புதிய சூழலில் இந்துத்துவா எதிர்ப்பு !

– பிரகாஷ் காரத்

இந்துத்துவா வகுப்புவாத சக்திகளையும், ஆர்.எஸ்.எஸ் பரிவாரத்தையும் எதிர்கொள்ள, அரசியல் தளத்திலும், சித்தாந்த தளத்திலும், சமூக மற்றும் பண்பாட்டு தளத்திலும் திட்டவட்டமான அணுகுமுறைகளை உருவாக்கி  முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். இது நம்முடைய முக்கிய நிகழ்ச்சி நிரலாக உள்ளது.

வகுப்புவாத சக்திகளை எதிர்கொள்வது பற்றி, கடந்த காலத்தில் எடுத்த முடிவுகள் இப்போது போதுமானதாக இல்லை. முந்தைய நிலையில், வகுப்புவாத சக்திகள் சில பிரிவினை திட்டங்களை முன்னெடுத்து இந்து மக்களின் ஆதரவை பெற முயல்வதுடன், சிறுபான்மையினருக்கு எதிரான திட்டங்களை முன்னெடுப்பார்கள். ஆனால் இப்போது இந்துத்துவா வகுப்புவாத சக்திகள் அரசு அதிகாரத்துடன் இயங்குகிறார்கள். இது கடந்த கால சூழலில் இருந்து மாறுபட்டது. இப்போதைய புதிய நிலைமைகளை பயன்படுத்தி, குடியரசின் தன்மையையே மாற்றியமைத்து, அரசியல் சாசனத்தை மாற்றியமைத்து,  ‘இந்து ராஷ்ட்டிராவை’ நோக்கி செயல்பட்டு வருகிறார்கள்.  ஆதரவுத் தளத்தை விரிவாக்கிட, முந்தைய காலத்தில் அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளில் இருந்து இது மாறுபட்டது ஆகும். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அடிப்படையான இலக்குகளை நிறைவேற்றக்கூடிய போக்கினை நாம் எதிர்கொண்டு வீழ்த்த வேண்டியுள்ளது.

பாஜக எப்படிப்பட்ட கட்சி ?

மேம்படுத்தப்பட்ட நம்முடைய கட்சி திட்டம், பாரதிய ஜனதா கட்சியை பிற முதலாளித்துவ கட்சிகளைப் போன்ற இன்னொரு சாதாரண முதலாளித்துவக் கட்சியாக பார்க்கவில்லை. பாஜகவை உருவாக்கியதும், வளர்த்தெடுப்பதும் பாசிச வகைப்பட்ட தத்துவத்தால் வழிநடத்தப்படும் ஆர்.எஸ்.எஸ் இயக்கமாகும். அவர்கள் அதிகாரத்திற்கு வரும்போது, அரசு இயந்திரத்தை பயன்படுத்தி ‘இந்து ராஷ்ட்டிராவை’ நோக்கிய பயணத்தை வேகப்படுத்த முயற்சிப்பார்கள் என்று நம் திட்டத்திலேயே குறிப்பிட்டுள்ளோம். 2000 ஆண்டில் நமது கட்சி திட்டத்தை மேம்படுத்திய போது வாஜ்பாய் அரசாங்கம் இருந்தது.

‘இந்து ராஷ்ட்டிரா’ என்பது இந்து ராஜ்ஜியம் அல்ல. அதாவது அது  மத தலைவர்களின் ஆட்சி அல்ல. (ஈரான் நாட்டில் நடப்பதை மத தலைவர்களின் ஆட்சி எனலாம், அதனை ஒத்த ஆட்சியாக இது இருக்காது). ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஆட்சி என்பதுதான் ‘இந்து ராஷ்ட்டிரா’ என்பதன் பொருள் ஆகும்.  ஏற்கனவே அவர்கள் ஆட்சிக்கு வந்துவிட்ட பின்னணியில் ‘இந்து ராஷ்டிரத்தைக்’ கட்டமைக்கும் பணியும் ஏற்கனவே துவங்கி விட்டது. பாஜக மக்களவையில் பெரும்பான்மை பெற்றுள்ளது. அரசமைப்பின் அடிப்படையான சில அம்சங்களையும், குணாம்சத்தையும் மாற்றியமைக்க முயல்கிறது. நீதித்துறையினுடைய தன்மையையும், அதிகார வர்க்கத்தின் தன்மையையும், ராணுவத்தின் தன்மையையும் மாற்றியமைக்க முயல்கிறார்கள்.

அக்னிபத் திட்டத்தை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வோம். அந்த திட்டத்தின் நோக்கம் என்ன?. ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் முறையை அரசியல் அடிப்படையிலானதாக திட்டமிட்ட விதத்தில்  மாற்றியமைப்பதுதான் அதன் நோக்கம். இவ்வகையில் அவர்கள் ராணுவத்தில் ஆள் எடுக்கும் தன்மையையே மாற்றியமைக்க முயற்சிக்கிறார்கள்.

பரந்துபட்ட உத்தி அவசியம்

எனவே இதுதான் இப்போதைய நிலை என்கிறபோது, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தை  தேர்தல் களத்தில் மட்டும் நடத்தினால் போதாது என்பதை உணர முடியும். தேர்தல் கால உத்திகள் மட்டும் பலன் கொடுக்காது. அவர்கள் தேர்தல் களத்திலும், அரசியல் தளத்திலும் மட்டுமே செயல்படுவதில்லை. தங்களை கலாச்சார அமைப்பு என்று கூறிக்கொள்ளும் ஆர்.எஸ்.எஸ், இந்திய குடியரசின் பண்பு நலன்களை மாற்றியமைப்பதையே  இலக்காக கொண்டு செயல்படுவதை ஒட்டுமொத்தமாக கணக்கில் எடுத்து, அனைத்தையும் உள்ளடக்கிய விரிவான உத்தியோடு செயல்பட வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ்/பாஜக அமைப்புகளால், இந்திய தேசியம் என்ற பெயரில் இந்து பெரும்பான்மை வகுப்புவாதத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க முடிந்துள்ளது. 23 வது அகில இந்திய மாநாட்டின் அரசியல் தீர்மானத்தில் இதை நாம் குறிப்பிட்டுள்ளோம். மக்களின் மனங்களில் தாக்கம் ஏற்படுத்தி, கருத்தை மாற்றியமைக்க அவர்களால் முடிந்துள்ளது. குறிப்பாக இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் வாழும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான சாதாரண மக்களின் மனங்களில் தம் கருத்துக்களை ஆழமாக பதித்துள்ளார்கள். அவர்கள் மட்டுமே  உண்மையான தேசியவாதிகள் என்றும், தேசத்தின் மீது அக்கறை கொண்ட சக்திகள் என்றும் பதிய வைத்துள்ளார்கள்.

இந்துக்கள் வலுவடைந்தால்தான் தேசம் வலுப்படும் என்கிறார்கள். இந்த வாதத்தின் மற்றொரு பகுதி இஸ்லாமியர்கள் இந்த தேசத்தை பலவீனமாக்குகிறார்கள் என்பதாகும். இந்துக்கள் என்றால் ’நாம்’, இஸ்லாமியர்கள் என்றால் ’அவர்கள்’. ‘நாம்’ –  எதிர் –  ‘அவர்கள்’ என்ற உணர்வினை உருவாக்கியுள்ளார்கள். இது கணிசமான மக்களை சென்று சேர்ந்திருக்கிறது.

குறிப்பாக உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இதுதான் நிலைமை. பாஜகவை மக்கள் வலுவான தேசியவாத  சக்தியாக பார்ப்பதுடன், பெரும்பான்மை மக்களுக்கு நல்லது செய்வதற்கே அவர்கள் இருப்பதாக பார்க்கிறார்கள். இந்த சூழலை எவ்வாறு எதிர்கொள்வது?

கடந்த  21, 22 மற்றும் 23 மாநாடுகளில் நிறைவேற்றப்பட்ட அரசியல் தீர்மானத்திலும், அரசியல் ஸ்தாபன அறிக்கையிலும் ‘இந்துத்துவாவை எதிர்கொள்வது’ என்ற தலைப்பிலான பகுதி இடம்பெற்று வந்துள்ளது. கடந்த காலங்களில் நாம் பொதுவாக காங்கிரஸ் கட்சியை எதிர்த்து போராடியிருக்கிறோம். பல மாநிலங்களில் இதர முதலாளித்துவக் கட்சிகளை எதிர்த்துப் போராடியிருக்கிறோம். ஆனால் இது அதிலிருந்து வேறுபட்ட ஒன்றாகும். அதனால்தான் நமது தீர்மானங்களில் தனியாக குறிப்பிட வேண்டி வந்தது.

எனவே 2015ஆம் ஆண்டில் இருந்து தனித்துவமாக, இதுபோல சில திட்டவட்டமான  உத்திகளை உருவாக்க முயற்சிக்கிறோம்.  அரசியல் செயல்பாடுகளிலும், கருத்தியல் செயல்பாடுகளிலும் இந்துத்துவா சக்திகளை எதிர்கொள்ளும் விதத்தில் பணிகளை திட்டமிட்டு முன்னெடுக்க கட்சியை தயார்ப்படுத்த வேண்டியுள்ளது. பல தளங்களிலும் நாம் கால் பதிக்க வேண்டியுள்ளது என்பதை கட்சி அணிகளுக்கு உணர்த்திட வேண்டும்.

கட்சியும், பல்வேறு வர்க்க வெகுஜன அரங்கங்களும், தமது வேலை பாணியை மாற்றியமைக்க வேண்டும். கருத்தியல் தளத்திலும், சமூக – பண்பாட்டுத் தளத்திலும், கல்வித் தளத்திலும் பணிகளை திட்டமிட வேண்டும். கடந்த காலத்தில் இந்த பணிகளை பொதுவாக அலட்சியப்படுத்தியே வந்திருக்கிறோம். கட்சி சில முழக்கங்களை முன்னெடுக்கும், தேர்தலை எதிர்கொள்ளும், வர்க்க – வெகுஜன அமைப்புகள் சில முழக்கங்களை முன்னெடுப்பார்கள், போராட்டங்களை நடத்துவார்கள்.

கருத்தியல் தளத்தில் கட்சி போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக பேசிவந்திருக்கிறோம். ஆனால் இதுவரை அதில் என்ன செய்திருக்கிறோம்? பொதுவாக நம்முடைய கட்சி தொழிலாளி வர்க்க கட்சியாகும். நம்முடைய கட்சியினுடைய கருத்தியல் என்பது தொழிலாளி வர்க்க கருத்தியலே. ஆனால் மும்பை, தில்லி போன்ற பெருநகரங்களில் வாழும்   தொழிலாளர்களோடு பேசினால் அவர்களில்  கணிசமானோர் பின்பற்றும் சித்தாந்தம் இந்துத்துவா சித்தாந்தமாக உள்ளது. இந்துத்துவாவை பின்பற்றிக் கொண்டே சிலர்  நம்முடைய சங்கங்களிலும் இருப்பார்கள். அதுதான் இப்போதைய சூழல்.

எனவே கருத்தியல் தளத்தில் நடத்த வேண்டிய போராட்டத்தில் நாம் முன்னேற வேண்டியுள்ளது.  தொழிற்சங்கம் மட்டுமே இந்த போராட்டத்தை முன்னெடுத்திருக்க முடியாது. கட்சிக்கு தான் அதில் கூடுதலான பங்கு உள்ளது. எனவே அரசியல் தளத்தில் மட்டுமல்லாது, கருத்தியல் மற்றும் சமூக தளத்திலும் பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்பதையே இது காட்டுகிறது.

சில மாநிலங்கள் இந்த சூழலில் விதிவிலக்காக அமைந்துள்ளன. தமிழ்நாட்டினை உதாரணமாக பார்க்கலாம். தமிழ் நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பரிவார அமைப்புகள் பிரதான இடத்தில் இல்லை. ஆனாலும் அவர்கள் வளர முயற்சிக்கிறார்கள். இன்றுள்ள நிலைமையை கணக்கில் எடுத்துக்கொண்டு, தமிழ்நாட்டிலோ, ஆந்திராவிலோ, கேரளத்திலோ ஆர்.எஸ்.எஸ் அமைப்பினுடைய செல்வாக்கிற்கு மக்கள் உட்பட மாட்டார்கள் என்ற நினைப்பில் இருந்துவிடக் கூடாது. ஏற்கனவே கர்நாடக மாநிலத்தில் அவர்கள் கணிசமான செல்வாக்கை பெற்றுள்ளார்கள். பிரதான சக்தியாக உள்ளார்கள். தெலங்கானாவிலும் சில முன்னேற்றங்களை அடைந்துள்ளார்கள். தமிழ் நாட்டில் ஒரு பெரிய சக்தியாக வளர்வதற்கு நீண்ட காலம் பிடிக்கும் என்று அவர்களுக்கு தெரியும். அதற்கு இந்த மாநிலத்தின் அரசியல், கருத்தியல், சமூக சூழல் ஒரு காரணமாக உள்ளது. திராவிட சித்தாந்தம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை சொல்லலாம். ஆனாலும் அவர்கள் இந்த நிலைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும், தமது  குறைபாடுகளை மீறி முன்னேறுவதற்கும் பல தளங்களிலும் முயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

பட்டியல் இனத்தின் மீது குறி !

ஆர்.எஸ்.எஸ் என்றால் ”உயர்” சாதி அமைப்பு எனபலர் நினைக்கிறார்கள். ஆம் அவர்கள்  சிந்தனை, கருத்தியல் இரண்டிலும் நிச்சயமாக “உயர்” சாதி ஆதிக்க கருத்தியல் கொண்டவர்கள்தான். ஆனால் ”உயர்” சாதியினரை மட்டும் கொண்ட கட்சியாக மட்டுமே அவர்கள் இல்லை.

உத்திரப்பிரதேசத்தை எடுத்துக் கொண்டால் ஓபிசி யை சேர்ந்த பெரும்பகுதியினர் பாஜக ஆதரவாளர்களாக இருக்கிறார்கள். அதே போல் தலித் மக்களில் குறைந்த பட்சம் 50 சதவிகிதம் பாஜக ஆதரவாளர்களாக இருக்கிறார்கள். இது எப்படி சாத்தியமானது?. முன்பு ”உயர்”  சாதியினர் கட்சியாக பார்க்கப்பட்ட கட்சி,  இன்றைக்கு ஓபிசி, எஸ்சி /எஸ்டி  மத்தியிலும் வளர்ந்திருக்கிறது என்றால் இது எப்படி நடந்தது? அவர்கள் குறிப்பாக சில சாதிகளைக் குறிவைத்து தங்களுடைய பணிகளைச் செய்தார்கள். அனைத்து இந்து மக்களின் பிரச்சனைகளையும் எடுப்பவர்களாக, அவர்களுக்கான கட்சியாகவும்  தங்களை அடையாளப்பட வைப்பதற்கான முயற்சிகளையும் செய்து கொண்டிருக்கிறார்கள்.

கடந்த காலத்தில் ஆர்எஸ்எஸ் உருவாக்கிய அரசியல் கட்சி யான ஜன சங்கத்தை பனியா கட்சி என்று சொல்வதுண்டு, அதற்குப் பிறகு பாஜக உருவான பின்பும் தொடக்க கட்டத்தில் அவர்களை பனியா கட்சி என்றே குறிப்பிடப்பட்டு வந்தது.

பனியா என்பது வடமாநிலத்தில் உள்ள ஒரு குறிப்பட்ட சமூகம். குறிப்பாக வியாபாரிகள் வணிகர்கள்; அவர்கள் ஜெயின் அல்லது குப்தாக்களாக இருக்கலாம். மார்வாடிகளாக இருக்கலாம். ஒரு வியாபாரம் செய்யக்கூடிய சமூகம். அவர்கள் மத்தியில் பாஜக வலுவாக இருந்தது. எனவே பாஜக அல்லது அதற்கு முன்னதாக ஜனசங்கத்தினுடைய வளர்ச்சி என்பது நகர்ப்புறங்களைச் சார்ந்து இருந்தது. ஆனால் இன்றைக்கு உத்தரப்பிரதேசத்தில் பட்டியலினத்துக்கான தொகுதிகளில் பெரும்பான்மையான தொகுதிகளில் அவர்கள் வெற்றிபெற முடிகிறது.

மாயாவதியினுடைய பகுஜன் சமாஜ் கட்சி  இருக்கிறது என்பது உண்மைதான். அந்த கட்சி யார் மத்தியில் இருக்கிறது என்று சொன்னால், பட்டியல் சாதிகளில்  உள்ள குறிப்பிட்ட துணை சாதி மத்தியில்தான் அவர்கள்  ஆழமாக இருக்கின்றனர். பட்டியல் இனத்தின் இதர துணை சாதிகளுக்குள்  பாஜக ஏகமாக வளர்ந்துள்ளது. பட்டியல்/பழங்குடி பிரிவினரை அவர்கள் குறிவைக்கிறார்கள்.

கடந்த 30, 40 ஆண்டுகளாகவே ஆர்எஸ்எஸ் பழங்குடியினர் மத்தியில் ஆழமாக வேலை செய்து வந்தது.  ஒரு நீண்ட காலத் திட்டத்தின் அடிப்படையில்தான் அவர்கள் பணியாற்றி வந்தார்கள். இவர்களின் ஊடுருவலை நாம் கவனித்து நோக்க வேண்டும்.

பாஜக என்பது நால் வருணத்தில் நம்பிக்கை உள்ள கட்சிதான், மதவாதத்தைப் பின்பற்றுகிற கட்சிதான். இருந்தாலும் அவர்களுடைய அரசியல் நோக்கத்திற்காக அனைவரையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வரும் தேவை அவர்களுக்கு இருக்கிறது. அதனை முயற்சிக்கிறார்கள்.

தெரிந்த பல அமைப்புகள் ஆர்எஸ்எஸ் அமைப்புகளாக இருக்கும். இந்து முன்னணி போல சிலதை சொல்லலாம். ஆனால், தெரியாமல் பல்வேறு  அமைப்புகள், என்ஜிஓ-கள் ஆர்எஸ்எஸ் வழிகாட்டி நடத்தக்கூடிய அமைப்புகளாக இருப்பார்கள். குறிப்பாக இன்றைக்கு ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால் அவர்களுக்கு நிதி என்பது ஒரு பிரச்சனையாக இல்லை.

கேரளாவில் பழங்குடியின மக்கள் ஒட்டு மொத்த மக்கள் தொகையில் 2 சதவிகிதம் கூட இருக்க மாட்டார்கள். ஆனாலும் ஆர்எஸ்எஸ் வழிகாட்டுதலில் செயல்படக்கூடிய பெரும்பகுதி என்ஜிஓ கள் செயல்படும் பகுதி பழங்குடியின மக்கள் பகுதிதான். எனவே ஆர்எஸ்எஸ் நடவடிக்கைளுடைய எல்லை என்ன ?ஆழம் என்ன ? அதனுடைய தன்மை என்ன? வகைகள் என்ன ? என்பதை சரியாக புரிந்துகொண்டு எதிர்க்க வேண்டும்.

கருத்தியல் நடவடிக்கைகள்

இதற்கான திட்டத்தை உருவாக்குவதற்கான பரந்த வழிகாட்டுதல், 23 வது அகில இந்திய மாநாட்டின் அரசியல் ஸ்தாபன அறிக்கையில் தெளிவாக தரப்பட்டுள்ளது. அதில் முதல் விசயம், கருத்தியல் நடவடிக்கைகள் ஆகும்.  இந்துத்துவ வகுப்புவாத கருத்தியலை வீழ்த்துவதற்கான நடவடிக்கைகளுக்கான ஏராளமான விபரங்களை கொண்ட பிரசுரங்கள், வகுப்பு குறிப்புகள், பிரச்சார கருவிகளை, சமூக வலைத்தள உள்ளடக்கங்களை உருவாக்க வேண்டும். இவற்றை உள்ளூர் மட்டத்திலேயே சுலபமாக செய்துவிட முடியாது. கட்சியின்  மத்தியக்குழுவும், மாநிலக்குழுவும் இணைந்து குறிப்பிட்ட காலவரையறைக்குள் இதனை முடிக்க வேண்டும். சமூக வலைத்தளத்தையும் வலுப்படுத்தி கருத்தியல் பிரச்சார நோக்கில் பயன்படுத்த வேண்டும்.

இரண்டாவது விசயம், கட்சி மக்களோடு உயிரோட்டமான தொடர்பில்,  இரண்டற  கலந்திருக்க வேண்டும் என்கிற மாஸ்லைன் கடைப்பிடிப்பது.  மக்கள் மத்தியில் நம்முடைய தலையீடுகளும், பணிகளும் விரிவாக நடக்க வேண்டும் என்பதை நாம் தொடர்ந்து வலியுறுத்துகிறோம். இது  கட்சிக்கும், வெகுஜன அமைப்புகளுக்கும் பொருந்தும்.  மக்களோடு உயிர்ப்பான ஒரு  தொடர்பில் இருக்க வேண்டும் என்பது  கொல்கத்தா பிளீனத்தில் இருந்தே சொல்லப்படுகிறது. மக்களுடன் உயிரோட்டமான தொடர்பு என்று சொல்வதன் மற்றொரு அம்சம், பல்வேறு நல நடவடிக்கைகளை, சமூக சேவை  நடவடிக்கைகளை முன்னெடுப்பது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் இது போன்ற பணிகளை  மேற்கொள்கிறார்கள். நாம் கட்சியாகவும், வர்க்க வெகுஜன அமைப்புகளின் வழியாகவும் இதனைச் செய்ய வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு கல்வி தளத்தில் செயல்படுகிறது. அவர்களை போல ஆயிரக்கணக்கான பள்ளிக்கூடங்களை நாம் நடத்த முடியாது. ஒன்றிரண்டு நடத்தலாம். ஆனால்  இளைஞர், மாணவர் அமைப்புகள்  கல்வி தளத்தில்  பங்களிக்க முடியும். உதாரணமாக மாலை நேர கல்வி (டியூசன்) மையங்கள் நடத்தலாம்.  தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் நடத்தலாம். படிப்பு வட்டங்கள், நூலகங்களை நடத்த முடியும்.

அதே போல, பண்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். பண்பாட்டு நடவடிக்கை என்றாலே  கலைக்குழு அமைப்பு, பாடல்குழு, வீதிநாடகக்குழு என்பது மட்டுந்தான் நினைவில் வருகிறது. அந்த பணிகள் இன்னும் பரந்து பட்டதாக இருக்க வேண்டும். நமக்கு அப்பாற்பட்ட மக்களை ஈடுபடுத்தகூடிய விதமான நடவடிக்கைகளாக செய்ய வேண்டும். உதாரணமாக புத்தகத் திருவிழாக்களை சொல்லலாம். மாணவ/மாணவியருக்கான பேச்சு போட்டி, கட்டுரைப்போட்டிகள் நடத்தலாம். இந்த நடவடிக்கைகளை கட்சியாக மட்டும் நடத்த முடியாது. வர்க்க வெகுஜன அமைப்புகளும் செய்ய வேண்டும். குறிப்பாக தொழிற்சங்கள் சில முயற்சி எடுத்து, தொழிலாளர் வாழும் பகுதிகளில் பண்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம்.

அடுத்து வளர்த்தெடுக்க வேண்டியது பாலர் சங்கம்,  சில மாநாடுகளாகவே நாம் பாலர் சங்கம் பற்றி பேசுகிறோம். இந்த விசயத்தில் தீவிர முன்முயற்சி ஏதும் இல்லை. அதனால்தான் பாலர் சங்கத்தை உருவாக்குவதை மாநாட்டின் கடமையாகவே நாம் வரையறுத்திருக்கிறோம். கேரளாவில் இவ்விசயத்தில் நமக்கு நல்ல அனுபவம் இருக்கிறது. ஒரு பரந்த அமைப்பாக பாலர் சங்கத்தை கட்டமைத்திருக்கிறார்கள். பாலர் சங்கத்தை உருவாக்கும் போது, கட்சி ஏற்கனவே கணிசமாக இருக்கும் பகுதி, செல்வாக்கு இருக்கும் பகுதியில் தொடங்கினால், இதர பகுதிகளுக்கும் விரிவாக்க முடியும் என்பது கேரள அனுபவம்.

மத விழாக்கள்

கோவில் திருவிழாக்களிலும், மத விழாக்களிலும் பங்கெடுத்தல் அடுத்து வருகிறது. பொதுவாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பு கோவில்களை, மத நம்பிக்கைகளை பயன்படுத்துகிறார்கள். கோவில் என்று சொல்லும் போது மதம் சார்ந்த நடவடிக்கைகள் இருக்கும். அடுத்து  கோவில் திருவிழாக்கள் என்று சொல்லும் போது அது மதம் சார்ந்த நடடிவடிக்கையாக மட்டும் இல்லாமல் ஒரு சமூகம் சார்ந்த நடவடிக்கையாகவும் இருக்கும் ஏரளாமான மக்களுடைய பங்கேற்பும் இருக்கும். நாம் சமூகம் சார்ந்த நடவடிக்கைகளில் இருந்து விலகி இருக்க முடியாது.

திருவிழாக்களை நாம் முற்றிலும் நிராகரித்துவிட முடியாது. ஆனால் எந்த திருவிழாவில் பங்கேற்பது. எந்த அளவில் பங்கேற்பது என்பது பற்றி  ஓரே சீரான முடிவினை மேற்கொள்ள முடியாது. ஒவ்வொரு திருவிழாவின் தன்மையை பொருத்து முடிவு செய்ய வேண்டும். சில திருவிழாக்கள் முழுக்க முழுக்க மதம் சார்ந்த நடவடிக்கையாக மட்டும் இருக்கும். அதில் சமூக ரீதியான  பங்கேற்பு பெரியதாக இருக்காது. எனவே ஒவ்வொரு திருவிழாக்களின் தன்மையை கணக்கில் எடுத்து உள்ளூர் மட்டத்தில் முடிவு எடுக்க வேண்டும்.

கோயில்களுக்கும் சமூக வாழ்க்கையில் பாத்திரம் உள்ளது. அவைகளை ஆர்.எஸ்.எஸ் சார்பு அமைப்புகள் கையகப்படுத்துகிறார்கள். இந்துத்துவா நடவடிகைகளுக்கு பயன்படுத்துகிறார்கள். நாம் அதனை அப்படியே தங்குதடையில்லாமல் அனுமதிக்க முடியாது. எனவே கோயில் நிர்வாகத்தில் நாமும் தலையிட வேண்டும். அதற்காக கட்சியின் முக்கிய ஊழியர்கள் அதனை செய்ய முடியாது. கட்சி ஆதரவாளர்கள், மதச்சார்பற்ற மனநிலை கொண்ட நம்பிக்கையாளர்கள் அதில் இணைந்திட முடியும். இது அத்தனை எளிதாக இருக்காது. ஆனால் நாம் இதன் மூலமே கோயில்களை ஆர்.எஸ்.எஸ் செயல்பாட்டுக்கான  களமாக மாறாமல் தடுக்க முடியும்.

விளையாட்டு விழாக்கள், யோகா பயிற்சி போன்ற வேறு பல சமூகம் சார்ந்த நடவடிக்கைகளும் அவசியமே.

பொதுவாகவே மக்கள் மத்தியில் மத உணர்வு அதிகரித்துள்ளது. (மதவாதத்தை குறிப்பிடவில்லை). கிருத்துவர்கள், இஸ்லாமியர்கள் மத்தியிலும் மத உணர்வு கூடுதலாகியுள்ளது. மதத்திற்கு எதிரான போராட்டத்தை நாம் நடத்துவதில்லை. அதற்கு முன்னுரிமை கொடுப்பதில்லை. மதவாத சக்திகள், மதவெறி சக்திகளை எதிர்த்த போராட்டத்திற்குத்தான் முன்னுரிமை கொடுக்கிறோம்.

நேரடியாக மதத்தை விமர்சிக்காத அதே சமயத்தில் அறிவியல் ரீதியான கருத்துக்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும், அதே போல முற்போக்கான சிந்தனைகளை உருவாக்குவதற்கான முயற்சிகளை  மேற்கொள்ள வேண்டும்.  மூடநம்பிக்கைகளையும்,  பழமைவாதத்தையும் எதிர்த்து பிரச்சாரம் செய்ய வேண்டும். இதுபோன்ற முயற்சியின் மூலம் சமூகத்தை  அறிவியல் பாதையில், முற்போக்கு பாதையில் செலுத்துவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

சிறுபான்மை வகுப்புவாதம்

ஆர்எஸ்எஸ் இந்துத்துவச் சக்திகள் வளர்கிறார்கள். அந்த வளர்ச்சி மட்டும் தனியாக நடப்பதில்லை. இன்னொரு பக்கம் இஸ்லாமிய மத அடிப்படை வாதிகளும் வளர்கிறார்கள். அதிலிருந்தும் ஆர்.எஸ்.எஸ் பலனடைகிறது. 1990 களில் கோவையில் என்ன நடந்தது என்பதைப் பார்த்தோம்.

பொதுவாக நாடு முழுவதுமே இஸ்லாமிய மக்கள் மிக மோசமான தாக்குதலுக்கு ஆளாகிவருகிறார்கள். குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில்  இரண்டாம்தர குடிமக்களாக வேகமாக மாற்றப்பட்டு வருகிறார்கள். எல்லாக் குடிமக்களுக்கும் உரிய அடிப்படையான உரிமைகள் கூட இஸ்லாமிய மக்களுக்குமறுக்கப் படுகின்றன. எனவே இந்த மாநிலங்களில் இஸ்லாமிய மக்கள்   விரக்தியின் விளிம்பிற்குத் தள்ளப்படுகிறார்கள். அந்த மாதிரியான சூழலில் அவர்கள்  இஸ்லாமிய அடிப்படைவாத, தீவிரவாத  அமைப்புகள் பக்கம் திரும்புவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

குறிப்பாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அதனுடைய அரசியல் கட்சியான எஸ்டிபிஐ, அதைப்போல ஜமாத்-இ-இஸ்லாமி அதனுடைய அரசியல் கட்சியான வெல்பேர் பார்ட்டி போன்றவற்றை நோக்கி ஒரு பகுதி சிறுபான்மையினர்  திரும்ப வாய்ப்பு இருக்கிறது.

தீவிரவாத போக்குகள்  சிறுபான்மை மக்கள் மத்தியிலிருந்து வந்தாலும் அதை கடுமையாக எதிர்க்க வேண்டும். இந்துத்துவ சக்திகளை எதிர்த்து விட்டு, சிறுபான்மை தீவிரவாதத்தை எதிர்க்கவில்லை என்று சொன்னால், சாதாரண மக்களுக்கு நம் மீது நம்பகத்தன்மை வராது. அது ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு சாதகமாகிவிடும். நம்முடைய நோக்கம் அனைத்து மதங்களையும் சார்ந்த மக்களை ஒரே அணியில் இணைத்து மதவெறிக்கு எதிரான, மதவாதத்திற்கு எதிரான போராட்டத்தை நடத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.

வகுப்புவாத சக்திகளுக்கு எதிரான நடவடிக்கைகளை உள்ளூர் அளவில் திட்டமிட்டு, திட்டவட்டமாக முன்னெடுக்க வேண்டும். மாநில அளவிலும், அகில இந்திய அளவிலும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். நாடும், நாட்டு மக்களும்  எதிர்கொள்ளும் தீவிர அபாயத்திற்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்த வேண்டும்.

தமிழில்: உ.வாசுகி

தொகுப்பு: எம்.கண்ணன் (தீக்கதிர்)

சங் பரிவாரத்தின் உத்திகள்!

ஜி.ராமகிருஷ்ணன்

அரசியல் தலைமைக்குழு  உறுப்பினர், சிபிஐ(எம்)

(ஆர்.எஸ்.எஸ். செயல்படுத்தி வரும் உத்திகளை எதிர்கொள்வது தொடர்பாக கோவை, திருப்பூர், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்ட கட்சி முன்னணி தோழர்கள் பங்கேற்ற பயிற்சி பட்டறையில் முன்வைக்கப்பட்ட குறிப்பின் சில பகுதிகள் இங்கு கட்டுரை வடிவில் தரப்பட்டுள்ளது – ஆசிரியர் குழு)

 “இந்துத்துவா சித்தாந்தம் பழமையை மீட்டெடுக்கும் வாதத்தை முன்னெடுப்பதாக இருப்பதோடு, இந்து ராஷ்ட்ராவை நிறுவ வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்தியாவின் பன்முகத்தன்மை மிக்க கலாச்சாரத்தை மறுதலிப்பதாகவும் இருக்கிறது” என நமது கட்சித் திட்டம் குறிப்பிடுகிறது.

ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங் பரிவார அமைப்புகள் தொடக்க காலத்தில் இருந்தே இந்துத்துவா – இந்து ராஷ்ட்டிராவை நோக்கிய பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. 2014 ஆம் ஆண்டு பாஜக ஒன்றிய ஆட்சிக்கு வந்த பிறகு அவர்களுடைய இந்த நோக்கத்தில் வேகமாக செயல்படுகின்றனர்.

கடந்த எட்டு ஆண்டு காலமாக “சமூக, இன பிளவுகளைத் தாண்டி, அனைத்தையும் உள்ளடக்கிய குறிப்பிடத்தக்க இந்து அடையாளத்தை உருவாக்குவதில் கணிசமான வெற்றியை பாஜக பெற்றுள்ளது. அதோடு சேர்ந்து நுண்ணிய நிலையில் (Micro Level) சாதியத் திரட்டலையும் அது மேற்கொள்கிறது” என்று 23 வது அகில இந்திய மாநாட்டின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

மேலும், “இந்துத்துவாவையும் அதன் பல்வேறு வகையான வகுப்புவாத அமைப்புகளையும் எதிர்த்துப் போராடுவதென்பதை அரசியல், தத்துவம், கலாச்சாரம் மற்றும் சமூகத் தளங்களில் நீடித்த வகையில் மேற்கொள்ள வேண்டும். இந்துத்துவா நிகழ்ச்சி நிரலுக்கு எதிரான இந்தப் போராட்டத்தை வலுப்படுத்த, உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” எனவும் அது குறிப்பிடுகிறது.

கட்சித்திட்டம் மற்றும் 23வது கட்சி காங்கிரஸ் சுட்டிக்காட்டிய அம்சங்களை கணக்கில் எடுத்துக் கொண்டு கோவை மற்றும் திருப்பூரில் பாஜக பின்பற்றிவரும் சில உத்திகளை காண்போம்.

கோவை – திருப்பூரில் எதிர்ப்பு உணர்வும், வகுப்புவாதமும்

கோவை மாவட்டம் தொழில்கள் நிறைந்த பகுதி. பஞ்சாலை மற்றும் இன்ஜினியரிங் துறையில் சில கார்ப்பரேட் நிறுவனங்களை தவிர்த்து பெரும்பான்மையாக சிறு-குறு தொழில் நிறுவனங்களே இயங்கி வருகின்றன. திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 1,200 ஏற்றுமதி நிறுவனங்கள் உள்ளன. கோவை, திருப்பூருக்கு தேவையான முக்கிய கச்சா பொருட்களில் ஒன்று பருத்தி. பருத்தி பதுக்கலுக்கு சாதகமான கொள்கைகளால் நூல் விலை சென்ற 2020 அக்டோபர் மாதம் கிலோவுக்கு ரூ.237 என்பதிலிருந்து, 2022 மே மாதம் ரூ.474 என இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. இதன் காரணமாக கோவை, திருப்பூரில் ஜவுளி, விசைத்தறி மற்றும்  பின்னலாடைத் தொழில்கள் பாதிக்கப்படுகின்றன.

மூலதனம் சுருங்குவதாலும், வங்கிகளிலிருந்து கடன் பெற இயலாததாலும் சிறு – குறு நிறுவனங்கள் நெருக்கடியில் உள்ளன. தொழிலாளர்களும் பாதிக்கப்படுகின்றனர். வெளிநாடுகளிலிருந்து திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்களுக்கு கிடைத்த ஆர்டர்களில் மூன்றில் இரண்டு பங்கு குறைந்துவிட்டது. சம்பந்தப்பட்ட நாடுகள் ஆர்டர்களை பங்களாதேஷூக்கும், வியட்நாமுக்கும் மாற்றி கொடுக்கின்றன. உள்நாட்டில் பஞ்சு விலையை சீராக்கவும், ஜவுளித் துறையை தடங்கலின்றிச் செயல்பட வைப்பதற்கும் முதலாளிகள் சங்கத்தினர் தங்களின் கோரிக்கைகளை ஒன்றிய அரசிடம் தெரிவித்தும் அரசின் ஒத்துழைப்பு முழுமையாக கிடைக்கவில்லை.

பொதுத்துறை நிறுவனமான இந்திய பருத்திக் கழகம் (சிசிஐ) விவசாயிகளிடமிருந்து பருத்தியைக் கொள்முதல் செய்ய ஜவுளித் துறையினர் ஒன்றிய அரசிடம் கேட்டபோது,  துறைக்கான அமைச்சர் பியூஸ் கோயல், “அரசை தலையிடச் சொல்லி யாரும் நிர்ப்பந்திக்க முடியாது. சந்தை சக்திகள் சுதந்திரமாக செயல்படட்டும்” என (19.11.2021) கூறிவிட்டார்.

கடந்த காலத்தில் பாஜக எதிர்க்கட்சியாக இருந்தபோது, இந்து முன்னணியைச் சார்ந்தவர்கள் திருப்பூர் தொழில் பாதுகாப்புக்குழு என்ற ஒரு அமைப்பை உருவாக்கி கடையடைப்பு உள்ளிட்ட போராட்டத்தை நடத்தினர். அதன் மூலம் சிறு குறுந்தொழில்முனைவோர் மத்தியில் ஆதரவை பெற்றனர். ஆனால், இப்போது மத்தியில் பாஜக ஆட்சியில் உள்ளது. எனவே, பின்னலாடைத் தொழிலை பாதுகாக்க மகா யாகம் ஒன்றை நடத்தினர். யாகம் நடத்துவதன் வழியாக, அரசியல் சார்ந்த பிரச்சனைக்கு, நம்பிக்கை சார்ந்த ‘தீர்வை’ முன்னிறுத்துகின்றனர்.

1984களில் திருப்பூர் மாவட்டத்தில், பஞ்சப்படி கோரி வீறுகொண்ட வேலை நிறுத்த போராட்டம் நடந்த போது, அதனை முறியடிப்பதற்காக, முதலாளிகளோடு கைகோர்த்து, சங் பரிவாரத்தினர் ஆலைகளை இயக்க முயன்றனர். ஆனால், ஒன்றுபட்ட தொழிலாளர் படையின் எதிர்ப்பின் முன்னால் சரணடைந்து ஓட்டம் எடுத்தனர். இப்போதும், இந்தப் பகுதிகளில், தொழில் மற்றும் தொழிலாளர் நலன் காக்க இடதுசாரி இயக்கமும், தொழிற்சங்க இயக்கமும் தொடர்ந்து வலுவாக இயங்குவதற்கான தேவை உள்ளது. இந்த சூழலில் பாஜகவும், சங் பரிவாரமும் பலமடைந்தால், அது இடதுசாரி இயக்கத்தையும், தொழிற்சங்க இயக்கத்தையும் பலவீனப்படுத்தும்.

கோவை, திருப்பூரில் ஜவுளித் தொழிலில் மட்டும் நெருக்கடி ஏற்படவில்லை. கோவை மாவட்டத்தில் உள்ள இஞ்சினியரிங் தொழில்களில் லட்சத்திற்கும் மேற்பட்ட சிறு/குறு நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை நெருக்கடியில் உள்ளன. கடந்த 20.12.2021 அன்று அகில இந்திய சிறு – குறு நிறுவனங்களின் 170 கூட்டமைப்புகள் இணைந்து நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தின. இப்போராட்டத்தில் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டன.

பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., கச்சா பொருட்கள் விலையேற்றம் என அடுத்தடுத்து நெருக்கடியை உருவாக்கும் கொள்கைகளை மத்திய பாஜக அரசு மேற்கொள்கிறது. இருப்பினும், அண்மையில் நடைபெற்ற திருப்பூர் மற்றும் கோவை மாநகராட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்ட பாஜக கடந்த காலத்தைவிட சற்று கூடுதலாகவே வாக்குகளை பெற்றுள்ளது. தொழில்கள் பாதிப்பதற்கும், தொழிலாளர்களின் வேலையிழப்பிற்கும் காரணம்  பாஜக அரசின் கடைப்பிடிக்கும் கொள்கைகளே என்ற போதிலும் கூட, பாஜகவிற்கு வாக்கு அதிகமாவது வகுப்புவாத உணர்வு வலுப்படுவதை காட்டுகிறது.

வகுப்புவாதத்தின் பல முகங்கள்

வகுப்புவாதத்திற்கு முக்கியக் காரணம் மதம்தான் என சிலர் கருதுகிறார்கள். அப்படி அல்ல. மதநம்பிக்கையும் மதத்தின் மீது பற்றுகொண்டவர்கள் அனைவரும் வகுப்புவாதிகளாக மாறுவதில்லை. மதநம்பிக்கை கொண்ட மக்கள் பலர் இதர மதத்தைச் சார்ந்தவர்களோடு சகோதரத்துவத்தோடும் நேயத்தோடும் வாழ்ந்து வருவதைக் காண்கிறோம். வகுப்புவாதத்திற்கு மதம் அடிப்படை காரணம் அல்ல. அதே நேரத்தில் மத நம்பிக்கையாளர்களைத்தான் வகுப்புவாதிகளாக மாற்றுகிறார்கள்.

வகுப்புவாத உணர்வை உருவாக்கும் நடைமுறைக்கு பேராசிரியர் கே.என்.பணிக்கர் ஒரு கேரளப் பெண்மணியை உதாரணம் காட்டி தனது நூலில் குறிப்பிடுகிறார். (மதச்சார்பற்ற நடவடிக்கைக்கான கையேடு)

”அந்தப் பெண்மணிக்கு ராமர் மீது பக்தி உண்டு. தினமும் கோவிலுக்கு செல்வதில்லை என்றாலும் ராமாயணத்தில் ஒன்றிரண்டு பக்கங்களை தினமும் காலையில் படிக்கும் பழக்கமுண்டு, இப்படிப் பட்டவர் அயோத்தியில் ராமர் கோவிலை பாஜக மேற்கொண்டபோது அதன் ஆதரவாளராக மாறினார்.

அயோத்தியா இயக்கத்தை எதிர்க்கும் முஸ்லீம் சிறுபான்மையினர் மீது அந்தப் பெண்மணிக்கு பகையுணர்வு ஏற்பட்டிருக்கக்கூடும். சாதாரண பக்தி/மத உணர்வு வகுப்புவாத உணர்வாக மாற்றப்பட்டது.

எனவே வகுப்புவாத உணர்வு நிலைக்கு கொண்டு வர மதநம்பிக்கை பயன்படுத்தப்படுகிறது. சாதாரண மக்களிடம் இந்த வகுப்புவாத உணர்வை உருவாக்கிட ராமர் கோவில் பிரச்சனை, முஸ்லீம்களுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரம் நடத்துவது, கிறிஸ்தவர்கள் மீது பொய்ப் பிரச்சாரம் செய்து அவர்கள் மீது தாக்குதல் நடத்துவது போன்ற நடவடிக்கைகளுக்கு உதவுகின்றன.

வகுப்புவாத உணர்வினை உருவாக்கிய பிறகு, வதந்தி மற்றும் பொய்களை கட்டமைத்து, மத மோதல்களையும், கலவரங்களையும் உருவாக்குகிறார்கள். இதுபோன்ற வன்முறைகள் அவர்களின் அடுத்தகட்ட பாய்ச்சல் வேக வளர்ச்சிக்கு பயன்பட்டிருக்கின்றன.

கோவை – திருப்பூரில் சங் பரிவார அமைப்புகள்:

1940களில் தமிழகத்தில் கன்னியாகுமரி, சேலம், கோவை, மதுரை போன்ற மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ். சாகாக்கள் நடக்கத் துவங்கின. 1949 ஆம் ஆண்டு கோவை மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு உருவானது. கோவை மற்றும் திருப்பூர் என்ற இரண்டு வருவாய் மாவட்டங்களை மாநில அரசு 2009ல் தான் உருவாக்கியது.

இந்து வியாபாரிகள் சங்கம்

கோவை நகரில் உள்ள திருப்பூர் குமரன் மார்க்கெட்டில் கடன் வசூல் செய்வதில் வியாபாரிகளுக்கிடையில் முரண்பாடு ஏற்பட்டது. கடன் கொடுத்தல், வசூலில் ஏற்பட்ட முரண்பாட்டை இந்து வியாபாரிகள், இஸ்லாமிய வியாபாரிகளுக்கிடையிலான முரண்பாடாக மாற்றி இந்து முன்னணி அங்கே இந்து வியாபாரிகள் சங்கத்தை துவக்கியது. மத ரீதியில் துவங்கப்பட்ட முதல் சங்கம் இது ஆகும்.

கோவையில் ஜவுளி விற்பனை துறையிலும், எலக்ட்ரானிக் துறையிலும் இஸ்லாமிய வியாபாரிகளுக்கும் மார்வாடிகளுக்கும் போட்டி ஏற்பட்டது. பெரியார் திராவிட கழகம் சார்பில் மார்வாடிகளை தமிழகத்திலிருந்து விரட்டுவோம் என துண்டு பிரசுரம் வெளியிட்டனர். இந்து முன்னணி மார்வாடிகளுக்கு ஆதரவாக நின்றது. மார்வாடிகளும் இந்து முன்னணிக்கு நிதி உதவி செய்தார்கள். இச்சூழலில் கோவை நகரில் 1981ல் நடந்த பொதுக்கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். பேச்சாளர் திருக்கோவிலூர் சுந்தரம் நபிகள் நாயகத்தை தாக்கி பேசியிருக்கிறார். அவரை இஸ்லாமிய பழமைவாதிகள் தாக்கியிருக்கிறார்கள். அடுத்தடுத்து திருக்கோவிலூர் சுந்தரம், ராமகோபாலன் போன்றோரின் வெறுப்பு பேச்சு நகரில் பதட்டத்தை உருவாக்கியது. 1982இல் ஹக்கிம் என்ற மாணவர் திராவிடர் கழக கூட்டத்தில் கலந்து கொண்டு திரும்பிய போது படுகொலை செய்யப்பட்டார்.

கலவரமும், குண்டு வெடிப்பும்

1997ஆம் ஆண்டு நவம்பர் 29 அன்று கான்ஸ்டபிள் செல்வராஜ் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, பதட்டம் விசிறிவிடப்பட்டது. நவம்பர் 30, டிசம்பர் 1 ஆகிய தேதிகளில் கலவரம் வெடித்தது. காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூடு, படுகொலையில் 19 பேர் கொல்லப்பட்டனர். இவர்களுக்கும் செல்வராஜ் படுகொலைக்கும் எந்த தொடர்பும் இல்லை.

1998 பிப்ரவரி மாதத்தில், கோவைக்கு அத்வானி தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்தார். அப்போது அல்-உம்மா பயங்கரவாதிகள் ரயில் நிலையத்திலும், மருத்துவமனையிலும், மக்கள் கூடும் இடங்களிலும் குண்டு வைத்தார்கள். இதிலும் அப்பாவி மக்களே கொல்லப்பட்டார்கள். மேலும் இந்த சம்பவம் இந்து முன்னணியின் கொலைபாதகங்களுக்கு நியாயம் கற்பிக்க உதவியது. இஸ்லாமியர் மீதான வெறுப்பு பிரச்சாரமும், தாக்குதல்களும் அதிகரித்தன.

திருப்பூர் தொழில்முனைவோர் மத்தியில்

திருப்பூரில் தொழில் முனைவோர் மத்தியில் தனது செல்வாக்கை அதிகரிப்பதற்காக சங் பரிவாரம் மேற்கொண்ட முயற்சிகள் முக்கியமானவை. 2011 ஆம் ஆண்டு சாய ஆலைகளுக்கு உயர்நீதிமன்றம் சாயக்கழிவுநீரை வெளியேற்றும் பிரச்சனையில் முழுத் தடை விதித்தது. இதனால் மொத்த பின்னலாடை தொழிலும் நின்று போகும் நிலை ஏற்பட்டது. அப்போது “தொழில் பாதுகாப்புக் குழு” என்ற பெயரில் ஒரு அமைப்பை இந்து முன்னணியினர் உருவாக்கினர். ஏற்கனவே செயல்பட்டு வரும் வழக்கமான தொழில் அமைப்புகளைத் தாண்டி இந்த அமைப்பு சிறப்பாக செயல்படுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயன்றனர். சாயஆலைப் பிரச்சனை, நூல் விலைப் பிரச்சனை ஆகியவற்றில் பிரம்மாண்ட இயக்கங்களை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தில் தேர்தல் வந்தபோது ஆர்எஸ்எஸ் குழுவினர் மாற்றத்துக்கான அணி என்ற பெயரில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றனர். இந்த வெற்றியை பயன்படுத்தி ஆர்எஸ்எஸ் கருத்தியலைப் பரப்ப முயற்சி மேற்கொண்டு, அதில் கணிசமான அளவுக்கு வெற்றியும் பெற்றுள்ளனர்.

ஆடிட்டர்கள் மத்தியில் உள்ள செல்வாக்கை பயன்படுத்தியும், “ஸ்ரீபுரம் அறக்கட்டளை” போன்ற தன்னார்வ அமைப்புகளை உருவாக்கியும் இயங்குகிறார்கள். கடந்த காலத்தில் தொழில் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் கூட்டாக சேர்ந்து அரசின் கொள்கை சார்ந்த பிரச்சனைகளில் கருத்து தெரிவிப்பது, இயக்கம் நடத்துவது ஆகியவற்றில் புகுந்து, சீர்குலைக்கும் வேலையை தற்போது நுட்பமாக செய்து வருகின்றனர். சமீபத்தில் தொழிற்சங்கங்கள் நடத்திய அகில இந்திய வேலை நிறுத்தம் மோசமாக சீர்குலைக்கப்பட்டது.

கல்வித்தளத்தில்

பெரும்பான்மையான தனியார் பள்ளிகள் தற்போது சிபிஎஸ்இ பாடத் திட்டத்திற்கு மாறிவிட்டன. இப்பள்ளி நிர்வாகங்களே ஆர்.எஸ்.எஸ். மாணவர்களை திரட்டுவதற்கு உதவி செய்கின்றன. தற்போது கோவையில் சில அரசு பள்ளிகளிலும், பள்ளி மைதானங்களிலும் சாகாக்கள் மற்றும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

திருப்பூரில் ஜெய்வாபாய் அரசுப் பள்ளி தமிழகத்தில் 6ஆயிரம் மாணவிகள் படிக்கக்கூடிய பெரிய மாநகராட்சிப் பள்ளியாகும். அப்பள்ளியில் பெண் ஏன் அடிமையானாள்? என்ற பெரியாரின் புத்தகத்தை விநியோகித்ததை பிரச்சனை செய்தனர். அந்த சம்பவத்தில் இருந்து தொடர்ந்து இப்பள்ளியைக் குறி வைத்து வருகின்றனர். இப்பள்ளியில் படிக்கும் மாணவியை ஆசிரியர்கள் மதமாற்றம் செய்வதாக சமீபத்தில் பிரச்சனையை தூண்டி சமூக ஊடகங்களில் பரப்பினர். ஆர்ப்பாட்டம் நடத்தினர். கல்வித் துறை விசாரித்து அது உண்மையில்லை என்று கூறியது.

இந்து முன்னணியின் திட்டம்

இந்து முன்னணி அமைப்பு விநாயகர் சதுர்த்தி விழாவை நான்கு நாள் நிகழ்வாக நடத்துகிறது. இந்த நிகழ்வை பயன்படுத்தி உள்ளூர் குடியிருப்புகள் மட்டத்தில் மிக இளவயது (15 – 20 வயதுடையோர்) இளைஞர்களை அணிதிரட்டுவது நடந்து வருகிறது. இதில் வெளியூரில் இருந்து இங்கு வந்து குடியிருக்கும் சமூகங்களின் பாதுகாப்பின்மை உணர்வை பயன்படுத்தி, தங்கள் பக்கம் ஈர்த்துக் கொள்கின்றனர்.

சிலைகளை ஆற்றில், குளத்தில் அல்லது கடலில் கரைக்கும் ஊர்வலம் நடைபெறுகிறது. இந்த ஊர்வலத்தை இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையிலான மோதலை உருவாக்குவதற்கும் பயன்படுத்துகிறார்கள்.

ஏன் விநாயகர் சதுர்த்தியை தேர்ந்தெடுத்தார்கள்?

தமிழகத்தில் இந்து மதத்தில் உள்ள சைவர்களும், வைணவர்களும் வெவ்வேறு கடவுள்களை வழிபடுகிறார்கள். இரண்டு பகுதிகளை சார்ந்தவர்களும் சங் பரிவார அமைப்புகளில் உறுப்பினர்களாக சேருகிறார்கள். சைவ, வைணவ அடையாளங்களுக்கு அப்பாலும், சாதி வேறுபாட்டிற்கு அப்பாலும் கிராமங்களிலும் நகரங்களிலும் விநாயகரை இந்துக்கள் வழிபடுகிறார்கள். எனவே, விநாயகரை கையில் எடுத்தால் சைவ, வைணவ வேறுபாட்டு பிரச்சனை வராது என்று ஆழமாக பரிசீலித்து முடிவெடுத்திருக்கிறார்கள்.

இ.மு. நிர்வாகிகளாக இருப்போர் கம்பெனி கொடுக்கல், வாங்கல் வரவு செலவு பிரச்சனைகள், நிலப் பிரச்சனைகளில் கட்டப்பஞ்சாயத்து செய்வதும், சட்டரீதியாக காவல் துறையை நாடி நீண்ட காலதாமதத்தைச் சந்திப்பதை விட, இவர்களிடம் போனால் விரைவில் பிரச்சனை முடியும் என்ற தொழில் செய்வோர் மனநிலையும் இ.மு.வுக்கு ஒரு பிடியை உருவாக்கி உள்ளது. இதனால் அவர்கள் பொருளாதார ஆதாயமும் அடைகின்றனர்.

யாகம் – நம்பிக்கை, வியாபாரம்:

இந்து முன்னணி அமைப்பின் சார்பில் மகா யாகம் நடத்தப்பட்டதை முன்பே குறிப்பிட்டோம். அதில் மூட நம்பிக்கை மட்டுமல்லாது வியாபார நோக்கமும் இணைந்துள்ளது. திருப்பூரை அடுத்த  பொங்கலூரில் சோடஷ மகாலட்சுமி மகா யாகம் நடத்தி அதில் சுமார் 10 ஆயிரம் பேரை திரட்டினார்கள். பிறகு யாகம் நடத்திய இடத்தை ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்து விட்டனர்.

ஆர்.எஸ்.எஸ். நடத்தும் சாகாக்கள்

கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய 3 மாவட்டங்களில் சுமார் 250 சாகாக்கள் நடந்து வருகின்றன. இப்படிப்பட்ட சாகாக்கள் சில அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பெரும்பாலும் தனியார் பள்ளி வளாகங்களில் நடந்து வருகின்றன. சங் பரிவார நடவடிக்கைகளில் இது முக்கியமானது. இதில் பயிற்சி பெறுபவர்களைத்தான் முழுநேர ஊழியர்களாக்குகிறார்கள். வெறுப்பு பிரச்சாரம் செய்வது, மத மோதலை உருவாக்குவது, சிறுபான்மை மக்களை தாக்குவது போன்ற நடவடிக்கைகளுக்கு வகுப்புவாத அரசியல் பயிற்சியோடு ஆயுதப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

ஆர்.எஸ்.எஸ்.ஸின் சாகா என்பது, கம்பு, வாள், குண்டெறிதல் போன்ற பயிற்சிகளை உள்ளடக்கியது. உடற்பயிற்சி விளையாட்டுகள், வில்கள், அணிவகுப்புகள் போன்றவை மைதானங்களிலும் பிற பொது இடங்களிலும் நடத்தப்படுகின்றன. உடற்பயிற்சி என்கிற பெயரில்தான் இவை அனைத்தும் நடத்தப்படுகின்றன. ஒரு தீவிரவாத அணுகுமுறையையும், குடிமைச் சமூகத்தில் எவ்விதமான தாக்குதலையும், நடத்துவதற்கான மனநிலையையும் உருவாக்குவதே, இந்த நடவடிக்கைகளின் நோக்கம். இவை சிறுபான்மையினரின் மனதில் சந்தேகத்தையும் அச்சத்தையும், பாதுகாப்பற்ற உணர்வுகளையும் அடிக்கடி ஏற்படுத்துகின்றன.

மதக்கலவரத்தை ஆர்.எஸ்.எஸ். உருவாக்கும் முறை இதுதான்.

1. சிறுபான்மையினர் இந்த நாட்டுக்கு விசுவாசமான குடிமகன்கள் அல்ல என்று பிரச்சாரம் செய்து, பெரும்பான்மை சமூகத்தின் மத உணர்வைத் தூண்டுவது.

2. சிறுபான்மையினரின் எண்ணிக்கை கூடுகிறது, இந்துக்கள் எண்ணிக்கை குறைகிறது என்று தந்திரமாக பிரச்சாரம் செய்து பெரும்பான்மையினரிடம் அச்சத்தை ஆழமாக்குவது.

3. நிர்வாகத்தில் ஊடுருவி, ஆட்சிப் பணியிலும், காவல் பணியிலும் இருக்கும்  அதிகாரிகளுக்கு மதவாத கண்ணோட்டத்தை ஏற்படுத்தி, மதவாத அணுகுமுறையை மேற்கொள்ளத் தூண்டுவது.

4. பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு கத்தி, வாள், ஈட்டி போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்த பயிற்சியளிப்பது.

5. எந்த ஒரு சிறு சம்பவத்திற்கும், மதச்சாயம் பூசி, மத ரீதியிலான பிளவை அதிகரித்து, மத வெறுப்பு உணர்வுகளை ஆழமாக்குவது.

சாதி வாரியாக மக்களை திரட்டும் முயற்சி

ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக அமைப்புகளின் தலைமையில் பிராமணர்களே இருக்கிறார்கள் என்ற தோற்றத்தை மாற்றுவதற்காக சங் பரிவார அமைப்புகளின் தலைமை பொறுப்பில் பிராமணர் அல்லாதவர்களை திட்டமிட்டு கொண்டு வருகிறார்கள். எல்லா மாவட்டங்களிலும் இந்து முன்னணி அமைப்பிற்கு பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின பகுதியிலிருந்து தலைமைப் பொறுப்பிற்கு நியமனம் செய்கிறார்கள். மாநிலத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்கள் பகுதியில் பிரதானமான சாதி எது என்று கண்டறிந்து, அம்மக்களை சாதி ரீதியில் திரட்டுவதை சங் பரிவார அமைப்புகள் அணுகுமுறையாக கடைப்பிடித்து வருகிறார்கள்.  கோவை மாவட்டத்தில் உள்ள தேவாங்க செட்டியார் சாதியில் உள்ள சில பிரமுகர்களை பிடித்து அவர்கள் மூலமாக அந்த சாதியில் உள்ள கணிசமான மக்களை சென்றடைந்துள்ளார்கள். இதே போல சாதிய பெருமித உணர்வைத் தூண்டிவிட்டு கவுண்டர் சமூகத்தினரிடம் கணிசமாக ஊடுருவி உள்ளனர். சாதிய அணி திரட்டலுக்காக சமூக ஊடகங்களை நுட்பமாகவும், திறம்படவும் பயன்படுத்துகின்றனர். கோவை, திருப்பூர் பகுதிகளில் அருந்ததியர் சமூக மக்களையும் தங்கள் வளையத்திற்குள் கொண்டு வர பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஊடக வலிமை

வாட்சாப், சமூக ஊடகங்களை பாஜக திறமையாக பயன்படுத்துவதை அறிவோம். அத்துடன் பாரம்பரிய ஊடகங்களையும் அவர்கள் தொடர்ந்து பயன்படுத்துகிறார்கள். கோவை, திருப்பூர் இரண்டு மாவட்டங்களிலும் தினமலர் பத்திரிக்கை கூடுதலாக விற்பனையாகிறது. இந்த இதழில் பாஜகவுக்கு ஆதரவாகவும், இடதுசாரிகளுக்கு எதிராகவும் செய்திகள் வெளியாகின்றன. குறிப்பாக கேரளாவில் தோழர் பினராயி விஜயன் தலைமையிலான அரசை பற்றி அங்குவரும் அவதூறுகளை அப்படியே தினமலர் பரப்புகிறது.

சங் பரிவார உத்திகளை எதிர்கொள்ள

                பாஜக தலைமையிலான ஒன்றிய அரசாங்கமும், சங் பரிவார அமைப்புகளும் இந்துத்துவ வகுப்புவாத திட்டத்தை அமலாக்கிட அனைத்து வழிகளிலும் முயற்சிக்கிறார்கள். இந்த முயற்சிகள் மேக்ரோ (நாடு தழுவிய அளவிலும், மாநில மற்றும் மாவட்ட அளவிலும்) மற்றும் மைக்ரோ (உள்ளூர் சமூக) அளவிலும் மேற்கொள்ளப்படுகின்றன. இரண்டு தளத்திலும் இதனை நாம் எதிர்கொள்ள வேண்டும்.

மேக்ரோ அளவில்

நாடு தழுவிய அளவில் பாஜக ஒன்றிய அரசும், சங் பரிவாரமும் பல்வேறு திட்டங்களை முன்னெடுக்கிறது. (உ.ம்., குடியுரிமை திருத்தச் சட்டம், ராமர் கோவில், அரசியல் சட்டத்தின் 370 வது பிரிவு நீக்கம், பொது சிவில் சட்டம்). இதே போல மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் பல்வேறு பிரச்சனைகளை கிளப்புகிறார்கள்.

நமது அரசமைப்பு சட்டத்தின் மதச்சார்பற்ற ஜனநாயக உள்ளடக்கத்திற்கு எதிராக இந்த செயல்பாடுகள் உள்ளன. மக்களை மத அடிப்படையில் பிளவுபடுத்துகின்றன. இந்த திட்டங்களுக்கு எதிராக கட்சியும், வர்க்க வெகுஜன அமைப்புகளும் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். எதிர் செயல்பாடுகளை கட்டமைக்க வேண்டும்.

மக்களிடையே ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும், மதச்சார்பின்மையையும் பாதுகாக்கும் திட்டத்தை சுயேட்சையான முறையில் முன்னெடுப்பதுடன், ஒத்த கருத்துள்ள கட்சிகள் மற்றும் அமைப்புகளோடு கைகோர்க்க வேண்டும்.

மைக்ரோ அளவில்

                வகுப்புவாத சக்திகள், தனிநபர்களை அணுகும் தன்மையோடு மைக்ரோ செயல்பாடுகளை வகுத்துக் கொண்டுள்ளார்கள். வெளிப்படையாகத் தெரியும் அரசியல் நிகழ்வுகளில் இருந்து இவை மாறுபட்டுள்ளன. அதிகம் வெளியே தெரிவதில்லை.

மதச் சார்பின்மைக்காக இந்தத் தளத்தில் நாம் மேற்கொள்ளும் போராட்டம், மனித மனங்களை வென்றெடுப்பதற்கான ஒன்றாகும். அதற்கு ஏற்ப செயல்திட்டத்தை வகுத்துக்கொள்ள வேண்டும். மத நம்பிக்கையாளர்களை அணுகுகிறபோது அவர்களுடைய மத நம்பிக்கையை புண்படுத்திவிடக் கூடாது.

குழந்தைகளுக்கான மழலையர் பள்ளிகளை சங் பரிவாரத்தினர் பலர் தொடங்கி நடத்துகிறார்கள். அந்த நிலையிலேயே, வகுப்புவாத செயல்பாடுகளை தொடங்குகிறார்கள். ஆங்கில எழுத்துக்களை கற்பிக்கும்போதும் கூட, ஏ எனில் அர்ஜூனன், பி எனில் பீமன் என்பதாக கற்பிக்கிறார்கள். கோயில் வளாகங்களையும் கைப்பற்றுகிறார்கள்.

மேக்ரோ அளவில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை, மைக்ரோ அளவில் மத நம்பிக்கையுள்ள மக்களிடம் எடுத்துச் சென்று மெல்ல மெல்ல அவர்களை வகுப்புவாதிகளாக மாற்றும் விதத்தில் சங்க பரிவாரம் இயங்குகிறது.

எனவே, வகுப்புவாத திட்டத்தை முன் உணர்ந்து தலையீடு மேற்கொள்வது அவசியமாகும். மதச்சார்பற்ற, ஜனநாயக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். அறிவியல் பூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். கூர்மையாக கவனம் செலுத்தி, வகுப்புவாத நடவடிக்கைகளை கண்டறிந்து, உரிய தலையீடு மேற்கொண்டு தடுக்கவும் வேண்டும். (உ.ம்., அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் வளாகங்களில் ஆர் எஸ் எஸ் சாகாக்கள் நடத்துவதை தடுத்து நிறுத்திட அரசு நிர்வாகத்தை அணுக வேண்டும்)

மதச்சார்பற்ற/ஜனநாயக நடவடிக்கைகள்:

கட்சியின் 23 வது அகில இந்திய மாநாடு, இந்துத்துவாவை எதிர்த்து போராடுவதற்கான 7 வழிமுறைகளை பட்டியலிட்டுள்ளது.

  1. கருத்தியல் அடிப்படையில் இந்துத்துவா கொள்கையை தொடர்ந்து அம்பலப்படுத்த வேண்டும். 2) வெறுப்பு/பயங்கரவாத தாக்குதல்களை எதிர்த்து முன்நிற்க வேண்டும். பொது இடங்களை வகுப்புவாதமயமாக்கும் முயற்சிகளை எதிர்க்க வேண்டும். 3) பழமைவாத, மூடநம்பிக்கை, கண்மூடித்தனமான போக்குகள், பகுத்தறிவின்மை போக்குகளை எதிர்த்து – அறிவியல் அடிப்படையிலான, பகுத்தறிவின் பார்ப்பட்ட கருத்துக்களை முன்னெடுக்க வேண்டும். 4) சமூக ஒடுக்குமுறைக்கு எதிராக, பாலின சமத்துவத்தை முன்னெடுக்க வேண்டும். பட்டியல் சாதி/பட்டியல் பழங்குடி மக்கள் மத்தியில் வகுப்புவாத சித்தாந்தம் பரவுவதை எதிர்கொள்ள வேண்டும். 5) பன்மைக் கலச்சாரத்தை முன்னிறுத்தும் நிகழ்வுகளில் சிறப்பு கவனம், செலுத்திட வேண்டும். 6) சமூக சேவை நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். 7) கல்வித் துறையில் மதச் சார்பற்ற, ஜனநாயகப்பூர்வமான, ஒன்றிணைப்பு நிரம்பிய உள்ளடக்கத்தை உருவாக்கி பரப்பும் விதத்தில் முன்முயற்சி எடுக்க வேண்டும்.

நம்முடைய நடவடிக்கைகளும் உள்ளூர் சமூக தளத்தில் முன்னெடுக்கப்பட வேண்டும்.

குழந்தைகள்

குழந்தைகளுக்காக துளிர் இல்லங்கள், பாலர் சங்கங்களை உருவாக்க வேண்டும். கிராமங்களிலும், நகரங்களிலும் உள்ள பள்ளிகளை (குறிப்பாக அரசுப் பள்ளிகளை) மேம்படுத்திட முயற்சி எடுக்க வேண்டும். இரவு பள்ளிகளை நடத்தலாம். மாணவர்களின் இடைநிற்றலை தடுக்க திட்டமிட்டு பயிற்சிகள் தர வேண்டும். அதே போல மாணவர் மன்றங்களை ஏற்படுத்தி, சேவைப் பணிகளில் ஈடுபடுத்த வேண்டும்.

இளைஞர்

பொதுவாகவே இளம் வயதில் வீர விளையாட்டுக்கள் மீது ஆர்வம் ஏற்படுகிறது. எனவே நாம் விளையாட்டு பயிற்சிகளில் கவனம் செலுத்த வேண்டும். பொங்கல் திருவிழாவை ஒட்டி நாம் விளையாட்டு போட்டிகளை நடத்திவருகிறோம். அதில் கண்டறியப்படும் திறன்களை மேலும் மேம்படுத்தும் விதத்தில் ஒன்றிய, நகர, மாவட்ட/மாநில அளவில் போட்டிகளை நடத்திட வேண்டும். வேலைவாய்ப்பு தொடர்பான பயிற்சிகளையும் வழங்க வேண்டும்.

சமூக செயல்பாடுகள்

யோகா உள்ளிட்ட உடற்பயிற்சிகள் ஆரோக்கிய நோக்கில் மிக உதவிகரமான நடவடிக்கைகளாகும். அது ஆன்மீகச் செயல்பாடு அல்ல. கேரளாவில் ஒன்றிய நகர அளவிலும் கிராம மற்றும் வார்டு அளவிலும் நமது கட்சியின் சார்பில் யோகா பயிற்றுவிக்கும் ஆசிரியர்களை தயார் செய்து, அனைத்து மக்களுக்குமே பயிற்சி அளிக்கிறார்கள். இதே போல, நலவாழ்வுக்கான நடவடிக்கைகளை திட்டமிட்டு முன்னெடுக்க வேண்டும்.

படிப்பகங்கள், நூலகங்களை உருவாக்குவதுடன், கலை/இலக்கிய பயிற்சிகள், , குறும்படம்/பாடல் போன்ற நவீன கலை செயல்பாடுகளையும் முன்னெடுக்க வேண்டும். ஈர்ப்பான விதத்தில் கலைக்குழுக்கள், நாடகக் குழுக்களை உருவாக்கி நிகழ்ச்சிகள் நடத்துவது, அதன் மூலம் மத நல்லிணக்க கருத்துக்களை பரப்புவது உதவி செய்யும்.

மரங்கள் நடுவது, ஏரி/குளங்களை ஆக்கிரமிப்புகளில் இருந்து பாதுகாப்பது என நடவடிக்கைகளை உருவாக்கி சாதி மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு மக்களை இணைத்திட முடியும்.

கோயில் நிர்வாகத்தில் பங்கேற்பு

                இந்து கோயில்கள், உள்ளூர் அளவில் பண்பாட்டு மையங்களாகத் திகழ்கின்றன. அவற்றை கைப்பற்றும் சங் பரிவார அமைப்புகள், கோயில்களை பயன்படுத்தி தங்களுடைய நோக்கங்களை முன்னெடுக்கிறார்கள்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு சில கோயில் நிர்வாகத்தில் நமது தோழர்கள் பங்கேற்று நிர்வாகத்தை ஊழலற்ற, தூய்மையான சிறப்பான முறையில் நடத்திட பங்களிக்கிறார்கள். நாம் கோயில் நிர்வாக நடவடிக்கைகளில் பங்கேற்க வேண்டும்.  கோயில்/ மத நிகழ்ச்சிகள்  நடைபெறும் சூழல்களில் வகுப்புவாதிகளின் தலையீட்டை தடுக்க நம்முடைய செல்வாக்கை பயன்படுத்த வேண்டும்.

                வெறுப்பு பிரச்சாரம்/வகுப்புவாத சூழல் உருவாக்கப்பட்டு, வன்முறையோ கலவரமோ வெடிப்பதற்கு ஏதுவான நிலைமை உருவானால் – அந்த நிலைமையை மாற்றிட தீவிரமான திட்டமிட்ட தலையீடுகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.

இதைப்போலவே, மசூதி, சர்ச் ஆகிய வழிபாட்டுத்தலங்களுடைய நிர்வாகத்திலும் பங்கேற்று, வகுப்புவாத நடவடிக்கைக்கு பயன்படுத்தாமல் தடுக்க முயற்சிகள் எடுக்க வேண்டும்.

இந்துத்துவா நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் மாற்று நடவடிக்கைகளை முன்னெடுக்க பல்வேறு துறைகளில் மேடைகளை உருவாக்குவதுடன் தேவைக்கு ஏற்ப முழு நேர ஊழியர்களை உருவாக்கிட வேண்டும்.

மேலே குறிப்பிட்ட பண்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுப்பது தனியாக ஒரு அரங்கத்தின் பணி அல்ல. நம்முடைய அனைத்து அமைப்புகளும் மேற்சொன்ன விதத்தில் செயல்பட வேண்டும். வாய்ப்புள்ள மதச்சார்பற்ற சக்திகளோடு, அமைப்புகளோடு, தொண்டு நிறுவனங்களோடு கைகோர்க்க வேண்டும். தனி நபர்களும் கூட உள்ளூர் அளவில் பல்வேறு நடவடிக்கைகளை உருவாக்கி முன்னெடுக்க முயற்சிக்க வேண்டும்.

மதமும் வகுப்புவாதமும்

சீத்தாராம் யெச்சூரி

(2002 நவம்பரில் சேவியர் சமூக சேவை கல்வி நிறுவனத்தில் ஆற்றிய உரையின் தமிழாக்கம்)

தமிழில்: கே. ராமசுப்பிரமணியன்

இன்றைய சூழல், அச்சுறுத்துவதாகவும், வகுப்புவாத பாசிச கருமேகங்கள் சூழ்ந்துள்ளதாகவும் இருக்கிறது. நவீன இந்தியாவின் அடித்தளத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் மதச்சார்பற்ற, ஜனநாயக குடியரசின் தன்மையை, சகிப்புத் தன்மையற்ற பாசிச சமூகமாக மாற்றிட அனைத்து நடவடிக்கைகளும் மிக வேகமாக எடுக்கப்படுகின்றன. சமீபத்தில் அரசின் ஆதரவுடனே குஜராத் மாநிலத்தில் நடந்த உறைய வைக்கும் வகுப்புவாத படுகொலைகள், வகுப்புவாத அரக்கனின் கோர முகத்தை வெளிக்காட்டியது. இதற்கு முன்பு குஜராத்திலுள்ள கிறிஸ்துவர்களுக்கு எதிரான மத வன்முறைகள் மற்றும் ஒடிசா போன்ற பல இடங்களில் நடந்துள்ள வகுப்புவாத வெறியாட்டங்களும், கிரஹாம் ஸ்டெயின்ஸ் குழந்தைகளோடு எரித்துக் கொல்லப்பட்டதும் – இவை அனைத்தும் சகிப்புத் தன்மையற்ற பாசிச முகத்தை வெளிக்காட்டுகிறது.

இன்று இந்திய நாட்டுப்பற்றாளர்கள் முன் உள்ள மிகப் பெரிய சவால் என்பது நாம் அறிந்த இந்தியாவை பாதுகாப்பதே ஆகும்.

எனக்களித்த தலைப்பிற்குள்ளே செல்வதற்கு முன்,  சமகால இந்திய அரசியலில், சமூக, பொருளாதார வாழ்வில் ஏன் இத்தகைய அபாயகரமான பண்பு மாற்றம் ஏற்படுகிறது என்பதை அறிந்து கொள்வது அவசியம்.

வகுப்புவாத வன்முறைகளுக்கான காரணங்கள்

இந்திய சமூக, அரசியல் நிகழ்வுகளில் வகுப்புவாத மோதல்களும், விரோதங்களும், ஒரு பகுதியாக கடந்த ஒரு நூற்றாண்டாகவே இருந்து வந்துள்ளன. இன்றைக்கு புதிய பண்புகளோடு எழுந்து வருகிற தாக்குதல்களை ஊக்குவித்து, பதட்டத்தை தொடரச் செய்திடும் மூல காரணங்கள் யாவை?

இதனை ஆராய முற்படுகையில், சுதந்திர இந்தியாவில் இதுவரை நடந்து வந்துள்ள வர்க்க ஆட்சி நடைமுறைகளின் விளைவுகளை பரிசீலித்துப் பார்க்க வேண்டும்.

இந்தியப் பெருமுதலாளிகளும், அதன் தலைமையும், இந்திய ஏகபோக மூலதனமும் தங்களுடைய சமூக அடித்தளம் குறுகியதாக இருக்கும் காரணத்தால், தனது வர்க்க அதிகாரத்தை தொடர்வதற்கு, நிலப்பிரபுக்களின் பகுதியுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டார்கள். இக்கூட்டுச் சேர்க்கையே இந்திய சமூக அரசியலின் மற்றும் பொருளாதார வளர்ச்சியின் உள்ளடக்கத்தையும், வழியையும் தீர்மானிக்கக் கூடிய புதிய முரண்பாடுகளின் தொகுப்பை செயல்படுத்தத் தொடங்கியது.

மேற்சொன்ன கூட்டுச் சேர்க்கையின் காரணமாக ஒருபக்கம் ஆளும் வர்க்கத்தினால் ஏகாதிபத்தியத்தின் பிடியை தீர்க்கமாக உடைத்தெறிய முடியவில்லை. மறுபக்கம் நிலப்பிரபுத்துவம் இந்திய மக்களிடையேயும், பொருளாதாரத்தின் மீதும் கொண்டுள்ள ஆதிக்கத்தைக் களையவும் முடியவில்லை.

இக்கால கட்டத்தில், நடுத்தர வர்க்கம் விரிவடைந்துள்ளது என்றபோதிலும், நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்தினால் உள்நாட்டு சந்தை மேலும் குறுகியிருப்பதையும்  பார்க்க முடிகிறது.

வரலாற்றுக் கண்ணோட்டத்தில் பார்த்தால் நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுகளை திட்டவட்டமாக முறியடிக்காமல், உலகில் எங்கும் முதலாளித்துவம் வளர்ச்சியடையவில்லை. அவ்வாறே இங்கும், ஒரு பக்கம் ஏகாதிபத்தியத்துடன் சமரசமும், மறுபக்கம் நிலப்பிரபுத்துவத்துடன் சமரசமும் செய்து கொண்டதால் இந்திய பெரு முதலாளிகளால் தாங்கள் விரும்பியது போல் சுதந்திர இந்தியாவில் முதலாளித்துவ வளர்ச்சிக்கான அடித்தளத்தை உருவாக்க முடியவில்லை.

நிலப்பிரபுத்துவ கட்டமைப்பின் மேல் முதலாளித்துவத்தை திணிப்பதன் மூலம்  நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்தை அகற்றி விடலாம் என்ற இந்தியப் பெருமுதலாளிகளின் முயற்சி பயனற்று போனது.

இந்த காலகட்டத்தில், பெருவாரியான இந்திய மக்கள் வருமானம் இல்லாமல்,  வாங்கும் சக்தியை இழந்த நிலையில், உள்நாட்டுச் சந்தை மேலும் குறுகத் தொடங்கியது. ஆளும் வர்க்கமோ, வாங்கும் சக்தியை பெருக்கும் விதத்தில்  முழுமையான நிலச் சீர்திருத்தம் எதையும் செய்திட முன்வரவில்லை. இந்த நிலையில், தனது முதலாளித்துவ வளர்ச்சிப் பாதைக்கு தடங்கல் ஏதும் ஏற்படாமலிருக்க அந்நிய சந்தையை நாட வேண்டிய கட்டாயத்திற்கு இந்திய முதலாளிகள் தள்ளப்பட்டனர்.

இப்போக்கின் காரணமாக, ஏகாதிபத்திய நாடுகளின் மூலதனத்தையும் தொழில்நுட்பங்களையும் கூடுதலாக சார்ந்திருக்கும் நிலைக்கு இந்தியப் பொருளாதாரம் தள்ளப்பட்டதுடன், அந்நிய நாட்டு சந்தையோடு போட்டிபோடும் நிலையும் ஏற்பட்டது. இதன் விளைவுதான் புதிய பொருளாதாரக் கொள்கையும், இந்திய மக்களின் மீதான அதனுடைய பேரழிவுத் தாக்குதல்களும் ஆகும்.

மேற்சொன்ன விதத்தில், நிலப்பிரபுத்துவத்துடன் செய்துகொண்ட சமரசம், இந்திய பெருமுதலாளிகளுக்கு பெரும் முரண்பாட்டை ஏற்படுத்தியது. அந்த முரண்பாட்டில் இருந்து விடுபடுவதற்கு, அபாயகரமான வகையில் ஏகாதிபத்தியத்தினை சார்ந்திருக்க வேண்டிய நிலைமையும், மறுபுறம் இதனால் ஏற்பட்ட நெருக்கடியினை பொதுமக்களின் தோள்களில் மாற்ற வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது. முரண்பாட்டின் ஒரு வெளிப்பாடாக இது இருக்கையில், அதற்கு ஈடான, இன்னும் முக்கியத்துவம் வாய்ந்த, மற்றொரு வெளிப்பாடும் உள்ளது. நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்தை, தனது கட்டமைப்பில் இருந்து நீக்க முடியாத காரணத்தால் நிலப்பிரபுத்துவத்தோடு இணைந்த சமூக உணர்வுநிலை இன்றும் நிலைத்து நிற்கிறது’. இந்த நிலைமையினுடைய தாக்கத்தினால் வகுப்புவாதமும், சாதீயமும் சமூக ஒழுக்கத்தின் மீது ஆதிக்கத்தை தொடர்ந்தன. எனவே நிலப்பிரபுத்துவத்தின் மீது முதலாளித்துவத்தை திணிக்கும் இந்த முயற்சியினால், நிலப்பிரபுத்துவத்துடன் இணைந்த பிற்போக்கு உணர்வுடன் கூடவே, சீரழிந்த போட்டி உணர்வுடன் கூடிய முதலாளித்துவமும் உருவானது.

இந்நிலையில் முதலாளித்துவ வளர்ச்சியில் விளைவான வர்க்கங்களின் உருவாக்கம் (தொழிலாளி வர்க்கம் போன்றவை), ஏற்கனவே உள்ள, சாதிப்பிரிவு சமூக நிலைகளின் உள்ளாகவே உருவாகியது. முதலாளித்துவத்திற்கு முன்பு இருந்த சமூக உறவுகளை மாற்றி அமைக்காமலேயே, அதனுடன் முதலாளித்துவம் சமரசம் செய்து கொண்டதால் இந்திய சமூகத்தில் ஏற்பட்டிருக்கிற மிகச் சிக்கலான இப்பிரச்சனையின் காரணத்தையும், அதனால் ஏற்பட்டு இருக்கிற விளைவுகளையும் இந்த போக்கு மிகத் துல்லியமாக விளக்குகிறது.

ஆகவே, வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சி என்பது ஏற்கனவே உயிரோட்டமாக உள்ள சாதியத்தையும், சாதிய ஒடுக்குமுறைகளையும் உள்ளடக்கியதாக உள்ளது. சமகால இந்தியாவில் சுரண்டப்படும் வர்க்கத்திற்கும், ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கும் இடையே ஒட்டிக் கொண்டுள்ள பொதுத்தன்மையை இது துல்லியமாக காட்டுகிறது.

இவ்வாறு தரம் மலிந்த நிலப்பிரபுத்துவமும், சீரழிந்த முதலாளித்துவமும் இணைந்து, சமூகத்தின் மேல்கட்டுமானத்தில் குற்றமயமாக்கல் பெருக வழிவகுக்கின்றன. அத்துடன், சாதிய வகுப்புவாத சக்திகள் ஒன்றாக ‘வளரவும் வழிவகை செய்கின்றன. இந்த நிலைமையை ஆளும் வர்க்கங்கள் தங்களது அரசியல் மற்றும் தேர்தல் வாய்ப்புகளுக்குப் பயன்படுத்திக் கொள்கின்றன.

மேலே குறிப்பிடப்பட்ட முரண்பாடுகளின் வெளிப்பாட்டின் அடிப்படையில், விடுதலை இந்தியாவில் மதவாத வன்முறைகளை வகுப்புவாத சக்திகள் அரங்கேற்றுகிறார்கள். நாட்டில் ஏற்கனவே ஏற்பட்டுள்ள நெருக்கடி, இந்திய மக்களின் மனதில் பல வருடங்களாக சேர்ந்துள்ள அதிருப்தியை மேலும் வளர்த்துள்ளது. பரபரவென்று  வளர்ந்து வருகிற நடுத்தர வர்க்க மக்களிடையேயும் இந்த அதிருப்தி வளர்ந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நடுத்தர வர்க்கம் இன்றும் சுரண்டலுக்கு ஆளாகிற பகுதியிலிருந்து நடுத்தர வர்க்கமாக வந்தவர்களே ஆவர். சுரண்டும் வர்க்கத்தினுடைய உணர்வுகளின் ஆதிக்கத்துடன், நடுத்தர வர்க்கத்தினரின் அதிருப்தியும் இணைவதால் வகுப்புவாத சக்திகள் வளர்வதற்கு ஒரு வளமான தளம் அமைகிறது.

சமூகத்தில், பிற்போக்கு உணர்வுகள் நிலைத்து இருக்கையில், வகுப்புவாத சக்திகள் நிலவுகின்ற அதிருப்தியை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு, வகுப்புவாதத்திற்கு மடை திறந்துவிட்டு, தங்களது அரசியல் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.

அதற்காக அவர்கள் இருமுனைத் தந்திரங்களை கையாளுகின்றனர். ஒருபக்கம் இந்தியாவிலுள்ள பல தரப்பட்ட சமூகங்களாகப் பிரிந்து கிடக்கிற – ஆனால் இந்து மதத்தை தழுவக் கூடியவர்களாக உள்ள அனைவரையும் ஒன்றாகக் கட்டி இணைப்பது. மற்றொரு பக்கம், இந்து அல்லாதவருக்கு எதிராக வெறுப்புணர்ச்சியைத் தூண்டி எதிரிகளாக்குவது – உதாரணமாக முஸ்லீம், கிறிஸ்துவர் இவர்களுக்கு எதிராக –  இந்த இரண்டு முனைகளிலும் தங்களது நோக்கத்தை அடைவதற்காக அவர்கள் கையாளும் பிரச்சார இயந்திரங்கள் பாசிச வெறியோடும், நவீன தொழில்நுட்பங்களோடும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.

பார்க்கப் போனால், இந்து ராஜ்யம் என்பதற்கான அடித்தளம் 1920களில் வி.டி. சாவர்க்கர் என்பவரால் போடப்பட்டது. பின்பு 1925இல் தோன்றிய ஆர்.எஸ்.எஸ். இயக்கம் இக்கொள்கையை தனதாக்கிக் கொண்டது. 1930 பின்பகுதி காலங்களில் ஆங்கிலேய அரசு இந்த மதப்பிரிவு நிலையினை கண்டுகொண்டு அதனை தனது சுயலாபத்திற்காகப் பயன்படுத்தியது.

இந்நோக்கத்தை வெளிப்படுத்தியவர் ஆர்.எஸ்.எஸ்.சின் தலைவராக பணியாற்றிய எம்.எஸ். கோல்வால்கர் தான். 1939இல் அவர் எழுதிய, நாம் அல்லது வரையறுக்கப்பட்ட நமது தேசம் என்ற அவரது நூலில், விளக்கப்படும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நோக்கத் திட்டத்தில், உறைய வைக்கக் கூடிய அளவுக்கு வெளிப்படுத்திய பாசிச எண்ணங்களே இன்றும் காவிக்கும்பலுக்கு ஊக்கமளிக்கிறது.

இந்தியாவில் இந்துக்கள் மட்டுமே தேசிய இனம் என்ற ஆதாரமற்ற கூற்றை பொறுப்பற்று அறிவித்து விட்டு அவர் சொல்வது “(இந்த நாட்டில்) அந்நியர்களாக உள்ளவர்களுக்கு இரண்டே வழிகள் உள்ளன. ஒன்று (இந்து) தேசிய இனத்துடன் ஒன்றரக்கலந்து அதன் கலாச்சாரத்தை ஏற்று வாழ வேண்டும்; அல்லது அந்த தேசிய இனத்தின் கருணையில் அவர்கள் எவ்வளவு நாட்கள் வாழ விடுகிறார்களோ அதுவரையில் வாழ்வது. (அவர்கள் கூறும்போது) அந்த தேசிய இனத்தின் அன்பு கோரிக்கைக்கு இணங்க நாட்டை விட்டு வெளியேற வேண்டும்”.

இந்த நிலைபாட்டிலிருந்து, புத்திசாலித்தனமாக நடந்து கொண்ட முந்தைய நாடுகளின் அனுபவத்திலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது – இந்துஸ்தானில் உள்ள அந்நிய இனங்கள் இந்து கலாச்சாரத்தையும், மொழியையும் கட்டாயம் ஏற்றுக் கொள்ள வேண்டும். மற்றும் இந்து மதத்திற்கு மரியாதையாக இருப்பதுடன், அந்த மதத்தை பய பக்தியுடன் அணுகிட வேண்டும். இந்து இனத்தையும், அதன் கலாச்சாரத்தையும் மகிமைப்படுத்துவது தவிர வேறு எந்த எண்ணத்திற்கும் இடம் கொடுக்கலாகாது – இது இந்த தேசத்திற்கும் சேர்த்து தான். அவர்களுக்கான தனித்துவமாக உள்ள வாழ்க்கையை விட்டு விட்டு இந்து இனத்துடன் ஒன்றிணைந்து விட வேண்டும். மற்றும் இந்து தேசத்திற்கு அடிபணிந்து வாழ வேண்டும். அவர்கள் எந்த உரிமையையும் கேட்கக் கூடாது. அவர்களுக்கு எந்த சலுகையும் கிடையாது. முன்னுரிமை அளிக்கக் கூடிய நடவடிக்கைகள் எதனையும் நினைக்கவே கூடாது. குடிமக்கள் உரிமை என்பது கூடவே கூடாது. அவர்கள் பின்பற்ற வேறு மார்க்கம் எதுவும் இருக்கக் கூடாது. நாம் ஒரு புராதான நாடு. புராதான நாடுகள் அந்நிய இனத்தை எவ்வாறு நடத்துமோ அதேபோன்று நம் நாட்டை தேர்ந்தெடுத்துள்ள அந்நிய இனத்தை நடத்துவோம்”.

புரதான அரசுகள் எப்படி நடத்தின. இனம் மற்றும் கலாச்சாரத்தின் தூய்மையை பாதுகாத்திட ஜெர்மனி தனது நாட்டிலுள்ள யூதர் இனத்தை கொன்று குவித்தது. இனப் பெருமை மிக உயர்ந்து இருப்பதை இது வெளிக்காட்டியது. ஜெர்மனி நமக்கு காட்டுவதெல்லாம் இனத்திலும், கலாச்சாரத்திலும் அடிப்படையில் வேறுபடுகிற நிலையில் உள்ளவை ஒருங்கிணைந்து ஒன்றாக மாறுவது என்பது முடியாதது ஆகும். இதை இந்துஸ்தான் ஒரு படிப்பினையாக ஏற்று நாம் பலனடைந்திட வேண்டும்.

இதே கோல்வால்கர்தான் மகாத்மா காந்தி சுட்டு கொலை செய்யப்பட்ட போது, ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தடை செய்யப்பட்டதை அடுத்து, அன்றிருந்த உள்துறை அமைச்சர் சர்த்தார் பட்டேல் அவர்களிடம் ஆர்.எஸ்.எஸ். மீதான தடையை நீக்கக் கோரினார், “ஆர்.எஸ்.எஸ். இனி கலாச்சார அமைப்பாக மாத்திரம் செயல்படும்” என்றும் உறுதி அளித்தார். இதன் பிறகு மாற்றாக ஒரு அரசியல் அமைப்பை தேடிக் கொண்டிருந்த கோல்வால்கர், அன்றைய ஜவஹர்லால் நேரு மீது அதிருப்தியை வெளியிட்டு, மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேறிய ஸ்யாம பிரசாத் முகர்ஜியை வைத்து 1951இல் ஒரு புதிய அரசியல் கட்சியை ஸ்தாபிக்க சில பிரச்சாரகர்களை அனுப்பினார். அன்றைக்கு ஸ்யாம பிரசாத் முகர்ஜியை சந்தித்துப் பேச அனுப்பப்பட்ட இரண்டு பேரில் ஒருவர் இன்றைய பிரதமர் (வாஜ்பாய்), மற்றொருவர் இன்றைய உள்துறை அமைச்சர் (அத்வானி). ஆக இன்றைக்கு அவதாரம் எடுத்துள்ள பாரதீய ஜனதா கட்சியின் முன் அவதாரமான ஜனசங்கம் இவ்வாறு தான் தொடங்கப்பட்டது.

எனவே, இன்றைக்குள்ள பாரதிய ஜனதா கட்சி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் உறுப்பு என்பதை யாரேனும் மறுப்பார்களேயானால் அவர்கள் முட்டாள்களின் கூடாரத்தில்தான் இருப்பார்கள் என்று சொல்லலாம்.

மேலும், பிறகு கோல்வால்கர் எழுதிய சிந்தனைக் கொத்து என்ற நூலில், ஒரு தனி அத்தியாயத்தில் இவ்வாறு எழுதினார்: இந்திய நாட்டு மதச்சார்பின்மையை அழிப்பதை மூன்று உள்நாட்டு எதிரிகள் தான் தடுத்து நிறுத்துகின்றன. அவை தான் ஆர்.எஸ்.எஸ். பாசிச இந்து ராஜ்யத்தை நோக்கி நடைபோடுவதையும் தடுத்து நிறுத்துகின்றன. ஆர்.எஸ்.எஸ்.சின் கண்ணோட்டத்தில் அவைகள் ஒன்று முஸ்லீம் மதத்தினர், இரண்டாவது கிறிஸ்துவ மதத்தினர். மூன்றாவது கம்யூனிஸ்ட்டுகள். ஆகவே பால் ரோப்ஸன் சொன்னது போல் “நாம் அனைவரும் ஒரே படகில் தான் சகோதரரே” (என்று அங்கு திரண்டு இருந்தவர்களைப் பார்த்துக் கூறினார்)

இதன் பிறகு கிடைத்துள்ள அனுபவங்கள் ஒரு உண்மையை கோடிட்டு காட்டுகிறது.  அதாவது இந்து மதவாத அடிப்படைவாதிகளும், முஸ்லீம் மதவாத அடிப்படைவாதிகளும் (எந்த மதத்தைச் சார்ந்த அடிப்படைவாதிகளாக இருந்தாலும்) அவர்களது இன்றைய நடவடிக்கை என்பது நமது இன்றைய நவீன இந்தியாவின் மதச்சார்பற்ற, ஜனநாயக ஆட்சி முறை பெற்றிருக்கும் சுதந்திரத்தையும், இறையான்மையையும் நேரடியாக தாக்குவதாகவே அமைகிறது. இந்த இரண்டு சக்திகளுமே ஒன்றுக்கொன்று ஊட்டத்தை கொடுத்துக் கொள்கிறார்கள். இந்த இரண்டு சக்திகளும், மதச்சார்பின்மை, ஜனநாயகம், நாட்டுப் பற்று போன்ற நவீன கருத்துக்கள் மீது முன்னெடுக்கும் தாக்குதல்கள் ஒரேமாதிரி உள்ளன. அவர்கள் மதத்தை மையமாகக் கொண்ட ஒரு சிதைந்த தேசியத்திற்குள் தங்களை வரையறுத்துக் கொண்டுள்ளார்கள். எந்த ஒரு தேசியத்தின் உருவாக்கத்திலும், ஒற்றுமைப்படுத்தும் காரணியாக மதம் என்றைக்கும் இருந்ததில்லை; இருக்கப் போவதும் இல்லை என்ற வரலாற்று படிப்பினைகளை ஏற்க மறுக்கின்றனர். (உதாரணமாக பாகிஸ்தானிடமிருந்து பங்களாதேஷ் பிரிந்தது) மாறாக, அரசியலிலும், சமூக அமைப்பிலும் மதம் தான் ஆதிக்கம் செலுத்திட வேண்டுமென்று வாதாடுகின்றனர். இவ்வாறு அவர்கள் வரலாற்றில் விளைந்த, விஞ்ஞான அடிப்படையிலான தேசியத்தை மறுக்கின்றனர்.

வகுப்புவாதமோ அல்லது அதன் அடிப்படைவாதிகளின் தத்துவமோ மதத்தை உயர்த்திப் பிடிப்பதாகவும் இல்லை; அதை பாதுகாக்கவும் இல்லை. மாறாக, மக்களிடையே நிலவுகிற மதப் பிளவுகளைப் பயன்படுத்தி, தனது குறிப்பிட்ட அரசியல் நோக்கத்திற்காக பிளவுகளை தீவிரமாக்கவும், நிலைநிறுத்தவும் செய்கின்றனர். அவர்களது இந்த தத்துவம் மதங்களிடையே மோதலை உருவாக்கி குறிப்பிட்ட அரசியலுக்கு பயன்படுத்துவதற்கு மட்டுமே உதவுகிறது. ஆங்கிலேயர்கள் மதங்களிடையே உள்ள வெறுப்பை தங்களது காலனி ஆதிக்கத்தை நிலைநிறுத்திட பயன்படுத்தினர். பின்பு இந்த மத மோதல்கள் கட்டுக் கடங்காமல் போகவே நமது தேசத்தை இரண்டாகப் பிரிப்பதில் வெற்றி கண்டனர். இன்றும் இக்கசப்பான நிகழ்வுப்போக்கு எண்ணற்ற உயிர்களை பலி வாங்கிக் கொண்டிருக்கிறது. ஆகவே, வகுப்புவாதம் என்பது மதங்களிலிருந்து தன்னை நீக்கிக் கொண்டு தள்ளி இருக்கிறது என்பதை அறிய முடிகிறது. வகுப்புவாதம் பிற மதத்தினரின் பால் வெறுப்பை உண்டாக்கியும், நீடிக்கச் செய்தும், தான் இருப்பதற்கும், வளர்வதற்கும் அடித்தளத்தை அமைத்துக் கொள்கிறது.

மதமும் – மார்க்சியமும்

இப்படிப்பட்ட சூழலில், மார்க்சிஸ்ட்டுகளுக்கு மதம் பற்றி உள்ள புரிதலைக் குறித்து சர்ச்சைகள் அதிகமாக எழுப்பப்படுகின்றன. இதில் மிகப் பிரபலமான கருத்தாக இருப்பதும், கூறப்பட்ட சூழலில் இருந்து விலக்கி எடுத்தாளப்படுவதுமான மதம் என்பது மக்களுக்கு அபின் போன்றது என்ற மார்க்சின் கூற்று ஆகும்.

அந்த மேற்கோள் எந்த பகுதியில் இடம் பெறுகிறதோ அது, வேண்டுமென்றே,  முழுவதுமாக வெளியிடப்படவில்லை. உண்மையில் மார்க்ஸ் கூறியது மத (நம்பிக்கையோடு கூடிய) துயரம் என்பது அதே நேரத்தில் உண்மையான துயரத்தின் வெளிப்பாடே ஆகும். அது உண்மையான துயரத்திற்கு எதிர்ப்பை தெரிவிப்பதும் ஆகும். மதம் (மத நம்பிக்கை) ஒடுக்கப்பட்ட மக்களின் பெருமூச்சு. இதயமற்ற உலகில் (அரவணைக்கும்) இதயம். ஊக்கமற்ற நிலையில் ஊக்கமளிப்பதும் ஆகும். இது மக்களுக்கு அபின் போன்றது. (அக்காலத்தில் காயத்தினால் ஏற்படும் வலியை  மறந்திட அபின் கொடுக்கப்பட்டது – மொழி பெயர்ப்பாளர்)

மதத்தை அபினுடன் ஒப்பிடுவதற்கான காரணம் அபினுக்கு உள்ள குணத்தை ஒத்த விதத்தில் மதமும் ஒரு மாயையை ஏற்படுத்துவதால் தான். துயரம் தாங்க முடியாமல் இருக்கும் மனிதனுக்கு அதிலிருந்து நீக்கம் அளிக்கிறது. இதயமற்ற உலகில் (அரவணைக்கும்) இதயத்தையும், ஊக்கம் அற்ற நிலையில் ஊக்கத்தையும் அளிக்கிறது.

(அவர்களது துன்பமானது) அவர்களது உணர்வு நிலைக்கும், கட்டுப்பாட்டுக்கும் அப்பால் இருக்கும் நிலைப்பாடாகத் தொடர்கிறது என்ற துல்லியமான காரணத்தால் அவர்களை செயலற்ற தன்மைக்கு இட்டுச் சென்று மந்தப்படுத்த இந்த அபின் மக்களுக்கு தேவையாகிறது.

மதங்கள் குறித்து, மார்க்சிஸ்டுகள் கொண்டுள்ள புரிதல், அந்த மதம் ஒரு தத்துவத்தின் அடித்தளத்தை அடிப்படையாகக் கொண்டு ஒருங்கிணைக்கப்பட்டு இருப்பதை புரிந்து கொள்வதே ஆகும். மார்க்ஸ் தான் வாழ்ந்த காலத்தில் மனிதர்களுடைய உண்மையான சுதந்திரத்தையும், அவர்களுடைய முழுமையான விடுதலையையும் எது தீர்மானிக்கிறது என்ற கேள்விக்கு விடை தேடுகையில், ஹெகலின் தத்துவமான மனதின் புரட்சி என்ற தத்துவத்தை – அதை ஃப்யூயர்பாக் அவர்களும் பரிந்துரைத்ததை – மறுத்து எதிர்கால வளர்ச்சிக்கு அவசியமான விளக்கத்தை அளித்தார்.

அது என்னவென்றால்; மனிதர்களுடைய உணர்வுகளை சமூக நிலைமைகளே தீர்மானிக்கிறதே தவிர அதற்கு மாறான  வகையில்  அல்ல. அதாவது, “மனிதர்களின் உணர்வுகள் அவர்கள் இருக்கும் நிலையை தீர்மானிக்கவில்லை. மாறாக, அவர்களது சமூக நிலைகளே அவர்களது உணர்வுகளை தீர்மானிக்கிறது. (Introduction to Critique of Political economy)

மேற்கண்ட முக்கியமானதும், மூல ஆதாரமான முடிவின் அடிப்படையில் மார்க்ஸ் கூறியது, “சமயப் பற்றற்ற இந்த விமர்சனத்திற்கான அடிப்படை. மனிதனே மதத்தினை உருவாக்கினான். மதம் மனிதனை உருவாக்கவில்லை.” வேறு சொற்களில் சொல்வதென்றால், மனிதர்களின் உணர்வுகள் பல விதங்களில் வெளிப்படுவது போல், உதாரணமாக, அவனது சிந்தனையும், அதன் விளைவாக ஏற்படுகிற அறிவுசார் நடவடிக்கைகளும் போல், மதமும் மனிதனுடைய சமூக வாழ்க்கையின் ஒரு விளைவுதானே அன்றி, மதம் தான் சமூக வாழ்க்கைக்கு காரணம் என்றோ, சமூக வாழ்க்கையை உண்டாக்கியது என்றோ கூறுவதற்கில்லை.

இதிலிருந்து நாம் புரிந்து கொள்வது, மதம் என்பது சமூக வரலாற்றின் உந்து சக்தியில் இருந்து விலகி தன்னைத் தானே ஆட்கொண்டதும் அல்ல; தன்னைத் தானே உருவாக்கிக் கொண்டதும் அல்ல. ஆகவேதான், மார்க்சிய தத்துவம் கோபர்நிகஸூக்கு கொடுத்த இடருக்காகவோ அல்லது ஏகலைவனுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காகவோ மதத்தின் மீது குற்றம் சாட்டவில்லை. ஏனெனில் இந்நிகழ்ச்சிகள் அனைத்துமே மதம் ஒரு தத்துவமாக ஆதிக்கம் செலுத்துகிற காலகட்டத்தில் நிகழ்ந்துள்ளது என்பதை பதிவு செய்யப்பட்ட வரலாறு தெளிவாக்குகிறது.

மதம் என்பது ஒரு ஆதிக்கம் செலுத்தும் தத்துவமாக இருக்கும் நிலையில் முற்போக்காளர், பிற்போக்காளர், சொந்த நலன்களையே நோக்கும் அதிகார வர்க்கம் அல்லது சுரண்டப்படுகிற வர்க்கங்களின் கோரிக்கைகள் – இப்படி அனைத்து மனிதர்களின் உணர்வுகளில் மதப் பற்று வேறுபாடில்லாமல் வியாபித்திருக்கிறது. ஆனால், மார்க்சிய தத்துவம் ஆக்கப்பூர்வமான முற்போக்கு கருத்துக்களையும், சீர்திருத்த இயக்கங்களையும் உள்ளடக்கிய மதப் பழக்கவழக்கங்களை கவனத்தில் கொள்கிறது. உதாரணமாக, சுஃபி மற்றும் பக்தி இயக்கங்கள். அதே சமயத்தில் இந்த இயக்கங்கள் தங்களை மதப்பிடிப்புக்குள் இருத்திக் கொண்டதால், சமூகத்தில் தேவையான மாற்றங்களை செய்வதற்கு சாத்தியமில்லை என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. எந்த சமூக நிலைமைகளின் காரணமாக, குறிப்பிட்ட வடிவிலான மத நடவடிக்கைகள் ஆதிக்கம் பெற்றனவோ, அந்த சமூக நிலைமைகளை மாற்றினாலொழிய இந்த குறிப்பிட்ட மதத்துடன் இணைந்த ஒடுக்குமுறைகளை அகற்றிவிட முடியாது. இவ்வாறு மார்க்சியமானது மதங்களின் ஆக்கப்பூர்வமான உள்ளடக்கத்தை அங்கீகரிக்கிறது, அவற்றின் சீர்திருத்தக் கருத்துக்களுடைய வரம்பை அறிந்துள்ளது. மனித நாகரீகத்தின் வளர்ச்சியின் ஒரு பகுதியாக, மனித உணர்விற்குள் பொருந்தி இருக்கும் பகுதியாக மதங்களின் வரலாற்று வளர்ச்சியைப் பார்க்கிறது.

ஆகவே மார்க்சிச தத்துவம் வரலாற்று நிகழ்வுகளுக்கு அறிவியல் விளக்கங்களை தருகிற நிலையிலும், சமூகப் போராட்டங்களில் மதங்கள் ஆற்றியுள்ள சிக்கலான பாத்திரங்களையும் கவனத்தில் கொள்கிறது.

ரோமப் பேரரசின் சிதைவுக்கு காரணமான மக்களின் பேரெழுச்சியின் விளைவாக கிறிஸ்துவ மதம் தோன்றியதை பார்த்திடலாம். அதேபோல் அரேபிய பாலைவனத்தில் வாழ்ந்த நாடோடிகளுக்கும், நகர மக்களுக்கும் நடந்த போராட்ட விளைவுகளாலும், அபிசீனிய ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து நாட்டை மீட்டிட எழுந்த அரேபிய தேசிய உணர்ச்சியும், அதன் மூலம் பல காலமாக உபயோகப்படாமல் இருந்த வர்த்தக வழிகளை மீட்டெடுப்பதுமே இஸ்லாம் மதம் தோன்றக் காரணம் என்பதை மார்க்சும், ஏங்கல்சும் சுட்டிக் காட்டுகின்றனர். இதுபோலவே சிதையும் நிலப்பிரபுத்துவத்திற்கும், வளரும் முதலாளித்துவத்திற்கும் நடந்த போராட்டத்தின் விளைவே பிராட்டஸ்டென்ட் சீர்திருத்தம் தோன்றக் காரணம். அழிக்க முடியாத பிராட்டெஸ்டென்டுகளின் எதிர்ப்புக் கொள்கைகளே வெல்ல முடியாத முதலாளித்துவத்தின் உதயத்திற்கு காரணமானது. (ஏங்கெல்ஸ் – ஃபயர்பாக்)

ஆகவே, மார்க்சுக்கும், மார்க்சிய தத்துவவாதிகளுக்கும், மதம் என்பது சமூக நிலைமைகளினால் ஏற்பட்ட விளைபொருளே; அதில் மனிதர்கள் வாழ்ந்தனர் என்பதும், வாழ்கின்றனர் என்பதையும் கவனத்தில் கொள்கிறோம். மதங்களின் வரலாறு என்பது ஒரு விதத்தில் பார்த்தால் மனித பரிணாம வளர்ச்சியின் பிரதிபலிப்பே ஆகும். இவ்வகையில் மதம் என்பது யதார்த்த உலகின் பிரதிபலிப்பு ஆகும். இயற்கையின் வலிமையும், சமூக நிகழ்வுப்போக்குகளுமே வாழ்வின் வழிகாட்டும் விதி.தால் புரிந்துகொள்ள முடியாத நிலைமையில் இயற்கையினைக் கடந்த வேற்று கிரக சக்தி ஒன்றை கற்பித்துக் கொள்வது அவர்களுக்கு அவசியமாகிறது. ஆகவே மதம் என்பது மனித குலத்திற்கு ஆறுதலையும், வாழ்வின் மீதான ஈர்ப்பையும், நிம்மதியையும் தருகிறது. அதேசமயத்தில், ஆதிக்கம் செலுத்தக்கூடிய தத்துவமாக மதம் அமைகின்றபோது, அந்த காலகட்டத்தில் ஆளும் வர்க்கத்தின் ஆதிக்கத்துடைய வெளிப்பாடாகிறது.

மார்க்சும், மார்க்சிய தத்துவமும் மாத்திரமே மதங்களின் பிறப்பு, தோற்றம் மற்றும் மனித மனங்களில் அவை செலுத்தும் தாக்கம் இவைகளை அறிவியல் பூர்வமாக புரிந்து கொண்டுள்ளதால், மதங்கள் வகிக்கும் பங்கினை வழிப்படுத்துவதும், தீர்மானிப்பதும், அரசின் சமூக அமைப்புகளே என்று அடித்துச் சொல்கிறார்கள். துல்லியமான இந்தக் காரணத்தினால்தான் மார்க்சிய தத்துவம் மதங்களை குறிப்பிட்டு தாக்குவது கிடையாது. மாறாக, மதங்களின் தோற்றங்களுக்கு காரணமான சமூக நிலைகளையும் மற்றும் மனித குலத்தின் மேல் மதம் தொடர்ந்து வைத்து வருகிற பிடிமானத்திற்கான நிலைகளையுமே தாக்குகிறது. மார்க்சிய தத்துவம் மதங்களை நிலைத்திருக்கச் செய்வதற்காக உதவும் நிலைகளை, அதாவது வர்க்கத்தை ஒடுக்கும் ஒரு கருவியாக மதம் இயங்குவதை முற்றிலுமாக மாற்றிட முயல்கிறது.

மார்க்சிஸ்டுகள் பொருள்முதல்வாதிகள். பொருள்முதல்வாதிகளாக இருப்பதினால், வர்க்கமாக பிரிந்து கிடக்கும் சமூகத்தில் சிக்கலான பாத்திரமேற்று மதம் நடத்தும் விளையாட்டின் முழுமையையும் புரிந்து கொண்டுள்ளனர். மதம் என்பது சமூகத்தின் மேல் கட்டுமானமாக தொடர்கிறது. ஒரு வர்க்கமற்ற சமுதாயத்தை நிறுவினாலும் அதிலும் நீண்ட காலத்திற்கு மதம் தொடர்ந்து இருக்கும். மார்க்சிய தத்துவம் மதத்தை குறியிட்டு தாக்குவதில்லை. ஆனால் மதத்தினை தோற்றுவிக்க காரணமான சமூக நிலைகளை தாக்குவதால், இதன் அடிப்படையிலேயே மார்க்சிய தத்துவத்தின் திசைவழி அமைகிறது.

இதுவே பொருள்முதல்வாதிகளான மார்க்சிஸ்ட்டுகளின் மதத்தைப் பற்றிய புரிதலும் சிந்தனையும் ஆகும். மதத்தில் மனித நேய உள்ளடக்கமும் உள்ளது, அதே நேரத்தில் அது ஒரு வர்க்கத்தின் ஆட்சி அதிகாரத்திற்காக உபயோகப்படுத்தப்படும் கருவியாகவும் உள்ளது என்பதை ஒட்டுமொத்தமாகப் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. மதத்தின் பிடிமானம் தொடர்வதற்காக உள்ள சமூக நிலைகளை மாற்ற ஒரு கம்யூனிஸ்ட் முயற்சிக்க வேண்டுமே அல்லாது மதத்தை குறியிட்டு தாக்கக் கூடாது.

வகுப்புவாதத்திற்கு எதிரான போராட்டம்

மதத்தை உயர்த்திப்பிடிக்கும் ஏகபோக உரிமையாக்கிக் கொண்ட வகுப்புவாதிகளையும், மத அடிப்படைவாத சக்திகளையும் அம்பலப்படுத்துவதும், மேற்சொன்னவாறு இன்றைக்கு நிலவும் சமூக நிலைகளுக்கு எதிராக நடத்தப்படும் ஒருங்கிணைந்த போராட்டத்தோடு இணைந்த செயல்பாடு ஆகும். இவ்வாறான மாற்றத்தை இந்தியாவில் ஏற்படுத்திட மார்க்சிஸ்டுகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யும் விழைகின்றனர்.

பார்க்கப் போனால், அடிமை இந்தியாவில், ஆங்கிலேயர்கள் தங்கள் ஆட்சி நிலைத்திருப்பதற்கான கருவியாக வகுப்புவாதத்தை உருவாக்கியும், பயன்படுத்தியும், கீழ்த்தரமானதொரு பிரித்தாளும் கொகையைக் கையாண்டார்கள்.

1857 முதல் சுதந்திரப் போரில் இந்துக்களும், முஸ்லீம்களும் இணைந்து வெளிப்படுத்திய உருக்குப்போன்ற ஒற்றுமையை கண்ட ஆங்கிலேயர்கள், அந்த ஒற்றுமையை சிதைத்தழிப்பதற்காக வகுப்புவாத அரசியலை திட்டமிட்டு கையாண்டனர். வாக்காளர்களை இந்து – முஸ்லீம் என்று பிரித்தார்கள். வங்காளத்தை இரண்டாகப் பிரித்தனர். முஸ்லீம் லீக் அமைப்பிற்கு தனித்த ஆதரவு காட்டினார்கள். இவையெல்லாம் காலனி ஆதிக்கத்தை தொடர்வதற்கான நிகழ்ச்சி நிரலாக மேற்கொள்ளப்பட்டன.

சுதந்திரத்திற்கு பிந்தைய ஆண்டுகளில், (கட்டுரையின் முன் பகுதியில் குறிப்பிட்ட)  நெருக்கடி நிலை மக்களிடையே அதிருப்தியை அதிகப்படுத்தியது. ஆளும் வர்க்கங்கள் இந்த அதிருப்தியில் இருந்து தற்காத்துக்கொள்ள, வகுப்புவாத பிரிவினையை பயன்படுத்தினார்கள். நாட்டுப் பிரிவினையைத் தொடர்ந்து, ஆழமாக வேரூன்றி நிலைத்துவிட்ட வகுப்புவாதத்தை ஒழிப்பதற்கு உணர்வுப்பூர்வமான முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. குறுகிய அரசியல் நோக்கத்துடன், ஊசலாட்டமும் வகுப்புவாத சக்திகளுடனான சமரசமும் செய்துகொள்ளப்பட்டது.

இன்று இந்தியாவில் நடந்துகொண்டிருப்பது, பாசிசத்திற்கான முன் நடவடிக்கை என்று ஒரு புகழ்பெற்ற அறிஞர் கூறினார். இன்று நம் பொதுவாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் அது தென்படத் தொடங்கிவிட்டது. மதத்தின் பெயரால் மக்களை திரட்டும் அருவருக்கத்தக்க முயற்சிகள் தொடர்கின்றன. ஆர்.எஸ்.எஸ் வகைப்பட்ட ‘இந்து ராஷ்ட்டிராவை’ எதிர்க்கும் ஒவ்வொரு நிகழ்வின் மீதும், ஒவ்வொரு குடிமகனின் மீதும் பாசிச வெறுப்பு உமிழப்படுகிறது. நமது ஜனநாயக சமூகத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களிலும் ஆர்.எஸ்.எஸ் ஊடுருவுகிறது. நம் குடியரசின் அரசமைப்புச் சட்டத்தை இழிவுபடுத்துகிறது. நிர்வாகத்தில் நேர்மையற்ற குறுக்கீடுகளைச் செய்கிறது. தன் விருப்பங்களை அடைவதற்காக சூழ்ச்சிகளைக் கையாள்கிறது. விதிகளை மீறியும், நடைமுறைகளை மீறியும், தரக்குறைவான பேரங்களைப் பேசுகிறது. இதுவரை நிகழ்ந்திராத அளவுக்கு மக்களின் மேல் பொருளாதாரச் சுமைகள் குவிக்கப்படுகின்றன. அனைத்து இடங்களிலும் ஊழல் மலிந்திருக்கிறது – என அனைத்தும் நன்றாக தென்படுகின்றன.

பாஜக ஆட்சியில் இருக்கிற இச்சில வருடங்களில், இந்த அரசின் கொள்கைகள் ஏகாதிபத்தியத்திற்கு துணை போவதாகவும், பிற்போக்கான இந்திய ஏகபோக மூலதனத்தின் நோக்கங்களுக்கு துணை செய்வதாகவும் இருக்கிறது. பார்க்கப் போனால், இந்த வாஜ்பாய் அரசு தான் அமெரிக்க அரசிற்கு, இதுவரை சுதந்திர இந்தியாவில் நடந்திராத அளவிற்கு அணுசரணையாக நடந்து கொள்கிறது. அதனுடைய பொருளாதாரக் கொள்கைகள் ஒருபக்கம் இந்தியாவின் இறையாண்மையை அடகு வைத்து விட்டது. மறுபக்கம் பெருவாரியான மக்களை வறுமை நிலைக்கு தள்ளி விட்டுள்ளது. அமெரிக்கா முன்னெடுக்கும் யுத்த நடவடிக்கைகளுக்கு இந்தியாவை கூட்டாளியாக ஆக்கியிருக்கும் அளவு அயல்நாட்டு கொள்கை வளைக்கப்பட்டுள்ளது.

மேலும் இவர்கள் ஆட்சியில் உள்ள இச்சில வருடங்களில் நமது நாட்டில் உள்ள கல்வி முறை மீது ஒரே கண்ணோட்டத்துடன் தாக்குதல்கள் ஏவப்படுகின்றன. இந்து மத நம்பிக்கை வைத்துள்ள மக்களிடையே நிலவும் பன்முக கலாச்சாரத்தை மாற்றி,  கட்டுண்ட ஒரே இந்து கலாச்சாரமாக மாற்றும் ஆர்.எஸ்.எஸ் முயற்சிகளும், வகுப்புவாத பிரிவினை விஷத்தை ஆழமாக பரப்பி, சிறுபான்மை மதத்தினருக்கு எதிராக, முக்கியமாக கிறிஸ்துவர், முஸ்லீம்களுக்கு எதிராக, வன்முறையை விதைத்து, நமது பள்ளி மாணவர்களின் பாடத் திட்டத்தை மாற்றுகின்றனர். இவ்வாறு நமது கல்வித் துறையை சீரமைப்பதன் மூலம், வகுப்புவாத, மத வெறுப்பு எண்ணங்களை புகுத்தி அதை வலுவடையச் செய்து, காவிக் கும்பல் தங்களது பாசிச நோக்கத்திற்கான பயணத்தை எளிதாக்கிட நினைக்கின்றனர்.

இதைப்போலவே, இவ்வருடங்களில் இந்திய வரலாற்றை மாற்றியெழுதும் இடைவிடாத முயற்சிகளையும் பார்க்க முடிகிறது. தாங்கள் தான் இந்தியாவின் மறுக்க முடியாத முன்னோர்கள் என்று நிறுவிட, வரலாற்று உண்மைகளையும், ஆதாரங்களையும் திரித்துக் கூறுவது என்பது சங்க பரிவாரத்திற்கு அவசியமாகிறது. அவர்களுடைய, “இந்து ராஷ்ட்டிரா”விற்கு இந்துக்கள், இந்துக்கள் மாத்திரமே உண்மையான முன்னோர்கள் என நிரூபிக்க இந்த வரலாற்று திருத்தல் அவசியமாகிறது. எனவே, இந்துக்கள் வேறெங்கும் இருந்து இங்கு வரவில்லை என்று நிறுவிட வேண்டியுள்ளது. ஏனெனில், அவர்களும் வெளியில் இருந்து வந்தவர்கள் என்றாகி விட்டால், பிறகு இந்நாட்டின் மீதான அவர்களது உரிமை கோரல் என்பது, அனைத்து மற்ற மதம் சார்ந்தவர்கள் இந்நாட்டிற்கு வந்து குடியேறிய நிலையோடு ஒப்பிட்டு, வேறுபாடு காட்ட முடியாத கோரிக்கையாகி விடும்.

அன்றைய கோல்வால்கருக்கும், இன்றைய ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் இந்து என்றால் ஆரியர்கள் என்றே பொருள். இந்து மதத் தலைவர்கள் ஆர்யவர்த்தா என்றே அழைக்கப்படுகிறார்கள்.

ஒரு பாசிச வெறுப்புடன் தமக்கு எதிராக உள்ள அனைத்து வரலாற்று ஆதாரங்களையும் நிராகரித்து, இந்திய வரலாற்றை மாற்றி எழுதி, இந்தியா தான் ஆரியர்கள் அவதரித்த பூமி என்பதை நிரூபிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தின் உந்துதலில், அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளது. ஆரியர்கள் தான் இந்தியாவிலிருந்து உலகைச் சுற்றி வந்தவர்கள் என்று நம்மையே நம்ப வைக்க முயற்சிப்பார்கள். ஆரிய இனம் தான் உயர்ந்தது என்ற கொள்கையோடு ஜெர்மனியில் பாசிச ஆட்சியை நிலை நாட்டிய ஹிட்லர் உண்மையில், இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்தவரே என்று கூட நம்மை நம்ப வைக்க இந்தக் கூட்டம் முயலும்.

அண்மை வருடங்களில், ஆர்.எஸ்.எஸ். தனது பாசிச குறிக்கோளை முன்னெடுக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. மதவெறியைத் தூண்டி கலவரங்களை ஏற்படுத்துவதே அதன் பிரதான நடவடிக்கையாக உள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவில் நடந்த வகுப்புவாத கலவரங்களை விசாரிக்க அமைக்கப்பட்ட நீதி விசாரணைக் கமிஷன்கள் அனைத்தும் ஆர்.எஸ்.எஸ். தான் முக்கிய குற்றவாளி என தீர்ப்பு வழங்கியிருக்கின்றன. தற்போது ஆட்சிக்கு வந்த பிறகு வகுப்புவாத நடவடிக்கைகள் மிக, மிக, முனைப்பாக பெருகியுள்ளது.

குஜராத்தில் அரசே முன்னின்று முஸ்லீம் மதத்தினருக்கு எதிராக நடத்திய வகுப்புவாத படுகொலை என்பது இதுவரை நடந்தவற்றை எல்லாம் விட நடத்தப்பட்ட கீழ்த்தரமான நடவடிக்கையாகும். குஜராத்தில் நடந்துள்ளது ஒரு இன அழிப்பிற்கு ஒப்பாகும். ஆர்.எஸ்.எஸ்.-உம் அதன் பரிவாரங்களும் குற்ற உணர்வோடு வருந்துவதற்கு பதிலாக, சுரணையற்று பச்சைப் படுகொலைகளை மகிழ்வுடன் வரவேற்று இந்துக்கள் புகழ் ஓங்குக என்று பறைசாற்றினர்.

சாதி, மத, மொழி போன்ற அனைத்து வேறுபாடுகளையும் கொண்ட மக்களை ஒற்றுமைப்படுத்தும் இந்திய நாட்டுப்பற்றினை மாற்றியமைத்து, தேசிய வெறியை உண்டாக்கிட ஆர்.எஸ்.எஸ். முயல்கிறது.

நமது நாடு ஒற்றுமையும், பண்பும் மிகப் பரந்த பன்முகத் தன்மையும் கொண்ட நாடு. மதத்தில், மொழியில், பாரம்பரியத்தில், பழக்க வழக்கங்களில், பன்முகத் தன்மை கொண்ட இந்த நாட்டை பராமரிக்க வேண்டுமானால், பன்முகத் தன்மையின் இடையிலான ஒற்றுமையை வலுவாக்குவதன் மூலமே முடியும். அதற்குப் பதிலாக ஒற்றைத்தன்மையை  திணிக்க முற்பட்டால், அந்தப் போக்கு நம் நாட்டின் ஒற்றுமையையும், பண்பையும் நொறுக்கி விடும். இதைத்தான் வகுப்புவாத பாசிச சக்திகள் துல்லியமாக நிறைவேற்றிடத் துடிக்கின்றன.

வகுப்புவாத விஷத்தை தூவுவதும், மதத்தின் பேரால் திரட்டுவதும் – எதிர் வரும் நாட்களில் நாட்டை பிளவுபடுத்தி, “உள்நாட்டுப் போர்” மூள்வதற்கான ஆபத்தான அடித்தளத்தை உருவாக்குகின்றன. மேலும் மக்கள் ஜனநாயகத்தை நோக்கி முன்னேறுவதற்கு அடிப்படையாக உள்ள உழைக்கும் பகுதி மக்களின் ஒற்றுமையையும் வகுப்புவாதம் சீர்குலைக்கிறது. எந்த அடிப்படை வர்க்கங்களின் ஒற்றுமையைக் கொண்டு, தற்போதுள்ள ஆட்சிக்கு எதிரான போராட்டத்தை நடத்த வேண்டுமோ, அந்த அடிப்படை வர்க்கங்களின் ஒற்றுமையை இன்றைக்கு எழுந்துள்ள வகுப்புவாதம் பலவீனப்படுத்தியுள்ளது என்பதையும் பார்க்க வேண்டியுள்ளது. ஆகவே, வகுப்புவாத சக்திகளுக்கு எதிரான போராட்டம் என்பது நமது வர்க்கத்தின் ஒற்றுமையை வலுப்படுத்திக் கொண்டு அதே நேரத்தில், நமது நாட்டை பாதுகாப்பதற்கும், முன்னேற்றுவதற்குமான போராட்டத்தோடு ஒன்றிணைந்ததும் ஆகும்.

இன்றைய இந்தியாவின் சூழலில் உழைக்கும் மக்கள் தங்களது வாழ்க்கை ஆதாரங்களை உயர்த்திக் கொள்ளவும், நேர்மையான சுதந்திரத்தையும், கண்ணியத்தையும் பெற்றிடவும் கையிலெடுக்கும் போராட்டங்கள் சிதைக்கப்பட்டு வகுப்புவாத பதட்டங்களுக்கும், சண்டைகளுக்கும் இப்போராட்டங்களை திசை திருப்பி விட்டுள்ளன. இப்போராட்டங்களுக்கு வலிமை ஊட்டி, வகுப்புவாத அச்சுறுத்தலை தோல்வி அடையச் செய்யாவிடில் மக்கள் விடுதலைக்கான முன்னேற்றங்கள் முறியடிக்கப்படும்.

இப்படிப்பட்ட சூழலில் வருத்தத்தை அளிக்கக் கூடிய, கொழுந்துவிட்டு எரியும் வகுப்புவாத விரோதங்களினால், தொடர்ந்து கொண்டிருக்கும் துயரங்கள் பெருகிவிடாமல் இருக்க இவ்விசயத்தில் தீவிரமாகத் தலையிடுவது நமது கடமையாகும். தெளிவான மனசாட்சியுள்ள எவரும் இப்போராட்டத்திலிருந்து விலகி நிற்க முடியாது. பொன்மொழிகள் சொல்வது போல் தீயவர்கள் வெற்றி பெற நல்லவர்கள் மௌனமாக இருப்பது ஒன்றே போதுமானது”.

இந்திய நாட்டை சிறந்த நாடாக மாற்றிட நாம் அதை பாதுகாக்க வேண்டியுள்ளது. 1947இல் அரசியல் சுதந்திரம் அடைந்த பிறகு பெறப்பட்ட சிறிய, சிறிய நன்மைகளைக் கூட அகற்றிட வகுப்புவாத சக்திகள் தாக்குதல்களை தொடுக்கின்றனர். இன்றைக்கு அனைத்து இந்திய தேச பக்தர்களின் கடமை என்பது இதுவரை கிடைத்தவற்றைப் பாதுகாத்து சிறப்பான எதிர்காலத்தை நோக்கி முன்னேறுவதேயாகும்.

கொரோனா காலத்திலும் தொடரும் வகுப்புவாத அணிதிரட்டல்

சுபாஷிணிஅலி

2020 முதல் நமது நாடு கொரோனா பெருந்தொற்று பரவலின் காரணமாக ஏராளமான இறப்புகளையும் துன்பங்களையும் சந்தித்துக் கொண்டு, நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் வேளையிலும் சங்க பரிவாரம் தனது வகுப்புவாத அணிதிரட்டல் நிகழ்ச்சி நிரலை நிறுத்தவில்லை என்று சொன்னால் மக்கள் ஆச்சரியப்படுவார்கள். உண்மை என்னவென்றால், சங்க பரிவாரத்திற்கு அதனுடைய இரண்டு நோக்கங்களை அடைவதற்கு வகுப்புவாத அணிதிரட்டல் என்பது மிகவும் முக்கியமானது. இந்து ராஷ்டிராவை நிர்மாணிப்பது என்பது, அல்லது மனுஸ்மிருதியின் கொள்கைகளால் வழிநடத்தப்படுகிற அந்நிய, இந்திய கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான பொருளாதாரத்தால் முழுவதும் ஆதிக்கம் செலுத்தப்படுகிற ஒரு அரசினை நிர்மாணிப்பது என்பதும் ஆகிய இரண்டு நோக்கங்களையும் எட்டுவதற்கு இந்த வகுப்புவாத அணிதிரட்டல் அவர்களுக்கு தேவைப்படுகிறது.

வகுப்புவாத அணிதிரட்டல் என்பது ஒரு தந்திரம். இது இடைவிடாமல் ஆர்எஸ்எஸ் அமைபினாலும், அதன் பரிவாரங்களாலும், மத்திய அரசாங்கத்தாலும், பாஜக ஆளும் மாநில அரசாங்கங்களாலும், அவற்றின் ஆதரவு தளத்தை பாதுகாக்கவும், பலப்படுத்தவும், விரிவுபடுத்தவும் பயன்படுத்தப்படுகிறது. இதனால் அவற்றிற்கு அளவற்ற லாபங்கள் -பயன்கள் கிடைத்துள்ளன. இந்த தந்திரத்தின் பின் உள்ள உண்மை நிகழ்ச்சி நிரலை நாம் புரிந்து கொள்ளாவிட்டால் எதிர்காலத்திலும் இதனை அவர்கள் தொடர்வார்கள். சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல்கள் என்பது எதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை பெரும்பான்மை பகுதி மக்கள் இப்போது உணரத் துவங்கியுள்ளார்கள். அவர்களுடைய வகுப்புவாத உணர்வுகளை கிளர்ந்தெழச் செய்யவும், ஆர்எஸ்எஸ் தலைமையிலான அமைப்புகளின் பின்னால் மதத்தின் அடிப்படையில் ஒன்றுபடுத்தவும், இதனையொட்டி அவர்களின் உரிமைகள், வாழ்வாதாரம் மற்றும் நல்வாழ்வு மீதான தாக்குதலைத் தொடரவும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதையும் தற்போது அவர்கள் உணரத் துவங்கியுள்ளார்கள்.

சமீப காலமாக சங்க பரிவாரங்களும் பாஜக தலைவர்களும் இந்தத் தந்திரத்தை பயன்படுத்திய பல்வேறு எடுத்துக்காட்டுகளை எடுத்து ஆராய்ந்தால் இந்த உணர்தலின் முக்கியத்துவத்தை நாம் அறியலாம்.

வூகானில் இருந்து முதல் கொரோனா பாதித்த நோயாளி கேரளாவிற்கு வந்தார். இதனையடுத்து மேலும் தொற்று பரவாமலிருக்க மோடி அரசாங்கம் உடனடியாக அனைத்து ஆகாயவிமான தளங்களையும் மூடி தடுப்பு நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். கொரோனாவை சமாளிப்பது என்பது அதற்கு முன்னுரிமையாக இருக்கவில்லை. டெல்லி சட்டமன்ற தேர்தலுக்காக, அதனுடைய அமைச்சர்கள் எல்லோரும், பொதுவாக சிறுபான்மையின மக்களையும், குறிப்பாக CAA/NRC-விற்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டவர்களையும் குறிவைத்து பிரிவினைவாத தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். இந்தப் பிரச்சாரம் போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக அகற்றுவதற்கும், புது டெல்லியில் வன்முறை வகுப்புக்கலவரத்தைத் தூண்டுவதற்கும் காரணமாக அமைந்தது. முந்தைய தேர்தலில் மூன்று இடங்களை மட்டுமே வென்ற பாஜகவால், கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 8 இடங்களை வென்றதன் மூலம் அதன் எண்ணிக்கையை உயர்த்த முடிந்தது.

பிரதமர் மோடிக்கு இதற்கடுத்த மற்றொரு முன்னுரிமை இந்த நேரத்தில் நடந்த டிரம்ப் விஜயம்தான். ட்ரம்புடன் ஒரு பெரிய பரிவாரமே வந்திருந்தது. கொரோனா பரவும் ஆபத்து குறித்த எந்தவொரு சிந்தனையும் இல்லாமல் அகமதாபாத்தில் அவரது வருகைக்காக லட்சக்கணக்கான மக்கள் திரட்டப்பட்டனர். இறுதியாக, மார்ச் மாதத்தில், பாஜக அரசாங்கத்தின் மூன்றாவது முன்னுரிமை தெளிவாக வெளிப்பட்டது. மத்திய பிரதேசத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசாங்கம் ஏற்பாடு செய்யப்பட்ட அணிதிரட்டலின் மூலம் (மார்ச் 2020 இல், இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஒரு அரசியல் நெருக்கடி உருவாக்கப்பட்டது. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 22 எம்.எல்.ஏக்கள் மாநில சட்டமன்றத்தில் இருந்து ராஜினாமா செய்ததால் கமல்நாத் அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கும், பின்னர் மத்தியப் பிரதேசத்தில் நான்காவது சிவராஜ் சிங் சவுகான் அரசாங்கத்தையும் உருவாக்க வழிவகுத்தது) பதவியிலிருந்து அகற்றப்பட்டு மார்ச் 22 அன்று ஒரு பாஜக அரசு நிறுவப்பட்டது. இதற்குப் பிறகுதான் மோடி தனது கவனத்தை கொரோனா பெருந்தொற்றின் மீது திருப்பினார். மார்ச் 25 அன்று அவர் ஒருதலைப்பட்சமாக – கடுமையானதும், திட்டமிடப்படாதுமான – ஊரடங்கினை அறிவித்தார்.

இந்த கடுமையான தவறுகள் அனைத்தாலும் கேரளாவிலும், ஓரளவிற்கு தமிழ்நாட்டிலும் தவிர பிற மாநிலங்களில் சுகாதார உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததன் காரணமாக, பெருந்தொற்றினை எதிர்கொள்ள வேண்டிய நிலையிலிருந்த மக்களின் மீது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தின. மேலும் ஊரடங்கின் காரணமாக அவர்கள் தங்கள் வேலைகளை இழந்தனர். வசிப்பிடங்களை இழந்தனர்; மேலும் உணவிற்கே கூட கஷ்டப்பட வேண்டியிருந்தது.

மார்ச் மாதத்தில் அரசாங்க அனுமதியுடன் டெல்லியில் ஒரு பெரிய சர்வதேச மாநாட்டை நடத்திய முஸ்லீம் பிரிவான தப்லிகி ஜமாஅத்தின் உறுப்பினர்கள் மீது கொரோனாவின் நெருக்கடிக்கான பொறுப்பை முழுக்க முழுக்க மாற்றுவதன்மூலம், மக்கள்மீது தான் ஏற்படுத்திய துன்பங்களுக்கான பொறுப்பைத் தவிர்ப்பதில் சங்க பரிவார் வெற்றிபெற்றது. தப்லீகி உறுப்பினர்களுக்கு எதிராகவும், அனைத்து முஸ்லிம்களுக்கும் எதிராகவும் அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் ஊடகங்களின் அனைத்து பிரிவுகளின் வாயிலாகவும் பயங்கரமான, மாபெரும் பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்பட்டது. ‘ஜமாஅத்திகள்’ டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுடன் தவறாக நடந்து கொண்டார்கள் என்ற பிரச்சாரம், மருத்துவமனைகளில் பிரியாணிதான் வேண்டும் என்று கேட்டார்கள் என்ற பிரச்சாரம், வேண்டுமென்றே காணாமல் தலைமறைவாகி கொரோனாவை வேண்டுமென்றே பரப்ப சதிசெய்துள்ளார்கள் என்பன போன்ற பிரச்சாரங்களால் வெறுப்பின் சூழல் வெறித்தனமாக உருவாக்கப்பட்டது. முஸ்லிம்கள் தாக்கப்பட்டனர். வேட்டையாடப்பட்டனர் மற்றும் சிறையில் அடைக்கப்பட்டனர் மற்றும் முஸ்லீம் விற்பனையாளர்கள் தாக்கப்பட்டு புறக்கணிக்கப்பட்டனர்.

இந்தப் பிரச்சாரம் முஸ்லிம்களின் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்டது மற்றும் அநீதியை ஏற்படுத்தியது என்பது மட்டுமல்ல. கூடுதலாக, துன்பப்படும் இலட்சக்கணக்கான குடிமக்களின் அவலநிலையை புறக்கணிக்க அரசாங்கத்திற்கு உதவியது. மக்களின் மேம்பட்ட மற்றும் விரிவாக்கப்பட்ட சுகாதார சேவைகளுக்கான தேவையையும், பணச் சலுகைகள் மற்றும் உணவுப் பொருட்களின் வடிவத்தில் நிவாரணம் பெறுவதற்கான உரிமையையும் புறக்கணிக்க உதவியது. வேலையில்லா காலத்திற்கான நிவாரணங்களை வழங்குவதிலிருந்தும், ஊரக வேலை உறுதி திட்டம் போன்ற திட்டங்களை விரிவாக்கும் அவசியத்தை தொடர்ந்து புறக்கணிக்க உதவியது. அரசாங்கத்தின் இயலாமை, நேர்மையின்மை மற்றும் மருத்துவத்தை தனியார்மயப்படுத்துவதற்கான அதன் முக்கியத்துவம் போன்ற அனைத்தும் அது உருவாக்கிய வகுப்புவாத வெறுப்பின் மூடுபனிக்கு பின்னால் மறைந்திருந்தது.

ஊரடங்கு நீக்கப்பட்டவுடன், பாதுகாப்பற்ற முதல் கொரோனா அலையில் இருந்து வெளியில் வந்துவிட்ட தைரியத்தில், பாஜக ஆட்சியில் உள்ள மாநில அரசாங்கங்களும் மத்திய அரசாங்கமும் மிகக் கடுமையான தியாகங்கள் நிறைந்த போராட்டங்களின் மூலம் போராடிப் பெற்ற தொழிலாளி வர்க்கத்தின் அனைத்து உரிமைகளையும் தொடர்ச்சியாக பல சட்டங்களை இயற்றுவதன் மூலம் பறித்தன. இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், மத்திய அரசாங்கம் ஜனநாயகமற்ற தன்மையுடன், நவம்பர் 2020ல் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராடிய பிறகும், மக்கள் விரோத, விவசாயிகள் விரோத மூன்று வேளாண் சட்டங்களையும் கொண்டு வந்துள்ளது. இந்த சட்டங்கள் கார்ப்பரேட்டுகளின் லாபத்திற்காக, குறிப்பாக அதானி மற்றும் அம்பானிக்கு உதவுவதற்காக கொண்டுவரப்பட்டுள்ளது என்பது தற்போது ஊரறிந்த இரகசியம் ஆகிப் போயுள்ளது.

சங் பரிவாரத்தின் வகுப்புவாத அணிதிரட்டல் அரசியலின் காரணமாக அவர்களின் வாழ்க்கையில் பேரழிவினை உண்டு பண்ணியது என்ற கசப்பான பாடத்தை தங்கள் அனுபவத்திலிருந்து கற்றுக்கொண்டதன்மூலம் விவசாயிகளின் இயக்கம் இன்று பெரிதும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

2012ல் கிராமப்புற மேற்கு உத்திரப் பிரதேசத்தில் தூண்டப்பட்ட இந்து-முஸ்லீம் கலவரங்கள், நியாயமான விலைகளுக்கான விவசாயிகளின் ஒன்றுபட்ட போராட்டத்தினை அன்றிலிருந்து நடைபெற விடாமல் செய்வதை உறுதிசெய்தது. 2020ல் விவசாயிகளின் தர்ணாக்கள் தொடங்கியபோது, சீக்கிய விவசாயிகளை ‘காலிஸ்தானி பயங்கரவாதிகள்’ என்று முன்னிறுத்த பாஜக முயன்றது. 2021 ஜனவரி 26-க்குப் பிறகு, ஒரு பாஜக எம்எல்ஏவும் பாஜக குண்டர்களும் தர்ணா நடைபெற்ற இடங்களை தாக்க முயற்சித்தனர். அப்போது வெளிப்படையாக 1984 மீண்டும் வருகிறது என்று (சீக்கியர்களுக்கு எதிராக அந்த ஆண்டு நடந்த தாக்குதல்களை நினைவுபடுத்தும் விதமாக) பேசினார்கள். விவசாயிகள் பாறைபோன்று ஒற்றுமையாக நின்றனர். மேற்கு உத்திரப் பிரதேச கிசான் தலைவர்கள் வகுப்புவாத வெறுப்பரசியலுக்கு ஆளாகிய தங்களது முந்தைய தவறை வெளிப்படையாக ஏற்றுக் கொண்டு, இனிமேல் முஸ்லிம் விவசாயிகள் போராட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பார்கள் என்று பகிரங்கமாக அறிவித்தனர். மேலும் சீக்கிய மற்றும் சீக்கியரல்லாத விவசாயிகளின் ஒற்றுமை மாறாமல் இருக்கும் என்று அறிவித்தனர்.

கடந்த ஆண்டு, பாஜக ஆட்சி செய்யும் அனைத்து மாநில அரசுகளும் மதமாற்றத்திற்கு எதிராகவும், மதம் விட்டு மதம் நடக்கும் திருமணங்களுக்கு எதிராகவும் கடுமையான சட்டங்களை இயற்றின. இதன் விளைவாக, பல இஸ்லாமிய ஆண்களும் அவர்களது குடும்பங்களும் வன்முறையையும் அநீதியையும் சந்திக்க வேண்டி வந்தது. முஸ்லிம் அல்லாத பெண்கள் பலர் வன்முறைக்கும், அவமானத்திற்கும் சித்திரவதைக்கும் ஆளாகினர். இந்த சட்டங்கள் எல்லாம், அரசியலமைப்பின் மூலமாக உத்திரவாதப்படுத்தியுள்ள அடிப்படை உரிமைகளுக்கும், சுதந்திர உணர்விற்கும், பெண்கள் தங்கள் வாழ்க்கைத் துணைகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்ற உரிமைக்கும் எதிராக வரம்பு தாண்டியவைகளாக உள்ளன என்பது மறைக்கப்படுகிறது. இவையெல்லாம் இந்திய குடிமக்களால் மிகவும் பாடுபட்டு வென்ற உரிமைகள். அவை இன்று தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றன.

தேர்தலில் வெற்றிபெற்றால் கேரளாவில் இதேபோன்ற சட்டங்களை அறிமுகப்படுத்துவதாக பாஜக அளித்த வாக்குறுதி மாநில மக்களால் நிராகரிக்கப்பட்டது என்பது மட்டுமல்லாமல், உண்மையில் தற்போது வென்ற கூட்டணியின் அங்கமாக இருந்த, ‘லவ் ஜிகாத்துக்கு’ எதிராக பேசிய ஒரு வேட்பாளர் தேர்தலில் தோல்வியடைந்தார் என்பதும் மிகவும் மனம்கவர்ந்த விஷயங்களாகும். அவரது கருத்துக்களை உடனடியாக சிபிஐ (எம்) கண்டனம் செய்தது, மேலும் அவர் மன்னிப்பு கேட்க வேண்டியிருந்தது, ஆனால் இது அவருக்கு அந்த இடத்தில் வெற்றி பெறுவதற்கு உதவவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

இரண்டாவது கொரோனா அலையை பரிதாபமாக கையாண்டதற்காக விமர்சனங்களையும் எதிர்ப்பையும் எதிர்கொள்ளத் தொடங்கியுள்ள இந்த நேரத்தில் பாஜக இரண்டு பெரிய சவால்களை எதிர்கொள்கிறது. முக்கியமான மாநிலமான உத்திரப் பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தல்கள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ளன. விவசாயிகள் போராட்டம் பலவீனமடைவதற்கான அறிகுறிகளும் இதுவரை தெரியவில்லை. இதன்விளைவாக, பாஜக தீய, கொடூரமான, வகுப்புவாத அணிதிரட்டலை நோக்கி புதுப்பிக்கப்பட்ட வீரியத்துடன் திரும்பியுள்ளது.

விவசாயிகள் இயக்கத்தின் வலிமையான மையங்களில் ஒன்றான ஹரியானா மாநிலத்தில் மேவாட் மாவட்டத்தில் மே30 அன்று பாஜக தலைவர்கள் “இந்து மகா பஞ்சாயத்து” ஒன்றை ஏற்பாடு செய்தனர். மேவாதி மொழி பேசும் ஒரு முஸ்லீம் இளைஞரை யாரென்று அறியப்பட்ட சமூகவிரோதிகள் கொலைசெய்த பின்னணியில் இந்த மகா பஞ்சாயத்து நடத்தப்பட்டுள்ளது. மகா பஞ்சாயத்தில் முஸ்லிம்கள் கொல்லப்படுவது நியாயமானது என்றும், கொலைக்காக கைதுசெய்யப்பட்டவர்களை நியாயப்படுத்தியும் பேசப்பட்டுள்ளது. மேலும் சட்டத்திற்குப் புறம்பாக மோசமான வெறுப்பினையூட்டும் தீப்பற்றும் உரைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. இந்த கூட்டத்தில் பங்கேற்க குறிப்பிட்ட விவசாய சமூகங்கள் ஊக்குவிக்கப்பட்டுள்ளன. இயல்பாகவே, இது வெளிப்படையான வகுப்புவாத அணிதிரட்டல் என்பதோடு, விவசாய சமூகத்திற்குள் தவறான நிலைப்பாடுகளை உருவாக்குவதாகவும் இது உள்ளது.

பாஜகவை கடுமையாகவும் உறுதியாகவும் எதிர்க்கக் கூடிய விவசாயப் பிரிவினர் மதத்தின் பெயரால் தூண்டப்பட்டு அதன் ஆதரவில் கிளர்ந்தெழுச் செய்வதற்கு தூண்டப்பட்டனர். ஜூன் 20 அன்று, AIKS, CITU உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், தொழிற்சங்கங்கள் மற்றும் இடதுசாரி அமைப்புகள், அதே மாவட்டத்தில் ஒரு “ஒற்றுமை மாநாட்டினை” ஏற்பாடு செய்திருந்தன. அந்த மாநாட்டை நடத்துவதிலும், கிராமவாசிகள் அதில் கலந்து கொள்வதைத் தடுப்பதிலும் இடையூறாக அரசாங்கத்தின் முயற்சிகள் பல இருந்தபோதிலும் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளன. விவசாயிகள் இயக்கத்தின் பல தலைவர்களும் மகா பஞ்சாயத்தைக் கண்டித்துள்ளனர்.

உத்திரப் பிரதேசத்தில், வகுப்புவாத பதட்டத்தை அதிகரிப்பதற்கு ஆளும் பாஜக மற்றும் அதன் ஆதரவாளர்களால் திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டு மசூதிகள் இடிக்கப்பட்டு, அரசாங்கம் கண்டுபிடித்ததாகக் கூறும் ‘மதமாற்ற பெரும் அமளி’யைச் சுற்றி (உமர் கவுதம் மற்றும் அவரது கூட்டாளியை “குறைந்தது 1000 பேரை இஸ்லாமியத்திற்கு கட்டாயமாக மாற்றியது” என்ற குற்றச்சாட்டில் கைது செய்த நிகழ்வு) வெறித்தனத்தை உருவாக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. வரவிருக்கும் மாதங்களில் வகுப்புவாத பிளவுகளை தீவிரப்படுத்த பாஜக துணிச்சலான பல நகர்வுகளை எடுக்கும். இரண்டாவது கொரோனா அலையின்போது பாதிக்கப்பட்ட இலட்சக்கணக்கானவர்களின் உதவியற்ற நிலை மற்றும் பெரும் வேதனையின் நினைவுகளை அழிக்க ஒரேவழி இதுதான் என்பதை அவர்கள் அறிவார்கள். வளர்ந்து வரும் வேலையின்மை, பசி மற்றும் வறுமை ஆகியவற்றிற்கு பொறுப்பேற்கவேண்டிய அரசாங்கத்தை தண்டிக்கும் விதமாக – மக்கள் ஒன்றிணைவதைத் தடுக்கக்கூடிய ஒரேவழி இதுதான் என்பதையும் அவர்கள் அறிவார்கள்.

மனுவாத ஆதரவும், கார்ப்பரேட் சார்பும் கொண்டிருக்கும் பாஜகவிற்கும், சங்க பரிவாரத்திற்கும் மக்களுடைய ஆதரவு தேவைப்படுகிறது. எனவே, ஒருபுறம் வகுப்புவாத அடிப்படையிலான திரட்டல், சிறுபான்மையினர் மீதான கொடூர வன்முறைகள் மற்றும் அநீதிகளை நிகழ்த்திக்கொண்டே மறுபுறம் பொய்களையும், திசைதிருப்பல் ஏற்பாடுகளையும் கொண்ட ஒரு ஏற்பாட்டைச் செய்வதன் மூலம், தனது சதி வேலைகளால் பாதிக்கப்படும் மக்கள் அதனை உணராத வகையில் முன்னெடுக்கிறது. வகுப்புவாத அமைப்புகள் முன்னெடுக்கின்றவெறுப்புக்கும், வெறிச் செயல்களுக்கும் பின்னணியாக உள்ள திட்டங்களையும், அதன் வழியாக வர்க்க, சாதி அடிப்படையிலான சுரண்டல் நடைமுறைகள் வேகப்படுத்தப்படுவதையும் புரிந்துகொள்வது அவசியம். மக்கள் உரிமைகளை பாதுகாக்கும் இயக்கங்களுடைய வெற்றிக்கு இது மிகவும் அவசியமாகும்.


தமிழில்: ஆர். எஸ். செண்பகம்

இந்தியாவுக்கு எதிரான ‘குடியுரிமை’ கூராயுதம்!

இரா. சிந்தன்

Download : Marxist Reader (android)

(டிசம்பர் 2019 மார்க்சிஸ்ட் இதழில் இடம்பெறும் இக்கட்டுரை, முன்னுக்கு வந்துள்ள குடியுரிமை சிக்கலை ஒட்டி இணைய வாசிப்புக்காக பகிரப்படுகிறது)

குடியுரிமை என்பதை தன் அரசியலுக்கான புதிய ஆயுதமாக தீட்டத் தொடங்கியிருக்கிறது பாஜக. குடியுரிமை சட்டத் திருத்தத்தை கொண்டுவந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றவும் செய்தது. அதில் மத அடிப்படையில் இந்தியக் குடியுரிமையை தீர்மானிக்கும் தன் நோக்கத்தை அப்பட்டமாகவே வெளிப்படுத்தியுள்ளது.

அசாமில்,  ‘இந்திய குடிமக்களின் தேசிய பதிவேடு’ பட்டியல் வெளியிடப்பட்டதும், அது ஒரு புதிய குழப்பத்தை ஏற்படுத்தியதையும் நாம் அறிவோம். இப்பட்டியலில் இடம் பெறாத 19 லட்சம் பேர் நாடற்றவர்களாக ஆக்கப்பட்டனர். பாஜக இப்படியொரு பதிவேடு இந்தியா முழுவதுமே கொண்டு வரப்பட வேண்டும் என்ற வாதத்தை முன்வைக்கிறது. அசாம் மாநில பட்டியல் வெளியான சில நாட்களுக்குப் பின் அவர்கள் கூச்சலை சற்று குறைத்துக்கொண்டார்கள். அதற்கு காரணம், 40 லட்சம் பேர் அதுவும் ‘வந்தேறிகள்’ வெளியேற்றப்படுவார்கள் என்ற தங்கள் பிரச்சாரம் பொய்த்துப்போனதே ஆகும். அசாம் மாநிலத்தில் பாதிக்கப்பட்ட மக்களில் முஸ்லிம்கள்  பெரும்பான்மையாக இல்லை. 

அவர்களுக்கு இது சிறிய ஏமாற்றம்தான். உத்திரப் பிரதேச மாநிலத்தில், மீரட் கண்டோன்மென்ட் தொகுதியின் எம்.எல்.ஏவான சத்ய பிரகாஷ் அகர்வால் ‘வடிகட்டும் வேலையை’ நாடு முழுவதும் செய்வோம் என திமிராகவே இப்போதும்  பேசுகிறார்.பாஜகவின் தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷா, ‘முஸ்லிம்களை’ மட்டும் குறிவைத்து தங்கள் திட்டத்தை மாறுதலுக்கு உள்ளாக்கி செயல்படுத்துவோம் என்கிறார். அசாமில் கணக்கெடுப்பை மீண்டும் நடத்துவோம் என்கிறார். (அந்த மாநிலத்தில் ஏற்கனவே மேற்கொண்ட கணக்கெடுப்பிற்கே சுமார் ரூ.1,600 கோடி செலவு ஆகியிருக்கிறது). அமித் ஷா பேச்சின் ஒரு பகுதி ‘முஸ்லிம் அல்லாதவர்களுக்கு பாஜக ‘தயவு’  உண்டு என்பதாகும்’. இது முஸ்லிம் அல்லாத வாக்கு வங்கியை நோக்கிய தூண்டில். மற்றொரு பகுதி, அவர்களுடைய திட்டத்தை அடுத்த கட்டத்திற்கு முன் நகர்த்துவது. இந்திய நாட்டின் குடியுரிமையையே மத அடிப்படையிலானதாக மாற்றியமைக்க வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ். செயல் திட்டமாகும். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் முகமான பாஜக இந்த முயற்சியை வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்திலேயே தொடங்கியது.

அசாம் ஒப்பந்தம் – வரலாற்று சுருக்கம்

ஆர்.எஸ்.எஸ்/பாஜக திட்டம் குறித்து பேசுவதற்கு முன், அசாம் மாநிலத்தின் சூழலை சுருக்கமாக பார்ப்போம். 1970களின் இறுதியில் அசாம் மாநிலத்தில் மாணவர் இயக்கம் எழுந்தது. இந்த இயக்கத்தின் முழக்கங்களில் ஒன்று அசாம் மாநிலத்தில் குடியேறியவர்களை (வங்க தேசத்தவர்களை) வெளியேற்ற வேண்டும் என்பதாகும். இப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் ராஜீவ் காந்தி தலைமையிலான அரசாங்கம் 1985 ஆம் ஆண்டில் ஒரு ஒப்பந்தம் (அசாம் அக்கார்ட்) ஏற்படுத்திக் கொண்டது. அதன்படி ஒருவருடைய குடும்பத்தாரின் பெயர் 1951 அசாமில் ஏற்படுத்தப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம் பெற்றிருக்க வேண்டும். அல்லது 1971 மார்ச் 24 வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும். இவை அல்லாமல் வேறு சான்றுகளையும் கொடுக்கலாம். இப்பிரச்சனையில் உச்ச நீதிமன்றமும் தலையிட்டு நெறிப்படுத்தியது.

இந்திய குடிமக்களின் தேசியப் பதிவேடு ஏற்படுத்தப்பட்ட வரலாற்றை படிக்கும் எவருக்கும் அது அசாம் மாநிலத்துக்கு மட்டுமேயான தனித்துவமான சூழலில் எழுந்தது என்பதை புரிந்துகொள்ள முடியும். மேலும், 1951 ஆம் ஆண்டிலேயே அந்த மாநிலத்தில் இவ்வாறான ஒரு பதிவேடு ஏற்படுத்தப்பட்டிருந்தது என்பதால், அதனை அடிப்படையாகக் கொள்ள முடிந்தது என்பதையும் பார்க்க வேண்டும். (புதுவை 1963 ஆம் ஆண்டில்தான் யூனியன் பிரதேசமானது என்பதையும்,கோவா 1974 ஆம் ஆண்டில்தான் இந்தியாவுடன் இணைந்தது என்பதையும் பார்க்கும்போது குடியுரிமை என்பதற்கு ஆண்டு அளவுகோல் போதுமா என்ற கேள்வியும் எழுகிறது)

ஆனால், அறிவியல் பூர்வமான வரையறை எது என்ற கேள்வியையே பாஜக விரும்பவில்லை. அசாமின் சூழலில் எழுந்த ஒரு முடிவை வைத்துக்கொண்டு நாடு முழுவதும் குடியுரிமை குறித்த வரையரையை மாற்றியமைப்பதே அவர்களின் நோக்கமாகும்.

ஏக காலத்தில் அவர்களுடைய செயல் திட்டத்தை பல்வேறு முனைகளில் முன்னெடுக்கின்றனர்.  இந்தக் கட்டுரையில்   ‘குடியுரிமை’ பிரச்சனையை மட்டும் எடுத்துக் கொள்வோம்.

இந்தியக் குடியுரிமை பற்றிய ஆர்.எஸ்.எஸ். நிலைப்பாடு

ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் குருஜி கோல்வால்கர் 1939 ஆம் ஆண்டில் ‘நாம் அல்லது நமது தேசியம் – ஒரு விளக்கம்’ என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டார். அதில் ஆர்.எஸ்.எஸ். ஏற்படுத்த விரும்புகிற தேசம் குறித்து பின்வருமாறு விளக்குகிறார். “இந்து இனம் தனது இந்து மத கலாச்சாரம் மற்றும் மொழியுடன் (சமஸ்கிருதம் மற்றும் அதிலிருந்த பிறந்த மொழிகளுடன்) அதன் தேசிய கருதுகோள் முழுமையடைகிறது” என்பதே அவரது விளக்கமாகும். மேலும், மேற்சொன்ன வரம்பிற்குள் வராத குடிமக்களை இரண்டாந்தர குடிமக்களாகவே நடத்தவேண்டும் என்கிறது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்தம்.

மேலும் 1923இல் வி.டி. சாவர்க்கர் ’இந்துத்துவா’ என்ற புத்தகத்தை வெளியிடும்போது ‘இந்துத்துவா’-விற்கும் இந்து மதத்திற்கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லை என்று தெளிவுபடக் கூறியுள்ளார். ஏனென்றால் அது ஒரு அரசியல் திட்டமே ஆகும். மதத்திற்கும், ஆன்மீகத்திற்குமான சொல் அல்ல. ‘இராணுவத்தை இந்துமயமாக்கு; இந்துதேசத்தை இராணுவமயமாக்கு’ (`Hinduise the military, militariseHindudom’) என்ற முழக்கத்தையும் அவர் முன்வைத்ததை இத்தோடு இணைத்துப் புரிந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறாக அவர்கள் கட்டமைக்கும் ‘தேசத்தில்’ மற்றவர்கள் எப்படி நடத்தப்படுவார்கள்?. இதுபற்றி கோல்வால்கர் தனது புத்தகத்தில் குறிப்பிடும்போது “இந்துஸ்தானத்தில் அந்நிய இனங்கள் இந்து கலாச்சாரத்தையும், மொழியையும் ஏற்க வேண்டும்” என சொல்வதுடன் அவ்வாறு ஏற்காதவர்கள் இந்து தேசத்திற்கு அடிபணிந்து வாழ வேண்டும்; அவர்கள் எதையும் எதிர்பார்க்கக் கூடாது; எந்த முன்னுரிமையையும் பெற முடியாது; மிகக் குறைவான முன்னுரிமையைக் கூட –குடியுரிமையைக் கூட பெற முடியாது” (பக்கம் 104-105) என்கிறார்.

இப்போதுள்ள ‘அனைவருக்குமான இந்தியா’ என்ற நிலையை மாற்றி சொந்த குடிமக்களுக்குள்ளேயே மோதலை தீவிரப்படுத்துவதுதான் ஆர்.எஸ்.எஸ். தத்துவமும் செயல்திட்டமும் ஆகும். இந்த முடிவுக்கு அவர்கள் வருவதற்கு உதவியாக அமைந்தது ஜெர்மனியில் அமைந்த நாஜி அரசாங்கம். கோல்வால்கர் தன்னுடைய புத்தகத்தில் நாஜி அரசு யூதர்களுக்கு இழைத்துக் கொண்டிருந்த கொடுமைகளைக் குறிப்பிட்டு அவைகளை வரவேற்று எழுதியிருக்கிறார். அதுபற்றி கீழ்க்காணும் வகையில் குறிப்பிடுகிறார் ‘செமிட்டிக் மொழிகள் பேசுகிற – யூதர் – இனத்தை வெளியேற்றியதன் மூலம் ஜெர்மனி உலகை அதிரச் செய்தாள். அதன் மூலமே ஒரு இனத்தின் பெருமை உச்சம் தொட வைக்கப்பட்டது.” என்றதுடன் அந்த கொடூரத்தில் இருந்து ‘இந்துஸ்தான்’ கற்றுக் கொள்ள வேண்டும்;  லாபமடைய வேண்டும் என்றார். எழுதியது மட்டுமல்ல; ஜெர்மனியிலும், இத்தாலியிலும் செயல்பட்ட அமைப்புகளுடன் தொடர்பும் ஏற்படுத்திக் கொண்டார்கள்.

இந்துத்துவா எதற்காக உருவாக்கப்பட்டது?

சாவர்க்கர் 1907 ஆம் ஆண்டில் ஒரு புத்தகம் எழுதினார்.அந்த புத்தகம் 1857 ஆம் ஆண்டில் நடைபெற்ற முதல் சுதந்திரப் போராட்டத்தை பற்றியது. இந்தப் போராட்டக் களத்தில்தான் “இந்துக்களும் முஸ்லிம்களும் முதல் முறையாக இணைந்தார்கள்” என்று குறிப்பிட்டதுடன், அவ்வாறு நடந்திருக்காவிட்டால் பல நூற்றாண்டுகளாக தொடர்ந்த மோதல் போக்கு முடிவுக்கு வந்திருக்காது என எழுதியிருக்கிறார். 1913 ஆம் ஆண்டில்  சவார்க்கர் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் அந்தமான் சிறையில் அடைக்கப்படுகிறார்.

அந்தமான் சிறையில்,அடுக்கடுக்கான துன்பங்களுக்கு பிறகும் விடுதலைப் போரைக் காட்டிக் கொடுக்காத வீரத் தியாகிகளைப் போன்றவர் அல்ல சவார்க்கர். அவர் மன்னிப்புக் கடிதங்களை எழுதுகிறார். 6 முறை மனுப் போடுகிறார். அதில் ஒரு கடிதத்தில்,“(பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசு) பெருந்தன்மையுடன், கருணையுடன் என்னை சிறையிலிருந்து விடுவிக்குமானால், நான் (பிரிட்டிஷ் காலனி) அரசின் அரசியல் சட்டத்தை உயர்த்திப் பிடிப்பவனாக இருப்பேன். பிரிட்டிஷ் அரசின் விசுவாசத்திற்கு உரியவனாக இருப்பேன்’ என்று இறைஞ்சிக் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த மாற்றத்தின் பிறகே அவர் ‘இந்த்துவா” என்ற அரசியல் சித்தாந்தத்தை வடிவமைக்கிறார்.

அது பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தங்களுடைய பிரித்தாளும் சூழ்ச்சியை செயல்படுத்தத் தொடங்கியிருந்த காலகட்டமாகும். அந்த திட்டத்திற்கு உதவியாகவே ‘இந்துத்துவா’ கருத்தியல் வடிவமைக்கப்பட்டது. மேலும், இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக்கு அடிப்படையாக அமைந்த ‘இரு தேசக்கொள்கையையும்’ சவார்க்கரே முதலில் முன்வைத்தார் என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும். சுமார் 10 லட்சம் மரணங்களையும், மிகப்பெரும் எண்ணிக்கையில் மத அடிப்படையிலான இடப்பெயர்வையும் ஏற்படுத்திய அந்த பிரிவினை, வரலாற்றின் ஆறாத வடுவாக அமைந்தது. இவ்வகையில், பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் நலன்களைக் காக்கும் விதமாகவே ‘இந்துத்துவா’ உருவானது; செயல்பட்டது.

இதன் காரணமாகவே, பாஜக முன்வைக்கும் தேசியமும், குடியுரிமையும் ‘காலனி ஆதிக்க எதிர்ப்பை’ அடிப்படையாக கொண்டிருக்கவில்லை. காலனி ஆதிக்க எதிர்ப்பின் மூலம் வடிவம் பெற்ற இந்திய தேசியத்தையும், மக்களிடையே வலுப்பட்ட மத நல்லிணக்கம், மதச்சார்பற்ற அரசியல் என அனைத்தையும் நிராகரிப்பதுடன், அதனைச் சிதைத்து அழிக்கவே திட்டமிட்டது. இப்போதும் அது கார்ப்பரேட் பெருமுதலாளிகளின் நலன்களை பாதுகாக்கும் வகையில் தன் பாசிச செயல்திட்டத்தை முன்னெடுக்கிறது.

பாசிசம்: உருவாக்கம் – வளர்ச்சி

முதல் உலகப் போருக்குப் பின் சில காலம் உலகப் பொருளாதாரம் வளர்ச்சியடைவது போல் தோன்றினாலும் மீண்டும் நெருக்கடிக்குச் சென்றது. இத்தகைய பொருளாதார சூழலில்தான் பாசிச அரசியல் பிறப்பெடுத்தது என்பது வரலாறு.

பாசிச அரசியலானது தானாகவே ஒரு பெரும் சக்தியாக வளர முடியாது. “முதலாளித்துவ வர்க்கம் தனது ஆதரவையும், ஊக்கத்தையும் வழங்குகிறபோதே பாசிசமானது தன்னை ஒரு இயக்கமாக அமைத்துக் கொள்ள முடியும், கீழ் நடுத்தர வர்க்கத்தின் பிற்போக்கு சக்திகளை திரட்டி அமைப்பின் பின் படை சேர்ப்பது இவ்வாறுதான் சாத்தியமாகும்” என்கிறார் மார்க்சிய சிந்தனையாளர் ஜான் பெல்லோமி போஸ்டர். பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் தயவோடு உருவாகி வளர்ந்த பாசிச கருத்தியல் மக்களிடையே வேர் விடவோ, வலிமை பெறவோ முடியவில்லை. இந்திய முதலாளித்துவ சக்திகளுக்கு பாசிசம் தேவைப்பட்டிருக்கவில்லை. 

இப்போது, உலக முதலாளித்துவ உற்பத்தி அமைப்புசார் நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. பொருளாதாரத்தில் பெரும் தேக்கம் நிலவுகிறபோது அது லாபத்தில் சரிவை ஏற்படுத்தும். குறைந்த பலன்களே கிடைக்கும்போதும் அதில் பெரும் பகுதியை தன் வசமாக்க விரும்புகிறது முதலாளித்துவம். எனவே அது பழைய ‘தாராளவாத ஜனநாயக’ அரசாங்கமும், அரசியலும் போதாது என நினைக்கிறது. தன்னுடைய வெளிப்படையான கொள்ளை நடவடிக்கைகளுக்கும், வரன்முறையற்ற சுரண்டலுக்கும் யார் சேவையாற்ற முடியும் என தேடுகிறது. இதற்காகத்தான் பாசிச சக்திகளுக்கு பெரும் பணமும், ஆதரவும் கொடுத்து ஊக்கப்படுத்துகிறது.

இரண்டு உலகப் போர்களுக்கு இடையிலான காலகட்டத்தைப் போல் அல்லாமல் இப்போதைய பாசிச அரசியல் சக்திகளின் செயல்பாடு சற்று வேறுபடுகின்றன. ‘நவ-பாசிசத்தின்’ கூறுகள் நாட்டுக்கு நாடு, சூழலைப் பொறுத்து மாறுபடும். அதன் அடிப்படையான கூறு வெகுமக்களிடையே ஒற்றுமையைச் சிதைத்து, வரன்முறையற்ற சுரண்டலுக்கு வழிவகுப்பதுதான்.

உள்ளிருக்கும் எதிரிகளும், உண்மை குடிமக்களும்:

பாசிசம் தன்னை உயிரோடு வைத்திருப்பதற்காக தொடர்ந்து முயற்சிகளை முன்னெடுக்கிறது. அது திட்டமிட்ட வகையில் ‘உள்ளிருக்கும் எதிரிகளைக்’ கற்பனையாகக் கட்டமைக்கிறது. வன்முறைகளை தூபம் போட்டு வளர்க்கிறது. காலனி ஆதிக்க காலத்திலும் சரி, விடுதலைக்கு பிறகும் சரி ஹைதராபாத், ஜம்மு, ஆல்வார்-பாரத்பூர்-மிவாட், பாட்டியாலா என எங்கெல்லாம் முஸ்லிம்களுக்கு எதிரான இன அழிப்பு மோதல்கள் நடந்தனவோ அங்கெல்லாம் இந்து மஹாசபாவும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் பங்கெடுத்தன என்பதை பல்வேறு ஆய்வறிக்கைகள் காட்டுகின்றன. பிரிவினையின்போது நடைபெற்ற வன்முறைகளிலும்  இவர்களின் கை இருந்தது.

‘உள்ளிருக்கும் எதிரிகளை’ கட்டமைத்து அதன் உதவியுடன் ஒரு நாட்டின் ‘உண்மையான’ உறுப்பினர்கள் என்ற மாய நம்பிக்கையையும் அது ஏற்படுத்துகிறது. அப்படிப்பட்ட ‘உண்மையான’ உறுப்பினர்களைக் கொண்ட ஒரு தேசம் உருவாகிறபோது, அது அந்த நாட்டுக்கே ‘மறு பிறவியாக’ அமையும் என்ற நம்பிக்கையை தன் ஆதரவுத்தளத்தில் விதைக்கிறது. இந்த மாற்றம் நடந்துவிட்டால் அரசியலும், கலாச்சாரமும் மாற்றம் பெற்றுவிடும்; நெருக்கடிகள் தீரும்; ஊழல் முடைநாற்றங்கள் முடிவுக்கு வரும் என்று பிரச்சாரம் செய்கிறது. அடிப்படையை மாற்றாமலே எல்லாவற்றையும் மாற்ற முடியும் என்கிற போலியான இந்த ‘நம்பிக்கை’யே பாசிசத்தின் தத்துவம், பிரச்சாரம், அரசியல் மற்றும் நடவடிக்கைகளின் அடிநாதமாகும். இன்றும் பாசிச சக்திகளின் செயல்பாட்டில் இதை நாம் உணர்கிறோம். மேலும்,அதே பாஜக-வானது மற்றொரு பக்கம் கார்ப்பரேட் பெரு முதலாளிகளுக்கு அப்பட்டமான சலுகைகளை அள்ளி வழங்கிக் கொண்டிருப்பதையும் நாம் அறிவோம்.

குடியுரிமை சிக்கலின் அடுத்த கட்டம் என்ன?:

இந்திய குடிமக்களின் தேசிய பதிவேட்டை நாடு முழுவதும் விரிவாக்க நினைக்கும் பாஜகவின் செயல் திட்டம், நாஜிக்களின் வரலாற்றில் இருந்து ஊக்கம் பெற்றது என்பதைப் பார்த்தோம். நாஜிக்களின் சட்ட நிபுணரான கார்ல் ஸ்மிட் இந்த திட்டம் குறித்து மேலும் விரிவாக கூறியிருக்கிறார். ஆரியர் அல்லாதவர்களை நீக்குவது,  தலைவரை சட்டத்திற்கு மேலானவராக நிறுத்துதல் என இரண்டு வழிமுறைகளை  ஆளுகை செலுத்துவதற்கான உத்திகளாக அவர் முன்வைத்தார். ‘ஒற்றைத்தன்மை மற்றும் தூய்மை ஆகிய லட்சியங்களை ‘பன்மைத்துவத்தை அழிப்பதன்” மூலமே அடைய முடியும் என்கிறார்.

உலகம் முழுவதுமே வலதுசாரிகள் இந்த நிலைப்பாட்டினை எடுத்து வருகிறார்கள். அந்தந்த நாடுகளின் சிறுபான்மையினரை ‘இரண்டாந்தரக் குடிமக்கள்’ என்ற நிலைக்கு தாழ்த்துகின்றனர். மோடியின் இரண்டாவது ஆட்சிக்காலம் அந்தப் பாதையில் சற்று வேகமாகவே பயணிக்கிறது. இதுவரையிலும் அவர்கள் மேற்கொண்டுவந்த ஒடுக்குமுறைகளை இப்போது நிறுவனமயப் படுத்துகிறார்கள்.

அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைகள் இதனை எளிதாக அனுமதிப்பதில்லை என்பது அவர்களுக்கு சில சிரமங்களை ஏற்படுத்துகிறது. ‘பாஜக விரும்புகிற’ குடியுரிமையை முன்வைக்கும் மசோதாவும் அரசமைப்புச் சட்ட வரம்புக்கு உட்பட்டது அல்ல. ஆனால், சில அண்டை நாடுகளில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிப்பதனை முன்வைத்து, ‘முஸ்லிம் அல்லாத’ அளவுகோலை, குடியுரிமைக்கு பொருத்துகிற தன் வாதத்தினை பிரச்சாரம் செய்ய முயற்சிக்கிறது பாஜக.

இன்றைக்கு நடந்துகொண்டிருக்கும் குழப்பங்களுடன் சேர்த்து, இந்தி மொழியை திணிப்பது மற்றும் மும்மொழித் திட்டம் ஆகியவற்றிற்கு எழுந்திருக்கும் எதிர்ப்புகள் என பல்வேறு நிகழ்வுகள் அவர்களுடைய செயல்திட்டத்திற்கு சில தடைகளை ஏற்படுத்தியிருக்கின்றன. முதலில் அவர்கள் ‘முஸ்லிம்களை’ மட்டும் குறி வைக்கிறார்கள். அதே சமயம் “முதலில் முஸ்லிம்கள், அடுத்தது கிறுத்துவர்கள்” என்ற வி.எச்.பி. முழக்கத்தைப் போல படிப்படியாக நகர்வோம் என்கிறார்கள் சங்க பரிவாரங்கள். குடியுரிமை சட்டம் மற்றும் பதிவேடு ஏற்படுத்துகிற முயற்சியின் அடுத்தடுத்த கட்டங்கள் இப்படித்தான் இருக்கும். அந்நிய குடியேற்றத்தை நீக்குவதல்ல; இந்தியாவிலேயே காலம் காலமாக வசித்துவரும் பலவகைப்பட்ட மத, இன, மொழி அடையாளம் கொண்டிருக்கும் மக்களிடையே  ‘உயர்ந்த’ மற்றும் ‘இரண்டாந்தர’ என்ற எண்ணத்தை உருவாக்கி மோதச் செய்வதுதான் அந்த செயல்திட்டத்தின் மெய்யான நோக்கம்.

ஆதாவது, கும்பல் கொலைகள், பசுக்காப்புபடையினர், லவ் ஜிகாத் என்ற பெயரால் ‘உதிரிகளை’ உருவாக்கி நிகழ்த்தப்பட்டு வந்த வன்முறைகளை இனி சட்டத்தின் பேரால் நடத்த விரும்புகிறார்கள். அந்த தாக்குதல்கள், அரசின் நலத் திட்டங்களை மறுப்பு, வேலைவாய்ப்பு மறுப்பது, சட்ட உரிமைகளை மறுப்பது என வளர்த்தெடுக்கப்படும்.

பாசிசமும், முதலாளித்துவ நெருக்கடியும்:

உலகம் முழுவதுமே சூழல்கள் மாறிவருவது பற்றி மார்க்சிஸ்ட் கட்சி தனது 22வது மாநாட்டில் விவாதித்தது. உலக முதலாளித்துவம் மீள முடியாத அமைப்பு நெருக்கடியில் சிக்கியுள்ளது. அதன் விளைவுகள் பல வழிகளில் வெளிப்படுகின்றன. “இனவாதம், இனவெறுப்பு மற்றும் வலது அதிதீவிர நவ-பாசிச போக்குகள்” வளர்கின்றன. நிதி மூலதனத்தின் நலன்களைக் காக்கும் விதமாகவே இந்தியாவிலும் வலதுசாரி அரசியல் வலுவடைகிறது. அதன் விளைவுகளில் ஒன்றாக மக்களுடைய ஜனநாயக உரிமைகளும், நாடாளுமன்ற ஜனநாயக கட்டமைப்பும், ஜனநாயக நிறுவனங்களும் தாக்கப்பட்டு எதேச்சதிகாரம் மேலோங்குகிறது.

பாசிசம் என்பது “வெளித்தோற்றத்தில் அது பிற்போக்கு சக்திகளின் பயங்கரவாத சர்வாதிகாரம், பெருமளவில் ஆதிக்கத் தன்மையுடையது. மேலும் நிதி மூலதனத்தின் அனைத்து ஏகாதிபத்திய வடிவங்களையும் உள்ளடக்கிய ஒன்று” என்கிறார் மார்க்சிய அறிஞர் ஜார்ஜ் டிமிட்ரோவ். மேலும், முதலாளித்துவத்தின் துணை இல்லாமல் பாசிச அரசியல் சக்திகள் அதிகாரத்தில் அமர்ந்திருக்கவில்லை. ஏகாதிபத்தியத்தின் நலன்களை உச்ச அளவில் அமலாக்கக்கூடியதே பாசிசம். அதற்கு ‘அந்நியச் சுரண்டல்’ மீது ‘அளவுகடந்த பாசமே’ உண்டு. அதே சமயம் மக்களிடையே “அவமதிக்கப்பட்ட தேசத்தின் மேலங்கியாகவும்,  வெடித்துக் கிளம்பும் ‘தேசிய’ உணர்வுகளின் முறையீடாகவும் தன்னைக் காட்டிக் கொள்வதில் வெற்றியடைகிறது. அதற்கு முகம் ஒன்று; முகமூடி வேரொன்று.

முதலாளித்துவம் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் சூழலில், வரன்முறையற்ற சுரண்டலை கட்டவிழ்த்து விடுகிறது. அதனால்தான், வேலையின்மையும், உற்பத்தி நெருக்கடியும் தீவிரமடைகின்றன. ஆனால், இந்த நிலைமையை மாற்றியமைக்க பாசிச அரசியலில் தீர்வு எதுவும் கிடையாது. பாசிசத்தின் பொருளாதாரக் கொள்கை முதலாளித்துவ அமைப்பை பாதுகாப்பதுதான்.

இத்தாலியின் முசோலினி பேசும்போது, ‘முதலாளித்துவ அமைப்பை மாற்றியமைக்கும் திட்டம் எதுவும் தங்களிடம் இல்லை’ என வெளிப்படையாக அறிவித்தார். ஹிட்லர் தனது ஆட்சியில் தனிச்சொத்துடைமையை பாதுகாத்ததுடன், தனியார்மயத்தை வேகமாக முன்னெடுத்தார். உழைக்கும் மக்களின் கூலியை வெட்டிச் சுறுக்கப்பட்டது. கீனிசியன் பொருளாதார கோட்பாடுகளை அமலாக்கி அதன் வழியாகவும் முதலாளித்துவத்தையே ஊக்கப்படுத்தினார். இவ்வகையில் முதலாளித்துவத்தின் வேட்டை நாயாகவே வளரும் பாசிசத்தை வீழ்த்துவது, முதலாளித்துவத்தை அம்பலப்படுத்தாமல் சாத்தியமில்லை.

ஜனநாயக உரிமைகளை காப்போம்:

குடியுரிமை மட்டுமல்ல, இந்திய மக்களின் ஜனநாயக உரிமைகள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பறிக்கப்படுகின்றன. முதலாளித்துவ ஜனநாயகக் கட்டமைப்பிற்குள்ளாகவே போராடிப் பெறப்பட்ட பல உரிமைகளை அழித்தொழிக்க முயல்கிறது பாஜக அரசு. குடியுரிமையின் பேரால் மதவழி சிறுபான்மையினரை குறிவைக்கும் அவர்களின் இந்தப் போக்கு உண்மையில் ‘ஒற்றை இந்தியா’ என்ற ஆதிக்கப் போக்கின் வெளிப்பாடாகும். அவர்கள் முன்வைக்கும் ‘இந்து’ மதம், சாதிப்படிநிலை ஏற்றத்தாழ்வை நிலைநாட்டுகிற ஒன்றாகும். அவர்கள் முன்வைக்கும் மொழி ஆதிக்கம், தேசிய இனங்களுக்கு எதிரானதாகும். அவர்களுடைய அரசாங்கக் கட்டமைப்பு ‘கூட்டாட்சி’க்கும் சவால் விடுப்பது. முஸ்லிம்கள், கிறித்துவர்கள், பழங்குடிகள், பட்டியலினத்தார் மற்றும் பெண்கள், தேசிய இனங்கள் என பாதிக்கப்படும் மக்கள் திரளே பெரும்பான்மையிலும் பெரும்பான்மையாகும்.

மேலும், பாசிச செயல் திட்டத்தின் அங்கமாகிய ‘வரன்முறையற்ற சுரண்டலும், முதலாளித்துவக் கொள்ளையும்’ நேரடியாகவே அனைத்து தரப்பு மக்களையும் சிக்கலுக்கு ஆளாக்குகிறது. அது ஏகாதிபத்திய நலன்களோடு கைகோர்த்துக் கொள்வதால் உலக அமைதிக்கும் ஆபத்தாக எழுகிறது. இந்த சூழலை மாற்றியமைப்பது இடது – ஜனநாயக சக்திகளின் ஒன்றுபட்ட போராட்டத்தாலேயே சாத்தியமாகும்.

அதிகாரக் குவிப்பும் அத்துமீறல்களும்

உ. வாசுகி

அரசு என்பது ஆளும் வர்க்கத்தின் ஒடுக்குமுறை கருவி என்றார் மார்க்ஸ். ஒரு நாட்டில் உள்ள அரசின் வர்க்கத் தன்மையைப் பொறுத்து, ஆளும் வர்க்கத்தின் நலனுக்கு ஏற்பவே அரசின் அங்கங்களும், அதிகார கட்டமைப்பும் அமையும். இந்தியாவும் அதற்கு விதிவிலக்கல்ல. இந்தியாவின் அரசியல் சாசனம், சுதந்திரத்துக்குப் பின் நவீன இந்தியா எத்தகையதாக கட்டமைக்கப்பட வேண்டும் என்ற பல நீரோட்டங்களின் கருத்து மோதல்களில் உருவானது. இந்திய முதலாளி வர்க்கத்தின் தலைமையிலான தேசிய நீரோட்டம், இடதுசாரி கருத்தோட்டம், ஆர்.எஸ்.எஸ். முன்வைத்த இந்து இந்தியா போன்ற பிரதான கருத்தியல்களில் ஆர்.எஸ்.எஸ்.சின் கண்ணோட்டம் நிராகரிக்கப்பட்டு, ஜனநாயக சோஷலிச குடியரசு என்ற அடிப்படையில் அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டது. பின்னர் மதச்சார்பின்மையும் இணைக்கப்பட்டது. டாக்டர் அம்பேத்கர் போன்ற தலைவர்களின் பங்களிப்பு இதில் முக்கியமானது.

கூட்டாட்சிக் கோட்பாடு இதில் இடம் பெற்றதற்கு முக்கிய காரணம் தேச விடுதலை போராட்டங்களில் மக்கள் பங்கேற்பும் , மொழி வழி மாநிலங்களுக்காகவும், மொழி கலாச்சாரம் பாதுகாக்கப்படுவதற்காகவும் பல்வேறு தேசிய இனங்கள் நடத்திய வெகுமக்கள் போராட்டங்களும்தாம். இவற்றில் இடதுசாரிகளின் பங்கு குறிப்பிடத்தக்கது. பல்வகை தேசிய இனங்கள், மொழிகள் உள்ளடங்கிய மாநிலங்கள் இணைந்த ஒன்றியம்தான் இந்தியா என்ற சாராம்சம் அரசியல் சாசனத்தில் இடம் பெற்றது. இந்தியாவில் பெரு முதலாளிகள் பெரிதும் வளர்ச்சியடையாத காலமாகவும் அது இருந்தது.

அரசியல் சாசனம் “வடிவத்தில் கூட்டாட்சி தன்மை (federal) கொண்டதாக இருந்தாலும், குணாம்சத்தில் மத்திய அரசிடம் அதிகார குவிப்புக்கு (unitary) வழி வகுப்பதாக உள்ளது” என்பது அன்றைக்கே கம்யூனிஸ்டுகளின் விமர்சனமாக அமைந்தது. பிரதான அதிகாரங்கள், வருவாய் மற்றும் வளங்களின் மீது கட்டுப்பாடு போன்றவை மத்திய அரசின் பொறுப்பில் இருந்தன. மாநில அரசுகளைக் கலைக்கும் உரிமை மத்திய அரசிடம் இருந்தது. நிதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் மத்திய அரசை சார்ந்து இருக்க வேண்டிய நிலைமையில்தான் மாநிலங்கள் வைக்கப்பட்டன. ஆளுநர்கள் மத்திய அரசின் முகவர்களாக செயல்பட்டனர். பொதுப்பட்டியலில் உள்ள அம்சங்கள் மீது முடிவெடுக்கும்போது கூட மாநிலங்களுடன் கலந்து பேசுவதற்கான ஏற்பாடு இல்லை. காலப்போக்கில் இந்த முரண்பாடு அதிகரித்தது. மத்திய மாநில உறவுகளை மறு வரையறை செய்யக்கோரி, 1977-ல் மேற்கு வங்க இடது முன்னணி அரசு 15 அம்ச கோரிக்கை சாசனத்தை உருவாக்கியது. வேறு பல கட்சிகளும் இந்நிலைபாட்டை எடுத்தன. 1983-ல் ஸ்ரீநகரில் நடந்த மாநாடு இத்தகைய கட்சிகளை ஒருங்கிணைத்தது. அதிகார பரவல் என்பது மைய அரசை பலவீனப்படுத்தாது; மாறாக அடித்தளத்தை வலுப்படுத்தும் என்று தோழர் ஜோதிபாசு அம்மாநாட்டில் முன்வைத்தார். அதே வருடம் மத்திய மாநில உறவுகளை மறு சீரமைப்பு செய்ய சர்க்காரியா கமிஷனை மத்திய அரசு அமைத்தது. இதன் அறிக்கை பல அடிப்படை முரண்பாடுகளைத் தீர்க்க உதவவில்லை. 1990-ல் தேசிய முன்னணி அரசு, மாநிலங்களுக்கிடையேயான கவுன்சிலை (Inter-State council) உருவாக்கியது. இது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், இதுவும் அடிப்படை பிரச்னைகளுக்கு வழிகாட்டவில்லை. மேலும் பல புதிய சிக்கல்கள் முளைத்தன. 2007-ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி, மீண்டும் ஒரு கமிட்டியை, மத்திய மாநில உறவுகள் சம்பந்தமாக அமைத்தது. அதன் வரம்பும் கூட மாநிலங்களைக் கலந்தாலோசிக்காமல் நிர்ணயிக்கப்பட்டது.

பொதுவாக, அரசியல் சாசனத்தில் இருந்த கூட்டாட்சி அம்சங்களை வலுப்படுத்தும் விதமாக, மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் முறையிலேயே கம்யூனிஸ்ட் கட்சியின் தலையீடுகள், நிலைபாடுகள் அமைந்தன. மத்திய முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ அரசின் அதிகார குவிப்பை நிலைநிறுத்துவதாகவே காங்கிரசின் செயல்பாடுகள் இருந்தன. அரசின் வழிகாட்டுதல் மற்றும் உதவியோடு இந்தியாவில் முதலாளித்துவ வளர்ச்சி பாதை போடப்பட்டது. இந்தத் தேவைக்கு ஏற்றாற் போல் மாநில உரிமை வரம்பை மீறும் மத்திய அரசின் நடவடிக்கைகள் தொடர்ந்தன. மாநில முதலாளித்துவ கட்சிகளைப் பொறுத்தவரை, அவற்றின் தோற்றம் மாநில உரிமைகள், மொழி, கலாச்சாரம் போன்றவற்றை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டாலும், மாநில உரிமைகளுக்கான அவர்களின் வலுவான குரல், நவீன தாராளமய காலகட்டம் மாநில முதலாளிகளின் வளர்ச்சிக்குக் கதவைத் திறந்து விட்ட பின்னணியில், தளர்ந்து போனது.

இந்திய முதலாளித்துவத்தின் தடையற்ற வளர்ச்சிக்கு அரசின் கட்டுப்பாடுகள் ஒரு கட்டத்தில் தடையாக மாறின. 1990களில் நவீன தாராளமய கொள்கைகள் சுவீகரிக்கப்பட்ட பின்னணியில், சர்வதேச நிதி மூலதனம் விருப்பம் போல் லாபத்தைத் தேடி உலகம் சுற்றுவதற்கு ஏதுவாக அரசின் பங்கு பாத்திரம் மாறியது. ஒருங்கிணைந்த சந்தை உருவாவது முதலாளித்துவ வளர்ச்சிக்குப் பலனளிக்கும் என்ற நிலையில், மத்திய அரசின் கையில் மேலும் அதிகாரங்கள் மாறவும், மாநில உரிமைகள் நீர்த்துப் போகவுமான நடவடிக்கைகள் பின்தொடர்ந்தன. பெரு முதலாளிகளின் வர்க்க பிரதிநிதியான காங்கிரஸ் இந்தப் பாதையில்தான் செயல்பட்டது. பின்னர் வந்த பாஜக அதிகார குவிப்பை அடுத்த கட்டத்துக்கே கொண்டு போனது. நிதி மற்றும் வருவாய் பகிர்வு குறித்த அதிகார குவிப்பு பிறிதொரு கட்டுரையில் இடம் பெறும். அரசியல் பாதிப்புகளை இங்கு பரிசீலிக்கலாம்.

பாஜக ஆட்சியில் அதிகார குவிப்பு:

பாஜக ஆட்சியில் பெருமளவு அதிகாரங்களை மத்திய அரசும், பிரதமர் அலுவலகமும் தம் வசம் குவித்துக் கொள்வதை வெறும் எதேச்சாதிகார நடவடிக்கையாக, மீறலாக மட்டும் பார்க்க இயலாது. பாஜக அரசு இப்படித்தான் இயங்கும். அதன் சித்தாந்தம் அப்படி. வேறு வகையிலான அறிவிப்புகள், வாய் ஜாலங்கள் அனைத்தும் புலியின் மீது போர்த்தப்பட்ட பசு தோல்தான்.

ஆர்.எஸ்.எஸ்.சின் வழிகாட்டுதலில் இயங்கும் பாஜக அரசு, கார்ப்பரேட்டுகளின் ஒட்டுமொத்த ஆதரவைப் பெற்றிருக்கிறது. தீவிரமான கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளை நடைமுறைப்படுத்தவும், ஏற்க மறுக்கிற மாநிலங்களின் எதிர்ப்பை நசுக்கவும் அதிகாரங்கள் மத்திய அரசிடம் குவிக்கப்பட வேண்டியிருக்கிறது. சர்வதேச நிதி மூலதனம் நாடு நாடாக போவதற்கும், வெளியேறுவதற்கும் ஒரு தேசமே கட்டுப்பாடுகளை அகற்ற வேண்டும் என்னும்போது, மாநிலங்களும் அப்பாதையில் செல்ல நிர்ப்பந்தப்படுத்தப்படுகின்றன. ஒரு பரந்து விரிந்த ஒருங்கிணைக்கப்பட்ட சந்தை நவீன தாராளமய காலத்தின் கட்டாயம்.

மறுபுறம், இந்துத்வ சித்தாந்தத்துக்கு ஏதுவாக ஒரே தேசம் – ஒரே கலாச்சாரம் – ஒரே மொழி என்ற ஒற்றை வடிவத்தைத் திணிக்கவும் அதிகார குவிப்பு மேலும் மேலும் தேவைப்படுகிறது. பாஜகவின் கலாச்சார தேசியம் என்ற சொல்லாடலும் சரி, அதன் கருத்தியலும் சரி, இந்தியாவின் பன்மைத் தன்மையை நிராகரிப்பதாகவே இருக்கிறது. தேசிய இனங்களின் பன்மைத் தன்மையை அங்கீகரிப்பதோடு தொடர்புடையதுதான் மாநில உரிமைகளுக்கான அங்கீகாரம். அது இல்லை என்றால் இது இருக்காது. இந்தப் பின்னணியிலேயே பாஜக அரசின் நடவடிக்கைகளைப் பொருத்திப் பார்க்க வேண்டும்.

உதாரணமாக, மானிய வெட்டு என்பது இவர்கள் பின்பற்றும் பொருளாதார கொள்கையின் ஒரு முக்கிய அம்சம். கொள்கை அடிப்படையில் இடதுசாரிகளும், மக்கள் போராட்டங்களின் வெப்பத்தில் இதர மாநில அரசுகளும், பொது விநியோக முறையை பலப்படுத்த வேண்டும் என்று கோருகின்றன. மானியத்தைக் குறைக்கும் நோக்குடன் வறுமை கோட்டைத் தீர்மானித்து, அதற்கேற்றாற் போல் அரிசி, கோதுமையை குறைப்பது, மண்ணெண்ணெயை நிறுத்துவது போன்ற நடவடிக்கைகள் காங்கிரஸ் ஆட்சியில் துவங்கின. தற்போது பாஜக ஆட்சி அதனைத் தீவிரமாக அமல்படுத்துகிறது. இது கேரளா, தமிழகம் போன்ற பொதுவிநியோக முறை ஓரளவு பலமாக இருக்கும் மாநிலங்களைக் கடுமையாக பாதித்துக் கொண்டிருக்கிறது. நேரடி பணப்பட்டுவாடா மூலம் பொதுவிநியோக முறையை முற்றிலும் சீரழிக்கும் நடவடிக்கைகள் படிப்படியாக அதிகரிக்கின்றன. தற்போதைய ஒரே தேசம் ஒரே ரேஷன் கார்டு என்பது பொதுவிநியோக முறையை நாசமாக்குவது மட்டுமல்ல; மாநில அரசாங்கங்கள் தம் மக்களுக்கு உணவு வழங்கும் அதிகாரத்தை மீறுவதாகவும் அமைகிறது. உலக வர்த்தகக் கழகத்தின் நிர்ப்பந்தங்கள், தம் குறுகிய அதிகாரங்களுக்கு உட்பட்டு சில நலத் திட்டங்களை அமல்படுத்த முயற்சிக்கிற மாநில அரசுகளுக்குத் தடையாக அமைகிறது. எனவே, சர்வதேச ஒப்பந்தங்கள் போடும் போது நாடாளுமன்ற ஒப்புதல் வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டியிருக்கிறது. ஜி.எஸ்.டி., நீட் உள்ளிட்ட நடவடிக்கைகளும் மாநிலங்களின் உரிமைகளை மீறக்கூடியவையாகவே அமைந்தன.

மொழி என்பது ஒரு தேசிய இனத்தின் மைய அம்சங்களில் ஒன்று. இந்தி திணிப்பை வலுவாக எதிர்த்த மாநிலங்களில் முதன்மையானது தமிழகம். இந்தி மற்றும் சமஸ்கிருத திணிப்பு, சமஸ்கிருத வளர்ச்சிக்குக் கூடுதல் நிதி ஒதுக்குவது, அகில இந்திய தேர்வுகள் சிலவற்றில் இந்தி, ஆங்கிலம் இரண்டை மட்டும் பயன்படுத்தியது, ரயில்வேயில் உள்ளக தொடர்புக்கு தமிழைப் பயன்படுத்தக் கூடாது என்று அறிவிப்பு வெளியிட்டது போன்ற நடவடிக்கைகள் மோடி ஆட்சியில் அடிக்கடி நடக்கின்றன. தேசிய வரைவு கல்வி கொள்கையின் மூலம் தமிழகத்தின் இரு மொழிக் கொள்கையை மறைமுகமாக மாற்ற முயற்சிக்கப்பட்டது. ஒவ்வொரு கட்டத்திலும் பலத்த எதிர்ப்புக்கிடையேதான் இது மாற்றிக் கொள்ளப்பட்டது. ஆனால் அடுத்த வாய்ப்பு வரும் போது மீண்டும் முயற்சிக்கப்படுகிறது. எனவே மாநிலங்களின் எதிர்ப்பை அங்கீகரித்து, எடுத்த முயற்சியை விட்டு விடுவது என்பது பாஜகவின் நோக்கமல்ல. தற்காலிகமாக விட்டுக் கொடுப்பது அல்லது தகர்த்து முன்னேறுவதுதான் அதன் உத்தியாகத் தெரிகிறது.

ஒரே தேசம் ஒரே தேர்தல் என்பதிலும் மாநிலங்களின் உரிமைகள் கடுமையாக மீறப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் பதவிக்காலத்தை அதிகரிப்பது அல்லது குறைப்பது என்ற உள்ளடக்கம் இதில் உண்டு. ஆளுநரின் மறைமுக ஆட்சிக்கும் இதில் பரிந்துரை செய்யப்படுகிறது.

17வது மக்களவை அமைக்கப்பட்ட பிறகு, நிலைக் குழுக்களோ, அவைக் குழுக்களோ உருவாக்கப்படவில்லை. எனவே, பல்வேறு மசோதாக்கள் முறையாக தயாரிக்கப்படாமல் நேரடியாக நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டன. பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய, ஆழமாக ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டிய, மாநில உரிமைகளைப் பறிக்கக் கூடிய மசோதாக்களை தெரிவுக் குழுவுக்காவது விட வேண்டும் என்ற எதிர் கட்சிகளின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. மக்களவையில் உள்ள மிருக பலத்தை வைத்து இந்த மசோதாக்கள் அனைத்தும் வரிசையாக நிறைவேற்றப் பட்டன. இவற்றில் பலவற்றில் மாநில உரிமைகள் வலுவாக மீறப்பட்டுள்ளன.

அனைத்து மாநில மக்கள் பிரதிதிகளும் இடம் பெறும் நாடாளுமன்றமும், அது சம்பந்தமாக பின்பற்ற வேண்டிய நடைமுறைகளும் புறக்கணிக்கப்பட்டு, பிரதமர் அலுவலகம் சார்ந்து முடிவுகள் எடுக்கப்படுவதும் கூட்டாட்சிக்கு முரணானது.

வரைவு தேசிய கல்விக் கொள்கை:

தற்போதைய வரைவு கொள்கையின் ஒரு பிரதான அம்சம் மையப்படுத்துதல். உதாரணமாக பிரதமர் தலைமையிலான ராஷ்டிரிய சிக்‌ஷா ஆயோக் என்ற அமைப்பின் கட்டுப்பாட்டிலும், கண்காணிப்பிலும் ஒட்டு மொத்த கல்வி நடவடிக்கைகள் இருக்கும் என்றும், ஆராய்ச்சி செய்ய வேண்டிய முக்கிய பிரச்னைகள் என்ன என்பதை இனி தேசிய ஆராய்ச்சி கழகம்தான் தீர்மானிக்கும் என்றும், இக்கழகம் தொழிலதிபர்கள், கார்ப்பரேட்டுகளின் நிதியைக் கொண்டு இயங்கும் என்றும் முன்மொழிவுகள் உள்ளன. கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுவாக எழும் போது, நேர்மாறாக, அதனை மத்திய பட்டியலுக்கு அதிகாரபூர்வமாகக் கொண்டு செல்லாமலேயே, அத்தகைய விளைவுகளை இக்கொள்கை ஏற்படுத்துகிறது.

தேசிய மருத்துவ ஆணையம்:

இதிலும் இந்தியா முழுவதும் உள்ள மருத்துவம் சார்ந்த அனைத்து அம்சங்களையும் இந்தக் கமிஷன் கட்டுப்படுத்தும் என்பது வருகிறது. தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50% இடங்களுக்கான கல்வி கட்டணம் அவர்களின் விருப்பத்துக்கு விடப்படுகிறது. மீதி 50%க்கு கட்டணம் வசூலிக்க பொதுவான வழிகாட்டுதல்தான் இருக்குமாம். அதற்கு ‘உட்பட்டு’ தனியார் மருத்துவ கல்லூரிகளே நிர்ணயித்துக் கொள்ளலாம். மாநில அரசு நிர்ணயிக்க இங்கு ஏதும் இல்லை. 6 மாத சுருக்கப்பட்ட பயிற்சி பெற்று கிராமப்புறங்களில் மருத்துவம் பார்க்கலாம் என்பதும், எக்ஸ்ரே டெக்னிஷியன், லேப் டெக்னிஷியன், கம்பவுண்டர் உள்ளிட்டோர் கூட இதனை செய்யலாம் என்பதும், நகர்ப்புற, கிராமப்புறங்களுக்கிடையே மருத்துவ சிகிச்சை தரத்தில் நிலவும் பாகுபாடுகளை இது சட்டபூர்வமாக்குகிறது. மாநில அரசின் அதிகார வரம்பை மீறுகிறது. ஐந்தரை ஆண்டு மருத்துவ படிப்புக்குப் பிறகு, மீண்டும் ஒரு தேர்வு எழுதப்பட வேண்டும் என்ற நிபந்தனை, பல்கலைக்கழகம் மருத்துவ பட்டம் கொடுக்குமா? இந்தத் தேர்வை நடத்தும் முகமையின் சார்பில் பட்டம் கொடுக்கப்படுமா? என்ற குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

தகவல் உரிமை சட்டத் திருத்தத்தின்படி மாநில தகவல் ஆணையரின் ஊதியமும், பதவிக் காலமும் இனி மத்திய அரசின் கையில்தான். தேசிய புலனாய்வு முகமை திருத்த சட்டத்தில், எந்த மாநிலத்தில் உள்ள எவரை வேண்டுமானாலும் மத்திய உள்துறை அமைச்சகம், பயங்கரவாதி என்று முத்திரை குத்தி, மாநில அரசின் ஒப்புதல் இல்லாமலே அவரைக் கைது செய்து, அவரின் சொத்துக்களைக் கைப்பற்றலாம் என்ற பிரிவு உள்ளது. விசாரணை செய்வதிலும் மாநில காவல்துறையை ஈடுபடுத்தப்போவதில்லை. சட்டம் ஒழுங்கு மாநில அதிகாரம் என்பது இதில் நீர்த்துப் போகிறது.

தொழிலாளர் நல சட்டத் திருத்தம்:

தொழிலாளர் நலன் என்பது மத்திய – மாநில பொதுப் பட்டியலில் உள்ளது. 44 தொழிலாளர் நல சட்டங்கள் வெறும் நான்கு தொகுப்பாக மாற்றப்படும் என்று மாநிலங்களுடன் விவாதிக்காமல், நிதிநிலை அறிக்கையின்போது நிதியமைச்சர் உரையில் அறிவிக்கப்படுகிறது. இவற்றில் ஊதியம் குறித்த தொகுப்பு தற்போது சட்டமாகியிருக்கிறது.

குறைந்த பட்ச ஊதியம் குறித்து 15வது இந்திய தொழிலாளர் மாநாடு வழங்கிய பரிந்துரையும், பின்னர் ராப்டகாஸ் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும், இவற்றை ஏகமனதாக ஏற்று உருவாக்கப்பட்ட 45 மற்றும் 46வது இந்திய தொழிலாளர் மாநாடுகளின் பரிந்துரைகளும் இச்சட்டத்தில் இடம் பெறவில்லை. 7வது ஊதிய குழு பரிந்துரைத்த ரூ.18,000 என்பதும் புறந்தள்ளப்பட்டு தேசிய அடிமட்ட ஊதியம் ரூ.4628 என தொழிலாளர் நலத்துறை அமைச்சரால் தன்னிச்சையாக அறிவிக்கப்படுகிறது. முறைசாரா துறையில் முதலாளி, மத்திய அரசு நிர்ணயிப்பதையோ அல்லது மாநில அரசு நிர்ணயிப்பதையோ தரலாம் என்று பச்சை கொடி காட்டியிருப்பது, குறைவான கூலிக்கே இட்டு செல்லும். சில குறிப்பிட்ட மாநிலங்களில் தொழிற்சங்க இயக்கம் போராடி தியாகம் செய்து பெற்ற பலன்கள் கூட தொடர முடியாது. உதாரணமாக, கேரள அரசு ரூ.18,000 குறைந்தபட்ச ஊதியம் என்பதை சட்டரீதியாக்கியிருக்கிறது. சட்டங்களை மீறும் முதலாளிகளுக்கு அதிகமான அபராதம் விதிக்கப்படுவதற்கான சட்டமும் உள்ளது. ஆனால் அகில இந்திய சட்டம் வரும் போது, மாநில சட்டங்களை அமல்படுத்துவது மிகுந்த சிரமத்துக்குள்ளாகும்.

ஆளுநர்கள் அரசியல் ஆதாய கருவிகளாய்:

மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டத்திலேயே ஆளுநர் நியமனம் குறித்த விமர்சனம் இருக்கிறது. மேலிருந்து தன்னிச்சையாக நியமனம் செய்வது கூட்டாட்சிக்கு முரணானது. ஒரு வேளை அப்படிப்பட்ட பதவி தேவை என்றால், மாநில முதல்வர்கள் பரிந்துரைக்கும் மூவரில் ஒருவரை குடியரசு தலைவர் தேர்வு செய்து ஆளுநராக நியமனம் செய்வது என்ற வழியைப் பின்பற்றலாம். இது சர்க்காரியா கமிஷன் பரிந்துரையிலும் இடம் பெற்றிருக்கிறது. உலக அளவில் கூட்டாட்சி அமைப்பை வைத்திருக்கும் பிரதான நாடுகள் எவற்றிலும் மத்திய அரசு ஆளுநரை நியமனம் செய்யும் முறை இல்லை. அதே போல், மாநில அரசுகள் நிறைவேற்றும் மசோதாக்கள் ஆளுநர்/குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் போது எல்லையற்ற காலம் அதைக் கிடப்பில் போட்டு வைப்பதானது தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் பணிகளை முடக்கும் நடவடிக்கையே. எனவே, மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க கால நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதும் மார்க்சிஸ்ட் கட்சியின் பரிந்துரையாக உள்ளது. மாநிலங்களின் கவுன்சில் இதற்கான அரசியல் சட்டத்திருத்தம் வேண்டும் என்று பலமுறை விவாதித்த பிறகும், அது அமல்படுத்தப்படவில்லை. ஆளுநர்கள் பல்கலைக்கழக வேந்தர்களாக இருப்பது பற்றியும், மாநில அரசை பகிரங்கமாக விமர்சிப்பது, அவர்களின் கருத்துக்களுக்கு முரண்படுவது போன்ற அம்சங்களும் தொடர்ந்து விவாதிக்கப்பட வேண்டியிருக்கிறது. புதுவை, தமிழக ஆளுநர்களின் அணுகுமுறை இதற்கு அண்மைக்கால உதாரணமாகும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளைக் கலைப்பது, கவிழ்ப்பது மற்றும் எந்தக் கட்சியை ஆட்சி அமைக்க அழைப்பது, எப்போது அழைப்பது போன்ற அம்சங்களில் மத்திய அரசின் செயல்கருவியாக ஆளுநர் செயல்பட்டதை அருணாச்சல பிரதேசம், உத்தராகண்ட், தமிழ்நாடு, கோவா, மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களில் பார்த்தோம். இது இன்னும் அதிகரிக்கவே வாய்ப்புகள் உள்ளன.

குதிரை பேரம்:

ஒரு குறிப்பிட்ட கட்சியின் சார்பில் அதன் கொள்கைகளை சொல்லி போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள், இன்னொரு கட்சியால் விலைக்கு வாங்கப்படும் குதிரை பேரமானது ஜனநாயகத்தைக் கேலி கூத்தாக்குவதாகும். மாநில மக்களின் விருப்பத்தை/முடிவை கொல்லைப்புற வழியாக தட்டிப் பறிப்பதாகும். தற்போது பாஜக ஆட்சியில், வாடிக்கையாக, அங்கீகரிக்கப்பட்ட நடவடிக்கையாக இது பெருமளவு மாறிவிட்டது. கர்நாடக மாநிலத்தில் நடந்து முடிந்த குதிரை பேரம், அடுத்து ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தைக் குறி வைத்து செய்யப்படுகிறது.

மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து:

11 மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து இந்திய அரசியல் சட்டத்தில் அளிக்கப்பட்டிருக்கிறது. முதன்முதலில் அரசியல் சாசனத்தின் ஓர் அம்சமாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட்டது. ஆனால் படிப்படியாக அது நீர்த்துக் கொண்டே வந்தது. அண்மை காலத்தில் மாநில அரசு கலைக்கப்பட்டு, குடியரசு தலைவரின் ஆட்சியின் கீழ் இருக்கும் ஜம்மு – காஷ்மீர் மாநிலத்துக்கு நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டமன்ற தேர்தலும் நடத்தப்பட வேண்டும் என்று கிட்டத்தட்ட அனைத்துக் கட்சிகளும் வலியுறுத்திய பிறகும், தேர்தல் ஆணையம் முன்வரவில்லை.

தற்போது, ஒரு சில மணி நேரங்களில் நாடாளுமன்றத்தின் மூலமாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து, அதன் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, குடியரசு தலைவரின் ஒப்புதலையும் பெற்று, பல்லாண்டுகளாக அம்மாநிலம் அனுபவித்து வந்த உரிமைகளைக் குழி தோண்டிப் புதைத்து விட்டது பாஜக அரசு. இனி சிறப்பு அந்தஸ்து பெற்ற மாநிலமாக அது இருக்க முடியாது என்பது மட்டுமல்ல; மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் அது இயங்க வேண்டியிருக்கும். இந்து இந்தியாவில், முஸ்லீம்கள் கணிசமாக இருக்கும் மாநிலம் சிறப்பு அந்தஸ்துடன் இயங்கலாமா என்ற மதவெறி நிகழ்ச்சி நிரலோடு சேர்த்து, இனி கார்ப்பரேட்டுகளுக்கு அதன் இயற்கை வளங்களை அள்ளிக் கொடுக்க முடியும் என்பதும் உள்ளது. நாடாளுமன்றப் பெரும்பான்மையின் கொடுங்கோன்மையைப் பயன்படுத்தி ஒரு மாநிலத்தையே இந்திய வரைபடத்தில் சிதைக்க முடியும் என்றால், இனி எந்த மாநிலத்தையும் எதுவும் செய்யலாம். ஜனநாயக படுகொலை என்பதோடு சேர்த்து, இந்தியாவின் சாரமாக இருக்கும் கூட்டாட்சியை மியூசியத்தில் அடைத்து வைத்து காட்சி பொருளாக்கும் ஏற்பாடே இது.

விடுதலை போராட்டத்தில் பங்களிப்பு செய்யாத ஆர்.எஸ்.எஸ்., காந்தி படுகொலைக்குப் பின் தடை செய்யப்பட்டு, மீண்டு வந்து, அதன் எண்ணற்ற அமைப்புகள் மூலமாக பாசிச உத்திகளைப் பயன்படுத்தி, தற்போது அரசியல் அதிகாரம் பெரும்பான்மை பலத்தோடு கைக்கு வந்த சூழலில், நாட்டின் விடுதலைக்குப் பிறகு மக்களால் தொடர்ந்து நிராகரிக்கப்பட்ட தனது நிகழ்ச்சி நிரலை ஒவ்வொன்றாக அமல்படுத்துகிறது. இதுதான் பாஜக அரசு பயணிக்கும் திசைவழியாக உள்ளது. மக்களின் மனநிலையை ஜனநாயகப்படுத்தி, போராட்ட ஒற்றுமையை ஏற்படுத்தும் பணியில் களத்திலும், கருத்தியல் தளத்திலும் முன்னிலும் வேகமாக இடதுசாரிகள் செயல்பட வேண்டிய நேரம் இது.

பேரிடரான காலகட்டம்

கடந்தகால, பாசிசத்திற்கும்,இன்றைய பாசிசத்திற்கும் என்ன வேறுபாடு? உலகில் பாசிச அச்சுறுத்தலை இன்று எவ்வாறு எதிர்கொள்வது? இதற்கான அழுத்தமான தத்துவ விளக்கங்களுடன் பேராசிரியர் பிரபாத் பட்நாயக் இக்கட்டுரையை வடிவமைத்துள்ளார்.

  • அன்று ஏகாதிபத்தியங்களுக்குள் மூலதனத்தை திரட்டிட போட்டி மூண்டது.உலகை பங்கு போட்டுக் கொள்ளும் உக்கிரம் மேலோங்கியது.
  • மறுபுறம்,உலக மக்களிடையே வறுமை வேலையின்மை தாண்டவமாடியது.
  • இந்த நிலையில் பாசிசம் வேற்று இனத்தவரை எதிரியாக வகைப்படுத்தி கொலை வெறி கொண்டு வேட்டையாடியது.இந்த “வேற்று”இனத்தார் என்ற சித்தாந்தம், பாசிசம் அரசுகளை கைப்பற்றி அதிகாரத்திற்கு வரவும் உதவியது.
  • ஏகாதிபத்தியங்களுக்குள் ஏற்பட்ட முரண்பாடுகள் தீவிரம் பெற்று இரண்டாம் உலகப் போர் எனும் பேரழிவு ஏற்பட்டது.
  • போரின் அழிவையும் கொடூரத்தையும் சந்தித்த மக்கள் இதுகாறும் பாசிசத்தை ஒதுக்கியே வந்தனர்.
  • முதலாளித்துவமும் மக்களின்  ‘நலன் காக்கும்’அரசு என்ற வேடம் பூண்டது.சோவியத் தாக்கத்தினால் சில நன்மைகளையும் செய்தனர். கீன்ஸ் கொள்கை அடிப்படையிலும் இவை தொடர்ந்தன.
  • இதனால் பாசிசம் சிறிது அடங்கி இருந்தது.
  • ஆனால் நவீன தாராளமயம் நிலைமையை மாற்றியது.அரசு மக்கள் நலன் காக்கும் என்ற நிலையிலிருந்து விலகியது; முற்றாக, கார்ப்பரேட் மூலதன நலன் காக்கும் அரசுகளாக  மாறின.
  • முன்பு போன்று ஏகாதிபத்தியங்களுக்குள்  முரண்பாடு என்றில்லாமல்,அவர்கள்  கைகோர்த்து நடைபோடும் புதிய சூழல் உருவானது.நிதி மூலதனம் ஆதிக்கம் பெற்றுள்ளதால்,அது உலகை  கூறு போடாமல் வலுப்பெற்று வருவதால்,அந்த முரண்பாடு மட்டுப்பட்டுள்ளது.
  • நிதி மூலதனத்திற்கு  உலகை பங்கு போட்டுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கம் உதவிடாது.அந்த நோக்கத்தை ஒதுக்கி வைத்துவிட்டு,கூட்டாக சுரண்ட வேண்டும் என்பது மேலோங்கியுள்ளது.
  • அதே போன்று அரசு விலகி தனியார் ஆதிக்கம் செலுத்தும் சூழல்(நவீன தாராளமயம்) அதற்கு ஏற்புடையது.
  • இக்கொள்கைகளால்,பொருளாதார நெருக்கடி தீவிரம் பெற்றது.அதிலிருந்து மீள முடியாமல் முட்டுச்சந்தில் சிக்கி கொண்டு தப்பிச் செல்ல வழியேதும் இல்லாமல் உலக முதலாளித்துவம் உள்ள நிலை.
  • மறுபுறம், மீண்டும் “வேற்று” சித்தாந்தம் விஸ்வரூபமெடுக்கிறது.வேற்று இனத்தினர்; வேற்று மதத்தினர்  என ஏராளமான “வேற்று”க்களுடன் பாசிசம் தலை தூக்கி வருகிறது.
  • முன்பு போன்று ஆட்சிக்கு பாசிசம் வரக் கூடும்;அல்லது ஆட்சிக்கு வராமல் இருக்கலாம்.ஆனால் சமுக தளம், அரசியல் தளத்தை பாசிச சித்தாந்தம் தனது ஆளுகையின் கீழ் கொண்டு வரும்.
  • முந்தைய பாசிசம் உலகப் போரில் முடிந்தது.இன்றைய பாசிசம் மனித இனத்தை அழிப்பதில் முடியும்.

எவ்வாறு பாசத்தை முறியடிப்பது.?

  • முதலில் இந்தியாவிலும் ஐரோப்பாவிலும் பாசிச சக்திகள் வளர்ச்சி பெற்று வருவதற்கு உறுதுணையாக இருப்பது நவீன தாராளமயம் என்பதனை உணர்ந்து கொள்வது அவசியம்.
  • முதலாளித்துவ முறையை குறை காண்பதற்கு பதிலாக “வேற்று” கூட்டத்தினை எதிரிகளாக முன்வைத்து செய்யப்படும் மக்கள் திரட்டலை மக்கள்  அடையாளம் கண்டிட வேண்டும்.
  • இதனை இடதுசாரிகளே செய்திட இயலும்.

இதற்கு

  • பாசிச எதேச்சதிகாரத்தை ஜீரணிக்க முடியாத,
  • தற்போதைய ஜனநாயகம் நீடிக்க வேண்டுமென நினைக்கின்ற,
  • “வேற்றுமை”பாராட்டாமல் ஒற்றுமை நிலைப்பெற விரும்பும் சக்திகள்
  • அதாவது “லிபரல்” சக்திகள்
  • (இந்தியாவில் மதச்சார்பின்மை நெறி விரும்பும்  சக்திகள் உள்ளிட்டோர்)

திரட்ட வேண்டும்.

  • இந்த சக்திகளை இடதுசாரிகள் வென்றடைய வேண்டும்.தனக்கென்று (நவீன தாராளமயக் கொள்கைக்கு  நேர் எதிரான) இடது மாற்று பொருளாதார திட்டத்தை அழுத்தமாகப் பற்றிக் கொண்டு லிபரல் வெகுமக்கள் இடதுசாரியினர் சக்திகளை திரட்ட வேண்டும்.இதற்கு அவர்களோடு நெருக்கம் கொள்ள வேண்டும்.

இந்த முடிவுகள் இன்றைய நிலை பற்றிய ஆழமான ஆய்வு அடிப்படையில், பிரபாத் பட்நாயக் வந்தடையும் முடிவுகள்.

(இந்த முன்னுரையை படித்த பிறகு பொறுமையுடன் அவரது கட்டுரையை வாசிக்க வேண்டுகிறேன்)

– என்.குணசேகரன்


ஆங்கிலத்தில் : >>>>>

இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின் கடந்த அரைநூற்றாண்டாக,  எல்லாவிடத்திலும் ஒரு முனைப்பான அரசியல் சக்தியாக பாசிசம் உருவகாமல் நின்றுவிட்டது. பல எதேச்சதிகார, கொலைபாதகமும் கொண்ட அரசாங்கங்கள், ராணுவ சர்வாதிகாரங்கள் குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் அமைந்திருந்திருக்கின்றன, அவை பெரும்பாலும் சி.ஐ.ஏ உதவியுடன் முற்போக்கு தேசியவாத அரசுகளுக்கு எதிராக வென்று அமையப்பெற்றன என்பதும், அவை அமெரிக்காவின் உத்தி ரீதியிலான ஒத்துழைப்பைப் பெற்றுவந்ததும் சந்தேகத்திற்கிடமில்லாத ஒன்று. ஆனால், பாசிச அரசாட்சியிலிருந்து அவற்றை வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். பாசிச அரசாட்சியென்பது மிகப் பரிதாபகரமான நிலையில் உள்ள சிறுபான்மைக்கு எதிராக வெறுப்பை பரப்புவதன் மூலம் அரசியல் நோக்கம் கொண்ட வெகுமக்கள் திரட்டலைச் சார்ந்தது. சோசலிசத்திற்கும் தாராளவாதத்திற்கும் இடையிலான போட்டிதான் முக்கியமானது என, எனது தலைமுறையினரும், அடுத்தடுத்த பல தலைமுறையினரும் நம்பிவந்தோம்.

அடங்கிப்போயுள்ளதாக பாசிசம் காட்சியளிப்பதற்கு இரண்டு மையமான காரணிகளைக் காண்கிறேன். அதில் முதலாவது, மானுட வரலாற்றில் மனித குலத்தைச் சூறையாடும் வகையில், பாசிசம் திணித்த போர்களின் வழியே கட்டமைத்து எழுப்பிய கடும் வெறுப்பு; பாசிசம் என்ற சொல் பெரும் போர்களை திணிக்கும் உச்சகட்ட பகைமை என்பதற்கு நிகரான சொல்லாக மக்களின் மனங்களில் இடம்பெற்றது. இரண்டாவது உலகப்  போர்களுக்கு இடையிலான காலகட்டத்தில், பாசிச வளர்ச்சிக்கு காரணமாக இருந்த பெரும் எண்ணிக்கையிலான வேலையிழப்பு மற்றும் கொடிய வறுமை ஆகியவை கடந்துபோன வரலாறாகிவிட்டது;  சமூக ஜனநாயகம் என்ற பாதுகாப்புக் கவசத்தின் கீழ் முன்னேறிய நாடுகளில் கினீசின் ‘கிராக்கி மேலாண்மை’ அறிமுகப்படுத்தப்பட்டது: அது ‘முதலாளித்துவத்தின் பொற்காலம்’ என அழைக்கப்பட்டது, காலனியத்திற்கு பிறகான காலத்தில் மூன்றாம் உலக நாடுகளில் கொண்டுவரப்பட்ட சமூக, பொருளாதார துறைகளில் அரசுக்கட்டுப்பாடுக் கொள்கைகள், காலனியச் சுரண்டலின் கொடூரங்களுக்கு ஆளாகியிருந்த பெரும்பகுதி மக்களுக்கு புதிய நம்பிக்கையையும், மேம்பட்ட வாழ்க்கையையும் கொடுத்தன.

கடைசியாகக் குறிப்பிட்ட உண்மையை இப்போது ஏற்றுக்கொள்ள சிரமமாய் இருக்கலாம். ஆனால் இந்தியாவே அந்தக் கருத்தை உணர்த்தும் எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது. பிரிட்டிஷ் இந்தியாவில், 1900 ஆண்டுகளில் குடிமக்களின் ஆண்டு உணவுதானிய உட்கொள்ளல் 200 கிலோ கிராம்களாக இருந்தது, 1945-46 ஆண்டுகளில் 136.8 கிலோ கிராம்களாக குறைந்தது, 1980களின் இறுதியில் அது 180 கிலோ கிராம்களாக உயர்ந்தது. (புதிய தாராளவாத ‘சீர்திருத்தங்களுக்கு’ பின் அது ஏறத்தாழ 165 ஆக குறைந்துவிட்டது). இந்தியாவின் வருமான வரி விபரங்களைக் கொண்டு, பிக்கட்டி மற்றும் சான்செல் ஆகியோர் செய்த கணக்கீட்டில், மக்கள் தொகையின் முதல் 1 விழுக்காடு பேர், 1930களில் வருமானத்தில் 21 விழுக்காட்டை பெற்றுவந்தனர். அது 1980களில் 6 விழுக்காடு என்பதாகக் குறைந்தது (2014 ஆம் ஆண்டுகளில் அது 22 விழுக்காடாக உயர்ந்துள்ளது)

முன்னேறிய மற்றும் வளர்ச்சிக் குறைந்த நாடுகளில் பொருளாதாரம் மற்றும் சமூக அமைப்பின் மீது அரசுக்கட்டுப்பாட்டுக்கு முடிவுகட்டிய நவதாராளமயத்தின் வெற்றிக்குப் பிறகும் கூட, அமெரிக்காவின் நிகழ்ந்த டாட்காம் குமிழி (1997 – 2001 ஆண்டுகளில் இணையப் பயன்பாட்டின் மூலம் ஊகமாக ஏற்பட்ட பொருளாதாரப் பெருக்கம்)  மற்றும் வீட்டு வசதிக் குமிழி (housing bubble ) ஆகியவை உலகப் பொருளாதார நடவடிக்கைகளை சற்று மேல் நிலையிலேயே வைத்திருந்தன. எனினும் வீட்டு வசதிக் குமிழி உடைந்த நிலையில், உலகப் பொருளாதாரம் ஒரு நெடிய நெருக்கடிக் காலத்திற்குள் நுழைந்தது. தற்போதுள்ளதைப் போல இடையிடையே மீட்சி குறித்த பேச்சுகள் எழும்; ஆனால் யாரோ சொன்னதைப் போல, பந்து தரையில் குதித்துக் கொண்டிருப்பதோடு (analogy of a ball bumping along the floor )  ஒப்பிடும் வாதங்கள், பந்து தரையை நோக்கி வீழும்போது அதனோடு சேர்ந்தே நொறுங்கிவிடுகின்றன. இப்போதைய மீட்சியும் கூட தற்போது அமெரிக்க சந்தையின் வாங்கும் தன்மையில், அமெரிக்க மக்களின் செலவுத்திறைக் காட்டிலும் கூடுதலான அளவில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை அடிப்படையாகக் கொண்டது, எனவே அது அதிககாலம் நீடித்திருக்கக் கூடிய ஒன்றல்ல.

போர்களுக்கு இடையிலான காலகட்டத்தைப் போலவே இப்போதும், முதலாளித்துவ உலகத்தின் நெருக்கடி, உலகமெங்கும் பாசிச வளர்ச்சிக்கான புதிய ஊக்கத்தைக் கொடுத்துள்ளது. ஒருவர் இப்பிரச்சனை அத்தனை எளிதாகப் பார்க்கக் கூடாது; எடுத்துக்காடாக, ஜெர்மனியிலேயே ஏற்பட்டுள்ள  நெருக்கடி பல நாடுகளை பல நாடுகளை விடவும் குறைவான தாக்கத்தையே ஏற்படுத்தியுள்ளது, ஜெர்மனியில் வளரும் பாசிசத்தை உலக முதலாளித்துவ நெருக்கடி, அதனால் ஜெர்மனியில் உருவாகும் விளைவுகளோடு சேர்த்து விளக்கிப் புரிந்துகொள்ளவேண்டும். ஒரு அமைப்பு இயங்கும் முறை மீது குற்றம் சாட்டாமல், ”மற்றவர்களை” (சிறுபான்மையினரை) குற்றம்சாட்டுவதன் அடிப்படையில் அரசியல் நோக்கத்துடன் வெகுமக்களைத் திரட்டுதல், இந்தியா உள்ளிட்டு பல நாடுகளில் பரவலாக வளர்ச்சி பெற்றிருப்பது தெளிவானது.

இதன் பொருள் பாசிச அரசு பல இடங்களில் அரசதிகாரத்திற்கு வந்தே தீரும் என்பதோ, அல்லது அவர்கள் அதிகாரத்திற்கு வரும் இடங்களில், பாசிச அரசை ஏற்படுத்தி, அதன் ஆட்சியை நிலைநாட்டுவதில் உறுதியாக வெற்றியடையும் என்பதாகவோ பொருள்கொள்ள வேண்டியதில்லை. ‘பாசிசத்தின் கீழ், அடுத்த அரசாங்கம் ஒன்று இருப்பதில்லை’ என்ற புகழ்பெற்ற மைக்கேல் கலெக்கியின் மேற்கோள், அவர் குறிப்பிட்ட அக்காலகட்டத்தில் இருந்ததைப் போலவே இன்றைய காலங்களிலும் உண்மையல்லாது போகலாம். ஆனால், தற்கால பாசிசம் இன்னும் சில காலத்திற்கு நீடித்திருக்கப் போகிறது என்பது நிச்சயமான உண்மை.

மேற்குறிப்பிட்ட வகையில் உலகப் போருக்கு பிறகான காலகட்டத்தில் பாசிசத்தை ஓரங்கட்டிய இரண்டு நிலைமைகளும் இப்போது இல்லை. தற்கால பாசிசம், போர்களின் மூலம் (மனிதகுலத்திற்கு அளவற்ற அழிவுகளை ஏற்படுத்துகிற அதே நேரத்தில்) தன்னைத்தானே அழித்துக்கொள்வதாக இல்லை. பெரும் முதலாளித்துவ சக்திகளுக்கு இடையிலான போட்டி, அல்லது லெனின் பெயரிட்டு அழைத்த ‘ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான குரூரமான போட்டா போட்டி’ மட்டுப்பட்டிருப்பது வெளிப்படை, மேலும் அது அப்படியேதான் மட்டுப்பட்ட நிலையிலேயே தொடரும் என்றும் தெரிகிறது, இதற்கு முக்கியக் காரணம் நிதிமூலதனம் ஆகும். லெனின் காலத்தைப் போல அல்லாமல் அது இப்போது சர்வதேசம் தழுவியது, தனது எல்லைதாண்டிய கட்டற்ற சுற்றோட்டத்திற்கு முட்டுக்கட்டையாக அமைந்திடும் என்கிற காரணத்தால் உலகை எந்த வகையிலும் தனித்தனி செல்வாக்கு மண்டலங்களாக பிரிப்பதற்கு அது எதிராக நிற்கிறது. டொனால்ட் டிரம்ப், சீனாவுக்கு எதிராக போர்முரசு கொட்டிவரும் போதிலும், உடனடியாக எந்தப் போரும் நிகழப்போவதாக இல்லை; இருப்பினும் சில கட்டுக்குள் உள்ள முரண்பாடுகள் வெடித்தாலும் கூட  இதனால் நேரடியாக பங்குபெறாத  பிற நாடுகளில் உள்ள பாசிச சக்திகள் செல்வாக்கு இழந்துவிடாது.

அதைப் போலவே, முதலாளித்துவத்தின் பொற்காலத்திற்கு திரும்புவது மட்டுமல்ல, நெருக்கடிக்கு முந்தைய காலகட்டத்திற்கு செல்வது சாத்தியமில்லை என்பது கேள்விக்கிடமற்றதாகிவிட்டது; தாராளவாதிகளிடம் தற்போதைய நெருக்கடி நிலைக்கு நம்பத்தகுந்த தீர்வுகள் ஏதும் இல்லை. பெரும்பாலான தாராளவாதிகள், நெருக்கடி உள்ளது என்று அங்கீகரிப்பதில் கூட பாராமுகமாக உள்ளனர். தேர்தல் கால பரப்புரையில் டிரம்ப் நெருக்கடியைக் குறித்து பேசவேனும் செய்தார் என்பதுடன் அதற்கு ‘வெளியாட்களை’ குற்றம் சொல்லியதுடன், பகைமையைத் தூண்டவும் செய்தார், ஹிலாரி கிளிண்டன் அதுகுறித்து பேசவில்லை என்பதுடன், நெருக்கடி இருப்பதையே அவர் அங்கீகரிக்கவில்லை.

அரசு செலவினங்களின் வழியே கிராக்கியை ஊக்கப்படுத்துவது, அது ராணுவத் தேவைக்கான செலவாக இருந்தாலும் கூட, அது நிதிப்பற்றாக்குறையின் வழியாகவோ அல்லது முதலாளிகளின் மீது வரிபோடுவதன் மூலமாகவோ தான் கைகூடும் ( தனது வருமானத்தின் பெரும்பகுதியை ஏதாவதொரு வகையில் நுகர்வுக்காக செலவிடும் தொழிலாளிகள் மீது வரிபோடுவது , கிராக்கியை அதிகரிக்காது) அரசு செலவினங்களை உயர்த்துவதற்கான மேற்சொன்ன இரண்டு நிதி ஏற்பாடுகளும் நவதாரளமயக் கட்டமைப்பில் விலக்கப்பட்டவை, இந்த நடவடிக்கைகள் உலகமய நிதி வெறுப்புக்கு உள்ளான நடவடிக்கைகளாகும். அத்துடன் பாசிஸ்டுகள் மட்டுமல்லாது தாராளவாதிகளுக்கும் உலகமய நிதிமூலதனத்தின் மேலுள்ள அக்கறை எவ்விதத்திலும் குறைவானதல்ல. உண்மையில் அவர்கள் பாசிஸ்டுகளை விடவும், உலகமய நிதி மூலதனத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் நவ தாராளமயத்திற்கு உறுதியாக இருப்பவர்கள். (இருப்பினும், பாசிஸ்டுகளை விட தாராளவாதிகள் நவீன தாராளமயத்தில் உறுதியாக இருப்பார்கள் என்பது இந்தியச் சூழலில் உண்மையானதல்ல, அதிகாரத்திலிருக்கும் வகுப்புவாத பாசிஸ்டுகள், ‘தாராளவாத’ காங்கிரசைப் போலவே நவ தாராளமயத்திற்கு தங்களை ஒப்புக்கொடுத்தவர்களாக உள்ளனர்)

இப்படிப்பட்ட சூழலில் நாம், நவதாராளமயம் நீடித்திருக்கும்வரை பாசிசம் வற்றாது ஜீவித்திருக்கும் நிலையில் சிக்கிக் கொண்டுள்ளோம். இது தற்கால நிலைமையை பேரிடரானதாக ஆக்குகிறது. பாசிசம், பாசிச அரசை நோக்கி நகருமாயின், அபாயம் இன்னும் வெளிப்படையானதாகிறது. அது ‘தேர்தல் விளையாட்டுகளை’ விளையாடும் போதிலும், வாக்குகளைப் பெற முடியாமல் அதிகாரத்திலிருந்து வெளியேற்றப்பட்டாலும், அது ஒரு மாற்றாக தொடர்ந்திருக்கும், காலச் சுற்றோட்டத்தில் அதிகாரத்திற்கு வரும், அரசியல் மற்றும் சமூக ‘பாசிசமயத்தை’ நோக்கி சீராக முன்னேறும்.

நவதாராள முதலாளித்துவத்திற்குள், பாசிசஇருப்புக்கு அணைபோடவோ ஓரங்கட்டவோ முடியாது. உலகப் பொருளாதாரத்தை நெருக்கடியில் மூழ்கடித்து, முட்டுச் சந்தில் தப்பிக்க இயலாமல் மாட்டிக் கொண்டிருக்கும் நவதாராளமயத்தின் தற்போதைய முதிர்ச்சிக் கட்டம் மனித குலத்திற்கு வழங்கியுள்ள ‘பரிசு’ பாசிசமாகும்.

பாசிசத்தின் இருப்பை தாண்டிச் செல்வதற்கான (transcending ) ஒரே வழி, நவதாராள முதலாளித்துவத்தை வீழ்த்தி முன்னேறுவதுதான். இடதுசாரிகளால் இதனை நிறைவேற்றி சோசலிச மாற்றை நோக்கி முன்னேற முடியும், ஆனால் அது தாராளவாதத்திற்கு உள்ள மக்கள் ஆதரவுத்தளத்தை வென்றெடுப்பதன் மூலமே கைகூடும். இதற்கு தாராளவாத அரசியல் சக்திகளை வென்றெடுக்கவேணுமென்ற புரிதல் தேவைப்படுகிறது. அதே நேரத்தில் இடதுசாரிகள் நவீன தாராளமயத்திற்கும் முதலாளித்துவத்திற்கும் மாற்றான, மக்களுக்கு நன்மைகளை ஏற்படுத்துகிற பொருளாதாரத் திட்டத்தை அழுத்தமாக வலியுறுத்த வேண்டும். இந்தப் பொருளாதாரத் திட்டத்தை நடைமுறைப்படுத்த, தற்போதைய உலகமயத்திடமிருந்து துண்டித்துக்கொள்வது மிகத் தேவை. கண்மூடித்தனமான மூலதன ஓட்டத்திற்கு விதிக்கவேண்டிய கட்டுப்பாடுகளைச் எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். இடதுசாரிகள் தங்களது ஆற்றல்மிகு பாத்திரத்தை பொருளாதார மற்றும் அரசியல் தயக்கங்கள் ஏதுமின்றி சாதித்திட வேண்டும்.

தமிழில்: இரா.சிந்தன்

இந்துத்துவாவை எதிர்கொள்வது எப்படி?

(வரலாற்று அறிஞர் கே.என். பணிக்கரின் பார்வையில்)

– என்.குணசேகரன்

இந்துத்துவா இயக்கம், தமிழ்நாட்டின் முற்போக்கு  பாரம்பரியம், கலாச்சாரக் கூறுகளுக்கு  முரணானது. தமிழகத்தில் உழைக்கும் மக்களின் அன்றாட வாழ்வில் பொதுவாக, மனிதநேயமும் மத நல்லிணக்கமும் காலம் காலமாக நிலைத்திருந்தது. இவற்றை அழித்து  வலுவாக இங்கு  காலூன்றிட சங்கப் பரிவார இயக்கங்கள் தீவிரமாக முயற்சிக்கின்றன. இந்த இயக்கங்களும், இவை ஏற்படுத்திடும் வகுப்புவாத உணர்வுகளும் வளர்வது, தமிழகத்தின் தொன்மையான கலாச்சார சிறப்புகளுக்கெல்லாம் விடப்பட்டுள்ள சவால். அது மட்டுமல்ல; நமது பாரம்பரியத்தின் மகத்தான கூறுகள் அனைத்தையும் சுவீகரித்து வளர்ந்து வரும் மதச்சார்பற்ற, இடதுசாரி உணர்வுகளுக்கும் இயக்கங்களுக்கும் இது எதிர்காலத்தில்  பெருந்தடையாக அமைந்திடும்.

சமூகத்தில் மதச்சார்பற்ற உணர்வுகளை மக்கள் நடுவில் வலுவாக வேரூன்றச் செய்திட வேண்டும். இதற்கான கருத்துப் பிரச்சாரம் தீவிரமாக மேற்கொள்ளப்படல் வேண்டும். இது மட்டும் செய்தால் போதாது. மதச்சார்பற்ற நடவடிக்கைகளில் மக்களை ஈடுபடுத்த வேண்டும். தெரு, ஊர், ஊராட்சி, நகர அளவில் உள்ளூர் வடிவிலான நடவடிக்கைகள் அதிகரிக்கப்படல் வேண்டும். இத்தகு நடவடிக்கைகளில் பெருந்திரளான மக்களை ஈடுபடச் செய்திடும் போது, மதச்சார்பற்ற உணர்வுகள் வலுப்பெற்றுவிடும்; வகுப்புவாத விஷக்காற்று பரவிடாமல் மக்களே தடுப்புச் சுவர்களாக மாறிவிடுவார்கள்.

இந்த நிலையை தமிழகத்தில் எவ்வாறு ஏற்படுத்துவது?மதச்சார்பற்ற நடவடிக்கைகள் எப்படிப்பட்டவை? வகுப்புவாதம் குறித்து இப்போதுள்ள புரிதல்கள் யாவை? உண்மையில்,வகுப்புவாதம் எத்தகையது?

இந்த கேள்விகளுக்கு பேராசிரியர் கே.என். பணிக்கரின் எழுத்துகள் வழிகாட்டுகின்றன. வகுப்புவாதம் குறித்த அவரது ஆழமான பார்வையை அடிப்படையாகக் கொண்டு மேற்கண்ட கேள்விகளுக்கான விடைகளை இக்கட்டுரை விளக்க முற்படுகிறது.

வகுப்புவாதம் எவ்வாறு வளர்கிறது?

வகுப்புவாதம் வளர்கிறது என்பதற்கு அடையாளமாக மூன்று வகையான நிகழ்வுகளை மையமாக வைத்துத்தான் பலர் பேசியும், எழுதியும் வருகின்றனர்.

முதலாவதாக ஆர்.எஸ்.எஸ்., மற்றும் சிறுபான்மை வகுப்புவாத அமைப்புகள் தங்களது பகுதியிலோ அல்லது மாநிலத்திலோ பரவலான அளவில் செயல்பட்டு வருகின்றன என்றால் அதனை வகுப்புவாத வளர்ச்சியாக பலர் கருதுகின்றனர்.

இந்தப் பார்வை வகுப்புவாத அமைப்புகள் செயல்படாத இடங்களில் வகுப்புவாதம் வளராது என்றும், செயல்படும் சில பகுதிகளில் தான் அந்த உணர்வு இருப்பதாகவும்  கருதிட  இடமளிக்கிறது. இது தவறானது.

இரண்டாவதாக, இரண்டு மதப்பிரிவினருக்கு இடையில் வகுப்புவாதக் கலவரங்கள் நடைபெற்று உயிரிழப்புகள், பொருட்சேதம் போன்றவையெல்லாம் ஏற்பட்டால், அந்தக் கலவரம் நடந்த இடத்தில் வகுப்புவாதம் வளர்ந்துள்ளது என்று பலர் கருதுகின்றனர். ஆக மதக்கலவரம் நடக்கும்போது தான் வகுப்புவாதம் வளர்கிறது என்ற முடிவுக்கு பலர் வருகின்றனர். இந்தப் பார்வையிலும் குறை உள்ளது. கலவரம் நடக்கும் இடங்களில் மட்டுமே வகுப்புவாதம் இருப்பதாகவும், இதர இடங்களில்  இல்லை; அந்த இடங்களில் வகுப்புவாதம் வளர வாய்ப்பில்லை என்ற முடிவுக்கும் இட்டுச் செல்லுகிற குறைபாடு இதில் உள்ளது.

மூன்றாவதாக பா.ஜ.க போன்ற வகுப்புவாதக் கட்சிகள் தேர்தலில் வெற்றி பெறுவது, ஆட்சி அமைப்பது போன்ற அரசியல் மாற்றங்கள் நடந்தால் வகுப்புவாதம் வளர்ந்துள்ளதாக பலர் கருதுகின்றனர். இது, வகுப்புவாதத்தை வெறும் அரசியல் நிகழ்வாக மட்டும் பார்க்கிற பார்வை. இதுவும் பலரின் அணுகுமுறையாக உள்ளது.

இதில் உள்ள தவறு எது?, வகுப்புவாத அரசியல் கட்சிகளின் செயல்பாட்டை மட்டும் கணக்கிலெடுத்துக் கொண்டு சங்கப்பரிவாரம் மற்றும் இதர வகுப்புவாத அமைப்புகளின் செயல்பாடுகளை இந்தப் பார்வை கவனத்தில் கொள்வதில்லை. எடுத்துக்காட்டாக, அண்மையில் பாஜக தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான யஷ்வந்த் சின்ஹாவிற்கும் தற்போதைய அருண் ஜெட்லிக்கும் பொருளாதாரக் கொள்கை சிக்கல்களில் கடுமையான கருத்துச் சண்டை நடந்தது. நாட்டின் பொருளாதாரத்தை நாசப்படுத்தி விட்டதாக அருண் ஜெட்லியை சின்ஹா குற்றம் சாட்டினார். இந்த கருத்துச் சண்டைகளை விளக்கி பல வார, தினசரி பத்திரிக்கைகள் செய்திகளையும், கட்டுரைகளையும் வெளியிட்டன. இதையொட்டி பலர் இந்த சண்டை பா.ஜக. வளர்ச்சியை பெரிதும் பாதிக்கும் என கருதினர்.

ஆனால் இதுபோன்ற கட்சிக்குள் உள்ள சண்டைகள் என்பன சங்கப்பரிவாரத்தின் ஏராளமான வகுப்புவாத ஸ்தாபனங்களில் ஒன்றான பா.ஜ.க.வில் மட்டும்தான். இதே காலத்தில், பல சங்கப்பரிவாரங்களின் செயல்பாடுகள் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளன. பசுப்பாதுகாப்பு என்ற முறையில் நடைபெறும் வன்முறைகள், பத்மாவதி திரைப்படத்தையொட்டி கிளப்பப்படுகிற இந்து மதவெறி, சிறுபான்மை மக்களுக்கு எதிராக தொடர்ச்சியாக நடந்து வருகிற தாக்குதல்கள், வெறுப்பு பிரச்சாரங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. உள்ளூர் மட்டத்தில்  மதவெறி தூண்டப்படுகிற அவர்களது பிரச்சாரங்கள் பெரிதாக பலரின் கவனத்தை ஈர்ப்பதில்லை.

வகுப்புவாதத்தை அரசியல் நிகழ்வாக மட்டும் பார்ப்பதில் மற்றொரு குறைபாடும் உள்ளது. வகுப்புவாத அரசியல் கட்சிகள் தேர்தலில் தோல்வி அடைந்தால் வகுப்புவாதம்  தடைபட்டு விட்டது என்ற முடிவுக்கு இந்தப்பார்வை இட்டுச் செல்கிறது. 1984ம் ஆண்டு வெறும் இரண்டு பாராளுமன்ற இடங்களை மட்டும் வென்ற பாரதீய ஜனதா ஆட்சிக்கு அந்தத் தேர்தலோடு அதன் வளர்ச்சி தடைபடவில்லை. அதன் பிறகு ஆட்சியைப் பிடிக்கும் அளவிற்கு வளர்ந்தது. எனவே வகுப்புவாத வளர்ச்சி என்பது வெறும் அரசியல் நிகழ்வாக மட்டும் பார்ப்பது சரியல்ல.

தற்போது கூட பிரதமர் மோடி அரசு மக்களிடையே வெறுப்பை வேகமாக ஈட்டி வருகிறது. முந்தைய காங்கிரஸ் அரசின் பொருளாதார கொள்கைகளை மோடி அரசு மேலும் முனைப்புடன் அமலாக்கி வரும் நிலையில் ஏமாற்றம் அதிகரிக்கிறது. அத்துடன் சங்கப் பரிவாரங்கள் வகுப்புவாத தாக்குதல்களை அதிகரித்து வருவதும் வெறுப்புக்குக் காரணமாக அமைந்துள்ளது. இந்நிலைமைகளை கண்டு சிலர் வகுப்புவாத எதிர்ப்பினை மெல்லியதாக,மேலோட்டமாக மேற்கொண்டால் போதும் என கருதுகின்றனர். இது தவறானது.

ஆக, வகுப்புவாதம் குறித்த பார்வைக்கு மூன்று அளவுகோல்களை எடுத்துக்கொள்கின்றனர். 1. வகுப்புவாத சங்பரிவாரங்களின் வளர்ச்சி, 2. மதக்கலவரங்கள் 3. அரசியல் நிகழ்வுகள். இந்த மூன்றுமே வகுப்புவாத வளர்ச்சியின் பல்வேறு வெளிப்பாடுகள்தான். ஆனால் இவை மட்டுமே வகுப்புவாதம் என்று கருதுவது தவறு. இவை வகுப்புவாதத்தின் முழுமையான உண்மைத் தன்மையை வெளிப்படுத்தவில்லை.

வகுப்புவாதம் என்பது இதைவிட ஆழமானது; மிக நுண்ணிய அளவில், உடனடி பார்வைக்கு தென்படாதவாறு, அடிமட்டத்தில் மக்களின் உணர்வில் சிறிது சிறிதாக வளர்ந்து வரும் தன்மை கொண்டது.

இதன் வளர்ச்சி இரண்டு கட்டங்களில் நிகழ்கிறது.

வகுப்புவாதத்தின் முதற்கட்டம்

சமூகத்தில் ஒவ்வொரு மனிதருக்கும் பல அடையாளங்கள் உண்டு. தந்தை, தாய், சகோதரி, சகோதரன் என உறவு ரீதியிலும், தொழிலாளி, விவசாயி என தொழில் ரீதியிலும் பல அடையாளங்கள் உண்டு. இந்த பல வகையான அடையாளங்களில் ஒன்றுதான், இந்து, முஸ்லீம், கிறித்துவர் என்ற மத அடிப்படையிலான  அடையாளம். இது ஒவ்வொரு மனிதனின் வழிபாட்டுமுறை, சடங்குகள் போன்ற செயல்பாடுகள்  வழியாக வெளிப்படுகிறது. தொன்றுதொட்டு, இந்த வழிபாட்டு முறைகள், சடங்குகள் அனைத்தும் பெரும்பாலும் குடும்பம் அல்லது கோயிலை மையமாகக் கொண்டு கடைபிடிக்கப்படுகின்றன.

ஆனால் இதில் பெரும் மாற்றம் கடந்த 25 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ளது. ஊர்வலம், கூட்டங்கள் போன்ற வடிவங்களில் மதச்சடங்குகள், நடத்தப்படுகின்றன. அவை பொது இடங்களில் மக்களை பங்கேற்கச் செய்து நடத்தப்படுகின்றன. எடுத்துக்காட்டாக விநாயகர் வழிபாடு என்பது குடும்ப வழிபாடாக இருந்த நிலை மாறி விநாயகர் ஊர்வலம் என்று பிரம்மாண்டமாக மக்களைக் கூட்டி, நடத்திடும் நிகழ்ச்சிகளாக நடத்தப்படுகின்றன.இது போன்று எல்லா மாநிலங்களிலும் பொதுத்தளத்தில் வழிபாட்டு முறைகள் நடத்துகிற வழக்கம் அதிகரித்து வருகிறது.

இவ்வாறு பொது நிகழ்ச்சியாக இந்த வழிபாட்டு முறைகள் மாறுகிறபோது மத நம்பிக்கை அல்லது வெறும் மத அடையாளம் மட்டும் உள்ள ஒருவருக்கு ஒரு கேள்வி எழுகிறது. இந்துவாக இருக்கும் நான் இந்துக்கள் நடத்தும் விநாயகர் ஊர்வலத்தில் கலந்து கொள்வது கட்டாயம் அல்லவா? ராமருக்கு கோயில் கட்ட வேண்டுமென்று ஊர்வலம் நடக்கிறபோது, அதை ஆதரிப்பது இந்துவாகிய எனது கடமை அல்லவா? என்கிற கேள்விகள் இந்துவாகிய  ஒருவரின் மனத்தை நெருக்குகின்றன. அவர் இதையெல்லாம் ஆதரிக்க வேண்டிய மனரீதியான அடக்குமுறைக்கு (Coercion) ஆளாகிறார்.

இதுபோன்ற தருணங்கள் அதிகரிக்கிற போது, ஒவ்வொருமுறையும் அவருக்கு தான் இந்து என்ற உணர்வு வலுப்பெறுகிறது. சிறிது சிறிதாக இந்து என்ற மத அடையாளத்தோடு மட்டும் வாழ்ந்து வந்த ஒருவர், சடங்குகளும்,வழிபாடுகளும், பொது நிகழ்ச்சிகளாக மாறுகிற போது, மிகுந்த மதப்பிடிமானம் (Religiousity) கொண்டவராக மாறுகிறார். இவ்வாறு மத அடையாளம் என்ற நிலை முற்றி, மதப்பிடிமானமாக மாறுவது வகுப்புவாத உணர்வின் முதற்கட்டம்.

வகுப்புவாதமும் சமூகப் பிளவும்

இந்து என்ற மத அடையாள உணர்வு சிறிது சிறிதாக கெட்டிப்படுத்தப்பட்டு மதப்பிடிமானம் என்ற உணர்வு நிலைக்கு ஒருவர் வருகிறபோது அவரிடம் பல்வேறு கருத்துகள் கொண்டு செல்லப்படுகின்றன. அதில் முக்கியமானது ‘இந்து மதத்திற்கு முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் எதிரிகள்’ என்கிற பிரச்சாரம். இந்த ‘எதிரி’ எனும் பிரச்சாரம் மிக வலுவான அளவில் ஒருவரை வகுப்புவாதியாக மாற்றுகிறது.

ஒவ்வொரு சிக்கலிலும் இந்து என்கிற கோணத்திலேயே அணுகும் நிலை ஏற்படுகிறது.கிரிக்கெட் விளையாட்டு கூட மத அடிப்படையில் சங்கப் பரிவாரத்தினர் பாகிஸ்தானுக்கு எதிராக வெறி ஏற்படுத்துவதற்கு பயன்படுத்துவது அனைவரும் அறிந்ததே. மோடியும் பல தேர்தல் பிரச்சாரங்களின் போது எதிர்க்கட்சிகள் பாகிஸ்தான் ஆதரவாளர்கள்,இந்து எதிரிகள் என பிரச்சாரம் செய்வதுண்டு.

வகுப்புவாத ஸ்தாபனங்கள் எடுக்கும் ஒவ்வொரு சிக்கலும், ஒவ்வொரு நடவடிக்கையும் இந்த சமூகப் பிளவை வேகமாக்குகிறது. இரு மதப்பிரிவினருக்கும் இடையே இதர அடையாளங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு மத அடையாளமே மேலோங்கி நிற்கும் நிலை வலுப்பெறுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு ஆர்.எஸ்.எஸ். ஒரு விழா எடுத்தது பலருக்கு நினைவிருக்கும். இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின் போது முஸ்லீம் மதவெறியர்களிடமிருந்து இந்துக்களை காப்பாற்றியவர்கள் என்று ஏறத்தாழ எழுபதுபேரை தேர்ந்தெடுத்து அவர்களை கௌரவிக்கும் விழாவை நடத்தினர்.அதனை முஸ்லீம்களைத் தூற்றிடவும், அன்றைய பிரிவினையின் போது அனைத்துத் தரப்பிலும் மதவெறியர்கள் இருந்தார்கள் என்ற உண்மையை மறைத்து, வெறுப்பு உணர்வுகளை மீண்டும் பெரிதுபடுத்தவும் அப்பிரச்சனையை பயன்படுத்தினர். இவ்வாறு அவர்கள் ஏறத்தாழ 80 ஆண்டுகளுக்கும் மேலாக இதே போன்ற பல பிரச்சினைகளை எடுத்து சமூகத்தை பிளவுபடுத்தும் வேலையை இடைவிடாது செய்து வருகின்றனர்.

வேறு எங்கோ நடந்திடும் மதக் கலவரங்கள், பற்றிய செய்திகள் தொலைக்காட்சி,செய்தித்தாள்களில் வரும் போது,இந்துவாக இருப்பவர் மதக் கண்ணோட்டத்தில் இந்துக்களுக்கு ஆதரவாக நிலை எடுக்கவும், இஸ்லாமியராக இருப்பவர் இஸ்லாமியர்களுக்கு  ஆதரவாக நிலை எடுப்பதும் வழக்கமாக மாறிவிடுகிறது. சட்ட ரீதியாக அல்லது  ஜனநாயகக் கோட்பாடுகள் அடிப்படையில் அணுகிடும் பார்வை கைவிடப்படுகிறது. அயோத்தியில் கோயில் கட்டுவது குறித்து சட்டப்பூர்வமான தீர்ப்பினை மதிக்க வேண்டியதில்லை என்ற கருத்து பலருக்கு ஏற்படுவதற்கு இந்த வகுப்புவாத உணர்வே காரணம்.

கல்வி, வரலாறு, ஆன்மீகம், கோயில், உடற்பயிற்சிக்கூடங்கள், ஷாகாக்கள் என பல வகைகளில் செயல்பட்டு வரும் ஏராளமான இந்துத்துவா ஸ்தாபனங்கள் சமூகப் பிளவை ஏற்படுத்தி வகுப்புவாத உணர்வை நீண்டகாலமாக மக்கள் நடுவில் வேகமாக பரப்பி வருகின்றனர். பொதுவாக ஏற்படும் மதப்பிடிமானம் வகுப்புவாத ஸ்தாபனங்களால் வகுப்புவாதம் என்ற நிலைக்கு உயர்ந்து, சமூகம் பிளவுபடும் நிலைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இவ்வாறு பிளவுபட்ட சமூகத்தில் இந்து உணர்வு மேலோங்கி நிற்பதுதான் இந்தியாவை மத அடிப்படையிலான இந்து ராஷ்டிரம் என்ற பாசிச அரசை உருவாக்கிட வழிவகுக்கும்.இதுவே அவர்களது தொலைநோக்கு.

1990ம் ஆண்டுகளில் உலகமயம், தாராளமயம் தீவிரமாக பின்பற்றப்பட்ட போது, வகுப்புவாத உணர்வுகளும் வேகமாக வளர்ந்தன. உலகமயம் நுகர்வுக் கலாச்சார உணர்வுகளை வலுப்படுத்தியது.

வாழ்க்கை வசதிக்கான பொருட்களை அடைய வேண்டுமென்ற மோகம், வெறி, குறிப்பாக, நடுத்தர வர்க்கத்தினரிடம் அதிகரித்தது. விரும்பிய பொருட்களை அடைய இயலாதபோது. தனது வரலாற்று வேர்களை மகத்தானதாக கருதிடும் உணர்வு உருவாக்கப்பட்டது. ‘ இந்துக்களின் வரலாற்றுப் பாரம்பரியம், வேத காலத்தில் இந்து ராஷ்டிரம் கோலோச்சி ஆண்ட பொற்காலம்’ போன்ற கருத்துகளுக்கு நுகர்வு கலாச்சாரத்தால் ஆட்டுவிக்கப்பட்டவர்கள் இயல்பாகவே ஈர்க்கப்பட்டனர். தங்களுக்கு நுகர்ப் பொருட்கள் கிடைக்க இயலாமைக்கு வேற்று மதத்தினர்தான் காரணம் என்று சிந்திக்கின்றனர். பெரும்பான்மை வகுப்புவாதம் மட்டுமல்ல, சிறுபான்மை வகுப்புவாதமும் இதே காலகட்டத்தில் விரிவாகவும் வேகமாகவும் வளர்ந்தது. எனவே உலகமயமும், வகுப்புவாதமும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்களாக விளங்குகின்றன.

தமிழ்நாட்டில் வகுப்புவாதம்

தமிழ்நாட்டில் நீண்டகாலமாக இந்து முஸ்லீம் வகுப்புவாத ஸ்தாபனங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் மதச் சார்பற்ற பாரம்பரியம் வலுவாக இருந்த வந்த போதிலும், 1990ம் ஆண்டுகளில் உலகமயச் சூழலில் சமூகப் பிளவு ஏற்படுத்தும் முயற்சிகள் தமிழ்ச் சமூகத்திலும் நிகழ்ந்து வந்துள்ளது.1980ம் ஆண்டுகளில் மண்டைக்காடு கலவரம் மற்றும் பல இடங்களில் நடைபெற்ற வகுப்பு மோதல்கள்,கோவையில் நடைபெற்ற நிகழ்வுகள் போன்றவற்றைப் பயன்படுத்தி ஆர்எஸ்எஸ் இந்து முன்னணி போன்ற அமைப்புகள் வேகமாக வளரத் துவங்கின. பிறகு, தேர்தல்களில் தங்களது திராவிட கருத்தோட்டங்களுக்கு துரோகம் இழைக்கும் வகையில் அதிமுக, திமுக இரண்டும் மாறி மாறி பா.ஜ.க.விற்கு அளித்து வந்துள்ள ஆதரவு, போன்ற பல காரணங்களால் தமிழக அரசியல், சமூக தளத்தில் முக்கிய இடத்தை சங்கப்பரிவாரம் பிடித்துள்ளது.

எனினும், திராவிட கட்சிகளின் வெகுமக்கள் செல்வாக்கு நீடித்து வருவது அவர்களுக்கு முக்கிய தடையாக இருந்து வருகின்றது. இதற்காக அவர்கள் பல கபடத்தனங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றைய தமிழக அரசியலில் குழம்பிய குட்டையில் மீன்பிடிப்பது போன்று அஇஅதிமுக பிளவுபட்டிருக்கிற நிலையில் எடப்பாடி – பன்னீர்செல்வம் குழுக்களை பயன்படுத்தி தமிழகத்தில் வகுப்புவாதக் கலாச்சாரத்தை வளர்ப்பதற்கு முயற்சி செய்து வருகின்றனர். இதனை உணர்ந்து எதிர்கொள்ள  வேண்டியது கட்டாயமானது.

திராவிட இயக்கத்தை கடத்திட சூழ்ச்சி

பாஜகவின் தமிழகத் தலைவர் அண்மையில் “இந்துத்துவா, திராவிட கலாச்சாரத்திற்கு எதிரானது அல்ல” என்று கூறினார். இதற்கு ஒரு பின்னணி உண்டு. பத்தாண்டுகளுக்கு முன்பு பாரதீய ஜனதா கட்சியின் ஊழியர் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. டெல்லியிலிருந்து வந்த ஒரு தலைவர் கீழ்க்கண்டவாறு ஊழியர்களுக்கு அறிவுரை கூறினார்.

“தமிழக அரசியல் மாறிக் கொண்டு வருகிறது. இந்த மாற்றத்தை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நாம் திராவிட இயக்க பாரம்பரியத்தை கிண்டல் செய்திடக் கூடாது. நாத்திகம் தான் திராவிட இயக்க பாரம்பரியம் என்று கருதுவது தவறு”.

“ஆழ்வார்கள், நாயன்மார்கள் மற்றும் பரவலாக மக்கள் வழிபடும் தெய்வங்களான அய்யனார், மாரியம்மா – போன்ற அனைத்தையும் திராவிட இயக்க பாரம்பரியம் இல்லையென்று நாம் புறக்கணிக்கலாமா? தெய்வ பக்தியையும், தெய்வத்தின் முன் அனைவரும் சமம் என்ற வலியுறுத்தும் திராவிட பாரம்பரியத்தின் அந்தப் பகுதி உண்மையில் இந்துத்துவாவை சேர்ந்ததாகும்.”

இதுவே தமிழகத்தில் அவர்களது உத்தியாக இருந்து வருகின்றது. திராவிட இயக்கப் பாரம்பரியத்தை தனதாக்கிக் கொண்டு இந்துத்துவாவை பரப்பிடும் சூழ்ச்சி இதன் அடிப்படையில் தான் நடைபெற்று வருகின்றது.

திராவிட பாரம்பரியத்தையும், ஆழ்வார்கள், நாயன்மார்களின் பாரம்பரியத்தையும் ஒருங்கே சேர்த்து இந்துத்துவாவை நோக்கி மக்களை கொண்டு செல்லும் கபடத்தனம் இங்கே வெளிப்படுகிறது. திராவிட இயக்கம் சமுதாயத்தின் அடித்தட்டில் இருந்த பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களை விழிப்புணர்வு கொள்ளச் செய்து பிராமணியத்திற்கு எதிராக அவர்களைத் திரட்டியது. அவ்வாறு திரட்டிடும் போது, பிராமணியம், மதப்போர்வையில் பாதிக்கப்பட்ட மக்களை மயக்கத்தில் ஆழ்த்தி, அறியாமைக் கடலிலிருந்து அவர்கள் வெளியே வாராமல் தடுத்திருந்தது. எனவே திராவிட இயக்கம் மதத்திற்கு எதிராகவும், மதச்சாயம் பூண்டு கடைபிடிக்கப்பட்டு வந்த மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டது. எனவே, மத எதிர்ப்பும் நாத்திகமும், மக்களை விழிப்புணர்வு கொள்ளச் செய்து பிராமணியத்திற்கு எதிராக அவர்களைத் திரட்டிட பயன்பட்ட கருவிகள். இத்தோடு ஆழ்வார்களையும் நாயன்மார்களையும் இணைப்பது திருகல் வேலை அல்லவா?

தமிழக ஆன்மீக பாரம்பரியத்திற்கும் விரோதமானது இந்துத்துவா

ஆழ்வார்கள், நாயன்மார்களின் பாடல்களில் உள்ள  சொற்செறிவும்,ஆன்மீகக் கருத்துச் செறிவும் பல பகுதி தமிழ் மக்களை ஈர்த்தவை. அவர்களது பாடல்களின் அடிநாதமாக விளங்கும் ஒரு கருத்தை தமிழறிஞர் டாக்டர் தெபொ.மீனாட்சி சுந்தரனார் கீழ்க்கண்டவாறு விளக்குகிறார்.

“அன்பேசிவம் என்பது திருமூலர் துணிபு. இந்தத் துணிபுடன் அகப்பாட்டு என்ற பெயர்ப் பொருத்தத்தை நாம் அணுக வேண்டும். அதனை ஆராய்ந்த நாயன்மார்களும், ஆழ்வார்களும் தாம் அனுபவித்த கடவுள் இன்பத்தை நமக்கு விளக்க வரும்போது. இத்தகைய அகப்பாடல்களாகவே பாடிக் காட்டுகிறார்கள்.

“ஆண்டவனே காதலனாக, தொண்டர்கள் காதலியாக பாடுகின்ற பாட்டையெல்லாம் வெறும் காதல் கதைகள் என்று கொள்வதற்கில்லை.காதற் கதையையும், தாண்டி விளங்கும் கடவுள் இன்ப அன்பின் காட்சியே அங்கெல்லாம் காண்கிறோம்”

நமது கேள்வியெல்லாம் ஆழ்வார்களும், நாயன்மார்களும் விளக்குகிற, தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் போன்ற தமிழறிஞர்களுக்கெல்லாம் உயரியதாக விளங்கிய ‘அன்பின் காட்சிக்கும்’ இந்துத்துவாவிற்கும் என்ன தொடர்பு? அன்பு என்கிற மனித நேய குணத்திற்கு எவ்விதத்திலும் தொடர்பில்லாத – மனிதர்களை, அவர்கள் சிறுபான்மையினர் என்பதற்காகவே கண்ட துண்டமாக வெட்டிப் படுகொலை செய்திடும் இந்த மதவெறிக் கூட்டத்திற்கும் ஆழ்வார்கள் நாயன்மார் பாரம்பரியத்திற்கும் என்ன உறவு? ஆக, திராவிட இயக்க பாரம்பரியத்திற்கும் முரணானது இந்துத்துவா. அதே நேரத்தில் அன்பு, மனிதநேயம் ஆகியவற்றை உள்ளடக்கிய தமிழகத்தின் ஆன்மீக பாரம்பரியத்திற்கும் முரணானது இந்துத்துவா. இரண்டையும் ஒன்று சேர்த்து இரண்டு தரப்பினரையும் வென்றெடுக்க முனைகிறது. இந்துத்துவா கூட்டம் இந்த இரண்டு தரப்பாரும் சேர்ந்து தமிழகத்தை இந்தத் தீமையிலிருந்து பாதுகாக்க வேண்டியது முக்கிய கடமையாக தற்போது முன்நிற்கிறது.

அன்றாட வாழ்க்கையில் தலையிடும் சங்கப்பரிவாரம்

மாநில ரீதியாக, திராவிட இயக்க சித்தாந்தத்தை கடத்திட இந்துத்துவா கூட்டம் முயல்கிறது. அதே நேரத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அங்குள்ள மக்களின் சாதி, மத, கலாச்சார நடவடிக்கைகளை அறிந்து அதற்கேற்ற உத்திகளை அவர்கள் கடைபிடிக்கின்றனர்.

ராமர் கோயில் கட்டும் இயக்கத்தை பிரச்சாரம் செய்யும் போதே ஸ்தல அளவில் இருக்கும் மாரியம்மன், காளியம்மன் தெய்வங்களுக்கும் விழா எடுக்கும் பணியை அவர்கள் மேற்கொள்கின்றனர் ஒரே கடவுள் ஒரே கலாச்சாரம், ஒரே நாடு என்ற பாசிச கொள்கையை அடைய, தனி தனி கலாச்சாரங்களை அழித்தொழிக்கும் பணியை அவர்கள் மேற்கொள்கின்றனர். இது மிகவும் தந்திரமாக மேற்கொள்ளப்படுகிற கலாச்சார ஒடுக்குமுறை. இந்த ஒடுக்குமுறைக்கெதிராக பாதிக்கப்பட்ட மக்களைத் திரட்டுவது கட்டாயம்.

இத்துடன், சமூகத்தில் உள்ள பல பிரிவினர்களிடம் செயல்பட்டு இந்துத்துவாவிற்கு ஆதரவு திரட்டி வருகின்றனர். குடும்பம் மற்றும் உள்ளூர் பகுதி மட்டங்களில் மக்களோடு பிணைப்புகளை ஏற்படுத்தி, தங்களது அமைப்புகளின் நடவடிக்கைகளில் மக்களை பங்கேற்கச் செய்து வருகின்றனர். கோயிலை மையமாக வைத்து மக்களைத் திரட்டும் பணி நடைபெற்று வருகின்றது. பெண்கள், மாணவர்கள் இளைஞர்கள் போன்றோரை ஆன்மீகம், கல்வி சேவைப்பணிகள், ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் என பல்வேறு செயல்பாடுகள் மூலமாக திரட்டுகின்றனர். குழந்தைகள், சிறுவர்கள் ஆகியோரையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை. சாதியரீதியில் மக்கள் திரண்டுள்ள பகுதிகளில் அதற்கேற்ற முறையில் சாதியத் தலைவர்களை அரவணைப்பது, உள்ளிட்ட பல உத்திகளைக் கையாண்டு மக்களைத் திரட்டுகின்றனர். தலித் மக்களைத் திரட்ட விசேட கவனம் செலுத்துகிறார்கள். ஏனெனில் அவர்கள் ஆதரவு இல்லாமல் ஓட்டுகளைப் பெற இயலாது. சங்கப்பரிவாரம் தீண்டாமைக்கெதிரானது என்ற தோற்றம் வரும் வகையில் பல நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

கலாச்சாரத்தில் தலையீடு

அன்றாட வாழ்க்கையின் அத்தனைச் செயல்பாடுகளும் கலாச்சாரத்தில் அடங்கும். தமிழக மக்களின் வாழ்வில் மாறுபட்ட பல வாழ்க்கை நடைமுறைகள் உள்ளன. எனினும் சில பாரம்பரிய நடவடிக்கைகள், மதச் சடங்குகள் போன்றவற்றில் பொதுவான தன்மைகள் அதிகமாக உள்ளன. சங்கப்பரிவாரம் கலாச்சாரம் என்பது மனித வாழ்க்கையின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கியது என்ற பார்ப்பதில்லை. கலாச்சாரம் என்பது முழுக்க முழுக்க மதம் சார்ந்ததாகவே அவர்கள் அணுகுகின்றனர். மதம் சார்ந்த சடங்குகள், பாரம்பரிய நடவடிக்கைகளில் மக்களைத் திரட்டி மக்களது உணர்வில் மதப்பிடிமானத்தை ஏற்படுத்துகின்றனர். விளக்குப் பூஜை, விநாயகர் ஊர்வலம், கோயில் திருவிழா போன்ற அவர்களது பல நடவடிக்கைகள் இந்த நோக்கில்தான் நடத்தப்படுகின்றன. இதற்காகவே ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை அவர்கள் கலாச்சார ஸ்தாபனம் தான் என்று சொல்லிக் கொள்கின்றனர். உண்மையில் மனித வாழ்க்கையின் பல்வேறு வகையான இசை, நாடகம், இலக்கியம் உள்ளிட்ட பல துறைகளில் மக்களின் ஆர்வங்களையெல்லாம் அடக்கி ஒடுக்கிவிட்டு மதக் கலாச்சார நடவடிக்கைகளில் மனிதர்கள் அதிக கவனம் செலுத்திட வற்புறுத்தப்படுகின்றனர்.

மதம் தவிர்த்த இதர துறைகளில் ஈடுபாடு இருந்தால் அதையும் பயன்படுத்த சங்கப்பரிவாரத்தினர் தயங்குவதில்லை. உடற்பயிற்சி, விளையாட்டு போன்ற துறைகளில் ஆர்வம் உள்ளோரை ஈர்க்கவும் அவர்கள் வாய்ப்பு ஏற்படுத்துகின்றனர். உடற்பயிற்சிக்கான இளைஞர், மாணவர்களின் ஆர்வத்திற்கு தீனிபோடவும், அதே நேரத்தில் அவர்களுக்கு மூளைச் சலவை செய்து இந்துத்துவா கருத்துகளை புகுத்தவும் ஷாகாக்களை அவர்கள் பயன்படுத்துகின்றனர்.

மதம் போன்றே, சாதியும் மக்களின் வாழ்க்கையில் முக்கிய பங்கினை ஆற்றுகிறது. இன்றைய தேர்தல் ஜனநாயக அமைப்பில் சாதிய ரீதியாக மக்கள் தங்களுக்குள் ஒருங்கிணைப்பை உருவாக்கிக் கொள்வது தங்களது நலன்களை பாதுகாத்துக் கொள்ளவும், பதவி, அந்தஸ்து உள்ளிட்ட பல நன்மைகள் பெற்றிடவும் உதவிகரமாக இருக்கிறது. இது ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்குகிறது. சாதிய நடைமுறைகள், ஒவ்வொரு சாதியையும் அடையாளப்படுத்துகிற பாரம்பரிய நடவடிக்கைகள் அனைத்தும் மக்களின் கலாச்சாரத்தில் முக்கிய அங்கமாக இருப்பதால்,அதனையும் சங்கப்பரிவாரத்தினர் பயன்படுத்த முனைகின்றனர். சாதிய நடைமுறைகளோடு இணைந்து தங்கள் பக்கம் இழுத்திட அவர்கள் முயற்சிகள் செய்து வருகின்றனர்.

ஆக, சாதி, மதம், பாரம்பரியம் உள்ளிட்ட கலாச்சாரத்தின் அத்துணை அம்சங்களிலும் தலையிட்டு வகுப்புவாத உணர்வை உறுதியாக நிலைபெறச் செய்திட சங்பரிவாரத்தினர் முயற்சிக்கின்றனர். இந்த உண்மைகளை உணர்ந்து மதச்சார்பற்ற சக்திகள் தங்களது அணுகுமுறையை அமைத்துக் கொள்ள வேண்டும்.

மதம்: மார்க்சிஸ்ட்களின் அணுகுமுறை

மதம் ஒரு சித்தாந்தம்; அது சுரண்டுகிற வர்க்கங்களின் கருவியாக செயல்படுகிறது என்பதே மார்க்சியத்தின் மையமான கருத்து. அதே நேரத்தில் மதம் இரண்டுவித, செயல்பாடுகளைக் கொண்டுள்ளது. ஒரு புறம், மக்களுக்கு தங்களது துன்ப துயரங்களுக்குக் காரணமாக இருக்கின்ற எதார்த்த நிலையை மறைக்கிறது. உண்மை நிலைமைகளை மக்களிடமிருந்து மறைக்கச் செய்து அவர்களை மயக்கத்தில் ஆழ்த்துகிறது. இதையொட்டியே மார்க்சின் வாசகங்கள் – ‘மதம் ஒரு அபின்’ ‘அடக்கப்பட்டவர்களின் பெருமூச்சு’ – பரவலாகப் பேசப்படுகிறது. ஆனால்,இது, மதத்தின் இரண்டு வித செயல்பாடுகளில் ஒன்று.

மற்றொரு வகை செயல்பாடும் மிக முக்கியமானது. சமூகத்தில் உள்ள நிலைமைகளை எதிர்க்கவும், எதிர்த்துப் போராடவும் மக்களுக்கு தேவையான துணிவையும் மதமே வழங்குகிறது. இது பல தருணங்களில் நிகழ்கின்றது. மக்களின் மத நம்பிக்கையே சமூக நிலைமைகளை மாற்றவும், தங்களது துன்ப துயரங்களுக்கு மாற்றினை நாடவும் மக்களுக்கு உறுதியையும், நம்பிக்கையும் வழங்குகிறது.

இதற்கு ‘’ஏராளமான எடுத்துக்காட்டுகள் உள்ளன. இந்திய நாட்டில் வேளாண்மை அமைப்புகள் உருவாவதற்கு முன்பே விவசாயிகளின் எழுச்சிகள், குறிப்பாக ஆதிவாசி மக்களின் போராட்டங்கள் நடந்துள்ளன. இதற்கெல்லாம் அவர்களது மத நம்பிக்கை உத்வேகம் அளித்துள்ளது. அதே போன்ற கிறித்துவ மத போதனைகள் இலத்தீன் அமெரிக்கா மற்றும் பல நாடுகளில் மக்கள் எழுச்சிக்கு தூண்டுகோலாக அமைந்திருக்கின்றன.

இந்தியாவில் மத்திய காலத் துவக்கத்தில் நடைபெற்ற பல விவசாயிகளின் புரட்சிகளைப் பற்றி ஆய்வு செய்துள்ள வரலாற்றுப் பேராசிரியர் ஆர்எஸ் சர்மா, “… இந்தப் புரட்சிகளின் தன்மையை ஒருவர் ஆராயும் போது, அடக்குமுறையாளர்களுக்கு எதிராக விவசாயிகள் திரண்டதற்கு மதம் ஆற்றிய பங்கினையும் சரியாக உணர வேண்டும்.” என்று வலியுறுத்துகிறார். மதம் முக்கிய பங்காற்றுவது என்பது விவசாய வர்க்க எழுச்சியின் தனி சிறப்பியல்பாகத் திகழ்கிறது. இது பல நாடுகளில் நிகழ்ந்துள்ளதை வரலாற்றில் காண முடியும்.

இந்த வகையான மதத்தின் செயல்பாட்டில் மார்க்சிஸ்ட்கள் தலையீட்டிற்கு பெரும் வாய்ப்புகள் உள்ளன. மத நம்பிக்கை உள்ளவர்களோடு தொடர்பு வைத்து, அவர்களது உள்ளத்தில் இதர மதத்தினர் மீதான வெறுப்பை வகுப்புவாதிகள் ஏற்படுத்துகின்றனர். வகுப்புவாதிகளின் இந்தக் கருத்துகள் எல்லாம் உண்மையில் குறிப்பிட்ட மதத்தின் கருத்துகளாக இருக்காது. மக்களை திரித்துக் கூறும் வழக்கம் எல்லா மத வகுப்புவாதிகளிடமும் உண்டு. எடுத்துக்காட்டிற்கு இந்து முன்னணி சார்பில் இராம கோபாலன் பிரச்சாரம் செய்திடும் கருத்துகள் பெரும்பாலும் உண்மையான மதக் கருத்துகள் இல்லை. அதைப்போல முஸ்லீம் தீவிரவாதிகள் பலர் அவ்வப்போது பரப்பிடும் வன்முறை கருத்துகள் குரானில் இருப்பதில்லை. மத நல்லிணக்கத்தையும், மனித நேயத்தையும் விரும்புகிற சாதாரண மத நம்பிக்கை கொண்ட மக்களை மதத்தின் பெயரால் வகுப்புவாதிகள் திசை திருப்புகிறபோது, ஏன் இவற்றை மார்க்சிஸ்ட்கள் அம்பலப்படுத்தக் கூடாது? உண்மையான மதக் கருத்துகளுக்கு பகைமையானது என்பதை ஏன் நிறுவிடக் கூடாது? இதன் மூலம் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களை வகுப்புவாத எதிர்ப்புப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகிப்பவர்களாக மாற்றிட முடியும்.

இதைச் செய்திட வேண்டுமென்றால் மார்க்சிஸ்ட்களுக்கு கடவுள் நம்பிக்கை கொண்ட பெருந்திரள் மக்களோடு தொடர்பும் பிணைப்பும் கட்டாயம் என்பது, மட்டுமல்ல; அவை வலுப்பெற வேண்டும். மத நம்பிக்கை கொண்டோருடன் தொடர்ந்து கருத்துப் பரிமாற்றம் (Dialogue) தேவை. இதைச் செய்வதற்கு மார்க்சிஸ்ட்கள் தங்களது மதம் பற்றிய பார்வையை கைவிட வேண்டும் என்பதில்லை. மதம் ஒரு சித்தாந்தம் எனும் வகையில் அதற்கான சித்தாந்த ரீதியான எதிர்ப்புக் கொள்கையை கைவிடாமலே மேற்கண்ட அணுகுமுறையை பின்பற்ற முடியும்.

மக்களிடையே மதச்சார்பின்மையை வளர்த்திட..

மக்களிடையே மதச் சார்பற்ற உணர்வுகளை மேம்படுத்திட ஏராளமான மதச்சார்பற்ற நடவடிக்கைகள் நடைபெற வேண்டும். இந்த நடவடிக்கைகள் வழியாக மக்களிடம் வகுப்புவாத, மதப்பிடிமான உணர்வுகள் ஆதிக்கம் செலுத்துவதை தடுக்க இயலும். மதச்சார்பற்ற உணர்வுகள் நிரந்தரமாக குடிகொள்ளும் நிலையை உருவாக்க மதச்சார்பற்ற நடவடிக்கைகள் தான் மிகவும் அவசியமானது.

ஆனால் பல நேரங்களில் மதச்சார்பற்ற நடவடிக்கைகள் எப்போதாவது ஒரு முறை எடுக்கப்படும் நடவடிக்கையாக உள்ளது. எங்காவது கலவரம் நடந்தால் அதைக் கண்டித்து ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் அல்லது கருத்தரங்கங்கள், விஸ்வஹிந்து பரிஷத் கோயில் கட்ட வேண்டுமென ஆர்ப்பாட்டம் நடத்தினால், அதனை எதிர்த்து ஒரு நாள் தர்ணா எனும் வகையில்தான் தற்போதைய நடவடிக்கைகள் அமைந்துள்ளன. மதச்சார்பற்ற நடவடிக்கைகளில் மிக முக்கியமானது, அவை தொடர்ச்சியான தன்மை கொண்டதாக இருக்க வேண்டும்.

எடுத்துக்காட்டிற்கு, ஒரு கிராமத்தில் ஒரு படிப்பகம் திறப்பது என்று முயற்சி துவக்கப்படுகிறது என்றால் இது தொடர் முயற்சிகளுக்கு இட்டுச் செல்லும் படிப்பகத்திற்கான இடம் கண்டுபிடிப்பது, செய்தித்தாள்கள், புத்தகங்கள் அளிப்பற்கான கொடையாளிகளை அணுகுவது, படிப்பகத்தில் வந்த மக்களை படிக்கச் செய்வதற்கு ஆர்வத்தை தூண்டுவது. அவ்வப்போது படிப்பகத்தில் பல கட்டுரைகளை கூட்டாக படித்துக் காட்டுவதற்கும், அதனை கேட்பதற்குமான மக்களை திரட்டுவது – என வகைகளில் இந்த ஒரு சிறிய முயற்சி தொடர் முயற்சிகளுக்கு இட்டுச் செல்லும். எனவே தளராத தொடர்ச்சியான முயற்சிகள் என்பது மதச்சார்பற்ற நடவடிக்கைக்குரிய ஒரு முக்கிய சிறப்பியல்பு.

மற்றொரு மிக முக்கியமான குறைபாடு களையப்படல் வேண்டும். பொதுவாக தற்போது நடைபெறும் மதச்சார்பற்ற நடவடிக்கைகள் மக்களை வெறும் பார்வையாளராக இருக்கச் செய்கிறது. ஆர்ப்பாட்டம், தர்ணா தெருமுனைக் கூட்டம், கருத்தரங்கம் உள்ளிட்ட இந்த வடிவங்கள் மக்களிடம் கருத்துகளை கொண்டு செல்கிற வழக்கமான வடிவங்கள். இந்த வடிவங்கள் முக்கியமானவையே. அவற்றை கைவிட வேண்டியதில்லை. ஏனெனில் இவை ஜனநாயக நடைமுறைகள்.

ஆனால் மக்களின் மதச்சார்பற்ற உணர்வை நிரந்தரமாக அவர்கள் மனதில் நிலை நிறுத்துவதற்கு இந்த வடிவங்கள் போதுமானதல்ல. இதற்கு உள்ளூர் மட்டத்தில், உள்ளூர் மக்களை செயல்பாடுகளில் ஈடுபட வைத்திடும் வடிவங்கள் தேவை. எடுத்துக்காட்டாக, முன்பு குறிப்பிடப்பட்ட படிப்பகம். அதனை நிறுவிட வேண்டுமென்றால் அந்த பணியில் ஏராளமான உள்ளூர் மக்களை ஈடுபடுத்த வேண்டியிருக்கும். இதுபோன்ற உள்ளூர் மக்கள் ஈடுபடும் பல வடிவங்களை கையாள வேண்டும். அவற்றையொட்டி எடுக்கப்படும் நடவடிக்கைகள் உள்ளூர் மட்டத்தில் இருக்க வேண்டும். தற்போது நடைபெற்று வரும் அகில இந்திய மாநில, மாவட்ட அளவிலான இயக்கங்கள் அவசியமானவையே. ஆனால் மக்கள் நடுவில் மதச்சார்பற்ற, உணர்வை ஏற்படுத்திட, எடுக்கப்படும் நடவடிக்கைகள் உள்ளூர் மட்டத்தில் இருத்தல் கட்டாயம். மாநில மாவட்ட இயக்கங்களை பாதிக்காமலே அவற்றை நடத்திட இயலும். உள்ளூர் அளவிலான செயல்பாடுகளில்தான் அதிக அளவிலான மக்களை ஈடுபடச் செய்திட இயலும். தொடர்ச்சியாகவும் அவர்களை ஈடுபட வைக்க முடியும்.

எண்ணற்ற வாய்ப்புகள்

பல்வேறு மத நம்பிக்கை கொண்டவர்கள் இணக்கமாக வாழ்வதற்கு “மத நல்லிணக்கம் காப்போம்” என்ற முழக்கம் எழுப்பப்படுவதுண்டு.பல கட்சிகள், அமைப்புக்கள்  பல்வேறு மதச் சின்னங்களை அணிந்து, நிகழ்ச்சிகள் நடத்துகின்றனர்.

அனைத்து மதம் சார்ந்தவர் களும், பொருளாதார , கலாச்சார உறவுகளால் காலம் காலமாக நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகின்றனர். அன்றாட வாழ்வில் பல சர்ச்சைகள் , கருத்து மோதல்கள் இருந்தாலும், உள்ளுரில் மத அடிப்படையில் மோதல்கள் குறைவு .ஆனால் 1990-க்குப் பிறகு இந்த நிலை மாறி, மத நல்லிணக்கம் மிகவும் பலவீனப்பட்டுப் போனது. மத நல்லிணக்கம் காக்க அடையாளப்பூர்வ பிரச்சாரம் நிகழ்ச்சிகள் போதுமானவை அல்ல.
மதம் சாராத வாழ்வாதாரத் தேவைகளுக்காக, ஒன்றுபடுகிற போதுதான் மத நல்லிணக்க உணர்வை ,  நிலையான மதச்சார்பற்ற கண்ணோட்டம் மக்களிடம் வளரும். எனவே, மக்களிடம்  நெருக்கமாக மேற்கொள்ளப்படும்,தொடர்ச்சியான மதச்சார்பற்ற  நடவடிக்கைகள் அவசியம்.

மதச்சார்பற்ற நடவடிக்கைகளுக்கான வாய்ப்புகள் விரிந்து பரந்துள்ளன. தமிழகத்தில் பாரம்பரியமாக இது போன்ற பல நடவடிக்கைகள் நிகழ்ந்து வருகின்றன. மக்கள் திரளாக கூடுகிற விழாக்கள், நிகழ்ச்சிகள் ஏராளமாக கிராம, நகர அளவில் நடைபெற்று வருகின்றன. இவற்றில் தலையிட்டு மதச்சார்பற்ற உணர்வுகளை வளர்ப்பதற்கு திட்டமிட்ட பல முன்முயற்சிகள் தேவைப்படுகிறது. எடுத்துக்காட்டாக, கிராமங்களில் நடைபெறும் கோயில் விழாக்கள்; கிராமம், தெரு அளவில் ஏராளமானோர் இயல்பாகவே பாடல் இயற்றும் திறன் படைத்தவர்கள் இருக்கின்றனர். ஆறு மாதம் கழித்தோ ஒரு வருடம் கழித்தோ வர இருக்கின்ற கோயில் திருவிழாவில் ஒரு இசை நிகழ்ச்சிக்கான வாய்ப்பை ஏற்படுத்தி அதில் பாட இருக்கும் பாடல்களை அங்கிருப்போரை வைத்து உருவாக்குவது. இதே போன்று விழாவின் போது ஒரு நாடகம் நடத்திட அங்குள்ளவர்களையே தேர்ந்தெடுத்து உருவாக்குவது. விழாவின்போது கண்காட்சி வைப்பதற்கான ஓவியங்களை வரைவதற்கான ஒரு குழுவை உருவாக்குவது – இவ்வாறு விழா என்கிற வாய்ப்பை மட்டும் வைத்து பலரது பங்கேற்புக்கு வழி வகுக்கும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

குடிநீர், சுகாதாரம் போன்ற பலவற்றை அடிப்படையாக வைத்து மக்கள் இயக்கங்களை உருவாக்கலாம். எடுத்துக்காட்டாக மணல் கொள்ளை தொடர்ந்து நடக்கும் ஆற்றுப்படுகைச் சார்ந்த மக்களை மையமாக வைத்து அந்த ஆற்றின் வளத்தை பாதுகாக்கும் நீடித்த இயக்கம் ஒன்றை உருவாக்கிடலாம். மக்களின் அடிப்படைப் சிக்கல்களுக்காக நிலைத்து நீடிக்கும் மக்கள் இயக்கங்கள் உள்ளூர்மட்டத்தில் உருவாக்கும் மதச்சார்பற்ற நடவடிக்கைகளே. சமூக வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் பலரை ஈடுபடுத்தி செயலாற்றக்கூடிய வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன.

குடும்ப விழாக்கள் ஏராளமானோர் பங்கேற்கும் வாய்ப்பாக அமைந்துள்ளது. இவற்றில் பல்வேறு சடங்கு சம்பிரதாயங்கள் கடைபிடிக்கப்படுகின்றன. எனினும் பல பாரம்பரிய நடவடிக்கைகளில் கலந்து கொள்வது மதச்சார்பற்றவாதிகளுக்கு அந்த மக்களோடு தொடர்பு கொள்ளவும் அவர்களோடு ஒன்றிணையவும் வாய்ப்பாக அமையும். சடங்குகள் எனும் பெயரால் நடைபெறும் மூட நம்பிக்கையோடு கூடிய செயல்பாடுகளிலிருந்து தன்னை விலக்கிக் கொள்ள வேண்டுமே தவிர அவற்றில் ஈடுபடும் மக்களோடு உறவை துண்டித்துக் கொள்ளக் கூடாது. அந்த உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். பல சந்தர்ப்பங்களில் சடங்குகள் பெயரால் நடக்கும் பல அநீதிகளுக்கு இந்த சடங்குகளை கையாளும் மக்களே தாக்கத்துக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே தவறான இந்த நடைமுறைகளை எதிர்க்க வேண்டுமே தவிர, அந்த மக்களிடமிருந்து மதச்சார்பற்றவாதி தனிமைப்பட்டுவிடக்கூடாது.

இவ்வாறு சமூகத்தில் நிலவும் எண்ணற்ற வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்துகிறபோது, வகுப்புவாதத்தை முறியடிக்க முடியும். அதுமட்டுமல்லாது, மதச்சார்பற்ற இடதுசாரி சிந்தனைகளுக்கும் இயக்கங்களுக்கும் தளமாக சமூகத்தை மாற்றிட முடியும்.மதச்சார்பற்ற சமுகமே சோசலிசத்தை அமைப்பதற்கான அடித்தளம்.

வரலாற்றைத் திரித்து வழங்குதல்!

ஜியா உஸ் சலாம்

தமிழில் தழுவி எழுதியவர்: கி.ரா.சு.

பாஜக ஆட்சிக்கு வரும்போது வரலாற்றைத் திரித்து அனைவரின் மனங்களிலும், குறிப்பாக இளம் மனங்களில் மதவெறியைத் திணிக்கும் வகையில் வரலாற்றைத் திரித்து எழுதுவது வழக்கமாகி விட்டது. இதை வாஜ்பாய் ஆட்சிக் காலத்திலும் பார்த்தோம்; ராமஜென்ம பூமி விஷயத்திலும் பார்த்தோம்; இப்போதும் பார்க்கிறோம். இப்போது பல்கலைக்கழகங்களிலேயே ஊடுருவும் போக்கு மோசமாக அரங்கேறி வருகிறது.

ராஜஸ்தான் பல்கலைக்கழகப் பாடப்புத்தகத்திலேயே அங்குள்ள பாஜக அரசு இதனை அரங்கேற்றியுள்ளது. மேவாரின் ஆட்சியாளரான ராணாபிரதாப்பை ஹல்திகட்டி போரில் வென்றவராகச் சித்தரிக்கும் ஒரு பாடத்தை ராஜஸ்தான் பல்கலை தன் பாடதிட்டத்தில் சேர்த்துள்ளது. மேலும் அப்போரில் அவர் முகலாயர்களை அழித்தொழித்து விட்டதாகவும் எழுதப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு வரலாற்றில் எந்த ஆதாரமும் கிடையாது. இந்தப் புத்தகத்தின் பெயர் ராஷ்டிர ரத்தன்: மகாராணா பிரதாப் (ஆர்யவ்ரத் சன்ஸ்க்ரித் சன்ஸ்தான், தில்லி, 2007) எழுதியவர் சந்திரசேகர் ஷர்மா. அவர் 1576ல் நடந்த ஹல்திகட்டிப் போரில் ராணா பிரதாப்தான் வென்றதாகவும், முகலாயர்கள் வெல்லவில்லை என்றும் எழுதியுள்ளார்.

வரலாற்றை அரசியலாக்குவது என்ற இந்த முயற்சியின்பால் தன் ஆற்றாமையைப் பதிவுசெய்துள்ள பிரபல வரலாற்று நிபுணர் சதீஷ் சந்திரா இவ்வாறு கூறியுள்ளார்: “தாராளமான, மதச்சார்பற்ற குரல்கள் இத்தகைய சீர்குலைக்கும் போக்கை அனுமதிக்காது என்று நம்புகிறேன்.” மத்தியகால இந்தியாவைப் புரிந்துகொள்ள அவரதுசுல்தனேட்டிலிருந்து முகலாயர்கள்வரைஎன்ற நூல்தான் அடிப்படை நூலாகக் கருதப்படுகிறது. அதில் அவர் சுட்டிக்காட்டுகிறார்: “மான்சிங் என்ற ரஜபுத்திரரின் தலைமையிலான அக்பரின் படைக்கும், ஹக்கிம்கான் சுர் என்பவரின் தலைமையிலான ஆஃப்கான் படை உள்ளிட்ட ராணா பிரதாப் சிங்கின் படைக்கும் இடையிலான போர் முதலில் வெற்றிதோல்வியின்றி முடிவுற்றது. அதனை இந்துக்களுக்கும், முஸ்லீம்களுக்கும் இடையிலான போர் என்றோ, ரஜபுத்திரர்களின் சுதந்திரத்துக்கான போர் என்றோ கருத முடியாது. ஏனென்றால் இருபுறமும் ரஜபுத்திரர்கள் இருந்தனர்.” ஆனால் இதைத்தான் தற்போது ராஜஸ்தான் அரசு நிறுவ விரும்புகிறது.

சந்திரசேகர ஷர்மா உதய்பூரின் அரசு மீரா கன்யா மகாவித்யாலயாவில் ஆசிரியர். அந்தக் காலத்தில் ராணா பிரதாப் தனது ராஜ்ஜியத்தின் மீதான பிடியை இழக்கவில்லை என்று நிறுவுவதற்கு ஹல்திகட்டியைச் சுற்றியுள்ள பகுதிகளில் கிடைத்த சில மத நிலப்பதிவேடுகளையும், ராணா பிரதாப்பின் சில நிர்வாக முடிவுகளையும் அவர் அடிப்படையாக எடுத்துக் கொண்டுள்ளார். இந்த புத்தகத்தை எடுத்துக் கொண்டு ஒரு பாஜக சட்டசபை உறுப்பினரான மோகன்லால் குப்தா ராஜஸ்தான் பல்கலையில் வரலாறு கற்பிக்கப்படும் முறை மாற்றப்பட வேண்டுமென்று வாதிட்டார். இதை ஆதரித்துப் பேசிய, மேலும் மூன்று சட்டசபை உறுப்பினர்களான முன்னாள் உயர்கல்வி அமைச்சர் காளிசரண் சரஃப், பள்ளிக்கல்வி அமைச்சர் வாசுதேவ் தேவ்னானி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டுவசதி அமைச்சர் ராஜ்பால் சிங் ஆகியோர், பல்கலையின் பாடத்திட்டம் மாற்றப்பட வேண்டுமென்றும், ராணா பிரதாப் இப்போரில் வென்றவராகக் காட்டப்பட வேண்டுமென்றும் வாதிட்டனர். பிறகு பல்கலையின் வரலாற்றுத்துறை இப்புத்தகத்தை மாற்றுப்பார்வையை அளிப்பதற்கான தனது குறிப்புப் புத்தகங்களுக்கான பட்டியலில் ஒன்றாகச் சேர்த்துவிட்டது.

ஆனால் இதைக் கல்வியாளர்கள் ஏற்கவில்லை. மேற்கூறிய புத்தகம் கூறுவதுபோல் ஹல்திகட்டி போர் இந்துக்களுக்கும், முஸ்லீம்களுக்கும் இடையிலானதல்ல என்று அவர்கள் வாதிடுகின்றனர். இரண்டு படைகளிலுமே இந்துக்களும், முஸ்லீம்களும் கலந்திருந்தனர். ஷேர்ஷா சூரியின் பரம்பரையில் வந்த இஸ்லாம்கான் சூர் மேவார் அரசருக்கு ஆதரவாகப் போரிட்டார். அதே சமயத்தில் அக்பரின் படைக்குத் தலைமை தாங்கியவர் அம்பேரின் அரசர் ராஜா மான்சிங். முகலாயர்களுக்கு ராணா பிரதாப்பின் சகோதரரான சக்தி சிங்கின் ஆதரவும் இருந்தது.

ஹல்திகட்டியில் நடந்தபோர் 1576, ஜூன் 18 அன்று வெறும் நான்கு மணி நேரம்தான் நடந்தது என்று கூறப்படுகிறது. சந்திரசேகர் ஷர்மா எழுதியுள்ளது போல் சூரிய உதயத்திலிருந்து, சூரிய மறைவு வரை நடைபெறவில்லை. அது பாரம்பரியமுறையில் காலாட்படை, யானைப்படையுடனேயே நடத்தப்பட்டது. ஏனென்றால் அந்தக் கடுமையான நிலப்பரப்பில் முகலாயர்களால் தமது ஆயுதங்களைக் கொண்டுவர முடியவில்லை. அந்த ஆயுதங்கள்தான் அவர்களது பலமும்கூட. பாரம்பரிய முறையிலான போரில் ரஜபுத்திரர்களின் கை மேலோங்கியிருந்தது.

அலிகார் முஸ்லீம் பல்கலைஆசிரியரான பேரா. சையத் அகமத் ரிசாவி, தமது மத்தியகால இந்தியா பற்றிய புத்தகத்தில் குறிப்பிடுகிறார்: “ராணா பிரதாப்புடன் மற்ற ரஜபுத்திரர்களின் கடுமையான தாக்குதல் முகலாயர்களின் இடது, வலதுபுறப் படைகளை நாசம் செய்வதற்கு இட்டுச் சென்றதுடன், மத்தியில் மான்சிங் படைகள்மீது கடும் அழுத்தத்தை ஏற்படுத்தியது.. ஆனால் அக்பர் வந்துவிட்டார் என்ற புரளியால் நிலை மாறி, ரஜபுத்திரர்கள் பின்வாங்க நேர்ந்தது. ஜூலையில் ராணா பிரதாப் தான் இழந்த சில நிலங்களை மீட்டு கும்பல்காவைத் தனது தளமாக்கிக் கொண்டார். விரைவில் அக்பர் தானே நேராக வந்து போரிட்டதில் கும்பல்கா உள்ளிட்ட பல நிலப்பகுதிகளை ராணா பிரதாப்பிடமிருந்து கைப்பற்றிக் கொண்டார். ராணா பிரதாப் மேவாரின் தென்பகுதியில் இருந்த மலைப்பகுதிக்குத் தப்பிச் செல்ல நேர்ந்தது.”

முகலாயர்களின் படையெடுப்பு அத்துடன் முடிந்து விடவில்லை. ஜலோரின் ஆஃப்கான் தலைவர் மீதும், இதார், சிரோஹி, பன்ஸ்வாரா, டுங்கர்புர், புண்டு ஆகியவற்றின் ரஜபுத்திரத் தலைவர்கள் மீதும் நிர்ப்பந்தம் செலுத்தினர். மேவார், குஜராத், மால்வாவின் எல்லைகளில் அமைந்த இந்த அரசுகள் அப்பகுதியில் ஆதிக்க சக்தியின் மேலாண்மையைக் காலங்காலமாக மதித்து வந்தவை. இதன் விளைவாக, அவை முகலாயர்களுக்குக் கீழ்ப்படிந்தன. புண்டியிலும், அதன் அருகாமையிலுள்ள சில இடங்களிலும் தன் ஆட்சியை நிறுவ ராவ் சர் ஜான் ஹாடாவின் மூத்தமகன் டூடா ராணா பிரதாப்புடன் கைகோர்த்திருந்தார். டூடாவின் தகப்பனாரான சர் ஜான் ஹாடாவும் அவர் இளைய சகோதரரான போஜும் முகலாயர்களுடன் இந்தப் போரில் கைகோர்த்திருந்தனர். ராணா பிரதாப் இறுதியில் மலைகளுக்குத் தப்பியோடினார்.

சதீஷ் சந்திரா இவ்வாறு கூறுகிறார்: “ராணா பிரதாப் ஹல்திகட்டி போரில் வென்றதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. வீரமிக்க போருக்காக அவர் அறியப்படுகிறார். அவரது கொரில்லா போர்முறை பின்னர் சிவாஜியால் பின்பற்றப்பட்டது. அக்பருடனான அவரது போரை மதப் போராக வகைப்படுத்துவது தவறு. தற்கால அரசியல் பார்வையில் வரலாற்றை நாம் பார்க்க முடியாது. ராணா பிரதாப் துணிவும், வீரமும் மிக்கவர் என்பதில் எந்த ஐயமுமில்லை. ஆனால் அவருக்கு பில்களும், ஆஃப்கானியர்களும் ஆதரவளித்தனர். பெரும்பாலான ரஜபுத்திரர்கள் அக்பருக்கு அடிபணிந்துவிட்ட காலத்தில் அவர் சில கொள்கைகளுக்காக நின்றார். சுதந்திரம் அடையும்வரை அவருக்கு எந்த சிலையும் இல்லை. உதய்பூரில் அவர் பெயரில் எந்த சாலையும் இல்லை. இப்போது அரசியல் காரணங்களுக்காக அவரைப் பற்றி அரசியல் தலைவர்கள் பேசுகின்றனர். அவரைப் பொறுத்தவரை இந்துத்துவாவுடன் எந்தத் தொடர்புமில்லை. அவரை இன்று இந்து வீரர் என்று புகழ்பவர்கள், இந்துக்களுக்கும், முஸ்லீம்களுக்கும் இடையில் தீராத பகையை மூட்ட பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர்கள் மத்தியகால இந்தியா பற்றி எழுதியதை காப்பியடித்துக் கொண்டிருக்கிறார்கள்.”

அது ஒரு மத மோதலல்ல

ஹல்திகட்டி போரும், ராணா பிரதாப்புக்கும், முகலாயர்களுக்கும் இடையிலான போரும் இரண்டு மதங்களுக்கு இடையிலான போர்களல்ல; அது ஏகாதிபத்திய மேலாதிக்கத்துக்கான போர். அதில் முகலாயர்கள் தீர்மானகரமான வகையில் வென்றனர். இதில் முகலாயர்களுக்கு ஏராளமான ரஜபுத்திரர்களின் ஆதரவும் இருந்தது. ராணா பிரதாப்புக்கு ஆஃப்கானியர்களின் ஆதரவு இருந்தது.

ஆக, இந்த முரண்பாட்டை ஏன் ராஜஸ்தான் பல்கலைக்கழகம் உருவாக்குகிறது என்பது தெளிவு. இளம் மனங்களில் மதவெறியை விசிறிவிடும் பணிதான் அதன் நோக்கம். இத்தகைய வரலாற்றை போதிப்பதன் மூலம் அதைச் செய்யவே விரும்புகிறார்கள்.

மேவார் போன்ற சிறு, சிறு ராஜ்ஜியங்களின் ஆட்சியாளர்களை மகாராணா என்றும், சிவாஜி போன்றவர்களை வீர சிவாஜி என்றும் போற்றும் ஒருவகை புகழ்பாடுதலின் பகுதிதான் மேற்கூறிய திரிபுவாதமும்.

ரெசாவி கூறுகிறார்: மத்தியகால வரலாற்றில் சிறு, சிறு ராஜ்ஜியங்களின் ஆட்சியாளர்கள்கூட தம்மை மேலானவர்களாகக் காட்டிக்கொள்ள பெரிய பட்டங்களைச் சூடிக்கொண்டனர். மேவாரின் அரசர் தன்னை மகாராணா என்று அழைத்துக் கொண்டார். அந்தப் பட்டம் ரஜபுத்திர தலைவர்களிடையே ராணாவை மிக முக்கியமானவராக்கியது. அம்பேரின் கச்சவாகாக்களையும், புண்டேலாக்களையும் ஒப்பிடுகையில் மார்வாரும், மேவாரும் பெரிய ரஜபுத்திர தலைவர்கள்தான். கச்சவாகாக்கள் முகலாயர்களுடன் கைகோர்த்தபிறகுதான் வெளிச்சத்துக்கு வந்தார்கள். முகலாயர்கள் இல்லாமலேயேகூட மார்வாரும், மேவாரும் புகழ் பெற்றிருந்தன.”

சதீஷ் சந்திரா கூறுகிறார்: “அவர்கள் (அரசியல்வாதிகள்) எல்லா இடங்களிலும் வரலாற்றைத் திரிக்க விரும்புகின்றனர். அவர்கள் எவ்வளவுதான் கடுமையாக முயன்றாலும் அவர்களால் வரலாற்றைத் தீர்மானிக்க முடியாது. ராணா பிரதாப் வீரமிக்க, ஆனால் தனிமையான போரை நிகழ்த்தினார். ரஜபுத்திரர்களில் ஒரு பகுதியினர்தான் அவருக்கு ஆதரவளித்தனர். அவர்களில் பெரும்பாலோரை அக்பர் ஏற்கனவே வென்றுவிட்டார்.”

அக்பர் ரஜபுத்திரர்களையும், கத்ரிக்களையும் தமது நிர்வாகத்தில் இணைத்துக்கொள்ள விரும்பினார். அக்பர் நிர்வாகத்தில் பன்னிரண்டு திவான்களில் எட்டுப்பேர் கத்ரிக்களும், காயஸ்தாக்களுமாவர். எனவே மதமோதல் என்ற கட்டுக்கதையை இதுவே அம்பலப்படுத்தும்.

இன்னொருபுறம் முகலாயக் குறிப்புகள் சிவாஜியை சிவா என்றே குறிப்பிடுகின்றன. மாராத்தாக்கள் மிகவும் பிற்காலத்தில்தான் பேஷ்வாக்களின் கீழ் மேலெழுந்தனர். ரெசாவி கூறுகிறார்: “சிவாஜியும், சாம்பாஜியும் சிறு மலைக்கோட்டைகளின் குறுந்தலைவர்களேயாவர். அவர்கள் பாதுகாப்பு மாமூல் வசூலித்தே வாழ்ந்து வந்தனர். சிவாஜி புரந்தர் போரில் ரஜபுத்திர மிர்சா ராஜா ஜெய்சிங்கால் தோற்கடிக்கப்பட்டார். அதற்கு முன் அவருடன் போரிட்ட முகலாய தளபதிகள் செய்ஷ்டா கானும் ஜஸ்வந்த்சிங் ரத்தோருமாவர். சிவாஜியை ஆக்ராவில் அவுரங்கசீபின் கோட்டைக்குக் கொண்டு வந்தபோது சபையில் அவரை எள்ளிநகையாடியவர் வேறு யாருமல்ல; இந்த ரத்தோர்தான். அவர் ஜெய்சிங்கின் மகன் ராம்சிங்கின் கோட்டையில் சிறைவைக்கப்பட்டு, அங்கிருந்து தப்பினார்.

கதைகள் வரலாறானால்?

கதைகளை வரலாறுகளாக்குவது எதில் சென்றுமுடியும்? நமது சமூகத்தின் ஒற்றுமையைக் குலைக்க இதைத்தான் மதவெறி அமைப்புகள் செய்து வருகின்றன. இளம் மனங்களில் விஷத்தை விதைக்க இவற்றைப் பள்ளி, கல்லூரிப் புத்தகங்களில் திணிக்கின்றன.

நாஜிக்களும் இதைத்தான் செய்தனர். பாகிஸ்தானும் இதைத்தான் செய்தது. அக்பர் பற்றிய குறிப்புகளே பாகிஸ்தான் பாடப்புத்தகங்களிலிருந்து அகற்றப்பட்டு விட்டன. இந்துக்களுடனும், ரஜபுத்திரர்களுடனும் சேர்ந்து இஸ்லாமுக்கு ஊறுவிளைவித்தவர் என்று அக்பரைப் பற்றி பாகிஸ்தான் பள்ளிகள் போதிக்கின்றன. இந்தியாவிலோ அக்பர் உண்மையில் மோசமானவர் என்று இளம் மனங்களில் விதைக்க முயற்சி நடக்கிறது. ஏன்? ஏனென்றால் இந்த அடிப்படைவாதிகள் அக்பரின் மதமற்ற போக்கைக் கண்டு அஞ்சுகின்றனர். அக்பரின்சுல்குல்(நிறைந்த அமைதி அல்லது அமைதிப்படுத்திக் கொள்வது என்ற கொள்கை) இந்து, முஸ்லீம் அடிப்படைவாத சக்திகளுக்குஅச்சமூட்டுகிறது என்கிறார் ரெசாவி.

1585ல் அக்பரின் சபைக்கு வருகைதந்த பாதிரியார் மொன்சரேட் அக்பர் அனைத்து மதங்களையும் சமமாக நடத்துவதன் மூலம் அனைத்தையும் எதிர்க்கிறார் என்கிறார். அதுதான் பாகிஸ்தானிய முல்லாக்களுக்குஅச்சமூட்டுகிறது. அதுதான் இந்தியாவில் இந்துத்துவப் பரிவாரங்களுக்கு அச்சமூட்டுகிறது. அவர்கள் இருவருக்கும் பல கட்டுக்கதைகள் சூழ்ந்த அவுரங்கசீப்தான் உண்மை நாயகர். முஸ்லீம் அடிப்படைவாதிகளுக்கு அவர் ஒரு இறைத்தூதர், இந்து அடிப்படைவாதிகளுக்குத் தமது வெறுப்பைப் பரப்ப அவர் ஒரு அடையாளம்.

இந்திய மக்கள் முட்டாள்களல்ல. அரசர்களுக்கு எந்தமதமும் கிடையாது என்பது அவர்களுக்குத் தெரியும். அந்த அரசர்களுக்கு எந்தமதமும் கிடையாது. ஆனால் அவர்கள் தமது நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல மதங்களைத் தற்கால ஆட்சியாளர்களைப் போல் உபயோகித்தனர்.

முகலாயர்கள் முஸ்லீம்கள் என்பதாலேயே ராணா பிரதாப்பும், சிவாஜியும் அவர்களை எதிர்த்ததாக சில அரசியல் தலைவர்கள் கருதுகின்றனர். ஆனால் அது உண்மையல்ல. ராணா, சிவாஜி ஆகியோரின் படைகளில் பெருமளவு முஸ்லீம் தளபதிகளும், வீரர்களும் நிறைந்திருந்தனர். முகலாய படையில் இந்துக்களான ரஜபுத்திரர்கள் இருந்தனர். இந்து பத்பத் ஷாகி என்று அவர் அழைத்த படைகளுக்கு சிவாஜி தலைமை தாங்கினார். பீட்டர் முண்டி போன்றோர் தற்போது கூறுவதை நம்புவதானால், பெரும்பாலான அவரது சிறைகளில் பிராமணர்களே நிறைந்திருந்தனர். அவர் சவுத்தையும், சர்தேஷ் முக்தியையும் (மாமூல்) முஸ்லீம் விவசாயிகளே இல்லாததால் இந்து விவசாயிகளிடமிருந்தே வசூலித்தார்.

ஆக, பாபரை வரவேற்று முடிசூட்டிய ராணா சங்காவாக இருக்கட்டும்; ராணா பிரதாப்பாக இருக்கட்டும்; சிவாஜியாக இருக்கட்டும்;அவர்கள் முகலாயர்கள் வெளிநாட்டினர் என்பதற்காகவோ, முஸ்லீம்கள் என்பதற்காகவோ எதிர்த்துப் போரிடவில்லை. மாறாக ஏகாதிபத்திய மேலாதிக்கம் என்பதற்காகவே எதிர்த்துப் போரிட்டனர்; அல்லது ஒரு அரசருக்கெதிராக இன்னொருவர் போரிட்டனர்.

1961ல் வெளிவந்த ஒரு இந்திப்படம் ஜெய்சித்தூர். அது ராணா பிரதாப்பின் புகழ்பெற்ற குதிரை சேட்ட அவரது உயிரைப் போரில் காப்பாற்றியது குறித்த லதா மங்கேஷ்கரின் ஒரு பாடலை உள்ளடக்கியது. ஆனால் அந்தப் படத்தில் ஒரு எச்சரிக்கை கொடுக்கப்பட்டது, அதாவது இந்தக்கதை வரலாறல்ல; கட்டுக்கதை என்பதே அது.

இவர்கள் வரலாற்றை கட்டுக்கதைகளால் நிரப்ப முயல்வதற்கு எதிராக நாம் இந்த எச்சரிக்கையைத்தான் கொடுக்கவேண்டியுள்ளது.

Thanks: Frontline, March 31, 2017.

வகுப்புவாத தேசியத்தை வீழ்த்தும் மாற்று எது?

உத்தரபிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் அரசியல் சக்திகளிடையே யும், மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளிடையேயும், நிறைய கேள்விகளை எழுப்பியுள்ளன. ஊடகங் கள் வெளியிட்டுள்ள தரவுகளை மட்டும் வைத் துக் கொண்டு, இதனை மதிப்பீடு செய்வது பலன் தராது. இந்தத் தரவுகளுக்கு காரணமான சூழல், அந்தச் சூழல் உருவாக்கப்பட்ட அடிப்படை ஆகியவை குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும்.

இந்தத் தேர்தல் முடிவுகள், மாநிலத்தை ஆட்சி செய்த கட்சிகள் அல்லது கூட்டணி ஆகிய வற்றுக்கு எதிராக அமைந்துள்ளன என்பது பொதுவான செய்தி. கோவாவில் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்திருந்தாலும், அதில் ஆளுநர் மற்றும் பாஜகவின் குதிரை பேரம் அப்பட்டமாக வெளிப்பட்டது. மற்றொரு பொதுவான செய்தி, மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக மீதான அதிருப்தி இந்த மாநிலத் தேர்தல்களில் பிரதிபலிக்கவில்லை. காரணம் மாநில முதலாளித்துவ கட்சிகள் அல்லது காங்கிரஸ், பாஜகவின் மத்திய ஆட்சி மீதான அதிருப்தியை அறுவடை செய்ய இயலவில்லை; அதற்கேற்ற உத்தியும் அவர்களிடம் இல்லை. இடதுசாரிகள், அமைப்பும் வலுவுடன் இல்லை.

பஞ்சாபில் பாஜக படுதோல்வி அடைந்தது. என்றாலும் அது மத்திய ஆட்சி மீதான அதிருப்தி யின் விளைவு என்ற முடிவுக்கு முழுதாக வரக் கூடியதாக இல்லை. காரணம், பாஜக பஞ்சாபில் அகாலி தளத்துடன் கூட்டணியில் இருந்தது. மாநில ஆட்சி, பாதல் குடும்ப ஆதிக்கத்தின் மீதான வெறுப்பு இருந்தது. பாஜக கூட்டணியில் பங்கு வகித்ததன் காரணமாக சீக்கியர்களிடம், இந்துத்துவா மேலாதிக்கம் சிறு பாதிப்பை ஏற் படுத்தியிருக்கக் கூடும்.

அதேநேரம் சில குறிப்பான செய்திகளையும் இந்த தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. ஒன்று, பாஜக உத்தரப்பிரதேசம், உத்தர்கண்ட் மாநிலங்களில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற திட்டமிட்டு செய்த பணிகள். தனக்கு வலு இல்லாத, மணிப்பூரிலும் குதிரை பேரத்தின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றியிருப்பது. அதே போல், நிர்வாக அமைப்புகளில் திணிக்கப்படும் இந்துத்துவக் கொள்கை. (உதாரணமாக ஆளுநர் களின் செயல்பாடு) மேலும் இந்த தேர்தலில் பாஜகவின் இந்துத்துவா நிகழ்ச்சி நிரலும் வகுப்பு வாத கலவரங்களும், ஊடக மேலாதிக்கமும் மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகளுக்கு கடுமையான சவாலை ஏற்படுத்தியுள்ளன.

பாஜகவின் திட்டமிடல்:
ஐந்து மாநிலத் தேர்தலிலுமே வெற்றி பெற்றாக வேண்டுமென்ற முனைப்பில் பாஜக இருந்தது. குறிப்பாக உத்தரப்பிரதேசம் இந்தியாவின் மிகப் பெரிய மாநிலம். அங்கே வெல்வதன் மூலம், தானொரு வெல்லற்கரிய சக்தி எனக் காட்டிக் கொள்வதும். அதை இந்தியா முழுமைக்கும் பொதுமைப் படுத்துவதும் பாஜகவின் விருப்ப மாக இருந்தது. அதற்கேற்றவகையில் திட்ட மிட்டது. உத்தரப்பிரதேசத்தில் கடந்த 2014 நாடாளு மன்றத் தேர்தலுக்கு முன்பாகவே இந்துத்துவா சக்திகள் தீவிர கவனத்தை மேற்கொண்டு வந்தன.

முதலில், அணிகளைத் தயார் செய்வது. உ.பி யில் மட்டும் சேர்க்கப்பட்ட உறுப்பினர்கள் 1.80 கோடி. அதில் செயல்படும் கட்சி உறுப்பினர் களாக 67,605 நபர்களை மாற்றியுள்ளது பாஜக. இது கடந்த ஆண்டைவிட இரு மடங்கு. வாக்கு சாவடி மட்டத்தில் 1.47 லட்சம் பொறுப்பாளர் களை உருவாக்கி, அவர்களுடைய முகவரி உள்ளிட்ட விவரங்களைச் சேகரித்து, அவர்களுடனான தொடர்பை வலுப்படுத்தியுள்ளது. இந்த வாக்கு சாவடிகளில் குறைந்தது 10 பேர் கொண்ட கமிட்டி அமைத்து, 13.50 லட்சம் ஊழியர்களை உருவாக்கியுள்ளது. 100 – 125 வாக்குச் சாவடி களைக் கொண்ட மண்டலங்கள் உருவாக்கப் பட்டுள்ளன. மண்டல ஊழியர்கள் ஒரு லட்சம் பேருக்கும், மாவட்ட அளவில் 15 ஆயிரம் பேருக் கும் பிரத்யேகப் பயிற்சி அளிக்கப் பட்டுள்ளது.

இரண்டாவது, பிரச்சாரம். அமித் ஷாவின் நேரடிப் பார்வையில் விளம்பர நிறுவனங்கள் உதவியுடன் செயல்பட்டனர். 34 தாமரை மேளாக் கள் நடத்தப்பட்டுள்ளன. அவை ஒவ்வொன்றி லும் 60 ஆயிரம் பேர் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டது. நாடகப் பிரச்சாரம் பெரும் ஈர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது. 8574 நாடகங் கள் நடத்தப்பட்டுள்ளன. வீடியோ வேன்கள் மாநிலம் முழுவதும் பயணம் செய்துள்ளன. இவற்றின் மூலம் 47 லட்சம் பேரைச் சந்தித் துள்ளனர். மனதோடு பேசுவோம் என்ற வீடியோ ரத நிகழ்வு மூலம், நிறைய பகுதிகளில் பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ கான்ஃ பரன்ஸ் மூலம் அமித் ஷா நேரடியாக 74,200 இளைஞர்களுடன் உரையாடியுள்ளார்.

மூன்றாவது, சமூக வலைத்தளங்களைப் பயன் படுத்தியது. பாஜக சமூகவலைத் தளங்களை மிக அதிகமாக பயன்படுத்தி வருகிறது. பாஜக4உபி (க்ஷதுஞழருஞ) என்ற பெயரில் பல குழுக்கள் உருவாக்கப் பட்டன. குறிப்பாக வாட்ஸாப் குழுக்கள் மிகப் பெரிய பங்களிப்பு செய்துள்ளன. 10,344 வாட்ஸாப் குழுக்கள் மூலம் 15 லட்சம் மக்களை இணைத் துள்ளனர். பாஜக தனக்கு உள்ள பொருள் செல்வாக்கு காரணமாக, முழுநேர ஊழியர் களாக தகவல் தொழில் நுட்ப ஊழியர்கள், மாநிலத்தில் 5,031 நபர்களை நியமித்து செயல் படுத்தியுள்ளது. இவை அனைத்தும் பாஜகவின் சொந்த செல்வாக்கில் உருவாக்கப்பட்டவை. இதர ஊடகங்களும் பாஜகவிற்கு சாதகமாக, ஒரு தலைப் பட்சமாக செயல்பட்டன என்பதும் முக்கியமானது.

பாஜகவின் ஊடக மேலாதிக்கம்:
அச்சு, மின்னணு ஊடகங்கள் என அனைத்துமே எந்தவிதப் பாகுபாடும் இல்லாமல், பாஜகவிற்கு சாதகமாக செயல்பட்டன. குறிப்பாக கருத்து உருவாக்கத்தில் பாஜகவிற்கு சாதகமான வாக் காளரின் மனநிலையை உருவாக்க, இத்தகைய பாரபட்சமான செயல்பாடு பயன்பட்டது. உதாரணத்திற்கு டெய்னிக் ஜாக்ரன் டெய்லி என்ற இதழ், தேர்தல் ஆணையத்தின் தடையை மீறி, கருத்துக் கணிப்புக்கு அப்பாற்பட்டு, வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு நடத்தி, அதை 6 கட்ட தேர்தல்கள் நடக்க உள்ள நிலை யில் வெளியிடவும் செய்தது. இது அப்பட்ட மான சட்டமீறலாகும்.
டெய்னிக் ஜாக்ரன் டெய்லி உ.பியின் முதல் கட்டத் தேர்தலில் 73 தொகுதிகளுக்கு 60- ல் பாஜக வெற்றி பெறுமென செய்தி வெளி யிட்டது. அது பின்னர் நடந்த 6 கட்ட வாக்குப் பதிவில் பிரதிபலித்துள்ளதை பல்வேறு ஆய் வாளர்கள் கூறுகின்றனர். குறிப்பாக நடுநிலை வாக்காளர்கள் எனக் கருதப்படுவோர் வெற்றி பெறும் கட்சிக்கு ஆதரவாக, தங்கள் மனநிலையை மாற்றிக் கொண்டுள்ளனர்.

திட்டமிட்ட வகுப்புவாதப் பிரச்சாரம்:
மேலே குறிப்பிட்ட பாஜகவின் ஊடகம், பிரச் சாரத் திட்டமிடல், அதன் நிகழ்ச்சி நிரலான, வகுப்புவாத அணிதிரட்டலுக்கு ஏற்ப தீவிரமாகப் பயன்படுத்தப்பட்டது. அதேபோல் ஒரு பொய்யைத் தொடர்ந்து பிரச்சாரம் செய்வதன் மூலம் அதை உண்மையாக்க முடியும் என்ற திசையிலேயே பாஜக செயல்பட்டது. உதாரணமாக இஸ்லாமி யர்கள் அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள் கின்றனர். காரணம் அவர்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்வதில்லை. முத்தலாக் மூலம் அதிக திருமணம் செய்து கொள்கின்றனர் போன்ற வற்றைச் சொல்லலாம். முத்தலாக் போன்றவை கைவிடப்பட வேண்டும் என கம்யூனிஸ்டுகள் உள்பட, விமர்சனம் செய்கின்றனர். ஆனால் அதிகமாக முத்தலாக் மூலம் கூடுதல் திருமணங் கள் நடைபெறுவதாக கூறுவது பொய் பிரச் சாரம் என்பதை அறிய வேண்டியுள்ளது.
உ.பி. யில் தேர்தல் பிரச்சாரம் செய்ய கணிசமான ஆர்.எஸ்.எஸ் ஊழியர்கள் பயன்படுத்தப்பட்ட னர். மேற்கு உ.பியில், “குஜராத் முஸ்லிம்கள் மனி தனின் மண்டை ஓட்டை வைத்து பேருந்துகளில் இடம் பிடிப்பர். இதன் காரணமாக இந்துக்கள் பாதிக்கப்பட்டனர். பாஜக ஆட்சி வந்த பின்தான் முஸ்லிம்களின் இத்தகைய செயல் ஒழிந்தது. உ.பியில் 2012 ஆண்டைப் போல் முஸ்லிம் எம்.எல்.ஏக்கள் வெற்றி பெற்றால், காவலர்களைக் கொண்டு, இந்துப் பெண்களைத் தூக்கிச் செல்வர்” எனப் பிரச்சாரம் செய்துள்ளனர். உண்மைக்கு புறம் பான இந்த வெறுப்பு அரசியல் பிரச்சாரம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்லாமியருக்கான இடுகாடுகள் ( கபர்ஸ் தான் ) மிக அதிகம் என்றும், இந்துக்களுக்கான மயானங்கள் குறைவு என்றும் பிரதமர் மோடியே பிரச்சாரம் செய்தார். இது அப்பட்டமான பொய் பிரச்சாரம் மட்டுமல்ல. திட்டமிட்ட வெறுப்பு அரசியல் ஆகும். இத்தகைய வெறுப்பு அரசியலுக்கு ஊடகங்களும் துணை செய்தன. இது `ஹிட்லரின் நாஜிக் கட்சி ஆட்சிக்கு வருவதற்காக, யூதர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டதாக செய்த பொய்ப் பிரச்சாரத் தைப் போன்றது. மோடி, யோகி ஆதித்யநாத் அல்லது மகேஷ் சர்மா என நபர்கள் மட்டும் பொறுப்பல்ல. இந்த பிரச்சாரம் திட்டமிடப் பட்ட ஒன்று. இந்து ராஷ்ட்ரா என்ற முழக்கத்தை, சாவர்க்கர், கோல்வால்கர் போன்றோர் முன் வைக்கும்போதே பிறந்ததாகும். உதாரணத்திற்கு பாஜக இத்தேர்தலில், பசு பாதுகாப்பு என்ற முழக்கத்தை தீவிரமாக்கியது.
முகம்மது இக்லக் என்பவர் கொல்லப்பட்டார். மீரட் சுற்றுவட்டாரப்பகுதி தொழில் வளர்ச்சி பெற்ற பகுதி. இருந்தாலும் மக்கள் சிந்தனையில், தொழில் வளர்ச்சிக்கேற்ற, வளர்ச்சி ஏற்பட வில்லை. இடதுசாரிகளோ, பாஜகவுக்கு எதிரான கருத்துவலிமை கொண்ட அமைப்புகளோ செயல்படவில்லை. எனவேதான் பாஜக தலைவர் கள் ஒருபுறம் பசு பாதுகாப்பு என முழங்கவும், மறுபுறம் மாட்டிறைச்சித் தொழிற்சாலையையும் நடத்த முடிந்தது. இந்த முழக்கம் தேர்தலுக்குப் பயன்பட்டது.

புதிய முதல்வர் ஆதித்யநாத், சட்டவிரோத மாட்டிறைச்சி கூடம் தடை செய்யப்படும் என அறிவித்து செயல்படுகிறார். இதுபோன்ற காரணத்தால், குஜராத் மற்றும் மத்தியப் பிரதேச பாஜக அரசுகள் பசுவதையில் ஈடுபடுவோருக்கு ஆயுள்தண்டனை, மரண தண்டனை என கூவு கின்றன. பாஜகவின் இந்த உணவு வெறுப்பு அரசியலை காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகள் வலுவான எதிர் பிரச்சாரத்தின் மூலம் எதிர்கொள்ளவில்லை.
உணவு, உற்பத்தியின் தன்மைக்கேற்றது. உ.பி., உள்ளிட்ட வட இந்தியாவின் மையப் பகுதி முழுவதும், மேய்ச்சல் மற்றும் விவசாய உற்பத்தி சார்ந்தது. எனவே உணவுப் பொருள் பட்டியலில் மேய்ச்சலுக்கு உள்ளான கால்நடைகள் இருப்பது இயல்பு. குறிப்பாக உழைப்பாளி மக்களின் உணவாகவும் கால்நடைகள், அமைகின்றன. இந்த பண்பாட்டு அம்சம் அல்லது உற்பத்தி வளர்ச்சி குறித்த பார்வை, முதலாளித்துவ கட்சிகளுக்கு இல்லை. அதன் விளைவே ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங் பரிவாரத்தின் வெறுப்புப் பிரச்சாரத்தை முறியடிக்க முடியவில்லை.

சாதித் திரட்டலுக்கு உதவிய லவ் ஜிகாத்:
இந்துத்துவா வகுப்புவாதம், மத அடிப் படையில் மட்டும் மக்களைப் பிளவுபடுத்த வில்லை. சாதி ரீதியில் அரசியல் செய்து வந்த கட்சிகளிலும் சரிவை ஏற்படுத்திய முழக்கமாக லவ் ஜிகாத் அமைந்தது. பாஜக மத்திய ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றியவுடன் முன்வைத்த முழக்கம் லவ் ஜிகாத். அதாவது, இஸ்லாமிய இளைஞர்கள் ஆடம்பர உடை அணிந்து இந்துப் பெண்களை ஏமாற்றுகின்றனர். அவர்கள் வீசும் காதல் வலையில் இந்துப் பெண்கள் மயங்கும் நிலை உள்ளது போன்ற கருத்துக்களை விதைத் தனர்.
சமாஜ்வாதி யாதவ் சாதியினரின் வாக்கு களைக் பெரும்பான்மையாகக் கொண்ட கட்சி, பாஜகவின் மேற்குறிப்பிட்ட வகையிலான பிரச் சாரம், உ.பியின் இதர சாதிய இந்துக்கள் என்ற பிரிவினரிடம் ஏற்புடையதாக அமைந்தது. அதன் விளைவு அத்தகைய குணம் கொண்ட சிறு அரசி யல் கட்சிகள் பாஜகவுடன் தேர்தல் உடன்பாடு செய்து கொண்டன. அது பாஜகவின் வாக்கு சதத்தைத் தக்கவைக்கவும், இந்த அளவிற்கான வெற்றிக்கும் வழிவகுத்தது. மீரட் போன்ற மேற்கு உ.பி.யில் ஜாட் பிரிவினர் வசிக்கும் பகுதியில் கணிசமான மனமாற்றத்தை, இது போன்ற பிரச் சாரங்கள் உருவாக்கின. காதல் மீதும் வெறுப்பு அரசியலை மேற்கொள்ள முடியும் என்பதற்கான உதாரணமாக இது அமைந்துள்ளது. ஆதித்யநாத் முதல்வர் பொறுப்பேற்றபின் ரோமியோக்களை ஒழிக்கும் காவலர் படையை அமைத்துள்ளது இந்தப் பின்னணியில்தான். இது மனித குல வளர்ச்சிக்கு எதிரானது.

பொதுவாகக் கலவரங்கள் மூலம் பாஜகவும், ஆர்.எஸ்.எஸ் திட்டமிட்டு தனது ஆதரவு தளத்தை விரிவாக்கம் செய்துகொண்டுள்ளன என்பதை இடதுசாரிகளுக்கு அப்பாற்பட்ட ஜனநாயக எண்ணம் கொண்ட ஆய்வாளர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். இந்தியாவில் 2012 ல் 668 வகுப்புக் கலவரங்கள் நடந்துள்ளது. அதில் உ.பி. யில் நடந்தது 118. 2013 ல் மொத்தம் 823 கலவரங் கள் நடந்துள்ளன. அதில் உ.பி.யில் மட்டும் 247. 2014 ல் மொத்தம் 644, உ.பி.யில் மட்டும் 133. இந்த கலவரங்கள் உ.பி.யை மையப்படுத்தி கவனம் செலுத்தப்பட்டதைக் குறிப்பிடுகிறது.
அதே நேரத்தில் மொத்த வகுப்பு கலவரங் களும் உ.பி., குஜராத், மத்தியப் பிரதேசம், கர்நாடகா, ராஜஸ்தான், மகாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களில் நடந்துள்ளது. பாஜக நீண்ட காலமாக ஆட்சியில் உள்ள குஜராத், ம.பி., காங் கிரஸ் ஆட்சியில் உள்ள கர்நாடகா, காங்கிரஸ் வசம் இருந்து பாஜக கைப்பற்றிய ராஜஸ்தான், மகாராஷ்ட்ரா. இது வெளிப்படுத்தும் உண்மை நீண்டகாலமாக பாஜக ஆட்சியில் இருப்பதற்கும், காங்கிரஸ் அல்லது பிராந்திய முதலாளித்துவ கட்சிகளிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றவும், பாஜகவிற்கு பிரதான ஆயுதமாக கலவரங்கள் பயன்படுகின்றன.
உ.பி.யில் நடந்துள்ள கலவரங்கள் பாஜகவிற் கான வாக்கு வங்கியைப் பலப்படுத்தியுள்ளன. குறிப்பாக முசாஃபர் நகர் பகுதியில் நடந்த கலவரங்கள் 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னரும், பாஜகவின் செல்வாக்கு வாக்கு சதத் தில் பிரதிபலிக்கக் காரணமாக அமைந்துள்ளது. குறிப்பாக முதல்வர் ஆதித்யநாத், ஐந்து முறை நாடாளுமன்ற உறுப்பினர்; இந்து யுவ வாகினி என்ற குண்டர் படையைக் கொண்டவர். அது நடத்திய தாக்குதல்கள் குறைத்து மதிப்பிடக் கூடியது அல்ல.

இரட்டையர்களாக செயல்படும் தாராளமயம் மற்றும் வகுப்பு வாதம்:
வகுப்புவாதம் எல்லா இடங்களிலும் தாராள மய பொருளாதாரக் கொள்கைகளுக்கு உதவி செய்து வருகிறது. தாராளமயம், வகுப்புவாதம் போன்ற அடிப்படைவாதத்தைத் தன் வளர்ச் சிக்குப் பயன்படுத்திக் கொள்கிறது. எனவே இரண்டும் இரட்டையர்களாகச் செயல்பட்டு வருகின்றன. கடந்த காலத்தில் பிரிட்டிஷ் காலனி யாதிக்க ஆட்சி, இந்தியாவில் மக்களைப் பிளவு படுத்தும் அரசியலை கையாண்டது. சுரண்டலை தொடர்ந்து செயல்படுத்தவும், காலனியாதிக்கத் திற்கு எதிராகப் போராடிய மக்களைப் பிளவு படுத்தவும் இந்த கொள்கை பயன்பட்டது.
இன்றைய பாஜக இதே போன்றதொரு பிளவு வாதக் கொள்கையைத்தான் கையாண்டு வருகிறது. விலைவாசி உயர்வு, வறுமை உள்ளிட்ட பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகும் மக்களின் எதிர்ப் புணர்வை திசைதிருப்பி, இந்துத்துவ நோக்கத்தை நிறைவேற்றும் வகையில், வடிவமைக்கப்பட் டுள்ளது. இன்று காலனியாதிக்கத்திற்கு பதிலாக நவகாலனியாதிக்கம் பின்பற்றப்படுவதால், பாஜக ஆட்சியாளர்களே செயல்படுத்துகிறார்கள். அந்த வகையில் புதிய காலனியாதிக்கத்திற்கு சேவை செய்யும் பணியை, பாஜகவின் மத்திய ஆட்சி சிறப்பாக செய்கிறது.
மோடி பிரதமர் வேட்பாளராக முன்னிறுத் தப்பட்ட போது, வளர்ச்சி என்ற முழக்கம் பேரிரைச்சலாக இருந்தது. இந்த மூன்று ஆண்டு களில், எந்த ஒரு துறையிலும் சிறப்பான வளர்ச் சியைப் பெற்றதாகக் குறிப்பிட்டு சொல்ல முடி யாது. அதேநேரம் மேலே குறிப்பிட்ட எண்ணிக் கையில் வகுப்புவாத கலவரங்கள் நடந்துள்ளன. ஆதித்யநாத் மற்றும் அவர் போல் உள்ள பரி வாரங்கள் கொடூர வார்த்தைப் பிரயோகங்களை சிறுபான்மையினரை நோக்கிப் பேசியபோது, மோடி கண்டுகொள்ளவில்லை. அதுவே மோடி தேர்தல் அறிக்கை குறித்து மக்கள் கேள்வி கேட் காமல் திசை திருப்புகிறது. அத்தகைய விஷத் தன்மை கொண்ட பிரச்சாரகர் ஆதித்யநாத்தை, ஒரு பெரிய மாநிலத்தின் முதல்வராக ஆர்.எஸ். எஸ். தேர்வு செய்துள்ளது.

ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போல், இந்துத்துவாவின் கொள்கை அமலாக்கத்திற்கு, மோடியும், ஆதித்யநாத்தும் செயல்படுவார்கள் என ஆர்.எஸ்.எஸ் எதிர்பார்க்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்களும் தங்களின் சலுகைகளைப் பாது காக்க இந்த அணுகுமுறை பயன்படும் என்றே கருதுகின்றனர். அதனால்தான் எந்த ஒரு ஊடக மும் ஆதித்யநாத் தேர்வை விமர்சிக்கவில்லை. தாராளவாதத்தை ஆதரிக்கிற மாநில முதலாளித்துவ கட்சிகளும், இந்த அபாயத்தை உணர்ந்து, கருத் துப் பிரச்சாரம் எதையும் செய்யவில்லை. கம்யூ னிஸ்டுகள் இது குறித்து விமர்சித்து வருகின்றனர்.

மோடி அரசின் ‘செல்லாநோட்டு’ அறிவிப் பின் போது, அதற்குக் கண்டனம் தெரிவித்த சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள், பாதிக்கப்பட்ட மக்களைத் திரட்டி – களப் போராட்டம் மூலமான நிர்ப்பந்தத்தைத் தர வில்லை. பாஜக மத்திய அரசும் தேர்தலை காரண மாக வைத்து, முதலில் வெளிவந்த 500 ரூபாய் நோட்டுக்களை, உ.பி போன்ற இடங்களில் விநி யோகம் செய்தது. இது உ.பியில் விரைவில் பணத் தட்டுப்பாட்டைப் போக்க பயன்பட்டது. அந்த வகையிலும் பாஜக தனது செல்வாக்கை தக்க வைத்துக் கொண்டது.

சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜ் கட்சியும் மாநிலக்கட்சிகள்தான் என்றபோதிலும் அவர்கள் பிராந்திய அடையாளங்களை முன்வைக்கவில்லை, உத்தரப் பிரதேசத்தில் பிராந்திய அரசியலும் வளர்த்தெடுக்கப் பட்டிருக்கவில்லை. தங்களை தேசிய அடையாளங்களுடன் இணைத்துப் பார்த் துக் கொள்ளும் உ.பி. மக்களுக்கு பாஜகவின் ‘இந்து தேசியவாத’ அழைப்பு ஈர்ப்பைக் கொடுத் துள்ளது. வகுப்புவாத நெடியுடன் அந்தப் பிரச் சாரம் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு மாறாக சக்திகள், கொள்கை அடிப்படையிலான மாற்றை அவை முன்நிறுத்தவில்லை.
“பிராந்திய முதலாளித்துவ கட்சிகள் வகுப்பு வாதத்தை எதிர்த்தாலும், தாராளமய பொருளா தாரக் கொள்கைகளுக்கு உதவுகிற போது, வகுப் புவாதத்துடன் சமரசம் செய்து கொள்கிறது. மக்களை துன்பத்தில் இருந்து மீட்கவில்லை,” என்ற மார்க்சிஸ்ட் கட்சியின் மதிப்பீடு சரியானது. வகுப்புவாதத்தை எதிர்ப்பதற்காக தேர்தல்அணி மட்டும் ஏற்படுத்துவது பலன் கொடுக்காது. எனவே, உத்தரப்பிரதேசத்தில் மாற்றுக் கொள் கைகளுடன் இடதுசாரி கட்சிகள் தனித்து போட்டி யிட்டன. அமைப்பு வலிமை குறைவானதன் காரணமாக, இந்தச் செய்தியை மக்களிடம் சென்று சேர்க்கமுடியவில்லை.

ஆட்சி நிர்வாகத்தில் பாஜக:
ஆளுநர் நியமனம் மத்தியில் ஆளும் கட்சியின் விருப்பத் திற்கு உரியவராக இருக்கிறார். வரம்புகள் மீறப் பட்டுள்ளன. மோடி ஆட்சிக்கு வந்தபின் 26 ஆளுநர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். குறிப்பிட்ட துறையின் பிரமுகர் என அந்தஸ்தில் யாரும் நிய மிக்கப் படவில்லை. கேரள ஆளுனர் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி. அவர் நியமனம் முன் எப் போதும் இல்லாத ஒன்று என்பதனால் சர்ச் சைக்கு உரியதாக இருந்தது.
மோடி பிரதமர் பொறுப்பு ஏற்றபின், அருணா சலப்பிரதேசம், உத்தர்காண்ட் மாநிலங்களில் ஆளுநர்களின் அத்து மீறலைப் பார்த்தோம். தொடர்ந்து டில்லி, புதுச்சேரி பிரதேசங்களிலும் சர்ச்சை எழுந்துள்ளது. திரிபுரா ஆளுநர், சமூக வலைத்தளத்தில் பாஜக ஆதரவு செய்திகளை வெளியிட்டுள்ளார். இது அரசியல் சட்டத்திற்கு எதிரானது. ஆளுநர் அரசியல் சட்டபடி அங்கீ கரிக்கப்பட்டவரா என்பதில் நீண்ட சர்ச்சை நடந்து, இறுதியாக அரசியல் சட்ட அங்கீகாரம் கிடைத்தது. இப்போது அப்படி ஒரு அங்கீகாரம் தேவையில்லை என்று சொல்லும் அளவிற்கு, கோவா, மணிப்பூர் சட்டமன்றத் தேர்தல் முடிவுக் குப் பின் ஆளுநர்களின் நடவடிக்கைகள் அமைந் துள்ளன.
தனிக்கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை இல்லாத நிலையில் மாநிலத்தில் ஆட்சி அமைக்க எந்த அடிப்படையில் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்பதை, சர்க்காரியா, அவரைத் தொடர்ந்து வெங்கடாச்சலய்யா ஆகியோர் அளித்த பரிந்துரைகள் தெளிவுபடுத்துகின்றன. முதலில் கூட்டணி சேர்ந்து போட்டியிட்ட கட்சி களின் எண்ணிக்கையைப் பொறுத்து அழைப்பு விடுக்க வேண்டும். அடுத்து தனிப்பெரும் கட்சிக்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்து, பின் பெரும் பான்மையை நிருபிக்க செய்ய வேண்டும். மூன்றா வதாக தேர்தலுக்குப் பின் கூட்டணி அமைத்துக் கொண்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்க வேண் டும். நான்காவதாக தேர்தலுக்குப் பின் கூட்டணி அமைத்துக் கொண்ட, ஆட்சியில் இடம் பெறும் சுயேட்சைகள் கொண்ட அணிக்கு அழைப்பு விடுக்க வேண்டும்.
கோவாவில் மிருதுளா சின்ஹா, மணிப்பூரில் நஜ்மா ஹெப்துல்லா ஆகியோர் செய்தது அரசி யல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது. எதேச் சதிகார அரசு அமைகிற போது, இருக்கிற உரிமை களும் பறிபோகும் என்பதற்கு இது ஒரு உதாரணம் ஆகும். அதாவது, உ.பி.யில் பாஜக 39 சதமும், கோவாவில் 30 சத வாக்குகளையும், மணிப்பூரில் 35 சத வாக்குகளையும், பெற்றுள்ள நிலையில் இந்த எதேச்சாதிகாரம் தலைதூக்குகிறது. மத்தி யில் பாஜக 31 சத வாக்குகளைப் பெற்றுள்ள சூழலில் எதேச்சாதிகாரத்தைப் பின் பற்றுகிறது. எனவேதான் தேர்தல் சீர்திருத்தம் அவசியம். விகிதாச்சார பிரதிநிதித்துவம் மிக அதிகமான முக்கியத்துவம் பெறுகிறது.
நிறைவாக:
உ.பி. முதல்வராக யோகி ஆதித்யநாத் நியமிக் கப்பட்டுள்ளார். ஆர்.எஸ்.எஸ். தன் வகுப்புவாத நிகழ்ச்சிநிரலை தீவிரமாக முன்னெடுக்கிறது. இந்தச் சூழலை எதிர்கொள்ள களத்தில் முன்நிற்க வேண்டும். அனைத்து ஜனநாயக சக்திகளும், மதச்சார்பின்மைக்கான சக்திகளும் ஒருங்கிணைந்து போராட வேண்டும். மக்கள்விரோதப் பொருளா தாரக் கொள்கைகளையும் தொடர்ச்சியாக அம் பலப்படுத்த வேண்டும். கதம்பக் கூட்டணிகள் அல்லாமல், பொதுக்கொள்கைகள் மற்றும் திட்டங்களின் அடிப்படையில், பாஜகவுக்கு எதி ரான கட்சிகள் இணைந்து போராட வேண்டும். மதச்சார்பற்ற ஜனநாயகம், சமூகநீதி மற்றும் மக்களை மையப்படுத்திய பொருளாதாரக் கொள்கை களுக்கான அணிசேர்க்கைதான் வகுப்புவாத-தேசியத்தை எதிர்கொள்வதற்கான மாற்று வழியாகும். சமூகத்தில் வலுப்பெற்றுவரும் வகுப் புவாத உணர்வுகளை அழித்து மதச்சார்பின்மை எண்ணங்களை வலுப்படுத்திட சமூகத்தளத்தி லும் பணியாற்றவேண்டும்.
இந்த இலட்சியங்களைக் கொண்ட இடது ஜனநாயக அணி அமைப்பதென்றே மார்க்சிஸ்ட் கட்சியின் எதிர்காலப்பார்வை அமைந்துள்ளது. அந்த லட்சியத்தை அடைவதில்தான் இந்தியா வின் எதிர்காலமும் அமைந்துள்ளது.