சோவியத் புரட்சியும் தமிழகமும்

– இரா.சிசுபாலன்

உலக வரலாற்றில் நவம்பர் புரட்சி ஒரு புதிய அத்தியாயத்தைத் துவக்கி வைத்தது. இதற்கு முன் நடைபெற்ற புரட்சிகள் – சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என முழங்கிய பிரெஞ்சு புரட்சி உட்பட – அனைத்துமே ஒரு சுரண்டல் வர்க்கத்தின் ஆட்சியை அகற்றிவிட்டு பிறிதொரு சுரண்டல் வர்க்கத்தின் ஆட்சியை நிலைநாட்டுவனவாகவே அமைந்தன. மகத்தான சோவியத் புரட்சியே முதன்முறையாக சுரண்டல் சமூக அமைப்பை வீழ்த்தி, சுரண்டலற்ற சமுதாயத்தைப் படைத்தது.

நவம்பர் புரட்சி உலகம் முழுவதும் விடுதலைப் போராட்ட சக்திகளுக்கு பெரும் ஆதர்சமாய் விளங்கியது. இந்திய விடுதலையின் உள்ளடக்கம் என்னவாக அமைய வேண்டும் என்ற சாரத்தை சோவியத் புரட்சியில் இருந்தே விடுதலைப் போராட்ட வீரர்கள் பெற்றனர்.

தமிழகத்தில் மகாகவி பாரதி ,சுப்பிரமணியம் சிவா, வ.உ.சிதம்பரம், திரு. வி.க, சக்கரைச் செட்டியார், ம.சிங்காரவேலர், ஜீவானந்தம்,பி.ராமமூர்த்தி உள்ளிட்ட பல விடுதலைப் போராட்ட தலைவர்கள் நவம்பர் புரட்சியால் ஈர்க்கப்பட்டு இந்தியாவிலும் அதே போன்ற மாற்றம் ஏற்பட வேண்டும் எனப் போராடினர். பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அற்ற, சமூக நீதியை நிலைநாட்டும் சுதந்திரமே தமது லட்சியம் என விடுதலை இயக்க வீரர்கள் முழக்கமிட்டனர்.

ரஷ்யப் புரட்சியை உச்சி மீது வைத்துக் கொண்டாடிய மகாகவி பாரதி, ‘ஆஹா வென்று எழுந்தது பார் யுகப் புரட்சி’  எனப் பாடினார். நவம்பர் புரட்சி வெற்றி பெற்ற சில தினங்களில் (29.11.17) சுதேசமித்திரன் பத்திரிகையில்,’ ரஷ்யாவில் சோசிலிஸ்ட் கட்சியார் ஏறக்குறைய தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றி விடக் கூடுமென்று தோன்றுகிறது… இக்கொள்கை மேன்மேலும் பலமடைந்து வருகிறது. ஏற்கனவே ரஷ்யாவில் ஸ்ரீமான் லெனின்… முதலியவர்களின் அதிகாரத்தின் கீழ் ஏற்பட்டிருக்கும் குடியரசில் தேசத்து விளை நிலமும் பிற செல்வங்களும் தேசத்தில் பிறந்த அனைத்து ஜனங்களுக்கும் பொது உடமையாகி விட்டது. ருஷ்யாவிலிருந்து இது (இக்கொள்கை) ஆசியாவிலும் தாண்டி விட்டது’ என எழுதுகிறார்.

ரஷ்யாவில் புரட்சிக்குப் பின் ஏற்பட்ட ஆண் – பெண் சமத்துவம் குறித்து தமது உரைநடையில் மகாகவி  எழுதுகிறார்:

‘சில தினங்களுக்கு முன்பு இங்கிலாந்து தேசத்தில் மான்செஸ்டர் நகரத்தில் பிரசுரம் செய்யப்படும் ‘மான்செஸ்டர் கார்டியன்’ என்ற பத்திரிக்கை நவீன ருசியாவின் விவாக விதிகளைப் பற்றிய உண்மையான விவரங்களை பிரசுரம் செய்திருக்கிறது. அது கூறுவதாவது: ‘தெற்கு சோவியத் (போல்ஷிவிஸ்ட்) ரஷ்யாவில் இதுவரையில் இருந்து வந்த வீண் நிர்பந்தங்கள் இனி விவாக விஷயத்தில் இல்லாதபடி ஒழித்து விடப்படும். அதாவது வேற்றுமைகள் முதலியன விவாகங்களுக்கு தடையாகக் கணிக்கப்பட மாட்டா. இப்போது உள்ள சட்டப்படி ஸ்திரீகளுக்கும் புருஷர்களுக்கும் எவ்விதத்திலும் வேற்றுமை கிடையாது. இருபாலாரும் சமானமாகவே கருதப்படுவர். எல்லாக் குழந்தைகளும் சமூகச் சட்டப்படி பரிபூரண சமத்துவம் உடையனவாம். பாதுகாப்பில்லாத குழந்தைகள் யாருக்கு பிறந்த போதிலும் அவற்றைப் பாதுகாக்க ஒரு தனி இலாகா ஏற்பட்டிருக்கிறது. இந்த சட்டம் ராஜாங்க சாசனப்படி நடைபெறும்  விவாகங்களையே அங்கீகாரம் செய்யும். பெண்கள் 14 வயதுக்குள்ளும், ஆண்கள் 18 வயதுக்குள்ளும் விவாகம் செய்து கொள்ள வேண்டும். இருதிறத்தாரும் மனமொத்தால்தான் விவாகம் செய்யலாம். விவாகம் முடிந்ததும் புருஷன் அல்லது ஸ்திரியின் பெயரைக் குடும்பத்தின் பெயராக வைத்துக் கொள்ளலாம். விவாகத்துக்குப் பிறகு தம்பதிகள் பரஸ்பரம் உதவியாக வாழ கடமைப்பட்டிருக்கிறார்கள். புருஷனேனும், ஸ்திரீயேனும் விவாக பந்தத்தை நீக்கிக் கொள்ள விரும்பினால் அங்ஙனமே நீக்கிக் கொள்ள சட்டம் இடம் கொடுக்கிறது’ என்ற மேற்கோளை முன்வைத்து இந்திய நிலைமைகளில், பெண்கள் அடிமைகளாக வாழ்வதைச் சுட்டிக்காட்டி பெண் விடுதலைக்காக குரல் கொடுக்கிறார்.

1918-19 ம் ஆண்டிலேயே பக்கிங்ஹாம் அண்ட் கர்னாடிக் (பி அண்ட் சி) மில் தொழிலாளர் சங்கத்தை உருவாக்கிய முன்னோடிகளில் ஒருவர் திரு.வி.க., அவர் சென்னையில் தொழிலாளி வர்க்கப் போராட்டங்களுக்கு தலைமை ஏற்றார். அப்போராட்டங்களில் உரையாற்றுகையில்,

‘பொருளாதார உரிமையற்ற வெறும் அரசியல் உரிமை என்பது பணக்காரர் ஆட்சியாய் சாதி, மதப் பூசல்களைப் பெருக்கி விரிப்பதாகும். நமது நாட்டுக்கு அரசியல் விடுதலையும் வேண்டும்;அதனூடே பொருளாதார விடுதலையும் விரவி நிற்றல் வேண்டும். பொருளாதார விடுதலை என்பது அன்னிய முதலாளிகளிடமிருந்து மாத்திரமல்ல, உள்நாட்டு முதலாளிகளின் பிடியிலிருந்தும் விடுதலை பெற்று சமதர்ம ஆட்சி மலர வேண்டும்’ என்றார்.

 ‘திரு.வி.க., சமூகத் துறையில் காந்தியத்தையும், மார்க்சியத்தையும் இயைவிப்பதற்கு முயன்று வந்தார். காந்தியத்தின் அடிப்படையான அகிம்சையும், மார்க்சியத்தின் லட்சியமான பொதுவுடமைக் கொள்கையும் திருவிக – வைக்  கவர்ந்தன. எனவே அன்பு நெறியைக் கடைபிடித்து பொதுவுடமைச் சமுதாயத்தை அமைக்கும் வகையைப் பற்றி இடைவிடாது சிந்தித்தும், பேசியும், எழுதியும் வந்தார்’ என நவசக்தியில் கல்கி எழுதினார்.

இந்திய விடுதலை இயக்கத்துடன் தொழிலாளி வர்க்கத்தின் பாத்திரத்தை இணைக்கும் நோக்குடன் வ.உ.சிதம்பரமும்,சுப்பிரமணியம் சிவாவும் செயல்பட்டனர். தூத்துக்குடி கோரல் மில் தொழிலாளர் போராட்டத்திற்கு அவர்கள் தலைமையேற்றனர். போராட்டத்தில் வ.உ.சி., க்கு இரட்டை ஆயுள் தண்டனையும், சிவாவுக்கு பத்தாண்டு கடுங்காவல் தண்டனையும் கிடைத்தது. வ.உ.சி., தொடங்கிய சுதேசிக் கப்பல் நிறுவனம் ஆங்கிலேயரின் வணிகத்தை பெரிதும் பாதிக்கும் என்பதால் ஆங்கிலேயர்கள் வ.உ.சி., மீது கடும் ஆத்திரம் கொண்டனர்.

1920 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற ட்ராம்வே தொழிலாளர் வேலை நிறுத்தம், மதுரை தொழிலாளர் வேலை நிறுத்தம் ஆகிய தொழிலாளி வர்க்கப் போராட்டங்களில் சுப்பிரமணியம் சிவா தீவிரமாகப் பங்கேற்றார். கம்யூனிஸ்ட் தலைவர் சிங்காரவேலரோடு மிக நெருங்கிய நட்பு பாராட்டினார்.

1920 ஆம் ஆண்டு நடைபெற்ற அகில இந்திய தொழிற்சங்கக் காங்கிரசுக்கு சென்னை சோசலிஸ்டுகள் சார்பாக சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் ஒரு தந்தி அனுப்பினார். அதில் அரசியல், சமூக, பொருளாதார இலட்சியங்களை தொடருவதே தேசிய சோசலிசத்தின் பிரதான ஸ்வரம்… தனது சமுதாயப் புணரமைப்பு என்ற இலட்சியத்துக்கு பொருந்த அரைகுறை சீர்திருத்தங்களோடு சமாதானம் ஆகிப்போகும் முயற்சிகளால் மட்டுமே எந்த நன்மையும் விளையாது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதே ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் இந்தியாவுக்கு முழு விடுதலை என்ற தீர்மானத்தை கம்யூனிஸ்டான ஹஸ்ரத் மோகானி முன்மொழிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்காரவேலர்  தொழிலாளர்- விவசாயிகள்  கட்சி ஒன்றை நிறுவினார். அதன் சார்பில் 1923 ஆம் ஆண்டு சென்னை கடற்கரையில் இந்தியாவிலேயே முதன் முறையாக  மே தினத்தைக் கொண்டாடினார். அந்த மே தின பொதுக்கூட்டத்தில் சுப்பிரமணியம் சிவா வீர உரையாற்றினார்.

ஆங்கிலேயருக்குச் சொந்தமான ‘மெட்ராஸ் மெயில்’ என்ற பத்திரிகை ‘தேசிய இயக்கத்தில்  போல்ஷெவிக்குகளின் தங்கம்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டு இருந்தது. அதை மறுத்து, ‘எங்கே இருக்கிறது போல்ஷெவிக்குகளின்  தங்கம்’ ?என்ற தலைப்பில் 1922 ஜூன் மாதம் சிங்காரவேலர் ஒரு கட்டுரை எழுதினார். அதில், ‘அப்படியே அதை வாங்கி மக்களின் நன்மைக்கு உபயோகப்படுத்துவதில்தான் என்ன தவறு ?என்றும் கேட்டிருந்தார்.

சென்னை  மாமன்ற உறுப்பினராக சிங்காரவேலர் செயல்பட்ட காலத்தில்தான் அவரது முன் முயற்சியில் தமிழகத்தில் முதன்முறையாக பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சாதிமுறையை, வருணாசிரம தருமத்தை இந்தியப் புரட்சியின் அடிப்படையான பிரச்சனைகளில் ஒன்றாகவே சிங்காரவேலர் பார்த்தார். 1931ஆம் ஆண்டு விருதுநகரில் நடைபெற்ற மூன்றாவது சுயமரியாதை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை வரவேற்று 30.8.1931  தேதியிட்ட குடியரசு பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் காங்கிரஸ் கட்சியைப் பின்வருமாறு சாடினார்:

 ‘ஜாதி என்பது நமது இந்திய தேசத்தில் மட்டும் பிறந்த ஒரு ஸ்தாபனம்.இதை ஒழிக்காமல் சகோதரத்துவம் வெறும் சொல்லே. காங்கிரஸ்காரர்கள் ஆயினும் இதை ஒழிக்காத வரை இவர்கள் நடிப்பெல்லாம் வேஷம் எனக் கொள்ளல் வேண்டும். தீண்டாமை ஒழிய வேண்டும் என சொல்லிக்கொண்டு, பூணூலையும், சந்தியா வந்தனத்தையும் வைத்துக்கொண்டிருத்தல் வஞ்சனை அல்லாது வேறில்லை.இந்தக் கபட நாடக சூஸ்திரம் போகாமல் காங்கிரஸ்காரர்கள் பொதுஜனத் தலைவர்கள் என்று சொல்லிக் கொள்வது பெரும் பித்தலாட்டம். இதனை சுயமரியாதையோர் வற்புறுத்துவது உண்மையே. தீண்டாமையை விட்டவர்கள் ஏன் ஆச்சாரியார்கள் எனவும், ஐயர், ஐயங்கார் எனவும் அழைக்க சம்மதிக்க வேண்டும்?ஜாதியை உண்மையில் ஒழித்தார்கள் என்பார்களாயின் ஜப்பான் தேசத்தில் சாமுரே பிரபுக்கள் தங்கள் ஜாதியை பகிரங்கமாக ஒழித்தெறிந்த விதமாக பூணூலையும், அர்த்தமில்லா வர்ணாசிரமங்களையும் ஏன் ஒழித்தெறியல் ஆகாது? இதைச் செய்யும் வரை தீண்டாமை நீங்க வேண்டும் என்பது மதி மயக்கே’ என்றார்.

சுயமரியாதைக்காரர்களின் கருத்தோட்டத்தில் உள்ள சிக்கல்களையும் சுட்டிக்காட்டிய அவர்,’அறிவுமிக்க ஆதாரமாகிய விஷயங்களைக் குறித்து நமது சுயமரியாதைக்காரர் எவ்வளவு ஊக்கத்துடன் உழைத்து வருகின்றாரோ, அவ்வளவு மனவிசாலத்துடன் சீல ஆசாரம், பொருளாதாரம் முதலிய முக்கிய விஷயங்கள் குறித்து பாடுபட வேண்டுமாய் நமது தோழர்களைக் வேண்டிக் கொள்கிறோம். உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்றதையும் கவனித்தல் வேண்டும். அறிவை அந்தகார இருளில் இருந்து நீக்குவதைப்போல், உயிரையும் தாங்கொணா பசிப்பிணியிலிருந்து காக்க வேண்டும். உணவு இன்றி அறிவு விளங்காது. ஆகையால் உணவே உயிருக்கும் அதில் தோன்றும் அறிவுக்கும் ஆதாரம். ஆதலின் 35 கோடி மக்கள்  இனிது உண்டு, உடுத்தி, வாழ்வதற்கு வேண்டிய ஆதாரங்களை சுயமரியாதைப் பெரியோர் கண்டெடுத்து அளிப்பார்கள் என்று நம்புகிறோம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

தந்தை பெரியார் சோவியத் யூனியன் உள்ளிட்ட பல மேலை நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தாயகம் திரும்பி சோசலிச பிரச்சாரத்தை வலுவாக முன்னெடுத்தார். சுயமரியாதை இயக்கத்தை சமுதாய சீர்திருத்த இயக்கமாக மட்டுமின்றி அரசியல் குறிக்கோள்களைக் கொண்ட ஒரு இயக்கமாக மாற்ற வேண்டும் என்ற விருப்பம் அவர்களிடத்தில் ஏற்பட்டது அதைத் தொடர்ந்து தந்தை பெரியார் சிங்காரவேலரைக் கலந்து இயக்கத்தின் நோக்கத்தையும் அதற்கான திட்டத்தையும் தயாரித்தார். ஈரோட்டில் ஈவெரா வீட்டில் 1932 டிசம்பர் 28 ,29 தேதிகளில் நடைபெற்ற கூட்டத்தில் தென்னிந்திய சம தர்மக் கட்சி என்ற ஒரு பிரிவை சுயமரியாதை இயக்கத்தில் அமைத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. தந்தை பெரியார், சிங்காரவேலர், ஜீவா ஆகியோர் ஈரோட்டு திட்டத்தை விளக்கி தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டனர். தமிழகத்தில் 154க்கும் மேற்பட்ட கிளைகள் அமைக்கப்பட்டன. 1933 ஆம் ஆண்டு குடியரசு பத்திரிகையின் ஒவ்வொரு இதழிலும் ரஷ்யாவின் சாதனைகளைப் பற்றிய கட்டுரைகள் வெளியிடப்பட்டன. மதத்தைப் பற்றி லெனின் எழுதிய கட்டுரைகள் தொடராக வெளிவந்தன. பகத்சிங் எழுதிய ‘நான் ஏன் நாத்திகன் ஆனேன்?’என்ற நூலை 1934 இல் அரசாங்கம் தடை செய்தது. அதனைத் தமிழில்

ப. ஜீவானந்தம் மொழிபெயர்த்தார். அது ஈவெரா- வின் சகோதரர் ஈ வெ கிருஷ்ணசாமி அவர்களுடைய உண்மை விளக்கம் அச்சகத்தில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. இதனால் அரசாங்கம் ஜீவாவையும், ஈ வெ கிருஷ்ணசாமியையும் கைது செய்தது. கம்யூனிசக் கருத்துக்கள் பரவுவதைத் தடுப்பதில் ஆங்கிலேய அரசு குறியாக இருந்தது.

புதுச்சேரியில் பிரெஞ்சுக் காலனி ஆதிக்கத்தை வீழ்த்தும் போராட்டத்தில் முன்னணியில் நின்ற கம்யூனிஸ்ட் தலைவர் வ.சுப்பையாவின் தலைமையில் 1935ஆம் ஆண்டு தொழிலாளர் வேலை நிறுத்தம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் பின்வரும் கோரிக்கைகளை முன் வைத்தனர்:

 • நாள் ஒன்றுக்கு பத்து மணி நேர வேலை
 • தினக்கூலி 3 அணாவிலிருந்து 6 அணா
 • பெண்களுக்கு இரவு வேலை கூடாது
 • குழந்தைத் தொழிலாளர்களை வேலையில் பங்கேற்க வைக்கக் கூடாது
 • பெண் தொழிலாளியின் மகப்பேறு காலத்தில் சம்பளத்தோடு கூடிய ஒரு மாத விடுமுறை
 • பிள்ளை பேறுக்காக அரை மாதச் சம்பளம்.

84 நாட்களுக்கு போராட்டம் தொடர்ந்தது. தொழிலாளர்களின் விடாப்பிடியான போராட்டத்தின் விளைவாக கோரிக்கைகள் ஏற்கப்பட்டன. 1936 ஜூலை 23 அன்று புதுவைத் தொழிலாளர் வர்க்கம் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வீரம் செறிந்த போராட்டத்தில் ஈடுபட்டது. இப்போராட்டத்தின் விளைவாக ஆசியாவிலேயே முதன்முறையாக 8 மணி நேர வேலையை புதுவைத் தொழிலாளர் சங்கம் உறுதிப்படுத்தியது.

பொருளாதார சமத்துவம் மட்டும் இல்லாமல் சமூக சமத்துவத்துக்கான போராட்டங்களிலும் கம்யூனிஸ்டுகள் முன்னோடிகளாக விளங்கினர். 1930 களில் காங்கிரசும் காந்தியும் விடுத்த அழைப்பை ஏற்று பி. இராமமூர்த்தி அரிசன சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்கு அருகே வசித்து வந்த தாழ்த்தப்பட்ட மக்கள் 200 பேருக்கு சில மந்திரங்களைச் சொல்லிக் கொடுத்து,தோள்பட்டையில் சங்கு சக்கர அடையாளமிட்டு அக் கோயிலின் தர்மகர்த்தா தேர்தலில் வாக்களிக்க ஏற்பாடுகளைச் செய்தார். கோயில் நிர்வாகத்தினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நீதிமன்றம் வரை சென்று அம்மக்களின் வாக்குரிமையை நிலைநாட்டினார்.

நவம்பர் புரட்சியும், சோவியத் இலக்கியங்களும், சோவியத் மக்களும் அரசும் சாதித்த சாதனைகள் தமிழக இலக்கியப் பரப்பில் பெரும் செல்வாக்கு செலுத்தின. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை எழுதுகிறார்: ‘இரஷ்ய ஆட்சி பொதுமக்கள் ஆட்சி. பொதுவுடமை ஆட்சி. அதனைச் சர்வாதிகாரம் என்பது தவறு. இரஷ்யர்கள் கூட்டாக உழைக்கிறார்கள். உழைப்பின் பயனை அனுபவிக்கிறார்கள். தம்மைத் தாமே ஆண்டு கொள்கிறார்கள். அதற்கேற்ற சமூக அமைப்பை அமைத்து அதன் வழியிலே செல்கின்றார்கள். அங்கே இரப்பாரும் இல்லை. புரப்பாரும் இல்லை. ஆண்டியும் இல்லை. ஆண்டையும் இல்லை. வயிற்றை எக்கி திரிவோரையும், வயிற்றை உப்ப வைத்துத் திரிவோரையும் காண முடியாது. தன்னலம் பேணாமல் பொதுநலம் பேணி உயர்கின்றது நாடு. இப்படி ஒரு நாடு இருந்தால் அதுவே ஒரு பூகோள சுவர்க்கம் என்பதற்கு ஐயமென்ன ?’என்கிறார்.

நவம்பர் புரட்சி ஏற்படுத்திய தாக்கம் தமிழக மண்ணில் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வை தீவிரப்படுத்தியதுடன், எதிர்கால இந்தியா எத்தகைய திசைவழியில் பயணிக்க வேண்டும் என்பதற்கான பார்வையையும் அளிப்பதாக அமைந்தது. புதியதோர் உலகம் காண போராடும் அனைவருக்கும் நவம்பர் புரட்சியே தொடர்ந்து உத்வேகம் அளிக்கும்.

பெரியார் – சுயமரியாதை இயக்கமும் சோசலிசமும்

(புது தில்லியில் கடந்த 2018, ஜனவரி 3-4 தேதிகளில், அம்பேத்கர் பல்கலைகழகமும், அசோகா பல்கலைகழகமும் இணைந்து நடத்திய ‘திராவிடவியல், தேசியம், கூட்டாட்சித்தத்துவம்’ என்ற தலைப்பிலான ஆய்வரங்கத்தில் முன்வைக்கப்பட்ட கட்டுரை. )

ஆர்.விஜயசங்கர் (ஆசிரியர், பிரண்ட்லைன்)

தமிழில்: ரமணி

தென்னிந்திய லிபரல் கூட்டமைப்பும் (South Indian Liberal Federation) 1916ல் வெளியிடப்பட்ட பிராமணரல்லாதோர் கொள்கை அறிக்கையும் சென்னை மாகாணத்தில் ஒரு புதிய அரசியல் போக்கு மலர்ந்ததையும்,  அது சென்னை மாகாணத்தின் அரசியல் தளத்தில் செல்வாக்கு செலுத்தவுள்ளது என்பதையும், அது மட்டுமல்லாமல் பிற்காலத்தில் ஒரு நூற்றாண்டிற்கும் மேலாக செல்வாக்கை செலுத்திக் கொண்டிருக்கும் என்பதையும் வெளிப்படுத்துவதாக அமைந்தன. அவர்களின் அரசியல் கொள்கைகளைத் தாங்கி வந்த ‘நீதி’ என்ற பத்திரிக்கையின் பெயரைக் கொண்டு, அந்தக் கூட்டமைப்பானது  ‘நீதிக்கட்சி’ என்றே அறியப்பட்டது. அந்த (பிராமணரல்லாதோர் கொள்கை) அறிக்கை அன்றைக்கு நிலவிவந்த சிக்கலை  கீழ்வருமாறு முன்வைத்தது:

(மெட்ராஸ்) மாகாணத்தின் மக்கள் தொகையான 4 கோடி 15 லட்சம் பேரில், 4 கோடிப் பேர் பிராமணர் அல்லாதவர்கள். வரி செலுத்துவோரில் கணிசமானவர்கள் அதே பிரிவைச் சார்ந்தவர்கள். அவர்களில் ஜமீந்தார்கள், நிலப்பிரபுக்கள் மற்றும் விவசாயிகளும் அடங்குவர்.  அன்றைய மெட்ராசில் நிலவிவந்த நிலைமை என்னவென்றால் பெரும்பான்மையாக இருந்த அவர்கள் அதற்குரிய அந்தஸ்தோடு அரசியலில் பங்காற்ற முடியவில்லை.  தேசத்தின் பொது அரசியலில் தங்களது செல்வாக்கை குறைந்த அளவே  செலுத்த முடிந்தது; அல்லது முற்றாக செலுத்த இயலவில்லை. திட்டமிட்டு முயற்சியில் ஈடுபடக்கூடிய இன்றைய காலகட்டத்தில் அவர்களின் பொதுநலனை பாதுகாக்க, வளர்த்தெடுக்க அவர்களுக்கென ஒரு அமைப்பு இல்லை. அரசியலில் எதிராளியை, மற்றும் எதிரணி நிபுணர்களை எதிர்கொள்ள அதே அளவு தகுதியுள்ள அவர்களது தரப்பு உண்மைகளை எடுத்துரைக்க தகுதியான நபர்கள் அவர்கள் சார்பில் யாருமில்லை; பத்திரிகையும் இல்லை.  ஆகையால் அவர்களது அரசியல் செல்வாக்கு (15 லட்சமே உள்ள பிராமணர்களோடு ஒப்பிடும் போது) கடுமையான பாதிப்பிற்கு ஆளாகியது.

அந்த அறிக்கை எவ்வாறு பிராமணரல்லாத சமூகம் பாதிப்பிற்கு ஆளானது என்பதை எடுத்துரைக்கிறது.  மெட்ராஸ் நிர்வாகக் கவுன்சில் உறுப்பினர் சர். அலெக்சாண்டர் கார்டியு அவர்களின் அறிக்கையைச் சுட்டிக்காட்டி 1892க்கும்  1904க்கும் இடைப்பட்ட காலத்தில் நடைபெற்ற மாகாண ஆட்சிப்பணித் தேர்வுகளில் (Madras Provincial Civil Services) வெற்றி பெற்ற பதினாறு பேரில் பதினைந்து பேர் பிராமணர்கள் என்பதை தெரிவித்துள்ளது.  கார்டியு அவர்கள் கூற்றுப்படி உதவிப் பொறியாளர்கள், துணை ஆட்சியர்கள், கீழமை நீதிமன்ற நீதிபதிகள் ஆகிய பதவிகளை பிராமணர்கள் ஏகபோகமாக அனுபவித்து வந்தது தெட்டத் தெளிவாக தெரிய வருகிறது.  மெட்ராஸ் பல்கலைக் கழகம், மெட்ராஸ் சட்டப் பேரவை போன்ற அமைப்புகளிலும் இதே நிலைமையே தொடர்ந்தது. அரசியல் தளத்தில் அந்த கொள்கை அறிக்கை சுட்டிக் காட்டியிருப்பது என்னவென்றால் மெட்ராஸ் மாகாணத்திலிருந்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு தேர்வான பதினைந்து பேரும் பிராமணர்களே.  இது எவ்வாறு அனைத்துத் தரப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாகும் என்ற கேள்வியை அறிக்கை எழுப்பியுள்ளது.

அந்த கொள்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள், உயர்மட்ட அதிகார மையங்களில் இருந்து பெறப்பட்ட சான்றாதாரங்களைக் கொண்டிருந்தன. மற்றவர்களைக் காட்டிலும் பிராமணர்களுக்கு  காலங்காலமாக  கிட்டிய கல்விப் பின்புலம், அதன் தொடர்ச்சியாக நவீன கல்வி, குறிப்பாக பத்தொன்பதாம் நூற்றாண்டு முற்பகுதியில் ஆங்கிலக் கல்வி கற்கும் வாய்ப்பு கிட்டியது. இந்த உண்மையை பிரிட்டிஷ் அரசு ஆவணப்படுத்தியுள்ளது. இதன் காரணமாக பிராமணர்கள்  உயர்கல்வியில் மேலாதிக்கம் பெற்றவர்களாக இருந்தனர்.  1881-82ல் இருந்த பொதுக் கல்வி இயக்ககத்தின் அறிக்கை  (Director of Public Instruction) குறிப்பிடுவது என்னவென்றால், நுண்கலை மற்றும் இளங்கலை இரண்டு பிரிவுக்கும் சேர்த்து நடத்தப்பட்ட தேர்வுகளில் 125 பிராமணர்களுக்கு ஒருவர் வீதமும் 5,888 இதர இந்துக்களுக்கு ஒருவர் வீதம் இருந்ததாக தெரிவிக்கிறது.  சிவில் பொறியியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, வேளாண்மை பள்ளிக்கூடங்கள் பெரும் எண்ணிக்கையில் பிராமண சமூகத்தைச் சார்ந்த மாணவர்களை ஈர்ப்பதும் அதே சமயம் இளங்கலை அறிவியல் படிப்பில் அதிகமாகும் ஏற்றத்தாழ்வு அதே அளவில் இருந்து வருவதையும் சுட்டிக் காட்டுகிறது.

ஆங்கிலவழி உயர்கல்வியில் பிராமணர்களின் ஏகபோகம், 1857ல் நடந்த முதல் சுதந்திரப் போருக்குப் (சிப்பாய் கலகம்) பின்னர் விரிவடைந்த, மத்தியத்துவப்படுத்தப்பட்ட, மற்றும் இந்திய மயமாக்கப்பட்ட அதிகார வர்க்கப் பணியிடங்களிலும் பிராமணர்கள் ஏகபோகமாக அனுபவிப்பதற்கு வழிவகுத்தது.   நிபுணத்துவ துறைகளான (liberal professions) சட்டம், மருத்துவம், மற்றும் ஆசிரியப் பணி ஆகியவற்றில் அவர்களின் மேலாதிக்கம் சரியாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிராமணர்கள், பிராமணர் அல்லாதவர்கள் என இரு பிரிவாகப் பிரித்து ஒரு சட்டகத்துக்குள் அடக்குவதன் பல்வேறு அடிப்படைகளில், பிரிட்டிஷ் அரசு இந்தியாவை காணும் பார்வையும் ஒன்றாகும்.   தினமும் அரசு நிர்வாகத்தில், கிட்டத்தட்ட வாழ்வின் அனைத்து தளங்களிலும் எதிர்கொள்ளவேண்டிய மிகவும் சிக்கலான சாதி-மத பிரமைகளை உள்வாங்கி  முடிவுகளை மேற்கொள்ள வேண்டியது ஆட்சியாளர்களின் நடைமுறைத்தேவையாக எழுகிறது.  துப்புரவான ஆங்கிலேய அல்லது காலனி ஆதிக்க வகைப்படுத்துதலை சமூகத்தின் மீது திணிப்பதன் வழியாக தனது கட்டுப்பாட்டைக் கொண்டுவர பிரிட்டிஷ் ஆட்சி விரும்பியது.  உள்ளூர் சமூகமோ அவர்களின் வகைப்படுத்துதலில் காணப்பட்ட துல்லியத்தன்மையோ, துப்புரவினையோ கொண்டிருக்கவில்லை.  பிரிட்டிஷ் ஆட்சியின் சொற்பயன்பாடுகள் பெரும் எண்ணிக்கையிலான உள்பிரிவுகளை ஒன்றாக்கி ஒரே வகைப்பாட்டில் அடக்கியது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில்  சென்னை மாகாணத்தில் இருந்த பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை குறித்து கல்வித் துறையின் அறிக்கையை “இர்சிக்” சுட்டிக் காட்டுகிறார்.  1870-71 வாக்கில் கல்வித்துறையானது பள்ளி மாணவர்களை  பிராமணர்கள், இதர இந்துக்கள், கிழக்கிந்தியர்கள், ஐரோப்பியர்கள், முகமதியர்கள், தேசிய கிறிஸ்துவர்கள் மற்றும் பார்சிகள் என பிரித்தது.  1880-ன் முற்பகுதியில் இந்துக்களின் வகைப்பாடு  பிராமணர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் மற்றும் இதர இந்துக்கள் என மாற்றியமைக்கப்பட்டது. அந்த நூற்றாண்டின் இறுதிவாக்கில் பிராமணர்கள், பிராமணர் அல்லாதவர்கள் என வகைப்படுத்தப்பட்டது.

சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் தலைவர்களாக,  பிராமணர் அல்லாத நான்கு கோடி பேர்களின் பிரதிநிதியாக, பிராமணர்கள் இருப்பதை இந்த கொள்கை அறிக்கை கேள்விக்குள்ளாக்கியது. இதே விதமாக பிரதிநிதித்துவ உரிமை குறித்த கேள்வியை வர்க்க நோக்கில் முன்வைத்தோமென்றால் அது நீதிக் கட்சியின் தலைமைக்கு சரியாகவே பொருந்தியது. தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் ஏ.என். சட்டநாதன் (1969) குறிப்பிடுகிறார், நெருக்கமாக பிணைக்கப்பட்ட சமூகத்தில் பெரும்பான்மை மக்களை பிரதிநிதித்துவப்படுத்தாத, அவர்களை அறிந்திராத, அவர்கள் மொழியில் உரையாடாத  பணக்காரர்களில் உயர் வகுப்பினருடையதாகவே அந்த அமைப்பு இருந்தது. சமூகத்தை மாற்றியமைக்கும் நோக்கமோ அல்லது பெரும்பான்மை மக்கள் பயனுற அவர்களின் வாழ்நிலையை உயர்த்தும் நோக்கமோ அவர்களுக்கு இல்லை. … உள்ளூர் சுயாட்சி அமைப்புகளின் ஏற்பாடாக அமைந்த மாவட்ட அவைகளிலும், பொதுச் சேவைகளிலும் பிராமணர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும், டாக்டர் அன்னி பெசண்ட் அம்மையாரால் துவக்கப்பட்டு சென்னையில் பிரபலமடைந்த “ஹோம் ரூல்” இயக்கத்திலும் பிராமணர்கள் செல்வாக்கு பெருகிவருவதைக் குறித்துமே அவர்கள் கவலைப்பட்டனர்.

நீதிக் கட்சி கட்டமைக்க விரும்பிய ‘பிராமணர் அல்லாதார் அடையாளத்தின்’ உள் முரண்பாடுகள், நீதிக்கட்சி தொடங்குவதற்கு பத்தாண்டுக்கு முன்னதாகவே தெரியத் தொடங்கியிருந்தன. தமிழ் நாட்டின் சமூக-பொருளாதார வரலாற்றைப் பார்த்தோமென்றால் பிராமணரல்லாதார் இயக்கம் தோன்றுவதற்கு முந்தைய நூற்றாண்டிலேயே பள்ளர், பறையர், பள்ளியர்கள் (pallis) ஆகிய கொத்தடிமைகளை வைத்திருப்பதில் பிராமணரல்லாத நிலப்பிரபுக்கள் பிராமண நிலப்பிரபுக்களுக்கு சற்றும் சளைத்தவர்களாக இல்லை என்பது தெளிவாகத் தெரிய வருகிறது..  பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தீவிர அடிமை முறை இருந்தது குறித்து தர்மா குமார் தெரிவித்திருப்பது. “ வெள்ளாள (பிராமணரல்லாதார்) விவசாயிகள் அடிமைகளை வைத்திருந்தனர்.  அவர்களை விற்கவும், அடகு வைக்கவும், மற்றும் வாடகைக்கு விடவும் செய்தனர் (அதில் கிடைக்கும் வருமானம் அடிமையின் உரிமையாளருக்கே சொந்தமாகும் ).

மேலும் பள்ளியர்களை வகைப்படுத்துவதில் உள்ள சிக்கல்களைப் பற்றி அவர் குறிப்பிடும்போது “1819-ல் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் இங்கு அடிமைகளாக இருப்பது இரு சாதியைச் சார்ந்தவர்கள் மட்டுமே, ஒன்று பள்ளர், மற்றொன்று பறையர் ஆகும்.  அதே சமயம் பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸ் (சென்னை மாகாண ஆட்சியர்) அவர்கள் தெரிவித்திருப்பது “வேளாண் பணிகளில் ‘அடிமைகளாக’ உள்ள சாதியினர் பள்ளி, பள்ளன், பறையன் ஆகும்.  பள்ளி சாதியினர் பிராமணர்களுக்கு அடிமைகளாக இருந்தவர்கள்; மற்ற இரு சாதியினரும் பிராமணர் அல்லாதவர்களுக்கு அடிமைகளாக இருந்தவர்கள்.  அதே சமயம் 1881-ல் வெளியிடப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கை தெரிவிப்பது என்னவென்றால் பள்ளி சாதியினர் பண்ணை அடிமைகளாக இருந்தவர்கள்;  வெள்ளாள சமூகத்தினருக்கு அடிமைகளாக இருந்தனர் என்கிறது.  விவசாயத்தில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக ஒரு சமயத்தில் தமிழகத்தில் வறண்ட பகுதிகளிலிருந்து பெரும் பகுதி மக்கள் இடம் பெயர்ந்து மற்ற பகுதிகளுக்குச் சென்றனர்.  அது வறட்சிக்கு இட்டுச் சென்றது.  பேரலை போல் தாக்கி பல பகுதிகளை பொது மயானமாக மாற்றியது. சாதி அடுக்குமுறை சமூக-பொருளாதார சீர்குலைவை ஏற்படுத்தியது.  இந்த கசப்பான உண்மைகள் பிராமணரல்லாதோர் அறிக்கையில் இடம் பெறவில்லை.

நீதிக்கட்சியின் இந்தக் குறுகிய கண்ணோட்டத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர் வேறு யாருமல்ல, ஈ.வெ.ரா. பெரியார் தான்.  பிராமணல்லாதார் அடையாளத்திற்கு ஒரு புதுப் பரிமாணம் உருவாக்கியதில் வெற்றி கண்டவர் அவரே. 1926-ஆம் ஆண்டு மதுரையில் ஒரு பிராமணரல்லாதார் மாநாட்டில் அவர் பேசியது வருமாறு: “முதலாவதாக நமது இயக்கம் என்றால் என்னவென்று சாதாரண மக்களுக்குப் புரிய வைத்திருக்கிறோமா? நாம் சாதாரண மக்களின் அனுதாபத்தை பெற ஏதாவது செய்திருக்கிறோமா? நமக்காக அரசு பதவிகளைப் பெற்றிருக்கிறோம். விருதுகள் பெற்றிருக்கிறோம். ஆனால் இவற்றின் மூலம் சாதாரண மக்கள் பயனடைந்திருக்கிறார்களா?  நமக்குக் கிடைத்த அதிகாரத்தையும், பதவியையும் பயன்படுத்தி பிராமணர்கள் முன்னேறுவதைத் தடுத்திருக்கிறோம். அதில் சந்தேகத்திற்கு இடமில்லை.  ஆனால் மக்களின் துயரங்களிலிருந்து அவர்களை விடுவித்திருக்கிறோமா?  மக்களை அடிமைகளாக, ஏழை கூலித் தொழிலாளியாக, பாட்டாளியாக வைத்திருக்கும் மூட நம்பிக்கையிலிருந்து அவர்கள் விடுபட ஏதாவது செய்திருக்கிறோமா?  நமக்கு பதவிகளும், விருதுகளும் தேவையில்லை என்று சொல்லவில்லை.  அவற்றை பெறுவது மட்டும் நமது நோக்கமல்ல.   நான் பிராமணரல்லாதோர் எனச் சொல்லும் போது 90 சதவீதமாக உள்ள ஏழைகள், ஏதுமற்றவர்களைத்தான் சொல்கிறேன்.  ராஜாக்கள், மற்றும் ஜமீந்தார்களைச் சொல்லவில்லை.  இங்கே கூடியுள்ள உங்களைப் பார்த்துக் கேட்கிறேன்.  நாம் உண்மையிலேயே பிராமணரல்லாதோர் நலனுக்காக பாடுபட உறுதியோடு இருக்கிறோமா? அல்லது ஒரு சிறிய பகுதியினரின் நலனுக்காக இருக்கிறோமா?  இந்தப் பிரச்னையில் புத்திசாலித்தனத்துடனும், பொறுப்புணர்வுடனும் செயல்பட, உறுதியேற்க எல்லாத் தலைவர்களுக்கும் நான் அழைப்பு விடுக்கிறேன்.”

வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தின் தேவை குறித்தும் அதை காங்கிரஸ் தலைமை ஏற்கும்படி செய்திட தான் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியுற்ற பின்னணியில் 1927-ல் பெரியார் காங்கிரசிலிருந்து வெளியேறினார்.  இதே காரணங்களுக்காக உடனே நேரிடையாக நீதிக் கட்சியில் போய்ச் சேரவில்லை.  நீதிக்கட்சியை விட்டு விலகி இருக்காவிட்டாலும். 1925ல் ராமநாதன் அவர்களால் துவக்கப்பட்ட சுயமரியாதை இயக்கத்தை தனது சர்வதேசப் பார்வைக்கு உகந்ததாக, மறுமலர்ச்சிக்கான புதிய சிந்தனைகளுக்கு அகலக் கதவு திறந்து வைத்திருக்கும் அமைப்பாக, தொண்ணூரு வயது வரையிலும் எந்த நோக்கத்திற்காக தனது அரசியல் வாழ்க்கையை அர்ப்பணித்து இருந்தாரோ, அதற்கு ஏற்ப சுயமரியாதை இயக்கம் இருந்ததால், அவ்வமைப்பை தனது நோக்கத்திற்கு உகந்ததாகக் கருதினார்.  சுயமரியாதை இயக்கம் பிராமணரல்லாதார் அடையாளத்திற்கு ஒரு தனித்துவமான, மாறுபட்ட பரிமாணத்தைத் தந்தது. மேலும் அந்த இயக்கத்தை ஜனநாயகப்படுத்தியது.  சமூக அடித்தளத்தை விரிவுபடுத்தவும் செய்தது.

அவர் பார்வையில் பிராமணரல்லாதார் என்பவர் கலாச்சார அடிப்படையில் பிராமணர்களால் அடிமைப்படுத்தப்பட்டவர்கள்; பொருளாதார, அறிவுசார் வளங்கள் பெற தடுக்கப்பட்டவர்கள் என்பதேயாகும்.  சுயமரியாதையுடன், கண்ணியத்துடன் கூடிய ஒரு மனிதனாக மீண்டெழ இவையே உதவும்.  பிராமணீயம் பிராமணரல்லாதார் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள் ஆகியவற்றின் உதவியுடன் தத்துவார்த்த அடிப்படையில் சாதி அமைப்பை ஆதரிக்கவும், நிலை நிறுத்தவும் உதவுகிறது. பிராமணரல்லாதார் இயக்கத்தில் உயர் பிரிவினரின் கட்டுப்பாட்டு எல்லைகளை சுயமரியாதை இயக்கத்தினர் தகர்த்தனர்.  ஈ.சா.விஸ்வநாதன் கூற்றுப்படி, சுயமரியாதை அமைப்பினர் தாழ்த்தப்பட்டவர்கள், இதர பிற்படுத்தப்பட்டவர்களான நாடார்கள், அகமுடையார்கள், இசை வேளாளர்கள், செங்குந்தர்கள், வன்னியகுல சத்திரியர்கள் ஆகியோரை நோக்கிச் சென்றனர்.  இந்தச் சாதியினரில் பெரும்பான்மையானவர்கள் விவசாயக் கூலிகள், பயிற்சி இல்லா தொழிலாளிகள், தமிழக மாவட்டங்கள் அனைத்திலும் சமமாக பரவி இருப்பவர்கள். 

ஈ.சா.விஸ்வநாதன் ‘ஈ.வெ.ரா. பெரியாரின் அரசியல் வாழ்வு’ என்ற தனது நூலில் குறிப்பிடும்போது,  சுயமரியாதை இயக்கத்தினர் தங்களது சாதிப் பெயரினை விட்டொழித்து, சாதி அடையாளங்களிலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டு,  சாதி மறுப்புத் திருமணங்களை ஆதரித்து,  பெண் விடுதலைக்கு பாடுபட்டனர்.  குழந்தைத் திருமணத்தை எதிர்த்தனர். வரதட்சிணைக்கு எதிராக செயல்பட்டனர்.  விதவைத் மறுமணத்தை ஆதரித்தனர்.  சொத்தில் பெண்ணுக்கு உரிமை கோரி போராடினர். விவாக ரத்து உரிமை கோரினர்.  மேலும் இது போன்றவற்றுக்கு ஆதரவாகச் செயல்பட்டனர். 1942-ல் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் தங்களது சாதிப் பெயரை கைவிட்டார்கள் என்கிறார்.

இந்த சுயமரியாதை இயக்கம் பிராமணரல்லாதாரை அடிமைப்படுத்தியிருக்கும் ஆரிய கலாச்சாரத்திற்கு மாற்றாக தீவிர சமூக சீர்திருத்தம், மதச்சார்பின்மை, அறிவியலை வளர்த்தெடுப்பது போன்றவற்றை செயல்படுத்தும் அமைப்பாகும்.  இவ்வமைப்பு மாகாணத்தில் பிராமணரல்லாத மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றிருந்தது.  ஈ.சா.விஸ்வநாதன் தெரிவிப்பது என்னவெனில் “இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த குழு, (பெரியாரின்) சுயமரியாதை இயக்கத்தினர், தமிழ்ப்பற்றாளர்கள், சாமியார்கள், பெண்கள், ஆதி திராவிடர்கள். உழைப்பாளி மக்கள், மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் உட்பட பலர் இணைந்த, நீதிக்கட்சியை விட ஒரு நெகிழ்வான அரசியல் சக்தியாக சென்னை மாகாணத்தில் உருவானது. சுயமரியாதை இயக்கம் மற்றும் நீதிக்கட்சியில் இருந்த முற்போக்காளர்களால் நடத்தப்பட்ட ஆலய நுழைவுப் போராட்டங்களில் நூற்றுக்கணக்கான ஆதிதிராவிடர் உள்ளிட்ட இளைஞர்கள், இளம் பெண்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.  

இந்தத் திட்டங்கள், அதனை செயல்படுத்துவது ஆகியவற்றின் மீது பிராமணர்கள் மட்டுமல்லாது, மதம் குறித்த பெரியாரின் கருத்தை ஏற்க மறுத்த நீதிக்கட்சித் தலைவர்களிடமிருந்தும் கடும் எதிர்ப்பினை சந்தித்தது.  இந்தப் புதிய முற்போக்கான, மதச்சார்பற்ற அடையாளம் சாதிப் பிரிவினையால் பயனடைந்து வரும் பிராமணரல்லாதோரில் இருந்த சில சுயநல சக்திகளை ஆட்டம் காண வைத்தது.  பிராமணரல்லாதோர் இயக்கம் சந்தித்த அடுத்த மாற்றம் அவர்களுடைய அச்சத்தை தீவிரப்படுத்தியது  முக்கியமாக இந்த அமைப்பு சாதி அடையாளத்துடன் கூடியதானாலும், வர்க்க வளையத்திற்குள் நுழைந்தது. 

அன்றைக்கு சென்னை மாகாணத்தில் தொழிற்சாலைகள் எண்ணிக்கை பெருகியதும். அதன் விளைவாக தொழிலாளி வர்க்க சமூகம் சுயமரியாதை இயக்கத்தின் சமூகப் பின்புலத்தை வர்க்க அடிப்படையில் தீவிரமாக மாற்றியமைக்கும் வாய்ப்பினை ஏற்படுத்தியது.  தொழிலாளி வர்க்க, சோசலிச தலைவர்களான எம். சிங்காரவேலர், ஜீவானந்தம் ஆகியோர் சுயமரியாதை இயக்கத்தோடு இணைந்து செயல்பட்டதும், அவர்கள் பெரியாரிடம் செல்வாக்கு பெற்றவர்களாக அமைந்தமையினால் அந்த இயக்கத்தை சீர்திருத்தக் கண்ணோட்டத்திலிருந்து, புரட்சிகர திசைவழியில் நடத்திச் சென்றனர்.  1917-ல் ரஷ்யாவில் போல்ஷ்விக் தலைமையில் புரட்சி வெற்றி பெற்றதும், இந்தியாவில் தொழிலாளி வர்க்கம் தோன்றியதும் இந்த வளர்ச்சிக்கு பின்புலமாக இருந்தது. கம்யூனிஸ்ட் அறிக்கை தமிழாக்கம் செய்யப்பட்டு, தொடராக பெரியாரால் நடத்தப்பட்ட ‘குடி அரசு’பத்திரிகையில் வெளிவந்தது.  பெரியார் அதற்கு ஆழமான கருத்துரை வழங்கியிருந்தார். அதில் குறிப்பிட்டிருந்தது என்னவென்றால் இந்தியாவில் சூழ்நிலை கனிந்திருந்தாலும், புரட்சி இதுவரை வராததற்குக் காரணம் இங்கு பணக்காரர் ஏழை இவர்களுக்கிடையிலான மோதல்களை சாதிக் கட்டுமானம் முகமூடியாக மறைத்து நிற்கிறது. ஒரு வலிமையான சோசலிச கண்ணோட்டத்துடன் கூடிய ஈரோடு திட்டம் பின்னர் வெளிவந்தது.

தமிழுக்கு எதிராக, சமஸ்கிருதத்திற்கு ஆதரவாக சலுகைகள் காட்டுவதை எதிர்த்து உருவான தனித்தமிழ் இயக்கம், (அதே ஆண்டு துவக்கப்பட்ட) பிராமணல்லாதோர் இயக்கத்துடன் இணைந்து இரட்டையர் போல் செயலாற்றியது.  ராஜாஜி அரசு பள்ளிக் கல்வியில் இந்தியை கட்டாய பாடமாக திணித்த போது அதனை எதிர்த்து தமிழ்நாடு பொங்கி எழுந்தது.  இந்த எதிர்ப்புப் போராட்டங்களில் பிராமணரல்லாதார் இயக்கத்தின் சமூக  நீதி மற்றும் தமிழுக்கான நீதி ஆகியவை சங்கமித்ததன் விளைவாக திராவிட தேசியம் வளர்வதற்கான அடித்தளம் உருவாக்கப்பட்டது.  சுயமரியாதை இயக்கத்தின் சோசலிச கட்டம், அடிப்படை சமூக நீதித் திட்டம், மற்றும் தனித்தமிழ் இயக்கத்தால் வளர்க்கப்பட்ட பேராண்மை இவற்றின் ஒன்றிணைவு  அவன்/அவளின் சாதி, வர்க்கம், மொழி போன்ற பல்வேறு அடுக்குகளைக் கொண்ட அடையாளங்கள் உடைய தமிழ் மக்களின் விருப்பங்கள் நிறைவேற வேண்டும் என்ற நோக்கத்தை தூண்டிவிட்டது.

சோசலிசம் நோக்கிய பெரியாரின் திருப்பம் ஒரு சில பகுதியினருக்கு அபாய

சங்கொலியாக இருந்தது.  குறிப்பாக பிராமணரல்லாதவர்களில் ஒரு பகுதியினர், பிரிட்டிஷ் அரசு ஆகியோரே அப்பகுதியினர்.  அரசியல் தளத்தில் வர்க்கம் பெரிய அளவில் நுழைவது பிராமணரல்லாதார் இயக்கத்தில் இருந்த நில உடைமையாளர்கள் தங்கள் அதிகாரம், இதுவரை பெற்ற சலுகைகள் மற்றும் தங்களது சொத்திற்கு ஆபத்து வரும் எனக் கருதினர்.  பெரும் எண்ணிக்கையில் மக்களை ஈர்க்கக் கூடிய ஒரு சமூக சீர்திருத்தவாதி புரட்சியாளராக மாறுவது, குறிப்பாக தேசிய இயக்கம் பெருகி வரும் கால கட்டத்தில், சோவியத் யூனியனில் சோசலிசம் திட்டவட்டமான நிலையை எட்டும் சூழலில் பிரிட்டிஷ் அரசிற்கு மிகப் பெரும் கவலையளிக்கும் விஷயமாக இருந்தது.  வளர்ந்து வரும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மீது கடுமையான தாக்குதல் கட்டவிழ்த்து விடப்பட்டது.  இதுவரை பிராமணரல்லாதார் இயக்கம் பெற்ற நன்மைகளைப் பாதுகாக்க வேண்டி, குறிப்பாக மாகாணத்தில் காங்கிரஸ் கட்சியில் பிராமணர்கள் கை மேலோங்கி உள்ள சூழலில், நீதிக்கட்சியின் அரசியல் வீழ்ச்சி கண்கூடாக காணப்பட்ட நிலையில், பெரியார் மீண்டும் சமூக சீர்திருத்த வட்டத்திற்குள் வந்து சேர்ந்தார்.

இருப்பினும், பெரியார் அவருடைய அரசியல் பயணத்தில் ஒரு சிக்கலான கட்டத்தில் பொதுக்கூட்டங்கள் வாயிலாகவும், அச்சு ஊடகம் வாயிலாகவும் வெளிப்படுத்திய சமூக சீர்திருத்தம், சோசலிசம் குறித்த கருத்துக்கள் மக்கள் மனங்களை கவ்விப் பிடித்தன – அடுத்த நூற்றாண்டு வரை மக்களிடம் அழிக்கவியலாத செல்வாக்கு செலுத்தும் அரசியல் சக்தியாகின.

தமிழகத்தில் சமூக சீர்திருத்தம் – மதுக்கூர் ராமலிங்கம்

(குரல் : ஆனந்த் ராஜ்)
கட்சித் திட்டம் கூறுவது:

சுதந்திரப் போராட்டத்தில் பெரும்பாலான இந்திய மக்கள் பங்கேற்று அதை வெற்றிகரமாக்கினர். சமூக தீங்குகளான சாதியம், சமூகப் பகைமை போன்றவற்றிலிருந்து விடுதலை, ஜனநாயக கட்டமைப்புக்குள் மக்களின் பண்பாட்டுத் தேவைகளை பூர்த்தி செய்தல் ஆகியவற்றையே மக்கள் சுதந்திரம் என கருதினர்.புதிய அரசுக்கு தலைமை ஏற்ற பெருமுதலாளி வர்க்கம் ஜனநாயகப்புரட்சியின் அடிப்படை கடமைகளை நிறைவேற்ற மறுத்தது.

சாதி மற்றும் பாலியல் ஒடுக்குமுறைக்கு தீர்வு காணப்பட நிலச்சீர்த்திருத்தம் உள்ளிட்ட புரட்சிகர மாறுதல் தேவையாகிறது என்று கூறும் கட்சித்திட்டம் பழைய சமுதாய அமைப்பை தூக்கி எறிய தேவையான அடிப்படை வர்க்கப் பிரச்சனையான நிலம், கூலிக்கான போராட்டம் மற்றும் நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான போராட்டம் அவசியம் என்று வரையறை செய்கிறது. சமூக சீர்திருத்த இயக்கங்கள் மூலம் சாதிய முறை மற்றும் அதன் அனைத்து வடிவத்திலான சமூக ஒடுக்குமுறையை எதிர்த்துப் போராட வேண்டியது ஜனநாயகப் புரட்சியின் முக்கியமான பகுதியாகும். சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டம், வர்க்கச் சுரண்டலுக்கு எதிரான போராட்டங்களுடன் பின்னிப்பிணைந்த ஒன்றாகும்.

பொருளாதார சுதந்திரம் மற்றும் சமூக அரசியல் வாழ்வில் சுயேச்சையான பங்கு பெண்களின் முன்னேற்றத்திற்கு அடிப்படையான நிபந்தனையாகும். ஏற்றத்தாழ்வான நிலையை எதிர்த்த போராட்டமும் சமத்துவத்திற்கான பெண்களின் போராட்டமும் சமூக விடுதலைக்கான இயக்கத்தின் பகுதியே ஆகும்.
சமூக சீர்திருத்தம் என்பது புரட்சியை நீர்த்துப் போக வைப்பது அல்ல. மாறாக, ஜனநாயகப் புரட்சிக் கட்டத்தின் தவிர்க்க முடியாத பகுதி சமூக சீர்திருத்த இயக்கம் என்கிற தெளிவு தேவையாகிறது. புரட்சியின் ஜனநாயகக் கட்டத்தை முழுமையாக நிறைவேற்றினால்தான் அடுத்தடுத்த கட்டத்தை எய்துவது சாத்தியமாகும் என்ற தெளிவுடன் நம்முடைய பணியின் ஒரு பகுதியாக சமூக சீர்த்திருத்தத்திற்கான இயக்கம் மாற்றப்பட வேண்டும்.

சமூக சீர்திருத்தம் என்றால் என்ன?

சமூக சீர்த்திருத்தம் என்பது சமூகத்தில் புரையோடிப்போயுள்ள சாதியம், பெண்ணடிமைத் தனம், மூடநம்பிக்கை போன்றவற்றை அகற்றி முற்போக்கு குணாம்சம் கொண்டதாக மாற்றுவதாகும். சமூக சீர்திருத்தம் என்பதன் அடித்தளம் பொருளியல் துறையில் ஏற்படும் மாற்றத்தைப் பொறுத்தே அமைகிறது.

பொருளாதார அடித்தளத்தில் மாற்றம் நிகழும் போது, மேல் கட்டுமானமான அரசு , சட்டம், மதம், கல்வி, கலை இலக்கியம், குடும்பப் பழக்கவழக்கங்கள், சடங்குகள் ஆகியவற்றிலும் மாற்றங்கள் நிகழ்கின்றன. ஆனால், இவை எந்திரகதியில் நிகழ்வது இல்லை. சமூகம் முற்போக்கான திசைவழியில் முன்னேறுவதற்கான போராட்டங்களையும், இயக்கங்களையும் நடத்த வேண்டியுள்ளது.

நிலப்பிரபுத்துவத்தின் மிச்சசொச்சங்களை அகற்றுவதற்கான போராட்டத்தை நடத்துவது அவசியம். முதலாளித்துவம் வளர்ந்த நாடுகள லும் கூட இந்தப் போராட்டம் நடந்திருக்கிறது, நடந்து கொண்டிருக்கிறது.

சாதியை அடிப்படையாகக் கொண்ட இந்திய சமூகத்தில் சமூக சீர்திருத்தத்திற்கான இயக்கம் தீயின் தீவிரத்துடன் இயங்க வேண்டியுள்ளது. சாதியம், பெண்ணடிமைத்தனம், மூடப்பழக்க வழக்கங்களுக்கு எதிரான போராட்டங்கள் பல்வேறு வடிவங்களில் தொடர வேண்டியுள்ளது. ஆளும் வர்க்கம் இதுகுறித்து கவலை கொள்ளாது. இன்னும் சொல்லப்போனால், இந்தக் கேடுகளை தனது ஆதிக்கத்திற்கு அனுசரணையாக மாற்றிக் கொள்ளும். சமூகத்தில் புரட்சிகர மாற்றத்தை இலக்காக கொண்ட தொழிலாளி வர்க்கத்தின் தோள்களில் இந்தக் கடமையும் சுமத்தப்பட்டுள்ளது.

வங்கத்தில் ராஜாராம் மோகன்ராய் துவக்கி வைத்த பிரம்ம சமாஜம் வடஇந்தியாவில் தயானந்த சரஸ்வதியால் துவக்கப்பட்ட ஆரிய சமாஜம், மராட்டியத்தில் மகாத்மா ஜோதிபா பூலே மற்றும் சாவித்திரி பூலே நடத்திய இயக்கம், கேரளத்தில் அய்யன்காளி, நாராயணகுரு உருவாக்கிய எழுச்சி, ஆந்திராவின் வீரேசலிங்கம், கர்நாடகத்தின் பசவண்ணா ஆகியோர் சாதியம், பெண்ணடிமைத்தனம் ஆகிய இரண்டுக்கும் எதிராக மிகப்பெரிய போராட்டங்களை நடத்தியுள்ளனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் பொதுவுடைமை இயக்கம் நடத்திய நிலத்திற்கான இயக்கம் மற்றும் உழவர்களின் கிளர்ச்சியின் உள்ளார்ந்த அம்சமாக சமூக சீர்திருத்தமும் இருந்தது என்பதை மறுக்க முடியாது.

வர்ணாசிரம அநீதியை முன்வைத்த வேத மரபுக்கு எதிரான மரபை முன்வைத்த தமிழகம் சமூக சீர்திருத்த இயக்க வரலாற்றில் தனித்துவம் பெற்றுள்ளது என்றே கூறலாம். சமூக சீர்திருத்த இயக்கத்தில் முன்னின்ற மாநிலங்களில் ஒன்று தமிழகம். இன்றளவும் சமூக சீர்திருத்த இயக்கத்தின் தாக்கம் தமிழ் மண்ணில் அழுத்தமாக வேர் கொண்டுள்ளது. தமிழகத்தைப் புரிந்து கொள்ள, மண்ணுக்கேற்ற மார்க்சியத்தை நடைமுறைப்படுத்த, இடது ஜனநாயக அணியை வலுவாக கட்டிட தமிழக சமூக சீர்திருத்த இயக்க வரலாற்றை அறிந்து கொள்வது அவசியமாகிறது.

சமூகமும், வர்க்கமும்

சங்க காலம் தமிழர்களின் பொற்காலம் என்று வியந்தோதுகிற போக்கு இருக்கிறது. அந்த சமூகத்தில் சாதி இல்லை, பெண்ணடிமைத்தனம் இல்லை. எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்தது என்று கூறுவதெல்லாம் மிகையானவையே ஆகும். இனக்குழு சமூகத்திற்கு அடுத்த நிலையிலான சங்ககாலத்தில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய திணைகள் இருந்தன. சங்க கால சமுதாயத்தை மேய்ச்சல் சமுதாயமாக மாறியதன் முதல்படி என்பர். பின்னர், நதிக்கரைகளில் வேளாண் சமூகம் உருவானது.துவக்கத்தில் கால்நடைகளுக்காக குழுக்கள் போரிட்ட நிலையில், பின்னர் வேளாண் நில விரிவாக்கத்திற்காக குறுநில மன்னர்கள் போரிட்டனர். வேளாண் சமூகம் வளர்ந்த நிலையில், அடித்தள மக்களின் நிலை மிகவும் மோசமாகவே இருந்ததோடு, வர்க்கப் பிரிவினைகளும் தோன்றி விட்டன.

“பருவ வாணத்து படுமலை கடுப்ப
கருவை வேய்ந்த கவின் குடிச்சீறுர்”

என்கிறது பெரும்பாணாற்றுப்படை. அதாவது, ஊருக்கு ஒதுக்குப்புறமாக குடிசைகளில் ஒருபகுதி மக்கள் வாழ்ந்துள்ளனர். அவர்களது வைக்கோல் வேய்ந்த கூரை மழையில் நனைந்து, வெயிலில் காய்ந்து, கருமையானது என்று பேசுகிறது பெரும்பாணாற்றுப்படை.

பெரும்பாணாற்றுப்படையின் மற்றொரு பாடல் உழைத்துக் கொடுத்த விவசாயத் தொழிலாளர்கள், வரகரிசியை உண்டு, வயிற்றை நிரப்புகையில், பெரும் நிலப்பிரபுக்கள் வெண்ணை போன்ற அரிசியை பெட்டைக்கோழி வறுவ லோடு சாப்பிடுகின்றனர் என்று கூறுகிறது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நிலமற்ற விவசாயிகள் ஒடுக்கப்பட்டவர்களாகவும், நிலமுள்ள வேளாளர்கள் உயர்ந்தவர்களாகவும் கருதப்பட்டனர். இது பொருளியல் வாழ்வில் மட்டுமல்ல, சமூக வாழ்விலும் பிரதிபலித்தது.

ஆனால், அதே நேரத்தில், வைதீகக் கொள்கைகளுக்கு எதிரான குரல்களும் சங்க இலக்கியப் பாடல்களில் ஒலிக்கின்றன என்பதை மனங்கொள்ள வேண்டும். பிராமணர், ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்கிற நான்கு அடுக்கை கடவுளின் பெயரால் வைதீகம் முன்வைக்கிறபோது, துடியன், பாணன், பறையன், கடம்பன் என்ற இந்த நான்கு குடிகளைத் தவிர வேறு குடிகள் இல்லை என்கிறார் மாங்குடி மருதனார்.

ஐம்பூதங்களால் ஆனதுதான் இவ்வுலகம் என்று ஆன்மாவை பின்னுக்குத் தள்ளுகிற சிந்தனையும், உடலுக்கு உணவே பிரதானம் என்கிற குரளும் சங்க இலக்கியத்தில் இருக்கிறது.
ஒரு அரசனின் வலிமை படைப்பெருக்கத்தால் அல்ல, அறநெறிகளினாலேயே அளவிடப்படும் என்று மதுரை மருதன் இளநாகனாரும், அரசனே முதல் என்ற மோசிகீரனாரின் பாடலுக்கு எதிராக குடிமக்கள் தான் முதல் என்று சொல்லும் ஒளவையின் குரலையும் சங்க இலக்கியத்தில் கேட்க முடிகிறது.

வைதீக மரபில் ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி பெற வாய்ப்பே இல்லை. அவ்வாறு கல்வி பெற முயன்றால், கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டன. புறநானூற்றில் பாண்டிய நெடுஞ்செழியன், கீழ்க்குடியில் பிறந்த ஒருவன் கல்வி கற்றால், மேல்குடியில் பிறந்தவனும் அவனை சேர்த்துக் கொள்வான் என்று பாடுவது பொதுக் கல்வியின் தேவையைப் பேசுகிறது.

பிறப்பால் மனிதனைப் பிரித்த வைதீக மரபுக்கு எதிராக ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற வள்ளுவனின் குறளும், தாவரத்துக்கு ஓர் அறிவு உண்டு என்று அறிவியல் பேசிய தொல்காப்பியமும், யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்குன்றனின் அறைகூவலும், யாயும் யாயும் யாராகியரோ, எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர் என்ற செம்புலப் பெயல் நீரார் என்ற புலவரின் சித்தரிப்பும் மனங்கொள்ளத்தக்கவை. பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தலும் அதனினும் இலமே என்ற சிந்தனையும் சங்க இலக்கியப் பாடல்களில் தெறிக்கிறது.

சமண, புத்த மதங்கள்

வேத மரபு என்பது பிரமாணம் எனும் வேள்விச் சடங்கையும், உபநிசத் எனப்பட்ட தத்துவ சிந்தனைகளையும் மையமாகக் கொண்டது. தீயில் சமைத்து சாப்பிடுவதன் பெருமையை உணர்ந்த மனிதன், தீயைப் பாதுகாக்க முயன்றான். அந்தப் பணியே வேள்வியாக மாறியது. புரோகிதர்கள் அதற்கு புனிதம் சேர்த்து, தங்களை வளமைப்படுத்திக் கொண்டனர். யாகம் குறித்து கேள்வி எழுப்பக் கூடாது என்று கட்டளையிடப்பட்டது. இதன் ஊடுருவலை சங்க இலக்கியத்திலேயே காண முடிகிறது.

வேள்வியால் வேளாண்மைக்கும் கால்நடைகளுக்கும் பெரும் இழப்பு ஏற்பட்டது. உழைத்து உண்பவர், பிறர் உழைப்பில் வாழ்பவர் என்ற இரு பிரிவு உருவானது. சாதியின் பெயரால் இது நியாயப்படுத்தப்பட்டது.

பசுவை பலியிட்டு நடத்தப்பட்ட யாகத்தை தடுத்த ஆபுத்திரன் வேதியர்களால் அடித்து விரட்டப்பட்ட கதையை புத்த மதகாப்பியமான மணி மேகலை பேசுகிறது. நீலகேசி எனும் பெண், தத்துவத்திலும் விவாதத்திலும் சிறந்து விளங்கியதை நீலகேசி எனும் சமண நூல் எடுத்துரைக்கிறது.

வேத மரபுக்கு எதிராகப் புறப்பட்டவையே சமண, புத்த மதங்கள். சாதியத்திற்கு எதிராகவும் கல்வியை பொதுவாக்கவும் இந்த மதங்கள் பெரும் பணியாற்றியுள்ளன.

வண்ணச்சீரடி மண்மகள் அறிந்திலள் என்று புகாரில் வாழும் கண்ணகியை பாடிய இளங்கோவடிகள் மதுரைக்காண்டத்தில் பேரரசனை நோக்கி தேரா மன்னா என அழைக்க வைத்தது சாதாரணமான ஒன்றல்ல. அந்தச் சிலப்பதிகாரம் சமண இலக்கியமாகும்.

பசியைப் பெரும் பாவி என்று பேசும் சீவக சிந்தாமணியின் ஆசிரியர் சீத்தலைச்சாத்தனார், பசி வந்தால், உடல் மட்டுமல்ல, உள்ளப் பண்புகளும் போய்விடும் என்கிறார்.இது சமண இலக்கியம். இதைத்தான் ‘பசி வந்திட பத்தும் பறந்து போகும்’ என்றது பின்னாளில் விவேக சிந்தாமணி.

பௌத்த இலக்கியமான மணிமேகலை உலகின் உண்மையான நெறி வாழ்வு எதுவென்றால், கொடுமையான பசியைக் களைவதே என்றும் உண்டி கொடுத்தவர் உயிர் கொடுத்தவர் என்றும் பேசுகிறது.
மலை மீது அழைத்துச் சென்று தன் மனைவியை தள்ளிவிட்டுக் கொல்ல முயன்ற கணவனை, அந்த மலையிலிருந்து தள்ளிவிட்டுக் கொன்றவர் குண்டலகேசி. தன்னைக் கொல்ல வருபவன் கணவனேயானாலும், தற்காத்துக் கொள்ள அவனைக் கொல்வது கற்பு நிலைதான் என்று குண்டலகேசி கதை பேசுவதும் இவரை சமண, பௌத்த மதங்கள் ஏற்றுக் கொண்டிருப்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கவை.

திருக்குறள் உள்ளிட்ட பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் எழுதப்பட்ட காலத்தில் சமண, புத்த மடங்கள், பள்ளிகள் என்று அழைக்கப்பட்டன. அனைத்து சாதியினருக்கும் கல்வி வழங்க முற்பட்டதால் பின்னாளில், தமிழில் கல்விக்கூடங்களுக்கு பள்ளி என்ற பெயர் இதனாலேயே வந்தது. வர்ணாசிரம அதர்மத்தின் பெயரால், அனைவருக்கும் கல்வி மறுக்கப்பட்ட பின்னணியில், சாதி வித்தியாசம் இல்லாமல் சமண, புத்த மதங்கள் கல்வி கொடுத்துள்ளன. வஜ்ரநந்தி என்பவர் மதுரையில் (கி.பி.470) திராவிடச் சங்கம் நிறுவியதாகவும் நீலகேசி, குண்டலகேசி உள்ளிட்ட நூல்கள் தோன்ற இந்த சங்கமே காரணம் என்கிறார் வரலாற்றாசிரியர் கே.கே.பிள்ளை.

எனினும் கி.பி.7 ஆம் நூற்றாண்டில் பக்தி இயக்கம் என்ற பெயரில் எழுந்த சைவ, வைணவ புயலை எதிர்த்து சமண, புத்த மதங்களால் நிற்க முடியவில்லை. வேத மரபு வெகுஜனத் தன்மையுடன் மக்களைக் கவர்ந்தது. சமண, புத்த மதங்களை மட்டுமல்ல, அதைப் பின்பற்றியவர்களையும் கொடூரமாக அழித்தது. மறுபுறத்தில் அன்பே சிவம் என்று ஓதியது. இந்த சமயக் காழ்ப்பில் ஏராளமான தமிழ் இலக்கியங்கள் நீராலும், தீயாலும் தின்னப்பட்டன.

பேரரசுகளின் துணையோடு சைவ, வைணவ மதங்கள் தங்களை நிலைநிறுத்திக் கொண்டன. வர்ணாசிரமம் மற்றும் யாக முறைக்கு எதிரான புத்த, சமண மதங்களின் தாக்குதலை சமாளிக்க பெரியபுராணம் உள்ளிட்ட பெருங்கதையாடல்களை உருவாக்கினர். ஆவுரித்து தின்றாலும் அவரும் இறைவனடி சேர முடியும் என்று ஒருபுறத்தில் கூறினாலும் மறுபுறத்தில் சதி நெருப்பில் நந்தன் வெந்தான். வர்ணாசிரமப் பிடியை விட்டு விடாமலே பெரும்பகுதி மக்களை வைதீக மதத்திற்குள் இழுக்க முயன்றனர். இதில் ஓரளவு வெற்றியும் பெற்றனர். சைவ, வைணவ மதப்பிரிவுகள் பக்தி இயக்கத்தை வெகுஜன மக்கள் இயக்கமாக மாற்ற முயன்றனர். இதற்கு இசை, கலை போன்றவற்றை வலுவாக பயன்படுத்தினர். பல்வேறு சாதிப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களை நாயன்மார்களாகவும், ஆழ்வார்களாகவும் சித்தரித்தனர். இதன் மூலம் இழந்த செல்வாக்கை மீட்டனர். அதே நேரத்தில், நிலவுடமை உறவுகளில் எந்த மாற்றமும் நிகழவில்லை.

வணிகர்கள் சமண மதத்தை ஆதரித்ததால், வேளாண் சார்ந்த வேளாளர்களுக்கும் வணிகர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. வேளாண் நிலப்பிரபுக்கள் சமண மதத்திலிருந்து பல்லவ, பாண்டிய மன்னர்களை சைவ மதத்திற்குள் இழுத்தனர். பிரம்மதேயம், தேவதான முறைகள் மூலம் பிராமணர்கள் மற்றும் வேளாளர்கள் நிலங்களை மீண்டும் கைப்பற்றினர். குத்தகை விவசாயிகளிடம் கொடூரமான வரி வசூலிக்கப்பட்டது. திருவையாற்றில் கண்டுபிடிக்கப்பட்ட 1429 ஆம் ஆண்டு கல்வெட்டில் அளவுக்கு அதிகமான வரி வசூலிக்கப்படுவதை எதிர்த்து இடங்கை, வலங்கை சாதியினர் கலகம் செய்ததாகவும், வரி விதிப்பில் மாற்றம் செய்யும் போது தங்களையும் கலந்து கொள்ள வேண்டுமென்றும் கூறுகிறது. தென்ஆற்காடு மாவட்டம் திருவாடி எனும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 1446 ஆம் ஆண்டு கல்வெட்டில், வரிக் கொடுமைக்கு பயந்து விவசாயிகள் பெருமளவு இடம்பெயர்ந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

வரிக் கொடுமையை எதிர்த்து கோவில்களின் மீது ஏறி கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் குறித்த செய்திகளும் உண்டு.

சித்தர்களின் கலகக்குரல்

சைவம், வைணவத்தால் சமண, புத்தம் ஒடுக்கப்பட்ட 14 ஆம் நூற்றாண்டில் சித்தர்கள் புறப்பட்டனர். சித்தர்கள் சமண மரபினை சேர்ந்தவர்கள். கடந்த காலம் என்பது முற்றிலும் அழிந்து விடுவதில்லை. அதன் மிச்சசொச்சம் ஏதேனும் ஒரு வடிவத்தில் வெளிப்படும். சமணத்தின் வேத மறுப்பினை சித்தர்கள் வெளிப்படுத்துவதாக அருணன் கூறுகிறார்.
சிவவாக்கியர், பட்டினத்தார், பத்திரகிரியார், பாம்பாட்டிச் சித்தர், இடைக்காட்டு சித்தர், அகப்பேய்ச் சித்தர், குதம்பைச் சித்தர், கடுவெளிச் சித்தர், குறுமுனிவர், அழுகணிச் சித்தர், நந்தீஸ்வரர், ராமதேவர், கொங்கணவர், ரோமரிஷி, திருமூலர், கருகூரார், பொதிகைச் சித்தர் என 17 சித்தர்களோடு சேர்த்து காகபுசுண்டர் என 18 சித்தர்கள் பட்டியலிடப்படுகின்றனர். சிவவாக்கியர், பட்டினத்தார் 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள் என்றும் அகப்பேய், அழுகணி ஆகியோர் 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள் என்றும், மற்றவர்கள் பிற்காலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் வரையறுக்கப்படுகிறது.

ஆதிச் சித்தர் என்று அழைக்கப்படும் சிவவாக்கியர், ஆதி உண்டு, அந்தம் இல்லை அன்று நாலு வேதமில்லை என முன்னாளில் வேதமில்லை என்கிறார். வேதத்தை மறுத்தவர் ஆன்மா குறித்த கதையாளர்களையும் விட்டுவைக்கவில்லை.
“கறந்த பால் முலைபுகா, கடைந்த வெண்ணெய் மோர்புகா
உடைந்து போன சங்கின் ஓசை உயிர்களும் உடல்புகா
விரிந்த பூவும், உதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம் புகா
இறந்தவர் பிறப்பதில்லை, இல்லை, இல்லையே”
என மறுபிறப்பு இல்லை என்று புரோகிதத் தின் அடிமடியிலேயே கைவைக்கிறார்.

“நட்ட கல்லை தெய்வமென்று நாலு புட்பம் சாத்தியே
சுற்றி வந்து முணமுணவென்று சொல்லும் மந்திரம் ஏதடா
நட்ட கல்லும் பேசுமோ, நாதன் உள் இருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச் சுவை அறியுமோ”
என உருவ வழிபாட்டை மறுக்கிறார். தேரில் சிலையை வைத்து தேர்த் திருவிழா நடத்துவதை செம்பை வைத்து இழுப்பதாக கூறுகிறார். நாலு வேதம் ஓதுபவர்களை பாவிகள் என்று சபிக்கிறார்.
என் சாமி, உன் சாமி என்று மோதிக் கொள்வதையும் சாடியுள்ளார் சிவவாக்கியர்.

“பிறந்தபோது கோவணம் இலங்கு நூல் குடுமியும்
பிறந்துடன் பிறந்தவோ பிறங்கு நாற் சடங்கலோ
மறந்த நாலு வேதமும் மனத்துலே உதித்தவோ
நிலம் பிளந்து வான் இடிந்து நின்றதென்ன வல்லீரே”
என பிராமணியத்தின் மீது நேரடியாகத் தாக்குதல் தொடுத்து பிறக்கிறபோதே பூணூல் குடுமி வேதத்துடன் பிறந்தீர்களா எனக் கேட்கிறார்.

புலால் உணவு இன்றைக்கும் பிரச்சனையாக உள்ளது. அசைவம் சாப்பிடுபவர்கள் அசுத்தமானவர்கள் என இன்றைக்கும் கூட கட்டமைக்கப்படுகிறது. சிவவாக்கியர் மீன் இறைச்சியை சாப்பிடாவிட்டாலும், மீன் இருக்கும் நீரில் தானே குளிக்கிறீர்கள், அதைத்தானே குடிக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பி, மாட்டிறைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர்; மாட்டிறைச்சி அல்லவா மரக்கறிக்கு இடுவது என்று கேள்வி எழுப்புகிறார். பிராமணர்களை மட்டுமல்ல, சைவம் பேசிய வேளாளரையும் மூடர்கள் என்று சாடியுள்ளார் சிவவாக்கியர். இறைச்சி, தோல், எலும்பிலே அந்தந்த சாதிக்கென இலக்கம் இடப்பட்டிருக்கிறதா என்றும் சிவவாக்கியர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பெண்களுக்கு இயற்கையாக ஏற்படும் மாதவிடாய் பெரும்பாவம், தீட்டு என்று கூறு வதையும் சிவவாக்கியர் அன்றைக்கே கண்டித்துள்ளது தனிச்சிறப்பு. போலி ஆசாரங்களையும், கோவில் உருவ வழிபாட்டையும், சாதி ஒடுக்கு முறைகளையும் எதிர்த்து வலுவான குரலாக சிவவாக்கியரின் குரல் உள்ளது.
உலக வாழ்வை வெறுத்து, பெண்களை இழிவாகக் கருதுகிற பார்வை பட்டினத்தாரிடம் உண்டு என்றாலும் வாழ்க்கை நிலையில்லாதது என்றபோதும், அதையே நினைத்துக் கொண்டு வாழாமல் போவது மரணத்தைவிட கொடுமையானது. மரணத்திற்கு முந்தைய மரணம் செயலற்ற தன்மைக்கு கொண்டுபோய் விடும் என்று பேசியுள்ளார்.
பத்திரகிரியார் என்ற சித்தர், “உளியிட்ட கல்லும், உருப்பிடித்த செஞ்சாந்தும், புளியிட்ட செம்பும் பொருளாவது எக்காலம்” என்று கேட்கிறார். அதாவது, உளியால் செதுக்கப்பட்ட சாமி சிலை, புளிபோட்டு விளக்கப்பட்ட சிலை யெல்லாம் எப்போது உண்மைப் பொருளாகும் என கேட்டுள்ளார்.

சாங்கியம் போதித்த ஆதிகபிலர் சொன்ன ஆகமத்தின்படி, சாதி வகை இல்லாமல் சஞ்சரிப்பது எக்காலத்தில் என்றும் கேட்கிறார்.
இன்னும் ஒருபடி மேலே போகிறார் பாம் பாட்டிச் சித்தர்.
“சதுர்வேதம், ஆறுவகைச் சாத்திரம் பல
தந்திரம், புராணம், கலை சாற்றும் ஆகமம்
விதம் விதமான வேறு நூல்களும்
வீணான நூல்களே என்று ஆடாய் பாம்பே”
என வேதம், சாத்திரம், ஆகமம் அனைத்தும் வீணே என்கிறார் பாம்பாட்டிச் சித்தர்.

சாதி எதிர்ப்பின் உச்சத்திற்கு செல்லும் பாம்பாட்டிச் சித்தர் சாதி மறுப்பு திருமணத்தையும் ஆதரித்துள்ளது போற்றத்தக்கது.
“சாதிப் பிரிவினிலே தீயை மூட்டுவோம்
சந்தை வெளியினிலே கோலை நாட்டுவோம்
வீதிப் பிரிவினிலே விளையா டிடுவோம்
வேண்டாத மனையினில் உறவு செய்வோம்”

என்பது பாம்பாட்டிச் சித்தரின் பெருமை குரல். சாதிக்கொரு வீதி வந்துவிட்ட 15 ஆம் நூற்றாண்டில் எல்லா வீதிக்கும் செல்வோம் என்பதும் விலக்கி வைக்கப்பட்ட வீடுகளிலும் மண உறவு கொள்வோம் என்பதும் அவரது விருப்பமாக இருந்துள்ளது.
குதம்பைச் சித்தர் ஏழை மக்களுக்கு வீடு இல்லாதபோது, தேவாரம் எதற்கு என கேட்கும் வகையில், “தாவாரம் இல்லை, தனக்கொரு வீடில்லை, தேவாரம் ஏதுக்கடி – குதம்பாய் தேவாரம் ஏதுக்கடி” என்று கேட்டுள்ளார். சமஸ்கிருத மந்திரங்களை வெறும் சத்தங்கள் என்றும் புறந்தள்ளுகிறார்.

சித்தர்கள் மரபு ஒரு இயக்கமாக மலராமல் போனாலும், நிலப்பிரபுத்துவ பின் புலத்தினாலான சாதியம், சடங்கு, சம்பிரதாயம் போன்றவற்றை சாடிய மரபு என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைக்கும் சமூக சீர்திருத்தவாதிகளால் எடுத்தாளப்படுவதாக சித்தர்களின் பாடல்கள் உள்ளன.

சமண, புத்த மதங்கள் அழித்தொழிக்கப்பட்ட நிலையில், பிராமணிய மதத்தின் மேலாதிக்கத்தால் பாதிக்கப்பட்ட அடித்தட்டு மக்கள், வழிபாட்டில் சமத்துவத்தை கொண்டிருந்த இஸ்லாமிய மதத்தின் பெருமளவில் சேர்ந்திருக்க வாய்ப்பு உண்டு. இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் அனைவரும் அரபு நாடுகளிலிருந்து குடியேறியவர்கள் அல்ல.

சமண மதத்தில் இருந்தவர்களில் ஒருபகுதியினரும் இஸ்லாமிய மதத்தை தழுவியுள்ளனர். இஸ்லாம் மதத்தின் ஒரு பிரிவாக கருதப்படுகிற சூபியிசம் தமிழகத்திலும் வேர் கொண்டது. சித்தர்கள் பாணியிலான சூபி அறிஞர்களின் பாடல்கள் மற்றும் போதனைகள் சமத்துவத்தை முன்னிறுத்துபவை. இதில் சமூக சீர்திருத்த நோக்குகளை காண முடியும்.

விஜயநகர சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு மைசூர், பாளையக்காரர்களின் கைக்கு வந்தது. மைசூர் ராணுவத்தின் தளபதியாக இருந்த ஹை தர் அலி ஆட்சியை கைப்பற்றினார். அவரைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த, திப்பு சுல்தான் பூரண மதுவிலக்கை கொண்டு வந்தார். விவசாயிகளுக்கு கடன் வழங்கப்பட்டதாகவும் விளைச்சல் இல்லாத நிலங்கள் அரசால் எடுக்கப்பட்டு, நிலமற்ற விவசாயிகளுக்கு வழங்கப்பட்டதாகவும் குறிப்புகள் உள்ளன. அவரது ஆட்சியில் அனாதைப் பெண்களையும் குழந்தைகளையும் விற்பது தடை செய்யப்பட்டது.

ஆடம்பரமாக திருமணங்கள் நடத்தப்பட்ட நிலையில் ஒருவரின் வருவாயில் ஒரு சதவீதம் மட்டுமே திருமணத்திற்கு செலவு செய்யப்பட வேண்டும் என திப்புவின் அரசு உத்தரவிட்டது.
திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தோல்சேலை அணிய தடை விதிக்கப்பட்டு, பெண்கள் மேலாடையின்றி இருந்தனர். இதை மாற்ற திப்புவின் அரசு உத்தரவிட்டது. இது மரபு என்று வாதிடப்பட்ட நிலையில், மரபென்றால் மனமாற்றம் செய் என்று அவர் உத்தரவிட்டுள்ளார்.

இராமானுஜரும் சீர்திருத்தமும்

ஆதி சங்கரரின் அத்வைதம், மத்துவாச்சாரி யாரின் துவைதம், இராமானுஜரின் விசிஷ்டாத் வைதம் ஆகியவை தத்துவங்களாக அறியப் பட்டாலும் தனித்தனி இயக்கங்களாகவும் வளர்ந்தன. இவர்களில் ஒப்பீட்டு அளவில் இரா மானுஜர் சீர்திருத்த நோக்கம் கொண்டவராக இருந்துள்ளார். இவர் 1017 ஆம் ஆண்டு பிறந்து 1137 ஆம் ஆண்டு மறைந்ததாக கூறப்படுகிறது.
வைணவத்தை பரப்பியதில் இவருக்கு பெரும் பங்கு உண்டு. தாழ்த்தப்பட்ட மக்களை இவர் ‘திருக்குலத்தார்’ என்று பெயரிட்டு அழைத்தார். இதைப் பின்பற்றிய காந்தி பின்னாளில், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ‘ஹரிஜன்’ என்று பெயரிட்டு அழைத்தார். வைணவத்தை சீர்திருத்தம் செய்து மக்கள் இயக்கமாக மாற்ற முயன்றார்.

திருக்கோஷ்டியூர் நம்பி என்பவரின் கட்டளையை மீறி திருக்கோஷ்டியூர் கோவில் மதில் சுவர் மீது ஏறி நின்று சாதி வித்தியாசம் இல்லாமல் அனைவரும் சொர்க்கம் செல்ல ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற மந்திரத்தை இவர் கூறினார். உயர்சாதியினர் மட்டுமே சொர்க்கம் செல்ல, தாம் நரகத்திற்குச் சென்றாலும் பரவாயில்லை என்று அவர் இவ்வாறு செய்தாராம். வழிபாட்டில் வடமொழி ஆதிக்கம் செலுத்திய நிலையில், தமிழையும் முன்னிறுத்தியதும், பெண்கள் வழி பாட்டில் பங்கேற்கும் வகையில் சில நெகிழ்வுத் தன்மையை உருவாக்கியதும் இராமானுஜரின் சாதனைகளாக பார்க்கப்படுகிறது. வைணவத்தில் தென்கலைப் பிரிவை உருவாக்கிய இவர், வைணவத்தின் பரவலாக்கத்திற்கே உழைத்தார் என்ற போதும், அதில் சில சமூக சீர்திருத்த கண்ணோட்டம் இருந்தது. பல்வேறு சாதியினரும் நாமம் போட்டு, பூணூல் அணிவித்து, அந்தணர் என்று இவர் அறிவித்ததாகவும் தகவல் உண்டு.

கிறிஸ்துவ போதகர்களின் தொண்டு

ஆங்கில ஏகாதிபத்தியம் இந்தியாவில் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கு முன்பே கிறிஸ்துவ போதகர்கள் தங்களுடைய பணியை இந்தியாவில் செய்து வந்துள்ளனர். கத்தோலிக்க கிறிஸ்துவ பிரிவைச் சேர்ந்த பிரான்சிஸ் சேவியர், ராபர்ட் டி நோபிளி, ஜான் டி பிரிட்டோ, புராட்டஸ்டண்ட் பிரிவைச் சேர்ந்த சீகன் பால்கு மற்றும் ஹென்றி புளூட்ச் ஆகியோர் தமிழகத்தின் பல பகுதிகளில் பணியாற்றினர். மதம் மாற்றுவதே அவர்களது நோக்கமாக இருந்த போதும், மக்களிடம் இருந்த சாதிப் பிரிவுகள் அவர்களது கவனத்தை ஈர்த்தது.

புராட்டஸ்டண்ட் பிரிவினர் 1858இல் சென்னையில் நடைபெற்ற தென்னிந்திய போதகர்கள் மாநாட்டில் சமர்ப்பித்த அறிக்கை சாதியை வன்மையாக கண்டிக்கிறது.

“சாதி என்பது அடிப்படையில் ஒரு மத நிறுவனமாகும். இது இந்தியாவின் பயங்கரமான கேடாகும். எவ்வித தயக்கமுமின்றி வன்மையாக, வெளிப்படையாக இதை கண்டிக்க வேண்டியது அனைத்து போதகர்கள் மற்றும் திருச்சபையினரின் கடமையாகும். சாதியின் பெயரால் ஒரு பகுதி கிறிஸ்தவர்களோடு மண உறவு கொள்ள மறுக்கும் எவரும் கிறிஸ்துவன் என்று சொல்லிக் கொள்கிற தகுதியுடையவர் அல்ல”.

1727 – இல் தரங்கம்பாடியில் பணியாற்றிக் கொண்டிருந்த புராட்டஸ்டண்ட் பாதிரியார்கள் தயாரித்த அறிக்கையில், “கிறிஸ்துவ தன்னடக்கம், ஒற்றுமை என்பவற்றிற்கு அக்கம்பக்கமாக சாதி ஒழுங்கு முறையும் நீடிக்க அனுமதிக்கலாம் என்றும் பறையர்கள் மற்றும் சூத்திரர்களை ஒரு கஜம் தள்ளி உட்கார வைக்க அனுமதிக்கலாம் என்றும் நீண்ட விவாதத்திற்கு பிறகு முடிவு செய்தோம். ஆனால், பிரசாதம் வழங்குவதில் வேறுபாடு காண்பிக்கப்படவில்லை.”

பிராமணிய அடிப்படையிலான சாதியம் கிறிஸ்துவத்தையும் விட்டு வைக்கவில்லை. உயர் சாதியினரை ஈர்க்க முயன்று பெருமளவு வெற்றி பெறாத நிலையில், அடித்தட்டு மக்களை நோக்கி அவர்களது கவனம் திரும்பியது. 1850க்கு பிறகு புராட்டஸ்டண்ட் பிரிவு சாதி வேறுபாட்டை திருச்சபை விதிகளுக்கு எதிரானதாக மாற்றியது.
19 ஆம் நூற்றாண்டில் கூட தமிழகத்தில் அடிமைகள் இருந்தனர். கிறிஸ்துவ போதகர்கள் இதுகுறித்து, இங்கிலாந்து அரசின் கவனத்தை ஈர்த்ததால், 1843 – இல் அடிமை ஒழிப்புச் சட்டம், மற்றும் 1861-இல் இந்தியன் பீனல் கோடு ஆகியவை நிறைவேற்றப்பட்டன. அடிமை முறை முற்றாக ஒழிக்கப்படவில்லை என்றபோதும், சட்டப்பூர்வமாக ஒழிக்கப்பட்டதே குறிப்பிடத்தக்க ஒன்றுதான்.

ஐரோப்பாவில் ஏற்பட்ட நவீன கல்வி முறையை தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அறிமுகப்படுத்தியவர்கள் கிறிஸ்துவ போதகர்களே. 1830ல் துவங்கிய கல்வித்துறையில் கவனம் செலுத்தினர். 1854-இல் உருவாக்கப்பட்ட கல்விக் கொள்கை காரணமாக முதன்முறையாக, “பொதுக் கல்வித்துறை” உருவானது. இந்தக் கல்விக் கொள்கையின் காரணமாகவே சென்னை, மும்பை பல்கலைக்கழகங்கள் உருவாகின.

விஜயநகரத்தில் அமைந்திருந்த மகாராஜா கல்லூரியின் முதல்வராக இருந்த ராமானுஜாச்சாரி 1910இல் இவ்வாறு எழுதியுள்ளார், “கிறிஸ்துவர்களினால் பெரும் பலன் அடைந்தவர்கள் பஞ்சமர்களே. பஞ்சமர்களுக்கு ஆதரவாக சில கிறிஸ்துவ போதகர்கள் துவக்கிய போராட்டமே இவர்களின் பரிதாப நிலை குறித்து மாகாண அரசின் கண்களை திறந்தது. அவர்களுக்கான தனிப்பள்ளிகளை துவக்குமாறு அரசே செய்தது. பஞ்ச காலத்தில் அடித்தட்டு மக்களுக்கு கஞ்சி ஊற்றி காப்பாற்றுவதிலும் கிறிஸ்தவ போதகர்கள் அதிக தொண்டாற்றியுள்ளனர்.

நோயை பாவத்துடன் போட்டு, குழப்பி, மக்களை பயமுறுத்தி வைத்திருந்தனர். இதுகுறித்து, கேத்ரின் மோயா என்ற ஐரோப்பிய ஆய்வாளர் கூறுகையில், “ஏதாவது ஒருவருக்கு நோய் வந்துவிட்டால், கடவுளே அந்த நோயை வீட்டிற்கு கொண்டுவந்து விட்டதாக கருதுகிறார்கள். இந்து சமூகத்தில் உள்ள பெண்கள், ஆண்களைவிட அதிக மூட வழக்கங்களில் நம்பிக்கை உள்ளவர்கள். யாருக்காவது நோய் வந்துவிட்டால், மருத்துவத்தை நாடுவதில்லை. குலதெய்வத்திற்கு பூஜை போடுகிறேன், வீரனுக்கு பொங்கல் இடுகிறேன், காளிக்கு அபிஷேகம் செய்கிறேன், காட்டேரிக்கு ஆடு வெட்டி நெய் பொங்கல் இடுகிறேன் என்றெல்லாம் வேண்டிக் கொள்கின்றனர்” என்று கூறியுள்ளார். நவீன மருத்துவத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும் கிறிஸ்துவ போதகர்கள் பணியாற்றியுள்ளனர்.

ஆனால், அதே நேரத்தில் சாதியம், கிறிஸ்துவத்தையும் விட்டுவைக்கவில்லை. இந்தியாவில் 35 சதவீதத்திற்கும் குறைவான மக்களே கிறிஸ்துவ மதத்தை பின்பற்றியிருந்தனர். இந்து மதத்தில் பிராமணர் உள்ளிட்ட உயர்சாதியினர் 26 சதவீதமும் தலித் மக்கள் 31.3 சதவீதமும் உள்ளனர். ஆனால், கிறிஸ்துவ மதத்தில் உயர்சாதியினர் 33.3 சதவீதமும் தலித் மக்கள் 41.8 சதவீதமும் உள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள கத்தோலிக்க சபைகளில் 65 சதவீதம் தலித்துகள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. சாதியத்தோடு கிறிஸ்துவமும் சமரசம் செய்து கொண்டு தலித்துகள் மற்றும் நாடார்களுக்கு தனி இடுகாடு, தனி வழிபாட்டுத்தலங்கள் உருவாக்கப்பட்டன. இதை எதிர்த்து பெரும் கலகங்களும் நடந்துள்ளன, நடந்தும் வருகின்றன.

உதாரணமாக, நெல்லை மாவட்டம் வடக்கன் குளம் கத்தோலிக்க தேவாலயத்தில், நாடார்கள் மற்றும் தலித்துகளுடன், ஒன்றாக அமர்ந்து வேளாளர் மற்றும் உயர்சாதியினர் பிரார்த்தனை செய்ய மறுத்து கலகம் செய்ததால், நூதனமான நுழைவு வாயில் உருவாக்கப்பட்டது. அந்த தேவாலயம் இதனால் டவுசர் சர்ச் என்று அழைக்கப்பட்டது. அதாவது, உயர்சாதியினர் வர ஒரு வழி, பிற சாதியினர் வர ஒரு வழி என இரண்டாக டவுசர் வடிவில் கட்டப்பட்டது. போதகர் எந்த வழியில் வருவது என்று பிரச்சனை ஏற்பட்டதால், அவர் இடையில் உள்ள மூன்றாவது வழியாக வந்து பிரார்த்தனையை எல்லோருக்கும் பொதுவாக ஏறெடுத்தார்.

நெடுங்காலத்திற்கு பிறகு இந்த டவுசர் வடிவு கிழிக்கப்பட்டது.
பால்ய விவாஹம், உடன்கட்டை ஏறுதல், தேவதாசி முறை உள்ளிட்ட பல்வேறு சமூக கேடுகளை சட்டத்தின் மூலம் தடை செய்வதற்கும் கிறிஸ்துவ போதகர்களின் தொண்டு பயன்பட்டுள்ளது.
வைகுண்டசாமி, வள்ளலார் போன்றவர்கள் மத வரம்புக்குள் நின்று கொண்டே வைதீக மரபை எதிர்த்துப் போராடியதோடு சாதியம், மூட நம்பிக்கைகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்துள்ளனர்.
கிறிஸ்தவ போதகர்களின் பிரச்சாரத்திற்கு எதிர்வினையாக 18-ஆம் நூற்றாண்டில் ராஜராம் மோகன்ராயால் உருவாக்கப்பட்ட பிரம்ம சமாஜம் அமைப்பும் தியோசாபிகல் சொசைட்டி அமைப்பும் சமூக சீர்திருத்தத் துறையில் சில பணிகளைச் செய்துள்ளது.

தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஒரு பகுதியாக சமூக சீர்திருத்த இயக்கமும் முகிழ்ந்தது. தீவிரவாதிகள் என்று வர்ணிக்கப்படுபவர்கள் இந்து பழமைவாதத்தை முன்னிறுத்துபவர்களாகவும், மிதவாதிகள் என்று கூறப்பட்டோர் சமூக சீர்திருத்தத்துறையிலும் கவனம் செலுத்துவர்களாகவும் இருந்தனர்.

மகாகவி பாரதியார், முன்சீப் வேதநாயகம் பிள்ளை, அ.மாதவய்யா, பாவேந்தர் பாரதிதாசன் ஆகியோரின் படைப்புகளின் வழியே சமூக சீர்திருத்தக் கருத்துக்கள் வெடித்து வெளிவந்தன.
அயோத்திதாசர் தமிழக சமூக சீர்திருத்தத் துறையில் தனித்த கவனம் பெறுபவர். சாதியத்திற்கு எதிராகவும், அனைத்து மக்களுக்கும் கல்வி கேட்டும் அவர் நடத்தியுள்ள போராட்டங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இதே வழியில் இரட்டை மலை சீனிவாசனின் பணியும் அமைந்தது.

காங்கிரசிலிருந்து வெளியேறி பெரியார் தொடக்கிய சுயமரியாதை இயக்கம் கடவுள் என்ற வரம்புக்கு வெளியே நின்று சமூக சீர்திருத்தத்தை அழுத்தமாக முன்வைத்தது. அதன் தாக்கம் இன்றைளவும் தமிழகத்தில் உள்ளது. முன்னதாக நீதிக்கட்சியின் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட வகுப்புவாரி பிரதிநிதித்துவம், மதிய உணவுத்திட்டம் போன்ற நடவடிக்கைகளும் முக்கியமானவை.
தேவதாசி முறையை எதிர்த்து மூவலூர் இராமிர்தம் அம்மையாளர் உள்ளிட்டோர் நடத்தியுள்ள கருத்தியல் களப்போராட்டங்கள் காத்திரமானவை.

தமிழகத்தில் பொதுவுடைமை இயக்கம் தோன்றி வளர்ந்த நிலையில் சமூக சீர்திருத்த பிரச்சாரமும் போராட்டமும் அதன் இயல்பான பகுதியாக அமைந்தன. சிங்காரவேலர் இந்தத் துறையின் முன்னோடியாகத் திகழ்கிறார்.

இந்திய மறுமலர்ச்சி இயக்கத்தின் மூன்று கால கட்டங்கள்…

 • அன்வர் உசேன்

(பிரண்ட்லைன் இதழில் கே.என்.பணிக்கர் எழுதிய கட்டுரையைத் தழுவி தமிழில் எழுதப்பட்டது)

நவீன இந்தியாவின் வரலாற்றில் சமூக மறுமலர்ச்சி இயக்கத்தின் தொடக்கம் எது? காலனியாதிக்கத்திற்கு எதிராக அரசியல் போராட்டம் தொடங்குவதற்கு முந்தைய காலகட்டத்தில், சமூக மறுமலர்ச்சி இயக்கம் ஆரம்பித்தது என்று மதிப்பீடு செய்யப்படுகிறது. சமூக மற்றும் மத சீர்திருத்த இயக்கங்கள்  பொதுவாக மறுமலர்ச்சி இயக்கங்கள் என அழைக்கப்படுகின்றன. இவை பிற்காலத்தில் மிகவும் தீவிரமான அரசியல் போராட்டங்களுக்கு அடித்தளம் அமைத்து கொடுத்தன எனவும் கருதப்படுகிறது. இதிலிருந்துதான் இந்திய தேசியம் உருவானது என்பதும் மதிப்பீடு ஆகும். எனவே இந்திய தேசியம் என்பது இந்த மறுமலர்ச்சி இயக்கங்களின் நேரடி விளைவு என உருவகப்படுத்தப்படுகிறது.

இந்தியாவின் வரலாற்றை பழங்காலம், மத்திய காலம், நவீன காலம் மற்றும் சமகாலம் என வகைப்படுத்துவது ஒரு மதிப்பீடு. காலனியாதிக்க காலம், சீர்திருத்த காலம், தேசிய இயக்க காலம் என வகைப்படுத்துவது இன்னொரு மதிப்பீடு. இத்தகைய மதிப்பீடுகள்தான் சமீப காலம்வரை இருந்தன. எனினும் இந்த மதிப்பீடுகள் கேள்விகளுக்குள்ளாக்கப்பட்டன. முதலில் மார்க்சிய ஆய்வாளர்கள் இதனை கேள்வி கேட்டனர். இவர்கள் தேசிய இயக்கத்தின் சமூக தோற்றுவாய் என்ன என்பதை ஆய்வு செய்தனர். பின்னர் தலித் ஆய்வாளர்களிடமிருந்து வலுவான கேள்விகள் எழுந்தன. இவர்கள் சாதி அடக்குமுறை அடிப்படையிலான மாற்று வரலாற்றை உருவாக்கினர். விளிம்பு நிலை மக்களின் வரலாறை உருவாக்கியவர்களும் இந்த மதிப்பீடுக்கு எதிராக சவால் எழுப்பினர். அடக்குமுறை மற்றும் அதன் விளைகள் குறித்து இவர்கள் அழுத்தமாக ஆய்வு செய்தனர். இத்தகைய மாற்று மதிப்பீடுகள் இந்திய வரலாற்றின் ஆய்வு குறித்த புதிய கருத்தாதக்கத்தை உருவாக்கின.

மறுமலர்ச்சியும் நவீனமயமும்

இந்திய சமூக அரசியலில் மறுமலர்ச்சிக்கும் நவீனத்திற்கும் உள்ள தொடர்பு என்ன? இக்கேள்வி வேறு பல கேள்விகளை எழுப்புகிறது..

 • மறுமலர்ச்சி இயக்கம் சமூகத்தில் நிலவிய முரண்பாடுகளுக்கு தீர்வு கண்டதா?
 • மறுமலர்ச்சி இயக்கம் ஏன் மதம் அல்லது சாதி கட்டமைப்பு சார்ந்து இருந்தது? ஏன் அது இத்தகைய எல்லைகள் கடந்து பயணிக்கவில்லை?
 • மறுமலர்ச்சி இயக்கம் என்பது வெறும் மேல் சாதியினரின் சமூக மற்றும் மதம் சார்ந்த நலன்களை மட்டுமே பிரதிபலித்ததா?
 • பிராமணிய கோட்பாடுகள் வகுத்த எல்லைகளை மறுமலர்ச்சி இயக்கம் மீறவில்லை எனும் மதிப்பீடு சரியானதாக இருக்குமா?
 • தலித் மற்றும் விளிம்புநிலை மக்களின் வரலாறு பல்கலை கழகங்களின் பாடத்திட்டங்களில் இடம் பெறவில்லை என்பது தற்செயல்தானா?
 • நவீன இந்தியாவின் பரிணாமம் குறித்த ஆவணங்கள் 19 மற்றும் 20ம் நூற்றாண்டுகளில் உருவான மறுமலர்ச்சி இயக்கங்களுக்கு எல்லைகளற்ற முக்கியத்துவம் தருவது ஏன்? இந்த ஆவணங்கள் தலித் மற்றும் விளிம்பு நிலை மக்கள் குறித்து மவுனம் சாதிப்பது ஏன்?

இந்திய சமூக அரசியலில் மறுமலர்ச்சிக்கும் நவீனத்திற்கும் உள்ள தொடர்பு பற்றி ஆய்வு செய்தால் இக்கேள்விகளுக்கான பதில்கள் கிடைக்கும்.

நவீனம் பற்றிய விவாதம்:

மறுமலர்ச்சி இயக்கத்திலிருந்துதான் இந்தியாவில் நவீனத்துவதுவம் தோன்றியது என கூறப்படுகிறது. எனினும் உலக அளவில் மறுமலர்ச்சி என்பது என்ன. மறுமலர்ச்சி என்பது சமூக சிந்தனைகள், உணர்வுகள் மற்றும் மதிப்புகளில் மாற்றத்தை விளைவிக்க கூடியது. மனிதம் குறித்து புது விளக்கம் உருவாக்குவது. புதிய மனிதன் தோன்றினான். இந்த புதிய மனிதன் கலாச்சார படைப்பாக்கத்திற்கு புத்துயிர் அளித்தான். இசை, இயல், நாடகம், சிற்பம், ஓவியம் என  அனைத்திலும் புதிய கருத்துகள் உருவாயின. இவ்வாறு உருவான புதிய அழகியல் என்பது சமூக அமைப்புடனும் உற்பத்தி உறவுடனும் பிரிக்க முடியாத ஒரு அங்கமாக இருந்தது. முதலாளித்துவ உதயத்தின் அறிவுசார் அங்கமாக இது இருந்தது. நிகழ் காலத்தை கடந்த காலத்திலிருந்து வேறுபடுத்தி காட்டியது. புதியதை பழையதிலிருந்து பிரித்து காட்டியது.

எனினும் முதலாளித்துவத்தின் வளர்ச்சி போக்கில் “நவீனம்” என்பதற்கு பல அர்த்தங்கள் முன்னுக்கு வந்தன. “நவீனம்” என்பது விவாதத்திற்குரிய ஒன்றாக மாறியது. ஐரோப்பிய நாடுகளில் முதலாளித்துவம் உருவாக்கிய நவீனம் போலவே ஆசிய ஆப்பிரிக்க நாடுகளிலும் உருவானதா? இது ஒரு முக்கிய கேள்வி. ஏனெனில் காலனியாதிக்க காலத்தில்தான் மேற்கத்திய நாடுகளால் நவீனத்துவத்தின் பல அம்சங்களும் இந்தியாவிற்குள் கொண்டுவரப்பட்டன எனும் ஒரு கருத்து உள்ளது. காலனியாதிக்க ஆட்சியாளர்கள் இத்தகைய கருத்தாக்கத்தை உருவாக்கினர். இந்தியாவை நவீன தேசமாக மாற்றுவதற்காகவே தாங்கள் ஆட்சி செய்வதாக அவர்கள் கூறிக்கொண்டனர்.

காலனி ஆதிக்கம் நவீனமயத்தை அறிமுகப்படுத்தியதா?

காலனி ஆதிக்கத்தின் பொழுது உருவான நிர்வாக முறைகள், போக்குவரத்து மற்றும் தகவல் கட்டமைப்புகளின் அறிமுகம், விவசாயத்தில் வணிகமயம் ஆகியவை நவீனமயத்திற்கான உதாரணங்களாக கூறப்படுகின்றன. இவை அடிப்படையில் “காலனிய நவீனமயம்” என்று வகைப்படுத்துவதுதான் பொருத்தமானது. அதாவது காலனி ஆதிக்கத்தின் நலன்களுக்காகவே இந்த நவீனமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இவை காலனி ஆதிக்க திட்டங்கள்தான். இந்தியாவின் நவீனமயத்திற்கான திட்டங்கள் அல்ல. எனினும் அதிகாரபூர்வ ஆவணங்கள் “காலனியம்” என்பதை தவிர்த்துவிட்டு “நவீனமயம்” என்பதை மட்டுமே குறிப்பிடுகின்றனர். இதன் மூலம் பொருளாதாரம், சமூகம் மற்றும் கலாச்சாரத்தில் உருவான மாற்றங்கள் நவீனமயத்தின் ஒரு பகுதியே என்பதை நிலைநாட்ட முயல்கின்றனர்.

ஆங்கிலேய கல்வியால் உருவாக்கப்பட்ட இந்திய நடுத்தர வர்க்கத்தினர் காலனி ஆதிக்கத்தின் நவீனமயம் எனும் பிரமையை கட்டமைத்தனர். தமது சொந்த மேற்கத்திய நவீன வாழ்க்கை நடைமுறை மூலம் இந்த பிரமைக்கு நம்பகத்தன்மை அளித்தனர். இக்கால கட்டத்தில் நவீனமயம் என்பதன் பொருள் என்ன? மேற்கத்திய உலகில் எது முன்னேற்றமோ அதுவே நவீனமயம் என வரையறைக்கப்பட்டது. காலனிய நவீனமயம் என்பது அதன் பிரதிபலிப்பாக இருந்தது.

“காலனிய நவீனமயத்தின்” நன்மைகள் குறித்த சாதகமான கருத்து மத்தியதர வர்க்கத்துக்கு மட்டுமல்ல; சமூகத்தின் பல பிரிவினருக்கு இருந்தது. தலித் மக்களின் தலைமையின் ஒரு பகுதிக்கு கூட அத்தகைய கருத்து இருந்தது. கடுமையான ஒடுக்குமுறையை கொண்ட சாதிய அமைப்பிலிருந்து விடுதலை பெற “காலனிய நவீனமயம்” ஒரு நம்பிக்கை கீற்றாக இருக்கும் என அவர்கள் நம்பினர். இதில் காரணம் இல்லாமல் இல்லை. காலனி ஆதிக்கத்தின் சில தலையீடுகள் சில சிறிய மாற்றங்களை விளைவிதத்து. இதன் மூலம் தலித் மக்களின் ஒரு சிறு பகுதி விடுதலை காற்றை சுவாசிக்க வழிவகை ஏற்பட்டது. எனினும் சாதிய அடக்குமுறையின் அடிப்படை கட்டமைப்பில் எவ்வித பெரிய மாறுதலையும் “காலனிய நவீனமயம்” கொண்டுவரவில்லை.

காலனி ஆதிக்கம் உருவாக்கிய நிர்வாக முறைகள், போக்குவரத்து மற்றும் தகவல் கட்டமைப்புகளின் அறிமுகம், இரயில்வே ஆகியவை காலனி ஆட்சியாளர்கள் இந்தியாவில் நவீனமயத்தை அறிமுகப்படுத்தினர் எனும் கருத்துக்கு நம்பகத்தன்மை அளித்தது. எனினும் காலனி ஆதிக்கம் என்பது சுரண்டலின் கருவியாகவே இருந்தது: காலனிய ஆதிக்கம் நவீனமயத்தை உருவாக்கிய கருவி அல்ல. அது இந்தியாவின் இயற்கை வளங்களை கொள்ளை அடித்தது. உள்நாட்டு தொழில்களை அழித்தது. கலாச்சார வாழ்வை சீர்குலைத்தது. காலனியம் விளைவித்த அழிவுகளை ஒப்பிடும் பொழுது “காலனிய நவீனமயம்” உருவாக்கிய நன்மைகள் மிகச்சொற்பமே!

நவீனத்துவத்தின் மெய்யான தொடக்கம்:

இந்தியாவில் நவீனத்துவத்தின் தொடக்கம் மேற்கத்திய கலாச்சாரத்தின் வருகையால் உருவானது அல்ல. மாறாக சமூக மற்றும் மதம் சார்ந்த சீர்திருத்த இயக்கங்கள்தான் நவீனத்துவத்தை தொடங்கிவைத்தன. இதுவே மேற்கத்திய வரையறை அடிப்படையில் “மறுமலர்ச்சி” என அழைக்கப்பட்டது. எனினும் சீர்திருத்தமும் மறுமலர்ச்சியும் ஒன்றல்ல. சீர்திருத்தம் என்பது மிகவும் ஆழமான சமூக மற்றும் அறிவுசார் விழிப்புணர்வை உள்ளடக்கியது ஆகும். வங்கத்தில் இராஜாராம் மோகன்ராய் உருவாக்கிய இயக்கம்தான் இதன் தொடக்கம் ஆகும். அன்றைய சூழலில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளையும் துன்பங்களையும் அகற்றிடவும் மதம் சார்ந்த நடவடிக்கைகளில் சீர்திருத்தம் கொண்டு வரவும் இராஜாராம் மோகன்ராய் முனைந்தார். வட இந்தியாவில் தயான்ந்த சரஸ்வதி, மராட்டியத்தில் ரானடே உருவாக்கிய “பிரார்த்தனா சமாஜ்”, ஆந்திராவில் விரேசலிங்கம் தொடங்கிய இயக்கம் ஆகியவையும் இத்தகைய சீர்திருத்தங்களின் தொடக்கம் ஆகும்.

எனினும் இந்த சீர்திருத்த இயக்கங்களுக்கு ஒரு வலுவான பொது அம்சம் இருந்தது. அது என்ன? இந்த இயக்கங்கள் எல்லாம் உயர் சாதியினர் மற்றும் மேல்தட்டு வர்க்கங்களால் தொடங்கப்பட்டவை ஆகும். புதியதாக உருவாகிக்கொண்டிருந்த மத்தியதர வர்க்கத்தின் சமூக மற்றும் ஆன்மீக தேவைகளை பூர்த்தி செய்வதே இவற்றின் நோக்கமாக இருந்தது.

தென்னகத்தின் சீர்திருத்த இயக்கங்கள்:

அதே சமயத்தில் தென் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்திலும் கேரளாவிலும் நிலைமை வேறு மாதிரியாக இருந்தது. இங்கு மறுமலர்ச்சி தாமதமாகவே தொடங்கியது. ஏனெனில் இப்பகுதிகள் 19ம் நூற்றாண்டில் பின் தங்கியவையாக இருந்தன. எனவே மத்தியதர வர்க்கம் தாமதமாகவே தோன்றியது. இதனைவிட மிகமுக்கியமான வேறுபாடு உண்டு. இந்தியாவின் வடபகுதியில் உருவான சீர்திருத்த இயக்கங்கள் உயர்சாதி மற்றும் மேல்தட்டு வர்க்கத்தினரால் தொடங்கப்பட்டது. ஆனால் தென் பகுதியில் இத்தகைய சீர்திருத்த இயக்கங்கள் அடிமட்ட சாதியினரால் தொடங்கப்பட்டது. கேரளாவில் நாராயணகுருவும் அய்யன்காளியும் தொடங்கினர். தமிழகத்தில் பெரியாரும் அயோத்திதாசரும் சீர்திருத்த இயக்கங்களை தொடங்கினர். மராட்டியத்தில் ஜோதிபா புலே அவர்களின் சீர்திருத்த இயக்கமும் இந்த வரிசையில் குறிப்பிடத்தக்கது.

இந்த தலைவர்கள் தொடங்கிய இயக்கம் வெறும் சீர்திருத்த இயக்கம் மட்டுமே என்று கூறிவிடமுடியாது. இவர்களின் செயல்கள் சீர்திருத்தங்கள் சார்ந்து இருக்கலாம். ஆனால் அவர்களின் கருத்தாக்கங்கள் மிகவும் தீவிரமாக இருந்தன. சாதிய கட்டமைப்பில் மாற்றங்களை இவர்கள் கோரவில்லை. மாறாக சாதிய அமைப்பு முழுவதுமே அகற்றப்பட வேண்டும் என பிரச்சாரம் செய்தனர். இவர்களின் வலுவான கருத்து பிரச்சாரம் புதிய சிந்தனைகள் கொண்ட ஒரு நவீன சமூகம் உருவாகிட உதவியது. இவர்கள் கல்வி, தொழில்மயம், பெண்ணுரிமை ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்தனர். இவர்கள் சமூக மாற்றத்தின் சித்தாந்த முன்னோடிகளாக திகழ்ந்தனர். சாதிகளற்ற வர்க்கமற்ற சமூகமே அவர்களின் இலட்சிய வேட்கையாக இருந்தது.

சீர்திருத்த இயக்கங்கள் முன்வைத்த நவீன கருத்துகள்

இந்தியாவின் வடபகுதி மற்றும் தென்பகுதியில் உருவான அனைத்து சீர்திருத்த இயக்கங்களுக்கும் சில பொதுவான அம்சங்கள் இருந்தன. தம் சமகாலத்தில் நிலவிய சமூக கலாச்சார சூழலில் முக்கிய மாற்றங்களை கொண்டுவர இந்த இயக்கங்கள் முயன்றன. பகுத்தறிவுக்கு பொருந்தாத மதம் சார்ந்த சடங்குகள் தொடங்கி பெண்கள் மீது தொடுக்கப்படும் அடக்குமுறைகள் வரை வாழ்வியலின் பல்வேறு அம்சங்களில் மாற்றம் கொண்டுவர விரும்பினர். மக்களுக்கு சிலை வழிபாடின் மீது இருந்த ஆழ்ந்த நம்பிக்கையே மூடநம்பிக்கைகளுக்கு ஆதாரம் என இவர்கள் கருதினர். எனவே சிலை வழிபாடின் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கையை அகற்றுவது என்பது முன்னுரிமை பணியாக இருந்தது.

பிரம்ம சமாஜம், ஆரிய சமாஜம், பிரார்தனா சமாஜம் ஆகிய அனைத்துமே சிலை வழிபாடினை எதிர்த்தன. தமது பிரார்த்தனைகளில் சிலை வணக்கத்தை அகற்றினர். பெரியார் சிலை வழிபாடினை எவ்வளவு கடுமையாக எதிர்த்தார் என்பது அனைவரும் அறிந்த உண்மை. நாராயண குரு இப்பிரச்சனையில் இதே நிலை கொண்டிருந்தார். எனினும் இதனை நடைமுறை படுத்துவதில் நிதானம் கடைபிடித்தார். இப்பிரச்சனையில் “துல்லிய தாக்குதல்” எதிர்விளைவுகளை உருவாக்கும் என்பதால் புதிய அணுகுமுறையை செயல்படுத்தினார். ஒரு கல்லை சிவன் சிலையாக உருவகப்படுத்திவிட்டால் அதற்கு எப்படி ஆன்மீக சக்தி வந்துவிடும் என கேள்வி எழுப்பினார். பின்னர் சிலைக்கு பதிலாக கண்ணாடியை பயன்படுத்தினார். பின்னர் சிலை வழிபாடை முழுவதுமாக அகற்றினார். சிலர் நாராயணகுரு சிலை வழிபாடினை ஆதரித்தார் என கூறுகின்றனர். அது உண்மை அல்ல. சிலை வழிபாடினை எதிர்ப்பதில் அவரின் கருத்து  பெரியார், ராஜாராம் மோகன்ராய் ஆகியோரின் கருத்துகளுக்கு உடன்பட்டே இருந்தது. சிலை வழிபாடினை எதிர்த்த நாராயணகுருவை இன்று சிலர் வழிபடும் சிலையாக மாற்றியிருக்கும் கொடுமையை என்னவென்று கூறுவது?

பெண்களின் சுயமரியாதை:

இந்த சீர்திருத்த தலைவர்கள் அனைவருமே கவனம் செலுத்திய இன்னொரு பிரச்சனை பெண்களின் நிலை குறித்தது ஆகும். அவர்களின் சமகாலத்தில் பெண்கள் கடுமையான ஒடுக்குமுறைகளுக்கு உள்ளானார்கள். சொல்ல முடியாத துன்பங்கள் அவர்கள் மீது சுமத்தப்பட்டன. செல்லரித்து போன கொடுமையான சடங்குகளின் அடிமைச் சங்கிலியிருந்து பெண்களை விடுவிப்பது அவசியமாக இருந்தது. சதி எனும் உடன்கட்டை ஏறும் கொடிய நடைமுறையை எதிர்த்து இயக்கம் உருவாக்கிய ராஜாராம் மோகன் ராயின் செயல்கள் தொடங்கி அனைத்து சீர்திருத்த தலைவர்களும் பெண்கள் விடுதலைக்கு வலுவாக குரல் தந்தனர். இது வெறும் பெண்கள் மீதான பச்சதாபம் அல்ல. மாறாக பெண்களின் விடுதலை மற்றும் சுயமரியாதையை மீட்பது எனும் நோக்கம் இதில் இருந்தது. பெண்விடுதலையின் நீண்ட வரலாற்றில் இந்த நோக்கம் சிறியதாக இருக்கலாம்; ஆனால் அதன் முக்கியத்துவம் சிறிதளவும் குறைந்தது அல்ல.

சமூகம் மற்றும் மதம் சார்ந்த சீர்திருத்தங்கள் குறித்த முயற்சிகள்தான் இந்திய மறுமலர்ச்சி இயக்கத்தின் முதல் கட்டம் ஆகும். சமூகத்தின் புத்தாககத்திற்கு இந்த சீர்திருத்தங்கள் மிக அவசியம் என இந்த கட்டத்தில் முன்வைக்கப்பட்டது. இந்தியாவின் எதிர்காலம் இந்த சமூக சீர்திருத்தங்களில்தான் அடங்கியுள்ளது என கருதப்பட்டது. எந்த அளவிற்கு துரிதமாக சமூகம் செல்லரித்து போன நடைமுறைகளிலிருந்தும் மூடநம்பிக்ககளிருந்தும் விடுபடுகிறதோ அந்த அளவிற்கு வேகமாக இந்திய சமூகம் முன்னேறும் என இந்த சீர்திருத்த இயக்கங்கள் கருதின.

அதே நேரத்தில் இந்த சீர்திருத்த இயக்கங்கள் அரசியல் போராட்டத்திலிருந்து விலகி நின்றன. அன்னிய ஆட்சி குறித்து விமர்சனங்கள் இருந்தாலும் அவை வலுவாக முன்வைக்கப்படவில்லை. சமூக பலவீனங்களை அகற்றிவிட்டால் அரசியல் பிரச்சனைகளக்கு எளிதாக தீர்வு காணலாம் என மதிப்பீடு செய்தனர்.. அக்காலகட்ட அறிவுஜீவிகளுக்கு “காலனிய நவீனம்” குறித்த ஒரு சாதகமான மதிப்பீடு இருந்தது. காலனியாளர்கள் புகுத்திய நவீன அம்சங்கள் இந்திய சமூகத்தின் பிற்போக்கு தன்மையை பின்னுக்கு தள்ள உதவும் என கருதினர். சமூக விடுதலைக்கும் காலனியாதிக்கத்திற்கும் இருந்த தொடர்பு சரியாக புரிந்துகொள்ளப்படவில்லை.

சமூக மாற்றத்தை பின்னுக்கு தள்ளிய இந்திய தேசியம்

இந்த சீர்திருத்த இயக்கங்களுக்கு இணையான காலகட்டத்திலும் அதற்கு பின்பும் உருவான இந்திய அறிவுஜீவிகள் காலனி ஆதிக்கம் குறித்து சரியான மதிப்பீடு உருவாக்கினர். காலனி ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டமும் சமூக பிரச்சனைகளுக்கான போராட்டமும் இணைந்து நடத்தப்பட வேண்டும் என எண்ணினர். இது மறுமலர்ச்சி காலத்தின் இரண்டாவது கட்டம் ஆகும். இந்திய தேசிய இயக்கம் மறுமலர்ச்சி இயக்கத்தின் அவசியத்தையும் உணர்ந்தது. அதாவது அரசியல் மாற்றத்திற்கான போராட்டத்துடன் சமூக மாற்றத்திற்கான போராட்டம் இணைக்க வேண்டியதன் தேவை உணரப்பட்டது. இது மிகவும் சாதகமான வளர்ச்சிப்போக்கு ஆகும். ஆனால் இது தொடரவில்லை என்பது மிகவும் துரதிர்ஷ்டவசமான ஒன்று!

காலனி ஆதிக்கத்திற்கு எதிரான போரட்டம் வலுவடைந்த பொழுது அரசியல் போராட்டத்திற்கு அளித்த முக்கியத்துவம் சமூக மாற்றத்திற்கான போராட்டத்திற்கு தரப்படவில்லை. “இந்திய தேசிய சமூக மாநாடு” எனும் அமைப்பின் தோற்றமும் அதன் மறைவும் இதனை தெளிவாக்குகிறது. ஒரு கட்டத்தில் காங்கிரஸ் அமைப்பில் அரசியல் மட்டுமே பேசவேண்டும் எனவும் சமூக முரண்பாடுகள் குறித்து பேசக்கூடாது எனவும் முடிவு எடுக்கப்பட்டது. இதன் காரணமாக ரானடே போன்றவர்கள் “இந்திய தேசிய சமூக மாநாடு” எனும் அமைப்பை உருவாக்கினர். இது காங்கிரசின் அங்கம் போலவே செயல்பட்டது. காங்கிரஸ் மாநாடு நடக்கும் அதே நேரத்தில் அதே இடத்தில் இந்த அமைப்பும் கூடியது; சமூக சீர்திருத்தம் குறித்த பல விவாதங்கள் நடத்தப்பட்டன; தீர்மானங்கள் இயற்றப்பட்டன. ஆனால் குறுகிய காலத்திலேயே இது செயலற்று போனது. தேசிய இயக்கம் எதற்கு முன்னுரிமை அளித்தது என்பதை இது தெளிவாக வெளிப்படுத்தியது.

ஒத்துழையாமை இயக்கம் வரிகொடா இயக்கம் என தொடர்ச்சியான போரட்டங்கள் மூலம் தேசிய இயக்கம் வலுவடைந்து முன்னேறியது. ஆனால் சமூக மறுமலர்ச்சி இயக்கம் பின்தங்கியது. ஒரு புறம் தேசிய இயக்கம் பீடுநடை போட்டு முன்னேற்றம் காண மறுபுறம் சமூக இயக்கம் பழமைவாதத்திலும் மூடநம்பிக்கைகளிலும் மூழ்கி கிடந்தது. சாதிய உணர்வும் மத உணர்வும் மேலோங்கிட இந்நிலை வழிவகுத்தது. காந்திஜியின் சில நடவடிக்கைகள் அரசியல் போராட்டத்துடன் சமூக மறுமலர்ச்சி போராட்டத்தை இணைத்திட வாய்ப்பு உருவாக்கியது.  கிராம சுயராஜ்யம், தீண்டாமை ஒழிப்பு மதஒற்றுமை ஆகியவை குறித்தும் காந்திஜி சில இயக்கங்களை உருவாக்கினார். இந்திய மறுமலர்ச்சி இயக்கத்தின் இரண்டாவது கால கட்டத்தில் இது முக்கியமான தருணமாக இருந்தது. ஆனால் இது முழுவீச்சை அடையவில்லை. காங்கிரஸ் இயக்கம் முழுவதையும் இதனை நோக்கி செயல்படுத்துவதில் காந்திஜி வெற்றிபெறவில்லை என்றுதான் கூறவேண்டும்.

அரசியல் போராட்டத்திற்கும் சமூக மறுமலர்ச்சி போராட்டத்திற்கும் இடையே உருவான இந்த இடைவெளி இந்திய சமூகத்தில் பல பாதகமான பின்விளைவுகளை உருவாக்கியது. சமூக அரங்கில் பின்தங்கிய உணர்வை தேசிய உணர்வு விளைவித்தது. காங்கிரசுக்கு தலைமை தாங்கியவர்களின் ஒரு பகுதியினருக்கு முற்போக்கு கருத்துகள் இருந்தாலும் அது நடைமுறையில் பிரதிபலிக்கவில்லை. மறுமலர்ச்சி இயக்கத்தின் முதல் கட்டம் சமூக பிரச்சனைக்கு முன்னுரிமை அளித்து அரசியல் போராட்டத்தினை பின்னுக்கு தள்ளியது. மறுமலர்ச்சியின் இரண்டாவது கட்டம் அரசியல் போராட்டத்திற்கு முன்னுரிமை அளித்து சமூக பிரச்சனைகளை பின்னுக்கு தள்ளியது.

மார்க்சியமும் மறுமலர்ச்சியும் சங்கமித்த மூன்றாவது கட்டம்

இந்திய மறுமலர்ச்சி இயக்கத்தின் மூன்றாவது கட்டம் காலனியாதிக்கத்தின் முடிவில் தொடங்குகிறது.  இந்த மூன்றாவது கட்டம்  மார்க்சியமும் மறுமலர்ச்சியும் சங்ககமித்த காலம் ஆகும். உண்மையில் மறுமலர்ச்சியின் பல்வேறு அம்சங்கள் மார்க்சியத்தினுள் பொதிந்துள்ளன. மறுமலர்ச்சியின் அம்சங்கள் கம்யூனிஸ்டு இயக்கத்தின் ஒன்றிணைந்த நிகழ்ச்சி நிரல் ஆகும். சாதிய கட்டமைப்பை அகற்றுவது அல்லது பாலின சமத்துவம் என்பது தொடர்ந்து கம்யூனிஸ்டு இயக்கத்தின் பிரிக்கமுடியாத கோட்பாடுகளாக உள்ளன. மூன்றாவது கட்டம் என்பது முதல் மற்றும் இரண்டாவது கட்டத்தின் தொடர்ச்சியே ஆகும். சாதிய ஒழிப்பு, பாலின சமத்துவம், மதச்சார்பின்மை ஆகியவை முதல் இரண்டு கட்டங்களிலும் இடம் பெற்றிருந்தன.

இடதுசாரி இயக்கத்தின் இலக்கு என்பது சமகால கலாச்சார சமூக நடைமுறைகளில் சீர்திருத்தம் கொண்டு வருவது என்பது அல்ல; மாறாக இவற்றை முற்றிலும் மாற்றுவது என்பதே இலக்கு ஆகும். அவ்வாறு அடிப்படை தீவீர மாற்றத்திற்கு முயலும்பொழுது இடதுசாரி இயக்கம் மறுமலர்ச்சி என்பதற்கு புதிய பொருள் தர முனைகிறது. எனினும் பல்வேறு காரணங்களால் மறுமலர்ச்சி இயக்கத்தின் மூன்றாவது கட்டத்தை இடதுசாரி இயக்கம் வெற்றிகரமாக உருவாக்கிட இயலவில்லை என்பதை குறிப்பிட வேண்டியுள்ளது. இது ஆச்சர்யமாக அல்லது அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் இதுதான் உண்மை.

தேவை மறுமலர்ச்சியின் நான்காவது கட்டம்

மறுமலர்ச்சி என்பது முற்று பெற்ற நிகழ்வு அல்ல. அது தொடர் நிகழ்வு. சமூகம் அல்லது பொருளாதாரத்தில் முக்கிய பெரிய மாற்றங்கள் நிகழும்பொழுது மறுமலர்ச்சியின் பல்வேறு அம்சங்களிலும் இந்த மாற்றங்கள் பிரதிபலிக்கின்றன. ஒரே மாதிரியான நிகழ்வுகளை இரண்டாவது முறையாக மறு ஆக்கம் செய்ய இயலாது. அது போல மறுமலர்ச்சியின் முதல் கட்டத்தில் உருவாக்கப்பட்ட மதிப்புகளை மாறுபட்ட இன்றைய சூழல்களில் அரங்கேற்க இயலாது. ஏனெனில் முதலாளித்துவமும் நவீன தாராளமயமும் முற்றிலும் வேறுபட்ட புறச்சூழலை உருவாக்கியுள்ளன. முதல் கட்டத்தின் மதிப்புகள் செல்லாதவையாக ஆகிவிட்டன என இதன் பொருள் அல்ல! ஆனால் சமூக சூழலும் காலமும் மாறிவிட்டன. எனவே அந்த மதிப்புகளை புத்தாக்கம் செய்ய வேண்டிய தேவை உள்ளது.

மறுமலர்ச்சியின் முதல் காலகட்டம் என்பது காலனிய நிலபிரபுத்துவ சூழல் ஆகும். அந்த சூழலில் உருவான மறுமலர்ச்சியின் மதிப்புகளை அப்படியே பொருத்துவதற்கு பதிலாக இடதுசாரி இயக்கம் மறுமலர்ச்சியை புதியதாக மீண்டும் படைக்க வேண்டும். இந்த மறுமலர்ச்சி என்பது சுரண்டப்படும், ஒடுக்கப்படும் மற்றும் விளிம்பு நிலைக்கு தள்ளப்படும் மக்களின் கோணத்திலிருந்து படைக்கப்பட வேண்டும். சோசலிச மனித நேயம் என்பது

அரசியல் சமூக சமத்துவத்தை தனது குறிக்கோளாக கொள்வது மட்டுமல்ல; கலாச்சார மற்றும் அறிவுசார் விடுதலையையும் தனது இலட்சியமாக கொண்டுள்ளது.

சமூகத்தில் தற்சமயம் நிலவும் வன்முறையும் சகிப்பற்ற தன்மையும் மறுமலர்ச்சியின் முதல் காலகட்டத்தில் உருவான மதிப்புகளின் தோல்வியால் விளைந்தவை அல்ல! மாறாக அந்த மதிப்புகளை இன்றைய சூழலுக்கு பொருத்துவதில் நமக்கு உருவான பின்னடைவுதான் முக்கிய காரணம் ஆகும். தொழில்நுட்பமும் அறிவியலும் உருவாக்கும் புதிய வசதிகள் மூலம் எதார்த்த புறஉலகம் மாறிக்கொண்டிருக்கிறது. ஆனால் கலாச்சார கருத்துகளின் சூழலோ சீரழியவில்லை என வைத்துக்கொண்டாலும் தேக்கம் அடைந்துள்ளது.

சமூகத்தில் பல்வேறு மதிப்புகள் மேலும் மேலும் வீழ்ச்சி அடைந்துகொண்டுள்ளதை தடுக்க நம் முன் உள்ள வழி அரசியலுக்கும் கலாச்சாரத்திற்கும் உள்ள தொடர்பை மறுசிந்தனைக்கு உட்படுத்துவதுதான்! அரசியல் என்பது கலாச்சாரத்தை தூண்ட வேண்டும்; கலாச்சாரம் அரசியலை செழுமைப்படுத்த வேண்டும்.

இந்திய மறுமலர்ச்சி இயக்கத்தின் நான்காவது கட்டம் குறித்து சிந்திக்க இது சரியான தருணம் எனில் மிகை அல்ல!

(பிரண்ட்லைன் இதழில் கே.என். பணிக்கர் எழுதிய கட்டுரையை தழுவி எழுதியது)

 

தமிழக அரசியலும், திராவிடக் கட்சிகளின் நிலையும் !

 • பிரகாஷ் காரத்

இந்தியாவின் சமூகப் பொருளாதார நிலைமைகள் நவீன தாராளமய முதலாளித்துவத்தின் தாக்கத்தால் பெரும் மாற்றங்களுக்கு ஆட்பட்டு வருகின்றன. மார்க்சியவாதிகள் என்ற முறையில், அடித்தளத்தில் ஏற்படும் மாற்றங்கள், மேல் கட்டுமானத்திலும் (Superstructure) மாற்றங்களை ஏற்படுத்துமென்பதை நாம் உணர்ந்தேயுள்ளோம். பொருளியல் நிலைமைகளிலும், பொருளாதார அடித்தளத்திலும் மாற்றம் நடக்கும் போது அது சித்தாந்தம், அரசியல், பண்பாடு மற்றும் சமூக உறவுகளில் தாக்கம் செலுத்தும்.

நிதி மூலதன ஆதிக்கம்:

நிதி மூலதனம் உலகமயமாகி முன்னுக்கு வரும் சூழலின் காரணமாக நவீன தாராளமயக் கட்டம்வந்துள்ளது. இந்த நிதி மூலதனத்திற்கு, உலகெங்கும் தங்குதடையற்று பாய்வதற்கேற்ற சூழல் தேவைப் படுகிறது. அது தேசிய எல்லைகளையோ தேச இறையாண்மையையோ மதிப்பதில்லை. நிதி மூலதனத்தின் இந்த ஆதிக்கத்தின் விளைவாக தேசிய அரசுகளும் அவற்றின் இறையாண்மையும் பலவீனமடைகின்றன.
மேலும் மேலும், ஒரு நாட்டின் எல்லைக்குட்பட்ட அரசும், ஆளும் வர்க்கங்களும் உலக நிதி மூலதனத்தின் தேவைகளை நிறைவேற்றி அதனோடு கூட்டுச் சேருகின்றன. இந்திய அரசின் மீதும், அரசியலின் மீதும் இது நேரடிவிளைவுகளை ஏற்படுத்துகிறது. பெரு முதலாளிகளால் தலைமை தாங்கப்படும் அரசும், ஆளும் வர்க்கங் களும் ஒட்டு மொத்தமாக நவீன தாராளமய அணுகு முறையை பின்பற்றுகின்றனர். அவர்களோடு பெருமுதலாளி அல்லாதவர்களும், மாநில முதலாளிகளும் கூட சேருகின்றனர். மாநில முதலாளிகளின் மூலதன திரட்டலுக்கும், வளர்ச்சிக்கும், நவீன தாரளமயம் புதியவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. அந்நிய மூலதனத்துடன் நெருங்கிக் கைகோர்க்க வழி வகுத்துள்ளது.

மாநில முதலாளிகளின் நலன்களை முதன்மையாக பிரதிபலிக்கும் மாநிலக் கட்சிகள், நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிரான உறுதியான நிலையெடுப்பதில்லை என்பதுடன் மாறுபட்ட விகிதங்களில் நவீன தாராளமயத்தினை ஏற்றுக்கொள்ளவும் செய்வது ஏனென்பது இதன் மூலம் புரிகிறது. மாநிலங்களில் அரசமைத்து அவ்வப்போது மத்திய அரசில் பங்குபெற் றுள்ள பிரதான மாநிலக் கட்சிகளுக்கு – பெருமுதலாளித்துவ முக்கியக் கட்சிகளான காங்கிரஸ், பாஜகவால் அமலாக்கப்படும் நவீன தாராளமயக் கொள்கை களுடன் எந்த முரண்பாடும் இல்லை.

கைவிடப்படும் கொள்கைகள்:

குறைந்த அளவே ஜனநாயக உள்ளடக்கத்துடன் இயங்கும் மாநிலக் கட்சிகளின் கண்ணோட்டத்திலும், திட்டங்களிலும் மேற்கண்டவை வெளிப்படுகின்றன. இருபது அல்லது முப்பது ஆண்டுகள் முன்பிருந்த நிலையுடன் ஒப்பிட்டால் – இத்தகைய கட்சிகளின் கொள்கைகளிலுள்ள ஜனநாயக உள்ளடக்கத்தில் சரிவு ஏற்பட்டுள்ளது.

மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான உறவையும், கூட்டாட்சிக் கோட்பாட்டையும் எடுத்துக் கொள்வோம். மாநில சுயாட்சிக் காகவும், மாநிலங்களின் கூடுதல் உரிமைக்காகவும் குரல் கொடுத்த மாநிலக் கட்சிகள் – இன்று தங்கள் கொள்கைகளில் சமரசம் செய்துகொண்டுள்ளன. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியாக இருந் தாலும் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சியாக இருந்தாலும் மத்திய அரசில் அங்கம் வகித்துள்ளன. கூட்டாட்சிக் கொள்கைகளுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளுக்கும் மாநில உரிமைகளை வெட்டிச் சுருக்கும் நடவடிக்கைகளுக்கும் ஆதரவு தருபவர்களாக உள்ளனர்.

மாநில கட்சிகளால் வழி நடத்தப்படும் மாநில அரசுகள் சில திட்டங்களையும், கூடுதல் நிதியையும் -கூடுதல் அதிகாரம் உரிமைகள் வேண்டுமென்ற கொள்கை அடிப்படையில் அல்லாமல், சலுகை அடிப்படையிலேயே கோருகின்றன. அகில இந்திய அளவிலான பெருமுதலாளிகளுடன், மாநில முதலாளிகளுக்கு பிணைப்பு அதிகரித்திருப்பதையே இது காட்டுகிறது. நவீன தாராளமயக் காலத்தில் இந்த இரண்டு பிரிவினருக்கும் இடைப்பட்ட முரண்பாடுகள், மங்கலாகியுள்ளன அல்லது மட்டுப்பட்டுள்ளன. காலம் செல்லச் செல்ல, இத்தகைய மாநிலக் கட்சிகள் தங்கள் அதிகாரத்தை உறுதி செய்து கொண்டு, அரசின் பங்காளிகளாகிவிட்டன, தாங்கள் அதுவரை குரல் கொடுத்து வந்த ஜன நாயக, சமூக உள்ளடக்கங்களைக் கைவிடத் தொடங்கிவிட்டனர். உதாரணமாக, சாதி ஒடுக்கு முறைக்கும், வகுப்புவாதத்திற்கும் எதிர்ப்பென்று வருகிறபோது, தேர்தல் வெற்றியே முக்கியமாகக் கருதப்படுகிறது, அரசாங்கத்தில் நீடித்திருப்பதற்காக மாநிலக் கட்சிகள் எல்லா விதமான சாதி, வகுப்பு வாதசக்திகளோடு சமரசம் செய்துகொள்கிறது.

கிளறப்படும் அடையாளங்கள்

பல்வேறு குறுங்குழுவாத, இனவாத அடையாளங்களுக்கும் ஊக்கம் கொடுப்பது, ஏகாதிபத்திய உலகமயம் தாராளமயத்தின் மற்றொரு குணாம்சமாகும். நிதி மூலதனத்தின் சூறையாடல் தேசிய அரசுகளையும் அவற்றின் இறையாண்மையையும் பலவீனப் படுத்துகிறபோது, சாதி, மதம் மற்றும் இன அடிப்படையிலான அடையாளங்களின் வளர்ச்சியை ஊக்குவிக் கிறது. இந்திய சூழலில் தாராளமயமும், சந்தைப் பொருளாதாரமும் சாதி, வகுப்புவாத, மாநில அடையாளங்களை கிளறிவிட்டுள்ளன. சோவியத் யூனியன் சிதறுண்டதன் விளைவாக, சோசலிசத்திற்கு ஏற்பட்ட பின்னடைவுக்குப் பிறகு, அனைவரையும் உள்ளடக்கிய முன்னேற்றத்திற்கான கருத்தியலுக்கு ஏற்பட்டபின்னடைவும் இந்த பலவீனத்திற்கான காரணமாகும்.

மேலும், குறுங்குழுவாத, வகுப்புவாரி, சாதி வாரிதிரட்டல்களுக்கு காரணமாக , நவீன தாராளமயத்தால் உந்தப்பட்டு கூர்மையாக அதிகரிக்கிறது. சமூகப் பொருளாதார சமத்துவமற்ற நிலைமை. பாகுபாடான வளர்ச்சியும், மிகப்பெரும் அளவிலான செல்வக் குவிப்பும் போதுமான வேலை வாய்ப்புகளை உருவாக்கிட வில்லை. வேலையற்றோரும், பொருளாதாரத்தில் பின்தங்கியோரும், அவர்களின் துன்ப துயரங்களுக்கு மற்ற மதக் குழு அல்லது மற்ற சாதிதான் காரணம் என்ற சாதிய, மதவாத முழக்கங்களுக்கு எளிதில் அகப்படுகின் றனர். நவீன தாராளமய கொள்கைகளுக்கும், அதன் அரசியல் ஆதிக்கத்திற்கும், மத, சாதி மற்றும் இனக் குழுக்களுக்கிடையிலான முரண்பாடுகள் உகந்தவையாக அமைந்துள்ளன.

இந்துத்துவப் பரவலின் பின்னணி

பெரும்பான்மை வகுப்புவாதத்தின் அதாவது இந்துத் துவத்தின் வளர்ச்சியை இந்தப் பின்னணியில்தான் பார்க்கப்பட வேண்டும். ஆளும் வர்க்கங்களின் ஆட்சியதிகாரத்தை உறுதி செய்யவும், மக்களுக்கு சொந்தமாக இருக்கும் மிக மிகக் குறைந்த நிலம் உள்ளிட்ட வளங்களில் இருந்து அவர்களை அகற்றி, நவீன தாராளமய நடவடிக்கைகளை தொடரவும், இந்துத்துவ வகுப்புவாதத்தின் நடவடிக்கைகள் நேரடியாக பலன் கொடுக்கின்றன. மக்களை மதவாத அரசியலுக்கும், அணி திரட்டலுக்கும் திசைதிருப்புவது அரசுக்கோ அதன் கொள்கைகளுக்கோ எவ்விதத்திலும் அச்சுறுத்தலாக இல்லை, ஆனால் மக்களைத்தான் பிளவுபடுத்துகிறது.

தேர்தல் நோக்கில் மக்களை சாதி எல்லைகளுக் குட்பட்டு பிரிக்கும் சாதி அரசியலும் மேற்சொன்ன அதே பாத்திரத்தையே வகிக்கிறது. நவீன தாராளமய அரசாட்சியின் கீழ், இந்த வகையான முதலாளித்துவ அரசை உறுதி செய்திடும் ஆயுதமாக வகுப்புவாதம் செயல்படுகிறது. எங்கெல்லாம் வகுப்புவாதம் முன்னேறுகிறதோ, அங்கு ஜனநாயக அரசியல் பின்தள்ளப்படுவதுடன், வர்க்க அடிப்படையிலான இயக்கங்கள் பின்னடைவைச் சந்திக்கின்றன. மத்தியில், பாஜக அறுதிப் பெரும்பான்மையுடன் அரசமைத்துள்ள நிலையில், இந்துத்துவ சக்திகளுக்கு பெரும் ஊக்கம் கிடைத்துள்ளது. அவர்கள் பலவீனமாக உள்ள மாநிலங்களில் காலூன்றவும், தங்கள் தளத்தை விரிவாக்கவும் பார்க்கின்றனர். தமிழ்நாடு அந்த மாநிலங்களில் ஒன்று.

தமிழக முதலாளித்துவம்

தேசிய அளவிலான வலதுசாரித் தாக்குதலின் இரண்டு முனைகளாக அமைந்த நவீன தாராளமயமும், வகுப்புவாதமும் தமிழகத்தின் அரசியல், பொருளாதார நிலைகளில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிற தென்பதை நாம் பார்க்க வேண்டும். முதலாளித்துவ வளர்ச்சி இன்று உயர்நிலையில் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. தொழிற்சாலைகளில் மிகப்பெரும் தனியார் முதலீடுகள், விவசாயத்தில் வளர்ச்சியடைந்த முதலாளித்துவ உறவுகள், முன்னேறிய முதலாளித்துவ வர்க்கம் என்ற வகைகளில் இந்த வளர்ச்சி அமைந்திருக் கிறது. நவீன தாராளமயக் கொள்கைகளின் பாதிப்பு காரணமாக, மாநிலத்தில் நிலவும் பொருளாதார சமத்துவமற்ற நிலை பெருமளவில் அதிகரித்துள்ளது. 73 சதவீதம் கிராமப்புறக் குடும்பங்களுக்கு சொந்தமாக நிலம் இல்லை; 78 சதவீதம் குடும்பங்கள் மாதம் ரூ.5000 க்கும்குறைவாகவே சம்பாதிக்கும் நிலை உள்ளது. இந்தசூழலில் ஏழை விவசாயிகள், விவசாயத் தொழி லாளர்கள் மற்றும் விவசாயிகளைத் திரட்டி நிலப்பிரத் துவத்துக்கு எதிராகவும் மத்திய, மாநில அரசுகளின் கொள்கைகளுக்கு எதிராகவும் போராட மிகப்பெரும் வாய்ப்பு உள்ளது. நகர்ப்புற தொழிலாளர்களான ஆலைப்பாட்டாளிகள் மற்றும் அமைப்புசாராத் துறைகளில் அதிகரித்துவரும் வர்க்க உணர்வு பெற்ற பாட்டாளி களை திரட்ட வேண்டும்.
கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் மிக வேகமான தனியார்மயத்தின் மூலம் நவீன தாராளமயக் கொள்கைகள் பெரும் தாக்கம் செலுத்துகின் றன. கல்வியும், மருத்துவமும் மக்களுக்கு முக்கியப் பிரச்சனையாகியுள்ளது. நவீன தாராளமயத்துக்கு எதிரான போராட்டம் பொருளாதார தளத்தில் மட்டும் நிற்பதல்ல. அது ஒட்டுமொத்த சமூகத்திலும், அரசியலிலும் தாக்கம் செலுத்துகிறது.

தமிழகத்தின் அரசியல் சூழல்

வேறுபட்ட அரசியல் அம்சத்தைக் கொண்ட மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. 1960களின் பிற்பகுதியில் திமுகவும் பின்னர் அதிமுகவும் என மாநில முதலாளித்துவ கட்சிகள்தமிழக அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளன. திமுகவிலிருந்து 1972 ஆம் ஆண்டில் பிரிந்து உருவானதுதான் அதிமுக. இந்த இரண்டு கட்சிகளுமே மாறி மாறி ஆட்சியில் இருந்துவருகின்றன. தமிழ் நாட்டில் வேறெந்தக் கட்சியும் கூட்டணி ஆட்சியில் கூடஇருந்ததில்லை. இதுதான் தமிழகத்தை மற்ற மாநிலங் களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது, அதாவது சுமார் ஐம்பது ஆண்டுகளாக ஒருவருக்கு ஒருவர் எதிராக செயல்படும் இரண்டு பிரதான மாநிலக் கட்சிகளும் மாறி மாறி ஆதிக்கம் செலுத்தினாலும், அவர் களிடையே கொள்கையளவில் அடிப்படை வேறுபாடு இல்லை. கடந்த 50 ஆண்டுகளில் எந்த அகில இந்திய முதலாளித்துவக் கட்சியும் மாநில அதிகாரத்தில் இருந்ததில்லை என்பது மாறுபட்ட மற்றொரு அம்சமாகும். தமிழகத்தின் அரசியல் போக்கு எந்த மாற்றமும் இல்லாமல் உறைந்துவிட்டதென்பது இதன் பொருளல்ல.

திமுக-அதிமுக

திமுகவும் அதிமுகவும் திராவிட இயக்கத்தின் வாரிசுரிமை கோருகின்றன. இந்தக் கட்சிகள் மாநில முதலாளிகள் மற்றும் ஊரக பணக்காரர்களிடையே ஆழமாக வேரூன்றியுள்ளன.
மாநிலத்தில் நடந்துவரும் முதலாளித்துவ விரிவாக்கத்துடன் இணைந்து இக்கட்சிகளும் வளர்ந்துள்ளன.

சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் திராவிட இயக்கம் வேறுபட்ட அரசியல் வடிவத்தையும் சமூக சீர்திருத்தக் கொள்கைகளையும் கொண்டிருந்தது. முதலில் அது பிராமணரல்லாதோர் இயக்கமாக அறியப்பட்டது, அதன் அரசியல் பிரதிநிதியாக அமைந்த நீதிக்கட்சி பிராமண சாதி அல்லாதவர்களிடையே உள்ள நிலவுடைமையாளர்கள் மற்றும் வசதிபடைத்த பகுதியினரின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தியது. அது பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு ஆதரவாகவும், தேச விடுதலை இயக்கத்திற்கு எதிராகவும் அமைந்தது. பெரியாரின் சுயமரியாதை இயக்கம் சாதி எதிர்ப்பு மத எதிர்ப்பு மேடைகளில் முற்போக்கான பங்கு வகித்து. பிராமணிய இந்துத்துவத்தையும் அதன் வர்ணாசிரம தர்மத்தையும் உறுதியுடன் எதிர்த்தது.

இந்த மரபில் வந்த திமுக 1967 ஆம் ஆண்டு ஆளும் கட்சியானது. 1972 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட அதிமுக 1977 ஆம் ஆண்டில் தனது முதல் தேர்தலை வென்றது. இரண்டு கட்சிகளும் தமிழக முதலாளிகளின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தி வளர்ந்தன. இந்த நிகழ்வுப்போக்கில், பெரியாரால் பிரச்சாரம் செய்யப்பட்ட முற்போக்கான சமூகக் கருத்துக்களை கைவிட்டன. சமூக, சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் மேலோட்டமான அளவிலேயே நிறுத்தப்பட்டது. தமிழ் மொழியையும் பண்பாட்டையும் முன்னெடுப்பதென்ற முழக்கம் நடப்பில் உள்ளது. ஆனால் அதன் உள்ளடக்கமும், மதிப்பும் மாறியுள்ளது. குறுகிய தமிழ்த் தேசியம் மற்றும் இனவெறிப் பார்வை ஆகியவை இந்த மாற்றத்தின் உப விளைவுகளாக அமைந்திருக்கின்றன.

தமிழகத்தின் அரசியலில் காங்கிரஸ்-பாஜக இடையிலான இருமுனைப் போட்டியோ அல்லது காங்கிரஸ் – மாநிலக் கட்சி இடையிலான இருமுனைப் போட்டியோ ஆதிக்கம் செலுத்தவில்லை. இந்த நிலையில் இடது ஜனநாயக மாற்றை கட்டமைப்ப தற்கான போராட்டம் இன்னும் சிக்கலாகிறது. இரண்டு திராவிடக் கட்சிகளும் அரசியல் தளத்தில் பிரதான இடத்தைப் பிடித்துள்ளன. அகில இந்தியமுதலாளித்துவக் கட்சிகள் உள்ளிட்டு மற்ற கட்சிகள் தேர்தல் கூட்டணியில் அவர்களின் ஜூனியர் பங்காளிகளாகவே இணைந்து கொள்கின்றனர்.

சித்தாந்தப் போராட்டம்

எனவே, இடது ஜனநாயக அணியையும், மாற்றையும் கட்டமைப்பதற்கு காங்கிரஸ் பாஜக-வை எதிர்த்து மட்டுமல்லாமல், பிரதான மாநிலக் கட்சிகள் இரண்டின் அரசியல் மற்றும் சித்தாந்தத்தையும் எதிர்த்த அரசியல் போராட்டம் தேவைப்படுகிறது. உலகமயமாக்கத்தின் தாக்கம் காரணமாக சாதி, மதம் மற்றும் இனம் போன்ற குறுகிய அடையாளங்களின் பிரச்சனைகள் உலகம் முழுவதும் அதிகப்படுத்தப்படுகின்றன. இந்தியாவிலும் அடையாளம் சார்ந்த அரசியலின் கூர்மையான அதிகரிப்பில் அதன் தாக்கம் உணரப்படுகிறது.

தமிழ்நாட்டில் கடந்த காலத்தில் பிரதானமாக இருந்த திராவிட இயக்க கருத்தியல் பிரச்சாரம் தளர்வடைந் துள்ளது. நவீன தாராளமயமாக்கல் அந்த கருத்தியலின் மதிப்பீடுகளை நீர்த்துப் போகச் செய்வதில் பங்காற்றி யுள்ளது. சாதி அடிப்படையிலான போட்டி அரசியல் கூர்மையாக வளர்ந்துள்ளது. வன்னியர் சாதி ஓட்டுக்களை திரட்ட முயலும் பாட்டாளிமக்கள் கட்சி தன்னை தலித் விரோத அரசியலின் மூலம் வெளிப்படுத்துகிறது. இன்னும் பல்வேறு சாதி அடிப்படையிலான கொங்கு நாடு மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி போன்ற அரசியல் கட்சிகளும் எழுந்துள்ளன.

இந்துத்வ திட்டம்

இந்துத்வ வகுப்புவாத அரசியல் இத்தகைய சாதி அரசியலின் உடன்பிறப்பாகும். ஆர்.எஸ்.எஸ். தன்னுடைய சமூகத் தளத்தை இத்தகைய ‘சமூகக் கட்டமைத்தலின்‘ (Social Engineering) மூலம் விரிவாக்கிட முயற்சிக்கிறது. சாதி அடிப்படையிலான குறுங் குழுக்களை ஆர்.எஸ்.எஸ் பாஜக ஆதரிக்கின்றன. அதன் மூலம் தங்கள் இந்துத்துவ தத்துவத்திற்கான சமூகத் தளத்தை விரிவுபடுத்த விரும்புகின்றன. மத்தியில் பாஜக அதிகாரத்திற்கு வந்துள்ள நிலையில், வி.ஹெச்.பி மற்றும் இந்து முன்னணி உள்ளிட்ட பிற இந்துத்துவ அமைப்புகள் சிறுபான்மையோரைக் குறிவைத்து, மத அடிப்படையிலான பிளவுகளை ஏற்படுத்தி தங்களின் செல்வாக்கை அதிகரிக்கவிரும்புகின்றனர். இது கன்னியாகுமரி மாவட்டத்தில் பல ஆண்டுகளாக நடந்துவருகிறது. இந்த நடவடிக்கைகள் மற்ற இடங்களுக்கும் பரவ வாய்ப்புள்ளது. கடந்த காலத்தின் பல கட்டங்களில் பாஜகவானது பிரதான மாநிலக் கட்சிகளுடன் கைகோர்த்ததும், கடந்த நாடாளு மன்றத் தேர்தலில் தேமுதிக, பாமக மற்றும் மதிமுக போன்ற சிறு கட்சிகளுடன் கைகோர்த்ததும் ஒரு அரசியல் ரீதியான ஒப்புதலை வழங்கியுள்ளது. திராவிட இயக்கமும் அதன் சித்தாந்தமும் வலுவிழந்திருப்பதும் மதச்சார்பற்ற-ஜனநாயக மாண்புகளை பின்பற்றுவதில் செய்யப்படும் சந்தர்ப்பவாதமும் கவலைக்குரியவை.

இடது ஜனநாயக மாற்று

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், இடதுசாரி ஜன நாயக சக்திகளுக்கும் இதுவொரு மிகப்பெரும் சவாலை முன் நிறுத்துகிறது. அதிமுக மற்றும் திமுக கட்சிகளுடன் கைகோர்த்துக் கொண்டு நவீன தாராளமயத்தையோ அல்லது மதவாத சக்திகளையோ எதிர்த்துப் போராடுவது சாத்தியம் இல்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிகளின் தனிப்பட்ட வலிமையை அதிகரிப்பதின் மூலம்தான் திராவிடக் கட்சிகளில் உள்ள ஜனநாயக சக்திகளும், சிறு மாநிலக் கட்சிகளும் ஒரு மாற்று அரசியல், பொருளாதார, சமூக மேடைக்கு ஈர்க்கப்படும். உழைக்கும் மக்கள் பிரச்சனைகளில் நீடித்த போராட்டங்களையும், தொடர் இயக்கங்களையும் நடத்துவதன் மூலமே இது சாத்தியமாகும்.

திராவிட இயக்கம் மற்றும் அதன் கருத்தியல் மரபை விமர்சன ரீதியாக ஆய்வு செய்து விவாதம் நடத்துவது தமிழக சமூக அரசியல் சூழலில் அவசியமான ஒன்றாகும். துவக்ககால சமூக நீதி இயக்கத்தின் ஜனநாயக மரபினை மீட்டெடுக்க வேண்டும், அதே நேரத்தில் திராவிடக் கட்சிகளின் முதலாளித்துவ முகத்தையும், பிற்போக்கான சமூகப் பார்வையையும், சந்தர்ப்பவாதத்தையும் அம்பலப்படுத்தி அவற்றை எதிர்த்துப் போரிட வேண்டும். சமூக நீதியின் காவலராக முன்னின்று அதற்கானபோராட்டங்களை முன்னெடுத்துச் செல்வது என்பது இடது ஜனநாயக மேடையின் முக்கியப்பணியாகும்; தீண்டாமைக்கு எதிராகவும், தலித் மக்கள் மீதான சமூக ஒடுக்கு முறைக்கு எதிராகவும் போராடுவதுதான் அதன் முக்கியத் திசை வழியாகும். பாலின ஒடுக்குமுறைக்கு எதிராகவும், பெண் சமத்துவத்தை வலியுறுத்தியும் நடத்த வேண்டிய போராட்டங்கள் பிரதான இடத்தைப் பெற வேண்டும்.

தமிழ் மக்களின் தாய்மொழியும், இந்தியாவின் பிரதான தேசிய மொழிகளில் ஒன்றுமான தமிழின் முன்னேற்றத்திற்கும், செழுமைக்கும் பாடுபடுவதாக இடதுஜனநாயக நிலைப்பாடு அமைய வேண்டும். அனைத்து இந்திய மொழிகளுக்கும் இடையே சமத்துவமும், கல்வி நிர்வாகம் உள்ளிட்டு சமூகத்தின் எல்லாப் பகுதிகளிலும் அந்தந்த மொழியின் வளர்ச்சி மற்றும் பயன்பாட்டுக்காகவும் இடது ஜன நாயக அணி முன்நிற்க வேண்டும். இத்துடன், வரலாற்று வளமிக்க தமிழர் பண்பாட்டின், மதச்சார்பற்ற ஜனநாயக அடிப்படையிலான விழுமியங்கள் தொடர்ந்து வளர்த்தெடுக்கப்பட வேண்டும். நுகர்வுக் கலாச்சார, கார்ப்பரேட் மதிப்பீடுகள் தமிழகத்தின் அத்தகைய பண்பாட்டுக்கு அச்சுறுத்த லாக அமைந்துள்ளன. தமிழகத்தில் இடதுஜனநாயக மாற்று இடது ஜனநாயகத் திட்டத்தின் அடிப்படையில் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அண்மையில் அத்தகைய திட் டத்தின் வரையறைகளை வகுத்துள்ளது.

இந்தத் திட்டத்தை தொடர்ந்து வளர்த்தெடுத்து தமிழக மக்களுக்கு ஒரு மெய்யான, முழுமையான – அரசியல், சமூக, பண் பாட்டு மற்றும் சித்தாந்த மாற்றை வழங்குவது அவசியம்.

 • தமிழில்: சிந்தன்

ரசூலின் இஸ்லாமியப் பெண்ணியம்!

தமிழ்ச் சூழலில் பெண்ணியம் வலுப்பெற்றிருக்கின்ற காலம் இது. படைப்பு ரீதியாகவும், அமைப்புகள் வாயிலாகவும் பெண்ணிய வாதிகள் தொடர்ந்து இயங்கி வந்தது பெண்ணியக் கோட்பாடுகளை வலுவாக நிறுவிக் கொள்ள வாய்ப்பாக இருந்தது. பெண் விடுதலை குறித்து உரத்த குரல் எழுப்பத் தேவையுள்ள மாநிலமாகவே தமிழகம் இருந்து வந்திருக்கிறது. எல்லோரும் பெண்ணியம் குறித்து கதைக்க வந்தது துரதிர்ஷ்டவசமானதும் அன்று. கற்பனைப் புராண காலத்தும் அதன் தேவை இருந்திருக்கிறது. சங்க காலத்திலும், பெண்ணியக் குரல்கள் ஒலித்துள்ளன. உலகம் இத்தனை நவீன மயமாக்கப்பட்ட பின்பும், இதன் தேவை தொடர்வதன் பின்னணி குறித்து சிந்திக்கையில் ஆணாதிக்கப் போக்கு எங்கும் வியாபித் திருந்ததன்றி வேறென்ன என்னும் விடை கிடைக்கிறது.

பெண் ஏன் அடிமையானாள் என்று கேட்டவர் பெரியார். பெண்விடுதலை குறித்து பலமாக முழங்கிய ஆண்களுள் பெரியாருக்கு முக்கிய இடம் உண்டு. ஆணுக்குப் பெண் கட்டுப்பட்டு வாழ்க்கை நடத்த வேண்டுமென மனு தர்மம் கூறுவதால் பெண் அடிமையானதற்கு மனு சாஸ்திரமே காரணம் என்று பெரியார் பதிலும் சொன்னார்.

ஒரு குழந்தை ஆண் அல்லது பெண் என நிர்ணயிக்கின்ற பிரதான சக்தியை பெண் பெற்றிருக்கவில்லையென அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. பெண் குரோமோசெம்களான ஓஓ ஆண் குரோமோசெம்களான ஓலு இரண்டும் இணைகையில் ஆணின் ஓ தீவிரமாகுமிடத்து ஓஓ ஆகிப் பெண்ணும், லு வலுப்பெற் றால் ஓலு ஆகி ஆணும் பிரசவிக்கிறது. இது இயற்கையே பெண்ணுக்கு எதிராகச் செய்து வைத்த சதி. இதன் காரணமாகவே பெண்கள் கருப்பையை அறுத்தெறிய வேண்டுமென பெரியார் குரல் கொடுத்தார்.

ஹெச்.ஜி. ரசூலின் இஸ்லாமியப் பெண்ணியம் என்னும் இப்பிரதி புதிய வரவு. வசதிக்காகவும், ஈர்ப்புக்காகவும் இத்தலைப்பு பயன்பட்டாலும் கூட, அர்த்தம் பொதிந்த விவாதத்துக்கு அழைக்கிற தன்மை பெற்றதாகவுமுள்ளது. ஆண்களுக்கு பெண்களின் மேல் அதிகாரம் இருக்கிறது என்கிறது குரான். ஏனெனில் அல்லாஹ் பெண்களை விட ஆண்களை மேன்மையாக்கி வைத்திருக்கிறான். மேலும் ஆண்கள் தங்களுடைய பொருட்களிலிருந்து பெண்களுக் காக செலவு செய்கிறார்கள். எனவே, நல்ல பெண்கள் கீழ்ப்படிந்து நடக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய மறைவான உறுப்புக்களைப் பாதுகாப்பார்கள். பணிந்து நடக்கமாட்டார்கள் என்று நீங்கள் நினைப்பவர்க்கு உபதேசியுங்கள். படுக்கைகளிலிருந்து அவர்களை நீக்கி வையுங்கள், அடியுங்கள் என்று குரான் (4:34) மேலும் தெளிவுபடக் கூறுவதிலிருந்து. ஆண்களையே இஸ்லாம் முதல் நிலையிலும் அதற்கெடுத்த நிலையிலேயே பெண்களையும் நிறுத்தி வைக்கிறது என்பதும், ஒழுக்க விதிகளை முன் வைத்து ஒரு ஆண், பெண் மீது வன்முறை நிகழ்த்த வசதியாக மேற்கண்ட குரான் வசனங்கள் அமைந்திருப்பதாக நாம் அர்த்தம் கொள்ளலாமா?

பெண்கள் மீது உள்ள உரிமைகளைப் போலவே பெண்களுக்கும் உரிமைகள் உண்டு என்றும் குரான் மொழிகின்ற நேரத்தில், ஆயினும் ஆண்களுக்கு அவர்களை விட உயர்வான தகுதி இருக்கிறது என தெளிவாகச் சுட்டுவதிலிருந்து இருபாலரில் எவருக்கு முன்னுரிமை என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. குரானை மறையாகக் கொண்டு இயங்கி வரும் இஸ்லாமியர்கள் மேற்படி குரானின் கூற்றுப்படியும் இயல்பாகவே பெண் மீது ஆதிக்கம் கொள்பவர்களாக உள்ளனர் என்பதில் இரண்டு விதமான கருத்து கிடையாது.

இஸ்லாம் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட சமூகம் என்பது போன்ற நிலைப்பாடு சமீப காலமாக கேள்விக் குள்ளாக்கப்பட்டு வருகிறது. திரைக்குப் பின்னால் நடப்பதை அறிந்து கொள்ளுகிற ஆர்வம் எல்லோருக்கும் இருந்தாலும், துணிச்சலுடன் நுழைந்து பார்க்க எவரும் முன்வரவில்லை., அந்த பாட்டையில் நடந்து செல்ல முடியாத அளவு தடைக்கற்களை உருவாக்கி வைத்திருந்ததும் காரணம்.

ஒரு தேவாலயத்தின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கின்றன. கர்த்தராகிய இயேசு என்று அங்கு தமிழ் வசனங்கள் ஒலிக்கின்றன. சிறுபான்மை சமயங்களில் கிறிஸ்தவம் ஒரு புதிராகத் தோற்றமளிக்கவில்லை. மாறாக பாமரனுக்கு அது உவப்பானதா கவும், நுழைந்து பார்க்க எளிதாகவும், வழிபாடுகளில் கலந்து கொள்ள மொழி வழித் தடையற்றதாகவும், அவன் பின்பற்றவும், ஆராயவும் சுலபமானதொரு மார்க்கமாகவும் இருந்தது. மாறாக, இஸ்லாம் கதவுகளைப் இறுக்கமாகப் பூட்டப்பட்ட பூட்டுக்களை யும் கொண்டதாக இருந்தது. கிராமப்புறங்களில் வாழும் இஸ்லா மியர்கள் பிற சமயத்தவர்களுடன் உறவு முறையில் விளித்துக் கொள்ளுமளவு நெருக்கம் பேணிய போதும், வழிபாட்டு கலாச்சாரங்களில் அந்நியப்பட்டே இருந்தனர். தர்கா கலாச்சாரம் மட்டுமே இதை ஓரளவு மாற்றியது. தமிழ் முஸ்லீம்கள் தமிழர்கள் ஓ முஸ்லீம்கள் என்னும் அசட்டுத்தனமான பிரிவினையை ஏற்படுத்திக் கொண்டனர். இதனால் ஒரு தமிழ் முஸ்லீம் தான் தமிழனல்ல என்றும் கூட வாக்குமூலம் தரத் தயாராயிருக்கிறான். இது சர்வதேசிய உணர்வன்று. அடர்த்தியான மதாபிமானமாகும். இவர்களில் பெரும்பான்மையினருக்கு அரேபிய வம்சாவழியினர் என்னும் நினைப்பிருக்கிறது. நாயகத்தின் உம்மத்துகள் என்கிற பொதுவான நிலைப்பாடு வேறு.

தமிழக முஸ்லீம்கள் தங்களை இஸ்லாமானவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் வழக்கம் உண்டு. இது இஸ்லாம் + ஆனவர்கள் என்னும் பொருள் தருவதாகும். மாறியவர்கள், மாற்றப்பட்டவர்கள் என இரண்டும் கலந்தவர்கள் இவர்கள். தங்களின் வேர்கள் குறித்த பிரக்ஞையற்றவர்களாகவே இன்றளவும் இவர்கள் இருக்கின்றனர். ஆண்களே இத்தகைய அறியாமைகளுடன் உழல்கையில், பெண் களின் நிலை குறித்து நாம் தீவிரமாக கவலைப்பட வேண்டியுள்ளது. ரசூலின் இஸ்லாமியப் பெண்ணியம் குழந்தைப் பருவத்திலிருந்து பெண்கள் சந்திக்கிற மதரீதியிலான பல நிலைகளையும் விமர்சனத்துக்குள்ளாக்குகிறது. பலதார மணம், தலாக், ஜீவனாம்சம், ஒழுக்க விதிகள், சொத்துப் பங்கீடு போன்ற நேரடி பாதிப்புக்குள்ளாகிற விஷயங்கள் பலவற்றையும் குரானின் குறிப்புகளுடன் ஒப்பிட்டு நோக்கி உண்மையை விளம்புகிறது. இவை காலம் காலமாகப் பலராலும் கேட்க நினைத்து கேட்கப்படாமல் விடப்பட்டவையே எனினும், பெண்ணின் பிரச்சனைகளைப் பேச வந்த பிரதி என்னும் அளவில் இந்நூலுக்கு தமிழில் முக்கியமான இடம் உண்டு.

அடிப்படைக் கல்வி பெறாத நிலை, கோஷா முறை, தலாக் போன்ற பகிரங்க மிரட்டல், பிள்ளைப் பிராயத்திலிருந்தே நிர்பந்திக்கப்படுகிற ஒழுக்க விதிகள் எல்லாம் ஒருங்கிணைந்து இறுக்கும் பொழுது மனரீதியாக பெண் பாதிக்கப்படுகிறாள். தமிழகத்தின் நகர்ப்புறத்தில் எந்த ஒரு பஸ் நிலையத்திலும் தனது புர்கா சுமையுடன் கிராமத்துக்குச் செல்லத் தடுமாறுகிற முஸ்லீம் பெண்களை சுலபமாக அடையாளங் காணலாம். மேற்குறிப்பிட்ட விதிமுறைகளுக்குள் வளர்க்கப்படுகிற பெண், மணமாகி குழந்தை பெற்று நேரடியாக வாழ்க்கையை சந்திக்கும் பொழுது திணறிப் போகிறாள். பொது இடங்களில் அவள் தன் அறியாமையைச் சிந்திச் சிதறி விடுகையில் பரிதாபமாகவே உள்ளது.

கடந்த இருபது ஆண்டுகளுக்குள்ளாகவே முஸ்லிம் சமூகத்தில் குடும்பக் கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அதற்கும்முன்பு பல்லாண்டு காலமாக ஒரு முஸ்லிம் பெண் சராசரி ஏழெட்டுக் குழந்தைகளுக்கு அதிகமாகப் பெற்றுத் தள்ளுகிற இயந்திரமாகவே இருந்து வந்திருக்கிறாள்.

தஞ்சாவூர் போன்ற பகுதியிலோ இஸ்லாமியப் பெண்கள் வேறு விதமான பிரச்சனைகளையும் எதிர் கொள்ள வேண்டியுள்ளது. இங்குள்ள ஆண்களுக்கு வெளிநாட்டுச் சம்பாத்தியம் என்பது தீராத பெருங்கனவாகவே உள்ளது. பயணம் புறப்படாதவனுக்குப் பெண் தரத் தயங்குகின்றவர்களாகவே பெற்றோர்கள் உள்ளனர். திருமணம் முடிந்த ஒரு வார காலத்திற்குள்ளாகவே பயணம் புறப்படுகிற இளைஞர்கள் கூட்டம் அதிகம். இந்நிலையில் அவர்களை மணந்து கொண்ட பெண்களின் தாம்பத்ய வாழ்வு கேள்விக்குள்ளாகிறது. மணவாளன் நான்கு ஷப் புகலேனும் சென்று மீளும் வரை சௌகர்யமான வாழ்வு முறைக்காக பெண் தனது பாலியல் தேவைகள் உள்ளிட்ட விஷயங்களை அடக்கியும், ஒடுக்கியும் வைக்க வேண்டியுள்ளது. சொந்த மண்ணில் தொழில் செய்து பிழைப்பதைக் கேவலமாகக் கருதும் மனோபாவத்தை ஆணும், பெண்ணும் மாற்றிக் கொள்ளத் தயாராக இல்லாதவரை இது போன்ற அவலங்கள் தொடரவே செய்யும். ரசூலின் இஸ்லாமியப் பெண்ணியம் இது போன்ற பல்வேறு சிந்தனைகளைத் தூண்டுகிற பிரதியாகவே உள்ளது.

1986 ல் வெளியான கவிஞர் இன்குலாப்பின் விமர்சன நூலான யுகாக்கினி இவ்வகை (Protest Literature) எதிர்ப்பு இலக்கியத்திற்கு முன்னோடியாக உள்ளது. ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை இது போன்ற கலகக் குரல்களும், முணுமுணுப்புகளும் அரை நூற்றாண்டு காலமாக ஆங்காங்கே சிறு அளவில் தோன்றி மறைந் துள்ளதற்கு ஆதாரங்கள் உள்ளன. தலாக் போன்ற விஷயங்களில் நேரடியான பாதிப்புக்குள்ளாகிற அநேகப் பெண்களும், பெற்றோரும் இஸ்லாத்தின் அடிப்படையையே கேள்விக்குள்ளாக் குகிற அளவு விமர்சனங்களை எழுப்பி தங்களுக்குள் ஓய்ந்திருகின்றனர்.

எவ்வளவுதான் புரட்சியும், புதுமையும் பேசினாலும், ஒரு முஸ்லிம் தன் சமூகத்தை தீவிர விமர்சனத்துக்குள்ளாக்கச் சம்மதிக் காதவனாகவே இருந்து வந்திருக்கிறான். ஆயினும் இருபது ஆண்டுகளுக்கு முன் வந்த யுகாக்கினியில் இன்குலாப் பர்தா முறை, தலாக் மற்றும் இஸ்லாத்தில் நிலவி வரும் ஜாதிய வர்க்க முரண் களையும் சாடியுள்ளதை அவதானிக்க முடிகிறது. 1992 ல் வெளியான இவரது பாலையில் ஒரு சுனை சிறுகதைத் தொகுப்பும் கலகக் குரலின் நீட்சியாகவே ஒலித்தது. காலம் காலமாக இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் என்று பேசப்பட்டு வந்த பிரதிகளில் எங்கும் இவ்வகைக் கலக மனோபாவம் வெளிப்பட்டிருக்கக் காணோம். முற்றிலும் அவை மார்க்கத்தை சிலாகிக்கவோ, அறிவுறுத்தவோ செய்தன. இஸ்லாமிய வாழ்க்கை இலக்கியத்தில் செறிவான முறையில் பதிவு செய்யப்படவில்லை என்னும் குரல் ஒலிக்கத் தொடங்கிய நேரத்தில் புதினம் மற்றும் சிறுகதைப் படைப்பாளர்கள் பலர் அறிமுகமாகி அக்குறையைக் களையத் தொடங்கினர். இவர்களது எழுத்துக்களில் ஒரு மாறுபட்ட அணுகுமுறையும், தீவிரத் தன்மையும் எழுத்துக்கு அடிப்படையான சத்தியமும் தென்பட்டது.

2000 ஆண்டு வெளியான ஹாமீம் முஸ்தபாவின் ஊரு நேச்சை கவிதைகளும், சமகாலத்தில் வெளியான ஹெச்.ஜி. ரசூலின் மைலாஞ்சி கவிதைகளும் சில கருத்துக்களை துணிச்சலாகக் கூறி சர்ச்சைக்குள்ளாயின. தர்கா வழிபாடு மற்றும் மண் சார்ந்த கலாச்சாரத்தை வன்மையாக எதிர்க்கின்ற வஹாபிகள் ஒரு பிரிவாகவும், தர்காக்களுக்கு பெண்கள் செல்வதால் சுதந்திரமான மனநிலையை வாய்க்கப் பெறுகிறார்கள் என்று கருதுபவர்கள் ஒரு பிரிவாகவும் இருந்து, தீவிரமாக விவாதித்துக் கொள்கிற போக்கு சமீபங்களில் வலுப்பெற்றுள்ளது. ஊரு நேச்சையில் ஹாமீம் முஸ்தபா தர்கா கலாச்சாரத்துக்கு ஆதரவாகவும், அரேபிய மனப்பான்மையை எதிர்ப்பவராகவும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். ஹெச்.ஜி. ரசூல் மைலாஞ்சியில் சற்றுத் தீவிரமாகவே சுமையாக்களின் பெண்ணுறுப்பில் அம்பெய்து கொல்லும் அபூஜஹில்கள் படுக்கைகள் தோறும் / இத்தனை இத்தனை ஆண் நபிகளுக்கு மத்தியில் ஏன் வாப்பா இல்லை ஒரு பெண் நபி என்றும் எழுதி அதிர்வலைகளை உருவாக்கினார். மைலாஞ்சியில் கவிதைகள் வாயிலாக அவர் எழுப்பிய அதே குரல் இஸ்லாமியப் பெண்ணியம் என்னும் இந்த நூலில் உரைநடையாக எளிமை பெற்று உரத்து ஒலிப்பதாகவே படுகிறது.

மைலாஞ்சி வெளியான தருணத்தில் ரசூல் தமிழ் இலக்கியச் சூழலில் கவனிப்புக்குள்ளானதைப் போலவே மதாபினமானிகளால் கண்டனத்துக்கும் உள்ளாகியிருக்கிறார். பொதுவாக கவிதைகள் பரவலான அளவில் பெண்களிடமும், பாமரர்களிடமும் செல்ல வாய்ப்பில்லாத சூழலில் இவ்வகை எளிய விமர்சனக் கட்டுரைகளில் கவிதைகளில் சொல்ல வாய்க்காத பல விஷயங்களையும் சான்றாதரங் களுடன் விளக்க முயன்றிருப்பது வரவேற்கத்தக்கதே. எவ்வகைப் பிரதியும் அது எதைச் சொல்ல முற்பட்டிருப்பினும், சம்பந்தப்பட்ட வர்களைச் சென்றடையும் போதும், அது குறித்த எதிர் வினைகள் கிளம்புகிற சூழலிலும் தான் வரவேற்பைப் பெற்றுள்ளதாக அர்த்தம் பெற முடியும். இந் நூலில் ரசூல் மறைக்கப்பட்ட பல விஷயங்களைப் பகிரங்கப்படுத்துகிறார். இஸ்லாமியச் சட்டங்களைத் திரிப்பதும், திருமறை வசனங்களை ஒரு சார்பாகப் பயன்படுத்துவதும், வாழ்வி யல் நிலைபாடுகளில் பாராபட்சம் காட்டுவதும் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. என்று அவர் தொடங்குவதில் உண்மை உள்ளது. இது உனக்குத் தக்கதாய் விளக்கமளித்து / உண்மை விளம்பியாய் நடித்து / புனிதச் சட்டங்களை வளைத்து முதுகு சொறிந்து கொள்கிறாய். (மைலாஞ்சி பக்கம் 30) என்னும் அவரின் கவிதையிலும் பிரதி பலிப்பதை உணரலாம்.

இஸ்லாத்தில் நடைமுறையிலுள்ளள பலதார மணம் அன்றைய நாயகம் காலத்து அரேபிய போர்ச் சூழலைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டதாகும். ஆனால் அன்றைய அரேபியா வில் பெண்கள் பெரிய அளவில் அடக்குமுறைக்குள்ளானதாகத் தெரியவில்லை.  பெண்களின் நிலை உயர்வாகவும், செல்வாக்கு மிகுதியாகவும் இருந்தது. தங்களுககு விருப்பமானவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் சுதந்திரம் இருந்தது. கணவர் வீட்டில் மோசமாக நடத்தப்பட்டாலோ அல்லது விருப்பம் இல்லாவிட்டாலோ அவர்கள் தங்கள் மக்களிடம் திரும்பிச் சென்றுவிட முடியும். சில சந்தர்ப்பங்களில் அவர்களே முன் வந்து திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். விவாகரத்து உரிமையும் அவர்களுக்கு இருந்தது. அவர்கள் அடிமையாகவோ, உடைமைப் பொருளாகவோ நடத்தப்படவில்லை. சம உரிமை பெற்றவர்களாகவும், தோழியராகவும் நடத்தப்பட்டனர் (R.A. NICOLSON – A Literary hostory of the Arabs) என்பது போன்ற ஆதாரங்களின் மூலமாகப் பெண்களுக்கான நிலை அன்றைய அரேபியாவில் சுதந்தரமயமானதாகவே இருந்ததை அறிந்து கொள்ள முடிகிறது.

பெண்கள் தங்கள் பார்வைகளை தாழ்த்தியே இருக்க வேண்டும் என்ற குரானின் குறிப்பு ஆண்களால் வலியுறுத்தப் பட்டது. அதே சமயத்தில் நபியே ஆண்களுக்கு நீர் கூறும். அவர்கள் தங்கள் பார்வைகளை கீழ் நோக்கியே வைக்கவும். தங்கள் கற்பையும் ரட்சித்துக் கொள்ளவும் என்று ஆண்களுக்கான குறிப்பும் உள்ளது. ஆண்கள் அதை கவனமாகத் தவிர்த்து விடுவதையும் ரசூல் இந்த நூலில் சுட்டிக்காட்டுவதைக் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

குழந்தை பிறந்த ஏழாவது நாளில் அது ஆண் குழந்தையானால் இரு ஆடுகளும், பெண் குழந்தையாயிருப்பின் ஒரு ஆடும் பலி கொடுக்கிற   அகீகா எனப்படும் அரபு வழிப் பழக்கம் இங்கும் நடைமுறைப்படுத்தப்படுவதன் காரணமாக, ஆண் உயர்ந்தவன், பெண் தாழ்ந்தவள் எனும் பேதங்கள் உண்டாவதையும் குழந்தைகள் உலகம் பகுதியில் சொல்கிறார்.

ஹைளு என்னும் மாதவிடாய் காலங்களில் புனித நூலைத் தொடுவதற்கும், தொழுகை செய்வதற்கும் பெண்களுக்குள்ள தடை குறித்துக் குறிப்பிட்டு வந்த – நூலாசிரியர் மனைவி ஆயிஷாவின் மாதவிடாய் மடியில் சாயந்தபடி நபிகள் குரான் ஓதிய தகவல் குறிப்பையும் தருகிறார்.

மொழி அரசியல் என்னும் பகுதியில் ரசூல் விவாதிக்கிற விஷயம் புரட்சிகரமானது. தாய் மொழியில் வழிபாடு, தமிழ்வழித் தொழுகை என்பதைக் கேட்ட மாத்திரத்தில் உலமாப் பெருமக்களும், அடிப்படைவாதிகளும் பத்வா கொடுக்கத் தயாராக இருப்பர். இருபது கோடி முஸ்லிம்கள் வாழ்வதாகச் சொல்லப்படும் இந்தியாவில் 1966 – வாக்கில் தான் குரான் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. இந்தி மொழியில் இப்படியானால் குரானின் தமிழ் மொழி பெயர்ப்பு வருவதற்கோ நீண்ட காலம் பிடித்தது. இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மொழி பெயர்ப்பில் குரான் திரிந்து விடுமென ஆழமாக நம்பினர். அதன் காரணமாகவே மொழி பெயர்ப்பைத் தள்ளிப்போட்டனர். மேலும் பிராந்திய மொழிகளில் பெயர்க்கப் பட்டால் பாமரனும் புரிந்து கொள்கிற பிரதியாகிவிடும். பிறகு ரசூல் குறிப்பிடுவதைப் போல புனித நூலைக் காரணம் காட்டி அவர்கள் இஷ்டம் போல முதுகு சொறிந்து கொள்ள முடியாது – என்னும் சதியுமாகும். இதை முறியடிக்கிற விதமாகவே குரான் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. இன்றைக்கு அது மாற்று மதத்தினர் அதிகம் பேரால் விரும்பி வாசிக்கப்பட்டும், விவாதிக்கப்பட்டும் வருவதைக் காண முடிகிறது.

அரபு எல்லோரும் சுலபமாகப் படித்தறியக் கூடிய மொழி அல்ல. அதற்கு இணங்க இளமையிலிருந்தே நாவை வளைத்துப் பழக்க வேண்டும். தமிழ்ச் சூழலில் குரான் ஓதிப்பழகாத முஸ்லிம் களே அதிகம். இதற்கு மொழிவழித் தடையும் ஒரு காரணமாகும். வீதிக்கு வீதி பள்ளிவாசல்கள் எழும்பி நிற்கின்ற காலத்தில் பாங்கோசை கேட்டவுடன் தொழுகைக்கு நிற்பவர்களை விரல் கொண்டு எண்ணி விடலாம். (வெள்ளிக்கிழமை ஜூம் ஆ தொழுகை வேறு விஷயம்)

இன்றளவும் பயான் எனப்படுகிற பிரசங்கம் தமிழிலேயே நிகழ்த்தப்படுகிறது. பல சந்தர்ப்பங்களில் துஆக்கள் நல்ல தமிழில் கேட்கப்படுகின்றன. தொழுகை முறையும் தாய் மொழிக்கே மாறிவிடும் பட்சத்தில் பொருளறிந்து மனமுருகி இறைவனை வழிபட அது பெருவாய்ப்பாக அமையும். இணை வைக்காமல் இறைவனை எப்படி அழைப்பது என்பது தான் மொழி சார்ந்த பிரச்சனை என்று ரசூல் கேள்வி எழுப்புகிறார். ஆண் தன்மையும், பெண் தன்மையும் அற்ற என் அல்லாவை எப்படி நான் அழைப்பேன் என் தமிழில் என்று அவர் கவிதை வாயிலாக எழுப்பிய கேள்வியு மாகும் இது. மொழி கடந்த, இனம் கடந்த என் அல்லாவிற்கு இப்பொழுது வேண்டும் ஒரு மொழி என்ற அவரின் கவிதைக் கோரிக்கையே மொழி அரசியல் என்னும் தலைப்பில் சற்று விரிவாக – இந்நூலில் எழுப்பட்டுள்ளது.

அடுத்து தர்கா கலாச்சாரம் எடுத்த எடுப்பில் இதை வஹாபின் ஷிர்க் (இணை வைத்தல்) என்று ஒதுக்குவதும் கூட அபத்த மானதாகும். தமிழக முஸ்லிம் கிராமங்களில் ரம்ஜான் விசேஷ தொழுகையை ஆற்றங்கரையில் அடர்ந்த தோப்புகளுக்கு நடுவே குத்பா பள்ளி என ஒன்றை நிறுவி அங்கே நிறைவேற்றுகிற வழக்கம் இருந்து வருகிறது. இயற்கையுடன் இயைந்து வழிபடுவதன் மூலம் உள்ளத்தில் நிறைவானதொரு நிலையை அடைய முடிகிறது. இந்த குத்பா பள்ளியை பெண்களும் பயன்படுத்திக் கொள்வதுண்டு. அருகிலுள்ள ஆற்றில் நீராடுவதும், தோப்பு தொறவுகளில் இயற்கையை ரசித்தவாறு நடப்பதும் அவர்களின் மன இறுக்கத் தைப் போக்குவதற்காக முன்னோர்களே செய்து கொடுத்த ஏற்பாடாகும் இது. மாற்று மதப் பெண்களுடன் அளவளாவ முஸ்லிம் பெண்களுக்கு சந்தர்ப்பங்களை அமைத்துக் கொடுக்கிறது தர்கா சந்திப்பு. இதனாலேயே வழிபாடுகளில் அந்நிய மதக்கலப்பு ஏற்பட்டு விட்டதாக வஹாபிகள் கொதிக்கின்றனர். இவ்விதக் கெடுபிடிகளின் மூலமாக இந்தியாவை அரபு தேசமாகக் கற்பனை செய்து பார்க்கிற விபரீத முயற்சிகளில் வஹாபிகள் இறங்கியுள்ள தாகவே தோன்றுகிறது. தமிழக முஸ்லிம்களைப் பொறுத்தவரை அவர்களது மத நம்பிக்கை எவ்வளவு ஆழமானதாக இருந்த போதிலும் அவர்களது பண்பாட்டு வாழ்க்கை தமிழ்வேர்களோடு தொடர்புடையதாகவே இருந்து வந்திருக்கிறது என்னும் மனுஷ்ய புத்திரனின் கூற்றை (தினமணி பெருநாள் மலர் 2002) இந்நேரத்தில் நாம் கருத்தில் கொள்ளலாம். வேர்களுடனான தொடர்புகளை துண்டிப்பதன் மூலம் வஹாபிகள் ஒரு நிழல் அரபு வாழ்க்கையை நிறுவத் துடிக்கிறார்கள் என்றும் கருத வேண்டியிருக்கிறது.

திருமணம், விவாகரத்து, சொத்துரிமை பிரச்சனைகளில் இஸ்லாமிய தனிநபர் சட்டத்தை வலியுறுத்துவதும், கிரிமினல் குற்றங்களுக்கு இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டத்தை பின்பற்றக் கோருவதுமான ஆதிக்க முஸ்லிம்களின் இரட்டை வேடத்தை ரஜ்ம் – சடங்கன் புனைவும் வாழ்வின் பிரதியும் அத்தியாயத்தில் நூலாசிரியர் அம்பலப்படுத்துகிறார்.

மது அருந்துதல், திருட்டு, விபச்சாரம், வன்முறை உள்ளிட்ட குற்றங்களுக்கு நாயகம் காலத்தில் நடைமுறையிலிருந்த கடுமையான தண்டனைகளை அறியும் பொழுதே ஆதிக்க முஸ்லிம்கள் எத்தனை சாமர்த்தியமாக இந்தியாவில் தங்களுக்கேற்ப சட்டத்தை வளைத்துக் கொள்கின்றனர் என்பதும் நமக்குப் புலனாகிறது.

இந்தியா உள்ளிட்ட வாழ்வியல் சூழல்களில் அதிகாரத்தின் ஆளுமைகளால் நசுக்கப்படுகிற பலவீன நிலையில் உள்ள இஸ்லாமி யப் பெண்களுக்கே அதிக அளவு சொத்துப் பங்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது குரானிய கருத்தாக்கத்தில் சொல்லப்படாத அர்த்தமாகவும் விரிவடைகிறது என்னும் கருத்து இமாம் அபூஹனியா ஆண் பலகீனமானவனா? பெண் பலகீனமானவளா? என்று எழுப்பும் கேள்விகளிலிருந்தும், இமாம் ஜாபர் அதற்கு பதிலளிப்பதுமான நிகழ்விலிருந்து சொல்லப்பட்டுள்ளது.

தமிழகப் பள்ளி வாயில்களில் ஆண்களுடன் இணைந்து தொழுகை நடத்த பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், நாயகம் காலத்தில் அவரை இமாமாக் கொண்டு ஆண்களும், பெண்களும் தொழுகை நடத்தியுள்ள சம்பவத்தை நூலாசிரியர் கோடிட்டுக்காட்டுகிறார். தவறான முறையில் பிறந்தவன், கிராமவாசி பருவமடையாதவன் கூட தொழுகை நடத்துவது கூடும் என்று புகாரி ஹதீஸ் கூறுவதையும், அல்லாஹ்வின் வேதத்தை நன்றாக ஓதக் கூடியவர்கள் மக்களுக்கு இமாமாக நின்று தொழுகை நடத்தட்டும் என்ற ஆயிஷா நாயகியின் அறிவிப்பின் படி, வேதம் நன்கு ஓதத் தெரிந்திருந்தால், பெண்களும் இமாமாக நின்று தொழுகை நடத்தலாம் என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது.
2002 பிப்ரவரி 28 குஜராத் ரயில் எரிப்பு சம்பவத்தை ஒட்டி நிகழ்த்தப்பட்ட வன்முறையில் கௌஸர்பானு என்னும் ஒன்பது மாத கர்ப்பிணியின் வயிற்றில் சூலாயுதம் பாய்ச்சி குழந்தையை வெளியேற்றிக் கொன்று தீயில் சிதைத்த கொடூரம், ஒரு இஸ்லாமியச் சிறுமியை பல காமுகர்கள் கூட்டு வன்புணர்ச்சி நடத்தியது போன்ற அடுக்கடுக்கான சம்பவங்கள், பாலஸ்தீன மற்றும் ஆப்கான் மக்கள் கொன்று குவிக்கப்படுவது, இராக்கை நிர்மூலமாக்கியது போன்ற அமெரிக்க சர்வதேச ரௌடியிசத்தின் பாசிச வன்முறைகளை வாசிக்கையில் வாசக மனம் பதைபதைப்புக்குள்ளாக்கும்.

சூஃபி ஞானிகள் இறைவனோடு ஒன்றிப்போய் தான் என்னும் நிலையை அழித்துக் கொள்கிற மகத்துவத்தை, இஸ்லாத்துக்காக தற்கொலைப் படையாகி தன்னை அழித்துக் கொள்கையையும் ரசூல் கண்டிக்கிறார்.

போஸ்னியாவில் இறங்கிய செர்பிய ராணுவவத்தின் பாலியல் பலாத்காரத்துக்குப் பலியான முஸ்லிம் பெண்கள் சுமந்த பாவக் கருக்களை வறுமையின் காரணமாக குழந்தைகளைக் கொல்லா தீர்கள் என்னும் குரான் மொழியைக் காட்டி கருவைச் சிதைக்கக் கூடாது என்று தீர்ப்பளித்த அரேபிய உலமாக்களின் கண்மூடித் தனத்தையும் ரசூலின் பேனா சாடுகிறது.

ஆதிக்கவாதிகளால் படர்ந்து விட்ட பாசி, பதர்களையும், திரைகளையும் களைந்து மாசு மருவற்ற பெண்கள் வாழ்வை இஸ்லாமியப் பெண்ணியம் நூலின் வாயிலாக முன் வைக்கும் ஹெச்.ஜி. ரசூல் உலகளாவிய அவதானிப்பும், நுட்பமான வாசிப்பும் கொண்டு இதைச் சாத்தியமாக்கியுள்ளார். புதுமையான மனோ நிலையும், துணிச்சலும், இவருக்கு கை கொடுத்துள்ளது. 200 பக்கங் களிலேனும் எழுதப்பட்டிருக்க வேண்டிய பிரதி நாற்பத்தெட்டே பக்கங்களில் செறிவாக வார்க்கப்பட்டிருப்பது நுலாசிரியர் வார்த்தைச் சிக்கனத்தைக் கடைப்பிடிக்கிற கவிஞர் என்பதைச் சொல்லாமல் சொல்கிறது.

மைலாஞ்சி கவிதைத் தொகுப்பின் மூலமாக அவர் சில கசப்பான அனுபவங்களைச் சந்திக்க நேர்ந்ததை வாசகர்கள் அறிவர். நெஞ்சில் உரமும் நேர்மைத் திறமும் கொண்ட படைப்பாளியை எதிர்ப்புகள் எதுவும் செய்துவிடாது. மாறாக அவன் முன்பிலும் தீர்க்கமாகக் களமிறங்கிச் செயலாற்றுவான் என்பதே ரசூலிடமிருந்து நாம் பெற்றுக் கொள்கிற செய்தியாகும்.
குரான் ஓதுதல், குரான் வாசித்தல், குரான் ஆய்தல் என்னும் மூன்று நிலைகள் அவசியம் என்பது இப்பிரதியின் மூலமாக நமக்கு கிடைக்கிற கருத்தியல் தரிசனமாகும். வேதம் கற்றவர்கள் புனித நூலை தமக்குத் தக்க மாற்றி மக்களை மேலாண்மை செய்கிற போக்கு இப்பிரதியின் மூலமாகத் தகர்க்கப்படலாம்.

ஒரு மறுமலர்ச்சியை நோக்கிய பயணத்துக்கு இஸ்லாம் உள்ளாக்கப்படவேண்டும் என அறவுலகவாதிகள் விரும்புகிற சூழலில் இந்த நூல் வரவேற்கத் தக்கதே. கலை இலக்கிய முயற்சிகளில் ஈடுபடுகிற இஸ்லாமியப் பெண்கள் மீதான தடையும், கட்டவிழ்த்துவிடப்படுகிற வன்முறை களையும் கூட (இப்பிரதியில் இல்லாதபோதும்) சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. தமிழ்ச் சூழலில் சல்மா போன்று அபூர்வமாக எழுத வந்த முஸ்லிம் பெண்ணும் கூட சமூகம், குடும்பம் இரண்டின் அழுத்தமான அடக்கு முறைக்குள்ளானார்கள். தனக்கு நேர்ந்ததை – அல்லது தன்னளவில் பாதிப்புக்குள்ளான விஷயங்களை எழுத்தாக் கிய சல்மாவின் இலக்கியத்துக்கு ஆபாச வர்ணம் பூசப்பட்டது. உடல் மொழி சார்ந்து பெண்கள் எழுதியவற்றுக்கு எதிராக பெரிய சர்ச்சைகள் எழுந்தன. இதனால் பல பெண் படைப்பாளிகள் மன உளைச்சலுக்குள்ளாயினர்.

சமீபத்தில் நடந்து முடிவுற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் சல்மா தோல்வியடைந்ததற்குப் பின்னணியாக மதவாதிகளின் கைங்கர்யமுள்ளது. மருங்காபுரி தொகுதி முடிவு வெளிவந்த நேரத்தில் பள்ளிவாயிலுக்கு வெளியில் நின்று வார்த்தைகளாலும் பாவனைகளாலும் மகிழ்வை வெளிப்படுத்திக் கொண்டவர்களை நேரிடக் காண முடிந்தது. இவர்கள் கோபப்படுமளவு சல்மா என்ன செய்துவிட்டார்? என்று யோசிக்கையில் அவரின் எழுத்தின் நிஜம் இவர்களைக் கலங்கடித்திருக்கிற உண்மை புலனாகிறது.

இசுலாமிய பெண்ணியம்Woman from Point Zero, Two women in one போன்ற உலகப் புகழ் பெற்ற புனிதங்கள் எழுதிய எகிப்து பெண் எழுத்தாளர் அல் – சாதவி தனது படைப்புகளுக்காகச் சிறை கண்டார். பெண்களின் காமவேட்கையைக் கட்டுப்படுத்துவதற்காக பெண்களின் பாலுறுப்பிலுள்ள முனையை வெட்டியெறிகிற (சிறு வயதிலேயே) எகிப்திய பழக்கத்துக்கு எதிரான கருத்தை தனது படைப்பில் முன்வைத்தவர் இவர். வங்க தேசப் பெண் எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரீன் லஜ்ஜா நாவலுக்க சந்தித்த வன்முறைகளை அனைவரும் அறிவர். இவ்வாறு உலகெங்கிலுமுள்ள இஸ்லாமியப் பெண் படைப்பாளிகள் நசுக்கப்டுகின்றனர்.

தமிழ்த் திரைப்படங்களில் இஸ்லாமியப் பெண்ணுலகம் மிகச் சம்பிரதாயமாகக் காட்டப்படுகிறது. இஸ்லாமிய வாழ்வு முழுமை யாகச் சித்தரிக்கப்பட்ட படம் ஒன்று கூட வெளியாகவில்லை. அபூர் வமாக நாவலிருந்து படமாக்கப்பட்ட ஜமீலா போன்ற படம் வந்த சுவடின்றிப் போய்விட்டது.

இரானியப் படங்கள் குறித்து அறிவுலகமே கதைத்துக் கொண்டிருக்கும் வேளையில், இரானிய பெண் இயக்குனர் தமினா மிலானி தன்னுடைய மறைக்கப்பட்ட பாதி (Hidden half)) என்னும் புரட்சிகரமான படத்துக்காக கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்திருக்கிறார்.

ஹெச்.ஜி. ரசூலின் இஸ்லாமியப் பெண்ணியம் இதேபோன்று பல்வேறு விதமான பெண்ணிய அடக்கு முறை களையும் நம் சிந்தனைக்கு கொண்டு தந்து ஒரு கலகப் பிரதிக்கான சகல கூறுகளையும் தாங்கி நிற்கிறது. ஒவ்வொரு முஸ்லிம் பெண்ணின் கையிலும் இது இருந்தாக வேண்டிய அவசியத்தை படித்த ஒவ்வொருவருமே சொல்லக் கடமை இருக்கிறது.

இஸ்லாமியப் பெண்ணியம்
ஹெச்.ஜி. ரசூல்
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
பக்கங்கள் : 48
விலை : ரூ. 10/-

பெரியாரும் சுயமரியாதை இயக்கமும்

பாரதீய ஜனதா கட்சியின் செல்வாக்கு தமிழகத்தில் படருமா?

தமிழக அரசியலை கூர்ந்து கவனித்து வரும் எவரிடமும் பத்து ஆண்டுகளுக்கு முன் இந்தக் கேள்வியைக் கேட்டிருந்தால் இல்லை என்று அடித்துக் கூறியிருப்பார்கள். இது பெரியார் வாழ்ந்த மண். பகுத்தறிவும் பிராமணியத்திற்கு எதிர்க்கலாச்சாரமும் ஊறிய இந்த பூமியில், பெரியார் வழிவந்த திராவிடக் கட்சிகள் மூச்சுவிடாது நாற்பது ஆண்டுகளாய் ஆட்சி செய்யும் இந்த மாநிலத்தில் இந்துத்துவ பாரதீய ஜனதா கால் நுனியைக்கூட ஊன்ற முடியாது என்று உறுதியாகச் சொல்லி இருப்பார்கள். பெரியாரின் 125 ஆவது பிறந்த நாளை தமிழகம் கொண்டாடி முடித்திருக்கும் இவ்வேளையில், அவருடைய கொள்கைகளின் தாக்கம் தமிழகத்தில் இன்றும் தொடர்ந்த போதிலும், பெரியார் தன் வாழ்நாளின் பெரும்பகுதியை எந்தச் சக்திகளையெல்லாம் எதிர்ப்பதற்காகப் பாடுபட்டாரோ அந்தச் சக்திகளை முழுமையாக உருவகப்படுத்தி நிற்கும் பாரதீய ஜனதா கட்சியை தமிழக மக்கள் தயக்கமின்றி அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளச் செய்கின்றன திராவிடக் கட்சிகள்.

தமிழகத்தின் சமூக, கலாச்சார தளங்களிலும் இந்துத்துவ சக்திகளின் சில நடவடிக்கைகளுக்கு ஊக்கம் தரும் முயற்சிகள் நடக்கின்றன. பசுவதைத் தடுப்பு, மரக்கறி (சைவ) உணவுக்கு ஆதரவான இயக்கம், கோவில்களில் உயிர்ப்பலி தடுப்பு, கோவில் குளங்களை சுத்தம் செய்வதில் முனைப்பு, கோவில்களில் அன்னதானம், தமிழில் அர்ச்சனைக்கு எதிர்ப்பு, விநாயகர் ஊர்வலங்கள் என்று ஏராளமான வடிவங்களில் தமிழகம் மறந்துபோன பல விஷயங்கள் எவ்வித எதிர்ப்புமின்றி மீண்டும் அரங்கேற்றப்படுகின்றன. தமிழகத்தின் எல்லாப் பகுதிகளிலும் கிளைகளைப் படரவிட்டுள்ள திராவிடக் கட்சியினர் சங்பரிவாரத்தின் முயற்சிகளை ஒரு கலாச்சாரப் பிரச்சினையாக பார்க்காதது மட்டுமின்றி பல நேரங்களில் உள்ளூர் மட்டத்தில் அவற்றில் பங்கேற்கவும் செய்கின்றனர்.

மேடைகளின் பின்புலத்திலும், கட்சிப் பாடல் வரிகளிலும், மாநாட்டு உரைகளின் முதல் சில வரிகளிலும், புகைப்படக் கண்காட்சிகளிலுள்ள பழைய பிரதிகளிலும் தவறாமல் இருக்கும் பெரியார் இவர்களின் கொள்கைகளில் காணாமல் போயிருப்பது வரலாற்றுச் சறுக்கலா? அரசியல் சந்தர்ப்பவாதமா? சந்தர்ப்பவாத மென்றால் பெரியாரின் கொள்கைகளை முன்னிறுத்த மீண்டும் ஒரு வாய்ப்பிருக்கும்போது இவர்களும் மாற வாய்ப்பிருக்கிறது. சறுக்கல் என்றால் மீண்டும் எழ வாய்ப்பிருக்கிறது. ஆனால் இங்கு நடப்பது விலகல்.

இந்த விலகலின் வரலாறு பெரியாரின் வாழ்நாட்களிலேயே துவங்கிவிட்டது. இந்த விலகலின் வேர் திராவிட இயக்க வரலாற்றின் துவக்க காலத்திலிருந்தே தீர்க்கப்படாத சில முரண்பாடுகளிலும், முழுமையடையாத, முதிர்ச்சியடையாத ஒரு தத்துவார்த்த அரசியல் போக்கிலும் ஊன்றியிருக்கிறது. இந்த முரண்பாடுகளையும், முதிர்ச்சியின்மையையும் புரிந்துகொள்வதற்கு பெரியார் என்ற புயல், எழுந்து வளர்ந்த வரலாற்றைப் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுந்த சில அடிப்படையான அரசியல் சக்திகளின் தாக்கத்திற்கு உள்ளாகி அவற்றின் மீதும் தாக்கமேற்படுத்திய போராளிதான் பெரியார். காந்தியின் தேசியத்தினால் முதலில் ஈர்க்கப்பட்டு, பின் உயர்சாதி விருப்பு வெறுப்புகளையும் சமூகப் பிற்போக்குத்தனங்களையும் விட்டுத்தள்ள  மனமில்லாத தேசிய வாதிகளை வெறுத்து விலகிச் சென்று, ஜாதீய, மதப் பிடியில் சிக்கியுள்ள சமூகத்தை சவுக் காலடித்துச் சீர்திருத்தும் பாதையில் சென்று, பின் சோஷலிஸத்தின் சிறப்புணர்ந்து புரட்சிப்பாதையில் நடைபோட்டு சிறிது தூரம் சென்று திரும்பி மீண்டும் சீர்திருத்தம் என பிராமண எதிர்ப்பு, பிரிட்டிஷ் ஆதரவு இயக்கத்தில் இணைத்துக்கொண்டு, இந்திய சுதந்திரத்தை நிராகரித்து… பெரியார் என்ற கட்டுக்கடங்காத தனிமனித சரிதையும் தமிழகத்தின் வரலாறும் பின்னிப் பிணைந்து கிடக்கின்றன. இதனால்தான் தமிழ்மண்ணில் ஒரு மாற்றம் வேண்டும் என்று விரும்பும் எவரும் பெரியாரை மறந்துவிட்டு சிந்திப்பது நடக்காத ஒன்றாகிறது. அவருடைய தாக்கத்தை மறப்பது வரலாற்றை மறைப்பதற்கு ஒப்பாகும்.

பிரிட்டிஷ் அரசுக்கு மகஜர் அளிதுக்கொண்டிருந்த காங்கிர மக்கள் இயக்கமாக மாற்றம் பெற்றது காந்தியின் தலைமையில்! அந்நிய ஆட்சியைத் துரத்த மட்டுமின்றி, வறுமை, தீண்டாமை, குடிப்பழக்கம் ஆகியவற்றிலிருந்தும் மக்கள் விடுதலை பெறவேண்டுமெனப் போராடும் தேசிய இயக்கத்தில் தன் நண்பர் இராஜகோபாலாச் சாரியாரின் வழிகாட்டுதல்படி 1919-இல் தன்னை இணைத்துக் கொண்டார் பெரியார். செல்வச் செழிப்பு மிக்க வணிகக் குடும்பத்தில் பிறந்த அவர் (கதர்) காதித் துணி மூட்டைகளைச் சுமந்து கிராமம் கிராமமாகச் சென்று விற்றார். எண்பது வயது நிரம்பிய தன் தாயார் உட்பட குடும்ப உறுப்பினர் அனைவரையும் காதி அணியச் செய்தார். ஒத்துழையாமை இயக்கத்தின் ஒரு பகுதியாக காந்தி மது விலக்குப் போராட்டத்தை அறிவித்தபோது தானே முன்னின்று கள்ளுக்கடை மறியல்களை நடத்தினார். இயக்கத்தை நிறுத்த வேண்டிக் கோரிக்கை எழுந்தபோது, அந்த முடிவு தமிழ்நாட்டிலுள்ள இரண்டு பெண்களின் கைகளில்தான் இருக்கிறது என்றார் காந்தி. அவர் கூறிய பெண்கள் பெரியாரின் மனைவியும், சகோதரியும். அத்தனை தீவிரமாக கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டிருந்தனர் இருவரும்! போராட் டத்தின் ஒரு பகுதியாக தன் தோப்பிலிருந்த 1000 தென்னை மரங்களையும் வெட்டினார் பெரியார். பழுத்த தேசியவாதிகள் கூட அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தான் மரங்களை வெட்டினர். இவ்வளவு தீவிரமாகத் தேசியவாதப் பாதையில் எட்டாண்டுகள் நடைபோட்ட பெரியார், காங்கிரசுக்கு எதிராகத் திரும்பும் நிலை ஏற்பட்டது.

அன்றிருந்த சென்னை மாகாணத்தின் தேசிய இயக்கத் தலைவர்களில் பலரின் சமூகப் பார்வை குறுகியே இருந்தது. தேச விடுதலை என்பது இந்திய எல்லைக்குள் வாழும் எல்லோருக்குமான விடுதலை. அன்னிய ஆதிக்கத்திலிருந்து விடுபடுவது, விடுதலை என்ற கருத்தின் ஒரு அம்சம் மட்டுமே. மனிதனைப் பிறப்பால் தாழ்த்தி வைத்திருக்கும் எல்லா சமூக, கலாச்சார, ஆதிக்க சாதிகளிடமிருந்தும் விடுவித்து ஒரு புதிய வாழ்க்கை மற்றும் சிந்தனைத் தளத்திற்கு இட்டுச் செல்வதுதான் உண்மையான விடுதலை. தேசியம் பற்றிய பெரியாரின் இந்தப் புரிதல் காங்கிர இயக்கத் தலைமையின் புரிதலோடு முரண்பட்டது. இந்த முரண்பாடு முதலில் வெளிப்பட்டது சேரன்மாதேவியில் தேசிய இயக்கத் தலைவர்களில் ஒருவரான வ.வே.சு.ஐயர் நடத்திய குருகுலத்தில் ஏற்பட்ட ஒரு பிரச்சினையில் தான். தேசிய சமூக சேவைக்காக வகுப்பு வேறுபாடின்றி இளைஞர் களைப் பயிற்றுவிப்பதற்காக துவங்கப்பட்ட இந்தக் குருகுலத்தில் பிராமண சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் உணவருந்த தனி இடமும், தரத்தில் சற்றே உயர்ந்த உணவும் அளிக்கப்பட்ட நடைமுறை பெரும் பிரச்சினையாக வெடித்தது.

பிரச்சினையைத் தீர்க்கும் நோக்கில் சம்பந்தப்பட்ட அனைவரும் காந்தியைச் சந்தித்தனர். இதில் பிராமணரல்லாதோருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

சேரன்மாதேவி குருகுலத்தில் சமபந்தி பிரச்சினை சமூக நீதி என்ற பெரும் பிரச்சினையின் ஒரு வெளிப்பாடேயாகும். சமூக அநீதி இருக்கும் வரை இந்திய தேசியம் என்ற லட்சியம் நிறைவேறாது என்ற முடிவுக்கு காங்கிரசில் இருந்த பிராமணரல்லாதோர் வந்தனர். பெரியாரிடமிருந்து கொள்கை விஷயங்களில் வேறுபட்ட திரு.வி.கல்யாணசுந்தரனார் (திரு.வி.க.) கூறிய தீர்வுகளையும் கூட குருகுலப் பிரச்சினைகளில் வ.வே.சு.ஐயர் ஏற்க மறுத்தார்.

குருகுலத்திற்கு காங்கிர கமிட்டி தரவேண்டிய பாக்கி ரூ.5,000 ஐ அங்கு பொது உணவிடம் ஏற்படுத்தும் வரை தர இயலாது என்று செயலாளர் என்ற முறையில் பெரியார் முடிவெடுத்திருந்தார். ஆனால் அவருக்குத் தெரியாமலேயே பிராமணராயிருந்த ஒரு உதவி செயலாளர் மூலம் அப்பணத்தை காசோலையாகப் பெற்றார் வ.வே.சு.ஐயர். இதனால் ஆத்திரமுற்ற பெரியார் குருகுலத்தின் மீது முழுப்போர் பிரகடனம் செய்து தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மெற்கொண்டார்.

ஏற்கெனவே கேரளாவிலுள்ள வைக்கம் என்ற ஊரில் பிராமணர் வசிக்கும் பகுதியில் பிற்படுத்தப்பட்ட ஈழவர்கள் நடப்பதைத் தடுத்ததையொட்டி எழுந்த பிரச்சினையில் தலையிட்டு நடத்திய போராட்டத்தில் பிராமணப் பழமைவாதிகளின் நிலைப்பாடுகளால் ஆத்திரமுற்றிருந்த பெரியாருக்கு, தேசிய இயக்கத்துக்குள்ளிருந்த ஜாதீய உணர்வுகள் அவ்வியக்கத்திலிருந்து அவரை அன்னியப் படுத்தின.

தேசியம் பற்றிய பெரியாரின் புரிதல் என்னவாக இருந்தது? பாலக்காட்டில் பெரியார் நிகழ்த்திய உரையில் இதற்கு விடை இருக்கிறது.

ஒரு தேசத்தின் தேசியம் முக்கியமாக எதைப் பொறுத்திருக்க வேண்டுமென்று பார்ப்போமானால், குறைந்தபட்சம் ஒரு தேச மக்கள் தங்கள் மனத்தையும், மன சாட்சியையும் விற்காமலும் விட்டுக் கொடுக்காமலும் வயிறு வளர்க்கும்படியாவது இருக்க வேண்டும். ஈதன்றி, அதற்கு  மேற்பட்ட தேசியங்கள் எவ்வளவோ இருக்கின்றன. அறிவு வளர்ச்சி வேண்டும், கல்வி வேண்டும், ஆராய்ச்சி வேண்டும், கண்ணியமான தொழில் வேண்டும், சமத்துவம் வேண்டும், ஒற்றுமை வேண்டும், தன் முயற்சி வேண்டும், உண்மை உயர்வு வேண்டும், ஒருவரை ஒருவர் ஏமாற்றிப் பிழைக்காமலிருக்க வேண்டும், சோம்பேறிகள் இருக்கக்  கூடாது, அடிமைகள் இருக்க கூடாது, தீண்டாதவர்கள் தெருவில் நடக்க முடியாதவர்கள் இருக்கக் கூடாது, இனியும் இது போன்ற எவ்வளவோ காரியங்கள் செய்யப்பட வேண்டும்.

இத்தகைய விளக்கமளித்த பெரியாருக்கு அன்றைய தேசியவாதிகள் மீது வெறுப்பு வரக் காரணமென்ன?

மேற்குறிப்பிட்ட வகையில் தேசியம் வளர்வதற்கான சட்டம் எதையும் அவர்கள் செய்யவில்லையென்பது மட்டுமின்றி, வந்த சட்டங்களுக்கு முட்டுக் கட்டையும் போட்டவர்கள் தேசியவாதிகள் என்று சாடுகிறார்.

மக்கள் சாதி பேதத்தையும், மதபேதத்தையும் ஒழிக்க தேசியவாதிகள் கவனிக்காமலிருப்பது மாத்திரமல்லாமல், அவற்றை நிலை நிறுத்தவும், வலுப்படுத்தவும் முயற்சிக்காமலிருப்பதுமில்லை. இன்றைய தேசிய வாழ்வில் தேவஸ்தான மசோதாவை எதிர்த்தவர்கள் யார்? சாமிகள் பேரால் பெண் மக்கள் விபச்சாரத்தை தடை புரியும் மசோதாவை எதிர்த்தவர்கள் யார்? மக்கள் எல்லோருக்கும் சமப்பிரதிநிதித்துவமும், சமசந்தர்ப்பமும் அளிக்க வேண்டும் என்ற கொள்கைகளை எதிர்ப்பவர்கள் யார்?

பால்ய விவாகத்தை தடை செய்யும் சாரதா சட்டம் மத்திய சட்ட சபையில் கொண்டுவரப்பட்ட போது, பழுத்த தேசாபிமானிகளும், பிரபல தேசியத் தலைவர்களும் என்ன நிலையெடுத்தனர் என்பதை பெரியார் அம்பலப்படுத்தினார். மதன் மோகன் மாளவியா: 14 வயதுக்கு மேற்பட்டு கல்யாணம் செய்வது நல்லதுதான். ஆனாலும் வைதீகர்களோடு மோதலை தவிர்ப்பதை முன்னிட்டு 12 வயதாக இருக்க வேண்டும்.

மோதிலால் நேரு 20 வயதுக்கு முன்னால் எங்கள் குழந்தைகளுக்கு கல்யாணம் செய்வதில்லை. அவசியமிருக்கிறவர்கள் 14 வயதுக் குள்ளாகவும் கல்யாணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற திருத்தம் கொண்டு வந்தார். கேஸ்கர் என்ற தேசியத் தலைவர் வைதீகர்கள் இஷ்டத்திற்கு விரோதமாய்ச் சட்டம் செய்யக் கூடாது என்றார்.

இத்தகைய தேசியவாதிகளின் கையில் தேசம் சென்றால் என்னவாகும் என்ற கவலை அவருக்கு இருந்தது.

வினா அறியாக் குழந்தைகளைக் கடவுளின் கடவுள் பேரால் பொட்டுக் கட்டி விபச்சாரிகளாக்குவதையும், மக்களை விபச்சாரத் தொழிலால் ஜீவனம் செய்யக் கூடாதென்றும், ஜாதிக் கொண்டு வரப்பட்ட சட்டங்கள் கூட மதத்தின் பேராலும், சாத்திரங்களின் பேராலும், சாமிகள் பேராலும் ஆட்சேபிக்கப்படுமானால் அதுவும் பூரண சுயேச்சையை விரும்பும் சங்கக் காரியதரிசியும், கற்ற பண்டிதராலேயே எதிர்க்கப்படுமானால், இனி சாதாரண பார்ப்பனர் களும் அவர்கள் கலந்த இயக்கங்களாலும் நாம் எந்த விதமான சீர்திருத்தத்தை சுய ராஜ்ஜியத்தில் இராமராஜ்ஜியத்தில் எதிர்பார்க்க கூடுமென்பது விளங்கவில்லை

இத்தகைய தேசிய தலைவர்களையெல்லாம் வழி நடத்திய காந்தியாரின் கருத்துக்கள் சில பெரியாரை மேலும் தேசிய இயக்கத்திலிருந்து அன்னியப்படுத்தியது.

செப்டம்பர் 1927-இல் கடலூருக்கு விஜயம் செய்த காந்தி, பிராமணர்கள் அறிவின் கலன்கள், தியாகத்தின் உருவம் என்று புகழ்ந்தார். பிராமணர்கள் தங்கள் பாரம்பரிய எளிமையைப் பேணி பிராமணரல்லாதோர் கொடுப்பதைப் பெற்று வாழ வேண்டு மென்றும், பிராமணரல்லாதோர் பிராமணரை வெறுப்பதன் மூலம் ஒரு புதிய தீண்டத்தகாதப் பிரிவை உருவாக்கிவிடக் கூடாதென்றும், பிராமணர்கள் இந்து மதத்தின் காவலர்களென்றும் கூறினார். பிராமணர் மீதுள்ள கோபத்தின் காரணமாக இந்து மதத்தின் அதிவாரமாக இருக்கும் வர்ணாசிரம தர்ம அமைப்பினை பிராமணரல்லாதோர் தகர்த்துவிடக் கூடாதென்றும் வேண்டுகோள் விடுத்தார். வர்ணாசிரமம் என்பது ஒரு பிரபஞ்ச விதி, மனித ஆற்றலை உயரிய நோக்கங்களுக்குத் திசை திருப்பும் ஆன்மீகப் பொருளாதார விதி என்று விளக்கங்களைக் கொடுத்தார்.

இவ்விளக்கங்கள் ஏற்கெனவே காங்கிரஸிற்குள் நடக்கும் பிராமணிய ஆதிக்க செயல்பாடுகளினால் வெறுப்புற்றிருந்த பிராமணரல்லாதோரிடையே பெரும் அதிருப்தியைத் தோற்றுவித்தது. வர்ணாசிரம தர்மம் பற்றிய காந்தியின் நிலைப்பாட்டை மாற்றும் முயற்சியாக பெரியாரும், எ.ராமநாதனும் அவரைச் சந்தித்தனர். அவருடைய கருத்துக்கள் தீண்டாமை, பால்ய விவாகம் ஆகிய பிரச்சினைகளில் பிராமணிய பழமைவாத சக்திகள் மேற்கொண்டுள்ள நிலைப்பாடுகளை வலுப்பெறச் செய்யுமென்றும் இச்சமூகத் தீமைகளுக்கு எதிராக காந்தி எடுத்துள்ள நிலைப்பாடு களையே மறுதலிக்குமென்றும் எடுத்துக்கூறினர். காந்தியின் நிலையில் எவ்வித மாற்றமும் இல்லாததைக்கண்ட பெரியார் இந்திய தேசிய காங்கிர, இந்துமதம், பிராமணியம் ஒழியும்போது மட்டுமே இந்தியாவுக்கு உண்மையான சுதந்திரம் கிடைக்கும் என்று காந்தியிடம் கூறினார்.

காங்கிர  மூலம் சமூக நீதி கிடைக்காது என்று முடிவெடுத்த பெரியார் 1927-இல் அவ்வமைப்பிலிருந்து விலகி சுயமரியாதை இயக்கம் என்ற சீர்திருத்தப் பாதையில் செல்லத் தொடங்கினார். கலாச்சார ரீதியாக சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் ஜனநாயக உணர்வுகளையும் உள்வாங்கி தேசவிடுதலை என்ற இலக்கினை நோக்கிச் செல்லும் இயக்கத்தை மேலும் அர்த்தமுள்ளதாக்குவதற்குக் கிடைத்த வாய்ப்பினை காங்கிர இழந்தது.

காங்கிரசிலிருந்து வெளியேறிய பெரியாருக்கு பிராமணரல்லா தோர் இயக்கமான நீதிக்கட்சியில் நேரடியாக இணையும் வாய்ப்பு இருந்தது. அக்கட்சியின் பல மாநாடுகளிலும், கூட்டங்களிலும் பெரியார் கலந்து கொண்டபோதிலும் அவ்வியக்கத்தின் குறிக்கோள் ஆட்சியிலும், அரசாங்கப் பதவிகளிலும், கல்வி, வேலை வாய்ப்பு களிலும் பிராமணரல்லாதோருக்கு அதிக பிரதிநிதித்துவம் வேண்டும் என்ற வட்டத்துக்குள்ளேயே நின்றிருந்தது. பிராமணரல்லாதோரின் நலன்களைப் பாதுகாக்கப் பிறந்த இயக்கம் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட நீதிக்கட்சி 1916-இல் வெளியிட்ட பிராமணரல்லாதோரின் அரசியல் அறிக்கையில் இப்பிரிவில் பெரும்பான்மையோராயிருந்த விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் அவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை. ஏனெனில் பிராமணரல்லாதோரின் சமூக, வர்க்க அடித்தளம் வேறு.

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் விவசாயம் வியாபாரமாக்கப்பட்டு, பருத்தி போன்ற பணப்பயிர்களுக்கு ஊக்கமளிக்கப்பட்டதால் பிராமணரல்லாத சாதியினரிடையே பணக்கார விவசாயி, தரகு வணிகர், வட்டி முதலாளி போன்ற வர்க்கங்களும் படித்த, நடுத்தர வர்க்கமும் தோன்றின. இந்தக் காலகட்டத்தில்தான் பிரிட்டிஷ் அரசு அதிகார இயந்திரத்தை மத்தியத்துவப் படுத்தியது; இந்திய மயமாக்கியது. ஏற்கெனவே கல்வியில் குறிப்பாக, ஆங்கிலக் கல்வியில், வியாபித்திருந்த பிராமணர்களே பெரும்பாலான அரசுப் பதவிகளைத் தக்கவைத்துக் கொண்டிருந்தனர். கல்வியின் விரிவாக்கம் மற்றும் பிராமணரல்லாதோரிடையே புதிய வர்க்கங்களின் தோற்றத்தால் அரசாங்கப் பதவிகளில் இப்பிரிவினருக்கும் மக்கள் தொகைக்கேற்ப பிரதிநிதித்துவம் வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. மேற்கத்திய கல்வியினால் முன்னேற்றம் பெற்றிருந்த பிராமணர்களே தேசிய இயக்கத்தில் முன்னணி வகித்து வந்ததால் அவர்களுக்கு எதிராக இந்திய சமூகத்திலிருந்தே ஒரு பிரிவினர் எழுந்தது, பிரிட்டிஷ் ஆட்சியின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு வசதியாக இருந்தது. பிராமணரல்லாத பிரிவினரின் மேல்தட்டிலிருந்து வந்த வர்க்க சக்திகளின் அரசியல் வடிவமாகவந்த நீதிக்கட்சியின் முதல் அறிக்கை இதனால்தான் கல்வி, அரசாங்கப்பதவி என்ற குறுகிய கோரிக்கை வட்டத்திற்குள் நின்றது. பிரிட்டிஷ் ஆட்சி மட்டுமே வர்க்கங்களுக்கும் இனங்களுக்கும் இடையே தராசை நியாயமாகப் பிடிக்கும் வல்லமை படைத்தது என்றும் பிரிட்டிஷ் ஆட்சியாளர் களின் செல்வாக்கினையும் அதிகாரத்தையும் அழிப்பதற்காக எடுக்கப்படும் எந்த முயற்சிக்கும் நாங்கள் ஆதரவளிக்க மாட்டோம் என்றும், அந்த ஆட்சிக்கு ஆழ்ந்த விசுவாசத்துடன் நடப்போம் என்றும் பிராமணரல்லாதோர் அறிக்கை கூறியது. அமெரிக்க செவ்விந்தியர்களின் உடல்களின் மீதும், ஆப்பிரிக்க அடிமைகளின் ரத்தத்தை உறிஞ்சியும் பூதாகரமாய் வளர்ந்து நின்ற ஏகாதிபத்திய சக்தி, தாதாபாய் நெளரோஜி போன்ற அறிஞர்களினால் இந்தியச் செல்வங்களைக் கொள்ளையடிக்க வந்த கூட்டம் என்று புள்ளி விவரங்களுடன் அம்பலப்படுத்தப்பட்ட பிரிட்டிஷ் ஆட்சி தொடர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்த வர்க்கம் பிராமணரல்லா தோரின் நலன் என்று எதைக் குறிப்பிடுகிறது என்பது தெளிவு.

பிராமணரல்லாதோர் அறிக்கை புகழராம் சூட்டிய பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் பிராமணரல்லாதோர் சமூகத்தின் பெரும்பாலோரின் அவல வாழ்க்கையை எடுத்துக் காட்டும் சில உண்மைகள் இங்கே:

பரந்து விரிந்து வரும் தன் உலக சாம்ராஜ்ஜியத்தை நிலை நிறுத்துவதற்காக பிரிட்டிஷ் அரசு பின்பற்றிய இரக்கமற்ற நிலவரிக் கொள்கையினால், பத்தொன்பதாம் நூற்றாண்டில் பல வருடங்களில் பஞ்சம் தலை விரித்தாடியது. 1823இல் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியாளர் அரசுக்கு ஓர் அறிக்கை அனுப்பினார். மக்கள் தலையில் துணியிட்டபடி உணவைத் தேடியலைந்து கொண்டிருந் தனர். பொதுச் சாலைகளில் தினமும் மக்கள் மடிகின்றனர்.

1876-78ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட பஞ்சத்தின் போது, சென்னை மாகாணத்தில் மூன்றரைக் கோடி மக்கள் பாதிக்கப்பட்டனர். ஏழரை லட்சம் பேருக்கு 22 மாதங்களுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டியிருந்தது.

இந்தப் பெரும் பஞ்சத்தினால், லட்சக்கணக்கான மக்கள் (பிராமணரல்லாதோர்) புலம் பெயர்ந்து இலங்கை, பர்மா, மலேசியா, மேற்கிந்தியத் தீவுகள் நோக்கிச் சென்றனர்.

1878ஆம் ஆண்டில் மட்டும் 1,50,000 பேர் இலங்கைக்கு புலம் பெயர்ந்து சென்றனர்.

பெரும் பஞ்சங்களுக்கு காரணமாயிருந்த பிரிட்டிஷ் கொள்கைகள், பண்ணையாள் எனப்படும் விவசாயத் தொழிலாளி அடிமைகளை விடுவிப்பதிலும் ஆர்வம் காட்டவில்லை. பறையர், பள்ளர், பள்ளி (வன்னியர்) போன்ற சமூகப் பிரிவுகளைச் சார்ந்த பண்ணையாட்கள் உணவு தானியங்களை அளப்பது. விவசாய நில எல்லைகளை ஏற்படுத்துவது, நீர் பாய்ச்சுவது, இறந்தவர்களைப் புதைப்பது போன்ற பணிகளில் பிராமணர் மற்றும் பிராமணரல்லாத நிலப்பிரபுக்களால் ஈடுபடுத்தப்பட்டனர்.

பட்ட கடனுக்காக பரம்பரை பரம்பரையாக பண்ணைச் சேவகம் புரிந்தனர் இம்மக்கள். 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரையில் இந்த அடிமை முறைக்கு ஆங்கிலேயே ஆட்சியின் ஆசிர்வாதம் இருந்ததாக பொருளாதார ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். தென்னிந்தி யாவில் நிலமும், சாதியும் என்ற புத்தகத்தில் தர்மா குமார் என்ற ஆராய்ச்சியாளர் இவ்வாறு குறிப்பிடுகிறார். 1800இல் பண்ணைச் சேவகம் புரிந்த பள்ளர்களும், பறையர்களும் தலைமறைவாகி விட்டனர் என்று கேள்விப்பட்ட தஞ்சை மாவட்ட ஆட்சியாளர் அவர்கள் அனைவரையும் அவரவரின் எஜமானார்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என உத்தரவிட்டார். அது மட்டுமல்லாமல், அடிமைகள் அரசாங்கத்திற்கும் நிலப்பிரபுக்களுக்கும் சேவகம் புரியுமாறு காவல்துறையைக் கொண்டு நிர்ப்பந்திக்க வேண்டு மென்றும் யோசனை கூறினார்.

அடிமை முறைக்கு எதிராக பிரிட்டிஷ் சமூகத்திற்குள் எழுந்த இயக்கங்கள் வலுப்பெற்ற போதுதான் 1841இல் பிரிட்டிஷ் ஆட்சி அடிமையொழிப்புச் சட்டம் இயற்றியது. அதுவரை அடிமைகளை விடுவிப்பதனால் நிலவுடைமை அமைப்பு சிதைந்து நிலவரி வருமானம் குறையாமல் பிரிட்டிஷ் ஆட்சி பார்த்துக் கொண்டது.

பிராமணரல்லாதோர் அறிக்கை இந்த பிரிட்டிஷ் ஆட்சியின் நீதி நியாய உணர்வைப் பாராட்டுவதோடு, மட்டுமல்லாமல் பெரும்பாலான பிராமணரல்லாதோர் அவ்வாட்சியில் எப்படி வாழ்ந்தனர் என்றும் குறிப்பிடாதது அதன் வர்க்க சமூக நிலைப்பாட்டை உணர்த்துவதாக உள்ளது.

பிராமணர்களோடு நடத்தும் அதிகார வர்க்கப் போட்டியைவிட சமூக, கலாச்சார தளங்களில் மனிதர்களைப் பிறப்பால் தாழ்த்தி வைத்திருக்கும் வர்ணாசிரம தர்மத்திற்கு எதிரான போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது என்று முடிவெடுத்த பெரியார், எ.ராமனாதன் துவங்கிய சுயமரியாதைக் கழகத்தில் தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்டார். இந்த சமூக, கலாச்சாரப் போராட்டத்தின் சமூக அடித்தளம் பிராமணரல்லாதோரில் பெரும் பகுதியினரைக் கொண்டிருக்க வேண்டும் என்று நினைத்த பெரியார் விவசாயத் தொழிலாளர், தாழ்த்தப்பட்ட மக்கள், நாடார்கள், அகமுடையார், இசை வேளாளர், செங்குந்தர், வன்னியகுல சத்திரியர் போன்ற பிரிவினரிடையே இயக்கத்தை எடுத்துச் சென்றார். சௌந்தரபாண்டிய நாடார், ரெட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா போன்ற பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சமூகத் தலைவர்களையும் தன் இயக்கத்தில் இணைத்துக்கொண்டார்.

பிராமணர்கள் (ஆரியர்கள்) கலாச்சார ரீதியாக திராவிடர்களை அடிமைப்படுத்தி வைத்துள்ளனரென்றும், புராணங்களும், சாதிரங்களும், மனுநீதியும் கொளுத்தப்பட வேண்டுமென்றும் கூறினார்.

சுயமரியாதை இயக்க வீரர்கள் தங்கள் பெயரிலும், உடலிலும் இருந்த ஜாதிய அடையாளங்களைத் துறந்தனர். 1932-ஆம் ஆண்டு மட்டும் 1,50,000 பேர் தங்கள் ஜாதிப் பெயர்களைத் துறந்ததாகக் கணக்கு உள்ளது. கலப்புத் திருமணங்கள் நடத்தப்பட்டன. குழந்தைத் திருமணம், வரதட்சிணைமுறை கண்டனம் செய்யப்பட்டன. விதவை மறுமணத்துக்கு உற்சாகம் அளிக்கப்பட்டது. பெண்களுக்கு சொத்துரிமையும், விவாகரத்து உரிமையும் கோரப்பட்டது. மனித சிந்தனையின் மீது சாதியமும், மதமூட நம்பிக்கைகளும், கட்டியிருந்த சங்கிலிகளை அறுத்து, வாய்ப்பளித்தால் எப்பிறப்பைச் சேர்ந்தவரும் முன்னேற முடியும் என்ற நம்பிக்கையை இளைஞர்கள், பெண்கள் மத்தியில் உருவாக்குவதில் சுயமரியாதை இயக்கம் பெரும் பங்காற்றியது.

மத நம்பிக்கையிலிருந்து மக்களை விடுவித்து, பகுத்தறிவுப் பாதையில் திருப்பிவிடும் வகையில் புரட்சிகரமான தீர்மானங்களை சுயமரியாதை இயக்கம் நிறைவேற்றியது. வழிபாட்டுக்கென்று ஒரு பைசா கூட தமிழர்கள் செலவழிக்கக்கூடாது, புதிதாகக் கோவில்கள் கட்டக்கூடாது, கோவில் வருமானத்தைக் கொண்டு தொழில்நுட்பக் கல்வி, தொழிற்கல்வி, கல்வி தொடர்பான ஆராய்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். கோவில் திருவிழாக்கள் நடத்துவதை விட்டு பொது சுகாதாரம் போன்ற பிரச்சினைகளைப்பற்றிய கண்காட்சிகள் நடத்தப்பட வேண்டும்.

மேற்கூறிய தீர்மானங்களை பிராமணர்கள் மட்டும் கண்டிக்க வில்லை. நீதிக்கட்சி நடத்திய பிராமணரல்லாதோரும் நிராகரித்தனர். அதிகாரப் பங்கீட்டில் பிராமணர்களை விரோதியாகப் பார்த்த நீதிக்கட்சி தலைவர்கள் பலரும், சமூக கலாச்சாரத்துறைகளில் பிராமணியம் பிரதிநிதித்துவப்படுத்திய நிலப்பிரபுத்துவக் கலாச்சார மதிப்பீடுகளிலிருந்து அதிகம் மாறுபடவில்லை. பிராமணரல்லா தோர் இயக்கத்தின் இந்த முரண்பாடு தீர்க்கப்படாத ஒன்று. சமூக சீர்திருத்தம் என்ற கட்டத்திலிருந்து சோஷலிஸம் என்ற அடுத்த கட்டத்துக்கு பெரியார் முன்னேறிச் சென்றபோது இந்த முரண்பாடு மேலும் முற்றியது.

ரஷ்யப் புரட்சியில் தொழிலாளி வர்க்க ஆட்சி ஏற்பட்டதன் வீச்சும், முதல் உலகப்போருக்குப்பின் ஏற்பட்ட பெரும் முதலாளித்துவ நெருக்கடியின் மோசமான தாக்கமும் புதிதாய்த் தோன்றி எழுந்துவரும் தொழிலாளி வர்க்கத்தினிடையே சோஷலிஸ மாற்றத்துக்கான ஒரு வேட்கையைத் தோற்றுவித்தது. 1920-க்கும் 1930-க்கும் இடைப்பட்ட இக்காலகட்டத்தில் சென்னை மாகாணத்திலிருந்து தொழிற் சாலைகள், தொழிற்சங்கங்களின் எண்ணிக்கை 511-லிருந்து 1330 ஆக உயர்ந்தது. ஏறக்குறைய ஒரு லட்சமாக இருந்த தொழிலாளர் எண்ணிக்கை 1,90,500 ஆக உயர்ந்தது. இடதுசாரித் தலைவர்களான சிங்காரவேலு செட்டியார், ப.ஜீவானந்தம் போன்றோர் இடதுசாரி கருத்துக்களை மக்களிடம் எடுத்துச்சென்றனர்.

இடதுசாரித் தலைவர்களுக்கும் பெரியாருக்கும் நெருக்கம் ஏற்பட்டது. பெரியாரின் உலகப்பார்வையில் ஒரு புரட்சிகர மாற்றமும் ஏற்பட்டது. இந்தக் காலகட்டத்தில் அவருடைய கருத்துக்கள் எவ்வளவு ஆழம் பெற்றன என்பதற்கு ஒரு சான்று:

சாதாரணமாய் தீண்டாமை முதலிய ஜாதி வித்தியாசத்துக்கு அடிப்படையாய் இருப்பது பொருளாதார தத்துவமேயாகும். ஜாதி வித்தியாசம் என்பது ஏதோ ஒரு முட்டாள்தனத்தினால் ஏற்பட்டது என்று சொல்வதை ஒருநாளும் ஒப்புக்கொள்ள முடியாது. அது மிகவும் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட முன் ஜாக்கிரதையான சுயநல அயோக்கியத்தனத்தால் எற்படுத்தப்பட்டதாகும். அந்நிலை கட்டுப்பாடாகவும் நிலையாகவும் இருப்பதற் காக சாதிர ஆதாரங்களும் மதக்கோட்பாடுகளும் ஏற்படுத்தப்பட்டன. ஆகவே மக்களுக்குள் உண்மையான ஒற்றுமை ஏற்படவேண்டு மானால் தீண்டாமை நீங்கி உண்மையான சமத்துவம் ஏற்பட வேண்டுமானால் மதங்கள் ஒழிந்து பொருளாதாரத்துறையில் மக்கள் எல்லோரும் சமத்துவத்துடன் இருக்கும்படியான காரியங்கள் எற்பட்டால் ஒழிய மற்றெந்த வழியாலும் சாத்தியப்படக்கூடியது அல்ல என்றே சொல்லுவோம்.

அரசியல் பொருளாதார சமூக விடுதலைக்கான ஒரு அருமையான அரசியல் திட்டத்திற்கான கருவினை இந்த உரையில் பார்க்கலாம்.

சோவியத் யூனியன் பயணமும் பிரிட்டிஷ் இடதுசாரி தொழிற் சங்கத் தலைவரான சக்லத் வாலாவின் சந்திப்பும் ஒரு பெரும் சோஷலிச தாக்கத்தை பெரியாருக்குள் ஏற்படுத்தின. சுயமரியாதை இயக்கத்துடன் இணையாக சமதர்மக் கட்சி உருவாக்கப்பட்டது. சென்னை மாகாணத்தின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் சோஷலிசக் கருத்துக்களை பெரியாரும் சுயமரியாதை இயக்க வீரர்களும் எடுத்துச்சென்றனர். சுயமரியாதைக் கூட்டங்களின் முடிவில் முதலாளித்துவம் ஒழிக, சோஷலிசம் வாழ்க என்று மக்கள் எழுந்து நின்று குரல்கொடுத்த அற்புதம் நிகழ்ந்தது. நிலப்பிரபுத்துவ அமைப்பின் பிற்போக்கு கலாச்சார உணர்வுகளிலிருந்து ஜனநாயக, சோஷலிச உணர்வை நோக்கி மக்களின் கணிசமான  ஒரு பகுதியினரை திருப்பியதில் பெரியாரின் பங்கு மகத்தானது.

சுயமரியாதை, சீர்திருத்தம், பிராமணர் அல்லாதோர் இயக்கம் என்ற பாதையில் போய்க்கொண்டிருந்த பெரியார், புரட்சிப் பாதையில் நடமாடத் தொடங்கியதும் இரண்டு பகுதியினர் கலவரமடைந்தனர். நீதிக்கட்சியிலும் சுயமரியாதை இயக்கத்திலும் இருந்த நிலவுடமை யாளர்களும் சிறுமுதலாளிகளும் ஒருபுறம். ஏகாதிபத்திய பிரிட்டிஷ் ஆட்சி மறுபுறம். பெரியார் மீது இரு பக்கங்களில் இருந்தும் தாக்குதல். வர்க்க நலன்களுக்கு ஊறு வந்ததால் சிங்காரவேலருடன் சேர்ந்து பெரியார் இயற்றிய ஈரோட்டுத் திட்டத்தைக் கைவிட்டு சீர்திருத்தப்பாதைக்கு திரும்ப வேண்டும் என்று ஒரு பகுதியினர் கூற 1934-இல் கம்யூனிச இயக்கத்தை தடை செய்த பிரிட்டிஷ் அரசு, சுயமரியாதை, சமதர்ம இயக்கத்தின் மீதும் நேரடித் தாக்குதல் தொடுத்தது.

பெரியார் எந்தப்பக்கம் போனார் என்பது வரலாறு! தமிழகத்தில் முற்போக்கு அரசியல் தடத்தையே மாற்றிப்போட்ட முடிவு அது.

இடதுசாரித் தலைவர்களுடன் தொடர்பிருந்த காலத்திலேயே பணக்காரர்களும் நமக்கு வேண்டும் என்ற நிலை எடுத்த பெரியார் பிராமணர் அல்லாதோர் மற்றும் சுயமரியாதை இயக்கத்திற் குள்ளிருந்த அடிப்படையான மேற்குறிப்பிட்ட முரண்பாடுகளை தீர்த்து முன்னேறவில்லை.

1936-இல் ராஜாஜி தலைமையில் காங்கிர ஆட்சிக்கு வந்ததும் அதுவரை பிராமணர் அல்லாதோர் இயக்கம் அடைந்த சமூக, அரசியல் பலன்கள் (வகுப்புவாரி பிரதிநிதித்துவம், தேவதாசிமுறை ஒழிப்பு, பால்ய விவாக தடுப்பு, அறநிலையத்துறை மசோதா) காங்கிரஸ்-பிராமண ஆட்சியில் அடிபட்டுவிடும் என அவர் அஞ்சினார். அவரை சோஷலிசப் பாதையில் வைத்திருப்பதற்கான இடதுசாரி அமைப்போ அரசியல் திட்டமோ நிலைபெற்றிருக்க வில்லை.

இந்நிலையில் நீதிக்கட்சியின் பக்கம் பெரியார் சென்றார். ராஜாஜி அரசு, பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக்கியது. விடுதலை இயக்க வீச்சிற்கு முன்னால் நிலைகுலைந்து போயிருந்த பிராமணர் அல்லாதோர் இயக்கத்துக்கு புத்துயிர் அளித்தது. இந்தி எதிர்ப்புப்போரில் தமிழ் தேசியம் முனைப்புப்பெற்றது. சீர்திருத்தம், சுயமரியாதை என்ற பரிணாமங்களுடன் தமிழ் உணர்வு என்ற புதிய பரிணாமமும் சேர்ந்து பிராமணர் அல்லாதோர் இயக்கம் திராவிடர் இயக்கம் என்ற புதிய வடிவம் பெறுவதற்கான வரைபுள்ளிகள் வைக்கப்பட்டன.

ஆனால் இந்த வரைபடத்தை முழுமையாக்க நீதிக்கட்சியின் ஏகாதிபத்திய ஆதரவுப்போக்கு உதவாது என்பதை சரியாகப் புரிந்துகொண்ட சி.என்.அண்ணாதுரை போன்ற பேச்சாற்றல் மிக்கத் தலைவர்கள் பெரியாரை நேரடியாக எதிர்க்காமல் அவரது உலகப்பார்வைக்கு அப்பாற்பட்ட ஒரு தளத்துக்கு இயக்கத்தைக் கொண்டு சென்றனர்.

விடுதலைப்போரின் வேகத்தில் நீதிக்கட்சி உதிர்ந்துபோக திராவிடர் கழகம் பிறந்தது.

அரசியல் விடுதலைபெற்று பிராமண-காங்கிர ஆதிக்கத்தில் இருப்பதைவிட திராவிட நாடு ஒன்றை தனியாகப்பெற்று பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இயங்க வேண்டும் என்ற நிலை எடுத்த பெரியார் இந்திய சுதந்திரத்தை அங்கீகரிக்கவில்லை. ஆகட் 15 துக்க நாள் என்று அறிவித்தார். இந்த நிலைப்பாட்டில் இருந்து முற்றிலும் மாறுபட்ட அண்ணாதுரை போன்றோர் சுதந்திர இந்தியாவில் ஜனநாயக சாத்தியக்கூறுகளின் தன்மையை உணர்ந்து திராவிடர் கழகத்தை ஒரு முழு முதல் அரசியல் சக்தியாக மாற்றும் வண்ணம் திராவிட முன்னேற்றக்கழகத்தினை ஏற்படுத்தினர்.

ஜமீன்தார் மற்றும் பெருநில உடமையாளர்களுக்கும் புதிதாக மேல் எழுந்து வந்த மத்தியதர வர்க்கத்திற்கும் பிராமணர் அல்லாதோர் இயக்கத்தினுள் நிகழ்ந்த முரண்பாடே புதிய அரசியல் கட்சியாக முடிந்தது.

பெரியார் சோஷலிசப் பாதைக்குச் சென்று மீண்டும் சீர்திருத்தத்திற்குத் திரும்பியது ஒரு குண ரீதியான மாற்றத்தை ஏற்படுத்தியது போலவே சீர்திருத்தம் என்ற தளத்தில் இருந்து முழுயைமான அரசியல் தளத்திற்கு அண்ணாதுரை சென்றதும் திராவிட இயக்கக்கொள்கையில் ஒரு குணமாற்றத்தை ஏற்படுத்தியது. இதனை மூன்று கூறுகளாக இலங்கைத் தமிழ் அறிஞர் கா.சிவத்தம்பி கூறுவார்.

 1. தேர்தல் அரசியலில் பங்குகொள்வது என்ற தீர்மானம் (1956).
 2. நாத்திக நிலையில் இருந்து விடுபட்டு ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற நிலைப்பாடு.
 3. திராவிட நாடு கோரிக்கை கைவிடப்படல்.

சமூக சீர்திருத்தத் தளத்திலிருந்து தேர்தல் அரசியலுக்கு வந்த திமுகவின் வளர்ச்சிக்கு நாத்திகம் ஒரு தடையாக இருக்கும் என்பதால் அக்கொள்கை நிலையிலிருந்து மாறியது. வளர்ந்து வரும் பிரதேச முதலாளித்துவத்திற்கு, இந்தியா என்பது ஒரு பெரும் வணிகச் சந்தையாகவும் மேலெழுந்து வரும் மத்தியதர வர்க்கத்திற்கு வேலைவாய்ப்புச் சந்தையாகவும் இருந்ததால் தனி நாடு கோரிக்கையையும் கைவிட்டது. ஆனால் மத்தியில் ஆட்சி புரிந்த காங்கிர வலுவிழக்கத் தொடங்கிய நேரத்தில் ஒரு பிரதேச சக்தியாக தன்னை அடையாளம் காட்டி, மத்திய அரசு எதிர்ப்பு நிலை எடுத்து நின்றது. வடக்கு வாழ்கிறது. தெற்கு தேய்கிறது என்ற கோஷங்களை விட்டு வடக்குடனான பேர ஆற்றலை வளர்த்துக் கொண்டது. 1972-ல் ஏற்பட்ட பிளவுக்குப் பின் திராவிட இயக்கத்தின் ஒரு கணிசமான பகுதி பிரதேச அரசியலில் இருந்து அகில இந்திய அரசியலுடன் ஐக்கியமாகி மத்திய அதிகாரத்தில் பங்காளியாகும் போக்கு ஏற்பட்டது. காங்கிர முற்றிலுமாக வலுவிழந்து அதற்கு மாற்றாக அகில இந்திய வீச்சுள்ள ஒரு சக்தி எழாத நிலையில் மத்திய ஆட்சியில் வலுவான பங்கு வகிக்கும் நிலைக்கு திராவிட இயக்கம் சென்றது.

சீர்திருத்தம் பகுத்தறிவு என்ற அடிப்படைகளில் இருந்து வெகுதூரம் வந்துவிட்ட நிலையில் தமிழர் என்ற உணர்வினாலும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்டோர் இயக்கம் இது என்ற நம்பிக்கையினாலும் பின்திரண்டு நிற்கும் மக்களின் வாழ்வில்  உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தும் அரசியல் பொருளாதாரத் திட்டம் இல்லாத நிலையில் கொள்கைகளைப் பின்னுக்குத்தள்ளி தனிநபர் அரசியல் முன்னுக்கு வந்துள்ளது. அரசியல் அதிகாரம் மட்டுமே குறிக்கோள் என்று ஆகிவிட்டபிறகு ராமனும் ராவணனும் ஒன்றுதான்-பாஜகவும் காங்கிரசும் ஒன்றுதான்.

முற்போக்கான அரசியல் பொருளாதாரத் திட்டம் திராவிடக் கட்சிகளுக்கு இல்லாதது, பெரியார் காலத்தில் இருந்தே வர்க்க நிலைப்பாட்டினை மேற்கொள்ளாத ஒரு வரலாற்றுப் பலவீனம். பொப்பிலி அரசரை ஆதரித்துக்கொண்டே ஜமீன்தார் அல்லாதார் மாநாட்டினை நடத்தினார்; நாட்டுக்கோட்டை செட்டியார்களை வைத்துக்கொண்டே லேவா தேவிக்காரர் அல்லாதார் மாநாடு நடத்தினார்; உயர்சாதி இந்துக்களை தலைவராகக் கொண்டு தீண்டாமை விலக்கு மாநாடு நடத்தினார்; தரகு வணிகர்களும் நிலப்பிரபுக்களும் அமர்ந்த மேடையில் ஏகமனதாக சமதர்மத்தீர்மானம் இயற்றப்பட்டது என்று கோ.கேசவன் பெரியாரை விமர்சித்தது போலவே நிலவுடமை யாளர்களின் ஆதரவை வைத்துக்கொண்டே நிலச்சீர்திருத்த சட்டத்தை இயற்றியது சமூக பொருளாதார நீதிக்கு எப்படி வழி செய்ய முடியும்?

அரசு அதிகார எந்திரத்திலும் சமூக அளவிலும் பிராமண மேலாண்மையை நீக்கி எல்லா சமூகத்தவருக்கும் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கிடைக்கச் செய்யும் ஜனநாயக மயமாக்கும் போக்கிற்கு திராவிடஇயக்கம் தலைமை வகித்தபோதிலும் ஏறக்குறைய 40 ஆண்டுகால திராவிட ஆட்சியில் தலித்துகளுக்கு கல்வியிலும் அரசுப்பதவிகளிலும் நியாயமாகக் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளன என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதேபோல் சமூக அளவிலும் பல இடங்களில் தீண்டாமையின் வடிவங்கள் நிலவுகின்றன. வன்முறையும் நடக்கிறது. அரசியல் அதிகாரம் இருந்தபோதிலும் திராவிட இயக்கத்தால் ஜனநாயக மயமாக்கும் போக்கினை நிறைவு செய்ய இயலவில்லை என்பது தெளிவு. மேலவளவும் தாமிரபரணியும் இதற்குச் சான்றுகள்.

இடஒதுக்கீடு, வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்பவை திராவிட இயக்கச் சாதனைகள். ஆனால் இட ஒதுக்கீடு என்பது அரசாங்க வேலைகளில்தான். தனியார்மயம், உலகமயம், தாராளமயம் என்ற பெயரில் வேலைவாய்ப்புகளே குறைந்துகொண்டிருக்கும் நேரத்தில் இடஒதுக்கீடு என்ற கொள்கைக்கு குந்தகம் விளைந்துகொண்டிருக்கும் வேளையில் தெளிவான பொருளாதாரக் கண்ணோட்டமும் வர்க்கப்பார்வையும் இல்லாத திராவிட இயக்கம் எப்படி சமூக நீதியைக் காக்கப்போகிறது. உலகம் முழுவதும் நிதிமூலதனத்தின் தாண்டவம் வேலை வாய்ப்புகளையும், நீர், நிலம், காற்று போன்ற மனிதகுலத்தின் பொதுச்சொத்துக்களையும் சூறையாடிக் கொண்டிருக்கிறது. காலனி ஆதிக்க காலத்தைவிட வேகமாக மூன்றாம் உலகநாட்டு மக்களை வறுமையிலும் துயரத்திலும் ஆழ்த்திக் கொண்டிருக்கிற பாசிச சக்திகள் பன்முக கலாச்சார தன்மைகளை ஒருமுகப்படுத்த முனைந்துகொண்டிருக்கின்றன. ஏகாதிபத்தியம் இராக்கிலும், ஆப்கானிதானத்திலும் தன் உண்மையான முகத்தைக்காட்டி வருகிறது. தனி மனிதர்கள் மட்டுமல்ல. பல நாடுகளில் பொருளாதார சுதந்திரமும் சுயமரியாதையும் கேள்விக்குள்ளாக்கப்பட்டு வருகின்றன. இந்த முயற்சிகளுக்கெல்லாம் எதிர்ப்பலைகளும் எழுந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த எதிர்ப்புக்கு இன்றும் கூட ஆயுதமாகப் பயன்படும் ஆற்றலைக் கொண்டவைதான் 1930-களில் பெரியார் முன்வைத்த சுயமரியாதையும் சமதர்மமும்.