பிரகாஷ் காரத்
தமிழில்: இ.எம்.ஜோசப்
மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கான நீண்ட கால உத்திகளை கட்சித் திட்டத்தில் உருவாக்கி வைத்திருக்கிறோம். இந்திய சமூகத்தில் உள்ள வர்க்கங்கள் குறித்த திட்டவட்டமான ஆய்வின் அடிப்படையில் கட்சித் திட்டம், வடிவமைக்கப்பட்டுள்ளது. புரட்சியின் கட்டம், அரசின் வர்க்கத் தன்மை, மக்கள் ஜனநாயகப் புரட்சிக்காக உருவாக்கப்பட வேண்டிய வர்க்கக் கூட்டணி ஆகிய அம்சங்கள் அதில் தெளிவுபடுத்தப்பட்டிருக்கின்றன. நமது கட்சித் திட்டத்தைப் பொறுத்த அளவில் நாம் இன்று புரட்சியின் ஜனநாயகக் கட்டத்தில் இருந்து வருகிறோம். இந்திய அரசு, பெரும் பூர்ஷ்வாக்கள் தலைமையிலான பூர்ஷ்வா நிலப்பிரபுத்துவ அரசு.
மக்கள் ஜனநாயகப் புரட்சிக்காக, தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், குட்டி பூர்ஷ்வாக்கள், பெரு முதலாளிகள் அல்லாத முதலாளித்துவப் பிரிவினர் கொண்ட வர்க்கக் கூட்டணியினை உருவாக்க வேண்டும். இவையெல்லாம் நமது கட்சித் திட்டத்தில் தெளிவாக இடம் பெற்றிருக்கின்றன.
2000மாவது ஆண்டில், கட்சித் திட்டத்தினை தற்காலப்படுத்திய போது, வேறு சில அம்சங்களும் அதில் சேர்க்கப்பட்டன. சோவியத் யூனியன் சிதைவிற்குப் பின்னர் சர்வதேசச் சூழ்நிலையில் வர்க்கப் பலாபலன்களில் ஏற்பட்ட மாற்றங்கள், இந்தியாவில் தாராளமயப்படுத்தப்பட்ட சூழலில் உருவான முதலாளித்துவ வளர்ச்சியின் புதிய கட்டம், பல்வேறு வர்க்கப் பிரிவினர் மீது அது ஏற்படுத்தியிருந்த தாக்கம் போன்ற பல அம்சங்களை ஆய்வு செய்ததோடு, 20ம் நூற்றாண்டில் சோஷலிசத்தைக் கட்டுவதில் கிடைத்த அனுபவங்கள், அன்றைய சூழ்நிலையில் உருவாகியிருந்த புதிய எதார்த்தங்கள் போன்றவற்றையும் மனதில் கொண்டு, திட்டத்தினைத் தகவமைத்துக் கொண்டோம்.
சர்வதேசிய, தேசிய அளவில் காலத்திற்குக் காலம் மாறிவரும் அரசியல் சூழ்நிலை குறித்து, கட்சித் திட்டத்தின் அடிப்படையில் திட்டவட்டமாகப் பரிசீலித்து அரசியல் – நடைமுறை உத்திகளை உருவாக்கி வந்திருக்கிறோம். அத்தகைய கொள்கைகள், அன்று இருக்கும் வர்க்கப் பலா பலன்களையும், உழைக்கும் மக்களின் பல்வேறு பிரிவினரின் அரசியல் உணர்வு மட்டத்தினையும் கணக்கில் கொண்டதாக இருக்க வேண்டும். அவ்வப்போது இயக்கத்தின் கட்டங்கள் மாறும் போது – அதனுடைய ஏற்ற இறக்கங்கள், ஆளும் வர்க்கங்களின் சாகசங்கள், நாம் அவற்றை எவ்வாறு எதிர்கொள்வது என்பனவற்றிற்குத் தகுந்தாற்போல் – நடைமுறை உத்திகளும் மாறவே செய்யும். வர்க்கப் பலாபலன்கள் தொழிலாளி வர்க்கத்திற்கு சாதகமாக மாறினால், கட்சித் திட்டத்தில் உள்ள நமது நீண்ட கால இலட்சியங்களை நோக்கி சற்று விரைவாக முன்னேற முடியும். அத்தகைய சாதகமான மாற்றத்தினை உருவாக்கும் போக்கிற்கும், நடைமுறை உத்திகளுக்கும் ஒரு நேரடி இணைப்பு உண்டு.
இந்தக் குறிப்பின் நோக்கம்
1964ம் ஆண்டு சி.பி.ஐ(எம்) உருவாக்கப்பட்டது முதல், கட்சியின் அரசியல் – நடைமுறை உத்திகள் எவ்வாறு வளர்ச்சி பெற்று வந்திருக்கின்றன? 1964க்குப் பின்னர் நடைபெற்ற கட்சியின் அகில இந்திய மாநாடுகளும், மத்தியக் கமிட்டிக் கூட்டங்களும் அன்று நிலவிய சூழ்நிலையின் அடிப்படையில் எப்படி நடைமுறை அரசியல் உத்திகளை வகுத்தன? அந்த உத்திகள் நாம் முன்னேறிச் செல்வதற்கு எவ்வாறு உதவின? அத்துடன், அந்த உத்திகளை அமலாக்கிய போது நமக்குக் கிடைத்த அனுபவங்கள் என்ன? அவற்றின் பின்னணியில் நாம் அவற்றை எவ்வாறு திருத்தி, மறு தகவமைப்பினைச் செய்து கொண்டோம்? இவை குறித்தெல்லாம் விளக்குவதே இக்குறிப்பின் நோக்கம்.
கட்சித் திட்டம் : நடைமுறைக்கு வழிகாட்டும் உள்ளடக்கம்
வலது திருத்தல்வாதத்தினையும், இடது அதிதீவிரவாதத்தினையும் எதிர்த்துப் போராடிய நமது கட்சி, தனது திட்டத்தில், நடைமுறை உத்திகளுக்கு உதவும் வகையிலும் சில அம்சங்களையும் உள்ளடக்கியிருக்கிறது. அவ்வகையில் திட்டத்தில், பத்தி எண் 105 முதல் 113 வரை சொல்லப்பட்டிருக்கும் அம்சங்களை பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்:
- புரட்சிகர இயக்கத்தின் சில குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டங்களில், பல்வேறு வர்க்கங்கள், அதே போன்று ஒரே வர்க்கத்துக்குள் இருக்கும் பல்வேறு அடுக்கினைச் சேர்ந்தவர்கள் பல மாறுபட்ட நிலைபாடுகளை மேற்கொள்வது உண்டு. வேகமாக மாறி வரும் சூழ்நிலையின் தேவைக்குத் தகுந்தாற் போல் கட்சி பல இடைக்காலக் கோஷங்களை உருவாக்க வேண்டி வரும்.
- முதலாளிகளில் கூட, அதனுடைய பெரு முதலாளிகளின் பிரிவு சில சமயம் ஏகாதிபத்தியத்துடன் முரண்படும் சாத்தியங்கள் உண்டு. அது குறித்து, ஆளும் காங்கிரஸ் கட்சியுடன் கேந்திரமான ஒற்றுமை அல்லது ஐக்கிய முன்னணி அமைப்பது என்ற பிரமைகள் எதுவும் கட்சிக்கு இல்லை. எனினும், நாட்டின் உண்மையான நலன்களின் அடிப்படையில், உலக சமாதானம், ஏகாதிபத்திய எதிர்ப்பு, ஏகாதிபத்தியத்துடன் முரண்படுகிற பொருளாதாரம் மற்றும் அரசியல் குறித்த பிரச்சனைகளிலும், நாட்டின் இறையாண்மை, சுதந்திரமான வெளியுறவுக் கொள்கை போன்றவற்றை பலப்படுத்துவது போன்ற அம்சங்களிலும் காங்கிரஸ் கட்சிக்கு தங்கு தடையில்லா ஆதரவு அளிப்பதில் எவ்விதத் தயக்கமும் இல்லை என திட்டம் கூறுகிறது.
- மக்களுக்கு உடனடியான நிவாரணம் வழங்கும் வகையில், நிதானமான ஒரு திட்டத்தின் அடிப்படையில் ஒரு அரசாங்கம் அமைப்பதனை திட்டம் ஏற்கிறது. ஆனால், அது நாட்டினுடைய பொருளாதாரம் மற்றும் அரசியல் பிரச்சனைகளை எவ்வித அடிப்படை நிலையிலிருந்தும் தீர்த்துவிடாது என்ற தெளிவான எச்சரிக்கையினையும் உள்ளடக்கியிருக்கிறது. மக்களுக்கு உடனடி நிவாரணம் அளிக்கக் கூடிய அத்தகைய அரசாங்கங்கள் எவ்வளவு தற்காலிகமானவை எனினும், அத்தகைய அரசாங்கங்களை அமைப்பதற்கான அனைத்து வாய்ப்புக்களையும் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம், வெகுஜன இயக்கத்தினை வலுப்படுத்த முடியும்.எனவும் திட்டம் கூறுகிறது.
- சமாதான பூர்வமான அல்லது அது அல்லாத வழிகள் குறித்து மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் நிலைப்பாட்டினையே திட்டம் ஏற்றுக் கொண்டுள்ளது. இது வலது மற்றும் இடது சந்தர்ப்பவாத நிலைகளுக்கு எதிரானது. மக்கள் ஜனநாயகத்தினையும், சோஷலிசத்தை நோக்கிய மாற்றத்தினையும் சமாதான பூர்வமான வழிகளிலேயே அடைவதற்கு கட்சி முயற்சி செய்யும்.. அதே வேளை, ஆளும் வர்க்கங்கள் அவ்வளவு எளிதாக தாங்களாகவே முன்வந்து தங்களது அதிகாரத்தினை விட்டுக் கொடுப்பதில்லை. சட்ட விரோத வழிமுறைகள் மற்றும் வன்முறை மூலம் மக்களின் விருப்பங்களை புறந்தள்ளுவார்கள். எனவே, புரட்சி சக்திகள், எல்லா விதச் சூழ்நிலையினையும், நாட்டின் அரசியல் வாழ்க்கையில் ஏற்படும் அதிரடித் திருப்பங்களை எல்லாம் சந்திக்கும் அளவிற்கு விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் திட்டம் கூறுகிறது.
பரிணாம வளர்ச்சியின் வரலாறு
1964ம் ஆண்டில் நடைபெற்ற கட்சியின் 7வது அகில இந்திய மாநாடு உருவாக்கிய தற்போதைய சூழ்நிலையும், கடமைகளும் என்ற தீர்மானத்தில் இருந்து வரலாற்றினைத் தொடங்க வேண்டும். அரசாங்கத்தின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிரான வெகுஜன எதிர்ப்பியக்கத்திற்கு திட்டமிட்ட தலைமையினை உருவாக்க வேண்டும் என்பது தான், இந்த அரசியல் பாதையில் மிகவும் கடினமான அம்சம்.
இது குறித்து தீர்மானம் கூறுவதாவது:
சிவில் உரிமைகள், ஜனநாயக உரிமைகள் மீதான ஒவ்வொரு தாக்குதலுக்கு எதிராகவும், ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிராகவும், மக்களின் ஜனநாயகப் பகுதியினரைத் திரட்ட வேண்டும். அரசாங்கத்தின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராகவும், மாற்றுக் கொள்கைகளைக் கோரியும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட வேண்டும் உலக சமாதானத்திற்காகவும், அனைத்து விதமான அணு ஆயுதங்களையும் தடை செய்யக் கோரியும், மொத்தத்தில் ஆயுதம் இல்லாத உலகம் வேண்டியும் இடையறாத பிரச்சாரம் செய்தல் வேண்டும்.
மக்கள் ஜனநாயக முன்னணி குறித்த கோஷத்தினையும், குறிப்பாக, மக்கள் ஜனநாயகப் புரட்சியின் முக்கியத்துவம் மிகுந்த உழுபவனுக்கு நிலம் என்ற கோஷத்தினையும் மக்கள் மத்தியில் இடையறாது பிரபலப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.
திருத்தல்வாதத்திற்கு எதிரான போராட்டம் குறித்து கட்சியின் 7வது அகில இந்திய மாநாடு ஏற்றுக் கொண்ட அறிக்கை பின் வருமாறு கூறுகிறது:
பூர்ஷ்வாக்கள் மற்றும் ஆளும் கட்சியின் வாலைப் பிடித்துக் கொண்டு செல்லும் நோக்கில் உருவாக்கப்பட்ட திருத்தல்வாதக் கருத்துக்கள், கோஷங்கள், உத்திகள் ஆகியவற்றிற்கு எதிராக கட்சி உறுதியாகப் போராட வேண்டும். அதே வேளையில், குறுங்குழுவாதத்தின் (செக்டேரியனிசம்) அனைத்து விதமான வெளிப்பாடுகளுக்கும் எதிரான போராட்டத்தினைத் தொடர வேண்டும். ஏனெனில், இது ஜனநாயக முன்னணியின் ஒற்றுமையினைக் கட்டுவதற்கு மிக முக்கியமான நிபந்தனை. குறுங்குழுவாதம் தன்னை இரண்டு முக்கிய வழிகளில் வெளிப்படுத்திக் கொள்கிறது.
(அ) ஆளும் காங்கிரஸ் கட்சியினைப் பின்பற்றும் ஜனத்திரளுக்கு எதிரான குறுங்குழுவாதம்;
(ஆ) வலதுசாரி பிற்போக்கு மற்றும் இடதுசாரி எதிர்க்கட்சிகளின் பின்னால் அணி திரண்டிருக்கும் தீவிர கம்யூனிஸ்ட் எதிர்ப்பு என்ற அடிப்படைக் கண்ணோட்டம் கொண்ட மக்களுக்கு எதிரான குறுங்குழுவாதம்.
மக்களில் பெரும் பகுதியினர் அநேகமாக இந்த இரண்டு வகைக் கட்சிகளின் பின்னால் தான் சரி பாதியாக அணி திரண்டிருக்கின்றனர். காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் அல்லாத கட்சிகளின் பின்னால் அணி திரண்டிருக்கும் இந்த மக்களைத் தான், ஜனநாயகக் கொள்கைகள் மற்றும் ஜனநாயக முன்னணிக்கு ஆதரவாக வென்றெடுக்க வேண்டியுள்ளது. இதனைச் சரியாக புரிந்து கொள்ளத் தவறுவதிலிருந்தே, இந்த இரண்டு வகையான குறுங்குழுப் போக்குகளும் எழுகின்றன. மாநிலங்களிலோ, மத்தியிலோ அமைச்சரவையில் அல்லது வேறு சில பிரச்சனைகள் மூலம் நெருக்கடி உருவாகும் பட்சத்தில், அத்தகைய அனைத்து நேரங்களிலும் கட்சி தலையிட வேண்டும். இது குறித்து பின்வருமாறு சொல்லப்பட்டிருக்கிறது: ஆளும் வர்க்கங்கள் மத்தியிலும், ஆளும் வர்க்கத்துக்குள் சில பிரிவினருக்கு இடையிலும் சில சமயங்களில் சில்லறைச் சச்சரவுகள் தோன்றும். அதை வெறுத்து ஒதுக்கி கண்டு கொள்ளாமல் விடுதல் கூடாது. ஏதேனும் ஒரு சிறிய அளவிலாவது, அதை நமக்கு சாதகமாக மாற்றும் வகையில் அதில் தலையிட வேண்டும். வேகமாக மாறி வரும் அரசியல் சூழ்நிலையில் அப்படியெல்லாம் தலையிடாவிட்டால், கட்சி செயலூக்கமற்றதாக மாறிவிடும். முடிவாக, அந்த அறிக்கை பின் வருமாறு கூறுகிறது:
சரியான உத்திகள் மூலம் உழைக்கும் மக்கள் மத்தியில் விரிவான போராட்டங்களை உருவாக்க வேண்டும். மேலிருந்து அரசியல் ரீதியாகத் தலையிட்டு, அவர்களது ஒன்றுபட்ட போராட்டங்களையும், ஸ்தாபனங்களையும் இணைக்க வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம், மேலும் பெரும்பகுதி மக்களை, மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்தில், கட்சி அணிதிரட்ட முடியும். காங்கிரஸ் அரசாங்கத்தின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக வெகுஜனப் போராட்டங்களை உருவாக்குவது, ஆளும் கட்சியைப் பின்பற்றும் திரளான மக்களை ஒன்றுபட்ட போராட்டங்களில் ஈடுபடுத்துவதற்கான தேவை ஆகியவை குறித்து, 7வது அகில இந்திய மாநாட் டின் நடைமுறை உத்தி தெளிவுபடுத்தியிருக்கிறது. ஆளும் வர்க்கக் கட்சிகள் மத்தியில் இருக்கும் பிளவுகள், முரண்பாடுகளைப் பயன்படுத்தி, அதை இடதுசாரிக் கட்சிகளுக்கு ஆதரவாக மாற்றும் வேலையைச் செய்ய வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய சூழ்நிலையும், கட்சியின் கடமைகளும்
1967ம் ஆண்டில் 4வது பொதுத் தேர்தல்கள் நடைபெற்றன. காங்கிரசுக்கு எதிராக மக்கள் தங்கள் கடுமையான அதிருப்தியினை பெருமளவில் வெளிப்படுத்திய தேர்தல் இது. எட்டு மாநிலங்களில் அதுவரை இருந்து வந்த காங்கிரசின் அரசியல் அதிகார ஏகபோகம் உடைத்தெறியப்பட்டது. காங்கிரஸ் அல்லாத கட்சிகள் இங்கு ஆட்சிக்கு வந்தன. மேற்கு வங்கத்திலும், கேரளாவிலும் நமது கட்சி பங்கேற்ற ஐக்கிய முன்னணி அரசாங்கங்கள் அமைக்கப்பட்டன. புதிய சூழ்நிலையினைச் சந்திக்கும் வகையில் மத்திய கமிட்டி, புதிய சூழ்நிலையில் கட்சியின் கடமைகள் என்ற நடைமுறை உத்தியினை உருவாக்கியது. கட்சித் திட்டத்தின் 112வது பாரா குறித்த புரிதலின் அடிப்படையில், மாநில அரசாங்கங்களில் நாம் பங்கேற்பது குறித்த தீர்மானம் என்ற வகையில் இது முக்கியத்துவம் வாய்ந்தது.
இத்தீர்மானம், காங்கிரஸ் அல்லாத அரசாங்கங்களின் தன்மை குறித்து, அவற்றை நான்காக வகைப்படுத்தியது.
- இடதுசாரி ஜனநாயக சக்திகள் வலுவாக உள்ள கேரள, மேற்கு வங்க அரசாங்கங்கள்.
- நோக்கங்களில் ஓரளவு ஜனநாயகத் தன்மை கொண்ட தமிழகத்தின் தி.மு.க அரசாங்கம்.
- சற்றுக் கலவையான பீகார் மற்றும் பஞ்சாப் அரசாங்கங்கள்.
- வலதுசாரிகள் ஆதிக்கம் செலுத்தும் உ.பி, ஹரியானா மற்றும் ஒடிசா அரசாங்கங்கள். நாம் கேரளா மற்றும் மே.வங்க அரசங்கங்களில் பங்கேற்றோம். பீகார் மற்றும் பஞ்சாப் அரசாங்கங்களில் பங்கேற்க மறுத்துவிட்டோம். ஆனால், இந்த இரண்டு மாநிலங்களிலும் சி.பி.ஐ பங்கேற்றது. 1964 முதல் 1967 வரை கட்சி கடைபிடித்த நடைமுறை உத்திகள், கட்சியின் முன்னேற்றத்திற்கு உதவின. சி.பி.ஐ- யின் திருத்தல்வாத நிலையினை எதிர்த்துப் போராடுவதற்கும் உதவின.
நக்சலிசத்திற்கு எதிரான போராட்டம்
கட்சி திருத்தல்வாத நிலையினை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்தது. நக்சலிசம் மேலோங்கிய காலத்தில், இடது அதிதீவிரவாதப் போக்குகளை எதிர்த்த போராட்டத்திலும் கட்சி ஈடுபட்டது. வர்க்க வெகுஜன அமைப்பு உருவாக்கம் மற்றும் வெகுஜனப் போராட்டங்களை நிராகரித்த நக்சலைட் குழுக்கள் தேர்தல்களில் பங்கேற்பதனையும், அதைத் தொடர்ந்து ஐக்கிய முன்னணித் தந்திரங்களையும் எதிர்த்தன. அனைத்துக் காலங்களிலும், ஆயுதம் தாங்கிய போராட்டமே ஒரே பாதை என வலியுறுத்தின. 1968ம் ஆண்டில் மேற்கு வங்கம் பர்துவானில் நடைபெற்ற சிறப்புக் கூட்டம் (பர்துவான் பிளீனம்), நக்சலிசத்தை முறியடிக்கும் வகையிலான கொள்கையினை உருவாக்கிக் கொடுத்தது. நக்சலைட் இயக்கம் நமது கட்சிக்கும், இயக்கத்திற்கும் ஊறு விளைவித்தது. மறுபுறத்தில், தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சிகள் அவர்களது கணிப்பும், உத்திகளும் எவ்வளவு தவறானவை என்பதை உறுதிப்படுத்தின.
9வது அகில இந்திய மாநாடு : எதேச்சதிகாரத்திற்கு எதிரான போராட்டம்
8வது மாநாடு நடைபெற்ற 1968ம் ஆண்டிற்கும், 9வது மாநாடு நடைபெற்ற 1972ம் ஆண்டிற்கும் இடையில் வெகு வேகமாக மாறி வந்த சூழ்நிலையினைக் கணக்கில் கொண்டு, கட்சி அதற்கு உரிய உத்திகளை உருவாக்க வேண்டியிருந்தது. மே.வங்கத்திலும், கேரளாவிலும் இடதுசாரிகளின் தலைமையில் இருந்த அரசாங்கங்களை, மத்தியில் இருந்த ஆளும் கட்சி கலைத்துவிட்டது. சி.பி.ஐ கேரளாவில் காங்கிரசுடன் சேர்ந்து அரசாங்கம் அமைத்து அதில் பங்கேற்றது. மேற்கு வங்கத்தில் நம்மைத் தனிமைப்படுத்துவதற்கான முயற்சிகளில் இறங்கியது. ஆனால், நாம் மக்களை நமது நிலைக்கு ஆதரவாக அணி திரட்டினோம். அத்தகையப் போராட்டங்கள் மூலம் நமது நிலையினை மீண்டும் வலுப்படுத்திக் கொண்டோம். ஆளும் வர்க்கக் கட்சிகளின் மத்தியில் உள்ள முரண்பாடுகள், ஆளும் வர்க்கங்களுக்கு இடையிலான பிளவுகள் ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, நமது இயக்கத்திற்கு உதவும் வகையில் உரிய உத்திகளை உருவாக்க வேண்டும். சரியான நடைமுறை உத்தி உருவாக்கத்தில் இவையெல்லாம் கவனத்தில் இருக்க வேண்டியவை.
1969-70களில் காங்கிரஸ் கட்சி பிளவுபட்ட போது நமது கட்சி எடுத்த நிலை இந்த வகையில் ஒரு எடுத்துக்காட்டகும். 1969 குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்து, வி.வி.கிரியை இந்திரா காந்தி ஆதரித்தார். பிளவு உருவாகி வரும் சூழ்நிலையைக் கவனத்தில் கொண்டு, நாமும் வி.வி கிரியை ஆதரித்தோம். ஆனால், அடுத்து வந்த 1971 பொதுத் தேர்தலில், பிளவுபட்ட காங்கிரஸ் கட்சி, இந்திரா காங்கிரஸ், சிண்டிகேட் காங்கிரஸ் என இரண்டு கோஷ்டிகளாக மோதிக் கொண்டபோது, அவற்றில் எதனுடனும் கைகோர்க்க நாம் மறுத்துவிட்டோம். இந்தத் தேர்தல்களில் சிண்டிகேட் தலைமையிலான மகா கூட்டணி நாடு முழுவதும் தோல்வியடைந்தது. நமது கட்சியும், நமது இடதுசாரிக் கூட்டாளிகளும் மே.வங்கத்தில் கணிசமான அளவில் வெற்றி பெற்றோம்.
1971ம் ஆண்டில், மே.வங்கத்தில் அரைப்பாசிச பயங்கரம் தொடங்கியது. 1972 மாநிலச் சட்டமன்றத் தேர்தல்கள் கடுமையான மோசடிக்கு உள்ளாயின. கேரளாவிலும் நமது இயக்கம் கடுமையான ஒடுக்குமுறையினைச் சந்தித்தது. சி.பி.ஐ காங்கிரசுடன் கைகோர்த்த நிலையில் 1967ல் உருவாக்கப்பட்ட இடதுசாரி ஒற்றுமை சீர்குலைவிற்கு உள்ளாகியது. இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகளின் ஒற்றுமைக்கான தேவையினை கட்சி தொடர்ந்து வலியுறுத்தியது. ஒரு கட்சி சர்வாதிகாரத்தின் அபாயம் குறித்து எச்சரித்த கட்சியின் 9வது அகில இந்திய மாநாடு, ஜனநாயகச் சக்திகளுடன் ஒற்றுமையினை உருவாக்குமாறு, இடதுசாரிக் கட்சிகளைக் கேட்டுக் கொண்டது.
அவசர கால நிலைமையினை நோக்கி
கட்சியின் 9வது அகில இந்திய மாநாட்டிற்குப் பின்னர், காங்கிரஸ் கட்சியின் மோசமான ஆட்சிக்கு எதிராக முக்கிய நிகழ்ச்சிகள் பல வேகவேகமாக நடந்தேறின. பெரிய அளவில் போராட்டங்கள், வரலாற்று முக்கியத்துவம் மிக்க ரயில்வே வேலைநிறுத்தம் போன்றவை நடைபெற்ற காலம் இது. காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலலைமையிலான எதேச்சதிகார எதிர்ப்பு இயக்கத்திற்குப் பின்னால் அணிதிரண்டன. அவரது இயக்கத்துடன் நேரடியாக இணையாமல், சுதந்திரமாக இயக்கங்களை முன்னெடுத்துச் செல்வது என நமது கட்சி முடிவு செய்தது. 1975ம் ஆண்டு, இந்திரா காந்தி அரசாங்கம் நாட்டின் மீது அவசர நிலையினைத் திணித்தது. மக்களின் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படன. நமது கட்சித் தலைவர்கள் உட்பட, நாடெங்கிலும் எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தனது சர்வாதிகார நோக்கங்களை நிறைவேற்றும் நோக்கில், அரசியல் சாசனத்தில் 42வது திருத்தம் செய்யப்பட்டது. இந்த 42வது திருத்தத்தினை எதிர்த்து, நமது கட்சி மக்களிடம் விரிவான பிரச்சாரத்தினை மேற்கொண்டது. 1976ம் ஆண்டு இறுதிப் பகுதியில், சிவில் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் பிற ஜனநாயக சக்திகளுடன் இணைந்தோம். அவசர நிலைக்கு எதிராகவும், ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும் நாம் நடத்திய போராட்டங்களும், பிரச்சாரங்களும், 1977 மார்ச் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் உரிய பங்கினை ஆற்றுவதற்கு நமக்குப் பெரிதும் உதவின. இந்தத் தேர்தலில் காங்கிரசும் அதன் எதேச்சதிகார ஆட்சியும் தோற்கடிக்கப்பட்டன.
10வது அகில இந்திய மாநாடு
9வது மாநாட்டின் நடைமுறை உத்திகளைத் திறனாய்வு செய்த 10வது மாநாடு, அதிலுள்ள சில குறைபாடுகளைச் சுட்டிக் காட்டியது. மேலோங்கி வளர்ந்த எதேச்சதிகார எதிர்ப்பினையும், ஆளும் கட்சிக்கும், பூர்ஷ்வா எதிர்க்கட்சிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்களையும் பயன்படுத்தி, முழுமையான அனுகூலம் பெறும் வகையில் நமது நடைமுறை உத்தி உதவவில்லை என மாநாடு சுட்டிக் காட்டியது. காங்கிரசுக்கும் ஜனதா கட்சிக்கும் இடையில் அடிப்படை வேறுபாடுகள் இல்லை என்பதனை 10வது மாநாடு, சரியாக கணித்தது. எனினும், எதேச்சதிகாரத்தினை எதிர்த்த இயக்கத்தில் ஜனதா கட்சி ஆற்றிய ஆக்கபூர்வமான பங்கினை அது அங்கீகரித்தது. எதேச்சதிகாரத்திற்கு எதிரான பரந்த மேடை என்ற கோஷத்தினை உருவாக்கியது. முதல் முறையாக, இடது மற்றும் ஜனநாயக முன்னணி என்ற கருத்தாக்கத்தினை 10வது மாநாடு உருவாக்கியது.
மாநாட்டின் அரசியல் தீர்மானம் குறிப்பிடுவதாவது:
வர்க்க பலாபலங்களில் ஒரு மாற்றத்தினைக் கொண்டு வர வேண்டும்; மக்கள் பூர்ஷ்வா – நிலப்பிரபுத்துவக் கட்சிகளில் எதேனும் ஒன்றினை மட்டுமே தேர்ந்தெடுப்பது, இன்றைய சமூக அமைப்பு என்ற சட்டகத்திற்குள்ளேயே சிறைப்பட்டுக் கிடப்பது என்ற நிலையினை மாற்றியமைக்க வேண்டும். இடதுசாரி மற்றும் ஜனநாயக முன்னணி அமைப்பதற்கான போராட்டம் என்பது இத்தகைய முயற்சிகளின் ஒரு பகுதியேயாகும். இவ்வாறு இடதுசாரி மற்றும் ஜனநாயகச் சக்திகளை ஒன்று திரட்டி முன்னெடுத்துச் செல்வது, பிற்காலத்தில் தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில், மக்கள் ஜனநாயகக் கூட்டணி அமைவதற்கான பங்களிப்பிற்கு உதவும். அவ்வகையில் கட்சி இதனை ஒரு துவக்கமாகக் கருதுகிறது. இடதுசாரி மற்றும் ஜனநாயக முன்னணியினை வெறும் தேர்தல் அணியாகப் புரிந்து கொள்ளக் கூடாது. மக்களின் பொருளாதார அரசியல் ரீதியான உடனடி முன்னேற்றத்தினை உறுதி செய்வதற்காகவும், பொருளாதாரத்தினை தங்களது இறுக்கமான பிடிக்குள் வைத்திருக்கும் பிற்போக்குச் சக்திகளை தனிமைப்படுத்துவதற்காகவும் போராடும் சக்திகளின் முன்னணியே இது என்ற புரிதல் இதில் அவசியம்.
மக்கள் ஜனநாயக முன்னணி என்ற தொலை நோக்குப் பார்வையுடன், அந்த முன்னணிக்கும், இன்றைய இடதுசாரி மற்றும் ஜனநாயக முன்னணிக்கும் உள்ள இணைப்பினை புரிந்து கொள்வதற்கு இந்தத் தீர்மானம் மிகவும் உதவுவதாகும்.
தொழிலாளி வர்க்க ஒற்றுமை மற்றும் அகில இந்திய வெகுஜன அமைப்புகளை உருவாக்குவது குறித்து:
ஒன்றுபட்ட தொழிற்சங்க மேடைகளின் மூலம், தொழிலாளர்களின் ஒற்றுமையினை உருவாக்கும் அம்சம் 1973-74 காலங்களில் முன்னுக்கு வந்தது. அந்தக் காலத்தில், காங்கிரஸ் அரசாங்கங்களின் தொழிலாளர் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக, தொழிலாளர்களின் ஒன்றுபட்டப் போராட்டங்கள் நடைபெறத் தொடங்கின. ஜனசங்கம், ஆர்.எஸ்.எஸ் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்ட தொழிற்சங்கங்களும் இவற்றில் அடங்கும். பி.எம்.எஸ் சங்கத்தினை உள்ளடக்கிய கூட்டு மேடைகளில் சி.ஐ.டி.யு பங்கேற்பதற்கு கட்சிக்குள் எதிர்ப்பு இருந்தது. 10வது மாநாட்டில் இந்தக் கருத்து பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இறுதியில், தொழிலாளர்களை போராட்டங்களில் ஒற்றுமைப்படுத்துவது அவசியம் என்பதால், எந்த அரசியல் கட்சியுடன் இணைக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பொருட்படுத்தாமல், தொழிற்சங்கங்களின் ஒற்றுமையினை உருவாக்க வேண்டும் என மாநாடு உறுதிபட முடிவு செய்தது. விவசாயத் தொழிலாளர்கள், மாதர், வாலிபர் ஆகியோருக்கான வெகுஜன அமைப்புகள் அகில இந்திய அளவில் அமைக்கப்பட வேண்டும் என 1978 சால்கியா பிளீனம் முடிவு செய்தது. 1970ம் ஆண்டிலேயே மாணவர் சங்கம் அமைக்கப்பட்டுவிட்டது. வர்க்க இயக்கங்கள் மற்றும் வெகுஜன இயக்கங்ளை உருவாக்குவது என்ற அரசியல் நடைமுறை உத்திகளை திறம்படச் செயல்படுத்த வேண்டுமெனில், அகில இந்திய அளவில் பரந்து விரிந்த வர்க்க, வெகுஜன அமைப்புகளைக் கட்டுவது மிக அவசியம்.
ஜனதா கட்சியின் பிளவு குறித்து:
1979 வரை ஜனதா கட்சி ஆட்சியில் இருந்தது. ஸ்தாபனக் காங்கிரஸ், ஜனசங்கம், பாரதிய லோக் தளம், சோசலிஸ்டுகள் மற்றும் முன்னாள் காங்கிரஸ்காரர்கள் ஆகியோரை உள்ளடக்கி உருவாக்கப்பட்டதே ஜனதா கட்சி. பழைய ஜனசங்கத்தைச் சேர்ந்தவர்கள் ஆர்.எஸ்.எஸ்-சில் உறுப்பினராகத் தொடர்ந்த நிலையில், இந்த இரட்டை உறுப்பினர் பிரச்சனை பெரிதாகி, இறுதியில் ஜனதா கட்சி பிளவுபட்டது. அத்துடன் அதன் ஆட்சியும் முடிவுக்கு வந்தது.
ஜனதா கட்சியில் இருந்து பிரிந்து வந்த சரண் சிங் அமைத்த அரசாங்கத்தினை சி.பி.ஐ (எம்) ஆதரித்தது. காங்கிரசும் அந்த அரசாங்கத்தினை ஆதரித்தது. ஜனதா கட்சியில் ஏற்பட்ட பிளவு, அதன் மீது நமது கட்சி மேற்கொண்ட நிலைப்பாடு குறித்து நமது கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் உருவாகின. மே.வங்க மாநிலத்தில் ஒரு கணிசமான பகுதியினர், மத்தியக் கமிட்டியின் நிலைப்பாட்டிற்கு எதிராக நிலை எடுத்தனர். 11வது அகில இந்திய மாநாட்டில் இந்தப் பிரச்சனை விவாதிக்கப்பட்டது. மத்தியக் கமிட்டி எடுத்த நிலையே சரியானது என அம்மாநாடு முடிவு செய்தது.
அவசரநிலைக் காலத்திற்குப் பின்னர், நாடு முழுவதும் கட்சியின் தலைமையில், இயக்கங்கள் பெருமளவில் நடைபெற்றன. 1977ம் ஆண்டில் மே.வங்கத்திலும், 1978ம் ஆண்டில் திரிபுராவிலும், இடது முன்னணி அரசாங்கங்கள் அமைக்கப்பட்டன. 1980ம் ஆண்டில், கேரளத்தில் இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் அமைக்கப்பட்டது. 1978ம் ஆண்டில் நடைபெற்ற 10வது அகில இந்திய மாநாடு, ஸ்தாபனம் குறித்த சால்கியா பிளீனம் ஆகியவை உருவாக்கிய தாக்கத்தின் பின்னணியில், கட்சியும் அதன் வெகுஜன அமைப்புகளும் விரிவடைந்தன.
12வது, 13வது அகில இந்திய மாநாடுகள் 12வது மாநாடு நடைபெறும் பின்னணியில், நாட்டில், குறிப்பாக பஞ்சாபிலும், வட கிழக்கிலும், பிரிவினைவாத, பிளவுவாத சக்திகள் தேச ஒற்றுமைக்கு, மிகப்பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திக் கொண்டிருந்தன. இந்த பிளவுவாத சக்திகளுக்கு எதிரான போராட்டத்தில், கட்சித் தோழர்கள் பலர் உயிர்ப்பலி ஆயினர். இந்தப் போராட்டம் குறித்து 12வது மாநாடு மிக முக்கியத்துவம் கொடுத்து விவாதித்தது. இந்திரா காந்தியின் படுகொலைக்குப் பின்னர் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில், காங்கிரஸ் கட்சி மிகப் பெரும் வெற்றி பெற்று, ராஜீவ் காந்தி தலைமையில் ஆட்சி அமைத்தது. புதிய பொருளாதாரக் கொள்கைகள் என்ற பெயரில் அரசு பொருளாதாரத்தினைத் தாராளமயப்படுத்தத் தொடங்கியது. காங்கிரஸ் அரசின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராகவும், பிரிவினைவாத, பிளவுவாதச் சக்திகளுக்கு எதிராகவும் போராடுவதற்கான கடமையினை 12வது மாநாட்டின் அரசியல்-நடைமுறை உத்தி வலியுறுத்தியது.
13வது மாநாட்டில் தான், 11வது மாநாட்டில் குறிப்பிடப்பட்ட வகுப்புவாதம், மற்றும் அடிப்படைவாதம் உருவாக்கும் அபாயம் உரிய முனைப்புடன் முன் வைக்கப்பட்டது. பாபர் மசூதிக் கட்டிடத்தில் இருந்த ராமர் கோவில் பூட்டினைத் திறந்துவிட்டது, ஷா பானு வழக்கினையொட்டி கொண்டுவரப்பட்ட சட்டம் போன்ற, காங்கிரஸ் அரசின் சந்தர்ப்பவாதம் குறித்த வேறு சில பிரச்சினைகளும் முக்கியத்துவத்துடன் முன்வைக்கப்பட்டன.
இடதுசாரி, ஜனநாயக, மதச்சார்பற்ற சக்திகளை ஓரணியில் திரட்ட வேண்டும் என மாநாடு கேட்டுக் கொண்டது. நாட்டினைப் பிளவுபடுத்தும் ஏகாதிபத்தியத்தின் திட்டங்களுக்கு எதிராகவும், பிரிவினைவாத மற்றும் வகுப்புவாத சக்திகளுக்கு எதிராகவும், நாட்டின் ஒற்றுமையினையும் ஒருமைப்பாட்டினையும் பாதுகாக்க வேண்டும் என மாநாடு கேட்டுக் கொண்டது. அதே வேளையில், அடுத்து வரவிருந்த தேர்தல்களில், ராஜீவ் காந்தி அரசினைத் தோற்கடிக்க வேண்டும் என்ற உடனடிக் கடமையினையும் மாநாடு முன்வைத்தது. கட்சி உருவாக்கிய இந்த நடைமுறை உத்தி, மதச்சார்பற்ற பிற பூர்ஷ்வா கட்சிகளை ஒன்றுபடுத்துவதற்கு உதவியது. அதே வேளையில் காங்கிரசுக்கு எதிரான அனைத்துக் கட்சிகளின் அணி என்றில்லாமல், பி.ஜே.பியினைத் தவிர்க்கும் அம்சத்தினையும் இந்த உத்தி உள்ளடக்கியிருந்தது.
வி.பி சிங் காங்கிரசை எதிர்த்தெழுந்த நிலையில் ஜனதா தளம் உருவானது. காங்கிரஸ் மற்றும் பி.ஜே.பி அல்லாத பல கட்சிகளை உள்ளடக்கி உருவான தேசிய முன்னணியினை நமது கட்சி ஆதரித்தது. இருப்பினும், காங்கிரசுக்கு எதிரான அனைவரின் ஒற்றுமை என்ற பெயரில், பிற கட்சிகள் பி.ஜே.பியுடன் உடன்பாடு காணும் முயற்சிகளுக்கு எதிராக போராட வேண்டியிருந்தது. 1989 தேர்தலுக்குப் பின்னர் சி.பி.ஐ (எம்) மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவுடன் தான் வி.பி. சிங் அரசாங்கம் அமைக்க முடிந்தது. பி.ஜே.பி அரசாங்கத்தில் பங்கு பெற இயலவில்லை. அதை வெளியிலிருந்து ஆதரிக்க வேண்டியிருந்தது.
மேலோங்கி வரும் வகுப்புவாத அபாயம்
காங்கிரஸ் மீதான அதிருப்தியைப் பயன்படுத்தி பி.ஜே.பி தன்னை வலுப்படுத்திக் கொள்ள முடிந்தது. 1989 தேர்தல்களில் அது முதல் முறையாக 85 இடங்களைப் பெற்றது. ஆர்.எஸ்.எஸ்-சின் பின் பலத்துடன், அது இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை கையில் எடுத்துக் கொண்டது. அத்வானியின் ரதயாத்திரையின் போது பெருமளவில் வன்முறை நடந்தேறியது. ரதயாத்திரை தடுத்து நிறுத்தப்பட்டு, அத்வானி கைது செய்யப்பட்ட போது, வி.பி.சிங் அரசிற்கான தனது ஆதரவினை பி.ஜே.பி விலக்கிக் கொண்டது. அதையடுத்து வி.பி. சிங் அரசு நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டு பதவி விலகியது. பி.ஜே.பியும் காங்கிரசும் இதில் சேர்ந்தே வாக்களித்தன.
1991 மே மாதம் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்ற காலத்தில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். பெரும்பான்மை இடங்களைப் பெற முடியாவிட்டாலும், உருவான அனுதாப அலை காரணமாக காங்கிரஸ் முதற் பெரும் கட்சியாக வந்தது. நரசிம்ம ராவ் பிரதமராகப் பதவி ஏற்றார். பி.ஜே.பி சுமார் 100 இடங்களுடன் முதற் பெரும் எதிர்க் கட்சியாக மாறியது.
14வது அகில இந்திய மாநாடு
உலகில் பல அதிரடியான மாற்றங்கள் நடைபெற்று வந்த காலத்தில், 1992 மே மாதம் கட்சியின் 14வது அகில இந்திய மாநாடு நடைபெற்றது. கிழக்கு ஐரோப்பாவில் இருந்த சோசலிஸ்ட் அரசாங்கங்கள் வீழ்ந்துவிட்டன. சோவியத் யூனியன் சிதைந்த நிலையில், சோசலிச அமைப்பு உருக்குலைந்து போனது. சர்வதேச அளவில் வர்க்கப் பலாபலன் ஏகாதிபத்தியத்திற்கு சாதகமாக மாறிப்போய்விட்டது. எனினும், நமது கட்சி மார்க்சிய லெனினியத்தில் உள்ள தனது நம் பிக்கையினை மீண்டும் உறுதிப்படுத்தியது.
மார்க்சிய லெனினியத்தின் மதிப்பும் மாண்பும் என்றும் பொருத்தமானதாகத் தொடர்கின்ற ஒன்று என்ற அடிப்படையில், சில தத்துவார்த்தப் பிரச்சனைகள் என்ற தலைப்பில் மாநாடு தீர்மானம் ஒன்றினை ஏற்றது. அதன் அடிப்படையில் இந்தத் தத்துவம் குறித்த புரிதலிலும், கணிப்பிலும் நம்மை மறுதகவமைத்துக் கொண்டு பயணத்தைத் தொடர்வது என கட்சி முடிவு செய்தது. அது வரை, சோசலிசம் ஒரு தீர்மானகரமான சக்தியாக மாறி வருகிறது என்ற புரிதலிலேயே இயங்கி வந்தது.
சர்வதேச வர்க்கப் பலா பலன்களில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் குறித்த கணிப்பின் பின்னணியில், ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடும் தேவை குறித்து, 14வது மாநாடு திசை வழி காட்டியது. சோசலிசத்தைக் கட்டுவதில் ஏற்பட்ட அனுபவம் குறித்தும் மாநாடு பரிசீலனை செய்தது. தேசிய நிலைமைகளிலும் கூட, இந்திய ஆளும் வர்க்கங்கள் தங்களது திசை வழிகளை மாற்றிக் கொண்டுவிட்டன. சர்வதேச நிதி மூலதனத்தின் நிர்ப்பந்தங்களின் பின்னணியில், காங்கிரஸ் அரசு தாரளமயமாக்கல், தனியார்மயமாக்கல் கொள்கைகளை கடைப்பிடிக்கத் தொடங்கிவிட்டது. இந்தக் கொள்கைகளுக்கு எதிராக மக்களை பெருமளவு திரட்டுவதன் மூலம் எதிர்ப்பு இயக்கங்களை உருவாக்க வேண்டும் என மாநாடு கேட்டுக் கொண்டது. மக்களவையில் 119 இடங்களைப் பெற்று, பி.ஜே.பி பெருமளவு ஆதாயம் அடைந்திருக்கிறது. உத்தரப்பிரதேசம் உட்பட நான்கு மாநிலங்களில் அது வெற்றி பெற்றிருக்கிறது. பி.ஜே.பி மற்றும் இந்துத்துவா சக்திகளினால் உருவாகும் அபாயம் வளர்ந்து வருவது குறித்து எச்சரித்த தீர்மானம், எதேச்சதிகாரப் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் வகுப்புவாதம் என்ற இரட்டை அபாயங்களுக்கு எதிராகப் போராட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டது. நாட்டில் நிலவும் திட்டவட்டமான சூழ்நிலையினைக் கணக்கில் கொண்ட நிலையில், இடதுசாரி, ஜனநாயக, மதச்சார்பற்ற சக்திகளின் ஒற்றுமையினை உருவாக்க வேண்டும் எனவும், அதே வேளையில், இடது மற்றும் ஜனநாயக முன்னணியினைக் கட்டும் பணியில், தொழிலாளி வர்க்கத் தினையும், பிற உழைப்பாளி மக்கள் பிரிவினரை ஈடுபடுத்த வேண்டும் எனவும் கட்சி கேட்டுக் கொண்டது.
இடதுசாரி மற்றும் மதச்சார்பற்ற சக்திகளின் பரந்த ஒற்றுமையினைக் கட்டுவது குறித்து:
14வது மாநாட்டினையடுத்து, 15வது மாநாட்டில் உருவான அரசியல் – நடைமுறை உத்தி, காங்கிரஸ் மற்றும் பி.ஜே.பி ஆகிய இரண்டு கட்சிகளையும் எதிர்த்துப் போராட வேண்டிய தேவையினையும், இடதுசாரி, ஜனநாயக, மதச் சார்பற்ற சக்திகளின் ஒற்றுமையினைக் கட்ட வேண்டிய தேவையினையும் வலியுறுத்தியது. இந்த உத்தியின் அமலாக்கத்தில் உருவானது தான் 1996 ஐக்கிய முன்னணி அரசு. காங்கிரஸ் கட்சி தோல்வியுற்ற நிலையில், பி.ஜே.பி அதிக எண்ணிக்கை உள்ள தனிக் கட்சியாக வந்தது. தேர்தல்களுக்குப் பின்னர், காங்கிரஸ் அல்லாத மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு ஐக்கிய முன்னணி உருவாக்கப்பட்டது. தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் அரசு அமைப்பதற்கு அழைக்கப்பட்ட பி.ஜே.பி தனது பெரும்பான்மையினை நிரூபிக்க முடியாத நிலையில் 13 நாட்கள் ஆட்சி செய்து விட்டு, பதவி விலகியது. அதற்குப் பின்னர் ஐக்கிய முன்னணி அரசு பதவியேற்றது. காங்கிரஸ் கட்சி அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்தது.
ஐக்கிய முன்னணி அரசாங்கம்
ஐக்கிய முன்னணியில் இடம் பெற்றிருந்த காங்கிரஸ் அல்லாத கட்சிகள் ஜோதி பாசுவை பிரதமர் ஆக்க வேண்டும் என முன்மொழிந்தன. இந்த வேண்டுகோளை ஏற்றுக் கொள்வதில்லை எனவும், அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளிப்பது எனவும் மத்தியக் கமிட்டி முடிவு செய்தது. இது குறித்து கட்சிக்குள் சில கருத்து வேறுபாடுகள் தோன்றின. கட்சியில் ஒரு பகுதியினர் ஜோதி பாசுவை பிரதமராகக் கொண்டு கட்சி அரசாங்கத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கருதினர். 1998ம் ஆண்டில் நடைபெற்ற கட்சியின் 16வது அகில இந்திய மாநாட்டில் மத்தியக் கமிட்டியின் இந்த முடிவு பரிசீலனை செய்யப்பட்டது. விவாதத்திற்குப் பின்னர், அரசாங்கத்தில் பங்கேற்பதில்லை என்ற மத்தியக் கமிட்டியின் நிலை சரியானது என முடிவு செய்தது.
1998ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி தனது ஆதரவினை விலக்கிக் கொண்டதையடுத்து ஐக்கிய முன்னணி அரசு கவிழ்ந்தது. 1998ம் ஆண்டிலும், 1999ம் ஆண்டிலும் நடைபெற்ற தேர்தல்களில் பி.ஜே.பி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் அமைக்கப்பட்டது. சில மதச்சார்பற்ற பூர்ஷ்வாக் கட்சிகளும், பிராந்தியக் கட்சிகளும் தே.ஜ.கூட்டணியில் சேர்ந்து கொண்டன. அவற்றில் சில கட்சிகள், பின்னர் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இணைந்தனர்.
பி.ஜே.பி தலைமையிலான அரசாங்கம்
காங்கிரஸ் கட்சியினையும் அதன் கொள்கைகளையும் எதிர்க்கும் அதே வேளையில், பி.ஜே.பி மற்றும் வகுப்புவாத சக்திகளை முறியடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்ட 18வது அகில இந்திய மாநாடு அதற்குப் பொருத்தமான அரசியல்-நடைமுறை உத்தியினை உருவாக்கியது. ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு கட்சி மத்திய அரசாங்கத்தில் இருக்கும் போது உருவாகும் அபாயத்தினை மாநாடு முன்னிலைப்படுத்தியது. பி.ஜே.பி அரசாங்கம் கடைப்பிடிக்கும் நவீன-தாராளவாதக் கொள்கைகளை எதிர்த்துப் போராடும் வகையிலும் அந்த நடைமுறை உத்தி வடிவமைக்கப்பட்டது. வாஜ்பாய் அரசாங்கத்தின் அமெரிக்க ஏகாதிபத்திய வெளியுறவுக் கொள்கைகளுக்கு எதிராக மக்களைத் திரட்ட வேண்டும் என கட்சி கேட்டுக் கொண்டது. நரசிம்ம ராவ் காலத்தில் மாற்றம் செய்யப்பட்ட வெளியுறவுக் கொள்கை தே.ஜ.கூ அரசின் காலத்தில் கூடுதல் அழுத்தம் பெற்றது. காங்கிரஸ் மற்றும் பிற பூர்ஷ்வாக் கட்சிகளின் பின்னால் திரண்டிருக்கும் மக்களை வகுப்புவாதச் சக்திகளுக்கு எதிரான போராட்டத்தில் இணைக்க வேண்டும் என கட்சி கேட்டுக் கொண்டது. தனியார்மயத்திற்கு எதிராகவும், பொருளாதாரத் தினை உலக வர்த்தக அமைப்பிற்கு உட்படுத்துவதற்கு எதிராகவும், விரிவடைந்து வரும் விவசாய நெருக்கடிக்கு எதிராகவும், நமது கட்சியும், இடதுசாரி மற்றும் ஜனநாயகச் சக்திகளும் பல போராட்டங்களை இக்காலத்தில் நடத்தின.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கமும் நமது அணுகுமுறையும்
அரசியல் நடைமுறை உத்தியின் அடிப்படையில், 2004 நாடாளுமன்றத் தேர்தல்களுக்கான உத்தி உருவாக்கப்பட்டது. பி.ஜே.பி அரசாங்கத்தினைத் தோற்கடிப்பது, மத்தியில் மதச்சார்பற்ற அரசினை அமைப்பது, இடதுசாரி மற்றும் ஜனநாயகச் சக்திகளை பலப்படுத்துவது என்பதே கட்சியின் முடிவு. தே.ஜ.கூட்டணி தேர்தல்களில் தோற்கடிக்கப்பட்டது. காங்கிரஸ் பெரும் எண்ணிக்கையில் இடங்களைப் பெற்று முதல் இடத்தினை வகித்தது. 60 இடங்களில் வெற்றி பெற்றிருந்த இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவுடன் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் அமைந்தது. நமது கட்சி வெளியிலிருந்து ஆதரவு அளிப்பது என முடிவு செய்தது. குறைந்தபட்ச பொதுத் திட்டத்தில் வாக்குறுதி அளிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் அம்சங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் கட்சி வலியுறுத்தியது.
2005 ஏப்ரல் மாதத்தில் கட்சி யின் 18வது அகில இந்திய மாநாடு நடைபெற்றது.
இம்மாநாட்டில் முடிவு செய்யப்பட்ட அரசியல் – நடைமுறை உத்தி:
- வகுப்புவாதத்திற்கு எதிராக அனைத்து வகைகளிலும் போராடுவது,
- மத்திய அரசின் நாசகரப் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராகவும், மாற்றுக் கொள்கைகளுக்காகவும் வலுவான இயக்கத்தினை உருவாக்குவது,
- உலக அளவிலான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்புகள், நம் நாட்டில் ஏகாதிபத்தியத்தின் ஊடுருவல் ஆகியவற்றிற்கு எதிராகப் போராடுவது,
- நாடு முழுவதும் உள்ள இடது சாரி ஜனநாயக சக்திகளை பலப்படுத்து வது, – என்ற நான்கு முக்கிய அம்சங்களை உள்ளடக்கியதாக இருந்தது.
ஐ.மு.கூ அரசாங்கம் குறித்த கட்சியின் அணுகு முறையினை மாநாடு தெளிவுபடுத்தியது. கட்சியின் சுதந்திரமான பாதை, அரசாங்கத்தின் நவீன தாராளவாதக் கொள்கைகளுக்கு எதிராக உருவாக்க வேண்டிய இயக்கங்கள் மற்றும் போராட்டங்கள், மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் நட வடிக்கைகளை விரைவு படுத்துவதற்கான முயற்சி கள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் மாநாடு வலியுறுத்தியது.
கட்சியின் அரசியல் தீர்மானம் பின்வருமாறு கூறியது:
கட்சி வகிக்கும் சுதந்திரமான பாத்திரம் என்பது குறைந்த பட்சப் பொதுத் திட்டம், மற்றும் அதன் அமலாக்கப் பிரச்சனைகளுடன் மட்டுமே சுருங்கி நின்று விடுவதல்ல. கட்சி முடிவு செய்துள்ள இடதுசாரி மற்றும் ஜனநாயகத் திட்டத்தின் கோரிக்கைகளைக் கையில் எடுக்க வேண்டும். நிலம், ஊதியங்கள், தொழிலாளி வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகள் ஆகிய பிரச்சனைகளில் போராட்டங்களை நடத்த வேண்டும். அடிப்படை வர்க்கங்களின் பிரச்சனை களுக்காக வாதாடவும், போராடவும் வேண்டும். இந்தப் பிரச்சனகளை எல்லாம் நாம் எடுக்க வில்லை என்றால், அது கட்சியின் சுதந்திரமான பாத்திரத்திற்கு ஊறு விளைவிப்பதாகும். இடது சாரி மற்றும் ஜனநாயக சக்திகளை பலவீனப்படுத்துவதுமாகும். (பாரா – 2.71)
18வது அகில இந்திய மாநாட்டின் அரசியல் நடைமுறை உத்திகளில், சமூகப் பிரச்சனைகளை கையில் எடுக்க வேண்டிய தேவை முக்கிய இடம் வகிக்கிறது. சாதிய ஒடுக்குமுறைக்கு ஆளாகும் தலித் மக்களின் பாதிப்புகள் குறித்த சமூகப் பிரச்சனைகளை கட்சி நேரடியாகக் கையில் எடுக்க வேண்டும். அதே போன்று, பெண் சமத் துவம், பாலின நீதி போன்ற பிரச்சனைகளிலும், தங்களது உரிமைகளுக்காகவும், பிற்போக்கான சமூகப் பழக்க வழக்கங்கள் மற்றும் நிலவுடைமைச் சமுதாய நியமங்களுக்கு எதிராகவும் பழங்குடி மக்கள் நடத்தும் போராட்டங்களிலும் கட்சியின் நேரடித் தலையீடு தேவை என கட்சி வலியுறுத்தியது. சாதிய அரசியல், அடையாள அரசியல் போன்றவற்றிற்கு எதிரான போராட் டங்களும், இவற்றுடன் இணைந்தவையே. ஏகாதிபத்தியம் மற்றும் நவீன தாரளவாதக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டம் ஐ.மு.கூ அரசு அமெரிக்காவுடன் கேந்திர உறவு கொள்ளும் நடவடிக்கைகளில் வேகமாக இறங் கியது. பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம், கேந்திர பொருளாதாரக் கூட்டு, இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தம் அனைத்தும் இதன் பகுதியேயாகும். அமெரிக்காவுடன் மென்மேலும் அதிகமாக இராணுவ உறவு கொள்வதை கட்சி கடுமையாக எதிர்த்தது. இறுதியாக, இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தம் கையெழுத்தான பின்னணியில், 2008 ஜூலை மாதத்தில், நமது கட்சி ஐ.மு.கூ அரசிற்கான ஆதரவினைத் திரும்பப் பெற்றுக் கொண்டது. அமெரிக்காவினையும், சர்வதேச நிதி மூல தனத்தினையும் திருப்திப் படுத்துவதற்காக பல நவீன தாராளவாதக் கொள்கைகளை ஐ.மு.கூ அரசு வேகவேகமாக நிறைவேற்றியது.
இவை அனைத்தும் அதனுடைய பின்னணியில் நிகழ்ந் தவையே. 19வது மாநாடு வகுத்த அரசியல் நடை முறை உத்திகள் குறித்து 20வது மாநாடு விவாதித் தது. ஐ.மு.கூ அரசிற்கு அளித்த ஆதரவினைத் திரும்பப் பெற்றது சரியே என மாநாடு முடிவு செய்தது. ஆனால், இந்தியா அணு உலை பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக சர்வ தேச அணு சக்தி கமிஷனுக்குப் போவது என்று முடிவு செய்தவுடனேயே ஆதரவினை விலக்கி யிருந்தால் ஒருவேளை அணு ஒப்பந்தத்தினைத் தடுத்திருக்க முடியும் என மாநாடு கருதியது. ஐக்கிய முன்னணி உத்திகள் கட்சியின் வளர்ச்சிக்கு ஐக்கிய முன்னணி உத்திகள் தேவைப்படுகின்றன. சரியான உத்திகளைப் பயன்படுத்தும் பட்சத்தில், பூர்ஷ்வாக் கட்சிகளின் செல்வாக்குப் பிடியில் இருக்கும் மக்களை நாம் அணுக முடியும்; சிலரை நம் பக்கம் வென்றெடுக்க வும் முடியும். கட்சியின் சுதந்திரமான நடவடிக்கைகள், ஐக்கிய முன்னணி உத்திகள் ஆகிய இரண் டுமே கட்சியின் விரிவாக்கத்திற்கு உதவுகின்றவை என்பதைக் கணக்கில் கொண்டு கட்சி செயல்பட வேண்டியுள்ளது. கட்சியின் 17வது அகில இந்திய மாநாடு, ஐக்கிய முன்னணி உத்திகள் தொடர்பான ஒரு திறனாய்வில் ஈடுபட்டது. மே.வங்கம், கேரளா, திரிபுரா மாநிலங்களைத் தாண்டி, கட்சியின் பொதுவான செல்வாக்கு ஏன் உயரவில்லை என்பது குறித்த விவாதத்தின் ஒரு பகுதியாக இது நடத்தப்பட்டது.
1977ம் ஆண்டிற்குப் பின்னரும், 10வது அகில இந்திய மாநாட்டிற்குப் பின்னரும், பல மாநிலங் களில் உள்ள பூர்ஷ்வா நிலப்பிரபுத்துவக் கட்சி களுடன் ஐக்கிய முன்னணி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறோம். அத்தகைய நேரங்களில், குறிப்பாக தேர்தல்களில் காங்கிரசையோ அல்லது பி.ஜே.பியினையோ தோற்கடிப்பது என்ற உடனடித் தேவைக்கு அவை பயன்பட்டிருக்கின்றன. அதே வேளையில், நீண்ட கால உறவு களில் பல குறைபாடுகள், விலகல்களையும் சந் திக்க வேண்டியிருந்தது. அவைகள் பரிசீலனையில் குறிப்பிடப்பட்டன. எடுத்துக்காட்டாக, இக்கட்சிகளுடன் உறவு குறித்து 14வது மாநாட்டின் அரசியல்-ஸ்தாபன அறிக்கையில் கண்டுள்ள சில அம்சங்கள், இந்தப் பரிசீலனையில் பொருத்தமாகச் சுட்டிக் காட்டப் பட்டுள்ளது. அவை பின் வருமாறு: ஆனால், கடந்த காலங்களில் நமக்கு ஏற்பட்டி ருக்கும் அனுபவங்களின் அடிப்படையில், இந்த பலவீனங்களை முறியடிக்க வேண்டியுள்ளது. எப்போது அவர்களிடமிருந்து விலகி நிற்க வேண்டுமோ, அப்போதே அதைச் செய்வ தில்லை. ஒற்றுமை என்ற பெயரில், நமது கருத்து வேறுபாடுகளை சற்று உரத்துச் சொல்லத் தவறி விடுகிறோம். ஏதோ ஒரு வகையில் நாடாளு மன்றச் சந்தர்ப்பவாதத்திற்கு பலியாகிவிடுகிறோம்.
தேர்தல்கள், நமது கருத்துக்களையும், கொள்கைகளையும் மக்களிடம் தெளிவாக எடுத்துச் சொல்லும் வாய்ப்பினைத் தருகின்றன. ஆனால், இதையும் கூட சில சமயங்களில் தவற விட்டு விடுகிறோம். நாம் பலமாக இல்லாத சில பகுதிகளில், எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டுமென்ற பதற்ற நிலையிலிருந்து, நமது அணியினரை கூட்டாளிக் கட்சிகளின் கைகளில் ஒப்படைத்து விடுகிறோம். 1977க்கு முன்பு நாம் தனியாக தேர்தல்களைச் சந்தித்த போது நமது நடவடிக்கைகளை ஆய்வு செய்தோம் என்றால், நாம் பல்வேறு பகுதிகளில் நமது செல்வாக்கினை விரிவு படுத்த முடிந்ததை உணர முடியும்.
அவசர நிலைக்குப் பின்னர், எதேச்சதிகாரத்திற்கு எதி ராக பூர்ஷ்வா நிலப்பிரபுத்துவக் கட்சிகளுடன் உறவு கொள்ள வேண்டியது அவசியமானது. ஆனால், ஒரு சரியான புரிந்துணர்விற்கு வருவதற் குப் பதிலாக, அவர்கள் பல இடங்களில் நமக்கு உத்தரவு போடத் தொடங்கிவிட்டனர். இந்த அணுகுமுறை நமது செல்வாக்கில் உள்ள மக் களை நமது கட்சிக்கும், இடதுசாரிக் கட்சிகளுக் கும் பின்னால் அணி திரட்டுவதற்குப் பதிலாக, இந்தக் கட்சிகளுக்கு இரையாக்க வேண்டிய நிலை நேர்கிறது. சில பிரச்சனைகளில் ஒன்று பட்ட இயக்கங்கள் நடத்துகின்ற போது, நாம் வேறுபடும் அம்சங்களில் நம்மை வேறுபடுத்திக் காட்டிக் கொள்ளவில்லை எனில், நமது மக்கள் தளத்தினை நாம் இழந்து விடுவோம். இந்த பல வீனம் களையப்பட வேண்டும்.
பிற கட்சிகளுடன் சேர்ந்து செயல்படும் போது, கூடுதல் கவனம் தேவை. சமரசம் செய்ய நேரும் போது கூட, நமது வர்க்கக் கண்ணோட்டம் மற்றும் சித்தாந்த நிலைகளில் எவ்வித சமரசமும் கூடாது. சர்வ தேச கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஏற்பட்டிருக்கும் போக்குகள், சரிவுகள், பின்னடைவுகளின் பின்ன ணியில் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக் கப்பட வேண்டும். இடதுசாரி சக்திகளில் முதன்மை இடம் வகிக்கும் நமது கட்சிக்கு இதில் கூடுதல் முனைப்பு தேவை. பூர்ஷ்வா-நிலப் பிரபுத்துவக் கட்சிகளின் தத்துவார்த்தப் பிடியி லிருந்து மக்களை விடுவிக்கும் வகையில், வெகுஜன இயக்கங்களைக் கட்டுவதும், உயர் தள அரசியல் தத்துவார்த்தப் போராட்டங்களை நடத்துவதும் நமது கடமையாகிறது.
கட்சியின் சுயேச்சையான பாத்திரம் மற்றும் நடவடிக்கைகள், ஐக்கிய முன்னணி தந்திரங்கள் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்த சரியான கண்ணோட்டம் இந்தப் பரிசீலனையில் பின் வருமாறு குறிப்பிடப்பட்டிருக்கிறது: இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகளின் ஒற்றுமை, இடதுசாரி மற்றும் ஜனநாயக முன் னணியைக் கட்டுதல் ஆகியவை பற்றிய செயல் திட்டம் வகுக்கப்பட்டு விட்டது. இந்நிலையில், 10வது அகில இந்திய மாநாட்டிலிருந்து தொடர்ந்து வந்திருக்கும் அரசியல்-நடைமுறை உத்திகள், இவை குறித்து சரியாகவே வலியுறுத்து கின்றன. எதேச்சதிகார அபாயத்தினை எதிர்த்த போராட்டம், காங்கிரசைத் தோற்கடித்து அதனுடைய ஏகபோகத்தை முறியடிப்பது, பி.ஜே.பி யினை தனிமைப்படுத்துவது, தற்போது ஆட்சியில் இருக்கும் பி.ஜே.பியினை தோற்கடிப்பது – இவையெல்லாம் ஒவ்வொரு காலத்திலும் மாறி மாறி வந்திருக்கின்ற உடனடிக் கடமைகள். இந்தக் கடமைகளை நிறைவேற்றுவதற்கும், மூன் றாவது மாற்று உருவாக்குவதற்கும், இடதுசாரி, ஜனநாயக,மதச்சார்பற்ற சக்திகளின் பரந்த ஒற்றுமை தேவைப்பட்டது. இது பூர்ஷ்வாக் கட்சிகளுடன் அணி சேர்க்கைக்கான தேவை யினை உருவாக்கியது. நடப்புச் சூழ்நிலையின் தேவைகளினால் உரு வாகும் உடனடி அரசியல் மற்றும் தேர்தல் கட மைகள் ஒரு புறம். அதற்குச் சமமான முக்கியத்துவத்துடன் கட்சியின் சுயேச்சையான செயல் பாடுகளை மேம்படுத்துவது, இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகளின் போராட்டங்களை பலப் படுத்துவது என்ற அரசியல் நடைமுறை உத்தி கள் உருவாக்கிக் கொடுத்திருக்கும் அடிப்படைக் கடமை மறு புறம். நமது வேலை முறைகளின் காரணமாக, இவற்றிற்கு இடையிலான இணைப்பு நடைமுறையில் துண்டிக்கப்பட்டிருக் கிறது. தொடர்ந்து வந்திருக்கும் அரசியல் நடை முறை உத்திகள் கட்சியின் சுயேச்சையான பலத்தை அதிகரிப்பதையும், இடதுசாரி மற்றும் ஜனநாயக முன்னணியினைக் கட்டுவதையும் முக்கிய கடமைகளாக முன் வைத்திருக்கின்றன. எதேச்சதிகாரத்தினையும் வகுப்புவாதத்தினையும் எதிர்த்துப் போராடுவது என்பது இடதுசாரி மற்றும் ஜனநாயக முன்னணியின் முன்னேற்றத் திற்கு வழி வகுப்பது என்ற அடிப்படைக் கடமை யினை நிறைவேற்றுவதற்காகவே. அரசியல், தத்துவார்த்தத் தளங்களிலும், கட்சி ஸ்தாபனத்தைக் கட்டி வளர்ப்பதிலும் நமது சுயேச்சையான நடவடிக்கைகள் தொடர்ந்து விரிவடையாமல், இடதுசாரி சக்திகளை பலப் படுத்துவதும், அதன் மூலமாக இடதுசாரி மற்றும் ஜனநாயக முன்னணியினைக் கட்டும் திசை நோக்கிச் செல்வதும் சாத்தியமல்ல. எனவே, கட்சியின் சுயேச்சையான நடவடிக் கைகளும், இடதுசாரி மற்றும் ஜனநாயக முன்னணிக் கருத்தாக்கத்தினை முன்னிறுத்துவதும், முன்னணியைக் கட்டுவதும் ஒன்றோடு ஒன்று இணைந்து நடைபெற வேண்டும்.
ஐக்கிய முன்னணி உத்திகள் குறித்த சரியான அணுகுமுறையினை அந்தப் பரிசீலனை அறிக்கை பின்வருமாறு தொகுத்து அளிக்கிறது:
- கட்சியின் சுயேச்சையான நடவடிக் கைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண் டும். இது நிறைவேற்றப்பட வேண்டு மெனில், அரசியல், தத்துவார்த்த, ஸ்தா பனத் தளங்களில் நமது பணி அதிகரிக்க வேண்டும்.
- இத்துடன், போராட்டங்களை யும், இயக்கங்களையும் கட்டும் நோக்கில் 17வது மாநாட்டில் நாம் நிறைவேற்றிய இடதுசாரி மற்றும் ஜனநாயகத் திட்டத் தின் கோரிக்கைகளையும் முன்னிறுத்த வேண்டும். போராட்டங்களைக் கட்டும் போது, அடிமட்டத்திலிருந்தும், ஸ்தல மட்டத்திலிருந்தும் அது தொடங்குவதை உறுதி செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் தான் அது இறுதி வரை நீடித்து நிற்கும். இதைச் செய்வதற்கு ஸ்தல மட் டத்தில் உள்ள நிலைமைகளை சரியாகக் கண்டறிதல் அவசியம்.
- அரசியல் பிரச்சாரங்கள் மற்றும் வெகுஜனப் போராட்டங்கள் மூலம், இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகளை பலப்படுத்துவதில் அதிக அழுத்தம் தேவை. இடதுசாரி மற்றும் ஜனநாயக அணி என்பது ஒரு தேர்தல் அணியே என்ற பொதுவான மனநிலையிலிருந்து முதலில் விடுபட வேண்டும்.
- குறிப்பிட்ட காலங்களில், குறிப் பிட்ட உத்திகளின் தேவைகளுக்குத் தகுந் தாற் போல், பூர்ஷ்வா மற்றும் குட்டி பூர்ஷ் வாக் கட்சிகளுடன் ஐக்கிய முன்னணி உத்தி களை பயன்படுத்த வேண்டும். இதிலும் கூட மக்கள் பிரச்சனைகளில் கூட்டுப் போராட்டங்களுக்காகவும், பரஸ்பரம் உடன்படு கின்ற அரசியல் பிரச்சனைகளில் அரசியல் பிரச்சாரங்களுக்காகவுமே நமது அழுத்தம் இருக்க வேண்டும். இதன் மூலம் தான் அவர்களது செல்வாக்கில் உள்ள மக்களை அணுகுவதற்கான வாய்ப்பினைப் பெற முடியும். கூட்டு மேடைகளில் கூட, நமது நிலைக்குப் பொருந்தாத தவறான கருத்துக் களை அந்தக் கட்சிகள் முன் வைக்கும் போது, அவற்றிலிருந்து நாம் விலகி நிற்கி றோம் என்பதைக் காட்டிக் கொள்ள வேண்டும். கூட்டு மேடைகள் மற்றும் சுயேச்சையான நடவடிக்கைகள் குறித்த உத்திகளை சரியாக அமலாக்க வேண்டும்.
- தேர்தல் உத்திகளைப் பொறுத்த மட்டில் தொகுதி உடன்பாடுகள், அணிகள் என மாறி மாறி பல ஏற்பாடுகள் நடந்து கொண்டே இருக்கும். அவற்றையெல்லாம் நிரந்தரமான ஐக்கிய முன்னணியாகப் புரிந்து கொள்ளக் கூடாது. அது நமது சுயேச்சையான நடவடிக்கைகளுக்கும், கொள்கைகள் மற்றும் அரசியல் பிரச்சனை களில் நமது சுதந்திரமான நிலைக்கும் எதிரானதாகும். தேர்தலில் நாம் கூட்டாக நின்று ஆதரித்த கட்சி மாநிலத்தில் அர சாங்கம் அமைக்கக் கூடும். ஆனாலும், அந்த அரசாங்கத்தின் தவறான கொள்கை களை எதிர்ப்பதில் நமக்கு எவ்விதத் தயக்க மும் இருக்கக் கூடாது. அவற்றுக்கு எதி ரான போராட்டத்தில் நாம் மக்களுடன் கைகோர்த்து நிற்க வேண்டும்.
- (6) அனைத்து அடிப்படை அரசியல் மற்றும் தத்துவார்த்தப் பிரச்சனைகள் குறித்தும், அரசியல் தலைமைக் குழுவும் மத்திய கமிட்டியும் கட்சி அணியினரைத் தெளிவு படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். வகுப்புவாதக் கட்சிகள், பிற பூர்ஷ்வாக் கட்சிகளுக்கும், இடதுசாரிக் கட்சிகளுக்கும் இடையிலான வித்தியாசத் தினை மக்களிடம் கொண்டு செல்வதற்கு இது மிகவும் அவசியம்.
சுயவிமர்சனமான இந்த பரிசீலனையின் பின்னணியில், அரசியல் தலைமைக்குழு, மத்திய கமிட்டி, மாநிலக் குழுக்கள் தங்களது சொந்த அணுகுமுறை, நடைமுறைகள் குறித்து பரிசீ லனை செய்து கட்சி முழுவதையும் சரியாக திசை வழிப்படுத்த வேண்டும். ஒரு வலுவான இடதுசாரி இயக்கத்தினையும், இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகளையும் பலப்படுத்தி ஒரு உண்மையான மாற்று அரசியல் சக்தியாக முன்னிறுத்தும் தேவை மேலோங்கியுள்ளது. நமது கட்சிதான் அத்தகைய சக்தியின் மையப்புள்ளியாக இருக்க முடியும். அப்படி இருக்க வேண்டும் எனில் போராடுவது மட்டுமல்லாது, அனைத்து வகையிலும் தன்னைத் தயார் நிலையில் வைத் திருக்கும் பலமான கட்சியாக நமது கட்சி உருப் பெற வேண்டும்.
கட்சிகளின் குணாம்சங்கள்
பல்வேறு ஆளும் வர்க்கக் கட்சிகள், பூர்ஷ்வா மற்றும் குட்டி பூர்ஷ்வாக் கட்சிகளின் பங்கு குறித்து நிர்ணயம் செய்வது அரசியல் நடை முறை உத்திகளின் ஒரு முக்கிய அம்சமாகும். கட்சித் திட்டத்தின் அடிப்படையில், பூர்ஷ்வா நிலப்பிரபுத்துவ வர்க்கங்களை, அதாவது, ஆளும் வர்க்கங்களை, பிரதிநிதித்துவப்படுத்தும் சில கட்சிகள் உள்ளன. தற்போது, காங்கிரசும், பி.ஜே.பி.யுமே அவ்வகையில் இரண்டு பெரிய கட்சிகள். பிற கட்சிகள், குறிப்பாக ஆளும் வர்க்கக் கட்சி கள் குறித்தும் கம்யூனிஸ்ட் கட்சி மதிப்பீடு செய்ய வேண்டியுள்ளது. ஒவ்வொன்றும் இன்றைய திட்டவட்டமான சூழ்நிலையில், என்ன பாத்திரத் தினை வகிக்கின்றன என்பது நமக்குத் தெரிந் திருக்க வேண்டும். தனிமைப் படுத்துவது, முறியடிப்பது என்ற நோக்கில், எது அதிகமான தீய சக்தி என்பதனை அடையாளம் காண வேண்டும். அத்தகைய தீய சக்திகளுக்கு எதிராக, எந்தக் கட்சிகளுடன் ஒன்று பட்டு அணி சேர்ந்து நிற்க லாம் என்பதனைத் தீர்மானிப்பதற்கும் இது மிகவும் அவசியம். ஆளும் வர்க்கங்களை பிரநிதித்துவப் படுத் தும் அகில இந்திய கட்சிகளைத் தவிர தத்தம் மாநிலங்களில் பூர்ஷ்வா-நிலப்பிரபுத்துவ நலன் களைப் பிரநிதித்துவப்படுத்தும் பிரதேசக் கட்சிகளும் இருக்கின்றன.
அகில இந்தியக் கட்சி களுடன் இவை முரண்படுவதும் உண்டு. ஒத்துழைப்பதும் உண்டு. ஒரு குறிப்பிட்ட காலத்தில் இந்தக் கட்சிகள் வகிக்கும் பாத்திரத்தினைப் பொறுத்தே, அவை கள் குறித்த நமது அணுகுமுறை அமைகிறது. இந்திய அரசில் ஆதிக்கம் செலுத்திய, 1977வரை மத்தியில் ஏகபோகமாய் ஆட்சியில் இருந்த காங் கிரஸ் கட்சி தான் ஆளும் வர்க்கக் கட்சிகளில் முதற் பெரும் கட்சி. எனவே அதுவே பிரதான குறி இலக்காக அமைகிறது. பி.ஜே.பி வளரத் தொடங் கிய நிலையில், குறிப்பாக 1991 தேர்தல்கள், பாபர் மசூதி இடிப்பிற்குப் பின்னர், இரண்டு கட்சி களும் நமது அரசியல்-நடைமுறை உத்திகளின் மையப்புள்ளியாக மாறின. சில குறிப்பிட்ட சம யங்களில் அக்கட்சிகள் வகிக்கும் பாத்திரத் தினைப் பொறுத்து, அவற்றுக்குள் எவை அதிக ஆபத்தானவை என்று முடிவு செய்கிறோம். எடுத்துக்காட்டாக, பி.ஜே.பி மத்தியில் ஆட்சியில் இருந்த 1998 -2004 காலங்களில் அதுவே நமது கணிப்பு. அதே போன்று, காங்கிரஸ் அல்லாத மதச்சார் பற்ற பூர்ஷ்வாக் கட்சிகள் குறித்தும் அவ்வப் போது கணித்து அவற்றுடன் கூட்டு மேடைகள், கூட்டுப் போராட்டங்கள் குறித்து முடிவு செய்கி றோம். இவர்களின் குணாம்சங்கள் குறித்து நிரந்தரமான முடிவுகள் வைத்துக் கொள்வ தில்லை. குறிப்பிட்ட கால கட்டங்களில் அவை வகிக்கும் பாத்திரங்களே அதைத் தீர்மானிக்கும். நடைமுறை உத்திகளின் தேவை, கூட்டுப் போராட்டங்கள் மற்றும் இயக்கங்களின் தேவை, ஆகியவற்றைப் பொறுத்து இவர்களுடன் ஐக்கிய முன்னணி உத்திகள் கையாளப்படும்.
இடதுசாரி அரசாங்கங்களின் பாத்திரம்
கட்சித் திட்டத்தின் 112வது பாராவின் அடிப் படையில் அமைந்த புதிய சூழ்நிலையும், நமது கடமைகளும் என்ற 1967ம் ஆண்டு தீர்மானம் மே.வங்கத்திலும், கேரளாவிலும் அமைந்த ஐக்கிய முன்னணி அரசாங்கங்களில் நாம் பங் கேற்குமாறு வழி காட்டியது. பிற்காலத்தில் இது திரிபுரா மாநிலத்திற்கும் விரிவு படுத்தப் பட்டது. மே.வங்கத்தில் 1977 முதல் 2011 வரை இடைவெளி இல்லாமல், 34 ஆண்டுகள் நமது அரசாங்கம் ஆட்சி செய்தது. கேரளாவில், 1980 -82, 1987-91, 2005-2011 காலங்களில் இடது முன்னணி அர சாங்கங்கள் ஆட்சியில் இருந்தன. திரிபுராவில், 1978 முதல் இன்றுவரை 1988 முதல் 1993 ஆண்டுகள் தவிர இடது முன்னணி அரசாங்கம் ஆட்சியில் இருந்து வருகிறது. இடதுசாரிகள் தலைமையிலான அரசாங்கங் களுக்கு வழிகாட்டும் வகையில், 18வது அகில இந்திய மாநாடு சில கொள்கைப் பிரச்சனைகள் குறித்து என்ற தலைப்பில் தீர்மானம் ஒன்றினை உருவாக்கியது.
19வது மாநாட்டின் அரசியல் ஸ்தாபன அறிக்கையின் இரண்டாம் பாகத்தில், இடதுசாரிகள் தலைமையிலான அரசாங்கங்கள்:
இன்றைய சூழ்நிலையில் அவர்களது அனு பவமும், பங்களிப்பும் என்ற பகுதி இணைக்கப் பட்டது. அந்த அரசாங்கங்களின் செயல் திட் டத்தை அமலாக்கும் போது கிடைத்த அனுபவங்களைக் குறிப்பிட்ட அந்தப் பகுதி, இந்த அர சாங்கங்கள் கொள்கைகளை எவ்வாறு அம லாக்குவது என்பது குறித்துத் தேவைப்படும் சில விளக்கங்களையும் உள்ளடக்கியிருந்தது. இந்த நாட்டில், இடதுசாரி மற்றும் ஜனநாயக மாற்றினை உருவாக்கும் போராட்டத்தில் இடது சாரிகள் தலைமையிலான அரசாங்கங்கள் ஒரு முக்கிய பகுதியாக அமைகின்றன. மூன்றாவது மாற்று காங்கிரசுக்கும், பி.ஜே.பிக்கும் எதிராக, காங் கிரஸ் அல்லாத, பி.ஜே.பி அல்லாத சக்திகளை அணி திரட்டி ஒரு மூன்றாவது மாற்றினை உருவாக்குவதில் கட்சி எடுத்த முயற்சிகள் குறித்து 20வது அகில இந்திய மாநாடு பரிசீலனை செய்தது. ஐக்கிய முன்னணி அரசாங்கம் தோற் கடிக்கப்பட்ட பின்னர் நடைபெற்ற 16வது மாநாட் டில் தொடங்கி, ஒரு மூன்றாவது மாற்று உரு வாக்க வேண்டிய தேவையினை கட்சி வலியுறுத்தி வருகிறது. அத்தகைய மாற்று என்பது மாற்றுக் கொள்கைகளின் அடிப்படையில் அமைய வேண்டுமே தவிர, வெறும் தேர்தல் அணியாக இருக்க முடியாது என்பதையும் கட்சி தொடர்ந்து தெளிவு படுத்தி வந்திருக்கிறது. மாநிலக் கட்சிகளின் பாத்திரம் மற்றும் குணாம்சங்களைக் கருத்தில் கொண்டு, பரந்துபட்ட கூட்டுப் போராட்டங்கள், கூட்டு இயக்கங்கள் மூலமே அவர்களின் நிலைபாடுகளிலிருந்து அவர்களை மாற்றி ஒரு பொதுவான புரிந்துணர்விற்குக் கொண்டு வர முடியும். மூன்றாவது மாற்று என்ற கோஷம், இடது மற்றும் ஜனநாயக முன்னணி உருவாவதற்கு முன்னர் உருவாகும் இடைக்கால முன்னணி என்று பார்க்கப்பட்டது.
ஒரு பத்து ஆண்டுகளுக்குப் பின்னர், மூன்றாவது மாற்று உருவாக்கம் குறித்து ஏற்பட்ட அனுபவத்தினை கட்சியின் அகில இந்திய மாநாடு பரிசீலனை செய்தது. காங்கிரஸ் அல்லாத மதச்சார் பற்ற கட்சிகளில் பெரும்பாலானவை மாநிலக் கட்சிகளேயாகும். அவர்களின் பங்கும், குணாம் சங்களும் காலப் போக்கில் மாறிவிட்டன. பிர தானமாக மாநில பூர்ஷ்வாக்களையும், கிராமப் புற செல்வந்தர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் இக்கட்சிகள் நவீன தாராளவாதக் கொள்கைகளை எதிர்ப்பதில் நிலைத்தன்மை கொண்டவை அல்ல. அவர்கள் மாநில ஆட்சிக்கு வரும் போது மத்திய அரசு கடைப்பிடிக்கும் அதே நவீன தாராளவாத அணுகுமுறையினையே கடைப்பிடிக்கின்றனர். மத்தியில் கூட்டணி அரசாங்கங்கள் உருவாகத் தொடங்கிய பின்னர், மாநிலக் கட்சிகள் மத்திய ஆட்சியில் பங்கேற்கும் வாய்ப்புகள் அதிகரித்திருக்கின்றன.
எனவே, அவர்கள் நேரத்திற்கு நேரம் மாற்றி மாற்றி பல சந்தர்ப்பவாத நிலையினை மேற்கொள்கின்றனர். மத்திய ஆட்சியில் பங்கு பெறுவதற்காக, மாநிலக் கட்சிகள் சில காங்கிரசுடனோ, பி.ஜே.பியுடனோ கை கோர்த்துக் கொள்கின்றன. ஒன்றுபட்ட போராட்டங்களிலும், இயக்கங்களிலும் நம் முடன் வருவதற்கு அவர்கள் தயங்குகிறார்கள் அல்லது மறுக்கிறார்கள். இடதுசாரி இயக்கம் தனது பலத்தை அதிகரித்துக் கொள்ளாத நிலை யில், அக்கட்சிகளை நம் பக்கம் ஈர்த்து, ஒரு உறுதி யான அணி அமைப்பதில் சிரமங்கள் உள்ளன. இத்தகைய இன்றைய சூழ்நிலையில், இந்தக் கட்சி களுடன், ஒரு திட்டத்தின் அடிப்படையில் ஒரு மூன்றாவது மாற்று என்பது சாத்தியமல்ல. அகில இந்திய பெரும் பூர்ஷ்வாக் கட்சிகளுக் கும், மாநிலக் கட்சிகளுக்கும், மத்திய மாநில உறவுகள் போன்ற பிரச்சனைகளில் முரண்பாடு கள் உண்டு. இந்த முரண்பாடுகளையும், மோதல் களையும் நாம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மக்களை பாதிக்கும் விலைவாசி உயர்வு, மதச்சார்பின்மை மற்றும் கூட்டாட்சி முறை பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவற்றின் மீது நாடாளுமன்றத்திலும் வெளியிலும் போராட்டங்களில் இந்தக் கட்சிகளை இணைக்க வேண்டும் என்பது நமது அரசியல் நிலை.
சி.பி.ஐ(எம்) மற்றும் இடதுசாரிக் கட்சிகளைத் தனிமைப் படுத்துவதற்குத் திட்டமிட்ட முயற்சிகள் நடை பெற்று வரும் இவ்வேளையில் காங்கிரஸ் அல் லாத மதச்சார்பற்ற கட்சிகளுடன் உறவுகளை தொடர்ந்து நிலை நிறுத்திக் கொள்வது அவ சியம். தேர்தல் காலங்களில் தேவைப்படும் போது இக்கட்சிகளுடன் உடன்பாடு கொள்ளலாம். காங்கிரஸ் அல்லாத, பி.ஜே.பி அல்லாத கட்சி களை அணி சேர்ப்பதற்கு, சில தேர்தல் உத்திகள் தேவைப்படலாம். ஆனால், அதனை ஒரு மூன்றாவது மாற்றாக முன்னிலைப்படுத்திவிடக் கூடாது. இன்றைய அரசியல் நடைமுறை உத்திகள் குறித்த சில அம்சங்கள்:
கட்சியின் சுயேச்சையான பாத்திரத்தின் முக்கியத்துவம்
நடப்பு அரசியல் சூழ்நிலையினைச் சமாளிப் பது, உடனடிக் கடமைகளை நிறைவேற்றுவது, சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் ஆளாகும் மக்கள் பிரிவினரிடையே கட்சியின் செல்வாக் கினை அதிகரிப்பது இவையெல்லாம் இன்றைய தேவைகள். நமது அரசியல்-நடைமுறை உத்தி களின் வெற்றிகரமான அமலாக்கம், இத் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் கட்சிக்கு உதவ வேண்டும். 17வது மாநாட்டிலிருந்து கட்சி யின் மக்கள் தளமும், செல்வாக்கும் உயர்வதில் உள்ள தேக்கம் குறித்து கட்சி விவாதித்து வரு கிறது. கட்சி விரிவாக்கத்திற்குத் தடையாக நிற்கும் பலவீனங்கள், தவறுகள் போன்றவற்றிற்கான காரணங்களை, 20வது அகில இந்திய மாநாட் டின் அரசியல் பரிசீலனை அறிக்கை குறிப்பாகச் சுட்டிக் காட்டியிருக்கிறது. கட்சியின் சுயேச்சை யான பாத்திரம் மற்றும் நடவடிக்கைகளை முன் னெடுத்துச் செல்வதன் முக்கியத்துவம் குறித்து 18வது மாநாடும், 19வது மாநாடும் வலியுறுத்திக் கூறியிருக்கின்றன. பெருமளவிலான இயக்கங்கள், போராட்டங்கள் மூலம், பல்வேறு மக்கள் பிரி வினர் மீது நவீன தாராளவாதக் கொள்ககைள் ஏற்படுத்தியிருக்கும் மோசமான பாதிப்புகளை எதிர்த்துப் போராட வேண்டும். இது மிக முக்கிய கடமைகளில் ஒன்று. இத்தகைய போராட்டங் கள் மூலமாகத் தான் நமது மக்கள் தளத்தினை விரிவுபடுத்த முடியும். இந்தக் கடமையினை சரிவரச் செய்யவில்லை என்பதும், அதன் விளை வாக, விரிவான இயக்கங்கள் மற்றும் போராட் டங்களை நடத்தத் தவறி விட்டோம் என நமது பரிசீலனையில் தெரிய வருகிறது. இந்தப் பல வீனம், ஸ்தலப் பிரச்சனைகளில் தொடர்ந்து போராட்டங்களை நடத்துவதற்கான நமது திறமைக் குறைவுடன் இணைந்தது. அத்தகைய போராட்டங்களை நடத்துவதில் நாம் மிகவும் பின் தங்கியுள்ளோம்.
அகில இந்திய அளவிலும், (நமது வலுவான மாநிலங்கள் தவிர பிற) மாநிலங்களிலும் புதிய மக்கள் பிரிவினரை ஈர்க்கும் வகையில், நம்மால் பெருமளவில் மக்களைத் திரட்டிப் போராட முடியவில்லை. மக்களைத் திரட்டி நாம் நடத்தும் பெரிய போராட்டங்களில் கூட, அவை முடிந்த பின்னர் அதில் கலந்து கொண்ட பலரை அணுகி கட்சியின் அமைப்புகளுக்குள் கொண்டு வரும் பணியினை நாம் செய்வதில்லை. மக்களின் பொரு ளாதாரப் பிரச்சனைகள் மீது நாம் நடத்தும் போராட்டங்கள் கட்சியின் செல்வாக்கினை உயர்த்துவதற்கான அஸ்திவாரம் என்பது உண்மை. ஆனால், அது மட்டுமே போதுமானது அல்ல. அடுத்து அந்த மக்களிடம் அரசியல் தத்துவார்த்தப் பணிகளைத் தொடர வேண்டும். கட்சியின் சுயேச்சையான பாத்திரத்தினை விரிவுபடுத்துவதும், பலப்படுத்துவதும் அரசியல் நடைமுறை உத்திகளில் ஒரு முக்கிய இணைப்புக் கண்ணி என 20வது அகில இந்திய மாநாடு வலியுறுத்தியிருக்கிறது. அரசியல், பொருளா தார, சமூகப் பிரச்சனைகள் என கட்சியின் சுயேச்சையான நடவடிக்கைகள் விரிவடைந்து கொண்டே செல்ல வேண்டும். திரட்டப்பட்ட மக்களிடம் நமது அரசியல் மேடைகளிலிருந்து பேச வேண்டும். இதன் மூலம் தான் பூர்ஷ்வாக் கட்சிகளை அரசியல் ரீதியாகவும் தத்துவார்த்த ரீதியாகவும் எதிர் கொள்ள முடியும். அடிப்படை வர்க்கங்கள் மத்தியில் செய்யும் பணிகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். விவசாயிகள் மற்றும் கிராமப்புற ஏழை மக்களைத் திரட்டி நடத்தும் வர்க்க வெகுஜனப் போராட்டங்களில் உள்ள பலவீனங்கள் களையப்பட வேண்டும்.
தலித் மக்கள் , பழங்குடியினர், சிறுபான்மையினர், பெண்கள் ஆகியோரின் பிரத்தியேகமான பிரச் சனைகள் மீது தொடர்ந்த போராட்டங்கள் அவ சியம். பிற கட்சிகளின் செல்வாக்கில் இருக்கும் மக்களைத் திரட்டும் வகையிலும், ஒன்றுபட்ட போராட்டங்களை உருவாக்கும் வகையிலும், நமது வெகுஜன அமைப்புகள் பரந்து விரிந்து வளர வேண்டியது அவசியம். சமூகப் பிரச்சனைகளைக் கையிலெடுப்பது குறித்து: கட்சி நேரடியாக சமூகப் பிரச்சனைகளைக் கையிலெடுப்பது குறித்து அரசியல்-நடைமுறை உத்தி வலியுறுத்துகிறது. மக்களை பிளவுபடுத்து கின்ற அடையாள அரசியலின் வளர்ச்சி, நமது கட்சிக்கும் இடதுசாரி இயக்கத்திற்கும் கடுமை யான சவாலை ஏற்படுத்தி வருகிறது. சாதி, மதம், இனம், இனக்குழு என்ற அடை யாளங்களின் அடிப்படையிலான அரசியல் மக்களை பிளவு படுத்தி சிதறடித்து விடுகிறது. ஆளும் வர்க்கங்களுக்கும் சுரண்டல் அமைப் பிற்கும் எதிராக ஒன்றுபட்டுப் போராட வேண் டும் என்ற நிலையிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்பி விடுகிறது. சமூக ஒடுக்குமுறை மற்றும் பாரபட்சங்களுக்கு ஆட்படும் குழுக்கள், சமூகங்களின் பிரச்சனைகளில் கட்சி தலையிடு வது தலையான கடமையாகும். அவர்கள் அனை வரையும் ஒரு பொதுவான இயக்கத்திற்கு அழைத்து வருவதற்கு பெருமளவில் முயற்சி தேவை.
வகுப்புவாத சக்திகளுக்கு எதிரான
போராட்டம் பி.ஜே.பி தொடர்ந்து இரண்டு தேர்தல்களில் தோற்றுப் போய்விட்டது என்பதன் காரணமாக, வகுப்புவாத சக்திகள் மற்றும் அவற்றின் செல் வாக்கினைக் குறைத்து மதிப்பிட்டு விடக் கூடாது என நமது நடைமுறை உத்தி எச்சரிக்கிறது. வரும் காலத்தில், அரசியல், தத்துவார்த்த, கலாச்சார தளங்களில் அவர்களை எதிர்த்துப் போராட வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம் என்பதை மறக்கக் கூடாது. பி.ஜே.பி ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத்துவா படையினரை எதிர்ப்பது அத னுடைய அரசியல் வடிவமாக இருக்கும்.
இடதுசாரி அரண் மீதான தாக்குதல்
2009 மே மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்கள் தொடங்கி மே.வங்கத்தில் நமது கட்சியினர் மீது திரிணாமூல் கட்சியினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந் நிலையில் கட்சி மற்றும் இடது முன்னணியைப் பாதுகாக்கும் கடமை முக்கியத்துவம் பெறுகிறது. சட்டமன்றத் தேர்தல்களுக்குப் பின்னர் தாக்கு தல்களின் கடுமை அதிகரித்திருக்கிறது. வர்க்கப் பிரச்சனைகள் மற்றும் பொருளாதாரப் பிரச்சனைகளில் மக்களைத் திரட்டிப் போராடு வது, ஜனநாயகத்தினை மேம்படுத்துவது போன்ற வற்றின் மூலம் இழந்த தளங்களை மீட்க வேண் டும். அதன் மூலம், நமது கட்சியினையும் இடது சாரி சக்திகளையும் மீண்டும் பலப்படுத்த வேண்டியது உடனடிக் கடமை.
இடதுசாரி ஒற்றுமை
இடதுசாரி மற்றும் ஜனநாயக அணியினை உருவாக்குவதற்கு, இடதுசாரி ஒற்றுமையினைப் பலப்படுத்துவதும், விரிவுபடுத்துவதும் மிகவும் அவசியம். இடதுசாரிக் கட்சிகளின் செல்வாக்கு வட்டத்திற்கு வெளியில் இருக்கும் இடதுசாரிக் கட்சிகள் மற்றும் தனி நபர்களை கூட்டு மேடை களுக்கு அழைத்து வருவதற்கான முயற்சிகள் இன்று மிகவும் தேவைப்படுகின்றன. 2009 தேர்தல்களில் கட்சி பின்னடைவைச் சந்தித்திருக்கிறது. சட்ட மன்றத் தேர்தல்களில் மே.வங்கத்திலும், கேரளாவிலும் இடதுசாரிகள் தலைமையிலான அரசாங்கங்கள் தோல்வி யினைச் சந்தித்தன. இத்தகைய சூழ்நிலையில் நமது சுயேச்சையான நடவடிக்கைகள் மூலம் கட்சி இழந்த பலத்தை மீட்டெடுக்க முடியும். இடதுசாரி ஒற்றுமையினைப் பலப்படுத்தி, ஒன்றுபட்ட போராட்டங்களை உருவாக்குவதன் மூலம் கட்சியின் செவ்வாக்கினை மேம்படுத்த வேண்டும்.
இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகளின் அணியினை உருவாக்குக!
இறுதியாக, இடதுசாரி மற்றும் ஜனநாயக முன்னணி உருவாக்கத்தின் மேன்மை குறித்து அரசியல்-நடைமுறை உத்தி ஆழமாக வலி யுறுத்தியிருக்கிறது. இடதுசாரி மற்றும் ஜனநாயக முன்னணியினை தொலை தூர இலக்காகப் பார்க்கக் கூடாது. நவீன தாராளவாதக் கொள் கைகள், வகுப்புவாத சக்திகள், ஏகாதிபத்திய ஆதரவுக் கொள்கைகள் ஆகிய அனைத்தையும் எதிர்த்துப் போராடுவதற்கும், மக்களின் உரிமை களை பாதுகாப்பதற்கும் இடதுசாரி மற்றும் ஜன நாயக முன்னணியின் உடனடித் தேவை உணரப் படுகிறது. இடதுசாரி மற்றும் ஜனநாயக அணி யைக் கட்டும் கடமையினை நிறைவேற்றுவதற்கு, வெகுஜன இயக்கங்களையும், ஒன்றுபட்ட போராட்டங்களையும் விரிவு படுத்த வேண்டிய தேவை உள்ளது. காங்கிரஸ் அல்லாத மதச் சார்பற்ற கட்சிகளுடன் இணைந்து பிரச்சனை கள் மீது ஒன்றுபட்ட போராட்டங்களை உரு வாக்க வேண்டும். வளர்ச்சிப் போக்கில் அவை யெல்லாம் சேர்ந்து இடதுசாரி மற்றும் ஜன நாயக அணியினை உருவாக்குவதற்கு துணை நின்று உதவும்.