தமிழகத்தில் சோவியத் புரட்சியின் தாக்கம்

– இரா.சிசுபாலன்

மகத்தான நவம்பர் புரட்சி மனிதகுல வரலாற் றில் மாபெரும் திருப்பு முனையாக அமைந்தது. சோசலிசப் புரட்சி இயக்கத்தில் புதிய கட்டம் துவங்கியது. கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் மக்கள் ஜனநாயகப் புரட்சிகள், மகத்தான சீனப்புரட்சி, வியட்நாம், கியூபப்புரட்சிகள், ஆசிய, ஆப்பிரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடுகளின் தேசிய விடுதலைப்புரட்சிகள் மகத்தான வெற்றி பெற நவம்பர் புரட்சியே ஆதர்ச மாய் விளங்கியது.

இந்திய விடுதலை இயக்கம் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்த சமயத்தில் நவம்பர் புரட்சி இந்தியப் புரட்சியாளர்கள் மீது புதிய வெளிச் சத்தைப் பாய்ச்சியது. அவர்கள் இந்திய விடுதலையை வெறும் அரசியல் விடுதலையாக மட்டுமல்லா மல், அது சமூகப் பொருளாதார விடுதலையாக மட்டுமல்லாமல், அது சமூகப் பொருளாதார விடுதலையாகவும் அமையவேண்டும் என்ற புதிய கண்ணோட்டத்தைப் பெற்றனர். தமிழகத்தில் நவம்பர் புரட்சி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

ரஷ்யப்புரட்சியை யுகப்புரட்சி என வரவேற்ற மகாகவி பாரதி, முப்பது கோடி ஜனங்களின் சங்க முழுமைக்கும் பொதுவுடைமை, ஒப்பில்லாத சமுதாயம் உலகிற்கொரு புதுமை எனப் பாடி னார். புரட்சி, பொதுவுடைமை ஆகிய கருத்து களைத் தமிழகத்தில் முதன்முதலில் விதைத்தவர் மகாகவியே ஆவார். மேலும், குடிமக்கள் சொன்ன படி குடிவாழ்வு, மேன்மையுறக் குடிமை நீதி என சோசலிசத்தைப் புரிந்து கொண்டு இந்தியா விலும் அத்தகைய இலட்சியம் ஈடேற வேண்டும் என்றார். சோசலிசம் என மேலை நாட்டினர் குறிப்பிடுவது என்னவென்று இங்குத் தெளி வாகப் புரிந்து கொள்ளப்படவில்லை. எனினும் மேலை நாட்டுக்கும் சரி, கீழை நாட்டுக்கும் சரி கவுரவமான வாழ்க்கை நடத்து வதற்கு ஒரே மார்க்கம்தான் உள்ளது. உலகைப் பொது வுடைமையாக்கி, அதில் சகத் தொழிலாளிகளாகவும், கூட்டுப் பங்காளிகளாகவும் வாழ்வதே அந்த மார்க்க மாகும் என 1925ம் ஆண்டு The Coming Age என்ற ஆங்கிலக் கட்டுரையில் மகாகவி குறிப் பிட்டார். நவம்பர் புரட்சியைப் பற்றி இந்திய மொழிகளிலேயே தமிழில் தான் பாரதியார் முதலில் பாடினார்.

சமரச சன்மார்க்கமே தேச விடுதலையின் சாராம்சம் எனக் குறிப்பிட்ட தியாகி சுப்பிரமணிய சிவா தனது பாரதீய மதத்தின் இலட்சியமாக எல்லோருக்கும் பொதுவான சமரச சன்மார்க்க விடுதலையையே பிரகடனப்படுத்தினார். ஆன்மீக விடுதலை என்பதே தேச விடுதலைதான் என அவர் விளக்கினார். தன் மீதான வழக்குகளில் நீதிமன்றங்களில் அவர் அளித்த வாக்கு மூலங்கள் இதனை உறுதிப் படுத்துகின்றன. எப்பொழுது, எங்கே சுதந்தரம் நசுக்கப்படுகிறதோ, நசுக்கப்பட முயற்சி செய்யப் படுகிறதோ அப்பொழுது அங்கே என்னால் முடிந்த வன்மையுடன், எனது எதிர்ப்புக்குரலைக் கிளப்புவதும், சிரமப்பட்டு சுதந்தரம் ஒளிர்விட பாடுபடுவதும் எனது தர்மமாகும். உலகிலே அடிமைப்பட்டுக்கிடக்கும் சகல மக்களுக்கும் நியாயத்தை எடுத்துரைப்பது எனது தர்மமாகும் எனக் குறிப்பிட்டார்.

1919ம் ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி சென்னையில் சுப்பிரமணிய சிவா ஏற்பாடு செய்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய வ.உ.சி, ஆங்கி லேயரின் கொடுங்கோன்மை, பலாத்காரம், நீதி யின்மை ஆகியவையே அவர்களுக்கு எதிரான சதி வேலைகளுக்கு அடிப்படையாக அமைந்தது என்றார். 1920 ஜூன் 21ல் திருநெல்வேலியில் நடைபெற்ற காங்கிரசின் இருபத்தி ஆறாவது மாநில மாநாட்டில் வ.உ.சி இரண்டு தீர்மானங்களை முன்மொழிந்தார். அதில் ஒன்று தொழிலா ளர் சங்கங்களைப் பற்றியது. காங்கிரஸ் கட்சி நாடுமுழுவதும் தொழிற் சங்கங்களைத் துவக்க வேண்டுமெனவும், நியாயமான குறைந்தபட்ச ஊதியம், அளவான பணிநேரம், நிறைவான கண்ணியமிக்க குடியிருப்பு வசதி, முழுமையான தடையற்ற சங்கம் அமைக்கும் உரிமை வேண்டும் எனவும் அத்தீர்மானம் குறிப்பிட்டது. மேலும் சென்னை மாநில மேலவைக்குத் தொழிலாளர் களிடமிருந்து போதுமான பிரதிநிதிகள் தேர்ந் தெடுக்கப்பட வழிவகை செய்யப்பட வேண்டு மெனவும் அத்தீர்மானம் வலியுறுத்தியது.

1921ம் ஆண்டு மகாத்மா காந்திக்கு பொதுவுடைமைச் சிற்பி சிங்காரவேலர் பகிரங்கக் கடிதம் ஒன்றை எழுதினார். ஊமையராய் உள்ள இந்த நாட்டின் லட்சக்கணக்கானவர்களின் நல்வாழ்வுக்கு தாங் கள் பாடுபடுவதால் நான் தங்களை ஆதரிக்கிறேன். துர்பாக்கிய நிலையிலுள்ள நமது மக்கள் தற்போ தைய அந்நிய அதிகார வர்க்கத்தை எதிர்த்து வெற்றி பெற்றால் மட்டும் போதாது; நமது சொந்த மக்களின் எதிர்கால அதிகாரவர்க்கத்தை எதிர்த்தும் போராடி முறியடித்தால்தான் சுதந்தர மும், மகிழ்ச்சியும் கிட்டும். நிலமும், ஆலைகளும் அனைவருக்கும் பொதுவாக்கப்பட்டு நாட்டில் தொழிலாளர் அனைவரின் நன்மைக்காகவும் பயன்படும் கம்யூனிசம் மட்டுமே நமது மக்களுக்கு விடுதலை கிட்டியதற்கான உண்மையான அளவு கோலாக இருக்க முடியும் என அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

1922ம் ஆண்டு கயாவில் நடை பெற்ற இந்திய தேசியக்காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்ற சிங்காரவேலர், உலகக் கம்யூனிஸ்டு களின் பிரதிநிதியாகத் தன்னைப் பிரகடனப்படுத் தினார். 1923ம் ஆண்டு சென்னை மெரினா கடற்கரையில் நாட்டிலேயே முதன்முறையாக மே தினக் கொடியை ஏற்றி வைத்து தொழிலாளர் சுயராஜ்ஜியம் அமைய வேண்டும் என முழங் கினார். இக்கூட்டத்துக்கு வேலாயுதம் தலைமை தாங்கினார். தியாகி சுப்பிரமணிய சிவா, கிருஷ்ண சாமி சர்மா ஆகியோர் உரையாற்றினர்.
இக்கூட்டத்தில் தொழிலாளர் – விவசாயிகள் கட்சி ஒன்று அமைக்கப்பட்டு, அதன் கொள்கை அறிக்கை வெளியிடப்பட்டது; இந்திய தேசியக் காங்கிரஸ், நாடு என்பதை உடமை வார்க்கத்தின் உரிமையாகவே வரையறுக்கிறது. அவர்களது சுயராஜ்ய திட்டத்தில் தொழிலாளிகளும், ஏழை விவசாயிகளும் செல்வர்களின் நலனுக்குத் தன் னையே தியாகம் செய்து கொள்ள வேண்டும். இன்றைய ஐரோப்பிய எஜமானர்களுக்கு பதிலாக இந்திய அதிகார வர்க்கத்தை உருவாக்குவதே அவர்களது நோக்கமாக உள்ளது. முதலாளி களும், ஜமீன்தார்களும் காங்கிரசின் முதுகெலும் பாக உள்ளதால் தொழிலாளர்களுக்குக் காங் கிரஸ் ஒரு நன்மையும் செய்யாது. எனவே தொழி லாளர், விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கக் கூடிய, வர்க்க உணர்வு கொண்ட அரசியல் கட்சி தேவைப்படுகிறது எனக் கட்சியின் கொள்கை அறிக்கை பிரகடனப்படுத்தியது. நாட்டின் அர சாட்சி முறை இந்துஸ்தான் பஞ்சாயத்து என்னும் கூட்டாட்சியாக இருக்கும். கிராம மட்டத்தி லிருந்து மத்திய அரசு மட்டம் வரை பஞ்சாயத் துக்கான உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். மத்திய அரசின் மைய உறுப்பாக அனைத்துப் பஞ்சாயத்துகளின் காங்கிரஸ் அமைந்திருக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியை மக்கள் திருப்பி அழைத்துக் கொள்ள உரிமை உண்டு என அப்பிரகடனம் மேலும் குறிப்பிட்டது.

இக்கட்சியின் பத்திரிகைகளாக லேபர் -கிசான் கெசட் என்ற ஆங்கில இதழும், தொழிலாளி என்ற தமிழ் இதழும் வெளிவந்தன. இவற்றின் மூலம் கொள்கைப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

மாமேதை லெனின் மறைந்தபொழுது லேபர் – கிசான் கெசட் தனது அஞ்சலியில் பின்வரு மாறு குறிப்பிட்டது: அரசியல் சிந்தனையிலும், தத்துவத்திலும் லெனின் அவர்கள் தமது சொந்த நாட்டின் செய்த மகத்தான புரட்சி ஒரு வேளை அழிக்கப்படலாம் அல்லது சில சுயநல மனிதர் களால் துடைத்தெறியப்படலாம். ஆனால் அது மீண்டும் மீண்டும் தன்னைப் புனரமைத்துக் கொண்டு உலகை வெல்லும், உலகம் முழுவதும் உள்ள உழைப்பாளர்களுக்கு உன்னத வாழ்வளிக்கும் தீர்க்கதரிசனமான வார்த்தைகள்!

தமிழ்த்தென்றல் திரு.வி.க தேசபக்தன் (1917), நவசக்தி (1920) ஆகிய இதழ்களில் பொதுவு டைமைக் கருத்துகளை எழுதிவந்தார். முற்போக் காளராகத் திகழ்ந்த அவர், சன்மார்க்கமும், சமதர்மமும் கலக்க வேண்டும் என வலியுறுத் தினார். நவசக்தி-யின் இலட்சியங்களாகப் பின் வருவனவற்றைப் பட்டியலிட்டுள்ளார் (22.10.1920)

 1. மக்கள் சுதந்தரத்துக்கு அடிப்படையானது ஜனநாயக முறையாதலால் அதை நாடி உழைத்தல்.
 2. ஜனநாயக முறைக்கு அடிகோல வேண்டு வது தொழிலாளர் இயக்கமாதலால் அவ்வியக் கத்தை வளர்க்க முயலல்.
 3. தொழிலாளர் இயக்கத்தை வலுப்படுத்த வும், அவர்களது குறைகளை நிவர்த்திக்கவும், அவர்கள் வழி ஆட்சி முறையைத் திருப்பவும், அவர்கட்கெனத் தனியாக உழைக்கவும் தொழிற் கட்சியை ஓம்பவும், விவசாயிகளின் கஷ்டங்களைப் போக்க முயலவும் தொழிற்சாலைகளைப் பெருக்குதல்
 4. பெண்கள் நலனுக்குப் பாடுபடுதல்.
 5. தமிழ் மொழியையும், தமிழ்நாட்டுப்பழைய பழக்க வழக்கங்களையும் செப்பஞ்செய்தல்.
 6. தமிழ்நாட்டில் தோன்றியுள்ள சாதியப்பகை, வகுப்பு துவேசம் முதலியவற்றை ஒழித்துச் சகோதர நேயத்தை வளர்த்தல்.
 7. தேசத்துக்குத் தீங்கிழைக்கும் கட்சிகளைக் கண்டித்து, அக்கட்சித் தலைவர்களை நேசித்துத் தேச வளர்ச்சியை நாடும் கட்சியில் அவர்களைத் திருப்பமுயலல்.
 8. இந்தியாவில் பிறந்த அனைவரையும் இந்திய ராகக் கருதி, அவரை ஒரினமாக்கி, அவர் நலத்துக் காகத் தியாகம் செய்தல்.

சென்னை நகரில் ஆங்கிலேய முதலாளிக்குச் சொந்தமான பக்கிங்காம் கர்னாடிக் பஞ்சாலை யில் தொழிற்சங்கம் துவக்கப்பட்ட அனுபவத்தைத் தனது வாழ்க்கைக் குறிப்பில் திரு.வி.க பின்வரு மாறு குறிப்பிட்டுள்ளார்:

1918ம் ஆண்டு மார்ச் மாதம் 2ம் தேதி ஜங்கார மாயம்மாள் பங்களாவில் வெங்கடேச குணாமிர் தவர்ஷினி சபை சார்பில் தொழிலாளர் கூட்டம் ஒன்று நடைபெற்றுது. பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்கள் கடந்து கூட்டத்தைச் சிறப்பித் தனர். தொழிலாளர் மைதானத்தை நிரப்பினர்; மதில்களை நிரப்பினர், மரங்களையும் நிரப்பினர்… யான் மேல் நாட்டில் தொழிலாளரியக்கம் தோன்றிய வரலாற்றையும், பொருளாதார விடுதலையின் மாண்பையும், தொழிலாளர் சங்கத்தின் அவசியத் தையும் விளக்கிப்பேசினேன். தொழிலாளர்களிடையே புத்துணர்ச்சி தோன்றித்ததும்பி வழிந்தது.. அன்று போலீஸ் நடவடிக்கை வெறுக்கத் தக்கதாக இருந்தது. தொழிலாளர் பொறுமை காத்தனர்.
1918ம் ஆண்டு ஏப்ரல் 27 அன்று சென்னைத் தொழிலாளர் சங்கம் காணப்பட்டது. திரு.வாடியா தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். திவான் பகதூர் கேசவப் பிள்ளையும், யானும், வேறு சிலரும் உதவித் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப் பட்டோம். தோழர்கள் இராமாஞ்சலு நாயுடுவும், செல்வபதி செட்டியாரும் காரியதரிசிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

1943ம் ஆண்டு நவம்பர் புரட்சி தினத்தன்று சோவியத் யூனியனுக்கு திரு.வி.க வாழ்த்துச் செய்தி அனுப்பினார்:
கவிஞர்களும், தத்துவஞானிகளும் நீண்டகாலமாகச் சுதந்தரச் சூரியன் என்று பாடியும், பேசியும் வந்தனர். அச்சூரியன் தோன்றி ஏறக்குறைய கால் நூற்றாண்டாகிறது. அச்சூரியன் எது? அதுவே சோவியத் யூனியன். அந்த யூனியனிடத்தில் எனது உள்ளம் தவழ்ந்து ஏறக்குறைய இருபது ஆண்டு களாகின்றன. 1921ம் ஆண்டு சென்னைத் தொழி லாளர் சங்கத் தலைவன் என்ற முறையில் எனக்கு முதன்முதல் சோவியத் கதிராகிய லெனின் படம் கிடைத்தது. அன்று முதல் லெனின் கொள்கை களை என்னால் இயன்றவரை பரப்பி வருகிறேன். உலகம் முழுவதும் சோவியத்மயமாக வேண்டு மென்று கனவு காண்பவருள் யானும் ஒருவன். அக்கனவு நினைவாய்ச் செயலாய் முகிழ்க்கும் காலம் அணித்தே நிற்றல் கண்டு மகிழ்வெய்து கிறேன். சோவியத் யூனியனை மூடப்பாசிச மேகங் கள் தவழ்கின்றன. அம்மேகங்கள் ஒழிந்ததும், உல கம் முழுவதும் சதந்தரச் சூரியனால் ஒளி காணும். அப்பொழுது உலகின் பீடைகள் போகும், கவன நீங்கும், எங்கும் பொதுமை தாணடவம் புரியும், அமைதி நிலவும். செஞ்சேனை வெற்றி உண்டாவ தாகுக என அச்செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.

1932ம் ஆண்டு தந்தை பெரியார் ஐரோப்பிய நாடுகளுக்கும், சோவியத் யூனியனுக்கும் பயணம் மேற்கொண்டார், அதன் விளைவாக சோசலிசக் கருத்துகள் மீது அவருக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. வெளிநாட்டுப் பயணம் முடித்து வந்து தமிழகத் தில் சோசலிசத்தின் மேன்மையைப் பிரச்சாரம் செய்யும் பணியில் ஈடுபட்டார். அவ்வாண்டு டிசம்பரில் ஈரோட்டில் பெரியார் இல்லத்தில் சுயமரியாதை சமதர்மக்கட்சி தொடங்கப்பட்டது. அக்கட்சியின் திட்டம் ஈரோடு திட்டம் என்ற அழைக்கப்பட்டது.அத்திட்டத்தின்முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

 1. பிரிட்டிஷ் முதலிய எந்தவித முதலாளித் துவத் தன்மை கொண்ட ஆட்சியிலிருந்தும் இந்தி யாவைப் பூரண விடுதலை அடையச்செய்வது.
 2. எல்லா தேசக் கடன்களும் ரத்து.
  தொழிற்சாலை, ரயில்வே, வங்கிகள் தேசியமயம்.
  விவசாய நிலம், காடுகள்- மக்களின் உரிமை.
  விவசாயக் கடன் ரத்து.
 3. சுதேச சமஸ்தானங்களை ஒழித்து இந்தியா வைத் தொழிலாளர் விவசாயிகள் ஆட்சியின் கீழ் கொண்டு வருதல்.
 4. ஏழு மணி நேர வேலை நாள் இத்திட்டத்தை விளக்கி தந்தைபெரியார், ஜீவா, சிங்காரவேலர் ஆகியோர் தமிழகம் முழுவ தும் பட்டிதொட்டி எங்கும் பிரச்சாரம் மேற் கொண்டு வந்தனர்.

1935ம் ஆண்டு மாவீரன் பகத்சிங் எழுதிய நான் ஏன் நாத்திகன் ஆனேன்? என்ற நுலை ஜீவா மொழிபெயர்க்க, அதனைக்குடியரசு இதழில் வெளியிட்டதால் ஜீவாவும், தந்தை பெரியாரின் சகோதரரும், விடுதலை இதழ் வெளியீட்டாளரு மான ஈ.வெ.கிருஷ்ணசாமியும், தந்தை பெரியாரும் கைது செய்யப்பட்டனர். குடியரசு (1925), சம தர்மம் (1934), பகுத்தறிவு (1935), புரட்சி (1934) சுநஎடிடவ (1928), விடுதலை (1934), உண்மை (1970) ஆகிய இதழ்களை ஈ.வெ.ரா நடத்தி வந்தார். மக்களிடம் சுயமரியாதையும், சமத்துவமும், சகோதரத்து வமும் ஓங்கிவளரவேண்டும் என்ற கருத்தை இவ்விதழ்களில் வெளியிட்டு வந்தார். லெனினும் மதமும், பொதுவுடைமைத் தத்துவங்கள் ஆகிய நூல்களையும் வெளியிட்டார்.

இந்திய விடுதலைப் போராளிகள் பலர் ரஷ்யா வில் மேதை லெனினை நேரில் சந்தித்து இந்திய விடுதலைப்போராட்ட நிகழ்வுகள் குறித்து விவாதித்துள்ளனர். அவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.டி ஆச்சார்யாவும் ஒருவராவார். 1920ம் ஆண்டு அக்டோபர் 17 அன்ற தாஷ்கண்டில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைத் துவக்கியவர் களில் எம்.பி.டி ஆச்சார்யாவும் ஒருவர் என்பது குறிப்பிட்டத்தக்கது.

சோவியத் புரட்சியை சாத்தியமாக்கிய போல்ஷ்விக் கட்சி வரலாறு

– ஜி.செல்வா

1903-ல் குறைந்த எண்ணிக்கையில் தலை மறைவு புரட்சிக் குழுக்களாக இருந்த இயக்கம், ஆயிரக்கணக்கான உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாக 1912-ல் உருவெடுக்கிறது. 1917-ல் சோசலிசப் புரட்சியை தலைமைதாங்கி வழி நடத்த 3 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாக பல்கிப் பெருகுகிறது. அதுதான் ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சி (போல்ஷ்விக்).

“புரட்சிகளின் நூற்றாண்டாக” இருபதாம் நூற்றாண்டை மாற்றி ரஷ்யாவில் புரட்சியை நடத்தி, சோசலிசப் பாதைக்கு அடித்தளமிட்டு, உலக மெல்லாம் பாட்டாளி வர்க்க கருத்துக்கள் வெடித்து எழும்ப வித்திட்டது ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி. இதன் வரலாற்றை மிகக் கச்சிதமாக மார்க்சிய, லெனினிய சித்தாந்தப் பார்வையில், எழுதப்பட்ட புத்தகம்தான் சோவியத் கம்யூனிஸ்ட் (போல்ஷ்விக்) கட்சியின் வரலாறு என்னும் நூல்.

நூல் உருவானப் பின்னணி
உலக மக்களுக்கு ஆதர்ஷ சக்தியாக சோசலி சப் பாதையில் சோவியத் யூனியன் முன்னேறிக் கொண்டிருந்த காலம். அப்போது சோசலிச கட்டு மானத்தைத் துரிதப்படுத்துவதில் ஏற்பட்ட அளவிடற்கரிய பிரச்சனைகள், சோவியத் யூனியன் எதிர்கொண்ட அபாயங்கள் மற்றும் சவால்களால் கட்சி ஊழியர்களுக்கு தத்துவார்த்த, அரசியல் பயிற்சி அளிப்பது முக்கியத்துவம் பெற்றது.

மார்க்சிய – லெனினிய அடிப்படை ஞானத்தில் தேர்ச்சி பெற்று அதனை சோசலிச கட்டுமானத் தில் முறையாகப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலுவாக வலியுறுத்திய ஸ்டாலின் “அனைத்து நடைமுறைப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்பதற்குத் தேவையானது கட்சி ஊழியர் களுக்கு சித்தாந்தப் பயிற்சி அளிப்பதும் அவர் களை அரசியல் ரீதியில் பயிற்றுவித்து வலுப் படுத்துவதும்தான்” எனக் கருதினார்.
இதற்கு உதவியாய் கட்சி வரலாற்றை சொல்லித் தரும் வகையில் புத்தகம் எழுதுவதற்கு ஸ்டாலின் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. 1937ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அக்குழுவினர் எழுதியதை அரசியல் தலைமைக் குழு சரிபார்த்து கொடுத்தது. அதன் ஆலோசனைகளை ஏற்று அடுத்த நான்கு மாதங்களில் மேம்படுத்தப்பட்டு புத்தகமாக உருவெடுத்தது. இப்புத்தகம் 1938 ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி முதல் 50 லட்சம் பிரதி கள் வெளியான பிராவ்தா கட்சி நாளிதழில் தொடராக வெளியிடப்படுகிறது. 1938 ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி சோவியத் கம்யூனிஸ்ட் (போல்ஷ்விக்) கட்சியின் வரலாறு என்ற நூலாக வெளியிடப்படுகிறது. அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டும் என்பதற்காக மிகக் குறைவாக விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

1939 மே மாதத்தில் இந்நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு அமெரிக்காவில் மட்டும் ஒரு லட்சம் பிரதிகள் அச்சடிக்கப்பட்டு 3 மாதத்திற் குள் 70,000 பிரதிகள் விற்பனை ஆயின. அதே காலகட்டத்தில் 28 மொழிகளில் மொழிபெயர்க் கப்பட்டுள்ளது. 1953க்குள் ரஷ்யாவில் மட்டும் 301 முறை பதிப்பிக்கப்பட்டு 42,82,60,000 புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன.

1947 ஜனவரி மாதம், ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கவுன்சில் உறுப்பினராக இருந்த வரும், சமரன் பத்திரிகையின் ஆசியரிரும், ஜூலியஸ் பூசிக்கின் தூக்கு மேடைக் குறிப்பு நூலை தமிழில் மொழி பெயர்த்தவருமான எம்.இஸ்மத் பாஷாவால் இந்நூல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

இதன் இரண்டாவது பதிப்பு 1979 டிசம்பர் மாதம் ஸ்டா லின் நூற்றாண்டு விழாவின்போது சென்னை புக் ஹவுஸ் வெளியிட்டுள்ளது. நவம்பர் புரட்சி நூற்றாண்டினை முன்னிட்டு பாரதி புத்தகாலயம் இந்நூலினை மீண்டும் பதிப்பித்துள்ளது.

1883 முதல் 1937ஆம் ஆண்டு வரையிலான வரலாறு சுமார் 600 பக்கங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நூலின் மையக் கருவாக விளங்கும் கருத்துக் களை இக்கட்டுரையில் சுருக்கமாகப் பார்க்கலாம்.

கரு உருமாறி வெளியேறும் காலக்கட்டம்
புரட்சியாளர் லெனின், அரசியல் தளத்திற்கு வருவதற்கு முன்பாகவே, ரஷ்ய தேசத்தில் உழைக் கும் மக்களுக்கான போராட்ட அமைப்புகள் தொடங்கப்பட்டு விட்டன. ஜார் ஆட்சியின் கொடுமைக்கும்,சுரண்டலுக்கும் உள்ளாகியிருந்த மக்கள் வெடித்துக் கிளம்பினர்.அதே காலக் கட்டத்தில் ரஷ்யாவின் நகரங்களில் மட்டுமல்லா மல், கிராமங்களிலும் தொழிற்சாலைகள் அமைந் ததால் முதலாளித்துவம் வளர்ச்சியடையத் தொடங்கி இருந்தது.

1875-ல் தென் ரஷ்ய தொழிலாளர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அது ஒன்பது மாதங் களுக்குள் ஆட்சியாளர்களால் நிர்மூலமாக்கப் படுகிறது. 1878-ல் வட ரஷ்ய தொழிலாளர் சங்கத்தை ஒரு தச்சுத் தொழிலாளியும், பிட்டரும் இணைந்து உருவாக்குகின்றனர். இப்படிப்பட்ட அமைப்புகள் உருவானது குறித்தும், உருவாக் கியவர்கள் குறித்தும் மிகச் சுவையான செய்திகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. 1881-1886 கால கட்டங்களில் மட்டும் 48 வேலை நிறுத்தங்கள் நடந்துள்ளன. இதில் 80 ஆயிரம் தொழிலாளர் கள் பங்கேற்றுள்ளனர்.
ரஷ்யாவில் முதல் மார்க்சிஸ்ட் குழு 1883-ல் ஜி.வி.பிளக்கனோவ் தலைமையில் ‘தொழிலாளர் விடுதலைக்குழு’ என்ற பெயரில் அமைக்கப் படுகிறது. இவ்வமைப்பு மார்க்ஸ், ஏங்கல்ஸ் நூல்களை ரஷ்ய மொழியில் வெளியிடுகிறது. கம்யூனிஸ்ட் அறிக்கை, கூலி உழைப்பும் மூலதன மும், கற்பனாவாத சோசலிசமும் விஞ்ஞான சோசலிசமும் ஆகிய நூல்களை வெளிநாடுகளில் அச்சடித்து, ரஷ்ய நாட்டு தொழிலாளிகளிடம் விநியோகிக்கின்றனர்.
இக்காலக் கட்டத்தில் ‘நரோத்னிக்’ என்ற அமைப்பினரும், பிளக்கனோவும் நிகழ்த்திய சித்தாந்தப் போராட்டம் மிக முக்கியமானது. நரோத்னிக் என்ற ரஷ்ய வார்த்தையின் பொருள் மக்களிடம் செல்வது. புரட்சிகர எண்ணம் கொண்ட படித்த இளைஞர்கள் இந்த அமைப் பில் சேர ஆரம்பித்தனர். இவர்கள் ரஷ்யாவில் தற்செயலான நிகழ்வுப் போக்குதான் முதலாளித் துவம். எனவே, இது வளராது என்றும், கிராமப் புற விவசாயிகள் தான் புரட்சிகரமானவர்கள், தனிச்சிறப்பு வாய்ந்த தனி நபர்களால்தான் சரித்திரம் உருவாக்கப்படுகிறது என்றும் கருதினர்.

இவர்களுக்கு எதிராக பிளக்கனோவும், அவரைத் தொடர்ந்து லெனினும் நடத்திய உரையாடல், எழுத்துக்கள் மிக விரிவாக இந்நூலில் கொடுக் கப்பட்டுள்ளது. இதே பிளக்கனோவ், எதிர் காலத்தில் லெனினின் கருத்துக்கு எதிர்திசைக்கு சென்றார். இருந்தாலும் அவரது பங்களிப்பு இந்நூலில் உரிய முறையில் அங்கீகரிக்கப்பட்டு உள்ளது. பிளக்கனோவ் 1895-ல் வெளியிட்ட சரித்திரத்தின் ஒருமைவாத வளர்ச்சியைப் பற்றி என்ற புத்தகம் “ரஷ்ய மார்க்சிஸ்டுகளின் ஒரு தலைமுறை முழுவதையும் அறிவியல் பக்குவப் படுத்த பணிபுரிந்தது” என லெனின் கூறியுள்ளார்.

தத்துவ அடிப்படையில் தொழிலாளி வர்க்க இயக்கத்தைக் கட்ட முதல் வேலையைச் செய்தது தொழிலாளர் விடுதலைக் குழு என லெனின் புகழாரம் சூட்டியுள்ளார். எனவேதான் அக்கால கட்டத் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் வளர்ச் சியை கரு உருமாறி வெளியேறும் வளர்ச்சியில் இருந்ததாக லெனின் கூறினார்.

புரட்சிகர தத்துவம் ; புரட்சிகர இயக்கம்
புரட்சிகரமான தத்துவம் என்றால் என்ன? புரட்சிகரமான இயக்கம் என்றால் என்ன? தத்துவத்திற்கும்,நடைமுறைகளுக்குமான தொடர்பு எப்படி இருக்க வேண்டும்? இப்படி யான கேள்விகளுக்கு ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி வரலாறும், அதில் லெனினும் அவர்தம் தோழர் களின் எழுத்துகளும், செயல்பாடுகளுமே நமக்கு விடையாக அமையும்.
லெனின் என்னும் மனிதரின் ஆளுமையும், அவர் புரட்சிகர இயக்கத்தில் இணைந்த பிறகு ஏற்பட்ட மாற்றங்களும், மிக விரிவாக இந்நூலில் சொல்லப்பட்டுள்ளது.
மார்க்சைப் பற்றி அவர் தெரிந்து கொண்டிருந்த அசாதாரணமான விஷய ஞானம், அன்றைய ரஷ்யாவில் நிலவிய அரசியல், பொருளாதார நிலைமைகளுக்கு ஏற்றவாறு மார்க்சியத்தைப் பொருத்திக் காண்பிப்பதில் அவருக்கிருந்த திறமை, தொழிலாளர்களின் லட்சியம், நிச்சயம் வெற்றிய டையும் என்பதில் அவருக்கிருந்த அசைக்க முடி யாத நம்பிக்கை, அமைப்புகளை உருவாக்குவதில் அவர் காட்டிய தனிச்சிறப்பு வாய்ந்த ஆற்றல் ஆகியவையெல்லாம் லெனினை செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மார்க்சிஸ்டுகள் அனைவராலும் மனப்பூர்வமாக ஒப்புக்கொள்ளப்பட்ட தலைவ ராக ஏற்கச் செய்தன.

1898-ல் ரஷ்ய சமூக ஜனநாயக தொழிற் கட்சி முதல் மாநாட்டில் 9 பேர் தான் பங்கு கொண் டனர். அப்போது லெனின் நாடு கடத்தப்பட்டு சைபீரியாவில் இருந்ததால் பங்கெடுக்க முடிய வில்லை.இம்மாநாட்டிலிருந்துதான் ரஷ்ய கம்யூ னிஸ்ட் கட்சியின் வரலாறு கூறப்பட்டுள்ளது.
நரோத்னிக்குள் மற்றும் பொருளாதாரவாதிகள் அதாவது பொருளாதார கோரிக்கைகளுக் காக நடத்தப்படும் போராட்டங்களில் மட்டும் தான் தொழிலாளர்கள் ஈடுபட வேண்டும் என விடாப்பிடியாக கருதும் குழுவினர். இவர்களின் கருத்தோட்டத்திற்கு எதிராக லெனின் நடத்திய சித்தாந்தப் போராட்டம் மிகத் தெளிவாக நூலில் சொல்லப்பட்டுள்ளது. லெனினது மிக முக்கியப் படைப்பான ரஷ்யாவில் முதலாளித் துவ வளர்ச்சி நூலிலிருந்து கொடுக்கப்பட்டுள்ள கருத்துகள் கம்யூனிஸ்ட்களுக்கு மிக தேவையான ஒன்றே. வேதனை என்னவெனில் இதுவரை தமிழில் வெளிவரவில்லை.

லெனின் எழுதுகிறார் “உடனடியாக நிறை வேற்ற வேண்டிய வேலையை நம்முன் இன்று சரித்திரம் வைத்திருக்கிறது. இந்த உடனடியான வேலை மிகமிகப் புரட்சிகரமானது. மற்ற நாட்டு பாட்டாளிகளின் முன் நிற்கின்ற உடனடியான வேலைகள் யாவற்றையும் விட மிகவும் புரட்சி கரமான வேலையாகும். இந்த வேலையைச் செய்து முடித்தால், ஐரோப்பிய பிற்போக்கிற்கு மட்டுமல்லாமல் ஆசியாவின் பிற்போக்கிற்கும் மிகவும் வலுவான கோட்டையாக திகழும் ஜார் ஆட்சியை அழித்து ஒழிப்பதால், புரட்சிகரமான சர்வதேசப்பாட்டாளி வர்க்கத்துக்கு ரஷ்ய பாட்டாளி வர்க்கம் முன்னணிப்படையாக ஆகும்.” எவ்வளவு தீர்க்கமான, தெளிவான பார்வை. அதை நோக்கி லெனின் நடத்திய பயணம்தான் கற்க வேண்டிய பாடம்.

கட்சி அமைப்பு எப்படி இருக்க வேண்டும் என உலக கம்யூனிச இயக்கத்துக்கு வலுவான கருத் தியலை கொடுத்தது மட்டுமல்லாமல் நடைமுறைப் படுத்தியும் காண்பித்தவர் லெனின். கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபன செயல்பாடுகளை கொச்சை யாக, கேலியாக, விஷமத்தனமாக இன்றும் அதி கார வர்க்கத்தினர் எழுதியும், பேசியும் வருகின் றனர். சில நேரங்களில் இக்கருத்துக்கள் கம்யூனிஸ்ட் ஊழியர்களிடத்தும் செல்வாக்கு செலுத்தும்.

புரட்சி நடத்த வேண்டுமானால் புரட்சிகர இயக்கம், அதாவது கம்யூனிஸ்ட் கட்சி கட்டப்பட வேண்டும். அது எப்படி இருக்க வேண்டும், எப்படி கட்ட வேண்டும் என்பதற்கு இந்நூலில் உள்ள விசயங்கள் இன்றும் நமக்கு வழிகாட்டும்.
கம்யூனிஸ்ட் கட்சிக்குள் நடைபெற்ற கருத்தி யல் ரீதியான போராட்டம் இரண்டு குழுக்களா கப் பிளவுபட நேர்ந்தது. லெனினைப் பின்பற்றிய வர்கள் போல்ஷ்விக்குகள் (அதாவது பெரும் பான்மை உறுப்பினர்கள் என்ற அர்த்தத்தில்) என்றும், எண்ணிக்கையில் குறைவாக இருந்தவர் கள் மென்ஷ்விக்குகள் எனவும் அழைக்கப்பட்டனர்.

போல்ஷ்விக்குகளுக்கும், மென்ஷ்விக்குகளுக் கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதலின் காரணங்கள், அக்காலகட்டத்தில் லெனின் எழுதிய நூல்களிலிருந்து பல்வேறு கருத்துக்கள் இந்நூலில் எடுத்தாளப்பட்டுள்ளது.

ரஷ்ய நாட்டிற்குள் மட்டும் இக்கருத்துப் போராட்டத்தை லெனின் நடத்தவில்லை. மேற்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்த சமூக ஜனநாயக கட்சிகளுடனும் சித்தாந்தப் போராட்டத்தை நடத்தி வந்தார். ஏங்கெல்ஸ் காலமான பிறகு மேற்கு ஐரோப்பிய சமூக ஜனநாயகக் கட்சிகள் சீரழிந்து போனதை போல்ஷ்விக்குகள் பார்த் தனர். ஏங்கெல்ஸ் காலத்தில் சமூகப் புரட்சிகர கட்சிகளாக இருந்த இயக்கங்கள் சமூக சீர்திருத் தக் கட்சிகளாக மாறி சீரழிந்து போயின. அவை ஒவ்வொன்றும் அமைப்பு ரீதியில், அந்தக் கட்சி யின் நாடாளுமன்ற சந்தர்ப்பவாதக் குழுக்களு டைய தொங்கு சதையாக ஏற்கனவே மாற்றப் பட்டு விட்டன. அத்தகைய கட்சிகளால் பாட்டாளி களுக்குப் பயன் எதுவும் இல்லை. தொழிலாளி வர்க்கத்தை அக்கட்சிகளால் வழிகாட்டி புரட் சியை நோக்கி அழைத்துச் செல்ல முடியாது என்பதை போல்ஷ்விக்குகள் தெளிவாக உணர்ந்தனர்.

உண்மையான மார்க்சியக் கட்சியை பெற்றி ருக்க விரும்புகிற எல்லோருக்கும் ஒரு உதாரண மாகத் திகழும் புதிய கட்சியை, போல்ஷ்விக் கட்சியைப் படைப்பதற்கு போல்ஷ்விக்குகள் விரும்பினார்கள். என்ன நேர்ந்தபோதிலும், எத்தகைய கஷ்டங்கள் வந்தபோதிலும் மனம் தளராமல் உறுதியுடன் விடாப்பிடியாக உழைத்து வந்தனர்.

இந்த வேலையில் லெனினுடைய நூல்கள் கட்சிக்கு மிகவும் அடிப்படையான – செல்நெறியை நிர்ணயிக்கும்படியான பங்கு வகித்தன. லெனின் எழுதிய என்ன செய்ய வேண்டும்? என்ற நூல் தான் அதற்கு அவசியமான கருத்தையும், கண்ணோட்டத் தையும் கொடுத்து தயாரிப்பு செய்தது. லெனின் எழுதிய ஓரடி முன்னால் ஈரடி பின்னால் என்ற நூல்தான் அத்தகைய கட்சிக்கு அமைப்பு ரீதியான தயாரிப்பாக இருந்தது. லெனின் எழுதிய, ஜன நாயகப் புரட்சியில் சமூக ஜனநாயகத்தின் இரு நடைமுறை உத்திகள் என்ற புத்தகம்தான் அரசியல் ரீதியான தயாரிப்பாக இருந்தது. லெனின் எழுதிய பொருள் முதல்வாதமும், அனுபவவாத விமர்சனமும் என்ற புத்தகம் கட்சிக்குத் தத்துவ ரீதியான அடித்தளமாக இருந்தது.

இப்படியாக கட்டப்பட்ட கட்சி புரட்சிக்கு மட்டுமல்ல, புரட்சிக்குப் பின்னரும் சோசலிசப் பாதை நோக்கி, இயந்திர தொழில்மயமாக்கு வதற்கு சோவியத் ஆட்சி மேற்கொண்ட அனைத் திற்கும் உதவிகரமாக இருந்ததுதான் இந்நூலின் வரலாறு நமக்கு சுட்டிக்காட்டுகிறது.

புரட்சி… புரட்சி… புரட்சி…
சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறே மூன்று புரட்சிகளின் வரலாறுதான். 1. 1905ஆம் ஆண்டு நடந்த முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி 2. 1917 மார்ச்சில் நடைபெற்ற முதலாளித் துவ ஜனநாயகப் புரட்சி 3. 1917-ல் நடைபெற்ற நவம்பர் சோசலிஸ்ட் புரட்சி. எப்படி இத்தகைய புரட்சிகள் சாத்தியமாயின?
எங்கள் தேவை
துண்டுத் துணி அல்ல;
முழு ஆடை
பருக்கைகளல்ல
முழுச் சாப்பாடு
ஒரு வேலை மட்டுமல்ல;முழுத் தொழிற்சாலையும் எங்களுக்குத் தேவை.

நிலக்கரி, தாதுப்பொருள், உலோகக் கரி
அத்தனையும் எங்களுக்குத் தேவை
எல்லாவற்றுக்கும் மேலாக
நாட்டின் ஆளும் அதிகாரமும்
எங்களுக்குத் தேவை
நல்லது
இவ்வளவும் எங்களுக்குத் தேவை
ஆனால்
நீங்கள் கொடுப்பது என்ன?

இது பிரக்டின் கவிதை வரிகள். இக்கவிதை வரிகளின் சாராம்சம்தான் மூன்று புரட்சிகளின் போதும் ரஷ்ய தொழிலாளிகளுக்கும், விவசாயி களுக்கும் ஜார் ஆட்சியை நோக்கிய, அதிகார வர்க்கத்தை நோக்கிய உணர்வுமிக்க முழக்கங் களாக மாறின.

ரஷ்ய தேசத்தின் வளர்ச்சியில் ஒரு சரித்திரப் பூர்வமான கட்டம் முழுவதையும் முதல் ரஷ்யப் புரட்சி (1905) குறித்தது.
இப்புரட்சி மக்களின் பரம விரோதி ஜார் ஆட்சி என்றும், முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சிக்குத் தலைமை தாங்குவதாக தொழிலாளி வர்க்கம் மட்டும்தான் இருக்க முடியும். ஊசலா டியபோதும் பாடுபடும் விவசாய வர்க்கம் தான் தொழிலாளி வர்க்கத்துடன் கூட்டுறவை ஏற்படுத் திக் கொள்ளத்தக்க முக்கியமான சக்தி என்பதும் நிரூபணமாயிற்று.

புரட்சியை குலைத்துக் கலைத்துவிடுவதை மென்ஷ்விக்குகள் தங்கள் பாதையாக கருதினர். எழுச்சியின் மூலம் ஜார் ஆட்சியை வீழ்த்துவதற் குப் பதில் அதை சீர்படுத்துவது எனக் கூறினர். இவ்விதம் சமரச சகதியில் மென்ஷ்விக்குகள் சிக் கினர். கட்சியிலும் தேசத்திலும் ஒரே ஒரு புரட்சி கரமான மார்க்சிஸ்ட் சக்தி, போல்ஷ்விக்கு கள்தான் என நிரூபிக்கப்பட்டது.

இப்புரட்சி தோல்வியில் முடிவடைந்ததைத் தொடர்ந்து 1908 முதல் 1912ஆம் ஆண்டு வரை மிக நெருக்கடியான காலக்கட்டத்தில் புரட்சிக் கான வேலை செய்வது கடினமானதாக மாறியது. இந்தச் சூழல்களுக்கு ஏற்றாற்போல் போல்ஷ் விக்குகள் நடைமுறை உத்திகளை மாற்றினர்.
சட்ட விரோதமான நடவடிக்கைகளையும், சட்டப்பூர்வமான செயல்பாடுகளையும் திறமை யாக இணைத்தனர். கட்சி விரோதமான பேர் வழிகளுக்கு எதிராக பிளக்கனோவ் உடன் சேர்ந்து தற்காலிக அணியை லெனின் அமைத் தார். இது கட்சிக்கு சாதகமாகவும், கட்சி விரோ திகளுக்கு பாதகமாகவும் இருக்க வேண்டும் என்பதே அடிப்படை.
இந்த நடைமுறை உத்தி எப்படி போல்ஷ் விக்குகளின் புரட்சிப் பணிக்கு சாத்தியமாயிற்று என்பதை நூலை வாசிக்கும்போது தெளிவாக உணரலாம். பத்திரிகைக்கு சந்தா சேர்ப்பு இயக் கம், தொழிலாளர் தொகுதியில் வெற்றி பெறு தல், சங்கத் தேர்வுகளில் பெற்ற வாக்குகள் என தொடர்ந்தது போல்ஷ்விக்குகளின் வெற்றிப் பயணம்.

முதலாவது உலக யுத்தம் தொடங்குவதற்கு முன்பே, லெனின் தலைமையிலான போல்ஷ்விக் குகள் அதை உணர்ந்தனர். “யுத்தம் என்பது முதலாளித்துவத்துடன் இரண்டறக் கலந்து நிற்கிற தவிர்க்க முடியாத விளைவு” என்று லெனின் சுட்டிக் காட்டினார். யுத்தத்திற்கு எதிராக எத்தகைய நிலைபாடுகளை மேற்கொள்ள வேண்டுமென லெனின் எழுதியும், பேசியும் வந்தார். சமாதானம் நிலவ வேண்டும் என்ற லட்சியத்துடன், பாட்டாளி வர்க்கப் புரட்சி வெற்றியடைய வேண்டும் என்ற லட்சியத்தைப் போல்ஷ்விக்குகள் இணைத்தனர். இந்த காலக்கட்டத்தில்தான் 1916-ல் லெனின் எழுதிய நூல் ஏகாதிபத்தியம் : முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம். இந்நூல் உலகத் தொழிலாளி வர்க்க இயக்கத்துக்கு லெனின் வழங்கிய அறிவுக் கருகூலம். இதன் வாயிலாக மார்க்சியத்தை லெனின் வளர்த்தெடுத்த நிகழ்வும் நடந்தேறியது. அதேபோல் இந்த யுத்த காலத்தின்போது லெனின் எழுதிய எழுத்துக்கள், இப்புத்தகத்தில் மேற்கோள்களாகத் தரப்பட்டுள்ளன.

ஏகாதிபத்தியம் குறித்து லெனின் ஆய்வு செய்த பல்வேறு விசயங்களை சுட்டிக்காட்டுகிறது இந்நூல். தனியாக ஒரு தேசத்தை மட்டும் எடுத்துக் கொண்டால், தனிதேசத்தில் சோசலி சம் வெற்றியடைய முடியாது என்றும், நாகரிகத் தில் முதிர்ந்த சகல தேசங்களிலும் ஒரே சமயத் தில்தான் அது வெற்றியடையும் என்றும் அக்காலத் திய மார்க்சிஸ்டுகள் சிலர் கருதினர். ஆனால், “லெனினோ ஏகாதிபத்திய முதலாளித்துவத் தைப் பற்றிய உண்மையான புள்ளி விவரங்களை ஆதாரமாகக் கொண்டு பழைய கருத்துக்கு மாறாக புதிய கருத்தை வளர்த்தெடுத்தார். இதன் படி ஒரே சமயத்தில் எல்லா தேசங்களிலும் சோசலி சம் வெற்றியடைவது என்பது அசாத்தியம். தனியான ஒரு முதலாளித்துவ நாட்டில் சோசலிசம் வெற்றியடைவதும் சாத்தியமே!” என்றார்.

இதுதான் யுத்தம், சமாதானம், புரட்சி ஆகிய வற்றைப் பற்றிய பிரச்சனைகளில் போல்ஷ்விக் குகள் கைக்கொண்ட தத்துவமும், நடைமுறை உத்தியுமாகும். இந்தக் கொள்கைகளை கொண்டு தான் ரஷ்யாவில் நடைமுறை வேலைகளை போல்ஷ்விக்குகள் நிறைவேற்றினர்.
விளைவு போல்ஷ்விக்குகள் மார்ச் மாத இரண்டா வது புரட்சியில் ஜனநாயகப் புரட்சியில் வெற்றி பெற்றனர். இதை நூலின் வாயிலாக வாசிக்க வாசிக்க புரட்சிகர உணர்வுகளும், சிந்தனைகளும் பெருக்கெடுத்து வருவதை வாசகரால் உணர முடியும்.

இதைத் தொடர்ந்து தற்காலிக அரசாங்கம் அமைந்தவுடன், அதில் பங்கு பெறவும் மந்திரி பதவிகள் பெறவும் மென்ஷ்விக்குகள் உள்ளிட்ட குழுவினர் வாய் பிளந்து காத்துக் கிடக்க, லெனினோ சோசலிசப் புரட்சியை நோக்கி களத்தை விரிவு படுத்தினார்.

முதலாளித்துவ புரட்சிகர கட்டத்திலிருந்து சோசலிசப் புரட்சிக் கட்டத்திற்கு முன்னேறி செல்வதற்கு கட்சிக்கும், பாட்டாளி வர்க்கத்திற் கும் வழிகாட்டினார். அது ஏப்ரல் கொள்கை என்ற நூலின் வழியாக நடந்தேறியது. மாறும் சூழல்களை மிக லாவகமாக உணர்ந்து, மார்க்சிய பகுப்பாய்வில் வர்க்கங்களின் நிலை அறிந்து வழி காட்டிய லெனின் நமக்குப் பேராசானாகத் திகழ்கிறார்.

போல்ஷ்விக் கட்சியினால் வழிகாட்டப்பட்டு ஏழை விவசாயிகளுடன் கூட்டுறவு ஏற்படுத்திக் கொண்டு, ராணுவ வீரர்கள், கடற்படையினரின் ஆதரவையும் பெற்று, முதலாளிகளுடைய அதி காரத்தை தொழிலாளி வர்க்கம் அடியோடு வீழ்த்தியது. “நவம்பர் 7 சோசலிசப் புரட்சி” முதலாளித்துவத்தை தகர்த்து தவிடுபொடியாக் கியது.

சோசலிசத்தை நோக்கி…

நவம்பர் புரட்சியைத் தொடர்ந்து லெனின் தலைமையிலான புரட்சிகர அரசு மேற்கொண்ட பயணம், உலகக் கம்யூனிஸ்டுகளுக்கு ஒரு பாடம். பன்னாட்டு முதலாளித்துவ சக்திகளிடமிருந்தும், உள்நாட்டில் வெண் படைகளை சமாளித்தும், புரட்சி மீதான மக்களின் ஆசைகளை, வேண்டு கோளை நிறைவேற்ற லெனின் எடுத்த நிலைபாடு கள், செயல்பாடுகள் இந்நூலில் கொடுக்கப் பட்டுள்ளன.
இந்த சோசலிசப் பாதை எவ்வளவு கடுமை யாக இருந்திருக்கும் என்பதை சார்லஸ் பெட்டில் ஹெய்ம் என்ற பிரெஞ்சு பொருளாதார நிபுணரின் கணிப்பின் மூலம் அறிய முடிகிறது. “சோவியத் யூனியனில் சோசலிசத்தைக் கட்டுவதற்காகப் பணிக்கப்பட்டவர்களில் நான்கில் மூன்று பேர் ஜார் மன்னனின் அதிகார வர்க்கத்தைச் சேர்ந்த முன்னாள் ஊழியர்கள். ஒரு புரட்சிகரமான சமு தாயத்தைக் கட்டியமைக்க எந்த வகையிலும் பொருத்தமற்றவர்கள். அதேவேளையில் சோவியத் பொருளாதாரம் போருக்கு முன்பிருந்த நிலையி லிருந்து 10 சதவீத வீழ்ச்சியை சந்தித்தது. இத்தகைய கடினமான சூழ்நிலையில் தங்களின் வாழ்க்கையை வேறு எங்காவது அமைத்துக்கொள்ள வாய்ப் புடைய படித்தவர்கள் உள்ளிட்ட 20 லட்சம் மக்கள் ரஷ்யாவிட்டு வெளியேறினர்.”

இப்படியான சூழல்களுக்கு மத்தியில் தான் சோசலிசத்திற்கான அடித்தளத்தை லெனின் நிறுவினார். லெனின் மறைவைத் தொடர்ந்து ஸ்டாலின் தலைமையில் போல்ஷ்விக் கட்சி வீறுநடை போட்டது. சோசலிசப் புரட்சியை கொச்சைப்படுத்தி ட்ராட்ஸ்கி எழுதிய எழுத்துக் களுக்கு எதிராக ஸ்டாலின் தத்துவார்த்த போரை உறுதியுடன் நடத்திச் சென்றார். அவர் எழுதிய லெனினியத்தின் அடிப்படைகள் என்ற புத்தகம் போல்ஷ்விக்குகள் கையில் சக்தி மிக்க ஆயுதமாக மாறியது.

இயந்திர தொழில்மயமாக்கலும், கூட்டுப் பண்ணை அமைப்பு முறைகளும் எவ்வாறு நிகழ்ந் தேறின. அதன் பலன்கள் எப்படி சோசலிசத்தை உயர்த்திப் படிக்க உதவிற்று போன்றவை மிக விரிவாக நூலில் படித்து அறிய முடியும்.

நிறைவாக
சோவியத் யூனியனின் உழைக்கும் மக்கள், சோசலிசத்திற்காக வெற்றிகரமாகப் போராடிய அனுபவமும், படிப்பினைகளும் இந்நூலில் காணக் கிடைக்கின்றன.
சோசலிசத்திற்கான போராட்டத்தில் மார்க்சிய போதனைகள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டன என இந்நூல் எடுத்துக் காட்டுகிறது. மேலும், அப்போராட்டத்தின் ஊடே லெனினும், ஸ்டாலினும் அவற்றை எவ்வாறு மேலும் வளர்த்தெடுத்தனர் என்பதை விளக்குகிறது.
மார்க்சிய – லெனினியத்தின் அடிப்டைக் கருத்து களை அறிமுகப்படுத்தி, அவற்றை எவ்வாறு நடைமுறையில் செயல்படுத்தி வளர்த்தெடுப்பது, எவ்வாறு அவற்றுக்காகப் போராடுவது என்பதை எடுத்துக் காட்டுகிறது. சமுதாய வளர்ச்சியின் விதிகளைப் பற்றிய அறிவைத் தந்து நம்மை ஆயத்தமாக்குகிறது. உலகம் முழுவதும் கம்யூனி சத்தின் வெற்றி நிச்சயம் என்ற நமது நம்பிக்கையை வலுப்படுத்துகிறது” என மார்க்சிய அறிஞர் மாரிஸ் கார்ன்ஃபோர்த் மார்க்சிய மூல நூல்களுக்கு வாசகர் வழிகாட்டி எனும் நூலில் இப்புத்தகத்தை பற்றி குறிப்பிட்டுள்ளார்.
இந்திய நாட்டில் மக்கள் ஜனநாயக புரட்சியை மூல உத்தியாகக் கொண்டு சிபிஐ(எம்) செயல்பட்டு வருகிறது. இப்புரட்சியை நிறைவேற்றுவதற்கு புரட்சிகர கட்சியை கட்டுவது மிக அவசியம். நவம்பர் புரட்சி நூற்றாண்டைக் கொண்டாடும் இத்தருணத்தில் புரட்சிகர கட்சியை கட்டுவதற்கு, புரட்சியை நடைமுறையில் சாத்தியப்படுத்திய போல்ஷ்விக் கட்சியின் வரலாறு மிகப்பெரும் உந்து சக்தியாக இருக்கும் என்பது நிச்சயம்.

மகத்தான சோவியத் புரட்சியின் பொருளாதார சாதனைகள்

அறிமுகம்
1917 அக்டோபர் மாதத்தில் (அன்றைய ரஷ்ய காலண்டர்படி அக்டோபர் 24-25, நவீன கணக்குப்படி நவம்பர் 6-7 ) மகத்தான ரஷ்ய புரட்சி வெற்றிபெற்று போல்ஷ்விக்கட்சியின் தலைமையில் ஒரு தொழிலாளி வர்க்க ஆட்சி அமைந்தது. இது மானுட வரலாற்றில் ஒரு திருப்பு முனையாகும். பத்தொன்பதாம் நூற்றாண் டின் நடுப்பகுதியில் மார்க்சும் எங்கல்சும் உருவாக் கிய சோசலிச இயக்கம், தொடர்ந்து தத்துவமாக வும் மக்கள் இயக்கமாகவும் பெரும் தாக்கத்தை ஐரோப்பாவில் மட்டுமின்றி உலகு முழுவதும் ஏற்படுத்தியது. எனினும், மிகக் குறைந்த காலம் 1871 இல் பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் நகரில் தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் பாரிஸ் கம்யூன் ஆட்சி நடத்தியது என்றாலும், ஒருநாட் டில், அதுவும் பெரிய நாட்டில் சோசலிச ஆட்சி அமைந்தது முதல் முறையாக நிகழ்ந்தது.

1917 ரஷ்யப் புரட்சியில் தான். தொழிலாளி வர்க்கம் ஆட்சிக்கட்டிலில் அமர்வது என்பது சாதாரண விசயமல்ல. அதுவும், பின்தங்கிய ஜார் மன்னன் சாம்ராஜ்யத்தில் கடும் அடக்குமுறை களை நீண்ட நெடிய மக்கள் போராட்டங்கள் மூலம் தகர்த்து, இடையில் ஆட்சியை கைப்பற்றி தொழிலாளி வர்க்கத்தை வெளியேற்ற முனைந்த முதலாளித்துவ கட்சிகளின் சதிகளை முறியடித்து போல்ஷ்விக் புரட்சி வெற்றி பெற்றது என்பது ஆகப்பெரிய வரலாற்று நிகழ்வாகும். இதை ஏகாதிபத்தியநாடுகளின் முதலாளித்துவ அரசு களும் ஆளும் முதலாளி வர்க்கமும் நன்கு உணர்ந் திருந்தன. அவர்களுக்கு கதிகலங்கியது.

முதலாளிகளே இல்லாமல் ஒருநாட்டை ஆள முடியுமா? உற்பத்தி எப்படி நடக்கும்? வளர்ச்சி என்னாவது? யார் முதலீடு செய்வார்கள்? என் றெல்லாம் கூறி காலம்காலமாக தங்கள் சுரண்டலை நியாயப்படுத்தி ஆண்டுவந்தனர் முதலாளி வர்க் கத்தினர். எனவே, இனி அந்த வர்க்கம் தேவை யில்லை, எல்லா உற்பத்தியையும் செய்துவரும் தொழிலாளி வர்க்கம் ஆட்சியையும் பொறுப் பெடுத்துச் செய்யும், முதலாளிகள் தேவையில்லை என்ற பிரகடனமாக அமைந்த அக்டோபர் புரட்சி அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக அமைந்ததில் வியப்பில்லை.

தொழிலாளி வர்க்க ஆட்சி அமைந்தவுடன் அதை முளையிலேயே கிள்ளியெறிய ஏகாதிபத் திய நாடுகள் கூட்டாக செயல்பட்டன. 1918 ஜூன் மாதத்திலேயே பதினான்கு நாடுகள் தங்கள் துருப்புகளை ரஷ்யாவிற்குள் அனுப்பி, உள் நாட்டு எதிர்ப்புரட்சி சக்திகளுக்கு ஆதரவாக சோசலிச ஆட்சிக்கு எதிரான போரைத் துவக் கின. ஆனால், பெரும் இழப்புகளை சந்திக்க நேர்ந்த போதிலும், மக்களின் பேராதரவுடன் தொழி லாளி வர்க்க செம்படை அவர்களை விரட்டி அடித்தது. புரட்சிகர ஆட்சி உறுதிப்படுத்தப் பட்டது. எனினும், ஏகாதிபத்தியம் தனது ஆட்சி கவிழ்ப்பு முயற்சிகளை பலவடிவங்களில் தொடர்ந் தது. ரஷ்யா மீதும் 1923 இல் சோசலிச சோவியத் ஒன்றியம் உருவான பின்பு அதன் மீதும் மேலை நாடுகள் பொருளாதார பகிஷ்கரிப்பை நடை முறையாக்கினர். (இதையும் மீறி சில மேலை நாட்டுக் கம்பனிகள் சோவியத் ஒன்றியத்துடன் பொருளாதார நடவடிக்கைகளில் பங்கேற்றனர் என்பதும் நடந்தது).

முதலாளிகள் இல்லாமல் ஒரு நாடு, பின்னர் பல குடியரசுகள் இணைந்த சோசலிச சோவியத் ஒன்றியம், வாழ முடியும், வளர முடியும் என்று பல ஆண்டுகளின் அனு பவம் காட்டிய பின்பும் பல முதலாளித்துவ அறிவு ஜீவிகள், குறிப்பாக பொருளியல் அறிஞர்கள், முதலாளிகளும் சந்தை யும், லாபநோக்கும் இல்லா மல் பொருளாதாரமே சாத்தியமில்லை என்றும் ஒட்டுமொத்த பொருளா தார திட்டமிடுதல் என்பது இயலாத காரியம் என்றும் சொல்லி வந்தனர். ஆனால், 70 ஆண்டு களுக்கும் மேலாக இருந்த சோவியத் சோசலிசம் பொருளாதார நிர்மாணத்தில் படைத்த பெரும் சாதனைகளை மேலைநாட்டு அறிஞர்களே மறுப்பதற்கில்லை. இவை பற்றி இக்கட்டுரையில் சுருக்கமாகக் காண்போம்.

புரட்சியின் நுழைவாயிலில் பின்தங்கியிருந்த ரஷ்யா
கடந்த நூற்றாண்டின் துவக்கத்தில் ரஷ்யா, இதர வல்லரசுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் பின்தங்கி இருந்தது. எழுத்தறிவு விகிதம் 30 கூட இல்லை. அச்சமயம் அமெரிக்காவின் எழுத்தறிவு விகிதம் 95 , ஜப்பானது 9 . அமெரிக்காவில் சரா சரி ஆயுட்காலம் 1900 இல் 47.3 ஆண்டுகளாக இருந்தது. ரஷ்யாவில் 1896 இல் 32 ஆண்டு கள் தான். இது போலவே, தொழில்துறை, வேளாண் உற்பத்தி, மின்சாரம், போக்குவரத்து என்று எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும், புரட்சி நிகழ்ந்த பொழுது ரஷ்யா மிகவும் பின் தங்கிய நாடாகவே இருந்தது. முதல் உலகப் போருக்கு முன்பு நிலைமை இவ்வளவு மோசம் என்றால், அதனை தொடர்ந்து வந்தது முதல் உலக யுத்தம். பின்னர் வந்தது, கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் (1918-1921) எதிர்ப் புரட்சியாளர்களையும் ஏகாதி பத்திய துருப்புகளையும் எதிர்த்து புரட்சிகர அரசை காப்பாற்ற நடந்த உள்நாட்டுப்போர். இதன் பின்னர் யுத்தங்களின் விளைவுகளில் இருந்து நாட்டைமீட்க புதிய பொருளாதார கொள்கை கள் பின்பற்றப்பட்டன,
1924 ஜனவரியில் லெனின் மறைந்த பிறகு உட்கட்சி போராட்டங்கள் நிகழ்ந் தன. இவற்றின் இறுதியில் 1927 ஆம் ஆண்டு முடிவில் தான் ஸ்டா லின் தலைமையில் உறுதி யான கொள்கை நிலைப் பாடு அமைந்தது. இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில், சோவியத் ஒன்றியத்தின் ரஷ்யப் பகுதி 1928ஆம் ஆண்டில் தான் அது ஏற்கெனவே 1913 ஆம் ஆண்டில் கொண்டிருந்த உற்பத்தி நிலையை எட்டியது. வேறு வகையில் சொல்வ தென்றால் போல்ஷ்விக் கட்சியின் தலைமையில் சோவியத் ஒன்றிய அரசு ஐந்தாண்டு திட்டம் என்ற மாபெரும் – அது வரை வரலாற்றில் மேற் கொள்ளப் படாத புது முயற்சியை, பிரம்மாண்ட மான முயற்சியை துவக்கிய 1928 ஆம் ஆண்டில் மேலைநாடுகளுடன் ஒப்பிடுகையில் சோவியத் ஒன்றியம் மிகவும் பின் தங்கி இருந்தது.

அடுத்த பன்னிரண்டு ஆண்டுகளில் 1940 இல் தனது மூன்றாவது ஐந்தாண்டு திட்டம் நிறை வடையும் முன்பே, அமெரிக்காவிற்கு அடுத்தபடி தொழில் வளர்ச்சி பெற்ற நாடு என உலகில் இரண்டாம் இடத்தை சோவியத் ஒன்றியம் எட்டியது. திட்டமிட்ட பொருளாதார வளர்ச்சி சாத்தியமே இல்லை, முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரம் இல்லையென்றால் சர்வநாசம் என்று கூறிவந்த பொருளியல் அறிஞர்களின், மேலைநாட்டு ஆளும் வர்க்கங்களின் கூற்றுகளை, சோவியத் ஒன்றியத்தின் மகத்தான சோஷலிச பொருளாதார வளர்ச்சி வரலாற்றின் குப்பைத் தொட்டியில் வீசி எறிந்தது.

திட்டமிட்ட சோஷலிச வளர்ச்சி
1917 முதல் 1927 வரை ஏராளமான சவால்களை அக்டோபர் புரட்சி எதிர்கொண்டதை ஏற்கெனவே குறிப்பிட்டோம். இதனால் ஏகாதிபத்தியத்தின் தாக்குதல்களை முறியடித்து தனது ஆட்சியை உறுதிப்படுத்தி நவீன நிர்மாணத்தை 1928 இல் துவக்கிய பொழுது எத்தகைய உலகை அது எதிர்கொண்டது? அதன் புரட்சிகர அணிகள் உள்நாட்டுப்போரில் ஏராளமான தோழர்களை இழந்திருந்தன. ரஷ்ய புரட்சியை தொடர்ந்து தொழில் வளர்ச்சியில் முன்னேறியிருந்த ஐரோப் பிய நாடுகளில் சோஷலிச புரட்சிகள் வெடிக்கும் என்ற போல்ஷ்விக் நம்பிக்கை பொய்த்துப் போனது. ஜெர்மனியிலும் ஹங்கேரியிலும் புரட்சி கள் வெடித்தன. ஆனால் அவற்றை ஆளும் வர்க் கங்கள் ரத்த வெள்ளத்தில் மூழ்கடித்து முறியடித் தன. இனி நீண்ட காலம் தனித்து நின்று சோஷலிச நிர்மாணத்தை மேற்கொண்டாக வேண்டும் எனற நிலைமையை அது சந்தித்தது. ஏகாதிபத்தியம் சோவியத் புரட்சியை தகர்க்க தொடர்ந்து பல ராணுவ முஸ்தீபுகளையும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப தடைகளையும் ஆயுதங்களாகப் பயன்படுத்தியது. அண்டை ஜெர்மனியில், அதே போல் இத்தாலியில், எதிர்ப் புரட்சி சக்திகளின் வெற்றி பாசிச சர்வாதிகாரத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது. ஜனநாயக சக்திகளுக்கு சிக்கலான கால கட்டம் உருவாகிக் கொண்டிருந்தது. இத்தகைய சூழலில், ட்ராட்ஸ்கி போன்றவர்கள் தனி ஒரு நாட்டில் சோசலிசம் அமைப்பது சாத்தியமல்ல என்ற கருத்தை முன்வைத்த பொழுது தனித்து நின்றும் சோஷலிச நிர்மாணத்தை வெற்றிகர மாக சாதிப்போம் என்று ஸ்டாலின் தலைமை யிலான போல்ஷ்விக்கட்சி முடிவெடுத்தது. இதற் கான முக்கிய ஆயுதமாக, அன்று வரை மானுட வரலாற்றில் கண்டிராத, ஒட்டு மொத்த பொருளா தார திட்டமிடுதல் என்ற அற்புதமான யுக்தியை கடைப்பிடித்தது. திட்டமிடுதல் பற்றியும் ஒவ்வொரு சோவியத் ஐந்தாண்டு திட்டம் பற்றியும் இக்கட்டு ரையில் விளக்குவதும் விவாதிப்பதும் சாத்திய மல்ல. எனினும் அதுபற்றிய சிறிய அறிமுகத்திற்கு செல்வோம்.

சோவியத் ஒன்றியத்தில் திட்டமிடுதல்
ரஷ்ய புரட்சிக்கு முன்பு ஒரு நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சிக்கு திட்டமிடு வது என்பது நிகழவில்லை. முதலாளித்துவ பொருளாதாரத்தில் உற்பத்தி மற்றும் விற்பனை சார்ந்த முடிவுகளை முதலாளிகள் எடுக்கின்றனர். நவீன முதலாளித்துவ வளர்ச்சியில் பெரும் கம்பனிகள் தங்கள் முதலீடுகள் எந்தெந்த துறை களில் செய்யப்படவேண்டும் என்பது போன்ற முடிவுகளை திட்டமிட்டு மேற்கொள்கிறார்கள். ஆனால் இவை குறிப்பிட்ட கம்பனி சார்ந்த திட்டமிடுதல் தான். ஒட்டு மொத்த நாட்டுப் பொருளாதாரத்திற்கு மையப்படுத்தப்பட்ட திட்டமிடுதல் என்பது முதலாளித்துவ அமைப் பில் சாத்தியமல்ல. ஒட்டுமொத்த திட்டமிடு தலுக்கும் அதனை அமலாக்கவும் ஒரு அதிகாரம் பெற்ற அமைப்பு வேண்டும். முதலாளித்துவ பொருளாதார அமைப்பில் அரசுகூட அத்தகைய அதிகாரம் பெற்ற அமைப்பு அல்ல. இதற்கு மிக அடிப்படையான காரணம், உற்பத்திக்கருவிகள் முதலாளிகளிடம் உள்ளன என்பதும் அவற்றை அவர்கள் விருப்பப்படி பயன்படுத்த அவர்களுக்கு முழு அதிகாரம் உண்டு என்பதுமாகும். இந்தியா உள்ளிட்ட பல முதலாளித்துவ நாடுகளில் பொருளா தார திட்டங்கள் தீட்டப்பட்டன. இவை எல்லாமே அரசு முன்வைக்கும் பரிந்துரைகள் தான். ஏனெனில், முதலாளித்வ நாடுகளில் வளங்களை திரட்டி அரசுத்துறை முதலீடுகளை மேற்கொள்ள அரசு முயற்சிக்கலாம். ஆனால் தனியார் துறை முதலாளி களின் முதலீட்டு முடிவுகளை அரசு நிர்ணயிக் கவோ ஆணையிடவோ முடியாது. அக்டோபர் புரட்சி தொழில் துறைகள் அனைத்தையும் அரசுடைமை ஆக்கியது. எல்லா தொழில் நிறுவனங்களும் அரசின் கட்டுப்பாட்டில் இருந்ததனால் அவர் களது முதலீடுகளின் அளவு, தன்மை உள்ளிட்ட அனைத்தையும் தனித்தனியாக முடிவு செய்யா மல் ஒட்டுமொத்த நாட்டு நலன் அடிப்படையில் துறைவாரியாக உற்பத்தி இலக்குகள் நிர்ணயித்து அவற்றை அடைய வழிமுறைகளையும் திட்ட மிட்டு அமலாக்குவது என்பது சாத்தியமாயிற்று. துவக்கத்தில், புரட்சி வெற்றி பெற்றவுடன் உள் நாட்டு எதிர்ப்புரட்சி சக்திகளும் ஏகாதிபத்திய நாடுகளும் புரட்சிக்கெதிராக போர் தொடுத்த நிலையில், நீண்ட தொலைநோக்குடன் திட்டமிட சாத்தியப்பாடு இல்லாமல் போனது. அரசின் அனைத்து பொருளாதார திட்டங்களும் கொள்கை களும் நடவடிக்கைகளும் எதிர்ப்புரட்சியாளர்கள் தொடுத்த போரில் அவர்களை தோற்கடிப்பதையே மையமாக கொண்டிருந்தன. இவ்வாறு 1918 முதல் 1921 வரையில் திட்டமிடுதல் என்பது போர் சார்ந்த விஷயமாகத்தான் இருந்தது. போர் கால பொது உடைமை கட்டம் என்று இந்த மூன்று ஆண்டுகள் அழைக்கப்படுகின்றன. துருப்புக ளுக்கு தேவையான உணவை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து உறுதிப்படுத்துவது என்பது முக்கிய திட்ட இலக்குகளில் ஒன்றாக இருந்தது. அதேபோல் போருக்கான தளவாடங் களை உற்பத்திசெய்வது போன்றவை முக்கியமாக இருந்தன. பின்னர் 1921 இல் போரின் பெரும் சேதங்களின் பின்புலத்தில் நாட்டின் மிகவும் பின்தங்கிய வளர்ச்சி நிலையை கணக்கில் கொண்டும், வேளாண் மற்றும் தொழில் மீட்சியை சாதிக்க வேண்டி இருந்தது. இதற்காக, தொழிலாளி வர்க் கத்தின் தலைமையிலான சோசலிச அரசு, தொழி லாளி – விவசாயி வர்க்கக் கூட்டணி யை வலுப் படுத்தும் தன்மையில் சில ஆண்டுகள் புதிய பொருளாதாரக் கொள்கை என்ற பெயரில் ஒரு வரம்பிற்கு உட்பட்டு தனியார் துறையையும் சந்தைசார் உறவுகளையும் அனுமதித்தது.

லெனின் 1924 ஜனவரியில் மறைந்தார். அதன் பின்பும் இக் கொள்கை சிறிதுகாலம் தொடர்ந்தது. ஆனால், இக்கொள்கைகள் செயல்படுத்தப்பட்டதனால் கிராமப்புறங்களில் முதலாளித்துவ சக்திகள் வலுப்பெற்று வந்தது சோஷலிச அமைப்பின் வளர்ச்சிக்கு தடையாக உருவெடுக்கும் அபாயம் உணரப்பட்டது. இவை 1927 வாக்கில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டன. ஓரளவு புரட்சி தன்னை நிலை நாட்டிக் கொண்டுவிட்டதால், நீண்ட கால நோக்குடன் மையப்பட்ட திட்டமிடுதலை நோக்கி செல்ல போல்ஷ்விக் கட்சியும் அரசும் முடி வெடுத்தன. சோவியத் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டிய அடிப்படையிலும் நிலவிய பன்னாட்டு சூழலில் தொழில் வளர்ச்சியை பெரிதும் விரைவுபடுத்த வேண்டிய அவசியத்தை கணக்கில் கொண்டும் சோவியத் அரசின் முதல் ஐந்தாண்டு திட்டம் 1928 -1932 காலத்திற்கான துறைவாரி யான வளர்ச்சி இலக்குகளை உருவாக்கியது. அவற்றை அடைவதற்கான வழிமுறைகளையும் சோவியத் அரசு தீர்மானித்தது. 1928 முதல் 1985 தொடர்ந்து ஐந்தாண்டு திட்டங்கள் தீட்டப்பட்டு அமலாக்கப்பட்டன. இவை பல வெற்றிகளை சாதித்தன. காலப்போக்கில் பல காரணங்களால் திட்டங்களின் தன்மையில் மாற்றங்கள் நிகழ்ந்தன. இதில் நிறைகளும் குறைகளும் இருந்தன. இவை பற்றி தனியாக விவாதிக்க வேண்டியுள்ளது. ஆனால் ஒரு விஷயத்தை இங்கே குறிப்பிடவேண்டும். சோஷலிச உடைமை உறவுகளின் கீழ் தான் முழு மையான ஒட்டுமொத்த திட்டமிடுதல் சாத்தியம். அத்தகைய திட்டமிடுதல் லாப நோக்கில் அல்ல. மக்களின் வாழ்க்கைத் தரம் பொருளாதாரம், பண்பாடு என அனைத்து அம்சங்களிலும் உயர வேண்டும் என்பதே அதன் நீண்டகால இலக்காக இருக்க முடியும். சோசலி சம் என்பது வெறும் பொருளாதார வளர்ச்சி பற்றிய விஷயம் அல்ல. அதற்கென. முழுமையான ஜனநாயகம், விரிவான மக்கள் பங்கேற்பு போன் றவை உள்ளிட்ட பல மாண்புகளும் விழுமியங்களும் உண்டு.

1928-1940: வியத்தகு வளர்ச்சி
முதல் மூன்று ஐந்தாண்டு திட்டங்கள் நிறை வடையும் முன்பே உலகில் இரண்டாம் தொழில் நாடானது சோவியத் ஒன்றியம் என்பதை குறிப் பிட்டோம். அதுவும், எதிரிகளின் தாக்குதல்களை எதிர்கொண்டது மட்டுமின்றி, பிற நாடுகளை சுரண்டாமல், தனது தொழிலாளி வர்க்கத்தின் நலன்களையும் காத்து இந்த வளர்ச்சி சாதிக்கப் பட்டது. 1928 முதல் 1937 வரையிலான காலத்தில் சோவியத் ஒன்றியத்தின் தொழில் உற்பத்தி மூன்று மடங்கு அதிகரித்தது. இதில், குறிப்பாக, 1932 முதல் 1937 வரையிலான ஐந்தாண்டு காலத் தில் இரட்டிப்பானது. (1937 முதல் 1955 வரை யிலான காலத்தில் தொழில் உற்பத்தி மீண்டும் இரண்டரை மடங்கு அதிகரித்தது என்ற செய் தியை இங்கு பதிவு செய்யவேண்டும். ஏனென் றால், 1928 முதல் 1937 வரையிலான காலத்தில் ஏற்பட்ட மாபெரும் தொழில் வளர்ச்சி பின்னர் இரண்டாம் உலகப்போரில் நாஜி படைகளின் தாக்குதலில் பெருமளவு அழிந்துபோனது. அதி லிருந்து மீண்டு, இரண்டாம் உலகப் போர் முடிந்து பத்து ஆண்டுகளில், தீவிரமடைந்த ஏகா திபத்திய எதிர்ப்பையும் சந்தித்து இவ்வளர்ச்சி நிகழ்ந்தது என்பது திட்டமிட்ட சோஷலிச பொருளாதார அமைப்பின் மறுக்க முடியாத விளைவும் சாதனையும் ஆகும். )
நிகழ்ந்தது தொழில் வளர்ச்சி மட்டுமல்ல. புரட்சிக்கு முன் விவசாயிகளும் விவசாயக் கூலி தொழிலாளிகளும் நிலப்பிரபுக்களின் கடும் சுரண்டலுக்கு இரையாக இருந்தனர். புரட்சி நிலப்பிரபுக்களின்ஆதிக்கத்தை அழித்தொழித் தது. எனினும் 1921 முதல் 1927 வரையிலான புதிய பொருளாதாரக் கொள்கைகள் காலத்தில் கிராமப் புற செல்வந்தர்களும் பணக்கார விவசாயிகளும் தங்களை ஓரளவு வலுப்படுத்திக் கொள்ள முடிந் தது. பின்னர் முதல் ஐந்தாண்டு திட்ட காலத்தில் சோஷலிச அமைப்பின் இலக்குகளுக்கு தடை யாக இப்பகுதியினர் மாறும் அபாயம் பற்றியும், தொழில் வளர்ச்சிக்கு வேளாண் துறையில் ஏற்பட வேண்டிய உற்பத்தி உறவு மாற்றங்கள் பற்றியும் போல்ஷ்விக் கட்சியில் நடந்த நீண்ட உட்கட்சி விவாதத்திற்குப்பின் கூட்டுப் பண்ணை கள் அமைக்கப்படவேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது. இது அமலாக்கப்பட்ட முறை யில் சில தவறுகள் நிகழ்ந்த போதிலும், கூட்டுப் பண்ணைகளை அமைத்தது வேளாண் வளர்ச் சிக்கும் தொழில் வளர்ச்சிக்கும் உதவிகரமாக இருந்தது என்றும் வேளாண் துறையில் உற்பத்தி திறனை உயர்த்த உதவின என்றும் தான் ஆராய்ச் சிகள் நமக்கு தெரிவிக்கின்றன. கடுமையான இயற்கை பாதிப்புகளை தொடர்ந்து சோவியத் ஒன்றியம் 1930 களில் சந்தித்த போதிலும் அவற்றை சமாளிக்க முடிந்தது. வேளாண் உற்பத்தியில் நவீன முறை களும் இயந்திரங்களும் திட்டமிட்டு அரசு உதவி யுடனும் மான்யங்களுடனும் 1930 களில் (அதன் பின்பும்) விரிவாக கொண்டு செல்லப்பட்டன. வேளாண் உற்பத்தி திறன் சோவியத் ஒன்றியத் தில் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. இடை யிடையில் இயற்கை சீற்றங்களால் பாதிப்பு ஏற்பட்ட காலங்களில் சோஷலிச அரசு தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது என்பதும் குறிப்பிடப் படவேண்டும்.

கல்வியில், ஆரோக்கியத்தில், மக்களின் வாழ்க் கைத் தரத்தில், நுகர்வு அளவில், பொதுவான கணிசமான முன்னேற்றம் இக்காலத்தில் நிகழ்ந் தது. ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற வகையில் கல்வி பற்றிய ஓரிரு புள்ளி விவரங்களை மட்டும் இங்கு பார்ப்போம். 1917 இல் ரஷ்யாவில் பள்ளியில் படித்துக் கொண் டிருந்த மாணவர் எண்ணிக்கை 80 லட்சம். இது 1934 இல் 2 கோடியே 5 லட்சமாக அதிகரித் திருந்தது. 1926 இல் சோவியத் ஒன்றியத்தில் 9 முதல் 49 வயது என்ற வயது வரம்பில் இருந் தோரின் எழுத்தறிவு விகிதம் 56.6 . 1939 இல் இது 87.4 ஆக உயர்ந்திருந்தது. சோவியத் ஒன்றியத் தின் மத்திய ஆசிய குடியரசுகளான உஸ்பெகிஸ் தான் மற்றும் கஸக்ஸ்தான் நாடுகளில் எழுத்த றிவு விகிதங்கள் 1926 இல் முறையே 11.6 மற்றும் 25.2 என்று இருந்தன. 1939 இல் இவை 78.7 மற்றும் 83.6 என்று அதிகரித்திருந்தன. (1959 இல் சோவியத் ஒன்றியத்தில் எழுத்தறிவு விகிதம்: 98.5) முதலா ளித்துவம் செய்ய முடியாத காரியம் அனைவருக் கும் வேலை உத்தரவாதம் அரசியல் சாசனத்தில் (1936) பிரகடனமாயிற்று. வேலை யின்மை என்ற பெருங்கொடுமை – முதலாளித் துவ அமைப்பில் முதலாளிகளின் பேராயுதம் முற்றிலுமாக துடைத்து எறியப்பட்டது. 1936 சோவியத் அரசியல் சாசனம் மறுபுறம், உழைப்பு சாரா வருமானங்களை வர்க்க சுரண்டலை – தடைசெய்தது. பெண்களுக்கு பிரசவகால விடுப்பு வழங்கப்பட்டது. நாடு முழுவ தும் தாய் சேய் நல இல்லங்கள், நர்சரிகள், சிறார் பள்ளிகள் அமைக் கப்பட்டன.

இக்காலத்தில் (1928-1940) பாசிச தாக்குதல்களுக்கு எதிராக தயாராகும் பணி களை அரசு கவனிக்க வேண்டியிருந்த சூழலில் மக்களின் சராசரி நுகர்வு நான்கில் ஒரு பங்கு அதிகரித்தது என்பதும் குறிப்பிடத் தக்கது.
இதே காலத்தில் உலக முதலாளித்துவ பொருளா தாரம் பெரும் மந்தத்தில் சிக்கியிருந்தது. சோவியத் சோசலிசத்தில் அனைவருக்கும் வேலை, தொடர்ந்து அதிகரித்து வந்த வாழ்க்கை தரம் என்ற நிலைமை சோசலிசத்தின் மேன்மையை பிரகடனப் படுத்தியது. கஷ்டங்களும் சவால்களும் இருந்தன. தவறுகள் நிகழ்ந்தன. அன்றைய சூழலில் எதிரிகளின் தாக்கு தலால் ஒரு முற்றுகை மனப்பான்மையுடன் செயல்படும் பலவீனம் இருந்தது. இதனால் பாட்டாளி வர்க்க ஜனநாயக நெறிமுறைகள் மீறப்பட்டன. எனினும், ஓரளவிற்கு, திட்டமிட்ட முறையில் , ஒட்டு மொத்த சமூக பங்கேற்புடன் சவால்கள் வெற்றிகரமாக எதிர் கொள்ளப்பட்டன. இலக்கு மறவாமல் செயல்பட்டு பொருளாதார வளர்ச்சியை சாதித்ததனால் தான் நாஜி படை களின் தாக்குதலையும் சோவியத் ஒன்றியத்தால் முறியடிக்க முடிந்தது.

இரண்டாம் உலகப்போருக்குப்பின் பனிப் போர் காலம் 1940களின் பத்து ஆண்டுகள் இரண் டாம் உலகப்போர் மற்றும் அதை தொடர்ந்து வந்த பிரச்னைகளில் கழிந்தது. இப்போரில் நாஜி படைகளை முறியடித்து உலகில் ஜனநாயகத்தை காப்பதில் பெரும் பங்காற்றிய சோவியத் சோசலி சம் கடும் இழப்புகளையும் சந்தித்தது. 250 லட்சம் மக்களின் இன்னுயிர்களை ஈந்தது மட்டுமின்றி, நாஜி தாக்குதலில் தனது தொழில் கூடங்களில் மூன்றில் இரண்டு பங்கு அழிக்கப்பட்டதையும், நகரங்களில் பெரும்பாலானவை தரை மட்டமாக் கப் பட்டதையும் சோஷலிச சோவியத் ஒன்றியம் எதிர் கொண்டது.

பாசிசத்தை வீழ்த்தி களைப்பாறும் முன்பே மிகப் பெரிய புதிய தலைவலி பனிப்போர் வடிவில் வந்தது. இரண்டாம் உலகப் போர்காலத்தில் வேறு வழியின்றி மேலை ஏகாதிபத்தியம் சோவியத் ஒன்றியத்துடன் ஒத்துழைக்க நேர்ந்தது. பல ஆண்டு கள் சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக நாஜி அரசை வளர்த்து விட்ட மேலைநாடுகள் இரண்டாம் உலகப்போரில் தங்கள் நிலைபாட்டை மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால் போர் முடிந்தபின் சோவியத் ஒன்றியம் தான் முதல் பெரும் எதிரி என்ற நிலைபாட்டை அமெரிக்க ஏகாதிபத்தியம் தெளிவு படுத்தியது. அணுகுண்டை உருவாக்கி அதை ஜப்பான் மீது இருமுறை அமெரிக்கா ஏவியது என்பது சோவியத் செம்படைகள் பசிபிக் பகுதியில் நுழைவதை தடுக்கவும் முதலாளித்துவ உலகின் காவல்காரனாக தன்னை அறிவித்துக் கொள்ளவும் அமெரிக் காவிற்குப் பயன்பட்டது. ஆகவே மீண்டும் ஒரு கடும் சவாலை சோவியத் சோசலிசம் எதிர்கொண்டது. 1928 -1940 காலத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத தொழில் வளர்ச்சியில் பெரும்பகுதி இரண்டாம் உலகப்போரில் அழிக்கப்பட்ட பின்னணியில் மீண்டும் ஒரு நெடிய வளர்ச்சிப் பயணத்தை அது மேற்கொள்ள வேண்டியிருந்தது. அப்பயணத்தை ஏகாதிபத்தியத்தின் கூர்மையான, இடைவிடாத தாக்குதல்கள் மத்தியில் செய்ய வேண்டியிருந்தது. அடுத்த இருபது ஆண்டுகளில் இந்த சவாலை யும் சோஷலிச சோவியத் ஒன்றியம் வெற்றி கரமாக சந்தித்தது. இதனை அடுத்தும் 1970களின் இறுதிவரையும் அதன்பின் சில ஆண்டுகளும் சோவியத் வளர்ச்சி தொடர்ந்தது.

இரண்டாம் உலகப்போர் துவங்கும் முன்பு 1937 இல் இருந்த நிலையை 100 என்று வைத்துக் கொண்டால், தலா தனி நபர் நுகர்வின் அளவு 1944 இல் 66 என சரிந்திருந்தது. ஆனால் 1950 இலேயே இது 135 ஆக உயர்ந்தது. 1955 இல் 159 என அதிகரித்தது. இது மிக வேகமான மீட்சி யாகும். 1950 இல் துவங்கி ஒரு மாபெரும் வீடு கட்டும் திட்டம் அமலுக்கு வந்தது. 1946-50 காலத் தில் மக்களின் வாழ்விடப் பரப்பளவு 12.71 கோடி சதுர கிலோமீட்டர் ஆக இருந்தது. இது 1961-66 இல் 39.44 கோடியாக உயர்ந்தது. சோவியத் மக் களின் உணவு பாரம்பர்ய ரொட்டி மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவற்றை மையப்பட்டிருந்த நிலைமாறி , இறைச்சி, மீன், முட்டை, பால் சார்ந்த பொருட்கள் என்றாகியது. 1965 இல் ஆண்டுக்கு 38 கிலோ என்றிருந்த தலா இறைச்சி நுகர்வு 1985 இல் 61.7 ஆக அதிகரித்தது. இதே கால இடை வெளியில் நூறு குடும்பங்களில் ரெப்ரிஜி ரேட்டர் வைத்திருந்தவை பதினொன்று மட்டுமே என்ற நிலையில் இருந்து தொன்னூற்று ஒன்று என்ற நிலைக்கு உயர்ந்தது. 1965 இல் 100 குடும் பங்களில் 24 மட்டுமே தொலைக்காட்சி பெட்டிகள் வைத்திருந்தன.1985 இல் இது 97 ஆகியது. தொலை பேசிகளின் எண்ணிக்கை இதே காலத் தில் கிட்டத்தட்ட ஐந்து மடங்கு அதிகரித்தது. ஒட்டுமொத்த தேச வருமான வளர்ச்சி வேகம் எழுபதுகளின் பிற்பகுதியில் குறையத் துவங்கியது என்றாலும் பல துறைகளில் முன்னேற்றம் தொடர்ந் தது. மின்உற்பத்தி ஐம்பது சதம் அதிகரித்தது. வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளின் உற்பத்தி ஆறு மடங்கு அதிகரித்தது.

பொதுவாக கூறுவதானால், ஆயிரத்து தொள்ளா யிரத்து இருபதுகளின் பிற்பகுதியில் தான் சோஷ லிச நிர்மாணப்பணிகளை வேகப் படுத்த முடிந் தது. அதன் பின்பு ஏகாதிபத்தியமும் பாசிசமும் தொடுத்த தொடர் தாக்குதல்களை ஒருபுறம் எதிர்கொண்டே மறுபுறம் மகத்தான பொருளா தார வளர்ச்சியையும் சோவியத் சோசலிசம் சாதித்தது என்றால், இதன் மையப்புள்ளி சோஷ லிச உற்பத்தி உறவுகளும் அதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட மைய திட்ட அணுகுமுறை யும் என்பதை பதிவு செய்ய வேண்டும். பனிப் போர் காலத்திலும் சோஷலிச அமைப்பின் சாதனைகள் தொடர்ந்தன. சோஷலிச அரசியல் நிலைபாடு இதில் முக்கியத்வம் வாய்ந்தது. சோவியத் ஒன்றியத்தின் அனுபவம் முக்கியமாக ஒரு செய்தியைச் சொல்கிறது. அது என்ன? ஒரு திட்டமிட்ட, உற்பத்திக்கருவிகளின் பொது உடைமை அடிப்படையிலான பொருளாதார அமைப்பு இன்று அனைத்து உழைக்கும் மக்களும் விரும்பும் விஷயங்களை தர இயலும் என்பதை காட்டுகிறது. எல்லோருக்கும் வேலை, உத்தரவாதப்படுத்தப் பட்ட ஒய்வு ஊதியம், வரம்புக்கு உட்பட்ட பணி நேரம், போதுமான காலத்திற்கு ஊதியத்துட னான மகப்பேறு விடுப்பு , குறைந்த செலவில் மகிழ்வான சுற்றுலா விடுமுறைகள், உயர்கல்வி உட்பட இலவசமானதும் தரமானதுமான கல்வி, இலவச உடல், மன நல வசதிகள் மற்றும் சிகிச்சைகள், மிகக்குறைந்த செலவில் வீட்டு வசதி, மிகக் குறைந்த கட்டணத்தில் பொது போக்குவரத்து வசதிகள் , தரமான தாய்-சேய்நல ஏற்பாடுகள் என்றுஅவற்றை அடுக்கிக் கொண்டே போகலாம். சோவியத் சமூகத்தில் ஏற்றத்தாழ்வு களும் குறைவு என்பதும் குறிப்பிடப்பட வேண் டும். சுருங்கச்சொன்னால், இன்றைய கேடுகெட்ட முதலாளித்துவ சீரழிவில் உழைக்கும் மக்கள் அனுபவிக்கும் கஷ்டங்களை ஒப்பிட்டுப்பார்த் தால், சோவியத் சோசலிசத்தின் சாதனைகளின் பிரம்மாண்டம் ஓரளவு புலப்படும்.

சோஷலிச பொருளாதார வளர்ச்சி அறிவியலை முன்னெடுத்துச் செல்ல உதவியது. அறிவியல் தொழில் நுட்ப சாதனைகளை சாத்தியமாக்கியது. விண்வெளி, ஆற்றல், மருத்துவம், பொறியியல் என்று பல துறைகளில் சோசலிச சோவியத் ஒன்றியம் பல சாதனைகளை நிகழ்த்திக் காட்டி யுள்ளது. இது பற்றி தனியாக விவரிக்க வேண்டிய அவசியம் உள்ளது.

பிரச்னைகள்
எனினும் கடந்த நூற்றாண்டின் எண்பதுகளில் சோவியத் பொருளாதாரத்தின் வளர்ச்சி வேகம் தொடர்ந்து குன்றியது. இது நிகழ்ந்ததற்கு சோவியத் அமைப்பில் திட்டமிடலில் ஏற்பட்ட பலவீனங் கள் ஒருபங்கு வகித்தன. இதன் பின்புலத்தில் திருத்தல்வாதம் உள்ளிட்ட அரசியல் திரிபு களுக்கு பொறுப்பு உண்டு. மறுபுறம், ஏகாதிபத் தியம் எழுபதுகளின் நடுப்பகுதியில் இருந்து ஏற் பட்ட தனது பொருளாதார நெருக்கடியை எதிர் கொள்ள சோஷலிச நாடுகளின் மீதான குறிப் பாக சோவியத் ஒன்றியத்தின் மீதான – தாக்கு தலை தீவிரப் படுத்தியது. 1980 இல் அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்ற ரீகன் தலைமை யிலான அமெரிக்க ஏகாதிபத்தியம் மீண்டும் ஒரு கடுமையான ஆயுதப் போட்டியை சோவியத் ஒன்றியத்தின் மீது திணித்தது. ஆயிரத்து தொள்ளா யிரத்து எழுபதுகளில் சில பதட்டக்குறைப்பு நடவடிக்கைகள் துவக்கப்பட்டிருந்தன. இதில் கேந்திர ஆயுதங்கள் கட்டுப்பாடு ஒப்பந்தம் 1 மற்றும் 2 என இரண்டு ஒப்பந்தங்கள் அமெரிக் காவிற்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் இடையில் போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் 1980 இல் நுழையும் தருணத்தில் ரீகன் தலைமை யிலான அமெரிக்க ஏகாதிபத்தியம் பதட்டக் குறைப்பு பாதையை நிராகரித்தது. மிக சக்தி வாய்ந்த பெர்ஷிங், க்ரூயிஸ் ஏவுகணைகளை அமெரிக்கா உற்பத்தி செய்து களத்தில் இறக் கியது. அடுத்து, கேந்திர பாதுகாப்பு முன்முயற்சி என்ற பொய் யான பெயரில், விண்வெளிக்கும் யுத்த முஸ்தீபு களை விரிவாக்கியது. இந்த நடவடிக்கைக்கு சரியான நட்சத்திர யுத்தம் என்ற பெயர் மக்கள் மத்தியில் பிரபலமாகியது. இந்த அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண் டிய கட்டாயத்தில் சோவியத் ஒன்றியம் இருந்தது. சோவியத் மக்களின் உழைப்பால் உருவான வளங்களில் ஒரு கணிசமான பகுதி ஏகாதிபத்தி யம் திணித்த தற்காப்பு நடவடிக்கைகளுக்கு சென்றது.இதனால், மக்கள் தேவைகளை குறிப் பாக நுகர்வு தேவைகளை நிறைவு செய்வதில் பிரச்சினைகள் ஏற்பட்டன. சோவியத் ஒன்றியம் தகர்க்கப்படும் வரை கூட சோஷலிச திட்டமிட லால் மக்களின் வாழ்க்கைத்தரம் தொடர்ந்து அதிகரித்து வந்த போதிலும், ஏகாதிபத்தியத்தின் ராணுவ நிர்ப்பந்தங்கள் சோவியத் பொருளா தாரத்தை கடுமையாக பாதித்தன. இது மட்டு மல்ல. மேலை நாடுகள் வசம் இருந்த நவீன தொழில் நுட்பங்களை சோவியத் ஒன்றியம் பெறு வதை தடுக்கவும் பல நடவடிக்கைகளை அமெரிக்கா எடுத்தது. இரட்டைப்பயன்பாடு தொழில்நுட் பங்கள் அதாவது, ராணுவம் சாரா பயன்பாடு ராணுவ பயன்பாடு இரண்டையும் ஒருங்கே கொண்டவை முற்றிலுமாக மறுக்கப்பட்டன. இதற்கான வணிகத்தடை ஏற்பாடுகள் கறாராக அமலாக்கப்பட்டன. இத்தகைய நடவடிக்கைகள் சோவியத் ஒன்றியத்தின் தொழில் நுட்ப வளர்ச் சிக்கு பெரும் முட்டுக்கட்டைகளாய் அமைந்தன. மேலும், இத்தகைய பதட்டமான பன்னாட்டுச் சூழலில் தனது கேந்திரமான மூலப்பொருட்கள் உள்ளிட்ட அவசிய பொருட்களுக்கு இறக்கும தியை சார்ந்திருப்பது ஏகாதிபத்தியத்திற்கு சாதக மாகிவிடும், தனக்கு நெருக்கடியை ஏற்படுத்தி விடும் என்ற அபாயத்தை கணக்கில் கொண்டு இவற்றை அதிக செலவில் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் நிலைக்கு சோவியத் ஒன்றியம் தள்ளப்பட்டது.

மேலும், 1970 களில் பல ஆப்பிரிக்க நாடுகளின் விடுதலை போராட்டங்களுக்குஆதரவு அளிப்பது, பல வளரும் நாடுகளுக்கு பொருளாதார மற்றும் இதர உதவிகள் அளிப்பது, எழுபதுகளின் இறுதி யிலும் எண்பதுகளின் பல ஆண்டுகளிலும் ஆப் கன் புரட்சிக்கு ஆதரவாக ராணுவ நடவடிக்கை களை எடுக்கவேண்டிய கட்டாயம் என்று பல சர்வதேச கடமைகளை சோவியத் ஒன்றியம் நிறைவேற்ற முனைந்தது. ஆப்கானிஸ்தானிலும், ஆப்பிரிக்காவிலும் இதர வளரும் நாடுகளிலும் சோவியத் சோசலிஸ ஒன்றியம் ஆற்றிய மகத் தான ஏகாதிபத்திய எதிர்ப்புப் பணி அதன் சர்வ தேசக் கடமையின் பகுதி என்றாலும், அதுவும் பொருளாதார ரீதியாக கூடுதல் சுமைகளை சோவியத் ஒன்றியத்திற்கு ஏற்படுத்தியது.

இப்படி ஏகாதிபத்திய தாக்குதல்கள், நெருக் கடிகள் உள்ளிட்ட பல பிரச்சனைகளை சந்திக்கும் நேரத்தில் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை யில் பெரும் பலவீனம் உருவாகி வளர்ந்து கொண்டிருந்தது. ஸ்டாலின் மறைவிற்குப்பின்பே, 1956 இல் நடந்த சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் இருபதாவது மாநாட்டில் வெளிப்பட்ட திருத் தல்வாத அணுகுமுறை சோவியத் கட்சிக்குள் படிப்படியாக வலுப்பெற்று வந்தது. ஏகாதிபத் தியம் பற்றியும் முதலாளித்துவத்தில் இருந்து சோசலிசம் நோக்கி பயணிக்கும் சகாப்தத்தின் தன்மை பற்றியும், இக்காலத்தில் பாட்டாளி வர்க்க தலைமையின், ஆட்சியின் அவசியம் பற்றியும் ஒரு சரியான நிலைபாட்டை சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி எடுக்கத் தவறியது. சமாதான சக வாழ்வு, சமாதான பொருளாதாரப் போட்டி, சமாதானப் பாதையில் சோசலிசத்தை நோக்கிப் பயணம் என்ற திருத்தல்வாத மும்மூர்த்திகளை சோவியத்கட்சி அங்கீகரித்தது. சமாதான சக வாழ்வின் அவசியத்தை நாம் மறுதலிக்க முடியாது என்றாலும் ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலைபாட்டில் இருந்து தான், ஏகாதிபத்தியம் பற்றிய எந்த பிரமைகளும் இல்லாமல் தான் அப் பிரச்சினை யைப் பார்க்க வேண்டியுள்ளது. சமாதான பொருளாதார போட்டியின் அடிப்படையில் சோசலிசம் முதலாளித்துவத்தை வீழ்த்த முடியும் என்ற புரிதலும் பொருத்தமல்ல. ராணுவ தாக்கு தல்கள், நெருக்கடிகள், போர், வர்த்தக மற்றும் தொழில் நுட்ப தடைகள் உள்ளிட்டு எல்லா ஆயுதங்களையும் அது பயன்படுத்தும் என்பதே அக்டோபர் புரட்சியின் துவக்கத்தில் இருந்து நமது அனுபவம். அக்டோபர் புரட்சிக்குப் பின் உள்நாட்டில் எதிரி வர்க்கங்கள் பெருமளவு பலவீனப் படுத்தப்பட்டன என்பது உண்மை என்றாலும், ஆயிரத்து தொள்ளாயிரத்து எண் பதுகளின் துவக்கத்தில் முதலாளித்துவ உலகில் உருவான பன்னாட்டு நிதி மூலதன ஆதிக்கப் பின்புலத்தில் சோவியத் ஒன்றியத்திற்குள் நிதி மூலதனம் ஊடுருவ பல வாய்ப்புகள் உருவாகின. வரலாற்று ரீதியாக மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்து பெரும் முன்னேற்றத்தை சாதிப்பதற்கு திட்டமிட்ட சோஷலிச உறவுகள் அடிப்படை யிலான வளர்ச்சிப் பாதை உதவியது. ஆனாலும், நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பன்னாட்டு சந்தைகள், பன்னாட்டு நிதித்துறை, பன்னாட்டு ஊடகதுறை ஆகிய அனைத்திலும் ஏகாதிபத் தியத்தின் ஆதிக்கம் நிலவி வந்த சூழலில், மேலை நாடுகளுடன் வர்த்தக, தொழில்நுட்ப, மற்றும் நிதிசார் உறவுகளை தவிர்க்கும் நிலையில் எண்ப துகளில் கூட சோவியத் ஒன்றியம் இல்லை. இத்தகைய வர்த்தக மற்றும் நிதி மூலதன போக்குவரத்து சோவியத் ஒன்றியத்திற்குள் ஊடுருவும் வாய்ப்பு களை ஏகாதிபத்தியத்திற்கு ஏற்படுத்திக் கொடுத் தது. சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியில் நிலவிய திருத்தல்வாதப் பார்வை இந்த அபாயத்தை முழு மையாக உணர்ந்து எதிர்கொள்ள உதவவில்லை. கடந்த நூற்றாண்டின் எண்பதுகளின் பிற்பகுதி யில் சோஷலிச கொள்கைகள கோர்பச்சாவ் தலைமையிலான சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி படிப்படியாக கைவிட்டது என்பது சோசலிசப் பின்னடைவுக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

நிறைவாக…
மானுட வரலாற்றில் ஒரு சமூகம் உணர்வு பூர்வமாக அறிவியல் அணுகுமுறையை ஏற்று பொருளாதார வளர்ச்சியை திட்டமிட்டு சாதிக்க முனைந்தது சோவியத் புரட்சியில் தான் முதல் முதலாக நிகழ்ந்துள்ளது. வரலாற்றியல் பொருள் முதல் பார்வையில் இருந்து நோக்கினால், இந்த மகத்தான முயற்சி சாதகமான, பொருத்தமான சூழலில் மேற்கொள்ளப்படவில்லை. மாறாக முதலாளித்துவ வளர்ச்சியில் பெரிதும் பின்தங் கியிருந்த ஒரு நாட்டில் மேற்கொள்ளப்பட்டது. எனினும்கூட அப்புரட்சி என்றும் அழியாத சாதனைகளை செய்துள்ளது. சோவியத்புரட்சி யும் அதன் சோஷலிச நிர்மாணத்தில் கிடைத்த வெற்றிகளும் அனுபவங்களும் உன்னதமான பொது உடைமை சமூகம் என்ற மானுடத்தின் இலக்கு நோக்கிய பயணத்தின் ஆரம்ப அடிகள். மார்க்சும் எங்கல்சும் எதிர்பார்த்தபடி ஒரு வளர்ந்த முதலாளித்துவ நாட்டில் அனுபவமிக்க, முன்னேறிய தொழிலாளிவர்க்க தலைமையில் புரட்சி நடந்திருந்தால் அது எதிர்கொண்டிருக்கக் கூடிய சவால்களை விட பல நூறு மடங்கு கூடுதல் சவால்களை எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக மகத்தான அக்டோபர் புரட்சி எதிர் கொண்டது. ஏகாதிபத்தியத்திற்கு சிம்ம சொப்பன மாக, தேச விடுதலை இயக்கங்களின் உற்ற நண் பனாக, உலக அமைதியின் பாதுகாவலனாக, உழைப்பாளிகளின் வாளாகவும் கேடயமாகவும் பங்காற்றிய சோவியத் சோஷலிச அனுபவத்தின் ஆகப்பெரிய பங்கு, ஒரு நவீன பொருளாதார அமைப்பை உருவாக்கவும் வளர்க்கவும் ஒரு முதலாளி வர்க்கம் தேவையில்லை என்பதும், உழைப்பாளி மக்களே கூட்டுத் தலைமையின் மூலம் அதை சாதிக்க முடியும் என்பதுமாகும். வேலையின்மை, வறுமை, கல்லாமை, ஆரோக் கியமின்மை உள்ளிட்ட பல முதலாளித்துவக் கேடுகளை அழித்தொழித்த, சுரண்டல் அற்ற உலகத்தை நோக்கி பயணிக்க முனைந்த சோஷலிச அமைப்பின் முதல் அனுபவமான அகோட்பர் புரட்சியை என்றென்றும் நினைவில் நிறுத்து வோம். அதன் மிக முக்கிய படிப்பினை மானுடத் தின் எதிர்காலம் சோசலிசத்தை நோக்கிப் பயணிப் பதில் தான் மேம்படும் என்பதே. சோவியத் அனு பவமும் உலகளவில் தொடரும் முதலாளித்துவ நெருக்கடியும் மானுடம் எதிர்கொள்ளும் எந்த பிரச்னையையும் லாப வேட்டை அடிப்படையி லான முதலாளித்துவ அமைப்பால் தீர்வு காண முடியாது என்று மக்கள் அன்றாடம் கண்டு வருவதும் எதிர்காலத்தில் சோவியத் சோசலிசம் தரும் வெளிச்சத்தில் மானுடம் முன்னேறும் என்ற நம்பிக்கையை நமக்கு அளிக்கின்றன.

ரஷ்ய புரட்சியும் பெண்களும் …

சுரண்டல் சமூகத்தின் தளைகளிலிருந்து மக்களை விடுவிப்பது தான் புரட்சியின் நோக்கம் என்னும் போது, ரஷ்ய புரட்சியானது, சமூக ஒடுக்கு முறைக்கும் வர்க்க சுரண்டலுக்கும் ஆளான பெண்களின் வாழ்க்கையிலும், சமூக அந்தஸ்தி லும் எவ்விதத் தாக்கங்களை ஏற்படுத்தியது, குறிப்பாகப் பெண் விடுதலைக்கான பவுதீக சூழலை ஏற்படுத்தியதா, ஆணாதிக்கமும், வர்க்க சுரண்டலும் அமைப்பு ரீதியாக நிறுவனமய மாக்கப்பட்ட சூழலை மாற்ற என்ன நடவடிக்கை கள் எடுக்கப்பட்டன என்ற சில முக்கிய கேள்வி களுக்கு விடை தேட வேண்டியிருக்கிறது. தனியுடைமை, வர்க்க சுரண்டல், பெண்ணடிமைத்தனம் ஆகியவற்றுக் கிடையான தொடர்பை எங்கல்ஸ் அவர்களின் ஆய்வு தெளிவாக எடுத்துரைக்கிறது. வரலாற்றில் முதல் வர்க்க முரண்பாடு, பாலினங்களுக்கிடை யான முரண்பாடு நிகழ்ந்ததுடன் ஒத்திசைந்து தோன்றியது என்கிறார் எங்கல்ஸ். இந்த மார்க் சிய கண்ணோட்டத்துடன் முதல் சோஷலிச சமூக அமைப்பில் நிகழ்ந்த மாற்றங்களைப் பார்க்க வேண்டும்.

முதலில் புரட்சிக்கான இயக்கத்தில், வெகுமக் கள் போராட்டங்களில் பெண்கள் பார்வை யாளர்களாக இருந்திருக்கவில்லை. தொழிலாளி வர்க்கப் பெண்களில் கணிசமானவர்கள் தலைமை தாங்குபவர்களாகவும், பங்கேற்பவர்களாகவும் இருந்தனர் என்பதைப் பார்க்க வேண்டும். அவர் கள் பங்கேற்பு இன்றி, புரட்சி நடந்தது என்றும், அவர்களின் கஷ்டங்கள் கண்டு மனம் இறங்கி மட்டுமே சோஷலிச சமூக அமைப்பு அவர்களுக் காக செயல்பட்டது என்றும் பார்த்துவிடக் கூடாது..

சம வாய்ப்புகளும் அவற்றுக்கான சூழல் உருவாக்கமும்:
உலகிலேயே முதன் முறையாக சட்டபூர்வமான அரசியல் ரீதியான சமத்துவம் பெண்களுக்கு சோஷலிச சமூக அமைப்பில் தான் அளிக்கப் பட்டது. 1917 துவங்கி 1927 வரை அடுக்கடுக்காக சட்டங்கள் இயற்றப் பட்டன. பெண்கள் மீதான ஒடுக்குமுறையின் அச்சாணி தனி உடைமை ஆதிக்கம் – முறிக்கப்பட்டது. சோஷலிச அரசு பொறுப்பேற்ற பின் அனைத்து குடிமக்களுக்கும் முன்னேற்றத்துக்கான சம வாய்ப்புகள் கொடுக்கப் பட்டன. சிவில் சர்வீஸ், தொழிற்சாலைகள், ராணுவம், கட்சி அமைப்பு என அனைத்திலும் பாலின பாகுபாடுகள் இன்றி வாய்ப்புக்கான கதவுகள் திறக்கப்பட்டன. ஆனாலும், தோழர் லெனினும் இதர போல்ஷ்விக் கட்சி தலைவர் களும் சிந்தித்தனர் இந்த வாய்ப்புகளைப் பெண் கள் பயன்படுத்திக் கொள்ளும் சூழல் இருக்கிறதா என்று. சமையலும், குழந்தை பராமரிப்பும், துணி துவைத்தலும் பெண்ணைக் கட்டிப் போட்டு விடும் என்ற புரிதலின் பின்னணியில் தான் மலிவு விலை சமூக உணவகம், மலிவு விலை சமூக சலவையகம், அனைத்து வேலை தலங்களிலும் சிறந்த குழந்தை காப்பகம் என்ற ஏற்பாடுகள் உருவாக்கப்பட்டன. சலிப்பூட்டும் வீட்டு வேலை களிலிருந்து விடுதலை கிடைக்காமல், பெண்கள் அரசியல் பொருளாதார சமத்துவத் தைப் பெற்று விடமுடியாது என்பதே சோஷலிச அரசின் கண்ணோட்டமாக இருந்தது. இக்கண் ணோட்டத்தின் அடிப்படையிலேயே, வீட்டு வேலைகள் தனிப்பட்ட பெண்ணின் அல்லது குடும்பத்தின் பொறுப்பு என்ற நிலையிலிருந்து மாறி சமூகமயமாகியது. குழந்தை பராமரிப்பும், அவர்களின் கல்வியும் பொது விவகாரமாக, அரசின் பொறுப்பாக மாறியது. இது மிகப்பெரிய மாற்றம். தோழர் லெனின் கீழ்க்கண்டவாறு கூறினார் பெண் முன்னேற்றத்துக்கான பல சட்டங்கள் வந்தாலும், அவள் வீட்டுக்கு அடிமை யாகவே கட்டுண்டு கிடக்கிறாள். வீட்டுப் பணி கள் அவளை நசுக்கி, நெரித்து மூச்சு திணற வைக் கின்றன. சமையலறையுடனும், குழந்தை பராமரிப் புடனும் அவள் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருக் கிறாள். எவ்வித பலனும் இல்லாத, காட்டுமிராண்டித் தனமான, சலிப்பூட்டும் வேலைகளில் அவளது உழைப்பு வீணாகிறது. இதிலிருந்து விடுதலையா வதன் மூலமே பெண் உண்மையான விடுதலையை அடைய முடியும். இதற்கான முழுமுதல் போராட்டத்தை அரசு அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் பாட்டாளி வர்க்கம் செய்ய வேண்டும். தனிப் பட்ட குடும்ப உழைப்பு, பரந்து பட்ட சோஷலிச பொருளாதாரத்தின் பகுதியாக ஒட்டுமொத்த மாக மாற வேண்டும் இந்தக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குடும்ப வேலைகளில் கட்டுண்டு கிடந்து, சுய முன்னேற்றம் குறித்து சிந்திக்க வழியில்லாமல் தவித்த பெண்களின் தளைகளை தகர்க்க உதவின. தனிப்பட்ட பணிகள் சமூகமயமாக்கப்பட்டதன் மூலம், பெண்கள் கல்வி, வேலை வாய்ப்புகளைப் பயன்படுத்தி முன்னேற வழி கிடைத்தது. 1927லேயே உயர்கல்வியில் 1/3 பங்கு பேர் மாணவிகளாக இருந்தனர். கிராமப்புற சோவியத்துகளுக்கான தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் 11 சதவீதமும், நகர சோவியத்துக்களில் 21.5 சதவீதமும் பெண் கள் என்ற நிலை ஏற்பட்டது. தொழிற்சங்க உறுப் பினர்களில் 25சதவிகிதம் பெண்கள்.

அனைத்துப் பெண்களுக்கும் வாக்குரிமை அளித்ததில் முன்னோடி:
வாக்குரிமையைப் பொறுத்த வரை, பெண் களின் வாக்குரிமைக்காக உலக அளவில் நீண்ட நெடிய இயக்கங்கள் முன்னமே நடந்து கொண் டிருந்தன. அதை முதன் முதலில் சாத்தியப்படுத் தியது ரஷ்ய புரட்சிக்குப் பின் ஏற்பட்ட சோஷலிச அரசாங்கமே. முதலாளித்துவ பெண்ணிய அமைப் புகள், சொத்துடைமை ஆண்களுக்கு வாக்குரிமை இருக்கும் போது, சொத்துடைமை பெண்களுக்கு ஏன் இருக்கக் கூடாது என்ற பிரச்சாரத்தை முன் னெடுத்தனர். பெண்கள் மத்தியில் சோஷலிச கருத்துகளை விதைப்பதற்கு முயற்சித்துக் கொண்டிருந்த பெண் கம்யூனிஸ்டுகள், அனைத்துப் பெண்களுக் குமான வாக்குரிமை என்பதற்கு அழுத்தம் கொடுத் தனர். அலெக்சாண்ட்ரா கொலந்தாய், கிளாரா ஜெட்கின் போன்றோர் இதில் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தனர்.

1907ல் ஸ்டட்கார்ட்டில் நடந்த சோஷலிச அகிலத்தில் கிளாரா ஜெட்கின் கீழ்க்கண்டவாறு முழக்கமிட்டார்:
வாக்குரிமை என்பது முதலாளித்துவ வர்க்க பெண்களுக்குத் தடைகளை உடைக்க உதவும் என்பது உண்மையே. ஆனால் தொழிலாளி வர்க்க பெண்களைப் பொறுத்த வரை வாக்குரிமை யானது, சுரண்டல் மற்றும் வர்க்க ஒடுக்குமுறை யிலிருந்து மனித குலத்தை விடுவிப்பதற்கான போரில் ஒரு கருவியாகப் பயன்படும். பெண்களின் பிரச்னைகளுக்கு அடிப்படை தீர்வைத் தர வல்ல சோஷலிச சமூக அமைப்பை நிறுவுவதற்கு அரசி யல் அதிகாரம் தேவைப்படுகிறது. அதைக் கைப் பற்ற பாட்டாளி வர்க்கம் நடத்தும் யுத்தத்தில், ஒரு முன் தயாரிப்பாக சாதக சூழலை ஏற்படுத்த தொழிலாளி வர்க்க பெண்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தி பெரும் பங்காற்ற முடியும். அனை வருக்கும் சிவில் உரிமைகளைப் பெற்றுத்தர முதலாளித்துவ வர்க்கப் பெண்கள் தம் வாக்குரிமை யைப் பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. இதனால், வாக்குரிமைக்காக அவர்கள் நடத்தும் இயக்கத்தைக் குறைத்து மதிப்பிட வேண்டியதில்லை. பொது எதிரியை எதிர்த்த போராட்டத்தில் தொழிலாளி வர்க்க பெண்கள் அவர்களுடன் இணைந்து பணியாற்ற முடியும். ஆனால் வர்க்க வேறுபாடின்றி ஆண்களை எதிர்த்து பெண்கள் நடத்தும் போராட்டத்தின் மூலம் வாக்குரிமை மற்றும் சிவில் உரிமைகளை வென்றெடுக்க முடியாது. மாறாக, சுரண்டப்படு பவர்கள் பாலின வேறுபாடு பார்க்காமல் ஒன்று படுவதும், சுரண்டும் வர்க்கத்தைப் பாலின வேறு பாடு பார்க்காமல் எதிர்த்து வர்க்கப் போரில் ஈடுபடுவதும் தான் பிரச்னைக்குத் தீர்வு காணும் வழியாகும்.

எதிர்கொண்ட சவால்கள்:
பெண்கள் வாக்குரிமைக்கான போராட்டத்தை வர்க்க பிரச்னையுடன் இணைந்த பாலின பிரச் னையாக கம்யூனிஸ்டுகள் பார்த்தனர். இதற்கு மாறுபட்ட நிலை எடுத்த முதலாளித்துவ பெண்ணிய வாதிகளை ஒரு புறமும், தொழிலாளி வர்க்கத்தில் இருந்த ஆணாதிக்கக் கண்ணோட்டத்தை மறு புறமும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. 1911ல் ஜெர்மனியில் கிளாரா ஜெட்கினும், 1913ல் ரஷ் யாவில் கொலந்தாயும் நடத்திய உலக பெண்கள் தின நிகழ்வுகளில் ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்றது மாற்றங்களுக்கான சூழலையும், மன நிலையையும் ஏற்படுத்தியது. தோழர் லெனின் அவர்களின் முன்முயற்சியில் 1914ல் பெண் தொழிலாளிகளுக்கான ஒரு பத்திரிகை பெண் தொழிலாளி (ரபோத்னித்சா) துவங்கப்பட்டது. போல்ஷ்விக் கட்சியின் மத்திய குழு, பெண்கள் பிரச்னைகளைப் பொது தளத்தில் விவாதிக்க என்று ஒரு தனியான குழுவை ஏற்படுத்தியது. இத்தகைய நடவடிக்கைகளைத் தொடர்ந்து, புரட்சிக்குப்பின், 1917-லேயே அனைவருக்கும் வாக்குரிமை என்பது சட்டபூர்வமாகியது. ஆஸ்தி ரேலியாவில் பெண்களுக்கு வாக்குரிமை 1902ல் கொடுக்கப்பட்டாலும், அது அனைவருக்குமான வாக்குரிமை அல்ல. அந்நாட்டின் பூர்வகுடி ஆண் களுக்கும் பெண்களுக்கும் வாக்குரிமை 1962ல் தான் கிடைத்தது. எனவே, சோஷலிச அரசு தான், அனைத்துப் பெண்களுக்குமான வாக்குரிமையை முதலில் கொண்டு வந்தது என்று அழுத்தமாகக் கூற முடியும்.

சிரமங்களைக் கடந்தே சிகரங்களை நோக்கி:
ஆனால் இவை எதுவும் சுலபமாக நடந்து விட வில்லை. பழைய ஆணாதிக்க கலாச்சாரத்தின் இழுவையும், நில உடைமை சித்தாந்தக் கூறு களும், பிற்போக்கு சமூக உறவுகளின் தாக்கமும் முற்போக்கு அம்சங்களைத் தடுத்தன. குழந்தை களைக் காப்பகத்தில் விடுவதற்குத் தயக்கம் இருந்தது. அரசாங்கத்தால் இதையெல்லாம் செய்து விட முடியுமா என்ற அவநம்பிக்கை நிலவியது. இவற்றை எதிர்த்த பிரச்சாரத்தையும் கட்சி செய்ய வேண்டியிருந்தது. குறிப்பாக மத்திய ஆசிய பகுதியில் இருந்த குடியரசுகளில் பெண் சமத்துவ அம்சங்களை நடைமுறையாக்குவது பெரும் சவாலாக இருந்தது. அரசியலுக்குப் பெண் களைக் கூடுதலாகக் கொண்டு வருவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்பதை உணர்ந்த தோழர் லெனின் மிகச் சரியாக சொன்னார் எவ்வளவு முன்னேறிய நாடுகளானாலும், பழைய முதலாளித்துவ சமூக அமைப்பில், பெண்கள் முக்கியத்துவமற்ற பங்குபாத்திரத்தையே அரசியலில் வகிக்க முடிந்தது. அரசியல் பங்கேற்பை ஒவ்வொரு பெண்ணுக்கும் கிடைக்குமாறு செய்ய வேண்டி யது நமது கடமை. அரசியலில் பெண் தொழிலா ளிகளின் பங்கேற்பு அவசியம். கட்சி உறுப்பினர் கள் மட்டுமல்ல, கட்சிக்கு வெளியில் இருக்கும் பெண்களுக்கும், மிகக் குறைவான அரசியல் உணர்வு பெற்றவர்களுக்கும் கூட அரசியல் பங்கேற்பு சாத்தியமாக வேண்டும். லட்சோப லட்சம் பெண்கள் அரசியலில் பங்கேற்கும் போது தான், சோஷலிச அரசு துவங்கியிருக்கும் பணிகளை நிறைவேற்ற முடியும்.

மேலும் கம்யூனிஸ்ட் கட்சி விரும்பிய விஷயங் களை செய்யும் அளவுக்கு தேசத்தின் நிதி நிலைமை இல்லை. புரட்சிக்குப் பின் உடனடியாக ஏகாதி பத்திய நாடுகளின் ராணுவ தலையீடுகள், உள் நாட்டு போர் போன்றவற்றை இளம் சோவியத் அரசு சந்திக்க வேண்டியிருந்தது. ஏற்கனவே நசிந்து கிடந்த பொருளாதாரத்தை இது மேலும் மோசமாக்கியது. 1920களின் பிற்பகுதியில் முன் னேற்ற நடவடிக்கைகள் வேகம் பிடித்தன. பிறகு ஹிட்லரின் பாசிச படையெடுப்பை சந்திக்க வேண்டியிருந்தது. இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட முன்னேற்றம் மீண்டும் சீர்குலைந்தது. இத்தகைய பெரும் சிரமங்களுக்கு இடையே தான், சோவியத் ஒன்றியத்தில் பெண்கள் பெரும் முன்னேற்றம் அடைந்தனர்.

மாறிய காட்சிகள்:
1924ல் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டு தீர்மானம், தொழிற்சாலைகளில் பெண்களின் உழைப்பு படையைப் பாதுகாப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது, முதலாளித்துவ சமூக அமைப்பிலிருந்து சொத்தாகப் பெற்ற பெண்ணடி மைத்தன பிற்போக்கு அம்சங்களுடன் போரிட வேண்டும் என்று அறைகூவி அழைத்தது. ஆலை களில் எப்போதும் துடைப்பத்துடன் காட்சி யளித்த பெண்கள் மெல்ல மெல்ல நம்பிக்கை அடைந்து, பயிற்சி பெற்று இயந்திரங்களை செயல்படுத்தும் தொழிலாளியாக, மேலாளரா கப் பரிணமித்தனர். பெண் மேலாளரை முதலில் கேலியாகப் பார்த்த ஆண் தொழிலாளிகள் பின்னர் பெண்களின் திறமைகளை மதிக்க ஆரம்பித்தனர் என பெண் தொழிலாளர்களின் பத்திரிகையான ரபோத்னித்சா செய்தி வெளி யிட்டது. சோவியத் ஒன்றியத்தில் மிக அதிகமான விற்பனையாகும் பத்திரிகையாக அது செயல் பட்டது.
ஜார் மன்னனின் ஆட்சியில் வேலைக்குப் போகும் ரஷ்ய பெண்களில் 55சதவிகிதத்தினர் நகர்ப்புற கிராமப்புற வீட்டுப் பணியாளர்களா கவும், 25சதம் விவசாய வேலை பார்ப்பவர்களா கவும், 13 சதம் தொழிற்சாலைகளில் பணிபுரி பவர்களாகவும், 4சதம் கல்வி, சுகாதாரம் சார்ந்த பணிகளில் ஈடுபடுபவர்களாகவும் இருந்தனர். ஏராளமான பெண்கள் – சுமார் 5 லட்சம் பேர் – பாலியல் வணிகத்தில் ஈடுபடுபட வேண்டிய நிலையில் வாழ்ந்தனர். இவற்றில் மிகப்பெரும் மாற்றம் ஏற்பட்டது. 1913ல் மருத்துவர்களில் 10 சதவிகிதம் மட்டுமே பெண்கள் என்ற நிலை மாறி, 1950களில் 50-70 சதவிகிதம்பேர் பெண்கள் என்ற நிலைக்கு உயர்ந்தனர். 1960களில் பொறியாளர் களில் 41 சதவிகிதம் பேர் பெண்கள். வழக்கறி ஞரில் மூன்றில் ஒருபங்கு பெண்கள். 1969 புள்ளி விவரப் படி, அமெரிக்காவில் மொத்த பொறி யாளர்களே 870000 பேர், அதில் 1 சதம் தான் பெண்கள். ஆனால் சோவியத் ஒன்றியத்தில் பெண் பொறியாளர்கள் மட்டும் 775000 பேர். 1959ல் வாகன ஓட்டுநர்களில் 57 சதவிகிதம் பெண்கள். கிரேன் ஆபரேட்டர்களில் பெண்கள் 1926ல் 1 சசதவிகிதம் மட்டுமே, ஆனால் 1959ல் 32 அதாவது 557400 பேர். இது 411 மடங்கு உயர்வு. குமாஸ்தா பணிகளில் 78 சதம், துறைகளின் தலைமை பொறுப்புகளில் 39சதவிகிதம் பெண் கள். 1968ல் முனைவர்களில் 31 சதவிகிதம் பெண் கள். பெரும் மருத்துவமனைகளின் தலைவர் களாகப் பெண்கள் பொறுப்பு வகித்தனர். 20000 டன் கப்பலை இயக்கும் கேப்டனாக ஒரு பெண் செயல்பட்டார். 100க்கும் மேற்பட்ட விண்வெளி கண்காணிப்பு நிலையங்களுக்குப் பொறுப்பாக, புகழ் பெற்ற மாஸ்கோ சிம்பனி இசைக்குழுவின் நடத்துநராக, உலகிலேயே மிகப்பெரிய மருத்துவ கல்வி அமைப்பின் தலைவராக பெண் சிறப்பாக செயல்பட்டதெல்லாம் சாதாரணமான விஷயமா? முதல் பெண் வெளிநாட்டு தூதுவர், முதல் பெண் விண்வெளி வீரர் என்று பலப்பல சாதனைகள். இந்த முன்னேற்றங்களும், தனிப்பட்ட பெண் களின் சாதனைகளும் ரபோத்னித்சாவில் இடம் பெற்றன. இது ஆணுக்கான வேலை, இது பெண்ணுக் கான வேலை என்று பிரிக்கப்படவில்லை. பாலின வேறுபாடு இன்றி, தகுதியின் அடிப்படையில் வேலைகளுக்கான வாய்ப்பு கிடைத்தது, அதைப் பயன்படுத்தும் சமூக, பண்பாட்டு சூழலும் உரு வாக்கப்பட்டது. திருமணமும் வேலை வாய்ப்பும் எதிரும் புதிருமான முரணாக இல்லை.

பெண்களின் முன்னேற்றத்துக்கான சிறப்பு ஏற்பாடுகள்:
ஆணும் பெண்ணும் சமம் என்கிற பேரில், பெண்ணுக்கான சில சிறப்பு ஏற்பாடுகள் நிரா கரிக்கப்படும் நிலை வந்து விடக் கூடாது என்ப தையும் சோஷலிச அரசு கணக்கில் எடுத்தது. சமத்துவத்தை இயந்திரகதியாக அணுகிவிடக் கூடாது. புரட்சிக்குப் பின் அமைந்த சோஷலிச அரசில், சமூக சேவைகளுக்கான கமிசாராக (அமைச்சர்) அலெக்சாண்ட்ரா கொலந்தாய் நிய மிக்கப்பட்டார். 1917 டிசம்பரில் தாய் சேய் நலத்துக்கான தனி முன்முயற்சி எடுக்கப்பட்டு பிரசவ கால விடுப்பு, கர்ப்ப காலத்தில் வேலை தலத்தில் கடின வேலை கொடுக்காமை போன்ற நடவடிக்கைகள், சட்ட அடிப்படையில் நிலை நிறுத்தப் பட்டன. பாலூட்டும் தாய்மார்களுக்கு, ஒவ்வொரு 3 மணி நேரத்துக்கு ஒரு முறை 30 நிமிடங்கள், பாலூட்டுவதற்கு அளிக்கப்பட்டது. குடியிருப்பு, வேலை தலத்திலிருந்து தள்ளி இருந் தால், இந்த நேரம் அதிகமாகக் கொடுக்கப் பட்டது. ஒரு வருடம் வரை, குழந்தை பிறந்த பிறகு வேலை பாதுகாத்து வைக்கப்பட்டது.

1918 துவக்கத்திலேயே திருமணத்திலும், குடும் பத்திலும் அன்பு, பரஸ்பர மரியாதையுடன் பாலின சமத்துவத்தை அங்கீகரிக்கும் கோட்பாடு சட்ட ரீதியாக்கப்பட்டது. திருமணமும், குடும்பமும் இரு பாலாரும் விரும்பி ஏற்கும் ஏற்பாடாக முன்னிறுத்தப் பட்டது. பின்னர் குழந்தை பாது காவலில் பெண்ணுக்கு சம உரிமை கிடைத்தது. இதுவெல்லாம் உலகில் எந்த நாட்டுப் பெண் களும் அது வரை அனுபவித்திராத உரிமைகள்.

சொத்துரிமையில், வாரிசுரிமையில் சம பங்கு உறுதி செய்யப்பட்டது. விவாகரத்து மற்றும் கருக்கலைப்புக்கான சட்டங்கள் உருவாக்கப் பட்டன. தன்பாலின சேர்க்கை மீதான தடை விலக்கப்பட்டது. 1922ல் விபச்சாரத்துக்குக் குற்ற விலக்கு கிடைத்தது. அதே சமயம், விபச்சாரத்துக்கு எதிரான பிரச்சாரம் பெண்கள் கமிட்டிகளால் மேற்கொள்ளப்பட்டது. பெற்றோரிடையே மண முறிவு ஏற்பட்டால், குழந்தைகளுக்கான நிதி ஆதாரம் அரசால் உறுதி செய்யப்பட்டது. குழந்தைகளுடன் பிரியும் பெண்களுக்கு நீதி மன்றங்கள் தாராளமான ஜீவனாம்ச தீர்ப்புகளை வழங்கின. திருமண உறவுக்கு அப்பாற்பட்டு பிறக் கும் குழந்தைகளுக்கும் சம உரிமைகள் வழங்கப் பட்டன. வேலை தலத்தில் சம வேலைக்கு சம ஊதியம் சட்டமாகியது. 55 வயதிலேயே முழு ஓய்வூதியத்துடன் பெண் ஓய்வு பெறலாம், ஆண் களுக்கு அது 60 வயது. ஆண் தொழிலாளிகளை விட கூடுதல் நாட்கள் ஓய்வுக்கான விடுப்பு பெண் களுக்குக் கொடுக்கப்பட்டது. நடன கலைஞர் களாக இருந்த பெண்களுக்கு 35 வயதிலேயே முழு ஓய்வூதியத்துக்கான உரிமை வழங்கப் பட்டது.

கிராமப்புறங்களில்:
வானம் வரை நீ செல்லலாம், ஆனால் உன் சிறகுகள் வெட்டப்பட்டவையாகவே இருக்கும் என்ற ரீதியில், வாய்ப்புகளை முன்வைத்து விட்டு, பெண்கள் சவாலான வேலைகளில் ஈடுபடுவதற்கு உகந்த சூழலை உருவாக்காமல் சோவியத் அரசாங் கம் இல்லை என்பது மிக முக்கியமானது. உதாரண மாக, கிராமப்புறங்களில் விவசாய இயந்திரங் களை செயல்படுத்த ஆரம்பித்த பெண்கள், ஒரு கட்டத்தில் மாநாடு நடத்தி, இயந்திரங்களில் அவர்களுக்கு வசதியாக சில மாற்றங்கள் வேண்டு மென கோரிக்கை விடுத்தனர். 1970ல் அரசாங்க உத்தரவு ஒன்று, அம்மாற்றங்களுடன் இயந்திரங் கள், தளவாடங்கள் உற்பத்தி செய்யப்பட ஏற்பாடு செய்தது. மாற்றங்களுடன் வந்த இயந்திரங்களை, பெண்கள் மேலும் திறம்பட இயக்க முடிந்தது. பல சவாலான பணிகளைப் பெண்கள் செய்தனர். அவர்களின் திறமைகள் அங்கீகரிக்கப்பட்டன.

விவாதங்களும், முன்னேற்றங்களும் இணைந்து நடந்தன. உஸ்பெகிஸ்தானில், ஒரு கூட்டுப் பண் ணையின் தலைவர் உட்பட அனைத்து முக்கிய பணிகளிலும் பெரும்பான்மை பெண்களாக இருந்தனர். கட்சி கமிட்டியிலும் பெண்கள் கூடு தலாக இருந்தனர். பெண் ஆதிக்கம் என்று சிலர் கேலி பேசிய போது, பெண்கள் பதிலடி கொடுத் தனர். இது சோவியத் அதிகாரத்தின் மிகப்பெரும் சாதனை, இத்தகைய சூழல் ஏற்படத்தானே நமது பெற்றோர்கள் போராடினர் என்று வாதிட்டு மடக்கினர்.

அமெரிக்கா போன்ற முன்னேறிய முதலாளித் துவ நாடுகளிலேயே, பெண்கள் இயக்கங்கள் முன்வைத்த கோரிக்கைகள், சோவியத் பெண்கள் அடைந்த முன்னேற்றத்தை ஒட்டியவையாகவும், அவற்றை இலக்காக வைத்தும் அமைந்தன.

சோவியத் ஒன்றியம் சிதறுண்ட போது ரஷ்ய புரட்சியின் பலனாக, பெண்கள் தலை நிமிர்ந்தனர். சலிப்பூட்டும் வீட்டு வேலைகளிலிருந்து விடு தலை பெற்றனர். கல்வி, வேலை வாய்ப்புகள் மூலம் பொருளாதார சுதந்திரம் பெற்றனர். பண்பாட்டு ரீதியாகவும் மாற்றங்கள் நிகழ்ந்தன. சமூகத்தின் பார்வையிலும் இது மாற்றத்தை ஏற்படுத்தியது. பெண் சமத்துவத்துக்கான பவுதீக சூழலை சோஷலிச சமூக அமைப்பு ஏற்படுத்தியது. அதாவது, பெண் முன்னேற்றம் சமூக அமைப்பு முறையுடனும், அரசியல் கொள்கையுடனும் தொடர்புடையது. சோஷலிச அமைப்பு வலுப் பெற்றால், முன்னேற்றமும் வலுப்பெறும். சீர் குலைந்தால், இத்தகைய பவுதீக சூழலிலும் எதிர் மறை விளைவுகள் உருவாகும்.
1990களில் சோஷலிசம் பின்னடைவை சந்தித்து, சோவியத் ஒன்றியம் சிதறுண்ட சூழலில், முதல் தாக்குதல் பெண்கள் மீது தான் என்பதை அனுப வத்தின் வாயிலாகவே அவர்கள் உணர்ந்துள்ள னர். வேலையின்மை காரணமாக, மீண்டும் விபச்சாரம் தலை தூக்கியது. வேலை வாய்ப்புகள் குறைவாக உள்ளதால், பெண்கள் வீடு என்கிற தளத்துக்கே திரும்பிப் போக வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன. சமூக நலத் திட்டங்கள் வெட்டப்பட்டன. வேலைக்கு இளம் பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்பதும், பாலியல் சேவை செய்ய வேண்டும் என்பதும் வெளிப்படை விளம்பரமாக வரத் துவங்கியது. பெண்கள் மீதான வன்முறை ஆரம்பித்தது. அரசியலில் பொறுப்புகளுக்குப் பெண்கள் வருவது குறைந்தது. ஆர்மீனியாவில் ஆண்கள் வேலை தேடி ரஷ்யா போன்ற நாடுகளுக்கு இடம் பெயர்ந்து வர வேண்டிய நிலையில், அங்குள்ள பெண்கள் மீதியுள்ள குடும்ப உறுப்பினர்களைப் பாதுகாக்கும் மொத்த சுமையும் சுமக்க வேண்டி யிருந்தது. குடும்பத்துக்குள்ளேயே பாலியல் வன் முறையை சந்திக்க நேர்ந்தது. பெருமளவில் குறைக்கப்பட்டிருந்த குடிப்பழக்கம் ஆண்கள் மத்தியில் வெகுவாக அதிகரித்தது. அதன் பாதக மான விளைவுகள் தொடர்ந்தன. சோவியத் சமூக அமைப்பில் ஏற்பட்ட சிதைவு, சோஷலிச தத்து வத்தினாலோ கோட்பாடுகளாலோ இல்லை, இது வரை யாரும் கடந்து சென்றிராத பாதை அது. முதல் முயற்சி என்ற ரீதியில், சோஷலிச நிர்மாணத்தில் சில தவறுகளும், பலவீனங்களும் ஏற்பட்டன, குறிப்பாக சோஷலிச ஜனநாயகத்தை நிறுவுதல், சோஷலிச பொருளாதாரத்தைக் கட்டுதல், தத்துவார்த்த உணர்வுகளை பலப்படுத்து தல் போன்ற பகுதிகளில் குறைபாடுகள் ஏற்பட்டன என்று 1992ல் சென்னையில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 14வது கட்சி காங்கிரசில் நிறைவேற்றப் பட்ட, தத்துவார்த்த பிரச்னைகள் குறித்த தீர்மானம் கூறுகிறது. மேலும் சோவியத் ஒன்றியத்தில் கார்பசேவ் தலைமையிலான ஆட்சி யில் கிளாஸ்நாஸ்ட், பெரஸ்த்ரோய்கா போன்ற கருத்தாக்கங்கள் மூலம் சோஷலிசத்துக்கு எதிரான போக்குகள் உருவானது குறித்து அத்தீர்மானம் கவலை தெரிவித்தது. சோஷலிசம் சந்திக்கும் பிரச்னைகளுக்கு முதலாளித்துவ மருந்துகள் அளிக்கப்படுவது தவறு என சுட்டிக்காட்டியது. சோஷலிச எதிர்ப்பு சக்திகளின் தாக்குதலை சந்திக்க முடியாமல் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி யின் அணிகளும், மக்களும் நிராயுதபாணியாக் கப்பட்டார்கள் என்றும் தீர்மானம் விளக்கியது. 1980களின் பிற்பகுதியிலிருந்தே இவ்விதத் திரிபு கள் முன்னுக்கு வந்தன. கார்பசேவ் முன்வைத்த கிளாஸ்நாஸ்ட் கருத்தாக்கம், பெண்கள், அவர் களது வேலைக்குத் திரும்பிப் போக வேண்டும், குடும்பத்தைப் பாதுகாப்பதே அவர்களது மைய பணி என்பதில் அழுத்தம் கொடுத்தது. அழகிப் போட்டிகள் பிரபலம் அடைந்தன. 1989 தேர் தலில், குறிப்பிட்ட மட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்புகளில் பெண்களின் பங்கு 15 சதவிகி தமா குறைந்தது. வேலையை விட்டு விட்டால் குடும்பத்தை, குழந்தைகளை நன்றாகப் பார்த்துக் கொள்ள முடியும், ஓய்வெடுக்க முடியும், அது தான் சுதந்திரம் என்ற பிரச்சாரம் செய்யப் பட்டது. சோஷலிசத்தை சீர்குலைக்க தொடர்ந்து முயற்சித்துக் கொண்டிருந்த ஏகாதிபத்திய சக்தி களுக்கு, இத்தகைய சூழல் பயன்பட்டது.

ஏகாதிபத்தியம் விரித்த வலையில் விழுந்தவர் கள், காலப்போக்கில் அதன் வெளிச்சம் மங்கிய பிறகு, பாதிப்புகளைப் புரிந்து கொள்ள துவங்கி யுள்ளனர். பல்வேறு பெண்கள் அமைப்புகள் உருவாகியுள்ளன. ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியும் அதன் பங்களிப்பை செய்து வருகிறது. இழந்த உரிமைகளையும், சமத்துவத்தையும் பெண்கள் மீண்டும் பெற, 20ம் நூற்றாண்டு சோஷலிசம் தன் பலவீனங்களிலிருந்து கற்றுக் கொண்டு, 21ம் நூற்றாண்டில் மாற்றம் காண முன்னைக் காட்டி லும் வீரியத்துடன் புறப்பட வேண்டியிருக்கிறது. இந்தியாவிலும், இந்த அனுபவங்களிலிருந்து படிப்பினைகளைப் பெற்றுக் கொண்டு, பெரு மளவு பெண்களை இடதுசாரி அரசியலின் பங்கேற் பாளர்களாக மாற்றி, புரட்சிகரப் பாதையில் முன்செல்ல வேண்டும்.

அக்டோபர் புரட்சியின் முக்கியத்துவம் … – ஹர்கிசன் சிங் சுர்ஜித்

தமிழில்: ஆர்.சந்திரா

ஆங்கிலத்தில் வாசிக்க

1917ல் நடைபெற்ற மாபெரும் அக்டோபர் புரட்சியின் வெற்றியை மார்க்சிய-லெனினிய கோட்பாடு எந்த அளவுக்கு சரியானது என்பதை நிரூபித்த முதல் அறிவியல் பூர்வமான அத்தாட்சி எனலாம். அதுவரையிலும் அது ஒரு கோட்பாடகவே இருந்தது. போல்ஷ்விக் கட்சி யின் தலைமையில் நடைபெற்ற புரட்சியின் வலிமை அதற்கு தேவைப்பட்டது. அதன் மூலம் விஞ்ஞான சோசலிசம் என்ற கோட்பாட்டின் சரியான நிலைப்பாட்டை உலகின் முன்வைத்து அதை விமர்சித்தவர்களின் தவறை சுட்டிக் காட்டியது. விஞ்ஞான சோசலிசத்தை உருவாக்கி, சிறப்பாக வளர்த்த கார்ல் மார்க்சும், பிரெடெரிக் எங்கெல்சும், மனிதகுல வளர்ச்சியின் வரலாறு முதலாளித்துவத்திலிருந்து சோசலிசம், அதன் பின்னர் கம்யுனிசம் என்ற பாதையில் செல்லும் என்பதை வகுத்து கொடுத்திருந்தனர். இத்தகைய மாற்றத்தை கொண்டு வரும் சக்திகள் மற்றும் அதன் பொதுவான வழி தெரிந்திருந்த போதிலும், அதை அடைவதற்கான திட்டவட்டமான வழி முறைகள் என்பவை, சர்வதேச நிலைமை மற்றும் அந்த குறிப்பிட்ட நாட்டின் புறச்சூழலை பொறுத்தே அமையும் என்பதால் அது நாட்டிற்கு, நாடு வேறுபாடும் தன்மை கொண்டதாகும்.

ஒரு புதிய பாதை துவங்கியது:

1917ல் லெனின் கீழ்கண்டவாறு கூறினார்:
“சோசலிச பாதையின் கடைசி விவரம் வரை மார்க்சுக்கு அல்லது மார்க்சிஸ்டுகளுக்கு தெரி யும் என நாங்கள் சொல்லவில்லை. அப்படி உரிமை கோருவதும் பொருளற்றதாகும். ஆனால், அந்த பாதை வழி எது, அதில் பின் தொடர வேண்டிய சக்திகள் எவை என்பது பற்றி எங்க ளுக்கு தெரியும். லட்சக்கணக்கான மக்கள் அதை தங்கள் கையிலெடுத்து, அவர்களின் அனுபவங் கள் மூலமாக தான் குறிப்பான, யதார்த்தமான விவரங்கள் வெளிச்சத்திற்கு வரும். “.

லெனின் மேலும் சுட்டிகாட்டுவது:
” மார்க்சிய கோட்பாடு உலக நாகரீக வளர்ச் சிப் பாதையிலிருந்து விலகி தோன்றியது மாறாக மார்க்சின் பேரறிவால், , மனிதகுலத்தின் மிக சிறந்த அறிஞர்கள் முன்பே எழுப்பிய வினாக் களுக்கு பதில் அளிக்க முடிந்தது . தத்துவம், அரசி யல் பொருளாதாரம், சோசலிச ஆகிய கோட் பாடுகளை விளக்கிய மிகச் சிறந்த தலைவர்கள் நேரடியாகவும், தொடர்ந்தும் எடுத்துரைக்கும் பாடங்களில் இருந்து அவரது கோட்பாடு தோன்றியது..”

முதலாளித்துவத்தின் உச்ச கட்டம் ஏகாதிபத்தியம் என விளக்கிய லெனின் மார்க்சிய கோட்பாட்டை செழுமைபடுத்தும் அரிய பங்களிப்பை செய்தார். ஏகாதிபத்திய கட்டத்தில் புரட்சி பற்றி மதிப்பீடு செய்த லெனின், சோசலிச புரட்சி முதலாளித்துவ நாடுகளில் மட்டுமின்றி , ஓரளவு பின் தங்கிய, ஏகாதிபத்திய சங்கிலியின் பலஹீன மான கண்ணி உள்ள நாடுகளிலும் வெற்றி பெரும் என்ற முடிவுக்கு வந்தார்.புதிய காலம் மற்றும் ரஷியாவில் அன்று நிலவிய திட்டவட்டமான நிலைக்கு ஏற்ப, அந்த கோட்பாட்டை திட்ட வட்டமாக பின்பற்றியதால் லெனினின் கீழ் செயல்பட்ட போல்ஷெவிக் கட்சி வெற்றிகரமாக புரட்சியை நடத்த முடிந்தது. ரஷியாவின் பழைய காலண்டர் படி புரட்சி அக்டோபர் 25,1917அன்று வெற்றி அடைந்தது. எனவே அது பிரபலமாக அக்டோபர் புரட்சி என அழைக்கப்பட்டது

புரட்சியின் பங்களிப்புகள்:
சோசலிச அரசு அமைந்தவுடன் பிறப்பிக்கப்பட்ட முதல் பிரகடனம் அமைதி மற்றும் நிலம் பற்றியதாகும். அதன் மூலம், லெனினின் தலைமை யிலான் கட்சி புரட்சியைக் காப்பதற்கு உழைக்கும் வர்க்கத்தின் பின்னால் விவசாயிகளைத் திரட்டும் பணியைச் செய்ய முடிந்தது. இவ்வாறு பெறப் பட்ட வலிமையின் மூலம் குழந்தைப் பருவத்தி லிருந்த சோசலிச அரசு ஏகாதிபத்திய தலை யீட்டை முறியடிக்கவும், உள்நாட்டு கலகத்தை ஒடுக்கவும் முடிந்தது. சுரண்டலின் பல வடிவங் களைக் கொண்ட வர்க்க ஆட்சிக்கு முடிவு கட்ட முடியும் என்பதை புரட்சியின் வெற்றி உணர்த் தியது. அத்துடன், உற்பத்திக்கு அனைவரும் தமது பங் கை செலுத்துவது, அவரவர் திறமைக்கேற்ப உழைப்பது, உழைப்புக்கு ஏற்ற கூலியை பெறுவது என்கிற சமுதாயத்தை உருவாக்க முடியும் என்ப தையும் உணர்த்தியது. இது, ஒவ்வொருவரும் உற்பத்திக்கு தன பங்களிப்பை தன திறமைக்கேற்ப செலுத்தி, தனது தேவைக்கேற்ப ஊதியம் பெறலாம் என்கின்ற சமுதாயத்தை நோக்கி ஒரு அடி முன் வைப்பதாகும்.

இந்த கோட்பாடு, இன்று வர்க்க சமுதாயத் திலும் கூட பல அமைப்புகள், அதிலும் குறிப் பாக, சேமநல அரசு என்ற கருத்து வருவதற்கு ஏதுவாக இருந்துள்ளது. இன்று நமது காலத்தில் க, ல்லாமையை ஒழிக்க,இலவச கட்டாய கல்வி அளிக்கத் தேவையான இலவச பள்ளிகள், கல்லூரி கள், பல்கலை கழகங்கள் தோற்றுவித்தல் என்பது சோவியத் ரஷ்யாவிடமிருந்து நாம் கற்றுக் கொண்ட பாடங்கள் ஆகும்.
எழுபது ஆண்டுகளுக்கும் மேலான ஆட்சியில், சோவியத் யூனியன் இது வரை கேள்விபடாத உரிமைகளையும், உத்தரவாதங்களையும் தனது மக்களுக்கு வழங்கியது. முதல் சோசலிச அரசில் மக்கள் அனுபவித்த வேலைக்கான உரிமை, கல்வி, ஆரோக்கியம், இருப்பிடம் ஆகியவற்றிற்கான உரிமைகள் மற்றும் கணக்கிலடங்காஉரிமைகளும் சலுகைகளும் மற்ற நாடுகளில் வசித்த மக்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதில் சந்தேகம் இல்லை. இது மற்ற நாடுகளில் வாழ்க்கை நிலை முன்னேறுவதற்காக நடத்திய போராட்டங் களுக்கு உந்து சக்தியாக விளங்கியது. அத்துடன், அந்நாடுகளில் உள்ள முதலாளிகள் அங்கிருந்த வசதியற்றவர்களுக்கு, சில சலுகைகளை வழங்க வேண்டி வந்தது. இதன் மூலம், ” சேம நல அரசு” என்பது உருவாகியது.
தாறுமாறாக செயல்படும் சந்தை மற்றும் நுகர்வோருக்கு எந்த மாற்றும் இல்லாத வண்ணம் கொள்ளை லாபம் ஈட்டும் நோக்கத்துடன் சந்தையை கைப்பற்றும் ஏகபோக வணிகர்களுக்கு பதிலடியாக பொருளாதார திட்டம் என்பது உருவாக்கப்பட்டது. இதுவும் புரட்சியின் மூலம் நமக்கு கிடைத்தது தான். அதே போன்று, சோஷ லிச பொருளாதார திட்டம் மூலமாக, வேலை யின்மையை ஒழிப்பது, மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வது, அவர்களிடமிருந்து அதிகபட்ச லாபத்தை ஈட்டுவதை தவிர்ப்பது போன்றவை ரஷிய புரட்சியின் மூலம் கிட்டியவை ஆகும். உலகின் அனைத்து உழைக்கும் மக்களையும் விவசாயிகளையும் இணைக்கும் அமைப்புகளான இலவச பொது மருத்துவ வசதி, அரசுடமையாக் கப்பட்ட தொழில்கள், கூட்டுறவு அமைப்புகள், முதியோர் பென்ஷன் முதியோர் இல்லங்கள் பஞ்சாயத்து ராஜ் போன்ற உள்ளாட்சி அரசு அமைப்புகள் ஆகிய அனைத்தும் ரஷிய புரட்சி யின் வெற்றியில் பிறந்தவை ஆகும். இந்த வெற்றி யின் காரணமாக, பல நாடுகளில் இவை பெரிய அளவில் அமுல்படுத்தப்பட்டன. இல்லையெனில், சிறிய குழுக்கள் நடத்திய பரிசோதனைகள் போல் அவை இருந்திருக்கும்.

நம்மை பொறுத்தவரை, இந்த புரட்சி உலக அளவில் ஏகபோகங்களுக்கு இடையேயும், சாம்ராஜ்யங்களுக்கு இடையேயுமான போட்டிக்கு மாறாக, உலக அளவில் பரஸ்பர ஒத்துழைப் பிற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கி தந்தது. காலனிகள் இல்லாத, போர்கள் இல்லாத ஒரு உலகிற்கான கதவுகளை இது திறந்து விட்டது. ரஷிய புரட்சிக்குப் பின்னர் ஏற்பட்ட ப்ரெஸ்ட் லிடோவ்ச்க் ஒப்பந்தம் முதல் உலகப் போரை முடிவுக்கு கொண்டு வர உதவியது. சோவியத் யூனியனின் முனைப்பான தலையீடு இல்லாமல், ஹிட்லரின் 75 துருப்புக்களை அவனது மண் ணிலேயே தோற்கடித்து, இரண்டாம் உலகப் போரை வென்றிருக்க முடியாது பாசிசத்தையும் தோறகடித்திருக்க முடியாது. அந்தப் போரின் பிந்தைய காலங்களில் சோவியத்யூனியன் இருந்த ததால் தான் மூன்றாவது உலகப் போர் வெடிக் காமல் இருந்ததுடன் சால்ட் (கேந்திர ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தம்) மற்றும் சால்ட் ஒப்பந் தங்கள்கை யெழுத்தாகி, அணுஆயுத தீமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிந்தது.

விடுதலை அடைவதற்கு ஊக்குவிப்பு:
தேசீய விடுதலை இயக்கங்களுக்கு சோவியத் யூனியன் அளித்த ஊக்குவிப்பு இந்தியாவில் நம் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.சோவியத் யூனியன் ஒரு புறக்கணிக்க முடியாத சக்தியாக உருவெடுப்பதற்கு முன்னர், காலணிகள் ஒரு ஆதிக்க சக்தியை தூக்கி எறிந்தால் கூட வேறொரு காலனிஆதிக்க சக்திகளிடம் சென்றன. முதல் உலகப் போரின் போது ஓட்டோ மான் பேரரசை எதிர்த்து வெற்றிகரமாக போரிட்ட அரபுகள் பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு பிடிக்குள் வந்து , மீண்டும் தங்கள் விடுதலைக்காக போரிட்டனர். தற்போது நடைபெற்று வரும் சுதந்திரமான பாலஸ்தீனத்திற்கான போராட்டம் என்பது அத்தகைய முடிவுக்கு வராத ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பதன் ஒரு அங்கமே ஆகும். அமெரிக்கா இராக்கை ஆக்கிரமிப்பு செய்ததும் யூத மத வெறி அரசான இஸ்ரேலுக்கு ஆதரவு அளிப்பதும் மேலும் சிக்கலாக்கியுள்ளளது. இரண்டாம் உலகப் போருக் குப் பின்னர் 60 நாடுகள் காலனியாதிக்கத்தி லிருந்து விடுதலை பெற்றதும் மேலும் பல தேசீய விடு தலை இயக்கங்களுக்கு தூண்டுகோலாக அமைந்த தும் ரஷிய புரட்சியின் வெற்றியின் மிகவும் முக் கியமான அம்சம் ஆகும். சிறிய நாடுகளான, வியத் னாம், கம்போடியா, லாவோஸ், கொரியா ஜனநாயக மக்கள் குடியரசு மற்றும் கியூபா ஆகியவை ஜெர்மனி, இத்தாலி,மற்றும் ஜப்பான் ஆகிய தோல்வியடைந்த அச்சு சக்திகளின் பிடி மானத்தை எதிர்த்ததுடன், வெற்றிபெற்ற நேச சக்திகளான பிரிட்டன் அமெரிக்க, பிரான்ஸ் ஆகிய நாடுகளையும் எதிர்கொள்ள முடிந்தது. முக்கியத்து வம் வாய்ந்த இந்த புரட்சி, உலக அளவில் உழைக் கும் வர்க்க இயக்கங்களுக்கும் காலனி எதிர்ப்பு போராட்டங்களுக்கும் பெரும் உந்துசக்தியாக அமைந்தது. சோசலிச அரசின் தோற்றமும் சோவியத் ஒன்றியம் அமைக்கப்பட்டதும் ஜார் மன்னனின் சிறையில் அடைக்கப்பட்டு, ஒடுக்கப் பட்ட ,பல தேசிய இன மக்களுக்கு விடுதலை அளித்தது. தற்கால வரலாற்றை உருவகப்படுத் தியதில் சோவியத் யூனியனின் பங்களிப்பை உலகம் முழுவதும் அங்கீகரிக்க வேண்டி வந்தது.

கோட்பாட்டின் முக்கிய அம்சங்கள்:
ஒரு அரசின் ஸ்தூலமான நிலைக்கேற்ப மார்க்ஸ்- எங்கெல்ஸ் கோட்பாட்டை முதல் முறையாக, வெற்றிகரமாக ரஷிய புரட்சி அமுல் படுத்தியது. புரட்சியின் வெற்றியானது, உலகெங் கிலும் உள்ள புரட்சிகர இயக்கங்களின் மனசாட் சியை குறிப்பாக சீனா, வியதனாம், கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு மற்றும் கியூபா ஆகிய நாடுகளில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், போலாந்து, கிழக்கு ஜெர்மனி, யுகொஸ்லாவியா ஹங்கேரி,செக்கொஸ்லாவியா, ரொமேனியா, பல்கேரியா, போன்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகள் ஒனறு சேர்ந்து சோசலிச முகாமை உருவாக்கி உலக சக்திகளை சோசலிசத்திற்கு சாதகமாக நிலையை ஏற்படுத்தின. சோசலிச முகாமிற்குள் ஏகாதிபத்திய ஊடுருவலுக்கு எதிரான போராட்டத் தில் இறுதிவரை நிற்கவில்லை என்பது உண்மை தான். தவறுகள் செய்யப்பட்டன. ஆனால், இந்த தவறுகள், இன்று நாம் அறிந்துள்ள அறிவியல் கோட்பாடான இயக்கவியல் மற்றும் வரலாற்று பொருள்முதல்வாதத்தின் சரியான தன்மையை புறக்கணிக்க முடியாது.

இதன் அடிப்படையான அம்சம் என்ன வெனில், அனைத்து வகையான பொருட்களின் அனைத்து வடிவங்களும், உறவுகளும் மாற்றத்திற்கு உட் பட்டவை என்பதாகும். ஒவ்வொன்றிலும் உள்ள எதிர்மறை சக்திகள் முரண்பாடுகளாக வெளிவரு கின்றன. பழையதை தூக்கி எறிந்து, புதியதை உருவாக்கி முரண்பாடுகளை தீர்க்க முடியும். தீர்க்கப்பட வேண்டிய புதிய முரண்பாடு உருவா கும். பொருள்முதல் உலகில் தோன்றும் புதிய வளர்ச்சிகள் , மற்றும் மனித உழைப்பு,டன் தொழில்நுட்ப வளர்ச்சியும், திறமைகளும் கருவி களாகி, புதிய நிலைமைகளை உருவாக்குகின்றன அவற்றை சார்ந்தே ஒரு சமுதாயத்தில் உற்பத்தி சக்திகள் அமைகின்றன. ஆனால், அதே சமயம அவை சமு தாயத்தை பல வர்க்கங்களாக பிளவு படுத்தி , உற்பத்தியை அபகரித்துக் கொள்ள போராடும் நிலையை தோற்றுவிக்கிறது. அபகரிப்பு என்ற நிலை வர்க்க போராட்டத்திற்கு இட்டு செல்வதுடன் புரட்சிகரமான மாற்றங்களை ஏற் படுத்துகிறது. வரலாற்றில் உற்பத்தி சக்திகள் தொடர்ச் சியாக வளர்ச்சி அடை கின்றன. புதிய சுரண்டல் உறவுகள், ஏற்படுகின்றன. அவற்றுடன் வர்க்கங் கள் இணைகின்றன.இவை முன்னுக்கு வரும் பொழுது, வளர்ச்சியின் தேவைகளை ஒட்டி, சிலவற்றை தூக்கி எறிய வேண்டி வரும். இந்த செயல்முறையில் புதிய திறம் வாய்ந்த தொழில் நுட்ப வடிவங்கள், திறமைகள் புதிய போராட்டங் கள் வருவதை நாம் காண முடியும். அடிமை சமூகம் நிலபிரபுத்துவம், முதலாளித்துவம், கம்யூனி சம் என்கின்ற, சமுதாயத்தின் முக்கியமான நான்கு கட்ட வளர்ச்சியில் இது தொடர்கிறது. சோசலி சத்திற்கான மாற்றம் ஏற்படும் பொழுது, மூலதன சர்வாதிகாரம் தூக்கி எறியப்பட்டு பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் அமைகிறது. இதில், பாட்டாளி வர்க்கம, முதலாளித்து வர்க்கத்தை தூக்கி எறிந்து உற்பத்தி சாதனங்களை கைப்பற்றுகிறது. அந்த வர்க்கம் பல நூற்றாண்டுகளாக, மற்றவர்களுக்கு செல்வத்தை உற்பத்தி செய்து கொடுத்துள்ளது. உற்பத்தியை தங்கள் வசம் கொண்டு வந்த உடன், சுரண்டலுக்கும், அதோடு தொடர்புடைய வர்க்க போராட்டத்திற்கும் முடிவு கட்டுகிறது.

இத்துடன், மனித குலத்தின் தேவைகளுக்கு ஏற்ப, திட்டமிட்ட உற்பத்தி துவங்குகிறது. அதன் வெற்றி என்பது, சோவியத் ரஷியாவின் வெற்றி மட்டுமல்ல.இதர சோசலிச நாடுகளான சீனா, கியூபா போன்ற நாடுகளில் பொருள் உற்பத்தி அதிகரித்து, மனித வளர்ச்சி உள்ளிட்ட ஒட்டு மொத்த வளர்ச்சியை அடைய முடிந்துள்ளது. இத்தகைய சாதனைகளை பணக்கார முதலாளித் துவ நாடுகள் அடையவில்லை அவர்களின் மக் களுக்கு அவற்றை அளிக்க விரும்பவும் இல்லை. உலகிலேயே ஒரே வல்லரசு என இன்று கருதப் படும் அமெரிக்க தந்து மக்களுக்கு சிறந்த கல்வி, ஆரோக்கியம் மற்றும் இதர கட்டுமான வசதி களை அளிப்பதற்கு பதிலாக, தந்து எல்லைக்கு வெளியேயிருந்து வளங்களை பெற்று வேறு இடங்களில் முதலீடு செய்ய விழைகிறது. மனித குல ம் அமைதியுடனும் முன்னேற்றத்துடனும் மேம்பட வாழ தேவையானதை வலுப்படுத்துவ தற்கு பதிலாக, ராணுவ தளவாடங்களில் முதலீடு செய்து லாபம் ஈட்டுவதையே விரும்புகிறது. அதன் வீழ்ச்சியின் விதைகள் இதில் அடங்கி யுள்ளன.. பாட்டாளி வர்க்கத்தின் கைகளில் உள்ள அரசு உலகில் குண ரீதியான மாற்றத்தை கொண்டு வருவதற்கான சூழலை உருவாக்க முடியும் என்று யதார்த்தத்தில் நிரூபித்து காட்டியதை அக்டோபர் புரட்சியின் மிக முக்கிய பங்களிப்பு எனலாம். சோவியத் யூனியன் இருந்ததனால் தான் இரண் டாம் உலகப் போருக்கு ப பின்னர், காலனியாதிக்க தகர்வு சாத்தியமாயிற்று.ஏகா திபத்திய நாடுகள் முன்னேறிய தொழில்நுட்பத்தை கொடுக்க விரும்பாத சூழலில், புதிதாக விடுதலை பெற்ற நாடுகள் சோவியத் யூனியனிடமிருந்து அவற்றை பெற முடிந்தது. அதே போல, அது ஷேம நல அரசு மற்றும் உலக அமைதிக்கான நிறுவனங்கள் ஏற் படவும் காரணமாக இருந்தது. என்றும் அழியா புரட்சி:
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு போர் தேவை என்ற கருத்து தவறு என்பதை சோவியத் யூனியன் தனது வெற்றிகரமான வளர்ச்சி மூலமாகவும், உலகில் தான் ஆற்றிய பங்கின் மூலமும் வெளிப்படுத் தியது. மாறாக, போர் படைப்பாற்றளுக்கு எதி ரான நிலையினையும், அழிவையும் ஏற்படுத்தக் கூடியது. சோவியத் யூனியனின் சர்வதேச உறவு கள் தொடர்பான் முதல் பிரகடனம் அமைதி பற்றியதாகும். அதன் மூலம் சர்வதேச உறவுகளில் ஒரு புது சகாப்தம் துவங்கியது என அறிவித்தது.

வரலாற்றைப் பற்றிய நமது புரிதலில் உலகில் “தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள்” என்று ஒன்று கிடையாது என்பதை ரஷிய புரட்சி உணர்த் தியது, அதனுடைய மிக முக்கியமான பங்களிப்பு ஆகும். எல்லா இடங்களிலும் உள்ள அனைத்து மக்களும் உள்நாட்டிலும், வெளியேயும் சக்தி களை ஒன்று திரட்டி, வர்க்கமற்ற சமுதாயத்தை நோக்கி முன்னேறும் பணியை மேற்கொள்ள வேண்டும். இதில் வெற்றி பெற உலகில் , மாறி வரும் வளர்ச்சிப் போக்குகளை நமது ஸ்தூலமான நிலைமைகளுடன் பொருத்தி படிப்பதும், அதை உணர்ந்து செயல்படுவதன் மூலம் உலக அளவில் பாட்டாளி வர்க்கம் உற்பத்தி கருவிகளை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர ரஷிய புரட்சி வழி காட்டி உள்ளது. இன்று, சோவியத் யூனியன் என்பது இல்ல. ஆனால், அதன் பங்களிப்புகளை ஒதுக்க இயலாது. உலக அளவில், குறிப்பிடத்தக்க தாக்கத்தை அவர்கள் ஏற்படுத்தினார்கள். எனவே, அவை நமது நினைவில் என்றும் நிலைத்து நிற்கும். சோவியத் யூனியன் சிதறுண்ட பின், முன்னாள், கிழக்கு ஐரோப்பிய சோசலிச நாடுகளில் முதலாளித்துவம் தலை தூக்கியது துரதிர்ஷ்ட மானது சோசலிசத்தை நிர்மாணிப்பதில் , மார்க்சிய லெனினிய கோட்பாடுகளை அப்போது நிலவிய சூழலுக்கு ஏற்ப பொருத்தி பார்பதில் ஏற்பட்ட திரிபுகள், விலகல்களினால், நிறைய தவறுகள் நேர்ந்தன. தவறான புரிதல் தோன்றி யதார்த்த நிலைமை புறந்தள்ளப்பட்டது. ஏகாதி பத்திய சவால்களை எதிர்கொள்ள, அவற்றிக்கு சமமாக ராணுவ தளவாடங்களை வைத்திருப் பதில் கவனம் செலுத்தியது சரியானது என்ற போதிலும், அதே அளவு அழுத்தம் தொழில் வளர்ச்சக்கு கொடுப்பதில் பின் தங்கிய நிலை இருந்தது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் தில் மேற்கொள்ளப்பட்ட வியக்கத்தகு முன்னேற்றங் கள் மீது போதிய கவனம் செலுத்தப்படவில்லை. பொருளாதார அரங்கில் இந்த பிரச்னைகள் கண்கொடுள்ளப்படவில்லை. என்பது மட்டு மின்றி , முடிவெடுக்கும் இடங்களில், மக்களின் பங்கேற்பை உறுதிபடுத்தி, உண்மையிலேயே, மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவது கைவிடப் பட்டது. கட்சிக்கும் அரசுக்கும் இடையிலான வேறுபாடு என்பது இல்லாமல் போயிற்று. ஜனநாயக மத்தியத்துவம் என்ற கோட்பாடு அதிகமாக மீறப்பட்டு, அதற்கு பதில் மத்தியத்து வம் என்பதற்கு அழுத்தம் தரப்பட்டது. கட்சிக்கு பதிலாக தலைமை, அந்த தலைமைக்கு பதிலாக ஒரு சிறு தனிகுழு செயல்பட்டது. இந்த தவறு கள் குறைபாடுகள் பின்னடைவுக்கு காரணமாக அமைந்தன. முதலாளித்துவம் முந்நூறு ஆண்டுகளுக் கும் மேலாக செயல்பட்டு வருகிறது. சோசலிசம் என்பது ஒரு புதிய கருத்தாகும். சோசலிசத்தின் சாதனைகள் ஏராளமாக இருந்த போதிலும், அதை அமுல்படுத்துவதில் இருந்த எதிர்மறை விஷயங்களினால், சோவியத் யூனியன் சிதறுண் டது. கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் பின்னடைவு ஏற்பட்டது.

வியூக மாற்றம் தொடர்தல்:
ஆனால், சுரண்டல் அமைப்பின் முக்கிய அமசங்களான, பசி, வறுமை, கைவிடப்படுதல் ஆகிய வற்றையும், முதலாளித்துவம் என்கிற யதார்த்தத்தை சந்தித்த கிழக்கு ஐரோப்பிய நாட்டு மக்களும், முன்னாள்சோவியத யூனியனில் இருந்த குடியரசுகளின் மக்களும் தற்போது போராட துவங்கிவிட்டனர். அந்நாடுகளில் கடும் எதிர்ப்புகளை அந்த அரசுகள் சந்திககின்றன. தொடர்ச்சியான ஏகாதிபத்திய தாக்குதல்களிடம் சரணாகதி அடைந்த கட்சிகள், தற்போது, புதிய சவால்களை எதிர்கொள்ள மீண்டும் வியுகங்கள் அமைத்துக் கொண்டு வருகின்றன.மக்கள் மீண் டும் கம்யுனிஸ்ட் கட்சிகளின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். ரஷிய பெடரேஷனின் கம்யூனிஸ்ட் கட்சி தான் இன்று ரஷியாவில் அமைப்பு ரீதியில் திரட்டப்பட்ட மிகப் பெரிய சக்தியாகும். சோசலி சத்தை பின்பற்றும், சீனா, கியூபா, வியத்னாம், லாவோஸ் கொரியா ஜனநாயக மக்கள் குடியரசு ஆகிய நாடுகளில், ஆளும் கட்சிகள் கடந்த கால தவறுகளில் இருந்து பாடங்களை கற்றுக் கொண்டு, அங்கே நிலவும் புறசூழலுக்கு ஏற்ப சரி எனக் கருதப்படும் போதிய ,பொருத்தமான மாற்றங் களை செய்து வருகின்றன. சோசலிசத்தை நிர் மாணிக்க ஒரேயொரு முன்மாதிரி என்பது இல்லை என்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது. ஒவ்வொரு நாடும் அதன் புறசூழலுக்கு தகுந்தவாறு, உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு ஏற்ற படி, வர்க்க சக்திகளின் கூட்டு எப்படி உள்ளது என்பதை அறிந்து தனது பாதையை தேர்ந்தெடுக்க வேண்டும். வளர்ச்சி குன்றிய நாட்டில் சோசலிச கட்டுமானம் எவ்வாறு இருக்க வேண் டும் என்பதில் சீன முன்மாதிரி மேலும் பங் களிப்பை செலுத்தி உள்ளது. அடிப்படை கோட் பாடுகளை பின்பற்றிக் கொண்டே உற்பத்தி சக்தி களின் வளர்ச்சிக்கு சீனா அ ழுத்தம் தருகிறது. ஆனால், கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை, தொழிலாளி-விவசாயி கூட்டு, பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் ஆகிய மூன்றும் சோசலிசம் வெற்றி பெற தேவைப் படும் மூன்று பொதுவான கோட்பாடுகள் ஆகும். இந்த நாடுகளின் அனுபவங்களை கணக்கில் கொண்டு ஒவ்வொருவரும் தத்தம் இடங்களில் நிலவும் சூழலுக்கு ஏற்ப, மார்க்சிய-லெனினிய விஞ்ஞான அடிப்படையில் செயல் படுவது வெற்றியை தரும். சீனர்கள் மாவோவின் சிந்தனை கள், டெங் சியா பிங்கின் கோட்பாடுகள் என்றனர். கொரியர்கள் சுசே கருத்து என்றனர். வியத்நாமி யர்கள் ஹோ சி மின்னுடன் அடையாளப்படுத் திக் கொண்டனர். வேறு சிலர் தங்களுடைய முன்மாதிரிகள் அல்லது ஸ்தூலமான நிலைமை யுடன் அடையாளப்படுத்தி கொண்டனர். 1991ல் நடைபெற்ற பேரதிர்வுகளை ஏற்படுத்திய சம்ப வங்களை தொடர்ந்து, சோசலிசம் வீழ்ந்து விட்டது என்றும், கம்யுனிசம் செத்து விட்டது என்றும் கட்டவிழ்த்து விடப்பட்ட பிரச்சாரம் இனிமேல் எடுபடாது. முன்னாள் சோவியத் குடியரசுகளின் மக்களும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளின்ம க்களும் முதலாளித்துவம் தீர்வு அல்ல என்பதை உணர்ந்து கொண்டு விட்டனர். இந்த நாடுகளில்,ஏற்றத் தாழ்வுகள் அதிகரித் துள்ளது. வேலையின்மமை அதிகரித்து பாது காப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மற்ற நாடுகளில், சோசலிசம் அமைப்பை தகர்க்கும் ஏகாதிபத்தியத்தின் கனவு நனவாகாது. சீன, வியத்னாம், கொரியா, கியூபா மற்றும் லாவோஸ் ஆகிய சோசலிச நாடுகளில் உலக மக்களில் கால் வாசி பேர் வசிக்கின்றனர். இவை மிகவும் பின் தங்கிய நாடுகள் தான், அமெரிக்க கடல்பகுதியி லிருந்து வெறும் 90 மைல்கள் தொலைவில் உள்ள கியூபா அதை நிலைகுலையச் செய்யும் அனைத்து முயற்சிகளையும் வீரத்துடன் எதிர் கொண்டு தோற்கடித்துக் கொண்டு வருகிறது. குழந்தை பருவத் தில் சோசலிசம் நிலவும் கியூபாவின் மீதும், அதன் மக்கள் மீதும் ஏகாதிபத்தியம் பொருளா தார தடைகளை விதித்து பெரும் கஷ்டங்களை ஏற்படுத்தியது. அவர்களுக்கு நிறைய பிரச்னை கள் இருந்த போதிலும், கியூபா இதர விடுதலை இயக்கங்களுக்கு ஏராளமான உதவிகளை செய்து வருகிறது. அந்நாட்டின் புரட்சி ஒட்டு மொத்த லத்தீன் அமெரிக்காவுக்கும், கரீபிய பகுதிக்கும் பரவியுள்ளது.

மார்க்சியம் -லெனினியம் என்பது இன்றைக்கும் பொருந்தும் கோட்பாடு ஆகும். அதன் பொருத்தப்பாட்டை, தேவையை வரலாறு நிரூபித்துள்ளது. கம்யுனிச எதிர்ப்பாளர்களும், பிற்போக்கு சக்திகளும் கடும் தாக்குதல்களை தொடுத்த போதிலும், தடம் பதித்த மாபெரும் அக்டோபர் புரட்சியும் அதனால் உருவாகிய முதல் சோசலிசம் அரசின் முக்கியத்துவத்தை யும் அவர்களால் நிராகரிக்க முடியாது.
1992ல் , “சமகால நிலைமையும் மார்க்சியத்தின் பொருத்தப்பாடும்” என்ற தலைப்பில் நடை பெற்ற சர்வதேச கருத்தரங்கில், மார்க்சிஸ்ட் கட்சி யின் கருத்துத்தாள் மிகச் சரியாக கூறியுள்ளது: தற்போது நிலவும் உலக வளர்ச்சிபோக்குகளின் தன்மை ஒரு அறிவியலாக ஒரு வழிமுறையாக, செயல்படுவதற்கு ஒரு வழிகாட்டியாக மார்க் சியத்தின் பொருத்தபாடும் , தேவையும் நியாய மானது என்பதை காட்டுகிறது. மனிதகுல விடு தலையை முழுமை பெறச் செய்ய தேவையானவை என்ன என்பதை நிறுவ மார்க்ஸ் தனது வாழ்நாள் முழுவதையும் செலவிட்டார். பின்னர் வந்த மார்க்சிஸ்டுகளும் அதே பணியில் ஈடுபட்டனர். மனிதனை மனிதன் சுரண்டுவதும், ஒரு நாட்டை மற்றொரு நாடு சுரண்டுவதும் முதலாளித்துவத் தின் அடிப்படையாக இருக்கும் வரை மனித குலத்தின் விடுதலைக்கான தேடலை நிறுத்திவிட முடியாது. இன்றைய உலகில் மனிதம் ஏற்றுக் கொண்டுள்ள உரிமைகள் அனைத்தும் மக்களின் போராட்டங்களின் பங்களிப்பாகும். இந்த வர்க்க போராட்டம் தான் தற்கால வளர்ச்சிப்போகு களை உருவகபடுத்துவதுடன், மனித மனசாட்சி யுடன் இணைந்ததாக உள்ளது.

தற்கால சமுதாயத் தின் மீதும் மனித குலத்தின் அறிவு வளர்ச்சி மீதும் மார்க்ஸ் பதித்துள்ள தடயம் அழிக்க முடியாதது “முதலாளித்துவத்தின் நியாயமற்ற, மனித நேயம் அற்ற தன்மையை தற்கால உலக நிலைமை தெளிவாக வெளிப்படுத்துகிறது. முதலாளித்துவ அமைப்பு அடிக்கும்கொள்ளை யால் வளர்ந்து வரும் நாடுகளில், கோடிக்கணக் கான மக்கள் பசி, பட்டினி, நோய் கல்லாமை போன்றவை நிலவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அணுஆயுத அழிவு அபாயங் களுக்கும், மோசமாகிவரும் சமமற்ற சுற்று சூழலுக்கும் அதுவே நேரடி பொறுப்பாகும் முதலாளித்துவ சமூகங்களில்அதிகரித்து வரும ஒழுக்கக் கேடுகள், போதை பழக்கம்,வன்முறை, பாலின, இன பாகுபாடுகள் .மனிதர்களின் நல்ல குணங்களை கீழே தள்ளுவது தொடர்கிறது. சோசலிச பின்னைடைவுக்குப் பின்னர், முன்பு போலவே, தற்போதும், “முதலாளித்துவமே நிரந்தரமானது” என்ற இடைவிடா பிரச்சாரம் இருந்தபோதிலும் தலாளித்துவ அமைப்பினால் மனித குலம் சந்திக்கும் பெரிய பிரச்னைகளை தீர்க்க இயலாது என்பதை அதுவே நிரூபித்துக் கொண்டிருக்கிறது.

இவற்றிக்கு மாறாக:
“மார்க்சியம்-லெனினியம் என்பது இயல் பாகவே பொருள்முதல்வாதத்தை உள்ளடக் கியது, புத்தாக்க தன்மை கொண்டது. இயக் கவியலை உள்ளடக்கியது. எனவே அது வரட்டு தனமற்றது. விடுதலை என்ற பார்வையும், அதற் கான உயர்ந்த நோக்கங்களையும் வெளிப் படுத்தும் உலகப் பார்வையை கொண்டது. அது மாறிவரும் வரலாற்று நிலைமைகளை கொண்ட பல விஷயங்களை புரிந்து கொள்ளவும் கூர் ஆய்வு செய்யவும் உதவுகின்ற ஒரு கருவியாகும். விடுதலைக்கான மக்கள் போராட்ட திட்டங் களின் நோக்கங்களை வரையறுத்துக் கொடுக்கும் ஓ ர்வழிகாட்டியாகவும், அதே சமயம் மாறி வரும் வரலாற்று சூழலுக்கேற்ப தேவைப்படும் மாற்றங் களை செய்து கொள்ளும் தன்மை கொண்டது.”

1992

நவம்பர் புரட்சியின் விழுமியங்களும் நமது கடமைகளும்!

சோவியத்தின் சாதனைகளைக் கூறி சோவியத் நாட்டிற்கு சென்றுவந்தவர்களின் வாக்கு மூலத் தைக்காட்டி  பேசுவதைக் காட்டிலும் நவம்பர் புரட்சி விதைத்த விழுமியங்களை நினைவில் இருத்தி நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை சிந்தித்து செயல்பட வேண்டிய நேரம் இது. அந்த விழுமியங்கள் இன்று உலகெங்கிலும் அளவு கோலாக ஒவ்வொரு நாட்டிலும் வெவ் வேறு பெயர்களில் இருப்பதை நாம்அறிவோம். மானுட வளர்ச்சி குறியீட்டென் (Human Developement Index) அடிப்படையாகக் கொண்டே ஒரு நாட்டின் வலிமையை அளக்கும்  நடை முறைக்கு வந்ததே நவம்பர் புரட்சியின் கதிர்வீச்சு செய்த மாயம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

மானுட வரலாற்றிலே பல புரட்சிகள் நிகழ்ந்த தாகக் கூறப்படுகிறது. புரட்சிகளின் புரட்சியாக, நாடுகளை விடுதலை செய்த புரட் சியாக உலகையே மாற்றி அமைத்த புரட்சியாக எழுந்த மகத்தான நவம்பர் புரட்சியின் விழுமியங்களை இருட்டில் தள்ள இவைகளை இன்று காட்டுகி றார்கள்.  நவம்பர் புரட்சியை ரஷ்யாவில் நடந்த விபத்து என்று சித்தரிக்கிறார்கள்.  அமெரிக்க  சுதந்திரப் போரை (1775-1783) தனிநபர் உரி மையை நிலை நாட்டிய புரட்சி என்பர். அடுத்த பிரெஞ்சு புரட்சியை (1789-1799) சமத்துவ உணர்வை ஊட்டிய புரட்சி என்பர். இங்கிலாந்து தொழில் புரட்சியை (1820-1840) நவீன எந்திர சக்தியை புகுத்திய புதுமை என்பர். மன்னர் களைப்போல் சண்டை போடாமல், கொள்ளை அடிக்காமல், அபகரிக்காமல் பிரபுக் களைப் போல் யாரையும் அடிமை ஆக்காமல் வர்த்தகத் தின் மூலம் யார் வேண்டுமானாலும் செல்வம் சேர்க்கும் உரிமையை தந்த புரட்சி என்பர். ஆனால் வரலாற்றையும் இன்றைய நடப்புக் களையும் ஒப்பு நோக்கிளால் அதனதன் இலக்கு களை அந்த புரட்சிகள் எட்டவில்லை என்பது தெரியும். அந்தப் புரட்சிகள் தனி நபர் உரிமையை நடைமுறையில் மறுத்தன, சமத்துவம் இயற் கைக்கு விரோதம் என்று விளக்கம் கொடுத் தன. யுத்தம் வாழ்வின் அம்சம் என்றன.

இன்றும் அமெரிக்காவில் அடிமைத்தனத்தின் சாயல்கள் நீடிப்பதை காண முடியும். இன்று அமெரிக்காவில் தனிநபர் வாழ்வுரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை, பத்திரிகை சுதந்திரம் படுகிற பாட்டை ரஷ்யாவில் தஞ்சம் புகுந்திருக்கும் ஸ்நோடனிடம் கேட்க வேண்டும்.

பிரெஞ்சு புரட்சி மன்னர் ஆட்சியை ஒழித்ததே தவிற ஏற்றத் தாழ்வையோ பிரபுத்துவ ஆடம் பரத்தையோ ஒழித்தாக கூற முடியாது. பிரெஞ்சு மொழியும், பிரெஞ்சு பூர்சுவாவும் உசத்தி மற்றது தாழ்வு என்ற அசமத்துவ பார் வையே அங்கு நிலவுவதைக் காணலாம். இங்கிலாந்து தொழில் புரட்சியோ நாடுகளை அடிமைப்படுத்தியது, ஆயுதப் போட்டியை உருவாக்கியது. இரண்டு உலக யுத்தங்களை கொண்டு வந்தது. மனிதனை மனிதன் அடக்காமல், மனிதனை மனிதன் கொல்லாமல், நாடுகளை அடிமைப் படுத்தி சுரண்டாமல் வாழ முடியாது என்று இருக்கும் புவிச்சூழலை இந்த மூன்று புரட்சி களாலும் மாற்ற இயலவில்லை. மாற்றத்தை நோக்கி திருப்பவுமில்லை. ஆதிகாலத்தில் மனிதன் இனங்களாக பிரிந்து சண்டை போட்டுக் கொண்டிருந்தான். இப்பொழுது இந்த புரட்சிகள் நாடுகளாக பிரிந்து சண்டை போட வைத்துவிட்டன. சண்டை போடாமல் தனது இனத்தின் தனித்துவத்தை காப்பாற்ற முடியாது என இந்த புரட்சிகள் கருதவைத்துவிட்டன. சுற்றிலும் நடப்பதென்ன?

சம மதிப்புள்ள சரக்குகளே பரிவர்த்தனை ஆகுமிடமாக சந்தையை ஆக்குவதை இலக்காகக் கொண்ட உலக வர்த்தக அமைப்பால் அதை உத்தரவாதம் செய்ய இயலவில்லை. இந்தப் புரட்சிகளால் ஏற்பட்ட  ஒரே புதுமை(!) சமூக உழைப்பை வேலை இல்லாத் திண்டாட்ட மெனும் பூதத்திடம் தின்னக் கொடுத்து விட்டது தான். இன்று உலகமயமாகி இருப்பது இரண்டு தான். ஒன்று டாலர். மற்றது வேலை யில்லா திண்டாட்டம்.  இந்த புரட்சிகளின் விளைவுகளை ஆய்வு செய்த 19 ஆம் நூற்றாண்டின் இரண்டு நாடோடி இளைஞர்கள் இந்த புரட்சிகளினால் உருவான ஒரு கருவின் மகத்துவத்தை உலகறியச் செய்தனர் அவர்கள் வேறுயாருமில்லை. 35 வயதே ஆன மார்க்சும் 33 வயதே ஆன எங்கெல்சும் ஆவர்.

இந்த மூன்று புரட்சிகளும், முன்வைத்த முழக் கங்களின் சுதந்திரம், ஜனநாயகம், சகோதரத் துவம். இலக்கை எட்டத் தவறினாலும் அந்த இலக்கை நனவாக்கும் ஆற்றல் படைத்த பாட் டாளிவர்க்கம் எனும் சமூக சக்தியை எதிர் வினை யாக உருவாக்கிவிட்டன என்பதை சுட்டிக்காட்டி னர். அவர்களால் வழிநடத்தப்பட்ட அமெரிக்க ஐரோப்பிய பாட்டாளிவர்க்கத்தின் அமைப்பும் இயக்கமும் காட்டிய வழியில் ரஷ்யாவில் நவம்பர் புரட்சி எழுந்தது. பாரிஸ், லண்டன், நியுயார்க் இந்த மூன்று நகரங்களின் விழிப் புணர்வு பெற்ற பாட்டாளி வர்க்க பகுதிக்கு நவம்பர் புரட்சி கடமைபட்டிருக்கிறது. அந்த நவம்பர் புரட்சி உருவாக்கிய சில விழுமியங்களை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

நவம்பர் புரட்சிதான் லெனினையும், செயலுக்கு வழிகாட்டியான அவரது சித்தாந்தத்தை யும் உலகறியச் செய்தது. முதல் உலக யுத்தம் நடக் கிறபொழுது ரஷ்யாவும் ஜெர்மனியும் கடுமை யாக சண்டை போட்டு கொண்டிருந்த தருவாயில் ரஷ்யாவில் கலவரம் வெடித்தது. மன்னர் சிரச் சேதம் செய்யப்பட்டு கெரன்ஸ்க்கி தலைமையில் அரசு உருவாகியது. அன்று கெரன்ஸ்க்கி அரசு பிரிட்டனின் கட்டளையை ஏற்று  யுத்தத்தை தொடர்ந்தது. வெளிநாட்டில் தலைமறைவாக வாழ்ந்த லெனின் ரஷ்யாவிற்குள்ளே பல நாட்டு நண்பர்கள் உதவ உள்ளே போனார். அன்று ஒற்றர்கள் மூலம் செய்தி அறிந்த இங்கிலாந்து நாட்டு யுத்த மந்திரி சர்ச்சில் ஜெர்மன் அரசு ரஷ்யாவை கைப்பற்ற உள்நாட்டு கலவ ரத்தை விரிவாக்கும் நோக்குடன் காலரா, டைபாயிடு கிரிமிகளை டப்பாவில் அடைத்து குடிநீரில் கொட்டுவது போல் லெனின் என்ற பத்திரிகையாளரை குட்ஸ் வண்டியில் அடைத்து அனுப்பியுள்ளது என்று அறிவித்தார். யுத்தத்தை தொடர திட்டமிட்ட ரஷ்ய அரசு லெனினை ஜெர்மன் ஒற்றன் என்று அறிவித்தது அவர் படத்தை வெளியிட்டு காட்டிகொடுப்பவர் களுக்கு பரிசும் அறிவித்தது. லெனின் எழுத்துக் களை ரகசியமாக படித்தவர்களைத் தவிர மற்ற வர்களுக்கு லெனின் யார் என்றே தெறியாது. அவர் எழுத்தை படித்தவர்களுக்கும் அவரது முகம் பரிட்சயமில்லை. கெரன்சிக்கி அரசின் கெடுபிடியாலும் சர்ச்சிலின் அவதூறு களாலும்  லெனின் உலகளவில் பிரபலம் ஆகிறார் ரஷ்ய மக்கள் நேசிக்கும் தலைவராக,  ஆசானாக (தூர இருந்து போதிப்பவர்) வாத்தி யாராக (நெருக்கமாக இருந்து கற்றுக் கொடுப்பவர்) ஆகிறார்.  பிராவ்தா என்ற பத்திரிகையில் அரசியல் பொரு ளாதாரம் பற்றியும். சுரண்டல் பற்றியும், யுத்த எதிர்ப்பு பற்றியும் கருத்துக்களை எழுதியவர் இவர்தான் என்பதை மக்கள் அறிந்தவுடன் அவர் மீது வறளாத நேசம் கொள்கின்றனர். லெனின் இல்லையென்றால் புரட்சியே ஏற்பட்டிருக்காது என்ற நம்பிக்கை பரவுகிறது. லெனின் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரு மாபெரும் சமூக மாற்றத்திற்கு என்ஜினாக இருந்த கட்சியையும் அதனைக்காத்த மற்ற முன்னோ டிகளையும் அங்கிகரிக்க மறுக்கிற போக்கு ஆபத்து என்று லெனின் கருதுகிறார். யாரோ ஒரு ஞானி வழிகாட்ட நவம்பர் புரட்சி எழவில்லை. நவீன பாட்டாளிவர்க்க போராட்டத்தால் புரட்சியாளர்கள் உருவாக்கப்படுகிறார்கள். ரஷ்ய உழைப்பாளிகளின் கட்சியின் 50 ஆண்டுகால போராட்டங்களின் தோல்விகளால் கற்றதைக் காட்டி ரஷ்ய புரட்சி தனி நபர் தலைமை தாங்கி நடக்கவில்லை, பொதுமக்களின் ஆதரவு பெற்ற ஒரு புரட்சிகர கட்சியின் ஆக்கமே நவம்பர் புரட்சி என்பதை காட்டுகிறார். அந்த புரட்சிக்கு வழிகாட்டியாக ஐரோப்பிய அமெரிக்க பாட் டாளி வர்க்க போராட்டக் களத்தில் தயாரிக்கப் பட்ட மார்க்சிசம் இருந்தது என்றார். ரகசிய பத்திரிகை விநியோகித்த பாபுஷ்க்கின் என்ற தோழரை சார் அரசு உயிரோடு புதைத்த நிகழ்வை காட்டி ஒரு புரட்சிகர கட்சியின் உயிர்மூச்சு அதன் ஊழியர்களே என்பதை அறிவுறுத்தினார். ஒரு புரட்சிகர கட்சிக்கு தலைமைக்கு பஞ்ச மிருக்காது. ஊழியர்கள் பஞ்சமே அதன் பல கீனம் என்றார்.

பலவகை ஆற்றல் கொண்ட முன்னோடிகளின் கூட்டமைப்பாக அந்த கட்சி இருந்தது. இதில் ஒவ்வொருவரின் ஆற்றலைப் பொறுத்தே புரட்சியின் தலைவிதி நிர்ணயிக்கப்பட்டது. கட்சி ஊழியனின் உற்சாகம் உறுதி, அரசியல் ஞானம், மக்களோடு நெருக்கம். தூங்கும் மக்க ளையும், திசை மாறி போனவர்களையும் நவம்பர் புரட்சி யின் இலக்கை நோக்கி இழுக்கும் ஆற்றல் இவைகளே வெற்றிக்கு உத்தரவாதமளித்தது. ஏகாதிபத்தியவாதிகளோ சோவியத்தை ஒழித் துக்கட்ட திட்டமிட்டனர். இதனால் சோவியத் பட்ட சிரமம் சொல்லில் வடிக்க இயலாது 3 ஆண்டுகள் உள்நாட்டு யுத்தத்தை அது சந்தித் தது 12 நாடுகளின் படைகள் உள்ளே நுழைந்தன. 1871இல் பாரீஸ் கம்யூனை ஓடிப் போன பிரெஞ்சு அரசு வேண்ட, ஜெர்மன் படைகள் புகுந்து அழித்ததுபோல பிரிட்டனும் அதனுடைய கூட்டாளி நாடுகளும் படைகளை அனுப்பி இதையும் ஒழிக்க முயற்சித்தனர். எதிரி களிடம் இல்லாத யுக்தியை சோவியத் ராணுவ வீரர்கள் கையாள சோவியத்கூடி முடிவு செய்தது. முதல் சர்வதேச தொழிலாளர் சங்கம் ஐரோப்பா முழுவதும் விதைத்திருந்த சோசலிச கருத்துக்க ளால் ஈர்க்கப்பட்டவர்களை தங்கள் பக்கம் இழுப்பது, நான்காண்டு ஆண்டுகால யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய மக்க ளின் ஆதர வைப் பெறுவது. இந்த முயற்சிகளில் ஈடுபட்ட தால் பிரிட்டீஷ் படை ரஷ்யாவிற்குள் இறங்கி யதை கண்டித்து பிரிட்டனில் தொழிலா ளர்கள் குரல் கொடுத்தனர். இது சோவியத் யுக்தியின் எடுபடும் தன்மைக்கு எடுத்துக்காட் டானது. அதேபோல் சோவியத் ராணுவ வீரர் களின் அரசியல் ஞானமும், சோசலிச லட்சிய உறுதியும் ஆங்காங்கு கள அளவில் இருந்ததைப் பொறுத்து இந்த களமட்ட சமரச முயற்சியின் பலன் இருந்தது என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும். இந்த முயற்சிகள் ஓரளவுதான் வெற்றி பெற்றது. இருந்தாலும் உள்நாட்டு சுரண்டும் கூட்டம் (பிரபுக்கள், முதலாளிகள்)வெண்படை அமைத்து. மாடுகளைக் கொன்று பால் தட்டுப் பாட்டை உருவாக்கினர், தானிய கிடங்குகளை எரித்தனர். நிராயுத பாணிகளான மக்களை கொன்று குவித்தனர். 70 லட்சம் குழந்தைகள் அனாதைகளாயின. சுருக்கமாக 3 ஆண்டு உள் நாட்டு யுத்தம் மக்களை விரக்தியின் விளிம்பிற்கு துரத்தியது. போல்ஷிவிக் கட்சி ஊழியர்களின் விவேகமும், மார்க்சிச ஞானமும், மக்களின் அன்றாட தேவைகளான உணவு, பால், இவை களை பகிர்ந்து கொடுக்க அவர்களது விருப்பு வெறுப்பற்ற முயற்சியும் சோவியத் ஆட்சி முறைக்கு, மக்களின் ஆதரவை உள்நாட்டு யுத்த காலத்தில் திரட்டிக் கொடுத்தது. பெரும்பாலான கட்சி ஊழியர்கள் மேல் இருந்து கீழ் வரை அதி காரத்தை துஷ்பிரயோகம் செய்யாமல் மக்களின் சேவகர்களாக நடந்து கொண்டனர். எல்லா மட்டங்களிலும் உள்ள குறைகளை சுட்டிக் காட்டும் சுதந்திரம் மக்களுக்கு இருந்தது (பின் நாளில் இந்த சுதந்திரம் தேய்ந்தது என்பது தனி வரலாறு) பிரதிநிதிகளை திரும்ப அழைக்கும் அதிகாரம் சோவியத் அமைப்பில் இருந்ததால் மக்களின் நம்பிக்கை உறுதிப்பட்டது..

கடந்தகாலப் புரட்சிகளின் சமத்துவம், சகோ தரத்துவம், தனிநபர் உரிமை (லிபர்ட்டி) இவை களை நடைமுறையில் ஒவ்வொருவரும் அனுப விக்க தேவையான அமைப்பை உருவாக்க கடந்த கால புரட்சியாளர்கள் தவறினர். சோவியத் அமைப்பு மக்களின் எதிர்பார்ப்பாக இருந்த அந்த முழக்கங்களை உத்தரவாதம் செய் யும் அமைப்புக்களை உருவாக்கியது. அதில் குறிப் பிடத்தக்க அமைப்பு இளைஞர்கள் அமைப்பு (காம்சோமால்).

கடந்த காலப் புரட்சிகளின் இலக்குகளை அடைய வேண்டுமானால் முதலில் ஒவ்வொரு மனிதனும் உழைப்பை நேசிப்பவனாக மாற வேண்டும். அடுத்து யுத்தமில்லா உலகு வேண்டும், அதைவிட நாடுகளிடையே ஒத்துழைப்பு வேண்டும். அதையும்விட விஞ்ஞானத்தின் இலக்கு மாற வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக தனிநபர் உரிமை, பெண்விடுதலை, குடும்பம், கல்வி, ஆரோக்கியம் இவைகளில் முற்றிலும் புதிய அணுகுமுறை வேண்டும். விடாமுயற்சியும் உலக நாடுகளின் அனுபவங்களை பகிர்வும் செய்யாமல் இந்த மாற்றங்களை கொண்டுவர இயலாது என்பதை போல்ஷிவிக் கட்சி உறுப்பினர்கள் உணர்ந்தனர், இதற்கு கட்சி மட்டும் போதாது. மக்களின் பங்களிப்பை உத்த ரவாதம் செய்ய வேண்டும். சோவியத் மக்கள் மட்டும் போதாது. உலக மக்களோடு நல்லுறவு வேண்டும்.  சோவியத்தை இந்த இலக்குகளை நோக்கி செயல்பட வைக்க வேண்டும் என்பதையும் உணர்ந்தனர்.

சோவியத் என்பது ஒரு நாடல்ல, உலக நாடு களின் பாட்டாளி வர்க்கமும், அறிவு ஜீவிகளும் ஆதரவு தந்து ரஷ்ய பாட்டாளி வர்க்கத்தின் விழிப்புணர்வு பெற்ற முன்னோடிகள் உரு வாக்கிய முன்மாதிரி சமூகம். எனவே உலக விஞ்ஞானிகளே. உழைக்கும் வர்க்கமே உங்களது ஒத்துழைப்பு தேவை என்று ஆதரவு திரட்டதிக் கெட்டும் தூதுவர்களை சோவியத் அரசு அனுப்பியது. மக்களின் அடிப்படை தேவை களுக்கான பொருளுற்பத்தியை பெருக்க ஆய்வு களை மேற்கொள்ள விஞ்ஞானிகளை வேண்டியது. அதற்காக நிதி ஒதுக்கியது. கஜானா வில் நிரம்பிக் கிடந்த தங்கத்தை அள்ளி கொடுத்து விஞ்ஞானிகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி தகவல்களை  சேகரித்தது. ஐந்தாண்டு திட்டத்தை அறிவித்தது. அனைவருக்கும் கல்வி போதிக்கும் முறையை புகுத்தியது. ஒருவர் ஒருவருக்கு கற்றுக் கொடுக்கும் முறை (Each one teach one) மூலம் முதியோர் கல்வியை முதன் முதலாக அறிமுகப் படுத்தியது. ஒவ்வொரு மனி தனையும் உழைப் பாளியாகவும் படைப்பாளி யாகவும் ஆக்குவதே இந்த கல்வியின் இலக்காக இருந்தது. உற்பத்தித் திறனை உயர்த்தும் புதிய தொழில் நுட்பங்களை கண்டுபிடிக்கும் ஆற்றலை உருவாக்க உழைப்பாளர்கள் பங்கேற்கும் இயக்க மாக ஆக்கியது. அன்று ஸ்டாக்னோவிச் இயக்கம் உலக நாடு களின் கவனத்தை ஈர்த்தது. கர உழைப்பு கருத் துழைப்பு இரண்டையும் பிரித்து முரன்பட வைப்பதின் மூலமே முதலாளித்துவம் தொழிற் புரட்சியை கண்டது. ஒரு பகுதி உழைக் கும் மக்களை எந்திரத்தை ஓட்டும் எந்திரமாக் கியது. ஸ்டாக்னோவிச் இயக்கமோ உழைப்பாளிகளின் விஞ்ஞான அறிவை உயர்த்தி படைப்பாளி யாகவும் ஆக்கியது அதற்கேற்றவாறு வேலை நேரத்தை குறைத்தது. கடின உடலுழைப்பு தேவைப்படும் வேலை நேரத்தை குறைத்தது. ஸ்டாக்னோவிச் இயக்கம் கண்ட தொழில் நுட்ப மேன்மைகள் உலகளவில் பாராட்டபட்டன. இன்று பல தனியார் நிறுவனங்கள் தொழிலா ளர்களின் படைப்புத் திறனை பயன்படுத்தும் நிர்வாக முறையை பின்பற்றுவதைக் காணலாம்.

மக்களின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை சொல்லும் வகையில் வரலாறு எழுத வரலாற்று ஆய்வாளர்களுக்கு சோவியத் வேண்டுகோள் விடுத்தது. சமூக இயல் என்ற புதிய வரலாற்று ஆய்வை பல்கலைக்கழகங்கள் துவக்கின.. உலக நாடுகளின் சமூக இயலை இந்த ஆய்வாளர்கள் துவக்கினர். இந்த வகையில் இந்திய சமூக இயலுக்கு சோவியத் ஆய்வாளர்களின் பங்கு அளப்பரியது. இந்திய பாடப் புத்தகங்களிலே சிப்பாய்க் கலகம் என்று இருந்ததை முதல் சுதந்திரப் போர் என்று திருத்த மார்க்ஸ் ஏங்கெல்ஸ் எழுத்துக்களை அறிமுகப்படுத்தியது சோவியத் ஆய்வாளர்களே. வர்ணாஸ்ரம தர்மம் நிலவிய காலத்திலிருந்து கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி வரை வர்ணாஸ்ரம அதர்ம பகிர்வும், நிலவரிக் கொடுமைகளும் விவசாயிகளை கலவர நிலைக்குத் தள்ளி ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்தது என்ற வரலாற்று உண்மையை வெளிக் கொண்டுவர சோவியத் ஆய்வாளர்களின் பங்களிப்பே துவக்கமாக இருந்தது.

சோவியத் குடும்ப உறவில் பாசம் அடிப்படை யாவதற்கான சூழலை உருவாக்கியது. திருமண மாகாமல் குழந்தை பெற்றெடுக்க நேர்ந்தால் அந்த தாயை இழிவுபடுத்தாமல் இருக்க சோவியத் அரசு சட்டமியற்றியது. குழந்தை வளர்க்க மான்யம் கொடுத்தது. தாய் சொந்த வருவாயில் வாழ வேலை கொடுத்தது. முன் னேறத் தேவையான கல்விகற்க வேலை நேரத்தை குறைத்தது. மதவாதிகள், சனாதன வாதிகள் இது குடும்பத்தை அழித்துவிடும் என்று அவதூறு செய்தனர். ஆனால்  நடந்ததுவேறு. பாசத்தை அடிப்படையாகக் கொண்ட குடும்பங்கள் நிலைத்தன. பணப்பட்டுவடா குடும்பங்கள் சிதறின. கடந்த காலத்திலும் இப்படி நிகழ்வது வாடிக்கை. அதில் பெண்கள் அனா தையாவது நடைமுறையாக இருந்தது. சோவியத் அந்த நிலைமையை மாற்றி உலகிற்கு வழி காட்டியது.

உள்நாட்டு கலவரத்தால் 70 லட்சம் குழந்தை கள் அனாதைகளாயினர். சோவியத் அரசு தங்கு மிட பள்ளிகள் அமைத்து அவர்களுக்கென பாடத்திட்டங்கள் உருவாக்கி சமூக விரோதி களை உருவாக்கும் சூழலை வெகுவாக குறைத்தது. இன்று அமெரிக்காவை திக்குமுக்காடச் செய்யும் துப்பாக்கி கலாச்சாரம். போதை பழக்கம் இவை களை நாம் அறிவோம். சோவியத் அன்று உரு வாக்கிய தங்கி படிக்கும் பள்ளிகளும். இளைஞர் அமைப்பும் (காம்சோமால்) இல்லை என்றால். முதல் உலக யுத்தம் முடிந்த தருவாயிலேயே ரஷ்யா இன்னொரு அமெரிக்காவாக ஆகியி ருக்கும். அதனுடைய கல்வி முறை உலகையே கவனிக்க வைத்தது. பல மேலை நாடுகளில் சிறார் களை திருத்தும் பள்ளிகள் சோவியத் கல்வி யாளர் மெக்கரங்கோவின் வழியை பின்பற்றத் தொடங்கின. சோவியத் கல்வியின் இன்னொரு சிறப்பு நர்சரி பள்ளியிலிருந்து உயர் கல்வி வரை தாய் மொழி கல்வியானது. குழந்தைப் பருவமே எதிர் கால ஆளுமைக்கு அடிப்படை. மதபோதனை குழந்தைப் பருவத்திலேயே ஊட்டப்படுவதால் ஒருவன் அல்லது ஒருத்தியின் எதார்த்தங்களை புரியும் ஆற்றலை வெகுவாக குறைத்துவிடுவதை காண்கிறோம். எனவே மதமாற்றப் பார்வை யோடு குழந்தைகளுக்கு போதிக்கிற பாடத்திட் டங்கள் உருவாக்கப்பட்டன. கார்ட்டூன்கள், கதைகள். புராணங்கள் எல்லாமே நல்லதை சொல்லுகிற முறையில் பயன்படுத்தப்பட்டன.  பழிக்குப்பழி வாங்குவது சுயநலமாய் இருப்பது நிறைந்த மனதை தராது என்பதையும். பிறருக்கு உதவுவது. இயற்கையின் சாவல்களை சந்தித்து உயிர்களைகாப்பது சண்டையை தவிர்பது. தற்காப்பு முறைகளால் தப்புவது மனநிறைவை தரும் என்று  உணரவைக்கும் கதைகளாகவும் அவைகள் இருந்தன.

பள்ளிப் பருவத்திலேயே சிக்கல்களை சந்திக்கும் மனோதிடத்தை உரு வாக்க குழந்தைகளால் நடத்தப்படும் ரயில்வே அமைப்பு உலக நாடுகளை பின்பற்ற வைத்தது. போலந்தில் சோசலிச ஆட்சி முறை இன்று இல்லை ஆனால் அக்காலத்தில் உருவான குழந்தைகள் நடத்தும் ரயிலமைப்பு இன்றும் உள்ளது. சோவியத் மருத்துவம் நோய் தடுப்பு. தகுதி பெற்ற மருத்துவர்கள் மூலம் உயர்ந்த சிகிச்சை அனைவருக்கும் கிடைக்கச் செய்தல் ஆகிய இரண்டு அடிப்படைகளை கொண்டிருந்தது. அரசே இதற்கான செலவை செய்தது. படுக்கை வசதியுடன் மருத்துவமனைகள் கட்டப்பட்டன. உழைப்பாளிகளின் ஆரோக்கியத்தை முதன்மை படுத்தியது. இலவச மருத்துவத்தின் மூலம் கொடுக்கிற காசுக்கேற்ற வைத்தியம் என்ற ஏற்றத் தாழ்வை ஒழித்துக் கட்டியது. விமானங்கள், ஹெலிகாப்படர்கள் ஆம்புலன்சாக பயன்படுத்தப்பட்டன. (அன்றைய தேதிகளில் உலகிலேயே மலிவான உள்நாட்டு விமானப் போக்குவரத்தை சோவியத் நடத்தியது. ஆடம்பர கார்கள் உற்பத் திக்கு கவனம் செலுத்தாமல் டிராக்டர், பஸ், லாரிகள், விமானங்கள் இவைகளே பெறுமளவில் உற்பத்திக்கு அதிக கவனம் செலுத்தியது) பிரிட்டன் உட்பட பல ஐரோப்பிய நாடுகள் இதன் பிறகு மருத்துவத்தை இலவசமாக்கியது. இப்பொழுது சுரண்டல் முறைக்கு வேட்டு வைக்கும் என்று பயந்து மருத்துவத்திலும் பணமாக்கும் முறையை புகுத்துகின்றன. சோவியத் உருவாக்கிய விழுமியங்களில் மானுடம் இருக்கிற வரை மறக்க முடியாத ஓன்றுண்டு. அது விஞ்ஞான தொழில்நுட்பங் களை பொது சொத்தாக்கி உலகமயமாக் கிடும் இயக்கத்திற்கு வித்திட்டது. தொழில்நுட்ப ஞானத்தை பகிர்வதை கொள்கையாக ஆக்கியது. பிறநாட்டு விஞ்ஞானிகளோடு கூட்டாக ஆய்வு செய்வதை ஊக்குவித்தது. அதற்கு அடையாள மாக இன்றும் மிர் என்ற செயற்கை விண்கலம் ஆய்வகமாக சுழன்று வருவதை காணலாம்.

இன்று 12 நாடுகள் அதனை ஆய்வாகமாக பயன்படுத்துவதை காணலாம். இன்று அறிவு சொத்து பற்றி குழப்பமான கருத்துக்களே நிலவுகிறது. அறிவு சொத்து வர்த்தக ரகசியமா கவும் பிறர் உழைப்பை சுரண்டும் கருவியாகவும் இருக்கிற வரை தேயுமே தவிர வளராது என்பது அனுபவம். இதை விஞ்ஞானிகள் அறிவர். யுத்த காலத்தில் கூட பகைமை நாட்டு விஞ்ஞானிகள் கலந்துறையாடுவதை கண்டிருக்கிறோம். சில விஞ்ஞானிகள் தங்களது கண்டுபிடிப்புகளை காப்புரிமை பெற மறுப்பதை காண்கிறோம். உதாரணமாக போலியோ தடுப்பு மருந்தை கண்டு பிடித்த அமெரிக்க விஞ்ஞானி ஜோனாஸ் சால்க் தனது கண்டுபிடிப்பை காப்புரிமை பெற மறுத்து விட்டார். அவர் காப்புரிமை பெற்று இருந்தால் பில்கேட்டை விட அதிக பணத்தை குவித்திருப் பார். பல கோடி இளம்பிள்ளைவாத நோய்கண்ட ஏழை நாட்டு ஏழை வீட்டுக் குழந்தைகள் அவரது பண மலையைப் பார்த்து. இது போலியோ தடுப்பு மருந்து உருவாக்கிய பணமலையல்ல. தடுப்பு மருந்தை கிடைக்காமல் செய்து வளர்ந்த பணமலை என்று கண்ணீர் விட்டிருப்பர். சமீபத்தில் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் கிரகங்களை ஆய்வு செய்யும் தொழில்நுட்ப முன்னேற்றம் பற்றி கருத்தரங்கம் நடத்திட்டமிட்டது. அமெரிக்க அரசு காப்புரி மையை ஏற்காத சீன நாட்டு விஞ்ஞானிகளை இதற்கு அழைக்க கூடாது என்று தடை உத்திரவு பிறப்பித்தது. ஆனால் விஞ்ஞானிகளில் அறிவு சொத்து பற்றிய பார்வையில் தெளிவு உள்ளவர்கள் இந்த அரசியல் முடிவை கண்டித்தனர். அவர்களை தடுத்தால் தாங்களும் கலந்து கொள்ள மாட்டோம் என்றும் அறிவித்தனர். அமெரிக்க அரசு பின் வாங்கியதாக தகவல். அறிவு சொத்தை பொது சொத்தாக கருதினால்தான் தொழில்நுட்ப அறிவு வளரும் அது சரக்குற்பத்திக்கான அவசிய நேரத்தை குறைக் கும். அது விலைகளை குறைக்கும் போக்கை உருவாக்கும் என்பது நவம்பர் புரட்சி உருவாக்கிய கோட்பாடு. நவம்பர் புரட்சி விதைத்த அறிவுச் சொத்து கோட்பாடு எனும் விழுமியத்தை முதலாளித்துவ அரசியல்வாதிகளும் பணவாத பொருளாதார நிபுணர்களும் மறுத்து வருவதால் இன்று நாம் காண்பதென்ன? விலைகளை உயர்த்தும் சந்தை பொருளாதார நெருக்கடி எனும் படியில்லா கிணற்றிலே மக்களை தள்ளி விடுவதை காண்கிறோம்.

ஒவ்வொரு மனுசனையும் மனுசியையும் உழைப்பாளியாகவும். படைப்பாளியாகவும் ஆக்குவது, குடும்ப உறவில் பாசத்தை அடிப்படை யாக்குவது. அறிவு சொத்தை சுதந்திரமாக வளரவிடுவது. ஆதிகால புரட்சிகளின் முழக்க மான சமத்துவம், சகோதரத்துவம், தனிநபர் சுதந்தரம் இவைகளை நடைமுறைப்படுத்துவது ஆகிய நவம்பர் புரட்சி விதைத்த விழுமியங்களை நாம் என்ன செய்யப் போகிறோம்? போய் விட்டதே என்று புலம்ப போகிறோமா? பட்டை தீட்டாத அந்த வைரங்களை பட்டை தீட்டி மானுடம் பயனுறச் செய்யப் போகிறோமா?

உலகை மாற்றுதல் புரட்சி என்பது உண்மைதான், ஆனால் – அதற்கு முதலில் உன்னை மாற்றுதல் வேண்டுமென்பதை உணர்வாயா? –  கவிஞர் துரை.சண்முகம்

நவம்பர் புரட்சிக்குப் பின்….

விரக்தியின் தத்துவம் உலகம் உருக்குலைந்து போய்க் கொண்டிருப்பதாகவும் பண்பாடு அழிந்து கொண்டிருப்பதாகவும் அவலக் குரல் எழுப்புகின்றது. ஆனால் அதே வேளையில் மார்க்சிஸ்டுகள் புதிய உலகு தோன்றும் பிரசவ வலியின் ஒலியினை கேட்கிறார்கள் அந்த பிறப்பின் வலியினை குறைக்கவும் முயற்சி செய்கிறார்கள்.

ஜார்ஜ் லூகாஸ்

நவம்பர் புரட்சியின் நினைவுகள், உலகை விளக்கிச் சொல்வதோடு நில்லாமல் மாற்ற முனையும் சக்திகளுக்கு என்றும் உத்வேகம் கொடுக்கும். அண்மை காலத்தில் நடந்து முடிந்த நிகழ்வுகள் அதற்கு தடையாக இருந்தன என்பதும் உண்மை. சோவியத் யூனியன் சிதைந்து போனதும் அதையொட்டி சோசலிச உலகம் சந்தித்த பின்னடைவும் நம்மையெல்லாம் சற்று அசைத்துப் பார்த்ததும் உண்மைதான். முதலாளித்துவத்தின் பிரச்சார பீரங்கிகள் முழங்கின. மார்க்சிசம் மறைந்து போனது வரலாறு முடிந்து போனது என்றும் மாற்று ஏதுமில்லாத மாற்றம் எதுவும் நெருங்க முடியாத உலகு, முதலாளித்துவ உலகுதான் என்றும் பிரச்சாரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. ரஷ்யாவில் நடந்து முடிந்த நவம்பர் புரட்சியும் அதையொட்டி அங்கு எடுக்கப்பட்ட முடிவுகள் நடவடிக்கைகள் யாவும் சோசலிச கட்டமைப்புக்கு எந்த வகையிலும் தொடர் பில்லாதவை என்று சிலர் வாதிட்டனர்; சோசலிசம் எங்கும் நடைமுறைப்படுத்தப்படவில்லை, ஆகவே சோசலிசம் தோற்றுப் போனதாக சொல்ல முடியாது என சிலர் (அனுதாபத்துடன்) வாதிட்டார்கள். வரலாற்று உண்மைகளையும் அறிவியல் ரீதியாக நிறுவப்பட்ட உண்மைகளையும் கேள்விக்குறியாக மாற்றும் சில அறிவு ஜீவிகளின் முயற்சி பல்வேறு வடிவங்களில் தொடர்கின்றன. இந்நிலையில் நாம் செல்லும் பாதையில் தெளிவுபெற வேண்டி கடந்த கால வரலாற்று நிகழ்வுகளை நினைவு கொள்ளுதல் அவசியமாகிறது.

முதலாளித்துவ சமூக அமைப்பிலிருந்து கம்யூனிச அமைப்புக்கு மாறிச் செல்லும் நிகழ்வு ஒரு வரலாற்று யுகம் முழுமையும் எடுத்துக் கொள்ளும். அந்த யுகம் முடியும் வரை, சுரண்டுபவர்கள் மீண்டும் புத்துயிர் பெரும் நம்பிக்கையினை வளர்த்துக் கொண்டிருப்பார்கள்; அந்த நம்பிக்கை அப்படி புத்துயிர் பெறுவதற்கான செயல் திட்டங்களில் அவர்களை ஈடுபடவைக்கும் என்று லெனின் விடுத்த எச்சரிக்கையினை கவனத்தில் கொள்ள வேண்டும். தோற்றுப் போனவர்கள், தூக்கியெறிப்பட்ட சுரண்டல்காரர்கள் பத்து மடங்கு வேகத்துடன் இழந்த சொர்க்கத்தை மீட்க போராடுவார்கள் என்றும் எச்சரித்தார்கள். இது ஒன்றும் கம்யூனிஸ்ட்டுகளுக்கு தெரியாத விஷயமல்ல; ஆனால் இது உணர்வில் முழுமையாக வியாபித்து அதன் பகுதியாக மாறவில்லை என்பது தான் சோவியத் காட்டும் உண்மை. மனித சமூகத்தின் வளர்ச்சிப் போக்கில் ஒரு கட்டத்திலிருந்து அடுத்த கட்டத்திற்கு மாறிச் செல்வது புல் தளத்தில் நடப்பதை போன்றதல்ல. முன்னேற்றம் உண்டு – ஆனால் ஏற்ற இறக்கத்துடன், கல்லும் முள்ளும் கடந்து, சில நேரம் பின் வாங்குதலையும் சந்தித்து அந்த முன்னேற்றம் உறுதி செய்யப்படுகிறது. சோவியத் யூனியனிலோ கிழக்கு ஐரோப்பா நாடுகளிலோ நிகழ்ந்த மாற்றங்கள் அதிர்ச்சி தருவதாக இருந்தாலும், நடக்க முடியாத நிகழ்வுகள் அல்ல.

சோவியத் சந்தித்த சோதனைகள் :

ஏகாதிபத்தியத்தின் பலமிழந்த கண்ணி அறுந்த பொழுது எழுந்தது தான் சோவியத் யூனியன். மார்க்ஸ் எதிர்ப்பார்த்தது போல் வளர்ந்த முதலாளித்துவ நாடுகளில் அந்த மாற்றம் நிகழவில்லை. தொழில் வளர்ச்சியிலும் விவசாயத்திலும் மற்ற ஐரோப்பிய நாடுகளைக் காட்டிலும் பின் தங்கியிருந்த ரஷ்யாவில் அது நிகழ்ந்தது. நாட்டின் 82 சதம் மக்கள் கிராமப்புறங்களில் வாழ்ந்தனர்; 70 சதம் மக்கள் கல்வியறிவு நிரம்பப் பெறாதவர்கள். அங்கு தான் சோசலிச புரட்சியின் மூலம் தொழிலாளி வர்க்க ஆட்சியை பிடித்தது. அதை தக்க வைத்துக் கொள்வது ஒரு சிக்கலான கடுமையான அனுபவமாக இருந்தது. லெனின் எச்சரித்தது போல் தோற்றவர்கள் மூர்க்கத்தனத்துடன் இளம் சோவியத் யூனியனை தாக்கினார்கள். வெள்ளை பயங்கரம் (White Terror) என்று குறிப்பிடப்பட்ட காலாடின், கோல்சாக், ராங்கல் (Kaladin, Kolchack, Wrangal) படைகள் உள்நாட்டு போரை துவக்கின. 14 நாடுகள் அவர்களுக்கு ஆதரவாக நின்று அனைத்து உதவிகளையும் செய்தன. ஆனால், “சிவப்பு பயங்கரம்” அதை சந்தித்தது. அந்த உள்நாட்டு போரில் வெள்ளை படைகளும் உள்ளே மூக்கை நீட்டியவர்களும் தோல்வியைச் சந்தித்தாலும், ரஷ்யாவின் பொருளாதாரம் பெரும் அழிவிற்கு உட்படுத்தப்பட்டது.

சில புள்ளி விவரங்கள் அந்த நிலையினை விளக்கும்.

விவசாயத்துறை 1913 1921
பயிர் செய்த நிலம் 2193.4 (ஏக்கர்) 112.3 (ஏக்கர்)
உணவு உற்பத்தி (பூட்*) 4079 1617

* 1 பூட் = 36.11 பவுண்ட்

தொழில்துறை (1913 உற்பத்தி சதவீதத்தில்)
நிலக்கரி 30.8
எண்ணெய் 42.7
இரும்பு 1.6
பருத்தி 7.5
இயந்திரம் 9.3
சர்க்கரை 6.7

இந்த பொருளாதார வீழ்ச்சியோடு வறுமை, பஞ்சம், பட்டினியால் மக்களின் துயரம் அதிகரித்தது. பாதிக்கப்பட்ட 2.4 கோடி மக்களில் 70 லட்சம் பேர் பஞ்சத்தால் மடிந்து போனார்கள்; இதோடு முதல் உலகப்போரில் மாண்டுபோன 15 லட்சம், உள்நாட்டுப் போரில் மாண்ட 10 லட்சம், தொத்து நோயால் மாண்ட  30 லட்சம் பேரையும் சேர்த்துக் கொள்ளவேண்டும். 20 லட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேறினார்கள். சோவியத் வீழ்ச்சியினைப் பற்றி பேசுபவர்கள் இந்த பொருளாதார சமூக அழிவின் மீது தான் போல்ஷ்விக் கட்சியின் தலைமையில் சோசலிச நிர்மாணம் முயற்சிக்கப்பட்டது என்பதை மறந்து விடுகிறார்கள். மற்ற சில நாடுகளிலும் (ஜெர்மனி, ஸ்பெயின், இத்தாலி, ஆஸ்ட்ரியா) புரட்சிகரமான இயக்கங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவைகள் நசுக்கப்பட்டன. ஜெர்மனியில் புரட்சி வெற்றிபெறும் என்று லெனின் எதிர்பார்த்தார்; மூன்று முறை ஜெர்மனியில் முயற்சி நடந்தது, அவையாவும் தோற்றுப் போயின. சோவியத் யூனியன் தனித்து நின்று தான் சோசலிசத்தைக் கட்ட வேண்டுமென்ற நிலை எழுந்தது. அதைச் சுற்றிலும் ஏகாதிபத்திய அரசுகள் தடுப்புச் சுவர் எழுப்பியிருந்தனர். வணிகத்தடை செயல்படுத்தப்பட்டது.

சோவியத் பொருளாதாரத்தை கீழிருந்து மேலே கொண்டுவர வேண்டிய அவசியம் வந்தது. லெனின் புதிய பொருளாதாரக் கொள்கையினை முன்வைத்தார். அதன்படி முதலாளித்துவ அமைப்பின் சில நடைமுறை அம்சங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இது முதலாளித்துவத்திற்கு உயிர் ஊட்டுவதாகாதா? என்ற கேள்வி எழுந்தது. லெனின் சொன்னார் அடிப்படை கேள்வி இது தான் புதிய நிலைமையினை யார் முதலில் பயன்படுத்துவது? விவசாயிகள் யாரை பின் தொடர்ந்து வருவார்கள் என்பதுதான் கேள்வி. சோசலிச சமூகத்தை கட்ட முயற்சிக்கும் தொழிலாளி வர்க்கத்தையா? முதலாளி வர்க்கத்தையா? தொழிலாளி வர்க்கத் தலைமையின் கீழ் அரசு செயல்படும் போது, அதன் நடைமுறை தந்திரங்கள், செயல்பாடுகள் யாவும் தொழலாளி – விவசாயி நலன்களை பாதுகாக்கும் வகையில் தான் செயல்படுத்தப்படும். சோசலிசத்திற்கு மாறும் காலத்தில் அந்த கொள்கை செயல்படுத்தப்பட்டது. 1926 ஆம் ஆண்டில் 1913ஆம் ஆண்டில் நிலவிய பொருளாதார நிலைமைக்கு அது உயர்த்தப்பட்டது என்பதே லெனின் கடைப்பிடித்த வழி சரியானது என்று உறுதி செய்யப்பட்டது.

தேர்ந்தெடுத்த வழி :

இதற்கிடையில் சோவியத் யூனியன் ஒரு விவாத மேடையினை துவக்கியிருந்தது. நாட்டை வேகமாக விரிந்த அளவில் தொழில்மயமாக்குவது தேவையா? லெனின் மறைந்த பிறகு இது சூடுபிடித்தது. 1927ஆம் ஆண்டு சோவியத் கட்சியின் 15வது கட்சி காங்கிரஸ் முதலாளித்து சக்திகள் நமது தொழிலாளி வர்க்க அரசின் மீது தாக்குதல் தொடுக்கும் ஆபத்தினை கருத்தில் கொண்டு, 5 ஆண்டு திட்டத்தில், பொருளாதாரத்தில் பொதுவான வளர்ச்சியினையும் நாட்டின் பாதுகாப்புக்கு உதவிடும் தொழில் துறையின் வளர்ச்சியினையும் வேகப்படுத்த வேண்டும், போர்க்கால பொருளாதாரம் நிலையாக உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று எச்சரித்தது. அன்று எழுந்த கேள்வி இது தான் முதல் 5 ஆண்டு திட்டம் (1928ல் துவங்கியது) எதில் கவனம் செலுத்த வேண்டும்? பஞ்சாலை வழியா (நுகர்வும் பொருள்களுக்கான)? அல்லது உலோக வழியா (கனகர இயந்திரங்கள் தயாரிப்புக்கான)? அன்றைக்கு இருந்த அச்சுறுத்தும் சூழ்நிலையில் உலோக வழி தான் சிறந்தது என்று கட்சி முடிவு செய்தது. 4 ஆண்டுகளில் திட்டத்தின் இலக்கு பூர்த்தியானது. பல ஆண்டுகளில் முதலாளித்துவ நாடுகள் சாதித்ததை சோசலிச நாடு 4 ஆண்டுகளில் செய்து முடித்தது.

தொழிலாளி – விவசாயி ஒற்றுமையும், உறுதியும் இல்லாமல் இதை சாதித்திருக்க முடியாது. ஸ்டாலின் 1933ம் ஆண்டு கட்சியின் மத்தியக்குழு கூட்டத்தில் பெருமையோடு சொன்னார்… இதற்கு முன்பு இரும்பு எஃகு தொழிற்சாலை ஏதும் இல்லை. இப்போது இருக்கிறது; முன்பு ட்ராக்டர் தயாரிக்கும் ஆலை இல்லை, இப்போது இருக்கிறது; முன்பு, கார் தயாரிக்கும் தொழிற்சாலை இல்லை, இப்போது இருக்கிறது; முன்பு ரசாயன தொழிற்சாலை இல்லை, இப்போது இருக்கிறது…………. இந்த பொருளாதார அடிப்படை தான் பின்னர் பாசிசம் தொடுத்த தாக்குதலை எதிர்கொள்ளும் பலத்தினை சோவியத் யூனியனுக்கு கொடுத்தது. மார்ஷல் ஜூகோவ் எழுதுகிறார். வரலாறு ரீதியாக சரி என்று நிரூபிக்கப்பட்ட கட்சியின் விவேகம், மதிக்கூர்மை, வளர்ச்சிக்காக தேர்ந்தெடுத்த பாதை, பணியிடத்தில் தொழிலாளிகளும் மற்ற பகுதி மக்களும் காட்டிய வீரம், தியாகம் – இவைகள் தான்இரண்டாம் உலகப் போரில் நமது வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தன.

கூட்டு விவசாயம் – அனுபவங்கள் :

தொழில்மயமாக்கலும் விவசாயத்தில் கூட்டுப் பண்ணை முறையும் ஒன்றோடொன்று இணைந்த பொருளாதார வளர்ச்சியினை சோவியத் யூனியன் கண்டது. கூட்டுப் பண்ணை தொழில்மய மாக்குதலுக்கு தேவையான மூலதனத்தை கொடுத்தது புதிய பொருளாதார கொள்கையிலிருந்து வேகமாக தொழில்துறை வளர்ச்சிக்கு போக வேண்டுமென்ற முடிவு, பெரிய அளவில் கூட்டுப் பண்ணை விவசாயத்தின் அடிப்படையில் தான் எடுக்க வேண்டிய நிலை எழுந்தது. இங்கே தான் சோவியத் பொருளாதாரத்தில் முதன் முதலாக கோணல் விழுந்தது. குலாக் என்றழைக்கப்பட்ட பெரும் நிலப்பிரபுக்கள் தான் தாக்குதல் இலக்காக வைக்கப்பட்டனர்; ஆனால் நடுத்தர விவசாயிகளை வென்றெடுக்க வேண்டுமென்ற முடிவு சரியாக செயல்படுத்தப்படவில்லை. குலாக்குகளின் செல்வாக்கு கணிசமாக நடுத்தர விவசாயிகள் மீது இருந்தது. ஏழை விவசாயிகளும், விவசாயத் தொழிலாளிகளும் விரும்பிய கூட்டுப் பண்ணை விவசாயம் வேகமாக செயல்படுத்தப்பட்ட பொழுது, நடுத்தர விவசாயிகளை வென்றெடுப்பதில் மெத்தனம் இருந்தது. கட்சியின் மத்திய கமிட்டி கொடுத்த எச்சரிக்கைகளும் வழிமுறைகளும் கடைப்பிடிக்கப் படவில்லை. ஜார் காலத்தில் வேரூன்றிய அதிகார வர்க்கத்தின் போக்கு புரட்சிக்கு சாதகமாக இல்லை. ஸ்டாலின், கூட்டு விவசாயத்திற்கு வருமாறு யாரையும் நிர்ப்பந்திக்கக் கூடாது என்று எச்சரித்தும் அந்தப் பணி மிகவும் கடுமையான முறையில் தான் நிறைவேற்றப்பட்டது. குலாக்குகள் வன்முறையில் ஈடுபட்டு தங்கள் எதிர்ப்பினைக் காட்டினர்; நடுத்தர விவசாயிகளும் அவர்களோடு சேர்ந்தனர். ஆனால் கிராமப்புற பகுதிகளில் கூட்டு விவசாயப் பண்ணைகளை உருவாக்குவதில் கட்டுக்கடங்காத வேகம் இருந்தது.

1934ல் மொத்த விவசாயக் குடும்பங்களில் 71.4 சதம் கூட்டுப் பண்ணைக்குள்  வந்தார்கள்; பல இடங்களில் கொண்டு வரப்பட்டார்கள் என்பதும் உண்மை. குலாக் என்ற வர்க்கம் துடைத்தெறியப்படவேண்டும் என்று ஸ்டாலின் சொன்னதற்கு சட்ட வழிமுறை உருவாக்குவதில் அதிகார வர்க்கம் தாமதப் படுத்தியது. எந்த சட்ட வழிகாட்டுதலும் இல்லாத நிலையில் தங்களுக்கு எது சரி என்று பட்டதோ அதை செய்யும் தீவிரத்தன்மை பல இடங்களில் நிலவியது. கூட்டுப் பண்ணை அமைப்பின் துரித வளர்ச்சி அந்த மன நிலையை உருவாக்கியது. ஸ்டாலின், 1930ம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் இந்த திசை மாறுதல்கள், விவசாய பண்ணை குறித்த அதிகார வர்க்க ஆணைகள் விவசாயிகளுக்கு எதிராக காட்டப்பட்ட கருணையற்ற அவசரம் யாவும் வெற்றியில் விளைந்த மயக்கம் என்று குறிப்பிட்டார். விவசாயிகளுக்கு எதிராக ஸ்டாலின் யுத்தம் என்று வெளிநாட்டுப் பத்திரிகைகள் வருணித்தன. ஆனால் அமோக விளைச்சல் வேண்டி நடக்கும் யுத்தம் என்று சோவியத் பதிலடி கொடுத்தது. ஆனாலும் போராட்டத் தழும்புகள் இருக்கத்தான் செய்தன. அப்படி ஒரு நிதானமிழந்த போக்கிற்கு மற்றொரு காரணமும் இருந்தது. திட்டமிட்ட பொருளாதாரத் துக்கான அடிப்படைகள் என்ற புத்தகத்தில் இ.ஹெச். கார் குறிப்பிடுகிறார்.

1926ம் ஆண்டு மக்கள் தொகை கணிப்பின் படி சோவியத் யூனியனின் 82 சதம் மக்கள் கிராமப்புறத்தில் வாழ்ந்தார்கள். 1927இல் துவக்க மாதங்களில் கட்சி நடத்திய ஆய்வின் படி மொத்த மக்கள் தொகையில் 1.78 சதம் தான் கட்சி உறுப்பினர்கள், கிராமப்புற மக்கள் தொகையில் 0.52 சதம்தான். கட்சியின் முடிவை செயல்படுத்தும் தோழர்கள் மிகக் குறைவாகவே இருந்தனர் என்பதும் இந்த தவறுகளுக்கு காரணமாக இருந்திருக்கிறது. தொழில்மயமாக்கலின் வேகம் 1928லிருந்து 1939க்குள் சுமார் 25 லட்சம் மக்களை கிராமத்திலிருந்து தூக்கி நகரங்களில் வைத்தது. தொழில்மய மாக்கலும் விவசாய கூட்டுப் பண்ணை முறையும் பதிவு செய்த அளப்பரிய வெற்றியினூடே இவைகளெல்லாம் புதைக்கப்பட்டன; பூட்டி வைக்கப்பட்டன, பிற்கால சந்ததியினர் திறந்து பார்க்க இவையனைத்துமே (அன்றைய நடைமுறை பற்றிய இன்றைய விமர்சனங்கள்)  ஒரு பிரதான கேள்வியின் முன் செயலற்று நின்றுவிடுகின்றன. அன்று சோவியத் சந்தித்த சவால்களை எதிர்கொள்ள கூட்டு விவசயாமே துணை கொண்டு நிறைவேற்றப் பட்ட தொழில்மயமாக்கலுக்கு மாற்று வழி ஏதேனும் இருந்ததா? ஐரோப்பாவிலேயே மிகவும் பின் தங்கிய நாடு, திரட்டப்பட்ட மூலதனம் ஏதுமில்லாத நாடு, முன் அனுபவம் ஏதுமின்றி ஒரு புதிய அமைப்பை உருவாக்க முனைந்த நாடு, பூகோள ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் ஏகாதிபத்தியம் விரித்த சதி வலையினை எதிர்நோக்கும் நாடு – எந்த வழியினை தேர்ந்தெடுத்திருக்க முடியும்? 1929லிருந்து முதலாளித்துவ உலகம் பெரும் வீழ்ச்சியினை சந்தித்துக் கொண்டிருந்த காலம் அது; 2 1/2 கோடி தொழிலாளர்கள் வேலையினை இழந்து வீதிக்கு வந்தனர்.

தொழில்துறை நெருக்கடி விவசாயத்துறை நெருக்கடியாகவும் மாறியது; தொழிலாளி வர்க்கத்தின் மீதான தாக்குதல் மூலமாகவும் மற்றொரு உலகப் போருக்கான தயாரிப்புகள் மூலமும் அந்த நெருக்கடியினை சமாளிக்க முதலாளித்துவ உலகம் தயாரானது. சோவியத் பரிசோதனை உலக மக்களை கவ்விப் பிடிக்கத் துவங்கியது. போல்ஷ்விசம் நாகரீகத்திற்கு எதிரி என்ற பிரச்சாரம் கட்டாய உழைப்பு மூலம் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களை சந்தையில் மலிவான விலைக்கு சோவியத் யூனியன் தள்ளுகிறது என்ற பிரச்சாரமும் கட்டவிழ்த்து விடப்பட்டன. சோவியத் ஏற்றுமதிகளுக்கு தடை விதிக்கப்பட்டன. சீனாவின் சியாங்கெய்தேஷக்கின் ஆட்சி சோவியத் யூனியனின் கிழக்குப் பகுதியில் ராணுவத்தை அனுப்பியது (பின்பு அது முறியடிக்கப்பட்டது). சோவியத் யூனியனை தாக்குதல் மையமாக வைத்து மீண்டும் ஒரு உலகப் போர் நிகழும் என்றுசோவியத் கம்யூனிஸ்ட் கட்சி சரியாகவே கணித்தது. ஆகவே ஒரு சுதந்திரமான சோசலிஸ்ட் அரசை தக்க வைத்துக் கொள்ள எந்த சூழ்நிலையிலும் நிலைத்து நிற்க வேகமான தொழில்மயமாக்கம் தேவைப்பட்டது. சோசலிசம் என்ற மாற்று வழி அதற்கான அடிப்படையினை வகுத்துக் கொடுத்தது. முதலாளித்துவ உலகம் பல்வேறு வகையிலான மூலதன திரட்டலுக்கு வாய்ப்பு இருந்த நிலையிலும் தொழில் முன்னேற்றத்தை காண பல ஆண்டுகள் பிடித்தன; ஆனால் ஒரு சில ஆண்டுகளிலேயே வெளிநாட்டு மூலதனம் கடன் உதவி ஏதுமில்லாமல் 1930ம் ஆண்டிலேயே தொழில் வளர்ச்சியில் ஐரோப்பாவின் முதல் இடத்திலும் உலகின் இரண்டாவது இடத்திலும் சோவியத் யூனியனை கொண்டு வந்து நிறுத்தியது அந்த நாடு ஏற்றுக் கொண்ட வழிமுறைதான். கோர்பசேவின் வார்த்தைகளிலேயே சொல்வ தென்றால் அன்று கட்சி குறிப்பிட்டதைத் தவிர, அந்த சூழ்நிலைகளில் வேறு வகையான முடிவை எடுத்திருக்க முடியுமா? நாம் வரலாற்றுக்கு நம்பிக்கையுடையவர்களாக, வாழ்வுக்கு உண்மையானவர்களாக இருக்க விரும்பினால், ஒரே ஒரு பதில் தான் உண்டு. வேறு எந்த வழியும் கிடையாது.

பாசிசத்தை முறியடித்த சாதனை :

அந்த சோசலிச அடிப்படை தான் சோதனை மிகுந்த கால கட்டங்களில் சோவியத் யூனியனை தலை நிமிர வைத்தது. 1934க்குப் பிறகு ஹிட்லர் ஜெர்மனியில் ஆட்சியதிகாரத்தை முழுமையாக கைவசப்படுத்தினான். தன்னுடைய மெய்ன்காம்ஃப் (எனது போராட்டம்) என்ற நூலில் தன் நோக்கத்தை தெளிவாகவே எழுதி வைத்தான். ஜெர்மனியர்களுக்கு வாழும் பகுதி விரிவாக்கப்பட வேண்டும். அது கிழக்கில் தான் உள்ளது. ஜெர்மனிக்கு கிழக்கே உள்ள பெரிய நிலப்பகுதி சோவியத் யூனியன் தான்; பறிக்க வேண்டிய பழுத்த கனி என்று அதை குறிப்பிட்டான். 1939ல் இத்தாலி அல்பேனியாவை கைப்பற்றியது; ஜப்பான் வடக்கு மற்றும் மத்திய சீனாவை ஆக்கிரமித்தது. ஹிட்லரும் அவன் பங்கிற்கு ஆஸ்ட்ரியாவை பிடித்தான். பிரிட்டன் சரணாகதி அடைந்து கையெழுத்திட்ட முனிச் ஒப்பந்தத்தின் அடிப்படையில் 1938ல் செக்கோஸ்லோவேகியாவை விழுங்கினான்.

ஜூன் 22, 1941, சோவியத் யூனியன் மீது ஹிட்லரின் படைகள் தாக்குதலை துவக்கிய நாள். உலக வரலாற்றில் நடந்த மிகப் பெரிய ராணுவ நடவடிக்கை என்று ஹிட்லர் பெருமையோடு கூறினான். ஆனால் சோவியத் எதிர்ப்பு ஒரு வரலாற்றை உருவாக்கியது. ரேமண்ட் கிளாப்பர் என்ற யுத்தகால நிருபர் லண்டனிலிருந்து கேபிள் செய்தி அனுப்பினார். ரஷ்யா வெற்றிக் கான புதிய வாய்ப்பினை திறந்து விட்டிருக்கிறது. விருப்பத்தோடு செயல்படும் இவ்வளவு பெரிய மனித சக்தியினை ஹிட்லருக்கு எதிராக இதற்கு முன் யாரும் நிறுத்தியதில்லை. அந்த கொடிய யுத்தம் நடந்து முடிந்தது. பாசிசம் மிகப் பெரிய தோல்வியினை சோவியத் மண்ணில் சந்தித்தது. சோவியத் போரை சந்தித்த விதம், எடுக்கப்பட்ட தாக்குதல் மற்றும் தற்காப்பு நடவடிக்கைகள் உலகம் இதற்கு முன் பார்த்ததில்லை. ஸ்டாலின் கிராட் முற்றுகை 182 நாட்கள், லெனின் கிராட் முற்றுகை 2 1/2 ஆண்டுகள் – என சோவியத் மக்கள் காட்டிய மனஉறுதி, தியாகம் உலகை வியக்க வைத்தது. பாசிச அபாயத் திலிருந்து இந்த பூவுலகைக் காப்பாற்ற அவர்கள் கொடுத்த விலை? 2 கோடி மக்களை அந்த நாடு இழந்தது; 5 கோடி மக்கள் படுகாயமடைந்தனர்; போர்க் கைதிகளாக இறந்துபோனவர் மட்டும் 33 லட்சம்; 1700 நகரங்கள், 27000 கிராமங்கள் அழிக்கப்பட்டன; 38500  மைல் ரயில்வே பாதை தகர்க்கப்பட்டது; மிகப்பெரிய டெனிபர் அணை சுவடு தெரியாமல் அழிந்தது – இப்படி அழிவுப்பட்டியல் முடிவில்லாமல் நீண்டது. இருந்தும் எப்படி இந்த வெற்றி சாத்தியமானது? புரட்சியின் முதல் பிரகடனமாக அமைதி வேண்டும் என்று அறிவித்த சோவியத் போர் முனையில் வெற்றி பெற்றது எவ்வாறு முடிந்தது? உலக அமைதியினை விரும்பிய சோவியத் யூனியனை அமைதியாக வளர்ச்சியடைய ஏகாதிபத்தியம் அனுமதிக்கவில்லை.

எல்லாவகையான தாக்குதலுக்கும் தயார் நிலையில் இருக்க வேண்டிய தேவை இருந்தது. புரட்சி முடிந்து துவக்க காலத்தில் நெளிவு – சுளிவோடு எடுக்கப்பட்ட பொருளாதார நடவடிக்கைகள், வேகமான தொழில்மயமாக்கல், கூட்டு விவசாய நடைமுறை, தொழிலாளி – விவசாயி ஒற்றுமை மக்களின் பேராதரவுடன் இலக்கினை எட்டிப்பிடித்த 5 ஆண்டுத் திட்டங்கள், நிலைமைகளை சரியாகக் கணித்து அதற்கேற்ப வழிகாட்டிய கட்சித்தலைமை, செஞ்சேனையின் தியாகம், வீரம், கடைபிடித்த ராணுவ தந்திரங்கள், எல்லாவற்றிகும் மேலாக, விரிந்த பரிமாணத்தில் ஒரு சோசலிச அரசின் செயல்முறை- அனைத்தும் ஒருங்கிணைந்து தான் இந்த வெற்றியினைக் கொண்டு வந்தது. இந்த வரலாறு சிலரால் மறக்கப்படலாம், ஆனால், மறைக்க முடியாத ஒன்று.

சோசலிசத்தின் தாக்கம் :

இந்த வெற்றியினை தொடர்ந்துதான்  உலகில் மூன்றில் ஒரு பகுதியில் சோசலிச அரசுகள் தோன்றின. பால்டிக் கடலின் ஸ்டெட்டின் துறைமுகத்திலிருந்து, அட்ரியாடிக் கடலின் டியஸ்டே துறைமுகத்திற்கு இடையே ஒரு இரும்புத்திரை விழுந்தது என சர்ச்சில் பனிப்போர் நிலைமையினை துவக்கி வைத்தார். ஆனாலும், இரண்டாம் உலகப்போரின் திசை வழியினை மாற்றிய சோவியத்தின் ஆற்றல், சோசலிச கோட்பாடுகளின் அடிப்படையில் மக்கள் தேவைகளை பூர்த்தி செய்ய எடுத்த நடவடிக்கைகள் உலகத்தின் குணாம்ச ரீதியான மாற்றங்களைக் கொண்டு வந்தன. உலகம் முழுமையும் கம்யூனிச சிந்தனைகள் முன்பே பரவத் தொடங்கி இருந்தாலும், சோவியத் யூனியனின் செயல்பாடுகள் கம்யூனிஸ்ட் கட்சிகள் உருவாக அவைகளின் ஆற்றலை விரிவுபடுத்துவதற்கான சூழ்நிலை எழுந்தது. சோசலிசம் எதை சாதிக்க முடியும் என்றும் உலகுக்கு எடுத்துச் சொல்ல முடிந்தது.

நவம்பர் புரட்சிக்குப்பின் ஒரு உலகம் தழுவிய கலாச்சாரம் உருவானது. கம்யூனிஸ்ட் கட்சிகள், தொழிற்சங்க அமைப்புகள், மாணவர் மற்றும் பெண்களுக்கான அமைப்புகள், கலை இலக்கிய அமைப்புகள் என பல்வேறு முனைகளில் அந்த கலாச்சாரம் – சோசலிச கலாச்சாரம் – முன்னெடுத்துச் செல்லப்பட்டது. அடக்குமுறைகள், உள்ளிருந்தே சீர்குலைக்கும் நடவடிக்கைகள், தத்துவார்த்த ரீதியான தாக்குதல்கள் – இவையாவற்றையும் சந்தித்து முன்னேறுகிற உறுதியினை அனுபவத்தை கம்யூனிஸ்ட் இயக்கம் பெற்றது. கல்வி, நல்வாழ்வு, வேலைவாய்ப்பு ஆகிய பிரச்சனைகளுக்கான தீர்வு சோசலிச சமூகத்தில் திட்டமிட்டு மக்களைச் சென்றடை வதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டதை உலகம் கண்டு வியந்தது.

சோசலிச அரசின் செயல்பாடுகள் மற்ற நாடுகளில் குறிப்பாக வளர்ந்த முதலாளித்துவ நாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.  தொழிலாளர் வர்க்க அமைப்புகளும், இதை முன்னிலைப்படுத்தி மக்களிடம் பிரச்சாரம் செய்தார்கள். மாக்ஸ் சொன்ன கம்யூனிச பூதம் அந்த நாட்டு ஆட்சியாளர்களை மிகவும் ஆட்டியது. அதிலிருந்து மக்களை தடுக்க பல மக்கள் நல திட்டங்களை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டது. சோசலிச சிந்தனையிலிருந்து தொழிலாளி வர்க்கத்தை வெளியே கொண்டுவர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. யுத்தத்தால் சீர்குலைந்து போன ஐரோப்பிய நாடுகளை கம்யூனிச வலையில் விழாமல் பாதகாக்க மார்ஷல் திட்டம் அமெரிக்காவால் அளிக்கப்பட்டது. சமூக ரீதியான செலவினங்கள் அனுமதிக்கப் பட்டன. கெய்ன்ஸ் போன்ற முதலாளித்துவ பொருளாதார நிபுணர்கள் கூட இதில் அரசின் பங்கை வற்புறுத்த வேண்டிய நிலை உருவானது. அடிப்படையில் விவசாய நாடாக இருந்த ரஷ்யாவில் ஏற்பட்ட மாற்றங்கள், நில உறவுகளை மாற்றுவதற்கான உத்வேகத்தை உலகநாடுகளுக்கு கொடுத்தன. நிலச்சீர்திருத்தங்கள் ஆகிய ஆப்பிரிக்க நாடுகளில் (இந்தியா போன்ற நாடுகளில் அரை குறையாக இருந்தாலும்) அமுலாக்கப்பட்டன. விவசாயிகளின் புரட்சிகரமான வர்க்கத்தன்மையினை அங்கீகரிக்க வேண்டி வந்தது.

தொடர்ந்து வந்த சோசலிச புரட்சிகள் :

கிழக்கு ஐரோப்பா பாசிசத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டு சோசலிச வாழ்க்கை முறையினை தோந்தெடுத்தது குறித்து நாம் முன்பே பார்த்தோம். சீனாவில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் புரட்சிக்கான தயாரிப்புகள் முழு அளவில் நடைபெற்றுக்கொண்டிருந்தன. ஏகாதிபத்திய அரசுகளின் துணை கொண்டு சியாங்கே ஷேக் படைகள் கம்யூனிஸ்டுகளை அழிக்கும் நோக்கத்துடன் செயல்பட்டதை உலகம் அறியும். மார்க்சிய – லெனினிசத்தின் அடிப்படையிலும், மாவோ போன்ற தலைவர்களின் தத்துவார்த்த மாற்றம் போர்தந்திர வழிகாட்டுதலின் அடிப் படையிலும், சீனப்புரட்சி வெற்றி பெற்றது. பாசிசத்தை எதிர்த்து சோவியத் பெற்ற வெற்றியும் அதைத் தொடர்ந்த சோசலிச விரிவாக்கமும் சீனப்புரட்சி வெற்றிக்கு துணைபுரிந்தது. உலகின் அதிகமான மக்கள் தொகை கொண்ட, விவசாயத்தை அடிப்படை வாழ்வாகக்கொண்ட சீனாவில் ஏற்பட்ட புரட்சிகரமான மாற்றம் சோசலிசத்திற்கு வலுவூட்டியதோடு, முதலாளிவர்க்கத்தை பேரிடியாகத் தாக்கியது என்பதும் வரலாற்று உண்மை. அது தொடர்ந்தது வியட்நாம் மக்களின் வீரச்சமர் அங்கே ஒரு சோசலிச அரசை உருவாக்கியது.

1975ல் அமெரிக்க படைகள் விரட்டி அடிக்கப்பட்ட பிறகு வியட்நாம் ஒரே நாடாக ஹோசிமின் தலைமையில் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் வழிகாட்டுதலோடு தொழிலாளி வர்க்க ஆட்சி நிலை நிறுத்தப்பட்டது. ஜப்பான் ஏகாதிபத்திய பிடிப்பினையும் பின்பு அமெரிக்க ஏகாதிபத்திய தாக்குதலையும் உடைத்துக்கொண்டு கொரிய ஜனநாயக குடியரசு (வடகொரியா) மலர்ந்தது. தென்கொரியாவில் அமெரிக்க ஏகாதிபத்தியம் காலுன்றி வடகொரியா சோசலிச அரசுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுத்தபோதும், அது நிமிர்ந்து நின்றது, இன்றும் நின்று கொண்டிருக்கிறது. இந்த புரட்சிகள் யாவும் ஆசியப் பகுதிகளில் நடந்து முடிந்தவைகள். ஆனால், மார்க்சிய – லெனினிய கோட்பாடுகள் எந்த ஒரு நிலப்பகுதிக்கும் சொந்தமானதல்ல. நவம்பர் புரட்சியின் பிரதான வெற்றியே சோசலிசம் என்ற கோட்பாடினை உலகம் தழுவிய ஒன்றாக மாற்றியதுதான். அமெரிக்காவின் காலடியில் பாடிஸ்டா என்ற கொடுங்கோலன் ஆட்சியில் தவித்துக் கொண்டிருந்த கியூபா மக்கள் விடிவு காண சோசலிச வழியினை தேர்ந்தெடுத்து காஸ்ட்ரோ தலைமையில் வீறு கொண்டு எழுந்தார்கள். கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் சோசலிஸ்ட் கியூபா அமெரிக்க ஏகாதிபத்தியம் தொடுத்த அனைத்து சதிகளையும் முறியடித்து நிமிர்ந்து நின்றது. நிமிர்ந்து நிற்கிறது. சீனா, கொரியா, வியட்நாம், கியூபா – சோசலிசம் என்பது வளர்ந்து வரும் கோட்பாடு, முதலாளித்துவ அமைப்புக்கு சரியான மாற்று என்பதை எடுத்துக்காட்டும் நாடுகள்.

காலனியாதிக்க முறிவு :

நவம்பர் புரட்சியின் மற்றொரு சாதகமான விளைவினையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். ஏகாதிபத்திய நாடுகள் உலகத்தை பங்கு போட்டுக் கொண்டு காலனியாதிக்கத்தை மேற்கொண்டிருந்தன. இரண்டாம் உலகப் போரில் சோசலிச நாடான சோவியத் யூனியன் (எந்த காலனி நாட்டையும் தன்னகத்தே வைத்துக்கொள்ளாத) அடைந்த வெற்றி காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற வேண்டும் என்று போராடிக் கொண்டிருந்த சக்திகளுக்கு உற்சாகத்தையும் வலுவினையும் ஊட்டியது. சோவியத் யூனியனும் அந்த போராட்டங்களுக்கு முழு ஆதரவினை நல்கியது. ஏற்கனவே சோசலிச நடைமுறைகளைக் கண்டு கதிகலங்கிப் போயிருந்த காலனியாதிக்க சக்திகள், தங்கள் நாட்டிலேயே அதன் வீச்சால் மாற்றங்கள் கொண்டு வர வேண்டிய சூழ்நிலையில், காலனி நாடுகளைத் தொடர்ந்து அவர்கள் ஆதிக்கத்தில் வைத்துக்கொள்ள இயலாமல் போனது. ஆசிய, ஆப்பிரிக்க கண்டங்களில் உள்ள நாடுகள் (இந்தியா உட்பட) விடுதலை பெற்றன. உலக அரசியல் பொருளாதார வரைபடித்தின் முகமே மாறிப்போனது. சுரண்டலற்ற சமூகம் ஒன்றினை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையினை உலக மக்களுக்கு தந்தது நவம்பர் புரட்சி.

மனித குல வரலாற்றில் சோவியத் யூனியன் உதயமானது என்பது ஒரு திருப்பு முனையாக இருந்தது. சோசலிசம் கொண்டு வந்த வேகமான முன்னேற்றம், அனைத்து அம்சங்களிலும் பின்தங்கிய நாட்டை பொருளாதார, ராணுவ ரீதியில் பலம் பொருந்திய நாடாக மாற்றி, ஏகாதிபத்திய தாக்குதலை எதிர்த்து நிற்கும் அரணாக நின்று, சோசலிச அமைப்பு முதலாளித்துவத்தைக்காட்டிலும் உயர்ந்த அமைப்புதான் என்பதை சோவியத் யூனியனும் மற்ற சோசலிச நாடுகளும் காட்டின. வறுமை ஒழிப்பு, ஏற்றத்தாழ்வின்மை, அனைவருக்கும் கல்வி, சுகாதாரம் என்று சோசலிச அமைப்பு தன் முத்திரைகளை பதித்தது. உலகம் பூராவும் உள்ள தொழிலாளி வர்க்கப்போராட்டங்களுக்கு உத்வேகம் கொடுத்தது. முதலாளித்துவ நாடுகளிலும் பல மக்கள் நல நடவடிக்கைகளை எடுத்து இதுவரை  கொடுக்கப்படாத உரிமைகளையும் கொடுக்க வேண்டிய சூழ்நிலையினை சோசலிச கோட்பாட்டின் தாக்கம் உருவாக்கியது என்று பார்த்தோம். மனித நாகரீகத்தின் உச்சகட்ட வளர்ச்சி நோக்கி அறிவியல் முன்னேற்றங்களின் துணை கொண்டு சோசலிசம் நடைபோட்டது. இரண்டு காரணங்களுக்காக சோவியத் யூனியனை நான் மதிக்கிறேன். ஒன்று பெண்களையும் குழந்தைகளையும் அந்த சமூகம் பேணிக் காக்கும் பண்பு; இரண்டாவது உலகின் மிகச் சிறந்த ஓவியங்களை தன்னகத்தே கொண்டிருப்பது என்று உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் ரோமெய்ன் ரோலண்ட் எழுதினார். ஸ்புட்னிக் விட்ட பொழுதும், யூரிகாகரின் வான்வெளியில் பறந்த போதும் அந்த நாட்டின் அறிவியல் வளர்ச்சி கண்டு – சோசலிசத்தின் கீழ் வந்த வளர்ச்சி – உலகம் வியந்தது.

சிதைவு ஏன் :

இவ்வளவு போற்றத்தக்க பெருமைகளையும், சாதனைகளையும் கொண்ட சோவியத் யூனியன் ஏன் சிதைந்து போனது? சோசலிச அமைப்பை ஏன் தக்க வைத்துக் கொள்ளாமல் போனது? எங்கே தவறுகள் நடந்தன? இப்படியெல்லாம் கேள்விகள் எழுந்தன: இன்றும் தொடர்ந்து கேட்கப்படுகின்றன. நமது கட்சியின் 14வது கட்சி காங்கிரஸ் நிறைவேற்றிய தத்துவார்த்த பிரச்சனைகள் பற்றிய தீர்மானம் அதற்கான காரணங்களை விளக்கியது. பிரதானமாக இரண்டு தவறான கணிப்புகளை தீர்மானம் சுட்டிக் காட்டியது. முதலாவது, நிலவி வரும் அரசியல் உலக நிலைமைகளை புரிந்து கொள்வதிலும், சோசலிசம் என்ற கோட்பாட்டினை விளக்கிக் கொள்வதிலும் தவறுகள் நிகழ்ந்தன.

இரண்டவதாக, சோசலிச கட்டுமானத்தில் ஏற்பட்ட நடைமுறை பிரச்சனைகளை எதிர் நோக்கிய தன்மை. இவைகளைப் பற்றி விரிவாகச் சொல்வது என்பது இக்கட்டுரையின் நோக்கமல்ல, அடிப்படையான சில விஷயங்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். உலகின் மூன்றில் ஒரு பகுதியினை சோசலிச அமைப்பில் கொண்டு வந்தாலும், அந்த நாடுகளில் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியில் இருந்த முதலாளித்துவ பிடிப்பினை அது தகர்க்கவில்லை; அறிவியல் தொழில் நுணுக்க முன்னேற்றங்களை பயன்படுத்தி, முதலாளித்துவம் தன்னுடைய பிடிப்பை தக்க வைத்துக் கொண்டது. குறுகிய காலத்தில் சோசலிசம் காட்டிய முன்னேற்றம், அதை பின்தள்ள முடியாது என்ற எண்ணத்தை தோற்றுவித்தது. தோற்கடிக்கப்பட்ட முதலாளித்துவம் பல மடங்கு வேகத்துடன் திருப்பித் தாக்கும் என்று லெனின் எச்சரித்தது முழுமையாக உள்வாங்கப்படவில்லை. இது முதலாளித்துவத்தைப் பற்றிய குறைத்து மதிப்பீடு செய்வதிலும்  சோசலிச கட்டுமானம் பற்றி அதீத மதிப்பீடு செய்வதிலும் போய் முடிந்தது.

முதலாளித்துவம் தவிர்க்க முடியாமல் தானே மடிந்து போகும் என்ற சித்தாந்தப் பிழை ஏற்பட்டது; அது தோற்கடிக்கப்பட வேண்டுமென்ற முக்கியமான ஸ்தாபனக் கடமை பின்னுக்குத் தள்ளப்பட்டது. சோசலிசம் என்பது தடையின்றி போகும் நேர்கோட்டு பயணம் என்று புரிந்து கொள்ளப்பட்டது. உண்மை நிலைமைகளை சரியாக கணித்து அதற்கேற்ப மாற்றங்களை கொண்டு வருவதில் கவனம் இல்லை. அப்படிக் கணிக்காமல் போனதில் ஈரான், சூடான், ஈராக், எகிப்து, இந்தோனிசியா போன்ற நாடுகளில் இருந்த வலுவான கம்யூனிஸ்ட் இயக்கம் வலுவிழந்து போன வரலாறு உண்டு.

இதற்கு முன் போட்ட பாதையில் சோசலிசம் பயணம் செய்யவில்லை. சோதித்துப் பார்க்காத ஒரு புதிய பாதையினை அது தேர்ந்தெடுத்தது. சோசலிச கட்டுமானத்திற்கு என்று முன்பே தயாரிக்கப்பட்ட செயல் வடிவம் ஏதும் கிடையாது. ஆகவே, சில சறுக்கல்களை சந்திக்க வேண்டியிருந்தது. எந்த கால கட்டத்தில் எந்த வடிவத்தில் அரசு செயலாற்ற வேண்டுமென்பதை தீர்மானிப்பதில் மயக்கம் இருந்தது. ஏகாதிபத்தியம் சுற்றி வளைத்த போதும், உள்நாட்டு யுத்தத்தை சந்தித்த போதும் இருந்த தேர்ந்தெடுத்த வடிவினை போர் முடிந்து சோசலிச கட்டுமான காலத்தில் பயன்படுத்த தேவையில்லை. முதலாளித்துவத்திலிருந்து கம்யூனிசத்திற்கு மாறும் காலம், லெனின் குறிப்பிட்டது போல் நிரம்ப பல்வேறு வடிவங்களை முன்வைக்கும் சோவியத் ஏற்றுக் கொண்ட வடிவத்தையே கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் பொருத்தியது, எதிர்விளைவுகளை கொண்டு வந்தது.

முதலாளித்துவ ஜனநாயகத்தைக் காட்டிலும் பரவலான, ஆழமான உண்மையான ஜனநாயகத்தை சோசலிசம் கொடுக்கும். கட்சிக்குள்ளும் வெளியேயும் இதை கடைப்பிடிப்பதில் குறைபாடுகள் எழுந்தன. கோர்ப்பசேவ் பொறுப்பேற்ற காலத்தில் சந்தைப் பொருளாதாரத்தின் பசிக்கு சோசலிச பொருளாதார அடிப்படைகள் (திட்டமிடுதல் உட்பட) உணவாக்கப்பட்டன. முடிவில் சோசலிசம் கீழே இறக்கப்பட்டது. தத்துவார்த்த உணர்வும் நீர்த்துப் போனது. சுருக்கமாகச் சொன்னால், நவம்பர் புரட்சிக்கு அடிப்படையாக இருந்த புரட்சிகரமான அறிவியல் ரீதியான மார்க்சிச – லெனினிச கோட்பாடுகளிலிருந்து தடம் மாறிய காரணத்தினால் நிகழ்ந்தது தான் அந்த வீழ்ச்சி.

சோசலிசம் தான் மாற்று :

ஆனால் கம்யூனிஸ்டுகள் விரக்தியில் முடங்கிப் போகிற மனிதர்கள் அல்ல. தேடிச் சோறு நிதந்தின்று, சின்னஞ்சிறு கதைகள் பேசி…… கூற்றுக்கிரையென பின் மாயும் வேடிக்கை மனிதர்களும் அல்ல. உலக நிலைமைகளை சரியாக கணித்து அதற்கேற்ப செயல்திட்டங்களை உருவாக்க முடியும். சோசலிச அடிப்படையினை விட்டுக் கொடுக்காமல், வளர்ச்சிக்காக சீனா மேற்கொண்டிருக்கும் முயற்சிகள் புதிய சிந்தனைகளை தோற்றுவித்திருக்கின்றன; வியட்நாம் அதற்கேற்ற வழியினை, சோசலிச அடிப்படைக்கு சேதம் ஏதும் இல்லாமல், தேர்ந்தெடுத்து முன்னேறிக் கொண்டிருக்கிறது. கியூபா எல்லா வகையிலும்  ஏகாதிபத்திய தாக்குதல்களை சமாளித்து மக்களின் பேராதரவுடன் சோசலிச கட்டுமானத்தை உயர்த்திப் பிடிக்கிறது; வட கொரியாவும் உலக அரங்கில் அதன் நிலையை உறுதி செய்வதில் வெற்றி பெற்றிருக்கிறது.

உலகமயம் சூழ்நிலையில் முதலாளித்துவத்துக்கு மாற்று ஏதுமில்லை என்ற பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்படுவதை ஏற்கனவே குறிப்பிட்டோம். ஆனால் சோசலிசம் தான் மாற்று என்று உலகில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகள் உறுதி செய்கின்றன. லத்தீன் அமெரிக்க நாடுகளில் உலகமய எதிர்ப்பும் ஏகாதிபத்திய எதிர்ப்பும் வெடித்துக் கிளம்புகின்றன. வெனிசுலாவின் சாவேஸ் தெளிவாக அறிவித்தார், முதலாளித்துவ அமைப்பில் பெரும்பான்மை மக்களின்  வறுமைக்கான தீர்வு கிடைப்பதற்கு வாய்ப்பே இல்லை. அதைத் தாண்டி நாம் செல்ல வேண்டும். சோசலிசம் என்று கோட்பாட்டினை மறுபடியும் மீண்டும் கைக்கொள்ள வேண்டும் – ஒரு செயல் திட்டமாக, ஒரு பாதையாக…… இந்த கருத்துக்காக அவர் அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் தொடர்ந்து வேட்டையாடப்படுகிறார்.

இடதுசாரி கருத்து கொண்டவர்கள் பிரேசில், அர்ஜெயிண்டினா, சிலி, ஈக்வடார், டொமினிகன் குடியரசு, உருக்வே ஆகிய நாடுகளில் ஆட்சிப் பொறுப்பில் உள்ளார்கள். பொலிவியாவில் எதிரணியில் இருக்கும் சோசலிச அமைப்பு அனைத்தையும் தன் கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறது. மெக்சிகோவும் பெரு நாடும் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் தேர்தலில் இடதுசாரிகளின் வெற்றியினை உறுதி செய்வார்கள் என்ற செய்திகள் வெளிவருகின்றன. உலகமய மாக்கலுக்கு எதிரான இயக்கங்கள் வலுப்பெறுகின்றன. அது முதலாளித்துவ நாடுகளில் நடந்த சில தேர்தல் முடிவுகளில் பிரதிபலிக்கின்றன.

இத்தாலியில் நடந்த பிரதேச தேர்தலில் 13 பிரதேசங்களில் 11ல் இடதுசாரி அணி வெற்றி பெற்றது; கம்யூனிஸ்டுகள் 10 சதம் வாக்குகளை பெற்றனர். ஜெர்மனியில் நடந்த தேர்தலில் இடதுசாரிகள் பெரும் வெற்றியினை பெற்றனர். ஐரோப்ப யூனியன் அமைப்பிற்கான சட்டத்தை பிரான்சு, நெதர்லாந்து மக்கள் நிராகரித்தனர்; அது அவர்களின் வாழ்வை ஏகாதிபத்திய உலகமய மாக்கல் பறித்து விடும் என்று உணர்ந்ததன் விளைவுதான் அந்த மக்கள் தீர்ப்பு. நார்வே நாட்டில் நடந்த தேர்தலில் இடதுசாரி ஆதரவு நிலை வெளிப்பட்டது.

உலகம் முழுமையும் பல்வேறு நாடுகளில் ஏகாதிபத்திய எதிர்ப்பு தன்மையோடு போராட்டங்கள் வெடிக் கின்றன. இந்திய மக்களில் 5 கோடி பேர் செப்டம்பர் 29, 2005 உலகமயக் கொள்கைகளை எதிர்த்து வேலை நிறுத்தம் செய்தனர்.

பிரான்ஸ் நாடு சில தினங்களுக்கு முன்பு நடந்த வேலை நிறுத்தத்தால் ஸ்தம்பித்தது. இவையாவும் ஒரு மாற்றத்தை தேடி நடைபெறுகின்ற இயக்கங்கள். இவைகள் அரசியல் ரீதியாக ஒருங்கிணைக்கப்பட வேண்டியவை. உலக சமூக மாமன்றம் போன்ற  அமைப்புகளில் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கங்கள் பங்கு கொள்வது என்பது அதிகரித்திருக்கிறது. அமெரிக்க கண்டத்தில் உள்ள கம்யூனிஸ்ட், இடதுசாரி மற்றும் முற்போக்கு இயக்கங்கள் பங்கு பெறும் சாவ்பெளலோ அமைப்பு போன்றவைகள் வலுவடைந்து வருகின்றன.

நவம்பர் புரட்சி சொல்லும் செய்தி சோசலிசம் வெல்லும்; இன்று ஏகாதி பத்தியத்திற்கு எதிரான போராட்டங்கள் சொல்லும் செய்தி; சோசலிசம் தான் மாற்று வழி.