முற்றுகையின் கீழ் இந்திய ஜனநாயகம்…

 • பிரகாஷ் காரத்

இந்திய மக்களாகிய நாம் நமது தேசத்தின் 75வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் வேளையில், விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் கடந்த பின்பும் கூட, இந்திய நாட்டின் நாடாளுமன்ற ஜனநாயகம் நடைமுறையில் இருக்கிறது என்பது நமது சாதனைகளுள் ஒன்றாகும். இதற்கு முழுமுதற் காரணம், 1950 ஆம் வருடம் நாம் ஏற்றுக் கொண்ட இந்திய அரசியல் அமைப்பு சட்டமும் அதன் பலனாக இந்திய மக்கள் அனைவரின் குரல்களும் அரசியலில் ஒலித்துக்  கொண்டிருப்பதும்தான். இன்றைக்கு இந்திய மக்கள் எழுப்பும் இந்த குரல், இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தில் எழுப்பப்பட்ட குரல்களின் எதிரொலி என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.

இந்திய நாட்டில், முதலாளித்துவ சக்திகளின் குறுகிய பார்வை போன்ற கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் கூட, சுதந்திரம் பெற்று ஏழு பத்தாண்டுகள் கடந்த பின்னரும், நாடாளுமன்ற ஜனநாயகம் என்பது உயிர்ப்புடன் இருக்கிறது. இவ்வளவு காலம் நாடாளுமன்ற ஜனநாயகம் நிலைத்திருப்பதற்கு முக்கிய காரணம், இந்திய மக்களும், ஜனநாயக சக்திகளும் இணைந்து நடத்திய போராட்டங்கள்தான்.

எனினும், நாம் 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலம் இருண்டதாக தெரிகிறது. நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பும், இந்திய அரசியல் அமைப்பு நமக்கு கட்டமைத்து கொடுத்திருக்கிற ஜனநாயகத்தை பாதுகாத்திடும் அடித்தளங்களும் மிகத் தீவிரமான தாக்குதல்களுக்கு உள்ளாகி இருக்கின்றன. இன்றைக்கு முழு அளவிலான சர்வாதிகார போக்கு என்பது தலைதூக்கி வருகிறது. இது இந்திய நாட்டின் ஜனநாயகம் வழங்கியுள்ள அரசு நிறுவனங்கள்  அமைப்புகளின் அதிகாரங்களை குறைத்துவிட்டதால், இந்திய நாட்டின் ஆட்சி அதிகாரம், நீதிமன்றம் மற்றும் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றங்களுக்கு இடையேயான சமநிலையை பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது.

முழு அளவிலான சர்வாதிகாரத்தனம்..

கூடுதலான நாடாளுமன்ற உறுப்பினர்களோடு, 2019ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க., ஒரு கட்சி சர்வாதிகாரத்தை கட்டமைப்பதற்கான இலக்கினை தனக்குத் தானே நிர்ணயித்துக் கொண்டுள்ளது. பா.ஜ.க.வின் இந்த நிர்ணயிப்பிற்கு எதிராக அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரணியில் நின்று கடுமையான எதிர்த்தாக்குதலை நடத்திட வேண்டும். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல்களை ஒடுக்குவது, எதிர்க்கட்சிகள் ஆட்சி புரியும் மாநிலங்களில், ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி ஆட்சிக் கவிழ்ப்பை செய்வது, மத்திய அரசின் சிபிஐ, வருமானவரி, அமலாக்கத்துறை போன்ற   அமைப்புகளை தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களின் மீதும், எதிர்க்கட்சி தலைவர்கள் மீதும்  தாக்குதலுக்கு பயன்படுத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது சர்வாதிகார பா.ஜ.க. அரசு.

நாடாளுமன்றத்தின் மாண்புகளை குறைப்பது, நாடாளுமன்ற நடவடிக்கைகளை சீரழிப்பது என்பது  மோடியின் இரண்டாவது ஆட்சியில் மிகவும் தீவிரத்தன்மையோடு உள்ளது. இந்திய நாடாளுமன்றம் கடந்த 2021 ஆம் ஆண்டில் மொத்தத்தில் 50 நாட்களுக்கும் குறைவாகவே நடைபெற்றுள்ளது. எந்தவொரு மசோதா மீதும் விவாதங்கள் என்பது நடப்பதில்லை; எதிர்க்கட்சிகளுக்கு விவாதங்களுக்கான நேரம் என்பது ஒதுக்கப்படுவது கிட்டத்தட்ட இல்லை என்ற அளவில்தான் உள்ளது. அதே போல், எந்தவொரு மசோதாவும் ஆய்விற்கு உட்படுத்துவது என்பதும் இல்லை. கடந்த UPA ஆட்சியில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 60 முதல் 70 சதவீத மசோதாக்கள், நாடாளுமன்ற நிலைக்குழு அல்லது தேர்வுக்குழுக்களுக்கு அனுப்பப்பட்டன. ஆனால் இந்த சதவீதம் பா.ஜ.க. வின் முதலாம் ஆட்சியில் 23 சதமாகவும், இரண்டாவது ஆட்சியில் 13 சதமாகவும் குறைந்து விட்டன. இவற்றோடு இணைந்து, எதிர்க்கட்சிகள் பிரச்னைகளை எழுப்புவதற்கும், ஓட்டெடுப்பு கோருவதற்கும் நாடாளுமன்றத்தில் மறுக்கப்பட்டு வருகிறது. பல்வேறு மசோதாக்களை பண மசோதாக்களாக (Money Bill) கொண்டு வந்து, ராஜ்ய சபையின் மாண்புகளை தரம் தாழ்த்தி விட்டது மோடி அரசு.

பா.ஜ.க. அரசின் சர்வாதிகாரப் போக்கு, இந்திய அரசியல் அமைப்பு சட்டம் வழங்கியுள்ள பொது மக்களின் ஜனநாயக உரிமைகள் மற்றும் குடிமக்களின் சுதந்திரம் ஆகியவற்றை காலில் போட்டு மிதிப்பது என்கிற இடத்திற்கு ஆட்சியாளர்களை இட்டுச் சென்றுள்ளன.

எதிர்ப்புக் குரல்களை குற்றவாளிகளாக சித்தரித்து தண்டிப்பது, குடிமக்களின் உரிமைகளை நசுக்குவது என்பது சர்வாதிகார மோடி ஆட்சியின் முத்திரையாக மாறிவிட்டது. கொடூரமான சட்டங்களான உவாபா (UAPA)  போன்றவற்றின் மூலம் எதிர்ப்பு குரல்களை நசுக்கும் போக்கு வரலாறு காணாத அளவிற்கு அதிகரித்துள்ளது. 2014 முதல் 2020 ஆம் வருடங்களுக்கு இடையிலான ஆறு வருட காலத்தில் 690 குற்ற வழக்குகள் இந்திய நாட்டு மக்களின் மீது போடப்பட்டுள்ளன. இந்த வழக்குகளின் வாயிலாக 10,552 பேர் கைது செய்யப்பட்டுள்ள கொடூரம் நிகழ்ந்துள்ளது. அவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் அரசியல் செயல்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள், அறிவுஜீவிகள், எழுத்தாளர்கள் என அந்தப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. பீமா கோரேகான் வழக்கில் 16க்கும் மேற்பட்ட சமூக செயல்பாட்டாளர்கள், அறிவு ஜீவிகள் கைது செய்யப்பட்டு சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் மூன்று வருட காலமாக அடைக்கப்பட்டுள்ளனர்.

உச்சநீதிமன்றம் தனது சுயேச்சையான செயல்பாட்டை நிறுத்திவிட்டு அதிகாரிகளின் கைப்பவைகளாக செயல்பட ஆரம்பிப்பதுதான் சர்வாதிகார ஆட்சியின் மோசமான அம்சம். உச்சநீதிமன்றம் ஒரு நிர்வாக நீதிமன்றமாக செயல்படத் துவங்கியுள்ளது. சமீபத்தில் வழங்கப்பட்ட தீர்ப்புகளான ஜாக்கியா ஜாஃப்ரி வழக்கிலும், பண மோசடி வழக்குகளில் அமலாக்கப் பிரிவின் அதிகார வரம்பு பற்றிய வழக்கிலும் உச்ச நீதி மன்றம் குடிமக்களின் உரிமைகள் மீது நிர்வாகத் தாக்குதல்கள் நடத்தியிருப்பதை காண முடியும்.

75 ஆண்டுகால இந்திய வரலாற்றை பார்க்கையில், 1975ஆம் வருடம் ஜூன் மாதம் இந்திராகாந்தி  ஆட்சி காலத்தில், இந்திய ஜனநாயகத்திற்கு நெருக்கடி நிலை என்கிற பெயரில் மிகப் பெரிய தாக்குதல் ஏற்பட்டது. ஆனால் அது 20 மாத காலம் மட்டுமே நீடித்தது.  அந்த காலகட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். சிவில் உரிமைகள் பறிக்கப்பட்டு, அனைத்து பத்திரிக்கைகளும் தணிக்கைக்கு உள்ளாக்கப்பட்டன. அடுத்து வந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோற்கடிக்கப்பட்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஆனால் இன்றைக்கு ஜனநாயகத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ள தாக்குதலானது, எமர்ஜென்சி காலத்தை விட மிகவும் தீவிரமானது; விரிவானது. குடியாட்சி என்கிற தத்துவத்தின் முக்கியமான அம்சங்களான மதச்சார்பின்மை மற்றும் கூட்டாட்சி இரண்டையும் துண்டித்து வருகிறது.

ஏன் இந்த கொடூர வடிவிலான சர்வாதிகாரம் இந்திய நாட்டின் ஜனநாயகத்தை முடக்கத் துடிக்கிறது? இது ஏதோ பிறழ்வோ அல்லது தற்செயலாக ஏற்பட்ட விபத்தோ அல்ல. இது தனிநபர் சர்வாதிகாரப் போக்கு என்றும் நாம் குறிப்பிட முடியாது. இத்தகைய சர்வாதிகாரம் கருக்கொள்வதற்கு பல்வேறு பாசிச சக்திகள் ஒன்றிணைந்து செயல்பட்டுள்ளன என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

அரசியல் ஜனநாயகம் குறித்து அம்பேத்கர் …

இந்திய நாட்டின் அரசியல் அமைப்பு சட்டத்தினை நாட்டிற்கு அர்ப்பணிக்கும் நேரத்தில், டாக்டர். அம்பேத்கர் அவர்கள் கூறியதை தற்போது நினைவு கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. பொருளாதார சமத்துவமும், சமூக நீதியும் வெற்றி பெறாமல் அரசியல் சுதந்திரம் என்பது வெற்றி பெறாது என்று கூறினார். இந்தியாவில் ஜனநாயகம் என்பது வெறும் மேல்பூச்சாக மட்டுமே உள்ளது; அது ஜனநாயகத்திற்கு முற்றிலும் விரோதமானது என்றும் அம்பேத்கர் எச்சரித்தார்.

இவ்வளவு காலமும், தேர்தல் ஜனநாயகம் நடைமுறையில் இருந்தாலும், பொருளாதார மற்றும் சமூக ஜனநாயகம் தோற்றுப் போயுள்ளது. ஆட்சியாளர்கள் தேர்ந்தெடுத்த முதலாளித்துவ பாதை இவற்றையெல்லாம் சீரழித்துவிட்டதோடு, பிராந்திய அளவிலான வேற்றுமைகளையும் அதிகரித்துள்ளது. கடந்த 30 ஆண்டுகாலமாக இந்தியாவில் அமல்படுத்தப்பட்டு வரும் புதிய தாராளமயக் கொள்கைகள், பொருளாதார அசமத்துவத்தை மேலும் மேலும் விரிவுபடுத்தி, இந்திய நாட்டின் வளங்களை எல்லாம் ஒரு சிலரின் கைகளில் கொண்டு சேர்த்திருக்கிறது. மற்றொரு புறம் முதலாளித்துவ வர்க்கம், நிலப்பிரபுக்களிடம் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, சாதிய ஒடுக்குமுறைகளை களைவது போன்ற ஒரு நாடகத்தை மட்டுமே நிகழ்த்தியுள்ளனர்.

அம்பேத்கர் அவர்கள் அரசியல் ஜனநாயகத்திற்கும், பொருளாதார மற்றும் சமூக நிலைமையில் விரிவடைந்து வரும் சமத்துவமற்ற போக்கிற்கும் உள்ள முரண்பாட்டினை முன் கூட்டியே உணர்ந்து சொல்லியிருக்கிறார்.

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், அம்பேத்கரின் இந்த பகுப்பாய்வும், இந்தியாவில் மார்க்சிஸ்டுகள் சொல்லி வரும் கருத்துக்களும் இணையானதாக உள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி துவக்கத்திலிருந்தே சொல்லி வருவது என்னவென்றால், சமூக மற்றும் விவசாய உறவுகளில் ஜனநாயகப் பூர்வமான மாற்றத்தை  முழுமையாக கொண்டு வராமல் முதலாளித்துவ வளர்ச்சியே சாத்தியமில்லை என்பதுதான். நவீன தாராளமயக் கொள்கைகளும், இந்துத்துவா சர்வாதிகாரமும் கைகோர்த்து பவனி வரும்போது, சமூக மற்றும் பொருளாதார நீதி என்பது முற்றிலும் தோல்வியுறும். இது முற்றிலும் ஜனநாயகத்தை வேரறுத்து சர்வாதிகாரத்தை வளர்ந்துவிடும்.

ஜனநாயகத்தை கட்டுப்படுத்தும் புதிய தாராளமயம்…

புதிய தாராளமயக் கொள்கைகள் ஜனநாயகத்தின் மாண்புகளை குறைத்தும் கட்டுப்படுத்தியும் வருகின்றது. குடிமக்கள் மற்றும் அவர்களது உரிமைகளை விட சந்தை தான் முக்கியமானது என்று வற்புறுத்துகிறது. நிதி மூலதனம் அரசியல் அமைப்பிற்குள் ஊடுருவி விட்டது. அனைத்து முதலாளித்துவ கட்சிகளும் பெரும் மூலதனத்திற்கு கீழ்ப்படிந்து கிடக்கின்றன.  இந்தப் போக்கு நாடாளுமன்ற அமைப்பையே சீரழிக்கிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் இதைத்தான் சொல்கிறது: “நாடாளுமன்ற அமைப்புகளுக்கும், ஜனநாயகத்திற்கும் ஆபத்து என்பது ஒருபோதும் தொழிலாளி வர்க்கத்தால் அல்லது அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் எந்த அரசியல் கட்சிகளாலும் ஏற்படாது. ஆனால் அந்த ஆபத்து சுரண்டும் வர்க்கத்தால் மட்டுமே ஏற்படும். முதலாளித்துவ சுரண்டும் வர்க்கம்தான் நாடாளுமன்றத்திற்குள்ளும் வெளியேயும் இருந்து கொண்டு, அவர்களின் குறுகிய லாபத்திற்காக நாடாளுமன்ற அமைப்பையே சிதைக்கிறார்கள்.

2014 ஆம் ஆண்டில் இந்துத்துவா சக்திகளின் வளர்ச்சியும், பா.ஜ.க. தனிக்கட்சியாக ஆட்சி அமைத்ததும் ஒரு முக்கிய மாற்றத்தை இந்திய அரசியலில் கொண்டு வந்தது. ஆர்.எஸ்.எஸ். என்கிற மதவாத சக்திகளால் தூண்டப்பட்ட ஒரு அரசியல் கட்சி அதை பயன்படுத்திக் கொண்டு நாட்டின் ஆட்சியைப் பிடிக்கிறது. இந்த அரசு, ஜனநாயகம் என்பதையே இழிவாக பார்க்கும், இந்துத்துவா சித்தாந்தத்தை புகுத்தி, இந்து ராஷ்ட்ரம் அமைத்திட துடிக்கிறது. இந்து ராஷ்ட்ரம் என்பது சிறுபான்மையினருக்கு சாம் அந்தஸ்தும், சம உரிமைகளையும் மறுக்கின்ற ஒரு கொள்கையாகும்.

இந்துத்துவா கொள்கைகளுக்கு ஆதரவாக அரசின் சட்டங்களையும், இந்து தீவிரவாத அமைப்புகளின் சிறுபான்மையினருக்கு எதிரான தீவிர நடவடிக்கைகளையும் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். சிறுபான்மையினர் என்றால், குறிப்பாக இஸ்லாமிய மக்களை குறி வைத்து தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. அவர்களை தொடர்ந்து அச்சத்திலும், வன்முறையிலும் வைத்திருக்கின்றன மத வாத அரசுகள். குறிப்பாக, பா.ஜ.க. ஆட்சி புரியும் உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், கர்நாடகா, குஜராத் போன்ற மாநிலங்களில் இஸ்லாமிய மக்கள் அனுதினமும் துன்புறுத்தப்படுகிறார்கள் அல்லது அச்சுறுத்தப்படுகிறார்கள்.

இந்துத்துவா-கார்ப்பரேட் கூட்டணி…

சர்வாதிகாரம் என்பது கார்ப்பரேட் மற்றும் இந்துத்துவா சக்திகளினால் நெய் ஊற்றி வளர்க்கப்படும் பெரு நெருப்பாகும். இரு தீய சக்திகளுக்கும் நவீன தாராளமயக் கொள்கைகளை முன்னெடுப்பது என்பது அடிப்படை தேவைகளாகும். அதற்கு உயர்ந்தபட்ச சர்வாதிகாரம் என்பது தேவைப்படுகிறது. அதன் ஒரு வெளிப்பாடுதான் தொழிலாளர்களின் உரிமைகளுக்கான அனைத்து சட்டங்களையும் வெட்டிச் சுருக்கி நான்கு தொழிலாளர் விதிகளாக (four labour codes) மாற்றி அமைத்தது ஆகும்.

அரசியல் அமைப்பு என்கிற போர்வைக்குள் இருந்து கொண்டு, ஜனநாயகத்தின் அத்தனை தூண்களையும் தகர்க்கும் வேலையை இந்த கூட்டணி செய்து கொண்டிருக்கிறது. சர்வாதிகாரம் என்பது அரசியல் ரீதியாக முன்னெடுக்கப்படாமல், சமூகம் மற்றும் பண்பாட்டுத் தளங்களில் வளர்த்தெடுக்கப் படுகிறது. பசு மாடுகளை கொல்லத்தடை, மாட்டிறைச்சி உண்பதற்குத் தடை, ஒழுக்க காவலர்களாக மாறுதல், கலைஞர்களை எழுத்தாளர்களை கட்டுப்படுத்துவது, – இவையெல்லாம் சர்வாதிகாரத்தின் கூறுகளாக நாம் தினம் தினம் காண்கிறோம்.

ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் போர்…

ஆகவே, இந்திய நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் கடந்த பின்பு, இந்திய நாட்டின் ஜனநாயகம் என்பது மோசமான திருப்புமுனையில் உள்ளது. மோடி அரசால் பின்பற்றப்படும் இந்த சர்வாதிகாரம் இந்திய ஜனநாயக மாண்புகளுக்கும் குடிமக்களின் உரிமைகளுக்கும் எதிரானது. அது நாட்டின் சமத்துவம் கூட்டாட்சித் தத்துவங்களின் மீதான தீவிர தாக்குதல்களை செய்து வருகிறது. வரும் காலங்களில் அனைத்து தரப்பு மக்களும் சாதி, மத, இன, மொழி பேதமின்றி இத்தகைய தாக்குதல்களுக்கு எதிராக போர் புரிய வேண்டும். அப்படி ஜனநாயகத்தை காக்கும் போராட்டம் என்பது நவீன தாராளமய கொள்கைகளுக்கும், இந்துத்துவா சக்திகளுக்கும் எதிரான போர் என்பதை உணர்ந்து போரிட வேண்டும்.

தொழிலாளர் வர்க்கத்தைப் பொறுத்த மட்டில், ஜனநாயக உரிமை என்பது மிகவும் அடிப்படையான தேவையாகும். ரோசா லக்சம்பர்க் சொல்வது போல், முதலாளித்துவ சாதிகளுக்கு ஜனநாயகம் என்பது தேவையற்றது மட்டுமல்லாமல் தொந்தரவானதும் கூட; ஆனால் அதுவே, தொழிலாளி வர்க்கத்திற்கு மிகவும் முக்கியமானது மட்டுமல்லாமல் தவிர்க்க முடியாததும் கூட. ஏனென்றால் முதலாளித்துவ பூர்ஷ்வா சக்திகளை அழித்துவிட்டு, சமத்துவ சமூக மாற்றத்தினை முன்னெடுப்பதற்கு ஜனநாயகம் என்பது சக்கரங்களாகவும், அதிர்வு தாங்கிகளாகவும் உள்ளது. அது இன்றியமையாதது; ஏனெனில் அதில் மட்டுமே, ஜனநாயகத்திற்கான போராட்டத்தில், பாட்டாளி வர்க்கம் அதன் வர்க்க நலன்கள் மற்றும் அதன் வரலாற்றுப் பணியை உணர்ந்து கொள்ள முடியும்.

இடதுசாரிகள் நவீன தாராளமயக் கொள்கைகளுக்கும், இந்துத்துவா சக்திகளுக்கும் முற்றிலும் எதிரானது என்ற நிலையில், நாட்டிலுள்ள அனைத்து ஜனநாயக முற்போக்கு சக்திகளை ஓரணியில் இணைத்து ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. முன்னெடுக்கும் சர்வாதிகாரத்திற்கு எதிராக போராடுவதற்கு முன்முயற்சி எடுக்க  வேண்டும்.

தமிழில்: வெ. ராகுல்ஜி

மார்க்சிய பார்வையில் அறிவியல் வளர்ச்சி

அபிவ் சூர்யா

அறிவியல் மற்றும் அறிவியல்-தொழில்நுட்ப வளர்ச்சி என்பது மானுட வரலாற்றில் எப்போதுமே முக்கிய பங்கு வகித்து வந்திருந்தாலும், தற்காலத்தில் இதன் தாக்கமும் முக்கியத்துவமும் உச்சத்தை எட்டியுள்ளது. யார் அறிவியல் வளர்ச்சியை கட்டுப்படுத்துகின்றனர்; யாரிடத்தில் தொழில்நுட்ப மேம்பாடு நிரம்பி உள்ளது போன்றவை தேசங்கள் இடையேயான உறவுகளையும், சர்வதேச அளவில் சுரண்டல் முறையின் தன்மைகளையும் தீர்மானிக்கின்றது.

இப்படிப்பட்ட அறிவியல் வளர்ச்சி எப்படி நிகழ்கிறது? அதன் போக்கு என்ன? அதன் போக்கை எது தீர்மானிக்கிறது?  தற்காலத்தில் நிலவும் உற்பத்தி முறைக்கும் அறிவியல்-தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் இடையே என்ன தொடர்பு? உற்பத்தி முறையில் ஏற்படும் நெருக்கடி அறிவியல் வளர்ச்சியை எப்படி பாதிக்கும்? இது போன்ற கேள்விகளுக்கு மார்க்சிய ஆய்வு முறைப்படி விடை கண்டறிந்து, அதன் வாயிலாக புரட்சியின் பாதையில் அறிவியல் ஆற்றும் பணிகளையும், அதை நிர்ணயிக்க ஆற்ற வேண்டிய கடமைகளையும் தெரிந்து கொள்வது அவசியம்.

முதலாளித்துவ அறிஞர்கள், அறிவியல் என்பதை வெறும் லாபத்திற்கான கருவியாக மட்டுமே புரிந்து கொள்கின்றனர். இதனால் லாப நோக்கை மேம்படுத்தும் வகையில் அறிவியலுக்கான கட்டமைப்புகள் இருப்பின் (அதாவது அறிவியல் குறித்த கொள்கைகள், காப்புரிமம் குறித்த சட்டங்கள் போன்றவை) அது அனைத்து தரப்பினருக்கும் சாதகமாக அமையும் என வாதிடுகின்றனர். அதுவும் நவ தாராளமய ஆதரவாளர்கள், கட்டற்ற வர்த்தகம் மற்றும் சந்தை பொருளாதாரத்தின் விளைவாக மூன்றாம் உலக நாடுகளும் தொழில்நுட்பத்தை பெற்று வளர்ச்சி அடையலாம் எனக் கூறுகின்றனர். ஆனால் இது ஏகாதிபத்திய சுரண்டலை நியாயப்படுத்தும் அப்பட்டமான நச்சு சொல்லாடலே ஆகும். அறிவியல் என்பது உற்பத்தியை பெருக்கி லாபத்தை கூட்ட வல்ல “தங்க முட்டையிடும் வாத்து” என்றே பார்ப்பதால், அந்த அறிவியல் தொழில்நுட்பங்களை எந்த ஏழை நாட்டிற்கும் வளர்ந்த நாடுகள் தானாக அளிக்காது என்பது தெளிவாக தெரிகிறது.

அறிவியலை புறந்தள்ளுவதா?

உண்மையில், அறிவியல் என்பது ஆளும் வர்க்கங்களின் கையில் இருக்கும் சுரண்டல் கருவி மட்டுமே அல்ல. மானுட மேம்பாட்டிற்கான மகத்தான கண்டுபிடிப்புகளை அறிவியல் நமக்கு எப்போதும் அளித்து தான் வருகின்றது. அண்மைக்கால பின் நவீனத்துவ சித்தாந்தங்கள், அறிவியலையே முற்றாக புறந்தள்ளவும் சொல்கின்றன. அது மக்கள் மத்தியில் அறிவியல் ஆர்வம் பெருகுவதை தடுக்கின்றது. இதுவும், சுரண்டும் வர்க்கத்திற்கே சாதகமாக அமைந்து விடுகின்றது.

உழைக்கும் மக்கள் அறிவியலை வெறுப்பதனால், அதன் மீதான தங்களின் நியாயமான உரிமையை கோராமல் போய் விடுகின்றனர். இதன் விளைவாக அறிவியல் வளர்ச்சி மீதான கட்டுப்பாடு சுரண்டும் வர்க்கம் கையில் வலுவாக சென்றடைகிறது. இது உழைக்கும் வர்க்கத்தின் சக்தியை மேலும் வலுவிழக்கச் செய்கிறது. அண்மை காலங்களில் இது போன்ற அறிவியல் குறித்த பிற்போக்கான புரிதல் இடதுசாரி இயக்கங்கள் மத்தியிலும் ஊடுருவத் துவங்கி உள்ளன. இந்த பின் நவீனத்துவ போக்குகளின் காரணமாக “இடதுசாரிகள் பிற்போக்காளர்கள்” என முத்திரை குத்த வலதுசாரி சக்திகளுக்கு ஏதுவாக உள்ளது.

ஆனால் அறிவியல்-தொழில்நுட்ப வளர்ச்சி குறித்த தெளிவான புரிதலை மார்க்சிய ஆய்வு மட்டுமே வழங்க முடியும். “லாப நோக்கமே அறிவியலுக்கு சிறந்தது” என்ற வலதுசாரி புரிதலையும், “லாபத்திற்கு மட்டுமே அறிவியல்” என்ற “சர்வதேச சதித் திட்டம்” நிலவுவது போல சித்தரிக்கும் நுட்பமாற்ற புரிதலையும் புறந்தள்ளி, அறிவார்ந்த முறையில் அறிவியல் வளர்ச்சியை அணுகுவது அவசியமாகும்.

இயங்கியல் பொருள்முதல்வாதமும் அறிவியலும்

மார்க்சியம் என்பது இயங்கியல் விதிகளை பொருளியல் தளத்தில் பொருத்தி, இந்த அண்டத்தையும், மானுட சமூகத்தையும் புரிந்து கொள்கிறது. “இயங்கியல்”, அதாவது எதிர்மறைகளின் உறவாடல் மற்றும் மோதல் வழியாக வளர்ச்சி என்ற கோட்பாட்டின் அடிப்படையில், வளர்ச்சியை புரிந்து கொள்ள வேண்டும் என்றால், முதலில் அந்த காலகட்டத்தில் நிலவும் எதிர்மறையான சக்திகளை புரிந்து கொள்வது அவசியம். “பொருள்முதல்வாதம்” என்றால் இந்த எதிர்மறை சக்திகளை எவரின் எண்ண ஓட்டங்களிலும் தேடாமல், “பொருள்” அல்லது பொருளியல் தளத்தில் தேட வேண்டும் என்கிறது. ஆக, மார்க்சிய ஆய்வு என்பது அந்த அந்த வரலாற்று சூழலுக்கும் ஏற்ப, அந்த அந்த கால கட்டத்தில் நிலவும் பொருள்நிலை சக்திகளையும் அதன் முரண்பாடுகளையும் புரிந்து கொள்வதில் அடங்கி உள்ளது. இதே போல தான் அறிவியல் குறித்த மார்க்சிய பார்வையும் அமைய வேண்டும்.

இதனை சுறுக்கமாக சொன்னால், “அறிவியல்” என்பது – மனிதர்கள் மேற்கொள்ளும் சமூக உற்பத்தி முறையின் ஒரு அங்கமாக உள்ள மனித உழைப்பில் ஒரு பகுதியை அறிவு மேம்பாட்டிற்காக ஒதுக்கி வைக்கப் படுவதையே “அறிவியல்” என்கிறோம். மனிதர்களின் மற்ற உழைப்பைப் போலவே இந்த “அறிவியல்” உழைப்பும் முக்கியமான பணியாற்றுகின்றது. இந்த உழைப்பின் மூலமாக இயற்கை மற்றும் இந்த அண்டத்தின் உண்மைகளை வெளிக்கொணர முடியும். இயற்கையோடு மனிதன் உறவாடுவதே “உற்பத்தி”. இதனால் இந்த “அறிவியலில்” செலுத்தப்படும் உழைப்பானது இயற்கையோடு மனிதன் கொண்டிருக்கும் உறவினை மேம்படுத்துகிறது. வழிநடத்துகிறது.

இந்த சுறுக்கமான விளக்கத்தின் மேல் இயங்கியல் பொருள்முதல்வாத ஆய்வை பொருத்தி பார்ப்போம். இப்போது “அறிவியல்” என்பதும் ஒரு வகை மனித உழைப்பு, மற்றும் அதன் வெளிப்பாடு தான். ஆக, மற்ற மனித உழைப்பு போலவே, இந்த உழைப்பும் ஒரு “சமூக” உற்பத்தி முறையின் அங்கமாகத் தான் நிகழ்கிறது. ஆக, எந்த ஒரு காலத்திலும், அறிவியல் ஆய்வு முறையின் நோக்கம் என்ன, அது எப்படி வழி நடத்தப்படுகிறது, முன்னேற்றத்திற்கான அதன் திட்டம் என்ன, அறிவியல் கண்டுபிடிப்புகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன, அறிவியல் ஆய்வில் யார் ஈடுபடுகின்றனர் மற்றும் யார் ஒதுக்கப்படுகின்றனர் என்பது போன்ற அனைத்தையும் வெறும் முந்தைய கால அறிவியல் வளர்ச்சியின் நிலை மட்டும் தீர்மானிப்பதில்லை. அந்த அந்த காலத்தில் நிலவும் சமூக அமைப்பும், உற்பத்தி முறையும் தீர்மானிக்கின்றது.

ஆனால் சமூக சூழல் அறிவியல் மீது தாக்கம் ஏற்படுத்துவது போலவே, அறிவியல் கண்டுபிடிப்புகளும் சமூகத்தின் பொருளியல் வாழ்வின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இப்படி சமூகத்தின் மீது ஏற்பட்ட தாக்கம், மீண்டும் அறிவியல் ஆய்வின் வளர்ச்சிப் பாதையின் மேல் சுழற்சியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

ஆக, அறிவியலில் ஈடுபட்டுள்ள “அறிவுசார்” உழைப்பின் மீது, சமூகத்தில் நடக்கும் வர்க்கப் போராட்டங்கள் பிரதிபலிக்கும். சமூக சூழலுக்கு ஏற்ப, இந்த “அறிவுசார்” உழைப்பின் தன்மை, தரம் ஆகிய அனைத்துமே அறிவியல் கண்டுபிடிப்புகள் மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எந்த ஒரு காலத்திலும், அறிவியல் வளர்ச்சியின் போக்கு எதேச்சையாகவோ, கையளவு மனிதர்களின் அசாதாரண திறமையால் மட்டுமோ ஏற்படுவது இல்லை.

மனித வாழ்வில் ஏற்படும் இயங்கியல் மாற்றங்களானது அறிவியல் “எப்படி பயன்படுத்தப்படுகிறது” என்பதை மட்டும் தீர்மானிப்பதில்லை. அறிவியல் கண்டுபிடிப்புகளின் தன்மை மற்றும் தரத்தையும் கூட தீர்மானிக்கின்றது.

மார்க்சிய புரிதலில் அறிவியல்

“மனிதனின் இருப்பே சிந்தனையை தீர்மானிக்கின்றது” என்பது மார்க்சிய கூற்று. அறிவியல் என்பதை “அறிவுப்பூர்வமான சிந்தனைகளின் உற்பத்தி” என புரிந்து கொண்டால், மனிதனின் இருப்பும், மனிதனின் அன்றாட பொருளியல் வாழ்விற்கான உழைப்பு மற்றும் உற்பத்தியும் தானே இந்த “அறிவுப்பூர்வமான சிந்தனைகளின்” உற்பத்தியையும் தீர்மானிக்க வேண்டும்? இதன் காரணமாகத் தான், ஆதிகால மனித சமூகத்தில் “அறிவியல்” என்பதற்காக தனியே எந்த உழைப்பையும் ஒதுக்கி வைக்காத போதும், அறிவியல் வளர்ச்சி ஏற்படத் தான் செய்தது. ஏனென்றால் அன்றாட வாழ்வின் பொருளியல் உற்பத்தியில் ஏற்படும் உழைப்பின் பழக்க வழக்கங்கள் தான் அறிவுப்பூர்வமான சிந்தனைகளுக்கு அடிப்படை.

எனவே, அறிவியலின் எந்த வளர்ச்சியும் வெறும் ஒரு மனிதனின் மூளையில் “உதிப்பது” அல்ல. ஒரு சிந்தனையின் உண்மை தன்மையானது, அன்றாட வாழ்வின் உழைப்பின் வாயிலாகத் தான் நிரூபணம் ஆகிறது. ஆகையால் அன்றாட பொருளியல் வாழ்வின் முன்னேற்றம் தான், அறிவியல் முன்னேற்றத்தையும் தீர்மானிக்கின்றது. இதன் பொருள், எந்த ஒரு கால கட்டத்திலும், “மனித உழைப்பு எவ்வாறு ஒருங்கிணைக்கப்படுகிறது” என்பதே அறிவியலின் வளர்ச்சியை தீர்மானிக்கிறது என்பதாகும். குறிப்பிட்ட காலத்தின் “உற்பத்தி முறை” (எ.கா. – ஆதி பொதுவுடைமை, நிலப்பிரபுத்துவம்,..) அதற்கு அடிப்படையாக அமைகிறது.

புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள், அதன் காலத்தில் நிலவும் நிலவும் உற்பத்தி முறையில் “அளவு மாற்றம்” ஏற்படுத்துகின்றன. இதன் காரணமாக உற்பத்தி முறையில் முரண்பாடுகளும், நெருக்கடிகளும் உருவாகின்றன. இந்த நெருக்கடியானது அறிவியலில் தாக்கம் செலுத்துகிறது. “சிந்தனை” மற்றும் “செயல்” (Theory and Practice) இரண்டிற்கும் இடயே விரிசல் உண்டாக்கின்றது. உற்பத்தி முறையில் ஏற்படும் “புரட்சிகர” மாற்றமானது, “சிந்தனை முறை”, அதாவது அறிவியல் முறையிலும் மற்றதை ஏற்படுத்தும்.

இதை ஒரு உதாரணம் கொண்டு புரிந்து கொள்ளலாம். இயற்கையில் நிலவும் கடுமையான சூழலில் உயிர் பிழைக்க போராடும் ஆதி கால மனிதனின் சிந்தனைகள் எல்லாம் இயற்கையில் திறம்பட பிழைப்பதை நோக்கியே இருக்கும். அப்படிப்பட்ட சமூகத்தில் “அறிவார்ந்த சிந்தனைகள்” அனைத்துமே பிழைத்திருப்பதற்கான மேம்பட்ட வழிமுறைகளை நோக்கியதாக இருக்கும். ஆனால் முதலாளித்துவ உற்பத்தி முறையில் ஒரு கண்டுபிடிப்பாளரின் சிந்தனைகள் முழுவதும், விற்பனைக்கான ஒரு பண்டத்தை உருவாக்குவதை நோக்கி மட்டுமே இருக்கும்.

இப்போது ஆதி கால மனித சமூகத்தில் நெருக்கடி உண்டானால் என்னாகும்? இப்போது ஆதி மனிதனின் போராட்டம் இயற்கையோடு இல்லாமல், சக மனிதர்களோடு போராட்டம் என மாறிப் போனால், என்னாகும்? இது நாள் வரை “பிழைத்திருப்பது” என்பதை நோக்கி கட்டமைக்கப்பட்ட “அறிவுச் சிந்தனைகளின்” இலக்கு மாற்றப்படும். எனவே சிந்தனைகள் நெருக்கடியை எதிர்கொள்ளும். மனிதர்களோடு போராட்டம் என்ற இலக்கை நோக்கிய சிந்தனைகள் வெளிப்படும். ‘பிழைத்திருப்பதற்கான’ சிந்தனைகளை அமலாக்க பயன்படுத்தப்பட்டு வந்த வழிமுறைகள், கட்டமைப்புகள் பயன் குறைந்தவையாக ஆகிடும்.

இவ்வாறுதான் உற்பத்தி முறையில் ஏற்படும் நெருக்கடி, அறிவியல் முறையிலும் பிரதிபலிக்கின்றது.

அறிவியலை வளர விடாமல் தடுக்கும் உத்தியோடு சிலர் செயல்படுகிறார்கள் என்றோ, குறிப்பிட்ட வர்க்கம் முயற்சிக்கிறது என்றோ ‘சதித்திட்ட கதையாடலை’ மார்க்சியம் முன்வைப்பதில்லை. அறிவியலின் உண்மையைத் தேடிக் கண்டறியும் அடிப்படையை, வலிமையை மார்க்சியம் அங்கீகரிக்கின்றது. ஆனால் எந்த ஒரு காலத்திலும் புதிய சிந்தனை/கண்டுபிடிப்புகளில் ஏற்படும் நெருக்கடியானது அக்கால உற்பத்தி முறையில் ஏற்படும் நெருக்கடியின் விளைவு என்றே அது விளக்குகிறது.

முதலாளித்துவமும் அறிவியலும்

மேற்கண்ட புரிதலினை, தற்கால முதலாளித்துவ உற்பத்திக்கு பொருத்தி, இந்த சூழலில் அறிவியல் வளர்ச்சியை புரிந்த கொள்வதை மார்க்ஸ், எங்கல்ஸ் தொடங்கி பல மார்க்சிய அறிஞர்கள் செய்துள்ளனர்.

முதலாளித்துவ முறையில் நிலவும் போட்டியின் விளைவாக, அதிவேக அறிவியல்-தொழில்நுட்ப வளர்ச்சி, மூலதனத்திற்கு அவசியமாக இருக்கிறது என்பதை தனது “மூலதனம்” நூலில் மார்க்ஸ் விவரித்துள்ளார். ஆனால் அறிவியல் கண்டுபிடிப்புகள் மீதான ஏகபோக கட்டுப்பாடு என்பது முதலாளித்துவத்தின் ஒரு சிறு அம்சம் மட்டுமே. முதலாளிகளுக்கு இடையிலான போட்டியின் காரணமாகவும், முதலாளி-தொழிலாளி இடையிலான வர்க்கப் போராட்டம் காரணமாகவும், முதலாளி வர்க்கம் அறிவியல் வளர்ச்சியைக் கொண்டு எந்திரமயமாக்கலை விரைவு படுத்துகிறது. இதன் விளைவாக லாப விகித நெருக்கடி உருவாகிறது. அதீத உற்பத்தி நெருக்கடி உருவாகிறது.

ஆனால் முதலாளித்துவத்தின் அடிப்படை நெருக்கடி என்ன? முதலாளித்துவம் வளர வளர உழைப்பு மேலும் மேலும் “சமூகமயம்” ஆகிறது (அதாவது மேலும் மேலும் தொழிலாளர்களின் உழைப்பு அனைவரும் சேர்ந்து புரியும் “சமூக” உழைப்பாக மாறுகிறது). ஆனால் உழைப்பின் பலனான உற்பத்தி பண்டங்கள் தனிச்சொத்து குவியலுக்கு செல்கின்றன. இதுவே முதலாளித்துவத்தின் அடிப்படையான சிக்கல். இது நாள் வரை முதலாளித்துவத்தில் அறிவியல் முறையானது தனிச்சொத்து குவியலை மேம்படுத்தவே கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆனால் “சமூகமயம்” ஆன தொழிலாளி வர்க்கத்தின் தேவைகளுக்கு எழுச்சிபெறும்போது முன்பு கட்டமைக்கப்பட்ட அறிவியல் முறை அந்த தேவைகளுக்கு முரணாக அமைகிறது. இந்த நெருக்கடியானது அறிவியலிலும் பிரதிபலிக்கின்றது.

முதலாளித்துவ முறையில் அறிவியல் தழைக்கும் என்று முதலாளித்துவத்தின் ஆதரவாளர்கள் கூறி வந்தாலும், உண்மையில் மேற்சொன்ன நெருக்கடி ஏற்பட்ட பின், அறிவியல் நச்சுப்படுகிறது. முதலாளித்துவத்தில் “அறிவு” வர்த்தகமாக்கப்பட்டதன் விளைவாக, அறிவியல் ஆய்வும் சந்தை நிபந்தனைகளுக்கு உள்ளாக்கப்படுகிறது. இப்போது நிகழ்த்தப்பட்டுவரும் “டிஜிட்டல் புரட்சி” என்பதன் அடிப்படையை பார்த்தால் கூட, மக்களின் தரவுகளை சேகரித்து, விளம்பரப் பிரச்சாரங்கள் மூலம் நம் ஜனநாயகத்தை சீர்குலைத்து, உழைப்பின் மீது மூலதனத்தின் ஆதிக்கத்தை வலுப்பெறச் செய்யும் விதமாகவே பயன்படுத்தப்படுகிறது. இந்த “டிஜிட்டல் புரட்சி”க்கு அடிப்படையாக உள்ள இணையதளம், நுண்கணினி (Microprocessor), போன்ற தொழில்நுட்பங்கள் எல்லாம் மக்கள் செல்வத்தின் மூலம் பொதுப் பல்கலைக்கழகங்களில் கண்டுபிடிக்கப்பட்டன, ஆனால் தனியாருக்கு அதன் காப்புரிமங்கள் உரிமையாக்கப்பட்டன. இது, தொழிலாளி வர்க்கத்தின் தேவைகளை தீர்க்க முடியாத முதலாளித்துவ அமைப்பில், அறிவியலுக்கு ஏற்பட்டிருக்கும் ஆழமான நெருக்கடியின் ஒரு உதாரணமாகும்.

வளரும் அறிவியலை, மூலதனம் தனது லாப நோக்கங்களுக்காக கட்டுப்பாட்டில் வைப்பதனால் மக்கள் மத்தியில் அறிவியல் மீதான ஆழமான அவநம்பிக்கை வளர்வதை பார்க்கிறோம். உலகின் மிகப்பெரும் முதலாளித்துவ பொருளாதாரமான அமெரிக்காவில் கூட இதை பார்க்கலாம். சுகாதாரத்தில் தனியார் ஏகபோகம், நவீன மருந்து தொழில்நுட்பத்தை தனியார் காப்புரிமம், புதிய ஆய்வுகள் பணக்காரர்களின் நோய்களுக்கு மட்டுமே தீர்வு தேடுவது போன்ற போக்குகளின் காரணமாக மக்கள் ஏமாற்ற உணர்வுக்கு ஆளாகின்றனர். இதனால் அறிவியலற்ற “மாற்று” முறைகள் பிரபலமாவது, தடுப்பூசிக்கு எதிரான பிரச்சாரம் போன்ற போக்குகள் எழுவதும், அறிவியல் அடிப்படையிலான மருத்துவ முறைக்கு எதிர்ப்பு உருவாவதையும் பார்க்கிறோம்.

இது போன்ற நெருக்கடியும், அறிவியலுக்கு எதிரான  போக்குகளும் கல்வி, வேளாண்மை போன்ற பல துறைகளில் காணப்படுகிறது. உலகம் முழுவதும் வெளிப்படுகிறது. அறிவியலுக்கு எதிராக முழக்கமிட்டு வலதுசாரிகள் வெற்றிபெறுகிறார்கள். கொரோனா பெருந்தொற்றின் காலத்தில், சோசலிச நாடுகள் மக்களை அறிவியல் பூர்வமாக ஒன்று திரட்டி போராடினார்கள், ஆனால் முதலாளித்துவ நாடுகள் மக்களை கைவிட்டன, போராட்டத்தையும் கைவிட்டன. இதுவே முதலாளித்துவத்தில் “சிந்தனை” மற்றும் “செயல்” (Theory and Practice) இரண்டிற்கும் இடையில் ஏற்பட்டுள்ள விரிசலின் தெளிவான வெளிப்பாடு.

அறிவியல் துறையில் உழைப்பின் தன்மையை பார்த்தால், அதுவும் நெருக்கடியிலேயே உள்ளது. ஏகாதிபத்திய நாடுகள், இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளில் பல்லாயிரம் தொழில்நுட்ப பட்டதாரிகளை அடிமட்ட பணியில் அமர்த்திக் கொண்டு, முன்னேறிய தொழில்நுட்பத்தையும் சர்வதேச திறமைகளையும் தன் வசம் குவித்து வைத்துள்ளன. இது ஏகாதிபத்திய நாடுகளுக்கும் – வளரும் நாடுகளுக்கும் இடையேயான முரண்பாட்டை கூர்மையாக்குகிறது. மேலும் “அறிவுசார்” உழைப்பிற்கும், உடல் உழைப்பிற்கும் இடையிலான முரண்பாட்டையும், இயற்கை பற்றிய அறிவியலுக்கும், சமூக அறிவியலுக்கும் இடையிலான விரிசலையும் தொடரச் செய்கிறது. இவை எல்லாம் உழைப்பு தளத்தில் முதலாளித்துவ நெருக்கடியின் வெளிப்பாடே.

அதிலும் குறிப்பாக, இன்று மானுடம் சந்திக்கும் மிகப்பெரும் சவால் “பருவநிலை மாற்றம்” பற்றிய பிரச்சனையில், அடிப்படை காரணம் என்ன?

முதலாளித்துவத்தில் “அந்நியமாதல்” கோட்பாட்டை மார்க்ஸ் விவரித்தார். தொழிலாளர் உழைப்பை செலுத்தி உருவாக்குவது தான் பண்டங்கள். ஆனால் அதிலிருந்து அவர்கள் அந்நியமாக்கப்பட்டு, அது தனிச்சொத்து குவியலுக்கு செல்கிறது. ஆக, மனிதர்கள் தம் உழைப்பின் பலனிலிருந்து அந்நியமாக்கப்படுகின்றனர். இதன் காரணமாக மனித உழைப்புக்கும், இயற்கைக்கும் இடையேயான “உயிரோட்டமான பிணைப்பு” முறிவுற்று போகிறது. இவ்வாறு தன் உழைப்பில் இருந்தே அந்நியமாகிப் போகும் தொழிலாளி, அந்த உழைப்பு எப்படி ஒருங்கிணைக்கப்பட வேண்டும், இயற்கையோடு இயைந்து எப்படி செயலாற்ற வேண்டும் என்பதை தீர்மானிக்கிற அதிகாரமோ, வழிமுறையோ இல்லாமல் போகிறார். இதன் காரணத்தால், மூலதனம் தன் லாப நோக்கிற்கு வேண்டியது போல  செயல்பட்டு, அது உழைக்கும் மக்களையும் பாதிக்கிறது, இயற்கையையும் பாதிக்கிறது. அதுபற்றிய எந்தக் கவலையும் இல்லாமல் தன்னை பெருக்கிக் கொண்டிருக்கிறது. இதுவே “பருவநிலை நெருக்கடி”யின் அடிப்படை ஆகும்.

இன்று இந்த பருவ நிலை நெருக்கடிக்கு தீர்வு காண அறிவியல் முறைகள் இருப்பினும் கூட, அதனை அமலாக்க இங்கே உள்ள கட்டமைப்பு, மூலதனக் குவியலினை இலக்காக கொண்டு அமைக்கப்பட்டுள்ளதால், அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து பருவ நிலை மாற்றத்தை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு முயற்சிகளை மேற்கொள்வதற்கு, ஏகாதிபத்திய நிதி மூலதனம் தடையாக இருக்கின்றது.

அறிவியல் குறித்த தத்துவார்த்த போக்குகள்

முதலாளித்துவத்தில் அறிவியலின் நெருக்கடி பற்றி புரிந்து கொண்டோம். இங்கே “அறிவியல்” குறித்த மார்க்சிய தத்துவார்த்த போக்குகளின் பரிணாமம் குறித்து பார்ப்போம்.

இயங்கியல் பொருள்முதல்வாத கோட்பாட்டை மேலும் வலுவாக்கும் விதமாக எங்கல்ஸ் இந்த கோட்பாட்டை இயற்கை மற்றும் அண்டத்தையும் புரிந்து கொள்ள பயன்படுத்தி எழுதிய நூல்  தான் “இயற்கையின் இயங்கியல்”. இதன் மூலம் அறிவியலாளர்களுக்கு இயங்கியல் பார்வை ஏன் அவசியம் என்பது குறித்தும் விவரித்தார். இவ்வாறு அறிவியல் ஆய்வில் இயங்கியலை பயன்படுத்தும் தத்துவத்தை ஜே.டி.பெர்னால், ஜே.பி.எஸ்.ஹால்டேன், ஐன்ஸ்டீன் உட்பட பல விஞ்ஞானிகளும் முன்னெடுத்துச் சென்றனர்.

அறிவியல் மற்றும் சமூகத்திற்கு இடையேயான உறவு குறித்த தத்துவங்களும் மார்க்சிய மரபில் பரவலாக புகழ் பெற்றன. முதலாளித்துவ நெருக்கடியால் அறிவியல் நசுக்கப்படாததன் காரணத்தால் சோவியத் ஒன்றியத்தில் அறிவியல் தழைத்தோங்கியது. மக்களின் வாழ்வியல் கலாச்சாரத்தோடு அறிவியல் ஒன்றிப் போனதன் விளைவாக, தொழிலாளர் வர்க்கத்தின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், அறிவியல் ஆய்வுக்குள் “ஆலை சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு”, “சமூக அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்” போன்ற துறைகள் பல்கலைக்கழகங்களில் உருவாக்கப்பட்டு தழைத்தன. இதன் தொடர்ச்சியாக அறிவியல் குறித்த தத்துவ விவாதங்களும் விரிவடைந்தன. போரிஸ் ஹெசன் அவர்களின் பணி எவ்வாறு நியூட்டனின் ஆய்வுகள் பதினேழாம் நூற்றாண்டின் வர்த்தகம் சார் முதலாளித்துவத்தின் எழுச்சியுடன் தொடர்புடையது என்பதைக் காட்டியது. நிகோலாய் புக்கரின், நிகோலாய் வாவிலோவ் போன்றோரின் அறிவியல்-சமூகம் குறித்த ஆழமான விவாதங்கள், அறிவியல் தன் முழு திறனை வெளிக்கொண்டு வர சோசலிச சமூகத்தில் தான் முடியும் என்பதை நிறுவின.

இரண்டாம் உலகப்போருக்கு பின், பிரபல பரிணாம வளர்ச்சி விஞ்ஞானிகளான ரிச்சர்ட் லேவின்ஸ், ரிச்சர்ட் லியோன்டிஃப் போன்றவர்கள் மார்க்சியத்தின் மூலம் அறிவியல் வளர்ச்சியை புரிந்து கொள்ளும் பணியை தொடர்ந்தனர். ஆனால் 1970களில் தொடங்கி, இடதுசாரி ஆய்வாளர்கள் மத்தியிலும் தவறான புரிதல்கள் எழத் தொடங்கின. ஆர்.எம்.யங் என்ற மார்க்சிய ஆய்வாளர், அதி தீவிர நிலைபாட்டை எடுப்பதாக எண்ணி, “அறிவியல் என்றாலே முதலாளித்துவ அறிவியல் மட்டும் தான்” என வாதிட்டார். ஆனால் இது பொருள்முதல்வாத புரிதலுக்கு எதிரானது. இதனைத் தொடர்ந்து எழுந்த பின் நவீனத்துவ கோட்பாடுகள் இடதுசாரி போர்வையில் முற்றிலும் அறிவியலற்ற கோட்பாடுகளை முன் வைத்தன. அவர்கள் மார்க்சிஸ்டுகள் முதலாளித்துவத்தில் அறிவியல் மீது வைக்கும் அதே குற்றச்சாட்டுகளை வைத்துக் கொண்டே கருத்துமுதல்வாத கோட்பாட்டு நிலை எடுக்கின்றனர். இவர்கள், “அறிவியல் மூலம் உண்மை நிலையை கண்டறியவே முடியாது. அந்தந்த வர்க்கங்களின் நலனுக்கு ஏற்றார்போல கோட்பாடுகள் உருவாக்கப்படுகின்றன” என வாதிட்டார்கள். சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கு பின், நவ தாராளமய காலத்தில் இந்த கோட்பாடுகள் மேலும் வலுப்பெற்றன.

இப்படிப்பட்ட பொருள்முதல்வாதத்திற்கு எதிரான கோட்பாடுகள் அறிவியலில் மனித உழைப்பின் பங்கையும், அறிவியல்-உழைப்பு-இயற்கை இடையேயான உறவையும் நிராகரிக்கின்றன. அறிவியல் என்பதை மனித உழைப்பின் அங்கமாக பார்ப்பதையும், அறிவியலின் நெருக்கடியை உற்பத்தி முறையின் நெருக்கடியின் பிரதிபலிப்பாக பார்ப்பதையும் நிராகரிப்பதன் மூலமாக, இந்த பின் நவீனத்துவ கோட்பாடுகள், இயங்கியல் போராட்டம் வழியாக மனித சமூகம் அடையும் வளர்ச்சியையும், அந்த போராட்டத்தில் அறிவியல் ஆற்றும் பங்களிப்பையும் முற்றிலுமாக மறைக்கின்றன.

இறுதியாக

மனித சமூகத்திற்கு அப்பாற்பட்டு நின்று அனைத்து மானுட பிரச்சனைகளுக்கும்  நூதன தீர்வை அளிக்கக் கூடியதாக அறிவியலை பார்க்கும் பார்வையும் தவறு. அதே வேளையில், அறிவியலின் உண்மை அறியும் திறனை முற்றிலுமாக நிராகரித்து, அறிவியல் மொத்தமும் முதலாளித்துவ அறிவியல் என நிராகரிப்பதும் தவறு.

மார்க்சிய புரிதல் மூலம் மட்டுமே இந்த இரண்டு தவறுகளையும் களைந்து, மனித உழைப்பின் வடிவமான அறிவியலின் ஆற்றலை உணரும் அதே வேளையில், அந்த அந்த காலத்தின் சமூக கட்டமைப்பு எவ்வாறு அறிவியல் வளர்ச்சியின் தன்மையை தீர்மானிக்கின்றது என்பதை புரிந்து கொள்ள முடியும். மார்க்சிய புரிதலால் மட்டுமே கோவிட் தடுப்பு மருந்து போன்ற அறிவியலின் வியக்கத்தக்க சாதனைகளை அங்கீகரிக்கும் அதே வேளையில், அணு ஆயுதம் போன்ற அறிவியலின் கோர முகத்தையும் புரிந்து கொள்ள முடியும். மார்க்சிய புரிதலால் மட்டும் தான் அறிவியலின் உண்மை திறனை புரிந்து கொண்டு, அந்த திறன் உழைக்கும் மக்களுக்கு பயன்பட தேவையான இயக்கங்கள் மற்றும் போராட்டங்களை கட்டமைக்க முடியும். இப்படிப்பட்ட போராட்டங்கள் மூலம், இக்கால ஏகாதிபத்திய சூழலில் அறிவியல்-முதலாளித்துவம் இடையேயான முரண்பாடுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து, அதை கூர்மைப்படுத்த இயலும். அறிவியல் பற்றிய மார்க்சிய புரிதல் மட்டுமே பிற்போக்கு சித்தாந்தங்களை எதிர்க்கும் அதே வேளையில், முதலாளித்துவ தளையில் இருந்து இருந்து அறிவியலை விடுவிக்க உதவும்.

சமூக ஒடுக்குமுறையும் இடது ஜனநாயக திட்டமும்

குரல்: அருந்தமிழ் யாழினி

உ. வாசுகி

இந்தியச் சூழலில் மக்கள் ஜனநாயகப் புரட்சியை இலக்காக வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அதற்கு உகந்தவகையில் மக்கள் ஜனநாயக அணியை உருவாக்க வேண்டும் என்பது கட்சித் திட்டத்தில் இடம் பெற்றுள்ளது. வர்க்கங்களைக் கொண்டு உருவாக்கப்பட வேண்டிய அந்தப் போராட்ட  அணியின் முன் முயற்சியாக, வர்க்க சேர்மானத்தில்  மாற்றத்தை ஏற்படுத்திட இடது ஜனநாயக அணி கட்டமைக்கப்பட வேண்டும் என்பது 1978 முதல் அகில இந்திய மாநாடுகளில் வலியுறுத்தப்பட்டு வந்த  கடமையாகும். இடைப்பட்ட காலத்தில் இடது ஜனநாயக அணி கட்டப்படுவதற்கான முக்கியத்துவம் பின்னடைவை சந்தித்தது. 20வது மாநாட்டில் அந்த பலவீனம் பரிசீலிக்கப்பட்டு, இடது ஜனநாயக அணி கட்டப்படுவது  அதி முக்கியத்துவம் வாய்ந்த முன்னுரிமை கடமையாக மீட்டெடுக்கப்பட்டது.

இந்திய மக்களின்  முன், முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ கொள்கைகளுக்கும் திட்டங்களுக்கும் முற்றிலும்  வேறுபட்ட மாற்றாக இடது ஜனநாயக கொள்கைகளும் திட்டங்களும் முன்வைக்கப்பட வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது. மக்கள் தேர்வு செய்வதற்கு ஏதுவாக, அரசியல் பொருளாதார சித்தாந்த பண்பாட்டுத் தளங்களில் ஒரு மாற்றுப்பாதை உருவாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் அத்தகைய திட்டமும் வகுக்கப்பட்டது. இடதுசாரி கட்சிகள், அமைப்புகள், குழுக்கள், தனிநபர்கள் மற்றும் ஜனநாயக சக்திகளை, சமூக ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் பகுதிகளைத் திரட்டி, வர்க்கங்களை உள்ளடக்கிய போராட்ட அணியாக இது வடிவமைக்கப்பட வேண்டும் என அகில இந்திய மாநாட்டின் அரசியல் தீர்மானம் வழிகாட்டியுள்ளது.

ஆர்.எஸ்.எஸ் வழிகாட்டுதலில் செயல்படக்கூடிய ஒன்றிய பாஜக அரசு அதன் சித்தாந்த அடிப்படையில் பொருளாதார சுரண்டலை தீவிரப்படுத்துவது மட்டுமல்ல, சமூக ஒடுக்குமுறையை ஊக்குவிக்கவும் நியாயப்படுத்தவும் செய்கிறது. அடையாள அரசியல் இதற்கான தீர்வாக இருக்க முடியாது. சமூக ஒடுக்குமுறையின்  அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டு வேர்களை அடையாளம் கண்டு, அவற்றை வேரோடும் வேரடி மண்ணோடும் அழிப்பதற்கான கொள்கைகள்தான் மாற்றுக் கொள்கைகள் ஆக இருக்க முடியும். வேறுபட்ட தலைவர்களும் கட்சிகளும் மீட்பராக, ஆளும் கட்சியின் மாற்றாகக் காட்சியளிக்க முயற்சிப்பதை, இடது ஜனநாயக மாற்றுக் கொள்கைகள், அவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்படும் போராட்டங்கள் மூலமாகவே அம்பலப்படுத்த முடியும்.

தற்போதைய நிலைமை:

சாதிய, பாலின ஒடுக்குமுறைகள் கடந்த காலத்தை விட அதிகரித்து வருகின்றன. சாதிப் பெருமிதமும், ஆண் என்கிற பெருமிதமும் வெளிப்படையாகவே பிரதிபலிக்கப் படுகின்றன; பகிரப்படுகின்றன. இவை உழைக்கும் வர்க்கத்தின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிப்பதாகவும் உள்ளன.

வருடத்துக்கு சராசரியாக 30,000 பெண்கள் இந்தியாவில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இதில் பெரும்பான்மையாக  ஏழை குடும்பங்கள், பட்டியலின, பழங்குடியின பெண்கள் அடங்குவர். ஒரு நாளைக்கு 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். ஆளும் கட்சியான பாஜகவின் தலைவர்களும், அமைச்சர்களும், முன்னணி ஊழியர்களும் இத்தகைய குற்றவாளிகள் பட்டியலில் உள்ளனர். உடை உள்ளிட்ட பல்வேறு கவைக்குதவாத வாதங்களை முன்வைத்து இத்தகைய குற்றங்கள் நியாயப்படுத்தப்படுகின்றன. மாறுபட்ட கருத்துக்கள், பாஜகவின் மீதான விமர்சனங்கள்  பதிவு செய்யப்பட்டால், அப்பெண்ணுக்கோ அல்லது ஆணின் பெண் உறவினர்களுக்கோ  பகிரங்கமாக பாலியல் வல்லுறவு மிரட்டல் விடுக்கப்படுகிறது. இஸ்லாமியப் பெண்களை கற்பனையாக ஏலம் விடக்கூடிய செயலிகள் சமீபத்தில் உருவாக்கப்பட்டன. வலுவான வணிகமயமாக்கலை நோக்கிச் செல்லும் புதிய கல்விக் கொள்கை அமலுக்கு வந்தால் பெண்கல்வி பெருமளவில் பாதிக்கப்படும். ஊரக வேலை உறுதி சட்டத்திற்கு  நிதி ஒதுக்கீடு தொடர்ந்து போதுமானதாக இல்லாத சூழல், அதை நம்பி இருக்கும் லட்சக்கணக்கான ஊரகப் பெண்களை பாதிக்கிறது. உலக வங்கி நிதி/கடன் உதவியோடு கொண்டுவரப்படும் ஸ்மார்ட் சிட்டி உள்ளிட்ட கட்டமைப்புகள் ஏழைக் குடும்பங்களின் குடியிருப்பைக் கேள்விக்குறியாக்குகிறது. இது பெண்களின் பாதுகாப்பை பலவீனப்படுத்துகிறது. குடும்பப் பணிக்கான பொறுப்புகள் பெண்ணின் தலை மீது சுமத்தப்பட்டுள்ள சமூகச் சூழலில் கடும் விலை உயர்வு, பொது சேவைகளில் இருந்து அரசு விலகல் உள்ளிட்ட நடவடிக்கைகளும் பெண்களுக்கே கூடுதலான பின் விளைவுகளை உருவாக்குகின்றன. உழைப்பு படையில் 2013இல் 36 சதவீதமாக இருந்த பெண்களின் பங்கேற்பு, 2018இல்  23 ஆகக் குறைந்து, 2019 இல் 18 ஆக மாறி, 2021இல் 9.24 சதவீதமாக படுபாதாளத்தில் சரிந்திருக்கிறது. பசிக் குறியீட்டில் மிக மோசமான நிலைமையில் இந்தியா உள்ளது. பெருந்தொற்று  காலத்தில்  அதிகரித்த உலகளாவிய வறுமையில் 60 சதவிகிதம்  இந்தியாவில் நிலவியது என்னும்போது, சமூகத்திலும், குடும்பத்திலும் இரண்டாம் தரக் குடிமக்களாக பாவிக்கப்படக்கூடிய பெண்களே அதிகம் சேதாரம் அடைகின்றனர். இதில் பட்டியலின, பழங்குடியின பெண்கள் பல மடங்கு அதிகம் பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.

பழங்குடியின மக்களின் நிலங்கள் மற்றும் வசிப்பிடங்களைக் கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிக்க ஏதுவாக  விதிமுறைகள், சட்டங்கள் திருத்தப்படுகின்றன. வன உரிமை சட்டத்தின் அடிப்படையான சாராம்சம் நீர்த்து போகிறது. பட்டியலின மக்களின் மீதான வன்கொடுமைகள் எண்ணிக்கையில் அதிகரிப்பது மட்டுமல்ல, மிகக் கொடூரமான முறையில் நடத்தப்படுகின்றன. இவற்றை செய்யும் சாதி ஆதிக்க சக்திகளின் பகுதியாகவும், ஆதிக்கத்தை நியாயப்படுத்துவதோடு குற்றவாளிகளின் பாதுகாவலர்களாகவும்  பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புகள் செயல்படுகின்றன. பல்வேறு  பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும்போது இட ஒதுக்கீடு அமலுக்கு வராது என்ற நிலை, பட்டியலின மக்களின், பெண்களின் வேலைவாய்ப்பைப் பெரிதும் பாதிக்கும் பிரதான பிரச்சனையாக முன்னுக்கு வருகிறது.

இந்தியாவின் பிரத்தியேக சூழலில் ஏற்கனவே நிலவி வந்த  சாதியக் கட்டமைப்பின் மீது தான் நவீன வர்க்கங்களான  முதலாளி, தொழிலாளி வர்க்கங்கள் உருவாயின. நிலப்பிரபுத்துவம் முற்றாக ஒழிக்கப்படாத சூழலில், முதலாளி வர்க்கம் நவீன வர்க்கமாக இருந்தாலும், அதற்கு முந்தைய காலகட்டத்தின் சாதிய, ஆணாதிக்க ஒடுக்குமுறை கருத்தியலைத் தன் உழைப்புச் சுரண்டலுக்கும் , லாபவெறிக்கும்  சாதகமாக பயன்படுத்தி வருவதையே பார்க்கிறோம். பல்வேறு அரசியல் கட்சிகள் சாதி ஒழிப்புக்கோ, சாதிய ஒடுக்குமுறை ஒழிப்புக்கோ உண்மையாகப் போராடாமல், சாதிகளை வாக்கு வங்கிகளாகக் கருதியே செயல்படுகின்றன. சாதியின் பெயரால் உணர்வுகளைத் தட்டி எழுப்பி, அந்த அடையாளத்தை அரசியல் பேரத்துக்குப் பயன்படுத்திக் கொள்கின்றன. நிலம், கூலிக்காகவும், பெருநில உடைமைக்கு எதிராகவும் நடத்த வேண்டிய போராட்டங்களைத் தம் நிகழ்ச்சிநிரலில் கூட வைப்பதில்லை. நில விநியோகம்  மற்றும் ஊரக வேலை  திட்டம் அமல்படுத்தல் சம்பந்தமாக  இதர கட்சிகள்  களத்துக்கு வருவதில்லை என்பது  இதற்கான உதாரணம். மார்க்சிஸ்ட் கட்சியும், இடதுசாரி கட்சிகளும் தான் பிரச்சனைக்கு பின்னாலுள்ள சுரண்டலையும் ஒடுக்குமுறையையும் குறிவைக்கின்றன. நிலம், கூலி, பெரு நிலவுடைமை முறைமைக்கு எதிரான போராட்டங்களை நடத்துகின்றன. தீவிர நிலச் சீர்திருத்தத்தை முன்வைக்கின்றன. இந்தியாவிலேயே நில விநியோகம் அதிகமாக நடைபெற்ற மாநிலங்களில் மேற்கு வங்கம் கேரளா, திரிபுரா முன்னிலையில் உள்ளன. தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமை கட்டப்பட வேண்டுமானால், சாதிய முறைமைக்கும், பட்டியலின மக்கள் மீதான வன்கொடுமைகளுக்கும்  எதிராக ஒன்றுபடுவது முன் நிபந்தனையாகும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் தெளிவாக வரையறுக்கிறது.

நடவடிக்கைகள்:

இச்சூழலில் இடது ஜனநாயக சக்திகளை அணிதிரட்ட வும், போராட்டங்களில் இறக்கவும் சில நடவடிக்கைகள் மார்க்சிஸ்ட் கட்சியால் எடுக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, இடதுசாரி வெகுஜன அமைப்புகள் ஒன்றிணைக்கப்பட்டு, JEJAA என்கிற பெயரில் செயல்படுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. தொழிற்சங்க அமைப்புகள், விவசாய விவசாயத் தொழிலாளர் அமைப்புகளின் பொது கோரிக்கைகள் மீதான கூட்டுப் போராட்டம் இக்காலகட்டத்தில் வலுப்பட்டுள்ளது. 500க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு ஒரு நீண்ட நெடிய வெற்றிகரமான போராட்டத்தை நடத்தி முடித்துள்ளது. அதில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பங்கு பாத்திரம் பிரதானமானது. பெண்களுக்கும் பட்டியலின மக்களுக்கும் எதிராக செயல்படும் காப் பஞ்சாயத்துகள், இக்காலகட்டத்தில் மேற்கூறிய பகுதியினரும் பங்கேற்கும் விதத்தில் இயங்கின.

பல்வேறு அமைப்புகளை உள்ளடக்கிய பட்டியலின,  பழங்குடியின மக்களுக்கான பரந்த மேடைகள், சிறுபான்மை நல குழுக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வழிகாட்டுதலோடு செயல்பட்டு வருகின்றன. சாதிய, பாலின ஒடுக்குமுறை பிரச்சினைகளில் கட்சியின் தோழர்கள் களத்தில் இறங்கி தலையீடு செய்கின்றனர். அதிகரித்து வரும் சாதி ஆணவக்  குற்றங்கள் மற்றும் கொலைகளுக்கு எதிராக உறுதியான போராட்டங்கள் பல்வேறு மாநிலங்களில் நடைபெறுகின்றன. கோயில் உள்ளிட்ட பொது இடங்களில் பெண்களும், பட்டியல் இன மக்களும்  உள்நுழைவதை உறுதிப்படுத்துவதற்கான இயக்கங்களும் தொடர்ந்து நடக்கின்றன. சபரிமலை பிரச்சினையை உதாரணமாகக் கூற முடியும். சமூகநீதி பாரம்பரியத்தை நினைவுகூர்ந்து அடர்த்தியான ஒரு மனிதச்சங்கிலி லட்சக்கணக்கான பெண்களின் பங்கேற்புடன் கேரளாவில் நடைபெற்றது. நிர்பயா பிரச்சனைக்குப் பிறகு அமைக்கப்பட்ட நீதியரசர் வர்மா கமிஷனுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் கொடுக்கப்பட்ட ஆலோசனைகள் மதிப்பு மிகுந்தவையாகும். தமிழக அரசால் வெளியிடப்பட்ட பெண்களுக்கான வரைவு கொள்கை குறித்து அரசியல் கட்சி என்கிற முறையில் அனேகமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே தன்னுடைய கருத்துக்களை விரிவான குறிப்பாக அனுப்பி இருக்கிறது.

மாநில அரசின் குறுகிய அதிகார வரம்புக்கு உட்பட்டு, இடது ஜனநாயக மாற்று கொள்கைகளை ஓரளவு அமல்படுத்திய செயல்பாட்டின் மூலமாகவே கேரளாவில் இடது முன்னணி அரசு பெரும்பான்மையான மக்கள் ஆதரவோடு மீண்டும் தேர்வு செய்யப்பட்டது.

 பழங்குடியின மக்களின் கலாச்சாரம், மொழி, நிலம், வாழ்வாதாரம் உள்ளிட்ட உரிமைகளைப் பாதுகாக்க அவர்கள் அடர்த்தியாக வசிக்கக்கூடிய தொடர்பகுதிகளுக்கு பிரதேச சுயாட்சி உரிமை அளிக்கப்பட வேண்டும் என்பது மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டத்திலேயே சுட்டிக்காட்டப்பட்ட அம்சம். அதன் அடிப்படையில்தான் மேற்கு வங்கத்தில் கோர்க்கா இன மக்களுக்கும், திரிபுராவின் பழங்குடியின மக்களுக்கும் மாவட்ட சுயாட்சி கவுன்சில்கள் அமைக்கப்பட்டன. பழங்குடியின மக்களின் குடியிருப்பு, இனச்சான்றிதழ், கல்வி, வேலைவாய்ப்புக்கு வலுவான போராட்டங்கள் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் நடத்தப்படுகின்றன

சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கு ஒன்றிய பாஜக அரசு காட்டுகிற தயக்கம் அதன் சித்தாந்தத்தின் அடிப்படையிலேயே  முன் வருகிறது என சுட்டிக் காட்டப்பட்டது. கணக்கெடுப்பு என்று சொல்லும்போது எண்ணிக்கை மட்டுமல்ல; கல்வி, வேலைவாய்ப்பு, கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு வாழ்வியல் அம்சங்களில் இந்த சாதிகள் எந்த நிலைமையில் உள்ளன என்பதும் புரிந்து கொள்ளப்படும். இந்துக்கள் என்கிற ஒற்றை வார்த்தைக்குள் சாதிய ஒடுக்குமுறைகளையும் வேறுபாடுகளையும் மூடி மறைக்கிற ஆர் எஸ் எஸ்ஸின் முயற்சிகள் இதில் அம்பலமாகும்.

இடது ஜனநாயக திட்டம் சமூக நீதி குறித்த கீழ்கண்ட அம்சங்களை மாற்றுக் கொள்கையாக முன்வைக்கிறது:

 • சாதிய முறைமையையும், சாதிய ஒடுக்குமுறையின் அனைத்து வடிவங்களையும் முற்றாக ஒழிப்பது;
 • பட்டியலின, பழங்குடியின மக்களின் அடிப்படையான மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு சிறப்பு நடவடிக்கைகள் எடுப்பது;
 • பட்டியலின, பழங்குடியின மக்களுக்கான துணை திட்டத்தை ஒரு சட்டத்தின் அடிப்படையில் உருவாக்குவது;  இதனை கண்காணிக்க உயர்மட்ட கமிட்டி ஒன்றை நிறுவுவது;
 • பழங்குடியின மக்களின் நில  உரிமை, வாழ்வுரிமை, கலாச்சார உரிமைகளுக்கான அரசியல் சாசனப் பிரிவுகள் மற்றும் சட்டப் பிரிவுகளைப் பாதுகாப்பது;
 • தனியார் துறையில் இட ஒதுக்கீட்டைக் கொண்டு வருவது;
 • சாதி வாரி கணக்கெடுப்பை நடத்துவது; பிற்பட்ட சாதிகள் குறித்தும் கணக்கெடுப்பது;
 • நிலுவையில் இருக்கும் காலி இடங்களை இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நிரப்புவது
 • கையால் மலம் அள்ளும் நடைமுறையைக் கறாராக தடுத்து நிறுத்துவது;
 • தீண்டாமைக்கு எதிராகக் கடும் தண்டனைகளை அமல்படுத்துவது;
 • வன உரிமை சட்டத்தைக் கறாராக  நடைமுறையாக்குவது;
 • சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை சட்டம் ஆக்குவது;
 • பெண்கள் குழந்தைகள் மீதான கொடூரமான வன்முறையைத் தடுக்க உறுதியான நடவடிக்கைகளை எடுப்பது; குற்றவாளிகள் தப்பி விடாமல் தண்டனைக்கு உட்படுத்தப்படுவதை உறுதிசெய்வது;
 • சாதி ஆணவக் குற்றங்களுக்கு எதிரான சட்டம் கொண்டு வருவது.

மாநில, அகில இந்திய மாநாடுகள் இடது ஜனநாயக அணி மற்றும் திட்டம் குறித்து பரிசீலிக்கும். ஆனால், இவை மாநாட்டு பரிசீலனைக்கான அம்சங்கள் மட்டுமல்ல; மார்க்சிஸ்ட் கட்சியின் கிளைகளும், கமிட்டிகளும், உறுப்பினர்களும் தம் அன்றாட பணிகளை, தமிழகத்தின் இடது ஜனநாயக திட்டத்தைச் சுற்றி அமைத்துக்கொள்ள வேண்டும். இடதுசாரி வெகுஜன அமைப்புகளை இவற்றிலுள்ள கோரிக்கைகளின்பால் அணிதிரட்டி, கூட்டுப் போராட்டம் நடத்திட வேண்டும். இதில் இடம் பெற்றுள்ள ஒவ்வோர் அம்சத்தையும் ஆதரிக்கக் கூடிய பல்வேறு முற்போக்கு ஜனநாயக அமைப்புகள் கண்டிப்பாக உள்ளன. அவற்றையும் உள்ளடக்கிய கூட்டு மேடைகள் உருவாக்கப்பட்டு பலப்படுத்தப்பட வேண்டும். ஒரே ஒரு கோரிக்கையில் அல்லது அக்கோரிக்கையின் ஒரே ஒரு புள்ளியில் இணைய முன் வருபவர்களையும் அதற்குத் தகுந்தவாறு பயன்படுத்திட வேண்டும்.

ஒன்றிய அரசின் சாதிய மதவெறி கொள்கைகள், மாநில உரிமைகள் பறிப்பு, பொருளாதார சுரண்டல் போன்றவற்றை எதிர்த்த போராட்டங்களில் மாநில முதலாளித்துவ கட்சிகளை இணைத்துக் கொள்ள வேண்டும். பெரு முதலாளி வர்க்க பிரதிநிதிகளான பாஜக, காங்கிரசையும், மாநில முதலாளித்துவ கட்சிகளையும் சமப்படுத்தி பார்க்கக்கூடாது என்று கட்சி ஆவணங்கள் சுட்டிக் காட்டுகிற அதே நேரத்தில், நமது வர்க்கங்கள் மற்றும் சமூக ஒடுக்குமுறையில் பாதிக்கப்படும் பகுதியினருக்கான  ஆதரவு நிலையில் சமரசத்திற்கு இடமில்லை எனவும், அத்தகைய கொள்கைகளை நடவடிக்கைகளை ஆட்சியிலிருக்கும் மாநில முதலாளித்துவ கட்சி எடுக்கும்போது மக்களைத் திரட்டி போராட்டங்களில் இறக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறது.  இதற்கு கட்சியின் சொந்த பலம் அதிகரிக்கப்பட வேண்டும் என்பது தலையாய கடமை. எனவே கட்சித் திட்டம் சார்ந்தும், இடது ஜனநாயக திட்டம் சார்ந்தும் பணிகளை ஒருங்கிணைத்து முன்னேறுவது என்பது அவசர அவசியமானதாகும்.

காலத்தின் தேவையே பகத்சிங்கை வளர்ந்தெடுத்தது

ச.லெனின்

“காலத்தின் தேவையே நம்மை இவ்வாறு வளர்த்தெடுத்துள்ளது. கம்யூனிசத்தின் தந்தை என்று கூறப்படும் கார்ல் மார்க்ஸ்கூட, உண்மையில் அந்தத் தத்துவத்தின் மூலகர்த்தா அல்ல என்றே நான் கூறுவேன். ஐரோப்பாவில் நடைபெற்ற தொழிற்புரட்சியே அத்தகைய  மனிதர்களை வளர்த்தெடுத்தது. மார்க்ஸ் அவர்களில் ஒருவர். குறிப்பிட்ட பாதையில் அக்காலச்சக்கரத்தை முடுக்கிவிட்டதில் மார்க்சுக்கு ஒரு முக்கியமான பங்குண்டு என்பது உண்மையே” என்று சுகதேவுக்கு எழுதிய கடிதத்தில் பகத்சிங் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

வரலாற்றில் தனிநபர்கள்

இயக்கவியல் வரலாற்றுப் பொருள் முதல்வாதம் மற்றும் மார்க்சிய நோக்கில் ‘வரலாற்றில் தனிநபர்கள்‘ என்கிற அம்சத்தை பகத்சிங்கின் எழுத்து பட்டவர்த்தனமாக எடுத்துரைக்கிறது. மார்க்ஸ் பற்றி பகத்சிங் குறிப்பிடுவது சற்று அதீதமான பார்வையாகக்கூட தெரியலாம். ஆனால், காலத்தின் தேவையே வரலாற்றில் தனிநபர்களை உருவாக்குகிறது என்பதையே அவர் இங்கு முன்வைக்கிறார்.

“கம்யூனிஸ்ட் அறிக்கை‘‘ –க்கு 1883 இல் எங்கெல்ஸ் எழுதிய முன்னுரையில் “அறிக்கையினூடே இழையோடி நிற்கும் அடிப்படையான கருத்து வரலாற்று ரீதியான ஒவ்வொரு சகாப்தத்தின் பொருளாதார உற்பத்தியும், அதிலிருந்து தவிர்க்க முடியாதபடி எழுகின்ற சமுதாய கட்டமைப்பும், அந்தந்த சகாப்தத்தின் அரசியல் வரலாற்றுக்கும் அறிவுத்துறை வரலாற்றுக்குமான அடித்தளமாக அமைகின்றன” என்கிறார். பகத்சிங்குடைய வாதத்திற்கான நியாயத்தை எங்கெல்சின் இவ்வரிகள் வழங்குகின்றன.

“கற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும்” எனும் தனது நூலில் இதுகுறித்து மேலும் விரிவாகவே எங்கெல்ஸ் எழுதியுள்ளார். “சோஷலிசம் என்பது எதார்த்தத்தில் நிலவும் இந்த மோதலினால் (உற்பத்தி சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையே நிகழும் மோதலினால்) சிந்தனையில் ஏற்படும் எதிர்வினையே அன்றி வேறில்லை” “உண்மையில் இம்மோதல் நமக்குப் புறத்தே, இம்மோதல்களை உருவாக்கிய மனிதர்களின் எண்ணத்தையும் செயல்களையும்கூடச் சாராமல் தன்னியல்பாக நிலவுகிறது” “சோஷலிசம் என்பது ஏதோவோர் அறிவுசார் மூளையின் தற்செயலானகண்டுபிடிப்பல்ல. வரலாற்று ரீதியாக வளர்ச்சிபெற்ற இரு வர்க்கங்களான பாட்டாளி வர்க்கத்திற்கும் முதலாளி வர்க்கத்துக்கும் இடையே நிகழும் போராட்டத்தின் தவிர்க்க முடியாத விளைவாகும்’‘ என்கிற எங்கெல்சின் வார்த்தைகளை “கம்யூனிசத்தின் தந்தை கார்ல் மார்க்ஸ்கூட இந்த தத்துவத்தின் மூலவர் அல்ல என்றுகூட நான் கூறுவேன்” என்கிற பகத்சிங்கின் வார்த்தைகளோடு இணைத்துப் பார்ப்பது சரியான புரிதலை வழங்கும்.

மார்க்ஸ் காலத்திற்கு முன்பு கற்பனாவாத சோசலிசம் பேசியவர்கள் முதலாளித்துவ உற்பத்தி முறையையும் அதன் பின்விளைவுகளையும் கண்டித்தனர். ஆனால் முதலாளித்துவ அமைப்பு முறையில், சுரண்டல் எதில் அடங்கியிருக்கிறது எனும் ரகசியத்தை தோலுரிப்பதும், குறிப்பிட்ட வரலாற்று காலகட்டத்தில் முதலாளித்துவம் தனது இருப்பை தக்கவைத்துக் கொண்டாலும் பிறகு தவிர்க்க முடியாத வகையில் அது வீழும் என்பதையும் கற்பனாவாத சோசலிசவாதிகள் கண்டறிய முடியவில்லை. அதை மார்க்ஸ் கண்டறிந்தார். “வரலாறு பற்றி பொருள்முதல்வாதக் கருத்துரு, உபரி மதிப்பு மூலம் முதலாளித்துவ முறையிலான உற்பத்தி பற்றிய இரகசியத்தின் வெளிப்பாடு ஆகிய இந்த மாபெரும் இரு கண்டுபிடிப்புகளுக்காக நாம் மார்க்சுக்கு கடமைப்பட்டுள்ளோம்’‘ என்கிறார் எங்கெல்ஸ். மேலும், தொழிலாளியிடம் இருந்து “ஊதியம் தரப்படாத உழைப்பை உறிஞ்சி கொள்வதுதான் முதலாளித்துவ உற்பத்தி முறைக்கும் அதன் கீழ் தொழிலாளி சுரண்டப்படுவதற்கும் அடிப்படையாக அமைகிறது என்பதை (மார்க்ஸ் கண்டறிந்த உபரி மதிப்பின் மூலம்) எடுத்துக் காட்டப்பட்டது”என்கிறார்.

கற்பனாவாத சோசலிசம் எனும் நிலையிலிருந்து விஞ்ஞான சோசலிசத்தை நோக்கிய “குறிப்பிட்ட பாதையில் காலச்சக்கரத்தை முடுக்கிவிட்டதில்“ மார்க்சின் உபரி மதிப்பு மற்றும் முதலாளித்துவ இயங்கு முறை குறித்த பங்களிப்பு, கணிசமானதொரு பாத்திரத்தை வகித்தது என்பதை எங்கெல்சின் வார்த்தைகளே நமக்கு வழங்குகிறது.

வரலாற்றை மக்களே படைக்கின்றனர்

பொதுவாகவே மக்களின் சக்தியைக் குறைத்து மதிப்பிடுவதும், அவர்களால் எதுவும் செய்ய முடியாது என்றும், எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தும் தகுதி அவர்களுக்கு இல்லை என்றும், ஆளும் வர்க்கம் மக்களின் பொதுப் புத்தியில் ஏற்றிவைப்பது வழக்கம். எனவே, மக்களை மீட்க ஒரு மீட்பர் வருவார்; அவரே மக்களை அனைத்து துயரங்களிலிருந்தும் மீட்பார் என்று கட்டியமைக்கிறது.

 வரலாற்றை தனிநபர்கள் படைப்பதில்லை; ஆனால் வரலாற்றில் தனிநபர்கள் வகிக்கும் பங்கு முக்கியமானதாகும். வரலாற்றைத் தனிநபர்கள் படைக்கிறார்கள் என்பது முதலாளித்துவ சிந்தனை போக்காகும். அத்தகைய முதலாளித்துவ கல்வி முறைதான் இந்திய விடுதலை உள்ளிட்ட எல்லா வரலாறுகளையும் யாரோ ஒருவர் சாதித்தது போல் கட்டமைத்துள்ளது. உண்மையில் வரலாற்றை மக்களே படைக்கிறார்கள். உலகில் நடைபெற்ற அத்துணை சமூக மாற்றங்களும் மக்களால் படைக்கப்பட்டதே அன்றி தனிநபர்களால் அல்ல என்பதை மக்கள் வரலாறு சொல்லுகிறது. மார்க்சியம் மக்களின் வரலாற்றைப் பேசுகிறது. பகத்சிங்கும் அதையே கூறுகிறார்.

வராலாற்றில் தனிநபர் வகிக்கும் பாத்திரம் என்பதையும் பகத்சிங் அறிந்தே இருந்தார். அதேநேரத்தில் மக்கள் திரள் போராட்டம், கூட்டு செயல்பாடு, அமைப்பின் அடித்தளமாக இருக்கும் தோழர்களின் உழைப்பு ஆகியவற்றின் மேன்மையையும் அவசியத்தையும் அவர் பல இடங்களில் பேசியுள்ளார்.

 இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் பகத்சிங், ராஜகுரு,  சுகதேவ் ஆகியோரின் உயிர்த்தியாகம் அளப்பரிய பங்களிப்பைச் செய்துள்ளது. பகத்சிங் மற்றும் அவர்தம் தோழர்கள் தூக்கிலிடப்பட்டபோது தேசமே உணர்ச்சி மேலிட்டு கொதித்தெழுந்தது. காந்திக்கு நிகரான புகழோடும் மக்கள் செல்வாக்கோடும் பகத்சிங் அன்று இருந்ததாக காங்கிரஸ் கட்சியின் வரலாற்றை எழுதிய அக்கட்சியின் முன்னோடி பட்டாபி சீத்தாராமையா குறிப்பிடுகிறார். அப்படியான நிலையிலும் பகத்சிங் தனிநபர் மாயைக்கு ஆட்படாமலே இருந்தார். வீரதீர செயல்களில் பங்கெடுப்பவர்களையும் ஆட்சியாளர்களால் அரசியல் காரணங்களுக்காக தூக்கிலிடப்படுபவர்களையும் தானாக புகழ் தேடி வருகிறது. ஒரு பெரிய மாளிகையின் முகப்பில் பதிக்கப்பட்ட வைரம் போன்று அவர்கள் காட்சிப்படுத்தப்படுகின்றனர். ஆனால், அம்மாளிகையை நிமிர்ந்து நிற்க வைத்துள்ள சாதாரண அஸ்திவார கல்லுக்குள்ள முக்கியத்துவம் அந்த வைரத்திற்கில்லை என்று மிகுந்த தன்னடக்கத்துடன் பகத்சிங் குறிப்பிடுகிறார். இதன்மூலம், எவ்வித ஆரவாரமும் இன்றி சமூக மாற்றம் என்கிற லட்சியத்திற்காக ஒரு புரட்சிகர இயக்கத்திற்குள் பணியாற்றும் ஆற்றல் மிகுந்த செயல்பாட்டாளர்களின் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைக்கிறார். 

“சோசலிசம் மற்றும் கம்யூனிச சிந்தனைகளை, நீயோ நானோ இங்கு விதைக்கவில்லை. நாம் வாழும் காலகட்டத்தின் சூழ்நிலைகளும் அதன் விளைவால் ஏற்பட்டுள்ள கட்டாயமும் நம்மை அச்சிந்தனைகளை ஏற்றுக்கொள்ளுமாறு செய்துள்ளன. இச்சிந்தனைகளைப் மக்களிடம் எடுத்துச்செல்ல  நாமும் சிறிது பங்காற்றியுள்ளோம் என்பது உண்மை.” என்று சுககேவிற்கு எழுதிய கடிதத்தில் பகத்சிங் குறிப்பிடுகிறார். எந்த தனி நபருக்காகவும் வரலாறு காத்துக்கிடப்பதில்லை. காலம் அதன் தேவையை கருத்தில்கொண்டு, தனிநபர்களை உருவாக்கி வளர்த்து முன்னோக்கி பாய்ந்து கொண்டே உள்ளது.

 மதம் சார்ந்த தேசியம்

 பகத்சிங்கிற்கு முன்பும் பின்பும் பல இளம் போராளிகள் தேச விடுதலைக்காக தங்களின் உயிரை தியாகம் செய்தபோதும், பகத்சிங் அவர்களிலிருந்து தனித்துவமாக நிற்பதற்கான காரணம் அவரது சித்தாந்தத் தெளிவாகும். இன்று மதவாத சக்திகள் மக்களை பிளவு அரசியலை நோக்கி அணி திரட்டி வரும் தருவாயில், பகத்சிங்கின் சித்தாந்தத் தெளிவும், இந்திய புரட்சி இயக்கத்தில் அவர் ஏற்படுத்திய தத்துவார்த்த தாக்கமும் கவனிக்கத்தக்கதாகும். இன்றுள்ளதுபோன்ற மதவெறி அரசியலோ, தேச பிரிவினையின்போது நிகழ்ந்த மதமோதல்களோ பகத்சிங் வாழ்ந்த காலத்தில் இல்லாதபோதும், மதப்பற்றில் மூழ்கிய உணர்வு வயப்பட்ட செயல்பாடுகளை கடந்த, பொது நோக்குடன் கூடிய, பக்குவப்பட்ட, தேர்ந்த அரசியலை பகத்சிங் கைக்கொண்டிருந்தார்.  பகத்சிங்கே கூறுவதுபோல் அது காலத்தின் தேவையிலிருந்து அவர்கள் வந்தடைந்த இடமாகும்.

 பகத்சிங்கின் காலத்திற்கு முந்தைய புரட்சிக் குழுக்கள் எல்லாம் கடவுள், மதம் உள்ளிட்ட பழமைவாத போக்குகள் மீது ஆழமான நம்பிக்கை கொண்டவைகளாகவே இருந்தன.  பகத்சிங் கடவுள் மறுப்பாளராக இருந்ததும், “நான் ஏன் நாத்திகன்” என்கிற தனது நூலில் நாத்திகத்தை அவர் பற்றி நிற்பதற்கான காரணங்களை விளக்கியிருப்பதும், அவருக்கு முந்தைய புரட்சிக் குழுக்களின் நிலைபாட்டிலிருந்து எவ்வளவு முற்போக்கான வளர்ச்சிக் கட்டத்தில் அவர் நின்றார் என்பதை எடுத்துக்காட்டியது.

லோகமான்ய பால கங்காதர திலகர் இந்திய விடுதலைப் போராட்டத்தின் தலைசிறந்த தலைவர்களில் ஒருவர். ஆனால் அவர் விடுதலை போராட்ட களத்தில் வெள்ளையர்களையும் அவர்களின் அடக்குமுறைகளையும் எதிர்கொள்வதற்கு மத ரீதியான உணர்வுகளை மையப்படுத்தி செயலாற்றினார். 1897 காலகட்டத்தில், பூனாவில் பிளேக் நோய் பரவியபோது அதை கட்டுப்படுத்துவதற்காக ராண்ட் எனும் வெள்ளை அதிகாரி நியமிக்கப்பட்டார். பிளேக் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தோடு பூனாவை விட்டு வெளியேற வேண்டுமென்று கூறி கடும் அடக்குமுறைகளை ஏவினார். பிளேக்கை கட்டுப்படுத்த , பிளேக் நோய்க்கு காரணமான எலிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் அவர் ஈடுபட்டார். ராண்ட் ஏவிய அடக்குமுறையை எதிர்கொள்ள, எலிகள் நமது விநாயகரின் வாகனம்; அதை வெள்ளையர்கள் அழிக்கிறார்கள் என்று உணர்வு ரீதியான பிரச்சாரத்தையே திலகர் மேற்கொண்டார்.

இச்சூழலில்தான் சபேகார் சகோதரர்கள் ராண்ட் மற்றும் அவர்ஸ்ட் ஆகிய வெள்ளை அதிகாரிகளை 1897 ஜூன் 22 அன்று சுட்டுக் கொன்றனர். இந்து மதத்திற்கு எதிராக உள்ளவர்களை அழிப்பதற்கான சங்கம் (Society for the Removal of Obstacles to the Hindu Religion) எனும் அமைப்பை சபேகார் சகோதரர்கள் 1894 லேயே உருவாக்கியிருந்தனர். அச்சங்கத்தின் உறுப்பினர்களுக்கு உடற்பயிற்சியும் ராணுவ பயிற்சியும் வழங்கப்பட்டது. அது இந்து மதத்தை பாதுகாப்பதற்கான சங்கம் என்றும் அழைக்கப்பட்டது. இவ்வமைப்பினர் ஆண்டுதோறும் சிவாஜி மற்றும் விநாயகர் திருவிழாக்களை நடத்தினர். அதில் வெளிப்படையாகவே இந்து மதத்திற்கு எதிராக உள்ளவர்களை எதிர்க்க வாள் ஏந்தவேண்டும் என்றனர். இந்த யுத்தத்தில் நமது உயிரை துச்சமாக மதிக்க வேண்டும் என்றனர். “ஐயகோ, கொலைகார பாவிகள் நம் பசுக்களையும் பசுங்கன்றுகளையும் கொன்று குவிக்கிறார்களே” என்று வெள்ளையர்களுக்கு எதிரான வாசகமாக கணபதி ஸ்லோகங்களில் பாடினர். மேலும் “இவர்கள் எப்படி வெள்ளையர்களுக்கு எதிராக இருந்தார்களோ, அதே அளவுக்கு முஸ்லீம்களுக்கு எதிராகவும் இருந்தனர்“என்று பதிவு செய்கிறார் சிவவர்மா.

 வங்கத்தில் அனுசீலன் சமிதி (உடல்நலக் கழகம்) எனும் அமைப்பு 1902 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கிழக்கு வங்கத்தில் இருந்த பெருநகரான டாக்காவை மையமாகக் கொண்ட ஒரு  குழுவும், இன்றைய மேற்கு வங்கத்தின் தலைநகரான கல்கத்தாவை மையமாகக் கொண்ட ஒரு குழுவும் செயல்பட்டன. வங்கத்தின் புகழ்பெற்ற எழுத்தாளரான பங்கிம் சந்திர சாட்டர்ஜியின் எழுத்துக்கள் இந்த அமைப்பின் வளர்ச்சிக்குத் தூண்டுகோலாக இருந்தன. இந்திய விடுதலைப் போராட்டத்தில் பல குறிப்பிடத் தகுந்த புரட்சியாளர்களை வளர்த்தெடுப்பதாகவும் புரட்சிகர நடவடிக்கைகளுக்கு அடித்தளமாகவும் இந்த அமைப்பு இருந்தது. “ அனுசீலன் சமிதி உறுப்பினர்கள் மிகவும் பயபக்தியுடன் இந்து மத நூல்களிலிருந்து, குறிப்பாக கீதையிலிருந்து, மேற்கோள்களை வாசித்தார்கள்”. பால கங்காதர திலகர், பிபின் சந்திரபால், பிரம்மா பந்தவ், அரவிந்த கோஷ் உள்ளிட்ட முக்கியமான தலைவர்கள் வெள்ளையர்களின் இருப்பை இந்து மதத்திற்கு எதிரானதாகவும் அதை அகற்ற மத உணர்வுடன், தீவிரவாத தன்மையுடன் போராட வேண்டும் என்று இளைஞர்களுக்கு வழிகாட்டி வளர்த்தனர். இது தவிர்க்க முடியாத வகையில் அரசியலில் மதக் கலப்பிற்கு வழிவகுத்தது.

 புரட்சிகர இயக்கத்தின் தத்துவ வளர்ச்சி

 வரலாற்று வளர்ச்சிப் போக்கில், இருபதாம் நூற்றாண்டான் துவக்கத்திலிருந்தே மத அரசியலுக்கு மாற்றாக தேசிய சிந்தனை கொண்ட அரசியலாக வளர்ச்சி பெற்றது. 1902 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அனுசீலன் சமிதியின் பிரகடனத்திலேயே இதற்கான விதை இருந்தது. அதில் “ அனுசீலன் கனவு காணும் சமூகத்தில் ஏழைகள் என்றோ, கல்வியற்றவர்கள் என்றோ, யாரும் இருக்க மாட்டார்கள். மனிதர்களை ஏற்றத்தாழ்வாக நடத்தும் சமூகத்தில் முன்னேற்றம் என்பது சாத்தியமில்லை. சமூக, பொருளாதார, பிராந்திய சமத்துவமின்மை என அனைத்து சமத்துவமின்மைகளையும் அழித்தொழித்து நாட்டில் வாழும் அனைவருக்கும் சமத்துவத்தை கொண்டுவர வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  வங்கப் புரட்சியாளர்கள் மத அரசியலிலிருந்து உத்வேகம் பெற்றிருந்தாலும் இஸ்லாமிய வெறுப்பு அவர்களிடம் இல்லை என்கிறார் சிவவர்மா. அதேசமயம் துவக்கத்திலிருந்தே பஞ்சாபிலிருந்து வந்த புரட்சியாளர்கள் வகுப்புவாத பலவீனம் அற்றவர்களாகவே இருந்தனர் என்றும், அவர்களை பொறுத்தவரை மதம் என்பது ஒருவரின் தனிப்பட்ட விஷயம் என்பதாகவே இருந்தது என்கிறார்.

பிரெஞ்ச், இத்தாலி மற்றும் ரஷ்ய புரட்சியாளர்களின் தாக்கமே இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் வளர்ந்த இந்திய புரட்சியாளர்கள் மத்தியில் விளைந்த இந்த வளர்ச்சிப் போக்கிற்கு அடிப்படையாக அமைந்தன என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

1917 இல் நிகழ்ந்த ரஷ்யப் புரட்சி உலகம் முழுவதும் கம்யூனிசத்தின் மீது ஒரு ஈர்ப்பை உருவாக்கியது. இந்திய விடுதலை இயக்கத்திலும் அது குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. புரட்சிக் குழுக்கள் பொதுவாக மக்களுடன் ஒரு நெருங்கிய தொடர்பற்றவர்களாகவே இருந்தனர். தனிநபர் பழி தீர்த்தல், ஆயுதம் தாங்கிய போராட்டம் என்பதையும் தாண்டி ஒரு சமூக மாற்றத்திற்கான போராட்டத்தில் மக்கள் சக்தியின் அவசியத்தையும் உழைக்கும் மக்களின் பங்களிப்பையும் ரஷ்ய புரட்சி இந்திய புரட்சியாளர்களுக்கு எடுத்துக்காட்டியது.

உலக வரலாற்றின் வளர்ச்சிப் போக்கையே ரஷ்ய புரட்சி புரட்டிப்போட்டது. அந்த வரலாற்று வளர்ச்சியின் தாக்கம் பகத்சிங்கை எட்டியபோது, அது இந்திய புரட்சிக் குழுக்களின் செயல்பாடுகளிலும் அதன் கொள்கை லட்சியங்களிலும் வெளிப்பட்டது. “மக்களை திரட்டுவதும், பிரச்சாரமும் முக்கியம். நாட்டு மக்கள் நமது துணிவையும் செயல்களையும் பாராட்டுகிறார்கள். ஆனால் அவர்கள் நம்முடன் நேரடித் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருக்கிறார்கள்” என்றார் பகத்சிங். கப்பற்படை எழுச்சி எனும் போர்க்குணமிக்க போராட்டமும் வெகுஜன மக்கள் திரள் போராட்டமும் வலுப்பெற்ற நிலையில்தான் இந்திய விடுதலை சாத்தியமானது என்கிற பிற்கால உண்மை பகத்சிங்கின் தெளிந்த அரசியல் அவதானிப்பை நமக்கு எடுத்துக் காட்டுகிறது.

இந்துஸ்தான் குடியரசு சங்கம் என்பதை இந்துஸ்தான் சோஷலிஸ்ட் குடியரசு சங்கம் என பெயர் மாற்றம் செய்யவும் அவரே காரணமாக அமைந்தார். “புரட்சிக் கட்சி என்பது தேசிய அளவிலான ஒன்றல்ல. மாறாக அது சர்வதேச அளவிலானது” என்கிற சர்வதேச பாட்டாளி வர்க்க அரசியலை அது பறைசாற்றியது.   

கடவுள், மதம், மதச்சார்பின்மை

கடவுள் குறித்த அறிவியல் பூர்வமான பொருள் முதல்வாதப் பார்வையை  பகத்சிங் வந்தடைந்திருந்தார். வறட்டுத்தனமான நாத்திகத்தை அவர் பேசியதில்லை. மிகவும் எதார்த்தமாக அவற்றை அணுகி அதிலிருந்து பொய்மைகளை விலக்கினார். “கடவுள், சொர்க்கம், நரகம், பூர்வஜென்ம பாவ புண்ணியம் போன்ற எவ்வித  நம்பிக்கையும் நமக்கு கிடையாது. …. தலை எழுத்து என்பதும், அதை மாற்றவே முடியாது என்பதிலும் நமக்கு கொஞ்சமும் நம்பிக்கை கிடையாது. பொருள் முதல்வாதத்தின் அடிப்படையில்தான் நாம் நமது வாழ்வையும் சாவையும் அணுகவேண்டும். … என்னை போன்ற பொருள்முதல்வாதப்பார்வை கொண்ட நாத்திகவாதி உபயோகமற்ற முறையில் சாவது குறித்து நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. எங்கள் வாழ்வை எவ்வளவு மதிப்புமிக்க முறையில் வாழ முடியுமோ அத்தகைய முறையில் வாழ்வதையே விரும்புகிறோம்” என்று கடவுள் குறித்த தனது கருத்தை பகத்சிங் வெளிப்படுத்தியுள்ளார்.

கடவுள் அதைத் தொடர்ந்த வடிவமான மதம் உள்ளிட்டவைகளின் அடிப்படை நோக்கம் மற்றும் அதன் மோசமான விளைவுகள் குறித்தும் பகத்சிங் மிகக் கச்சிதமாக தனது நிலையை விளக்கியுள்ளார்.

மாயை, தலையெழுத்து, கடவுள், மதம் என்பவை எல்லாம் சாதாரண மக்களை ஏமாற்றி அவர்களை சுரண்டப் பயன்படுத்தும் ஆளும் வர்க்கத்தின் நச்சுக் கருத்துக்கள்தான். இதுவரை எல்லா மதங்களும் உலக மக்களை பிரித்துவைத்து அவர்களிடையே கலகங்களை தூண்டின. மதங்களின் பெயரால் நடத்திய ரத்தக் களறிகளைபோல் உலகத்தில் வேறெந்த விஷயத்திலும் நடக்கவில்லை. மதம் மனிதர்களை பிரித்து வைக்கிறது. அன்பு செய்வதை பறைசாற்றாமல் ஒருவருக்கொருவரை பகைக்கச் செய்கிறது. மதம், மூட நம்பிக்கைகளை ஊக்குவித்து மக்களின் அறிவு வளர்ச்சியைத் தடுக்கிறது. மனிதனின் சிந்தனா சக்தியை குறைக்கும் அத்தகைய மதம் எப்போதும் எனது மதமாக முடியாது என்கிறார் பகத்சிங்.

மதச்சார்பின்மை என்று வருகிறபோது, இன்றைய அளவில் மிகத் தீவிரமான மத மோதல்கள் நிகழ்ந்திராத சூழலிலும் பகத்சிங்கின் அவதானிப்பும் தீர்க்கமான பார்வையும் இன்றைய நிலைக்கும் பொருந்திப்போவதை பார்க்க முடியும். “ இங்குள்ள எல்லா கடவுள்களும் எனது கடவுள்கள்தான். ஒரு கடவுளை மற்றொரு கடவுளுடன் சண்டையிடச் செய்வதும், அதன்மூலம் நாம் வாழும் இச்சொர்க்கத்தை நரகமாக மாற்றும் சக்திகளை ஒழிப்பதோடு, மனித சமூகத்தை சமத்துவ சமூகம் நோக்கி அழைத்துச் செல்லும் முயற்சிகளே எனது மதமாகும்’‘ என்கிறார் பகத்சிங். அவரது  வார்த்தைகள் இன்றைய மதவெறி அரசியலை முன்னிறுத்தும் ஆர்எஸ்எஸ் இன் கருத்து நிலையை எதிர்கொள்வதற்கான சிறந்த ஆயுதமாகும்.  முற்போக்கு சித்தாந்தத்தின் வரலாற்று வழிவந்தவர்தான் பகத்சிங் எனும் புரட்சியின் அடையாளம் என்றும், மதச்சார்பின்மையை வலியுறுத்தியவராகவும் எல்லா வகையான சுரண்டலையும் எதிர்த்து களமாடியவராகவும் அவர் இருந்தார் என்பதையும் இளம் தலைமுறையினரிடம் எடுத்துச் செல்லவேண்டும். மதம் சார்ந்த அரசியலை பேசிய துவக்ககால புரட்சி குழுக்களை கடந்து, உலக வரலாற்று வளர்ச்சிப்போக்கின் கால ஓட்டத்தில் மதச்சார்பற்ற அரசியலை பகத்சிங் வந்தடைந்தார். அந்த வரலாற்றின் நீட்சியை உறுதிப்படுத்துவதே காலத்தின் இன்றைய தேவையாகியுள்ளது.

 • புரட்சிகர இயக்கத்தின் தத்துவார்த்த வளர்ச்சி, சிவவர்மா, பாரதி புத்தகாலயம், சென்னை, டிசம்பர் 2007.

மார்க்சிய பார்வையில் காந்தி – இ.எம்.எஸ் நம்பூதிரிபாட்

இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்

மகாத்மா காந்தியைப் பற்றிய ஒரு கண்ணோட்டத்திற்கு வர இதுவரை எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்துமே துரதிர்ஷ்டவசமாக, ஒன்று மிக எளிமையாகவும் அவரை ஒருதலைப்பட்சமாகப் பாராட்டுவதாக இருக்கின்றன; அல்லது மிக எளிமைப்படுத்தி, அவரை ஒருதலைப்பட்சமாக விமர்சிப்பதாக இருக்கின்றன. எனினும் நாம் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் இத்தகைய ஆபத்துகளைத் தவிர்ப்பதாக இருக்க வேண்டும். அத்தகைய முயற்சிகளுக்கான ஒரு பங்களிப்பாகவே காந்தியின் வாழ்க்கையிலிருந்து இந்த எழுத்தாளருக்குத் தோன்றுகின்ற முடிவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

முதலில் கவனிக்கப்பட வேண்டியது காந்தி ஒரு கருத்துமுதல்வாதி என்பதுதான். அவரை வழிநடத்திய உலகக் கண்ணோட்டம் பொருள்முதல்வாதத் தத்துவத்திற்கு எதிரானது என்ற பொருளில் மட்டுமல்ல; தன் முன்னால் அவர் வைத்துக் கொண்டிருந்த சில கொள்கைகளை தனது வாழ்க்கையின் இறுதிவரை உறுதியாகப்  பற்றிக் கொண்டிருந்தார் என்பதாலும்தான். உண்மை, அஹிம்சை, வாழ்க்கையின் இன்பங்களைத் துறத்தல் போன்ற தார்மீக நெறிகள்; சுதந்திரம், ஜனநாயகம், அமைதி போன்ற அரசியல் கருத்துக்கள்; மதங்கள் மற்றும் சமூகங்களின் ஒற்றுமை போன்ற சமுதாயக் குறிக்கோள்கள் ஆகிய இவை அனைத்தும் அவரது வாழ்வு மற்றும் போதனைகளின் பிரிக்கமுடியாத பகுதிகள். இத்தகைய சில சிறப்பான கொள்கைகளை பற்றி நின்றதே அவரை தன் பொதுவாழ்வின் தொடக்க காலத்தில் தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரக இயக்கத்தில் ஆர்வத்தோடு ஈடுபடச் செய்தது. இதுவே அவரை தேசத்தின் விடுதலைக்காக ஒத்துழையாமை மற்றும் இதர இயக்கங்களை வகுக்க உதவியது. இதுவே அவரை எண்ணற்ற ஜனநாயக நோக்கங்களுக்காகப் போராடுபவராகவும் ஆக்கியது. இறுதியாக, அவரை தேச ஒற்றுமை எனும் உயரிய லட்சியத்திற்காக உயிர்நீத்த தியாகியாகவும் ஆக்கியது.

இரண்டாவதாக, அதுவரை தூங்கிக் கொண்டிருந்த கோடிக்கணக்கான கிராமப்புறத்து ஏழைகளை தட்டி எழுப்புவதில் அவரது கொள்கைகள் மிகப்பெரும் பங்காற்றின. அவர்களோடு பேசும்போது அவர் பயன்படுத்திய அரை மதத்தன்மை கொண்ட மொழி; அவர் வாழ்ந்த எளிய, ஆடம்பரமற்ற வாழ்க்கை; அவர்களின் கோரிக்கைகளுக்காக அவர் நடத்திய போராட்டங்களில் காட்டிய ஆர்வம். இவையெல்லாம் கோடிக்கணக்கான கிராமப்புற ஏழைகளை அவர் பால் ஈர்த்தன. தங்களை ரட்சிக்க வந்தவராகவும், கடவுளின் அவதாரமாகவும், தாங்கள் இருந்த பரிதாப நிலையிலிருந்து தங்களை மீட்க வந்தவராகவும் அவர்கள் அவரைக் கண்டனர்.

பிற்போக்கான சமூகக் கண்ணோட்டம் கொண்டிருந்த காந்தியே நவீன தேசிய ஜனநாயக இயக்கத்திற்கு பெருந்திரளான கிராமப்புற ஏழைகளை ஈர்க்கும் ஆழமான புரட்சிகர அற்புதத்தை உருவாக்கிய காரணகர்த்தா என்று எவரேனும் கூறினால் அது சுயமுரண்பாடு போலத் தோன்றக் கூடும். எனினும், இந்த சுயமுரண்பாடு, தேசிய ஜனநாயக இயக்கம் நிலப்பிரபுத்துவத்துடன் தொடர்புள்ள முதலாளி வர்க்கத்தால் தலைமை தாங்கப்பட்டது என்ற உண்மையிலிருந்து எழுகின்ற நிஜ அரசியல் வாழ்வில் இருந்த முரண்பாட்டின் வெளிப்பாடே ஆகும்.

மூன்றாவதாக, தேசிய இயக்கத்தில் கிராமப்புற ஏழைகளை ஈர்ப்பதில் அவர் மிக முக்கிய பங்காற்றினார் என்ற போதிலும், முதலாம் உலகப் போருக்குப் பிந்தைய ஆண்டுகளில் அவர்கள் வெளிப்படுத்திய மிகப் பிரம்மாண்டமான விழிப்புணர்விற்கும் அவர்தான் காரணம் என்பதும் தவறாகும். ஏனெனில், இந்தியாவிலும் உலகம் முழுவதிலும் ஏற்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுகளின் விளைவே அந்த விழிப்புணர்வு. இந்திய தேசிய இயக்கத்திற்குள் வளர்ந்து வந்த தீவிரவாதப் பிரிவு சில பகுதிகளில் விவசாயிகளையும் தொட்டது. துருக்கி, சீனா , எல்லாவற்றிற்கும் மேலாக ருஷ்யப் புரட்சி போன்ற சர்வதேச நிகழ்வுகள் ஆசிய மக்களின் மனங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியது போன்றவை இந்திய விவசாயிகளின் மனசாட்சியின்மீது செயல்படத் தொடங்கிய சில அடிப்படையான காரணங்களாகும். காந்தி அந்த சித்திரத்திற்குள் வந்திருந்தாலும் அவை செயல்பட்டிருக்கும். ஒருவேளை அதேமாதிரியாக இருந்திருக்காது.

இதைச் சொல்வது இந்திய விவசாயிகளின் விழிப்புணர்விற்கு ஒரு குறிப்பிட்ட மாதிரியான குணாம்சத்தைக் கொடுத்ததிலும், புதிய எழுச்சி, சுதந்திரம், ஜனநாயகத்திற்கான அரசியல் இயக்கத்தோடு இணைக்கப்பட்டதிலும் தனிநபர் என்ற முறையில் காந்தி ஆற்றிய பங்கை மறுப்பதற்காக இல்லை. கிராமப்புற மக்களை ஈர்த்ததிலும் அதன் தொடர்ச்சியாக தேசிய ஜனநாயக இயக்கத்தை பலப்படுத்தியதிலும் காந்தியின் பங்கை மறுப்பது , மக்களிடம் ஏற்பட்ட அந்த விழிப்புணர்விற்கு முழுக்க முழுக்க காந்தியே காரணம் என்பது போன்றே ஒருதலைப்பட்சமானதே ஆகும்.

நான்காவதாக, இவ்வாறாக தேசிய இயக்கத்தின் பெரும் பலவீனத்தைப் போக்கியதில் பங்காற்றியவர் என்ற பாராட்டுதலுக்கு காந்தி தகுதியுடையவர் ஆகிறார். அதாவது, இதுவரை அணிதிரட்டப்படாமல் இருந்த பெருந்திரளான கிராமப்புற ஏழைகளை இயக்கத்திற்குள் கொண்டு வந்தததன் மூலம் இயக்கத்தை உண்மையிலேயே ஒரு தேசிய இயக்கமாக, அனைத்து வர்க்கங்களும் கலந்து கொண்ட இயக்கமாக அவர் ஆக்கினார். அதேவேளையில், கிராமப்புற ஏழைகள் சுயேச்சையான ஒரு சக்தியாக செயல்பட்டு விடுவார்களோ என்று எப்போதும், தன் இறப்பு வரைக்கும், அவர் பயந்து கொண்டே இருந்தார் என்பதையும் மறந்துவிடக் கூடாது. சுதந்திரம், ஜனநாயகத்திற்கான இயக்கத்தில் அவர்களை அணிதிரட்ட வேண்டும் என்று விரும்பியபோதிலும், அவர்கள் அவருடைய சொந்த வர்க்கமான முதலாளி வர்க்கத்தின் தலைமையின் கீழேதான் செயல்பட வேண்டும் என்பதிலும் அவர் குறிப்பாக இருந்தார்.

சவுரிசவ்ரா நாட்களிலிருந்து தன் இறுதி வரை, சுதந்திரம், ஜனநாயகத்திற்கான இயக்கத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் முதலாளி வர்க்கத்திற்குப் பாதுகாப்பானது என்று கருதப்பட்ட வரம்பிற்கு உள்ளேயே கிராமப்புற ஏழைகளை வைத்திருக்க அனைத்துவகையான நடவடிக்கைகளையும் அவர் எடுத்தார். இந்த உண்மையைக் காண மறுக்கும் எவரும், முதல் உலகப் பெரும்போர் காலகட்டத்தில் ஏகாதிபத்திய ராணுவத்திற்கு ஆள் எடுக்கும் ஒரு தளபதியாகச் செயல்பட்ட அவர், ஏன் ஏகாதிபத்தியத்திற்கும் அதன் முகவர்களுக்கும் எதிரான போராட்டத்தில் மக்கள் அகிம்சையையே கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார் என்பதை விளக்க முடியாது.

ஐந்தாவதாக, கிராமப்புற ஏழைகள் விஷயத்தில் மட்டுமல்ல; தொழிலாளி வர்க்கம் மற்றும் இதர உழைக்கும் மக்கள் விஷயத்திலும் அவரது அணுகுமுறையும் செயல்பாடும் முதலாளி வர்க்கத்திற்கு உதவுவதாகவே இருந்தது. அவரது ’தர்மகர்த்தா’ முறை பற்றிய கொள்கை, அரசியல் செயல்பாட்டின் வழிகாட்டியாக சில ஒழுக்க நெறிகள் இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியது, தனது தளபதிகளின் பாராளுமன்ற நடவடிக்கைகளோடு ஆக்கபூர்வத் திட்டம், சத்தியாகிரகம் போன்ற பாராளுமன்றத்திற்கு வெளியிலான தனது சொந்த செயல்பாடுகளை சாமர்த்தியமாக இணைத்த விதம், எதிரிக்கு எதிராக மக்கள் இயக்கத்தை நடத்திக் கொண்டே அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகின்ற பிரத்தியேகமான காந்திய வழிமுறை இவை எல்லாமே நடைமுறையில் (அ) ஏகாதிபத்தியத்திற்கு எதிரான செயல்பாட்டிற்காக மக்களை திரட்டுவதில் (ஆ) அவர்களை புரட்சிகர நடவடிக்கைகளில் இறங்குவதிலிருந்து தடுப்பதில் முதலாளி வர்க்கத்திற்கு அளவற்ற உதவி புரிந்தன.

மக்களை எழுச்சி கொள்ளச் செய்வதிலும், கட்டுப்படுத்துவதிலும், ஏகாதிபத்திய எதிர்ப்பு நேரடி நடவடிக்கைகளை தொடங்குவதிலும், அதே நேரத்தில் ஏகாதிபத்திய ஆட்சியாளர்களுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடர்வதிலும் அவருக்கு இருந்த தனித்திறன் அவரை முதலாளி வர்க்கத்தின் தன்னிகரற்ற தலைவராக ஆக்கியது. அந்த வர்க்கத்தின் அனைத்து குழுக்களும் கோஷ்டிகளும் அவர்மீது நம்பிக்கை வைத்திருந்தன. எனவே அவரால் முழு வர்க்கத்தையும் ஒன்றுபடுத்தி, செயல்பட வைக்க முடிந்தது.

இறுதியாக, வரலாற்றில் முதலாளி வர்க்கத்தின் முதன்மையான தலைவர் என்ற பாத்திரத்தை காந்தி வகித்தார் என்பதைக் கொண்டு அவர் எப்போதும், எல்லா  விஷயங்களிலும் முதலாளி வர்க்கத்தோடு ஒன்றுபட்டார் எனப் புரிந்து கொள்ளக் கூடாது. மறுபுறத்தில், நண்பராகவும், தத்துவவாதியாகவும் வழிகாட்டியாகவும் அவர் இருந்து தலைமை தாங்கிய முதலாளி வர்க்கத்தினுடைய, அவருடைய சிறப்பியல்பிற்கு ஏற்ற வகையில் பல தருணங்களிலும், பல விஷயங்களிலும் காந்தியின் குரல் தன்னந்தனியான ஒன்றாக இல்லை எனினும், ஒரு சிறுபான்மைக் குரலாக இருந்திருக்கிறது. அத்தகைய தருணங்கள் அனைத்திலும் அவரும் அவர்களும் தற்காலிகமாக வேறு வேறு பாதைகளில் செல்வது என்று தங்களுக்குள் முடிவு எடுத்துக் கொள்வார்கள். முதலில் சுயராஜ்யவாதிகளுக்கும் மாற்றத்தை விரும்பாதவர்களுக்கும் இடையிலான வேலைப் பிரிவினையாக, பின்னர் 1932-33 ஆண்டுகளில் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்திற்குப் பிந்தைய வருடங்களில், இரண்டாம் உலகப் பெரும்போரின்போது பல சந்தர்ப்பங்களில், இறுதியாக சுதந்திரத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய மாதங்களில்  இந்த அதிசயம் மீண்டும் மீண்டும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டது.

அவருடைய இறுதிநாட்களில் அவருக்கும், அவரது சகாக்களுக்கும் இடையில் அதிகரித்துவந்த இந்த இடைவெளியை ஆராயும்போதே அவரைப் பற்றிய, அவரது குறிக்கோள்கள் பற்றிய உண்மையிலேயே பாரபட்சமற்ற பல கோணங்களிலான மதிப்பீட்டிற்கு நாம் வர முடியும். ஏனெனில், சில தார்மீக விழுமியங்களை காந்தி வலியுறுத்தியதானது ஒரு சமயம் முதலாளி வர்க்கத்திற்கு சாதகமாக இருந்து, பின்னர் அவரது இறுதி நாட்களில் அதற்குத் தடையாக ஆனதன் வெளிப்பாடே அதிகரித்து வந்த இந்த இடைவெளி ஆகும்.

முதலாளி வர்க்கம் இரண்டு முனைகளில் போராட வேண்டியிருந்த நாட்களில் ஒரு பக்கம் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடுவதற்காக நமது நகர்ப்புற, கிராமப்புற ஏழைகளை அது திரட்ட வேண்டியிருந்தது. அதே நேரத்தில் மக்கள் மத்தியில் வளர்ந்து கொண்டிருந்த புரட்சிகரப் போக்குகளை எதிர்த்துப் போராட வேண்டியிருந்தபோது, காந்தியால் உருவாக்கப்பட்ட வன்முறையற்ற போராட்ட உத்தியை மேற்கொள்வது அதற்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதைக் கண்டது. இருந்தபோதிலும், ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம் வெற்றி பெற்ற பிறகு, அரசு அதிகாரத்தைப் பெற்ற பிறகு, அது இரு முனைகளில் போராட வேண்டிய அவசியம் இருக்கவில்லை. மேலும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக எந்தப் போராட்டத்தை நடத்த வேண்டியிருந்தாலும் அது அரசு மட்டத்திலேயே நடத்தப்பட்டது. அதற்காக மக்களை செயலில் இறக்க வேண்டிய தேவை இருக்கவில்லை.

மேலும் முதலாளி வர்க்கம் தன் கைக்கு வந்த அரசு அதிகாரத்தை தனது வர்க்க நலன்களை காப்பதற்காகவே பயன்படுத்தும். எனவே அரசு அதிகாரத்தை மக்களுக்கு எதிராகவே பயன்படுத்தும். அவர்கள் அதிகாரத்திற்கு வந்ததன் மற்றொரு விளைவு என்னவெனில், முதலாளி வர்க்கத்தின் தனிநபர் பிரதிநிதிகள் (சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் போன்றவர்கள்) தங்களையும், தங்கள் உறவினர்கள், நண்பர்கள், அடிவருடிகளை அரசு மற்றும் மக்களின் செலவில் செல்வந்தர்களாக ஆக்கிக் கொள்ளத் தொடங்கினர். இதற்காக எந்த வகையான ஊழலிலும் அவர்கள் ஈடுபட்டனர்.

முதலாளி வர்க்கம் மற்றும் அதன் பிரதிநிதிகளின் நிலையில் ஏற்பட்ட இந்த மாற்றம்தான் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்ட நாட்களில் தான் போதித்து வந்த கருத்துக்களை இன்னமும் பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த காந்தியோடு அதை முரண்படச் செய்தது. ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்ட நாட்களில் அவர் போதித்து வந்த தார்மீக நெறிகள் அதிகாரத்திற்கு வந்த அரசியல்வாதிகளுக்குத் தடையாக ஆயின. மறுபக்கமோ காந்தி அவற்றுக்கு உண்மையாக இருந்தார். தனது சகாக்கள், தளபதிகள் ஆகியோரிடம் ஏற்பட்ட இந்த திடீர் மாற்றத்தோடு அவரால் ஒத்துப்போக முடியவில்லை. குறிப்பாக, இந்து-முஸ்லீம் ஒற்றுமை மற்றும் காங்கிரசார் மத்தியில் ஊழல் ஆகிய பிரச்சனைகளில் நிலைமை இவ்வாறே இருந்தது.

ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்ட வருடங்களில் அவர் கடைப்பிடித்து வந்த உயரிய கொள்கைகளுக்காகவே – குறிப்பாக அவை முதலாளி வர்க்கத்தின் கைகளில் பயனுள்ள ஆயுதமாக நடைமுறையில் இருந்ததாலேயே – காந்தி தேசத் தந்தை ஆனார். மேலும், தன்னுடைய பிந்தைய நாட்களில் அவர் முதலாளி வர்க்கத்திலிருந்து கிட்டத்தட்ட தனிமைப்பட்டதற்குக் காரணம், சுதந்திரத்திற்குப் பிந்தைய நாட்களில் அவருடைய உயரிய கொள்கைகள் முதலாளி வர்க்கத்தின் சுயநலனுக்குத் தடையாக இருந்ததே ஆகும். உண்மை, அகிம்சை, அறம் போன்ற காந்தியின் போதனைகளை அரசியல் அதிகாரத்தை அடைவதற்காகத்தான் அவர்கள் ஏற்றுக் கொண்டனர்.

இன்றும் கூட கடுமையான எதார்த்தவாதிகள் என்ற வகையில், சமூக-பொருளாதார மாற்றத்திற்கான எந்த ஒரு இயக்கத்தின் வெற்றியும் தோல்வியும் அரசியல் அதிகாரம் யார் கையில் இருக்கிறது என்பதையும், அது எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதையும் பொறுத்தே அமைகிறது. இதனாலேயே அவர்கள் அதிகாரத்தையும் அதனைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பையும் துறக்கத் தயாராக இல்லை.

இவ்வகையில் காந்தியிசத்தை மதிப்பிடுகையில், மார்க்சிஸ்ட்-லெனினிஸ்டுகள் முதலாளி வர்க்கத்தின் தத்துவம், நடைமுறை என்ற வகையில் அதன் சாதக-பாதக அம்சங்களை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். சுதந்திரப் போராட்ட காலத்தின் ஏகாதிபத்திய எதிர்ப்பானாலும் சரி, அல்லது பூதான இயக்கத்தின்போது நிலப்பிரபுத்துவ எதிர்ப்பானாலும் சரி, அல்லது 1970களில் எதேச்சாதிகாரத்திற்கு எதிரான காலத்திலும் சரி, காந்தியிசம் என்பது முறையே நாட்டு விடுதலை, விவசாய சீர்திருத்தம், ஜனநாயக பாதுகாப்பு ஆகியவற்றுக்காகப் போராடியது. அதே நேரத்தில் மறுமலர்ச்சி மற்றும் இருண்மைவாத சமூக-கலாச்சார கண்ணோட்டத்தின் காரணமாக மக்கள் இயக்கத்தின் தடையற்ற வளர்ச்சிக்கு அது இடையூறான ஒன்றாக ஆனது.

இங்கொன்றும் அங்கொன்றுமாக தனிநபர்கள், வினோபா பாவே அல்லது வேறு லட்சியவாதிகளின் போதனையை கேட்டு அதிகாரத்தையோ உடமையையோ துறக்கலாம். ஆனால் நிலப்பிரபுக்களும் முதலாளி வர்க்கத்தினரும், இதர சுரண்டும் வர்க்கங்களும் ஒரு வர்க்கம் என்ற வகையில், தீர்க்கதரிசிகள் கனவு கண்ட, நடைமுறை புரட்சியாளர்கள் எதற்காகப் போராடினார்களோ அத்தகைய சமூக மாற்றங்களுக்கு விருப்பத்துடன் உடன்பட மாட்டார்கள். அவ்வகையில்தான் வினோபா பாவேயையும் அவரது சகாக்களையும் அவர்கள் நிச்சயமாக வாழ்த்துவார்கள். கிராமதான இயக்கத்தை தங்கள் அதிகாரத்திற்கு உட்பட்டு பிரச்சாரம் செய்வதற்கு உதவுவார்கள். ஆனால் அரசியல் அதிகாரத்திற்கான தங்களது போராட்டத்தை அவர்கள் எப்போதும் கைவிட மாட்டார்கள்.

கம்யூனிஸ்டுகள், சோஷலிஸ்டுகள், மற்ற இடதுசாரிகளைப் பொறுத்தவரையில் சமூக-பொருளாதார மாற்றத்திற்கான போராட்டத்தில் அரசியல் அதிகாரம் அவசியமான ஓர் அம்சம் என்பதில் அவர்கள் தெளிவாகவே இருந்தனர். இரு நூற்றாண்டிற்கு முன்பாகவே, மார்க்சிய மூலவர்கள் பிரகடனம் செய்ததைப் போல,  எந்தவொரு ஆளும் வர்க்கமும் தானாகவே அரசியல் அதிகாரத்தை விட்டுவிடுவதில்லை.

(தோழர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் எழுதிய மகாத்மாவும் அவரது இசமும் என்ற நூலில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள்)

சீனாவின் பயணம் எப்படிப்பட்டது?

[சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாம் ஆண்டு நிறைவு விழாவில் தோழர் ஷி ஜின் பிங் ஆற்றிய உரை (ஜூலை 1, 2021). ]

தோழர்களே! நண்பர்களே!

இன்று ஜூலை முதல் நாள். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றிலும் சீன தேசத்தின் வரலாற்றிலும் இது மிகச் சிறப்பான, முக்கியமான நாள். கட்சியின் நூறாம் ஆண்டு நிறைவை அனைத்து கட்சி உறுப்பினர்களோடும் நாடு முழுவதும் உள்ள  அனைத்து இன மக்களுடனும் இணைந்து கொண்டாட  நாம் கூடியிருக்கிறோம். கட்சியின்  கடந்த நூறு ஆண்டு போராட்டப் பயணத்தின் சிறப்புகளை பின் நோக்கி பார்க்கிறோம். சீன தேசத்தின் மறுமலர்ச்சிக்கான ஒளிமிக்க  வாய்ப்புகளை எதிர்நோக்குகிறோம்.

தொடக்கத்தில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு சார்பாக அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்.

இந்தச் சிறப்பான தருணத்தில் கட்சியின் சார்பாகவும் மக்கள் சார்பாகவும்  ஒரு பிரகடனம் செய்வதில் பெருமை கொள்கிறேன். தேசம் முழுமையும், ஒட்டுமொத்த கட்சியும் மேற்கொண்ட தொடர் முயற்சிகளின் விளைவாக நமது முதல் நூறாண்டு இலக்கான ‘எல்லா வகைகளிலும் மித அளவிலான வசதிபடைத்த சமூகத்தை கட்டுவது’ (Build a moderately prosperous society) என்பதை நிறைவு செய்துள்ளோம். இதன் பொருள் வரலாற்று சிறப்பு மிக்க வகையில் வறுமை பிரச்சினை சீனாவில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது என்பதாகும். இப்பொழுது நாம் அனைத்து வகைகளிலும் சிறப்பான, நவீன, சோசலிச நாடாக சீனாவை ஆக்குவது என்ற இரண்டாம் நூறாண்டு இலக்கை நோக்கி நம்பிக்கையுடன் பீடுநடை போடுகிறோம். இது சீன தேசம், சீன மக்கள் மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு மகத்தான சாதனையாகும்!

தோழர்களே! நண்பர்களே!

சீன தேசம் ஒரு மகத்தான தேசம். 5000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு உள்ள நாடு. மானுட நாகரீக வளர்ச்சிக்கு சீனா அழிக்க இயலாத பங்களிப்புகளை செய்துள்ளது. எனினும், 1840 ஆம் ஆண்டு கஞ்சா யுத்தத்திற்குப் பிறகு சீனா படிப்படியாக அரை-காலனி, அரை நிலப்பிரபுத்துவ சமூகமாக சிறுமைப்பட்டது. முன்பு எப்பொழுதும் இல்லாத அளவிற்கு பெரும் பாதிப்புகளுக்கு ஆளானது. நாடு கடும் அவமானத்திற்கு உள்ளாகியது. மக்கள் பெரும் துயரத்தை சந்தித்தனர். சீன நாகரீகம் இருளில் மூழ்கியது. அப்பொழுதில் இருந்து தேசீய மறுமலர்ச்சி என்பது சீன தேசத்தின், சீன மக்களின் ஆகப்பெரிய கனவாக இருந்து வந்தது.

தேசத்தை ஆபத்திலிருந்து காப்பாற்ற சீன மக்கள் தைரியத்துடன் போராடினார்கள். உயர்சிந்தனை கொண்ட தேசபக்தர்கள் தேசத்தை ஒன்றுபடுத்த முயற்சித்தனர். ஒன்றன் பின் ஒன்றாக தைபிங் சுவர்க்க அரசு இயக்கம், சீர்திருத்தத்திற்கான 1898 இயக்கம், யிஹெதுவான் இயக்கம், 1911 ஆம் ஆண்டு புரட்சி என்று எழுச்சிகள் நிகழ்ந்தன. நாட்டைக் காப்பதற்கு பல திட்டங்கள் தீட்டப்பட்டன. ஆனால் அவை அனைத்தும் தோல்வியில் முடிந்தன. நாட்டை பாதுகாப்பதற்கான இயக்கத்திற்கு புதிய சிந்தனைகளும், புரட்சிகர சக்திகளை திரட்ட புதிய அமைப்பும்  அவசர தேவையாக இருந்தன.

1917 இல்  ரஷ்ய அக்டோபர் புரட்சி வெடித்தபின் மார்க்சிசம்-லெனினிச தத்துவம் சீனாவை வந்தடைந்தது.  பின்னர், 1921இல் சீன மக்களும் தேசமும் பெரும் விழிப்புணர்வு பெற்ற நிலையில், சீன தொழிலாளி வர்க்க இயக்கத்துடன் மார்க்சிசம் லெனினிசம் நெருக்கமாக இணைந்து கொண்டிருந்த நேரத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சி பிறந்தது. சீனாவில் ஒரு கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்படுவது என்பது ஒரு சகாப்த நிகழ்வாகும். இந்நிகழ்வு நவீன கால சீன வரலாற்றை ஆழமான வகையில் மாற்றியது. உலக வளர்ச்சியின் வரைபடத்தையே மாற்றியது.

துவக்கப்பட்ட நாளில் இருந்து கட்சி சீன மக்களின் மகிழ்ச்சியை, சீன தேசத்தின் மறுமலர்ச்சியை தனது இலக்காகவும் ஆகர்ஷ சக்தியாகவும் கொண்டிருந்தது. கடந்த நூறு ஆண்டுகளில் கட்சி சீன மக்களை ஒன்றுபடுத்தி, தலைமை தாங்கி நடத்தியுள்ள போராட்டங்கள், செய்துள்ள தியாகங்கள், ஆக்கப் பணிகள் அனைத்தும் ஒரு அடிப்படையான கருத்தால் ஒன்றிணைக்கப்பட்டிருந்தன. அதுதான் சீன தேசத்தின் மாபெரும்  மறுமலர்ச்சி என்பதாகும்.

தேசீய மறுமலர்ச்சியை சாதிக்க அசைக்கமுடியாத உறுதியுடன், மக்களை ஒற்றுமைப்படுத்தி, சீன மக்களின்  ரத்தம் சிந்திய போராட்டங்களுக்குத் தலைமை தாங்கியது. புதிய-ஜனநாயகப் புரட்சியின் மூலம்  மகத்தான வெற்றியும் பெற்றது.

வட பகுதி போர் ,விவசாய புரட்சிப் போர், ஜப்பானிய ஆக்கிரமிப்பை எதிர்த்த போர், விடுதலைக்கான போர் ஆகிய பெரும் யுத்தங்கள் வாயிலாக, ஆயுதமேந்திய எதிர்ப்புரட்சி சக்திகளை ஆயுதமேந்திய புரட்சி மூலம் முறியடித்தோம். ஏகாதிபத்தியம், நிலப்பிரபுத்துவம் மற்றும் அதிகாரவர்க்க-முதலாளித்துவம் ஆகிய முப்பெரும் மலைகளை தகர்த்தோம். மக்கள் சீன குடியரசை நிறுவினோம். இதன் மூலம் மக்களே நாட்டின் எஜமானர்களாயினர். இவ்வாறு நமது நாட்டின் விடுதலையை சாதித்தோம். மக்களை விடுவித்தோம்.

ஏகாதிபத்திய வல்லரசுகள் சீனாவில் அனுபவித்த சலுகைகள், நமது நாட்டின் மீது அந்நிய அரசுகள் திணித்த ஏற்றத்தாழ்வான ஒப்பந்தங்கள், பழைய சீனத்தில் நிலவிய ஒற்றுமையற்ற நிலைமை, அரைக் காலனி, அரை நிலப்பிரபுத்துவ நாடு என்ற சீன நாட்டின் நிலைமை  – இவை அனைத்திற்கும் புதிய ஜனநாயக புரட்சியின் வெற்றி முற்றுப்புள்ளி வைத்தது. தேசீய மறுமலர்ச்சியை சாதிப்பதற்கான அடிப்படை சமூக நிலைமைகளை ஏற்படுத்தியது.

விடாப்பிடியான போராட்டத்தின் மூலம் கட்சியும் சீன மக்களும் சீன மக்கள் எழுந்துவிட்டார்கள் என்று உலகிற்குக் காட்டினர். இனி என்றுமே பிறரால் சீன தேசத்தை அவமதிப்பதோ, மிரட்டுவதோ  சாத்தியமில்லை என்று காட்டினர்.

தேச மறுமலர்ச்சியை அடைய, வலுவான சீனத்தை தற்சார்பு உணர்வுடன் கட்டிட, கட்சி சீன மக்களை ஒன்றுபடுத்தி, அவர்களுக்குத் தலைமை தாங்கியது. சோசலிச புரட்சி மற்றும் நிர்மாணத்தில் பெரும் வெற்றி பெற்றது.

சோசலிச புரட்சியை நிகழ்த்தியதன் மூலம்  பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சீனாவில் நிலைத்திருந்த, சுரண்டலும் அடக்குமுறையும் நிலவிய நிலப்பிரபுத்துவ அமைப்பை அழித்தொழித்தோம். சோசலிசத்தை நமது அடிப்படை அமைப்பாக ஆக்கினோம். சோசலிச கட்டுமான செயலாக்கத்தில் ஏகாதிபத்திய,  மேலாதிக்க சக்திகளின் அழிப்பு முயற்சிகள், சதிச் செயல்கள், ஆயுதம் தாங்கிய தாக்குதல்கள் உட்பட அனைத்தையும் முறியடித்து சீன தேசத்தின் வரலாற்றில் மிகவும் விரிவானதும் ஆழமானதுமான சமூக மாற்றங்களை ஏற்படுத்தினோம். உலகின் கிழக்கு பகுதியில் அதிக மக்கள் தொகை கொண்ட, ஏழ்மையான, பின்தங்கிய நாடாக இருந்த சீனாவை சோசலிச நாடாக மாற்றியது. தேசீய மறுமலர்ச்சியை அடைவதற்கு அவசியமான அடிப்படை அரசியல் தளத்தையும் நிறுவன அஸ்திவாரங்களையும் ஏற்படுத்திக் கொடுத்தது.

விடாப்பிடியான போராட்டங்கள் மூலம் கட்சியும் சீன மக்களும் அவர்கள் பழைய உலகை தகர்ப்பவர்கள் என்பது மட்டுமின்றி, புதிய உலகை நிர்மாணிப்பவர்கள் என்பதையும், சோசலிசம் மட்டுமே சீனத்தை காப்பாற்றும் என்பதையும், அதுதான் சீன வளர்ச்சியை சாத்தியமாக்கும் என்பதையும் உலகிற்கு காட்டினர். 

தேசீய மறுமலர்ச்சியை அடைய,  கட்சி சீன மக்களை ஒற்றுமைப்படுத்தி, தலைமை தாங்கி, சிந்தனைகளை மனச்சிறைகளில் இருந்து விடுவித்தது. இதனால் வேகமாக முன்னேறியது. சீர்திருத்தங்கள், சீன தேசத்தின் கதவுகளை விரிவாக திறப்பதில், சோசலிச நவீன மயமாக்கலில் வெற்றி பெற்றது.

சோசலிசத்தின் துவக்க கட்டத்திற்கான கட்சியின் நிலைப்பாட்டை நாம் உருவாக்கினோம். சீர்திருத்தம் மற்றும் பொருளாதாரத்தை திறந்து விடுதல் என்பதை உறுதியுடன் செய்தோம். நாலா பக்கங்களிலும் இருந்து வந்த அபாயங்களையும் சவால்களையும் முறியடித்தோம். சீன குணாம்சங்களைக்கொண்ட சோசலிசத்தை நிறுவி, அதை உயர்த்திப் பிடித்து, பாதுகாத்து, வளர்த்தோம். இதன் மூலம், சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட பின்பான காலத்தில் கட்சி வரலாற்றில் பெரும் முக்கியத்துவம் கொண்ட பெரியதொரு திருப்பத்தை சாதித்தோம். அதிக அளவில் மையப்படுத்தப்பட்ட, திட்டமிடுதல் கொண்ட, பொருளாதாரம் என்ற தன்மையில் இருந்து  உயிர்ப்பு மிக்க சோசலிச சந்தை பொருளாதாரம் என்ற தன்மைக்கு சீனப் பொருளாதாரம் மாறியது. மேலும் பெரும்பாலும் தனித்தே இருந்த நாடு என்ற நிலையில் இருந்து, வெளி உலகம் முழுமைக்கும் திறந்துவிடப்பட்ட நாடாக சீனா மாறியது. இத்திருப்பம் ஒப்பீட்டளவில் பின்தங்கிய உற்பத்தி சக்திகளைக் கொண்ட நாடு என்ற நிலையில் இருந்து, உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரம் என்ற இடத்திற்கு சீனாவால் தாவ முடிந்தது. மேலும் சீனா தனது மக்களின் வாழ்க்கை தரத்தை குறைந்த மட்டத்தில் இருந்து ஒட்டுமொத்த அளவில் ஓரளவு வசதியான வாழ்க்கை என்ற நிலைக்கும், அதன்பின் அனைத்து அம்சங்களிலும் ஓரளவு வசதியான வாழ்க்கை என்ற நிலைக்கும் உயர்த்தியுள்ளது. வேகமான வளர்ச்சிக்கான பொருளாதார அடித்தளத்தையும் ஆற்றல் தரும் நிறுவன உத்தரவாதங்களையும் உருவாக்கி, தேசீய மறுமலர்ச்சியை நோக்கி செல்லும்  வாய்ப்புகளையும் இச்சாதனைகள் ஏற்படுத்தியுள்ளன.

விடாப்பிடியான  போராட்டங்கள் மூலம் கட்சியும் சீன மக்களும் சீர்திருத்தங்கள் மூலமும் சீனாவின் கதவுகளை விரிவாக திறந்ததன் மூலமும் (இவை இன்றைய சீனத்தை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றியுள்ளன) சமகாலத்திற்கு சீனா மிக வேகமாக முன்னேறியுள்ளது என்று காட்டியுள்ளனர்.

தேசீய மறுமலர்ச்சி என்ற இலக்கை அடைய கட்சி சீன மக்களை ஒற்றுமைப்படுத்தி, தலைமை தாங்கி,மாபெரும் போராட்டத்தை, மாபெரும் திட்டத்தை, மாபெரும் கனவை தொடர்ந்து மேற்கொண்டு வந்துள்ளது. இதனை தன்னம்பிக்கை, தற்சார்பு,புதுமை காணல் ஆகியவற்றின் மூலம் செய்துள்ளது. புதிய சகாப்தத்தில் சீன குணாம்சங்களுடனான சோசலிசத்தை அடைவதில் பெரும் வெற்றி கண்டுள்ளது.

கட்சியின் பதினெட்டாவது தேசீய மாநாட்டை தொடர்ந்து, சீன குணாம்சங்களுடனான சோசலிசம் ஒரு புதிய சகாப்தத்திற்குள் நுழைந்துள்ளது. இந்த கட்டத்தில் நாம் கட்சியின் ஒட்டு மொத்த தலைமையை வலுப்படுத்தியுள்ளோம்.ஐந்து கள ஒன்றிணைக்கப்பட்ட திட்டம்  மற்றும் நான்கு முனை முழுமையான உத்தி ஆகியவை ஒருங்கிணைந்து அமலாக்கப்படுவதை உறுதிப்படுத்தியுள்ளோம். சீன குணாம்சங்களுடனான சோசலிச அமைப்பை மேம்படுத்தியுள்ளோம். சீனாவின் ஆட்சி சார் அமைப்புகளை நவீனப்படுத்தி அவற்றின் ஆளும் திறனை மேம்படுத்தியுள்ளோம். கட்சி  விதிகளின் அடிப்படையில் கட்சி ஆளப்படுவதை உறுதி செய்துள்ளோம்.  சரியான உட்கட்சி நெறிமுறைகளை உருவாக்கியுள்ளோம். பல அபாயங்களையும் சவால்களையும் வென்று, முதல் நூறு ஆண்டுகளின் இலக்கை நிறைவு செய்து, இரண்டாம் நூறு ஆண்டுகளின் இலக்கை அடைவதற்கான உத்திகளை முன்வைத்துள்ளோம். கட்சி மற்றும் நாட்டிற்கான நமது சாதனைகளும் மாற்றங்களும் தேசீய மறுமலர்ச்சியை அடைய வலுவான நிறுவன அமைப்புகளை நமக்கு அளித்துள்ளன. வலுமிக்க அடித்தளத்தை தந்துள்ளன. கூடுதலாக முன்முயற்சிகளை எடுக்க நமக்கு உந்து சக்தியாகவும் அவை அமைந்துள்ளன.

விடாப்பிடியான போராட்டத்தின்மூலம் கட்சியும் சீன மக்களும் சீனா நிமிர்ந்து நின்று மகத்தான மாற்றங்களை சாதித்துள்ளது, வசதிபடைத்த நாடாக மட்டுமின்றி வலுவான நாடாகவும் மாறியுள்ளது, சீனாவின் தேசீய மறுமலர்ச்சி வரலாற்றின் தவிர்க்க இயலாத பகுதியாகிவிட்டது என்பதையும் உலகுக்கு காட்டியுள்ளனர்.

மாவோ கூறினார்: “தியாகிகளின் தியாகங்கள் நமது மனங்களை மேலும் வலுப்படுத்துகின்றன. நாம் உருவாக்கும் புதிய வானத்தில் சூரியனையும் சந்திரனையும் ஒளி வீசச் செய்ய முனையும் தைரியம் நம்மிடம் உள்ளது.” இந்த அச்சமற்ற உணர்வைத்தான் பல ஆயிரம் ஆண்டுகள் கொண்ட சீன தேச வரலாற்றின் மிக அற்புதமான அத்தியாயத்தை கடந்த நூறு ஆண்டுகளில் சாதிக்கும் பணியில் கட்சி சீன மக்களை ஒற்றுமைப்படுத்தி தலைமை தாங்கி வெற்றி பெற்றுள்ளது. சீன தேசத்தின், மனித குலத்தின் வளர்ச்சி வரலாற்றில் நாம் பதித்துள்ள புதிய பாதை, நாம் மேற்கொண்டுள்ள இலக்கு, கடந்த நூறு ஆண்டுகளில் நாம் படைத்துள்ள சாதனைகள் நிச்சயம் இடம் பெறும்.

தோழர்களே, நண்பர்களே,

நூறு ஆண்டுகளுக்கு முன் சீனாவின்  கம்யூனிஸ்ட் முன்னோடிகள் சீன கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவினர். அதன் மாபெரும் துவக்க உணர்வை வளர்த்தெடுத்தனர். அதன் அடிப்படை கோட்பாடுகள் வருமாறு: லட்சியங்களையும் உண்மையையும் உயர்த்திப்பிடித்தல்; நமது துவக்க வேட்கைக்கும் இலக்கிற்கும் உண்மையாக இருத்தல்; இழப்பு பற்றி கவலையின்றி தைரியமாக போராடுதல்; கட்சிக்கும் மக்களுக்கும் விசுவாசமாக இருத்தல். இந்த உணர்வு கட்சியின் வலிமைக்கான ஊற்றுக்கண்.

கடந்த நூறு ஆண்டுகளில் கட்சி இந்த துவக்க உணர்வை முன்னெடுத்து சென்றுள்ளது. அதன் நெடிய போராட்டங்கள் மூலம் சீன கம்யூனிஸ்டுகளுக்கு உத்வேகம் அளிக்கும் பல கோட்பாடுகளை உருவாக்கியுள்ளது. தனித்தன்மை வாய்ந்த அரசியல் குணத்தை ஏற்படுத்தியுள்ளது. வரலாறு முன்னேறுகையில் கட்சியின் உணர்வு தலைமுறை தலைமுறையாகத் தொடர்கிறது. கட்சியின் மகத்தான துவக்க உணர்வு எப்பொழுதும் உயிர்ப்புடன் இருக்கும் வகையில், முன்னெடுத்து செல்லப்படும் வகையில் நமது மகத்தான புரட்சிகர பாரம்பர்யத்தை உயர்த்தி பிடிப்போம். 

தோழர்களே! நண்பர்களே!

நமது கடந்த நூறு ஆண்டு சாதனைகள் அனைத்தும் சீன கம்யூனிஸ்டுகளின், சீன மக்களின், சீன தேசத்தின் தீவிர முயற்சிகளால் நிகழ்ந்துள்ளன. இதன் பிரதான பிரதிநிதிகள் தோழர்கள் மாவோ, டெங், ஜியாங் ஜெமின் மற்றும் ஹூ ஜின் டாவ் ஆவர். சீன தேசத்தின் மறுமலர்ச்சிக்கு அவர்கள் மாபெரும் வரலாற்றுச் சிறப்பு மிக்க பங்களிப்பை செய்துள்ளனர். அவர்களுக்கு நமது மிக உயர்ந்த மரியாதையை செலுத்துகிறோம்.

இத்தருணத்தில் சீன புரட்சிக்கும், நிர்மாணத்திற்கும் சீர்திருத்தத்திற்கும், சீன கம்யூனிஸ்ட் கட்சியை துவக்கி, வலுப்படுத்தி வளர்த்ததற்கும் தோழர்கள் மாவோ, ஜூ என் லாய், லியு ஷா சி, சு டே, டெங் சியாவ் பிங், சென் யுன் மற்றும் இதர முதுபெரும் புரட்சியாளர்களை நெகிழ்வுடன் நினைவு கூறுவோம். மக்கள் குடியரசை நிறுவி, பாதுகாத்து வளர்க்கும் பணிகளில் மனஉறுதியுடன் தங்கள் உயிரையும் ஈந்த புரட்சியாளர்களை இத்தருணத்தில் நெகிழ்வுடன் நினைவு கூறுவோம். சீர்திருத்தம், சீனாவின் கதவுகளை விரிவாக திறந்துவிடல், சோசலிச நவீனமாக்கல் ஆகிய பணிகளுக்கு தங்கள் வாழ்வை அர்ப்பணித்த தோழர்களுக்கு இத்தருணத்தில் நெகிழ்வுடன் நினைவு கூறுவோம். நவீன காலங்களில் தேசங்களின் சுதந்திரத்திற்கும் மக்கள் விடுதலைக்கும் உறுதிபடப்போராடிய அனைத்து பெண்களையும் ஆண்களையும் நெகிழ்வுடன் நினைவு கூறுவோம். நமது தாய் நாட்டிற்கும் தேசத்திற்குமான அவர்களின் சிறப்பான பங்களிப்பு வரலாற்றில் நிரந்தர இடம் பெறும். சீன மக்களின் இதயங்களில் அவர்களது உன்னதமான உணர்வுகள் என்றும் இருக்கும்.

மக்கள் தான் உண்மையான கதாநாயகர்கள். ஏனெனில் அவர்கள் தான் வரலாற்றை படைக்கின்றனர். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு சார்பாக நாடுமுழுவதும் உள்ள தொழிலாளர்கள், விவசாயிகள், அறிவுஜீவிகள் அனைவருக்கும் உயர்ந்த மரியாதையை செலுத்துகிறேன். இதர அரசியல் கட்சிகள், கட்சி சார்பற்ற பொது வாழ்வு பிரமுகர்கள், மக்கள் அமைப்புகள், சமூகத்தின் அனைத்து துறைகளை சார்ந்த தேச பக்தர்கள்; மக்கள் விடுதலைப்படை, மக்களின் ஆயுத போலீஸ் படை, தீயணைப்பு மற்றும் மீட்சி சேவைத்துறை ஆகிய அனைத்து அமைப்புகளின் உறுப்பினர்களுக்கும்; அனைத்து சோசலிச உழைக்கும் மக்களுக்கும்; ஐக்கிய முன்னணியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்கள். ஹாங்காங், மக்காவ் சிறப்பு நிர்வாக பகுதி சீன மக்களுக்கும் தைவான் மற்றும் உலகின் இதர பகுதிகளில் வாழும் சீன மக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். சீன மக்களுடன் நட்பும் புரிதலும் கொண்ட, புரட்சி, வளர்ச்சி மற்றும் சீர்திருத்தத்தில் சீனா எடுத்துவரும் முயற்சிகளை ஆதரிக்கும் உலகெங்கும் உள்ள மக்களுக்கும் நண்பர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி.

தோழர்களே! நண்பர்களே!

நமது கட்சியின் துவக்க இலக்கை வரையறை செய்வது எளிது என்றாலும், அந்த இலக்கிற்கு நாம் விசுவாசமாக இருப்பதை உறுதி செய்வது அதைவிட  கடினமான பணி. வரலாற்றைக் கற்பதன் மூலம் வல்லரசுகள் எழுவதும் வீழ்வதும் ஏன் என்று புரிந்துகொள்ளலாம். வரலாறு எனும் கண்ணாடி மூலம் நாம் தற்பொழுது எங்கு உள்ளோம் என்பதை அறியலாம். எதிர்காலம் பற்றிய வெளிச்சம் பெறலாம். கட்சியின் கடந்த நூறு ஆண்டு வரலாற்றை உற்றுநோக்கி கடந்த காலத்தில் நம்மால் எவ்வாறு வெற்றிபெற முடிந்தது என்று அறியலாம். எதிர்காலத்தில் தொடர்ந்து வெற்றி பெறுவது எப்படி என்றும் அறியலாம். இவ்வாறு செய்வதன் மூலம் கூடுதல் உறுதியுடன் நமது துவக்க இலக்கிற்கு உண்மையாக இருந்து மேலும் சிறந்த எதிர்காலத்தை நோக்கி நம் முன்னே உள்ள புதிய பயணத்தினை தொடரலாம்.

ஓய்வின்றி ஒரு மேம்பட்ட வாழ்க்கையை சாத்தியமாக்கிட நாம் சீன மக்களை ஒற்றுமைப்படுத்தி அவர்களுக்கு தலைமை தாங்க வேண்டும்.

இந்த நாடு என்பது இந்த நாட்டின் மக்களே. மக்கள் தான் நாடு. நாட்டின் மீதான நமது தலைமை பாத்திரத்தை நிலைநாட்டி உறுதிப்படுத்த நாம் போராடி வந்துள்ளோம். அதன் பகுதியாக மக்களின் ஆதரவை வென்றெடுத்து தக்க வைக்கவும் நாம் போராடி வருகிறோம். கட்சியின் வேர்கள் மக்கள் தான். அவர்கள் தான் கட்சியின் உயிர்நாடி, கட்சியின்  வலிமைக்கான ஆதார வளம். எல்லாக் காலங்களிலும் கட்சி அனைத்து சீன மக்களின் அடிப்படை நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தியே வந்துள்ளது. எப்பொழுதும் கட்சி மக்களுடன் நிற்கிறது. தனக்கென்று கட்சிக்கு பிரத்யேக நலன் எதுவும் இல்லை. எந்த தனி நபர் நலனையோ, அதிகார குழுக்களின் நலனையோ, உயர் நிலை குழுக்களையோ  கட்சி ஒருபோதும் பிரதிநிதித்துவப்படுத்தியதில்லை. சீன மக்களிடமிருந்து கட்சியை பிரிக்கவோ, மக்களை கட்சிக்கு எதிராக திருப்பவோ செய்யப்படும் முயற்சிகள் கட்டாயம் தோல்வியுறும். இத்தகைய நிலை ஏற்பட 9 கோடியே ஐம்பது லட்சம் கட்சி உறுப்பினர்களோ 140 கோடிக்கும் அதிகமான சீன மக்களோ இடம் அளிக்க மாட்டார்கள்.

நம் முன் உள்ள பயணத்தில் மக்களை நெருக்கமாக சார்ந்து நின்று  வரலாறு படைக்க வேண்டும். மக்களுக்கு சேவை செய்வது என்ற கட்சியின் அடிப்படை நோக்கத்தை உயர்த்தி பிடிப்போம். மக்களுடன் உறுதியாக நிற்போம். கட்சியின் வெகு மக்கள் நிலைபாட்டை (mass line) அமலாக்குவோம். மக்களின் ஆக்க திறனை மதிப்போம். மக்களை மையப்படுத்தும் வளர்ச்சி என்ற கோட்பாட்டை நடைமுறைப்படுத்துவோம். முழுமையான மக்கள் ஜனநாயகத்தை அமலாக்குவோம். சமூக நீதி மற்றும் நியாயத்தை பாதுகாப்போம். வளர்ச்சியில் உள்ள சமநிலையை பாதிக்கும் அம்சங்களை, குறைபாடுகளை  களைவோம். மக்களுக்கு மிகுந்த கவலை தரும் அவசர நெருக்கடிகளையும் பிரச்சினைகளையும் தீர்த்து வைப்போம். இதன்மூலம் முழுமையான மானுட வளர்ச்சி மற்றும் அனைவருக்கும் பொது வளம்ஆகிய இலக்குகளை அடைவதில் கூடுதலான, குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காண்போம்..

சீன சூழலுக்கேற்ப மார்க்சியத்தைத் தொடர்ந்து கடைப்பிடிப்போம்

நமது கட்சியும் நாடும், மார்க்சியத்தை வழிகாட்டும் அடிப்படைத் தத்துவமாகக் கொண்டு கட்டப்பட்டவை; அது நமது கட்சியின், நாம் தூக்கிப்பிடிக்கும் பதாகையின் ஆன்மாவாகும். சீன கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சியத்தின் அடிப்படைக் கோட்பாடுகளையும், நிரூபிக்கப்பட்ட உண்மைகளிலிருந்து நிதர்சனத்தைத் தேடிக் கண்டடையும் கொள்கையையும் உயர்த்திப் பிடித்து இயங்குகிறது.

சீன நிலைமையின் யதார்த்தத்தில் இன்றைய போக்குகளைக் கூர்ந்து நோக்கி, வரலாற்றில் ஒரு முக்கிய முன்முயற்சி எடுத்து அதனைக் கடுமையான ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளோம். அதன்மூலம், தொடர்ந்து மார்க்சியத்தை இன்றைய காலகட்டத்தில் சீனாவின் தேவைகளுக்கேற்பப் பொருத்தி, சமூகப் புரட்சியை முன்னெடுத்துச் செல்வதில் சீன மக்களுக்கு வழிகாட்டியாக இருக்க நம்மால் முடிந்துள்ளது. அடிப்படையில், சீன சூழலுக்கு பொருத்துவதற்கான சோசலிசத்தின் வலிமையும், அதை செயல்படுத்துவதற்கான கட்சியின் திறமையும், மார்க்சியம் நடைமுறைப்படுத்தப்படக்கூடியது என்ற உண்மையினால்  சாத்தியமாகியுள்ளன.

தொடரும் நமது பயணத்தில் மார்க்சிய-லெனினிய தத்துவம், மாவோவின் சிந்தனைகள், டெங் ஜியோபிங்கின் கோட்பாடுகள், சீன கம்யூனிஸ்ட் கட்சியால் அங்கீகரிக்கப்பட்ட மேம்பட்ட உற்பத்தித்திறன், மேம்பட்ட கலாச்சாரம் மற்றும் மக்களின் அடிப்படை நலன்கள் ஆகியவற்றிற்கான ‘மூன்று கொள்கைகள்’, வளர்ச்சிக்கான அறிவியல் அணுகுமுறை ஆகியவற்றைத் தொடர்ந்து உயர்த்திப் பிடிக்க வேண்டும். புதிய சகாப்தத்திற்கான சீனப் பண்புகளுக்கு ஏற்ப சோசலிசம் பற்றிய சிந்தனையை நடைமுறைப்படுத்த வேண்டும். சீனாவின் திட்டவட்டமான நிலைமைகள் மற்றும் அதன் பாரம்பர்ய  பண்பாட்டின் சிறப்பு அம்சங்களுக்கு  ஏற்ப, மார்க்சிய தத்துவத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை நாம் தொடர்ந்து கையாளவேண்டும். சமகாலப் போக்குகளை கவனித்து, புரிந்துகொண்டு, காலத்திற்கேற்ப வழிநடத்தவும் மார்க்சியத்தைப் பயன்படுத்தி, சமகால சீனாவிற்கும்  இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டிற்குமான மார்க்சியத்தை மேலும் வளர்த்தெடுப்போம்.

பல சமகாலப் பண்புகளுடனான பெரிய போராட்டத்தை நடத்திட வேண்டும்.

போராடும் மனவுறுதியும், வெற்றிக்கான துணிவும், நம் கட்சியை வெல்லற்கரியதாக ஆக்கியுள்ளது. நம் உயரிய கனவை நனவாக்க, கடின உழைப்பும், விடாமுயற்சியும் தேவை. தேசிய மறுமலர்ச்சி என்ற நமது இலக்கை சாத்தியமாக்கிட, இன்று நாம் முன்னெப்போதையும் விட ஒற்றுமையுடனும், திறமையுடனும், நம்பிக்கையுடனும் உள்ளோம். ஆனால், அதை அடைய மேலும் கடினமாக உழைக்க வேண்டியுள்ளது.

நம் முன்னேற்றப் பாதையில், அமைதியான காலங்களில் கூட, மறைந்திருக்கக்  கூடிய  ஆபத்தினையும்  எதிர்நோக்கும் கூரிய விழிப்புணர்வு தேவை. தேசப் பாதுகாப்புக்கு, அமைதி மற்றும் பாதுகாப்புக்கான  வழிமுறைகளை  சமநிலைப்படுத்தும் ஒரு முழுமையான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும். நூறாண்டுக்கு ஒரு முறை நிகழும் மாற்றங்கள் தற்போது உலகில் ஏற்பட்டுவரும் சூழலில், நம் தேசத்தின் மறுமலர்ச்சிக்கான திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இம்மாற்றத்தினால் எழும் புதிய அம்சங்கள் மற்றும் தேவைகள், சீன சமுதாயத்தில் ஏற்படும் முக்கியமான முரண்பாடுகள், சிக்கலான உலகச் சூழலிலிருந்து எழும் புதிய பிரச்சனைகள் மற்றும் சவால்கள் ஆகியவற்றைப் பற்றிய முழுமையான புரிதல் தேவை. நம் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல, புதிய பாதைகளை உருவாக்குவதிலும், சவால்களையும், இடர்பாடுகளையும் தாண்டிச் செல்லத் தேவையான பாலங்களை அமைப்பதிலும் நாம் தைரியமாகவும் திறமையாகவும் செயல்பட வேண்டும்.

சீன மக்களின் மகத்தான ஒற்றுமையை பலப்படுத்த வேண்டும்

கடந்த ஒரு நூற்றாண்டு கால போராட்ட வரலாற்றில், ஐக்கிய முன்னணியை முன்னிலைப்படுத்தி வந்துள்ளோம். எல்லாக் காலங்களிலும் ஒற்றுமைப்படுத்தக்கூடிய அனைத்து சக்திகளையும் ஒற்றுமைப்படுத்தியுள்ளோம். திரட்டவாய்ப்புள்ள அனைத்து சாதகமான காரணிகளையும் திரட்டியுள்ளோம். மிகவும் விரிவான ஐக்கிய முன்னணியை உருவாக்கியுள்ளோம். கூட்டு முயற்சிக்கான அனைத்து வலுவையும் இணைத்துள்ளோம். தேச மறுமலர்ச்சி எனும் நோக்கத்திற்காக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழும் ஒவ்வொரு சீனரையும் அணிதிரட்ட இந்த தேச பக்த ஐக்கிய முன்னணி ஒரு முக்கியமான கருவியாக  உள்ளது. 

நாம் பயணிக்கும் இந்தப் பாதையில், நம்மிடையே உள்ள பொதுவான தன்மைகள் மற்றும் பன்முகத் தன்மைகளுக்கிடையே சமநிலையைப் பேணிக் காத்து, ஒருமைப்பாட்டையும் ஒற்றுமையையும் வளர்க்க வேண்டும். நம் கோட்பாடு மற்றும் அரசியல் வழிகாட்டுதலை வலுப்படுத்தி, பரந்த அளவில் ஒத்த கருத்தை உருவாக்கி, அறிவுத்திறன்  மிகுந்தவர்களை ஒன்றிணைத்து, ஒருமித்த செயல்பாட்டுக்கான களத்தை விரிவுபடுத்தி, அனைவரின் நலன்களும் ஒன்றிணைவதை நோக்கி பயணிக்க  வேண்டும். இதன் மூலமே நாம் அனைத்து சீன மக்களின் திறமைகளையும் ஆற்றலையும் ஒரே இலக்கை நோக்கி செலுத்த இயலும். தேச மறுமலர்ச்சி என்ற இலக்கை அடைவதற்கு மாபெரும் சக்தியாக இணைய முடியும்.

கட்சி கட்டும் புதிய பெரிய திட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும்

சீன கம்யூனிஸ்ட் கட்சியை மற்ற அரசியல் கட்சிகளிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் தனிச்சிறப்பு என்னவெனில், தன்னை தானே  சுய சீர்திருத்தம் செய்துகொள்ளும்  அதன் துணிவே ஆகும். பல சோதனைகளுக்கும் இன்னல்களுக்கும் ஆளான போதிலும் கட்சி துடிப்புடன் செயலாற்றக் காரணம் இந்த கடுமையான சுய பரிசோதனையும், திறமையான சுய நிர்வாக ஒழுங்குமே ஆகும். வரலாற்றில் பல்வேறு ஆழமான மாற்றங்களையும் அபாயங்களையும் சந்தித்தபோதும், உலகளாவிய ஆழமான மாற்றங்கள் நிகழும் பொழுதும், நாட்டிலும் பன்னாட்டு களத்திலும் பல சவால்களை எதிர்கொண்டு  தேசத்தின் முதுகெலும்பாக எப்போதும் முன்னணியில் நிற்க முடிந்தது.

நம் முன்னேற்றப் பாதையில் ‘நல்ல எஃகு செய்ய நல்ல கொல்லன் தேவை’ என்ற பழமொழியை நினைவில் கொள்ள வேண்டும். சுய பரிசோதனையும், திறமையான சுய நிர்வாக ஒழுங்கும் முடிவற்றுத் தொடர வேண்டும் என்ற அரசியல் விழிப்புணர்வு நமக்குத் தேவை. கட்சியை அரசியல் ரீதியாக பலப்படுத்துவதை நம் முக்கியக் கொள்கையாக செயல்படுத்த வேண்டும். கட்சியின் அமைப்பு முறையை மேலும் கறார்த்தன்மை கொண்டதாக ஆக்க வேண்டும். நேர்மையான, திறமை வாய்ந்த கட்சி அலுவலர்களைப் பயிற்றுவிக்க வேண்டும். கட்சியின் கட்டுப்பாட்டு ஒழுக்க நெறிகளை மேம்படுத்தவும், நாணயத்துடன் செயலாற்றவும், ஊழலுக்கு எதிராகப் போராடவும், கட்சியின் தரத்தைக் குலைக்கும் எந்தத் தீங்கினையும் களையவும் உறுதியுடன் செயல்பட வேண்டும். புதிய யுகத்தில், சீனப் பண்புகளுடனான சோசலிசத்தை நிலை நாட்ட, கட்சி தனது உயர் பண்பையும், தன்மையையும் சாராம்சத்தையும் பாதுகாத்து நாட்டின் அரசியல் மையத்தில், முக்கிய தலைமை இடத்தில் இருந்து செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

தோழர்களே, நண்பர்களே,

சிறப்பு நிர்வாகப் பகுதிகளான ஹாங்காங் மற்றும் மக்காவ் ஆகியவற்றைப் பொறுத்தவரை, ஒரு நாடு- இரு நிர்வாக அமைப்புகள் என்ற கொள்கையின் உள்ளடக்கத்திற்கு உண்மையாக செயல்படுவோம். அம்மக்கள் பெருமளவு  தன்னாட்சி அதிகாரம் பெற்று தங்களது பகுதிகளைத் தாங்களே நிர்வகிப்பர். தேசியப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சட்டம் மற்றும் அமலாக்க அமைப்புகள் மத்திய அரசின் ஒட்டுமொத்த அதிகார வரம்பிற்குள் இருக்கும். சீனாவின் இறையாண்மை, பாதுகாப்பு, மேம்பாட்டு நலன்களைப் பாதுகாக்கும் அதே வேளையில், இவ்விரண்டு சிறப்புப் பகுதிகளிலும் நீடித்த வளர்ச்சியையும் சமூக நிலைத்தன்மையையும் உறுதி செய்வோம்.

தைவான் பிரச்சனையைத் தீர்த்து ஒருங்கிணந்த சீனாவை மீட்டுருவாக்கம் செய்வது என்ற வரலாற்றுப் பணியில் சீன கம்யூனிஸ்ட் கட்சி அசைக்க முடியாத உறுதிப்பாட்டுடன் உள்ளது. இது ஒவ்வொரு சீனக் குடிமக்களின் கனவாகவும் உள்ளது. ஒரே சீனம் என்ற 1992இல் எடுக்கப்பட்ட ஒருமித்த முடிவை உயர்த்திப் பிடித்து அமைதியான வழியில் தேசிய ஒருங்கிணைப்பை முன்னெடுப்போம். தைவான் ஜலசந்தியின் இருபுறமும் வாழும் தோழர்களாகிய நாம் இவ்விஷயத்தில் இணைந்து ஒற்றுமையாக முன்னேற வேண்டும். “சுதந்திரத் தைவான்” முயற்சியை உறுதியாகத் தோற்கடித்து, ஒரே சீனத்திற்கான பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க வேண்டும். இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான  சீனமக்களின் மனஉறுதியையும் திறனையும் யாரும் குறைத்து மதிப்பிட முடியாது.

தோழர்களே! நண்பர்களே!

எதிர்காலம் இளைஞர்களின் கைளில் உள்ளது. நாம் அவர்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளோம். நூறாண்டுகளுக்கு முன் சீனா இருளில் மூழ்கியிருந்த ஆண்டுகளில் முன்னேற்ற சிந்தனையுடைய இளைஞர்கள் குழு ஒன்று  மார்க்சியம் எனும் ஒளிவிளக்கை உயர்த்திப் பிடித்து, அந்த ஒளியில்  சீன தேசத்தின் மறுமலர்ச்சிக்கான வழியைத் தேடியது. அன்றிலிருந்து, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பதாகையின் கீழ், தலைமுறை தலைமுறையாக இளைஞர்கள் கட்சிக்காகவும் மக்களுக்காகவும் தங்கள் இளமை பருவத்தை அர்ப்பணித்து வருகின்றனர். நாட்டின் மறுமலர்ச்சிக்கான இயக்கத்தில் முன்னணியில் இருந்து வருகிறார்கள்.

இப்புதிய யுகத்தில் நம் இளைஞர்கள், அவர்கள் சீன மக்கள் என்பதில் மேலும் பெருமையும் நம்பிக்கையும் கொண்டு நாட்டின் மறுமலர்ச்சிக்கு  பங்களிப்பதை  தமது குறிக்கோளாகக் கொண்டு செயல்பட வேண்டும். அப்பொழுதுதான், இளைஞர்கள் மீதான நம் காலத்தின், கட்சியின், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியும்.

தோழர்களே, நண்பர்களே,

நூறாண்டுகளுக்கு முன், சீன கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டபோது, வெறும் 50 பேர்களுக்கு சிறிது அதிக அளவிலேயே உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. இன்று 140 கோடிக்கு மேற்பட்ட மக்கள் வாழும் சீனத்தில், 9.5 கோடிக்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்டு உலகின் மிகப்பெரிய ஆளும் கட்சியாகவும் சர்வதேச அளவில் மிகுந்த செல்வாக்குடையதாகவும் சீன கம்யூனிஸ்ட் கட்சி  விளங்குகிறது.

ஒரு நூற்றாண்டுக்கு முன், சீனா உலகின் கண்களில் வீழ்ச்சியடைந்து உதிர்ந்து கொண்டிருந்த ஒரு நாடாக இருந்தது. இன்று, அது தடுக்கமுடியாத வேகத்தில் மறுமலர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கும் நாடாக காட்சியளிக்கிறது. கடந்த நூற்றாண்டில் சீன கம்யூனிஸ்ட் கட்சி, நம் மக்களின் சார்பாக பல வரலாற்றுச் சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. இன்று அது அடுத்த நூற்றாண்டுக்கான இலக்கை அடையும் புதிய பயணத்தில், மக்களை அணிதிரட்டி தலைமையேற்று வழிநடத்துகிறது.

கட்சி உறுப்பினர்களே,

நம் கட்சியின் ஸ்தாபன இலக்கிற்கு உண்மையாக இருந்து, உங்கள் லட்சியங்கள்  மற்றும் நம்பிக்கைகளில் உறுதியாக நிற்கவும் உங்கள் ஒவ்வொருவரையும் மத்தியக் கமிட்டி கேட்டுக் கொள்கிறது.  இன்பத்திலும் துன்பத்திலும்  மக்களை விட்டு விலகாது, அவர்கள் மீதான பரிவுடன், தொடர்ந்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் அவர்களுடன் இணைந்து நின்று அயராது பணிகளைச் செய்ய வேண்டும். இவ்வாறு கட்சியின் நோக்கத்திற்காக செயல்படுவதன் மூலம் நீங்கள் கட்சிக்கும் மக்களுக்கும் மேலும் பெருமை சேர்க்க முடியும்.

தோழர்களே, நண்பர்களே,

சீன கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டு நூறாண்டுகளான நிலையில், இன்றும் கட்சி அதே துடிப்புடன் செயல்படுகிறது. சீன தேசத்திற்கு நீடித்த பெருமை சேர்க்க, அதே உறுதியுடன் திகழ்கிறது. நாம் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்த்து, முன்னால் நாம் செல்லவேண்டிய பயணத்தைக் கண்ணுறும் போது, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுதியான தலைமையின் கீழ், அனைத்து  இனக்குழு மக்களின் ஒற்றுமை காத்து, நாம் மேலும் பல உயரங்களைத் தொடுவது உறுதி. நாம் அனைத்து வகையிலும் உன்னதமான நவீன சோசலிச தேசத்தைக் கட்டியெழுப்பி, சீன மக்களின் பெரும் கனவான தேச மறுமலர்ச்சி என்ற இலக்கை அடைவோம்.

வாழ்க நமது உயர்ந்த, போற்றத்தக்க, சரியான கட்சி!

வாழ்க நமது உயர்ந்த, போற்றத்தக்க, வீரமிக்க மக்கள்!

தமிழில்: பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா

‘சோசலிசம் உடனடித்தேவை’: பறைசாற்றும் காலநிலை மாற்றம் !

விஜயன்

அறிமுகம்

காலநிலை மாற்றத்திற்கான சர்வதேச நிபுணர்குழு (IPCC) வின் ஆறாவது மதிப்பீடு கடந்த ஆகஸ்ட் மாதம் 9ஆம்தேதி வெளிவந்ததிலிருந்து பத்திரிக்கைகளில் தொடர்ச்சியாக கட்டுரைகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதையொட்டி ஆண்டுதோறும் நடைபெறும் உறுப்பு நாடுகள் மாநாடு (COP) இந்த ஆண்டு பிரிட்டனின் கிளாஸ்கோ நகரில் நடக்கிறது. இதிலும் இப்பிரச்சனை விவாதிக்கப்படவுள்ளது. இந்தப் பின்னணியில் சர்வதேச சமூகத்தின் கடந்த 30 ஆண்டுகால முயற்சியில் ஏன் துளிக்கூட முன்னேற முடியவில்லை என்பதை பரிசீலிப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். ஆயிரக்கணக்கான கட்டுரைகள் இதுசம்பந்தமாக வெளிவந்தாலும், இப்பிரச்சனையின் ஆணிவேர் எங்குள்ளது என்பதை ஆய்வு செய்யும் கட்டுரைகள் பின்னுக்குபோன நிலையில், அத்தகைய முயற்சியை முன்னெடுத்துச் செல்வதும் இதன் நோக்கமாகும்.

இயற்கையாக நிகழும் நிகழ்வாக அல்லாமல் மனித நடவடிக்கையாலும் புவியின் வெப்பம் உயர்கிறது என்பது அறிவியல் ரீதியாக 1967ஆம் ஆண்டு நிரூபிக்கப்பட்டது. ஜப்பானிய அமெரிக்கரான சுகுரா மனாபே என்ற அறிவியலாளரால் இது நிறுவப்பட்டது.  இவர் இந்த ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசில் 25 சதவீதத்தை பெற்றிருக்கிறார். இவரது பணியைத் தொடர்ந்த க்ளாஸ் ஹாசல்மேன் என்ற ஜெர்மானிய அறிவியலாளர் இடத்துக்கு இடம் நேரத்திற்கு நேரம் மாறுபடும் வானிலை உருப்படிவம் (Climate Model) உருவாக்கும் வழிமுறையை கண்டறிந்தார். இவரும் இந்த ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசில் 25 சதவீதத்தை பெற்றிருக்கிறார்.

மனித நடவடிக்கையால் புவிவெப்பம் எப்படி உயர்கிறது?

சூரியனிலிருந்து உமிழப்படும் அகச்சிவப்பு கதிர்கள் மூலமாகவே வெப்பம் பூமிக்கு வருகிறது. அகச்சிவப்புக்கதிர் என்பது கண்ணுறு ஒளியை விட நீண்ட அலை நீளம் கொண்டது.  இந்த அகச்சிவப்பு கதிர்களை பெற்றுக்கொண்டு பூமி வெப்பமாகும். அதே வேளையில் அதன் ஒரு பகுதியை பூமியானது வளிமண்டலத்திற்கு திருப்பி அனுப்புகிறது. திருப்பி அனுப்பப்படும் இந்த அகச்சிகப்பு கதிர்களை வளிமண்டலம் மீண்டும் திருப்பி அனுப்புகிறது.  இப்படியாக பூமியின் சராசரி வெப்பநிலை 15 டிகிரி அளவுக்கு இருக்கிறது. ஒருவேளை வளிமண்டலம் இல்லை என்றால் எதிரொளிக்கப்பட்ட அகச்சிவப்புக்கதிர்கள் விண்வெளிக்கு சென்று விடும். இதனால் பூமியின் சராசரி வெப்பநிலை இரவு நேரத்தில் கிட்டதட்ட மைனஸ் 18 டிகிரிக்கு சென்றுவிடும். எடுத்துக்காட்டாக நிலவில் வளிமண்டலம் இல்லை. அதனால்தான் நிலவின் இரவு நேர வெப்ப நிலை மைனஸ் 50 டிகிரிக்கு கீழே செல்கிறது.  வளிமண்டலம்தான் நமது பூமிக்கு வெப்பப்பாதுகாப்பு உறையாக செயல்படுகிறது. சூரிய ஒளிக்கதிர்களை உள்ளே அனுமதித்து, பூமியிலிருந்து வெளியேறும் அகச்சிவப்புக் கதிர்களை தடுத்து நிறுத்தும் வளிமண்டலத்தின் இந்த செயலை நாம் பசுங்குடில் விளைவு என்று அழைக்கிறோம். வளிமண்டலம் என்று நாம் சொல்லும் போது அங்குள்ள கார்பன்-டை-ஆக்ஸைடு, மீத்தேன் போன்ற பல்தனிம மூலக்கூறுகளைக் கொண்ட வாயுக்களைத்தான் நாம் அவ்வாறு கூறுகிறோம். ஆக, பசுங்குடில்வாயுக்கள் குறைவாக இருந்தால் வெப்பம் வீழ்ச்சியடைந்துவிடும் மனிதர்கள் வாழமுடியாது. பசுங்கூட வாயுக்கள் அதிகமாக இருந்தால் வெப்பம் அதிகரித்து விபரீதமான காலநிலை மாற்றம் ஏற்பட்டு மனிதர்கள் வாழும் நிலப்பகுதி தண்ணீரில் மூழ்குதல், கடும் வெள்ளம், கடும் வறட்சி என்று மனிதர்கள் பெருந்துயரத்திற்கு ஆளாவார்கள்.

இந்த ஆண்டு நோபல் பரிசு பெற்ற ஹாசல்மானின் முக்கியமான பங்களிப்பு என்பது புவி வெப்பமயமாதலில் மனிதனின் பங்கு என்ன என்பதைக் கண்டறிந்ததுதான். பூமியின் வெப்பமயமாதல் என்பது இயற்கையாகவும் நடக்கலாம்; அல்லது மனிதனின் நடவடிக்கைகளாலும் நடக்கலாம். இங்கே இயற்கையாக நடப்பது என்றால் எரிமலை வெடிப்பின் மூலம் கார்பன்-டை-ஆக்சைடு மூலக்கூறுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு, அல்லது சூரிய வெப்பம் அதிகரிப்பு. செயற்கையாக என்றால் மனிதனின் நடவடிக்கைகளில் மூலமாக (தொழிற்சாலை வெளியிடும் வாயுக்கள், வாகனங்கள் வெளியிடும் வாயுக்கள்) என கார்பன்-டை-ஆக்சைடு வாயு எண்ணிக்கை அதிகரிக்கலாம். ஹாசல்மான்  தனது ஸ்டோகாஸ்டிக்ஸ் கோட்பாட்டு உருப்படிவம் மூலம் பூமியின் வெப்பநிலை அதிகரிப்பு மனிதனின் நடவடிக்கைகளால் எவ்வளவு அதிகரித்தது; இயற்கையான சீற்றங்களால் எவ்வளவு அதிகரித்தது என்று பிரித்து எடுத்து சொன்னார். இது மிகப்பெரிய சாதனை.

சுற்றுச்சூழல் பிரச்சனையும் புவிவெப்பமாகும் பிரச்சனையும்

பசுங்குடில் வாயுக்கள் வகையினத்தைச் சாராத, மனிதர்களுக்கும், விலங்கினங்களுக்கும், தாவரங்களுக்கும் தீங்கு விளைவிக்கும் இதர வாயுக்களும் உள்ளன. இவற்றை நாம் மாசுக்கள் (Pollutants) என்கிறோம். உதாரணமாக கந்தக அமில உற்பத்தியில் வெளியேற்றப்படும் கந்தக-டை-ஆக்ஸைடு என்ற வாயு அமிலமழை உருவாவதற்கு காரணமாகிறது. மனித நடவடிக்கைகள் என்று கூறப்படும் பெருவீத பொருள் உற்பத்தியில் பசுங்குடில் வாயுக்கள் வெளியாகின்றன. இவ்வாயுக்கள் மனிதர்களுக்கு பொதுவாக நேரடியாகத் தீங்கு விளைவிப்பதில்லை. ஆனால் இவற்றின் வெளியேற்றம் புவி வெப்பமடைவதற்கு சுற்றடியாக காரணமாக்குகிறது. முதலாவது வகை வாயுக்கள் உண்டாக்குவது சுற்றுச்சூழல் பிரச்சனை. இது பிரதேசம் சார்ந்த பிரச்சனையாக இருக்கிறது. இரண்டாவது, புவிவெப்பமயமாகும் பிரச்சனை. பசுங்குடில் வாயுக்கள் உமிழ்வானது உலகளாவிய வெப்பநிலை உயர்வுக்கு காரணமாவதால், இது உலகளாவிய பிரச்சனையாகும். எனவே இது உலக சமூகம் முழுவதும் கட்டாயம் தலையிட வேண்டிய பிரச்சனையாகும்.

இதேபோல் உலகளாவிய பிரச்சனையாக உருவெடுத்தது வளிமண்டல ஓசோன் படல தேய்மானம். குளிர்ச்சாதனங்களில் பயன்படுத்தப்படும் குளோரோபுளோரா கூட்டுப்பொருட்கள் வளிமண்டல ஓசோன் படலத்தை அரிப்பதால் இந்தப் படலம் மெலிந்து கொண்டே வந்தது. பூமியின் மீது விழும் புறஊதாக் கதிர்களை தடுக்கும் பணியை ஓசோன் படலம் செய்து வருகிறது. இது மெலிந்து போனால் புறஊதாக்கதிர்களை தடுக்க முடியாமல் போய், உயிரினங்கள் புறஊதாக்கதிர்களின் நேரடித் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றன. எனவே ஓசோன் படல தேய்மானம் உலகளாவிய பிரச்னையாகும்.  1987ஆம் ஆண்டு உலகநாடுகளுக்கிடையே கையொப்பமிட்ட மாண்டிரியல் ஒப்பந்தத்தின் மூலமாக இதற்குத் தீர்வு காணப்பட்டது. இதேபோல் இப்பொழுதும் ஒரு உலகளாவிய ஒப்பந்தம் தேவைப்படுகிறது. உமிழப்படும் பசுங்குடில் வாயுக்களின் அளவைக் கட்டுப்படுத்தி 1990ஆம் ஆண்டிலிருந்து உயர்ந்து கொண்டே வரும் வெப்பத்தை 1.5 டிகிரி செல்ஷியஸுக்குள் நிறுத்த வேண்டும். இது முடியாது என்று இப்பொழுது ஆகிவிட்ட நிலையில் 2 டிகிரிக்குள்ளாவது நிறுத்த வேண்டும் என்பதே IPCCயின் ஆறாவது மதிப்பீட்டு அறிக்கை கூறுகிறது. பல சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இரண்டையும் போட்டுக் குழப்பி தவறாக வழிகாட்டுகின்றனர். சிலர் காற்றுமாசுதான் வெப்பநிலை உயர்வுக்கு காரணம் என்கின்றர். சிலர் ஓசோன் படலம் தேய்ந்துபோன நிகழ்வையும் புவிவெப்பத்தையும் இணைத்துப் பேசுகின்றனர். இரண்டும் தவறு.

சர்வதேச அமைப்புகள்

காலநிலை மாற்றத்திற்கான சர்வதேச நிபுணர்குழு (Inter-governmental Panel on Climate Change –   IPCC) என்ற அமைப்பானது பன்னாட்டு அரசுப் பிரதிநிதிகள் அடங்கிய குழுவாகும். இக்குழுவானது ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு உபகுழுவாகும். ஐக்கிய நாடுகள் சபையின் அங்கமான ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் (United Nations Environment Program – UNEP) என்ற அமைப்பும் உலக வானிலை அமைப்பும் (World Meteorological Organization – WMO) இணைந்து 1988ஆம் ஆண்டு இக்குழு ஏற்படுத்தப்பட்டது. இது ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையால் அங்கீகரிக்கப்பட்டு சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படத் துவங்கியது. இதில் இந்தியா உள்ளிட்ட 195 உறுப்புநாடுகள் உள்ளன. இந்த அமைப்பானது காலநிலை மாற்றத்தை அவ்வப்போது அறிவியல் அடிப்படையில் ஆய்வுசெய்து மதிப்பீட்டு அறிக்கைகள் வெளியிடும். கடந்த ஆகஸ்ட்டில் வெளியான அறிக்கை உள்ளிட்டு இதுவரை ஆறு அறிக்கைகளை இக்குழு வெளியிட்டிருக்கிறது. இதன் அறிக்கைகள் மீது அனல்பறக்கும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. 1995ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இரண்டாவது மதிப்பீட்டு அறிக்கை க்யூட்டோ ஒப்பந்தத்துக்கு வழிகோலியது. 2007ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஐந்தாவது மதிப்பீட்டு அறிக்கையின் விளைவாக பாரிஸ் ஒப்பந்தம் ஏற்பட்டது.

காலநிலை மாற்றத்துக்கான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு (United Nations Framework on Climate Change – UNFCC) என்ற அமைப்பு 1992ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இது பிரேஸில் நாட்டின் ரியோ-டி-ஜெனரியோ நகரில் நடைபெற்ற புவிமாநாட்டில் (Earth Summit என்று சொல்லப்படும் United Nations Conference on Environment and Development – UNCED) அமைக்கப்பட்டது.  இது ஜெர்மனியில் உள்ள பான் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு 1994லிருந்து செயல்பட ஆரம்பித்தது. இதில் இந்தியா உள்ளிட்டு 197 உறுப்புநாடுகள் உள்ளன. இந்த 197 உறுப்பு நாடுகளும் ஆண்டுக்கொருமுறை கூடி காலநிலைமாற்றம் பற்றி இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பரிசீலித்து, எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை தீர்மானிக்கும். ஆண்டுக்கொருமுறை கூடும் இக்கூட்டத்தை உறுப்பு நாடுகள் மாநாடு (Conference of Parties – COP) என்று அழைக்கின்றனர். பொதுவாக இது ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் நடைபெறும். 1995 ஆண்டு முதல் இதுவரை 25 மாநாடுகள் நடைபெற்றுவிட்டன. 2020இல் பெருந்தொற்று காரணமாக நடைபெறவில்லை. இப்பொழுது 26வது மாநாடு  பிரிட்டனின் கிளாஸ்கோ நகரில் நடக்கிறது. IPCC காலநிலை மாற்ற ஆய்வறிக்கைகள் வெளியிடும் அமைப்பு என்றால் UNFCC காலநிலை மாற்றத்தைத் தடுக்கும் செயல்திட்டத்தை மேற்கொண்டுவரும் அமைப்பாகும்.

முயற்சிகளும்முறியடிப்புகளும்

IPCCயின் ஆறாவது மதிப்பீட்டு அறிக்கையை நாம் இங்கு விவாதிக்க வேண்டியதில்லை. இது ஒரு நீண்ட நெடிய அறிக்கை. 3,949 பக்கங்களைக் கொண்டது. விரிவான, ஆழமான, ஆய்வு முடிவுகள் இதில் உள்ளன. இதை ஆங்காங்கே பிய்த்து எடுத்து ஏராளமான கட்டுரைகள் வந்துவிட்டன. இந்தியா எப்படி பாதிக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ள விரும்புவர்கள் இவ்வறிக்கையின் சம்பந்தப்பட்ட பகுதியை படிக்கவும். முழுக்க முழுக்க இது அறிவியல் அறிக்கை. தொழில்நுட்ப அடிப்படையிலானது. நோபல் அறிஞர்கள் மனாபே, ஹாசல்மேன் கோட்பாடுகளை பயன்படுத்தி தயார் செய்த அறிக்கையாகும். காலநிலை அறிவியலில் ஓரளவு ஞானம் உள்ளவர்கள் மட்டுமே முழுமையாக புரிந்து கொள்ள முடியும். இந்த அறிக்கையின் மூலம் புவியின் வெப்பமானது 1990இன் அளவை விட 2 டிகிரி உயர்ந்தால் கடுமையான தீய விளைவுகள் ஏற்படப்போவது உறுதி என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. இப்பொழுது நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

IPCCயின் முதல் அறிக்கை 1990ஆம் ஆண்டு வெளிவந்ததிலிருந்தே சர்ச்சை துவங்கிவிட்டது. பசுங்குடில் வாயுக்கள் ஒரு நூற்றாண்டில் எவ்வளவு வெளியிடப்பட்டிருக்கிறது; யார் வெளியிட்டார்கள் என்ற விபரங்களை இந்த அறிக்கை போட்டு உடைத்துவிட்டது. புவிவெப்பமயமாவதற்கு வளர்ச்சியடைந்த மேற்கு நாடுகள் அதிகப் பொறுப்பு ஆகும் என்ற உண்மையை இது தெள்ளத் தெளிவாக்கியது. பொதுவாக அறிவியல் அடிப்படையில் நிறுவப்பட்ட ஒன்று கேள்விக்குள்ளாகாது. உதாரணமாக, பூமி சூரியனைச் சுற்றுகிறது போன்றவை கேள்விக்குள்ளாவதில்லை. ஆனால் அறிவியல் அடிப்படையில் மதிப்பிட்ட இந்த அறிக்கையின் அம்சங்கள் கேள்விக்குள்ளாக்கப்பட்டன. கேள்வியை எழுப்பியவர்களில் மிகவும் மதிப்பு வாய்ந்த அறிவியலாளர்களும் அடங்குவர்.

அறிவியலில் நிறுவப்பப்பட்ட ஒன்று தூய்மையான அறிவியலாக இருக்கும்வரை அது கேள்விக்குள்ளாகாது. ஆனால் அது பொருளியல் சம்பந்தப்பட்டால் அது கேள்விக்குள்ளாகும் என்பது தெளிவு. அறிவியல் பாதையில் பயணித்து வந்த அரசியல்-பொருளாதாரம், மார்க்ஸ் காலத்தில் உபரி மதிப்பு எப்படி தோன்றுகிறது, உண்மையான செல்வ உற்பத்தியாளர்கள் யார் என்பதை இனம் கண்டவுடன், அந்த முடிவுகள், ஆதாயம் அடைபவர்களை அடையாளம் காட்டியதால் போலி அறிவியல் அரசியல்-பொருளாதாரத்திற்குள் புகுந்து அதை கொச்சைப் பொருளாதாரம் ஆக்கிவிட்டது. காலநிலை அறிவியல் மீதும் இதே போன்று தாக்குதல் தொடுக்கப்பட்டது. புவியின் வெப்பம் மனித நடவடிக்கையால் உயரவில்லை என்ற கருத்தும் தற்போது நாம் காணும் உயர்வு இயற்கையானதுதான் என்றொரு கருத்தும், வெப்பம் உயரவேயில்லை என்று சாதிக்கும் மற்றொரு கருத்தும், பரவலாக உலா வந்தன. இக்கருத்துகளுக்குச் சொந்தக்காரர்களில் பலர் மதிப்பு வாய்ந்த அறிவியலாளர்கள் ஆவார்.அடுத்தடுத்த IPCCயின் மதிப்பீட்டு அறிக்கைகைகள் வெளிவந்த நிலையில் இனிமேலும் உண்மை என்ற சூரியனை போலி அறிவியல் கொண்டு மறைத்துவிட முடியாது என்ற நிலை ஏற்பட்டது.

க்யூட்டோஉடன்படிக்கை

முதலாம் அறிக்கையின் தாக்கமே 1992ஆம் ஆண்டு நடைபெற்ற புவிமாநாடு. அதையொட்டி அமைக்கப்பட்டதே UNFCC. அதன் ஏற்பாடுதான் ஆண்டுதோறும் நடைபெறும் உறுப்பு நாடுகள் மாநாடுகள். மூன்றாவது உறுப்பு நாடுகள் மாநாட்டில் எற்டப்பட்டதுதான் க்யூட்டோ உடன்பாடு. இந்த உடன்படிக்கையானது ஜப்பான் நாட்டின் க்யோட்டோ நகரில் 1997ஆம் ஆண்டு டிசம்பரில் எட்டப்பட்டது. மார்ச் 16, 1998 முதல் மார்ச் 15, 1999 வரை நாடுகள் கையொப்பமிட அவகாசம் கொடுக்கப்பட்டது. பிப்ரவரி 16, 2005 முதல் அமலுக்கு வந்தது.  இந்த உடன்படிக்கையானது “உச்சவரம்பு மற்றும் வணிகம்” (Cap and Trade) என்ற அணுகுமுறையில் அமைந்தது. இந்த உடன்படிக்கையின்படி தொழில்வள நாடுகள் (உடன்படிக்கையில் அட்டவணை ஒன்று நாடுகள் – இதில் இந்தியா, சீனா கிடையாது) தாங்கள் உமிழும் பசுங்குடில் வாயுக்களை 1990இன் அளவில் 5.2 சதவீதம் குறைவாக உமிழ்வது என்ற உச்சவரம்பிற்கு ஒப்புக் கொண்டன. இதில் ஐரோப்பிய யூனியன் நாடுகள் 8 சதவீதமும் அமெரிக்கா 7 சதவீதமும் ஜப்பான் 6 சதவீதமும் ரஷ்யா 0 சதவீதமும் 1990ஆம் ஆண்டைவிட குறைக்கும் என்ற முடிவுக்கு வந்தனர். இந்த உடன்படிக்கையானது ஆஸ்திரேலியாவிற்கு 1990ஆம் அளவைவிட 8 சதம் அதிகமாகவும் ஐஸ்லாந்திற்கு 10 சதம் அதிகமாகவும் நிர்ணயித்தது.  பிப்ரவரி 2009 வரை 183 நாடுகள் இந்த உடன்படிக்கையின் அம்சங்களை ஏற்றுக் கொண்டுள்ளன. உச்சவரம்பைவிட குறைவாக உமிழ்பவர்கள் சான்றிதழ் பெறுவார்கள்; அதிகமாக உமிழ்பவர்கள் சான்றிதழ் உள்ளவர்களிடம் விலைகொடுத்து வாங்கி மொத்த உமிழ்வை ஒரு எல்லைக்குள் நிறுத்த வேண்டும்.

கோபன்ஹேகன்உடன்படிக்கை

“உச்சவரம்பு மற்றும் வணிகம்“ அணுகுமுறையானது உமிழ்வு வணிகத்தையும் அதையொட்டிய ஊகவணிகத்தையும் திறந்துவிட்டது. அத்துடன் 2001ஆம் ஆண்டு அமெரிக்க அதிபரான புஷ் இந்த உடன்பாட்டிலிருந்து விலகுவதாக அறிவித்து இதை உடைத்தெறிந்தார். இதன் மூலமாக அமெரிக்கா இதுவரை உமிழ்ந்ததற்கு மற்றவர்கள் செலவழிக்க வேண்டும் என்று மறைமுகமாக வாதிட்டது. இந்தக் கொள்கை சர்வதேச அளவில் கடுமையாக விவாதிக்கப்பட்டு வந்தது. இழுபறி நிலையே நீடித்தது. பின்தங்கிய நாடுகள் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. மற்றவர்கள் அளவிற்கு வளரும் வரை இதில் பங்கெடுக்க முடியாது என்று வாதிட்டு வந்தன. எனினும் இந்த தேக்க நிலையில் ஒரு மாற்றம் 2009ஆம் ஆண்டு கோபன்ஹேகன் நகரில் நடைபெற்ற 15வது உறுப்பு நாடுகள் மாநாட்டில் வந்தது. இந்த மாநாட்டில் பின்தங்கிய நாடுகளும், உமிழ்வு குறைக்கும் முயற்சியில் பங்கெடுப்பது என்று ஒரு அடி முன்வைத்து உடன்பாட்டுக்கு வந்தன. ஆரம்ப கட்டமாக ஒவ்வொரு நாடும் அதன் மொத்த உமிழ்விற்கும் உள்நாட்டு உற்பத்திக்கும் (Emission/GDP Ratio) உள்ள விகிதத்தை சரிசமமாக பராமரிப்பது என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதாவது பின்தங்கிய நாடுகள் கோரிய தனிநபர் உமிழ்வு என்பது கைவிடப்பட்டு Emission/GDP Ratio வந்துவிட்டது. இதன் பிரச்சனை என்னவென்றால் அதிக GDP உள்ள நாடுகள் அதிகமாக உமிழலாம்; அதாவது அதிக GDP உள்ளவர்களுக்கு மட்டும் தனிநபர் உமிழ்வு அதிகமாக வைத்திருக்க உரிமை உண்டு. எனினும் வளர்ச்சியடைந்த நாடுகள், அதாவது அதிக GDP உள்ள நாடுகள், பின்தங்கிய நாடுகளுக்கு உதவ முன்வந்தன.  இதை அடைவதற்கு வளர்ச்சியடைந்த நாடுகள் பின்தங்கிய நாடுகளுக்கு தொழில்நுட்பத்தை வழங்குவது என்றும், மூலதனத்தை வழங்குவது என்றும், 2020க்குள் 100 பில்லியன் அமெரிக்க டாலர் நிதிதிரட்டி பின்தங்கிய நாடுகளுக்கு உதவுவது என்றும் முடிவெடுக்கப்பட்டது. இப்படிச் செய்தால் தொழிற்புரட்சிக்கு முந்தைய வெப்பநிலையில் 2 டிகிரி செல்ஷியஸ் மட்டுமே உயரும் என்றும் கணக்கிடப்பட்டது.

டர்பன்திட்டம்

குட்டித் தீவு நாடுகளுக்கு கோபன்ஹேகன் உடன்பாட்டில் திருப்தி ஏற்படவில்லை. அவர்கள் வாழும் பகுதி வேகமாக மூழ்கிவந்த நிலையில் அவர்கள் தீவிர நடவடிக்கை கோரி கூக்குரலிட்டு வந்தனர். எனவே டர்பன் நகரில் 2011ஆம் ஆண்டில் நடைபெற்ற 17வது உறுப்பு நாடுகள் மாநாட்டில் காரசாரமான விவாதம் முன்னுக்கு வந்தது. குட்டித் தீவு நாடுகளின் அச்சத்தை முன்வைத்து பருவநிலை பிரச்சனையை சரி செய்ய வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு அதிக கடப்பாடு இருக்கிறது என்ற கொள்கையை ஒழித்துக் கட்டினர். இந்தக் கொள்கை இருப்பதால்தான் உருப்படியாக எந்த நடவடிக்கையும் எடுப்பது நடைமுறையில் சாத்தியப்படவில்லை என்ற வாதத்தை முன்வைத்து இதை நீக்குவதற்கு கோரி வந்தது. அழியும் நாடுகளின் கூக்குரலுக்கு எல்லாரும் செவிசாய்க்க வேண்டும் என்ற நிலையில் பின்தங்கிய நாடுகள் இக்கொள்கையை வலியுறுத்துவதை நிறுத்த ஒப்புக் கொண்டன. அத்துடன் இக்கொள்கை நிறுத்தி வைக்கப்பட்டால் ஓராண்டுக்குள் உருப்படியான நடவடிக்கை எடுக்கும் உடன்பாட்டுக்கு வழிகோல முடியும் என்றும் வாக்குறுதியளித்தன. அப்படி நடக்காவிட்டால் 2015க்குள் கண்டிப்பாக உருப்படியான உடன்படிக்கை எட்டுவது என்ற இலக்கிற்கு ஒப்புக்கொண்டது. உருப்படியான நடவடிக்கை என்றால் ஒவ்வொரு உறுப்பு நாடும் சட்டரீதியாக உமிழ்வு குறைப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும். அமெரிக்காவில் அதீத வலதுசாரி குடியரசுக் கட்சியினர் பெரும்பான்மையாக இருக்கும் நிலையில் இது சாத்தியப்படாது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இவர்கள் பெரும்பான்மையாக இருந்தபொழுதுதான் க்யோட்டா உடன்படிக்கையை சட்ட ரீதியாக ஏற்றுக் கொண்டதை ரத்து செய்தார்கள்.

22வதுஉறுப்புநாடுகள் (பாரிஸ்)மாநாடு

2015ஆம் ஆண்டு நெருங்கி வந்ததையொட்டி அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெற்று வந்தன. இதற்கிடையில் சீனாவும், அமெரிக்காவும் 2014ல் ஒரு பருவநிலை உடன்பாடு செய்து கொண்டன. இதன்படி 2030க்குள் சீனா அதன் உமிழ்வின் உச்சத்தை அடைந்துவிடும் என்றும், அதன் பிறகு அது படிப்படியாக குறைக்கத் துவங்கிவிடும் என்பதும் அந்த உடன்பாட்டில் கூறியிருக்கிறது. அத்துடன் படிம எரிபொருட்களின் உபயோகத்தை 20 சதவிதம் குறைப்பதாகவும் கூறியிருந்தது. படிம எரிபொருட்கள்தான் பசுங்குடில் வாயுக்கள் உமிழ்வில் முக்கிய பங்காற்றுகின்றன இதுவே புவிவெப்பமயமாவதற்கு காரணம். தன்னுடைய தரப்பில் அமெரிக்காவானது 2005ஆம் ஆண்டு உமிழ்வில் 26-28 சதவீதத்தை 2025க்குள் குறைப்பதாக ஒப்புக் கொண்டது. எனினும் குடியரசுக் கட்சியினர் கட்டுப்பாட்டில் இருக்கும் அமெரிக்க பாராளுமன்றத்தில் இது சாத்தியப்படாது என்பதால் அதிபர் ஒபாமா அவர்கள் நாட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் சுற்றறிக்கை மூலம் அமல்படுத்த முயன்றார். விஷயம் நீதிமன்றம் சென்று நிறுத்தி வைக்கப்பட்டுவிட்டது. இதனையடுத்து 2015ஆம் ஆண்டு நவம்பரில் சீனாவும், ஃபிரான்சும் ஒரு கூட்டறிக்கை வெளியிட்டன. இதன்படி அதே ஆண்டு டிசம்பர் மாதம் பாரிசில் நடைபெறும் மாநாட்டில் இரண்டும் இணைந்து செயல்பட்டு ஒரு உடன்பாடு உருவாவதை வெற்றிகரமாக்க முயற்சிக்கும் என்று அறிவித்தன. எப்படிச் செய்யப்போகின்றன என்று அறிவிக்கவில்லை.

பாரிஸ் மாநாட்டிற்கு முன்பாக ஒவ்வொரு நாடும் தன்னால் எவ்வளவு உமிழ்வை குறைக்க முடியும் என்பதும், அதற்கு தேவைப்படும் நிதி எவ்வளவு என்பதும் வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மிகவும் பின்தங்கிய நாடுகளை நெருக்கி அவர்களிடம் வாக்குறுதியைப் பெற்றுவிட்டன. சில நாடுகள் தங்களின் வளர்ச்சித் திட்டத்தில் சமரசம் செய்து கொண்டு உடன்படிக்கைக்கு முன்வந்தன. இவர்களை அணிசேர்த்துக் கொண்டு வளர்முக நாடுகளை, குறிப்பாக இந்தியா மற்றும் சீனாவை, அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் நெருக்கி வந்தன. பாரிஸ் மாநாட்டில் உடன்படிக்கை என்பது ஒருவழியாக எட்டப்பட்டுவிட்டது. வளர்ந்த நாடுகளின் கோரிக்கையான பருவநிலை மாற்றத்தினால் பின்தங்கிய நாடுகளுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு தாங்கள் பொறுப்பல்ல என்பதும், பின்தங்கிய நாடுகளின் கோரிக்கையான பொதுவான ஆனால் வித்தியாசமான பொறுப்பு (Equity or Common but differentiated Responsibilities) என்ற கோரிக்கையும் உடன்பாட்டில் இடம் பெற்றிருக்கின்றன. நாடுகளின் வாக்குறுதிகளும் இடம் பெற்றிருக்கின்றன. எனினும் எதுவும் சட்டரீதியானது கிடையாது. ஐந்தாண்டுக்கொருமுறை பரிசீலனை செய்து உமிழ்வுகுறைப்பில் மாற்றங்கள் செய்வதற்கு ஒப்புக் கொள்ள வேண்டும் என்பதும் உடன்பாட்டில் உண்டு. இந்த உடன்பாட்டிலிருந்து பின்வாங்கப் போவதாக அதிபர் ட்ரம்ப் தனது தேர்தல் பிரசாரத்தின்போது கூறியிருந்தார். வெற்றி பெற்றபின் சொன்னதைச் செய்தும் காட்டினார்.

முதலாளித்துவம் இருக்கும்வரை புவிவெப்பமயமாக்கலுக்குத் தீர்வு கிட்டாது

இந்தப் பின்னணியில்தான் 26வது உறுப்பு நாடுகள் மாநாடு கிளாஸ்கோ நகரில் நடைபெறுகிறது. இது அபாயச்சங்கு ஊதும் IPCCயின் ஆறாவது மதிப்பீட்டு அறிக்கையின் பின்னணியில் நடைபெற்று வருகிறது. எதிர்பார்த்ததைப் போல் எந்த உருப்படியான முடிவும் எட்டப் போவதில்லை. மதிப்பீட்டு அறிக்கை சுட்டிக்காட்டியபடி 2030க்குள் 2 டிகிரி செல்ஷியஸுக்குள் வெப்பஉயர்வை நிறுத்துவதற்கு ஒவ்வொரு நாடும் குறைக்க வேண்டிய உமிழ்வின் இலக்குகள் என்று எதுவும் நிர்ணயிக்கப் போவதில்லை. காடுகள் அழிப்பை குறைக்கப் போகிறார்களாம். பசுங்குடில் வாயுக்களில் பிரதான வாயுவான கார்பன்-டை-ஆக்ஸைடை குறைப்பது பற்றி எதுமில்லை. ஆனால் சிறிய அளவு பங்கு வகிக்கும் மீத்தேன் உமிழ்வைக் குறைக்கப் போகிறார்களாம். மாநாடு நவம்பர் 12ஆம்தேதி முடிவடைகிறது.

ஓசோன்படலம் தேய்மானப்பிரச்சனை முன்னுக்கு வந்த பொழுது மாண்டிரியல் உடன்படிக்கை மூலம் தீர்வு எட்டப்பட்டது. இந்த தீர்வின் விளைவாக குளோரோபுளோரா கூட்டுப்பொட்கள் உற்பத்தி நிறுத்தப்பட்டு அதற்கு மாற்றாக வேறு குளிர்விப்பு ஊடகம் புழக்கத்திற்கு வந்துவிட்டது. குளோரோஃபுளோரா கூட்டுப்பொருள் உற்பத்தியில் ஈடுபட்ட மூலதனதனமானது ஒட்டுமொத்த உலக மூலதனத்தின் சிறுபகுதியே. எனவே அதன் வலிமையும் குறைவு. முதலாளித்துவ உற்பத்திமுறையில் பல்வேறு உற்பத்திக் கிளைகளுக்குள் முரண்பாடுகள் எப்பொழுதுமே இருந்துவரும். இதில் நெருக்கடி கட்டத்தை ஏட்டும்பொழுது சிறுமூலதனம் நசுங்கிச் செத்துவிடும். குளோரோஃபுளோரோ கூட்டுப்பொருளுற்பத்தியில் ஈடுபட்ட மூலதனம் இப்படித்தான் மறைந்து போனது. ஆனால் புவிவெப்பப் பிரச்சனையில் நிலைமை வேறு. படிமஎரிபொருட்கள் உற்பத்தியில் ஈடுபடும் மூலதனமும் அவற்றின் உற்பத்திப் பொருட்களை கச்சாப் பொருட்களாக கொண்டு செயல்படும் மூலதனமும் உலக மூலதனத்தில் கணிசமான பங்கை வகிக்கின்றது. எனவே இந்த மூலதனத்தின் வலிமையை குறைந்தது மதிப்பிட முடியாது. அத்துடன் வளரும் நாடுகள் படிம எரிபொருளையே தங்களின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு சார்ந்திருக்கின்றன. எனவே வளரும் நாடுகளின் மூலதனமும் படிம எரிபொருளை முடக்க அனுமதிக்காது.

முதலாளித்துவ உற்பத்திமுறை அதற்கே உரித்தான இயங்குவிதிகளுடன் இயங்கிவருகிறது. இவ்வுற்பத்திமுறை இருக்கும் வரை அதன் இயங்குவிதிகளில் யாரும் தலையிட முடியாது. முதலாளித்துவ உற்பத்திமுறை ஏற்படுத்திவரும் நெருக்கடிக்குத் தீர்வாக அரசு செலவீனத்தின் மூலம் செய்யப்படும்அரசு தலையீடு ஒரு ஒழுங்குக்கு கொண்டுவரும் என்ற கோட்பாட்டை ஜான் மோனார்டு கீன்ஸ் முன்மொழிந்தார். ஆனால் அவருடைய கோட்பாட்டை அமல்படுத்த முடியவில்லை. அவ்வப்போது அமல்படுத்தப்பட்டாலும், ஒரு குறுகிய காலத்திற்குள் அமலாக்கம் பின்வாங்கப்பட்டுவிடுகிறது. ஏனென்றால் முதலாளித்துவத்தின் இயங்குவிதியானது கீனிஸியத்தை ஒருபோதும் அனுமதிக்காது. அதேபோல்தான் புவிவெப்ப பிரச்சனையிலும் அரசுகளின் தலையீட்டை அனுமதிக்காது. ஒருபுறம் வளர்ச்சியை கோரி நிற்கும் பின்தங்கிய நாடுகள், இன்னொருபுறம் அதிக உமிழ்வைச் செய்து வளர்ந்துவிட்ட நாடுகள். வளரும் நாடுகளின் கோரிக்கைகளை சுட்டிக்காட்டி இவை தனது பொறுப்பை தட்டிக்கழிக்க முனைகின்றன.

எப்படிப்பட்ட சமூகப் பிரச்சனைகள் இருந்தாலும் உற்பத்திமுறைக்குள்ளோ உற்பத்தியமைப்புக்குள்ளோ தலையீடு செய்வதை முதலாளித்துவத்தின் இயங்குவிதிகள் ஒருபோதும் அனுமதிக்காது. கடந்த முப்பது ஆண்டுகளாக வரவிருக்கும் ஆபத்தை எவ்வளவுதான் உரக்கக் கூறி எத்தனை கிரேட்டா தன்பெர்க்குகள் போராட்டம் நடத்தினாலும் முதலாளித்துவத்தை அதனது லாப நோக்க செயல்பாட்டிலிருந்து விடுவித்து ஒட்டுமொத்த சமூக நோக்க செயல்பாட்டிற்குள் கொண்டு வரமுடியாது. “முதலாளித்துவமானது, அதனளவில் அதன் உற்பத்தித்தளத்தில் ஒரு கட்டுப்பாட்டையும் ஒழுங்கையும் கொண்டுவருகிறது. அதே நேரத்தில், உற்பத்தித்தளத்திற்கு வெளியே ஒழுங்கின்மையையும், அராஜகத்தையும் ஏற்படுத்துகிறது” என்று மூலதன நூலில் வலியுறுத்திக் கூறும் மார்க்ஸின் கூற்று மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. நெருக்கடிகள் முற்றுவதால், பேச்சுவார்த்தைக்கு பல்வேறு மூலதனத்தின் பிரதிநிதிகள் மேஜைக்கு வந்திருக்கிறார்கள். என்ன மாதிரியான முடிவெடுத்தாலும் அது மூலதனத்தின் இயக்கப் போக்கில் தலையிடுவதாகவே வருகிறது. எனினும் பேச்சுவார்ததை மேஜையில் அமர்ந்திருப்பவர்கள் கறாராக முதலாளித்துவ கோட்பாடுகளை இம்மி பிசகாமல் அமல்படுத்த முயன்று வருகிறார்கள். எப்பொழுதெல்லாம் சூழலைக் கெடுக்கும் இந்த அராஜக உற்பத்திமுறையில் மனிதத் தலையீடு வேண்டும் என்ற கோஷம் வலுக்கிறதோ, அப்பொழுதெல்லாம் சந்தை வழியில் தீர்வு என்பதாக திசை திருப்பப்பட்டு, சந்தைதான் திசைவழியைத் தீர்மானிக்கும்; மனிதத் தலையீடு தீர்மானிக்க முடியாது என்று நிறுவுவதற்கு கறாராக முயல்கிறார்கள்.

முதலாளித்துவம் ஏற்படுத்தும் உற்பத்திசக்திகளின் பிரம்மாண்டமான வளர்ச்சியானது சமூகத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும். ஆனால் அதன் அராஜக உற்பத்தியமைப்பு முறை மனிதர்களுக்கு சொல்லொண்ணாத் துயரத்தையும் கொண்டுவரும். அது மனிதர்களுக்கு கொண்டுவரும் துயரங்களிலிருந்து மானுடம் பாடம் கற்றுக்கொண்டு புதிய சமூக அமைப்பாக தன்னை தகவமைத்துக் கொள்ளும். அப்புதியவகை சமூக அமைப்பே சோசலிச சமூகம்; அது லாபத்திற்காக உற்பத்தி என்பதை கைவிட்டு மனிதத் தேவைக்கான உற்பத்தி என்பதை மையமாக வைத்து செயல்படும். இயற்கையான இந்த மாற்றங்கள் நடைபெறுவதற்கு நீண்டகாலம் பிடிக்கும். அதுவரை இயற்கை வளங்களைப் பற்றியும், சுற்றுச்சூழலை பற்றியும் ஒட்டுமொத்தமாக இந்த புவி பற்றியும் கவலைப்படாமல் அராஜக உற்பத்திமுறையை முதலாளித்துவம் தொடர்வதற்கு அனுமதிக்க முடியாது.  லாபவெறியில் இயங்கும் முதலாளித்துவம் புவியை காப்பாற்ற அனுமதிக்காது. எத்தனை சுற்றுகள் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றாலும், உறுப்பு நாடுகள் மாநாடு எத்தனை நடைபெற்றாலும், மூலதன இயங்குவிதிகளை மீறும் தலையீடுகளை முதலாளித்துவ உற்பத்திமுறை அனுமதிக்காது. மூலதன இயங்குவிதிகளை மீறும் தலையீடு இல்லாமல் புவிவெப்ப பிரச்சனைக்கு தீர்வுகாண முடியாது. படுவேகமாக அழிவை நோக்கி சென்றுகொண்டிருக்கும் புவியைக் காப்பாற்றவேண்டுமானால் முதலாளித்துவம் தூக்கியெறியப்பட்டு அதனிடத்தில் மானுடத்தில் அக்கறையுள்ள சமூக அமைப்பான சோசலிசம் வரவேண்டும் என்பதே மானுடம் முன் உள்ள முன்னுரிமை என்பதை புவிவெப்பமயப் பிரச்சனை வலியுறுத்துகிறது.

மோடி அரசின் பாசிச போக்குகள்: டோக்ளியாட்டி தரும் வெளிச்சத்தில் ஒரு பார்வை

பேரா. ஆர். சந்திரா.

(கடந்த இதழில் பால்மிரோ டோக்ளியாட்டி எழுதிய “பாசிசம் குறித்த விரிவுரைகள்” எனும் நூல் அறிமுகத்தை வெளியிட்டிருந்தோம். அதன் தொடர்ச்சியாக அந்நூல் குறித்த சமகால பொருத்தப்பாட்டை இக்கட்டுரை விவரிக்கிறது.)

சமீபகாலமாக உலகின் பலபகுதிகளிலும், பாசிச சக்திகள் வலுப்பெற்று வருகின்றன. இவை, 1930களில் ஐரோப்பிய நாடுகளின், குறிப்பாக , ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகளின் நிகழ்வுகளை நினைவுபடுத்துவதாக உள்ளன. பாசிச அரசு ஏகபோக முதலாளிகளின் நலன்களை முன்னிறுத்தி, முழுமையாக அதற்கேற்ப செயல்படும் தன்மை கொண்டது. இந்தியாவில் தற்போது மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு பாசிச அரசா, இல்லையா என்பது பற்றி நிறைய விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தச் சூழலில்,1930களில் இத்தாலிய  கம்யூனிஸ்ட் தலைவர்களில் முக்கியமான ஒருவரான பல்மிரோ டோக்ளியாட்டி  பாசிசம் பற்றி 1935ஆம் ஆண்டு மாஸ்கோவில் லெனின் பள்ளியில் ஆற்றிய விரிவுரைகள் பாசிசம் பற்றிய புரிதலுக்கு உதவும். அது மட்டுமல்ல. பாசிசம் என்பது முறியடிக்க முடியாத ஒன்று இல்லை.  பாசிச சக்திகளை முறியடிக்க கம்யூனிஸ்டுகள் எத்தகைய நிலைபாடுகளை எடுக்க வேண்டும் என்பதை ஜெர்மனி மற்றும்  இத்தாலிய நாடுகளின் அனுபவங்களின் மூலம் அவர் விளக்கி இருப்பதை புரிந்து கொண்டு, அப்புரிதலின்  வெளிச்சத்தில், நமது கட்சி திட்டத்தின் மீது நின்று, சமகால இந்திய சூழலையும் கணக்கில் கொண்டு, தக்க செயல் திட்டங்களை உருவாக்க இந்த வாசிப்பு உதவும்.

பாசிசம் என்பது என்ன?

பாசிசம் என்பதற்கு பல வகையான விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. “பாசிசம் என்பது நிதி மூலதனத்தின் மிகவும் பிற்போக்கான, மிகவும் இனவெறி கொண்ட, மிக மோசமான ஏகாதிபத்திய சக்திகளின் அப்பட்டமான பயங்கரவாத சர்வாதிகாரமாகும்” என்று 1935ஆம்  ஆண்டு நடைபெற்ற கம்யூனிஸ்ட் அகிலத்தின் 7வது உலக காங்கிரசுக்கு அளித்த அறிக்கையில் தோழர். ஜார்ஜ் டிமிட்ரோவ் கூறியதை டோக்ளியாட்டி எடுத்துரைக்கிறார். இங்கு மாமேதை  லெனின் அவர்கள் “ஏகாதிபத்தியம் குறித்து நீங்கள் அறிந்திருக்கவில்லை என்றால், பாசிசம் என்ன என்பது குறித்து நாம் தெரிந்து கொள்ள முடியாது“ என்று கூறியுள்ளதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். சுருங்கச் சொன்னால், ஏகாதிபத்தியம் என்பது ஏகபோகமூலதனம் ஆதிக்கம் செலுத்தும் கட்டம்.

பாசிசமானது ஒவ்வொரு நாட்டில் ஒவ்வொரு வடிவம் எடுக்கும் . ஒரே நாட்டில் கூட அந்தந்த கால கட்டத்திற்கேற்ப அதன் நோக்கங்கள், அணுகுமுறைகள் மாறும். ஏகபோக முதலாளித்துவம் நெருக்கடியை எதிர்கொள்ளும் பொழுது, பூர்ஷ்வா சக்திகள் சில “முதலாளித்துவ ஜனநாயக” நெறிமுறைகளை கைவிட்டுவிட்டு பாசிசத்தின்பால் திரும்பும் என்பதை பல எடுத்துக்காட்டுகளுடன் டோக்ளியாட்டி விளக்குகிறார்.

பாசிசத்தின் முக்கிய அம்சங்களும்  இந்திய சூழலும்

பாசிசத்தின் முக்கிய அம்சங்கள் சமகால இந்திய சூழலுக்கு எப்படி பொருந்துகின்றன என்று பார்க்கலாம்.

பாசிச கட்சி ஆட்சியில் அமர்ந்தால் பெரு முதலாளிகளுக்கு ஆதரவான பொருளாதார கொள்கைகளை முழுமையாக முன்பின்முரணின்றி அமலாக்கும். பா.ஜ.கவிற்கு முந்தைய  காங்கிரஸ் தலைமையிலான அரசு நவீன தாராளமயக் கொள்கைகளை அமுலாக்கியது. இடது சாரிகள் மற்றும் ஜனநாயக சக்திகளின் தொடர் போராட்டங்களின் விளைவாக, கிராமப்புற வேலை உறுதி சட்டம், தகவல் அறியும் உரிமை சட்டம், வன உரிமைச் சட்டம் போன்ற சட்டங்கள் இயற்றப்பட்டு  அமலுக்கு வந்தன. இடதுசாரிகளின் ஆதரவுடன் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு செயல்பட்ட 2004-2008 காலத்தில் வேளாண் மற்றும் ஊரக கட்டமைப்புகளில் ஒன்றிய அரசு முதலீடுகள் நிகழ்ந்தன. 2009லிருந்து இது நீர்த்துப் போனது. பின்னர் 2014இல் மோடி அரசு ஆட்சிக்கு வந்ததும், நவீன தாராளமயக் கொள்கை மேலும் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டது. பெரு முதலாளிகளுக்கு ஆதரவாக, நெருக்கமாக இருந்து ஒன்றிய அரசு செயல்பட்டுவருகிறது. தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் சட்டம், விவசாயத்தை கார்பரேட்மயமாக்கி, விவசாயிகளை நிர்க்கதியாக தவிக்க விடும் சட்டம், லாபம் ஈட்டும்  நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் தனியாருக்கு தாரை வார்க்கும் சட்டம், ஆதிவாசிகள், பழங்குடி மக்கள் தமது வாழ்வாதாரங்களை இழக்கும்  வகையில்  இயற்கை வளங்களை கார்பரேட்டுகள் கைவசப்படுத்தி லாபம் ஈட்டும் சட்டம்  என பல சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இவற்றை எதிர்ப்போர் வளர்ச்சிக்கு எதிரானவர்கள்; தேச விரோதிகள் என்று முத்திரை குத்தப்படுகின்றனர். இச்சட்டங்களை மோடி எப்படி நியாயப்படுத்துகிறார்? பெரு முதலாளிகள்தான் “செல்வத்தை உருவாக்குபவர்கள்” என்கிறார். மோடி அரசின் பொருளாதார  கொள்கைகளால் வேலை இழப்பு, கடும் விலை வாசி உயர்வு, விளிம்பு நிலைக்கு தள்ளப்படுவோர்  எண்ணிக்கை அதிகரிப்பு  போன்றவற்றை பற்றி எந்த கவலையும் ஒன்றிய அரசுக்கு கிடையாது என்பதே யதார்த்தம்.

பாசிச கட்சி ஆட்சிக்கு வந்தால்

டோக்ளியாட்டி இந்த அமசத்தை பின்வருமாறு விளக்குகிறார்? “அரசியல் விவாதங்கள் நடைபெறாது. பாசிச கட்சி கொள்கையில் மாற்றம் கொண்டு வந்தால் கூட, அக்கட்சியின் உறுப்பினர்கள் இதர குடிமக்களை போல, செய்தித்தாள்களை படித்து தெரிந்து கொள்ள வேண்டியிருக்கும். கட்சி உறுப்பினர்களுக்கு  அதன் கொள்கை உருவாக்கத்தில் பங்கு இருக்காது. உட்கட்சி  ஜனநாயகம் என்பது  இருக்காது. அதிகார வர்க்க பாணியில், கட்சி மேலிருந்து கட்டப்படும்… ஆண்டுக்கொருமுறை கூட்டப்படும் கூட்டங்களில் தலைவர் ஆற்றும் உரைகளை கேட்பதுடன், தலைமை எடுக்கும் முடிவுகளை உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்வார்கள். ஜனநாயக அடிப்படையில்  கட்சிக்குள் தேர்தல் என்பது கிடையாது ..”

கடந்த ஏழு ஆண்டுகளில் மோடி அரசின் செயல்பாடு எப்படி இருந்திருக்கிறது? ஆகப்பெரிய நாசம்  விளைவித்த பணமதிப்பு இழப்பு நடவடிக்கை சம்பந்தப்பட்ட நிதித்துறையும்  ரிசர்வ் வங்கியும் கலந்து முன்மொழிவு உருவாக்கப்பட்டு விவாதித்து முடிவு எடுக்கப்படவில்லை. திடீரென மோடியால் அறிவிக்கப்பட்டது. இதனால் சிறுகுறு தொழில்களும் விவசாயமும் இதர முறை சாரா தொழில்களும் பெரும் சேதத்திற்கு உள்ளாயின. மக்களுக்கு எந்த நன்மையையும் இல்லை. மிஞ்சியது உயிரிழப்பு உட்பட கடும்பாதிப்பு மட்டுமே. சென்ற ஆண்டு  பெரும்தொற்று  பரவிய பொழுது எந்த மாநிலத்தையும் கலந்தாலோசிக்காமல், திடீரென சர்வாதிகார பாணியில் பிரதமர் நாடு தழுவிய முழு ஊரடங்கு  கொண்டு வந்தார். மக்கள் பெரும் துயருக்கு உள்ளாயினர். ஆனால்  இந்திய பெரு முதலாளிகளின் சொத்துக்கள் பெரும் தொற்று காலத்தில் பல்கிப்பெருகியுள்ளன. பெரும் தொற்று கால நிலைமைகளை பயன்படுத்தி விவசாயிகள், தொழிலாளிகள், கிராமப்புற ஏழைகள் ஆகியோருக்கு எதிரான சட்டங்களை பாராளுமன்ற நெறிமுறைகளை மீறி ஒன்றிய அரசு  நிறைவேற்றியுள்ளது. பாராளுமன்ற ஜனநாயகம் மறுக்கப்பட்டு சர்வாதிகார போக்குகள் மேலோங்கி வருவதை இந்நிகழ்வுகள்  காட்டுகின்றன .  

ஜனநாயக அரசு நிறுவன அமைப்புகள் அழிப்பு

பாசிச கட்சி ஆட்சியில் இருக்கும் பொழுது, அரசின் நிறுவனங்கள் ஜனநாயக அடிப்படையில் செயல்படுவது படிப்படியாக அழிக்கப்படும்.. “GLEICHSHALTUNG” என்ற ஜெர்மானிய வார்த்தையின் அர்த்தம் ஒன்றிணைந்து செயல்படுதல் என்பதாகும். இது அபாயகரமான வார்த்தை அல்ல. ஆனால், நாஜிக்கள் அந்தச் சொல்லை எப்படி பயன்படுத்தினார்கள் என்பதை டொக்ளியாட்டி விளக்குகிறார். நாட்டில் உள்ள அனைத்து நிறுவனங்கள், பொது வாழ்வுடன் தொடர்புள்ள அனைத்து அமைப்புகள், சங்கங்கள் ஆகியவற்றை தங்களின் – பாசிஸ்டுகளின் –  கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என்பதே பாசிஸ்டுகளின் நோக்கமும் நடைமுறையுமாக நாஜி ஆட்சியில் இருந்தது. எதுவுமே அவர்களின் கட்டுப்பாட்டிற்கு வெளியே இருக்கக்கூடாது என்பதில் தீவிரமாக இருந்தனர். தற்போதுள்ள இந்திய ஒன்றிய அரசும் பாஜகவும் இதேபாணியில் செல்ல முயல்வதை நாம் கண்கூடாக பார்க்கலாம்.

கடந்த ஏழு ஆண்டுகளில் இந்தியாவின் அரசியல் சாசன அடிப்படையில் அமைக்கப்பட்ட நிறுவனங்களின் சட்டப்படியான செயல்பாடுகள் கடும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. நீதிமன்றங்கள் சுயமாக செயல்பட முடிவதில்லை. தேர்தல் ஆணையம், ரிசர்வ் வங்கி, அரசின் வரி வசூல் அமைப்புகள், நிதி கட்டுப்பாட்டு அமைப்புகள் உள்ளிட்ட நிறுவன அரசு அமைப்புகள் அச்சமின்றி நேர்மையாக செயல்பட முடியாத நிலை உருவாகிவருகிறது. பாராளுமன்றத்தில் நெறிமுறைகளை மீறி அரசியல் சாசனத்திற்கு புறம்பான  சட்டங்கள் இயற்றப்படுகின்றன. விவாதத்திற்கு இடமே இல்லை

கம்யூனிஸ்டுகளே பிரதான எதிரிகள்

தனது உரைகளில் டொக்ளியாட்டி பாசிசம் கம்யூனிஸ்டுகளையும் முற்போக்குவாதிகளையும் தான் தனது முக்கிய எதிரிகளாக பார்க்கும் என்பதை வலியுறுத்துகிறார்.

பாஜகவும் சங்க பரிவாரும் யாரை  தங்கள் எதிரிகளாக கருதுகின்றனர்? அவர்களின் குருவாக கருதப்படும் கோல்வால்கர் கூறுகிறார்: ”நமது மூன்று பிரதான எதிரிகள் முஸ்லிம்கள், கிறித்துவர்கள் மற்றும் கம்யூனிஸ்டுகள். இவர்கள் அந்நிய சக்திகளை விட அபாயகரமானவர்கள்.” ஒன்றிய அரசின் செயல்பாடுகளும் பாஜக சங்க பரிவார அமைப்புகளின் செயல்பாடுகளும் கோல்வால்கர் கருத்துக்களின் அடிப்படையில் இருப்பது தெளிவு.  கடந்த ஏழு ஆண்டுகளில் முற்போக்குவாதிகள், கம்யூனிஸ்டுகள் குறி வைத்து தாக்கப்பட்டிருக்கின்றனர். இடதுசாரிகளின் தலைமையில் செயல்படும் மாநில அரசுகளும் வர்க்க வெகுஜன அமைப்புகளும் சங்க பரிவாரத்தின் அன்றாட தாக்குதலை எதிர்கொள்கின்றனர். இடதுசாரிகள் நாட்டின் ஒற்றுமையை குலைக்கின்றனர்; நாட்டை பலவீனப்படுத்துகின்றனர் என்று குற்றம் சாட்டப்படுகின்றனர். மாணவர்கள், இளைஞர்கள் கூட  இந்த தாக்குதலில் இருந்து தப்பவில்லை.

பாசிசத்தின் அணுகுமுறை

பாசிசம் அதனுடன்  இணையாதவர்களை/எதிராகப் பேசுபவர்களை தண்டிக்கும் நோக்குடன் செயல்படும். டோக்ளியாட்டி இதனை ஒரு எடுத்துக்காட்டு மூலம் விளக்குகிறார். இத்தாலியின் கூட்டுறவு அமைப்பு போன்ற ஒன்றின் பணியாளர் ஒருவர் கம்யூனிஸ்ட் கட்சி தோழரிடம் அழுதுகொண்டே கூறினார்: “நான் பாசிச கட்சியில் சேர நாற்பது லிரா கொடுக்கவேண்டும், ஆனால் என்னிடம் பணம் இல்லை. கட்சியில் சேராவிட்டால் நான் பணியில் இருக்கமுடியாது.” இவ்வாறு மிரட்டி கட்சிக்கு அதிக அளவில் உறுப்பினர் சேர்த்தனர் அன்றைய இத்தாலிய பாசிஸ்டுகள்.  சமகால இந்தியாவில் பாஜக மிரட்டியும் ஆள் சேர்க்கிறது. காசு கொடுத்தும் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குகிறது. ஊழல் செய்ததாக பாஜகவால் குற்றம் சாட்டப்பட்டவர்களை மிரட்டி கட்சிக்குள் சேர்த்துக்கொள்கிறது. அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, மைய புலனாய்வுத்துறை என்று அரசு நிறுவனங்கள் அனைத்தையும் இவ்வாறு ஆள் சேர்க்க பயன்படுத்துகிறது.

இராணுவமய இந்து சமூகமே  இலக்கு

பாசிச கட்சி இளைஞர்கள் மீது அதிக கவனம் செலுத்துகிறது என்று அன்றைய இத்தாலிய நிலைமை பற்றி டோக்ளியாட்டி கூறுகிறார். அங்கும் ஜெர்மனியிலும் பாசிஸ்டுகள் வேலையில்லா இளைஞர்களை திரட்டுவதில், அவர்களை ‘ராணுவமயமாக்குவதில்’ தீவிரமாக செயல்பட்டனர். இந்த இளம் படைகள் தொழிலாளர்களையும் கிராமப்புற மக்களையும் திரட்டவும் உதவினர். ஆர் எஸ் எஸ் இளைஞர்களை ஈர்த்து அவர்களை ராணுவபாணியில் பயிற்சி அளிக்க முற்படுகிறது என்பது இன்று நேற்றல்ல. 1920களின் பிற்பகுதியில் ஆர் எஸ் எஸ். முன்னோடித் தலைவர் மூஞ்சே, இத்தாலி சென்று முசோலினியை சந்தித்தார். மூஞ்சே இத்தாலியின் ராணுவ கல்லூரிக்கும் பயிற்சி கூடங்களுக்கும் சென்று வந்தபின், இது போன்ற அமைப்புகள் இந்தியாவிற்கு மிகவும் தேவை; இந்து சமூகம் ராணுவமயமாக்கப்படவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினார். மராத்திய ஊடகங்கள் 1925 முதல் 1935 வரை பாசிசத்தையும் முசோலினியையும் பெருமைப்படுத்தி முன்னிறுத்தின என்பதை வலதுசாரி ஆர் எஸ் எஸ் ஆதரவாளர் ராகேஷ் சின்ஹா குறிப்பிட்டுள்ளார். இன்றும் இத்தகைய   பயிற்சிகள் தொடர்கின்றன. இந்திய பிரதமர் உள்ளிட்ட ஆர் எஸ் எஸ் தலைவர்கள் இப்பயிற்சிகளில் பங்கு பெற்றுள்ளனர்.

பன்முகத்தன்மை மறுப்பு

பாசிசம் பன்முகத்தன்மையை ஏற்பதில்லை. ஒரு நாடு, ஒரே இனம், ஒரே கலாச்சாரம் என்று ஒற்றைத்தன்மையை திணிக்கும் தன்மை கொண்டது பாசிசம். இதனை டோக்ளியாட்டி நினைவுபடுத்துகிறார்.

இந்தியா இந்துக்கள் நாடு என்று கூறுகிறது ஆர் எஸ் எஸ். பிற மத மக்கள் இரண்டாம் தர குடிமக்களாக வாழ மட்டுமே அனுமதி என்கிறது. குடியுரிமை திருத்த சட்டம், தேசீய குடிமக்கள் பதிவேடு போன்றவற்றிற்குப்பின் உள்ள நிகழ்ச்சி நிரல் இதுவே.

அதேசமயம், இந்து மதத்தையும் அதன் ஜாதி அமைப்பையும் கேள்விக்குள்ளாக்கக் கூடாது என்பதே ஆர் எஸ் எஸ் நிலை. பட்டியல் சாதியினர், பழங்குடி மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் ஆகிய மக்கள் திரள்கள் மீது கட்டவிழ்க்கப்படும் சமூக ஒடுக்குமுறையை ஆர் எஸ் எஸ் எதிர்ப்பதில்லை என்பது மட்டுமல்ல; சனாதனம் என்ற பெயரில் சாதி ஒடுக்கு முறைகளையும் படிநிலைகளையும் அது நியாயப்படுத்துகிறது. தேசீய கல்விக்கொள்கையில் கூட இவற்றை மறைமுகமாக கொண்டு வந்துள்ளது. தனியார் மயமாக்கல் என்பதும் சமூக ஒடுக்குமுறைக்கு உள்ளாகியுள்ள மக்களுக்கு நீதிமறுக்கும் செயலாகும். ஆர் எஸ் எஸ் தனது கனவு இலக்கான இந்து ராஷ்டிரத்தை நோக்கி நாட்டை இழுக்க முயன்றுவருகிறது.

கலாச்சாரம் என்ற பெயரில்

பாசிச கட்சி கலாச்சார தளத்தை குறிவைத்து பயன்படுத்தும். அது வரையறுக்கும் தேசீய கலாச்சாரம் என்பதற்கு மாற்றாக உள்ள எதையும் ஏற்காது. “ஐரோப்பாவில் உள்ள 16 தீவிர வலதுசாரி கட்சிகள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை  பொருளாதார கொள்கை பற்றி எதுவுமே குறிப்பிடாமல் ஐரோப்பாவில் தேசீய கலாச்சாரம் எப்படி பாதுகாக்கப்படவேண்டும் என்பதற்கு அழுத்தம் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த அறிக்கை மத சிறுபான்மையினரை தாக்கும் வகையில் அமைந்துள்ளது.” என்று பேராசிரியர் பிரபாத் பட்நாயக் அண்மையில் எழுதியுள்ளார்.

இந்தியாவில் கடந்த 7 ஆண்டுகளில் கலாச்சார தளத்தில் கடுமையான தாக்குதல்கள்  நிகழ்ந்துள்ளன. மதம், மொழி, உணவு, உடை என பலவற்றிலும் வேறுபாடுகளைக் கொண்டுள்ள இந்தியர்களை பாஜக அரசு ஒற்றை (இந்துத்வா) கலாச்சாரத்தை நோக்கி நகர்த்த பெரிதும் முனைந்துள்ளது. சிறுபான்மையினரின் மதவழிபாட்டுத்தலங்கள் தாக்கப்படுகின்றன. இந்தி மொழியை அம்மொழி பேசாத மக்கள் மீது பாஜக அரசு திணிக்கிறது. மாட்டிறைச்சிக்கு தடை சட்டம் மூலம் முஸ்லிம்கள், கிறித்தவர்கள் மற்றும் தலித்துகளின் உணவு பழக்கங்கள் மீது தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இதனால் உணவில் மட்டுமின்றி மாட்டுக்கறி வணிகம், மாடுகளின் சந்தை போன்றவற்றில் பொருளாதார ரீதியான பாதிப்புகளும் ஏற்படுகின்றன. லவ் ஜிஹாத் என்ற பெயரில் இருவேறு மதங்களை சேர்ந்தவர்கள்  திருமணம் செய்து கொண்டால் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. உபி மாநிலத்தில் ஒரு இந்து முஸ்லிமை திருமணம் செய்துகொள்வதற்கு தடை விதிக்கும் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

சமீபத்தில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொண்டால் அரசு நலத்திட்டங்களின் பயன்களை பெற இயலாது; தேர்தலில் போட்டியிட முடியாது என்பது போன்ற அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் சட்டத்தை உ பி அரசு கொண்டுவந்துள்ளது. முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல் தொடுப்பது என்ற உள்நோக்கமும் இச்சட்டத்தில் உள்ளது. முஸ்லிம்கள் அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்கிறார்கள் என்றும், அவர்கள் எண்ணிக்கை இந்துக்களைவிட அதிகமாகிவிடும் என்ற பொய்யான பிரச்சாரத்தை பாஜக கட்சியும் அதன் அரசுகளும் செய்துவருகின்றன.

கல்வித்துறையிலும் கலாச்சார தாக்குதல்கள் நடத்தப்படுகிறது.  வரலாறு திரித்து எழுதப்படுகிறது. கடந்த காலத்தில் நடந்த சம்பவங்களை திரித்து எழுதி பாட திட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன. பிஞ்சு நெஞ்சங்களில் வகுப்புவாத நஞ்சை புகுத்தும் பணியை ஆர் எஸ் எஸ் பாஜக அரசுகள் முனைப்புடன் செய்து வருகின்றன. நோக்கம் முற்போக்கு வர்க்க அமைப்புகளை அழிப்பதே!

தொழிலாளர் நலன் காக்கும் வர்க்க அமைப்புகளுக்கெதிராக பாசிசம் போட்டி அமைப்புகளை அரசு ஆதரவுடன் உருவாக்கி செயல்படும். தொழிலாளர்கள், விவசாயிகள், இளைஞர்கள், மாணவர்கள் என்று பல பகுதி மக்களுக்கான அமைப்புகளை பாசிஸ்டுகள் உருவாக்குவதன் நோக்கம், இவை மூலம் தனக்கென்று ஒரு படையை திரட்டிக்கொண்டு தனது பாசிச பிரச்சாரத்தை விரிவாக மக்களிடம் கொண்டுசெல்ல அவற்றை பயன்படுத்தவே. இதனை டொக்ளியாட்டி வலுவாக எடுத்துரைக்கிறார். நமது நாட்டில் இத்தகைய முனவுகளில் ஆர் எஸ் எஸ் பாஜக ஈடுபட்டிருப்பது கண்கூடு.

பாசிசமும் “தேசீயவாதமும்”

பாசிசம் தேசீயவாதம் என்பதை ஒரு கருவியாக பயன்படுத்தி தனது நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ளும் தன்மை கொண்டது என்கிறார் டோக்ளியாட்டி. பாசிச கட்சி தேசப்பற்று என்ற சொல்லை பயன்படுத்தி மக்களை தனக்குப்பின் திரட்ட முயலும். இந்தியாவில் பாஜக பொருளாதார பிரச்சினைகள் தீவிரம் அடையும் பொழுதெல்லாம் தேசப்பற்று, தேசப்பாதுகாப்பு ஆகியவற்றை முன் நிறுத்தி மக்கள் கவனத்தை திசை திருப்புகிறது. பாஜக அரசின் கொள்கைகள் மக்களின் நலனுக்கு புறம்பானவை;  அடிப்படை உரிமைகளைப் பறிக்கின்றவை; அரசியல் சாசனத்திற்கு எதிரானவை என்று கூறுவோரை தேச விரோதிகள் என்று முத்திரை குத்தி தேசத் துரோக வழக்கில் கைது செய்து சிறையில் தள்ளுகிறது.

பாசிசம் தனது அடிப்படை இலக்கை கைவிடாமல் தந்திரங்களையும் அணுகுமுறைகளையும் சூழலுக்கு ஏற்றவாறு மாற்றிக்கொண்டே இருக்கும் என்பது இத்தாலிய அனுபவம். சொல்லாடல்களையும் சூத்திரங்களையும் அது பச்சோந்தி போல் மாற்றிக்கொள்ளும். பொய்களை கட்டவிழ்த்துக்கொண்டே இருக்கும். இதுவே கடந்த ஏழு ஆண்டுகால இந்திய அனுபவம்.

ஜனநாயக அமைப்புகளை பயன்படுத்தியும் தாக்கியும் பாசிசம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முனையும். 1930களின் துவக்கத்தில் ஜெர்மனி நாட்டில் அன்றைய ஆளும் கட்சிகளுக்கு எதிராக மக்களை ஈர்த்து பாசிச கட்சி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. தேசப்பற்று, நாட்டின் சுய மரியாதை, மாபெரும் ஜெர்மானிய தேசம் போன்ற முழக்கங்களை முன்வைத்து மக்கள் ஆதரவை திரட்டியது. ஆட்சியை கைப்பற்றும் பயணத்தில் எதிர்க்கட்சிகள் மீது வன்முறைகளையும் பயன்படுத்தியது. தொழிற்சங்கங்களையும் கம்யூனிஸ்டுகளையும் குறிவைத்து தாக்கி, அவர்களுக்கெதிராக பெரும் பொய்பிரச்சாரம் செய்தும் வன்முறையில் ஈடுபட்டும் அவர்களை முற்றிலுமாக அழிக்க முயன்றது. அதில் ஓரளவு வெற்றி பெற்றபின் முதலாளித்துவ கட்சிகளை அழித்தது.

கடந்த 7 ஆண்டுகளாக மோடி அரசு இந்தியாவில் வளர்ச்சி, தேசப்பற்று, தேசீயம், வல்லரசு போன்ற முழக்கங்களை முன்வைத்து தனது ஆதரவு தளத்தை விரிவுபடுத்திக்கொண்டுள்ளது. இதனுடன் அரசு இயந்திரத்தையும் பெருமுதலாளிகளின் ஆதரவையும் பயன்படுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட முதலாளித்துவ கட்சிகளை பெரிதும் பலவீனப்படுத்தியுள்ளது. இடதுசாரிகளை குறிவைத்து தாக்கிவருகிறது. பாசிசம் ஏகபோக மூலதனத்தின் விசுவாசமான பிரதிநிதி என்பதை மோடி ஆட்சி எடுத்துக்காட்டுகிறது. கார்ப்பரேட் ஹிந்துத்வா என்பது அதன் சிறப்பு முத்திரை.

பாசிசத்தை வீழ்த்துவது பற்றி டோக்ளியாட்டி

பாசிச சக்திகள் மேலோங்கி இருக்கும் பொழுது அவற்றை வெல்ல முடியாது என்ற பிம்பம் உருவாகும். ஆனால் இத்தாலிய அனுபவமும் பிற நாடுகளின் அனுபவமும் பாசிசத்தை வீழ்த்த முடியும் என்று நமக்கு கற்றுத்தருகின்றன என்பதை டோக்ளியாட்டி வலியுறுத்துகிறார். “பாசிசத்தால் முதலாளித்துவ அமைப்பின் முரண்பாடுகளில் இருந்து மீள முடியாது. அவை தொடரும். இந்த முரண்கள் பாசிசத்திற்கு எதிரான போராட்டங்களுக்கு வழிவகுக்கும். திட்டமிட்ட, ஒருங்கிணைந்த மக்கள் போராட்டங்கள் மூலமே பாசிசத்தை வெல்ல முடியும்” என்று டோக்ளியாட்டி தெளிவுபடுத்துகிறார். அவர்: “பாசிச கட்சியில் இருப்பவர்கள், அதன் ஆதரவாளர்கள், தொழிலாளிவர்க்க புரட்சியை நோக்கி வந்து விடுவார்கள் என்று நம்பிவிடக்கூடாது.” என்று எச்சரிக்கவும் செய்கிறார். ஒவ்வொரு பிரச்சினையிலும் கொள்கை சார்ந்த நிலைப்பாடு எடுத்து, பிரச்சனைகளை துல்லியமாக கணித்து அதற்கு ஏற்ப உரிய தீர்வுகளை நோக்கி நமது தந்திரங்கள் அமைய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார். சந்தர்ப்ப வாதங்களுக்குப் பலியாகிவிடக்கூடாது என்கிறார்.

பாசிசம் தனது உள்முரண்பாடுகளால் தானே வீழ்ந்துவிடாது. ஆனால் இந்த உள்முரண்பாடுகளை தக்கவகையில் பயன்படுத்தி பாசிசத்தை வீழ்த்த முடியும் என்றும் டோக்ளியாட்டி கூறுகிறார்.

சம கால இந்தியாவில்

டோக்ளியாட்டி முன்வைத்துள்ள பல கருத்துக்களும் அவர் அளித்துள்ள வெளிச்சமும் நமக்கு உதவும். எனினும், இன்று இந்தியாவில் பாசிசத்தன்மை கொண்ட ஒன்றிய அரசும் அதன்பின் உள்ள ஆர் எஸ் எஸ் என்ற பாசிச அமைப்பும், இந்தியாவை பாசிசத்தின் பிடியில் கொண்டு செல்ல நினைத்தாலும், அவர்களுக்கு எதிரான அரசியல் சக்திகளும் களத்தில் உள்ளன என்பது பாசிச இத்தாலிக்கும் நமக்கும் உள்ள ஒரு முக்கிய வேறுபாடு. அரசியல் சாசனத்தையும் அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள பல்வேறு நிறுவனங்களையும் பாஜக ஆர் எஸ் எஸ் பலவீனப்படுத்தியுள்ள போதிலும், இந்தியாவின் ஆட்சி அமைப்பு பாசிஸ்ட் ஆக மாறிவிட்டது என்ற வரையறையை நாம் ஏற்கவில்லை. ஆட்சி அமைப்பு யதேச்சாதிகாரத்தன்மை நிறைந்துள்ளதாக இருக்கிறது; அத்திசைவழியில் பயணிக்கிறது என்பதை நாம் குறிப்பிடுகிறோம். ”இந்தியப் பெருமுதலாளிகள் தலைமையில் இந்திய அரசு செயல்படுகிறது. இதில் முதலாளி வர்க்கமும் நிலப்பிரபுக்களும் இடம்பெறுகிறார்கள். ஆளும் வர்க்க கூட்டணிக்கு தலைமை தாங்கும் பெருமுதலாளிகள் இன்று மேலும் மேலும் பன்னாட்டு நிதி மூலதனத்துடன் இணைந்துவருகிறார்கள்” என்ற கட்சி திட்டத்தின் வெளிச்சத்தில் நின்று, சமகால இந்திய அரசியல் களத்தைப்  பரிசீலிக்கும் பொழுது  ஆர் எஸ் எஸ் பாஜகவின் கார்ப்பரேட் ஹிந்துத்வா கொள்கைகளையும் எதேச்சாதிகார முனைவுகளையும் வலுவான வர்க்க வகுஜன போராட்டங்கள் மூலமே பின்னுக்கு தள்ள முடியும் என்பதை நாம் வலியுறுத்துகிறோம். டோக்ளியாட்டி தந்துள்ள வெளிச்சத்தில், கட்சி திட்ட நிலைபாட்டில் நின்று, ஆர் எஸ் எஸ் -பாஜக பாசிச முனைவுகளை நாம் வர்க்க வெகுஜன திரட்டல்கள் மூலமும் போராட்டங்கள் மூலமும் தக்க அரசியல் நடைமுறை தந்திரங்கள் மூலமும் முறியடிப்போம்.

மார்க்சிய பார்வையில் நகரமயமாதல் …

திக்கெந்தர் சிங் பன்வர்

நகரமயமாக்கல் நடவடிக்கை குறித்து மார்க்சீய பார்வையில் எழுதுவது என்பது மிகவும் சுவாரசியமான ஒன்றாகும். இந்தியாவிலும், உலகம் முழுவதிலும் ஏற்பட்டு வரும் நகரமயமாக்கல் குறித்தும், அதன் பரிமாணங்கள் குறித்தும், இதில் தலையிடுவதற்கான நமது பணிகளைப் பற்றித் தெளிவுபடுத்தும் மார்க்சீய அடிப்படைக் கொள்கைகள் குறித்தும் புரிந்துகொள்வது முக்கியமாகும்.

முதலாளித்துவ உற்பத்தி நடைமுறை உபரியை உருவாக்குகிறது.  இவ்வாறு உருவாக்கப்படும் உபரி பின்னர் கைப்பற்றப்பட்டு, அந்நடைமுறையில் மேலும் ஒருங்கிணைக்கப்படுகிறது. எந்தவொரு மார்க்சீயவாதியைப் பொறுத்தவரையிலும், இவ்வாறு கைப்பற்றப்பட்ட உபரி மீண்டும் தொழிலாளிக்கே பகிர்ந்தளிக்கப்படுவதை உத்திரவாதம் செய்திடப் பணியாற்றுவது முக்கியமாகும்.  அதேநேரத்தில் முதலாளி களைப் பொறுத்தவரையிலும், முதலாளித்துவ வர்க்கத்தைப் பொறுத்தவரையிலும், மேலும் அதிக அளவில் உபரி உற்பத்தி செய்யப்படுவதையும், அதை பெருமளவில் தனதாக்கிக் கொள்வதையும் உறுதிப்படுத்திக் கொள்வதே அதன் நோக்கமாகும்.  200 ஆண்டுகளுக்கும் மேலான முதலாளித்துவ வளர்ச்சியில், இந்த அடிப்படைக் கோட்பாடு எவ்வாறு மேலும் ஒருங்கிணைக்கப்படுகிறது என்பதையும், பெருமுதலாளிகளின் வளர்ச்சி எவ்வாறு பெருகியுள்ளது என்பதையும் நாம் கண்டு வருகிறோம். உலகிலுள்ள மக்கள்தொகையில் 60 சதவீதத்தினரான 4.6 பில்லியன் மக்களின் சொத்துக்களின் மதிப்பைவிட கூடுதலான சொத்துமதிப்பு கொண்டவர்களாக கிட்டத்தட்ட 2000 பில்லியனர்கள் (ஆயிரம் கோடிக்கும் மேலான மதிப்பில் சொத்துடையவர்கள்) உள்ளனர் என்பதிலிருந்து இதை உணரமுடிகிறது.

குவியலுக்கான மையமாக மாறும் நகரம்

நகரம் என்பது உபரியை உருவாக்கி, மறுபங்கீடு செய்யும் ஒரு தொழிற்சாலையைப் போன்றதல்ல என்றாலும், மேற்கூறப்பட்ட வடிவத்திலான சொத்துக் குவியலுக்கு நகரம் துணைபோகிறதா? என்ற கேள்வி எழுகிறது.

இத்தாலிய நகரவாதிகளைப் பொறுத்தவரை “முதலாளித்துவ உற்பத்தி அதிக அளவில் ஆழமாக ஊடுருவி, விரிவாக்கத்தை விறுவிறுப்பாகத் துவங்குகிறபோது ஒட்டுமொத்த சமூக உறவுகள், உற்பத்தியோடு முழுமையாக ஒத்திசைந்த சமூகமாகவும், உற்பத்தியானது சமூகத்தின் தனித்துவமாகவும் தோற்றமளிக்கிறது.”  முதலாளித்துவ உற்பத்தியின் சமூக உறவுகளில் உற்பத்தியை பொதுமைப்படுத்துவதே சமூகத்தின் உன்னத நிலையாக தெரியப்படுத்துவதில் ஆச்சரியம் ஏதுமில்லை.  மேலும் இது ஒன்றிணைந்து சமூக உறவுகளின் வலைப்பின்னலுக்கு – ஒரு பொதுவான சமூக உறவுக்கு – வழிவகுக்கிறது.  ஒட்டுமொத்த சமூகமும் உற்பத்தியின் வெளிப்பாடாக மாற்றப்படுகிறது.  அதாவது, ஒட்டுமொத்த சமூகமும் தொழிற்சாலையின் செயல்பாடாக உள்ளது.  மேலும், தொழிற்சாலை என்பது அதன் பிரத்தியேக ஆதிக்கத்தை ஒட்டுமொத்த சமூகத்திற்கும் விரிவுபடுத்துகிறது.  

எளிமையாகச் சொல்வதானால், முதலாளித்துவ உற்பத்தியின் சமூகஉறவுகள், சமூகத்தை உற்பத்திக்கான ஒரு வழிமுறையாகவும், உற்பத்தியை அதன் இறுதிநிலையாகவும் பார்க்கிறது.  அதே சமூக சார்பு தனிப்பட்ட முறையிலான பங்கீட்டிற்கான வழிமுறையாகிறது.  எனவே, சமூக உறவானது ஒருபோதும் உற்பத்தி உறவுகளிலிருந்து பிரிக்கப்படுவதில்லை என்பதோடு, தொழிற்சாலையின் சமூக உறவுகளோடே உற்பத்தி உறவுகள் அடையாளம் காணப்படுகின்றன.  மேலும், தொழிற்சாலையுடனான உற்பத்திஉறவுகள் ஒவ்வொரு முறையும் பெருமளவிலான, நேரடியான அரசியல் உள்ளடக்கத்தைப் பெறுகின்றன. 

உழைக்கும் வர்க்கமானது அரசு என்பதை சமூகக் கண்ணோட்டத்திலிருந்தும், சமூகத்தை தொழிற்சாலையின் கண்ணோட்டத்திலிருந்தும், தொழிற்சாலையை தொழிலாளியின் கண்ணோட்டத்திலிருந்தும் புரிந்துகொள்வது அவசியமாகும்.  உண்மையில் சொல்லப்போனால், நகரம் என்பது உபரியை உற்பத்தி செய்வதற்கும், பெருமளவிலான பங்கீட்டிற்குமான மற்றொரு தளம் எனவும் புரிந்துகொள்ளப்பட வேண்டும்.  முதலாளித்துவ வளர்ச்சியின் சட்டங்கள் அதில் மர்மமானவையாக உள்ளன.  “நகரம் குறித்து திட்டமிடுபவர்கள் அதனை காகிதத்திலான வெறும் திட்டமாகத் தீட்டுவதில்லை.  அவர்கள் வங்கிகளுடன், முதலாளிகளுடன் பேச்சுவார்த்தையை நடத்தி, தங்களது நலன்களை பாதுகாத்துக் கொள்கிறார்கள்” என தி கேப்பிடல் சிட்டி என்ற தனது புத்தகத்தில் சாமுவேல் ஸ்டெயின் குறிப்பிடுகிறார்.

மிகச்சிறந்த மார்க்சீயவாதியான லெஃபெப்வ்ரே நகர்ப்புறம் என்பதற்கு ஒரு புதிய அர்த்தத்தை  அளித்தார்.  தொழில்துறையில் கவனம் செலுத்துவதைப் போலவே மார்க்சிஸ்டுகள் நகர்ப்புறத்திலும், தொழிற்சாலைகளைப் போலவே தெருக்களிலும் கவனம் செலுத்தவேண்டுமென அவர் கூறினார். நகரமயமாக்கல் என்பது முதலாளித்துவ உற்பத்திமுறை என்பதோடு, சமூகக் கட்டுப்பாட்டிற்கான ஒரு வழிமுறையும் ஆகும்.  அரசு சார்ந்த செயல்பாடுகள், வேலைப்பங்கீடு, சந்தையின் தொடர்ச்சியான செயல்பாடு, தொழில்துறை உற்பத்தி மற்றும் சமூகப் போராட்டங்கள் ஆகியவற்றை நகர்ப்புறப்  பகுதிகள் உருவாக்குகின்றன.

இறுதியாக, நகரமயமாக்கல் என்பது வர்க்கங்களின் பிரிவை இடமாற்றம் செய்வதற்கான ஒரு செயல்முறையைக் குறிக்கிறது.  மேலும், இது ஃபிரெட்ரிக் எங்கெல்சால் வீட்டுவசதி குறித்து என்ற புத்தகத்தில் ஒளிவுமறைவின்றி வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இடம் சார்ந்த வடிவங்கள் சமூக செயல்முறைகளை உள்ளடக்குகின்றன என்பதோடு, அனைத்து செயல்முறைகளும் இயல்பாகவே இடம் சார்ந்தவையாகவே இருக்கின்றன.  

எனவே, நகரம் என்பது மூலதனத் திரட்டலுக்கும், உபரியை பங்கீடு செய்வதற்குமான மிக முக்கியமான களங்களில் ஒன்றாக ஆகிறது.

ஆண்டாண்டு காலமாக, குறிப்பாக 1980களின் பிற்பகுதியிலிருந்து, மிகப்பெரிய அளவிலான உபரியை உருவாக்குவது என்பது நகரங்களின் முக்கியமான அம்சங்களில் ஒன்றாக உள்ளது. மூலதனம் பறிக்கப்பட்டுள்ளதோடு, உபரியை உற்பத்தி செய்யும் வழக்கமான முறை கடந்த 40 ஆண்டுகளில் உருமாற்றம் பெற்றுள்ளது.  முதலாளித்துவ பொருளாதாரத்தில் உபரியை உருவாக்குவதில் எந்தத் தவறும் இல்லை.  இறுதியில், அதுவே (உபரியை உருவாக்குவதும், பயன்படுத்துவதும்) அதன் உந்துசக்தியாகத் திகழ்கிறது.

ஆனால் சமீபகாலமாக நடைபெற்று வருபவை பற்றி முதலாளித்துவ பொருளாதாரத்தில் இதற்குமுன் கேள்விப்படாத ஒன்றாகும்.  முதலாளித்துவ பொருளாதாரத்தில் உற்பத்தி நடைமுறையில் சொத்துக்களின் உபரி உருவாக்கப்படுகிறது. எனவே, இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு பொருளுக்கும் பரிமாற்ற மதிப்பு உள்ளது.  சமூகத்திற்கும், தனிநபர்களுக்கும் ‘பயன்மதிப்பு’ கொண்டவையாகக் கருதப்படும் சில பொருட்களை பண்டமாக்க முடியவில்லை.  உதாரணமாக, தண்ணீர், கல்வி, சுகாதாரம் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.  தண்ணீர் என்பது உரிமையா அல்லது தேவையா?  வாஷிங்டன் ஒப்பந்தத்தின்படி, தண்ணீர் என்பது ‘தேவை’ ஆகும்.  எனவே, அதனை மக்களுக்குக் கிடைக்கச் செய்வது ‘அரசு’ மற்றும் அதன் கருவிகளின் கடமையல்ல.  சந்தையில் உள்ள பகாசுர கார்ப்பரேட்டுகள் உள்ளிட்ட பலரால் இந்தத் தவையை பூர்த்தி செய்ய முடியும்.

கல்வி, சுகாதாரம், தகவல்தொழில்நுட்பம் போன்ற அடிப்படை சேவைகள் பண்டமாக்கப்படுவதை  நாம் கண்டு வருகிறோம்.   இந்த நடைமுறையில் உபரிமதிப்பு பறிமுதல் செய்யப்படுவதும், தனதாக்கிக் கொள்ளப்படுவதும் பெருமளவில் நடைபெறுகிறது.  (2019ல் சோஷியலிஸ்ட் ரெஜிஸ்டரின் பக்கம் 65ல் உர்சுலா ஹ்யூஸ்).  இத்தகைய குவிப்பு நடைமுறை விரைவுபடுத்தப்படுகையில், உண்மையில் புதிய உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றை உருவாக்குவதில் மந்தநிலை உருவாகிறது.  இதையே வேறு வார்த்தைகளில் சொல்வதானால், மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்களின் லாபம் உற்பத்தியின் காரணமாக அதிகரிக்கவில்லை.  மாறாக, ஏற்கனவே உள்ள உற்பத்தித் திறனை முழுமையாக உறிஞ்சும் வகையில் பயன்படுத்துவதாலேயே அவர்களது லாபம் தொடர்ந்து நீடிக்கிறது.

2006ம் ஆண்டில் செயல்பட்டுவந்த மிகப்பெரிய 100 பன்னாட்டு நிறுவனங்களில், 20% சேவைத்துறையில் இருந்தன.  1997ம் ஆண்டில் இது வெறும் 7% மட்டுமே இருந்தது.  நவீன தாராளவாதத்திற்குப் பிந்தைய யுகத்தில் முதலாளித்துவத்தின் தன்மை மாறியுள்ளது.  இதில் உற்பத்தியின் காரணமாக லாபம் அதிகரிக்கவில்லை.  மாறாக, வீட்டுக்கடனை தொகுப்பது, சேவைகளை சரக்காக்குவது போன்ற நிதி சம்பந்தமான மூலதனத்தின் இதர சூறையாடல்களால் இது ஏற்பட்டது.

நிக்தியோடர், ஜேமீபெக் மற்றும் நீல் ப்ரென்னர் சுட்டிக்காட்டியுள்ளதைப் போன்று, “தொழில்துறை மீதான அரசின் கட்டுப்பாட்டை நீக்குதல், அணிதிரட்டப்பட்ட தொழிலாளர்கள் மீதான தாக்குதல்கள், கார்ப்பரேட்டுகள் மீதான வரிகளை குறைப்பது, மக்களுக்கான சேவைகளையும், சொத்துக்களையும் தனியார்மயமாக்குவது, சமூக உதவித் திட்டங்களை நீக்குவது, சர்வதேச மூலதனத்தின் செயல்பாட்டை மேம்படுத்துவது மற்றும் பகுதிகளுக்கு இடையேயான போட்டிகளைத் தீவிரப்படுத்துவது” ஆகியவற்றையே நவீன தாராளவாதம் குறிப்பதாக அமைகிறது.  (http://www.blackwellreference.com/public/tocnode?id= g9781405189811_ chunk_ g97814051 898112).

நகர்ப்புற இந்தியா

இந்தியாவில் நகரமயமாக்கல் என்பது ஹரப்பா நாகரீகத்தைப் போன்று பழமையானது.  அதன்பின்னர், வளர்ச்சிப் போக்கின் பிந்தைய கட்டத்தில் உருவாக்கப்பட்ட சில புராதன நகரங்களும், சில பெரிய முகலாய நகரங்களும், மாநகர்களும் உள்ளன.  காலனியாதிக்கத்திற்குப் பிந்தைய காலம் குறித்து, அதுவும் குறிப்பாக 1990கள் துவங்கி நவீன தாராளவாத கொள்கைகள் செயல்படுத்தப்பட்ட காலம் குறித்தே நாம் அதிகம் கவனம் கொள்கிறோம்.  விடுதலைக்குப் பிந்தையரஇந்தியாவில், திறன்களை நினைவூட்டுபவையாக மட்டுமின்றி, பெருமளவில் அனைத்தையும் உள்ளடக்கிய வடிவங்களை கொண்ட நகரங்களை நிர்மாணிக்க சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.  புதுமையான கண்ணோட்டத்தோடு நிர்மாணிக்கப்பட்ட சண்டிகர் மற்றும் இதர நகரங்கள் போன்றவை பின்னால் நாம் கைவிட்டு விட்ட மற்றொரு மாதிரியாகும்.

2011ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் மக்கள்தொகையில் 32 சதவீதத்தினர் நகர்ப்புற பகுதிகளில் வாழ்ந்தனர்.  2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் நகர்ப்புற மக்கள்தொகை அதிகரிப்பு விகிதம், கிராமப்புற மக்கள்தொகையை விட கூடுதலாக பதிவு செய்யப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட 40 சதவீதத்தினர் நகர்ப்புறபகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர்.  இருப்பினும், 2021ம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பு துல்லியமான எண்ணிக்கையை குறிக்கும்.  நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 66 சதவீதம் நகர்ப்புறங்களில் இருந்து வருகின்றன.  அரசின் வருமானத்தில் கிட்டத்தட்ட 90 சதவீதம் நகர்ப்புற இந்தியாவிலிருந்து வருகிறது.  பெருநகரங்களில், 40 சதவீதத்திற்கும் கூடுதலான மக்கள் குடிசைப் பகுதிகளில் வசித்து வருகின்றனர்.  நகர்ப்புற இந்தியாவில் கிட்டத்தட்ட 45 சதவீதத்தினர் ஒற்றை அறையில் வசித்து வருகின்றனர்.  75 சதவீதத்தினர் இரண்டு அறைகளைக் கொண்ட வீடுகளில் வசித்து வருகின்றனர். 

அணிதிரட்டப்பட்ட உழைக்கும் வர்க்க இயக்கங்களின் வீழ்ச்சி காரணமாக உழைக்கும் மக்களின் பேரம்பேசும் திறன் குறைந்துவருவதால், நகரங்கள் தொடர்ந்து வாழத்தகுந்த இடங்களாக நீடிக்கமுடியாமல் போயுள்ளன.  குடிநீர், சுகாதாரம், கல்வி போன்றவை சரக்காக மாற்றப்பட்டுள்ளதால் அவற்றிற்கான பெரும்செலவை மக்கள்ஏற்க வேண்டியுள்ளது.  மேலும், ஏழைகளுக்கான, கீழ்த்தட்டு நடுத்தர வர்க்கங்களுக்கான வீட்டுவசதி என்பது கூட எட்டாக்கனியாகி உள்ளது.  இந்நிலையில் கிட்டத்தட்ட  50 மில்லியன் பேர் தங்குமிடம் எதுவுமின்றி இருப்பதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை.

விலக்கின் மற்றொரு வடிவம்

இன்றைய நகர திட்டமிடல் மற்றும் வளர்ச்சியானது, ஏழைமக்கள் வசித்துவந்த நகர்ப்புற பகுதிகளில் வீட்டுவசதிகளை மேம்படுத்தி புதிய வர்த்தகங்களை ஈர்த்து, அங்கு அதுவரை வசித்துவந்த ஏழைமக்களை அங்கிருந்து வெளியேற்றி, வசதிபடைத்தவர்களை அங்கே குடியேறச் செய்கிறது.  மேலும், சாதாரண மக்களுக்கு, தொழிலாளர்களுக்கு வீட்டுவசதியை எட்டாக்கனியாக்குகிறது.  குறிப்பாக முறைசாரா துறையை சார்ந்தவர்களின் இருப்பிடம் வீடு என்ற தகுதியே இல்லாத ஒன்றாக உள்ளது.  பிரதானமாக இதன் காரணமாகவே குடிசைப்பகுதிகளில் வசிப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கிறது.

நகரங்களுக்கு இரண்டு வாய்ப்புகள் அளிக்கப்படுகின்றன – ஏழைகளின் வசிப்பிடங்களிலிருந்து அவர்களை வெளியேற்றி வசதிபடைத்தவர்களை அங்கு குடியேறச் செய்வது (gentrification) அல்லது முதலீட்டைத் திரும்பப் பெறுவது அல்லது குறைப்பது என்பதே அந்த இரண்டு வாய்ப்புகளாகும்.  நகர்ப்புற பகுதிகளில் மூலதனத்தை மறுமுதலீடு செய்து அங்கு ஏற்கனவே வசித்துவரும் ஏழைகளையும், அவர்களது கலாச்சார தயாரிப்புகளையும் அங்கிருந்து இடம்பெயரச் செய்து, அவ்விடங்களை வசதிபடைத்தோரையும், அவர்களுக்குப் பிடித்தமான அழகியல் மற்றும் வசதிகளைக் கொண்டு நிரப்புவதே ஜென்ட்ரிஃபிகேஷன் என்பதாகும்.

இந்திய நகரங்களின் கதையானது அமெரிக்காவின்  வீட்டு வசதி மேம்பாடு மற்றும் செயல்முறைகளிலிருந்து சற்றே மாறுபடுகிறது.  இருந்தபோதும், இந்தியாவில், உடைமைப்பறிப்பின் வாயிலாகவே மூலதனத் திரட்டல் நடைபெறுகிறது.  குடிசைப்பகுதிகளிலிருந்து ஏழைமக்களை வெளியேற்றி, பொதுவான தேவைகளுக்காக மாற்றியமைக்க வேண்டிய அவ்விடங்களை ரியல்எஸ்டேட் மேம்பாட்டிற்கானவையாக மாற்றுவது முக்கியமான பிரச்சனையாகும்.

இத்தகையதொரு சூழலில், வலுவான உறுதியான நடவடிக்கைகள் எதுவுமின்றி, நகரத்தின் நிலைத்தன்மை ஏட்டளவில் மட்டுமே உள்ளது.  ஒருபோதும் யதார்த்தத்தில்  அது நடப்பதில்லை.  நகரங்களை வாழத் தகுதியான இடங்களாக ஆக்கிட உபரியை ஜனநாயகமாக்குவது மிக அவசியமாகும்.  உழைப்பாளி மக்களின் கூட்டு வலிமையின் மூலமாகவோ அல்லது நகர, மாகாண மற்றும் தேசிய அளவிலான கொள்கைரீதியிலான தலையீடுகள் மூலமாகவோ உபரியை ஜனநாயகமாக்குவது நடைபெறலாம்.

உறுதியான நடவடிக்கையையும், உபரியை ஜனநாயகமாக்குவதையும் எட்டுவதற்கான ஒரு கருவியாக நகரக் கவுன்சில் இருக்கக்கூடும்.  ஆனால், கடந்த ஆறு ஆண்டுகளாக ஏற்பட்டுவரும் முன்னேற்றங்கள், நகரத்தை சுதந்திரமாகவும், ஜனநாயக பூர்வமாகவும் நிர்வகிக்கக்கூடிய திறன் சூறையாடப்பட்டுள்ளது.  அதிகபட்சமாக, மாகாண அரசுகளின் இணைப்புகளாக அவை மாறிவருகின்றன.

ஸ்மார்ட் சிட்டிதிட்டம்

‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டம் நகர வளர்ச்சியின் பரிணாம வரலாற்றில் சமூகங்கள் வென்றெடுத்த அடிப்படை உரிமைகள் மற்றும் முன்னேற்றங்களுக்கு பெரும் அச்சுறுத்தலை குறிக்கிறது.  காவல், போக்குவரத்து, எரிசக்தி போன்ற நகரம் முழுவதற்குமான பொறுப்புகளை தானாக இயங்குபவையாக ஆக்கிடுவதற்கு தரவுப்புள்ளிகளை பயன்படுத்துகிற நகர்ப்புற வளர்ச்சித் திட்டமே ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டமாகும்.  முக்கியமான முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இது கைமாற்றுவதோடு, பாரம்பரியமாக நகராட்சி அதிகாரிகளால் நிர்வகிக்கப்படும் பல நகர்ப்புற சேவைகளை இத்திட்டங்கள் தனியார் மயமாக்குகின்றன.  தொழில்நுட்பம் நிரம்பிய ஸ்மார்ட் சிட்டியானது தனிநபர் சுதந்திரங்களையும், உரிமைகளையும் வெட்டிச் சுருக்குவதோடு, ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய “1984” எனும் நாவலில் விவரிக்கப்பட்டதைப் போன்ற – மக்களது வாழ்வின் ஒவ்வொரு பகுதியையும் அரசு கட்டுப்படுத்த முயல்கிற அரசியல் நடைமுறையைக் கொண்ட எதிர்காலத்திற்கு இட்டுச் செல்கிறது. 

ஸ்மார்ட் நகரங்கள் என்பவை வெறுமனே தகவல்களையும், தகவல்தொடர்பு தொழில்நுட்ப குவியல்களும், நகரத்தால் மட்டுமே செயல்படுத்தப்படும் கொள்கைகளும் அல்ல. ஸ்மார்ட் சிட்டி திட்டம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றிட, அரசு, தனியார் மற்றும் சமூக துறைகளைச் சார்ந்த நிறுவனங்கள் பங்கேற்கக்கூடிய வகையிலானதொரு சமூக அமைப்பை நகரமோ அல்லது நகராட்சியோ உருவாக்கிட வேண்டும்.  இதில் பங்கேற்பவர் ஒவ்வொருவரும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தங்களது பங்களிப்பை அளித்து, அதற்குப் பதிலாக மதிப்பைப் பெறுகின்றனர். 

இதற்குப் பல பங்கேற்பாளர்கள் உள்ளனர்.  உதாரணமாக, ஜிஇ, ஐபிஎம், க்வால்காம், மாஸ்டர்கார்ட், ஆல்ஸ்ட்ராம், வெரிசான், சிஸ்கோ, எனெல், மைக்ரோசாப்ட் மற்றும் தாம்சன் ராய்ட்டர்ஸ் ஆகிய நிறுவனங்களை தனது பல்வேறு பிரிவுகளிலான ஸ்மார்ட் சிட்டி தொழில்நுட்பம் மற்றும் கட்டமைப்பு சேவைகளை அளிப்பவர்களாக இந்திய ஸ்மார்ட் சிட்டி கவுன்சில் பட்டியலிடுகிறது. (http://india.smartcitiescouncil.com/member-levels/lead-partners).

ஸ்மார்ட் சிட்டி தொழில்நுட்ப சேவை அளிப்பவர்களாக உள்ள மிகப்பெரிய மற்றும் மிகமுக்கியமான நிறுவனங்கள் பலவும், நிதி நிர்வாகத்தில் ஈடுபடும் பணியை எடுத்துக் கொண்டுள்ளன; அல்லது இத்திட்டத்தின் முன்முயற்சிகளுக்கு நிதியளிப்பவர்களோடு இணைந்து செயல்படுகின்றன.   இயல்பாகவே இது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தைச் செயல்படுத்துதல், கொள்கைகள் மற்றும் தரவு ஆகியவற்றின் மீதான மேற்கூறப்பட்ட பங்கேற்பாளர்கள் ஒவ்வொருவரின் செல்வாக்கையும், கட்டுப்பாட்டையும் பெருமளவில் அதிகரிக்கச் செய்கிறது(http://www.slideshare.net/FrostandSullivan/smart-cities-from-concept-to-reality). 

இந்தியாவில், ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கு அரசு ஒதுக்கீடு செய்யும் நிதியில் பெரும்பாலான தொகை உண்மையில் இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் 3 சதவீத அளவில் உள்ள தொழில்துறை (ப்ரொஃபெஷனல்) மற்றும் மத்தியதர வர்க்கத்தைச் சார்ந்தவர்களுக்கான ஸ்மார்ட் என்க்ளேவ்களை(பெரும் குடியிருப்பு வளாகங்கள்) உருவாக்கவும், நகரத்தின் இதர பகுதிகளிலிருந்தும், அதன் வறுமையிலிருந்தும், அசௌகரியங்களிலிருந்தும் பிரிக்கவே செல்கிறது.  திறன்மிக்க மின் விநியோகக் கட்டமைப்பு, சூரிய எரிசக்தி திட்டங்கள், திறன்மிகுந்த அளவீட்டுமுறை, மழைநீர் சேகரிப்பு திட்டங்கள், திடக்கழிவு மேலாண்மை, மின்ஆளுமை, நிறுவப்பட்ட சாலைஇணைப்புகள், நடைபாதைகள், மிதிவண்டிக்கான தனி வழித்தடங்கள், திறன்மிக்க வாகன நிறுத்துமிடங்கள் போன்றவற்றை உள்ளடக்கிய சொர்க்கபுரியாக இந்த என்க்ளேவ்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான சவால்கள்

இதற்குமுன்னெப்போதும் இருந்ததைவிட இன்றைக்கு சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான கவலைகள் மிகவும் அதிகரித்து வருகின்றன.  முதலாளித்துவ பாணியிலான வளர்ச்சியானது, தொழிலாளர்களை புறநிலைப்படுத்தியதோடு மட்டுமின்றி இயற்கையையும் கூட பண்டமாக்கியுள்ளது. இதனால், பூமிப்பந்தில் உயிரினம் வாழ்வதற்கே ஆபத்து ஏற்பட்டுள்ளது.  உலகளாவிய வெப்பநிலை உயர்வுக்கும், பண்டமாக்கல் காரணமாக ஏற்பட்டுள்ள பூமியிலுள்ள பல்லுயிர்களின் மீதான அச்சுறுத்தலுக்கும் கரியமில வாயுக்கள் உமிழ்வுகள் காரணமாகும். மனித குலத்தின் வரலாற்று பூர்வமான பரிணாம வளர்ச்சியின்போது இருந்ததைவிட கடந்த 40 ஆண்டுகளில் (சுற்றுச்சூழல் பேரழிவிற்கு அப்பால்) கரியமில வாயு உமிழ்வுகள் கிட்டத்தட்ட 50% அதிகரித்துள்ளன. 

முதலாளித்துவ உற்பத்திமுறையானது, தனியுடைமை மூலமாகவும், வளங்களை சுரண்டுவதன்மூலமும், உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மிகப்பெரிய அளவிலான இடமாற்றங்களும், பொருட்கள் மற்றும் எரிசக்தியின் இயற்கையான குவியல்களையும், ஓட்டங்களையும் சீர்குலைக்கிறது.  இரண்டாவதாக, உழைப்புச் சுரண்டலின் மூலம் இணைபிரியாத உழைப்பையும், இயற்கையையும் மாற்றி, வளங்களின் தொகுப்பை மனிதகுலத்தைச் சுரண்டிட புறநிலைப்படுத்தப்படுவதை உத்திரவாதம் செய்கிறது.  போட்டி மற்றும் பண்டமாக்கல் மூலம் மனிதரல்லாத வாழ்க்கை வடிவங்களின் நிலைகளையும், மனிதர்களுக்குத் தேவையானவற்றையும் ஆக்கிரமிக்கின்றன.  முதலாளித்துவ உற்பத்தியும் பொருட்களின் விநியோகமும் எப்போதும் அதிகரித்துவரும் கழிவுப்பொருட்களின் உற்பத்தியின் மூலம் வளர்சிதை மாற்றத்தை மறுவடிவமைப்பு செய்கின்றன என உலகை மிகச்சிறந்ததொரு இடமாக உருவாக்குவது என்ற தலைப்பிலான தனது கட்டுரையில் பார்பரா ஹாரிஸ் எழுதுகிறார்.

இத்தகைய நிலைமைகளில் கம்யூனிஸ்டுகள் எவ்வாறு செயல்படவேண்டும்?  பொருள்உலகத்துடனான உறவில், இவ்வுலகை குறைந்தபட்சம் மேலும் சீரழிக்காது, அதனை மேம்படுத்த முயற்சித்திடும் சோசலிச சமூக அமைப்பை உருவாக்கி, பராமரிக்கிற மறுசீரமைப்பை மார்க்ஸ் முன்மொழிந்தார்.  எனினும், இதுவும் ஒரு கற்பனாவாதமே.  குறிப்பாக, சோசலிச சக்திகள் இல்லாதபோதும், அச்சுறுத்தலின் காலஅளவிலும் இது ஒரு கனவேயாகும்.  (சோஷியல் ரெஸ்டிட்யூஷன், பக்கம் 12).

கடந்தகாலத்தில் மேற்கொள்ளப்பட்ட சில பரிசோதனைகள்

கொரோனா பெருந்தொற்று அதிகரித்துவரும் நிலையில், நகரமயமாக்கலின் தற்போதைய வடிவங்கள் நீடிக்க இயலாதவை என்பதை அது நமக்கு நினைவூட்டி வருகிறது.  இந்நிலையில், நகர வளர்ச்சியின் எதிர்காலத்திற்காக பலவகையான வடிவமைப்புகளை அல்லது கடந்தகாலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டவற்றை நாம் காண வேண்டியது அவசியம்.

நகரத்தின் கட்டிடக் கலை வடிவமைப்பு எவ்விதத்தில் செயல்பட வேண்டும் என்பதை கட்டிட வடிவமைப்புக் கலை வெளிப்படுத்துகிறது. இது தொடர்பாக பல பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. நகர மேம்பாட்டிற்கான மூலதனத்திற்கு மிகுந்த அழுத்தம் தரும் தொழில்நுட்பங்களில் நவீன தாராளவாத முன்னுதாரணம் கவனம் செலுத்துகிறது. உதாரணமாக, கண்ணாடியும், செங்குத்து வளர்ச்சியும் மூலதனத்தின் ஆற்றலை நிரூபித்திட பயன்படுத்தப்படுகிறது. அதே நேரத்தில், சுகாதாரத்திற்கான அளவுகோல்களின்படி, இத்தகைய கட்டிடங்கள் இன்னமும் பாதுகாப்பானவையா என்பது குறித்தும் தற்போது மீண்டும் விவாதிக்கப்படுகிறது.

குடியிருப்புகளுக்கு அருகில் விளையாட்டு மைதானங்களை அமைப்பதை விட விளையாட்டு அரங்கங்களை அமைக்கவே நவீன தாராளவாத கட்டமைப்பு கூடுதலாக முனைப்பெடுக்கும். அதேபோன்று, சமூக சுகாதார மையங்களுக்குப் பதிலாக பல்சிறப்பு மருத்துவமனைகளை உருவாக்குவதிலேயே அது அதிக கவனத்தைச் செலுத்துகிறது. இதன் காரணமாக, மருத்துவ சேவைகளுக்கான செலவுகள் அதிகரிக்கின்றன.

புதுமையான, சோதனை முயற்சி மிக்க கட்டிடக் கலை குறித்து விமர்சனங்கள் இருந்தபோதிலும், சோவியத்துகள் மேற்கொண்ட பரிசோதனைகள் கட்டிட வடிவமைப்புக் கலைகளை வர்ணிக்கின்றன. தாராளமாக பொது இடங்களை உருவாக்குவதன் மூலம் சினிமா, சமூகக் கூடம், உடற்பயிற்சி நிலையம், நூலகம், வானொலி நிலையம் போன்ற பல்வேறுபட்ட பொதுச்செயல்பாடுகளை ஒரே கட்டமைப்பின் கீழ் ஒன்றாகக் கொண்டு வரப்படும்.

2010ஆம் ஆண்டில் ஜூரிச் நகரில் ‘எதிர்காலத்தை நோக்கி ஒரு பார்வை’ என்ற தலைப்பில் தான் உருவாக்கியிருந்த கண்காட்சியில் பாட்ரிக் ஷூமாச்சர் இவ்வாறு விளக்கியிருந்தார்: “ 90 ஆண்டுகளுக்கு முன்பு அக்டோபர் புரட்சி புதியதொரு சமூகத்திற்கான திட்டத்திற்காக உணர்ச்சிக் கொந்தளிப்புமிக்க வகையில் அளவற்ற படைப்புக்கத்தினை கிளர்ந்தெழச் செய்தது. அதுவும் மிக மோசமான பொருள்தட்டுப்பாடுகளுக்கு இடையிலேயே அது நிகழ்ந்தது. 20ஆம் நூற்றாண்டின் கலை மற்றும் கட்டிடக் கலையினை வரையறுக்கும் ஒன்றாகவும் அது திகழ்ந்தது. கலை, அறிவியல், வடிவமைப்பு ஆகிய துறைகளில் அளவிலும் தரத்திலும் அப்போது வெளிப்பட்ட படைப்பூக்கத் திறன் பிரமிக்கத்தக்க ஒன்றேயாகும். உலகத்தின் மற்ற பகுதிகளில் 50 ஆண்டுகளுக்குப் பிறகே வெளிப்பட்ட இத்திறனை கண்ணிமைக்கும் நேரத்தில் முன்னறிவிப்பு செய்வதாகவும் அது திகழ்ந்தது.”

21ஆம் நூற்றாண்டில் சாத்தியமாகக் கூடும் என்ற அனுமானத்தின் அடிப்படையில் துயரமும் அநீதியும் நிரம்பிய ஒரு சமூகத்திற்கும், கற்பனை உலகிற்கும் இடையே ஓர் உரையாடல் என்ற வகையில் ‘பேழையை உருவாக்கப்போவது யார்?’ என்ற தலைப்பில் மைக் டேவிஸ் எழுதிய ஒரு கட்டுரையில் சோஷலிசத்தையும் அதே நேரத்தில் சூழலியல் தன்மையையும் சுட்டிக் காட்டுகின்ற ஒரு நவீன நகரத்தினை உறுதிசெய்ய முயற்சித்தபோது, அவர் சோவியத் நாட்டின் முற்றிலும் புதுமையான சோதனை முயற்சிகளை நோக்கியே திரும்பினார்.

தொடக்க காலத்தில் சோவியத் நாட்டின் நகர்ப்புறப் பகுதிகளில் நிலவிய துயரம், பொதுமுதலீட்டிற்கான கடுமையான பற்றாக்குறை ஆகியவற்றால் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் புத்திசாலித்தனமான சோஷலிஸ்ட் வடிவமைப்புக் கலைஞர்கள் சந்தடிமிக்க அடுக்குமாடி வாழ்க்கையிலிருந்து மக்களை விடுவிக்க முடிவெடுத்தனர். அதன் அடிப்படையிலேயே தொழிலாளர்களுக்கான கேளிக்கை விடுதிகள், மக்களுக்கான  மிகப்பெரும் பொது அரங்குகள், விளையாட்டு வளாகங்கள் ஆகியவற்றை மிகச் சிறப்பான வகையில் அவர்கள் வடிவமைத்தனர். மேலும் பொதுவான சமையலறைகள், பகல்நேர குழந்தைக் காப்பகங்கள், பொதுக் குளியல் கூடங்கள் மற்றும் அனைத்துவகையான கூட்டுறவு அமைப்புகள் ஆகியவற்றின் மூலம் பாட்டாளிவர்க்கப் பெண்களின் விடுதலைக்கும் அவர்கள் முன்னுரிமை அளித்தனர்.

நகர வாழ்க்கையின் சமத்துவ அம்சங்கள் வளங்களைப் பாதுகாக்கவும், கார்பன் இடப்பெயர்வுக்குமான சிறந்த சமூகவியல் மற்றும் ஸ்தூலமான ஆதரவினை தொடர்ச்சியாக அளிக்கின்றன. ஒருவேளை அவையே உண்மையான எதிர்காலமாகவும் கூட இருக்கலாம்.

இந்தியாவைப் பொறுத்தவரை, புலம்பெயர்தல் என்பது நகர்ப்புறப் பகுதிகளில் பெரும்பிரச்சனையாக உள்ளது. அனைத்தையும் உள்ளடக்கிய, சமத்துவமான எதிர்கால வாழ்விடம் கண்டறியப்பட்டு உருவாக்கப்பட வேண்டும். கூடுதலான வாடகை வீடுகள், தொழிலாளர் தங்கும் விடுதிகள், அதிக அளவிலான திறந்தவெளிகள் ஆகியவை மக்களுக்குத் தேவைப்படுகின்றன.

நகர்ப்புற இந்தியாவில் திட்டமிடலுக்கான நடைமுறைகள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படாத அமைப்புகளிடமே குறுக்கப்பட்டுள்ளன. உள்ளூர் மட்டத்தில் திட்டமிடுவதற்குப் பதிலாக, மக்களுக்குப் பதிலளிக்கத் தேவையில்லாத, மேம்பாட்டு அதிகாரிகளாலேயே இது செய்யப்படுகிறது. இவ்வாறு திட்டமிடல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதிகாரிகள் பெரும் நிறுவனங்களின் ஆலோசகர்களை சார்ந்தே இருக்கின்றனர். இவர்கள் மீண்டும் மூலதனம் தேவைப்படும் தொழில்நுட்பங்களுக்காகவே நகரங்களை திட்டமிடுகின்றனர். இது மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். மேலும் திட்டமிடலுக்கான நடைமுறை பரவலாக்கப்பட்டு, மேலும் ஜனநாயகமாக்கப்பட வேண்டும்.

கூடுதல் ஜனநாயகமாக்கலுக்கான குரல் உரத்து எழுப்பப்பட வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் அளிப்பதும், மக்களின் சுய ஆளுமையை அதிகப்படுத்துவதும் அவசியமாகும். குடியிருப்பு மட்டத்தில் திட்டங்களை தயாரிப்பதற்கான வழிமுறையை ஏற்படுத்துவதன் மூலம் இதைச் செய்திடலாம். தங்களுக்கான இடங்களை மீண்டும் கோரவும் மக்களும், தொழிலாளி வர்க்கமும் தலையீடு செய்யவும் கூடுதல் வாய்ப்பை இது அளிக்கக் கூடும்.

பல்வேறு வழிமுறைகளை அளிக்கிற நகரமானது கார்ப்பரேட்டுகளுக்கு அதிகபட்ச லாபங்களை அளிப்பதற்கான இடமாகவும் இருக்கிறது. பெருமளவிலான அசமத்துவத்தையும் இது ஏற்படுத்துகிறது. உழைக்கும் வர்க்கத்தின் போராட்டங்களை தொழிற்சாலைகளிலிருந்து நகரத்தோடு இணைப்பதன் மூலமும், உழைக்கும் மக்களை வஞ்சித்து பெருமளவில் மூலதனத் திரட்டல் நடத்தப்படும் தொழிற்சாலைகளாக நகரங்களைக் கருதுவதன் மூலமும் இந்தப் பிரச்சனையை நம்மால் எதிர்கொள்ள முடியும்.

தமிழில்: எம். கிரிஜா

பால்மிரோ டோக்ளியாட்டியின் பாசிசம் குறித்த விரிவுரைகள்; தொழிலாளி வர்க்க அணுகுமுறைக்கான வழிகாட்டி

சுதிர்

1935ம் ஆண்டில் மாஸ்கோவில் லெனின் பள்ளியின் இத்தாலியப் பிரிவில் பால்மிரோ டோக்ளியாட்டி ‘எதிரிகள்’ என்ற தலைப்பில் நிகழ்த்திய 15 பகுதிகளைக்கொண்ட சொற்பொழிவுகளின் முக்கியமான பகுதியே இந்நூல்.

இத்தாலியில் பாசிசத்திற்கெதிராக 12 வருடங்கள் நடைபெற்ற போராட்டங்களில் நேரடியாக தனக்கிருந்த அனுபவங்களிலிருந்து அவர் இவ்விரிவான சொற்பொழிவுகளை ஆற்றியிருக்கிறார். இத்தகைய சொற்பொழிவுகள், நமக்குச் சம்மந்தப்பட்டதல்ல என்று மெத்தனமாகப் படிக்கும் போக்கிற்கு நாம் இடமளிக்கக் கூடாது என்று இவ்வுரைகளை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் தோன்றும்.

உண்மையில் பாசிசத்திற்கு எதிரான போராட்டப் படிப்பினைகள் வேறெவரையும் விட இந்திய மக்களாகிய நமக்குத்தான் அதிகம் தேவைப்படுகின்றன. பாசிச அபாயத்தை தற்பொழுது நாம் சந்திக்க வேண்டியுள்ளது.

அது மட்டுமல்ல; ஏகபோக முதலாளித்துவம் நம்மீது ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் காலம் வரை பாசிசத்திற்கு எதிராக போராடும்படி நாம் நிர்ப்பந்திக்கப்பட்டே தீருவோம். மிக அதிகபட்ச லாபங்களை அடையும் தனது பாதையில் இதர வடிவங்களில் அமைந்த ஆட்சி தடைக்கற்களாக மாறும்போது, ஏகபோக முதலாளித்துவம் பாசிசத்தை ஆதரிக்க சற்றும் தயங்காது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

டோக்ளியாட்டி திட்டவட்டமாக விவரித்து கூறுவது போல வரலாற்றின் படிப்பினைகளை நாம் கற்றோமானால் “அது இங்கே நடக்காது” என்று தீர்மானிப்பதற்கான போராட்டத்தில் மக்களோடு நாமும் (நமது இயக்கம்) ஒரு முக்கியமான அம்சமாக இருப்போம்.

முதலாளித்துவத்தின் உள் கட்டமைப்புதான் ஜனநாயக விரோதப் போக்கிற்கு வழி பிறக்கச் செய்கிறது என்பதும், அந்தப் போக்குதான் பாசிசத்தை நோக்கிச் செல்லும் இயக்கங்களுக்கு தீனி போடுகிறது என்பதையும் முதலாளித்துவத்தின் நெருக்கடி மற்றும் சரிவு காலகட்டத்தில் “பிற்போக்கான கொள்கைகளை நோக்சிச் செல்லும் போக்கு முதலாளித்துவத்தில்” தலைதூக்கும் என்பதையும் டோக்ளியாட்டி விளக்குகிறார்.

ஏகபோக முதலாளித்துவம், அதனுடைய பொதுவான நெருக்கடி காலகட்டத்தில் தொழில் உச்சபட்சமாக லாபமடையும் கொள்கைகளைப் பின்பற்ற முடியாது. இத்தகைய கொள்கைகளுக்கு எதிராக மக்கள் தலையிடும்படியான மிகக் குறைந்தபட்ச சாத்தியப்பாட்டை ஜனநாயக அமைப்புகள் ஏற்படுத்தினால் கூட ஏகபோக முதலாளித்துவம் அத்தகைய அமைப்புகளை ஒழித்துக் கட்டுவதில் இறங்கும். அது, ஜனநாயக ஆட்சிக்குப் பதிலாக பிற்போக்கான ராணுவ ஆட்சிகளைக் கொண்டு வருவதற்கு முற்படும். பாசிசம் என்பது இத்தகைய பெரும் தொழில் வர்த்தக சர்வாதிகாரங்களின் மிகவும் கொடூரமான, நாசகரமான, வளர்ச்சியடைந்த வடிவமேயாகும்.

பாசிசமானது எப்பொழுதும் பொய்யான மற்றும் வாய்ச்சவடால் வடிவங்களிலேயே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக பாசிசம் என்பது ஏகபோக மூலதனத்தின் மிகவும் பிற்போக்கான பகுதியின் அப்பட்டமான சர்வாதிகாரம் என்பதை அது மூடி மறைக்கவே முயற்சிக்கிறது.

பாசிசம் என்பது ஏகபோக மூலதனத்தின் மேல்தட்டு வட்டாரங்களின் மிகவும் பிற்போக்கான பகுதியினருடைய அப்பட்டமான, மிகக் கொடூரமான சர்வாதிகாரம் என்பதை விளக்க வேண்டியது அவசியமாகும். அவ்வாறு செய்தால்தான் உண்மையான பகைவனை திட்டவட்டமாக சுட்டிக்காட்டி அவனுக்கு எதிரான போராட்டத்தை நடத்துவது சாத்தியமாகும். அதன்பிறகே பாசிசத்திற்கெதிராகப் பரந்துபட்ட இயக்கத்தை அணிதிரட்டுவது சாத்தியமாகும் என்றும் அவர் விளக்குகிறார்.

“பாசிசம் என்பது ‘நிதி மூலதனத்தின் மிகவும் பிற்போக்கான, மிகவும் இனவெறி கொண்ட, மிக மோசமான ஏகாதிபத்திய சக்திகளின் அப்பட்டமான பயங்கரவாத சர்வாதிகாரமாகும்” என்று 1935ம் ஆண்டு நடைபெற்ற கம்யூனிஸ்டு அகிலத்தின் 7வது உலக காங்கிரசுக்கு அளித்த தன்னுடைய வரலாற்றுச் சிறப்புமிக்க அறிக்கையில் தோழர் ஜார்ஜ் டிமிட்ரோவ் அளித்தார் என்பதை டோக்ளியாட்டி எடுத்துரைக்கிறார்.

பாசிசத்திற்கான பாதையைத் தடுப்பதில் நாம் உண்மையிலேயே அக்கறை கொண்டிருப்போமானால், ஒடுக்குமுறைகளை (அதாவது மத, இன, சாதி வெறியை) ஒழித்துக்கட்டப் போராட வேண்டிய படிப்பினையை நாம் இவ்வுரையை வாசிப்பதன் மூலம் அறிய முடியும்.

பாசிச அபாயம் அதிகரிப்பதைத் தொடர்ந்து கம்யூனிச எதிர்ப்பு, இனவெறி, பேரரசு இனவாதம் போன்ற இயக்கங்களும் அவற்றுக்கான பிரச்சாரங்களும் அதிகரிக்கும் என்பதையும் அவர் சுட்டிக் காட்டுகிறார்.

முதலாளித்துவமானது தொழிலாளி வர்க்கத்தைச் சுரண்டுவதால் மட்டுமே நீடிக்க முடிகிறது என்ற உண்மையை மூடி மறைக்கவே எப்பொழுதும் முயற்சிக்கிறது. பாசிசம் இந்த மூடி மறைத்தலை ஒரு படி முன்னெடுத்துச் செல்கிறது.

பாசிசமானது ஒருமுறை வேரூன்றிவிட்டால் அது வர்க்கக் கூட்டுக் கொள்கைகளைக் கொண்டுள்ள சங்கங்கள் உள்ளிட்டு அனைத்து தொழிற்சங்கங்களையும் நாசம் செய்துவிடும். அவைகளிருந்த இடத்தில் பாசிஸ்டுகள் தங்களுடைய சொந்த பாசிச தொழிலாளர் முன்னணி அமைப்புகளை உருவாக்குவார்கள்.

பாசிசத்தின் தோல்வியானது அணிதிரட்டப்பட்ட வெகுஜன போராட்டத்தின் விளைவாக மட்டுமே வர முடியும்.

பாசிஸ்டுகளால் ஒழுங்கமைக்கப்பட்டு, அணிதிரட்டப்பட்டு, அவர்களின் செல்வாக்குக்கு உட்பட்ட மக்கள் ஒருநாள் காலையில் தாங்களாகவே பாசிசத்திலிருந்து விலகி, பாட்டாளி வர்க்கப் புரட்சியில் கலந்து கொள்ள நம்மிடம் வந்துவிடுவார்கள் என்று யாரும் நினைக்கக் கூடாது. அந்த மக்களை அவர்களின் பிடியிலிருந்து விடுவிப்பதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும். நமது பக்கம் அவர்கள் வந்து சேருவதற்கான முறையில் நாம் பணியாற்ற வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறார்.

பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய அடிப்படையான கொள்கைகள் குறித்து டோக்ளியாட்டி பல நிர்ணயிப்புகளை உருவாக்கியுள்ளார்.

“கோட்பாடு குறித்த சரியான நிலைப்பாட்டிற்கும் சக்திகளின் உறவு குறித்த சரியான மதிப்பீட்டிற்கும், ‘நடைமுறைக் கொள்கைப் பிரச்சினைகளில் சரியான தீர்வுகளுக்கும்’ அவர் மிகுந்த முக்கியத்தும் அளிக்கிறார்”.

நடைமுறைக் கொள்கைப் பிரச்சினைகளுக்கான சரியான தீர்வுகளுக்கு அடிப்படையான ‘சரியான கோட்பாட்டு நிலைப்பாட்டை’ மேற்கொள்ள வேண்டும் என்று அவர் அழுத்தமாகக் கூறுவதானது சர்ந்தப்பவாத நிலைப்பாடுகளில் தவறி விழுவதற்கு எதிரான எச்சரிக்கையாகும்.

உலக அனுபவம் என்ற பெட்டகத்திலிருந்து குவிக்கப்பட்டிருக்கும் ஏராளமான சான்றாதாரங்களின் அடிப்படையில் டோக்ளியாட்டி பின்வரும் முடிவுகளுக்கு வருகிறார்.

• பாசிசம் என்பது முதலாளித்துவ நாடுகளில் ஒரு அபாயமாக உள்ளது. ஆனால், அது தவிர்க்க முடியாத ஒரு வளர்ச்சிக் கட்டமல்ல.

• பாசிசத்தால், முதலாளித்துவத்தின் பிரச்சினைகளையும் முரண்பாடுகளையும் அடிப்படையில் தீர்க்க முடியாது. இதனால் அடிப்படையான வர்க்க முரண்பாடும் வர்க்கப் போராட்டமும் தொடரும்.

• பாசிசம் அதிகாரத்திலிருக்கும் மிக மோசமான நிலைமைகளிலும் கூட ஒரு வெகுஜன இயக்கத்தை உருவாக்கி பாசிசத்தைத் தோற்கடிப்பதக்குப் போராடுவது சாத்தியமே.

• பாசிசமானது தன்னுடைய சொந்த உள் முரண்பாடுகளால் நொறுங்கி விழுந்துவிடாது. ஆனால் அதை தோல்வியுறச் செய்ய, அந்த முரண்பாடுகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் கம்யூனிஸ்டு கட்சிகளும், பாசிச-எதிர்ப்பு ஒற்றுமை என்ற அதனுடைய கொள்கைகளும்தான், பாசிச சவாலை முறியடித்து, பாசிச எதிர்ப்புக்கு வெகுஜன அடித்தளத்தை உருவாக்கி தந்தன என்பதையும் வரலாற்று ரீதியாக விளக்குகிறார்.

நமது எதிரிகள் யார் என்பதை வரையறை செய்தல் மிகவும் முக்கியமானது என்று துவக்கத்திலேயே குறிப்பிடுகிறார். ஏனென்றால் ஒரு தவறான விளக்கமானது அரசியல் தவறுகளுக்கு இட்டுச் செல்லக்கூடும் என்பதையும் எடுத்துரைக்கிறார்.

“பகைவர்கள் என்று பேசும்பொழுது பாசிச அமைப்புகளில் உறுப்பினர்களாக உள்ள வெகுமக்களை நாம் சிந்தனையில் கொண்டிருக்கவில்லை. நமது பகைவர்கள் பாசிச அமைப்புகளேயாகும். ஆனால், அந்த அமைப்புகளில் உள்ள மக்கள் நமது எதிரிகள் அல்ல. அவர்கள் உழைக்கும் வெகுமக்கள். அவர்களை நம் பக்கம் ஈர்ப்பதற்கு நாம் ஒவ்வொரு முயற்சியையும் செய்ய வேண்டும்” என்கிறார்.

முதலாளித்துவ வர்க்கத்தின் சர்வாதிகாரம் மற்றும் குட்டி-முதலாளித்துவ வெகுமக்கள் இயக்கம் ஆகிய இந்த இரு அம்சங்களை கோட்பாட்டு ரீதியிலான கண்ணோட்டத்தில் காணும்போது, இவ்விரு அம்சங்களுக்கு இடையிலான இணைப்பை முற்றிலுமாகப் புரிந்து கொள்வது கடினமாக இருக்கும். ஆனால், இந்த இணைப்பு புரிந்து கொள்ளப்பட வேண்டும். முதலாவது அம்சத்தை காண்பதோடு மட்டும் ஒருவர் நிறுத்திக் கொள்வாரேயானால், பாசிசத்தின் வரலாற்றுப் பூர்வ வளர்ச்சியின் முக்கியமான வழியையும், அதனுடைய வர்க்க உள்ளடக்கத்தையும் காண இயலாது. இரண்டாவது அம்சத்தைக் காண்பதோடு மட்டும் ஒருவர் நிறுத்திக் கொள்வாரேயானால், அதனுடைய விளைவுகளை காணத் தவறிவிடுவார் என்றும் எச்சரிக்கிறார்.

வெகுமக்கள் இயக்கம் ஒவ்வொரு நாட்டிலும் ஒரே மாதிரியாக இருக்காது. சர்வாதிகாரம் கூட ஒவ்வொரு நாட்டிலும் ஒரே மாதிரியாக இருக்காது. அதனால் நாம் சுலபமாக தவறு செய்துவிடுவோம் என்பதையும் எச்சரிக்கிறார். இதை வரலாற்று நிகழ்வுகளைக் கொண்டும் விளக்குகிறார்.

இத்தாலிக்கு எது பொருந்துமோ, அது இதர ஒவ்வொரு நாட்டிற்கும் பொருந்தும் என்றோ, பொருந்த வேண்டும் என்றோ நினைக்காதீர்கள். பாசிசமானது வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு வடிவங்களை எடுக்கும். வெவ்வேறு நாடுகளின் வெகுமக்கள் பகுதியினர் வெவ்வேறு வடிவங்களிலான அமைப்பைக் கொண்டிருக்கின்றனர். அத்துடன் எந்தக் கால கட்டத்தைக் குறித்து நாம் பேசுகிறோம் என்பதையும் நினைவில் கொண்டிருக்க வேண்டும். பாசிசமானது ஒரே நாட்டில் வெவ்வேறு சமயங்களில் வெவ்வேறு நோக்கங்களையும், கோணங்களையும் மேற்கொள்கிறது. இந்த இரண்டு அம்சங்களை நாம் ஆராய வேண்டுமென்கிறார்.

முதலாளித்துவ வர்க்கத்தினரின் அப்பட்டமான சர்வாதிகாரமான பாசிசத்தை, தோழர் லெனின் அவர்கள் ஏகாதிபத்தியம் குறித்து எழுதியுள்ளவற்றில் இருந்தே காண முடியும் என்கிறார். ஏகாதிபத்தியம் குறித்து நீங்கள் அறிந்திருக்கவில்லை என்றால், பாசிசம் என்ன என்பது குறித்து நாம் தெரிந்து கொள்ள முடியாது என்றும் எச்சரிக்கிறார்.

ஏகாதிபத்தியத்தின் பொருளாதார அம்சங்களை நீங்கள் அறிவீர்கள். லெனின் அளிக்கும் விளக்கமும் உங்களுக்குத் தெரியும். ஏகாதிபத்தியம் என்பது பின்வருமாறு குணாம்சப்படுத்தப்படுகின்றது; 1. உற்பத்தி மற்றும் மூலதனக் குவிப்பு, பொருளாதார வாழ்வில் ஒரு தீர்மானகரமான பங்கை வகிக்கக் கூடிய ஏகபோகங்களின் உருவாக்கம், 2. வங்கி மூலதனமும் தொழில் மூலதனமும் இணைக்கப்படுதல், நிதி மூலதனத்தின் அடிப்படையில் ஒரு நிதி கும்பல் உருவாதல், 3. மூலதன ஏற்றுமதி மூலம் அடையப்படும் பெரும் முக்கியத்துவம், 4. சர்வதேச முதலாளித்துவ ஏகபோகங்களின் தோற்றம். இறுதியாக, பெரும் முதலாளித்துவ நாடுகளிடையே உலகை மறு கூறுபோடுதல், இந்தப் பணி இப்போது பூர்த்தியடைந்துவிட்டதாகவே கருதலாம்.

மேற்கூறியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒரு பிற்போக்கான உருமாற்றத்தை அடையும் போக்கு அனைத்து முதலாளித்து அரசியல் அமைப்புகளிலும் காணப்படுகிறது. இதையும் கூட, நீங்கள் லெனின் எழுத்துக்களில் காணலாம். இத்தகைய அமைப்புகளைப் பிற்போக்கானதாக ஆக்கவேண்டுமென்ற போக்கு உள்ளது. இந்தப் போக்கு பாசிசத்துடன் மிகவும் இணைக்கமான வடிவங்களில் தோன்றுகிறது.

ஏனென்றால், தங்களுடைய லாபங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டிய தேவையை வைத்துப் பார்க்கும் பொழுது, தொழிலாளிகள் மீது மிகுந்த நிர்ப்பந்தம் செலுத்துவதற்கான வடிவங்களை முதலாளித்துவ வர்க்கம் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது. மேலும், ஏகபோகங்கள், அதாவது முதலாளித்துவ வர்க்கத்தின் தலையாய சக்திகள், குவிப்பின் மிக உயர்ந்த கட்டத்தை அடைகின்றன. அப்போது ஆட்சியின் பழைய வடிவங்கள் அவற்றின் விரிவாக்கத்திற்குத் தடைக்கற்களாக ஆகிவிடுகின்றன. இதனால் முதலாளித்து வர்க்கம் தான் உருவாக்கியதற்கு எதிராகவே திரும்ப வேண்டியுள்ளது. ஏனென்றால் ஒரு சமயம் அதனுடைய வளர்ச்சிக்கான அம்சமாக இருந்தது இன்று முதலாளித்துவ சமுதாயத்தைப் பாதுகாப்பதற்கு ஒரு இடையூறாகவே இருக்கிறது. இதன் காரணமாகத்தான் முதலாளித்துவ வர்க்கத்தினர் பிற்போக்காளர்களாக மாறி பாசிசத்தை கடைப்பிடிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர் என்று விளக்குகிறார்.

முதலாளித்துவ ஜனநாயகத்திலிருந்து பாசிசத்திற்கு மாறிச் செல்லும் போக்கு தவிர்க்க இயலாத ஒன்று எனக் கருதாமல் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனென்றால், ஏகாதிபத்தியத்திலிருந்து பாசிச சர்வாதிகாரம் அவசியம் தோன்றியே தீரும் என்பதல்ல என்பதை உதாரணங்களுடன் விளக்குகிறார். உதாரணத்திற்கு இங்கிலாந்து ஒரு பெரும் ஏகாதிபத்திய நாடு. அங்கே ஜனநாயக வழிப்பட்ட நாடாளுமன்ற அரசாங்கம் (இதிலும் கூட பிற்போக்கான அம்சங்கள் இல்லையென்று கூறிவிட முடியாது) உள்ளது. பிரான்சையும் அமெரிக்காவையும் உதாரணங்களாகக் கூறுகிறார். பாசிச வடிவிலான அரசாங்கத்தை நோக்கிச் செல்லும் போக்கு அனைத்து இடங்களிலும் காணப்பட்டாலும், பாசிசம் எல்லா இடங்களிலும் வந்தே தீரும் என்று பொருளாகாது என்றும் நம்மை எச்சரிக்கிறார்.

தொழிலாளி வர்க்கத்தின் போராட்ட உணர்வின் வீச்சு மற்றும் ஜனநாயக அமைப்புகளைப் பாதுகாப்பதில் அதனுடைய திறன் ஆகியவற்றை வைத்தே பாசிச சர்வாதிகாரம் உருவாகக் கூடிய சாத்தியப்பாடுகள் ஏற்படுகின்றன என்பதைக் காணத் தவறக் கூடாது எனவும் எச்சரிக்கிறார்.

பாசிசத்தின் வளர்ச்சிக் கட்டத்தில் இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சி காணத் தவறிய பிழைகளையும் எடுத்துக்காட்டுகளுடன் விவரிக்கிறார். இத்தாலிய மூலதனத்தின் மிக வளர்ச்சியடைந்த உள்ளார்ந்த இயைபையும் நாம் கவனித்திருக்க வேண்டும் என்பதையும் நாம் காணத் தவறிவிட்டோம். இத்தாலிய முதலாளித்துவம் என்பது ஒரு பலவீனமான முதலாளித்துவம் அல்ல என்ற முடிவுக்கு வருவதற்கு, மூலதனக் குவிப்பு, ஏகபோகங்கள் போன்றவற்றைக் கணக்கிலெடுத்துக் கொண்டாலே போதுமானதாக இருந்திருக்கும் என்கிறார்.

1931 ஆம் ஆண்டு ஜெர்மனியில் இதேபோன்றதொரு தவறை, அதாவது பாசிச இயக்கத்தினுடைய வளர்ச்சியைத் தீர்மானிப்பதில் தவறு செய்திருப்பதாகவும் குறிப்பிடுகிறார். ஜெர்மனியில் பாசிசம் முறியடிக்கப்பட்டுவிட்டது என்றும், ஜெர்மனியைப் போன்ற ஒரு வளர்ச்சியடைந்த நாட்டில், தொழிலாளி வர்க்க சக்திகள் நன்றாக ஸ்தாபன ரீதியாக அணிதிரண்டிருக்கும் ஒரு நாட்டில், அத்தகைய ஆபத்து ஏதும் இல்லை என்பதால் பாசிச சர்வாதிகார அச்சுறுத்தல் கிடையாது என்றும் சில தோழர்கள் கூறினார்கள். பாசிசத்திற்கான பாதையை நாங்கள் தடுத்துவிட்டோம் என்றும் அவர்கள் கூறினார்கள். விரிவடைந்த நிர்வாகக் குழுவின் 11வது கூட்டத்தில் நிகழ்த்தப்பட்ட பல உரைகளிலும் இதே சாயல் காணப்பட்டது. இதே தவறைத்தான் இத்தாலியில் நாமும் செய்தோம்; பாசிச வெகுமக்கள் இயக்கம் வளர்ச்சியுறுவதற்கு அதற்குள்ள உள்ளார்ந்த ஆற்றலைக் குறைத்து மதிப்பிட்டோம் என்றும் விளக்குகிறார்.

பகுத்தாய்வு தவறாக இருக்குமானால் அரசியல் திசைவழியும் தவறாகவே இருக்கும் என்பதை இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள முடியும்.

பாசிச சர்வாதிகாரம் உருவாக்கப்படுவது முதலாளித்துவ வர்க்கம் பலப்படுவதைக் குறிக்கிறதா? அல்லது பலவீனமாவதைக் குறிக்கிறதா என்ற கேள்விக்கு பின்வருமாறு பதிலளிக்கிறார்;

முதலாளித்துவத்தின் உள் முரண்பாடுகள் தீவிரமடைந்து ஜனநாயக வடிவங்களை முதலாளித்துவ வர்க்கத்தினர் கலைக்கும்படியான நிர்ப்பந்தம் ஏற்படுவதன் விளைவாகவே பாசிசம் வளர்கிறது என்பது உண்மையே. இந்தக் கண்ணோட்டத்தில் இருந்து காணும்போது, நாம் ஒரு ஆழமான நெருக்கடியை எதிர்கொள்கிறோம் என்பதும், அதை முதலாளித்துவ வர்க்கத்தினர் சந்திக்க விரும்புகிறார்கள் என்பதும் தெள்ளத் தெளிவாகிறது. ஆனால், இந்த அம்சத்தை மட்டும் காண்பது பின்வரும் தவறான முடிவை எடுப்பதற்கு இட்டுச் செல்லும்; பாசிச இயக்கம் எந்த அளவுக்கு அதிகமாக வளர்கிறதோ அந்த அளவுக்குப் புரட்சிகர நெருக்கடி மிகவும் கூர்மையடையும் என்கிறார்.

பாசிசத் தத்துவமானது பல்வேறு கதம்பக் கூறுகளைத் தன்னுள் கொண்டுள்ளது. இதை நாம் நினைவிற் கொள்ள வேண்டும். ஏனென்றால் இந்த சித்தாந்தம் எந்த நோக்கத்திற்காகச் செயல்படுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள இது உதவுகிறது. மேலும் உழைக்கும் வெகுமக்கள் மீது சர்வாதிகாரத்தைத் திணிப்பதற்கான போராட்டத்தில் பலதரப்பட்ட குழுக்களை இணைப்பதற்கும், இதன்பொருட்டு ஒரு பரந்த இயக்கத்தை உருவாக்குவதற்கும், இது பயன்படுகிறது. பாசிச சித்தாந்தம் இத்தகைய சக்திகளை ஒன்றாகப் பிணைப்பதற்கான ஒரு கருவியாக அமைந்துள்ளது. இந்தச் சித்தாந்தத்தின் தேசியவாத பகுதி நேரடியாக முதலாளித்துவ வர்க்கத்துக்குத் தொண்டு செய்கிறது; மற்றொரு பகுதி ஒரு பிணைப்பாகச் செயல்படுகிறது என்று விளக்குகிறார்.

பாசிச சித்தாந்தம் மிக உறுதியான, முழுமையான, ஒரே சீரான சித்தாந்தம் அல்ல; பச்சோந்தியைப் போன்று தோற்றமளிக்கக் கூடியது. ஒரு குறிப்பிட்ட சமயத்தில் ஒரு குறிப்பிட்ட கோட்பாட்டைக் கூறி பாசிசம் எய்த விரும்பும் குறிக்கோள்களைக் கணக்கிலெடுத்துக் கொள்ளாமல் பாசிச சித்தாந்தத்தை மதிப்பிடாதீர்கள் என்றும் நம்மை எச்சரிக்கிறார்.

பாசிசத்தின் அடிப்படையான கொள்கை வழி உக்கிரமான, வெறித்தனமான தேசியவாதமும் சமூக ஜனநாயகத்துடன் ஒத்த தன்மை கொண்டிருப்பதுமாகும். ஏன் இந்த ஒத்த தன்மை? ஏனென்றால் சமூக ஜனநாயக சித்தாந்தமும் கூட ஒரு குட்டி-முதலாளித்துவ சிந்தாந்தமாகும்; அதாவது குட்டி முதலாளித்துவ உள்ளடக்கம் இவ்விரு தத்துவங்களுக்கும் பொதுவானது. ஆனால், இந்த ஒத்த தன்மை என்பது பல்வேறு நாடுகளில் பல்வேறு சமயங்களில் பல்வேறு வடிவங்களில் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது என்கிறார்.

ஒட்டுமொத்தமாக பால்மிரோ டோக்ளியாட்டியின் இந்நூல், பிற்போக்கு சக்திகளுக்கும் பாசிச சக்திகளுக்கும் எதிரான போராட்டத்திற்கு ஒரு முக்கியமான பங்களிப்பாகும். பாசிசம் குறித்த தொழிலாளி வர்க்க அணுகுமுறைக்கான ஒரு மிகச் சிறந்த வழிகாட்டியாகவும் அமைந்துள்ளது.

இறுதியாக, அணிதிரட்டப்பட்ட வெகுமக்கள் போராட்டமே பாசிசத்தை வீழ்த்தும்

பாசிசம் குறித்த விரிவுரைகள் -பால்மிரோ டோக்ளியாட்டி
தமிழ் மொழியாக்கம்: ரா.ரங்கசாமி, ஏ.எஸ்.மணி. என்.ஜெயராமன், என்.ராமகிருஷ்ணன், கல்பனாதாசன்
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்