மதச்சார்பின்மையை காக்க சமரசமின்றி போராடும் மார்க்சிஸ்ட் கட்சி

(குரல் : கணேசன்)

  • அன்வர் உசேன்

இந்திய அரசியல் இயக்கங்களில் மதச்சார்பின்மையை காக்க துளி சமரசமும் இல்லாமல் போராடுவது மார்க்சிஸ்ட் கட்சிதான் எனில் மிகை அல்ல. மதச்சார்பின்மை என்பது இந்திய ஜனநாயகத்திற்கும் ஒற்றுமைக்கும் மிகவும் இன்றியமையாத கோட்பாடு என கட்சி ஆழமாக மதிப்பீடு செய்துள்ளது. எனவேதான் தனது திட்டத்திலேயே கட்சி கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது:

“மதச்சார்பினமை கோட்பாடுகள் அமலாக்குவதற்கு கட்சி சமரசமில்லாத போராட்டத்தை நடத்தும். இந்த கோட்பாடுகளிலிருந்து நழுவுவதற்கு செய்யப்படும் மிகச் சிறிய முயற்சியை கூட அம்பலப்படுத்த வேண்டும்; அதற்கு எதிராக போராட வேண்டும்.”  (பாரா: 5.8)

அனைத்து மதங்களையும் சமமாக பாவிப்பதுதான் மதச்சார்பின்மை என முதலாளித்துவ கட்சிகள் முன்வைக்கின்றன. மாறாக அரசின் செயல்பாடுகளிலும் அரசியலிலும் மதம் தலையிடக்கூடாது என்பதுதான் உண்மையான மதச்சார்பின்மை என கட்சி திட்டம் அழுத்தமாக முன்வைக்கிறது.

மதச்சார்பின்மையை பாதுகாக்க மதவாதத்தை எதிர்த்து மூன்று தளங்களில் மார்க்சிஸ்ட் கட்சி போராடுகிறது. அவை:

  1. சித்தாந்த கருத்தியல் தளம்
  2. அரசியல் தளம்
  3. நடைமுறை போராட்ட களம்.
சங்பரிவாரத்திற்கு எதிராக கருத்தியல் போராட்டம்!

சித்தாந்த கருத்தியல் தளத்தில் சங்கபரிவாரம் கூடுதல் முனைப்புடன் செயல்படுகிறது. கடந்த கால வரலாற்றை மாற்றி எழுத கடும் முயற்சிகள் நடக்கின்றன. குறிப்பாக இந்து-முஸ்லீம் ஒற்றுமை குறித்த அனைத்து வரலாற்று பதிவுகளையும் அழிக்க முயல்கின்றனர்.

இந்திய வரலாற்றின் மத்திய காலம் முரண்பாடுகளும் ஒற்றுமையும் கலந்த கலவையாகவே இருந்தது. சங்பரிவார அமைப்புகள் திட்டமிட்டு ஒற்றுமை அம்சங்களை மக்களின் கவனத்திற்கு வருவதை தடுக்கின்றனர். முரண்பாடுகளை மட்டுமே மிகைப்படுத்தி பொய் பிரச்சாரம் செய்கின்றனர். இதற்கு மாறாக மார்க்சிஸ்ட் கட்சியும் இடதுசாரி கருத்தியல் வல்லுநர்களும் மத்தியகாலத்தின் அனைத்து அம்சங்களையும் மக்களிடம் கொண்டு செல்கின்றனர். குறிப்பாக ஒற்றுமை அம்சங்களுக்கு அழுத்தம் தருகின்றனர்.

ஆங்கிலேயர்களுக்கு எதிராக 1801 மற்றும் 1806ல் நடந்த தென்னிந்திய கிளர்ச்சிகளும் 1857ல் நடந்த வட இந்திய கிளர்ச்சியும் மிக வலுவான இந்து- முஸ்லிம் ஒற்றுமை எனும் அடித்தளத்தில் பிரிட்டஷாருக்கு சவால்விட்ட மாபெரும் போராட்டங்கள் ஆகும். இந்துமுஸ்லிம்களிடையே உருவான இந்த மகத்தான ஒற்றுமையின் எந்த தகவலும் மக்களுக்கு சென்று அடையக் கூடாது என சங் பரிவாரம் கண்ணும் கருத்துமாக உள்ளது.

எனவேதான் வரலாற்றை மாற்றி எழுத கடுமையான முயற்சிகள் நடக்கின்றன. இதற்கு எதிராக மார்க்சிஸ்ட் கட்சி வலுவான கருத்தியல் போராட்டத்தை தொடர்ந்து சமரசமில்லாமல் நடத்துகிறது. இந்த கருத்தியல் போராட்டம் மத ஒற்றுமையையும் மதச்சார்பின்மையையும் வலுப்படுத்திட உதவும் என கட்சி நம்புகிறது.

சங்பரிவாரத்தின் அரசியல் அதிகாரத்தை தடுத்த மார்க்சிஸ்ட் கட்சி:

சங் பரிவாரத்தின் அரசியல் முகமாக விளங்குவது பாரதிய ஜனதா கட்சி ஆகும். பா.ஜ.க. ஆட்சி அதிகாரத்தில் இருந்தால் தனது இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை அமலாக்குவதற்கு பொன்னான வாய்ப்பு கிடைக்கும் என்பதை ஆர்.எஸ்.எஸ் அறிந்திருந்தது. ஆனால் மார்க்சிஸ்ட் கட்சி வாய்ப்பு கிடைத்த பொழுதெல்லாம் பா.ஜ.க. அரசியல் அதிகாரத்தில் அமர்வதை தடுத்துள்ளது.

1977ல் ஜனதா கட்சி மத்தியில் ஆட்சி செய்தது. ஜனதா கட்சிக்குள் ஆர்.எஸ்.எஸ்.ல் உறுப்பினராக இருப்பது குறித்து முரண்பாடுகள் வெடித்தன. . ஜனசங்கம் மற்றும் பழைய காங்கிரஸ் ஆர்.எஸ்.எஸ். பக்கமும் ஏனையோர் எதிர் பக்கமும் நின்றனர். ஆர்.எஸ்.எஸ்.க்கு எதிராக நின்ற பிரிவை கட்சி ஆதரித்தது. இதன் மூலம் சங்பரிவாரம் அரசு இயந்திரத்தில் தொடர்ந்து பங்கு பெறுவதை கட்சி தடுத்தது.

1989ல் வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணி ஒரு பக்கம் இடதுசாரிகளின் ஆதரவும் மறுபக்கத்தில் பா.ஜ.க.வின் ஆதரவுடன்தான் ஆட்சி அமைக்க முடியும் எனும் சூழல் உருவானது. எனவே வி.பி.சிங் ஆட்சியில் வலுவான பங்காளியாக இணைந்திட 85 உறுப்பினர்களை கொண்டிருந்த பா.ஜ.க. கடும் முயற்சி செய்தது. பா.ஜ.க. ஆட்சியில் பங்கேற்றால் தேசிய முன்னணிக்கு ஆதரவு இல்லை என மார்க்சிஸ்ட் கட்சி வலுவான நிலைபாடு எடுத்தது. இதன் விளைவாகவே பா.ஜ.க. வெளியிலிருந்து ஆதரவு தரவேண்டிய நிலை ஏற்பட்டது.

தாம் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடுவோம் எனும் இறுமாப்புடன்தான் பா.ஜ.க. 2004ம் ஆண்டு தேர்தலை சந்தித்தது. ஆனால் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. பா.ஜ.க.வின் ஆட்சியை தடுத்திட மார்க்சிஸ்ட் கட்சியும் இடதுசாரிகளும் காங்கிரஸ் கூட்டணிக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்தன. இந்திய மக்கள் அளித்த இந்த மகத்தான ஆதரவை காங்கிரஸ் கூட்டணி சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. நவீன பொருளாதார கொள்கைகளில் கொண்ட மோகத்தால் 2014ம் ஆண்டு ஆட்சியை பா.ஜ.க.விற்கு தாரை வார்த்த்து காங்கிரஸ்!

பாபர் மசூதி இடிப்பும் பா.ஜ.க. ஆட்சிகள் கலைப்பும்:

இந்திய மக்களின் மத ஒற்றுமையை வலுவாக சீர்குலைத்தது இரு நிகழ்வுகள். ஒன்று 1992ல் பாபர் மசூதி இடிப்பு. இரண்டாவது 2000ம் ஆண்டு குஜராத் கலவரங்கள். முன்னதாக ராஜிவ் காந்தி ஆட்சி மதச்சர்பின்மையை சீர்குலைக்கும் விதத்தில் சில தவறுகளை செய்தது. ஷா பானு வழக்கில் முஸ்லிம் மதவாத அமைப்புகளுக்கு ஆதரவாக சட்ட திருத்தமும் அதனை தொடர்ந்து  இந்து மதவாத அமைப்புகளுக்கு இராமர் கோவில்- பாபர் மசூதி வளாகத்தில் செங்கல் பூஜை அனுமதியும் ராஜிவ் காந்தி ஆட்சி கொடுத்தது. 1990ல் மதவாதத்தை வலுப்படுத்தும் நோக்கில் அத்வானி ரதயாத்திரை நடத்தினார். இது இறுதியில் நரசிம்மராவ் ஆட்சியில் பாபர் மசூதி இடிப்பில் முடிந்தது.

இந்த கால கட்டம் முழுதும் மார்க்சிஸ்ட் கட்சி மதச்சார்பின்மையை பாதுகாக்க வலுவான முயற்சிகளை எடுத்தது. இந்தியா முழுதும் உள்ள மதச்சார்பின்மை சக்திகளை திரட்டியது. அத்வானி ரத யாத்திரை மேற்கு வங்கத்தில் நுழைந்தால் அத்வானி கைது செய்யபப்டுவார் என தோழர் ஜோதிபாசு எச்சரித்தார். அகில இந்திய அளவிலும் ஒவ்வொரு பகுதியிலும் மதச்சார்பின்மைக்காக கட்சி செய்த பிரச்சாரங்கள் மிக ஆழமானவை! குஜராத் கலவரங்களின் கொடூர தன்மைகளை முழுதும் சேகரித்து ஆவணப்படுத்தி அவற்றை இந்திய மக்களின் கவனத்திற்கு கட்சி கொண்டு வந்த்து.

1992ம் ஆண்டு பாபர் மசூதி இடிப்பை தொடர்ந்து அரசியல் சட்டத்திற்கு விரோதமாக செயல்பட்டதற்காக உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள பா.ஜ.க. ஆட்சிகளை கலைக்க வேண்டும் எனும் கோரிக்கை வலுவாக எழுந்தது. மக்களால் தேர்நெடுக்க்ப்பட்ட மாநில அரசாங்கங்ககளை மத்திய அரசாங்கம் அகற்ற கூடாது என்பதுதான் மார்க்சிஸ்ட் கட்சியின் வலுபவான நிலை! மத்திய அரசாங்கத்தின் ஆட்சி கலைப்புக்கு முதல் பலி 1957ல் தோழர் ஈ.எம்.எஸ். தலைமை தாங்கிய அரசாங்கம்தான்! பல முறை மத்திய அரசாங்கம் மாற்று கொள்கைகளை கொண்ட மாநில அரசாங்கங்களை கலைத்துள்ளது. இந்த அரசியல் சர்வாதிகாரத்தை கட்சி கடுமையாக எதிர்த்து வந்துள்ளது.

எனினும் பாபர் மசூதி இடிப்பை அமனுமதித்த உ.பி. பா.ஜ.க. அரசாங்கம் மதச்சார்பின்மை மீது மிகப்பெரிய தாக்குதலை தொடுத்தது. அரசியல் சட்டத்தை அப்பட்டமாக மீறியது. மசூதியை பாதுகாப்போம் என உச்ச நீதிமன்றத்தில் தந்த வாக்குறுதியை உதாசீனப்படுத்தியது. இதே நிலைதான் ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச அரசாங்கங்கங்கள் எடுத்தன. எனவே இந்த அரசாங்கங்கங்கள் கலைக்கப்பட்ட பொழுது மதச்சார்பின்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில் கட்சி இதனை வரவேற்றது. எனினும் இது ஒரு விதிவிலக்கு எனவும் எல்லா சூழல்களுக்கும் இதனை பொருத்துவது கூடாது எனவும் கட்சி கருதியது.

மதவாத கட்சியான பா.ஜ.க. தனது சுயநலனுக்காக அப்துல் கலாம் அவர்களை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வைத்தது. தி.மு.க. காங்கிரஸ் உட்பட பல கட்சிகள் அப்துல் கலாமை ஆதரித்த பொழுதும் மார்க்சிஸ்ட் கட்சியும் இடதுசாரி கட்சிகளும் எதிர் வேட்பாளரை களம் இறக்கின. பிரச்சனை அப்துல் கலாம் அல்ல! மாறாக மதசார்பின்மைதான் பிரச்சனை! பா.ஜ.க. முன்நிறுத்தும் ஒரு வேட்பாளரை எப்படி ஆதரிக்க முடியும்?

மதச்சார்பின்மை பாதுகாக்க உயிர் தியாகம்

மதச்சார்பின்மையை பாதுகாக்க கருத்தியல் மற்றும் அரசியல் போராட்டம் மட்டுமல்ல; நேரடி களத்திலும் மார்க்சிஸ்ட் கட்சி உயிர் தியாகம் செய்துள்ளது. மதவாதம் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள கொலை வெறி செயல்களில் ஈடுபடுகிறது. கட்சி அத்தகைய கொலை வெறி  தாக்குதல்களை சந்தித்துள்ளது.

குறிப்பாக கேரளா, மேற்கு வங்கம் மற்றும் தற்பொழுது திரிபுராவில் அத்தகைய தாக்குதல்கள் கட்சி மீது ஏவப்படுகின்றன. மிக அதிகமான தாக்குதல்கள் கேரளாவில் நடைபெற்றுள்ளன. நூற்றுக்கணக்கான ஊழியர்கள் மதவாதத்திற்கு எதிராகவும் மதச்சார்பின்மையை பாதுகாக்கவும் உயிர் தியாகம் செய்துள்ளனர்.

பெரும்பானமை மதவாதம் மட்டுமின்றி சிறுபான்மை மதவாதமும் இத்தகைய கொலை வெறி தாக்குதல்களில் ஈடுபடுகிறது. சமீபத்தில் தோழர் அபிமன்யூவின் கொலை இதற்கு உதாரணம். இதே போல 1980களில் சீக்கிய மதவாதம் அடிப்படையில் இயங்கிய காலிஸ்தான் அமைப்பினர் பல மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்களை கொன்றனர். மதச்சர்பின்மையை பாதுகாக்க இத்தகைய உயிர்தியாகம்  மார்க்சிஸ்ட் கட்சி அளவிற்கு வேறு எந்த இயக்கமும் செய்யவில்லை என உறுதியாக கூற முடியும்.

மதச்சார்பின்மையும் சிறுபான்மை மதவாதமும்:

மதச்சார்பின்மைக்கு ஆபத்து மிக அதிகமாக பெரும்பான்மை மதவாதத்திடமிருந்துதான் வருகிறது. எனினும் சிறுபான்மை மதவாதமும் மதச்சார்பின்மையை விரும்புவது இல்லை. மார்க்சிஸ்ட் கட்சி சிறுபான்மை மதவாதத்தை விமர்சிப்பது இல்லை எனும் குற்றச்சாட்டு கூறப்படுகிறது. இது உண்மைக்கு மாறானது.

1980களின் மத்தியில் ஷா பானு வழக்கு மதச்சார்பின்மைக்கு சவாலாக முன்வந்தது. முஸ்லீம் பெண்களுக்கு ஜீவனாம்சம் உரிமை இல்லை என முஸ்லீம் அமைப்புகள் போர் கொடி தூக்கின. ஏனைய பெண்களை போலவே முஸ்லிம் பெண்களுக்கும் ஜீவனாம்சம் உரிமை உண்டு என மார்க்சிஸ்ட் கட்சி உறுதியான நிலை எடுத்தது.

இந்த கால கட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியிடமிருந்து பிரிந்த அகில இந்திய முஸ்லீம் லீக் எனும் அமைப்பு கேரளாவில் இடது ஜனநாயக அணியின் ஒரு அங்கமாக இருந்தது. இந்த அமைப்பு ஷா பானு வழக்கில் முஸ்லீம் அமைப்புகளின் நிலைபாடை ஆதரிக்க வேண்டும் எனவும் ஜீவனாம்சம் உரிமை முஸ்லிம் பெண்களுக்கும் உண்டு எனும் தனது நிலையை கட்சி மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் வற்புறுத்தியது. ஆனால் கட்சி இதனை நிராகரித்துவிட்டது.

இதன் காரணமாக தான் இடது ஜனநாயக முன்னணியிலிருந்து விலகப்போவதாக அகில இந்திய முஸ்லீம் லீக் பயமுறுத்தியது. எனினும் கட்சி தனது நிலைபாடில் மாறவில்லை. பின்னர் அகில இந்திய முஸ்லீம் லீக் வெளியேறியது. இந்த அரசியல் நிகழ்வை ஆய்வு செய்த மார்க்சிஸ்ட் கட்சி ஒரு முக்கியமான முடிவை எடுத்தது. கேரளாவில் மட்டுமல்ல; இந்தியா முழுதும் மதம் அல்லது சாதியை மட்டுமே  சார்ந்து இயங்குகின்ற எந்த ஒரு கட்சியுடனும் தேர்தல் புரிதல் உட்பட எவ்வித அரசியல் புரிதலுக்கும் முயலக்கூடாது எனும் முடிவை கட்சி எடுத்தது. எனவேதான் முஸ்லீம் லீக் கட்சியுடன் எவ்வித தேர்தல் புரிதலுக்கும் மார்க்சிஸ்ட் கட்சி உடன்பட்டதே இல்லை.

முத்தலாக் உட்பட பல பிரச்சனைகளில் மார்க்சிஸ்ட் கட்சி முஸ்லீம் பெண்களுக்கு ஆதரவாக உறுதியான நிலை எடுத்துள்ளது. அதன் காரணமாக முஸ்லிம் மதவாதிகளின் தாக்குதல்களையும் கட்சி சந்தித்துள்ளது. அதே சமயத்தில் முத்தலாக் பிரச்சனையை கிரிமினல்மயமாக்கும் மோடி அரசாங்கத்தின் வஞ்சக அணுகுமுறையை கட்சி கடுமையாக எதிர்க்கிறது.

சமீபத்தில் நடந்த 22வது கட்சி மாநாடு அரசியல் தீர்மானம் சிறுபான்மை மதவாதம் குறித்து கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது: “பெரும்பான்மை மதவாதத்தின் தாக்குதல்கள் சிறுபான்மை மதவாதம் மற்றும் தீவிரவாதத்தின் நடவடிக்கைகளுக்கு களம் அமைத்து தருகின்றன. சிறுபான்மை மக்களின் நலன்களுக்கே கூட இத்தகைய போக்குகள் ஆபத்தானவை. இந்துத்துவா சக்திகளுக்கு எதிராக மக்களின் ஒற்றுமையை உருவாக்க (சிறுபான்மை மதவாதத்தை முன்நிறுத்தும்) இத்தகைய போக்குகளுக்கு எதிராக போராடுவது அவசியமாகிறது.” (பாரா 2.49)

முஸ்லீம் மக்களின் நலன்களுக்காக உறுதியாக குரல் தரும் அதே சமயத்தில் மதச்சார்பின்மையை பாதுகாக்க சிறுபான்மை மதவாதத்தை எதிர்க்க கட்சி தயங்கியது கிடையாது..

மதச்சார்பின்மை எதிர்கொள்ளும் நவீன சவால்கள்!

நிகழ்காலத்தில் குறிப்பாக மோடி ஆட்சிக்கு பின்னர் மதச்சார்பின்மைக்கு உருவாகியுள்ள புதிய சவால்களை உள்வாங்கிகொள்வது மிகவும் அவசியமாகிறது. சில பத்தாண்டுகளுக்கு முன்பு பெரும்பாலும் உயர் சாதியினரின் ஒரு பகுதியினர், குறிப்பாக மத்தியதர வர்க்கத்தினரின் ஒரு பிரிவினர் மதவாதத்தால் ஈர்க்கப்பட்டனர் . ஆனால் இன்று சாதாரண உழைக்கும் மக்களிடையேயும் மதவாதம் ஊடுருவியுள்ளது.

உதாரணத்திற்கு குஜராத்தில் முஸ்லீம்கள் மீதான தாக்குதல்களை திட்டமிட்டது  உயர் சாதியினர். ஆனால் களத்தில் அதனை அமலாக்கியது அதாவது முஸ்லிம்கள் மீது கொலை உட்பட வன்முறையை நிகழ்த்தியது பிற்படுத்தப்பட்ட, தலித் மற்றும் ஆதிவாசி மக்கள்தான் என்கிறார் ராம் புண்ணியானி எனும்  சமூக ஆய்வாளர். சிறுபான்மை மதவாதமும் உழைக்கும் மக்களை மதவாத செயல்களில் ஈடுபடுத்துகிறது. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித் மக்கள் உட்பட உழைக்கும் மக்களிடமும் கூட மதவாதம் தனது நச்சு கொடுக்குகளை பரவவிட்டுள்ளது..

மதவாதம் வெற்றிடத்தில் இயங்குவது இல்லை. நவீன தாராளமய பொருளாதார கொள்கைகள் அமலாக்கத்தின் பின்னணியில் மதவாதம் செயல்படுகிறது. நவீன தாராளமய பொருளாதார கொள்கைகள் மிக அதிகமாக ஏழைகளை உருவாக்குகிறன. தமது வாழ்வாதரத்தின் எதிர்காலம் குறித்து மிகப்பெரிய கவலை இப்பகுதி மக்களிடம் எழுகிறது. இந்த பொருளாதார சூழலை பயன்படுத்தி  மக்களின் ஒரு பிரிவினரை மதவாதம் ஈர்ப்பது மிகவும் எளிதாக நடக்கிறது. எனவேதான் மதசார்பின்மை கொள்கைகளை உழைக்கும் மக்களிடையே கொண்டு செல்வது மிக அவசியம் என மார்க்சிஸ்ட் கட்சி கருதுகிறது.

பொருளாதார நெருக்கடி அதிகமாக உள்ள காலகட்டத்தில் மோடி போன்ற இந்துத்துவ அரசியல்வாதி எதிர்காலம் குறித்து பொய்யான கனவுகளை முன்வைத்தால் மக்கள் அதனை நம்புகின்றனர். மதச்சார்பின்மையை பின்னுக்கு தள்ளிவிடுகின்றனர். 2014 தேர்தல் மற்றும் அதனை தொடர்ந்து மோடியின் வெற்றி இதனை தெளிவாக்குகிறது. மோடி ஆட்சியில் நவீனதாராளமய கொள்கைகள் வெறித்தனமாக செயல்படுத்தப்படுகின்றன.

அதே மோடி ஆட்சியில் மதவாதமும் பேயாட்டம் ஆடுகிறது. சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் தொடுக்க லவ்ஜிகாத், மாட்டிறைச்சி போன்ற புதிய பிரச்சனைகள் கட்டமைக்கப்படுகின்றன. கிறித்துவ சிறுபான்மை மக்களும் தாக்குதலுக்கு தப்பவில்லை. அரசு அதிகாரத்தை பயன்படுத்தி சங்பரிவாரம் அரசியல் சட்டத்திலிருந்து மதச்சார்பினமை கோட்பாடை அகற்ற எத்தனிக்கின்றனர்.

ஒரு காலத்தில் முதலாளிகளுக்கு மதச்சார்பின்மை காக்கப்பட வேண்டும் எனும் கவலை இருந்தது. 1992ம் ஆண்டு மும்பை கலவரத்தை கண்டித்து ஜே.ஆர்.டி. டாட்டா, ராமகிருஷ்ணா பஜாஜ் ஆகியோர் பகிரங்கமாக அறிக்கைவிட்டனர்.  ஆனால் இன்று நவீன தாராளமய கொள்கைகள் தரும் கொள்ளை இலாபம் முதலாளித்துவத்தின் கண்களை மறைத்துவிட்டது. “மோடி காந்திஜிக்கு இணையானவர்”” “ என அம்பானி பேசியது இதனை தெளிவாக்குகிறது. சமீபகால மதவாத தாக்குதல்களை கண்டித்து எந்த முதலாளியும் வாய் திறப்பது இல்லை.

மதவாதத்தின் ஊற்றுக்கண்ணாக நவீன தாராளமயம்:

மதவாதத்திற்கு உள்ள பல ஊற்றுக்கண்களில் மிக முக்கிய ஒன்றாக நவீன தாராளமய கொள்கைகள் உருவாகியுள்ளன. நவீன தாராளமயக் கொள்கைகளை ஆதரித்து கொண்டே மதவாதத்திற்கு எதிராக மட்டும் குரல் கொடுப்பது முழு பலன் அளிக்காது. மதவாதம், நவீன தாராளமய கொள்கைகள் இரண்டையுமே எதிர்த்து முறியடிக்க வேண்டிய தேவை உள்ளது. துரதிர்ஷ்ட வசமாகவோ அல்லது தமது வர்க்க நலன்கள் காரணமாகவோ இந்த முக்கிய உண்மையை பல அரசியல் சமூக அமைப்புகள் புரிந்து கொள்ள மறுக்கின்றன.

பா.ஜ.க.வை தோற்கடிப்பது மிக முக்கிய அரசியல் கடமைதான்! எனினும் பா.ஜ.க.வின் தோல்வி என்பது ஆர்.எஸ்.எஸ்.ன் தோல்வியாகவும் அமைந்துவிடும் எனும் உத்தரவாதம் இல்லை. இந்திய சூழலை பொறுத்தவரை பா.ஜ.க.வின் தோல்விக்கு பிறகும் நவீன தாராளமய கொள்கைகள் தொடர்ந்தால் அது மதவாதத்திற்கு உகந்த களமாகவே இருக்கும். எனவேதான் மதவாதம் மற்றும் நவீன தாராளமய கொள்கைகள் இரண்டையுமே முறியடிக்க வேண்டிய அவசியம் உள்ளது என மார்க்சிஸ்ட் கட்சி கருதுகிறது.

மதச்சார்பின்மையை பாதுகாக்கும் முழு கடமை உழைக்கும் மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. எனவேதான் மதச்சார்பின்மை குறித்த செயல்பாடுகள் உழைக்கும் மக்கள் வாழும் பகுதிகளில் வலுவாக கொண்டு செல்ல வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. மதவாதத்தை பண்பாடு, கலாச்சார தளங்களிலும் எதிர்கொள்வது அவசியம். மதவாதத்திற்கு எதிரான போரில்  அதன் நவீன வடிவங்கள் முன் நிறுத்தும் சவால்களை முறியடிப்பது அவசிய தேவை. இதனை மார்க்சிஸ்ட் கட்சி உணர்ந்துள்ளது. அதன் அடிப்படையில் மதச்சார்பின்மையை பாதுகாக்க கட்சி இடைவிடாது செயல்படுகிறது. உழைக்கும் மக்களை அணிதிரட்டி மதவாதத்தை தோற்கடிப்பதும் மதசார்பின்மையை உறுதிப்படுத்துவதும் சாத்தியமான ஒன்றே என மார்க்சிஸ்ட் கட்சி உறுதியாக நம்புகிறது.