மாறியிருக்கும் – நாகரீகத்தின் இலக்கணம் …

  • பேராசிரியர் ஹேமா

(முதல் பாகம் பாரம்பரியத்தின் கட்டமைப்பு செப்டம்பர் இதழில் வெளியானது. இந்த இரண்டு கட்டுரைகளும் ருக்மிணி தேவி நினைவாக பேராசிரியர் ரொமிலா தப்பார் அவர்கள் உரையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டவை.)

நாகரீகம் (Civilization) – என்ற கருத்து தற்போது மிகவும் சிக்கலானதாக உருப்பெற்றுள்ளது. முன்பு இந்தச் சொல் மேல்தட்டு, மக்களின் பண்பாட்டை மட்டுமே குறிப்பதாகக் கருதப்பட்டது. ஆனால் தற்போது நாகரீகம் என்பது பல்வேறு பண்பாடு களை உள்ளடக்கியது என்று கருதப்படுகிறது. பண்டைக் காலத்தில் நிலவிய வரலாற்றுப் பூர்வ மான தொடர்புகளைக் கவனிப்பதில் தற்போது ஏற்பட்டுள்ள புதிய பார்வைதான் இதற்குக் காரணமாகும்.

கேள்விக்குள்ளாகும் நான்கு கூறுகள்:
17-ம் நூற்றாண்டில், ஒரு நாகரீகத்தின் இதய மாகச் சிறப்பு மிக்க ஒரு காலத்தைச் செவ்விய காலம் என்று குறிப்பிட்டார்கள். இந்தக் காலம் அந்தப் பண்பாட்டின் மிகச் சிறந்த பகுதியாக கருதப்பட்டது. பின்னால் தொடர்ந்த கலாசாரங் களை, இந்தச் செவ்விய காலத்தோடு ஒப்பிட்டுப் பார்த்து, அவை எத்தகையவை என்பதை முடிவு செய்தனர். மேற்கூறிய விளக்கத்தில் செவ்விய காலம் என்பதே -ஏதோ மாறாமல் நிலைத்து நிற்கும் தன்மை உடையது என்ற கருத்து காணப் படுகிறது. இத்தகைய செவ்விய காலம் (Classical period) அந்தச் சமுதாயத்தின் சூழலச்சு என்றும் கருதப்பட்டது.

நாகரீகம் என்ற கருத்துக்கு நான்கு முக்கியக் கூறுகள் குறிப்பிடப்பட்டன. முதலாவதாக ஒவ் வொரு நாகரீகமும் ஒரு குறிப்பிட்ட பூகோளப் பகுதியில் பரவி இருந்ததாகக் கருதப்பட்டது. மொழி- இன்னொரு கூறு. மூன்றாவது சமயம்; அடுத்து செவ்விய காலம் – என்பவையாகும் ஆனால், இந்த  நான்கு கூறுகளுமே தற்போது கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளன.

இடமாற்றமும், பண்பாட்டு பரிமாற்றமும்:
பூகோள வரைபடம் வரைவது எளிமையாக நடந்தபோது, ஒரு நாகரீகத்தின் நிலப்பரப்பைக் குறிப்பிடுவதும் எளிதாக இருந்தது. அதற்கு முன்பு நாடுகளுக்கு இடையே நதிகள், மலைகள், காடு கள், பாலைவனங்கள்இவைதான் எல்லைகளாக இருந்தன. இந்த இடங்களில் மக்கள் போக்கு வரத்து ஓயாமல் நடந்தன. இதனால் பண்பாடு களில் பல கலப்புகள் நிகழ்ந்தன.

பல நூற்றாண்டுக் காலம் இந்தியாவில் வட மேற்குப் பகுதி, எல்லைப் பகுதியாக விளங்கியது. ஆப்கானிஸ்தானம், மத்திய ஆசியா, இரான், இந்தியா- ஆகிய நாடுகளிலிருந்து வந்த மக்கள் தங்கும் இடமாகவும் இருந்தது, வியாபார மைய மாக இருந்தது, பல்வேறு மதங்கள், இங்கிருந்து பரவின. பல்வேறு திசைகளை நோக்கிய படை யெடுப்புகளும் இங்கிருந்து தொடங்கின. வணிகர் களோடு, புத்தத் துறவிகளும் இங்கிருந்துப் பல நாடுகளுக்குப் பயணங்கள் மேற்கொண்டனர். ஆப்கானிஸ்தான், உஸ்பெக்கிஸ்தான் போன்ற இடங்களில் மடங்களை நிறுவினர். கோபி பாலை வனத்தின் வழியே சீனாவுக்கும் சென்றனர்.

சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு, சூஃபி பிரிவினர் மேற்கு மற்றும் மத்திய ஆசியாவிலிருந்து வந்த போது, இதே பாதையில்தான் பயணம் செய்தனர் இந்தியாவின் கிழக்குப் பகுதிக்குக் கடல்தான் எல்லையாக விளங்கியது கடல் கடந்து, தெற்கு ஆசியா, தென் சீனா ஆகிய இடங்களோடு இந்தியா நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தது. அங்கு இன்றும் காணப்படும். நினைவுச் சின்னங் களே இதற்குச் சான்று. மேற்குக் கரைப் பகுதிக்கு அதற்கே உரிய வரலாறு உண்டு. அங்கு அரேபிய வணிகர்கள் குடியேறினர். இவர் வணிகர்கள் உள்ளூர் மக்களோடு திருமண உறவு கொண்டு, இந்தோஅரபியர்கள் என்ற புதிய மக்கள் பிரி வையே உருவாக்கினர். போராஸ்,  கோஜா, வாயத், மாப்பினா- போன்ற இஸ்லாமியப் பிரி வினர் அனைவரும் இத்தகைய இந்தோ-அராபியர்கள்தான்.

நாகரீகம் எல்லைக்குள் அடங்குவதில்லை:
விந்திய மலைக்குத் தெற்கே உள்ள பகுதி, இந்தியப் பெருங்கடலின் மையப் பகுதியில் நீண்டு நிற்கிறது. இதனால், இந்தப் பகுதியில் ஏற்படும் பாதிப்புகள் வேறுவிதமானவை. ஆனால் இந்த அனுபவங்களையும், இந்திய நாகரீகத்தின் ஒரு பகுதியாக இணைக்க வேண்டியுள்ளது. மேற்கூறிய நிலையில் இந்திய நாகரீகம் என்று கூறும் போது. அதற்கு ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பு என்று கூறி, பூகோள எல்லைகளை வகுப்பது எப்படி? இதுவரையில், நாம் இந்திய வரலாற்றைக் கங்கைச் சமவெளியின் பின்னணியிலிருந்துதான் பார்த்துதோம். அண்மைக் காலம் வரையில், வரலாறு இவ்வாறுதான் எழுதப்பட்டது. ஆனால் இந்திய நிலப்பரப்பின் கடலோரப் பகுதி களிலிருந்து பார்க்கும்போது, மிகவும் முக்கிய மான, தொலை தூரத் தொடர்புகளைக் காண முடிகிறது. பூகோள வரைபடத்தின் எல்லைக் கோடுகள் நாடுகளைக் சுருக்கித் தனிமைப்படுத்து கின்றன. ஆனால் நாடுகளின் விளிம்புப்பகுதி களிலிருந்து பார்க்கும்போது, நமது பார்வை, எல்லைகளைக் கடந்து, பரந்த விரிகிறது. காகிதத் தில் வரைந்த எல்லைகளைத் தாண்டிச் செல் கிறது.

கடந்த கால மக்களுக்கு , மண்ணின் மைந்தர் கள்- என்றும் பிறர் வெளிநாட்டவர்- என்றும் முத்திரை குத்துகிறோம். இவை பிரிட்டன் இந்தி யாவை ஆண்ட காலத்தில், காலனீய வரலாற்று ஆசிரியர்களால், வரையறுக்கப்பட்ட நிலைபாடு கள். காலனீய ஆட்சிக்கு முந்தைய காலங்களில். இந்த எல்லைகள் பொருளற்றதாகின்றன. கடந்த காலங்களில், ஒரு குழுவினர் வெளிநாட்டவரா இல்லையா என்பது, அவர்களுடைய பண்பாட் டுக் கூறுகளைக் கொண்டுதான் முடிவு செய்யப் பட்டது. அவர்களுடைய மொழி, பழக்க வழக்கங் கள் சடங்குகள் போன்றவற்றின் அடிப்படையில் தான், அவர்களை வெளிநாட்டவரா இல்லையா என்று முடிவு செய்தனர். பூகோளப் படத்தில் வரைந்த எல்லைக்கோடுகளைக் கொண்டு அல்ல.

ஒன்றுகலக்கும் பண்பாட்டுக் கூறுகள்:
அதேபோல் மிலேச்சன் என்றால் அந்நியன் அல்லது சாதிப்பிரிவை சாராதவன் என்றுதான் பொருள்படும். இந்தியத் துணைக் கண்டத்திற்குட் பட்ட சில இடங்கள். மிலேச்சர்களின் பண்பாடு நிலவிய இடங்களாகக் கருதப்பட்டன. வடமொழி நூல்களில், குறிப்பிடப்பட்ட காடுவாடி மக்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம் இவர்கள் ராட்சதர்கள் என்று வருணிக்கப்பட்டனர். இவர் கள் அந்நியர்களாகப் பார்க்கப்பட்டனர். துவக்க காலத்தில், யவனர்கள் துருஷ்கர்கள்- இவர்களும் அந்நியர்களாகவே கருதப்பட்டார்கள். ஆனால் சிறிது, சிறிதாக அவர்களுடைய கலாசாரம் ஏற்கெனவே இந்தியாவில் நிலவிய பண்பாட்டுக் கூறுகளோடு ஒன்றிக் கலந்துவிட்டன.

நாம் கிழக்குத் திசையை நோக்கினால், கம் போடிய மன்னர்கள், அற்புதமான அங்கோர் வாட் கோவிலைக் கட்டியிருப்பதைப் பார்க்க லாம் அதில் ராமாயண மஹாபாரதச் சிற்பங்கள் க்மேர்  சிற்பக்கலைப் பாணியில் செதுக்கப்பட்டி ருப்பதைக் காணலாம். ஜாவாவை ஆண்ட மன்னர்கள் புத்த மதத்தைக் கொண்டாடும் வகையில் மாபெரும் ஸ்தூபியைப்போலக் கட்டி னார்கள். இந்த மன்னர்கள் ஓர் அயல் நாட்டுக் கலாசாரத்தை ஆதரிப்பதாக நினைத்தார்களா?

ஒரு மொழி மட்டும் போதாது:
ஒரு நாகரீகத்தின் இரண்டாவது முக்கிய அம்சம் மொழி. ஒரு நாகரீகத்தைப் பொருத்த வரை, அதன் பண்பாட்டைப் பிரதிபலிப்பதற்கும் மக்களோடு தொடர்பு கொள்ளவும் ஒரே ஒரு மொழிதான் தேவை என்பது கருத்தப்படுகிறது. ஐரோப்பாவில் கிரேக்கமும் மேற்கு ஆசியாவில் அராபிய மொழியும், இந்தியாவில் சமஸ்கிருத மும் இத்தகைய மொழிகளாகக் கருதப்பட்டன. இந்த மொழிகளில் எழுதப்பட்ட நூல்கள் முக்கியமான, முதல் நூல்களாகக் கருதப்பட்டன. இந்த மொழிகள் எழுதப்பட்ட நூல்களில் பிராந்திய கலாசாரங்கள் கூட அடங்கிவிட்ட தாகக் கருதப்பட்டன. பல்வேறு மொழிகள் பேசப்பட்ட ஒரு நாட்டின் கலாசாரத்தைப் புரிந்து கொள்ள குறிப்பிட்ட மொழியில் எழுதப் பட்ட நூல்களை மட்டும் பயன்படுத்துவது ஏற்புடையதல்ல.

இந்தியப் பண்பாட்டைக் குறித்து முதன் முதலில் படிக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்ட பிராக்ருதமொழிக் கல்வெட்டுக்களாகும். இவை கி.மு முதல் ஆயிரமாண்டைச் சார்ந்தவை. சமஸ் கிருதத்தில் மொழியிலும் முதல் முதலாகக் கிடைத்தவை கல்வெட்டுக்கள் தான். மேற்கூறிய ஆவணங்கள் கி.பி.முதல் ஆயிரமாண்டைச் சேர்ந் தவை. வேதங்களும் இதிகாசங்களும் கல்வெட்டுக் களைக் காட்டிலும் பழமையானவை. துவக்கத் தில், வேதங்களும், இதிகாசங்களும் வாய்வழிச் செய்தி பரப்பும் பண்டைக் கலாசா ரத்தைச் சேர்ந்தவை வேத பிராமணிய கலாசா ரத்தை எதிர்த்த , பௌத்த, சமண சித்தாந்தங்கள், முதலில் பிராக்குதம், பாலி போன்ற மொழிகளில் எழுதப்பட்டன. சித்தாத்தங்களைப் பரப்புவதற் கும், போதிப்பதற்கும், இந்த மொழிகள்தான் பயன்பட்டன. கிறித்துவ சகாப்தத்தின் துவக்கத்தி லிருந்து பாலி, பிராக்குத மொழிகளுக்கு மாற்றாக மேல்தட்டு மக்களால் சம்ஸ்கிருதம் பயன்படுத்தப் பட்டது. ஆனால் பிராக்ருதமும் பேசப்பட்டது. ஆனால் அந்த மொழிக்கு அந்தஸ்து குறைந்தது. பெண்களும், தாழ்த்தப்பட்ட சாதி மக்களும் பேசும் மொழியாகப் பழக்கத்தில் இருந்தது.

இந்தியாவின் பண்டைய வரலாற்றைக் காலனீய வரலாற்றாசிரியர்கள் ஆராயத் தொடங் கியபோது, அவர்களுக்கு ஆலோசனை வழங்கிய வர்கள் அந்தணர்கள். அவர்கள் சமஸ்கிருத நூல்களுக்குத்தான் முதலிடம் அளித்தனர். வெகு காலத்திற்குப் பின்னர்தான் அவர்களுடைய கவனம் வேறு மொழிகளில் எழுதப்பட்ட. பௌத்த, சமண நூல்கள், பிற மொழி நூல்கள் இவைகளின் மீது திரும்பியது.

பௌத்தத்தின் முக்கியத்துவம்:
இந்து மதத்தை, இந்திய நாகரீகத்தைப் பிரதி பலிக்கும் ஒரே சமயம் என்று முடிவு செய்ததிலும் இதே போக்கு நிலவியதைப் பார்க்கலாம். ஒரு கால கட்டத்தில், புத்த மதம் தான் இந்தியாவில் பெரும் செல்வாக்கு பெற்ற சமயமாக விளங்கி யது. பின்னர் இந்தியாவில் பௌத்தம் வீழ்ச்சி யடைந்தது என்றும் வரலாற்று ஆசிரியர்கள் பின்னாட்களில்தான் அறிந்து கொண்டனர். சமயம் என்பதை நாகரீகத்தின் முக்கியப் பகுதி யாக்கி, இந்தியாவில் இந்து மதமும், சீனாவில் கன்ப்பூசிய மதமும்தான் பெரும் சமயங்கள் என்று கூறுவதன் மூலம் ஆசியாவில் புத்த மதத்திற்கு முக்கியத்துவமே மறுக்கப்பட்டது. ஆனால் ஆசியாவின் வரலாற்றில், பண்டைக் காலத்தின் முக்கிய மதமாக விளங்கியது புத்தமதம் தான் என்று குறிப்பிடலாம். சமணம், இஸ்லாம் ஆகிய இருமதங்களும், சில காலகட்டங்களில், இந்தி யாவின் சில பகுதிகளில் முக்கியத்துவம் பெற்று விளங்கின. ஆனால் இவையும் முக்கியமானவை என்று வரலாற்று அறிஞர்கள் நினைவிக்க வில்லை.

சாதிப் பிரிவுகளின் மதம்:
இந்து மதத்தின் அமைப்பு கிறித்துவ, இஸ்லாம் மதங்களிலிருந்து வேறுபட்டிருந்தது. காலனியை ஆண்ட ஐரோப்பிய அதிகாரி களுக்கும், ஐரோப்பிய வரலாற்று ஆசிரியர் களுக்கும் புரியம்படி, இந்து மத அமைப்புக்களை மாற்றியமைக்க வேண்டியிருந்தது. இந்த முயற்சி வேறுவிதமான சிக்கல்களை எழுப்பியது. இந்து மதம், வரலாற்றில் ஒரு காலகட்டத்தில் அவ தரித்த ஒரு போதகரின் உபதேசங்களைச் சுற்றி வளர்ந்த மதமல்ல. இதற்கு ஒரு குறிப்பிட்ட தேதியிட்டுக் காலத்தையும் வரையறுத்தச் சொல்ல முடியாது. இந்து மதம் பல்வேறு பிரிவு  களைக் கொண்டது. ஒவ்வொரு பிரிவும் தனிப் பட்ட மதமாக இயங்கக்கூடியது. ஒரு சில பிரிவுகள், ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. இந்தப் பிரிவுகள் ஒவ்வொன்றிற்கும் தனிப்பட்ட தெய்வமும், சடங்குகளும் உண்டு. இந்துமதம் சாதாரணமான அளவு நீண்ட காலம் இயங்கி வருவதற்கு, இந்த உட்பிரிவுகள் இந்து மதத்தின் பகுதிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டதுதான் காரணம் இந்து மதம் ஒற்றைத்தன்மை வாய்ந்த தல்ல வேற்று மதத் தெய்வங்களுக்கு மரியாதை செலுத்துவதைத் தடுத்ததில்லை. இதில் சடங்கு களைச் சரியான முறையில் செய்வதற்குத்தான் முதலிடம் அளிக்கப்பட்டது. மதத்தைக் குறித்த தத்துவக் கருத்துக்களுக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. எல்லாப் பிரிவுகளையும் உள்ளடக்கிய திருச்சபை – போன்ற அமைப்பு இல்லை. இந்துமதத்தின் உட்பிரிவுகள் பலவும், குறிப்பிட்ட சாதிகளோடு தொடர்புள் ளவை. இந்தப் பிரிவுகளும் சாதிப்பிரிவுகளைப் போலவே- உயர்ந்தவை, தாழ்ந்தவை- என்று பல்வேறு அடுக்குளாக நிறுவப்படுவது தவிர்க்க முடியாததாகிறது.

செவ்விய காலம் உண்டா?
நாகரீகம்- என்பதன் 4-வது பகுதி செவ்விய காலம்என்பதாகும். கிரேக்க நாகரீகத்திற்கு பெரிக்ளிஸ் என்பவர் ஏதென்ஸை ஆண்ட காலம் இத்தகையை காலமாகக் கருதப்படுகிறது. இஸ் லாமைப் பொருத்தவரை நகரில் காலிஃப்கள் என்றும் மதத் தலைவர்கள் ஆண்ட காலமும், இந்தியாவுக்குக் குப்த அரசர்கள் ஆண்ட கால மும் செவ்விய காலம் எனப்படுகிறது. ஆனால் ஒரு நாகரீகத்தை இவ்வாறு ஒரு குறிப்பிட்ட காலத் திற்குள் அடைக்க முடியாது. அப்படிச் செய்வது நாகரீகங்களை மாற்றமே இல்லாமல், ஒரே நிலையில் இருப்பவை என்ற நிலைபாட்டிற்கு இட்டுச் செல்லும். இது சரியல்ல.
ஒரு பண்பாட்டின் பல்வேறு கூறுகள் வெவ் வேறு காலங்களில் உருவாகி வளர்கின்றன. இவ் வாறு உருவாகும் பல்வேறு அம்சங்களும், பண்டைய பண்பாட்டின் அம்சங்களுக்கு வாரிசா கவும் விளங்கி பண்பாட்டின் வளர்ச்சிக்கும் உதவுகின்றன்.

பக்தி இலக்கியங்கள்:
நாடுகளை ஆண்ட அரச வம்சங்கள் ஒரு குறிப்பிட்ட தேதியையும் காலத்தைக் காட்டும் அடையாளங்கள் தான். இந்த வம்சங்களை வைத்து அவர்கள் காலத்துப் பண்பாடு எப்படி இருந்தது என்று கூற முடியாது. ஒரு குறிப்பிட்ட வம்சத்தைச் சேர்ந்த பல மன்னர்களில் ஒரு சிலர், ஒரு சில கலாசாரக் கூறுகளை ஆதரிப்பவர்களாக இருக்கலாம். இதற்கு பக்தி இயக்கம் ஒரு எடுத்துக் காட்டு இந்து மதத்தில் அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்திய பக்தி இயக்கம், இறை வழிபாட்டில் ஒரு புதுமையை அறிமுகப்படுத்தியது. 7-ம் நூற் றாண்டில் தொடங்கியது இந்த இயக்கம், இந்த இயக்கம் பரவிய இடங்களில் அங்கே ஆண்ட அரச வம்சத்தினர் அனைவரும் ஆதரித்தனர் என்று கூறமுடியாது. ஒரு சிலர்தான் ஆதரித்தனர்.

வரலாற்றுச் சின்னங்களை
பாதுகாத்த துக்ளக்:
இவ்வாறே 14-ம் நூற்றாண்டில் டில்லியை ஆண்ட ஃபிரோஸ் துக்ளக் தொன்மையான வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாத்தவர்களின் முன்னோடி எனலாம். கவனிப்பாரற்றுக் கிடந்த அசோகருடைய ஸ்தூபிகளைப் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பச் செய்தார். அந்த ஸ்தூபி களில் பொறிக்கப்பட்ட செய்திகள் ஒருவராலும் படித்துச் சொல்ல முடியவில்லை. இருப்பினும், அவை பாரம்பரியச் சின்னங்கள் என்பதை அவர் புரிந்து கொண்டிருந்தார்.

ஆனால் துக்ளக் வம்சத்தைச் சேர்ந்த மற்ற அரசர்கள் இத்தகைய நடவடிக்கைகள் எடுக்க வில்லை. பண்பாடுகளை ஒன்றோடு ஒன்று இணைப்பதில் மொகலாயர்கள் மிகத் திறமையும், படைப்பாக்கமும் உடையவர்களாக விளங்கினார் கள். பண்டைய சம்ஸ்கிருத நூல்களைப்பற்றித் தெரிந்துகொள்வதில், அக்பர் மிகுந்த ஆர்வம் காட்டினார். பல நூல்களைப் பாரசீக் மொழியில் மொழிபெயர்க்கச் செய்தார். இதனால் சமய நூல்களைக் கற்ற அறிஞர்களோடு அக்பர் கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அக்பர் எளிய மக்களோடு அதிகமாகப் பழகிய யோகிகள், ஸந்துக்கள் (ஸாதுக்கள்) இஸ்லாமிய பக்கிரி  இவர்களையும் விவாதங்களுக்கு அழைத்திருந்தால்- பெரும் பான்மையான இந்திய மக்களின் நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள்- இவற்றைப்பற்றிய மிகவும் மாறுபட்ட கருத்துக்களைக் கேட்டிருப்பார்.

பிரிட்டிஷ் காலம்:
பிரிட்டிஷாரைப் பொருத்தவரை, இந்தியா வின் சின்னங்கள், இந்திய பாரம்பரியத்தின் தோற்றுவாய் எனக் கருதவில்லை. ஆனால் அவை இந்தியப் பண்பாட்டைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்திற்திற்குத் தீனிபோட்டன. 19-ம் நூற்றாண்டு ஐரோப்பியர் கள், காலனி ஆட்சியாளர்களான ஐரோப்பிர்கள் தான் நாகரீகமானவர்கள், மற்ற நாட்டவர்கள் அநாகரீகமானவர்கள் என்று நினைத்தார்கள். பிரிட்டிஷ் இந்தியாவின் நீதிமன்றங்களில் இந்தி யர்கள் சட்டத்தை மீறுவதற்குக் காரணம், அவர் கள் அநாகரீகமானவர்களாக இருப்பதுதான் என்ற கருத்து நிலவியது.

செவ்விய காலம் –  என்பதைப் பற்றிய கருத்து, அடுத்த நூற்றாண்டில் பெருமளவுக்கு மாறியது. ஒரு நாட்டில் இத்தகைய செவ்விய காலம் என்பது ஒரு முறைதான் வரும் என்று கருத வேண்டிய தில்லை. இந்தக் காலத்திற்குரிய கூறுகள் எப் போது காணப்பட்டாலும். அந்தக் காலத்தைச் செவ்விய காலம் என்று கருதலாம் எனப்பட்டது.

மத அடிப்படையில் வரலாறு இல்லை:
இந்திய வரலாற்றை, இந்து, இஸ்லாமிய வர லாற்றுக் காலங்கள் என்று மத அடிப்படையில் பிரிப்பது சரியல்ல என்ற கருத்தும் எழுந்தது. வரலாற்றுப் போக்கில் ஏற்பட்ட மாறுதல்களை விளக்க இத்தகைய பிரிவு உதவாது என்று கருதப்பட்டது. இதனால் இந்தப் பகுப்பு கைவிடப்பட்டது. மக்களுடைய புற வாழ்க்கைச் சூழலில் ஏற்பட்ட கலாசார மாறுதல்களைத் தொல்வியல் ஆய்வாளர்கள் கவனித்தபோது, இத்தகைய மாறுதல்களைப் புரிந்துகொள்ள இன்றும் ஆழமான ஆய்வுகளும், விளக்கங்களும் தேவை என்று உணர்ந்தனர்.

நகர்ப்புற நாகரீகங்கள்:
இந்தக் காலகட்டத்தில், நாகரீகம் என்றால், நகர்ப்புரத்தில் வசிக்கும் சமூகம் என்றும் இம் மக்கள் எழுத்து மூலம் தங்களுக்குள் தொடர்பு கொள்ளத் தெரிந்தவர்கள் என்றும் கூறப்பட்டது. அரசு என்ற அமைப்பு இருந்தாதாகவும். அந்த அமைப்பு நகர்ப்புறத்தைக் கட்டிக் காத்தது என்றும், அந்தச் சமூகத்தில் ஏற்றத் தாழ்வுகளைக் குறிக்கும் பல மட்டங்கள் இருந்தன என்றும் கருதப்பட்டது. நகர்ப்புறத்தில் உற்பத்தி செய்யப் பட்ட பொருள்களைக் கொண்டு வணிகம் நடந்தது. உணவுக்கு, நகரைச் சுற்றி இருந்த விவசாயக் குடியிருப்புக்களைத்தான் நகரங்கள் நம்பியிருந்தன. இத்தகைய நகர்ப்புற நாகரீகங்கள் எப்போது தோன்றின என்று ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தைச் சுட்டிக் காட்ட முடியாது. நகர்ப் புற நாகரீகங்கள் பல பகுதிகளில் வெவ்வேறு காலகட்டங்களில் தோன்றின. இந்த நாகரீகம் பொருள் உற்பத்தி சார்ந்த புற வாழ்க்கைச் சூழல், அறிவுசார் வளர்ச்சி – இவை இரண்டிற்கும் மேலும் நாகரீகம் வாய்ந்த அழகியலின் தொட்டி யாகவும் கருதப்படுகிறது. சிறப்பு மிக்க சிந்தனை, அத்துடன் இணைந்த வசதி, முன்னேறிய புற வாழ்வு – இவை இந்தப் பண்பாட்டின் அடை யாளங்களாகக் கருதப்பட்டன. மேற்கூறிய கருத் துக்கள் பலரை அன்றாட பௌதீகம் சூழலைத் தாண்டிச் சிந்திக்கத் தூண்டின.

புதிய தேடல்கள் தொடங்கின:
இந்தப் புதிய வரையரை, இதுவரை கண் ணுக்குப் புலப்படாதிருந்த கலாசார அம்சங் களைச் சுட்டிக்காட்டியது. பண்பாட்டின் பல் வேறு கூறுகளைப் பல்வேறு விதங்களில் இணைக்க உதவியது. ஒரு குறிப்பிட்ட அரச வம்சம் அல்லது ஒரு குறிப்பிட்ட நூல் அல்லது ஒரு குறிப்பிட்ட நினைவுச் சின்னம் போன்ற வற்றின் அடிப்படையில் பார்ப்பதைத் தவிற்க உதவியது. ஒரு பரந்துபட்ட பார்வையை வளர்த் துக் கொள்ள உதவியது. இதுவரை பண்பாடு, நாகரீகம் என்ற அம்சங்களோடு தொடர்பே இல் லாதவை என்று கருதப்பட்ட பல விசயங்களைக் கவனிக்க உதவியது. ஏற்கெனவே புலப்பட்ட அம்சங்களில் மறைந்து கிடந்த பல விசயங்களைக் குறித்த தேடல் துவங்கியது. பண்பாடு என்பதன் ஒவ்வொரு அம்சமும், பல்வேறு கருத்துக்கள் பொருட்கள் இவற்றின் கூட்டு என்று பார்க்கப் பட்டது. பண்பாடு ஓரே நிலையில் இருப்பதல்ல மாற்றத்திற்கும் உட்பட்டது என்று புரிந்து கொள் ளப்பட்டது. இதன் விளைவாகக் அம்சங்களை மிகப்பழமையான- நாகரீகத்தின் துவக்க காலத்தியோ அல்லது ஏதாவது ஒரு குறிப்பிட்ட கால கட்டத்திலேயோ தேட வேண்டியதில்லை என்ற கருத்து உருவாயிற்று. ஒரு பண்பாட்டின் சில கூறுகள் பிற்பட்ட காலத்தில் உருவாகி இருக்கலாம்.மேற்கூறியபடி பார்க்கையில், பாரம் பரியத்தின் அம்சங்கள், ஒரு சமுதாயத்தால் யார் தேர்ந்தெடுக்கிறார்கள்? பாரம்பரியம் என்பதை உருவாக்குபவை யாவை? – போன்ற கேள்விகள் எழுகின்றன தற்போது பண்பாடு என்பது உரு வாக்கப்படுவதைக் காணும்போது. கீழ்க்கண்ட சில விசயங்கள் கவனத்திற்கு வருகின்றன; அதா வது அரசு ஆதரவும், மும்பாய் சினிமாத்துறையும் (பாலிவுட்) காட்சி ஊடகங்களும் உள்ளிட்டவை தான் பண்பாட்டை உருவாக்குகின்றன. சிலருக்கு இது வருத்தமளிக்கலாம். விளிம்பு நிலையில் இருப்பவர்கள் கூட ஒரு மாற்று வேண்டும் என்று கோருகிரார்கள். ஒரிஸ்ஸாவைச் சேர்ந்த பழங்குடி மக்களான கோண்ட் பிரிவினர் தங்க ளுக்குப் புனிதமான நியம் கிரி பகுதியில் பெரு நிறுவனங்கள் சுரங்கங்கள் தோண்டுவதையும், அந்தப்பகுதி அழிக்கப்படுவதையும் எதிர்த்தனர். இந்தியப் பண்பாடு பன்முகத் தன்மையுடையது. அதனால் மேற் கூறியவை போன்ற விஷயங்களில், முன் எப்போதையும் விட நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

பண்பாட்டில் புதுமைகள்:
பண்பாட்டில் புகுத்தப்படும் புதுமைகள், பாரம்பரியம் என்பதற்குப் புதிய பொருளைக் கொடுக்கின்றன. பழைய வடிவங்கள் புதிய முறை யில் நமக்கு அளிக்கப்படும்போது பண்பாட்டு அம்சங்கள் புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குகின்றன.
இத்தகைய முயற்சிகள், கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் இணைக்கின்றன. பண்பாட் டின் அம்சம் ஒன்றை தற்காலத்திற்கு எற்ற முறை யில் அளிக்கும்போது, அந்த விசயங்களையும் புதிய முறையில் புரிந்துகொள்ள முடிகிறது. மேல்தட்டு மக்களின் அழகியல் கூறுகளை, மற்றப் பகுதி மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் விரி வாக்கம் செய்யும்போது, மேற்கூறிய கருத்தைப் புரிந்துகொள்ளலாம். புதிதாகச் சேர்ந்துக்கொள் ளப்பட்ட பகுதிகள் முற்றிலும் வித்தியாசமான வையாக இருந்தாலும், புதிய வடிவங்களாகக் உருவெடுக்கலாம். இந்தப் புதிய வடிவங்களை, ஏற்கெனவே இந்த பழைய வடிவங்களின் அருகே வைத்துப் பார்க்கும்போது. இது இன்னொரு புதிய விளக்கத்தை அளிக்கிறது. நாட்டியக் கலைஞர் சந்திரலேகா, பரத நாட்டியத்தைக் களரியோடு இணைத்ததை இங்கே நினைவு கூறலாம். ஏற்கெனவே நிலவும் பண்பாட்டு வடி வங்களை உருவாக்கியவர்களுக்கும், தற்போதைய புதிய பண்பாட்டு வடிவங்களை அமைத்த வர்களுக்கும், இடையே நடைபெறும் கருத்துப் பரிமாற்றங்கள் அர்த்தமுள்ளவையாகும்.

சகுந்தலை நாடகம்:
மேற்கூறிய விசயங்களைப் பற்றிப் பேசும் போது, இயக்கயத்திலிருந்து ஓர் எடுத்துக் காட்டை இங்கே குறிப்பிட வேண்டும். 18-ம் நூற் நாண்டின் முற்பகுதியில் மொகலாய அரசவை யில், சகுந்தலையின் கதையை நாடகமாக நடிக்க வேண்டுமென்ற என்ற முயற்சி மேற்கொள்ளப் பட்டது. இதற்குக் காளிதாசனின் நாடக வடிவை ஏற்றுக்கொண்டனர். ஆனால் இந்த நாடகத்தை சமஸ்கிருதத்தில் அல்லாமல் வ்ரஜ்பாஷா என்ற மொழியைத்தான் பயன்படுத்தினார்கள். அந்தக் காலத்தில் இந்த வ்ரஜ்பாஷாதான் அரசவையி லும், வெளியேயும் பேசப்பட்டது. சகுந்தலையும் காளிதாசன் உருவாக்கிய அடக்கமான நானம் மிக்க பெண்ணாக இல்லாமல் தைரியமான வெளிப்படையாகப் பேசும் பெண்ணாகச் சித்தரிக்கப்பட்டடிருந்தாள்.
காளிதாசன் கதையில் வரும் சில பகுதிகள் – முனிவரின் சாபம் , மோதிரம் காணாமல் போவது – போன்றவை பகுதிகள் நீக்கப்பட்டன. காளிதாசனின் நாடகம், மேல் தட்டு மேல் சாதிகளின் பண்பாட்டின் அடிப்படையில் உருவானது. ஆனால், மேற்கூறிய நாடகமோ, இந்த மேல் தட்டினரையும் தாண்டி, அதற்கு அப்பாற்பட்ட மக்களையும் ரசிகர்களாகக் கொண்டிருந்தது. இத்தகைய புதிய வடிவங்கள் மக்களுடைய ரசனையில் ஏற்படும் மாற்றங் களைக் குறிக்கின்றன. எதிர்காலத்தில் இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றப்பட்ட சகுந்தலை நாடகத்தையும் காணலாம்.

பாரம்பரியமும் நினைவாற்றலும்:
பராம்பரியத்தின் மையமான அம்சம் நினை வாற்றல் என்று கருதப்படுகிறது. ஆனால் இந்த நினைவாற்றல், மிக்க குறுகிய காலம் தான் நிலைக்கும். அவ்வாறே பாதுகாக்க நினைத் தாலும் கூட, நிகழ்காலத்தின் லட்சியக் கனவு களுக்கு ஏற்ப பண்டைப் பாரம்பரியங்களைப் பற்றிய நினைவுகளை உருவாக்கிக் கொள்ளு கிறார்கள். துண்டு, துக்காணிகளாக நினைவில் இருக்கும் பண்பாட்டுக் கூறுகள் இரண்டு தலை முறைகளுக்குமேல் நீடிக்காது. அதற்குப் பிறகு, இவை வாய்மொழிப் புராணங்களுக்கு உர மாகிவிடும்.

பௌத்தசமயம் செல்வாக்கு இழந்த பின்னர், பௌத்தப் பள்ளிகளும், மடங்களும் கேட்பா ரற்றுப் பாழடைந்து போயின. வேதங்களைப் போலப் பல நூல்கள் மனப்பாடம் செய்யப் பட்டன. ஆனால் இந்நூல்கள் எழுதப்பட்ட காலத்தில் நிலவிய புறச் சூழலையும் சமுதாயர் மறந்துவிட்டனர். அடுத்து எழுத்து வடிவங்கள் மாறியபோது அந்நூல்களைப் படிக்க முடிய வில்லை.

அசோக மன்னரின் கல்வெட்டுக்களை இன்று நாம், நம்முடைய பாரம்பரியச் சொத்து என்று போற்றுகிறோம். ஆனால் 1500 ஆண்டுகள் வரை அவருடைய கல்வெட்டுக்கள் கவனிப்பாற்றுக் கிடந்தன. 19-ம் நூற்றாண்டின் துவக்கத்தில்தான் அந்தக் கல்வெட்டுக்களின் எழுத்துக்கள் புரிந்துக் கொள்ளப்பட்டு, படிக்கப்பட்டன. அஹிம்சை, சகிப்புத்தன்மை இவற்றைப்பற்றிய போதனைகள் அடங்கிய இந்தக் கல்வெட்டுக்களைத் தெரிந்து கொள்வதற்கு 1000 ஆண்டுகளுக்கு மேல் ஆயின்று. இது மிக நீண்ட இடைவெளி. இந்தக் கல்வெட்டுக்களை ஆராய்ச்சியாளர்கள் படித்த போது இதைப் பதிவுசெய்த அரசன் யார் என்றே தெரியவில்லை. பௌத்த நூல்கள் மட்டுமே அவரைப்பற்றிய செய்திகளைப் பதிவு செய் திருந்தன. ஆனால், புத்த மதம் இந்தியாவில் செல்வாக்கு இழந்த பின்னர் பாலி மொழியில் எழுதப்பட்ட பௌத்த நூல்களை இந்தியாவில் படிப்பவர் எவருமில்லை.

புகுத்தப்பட்ட பொதுப்பண்பாடு:
காலனிஆதிக்க காலத்தில், இந்தியப் பண் பாட்டை, சாதி, மதம் இவற்றின் அடிப்படையிலேயே பாகுபாடு செய்தார்கள். ஒருபொதுப் பண்பாடு, இவ்வாறு புகுத்தப்பட்டது. இந்தப் பிரிவுகள் நமக்குள்ளேயும் ஊறிவிட்டன. இந்தப் பிரிவுகளுக்குள், மேல்தட்டுப் பண்பாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. அடிமட்ட மக் களின் கலாசாரத்தோடு தொடர்பு கொள்வதே தடைபட்டது. தற்போது, இந்தியாவுக்கு ஒரு தேசியப் பண்பாடு – என்று ஒன்று தேவைப் படுவதாக நினைக்கும்போது, மீண்டும் இந்த மேல்தட்டுப் பண்பாடுகளே முன்றுக்கு வரு கின்றன. இதர பண்பாட்டுக் கூறுகள் மறைக்கப் பட்டு விடுகின்றன. பாரம்பரியம் என்பது தன் னுடைய வரலாற்று அம்சங்கள் சிலவற்றை முன்னுக்குக் கொண்டு வரலாம். சிலவற்றை மறைத்துவிடலாம் பாரம்பரியத்தின் பல பழைய அம்சங்கள் தொடரலாம். புதிய அம்சங்கள் பல பழையன என்று சொல்லப்படலாம். நாம் குறிப்பிடுவது இதுதான் நம்முடைய மரபுகள் (பாரம்பரியம்) என்று கூறப்படும் அம்சங்களை நாம் இன்னும் அழமாக ஆராய வேண்டும். இத்தகைய ஆய்வுகள் மூலம், தற்போது மறைந்த கிடக்கும், பன்முகத் தன்மைகொண்ட நம் முடையப் பாரம்பரியத்தின் பல்வேறு கூறுகளை யும் வெளிச்சத்திற்குக் கொண்டுவர வேண்டும்.

ஒற்றைப் பண்பாட்டும் – அழிவுகளும்:
பாரம்பரியம் என்பது ஓரே நிலையில் நிலைத் திருப்பதல்ல என்று கொண்டால் பாரம்பரியத்தி லிருந்து பல அம்சங்களை நம்மால் கூட்டவும், குறைக்கவும் இயலும். அதனால், நமக்கு, இந்தப் பாரம்பரியம் என்பதை உருவாக்க வாய்ப்பு கிடைக்கும். தற்போது தேசீய பாரம்பரியம்- என்பதை வரையறுக்க முனையும் விவாதங்கள் எழுகின்றன. தேசீயப் பாரம்பரியத்தில் இணைய வேண்டுமென்று பல அம்சங்கள் போட்டி போட்டுக் கொண்டு முன்னுக்கு வருகின்றன. பன்முகத் கலாசாரத்தைக் கொண்ட  சமுதாயத் தில் இது இயல்பு. இத்தகைய விவாதங்கள் சில பாரம்பரிய அம்சங்களை வேண்டுமென்றே அழிப்பதில் முடிகின்றன. அதற்கு அரசியல் காரணங்கள் இருக்கலாம். பாப்ரி மசூதி இடிப்பை இதற்கு ஓர் உதாரணமாகக் கூறலாம். பல்வேறு சமயங்களைச் சேர்ந்த மன்னர்கள் வேற்று மதங் களைச் சேர்ந்த புனிதமான இடங்களை இடிப் பதும் இந்தப் போட்டியினால்தான். சில சமயங் களின் இதற்கு நேர்மாறான விசயங்கள் நடை பெறலாம். சில பாரம்பரியக் கூறுகள், அவை எந்தக் காரணத்திற்காகத் துவங்கப்பட்டதோ, அந்த வரையறைகளைத் தாண்டி புதிய அம் சங்களை உள்வாங்கி வேறொரு பாரம்பரியமாக உருவெடுக்கிறது. அமைதியான, முறையில் நடை பெறும் இத்தகைய மரபுகளின் வரலாறு, சமூகத் தில் சற்றே தாழ்ந்த அந்தஸ்தில் இருக்கும் மக்க ளோடு தொடர்புடையது. கலாசார வடிவங்களுக் கும், இந்த வடிவங்கள் தோன்றிய சமூகங்களுக் கும் இடையேயானதொடர்புகளைத் தெரிந்து கொள்வது இந்தத் தொடர்புகள் எப்படிப்பட் டவை என்று தெரிந்துகொள்ள உதவும்.

பல்வேறு ராமாயணங்கள்:
மேற்கூறிய- உள்வாங்கித் தன்மயமாக்குதல், விவாதம்- ஆகிய இரண்டிற்கும் – ராமகதையை உதாரணமாகக் கூறலாம். தென்கிழக்கு ஆசியா விலும், இந்தியாவிலும் ராமகதை மிகவும் பிரபல மானது ஒவ்வொரு பகுதியிலும் ராமகதை வெவ் வேறு விதமானது. பல நூறு ஆண்டுப் பழமை வாய்ந்தது. அந்தந்த இடத்து மக்களுக்கு மிகவும் முக்கியமானது அவற்றை எழுதிய ஆசிரியர்களும் தனிச்சிறப்பு வாய்ந்தவர்கள். இந்தப் பன்முகத் தன்மைதான் ராமாயணத்தின் வலிமையாகக் கருதப்படுகிறது. ராமகதை பல்வேறு வடிவங் களில் உருவெடுத்துள்ளது.

பல்வேறு கருத்துக்களை உள்வாங்கியுள்ளது. அற்புதமான கவிதை நடையில் எழுதப்பட்டுள் ளது. தற்போதைய அரசியல் குறுக்கீட்டால், பகடைக் காயாக மாறியுள்ளது. ராமாயணத்தை மையப்படுத்தி பல வாதங்கள் பல எழுதப்பட்டது. வால்மீகி ராமாயணம்மட்டுமே நமது சமயம் மற்றும் சமூக அடையாளங்களை உள்ளடக் கியது. எனவே அது ஒன்றுதான் ஏற்புடையது. இந்த கருத்து வெற்றி பெற்றால், ராமாயணம் -என்றும் கலாசார சின்னம்மாறிச் சுருங்கிவிடும். தேசீயப் பாரம்பரியம் என்பது தப்பிப் பிழைக்கும் அம்சங்கள் என்றாகிவிடும். வால்மீகி ராமா யணம் மிகச் சிறந்த படைப்பு என்பதில் ஐய மில்லை. ஆனால் மற்ற படைப்புக்களை ஒதுக்க முடியுமா? ராமாயணப் படைப்புகள் சில, அந்தக் கதையின் உள்ளடக்கத்தைப் பற்றிய புதிய ஆழ மான அர்த்தங்களை விளக்குகின்றன. கதை யோடு தொடர்பு கொண்ட சமூகங்களைப்பற்றி நுட்பமான பல விஷயங்களை அறிந்துகொள்ள உதவுகின்றன.

பாரம்பரியத்தைப் புரிந்துகொள்வோம்:
நம்முடைய பாரம்பரியத்தை உருவாக்கு வதைப்பற்றி, நமக்குத் தெளிவான பார்வை யில்லையோ என்ற ஐயம் எழுகிறது. நமது பாரம் பரியத்தை உருவாக்குவதற்குத் தக்க ஆழமான விவாதங்களும், புரிதலோடு கூடிய தேடலும் அவசியம். ஒருசில கலாசார வடிவங்களுக்கு மட்டும், – அவை மேல்தட்டுப் பண்பாடாக இருக்கலாம், அல்லது ஏதாவது ஒரு குறிப்பிட்ட பிரதேசம், சமயம் அல்லது மொழியாக இருக்க லாம்- முக்கியத்துவம் கொடுப்பது, நமது பாரம் பரியத்தை முழுமைப்படுத்தாது. அரைகுறையாக நிறுத்தும் நமது கலாசாரத்தின் பன்முகத்தன் மையையும் செழுமையையும் வெளிப்படுத்து வதற்குப் பல்வேறு கலாசார அம்சங்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு இணைப்பதற்கு, வரலாற்று மாற்றங்களைப் பற்றிய புரிதல் வேண்டும். கலாசார வடிவங்கள் ஒன்றோடொன்று இணக்கமான தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதையும் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

 

பாரம்பரியத்தின் கட்டமைப்பு …

பேராசிரியர் ஹேமா

(பண்பாடு, பாரம்பரியம், மரபு போன்ற  சொற்களை பல வகைகளில் பயன்படுத்துகின்றனர். தவறாகவும் கையாள்கின்றனர். பாரம்பரியம் என்பதை அறிவியல்ரீதியாக எப்படிப் பார்க்க வேண்டும் உணர்த்துகிறது இந்தக் கட்டுரைருக்மிணி தேவி நினைவாகவரலாற்று ஆய்வாளர் ரொமிலா தாப்பர் அவர்கள் ஆற்றிய உரையை உதவியாகக் கொண்டு எழுதப்பட்டது.)

பாரம்பரியம் என்பது நமக்கு முன்னோர்களிடமிருந்து கிடைத்த சொத்து என்று பொருள்படுகிறது. இந்தச் சொல் பல்வேறு விசயங்களையும் விளக்குவதற்கு பயன்படுகிறது. இந்தப் பாரம்பரியம் எந்தவித மாற்றங்களும் இன்றி ஒரு தலைமுறையிடமிருந்து அடுத்த தலைமுறையினருக்கு கொடுக்கப்படுகிறது என்றும் கூறுகிறோம். இதை நாமும் அவ்வாறே அடுத்த சந்ததியினருக்குக் கொடுப்போம் என்றும் நினைக்கிறோம். இதனை மரபு என்றும் குறிப்பிடுகிறோம். இந்தப் பாரம்பரியம்தான் நம்முடைய பண்பாட்டையும், நாகரீகத்தையும் உருவாக்குகிறது. ஆனால், இந்தப் பாரம்பரியம், மரபு இவற்றை ஆராய்ந்து பார்க்கும்போது இந்த மரபுகளின் உள்ளடக்கங்கள் சில சமயங்களில் ஓரளவுக்கும் சில சமயங்களில் மிக அதிகமாகவும் மாறிக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.

மரபுகள் பழமையானவையா?:

தற்போது மரபு என்பதற்கு வேறொரு விளக்கமும் அளிக்கப்படுகிறது. கடந்த காலத்தில் வழக்கத்தில் இருந்ததாக நாம் கருதிய விஷயங்களும், நம்முடைய தற்போதைய குறிக்கோள்களும் ஒன்றன்மீது ஒன்று தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதைப்பற்றி நாம் ஆழ்ந்து ஆராயும் போது புதிய கருத்துக்கள் தோன்றுகின்றன. இதனால் பாரம்பரியம் என்பதைப் பற்றி நமக்கு பொதுக் கருத்து உருவாகிறது. அல்லது நிகழ்காலத் தேவைகளுக்கு ஏற்ப இந்தப் பொதுக் கருத்து ஒரு புதிய கண்டுபிடிப்பாக உருவாகலாம். சில சடங்குகளையும் மரபுகளையும் மிகப் பழமையானவை என்று நினைக்கிறோம். ஆனால் ஆராய்ந்து பார்க்கையில் அவை மிக அண்மைக் காலத்தில் உருவாக்கப்பட்டவை என்றே தெரிகிறது. வரலாற்று ஆசிரியர்கள் இந்தக் கற்பனையான பாரம்பரியத்தைப் பற்றி ஆராயத் தொடங்கியுள்ளனர்.

பாரம்பரியம் மற்றும் மரபுப் பழக்க வழக்கங்கள் இவற்றைப் பற்றிய விவாதங்கள்,”பண்பாடு நாகரீகம்” போன்ற கருத்துகளைப் பற்றியும் ஆராய்வதற்கு வித்திட்டுள்ளது. மேற்கூறிய கருத்துக்களை எளிதில் விளக்க இயலாது. பண்பாடு, நாகரீகம் என்பதைப் பற்றி கடுமையான விவாதங்கள் நடைபெற்றன. 17 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் வரலாற்றில் முக்கியமான மாற்றங்கள் நிகழ்ந்தன. அப்போது கேள்விகள் எழுப்பப்பட்டன. அப்போது ஐரோப்பாவின் அறிவுசார்ந்த மறுமலர்ச்சி இயக்கம் வளர்ந்து வந்தது. அடிப்படைக் கோட்பாடுகள் பலவற்றை புதிய கோணத்தில் ஆராய வேண்டியிருந்தது. இந்தியாவிலும் நாம் இத்தகைய மாற்றங்களைச் சந்திப்பதால், பாரம்பரியம் என்பதைப் பற்றி நாம் புதிய கோணத்தில் ஆராய வேண்டியுள்ளது.

பாரம்பரியம் மாறக்கூடியது:

அண்மைக் காலங்களில் வரலாற்று ஆசிரியர்கள் பாரம்பரியம் என்பது உருவாக்கப்பட்டது, மாறக்கூடியது என்றுதான் பார்க்கிறார்கள். ஒரு காலகட்டத்தின் பண்பாடு என்பது கண்களால் பார்க்கக் கூடிய நிகழ்த்துக் கலைகள், இலக்கியம், தத்துவம், கல்வி, கேள்விகளில் புலமை பெற்று மனித குலத்தின் பெருமைகளை மேம்படுத்துதல் போன்ற விசயங்களில் ஒரு சமுதாயம் படைத்த சாதனைகளைக் குறித்ததாகக் கருதப்பட்டது. நவீன காலத்திற்கு முந்தைய காலகட்டத்தில் மேற்கூறிய விசயங்கள் மேட்டுக்குடி மக்களின் செயல்பாடுகளோடு தொடர்புடையவையாயிருந்தன. இதனை எளிய மக்களின் பண்பாட்டிலிருந்து வேறு படுத்திக் காட்டுவதற்கு இதை உயர் கலாச்சாரம் என்றார்கள். ஆனால் மேற்கூறிய பண்பாட்டின் கூறுகள் பரந்துபட்ட சமுதாயத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருபவை. பண்பாடு என்று கூறும்போது சமுதாயத்தின் பல்வேறு பகுதி மக்களின் வாழ்க்கை முறை, அம் மக்களின் எண்ணங்களுடைய வெளிப்பாடுகள் ஆகியவையும் அடங்கும். பண்பாடு என்று குறிப்பிடும்போது அதில் வேட்டையாடி உணவு சேகரிக்கும் மக்கள், ஆடு – மாடு மேய்க்கும் மக்கள், விவசாயிகள், நகர்ப்புற ஏழை மக்கள் போன்ற எளிய மக்களின் வாழ்க்கையும் அடங்கும்.

பண்பாடு என்பது மாறக் கூடியது. தாக்கங்களுக்கு உட்பட்டது. பரிமாற்றங்களை அனுமதிப்பது. வரலாற்றை ஆராயும் போது மாற்றங்கள் அடிக்கடி நிகழ்ந்தன என்று தெரிகிறது. மேலும் பண்பாடு என்பது உற்பத்தி சார்ந்ததென்றும் புலப்படுகிறது. வேட்டையாடி வாழும் சமுதாயத்தில் நிலவும் பண்பாடுகள், ஆடு மாடு மேய்த்து வாழும் சமுதாயத்தின் பண்பாட்டிலிருந்து வேறுபடும். விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட சமுதாயத்தின் பண்பாடு முதலாளித்துவ சமுதாயத்தின் பண்பாட்டில் இருந்து மாறுபட்டதாகவே இருக்கும்..

ஆதிக்கப் பண்பாடும் – எளிய மக்கள் பண்பாடும்:

கடந்த காலங்களில் சமுதாயம் ஒரே மாதிரியான ஒற்றைத் தன்மையுடைய கலாசாரத்தைப் பின்பற்றியதில்லை. எல்லாச் சமுதாயத்திலும் இருந்ததைப் போலவே இந்தச் சமூகத்திலும் மேல் தட்டுப் பண்பாடுகள் ஆதிக்கம் செலுத்தின. ஆனால் இந்த மேல்தட்டுப் பண்பாடுகளைத் தாங்கி நின்றது எளிய மக்களின் பண்பாடு. இது தான் முக்கியமானதாகும்.

இந்த நிலையில் பல கேள்விகள் எழுகின்றன. “ இந்தப் பண்பாடுகள் அனைத்தும் ஒற்றுமையாக இருந்தனவா? அல்லது சாதி, மொழி, சமையம் இவற்றின் அடிப்படையில் பிரிந்து இருந்தனவா? இப்போது இந்தக் கலாச்சாரங்களை ஒன்றிணைக்க முயலும்போது நாம் புதிய முயற்சி ஒன்றை மேற்கொள்கிறோமா? “ என்பவைதான் இந்தக் கேள்விகள். இந்த ஒன்றுபடுத்தும் முயற்சி “வேற்றுமையில் ஒற்றுமை” என்ற முழக்கத்தோடு நின்றுவிட்டதாகத் தோன்றுகிறது. ஏனெனில், “இந்த ஒற்றுமை என்றால் என்ன? வேற்றுமை என்றால் என்ன?” என்பதெல்லாம் தெளிவுபடுத்தப்படவில்லை. இவற்றோரு கூட மேலோட்டமாகப் பார்க்கும்போது மாற்றமே இல்லாமல் தோன்றும் ஒரு விசயத்தை ஆராய்ந்து பார்த்தால் அதிலும் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதைக் காணலாம். உதாரணம், சாதி – நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சாதிய ஏற்றத்தாழ்வு வெவ்வேறு விதமாக காணப்படுகிறது. உயர் சாதியாகக் கருதப்படும் ஒரு சாதி எல்லா இடங்களிலும் உயர் சாதியென்று கருதப்படுவதில்லை. குறிப்பாக பஞ்சாபில் ‘கத்ரி’ என்ற சாதி உயர்வாகக் கருதப்படுகிறது. சில இடங்களில் பிராமணர்களும், சில இடங்களில் ‘ஷத்ரியர்கள்’ என்று தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்வோரும் உயர் சாதியாகக் கருதப்படுகின்றனர்.

பண்பாட்டை புரிந்துகொள்ளல்:

அனைத்து சமுதாயங்களிலும் ஆள்வோர் ஆளப்படுவோர் என்ற பிரிவுகள் உண்டு. இதில் அதிகாரப் பிரிவினர், அடக்கப்படுவது யார் என்பது காலத்தை ஒட்டி மாறும். அவ்வாரே, அவர்கள் ஆதரிக்கும் கலாசாராம் எது என்பதிலும் மாற்றம் ஏற்படலாம். அண்மைக் காலங்கள் வரையில் ஆளும் வர்க்கங்கள் தங்கள் பண்பாட்டுத் தடயங்களையும், ஆவணங்களையும் பாதுகாத்து வைப்பதற்கு ஏற்ற சூழல் நிலவியது. ஆனால் தங்கள் பண்பாட்டை எந்த வகையிலும் பதிவு செய்ய இயலாதவர்களைப் பற்றி ஊகத்தின் அடிப்படையில் தான் தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது.

தொல் பொருள் ஆய்வுகள் நமக்குச் சில தகவல்களை அளிக்கின்றன. மேல் தட்டு மக்களின் பண்பாட்டைப் புரிந்து கொண்டவர்களை ஒரு தனிப்பட்ட பகுதியினராகப் பார்க்காமல், அவர்கள் சமுதாயத்தின் ஏனைய பகுதிகளோடு எத்தகைய தொடர்பு கொண்டிருந்தார்கள், இதர பகுதியினரோடு எவ்வாறு பழகினார்கள் என்பதை ஆராய்வது அவர்களது பண்பாட்டைப் புரிந்துகொள்ள உதவும்.

சுற்றுச் சூழலில் ஏற்பட்ட மாற்றங்களும் தற்போது கருத்தில் கொள்ளப்படுகின்றன. நாடுகளின் அழிவு, தட்ப வெட்ப நிலைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் – இவை கடந்த காலங்களில் நிகழ்ந்திருக்கின்றன. சிந்து சமவெளி நாகரீகத்தின் நலிவிற்கு இந்த மாறுதல்கள் காரணமாக இருக்கலாம் என தற்போது கருதப்படுகிறது.

தொழில் நுட்பத் துறையில் நிகழும் புதிய கண்டுபிடிப்புகள், சமூகப் பொருளாதார மாற்றங்களுக்கு ஏற்ப மக்கள் தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்திக் கொள்ளும் மாற்றங்கள், இவையும் கவனிக்கத் தகுந்தவை.

புதுமைக் கலப்பு:

வணிகத்தின் மூலமும், குடி பெயர்ந்து வரும் மக்களோடு ஏற்படும் தொடர்புகளாலும் பிற நாட்டை வெற்றி கொள்வதால் ஏற்படும் அரசியல் நிகழ்வுகள் இவற்றால் சமுதாய வாழ்வில் புதுமைகள் புகலாம். பிற நாட்டை வெற்றி கொள்ளும் போது புதிய அரசியல் அமைப்பு என்பது மிகத் தெளிவாக முன்னுக்கு வருகிறது. வணிகக் குடிபெயர்தலால் வலுவான தாக்கங்கள் ஏற்படுகின்றன. இவை பரந்த நிலப்பரப்பில் மிக அதிகமான மக்களிடையே பாதிப்பை எற்படுத்துகின்றன. ஆனால் நாம் படையெடுப்புகளுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கிறோம். நாம் நாட்டின் வட மேற்குப் பகுதியில் கிறிஸ்து சகாப்தத்தின் தொடக்கத்தில் கிரேக்க சிற்ப வடிவமைப்புகளின் தாக்கத்தால் உருவான காந்தார சிற்பக் கலையைக் குடிபெயர்தலினால் ஏற்படும் மாற்றங்களுக்கு ஓர் உதாரணமாகக் கொள்ளலாம்.

இதே காலகட்டத்தில் பெளத்த சிற்பக் கலை, மதுரா, மத்திய இந்தியா மற்றும் தெற்கே அமராவதி போன்ற இடங்களில் வளர்ந்திருந்தது. காந்தார சிற்பக் கலை வடிவங்களுக்கும் பெளத்த சிற்பக் கலை வடிவங்களுக்கும் இடையே பல வேற்றுமைகள் காணப்படுகின்றன. இந்தக் கலை வடிவங்களைப் பற்றிக் கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக அறிஞர்களிடையே கடுமையான விவாதங்கள் நடைபெறுகின்றன. ஆனால் 19 ஆம் நூற்றாண்டுக் கலை வரலாற்று அறிஞர்கள் தங்கள் சம காலத்து சிற்பக் கலைஞர்களிடம் இதைப் பற்றி கருத்துக் கேட்கவில்லை. இந்த காந்தாரப் பகுதியில் பேசப்பட்ட மொழிகள் தனித்து விளங்கின. கிரேக்கம், சம்ஸ்கிருதம் இரண்டும் தனித்தனி மொழிகளாகவெ விளங்கின.

அதே காந்தாரத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் துருக்கியர்கள், ஆப்கானியர்கள், பாரசீகர்கள் போன்றோர் குடியேறினர். இவர்கள் மத்திய ஆசியாவிலிருந்தும் மேற்கு ஆசியாவிலிருந்தும் வந்தவர்கள். இந்த நிகழ்வுகளை நாம் படையெடுப்பு என்று கூறி விட்டுவிடுகிறோம். படையெடுப்பினால் வணிகத் தொடர்புகள் அதிகரிகமாகின்றன. புலம் பெயர்ந்து வசிப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. துருக்கியர், ஆப்கானியர் ஆகியோரின் வருகையால் மொழி மத நம்பிக்கைகளில் தாக்கம் ஏற்பட்டது. இங்கு இஸ்லாமிய மதம் அறிமுகமானது மட்டுமின்றி புதிய சிந்தனைகள் உருவாகின. சூபிக்கள் என்ற பிரிவினர் எளிய மக்களிடையே பழகித் தங்கள் கருத்துகளைப் பரப்பினர். இதன் விளைவாகப் பஞ்சாபி போன்ற மொழிகள், பல புதிய சொற்கள் அறிமுகமாயின, குருநானக் வாரிஸ் ஷா போன்ற சமயப் பெரியோர்களின் கவிதைகள் பொதுவாக மக்கள் பேசும் மொழியிலேயே இயற்றப்பட்டன. இவ்வாறு மொழி பயன்பாட்டின் பிற கூறுகளுக்கும் பரவியது.

நீண்டகாலம் எழுதப்பட்ட அர்த்த சாஸ்திரம்:

பல நூல்களின் காலத்தைக் கண்டறிய மொழியில் ஏற்பட்ட மாற்றங்கள் உதவுகின்றன. நீண்ட காலம் தொடர்ந்து எழுதப்பட்ட நூல்களில் ஒன்று ‘அர்த்த சாஸ்திரம்’. இந்த நூலின் மொழி நடையில் ஏற்பட்ட மாற்றங்களைக் கொண்டு இந்த நூலின் வெவ்வேறு பகுதிகளும் எப்போது எழுதப்பட்டன என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஒரு மொழிக்கு வேறு மொழிகளோடு தொடர்பு ஏற்படும்போது சில புதிய சொற்கள் கடன் வாங்கப்படும் அல்லது பரிமாற்றம் செய்யப்படும். இத்தகைய பரிமாற்றம் இந்த இரு மொழிகளைப் பேசும் மக்களிடையே நிலவிய உறவுகளையும் தெளிவுபடுத்தும். வேத கால சமஸ்கிருதத்தில் ‘லாங்கல’ (langala) என்ற சொல் ஏர் என்பதைக் குறிக்கிறது. அந்தச் சொல் திராவிட மொழியிலிருந்து பெறப்பட்டது என்று தெரிகிறது.

குடிபெயர்தல் மூலமாக பண்பாட்டில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. மேய்ச்சல் நிலங்களைத் தேடியும் வணிகத்தின் பொருட்டும் மக்கள் புதிய இடங்களில் குடியேறுவார்கள். வணிகம் நடைபெறுவதற்காக புதிய பாதைகள் போடப்படும். புதிய குடியிருப்புகள் தோன்றும். இதன் விளைவாகப் புதிய பண்பாட்டு வடிவங்கள் தோன்றும். ஹூனா, துரானி போன்ற சாதிப் பெயர்கள் இந்தப் போக்கைக் குறிக்கின்றன.

பிரிட்டிசாரின் வருகை முற்றிலும் மாறுபட்டது. இந்தியாவின் செல்வத்தை உறிஞ்சுவது தான் அவர்களுடைய நோக்கம். இருப்பினும், இந்தியாவின் கடந்தகாலத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள அவர்கள் ஆர்வம் காட்டினர். இவ்வாறு அவர்களுக்குக் கிடைத்த விவரங்களும் நம்முடைய  பாரம்பரியத்தை உருவாக்குவதில் பங்காற்றின.

பாரபட்சமான நோக்கு:

செல்வ வளம் மிக்க மேல் தட்டு மக்களின் கலாச்சாரத்தைப் பறைசாற்றும் சுவடிகளும் சான்றுகளும் ஏராளமாகக் கிடைக்கின்றன என்பதை ஏற்கெனவே பார்த்தோம். எளிய மக்களுடைய பண்பாட்டைப் பற்றிய  இத்தகைய அடையாளங்கள் கிடையாது. அவர்கள் மேல் தட்டு சமுதாயத்தின் செல்வத்தைப் பெருக்குவதற்கான அனைத்து உழைப்பையும் அளித்தனர். ஆனால் மேல் தட்டுப் பண்பாட்டில் அவர்களுக்குப் பங்கில்லை. அடித்தட்டு மக்களுடைய பண்பாடு வேறு விதமானது. அவர்களுடைய பண்பாட்டைப் புரிந்து கொள்ள மேல்தட்டு மக்கள் இவர்களை எப்படிப் பார்த்தார்கள் என்று கவனித்துத்தான் தெரிந்துகொள்ள வேண்டும்.

மேல்தட்டு மக்களின் பார்வையிலிருந்து தான் நாம் அடித்தட்டு மக்களைப் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. இந்த நோக்கு பாரபட்சமற்றதாக இருக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால் இந்த மக்களின் திறமையும் அழகுணர்வும் மேல் தட்டினரின் பண்பாட்டை உருவாக்குவதில் பெரும் பங்காற்றுகின்றன.

பண்பாட்டை உருவாக்குவதாகக் கருதப்படும் பாரம்பரியம் எல்லாக் காலங்களிலும் மாறாது நிலைத்து நிற்பதல்ல. அதுவொரு பொருளாக இருந்தாலும் கருத்தாக இருந்தாலும், நிகழ்காலத்தில் இருந்ததைப் போலத்தான் இருந்திருக்கும் என்று நினைக்கிறோம். பண்பாட்டுக் கூறுகளுக்கு ஒரு பூர்வீகத்தை ஏற்படுத்துவதன் மூலம், கடந்த காலத்தை நிகழ் காலத்திற்குக் கொண்டு வருகிறோம். இவ்வாறு கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையே ஒரு தொடர்ச்சியை ஏற்படுத்துகிறோம். “மாறாமல் தொடருகிறது என்று நாம் நினைக்கும் பாண்பாட்டுக் கூறுகளில் நாம் தக்கவைத்துக் கொண்டவை எவை? வேண்டாமென விலக்கியவை எவை? என்று ஆராய வேண்டும்.

நியாயம் கற்பித்தல்:

நம் முன்னோர் காலந் தொட்டு பழக்கத்தில் இருந்ததென்று நாம் கூறிக் கொள்வது சில விசயங்களுக்கு நியாயம் கற்பிப்பதற்கான முயற்சியாகும். இவ்வாறு கூறுவது சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட குழுவினர் உயர்ந்த நிலையில் இருந்ததைக் காட்டும் அடையாளமாக இருக்கலாம். இவ்வாறு கூறுவது அவர்கள் சமுதாய வாழ்வில் வெற்றி பெற்றதாகக் காட்டிக்கொள்ளப் பயன்படும் அல்லது ஒரு குழுவின் சமூக நிலையை மற்ற சிலர் ஏற்றுக்கொள்ளச் செய்யப் பயன்படும். வேறு சிலர் அது பற்றி கேள்வி எழுப்பலாம்.

இத்தகைய கேள்விகளைத் தவிர்க்கும் முயற்சியாகவும் இருக்கலாம். பண்பாட்டின் ஒரு பகுதிக்கு பூர்வீகம் இதுதான் என்று கற்பிக்க முயற்சிக்கும்போது அந்தப் பகுதி வேறொரு பூர்வீகத்திலிருந்து பிறந்திருக்கலாம் என்பதை மறுக்கிறோம். இது வேண்டுமென்றே செய்யப்பட்டால் அதற்கு வேறு காரணங்கள் இருக்கலாம். துவக்கத்தில் இதை ஏற்றுக் கொண்டிருப்பார்கள், பின்னர் இதனைப் பலர் ஏற்க மறுத்திருப்பார்கள். தொல் பண்பாட்டின் பல அம்சங்களில் பூர்வீகத்தை முழுமையாக அறிந்துகொள்வது மிக அவசியம். இதைச் சரியாகத் தெரிந்துகொள்ளாவிட்டால், ஒன்று நாம் பாரம்பரியத்தைத் திரிக்கிறோம் அல்லது நாமாக எதையாவது கண்டு பிடிக்கிறோம் என்று தான் கூற வேண்டும்.

புறச் சூழல் முக்கியம்:

கலைகளைப் பற்றி, அதுவும் பண்பாட்டின் ஒரு அம்சமாக கருதப்படுகின்ற சங்கீதம் நாட்டியம் போன்ற நிகழ்த்துக்கலைகள் பற்றிப் பேசுபோது அவற்றைப் பற்றிக் குறிப்பிடும் நூல்களைப் பற்றியும் அவற்றில் காணப்படும் குறிப்புகளைப் பற்றி மட்டும் குறிப்பிட்டால் போதுமானதா?. இந்தக் கலை வளர்ந்த புறச் சூழலைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாமா? என்ற கேள்வி எழுகிறது. இந்தக் கலைகளைப் பொருத்தவரையில் பெண்கள் ஒரு தொழிலைத் தேர்ந்தெடுத்தார்கள் அல்லது அவர்கள் ஒரு தொழிலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அந்தத் தொழில் சமுதாயக் கோட்பாடுகளுக்கு எதிரானது. இவர்கள் சமூகத்திற்கு அப்பாற்பட்ட தங்களுக்கே உரித்தான ஒரு சமூகத்தின் கருவை உருவாக்கிக் கொண்டார்கள். பெளத்த, சமணப் பெண் துறவிகளின் குழுக்கள் மேற்கூறிய தேவதாசிகளின் குழுக்களில் இருந்து மாறுபட்டவை. இவர்களும் தங்களுக்கென்ற ஒரு வாழ்வை நடத்தினர். இத்தகைய பெண்களின் வாழ்க்கை, அவர்கள் வாழ்ந்த சமூகத்தோடு எத்தகைய தொடர்பு கொண்டிருந்தார்கள் என்பவை ஆராயப்பட வேண்டியவை.

மேற்கூறிய விசயங்கள் அனைத்தும் பண்பாடு, மரபு என்பவற்றைப் பற்றி விரிவாக ஆராய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன. பண்பாடு எனபது நிலைத்து நிற்பதல்ல, மாறிக் கொண்டேயிருப்பது என்பதையும் சுட்டிக் காட்டுகின்றன.

மே தினத்தின் புரட்சிகரப் பாரம்பரியம்

உலகெங்கும் உள்ள உழைப்பாளர்களின் ஒருமைப்பாட்டையும் போராட்ட உணர்வையும் மே தினக் கொண்டாட்டாங்கள் வெளிப்படுத்துகின்றன. இந்த ஆண்டு உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்கள் மே தினத்தைக் கொண்டாடும் போது இந்திய பாட்டாளி வர்க்கம் ஒரு கடுமையான அரசியல் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறது. இந்தியாவின் 16 ஆவது நாடாளுமன்றத் தேர்தல் கிட்டத்தட்ட முடிவடைந்துள்ளது. இந்தத் தேர்தல் களத்தில் உலகின் பல்வேறு பகுதியிலுள்ள பாட்டாளி மக்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளை இந்தியப் பாட்டாளி வர்க்கமும் எழுப்பியுள்ளது. உழைக்கும் வர்க்கத்தை பொறுத்த வரை கூலி, பணிப்பாதுகாப்பு, விலைவாசி உயர்வு, வேலையின்மை, சமூகப் பாதகாப்பு போன்றவை முக்கியமான சில பிரச்சினைகளாகும்.

மேலும், பாட்டாளி வர்க்கம் தான் விரும்பிய தொழிற்சங்கத்தைத் துவக்கி நடத்துவது என்பது உள்ளிட்ட தனது உரிமைகளை நிலைநாட்டுவது போன்ற பிரச்சனைகளும் முக்கியமாகும். மேற்கூறிய பிரச்சனைகள் அனைத்தும் கடந்த 23 ஆண்டுகளாக நம் நாட்டில் கடைபிடிக்கப்படும், நவீன தாராளமயக் கொள்கைகளோடு தொடர்புள்ள பிரச்சனைகளாகும். உழைக்கும் வர்க்கம், இந்தப் பிரச்சனைகளின் மீது மக்களின் கவனத்தை ஈர்க்க முயற்சிக்க வேண்டும். இந்தப் பிரச்சனைகள் பாட்டாளி மக்களின் வாழ்வாதாரங்களோடு தொடர்புடையவை. அதுமட்டுமின்றி நாட்டின் பெரும்பகுதி மக்களின் எதிர்காலத்தோடும் தொடர்புடையது.

இந்திய பாட்டாளி வர்க்கம் தற்போது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. இந்தப் பிரச்சாரம் கடந்த 5 ஆண்டுகளாக பாட்டாளி வர்க்கம் நடத்தி வரும் மாபெரும் ஒன்றுபட்ட போராட்டத்தின் ஒரு பகுதியேயாகும். இந்தக் காலகட்டத்தில் இந்திய பாட்டாளி வர்க்கம் துறைவாரியான மாபெரும் போராட்டங்களை நடத்தியுள்ளது. பல ஒன்றிணைந்த போராட்டங்களையும் நடத்தியுள்ளது. நாடு தழுவிய வேலை நிறுத்தங்களை நடத்தியுள்ளது. அரசு பின்பற்றும் கொள்கைகளில் மாற்றம் தேவை என்பதை வலியுறுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாகவே இப்போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்தப் போராட்டங்கள், வேலை நிறுத்தங்கள் இவையனைத்தும் உலக முழுவதிலும் உள்ள பாட்டாளி மக்கள், பல்வேறு பகுதிகளிலும் நடத்திவரும் மாபெரும் போராட்டங்களோடு ஒத்திசைந்தவை எனலாம்.

நீக்கமற நிறைந்த பிரச்சனைகள்

கடந்த சில ஆண்டுகளாக முதலாளித்துவ உலகைக் கடுமையான பிரச்சனைகள் வாட்டி வருகின்றன. உலகெங்கிலும் உள்ள பல பகுதி மக்களின் வாழ்வு இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதைக் கண்கூடாகக் காணலாம். இத்தகைய சிக்கல்களின் பின் விளைவுகளை எதிர்த்துதான் ஐரோப்பாவிலும் மற்ற நாடுகளிலும் போராட்டங்கள் வெடித்தன. ஐரோப்பாவில் வேலையின்மை, மிக முக்கியப் பிரச்சனையாகும். கிரீஸில் வேலையற்றோரின் விகிதம் 27.4 சதவீதம் என்பது அதிகாரப்பூர்வமான தகவல்: ஸ்பெயின் 26.7 சதவீதம்: போர்ச்சுகல் 15.5 சதவீதம்: பல்கேரியா 12.9 சதவீதம்: இத்தாலி 12.7 சதவீதம். பெண்கள், இளைஞர்கள் இவர்களைப் பொறுத்த வரையில் நிலைமை மிகவும் மோசமாகியுள்ளது. அனைத்து நாடுகளிலும் இந்த இரண்டு பிரிவினரும் வேலையற்றோரில் மிக அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இந்த காலகட்டத்தில், வேலையின்மை பெருகும்: மேலும் தொழிலாளர்களின் கூலியின் மீதும் சமூகப் பாதுகாப்புக்கான நடவடிக்கைகளின் மீதும் தாக்குதல் நடைபெறும். இதுதான் வரலாறு நமக்குப் புகட்டும் பாடம். சிக்கன நடவடிக்கைகள் என்ற பெயரில் எடுக்கப்படும் இத்தகைய நடவடிக்கைகள் பிரச்சினைகளை மேலும் சிக்கலாக்குகின்றன. உழைக்கும் மக்களின் வாழ்வாதாரங்களின் மீது மிகக் கடுமையான தாக்குதல்களை ஏவுகின்றன. கொள்கை ரீதியில் நவீன தாராளமயக் கொள்கைகளை ஏற்றுக் கொள்பவர்கள் கூட ஆளும் வர்க்கங்களும், பன்னாட்டு நிதி நிறுவனம் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி போன்றவற்றின் இத்தகைய கொள்கைளை ஏற்கத் தயங்குகிறார்கள். ஏப்ரல் 4 ஆம் தேதி பிரஸ்ஸல்ஸ் நகரில் மிகப் பெரிய பேரணி ஒன்று நடந்தது. அதில் ஐரோப்பா முழுவதிலிருந்தும் வந்திருந்த ஆயிரமாயிரம் உழைப்பாளர்கள் சிக்கன நடவடிக்கைகள் ஒழிக என்றும் இன்னொரு ஐரோப்பா சாத்தியமே என்ற கோஷங்களை முழங்கினார்கள். இந்தப் பேரணியில் கலந்து கொண்டவர்கள், ஐரோப்பிய ஒன்றியத்தின் நிர்வாகிகள் வேலையின்மை, வறுமை, சமத்துவமின்மை ஆகிய சிக்கல்களைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினர்.

துரதிருஷ்டவசமாக இந்த மாபெரும் போராட்டங்கள், அநீதியை எதிர்த்த கோஷங்கள், ஏழைகளுக்கும், செல்வந்தவர்களுக்கிடையே அதிகரித்து வரும் இடைவெளியை எதிர்த்த கோஷங்கள் போன்ற போராட்டங்கள் வால்ஸ்டிரீட் முற்றுகை போராட்டத்தைப் போலவே, ஓர் அரசியல் குறிக்கோள் இல்லாமலே முடிந்து விடுகின்றன. எதிர்ப்பையும், கோபத்தையும் வெளிப்படுத்திய பின்னர் அடங்கி விடுகின்றன.

தற்போதைய அமைப்புக்குச் சவால்

மேற்கூறிய அனைத்துப் பிரச்சனைகளையும் வர்க்க நோக்கோடு பார்க்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறது மே தினம். உழைப்பாளிகளைச் சுரண்டினால்தான் முதலாளித்தவம் நிலைத்து நிற்க முடியும். நாம் தற்போது சந்திக்கும் அத்தனைப் பிரச்சனைகளுக்கும் மூல காரணம் முதலாளித்துவம்தான். அதனால், முதலாளித்துவ அமைப்புக்கு நாம் சவால்விட வேண்டும். இந்த குறிக்கோளை எட்டுவதற்காக பாட்டாளி வர்க்கமும் மற்ற எல்லா உழைக்கும் மக்களும் ஓரணியாகத் திரண்டுவர வேண்டும். அவர்களுடைய அன்றாடப் போராட்டங்களை ஆளும் வர்க்கங்களின் கொள்கைகளின் மீதான விமர்சனத்துடன் இணைக்க வேண்டும். இந்த ஆளும் வர்க்கத்தின் கொள்கைகளுக்குப் பின்னாலிருக்கும் அரசியலை அம்பலப்படுத்த வேண்டும். இதுதான் மிக முக்கியமான பணியாகும். மே தினத்தின் உத்வேகம் நிறைந்த அறைகூவல் முதலாளித்துவத்தை எதிர்த்த போராட்டத்தை வலுப்படுத்தவோம் என்பதுதான் இன்றைய உலகில் குறிப்பாக நம் நாட்டில் பொருளாதார, அரசியல் மற்றும் தத்துவார்த்த மட்டங்களில் நமது செயல்பாடுகளை வலுப்படுத்த வேண்டும். நவீன தாராளமயக் கொள்கைகள், நமது சமுதாய அமைப்பில் கடுமையான தாக்குதலை நிகழ்த்திச் சமுதாயத்தைச் சீரழித்துவிடுகிறது. இத்தகைய நவீன தாராளமயக் கொள்கையினால் ஏற்பட்ட பாதிப்புகள் ஆழ்ந்து பரிசீலனை செய்யப்பட வேண்டும். இந்தச் சமுதாயச் சீரழிவைத் தடுக்கும் வழிமுறைகளைப் பற்றி ஆலோசிக்க வேண்டும்.

45 கோடிக்கும் மேல் உழைப்பாளர்களைக் கொண்ட நம் நாட்டில், அதில் மிகச் சிறிய பகுதியினரே வெகுஜன அமைப்புகளில் உறுப்பினராக உள்ளனர். இந்த நிலையில் தொழிற்சங்க இயக்கத்தை வலுப்படுத்துவதே நம் தலையாய கடமையாகும். இந்தியாவில் உழைக்கும் மக்களில் பெரும்பகுதியினர் ஏழை விவசாயிகளும், விவசாயத் தொழிலாளிகளும் ஆவர். தொழிற்சங்கங்கள் இந்த மக்களின் பிரச்சினைகளையும் கையிலெடுக்க வேண்டும். இந்தப் பகுதி மக்கள் ஈவு இரக்கமின்றிச் சுரண்டப்படுகிறார்கள். லட்சக்கணக்கானோர் தற்கொலை செய்து கொண்டு இறக்கிறார்கள். உழைக்கும் மக்களிடையே நிலப்பிரபுத்துவக் கருத்துக்களும், திருத்தல்வாத மனோநிலையும் காணப்படுவது இன்னொரு பெரும் சவாலாகும். இது நம் பணியை மேலும் முக்கியமானதாக்குகிறது. தொழிற்சங்கங்களுக்கு வர்க்க உணர்வை ஊட்டுவதும், பாட்டாளி மக்களிடையே விஞ்ஞான சோசலிசக் கருத்துக்களைப் பரப்புவதும் நமது மிக முக்கியமான பணியாகும். நமது போராட்டங்களில் ஒவ்வொரு நாட்டுக்கும் உரிய தனிப்பட்ட பிரச்சினைகளைக் கையிலெடுக்கும் போது, ஏகாதிபத்தியத்தின் தாக்குதல்கள், அதன் தலையீடு இவற்றைப் பற்றியும் குறிப்பிட வேண்டும்.

இந்த ஆண்டு முதல் உலகப்போர் நிகழ்ந்து நூறாண்டு நிறைவு பெறுகிறது. இந்தப் போர் முடிந்தாலும், இருபதாம் நூற்றாண்டின் முதல் பகுதியிலேயே உலகம் இன்னொரு கொடூரமான போரைச் சந்தித்தது. இதன் விளைவாக ஏராளமான பொருட்சேதமும், உயிர் சேதமும் விளைந்தன. ஆனால், இன்னமும் போர் வெறி குறையவில்லை. ஏகாதிபத்திய நாடுகள், நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்வேறு கண்டங்களிலும், பல்வேறு நாடுகளிலும் அவற்றின் விவகாரங்களில் தலையிட்டு, அந்நாடுகளின் மீது ஆதிக்கம் செலுத்த முனைகின்றன.

ஏகாதிபத்திய சதிக்கு ஆளாகியிருக்கும் நாடுகளான சிரியா, வெனிசுலா, பாலஸ்தீன், கியூபா முதலிய நாடுகளின் மக்கள் ஏகாதிபத்தியத்தை எதிர்த்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இந்நாடுகளில் ஏகாதிபத்திய சதியை எதிர்த்து நாம் குரல் கொடுக்க வேண்டும். லிபியா, ஈராக், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளும் ஏகாதிபத்தியத்தின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. இந்நாட்டு மக்களுக்கும் ஆதரவாக நிற்க வேண்டும்.

நம்முன் இருக்கும் பணிகளை நமக்கு நினைவூட்டும் நாள் மே தினம். இந்தியாவில் தற்போது மதவெறி வகுப்புவாதம் தலைவிரித்தாடும் நிலைமையைக் காண்கிறோம். இத்தகைய வகுப்புவாதம் மக்களைக் கூறுபோடுவதோடு சமூக அமைதியைச் சீர்குலைக்கிறது. அதுமட்டுமின்றி உழைக்கும் மக்களின் ஒற்றுமையைக் குலைத்துத் தொழிற்சங்க இயக்கத்தையும் பலவீனப்படுத்துகிறது. தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமையைக் குலைக்கும் இன்னொரு பிரச்சினை சாதியம். சாதிய மோதல்களை ஊக்குவிக்கும் சக்திகளை அடையாளம் கண்டு, சாதியத்தை எதிர்த்துப் போராட வேண்டும்.

இந்திய தொழிற்சங்க மையத்தைத் தோற்றுவித்தவரும், அதன் தலைவருமான பி.டி.ரணதிவே “மே தினத்திற்குப் புரட்சிகரமான பாரம்பரியம் உண்டு. இந்தப் பாரம்பரியம் எப்போதும், மக்களின் கோரிக்கைகளோடு, உழைக்கும் மக்களின் சர்வதேச ஒருமைப்பாட்டையும் இணைத்துக் கொண்டுள்ளது. முதலாளித்துவத்தை முடிவுக்குக் கொண்டு வருவதில் நம்பிக்கையும், திண்மையும் கொண்டது. உழைக்கும் மக்களுக்கு அரசியல் அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் என்று உறுதி பூண்டது” – என்கிறார்.

உழைக்கும் மக்களின் வர்க்கப் போராட்டங்களில் தங்கள் இன்னுயிரை ஈந்த தியாகிகளின் மகத்தான தியாகங்களை நினைவு கொள்வோம். வர்க்க ஒற்றுமையை மனதில் இருத்திப் புரட்சிப் பதாகையை உயர்த்திப் பிடித்து நமது இலக்கை நோக்கி வீறு நடை போடுவோம்.

– தமிழில் பேராசியர் ஹேமா