மக்கள் மேம்பாட்டிற்கான கொள்கைவழியில் கேரளா…

பி. ராஜீவ்

[அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் 24வது பொது மாநாடு எர்ணாகுளம் நகரில் நடைபெற்றது. அவ்வமயம், மாநிலங்கள் அவை முன்னாள் உறுப்பினர் தோழர் ராஜீவ் “மேம்பாட்டின் மாதிரியாக கேரளம்” என்ற தலைப்பில் ஆற்றிய கருத்துரை  – தொகுப்பு : என். சுரேஷ்குமார், மதுரை]

வரலாறு படைத்த கேரளம்

1957ம் ஆண்டு, உலகிலேயே முதன் முதலாக, தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கம்யூனிஸ்ட் கட்சி அரசாங்கம் என்ற வரலாற்றுப் பெருமையை கேரளா பெற்றது. ஆனால், 2 ஆண்டுகள் மட்டுமே அந்த ஆட்சி நீடிக்க முடிந்தது. பின்னர் பத்தாண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. 1967ல் மீண்டும் கம்யூனிச அரசு கேரளாவில் ஆட்சி அமைத்தது. அப்போதும் 2 ஆண்டுகள் மட்டுமே பொறுப்பிலிருக்க அனுமதிக்கப்பட்டது. அடுத்த பத்தாண்டுகள் கழித்து மீண்டும் 1980ல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இடதுசாரி அரசும் 2 ஆண்டுகள் மட்டுமே ஆட்சிப் பொறுப்பில் இருக்க முடிந்தது. பொதுவாக கேரளாவில் 5 ஆண்டுகள் இடதுசாரி அரசு எனில் அடுத்த 5 ஆண்டுகள் காங்கிரஸ் அரசு என மாறி மாறி ஆட்சிப் பொறுப்பில் இருப்பார்கள் என்பது போல அப்போது இல்லை. சரியாகச் சொல்வதானால், 1957 முதல் 1982 வரையிலான 25 ஆண்டு காலத்தில் மூன்று முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் 6 ஆண்டுகள் மட்டுமே இடதுசாரி அரசு ஆட்சிப் பொறுப்பில் இருந்துள்ளது. எனினும் அந்த 6 ஆண்டு காலத்தில் மக்களுக்கான மாற்றுகளை அமலாக்குவதற்கான குறிப்பிடத்தக்க பங்களிப்பை அந்த இடதுசாரி அரசுகளால் செய்ய முடிந்தது. கேரள அரசியல், சமூக, பொருளாதார வரலாற்றில் பல புதிய மைல் கற்கள் இடதுசாரி அரசின் காலத்தில்தான் எட்டப்பட்டன.

வளர்ச்சியும், மேம்பாடும் ஒன்றல்ல

உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி மக்கள் வாழ்நிலையில் பிரதிபலிப்பதில்லை என இந்த மாநாட்டில், தலைவர் அமானுல்லா கான் மிகச் சரியாகவே குறிப்பிட்டார். வளர்ச்சி (Growth) என்பதும், மேம்பாடு (Development) என்பதும் ஒரே பொருள் கொண்ட சொற்கள் அல்ல. ஒவ்வொரு சொல்லுக்கும் பிரத்யேக அரசியல் மற்றும் தத்துவார்த்த அடிப்படையிலான பொருள் உண்டு. ஒன்றை மற்றொன்றிற்கு மாற்றாக பயன்படுத்துவது சரியல்ல. எடுத்துக்காட்டாக, போரும் (War), ஆக்கிரமிப்பு அல்லது அத்துமீறல் (Aggression or Invasion) ஆகியன ஒரே பொருளில் பயன்படுத்தத்தக்க சொற்கள் அல்ல. ஈராக் மீது அமெரிக்கா  தாக்குதல் தொடுத்த போது, பல ஊடகங்கள் அமெரிக்கா ஈராக் மீது போர் தொடுத்தது என எழுதின. போர் என்று சொல்லி விட்டால், அமெரிக்காவிற்கும், ஈராக்கிற்கும் அத்தாக்குதல்களில் சம பொறுப்பு உண்டு என்பதாகும். ஆனால், ஆக்கிரமிப்பு என்று சொல்லும் அடுத்த கணமே, யார் குற்றவாளி? ¨தாக்குதலுக்கு யார் பொறுப்பு? என்கிற கேள்வி நம் மனதில் எழுந்து விடுமல்லவா? ஆகவே இரண்டும் வெவ்வேறு பொருள் கொண்ட சொற்களாகும். ஆனாலும் பல பத்திரிக்கைகளும் போர் என்றே எழுதின. அதற்குக் காரணம் அமெரிக்காவும், ஈராக்கிற்கும் சம பொறுப்பு இருக்கிறது என்ற கருத்தை உருவாக்குவதே அவ்ர்களின் நோக்கம். இதுதான் ஒவ்வொரு சொல்லுக்குள்ளும் பொதிந்துள்ள உண்மையான பொருள். பல பத்திரிக்கைகள் ஈராக் அமெரிக்கா போர் என எழுதிய போது, பிரிட்டனின்  இடதுசாரி ஏடான “கார்டியன்” மட்டும் அதை ஆக்கிரமிப்பு என்றே குறிப்பிட்டு எழுதியது.

அதே போலத் தான் வளர்ச்சி மற்றும் மேம்பாடு என்பதும். ‘வளர்ச்சி’என்பது நம்மால் உருவாக்கப்படுவது அல்லது உற்பத்தி செய்யப்படுவது. அதே நேரத்தில் ‘மேம்பாடு’ என்பது வளர்ச்சி உள்ளிட்டவற்றின் பலன்களை பல தரப்பினருக்கும் பங்கீடு செய்வது, அது எப்படி செய்யப்படுகிறது என்பதைப் பொருத்துத்தான், மேம்பாடு தீர்மானிக்கப்படுகிறது. Mis-measuring our lives என்ற புத்தகத்தைப் படித்தேன், அது அது அமர்த்தியா சென் தலைமையில், ஸ்டிக்லிட்ஸ் உள்ளிட்டவர்களைக் கொண்டு அமைத்த ஒரு கமிட்டி தந்த அறிக்கையாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தி மட்டுமே ஒரு நாட்டின் பொருளாதார நிலைமையை பிரதிபலிக்கப் போதுமானதா? என்பதை ஆராய்கிறது அந்தப் புத்தகம்.

கேரளாமேம்பாட்டின் முன்மாதிரியாக

இதனைச் சொல்லி நாம் பேசவுள்ள பொருளுக்குள் நுழைவது பொருத்தமாக இருக்கும் எனக் கருதுகிறேன். கேரளா மேம்பாட்டின் ஒரு முன்மாதிரி என்கிற பொருளில் கருத்துக்களைப் பரிமாற உள்ளதே எனக்கு இடப்பட்ட பணி. சில பொருளாதார நிபுணர்கள் கேரள மாதிரி மேம்பாடு என்று இதனைக் குறிப்பிடுகிறார்கள். பேராசிரியர் சென் அவர்கள் இதனை கேரள “அனுபவம்” என்று குறிப்பிடுகிறார்.

முக்கிய இலக்கான கல்வியில், இன்றளவில், கேரளா 100 சத கல்வியறிவை எட்டிய முதல் மாநிலம், வாழ்நாள் சராசரி அதிகம் உள்ள மாநிலம் என்ற முன்னேற்றங்களை எட்டியுள்ளது. இத்தகைய மனித வளக் குறியீடுகளின் அடிப்படையில் உலக சராசரி, சீனா மற்றும் இதர வளர்ச்சி பெற்ற நாடுகளுடன் ஒப்பிடுகிற அளவிலான மேம்பாடுகளை கேரளா எட்டியிருந்தது. வாழ்நாள் சராசரியில், மகளிர் படிப்பறிவுக் குறியீட்டில் வளர்ந்த நாடுகளுக்கு இணையான முன்னேற்றத்தை கேரளா கொண்டிருந்தது. சமூகப் பொருளாதாரத் தலையீடுகளின் குவிதல் எனச் சரியாகவே இதனைக் குறிப்பிடுகிறார். இத்தகைய ஒப்பீடுகளைக் கொண்ட ஒரு சிறு பிரசுரமாக Mismeasuring our lives வெளிவந்துள்ளது. இத்தகைய முன்னேற்றங்களுக்கான அடிக்கற்கள் இடதுசாரி அரசின் காலங்களில்தான் பதிக்கப்பட்டன.

இடதுசாரி அரசு அமைந்த அந்த ஆறு ஆண்டுகள்தான் பல புதிய குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை எட்ட முடிந்த காலமாக இருந்தது. உதாரணத்திற்கு, 1957ல் நாட்டில் நிலவிநியோகத்தை அமல்படுத்தியது, எழுத்தறிவிற்கான பல முன்முயற்சிகளைத் துவக்கியது, திட்டமிடல் என்றாலே மேல்மட்டத்தின் வழிகாட்டுதல்படி என்பதை மாற்றி, அடிமட்டத்திலிருந்து வளர்ச்சிக்கான திட்டமிடல் என்பதை அமல்படுத்தியது உள்ளிட்டவற்றைக் குறிப்பிடலாம். இத்திட்டத்தில் மக்கள் தங்களது கருத்துக்களை, ஆலோசனைகளைத் தெரிவிக்கலாம் என்பது சிறப்பு.

இத்தகைய பெருமைகள் இருந்தாலும், சுயபரிசோதனை அடிப்படையில் தோழர் இ.எம்.எஸ் அவர்கள் சில விமர்சனப்பூர்வமான உண்மைகளையும் பட்டியலிட்டார். கேரளா தனது முதன்மைத் துறையான விவசாயம், இரண்டாம் துறையான தொழிற்துறை ஆகியவற்றில் போதிய இலக்குகளை எட்டமுடியவில்லை. ஏனைய சேவைத்துறை, வர்த்தகத்துறை உள்ளிட்டவற்றின் வளர்ச்சியை எட்டவும், விவசாயம் மற்றும் தொழிற்துறை வளர்ச்சியின்றி அவற்றை தக்கவைத்துக் கொள்ளவும் எப்படி முடியும் என்று கேள்வி எழுப்பினார். கேரளாவிற்கென சில பிரத்யேக நெருக்கடி சூழல்களும் உண்டு. எனினும், அதனையடுத்து மேற்கொள்ளப் பட்ட ஆய்வுகளைத் தொடர்ந்து விவசாயம் மற்றும் தொழிற்துறையில் வளர்ச்சி காண்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இரண்டாம் தலைமுறை நெருக்கடி

தற்போது கேரளா, கல்வி மற்றும் சுகாதாரத்தில் இரண்டாம் தலைமுறை நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றது என்று சொல்லலாம்.

கல்வியைப் பொறுத்தவரை அனைத்து மக்களுக்கும் கல்வியறிவு என்ற எண்ணிக்கை அடைப்படையிலான இலக்கினை நிறைவு செய்து விட்டோம். ஆனால் கல்வியின் தரத்தில் இலக்கினை எட்டி விட்டோம் என்று சொல்வதற்கில்லை. உயர்கல்விக்கான தரத்தை மேம்படுத்துவது அவசியம் என்பதை உணர்ந்துள்ளோம். அதே போல, சுகாதாரத் துறையில் கூடுதல் வாழ்நாள் சராசரி கொண்ட மாநிலம் என்ற இலக்கினை எட்டிய காரணத்தினால், தற்போது அதிக எண்ணிக்கையிலான முதியோரைக் கொண்ட மாநிலமாக கேரளா உள்ளது. வயதான மக்களை பாதுகாத்து, பராமரிக்கப் போதுமான தேவையான முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்தகைய சவால்கள் உபி, மகாராஷ்டிரா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு இல்லை. தற்போதைய கேரள இடது ஜனநாயக அரசு இதற்கான தீர்வுகள் மற்றும் இதர முன்முயற்சிகளை கவனத்துடன் மேற்கொண்டு வருகிறது.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமெனில், மத்திய ஆட்சியாளர்களின் கொள்கைகளுக்கு மாற்றுக் கொள்கைகளை கேரள அரசு பின்பற்றி அமலாக்கி வருகிறது. அதில் எங்களுக்கென்று பிரத்யேகமான சிரமங்கள் உண்டு. கேரளா  தனி நாடு அல்ல. மாநில அரசின் பொறுப்பில் இருந்து கொண்டு மக்களுக்கான மாற்றுக் கொள்கைகளை அமலாக்குவதே இந்த அரசின் குறிக்கோள் ஆகும். உண்மையில் கம்யூனிஸ்ட் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் முதலாளித்துவக் கட்டமைப்பை தூக்கியெறிவதை லட்சியமாகக் கொண்டவர்கள். ஆனால் கம்யூனிஸ்ட் அரசே தலைமைப் பொறுப்பேற்று நடத்த வேண்டிய சூழல். உலகில் வேறு எங்கும் இத்தகைய முன்மாதிரி இதற்கு முன் இருந்ததில்லை. 1957ல்  முதல் கம்யூனிச அரசு காங்கிரஸ் என்ற ஒற்றை கட்சியினைத் தகர்த்து உருவான போது எப்படி ஆட்சி செய்வது என்பதற்கான வழிகாட்டுதலோ, குறிப்புகளோ, முன் அனுபவமோ இருக்கவில்லை.

தற்போதைய அரசுகள் யாவும் முதலாளித்துவக் கட்டமைப்பின் கீழ் செயல்படுபவையே. முதலாளிகள் மற்றும் நிலபிரபுக்களின் ஆதிக்கத்தின் கீழ் கட்டமைக்கப்படுகிற அரசுகளே இவை. மாநில அதிகாரம் என்பது முதலாளித்துவக் கட்டமைப்பின் கருவியே. அரசாங்கம் அதனொரு பகுதியே. முதலாளித்துவ கட்டமைப்பைத் துhக்கியெறிகிற லட்சியத்திற்கிடையே, அக்கட்டமைப்பின் பகுதியான அரசு அதிகாரத்தை திறம்பட நடத்துவது என்கிற மிக வித்தியாசமான அனுபவத்தை கம்யூனிச இயக்கம் சந்திக்க வேண்டியிருந்தது. இருப்பினும் முதலாளித்துவ அமைப்பிற்குள்ளேயே செயல்பட்டுக் கொண்டு, நடைமுறை எதார்த்தத்தைக் கணக்கிற் கொண்டு அவற்றிற்கான உண்மையான மாற்றுகளையும் நோக்கி முன்னேறுகிற பெரும் கடமையை கவனமாக இன்றைய அரசு செய்து வருகிறது. இஎம்எஸ் தலைமையிலான முதல் அரசானது, ஆட்சி அதிகாரத்தை மக்களுக்கு தற்காலிகத் தீர்வுகளைத் தருகிற கருவியாக, வாய்ப்பாக எப்படிப் பயன்படுத்த முடியும் என்பதற்கான சிறந்த பயிற்றுவிப்பைத் தந்தது. அதுவே முதல் அனுபவமாக அமைந்தது.

1987-91; 1996-2001 ஆகிய ஆட்சிக் காலங்களில் மக்கள் பிரச்சினைகளுக்கு சில குறிப்பிடத்தக்க தீர்வுகளைத் தர முடிந்தது. 1996-2001 தோழர் ஈ.கே.நாயனார் தலைமையிலான அரசே முதன்முதலாக அதன் முழு ஆட்சிக் காலத்தையும் நிறைவு செய்த இடதுசாரி அரசாகும். அதற்கு முன்னதாக முழு காலஅளவை நிறைவு செய்த இடது சாரி அரசு இல்லை. அக்கால கட்டத்தில்தான் மக்கள் ஜனநாயக திட்ட முறை அமலாக்கப்பட்டது.

இத்தகைய அனுபவங்களுக்குப் பிறகு, தற்காலிகத் தீர்வுகளைத் தருவது மட்டுமே அரசின் கடமையாக இருக்க முடியாது, மாற்றுகளுக்கான முன்முயற்சிகள் துவக்கப்பட வேண்டும் என்பதை உணர முடிந்தது. 1990களுக்கு முந்தைய காலப் புரிதல் போல, மாநில அரசு ஆளும் வர்க்கத்திற்கு எதிரான கருவி என்பதை புரியச் செய்யும் வகையிலும், மக்கள் சந்திக்கும் நெருக்கடிகளுக்கு வெறும் வலி நிவாரணிகளை மட்டுமே தந்து கொண்டிருக்க முடியாது. அதோடு, பிரச்சினைகளுக்கான நிரந்தரத் தீர்வுகள் தரப்பட வேண்டிதன் அவசியத்தை ஆட்சி அனுபவத்திலிருந்து உணர்ந்தோம். இரண்டாண்டுகள், பின்னர் ஐந்தாண்டுகள், கால ஆட்சிகளில் தற்காலிகத் தீர்வுகள் தரப்படலாம். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகும் எனில் அது சரியானதல்ல. தற்காலிக வலி நிவாரணிகளைத் தொடர்ந்து உடம்பே ஏற்காமல் தனக்கான உகந்த மாற்றினைத் தேடிக் கொள்ளும் என்பது ஆட்சிக்கும் பொருந்துவதாகும்.

முதலாளித்துவ ஆட்சி முறையில், நவீன தாராளமய சூழலில் அத்தகைய நிரந்தரத் தீர்வுகளுக்கான வாய்ப்புகள் இல்லாத நிலையில், இடது ஜனநாயக அரசு மக்கள் பிரச்சினைகளுக்கு பொருத்தமான மாற்றுகளை நடைமுறைப்படுத்த அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டியிருந்தது. அரசு அனுபவத்திலிருந்து மத்திய அரசின் கொள்கைகள் மற்றும் தாராளமயக் கொள்கைகள் என்ற நெருக்கடிகளுக்கு இடையில் மக்களுக்கான மாற்றுகளை அமலாக்குவதற்கான வாய்ப்பாக ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்துவது எவ்வாறு என்பதை செயல்படுத்த முடிந்தது.

தற்போது பினராயி அவர்கள் தலைமையிலான இடது ஜனநாயக அரசு நிர்பந்தங்களுக்கு உட்பட்டு பல முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக சமூக மேம்பாடு சார்ந்த துறைகளுக்கு முதன்மைக் கவனம் அளிக்கப்பட்டு வருகிறது.

கல்வி, சுகாதாரம் ஆகியன தற்போது தொழிற்துறையாக மாறியுள்ளன. உச்சநீதிமன்றம் கூட ‘பாய் பவுண்டேஷன்’ வழக்கில் கல்வி ஒரு தொழிலே என தீர்ப்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். விதி 19(1ஜி)யின் படி கல்வியும் ஒரு வியாபாரமே என்று அதில் தெரிவிக்கப்பட்டது. சுகாதாரத் துறையும் வியாபாரமே என்கிறது. இப்பின்னணியில் இடது ஜனநாயக அரசோ பொதுக் கல்வி முறை வலுப்படுத்தப்பட வேண்டும் என முடிவெடுத்தது. அதற்குத் தேவையான கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்வது அவசியம் என்பதை உணர்ந்தது. நிதி நெருக்கடி இருந்த போதிலும் கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்து தரத்தை உயர்த்திட முடிவெடுத்தது உள்ளிட்ட பணிகளைத் துவக்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக அரசு பள்ளிகளின் பாடத்திட்டத்தை, நடைமுறையை உயர்த்துவதன் வாயிலாக கல்வித்தரத்தை உயர்த்துவது எனத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக அரசு பள்ளிகளின் தரத்தை ‘சர்வதேசப் பள்ளிகளின்’ தரத்திற்கு உயர்த்துவது என்பதே இலக்காகும். அதன் முதற்கட்டமாக 140 சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா ஒரு அரசு பள்ளியைத் தேர்வு செய்து, ஜன. 26 அன்று இத்திட்டத்தை அமலாக்க உள்ளது.

சுகாதாரம் மற்றும் மருத்துவ சேவை மையமாக

கொச்சி நகரம், நாட்டின் மருத்துவ மற்றும் சுகாதார சேவை மையமாக உருவெடுத்து வருகிறது. பல நான்கு வழி சாலைகளும் கொச்சியை நோக்கியே வருகின்றன. கொச்சியில் பெரிய மருத்துவமனைகள் உள்ளன. அனைத்து நவீன தரமான மருத்துவ வசதிகள் அங்கு அமையப்பெற்றுள்ளன. இருப்பினும் அதற்கு கூடுதல் செலவு பிடிக்கும் என்பதால், அனைவராலும் தேவையான சிகிச்சை பெற முடியாத நிலை உள்ளது. எனவே அனைவருக்கும் தேவைப்படுகிற சிகிச்சை கிடைக்கச் செய்யும் வகையில் பொது சுகாதாரத் திட்டத்தை வலுப்படுத்தத் தீர்மானித்துள்ளது.

சுகாதாரத்துறையில் என்ன மாதிரியான முன்னேற்றங்கள் அமலாக்கப்பட்டு வருகின்றன என தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் இங்குள்ள கொச்சி அரசு மருத்துவ மனையைச் சென்று பார்க்கலாம். மாவட்ட அளவிலான அந்த பொது மருத்துவமனையில் கேத் லேப் (இருதய சிகிச்சைக்கானது), ஆஞ்சியோ கிராம் மற்றும் ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை முறைகள் செய்யப்படும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்குள்ள மருத்துவர்களை நான் சந்தித்த போது கடந்த சில மாதங்களில் 600க்கும் அதிகமான ஆஞ்சியோ பரிசோதனைகள் செய்யப்பட்டன எனத் தெரிவித்தனர். ஆஞ்சியோகிராம் செய்ய ரூ1500, எம்ஆர்ஐ ஸ்கேன் கட்டணம் ரூ1500 முதல் ரூ3500வரை, ஆஞ்சியோ பிளாஸ்டிக்கு ரூ.1500வுடன் ஸ்டேன்ட் கட்டணம் என்ற அளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ள மாநிலத்தின் 12 மாவட்ட மற்றும் தாலுகா அளவிலான குறிப்பிட்ட மருத்துவமனைகளில் ரூ100 கட்டணத்தில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அடுத்த கட்டமாக லீனியர் ஆச்சிலரேட்டர் எனப்படும் வசதிகள் செய்யதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இது எனது நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட உள்ள திட்டமாகும். அதோடு, ஏழை மக்களுக்கு முழு இலவசச் சிகிச்சையும், தேவையான மருத்துவ நிதி உதவியும் செய்யும் இன்னும் பிற திட்டங்களும் நடைமுறையில் உள்ளன. இருதய நோய் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப் படும் 18 வயதிற்குட் பட்டவர்கள் சிகிசிச்சைக்கும் நிதி உதவி செய்யப் பட்டுள்ளது. நாட்டிலேயே எங்கும் இல்லாத வகையில் இருதயம் மற்றும் புற்றுநோய் சிகிச்சை பெறுபவர்களுக்கு குளிரூட்டப்பட்ட பிரத்யேக வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

உள்நோயாளிகள் அனைவருக்கும் நான்கு வேளைகளும் கட்டணமின்றி உணவு வழங்குகிற ஒரே மருத்துவமனையாக இது திகழ்கிறது. இதற்கு நிதி நெருக்கடி ஏற்படுவது உண்மையே. அதனைச் சமாளிக்க பொது அமைப்புகளிடமிருந்தும், இத்தகைய மாநாடுகள் நடைபெறுகிற போதும் நோயாளிகளின் உணவுக்கான நிதி உதவியைச் செய்திட வேண்டுகோளும் விடப்பட்டுள்ளது. தற்போது அனைத்து தாலுகா அளவிலான மருத்துவமனைகளிலும் இருதய சிகிச்சைக்கான ஆஞ்சியோ வசதிகளை ஏற்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இப்படி நோயாளிகளுக்குத் தேவையான மருத்துவத்தின் தரத்தை அனைத்து விதத்திலும் உயர்த்துவதே இன்றைய அரசின் குறிக்கோளாகும்.

மூன்றாம் தலைமுறை மனித உரிமைகளில்முன்மாதிரி மாநிலமாக!

அரசின் முதற்பெரும் கடமையாக அனைவருக்கும் குடியிருப்பு என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறோம். LIFE (Livelihood, Inclusion, Financial Empowerment) என்ற திட்டத்தின் படி வீடற்றவர்களுக்கு வீடு வழங்கப்பட உள்ளது. வீடு என்றாலே சிறிய குடிசை, குடில் என்ற அரசுகளின் எண்ணத்திலிருந்து மாறுபட்டதான முயற்சியை மேற்கொண்டு வருகிறோம். இது முற்றிலும் மாறுபட்டதொரு முயற்சியாகும். பிரத்யேகமாக ஒரு பொது நகரமைப்பினை உருவாக்கி, வீடுகளில் போதுமான வசதிகளோடு  வீடற்றவர்களை குடியமர்த்துவதோடு, அதில் அவர்களுக்கான பொது குழந்தை பராமரிப்புக் கூடம், விழாக் கூடங்கள் உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தப்படும். அதோடு கௌரவமான வாழ்க்கைக்கு குடியிருப்போடு, போதிய வசதிகளுடன் கௌரவமான வீடு மற்றும் வேலைவாய்ப்பு என்ற அடிப்படையில் அக்குடும்பங்களில் குறைந்தபட்சம் ஒருவருக்கேனும் ஒரு வேலைவாய்ப்பினையும் தருவது என்பதே திட்டமாகும். இந்தத் திட்டம் துவக்கப்பட்டு விட்டது.

அதே போல கேரள அரசு மகத்தான திட்டம் ஒன்றைத் துவக்கியுள்ளது. இயற்கை விவசாயத்தை மேம்படுத்துவதற்கான “ஹரித கேரளம்” திட்டமாகும் அது. ஒரு சில அனுபவங்களை என்னால் விவரிக்க முடியும், உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், இன்னும் சில நாட்களில் கேரளாவில் நடைபெற உள்ள இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அகில இந்திய மாநாட்டிற்குத் தேவையான அரிசி, மீன் மற்றும் காய்கறிகளை இயற்கை முறையில் கேரளாவின் இளைஞர்கள் விளைவித்தும், உற்பத்தி செய்தும் வருகிறார்கள் என்பதே. அரசின் இந்தத் திட்டம் மாநிலத்தின் அரிசி மற்றும் காய்கறி தேவைகளை பூர்த்தி செய்வதற்கான ஒரு பகுதியாக அமையும். இயற்கை விவசாயமே குறிக்கோள் என்ற அடிப்படையில் அதனை ஊக்குவித்து வருகிறோம். அரிசிக்கு தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களைச் சார்ந்திருக்கிற நாங்கள் சுய சார்ப்படைவதற்கான வழிமுறைகளை கண்டறிந்து வருகிறோம்.

கழிவு மேலாண்மைக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இவையாவும் கேரள அரசின் சமூகப் பொறுப்புகளாகும்.

லாப நோக்கோடு செயல்படும் எந்தவொரு அரசாலும் இத்தகைய திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க முடியாது. தற்போதைய கேரள அரசைப் பொறுத்தவரை பெரும்பாலான கேரள மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்ற வேண்டும் என்பதே முன்னுரிமையாகும்.

ஆக மொத்தத்தில், வளர்ச்சியின்றி மேம்பாடு இருக்க முடியாது. மேம்பாட்டிற்கு வளர்ச்சி அவசியமான ஒன்று. ஆனால் வெறும் வளர்ச்சி மட்டுமே மேம்பாட்டினைத் தந்து விடுவதில்லை. மேம்பாடு என்றால் மக்கள் உணவு பெறுகிறார்களா, தரமான கல்வி பெற முடிகிறதா, குடியிருக்க வீடு உள்ளதா, தரமான சுகாதாரம் உள்ளதா என்பதும் இணைந்தது. இத்தகைய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருவதோடு, சுகாதாரமான காற்று, சுத்தமான குடிநீர் உள்ளிட்ட அனைத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இவை உள்ளிட்ட மேம்பாடு மூன்றாம் தலைமுறை மனித உரிமை, இதனைப் பெற ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு என ஐ.நா அறிவித்துள்ளது. இவையே இந்த அரசின் குறிக்கோளாக உள்ளது.

உலகமயச் சூழலில் உரிய மாற்று மாதிரிகளாய்

மேலும், மாநிலத்தின் உள்கட்டமைப்பினை மேம்படுத்துகிற திட்டங்களும் தீவிரமாகப் பின்பற்றப்பட்டு வருகின்றன. உதாரணத்திற்கு, மாநிலத்தின் மெட்ரோ திட்டமான கொச்சி மெட்ரோ ரயில் திட்டத்தைக் குறிப்பிடலாம். அதன் முதற் கட்டம் குறிப்பிட்ட காலவரையறைக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே முடிக்கப்பட்டு, வரும் ஏப்ரல் மாதத்திற்குள்ளாக நடைமுறைக்கு வர உள்ளது. இதற்கு கடுமையான நிதி நெருக்கடியை அரசு சந்திக்க வேண்டியிருந்தது.

மற்றுமொரு தகவலையும் உங்களிடம் சொல்ல வேண்டும். அது உங்களுடைய மாநாட்டினைத் துவக்கி வைப்பதற்காக வந்த கேரள முதல்வர் தோழர் பினராயி விஜயன் அவர்கள், அதற்கு முன்னதாக திருச்சூரில் ஒரு நிகழ்ச்சியில் பங்கு பெற்ற பின் வந்தார். அது மாநிலத்தின் திட்ட நடவடிக்கை ஒன்றினைத் துவக்கி வைக்கிற நிகழ்வாகும். தற்போதைய மத்திய அரசு திட்டக்குழுவினைக் கலைத்து விட்டது. நிதியின்றி நிதிஆயோக் அமைப்பு செயல்படத் துவங்கியுள்ளது. எங்களது அரசைப் பொருத்த வரை மையப்படுத்தப்பட்ட மாநில அளவிலான திட்டங்களை அமலாக்க முடிவெடுத்துள்ளது. அதற்கென முதல்வரைத் தலைவராகவும், சிறந்த விவசாயப் பொருளாதார நிபுணரான திரு வி.கே. ராமச்சந்திரன் அவர்களைத் துணைத்தலைவராவும் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் திட்டமுறைக்கு முற்றிலும் மாறானதொரு திட்டக் குழுவாகும் இது. இடதுசாரி அரசின் முந்தைய மக்கள் திட்ட நடைமுறையின் அடுத்த கட்டம் என்று இதனைக் குறிப்பிடலாம். கூடுதல் சமூகக் வளக் குறியீடு கொண்ட புதிய கேரளா என்பதே இதன் நோக்கமாகும்.

மாநிலத்தின் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்குத் தேவையான நிதி முதலீட்டைத் திரட்ட வேண்டியுள்ளது. ஆனால், மத்திய அரசின் நிபந்தனைகளும், உச்சவரம்பு உள்ளிட்ட நிர்பந்தங்களும் அதற்குத் தடையாக உள்ளன. அதனை சமாளிக்கிற வகையில் கேரளா இன்ப்ராஸ்டிரக்சர் இன்வெஸ்ட்மெண்ட பண்ட் போர்ட் (KIIFB) என்கிற சுயேச்சையான அமைப்பினை உருவாக்கியுள்ளோம். திட்டங்களுக்கான நிதியினைத் தருவதோடு, வெளிநாட்டு வாழ் கேரள மக்கள் உள்ளிட்ட வாய்ப்புள்ள வகைகளில் முதலீட்டிற்கான நிதியினை இந்த அமைப்பு திரட்டும். இந்த அமைப்பிற்கு எவ்விதமான உச்சவரம்புகள் விதிக்கப்பட வில்லை. அதாவது, முதலீட்டிற்குப் பணமில்லை என்பதை ஏற்க முடியாது. வாய்ப்புள்ள இடங்களில் கடன் வாங்கியாவது முதலீடுகளைச் செய்ய வேண்டியது கடமை. நிதிப் பற்றாக்குறை (Fiscal Deficit) என்று சொல்லி இப்பொறுப்பைத் தட்டிக் கழிக்க முடியாது. நிர்பந்தங்களை உருவாக்கிட, நிதி பற்றாக்குறை, வருவாய் பற்றாக்குறை என்ற மத்திய அரசின் கொள்கைகளிலிருந்து நாங்கள் மாறுபடுகிறோம். வேலைவாய்ப்பினை உருவாக்கும் முதலீடுகள் கடன்கள் மூலம் பெறப்பட்டாலும், அதற்காக நிதிப் பற்றாக்குறை என்பதும் ஏற்றுக் கொள்ளத் தக்கதே, அதனைச் சமாளிப்பதே முக்கியமானது. வருவாய் பற்றாக்குறை பொருளாதாரத்திற்கு நல்லதல்ல. அதே நேரத்தில் வருமானத்தைப் பெருக்காமல் வருவாய்ப் பற்றாக்குறை (Revenue Deficit) என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. மக்கள் வாங்கும் சக்தியை அதிகரிக்கும் வகையிலான முதலீடுகளுக்கு முன்னுரிமை வழங்கப் படவேண்டும்.

அபாயத்தை தடுக்கும் மலையாய்

நாட்டில் அதிகமான ஆர்.எஸ்.எஸ் சாகாக்களைக் கொண்ட மாநிலமும் கேரளாவே. இதுநாள் வரை சட்டமன்றத்தில் தனது கணக்கினைத் துவக்க முடியாமல் இருந்த. பிஜேபி இம்முறை ஒரு சட்டமன்ற உறுப்பினர் என தனது கணக்கினைத் துவக்கியிருக்கிறது. இது அபாயகரமான வெளிப்பாடாகும். காங்கிரசின் வலிமையான அத் தொகுதியில் அதற்குகந்த வேட்பாளர் நிறுத்தப்படாததைப் பயன்படுத்தி பிஜேபி வெற்றி பெற்றது.

பல சமூகச் சீர்திருத்த இயக்கங்களைப் படைத்த வரலாறு கேரளாவிற்கு உண்டு. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் சமூகச் சீர்திருத்தத்திற்கான இயக்கங்கள் நடைபெற்றன என்றாலும், கேரளா அவற்றிலிருந்து மாறுபட்ட ஒன்றாகும். கேரளத்தைப் பொறுத்தவரை சமூக சீர்த்திருத்த இயக்கங்கள் கம்யூனிஸ்டுகளின் தலைமையின் கீழ் முன்னெடுக்கப் பட்டன என்பதே அது. ஸ்ரீ நாராயணகுரு, அய்யங்காளி உள்ளிட்ட தலைவர்கள் குறிப்பிடத்தக்க இயக்கங்களை நடத்தியுள்ளனர். 1907ஆம் ஆண்டு கேரளாவின் முதல் விவசாயத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தின் கோரிக்கை தங்களது குழந்தைகளுக்கு கல்வி வசதி செய்து தரப்பட வேண்டும் என்பதிலிருந்து இந்த வித்தியாசத்தினைப் புரிந்து கொள்ள முடியும். உலகில் எங்கும் நடைபெறாத புதுமை இது. சமூக சீர்திருத்த இயக்கத்தில் விடுதலைக்கான கல்வி என்பது முக்கிய முழக்கமாக இருந்தது.

தோழர் ஏ.கே.கோபாலன், கிருஷ்ணபிள்ளை போன்ற தலைவர்கள் குருவாயூரில் ஆலய நுழைவுப் போராட்டத்தை முன்னின்று நடத்தினார்கள்.

மதச்சார்பின்மை மற்றும் மதநல்லிணக்கத்தில் முதன்மை மாநிலம் கேரளாவே. ஆனால், தற்போது மதவெறி அபாயம் தீவிரமாக தலைதூக்கி வருகிறது.கேரளத்தின் பாரம்பரியத்தை காத்திட அரசு தன்னாலான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. மதவெறி அபாயம் தலைதூக்கும் போதெல்லாம், இடதுசாரி சக்திகள் ஒன்றிணைந்து மலை போல் எழுந்து தடுத்து வந்துள்ளன என்பதே அனுபவம்.

தோழர் இ.எம்.எஸ் அவர்கள் பயிற்றுவித்த வழியில் மக்கள் பிரச்சினைகளுக்கான நிரந்தர மாற்றுக் கொள்கைகளை அமலாக்கிடும் முன் மாதிரி மாநிலமாக கேரளா பீடு நடை போட்டு வருகிறது. நிச்சயம் இது தொடரும்.