கியூபா: புரட்சியைப் பாதுகாக்கும் புதிய தலைமுறை

சிந்தன்

கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின்  8 வதுமாநாட்டினை ‘தொடர்ச்சியின் மாநாடு’ என்று அழைக்கிறார்கள். உலக முதலாளித்துவ ஊடகங்களெல்லாம், ‘காஸ்ட்ரோக்களின் காலம் முடிந்தது’ என்று செய்தி போட்டு மகிழ்ந்தபோது, ‘தொடர்ச்சி’ என்ற சொல்லை அவர்கள் பயன்படுத்தியதன் நோக்கம், மிக நன்றாகவே புரிகிறது. சோசலிச லட்சியத்தை தொடர்ந்து முன்னெடுக்கிறோம் என்று பெருமிதத்துடனே அவர்கள் அறிவித்துள்ளனர்.

2021 ஏப்ரல் 16 தொடங்கிய மாநாடு 19 அன்று நிறைவடைந்தது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட, கட்சியின் முதன்மைச் செயலாளர் மிகுவெல்டியாஸ்-கேனல் இவ்வாறு பேசினார். “தயங்காமல் சொல்வேன். உண்மையான புரட்சிகர போராட்டத்தில், வெற்றி என்பது கற்றுக் கொண்டே இருப்பதுதான். முன்பே பரிசோதிக்கப்படாத ஒரு பாதையை நாம் தேர்ந்தெடுத்துள்ளோம். புதியவைகளை கண்டறிந்து கொண்டே இருக்க வேண்டும். கொள்கை உறுதியை எவ்வகையிலும் கைவிட்டுவிடக் கூடாது. அதே சமயம், மாற வேண்டியவைகளை மாற்றியமைக்க வேண்டும். வீழ்த்த முடியாத நம் தலைவர் (ஃபிடல் காஸ்ட்ரோ) நமக்கு கொடுத்துச் சென்றிருக்கும் புரட்சியின் கருதுகோளில் இருந்து மாறாமல் பயணிக்க வேண்டும். இந்த சவால் நம் முன் உள்ளது. கட்டுப்பெட்டியான சிந்தனைப் போக்குகளையும், தவறிழைத்துவிடாது இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வையும் சற்று தளர்த்திக் கொண்டு, நமது பாதையில் முன்னேறுவோம்.”

காஸ்ட்ரோக்களின் காலம் தொடர்கிறது. இன்னும் இளமைத் துடிப்புடன், புதுமைகளைக் கைக்கொண்டு என்பதுதான் இந்த மாநாடு வெளிப்படுத்தியிருக்கும் தெளிவான அறிவிப்பு.

புதிய தலைமுறை தலைவர்கள்:

கியூபாவில் புரட்சி நடைபெற்றபோது பிறந்திருக்காத  தலைமுறையைச் சார்ந்தவர் மிகுவெல் டியாஸ்-கேனல். மின்னணுவியல் பொறியாளர். இளம் கம்யூனிஸ்ட் லீக் மூலமாக வளர்ந்தார். நிகரகுவா படைத்தலைவராக இயங்கியுள்ளார். ஒவ்வொரு இளைஞரும் ராணுவ கடமையாற்ற வேண்டும் என்பதை பின்பற்றி 3 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றியுள்ளார். கியூபாவின் இரண்டு பிராந்தியங்களில் முதன்மைச் செயலாளராக செயல்பட்டுள்ளார். உயர்கல்வித்துறைக்கு அமைச்சராக இருந்துள்ளார். கடந்த 2003ஆம் ஆண்டு அரசியல் தலைமைக் குழு உறுப்பினராக தேர்வானார். மூன்று ஆண்டுகளுக்கு முன் கியூப சோசலிச குடியரசின் தலைவராக தேர்வானார். இப்போது கட்சியின் முதன்மைச் செயலாளராகவும் தேர்வாகியுள்ளார். புதிய அரசியல் தலைமைக்குழுவில் 3 பெண்கள் உட்பட 14 பேர் உள்ளனர்.

இளைஞர்களும் புதிய மாற்றமும்:

முன்பு ஃபிடல் காஸ்ட்ரோ செய்ததைப் போலவே, இந்த மாநாட்டில் ரால் காஸ்ட்ரோவும் தனது ஓய்வினை அறிவித்தார். வேறு எந்த கூடுதல் பொறுப்பையும் எடுக்கவில்லை. ‘ஒரு சாதாரண புரட்சிகரப்போராளியைப் போலவே நானும் ஓய்வு பெறுகிறேன். நான் உயிரோடு வாழும் காலம் வரையில் என் கால்களில் வாழ்வேன். தந்தை நாட்டையும்,புரட்சியையும்,சோசலிசத்தையும் முன்னணியில் நின்று காப்பேன்’ என அவர் அறிவித்தார்.

திட்டமிட்ட வகையில் இளைஞர்களை வளர்த்தெடுத்து உரிய பணிகளில்  அமர்த்திவிட்டே அவர்கள் இதைச் செய்துள்ளனர்.

கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் இளைஞர்களை அமர்த்துவது ஒரு தொடர் பணியாகும். இதற்காக அமைப்பு ரீதியாக சில ஏற்பாடுகளும் அவசியம். கியூப கம்யூனிஸ்ட் கட்சி தனது மத்தியக்குழுவிற்கு அதிகபட்ச வயது 60 என நிர்ணயித்தது. அதே போல  அரசியல் தலைமைக்குழுவிற்கு வயது வரம்பு 70 ஆகும். கட்சியின் மத்தியக்குழுவில் பெண் பிரதிநிதிகளின் சதவீதம் கிட்டத்தட்ட 50 ஆகும்.

இந்த மாநாட்டில், கொரோனா கட்டுப்பாட்டிற்காக 300 பிரதிநிதிகள் மட்டுமே கலந்து கொண்டனர். 58 ஆயிரம் கிளைகளில் உள்ள 7 லட்சம் கட்சி உறுப்பினர்களை அவர்கள் பிரதிநிதித்துவம் செய்தனர். கியூப கம்யூனிஸ்ட் கட்சியில் இப்போது 27 ஆயிரம் புதிய உறுப்பினர்கள் இணைந்துள்ளனர். 2006ஆம் ஆண்டு வாக்கில் கட்சி உறுப்பினர்கள் குறையக் கூடிய சூழலை கட்சி கண்டுணர்ந்தது. இப்போது அந்த நிலைமை முடிவிற்கு வந்துவிட்டது. அதே சமயம், கட்சி உறுப்பினர்களின் சராசாரி வயது உயர்ந்துள்ளது. 42.6% கட்சி உறுப்பினர்களின் வயது 55க்கும் அதிகமாகும். அதே சமயம் கட்சியின் முழுநேர ஊழியர்களுடைய சராசரி வயது 42.5 ஆக உள்ளது என்கிறது மாநாட்டு அறிக்கை.

8வது மாநாடு 4 நாட்கள் நடந்தது. மாநாட்டு ஆவணங்கள் முன்கூட்டியே விநியோகிக்கப்பட்டன. மண்டல அளவில் பிரதிநிதிகளால் விவாதிக்கப்பட்டன. இந்த ஆவணங்கள் தத்துவத்தளத்திலும், மக்களின் சமூக பொருளாதார நிலை குறித்தும், கட்சியின் முன்னணி பணியாளர்கள் கொள்கை குறித்தும், பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வது மற்றும் கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்வது ஆகியவைகளை உள்ளடக்கியிருந்தன.

அரசமைப்பில் மாற்றங்கள்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்தான் கியூபா தன்னுடைய அரசமைப்புச் சட்டத்தை மாற்றியமைத்தது. அரசமைப்பின் புதிய மாற்றங்கள், அப்போதே பொது வாக்கெடுப்பிற்கு விடப்பட்டன. அரசியல் கட்டமைப்பிலும், பொருளாதார கட்டமைப்பிலும் செய்ய வேண்டிய இந்த மாற்றங்களை மக்கள் பரவலாக விவாதித்தார்கள். கட்சிக்குள்ளும் அனைத்து நிலைகளிலும் விவாதிக்கப்பட்டது. திருத்தங்கள் பெறப்பட்டன.

பிரதமர் என்ற பதவி மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. குடியரசின் தலைவராக ஒருவர் இரண்டு ஐந்தாண்டுகள் மட்டுமே அதிகபட்சமாக தேர்ந்தெடுக்கப்பட முடியும். மக்கள் அதிகார தேசிய அவையின் தலைவர் மற்றும் பிரதமர் ஆகியோர் இணைந்து கூட்டாக தலைமை தருவார்கள் என்பதாகஅரசமைப்புச் சட்டம் கூறுகிறது.

தனியார் முதலீடுகளுக்கு ஊக்கம்

கியூபா திட்டமிட்ட சோசலிச பொருளாதாரத்தை அடிப்படைக் கட்டமைப்பாக கொண்டுள்ளது. அதே சமயத்தில்,அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் அரசியல் ரீதியாகவும்,பொருளாதாரத்திலும் தொடர்ந்து கியூபாவை தாக்கி வருகிறார்கள். சுமார் 60 ஆண்டுகளாக தொடரும் இத்தகைய தாக்குதலை எதிர்கொள்ள படைப்பூக்கம் மிக்க புதிய வழிமுறைகளை கியூபா பின்பற்ற வேண்டியுள்ளது. அதுதான் ஒரு குறிப்பிட்ட நாட்டில், குறிப்பிட்ட வரலாற்றுக் கட்டத்தில் சோசலிசத்தை கட்டமைப்பதன் சவால் ஆகும்.

சோவியத் ரஷ்யா தனது நாட்டின் புதிய பொருளாதார கொள்கையை அமலாக்கி பரிசோதித்தது. இப்போதும் மக்கள் சீனமும், வியட்நாமும் பல்வேறு பரிசோதனைகளை தங்கள் நாடுகளில் மேற்கொள்கிறார்கள். கியூபாவும் அந்த அனுபவங்களை பரிசீலித்து, தனது நாட்டில் தனியார் முதலீடுகள் மற்றும் அன்னிய முதலீடுகளை சில பகுதிகளில் அனுமதிக்கிறது.

பல ஆண்டுகள் பொது விவாதத்திற்கு பிறகு 2016 ஆம் ஆண்டில் மேம்படுத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டன. 2030 வரையிலான கியூப சமூக பொருளாதார மேம்பாட்டு திட்ட கருதுகோள் உருவாக்கப்பட்டது.

உற்பத்திக்கு உதவும் வகையில் வேலை முறைகளை மாற்றியமைத்தல் அல்லது அழித்தல், அரசு அல்லாத துறைகளை விரிவாக்குவது, சுய வேலைவாய்ப்பு, கூட்டுறவு உட்பட விவசாயம் மற்றும் விவசாயம் அல்லாத தொழில்களில் அதிகரிப்பது என்ற முடிவுகளை எடுத்தனர். அதே சமயம் மூலதன குவியல் உருவாகாமல் தடுக்க தொழில் உடைமையானது எண்ணிக்கை மற்றும் அளவுக் கட்டுப்பாடு செய்யப்பட்டுள்ளது. பயன்பாட்டில் இல்லாத காலியிடங்களை குத்தகைக்கு விடுவது, குத்தகைதாரர்களுக்கு நுண் கடன்களை வழங்குவது, உற்பத்தி பொருட்களை உணவு விடுதிகளுக்கும், தங்கும் விடுதிகளுக்கும் விற்க அனுமதிப்பது, போன்றவை சமீபத்தில் அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகளில் ஒன்றாகும்.

நலவாழ்வு, கல்வி, பாதுகாப்பு மற்று ஆயுதம் தொடர்பான நிறுவனங்கள், எவ்விதமான தனியார்மயம் அல்லது அந்நிய மூலதனத்திலிருந்தும் விலக்கியே வைக்கப்பட்டுள்ளன. கியூபாவின் அந்நிய வர்த்தகத்திற்கு ஒரு செலவாணி, உள்நாட்டு வர்த்தகத்திற்கு ஒரு செலவாணி என்று இருந்த நிலைமையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு, இரண்டும் ஒன்றாக்கப்பட்டுள்ளது. இந்த எல்லா மாற்றங்களையும் ‘சோசலிச திட்டமிடல் அமைப்பே வழிநடத்துகிறது.’

இந்த மாற்றங்களைத் தொடர்ந்து நடந்திருக்கும் மாநாடு, கிடைத்த அனுபவங்களை பரிசீலித்துள்ளது. பொருளாதார வகைப்பட்ட 52 கொள்கை முடிவுகள் நினைத்த பலன்களை கொடுத்துள்ளன. 41 கொள்கை முடிவுகள் ஓரளவு பலன் கொடுத்துள்ளன. 12 கொள்கைகள் முடிவுகள் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை என்று மாநாட்டு அறிக்கை கூறுகிறது. கொரோனா பெருதொற்றுக்கு நடுவிலும் 1 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருப்பதை அறிக்கை காட்டுகிறது. அடிப்படைத் தேவைகள் மற்றும் சேவைகளுக்கு அதிக செலவு என்கிற நிலைமையை மாற்ற இன்னும் முன்னேற வேண்டியுள்ளது என்று சுயவிமர்சனமாகவும்  அது கூறுகிறது.

பொருளாதார நிலைமைகளை பரிசீலித்த மாநாட்டின் முதல் ஆணையத்திற்கு, பிரதமர் இம்மானுவல் மரி ரோக்ரஸ் தலைமையேற்றார். இதில்  319 செயல்முறைகள் வகுக்கப்பட்டுள்ளன. 2016 முதல் 2020 வரையிலான பணிகளை பரிசீலித்ததுடன், 2026 வரையிலான செயல்திட்டமும் நிறைவேற்றப்பட்டது.

முன்னணியினர் குறித்த கொள்கை

“ஒரு முன்னணி ஊழியருக்கு எப்படி தலைமையேற்பது என்பது மட்டும் தெரிந்தால் போதாது; நீடித்திருக்கும் சிக்கலான சூழலை எதிர்கொண்டு முறியடிக்கவும் தெரியவேண்டும். அதற்கான தைரியமும், அற்பணிப்பும், திட்டமிடலும் தீர்வும் இருக்க வேண்டும்.”

புரட்சிக்கு பின்னர் பிறந்தவர்கள் தலைமையேற்றிருக்கும் இந்தக் காலகட்டத்தில் முன்னணி பணியாற்றும் கம்யூனிஸ்ட் ஊழியர்களைக் குறித்த கொள்கையை இந்த மாநாடு விவாதித்திருக்கிறது. மிகுவெல் டியாஸ் கானல் அந்த அவைக்கு தலைமையேற்றார். ‘முன்னணிச் செயலாட்டாளராக வரக்கூடியவர் நல்லவராக மட்டும் இருக்கக் கூடாது, சிறந்தவர்களாக, மிகச் சிறந்தவர்களாக இருக்க வேண்டும்’ என்கிறார்.

கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர் கொள்கை அறிவியல் பூர்வமாக தொடர்ந்து மேம்படுத்தப்படுகிறது. இன்னொரு தருணத்தில், அதனை விரிவாக பார்ப்போம்.

கியூப மக்களின் உயிரோட்டம் மிக்க கட்சியாக தொடர்ந்து வைத்திருக்கும் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைத்திருப்பதை புள்ளி விபரங்கள் காட்டுகின்றன. கட்சியில் 40 வயதுக்கு குறைவான முழுநேர ஊழியர்கள் 1,501 பேர் உள்ளனர். 54.2 % ஊழியர்கள் பெண்கள், 47.7 % பேர் கருப்பின அல்லது கலப்பு மண குழந்தைகள். நகராட்சி மற்றும் மாவட்ட செயலாளர்களில் 75 பேர் பெண்கள் (42%). 81 சதவீதம் கட்சி ஊழியர்கள் பல்கலைக்கழக படிப்பை முடித்தவர்கள். இளம் கம்யூனிஸ்ட் லீக் மூலமாக கட்சிக்கு வரும் ஊழியர்கள் தொடர்ந்து படிப்பது உறுதி செய்யப்படுகிறது. சிறப்புத் திறன் கொண்ட (புரொபசனல்) கட்சி ஊழியர்களில் குறிப்பிட்ட பகுதி (23.5%) இளம் கம்யூனிஸ்ட் லீக் மூலமாக வருகிறார்கள். கட்சி, அரசு மற்றும் நிர்வாக பொறுப்புகளில் கட்சியின் ஊழியர்கள் தொடர்ந்து இயங்க அனுமதிக்கப்படுவதில்லை, 76.5% பேர் ஒரே பொறுப்பில் 5 ஆண்டுகளுக்கு மேல் தொடரவில்லை. 6.9% பேர் மட்டுமே ஒரு குறிப்பிட்ட பொறுப்பில் 10 ஆண்டுகளுக்கு மேல் இருக்கின்றனர்.

கியூபாவின் கடந்த காலம்

கியூபா, தனது வரலாற்றில் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு வந்திருக்கிறது. சோசலிச சோவியத் யூனியன் தகர்ந்தபோது, இரண்டு நாடுகளுக்குமான பொருளாதார ஒத்துழைப்பு தகர்ந்தது. இதனால் 20 ஆண்டுகளாக கியூபா பெற்றுவந்த நன்மைகளை இழந்தது. அன்னிய வர்த்தகம் 80 சதவீதம் வரை விழுந்தது. உற்பத்தி திறனை பயன்படுத்திக் கொள்வதில் 85% வீழ்ச்சி ஏற்பட்டது. அந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 35% சரிந்தது.

1992 தொடங்கி 1996 வரையில் அமெரிக்கா தனது பொருளாதாரத் தடைகளை தீவிரமாக்கியது. இதனால் வர்த்தகமும், டாலர் பரிவர்த்தனையும் பாதிக்கப்பட்டது, நிரந்தரமாக கியூபாவின் 10 சதவீத உள்நாட்டு உற்பத்தி பாதிப்பிற்கு ஆளானது. ஆனால், இந்த நெருக்கடிக்கு கியூப கட்சி முன்கூட்டியே தயாராகியிருந்தது.

சோவியத் அரசின் ‘பெரெஸ்றோய்க்கா’ திட்டத்தை, கியூப தலைமை 1985களிலேயே நிராகரித்துவிட்டிருந்தது. கட்சிக்குள் நெறிப்படுத்தும் இயக்கத்தை வலிமையாக முன்னெடுத்திருந்தது. இது, அடுத்தடுத்த காலங்களில் வந்த நெருக்கடிகளை எதிர்கொள்வதில் கியூபாவிற்கு உதவியது. பொருளாதார முடிவுகள் அதீத மையப்படுத்துதலை மாற்றியமைத்திருந்ததும், நாட்டின் நிர்வாக கட்டமைப்பின் அளவு மற்றும் தோற்றத்தை மாற்றியமைத்தலையும் கியூபா முன்கூட்டியே செய்திருந்தது.

உள்ளூர் குழுக்களுக்கு புத்துயிர் கொடுத்ததுடன், பிராந்திய அளவிலும், தேசிய அளவிலும் பிரதிநிதிகளுக்கு நேரடி தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. சமூக, பொருளாதார கொள்கைகளை உருவாக்குவதில் மக்களின் பங்கேற்பு  உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக ஆற்றல் உற்பத்தியும் விநியோகமும் பரவலாகியது. உயர் தொழில்நுட்பம், நகர்ப்புற வேளாண்மை, அடிப்படை உணவுப் பொருள் உற்பத்தி ஆகியவை மேம்பட்டன. 1993-94களில், செலாவணி பற்றாக்குறை ஏற்பட்டதை அடுத்து, பல கட்ட விவாதங்களுக்கு பின் கியூபா தனது பொருளாதாரம் அந்நிய மூலதனத்திற்குத் திறக்கப்பட்டது. பாதிக்கும் அதிகமான அரசு நிலங்கள் கூட்டுறவு உற்பத்தியில் ஈடுபடுத்தப்பட்டன. நிலம் கொடுத்து முடிவெடுப்பதற்கான அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டது. சுற்றுலாத் துறையில் நுழைந்த அன்னிய மூலதனத்திற்கு, உள்ளூர் வள ஆதாரமும் குறிப்பிடத்தக்க அளவில் கிடைத்ததை ஒட்டி, பொருளாதார மீட்சி வேகமெடுத்தது. நிக்கல் சுரங்கங்களை நோக்கி சீனா, பிரேசில் மற்றும் வெனிசுலா நாட்டு நிறுவனங்களும் முதலீடு செய்தன.

இவ்வாறாக, தனது சொந்த பலத்தையும், பலவீனங்களையும் கணக்கில் கொண்டு கியூபா சோசலிச பாதையில் முன் நோக்கி பயணிக்கிறது.

கட்சியே வழிநடத்துகிறது

கட்சிதான் மக்களின் பாதுகாவலன்; மக்களின் துணை; மக்களின் நம்பிக்கை. பாதுகாவலர்களை கொண்ட அமைப்பு என்பது அடிப்படையானது. புரட்சிக்கு எது பாதுகாப்பை தருகிறது? கட்சிதான். புரட்சியை நிரந்தரப்படுத்துவது எது? புரட்சிக்கு எதிர்காலம் தருவதும், புரட்சிக்கு உயிர் கொடுப்பதும், புரட்சிக்கு எதிர்காலத்தை உறுதி செய்வதும் கட்சியே. கட்சி இல்லாமல் புரட்சி இருக்காது. என்றார் ஃபிடல் காஸ்ட்ரோ (1974).

கியூபாவில் ஒரு சமூக அமைதியின்மையை உருவாக்கிட எதிரிகள் எப்போதும் தயாராக இருக்கிறார்கள் என்ற எச்சரிக்கை உணர்வு அவசியம் என்று நினைவூட்டியுள்ளது இந்த மாநாடு. கியூபா ஒரு மிகச் சிறிய பொருளாதாரம். தனக்கென எந்த உற்பத்தியை மேற்கொண்டாலும், அதற்காக அது பல நாடுகளில் இருந்து தொழில்நுட்பமும், கச்சாப் பொருட்களும் பெற்றாக வேண்டும். மேலும், தன் நாட்டின் தேவை போக அதிகமான உற்பத்தியை வேறு நாட்டு சந்தைக்கு அனுப்பியாக வேண்டும். எனவே நிதி மூலதனமும், உலகச்சந்தையும் தவிர்க்கக்கூடியவை அல்ல. சுற்றுலாவும், நவீன தொழில்நுட்பத்தின் பெருக்கமும் அதிகரிக்கும்போது, அது கியூப குடிமக்களுடைய வாழ்க்கையில் தாக்கம் செலுத்தும். அதற்கேற்ப மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் கடமையும் கட்சியிடம் உள்ளது.

இதையெல்லாம் உணர்ந்த மாநாடாகத்தான், ‘தொடர்ச்சியின்’ மாநாடு அமைந்திருப்பதை காண்கிறோம். சமூக ஊடகங்களின் வளர்ச்சி வரைக்கும் அனைத்தும் அங்கே விவாதிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் ஒற்றுமையை சீர்குழைத்து, அமைதியின்மையை உருவாக்க முன்னெடுக்கும் ஏகாதிபத்திய முயற்சிகள் வீழ்த்தப்படும் என்பதை இந்த மாநாடு மிகத் தெளிவாகவே அறிவித்தது.

மிகுவேல் டியாஸ் கேனல் இவ்வாறு பேசினார், “கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றை இரண்டே வரிகளில் சுருங்கக் கூறுவதானால், ‘மக்களும் ஒற்றுமையும்’ எனலாம். அதனால்தான் கியூபாவின் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் கட்சியாக இருந்ததே இல்லை. கம்யூனிஸ்ட் கட்சியானது… பெரும் அநீதியும், ஏற்றத்தாழ்வும் நிலவிய நாட்டின் நிலைமையை மாற்றியமைக்க விரும்பிய மனித நேயசக்திகளின் அனைவரின் ஒற்றுமையில்தான் கம்யூனிஸ்ட் கட்சி உருவானது. ஒரு கட்சியின் உறுதிப்பாடு என்பது நாட்டின் சக்தியை வளர்ச்சியை நோக்கி திரட்டி செலுத்தும் தன்மையே ஆகும்.

“அவர்கள் தொடர்ந்து முன் செல்கின்றார்கள்.”

***

மார்க்சிஸ்ட் செயலியில் புதிய அப்டேட்

மார்க்சிஸ்ட் இதழ் இணையத்திலும், அலைபேசியில் செயலியாகவும், ஒலி வடிவத்திலும் கிடைத்து வருகிறது. இப்போது புதிய வசதியாக மின் நூல் வடிவிலும் மார்க்சிஸ்ட் இதழ்களை வாசிக்க முடியும். இந்த வசதியை உள்ளடக்கி செயலியில் புதிய அப்டேட் செய்திருக்கிறோம்.

அப்டேட் செய்ய : https://play.google.com/store/apps/details?id=com.marxist.android

மின் நூல் வடிவில் மார்க்சிஸ்ட் இதழ்களை வாசிப்பதற்கான புதிய வசதியை நவம்பர் 17, 2019 அன்று திருப்பூரில் நடைபெற்ற 102 வது நவம்பர் புரட்சி தின பேரணி பொதுக்கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் அறிமுகப்படுத்த, சம்சீர் அகமது பெற்றுக்கொண்டார்.

இந்த செயலியில் தனித்தனியாக கட்டுரை வடிவத்தில் மார்க்சிஸ்ட் கட்டுரைகளை படிக்கலாம். ஒலிக் கோப்புகளை சேமித்து வைக்கலாம். மின் நூல் வடிவிலும் புத்தகங்களை படிக்கலாம். அவ்வாறு புத்தகமாக வாசிக்கும்போது எழுத்து அளவு, வண்ணம் மற்றும் இரவு/பகல் என கண்ணுக்கு ஏற்ற இதமான அமைப்புகளை மேற்கொள்ள முடியும்.

மார்க்சிஸ்ட் செயலி சேவை முற்றிலும் இலவசமாகும். மின் நூல் சேவை வசதியும் மார்க்சிஸ்ட் வாசகர்களுக்கு முற்றிலும் இலவசமாகவே வழங்குகிறோம்.

செயலி மற்றும் இணையதளம் தொடர்பான தங்கள் கருத்துக்களை tamilmarxist@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். குறைகள் இருந்தாலும் தெரிவிக்கலாம்.

மாவட்டங்களில் செயல்படும் வாசகர் வட்டங்களில் இணைந்து, கட்டுரைகளை விவாதித்திடுங்கள். மார்க்சிய வாசிப்பை பரவலாக்குங்கள்.

உள்ளிருந்தே கைப்பற்றப்பட்ட அரசு அய்ஜாஸ் அகமத் – உடன் ஓர் உரையாடல்

ஜிப்ஸன் ஜான், ஜிதேஷ், எ.எம்

தமிழில்: வீ.பா. கணேசன்

இந்தியாவைச் சேர்ந்த மார்க்சிய சிந்தனையாளரான அய்ஜாஸ் அகமத் நவீன வரலாறு, அரசியல், கலாச்சாரம் ஆகியவை குறித்த கொள்கைகளுக்கான நிபுணராக சர்வதேச அளவில் புகழ்பெற்றவர். இந்தியா, கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் பல்கலைக் கழகங்களில் பேராசிரியராக பணியாற்றிய அவர், தற்போது இர்வைன் பகுதியில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஒப்பியல் இலக்கியத் துறையில் மதிப்புமிகு பேராசிரியராக விமர்சனக் கொள்கையை பயிற்றுவித்து வருகிறார்.

இந்துத்துவ வகுப்புவாதம், பாசிஸம், மதச்சார்பபின்மை, இந்தியப் பின்னணியில் இடதுசாரிகளின் எதிர்காலத்திற்கான வாய்ப்புகள் குறித்த கேள்விகளே இந்தப் பேட்டியில் பெரும் பகுதியாக எழுப்பப்பட்டன. மற்ற பகுதிகளில் உலகமயமாக்கல், உலகளாவிய அளவில் இடதுசாரிகளுக்கான வாய்ப்புகள், அண்டோனியோ க்ராம்சியின் சிந்தனைகளை சரியாகவும், தவறாகவும் பயன்படுத்துவது, இன்றைய சூழலில் கார்ல் மார்க்சின் சிந்தனைகளின் பொருத்தப்பாடு ஆகியவை குறித்த தனது கருத்துக்களையும் அவர் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றப் பொதுத்தேர்தலுக்கு முன்பாக இந்தப் பேட்டி நடத்தப்பட்டு, தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் மேம்படுத்தப்பட்டது.

ஆர்.எஸ்.எஸ்-ம் பாஜக உள்ளிட்ட அதன் பரிவாரங்களும் மிகவும் தனித்துவமான முறையில் பாசிஸ தன்மைகளை வெளிப்படுத்துகின்றன எனவும் அய்ஜாஸ் அகமத் வாதிடுகிறார். எனினும் இந்தியாவின் தாராளவாத நிறுவனங்கள் தற்போது வெற்றுக் கூடுகளாக மாறிவிட்டபோதிலும், இந்திய அரசு இன்னமும் தாராளவாத முறைமையின் அடிப்படையில்தான் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. தனித்துவமான தத்துவார்த்த நிலைபாட்டின் அடிப்படையில்தான் இந்தக் கருத்தாக்கத்தை அவர் முன்வைக்கிறார்.

ஜனநாயகத்திற்கும் தாராளவாதத்திற்கும் இடையில் அடிப்படையான முரண்பாடு நிலவுகிறது என்றும் அய்ஜாஸ் அகமத் நம்புகிறார். எனினும் அதீத வலதுசாரிகளுக்கும் அரசின் தாராளவாத நிறுவன வடிவத்திற்கும் இடையே அத்தகைய முரண்பாடு எதுவும் நிலவவில்லை என்றும் அவர் குறிப்பிடுகிறார். இத்தகைய தாராளவாதம்தான் ஜனநாயகத்தை பலவீனப்படுத்தி அதீத வலதுசாரிகளை வலுப்படுத்துகிறது. எனவேதான் அமெரிக்கா, இஸ்ரேல், துருக்கி, இந்தியா போன்ற பலவகையான உலக நாடுகளிலும் அதீத வலதுசாரி சக்திகள் தாராளவாத நிறுவனங்களின் மூலமாக ஆட்சி செலுத்தவும் முடிகிறது.

பாசிஸம் குறித்த கேள்வியை இருவேறுபட்ட சிந்தனைச் சட்டகத்தில் இருந்து பார்க்க வேண்டும் என்றும், பெரும்பாலான நேரங்களில் இந்தச் சட்டகங்கள் ஒன்றோடு ஒன்று குழப்பிக் கொள்ளப்படுகின்றன என்றும் அவர் நம்புகிறார். அவற்றில் ஒரு சிந்தனைச் சட்டகத்தில் இருந்து பார்க்கும்போது ஏகாதிபத்திய சகாப்தம் முழுவதிலும் முதலாளித்துவ அரசியலின் அனைத்து வடிவங்களிலுமே பாசிஸம் என்ற போக்கு நிரந்தரமான உள்ளீடாக இருந்து வருவதைக் காண முடியும். உதாரணமாக, தாராளவாத/ நவதாராளவாத முதலாளித்துவத்தின் ஆட்சியில் பாசிஸ போக்குகளை வெளிப்படுத்தி வரும் எண்ணற்ற அரசியல் கட்சிகள் ஐரோப்பா கண்டம் முழுவதிலுமே மிக இயல்பாக செயல்பட்டு வருவதைக் காண முடியும்.

எனினும் மேலே சொல்லப்பட்ட சிந்தனைச் சட்டகத்தின் குறுகிய பார்வையில் பார்க்கும்போது போர்களுக்கு இடையிலான காலப்பகுதியில், பிரத்தியேகமான சூழ்நிலைகளில், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் முழுமையான பாசிஸ அரசுகளும் இயக்கங்களும் எழுச்சி பெற்றன. இதற்கு அந்த நாடுகளில் நிலவிய வர்க்க சக்திகளின் பலாபலன் அத்தகையதாக இருந்தது. மூலதனத்தின் ஆட்சியை அச்சுறுத்தி வந்த மிக வலுவான புரட்சிகரமான தொழிலாளி வர்க்க இயக்கங்களுக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து விட, அரசின் தாராளவாத வடிவத்தை அகற்ற வேண்டியது அவசியமாக இருந்தது. கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலத்தில் வேறெந்த காலகட்டத்தையும் விட இன்று தொழிலாளி வர்க்க இயக்கங்கள் மிகவும் பலவீனமானவையாக உள்ள நிலையில் ஒரு பாசிஸ ஒழுங்குமுறை தேவையற்றதாக உள்ளது. இத்தகைய சூழலில் நரக வேதனையைத் தழுவியபடி அதீத வலதுசாரிகளும் தாராளவாத அமைப்புகளும் ஒன்றாக இருக்க முடியும்.

கேள்வி: மே 2019 தேர்தலில் நரேந்திர மோடி மீண்டும் மக்களின் ஒப்புதலைப் பெற்றிருக்கிறார். அவர் திரும்பவும் ஆட்சிக்கு வந்திருப்பதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியுடன் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான முக்கிய அம்சங்கள் என்ன? ஆர்.எஸ்.எஸ்.-பாஜகவின் இரண்டாவது முறை ஆட்சியின் கீழ் இந்தியாவின் எதிர்காலம் எத்தகையதாக இருக்கும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

நரேந்திர மோடியின் தலைமையில் நிச்சயமாக பாஜக மிகப்பெரும் தேர்தல் வெற்றியைப் பெற்றுள்ளது. ‘மக்கள் தீர்ப்பு’ என்று இதைச் சொல்லமுடியுமா என்பதும் கூட சந்தேகத்திற்குரிய ஒன்றுதான். மக்கள் தங்கள் தீர்ப்பைச் சொல்லவேண்டுமானால், உண்மைகளின் அடிப்படையிலான, அறிவுபூர்வமான, அரசியல் விவாதம் மக்களுக்குத் தேவைப்படுகிறது. அதைப் போன்றே எதிர்க்கட்சிகள் தங்களது மாற்றுக் கொள்கைகளை மக்களிடையே தெளிவாக எடுத்துரைப்பதற்கான அமைதியான, தெளிவான சூழலும் தேவைப்படுகிறது. அரசியல் கட்சிகள் உண்மைகளின் அடிப்படையில் அறிவுபூர்வமான மாற்றுக் கருத்துக்களை முன்வைக்க முடிந்தாலும் கூட, அவை மக்களிடம் சென்று சேரும் வாய்ப்பு இன்று இல்லை. ஏனெனில், இந்திய பெரு நிறுவனங்களின் பிடியிலுள்ள ஊடகமானது கிட்டத்தட்ட சங் பரிவார இயந்திரத்தோடு ஐக்கியமான ஒன்றாக மாறிவிட்டதோடு, உண்மைகளையும் கொள்கைகளையும் எவ்வித மாச்சரியமும் இன்றி வெளியிடுவது; மக்கள் நலனுக்கு உகந்த வகையில் செயல்படுவது என்ற தனது தொழில்முறை உறுதிப்பாட்டை இழந்துபோனதாகவும் மாறியுள்ளது. மக்கள் தங்கள் தீர்ப்பைத் தர முடிகின்ற ஜனநாயக பூர்வமான செயல்பாட்டிற்கு இதில் தொடர்புடைய, அனைத்து அமைப்புகளும், குறிப்பாக தேர்தல் ஆணையம், உயர்மட்ட நீதித்துறை, சட்டத்தை அமலாக்கும் அமைப்புகள் போன்றவை, நீதிநெறி முறைகளை, அரசியல் அமைப்புச் சட்ட மற்றும் சட்டரீதியான நெறிமுறைகளை, கறாராகக் கடைப்பிடிப்பனவாக இருக்க வேண்டும். ஆனால் நிலைமை அவ்வாறு இல்லை என்பது தான் உண்மை. இந்திய அரசியல் தளம் மிகவும் குறிப்பிடத்தக்க வகையில் ஜனநாயக நெறிமுறைகளை மிகுந்த உறுதியோடு கடைப்பிடித்த ஒரு காலமும் இருந்தது. எனினும் அத்தகைய மக்கள் திரள் கடந்த சில தசாப்தங்களாக இந்தியாவில் பெரும் போராட்டத்தை நடத்தி வருவதோடு, ஆண்டுகள் செல்லச் செல்ல மேலும் மேலும் அதிகமான வகையில் ஊழல்மிக்கதாக மாறி வருகிறது. “ஊழல் மிக்கதாக” என்பதை தேர்தலில் மிகப் பிரம்மாண்டமான வகையில் பணத்தைப் பயன்படுத்துவது என்ற பொருளில் மட்டுமே நான் குறிப்பிடவில்லை; தேர்தல் முடிவுகளைத் தீர்மானிப்பதில் அது மிக முக்கியமான ஓர் அம்சமாக இருக்கிறது என்பதும் உண்மை தான். எனினும் ஜனநாயகச் செயல்பாடு என்ற குறிப்பிடக்கூடிய செயல்பாட்டில் ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்த சீரழிவையே நான் அவ்விதம் குறிப்பிடுகிறேன். 2019 தேர்தல் முடிவுகள் தேர்தல் வெற்றியின் அளவுக்கும் ஜனநாயக ரீதியான அடிப்படை நெறிமுறைகள் என்பதற்கும் இடையேயான உறவுகள் முற்றிலுமாக மறைந்து போன ஒரு கட்டத்தை நாம் எட்டியிருக்கிறோம் என்பதை எடுத்துக் காட்டுவதாகவே தோன்றுகிறது.

மிகுந்த ஆச்சரியமூட்டும் வகையில் இந்திய அரசியல் அமெரிக்க மயமாகியுள்ளது. ஒரு புறத்தில் வழிகாட்டியும் பாதுகாவலருமாகத் தோற்றமளிக்கும் மகத்தான தலைவர் என்ற பிம்பம் உருவாக்கப்படுவதும் மறுபுறத்தில் அச்சத்தையும் பதற்றத்தையும் திட்டமிட்டு உருவாக்குவதும் வழக்கமானதொரு விஷயமாக மாறியிருக்கிறது. அரசியல் என்பது இப்போது இடைவெளியற்ற வகையில் தொலைக்காட்சி நிலையங் களாலும், கருத்துக் கணிப்புகளாலும், பிரம்மாண்டமான பிரச்சாரங்களாலும் பெருநிறுவனங்கள் பல ஆயிரம் கோடிக்கணக்கான ரூபாய்களை செலவழிக்கும் ஒரு விஷயமாக மாறிப் போயிருக்கிறது. இந்தப்பணத்தில் பெரும்பகுதி ரகசியமானது மட்டுமின்றி அடையாளம் காண முடியாத ஒன்றாகவும் இருக்கிறது. அமித் ஷா உள்துறை அமைச்சராக உள்ள நிலையில் குடிமக்கள், குடிமக்கள் அல்லாதவர்கள் குறித்த பதற்றமான சூழ்நிலை அதிகரித்துக் கொண்டே போவது அமெரிக்காவிற்குள் நுழையும் பொருளாதார ரீதியான அகதிகள் குறித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் இனவாத, கிட்டத்தட்ட இனவெறித்தனமான கொள்கைகளின் நகலாகவே தென்படுகிறது. இவை அனைத்தையுமே சங் பரிவாரங்கள் மூன்று வேறுபாடுகளுடன் அமெரிக்காவிடமிருந்து கற்றுக் கொண்டவைதான்: வெட்டவெளிச்சமான பதற்றச் சூழ்நிலையை உருவாக்குவது என்பதுதான் இந்தியாவிலுள்ள அனைத்துத் தொலைக்காட்சிகளின் விதிமுறையாக இருந்து வருகிறது; 2019-ம் ஆண்டில் பாஜகவின் செயல்பாட்டை வேகப்படுத்த உதவிய பணத்திற்கான ஆதாரத்தை கண்டுபிடிக்க முடியாது என்பதோடு அமெரிக்காவில் இவ்வாறு தேர்தலில் செலவழிக்கப்படும் தொகையை விட அது மிக அதிகமாகவே உள்ளது; நீதித்துறையினால் தண்டிக்கப்படுவோம் என்ற பயமேதுமின்றி, தீவிரமாகவும், இடைவிடாத வகையிலும் சங் பரிவாரம் தொடர்ந்து கட்டவிழ்த்து விடும் வன்முறை ட்ரம்ப்பின் மூர்க்கத்தனத்தை விடப் பல மடங்கு அதிகமாகும்.

“2019 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தினவா?” என்று கேட்டால், ஆம், 2014-ம் ஆண்டு தேர்தல் முடிவுகளைப் போலவே இந்தத் தேர்தலும் எனக்கு வியப்பை அளித்தது. அன்றாட தேர்தல் அரசியலில் நான் அதிக கவனம் செலுத்துபவன் அல்ல. எந்தவொரு தேர்தலிலும் எனது தனிப்பட்ட எதிர்பார்ப்புகள் என்பது இடதுசாரிகள், தாராளத்தன்மை கொண்ட இடதுசாரிகள் போன்ற எனக்கு வேண்டியவர்களிடமிருந்து பெற்ற அந்த மதிப்பீடுகள் என்னவென்று தெரியுமா? இருதரப்பினருமே மிகக் குறைந்த வித்தியாசத்தில்தான் வெற்றி பெறுவார்கள்; ஒரு வேளை தொங்கு பாராளுமன்றமாகவும் கூட அது இருக்கலாம். உடனடி எதிர்பார்ப்புகளில் இருந்து நான் விடுபட்ட உடனேயே கட்டமைப்பு குறித்த எனது ஆய்வின் அடிப்படை ஆதாரத்தை நோக்கி நான் திரும்பிச் சென்றேன். மதச்சார்பின்மை எப்போதுமே சிறுபான்மை நிலைபாடு கொண்டதுதான் மதச்சார்பின்மைக்கான உண்மையான பற்றுறுதி என்பது இந்திய சமூகத்திலும் அரசியலிலும் எப்போதுமே சிறுபான்மை நிலைபாட்டைக் கொண்டிருப்பதுதான் என்பதையும் இந்திய சமூகமானது எந்த அளவிற்கு இந்துமயமாக மாறியுள்ளது என்பதையும், எவ்வாறு வகுப்புவாத வன்முறையானது எப்போதுமே பாஜக மற்றும் அதன் கூட்டாளிகளுக்கு தேர்தலில் பெருமளவிற்குப் பலனளிக்க வழிவகுக்கிறது என்பதையும், இந்திய அரசின் முக்கியமான, தேர்தல் ஆணையம், உயர்மட்ட நீதித் துறை ஆகியவை உள்ளிட்ட, நிறுவனங்கள் அனைத்தும் மிக அதிகமான அளவிற்கு பாஜகவின் நலன்களுக்கு சேவை செய்வதாக மாறியுள்ளன என்பதையும் நான் எப்போதுமே வலியுறுத்தி வந்துள்ளேன். 2014-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்குப் பிறகு பெருமளவிலான போக்குகள் குறித்து மேலும் அதிகமான கருத்தோட்டங்களை உள்ளடக்கி 2015-ம் ஆண்டில் நான் எழுதிய கட்டுரையை சோஷலிஸ்ட் ரிஜிஸ்டர் இதழ் 2016-ம் ஆண்டில் வெளியிட்டது. அந்தக் கட்டுரை பிரிட்டன், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மறுபிரசுரம் செய்யப்பட்டது. இப்போது ஜூன் 7, 2019 தேதியிட்ட ஃப்ரண்ட்லைன் இதழிலும் “இந்தியா: தாராளவாத ஜனநாயகமும் அதிதீவிர வலதுசாரிப் போக்கும்” என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. இந்திய அரசியலின் முக்கியமான அம்சங்கள் என்று நான் சுட்டிக் காட்டியிருந்தவை மேலும் தீவிரமாகியுள்ளன என்பதையே இப்போது நடக்கும் நிகழ்வுகள் நிரூபிக்கின்றன.

தேர்தலில் ஒருபுறத்தில் காங்கிரஸிற்கு ஏற்பட்ட பின்னடைவும், மறுபுறத்தில் இடதுசாரிகளுக்கு ஏற்பட்ட சரிவும் மக்களவையில் பாஜகவிற்கு கிடைத்த பெரும்பான்மையைப் போன்றே முக்கியமானது என்று அந்த நேரத்தில் நான் குறிப்பிட்டிருந்தேன். தேர்தல்கள் நடப்பதற்கு நீண்ட நாட்களுக்கு முன்பாகவே முதலாளித்துவ பெரும்புள்ளிகளின் முழுமையான ஆதரவை பெற்றிருந்த முதல் இந்தியப் பிரதமராகவும் மோடி இருந்தார் என்பதையும் நான் சுட்டிக் காட்டியிருந்தேன். அமெரிக்காவை முன்மாதிரியாகக் கொண்டு இந்திய அரசியலை அதிபர் வகைப்பட்டதாக அவர் கட்டாயமாக மாற்றவில்லை என்ற போதிலும் முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தனது அதிபர் தேர்தலுக்காக செலவிட்ட தொகைக்கு இணையான தொகையை மோடி செலவழித்தார் என்பதும் முக்கியமானது.

அரசியலை ஆழமாக உற்று நோக்குபவர்கள் கூட இதில் கவனிக்காமல் விட்ட ஒரு விஷயம் என்னவெனில் இந்தத் தேர்தலுக்காக அவர் திரட்டிய பணமும், பெரு நிறுவனங்களிடமிருந்து எதிர்காலத்தில் திரட்ட அவர் திட்டமிட்டிருந்த தொகையும் கணிசமான அளவிற்கு ஆர்எஸ்எஸ், விஸ்வ இந்து பரிஷத், ஏன் பாஜகவிடமிருந்தும் கூட சுய உரிமை பெற்றவராக அவரை மாற்றியிருந்தது என்பதே ஆகும். ஏனெனில் பாஜகவின் தேர்தல் பிரச்சாரங்களுக்காக ஆர் எஸ் எஸ் அமைப்பு வழங்கிவரும் தொண்டர்களின் விசுவாசத்தை விலைக்கு வாங்கப் போதுமான பணம் அவரிடம் இப்போது இருக்கிறது. அப்படி இருக்கையில் பாஜகவின் இடைநிலை செயல்பாட்டாளர்களையும் கூட அவரால் எளிதாக விலைக்கு வாங்கிவிட முடியும். தங்களுக்கே ஆன தனி ஒரு உலகத்தை உருவாக்கிக் கொண்டுள்ள மோடி-ஷா இரட்டையரின் தோற்கடிக்க இயலாத தன்மைக்கு அவர்களிடம் இப்போது இருக்கும் அபரிமிதமான செல்வமும் கூட ஒரு விதத்தில் காரணமாகும்.

தாராளவாத நிறுவன கட்டமைப்புகளின் இருப்பை ஆர் எஸ் எஸ் அங்கீகரித்த போதிலும் அரசின் நிறுவனங்களை உள்ளிருந்தே கைப்பற்றி நீண்ட கால அரசை அமைக்கப் போராடுவது என்ற நடைமுறை உத்தியை மேற்கொண்டுள்ளது என்று மிகவும் விரிவாகவே நான் வாதிட்டு வந்திருக்கிறேன். 1960களில் இடதுசாரிகளின் புகழ்பெற்ற கோஷத்தை நினைவுபடுத்தும் வகையில் “நிறுவனங்களின் ஊடாக நீண்ட பயணம்” என்றும் கூட நான் அதைக் குறிப்பிட்டிருக்கிறேன். விரிவான அளவில் பார்க்கும்போது அதீத வலதுசாரிகளின் திட்டங்களுக்கும் தாராளவாத நிறுவன கட்டமைப்புகளுக்கும் இடையே அடிப்படையான முரண்பாடுகள் எதுவும் இல்லை. இந்த நிறுவனங்களை ஆர் எஸ் எஸ் கையிலெடுத்து அவற்றின் மூலம் ஆட்சி செலுத்த முடியும் என்றும் கூட நான் வாதிட்டிருக்கிறேன். எனது முந்தைய ஆய்வில் உள்ள இத்தகைய கருத்தாக்கங்கள் பலவற்றையும் கையிலெடுத்துக் கொண்டு இப்போதிருக்கும் நிலையைப் பற்றிய ஆய்வை நாம் முன்னெடுத்துச் செல்ல முடியும் என்றே நான் கருதுகிறேன். உதாரணமாக, பல்வேறு வகைகளிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் தேர்தல் மோசடிகளின் அளவு குறித்தோ அல்லது இந்திய அரசின் ஒவ்வொரு முக்கிய நிறுவனமும் எந்தவகையிலும் ரகசியம் வெளியே கசிந்துவிடாதபடிக்கு பாதுகாக்க பாஜக/ஆர் எஸ் எஸ் உடன் கூட்டாகச் செயல்படுவது குறித்தோ நான் வியப்படையவே இல்லை. ஏனெனில் அரசானது பெருமளவிற்கு உள்ளிருந்தே கைப்பற்றப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.

கசப்பான யதார்த்தங்கள்

இதுபற்றி மேலும் ஆழமான ஆய்விற்கு நாம் காத்திருக்கத்தான் வேண்டும். என்றாலும் ஒரு சில கசப்பான விஷயங்களை சொல்லியாக வேண்டும். முதலாவதாக, பாரதீய ஜனதா கட்சி உண்மையிலேயே ஒரு தேசிய கட்சியாக இப்போது உருவெடுத்திருக்கிறது. இந்த கட்டமைப்பின் நிலையான மையமாக மோடி-ஷா கூட்டணி இருக்கிறது.

இரண்டாவதாக, தனது சொந்த பிரிவின் நலன்களை, பெருநிறுவனங்களின் நலன்களை எல்லாம் மீறி மதச் சார்பின்மைக்காக கூட்டாகப் போராட வேண்டிய தேவை இருக்கும் நேரத்தில் இடதுசாரிகளைத் தவிர, வேறெந்த அரசியல் கட்சியுமே, காங்கிரஸ் உள்ளிட்டு, அதற்குத் தயாராக இல்லை. இத்தகைய அங்கீகரிப்பின் விளைவு என்னவெனில் இடதுசாரிகள் நம்பிக்கையோடு இணைந்து செயல்படுவதற்குரிய “மதசார்பற்ற கட்சிகள்’ என்ற எதுவுமே இல்லை என்பதுதான். அவர்கள் ஒவ்வொருவருக்குமே மதச்சார்பின்மை என்பது வசதிக்கேற்ற ஒரு விஷயம் மட்டுமே. இந்த விஷயத்தில் இடதுசாரிகள் மிகவும் முழுமையான வகையில் தனிமைப்பட்டுள்ளனர்.

மூன்றாவதாக, காங்கிரஸின் சரிவு என்பது உறுதியானது; அது மீண்டும் உயிர்பெற்று வர வேண்டுமெனில் மிகப்பெரும் மாற்றங்களை அது செய்ய வேண்டும். ஆனால் அதற்கான அறிகுறிகள் எதுவுமே கண்ணில் தென்படவில்லை.

நான்காவதாக, உத்திரப் பிரதேச மாநிலத்தில் சாதிய அரசியலின் இரண்டு மிகப்பெரும் அடையாளங்களாக இருக்கும் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளின் கூட்டு வலிமையை உடைத்தெறியும் அளவிற்கு மதரீதியான வெறிக்கூச்சல் மற்றும் சமூக நெறியாள்மை ஆகிய கூட்டணியின் அரசியல் வலுவாக உள்ளது என்பதையே உத்திரப் பிரதேச மாநில நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் நிரூபித்துள்ளன. தொடர்ச்சியான சலுகைகளின் மூலம் சாதிய முரண்பாடுகளை பெருமளவிலான இந்து அமைப்பிற்குள்ளேயே கட்டுப்படுத்தி வைத்து விட வேண்டும் என்பதே காந்தியில் இருந்து ஆர் எஸ் எஸ் வரையிலானவர்களின் கனவாக இருந்து வந்துள்ளது. ஒரு வகையில் சொல்வதென்றால் மேல் மட்ட, அடிமட்ட சாதிகள் சகவாழ்வு வாழ்வதற்கு ஒரு நடு சாதிக்கான தீர்வுதான் அது. இந்த விஷயத்தில் குஜராத் மாநிலத்தில் இருந்து நாட்டின் வடகிழக்குப்பகுதி வரையில் ஆர் எஸ் எஸ் பெற்றிருக்கும் பல வெற்றிகளில் மிக சமீப காலத்திய வெற்றியாகவே உத்திரப் பிரதேச தேர்தல் முடிவுகள் அமைகின்றன. சாதிப் பிரச்சனை ஏதாவதொரு வகையில் இந்துத்துவா திட்டத்தை வீழ்த்தி விடும் என்ற நமது ஆழ்ந்த நம்பிக்கையை நாம் மீண்டும் ஆழமாக மறுபரிசீலனை செய்யவேண்டியது அவசியம்.

இறுதியாக, விடுதலை, சீரமைப்பு ஆகியவற்றுக்கான அரசியலுக்கான எந்தவொரு வாய்ப்புக்கும் தொலைதூர நோக்கிலிருந்து பார்க்கும்போது மேற்கு வங்கத்தில் இடதுசாரி நோக்கங்கொண்ட வெகுஜன வாக்குகளின் சரிவு, அவற்றில் பெரும்பங்கு பாஜக நோக்கித் திரும்பியிருக்கக் கூடும் என்ற கருத்தில் உள்ள உண்மை ஆகியவை 2019-ம் ஆண்டின் மிகவும் கவலை தரத்தக்க நிகழ்வாகவே அமைகிறது. தாராளவாத அரசியலின் கொடுமைகளும் ஏமாற்றுக்களும் இந்த உலகின் பாவப்பட்ட மக்களை எந்த அளவிற்கு திசை திருப்ப முடியும் என்பதற்கு இது முதல் முறை உதாரணமும் அல்ல; அவ்வாறு நடைபெற்ற முதல் இடமாகவும் மேற்கு வங்க மாநிலம் இருக்கவில்லை திர்ணாமூல் காங்கிரஸ் மற்றும் பாஜக போன்ற இழிசெயல்புரியும் அரசியல் சக்திகளின் மோதல்களுக்கு நடுவே சிக்கும்போது அன்றாட பொருளாயத அவலங்களை எதிர்கொள்ளவே தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கும் நிராதரவான, நம்பிக்கை இழந்து போன, துயரத்தில் மூழ்கிப் போன மக்கள் என்னதான் செய்வார்கள்? தாராளவாத அரசியலின் சிதிலங்களில் மிகவும் தனிமைப்பட்டிருக்கும் இடதுசாரிகள் தங்கள் இருப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்கே போராட வேண்டியிருக்கும் என்று தேர்தலுக்கு முன்பாகவே நான் கூறியிருந்தேன். இப்போது தேர்தல் முடிவுகள் வந்தபிறகு, நிலைமை அதை விட மிகுந்த கவலைக்குரியதாகவே மாறியுள்ளது.

இடதுசாரிகளின் பங்கு

இவ்வாறு குறிப்பிட்ட நிலையில், இந்தியாவில் உள்ள இடதுசாரிகள் குறித்து மூன்று விஷயங்களை நான் வலியுறுத்த விரும்புகிறேன். ஒன்று வேறு எந்தவொரு கட்சியுடனும் ஒப்பிடமுடியாத வகையில் பரந்த அரசியல் அனுபவமும் ஆழ்ந்த ஸ்தாபனமும் அவர்களிடம் இருக்கிறது. இடதுசாரிகளின் பின்னடைவால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை சமூக ரீதியான இயக்கங்களும், அரசுமுறை சாரா அமைப்புகளும், அங்குமிங்குமாக செயல்பட்டு வரும் சிறு குழுக்களும் நிரப்பி விடக் கூடும் என்று யாரும் நினைத்தால் அத்தகைய ஒரு நிகழ்வு நடக்கவே நடக்காது. இரண்டாவதாக, ஏழைகளின், ஒட்டுமொத்த உழைக்கும் வர்க்கத்தின் பார்வையில் இருந்து தெளிவான நோக்கும், சமூகம் குறித்த முழுமையான புரிதலும் உள்ள ஒரே சக்தியாக இடதுசாரிகள் மட்டுமே உள்ளனர். அறிவுலகத்திலும் கலாபூர்வமான வாழ்க்கையிலும் இந்தியாவில் உள்ள இடதுசாரிகளின் இருப்பு மிகவும் அபரிமிதமான ஒன்றாகும். வேறு எந்தவொரு அரசியல் சக்தியும் இந்த விஷயத்தில் அதன் அருகில் கூட வரமுடியாது. மறுகட்டமைப்பைத் தொடங்குவதற்குத் தேவையான பேராற்றல் மிக்க துணிவு இப்போது அதற்குத் தேவைப்பட்ட போதிலும், தேவையான அடிப்படையான வள ஆதாரங்கள் இன்னமும் அதனிடம் இருக்கவே செய்கின்றன.

கடந்த ஐந்து ஆண்டுகளில்நடைபெற்ற அனைத்திற்கு பிறகு 2019தேர்தலின் முடிவுகள் பற்றி வியப்படைவதற்கு அடிப்படையில் எதுவுமில்லை; அடுத்த ஐந்து ஆண்டுகள் இதை விட மோசமாக இருப்பதற்கான வாய்ப்புகள் குறித்தும் கூட நாம் வியப்படைய வேண்டிய அவசியமில்லை. நமது நாட்டின் விடுதலைக்கான போராட்டத்தைத் தொடங்கி வைத்த யுகம் இப்போது முடிவடைந்து கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது. இருந்தாலும், மிக விரிவான வகையில் சேதமாகிவிட்ட ஒரு நாட்டையே நமது இளைஞர்கள் இப்போது பெறவிருக்கிறார்கள். அதை மீண்டும் புனரமைப்பதைத் தவிர வேறெந்த வழியும் அவர்களுக்கு இல்லை; அதையும் கூட அவர்கள் கீழே இருந்துதான் தொடங்க வேண்டியிருக்கிறது.

நன்றி: ஃப்ரண்ட்லைன்

அடுத்த இதழில்: இந்துத்வாவின் தாக்குதல்கள்

ஜூன் 2019 மார்க்சிஸ்ட் இதழில் …

உலகமயமாக்கல் காலத்தில் அதற்கு முந்தைய காலத்தைவிட நிலம் என்பது முதலாளித்துவத்தின் மூலதனத்  திரட்சிக்கான முக்கிய ஆதாரமாக விளங்குகிறது. ஏழை எளிய மக்களிடமிருந்து அரசே கார்ப்பரேட்டுகளுக்கு பிடுங்கிக் கொடுக்கிறது. காலனிய ஆட்சியின்போது  நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் தன்மை, கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது கொண்டுவரப்பட்ட  சட்டம், தற்போதைய பிஜேபி அரசு அதில் செய்துள்ள மோசடித்தனமான மாற்றங்கள் பற்றியும், நிலம் கையகப்படுத்தலுக்கு எதிராக மக்களின் நாடுதழுவிய  வலுவான போராட்டங்கள், அதன் வெற்றிகள் மற்றும் அதன் தேவைகள் பற்றி அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் இணைச் செயலாளர் தோழர் விஜூ கிருஷ்ணன் அவர்களின் கட்டுரையின் முதல்பகுதி விரிவாக பேசுகிறது.

கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு, குறிப்பாக மார்க்சிஸ்ட் கட்சிக்கு, சமீபத்திய தேர்தலில் கிடைத்த படிப்பினைகள், வலதுசாரிகளின் வெற்றியால் நாடு சந்திக்கவிருக்கும் சவால்கள், நாம் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து கட்சியின் மத்திய குழுவின் தேர்தல் பரிசீலனையை உள்ளடக்கியதாக தோழர் உ.வாசுகி அவர்களின் “17வது மக்களவை தேர்தல் முடிவுகள்: பின்னுக்குத் தள்ளப்பட்ட வாழ்வுரிமை பிரச்சனைகள் – உறுதிப்படுத்தப்பட்ட வலதுசாரித் திருப்பம்” கட்டுரை அமைந்துள்ளது.

சாதி மற்றும் இதர சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும், அரசியல் போராட்டங்களையும், வர்க்க போராட்டங்களையும் ஒன்றிணைத்தும் கொண்டு சென்ற தனது அனுபவங்களை தோழர் இ.எம்.எஸ் அவர்களின் “மீண்டுமொருமுறை சாதிகள், வர்க்கங்கள் குறித்து…” என்ற கட்டுரை பேசுகிறது.

தேர்தல் தோல்வியை ஒட்டுமொத்த தோல்வியாக பார்க்கும் போக்கை கடந்து, தேர்தலை எவ்வாறு பார்க்க வேண்டும்; முழுமையான சமூக விடுதலையை தேர்தல் மூலமாக மட்டுமே அடைந்து விட முடியாது என்கிற அதே நேரத்தில், தேர்தலை கம்யூனிஸ்டுகள் எப்படி அணுக வேண்டும் என்பதை விளக்கிடும் மார்க்ஸ் மற்றும் எங்கல்சின் கருத்துக்களை உள்ளடக்கியதாக தோழர் வீ.பா. கணேசன் அவர்களின் “தேர்தல் பற்றி மார்க்சும் எங்கல்சும்” என்கிற கட்டுரை அமைகிறது.

மார்க்சிய இயக்கவியல் பொருள்முதல் வாதத்தின் உண்மை தன்மையை நவீன அறிவியல் வளர்ச்சி தொடர்ந்து நிரூபித்து வருகிறது. அறிவியல் கண்டுபிடிப்புகள் ஒவ்வொன்றுமே உலகம் குறித்த மனிதனின் புரிதலை மேலும் விரிவுபடுத்துகிறது. இது முடிவில்லாமல் வளர்ந்து கொண்டும் வருகிறது. அத்தகைய ஒரு சிறந்த கண்டுபிடிப் பான கருந்துளை பற்றிய விளக்கங்களைத் தருவதாக “கருந்துளை: அறிதல், அறிவியல், இயக்கவியல் பொருள்முதல்வாதம்” என்கிற தோழர் இரா. சிந்தன் எழுதிய கட்டுரை அமைகிறது.

வாசகர்கள் மார்க்சிஸ்ட் இதழின் சந்தாவை உயர்த்திட முனையுமாறும், இதழ் குறித்து வாசகர் வட்டங்களில் வெளிவரும் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் ஆசிரியர் குழுவிற்கு தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

-ஆசிரியர் குழு

தேவிபிரசாத் நூற்றாண்டு சிறப்பு மார்க்சிஸ்ட் இதழில் …

தேவிபிரசாத் சட்டோபாத்யாயாவின் நூற்றாண்டை முன்னிட்டு (19.11.1918 – 8.5.1993)  சமீபத்தில் சென்னையில்  சிறப்பு  கருத்தரங்கம் நடைபெற்றது குறித்தும், அதில் முன்வைக்கப்பட்ட கருத்துரைகள் வரவிருக்கும் மார்க்சிஸ்ட் இதழில் பிரசுரிக்கப்படும் என்றும் சென்ற இதழில் அறிவித்திருந்தோம். கட்டுரைகளின் அளவு அதிகமாக இருந்தாலும், கட்டுரையின் உள்ளடக்கம் கருதி முழுமையாக கொண்டு வரும் நோக்கோடு இந்த இதழ் தேவிபிரசாத் சட்டோபாத்யாயாவின் நூற்றாண்டு சிறப்பிதழாக கொண்டுவரப்படுகிறது.

இவ்விதழில் தேவிபிரசாத் சட்டோபாத்யாயாவின் பங்களிப்புகள் குறித்து கருத்தரங்கில் முன்வைக்கப்பட்ட இரண்டு கட்டுரைகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. 

 “அறிவியல், தத்துவம் – ஊடாடல்: தேவிபிரசாத் சட்டோபாத்யாயாவின் பதிவுகள்” என்ற முதல் கட்டுரையை  தோழர் பி கே.ராஜன் எழுதியுள்ளார். சற்று நீளமான கட்டுரையானாலும், நிதானமாக படித்து உள்வாங்க வேண்டிய கட்டுரையாகும் இது. பண்டைய இந்திய தத்துவத்தில் அறிவியல், கணிதம், மருத்துவம்  உள்ளிட்டவற்றின் பங்கு பாத்திரம் பற்றிய சட்டோபாத்யாயாவின் பதிவுகளை இக்கட்டுரை சிறப்பாக எடுத்தியம்புகிறது.

 “வேதாந்தம் குறித்து சட்டோபாத்யாயா” என்ற  பேரா. இரா. முரளியின்  கட்டுரை இந்திய தத்துவத்தில் வேதங்கள் முன்வைத்த கருத்துமுதல்வாதத்தை எதிர்த்த பொருள்முதல்வாதப் போக்கையும், கடந்த காலத்தை கண்மூடித் தனமாகப் புனிதப்படுத்தும் போக்கையும் சட்டோபாத்யாயா சுட்டிக்காட்டி விளக்கும் விதத்தை விதந்து பேசுகிறது.

1982 ஆம் ஆண்டு ஏப்ரல்  மாத “சோஷியல் சயின்டிஸ்ட்” இதழில் தேவிபிரசாத் சட்டோபாத்யாயாவின் “தத்துவவாதி லெனின்” என்ற நூல் குறித்து தோழர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் விரிவான விமர்சனக் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார்.   நூல் விமர்சனம் என்றாலும் தோழர் இ.எம்.எஸ். பல தத்துவார்த்த விவாதங்களை இதில் கொண்டுவந்துள்ளதன் அவசியத்தை கருத்தில் கொண்டு இங்கு தோழர் ச.லெனின் மொழியாக்கத்தில் பிரசுரிக்கப்படுகிறது.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தமிழ் மாநில மாநாட்டில் வெளியிடப்பட்ட தோழர் என்.குணசேகரன் அவர்களின் “மறுவாசிப்பில் திராவிட இயக்கம்” என்ற நூல் குறித்த விமர்சனத்தை ஆய்வாளர் சூரியன் அவர்கள் வழங்கி யுள்ளார். மேலும் விவாதிக்க வேண்டிய பல அம்சங்களும் இதில் குறிப்பிடப் பட்டுள்ளன.

ஏகாதிபத்திய தலையீட்டின் புதிய வடிவம்: வெனிசுவேலாவில் அமெரிக்கத் தலையீடு” என்ற தோழர் பிரபாத் பட்நாயக்கின் கட்டுரை காலத்தின் தேவை கருதி “பீப்பிள்ஸ் டெமாக்ரசி” இதழில் இருந்து தோழர் கிரிஜா அவர்களின் மொழி பெயர்ப்பில் வெளியாகிறது.

மார்க்சிய சொல்லகராதியின் மூன்றாம் பகுதியாக, இயக்கவியலின் முதல் விதியான “அளவு மாற்றம் தன்மை மாற்றத்திற்கு இட்டுச் செல்லும்” என்ற விதி இந்த இதழில் விளக்கப்பட்டுள்ளது.

“மார்க்சிஸ்ட்” இதழின் சந்தா சேர்ப்பில் வாசகர்கள் கவனம் செலுத்திடுமாறும், வாசகர் வட்டங்களில் வரும் கருத்துக்களை ஆசிரியர் குழுவிற்கு தெரியப்படுத்து மாறும் கேட்டுக்கொள்கிறோம்.

-ஆசிரியர்குழு

(ஏப்ரல் 2019)

மதச்சார்பின்மையை காக்க சமரசமின்றி போராடும் மார்க்சிஸ்ட் கட்சி

(குரல் : கணேசன்)

  • அன்வர் உசேன்

இந்திய அரசியல் இயக்கங்களில் மதச்சார்பின்மையை காக்க துளி சமரசமும் இல்லாமல் போராடுவது மார்க்சிஸ்ட் கட்சிதான் எனில் மிகை அல்ல. மதச்சார்பின்மை என்பது இந்திய ஜனநாயகத்திற்கும் ஒற்றுமைக்கும் மிகவும் இன்றியமையாத கோட்பாடு என கட்சி ஆழமாக மதிப்பீடு செய்துள்ளது. எனவேதான் தனது திட்டத்திலேயே கட்சி கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது:

“மதச்சார்பினமை கோட்பாடுகள் அமலாக்குவதற்கு கட்சி சமரசமில்லாத போராட்டத்தை நடத்தும். இந்த கோட்பாடுகளிலிருந்து நழுவுவதற்கு செய்யப்படும் மிகச் சிறிய முயற்சியை கூட அம்பலப்படுத்த வேண்டும்; அதற்கு எதிராக போராட வேண்டும்.”  (பாரா: 5.8)

அனைத்து மதங்களையும் சமமாக பாவிப்பதுதான் மதச்சார்பின்மை என முதலாளித்துவ கட்சிகள் முன்வைக்கின்றன. மாறாக அரசின் செயல்பாடுகளிலும் அரசியலிலும் மதம் தலையிடக்கூடாது என்பதுதான் உண்மையான மதச்சார்பின்மை என கட்சி திட்டம் அழுத்தமாக முன்வைக்கிறது.

மதச்சார்பின்மையை பாதுகாக்க மதவாதத்தை எதிர்த்து மூன்று தளங்களில் மார்க்சிஸ்ட் கட்சி போராடுகிறது. அவை:

  1. சித்தாந்த கருத்தியல் தளம்
  2. அரசியல் தளம்
  3. நடைமுறை போராட்ட களம்.
சங்பரிவாரத்திற்கு எதிராக கருத்தியல் போராட்டம்!

சித்தாந்த கருத்தியல் தளத்தில் சங்கபரிவாரம் கூடுதல் முனைப்புடன் செயல்படுகிறது. கடந்த கால வரலாற்றை மாற்றி எழுத கடும் முயற்சிகள் நடக்கின்றன. குறிப்பாக இந்து-முஸ்லீம் ஒற்றுமை குறித்த அனைத்து வரலாற்று பதிவுகளையும் அழிக்க முயல்கின்றனர்.

இந்திய வரலாற்றின் மத்திய காலம் முரண்பாடுகளும் ஒற்றுமையும் கலந்த கலவையாகவே இருந்தது. சங்பரிவார அமைப்புகள் திட்டமிட்டு ஒற்றுமை அம்சங்களை மக்களின் கவனத்திற்கு வருவதை தடுக்கின்றனர். முரண்பாடுகளை மட்டுமே மிகைப்படுத்தி பொய் பிரச்சாரம் செய்கின்றனர். இதற்கு மாறாக மார்க்சிஸ்ட் கட்சியும் இடதுசாரி கருத்தியல் வல்லுநர்களும் மத்தியகாலத்தின் அனைத்து அம்சங்களையும் மக்களிடம் கொண்டு செல்கின்றனர். குறிப்பாக ஒற்றுமை அம்சங்களுக்கு அழுத்தம் தருகின்றனர்.

ஆங்கிலேயர்களுக்கு எதிராக 1801 மற்றும் 1806ல் நடந்த தென்னிந்திய கிளர்ச்சிகளும் 1857ல் நடந்த வட இந்திய கிளர்ச்சியும் மிக வலுவான இந்து- முஸ்லிம் ஒற்றுமை எனும் அடித்தளத்தில் பிரிட்டஷாருக்கு சவால்விட்ட மாபெரும் போராட்டங்கள் ஆகும். இந்துமுஸ்லிம்களிடையே உருவான இந்த மகத்தான ஒற்றுமையின் எந்த தகவலும் மக்களுக்கு சென்று அடையக் கூடாது என சங் பரிவாரம் கண்ணும் கருத்துமாக உள்ளது.

எனவேதான் வரலாற்றை மாற்றி எழுத கடுமையான முயற்சிகள் நடக்கின்றன. இதற்கு எதிராக மார்க்சிஸ்ட் கட்சி வலுவான கருத்தியல் போராட்டத்தை தொடர்ந்து சமரசமில்லாமல் நடத்துகிறது. இந்த கருத்தியல் போராட்டம் மத ஒற்றுமையையும் மதச்சார்பின்மையையும் வலுப்படுத்திட உதவும் என கட்சி நம்புகிறது.

சங்பரிவாரத்தின் அரசியல் அதிகாரத்தை தடுத்த மார்க்சிஸ்ட் கட்சி:

சங் பரிவாரத்தின் அரசியல் முகமாக விளங்குவது பாரதிய ஜனதா கட்சி ஆகும். பா.ஜ.க. ஆட்சி அதிகாரத்தில் இருந்தால் தனது இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை அமலாக்குவதற்கு பொன்னான வாய்ப்பு கிடைக்கும் என்பதை ஆர்.எஸ்.எஸ் அறிந்திருந்தது. ஆனால் மார்க்சிஸ்ட் கட்சி வாய்ப்பு கிடைத்த பொழுதெல்லாம் பா.ஜ.க. அரசியல் அதிகாரத்தில் அமர்வதை தடுத்துள்ளது.

1977ல் ஜனதா கட்சி மத்தியில் ஆட்சி செய்தது. ஜனதா கட்சிக்குள் ஆர்.எஸ்.எஸ்.ல் உறுப்பினராக இருப்பது குறித்து முரண்பாடுகள் வெடித்தன. . ஜனசங்கம் மற்றும் பழைய காங்கிரஸ் ஆர்.எஸ்.எஸ். பக்கமும் ஏனையோர் எதிர் பக்கமும் நின்றனர். ஆர்.எஸ்.எஸ்.க்கு எதிராக நின்ற பிரிவை கட்சி ஆதரித்தது. இதன் மூலம் சங்பரிவாரம் அரசு இயந்திரத்தில் தொடர்ந்து பங்கு பெறுவதை கட்சி தடுத்தது.

1989ல் வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணி ஒரு பக்கம் இடதுசாரிகளின் ஆதரவும் மறுபக்கத்தில் பா.ஜ.க.வின் ஆதரவுடன்தான் ஆட்சி அமைக்க முடியும் எனும் சூழல் உருவானது. எனவே வி.பி.சிங் ஆட்சியில் வலுவான பங்காளியாக இணைந்திட 85 உறுப்பினர்களை கொண்டிருந்த பா.ஜ.க. கடும் முயற்சி செய்தது. பா.ஜ.க. ஆட்சியில் பங்கேற்றால் தேசிய முன்னணிக்கு ஆதரவு இல்லை என மார்க்சிஸ்ட் கட்சி வலுவான நிலைபாடு எடுத்தது. இதன் விளைவாகவே பா.ஜ.க. வெளியிலிருந்து ஆதரவு தரவேண்டிய நிலை ஏற்பட்டது.

தாம் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடுவோம் எனும் இறுமாப்புடன்தான் பா.ஜ.க. 2004ம் ஆண்டு தேர்தலை சந்தித்தது. ஆனால் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. பா.ஜ.க.வின் ஆட்சியை தடுத்திட மார்க்சிஸ்ட் கட்சியும் இடதுசாரிகளும் காங்கிரஸ் கூட்டணிக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்தன. இந்திய மக்கள் அளித்த இந்த மகத்தான ஆதரவை காங்கிரஸ் கூட்டணி சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. நவீன பொருளாதார கொள்கைகளில் கொண்ட மோகத்தால் 2014ம் ஆண்டு ஆட்சியை பா.ஜ.க.விற்கு தாரை வார்த்த்து காங்கிரஸ்!

பாபர் மசூதி இடிப்பும் பா.ஜ.க. ஆட்சிகள் கலைப்பும்:

இந்திய மக்களின் மத ஒற்றுமையை வலுவாக சீர்குலைத்தது இரு நிகழ்வுகள். ஒன்று 1992ல் பாபர் மசூதி இடிப்பு. இரண்டாவது 2000ம் ஆண்டு குஜராத் கலவரங்கள். முன்னதாக ராஜிவ் காந்தி ஆட்சி மதச்சர்பின்மையை சீர்குலைக்கும் விதத்தில் சில தவறுகளை செய்தது. ஷா பானு வழக்கில் முஸ்லிம் மதவாத அமைப்புகளுக்கு ஆதரவாக சட்ட திருத்தமும் அதனை தொடர்ந்து  இந்து மதவாத அமைப்புகளுக்கு இராமர் கோவில்- பாபர் மசூதி வளாகத்தில் செங்கல் பூஜை அனுமதியும் ராஜிவ் காந்தி ஆட்சி கொடுத்தது. 1990ல் மதவாதத்தை வலுப்படுத்தும் நோக்கில் அத்வானி ரதயாத்திரை நடத்தினார். இது இறுதியில் நரசிம்மராவ் ஆட்சியில் பாபர் மசூதி இடிப்பில் முடிந்தது.

இந்த கால கட்டம் முழுதும் மார்க்சிஸ்ட் கட்சி மதச்சார்பின்மையை பாதுகாக்க வலுவான முயற்சிகளை எடுத்தது. இந்தியா முழுதும் உள்ள மதச்சார்பின்மை சக்திகளை திரட்டியது. அத்வானி ரத யாத்திரை மேற்கு வங்கத்தில் நுழைந்தால் அத்வானி கைது செய்யபப்டுவார் என தோழர் ஜோதிபாசு எச்சரித்தார். அகில இந்திய அளவிலும் ஒவ்வொரு பகுதியிலும் மதச்சார்பின்மைக்காக கட்சி செய்த பிரச்சாரங்கள் மிக ஆழமானவை! குஜராத் கலவரங்களின் கொடூர தன்மைகளை முழுதும் சேகரித்து ஆவணப்படுத்தி அவற்றை இந்திய மக்களின் கவனத்திற்கு கட்சி கொண்டு வந்த்து.

1992ம் ஆண்டு பாபர் மசூதி இடிப்பை தொடர்ந்து அரசியல் சட்டத்திற்கு விரோதமாக செயல்பட்டதற்காக உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள பா.ஜ.க. ஆட்சிகளை கலைக்க வேண்டும் எனும் கோரிக்கை வலுவாக எழுந்தது. மக்களால் தேர்நெடுக்க்ப்பட்ட மாநில அரசாங்கங்ககளை மத்திய அரசாங்கம் அகற்ற கூடாது என்பதுதான் மார்க்சிஸ்ட் கட்சியின் வலுபவான நிலை! மத்திய அரசாங்கத்தின் ஆட்சி கலைப்புக்கு முதல் பலி 1957ல் தோழர் ஈ.எம்.எஸ். தலைமை தாங்கிய அரசாங்கம்தான்! பல முறை மத்திய அரசாங்கம் மாற்று கொள்கைகளை கொண்ட மாநில அரசாங்கங்களை கலைத்துள்ளது. இந்த அரசியல் சர்வாதிகாரத்தை கட்சி கடுமையாக எதிர்த்து வந்துள்ளது.

எனினும் பாபர் மசூதி இடிப்பை அமனுமதித்த உ.பி. பா.ஜ.க. அரசாங்கம் மதச்சார்பின்மை மீது மிகப்பெரிய தாக்குதலை தொடுத்தது. அரசியல் சட்டத்தை அப்பட்டமாக மீறியது. மசூதியை பாதுகாப்போம் என உச்ச நீதிமன்றத்தில் தந்த வாக்குறுதியை உதாசீனப்படுத்தியது. இதே நிலைதான் ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச அரசாங்கங்கங்கள் எடுத்தன. எனவே இந்த அரசாங்கங்கங்கள் கலைக்கப்பட்ட பொழுது மதச்சார்பின்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில் கட்சி இதனை வரவேற்றது. எனினும் இது ஒரு விதிவிலக்கு எனவும் எல்லா சூழல்களுக்கும் இதனை பொருத்துவது கூடாது எனவும் கட்சி கருதியது.

மதவாத கட்சியான பா.ஜ.க. தனது சுயநலனுக்காக அப்துல் கலாம் அவர்களை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வைத்தது. தி.மு.க. காங்கிரஸ் உட்பட பல கட்சிகள் அப்துல் கலாமை ஆதரித்த பொழுதும் மார்க்சிஸ்ட் கட்சியும் இடதுசாரி கட்சிகளும் எதிர் வேட்பாளரை களம் இறக்கின. பிரச்சனை அப்துல் கலாம் அல்ல! மாறாக மதசார்பின்மைதான் பிரச்சனை! பா.ஜ.க. முன்நிறுத்தும் ஒரு வேட்பாளரை எப்படி ஆதரிக்க முடியும்?

மதச்சார்பின்மை பாதுகாக்க உயிர் தியாகம்

மதச்சார்பின்மையை பாதுகாக்க கருத்தியல் மற்றும் அரசியல் போராட்டம் மட்டுமல்ல; நேரடி களத்திலும் மார்க்சிஸ்ட் கட்சி உயிர் தியாகம் செய்துள்ளது. மதவாதம் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள கொலை வெறி செயல்களில் ஈடுபடுகிறது. கட்சி அத்தகைய கொலை வெறி  தாக்குதல்களை சந்தித்துள்ளது.

குறிப்பாக கேரளா, மேற்கு வங்கம் மற்றும் தற்பொழுது திரிபுராவில் அத்தகைய தாக்குதல்கள் கட்சி மீது ஏவப்படுகின்றன. மிக அதிகமான தாக்குதல்கள் கேரளாவில் நடைபெற்றுள்ளன. நூற்றுக்கணக்கான ஊழியர்கள் மதவாதத்திற்கு எதிராகவும் மதச்சார்பின்மையை பாதுகாக்கவும் உயிர் தியாகம் செய்துள்ளனர்.

பெரும்பானமை மதவாதம் மட்டுமின்றி சிறுபான்மை மதவாதமும் இத்தகைய கொலை வெறி தாக்குதல்களில் ஈடுபடுகிறது. சமீபத்தில் தோழர் அபிமன்யூவின் கொலை இதற்கு உதாரணம். இதே போல 1980களில் சீக்கிய மதவாதம் அடிப்படையில் இயங்கிய காலிஸ்தான் அமைப்பினர் பல மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்களை கொன்றனர். மதச்சர்பின்மையை பாதுகாக்க இத்தகைய உயிர்தியாகம்  மார்க்சிஸ்ட் கட்சி அளவிற்கு வேறு எந்த இயக்கமும் செய்யவில்லை என உறுதியாக கூற முடியும்.

மதச்சார்பின்மையும் சிறுபான்மை மதவாதமும்:

மதச்சார்பின்மைக்கு ஆபத்து மிக அதிகமாக பெரும்பான்மை மதவாதத்திடமிருந்துதான் வருகிறது. எனினும் சிறுபான்மை மதவாதமும் மதச்சார்பின்மையை விரும்புவது இல்லை. மார்க்சிஸ்ட் கட்சி சிறுபான்மை மதவாதத்தை விமர்சிப்பது இல்லை எனும் குற்றச்சாட்டு கூறப்படுகிறது. இது உண்மைக்கு மாறானது.

1980களின் மத்தியில் ஷா பானு வழக்கு மதச்சார்பின்மைக்கு சவாலாக முன்வந்தது. முஸ்லீம் பெண்களுக்கு ஜீவனாம்சம் உரிமை இல்லை என முஸ்லீம் அமைப்புகள் போர் கொடி தூக்கின. ஏனைய பெண்களை போலவே முஸ்லிம் பெண்களுக்கும் ஜீவனாம்சம் உரிமை உண்டு என மார்க்சிஸ்ட் கட்சி உறுதியான நிலை எடுத்தது.

இந்த கால கட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியிடமிருந்து பிரிந்த அகில இந்திய முஸ்லீம் லீக் எனும் அமைப்பு கேரளாவில் இடது ஜனநாயக அணியின் ஒரு அங்கமாக இருந்தது. இந்த அமைப்பு ஷா பானு வழக்கில் முஸ்லீம் அமைப்புகளின் நிலைபாடை ஆதரிக்க வேண்டும் எனவும் ஜீவனாம்சம் உரிமை முஸ்லிம் பெண்களுக்கும் உண்டு எனும் தனது நிலையை கட்சி மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் வற்புறுத்தியது. ஆனால் கட்சி இதனை நிராகரித்துவிட்டது.

இதன் காரணமாக தான் இடது ஜனநாயக முன்னணியிலிருந்து விலகப்போவதாக அகில இந்திய முஸ்லீம் லீக் பயமுறுத்தியது. எனினும் கட்சி தனது நிலைபாடில் மாறவில்லை. பின்னர் அகில இந்திய முஸ்லீம் லீக் வெளியேறியது. இந்த அரசியல் நிகழ்வை ஆய்வு செய்த மார்க்சிஸ்ட் கட்சி ஒரு முக்கியமான முடிவை எடுத்தது. கேரளாவில் மட்டுமல்ல; இந்தியா முழுதும் மதம் அல்லது சாதியை மட்டுமே  சார்ந்து இயங்குகின்ற எந்த ஒரு கட்சியுடனும் தேர்தல் புரிதல் உட்பட எவ்வித அரசியல் புரிதலுக்கும் முயலக்கூடாது எனும் முடிவை கட்சி எடுத்தது. எனவேதான் முஸ்லீம் லீக் கட்சியுடன் எவ்வித தேர்தல் புரிதலுக்கும் மார்க்சிஸ்ட் கட்சி உடன்பட்டதே இல்லை.

முத்தலாக் உட்பட பல பிரச்சனைகளில் மார்க்சிஸ்ட் கட்சி முஸ்லீம் பெண்களுக்கு ஆதரவாக உறுதியான நிலை எடுத்துள்ளது. அதன் காரணமாக முஸ்லிம் மதவாதிகளின் தாக்குதல்களையும் கட்சி சந்தித்துள்ளது. அதே சமயத்தில் முத்தலாக் பிரச்சனையை கிரிமினல்மயமாக்கும் மோடி அரசாங்கத்தின் வஞ்சக அணுகுமுறையை கட்சி கடுமையாக எதிர்க்கிறது.

சமீபத்தில் நடந்த 22வது கட்சி மாநாடு அரசியல் தீர்மானம் சிறுபான்மை மதவாதம் குறித்து கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது: “பெரும்பான்மை மதவாதத்தின் தாக்குதல்கள் சிறுபான்மை மதவாதம் மற்றும் தீவிரவாதத்தின் நடவடிக்கைகளுக்கு களம் அமைத்து தருகின்றன. சிறுபான்மை மக்களின் நலன்களுக்கே கூட இத்தகைய போக்குகள் ஆபத்தானவை. இந்துத்துவா சக்திகளுக்கு எதிராக மக்களின் ஒற்றுமையை உருவாக்க (சிறுபான்மை மதவாதத்தை முன்நிறுத்தும்) இத்தகைய போக்குகளுக்கு எதிராக போராடுவது அவசியமாகிறது.” (பாரா 2.49)

முஸ்லீம் மக்களின் நலன்களுக்காக உறுதியாக குரல் தரும் அதே சமயத்தில் மதச்சார்பின்மையை பாதுகாக்க சிறுபான்மை மதவாதத்தை எதிர்க்க கட்சி தயங்கியது கிடையாது..

மதச்சார்பின்மை எதிர்கொள்ளும் நவீன சவால்கள்!

நிகழ்காலத்தில் குறிப்பாக மோடி ஆட்சிக்கு பின்னர் மதச்சார்பின்மைக்கு உருவாகியுள்ள புதிய சவால்களை உள்வாங்கிகொள்வது மிகவும் அவசியமாகிறது. சில பத்தாண்டுகளுக்கு முன்பு பெரும்பாலும் உயர் சாதியினரின் ஒரு பகுதியினர், குறிப்பாக மத்தியதர வர்க்கத்தினரின் ஒரு பிரிவினர் மதவாதத்தால் ஈர்க்கப்பட்டனர் . ஆனால் இன்று சாதாரண உழைக்கும் மக்களிடையேயும் மதவாதம் ஊடுருவியுள்ளது.

உதாரணத்திற்கு குஜராத்தில் முஸ்லீம்கள் மீதான தாக்குதல்களை திட்டமிட்டது  உயர் சாதியினர். ஆனால் களத்தில் அதனை அமலாக்கியது அதாவது முஸ்லிம்கள் மீது கொலை உட்பட வன்முறையை நிகழ்த்தியது பிற்படுத்தப்பட்ட, தலித் மற்றும் ஆதிவாசி மக்கள்தான் என்கிறார் ராம் புண்ணியானி எனும்  சமூக ஆய்வாளர். சிறுபான்மை மதவாதமும் உழைக்கும் மக்களை மதவாத செயல்களில் ஈடுபடுத்துகிறது. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித் மக்கள் உட்பட உழைக்கும் மக்களிடமும் கூட மதவாதம் தனது நச்சு கொடுக்குகளை பரவவிட்டுள்ளது..

மதவாதம் வெற்றிடத்தில் இயங்குவது இல்லை. நவீன தாராளமய பொருளாதார கொள்கைகள் அமலாக்கத்தின் பின்னணியில் மதவாதம் செயல்படுகிறது. நவீன தாராளமய பொருளாதார கொள்கைகள் மிக அதிகமாக ஏழைகளை உருவாக்குகிறன. தமது வாழ்வாதரத்தின் எதிர்காலம் குறித்து மிகப்பெரிய கவலை இப்பகுதி மக்களிடம் எழுகிறது. இந்த பொருளாதார சூழலை பயன்படுத்தி  மக்களின் ஒரு பிரிவினரை மதவாதம் ஈர்ப்பது மிகவும் எளிதாக நடக்கிறது. எனவேதான் மதசார்பின்மை கொள்கைகளை உழைக்கும் மக்களிடையே கொண்டு செல்வது மிக அவசியம் என மார்க்சிஸ்ட் கட்சி கருதுகிறது.

பொருளாதார நெருக்கடி அதிகமாக உள்ள காலகட்டத்தில் மோடி போன்ற இந்துத்துவ அரசியல்வாதி எதிர்காலம் குறித்து பொய்யான கனவுகளை முன்வைத்தால் மக்கள் அதனை நம்புகின்றனர். மதச்சார்பின்மையை பின்னுக்கு தள்ளிவிடுகின்றனர். 2014 தேர்தல் மற்றும் அதனை தொடர்ந்து மோடியின் வெற்றி இதனை தெளிவாக்குகிறது. மோடி ஆட்சியில் நவீனதாராளமய கொள்கைகள் வெறித்தனமாக செயல்படுத்தப்படுகின்றன.

அதே மோடி ஆட்சியில் மதவாதமும் பேயாட்டம் ஆடுகிறது. சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் தொடுக்க லவ்ஜிகாத், மாட்டிறைச்சி போன்ற புதிய பிரச்சனைகள் கட்டமைக்கப்படுகின்றன. கிறித்துவ சிறுபான்மை மக்களும் தாக்குதலுக்கு தப்பவில்லை. அரசு அதிகாரத்தை பயன்படுத்தி சங்பரிவாரம் அரசியல் சட்டத்திலிருந்து மதச்சார்பினமை கோட்பாடை அகற்ற எத்தனிக்கின்றனர்.

ஒரு காலத்தில் முதலாளிகளுக்கு மதச்சார்பின்மை காக்கப்பட வேண்டும் எனும் கவலை இருந்தது. 1992ம் ஆண்டு மும்பை கலவரத்தை கண்டித்து ஜே.ஆர்.டி. டாட்டா, ராமகிருஷ்ணா பஜாஜ் ஆகியோர் பகிரங்கமாக அறிக்கைவிட்டனர்.  ஆனால் இன்று நவீன தாராளமய கொள்கைகள் தரும் கொள்ளை இலாபம் முதலாளித்துவத்தின் கண்களை மறைத்துவிட்டது. “மோடி காந்திஜிக்கு இணையானவர்”” “ என அம்பானி பேசியது இதனை தெளிவாக்குகிறது. சமீபகால மதவாத தாக்குதல்களை கண்டித்து எந்த முதலாளியும் வாய் திறப்பது இல்லை.

மதவாதத்தின் ஊற்றுக்கண்ணாக நவீன தாராளமயம்:

மதவாதத்திற்கு உள்ள பல ஊற்றுக்கண்களில் மிக முக்கிய ஒன்றாக நவீன தாராளமய கொள்கைகள் உருவாகியுள்ளன. நவீன தாராளமயக் கொள்கைகளை ஆதரித்து கொண்டே மதவாதத்திற்கு எதிராக மட்டும் குரல் கொடுப்பது முழு பலன் அளிக்காது. மதவாதம், நவீன தாராளமய கொள்கைகள் இரண்டையுமே எதிர்த்து முறியடிக்க வேண்டிய தேவை உள்ளது. துரதிர்ஷ்ட வசமாகவோ அல்லது தமது வர்க்க நலன்கள் காரணமாகவோ இந்த முக்கிய உண்மையை பல அரசியல் சமூக அமைப்புகள் புரிந்து கொள்ள மறுக்கின்றன.

பா.ஜ.க.வை தோற்கடிப்பது மிக முக்கிய அரசியல் கடமைதான்! எனினும் பா.ஜ.க.வின் தோல்வி என்பது ஆர்.எஸ்.எஸ்.ன் தோல்வியாகவும் அமைந்துவிடும் எனும் உத்தரவாதம் இல்லை. இந்திய சூழலை பொறுத்தவரை பா.ஜ.க.வின் தோல்விக்கு பிறகும் நவீன தாராளமய கொள்கைகள் தொடர்ந்தால் அது மதவாதத்திற்கு உகந்த களமாகவே இருக்கும். எனவேதான் மதவாதம் மற்றும் நவீன தாராளமய கொள்கைகள் இரண்டையுமே முறியடிக்க வேண்டிய அவசியம் உள்ளது என மார்க்சிஸ்ட் கட்சி கருதுகிறது.

மதச்சார்பின்மையை பாதுகாக்கும் முழு கடமை உழைக்கும் மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. எனவேதான் மதச்சார்பின்மை குறித்த செயல்பாடுகள் உழைக்கும் மக்கள் வாழும் பகுதிகளில் வலுவாக கொண்டு செல்ல வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. மதவாதத்தை பண்பாடு, கலாச்சார தளங்களிலும் எதிர்கொள்வது அவசியம். மதவாதத்திற்கு எதிரான போரில்  அதன் நவீன வடிவங்கள் முன் நிறுத்தும் சவால்களை முறியடிப்பது அவசிய தேவை. இதனை மார்க்சிஸ்ட் கட்சி உணர்ந்துள்ளது. அதன் அடிப்படையில் மதச்சார்பின்மையை பாதுகாக்க கட்சி இடைவிடாது செயல்படுகிறது. உழைக்கும் மக்களை அணிதிரட்டி மதவாதத்தை தோற்கடிப்பதும் மதசார்பின்மையை உறுதிப்படுத்துவதும் சாத்தியமான ஒன்றே என மார்க்சிஸ்ட் கட்சி உறுதியாக நம்புகிறது.

தாமஸ் பிக்கெட்டின் மூலதனமும், கார்ல் மார்க்சும்

(குரல்: யாழினி)

வி. மீனாட்சிசுந்தரம்

தாமஸ் பிக்கெட்டி என்ற பிரெஞ்சு ஆய்வாளர் 15 வருடமாக சிரமப்பட்டு பொருளுற்பத்தி சம்மந்தமான புள்ளிவிவரங்களை சேகரித்திருக்கிறார். கடந்த 200 ஆண்டுகளில் மூலதனம் சொத்துக்களை ஒருபக்கமாக குவித்து வருகிறது. தனிநபர் வருமானத்தின் ஏற்றத்தாழ்வு இடைவெளியை அதிகப்படுத்தி வருகிறது என்பதை அந்த தரவுகள் காட்டுவதாக நிரூபிக்கிறார். முதலாளித்துவம் பேரழிவை சந்திக்கும் என்று மார்க்ஸ் கூறியதாகவும் அதனை இன்றைய முதலாளித்துவம் பொய்ப்பித்துவிட்டது என்றாலும் அவர் நம்பின வருமான ஏற்றத்தாழ்வு இடைவெளி விரியும் என்பது உண்மையாகிவிட்டது. அதன் விளைவாக நாடாளுமன்ற ஜனநாயகம் நிலவுகிற நாடுகளில் மக்களாட்சி மாண்புகள் சிறுமைப்படுத்தப்படுகிறது என்றும் அவர் வருத்தப்படுகிறார்.

முதலாளித்துவ உற்பத்தி முறையையும் பேணி மக்களாட்சி மாண்புகள் சிறுமைப்படாமல் காப்பாற்றுவது எப்படி என்பதே இந்த புத்தகம் முழுவதும் விரவிக் கிடக்கிறது.

இந்த புத்தகத்தின் தனித்துவம் என்னவென்றால் மார்க்சின் உபரிமதிப்பு மற்றும் மூலதன சுழற்சி கோட்பாடுகளையும் அமெரிக்க நாட்டு பொருளாதார நிபுணர்கள் திணித்த கட்டுத்தறியற்ற தனியார்மய சுதந்திர சந்தைமய மூலதனக் கோட்பாட்டையும் நிராகரிக்க மார்க்சின் பகுப்பாய்வு வழியை பின்பற்றுகிறது. அதற்கு புள்ளிவிரங்களை ஆதாராமாக கொள்கிறது. .

(தனியார் மூலதனத்தின் குவிப்பால் உருவாகும் தொழில்நுட்பங்களின் முன்னேற்றத்தையும் படிப்படியாக அதிகரிக்கும் உற்பத்தி திறனையும் முற்றிலும் மார்க்ஸ் புறக்கணித்ததாக குறிப்பிடும் பிக்கெட்டி மார்க்சின் மூலதன பகுப்பாய்வு முறையை பயனுள்ளது என்கிறார்.(பிக்கெட்டின் 21ஆம் நூற்றாண்டு மூலதனம் பக்கம் 23)

.இந்த புத்தகம் இன்னொன்றையும் காட்டுகிறது.

1971ல் அமெரிக்க பொருளாதார நிபுணர் சைமன் சுமித் குஸ்னே புள்ளிவிவரங்களை வைத்து வரைபடம் மூலம் தனிநபரின் வருமான ஏற்றத்தாழ்வு இடைவெளி சுருங்கி வருவதாக காட்டியதையும் 200 ஆண்டு புள்ளி விவரங்களையும் பிக்கெட்டி ஒப்பிட்டு அந்த முடிவு தவறானது என்று நிரூபிக்கிறார். நோபிள் நினைவுப்பரிசு பெற்ற ஒரு கண்டுபிடிப்பை தவறு எனக் காட்டிய பிக்கெட்டி இதனை தடித்த புத்தகத்தில் வடித்து 2013ம் ஆண்டு மேலைநாட்டு பணபுழக்க கோட்பாட்டு உலகை கலக்கி விட்டார்.

புத்தகத்தின் முதல்பகுதி துவக்கத்திலே மூலதனத்திற்கும்- உழைப்பிற்குமிடையே இருக்கும் முரணைத் தீர்ப்பது பற்றி விவாதிக்கிறது. மூலதனம் பற்றிய மேலைநாட்டு பொருளாதார நிபுணர்களின் மரபுசார்ந்த பார்வையை பிக்கெட்டி நிராகரிக்கிறார். பொருளுற்பத்திக்கான காரணிகளாக மூலதனம் உழைப்பு என்று இரண்டையும் வகைப்படுத்தி மூலதனத்திற்கு லாபம்- உழைப்பிற்கு சம்பளம் என்று பாகுபடுத்துவதே முரண்பாட்டை உருவாக்குகிறது.  என்கிறார்.

கூலிஉயர்வு கேட்காதே – குண்டடிபட்டு சாகாதே என்ற   19ம் நூற்றாண்டு பழைய நிலை முதலாளித்துவ நாடுகளில் இன்றும் நிலவுகிறது என்பதை தென்ஆப்பிரிக்காவில்  2012ல் கூலிஉயர்வு கேட்ட தொழிலாளர்களை துப்பாக்கிச்சூட்டில் கொன்றதை காட்டியே தொடங்குகிறார். அந்த பகுதியின் இறுதியில் திறந்தவெளிசந்தையும் தனியார் சொத்தையும் அடிப்படையாக கொண்ட ஒரு பொருளாதாரம் மூலதனத்திற்கும் உழைப்பிற்கும் இடையிலான முரணை போக்குமா? நேசஉறவாக்க எப்படி சிந்திக்க வேண்டும் என்ற கேள்விகளை கேட்டு ஒரு நூதன பணப்புழக்க கோட்பாட்டை விவாதிக்கிறார்.

தனியார் சொத்து பெருக்கம் – மூலதன பெருக்கம் இரண்டையும் ஒன்றாகவே பாவித்து முன்மொழிகிற வாதங்களை படித்தால் பரம்பரை சொத்துரிமை அடிப்படை உரிமையாக இருக்கமுடியுமா என்ற கேள்வியை இந்த புத்தகம் நம்மை கேட்க வைக்கிறது

நாடுகளின் தேச மொத்த வருமானம் கணக்கிடுவதில் உள்ள குறைபாட்டை இந்த புத்தகம் விவாதிக்கிறது. தேச மொத்த வருமானத்தை கணக்கிட ஒரு வரலாற்றுப்பார்வை அவசியம் என்கிறது. அதாவது தேச மொத்த வருமானத்தை எந்திரங்கள், கட்டிடங்கள் இவைகளின் தேய்மானங்களை கழித்தே கணக்கிட வேண்டும் என்பது இவரது வாதமாகும். தேச மொத்த வருமானத்தின் வளர்ச்சி விகிதத்திற்கும் மூலதனத்தின் லாபவிகிதத்திற்கும் உள்ள உறவை ஆய்வு செய்வதே இந்த புத்தகத்தின் முக்கிய நோக்கமாக தெரிகிறது.

இந்த புத்தகம் தனிநபர் வருமான ஏற்றத்தாழ்வு இடைவெளி விரிவதை அளக்க ஒரு சூத்திரத்தை முன்மொழிகிறது. மூலதனம் சம்பாதிக்கும் லாபவிகிதம் தேச மொத்த வருவாயின் வளர்ச்சி விகிதத்தைவிட கூடுதலாக இருக்கிறது(r.>g) இதுவே தனிநபர் வருமான ஏற்றத்தாழ்வை விரித்துக்கொண்டே போகிறது.

இதனை நிரூபிக்கவே 200 ஆண்டு புள்ளிவிவரங்களை ஆதாரமாக காட்டியுள்ளார்.

இதன்மூலம் அவர் சொல்லவருவது மூலதனத்தின் லாபவிகிதமும் தேச மொத்த வருவாயின் வளர்ச்சி விகிதமும் சமமாக இருந்தால் தனிநபர் வருமான இடைவெளி அதிகமாகாது என்பதாகும்.  மூலதனம் உழைப்பாளிகள் ஒன்றிணைந்து உருவாக்கும் உபரிமதிப்பை நேரடியாகவும் சந்தைவழியாக மறைமுகமாகவும் சுரண்டுவதாலேயே வருமான ஏற்றத்தாழ்வு ஏற்படுகிறது என்ற மார்க்சிய கோட்பாட்டை இந்த சூத்திரம் மறுக்கிறது என்பது வெளிப்படை. அதேவேளையில் வருமான இடைவெளி விரிவதால் நாடாளுமன்ற ஜனநாயகம் நிலவுகிற நாடுகளில் ஜனநாயக மாண்புகள் சிறுமைப்படுகிறது என்பதை ஏற்கிறார். மூலதன இயக்கத்தை கட்டுப்படுத்த என்ன செய்வது என்ற கேள்வியை விவாதிக்கிற இந்த புத்தகம் சீனா வெற்றிகரமாக மூலதனத்தை கட்டுப்படுத்துகிறது என்று பாராட்டிவிட்டு அது மேலைநாட்டிற்கு பொருந்தாது என வாதிடுகிறது.

இந்த புத்தகம் இன்றைய உலகமய அரசியல் பொருளாதார பிரச்சினைகளை கோடிட்டு காட்டுவதால் மார்க்சிஸ்டுகள் விவாதித்து தெளிவுபெற மிகவும் பயன்படும்.

.அதேவேளையில் பிரிட்டிஷ் பொருளாதார நிபுணர் டேவிட் ரிக்கார்டோ(1772-1823) முன்மொழிந்து கார்ல் மார்க்சால் மேன்மைப்படுத்தப்பட்ட சரக்கின் மதிப்பு சமூக உழைப்பு நேரத்தை சார்ந்தது என்ற கோட்பாட்டை இந்த புத்தகம் நிராகரித்து நூதன பணபுழக்க கோட்பாட்டை முன்மொழிகிறது.

இன்றைய மேலைநாடுகள் அரசாங்க கடன்சுமையை குறைக்க சிக்கன முறையை கையாள்வதை கடுமையாக சாடுகிறார். அதற்கு மாற்றாக சொத்துவரி மற்றும் பணவீக்கத்தை நடைமுறைப்படுத்த சொல்கிறார். இதற்கு அவர் சொல்லுகிற காரணம் நாடாளுமன்ற ஜனநாயகம் வர்க்க சார்பு தன்மையை இழந்து நடுநிலை வகிப்பதாக கூறியே இந்த தீர்வு சாத்தியமென முன்மொழிகிறார். இது தவிர வேறு சில பிரச்சினைகளையும் இந்தப் புத்தகம் விவாதிக்கிறது. சீனாவின் வெளிநாட்டு முதலீட்டு வேகம் ஒரு கட்டத்தில் மேலைநாடுகளின் சொத்துக்களை சீனவங்கி அபகரித்துவிடும் என்பது உண்மையல்ல என்பதற்கு சில புள்ளிவிவரங்களை காட்டுகிறார். அந்நிய முதலீடுகளால் ஒரு நாட்டின் சொத்து இன்னொரு நாட்டின் கட்டுப்பாட்டில் போகாது என்பது இவரது வாதமாகும்.

மூலதன ஏற்றுமதி செய்வதை விட ஒவ்வொரு நாடும் உழைப்பாளிகளை இறக்குமதி செய்வது நல்லது என்கிறார்.

இயற்கைவளம் பூமிப்பந்தில் ஒரேமாதிரியாக இல்லை. இது உருவாக்கும் பிரச்சினைகளை சிந்திக்க  இந்த புத்தகம் நம்மை தூண்டுகிறது.

மார்க்சிஸ்டுகளுக்கு இந்த புத்தகம் பழைய சவாலை புதுப்பிக்கிறது. அதாவது முதலாளித்துவ உற்பத்தி முறையில் லாபவிகிதம் சரியும் போக்குள்ளது என்ற மார்க்சின் கண்டுபிடிப்பை தவறு என்கிறது. இந்த சவாலால் மார்க்சின் மூலதன நூலை வரலாற்று ஆவணமாக பார்க்காமல் அதன் வரையறைகள் சரிதானா என்பதை இன்றைய புள்ளிவிவர அடிப்படையில் பரிசீலிக்க தூண்டுகிறது.

பணபுழக்கத்தை நெறிப்படுத்துவதின் மூலம் ஜனநாயக மாண்புகளை காக்கமுடியும் என்பதே இந்த புத்தகத்தின் ஜீவநாடியாகும். மார்க்சிய பொருளாதார கோட்பாடுகளுக்கு இது ஒரு சவாலாகும். கீழ்கண்ட காரணங்களால் இதனை மார்க்சிஸ்டுகள் படிப்பது அவசியம்.

 

  1. .முதலாளித்துவ உலகில் நடைபெறும் பொருளாதார கோட்பாட்டு சர்ச்சைகளை புரிந்து கொள்ள இந்தப் புத்தகம் உதவுகிறது.
  2. அமெரிக்க முதலாளித்துவ மாடலுக்கும் ஐரோப்பிய மாடலுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை அறிய உதவுகிறது.
  3. கார்ல் மார்க்சை மேலைநாட்டு பூர்சுவா பொருளாதார நிபுணர்கள் எவ்வாறு அணுகுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது.
  4. பணத்தின் வளர்சிதைமாற்றம் பற்றிய மார்க்சிய பார்வைக்கும் முதலாளித்துவ நிபுணர்களின் அணுகுமுறைக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ள இது உதவுகிறது. பாமரன் கையிலிருந்தால் பரிவர்த்தனை கருவி. இதுவே சேமிப்பானால் சொத்துக்களை மடக்கும் பங்குப்பத்திரம்- மற்றும் முன்பேரதாள். இதுவே வங்கியில் இருந்தால் நிதிமூலதனம் பணமென்றால் தங்கம்- வெள்ளி என்று இருந்த நிலைமாறி சொத்துக்களை அடிப்படையாக கொண்ட அருவமான டிஜிட்டல் பணபுழக்கம் எப்படி வந்தது என்பதை புரிய உதவுகிறது.
  5. எக்னாமிஸ்ட் என்ற பிரிட்டிஷ் இதழ்தான் தாமஸ் பிக்கெட்டியை 21ம்நூற்றாண்டு மார்க்ஸ் என்று விளம்பரப்படுத்தியது. அமெரிக்க பாணி தாராளமயப் பொருளாதாரத்தை பிக்கெட்டி தாக்குவதோடு மார்க்சையும் நிராகரித்து ஐரோப்பியபாணி முதலாளித்துவமே சிறப்பானது என்று காட்டுவதால் ஒருகல்லில் இரண்டு மாங்காய்கள் என்று மகிழ்கிறது.
  6. பணப்புழக்கத்தை சமூக உறவாக அணுகி பொருளாதாரத்தின் திசையை அரசியலே தீர்மானிக்கிறது என்ற மார்க்சின் கண்டுபிடிப்பை பிக்கெட்டி பார்க்க மறுக்கிறார் . அதேவேளையில் பணத்தின் நடமாட்டத்தை வரலாற்றுரீதியாக புரிந்து கொள்ள வாசகனை வேண்டுகிறார். இந்த ஒரு இடத்தில்தான் அவருக்கும் மார்க்சிற்கும் வேற்றுமை மறைகிறது.. மூலதனத்தை இயக்குகிற சமூகஉறவு, அந்தஉறவை தீர்மானிக்கிற அரசியல், அந்த அரசியலை தீர்மானிக்கிற வர்க்கப்போராட்டம் இவைகளையும் பணத்தின் வடிவங்கள் மாறுவதையும் இணைத்து பார்க்க மறுக்கிறார். வர்க்கப் போராட்டத்திற்கும் பொருளாதாரத்திற்கும் உறவு எதுவுமில்லை என்பதே அவர்களது பார்வையாகும்.
  7. அமெரிக்கா உலகநாடுகளின் தலையில் திணிக்கும் கட்டுத்தறியற்ற தாராளமய, தனியார்மய பொருளாதார கோட்பாட்டை பிக்கெட்டி ஆதாரங்களுடன் நிராகரிக்கிறார். அது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது என்பதை புள்ளிவிவரங்களை காட்டி நிரூபிக்கிறார்
  8. அதேவேளையில் மார்க்சிய கோட்பாடான சமூக உற்பத்திக்கு சமூக கட்டுப்பாடு ( சோசியல் கன்ட்ரோல் ஓவர் சோசியல் புரடக்‌ஷன்) என்பதை ஏனோ கண்டுகொள்ளாமல் இருக்கிறார்.
  9. .ஜனநாயக உரிமைகளை பறிக்காமல் முதலாளித்துவம் நீடிக்க இவர் கூறுகிற ஆலோசனையை பிரெஞ்சு அரசே ஏற்கத் தயாரில்லை.(சொத்துவரி- பணப்புழக்கத்தை அதிகரித்தல்)
  10. மார்க்ஸ் எந்த இடத்திலும் முதலாளித்துவம் பேரழிவை சந்திக்கும் என்று கூறியதாகத் தெரியவில்லை. மூலதனம் சொத்துக்குவிக்கும் கருவியாக இருப்பது மாறிவிடும். சமூகம் உருவாக்கும் சொத்துக்கள் வர்க்கப்போராட்டத்தால் வர்க்கமுரண்கள் மறைந்து அந்த சமூக உறுப்பினர்களிடையே பகிரப்படும் என்கிறார். அது ஒரு புரட்சி மூலமே சாத்தியம் என்கிறார்
  11. இன்றைய அரசியல் பொருளாதார கோட்பாடுகள் சர்ச்சைகள் பணம் சமூகத்தின் மையப்புள்ளியாகி பணத்தை வைத்து பொருளுற்பத்தி என்பது தலைகீழாக போய் உற்பத்திசக்தியை பணமாக ஆக்கும் முறை எப்படி முதலாளித்துவ உலகில் வந்தது என்பதைப் புரிய விரும்புவோர் படிக்கவேண்டிய புத்தகம்.

மார்க்சின் மூலதனம் என்ற மகத்தான நூலின் அதிகம் வாசிக்கப்படாத வால்யூம் இரண்டு மற்றும் மூன்றில் மூலதன இயக்கத்தை மார்க்ஸ் எப்படி பகுத்து ஆய்வு செய்தாரோ அதேவழியை பிக்கெட்டி பின்பற்றினாலும் இருவரும் வேறுபடுகின்றனர் .

மூலதன சுழற்சியின் பணமூலதன வடிவையே மையமாக வைத்து பிக்கெட்டி பகுப்பாய்வு செய்கிறார்.  . ஆனால் மார்க்ஸ் மூலதனத்தின் உட்கூறுகள் நுகர்பொருள் உற்பத்தியில் ஈடுபடும் மூலதனம்-உற்பத்தி கருவிகளை உருவாக்கும் மூலதனம் இந்த இரண்டின் சுழற்சியை பகுப்பாய்வு செய்ய முயல்கிறார். இயற்கையையும் மனிதனையும் மதிக்காத இந்த இருவகை மூலதனங்களின் சுழற்சிகளை வைத்து மார்க்ஸ் உருவாக்கிய கோட்பாடுகளை பிக்கெட்டி ஏன் நிராகரித்தார் என்பதற்கு விளக்கம் தேவையில்லை.

இருந்தாலும் இந்த புத்தகம் வாசகனோடு உரையாடுவதால் கனத்தை மறந்து படிக்கத் தூண்டுகிறது. மார்க்சிய கோட்பாடுகளை புள்ளிவிவரங்களோடு உரசிப் பார்க்க உதவுவதால் நமக்கு படிக்க வேண்டிய புத்தகமாகி விடுகிறது.

பிப்ரவரி மாத மார்க்சிஸ்ட் இதழில் … (இடது ஜனநாயக அணி சிறப்பிதழ்)

மார்க்சிஸ்ட் கட்சியின் 22 வது மாநில மாநாட்டை ஒட்டி, இவ்விதழ் ‘இடது ஜனநாயக முன்னணி’ சிறப்பிதழாக வெளிவந்திருக்கிறது. மக்கள் ஜனநாயக புரட்சியை நோக்கிய பயணத்தில், நடைமுறை உத்தியாக ‘இடது ஜனநாயக அணி’ என்ற முழக்கத்தை மார்க்சிஸ்ட் கட்சி முன்வைத்தது.

மார்க்சிய சமூக விஞ்ஞானத்தின் வழியில் நடைபோடும் மார்க்சிஸ்ட் கட்சியின் இந்த முழக்கம், தேர்தல் அணிச் சேர்க்கையாகப் புரிந்துகொள்ளப்படும் குறுகிய முழக்கமல்ல. பாட்டாளி வர்க்கத்தின் கைகளில் அதிகாரம், சுரண்டலுக்கு முடிவுகட்டிய சமூகம் என்ற இலக்கை சாதிப்பதற்கான வர்க்கச் சேர்க்கையை ஏற்படுத்துதலுக்கான முழக்கம்.

தோழர் பிரகாஷ் காரத், இடது ஜனநாயக அணியைக் குறித்த சிறப்புக் கட்டுரையை தமிழ் மார்க்சிஸ்ட் வாசகர்களுக்கு வழங்கியிருக்கிறார். அகில இந்திய அளவில் அதன் முக்கியத்துவத்தை விளக்கியிருப்பதோடு, தமிழகத்திலும் இடதுசாரிகள் முன்னெடுக்கவேண்டிய கடமைகளை அவர் நினைவூட்டுகிறார்.

தமிழகத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சிகளுடன் சேர்த்து, இடது ஜனநாயக அணி கருத்தாக்கங்களை விளக்கியுள்ளார் தோழர் ஜி.ராமகிருஷ்ணன்.
இடது ஜனநாயக அணிக்கான வர்க்கங்களைத் திரட்டுவ து குறித்தான கட்டுரையை தோழர் என்.குணசேகரன் எழுதியிருக்கிறார். கருத்து, செயல் என இரண்டு தளங்களிலும் நாம் மேற்கொள்ள வேண்டிய முயற்சிகளைக் குறிப்பிடும் அக்கட்டுரை, உள்ளூர் மட்டத்தில் ஒரு சமூக நிலைமையை கவனித்து அதனை மாற்றியமைக்க எப்படியான தலையீடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வழிகாட்டுகிறது.
இடது ஜனநாயக அணியில் அமையப்பெறும் வர்க்கங்களை கவனிப்பதைப் போலவே, ஒடுக்கப்பட்ட சமூக அடையாளங்களைத் திரட்டுவது எத்தனை முக்கியம், அதில் ஏன் கவனம் செலுத்தவேண்டும் என்பதை தோழர் உ.வாசுகி எழுதியிருக்கிறார்.

இந்தியாவில் நாம் முன்னெடுக்கவுள்ள எந்தவொரு உத்தியிலும் வேளாண் சமூகத்தின் மீது தனித்த கவனம் செலுத்தப்பட வேண்டும். நவின தாராளமயக் கொள்கைகளின் அமலாக்கத்திற்குப் பின் இந்திய சமூகங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கட்சி கூர்ந்து கவனித்தே வருகிறது. மாறிவரும் சூழ்நிலைமைகளில் நாம் எவ்வாறு செயல்படவேண்டும் என்று தோழர் விஜூ கிருஷ்ணன் விளக்கியிருக்கிறார்.
இடது ஜனநாயக அணியின் மாற்று பொருளாதாரப் பார்வையை தெளிவாக்கிற வகையில் ஆத்ரேயா கட்டுரை அமைந்துள்ளது.

மார்க்சிய இயக்கத்திற்கு, உத்திகளை வகுப்பதன் தேவையையும், திட்டவட்டமான ஆய்வு எப்படி திட்டவட்டமான மாற்றங்களுக்கு அடிப்படையாக அமையும் என்பதையும் ஜி.செல்வா எழுதியுள்ள ஏப்ரல் கருத்தாய்வு குறித்ததான கட்டுரை நமக்கு விளக்குகிறது.

கடைசி நேரத்தில் என்றாலும், கவனமுடனும் அக்கறையுடனும் தோழர் ஆர்.எஸ்.செண்பகம், சமூக நேசன் எழில் ராஜூ ஆகியோர் மொழியாக்க பணிகளை மேற்கொண்டுள்ளனர். அட்டை வடிவமைத்துள்ளார் ஆனந்த் காஸ்ட்ரோ. அவர்களுக்கு பாராட்டுக்கள்.

ஜனவரி 28 ஆம் தேதி முதல் மார்க்சிஸ்ட் செயலி அப்டேட் செய்யப்பட்டு ஒலி இதழாக வெளிவருகிறது. சந்தா சேர்ப்பும், வாசகர் வட்டங்களும் துணையாக இல்லாமல் புதிய முயற்சிகளைத் தொடர்வது சாத்தியமில்லை. மார்க்சிஸ்ட் வாசகர் வட்ட தோழர்கள் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டுகிறோம்.

  • ஆசிரியர் குழு

இடது ஜனநாயக முன்னணி – பிரகாஷ் காரத்

பிரகாஷ் காரத்

இடது ஜனநாயக மாற்றினை நோக்கி முன்னேறுவோம் என்பது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வகுத்துக்கொண்ட நடைமுறை உத்தியாக அமையப்பெற்ற அறைகூவலாகும். இதற்காக நமது கட்சி, அனைத்து இடது மற்றும் ஜனநாயக சக்திகளை அணிதிரட்டி வலுவான இடது ஜனநாயக அணியினை கட்ட வேண்டும். முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ ஆட்சிமுறைக்கு (bourgeois-landlord order) உண்மையான மாற்றாக இந்த அணி இருக்கும் என்று கட்சி கருதுகிறது.

திரட்டவேண்டிய வர்க்கப் பிரிவுகள்:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படை தொலைநோக்குத் திட்டத்துடன் இந்த இடது ஜனநாயக மாற்றுக்கு உள்ள பொருத்தப்பாடு என்ன?  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொலைநோக்குத் திட்டம் மக்கள் ஜனநாயகப் புரட்சியை நோக்கியதாகும்.  இதற்காக முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ அமைப்பினால் சுரண்டப்படும் வர்க்கத்தின் அனைத்து பிரிவினரையும் ஒன்றிணைத்து, மக்கள் ஜனநாயக முன்னணி அமைக்கவேண்டும் என்கிறது கட்சியின் திட்ட ஆவணம். தொழிலாளி வர்க்கம், விவசாயிகள், விவசாயக்கூலிகள், மத்தியதர வர்க்கத்தினர் மற்றும் சிறு முதலாளிகள் ஆகியோரே அந்த சுரண்டப்படும் வர்க்கப் பிரிவினர் ஆவர்.

மக்கள் ஜனநாயக அணியை கட்டுவதை நோக்கி முன்னேறும்போது, தேவைப்படும் நேரங்களில் இடைக்கால நிலைமைகளுக்கேற்ப இடைக்கால முழக்கங்களை உருவாக்கிக் கொள்ளலாம் என்று கட்சியின் திட்டம் விளக்குகிறது.

இடது ஜனநாயக முன்னணி என்பது அப்படிப்பட்ட இடைக்கால முழக்கமாகும்.  அது முதலில் 10வது கட்சிக்  காங்கிரஸ் ஜலந்தரில் 1978 ஆம் ஆண்டு நடந்தபோது உருவாக்கப்பட்டது. 10வது கட்சிக் காங்கிரஸ் இடது ஜனநாயக முன்னணியின் கருதுகோளைக் குறித்து பின்வருமாறு விளக்குகிறது;-

”இடது ஜனநாயக அணியைக் கட்டுவதற்கான நமது போராட்டம் என்பது வர்க்க சக்திகளுக்கிடையேயான சமன்பாட்டில் ஒரு மாற்றத்தினை உருவாக்கும் நமது போராட்டத்தின் ஒரு பகுதியாகும்.  அதே போல, இரண்டு நிலப்பிரபுத்துவ முதலாளித்துவ கட்சிகளில் ஏதேனும் ஒன்றைத்தான் மக்கள் தேர்ந்தெடுத்தாக வேண்டும் என்ற நிலையில், தற்போதுள்ள அமைப்பு முறையின் சட்டகத்திற்குள்ளேயே கட்டுண்டு கிடக்கும் நிலையினை மாற்றும் முயற்சியின் ஒரு பகுதியாகும் அது.  அனைத்து இடது மற்றும் ஜனநாயக சக்திகளையும் அணி திரட்டுவதன் மூலம் இந்த முன்னணியின் முன்னேற்றத்தினை நோக்கி நகர முடியும்.  அவ்வாறு நகரும்போது, கட்சி இந்த சக்திகளை  அணி திரட்டத் தொடங்குவதன் காரணமாக, எதிர்காலத்தில், தொழிலாளி வர்க்கத்தின் தலைமையின் கீழ் மக்கள் ஜனநாயக அணியினை நாம் கட்ட முனையும்போது இந்த சக்திகள் அந்த அணியில் பங்கேற்க முடியும்.  இடது ஜனநாயக அணியினை வெறும் தேர்தலுக்கான அணியாகவோ அல்லது அமைச்சரவைக்கான முன்னணியாகவோ புரிந்து கொள்ளக்கூடாது.  மாறாக, பொருளாதாரத்தை தங்கள் கட்டுக்குள் வைத்திருக்கும் பிற்போக்கு சக்திகளை தனிமைப்படுத்துவதற்கும், பொருளாதார மற்றும் அரசியல் தளங்களில் உடனடி முன்னேற்றத்திற்குமான போர்ப்படையாக இதனை புரிந்து கொள்ள வேண்டும்.”

இதன் தொடர்ச்சியாக, மக்கள் ஜனநாயக அணியில் இடம் பெற வேண்டிய வர்க்கங்கள்தான் இடது மற்றும் ஜனநாயக முன்னணியில் இடம் பெறுவார்கள் என்று விளக்கமளித்துள்ளோம்.  இருந்தபோதும், இதில் உள்ள ஒரே வேறுபாடு தலைமை குறித்தானது.  மக்கள் ஜனநாயக முன்னணிக்கான தலைமை தொழிலாளி வர்க்கமாக  இருக்க வேண்டும் என்ற அவசிய தேவை இடது ஜனநாயக அணிக்கான அவசியத்தேவையாக இருக்க வேண்டுமென்பதில்லை.  10வது கட்சிக் காங்கிரசில் இருந்து இந்தக் காலம் முழுவதும் இடது ஜனநாயக அணி என்ற நடைமுறை உத்திக்கான அறைகூவலை விடுத்துவந்த போதிலும், ஒவ்வொரு கட்சி காங்கிரசிலும், இந்த இடைக்கால முழக்கத்தின் நோக்கத்தில் எந்த முன்னேற்றத்தையும்  எட்ட முடியவில்லை.

மேற்குவங்கம், கேரளா மற்றும் திரிபுராவில் மட்டுமே இந்த அரசியல் மற்றும் வர்க்க சக்திகளை கொண்ட முன்னணிகளையும் கூட்டணிகளையும் நம்மால் உருவாக்க முடிந்துள்ளது.  உதாரணமாக, மேற்குவங்கத்தில் கடந்த இரு பத்தாண்டுகளில் பல்வேறு வர்க்கப் போராட்டங்கள் மற்றும் இயக்கங்களின் வாயிலாக இடது முன்னணி கட்டப்பட்டுள்ளது.  ஆனால், இந்த மூன்று மாநிலங்களிலும் இந்த கூட்டணிகளை உருவாக்கியுள்ளது என்பது நமது நோக்கத்தின் ஒரு பகுதி வெற்றிதான்.  இது அகில இந்திய அளவில் உருவாக்கப்பட வேண்டும்.

நடைமுறை உத்தி குறித்த பரிசீலனை:

ஏப்ரல் 2015ம் ஆண்டில் நடந்த 21வது கட்சி காங்கிரஸ் கடந்த 25 ஆண்டுகளாக நாம் கடைபிடித்து வந்துள்ள அரசியல் நடைமுறை உத்தி குறித்த மிக ஆழமான பரிசீலனையை நடத்தியது.  ஏன் நம்மால் இடது ஜனநாயக மாற்றினை கட்ட முடியவில்லை என்பதை பற்றித் தெரிந்து கொள்ள விமர்சனப் பூர்வமான ஆழ்ந்த பரிசீலனை தேவைப்பட்டது.

இந்த ஆழ்ந்த பரிசீலனையின்போது இக்காலக்கட்டத்தில் கட்சியின் சொந்த பலம் அதிகரிக்கப்படவில்லை என்பது தெளிவாகியது.  சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், மேற்குவங்கம், கேரளா மற்றும் திரிபுராவைத் தவிர்த்த நாட்டின் பிற பகுதிகளில் கட்சியின் சொந்த பலம் குறைந்துள்ளது.  காங்கிரஸ் அல்லது பாரதீய ஜனதா கட்சியை தோற்கடிக்க வேண்டும் என்பதே உடனடிநோக்கமாக இருந்ததன் காரணமாக  அதற்குப் பொருத்தமான தந்திரங்களை உருவாக்குவற்கே முதன்மை கவனம் செலுத்தப்பட்டு வந்துள்ளது. இடது ஜனநாயக சக்திகளை அணிதிரட்டும் நோக்கில் கவனம் குவித்து பொதுத் திட்டத்தின் அடிப்படையில் வர்க்க, வெகுமக்கள் போராட்டங்களைக் கட்டமைத்து வளர்ப்பதற்கன முக்கியத்துவம், அவசியமான அளவுக்கு தரப்படவில்லை.

21 வது மாநாட்டின் விவரிப்பு:

எனவே, கட்சிக் காங்கிரஸ் இந்த பலவீனத்தைக் களைவது என்ற முடிவிற்கு வந்தது.  அந்த கட்சிக் காங்கிரசில் நிறைவேற்றப்பட்ட அரசியல் தீர்மானம் இடது ஜனநாயகஅணியினை கட்டுவதற்கு மீண்டும் முதன்மை இடத்தை வழங்க வேண்டும் என்று முடிவெடுத்தது.  இதற்காக கட்சியின் சொந்த பலத்தை அதிகரிப்பதற்கு மிக அதிக முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது.  இதற்கு நவீன தாராளமயத்தின் தாக்கத்தின் காரணமாக சமூகப் பொருளாதார சூழ்நிலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து ஒரு தீர்க்கமான ஆய்வினை நடத்த வேண்டுமென்றும், அந்த ஆய்வின் அடிப்படையில் நமது நடைமுறை உத்திக்கேற்ற முழக்கங்களை  உருவாக்க வேண்டும் என்றும், வர்க்க மற்றும் வெகுமக்கள் போராட்டங்களை நடத்திட வேண்டும் என்றும் வலியுறுத்தியது.

21வது கட்சி காங்கிரசும், 10வது கட்சிக் காங்கிரஸ் விவரித்தது போலவே, இடது ஜனநாயக அணியை ஒரு தேர்தல் கூட்டணியாகப் பார்க்கக்கூடாது என்றும்,  அது வெறுமனே அரசியல் கட்சிகளின் கூட்டணி அல்ல என்றும், மாறாக, பல்வேறு வர்க்க மற்றும் மக்கள் ஜனநாயக அமைப்புகள் மற்றும் சமூக இயக்கங்களின் கூட்டணியாகும் என்றும் விவரித்தது.

21வது கட்சி காங்கிரசின் விளக்கம் பின்வருமாறு:-

”இடதுசாரிக் கட்சிகள், அவற்றின் வர்க்க வெகுஜன அமைப்புகள், இடதுசாரி குழுக்கள் மற்றும் இடது அறிவுஜீவிகள், பல்வேறு கட்சிகளில் பரவிக் கிடக்கும்  சமூகவியலாளர்கள், மதச்சார்பற்ற முதலாளித்துவ கட்சிகளில் உள்ள ஜனநாயகப் பிரிவினர், ஆதிவாசி, தலித், பெண்கள் மற்றும் சிறுபான்மையினரின் ஜனநாயக அமைப்புகள், ஒடுக்கப்படும் மக்கள் பிரிவினரின் பிரச்சினைகளை கையிலெடுத்து போராடும் சமூக இயக்கங்கள் போன்றவை இடது ஜனநாயக அணியில் இடம்பெற வேண்டும்.  இந்த சக்திகள் அனைத்தையும் ஒரு கூட்டு மேடையின் கீழ், முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ கட்சிகளின் கொள்கைகளுக்கு எதிரான, ஒரு தனித்துவமான, பொதுத்திட்டத்தின் கீழ் கொண்டு வருவதன் மூலம் மட்டுமே, இடது ஜனநாயக அணியினை உருவாக்குவதற்கான திட்டவட்டமான வடிவத்தை நாம் பெறமுடியும்”.

மாநிலங்களுக்கான திட்டம்:

இந்தப் புரிதலின் அடிப்படையில், ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு இடது ஜனநாயகத் திட்டத்தை உருவாக்க வேண்டும்.  அந்தத் திட்டத்தில் பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகள் உள்ளடங்கியிருக்கும்.  இந்தத்திட்டத்தின் கீழ் எந்தெந்த மக்கள் சக்திகள் இடது ஜனநாயக அணியின் கீழ் கொண்டு வரப்பட வேண்டுமோ அந்தப் பிரிவினர் அனைவரும் அணி திரட்டப்பட வேண்டும்.  இந்த கூட்டுமேடையிலிருந்து பல்வேறு கட்சிகள், வர்க்கங்கள், வெகுஜன அமைப்புகள் மற்றும் சமூக இயக்கங்கள் கட்டவிழ்த்துவிடும் ஒன்றுபட்ட போராட்டங்கள் மற்றும் இயக்கங்களின் மூலம், ஒரு குறிப்பிட்ட அரசியல் திசைவழியுடன் கூடிய திட்டவட்டமான இடது ஜனநாயக அணி உருவாக்கப்பட வேண்டும்.

அப்படி ஒரு முன்னணி உருவாக்கப்படும்போது, அந்த முன்னணியினால் பிற முதலாளித்துவ கட்சிகளின் கொள்கைகளில் இருந்தும், அரசியலில் இருந்தும் முற்றிலும் வேறான அரசியல் – தத்துவப் பார்வையினை கொண்டு செயல்படமுடியும்.

தமிழகத்தில் இடதுஜனநாயக திட்டம்:
தமிழ் நாட்டில், 21வது கட்சிக் காங்கிரசிற்குப் பிறகு இடது ஜனநாயக திட்டத்தினை உருவாக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டன.  பல்வேறு இடதுசாரி கட்சிகளின் வர்க்க மற்றும் வெகுஜன அமைப்புகள் ஒரு பொது மேடையின் கீழ் ஒன்றுபட்ட போராட்டங்களை நடத்தவும், இயக்கங்களை நடத்தவும் அணிதிரட்டப்பட்டன.  இது தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும்.

இதோடு கூட, முக்கிய திராவிட கட்சிகள் மற்றும் பிற முதலாளித்துவ கட்சிகளின் அரசியல் மற்றும் தத்துவார்த்தப் பார்வையிலிருந்து தனித்துவமான தத்துவார்த்தப் பார்வையுடன் கூடிய  ஒரு அரசியல் கொள்கை திட்டம் இந்த கூட்டு மேடையில் இருந்து உருவாக்கப்பட வேண்டும் என்ற தேவை உள்ளது.  நவீன தாராளவாதக் கொள்கைகளுக்கு மாற்றான, மக்கள் முன்னேற்றத்திற்கான, மற்றும் இந்த சமூகத்தில் நிலவும் பொருளாதார சமூக ஏற்றத்தாழ்வுகளுக்குக் கடிவாளமிடக்கூடியதுமான ஒரு மாற்றுக்கொள்கைச் சட்டகம் அங்கு உருவாக்கப்படவேண்டும்.

கருத்தியல் போராட்டம்:

இந்தத் திசைவழியில் எடுக்க வேண்டிய மற்றொரு நடவடிக்கை திராவிடக் கருத்தியலுக்கும், இயக்கங்களுக்கும் இசைவான ஒரு இடதுசாரி கருத்தியல் பார்வை உருவாக்கப்பட வேண்டும்.  இந்த இடதுசாரிக் கருத்தியல், திராவிடக் கருத்தியலுடனும் இயக்கங்களுடனும் விமர்சனப்பூர்வ தலையிடல் மேற்கொண்டு அதன் பாரம்பரியத்தில் அமைந்த நேர்மறை அம்சங்களை இணைத்துக் கொள்வதாகவும், எதிர்மறை அம்சங்களைக் கழித்துக்கட்டுவதாகவும் அமைந்து, அதன் போதாமைகளை மிஞ்சுவதாக அமையவேண்டும். மேலும் குறிப்பாக புதிய தாராளவாதத்தின் தாக்கத்தால் ஏற்பட்ட கேடுவிளைவிக்கும் கருத்தியல் தலையீட்டையும், சீர்குலைவையும் புரிந்துகொள்ளவேண்டும்.

மேலும், இந்த இடது ஜனநாயகத் திட்டம் என்பது மக்களை பிரித்தாளும் இந்துத்துவா வகுப்புவாதக் கொள்கைகளை எதிர் கொள்ளக் கூடிய வகையில் ஒரு தெளிவான திசைவழியினை காட்ட வேண்டும்.

கட்சியின் அனைத்து மட்டங்களுக்கும் இடது ஜனநாயக அணி குறித்தும் அதனுடைய மாற்று குறித்தும் அதன் அடிப்படைக் கரு குறித்தும் தெளிவாக விளக்கி அவர்கள் புரிந்து கொள்ளும்படி செய்ய வேண்டும்.  இதனை தேர்தல் கூட்டணிகளுடனோ அல்லது தேர்தல் உடன்பாட்டுடனோ குழப்பிக் கொள்ளக்கூடாது என்பது தெளிவாக அவர்களுக்குப் புரியச் செய்யப்பட வேண்டும்.  இடது ஜனநாயக அணியினை கட்டுவது என்பதனை நமது பிரதானமான நோக்கமாக தக்க வைத்துக் கொண்டு, எப்போதெல்லாம் தேர்தல் வருகிறதோ அப்போதெல்லாம் அதற்குப் பொருத்தமான தேர்தல் உத்திகளை உருவாக்கிக் கொள்ளலாம். கட்சியின் நலன்களை நோக்கி முன்னேறுவதன் அவசர அவசியத்திற்கும், இடது ஜனநாயக சக்திகளை அணி திரட்டுவதன் உடனடி அவசர அவசியத்திற்கும் நன்றாகப் பொருந்தும்படி இந்த தேர்தல் உத்திகள் வடிவமைக்கப்பட வேண்டும்.

  • தமிழில்: ஆர்.எஸ்.செண்பகம்

இடது ஜனநாயக அணியில் ஒடுக்கப்பட்ட சமூக பிரிவினரின் பங்கு

. வாசுகி

கொள்கை குறித்த கேள்வியையே நையாண்டி செய்வோர், எதிரும் புதிருமான அத்தனை தத்துவங்களையும் வரிசைப்படுத்தி, இதுதான் எங்கள் கட்சியின் இசம் என்று சொல்வோர்,

இதுவரை கொள்கை குறித்து எவ்வித முன்மொழிவும் இன்றியே ஆட்சிக்கு வந்து விட்டோர்,

சுரண்டும் வர்க்கத்துக்குத் துணை போகும் கொள்கைகளை, தேன் தடவிய சொல்லாடல்களால் மறைப்போர்

எனப் பலரையும் இச்சமூகம் பார்த்துக் கொண்டிருக்கிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோ, இந்திய மக்கள் விடுதலைக்காக நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு, ஏகபோக எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற மும்முனைகள் கொண்ட மக்கள் ஜனநாயக புரட்சி செய்வதை இலக்காக வைத்து, அதற்கான திட்டத்தையும் மக்கள் முன் வைத்திருக்கிறது. புரட்சியின் படையாக மக்கள் ஜனநாயக அணி உருவாக்கப்பட வேண்டும் என்பதுடன், இதை அடைய, இடது ஜனநாயக அணி என்பதை இடைக்கால நோக்கமாகவும் முன்வைக்கிறது. இந்த இதழின் மற்ற கட்டுரைகளில், இடது ஜனநாயக அணி குறித்த விளக்கங்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன.

இது வர்க்கங்களால் கட்டமைக்கப்படும் அணி என்று கூறும் அதே சமயத்தில்,  ஒடுக்கப்படும் சமூக பிரிவினர் இதில் இடம் பெறும் அவசியம் குறித்தும் இடது ஜனநாயக திட்டம் பேசுகிறது.

இந்திய சமூக அமைப்பில் சாதியும் வர்க்கமும் பின்னிப் பிணைந்திருக்கின்றன. சாதிய அமைப்பின் மீதே, இன்றைய முதலாளித்துவ வர்க்கமும், தொழிலாளி வர்க்கமும் பிறந்திருக்கின்றன என்பதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புரிதலாகும். கட்சி திட்டத்தின் பிரிவு 3.15, சாதிய மற்றும் பாலின ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை என்பதை புரட்சிகர மாற்றத்தின் ஒரு முக்கிய பகுதியாக முன்னிறுத்துகிறது. இந்திய சூழலில், வகுப்புவாத நடவடிக்கைகளால் சிறுபான்மை மக்கள் பாகுபடுத்தப்படுகின்றனர் என்ற அடிப்படையில், விடுதலை என்பதில், சாதியம், மதவெறி போன்றவற்றிலிருந்து விடுதலை என்பதும் உள்ளடங்கும் எனவும் அது விளக்குகிறது.

சாதியம், வகுப்புவாதம், ஆணாதிக்கம் என்ற மூன்றுக்கும் எதிரான சமரசமற்ற போராட்டம், சுரண்டலை எதிர்த்த வர்க்க போராட்டத்தின் முக்கிய பரிமாணமாக விளங்குகிறது. ஒரு சமூகப் பகுதி என்ற முறையில் தலித், பழங்குடியின மக்கள், மத வழி சிறுபான்மையினர்,  பெண்கள் ஆகியோர் பிரத்தியேக ஒடுக்குமுறைக்கு உள்ளாகின்றனர். ஒருவர் பெண்ணாக, தலித்தாக/பழங்குடியினராக, தொழிலாளி/விவசாயியாக இருந்தால் பாலினம், சாதியம், வர்க்கம் என்கிற மூன்று அடிப்படையிலும் ஒடுக்கப்படுகிறார். இசுலாமியராக, கிறித்துவராக இருந்தால் இந்துத்துவ அடக்குமுறைக்கு உள்ளாகிறார்.  இத்தகைய சமூக ஒடுக்குமுறை பிரச்னைகளைக் கையிலெடுக்காமல், வர்க்க ஒற்றுமையையும் கட்ட முடியாது.

சமூக ஒடுக்குமுறையும் முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ கட்சிகளும்:

முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ கட்சிகள், கவனமாக, சமூக ஒடுக்குமுறையை அரசியல் படுத்தி, வாக்கு வங்கியாக மாற்றுகின்றன. ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்ற அடிப்படையில் தேர்தல் அரசியலை மையப்படுத்தியே பிரச்னைகளில் தலையீடுகள் செய்யப்படுகின்றன. உடுமலை சங்கர் படுகொலையில் குற்றவாளிகளுக்குத் தூக்கு தண்டனை கிடைத்தது குறித்து அதிமுக உள்ளிட்ட பல மாநில முதலாளித்துவ கட்சிகள் கருத்து கூற விரும்பவில்லை என்பது மட்டுமல்ல, தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான திமுக, அச்செய்தியை முரசொலியில் வெளியிடவில்லை என்பதும்,  எங்கள் கட்சி உறுப்பினர்களில் 70% இந்துக்கள் என்று ஒரு கட்டத்தில் கூறியதும்  இதற்கு ஒரு சான்று.

அதேபோல், சமீபத்தில் நடந்த குஜராத் தேர்தலில் காங்கிரஸ் பிரச்சாரம் செய்த ஓர் இடத்தில் கூட, மோடி  முதல்வராக இருந்தபோது  இசுலாமியர்கள் கொன்று குவிக்கப்பட்ட சம்பவத்தைப் பேசவில்லை. அதன் பொது செயலாளர் ராகுல் காந்தி, நான் ஒரு பிராமணன், சிவ பக்தன் என்று பேசியதும் தற்செயலானதல்ல. ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில், பசு பாதுகாப்பு என்ற பெயரால் இசுலாமியர்கள் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவங்களில், ஒரு கண்டன அறிக்கை கொடுப்பதற்குக் கூட  காங்கிரஸ் முன்வரவில்லை.

ராம நவமி போன்ற விழாக்களை, மேற்கு வங்கத்தில், பாஜகவுடன் போட்டி போட்டுக் கொண்டு காங்கிரஸ் நடத்தியது. ஒரு சில இடங்களில் விழா மேடையில் இரு கட்சிகளின் உள்ளூர் தலைவர்களும் இடம் பெற்றனர்.  அதாவது, இங்கு, சமூக பிரச்னைகளில் தன் கொள்கையை சொன்னால் பெரும்பான்மை மதத்தினரின் வாக்குகள் வராது என்று மதிப்பீடு செய்து, பாஜக நிகழ்ச்சி நிரலின் சில பகுதிகளைத் தமதாக்கிக் கொள்ள காங்கிரஸ் முயற்சிக்கிறது.

பாஜகவோ, சாதிய படிநிலையை நியாயப்படுத்திக் கொண்டே, இந்து என்கிற பெயரில் தலித்துகளை  அணி திரட்ட முயற்சிக்கிறது. சில இடங்களில் இசுலாமியர்களுக்கு எதிர் நிலையில் அவர்களை நிறுத்தியதும் நடந்திருக்கிறது.  கர் வாபசி என்ற அவர்கள் முழக்கத்தின் போது, முற்போக்காளர்கள் கேட்டனர், மீண்டும் இந்து மதத்துக்கு வந்த பிறகு, அவர்களை எந்த சாதியில் வைப்பீர்கள்,  அவரவர் ஏற்கனவே இருந்த சாதிய படிநிலையில் தானே? என்று.  வர்ணாசிரம தர்மம் உழைக்கும் வர்க்கத்தின் பகுதிகளான தலித், பழங்குடியின மக்கள், பெண்களை சமூக ஏணிப்படியின் கீழ் படியில்தான் வைத்திருக்கிறது. எனவே, இந்துத்துவத்தின்  உள்ளடக்கத்தில் சாதி வெறியும், ஆணாதிக்கமும் உண்டு என்பதைப் பார்க்கத் தவறி விடக்கூடாது.

இந்திய முதலாளித்துவம் சாதிய பாகுபாடுகளை வளர்க்கிறது என்று மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.  அதாவது சமூக ஒடுக்குமுறை, குறிப்பாக சாதிய, பாலின ரீதியான ஒடுக்குமுறை, மலிவு உழைப்பை உறுதி செய்கிறது.  முதலாளித்துவத்தின் அடித்தளமான உழைப்பு சுரண்டலை நியாயப்படுத்தும் ஏற்பாடே இது. ஏகாதிபத்தியத்தின் தற்கால முகத்தோற்றமான நவீன தாராளமயம் இச்சுரண்டலைத் தீவிரமாக்குகிறது. திமுக, அதிமுக போன்ற மாநில முதலாளித்துவ கட்சிகளும் கூட அவர்கள் வர்க்க நலனிலிருந்து நவீன தாராளமய ஆதரவாளர்களாக, அவற்றை நிறைவேற்றுபவர்களாக மாறியுள்ளனர். சமூக நீதி என்ற திராவிட கருத்தியலின் முக்கிய கூறு, இக்கட்சிகளின் குணாம்சம் மாறுபட்டுள்ள சூழலில், நீர்த்துப் போய்க்கொண்டிருக்கிறது. எனவே சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான அவர்களின் குரல் ஏட்டளவிலேயே நிற்பதைக் காண முடிகிறது.

மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைபாடு:

மார்க்சிஸ்ட் கட்சி சமூக ஒடுக்குமுறை தொடர்வதற்குக் காரணமாக உள்ள பொருளியல் தளத்தைக் கேள்விக்கு உள்ளாக்குகிறது. வேலை, நிலம், கூலி உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைக்கிறது. தீண்டாமை பிரச்னையை ஜனநாயக பிரச்னையாகப் பார்த்து, பாதிக்கப்பட்ட பகுதியினர் மட்டுமல்ல; ஜனநாயக எண்ணம் கொண்ட அனைவரும் சேர்ந்து போராட வேண்டிய அவசியத்தைப் பேசுகிறது.

அனைத்தையும் சாதி அமைப்புகள் என்று   வகைப்படுத்துவது தவறு  எனவும், சாதிய ஒடுக்குமுறையிலிருந்து விடுபட வேண்டும் என்று போராடும் தலித், பழங்குடியின அமைப்புகளின் செயல்பாட்டில், நிகழ்ச்சி நிரலில் விடுதலைக்கான வேட்கையும், ஜனநாயக உள்ளடக்கமும் இருக்கின்றன என்பதையும் விளக்குகிறது. சில தலித் இயக்கங்கள்  ஒடுக்கப்பட்ட மக்களை சாதிய வரம்புக்குள் நிறுத்துகிற அடையாள அரசியலைப் பின்பற்றுகின்றன. இத்தகைய அடையாள அரசியலை நிராகரித்து,  மேற்கூறிய ஜனநாயக உள்ளடக்கத்தை வலுப்படுத்த வேண்டும்.

வர்க்க போராட்டம் வலுப்பெற வேண்டுமானால், கடும் உழைப்பு சுரண்டலுக்கு உள்ளாகும் தலித் பழங்குடியின பகுதியினர் அதில் இடம் பெற வேண்டும். அவர்கள் மீதான பொருளாதார சுரண்டலுடன், அவர்கள் சந்திக்கும் பிரத்தியேக சமூக ஒடுக்குமுறை ஒழிக்கப்படுவதற்கான போராட்டத்தையும் சேர்த்துக் கையில் எடுக்க வேண்டும். அதே போல்தான், பாகுபாடுகளுக்கு எதிரான பெண்கள் இயக்கங்களின் போராட்டம், ஜனநாயக போராட்டத்தின் ஒரு பகுதி. சமத்துவத்துக்கான அவர்களின் குரல் சமூக விடுதலைக்கான குரல். எனவே மேற்கூறிய சமூகப்பகுதியினர், ஜனநாயக புரட்சியை முன்னெடுக்க முதல் கட்டமாகத் தேவைப்படும்  இடது ஜனநாயக அணியின் பிரிக்க முடியாத பகுதியினராக இடம் பெறுவர்.

மேலும், கிராமப்புற பணக்கார வர்க்கங்கள், சாதியிலும், பொருளாதாரத்திலும், வளங்களின் மீதும் அதிகாரம் செலுத்துபவர்களாக செயல்படுவதையும், மாநில முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ கட்சிகள் இவர்களின் நலனைப் பிரதிபலிப்பதையும், வாக்குகளுக்காகவும், நிதிக்காகவும் இவர்களை சார்ந்து இருப்பதையும், கிராமப்புற உழைப்பாளி மக்கள் மீதான சுரண்டல் வலை இந்தக் கொள்ளை கூட்டணியால் பின்னப்படுவதையும்  மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டமும், ஸ்தாபன சிறப்பு மாநாட்டு ஆவணமும் சுட்டிக்காட்டுகின்றன.  கிராமப்புறங்களில் நிலவும் இத்தகைய முரண்பாடுகளை முன்னிறுத்திப் போராடாமல் இடதுசாரி இயக்கத்தை வளர்த்துவிட முடியாது. இத்தகைய போராட்டத்திலும், அடிப்படை வர்க்கங்களுடன், தலித், பழங்குடியினத்தவர், பெண்கள் இணைக்கப்பட வேண்டும்.

முதலாளித்துவ வளர்ச்சிப் போக்கில், மத வழி சிறுபான்மை மக்களின் உரிமைகள் நிலைநாட்டப் படுவதில்லை என்று சுட்டிக்காட்டும் மார்க்சிஸ்ட் கட்சி, அவர்களது உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டம், ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மையை வலுப்படுத்தும் போராட்டமாகும் என உறுதிபடக் கருதுகிறது. ஜனநாயக புரட்சியை நோக்கிய பயணத்தில் இடது முன்னணி மேடையில் இவர்கள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.

ஊனமுற்றோர், இச்சமூகத்தில் பிரத்தியேக பிரச்னைகளை சந்திக்கின்றனர். இவர்களில் பெரும் பகுதியினர் ஏழைகளாக உள்ளனர். இவர்களும், இடது ஜனநாயக அணியில் இடம் பெற வேண்டிய சக்திகளே.

21வது அகில இந்திய மாநாட்டில் முன்வைக்கப்பட்ட இடது ஜனநாயக திட்டம்:

தலித்:

சாதி ஒழிப்பு, அனைத்து வித சாதிய ஒடுக்குமுறைகள் ஒழிப்பு, தீண்டாமை மற்றும் சாதிய பாகுபாடுகளைக் கடைப்பிடிப்போருக்குக் கடும் தண்டனை,  காலி பணியிடங்களை நிரப்புதல்,  தலித் கிறித்துவர்களையும் தலித் என வகைப்படுத்துவது,  தனியார் துறையில் இட ஒதுக்கீடு.

பழங்குடியினத்தவர்:

பழங்குடியின மக்களின் நில உரிமையைப் பாதுகாப்பது; அவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்களை மீட்பது;  வன உரிமை சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவது; சிறு வன பொருட்களுக்கு ஆதரவு விலை நிர்ணயிப்பது; பழங்குடி மொழிகள் மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாப்பது.

சிறுபான்மை மக்கள்:

சிறுபான்மையினர் உரிமைகளைப் பாதுகாப்பது; கல்வி, வேலை வாய்ப்பு, சமூக நல நடவடிக்கைகள் போன்றவற்றில் இசுலாமியர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்.

பெண்கள்:

சட்டமன்றங்கள், நாடாளுமன்றத்தில் மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு, பெண்கள், குழந்தைகள் மீதான அனைத்து வித வன்முறைகளையும் தடுக்க, நிறுத்த, குற்றவாளிகளைத் தண்டிக்க கறாரான நடவடிக்கைகள்; சம வேலைக்கு சம ஊதியம்.

ஊனமுற்றோர்:

உரிமை அடிப்படையிலான ஏற்பாடுகள், ஊனத்தை அடிப்படையாக வைத்து பாகுபாடு பார்ப்பதைத் தடுக்க அரசியல் சட்டத்தைத் திருத்துவது;  சம வாய்ப்புகள், சம தளத்தில் செயல்பட உகந்த ஏற்பாடுகள், அனைத்துப் பொது இடங்களுக்கும் தடையின்றிப் போவதற்கான ஏற்பாடு.

செய்ய வேண்டியது என்ன?

21வது அகில இந்திய மாநாட்டின் அரசியல் தீர்மானத்தின் 2.87 பிரிவு, பழங்குடி, தலித், பெண்கள், சிறுபான்மையினரின் ஜனநாயக தன்மை கொண்ட அமைப்புகள், ஒடுக்கப்பட்ட பிரிவினரின் பிரச்னைகளை எடுத்து செயல்படும் சமூக அமைப்புகள் இடது ஜனநாயக அணியின் ஓர் அம்சம் என்று குறிப்பிடுகிறது. முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ கட்சிகளின் கொள்கைகளுக்கும் முற்றிலும் மாறுபட்ட திட்டத்தின் அடிப்படையில் இவர்களை அணி திரட்டுவது முக்கிய கடமை என்றும் முன் வைக்கிறது.

இந்த அடிப்படையில்தான், கட்சியின் மத்திய குழு, தலித், பழங்குடியின அமைப்புகளுடன் ஒருங்கிணைப்பு, சிறுபான்மை மக்களின் நலனுக்காக செயல்படும் அமைப்புகள், ஒடுக்கப்பட்ட சமூக பிரிவினருக்காக நேர்மையுடன் போராடும் அமைப்புகள், பெண்கள் அமைப்புகளுடன் கூட்டுப் போராட்டங்கள் ஆகிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வலியுறுத்துகிறது. தத்துவார்த்த ரீதியான தலையீடுகள் செய்வதையும் வற்புறுத்துகிறது.

அரசின் கொள்கைகள் வர்க்கச் சுரண்டலைத் தீவிரப்படுத்துகிறது. ஏற்கனவே சமூக ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் பகுதியினர், இதற்குக் கூடுதல் இலக்காகின்றனர். மறுபுறம் நிலம், வேலை, கூலியில், பொருளாதாரத்தில் கீழ்மட்டத்தில் இருப்பதால் இவர்களை சமூக ஒடுக்குமுறைக்கு உள்ளாக்குவது எளிதாகிறது.  உதாரணமாக, நிலமற்றவர்களுக்காக நில சீர்திருத்தம் என்பது மார்க்சிஸ்ட் கட்சியின் போராட்ட கோரிக்கையாக இருக்கும் போது, நிலங்களிலிருந்து தலித் மற்றும் பழங்குடியினரை மேலும் அந்நியப்படுத்தி, கார்ப்பரேட் மற்றும் முதலாளிகளுக்கு ஆதரவாக நிலக்குவியலை உறுதி செய்ய சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படுகின்றன. நிலத்தின் மீது, வளங்களின் மீது அதிகாரம் மறுக்கப்படுவது பாகுபாடுகளை அதிகப்படுத்துகிறது. எனவே, ஒடுக்கப்பட்ட சமூக பகுதியினரின் நலனுக்கான மாற்று திட்டத்தை முன் வைத்து, வலுவான போராட்டங்களை சுயேச்சையாகவும், அவர்கள் மத்தியில் பணியாற்றும் அமைப்புகளுடன் இணைந்து நடத்துவதன் மூலம் இடதுசாரி அரசியல் நோக்கி அவர்களை ஈர்க்க முடியும். இப்பகுதியினர் மத்தியில் பணியாற்றும் இடதுசாரி அமைப்புகள் இத்தகைய கண்ணோட்டத்துடன் இயங்க வேண்டும்.