உக்ரைன் போர்: நாம் யார் பக்கம்?

இ.பா. சிந்தன்

(பெல்ஜியம் நாட்டில் மென்பொருள் துறையில் பணியாற்றிவரும் இ.பா. சிந்தன், உக்ரைனில் நடப்பது என்ன? என்ற தலைப்பில் எழுதி, பாரதி புத்தகாலயம் சமீபத்தில் வெளியிட்ட நூலின் பகுதிகள்)

நூல் வாங்க: Buy

இரஷ்யாவை ஒட்டிய கிழக்கு உக்ரைனில் போரும் சண்டைகளும் உயிரிழப்புகளும் இதுவரை முடிந்தபாடில்லை. அமெரிக்காவின் ஆதரவு கிடைக்கப்பெற்ற அசோவ் பட்டாலியன் படைகள் ஒருபுறமும், இரஷ்யாவின் ஆதரவைப் பெற்ற டொனட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் அரசுகளின் இராணுவமும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டே இருந்தன. ஒரு போருக்குப் பின்னர் இன்னொரு போர் என்று அது தொடர்கதையாகிப் போனது.

2014 ஆம் ஆண்டு முதல் போரும் சண்டையும் மோதலும் மரண ஓலங்களும் இல்லாத நாளே இல்லை எனலாம். ஸ்லோவியான்ஸ்க் சண்டை, கிரமாட்டோர்ஸ்க் சண்டை, டொனட்ஸ்க் விமான நிலைய சண்டை, லுகான்ஸ்க் எல்லைக்கான சண்டை, செலினோபிலா ராக்கெட் தாக்குதல், சகார்ஸ்க் சண்டை, ஹொர்லிவ்கா மோதல், இலோவாய்ஸ்க் மோதல், நோவோவிட்லிவ்ஸ்கா அகதிகள் தாக்குதல், நோவோசோவ்ஸ்க் சண்டை, மரியோபோலில் பலகட்ட மோதல்கள், ஸ்வித்லோதர்ஸ்க் மோதல், அவ்டிவ்கா மோதல், ஒடஸ்ஸா மோதல் என தொடர்ந்தன.

இரஷ்யாவும் ஐரோப்பிய ஒன்றியமும் உக்ரைனும் இணைந்து ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டு சமமாக வளர்வதற்கு பதிலாக ஒருவருக்கொருவர் அடித்துக்கொள்வதால், இம்மூன்று பகுதியினருக்குமே நிம்மதியோ, அமைதியோ, இலாபமோ இல்லை என்பதை அவர்கள் உணரவில்லை. இம்மூன்று பகுதியினரும் அடித்துக்கொள்வதால் உக்ரைனில் இருந்து பல ஆயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள அமெரிக்க ஏகாதிபத்தியமே லாபமடைகிறது.

ஐரோப்பாவிற்கும் இரஷ்யாவிற்கும் இடையிலான மோதலை உயிர்ப்போடு வைத்திருப்பதன் மூலம்தான் இவ்வுலகின் ஒரே ஆதிக்க நாடாக நீடித்து இருக்கமுடியும் என்று அமெரிக்க பெருமுதலாளிகளும் ஆட்சியாளர்களும் திட்டமிட்டே செயல்படுகிறார்கள். இரஷ்யாவுக்கும் ஐரோப்பாவிற்கும் இடையில் ஒரு தொடர்புப் புள்ளியாகவும், எரிபொருள் மற்றும் எரிவாயு வர்த்தகத்திற்கு உதவும் வகையிலும் இருக்கிற உக்ரைனில் பெருங்குழப்பத்தை விளைவிப்பதன் மூலம் அதை செய்கிறார்கள்.

இரஷ்யாவில் இருந்து ஜெர்மனி வரையிலும் கடல்வழியாக வரும் முதலாம் நார்த் ஸ்ட்ரீம் குழாயின் வழியாக எரிவாயு கொண்டு வரப்பட்டு, ஐரோப்பிய வீடுகளில் விளக்கு எரிகிறது. அதைப்  பார்த்து அமெரிக்காவின் வயிறு எரிந்து, கெடுப்பதற்கு பல வழிகளில் கடந்த பல ஆண்டுகளாகவே முயன்று வருகிறது. இப்போது இரஷ்யாவுக்கும் ஜெர்மனிக்கும் இடையில் இரண்டாவது எரிவாயுக் குழாயினை கடலில் அமைக்கும் பணியும் முடிவடைந்துவிட்டதை அமெரிக்காவால் தாங்கவே முடியவில்லை. அதனாலேயே, இரஷ்யாவை ஐரோப்பாவின் எதிரியாக்கிடும் ஒரு பொதுக்கருத்தை உருவாக்க விரும்பித்தான், உக்ரைனின் கிழக்குப் பகுதியில் வெள்ளை இனவெறி அமைப்புகளை உருவாக்கி பயங்கரவாதத்தை அமெரிக்கா துவக்கியிருக்கிறது.

இரஷ்யாவுடன் கைகோர்ப்பதால் கிடைக்கிற பலனுக்காக அமெரிக்காவை பகைத்துக்கொள்ள முடியாத சூழலிலும் ஐரோப்பிய நாடுகள் இருக்கின்றன. அதற்கு இரஷ்யாவை கம்யூனிசத்துடன் இணைத்து கடந்த 75 ஆண்டுகளாக ஐரோப்பிய மக்களிடையே ஐரோப்பிய ஆளும்வர்க்கம் ஏற்படுத்திவரும் அச்சத்தினால், திடீரென ஒரேநாளில் அமெரிக்காவை எதிரியாக்கி இரஷ்யாவை நட்பு நாடாக அறிவித்துவிட முடியாத சூழலில் ஐரோப்பிய ஆட்சியாளர்கள் சிக்கிக்கொண்டனர். எனவே, அமெரிக்கா போடும் தாளத்திற்கு ஆடியே ஆகவேண்டிய கட்டாயத்திற்கு ஐரோப்பிய ஆட்சியாளர்கள் தள்ளப்பட்டிருக்கின்றனர்.

2014 முதல் 2022 வரையிலும் 15,000த்திற்கும் மேற்பட்ட உக்ரைனிய மக்களை அமெரிக்க ஆதரவுடன் உருவாக்கப்பட்ட வெள்ளையின பயங்கரவாதிகள் கொன்றிருக்கிறார்கள். ஆங்காங்கே கூட்டங்கூட்டமாக மக்களைக் கொன்று புதைத்திருக்கிறார்கள். 2021 ஆம் ஆண்டில் டொன்பாஸ் பகுதியில் எதேச்சையாகத் தோண்டுகையில் 292 பிணங்கள் ஒரே இடத்தில் கண்டெடுக்கப்பட்டன. அவை அமெரிக்க ஆதரவு வெள்ளையின பயங்கரவாதிகளால் கொன்று புதைக்கப்பட்ட உக்ரைனியர்களின் உடல்கள்தான் என்று ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றத்தில் இரஷ்யா வழக்கும் தொடுத்திருக்கிறது.

என்றைக்கிருந்தாலும் ஒருநாள் உக்ரைனை நோக்கி தன்னுடைய படையினை இரஷ்யா கொண்டுவந்தே ஆகவேண்டும் என்பதை, 2014 முதல் அமெரிக்காவின் தொடர் நடவடிக்கைகளை கவனித்துவந்த எவருமே எளிதாக யூகித்துவிடுவார்கள். அதுதான் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதியன்று நடந்தது. அன்றைக்கு யார் மகிழ்ந்தார்களோ இல்லையோ, அமெரிக்க அரசும் அமெரிக்க பெருமுதலாளிகளும் அவரவர் அலுவலகங்களில் துள்ளிக் குதித்துக் கொண்டாடியிருப்பார்கள்.

உக்ரைனுக்காக கண்ணீர் வடிப்பது தவறா?

ஆயிரம்தான் இருந்தாலும் இரஷ்யா நடத்தும் இந்த போரை ஆதரிக்க முடியாது என்ற வாதத்தை ஏற்கத்தான் வேண்டும். வீடுகளை இழந்து, சொந்த நிலத்தை இழந்து இலட்சக்கணக்கான அப்பாவி உக்ரைனிய மக்கள் புலம்பெயர்வதைப் பார்க்கவே கொடூரமாக இருக்கிறது. அவர்கள் மீண்டு வருவதற்கான வழிகள் ஏதும் தென்படாமல் இருப்பதும்  கவலையைத் அதிகரிக்கிறது. அதனாலேயே இந்தப் போர் குறித்த எந்த செய்தியைப் பார்த்தாலும், எந்த புகைப்படங்களைப் பார்த்தாலும் நமது கண்களில் இருந்து கண்ணீர் வெளியேறுவது இயல்பாகி விடுகிறது.

ஆனால், உக்ரைனிய போர் குறித்தான தகவல்களும் புகைப்படங்களும், கண்ணீர்க்கதைகளும் எப்படி நம்மிடம் இவ்வளவு வேகமாக வந்து சேர்கின்றன என்பதையும், உலகில் வேறெந்த நாட்டிலும் இப்படியான போர்கள் ஏதும் நடைபெறவில்லை என்பது போன்ற தோற்றத்தை யார் நம் மீது திணிக்கிறார்கள் என்கிற கேள்வியை நமக்கு நாமே எழுப்ப வேண்டும். அப்போதுதான் பல உண்மைகள் நமக்குப் புலப்படும்.

உலக ஊடகங்கள் அனைத்தும் மேற்கு நாடுகளின் வசமே இருப்பதால், மேற்குலகம் இவ்வுலகில் நடத்திக் கொண்டிருக்கும் போர்களையும் செய்து கொண்டிருக்கும் கொலைகளையும் மறைத்துவிட்டு, அவர்களுக்கு சாதகமான அரசியலுக்காக, இரஷ்யாவின் போரைப் பற்றி மட்டுமே நம்மைக் கவலைப்பட வைக்கிறார்கள். இது அவர்களின் தந்திரமான சூழ்ச்சி.

சிரியாவை ஏன் மறந்தோம்?

மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து சிரியா வழியாக ஐரோப்பாவிற்கு பூமிக்கடியில் குழாய் பதித்து, அதன் மூலம் எரிபொருள் கொண்டு செல்வதற்கு போடப்பட்ட திட்டத்தை எப்படியாவது முறியடிக்க வேண்டும் என்கிற ஒரே குறிக்கோளுடன், சிரியாவில் குழப்பம் விளைவித்து, போரைத் துவங்கும் பணியைச் செய்தது அமெரிக்கா. அதற்காக, ஈராக் சிறைகளில் இருந்த பல்லாயிரக்கணக்கான மரணதண்டனைக் கைதிகளை விடுவிக்க வைத்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைக்க வைத்தது வரை அமெரிக்காவின் பங்கு இருக்கிறது என்பதற்கு பல ஆதாரங்கள் இருக்கின்றன. சிரியாவின் அரசுக்கும் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்திற்கும் இடையிலான சண்டையில் நியாயப்படி சிரியாவின் அரசுக்குத்தானே யாராக இருந்தாலும் ஆதரவாக இருக்கவேண்டும்? ஆனால், இவ்விருவருடனும் இணையாமல், மூன்றாவதாக ஒரு அணியை உருவாக்கி, மறைமுகமாக ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்கள் வழங்கும் பணியினை அமெரிக்க அரசு செவ்வனே செய்தது.

 சிரியாவில் போர் துவங்கி பத்து ஆண்டுகளுக்கும் மேலாகிறது. எதற்காக அந்த போர் துவங்கியது? யாரின் நலனுக்காகத் துவங்கியது? எதை நோக்கிய போர் அது? என்கிற எந்த கேள்விக்கும் இன்று எவரிடமும் பதில் இல்லை. இஸ்ரேலும், துருக்கியும், குர்து படைகளும், ஐஎஸ்ஐஸ் அமைப்பும், அமெரிக்க ஆதரவு பயங்கரவாதக் குழுக்களும் சிரியாவின் பல பகுதிகளை ஆக்கிரமித்து, சிரியா என்கிற நாட்டை ஒன்றுமில்லாமல் செய்திருக்கிறார்கள்.

இதுமட்டுமில்லாமல், கடந்த பத்தாண்டுகளில் இப்போரால் இலட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்திருக்கின்றனர். பல்வேறு அமைப்புகளின் அதிகாரப்பூர்வ ஆய்வுகளின்படியே ஐந்து இலட்சத்திற்கும் மேலான சிரிய மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். உண்மையான கணக்கு இதைவிடவும் அதிகமாக இருக்கும்.

வீடு வாசல் அனைத்தையும் இழந்து, ஒன்றரை கோடி மக்கள் அகதிகளாகி இருக்கின்றனர். அவர்களில் சுமார் 60 இலட்சத்திற்கும் மேலானவர்கள் சிரியாவை விட்டே வெளியேறி, துருக்கி, லெபனான், ஜோர்டான், ஜெர்மனி என பல்வேறு நாடுகளுக்கு விரட்டியடிக்கப்பட்டிருக்கின்றனர். மீதமுள்ளோரோ, சொந்த நாட்டிலேயே அகதிகளாக, எவ்வித அடிப்படை வசதியும் இல்லாமல் முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். கொரோனாவினாலும், வறுமையினாலும், சுகாதாரமின்மையினாலும் இறந்தவர்கள் எண்ணிக்கையெல்லாம் எந்தக் காலத்திலும் வெளிவராத தகவலாகவே தான் இருக்கப்போகிறது.

ஒரு தேசத்தையே துண்டாக்கி விட்டு, கோடிக்கணக்கான மக்களை அகதிகளாக்கி, இலட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்த இந்தப் போர் இன்றைக்கும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால், அந்தப் போருக்குக் காரணமான எவர் மீதும், உலகின் எந்த அமைப்புகளும், எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அமெரிக்கா மேல் எந்த நாடும் பொருளாதாரத் தடை விதித்ததாகத் தெரியவில்லை. அமெரிக்க டாலரை இனி  பயன்படுத்தவே மாட்டோம் என்று ஐரோப்பிய யூனியன் சொல்லவில்லை. அமெரிக்காவுடன் யாரும் ஒட்டோ உறவோ வைக்கவே கூடாது என்று ஐநா சபையில் தீர்மானமெல்லாம் நிறைவேற்றப் படவில்லை. இவ்வளவு ஏன், நம்முடைய கண்ணீரைக் கோரும் செய்திகளைக் கூட ஊடகங்கள் நமக்கு வழங்கவில்லை.

உக்ரைனிய மக்கள் மட்டுமல்லாமல், சிரியாவின் மக்களுக்கும் நம்முடைய கண்ணீர் தேவைப்படும் தானே! நாம் ஏன் சிரிய மக்களை மறந்தோம்? திட்டமிட்டு நம்மை மறக்க வைத்தது யார்?

ஏமனை ஏன் மறந்தோம்?

உலகின் மிகவும் ஏழ்மையான நாடுகளில் ஒன்று ஏமன். வளைகுடாப் பகுதியில் மிகப்பெரிய பணக்கார நாடாக இருக்கும் சவுதி அரேபியாவுடன் 1,000 கிலோமீட்டர் நீண்ட எல்லையைக் கொண்டிருக்கும் நாடுதான் ஏமன்.

1962இல் நிகழ்ந்த மக்கள் கிளர்ச்சியின் காரணமாக, மன்னராட்சியிலிருந்து குடியரசாக மாறியது வடக்கு ஏமன். அன்றிலிருந்து “ஏமன் அரபு குடியரசு” என்று வடக்கு ஏமன் அழைக்கப்பட்டது. அரபுலக சுதந்திரத்தை முன்னிறுத்திய எகிப்து அதிபர் நாசர், வடக்கு ஏமனின் ஆட்சி மாற்றத்திற்கு உதவியாக இருந்தார். அப்போது, அமெரிக்கா, பிரிட்டன், சவுதி அரேபியா மற்றும் பழைய ஈரான் போன்ற நாடுகள் தங்களது படைகளை அனுப்பி, வடக்கு ஏமனில் மன்னராட்சியையே தொடர வைக்கவும், நாசரை பலவீனப்படுத்தவும் கடுமையாக முயன்றன. அதுவே ஒரு போராகவும் மாறியது.  வடக்கு ஏமனுக்கு விடுதலை பெற்றுத் தருவதற்காக, 10,000த்திற்கும் மேற்பட்ட எகிப்து படையினர் உயிரிழந்தனர். இறுதியாக, வடக்கு ஏமனில் “ஏமன் அரபு குடியரசு” உருவெடுத்தது. ஆனாலும் அது பலம் பொருந்தியதாக இல்லை. அந்தப் போரின் காரணமாக எகிப்தும் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகியது. புதிதாக உருவான ஏமன் அரபு குடியரசால், பெரியளவு கலாச்சார ரீதியாகவோ, பொருளாதார ரீதியாகவோ வளர்ச்சியடைய முடியவில்லை. மன்னராக இருந்தவர், சவுதி அரேபியாவிற்குத் தப்பியோடினார். வடக்கு ஏமனுக்கு சொந்தமான பல பகுதிகளை சவுதி அரேபியா ஆக்கிரமித்துக்கொண்டது.

தெற்கு ஏமனின் வரலாறு சற்றே வித்தியாசமானது. அரபு நாடுகளையும் ஆப்பிரிக்க நாடுகளையும் கடல்வழியாக இணைக்கிற குறுகிய ஆப்பிரிக்கப் பகுதிகளை ஆக்கிரமித்து, ஜிபூடி என்கிற புதிய நாட்டை உருவாக்கி வைத்திருந்தது பிரெஞ்சு அரசு. அதற்குப் போட்டியாக, அரபுப் பிரதேசத்தில் தெற்கு ஏமனை ஆக்கிரமித்து வைத்திருந்தது பிரிட்டன். தெற்கு ஏமனில் ஆடன் துறைமுகத்தையும் உருவாக்கியது பிரிட்டன்தான். அந்நகரை அப்போதைய ஹாங்காங் என்று கூட சொல்லலாம். பிரிட்டன் தன்னுடைய காலனி நாடுகளிலிருந்து வேலையாட்களை கொண்டுவந்து சேர்த்தது. எல்லாவிதமான அதிகாரங்களையும் வைத்திருந்த பிரிட்டன் அதிகாரிகள், தங்களுக்கு ஒருபடி கீழேவைத்தே புலம்பெயர் இந்தியர்களையும் சோமாலியர்களையும் நடத்தினர். அவர்களுக்கும் கீழ்நிலையில் வைத்து ஏமன் மக்களை நடத்தினர். பிரிட்டனின் மற்ற காலனி நாடுகளிலெல்லாம் பிரிட்டன் ஆட்சியை எதிர்த்துப் போராடிய தேசியவாதிகள் மற்றும் கம்யூனிஸ்டுகளை அங்கிருந்து நாடுகடத்தி, ஏமனின் ஆடன் நகருக்கு கொண்டு வந்துவிட்டது பிரிட்டன். அப்படியாகக் குவிக்கப்பட்டவர்கள் ஒன்றிணைந்து பிரிட்டனின் ஆதிக்கத்தை எதிர்த்து ஏமனிலும் போராடினர். அதன் விளைவாகவே 1967இல் பிரிட்டனிடமிருந்து தெற்கு ஏமன் மட்டும் விடுதலை பெற்று, “ஏமன் மக்கள் ஜனநாயகக் குடியரசு” என்கிற புதிய நாடு உருவானது. கம்யூனிஸ்டுகளும் தேசியவாதிகளும் பாத் சோசலிசவாதிகளும் இணைந்து ஏமன் சோசலிசக் கட்சியின் கீழ் தெற்கு ஏமனை ஆட்சி செய்தனர்.

அரபுலகத்தில் மிகவும் முற்போக்கான நாடாகத் திகழ்ந்தது தெற்கு ஏமன். சட்டங்கள் மூலமாக நிலச்சீர்திருத்தம் நடைபெற்றது; பெண்-ஆண் சமத்துவம் நிலைநாட்டப்பட்டது. ஆட்சியை நிர்வகித்துவந்த சோசலிசக் கட்சியில் பலதரப்பட்ட குழுக்கள் இடம்பெற்றிருந்தன. அவர்களில், கம்யூனிஸ்டுகள் முக்கியப் பங்காற்றினார். பல்வேறு விதமான குழுக்கள் இருந்தமையால், ஒவ்வொரு முறையும் புதிதாக எதையாவது செய்ய முயலும் போதும், பல்வேறு விவாதங்களும் தடைகளும் குழப்பங்களும் வந்துகொண்டே இருந்தன. அவற்றையெல்லாம் சமாளித்தபடியே தான் முற்போக்கான நாடாக தெற்கு ஏமன் முன்னேறிக் கொண்டிருந்தது. ஆண்டாண்டு காலமாக நிலவுடைமையாளர்களாலும், அதிகாரத்தை அனுபவித்து வந்தவர்களாலும், அரசின் மக்கள் நலச் சட்டங்களை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால், அரசில் அவ்வப்போது நிலவிய கருத்துவேறுபாடுகள், சண்டைகளாகவும் கொலைகளாகவும் மாறின. அரசின் முக்கியமான தலைவர்களைக் கூட இழக்க வேண்டியிருந்தது. பனிப்போர் காலத்தில், தெற்கு ஏமனை அமெரிக்காவும் சவுதி அரேபியாவும்  முக்கிய எதிரியாகவே பார்த்தன. மூன்று முறை ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி நடைபெற்றன. இறுதி முயற்சியில், பல முக்கியத் தலைவர்களின் உயிரிழந்ததால் அது சோசலிசக் கட்சியினை பலவீனமாக்கியது. உடனே லிபரல் குழுக்கள் ஆட்சியதிகாரத்தைப் பிடித்துக்கொண்டன.  அதன்பின்னர், வீரியம் குறைந்த, பலமற்ற சோசலிசக் கட்சியாக அது மாறியது.

அதேவேளையில், 1962 முதலே அதிபர் சாலேவின் தலைமையிலான பிற்போக்குவாத அரசின் கட்டுப்பாட்டிலேயே வடக்கு ஏமன் இருந்தது. வடக்கு ஏமன் என்கிற தனியான தேசம் உருவாகிவிடக் கூடாதென்று அமெரிக்காவும், சவுதி அரேபியாவும் பிரிட்டனும் 1962இல் கடுமையாக முயன்றன. ஆனால், தெற்கு ஏமனைக் கம்யூனிஸ்டுகள் ஆட்சி செய்கிறார்கள் என்றவுடன், வடக்கு ஏமனுடன் இணைந்து தெற்கு ஏமனை அழிக்க, எல்லாவித முயற்சிகளையும் அமெரிக்காவும் சவுதி அரேபியாவும் எடுத்தன. வடக்கு ஏமனின் அதிபர் சாலேவை நல்லவர், வல்லவர் என்றெல்லாம் உலகிற்கு சொல்லத் துவங்கிவிட்டார்கள்.

1990ஆம் ஆண்டு சோவியத்தின் சரிவும், தெற்கு ஏமன் கம்யூனிஸ்டு தலைவர்களின் இழப்பும் ஒன்று சேர்ந்து, எவ்வித சமரசத்திற்கும் உடன்பட தெற்கு ஏமன் அரசை தயாராக்கி விட்டது. அதன்படி, தெற்கு ஏமனும் வடக்கு ஏமனும் ஒன்றிணைந்து, 1990இல் “ஏமன்” என்கிற ஒரே நாடாக மாறியது. வடக்கு ஏமனின் அதிபராக இருந்த சாலே ஒருங்கிணைந்த ஏமனின் அதிபரானார். துவக்கத்தில் நடுநிலைவாதி போல தன்னைக் காட்டிக் கொண்டார் சாலே. சோசலிச பின்னணியைக் கொண்ட தெற்கு ஏமனைச் சேர்ந்தவர்களும் ஒருங்கிணைந்த அரசில் இணைக்கப்பட்டனர். ஏமன் உருவான சமயத்தில் வளைகுடாப் போர் துவங்கியது. ஏமனில் இணைந்திருந்த முற்போக்குவாதிகள், வளைகுடாப் போரை ஏமன் அரசு ஆதரிக்கக்கூடாது என்று வலியுறுத்தினர். சாலேவும் வளைகுடாப் போரை ஏமன் எதிர்க்கிறது என்று அறிவித்து விட்டார். அதன்மூலம் அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியாவின் எதிர்ப்பை ஏமன் சம்பாதிக்க வேண்டியிருந்தது. சவுதி அரேபியாவில் பணிபுரிந்துகொண்டிருந்த 10 இலட்சம் ஏமன் தொழிலாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். அவர்கள் ஏமனுக்குத் திரும்ப வந்ததால், பெரிய பொருளாதார நெருக்கடியை ஏமன் சந்திக்க நேரிட்டது. சவுதி அரேபியாவின் சொல்பேச்சை எப்போதும் கேட்டுக்கொண்டிருக்கவேண்டும் என்கிற செய்தியை அழுத்தமாக சொல்வதற்காகவே இத்தகைய நடவடிக்கையை சவுதி அரேபியா எடுத்தது. அப்போதே, சவுதி அரேபியாவையும் அமெரிக்காவையும் பகைத்துக்கொண்டு எதுவும் செய்யமுடியாது என்கிற நிலைக்கு சாலேவின் ஏமன் அரசு தள்ளப்பட்டது

பலம்வாய்ந்த அதிபராக சாலே உருவெடுத்த பின்னர், ஏற்கெனவே பலமிழந்து காணப்பட்ட தெற்கு ஏமனின் சோசலிசக் கட்சி, மேலும் வலுவிழந்தது. அரசின் எல்லாவித அதிகாரங்களிலிருந்தும் தெற்கு ஏமன் புறக்கணிக்கப்பட்டது. வடக்கு ஏமனோடு இணைந்தது மிகப்பெரிய தவறு என்று சொல்லிக் கொண்டு சில பிரிவினைவாதக் குழுக்கள் தெற்கு ஏமனில் உருவாகின. 1994இல் மீண்டும் தெற்கு ஏமன் தனிநாடாக வேண்டும் என்கிற கோரிக்கையோடு தெற்கு ஏமனில் கலவரங்களும் போராட்டங்களும் வெடிக்கத் துவங்கின. இதில் வேடிக்கை என்னவென்றால், அப்போராட்டக் குழுக்களுக்கு மறைமுக ஆதரவும் ஆயுதங்களும் வழங்கியது வேறு யாருமல்ல, சவுதி அரேபியாதான். ஏமனில் ஒரு நிலையான அரசு அமைவதை எப்போதும் விரும்பாத சவுதி அரேபியா, தெற்கு ஏமனின் போராட்டக் குழுக்களுக்கு ஆதரவளித்தது. அதற்கு முன்பு வரலாற்றில் எப்போதும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளாத தெற்கு மற்றும் வடக்கு ஏமன் மக்களிடையே பிரிவினை எண்ணங்கள் பரப்பப்பட்டன. உள்நாட்டுக் கலவரம், சவுதி அரேபியாவில் இருந்து வெளியேற்றப்பட்ட பத்து இலட்சம் பேரின் வருகை, அதனால் ஏற்பட்ட வேலைவாய்ப்பின்மை என பலவும் ஏமனை வாட்டி வதைத்தது.

உழைப்பதற்கு வேலையும், மூன்று வேளை உணவும் கிடைக்காத மக்களிடத்திலே பிரிவினைவாதத்தை எளிதில் உருவாக்கிவிடமுடியும் என்று சவுதி அரேபியா தீர்க்கமாக நம்பியது. நாளடைவில் அதுவே பெரிய உள்நாட்டுப் போராக உருவெடுத்தது. 1994  மே மாதம், “ஏமன் ஜனநாயகக் குடியரசு” என்கிற நாடு மீண்டும் உருவாகிவிட்டதாக தெற்கு ஏமனின் போராட்டக் குழுவினர் அறிவித்தும் விட்டனர். வடக்கு ஏமனைப் பூர்வீகமாகக் கொண்ட அதிபர் சாலே, மதரீதியாக வடக்கு மக்களை தெற்கு மக்களுக்கு எதிராகத் திரட்டினார். இசுலாமின் சைதி பிரிவைச் சேர்ந்த வடக்கு ஏமன் மக்களை, சுன்னி பிரிவைச் சேர்ந்த தெற்கு ஏமன் மக்களுக்கு எதிராக நிறுத்தினார் அதிபர் சாலே. மக்களிடையே மதவுணர்வு தூண்டப்பட்டு, காலங்காலமாக ஒற்றுமையாக வாழ்ந்து வந்த மக்கள், எதிரெதிர் திசையில் நிறுத்தப்பட்டனர். இரண்டு மாதங்களாக நடந்த போரின் இறுதியில், தெற்கு ஏமனின் போராட்டக் குழுவினர் முற்றிலுமாக அழிக்கப்பட்டனர். அதிலும் குறிப்பாக, தெற்கு ஏமனில் மிச்சமிருந்த சோசலிசக் கட்சியினரும், இன்னபிற ஜனநாயக விரும்பிகளும் குறிவைத்துக் கொல்லப்பட்டனர். வெளிப்படையான கணக்குப்படியே 10,000த்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மறைமுகமாக பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று எளிதாக யூகித்துவிட முடியும். ஏமனின் சர்வாதிகாரியாக அலி அப்துல்லா சாலே உருவெடுத்தார்.

ஏமனின் பொருளாதாரம் பெரிதும் விவசாயத்தை சார்ந்தே இருந்து வந்திருக்கிறது. அரசின் அலட்சியப் போக்கினால், விவசாயம் பொய்க்கத் துவங்கியிருக்கிறது. எண்ணெய் வளங்களினாலும், மீன்பிடித்தொழிலாலும், சர்வதேச உதவிகளாலும், வெளிநாடுவாழ் ஏமன் மக்கள் அனுப்பும் பணத்தாலும் மட்டுமே ஏமனின் வருமானம் அடங்கியிருக்கிறது. அதிபர் சாலேவும் அவரை சுற்றியுள்ள அதிகாரமிக்க சில நபர்களுமே வசதியான வாழ்க்கை வாழ்வதும், பெரும்பான்மையான மக்கள் ஒருவேளை சோற்றுக்கே வழியற்ற நிலையில் தவிப்பதுமே 20 ஆண்டுகளாக இயல்பாகிப் போயிற்று. ஏமனின் பெரும்பகுதி மக்கள் 30 வயதுக்கு உட்பட்டோர்தான் எனினும், வேலையில்லாத் திண்டாட்டம் உச்சத்தில் இருக்கிறது. 2009 இல் 40% ஏமன் மக்களுக்கு வேலை இல்லாத நிலைதான். இவற்றுக்கெல்லாம் தீர்வு கேட்டு, 2004 இல் ஹூத்திகள் என்கிற போராட்டக்குழுவொன்று வடக்கு ஏமனில் உருவானது. வடக்கு ஏமனைச் சேர்ந்த ஹுசைன் அல் ஹூத்தி என்பவரால் உருவாக்கப்பட்டது தான் ஹூத்திகள் இயக்கம். வடக்கு ஏமன் மிகவும் பின்தங்கிய பகுதியாகவும், குடிக்கத் தண்ணீர் கூட இல்லாத நிலையும், உள்கட்டமைப்பு வசதியேதும் இல்லாத சூழலும் தொடர்ந்து கொண்டிருந்ததை ஏன் என்று கேள்வி எழுப்பினர். 20 ஆண்டுகளுக்கும் மேலாக எல்லாவற்றையும் தட்டிக்கழித்த அதிபர் சாலே, ஹூத்திகளை அலட்சியப்படுத்தினார். அதனைத்தொடர்ந்து ஆயுதப் போராட்டத்தை துவக்கினர் ஹூத்திகள் இயக்கத்தினர்.

எகிப்து, துனிசியா போன்ற நாடுகளில் அரபு வசந்தம் என்னும் பெயரில் மக்கள் கிளர்ச்சி நடந்ததை நாம் நன்கு அறிவோம். ஆனால், அதே காலகட்டத்தில் ஏமனில் ஜனநாயகத்தை விரும்பிய மக்கள், சாலேயின் சர்வாதிகார ஆட்சியை எதிர்த்துப் போராடினர். அமெரிக்காவின் நட்பு வட்டத்திற்குள் இருந்த காரணத்தாலேயே, ஏமன் மக்களின் போராட்டங்கள் உலக மக்களுக்கு சொல்லப்படவில்லை.

அரபுலகத்தின் எந்த நாட்டிலும் தனக்கு எதிரான அரசு அமைவதை அமெரிக்கா விரும்புவதில்லை. குறிப்பாக சவுதி அரேபியாவின் தெற்கே இருக்கும் ஏமனை எக்காரணம் கொண்டும் இழக்கத் தயாராக இல்லை. ஏமனிலோ, சவுதி அரேபியாவிலோ நிலையற்ற தன்மை உருவாகுமானால், அது தன்னுடைய பொருளாதாரத்தை பெரியளவில் பாதிக்கும் என்பதை அமெரிக்கா உணர்ந்தே இருக்கிறது. ஒரு கட்டத்திற்கு மேல் சாலேவுக்கான ஆதரவைத் தொடர முடியாமல், அமெரிக்காவும் சவுதி அரேபியாவும் இன்னபிற மத்தியகிழக்கு நாடுகளும் இணைந்து துணை அதிபராக இருந்த ஹாதியை அதிபராக்கின. ஆனால் அது வெறுமனே ஒரு கண்துடைப்பு தான் என்பதைப் புரிந்துகொண்ட ஹூத்தி அமைப்பினரும் மக்களும் அமெரிக்க ஆதரவு ஹாதி அரசினை தொடர்ந்து எதிர்த்தனர். அதற்குள் அல்கொய்தா அமைப்பின் வளைகுடாப் பிரிவு ஏமனில் துவக்கப்பட்டது. அதற்காக சவுதி அரேபியாவின் ஏராளமான சிறைக்கைதிகள் விடுவிக்கப்பட்டு ஏமனுக்கு அனுப்பப்பட்டுவிட்டதாக ஹூத்திகள் குற்றம் சாட்டுகின்றனர்.

அமைதியாக இருந்த ஏமன் நாட்டில் இப்படியாக பலதரப்புக் குழுக்கள் அடித்துக் கொள்ளும் ஒரு உள்நாட்டுப் போரினை தன்னுடைய சுயலாபத்திற்காக சவுதி அரேபியாவும் அமெரிக்காவும் இணைந்து செய்திருக்கின்றன.

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக நடக்கிற இப்போரில், இதுவரை ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். 75% மக்கள் மிகக்கொடூரமான வறுமையில் இருப்பதாக சர்வதேச அமைப்புகளின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை உணவு கூட கிடைக்காமல் இலட்சக்கணக்கான குழந்தைகள் பசியோடும் பட்டினியோடும் சாவோடும் போராடிக் கொண்டிருக்கின்றனர். பள்ளிகளையெல்லாம் பார்த்தே பத்தாண்டுகள் ஆகிப்போன குழந்தைகள் அவர்கள். இது மட்டுமில்லாமல் ஏறத்தாழ ஏமனின் பாதி மக்கள் காலரா தொற்றின் அச்சத்தில் வாழ்கின்றனர். இவை எல்லாவற்றுக்கும் மேலாக கொரோனா தாக்கத்தால் எவ்வளவு பேர் இறந்தார்கள் என்கிற புள்ளிவிவரம் கூட திரட்டமுடியாத நிலை உருவாகி இருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் ஏமனில் நடக்கிற போரை முடிவுக்குக் கொண்டு வரவில்லையென்றால், மக்களே வாழாத பகுதியாக ஏமன் மாறிவிடும் அபாயம் இருக்கிறதாக சுகாதார அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துக்கொண்டே இருக்கின்றன.

இப்போது இந்த வரியைப் படித்துக்கொண்டிருக்கும்போதே சில நூறு குண்டுகள் ஏமனில் வீசப்பட்டுக் கொண்டிருக்கும். பள்ளிகளும், மருத்துவமனைகளும் இடிந்து நொறுங்கிக் கொண்டிருக்கும். அதற்கு பிரிட்டனும், அமெரிக்காவும், பிரான்சும், சவுதி அரேபியாவும் தங்களுடைய மக்களிடம் வசூல்செய்த வரிப்பணத்தைத்தான் செலவு செய்து கொண்டிருக்கின்றன. தங்களுக்கு எவ்வகையிலும் தொடர்பில்லாத ஒரு போரினால் கடந்த பத்தாண்டுகளாக தவித்துக்கொண்டிருக்கும் ஏமன் மக்களுக்காக நம்முடைய கண்ணீரில் ஒரு துளியைக் கூட சிந்தச் சொல்லி எந்த ஊடகமும் நம்மிடம் ஏன் கோரவே இல்லை? ஏமன் மக்களின் துயரமெல்லாம் துயரக்கணக்கில் வராதா? இதுவரையிலும் ஏமன் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தையைக் கூட யாருமே துவக்காதது ஏன்? இத்தனை இலட்சம் ஏமன் மக்களைக் கொன்ற காரணத்திற்காக, சவுதி அரேபியா மீதும், அமெரிக்கா மீதும், இதுவரை ஐநா பாதுகாப்புக் கவுன்சிலோ, ஐரோப்பிய யூனியனிலோ, எந்தத் தீர்மானமும் நிறைவேற்றாதது ஏன்? அமெரிக்காவின் டாலரைப் புறக்கணிக்கும் கோரிக்கையை எந்த நாடும் எழுப்பாதது ஏன்?

யார் பக்கம் நாம் நிற்க வேண்டும்?

உக்ரைனின் கடந்தகால வரலாற்றையும் தற்போதைய நிலவரத்தையும் விரிவாக இதுவரையிலும் பார்த்திருந்தாலும், இன்றைய போர்ச்சூழலில் நாம் யாரின் பக்கம் நிற்க வேண்டும் என்பதில் பெருங்குழப்பம் இருக்கத்தானே செய்கிறது. இன்றைய சூழலைப் பொறுத்தவரையில் பல்வேறு அரசுகளும் குழுக்களும் உக்ரைனியப் பிரச்சனையில் ஈடுபட்டிருப்பதால், அவர்களில் யாருக்கு நாம் ஆதரவளிக்க வேண்டும் என்று முடிவெப்பது கடினம் எனினும் முக்கியமே.

இரஷ்ய அரசின் பக்கமா?

இன்றைய இரஷ்யாவை சோவியத் யூனியன் காலத்து இரஷ்யாவாகக் கருதிக் கொண்டு, இரஷ்யாவின் இப்போரை நாம் ஆதரித்துவிடமுடியாது. இன்றைய இரஷ்யா என்பது இலாபவெறி பிடித்த ஒரு முழுமையான முதலாளித்துவ நாடுதான். இன்னும் சொல்லப்போனால், 1991க்குப் பிறகான இரஷ்யா என்பதே அமெரிக்காவின் சந்தைப் பொருளாதார ஆட்சிமுறையை கொஞ்சம் கொஞ்சமாகப் நகல் எடுத்துக்கொண்டிருக்கும் ஒரு நாடுதான். சுமார் நூறாண்டுகளுக்கு முன்னர் ஜார் மன்னராட்சியைக் கவிழ்த்து, சோவியத் புரட்சியின் மூலம் உருவான, மக்களாட்சிக்குப் பின்னர், மக்களின் சொத்துக்களாக உருவாக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான அரசு நிறுவனங்கள், சோவியத் வீழ்ச்சிக்குப் பின்னர் ஒன்றன்பின் ஒன்றாக சில தனிநபர்களின் கைகளில் கொண்டு சேர்க்கப்பட்டன.

1992 முதல் 1994 வரையிலான இரண்டாண்டுகளில் மட்டுமே அரசுக்கு சொந்தமாக இருந்த 15,000 மிகப்பெரிய தொழிற்சாலைகளும் நிறுவனங்களும் ஒரு சில தனியார் முதலாளிகளுக்கு தாரை வார்க்கப்பட்டு விட்டன. அத்துடன் 85,000 கடைகள், உணவகங்கள் உள்ளிட்ட தொழிற்சாலைகளற்ற அரசு வணிக சொத்துக்களும், அதேபோல தனியாரின் வசம் கொடுக்கப்பட்டுவிட்டன. இதனால் தனியார் முதலாளிகள் வைப்பதே சட்டமாகிப் போனது. தொழிலாளர்களின் ஊதியம் குறையத் துவங்கியது. அதனை எதிர்த்துக் கேட்பதற்கான தளத்தையும் புதிய பொருளாதாரக் கொள்கையைப் பின்பற்றிய முதலாளித்துவ இரஷ்ய அரசுகள் முற்றிலுமாக அழித்து விட்டன. முயன்று கேள்விகேட்ட மக்களெல்லாம் ஒடுக்கப்பட்டனர். கேள்வி கேட்க முடியாத சூழலில் இருந்த மக்களெல்லாம் தற்கொலை செய்து மாண்டு போயினர்.

கோர்ப்பச்சேவ், எல்சின் எனத்துவங்கி இன்றைக்கு புடின் ஆட்சிக்காலம் வரையிலும் இப்படித்தான் மக்களின் போராட்டக்குரல் தொடர்ச்சியாக ஒடுக்கப்பட்டுக்கொண்டே வருகிறது. இரஷ்ய முதலாளிகளின் தேவை தான் இரஷ்ய அரசின் கொள்கையாக பிரதிபலிக்கிறது. உக்ரைனுக்குப் பின்னால் அமெரிக்க அரசின் தந்திரங்கள் இருக்கிறபோதிலும், உக்ரைனில் தனக்கு சாதகமான ஒரு அரசுதான் அமைய வேண்டும் என்பதிலும், அதன்மூலம் தன்னுடைய வியாபார நலன்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதிலும் இரஷ்ய பெருமுதலாளிகள் கவனமாகவே இருக்கிறார்கள்.

இன்று டொன்பாஸ் பகுதிகளெல்லாம் உக்ரைனுக்கு சொந்தமா அல்லது இரஷ்யாவுக்கு சொந்தமா அல்லது தனிநாடுகளாக மாறவேண்டுமா என்கிற பஞ்சாயத்தில் தான் போரே நடந்துகொண்டிருக்கிறது. “அந்த டொன்பாஸ் பகுதியை உக்ரைனுடன் இணைத்து இரஷ்யாவுக்கு லெனினின் துரோகம் இழைத்துவிட்டார்” என்று சொல்லிவிட்டுத்தான் உக்ரைனுக்கு எதிரான போரையே புடின் அறிவித்தார் என்பதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

எனவே, கிழக்கு உக்ரைனில் இயங்கும் அதிதீவிர வெள்ளை இனவெறி நாஜி இயக்கங்களை அழிப்பது தான் நோக்கம் என்று கூறிவிட்டு இப்போரை புடின் துவக்கியிருந்தாலும், உக்ரைனின் சில பகுதிகளை ஆக்கிரமித்து இரஷ்யாவுடன் வலுக்கட்டாயமாக இணைத்துக்கொள்வது தான் புடினின் உண்மையான நோக்கமாக உள்ளது என்று சந்தேகப்படாமலும் இருக்கமுடியவில்லை.

அதிலும், ஆயிரம் காரணங்கள் சொன்னாலுமே கூட, போர் என்றாலே அப்பாவி உழைக்கும் மக்கள் தான் அதிகமாக உயிரையும் உடமைகளையும் வாழ்விடங்களையும் இழப்பார்கள். போருக்குத் தகுந்தவாறு பயங்கரவாதிகளும் உக்ரைனிய அரசு அதிகாரிகளும் மறைவிடத்தில் ஒளிந்துகொள்ள முடியும். ஆனால் அப்பாவி மக்களால் என்ன செய்துவிடமுடியும். கிழக்கு உக்ரைனில் வாழ்ந்த இலட்சக்கணக்கான மக்கள் ஏற்கெனவே வீடிழந்து வாழ்க்கை இழந்து எங்கெங்கோ அகதிகளாக அலையத் துவங்கிவிட்டார்கள். காலங்காலமாக அரசியல் முரண்பாடுகளும் எல்லையோர சண்டைகளையும் கொண்டிருக்கிற போலந்து நாட்டிற்குத் தான் அதிகமான உக்ரைனிய மக்கள் இப்போது புலம்பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள். அங்கே அம்மக்களுக்கு நிச்சயமாக சமமான மரியாதை கிடைப்பதற்கான வாய்ப்பே இல்லை.

அதேபோல இந்தப் போருக்கு இரஷ்யா செலவிடும் பணம் எங்கிருந்து வருகிறது? இரஷ்யாவில் உழைக்கும் மக்கள் செலுத்திக்கொண்டிருக்கும் வரியைத் தானே புடின் தலைமையிலான இரஷ்ய அரசு போருக்கு செலவிடுகிறது? ஆக, இப்போரினால் இரஷ்யாவில் வாழும் மக்களின் உழைப்பும் தானே சுரண்டப்படுகிறது? அண்டை நாடான உக்ரைனில் வாழும் உழைக்கும் வர்க்கத்து மக்களைக் கொல்வதற்கு இரஷ்ய உழைக்கும் மக்களின் வியர்வைப்பணம் பயன்படுத்தப்படுவது எத்தனை பெரிய கொடூரம். இறுதியில்  இப்போரினால்  இலாபமடையப் போவது ஆளும்வர்க்கத்தினர் என்றாலும், இழப்பு மட்டும் இருநாடுகளில் வாழும் உழைக்கும் வர்க்கத்தின் தலையில் சுமத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

அதனால் எக்காரணம் கொண்டும் இரஷ்யாவின் பக்கம் நின்று இப்போரை நம்மால் ஆதரிக்கவே முடியாது.

உக்ரைனிய அரசின் பக்கமா?

இன்றைய உக்ரைனிய அரசென்பது முழுக்க முழுக்க அமெரிக்காவின் அடிமை அரசாகத்தான் இருக்கிறது. தற்போதைய உக்ரைனிய அதிபரான செலன்ஸ்கி செய்யும் வேடிக்கையான சேட்டைகளையெல்லாம் நாம் அன்றாடம் செய்திகளில் பார்க்க முடிகிறது. அவர் எப்படி உக்ரைனின் அதிபரானார் என்பதை அறிந்துகொண்டாலே, அவரை எளிதாக நம்மால் புரிந்துகொள்ள முடியும். இரஷ்ய மொழி பேசும் யூதக் குடும்பத்தில் பிறந்தவர் செலன்ஸ்கி. சோவியத் செஞ்சேனையில் கர்னலாக இருந்து, அதிகார வர்க்கத்தை எதிர்த்துக் காலமெல்லாம் போரிட்டவர் செலன்ஸ்கியின் தாத்தா. செலன்ஸ்கியின் கொள்ளுத்தாத்தாவும் அவருடைய தாத்தாவின் சகோதர்கள் மூவரும் யூதர்கள் என்பதாலேயே ஹிட்லரின் படையினரால் கொடூரமாகக் கொல்லப்பட்டவர்கள். ஆனால், தான் செல்வந்தராக இருக்கிற காரணத்தினாலேயே இரஷ்ய மொழி பேசும் மக்களுக்காகவோ அல்லது ஒட்டுமொத்த உக்ரைனிய மக்களுக்காகவோ குரல்கொடுக்காமல், தன்னுடைய வர்க்கம் சார்ந்து முதலாளித்துவ நலனிலேயே அக்கறை கொண்டவராக இருக்கிறார் செலன்ஸ்கி.

குவார்தல் 95 என்கிற பெயரில் ஒரு தொலைக்காட்சி சானலை நடத்தி வந்தார். அதில் அவரே நடித்தும் சில நாடகங்கள் ஒளிப்பரப்பானது. அதன்மூலம் தன்னுடைய முகத்தையும் ஒட்டுமொத்த உக்ரைன் மக்களின் மனதில் தொடர்ந்து பதியவைத்துக்கொண்டே இருந்தார்.

அப்படித்தான் “மக்கள் ஊழியன்” என்கிற பொருளில் சர்வன்ட் ஆஃப் தி பீப்பிள் என்கிற ஒரு தொலைக்காட்சித் தொடரில் நடித்தார். அது அவருடைய தொலைக்காட்சி சானலிலேயே ஒளிபரப்பானது. அதில் அவர் ஒரு பள்ளிக்கூட ஆசிரியராக நடித்திருந்தார். கதையின்படி, ஒருமுறை பள்ளியில் இருக்கும் மாணவர்களுக்கு உக்ரைனை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று மாணவர்களிடம் வகுப்பில் பேசிக்கொண்டிருப்பார். அதனை அவருக்குத் தெரியாமல் ஒரு மாணவர் வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவேற்றிவிடுவார். உடனே அது நாடு முழுவதிலும் பரவலாகிவிடும். செலன்ஸ்கி கதாபாத்திரம் நாட்டு மக்களிடையே பெரிய எழுச்சியை உண்டாக்கிவிடும். அதனைத் தொடர்ந்து அவர் உக்ரைன் அதிபர் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைக்கிறார்கள். வேறு வழியின்றி ஓப்புக்கொண்டு உக்ரைனிய அதிபராகிறார் அந்த ஆசிரியர். இதுதான் செலன்ஸ்கி ஆசிரியராக நடித்த தொலைக்காட்சித் தொடரின் கதை.

இந்தத் தொடர் உக்ரைனிய மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அதையே முதலீடாக வைத்துக்கொண்டு அரசியலில் குதிக்க வேண்டும் என்கிற ஆவல் அவருக்கு ஏற்பட்டது. அதனால் அவர் நடித்த “மக்கள் ஊழியன்” என்கிற தொடரின் பெயரிலேயே ஒரு அரசியல் கட்சியினைப் பதிவு செய்தார். அவருடைய தொலைக்காட்சி சானலில் பணிபுரியும் அனைவரையும் அந்த அரசியல் கட்சியின் கட்டாய உறுப்பினர்களாக்கி, கட்சிக்காக வேலை செய்ய வைத்தார். 24 மணி நேரமும் அவரையும் அவரது கட்சியையும் பிரபலமாக்கவே அவருடைய தொலைக்காட்சி சானல் பயன்படுத்தப்பட்டது. அரசியலே தெரியாத ஒரு ஆள் உக்ரைனிற்கு அதிபராவது அமெரிக்காவிற்கும் நல்லது என்பதால் அவர்களும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர்.

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் போட்டியிட்டு 75% வாக்குகளைப் பெற்று உக்ரைனின் புதிய அதிபரானார் செலன்ஸ்கி. இதில் என்ன வேடிக்கையென்றால், அந்தத் தேர்தலுக்காக தேர்தல் அறிக்கை கூட வெளியிடாத வேட்பாளராக அவர் இருந்தார். அதுமட்டுமல்லாமல், வரலாறோ, அரசியலோ, சமூகப்புரிதலோ, உக்ரைனின் பிரச்சனைகளோ தெரியாத காரணத்தால், அவர் எங்கேயும் எப்போதும் பத்திரிக்கையாளர் சந்திப்பைக்கூட நடத்தியதே இல்லை. எத்தனையோ முறை பத்திரிக்கையாளர்கள் கேட்டுப் பார்த்தும், அவர்களிடம் இருந்து நழுவித் தப்பித்து ஓடிக்கொண்டே இருக்கிறார் செலன்ஸ்கி. இந்தியாவிலும் கூட செலன்ஸ்கியைப் போல பத்திரிக்கையாளர்களை சந்திக்காமல் கடந்த 8 ஆண்டுகளாக பிரதமர் மோடி நழுவிக்கொண்டிருக்கிறார் என்பதை இணைத்துப் பார்த்தும் நாம் புரிந்துகொள்ளலாம்.

இன்றைக்கும் இரஷ்ய மொழியை அதிகாரப்பூர்வ மொழியாக அங்கீகரிக்காதது; அம்மொழி பேசும் மக்களைப் புறக்கணிப்பதோடு, கிழக்கு உக்ரைனில் அவர்களைக் கொன்றுகுவிக்கும் அசோவ் பட்டாலியன் உள்ளிட்ட அதிதீவிர வலதுசாரி பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிப்பது என தொடர்ந்து பிரிவினைவாத ஆட்சியை செலன்ஸ்கி நடத்தி வருகிறார்.

இன்றைய அசோவ் பயங்கரவாத அமைப்பின் தலைவர்களுக்கு உக்ரைனிய இராணுவத்திலும் காவல்துறையிலும் பெரிய பதவிகளையெல்லாம் அவர் வழங்கியிருக்கிறார். ஆனால் அந்த இயக்கத்தின் முன்னோர்கள்தான் ஹிட்லருடன் கைகோர்த்துக்கொண்டு, செலன்ஸ்கியின் கொள்ளுத்தாத்தாக்கள் உட்பட இலட்சக்கணக்கான  யூதர்களைக் கொன்று குவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 2014ஆம் ஆண்டு தேர்தலைப் போலவே 2019ஆம் ஆண்டு தேர்தலிலும் கம்யூனிஸ்ட் கட்சியைப் போட்டியிடவே அனுமதிக்காமல், அவர்களுக்குள்ளாகவே போட்டியிட்டு, அவர்களாகவே வென்றுகொண்ட ஒரு ‘ஜனநாயக’ அமைப்புதான்  இன்றைய உக்ரைனிய அரசு.

அதுமட்டுமில்லாமல், ஐஎம்எஃப் மற்றும் உலக வங்கிகளிடம் தொடர்ச்சியாக கடன் வாங்கிக் குவிப்பதையும் வழக்கமாக்கி வைத்திருக்கிறது இன்றைய உக்ரைனிய அரசு. அப்படியாக வாங்கப்படும் கடன்களையும் ஆயுதங்கள் வாங்கவே பயன்படுத்தி வீணாக்கி வருகிறது. கடனைக் கொடுத்த ஐஎம்எஃப் இன் கட்டளைகளில் மிக முக்கியமானது என்ன தெரியுமா? உக்ரைனிய அரசில் புதிதாக யாருக்கும் வேலை கொடுக்கக் கூடாது என்பதும், தனியார் முதலாளிகளை அனைத்துத் துறைகளிலும் அனுமதிக்க வேண்டும் என்பதும் தான். அதாவது கடனைக் கொடுத்துவிட்டு, மக்களின் உழைப்பை சுரண்டுவதுதான் ஐஎம்எஃப்- இன் ஒரே குறிக்கோள். பல்லாயிரக்கணக்கான கோடிகள் கடனில் உக்ரைன் மூழ்கியிருக்கிறது. அது தற்செயலாக நடந்தது அல்ல.

உக்ரைனிய அரசு இன்றைக்கு நினைத்தாலும் அமெரிக்காவையும் உலக வங்கிகளையும் எதிர்த்துப் பேசமுடியாத நிலையில் இருக்கிறது. போர் துவங்கிய அடுத்த சில நாட்களிலேயே 2500 கோடி ரூபாயினை ஐரோப்பிய ஒன்றியமும், 3000 கோடி ரூபாயினை உலக வங்கியும், 75,000 கோடி ரூபாயினை அமெரிக்காவும், 10,000 கோடி ரூபாயினை ஐம்எஃப் அமைப்பும் உக்ரைனுக்குக் கடனாக வழங்குவதாக அறிவித்துவிட்டன. போர் காலகட்டத்திலும் அமெரிக்க நலனுக்கு எதிராக  உக்ரைன் சென்றுவிடக் கூடாது என்பதை உறுதிசெய்வதற்கான ஏற்பாடுதான் இதெல்லாம்.

இப்படியான ஒரு சூழலில், நம்மால் உக்ரைனிய அரசுக்கு எவ்வித ஆதரவையும் தந்துவிடவே முடியாது. போரை நிறுத்துவதற்கான விருப்பமோ, சொந்த நாட்டு மக்களின் நலனில் கொஞ்சமும் அக்கறையோ, அவர்களிடம் இல்லை. எனவே அவர்களை ஆதரிப்பது கடந்த 8 ஆண்டுகளாக கொல்லப்பட்ட 15,000 த்திற்கும் மேற்பட்ட கிழக்கு உக்ரைனிய மக்களின் உயிர்களுக்கு நாம் மதிப்பளிக்காததற்கு இணையாகிவிடும். உக்ரைனிய அரசுக்கு நாம் கொடுக்கும் ஒவ்வொரு ஆதரவும், மேலும் பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் கொல்வதற்கு அவர்களுக்கு நாமே அனுமதி கொடுப்பதுபோலாகிவிடும்.

இப்போரைக் காரணம் காட்டி, போருக்காக செலவிடுவதற்காகவே, உலக நாடுகளிடம் கடன் வாங்கினால், அந்தச் சுமையையும் ஏற்கவேண்டிய நிலைக்கு உக்ரைனின் உழைக்கும் வர்க்க மக்கள் தான் தள்ளப்படுவார்கள். போரின் காரணமாக அழிந்துகொண்டிருக்கிற உள்நாட்டுக் கட்டமைப்பு வசதிகளை மீட்டெடுப்பதற்கு ஆகிற செலவுகளையும் அம்மக்கள் தான் ஏற்கவேண்டியிருக்கும். ஆயுதங்களை அனுப்புமாறு ஐரோப்பிய ஒன்றியத்திடமும், அமெரிக்காவிடமும், நேட்டோ படைகளிடமும் கோரிக்கை வைத்துக்கொண்டிருக்கிறது உக்ரைனிய அரசு. போர் தொடங்குவதற்காக இத்தனை ஆண்டுகளாக பல தந்திர வேலைகளைச் செய்துவந்தவர்களிடமே போய் ஆயுதங்கள் கேட்கும் உக்ரைனிய அரசை எந்த வகையிலும் ஆதரிக்க முடியாது.

உலக அமைதிக்காக

ஐரோப்பாவைப் பொறுத்தவரையில், ஒவ்வொரு வீட்டிலுமே 75 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த உலகப்போர்களின் காயங்களும் கதைகளும் வாய்வழிக் கதைகளாகவாவது இன்றைக்கும் அசைபோடப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. அத்தகைய ஐரோப்பாவில் என்ன விலைகொடுத்தாவது அமைதியைப் பெறுவதற்குத் தான் ஐரோப்பிய ஆட்சியாளர்கள் முயற்சி செய்யவேண்டுமே தவிர, மூன்றாவது முறையாக மீண்டுமொரு போரினைத் துவக்குவதற்கான வேலைகளை செய்வது மனிதகுலத்திற்கே எதிரானது.

75 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற முதலிரண்டு உலகப் போர்களிலும் அமெரிக்காவிற்கு பெரிய இழப்பேதும் இல்லை. ஐரோப்பிய மண்ணில் தான் முழுப்போரும் நடைபெற்றதென்பதாலேயே, போருக்குப் பின்னர் அதிலிருந்து மீண்டெழுவது ஐரோப்பிய நாடுகளுக்கு பெரும்பாடாக இருந்தது. அந்த சூழலைப் பயன்படுத்தித்தான் அமெரிக்கா, இவ்வுலகை ஆட்டிப்படைக்கும் ஒரே பெரியாள் என்கிற மனோபாவத்துடன் உலக மக்களை அதிகாரம் செலுத்தப் புறப்பட்டது. அது இன்றளவும் தொடர்ந்துகொண்டே தான் இருக்கிறது. ஆனால், இரஷ்ய ஊடகங்கள் அனைத்தையும் தடைசெய்துவிட்டு, மேற்குலக ஊடகங்களின் வழியாக வரும் செய்திகளைப் பார்த்துவிட்டு, “இரஷ்யாவே போரை நிறுத்து” என்று மட்டுமே சொல்லி முடித்துக்கொள்ள நமக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இரஷ்யா இப்போரை உடனடியாக நிறுத்தியே ஆக வேண்டும் தான். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், அது மட்டுமே உக்ரைனில் அமைதியை நிலைநாட்டிவிடும் என்று நினைத்தால் அது நிச்சயமாக உண்மையல்ல.

அதனால் உலகின் குடிமக்களாகிய நாம், ‘உக்ரைன் மீது இரஷ்யா தொடுத்திருக்கிற இப்போரை எந்த நிபந்தனையும் விதிக்காமல் உடனடியாக நிறுத்தி ஆகவேண்டும்’ என்று வலுவாக குரல் கொடுக்க வேண்டும். அதனோடு இணைந்தபடி, ‘இரஷ்யாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையில் எரிபொருள் ஒப்பந்தம் கையெழுத்தானால் அமெரிக்காவிற்கு என்ன பிரச்சனை?’ என்று ஐரோப்பிய உழைக்கும் மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஐரோப்பிய அரசுகளைக் கேள்விகேட்கவேண்டும்

‘உக்ரைனில் நடத்தப்படும் போருக்கு எங்களுடைய வரிப்பணத்தைப் பயன்படுத்தாதே’ என்று புடினின்இரஷ்ய அரசைப் பார்த்து இரஷ்ய உழைக்கும் மக்கள் கேள்வியெழுப்ப வேண்டும்.

‘எங்களுடைய வரிப்பணத்தில் ஆயுதம் வாங்கி உலகெங்கிலும் போருக்குச் சென்று இலட்சக்கணக்கான மக்களைக் கொல்லாதே’ என்று அமெரிக்க ஆட்சியாளர்களை நோக்கி அமெரிக்க உழைக்கும் மக்கள் கேட்கவேண்டும்

‘ஆயுதங்களைத் தயாரித்து விற்பனை செய்து, மற்ற நாடுகளில் போரைத் துவங்கும் எந்த நாட்டுடனும் வர்த்தகம் செய்யவே கூடாது’ என்று உலகின் அனைத்து நாடுகளின் உழைக்கும் மக்களும் அவரவர் தேசத்து அரசுகளுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும்.

மத்திய கிழக்கு நாடுகளில் வன்முறைகளைக் கட்டவிழ்க்கும் ஐஎஸ்ஐஎஸ் மட்டுமல்லாமல், உக்ரைனில் பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்துக்கொண்டிருக்கும் வெள்ளை இனவெறி அசோவ் பட்டாலியன் படையினரும் பயங்கரவாதிகள் தான் என்பதை அங்கீகரித்து, அதற்கு நிதியும் ஆயுதமும் வழங்கும் அனைத்து தரப்பினரையும் உலகின் குடிமக்களாகிய நாம் எதிர்க்க வேண்டும்

2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உக்ரைனியத் தேர்தல்களில் சுத்தியல் அரிவாள் சின்னத்தைக் கொண்டிருக்கிறது என்கிற ஒரே காரணத்தை முன்வைத்தே கம்யூனிஸ்ட் கட்சியை போட்டியிடவே அனுமதிக்காத அமைப்பினை ஜனநாயகம் என்றே அங்கீகரிக்க முடியாது என்று நாம் உரக்கச் சொல்லியாக வேண்டும்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக உக்ரைனில் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த உலகிலுமே அமைதி நிலவவேண்டும் என்று உண்மையாகவே நாம் விரும்புவதாக இருந்தால், இன்றைக்கு உலகின் அனைத்து போர்களுக்கும் மையக்காரணமாக இருக்கும் நேட்டோ படையினை முற்றிலுமாக ஒழிக்கப் போராட வேண்டும். நேட்டோவை இல்லாமல் செய்துவிட்டாலே, அமெரிக்காவால் உலகின் எந்த நாட்டிற்கு அருகிலும் சென்று எளிதாக ஒரு போரையோ, கலவரத்தையோ, கலகத்தையோ, ஆட்சிக்கவிழ்ப்பையோ, பயங்கரவாத இயக்கங்களையோ உருவாக்குவது கடினமாகிவிடும். ஆம், நேட்டோ ஒழிப்பில் தான் ஒட்டுமொத்த உலகின் அமைதியே இருக்கிறது.

பால்மிரோ டோக்ளியாட்டியின் பாசிசம் குறித்த விரிவுரைகள்; தொழிலாளி வர்க்க அணுகுமுறைக்கான வழிகாட்டி

சுதிர்

1935ம் ஆண்டில் மாஸ்கோவில் லெனின் பள்ளியின் இத்தாலியப் பிரிவில் பால்மிரோ டோக்ளியாட்டி ‘எதிரிகள்’ என்ற தலைப்பில் நிகழ்த்திய 15 பகுதிகளைக்கொண்ட சொற்பொழிவுகளின் முக்கியமான பகுதியே இந்நூல்.

இத்தாலியில் பாசிசத்திற்கெதிராக 12 வருடங்கள் நடைபெற்ற போராட்டங்களில் நேரடியாக தனக்கிருந்த அனுபவங்களிலிருந்து அவர் இவ்விரிவான சொற்பொழிவுகளை ஆற்றியிருக்கிறார். இத்தகைய சொற்பொழிவுகள், நமக்குச் சம்மந்தப்பட்டதல்ல என்று மெத்தனமாகப் படிக்கும் போக்கிற்கு நாம் இடமளிக்கக் கூடாது என்று இவ்வுரைகளை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் தோன்றும்.

உண்மையில் பாசிசத்திற்கு எதிரான போராட்டப் படிப்பினைகள் வேறெவரையும் விட இந்திய மக்களாகிய நமக்குத்தான் அதிகம் தேவைப்படுகின்றன. பாசிச அபாயத்தை தற்பொழுது நாம் சந்திக்க வேண்டியுள்ளது.

அது மட்டுமல்ல; ஏகபோக முதலாளித்துவம் நம்மீது ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் காலம் வரை பாசிசத்திற்கு எதிராக போராடும்படி நாம் நிர்ப்பந்திக்கப்பட்டே தீருவோம். மிக அதிகபட்ச லாபங்களை அடையும் தனது பாதையில் இதர வடிவங்களில் அமைந்த ஆட்சி தடைக்கற்களாக மாறும்போது, ஏகபோக முதலாளித்துவம் பாசிசத்தை ஆதரிக்க சற்றும் தயங்காது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

டோக்ளியாட்டி திட்டவட்டமாக விவரித்து கூறுவது போல வரலாற்றின் படிப்பினைகளை நாம் கற்றோமானால் “அது இங்கே நடக்காது” என்று தீர்மானிப்பதற்கான போராட்டத்தில் மக்களோடு நாமும் (நமது இயக்கம்) ஒரு முக்கியமான அம்சமாக இருப்போம்.

முதலாளித்துவத்தின் உள் கட்டமைப்புதான் ஜனநாயக விரோதப் போக்கிற்கு வழி பிறக்கச் செய்கிறது என்பதும், அந்தப் போக்குதான் பாசிசத்தை நோக்கிச் செல்லும் இயக்கங்களுக்கு தீனி போடுகிறது என்பதையும் முதலாளித்துவத்தின் நெருக்கடி மற்றும் சரிவு காலகட்டத்தில் “பிற்போக்கான கொள்கைகளை நோக்சிச் செல்லும் போக்கு முதலாளித்துவத்தில்” தலைதூக்கும் என்பதையும் டோக்ளியாட்டி விளக்குகிறார்.

ஏகபோக முதலாளித்துவம், அதனுடைய பொதுவான நெருக்கடி காலகட்டத்தில் தொழில் உச்சபட்சமாக லாபமடையும் கொள்கைகளைப் பின்பற்ற முடியாது. இத்தகைய கொள்கைகளுக்கு எதிராக மக்கள் தலையிடும்படியான மிகக் குறைந்தபட்ச சாத்தியப்பாட்டை ஜனநாயக அமைப்புகள் ஏற்படுத்தினால் கூட ஏகபோக முதலாளித்துவம் அத்தகைய அமைப்புகளை ஒழித்துக் கட்டுவதில் இறங்கும். அது, ஜனநாயக ஆட்சிக்குப் பதிலாக பிற்போக்கான ராணுவ ஆட்சிகளைக் கொண்டு வருவதற்கு முற்படும். பாசிசம் என்பது இத்தகைய பெரும் தொழில் வர்த்தக சர்வாதிகாரங்களின் மிகவும் கொடூரமான, நாசகரமான, வளர்ச்சியடைந்த வடிவமேயாகும்.

பாசிசமானது எப்பொழுதும் பொய்யான மற்றும் வாய்ச்சவடால் வடிவங்களிலேயே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக பாசிசம் என்பது ஏகபோக மூலதனத்தின் மிகவும் பிற்போக்கான பகுதியின் அப்பட்டமான சர்வாதிகாரம் என்பதை அது மூடி மறைக்கவே முயற்சிக்கிறது.

பாசிசம் என்பது ஏகபோக மூலதனத்தின் மேல்தட்டு வட்டாரங்களின் மிகவும் பிற்போக்கான பகுதியினருடைய அப்பட்டமான, மிகக் கொடூரமான சர்வாதிகாரம் என்பதை விளக்க வேண்டியது அவசியமாகும். அவ்வாறு செய்தால்தான் உண்மையான பகைவனை திட்டவட்டமாக சுட்டிக்காட்டி அவனுக்கு எதிரான போராட்டத்தை நடத்துவது சாத்தியமாகும். அதன்பிறகே பாசிசத்திற்கெதிராகப் பரந்துபட்ட இயக்கத்தை அணிதிரட்டுவது சாத்தியமாகும் என்றும் அவர் விளக்குகிறார்.

“பாசிசம் என்பது ‘நிதி மூலதனத்தின் மிகவும் பிற்போக்கான, மிகவும் இனவெறி கொண்ட, மிக மோசமான ஏகாதிபத்திய சக்திகளின் அப்பட்டமான பயங்கரவாத சர்வாதிகாரமாகும்” என்று 1935ம் ஆண்டு நடைபெற்ற கம்யூனிஸ்டு அகிலத்தின் 7வது உலக காங்கிரசுக்கு அளித்த தன்னுடைய வரலாற்றுச் சிறப்புமிக்க அறிக்கையில் தோழர் ஜார்ஜ் டிமிட்ரோவ் அளித்தார் என்பதை டோக்ளியாட்டி எடுத்துரைக்கிறார்.

பாசிசத்திற்கான பாதையைத் தடுப்பதில் நாம் உண்மையிலேயே அக்கறை கொண்டிருப்போமானால், ஒடுக்குமுறைகளை (அதாவது மத, இன, சாதி வெறியை) ஒழித்துக்கட்டப் போராட வேண்டிய படிப்பினையை நாம் இவ்வுரையை வாசிப்பதன் மூலம் அறிய முடியும்.

பாசிச அபாயம் அதிகரிப்பதைத் தொடர்ந்து கம்யூனிச எதிர்ப்பு, இனவெறி, பேரரசு இனவாதம் போன்ற இயக்கங்களும் அவற்றுக்கான பிரச்சாரங்களும் அதிகரிக்கும் என்பதையும் அவர் சுட்டிக் காட்டுகிறார்.

முதலாளித்துவமானது தொழிலாளி வர்க்கத்தைச் சுரண்டுவதால் மட்டுமே நீடிக்க முடிகிறது என்ற உண்மையை மூடி மறைக்கவே எப்பொழுதும் முயற்சிக்கிறது. பாசிசம் இந்த மூடி மறைத்தலை ஒரு படி முன்னெடுத்துச் செல்கிறது.

பாசிசமானது ஒருமுறை வேரூன்றிவிட்டால் அது வர்க்கக் கூட்டுக் கொள்கைகளைக் கொண்டுள்ள சங்கங்கள் உள்ளிட்டு அனைத்து தொழிற்சங்கங்களையும் நாசம் செய்துவிடும். அவைகளிருந்த இடத்தில் பாசிஸ்டுகள் தங்களுடைய சொந்த பாசிச தொழிலாளர் முன்னணி அமைப்புகளை உருவாக்குவார்கள்.

பாசிசத்தின் தோல்வியானது அணிதிரட்டப்பட்ட வெகுஜன போராட்டத்தின் விளைவாக மட்டுமே வர முடியும்.

பாசிஸ்டுகளால் ஒழுங்கமைக்கப்பட்டு, அணிதிரட்டப்பட்டு, அவர்களின் செல்வாக்குக்கு உட்பட்ட மக்கள் ஒருநாள் காலையில் தாங்களாகவே பாசிசத்திலிருந்து விலகி, பாட்டாளி வர்க்கப் புரட்சியில் கலந்து கொள்ள நம்மிடம் வந்துவிடுவார்கள் என்று யாரும் நினைக்கக் கூடாது. அந்த மக்களை அவர்களின் பிடியிலிருந்து விடுவிப்பதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும். நமது பக்கம் அவர்கள் வந்து சேருவதற்கான முறையில் நாம் பணியாற்ற வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறார்.

பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய அடிப்படையான கொள்கைகள் குறித்து டோக்ளியாட்டி பல நிர்ணயிப்புகளை உருவாக்கியுள்ளார்.

“கோட்பாடு குறித்த சரியான நிலைப்பாட்டிற்கும் சக்திகளின் உறவு குறித்த சரியான மதிப்பீட்டிற்கும், ‘நடைமுறைக் கொள்கைப் பிரச்சினைகளில் சரியான தீர்வுகளுக்கும்’ அவர் மிகுந்த முக்கியத்தும் அளிக்கிறார்”.

நடைமுறைக் கொள்கைப் பிரச்சினைகளுக்கான சரியான தீர்வுகளுக்கு அடிப்படையான ‘சரியான கோட்பாட்டு நிலைப்பாட்டை’ மேற்கொள்ள வேண்டும் என்று அவர் அழுத்தமாகக் கூறுவதானது சர்ந்தப்பவாத நிலைப்பாடுகளில் தவறி விழுவதற்கு எதிரான எச்சரிக்கையாகும்.

உலக அனுபவம் என்ற பெட்டகத்திலிருந்து குவிக்கப்பட்டிருக்கும் ஏராளமான சான்றாதாரங்களின் அடிப்படையில் டோக்ளியாட்டி பின்வரும் முடிவுகளுக்கு வருகிறார்.

• பாசிசம் என்பது முதலாளித்துவ நாடுகளில் ஒரு அபாயமாக உள்ளது. ஆனால், அது தவிர்க்க முடியாத ஒரு வளர்ச்சிக் கட்டமல்ல.

• பாசிசத்தால், முதலாளித்துவத்தின் பிரச்சினைகளையும் முரண்பாடுகளையும் அடிப்படையில் தீர்க்க முடியாது. இதனால் அடிப்படையான வர்க்க முரண்பாடும் வர்க்கப் போராட்டமும் தொடரும்.

• பாசிசம் அதிகாரத்திலிருக்கும் மிக மோசமான நிலைமைகளிலும் கூட ஒரு வெகுஜன இயக்கத்தை உருவாக்கி பாசிசத்தைத் தோற்கடிப்பதக்குப் போராடுவது சாத்தியமே.

• பாசிசமானது தன்னுடைய சொந்த உள் முரண்பாடுகளால் நொறுங்கி விழுந்துவிடாது. ஆனால் அதை தோல்வியுறச் செய்ய, அந்த முரண்பாடுகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் கம்யூனிஸ்டு கட்சிகளும், பாசிச-எதிர்ப்பு ஒற்றுமை என்ற அதனுடைய கொள்கைகளும்தான், பாசிச சவாலை முறியடித்து, பாசிச எதிர்ப்புக்கு வெகுஜன அடித்தளத்தை உருவாக்கி தந்தன என்பதையும் வரலாற்று ரீதியாக விளக்குகிறார்.

நமது எதிரிகள் யார் என்பதை வரையறை செய்தல் மிகவும் முக்கியமானது என்று துவக்கத்திலேயே குறிப்பிடுகிறார். ஏனென்றால் ஒரு தவறான விளக்கமானது அரசியல் தவறுகளுக்கு இட்டுச் செல்லக்கூடும் என்பதையும் எடுத்துரைக்கிறார்.

“பகைவர்கள் என்று பேசும்பொழுது பாசிச அமைப்புகளில் உறுப்பினர்களாக உள்ள வெகுமக்களை நாம் சிந்தனையில் கொண்டிருக்கவில்லை. நமது பகைவர்கள் பாசிச அமைப்புகளேயாகும். ஆனால், அந்த அமைப்புகளில் உள்ள மக்கள் நமது எதிரிகள் அல்ல. அவர்கள் உழைக்கும் வெகுமக்கள். அவர்களை நம் பக்கம் ஈர்ப்பதற்கு நாம் ஒவ்வொரு முயற்சியையும் செய்ய வேண்டும்” என்கிறார்.

முதலாளித்துவ வர்க்கத்தின் சர்வாதிகாரம் மற்றும் குட்டி-முதலாளித்துவ வெகுமக்கள் இயக்கம் ஆகிய இந்த இரு அம்சங்களை கோட்பாட்டு ரீதியிலான கண்ணோட்டத்தில் காணும்போது, இவ்விரு அம்சங்களுக்கு இடையிலான இணைப்பை முற்றிலுமாகப் புரிந்து கொள்வது கடினமாக இருக்கும். ஆனால், இந்த இணைப்பு புரிந்து கொள்ளப்பட வேண்டும். முதலாவது அம்சத்தை காண்பதோடு மட்டும் ஒருவர் நிறுத்திக் கொள்வாரேயானால், பாசிசத்தின் வரலாற்றுப் பூர்வ வளர்ச்சியின் முக்கியமான வழியையும், அதனுடைய வர்க்க உள்ளடக்கத்தையும் காண இயலாது. இரண்டாவது அம்சத்தைக் காண்பதோடு மட்டும் ஒருவர் நிறுத்திக் கொள்வாரேயானால், அதனுடைய விளைவுகளை காணத் தவறிவிடுவார் என்றும் எச்சரிக்கிறார்.

வெகுமக்கள் இயக்கம் ஒவ்வொரு நாட்டிலும் ஒரே மாதிரியாக இருக்காது. சர்வாதிகாரம் கூட ஒவ்வொரு நாட்டிலும் ஒரே மாதிரியாக இருக்காது. அதனால் நாம் சுலபமாக தவறு செய்துவிடுவோம் என்பதையும் எச்சரிக்கிறார். இதை வரலாற்று நிகழ்வுகளைக் கொண்டும் விளக்குகிறார்.

இத்தாலிக்கு எது பொருந்துமோ, அது இதர ஒவ்வொரு நாட்டிற்கும் பொருந்தும் என்றோ, பொருந்த வேண்டும் என்றோ நினைக்காதீர்கள். பாசிசமானது வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு வடிவங்களை எடுக்கும். வெவ்வேறு நாடுகளின் வெகுமக்கள் பகுதியினர் வெவ்வேறு வடிவங்களிலான அமைப்பைக் கொண்டிருக்கின்றனர். அத்துடன் எந்தக் கால கட்டத்தைக் குறித்து நாம் பேசுகிறோம் என்பதையும் நினைவில் கொண்டிருக்க வேண்டும். பாசிசமானது ஒரே நாட்டில் வெவ்வேறு சமயங்களில் வெவ்வேறு நோக்கங்களையும், கோணங்களையும் மேற்கொள்கிறது. இந்த இரண்டு அம்சங்களை நாம் ஆராய வேண்டுமென்கிறார்.

முதலாளித்துவ வர்க்கத்தினரின் அப்பட்டமான சர்வாதிகாரமான பாசிசத்தை, தோழர் லெனின் அவர்கள் ஏகாதிபத்தியம் குறித்து எழுதியுள்ளவற்றில் இருந்தே காண முடியும் என்கிறார். ஏகாதிபத்தியம் குறித்து நீங்கள் அறிந்திருக்கவில்லை என்றால், பாசிசம் என்ன என்பது குறித்து நாம் தெரிந்து கொள்ள முடியாது என்றும் எச்சரிக்கிறார்.

ஏகாதிபத்தியத்தின் பொருளாதார அம்சங்களை நீங்கள் அறிவீர்கள். லெனின் அளிக்கும் விளக்கமும் உங்களுக்குத் தெரியும். ஏகாதிபத்தியம் என்பது பின்வருமாறு குணாம்சப்படுத்தப்படுகின்றது; 1. உற்பத்தி மற்றும் மூலதனக் குவிப்பு, பொருளாதார வாழ்வில் ஒரு தீர்மானகரமான பங்கை வகிக்கக் கூடிய ஏகபோகங்களின் உருவாக்கம், 2. வங்கி மூலதனமும் தொழில் மூலதனமும் இணைக்கப்படுதல், நிதி மூலதனத்தின் அடிப்படையில் ஒரு நிதி கும்பல் உருவாதல், 3. மூலதன ஏற்றுமதி மூலம் அடையப்படும் பெரும் முக்கியத்துவம், 4. சர்வதேச முதலாளித்துவ ஏகபோகங்களின் தோற்றம். இறுதியாக, பெரும் முதலாளித்துவ நாடுகளிடையே உலகை மறு கூறுபோடுதல், இந்தப் பணி இப்போது பூர்த்தியடைந்துவிட்டதாகவே கருதலாம்.

மேற்கூறியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒரு பிற்போக்கான உருமாற்றத்தை அடையும் போக்கு அனைத்து முதலாளித்து அரசியல் அமைப்புகளிலும் காணப்படுகிறது. இதையும் கூட, நீங்கள் லெனின் எழுத்துக்களில் காணலாம். இத்தகைய அமைப்புகளைப் பிற்போக்கானதாக ஆக்கவேண்டுமென்ற போக்கு உள்ளது. இந்தப் போக்கு பாசிசத்துடன் மிகவும் இணைக்கமான வடிவங்களில் தோன்றுகிறது.

ஏனென்றால், தங்களுடைய லாபங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டிய தேவையை வைத்துப் பார்க்கும் பொழுது, தொழிலாளிகள் மீது மிகுந்த நிர்ப்பந்தம் செலுத்துவதற்கான வடிவங்களை முதலாளித்துவ வர்க்கம் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது. மேலும், ஏகபோகங்கள், அதாவது முதலாளித்துவ வர்க்கத்தின் தலையாய சக்திகள், குவிப்பின் மிக உயர்ந்த கட்டத்தை அடைகின்றன. அப்போது ஆட்சியின் பழைய வடிவங்கள் அவற்றின் விரிவாக்கத்திற்குத் தடைக்கற்களாக ஆகிவிடுகின்றன. இதனால் முதலாளித்து வர்க்கம் தான் உருவாக்கியதற்கு எதிராகவே திரும்ப வேண்டியுள்ளது. ஏனென்றால் ஒரு சமயம் அதனுடைய வளர்ச்சிக்கான அம்சமாக இருந்தது இன்று முதலாளித்துவ சமுதாயத்தைப் பாதுகாப்பதற்கு ஒரு இடையூறாகவே இருக்கிறது. இதன் காரணமாகத்தான் முதலாளித்துவ வர்க்கத்தினர் பிற்போக்காளர்களாக மாறி பாசிசத்தை கடைப்பிடிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர் என்று விளக்குகிறார்.

முதலாளித்துவ ஜனநாயகத்திலிருந்து பாசிசத்திற்கு மாறிச் செல்லும் போக்கு தவிர்க்க இயலாத ஒன்று எனக் கருதாமல் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனென்றால், ஏகாதிபத்தியத்திலிருந்து பாசிச சர்வாதிகாரம் அவசியம் தோன்றியே தீரும் என்பதல்ல என்பதை உதாரணங்களுடன் விளக்குகிறார். உதாரணத்திற்கு இங்கிலாந்து ஒரு பெரும் ஏகாதிபத்திய நாடு. அங்கே ஜனநாயக வழிப்பட்ட நாடாளுமன்ற அரசாங்கம் (இதிலும் கூட பிற்போக்கான அம்சங்கள் இல்லையென்று கூறிவிட முடியாது) உள்ளது. பிரான்சையும் அமெரிக்காவையும் உதாரணங்களாகக் கூறுகிறார். பாசிச வடிவிலான அரசாங்கத்தை நோக்கிச் செல்லும் போக்கு அனைத்து இடங்களிலும் காணப்பட்டாலும், பாசிசம் எல்லா இடங்களிலும் வந்தே தீரும் என்று பொருளாகாது என்றும் நம்மை எச்சரிக்கிறார்.

தொழிலாளி வர்க்கத்தின் போராட்ட உணர்வின் வீச்சு மற்றும் ஜனநாயக அமைப்புகளைப் பாதுகாப்பதில் அதனுடைய திறன் ஆகியவற்றை வைத்தே பாசிச சர்வாதிகாரம் உருவாகக் கூடிய சாத்தியப்பாடுகள் ஏற்படுகின்றன என்பதைக் காணத் தவறக் கூடாது எனவும் எச்சரிக்கிறார்.

பாசிசத்தின் வளர்ச்சிக் கட்டத்தில் இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சி காணத் தவறிய பிழைகளையும் எடுத்துக்காட்டுகளுடன் விவரிக்கிறார். இத்தாலிய மூலதனத்தின் மிக வளர்ச்சியடைந்த உள்ளார்ந்த இயைபையும் நாம் கவனித்திருக்க வேண்டும் என்பதையும் நாம் காணத் தவறிவிட்டோம். இத்தாலிய முதலாளித்துவம் என்பது ஒரு பலவீனமான முதலாளித்துவம் அல்ல என்ற முடிவுக்கு வருவதற்கு, மூலதனக் குவிப்பு, ஏகபோகங்கள் போன்றவற்றைக் கணக்கிலெடுத்துக் கொண்டாலே போதுமானதாக இருந்திருக்கும் என்கிறார்.

1931 ஆம் ஆண்டு ஜெர்மனியில் இதேபோன்றதொரு தவறை, அதாவது பாசிச இயக்கத்தினுடைய வளர்ச்சியைத் தீர்மானிப்பதில் தவறு செய்திருப்பதாகவும் குறிப்பிடுகிறார். ஜெர்மனியில் பாசிசம் முறியடிக்கப்பட்டுவிட்டது என்றும், ஜெர்மனியைப் போன்ற ஒரு வளர்ச்சியடைந்த நாட்டில், தொழிலாளி வர்க்க சக்திகள் நன்றாக ஸ்தாபன ரீதியாக அணிதிரண்டிருக்கும் ஒரு நாட்டில், அத்தகைய ஆபத்து ஏதும் இல்லை என்பதால் பாசிச சர்வாதிகார அச்சுறுத்தல் கிடையாது என்றும் சில தோழர்கள் கூறினார்கள். பாசிசத்திற்கான பாதையை நாங்கள் தடுத்துவிட்டோம் என்றும் அவர்கள் கூறினார்கள். விரிவடைந்த நிர்வாகக் குழுவின் 11வது கூட்டத்தில் நிகழ்த்தப்பட்ட பல உரைகளிலும் இதே சாயல் காணப்பட்டது. இதே தவறைத்தான் இத்தாலியில் நாமும் செய்தோம்; பாசிச வெகுமக்கள் இயக்கம் வளர்ச்சியுறுவதற்கு அதற்குள்ள உள்ளார்ந்த ஆற்றலைக் குறைத்து மதிப்பிட்டோம் என்றும் விளக்குகிறார்.

பகுத்தாய்வு தவறாக இருக்குமானால் அரசியல் திசைவழியும் தவறாகவே இருக்கும் என்பதை இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள முடியும்.

பாசிச சர்வாதிகாரம் உருவாக்கப்படுவது முதலாளித்துவ வர்க்கம் பலப்படுவதைக் குறிக்கிறதா? அல்லது பலவீனமாவதைக் குறிக்கிறதா என்ற கேள்விக்கு பின்வருமாறு பதிலளிக்கிறார்;

முதலாளித்துவத்தின் உள் முரண்பாடுகள் தீவிரமடைந்து ஜனநாயக வடிவங்களை முதலாளித்துவ வர்க்கத்தினர் கலைக்கும்படியான நிர்ப்பந்தம் ஏற்படுவதன் விளைவாகவே பாசிசம் வளர்கிறது என்பது உண்மையே. இந்தக் கண்ணோட்டத்தில் இருந்து காணும்போது, நாம் ஒரு ஆழமான நெருக்கடியை எதிர்கொள்கிறோம் என்பதும், அதை முதலாளித்துவ வர்க்கத்தினர் சந்திக்க விரும்புகிறார்கள் என்பதும் தெள்ளத் தெளிவாகிறது. ஆனால், இந்த அம்சத்தை மட்டும் காண்பது பின்வரும் தவறான முடிவை எடுப்பதற்கு இட்டுச் செல்லும்; பாசிச இயக்கம் எந்த அளவுக்கு அதிகமாக வளர்கிறதோ அந்த அளவுக்குப் புரட்சிகர நெருக்கடி மிகவும் கூர்மையடையும் என்கிறார்.

பாசிசத் தத்துவமானது பல்வேறு கதம்பக் கூறுகளைத் தன்னுள் கொண்டுள்ளது. இதை நாம் நினைவிற் கொள்ள வேண்டும். ஏனென்றால் இந்த சித்தாந்தம் எந்த நோக்கத்திற்காகச் செயல்படுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள இது உதவுகிறது. மேலும் உழைக்கும் வெகுமக்கள் மீது சர்வாதிகாரத்தைத் திணிப்பதற்கான போராட்டத்தில் பலதரப்பட்ட குழுக்களை இணைப்பதற்கும், இதன்பொருட்டு ஒரு பரந்த இயக்கத்தை உருவாக்குவதற்கும், இது பயன்படுகிறது. பாசிச சித்தாந்தம் இத்தகைய சக்திகளை ஒன்றாகப் பிணைப்பதற்கான ஒரு கருவியாக அமைந்துள்ளது. இந்தச் சித்தாந்தத்தின் தேசியவாத பகுதி நேரடியாக முதலாளித்துவ வர்க்கத்துக்குத் தொண்டு செய்கிறது; மற்றொரு பகுதி ஒரு பிணைப்பாகச் செயல்படுகிறது என்று விளக்குகிறார்.

பாசிச சித்தாந்தம் மிக உறுதியான, முழுமையான, ஒரே சீரான சித்தாந்தம் அல்ல; பச்சோந்தியைப் போன்று தோற்றமளிக்கக் கூடியது. ஒரு குறிப்பிட்ட சமயத்தில் ஒரு குறிப்பிட்ட கோட்பாட்டைக் கூறி பாசிசம் எய்த விரும்பும் குறிக்கோள்களைக் கணக்கிலெடுத்துக் கொள்ளாமல் பாசிச சித்தாந்தத்தை மதிப்பிடாதீர்கள் என்றும் நம்மை எச்சரிக்கிறார்.

பாசிசத்தின் அடிப்படையான கொள்கை வழி உக்கிரமான, வெறித்தனமான தேசியவாதமும் சமூக ஜனநாயகத்துடன் ஒத்த தன்மை கொண்டிருப்பதுமாகும். ஏன் இந்த ஒத்த தன்மை? ஏனென்றால் சமூக ஜனநாயக சித்தாந்தமும் கூட ஒரு குட்டி-முதலாளித்துவ சிந்தாந்தமாகும்; அதாவது குட்டி முதலாளித்துவ உள்ளடக்கம் இவ்விரு தத்துவங்களுக்கும் பொதுவானது. ஆனால், இந்த ஒத்த தன்மை என்பது பல்வேறு நாடுகளில் பல்வேறு சமயங்களில் பல்வேறு வடிவங்களில் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது என்கிறார்.

ஒட்டுமொத்தமாக பால்மிரோ டோக்ளியாட்டியின் இந்நூல், பிற்போக்கு சக்திகளுக்கும் பாசிச சக்திகளுக்கும் எதிரான போராட்டத்திற்கு ஒரு முக்கியமான பங்களிப்பாகும். பாசிசம் குறித்த தொழிலாளி வர்க்க அணுகுமுறைக்கான ஒரு மிகச் சிறந்த வழிகாட்டியாகவும் அமைந்துள்ளது.

இறுதியாக, அணிதிரட்டப்பட்ட வெகுமக்கள் போராட்டமே பாசிசத்தை வீழ்த்தும்

பாசிசம் குறித்த விரிவுரைகள் -பால்மிரோ டோக்ளியாட்டி
தமிழ் மொழியாக்கம்: ரா.ரங்கசாமி, ஏ.எஸ்.மணி. என்.ஜெயராமன், என்.ராமகிருஷ்ணன், கல்பனாதாசன்
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

மனிதக் குரங்கு மனிதனாக மாறிய இடைநிலைப்படியில் உழைப்பின் பாத்திரம்*

குரல்: தேவி பிரியா

– பிரடெரிக் எங்கெல்ஸ்

சகல செல்வத்தினுடைய தோற்றுவாயும் உழைப்பே என அரசியல் பொருளாதார நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். உண்மையிலே அதுதான் தோற்றுவாய் – இயற்கைக்கு அடுத்தபடியாக; அதற்கு இயற்கை மூலாதாரமாக வழங்கும் பொருளை அது செல்வமாக மாற்றுகிறது. ஆனால் அளவிடற்கரிய வகையில் அதை விட அது இன்னும் அதிகமும் கூட. ஓர் அர்த்தத்தில், உழைப்பு மனிதனையே படைத்தது என்று நாம் கூறவேண்டிய அளவுக்கு அது மனித வாழ்வு முழுவதற்கும் முதன்மையான அடிப்படை நிபந்தனையாக உள்ளது.

பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால், இன்னும் திட்டமாக நிர்ணயிக்கப்படாத, மூன்றாம் காலக்கூறு (Tertiary period) எனப் புவியியல்வாதிகள் அறிந்துள்ள பூமியின் வரலாற்றின் ஒரு சகாப்தத்தில் – அதனுடைய முடிவுக்கட்டத்தில் இருப்பதற்கு அதிக சாத்தியக்கூறு உண்டு – மிகவும் உன்னதமான வளர்ச்சி பெற்ற மனிதக் குரங்கு இனமானது வெப்பமண்டலத்தில் – தற்போது இந்துமாகடலின் அடியில் ஒரு வேளை மூழ்கிப்போன ஒரு பெரும் கண்டமாக இருக்கலாம் – ஏதோ ஓர் இடத்தில் வாழ்ந்தது. நம்முடைய இந்த மூதாதையர்களைக் குறித்த ஒரு உத்தேசமான வர்ணனையை டார்வின் நமக்குக் கொடுத்துள்ளார். அவர்கள் முழுமையாகவே உரோமத்தால் மூடப்பட்டிருந்தனர்; அவர்கள் தாடிகளையும் கூர் முனையுள்ள காதுகளையும் பெற்றிருந்தனர் ; மரங்களின் மீது கூட்டங்கூட்டமாக வாழ்ந்தனர்.

மரமேறுதல் என்பது கை கால்களுக்கு வித்தியாசப்பட்டதொழில்களைப் பகிர்ந்து விடுகிறது; அவர்களுடைய வாழ்க்கைமுறையில் தட்டையான நிலத்தின் மீது நிலை பெயர்ந்து செல்ல வேண்டிஏற்பட்ட போது இந்த மனிதக் குரங்குகள் படிப்படியாகக் கைகளைப்பயன்படுத்தும் பழக்கத்தைக் கைவிட்டன; மேலும் மேலும் அதிகமாக ஒரு நிமிர்ந்த உடற்பாணியையே அனுசரித்தன. மனிதக் குரங்கு மனிதனாக மாறிய இடைநிலையில் இது நிர்ணயமானதொரு படி ஆகும். தற்போதுள்ள எல்லா மனிதக் குரங்குகளுக்கும் நிமிர்ந்து நிற்கவும் பாதங்களினால் நடக்கவும் இயலும்; ஆனால் அது அவசரகாலங்களிலேதான், அதுவும் விகாரமாகத்தான். அவற்றினுடைய இயல்பான நடை பாதி நிமிர்ந்தும் பாதி குனிந்தும் செல்லும் நடை, அதில் அவை கைகளையும் பயன்படுத்துகின்றன. பெரும்பாலானவை தங்களது முஷ்டியின் விரல் கணுக்களைப் பூமியின் மீது ஊன்றிக் கால்களை உள்இழுத்து நீண்ட கைகளிடையே உடலை ஊசலாட்டிச் செலுத்துகின்றன – நடக்கும் திறனில்லாத ஒருவர் கவைக் கோல்களினால் நடந்து செல்வதற்கு ஒப்பாக இதனைக் கூறலாம்.

பொதுவாக, நான்கு கால்களினால் நடப்பது முதல் இரண்டு கால்களினால் நடப்பது வரை உள்ள இடைநிலைக் கட்டங்களை எல்லாம் இன்றைய மனிதக் குரங்குகளிடமே காணலாம். இருந்தாலும், பின் சொன்ன நடை அவற்றில் எதற்கும் தாற்காலிகமாகச் சமாளித்துக் கொள்வதற்கு மேலாக முக்கியத்துவம் உடையதாக இருக்கவில்லை. உரோமம் படர்ந்த நமது மூதாதையரிடையே நிமிர்ந்த நடை என்பது முதலில் ஒரு விதியாகவும் பின்னர் கால அடைவில் ஓர் அவசியமாகவும் ஆயிற்று, இதற்குள்ளாக கைகளுக்குப் பல்வேறுவகையான இதர வேலைகளின் பொறுப்பும் ஏற்பட்டிருக்க வேண்டும் என்பதைப் புரிய முடியும். மனிதக் குரங்குகளிடையே ஏற்கெனவே கைகளும் பாதங்களும் பயன்படுத்தப் படுவதில் சிறிது வித்தியாசம் இருக்கிறது. மேலே சொன்னதற்கொப்ப, மரமேறுவதில் கைகளுக்கும் பாதங்களுக்கும் வெவ்வேறு உபயோகங்கள் உள்ளன. கீழ்ப்படியில் உள்ள சில பாலூட்டிகள் தங்களது முன்பாதங்களை உபயோகிப்பதைப் போல உணவைச் சேகரிக்கவும் பிடிக்கவுமே கைகள் பிரதானமாக உபயோகிக்கப் படுகின்றன.

மரங்களில் தங்களுக்குக் கூடுகளைக்கட்டிக் கொள்ளவும் அல்லது உதாரணமாக சிம்பன்ஸி குரங்கைப் போலத் தங்களை பருவமாற்ற நிலைகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ளக் கிளைகளிடையே கூரைகள் வேய்ந்து கொள்ளவும் கூடப் பல மனிதக் குரங்குகள் கைகளைப் பயன்படுத்துகின்றன. பகைவர்களிடம் இருந்து காத்துக் கொள்ளத் தங்களது கைகளினால் கழிகளைப் பிடிக்கின்றன; தங்களது கைகளைக் கொண்டு எதிரிகளைப் பழங்களாலும் கற்களாலும் தாக்குகின்றன. அவை கூண்டில் பிடிபடும் போது மனிதர்களிடமிருந்து சில சிறிய செயல்களை ஒத்த வடிவத்தில் செய்யத் தங்களது கைகளைப் பயன்படுத்துகின்றன. இதில்தான், மனிதனை அதிகபட்சம் ஒத்தமனிதக் குரங்குகளின் வளர்ச்சியடையாத கைக்கும் லட்சக்கணக்கான ஆண்டுகளின் உழைப்பினால் உன்னதமான சிறப்பு பெற்றுள்ள மனிதக் கைக்குமிடையே உள்ள பெரிய இடைவெளியை ஒருவன் காண்கிறான். இந்த இரு கைகளிலும் உள்ள எலும்புகளும் தசைகளும் எண்ணிக்கையிலும் பொதுவான இணைப்பு ஏற்பாட்டிலும் ஒரே மாதிரியானவை; ஆனால் எந்தக் குரங்கின் கையும் ஒத்த மாதிரி செய்யமுடியாத நூற்றுக்கணக்கான செயல்களை மிகக் கீழ்ப் படியிலுள்ள ஒரு காட்டுமிராண்டியின் கை செய்ய முடியும் – எந்தக் குரங்கின் கையும் எந்தக்காலத்திலும் மிகக் கரடுமுரடான கல் கத்தியைக் கூட உருவாக்கியதில்லை.

மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக மாறிய இடைநிலையான பல்லாயிரமாண்டுகளில் நமது மூதாதையர்கள் படிப்படியாகத் தங்களது கைகளைப் பொருந்தியவாறு பழக்கப்படுத்தக் கற்றுக்கொண்ட முதற்செயல்கள் மிக சாதாரணமானவையாக மட்டுமே இருந்திருக்க முடியும். எவரிடையே மிருகங்களையொத்த நிலைக்கு மீண்டும் திரும்பக் கூடிய நிலைமை அதிகமாகவிருக்கவும், அதேசமயத்தில் உடல் துறையிலும் பின்னடைவு ஏற்படுவதும் அனுமானிக்க இயலுகிறதோ, அப்படிப்பட்ட மிகக் கீழ்ப்படியிலிருந்த காட்டுமிராண்டிகளும் கூட அந்த இடைநிலைவாசிகளை விட எவ்வளவோ மேம்பட்டவர்களே. முதல் சக்கிமுக்கிக் கல் மனிதக் கையினால் கத்தியாக உருவாக்கப்படுவதற்கு முன்பு ஒப்பு நோக்கினால் நாமறிந்த வரலாற்றுக்காலம் அற்பமாகிவிடுகிற ஒரு காலக்கூறு கடந்து விட்டிருக்கக்கூடும். ஆனால் நிர்ணயமான அடி எடுத்து வைக்கப்பட்டாகிவிட்டது; கை சுதந்திரம் பெற்று விட்டது; இனிமேற்கொண்டு அது மேலும் மேலும் அதிக நுண்திறத்தைப் பெறமுடியும்; இவ்வாறு பெறப்பட்ட அதிக நெகிழ்ச்சித்திறமும் வழி வழியாக அடையப்பட்டு தலைமுறைக்குத் தலைமுறை பெருகி வந்தது.

இவ்வாறாக கை உழைப்பிற்கான உறுப்பு என்பது மட்டுமல்ல, உழைப்பின் விளைபயனும் அதுவே. உழைப்பு, எப்பொழுதும் புதியசெயல்களுக்குப் பொருந்தியவாறு அமைத்துக் கொள்ளல், இவ்விதத்தில் விசேஷ வளர்ச்சி அடைந்த தசைகள், தசை நார்கள், காலத்தின் மிக நீண்டகூறுகளில் எலும்புகள் இவற்றை வழி வழியாகப் பெறுதல், இவ்வாறுவழி வழியாகப் பெறப்பட்ட நுண்ணயங்களைப் புதிய, மேலும் மேலும்கூடுதலான சிக்கலான செயல்களுக்குத் திரும்பத் திரும்பப் பயன்படுத்தல் ஆகியன ஒரு ரஃப யேலின் ஓவியங்களையும் ஒரு தொர்வால்ட்ஸனின் சிற்பங்களையும் ஒரு பகனீனியின் சங்கீதத்தையும் செப்பிடுவித்தையின் விளைவு போல முன்கொண்டு வந்து நிறுத்தத்தக்க மகோன்னதத் தேர்ச்சியை மனிதனின் கைக்கு அளித்தன. ஆனால் கை மட்டும் தனித்து இருக்கவில்லை; அது முழு மொத்தமான, உயர்ந்தபட்ச பல்கூட்டுத்தொகுதியான அங்கஜீவியின் ஓர் உறுப்பாகும். கை என்ன நற்பயனைப்பெற்றதோ, அதை அது பணி புரிந்த உடலமைப்பு முழுவதும் பெற்றது; இது இரண்டு வழிகளில் நடந்தேறியது.

முதலாவதாக, வளர்ச்சியின் பரஸ்பரத் தொடர்பு விதி என டார்வின்அழைத்ததற்கொப்ப உடலமைப்பு அந்த நற்பயனைப் பெற்றது. ஓர்அங்கஜிவியின் தனிப்பட்ட உறுப்புகளின் பிரத்யேகத் தன்மை வாய்ந்தவடிவங்கள் எப்போதுமே மேலீடாக அவற்றுடன் தொடர்பற்றதாகத் தெரிகிற இதர உறுப்புகளின் குறிப்பிட்ட வடிவங்களுடன் பிணைக்கப்பட்டுள்ளன என்று அந்த விதி அறிவிக்கிறது. இவ்வாறாக ஜீவ அணுக் கருவற்ற சிவப்பு ரத்த அணுக்களையும் முதுகெலும்பின் முதல் எலும்புடன் இரட்டை மூட்டுகளால் இணைக்கப்பட்ட தலையையும் உள்ள எல்லா மிருகங்களும் எவ்வித விதிவிலக்குமின்றித் தங்களது குட்டிகளுக்குப் பாலூட்டப் பால் சுரப்பிகள் பெற்றிருக்கின்றன. அதைப்போலவே, பாலூட்டும் மிருகங்களின் பிளவுபட்ட குளம்புகள் என்பது அசைபோடுவதற்கான பல் கூறடங்கிய வயிற்றைப் பெற்றிருப்பது என்பதுடன் முறையாக இணைக்கப்பட்டுள்ளது. சில குறிப்பிட்டவடிவங்களில் மாற்றங்கள் என்பதில் உடலினுடைய இதர உறுப்புகளின்வடிவங்களில் மாற்றங்கள் என்பன அடங்கியுள்ளன- இந்தத் தொடர்பை நம்மால் விளக்க முடியவில்லையெனினும் இது உண்மையே. நீலக்கண்களைப் பெற்ற தூய வெள்ளைப் பூனைகள் எப்போதுமே அல்லது கிட்டத்தட்ட எப்போதுமே செவிடாக உள்ளன. படிப்படியாக மேலும் மேலும் நிறைவுபெற்று வந்த மனிதக் கையும் இதை ஒத்து ஒரே அளவில் நிமிர்ந்த நடைக்கு உகந்த வகையில் பாதங்கள் பொருந்திவந்தமையும் சேர்ந்து இந்தப் பரஸ்பரத் தொடர்பு இணைப்பின் காரணமாக அங்க ஜீவிகளின் இதர உறுப்புகள் மீது நிச்சயமாக எதிர்ச்செயல் கொண்டன. இருந்தபோதிலும் கூட, யதார்த்த உண்மையைப் பொதுப்படையாக அன்றி அதற்கு மேல் அதிகமாகச் சொல்லுவதற்குச் சாத்தியமல்லாத வகையில் போதுமான அளவுக்கு இந்தச் செயற்பாடுபரிசீலிக்கப் படவில்லை.

உடலமைப்பின் இதர பகுதிகளின் மீது கையினுடைய வளர்ச்சியின்நேரடியான, எடுத்துக் காட்டத்தக்க செயலாட்சி அதைவிட அதிகமுக்கியத்துவம் உடையதாகும். நமது வானர மூதாதையர்கள் சமூகஉணர்வு கொண்டவர்களாக இருந்தனர் என்பது ஏற்கெனவே கவனத்தில்கொள்ளப்பட்டது; மிருகங்களிலேயே மிக அதிக சமூக உணர்வுகொண்ட மனிதனின் தோற்றத்தை சமூக உணர்வில்லாத மிக சமீபத்திய மூதாதையரிடையே தேடுவது சாத்தியமில்லை என்பது தெளிவு. கையின்வளர்ச்சியுடன், உழைப்புடன் இயற்கையின் மீது ஆளுகை கொள்வதுதொடங்கியது; ஒவ்வொரு புதிய முன்னேற்றத்தோடும் மனிதனுடையஅறிவெல்லை விரிவாகி வந்தது. இயற்கைப் பொருள்களின் அது வரைஅறியப்படாமல் இருந்த புதிய பண்புகளைத் தொடர்ந்தாற்போலஅவன் கண்டுபிடித்துக் கொண்டிருந்தான். மற்றொருபுறம், பரஸ்பரஆதரவு, கூட்டுச் செயல் என்பதற்கான வழக்குகளைப் பெருக்கியும்ஒவ்வொரு தனி நபருக்கும் இவ்வித கூட்டுச் செயலின் நல்லாதாயத்தைத்தெளிவுபடுத்தியும் சமூக உறுப்பினர்கள் நெருங்கிக் கூடி வர உழைப்பின்வளர்ச்சி அவசியமாகவே உதவி புரிந்தது. சுருக்கமாகக் கூறுவதென்றால்உருவாகிக் கொண்டிருந்த மனிதர்கள் ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்வதற்கு ஏதோ ஒன்று உள்ளவர்களாகிற நிலையை எய்தினர். தேவைஎன்பது ஓர் உறுப்பைப் படைத்தது; மனிதக் குரங்கின் வளர்ச்சியுறாதகுரல்வளை மெதுவாக ஆனால் நிச்சயமாகச் சுரபேதத்தின் மூலம்இன்னும் கூடுதலான வளர்ச்சி பெற்ற சுரபேதத்தை உற்பத்தி செய்யமாற்றியமைக்கப்பட்டது; வாயின் உறுப்புகள் படிப்படியாக ஒருதீர்க்கமான ஒலிக்குப் பின் மற்றொன்றாக உச்சரிக்கக் கற்றுக் கொண்டன.

உழைப்பிலிருந்தும் அதனுடைய மாற்றப் போக்கிலிருந்தும் மொழியின் பிறப்பை விளக்குவது ஒன்றே சாலவும் பொருத்தமுடையது என மிருகங்களுடன் ஒப்பிட்டு நோக்குங்கால் நிரூபிக்கப்படுகிறது. மிக அதிகபட்சம் வளர்ச்சி பெற்ற மிருகங்களுக்கும் தங்களுக்குள்பரஸ்பரத் தொடர்பு கொள்ள அவசியமான அந்தச் சிறிய அளவுக்கும்கூடத் தீர்க்கமான பேச்சு தேவைப்படுவதில்லை. இயற்கை நிலையில்அதற்குப் பேசுவதற்கு அல்லது மனிதப் பேச்சைப் புரிவதற்குச்சாத்தியப்படவில்லை என்பதினால் தனக்கு ஏதோ ஒரு தடை இருப்பதானஉணர்ச்சி எந்த மிருகத்திற்கும் இல்லை. மனிதனால் பழக்கப்படும்பொழுது இது முற்றாகவே வேறுபடுகிறது. நாயும் குதிரையும்மனிதனுடன் கொண்ட நட்புக் கூட்டு காரணமாக, அவற்றினுடையகருத்து வீச்சின் எல்லைக்குள், எம்மொழியையும் புரிய எளிதாகக் கற்றுக்கொள்ளுகிற அளவுக்குத் தீர்க்கமான பேச்சைக் கூர்ந்து கேட்கக் கூடியகாதுகளை வளர்த்துக் கொண்டுள்ளன. மேலும், அவற்றுக்கு முன்புஅப்பாற்பட்ட தாக இருந்த, மனிதனின் பால் அபிமானம், நன்றியுணர்வு,முதலான உணர்ச்சிகளைக் கொள்ளுவதற்கான திறனையும் அவைபெற்று உள்ளன. இப்படிப்பட்ட மிருகங்களுடன் அதிகமாகப் பழகவாய்ப்புள்ள ஒருவன், அனேக வழக்குகளில் அவை இப்பொழுதுபேசுவதற்குச் சாத்தியமற்ற தங்களது நிலையை ஒரு குறைபாடாகஉணருகின்றன என்ற நம்பிக்கையிலிருந்து எளிதாகத் தப்பிக்க முடியாது;இருந்தாலும், துரதிர்ஷ்டவசமாக, இந்தக் குறைபாடு இனி நேர் செய்யமுடிகிற ஒன்றல்ல; ஏனெனில் அவற்றினுடைய வாய்த் தொனிஉறுப்புகள் ஒரு திட்டமான திசையில் மிகப் பிரத்யேகத் தன்மை பெற்ற விட்டன.

ஆனாலும் வாய்த் தொனி உறுப்புகள் உள்ளவற்றில் இந்தத்திறமின்மையும் குறிப்பிட்ட வரையறைகளுக்குள் மறைந்து விடுகிறது.பறவைகளின் குரல் கொடுக்கும் உறுப்புகள் மனிதனுடையவற்றை விடஎவ்வளவு மாறுபட முடியுமோ அவ்வளவு மாறுபட்டிருந்தாலும் கூட,எல்லா விலங்குகளிலும் பறவைகள் மட்டுமே பேசுவதற்குக் கற்றுக்கொள்ள வல்லவை: மிகவும் அருவருக்கத்தக்க குரலைக் கொண்டுள்ளகிளிதான் மிகச் சிறப்பாகப் பேசுகிறது. கிளி என்ன பேசுகிறதோ, அதைப்புரிந்து கொள்வதில்லை என்று யாரும் ஆட்சேபிக்க வேண்டாம்.மனிதர்களுடன் பேசவும் நட்புறவு கொள்ளவுமான இன்பத்திற்காகமட்டும் கிளி ஒரேயடியாய் மணிக் கணக்கில் பேசும்; தொடர்ந்தாற்போலத்தனது சொற்செல்வம் முழுவதையும் திரும்பத் திரும்ப ஒப்பிக்கும் என்பதுஉண்மையே. ஆனால் அதனுடைய கருத்துகளின் வீச்சு எல்லைக்குட்பட்டுதான் சொல்வதைப் புரிந்து கற்றுக்கொள்ள முடியும். வசைச் சொற்களின்பொருளைப் பற்றிய கருத்தைப் பெறத்தக்க வகையில் ஒரு கிளிக்குஅவற்றைச் சொல்லிக் கொடுங்கள் (வெப்ப மண்டலத்திலிருந்துதிரும்புகிற மாலுமிகளின் ஓர் இன்பமான பொழுதுபோக்கு இது); பிறகுஅதைத் தொந்தரவு செய்யுங்கள்; வசைச் சொற்களை பெர்லினில் உள்ளஒரு தள்ளுவண்டிப் பழம் விற்பவனைப் போல மிகப் பொருத்தமாகஉபயோகிக்க அது தெரிந்து கொண்டிருக்கிறது என்பதைக் கண்டறிவீர்கள். தின்பண்டங்கள் கொடுக்கக் கெஞ்சும் போதும் இது பொருந்துகிறது.

முதலில் உழைப்பு, அதன் பின்னரும், அத்துடன் சேர்ந்தும் பேச்சு-இந்த மிக முக்கியமான இரண்டு தூண்டுகைகளின் செயலாட்சியினால்மனிதக் குரங்கின் மூளை படிப்படியாக மனிதனுடைய மூளையாகமாறியது; இது அதை ஒத்ததாக இருந்தபோதிலும் அதை விட இன்னும்பெரிதாகவும் இன்னும் நேர்த்தியாகவும் இருந்தது. மூளையின்வளர்ச்சியுடன் கைகோத்துக் கொண்டு அதனுடைய மிக உடனடியானகருவிகளான புலன்களின் வளர்ச்சியும் சென்றது. பேச்சின் படிப்படியானவளர்ச்சியுடன் ஒத்த வகையில் கேட்கும் உறுப்பும் செம்மையடைவதுஎன்பது தவிர்க்க முடியாமல் தொடர்ந்ததைப் போல மூளையின் வளர்ச்சிமுழுவதையும் தொடர்ந்து எல்லாப் புலன்களும் செம்மையடைந்தன.மனிதனுடையதை விடப் பருந்தின் கண்கள் மிக தூரத்தைப் பார்க்கின்றன;ஆனால் மனிதனுடைய கண்கள் பருந்தினதைவிடக் கணிசமாகவேஅதிகமானவற்றைப் பொருள்களில் உய்த்துணருகின்றன. மனிதனதைவிட நாயின் முகரும் உணர்வு மிகக் கூர்மையானதே; ஆனாலும்மனிதனுக்கு வெவ்வேறான பொருள்களைக் குறிக்கிற திட்டமானஅறிகுறிகளாக உள்ள வாசனைகளில் நூற்றில் ஒரு பகுதியைக் கூடஅதனால் வகைவேறுபாடு காணமுடியாது. மனிதக் குரங்கு ஸ்பரிசஉணர்வைக் கரடுமுரடான, ஆரம்ப நிலையில் மட்டுமே பெற்றிருக்கும்;மனிதக் கையின் வளர்ச்சியுடன் அக்கம்பக்கமாகவே, அதுவும் உழைப்பின்மூலமாக, வளர்ச்சி பெற்றது.

மூளை, அதன் பணியாட்களான புலன்கள், மேலும் மேலும் தெளிவுபெறும் பகுத்தறிவு, பொதுமைப்படுத்தவும் முடிவு காணவும் உள்ள திறன்ஆகியவற்றின் வளர்ச்சி உழைப்பின் மீதும் பேச்சின் மீதும் ஏற்படுத்தியஎதிர்ச் செயற்பாடு உழைப்பு, பேச்சு இவற்றின் கூடுதலான வளர்ச்சிக்குத்திரும்பத் திரும்பத் தூண்டுகைகளை அளித்து வந்தது. மனிதக்குரங்கிலிருந்து வேறுபட்டவனாக மனிதன் இறுதியாக மாறியவுடன்இந்த வளர்ச்சி முற்றுப்பெற்று விட வில்லை; ஆனால் ஒட்டுமொத்தத்தில்கூடுதலான வலு மிக்க முன்னேற்றத்தைப் பெற்றது; இது வெவ்வேறுகாலங்களில் வெவ்வேறு மக்களினங்களிடையே அளவிலும் திசையிலும்மாறுபடவும் அங்குமிங்கும் ஸ்தல அல்லது தற்காலிகப் பின்னேற்றத்தால்இடைமறிக்கப்படவும் செய்தது. இந்தக் கூடுதலான அபிவிருத்தி,முழு வளர்ச்சி பெற்ற மனிதன் தோன்றியவுடன் செயலுக்கு வந்தபுதியதோர் ஆக்கக் கூறான சமூகம் என்பதினால் ஒரு புறத்தில் வலுவுடன்முன்னோக்கி உந்தப்படவும் மறுபுறம் இன்னும் திட்டமான திசைகளில்வழி நடத்தப்படவும் செய்தது.மரமேறிகளான குரங்குகளின் கூட்டத்திலிருந்து மனித சமூகம்தோன்றுவதற்குள் லட்சக்கணக்கான ஆண்டுகள் – மனிதனுடையஆயுளில் ஒரு வினாடிக்கு இருப்பதை விட அதிக முக்கியத்துவம்இதற்குப் பூமியின் வரலாற்றில் ஏதும் இல்லை*– நிச்சயமாகவேகடந்து சென்றன. ஆனால் இறுதியாக அது தோன்றத்தான் செய்தது.

குரங்குகளின் ஒரு கூட்டத்திற்கும் மனித சமூகத்திற்கும் இயல்பு ரீதியானவேறுபாடாகத் திரும்பவும் நாம் எதைக் காண்கிறோம்? உழைப்பு.பூகோளச் சூழ்நிலைகளால் அல்லது அண்டையிலுள்ள மந்தைகளின்எதிர்ப்பால் வரையறை செய்யப்பட்ட தீனிப் பிரதேசத்திற்குள்இரை தேடிக் கொண்டிருப்பதுடன் ஒரு மனிதக் குரங்குக் கூட்டம்திருப்தியடைந்தது; புதிய தீனிப் பிரதேசங்களைப் பெறுவதற்காக அதுகுடி பெயர்ச்சிகளை அல்லது போராட்டங்களை மேற்கொண்டது; தனதுகழிவுப் பொருளைக் கொண்டு அப்பிரதேசங்களுக்குத் தன்னுணர்வின்றிஉரமளித்ததைத் தவிர்த்து அவை இயற்கை நிலையில் அளித்ததற்குமேலாக வலிந்தெடுக்க அது திறனற்றிருந்தது. எல்லாத் தகுந்ததீனி நிலங்களும் வியாபிக்கப்பட்டவுடன் மனிதக் குரங்குகளின்மொத்த தொகையில் பெருக்கம் ஏற்படவில்லை; அதிகபட்சம்அவற்றின் எண்ணிக்கை ஒரே நிலையில் தங்கிவிட்டது. ஆனால் எல்லாமிருகங்களும் பெருமளவு உணவை விரயம் செய்கின்றன; அத்துடன்கூடுதலாக, உணவின் அடுத்த தலைமுறையை முளையிலேயே அழித்துவிடுகின்றன. வேட்டைக்காரனைப் போலன்றி ஓநாய் தனக்கு அடுத்த ஆண்டிற்குக் குட்டிகளை உணவாக அளிக்கும் பெண்மானை விட்டுவைப்பதில்லை; முழு வளர்ச்சி பெறுவதற்கு முன்னரே இளம் புதர்களைத்தின்று விடுகிற கிரேக்க நாட்டு வெள்ளாடுகள் நாட்டிலுள்ள எல்லாமலைகளையும் பசுமையின்றி வெறிச்சோட வைத்தன. மிருகங்களின்இந்தச் “சூறையாடும் பொருளாதாரம்”, இனவகைகள் தங்களதுவழக்கமான உணவைக் கைவிட்டு இதர வகைக்கு ஏற்றவாறு தங்களைஅமைத்துக் கொள்ள நிர்ப்பந்தித்து அவை படிப்படியாக நிலைமாறுதல்அடைவதில் முக்கியப் பாத்திரம் வகிக்கிறது: இதன் புண்ணியத்தால்அவற்றின் ரத்தம் ஒரு வேறுபட்ட இரசாயன ஆக்கத்தைப் பெறவும்உடலமைப்பு படிப்படியாக வேறுபடவும் செய்கிறது; அதே பொழுதில்தங்களைத் திருத்தியமைத்துக் கொள்ளாத இனவகைகள் சிறுகச் சிறுகஇறந்து விடுகின்றன. நமது மூதாதையர்கள் மனிதக் குரங்கிலிருந்துமனிதனாக மாறியதில் இந்தச் சூறையாடும் பொருளாதாரம் பெரும்அளவில் நற்பங்காற்றியுள்ளது என்பதில் யாதோர் ஐயமும் இல்லை.

மனிதக் குரங்குகளில் புத்திக் கூர்மையிலும் சூழ்நிலைமைகளுக்குப்பொருந்தியவாறு அமைத்துக் கொள்வதிலும் மற்றெல்லாவற்றையும் விடமேலோங்கி நின்ற ஓர் இனத்தில் இந்தச் சூறையாடும் பொருளாதாரம்உணவாக உபயோகிக்கப்பட்ட செடிகளின் எண்னிக்கையைத்தொடர்ந்து பெருக்குவதற்கும் உணவு வகைச் செடிகளின் உண்ணத்தக்கபகுதிகளை மேலும் மேலும் கூடுதலாக உண்ணப்படுவதற்கும் இட்டுச்சென்றது. சுருக்கத்தில், “உணவு மேலும் மேலும் பல்வகையதாயிற்றுஉடலுக்குள் செல்லும் பொருட்சத்துகளின் வகையும் அவ்வாறேயாயிற்று;இந்தப் பொருட்சத்துகளே மனிதனாக மாறுவதற்கான இரசாயனஆதாரப்படிகளாகும். ஆனால் அவை அத்தனை சேர்ந்தும் கூட இன்னும்உழைப்பு என்ற சொல்லிற்குப் பொருத்தமான பொருளைப் பெற்றுவிடவில்லை. உழைப்புக் கருவிகளைச் செய்வதிலிருந்தே உழைப்புஆரம்பமாகிறது. நாம் காண்கிற மிகப் புராதனமான உழைப்புக்கருவிகள்-இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ள, வரலாற்றுக் காலத்திற்குமுற்பட்ட மனிதனின் வழிவழியாக வந்த உடை மைகளைக் கொண்டும்வரலாற்றுக் காலத்தின் ஆரம்ப மக்களுடையவும் மிக மிக முதிர்ச்சியற்றதற்காலத்துக் காட்டுமிராண்டிகளுடையவும் வாழ்க்கைப் பாங்கைக்கொண்டும் நிர்ணயிப்பதெனில் மிகப் புராதன உழைப்புக் கருவிகள் தான்என்ன? வேட்டையாடுவதற்கும் மீன் பிடிப்பதற்குமான அக்கருவிகளில்முன்சொன்னவை அதே சமயத்தில் ஆயுதங்களாகவும் பயன்பட்டன.

வேட்டையாடுதல், மீன் பிடித்தல் என்றால் தாவர உணவை மட்டும்உட்கொள்வது என்பது மாறி அத்துடன் இறைச்சியையும் உபயோகிக்கிறநிலை ஏற்பட்டது என்று பொருள்; மனிதக் குரங்கு மனிதனாக மாறிய இடைநிலை மாற்றப்போக்கில் இது மற்றொரு முக்கியமான படியாகும். அங்கஜீவியின் வளர்சிதை மாற்றத்திற்குத் தேவையான எல்லாமுக்கியமான ஆக்கக் கூறுகளும் ஏறக்குறையப் பக்குவப்பட்ட நிலையில் இறைச்சி உணவில் உள்ளன; ஜீரணத்திற்கு ஆகும் நேரத்தைக் குறைத்ததின் மூலமாக அது தாவர வாழ்விற்கு ஒத்த, உடலின் தாவரத் தன்மை சார்ந்த இதர மாற்றப்போக்குகளையும் குறைத்தது; இவ்வாறு மிருக வாழ்வுஎன்பது செயல்திறனுடன் வெளிப்பட்டுச் செயல்படுவதற்குக் கூடுதலானநேரம், பொருள், சக்தி ஆகியவற்றை அது பெற்றுக் கொடுத்தது. உருவாகிவந்த மனிதர் தாவர இனத்திலிருந்து விலகிச் சென்ற அளவுக்கு மனிதர் மிருகத்தை விட மேல் நிலைக்கு உயர்ந்தார். இறைச்சியுடனேயே அக்கம்பக்கமாக ஏற்பட்டதாவர உணவின் பழக்கம் காட்டுப் பூனை, காட்டு நாய் ஆகியவற்றை மனிதனுக்கு ஊழியர்களாக மாற்றியதைப்போலவே, தாவர உணவிற்கு அக்கம்பக்கமாக இறைச்சி உணவையும்பொருந்த அமைத்துக் கொண்டது உருப்பெற்று வந்த மனிதன் உடல்வலுவையும் சுதந்திரத்தையும் பெறுவதில் நற்பங்காற்றியது. ஆயினும் இறைச்சி உணவு மிக அதிகபட்சம் மூளைக்கே நற்பயனை விளைவித்தது; அதனுடைய ஊட்டத்திற்கும் வளர்ச்சிக்கும் தேவையான பொருள்களை இப்பொழுது இன்னும் செழுமையாக அது பெற்றது; எனவே தலைமுறைக்குத் தலைமுறை அதிக விரைவாகவும் முழுநிறைவாகவும் அபிவிருத்தியடைய அதற்குச் சாத்தியமாயிற்று. தாவர உணவு உண்போருக்கு முழு மதிப்புக் கொடுத்த போதிலும், சொல்லவேண்டியதென்னவெனில் இறைச்சி உணவின்றி மனிதர் வாழ்நிலைபெற்று விடவில்லை. இறைச்சி உணவினால் ஏதோ ஒரு காலத்தில் நாமறிந்த சகல மக்கள் இனங்களிலுமே நரமாமிசப்பட்சணியாக மாறஅது இட்டுச் சென்றது எனினும் (பெர்லின் வாசிகளின் மூதாதையர்களானவெலெடாபியன்கள் அல்லது வில்ட்ஸியன்கள் ஆகியோர் பத்தாவதுநூற்றாண்டு வரைக்கும் தங்களது பெற்றோரை உண்பதை வழக்கமாகப்பெற்றிருந்தனர்) அது இன்று நமக்கு முக்கியமல்ல.

இறைச்சி உணவு நிர்ணயமான முக்கியத்துவம் உடைய இரண்டு புதியமுன்னேற்றங்களுக்கு இட்டுச் சென்றது – நெருப்பைப் பயன்படுத்தல்,மிருகங்களைப் பழக்குதல். முதலாவது அரை ஜீரண நிலையில் உணவைவாய்க்கு வழங்கியதால் ஜீரண மாற்றப்போக்கை மேலும் சுருக்கியது;இரண்டாவது வேட்டையாடுவதோடு கூட இறைச்சி இன்னும்அபரிமிதமாகவும் ஒழுங்காகவும் கிடைப்பதற்கான புதியதொருதோற்றுவாயைத் திறந்து விட்டது; மேலும், பாலிலும் அதைச்சேர்ந்த விளைபொருள்களிலும் ஊட்டத்தில் இறைச்சிக்குக் குறைந்தபட்சம் சமமான மதிப்புள்ள புதியதோர் உணவுப் பண்டத்தைஅளித்தது. இவ்வாறு இவ்விரண்டு முன்னேற்றங்களும் மனிதனுடையவிடுதலைக்குப் புதிய சாதனங்களாக விளங்கின. மனிதனுடையவும்சமூகத் தினுடையவும் அபிவிருத்திக்கு அவை மகத்தான முக்கியத்துவம்உடையனவாக இருந்தாலும், அவற்றின் மறைமுக விளைவுகளைப் பற்றிஇங்கு நாம் விரித்துக் கூறினால் அது நம்மை வேறு புறம் வெகு தூரம்இட்டுச் சென்று விடும். உண்ணத்தக்கவற்றை எல்லாம் உண்ணக் கற்றுக்கொண்டதைப் போலவே மனிதன் எந்த சீதோஷ்ண நிலையிலும் வாழவும்கற்றுக்கொண்டான். குடியிருக்கத்தக்க உலகம் முழுவதிலும் அவன் வியாபித்தான்; தனது சொந்தப் போக்கில் அதை முழுமையாகச் சாதித்தஒரே மிருகம் அவனே. எல்லா சீதோஷ்ண நிலைகளுக்கும் தங்களைப்பழக்கப்படுத்திக் கொண்ட இதர மிருகங்கள் – வீட்டுப் பிராணிகளும்பூச்சி இனங்களும் – தங்களது சொந்தப் போக்கில் சுயேச்சையாகஅவ்வாறு மாறவில்லை; மனிதனுடைய அடிச்சுவட்டைப் பின்பற்றிச்சென்றே அவ்வாறு மாறின. ஒரே மாதிரியான வெப்ப சீதோஷ்ணநிலை நிலவிய தனது அசல் குடியிருப்புப் பிரதேசத்திலிருந்து மனிதன்வேனிற்காலம், பனிக்காலம் என வருடம் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளகுளிர் பிரதேசங்களுக்குப் பெயர்ந்து சென்றதானது புதிய தேவைகளை– குளிரையும் ஈரத்தையும் எதிர்த்துக் காப்பாகப் புகலிடமும் உடுப்பும்என்பதாக – படைத்தது; இதனால் உழைப்புக்கான புதிய துறைகளும்செயலுக்கான புதிய வடிவங்களும் தோன்றின; இவை மேலும் மேலும்மனிதனை மிருகத்திலிருந்து வேறுபடுத்தின.

கைகள், பேச்சு உறுப்புகள், மூளை இவற்றினுட ையஒருங்கிணைப்பான செயற்பாட்டினால் – ஒவ்வொரு தனி மனிதனிடத்தில்மட்டுமின்றிச் சமூகத்திலும் கூட-மனிதர்கள் மேலும் மேலும் சிக்கல்மிகுந்த காரியங்களை நிறைவேற்றத் திறன் பெற்றனர்; மேலும்மேலும் உயர்ந்த குறிக்கோள்களைத் தங்களுக்கு நிர்ணயித்துக்கொள்வதும் அவற்றை அடைவதும் அவர்களுக்குச் சாத்தியமாயிற்று.ஒவ்வொரு தலைமுறையின் வேலையும் கூட வித்தியாசப்பட்டது;கூடுதலான செய்நேர்த்தியும் பல்வகைத் தன்மையும் அது பெற்றது.வேட்டையாடுவது, கால்நடைகளை வளர்ப்பது என்பதுடன்விவசாயமும் சேர்ந்தது; அதைத் தொடர்ந்து நூற்பு, நெசவு வேலைகள்,உலோக வேலைகள், மண் பாண்டங்கள் செய்தல், கடற்பயணம்ஆகியனவும் வந்தன. வாணிபம், தொழில் இவற்றுடன் இறுதியாகக்கலைகளும் விஞ்ஞானமும் தோன்றின: குலங்கள் தேசங்களாகவும்அரசுகளாகவும் வளர்ந்தன. சட்டமும் அரசியலும், அவற்றோடுமனிதனுடைய உள்ளத்தில் மனித விவகாரங்களின் அந்த வினோதமானபிரதிபிம்பமான மதமும் எழுந்தன. உள்ளத்தின் விளைபொருள்களாகமுதலாவதாகத் தோற்றமளித்தவையும் மனித சமூகங்களில் மேலாதிக்கம்செலுத்தியவையுமான இந்த எல்லாப் பிம்பங்களுக்கும் எதிராகஉழைக்கும் கையின் மிகையான தன்னடக்கம் உள்ள விளைபொருள்கள்பின்னணிக்குச் சென்றன; சமூக வளர்ச்சியின் மிக ஆரம்ப கட்டத்திலேயே(உதாரணமாக, புராதனக் குடும்பத்திலேயே) உழைப்புக்குத் திட்டம்வகுத்த உள்ளம் தன்னுடையதன்றி இதர கைகளால் அவ்வாறுதிட்டமிடப்பட்ட உழைப்பை நிறைவேற்றவும் சாத்தியமாக்கியதால்அது இன்னும் கூடுதலாகவே நிகழ்ந்தது. நாகரிகத்தினுடைய துரிதவளர்ச்சியின் பெருமை முழுவதும் உள்ளத்திற்கே, மூளையின் வளர்ச்சிக்கும் செயலுக்குமே வழங்கப்பட்டது. (எவ்வாறாயினும் உள்ளத்தில்புலன் நுகர்ச்சி செய்யப்பட்டு அதில் பிரதிபலிக்கிற) தங்களுடையதேவைகளிலிருந்தன்றிக் கருத்துகளிலிருந்தே எழுகின்றன என்று தங்களுடைய செயல்களை விளக்க மனிதர்கள் வழக்கப்படுத்திக்கொண்டனர்; எனவே காலப் போக்கில், விசேஷமாகப் பண்டைய உலகின்வீழ்ச்சிக்குப் பிறகு மனிதர்களின் மனதில் மேலாதிக்கம் செலுத்தியஒரு கருத்துமுதல்வாத உலகக் கண்ணோட்டம் எழுந்தது. டார்வின்கருத்தோட்டத்தைச் சேர்ந்த அதிகப் பொருள்முதல்வாத இயற்கைவிஞ்ஞானிகள் கூட மனிதனுடைய ஆரம்ப பிறப்பைக் குறித்து ஒருதெளிவான கருத்தை இன்னும் கூடப் பெற இயலாத அளவுக்கு அதுஇன்னும் மனிதர் களை ஆட்சி செய்து வருகிறது; ஏனெனில் அதனுடையகருத்தியல் செல்வாக்கின் கீழ்ப்பட்டுள்ள அவர்கள் அதில் உழைப்புஆற்றியுள்ள பங்கை அங்கீகரிப்பதில்லை.

ஏற்கெனவே சுட்டிக் காட்டியது போல, மிருகங்கள் தங்களதுசெயல்களால் – மனிதனைப் போலவே, ஆனால் அந்த அளவுக்குஇல்லாமல் இருந்தாலும் – சுற்றுச்சார்புகளை மாற்றுகின்றன; இந்தமாற்றங்கள் தங்களது முறைக்கு அவற்றை நிகழ்த்தியவர்களின் மீதுஎதிர்ச்செயல் புரிந்து அவர்களை மாற்றுகின்றன என்பதையும் கண்டோம்.இயற்கையில் எதுவுமே தனிமைப்பட்ட நிலையில் நிகழ்வதில்லை.ஒவ்வொன்றும் மற்ற ஒவ்வொன்றையும் பாதிக்கிறது, பாதிக்கப்படுகிறது.பெரும்பாலான இனங்களில் இந்தப் பல தரப் பட்ட இயக்கமும் பரஸ்பரச்செயற்பாடும் மறக்கப்படுவதால் மட்டுமே நமது இயற்கை விஞ்ஞானிகள்மிக எளிய விஷயங்களிலும் கூட ஒரு தெளிவான உட்பார்வைபெறுவதினின்றும் தடுக்கப்படுகின்றனர். கிரேக்க நாட்டில் வெள்ளாடுகள்காடுகள் புத்துயிர் பெறுவதை எப்படி தடுத்தன என்பதைக் கண்டோம்;செயின்ட்ஹெலேனா தீவில் ஆரம்பத்தில் குடியேறியவர்களால் கொண்டுவரப்பட்ட வெள்ளாடுகளும் பன்றிகளும் ஏறக்குறையப் பூரணமாகவேஅங்கிருந்த பழைய செடிகொடியினத்தையே ஒழித்து விடுவதில் வெற்றிகண்டு, பின்னால் வந்த மாலுமிகள், குடியேறியவர்கள் இவர்களால்கொணரப்பட்ட செடிகள் பரவுவதற்கு இவ்வாறு வழி வகுத்தன.

ஆனால் மிருகங்கள் சுற்றுச்சார்புகள் மீது எவ்வித உட்கருத்தின்றிஅவற்றைப் பொறுத்த வரை தற்செயலாகவும் நிரந்தரமான பாதிப்பைநிகழ்த்துகின்றன. ஆனால் மனிதர்கள் மிருகங்களிடமிருந்து விலகிச்செல்கிற அளவுக்கு இயற்கையின் மீது அவர்களின் பாதிப்பு முன்கூட்டியேநிர்ணயித்த, திட்டமான குறிக்கோள்களை நோக்கிய திசைமுகம் கொண்ட,முன்னரே சிந்தித்துத் திட்ட மிட்ட செயலின் இயல்பை மேலும் மேலும்கொள்கிறது. அவை என்ன செய்கின்றன என்பதை உணராமலேயேமிருகங்கள் ஓர் இடத்தில் உள்ள செடிகொடியினத்தை அழிக்கின்றன.மனிதன் அதை அழிப்பது அவ்வாறு செய்வதினால் விடுபடுகிறநிலத்தில் வேளாண்மைப் பயிரை விதைக்க அல்லது மரங்களை அல்லதுதிராட்சைக் கொடிகளை நடு வதற்காகவேயாம்; விதைப்பதைப் போலப்பல மடங்கை அவை அளிக்கின்றன என்பதை அவன் அறிவான்.உபயோககரமான செடிகளையும் வீட்டுப் பிராணிகளையும் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு அவன் மாற்றி கண்டங்கள் அனைத்தின் மாவடை, மரவடை வகைகளையே இவ்வாறு மாற்றிவிடுகிறான்.

இதை விட இன்னும் அதிகமாக. செயற்கை இனப் பெருக்கத்தின் மூலம்செடிகளும் மிருகங்களும் மனிதனுடைய கையினால் அடையாளம்தெரியாத அளவுக்கு மாற்றப்படுகின்றன. நமது தானிய வகைகள்எந்தக் காட்டுச் செடிகளிலிருந்து தோன்றினவோ, அவை பயனற்றவகையில் இன்னும் கூடத் தேடப்பட்டு வருகின்றன. மிகவித்தியாசப்பட்ட வளர்ப்பினங்களைச் சேர்ந்த நமது நாய்கள் அல்லதுஇவற்றிற்குச் சமமான எண்ணிக்கையுள்ள வளர்ப்பினங்களைச் சேர்ந்தகுதிரைகள் எந்தக் காட்டு மிருகங்களின் வழிமரபாக வந்தன என்பதைக்குறித்து இன்னும் சர்ச்சை உள்ளது.

முன்கூட்டியே சிந்தித்த, திட்டமிட்ட முறையில் செயல்படமிருகங்களுக்கு உள்ள ஆற்றலைக் குறித்து சர்ச்சை புரிய நமக்குமனதிற்படாது என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. இதற்குஎதிர்மாறாக, எங்கெங்கு புரோடோபிளாஸம், உயிருள்ள அல்புமின்நிலை வாழ்ந்து எதிர்ச்செயல் புரிகிறதோ, அதாவது திட்டமான புறநிலைத்தூண்டுகைகளின் விளைவாக மிகச் சாதாரணமானவையாக இருந்தாலும்திட்டமான சலனங்களை உண்டாக்கி நிறைவேற்றுகின்றதோ,அங்கெல்லாம் கரு உருவத்தில் திட்டமிட்ட செயல்முறை நிலைவாழ்கிறது. ஒரு நரம்பு அணு இருக்கிறதா என்பது ஒரு புறமிருக்க ஓர்அணு கூட இன்னும் இல்லாத இடத்தில் கூட இவ்வாறான எதிர்ச்செயல்நிகழ்கிறது. பூச்சிகளை உண்ணும் செடிகள் உளவிழிப்பின்றிச் செய்தாலும்கூட தங்களுடைய இரையைப் பிடிக்கும் முறையில் திட்டமிட்டசெயலின் ஏதோ ஒன்று இருக்கிறது. மிருகங்களில் உளவிழிப்புள்ளதிட்டமிட்ட செயலுக்கான திறன் என்பது அவற்றின் நரம்பு மண்டலஅபிவிருத்தியுடன் தகவுப் பொருத்தம் உடையதாகும்; பாலூட்டிகளில்அது இன்னும் கணிசமான உயர் மட்டத்தை அடைகிறது. இங்கிலாந்தில்நரி வேட்டையின்போது தன்னைத் துரத்துகிறவர்களிடமிருந்துதப்பிக்க ஸ்தலத்தைப் பற்றிய தனது சிறந்த அறிவை நரி எவ்வாறுஒரு பிழையுமின்றி உபயோகிக்கிறது என்பதையும் மோப்பத்தைஇழக்கும்படிச் செய்ய நிலத்தில் உள்ள எல்லாச் சாதகமானஅம்சங்களையும் அது எவ்வளவு நன்கு உணர்ந்து பயன்படுத்துகிறதுஎன்பதையும் ஒருவன் தினசரி கவனிக்க முடியும். மனிதனுடன் உறவுபூண்டதின் புண்ணியத்தால் மிக ஓங்கிய வளர்ச்சி பெற்ற நமது வீட்டுப்பிராணிகளிடையே குழந்தைகளுக்குச் சரி ஈடாக உள்ள சூழ்ச்சித்திறமுள்ள செயல்களை ஒருவன் இடைவிடாமல் கவனிக்கமுடியும்.தாயின் கர்ப்பத்தில் உள்ள மனிதக் கருவின் வளர்ச்சி வரலாறு பலபத்து லட்சம் ஆண்டுகளாக நடந்தேறிய நமது மிருக மூதாதையர்களின்புழுவிலிருந்து தொடங்கிய உடல் பரிணாமத்தின் சுருங்கிய புனர்நிகழ்வேயாம்; இதைப் போலவே, மனிதக் குழந்தையின் உள வளர்ச்சிஅதே மூதாதையர்களின்-குறைந்த பட்சம், பிற்காலத்தவருடைய-அறிவுத் துறை வளர்ச்சியின் இன்னும் கூடுதலான சுருங்கிய புனர்நிகழ்வு மட்டுமேயாகும். ஆனால் எல்லா மிருகங்களின் எல்லாத் திட்டமிட்டசெயல்கள் சேர்ந்தாலும் பூமியின் மீது அவற்றினுடைய மனோசித்தத்தின்முத்திரையை இடுவதில் அவை வெற்றி பெற வில்லை. அதுமனிதனுக்கே விடப்பட்டது.

சுருக்கத்தில், ஒரு மிருகம் தனது சுற்றுச் சார்பைச் சும்மா பயன்படுத்தமட்டுமே செய்கிறது; தனது வெறும் இருத்தலால் மட்டும் இதில்மாற்றங்களை உண்டாக்குகிறது; மனிதன் தனது மாற்றங்களால் தனதுகுறிக்கோள்களுக்கு அதை ஊழியம் புரியச் செய்கிறான், அதற்குஎசமானனாகிறான். மனிதனுக்கும் இதர மிருகங்கள் அனைத்திற்கும்உள்ள இறுதியான, சாராம்சமான வித்தியாசம் இதுவே: இந்தவித்தியாசத்தை நிகழ்த்துவது உழைப்பே என்பதை மீண்டும் ஒரு தடவைகுறிப்பிட வேண்டும்.

*

இருந்தபோதிலும் இயற்கையின் மீது நமது மனித வெற்றிகளைவைத்துக் கொண்டு நம்மை நாம் அளவு கடந்து தற்புகழ்ச்சி செய்துகொள்ள வேண்டியதில்லை. ஏனெனில் இப்படிப்பட்ட வெற்றிஒவ்வொன்றுக்கும் இயற்கை நம்மைப் பழி வாங்குகிறது. ஒவ்வொருவெற்றியும் முதலாவதாக நாம் எதிர்பார்க்கிற விளைவுகளைநிகழ்த்துகிறது என்பது உண்மையேயாயினும் இரண்டாவது, மூன்றாவதுநிலைகளாக நாம் எதிர்பார்க்காத, முற்றிலும் வேறுபட்ட பலன் களையும்அளிக்கிறது; இவை பல தடவைகளிலும் முதலில் சொன்னதைரத்து செய்துவிடுகின்றன. மெசப்பொடேமியா, கிரீஸ், ஆசியாமைனர், இன்னும் இதர இடங்களிலும் சாகுபடி நிலங்களைப்பெறுவதற்காகக் காடுகளை அழித்த மக்கள் காடுகளை அழித்ததுடன்கூடவே நீர்த் தேக்கங்களையும் தண்ணீர் ஒருங்கு சேரும் இடங்களையும்ஒழித்ததினால் அவர்கள் அந்த நாடுகளின் தற்போதைய திக்கற்றநிலைக்கு அடிகோலியதாகக் கனவும் கூடக் காணவில்லை. ஆல்ப்ஸ்மலைகளில் குடியேறிய இத்தாலியர்கள் வட புறச் சரிவுகளில் அவ்வளவுபரிவுடன் பேணிக் காக்கப்பட்ட பைன் மரக் காடுகளைத் தென் புறச்சரிவுகளில் பூரணமாக வெட்டிப் பயன்படுத்தி விட்டபொழுது, அவ்விதம்செய்ததின் மூலம் அப்பிரதேசத்துப் பால் பண்ணைத் தொழிலின் அடிவேர்களையே வெட்டி விட்டதின் சூசகத்தையும் கூடக் காணவில்லை;அதன் மூலம் வருடத்தின் பெரும் பகுதியில் மலைச் சுனைகளுக்குத்தண்ணீர் இல்லாமல் செய்து விட்டதைப் பற்றியும் மழைக் காலங்களில்கூடுதலான வெள்ளப் பெருக்குடன் அவை சமவெளிகளில் பாய்வதற்குவகை செய்யப்பட்டது என்பதைப் பற்றியுமோ, அந்த அளவு சூசகமும்கூடக் காணவில்லை. ஐரோப்பாவில் உருளைக் கிழங்கை யார் பரவவைத்தனரோ, அவர்கள் அந்த மாச்சத்துள்ள கிழங்குகளுடன் அதேசமயத்தில் கண்டமாலை என்ற வியாதியையும் கூடப் பரப்ப ஏதுவாயினர் என்பதை அவர்கள் அறியவில்லை. இவ்வாறாக அயல்நாட்டு மக்கள்மீது வெற்றிவாகை சூடியவனைப் போல, இயற்கைக்குப் புறத்தில்நிற்கும் ஒருவனைப் போல, இயற்கையின் மீது எவ்விதத்திலும் நாம்ஆளுகை புரியவில்லை என்பதும் அதற்குப் பதிலாக நமது சதை, ரத்தம்,மூளை இவற்றுடன் இயற்கையோடு சேர்ந்தவர்கள் நாம் அதன் நடுவில்வாழ்கிறோம் என்பதும் இயற்கையின் நியதிகளைக் கற்றுக் கொண்டுஅவற்றைப் பொருந்தியவாறு கடைப்பிடிப்பதில் இதர எல்லாப்பிராணிகளைக் காட்டிலும் நமக்கு அனுகூலம் உள்ளது என்பதிலேயேஅதன் மீது நமது ஆளுகை அடங்கியுள்ளது என்பதும் ஒவ்வொருபடியிலும் நமக்கு நினைவூட்டப்படுகிறது.

உள்ளபடியாகவே, கடந்து போகும் ஒவ்வொரு நாளும் நாம்இந்த நியதிகளை மேலும் நன்கு புரிந்துகொண்டும் இயற்கையின்பரம்பரையான செல்வழியில் நாம் குறுக்கிடும்போது உண்டாகும் உடனடிவிளைவுகளையும் எதிர்காலத்தில் நிகழும் விளைவுகளையும் புலனாக்கிக்கொண்டும் வருகிறோம். குறிப்பாக, இந்த நூற்றாண்டில் இயற்கைவிஞ்ஞானங்களில் ஏற்பட்டுள்ள மகத்தான முன்னேற்றங்களுக்குப்பிறகு குறைந்தபட்சம் நமது தினசரி உற்பத்திச் செயல்களின்இயற்கையான எதிர்கால விளைவுகளையும் கூட உணரவும் எனவேஅவற்றைக் கட்டுப்படுத்தவும் கூடிய நிலையில் எப்பொழுதையும்விட இன்றுள்ளோம். இது முன்னேற்றம் அடைய அடைய மனிதர்கள்இயற்கையுடன் தங்களுக்குள்ள ஒருமைப்பாட்டை மேலும் மேலும் உணருவது மட்டுமின்றி – ஐரோப்பாவில் பண்டையகிரேக்க – லத்தீன் நாகரிகம் �ணமடைந்த பிறகு தோன்றி கிறிஸ்துவமதத்தில் மிக அதிக நுட்பம் பெற்ற, மனது – பருப்பொருள் என்பதையும் மனிதன் – இயற்கை என்பதையும் உடல் – ஆன்மா என்பதையும்வேறுபடுத்தி எதிர்நிலைப்படுத்துகிற பொருளற்ற, இயற்கைக்குமுரணான கருத்தானது மேலும் மேலும் சாத்தியமில்லாமல் போகும். உற்பத்தித் துறையில் நமது செயல்களின் கூடுதலான தொலைவிலுள்ளஇயற்கையான பலன்களை எவ்வாறு கணக்கிடுவது என்பதில் ஒருசிறிதைக் கற்றுக்கொள்ள நமக்குப் பல்லாயிரமாண்டுகள் உழைப்புதேவைப்பட்டது; ஆனால் இந்தச் செயல்க ளி ன் கூ டு த ல ா னதொலைவிலுள்ள சமுதாய ரீதியான பலன்களைப் பற்றியது இன்னும்அதிகக் கடினமுள்ளதாக இருக்கிறது. உருளைக் கிழங்கைப் பற்றியும்அதன் பலனாக விளைந்து பரவிய கண்டமாலை வியாதியைப்பற்றியும் மேலே சொன்னோம். ஆனால் உருளைக் கிழங்கு உணவுடன்தொழிலாளிகள் கட்டுப்பட்டுப் போனதால் பல நாடுகளில் பாமரமக்கள் பகுதிகள் அனைத்தின் வாழ்க்கை நிலைமைகளில் நிகழ்ந்தவிளைவுகளுடன் ஒப்பிட்டு நோக்கினாலும் அல்லது உருளைக்கிழங்கு ஒன்றை மட்டுமே அல்லது கிட்டத்தட்ட அதை மட்டுமேஉணவாகக் கொண்ட ஐரிஷ் மக்களில் பத்து லட்சம் பேரைப் புதைகுழிக்கு அனுப்பியும் அத்துடன் இருபது லட்சம் பேரைக் கடல்கடந்து குடிபெயரவும் செய்த, அயர்லாந்தில் 1847இன் உருளைக்கிழங்கு நோய் நிகழ்த்திய பஞ்சத்துடன் ஒப்பு நோக்கினாலும்கண்ட மாலை என்பது எந்த மூலைக்கு? மதுபானங்களை வடிக்கஅராபியர்கள் கற்றுக் கொண்ட போது, அவ்விதம் செய்ததின் மூலம்அவர்கள் அப்பொழுது இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் இருந்தஅமெரிக்கக் கண்டத்தின் பூர்வீகக் குடிகளைக் களைந்தெறிவதற்கானபிரதான கருவிகளில் ஒன்றைச் சிருஷ்டித்துக் கொண்டிருப்பதாகஅவர்கள் மூளையில் கிஞ்சிற்றும் தோன்றவில்லை. அதன் பின்னர்அந்த அமெரிக்காவை கொலம்பஸ் கண்டுபிடித்தபொழுது, அவ்வாறுசெய்ததின் மூலம் ஐரோப்பாவில் என்றோ ஒழிக்கப்பட்டுப் போனஅடிமைத்தனத்துக்குப் புத்துயிரளிப்பதாகவும் நீக்ரோ அடிமைவர்த்தகத்திற்கு அடிகோலுவதாகவும் அவர் அறியவே இல்லை.பதினேழாவது, பதினெட்டாவது நூற்றாண்டுகளில் நீராவி எஞ்சினைப்படைக்க உழைத்த மனிதர்களுக்கு, உலகம் முழுவதிலும் வேறு எதைக்காட்டிலும் சமூக உறவுகளைப் புரட்சிகரமாக்குகிற ஒரு சாதனத்தைஅவர்கள் தயாராக்கிக் கொண்டிருக்கின்றனர் என்ற எண்ணமேஇல்லை; விசேஷமாக ஐரோப்பாவில் ஒரு சிறுபான்மையோர் கையில்செல்வத்தைக் குவித்தும், பெரும்பான்மையோரின் உடைமைகளைப்பறித்தும் இந்தச் சாதனம் முதலில் முதலாளி வர்க்கத்திற்குச் சமூக,அரசியல் மேலாதிக்கத்தை அளிப்பதையும் ஆனால் பிற்பாடுமுதலாளி வர்க்கம் துக்கியெறியப்படுவதிலும் எல்லாவித வர்க்கப்பகைமைகளும் ஒழிக்கப்படுவதிலும் மாத்திரமே முடிவு பெறக் கூடிய,முதலாளி, பாட்டாளி வர்க்கங்களிடையில் வர்க்கப் போராட்டத்தைத்தோற்றுவிப்பதையும் தனது விதியாகக் கொண்டிருந்தது. ஆனால்இந்தத் துறையிலும் கூட நீண்ட, அடிக்கடி குரூரத் தன்மை வாய்ந்தஅனுபவத்தின் மூலமாகவும் வரலாற்று விஷயாதாரங்களை சேகரித்துப்பகுப்பாய்வு நடத்தியதின் மூலமாகவும் நமது உற்பத்திச் செயல்களின்மறைமுகமான, மேலும் தொலைவிலுள்ள சமூக விளைபயன்களைப்பற்றித் தெளிவானதொரு கண்ணோட்டம் பெற நாம் படிப்படியாகக்கற்று வருகிறோம்; எனவே இந்த விளைபயன்களையும் கட்டுப்படுத்திமுறைப்படுத்த ஒரு வாய்ப்பு நமக்குக் கிடைத்தது.

எனினும் இவ்வாறு முறைப்படுத்தல் என்பதற்கு வெறும் அறிவுமட்டும் போதாது; ஏதோ ஒன்று அதிகமாகவும் தேவையாகிறது. இன்றுவரை நிலைப்பிலுள்ள நமது உற்பத்தி முறையில் ஒரு முழுப் புரட்சியும்,அதே சமயத்தில் நமது இன்றைய சமூக அமைப்பு முழுவதிலும் ஒருபுரட்சியும் தேவைப்படுகின்றன.

இதுவரை நிலைப்பிலிருந்து வரும் எல்லா உற்பத்தி முறைகளும்உழைப்பினுடைய மிக அடுத்த, நேரடியான பயன் அளிக்கிற விளைவைப்பெறுவதை மட்டுமே வெறும் குறிக்கோளாகக் கொண்டிருந்தன. பிற்பாடு மட்டுமே வெளிப்படுகிற, படிப்படியாகத் திரும்பத் திரும்பச்செய்யப்படுவதாலும் திரட்சி பெறுவதினாலும் மட்டுமே பயன்தருகின்ற மேலும் கூடி வரும் விளைவுகள் பூரணமாகவே உதாசீனம்செய்யப்பட்டன. முதலாக இருந்த நிலப் பொது உடைமை, ஒருபுறம், உடனடியாகக் கிட்டக்கூடியதுடன் மட்டுமே பொதுவாகவரையறுக்கப்பட்ட அறிவு வரம்பு பெற்ற மனிதகுல வளர்ச்சிமட்டத்துக்கு ஒத்திசைந்திருந்தது; மற்றொரு புறம், அது இந்தப்பூர்வீகத் தன்மை வாய்ந்த பொருளாதாரத்தின் சாத்தியப்பாடுள்ள தீயவிளைவுகளை நேர் செய்ய இடமளிக்கிற நிலத்தின் ஓர் உபரியைமுன்னூகம் செய்து கொண்டது. இந்த உபரி நிலம் தீர்ந்த பிறகுபொதுவான உடைமை என்பதும் நசித்தது. இருந்தாலும் உற்பத்தியின்உயர் வடிவங்கள் அனைத்தும் மக்கள்தொகை பல்வேறு வர்க்கங்களாகப்பிரிக்கப்படுவதற்கும் அதன் மூலம் ஆளும் வர்க்கம், ஒடுக்கப்படுகிறவர்க்கம் இவற்றிடையே பகைமை தோன்றுவதற்கும் இட்டுச் சென்றன.இவ்வாறாக ஆளும் வர்க்கத்தின் நலன்களே உற்பத்தியை முன்னோக்கிநடத்திச் செல்லும் காரணியாக அமைந்தன; ஏனெனில் ஒடுக்கப்பட்டமக்களின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான பண்டங்களை அளிப்பதுடன்உற்பத்தி கட்டுப்பட்டு விடவில்லை. மேற்கு ஐரோப்பாவில் ஓங்கிப்பரவியுள்ள முதலாளித்துவ உற்பத்தி முறையில் இது முழுக்க முழுக்கஅமுலாக்கப்பட்டுள்ளது. உற்பத்தியிலும் பரிவர்த் தனையிலும்மேலாதிக்கம் கொண்டுள்ள தனிப்பட்ட முதலாளிகள் தங்களுடையசெயல்களின் மிக உடனடியான பிரயோசனமுள்ள பலன்களைப் பற்றிமட்டுமே கவலைப்பட முடிகிறவர்களாக உள்ளனர். உண்மையில்இந்தப் பிரயோசனமுள்ள பலன் என்பதும் கூட-உற்பத்தி செய்யப்படுகிறஅல்லது பரிவர்த்தனைக்குட்படுகிற பண்டத்தின் பிரயோ சனம் என்பதேபிரச்சனையாக இருப்பதால் – பின்னணிக்குள் வெகு தூரம் பின்வாங்கிப்போய், விற்பனையினால் கிடைக்கும் லாபம் மட்டும் ஒரே உந்தும்சக்தியாகிவிடுகிறது.

முதலாளி வர்க்கத்தின் சமூகவியலான, மூலச் சிறப்புள்ள அரசியல்பொருளாதாரம் உற்பத்தி, பரிவர்த்தனை ஆகிய துறைகளில்உண்மையாகவே குறிக்கோள்களாகக் கொள்ளப்படுகின்ற மனிதச்செயல்களின் சமூக விளைவுகளை மட்டுமே பிரதானமாக ஆராய்கிறது.சமூக அமைப்பின் தத்துவார்த்த வெளியீடாக உள்ள அத்துடன் இதுமுழு ஒத்திசைவு உள்ளதாகவே இருக்கிறது. தனிப்பட்ட முதலாளிகள்உடனடியான லாபத்திற்காக உற்பத்தியிலும் பரிவர்த்தனையிலும்ஈடுபட்டிருப்பதால் முதலில் மிக நெருங்கிய, மிக அடுத்துள்ளவிளைவுகள் மட்டுமே கணக்கிலெடுக்கப்பட வேண்டும். ஒரு தனிப்பட்டஉற்பத்தியாளன் அல்லது வியாபாரி உற்பத்தி செய்த அல்லது விலைக்குவாங்கப்பட்டசரக்கை வழக்கமான பேராசைப்பட்ட லாபத்துடன் விற்கும் வரை அவன் அத்துடன் திருப்தியடைகிறான்; அதன் பிறகு அந்தச்சரக்கிற்கோ அல்லது அதை வாங்குபவர்களுக்கோ என்ன நேர்கிறதுஎன்பதைப் பற்றி அவன் கவலை கொள்பவனாக இல்லை. அதேசெயல்களின் இயற்கை விளைபயன்களுக்கும் இதுவே பொருத்தமாகஉள்ளது. கியூபாவில் மலைச் சரிவுகளில் இருந்த காடுகளைத் தீயிட்டுக்கொளுத்தி மிகவும் உயர்ந்த லாபகரமான காப்பிச் செடிகளின் ஒருதலைமுறைக்குப் போதுமான உரத்தை அந்தச் சாம்பலிலிருந்து பெறஸ்பானிய காப்பித் தோட்ட முதலாளிகள் என்ன கவலைப்பட்டார்கள்-வெப்பப் பிரதேசத்துக் கன மழை பின்னால் பாதுகாப்பற்ற மேல்படிவமண் முழுவதையும் அடித்துக் கொண்டு போய் பாறைகளை மட்டும்மொட்டையாக விட்டுச் சென்றது என்பதைப் பற்றித்தான் அவர்கள்என்ன கவலைப்பட்டார்கள்! சமூகத்தைப் போலவே இயற்கைசம்பந்தமாகவும் கூட இக்காலத்திய உற்பத்தி முறை உடனடியான, மிகஉருப்படியான விளைவுகளைப் பற்றி மட்டுமே பிரதானமாக அக்கறைகொண்டுள்ளது; பிறகு இந்த நோக்கத்தின் பால் திசைமுகம் திரும்பியுள்ளசெயல்களின் எதிர்கால விளைவுகள் மிக வேறுபட்டவையாக, இயல்பில்பெரும்பாலும் நேர் முரணானவையாக மாறிவிடுகின்றன என்றும்தொழில்துறையின் பத்தாண்டு கால சக்கரவட்டச் செல்வழி காட்டியதுபோல அளிப்புக்கும் தேவைக்கும் இருந்த நல்லிணக்கம் நேர் எதிரானதாக-“வீழ்ச்சியில்” *ஜெர்மனியும் கூட சிறிது பூர்வாங்க அனுபவத்தை அதைக்குறித்து பெற்றது-மாறி விடுகிறது என்றும் தன் சொந்த உழைப்பைஅடிப்படையாகக் கொண்டுள்ள தனி உடைமை அத்தியாவசியமாகவேஉழைப்பாளிகளின் உடைமை கவரப்பட்டு வெளியேற்றப்படுவதாகவளர்ந்து உழைப்பாளிகளல்லாதவர் கைகளில் மேன்மேலும் செல்வம்குவிக்கப்படுகிறது என்றும் மேலும் ஆச்சரியம் வெளியிடப்படுகிறது….**

1876 இல் பி. எங்கெல்சினால்எழுதப்பட்டது…

  • இக்கட்டுரை முதலில் “அடிமைப்படுத்தலின் மூன்று முக்கியமான வடிவங்கள்” என்னும் விரிவான நூலுக்கு ஒரு முன்னுரையாகத் திட்டமிடப்பட்டது. ஆனால் அது நிறைவேற்றப்படவில்லை; ஆகையால் முடிவில் எங்கெல்ஸ், அவர் எழுதிய முன்னுரைக்கு “மனிதக் குரங்கு மனிதனாக மாறிய இடைநிலைப் படியில் உழைப்பின் பாத்திரம்” என்னும் தலைப்பைக் கொடுத்தார். மனித உடலமைப்பின் உருவாக்கத்தில் உழைப்பு மற்றும் கருவிகளின் உற்பத்தி வகித்த ஜீவாதாரமான பாத்திரத்தை எங்கெல்ஸ் ஆராய்கிறார்; நீண்ட வரலாற்றுப் போக்கின் விளைவாகக் குரங்கு குண ரீதியில் புதிய
    பிறவியாக, மணிதனாக எப்படி மாறியது என்பதை அவர் எடுத்துக்காட்டுகிறார். இக்கட்டுரை அநேகமாக 1876 ஜூனில் எழுதப் பட்டிருக்க வேண்டும்.
  • இங்கு கையெழுத்துப் பிரதி துண்டாக நின்றுவிடுகிறது.-ப.ர்,

சாதி, வர்க்கம், இயக்கங்கள்

என். குணசேகரன்

ஆனந்த் டெல்டும்டெவின் “சாதிக் குடியரசு” நூல், இந்திய மக்கள் எதிர்கொள்ளும் சமூக சிக்கல்கள் பற்றி ஆழமான பல கருத்துக்கள், ஏராளமான விவரங்கள் கொண்ட 400-பக்க நூலாக அமைந்துள்ளது. டெல்டும்டெவின் சிந்தனைகள் அனைத்தும் கவனத்தில் கொள்ள வேண்டியவை; விவாதத்திற்கும், விமர்சனத்திற்கும் உட்படுத்த வேண்டியவை. எனினும், முக்கிய கருத்துக்கள் சிலவற்றை மட்டும் இக்கட்டுரை விவாதிக்கிறது.

“சாதி, வர்க்க இயக்கவியல்: உள்ளேயும், வெளியேயும்” என்ற தலைப்பு டாக்டர் அம்பேத்கரின் ஒரு முக்கிய மேற்கோளுடன் துவங்குகிறது. “சாதி என்பது மூடப்பட்ட வர்க்கம்” என்று 1916-ம் ஆண்டு “இந்தியாவில் சாதிகள்” என்கிற நூலில் டாக்டர் அம்பேத்கர் குறிப்பிடுகிறார். அதாவது, வர்க்கத்தின் வடிவமாக சாதி உள்ளது என்று அவர் கருதினார்.

இன்றைய நவீன கிராம சமுதாயத்தை எடுத்துக்கொண்டால் நிலவுடைமையாளர்கள், முதலாளிகள் என்ற அதிகாரம் படைத்த வர்க்கப் பிரிவினர் ஒருபுறம்; அவர்களிடம் பல்வேறு வகைகளில் பணியாற்றும் நிலமற்ற விவசாயிகள், முறைசாராத் தொழிலாளர்கள் போன்றோர் மறுபுறம் என வர்க்க அடிப்படையில் வேறுபாடுகள் உள்ளன. ஆனால் இதை விட வெளிப்படையாக தெரிவது அந்த கிராம சமூகத்தில் நிலவும் சாதி வேறுபாடுகள் தான். எனவேதான் வர்க்கம், சமூகத்தின் உள்ளடக்கமாகவும் சாதி அதன் வெளிப்புற வடிவமாகவும் விளங்குகிறது.

சாதி, வர்க்க ஒடுக்குமுறை எதிர்ப்பு இரண்டும் இணைந்த போராட்டத்தில்தான் பொருளாதார சுரண்டலுக்கும் ஒடுக்கு முறைக்கும் ஆளான உழைக்கும் மக்கள் அனைவரையும் ஒன்று திரட்ட முடியும்.

இந்த ஒற்றுமை அம்பேத்கர் கனவு கண்ட சமத்துவ சமூகத்தை உருவாக்கிடும். அம்பேத்கரின் வர்க்கம், சாதி பற்றிய வரையறை இதனையே உணர்த்துகிறது.

சாதி, வர்க்கம் என்ற இரண்டும் வேறுபட்டவையாக இருந்தாலும், இரண்டுக்கும் ஒற்றுமை அம்சங்களும் உண்டு என்கிறார் டெல்டும்டெ. இரண்டுக்கும் உள்ள பிணைப்பை சரியாக புரிந்து கொண்டு இயங்கும்போது, சமூக விடுதலைக்கான ஒன்றுபட்ட போராட்டத்தைக் கட்டவிழ்ப்பதற்கான வலிமை ஏற்படுவதாக அவர் கருதுகிறார்.

கம்யூனிஸ்ட் இயக்கங்கள் நீண்ட காலமாகவே ஒடுக்கப்பட்ட மக்களை சமூக, பொருளாதார அடிப்படையில் அணிதிரட்டி வந்துள்ளனர். இந்த செயல்பாட்டுக்கான வழிகாட்டுதலை மார்க்சியமே வழங்குகிறது. இதனால்தான் அம்பேத்கரும் மார்க்சியப் பார்வையில் முக்கியமான கருத்தாக்கமான “வர்க்கம்” என்கிற கருத்தாக்கத்தை சாதி பற்றிய ஆய்வுக்கு பயன்படுத்துகிறார்.

அம்பேத்கரும் மார்க்சியமும்

மார்க்சியத்தின் மீது ஈர்ப்பு கொண்டவராக அம்பேத்கர் இருந்தார் என்பதனை டெல்டும்டெ விவரிக்கின்றார். மார்க்சியம் “….மனித உறவுகளில் உள்ள சுரண்டல் தன்மையை முன்னிலைப்படுத்தி, அதனை மாற்றுவதற்கு வழிகாட்டும் சித்தாந்தம்” என்று அம்பேத்கர் கருதியதாக டெல்டும்டெ கூறுகிறார். (பக்கம்-127)

மார்க்சின் “மூலதனம்” மராத்தியில் வெளிவந்தபோது, “கூலி, விலை, லாபம்” என்ற மார்க்சின் நூலை அவரது “ஜனதா” பத்திரிகையில் அம்பேத்கர் தொடராக பிரசுரித்துள்ளார். 1956-ம் ஆண்டில் காத்மாண்டுவில் நடந்த ஒரு கருத்தரங்கில் “புத்தரும், மார்க்ஸும்” என்ற தலைப்பில் ஆராய்ச்சிக் கட்டுரை சமர்ப்பித்து உரையாற்றியுள்ளார். அதில் புத்தர், மார்க்ஸ் இருவரின் உலகப்பார்வையும் இலட்சியங்களும் ஒன்றே என்று பேசியுள்ளார்.

1936 ஆகஸ்ட் 15 அன்று அனைத்து உழைக்கும் மக்களையும் திரட்ட அவர் சுதந்திர தொழிலாளர் கட்சி அமைத்தார். இது, அவரிடம் வர்க்க சிந்தனை இருந்ததை எடுத்துக்காட்டுவதாக டெல்டும்டெ கருதுகிறார்.

இந்த உண்மைகளை ஆனந்த் டெல்டும்டெ எடுத்துக் கூறுவதன் நோக்கம் என்ன? மார்க்ஸ் சிந்தனையும் அம்பேத்கர் சிந்தனையும் எதிரும் புதிருமானது அல்ல என்றும், மார்க்சிய இயக்கங்களும் தலித் இயக்கங்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்துகிறார்.

மார்க்சியம் மீது சில விமர்சனங்களும் அம்பேத்கருக்கு உண்டு என்று டெல்டும்டே குறிப்பிடுகிறார். வன்முறையையும், சர்வாதிகாரத்தையும் அது வலியுறுத்துவதாக அம்பேத்கர் கருதினார் என்று டெல்டும்டெ தெரிவிக்கின்றார்.

ஆனால், வன்முறை, சர்வாதிகாரம் இரண்டுமே ஆளும் முதலாளித்துவ வர்க்கங்களும், அவற்றின் கருவியாக செயல்பட்டு வரும் அரசும் மக்களை அடக்கி ஒடுக்கிட, மேற்கொள்ளுகிற வழிமுறைகள். இதனை மார்க்சியம் ஆழமாக விளக்குகிறது. இன்றளவும் இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலும் இதனை நாம் காண்கின்றோம். புரட்சிகர மாற்றம் ஏற்பட்டு, பாட்டாளி வர்க்க அரசு அமைகிற போது, பெரும்பான்மை மக்கள் அதிகாரத்தில் இருப்பதை முதலாளித்துவம் சகித்துக் கொள்வதில்லை. பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தில் இருப்பதை பொறுக்க முடியாத முதலாளித்துவம், மீண்டும் எதிர்ப்புரட்சி வேலைகளை செய்து உழைக்கும் மக்களின் அரசினை வீழ்த்த வன்மத்துடன் முயற்சிக்கும்.

அதனை எதிர்கொள்ள வேண்டுமானால், பாட்டாளி வர்க்க அரசு அனைத்து அதிகாரங்களையும் கொண்ட பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசாக இருக்க வேண்டும் என்று மார்க்சியம் வழிகாட்டுகிறது.  அந்த அரசு உண்மையில் பெரும்பான்மை உழைக்கும் மக்களின் அரசாக இருக்கும் என்பதனை மார்க்சியம் விளக்குகிறது. அந்த அரசும், அது நிர்வகிக்கும் சமூகமும், நடைமுறையில் உண்மையான மக்கள் ஜனநாயகமாகவே இருக்கும்.

மார்க்சியத்தை வன்முறை தத்துவம் என்றும், சர்வாதிகாரத் தத்துவம் என்றும் மனிதநேய சிந்தனையாளர்கள் பலரும் கூட தவறான புரிதலுக்கு ஆட்பட்டுள்ளனர். அவர்கள் மார்க்சியத்தை அதன் முழுப்பரிமாணங்களுடன் புரிந்து கொள்வதற்கு ஏற்ற வகையில் மார்க்சியம் பற்றிய முழுமையான தரவுகள், மதிப்பீடுகள் கொண்ட கருத்தியல் பிரச்சாரம் அதிகமாக தேவைப்படுகிறது.

சுயநல அரசியலும்,சாதி ஒழிப்பும்

1936-ல் தொழிலாளர் கட்சியை அமைத்த அம்பேத்கர், அந்த வர்க்கத் திரட்டல் பணியை முதன்மைப் பணியாகத் தொடரவில்லை. 1942ல் அனைத்திந்திய தாழ்த்தப்பட்டோர் கூட்டமைப்பினை உருவாக்கினார். இது, வர்க்கம் என்கிற முனையிலிருந்து சாதி என்கிற முனைக்கு அவர் சென்றுவிட்டதை குறிப்பதாக டெல்டும்டெ எழுதுகிறார்.

அம்பேத்கர், காங்கிரஸ் ஆட்சியில் சட்ட அமைச்சராக பொறுப்பேற்றதும், பிறகு காங்கிரஸ் தலைமையால் துரோகத்திற்கு ஆளானதும் வரலாறு. இவற்றை விளக்கும் டெல்டும்டெ பாஜக, காங்கிரஸ் இரண்டுமே தலித் மக்களுக்கு துரோகம் இழைக்கும் கட்சிகளென ஆதாரங்களுடன் எடுத்துரைக்கிறார்.

ஆனால் அந்தக் கட்சிகளோடு, அம்பேத்கர் பெயரை உச்சரித்துக் கொண்டு அரசியல் செல்வாக்கை தேடிக் கொண்ட பலர், சுயநல அரசியலை நடத்தி வருகிற நிலையையும் டெல்டும்டெ அம்பலப்படுத்துகிறார்.

இதற்கு தலித்துகளான ‘ராம்கள்’ சிலரை எடுத்துக்காட்டாக முன்வைத்து பேசுகிறார். ராம்தாஸ் அத்வாலே செல்வாக்கு பெற்ற பெரும் கோடீஸ்வரராக ஆன வரலாற்றை குறிப்பிடுகிறார். முதலில் தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கூட்டணி அரசில் அமைச்சராகவும், பிறகு பாஜக அரசில் அமைச்சராகவும் அவர் இருந்தார். அதேபோன்று ராம் விலாஸ் பஸ்வான், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசிலும் பாஜக தலைமையிலான கூட்டணி அரசிலும் தொடர்ச்சியாக ஐந்து முறை மத்திய அமைச்சராக பதவியில் இருந்து வருகிறார். இவர்களை விட பலமடங்கு சுயநல அரசியலும், ஊழல் சாம்ராஜ்யத்தை நடத்தி வருகிற பலர், பல முதலாளித்துவ கட்சிகளில் இருந்து வருகின்றனர் என்பது உண்மையே. ஆனால் சாதி ஒழிப்பு லட்சியத்திற்காக வாழ்க்கையைத் துவங்குகிற பலர் தடம் மாறி போகிறபோது, அந்த லட்சியத்திற்கு பாதிப்பு ஏற்படுகிறது.

தற்போதைய நிலையில் அம்பேத்கரைப் பின்பற்றுவோரும் கூட அம்பேத்கரின் பார்வையை நடைமுறையில் பின்பற்றுவதில்லை. சாதி ஒழிப்பு இலட்சியம் சாத்தியமில்லை என்று அவர்கள் கருதுகின்றனர். அம்பேத்கர் பெயரை உச்சரிக்கும் வேறு சிலர் இந்துத்துவா மற்றும் நவீன தாராளமய விஷ கருத்தியலுக்கு ஆளாகி உள்ளனர். எனவே சாதி ஒழிப்பு நிகழ்வு மெதுவாகவே நடக்கும் என்று விளக்கும் டெல்டும்டெ, அந்த குறிக்கோள் வர்க்க ஒற்றுமை போராட்டங்களின் வழியாகத்தான் சாத்தியமாகும் என்கிறார். (பக்கம் 179). இந்த கருத்திற்கும், கம்யூனிஸ்டுகளின் பார்வைக்கும் பெரிய வேறுபாடு இல்லை.

சங்கப் பரிவாரம் விடுக்கும் சவால் உள்ளிட்ட அனைத்தையும் எதிர்கொள்ள, “சாதி உணர்வு வேரறுக்கப்பட வேண்டும்” என்கிறார் டெல்டும்டெ. இதற்கு “சாதி அடுக்கில் நிறுத்தப்பட்டிருக்கும் சாதிகளின் அடையாள உணர்வுகள் அழிக்கப்பட வேண்டும்” என்கிறார். அதாவது, “சாதி ஓழிக்கப்படுதலே சரியான தீர்வாக அமையும்” என்கிறார். இது கரடு முரடான, நீண்ட கால பாதையாக இருக்கலாம். இதற்கு சரியான அணுகுமுறை தேவை. சாதி ஒழிப்பை சாதிக்க, தலித் மக்கள் வர்க்க நிலைமைகள், வர்க்க கருத்து நிலைகளில் நின்று சமூகத்தை அணுக வேண்டும்; தலித்துக்களைப் போன்றே கிராமப்புற அதிகார வர்க்கங்களிடம் அடிமைப்பட்டுக் கிடக்கும் தலித் அல்லாதவர்களோடு நெருக்கம் ஏற்பட இந்த அணுகுமுறையே சிறந்த வழி என்கிறார் டெல்டும்டெ. இது சாதி ஒழிப்பில் முன்னேறிட உதவிடும்.

சங்பரிவாரங்களின் திட்டம்

தலித் மக்களை தங்கள் பிடியில் வென்றெடுப்பது என்பது சங்பரிவாரத்தின் ஒரு நயவஞ்சகமான திட்டம்.

இந்துக்களுக்கு எதிராக இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், கம்யூனிஸ்டுகளை முன்னிறுத்தி, சமூகத்தில் பிளவை ஏற்படுத்துவது இந்துத்துவாவின் குறிக்கோள். இதனை அடைவதற்கான அவர்களது திட்டத்திற்கு, தலித்துகள் தடையாக இருப்பார்கள் என்கிற அச்சம் எப்போதுமே அவர்களுக்கு உண்டு.

வேறுபட்ட நம்பிக்கைகள், கடவுளர்கள், சடங்குகள் என பல்வேறு பிரிவினரை இந்து என்கிற ஒற்றை மத அடையாளத்தின் கீழ் கொண்டுவர இந்துத்துவா முயற்சிக்கிறது. இதற்காக பல பிரிவினரின் பன்முகத் தன்மைகளை அழிக்கும் பண்பாட்டு அழிப்பினை அவர்கள் செய்து வருகின்றனர். தலித் மக்களை இந்து என்ற ஒற்றை மத அடையாளத்தின் கீழ் கொண்டுவருவது சாத்தியமில்லை. ஏனெனில், இந்து மதத்தில் நால் வருணம் என்கிற ஒடுக்குமுறை கோட்பாடு, காலம் காலமாக, அவர்கள் மீது திணிக்கப்பட்டு, தீண்டாமை உள்ளிட்ட கொடுமைகளுக்கு அவர்கள் ஆளாகி வருகின்றனர். இந்த நிலையை எதிர்கொண்டு தலித் மக்கள் மத்தியில் இந்து மத ஒற்றை அடையாளத்தை ஏற்படுத்த சங்பரிவாரம் பெரு முயற்சி செய்கிறது. அம்பேத்கரையும் காவி மயமாக்க அவர்கள் படாதபாடு படுகிறார்கள். அம்பேத்கர் இந்து மதத்தை முழுமையாக நிராகரித்தவர் என்கிற உண்மையை மறைத்து, அம்பேத்கரை சித்தாந்த ரீதியாக கடத்திட முயற்சிக்கிறார்கள். தலித் இயக்கத்தில் உள்ள நடுத்தர வர்க்கத்தினர் சிலரின் சுயநலமும், சங்பரிவாரத்தின் இந்த சதித் திட்டத்திற்கு துணையாக இருக்கிறது என்பதை டெல்டும்டெ அழுத்தமாக குறிப்பிடுகிறார்.( பக்கம் 265)

பாஜகவிற்கு தலித் மக்கள் மீது எந்தப் பாசமும் இல்லை. பாஜக ஆட்சியில் தலித் மக்கள் மீதான தாக்குதல்கள் ஒவ்வொரு நாளும் சராசரியாக 111 என்ற எண்ணிக்கையில் நடந்து வருவதை சுட்டிக் காட்டும் டெல்டும்டெ “ஆளும் வர்க்கங்களின் நலன்கள் தற்போதைய சாதிப் பிளவுகளை பாதுகாப்பதில்தான் உள்ளது. இந்த ஆளும் வர்க்கங்களின் தேவைகளுக்கு ஏற்ப அரசும் செயல்படுகிறது” என்கிறார். எனவே, பாஜக தலைமை தாங்கும் அரசினை எதிர்த்தால் மட்டும் போதாது. எதிர்காலப் பார்வை முன்வைக்கப்பட வேண்டும். முதலாளித்துவ அரசினை அகற்றி, உழைக்கும் வர்க்கங்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுகிற மாற்று நிகழ்ச்சி நிரல் அவசியம்.

சாதி ஒழிப்பில் நிலப் பிரச்சனை

தலித் விடுதலை பற்றி பேசுகிறவர்கள் நிலப் பிரச்சனை பற்றி அதிகம் பேசுவதில்லை. டெல்டும்டெ தலித் விடுதலைக்கு நிலவுடைமை உறவுகளில் மாற்றத்தை ஏற்படுத்துவது மிக முக்கியமானது என்று எழுதுகிறார். “மக்கள் தொகை அடிப்படையில் பார்த்தால், 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட தலித் மக்கள் பெரும்பாலும் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். வேகமாக நிகழும் நகரமயத்தில், தலித் அல்லாதவர்கள் நகர்ப்புறங்களுக்கு குடியேறுகிற அளவில் பாதி அளவிற்கு மட்டுமே நகரங்களுக்கு செல்லும் தலித் மக்களின் எண்ணிக்கை உள்ளது. இந்நிலையில் தலித் விடுதலை குறிக்கோளினை அடைந்திட, நிலம் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது.” (பக்கம் 211). இதனையொட்டி அம்பேத்கர் 1929-ம் ஆண்டில் மகாராஷ்டிரா கொங்கண் பகுதியில்ந டத்திய நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் போராட்டத்தை டெல்டும்டெ குறிப்பிடுகிறார்.

கம்யூனிஸ்டுகள் நீண்டகாலமாக நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தி வந்துள்ளனர். டெல்டும்டெ இந்த பங்களிப்பை விரிவாக எழுதவில்லை என்றாலும், நிலத்துக்கான போராட்டம் கம்யூனிச இயக்கத்தின் பிரிக்க முடியாத நிகழ்ச்சி நிரலாக இருந்து வந்துள்ளது. அந்த வகையில் தலித் விடுதலைக்கு கம்யூனிஸ்டுகள் ஆற்றிய பங்கு மிக முக்கியமானது. எதிர்வரும் காலங்களிலும் புதிய சூழலுக்கு ஏற்றவகையில் நிலப் போராட்டம் முன்னெடுத்துச் செல்ல வேண்டியது அவசியமானது. இது விவசாயப் பகுதியினரை திரட்டி நகர்ப்புற உழைக்கும் வர்க்கங்களோடு ஒற்றுமை காண வழிவகுக்கும். இந்த வர்க்க ஒற்றுமையைக் கட்டுவது, சாதி ஒழிப்பில் முக்கிய கடமையாக அமைந்துள்ளது.

கம்யூனிஸ்டுகள் மீது விமர்சனம்

எவ்வித அடிப்படையும் இல்லாமல் கம்யூனிஸ்டுகள் மீது ஏற்கெனவே உலா வந்து கொண்டிருக்கின்ற பல அடிப்படியில்லாத கருத்துக்களையும் ஆங்காங்கே டெல்டும்டெ பதிவு செய்துள்ளார். “வறட்டு தத்துவவாதிகள்” என்று கம்யூனிஸ்ட்களை தூற்றுகிறார். சாதி – வர்க்க உறவுகள் பற்றிய “தத்துவார்த்த பற்றாக்குறை” இடதுசாரி இயக்கங்களிடம் இருப்பதாக அவர் குறிப்பிடுகிறார். அவரது அறிவியல் சார்ந்த சிந்தனைக்கு பொருத்தமற்ற வகையில் இக்கருத்துக்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. தலித் இயக்கங்கள் ‘சாதி மட்டும் பார்க்கிறார்கள்; கம்யூனிஸ்டுகள், வர்க்கம் மட்டும் பார்க்கிறார்கள்’ என்று சூத்திரம் போன்று டெல்டும்டெ எழுதுகிறார். ‘இதனால் இரண்டு இயக்கங்களும் மக்களிடமிருந்து தனிமைப்பட்டு வருகின்றன’ என்கிறார். தலித் இயக்கங்களின் கருத்து நிலைகள், செயல்பாடுகள், நோக்கங்கள் பலவற்றை அவரே விமர்சித்திருக்கிறார்.

ஆனால், மார்க்சிய இயக்கம் வர்க்கம் மட்டும் பார்ப்பது உண்மையல்ல என்பது மட்டுமல்ல; உண்மையான மார்க்சிய செயல்பாடு சாதியை தவிர்த்து வர்க்கம் மட்டும் பார்ப்பதாக இருக்க இயலாது. ஒரு கிராமத்தில் நிலப்பிரச்னைக்கு விவசாயிகளை திரட்டும் பணியில் ஈடுபட்டு, வர்க்க ஒற்றுமைக்கு முயல்கின்ற ஒரு கம்யூனிஸ்ட், சாதி சவாலை எதிர்கொள்ளாமல் வர்க்க ஒற்றுமையை உருவாக்க இயலாது. உள்ளூர் மக்களிடம் ஒடுக்குமுறை உறவுகளுக்கு எதிராகவும், சாதிய மனப்பான்மையை கைவிடவும் கருத்துப் பிரச்சாரத்தை மேற்கொள்ளாமல் உண்மையான வர்க்க ஒற்றுமை உள்ளூரில் சாத்தியமாகாது. இதை நடைமுறைப்படுத்துகிறபோது சில தவறுகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளளன. வாழ்வாதார, பொருளியல் பிரச்சினைகளில் அதிக கவனம் செலுத்துகிற நிலையில், சமூகரீதியில் உள்ள ஒடுக்குமுறை பிரச்சனைகள் மீது உரிய கவனம் செலுத்தாத போக்கு ஏற்படுகிறது. இது உண்மையான, மார்க்சிய தத்துவ நடைமுறை அல்ல. மார்க்சிய அடிப்படையில் சமூக கட்டமைப்பை பார்ப்பதில் உள்ள சரியான மார்க்சிய புரிதலை ஏற்படுத்தி, இதனை அவ்வப்போது சரி செய்திட வேண்டும். பல தலித் இயக்கங்களோடு இணைந்து கம்யூனிஸ்டுகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த பல ஆண்டுகளாக பல மாநிலங்களில், குறிப்பாக, தமிழ்நாடு, ஆந்திரா மாநிலங்களில் கூட்டாக தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைத்து செயல்பட்டு வருகின்றனர். தலித் மக்களுக்கான உரிமைகளை நிலைநாட்டி உள்ளனர்.

இவ்வாறு தீவிரமான செயல்பாடுகள் மேற்கொண்ட போதிலும், பல அறிவுஜீவிகள் கம்யூனிஸ்டுகளுக்கு ‘வர்க்கம் மட்டுமே தெரியும்; சாதி பற்றி அவர்களுக்கு தெரியாது’ என்ற அவதூறுப் பிரச்சாரத்தை நிறுத்தவில்லை. கம்யூனிஸ்டுகள் ஒடுக்கப்பட்ட மக்களிடையே வேரூன்றுவதை அவர்கள் விரும்பவில்லை; அது மட்டுமல்ல; தலித் மக்கள் பரந்த அளவில் சுரண்டப்படும் வர்க்கங்களோடு இணைந்து போராடுவதையும் அவர்கள் விரும்பவில்லை; வர்க்க ஒற்றுமை உருவாகி, சுரண்டலுக்கே முற்றுப்புள்ளி வைக்கும் சோஷலிச பாதையில் தலித்துக்கள் செல்வதை தடுக்கும் உள்நோக்கமும் அவர்களில் பலருக்கு உண்டு.

சாதியைப் பற்றி சரியாகப் புரிந்து கொள்வதற்கு மார்க்சிய அணுகுமுறை உதவுகிறது. பொருளியல் தளத்தில் எவ்வாறு உழைப்புச் சுரண்டல் நடக்கிறது என்பதனையும், சாதி அடுக்கில் அடித்தட்டில் இருக்கிற தலித், பிற்பட்ட உழைக்கும் மக்கள் எவ்வாறு கடும் உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ளவும், மாற்றத்துக்கான சரியான செயல்பாட்டிற்கும் மார்க்சியமே வழிகாட்டுகிறது. அதேபோன்று, மக்களின் சுரண்டல் வாழ்க்கை நிலைமைகளை மறைப்பதற்கும், மறப்பதற்கும், சாதி, மதம் இரண்டுமே பயன்படுத்தப்படுகின்றன. உழைக்கும் மக்களை ஆதிக்க வர்க்கங்களின் சுரண்டலுக்கு உட்படுத்தி, கேள்வி கேட்காமல் அடிமை வாழ்க்கையில் உழல்வதற்கான சிந்தனைகளை சாதி, மத சிந்தனைகள் ஏற்படுத்துகின்றன. ஆளும் வர்க்கத்தின் கருவிகளாக இவை செயல்படுவதை மார்க்சிய ஆய்வுமுறை மூலமாகத்தான் துல்லியமாக புரிந்து கொள்ள முடியும்.

தீண்டாமை ஒழிப்பு, சாதி ஒழிப்பு என்று அவ்வப்போது சில நடவடிக்கைகளை எடுத்தால் மட்டும் சாதி ஒடுக்குமுறை சார்ந்த சமூக அடுக்கினை அகற்றிட முடியாது. வர்க்க நிலைமைகளையும் சாதிய ஒடுக்குமுறை உறவுகளையும் சரியாக கணித்து சரியான செயல்பாட்டு வியூகங்களை அமைத்து செயல்படுவதன் வழியாகத்தான் சாதி ஒழிப்பிலும் முன்னேற முடியும். வர்க்க விடுதலை சாதிக்க முடியும். இதுவே கம்யூனிஸ்டுகளின் கடந்தகால அனுபவமாகவும் இருந்துள்ளது. கேரள சமூகமும், தமிழகத்தில் கம்யூனிஸ்டுகள் ஓரளவு வலுவாக ஆதரவு தளம் பதித்த கீழத்தஞ்சை பகுதியிலும் இந்த வரலாற்று அனுபவங்கள் ஏராளமாக உள்ளன. இந்த வரலாற்றை டெல்டும்டெ அங்கீகரித்ததாக தெரியவில்லை. வர்க்க ஒற்றுமையை கட்ட வேண்டும் என்று வலியுறுத்தும் டெல்டும்டேவின் பார்வையை நடைமுறைப்படுத்தவும் கூட கம்யூனிஸ்டு இயக்கங்களின் சாதி ஒடுக்குமுறை எதிர்ப்பு வரலாற்றையும் அவற்றின் அனுபவங்களையும் கற்பது அவசியமாகிறது.

தலித் எழுச்சி

1990களில் அதிக அளவில் தலித் இயக்கங்கள் உருவான சூழலில், மார்க்சிஸ்ட் கட்சி தலித் இயக்கங்களின் புத்தெழுச்சியை வரவேற்றது. அதனை ஒடுக்குமுறைக்கு எதிரான எழுச்சியாகவே மார்க்சிஸ்ட் கட்சி கணித்தது. அந்த எழுச்சியை வரவேற்பது மட்டுமல்லாமல், அவர்களோடு இணைந்து, களத்தில் ஏராளமான கூட்டு இயக்கங்களை மார்க்சிஸ்ட் கட்சி முன்னெடுத்து வருகிறது

‘சாதிகள் ஒருவகையில் வர்க்கத்தின் ஒரு வடிவமாகவே இந்தியாவில் உள்ளன; வர்க்கங்கள் சாதிகளுக்குள் உட்புகுந்து இருப்பதை காணமுடியும்’ என்பது அம்பேத்கரின் கருத்து. அதே கோணத்தில் டெல்டும்டெ சாதிக்கும் வர்க்கத்திற்கும் உள்ள உறவினை விளக்குகிறார். வர்க்கம் என்றால் மார்க்ஸையும், சாதி என்றால் அம்பேத்கரையும் பிரித்துக் காண்பது சில அறிவு ஜீவிகள் மேற்கொள்ளும் வீணான வேலை என்று டெல்டும்டெ கருதுகிறார்.

சாதி, வர்க்கம் இரண்டையும் பிரித்துப் பார்க்கிற தவறினை உண்மையான மார்க்சியம் செய்வதில்லை. ஆனால் ‘இந்த இரண்டையும் பிரித்துப் பார்க்கிற தவறுகளை தலித் இயக்கங்களும், மார்க்சிய இயக்கங்களும் செய்ததால், இரண்டுமே பின்னடைவுக்கு சென்றுவிட்டது ‘என்று டெல்டும்டெ கருதுகிறார். வழக்கமாக பலர் மார்க்சியத்தை தூற்றுகிற அதே பாணியில் இக்கருத்தினை டெல்டும்டெ வெளிப்படுத்துகிறார்.

மார்க்சியம் ஒரு சமூகத்தை துல்லியமாக ஆய்வு செய்திட வழிகாட்டுகிறது. அந்த சமூகத்தில் வாழும் மக்கள் தங்களது வாழ்க்கையின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள உற்பத்தியில் ஈடுபட வேண்டிய கட்டாயம் உள்ளது. அந்த வகையில் பொருளாதாரம் அடிப்படையாக அமைந்துள்ளது. அந்த பொருளாதார இயக்கத்தில் நிலம் உள்ளிட்ட உற்பத்தி சாதனங்களின் உடைமையாளர்கள், அதில் உடைமை ஏதும் இல்லாமல் உழைப்பு மட்டும் செலுத்துவோர் என்று பிரிவுகள் ஏற்படுகின்றன. இந்த உற்பத்தி சார்ந்த உறவுகளின் அடிப்படையில் தான் வர்க்கங்கள் உருவாகின்றன. சொத்துடைமை வர்க்கங்கள், உழைப்பு சக்தியை மட்டுமே நம்பி இருக்கிற உடைமையற்ற வர்க்கங்கள் என்ற இரண்டு முக்கிய பிரிவுகள் சமூகத்தில் ஏற்படுகிறது. இரண்டு வர்க்கங்களும் வெவ்வேறான நலன்களை கொண்டதாக உள்ளன.

இந்த இரண்டு வர்க்கப் பிரிவினர் சாதிகளாகவும் பிரிந்துள்ளனர். உழைக்கும் வர்க்கங்களாக இருந்தாலும், சாதி என்கிற சமூக அடுக்கு, கருத்து ரீதியாக அவர்களை ஒன்று சேர விடாமல் தடுக்கிறது. உழைக்கும் வர்க்கங்கள் சாதிகளாக பிரிந்திருப்பதும் தலித் மக்களை, தலித் அல்லாத சாதியினர் பகைமையோடு அணுகுவதும் சாதிச் சிந்தனையின் விளைவு. இது, சுரண்டப்படுகின்ற மக்களிடம் வர்க்க ஒற்றுமை ஏற்படுவதை தடுக்கிறது. இதனால் ஆளும் வர்க்கங்கள் பலனடைகின்றன. சாதி பற்றி மார்க்சிய வழியில் ஆராய்வதே சரியான பாதைக்கு வழிவகுக்கும். இன்றைய முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ சமூக உறவுகளில் உள்ள அநீதியான ஒடுக்குமுறை நிலைமைகளை மாற்றியமைத்து சமத்துவத்தை அடைய மார்க்சியம் வழிகாட்டுகிறது.

ஆக, டெல்டும்டெவின் கருத்துக்களும், கள அனுபவங்களும் கீழ்க்கண்ட முடிவுகளுக்கு இட்டுச் செல்கின்றன.

முதலாளித்துவத்தை தூக்கி எறியும் நிகழ்ச்சி நிரல் இல்லாமல்,சாதி ஒழிப்புக் குறிக்கோள் நிறைவேறாது. ஆனால் இவை இரண்டுமே தானாக அழிந்து போகாது. முதலாளித்துவத்தையும், சாதி கருத்து நிலைகளையும் அழிப்பதற்கான களப்போராட்டங்கள், கருத்தியல் முயற்சிகள் இடைவிடாது நடந்தால்தான் இரண்டையும், மரணப்படுக்கையில் தள்ளிட முடியும். இதனை அனைத்துப் பகுதியினரையும் உள்ளடக்கிய பாட்டாளிவர்க்கத்தின் உறுதியான, ஒன்றுபட்ட நடவடிக்கைகளே சாதிக்கும்.

புரட்சிகர கட்சி அமைப்புக்கான போராட்டம் …

ஜி. செல்வா

“அது கடினமானதல்ல, சட்டென புரிந்து கொள்ளக்கூடிய எளிமை உள்ளது அது. நீ சுரண்டல்வாதியல்லன். எனவே உன்னால் அதை  எளிதில் புரிந்துகொள்ள முடியும். அது உன் நன்மைக்கு வழி. எனவே அதைப் பற்றி நீ தெரிந்து கொள்.

அதனை மடமை என்போர் மடையர்கள். அது மோசம் என்போர் மோசடிக்காரர். மோசடிகளுக்கு எதிரானது அது. சுரண்டல்வாதிகள் அதனை ‘கிரிமினல்’ ஆனது என்பர். ஆனால் உண்மை விஷயம் நமக்குத் தெரியும். கிரிமினல் ஆன அனைத்திற்கும் அது முடிவு கட்டும். அது கிறுக்குத்தனமானது அல்ல. கிறுக்குத்தனங்கள் அனைத்தையும் முடிவுகட்டுவது அது.

அது குழப்பமல்ல; ஒழுங்கு. எளிமையான விஷயம்தான். எனினும் செய்யக் கடினமானது”

“கம்யூனிசத்திற்கு வாழ்த்து’ என்ற தலைப்பில் ஜெர்மன் நாடக ஆசிரியர் பெர்டோல்ட் ப்ரெக்ட் எழுதிய புகழ்பெற்ற வரிகள் இவை. இதிலுள்ள “அது குழப்பமல்ல; ஒழுங்கு’ என்ற வார்த்தைக்கான பொருள் என்ன? அந்த ‘ஒழுங்கு’ கம்யூனிச இயக்கத்திற்குள் உருப்பெற்றது எப்படி? அப்படியான ‘ஒழுங்குக்குள்’ கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்கள் உட்பட்டு இருக்க வேண்டியதன் தேவை என்ன? 

கம்யூனிசத்தை, மார்க்சியத்தை, பெயரளவில் அல்லது கொள்கைரீதியாக ஏற்றுக் கொள்பவர்கள் கூட,  கம்யூனிஸ்ட் இயக்கங்கள் வளராததற்கு கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு ரீதியான ஒழுங்குகளை விமர்சனமாக சுட்டி காட்டுகின்றனர். தொடர்ந்து விவாதத்தின் மையப்புள்ளியாய் முன்வைத்து வருகின்றனர். 

இந்தியாவில் எத்தனையோ இடர்ப்பாடுகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்கொண்டாலும் அதையெல்லாம் முறியடித்து சமாளித்து இன்று இந்தியாவில் உயிர்த்துடிப்புள்ள  இயக்கமாக செயலாற்றுவதற்கு கட்சியின் அமைப்பு ரீதியான ஒழுங்கு மிக முக்கியமானது என உறுதியாக கருதுகிறது. இதன் காரணமாகவே எப்போதெல்லாம் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு ரீதியான ஒழுங்குமுறைகள் விமர்சனத்துக்குள்ளாக்கப் படுகிறதோ அப்போதெல்லாம் கட்சி அவ்விவாதங்களுக்கு பதிலளித்தே செயலாற்றி வருகிறது.

கட்சியின் அமைப்புச் சட்ட விதிகளை ஏற்று செயலாற்றும் உறுப்பினர்களை மட்டுமே கட்சியில் வைத்திருக்கமுடியும் என உறுதியாக தீர்மானித்து அதை செயல்படுத்த முயன்று வருகிறது கட்சி. 

இதை கருத்தியல் நோக்கில் புரிந்து கொள்ள மார்க்சிய ஆசான் லெனினிடமே செல்ல வேண்டும்.

கம்யூனிச இயக்கத்திற்குள் ஸ்தாபன ஒழுங்கை கொண்டுவந்தவரிடம் கற்றுத் தெளிய,  வாசிக்க வேண்டிய புத்தகம் “ஓரடி முன்னால் ஈரடி பின்னால்”. 

சுமார் 116 ஆண்டுகளுக்கு முன்பு 1903ல் எழுதப்பட்ட புத்தகம். அதை இன்றைக்கு கம்யூனிஸ்ட் ஊழியர்கள் ஏன் வாசிக்க வேண்டும்? அதுவும் ரஷ்யாவில் அன்றிருந்த சூழலுக்கு லெனினால் எழுதப்பட்டதை இந்தியாவில் புரட்சிகர இயக்கத்திற்காக அர்ப்பணித்துள்ள ஊழியர் இப்போது ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்? இக்கேள்விக்கு விடைதேட இக்கட்டுரை முயல்கிறது.

1906 ஆண்டு லெனின் “பத்து ஆண்டுகள்” என்று ஒரு தொகுப்பு நூலை வெளியிடுகிறார். அதில் 1895 முதல்1905 வரை எழுதிய முக்கிய நூல்களை மட்டும் தொகுத்து, அதற்கு ஒரு முன்னுரையும் எழுதி உள்ளார். அதில்  ‘ஓரடி முன்னால் ஈரடி பின்னால்’ நூலினைப் பற்றி குறிப்பிடும் போது அதை எழுதியதற்கான காரணங்களை சுட்டிக் காண்பித்து 18 அத்தியாயம் கொண்ட நூலின் உள்ளடக்கத்திலிருந்து  ஏழு அத்தியாயங்களை நீக்கி அதன் சாராம்சத்தை மற்ற அத்தியாயங்களோடு இணைத்து மேம்படுத்தியதை குறிப்பிட்டுள்ளார்.

நூலினை எழுதுவதற்கு தூண்டிய நிகழ்வு போக்குகள்: 

ரஷ்ய கம்யூனிஸ்ட் இயக்கத்திற்குள் உருவாகி வளர்ந்த கருத்து மோதல்கள் முட்டி மோதி இரு குழுவாக பிரிந்து செயலாற்ற வேண்டிய நிலை 1903ல் இரண்டாவது கட்சி காங்கிரஸில் நடந்தேறியது. இம்மாநாட்டில் பெரும்பான்மையான பிரதிநிதிகள் லெனின் முன்மொழிந்த வழிகாட்டுதலை ஏற்றுக்கொண்டனர். அவர்கள் போல்ஷ்விக் என அழைக்கப்பட்டனர். போல்ஷ்விக் என்றால் ரஷ்ய மொழியில் பெரும்பான்மை என்று அர்த்தம் . லெனினது நிலைபாடுகளுக்கு மாறான  கருத்துக்களை பிளக்கனோவ், மார்த்தவ் போன்றோர்முன்மொழிந்தனர். அவர்களை பின்பற்றியவர்கள் மென்ஷ்விக்குகள் என அழைக்கப்பட்டனர். 

கட்சி காங்கிரஸ் நிறைவேற்றிய முடிவுகளின் அடிப்படையில் செயல்படாமல், அதற்கு நேர்மாறாக மென்ஷ்விக்குகள் செயல்பட ஆரம்பித்தனர்.குறிப்பாக, கட்சியின் பத்திரிக்கையான இஸ்க்ரா (தீப்பொறி) வுக்கு கட்சி காங்கிரஸில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர் குழுவுடன், தேர்ந்தெடுக்கப்படாத பழைய உறுப்பினர்களையும் இணைத்துக் கொள்ள வேண்டுமென பிளக்கனோவ் வற்புறுத்தினார். இதை லெனின் ஒப்புக்கொள்ளவில்லை. கட்சியின் மத்திய குழுவில் வலுவாக காலூன்றி நின்று கொண்டே சந்தர்ப்பவாதிகளின் மண்டையில் ஓங்கி அடிக்க வேண்டும் என கருதினார். எனவே இஸ்க்ரா பத்திரிக்கையின் ஆசிரியர் குழுவில் இருந்து லெனின் ராஜினாமா செய்தார். பிளக்கனோவ் கட்சி காங்கிரஸின் விருப்பத்தை காலில் போட்டு மிதித்து  தன்னிச்சையாக ஆசிரியர் குழுவை உருவாக்கினார். அன்று முதல்  மென்ஷ்விக்குகளின் சொந்த பத்திரிக்கையாக இஸ்க்ரா மாற்றப்பட்டது. கட்சி காங்கிரஸின் முடிவுகளுக்கு மாறாக தங்களுக்கு விருப்பமான சந்தர்ப்பவாத கருத்துகளை அப்பத்திரிக்கையில் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தனர்.  “செய்யக்கூடாது என்ன?”என்ற தலைப்பில் பிளக்கனோவ் கட்டுரை எழுதினார். இக்கட்டுரையானது லெனின் எழுதிய இன்றளவும் உலக கம்யூனிஸ்ட் இயக்க ஊழியர்களின் கையேடாக விளங்கும் “என்ன செய்ய வேண்டும்?”  நூலுக்கு மறுப்பாக எழுதப்பட்டது.  தொடர்ந்து கட்சி காங்கிரசின் முடிவுகளுக்கு எதிராக மென்ஷ்விக்குகள் எழுத ஆரம்பித்தனர்.  ‘கட்சி ஸ்தாபனத்தை ஒழுங்கற்ற முறையிலான ஒரு பொருளாக’   மார்த்தவ் கருதினர். 

இத்தகைய போக்குகளுக்கு எதிராக கட்சி காங்கிரஸ்  முடிவுகளை கட்சி அணிகளுக்கு தெளிவுபடுத்த விரும்பினார் லெனின். ஆனால் கட்சிப் பத்திரிகையோ மென்ஷ்விக்குகள் வசம் இருந்தது. எனவே தனது கருத்துக்களை ஒரு  நூலாக எழுத தொடங்கினார். அதுதான்  ‘ஓரடி முன்னால் ஈரடி பின்னால்’ . இந்நூலில் கட்சிக் காங்கிரசில் நடைபெற்ற நிகழ்வுகளை துல்லியமான ஆய்வுக்கு உட்படுத்தினார் . இத்தகு பணிக்கு லெனின் ஆதாரமாக  எடுத்துக் கொண்டது மாநாட்டு தீர்மானங்கள், பிரதிநிதிகள் பேச்சு, விவாதத்தின் போக்கில் பல்வேறு குழுக்கள் தெரிவித்த கருத்தோட்டங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய மாநாட்டு மினிட்ஸ் புத்தகங்கள்.

மினிட்ஸ் புத்தகங்களின் முக்கியத்துவம்

மாநாடுகளில் மினிட்ஸ் குழுவை தேர்ந்தெடுப்பதன் தேவையை, அதில் செயல்படுபவர்களின் பணிகளின் முக்கியத்துவத்தை, லெனினது வார்த்தைகளை வாசிக்கையில் உணரமுடியும்.

” கட்சிக் காங்கிரசின் கூட்ட நடவடிக்கை குறிப்புகள் நமது கட்சியின் உண்மையான நிலையைப் படம் பிடித்துக் காட்டுவதாக விளங்குகின்றன. இந்த வகையில் அவசியமானதாயும், துல்லியம், பூரணத்துவம், சர்வாம்சத்தன்மை, அதிகாரபூர்வ தன்மை ஆகியவற்றில் ஈடு இணையற்றது.

இயக்கத்தில் பங்கு கொண்டவர்கள் தாங்களாகவே தீட்டிய கருத்துகள், உணர்வுகள், திட்டங்கள் ஆகியவற்றின் படம் இது.அரசியல் சாயங்களின் ஒரு சித்திரம். அவற்றின் பரஸ்பர உறவுகள், போராட்டங்கள் ஆகியவற்றை காட்டும் ஒரு கருவி” என்கிறார் லெனின்.

“உட்கட்சி விவாதங்களில் விவேகமான பங்களிப்பை செலுத்த விரும்பும் ஒவ்வொரு தோழரும், கட்சி உறுப்பினரும், நமது கட்சி காங்கிரஸ் பற்றி கவனமாக படிக்க வேண்டியது அவசியம்” எனச் சொல்லும் லெனின், “கவனத்துடனும் சுயமுயற்சியால் படித்து அறிவதன் மூலம் மட்டுமே, சொற்பொழிவுகளின் சுருக்கங்கள், விவாதங்களின் சுவையற்ற பகுதிகள்  சிறு ( சிறியவையாக தோன்றும்) பிரச்சினைகள் மீது சில்லறை மோதல்கள் ஆகியவற்றை கொண்டு முழுமையானதொரு வடிவத்தை இணைத்து காணமுடியும்.” 

இப்படியாய் எழுதப்பட்ட இந்நூலை கட்சி உறுப்பினர்கள் மத்தியில் செல்லாமல் தடுப்பதற்கு சிறு குழுவினர் முயற்சி செய்தனர். இன்னும் ஒரு படி மேலே சென்று இப்புத்தகத்தை மத்திய குழு தடை செய்ய வேண்டும் என்று பிளக்கனோவ் வாதிட்டார். இத்தகைய தடைகளை தகர்த்து தான் லெனினது நூல் கட்சி உறுப்பினர்களிடம் சென்றடைந்தது.

கட்சி காங்கிரஸை எப்படி புரிந்து கொள்வது?: 

கட்சி அமைப்பு குறித்து தத்துவார்த்த ரீதியில் விரிவாக மார்க்சிய நோக்கில் எழுதப்பட்ட முதல் நூல் இது. குறிப்பாக கட்சி அமைப்பு முறை, கட்சி உறுப்பினர் என்பவர் யார்? அவரது செயல்பாடுகள், பங்களிப்புகள் எவ்வாறு இருக்க வேண்டும் ? என்பது போன்ற வரையறைகளை இந்நூல் உலக கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு வழங்கியுள்ளது.

விவாதத்திற்கு உள்ளான இரண்டாவது கட்சிக் காங்கிரசின் பிரதான பணிகளை சுட்டிக் காண்பிக்கும் லெனின் கட்சி காங்கிரஸ்-ஐ எப்படி புரிந்து கொள்ள வேண்டும் என வழிகாட்டுகிறார்.

நூலின் ஓட்டத்தில்  அவர் சுட்டிக் காட்டியுள்ள  கருத்துக்கள் இன்றைக்கும்  பொருத்தப்பாடு உடையவை. 

“கட்சிக் காங்கிரசின் எல்லா முடிவுகளும், அது நடத்தி முடிக்கும் எல்லாத் தேர்தல்களும், கட்சியின் முடிவுகளாகும். அவை கட்சி அமைப்புகள் அனைத்தையும் கட்டுப்படுத்துவதாகும். எக்காரணம் கொண்டும் அவற்றை ஏற்றுக் கொள்ள எவரும் மறுக்க கூடாது. கட்சி காங்கிரசால் மட்டுமே அவை நீக்கப்படவோ அல்லது திருத்தப்படவோ முடியும். 

மேலும் கட்சி காங்கிரஸ் முடிவுகளையும், தேர்தல்களையும் ஏற்றுக்கொள்ள  மறுப்பதை கட்சிக்கு செய்யும் நம்பிக்கை துரோகமாகக் கருத வேண்டும்”   எனக் கூறியிருக்கிறார். அம் மாநாட்டில் பங்கேற்ற பல்வேறு கருத்தோட்டம் உடைய குழுக்களின் நிலைப்பாடுகளை லெனின் ஒவ்வொன்றாய் நம்முன் வைக்கிறார். அவ்வாறு சொல்லும் பொழுது “ஓரிடத்தில் முக்கியமல்லாத சிறு பிரச்சினைகள் மீது நடந்த எண்ணற்ற வாக்களிப்புகளை நாம் விட்டுவிடுவோம். நம்முடைய காங்கிரஸின் பெரும்பகுதி நேரத்தை இதுதான் எடுத்துக் கொண்டது” என்கிறார். இது அன்று மட்டுமல்ல; இன்றும் தொடர்கிறது என்பதை நமது அனுபவம் சுட்டிக்காட்டுகிறது. அது மட்டுமல்ல; மாநாட்டு நிகழ்வுகளை பிரதிநிதிகளின் செயல்பாடுகளை லெனின் கூர்மையான விவாதங்களுக்கு மட்டும் உட்படுத்தவில்லை. நையாண்டிக்கும் நமட்டு சிரிப்புக்கும் வாசகரை உள்ளாக்கும் வகையில் தனது எழுத்தை கையாண்டுள்ளார்.

அகநிலை பார்வையற்ற ஆய்வு

லெனின் தனது நூலில் இரண்டு முக்கிய பிரச்சனைகளை மைய தளமாக கொண்டு விவாதத்தை முன்னெடுத்துச் செல்கிறார். ஒன்று அரசியல் முக்கியத்துவம் பற்றியது. அதாவது  கட்சிக் காங்கிரசில்  உருவெடுத்த பெரும்பான்மை – சிறுபான்மை  பிளவுக்கான அம்சங்கள். இதை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள கட்சிக் காங்கிரசில் நடைபெற்ற கருத்தியல் போராட்டத்தை தளமாக கொள்கிறார்.

இரண்டாவது, கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. இதற்கு  இஸ்க்ரா பத்திரிகை ஆசிரியர் குழுவில் இருந்து அவர் விடுபட்ட பிறகு  வந்திருந்த கட்டுரைகளை, எழுத்துக்களை விவாதத்திற்கு எடுத்துக் கொள்கிறார்.

கட்சிக் காங்கிரசில் பங்கேற்ற பல்வேறு கருத்தோட்டம் உடைய குழுவினரை எதிர் கொள்வதன் வழியாக “அகநிலை பார்வையற்று” செயலாற்ற  நமக்கு கற்றுக் கொடுக்கிறார் லெனின். அதுமட்டுமல்ல; மாற்றுக் கருத்துக்களை எப்படி ஜனநாயகரீதியில் எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் பக்குவமாக சுட்டி காண்பிக்கிறார். அதேவேளையில் வார்த்தை ஜாலங்களில் வித்தை காண்பிப்பவர்களை, உதட்டளவில் புரட்சிகரமாக பேசி செயலளவில் ஜம்பமாக செயல்பட்டோரை, கிழி கிழி என்று கிழித்து தொங்க விடுகிறார்.

உதாரணத்திற்கு இந்நூலில் பிளக்கனோவ், மார்த்தவ் ஆகியோர் கடும் விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட்டு  உள்ளனர். பிளக்கனோவ் லெனினுக்கு முந்தைய தலைமுறையைச் சேர்ந்தவர். மார்த்தவ் சமகாலத்தவர்.ஆனால் அவர்களது பங்களிப்புகளை மிக உயர்வாக மதிப்பிடுவது மட்டுமல்ல; அதை கட்சி அணிகளுக்கும் கடத்துகிறார். இவர்களை வர்க்க பகைவர்கள் போல் புரிந்து கொள்ளாமல் அவர்களின் கருத்தியல் குறைபாடுகளைத் தான் முதன்மையாக கொள்ளவேண்டும் என்பதற்காகவே எத்தனை அடிக்குறிப்புகள். இதுதான் கம்யூனிஸ்ட்  இயக்கத்தின் ஜனநாயக செயல்பாட்டுக்கு உதாரணம் என்பதை பெருமை பொங்க வாசிப்பின் வழி உணரமுடிகிறது.

குழுவாத போக்குக்கு “தான் எதிரி என தம்மை தாமே அழைத்துக் கொள்கிறார்” மார்த்தவ். இருப்பினும் கட்சி காங்கிரசுக்கு பிறகு அவற்றின் ஆதரவாளர் ஆனார் என கிண்டல் அடிக்கும் லெனின் அதை ஆதாரத்துடன் எடுத்து சொல்கிறார்.

கட்சி காங்கிரசுக்கு பிறகு ஸ்தாபன கோட்பாடுகளை எதிர்த்து, லெனினை தாக்கி எழுதப்பட்ட கட்டுரை இஸ்க்ரா பத்திரிகையில் பிரசுரிக்கப் படுகிறது. இக்கட்டுரையின் சில அம்சங்களில் மாறுபடுவதாக சொல்லி மொத்தத்தில் அக்கட்டுரையை ஏற்றுக்கொண்டு, அதன் ஆய்வுரைகளை ஒப்புக்கொள்கிறது ஆசிரியர் குழு. இதை விரிவாக எடுத்துச் சொல்லும் லெனின், “கட்சிக் காங்கிரசின் போது தாங்கள் சொன்னதற்கு நேர் விரோதமாக காங்கிரஸுக்கு பிறகு பேசும் ஆசிரியர் குழுவை கொண்ட ஒரு கட்சிப் பத்திரிகையை எவராவது என்றாவது கண்டதுண்டா?” என கேள்வி எழுப்புகிறார். 

நூலின் உள்ளடக்கம்

1, மார்க்சிஸ்ட் கட்சியானது தொழிலாளி வர்க்கத்தின் ஒரு பகுதி

2, தொழிலாளி வர்க்கத்தின் அமைப்புரீதியாக உருவாக்கப்பட்ட படைப் பகுதி

3, தொழிலாளி வர்க்கத்தின் அமைப்புகளுக்கெல்லாம் தலைசிறந்த உயர்ந்த அமைப்புகளாகும்.

4, பல லட்சக்கணக்கான தொழிலாளிவர்க்க மக்களுடன் தொழிலாளி வர்க்கத்தின் முன்னணிப் படை இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த இணைப்பின் உருவமே கட்சி.

5, ஜனநாயக மத்தியத்துவ கோட்பாட்டை அடிப்படையாக கொண்டு கட்சி இருக்க வேண்டும்.

6, தத்துவ ரீதியான ஒற்றுமை மட்டுமல்ல; எதார்த்தத்தில்  தெரியும்படியான ஸ்தாபன ஒற்றுமையோடு கட்சி இருக்க வேண்டும்.

இந்த கருதுகோள்களை விளக்கி, ஏன் இதனடிப்படையில் கம்யூனிஸ்ட் கட்சி கட்டப்பட வேண்டும் என்பதை, தனது காலத்தில் தான் எதிர்கொண்ட பிரச்சினைகள் வழி லெனின் உலக கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்கு ஸ்தாபனம் குறித்த அடிப்படைகளை எடுத்துரைத்துள்ளார்.

வர்க்கத்தின் ஒரு பகுதி என்றால் என்ன?

வேலைநிறுத்தம், போராட்டங்களில் பங்கேற்பவர்களை  கட்சி உறுப்பினராக கருத வேண்டும் என்ற வாதம் கட்சிக் காங்கிரசில் முன்வைக்கப்பட்டது. அதற்கு லெனின் “கட்சியையும் வர்க்கத்தையும் ஒன்றாக போட்டு யார் குழப்புகிறார்களோ அவர்கள் கட்சியின் உணர்வை ‘ஒவ்வொரு வேலைநிறுத்தக்காரனுடைய’ உணர்வின் அளவுக்கு குறைத்து தாழ்த்துகிறார்கள்” என கடுமையாக விமர்சிக்கிறார்.

மார்க்சிஸ்ட் கட்சி ஆனது தொழிலாளி வர்க்கத்தின் ஒரு பகுதி ஒரு பிரிவு. ஆனால் தொழிலாளி வர்க்கம் பல்வேறு பகுதிகளை கொண்டுள்ளது. தொழிலாளி வர்க்கத்தின் இத்தகைய  பகுதிகளை கட்சியாக கருதக்கூடாது. காரணம் தொழிலாளி வர்க்கத்தின் முன்னணிப் படையான வர்க்க உணர்வு கொண்ட பகுதிதான் மார்க்சிஸ்ட் படைப்பகுதி. ஏனெனில் சமூக வாழ்க்கை, சமூகத்தின் வளர்ச்சி விதிமுறைகள் குறித்தும், வர்க்கப் போராட்டத்தின் வழிமுறைகள் பற்றிய அறிவையும் ஆயுதமாக கொண்டுள்ளது இப்படை. மேலும் இந்த காரணத்தினால்தான் அதனால் தொழிலாளி வர்க்கத்தை தலைமை தாங்கி நடத்தி செல்ல முடிகிறது. வழிகாட்டி செயல்பட முடிகிறது.ஆகவே பகுதியை முழுமையாக போட்டு குழப்பக்கூடாது என சுட்டிக் காட்டுகிறார் லெனின்.

முதலாளித்துவ சமூகத்தின் கீழ் இருக்கும் போது 

வர்க்கத்தின் முன்னணிப் படையாக உள்ள கட்சியினரின் உணர்வின் அளவிற்கு, செயல்களின் அளவிற்கு தொழிலாளி வர்க்கம் முழுவதும் எழும்பி உயரும் என்று எந்த சமயத்திலாவது நினைத்தால் அது கண்மூடித்தனமான வெறும் திருப்தியாகவே இருக்கும். வர்க்க உணர்வு ஊட்டப்பட்ட பகுதியினருக்கும் வெகுமக்களுக்கும் உள்ள உணர்வு மட்ட வித்தியாசத்தை பார்க்க தவறுவதை, குறைத்து மதிப்பிடுவதை “நம் முன் நிற்கும் வேலைகளின் பிரம்மாண்ட அளவை பார்க்காமல், கண்களை மூடிக் கொள்வதற்கு ஒப்பாகும். மேலும், இந்த வேலைகளை மிகவும் சுருக்கிக் குறுக்குவதே என்றே அர்த்தம்” என எடுத்துரைக்கிறார்.

அமைப்புரீதியாக ஒன்று திரட்டுவதின் தேவை

“கட்சி உறுப்பினர் என்ற பட்டம் எந்த அளவுக்குப் பரந்து இருக்கிறதோ, அந்த அளவுக்கு நல்லது” என மார்த்தவ் தனது கருத்தை வலுவாக முன்வைக்கிறார். அதற்கு லெனின் ” வர்க்கத்தின் முன்னணிப் படை என்ற முறையில் எவ்வளவு தூரம் அமைப்புரீதியாக ஒன்று திரட்டி உருவாக்க முடியுமோ, அவ்வளவு தூரம் கட்சியை உருவாக்க வேண்டும். ஒரு குறைந்தபட்ச அமைப்புக் கோட்பாடுகளுக்கு எத்தகைய நபர்கள் தங்களை உட்படுத்தி கொள்வார்களோ, அத்தகைய நபர்களை கட்சிக்குள் உறுப்பினர்களாக அனுமதிக்க வேண்டும்” என்கிறார். மேலும் “கட்சியின் கட்டுப்பாட்டை பார்த்து முகம் சுளித்து பின்வாங்குபவர்கள், கட்சியின் அமைப்பில் சேர்வதற்கு பயப்படுபவர்கள் கட்சிக்கு உறுப்பினர்களாக தேவைப்படவில்லை. கட்டுப்பாட்டையோ, அமைப்பையோ பார்த்துத் தொழிலாளர்கள் பின்வாங்குவதில்லை. கட்சியில் உறுப்பினராக சேருவது என்று தீர்மானித்து விட்டால் அவர்கள் மனப்பூர்வமாக அமைப்பில் சேருகிறார்கள். தன்னந்தனியான போக்குடைய  படைப்பாளிகள்தான் கட்டுப்பாட்டையும் அமைப்பையும் கண்டு பயப்படுகிறார்கள்” என்கிறார்.

கட்சி, அமைப்பு ரீதியாக உருவாக்கப்பட்ட சாதாரண பகுதி மட்டுமல்ல. தொழிலாளி வர்க்கத்தின் அமைப்பு வடிவங்களிலெல்லாம் தலை சிறந்த, உயர்ந்த அமைப்பு வடிவம் ஆகும். “அதிகாரத்திற்காக பாட்டாளிவர்க்கம் நடத்துகிற போராட்டத்தில் அமைப்பைத் தவிர வேறு ஆயுதம் எதுவும் இல்லை” என்பதே லெனினியத்தின் அடிப்படை.

கட்டுப்பாடுகளை ஸ்தாபன ஒழுங்கை கட்சி முன்னிறுத்துவதன் அடிப்படைகள்

“தன்னுடைய கூட்டுக்குள்ளேயே எந்த கட்சி அடைபட்டு கிடைக்கிறதோ, பொதுமக்களிடமிருந்து எந்த கட்சி தன்னை தனிமைப்படுத்திக் கொள்கிறதோ, தன்னுடைய வர்க்கத்துடன் எந்த கட்சி தொடர்பு அற்று இருக்கிறது அல்லது அந்த தொடர்பை தளர்த்திக் கொள்கிறதோ, அந்த கட்சி மக்களுடைய நம்பிக்கையை ஆதரவை இழப்பது திண்ணம். இதன் பயனாக அது அழிந்தும் போகும். பூரணமாக வாழ்வதற்காகவும், வளர்ச்சி அடைவதற்காகவும் மக்களுடன் வைத்திருக்கும் தன்னுடைய தொடர்புகளை கட்சி பன்மடங்கு அதிகமாக்க வேண்டும். தன்னுடைய வர்க்கத்தைச் சேர்ந்த பல லட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கைகளை பெருமுயற்சி செய்து பெற வேண்டும்” இவ்வாறு  லெனின் சொல்வதை கருத்தளவில் ஏற்றுக் கொள்பவர்கள் கூட அதை அடைய கட்சியின் ஒழுங்கு, கட்டுப்பாடு குறித்து சொல்லும்போது கண்டுகொள்ளாமல் சென்றுவிடுகின்றனர். அந்த ஒழுங்கை ரஷ்ய கம்யூனிஸ்ட் இயக்கத்திற்குள் கொண்டு வருவதற்கு லெனின் நடத்திய கருத்தியல் போராட்டத்தை கூர்ந்து வாசிப்பது இன்றைய தேவைக்கு மிக முக்கியமானது. 

கட்சி ஸ்தாபனத்தை ‘கொடூரமானதாக கருதுவதை, முழுமைக்கு பகுதி கட்டுப்படுவதை, பெரும்பான்மைக்கு சிறுபான்மை உட்படுத்தப்படுவதை, ‘பண்ணை அடிமைத்தனமாக’ கூக்குரலிட்டு கத்தி பேசுவதை லெனின் தனது வாதங்களின் வழி நையப் புடைக்கிறார்.

“கட்சியை கட்டுவதில்  தொடர்ந்து ஈடுபடும்போது தொழிலாளி வர்க்க ஊழியரின் மனோபாவத்திற்கும் தன்னுடைய அராஜகப் பேச்சுகளை ஜம்பமாகப் பேசுகிற முதலாளித்துவப் படிப்பாளியின் சிந்தனை போக்கிற்கும்  இடையே உள்ள வேறுபாட்டை வர்க்க உணர்வு ஊட்டப்பட்ட தொழிலாளர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். சாதாரண உறுப்பினர்கள் மட்டுமல்லாமல், ‘தலைமையில் உட்கார்ந்து இருப்பவர்களும்’ தங்களது கடமையை நிறைவேற்றி பூர்த்தி செய்ய வேண்டும் என்று வற்புறுத்த கற்றுக்கொள்ள வேண்டும்.” இவ்வாறு வழிகாட்டி புரட்சிகர இயக்கத்தை வளர்த்தெடுக்க பாடுபட்ட லெனின் தன்னை ஓரிடத்தில் சுயவிமர்சனத்துக்கு உட்படுத்தி பேசும் வார்த்தைகள் நெகிழ்ச்சி அளிக்கிறது. 

“நான் அடிக்கடி திகில் தரும் எரிச்சலான நிலையில் சீற்றம் கொண்டவனாக நடந்திருக்கிறேன்; செயல்பட்டிருக்கிறேன் என்பதை உணருகிறேன். என்னுடைய அந்தப் பிழையை நான் எவரிடத்திலும் ஒத்துக் கொள்ள விருப்பமுள்ளவனாகவே இருக்கிறேன். அது ஒரு குற்றம் என்று கருதப்படுமேயானால், அது சூழல், எதிர்செயல்கள், போராட்டம் ஆகியவற்றின் இயற்கையான விளைவே.

அவ்விளைவுகளை ஆராய்ந்து பார்த்தோமேயானால், கட்சிக்கு ஊறு விளைவிப்பதாக எதுவுமில்லை. சிறுபான்மையை புண்படுத்தும் அல்லது இழிவுபடுத்தும் என்று சொல்லக்கூடியது எதுவுமில்லை.” என்கிறார்.

அறிவுஜீவிகள் யார்? முதலாளித்துவ சமூக அமைப்பில் அவர்களது உணர்வோட்டம் எப்படி கட்டமைக்கப்படுகிறது? என்பதை விரிவாக ஆய்வுக்கு இந்நூலில் உட்படுத்தி உள்ளார். ஓர் அறிவுஜீவி எப்படி இருக்க வேண்டும் என்ற உதாரணத்தையும் எடுத்துரைத்துள்ளார். ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த சர்வதேச தொழிலாளி வர்க்க இயக்கத்தின் தலைசிறந்த தலைவர் லீஃப்னெக்ட்-ஐத் தான் லெனின் சுட்டிக்காட்டுகிறார்.

“அவர் சிறப்பான எழுத்தாளராக இருந்தும், ஓர் அறிவுஜீவியின் தனிப்பட்ட மனப்பான்மையை முற்றிலும் இழந்து விட்டு, தொழிலாளர்களுடைய அணியில் மகிழ்ச்சியுடன் நடைபோட்டார். அவருக்கு என ஒதுக்கித் தரப்பட்ட எந்த பதவியிலும் பணிபுரிந்தார். மாபெரும் லட்சியத்திற்காக தன்னை முழு மனதோடு ஆட்படுத்திக்கொண்டார்” என புகழாரம் சூட்டுகிறார் லெனின்.

நிறைவாக,

தமிழகத்தில் உறுதியான, புரட்சிகர குணாம்சமிக்க கட்சியை கட்டுவதில் உள்ள பலவீனமான அம்சங்களை  மத்திய குழு சுட்டிக்காட்டி உள்ளது. அப் பலவீனங்களை களைய கட்சி முழுவதும் எப்படி செயல்படுவது என பல்வேறு வழிகாட்டுதல்களை கட்சியின் மாநிலக்குழு விவாதித்து உருவாக்கி நடைமுறைப்படுத்தி வருகிறது. அதை கோட்பாட்டு ரீதியாக புரிந்து கொள்ளவும், இன்னும் முழு ஈடுபாட்டுடன் செயல் தளத்தில் நடைமுறைப்படுத்தவும், லெனினது ” ஓரடி முன்னால் ஈரடி பின்னால்” நூல் நமக்கு வழிகாட்டும்; உற்சாகமூட்டும். இது நான்கு சுவர்களுக்குள் உருவான கருத்தியல் பெட்டகம் அல்ல. மாறாக, கள அனுபவங்களை  மார்க்சிய தத்துவ ஒளியின் கண் கொண்டு பார்த்து சித்தாந்தரீதியான உரையாடல்களை ஜனநாயகரீதியாக மேற்கொண்டு உருவாக்கப்பட்ட ஆய்வு நூல். அதைவிடவும் முக்கியமானது, இப்படியாகக் கட்டப்பட்ட கட்சியின் மூலம் தான் ரஷ்ய புரட்சி சாத்தியம் ஆனது.

ஊர் சுற்றிகளின் அரசன் ராகுல்ஜி

  • வீ. பா. கணேசன்

நம்மில் பலரும் மார்க்சியத்தை நோக்கி அடிவைக்கும்போது ராகுல்ஜியின் ‘பொதுவுடமைதான் என்ன?’, ‘வால்காவிலிருந்து கங்கை வரை’, ‘சிந்து முதல் கங்கை வரை’ போன்ற பல நூல்களை படித்திருப்போம். நாம் அதுவரை படித்து வந்த மாமன்னர்களின் பட்டியல் வரிசைக்கு முற்றிலும் மாறாக, இந்தியாவின் எழுதப்படாத வரலாறு பற்றிய சித்திரங்களை நம் மனக்கண் முன் கொண்டு வந்த அந்த மாமேதையின் வாழ்க்கை முற்றிலும் மாறுபட்ட ஒன்றாகவே இருந்தது.

அன்று ஐக்கிய மாகாணம் என அழைக்கப்பட்டு வந்த உத்திரப் பிரதேசத்தில் ஆஜம்கட் மாவட்டத்தில் இருந்த பண்டகா என்ற கிராமத்தில், ஏழு தலைமுறைகளாக விவசாயத்தில் ஈடுபட்டு வந்த ஒரு பிராமணக் குடும்பத்தில், 1893 ஏப்ரல் 9 அன்று கேதார் நாத் பாண்டே என்ற இயற்பெயருடன் பிறந்த அவர் ஊர் சுற்றிகளின் அரசன் என்று போற்றப்படும் அளவிற்கு பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்து அங்கிருந்த கலைச்செல்வங்களை இந்தியாவிற்குக் கொண்டு வந்தவர். அவர் சேகரித்து வந்த புத்த மத தத்துவ நூல்கள் இன்றும் பாட்னா அருங்காட்சியகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு சிறு பகுதி மட்டுமே ஜப்பான், சீனா, இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த புத்தமத ஆய்வாளர்களின் ஆய்வுக்கு உட்பட்டுள்ளன. 1963 ஏப்ரல் 14 அன்று தனது 70வது வயதில் மறைந்த ராகுல்ஜி எனும் ராகுல சாங்கிருத்தியாயன் இன்றளவும் அவரது எண்ணற்ற எழுத்துக்களுக்காக இன்றுவரை போற்றப்படுகிறார்.

ராகுல்ஜியின் வாழ்க்கையை நான்கு பருவங்களாகப் பிரிக்கலாம். முதல் பருவம் அவரது துறவுக்காலத்தைக் குறிப்பிடுவதாக இருக்கும். இப்பருவத்தில் 17-18வயதிலேயே துறவு பூண்டு இமயமலைப் பகுதிகளில் சுற்றி வந்து இந்தியாவின் பல வைணவ மடங்களின் மடாதிபதியாக தேர்வு செய்யப்பட்டு ராமுதர் தாஸ், தாமோதராச்சாரி என்ற பெயர்களில் வாழ்ந்த காலத்தை, இக்காலத்தில் அவர் பெற்ற மிக ஆழமான சமஸ்கிருத அறிவாற்றலை எடுத்துக் கூறுவதாக இருக்கும்.

அதற்கடுத்த பருவம் துறவுக் கோலத்திலிருந்து வெளியேறி அவர் ஆர்ய சமாஜியாக இருந்த காலத்தைக் குறிக்கிறது. இப்பருவத்தில் மத வேறுபாடுகளைக் கடந்து, இந்திய விடுதலைக்கு கல்வியே அடித்தளம் என்ற உணர்வுடன் மக்களிடையே ஆங்கிலத்திலும், இந்தியிலும் நாவன்மை மிக்க பிரச்சாரகராய் செயல்பட்ட காலத்தை நமக்கு எடுத்துக் காட்டுவதாய் இருக்கும்.

அதற்கடுத்த பருவம் புத்தமத தத்துவங்களை அறியத்துவங்கி, அதன் ஆணிவேர் எனச் சொல்லத்தக்க திரிபீடகம் (முப்பெரும் தத்துவம்) என்ற தத்துவத்தை முழுமையாக உள்வாங்கி, அதையும் தாண்டி புத்தமத அறிவுச் செல்வங்களைத் தேடி கடும் முயற்சியுடன் திபெத் பகுதிக்குச் சென்று பெறர்கரிய சமஸ்கிருத, பாலி, பிராகிருத மொழி நூல்களை படியெடுத்துக் கொண்டு வந்து சேர்த்த பகுதியாகும். இந்தப் பருவத்தில் நேபாளத்தில் தேரவாடா என்ற புத்த மதப்பிரிவு தழைத்தோங்கவும், அங்கிருந்த மன்னராட்சிக்கு எதிராக இளைஞர்களை தட்டியெழுப்பிய எழுத்துக்களை வடித்ததும் அடங்கும்.

இதற்கடுத்த பருவம் சோஷலிச கருத்துக்களை ஆழ்ந்து கற்று, சோவியத் மண்ணில் பேராசிரியராக, ஆராய்ச்சியாளராக பணியாற்றி, அந்த நாட்டில் சோஷலிசம் விதைக்கப்படுவதை நேரில் கண்டு அதை தம் தாய்நாட்டிலும் உயிர்ப்பிக்க வேண்டும் என்ற வேகத்துடன் பீகாரில் விவசாயிகளின் போராட்டங்களை உருவாக்கி நடத்திய கம்யூனிஸ்ட் செயல்வீரராக இருந்த, பொதுவுடமைத் தத்துவங்களை மிக எளிய முறையில் மக்களுக்குக் கொண்டு செல்ல எண்ணற்ற நூல்களை எழுதிக் குவித்த பருவமும் ஆகும்.

தமிழ் உள்ளிட்டு மொத்தம் 33 மொழிகளில் செயல்படும் திறமை பெற்றவராக இருந்த ராகுல்ஜி தன் வாழ்க்கையின் ஒவ்வொரு பருவத்திலும் அடுத்த கட்ட வளர்ச்சிக்கான அறிவுச் செல்வத்தைத் தேடி அலைபவராகவே இருந்தார். வேதாந்தக் கல்வியில் மூழ்கியிருந்தபோதும் இந்திய நாட்டின் விடுதலைக்கான இயக்கங்களில் தீவிரமாகச் செயல்பட்டு சிறைத் தண்டனை பெறும் செயல் வீரராகவும் அவர் திகழ்ந்தார். அவரது நீண்ட சிறைவாழ்க்கையும் எழுத்துப் பணிகளை மேற்கொள்ள உதவியது. முறையான பள்ளிக் கல்வியோ, பல்கலைக்கழகப் பட்டமோ பெறாதவராக இருந்தபோதிலும் அவரது ஆழ்ந்த கல்வித் திறனின் காரணமாக இலங்கையில் வித்யாலங்கார பரிவேனா என்ற பல்கலைக்கழகத்தின் சமஸ்கிருத பேராசிரியராக, சோவியத் யூனியனில் லெனின்கிராட் பல்கலைக்கழகத்தின் சமஸ்கிருத பேராசிரியராக பணியாற்றும் வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தன. மிக நீண்ட காலமாகவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த ராகுல்ஜி 1961டிசம்பரில் கல்கத்தாவில் தன் சுயநினைவை இழந்தார். இந்தியாவிலும் சோவியத் யூனியனிலும் அவரது நிலையை மேம்படுத்த சிகிச்சைகள் செய்யப்பட்டபோதும், எவ்வித முன்னேற்றமும் இல்லை. இறுதியில் 1963 ஏப்ரல் 14 அன்று டார்ஜிலிங்கில் இருந்த அவரது இல்லத்தில் உயிர்நீத்தார்.

இந்தி மொழியில் அவர் எழுதிய ஆறு தொகுதிகளைக் கொண்ட எனது வாழ்க்கைப் பயணம், சிம்ம சேனாபதி, புத்த சரிதம், புத்த தர்ஷன், புத்த சம்ஸ்க்ருதி, மகா மனிதர் புத்தர், புத்தரின் பன்முகப் பார்வை, ஊர்சுற்றிப் புராணம், ரிக் வேத ரகசியம், இஸ்லாமிய தர்மம் என நீண்டு கொண்டே போகும் நூல்களின் பட்டியல்.

மார்க்சிய தத்துவத்தில் ஆழ்ந்த பிறகு, பொதுவுடமைத் தத்துவத்தைப் பரப்புவதற்காக அவர் எழுதிய எண்ணற்ற நூல்களில் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் பற்றிய அறிமுக நூல்கள், மார்க்சிய தத்துவம் குறித்த அறிமுக நூல்கள், மார்க்சிய பார்வையில் உலக வரலாற்றை, இந்திய வரலாற்றை அறிமுகம் செய்யும் நூல்கள், இதுவரை அவர் கற்றறிந்திருந்த வேதாந்த, புத்த தத்துவங்கள்  குறித்த மீள்பார்வை குறித்த நூல்கள் போன்றவை குறிப்பிடத்தக்கவையாக  இருந்தன. அவரது வாழ்நாளில் 50,000 பக்கங்களுக்கு நூல்கள் வெளியாகி இருந்தன எனில், அவரது குறிப்புகளின் அடிப்படையில் மேலும் 25,000 பக்கங்களுக்கு நூல்கள் (அவரது மனைவியும் பேராசிரியருமான கமலாவின் முயற்சியில்) பின்னர் வெளியாயின என்பதும் குறிப்பிடத்தக்கது. இவற்றில் வால்காவிலிருந்து கங்கை வரை நூல் வேறெந்த நூல்களையும் விட அதிகமான மொழிகளில் வெளியாகி ராகுல்ஜியின் பெயரை இன்றும் நிலைநிறுத்தி வருகிறது.

இந்திய தத்துவ உலகில் மூழ்கி, அதன் விலைமதிக்க முடியாத செல்வங்களை மீட்டெடுத்து வந்து அறிமுகப் படுத்தி, பின்னர் மார்க்சிய தத்துவத்தில் ஈடுபட்டு, அதை இந்திய மண்ணுக்கு, இந்திய தத்துவப் பின்னணியில் அறிமுகப்படுத்தும் பணிகளில் தன் வாழ்நாளின் இறுதிவரை பாடுபட்ட தேசியவாதியாக அவர் திகழ்ந்தார் எனில் மிகையாகாது. இந்தியாவின் பண்டைய இலக்கியங்களை உலகிற்கு அறிமுகப்படுத்துவதில், குறிப்பாக புத்த மத தத்துவ  நூல்களை மீட்டெடுத்து வந்து அவற்றுக்குப் புத்துயிர் ஊட்டியதில் தனிச்சிறப்பு பெற்றவராகவும் அவர் திகழ்கிறார்.

ஊர் சுற்றுவதில் தனிச்சிறப்பு பெற்றிருந்த ராகுல்ஜி, தான் கண்ட செல்வங்கள் அனைத்தையும் திரட்டிக் கொண்டு வந்து இந்திய அறிவுலகில் பாத்தி கட்டி வளர்த்த அறிஞரும் ஆவார். இந்தியாவின் பண்டைய வரலாற்றில் ஆழக் கால்பதித்து அவர் எழுதிய எழுத்துக்கள் நமக்கு புதிய வெளிச்சத்தை தருபவையாய் விளங்குகின்றன. அவர் பிறந்து மறைந்த இந்த மாதத்தில் அவரை நினைவு கூர்ந்து அவற்றை வாசிப்போம்! அனைவருக்கும் எடுத்துச் செல்வோம்!

வாழ்வா, சாவா போராட்டத்தின் மற்றொரு களம்

– என்.குணசேகரன்.

லெனின் “பொருள்முதல்வாதமும் அனுபவாத விமர்சனமும்”என்ற நூலை 1908-ஆம் ஆண்டு பிப்ரவரி துவங்கி அக்டோபர் மாதத்தில் எழுதி முடித்தார்.1909-ஆம் ஆண்டு அந்நூல் பிரசுரமாகி வெளிவந்தது. மிகவும் சிக்கலான தத்துவப் பிரச்னைகளை மையமாகக்கொண்டு எழுதப்பட்ட நூல் இது.

இந்த நூல் வெளிவந்த எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ரஷ்யாவில் பிற்போக்கு முதலாளித்துவ ஆட்சி தூக்கியெறியப்பட்டு,புதிய தொழிலாளி விவசாயிகளின் வர்க்க அரசு ஆட்சிக்கு வந்தது.அந்த அரசுக்கு லெனின் தலைமை ஏற்றார்.இந்த காலங்கள் முழுவதும் புரட்சிக்கான தயாரிப்பு பணிகளும் போராட்டங்களும் நிறைந்த காலமாக இருந்த நிலையில் ஒரு தத்துவ நூல் எழுத வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது?அதிலும் புரட்சியின் தலைமையில் நின்று, முழுமூச்சாக செயல்பட்டு வந்த லெனின், அந்தப் பணியை ஏன் மேற்கொண்டார்?

அன்றைய காலக்கட்டத்தில் எழுந்த தத்துவப் பிரச்னைகள் புரட்சி வெற்றியோடு இணைந்த பிரச்னைகள் என்று லெனின் கருதினார்.தத்துவப் பிரச்னைகளில் அக்கறை செலுத்தாமல் அவற்றைக் கைவிட்டால்,புரட்சி  முன்னேற்றம் அடையாது என்ற ஆபத்தினை அவர் உணர்ந்ததால்தான் இந்தக் கடினமான பணியில் ஈடுபட்டார்.

மார்க்சிய நோக்கிலான அவரது தீர்க்கதரிசனம் பின்னர் உண்மையானது.தத்துவத் துறையில் மார்க்சிய தத்துவத்தை திரித்து குழப்பம் விளைவித்துக் கொண்டிருந்தோரின் கருத்து நிலைபாடுகளோடு இந்த நூல் வலிமையான கருத்து யுத்தத்தை நடத்தி, அந்தக் கருத்துக்களை முறியடித்தது.அதன் விளைவாக ரஷ்யப் பாட்டாளி வர்க்கம் மார்க்சிய தத்துவத்தின் உயிர்நாடியான இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை இறுகப் பற்றிகொண்டு புரட்சியை நோக்கி முன்னேறியது.

சமுக மாற்றத்தில்,புரட்சியில் நம்பிக்கை கொண்டவர்கள் தத்துவத்தை கைவிடக்கூடாது என்ற பாடத்தை இந்த வரலாற்று அனுபவம் எடுத்துரைக்கிறது.தொழிலாளி மற்றும் உழைக்கும் வர்க்கங்களிடம் வர்க்க தத்துவப் பிரச்சாரத்தை செய்வதும்,,முதலாளித்துவ தத்துவ நிலைகள்,மதப்பழமைவாதங்களின்  குரலாக ஒலிக்கிற உலகப் பார்வைகள் போன்றவற்றிற்கு எதிராக தத்துவப் போராட்டம் மேற்கொள்வதும் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு அவசியமனது. இந்த நூல் உணர்த்தும் உன்னதமான லெனினிய அறிவுரை.

நூலாக்கத்தின் பின்னணி

19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும்,20-ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலும் ஐரோப்பாவில் எர்னஸ்ட் மாக் பெயரால் மாக்கிசம் எனவும்,”அனுபவவாத விமர்சனம்“ என்றும் அழைக்கப்பட்ட தத்துவம் பரவியிருந்தது. எர்னஸ்ட் மாக்,அவேனரியஸ் உள்ளிட்ட இந்த தத்துவவாதிகள் தாங்களது தத்துவமே ஒரே அறிவியல் தத்துவம் என்று சொல்லிக் கொண்டனர்.இதற்கு அவர்கள் பல வாதங்களை முன்வைத்தனர்.

தத்துவம்,கருத்துமுதல்வாதம்,பொருள்முதல்வாதம் என்ற இரண்டு முகாம்களாக பிரிந்துள்ளது. இரண்டும் வெவ்வேறு பக்கமாக சாய்ந்திருக்கும் பிரிந்திருக்கும் நிலையை தாங்கள் சரிசெய்து செழுமையாக்கி ,”அனுபவவாத விமர்சனம்“ தத்துவத்தைப் படைத்திருப்பதாக பெரிதாக ஆரவாரம் செய்து நூல்களை வெளியிட்டனர்.

அன்றைய சமுக ஜனநாயக இயக்கத்தில் இருந்த மார்க்சிஸ்ட்கள் பலரும் ,”அனுபவவாத விமர்சனம்“ என்பது அறிவியல் உலகின் ஒரு புதிய சிந்தனையாக பார்க்க முற்பட்டனர்.சிலர் மார்க்சிய தத்துவமான இயக்கவியல் பொருள்முதல்வாதத்திற்கு மாற்றான தத்துவம் என்று நினைக்கும் அளவிற்கு கூட சென்றனர்.இந்த கூட்டத்தோடு  சில முக்கியமான அறிவியலாளர்களும் சேர்ந்து கொண்டனர்.

அன்று சோசலிஸ்ட் கட்சிகளைக் கொண்ட சர்வதேச அகிலம் இயங்கி வந்தது.அது பிரெடரிக் எங்கெல்சின் அரும்பெரும் பணியால் உருவானது.ஆனால் அவரது மறைவிற்குப் பிறகு சந்தர்ப்பவாதிகள் நிறைந்த அமைப்பாக மாறிப் போனது.அகிலத்தின் தலைவராக இருந்த கார்ல் காவுத்ஸ்கி ஜெர்மானிய சமுக ஜனநாயகத்தின் செல்வாக்கான தலைவராகவும் விளங்கியவர்.தத்துவ உலகில் மார்க்சியத்தை பின்னுக்குத் தள்ளுகிற வகையில் பரவிக் கொண்டிருக்கும் மாக்கிசத்திற்கு பதிலடி கொடுக்க சர்வதேச அகிலம் எந்த முயற்சிகளையும் எடுக்கவில்லை.

ஒரு கட்டத்தில் காவுத்ஸ்கி மார்க்சிய தத்துவம்,எர்னஸ்ட் மாக்கின் தத்துவத்தோடு எந்த வகையிலும் முரண்படவில்லை என்று அறிவித்தார்.இது மேலும் பல ஐரோப்பிய சோஷலிச கட்சிகளிடையே அனுபவாத விமர்சனத் தத்துவம் பரவிட வழிவகுத்தது.

ஐரோப்பாவில் இந்த சூழல் நிலவியபோது ரஷ்யாவிலும் கருத்தியல் போராட்டத்திற்கான தேவை அதிகரித்தது.1905-07-ஆம் ஆண்டுகளில் ஜாராட்சிக்கு எதிராக எழுந்த புரட்சி கடுமையாக அடக்கி ஒடுக்கப்பட்டது.புரட்சி தோல்வியில் முடிந்ததையொட்டி ஜார் அரசாங்கம் புரட்சியாளர்களை வேட்டையாடியது. பல்லாயிரக்கணக்கானோர் தூக்கிலடப்பட்டனர்.

ரஷ்ய அறிவுஜீவிகள் மத்தியில் மார்க்சியம் மீதும்,இயக்கவியல்,வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தின் மீதும் நம்பிக்கை குறையத் தொடங்கியது.சமூகப் பிரச்னைகளை ஒதுக்கி வைத்துவிட்டு கடவுளை நாடும் போக்கு அதிகரிக்கத் துவங்கியது.”கடவுள் நாடுவோர்”எனும் பெயரில் கடவுள் பிரசாரம் செய்யப்பட்டு கிறித்துவத்தின் மீது புதிய ஆர்வம் தூண்டப்பட்டது.

எல்லாவற்றுக்கும் மேலாக, ரஷ்ய கம்யுனிஸ்ட் கட்சியான போல்ஷ்விக் கட்சியில் இருந்த சிலர் இந்தக் கருத்துக்களுக்கு இரையானதுதான் பெரும் ஆபத்தாக உருவெடுத்தது. போக்தானாவ், பசாராவ், லூனாசார்ஸ்கி போன்றோர் மார்க்சியத்தையும் எர்னஸ்ட் மாக்கின் தத்துவத்தையும் இணைத்துப் பேச முற்பட்டனர்.மார்க்சியத்தை வளர்க்கிறோம் என்ற பெயரில் இது நடந்தது.

ஆக, புரட்சிகர கட்சியின் தத்துவ அடித்தளத்தை வேரோடு சாய்த்திடும் வேலை நடந்து வந்தது.இந்த நிலையை லெனின் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பாரா?மார்க்சியத்தின் மீதான தாக்குதல்களை முறியடித்து, மார்க்சியத்தை பாதுகாத்திடும் கருத்துப் போரில் இறங்கினார்.அதன் விளைவாகவே “பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்” நூல் பிறப்பெடுத்தது.

பொருளே முதன்மையானது…

“பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்”என்ற தலைப்பிலேயே தனது முக்கிய குறிக்கோளை லெனின் வெளிப்படுத்துகிறார். ஆழ்ந்து நோக்கினால் இது புலப்படும்.

தத்துவத்தில் பொருள்முதல்வாதம்,கருத்துமுதல்வாதம் என இரண்டு பிரிவுகள்தான் உண்டு.எந்த பெயர்களில் எந்த தத்துவம் எழுந்தாலும் இந்த இரண்டுக்குள் தான் அடக்கம்.எனவே ஒரு புறம் பொருள்முதல்வாதம் எனில் மற்றொருபுறம் “அனுபவவாத விமர்சனம்”என்ற பெயர் கொண்டாலும் அது கருத்துமுதல்வாதம்தான்.ஆனால்,அனுபவவாத விமர்சன தத்துவ ஆசிரியர்கள் தங்களை கருத்துமுதல்வாதிகள் என்று ஏற்றுக் கொள்ளவில்லை.எனினும், அவர்களுடைய வாதங்கள் அனைத்தும் பழைய கருத்துமுதல்வாதமே என்று லெனின் நூலில் ஆணித்தரமாக நிறுவுகிறார்.புலனறிவு,பொருளின் இருப்பு,அறிவு போன்ற அடிப்படை தத்துவார்த்த பிரச்னைகளில்  மார்க்சியத்தின் பார்வையையும் மாக்கியவதிகள் விமர்சித்துள்ளனர்.ஒவ்வொரு கருத்தையும் அலசி ஆராய்ந்து தகர்க்கின்றார் லெனின்.

அனுபவவாத விமர்சன தத்துவ ஆசிரியர்கள் தத்துவத்தின் இரு பிரிவுகளில் உள்ள குறைகளை நீக்கி ஒரு புதிய தத்துவ முறையை படைப்பதாக கூறிக்கொண்டனர்.இந்தக் கூற்றினைத் தகர்த்து அவர்களின் புதிய முறை என்பது  பழைய  17௦௦-ஆம் ஆண்டுகளில் ஜார்ஜ் பெர்க்லியின் கருத்துமுதல்வாதம்தான் என்று லெனின் நிறுவுகிறார்.பெர்க்லியின் வாதங்களும்,முந்தைய கருத்துமுதல்வாதிகளின் கருத்துக்களும் மாக்,அவனேரியஸ் போன்றோர்களின் கருத்துக்களோடு எவ்வாறு ஒத்துப் போகின்றன என்பதை லெனின் அம்பலப்படுத்துகிறார்.

 

தத்துவத்தில் இரண்டு வேறுபட்ட நிலைகளான பொருளா,கருத்தா என்ற முகாம்களில் நான் எதிலும் சாராதவர் என்று சொல்லி வருகின்றார், அனுபவாத விமர்சகர்,வித்தியாசமான நிலை என்னுடையது என்று உள்ளே புகுந்து வாதிடுகிறார்.

புலன் உணர்வுகளின் தொகுதியே பொருள் என்று பேசுகின்றார் அவர். புதிய பார்வை என்ற பெயரால் மாக் புகுத்துகிற கருத்தை அம்பலப்படுத்துகிறார் லெனின்.கருத்துதான் அடிப்படை;பொருளின் இருப்பை கருத்தே நிர்ணயிக்கிறது எனும் பழைய தத்துவத்தைத்தான்  “புலன் உணர்வுகளின் தொகுதி”என்று மாக் புது பெயர் சூட்டி அழைகின்றார்.

பொருள் மனிதனின் புலன் உணர்வில் பிரதிபலிக்கிறது.பிறது அது மனித மூளையால் பெறப்பட்டு    பொருள்  பற்றிய அறிவு உருவாகிறது.உதாரணமாக,பச்சை நிறம் கொண்ட திராட்சையை பார்க்கும் ஒருவர் அதன் நிறத்தை தனது புலன் உறுப்பினால் (கண்பார்வை) புலன் உணர்வு பெறுகின்றார்..அந்த புலன் உணர்வு மூளைக்கு அனுப்பப்பட்டு அந்தப் பொருள் பச்சை நிறம் கொண்ட திராட்சை என்று அறிதலுக்கு வருகின்றார்.

பொருளின் கூறுகள் மனிதரின் புலன் உணர்வுகளோடு கலந்து வினையாற்றும் போதுதான் புலனறிவு ஏற்பட்டு அறிவு பெறும் நிகழ்வு நடப்பதை லெனின் விளக்குகிறார். பச்சை நிறம் கொண்ட திராட்சையின் நிறம் எப்படி உணரப்படுகிறது?ஒளி அலைகள் கண்ணின் கருவிழிகளில் பட்டு,அந்த உணர்வுகள் மூளையில் பதிகின்றன.அதன் விளைவாக பச்சை நிறம் என்ற புலன் அறிவும்,பிறகு பொருளின் (பச்சை நிறம் கொண்ட திராட்சை) முழுத் தன்மை சார்ந்த அறிவும் தோன்றுகிறது.

இதில் பொருள் மட்டுமல்ல,ஒளி அலைகளும் பொருளாகவே லெனின் காண்கின்றார்.நம்மைச் சுற்றியுள்ள,வெளியுலகம் அனைத்துமே பொருட்களால் ஆனது:அனுபவவாத விமர்சகர்கள் பொருள் அல்லாதவைகளின் இருப்பு பற்றி பேசுவதை லெனின் நிராகரிக்கிறார்.இதனை புலனுணர்ச்சிகளின் தொகுதி என்பது போன்ற எந்தப் பெயர்களை அவர்கள் கொடுத்தாலும் அது உண்மையல்ல.எனவே பொருள்,அதன் தன்மைகள் அனைத்தும் மனித மனதிற்கு அப்பாற்பட்டு சுயேச்சையான இருப்பு கொண்டவை.இதுவே மார்க்சிய இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் அடிப்படை என்கிறார் லெனின். இதுவே உலகை சரியாக அறிந்து   கொள்ளவும்,புரிந்து கொள்ளவும் உதவிடும்.

வண்டியை குதிரைக்கு முன்னால் நிறுத்தி…

அனுபவவாத விமர்சகர்கள் பொருளை “அருவமான அடையாளம்”என்று வரையறுக்கின்றனர்.இந்த சொல்லாடலைப் பயன்படுத்தி குழப்புவதற்கு அவர்கள் முயற்சிக்கின்றனர். “அருவமான அடையாளம்”என்றால் நிலையான புலன் உணர்வுகளின் தொகுதிதான் உண்மையாக இருக்கிறது;பொருள்அல்ல என்பது அவர்களது வாதம்.இது அவர்களை எங்கு கொண்டு சேர்க்கிறது? பொருள் என்பதே மனித உணர்வில் தோன்றி உருவாகும் கருத்தாக்கம் என்பதுதான் அனுபவவாதிகளின் உண்மையான  நிலை என்று வெளிப்படுத்திய லெனின்,அதனால் அவர்கள் கருத்துமுதல்வாதத்தில்தான் கரைந்து போகிறார்கள் என்று எடுத்துரைக்கின்றார்.

பொருள்,புலனுணர்வு,அறிவு ஆகியவற்றில் புலன் உணர்வுகளை முதன்மையாக அடிப்படையாக பார்ப்பது கருத்துமுதல்வாதம்.புலன் உணர்வுகளிருந்து பெறப்படும் எண்ணங்கள் மேலும் செழுமைப்படுத்தப்பட்டு அறிவு உண்டாகிறது என்பது கருத்துமுதல்வாதத்தின் நிலை.ஆனால்,புலன் உணர்வுக்கும் அதையொட்டி ஏற்படும் அறிவுக்கும் அடிப்படை பொருள்தான் என்பது பொருள்முதல்வாதம்.

தனது நூலில் லெனின் விளக்குகிறார்:

“பொருள்முதல்வாதத்திற்கும் கருத்துமுதல்வாதத்துக்கும் இடையே உள்ள எதிர்நிலை, தத்துவத்துறையில் இரண்டு அடிப்படையான போக்குகளுக்கும் இடையே உள்ள வேறுபாடே பிரச்சனையாகும். நாம் பொருட்களில் இருந்து புலனுணர்வுக்கும் சிந்தனைக்கும் போவதா? அல்லது நாம் சிந்தனை மற்றும் அறிந்துணர்ந்துகொள்ளலில் இருந்து, புலனுணர்விலிருந்து பொருட்களுக்கு போவதா?முதல் போக்கை, அதாவது பொருள்முதல்வாத போக்கை ஏங்கெல்ஸ் பின்பற்றுகிறார். இரண்டாவது போக்கை, அதாவது கருத்துமுதல் வாத போக்கை மாக் கடைப்பிடிக்கிறார். பொருட்கள் புலனுணர்வுகளின் தொகுதிகள் என்ற ஏ. மாக்கின் கோட்பாடு அகநிலைக் கருத்துவாதம் (Subjective Idealism); பெர்க்லிவாதத்தின் எளிமையான புத்துருவாக்கம் என்ற தெளிவான, மறுக்க முடியாத உண்மையை எந்தப் போலித்தனமும் , எந்த குதர்க்கமும் (அப்படி ஏராளமானவற்றை நாம் இனிமேல் சந்திக்க வேண்டியிருக்கும்) அகற்ற முடியாது.”

மாக்கின் வாதப்படி உலகப் பொருட்கள் எல்லாமே  “புலனுணர்வுகளின் தொகுதிகள்” என்பது மொத்த உலகமே கருத்து அல்லது சிந்தனையில்தான் உள்ளது என்பதாகவே முடிகிறது.அவருக்கு முன்பு,பெர்க்லி “புலனுணர்வுகளின் ஒன்றுசேர்த்தல்கள்” என்ற சொற்றொடரை பயன்படுத்தி உணர்வு மட்டுமே உண்மை,பொருள் உண்மையானது அல்ல என்று கூறியிருந்தார்.இந்த வாதத்தை நீட்டினால் எதார்த்தத்தில் உலகமோ அல்லது பொருட்களோ இல்லை,ஒவ்வொருவரின் தனிப்பட்ட உணர்வு மட்டுமே உண்மையானது என்ற முடிவிற்கு வர வேண்டியிருக்கும்.

 

லெனின் இந்த விநோத வாதங்கள் எங்கு கொண்டு செல்கிறது என்பதை விளக்குகிறார்: “…இத்தகைய வாதங்களிலிருந்து தொடங்கினால், தன்னைத் தவிர மற்றவர்களும் இருக்கிறார்கள் என்பதைக் கூட ஒப்புக்கொள்ள இயலாது;… இது,ஒருவரின் சொந்த எண்ணம்  மட்டுமே உள்ளது எனக்கூறும் ஆன்மீக நித்தியவாதம் (Solipsism) ஆகும்.”

அனுபவவாத விமர்சகர்கள் மீது லெனின் வைக்கும் அடிப்படை குற்றச்சாட்டு இதுதான்.: பொருள் அடிபடையானது,பொருலிருந்தே சிந்தனை தோன்றுகிறது என்ற உண்மையை அனுபவவாத விமர்சகர்கள் மறுக்கிறார்கள்.அதாவது, வண்டியை குதிரைக்கு முன்னால் நிறுத்தி வண்டியை ஓட்ட முயற்சிக்கிறார்கள்.

லெனினது வரையறை:

இந்த விவாதத்தில் லெனின் சிந்தனை அல்லது,கருத்து,அல்லது எண்ணங்கள் ஆகியவற்றின் பங்கையும் மறுக்கவில்லை,வறட்டு பொருள்முதல்வாதிகள் அத்தவறை செய்தனர்.மிக உயர்ந்த அளவில் வளர்ச்சி பெற்றுள்ள உயிர்ப்பு நிலையில் (organic)உள்ள பொருளின் குணம்தான் உணர்வு,சிந்தனை,கருத்து போன்றவை என்கிறார் லெனின்.(இந்த குணம் கொண்ட பொருளாக மனிதர்களிடம் மனித மூளை இயங்குகிறது).இந்த குணம் மனிதர்கள் மற்றும் உயிரினங்களின் தங்கள் வாழ்வின் சுற்றுப்புற இயற்கை நிகழ்வுகளையும்,சமுக சூழல்களையும் அறிந்து கொள்ள துணை புரிகிறது,இவ்வாறு அறிந்து,தகுந்த முறையில் எதிர்வினைகள்,செயல்பாடுகளை அமைத்துக்கொள்ள உதவுகிறது.

மார்க்சிய இயக்கவியல் பொருள்முதல்வாதம்தான் பொருளுக்கும் சிந்தனைக்குமான இந்த தொடர்பை சரியான முறையில் விளக்குகிறது.கருத்துமுதல்வாதம் பொருளின் அடிப்படைப் பங்கினை மறுக்கிறது. அது,சிந்தனைதான் பொருளின் அடிப்படை என்று பார்க்கிறது.கருத்துமுதல்வாதத்தின் நீட்சியாக ஆன்மிகவாதம் மகத்தான சிந்தனையான கடவுள்தான்,இந்த உலகத்தின் பொருட்கள்,இயற்கை,பிரபஞ்சம் அனைத்துக்கும் ஆதாரம் என்று வாதிடுகிறது.

இந்த வாதம் உண்மைக்கு மாறானது மட்டுமல்ல,இயற்கை ,பொருட்கள்,சமுகம் ஆகியனவற்றின் நிலைமைகளை உணர்ந்து ,அவை பற்றிய அறிவினைப் பெற்று அந்த நிலைமைகளை மாற்றும் வல்லமையை மனிதர்கள் பெற்றிடாமல் தடுத்திடத் தூண்டுகிறது.பொருள்முதல்வாதம்,கருத்துமுதல்வாதம் இரண்டிலிருந்தும் நாங்கள் வித்தியாசப்பட்டவர்கள் என்று முன்வந்த அனுபவாத விமர்சகர்கள் கருத்துமுதல்வாத சரக்கையே உருமாற்றிக் கொடுததனர்.

‘பொருள்முதல்வாதிகள் பொருள் முதன்மையானது என்று பேசுகிறார்கள்; ஆனால் பொருளின் உண்மையான தன்மை என்ன என்பதை வரையறுக்க யாரும் முயற்சிக்கவில்லை’ என்று அனுபவாத விமர்சகர்கள் பொருள்முதல்வாதிகள் மீது குற்றம் சாட்டுகின்றனர்.

’அதிலும் குறிப்பாக வளர்ந்து வரும் இயல்பியல் அறிவியல், பொருளைப் பற்றி பல கண்டுபிடிப்புக்களை வெளியிட்டு வருகிறது;(19-ஆம் நூற்றாண்டு இறுதியில்) அணுவையும் தாண்டி பல துகள்கள் (particles) கண்டுபிடிக்கப்பட்டது;இதனால் பொருள் என்று ஒன்று உண்டா என்று  பொருளின் இருப்பே கேள்விக்குள்ளாகியுள்ளது;இந்த கண்டுபிடிப்புக்களைப்  பற்றி எந்த கவனமும் செலுத்தாமல் சொன்னதையே சொல்லிக்கொண்டு,   பொருளைப் பற்றிய வரையறை எதுவும் செய்யாமல் இருகின்றனர் பொருள்முதல்வாதிகள்’ என்று அடுக்கடுக்காக குற்றம் சாட்டினர்.

லெனின் அவர்களது வாதங்களை எதிர்கொண்டார். பொருளின் முதன்மையை பொருள்முதல்வாதிகள் வலியுறுத்துகின்றனர்.இந்த வாதம் தத்துவ உலகில் விவாதிக்கப்படும் விஷயமாக நீடிக்கிறது.பொருள் பற்றிய  பல்வேறு  தன்மைகளை விளக்குவதும், மேலும் மேலும் ஆராய்ந்து புதிய கண்டுபிடிப்புக்களை உருவாக்குவதும் அவசியம்.இது இடையறாது நடைபெற வேண்டிய துறை அறிவியல் துறை ஆகும்.

தத்துவத்துறையில் பொருளின் இருப்பு மற்றும் அதன் முதன்மையை வலியுறுத்துவதோடு மார்க்சிஸ்ட்கள் நின்றுவிடவில்லை.அது முந்தைய பொருள்முதல்வாதிகள் செய்த தவறு.மார்க்சிஸ்ட்கள் பொருளின் முதன்மையை வலியுறுத்துவதோடு,பொருள் இடையறாது இயங்கிக் கொண்டிருக்கிறது என்ற கோட்பாட்டையும் வலியுறுத்துகின்றனர்.இதுவே இயக்கவியல் பொருள்முதல்வாதம்.பொருளின் மாறும் தன்மையை ஏற்றுக் கொள்கிற நிலையில் நவீன் அறிவியலோடு இயக்கவியல் பொருள்முதல்வாதம் ஒத்துப் போகிற தத்துவமாக விளங்குகிறது.

பல அறிவியல் கண்டுபிடிப்புக்கள் யாருடைய உணர்வையும்  சிந்தனையையும் சாராமல், சுயேச்சையாக,    பொருளின் இருப்பும்,இயக்கமும் இருப்பதை எடுத்துரைக்கின்றன.பொருளின் இந்த புறநிலை எதார்த்தத்திலிருந்துதான்  அறிவியலுக்கு பொருளை ஆராய்ந்திட  வழி ஏற்படுகிறது.பொருளின் சுதந்திர இருப்பினை மறுத்தால் அறிவியலுக்கான் கதவுகள் மூடப்படும்.அறிவியலுக்கு வாய்ப்பற்ற நிலையைத்தான் கருத்துமுதல்வாதம் ஏற்படுத்துகிறது.அதையேதான் அனுபவவாத விமர்சகர்களும் செய்கின்றனர்,ஆனால் நாசூக்காக தாங்கள் அறிவியலின் துணையோடு நிற்பதாகக் காட்டிக்கொண்டு பிற்போக்குத்தனத்தை புகுத்துகின்றனர்.

பொருளுக்கான வரையறை இல்லை என்றவர்களிடம் வாதப்போரில் ஈடுபட்ட லெனின்,வாதங்களின் ஊடாக அற்புதமான,பிரசித்திபெற்ற பொருள் பற்றிய ஒரு வரையறையை வழங்கினார்;

“பொருள் என்பது தத்துவரீதியான ஒரு கருத்தினம் (cetegory).இது புறநிலையான எதார்த்தத்தை சுட்டிக்காட்டுகிறது.இந்த எதார்த்தம் மனிதரின் புலன் உணர்வுகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.புலன் உணர்வுகளின் பிரதிபலிப்பால் அங்கு அது காப்பி எடுக்கப்படுகிறது;நிழல் படம் எடுக்கப்படுகிறது;(இவை அனைத்தும்)பொருள் புலன்களுக்கு அப்பால் சுயேச்சையாக இருக்கும் நிலையில் நிகழ்கிறது.”

இந்த விரிவான வரையறை மனிதன்,புற உலகு இரண்டுக்குமான தொடர்பினை துல்லியமாக விளக்குகிறது.பொருள் முதன்மையானது,,பொருளிலிருந்துதான்  சிந்தனை தோன்றுகிறது  என்ற கோட்பாடுகளை இந்த வரையறை கொண்டுள்ளது.

தத்துவத்தின் கருப்பொருள் மனிதன்,புற உலகு இரண்டுக்குமான தொடர்பினை விளக்குவதுதான்.எனவே இந்த வரையறையில் பொருளை தத்துவத்தின் கருத்தினம் என்று லெனின் துவங்குகிறார்.பொருளின் உள்ளே இயங்கும் தொடர்புகளையும்,உள்ளிருக்கும் அணு,துகள்கள்,எலேக்ட்ரோன் போன்றவை அனைத்தும் இயல்பியல் உள்ளிட்ட அறிவியல் பிரிவுகளின் ஆராய்ச்சிக்கு உட்பட்டவை. அந்த அறிவியல்  வளர்ந்து கொண்டே வருகின்றது.

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் முக்கியமான பல கண்டுபிடிப்புக்கள் அறிவியல் துறையில் நிகழ்ந்தன.எக்ஸ்-ரே(1895)ரேடியோக்டிவிட்டி(1896),எலக்ட்ரான் கண்டிபிடிப்பு(1897)ரேடியம் கண்டிபிடிப்பு(1898),க்வாண்டம் கோட்பாடு(quantum thoery-1900). சார்பியல் தத்துவம் (theory of relativity-1905),வேதியல் பொருட்கள் ஒன்று மற்றொன்றாக மாற்ற முடியும் என்பது உள்ளிட்ட இந்த கண்டுபிடிப்புக்கள் அறிவியலில் பெரும் புரட்சிகர மாற்றங்களை நிகழ்த்திக் கொண்டிருந்தன.இந்த கண்டுபிடிப்புக்கள் அனைத்தும் தத்துவத்துறையில் இயக்கவியல் பொருள்முதல்வாத நிலைபாடுகளை மேலும் மேலும் உறுதி செய்தன.ஒப்பீட்டளவில் அளவில் பார்த்தால் இன்று இந்த ஆராய்ச்சிகள் மேலும் பிரம்மாண்டமான முன்னேற்றத்தை அடைந்துள்ளன.

இந்த அறிவியல் வளர்ச்சி  வரலாறும் லெனின் வாதிட்ட இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் முக்கிய கோட்பாட்டை உறுதி செய்கின்றன.இயற்கை, பிரபஞ்சத்தில் இன்னும் அறியப்படாதவை எராளமாக இருக்கின்றன;ஆனால் அவை அனைத்தும் இன்னும் அறியப்படவில்லை என்பதுதானே தவிர அறிய முடியாதது என்று எதுவுமில்லை.அனைத்தையும் அறிதல் சாத்தியம்.

அடுக்கடுக்கான தாகுதல்களை எதிர்கொண்டு…

**லெனினது வாதங்கள் அனுபவாத விமர்சகர்களின் கருத்துக்கள் பலவற்றை முறியடித்து மார்க்சிய தத்துவத்தின் மேன்மையை உயர்த்திப் பிடித்தது.வில்லியம் ஆச்ட்வால்த் என்ற அறிவியலாளர் எதார்த்தம் என்பது பொருளோ சிந்தனையோ அல்ல;ஆற்றல் மட்டுமே உண்மையான எதார்த்தம் என்று வாதிட்டார்.இது கருத்துமுதல்வாதம் பொருள்முதல்வாதம் இரண்டையும் எதிர்ப்பதாகக் கூறும் அனுபவாத விமர்சனத் தத்துவத்திற்கு ஆதரவாக இருந்தது.

லெனின் பொருளில்லாமல் ஆற்றல் இருக்க முடியாது எனவும்,பொருள் இயக்கத்துடன் இணைந்திருக்கிறது என்பதையும் விளக்குகிறார்.பொருள் இல்லாமல் இயக்கம் இல்லை;அதேபோன்று இயக்கம் இல்லாமல் பொருள் இல்லை.இரண்டும் ஒன்றிணைந்த முழுமையாகவே உள்ளது.வெறும் ஆற்றல்தான் என்பது இயல்பியலில் கருத்துமுதல்வாதத்தை புகுத்துவதாகும் என்று லெனின் எச்சரிக்கிறார்.

**நம்பிக்கை அடிப்படையில் அறிவைப் பெற முடியும் என்று வாதிட்ட அனுபவவாத விமர்சன அறிவுக் கோட்பாட்டையும் லெனின் கண்டித்தார்.இது மூட நம்பிக்கைகளுக்கு கொண்டு செல்லும் என்றார்.போகடனாவ் போன்றவர்கள் உண்மை பற்றிய கோட்பாடு என்ற பெயரில் இக்கருத்தை முன்வைதத்த போது, பாரம்பர்ய மார்க்சியத்தின் சமரசமற்ற நாத்திகத்தை அரித்து,மதப் பழைமைக்கு இடமளிக்கும் என்று எச்சரித்தார்.

**அனுபவவாத விமர்சகர்கள் ரஷ்ய மார்க்சிஸ்ட்டான பிளக்கனாவ் கருத்துக்களை தாக்கி வந்தனர்.அவர்களது தாக்குதல்களை எதிர்கொண்டு நூல் முழுவதும் பிளக்கனாவின் பொருள்முதல்வாதக் கருத்துக்களை ஆதரித்து எழுதினார் லெனின்.ஆனால் பிளக்கனாவின் ஒரு கருத்தோடு அவர் முரண்படுகின்றார்.

பிளக்கனாவ் புலன் உணர்வு என்பது புற எதார்த்தத்தின் ஒரு சித்திரம்தான் ( hyroglyph ) என்றும் புற உலகு பற்றி ஒருவர் நிழல் போன்ற  ஒரு குறியீட்டை மட்டுமே   பெற  இயலும் என்றும் எழுதினார்.லெனின் இதனை மறுத்தார். எதையும் முழுமையாக அறிய முடியாது என்ற அறியொணாக் கோட்பாட்டை பிளக்கனாவ் கூறுவதாக சாடினார்.உண்மையான எதார்த்த உலகம், இயற்கை ஆகியன  மனித அறிவுக்கு எட்டாதவை என்ற கருத்தை பிளக்கனாவ் முன்வைக்கின்றார்.

மாறாக புலன் உணர்வுகள்   புற உலகை பிரதியெடுத்தும், படமெடுத்தும், உண்மை எதார்த்தத்தை தர இயலும் என்று வாதிட்டார் லெனின்.உலகை மாற்றுவதற்கு உலகை அறிந்திடவேண்டும்.இதற்கு உலகை அரிய முடியும் என்ற பொருள்முதல்வாதக் கோட்பாடு உதவுகிறது.

**ரஷ்ய போல்ஷ்விக்காக இருந்த லூனாசார்ஷியும் கூட தத்துவ குழப்பத்தில் ஆளாகி,”நாத்திக மதம்”என்று உருவாக வேண்டுமெனவும்,அது “உயர்ந்த மனித ஆன்மாவாக”விளங்கிடும் என்ற வகையில் கருத்துக்களை வெளியிட்டார்.”கடவுள்-கட்டும்”இந்த வேலையை கடுமையாக சாடினார் லெனின்.பாரம்பர்யமான மத மூட நம்பிக்கைகளுக்கு பதிலாக அந்த இடத்தில் அதே மாதிரியான நம்பிக்கைகளை புதிய வகையில் புகுத்தும் முயற்சி என்று விமர்சித்தார்.

**அனுபவவாத விமர்சகர்கள்  மார்க்சிய வரலாற்றுப் பொருள்முதல்வாதத்திலும் தலையிட்டனர்.வரலாற்று நிகழ்வுகளை ஆராயும்போது உயிரியல்ரீதியான காரணங்கள்,சமூகவியல் ரீதியான அம்சங்களை விவாதிக்க வேண்டும் என்றனர்.மார்க்சியம் சமுக நிகழ்வுகளின் அனைத்துப் பரிமாணங்களையும் ஆராய்கிறது என்றாலும்,பொருளியல் அடிப்படையை வலியுறுத்துகிறது.இந்த அடிப்படையை நிராகரிப்பதாக அனுபவவாத விமர்சகர்கள் பார்வை உள்ளது என்று குறிப்பிடுகிறார்,லெனின்.

**சமுக உணர்வினை நிர்ணயிப்பதில் சமுக இருப்பு அல்லது எதார்த்தம் அடிப்படையானது என்பது மார்க்சிய வரலாற்றுப் பொருள்முதல்வாதம்.இதை மறுக்கும் வகையில் போகடானாவ் இரண்டையும் ஒன்றுபடுத்துவதாக கூறி ஒரு ஒருமைக் கோட்பாட்டை உருவாக்கினார்.இதில் சமுக சிந்தனையை முதன்மையாக்கி அந்த சிந்தனையை நிர்ணயிப்பதில்,பொருளியல் அடிப்படைகளின் முதன்மைப் பங்கினை  போகடானாவ் கைவிட்டதாக லெனின் குற்றம் சாட்டினார்.

**அனுபவாத விமர்சகர்களின் தத்துவம், பொருள்முதல்வாதம்,கருத்துமுதல்வாதம் என்ற இரண்டு எல்லைகளையெல்லாம் தாண்டிய நடுநிலையான தத்துவம் என்று தங்களது தத்துவத்தை அவர்கள் பாராட்டிக்கொண்டனர்.இந்த கருத்தினையும் லெனின் தாக்கினார்.ஒரு தத்துவவாதி நடுநிலை என்ற நிலையை தத்துவப் பிரச்னைகளில் எடுக்க முடியாது.ஏனென்றால்,பொருளா?கருத்தா?எது அடிப்படை என்பதுதான் தத்துவத்தின் அடிப்படைப் பிரச்னை.எது அடிப்படை என்ற நிலையெடுத்து தனது தத்துவத்தை விளக்கிட வேண்டும்.இதில் நடுநிலை இருக்க இயலாது.அப்படி இருப்பதாக கூறிக் கொள்வது ஏமாற்று வித்தை.

மார்க்சியம் எந்த தயக்கமும் இல்லாமல் தனது சார்புத்தன்மையை அறிவிக்கிறது.பொருள்தான் அடிப்படை என்ற இயக்கவியல் பொருள்முதல்வாதத்தினைப் பற்றி நிற்கிறது.

லெனின் நூலில் எழுதுகிறார்:

“துவக்கத்திலிருந்து கடைசி வரை மார்க்சும் எங்கெல்சும் தத்துவத்தில் சார்பு கொண்டவர்களாகவே இருந்தனர்.பொருள்முதல்வாதத்திலிருந்து திசைமாறுகிற ஒவ்வொரு விலகலையும் அவர்களால் கூர்ந்து கண்டுபிடிக்க முடிந்தது.ஒவ்வொரு புதிய போக்குகள் உருவெடுக்கும் போதும் அது கருத்துமுதல்வாதத்திற்கும் மத விசுவாசத்திற்கும் எவ்வாறு இடமளித்து சலுகைகள்  கொடுக்கிறது என்பதை நுணுகி கண்டறிந்தனர்…..”

எனவே தத்துவம் என்பது  எதோ சில அறிவுஜீவிகளின் மயிர் பிளக்கும் வாதங்களுக்கான களமாக லெனின் பார்க்கவில்லை.பாட்டாளி வர்க்கம் முதலாளித்துவத்திற்கு எதிராக நடத்தும் வாழ்வா,சாவா போராட்டத்தின் மற்றொரு களமாகவே லெனின் தத்துவத்தை அணுகினார்.

தத்துவத்துறையில் நிலைத்து நிற்கும் நூலாக…

லெனின் எழுதிய சில நூல்கள் மட்டுமே பரவலாக அறிமுகமாகியுள்ளன.அதிகம் அறியப்படாத நூல்கள் பல உள்ளன.அதிலும் குறிப்பாக தத்துவம் பற்றிய நூல்களை பலர் வாசிப்பதில்லை.அதற்கு முக்கிய காரணம்,அன்றாட அரசியல் தேவைகளுக்கு தத்துவம் உதவிடாது என்ற எண்ணம் பலரிடம் நீடிப்பதுதான்.ஆனால் எட்டு மாதங்கள் முழுமையாக செலவிட்டு இடைவிடாது எழுதி முடித்த“பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்” புரட்சிகர அரசியலுக்கு உதவிகரமாக அமைந்தது.

அந்த நூலை எழுதி முடித்தவுடன் லெனின் அந்நூல் உடனே வெளியாக வேண்டும் என்று அவசரம் காட்டினார் என்பது அவரது கடிதங்களில் தெரிய வருகிறது. பதிப்பகத்தாருக்கு அவர் எழுதிய ஒரு கடிதத்தில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.

“…..(1909) ஏப்ரல் முதல் வாரத்தில் நூல் வெளிவர வேண்டும்;இதற்கான வகையில் எல்லா திருத்தங்களையும் செய்து முடித்துக் கொடுத்துவிட்டேன்…..இதில்  ஒரு நூல் பங்களிப்பு என்ற நோக்கம் மட்டுமல்லாது ;இந்நூல் வெளிவருவது,முக்கியமான அரசியல் விளைவுகளோடு தொடர்புடையது ……”

 

இவ்வளவு  அவசரமும் ஆர்வமும் அவர் கொண்டிருந்ததற்குக் காரணம், நூலின் கருத்துக்கள் பாட்டளி வர்க்கத்திடம் இயக்கத்தினரிடம்  செல்ல வேண்டுமென்பதுதான். ரஷ்ய புரட்சிகர அரசியல் மாற்றத்திற்கு அந்த நூல் பயன்படும் என்று உறுதியாக நம்பினார்.

அவரது நம்பிக்கை வீண் போகவில்லை.“பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்”அன்று அந்த மாற்றத்திற்கான பணியை நிகழ்த்தியது. இந்நூல் வெளியான பிறகு ரஷ்யாவில் பரவலாக வாசிக்கப்பட்டது.இதையொட்டிய ரகசியக் வாசிப்புக் கூட்டங்கள்,விவாதங்கள் நடைபெற்றன.ரஷ்யாவில் மட்டுமல்லாது பாரிஸ் நகரத்தில் தொழிலாளர் கூட்டங்கள் நடந்தன.நாடு கடத்தப்பட்டவர்கள், சிறையிலிருப்பவர்கள் என பலரிடம் நூல் தாக்கத்தை ஏற்படுத்தியது.

அன்று லெனின் எதிர்பார்த்த அரசியல்மாற்றத்திற்கு இந்நூல் பயன்பட்டதுடன்,இன்றும் தத்துவத்துறையில் நீடித்து நிலைத்து நிற்கும் நூலாக விளங்குகிறது.

ஒரு புறம்,முதலாளித்துவ கார்ப்பரெட் சுரண்டல்,அதற்கு துணையாக நிற்கும் அரசு,அதிகாரம்,மறுபுறம்,சுரண்டலுக்கு ஆளாகி,மனமொடிந்து,வறுமைக்கும்,வேதனைக்கும் ஆளாகும் உழைக்கும் வர்க்கங்கள் என கூறுபட்டு நிற்பது இந்தச் சமுகம்.இது எதார்த்தம்.இந்த எதார்த்த நிலையிலிருந்து மாற்றத்திற்கான புரட்சிக்கான கருத்துக்கள் தோன்றுகின்றன.

கருத்திலிருந்து பொருள் என்ற வகையில் பார்த்தால் உண்மை எதார்த்தம் கடவுளால் அல்லது ஹெகலின் சொற்றொடரில் முழுமுதல் கருத்தினால் படைக்கப்பட்டது.அது மாற்ற முடியாதது என்ற முடிவிற்குத்தான் வர வேண்டியிருக்கும்.முதலாளித்துவம் நிரந்தரமானது என்றும் அது விதிக்கப்பட்டது என்றும் முடிவிற்கு இட்டுச் செல்வது கருத்துமுதல்வாதம்.உண்மை நிலையை மாற்றுவதற்கு இட்டுச் செல்வது பொருள்முதல்வாதம்.இதனால்தான் இயக்கவியல் பொருள்முதல்வாத அடிப்படைகளை பாதுகாப்பது புரட்சிகர கடமை என்று போதித்தார் லெனின்.

 

லெனினின் பார்வையில் அரசும் புரட்சியும் …

– ஜி.செல்வா

ரகசிய உத்தரவு வந்திருக்கிறது. லெனின் யார் தெரியுமா? அவர் இங்கே மறைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பிடிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கெள்ளுங்கள். லெனினைப் பிடித்தால் பெரும் பரிசுகள் கிடைக்கும்.

இது, ரஷ்ய நாட்டின் ஒரு பகுதியாக அப்போதிருந்த பின்லாந்து நாட்டின் கவர்னர் ஜெனரல் தனது தலைமை காவல்துறை அதிகாரியான ரேவியேவிடம் சொன்னது.
உத்தரவுகளை உள்வாங்கிக் கொண்டு ரேவியே நேரடியாக ரயில் நிலையம் செல்கிறார். அங்கிருந்த தபால்காரரிடம் கடிதங்களை பெற்று தனது சட்டைப்பைக்குள் செருகிக்கொள்கிறார். மளிகைக் கடைக்கு சென்று பத்து முட்டைகள், ரொட்டி, வெண்ணெய் வாங்கிக் கொண்டு அலுவலகத்திற்கு செல்லாமல் ஒரு பெரிய வீட்டின் ஐந்தாவது மாடியில் உள்ள தனது சிறிய வீட்டுக்கு செல்கிறார்.

அந்த வீட்டுக்குள்ளே அப்போது என்ன நடந்து கெண்டிருந்தது. அறையின் மூலையில் ஒரு மேஜை அருகே உட்கார்ந்து அரசும் புரட்சியும் என்ற நூலை எழுதிக் கொண்டிருந்தார் லெனின்.
நிற்க…

அரசும் புரட்சியும் லெனினது படைப்புகளில் மிக அடிப்படையான ஒன்றாக கருதப்படும் நூல். ரஷ்ய புரட்சிக்கு முன்னால் தலைமறைவு காலத்தின்போது எழுதப்பட்டது. 1917 ஆகஸ்ட் மாதத்தில் முதல் பதிப்பு வெளியிடப்பட்டு, 1918 டிசம்பர் 17-ல் இரண்டாம் பதிப்பு வெளியிடும்பேது அது ஒரு சிறு பகுதியை மட்டும் சேர்த்து வெளியிட்டார் லெனின்.

இந்நூல் முற்றுப்பெறாத படைப்பு.

1905ஆம் ஆண்டு மற்றும் 1917ஆம் ஆண்டு ரஷ்யப் புரட்சியின் அனுபவங்களை தொகுத்து இறுதியாக ஒரு அத்தியாயத்தை எழுதுவதாக லெனின் திட்டமிட்டிருந்தார். ஆனால், எழுத்தில் கொண்டுவர இயலவில்லை. காரணத்தை அவரே தெரிவிக்கிறார். 1917 அக்டோபர் புரட்சியின் தறுவாயில் அரசியல் நெருக்கடி குறுக்கிட்டுவிட்டது, இது போன்ற குறுக்கீடு
வரவேற்கத்தக்கதே!

புரட்சியின் அனுபவத்தை எழுதுவதைக் காட்டிலும் நேரில் வாழ்ந்து காண்பது மேலும் இனிதாகவும், பயனுள்ளதாகவும் இருக்கிறது.

புரட்சி, புரட்சி, புரட்சி இதையே மையமாகக் கொண்டு  இலக்காகக்கெண்டு முழு நேரமாக சிந்தித்து, செயல்பட்டு வாழ்ந்த போராளிகளுக்கு உண்மையில் இதைவிட ஆனந்தம் என்னதான் இருக்கமுடியும். எதற்காக எழுதினார் லெனின்

பாட்டாளி வர்க்கப் புரட்சியை நோக்கி ரஷ்ய தேசம் வீறுநடை போட்டு சென்று கெண்டிருந்த காலக்கட்டம். ஜார் மன்னன் விரட்டப்பட்டு, தற்காலிக அரசாங்கம் சோசலிஸ்டுகள், காடெட்டுகள் உள்ளிட்டு மார்க்சிய பெயரிலான குழுக்கள் அதிகாரத்தில் பங்கெடுத்திருந்தனர். பதவிக்கு வந்தவுடன் இவர்கள் அடித்த அந்தர் பல்டிகளை லெனின் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தினார்.

மார்க்சியத்தின் மிக முக்கியமான கருத்துகளை திரித்துக் கூற முயன்றனர். அதில் ஒன்று அரசு குறித்த மார்க்சிய பார்வை. எனவேதான், இந்நூலின் முன்னுரையின் முதல் வரியிலேயே, அரசு பற்றிய பிரச்சனை தத்துவத்திலும், நடைமுறை அரசியலிலும் இன்று மிகுந்த முக்கியத்துவம் பெற்று வருகிறது எனக் குறிப்பிட்டு உலகப் பாட்டாளி வர்க்கப் புரட்சி முற்றி வருவது தெளிவாகத் தெரிகிறது.

அரசின்பால் இதற்குள்ள உறவு பற்றி பிரச்சனை நடைமுறை முக்கியத்துவமுடையதாகி விடுகிறது என்கிறார். மேலும், அரசு குறித்து சந்தர்ப்பவாதத் தப்பெண்ணங்களை எதிர்த்துப் போராடாமல், பொதுவில் முதலாளித்துவ வர்க்கத்தின் செல்
வாக்கிலிருந்தும், குறிப்பாய் ஏகாதிபத்திய முதலாளித்துவ வர்க்கத்தின் செல்வாக்கிலிருந்தும் உழைப்பாளி மக்களை விடுவிக்கப் போராடுவது சாத்தியமன்று… ஆகவே, அரசின்பால் சோசலிசப் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்குள்ள உறவு குறித்த பிரச்சனை நடைமுறை அரசியல் முக்கியத்துவம் மட்டுமின்றி, இன்றைய மிக அவசர அவசியப் பிரச்சனையாகவும் முக்கியத்துவம் பெற்று வருகிறது என்கிறார்.

பெரும்பாலான லெனினது நூல்களைப் போல் அரசும் புரட்சியும் தனது எதிராளிகளுக்கு அதாவது மார்க்சிய தத்துவத்தின் எதிராளிகளுக்கு விளக்கமளிக்கவும், அதன்வழி போல்ஷ்விக் கட்சி ஊழியர்களை தத்துவார்த்த ரீதியாக
வளர்த்தெடுக்கவுமே எழுதியுள்ளார். இந்த நூலானது, அரசு குறித்த மார்க்ஸ், ஏங்கெல்ஸ் ஆகியேரின் கருத்துகளை எடுத்துரைப்பதாகவே அமைந்துள்ளது. இதன் காரணமாக லெனின் சொன்னது போல் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் ஆகியோரின் நீண்ட மேற்கோள்கள் புத்தகம் எங்கும் விரவியிருப்பதை காணலாம்.

மார்க்சியப் பார்வையில் அரசு வர்க்கப் பகைமைகள் இணக்கம் காணமுடியாதவை ஆனதன் விளைவே அரசு. எங்கே எப்போது எந்த அளவிற்கு வர்க்கப் பகைமைகள் புறநிலை காரணங்களால் இணக்கம் காண முடியாதவை
ஆகின்றனவோ அங்கே அப்போது, அந்த அளவுக்கு அரசு உதித்தெழுகிறது. எதிர்மறையாக கூறுகையில், அரசு ஒன்று இருப்பதானது, வர்க்கப் பகைமைகளை இணக்கம் காண முடியாததன் இருத்தலை நிரூபிக்கிறது என அரசு குறித்து
லெனின் வரையறுக்கிறார்.

எங்கெல்சின் புகழ்பெற்ற நூல்களில் ஒன்றான குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் என்ற நூலிலிருந்தே பெரும்பாலான மேற்கோள்களை எடுத்துக்காட்டி லெனின் முதல் அத்தியாயம் முழுவதையும் எழுதியுள்ளார். ஏங்கெல்ஸ் நூலின் ரஷ்ய மொழிபெயர்ப்பு பெரும்
பிழைகளுடன் இருப்பதால் ஜெர்மன் மூலத்திலிருந்தே மேற்கோள்களை மொழிபெயர்த்துள்ளதாக லெனின் தெரிவிக்கிறார்.

லெனின் அரசின் தோற்றம் குறித்து இவ்வளவு அக்கறையோடு வெளிப்படுத்துவவற்கு காரணம் என்ன?

அன்றைக்கு அவர் முன்னால் இருந்த கடமையானது, ரஷ்ய பாட்டாளி வர்க்க சோசலிசப்புரட்சி. அதை நிறைவேற்றுவதற்கான சூழல்கள்பொருந்தியிருந்தன. ஆனால், தத்துவார்த்த தளத்தில் இதற்கு இடையூறு மிக நாசூக்காக மேற்கொள்ளப்பட்டது. இந்த இடையூறுகளை
அம்பலப்படுத்துவதும், அப்போதைய சோசலிசப் புரட்சிக்கு அரசு அதிகாரத்தை அழித்தொழிப்பதும் பிரதான விசயமாக முன்னிருந்தது.

எனவே, அரசும் புரட்சியும் நூலில் இந்த கருத்துகளை மையமாகக் கொண்டே லெனின் தனது எழுத்துகளை வார்த்தெடுத்தார். இதற்கு வரலாற்று காரணங்களும் உண்டு.

லெனின் தன் சமகாலத்தில் பல நாடுகளில் அதிகாரத்திலிருந்த முதலாளித்துவ வர்க்கங்கள் தொழிலாளி வர்க்க இயக்க்ததை பிளவுபடுத்த எடுத்த முயற்சிகளை கண்கூடாகப் பார்த்தார்.

பாட்டாளி வர்க்கப் புரட்சியை திசைதிருப்பும் பொருட்டு தொழிலாளி வர்க்கத்திற்கு சிறு சலுகைகள் வழங்குவது, பிற்போக்கு முதலாளித் துவ அரசாங்கங்களில் சோசலிஸ்டு கட்சிகளின் சீர்திருத்தவாத தலைவர்களுக்கு பதவிகள் தருவது போன்றவை. 1892-ல் ஆங்கில நாடாளுமன்றத்திலும், 1899 பிரெஞ்சு அரசாங்கத்திலும் சோசலிஸ்டுகள் அதிகாரத்தில் பங்கு கொண்டனர்.

பிரெஞ்சு நாடாளுமன்றத்தில் சோசலிஸ்ட் தலை வர் மில்லிரான் பங்கு பெற்றதானது, பிரான்சில் தொழிலாளி வர்க்க இயக்கத்திற்கு மாபெரும் தீங்கு விளைவித்தது. இதை லெனின் கடுமையாக கண்டித்தார். இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் இத்தாலியிலும், சோசலிஸ்ட் கட்சியினர் முதலாளித்துவ அரசாங்கத்தில் இணைந்து கொண்டனர்.
முதல் உலகப் போரின்பேது பல நாடுகளிலிருந்து சோசலிசம் பேசும் கட்சிகள், அதன் தலைவர்கள், தத்தம் நாடுகளின் முதலாளித்துவ அரசாங்கங்களில் பதவியில் பங்கேற்று, அவர்களது கொள்கைக்கு ஆதரவாக பேசவும் ஆரம்பித்தனர். இவ்வாறு பேசுபவர்களில் மிக முக்கிய மானவர் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த காவுட்ஸ்கி (1854-1938). இவர் இரண்டாம் கம்யூனிஸ்ட் அகிலத்தின் தலைவராக இருந்தவர். மார்க்சியவாதியாக இருந்து மார்க்சின்ப டைப்புகளை மொழிபெயர்த்தவர். ஆனால், பிறகு மார்க்சியத் துக்கு விரோதமாக செயல்பட ஆரம்பித்தார்.

மார்க்சியத்தை கொச்சைப்படுத்தினார். குறிப்பாக நாடாளுமன்ற ஜனநாயக முறையின் மூலமே தொழிலாளி வர்க்கத்தின் விடுதலைக்கு சாத்தியம் உண்டு என பேசினார். இத்தகைய கருத்துகளுக்கு எதிராக மிக உக்கிரமான போராட்டத்தை லெனின் நடத்தினார்.

ஜனநாயக குடியரசானது முதலாளித்துவத்தில் பாட்டாளி வர்க்கத்துக்கு மிகச் சிறந்த அரசு அமைப்பாகுமென நாம் அதனை ஆதரிக்கிறோம். ஆனால், மிகவும் ஜனநாயகமான முதலாளித்துவக் குடியரசிலும்கூட கூலியடிமையிலேதான் மக்கள் உழல வேண்டியிருக்கிறது. மேலும், ஒவ்வொரு அரசும் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தை அடக்கி ஆள்வதற்கான தனிவகை சக்தியே. எனவே, எந்தவொரு அரசும் சுதந்திரமானது
அல்ல; மக்கள் அரசும் அல்ல. மார்க்சும் ஏங்கெல்சும் 1870ஆம் ஆண்டுகளில் தமது கட்சித் தோழர்களுக்கு இதைத் திரும்பத் திரும்ப விளக்கக் கூறினார்கள் என லெனின் காவுட்ஸ்கிவாதங்களுக்கு பதிலடி கெடுத்தார்.

மார்க்ஸ் கருத்தோட்டத்தில் ஏற்பட்ட வளர்ச்சிப் போக்கு மார்க்சிய தத்துவமானது நடைமுறைச் செயல்பாடுகளுக்கான வழிகாட்டியாகும். அப்படியெனில் அத்தத்துவ வளர்ச்சிப் போக்குக்கும் நடை முறை அனுபவத்தின் வாயிலாகவே செழுமைப் பட்டிருக்கும் அல்லவா. அரசு குறித்த கருத் தோட்டத்திற்கும் இதுவே அடிப்படை.

லெனின் இந்த வளர்ச்சிப் போக்கை, மிகச் சிரத்தையுடன் எடுத்துச் செல்லும் பாங்கே மிக அற்புதமாக அமைந்துள்ளது. மார்க்சின் நூல்கள் அதிலும் முதிர்ச்சியுற்ற மார்க்சியத்தின் முதலாவது நூல்களான மெய்யறிவின் வறுமை, கம்யூனிஸ்ட் அறிக்கை இதைத் தொடர்ந்து லூயி போனப்பர்த்தின் பதினெட்டாம் புரூமேர் நூல்களிலிருந்து மேற்கோள்களை எடுத்தாண்டு மார்க்சியத்தின் அரசு குறித்த பார்வையை வளர்ச் சியை விவரிக்கிறார் லெனின்.  வர்க்கங்கள் ஒழிக்கப்பட்டதும், அரசு மறைந்து விடுமென பொதுவான விளக்கத்தை மெய்யறிவின் வறுமை நூலில் சொன்ன மார்க்ஸ், அடுத்த சில மாதங்கள் கழித்து ஏங்கெல்சுடன் இணைந்து எழுதிய கம்யூனிஸ்ட் அறிக்கையில் இன்னும் துல்லியமாய் பேசுகிறார்.

பாட்டாளி வர்க்கம் தனது அரசியல் மேலாண்மையைப் பயன்படுத்தி முதலாளித்துவ வர்க்கத்திடமிருந்து படிப்படியாய் மூலதனம் முழுவதையும் கைப்பற்றும். உற்பத்திக் கருவிகள் யாவற்றையும் அரசின்கைகளில் அதாவது ஆளும் வர்க்கமாய் ஒழுங்கமைந்த பாட்டாளி வர்க்கத்தின் கைகளில் ஒருசேர மையப்படுத்தும். இங்கு அரசு, அதாவது ஆளும் வர்க்கமாய்
ஒழுங்கமைந்த பாட்டாளி வர்க்கம் என்பது வரலாற்றில் பாட்டாளி வர்க்கத்துக்குரிய புரட்சி பாத்திரம் குறித்த மார்க்சிய போதனை என்கிறார் லெனின். அப்படியெனில் முதலாளித்துவ வர்க்கத்தினர் தமக்கென உருவாக்கிக் கொண்ட அரசுப் பொறியமைவை முதலில் ஒழித்திடாமல்,
தகர்த்தெறியாமல் இத்தகைய ஒழுங்கமைப்புகளை உருவாக்க முடியுமென நினைக்கலாமா? இதற்கான கருத்துகளை, விடைகளை மார்க்ஸ் 1848-51ஆம் ஆண்டுகளில் பிரான்ஸ் நாட்டு புரட்சி வரலாற்றிலிருந்து பெறப்பட்ட படிப்
பினைகள் வாயிலாக லூயி போனபர்த்தின் பதினெட்டாம் புரூமேர் நூலில் கூறுகிறார். அதன் சாராம்சத்தை லெனின், அரசை வர்க்க ஆதிக்கத்துக்கான உறுப்பாக கருத வேண்டும். பாட்டாளிவர்க்கம் முதலாளி அரசு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றாமல், அரசியல் அதிகாரத்தைப் பெறாமல் ஆளும் வர்க்கமாய் ஒழுங்கமைக்கப்பட்ட பாட்டாளி வர்க்கமாய் மாற்றாமல் முதலாளித்துவத்தை வீழ்த்த முடியாது. முந்திய புரட்சிகள் எல்லாம் அரசுப் பொறியவையைச் செம்மை செய்தன. ஆனால், இந்தப் பொறியமைவை தகர்த்து நொறுக்க வேண்டும் என்கிறார்.

இங்கு ஒரு கேள்வி இயல்பாக எழக்கூடும். பிரெஞ்சு நாட்டின் வரலாற்றை மட்டுமே மையமாகக் கெர்ணடு ஒரு பொதுவான முடிவுக்கு வர முடியுமா? அதுவும் 1848-51க்கு இடைப்பட்ட மூன்று ஆண்டுகள் பிரெஞ்சு வரலாற்றை விரிவான அரங்கில் கையாள்வது சரியா? இதற்கு விடையாய் இந்நூலில் ஏங்கெல்ஸ் பதினெட் டாம் புரூமேர் நூலுக்கு எழுதிய முன்னுரையை லெனின் குறிப்பிட்டுள்ளார். படித்து, இன்புற்று, கிளர்ச்சியடைய வேண்டிய எழுத்துக்கள் அவை. பாரிஸ் கம்யூனும் மார்க்சும் 1871ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18ஆம் நாள் பாட்டாளி வர்க்கப் புரட்சி பாரிஸ் கம்யூனை பிரகடனம் செய்தது. பாரிஸ் தொழிலாளர்கள் ஒரு சாதகமில்லாத சூழ்நிலையில் பக்குவமில்லாத நடவடிக்கையை எடுத்துவிடுவார்கள் என மார்க்ஸ் முதலில் பயந்தார். எனினும் புரட்சி வெடித்தவுடன் கம்யூனர்டுகளுடைய வீரத்தையும் தன்னலமற்ற தியாகத்தையும் ஈடுபாட்டையும் வெகுவாகப் பாராட்டி, போற்றிப் புகழ்ந்தார்.

கம்யூனின் செயல்பாட்டில் நடவடிக்கைகளின் மகத்தான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்னவென்றால், அது வரலாற்றிலேயே முதல் தடவையாக பூர்ஷ்வா வர்க்கத்தினுடைய ராணுவ – அதிகார வர்க்க அரசாங்க எந்திரத்தை தகர்த்து எறிவதற்கு முதலாவது நடைமுறை முயற்சி எடுக்கப்பட்டதில் அடங்கியிருக்கிறது. அந்த நடவடிக்கை சோசலிசப் புரட்சியின் வெற்றிக்கு ஒரு அவசியமான நிபந்தனையாகும் என்றார் மார்க்ஸ்.

நூற்றுக்கணக்கான வேலைத் திட்டங்கள், வாதங்களை காட்டிலும் மிக முக்கியமானதாக பாரிஸ் கம்யூனின் அனுபவத்திலிருந்து மார்க்ஸ் பார்த்தார் இந்த புரட்சி இயக்கத்திலிருந்து அனுபவங்களையும், படிப்பினைகளையும் பெற்று தமது தத்துவப் பார்வையை மறுபரிசீலன செய்து பார்க்க முயன்றார் மார்க்ஸ். கம்யூனிஸ்ட் அறிக்கையில் திருத்தத்தினை மேற்கெண்டார்.

பாரிஸ் கம்யூனானது முக்கியமாய் ஒரு விவரத்தை அதாவது ஏற்கனவே உள்ள ஒரு அரசுப் பொறியமைவைத் தொழிலாளி வர்க்கம் அப்படியே கைப்பற்றி தனது செந்த நோக்கத் திற்காக பயன்படுத்திக் கொள்ள முடியாது என்பதை நிரூபித்துக் காட்டியது அதாவது, அதிகார வர்க்க – ராணுவ அரசுப் பொறியமைவை அழித்தொழிப்பது மெய்யான மக்கள் புரட்சி ஒவ்வொன்றின் முன் நிபந்தனையாகும் என்கிறார் மார்க்ஸ்.

இங்கு மக்கள் புரட்சி என்று மார்க்ஸ் சொல்வதற்கு காரணம் உண்டு. அன்று 1871-ல் ஐரோப்பாவில் பாட்டாளி வர்க்கம் எங்கும் பெரும்பான்மையிராக இல்லை. பாட்டாளி வர்க்கம், விவசாயிகள் இவ்விரு வர்க்கங்கள் தான் அன்று மக்கள் என்போர். அதிகார வர்க்க – ராணுவ அரசுப் பொறியமைவு இந்த இரண்டு வர்க்கங்களையும் ஒடுக்கியும் நசுக்கியும் சுரண்டி வருகிறது என்பதால் இயல்பாக ஒன்றிணைக்கப் படுகின்றன.

இவ்வாறு மார்க்சால் முன்வைக்கப்பட்டு லெனினால் வளர்த்தெடுக்கப்பட்ட தொழிலாளி – விவசாயி கூட்டணி என்னும் கருத்து ரஷ்யப் புரட்சியின்போதும் வெற்றிகரமான சோசலிச நிர்மாணத்தின் போதும் எதார்த்த நிலைக்கு மாற்றப்பட்டது. சோசலிசப் புரட்சியில் விவசாயிகளின் தீர்மானமான பங்கைப் பற்றி நரேத்னிக்குகள் மற்றும் சோசலிஸ்டு புரட்சி கட்சியினரின் தவறான தத்துவங்களையும் விவசாயிகள் புரட்சி கரமான வாய்ப்புகளை இயல்புகளை மறுத்த மென்ஷ்விக்குகளின் தவறான கருத்தோட்டங்க ளையும் உடைத்தெறிந்தார் லெனின்.

கம்யூனது அனுபவத்தை ஏங்கெல்ஸ் தொடர்ந்து பலமுறை பல்வேறு தத்துவார்த்த விவாதங்களில் பகுத்து ஆராய்ந்து எழுதியிருக்கிறார். இதன் காரணமாகவே இந்நூலில் ஏங்கெல்ஸ் கூறிய படைப்புகளின் சாராம்சத்தை தனி அத்தியாயமாகவே லெனின் தொகுத்து கொடுத்துள்ளார். அதில் ஒன்று குடியிருப்பு பிரச்சனை பற்றி ஏங்கெல்ஸ் 1872-ல் தனது நூலில் எடுத்துரைத்தது.

பாட்டாளி வர்க்க அரசு அதிகாரத்திற்கு வந்தவுடன் குடியிருப்பு பிரச்சனைக்கு எவ்வாறு தீர்வு காணும்? இது முதலாளித்துவ ஆட்சியதிகாரத்திலிருந்து எப்படி வேறுபட்டிருக்கும்? என்பதை பாரிஸ் கம்யூன் அனுபவத்திலிருந்து ஏங்கெல்ஸ் ஆராய்கிறார்.

சோசலிசம், கம்யூனிசம் ஆகிய இரண்டு கட்டங்களில் அரசு புரட்சி குறித்து எவ்வளவு தெளிவான தீர்க் கமான பார்வையேடு செயல்பட வேண்டுமென் பதை மார்க்சிய மூலவர்களின் எழுத்துகளும் சிந்தனைகளும் இங்கு நமக்கு
புரியவைக்கப்படுகின்றன. அரசு உலர்ந்து உதிர்ந்து விழும் என்ற ஏங்கெல்சின் சொற்றொடர் எவ்வாறெல்லாம் அந்த கருத்தின்

சாராம்சத்தை புரிந்து கெள்ளாமல் திரித்து கூறப்படுகிறது என்பதை லெனின் மிகுந்த கவனத்துடன் எடுத்துரைக்கிறார்.
அரசு எப்போது மறையும், வர்க்கங்களற்ற சமுதாயம் எந்த கட்டத்தில் உருவாகும் என்பதை மார்க்ஸ், ஏங்கெல்ஸ் எழுத்துகளின் வழிநின்று எடுத்துரைக்கிறார்.

முதலாளித்துவ ஜனநாயகத் தின் பலவீனங்களை கிழி கிழி என்று கிழித்துத் தொங்கப் போட்டுவிட்டு அதைவிட மேலான ஜனநாயகம், வாழ்க்கை முறை, சோசலிசத்திலும், கம்யூனிச சமூகத்திலும் எப்படி இருக்கும் என் பதை வெளிப்படுத்துகிறார். முதலாளித்துவ ஜனநாயகம் என்பது மிக சிலருக்கு, அதாவது செல்வந்தருக்கான ஜனநாயகம் தான். வாக்குரிமை, பிரதிநிதித்துவ சபையில் பங்கேற்பு, கூட்டம் கூடும் உரிமைகள் போன்றவை முதலாளித்துவ சமூகத்தில் இருந்தபோதிலும் இதன் மீது ஏழ மக்களுக்கு, உழைக்கும் வர்க்கத்தினருக்கு விதிக் கப்படும் கட்டுப்பாடுகளும் விலங்குகளும் விலக்கல்களும் ஏராளம் ஏராளம். இது ஜனநாயகத்தில் நேரடியாக பங்கு கொள்வதிலிருந்து ஒதுக்கி வெளியே தள்ளுவதற்கு சமமாகும்.

கம்யூனிச சமுதாயத்தில்தான் முதலாளிகளுடைய எதிர்ப்பு அடியோடு நசுக்கப்பட்டு முதலாளிகள் மறைந்துபோய் வர்க்கங்கள் இல்லாமல் போய்விடும். …அப்பொழுதுதான் முழு நிறைவான ஜனநாயகம் விதிவிலக்கு எதுவுமில்லாத ஜனநாயகம் சாத்தியமாகும். அப்போது அரசு உலர்ந்து உதிரத் தொடங்கும் என்கிறார் லெனின். இந்த கம்யூனிச சமுதாயத்தின் வளர்ச்சிப் போக்குகளை ஆராய்ந்து கம்யூனிசத்தின் முதற் கட்டத் தில் அதாவது சோசலிசத்தில் முதலாளித்துவ உரிமை அதன் முழு அளவிலும் ஒழிக்கப்படுவதில்லை. பகுதி அளவுக்கே. இதுகாறும் உருப்பெற்றுள்ள பொருளாதார புரட்சிக்கு ஏற்ற அளவுக்கே அதாவது உற்பத்தி சாதனங்களை பொறுத்தமட்டிலுமே ஒழிக்கப்படுகிறது. முதலாளித்துவ உரிமை இவற்றை தனிநபருடைய தனி உரிமையாய் அங்கீகரிக்கிறது. சோசலிசம் இவற்றை பொதுவுடைமையாய் மாற்றுகிறது. அந்த அளவுக்கு – அந்த அளவுக்கு – மட்டுமே முதலாளித்துவ உரிமை மறைகிறது. இதற்கு அடுத்த உயர் கட்டமான கம்யூனிச சமுதாயத்தில்தான் அரசு பூர்ணமாய் உலர்ந்து உதிர பாதை திறக்கப்பட்டுவிடும். இப்படியாய் அரசின் தோற்றம் முதற்கொண்டு அதன் மறைவு வரை மார்க்சிய பார்வையை லெனின் அரசும் புரட்சியும் நூலில் எடுத்துரைக்கிறார்.

நிறைவாக

அரசு, புரட்சி இன்று இந்திய சமூகத்தில் கம்யூனிஸ்டுகள் எதிர்கொள்ளும் மிக முக்கியமான கருத்துகள். அரசு குறித்தும் அரசாங்கத்தின் நிர்ணயிப்புகள் சம்பந்தமாகவும், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தில் நடைபெற்ற தத்துவார்த்த விவாதங்களும், மோதல்களும், பிளவுகளும் கற்றுணர வேண்டிய மிக முக்கியமான பாடங்கள். இந்திய அரசு குறித்து மார்க்சிஸ்ட் கட்சி நிர்ணயிப்பும், இந்திய புரட்சியின் கட்டம் குறித்த நிலைபாடுகளும் உள்வாங்கிக் கொண்டு செயலாற்றுவது மிக முக்கியமானது.

அவ்வாறு செயல்படும்போது இயக்கவியல் வரலாற்று பொருள் முதல்வாதப் பாதையில் சமூகத்தில் நடைபெறும் நிகழ்வுப் போக்குகளை எவ்வாறு ஆராய்வது, கம்யூனிச இயக்கத்திற்குள் எப்படியெல்லாம் தவறான கருத்துகள் உருவெடுக்கும், அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதையெல்லாம் மார்க்சிய செவ்விலக்கிய நூல்களிலிருந்து அறிய முடியும். எவ்வளவுதான் நூல்கள்வழி கற்றறிந்தாலும் இன்று எதிர்கொள்ளும் நடைமுறை பிரச்சனைகளேடு உரசிப்
பார்த்து தத்துவப் பார்வையை வளர்த்தெடுத்து செயல்படுவதுதான் சிறந்தது. இதைத்தான் லெனினது அரசும் புரட்சியும் சுட்டிக்காட்டுகிறது.