இந்தியமக்களின் விடுதலை – கம்யூனிஸ்டுகளின் தெளிவான மாற்றுப்பார்வை

பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா

அறிமுகம்

சுதந்திர இந்தியாவின் எழுபத்தி ஐந்தாம் ஆண்டை அதிகார பூர்வமாக கொண்டாடிவரும் ஒன்றிய அரசின் தலைமை விடுதலை இயக்கத்தில் பங்கேற்காத ஒன்றாகும். இத்தலைமையின் அரசியல்-தத்துவார்த்த முன்னோடிகள் காலனி அரசிடம் மண்டியிட்டு, மன்னிப்புக் கேட்டு, சேவகம் புரிந்தவர்கள். அவர்களது இலக்கு, மதசார்பற்ற, பல்வேறு மொழிவழி தேசீய இனங்களும் தன்னாட்சி பெற்று இணைந்து வாழும் இந்திய ஒன்றியம் அல்ல. மாறாக, பெரும்பான்மை என்ற போர்வையில், இந்துராஷ்டிரா என்ற இலக்கைத்தான் இன்றைய ஆட்சியாளர்களின் அன்றைய குருமார்கள் முன்வைத்தனர். மகாத்மா காந்தி கொலையில் குற்றம் சாட்டப்பட்டு தண்டனையிலிருந்து தப்பிய சவார்கர், முஞ்சே, ஆர் எஸ் எஸ். ஸின் பயங்கர இந்து ராஷ்டிரா இலக்கணத்தை விரிவாக முன்வைத்த கோல்வால்கர் உள்ளிட்ட அனைத்து ஆர் எஸ் எஸ் தலைவர்களுக்கும் எந்த ஒரு கட்டத்திலும் இந்திய மக்களின் விடுதலை இலக்காக இருந்ததில்லை. பன்முக இந்திய தேசத்தின் அரசியல் விடுதலையும் ஆர் எஸ் எஸ்  இலக்காக என்றுமே இருந்ததில்லை.

இந்திய தேசீய காங்கிரசின் விடுதலை இயக்கப் பார்வை

இந்திய விடுதலை இயக்கத்தில் தலைமை பாத்திரத்தை வகித்த காங்கிரஸ் கட்சி அரசியல் விடுதலை என்ற இலக்கை அக்கட்சி துவங்கி பல பத்தாண்டுகள் முன்வைக்கவில்லை. 1885 இல் துவக்கப்பட்ட இந்திய தேசீய  காங்கிரஸ் கட்சி 1930 இல் தான் இந்திய தேசத்தின் முழுவிடுதலை என்ற முழக்கத்தை  முறையாக அதன் அகில இந்திய மாநாட்டில் பிரகடனப்படுத்தியது. மக்கள் எழுச்சியின் காரணமாக விடுதலை முழக்கத்தை இவ்வாறு முன்வைத்தபோழுதும், விடுதலை  பெற்ற இந்தியா எத்தகைய சமூகமாக இருக்கவேண்டும் என்பது பற்றியெல்லாம் காங்கிரஸ் விரிவாகவோ ஆழமாகவோ பேசவில்லை. அடுத்தடுத்து வந்த காலங்களில் விவசாயிகளையும் தொழிலாளிகளையும் இதர பகுதி உழைப்பாளி மக்களையும் விடுதலை இயக்கத்தில் விரிவாக பங்கேற்க வைப்பதற்கு அவர்களது அன்றாட வாழ்வுசார் கோரிக்கைகளையும் முன்வைக்க வேண்டும் என்ற அவசியத்தை காங்கிரஸ் தலைமை, முன்பின் முரணின்றி இல்லாவிடினும் ஓரளவாவது உணர்ந்தது. இதனால் தான் உழுபவனுக்கு நிலம் சொந்தம், குறைந்தபட்சக்கூலி, வேலை நேரம் வரையறுக்கப்படுவது போன்ற பிரச்சினைகள் பற்றி அது பேசியது. 1930களில் மேலை ஏகாதிபத்திய நாடுகள் பெரும் வீழ்ச்சியில் பத்தாண்டு காலம் சிக்கி உழைக்கும் மக்கள் பெரும் வேலையின்மை, வறுமை பிரச்சனைகளை  சந்தித்துக்கொண்டிருந்த காலத்தில் சோசலிச சோவியத் ஒன்றியம் திட்டமிட்ட பொருளாதார வளர்ச்சி மூலம் அனைவருக்கும் வேலையையும், தொடர்ந்து உயரும் வாழ்க்கை நிலையையும் உறுதிப்படுத்திய அனுபவம் இந்திய தேசீய காங்கிரஸ் தலைமையின் ஒருபகுதியினரை சோசலிசம் பற்றியும் திட்டமிடுதல் பற்றியும் பேச வைத்தது. எனினும் காங்கிரஸ் கட்சி விடுதலை இயக்க காலத்திலும், அதன் பின்பும், சொற்களைத் தாண்டி இத்திசைவழியில் வெகுதூரம் பயணிக்கவில்லை. முதலாளித்துவ வளர்ச்சிப்பாதைதான் காங்கிரஸ் கட்சியின் கனவாக விடுதலைபோராட்ட காலத்திலும் அதன் பின்பும் இருந்தது. இதுபற்றி தோழர் இஎம்எஸ் நம்பூதிரிபாத் மிகச்சிறப்பாகவும் தெளிவாகவும் இந்திய சுதந்திரப்போராட்ட வரலாறு என்ற புத்தகத்திலும் நெருக்கடியில் இந்தியாவின் திட்டமிடல் என்ற நூலிலும் விளக்கியுள்ளார்.

எத்தகைய மாண்புகளும் விழுமியங்களும் இந்திய விடுதலை போராட்டத்தில் உயர்த்திப் பிடிக்கப்படவேண்டும் என்பதிலும் காங்கிரஸ் முன்னுக்குப்பின் முரணான நிலைபாடுகளைத்தான் கொண்டிருந்தது. சாதி அமைப்பையும் சமூக ஒடுக்குமுறைகளையும் தீவிரமாக காங்கிரஸ் எதிர்க்கவில்லை. பொதுவாக மதசார்பின்மை என்ற விழுமியத்தை ஏற்றுக்கொண்ட போதிலும் நடைமுறையில் காங்கிரஸ் கட்சி அதனை முரணின்றி பின்பற்றவில்லை. பெரும்பாலும் நிலப்ரபுக்களையும் ஜமீன்தார்களையும் மன்னராட்சிகளையும் எதிர்த்து காங்கிரஸ் களம் இறங்கவில்லை. மாறாக, இந்திய முதலாளிகளின் நலம் காக்கும் நோக்குடனே செயல்பட்ட காங்கிரஸ் இயக்கம், கிராமப்புற ஆதிக்க சக்திகளுடன் மோதலை தவிர்க்கவே முயன்றது. சாதி ஒடுக்குமுறையை தகர்க்கவோ, பழங்குடி மக்களின் உரிமைகளை நிலைநாட்டவோ காங்கிரஸ் தலைமை குறிப்பிடத்தக்க எந்த முயற்சியும் எடுத்ததாக சான்றுகள் இல்லை. விடுதலைக்குப்பின் இந்திய தேசீய காங்கிரஸ் பகிரங்கமாகவே கிராமப்புற பெருநில உடமையாளர்களுடன் சமரசம் செய்துகொண்டது. மக்கள் எழுச்சியின் காரணமாகவும் முதலாளித்துவ வளர்ச்சியின் தேவை அடிப்படையிலும் கிராமப்புற மற்றும் வேளாண் உற்பத்தி உறவுகளில் சில மாற்றங்கள் நிகழ்ந்தன. ஒரு எல்லைக்கு உட்பட்ட நிலச்சீர்திருத்த நடவடிக்கைகளை காங்கிரஸ் மேற்கொண்டது. ஆனால் அடிப்படையில் பெருமுதலாளிகளின் தலைமையிலான முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ வர்க்க ஆட்சியைத்தான் காங்கிரஸ் நடத்திவந்தது. அப்பாதையின் நெருக்கடி 1980 – 1991 காலத்தில் மேலும் மேலும் தீவிரமடைந்த பின்னணியில், பன்னாட்டு அரங்கில் சோவியத் ஒன்றியத்திலும் பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் சோசலிச அமைப்புகள் தகர்க்கப்பட்ட சூழலில், 1991 இல் இருந்து காங்கிரஸ் நவீன தாராளமய கொள்கைகளை தீவிரமாக அமலாக்கியது. இந்த நிகழ்ச்சிப்போக்குகள் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் இந்திய அரசின் வர்க்கத்தன்மை பற்றிய கீழ்கண்ட மதிப்பீடு மிகச்சரியானது என்று நிரூபிக்கின்றன: “இந்திய அரசு முதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்களின் அரசு. இதற்கு தலைமை தாங்குவது பெருமுதலாளிகள். இப்பெருமுதலாளிகள் மேலும் மேலும் கூடுதலாக அந்நிய நிதி மூலதனத்துடன் இணைந்து செயல்படுகின்றனர்.”

இக்கட்டுரையின் நோக்கம் விடுதலை இயக்கத்திலும் அதன் பின்பும் இந்திய தேசீய காங்கிரஸ் எடுத்த பல்வேறு நிலைபாடுகள், அவற்றில் இருந்த முரண்கள் மற்றும் அவற்றின் வர்க்கத்தன்மை ஆகியவற்றை ஆய்வது அல்ல. எனினும் இந்திய நாட்டின் விடுதலை இயக்கத்தையும் இந்திய மக்களின் விடுதலை என்ற இலக்கையும்  பொது உடமை இயக்கம் எவ்வாறு முன்பின் முரணின்றி இணைத்துப் பார்த்தது என்பதை புரிந்து கொள்ள உதவும் வகையில் தேச விடுதலை இயக்கத்திற்கு தலைமை தாங்கிய காங்கிரஸ் கட்சியின் அணுகுமுறை தொடர்பான கருத்துக்கள் இங்கே இடம் பெற்றுள்ளன.

விடுதலை இயக்கத்தில் கம்யூனிஸ்டுகளின் மாற்று பார்வை

இந்திய தேசீய காங்கிரஸ் என்ற அரசியல் அமைப்பின் வாயிலாக இந்திய முதலாளிவர்க்கம் 1885 ஆம் ஆண்டிலேயே அரசியல் களம் புகுந்துவிட்டது. இதற்குப்பின் பல பத்தாண்டுகளுக்குப் பின் தான் நவீன தொழிலாளி வர்க்கம் உருவாகி எண்ணிக்கையில் வேகமாக அதிகரித்த நிலையில், உலகெங்கும், குறிப்பாக ரஷ்யாவிலும் எழுந்த புரட்சிகர அலைகளின் பின்புலத்தில் இந்திய தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் உணர்வும் விடுதலை வேட்கையும் வேகமாக வளர்ந்து அரசியல் களத்திற்கு வருகிறது.1917இல் ரஷ்யாவில் வெடித்த மகத்தான அக்டோபர் புரட்சியின் தாக்கம் இதில் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தது.

1921இல் காங்கிரஸ் முன் கம்யூனிஸ்டுகள் வைத்த கடிதம்

1920இல் முதன்முறையாக கூடிய அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (ஏஐடியுசி ) வளர்ந்துவந்த தொழிலாளி வர்க்க இயக்கத்தின் ஒரு குறியீடு என்றால், 1921இல் காங்கிரஸ் கட்சியின்  அகமதாபாத் நகரில் கூடிய அகில இந்திய கமிட்டி கூட்டத்திற்கு இந்திய பொது உடமை இயக்கத்தின் துவக்கத்தில் பங்கேற்ற M.N.ராய் மற்றும் அபானி முகர்ஜி ஆகிய இருவரும் சமர்ப்பித்த கடிதத்தின் வாயிலாக முன்வைக்கப்பட்ட அறைகூவல் விடுதலை இயக்கத்தில் சில இடதுசாரி கருத்துக்களை பிரகடனப்படுத்தியது. நிறைகுறைகள் இருந்தாலும், இது கவனிக்கத்தக்க ஆவணம். அடுத்த ஆண்டு கயாவில் காங்கிரஸ் கூடிய பொழுதும் இக்கடிதம் அனுப்பப்பட்டது. இக்கடிதம் முழு சுதந்திரம் – “பூரண ஸ்வராஜ்” – என்ற கோரிக்கையை விடுதலை இயக்கத்தில் முதன் முறையாக எழுப்பியது. இந்த கோரிக்கையை 1929 இல் தான் காங்கிரஸ் ஏற்றுகொண்டது. அது மட்டுமல்ல; விடுதலைப் போராட்டத்தில் விவசாயிகளையும் தொழிலாளிகளையும் இதர உழைக்கும் மக்களையும் ஈர்க்கும் வகையில் அவர்களின் உடனடி வாழ்வுசார் பிரச்சினைகளை காங்கிரஸ் கையில் எடுக்க வேண்டும் என்று கடித வடிவிலான இந்த பிரகடனம் வலியுறுத்தியது. அது கூறியது: “(காங்கிரஸ்) தொழிற்சங்கங்களின் குறைந்தபட்ச கோரிக்கைகளை தனது கோரிக்கைகளாக ஏற்கட்டும்; விவசாய சங்கங்களின் திட்டத்தை தனது திட்டமாக ஏற்கட்டும்…. விரைவில் எந்த இடையூறும் காங்கிரஸ் முன்னேறுவதை தடுக்க இயலாது. தங்களின் பொருள்சார் நலனுக்காக உணர்வுபூர்வமாக போராடும் அனைத்து மக்களின் எதிர்கொள்ள முடியாத வலிமை காங்கிரசுக்கு பின்பலமாக இருக்கும்.” இந்த அறைகூவலை தொடர்ந்து தோழர் சிங்காரவேலர் காங்கிரஸ் கட்சியின் கயா மாநாட்டில் அறிவிக்கப்பட்ட கம்யூனிஸ்ட் என்ற முறையில் முழு சுதந்திரம் என்ற முழக்கத்தை ஏற்குமாறு வற்புறுத்தி உரை நிகழ்த்தினார்.

வகுப்புவாத எதிர்ப்பில் இடதுசாரிகள்

தொடர்ந்து காலனி அரசின் கடும் தாக்குதலுக்கு உள்ளான போதிலும் கம்யூனிஸ்ட் கட்சி தன்னை புனரமைத்துக்கொண்டு 1926ஆம் ஆண்டு மே மாதத்தில் வகுப்பு வாதவாத பிரச்சினை பற்றி தனது அறிக்கையை வெளியிட்டது. 1922 முதல் 1927 வரை ஏராளமான வகுப்பு கலவரங்கள் நிகழ்ந்தன. நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். பல காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் தலைவர்கள் வகுப்புவாத சிந்தனைகளுக்கும் செயல்பாட்டுக்கும் மாறினர். இந்துமஹாசபா தலைவராக இருந்த சவார்கர் எழுதிய இந்துத்வா என்ற புத்தகம் 1923இல் வெளிவந்தது. 1925இல் ஆர் எஸ் எஸ் அமைப்பு உருவாக்கப்பட்டது. இத்தகைய சூழலில் கம்யூனிஸ்ட் கட்சி வகுப்புவாதத்தை சமரசமின்றி எதிர்ப்பது என்ற தனது நிலைபாட்டை உறுதிபட கடைப்பிடித்தது. காங்கிரசைப் போல் அல்லாமல், வகுப்புவாத அமைப்பை சார்ந்த எவரும்  கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக முடியாது என்ற நிலையை அது ஏற்கெனவே எடுத்திருந்தது. தோழர்கள் முசபர் அஹமதும் பாகர்ஹட்டாவும் இணைந்து வெளியிட்ட கடிதத்தில் இந்துக்களும் முஸ்லிம்களும் அந்நிய மற்றும் இந்திய முதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்களால் சமமாக சுரண்டப்படுகின்றனர் என்றும், இருசாராரின் பொருளாதார நலன்களும் ஒன்றானவையே என்றும் வலியுறுத்தினர். வர்க்க பேதமற்ற சமூகத்தை இருசாராரும் இணைந்து உருவாக்க முன்வரவேண்டும் என்றும் அக்கடிதம் அறைகூவல் விடுத்தது. காலனி ஆதிக்க சுரண்டலை எதிர்க்கவும் அழைத்தது.

1930இல் கம்யூனிஸ்டுகள் முன்வைத்த நடவடிக்கைக்கான திட்டம்

1920கள் முழுவதும் காலனி அரசால் வேட்டையாடப்பட்டு வந்தபோதிலும் கம்யூனிஸ்டுகள் உறுதியுடன் எதிர்காலப் பணிகள் பற்றி முனைப்புடன் சிந்தித்தனர். 1930ஆம் ஆண்டு நடவடிக்கைக்கான நகல் திட்டம் என்ற கம்யூனிஸ்ட் கட்சி ஆவணம்  இந்திய மக்களின் விடுதலை பற்றி கம்யூனிஸ்டுகளின் கண்ணோட்டத்தை பதிவு செய்தது. அது கூறியது:

இந்திய மக்களின் அடிமைத்தளைகளை அழித்தொழிக்கவும், தொழிலாளி வர்க்கத்தையும் விவசாயிகளையும் அவர்களை கசக்கிப் பிழியும் வறுமையில் இருந்து விடுவிக்கவும், தேசத்தின் விடுதலையை அடைவது அவசியம். விவசாய புரட்சி என்ற பதாகையை உயர்த்திப் பிடிப்பது அவசியம்……இந்தியாவின் புரட்சிகர விடுதலைக்கு பிரிட்டிஷ் முதலாளித்துவத்திற்கு எதிராகவும் நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராகவும் விவசாய புரட்சியை சாதிப்பது தான் அடிப்படை.

இதனை செய்வது யார் என்ற கேள்விக்கு அந்த அறிக்கை தொடர்ந்து கூறியது:

உலக வரலாறும் இந்தியாவில் வர்க்கப் போராட்டம் அளித்துள்ள படிப்பினைகளும் இந்திய மக்களின் விடுதலை, தேச அடிமைநிலையை ஒழிப்பது, தேச வளர்ச்சிக்கு குறுக்கே நிற்கும் அனைத்து தடைகளையும் தகர்த்தெறிவது, (சுரண்டும் வர்க்கங்களின்) நிலங்களை பறிமுதல் செய்து, புரட்சிகர தன்மையிலான மிகப்பெரிய அளவிலான ஜனநாயக புனரமைப்பை சாதிப்பது ஆகிய அனைத்தும் தொழிலாளி வர்க்கத் தலைமையின் கீழ் மட்டுமே சாத்தியம் என்பதை நிரூபிக்கின்றன.

1930 அறிக்கை முன்வைத்த மக்களுக்கான கோரிக்கைகள் 

மக்களுக்கான விரிவான திட்டத்தையும் அறிக்கை முன்வைக்கிறது. அதன் அனைத்து அம்சங்களையும் நாம் இங்கே விளக்கவோ விவாதிக்கவோ இயலாது. எனினும் நம்மை வியக்க வைக்கும் வகையில் தொலைநோக்குப் பார்வையுடன் பல விஷயங்களை அத்திட்டம் முன்வைத்துள்ளதை கோடிட்டுக் காட்டலாம். ஆவணம் முன்வைக்கும் கோரிக்கைகளில் சிலவற்றை பார்ப்போம்:

  • பிரிட்டிஷ் ஆட்சியை தூக்கி எறிந்தபின், அனைத்து (அந்நிய) கடன்களையும் ரத்துசெய்தல்; அனைத்து பிரிட்டிஷ் தொழிற்சாலைகள், வங்கிகள், ரயில், கடல் மற்றும் நதி சார் போக்குவரத்து, மலைத்தோட்டங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து நாட்டுடமை ஆக்குதல்.
  • நிலப்பிரபுக்களின் நிலங்கள், வனங்கள், இதர சொத்துக்கள் ஆகியவற்றை நட்டஈடுஇன்றி பறிமுதல் செய்து உழைக்கும் விவசாயிகளிடம் ஒப்படைத்தல். (இது, மன்னர்கள்,பிரிட்டிஷ் அரசு அலுவலர்கள், லேவாதேவிகாரர்கள் ஆகியோருக்கும் பொருந்தும்). வங்கிகளுக்கும் லேவாதேவிக்காரர்களுக்கும் விவசாயிகள் தரவேண்டிய கடன்கள் ரத்து செய்யப்படும். அனைத்து ஆண்டான்-அடிமை ஒப்பந்தங்களும் ரத்தாகும்.
  • எட்டு மணி நேர வேலைநாள், தொழிலாளர் பணிநிலைமைகளில் மிகப்பெரிய முன்னேற்றம், கூலி உயர்வு ஆகியவை உறுதிசெய்யப்படும். வேலைகிடைக்காதவர்களுக்கு அரசு பராமரிப்பு வழங்கப்படும்
  • ஊடக சுதந்திரம், தொழிலாளர்களுக்கான அமைப்பு மற்றும் வேலை நிறுத்த உரிமை.
  • மறியலுக்கு தடை விதித்தல் உட்பட அனைத்து தொழிலாளர் விரோத சட்டங்கள் ரத்தாகும்.
  • அரசில் இருந்து மதம் முழுமையாக விலக்கப்படும்.
  • சாதி அமைப்பும் சாதி ஒடுக்குமுறைகளும் முழுமையாக அழித்தொழிக்கப்படும்.

பெண்கள் உரிமைகள்

இந்திய சமூகத்தில் பெண்களின் துயரநிலையை முடிவுக்கு கொண்டுவர பல நடவடிக்கைகளை 1930ஆம் ஆண்டு அறிக்கை பேசுகிறது. பெண்களின் முழுமையான சமூக, பொருளாதார, சட்டரீதியான சமத்துவத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராடும் என்று ஆவணம் கூறுகிறது. இதுபற்றிய விவரமான கருத்துக்கள் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. அன்றே, கருவுற்றிருக்கும் பெண் தொழிலாளர்களுக்கு மகப்பேறுக்கு முன்பு இரண்டு மாதம், பின்பு இரண்டு மாதம் முழு சம்பளத்துடன், தக்க இலவச மருத்துவ வசதிகளுடன்  விடுப்பு தரப்படவேண்டும் என்று அறிக்கை கூறியுள்ளது. பெண்கள் வேலை செய்யும் ஆலைகளில் ஆலை உடைமையாளர் செலவில் குழந்தை காப்பகங்கள் அமைக்கப்பட்டு செயல்படவேண்டும் என்ற கோரிக்கையையும் இந்த ஆவணம் முன்வைத்துள்ளது. பெண்தொழிலாளர்கள் அவர் தம் சிசுவிற்கு பாலூட்ட தனி அறை, இப்பெண்களுக்கு 6 மணி நேரம் மட்டுமே வேலைநாள் என்ற கோரிக்கைகளும் அறிக்கையில் இடம் பெறுகின்றன.

கல்வி, இளைஞர் நலம்

16 முதல் 20 வயதுவரையிலான இளைஞர்களுக்கு வேலைநாள் நான்கு மணிநேரமாக இருக்கவேண்டும் என்றும் 16 வயதுக்கு குறைவான குழந்தைகளை பணி அமர்த்தக்கூடாது அறிக்கை கோருகிறது. 16 வயதுவரை, கட்டாய இலவச கல்வி அரசால் வழங்கப்படவேண்டும் என்றும் அது கோருகிறது. அனைத்து மாணவர்களுக்கும் பாடபுத்தகங்கள், உணவு, உடை ஆகியவை அரசால் வழங்கப்படவேண்டும் என்பது அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.

1930கள், 1940கள்

கட்சியின் முதல் திட்ட ஆவணம் 1930 இல் தயார் செய்யப்பட்டது. அப்பொழுது மீரட் சதிவழக்கு நடந்துகொண்டிருந்தது. மீரட் சதிவழக்கில் சிறை சென்ற தோழர்கள் வெளியே வந்தபிறகு நகல் அரசியல் கருத்துரு ஒன்று டிசம்பர்  1933 இல் அன்றைய “தற்காலிக (புரோவிஷனல்)”   மத்தியக் குழுவால் நிறைவேற்றப்பட்டது. பின்னர் 1936 இல் மூன்றாவது திட்ட ஆவணம் – நடவடிக்கைக்கான மேடை – ஏற்றுக்கொள்ளப்பட்டது. முந்தைய இரு ஆவணங்களில் இருந்த சில தவறுகளை நீக்கிய  இந்த ஆவணத்தின் அடிப்படையில் சர்வதேச அகிலத்துடன் இந்திய கம்யூனிஸ்ட் இணைப்பு பெற்றது. பின்னர் 1943இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்  முதல் அகில இந்திய மாநாட்டில் கட்சி திட்டம் தொடர்பான வழிகாட்டுதல்கள் தரப்பட்டன. சர்வதேச மற்றும் இந்திய நிலைமைகள் பற்றிய மதிப்பீடுகள் தொடர்பாக  இந்த ஆவணங்களில் சில வேறுபாடுகள் இருந்தபோதிலும், நாட்டு விடுதலையிலும் மக்கள் விடுதலையிலும் உழைக்கும் மக்களின் கோரிக்கைகளை முன்னிறுத்தி மக்களை விடுதலை இயக்கத்தில் திரட்டவேண்டும் என்ற புரிதல் தொடர்ந்தது. பின்னர், கம்யூனிஸ்ட் இயக்கத்தில் புரட்சியின் கட்டம் பற்றியும், அதன் தலைமை வர்க்கம் பற்றியும், பங்கேற்கும் வர்க்கங்கள் பற்றியும், இந்திய அரசின் வர்க்கத்தன்மையை மதிப்பீடு செய்வதிலும், அதிலிருந்து புரட்சியின் பாதையை இனம் காண்பதிலும் கடுமையான வேறுபாடுகள் எழுந்தன. நீண்ட போராட்டத்திற்குப்பின், மக்கள் ஜனநாயக புரட்சி என்ற இலக்கை நோக்கி இயக்கம் பயணிக்க வேண்டும் என்ற, விடுதலை இயக்க காலத்தில் அங்கீகரிக்கப்பட்டிருந்த  புரிதலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தொடர்ந்து முன் எடுத்துச் சென்றுள்ளது. இந்த வரலாறுக்குள் செல்வது இக்கட்டுரையின் வரம்பிற்கு அப்பாற்பட்டது.

இறுதியாக

இக்கட்டுரையின் நோக்கம், முதலாளித்துவ கட்சிகளைப்போல் இல்லாமல், கம்யூனிஸ்ட் இயக்கம் வர்க்கப் பார்வையில் நின்று விடுதலை இயக்கத்தில் செயல்பட்டது என்பதை தெளிவு படுத்துவது தான். அரசியல் விடுதலையின் அவசியத்தை நன்கு உணர்ந்து, இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி ஊசலாடிக்கொண்டிருந்த பொழுதே, 1921இலேயே முழுவிடுதலை என்ற கோரிக்கையை முன்வைத்த கம்யூனிஸ்டுகள் வெறும் அரசியல் விடுதலை மட்டும் நமது நோக்கமாக இருக்கமுடியாது என்பதையும் வலுவாக முன்வைத்தனர். வர்க்க அடிப்படையில் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளைக் கையில் எடுப்பது அவசியம் என்று வலியுறுத்தினர். இத்தகைய பாதையின் மூலம் தான் உண்மையான ஜனநாயகத்தன்மை கொண்ட நாடாக இந்தியா மாற இயலும் என்பதை 1921,1930 ஆவணங்களில் மட்டுமின்றி, அதற்குப் பின்பும், விடுதலைப் போராட்ட காலத்திலும், இன்று வரையிலும் கம்யூனிஸ்டுகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளனர். அதேபோல் சமூக ஒடுக்குமுறையை முடிவுக்கு கொண்டு வருவதும் பழங்குடி மக்களின் சம உரிமைகளை நிலை நாட்டுவதும் பாலின சமத்துவத்தை நோக்கி பயணிப்பதும் இந்திய நாட்டு மக்களின் விடுதலைப் பயணத்தின் இன்றியமையாத அம்சங்கள் என்ற புரிதலுடன் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி செயல்படுகிறது. இந்தியா பல மொழிவழி தேசீய இனங்களைக்கொண்ட நாடு என்பதையும் மக்களின் முழுமையான விடுதலை என்பதன் இலக்கணத்தின் பகுதியாக முன்வைக்கிறது. அதேபோல், மதச்சார்பின்மையையும் நவீன இந்தியாவின் இலக்கணத்தின் பகுதியாக நாம் பார்க்கிறோம். நவீன தாராளமய கொள்கைகளை நிராகரித்து, வலுவான பொதுத்துறை, திட்டமிட்ட பொருளாதாரம் என்ற திசைவழியில் பயணித்தால் தான் ஏகாதிபத்திய தாக்குதலை எதிர்த்து நிற்கவும், பாடுபட்டு பெற்ற அரசியல் விடுதலையை பாதுகாக்கவும் இயலும். இந்த அம்சங்கள் அனைத்தும் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் சமகாலப்படுத்தப்பட்ட திட்டத்தில் தெளிவாகவும் விரிவாகவும் விளக்கப்பட்டுள்ளன.

சமகாலத்தில் பல்வேறு அரசியல் பார்வைகளும் “மாடல்களும்” உரத்த குரலில் முன்வைக்கப்படுகின்றன. ஒருபுறம் ஆர் எஸ் எஸ் சின் கார்ப்பரேட் இந்துத்வா மாடல் ஊடகங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. மறுபுறம் மதசார்பின்மை பற்றி அவ்வப்பொழுது பேசினாலும் தாராளமய பாதை தான் சரியான மாடல் என்று காங்கிரஸ் கருதுகிறது. விவசாய புரட்சியின்றி, சில சமூக சீர்திருத்த முனைவுகள், சில நலத்திட்டங்கள் மற்றும் தாராளமய கொள்கைகள் மூலம் வளர்ச்சி காணலாம் என்ற சில மாநில முதலாளித்துவ கட்சிகளின் மாடல்கள் முன்மொழிகின்றன. கம்யூனிஸ்ட் இயக்கம் சமூக ஒடுக்குமுறையையும் பொருளாதார சுரண்டலையும் இணைந்தே எதிர்ப்பது தான் சரியான, புரட்சிகரமான வர்க்கப்பார்வை என்ற புரிதலில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதுதான் மக்கள் விடுதலை என்ற இலக்கை அடைய சரியான பாதை. எனவே தான், தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் விவசாயிகளையும் இதர உழைக்கும் மக்களையும் திரட்டி போராடுவதோடு, சாதி ஒடுக்குமுறையை தகர்ப்பது, பாலின சமத்துவத்தை நிலைநாட்டுவது, பழங்குடி மக்களின் உரிமைகளை உயர்த்திப்பிடிப்பது, தாராளமய பாதையை நிராகரிப்பது, பொதுத்துறையை வலுப்படுத்துவது, மாநில உரிமைகளுக்கு குரல் கொடுப்பது, மதசார்பின்மையை பாதுகாப்பது ஆகிய அம்சங்களும் மக்கள் ஜனநாயக புரட்சிப் பயணத்தின்  இன்றியமையாத அம்சங்கள் என்று மார்க்சிஸ்ட் கட்சி கருதுகிறது.

நகரமயமும், நம் முன் உள்ள கடமைகளும் !

அருண் குமார்

தமிழில்: ச.லெனின்

நாட்டில் வேகமாக நகர்மயமாகும் மாநிலங்களில் தமிழ் நாடும் ஒன்று. புள்ளிவிவரங்களின்படி தமிழகத்தின் 48.5 சதவீத மக்கள் நகரங்களில் வசிக்கின்றனர். இந்த போக்கு அடுத்த சில பத்தாண்டுகளுக்குத் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நகர்மயமாதல் என்பது வாய்ப்பு மற்றும் சவால்கள் என இரண்டையும் ஒருங்கே கொண்டுள்ளது.

பொருளாதார மற்றும் சமூக ரீதியான மேம்பட்ட ஒரு வாழ்நிலைக்கான நம்பிக்கையோடு நகரங்களை நோக்கி புலம்பெயரும் மக்களுக்கு நகர்மயம் சவாலாக உள்ளது. அதேநேரம் அரசிற்கோ அதிகப்படியான வரியை விதித்து அதன் வருவாய்க்கான வழிகளை அதிகப்படுத்துவதற்கான வாய்ப்பாக உள்ளது. இந்தப் பின்னணியில், சமூக மாற்றத்தை நிகழ்த்துவதற்கான உறுதிப்பாடுடன் இருக்கும் புரட்சிகர சக்தி என்கிற வகையில் நகர்பகுதிகளில் நமது தலையீடு அவசியமானதாகும். நமக்கு நகர்மயம் என்பது சவாலாகவும் அதேநேரம் வாய்ப்பாகவும் உள்ளது.

கொல்கத்தா பிளீனத்தின் ஸ்தாபனம் குறித்த அறிக்கையில் நகர்ப்புற மக்கள் மத்தியில் நமது தொடர்பை வலுப்படுத்துவதன் அவசியம் குறித்து கூடுதல் அழுத்தம் கொடுத்து குறிப்பிடப்பட்டுள்ளது. நகரங்கள் என்பது தொழிற்சாலைகளில் மையமாக மட்டுமில்லாமல் சேவை துறை சார்ந்த மையங்களாகவும் வளர்ந்து வருகிறது. நாட்டின் உள்நாட்டு உற்பத்திக்கு இந்த இரண்டு துறைகளும் கூடுதலான பங்களிப்பை செலுத்துகிறது என்பதோடு மட்டுமல்லாமல், அவை அதிகமான வேலைவாய்ப்புகளை வழங்கும் இடமாகவும் உள்ளது. கிராமப்புற இளைஞர்கள் பலர் வேலை மற்றும் மேம்பட்ட வாழ்வை தேடி நகரங்களை நோக்கி புலம்பெயர்கின்றனர். நகரங்கள் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தொழில் துறையில் பணியாற்றும் தொழிலாளர்களுடன், சேவை துறை சார்ந்த பணிகளில் வந்து குவியும் புதிய தலைமுறையினர் கூடுதலாக இணைகின்றனர். அந்தவகையில் நகரங்கள் இன்னமும் உழைக்கும் வர்க்கத்தின் முக்கிய மையமாக திகழ்கிறது. எனவே நகரங்களில் நமது அடித்தளத்தை வலுவாக்க வேண்டியது அவசியமாகிறது.

வங்கி, காப்பீடு, கல்லூரிகள், பள்ளிகள், பயிற்சி மையங்கள் என நிதி மற்றும் கல்வி சார்ந்த நடவடிக்கைகள் நகரங்கள் மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகம் நடைபெறுகிறது. வளர்ந்துவரும் தகவல் தொழில் நுட்பத்துறை புதிய தலைமுறையினரின் துறைசார் வல்லுநர்களை (professionals) நகரங்களை நோக்கி வரவைக்கிறது. இவர்களில் பெரும்பகுதியினர் தங்களின் வாழ்வை மேம்படுத்திக்கொள்ளும் கனவுடன் கூடிய, நன்கு படித்த, மத்தியதர வர்க்கத்தினராக உள்ளனர். இருக்கும் பொருளாதார நிலைமைகளில் அவர்களின் கனவுகள் நிராசைகளாகவே முடியும் என்பதை உணர மறுக்கின்றனர். மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்றாததையும், மாசு நிறைந்த சுற்றுச்சூழல், மோசமான பொது போக்குவரத்து, நெருக்கடியான சாலைகள், தங்களை ஆற்றுப்படுத்தி தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வெளி இல்லாமை என்பது போன்ற மோசமான அரசுகளின் மீது அவர்களுக்கு கோபமும் அதிருப்தியும்  உள்ளது. சொந்த வீடு என்பதன் மீதான விருப்பம் கூடுதலாக உள்ளது.  நில விற்பனை சந்தை இம்மக்களை சார்ந்தே உள்ளது. இம்மக்களின் ஆசைகள் மற்றும் அச்சங்களின் மீதே அவர்கள் தங்கள் முதலீட்டை திட்டமிடுகின்றனர். இம்மக்கள் இன்றளவும் நவதாராளமய கொள்கைகள் குறித்து குழப்பமான பார்வையையே கொண்டுள்ளனர். ஒரு பக்கம் சந்தைகள் மூலம் அது வழங்கியுள்ள வாய்ப்பு வசதிகளை நினைத்து மகிழ்கின்றனர். மறுபுறம் வேலை மற்றும் வாழ்நிலை குறித்த நிச்சயமற்ற தன்மைகளை நினைத்து வருந்துகின்றனர். சமூகத்தின் அடிநாதமாக இருக்கும் இம்மக்கள் தங்களின் அதிருப்திகளை வெளிப்படுத்தும் அதேநேரம், இந்த வளர்ச்சிப்போக்கை ஏற்பதா? நிராகரிப்பதா? என்று முடிவெடுக்க முடியாமல் நிற்கின்றனர்.

அரசுக்கும் இம்மக்களுக்குமான முதல் தொடர்பு உள்ளாட்சி அமைப்புகள்தான். அரசு வழங்கவேண்டும் என்று இம்மக்கள் எதிர்பார்க்கும் தேவைகளை உள்ளாட்சி அமைப்புகள்தான் நிறைவேற்றிட வேண்டும். அதேபோல் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளே அவர்களால் உடனடியாக தொடர்புகொள்ள முடிந்த மக்கள் பிரதிநிதியாகும். உள்ளாட்சி அமைப்புகளில் செய்யவேண்டிய பணிகள் குறித்து அதிகமான எதிர்பார்ப்பு இம்மக்களிடம் உள்ளது. ஆனால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு உள்ள வரம்புகள் குறித்து அவர்கள் அறிவதில்லை. எனவே உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மீதே அவர்களின் கோபங்கள் வெளிப்படுகிறது. உள்ளாட்சி அமைப்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி என்ற வகையில் மக்களின் எதிர்பார்ப்புகளை கூடுமான அளவு நிறைவேற்றிட உழைத்திட வேண்டும். அதேநேரம் மக்கள் மத்தியில் இப்பணிகளை மேற்கொள்வதில் உள்ள வரம்புகளையும் எடுத்துக் கூறிடவேண்டும். சமூகத்தில் நவதாராளமயத்தின் மோசமான தாக்கம் குறித்தும் நமது அரசியல் குறித்தும் மக்கள் மத்தியில் எடுத்துரைப்பதற்கான நல்ல வாய்ப்பை இது வழங்கியுள்ளது. மக்களுடன் நேரடித் தொடர்பு கொள்ளும் நிலையில் உள்ள நாம் நிர்வாகம் மற்றும் செயல்பாடுகளில் நமது மாற்று திட்டத்தின் அடிப்படையிலான சிறப்பான செயல்பாடுகள் மூலம் முன்னணி வகிக்க வேண்டும்.

அதிகாரங்களை குவிக்கும் மத்திய அரசின் இன்றைய போக்கை அம்பலப்படுத்திடவேண்டும். அரசியல் சாசனத்தின் 73 மற்றும் 74 ஆம் பிரிவு வழங்கியுள்ள குறைந்தபட்ச அதிகாரப் பரவலையும் மத்திய அரசு சிதைக்கிறது. அதிகாரப் பரவல் மற்றும் மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு  பிரிவுகள் குறித்து கட்சியின் முன்னாள் அகில இந்திய பொதுச் செயலாளர் இ.எம்.எஸ். கீழ்காணும் வகையில் குறிப்பிடுகிறார். “ஜனநாயகபர்வமான அதிகாரப் பரவல் என்பது, உழைக்கும் மக்கள் தங்கள் மீது நிகழ்த்தப்படுகிற ஒடுக்குமுறை மற்றும் சரண்டலுக்கு எதிரான போராட்டத்திற்கு உதவுவதாக இருக்கவேண்டும் என்பதே எனது நம்பிக்கை. தேசிய மற்றும் மாநில அளவில் ஜனநாயகமும், கீழ்மட்ட அளவில் அதிகாரப் போக்கு என்பதே இந்திய அரசியலின் அரசியல் சாசனம் குறிப்பிடுகிறது. மேலும் அரசியல் அமைப்பின் உள்ளடக்கம் மாநிலங்களின் உரிமைகள் மற்றும் அதிகாரத்தின் மீதான மத்திய அரசின் ஆதிக்கத்தை விரிவுபடுத்த வழிவகை செய்கிறது. எனவே, அரசு அதிகாரிகளோ, அரசியல்வாதிகளோ அரசியல் சாசனம் மாநிலங்களுக்கு வழங்கியுள்ள அதிகாரப் பரவலை அமலாக்க தயாராகாமல் இருப்பது குறித்து ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.” இந்தப் இரண்டு பிரிவுகளும் அரசு நிர்வாகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளதே தவிர, தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகளுக்கு கட்டுப்படும் வகையில் அதிகாரிகள் இல்லை.

இந்த அடிப்படையில் அதிகாரப்பரவல் குறித்து நாம் பேசவேண்டியுள்ளது. 73 மற்றும் 74 ஆவது பிரிவுகளின் சாதகமான பங்களிப்புகள் மற்றும் வரம்புகளையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். அனைத்து மாநிலங்களும் உள்ளாட்சி அமைப்புகளை உருவாக்கி, அதற்கான நிதி ஆதாரங்களை உருவாக்கி செயல்பட வைப்பதோடு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தி அவ்வமைப்புகளுக்கான பிரதிநிதிகளை தேர்வு செய்யவேண்டும் என்கிறது இப்பிரிவுகள். நாடுமுழுவதும் ஒரேமாதிரியான செயல்பாடுகளை உத்தரவாதப்படுத்துவதோடு கிராமப்புற மற்றும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இப்பிரிவு அரசியல் சாசனத்திற்குட்பட்ட அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. 74 ஆவது பிரிவின்படி வழங்கப்பட்ட அதிகாரப் பரவலின்படி ‘வளர்ச்சிக்கான பணிகளை திட்டமிடுவது, சுகாதாரம், கல்வி, வறுமை ஒழிப்பு, வீட்டுவசதி, நகர வளர்ச்சி திட்டங்கள், நிலபயன்பாடுகள் குறித்த வரம்புகள், தண்ணீர் விநியோகம், குடிசை பகுதிகளை மேம்படுத்துதல், சிறு தொழில் வளர்ச்சி உள்ளிட்ட 18 முக்கியமான அம்சங்களில் செயல்பட உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் உண்டு. இவையெல்லாம் அதன் அதிகார வரம்பாக தீர்மானிக்கப்பட்டாலும், மாநிலத்திற்கு மாநிலம் அது வேறுபடும். தேர்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதி என்கிற வகையில் மக்கள் நலன் சார்ந்து அவ்வமைப்பை செயல்பட வலியுறுத்துவது நமது கடமையாகும்.

அதேநேரம் அதன் வரம்புகளையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். வேகமான நவதாராளமய காலத்தில் அதற்கேற்ற வகையில்தான் பொருளாதார கொள்கை, அரசு அமைப்பு முறை எல்லாம் மாறிப் போயுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கப்பட்டு வந்த நிதி கடுமையாக வெட்டிச் சுருக்கப்பட்டுள்ளது. சர்வதேசிய நிதி முகமைகளான உலக வங்கி நவதாராளமய சீர்திருத்தங்களை அமலாக்கிட அழுத்தம் கொடுக்கின்றன. தண்ணீர் விநியோகத்திற்கு மீட்டர் பொருத்தி கட்டணம் வசூலிக்க வேண்டும் என்றும், குடிநீர், குப்பை சேகரிப்பு, கழிவு நீர் சுத்திகரிப்பு, பொது இட பயன்பாடு உள்ளிட்டவைகளுக்கு தனித்தனியாக கட்டணம் வசூலிக்க வேண்டும் என்றும், சொத்துவரி, மின்கட்டணம் மற்றும் நிலப்பயன்பாடு உள்ளிட்டவைகளுக்கான கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்றும் அவை கூறுகின்றன. அரசியல் ரீதியான பின்விளைவுகளை சந்திக்க வேண்டும் என்கிற அச்சத்தில் மத்திய மாநில அரசுகள் இவற்றை ஓரே நேரத்தில் அமலாக்க அஞ்சுகின்றன. எனவே உலக வங்கி கொஞ்சம் கொஞ்சமாக அமலாக்கச் சொல்கிறது. அவ்வாறே தற்போது அது அமலாக்கப்படுவதை நாம் பார்க்கிறோம்.

உள்ளாட்சி அமைப்புகள் தண்ணீர் விநியோகம் உள்ளிட்ட மக்களுக்கு ஆற்றும் சேவைகளை தனியார்மயமாக்க வேண்டும் என்கிறது உலக வங்கி. நகரங்களுக்கு 24 மணி நேரமும் தண்ணீர் விநியோகத்தை தனியார் வந்தால்தான் வழங்கமுடியும் என்கிறது. “கொள்கை அடிப்படடையில், பராமரிப்பு மற்றும் செயல்பாட்டுக்கான பணம் என்பது பயன்பாட்டு கட்டணத்தின் மூலமே திரட்டப்பட வேண்டும். சொத்தின் மீதான தேய்மானம் மற்றும்  சொத்துக்கள் மூலம் ஈட்டப்பட வேண்டிய வருமானம் எல்லாம் வரவாக வேண்டும்” என்கிறது உலக வங்கி (2013). பொதுப் பணத்தின் மூலம் அனைவருக்கும் குடிநீர் வழங்குவது சாத்தியமில்லை. எனவே தனியாரை அனுமதிப்பது அவசியம் என்கிறது. “தற்போது ஏழை மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகள் பொது நிதியை செலவு செய்கின்றன. அவை போதுமான திட்டமிடல்கள் இல்லாமலும் தேவையை நிறைவேற்ற போதுமானதாகவும் இருப்பதில்லை. நிதி ஆதாரத்தை திரட்டுவதாக இல்லாமல் நிதியை  செலவழிப்பதாக உள்ளது. எனவே நிதி ஆதாரங்களுக்கான பழைய வழிமுறைகளுக்கு மாறாக, ஒரு புதிய நிதி திரட்டும் முறையை அரசாங்கம் கண்டறியவேண்டும்.”   செலவுகளை ஈடுகட்ட தனியார் முதலீட்டை அனுமதிக்க வேண்டுமென்கிறது உலக வங்கி. ”அனைவரின் தேவைகளையும் பூர்த்தி செய்யவேண்டும் என்கிற விருப்பத்தை அரசியல் கட்சிகளின் தலைமை அடைய நினைத்தால் அவர்கள் சற்று மாற்றி சிந்திக்க வேண்டும்” (உலக வங்கி 2017)

காங்கிரஸ், பி.ஜே.பி மற்றும அனேகமாக அனைத்து மாநில கட்சிகளுக்கும் நவதாராளமய சீர்திருத்தங்களை அமலாக்குவதில் எவ்வித தயக்கமும் இல்லை. இப்படியான சீர்திருத்தங்களை அமலாக்கினால் மக்களின் கோபத்திற்கு ஆளாக வேண்டி வருமே என்பது குறித்து மட்டுமே அவர்களுக்கு அச்சம் உள்ளது. மக்களின் எதிர்ப்பை எதிர்கொள்ளவே ஜனநாயகமும் ஜனநாயக அமைப்புகளும் மெதுமெதுவாக சீரழிக்கப்படுகிறது. மத்தியில் பி.ஜே.பி ஆட்சிக்கு வந்த பிறகு இதன் வேகம் அதிகரித்ததுள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளை பொருத்தவரை அதன் அதிகாரங்கள் வெட்டிச் சுருக்கப்பட்டு, அதன் ஜனநாயக உள்ளடக்கம் நீர்த்துப்போக செய்யப்படுகிறது. இ.எம்.எஸ். சுட்டிக்காட்டியதுபோல் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளால் எடுக்கப்படும் முடிவுகள் மதிக்கப்படாமல் அரசு நிர்வாகத்தின் அதிகாரம் நிறுவப்படுகிறது. நவதாராளமய கொள்கைகளின் அமலாக்கத்திற்கு பிறகு, உலக வங்கியின் வேறொரு பரிந்துரையின்படி தேர்வு செய்யப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு இணையான அரசு அதிகாரிகளின் மையம் உருவாக்கப்பட்டுள்ளது. நகர வளர்ச்சி குழுமம், குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரியம் ஆகியவை இதற்கான உதாரணங்களாகும்.

பி.ஜே.பி உருவாக்கியுள்ள ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கு பிறகு இந்த அமைப்புகளின் உள்ளடக்கம் மேலும் புதிய பரிணாமத்தை அடைந்துள்ளது. சிறப்பு நோக்க திட்டம் (Special Purpose Vehicle) என்று அது அழைக்கப்படுகிறது. இது அரசு மற்றும் தனியார் மூலம் 50:50 என்கிற பங்குகள் அடிப்படையில் செயல்படும். சந்தையில் தனக்கான அங்கீகாரத்தை உருவாக்கிக் கொண்டு கூடுதல் நிதி ஆதாரங்களை பெருக்கிக் கொள்ள வேண்டும். இது தலைமை நிர்வாக அலுவலரை நியமித்து செயல்படும். அவர் மூன்றாண்டுகள் அப்பொறுப்பில் இருப்பார். அதற்கு முன்பாக அவரை அப்பொறுப்பிலிறுந்து விடுவிப்பதாக இருந்தால், மத்திய அரசிடம் முன் அனுமதி பெறவேண்டும். இது 74வது பிரிவு வழங்கியுள்ள உரிமைகள் மீதான தாக்குதலாகும். அதிகாரப் பரவலை நீர்த்துப் போகச் செய்வதாகும். தனியார் அரசு கூட்டு திட்டங்களை ஊக்குவிப்பதோடு, திட்ட மேலாண்மை ஆலோசகர்களை கொண்டு செயல்படும் தன்மையை கொண்டுள்ளது. இது தவிர்க்க முடியாத வகையில் நகர நிர்வாகத்தில் நேரடி ஆதிக்கத்தை செலுத்தும்.

நகர நிர்வாகம் என்பது ஜனநாயக வழிமுறைப்படியான செயல்பாடுகளில் இருந்து நிர்வாக வழிமுறையாக மட்டும் மாற்றப்படும். உள்ளாட்சி தேர்தல்களின் முக்கியத்துவம் குறையும். மேயர், தலைவர் உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் வார்த்தைகளுக்கு எவ்வித மரியாதையும் இல்லாமல் போகும். மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்கிற குறைந்த பட்ச சிந்தனையும் குறைந்துபோகும். மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு முடிவுகள் எடுக்கப்படாமல், லாப நஷ்ட கணக்கின் அடிப்படையிலும் வருமானத்தை ஈட்டுவதற்கான சிந்தனையோடுமே திட்டங்கள் செயல்படுத்தப்படும். பொதுவாக ஆணையர்களாக உள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும்  தலைமை நிர்வாக அலுவலருமே அனைத்து முடிவுகளையும் எடுப்பார்கள். அவர்கள் யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் அற்றவர்களாவர். இது ஜனநாயகத்தின் மீது தொடுக்கப்படும் மோசமான தாக்குதலாகும். இதை எதிர்த்து கடுமையாக போராட வேண்டும்.

கலங்கரை திட்ட வளர்ச்சி என்கிற ஒன்றும் தற்போது முன்நிறுத்தப்படுகிறது. குறிப்பிட்ட பகுதியை தேர்வு செய்து மேம்படுத்துவது, அதை மற்ற பகுதிகள் பின்பற்றுவது என்பதாகும். இது சிறுதுளி தத்துவம் என்பது போன்றதாகும். ஆனால் எங்குமே வெற்றி பெறாது. இது  சென்னை தி.நகர் பகுதியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஸ்மார்ட் சிட்டி திட்டம் போன்றதாகும். அப்பகுதியின் நிலப்பயன்பாடு, போக்குவரத்து முறை, தகவல் தொடர்பு என எல்லாம் நவீனமயமாக்கப்படும். ”நகர்மயத்தின் மூலம் உருவாகியுள்ள நிலம் குறித்த கொள்கை, கட்டமைப்பு சேவை, போக்குவரத்து மேம்படுத்தப்படுவது, ஒருங்கிணைந்த வளர்ச்சி  ஆகியவை இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கான அறுவடையை வழங்கும்.” என்கிறது உலக வங்கி. ஸ்மார்ட் சிட்டிக்கான இடங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்கள் எல்லாம் ஒன்று பணம் படைத்த மேட்டுகுடி பகுதிகளாக உள்ளன; அல்லது நிலத்தின் மதிப்பு கூடுதலாக உள்ள இடமாகவும், வர்த்தக நோக்குடன் அங்குள்ள ஏழை மக்களிடமிருந்து அவற்றை அபகரிக்கும் நோக்கம் கொண்டதாகவும் உள்ளன.

2008 ஆம் ஆண்டு நெருக்கடிக்கு பிந்தைய காலத்தில் நிலம் ஒரு முக்கியமான ஆதாரமாக உள்ளது. அரசு நிலங்களை குத்தகைக்கு கொடுத்தோ அல்லது விற்பனை செய்தோ நிலங்களை பணமாக மாற்றும்  போக்கு அதிகரித்துள்ளது. அரசு நிலங்களில் உள்ள குடிசை பகுதிகளை அகற்றுவதும், அந்த நிலங்களை தனியாருக்கு வாரிவழங்குவதும் நிகழ்கிறது. நில தரகு என்பது நிதி மூலதனத்தின் கூடாரமாக இருந்து அதிகப்படியான லாபத்தை வழங்குகிறது. உலகம் முழுவதும் அவை நிலம் மற்றும் வீடுகள் குறித்த மாயத்தோற்றதை உருவாக்கி வருகின்றன.  குறைந்த விலையில் வீடுகள் என்பவை எல்லாம் ஏழை மற்றும் புலம்பெயர் மக்களுக்கான வீடு கட்டும் வேலைகளை தனியாருக்கு வழங்கும் வேலைகளே ஆகும். தனியார் – அரசு கூட்டு என்பதன் மூலம் ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் வீடு எனும் உள்ளாட்சி அமைப்புகளின் பங்களிப்பை முடக்குகிறது.

நிலம் சம்மந்தப்பட்ட வர்த்தகத்தின் மூலம் ஊழல் மற்றும் முறையற்ற பணப் பரிவர்த்தனை அதிகரிக்கிறது. உள்ளூர் தலைவர்கள், ஒப்பந்தக்காரர்கள், நில தரகர்கள் ஆகியோர் இதன்மூலம் ஊழலில் திளைக்கின்றனர். அரசும் இதை கண்டுகொள்வதில்லை. இவர்கள் அனைவரும் கூட்டு சேர்ந்து செயல்படுவதன் மூலம் குடிசைகளை எளிதில் காலிசெய்து நிலங்களை கொள்ளையடிக்க முடிகிறது. எனவே இதன் ஊழல் நடவடிக்கைகள் ஊக்குவிக்கப்படுகிறது.

இந்தப் பின்னணியில் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளின் முன்னுள்ள சவால்கள் மகத்தானதாகும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) பிரதிநிதிகளுக்கு கூடுதலாக இது பொருந்தும்.

அவ்வாறு மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் தேர்வாகியுள்ள பிரதிநிதிகளின் முதல் கடமை மக்களின் நலன்சார்ந்து மக்களுடன் இரண்டறக் கலந்து பனியாற்றுவதாகும். உள்ளாட்சி அமைப்புகளுக்குள்ள வரம்புகளும் விளக்கப்படவேண்டும். குடிசை பகுதிகளுக்கு சுகாதாரம், மருத்துவம்,  கல்வி, தண்ணீர் மற்றும் கழிப்பறை வசதிகள் கிடைத்திட முன்னுரிமை வழங்கிட வேண்டும்.

தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதி என்ற வகையில் குடியிருப்போர் நலச்சங்கம், அடுக்குமாடி கட்டிட அமைப்புகள் துவங்கி அவர்கள் மூலம் மக்களின் கோரிக்கைகளை அடையாளப்படுத்தி முன்னெடுப்பது. அந்த அமைப்புகளின் மூலம் ஜனநாயகத்தின் மீதான விருப்பத்தை வளர்த்தெடுத்து, கீழிருந்து வரும் குரல்களுக்கு செவிசாய்த்திட வேண்டும். சொத்துவரி உயர்வு, பயன்பாட்டு கட்டணங்கள் விதிப்பது போன்றவற்றுக்கு எதிராக இந்த குடியிருப்பு சங்கங்கள் செயல்படுவதை முதல் வேலையாக மாற்ற வேண்டும். உள்ளாட்சி அமைப்புள் தங்களின் செயல்பாட்டிற்காக எவ்வாறு ஒன்றிய மற்றும் மாநில அரசுகளை சார்ந்துள்ளன என்பதை விளக்க வேண்டும்.  ஏனெனில் இந்த அரசுகளின் செயல்பாடுகளே நவதாராளமய சீர்திருத்தங்களுக்கு இணங்கச் செய்கிறது. கொரோனா தொற்று காலத்தில் சொத்து வரி உயர்வை உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி வழங்குவதற்கான நிபந்தனையாக மாற்றியுள்ளது ஒன்றிய அரசு. உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி ஒதுக்குவதற்கு பதிலாக, தனியார் மற்றும் வெளி நிதி அமைப்புகளிடம் நிதி பெறுவதற்கான நிர்ப்பந்தத்தை உருவாக்குகிறது. இவ்வளவு இருந்தபோதும் நாட்டின் உள்நாட்டு உற்பத்தியில் வெறும் இரண்டு சதம் மட்டுமே உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கப்படுகிறது. சீனாவில் 11 சதமும் பிரேசிலில் 7 சதமும் ஒதுக்கப்படுகிறது. இவற்றை எல்லாம் அந்த குடியிருப்போர் நல அமைப்புகளில் விவாதிப்பதின் மூலம் அரசின் தவறான கொள்கைகளுக்கு எதிராக அவர்களை கேள்வி எழுப்ப வைக்க முடியும்.

 ஸ்டாலின் கூறியதுபோல் கம்யூனிஸ்டுகள் தனித்த வார்ப்புகள். நமது நடவடிக்கைகளின் மூலம் அதை நிருபிக்க வேண்டும். ஊழல் நடவடிக்கைகளில் நாம் ஈடுபடாதவர்கள்; அதிலிருந்து வெகுதூரம் நிற்பவர்களாக மட்டும் நிற்காமல், ஊழலுக்கு எதிராக மக்களையும் திரட்டிட வேண்டும். பிறப்பு இறப்பு சான்றிதழ்கள் வாங்குவதில் துவங்கி நில பயன்பாடு, கட்டிட அனுமதி என பல அம்சங்களை லஞ்சம் இல்லாமல் பெறுவது பெரும் சிரமமாக உள்ளது. இவைகளை எளிதில் பெற்று மக்கள் பயன்படும்படி இதை மாற்ற முயற்சிக்கவேண்டும்.

உள்ளூர்தான் மக்கள் கூடுவதற்கும் பேசுவதற்கும் உறவுகளை வளர்ப்பதற்குமான இடமாக உள்ளது. விழாக்கள், பண்டிகைகள், திருமணங்கள் போன்றவையே அதற்கான இடங்களாகும். விளையாட்டு மற்றும் கலை நிகழ்வுகளை நாம் நடத்திட முன்முயற்சிகளை  மேற்கொள்ளவேண்டும். திருவிழாக்களில், பண்பாட்டு நிகழ்வுகளில் நாம் கூடுதலாக பங்கேற்க வேண்டும். பழமைவாத மூடநம்பிக்கை நிகழ்வுகளை கவனமாக தவிர்க்க வேண்டும்.

கொரோனா பெருந்தொற்று முக்கியமான படிப்பினையை நமக்கு வழங்கியுள்ளது. நெருக்கடியான காலங்களில் மக்கள் உதவிக்காக தேடி நிற்பார்கள். அதுபோன்ற காலங்களில் நாம்தான் முதலில் உதவிக்கரம் நீட்டுபவர்களாக இருக்க வேண்டும். கேரளாவில் நமது உள்ளாட்சி பிரதிநிதிகள் தான் மக்களுக்கான உதவிகளையும் அவர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்தனர். வெள்ளச் சேதத்தின்போதும் இப்படியான பணிகளை அவர்கள் மேற்கொண்டனர். அதை நாம் அனைத்து பகுதிகளிலும் செய்திடவேண்டும். இதுபோன்ற தன்னலமற்ற பணிகள் மூலம்தான் மக்களின் மனத்தை  வெல்ல முடியும்.

உள்ளாட்சி அமைப்புகளின் தன்னாட்சி தன்மையை சீர்குலைக்கும் முதலாளித்துவ கட்சிகளின் செயல்பாடுகளை எடுத்துரைக்க வேண்டும். ஜனநாயகத்தை சீர்குலைப்பது, தனியாருக்கு வளங்களை தாரைவார்ப்பது, அதிகாரிகளின் கையில் நிர்வாகத்தை ஒப்பளிப்பது போன்ற நடவடிக்கைகளை மக்களுடன் உரையாடும்போது அவ்வப்போது விவாதிக்க வேண்டும். எந்த மாதிரியான அரசியல் சூழ்நிலையில் நாம் பணியாற்றுகிறோம் என்பதை மக்களிடம் பேசாமல் விட்டால் அவர்களால் மக்கள் பிரதிநிதிகளான நமது வேலைகளை புரிந்து கொள்ள இயலாது. தற்போதைய நிலையிலேயே தேங்குவதைவிட நமது குறிக்கோளை நோக்கி பயணிப்பதற்கான வேலைகளை  கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும் செய்ய முனைய வேண்டும். நமது அரசியலை மக்களிடம் பேசுவதன் மூலம்தான் அவர்களின் ஆதரவை தொடர்ந்து பெற்று அதை விரிவுபடுத்திட முடியும்.

மதவாத சக்திகள் நகரங்களை தங்களின் இயற்கையான தளமாக பார்க்கின்றன. மத்திய தர மக்களின் ஊசலாட்டத்தையும், அச்சத்தையும் வளர்த்து அவர்களுக்கான ஆதாயத்தை வளர்த்துக் கொள்கின்றனர். நமது நடவடிக்கைகளில் அவர்களின் ஜனநாயகமற்ற தன்மையை விளக்கி நமது சித்தாந்த பிரச்சாரத்தையும் மேற்கொள்ளவேண்டும்.

இ.எம்.எஸ். கூறியதை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். “ஒன்றிய மற்றும் மாநில நாடாளுமன்ற\ சட்டமன்ற  ஜனநாயகத்தை பாதுகாப்பதோடு, மேலும் அவற்றை மாவட்ட மற்றும் அதற்கடுத்த கீழ்நிலைவரை விரிவுபடுத்துவதே ஜனநாயகத்தின் நான்கு தூண்களாக கருதப்பட்டது.  அதுவே இந்திய சமூகத்தின் முன்னேற்றத்திற்கு முக்கியமானதாகும்.” ஒன்றியத்தில் பி.ஜே.பி ஆட்சியில் இருக்கும் நிலையில் இது கூடுதல் பொருத்தப்பாடுடையதாக உள்ளது.

இந்திய வர்க்கங்களின் நிலைமையில் மாற்றமும், கம்யூனிஸ்டுகள் செய்ய வேண்டியதும் !

குரல்: பூங்கொடி மதியரசு

(கொல்கத்தா பிளீனம் ஆவணத்தில் இருந்து, இந்தியாவின் ஊரக மற்றும் நகர்ப்புற சூழலில் நவ-தாராளமய காலத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களுக்கு தக்க நாம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை விளக்கும் பகுதிகள் சுருக்கமாக வழங்கப்படுகின்றன– ஆசிரியர் குழு )

ஊரக இந்தியா:

ஊரக இந்தியாவில் விவசாய உறவுகளின் தற்போதைய நிலைமை, காலத்திற்கு ஒவ்வாத அமைப்புகளும், சமூக உருவாக்கங்களும் கொண்டதாகவும், இதன் ஊடாகவே முதலாளித்துவ வளர்ச்சியின் விரிவாக்கத்தையும், தீவிரப்படுத்துதலையும் உள்ளடக்கியதாகவும் இருக்கிறது. ஊரக இந்தியாவில் சமச்சீரற்ற வளர்ச்சி நிலைமையை, உலகமய காலகட்டம் மேலும் தீவிரப்படுத்தியிருப்பது இன்னொரு அம்சம் ஆகும்.

நிலவுடைமை குவிவதும், மற்ற விவசாய உடைமைகளும், விவசாய – விவசாய வருமானங்களின் குவிப்பும் வேகமடைந்துள்ளன. ஊரகப் பகுதிகளில் வாழும் நிலவுடைமையாளர்கள் – பெரும் முதலாளித்துவ விவசாயிகள் – ஒப்பந்தக்காரர்கள் – பெரும் வர்த்தகர்களுக்கு இடையில் நிலவும் செல்வாக்கு மிக்க ஊரக பணக்கார கூட்டணி, ஆதிக்க வர்க்கமாக இருக்கிறது.

எனவே, ஊரகப் பகுதிகளில் வர்க்கப் போராட்டமும், விவசாய இயக்கத்தின் வளர்ச்சியும் மேற்சொன்ன பணக்காரர்களின் கூட்டணிக்கு எதிரான போராட்டத்தின் அடிப்படையிலேயே அமைய வேண்டும். நிலத்தின் மீது செலுத்தப்படும் கட்டுப்பாடுதான் அவர்களுடைய அதிகாரத்திற்கான அடிப்படை. ஆனால் அந்த ஆதாரங்களை மட்டும் அவர்கள் கட்டுப்படுத்தவில்லை. கடனுக்கான வாய்ப்புகள், நில வர்த்தகம், தானிய அரவை ஆலைகளை நடத்துவது, பால் பொருட்கள் வர்த்தகம், உணவுப் பொருட்கள் மீதான ஊக வணிகம், கட்டுமானம், சினிமா தியேட்டர்கள், பெட்ரோல் நிரப்பும் மையங்கள், போக்குவரத்து வசதிகள்,வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு விடுவது மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் என அனைத்து வர்த்தக நடவடிக்கைகளிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

விவசாயிகள், தொழிலாளர்களாக மாறி வருவது, இதில் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான அம்சம் ஆகும். விவசாயம் மற்றும் விவசாயம் அல்லாத பணிகளில் ஈடுபடும் கூலித் தொழிலாளர்கள் பெரும்பாலும் உடல் உழைப்புத் தொழிலாளர்களாக இருக்கின்றனர். நிலப்பிரபுக்களை ஒழித்து, அவர்கள் வசமுள்ள நிலம் அனைத்தையும் விவசாயத் தொழிலாளர்கள், ஏழை விவசாயிகள் மற்றும் நிலமற்றவர்களுக்கு விநியோகிப்பதே அடிப்படையான இலக்கு ஆகும். எனினும், இப்போது புதிய வடிவங்களை எடுத்திருக்கும் நிலப்போராட்டத்தை புரிந்துகொண்டு நமது செயல்பாடுகளை அமைக்க வேண்டும்.

நில உரிமை போராட்டங்கள்:

நவீன தாராளமயக் கொள்கைகள் அமலான பிறகு, முதலாளித்துவக் கட்சிகளின் மாநில அரசாங்கங்கள் நிலச்சீர்திருத்த நடவடிக்கைகளை நீர்த்துப்போகச் செய்திருக்கின்றன. பெருமுதலாளிகளுக்குச் சாதகமான விதத்தில் நிலத்தை தாங்களே கையகப்படுத்திக் கொடுக்கும் அளவிற்கு நிலைமைகள் மோசமாகியுள்ளன. விவசாயிகளின் வசமுள்ள நிலங்களை பாதுகாப்பது, குறிப்பாக பழங்குடி மக்களின் நில உரிமையை பாதுகாப்பது இப்போது முன்னுக்கு வந்திருக்கிறது. ஏழைகளுக்கான வீட்டுமனைப் பிரச்சனை நாம் கவனம் செலுத்தவேண்டிய மற்றொரு அம்சம் ஆகும்.

ஊரகப் பகுதிகளில், விவசாயத் தொழிலாளர்களையும், ஏழை விவசாயிகளையும் சுரண்டக் கூடிய இந்த ஆதிக்க வர்க்கங்களுக்கு எதிரான முரண்பாடு – விவசாயம் அல்லாத முதலாளித்துவ நடவடிக்கைகளிலும் வெளிப்படுகின்றன. எனவே, நிலப் பிரச்சனை மட்டுமல்லாது, சுரண்டப்படும் பகுதியினரின் அனைத்து பிரச்சனைகளையும் கையிலெடுக்க வேண்டும். 

கோரிக்கைகளின் உருவாக்கம்:

விளைபொருட்களுக்கு கட்டுப்படியாகும் விலை, கடன் தள்ளுபடி ஆகிய கோரிக்கைகளின் மீது இயக்கங்கள் நடத்தப்பட வேண்டும். அதேசமயம் விவசாயத் தொழிலாளர்கள், ஏழை விவசாயிகள், மத்தியதர விவசாயிகள் மற்றும் மற்ற உழைக்கும் மக்கள் பகுதியினரின் நலன்களை தெளிவாக மையப்படுத்துவதாக இந்த இயக்கத்தின் தன்மையை அமைத்திட வேண்டும்.

கடன் தள்ளுபடி, கடன் வசதி, விவசாய இடுபொருட்களுக்கான மானியம் ஆகியவற்றைக் கோரும்போது, இதன் மூலம் கிடைக்கும் பலன் முக்கியமாக ஏழை, நடுத்தர விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் உடலுழைப்புத் தொழிலாளர்களுக்குச் சென்றடையும் வகையில் கோரிக்கை வகுக்கப்பட வேண்டும்.

அதே போல குத்தகை முறைகளின் பல்வேறுபட்ட இயல்பை கணக்கில் கொண்டு, நாம் எழுப்பும் கோரிக்கைகள், அவ்விடத்தின் திட்டவட்டமான நிலைமைகளை கணக்கில் கொண்டும் அப்பகுதியில் இயக்கத்தின் வலுவின் அடிப்படையிலும் இருக்க வேண்டும்.

குறைந்த கூலி,விவசாய கருவிகளுக்கான வாடகை, வட்டி வசூல், நிலத்தின் மீதான கட்டுப்பாடு, தண்ணீர் வளத்தின் மீதான கட்டுப்பாடு, விவசாய சேமிப்புக் கூடங்கள்  மற்றும் வேளாண் பொருட்களின் வர்த்தகம் என அனைத்து நடவடிக்கைகளிலும் சுரண்டலுக்கு எதிரான இயக்கங்களை திட்டமிட வேண்டும்.

நகரப்புறங்களை நோக்கி இடம்பெயரும் தொழிலாளர்களின் வேலை மற்றும் வாழ்க்கை நிலையை மேம்படுத்தும் கோரிக்கைகளை வடிவமைக்க வேண்டும்.

வேளாண் உற்பத்தியை பதப்படுத்துதல், மதிப்புக் கூட்டுதல், சந்தைப்படுத்தல், கடன்வசதி ஆகியவற்றிற்காக சுய உதவிக் குழுக்களையும், கூட்டுறவு அமைப்புகளையும் கிராமங்களில் உருவாக்க வேண்டும்.

நீர்ப்பாசன மேம்பாடு, இயற்கைப் பேரழிவுகளைத் தடுத்தல், சுற்றுப்புற சூழல் பிரச்சனைகளின் மீது கவனம் செலுத்துதல் ஆகியவற்றைப் பற்றி மீது நவீன தாராளமயக் கொள்கைகள் எந்தவிதமான கவனமும் செலுத்துவதில்லை. மேற்சொன்ன விஷயங்களில் ஊரக மக்களுக்கு சரியான புரிதலை ஏற்படுத்தி இயக்கங்களை கட்டமைக்க வேண்டும்.

ஊரகப் பகுதிகளில் நிலவக்கூடிய சமூக ஒடுக்குமுறைகளுக்கும், பாகுபாடுகளுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். கல்வி, பொது சுகாதாரம் மற்றும் வீட்டுவசதியை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உறுதி செய்வதில் விவசாய அமைப்புகள் முன்னணியில் இருக்க வேண்டும்.

தொழிலாளி வர்க்கத்தின் பலவகைத் தன்மை:

நவ-தாராளமய காலகட்டத்தில், தொழிலாளி வர்க்க சேர்மானத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. எண்ணிக்கை விரிவடைந்துள்ளது, அதே சமயத்தில் முறைசாராத் தொழிலிலும், அணி திரட்டப்பட்ட தொழில்களிலும், ஒப்பந்தப் பணிகளிலும், நிரந்தரமற்ற பணிகளிலும்தான் வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளன.

முறைசாராத் தொழில்களில் ஈடுபடும் பெரும்பகுதி தொழிலாளர்கள் தினக்கூலிகள், சேவைத்துறை தொழிலாளர்கள், இடம்பெயர்ந்த தொழிலாளர்கள், வீட்டில் இருந்து வேலை செய்கிறவர்கள் மற்றும் ‘தொழிலாளர்களாக’ எடுத்துக் கொள்ளப்படாத திட்டப் பணியாளர்கள் ஆவர்.

போக்குவரத்துத் துறையில் முறைசாராத் தன்மை அதிகரித்துள்ளது. இந்தத் துறை நாட்டின் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கினை வகிப்பதுடன் லட்சக்கணக்கான தொழிலாளர்களைக் கொண்டதாகவும் இருக்கிறது.  அணிதிரட்டப்பட்ட தொழில்களில், தனியார் நிறுவனங்களிடம் மிக மோசமாக சுரண்டப்படுவோராக இளம் தொழிலாளர்கள் உள்ளார்கள். குறைந்த கூலியில் எந்த  சமூகப் பாதுகாப்பு பலன்களுமின்றிப் பணிபுரியும் அவலநிலையில் சிக்குண்டுள்ளனர். இந்தத் தொழிலாளர்களை அணிதிரட்டசிறப்புக் கவனம் செலுத்த வேண்டும்.

தொழிலாளி வர்க்கத்தின் பல்வகைத்தன்மை, இந்திய முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த அம்சம் ஆகும்.

தொழிலாளர்களின் கோரிக்கைகள்:

ஒரே மாதிரியான வேலைக்கு ஒரே கூலி, சட்ட பூர்வமான சமூகப் பலன்கள் போன்ற முழக்கங்களை முன்னெடுக்கும் விதத்தில் தொழிற்சங்கம் தனது கண்ணோட்டத்தை அமைத்துக் கொள்ள வேண்டும்.

அணிதிரட்டப்பட்ட தொழில்கள், முறைசாராத் தொழில்கள் இரண்டிலும் பணி புரியும் பெண் தொழிலாளர்களை அணிதிரட்ட சிறப்பான கவனம் செலுத்தப்பட வேண்டும். பாலியல் துன்புறுத்தல் உட்பட பெண் தொழிலாளர்களின் குறிப்பான பிரச்சனைகளை கையிலெடுக்க வேண்டும். தலித், பழங்குடி தொழிலாளர்களின் பிரச்சனைகளை எடுத்துக் கொள்வதில் சிறப்புக் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

இளம் தொழிலாளர்களைப் பொறுத்த வரை, பழைய முறையிலான தொழிற்சங்க நடவடிக்கைகள் அவர்களை ஈர்க்காது. தொழிற்சங்க ஊழியர்கள் அதற்குத்தகுந்த முறையில் இயங்கி,அவர்களது மொழியில் பேசி, அறிவு ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அவர்களிடையே பணிபுரியத் தம்மை திறன்மிக்கவர்களாக்கிக் கொள்வது அவசியம்.

வகுப்புவாத கருத்தியல் தொழிலாளர்களிடம் விரிவாகப் பரவியுள்ளது. சாதி அடையாளமும், தாக்கமும் கூட ஆழமாகச் சென்றுள்ளது. வகுப்புவாத, சாதி தாக்கம் ஆகியவற்றை எதிர்க்கும் பணியை கட்சி நேரடியாக எடுத்துக் கொள்ளவேண்டும். அதே சமயத்தில் தொழிற்சங்கங்கள் வகுப்புவாதம் தொடர்பான விஷயங்களை எடுத்துக் கொண்டு உழைக்கும் வர்க்கத்தை உடைக்கும் முயற்சிகளை எதிர்க்க வேண்டும்.

குடியிருப்புப் பகுதிகளில் எப்படி தொழிலாளர்களை அணி திரட்டுவது என்ற ஒரு முக்கியமான கேள்வியை கட்சியின் 21வது காங்கிரஸ் எடுத்துக் கொண்டது.

அரசியல்-ஸ்தாபன அறிக்கை இப்படிக் கூறுகிறது:

  • அ. “தொழிலாளி வர்க்கத்தின் சமூகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்த அறிக்கை தொழிலாளி வர்க்கத்தின் மாறியுள்ள சேர்மானத்தை வெளிப்படுத்துகிறது. முறைசாராத் தொழில் பகுதியில் பல்வேறு பிரிவுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் மொத்த உழைப்பாளர்களில் 94 சதவிகிதமாக உள்ளனர்; இதில் விவசாயத் துறையும் அடக்கம். பணியிடத்தில் தொழிலாளர்களை சங்கத்தில் இணைக்கும் பாரம்பரிய முறைகளின் வாயிலாக அணிதிரட்டுவதில் கஷ்டங்கள் உள்ளன.
  • ஆ. அணிதிரட்டப்பட்ட தொழில்களில் உள்ள ஒப்பந்த தொழிலாளர்கள், முறைசாரா தொழிலாளர்கள், வீட்டிலிருந்து பணிபுரிவோர், சேவைத்துறை ஊழியர்கள், சுயதொழில் செய்வோர் என அனைத்து வகை தொழிலாளர்களின் பெரும்பகுதி சேரிகளிலும், நகரத்தின் ஏழ்மை பகுதிகளிலும், புறநகர் பகுதிகளிலும் வாழ்கின்றனர். அவர்களை திரட்டுவதற்கான ஒரு வழி, வாழ்விடங்களில் தொழில் வாரியாக திரட்டுவதாகும். அவர்களின் பணியிடங்கள் சிதறிக்கிடப்பதாலும், அடிக்கடி இடம் மாறுவதாலும் அவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் அவர்களை அணுக வேண்டும்.  வீட்டிலிருந்தபடியே வேலை செய்வோர், அயலாக்கத் தொழிலாளர்கள் ஆகியோருக்கு வீடேபணியிடமாக உள்ளது. அல்லது குடியிருப்பு பகுதிகள் பணி செய்யுமிடத்திற்கு அருகமைந்துள்ளது.
  • இ. “எனவே தொழிற்சங்கங்கள் பகுதி வாரியாக ஸ்தாபனங்களை அமைப்பதில் ஈடுபட வேண்டும். இது அருகமை / குடிசைப்பகுதி கமிட்டிகளாக இருக்கலாம். இந்த கமிட்டிகளும், இணைப்புகளும் இளைஞர், மாதர் மற்றும் பிற பகுதி வாரியான ஸ்தாபனங்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும். சமூக வாழ்க்கை அடிப்படையிலான கமிட்டிகள் பல்வேறு விதமான செயல்பாடுகளை மேற்கொள்ளலாம். அதில் சில தொழிற்சங்க குணாம்சத்தைக் கொண்டதாகஇருக்கலாம். ஆனால் மற்ற செயல்பாடுகள் சமூகநலம், படிப்பகங்கள், கலாச்சாரக் குழுக்கள், உடல் நலவாழ்வு மையங்கள், நுகர்வோர்அமைப்புக்கள், கூட்டுறவு சங்கங்கள் போன்றவற்றை உள்ளடக்கி இருக்கலாம்.
  • ஈ. “இவ்வாறு கட்சி, தொழிற்சங்கங்கள் மற்றும் பிற வெகுஜன அமைப்புக்களை இத்தகைய சமூக அடிப்படையிலான ஸ்தாபனங்களின்பால் செலுத்தும்போது, அது நம்மை முறைசாரா தொழிலாளர்களிடம் மட்டுமல்லாமல், பொதுவாக நகர்ப்புற ஏழைகளையும் சென்று அடைய உதவி செய்வதாக வேண்டும்.”

நடுத்தர வர்க்கமும், நகர்ப்புறமும்:

நகர்மயமாதல் தொடர்ந்துஅதிகரித்து வருகிறது. தொழிலாளர் வர்க்கம் நகர்ப்புறத்திலிருந்து வேரோடு பிடுங்கப்பட்டு நகரின் எல்லைகளுக்கு வெளியே வீசப்பட்டுள்ளனர். நகர்ப்புறப் பகுதிகளின் முக்கியத்துவம் அதிகரித்து வருவதை ஒட்டி கட்சியும், வெகுஜனஅமைப்புகளும் தமது பணியின் தன்மைகளை மாற்றிக் கொண்டு நகர்ப்புறப் பகுதி பணிக்கான தகுந்த வடிவங்களைக் கொண்ட செயல்பாட்டுத் திட்டத்தை வகுக்கவேண்டும்.

நவீன தாராளமய நகர்ப்புற சீர்திருத்தங்கள் ஏழைகள், கீழ் நடுத்தர மக்களின் பணி நிலைமைகளை மோசமாக்கியுள்ளன; ஏழைகள் வசிக்கும் பகுதிகளில் உட்கட்டுமானம் மோசமடைந்துள்ளது. அடிப்படை சேவைகள் தனியார்மயம் மூலமாகவோ, சேவைக்கட்டணங்கள் திணிப்பு வாயிலாகவோ வழங்கப்படுவதால் வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்துள்ளன. சீர்திருத்தங்களின் இன்னொரு விளைவு அரசாங்கம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அளிக்கும் நிதி, கடன் போன்றவை குறைக்கப்பட்டதாகும். இவ்வாறாக, அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படுவதாக

கூறப்படும் வெற்று வார்த்தை ஜாலங்களைத் தவிர உண்மையில் எந்த  உண்மையான அதிகாரமும் உள்ளாட்சி அமைப்புகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படவில்லை.

குடிசைகளிலும், அடிப்படை வசதிகளற்ற குடியிருப்புகளிலும் தான் பெரும்பாலான நகர்ப்புற ஏழைகள் வசிக்கின்றனர். நகர்ப்புற ஏழைகள் மத்தியில் பணிபுரிய ஸ்தல அமைப்புகளை உருவாக்கவேண்டும். ஏற்கனவே அமைப்புகள் இருக்கும் இடங்களில் அவற்றில் நாம் சேர்ந்து பணிபுரிவது குறித்து விவாதிக்க  வேண்டும்.

அடிப்படை  வசதிகளற்ற பகுதிகளில் வீட்டு வசதி, வீடுகள் இடிக்கப்படும் அச்சுறுத்தல், குடிதண்ணீர், கழிவுநீர்வசதிகள், பொது விநியோக முறை, பள்ளி, சுகாதார வசதிகள் அளித்தல், போலீஸ் துன்புறுத்தல், கிரிமினல், மாஃபியா குண்டர்களின்  ஒடுக்குமுறை ஆகிய பிரச்சனைகளை கையிலெடுத்தால் அங்குள்ள மக்கள் நம்முடன் சேருவர்.

தலித், முஸ்லீம் பகுதிகள், ஏழை குடியிருப்பு பகுதிகள், காலனிகளில் பணிபுரிய நாம் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். பல மாநிலங்களில் அவர்கள் தனியாகப் பிரிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கின்றனர்.

நடுத்தர வர்க்கங்கள்:

இந்த நவ-தாராளமய காலகட்டம்,  நடுத்தர வர்க்கத்தில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. உயர்ந்த கல்வி, அதிக ஊதியத்துடன் கூடிய வேலை, அதிக நுகர்வுடன் கூடிய உயர் நடுத்தர வர்க்கம் வளர்ந்துள்ளது. அவர்கள் அதிக விலையுடைய எலக்ட்ரானிக் பொருட்கள், உடைகள், கார்கள் போன்றவற்றை வாங்கும் சந்தையாக உருவெடுத்துள்ளனர். மேல்தட்டு கல்வி, சுகாதார வசதிகளுக்கு அவர்கள்தான் முக்கிய வாடிக்கையாளர்கள். இந்த உயர்நடுத்தர வர்க்கத்தினர், சில விதிவிலக்குகளைத் தவிர, நவீன தாராளமய விழுமியங்களுக்கு ஆதரவானவர்களாக உள்ளார்கள்.

ஏனைய நடுத்தர வர்க்கத்தினரும் உயர்பகுதியினரின் வாழ்க்கைதரத்தை அடைய ஆவலாக உள்ளனர். ஆனால் வாழ்க்கையின் நிதர்சனம் அதற்கு சாதகமாக இல்லை. ஒரு ஃப்ளாட், வீடு வாங்கவும், தமது குழந்தைகளின் கல்விக்கு கட்டணம் செலுத்தவும், மருத்துவச் செலவுகளைச் செய்திடவும்,முதுமையில் வாழ்க்கை பாதுகாப்புக்கு என அனைத்திற்காகவும் அவர்கள் போராட வேண்டியுள்ளது.

தொழிலாளி வர்க்கம் சந்திப்பது போலவே நடுத்தர வர்க்கங்களும் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கின்றன. தாராளமயம் அவர்களை பல விதங்களில் பாதித்துள்ளது. இது பல தருணங்களில்அவர்களை தொழிலாளி வர்க்கத்துடன் இணைந்த போராட்டங்களிலும், இயக்கங்களிலும் தள்ளியுள்ளது. இந்த வர்க்கத்திற்கு ஜனநாயகத்தின் மீது ஆவலும் உண்டு. அங்கு அது அனைத்து குடிமக்களுக்கும் நீதியையும், நியாயமான நடைமுறையையும் வேண்டுகிறது. அது அரசியலை பண பலத்திலிருந்தும், ஊழலிலிருந்தும்,குற்றமயத்திலிருந்தும் விடுவிக்க விரும்புகிறது. இவற்றோடு கூடவே அதற்கு சமூக முன்னேற்றம் பற்றிய ஆவலும்உண்டு. மேலும் சந்தைப் பொருளாதாரம் பற்றிய மாயையும் அதற்கு உண்டு. இவை அனைத்தும் நடுத்தர வர்க்கத்துக்குள் வெளிப்படும் முரண்பாடான போக்குகள் ஆகும்.

நடுத்தர வர்க்கத்தை திரட்டுதல்:

நவீன தாராளமய அரசின் கீழ் நடுத்தர வர்க்கங்களில் ஏற்பட்ட மாறுதல்களின் காரணமாக இடதுசாரிகளின் செல்வாக்கும், உழைக்கும் வர்க்கத்துடன் அதன் இணைப்புகளும் பலவீனப்பட்டுள்ளன. நடுத்தர வர்க்கத்தின் கீழ்ப்பகுதியிலும், நடுப்பகுதியிலும் நாம் கவனத்தை செலுத்த வேண்டும். நமது அரசியல் செய்திகளை

எடுத்துச் செல்ல புதிய வடிவங்களையும், அவர்களைச் சென்றடையும் விதத்தில்  புதிய ஸ்தாபன வடிவங்களையும் கையில் எடுக்கவேண்டும். நடுத்தர வர்க்கத்தின் இந்தப் பகுதி சந்திக்கும்விஷயங்களும், பிரச்சனைகளும் துல்லியமாக எடுத்துக் கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட வேண்டும்.

நடுத்தர வர்க்கங்களின் கவலைகளாக உள்ள ஊழல், நல்ல நிர்வாகம், சுற்றுச்சூழல் மாசடைதல் போன்ற விஷயங்களை நாம் கையிலெடுக்க வேண்டும். உயர் கல்வி பயிலும் மாணவிகளும், வேலையிலிருக்கும் இளம்பெண்களும் நகர்ப்புற ஜனத்தொகையில் மிக முக்கியமான பகுதியினர் ஆவார்கள். பொதுவான இடங்களில் அவர்கள் பாகுபாடு,சமத்துவமின்றி நடத்தப்படுதல், பாலியல் துன்புறுத்தல் ஆகியவற்றை சந்திக்கின்றனர். நமது சங்கங்கள் செயல்படும்

இடங்களில் நாம் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை எடுத்துக்கொள்ள உபகுழுக்களை உருவாக்க வேண்டும். தேவையான இடங்களில் நாம் அவர்களிடையே பணி புரிய சிறப்பு அமைப்புகளை உருவாக்கலாம்.

நடுத்தர வர்க்கத்தில் பணி புரிய வேண்டிய முக்கியமான பகுதி தத்துவார்த்த தளம் ஆகும். இதற்காக குடிமக்கள் அமைப்புகள்,கலாச்சார அமைப்புகள் ஆகியவை அமைக்கப்பட வேண்டும்.அங்கு நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கை, நலன்களுடன் தொடர்பான விவாதங்களும், கலாச்சார நிகழ்வுகளும் நடைபெறவேண்டும்.

நடுத்தர மக்கள் வசிக்குமிடங்களில் மிக அதிகமான குடும்பங்கள் அடுக்குமாடிக் குடியிருப்புக்களில் வசிக்கின்றனர். நமதுஉறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மூலமாக நாம் இந்த குடியிருப்பு சங்கங்களில் தீவீரமாகப் பணிகளில் ஈடுபட வேண்டும். நகர்ப்புறப் பகுதிகளில் மூத்த குடிமக்கள், ஓய்வு பெற்றோர், ஓய்வூதியர்கள் ஆகியோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.அவர்கள் நிதி, ஆரோக்கியம், முதிய வயது பிரச்சனைகளை சந்திக்கின்றனர். அவர்களுக்காக ஓய்வு பெற்றோர் சங்கங்கள், நலவாழ்வு அளித்தல், முதியோர் இல்லங்கள், பொழுதுபோக்கு இல்லங்கள் ஆகியவற்றில் நாம் தீவீரமாகச் செயல்பட வேண்டும்.

மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நகல் தீர்மானம் சொல்வது என்ன?

(மார்க்சிஸ்ட் கட்சியின் 23 வது அகில இந்திய மாநாட்டின் அரசியல் நகல் தீர்மானம் குறித்து : முழுமையாக வாசிக்க | ஆங்கிலம் (பி.டி.எப்) | Link )

  • ஜி. ராமகிருஷ்ணன்

2022 ஏப்ரல் மாதத்தில் நடக்கவுள்ள, நமது கட்சியின் 23 வது அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்படவுள்ள அரசியல் தீர்மானத்தின் நகலினை தற்போது கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ளது. (மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கவேண்டிய மாநாடு, கொரோனா பாதிப்பினால் 4 ஆண்டுகளுக்கு பின் நடக்கவுள்ளது) நகல் தீர்மானத்தை படிக்க உதவியாக ஒரு சுருக்கமான அறிமுகம் வழங்குவதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.

நாடு முழுவதும் உள்ள கட்சி அமைப்புகள் இந்த நகல் தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தியும், தனியாகவும் திருத்தங்களை அனுப்புவார்கள். வரப்பெற்ற திருத்தங்களையும், மாநாடு நடக்கும்போது விவாதத்தில் முன்வைக்கப்படும் திருத்தங்களையும் கணக்கிலெடுத்துக்கொண்டு, அரசியல் தீர்மானம் இறுதிப்படுத்தப்படும். கட்சியின் கொள்கையை உருவாக்குவதில் கட்சியின் அணிகள் முழுவதையும் ஈடுபடுத்தும் இந்த நடவடிக்கை நமது கட்சியில் பின்பற்றும் உட்கட்சி ஜனநாயகத்தின் உயர்ந்த வெளிப்பாடு ஆகும்.

நகல் அரசியல் தீர்மானத்தை 3 பகுதிகளாக பகுத்துப் பார்க்கலாம். முதலாவது, உலகளாவிய நிலைமை. இரண்டாவது தேசிய நிலைமைகள். மூன்றாவது எதிர்கால அரசியல் கடமைகள்.

 உலக நிலைமைகள்:

 “நவீன தொழில் துறை, உலகச் சந்தையை உருவாக்கியுள்ளது… நவீன முதலாளித்துவ வர்க்கம் என்பதே நீண்டதொரு வளர்ச்சிப்போக்கின் விளைவு – உற்பத்தி முறைகளிலும், பரிவர்த்தனை முறைகளிலும் தொடர்ச்சியாக நிகழ்ந்த மாற்றங்களின் விளைவு” என்று 1848 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை குறிப்பிடுகிறது. இப்போது முன்னைக்காட்டிலும்  உலகச் சந்தை விரிந்து பரந்ததாக இருக்கிறது. அறிக்கை எழுதப்பட்ட 19 ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் இருந்த நிலைமைகளில் இருந்து 20 ஆம் நூற்றாண்டிலும், தற்போதும் தொழில்நுட்பங்களில் ஏற்பட்ட வளர்ச்சி உலகச் சந்தையில் பெரும் தாக்கம் செலுத்துகிறது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, இந்தியா உள்ளிட்டு பல காலனி நாடுகள் விடுதலை அடைந்தன. எனவே, ஏகாதிபத்திய ஆதிக்கம் முந்தைய வடிவத்தில் தொடரமுடியவில்லை. இருந்தாலும் நவீன-தாராளமய பொருளாதாரக் கொள்கையின் மூலம், அறிவியல் தொழில்நுட்பங்களில் ஏற்பட்ட வளர்ச்சியைப் பயன்படுத்தி, தமது ஆதிக்கத்தை ஏகாதிபத்திய நாடுகள் வலுப்படுத்திக்கொண்டன. பொருளாதார ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக, உலகெங்கிலும் ராணுவத் தலையீட்டையும், அரசியல் தலையீட்டையும் தொடர்ந்து மேற்கொள்கிறார்கள்.

அதே நேரத்தில், பொருளாதாரத்தில் முதலிடத்தில் உள்ள அமெரிக்கா, கொரோனா மரணங்களிலும் முதலிடத்தில் இருக்கிறது. இவ்வாறு, முதலாளித்துவத்தால் மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண முடியாது என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி வருகிறது.

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகவே, உலக முதலாளித்துவம் நெருக்கடியில் இருந்துவருகிறது. இதனைப் பற்றி நகல் தீர்மானத்தில் பத்தி 1.6 “உலக முதலாளித்துவம் மீட்சியடைந்து பழைய நிலைக்கு வருவது சாத்தியமாகவில்லை. சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எஃப்) கணக்கீட்டின்படி உலக மொத்த உற்பத்தி வளர்ச்சி 2009 ஆம் ஆண்டில் 5.4 சதவீதமாக இருந்தது 2019 ஆம் ஆண்டில் 2.8 சதவீதம் என்ற நிலைக்கு தொடர்ந்து வீழ்ச்சியடைந்தது” என்பதை சுட்டிக்காட்டுவதுடன் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக உலகம் முழுவதும் நாட்டடங்கு விதிக்கப்பட்டதால் மொத்த உற்பத்தி மைனஸ் 4.4 சதவீதமானதையும் எடுத்துக் காட்டுகிறது.

வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளிலும், பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரித்துவருகிறது. அதனை பத்தி 1.8 விளக்குகிறது. வேலையின்மையும் வறுமையும் அதிகரித்து வருவதுடன் சுரண்டல் தீவிரமாகியிருப்பதையும் அது விளக்குகிறது.

வலதுசாரி திருப்பத்தில் மாற்றம்:

மேற்சொன்ன பொருளாதார நெருக்கடியின் காரணமாக மக்களிடம் அதிருப்தி அதிகரிக்கிறது. அதனை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டிருக்கும் தீவிர வலதுசாரி சக்திகள், கடந்த பத்து ஆண்டுகளில், பல நாடுகளில் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தார்கள். ஆனால் அந்த நிலையில் இருந்து இப்போது மாற்றம் ஏற்பட்டு வருகிறது.

2018 ஆம் ஆண்டுக்கு பின், லத்தீன் அமெரிக்க நாடுகளில் வலதுசாரி சக்திகளுக்கு எதிரான எழுச்சி நடைபெற்றுவருவதை நகல் தீர்மானத்தின் பத்தி 1.36 முதல் 1.39 வரை விளக்குகிறது. 2019 ஆம் ஆண்டில், அமெரிக்கா மேற்கொண்ட தலையீட்டின் காரணமாக பொலிவியாவில் ஈவோ மொரேல்ஸ் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இதற்கு எதிராக வலுவான மக்கள் இயக்கத்தைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் இடதுசாரிகள் மீண்டும் ஆட்சியைப் பிடித்தார்கள். பிரேசில் நாட்டில் 2018 ஆம் ஆண்டில் வலதுசாரிகள் ஆட்சியைப் பிடித்தார்கள். இப்போது அந்த ஆட்சிக்கு எதிரான மக்கள் எழுச்சி உருவாகி போராட்டங்கள் நடந்துவருகின்றன. தேர்தல் நடைபெற்றால், தொழிலாளர் கட்சியின் தலைவர் லூலா ஆட்சியைக் கைப்பற்றுவார் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

சிலி நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியையும் உள்ளடக்கிய இடதுசாரி ஆட்சி ஏற்பாட்டுள்ளது. மேலும் சர்வாதிகார ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தை திருத்துவதற்கான குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இதனைப் போலவே பெரு, ஹோண்டுராஸ், அர்ஜண்டைனா, நிகரகுவா போன்ற லத்தீன் அமெரிக்க நாடுகளில் இடதுசாரி சக்திகள் அதிகாரத்திற்கு வந்துள்ளன. வெனிசுவேலாவில் அமெரிக்காவின் நேரடித் தலையீட்டினை எதிர்த்த வலுவான மக்கள் இயக்கம் நடந்த பின்னணியில் மீண்டும் நிகோலஸ் மதுராவின் தலைமையிலான ஆட்சி அமைந்து இயங்கிவருகிறது.

ஐரோப்பிய நாடுகளிலும் ஆலைத் தொழிலாளர்கள், சேவைத்துறைகளில் பணியாற்றும் மருத்துவர், செவிலியர், சுகாரார பணியாளர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட இதர உழைக்கும் மக்களும் பல வேலை நிறுத்தப் போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். பிரான்ஸ், போர்ச்சுகல், கிரீஸ் போன்ற நாடுகளில், தொழிலாளர் உரிமைகளைப் பறிக்கக்கூடிய சட்டத் திருத்தங்களை எதிர்த்து போராட்டங்கள் நடந்துள்ளது. போர்ச்சுக்கல் போன்ற நாடுகளில் கொரோனா காலத்தில் வீட்டிலிருந்து பணியாற்றும் ஊழியர்களுக்கான சலுகைகள் கோரி, போராட்டத்தை முன்னெடுத்து, சட்டத்தையும் நிறைவேற்றச் செய்துள்ளார்கள்.

கொரோனா நெருக்கடியை பயன்படுத்திக்கொண்டு கியூபா, வடகொரியா போன்ற நாடுகளில் உள்ள சோசலிச அரசாங்கங்களை பலவீனப்படுத்த அமெரிக்க ஏகாதிபத்தியம் முயற்சிக்கிறது. ஏற்கனவே முன்னெடுத்துவரும் பொருளாதார தடைகளை தீவிரமாக்குகிறது. 

வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகள் உட்பட பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளார்கள். மறுபக்கம் மக்கள் சீனத்தின் சோசலிச அரசாங்கம் கொரோனா பெருந்தொற்றினை வெற்றிகரமாக எதிர்கொண்டிருப்பதுடன் உலகின் இரண்டாவது பொருளாதாரமாகவும் வலிமையடைந்துள்ளது. 2021 ஆம் ஆண்டில், அதீத வறுமையை முற்றாக ஒழித்துள்ள சீனாவின் பிரகடனம் கவனிக்கத்தக்கதாகும். உலக அரங்கில் மக்கள் சீனத்தின் செல்வாக்கு உயர்ந்துள்ளது.

உலகின் பிரதான முரண்பாடுகள்:

மேலே குறிப்பிடப்பட்டுள்ள உலக நிலைமைகளையும், தேசிய நிலைமைகளையும் புரிந்துகொள்ள கீழ்க்காணும் பிரதான முரண்பாடுகளை மனதில் நிறுத்துவது அவசியமாகும்.

1)   சீனா, கியூபா, வடகொரியா உள்ளிட்ட சோசலிச நாடுகளுக்கு எதிரான ஏகாதிபத்திய நிலைப்பாடுகளும். சீனாவுடன் அமெரிக்கா கடைப்பிடிக்கின்ற மோதல் போக்கும் – ஏகாதிபத்தியத்திற்கும், சோசலிசத்திற்கும் இடையிலான முரண்பாட்டின் வெளிப்பாடுகளாக உள்ளன.

2)   அமெரிக்காவில் டிரம்ப் ஆட்சிக்கு வந்த பிறகு ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையில் சலசலப்பு ஏற்பட்டதை கட்சியின் சென்ற மாநாடு சுட்டிக்காட்டியது. தற்போது ஜோ பைடன் ஆட்சிக்கு வந்துள்ளார். சில திட்டவட்டமான நடவடிக்கைகளை எடுத்து ரஷ்யாவிற்கும், சீனாவிற்கும் எதிரான அணிச்சேர்க்கையை உருவாக்கிட முயற்சி நடக்கிறது. இருப்பினும் ஏகாதிபத்திய நாடுகளுக்குள் ஏற்பட்ட சலசலப்புகள் தொடர்கின்றன.

3)   உலகம் வெப்பமாதலும், வளரும் நாடுகளின் மீதான கடன் சுமையும் முக்கிய பிரச்சனைகளாக உள்ளன. எனவே, ஏகாதிபத்திய நாடுகளுக்கும், வளரும் நாடுகளுக்கும் இடையிலான முரண்பாடுகள் அதிகரிக்கின்றன. லத்தீன் அமெரிக்கா, மேற்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள நாடுகளில் அதன் வெளிப்பாடுகளைப் பார்க்கிறோம்.

4)   உழைப்புக்கும் மூலதனம் மற்றும் முதலாளித்துவத்திற்கும் அமைப்பிற்கும் இடையிலான அடிப்படை முரண்பாடு தீவிரமடைந்துவருகிறது. தொழிலாளி வர்க்கத்தின் உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்படுகின்றன. வேலை இழப்பும், நவீன தொழில்நுட்பங்களின் வருகையால் வேலைச் சூழலில் மாற்றங்களும் தொடர்கின்றன. இவைகளை எதிர்த்து தொழிலாளி வர்க்கம் போராடி வருகிறது.

இத்தகைய பின்னணியில், உலகில் நடக்கும் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கங்களை ஆதரிப்பதுடன், இந்தியாவிலும் அதனை வலுப்படுத்திட வேண்டும் என்று நகல் அறிக்கையில் பத்தி 1.65 தொடங்கி 1.75 விளக்கியுள்ளது. உலக அளவில் இடதுசாரி சக்திகளோடு கைகோர்ப்பதுடன், இந்தியாவிலும் ஏகாதிபத்திய சக்திகளுக்கு எதிரான மக்கள் இயக்கங்களை வலுப்படுத்த கட்சி தனது உறுதிப்பாட்டினை வெளிப்படுத்தியுள்ளது.

புவி வெப்பமாதல்:

புவி வெப்பமாதல் பிரச்சனை தீவிரமடைந்துவருகிறது. இதனால் ஏற்படும் பருவநிலை மாற்றம் உலக மக்களை பாதிக்கிறது. பருவநிலை மாற்றத்தை ஒரு வர்க்கப் பிரச்சனையாக பார்க்க வேண்டும் என்கிறது நகல் அறிக்கை. ‘உலக சமநீதிக்கான போராட்டம் தீவிரமடைந்து வருவதை சி.ஓ.பி 26 மாநாடு காட்டுகிறது, இந்த போராட்டம் மிக நீண்டதாக இருக்கும்’ என்று பத்தி 1.53 குறிப்பிடுவது முக்கியமானதாகும்.

இப்படியான சூழலில், உலகம் முழுவதும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையில் நடக்கும் ஆண்டுக் கூட்டங்கள் முக்கியத்துவம் பெருகின்றன. முக்கியமான சமூக பொருளாதார சவால்களை எவ்வாறு எதிர்கொள்ளலாம் என்கிற அனுபவப் பகிர்விற்கும், கருத்துப் பரிமாற்றத்திற்கும் அவசியம் உள்ளது. இந்த ஒத்துழைப்பை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்கிறது நகல் அறிக்கை.

தேசிய நிலைமைகள்:

ஆங்கிலத்தில் 63 பக்கங்கள் உள்ள நகல் அறிக்கையில், 19 பக்கங்கள் உலக நிலைமைகளும், 44 பக்கங்கள் தேசிய நிலைமைகளையும், எதிர்கால கடமைகளையும் கட்சி விவரித்துள்ளது.

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கூடுதலான தொகுதிகளில் வென்றதுடன், கூடுதலான வாக்குகளையும் பெற்று அதிகாரத்திற்கு வந்திருக்கும் மோடி அரசாங்கம், தனது பாசிச வகைப்பட்ட இந்து ராஷ்ட்ரா திட்டத்தை தீவிரமாக முன்னெடுக்கிறது. பாஜகவைப் பற்றி கட்சி திட்டத்தில் 3 பத்திகள் நகல் தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்படுகின்றன. அவற்றிலிருந்து கீழ்க்காணும் பகுதிகள் வாசிக்க:

“பாஜக அதிகாரத்திற்கு வருகிறபோது, அரசின் அதிகாரத்திலும், அரசு இயந்திரத்திலும் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவ வாய்ப்புக் கிடைக்கிறது. இந்துத்துவா தத்துவம் பழமைவாதத்தை வளர்க்கிறது, இந்து ராஷ்டிரத்தை நிறுவும் நோக்குடன் இந்தியாவின் பன்முகப் பண்பாட்டை நிராகரிக்கிறது.”

“மதவெறி அடிப்படையிலான பாசிச போக்குகளின் ஆபத்து வலுப்பெற்று வருவதை எதிர்த்து அனைத்து நிலைகளிலும் (கட்சி) உறுதியாகப் போராடும்”

இப்போதுள்ள மோடி தலைமையிலான ஒன்றிய அரசை, ‘வகுப்புவாத-பெருமுதலாளித்துவ கூட்டு’ (Communal-corporate nexus) என்று நகல் தீர்மானம் குறிப்பிடுகிறது. தனது பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் இந்த தன்மையை மோடி அரசு வெளிப்படுத்திவருகிறது.

மதச்சார்பற்ற ஜனநாயகம், கூட்டாட்சி, சமூக நீதி மற்றும் பொருளாதார இறையாண்மை ஆகிய நமது அரசமைப்பின் 4 தூண்களையும் தகர்த்து, இந்திய குடியரசின் தன்மையையே மாற்றிவருகிறது.

தேர்தல் பிரச்சாரத்தினை வகுப்புவாத தேசியவாத வெறியைச் சுற்றி அமைத்துக்கொண்டதன் மூலம், மக்களின் அடிப்படை வாழ்வாதார பிரச்சனைகள் தேர்தலில் எதிரொலிக்காமல் செய்ய முடிந்திருப்பதுடன், உள்ளூர் அளவில் சாதி அடிப்படையிலான திரட்டல்களை மேற்கொண்டு அதனைக் கொண்டு ‘இந்து அடையாளம்’ உருவாக்குவதையும் செய்துள்ளார்கள். ஊடகங்களையும், சமூக ஊடகத்தையும் கட்டுப்படுத்துகிறார்கள். பெருமளவில் பணம் தேர்தல் களத்தில் பயன்படுத்தப்படுகிறது.

பொருளாதார இறையாண்மையின் மீதான தாக்குதல்:

2019 ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பின், மோடி அரசாங்கம், நவ தாராளமய பொருளாதாரக் கொள்கையை மேலும் தீவிரமாக அமலாக்குகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகை அளிப்பதும், பொதுத்துறைகளை தனியார்மயம் ஆக்குவதுமான நடவடிக்கைகளோடு வேறு பல வடிவங்களிலும் பொருளாதார இறையாண்மையின் மீது தாக்குதல் நடக்கிறது. பாதுகாப்புத்துறை உட்பட இந்தியாவின் அனைத்து பொதுத்துறைகளிலும் தனியார்மயத்தை முன்னெடுக்கிறார்கள். இவ்வாறு இந்திய சுயச்சார்பின் அடிப்படைகள் தகர்க்கப்படுகின்றன. கார்ப்பரேட் நிறுவனங்களை சார்ந்திருக்கும் நிலையை நோக்கி நாடு நகர்கிறது.

கொரோனா பரவலுக்கு முன்பே இந்திய பொருளாதார வளர்ச்சி குறையத் தொடங்கியிருந்தது. இப்படியான சூழலில் அரசாங்கம் பொதுச் செலவினங்களை அதிகரிக்க வேண்டும். ஆனால் பொதுச் செலவினங்கள் வெட்டிச் சுருக்கப்பட்டன.  இப்போது அது மந்தநிலையை எட்டியுள்ளது.

வேளாண் துறையில் செலவினங்கள் அதிகரித்திருப்பதுடன், அதீத வட்டியும், மானியக் குறைப்பும் நெருக்கடியை தீவிரப்படுத்தியுள்ளது. கொரோனா பரவலின் காரணமாக ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கான அவசியம் அதிகரித்தது ஆனால் அரசின் நிதி ஒதுக்கீடு அதிகரிக்கவில்லை. மறுபக்கத்தில், பெருமுதலாளிகளின் ரூ.10.72 லட்சம் கோடி அளவிலான வங்கிக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. 13 நிறுவனங்களின் ரூ.4.5 லட்சம் கோடி மதிப்பிலான கடன்களை திரும்ப செலுத்துவதில் இருந்து 64% தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் பொதுச் சொத்துக்கள் தனியாருக்கு தாரைவார்க்கப்படுகின்றன.

இந்தியாவின் 10 பெரும் பணக்காரர்களிடம் நாட்டின் சொத்துக்களில் 57% உள்ளது. 50 சதவீதம் இந்திய ஏழைகளிடம் மொத்தச் சொத்துக்களில் 13% மட்டுமே உள்ளது. இதே காலகட்டத்தில் சட்டப்படியான ஊழல் முலம் பாஜக பல ஆயிரம் கோடி பணம் திரட்டுவது  முன்னெடுக்கப்படுவதையும் நகல் ஆவணம் விளக்குகிறது.

இவ்வாறாக, கொரோனா பெருந்தொற்று காலத்திலும் கூட நவ-தாராளமயக் கொள்கைகளே வேகமாக முன்னெடுக்கப்படுகின்றன. கொரோனா தொற்றினையும் அறிவியலற்ற முறைகளில் கையாண்டதுடன், ஜி-20 நாடுகளோடு ஒப்பிட்டால் மிகக் குறைவான பொதுச் செலவினத்தை மேற்கொண்டு, அவசியமான பொருளாதார ஊக்க நடவடிக்கைகளையும் புறந்தள்ளியது பாஜக அரசாங்கம்.

எதேச்சதிகார திசைவழியில்:

யு.ஏ.பி.ஏ., / என்.எஸ்.ஏ மற்றும் தேசத்துரோக வழக்குகளைப் பயன்படுத்தி நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். மிக மோசமான இந்தச் சட்டங்கள் மதவழி சிறுபான்மையினர் மீது குறிவைத்து செயல்படுத்தப்படுகின்றன. சொந்த மக்களையே வேவுபார்க்கும் போக்கும் அதிகரித்துள்ளது.

நாட்டின் கூட்டாட்சி அமைப்பின் மீது தாக்குதல் முன்னெடுக்கப்படுகின்றன. எதிர்க் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பாஜகவின் அரசியல் திட்டங்களை முன்னெடுக்க ஆளுநர் பயன்படுத்தப்படுகிறார். பொதுப் பட்டியலில் உள்ள விவகாரங்களில் ஒன்றிய அரசு தன்னிச்சையான முடிவுகளை தொடர்ந்து திணிக்கிறது. நிதிப் பகிர்வு செய்வதிலும், வரிக் கொள்கைகளும் மாநிலங்களுக்கான வாய்ப்புகள் சுருக்கப்பட்டுள்ளன. இந்த நிலைமைகளை நகல் அறிக்கை உதாரணங்களுடன் விளக்குகிறது.

நாடாளுமன்றம், நீதித்துறை, தேர்தல் ஆணையம் மற்றும் ஊடகங்களின் சுயேட்சையான தன்மையின் மீது தாக்குதல் நடக்கிறது. விசாரணை அமைப்புகள், அரசியல் நோக்கத்தோடு ஏவிவிடப்படுவதும் தொடர்கிறது. இவை அனைத்தையும் விளக்கும் நகல் அறிக்கை, ஜம்மு காஷ்மீர் மீது நடத்தப்படும் தாக்குதல்களைப் பற்றியும் விரிவாக விளக்கியுள்ளது.

சமூக நீதியின் மீது தாக்குதல்:

பாசிச தன்மை கொண்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அரசியல் கருவியாக செயல்படும் பாஜக, அரசாங்கத்தை பயன்படுத்தி அதன் கொள்கைகளை தீவிரமாக முன்னெடுக்கிறது. இதனால் சமூக நீதி ஏற்பாடுகள் சிதைக்கப்படுகின்றன. பெண்கள், சிறுபான்மையினர், பட்டியலினத்தார், பழங்குடிகள், பிற்படுத்தப்பட்டோர், பாலியல் சிறுபான்மையினர் என அனைத்து தரப்பின் மீதும் ஒடுக்குமுறைகள் அதிகரித்துள்ளன.

புதிய கல்விக் கொள்கை, மாநிலங்களிடம் கலந்து ஆலோசிக்காமலே முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது ஆர்.எஸ்.எஸ். திட்டத்தின் அடிப்படையில், அறிவியல் விரோதமாகவும், வரலாற்றின் இடத்தில் நம்பிக்கையை புகுத்துவதுடன், இந்தியாவின் பன்முகத்தன்மை மீதான தாக்குதலாகவும் அமைந்திருக்கிறது. இந்திய தத்துவங்களுக்கு மாறாக ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை திணிப்பதாகவும் உள்ளது.

வெளியுறவுக் கொள்கை:

இந்தியா பின்பற்றிவந்த கூட்டு சேராக் கொள்கை கைவிடப்பட்டு, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இளைய பங்காளியாக அதை மாற்றும் போக்கில் பாஜக செயல்படுவதை நகல் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. பருவநிலை மாற்றம், அதிகரிக்கும் கடன் போன்ற உலகு தழுவிய பிரச்சனைகளிலும், உள்நாட்டுக் கொள்கைகளிலும் இது இந்திய நலன்களை பாதிக்கும். அண்டை நாடுகளுடனான உறவிலும் இது பாதிப்பை உருவாக்குகிறது.

அதே போல, அறிக்கையின் பருவநிலை மாற்றம் மற்றும் சூழலியல் தொடர்பான பகுதி, நாம் சந்தித்துவரும் பிரச்சனைகளை விளக்குகிறது. நமக்கென்று சுயேட்சையான அணுகுமுறையின் அவசியத்தை அந்தப் பகுதி சுட்டிக்காட்டுகிறது.

நம்பிக்கை தரும் மக்கள் போராட்டங்கள்:

கடந்த 4 ஆண்டுகளில், நாடு முழுவதுமே மக்கள் போராட்டங்கள் அதிகரித்துள்ளன. குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிரான போராட்டங்களும், அதனை தொடர்ந்து நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க விவசாயிகள் போராட்டமும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவையாகும்.

அன்னிய மூலதனத்தோடு கைகோர்த்துக் கொண்டுள்ள இந்திய பெருமுதலாளிகளின் திட்டங்களுக்கும், இந்திய விவசாயிகள் மற்றும் ஒரு பகுதி பணக்கார விவசாயிகளுக்கும் இடையிலான மோதலாக விவசாயிகள் போராட்டத்தை பார்க்க வேண்டும். பெரிய முதலாளிகளின் நலன்களுக்கும், பெருமுதலாளி அல்லாத கோடிக்கணக்கான சிறு/குறு தொழில்முனைவோர் மற்றும் ஒரு பகுதி நடுத்தர முதலாளிகளின் நலன்களுக்கும் இடையிலான மோதலும் போராட்டங்களில் வெளிப்படுகிறது.

நகல் அறிக்கை குறிப்பிடும் மேற்சொன்ன வர்க்கங்களின் மீதான தாக்கத்தை கணக்கில் கொண்டு, தொழிலாளர் இயக்கமும், விவசாயிகள் இயக்கமும் முன்னேறிட வேண்டும். ஆளும் வர்க்கத்தின் கூட்டாளிகளிடையே எழக்கூடிய முரண்பாடுகளை பயன்படுத்தி சுரண்டப்படும் வர்க்கங்கள் தங்களுடைய வர்க்கப் போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் என நகல் அறிக்கை பணிக்கிறது.

அரசியல் கட்சிகளைப் பற்றி:

அரசியல் கட்சிகளைப் பற்றிய நகல் அறிக்கையின் மதிப்பீடு கவனமாக வாசிக்க வேண்டியதாகும். “இந்திய ஆளும் வர்க்கங்களுடைய பிரதானமான கட்சியாக பாஜக உருவெடுத்திருக்கிறது. இதன் துணையோடு ஆர்.எஸ்.எஸ். தனது வலைப்பின்னலை விரிவாக்குகிறது. இந்தியாவின் பெரிய கட்சியாகவும் பாஜக மாறியுள்ளது.” அதே சமயத்தில் பல மாநில தேர்தல்களில் பாஜக தன்னுடைய இலக்குகளை எட்டமுடியாத நிலைமையும் ஏற்பட்டிருக்கிறது. பாஜக  தற்போது இந்தியாவின் 12 மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது, நாடாளுமன்றத்தில் 2 அவைகளிலும் பெரும்பான்மை பெற்றுள்ளது.

காங்கிரஸ் கட்சி, இந்திய ஆளும் வர்க்கங்களின் நலன்களையே பிரதிநிதித்துவப்படுத்துகிறது. தான் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் நவ-தாராளமய கொள்கைகளை முன்னெடுக்கிறது. காங்கிரசின் பலமும் செல்வாக்கும் குறைந்துவருகிறது. உட்கட்சி பூசலின் காரணமாக காங்கிரசில் இருந்து விலகிய பலரும் பாஜகவில் இணைகிறார்கள். மதச்சார்பின்மையை தமது கொள்கையாக கூறினாலும், இந்துத்துவா கொள்கையுடன் சில சமயங்களில் சமரசம் செய்துகொள்கிறது. இதர மதச்சார்பற்ற கட்சிகளை திரட்டும் திறனையும் அது இழந்துள்ளது.

கடந்த மாநாடு, ‘ஆர்.எஸ்.எஸ். பின்புலத்துடன் செயல்படும் பாஜக, பிரதான ஆபத்து’ என்பதை சுட்டிக்காட்டியது. எனவே பாஜகவையும், காங்கிரசையும் ஒரே தட்டில் வைக்க முடியாது. இருப்பினும், காங்கிரஸ் கட்சியுடன் அரசியல் அணிச்சேர்க்கையை கட்சி ஏற்படுத்திக்கொள்ள கூடாது என்பதை நகல் அறிக்கை தெரிவிக்கிறது.

மாநில கட்சிகளைப் பொருத்தமட்டில், அவை  நவ-தாராளமய கொள்கைகளையே முன்னெடுக்கின்றன. அரசியல் சந்தர்ப்பவாத போக்கினை அவ்வப்போது கடைப்பிடித்து வந்துள்ளார்கள். எனினும் கூட்டாட்சியின் மீதான தாக்குதல்கள் அதிகரித்துவரும் சூழலில் மாநில கட்சிகள் பலவும் பாஜகவுடன் கூர்மையாக முரண்படுகின்றன.

பொதுவான பிரச்சனைகளில் கரம் கோர்க்க முன்வரும் மாநில கட்சிகளுடன் ஒத்துழைப்பதுடன், மாநிலங்களின் தன்மைக்கு ஏற்ப உத்திகளை வகுத்திட வேண்டும். அதே சமயத்தில் மாநில கட்சிகளின் தலைமையிலான அரசாங்கங்கள் முன்னெடுக்கும் கொள்கைகள் மக்களை பாதிக்கும்போது, தனியாகவும், இடதுசாரி கட்சிகளோடு இணைந்தும் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். மாநில ஆட்சிகளை, ஒன்றிய அரசோடு இணைவைத்து பார்க்கக் கூடாது. (விரிவாக வாசிக்க : நகல் அறிக்கை பிரிவு 2.139 – 2.143)

அதே போல, இஸ்லாமியர்களிடையே செயல்படும் தீவிரவாத மற்றும் அடிப்படைவாத அமைப்புகளைப் பற்றி குறிப்பிடும்போது, ஆர்.எஸ்.எஸ். முன்னெடுக்கும் அரசியலுக்கு இது சாதகமாக அமைவவதை சுட்டிக்காட்டும் நகல் அறிக்கை, சிறுபான்மை மக்களின் உரிமைகளுக்காக உறுதியாக நின்று, மதச்சார்பற்ற மேடைகளில் திரட்டிட வேண்டும்  என்று பணிக்கிறது.

வலிமையான மார்க்சிஸ்ட் கட்சி:

ஆர்.எஸ்.எஸ். வலைப்பின்னல் வேகமாக வளர்ந்துவரும் சூழலில், மார்க்சிஸ்ட் கட்சியின் ஆதரவுத்தளத்தில் ஏற்பட்டிருக்கும் அரிமானத்தை நகல் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. கேரளத்தில் நமது ஆட்சியை பலவீனப்படுத்தும் விதத்தில் பாஜக அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றுகிறது. முன்னணி ஊழியர்களின் மீதான தாக்குதலும் முன்னெடுக்கப்படுகிறது.

மேற்கு வங்கத்தில், கட்சி எதிர்கொண்டுள்ள பின்னடைவை சுய விமர்சனப் பார்வையுடன் ஆய்வு செய்து, அதிலிருந்து மேற்கொள்ளப்பட்டுள்ள முடிவுகளை, சிரத்தையுடன் அமலாக்கிட வேண்டும் என்று நகல் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. திரிபுராவிலும் நம் மீதான பாசிச வகைப்பட்ட தாக்குதல்கள் தொடர்கின்றன.  இந்த மாநிலங்களில் நமது ஆதரவுத்தளத்தில் சரிவும் ஏற்பட்டு வருகிறது.

நமது கட்சியின் ஆதரவுத்தளம் பாதிக்கப்பட்டால் அது மக்கள் நலனை முன்னிறுத்தி நாம் மேற்கொள்ள வேண்டிய தலையீடுகளை பலவீனப்படுத்தும். எனவே, கட்சியை வலுப்படுத்த வேண்டியது நம் முன் உள்ள முக்கியமான கடமையாகும். கொல்கத்தா பிளீனம் எடுத்த முடிவுகளை சிரத்தையுடன் அமலாக்க வேண்டும். அரசியல், தத்துவ, ஸ்தாபன பணிகளை முன்னெடுக்க வேண்டும். தொடர்ச்சியாக மக்கள் கோரிக்கைகள் மீது இயக்கத்தை நடத்த வேண்டும். அவர்கள் மத்தியில் செல்வாக்கை உயர்த்த வேண்டும். உள்ளூர் அளவில் இயக்கங்களை கட்டமைத்து மக்களைத் திரட்ட வேண்டும்.

நவ-தாராளமய கொள்கைகளின் அமலாக்கத்தினால் மக்களின் வாழ்க்கையும், வாழ்வாதாரங்களும் கேள்விக்குறியாகியுள்ளது. வேலையின்மை, வறுமை உள்ளிட்ட துன்ப துயரங்கள் அதிகரிக்கின்றன. இந்த சூழலில், மக்களுக்கு மதவெறியூட்டி, சாதிவெறியூட்டி, இனவெறியூட்டி இயங்கும் அதீத வலதுசாரி கட்சிகள் அதிகாரத்திற்கு வருகிறார்கள்; அல்லது  போராட்டங்களை சீர்குலைக்கிறார்கள். இப்படியான நிலைமைகளில் தலையீடு செய்து மக்களை வென்றெடுக்கக் கூடிய முயற்சியில் பல நேர்மறையான அனுபவங்களும் உலகத்தில் உள்ளது. அவைகளை நகல் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இடது ஜனநாயக திட்டம்:

நகல் அறிக்கையின் பத்தி 1.17 – 1.19 சுட்டுவது போல செயல்பட்டு இந்தியாவில் நமது இயக்கத்தை முன்னேற்றுவதே ‘இடது ஜனநாயக திட்டம்’.

மக்கள் ஜனநாயக அணியில் இடம்பெற வேண்டிய வர்க்கங்களை திரட்டுவதே இடது ஜனநாயக திட்டத்தின் நோக்கம். இடது ஜனநாயக அணியை கட்டுவதை பலரும் தொலைநோக்கு திட்டமாகவே கருதுகிறார்கள். அவ்வாறு அல்ல. இடது ஜனநாயக அணியை கட்டுவதை கட்சியின் அன்றாட நடவடிக்கைகளில் ஒன்றாக மேற்கொள்ள வேண்டும் என்பதே நம் முடிவு.

துன்ப துயரங்களில் உள்ள மக்களின் தேவைகளையே நாம் இடது ஜனநாயக திட்டத்தில் முன்னெடுக்கிறோம். நம் திட்டங்களும் கோரிக்கைகளும் தான் முதலாளித்துவ கட்சிகளின் திட்டங்களுக்கு மாற்று. 

இடது ஜனநாயக அணியின் திட்டம், “பொருளாதார இறையாண்மையை பாதுகாத்தல், அரசமைப்புச் சட்டத்தை பாதுகாத்தல், ஜனநாயக உரிமைகளை, குடிமக்கள் உரிமைகளை காத்தல், கூட்டாட்சியை பாதுகாப்பது, பாட்டாளி வர்க்கம் மற்றும் விவசாயிகள், சமூக நீதி, மக்கள் நலத்திட்டங்கள்” என்ற தலைப்புகளில் விளக்கப்பட்டுள்ளது. இவைதான் பாதிக்கப்படும் மக்களின் பெரும்பான்மையான கோரிக்கைகள்.

இடதுசாரி கட்சிகளும், அவர்களின் வர்க்க வெகுஜன அமைப்புகளும், இடதுசாரிகள் குழுக்கள் மற்றும் தனிநபர்களும், பல்வேறு கட்சிகளில் உள்ள சோசலிஸ்டுகளும், ஜனநாயக பிரிவினரும், ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளை முன்னெடுக்கும் பட்டியலினத்தார், பழங்குடியினர், பெண்கள், சிறுபான்மையோர் மற்றும் சமூக இயக்கங்கள் ஆகியவை   – நாம் அமைக்க வேண்டிய இடது ஜனநாயக அணியின் தொடக்கமாக அமைந்திடுவார்கள். இந்த சக்திகளை ஒருங்கிணைப்பதன் மூலமே இடது ஜனநாயக அணிக்கு ஒரு திட்டவட்டமான வடிவம் கிடைக்கும் என்று 22 வது மாநாட்டின் அரசியல் தீர்மானம் குறிப்பிடுகிறது.

எனவே இந்தப் பணிகளை வேகப்படுத்த வேண்டும்.  தில்லி விவசாயிகள் போராட்டக் களத்தில் ஒன்றிணைந்த பல்வேறு இயக்கங்களும், ஆதரவாக நின்ற அறிவு ஜீவிகளையும் ஒருங்கிணைத்திட வேண்டும் என நகல் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இந்துத்துவாவை எதிர்கொள்வது:

வலிமையான மார்க்சிஸ்ட் கட்சியை உருவாக்குவதே இந்துத்துவ சக்திகளை எதிர்கொள்வதற்கான அடிப்படையான தேவையாகும்.

கட்சியும், வெகுஜன அமைப்புக்களும் வகுப்புவாத சக்திகளின் பிற்போக்கு கருத்துக்களுக்கு எதிராக அயராத பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டும். இந்துத்துவ குழுக்களின் தாக்குதல் போக்குக்கும், வெறுப்பு பிரச்சாரத்திற்கும் பதிலடி தர வேண்டும். சமூக அமைப்புகள், பண்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் மக்கள் அறிவியல் இயக்கங்களை முன்னெடுப்பதன் வழியாக அறிவியல் சிந்தனையை பரவலாக்கிட வேண்டும். சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராடுவதும், இந்தியாவின் பன்முக கலாச்சாரத்தை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம். கொரோனா காலத்தில் முன்னெடுத்த சமூக நல நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். கல்வித்துறையில் ஆர்.எஸ்.எஸ். முன்னெடுக்கும் நடவடிக்கைகளில் தலையீடு செய்து எதிர்கொள்வது அவசியம்.

மேற்சொன்ன நடவடிக்கைகள் இல்லாததன் விளைவாகவே ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தனது ஆதரவுத்தளத்தை விரிவாக்க முடிகிறது.

அரசியல் நிலைப்பாடு:

நமது கட்சி மேற்கொள்ள வேண்டிய அரசியல் நிலைப்பாடு, நகல் அறிக்கையின் பத்தி 2.171 இல் விளக்கப்பட்டுள்ளது.

கட்சியை வலுப்படுத்துவதும், இடதுசாரி ஒற்றுமையை பலப்படுத்துவதும் ஒரு மாற்றுக் கொள்கையை முன்னெடுக்க அவசியம் ஆகும்.

நவ-தாராளமய கொள்கைகளால் பாதிக்கப்படும் மக்களின் போராட்டங்களுக்கு வடிவம் கொடுப்பதும் அவசியமாகும். இந்துத்துவா-கார்ப்பரேட் ஆட்சி அதிகாரத்திற்கு எதிராக இருமுனைப் போராட்டம் தேவைப்படுகிறது.

நாடாளுமன்றத்திற்குள் நாம் மதச்சார்பற்ற சக்திகளோடு ஒத்துழைப்புடன் இயங்கிட வேண்டும். நாடாளுமன்றத்திற்கு வெளியே அனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் திரட்டி வகுப்புவாத நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டும். வர்க்க – வெகுஜன அமைப்புகளின் மேடையை உருவாக்க வேண்டும். இவ்வகையிலேயே நாம் இடது ஜனநாயக அணியை ஏற்படுத்த முடியும்.

மேற்சொன்ன சூழலை விளக்கும் நகல் அறிக்கையின் பத்தி 2.172, கட்சியின் தற்போதைய கடமைகளை விளக்குகிறது.

நகல் அறிக்கையை, கட்சியின் ஒவ்வொரு அமைப்பும் ஊன்றிப் படித்து, அமைப்பிற்குள் விவாதித்து, அதனை மேம்படுத்துவதற்கான திருத்தங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் அனுப்பிட வேண்டும். அறிக்கையை முழுமையாக புரிந்துகொள்வதே, அதனை அமல்படுத்துவதற்கான முதல் கட்ட நடவடிக்கை ஆகும்.

மார்க்சிஸ்ட் கட்சியும், மதுரை மாநாடுகளும் !

எஸ்.பி.ராஜேந்திரன்

“நமது எதிர்கால நடவடிக்கைகளின் விளைவாக இன்னும் ஆயிரக்கணக்கான புதிய உறுப்பினர்களை நமது கட்சி தமிழ்நாட்டில் ஆகர்ஷிக்கப் போவது நிச்சயம். கம்யூனிஸ்ட் கட்சியின் பரம்பரைக்கேற்ப ஒரு பலம் பொருந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்த நெருக்கடிக்கும் சோதனைக்கும் பின் நமது நாட்டில் மலரப் போவது திண்ணம். அந்தக் கடமை பூர்த்தி செய்யப்படுவதில் நமது பங்கை உறுதியாக நிறைவேற்றுவோம் என்று சபதமேற்று இந்த மாநாட்டிலிருந்து செல்லுவோமாக!”

1964 ஏப்ரல் 15 முதல் ஏப்ரல் 18 வரை நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில ஏழாவது மகாநாட்டில் – உதயமான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) நிறைவேற்றிய அரசியல் ஸ்தாபன அறிக்கையின் கடைசி வரிகள் இவை.

அந்த மாநாடு தீர்க்கதரிசனமாக தீர்மானம் போட்டதைப் போலவே இன்று தமிழ்நாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அதன் அணிகளும் பல லட்சக்கணக்கான உறுப்பினர்களை கொண்ட மாபெரும் இயக்கமாக வளர்ந்திருக்கிறது. இந்த மாபெரும் வளர்ச்சிக்கு வித்திட்ட ஏழாவது மாநாடு – தமிழ் நாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உதயமான மாநாடு நடைபெற்ற இடம், கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரியால் “இந்தியாவின் மகத்தான புரட்சி மையங்களில் ஒன்று” என்று வர்ணிக்கப்பட்ட மதுரை என்பது குறிப்பிடத்தக்கது.
1964 ஏப்ரலில், மதுரையில் நடைபெற்ற மாநில மாநாட்டைப்போல பல்வேறு மாநிலங்களில் மாநாடுகள் நடைபெற்று, அதன் உச்சக் கட்டமாக கல்கத்தாவில் 1964 அக்டோபர் 31 முதல் நவம்பர் 7 வரை நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஏழாவது அகில இந்திய மகாநாட்டில் (கட்சியின் ஏழாவது காங்கிரஸ்) இந்திய புரட்சியின் உறுதிமிக்க திட்டங்களோடு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உதயமானது. எனவே 1964 மதுரை மாநாடு இந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றிலும், தமிழக கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றிலும் முத்திரைப் பதித்த மாநாடு ஆகும்.
அதற்கு முன்பும், பின்பும் தமிழக அரசியல் வரலாற்றில் மதுரையின் பங்கும், மதுரை கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பங்கும் அளப்பரியது. மதுரையில் நடைபெற்ற மாநாடுகள் ஏற்படுத்திய அதிர்வுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. கம்யூனிஸ்ட் இயக்கத்தை வலுமிக்க புரட்சிகர ஸ்தாபனமாக கூர்மைப்படுத்தி கொண்டு செல்வதில் மதுரை மாநாடுகள் முக்கியப் பங்கு வகித்துள்ளன.

மார்க்சிஸ்ட் கட்சி உதயத்திற்கு முன்பு 1953 டிசம்பர் 27ல் துவங்கி 1954 ஜனவரி 4 வரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூன்றாவது அகில இந்திய மாநாடு மிகப் பிரம்மாண்டமான முறையில் மதுரையில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கட்சி உதயமான பின்பு 1972 ஜூன் 27 முதல் ஜூலை 2 வரை கட்சியின் ஒன்பதாவது அகில இந்திய மாநாடு மிகப்பெரும் எழுச்சியுடன் நடைபெற்றது. இதன் பின்னர் பல ஆண்டுகள் கழித்து 2008ல் கட்சியின் மாநில மாநாடு மதுரையில் நடைபெற்றது.

இந்த மாநாடுகளின் வரிசையில் 2022 மார்ச் 30,31, ஏப்ரல் 1 ஆகிய தேதிகளில் கட்சியின் 23 ஆவது மாநில மாநாடு மதுரையில் நடைபெறவிருக்கிறது. வலதுசாரி பிற்போக்குவாத பாசிச சக்திகள் இந்தியாவின் ஒன்றிய ஆட்சியிலும் பல்வேறு மாநில ஆட்சிகளிலும் அமர்ந்து அட்டூழியங்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கும் மிகக் கடுமையான அரசியல் சூழலில்; தமிழகத்திலும் மதவெறி சக்திகள் காலூன்ற துடிக்கும் சூழ்ச்சிகரமான அரசியல் பின்னணியில் அதைத் தடுத்து நிறுத்துவதற்கும் தொடர்ந்து இடதுசாரி ஜனநாயக சக்திகளை அணிதிரட்டுவதற்கும் திட்டமிட வேண்டிய மாபெரும் பொறுப்பினை நிறைவேற்றுகிற மாநாடாக மதுரையில் நடைபெறவுள்ள 23 ஆவது மாநாடு அமையவுள்ளது.

1954ல் மதுரையில் நடைபெற்ற 3ஆவது அகில இந்திய மாநாடு, சர்வதேச அரங்கில் கொரிய யுத்தம் நடந்து முடிந்து 1953 ஜூலை 23ல் சோவியத் ஒன்றியம் மற்றும் மக்கள் சீனத்தின் ஒன்றுபட்ட தலையீடுகள் அமைதி முயற்சிகளின் பின்னணியில் அமெரிக்க ஏகாதிபத்திய சக்திகளை பின்வாங்கச் செய்து, கொரியாவுடன் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடச் செய்த மகத்தான நிகழ்வுகளை உலக கம்யூனிஸ்ட் இயக்கம் நடத்திக் காட்டிய பின்னணியில் உணர்ச்சிப் பெருக்குடன் நடைபெற்றது.

இந்த மாநாட்டில் பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர் ஹாரி பாலிட் கலந்து கொண்டது, அன்றைய நாளில் மதுரையில் பெரும் எழுச்சியை உருவாக்கியது. அந்த மாநாட்டுக் காட்சியை 1954 ஜனவரி 3 அன்று வெளியான கம்யூனிஸ்ட் கட்சியின் வார இதழான ஜனசக்தி உணர்ச்சிப் பெருக்குடன் வர்ணித்திருக்கிறது. “அலை கடலென ஜன சமூகம் கொந்தளித்து ஆரவாரம் செய்கிறது. தலைவர்கள் இதோ ரயில் நிலையத்திலிருந்து வெளி வந்து விட்டார்கள். வீராவேசம் கொண்ட மதுரை மக்கள், தம் உரம் கொண்ட கரங்களை உயர்த்தி வாழ்த்தொளி முழங்குகிறார்கள். முரசங்கள் அதிர்ந்தன. தாரை, தப்பட்டை, பறைகள் ஒலித்தன. அதிர் வெடிகள் விடப்பட்டன. தலைவர்கள் கைகளை உயர்த்தி மதுரை மக்களுக்கு வணக்கம் தெரிவித்தனர். ஈடு இணையற்ற வரவேற்பை கண்டு உணர்ச்சிப்பெருக்கும், உற்சாகப்பூரிப்பும் அடைந்த பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சி காரியதரிசி தோழர் ஹாரி பாலிட் மதுரை மக்களுக்கு நன்றி தெரிவித்து சொற்பொழிவு ஆற்றினார்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சரித்திர முக்கியத்துவம் பொருந்திய மூன்றாவது காங்கிரஸ் கூடும் இச்சமயத்தில் பிரிட்டிஷ் மக்களின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். இந்தியாவின் ஜனநாயக சக்திகள் அனைத்தையும் இயக்குவிக்கும் சாவியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விளங்கப் போகிறது” என்று பேசி முடித்தார்.

ஹாரி பாலிட்டின் வார்த்தைகளும் தீர்க்கதரிசனமிக்கவை. இன்றைக்கும் இந்தியாவில் ஜனநாயக சக்திகளை எந்தப் பாதையில் செல்ல வேண்டும் என்று அழைத்துச் செல்கிற மகத்தான பணியை இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செய்து கொண்டிருக்கிறது என்றால் மிகையல்ல.

299 பிரதிநிதிகள் பங்கேற்ற மூன்றாவது அகில இந்திய மாநாட்டில் இலங்கையிலிருந்தும் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். கட்சியின் பொதுச் செயலாளர் அஜய் கோஷ், பி.ராமமூர்த்தி உள்ளிட்ட தலைவர்கள் ஆற்றிய உரைகள் மதுரை பாட்டாளி வர்க்கத்தை பெரும் எழுச்சிக் கொள்ளச் செய்தது. மூன்றாவது அகில இந்திய மாநாடு நிறைவேற்றிய அரசியல் தீர்மானம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. 1948ல் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டு 1950ல் தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்த மூன்றாண்டு காலத்தில் கம்யூனிஸ்ட் தலைவர்கள் மீது நாடு முழுவதும் தாக்குதல்கள் ஏவப்பட்டன. இவற்றையெல்லாம் உறுதியுடன் எதிர்கொண்டு, தடைக் காலத்தில் நடந்த கொடுமைகளையெல்லாம் துணிவுடன் எதிர்கொண்டு உறுதியாக எழுந்து நின்றது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. நேருவின் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. சோவியத் பாணியில் ஐந்தாண்டு திட்டம் அறிவிக்கப்பட்டது. முதலாவது ஐந்தாண்டு திட்டம் அமலாக துவங்கியிருந்தது. ஆனால் நிலப் பிரபுத்துவ- முதலாளித்துவ அரசாங்கம் அமலாக்கிய அந்தத் திட்டம் இந்த நாட்டில் நிரந்தரமான தீர்வுகளை ஏற்படுத்தி விடாது என்று மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட அரசியல் தீர்மானம் கூறியது.

மூன்றாவது அகில இந்திய மாநாடு, கட்சி மீதான தடை மற்றும் தலைமறைவு காலங்களுக்கு பிறகு கூடிய முதல் மாநாடு ஆகும். இந்த மாநாட்டில்தான் முதல் முறையாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக 1954 ஏப்ரலில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு, கட்சியின் நகல் திட்டத்தை தயாரித்து, அது நாடு முழுவதும் கட்சிக் கிளைகள் வரையிலும் விவாதிக்கப்பட்டு, திருத்தங்கள் முன்மொழியப்பட்டன. அதைத் தொடர்ந்து 1951 அக்டோபரில் கல்கத்தாவில் அகில இந்திய சிறப்பு மாநாடு நடத்தப்பட்டு, நாடு முழுவதும் இருந்து வந்திருந்த திருத்தங்கள் மற்றும் கருத்துக்கள் இறுதி செய்யப்பட்டன. இறுதி செய்யப்பட்ட நகல் திட்டம், மதுரை மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. அந்தத் திட்டம்தான் முற்றிலும் முற்போக்கான ஓர் இந்தியா, கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் உருவானால் எப்படி இருக்கும் என்ற சித்திரத்தை நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தியது.

கட்சித் திட்டம் மட்டுமல்ல, கட்சி அமைப்பு (ஸ்தாபனம்) தொடர்பான தீர்மானத்தையும், மூன்றாவது மாநாடு நிறைவேற்றியது. இந்த தீர்மானம் முன்னதாக அனைத்து மட்டங்களிலும் விவாதிக்கப்பட்டு, திருத்தங்கள் பெறப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதில் உள்ள அம்சங்கள்தான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபனங்கள் நாடு முழுவதும் வலுப்படுத்துவதற்கான அடிப்படை ஸ்தாபன விதிகளாக அமைந்தன.

இந்தத் தீர்மானம் கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பின் பலம் மற்றும் பலவீனங்களை விரிவாக ஆய்வு செய்து, பலவீனங்களை களைந்து வலுவான கட்சியாக கட்டப்படுவதற்காக வழிகாட்டும் ஒளிவிளக்காக அமைந்தது.

(1) முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ கருத்தியல்புகளுக்கு எதிரான இடைவிடாதப் போராட்டம்;

(2) கட்சியின் பிரதான அடித்தளமாக இருக்கும் தொழிலாளி – விவசாயி ஒற்றுமை;

(3) விமர்சனம் மற்றும் சுய விமர்சனம், குறிப்பாக கட்சி அணிகளின் கீழ்மட்டத்திலிருந்து முன்வைக்கப்படும் விமர்சனத்தின் முக்கியத்துவத்தை உள்வாங்கிக் கொள்ளும் வகையிலான ஜனநாயக மத்தியத்துவ கோட்பாடுகள்;

(4) அனைத்துக் கிளைகளிலும் கூட்டுச் செயல்பாடு என்ற கோட்பாட்டை உறுதியாக செயல்படுத்துவது – ஆகிய நான்கு அம்சங்களுக்கும் கட்சியின் அமைப்பை பலப்படுத்துவதற்கான இடையிலான மிக நெருங்கிய தொடர்பை இத்தீர்மானம் விரிவாக முன்வைத்தது.

இந்த மாநாடு நிறைவேற்றிய திட்டத்தின் அடிப்படையிலும் ஸ்தாபன தீர்மானத்தின் அடிப்படையிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சுதந்திர இந்தியாவில் தனது புரட்சிகரப் பயணத்தை துவக்கியது. அந்தக் காலகட்டத்தில் நாடு முழுவதும் எத்தனை எத்தனை போராட்டங்கள்; எத்தனை எத்தனை அடக்குமுறைகள்; 1957ல் கேரளாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இடதுசாரி ஆட்சி தோழர் இஎம்எஸ் தலைமையில் அதிகாரத்திற்கு வந்ததுபோன்ற பிரம்மாண்டமான வெற்றிகள். இவை அத்தனைக்கும் மதுரை மாநாடு வித்திட்டது என்றால் மிகையல்ல.
இதன் பின்னர் மதுரையில் மார்க்சிஸ்ட் கட்சி உதயமான 1964 தமிழ் மாநில மாநாடு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட அரசியல் ஸ்தாபன அறிக்கை, அன்றைய சூழலில் கட்சிக்குள் வளர்ந்த சீர்திருத்தவாதம், எப்படி கட்சியையே விழுங்கும் அளவிற்கான திருத்தல் வாதமாக தலையெடுத்தது என்பதையும் அதை கட்சிக்குள்ளேயே இருந்து நிதானமாகவும், மார்க்சிய – லெனினிய வழியில் நின்று போராடி, அதன் உச்சக் கட்டமாக மார்க்சிய லெனினிய வழியில் இந்தியப் புரட்சியை தலைமை தாங்கி நடத்துவதற்கான உறுதிமிக்க பாட்டாளி வர்க்க கட்சியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) எப்படி உதயமானது எனும் உட்கட்சி வரலாற்றை விரிவாக விவாதிக்கிறது.

கட்சிக்குள் திருத்தல்வாதம் வேரெடுத்த சூழ்நிலையை அந்த அறிக்கை ரத்தினச் சுருக்கமாக விவரிக்கிறது: “சுதந்திர இந்தியாவில் அரசியல் அதிகாரம் பெற்ற முதலாளி வர்க்கம், ஐந்தாண்டுத் திட்டங்கள் மூலம் துரிதமாக வளர முற்பட்டது. புதிய தொழிற்சாலைகள் ஏற்பட்டன. அணைக்கட்டுகள் பல தோன்றின. மின்சார வசதி அதிகரித்தது. ரோடுகள் எங்கும் பரவின. தேசிய விஸ்தரிப்புத் திட்டம். சமுதாய நல அபிவிருத்தித் திட்டம் என்ற பெயர்களுடன் பணப்புழக்கம் கிராமங்களில் மேலும் நுழைந்தது. முதலாளித்துவ வளர்ச்சி பல கிராமங்களுக்கும் சென்றது. தொழிலபிவிருத்திக்கெனத் துவக்கப்பட்ட புதிய நிதி நிறுவனங்களின் மூலம் வசதியோ செல்வாக்கோ இருந்தவர்கள் கையில், பண நடமாட்டத்திற்கு சௌகரியம் கிடைத்தது. லைசென்சுகள் பெர்மிட்டுகளுடன் லஞ்சலாவண்யங்களும் பலவிதத் தரகர்களும் தோன்றினர். திட்ட நடவடிக்கைகளில் பிரதானமாக மேல் தட்டு வர்க்கங்களே பலன் பெற்றாலும் ஆங்காங்கு சில மத்திய தர வர்க்கப் பகுதிகளுக்கும் சிறு ஆதாயம் கிடைத்தது. தொழிலாளிகளில் ஒரு பகுதியினரும், குறிப்பாக அவர்களது சங்கங்கள் பலமாயிருந்த தொழில்களில், இதர தொழிலாளிகளோடு ஒப்பிடும் போது, சில சலுகைகளையும், ஓரளவுக்கு ஊதிய உயர்வையும் பெற முடிந்தது. பல தொழிலதிபர்கள் ஏற்பட்டார்கள். கிராமப்புறங்களில் பணக்கார விவசாயிகளின் பகுதி உரம் பெற்றது.

ஐந்தாண்டுத் திட்டங்களினால் ஏற்பட்ட முரண்பாடு மிக்க இந்த முதலாளித்துவ வளர்ச்சியை, காங்கிரஸ் கட்சியும் சர்க்காரும் பெரிய சாதனையாக ஓயாமல் வர்ணித்தனர். அன்றாட ரேடியோச் செய்திகள் மூலமும, அறிக்கைகளின் மூலமும், எண்ணற்ற வெளியீடுகளின் மூலமும் பார்லிமெண்டையும் சட்டசபைகளையும் இதற்கு நன்கு பயன்படுத்துவதின் மூலமும நாட்டின் சுபீட்சத்திற்கு இவ்வாறு வழி செய்துள்ளதாக மிக வன்மையாகப் பிரச்சாரம் செய்தனர். திட்ட நடவடிக்கைகளினால பலனடைந்த முதலாளி வர்க்கமும் அதன் பத்திரிகைகளும் இதற்கு ஒத்து ஊதும் முறையில், தங்களுக்குக் கிடைத்த சுபீட்சத்தை நாடு பூராவிற்கும் ஏற்பட்டுள்ள அபிவிருத்தியாக வர்ணித்து விளம்பரப்படுத்தத் தவறவில்லை.

சுதந்திரமடைந்த பிறகு இந்தியாவில் ஏற்பட்ட இந்தப் புதிய முதலாளித்துவ வளர்ச்சியும் விஸ்தரிப்பும்தான் மக்களின் பல பகுதிகளிடையே இதைப்பற்றிப் பல பிரமைகள் ஏற்படுத்துவதற்கு இடமளித்தது. இதே புறநிலைதான் கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளும் இந்தப் பிரமைகள் படையெடுத்துத் திருத்தல் வாதம் தோன்றி வளர்வதற்கு அனுசரணையாயிருந்தது.”
இத்தகைய பின்னணியில் கட்சிக்குள் தலைதூக்கிய சீர்திருத்தவாதம் மற்றும் திருத்தல்வாதத்திற்கு எதிராக பல்லாண்டு காலம் நடந்த உட்கட்சிப் போராட்டத்தின் முடிவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உதயமானது.

இதை விவரிக்கும் 1964 மதுரை மாநாட்டு அரசியல் ஸ்தாபன தீர்மானம், கட்சிக்குள் திருத்தல்வாதம் தீவிரமடைந்திருந்த சூழலில் கட்சி ஸ்தாபனத்திற்குள் நுழைந்த கட்சி விரோதப் போக்குகளை துல்லியமாக அடையாளம் கண்டு சுட்டிக்காட்டியது: “கூட்டங்களுக்கு சரியாக வராமலிருத்தல், வெகுஜன ஸ்தாபனங்களில் அங்கத்தினர்களாக இருந்து அவற்றில் பணிபுரிவதை தட்டிக்கழித்தல், ஓயாது ஏதாவது அரசியல் பேசுவதோடன்றி எத்தகைய உருப்படியான கட்சி வேலைகளை நிறைவேற்றாமல் இருத்தல், பத்திரிகை, பிரசுரங்களை படிக்காமலும், பரப்பாமலும் இருத்தல், கொள்கையை பிறருக்கு எடுத்துச் சொல்வதிலும், அதற்காக போராடுவதிலும் அசிரத்தை, கட்சிக்கு நிதி கொடுக்காமல் காலம் கடத்துதல், கட்சி ஸ்தாபன கோட்பாடுகளுக்கு புறம்பாக யாரிடமும் எங்கும் எதையும் பேசுதல், கட்சி முடிவுகளையும் தனது யூனிட் முடிவுகளையும் நிறைவேற்றாமல் இருத்தல்” ஆகிய சீரழிவுகள் ஸ்தாபனத்தை செயல்படவிடாமல் தடுக்கும் விதத்தில் உள்ளிருந்தே கட்சியை அரித்து தின்றுகொண்டிருந்தன என்கிறது அந்தத் தீர்மானம்.

இப்பின்னணியில் 1990 களுக்குப் பிறகு அமலுக்கு வந்த நவீன தாராளமய கொள்கைகளின் தீவிர அமலாக்கம் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட சமூகச் சூழலில் அதிதீவிரமாக வளர்ந்துள்ள நுகர்வுக் கலாச்சாரம் உள்ளிட்டவற்றின் விளைவாக கட்சி ஸ்தாபனத்தில் ஏற்பட்டுள்ள தாக்கங்களை கொல்கத்தா பிளீனம் சுட்டிக்காட்டியுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. மார்க்சிய – லெனினிய கோட்பாடுகளில் பற்றுருதியுடன் கூடிய புரட்சியின் மீதான நம்பிக்கை கொண்ட கட்சி உறுப்பினர்களை வளர்த்தெடுப்பதன் அவசியத்தையும் கொல்கத்தா பிளீனம் கவனப்படுத்துகிறது.

மார்க்சிய – லெனினிய கோட்பாடுகளை புரிந்து கொள்ளாமலும், புரட்சியின் மீது நம்பிக்கையோ பிடிப்போ இல்லாமலும் இன்றைக்கும் கூட கட்சி ஸ்தாபனத்தில் இத்தகைய போக்குகள் பல்வேறு வடிவங்களில் நீடித்து வருகின்றன என்பதை கொல்கத்தா பிளீனம் சுட்டிக்காட்டியிருப்பது இங்கே கவனிக்கத்தக்கது. இவை புரட்சியின் பாதை எது என்ற தத்துவார்த்த மோதல் நடந்த காலக்கட்டத்தில் மட்டுமல்ல, இந்தியப் புரட்சிக்கான பாதை மிகத்தெளிவாக தீர்மானிக்கப்பட்ட போதிலும், 1990களுக்குப் பிறகு அமலுக்கு வந்த நவீன தாராளமய கொள்கைகளின் தீவிர அமலாக்கம் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட சமூகச் சூழலில் அதிதீவிரமாக வளர்ந்துள்ள நுகர்வுக் கலாச்சாரம் உள்ளிட்டவற்றின் விளைவாக மேற்கண்ட திருத்தல்வாதப் போக்குகளுக்கு இணையான சீர்குலைவு போக்குகள் தலைதூக்கி உள்ளன என்பதை கொல்கத்தா பிளீனம் சுட்டிக்காட்டுகிறது.

மதுரை மாநாட்டு தீர்மானம் மற்றொரு மிக முக்கிய அம்சத்தை விளக்கியுள்ளது. திருத்தல்வாதத்திற்கு எதிரான உட்கட்சிப் போராட்டத்தில் தமிழகத்தில் மதுரை கட்சித் தோழர்கள் மிகப்பெரிய அளவிற்கு முன்னணியில் நின்று, மார்க்சிய – லெனினிய பாதையில் கட்சியைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டார்கள் என்பதை மாநாடு விவரிக்கிறது: “திருத்தல்வாதிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு ஆரம்பத்திலிருந்தே எதிர்ப்பு கிளம்பியது. மதுரை மாவட்ட கட்சித் தோழர்கள் இதில் முக்கியப் பங்கு வகித்து திருத்தல்வாத தலைமையின் கோபத்திற்கும் உருட்டல் மிரட்டல்களுக்கும் ஆளானார்கள்… ஆனால் இவை அனைத்தும் மதுரை கட்சி ஸ்தாபனத்தால் உறுதியாக முறியடிக்கப்பட்டன.”

இந்த நடவடிக்கைகளில் கோவை கட்சி தோழர்களும், கன்னியாகுமரி, தென்னாற்காடு, வடஆற்காடு, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களின் கட்சித் தோழர்களும் உறுதியாக நின்று ஸ்தாபனத்தைப் பாதுகாத்தார்கள் எனவும் மதுரை மாநாட்டுத் தீர்மானம் பாராட்டுகிறது. அதுமட்டுமல்ல, தமிழகத்தில் திருத்தல்வாதத்திற்கு எதிராக கட்சி ஸ்தாபனத்தை பாதுகாப்பதிலும், அதைத்தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) எனும் ஸ்தாபனத்தை உருவாக்கிடவும் வடிவமைக்கவும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான தலைவர் தோழர் ஏ.கே.கோபாலன் அவர்கள் இங்கேயே தங்கியிருந்தும், 1962 காலக்கட்டங்களில் தலைமறைவாக செயல்பட்டும் வழிகாட்டினார் என்பதை விவரிக்கும் அத்தீர்மானம், ஏ.கே.ஜி.க்கு செவ்வணக்கம் செலுத்தி நன்றி தெரிவித்திருக்கிறது. அதேபோல எல்லா நடவடிக்கைகளிலும் தோழர் பி.ராமமூர்த்தி அவர்களது ஈடு இணையற்ற பங்கு பற்றியும் விவரிக்கப்பட்டுள்ளது. இத்தகைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரத்தை கட்சியின் முதலாவது மாநாடு நடைபெற்ற மதுரை பெற்றிருக்கிறது என்றால் மிகையல்ல.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உதயமான பிறகு, இக்கட்டுரையின் முதல் பத்தியில் குறிப்பிட்டிருப்பதைப் போல தமிழ்நாட்டில் லட்சோபலட்சம் மக்களை தனது போராட்ட அலைகளால் ஈர்த்தது. அதன் மையங்களாக மதுரையும் கோவையும் தஞ்சை பூமியும் கன்னியாகுமரி உள்ளிட்ட பிரதேசங்களும் அமைந்திருந்தன. சென்னையில் தொழிற்சங்கம் வலுப்பெறத் துவங்கியது. இந்த வளர்ச்சியின் பின்னணியில் 1972 ஜுன் 27 முதல் ஜூலை 2 வரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) -ன் 9வது அகில இந்திய மாநாடு மதுரையில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. லட்சக்கணக்கானோர் பங்கேற்ற மாபெரும் பேரணி மதுரையை குலுக்கியது.

இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட அரசியல் தீர்மானம் 1967 காலக்கட்டத்தில் கட்சிக்குள் எழுந்த இடது அதீதிவிரவாத போக்கின் விளைவாக ஏற்பட்ட நாசங்களை சுட்டிக்காட்டி, அது எப்படித் தோல்வி அடைந்தது என்பதை விவரிக்கிறது. 1969-71 காலத்தில் வங்கத்தில் நக்சலைட்டுகள் குட்டி முதலாளித்துவ சக்திகளோடு இணைந்து கொண்டு; அமெரிக்க சிஐஏ உளவாளிகள் மற்றும் போலீஸ் ஏஜெண்டுகளின் கைக்கூலியாக மாறி இடதுசாரிகளை, குறிப்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-ன் ஊழியர்கள் மற்றும் ஆதரவாளர்கள் 650க்கும் மேற்பட்டோரை கொடூரமாக படுகொலை செய்த பயங்கரங்களையும் விவரிக்கிறது. அதுமட்டுமல்ல, வங்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிராக அரங்கேற்றப்பட்ட அப்போதைய காங்கிரஸ் ஆட்சியின் அரை பாசிச பயங்கரத்தைப் பற்றியும் அரசியல் தீர்மானம் விவரிக்கிறது. இத்தகைய தாக்குதல்களை எதிர்கொண்டுதான் வங்கத்தில் கட்சி மிகப்பிரம்மாண்டமாக எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

9வது அகில இந்திய மாநாட்டின் தீர்மானம் வங்கத்திலும் நாட்டின் பிற பகுதிகளிலும் ஐக்கிய முன்னணி தந்திரத்தை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்தும் இடது மற்றும் ஜனநாயக சக்திகளின் ஒற்றுமையை பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அடிக்கோடிட்டு காட்டுகிறது.

இந்தியாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான் மிகச்சரியான மார்க்சிய – லெனினியப் பாதையில் செல்கிறது; ஆகவேதான் அதிதீவிர இடதுசாரிகளும் வலதுசாரிகளும் சேர்ந்து நமது கட்சியைத் தாக்குகிறார்கள்; எத்தனை தாக்குதல்கள் வந்த போதிலும் நமது கட்சி நமது சொந்த வர்க்கத்திற்கும் மக்களுக்கும் தொடர்ந்து விசுவாசமாக பணியாற்றும்; நமது நாட்டின் திட்டவட்டமான சூழ்நிலைமைகளை ஆய்வு செய்து அதற்கு ஏற்ற விதத்தில் மார்க்சிய – லெனினிய கோட்பாடுகளை அமலாக்கும் என்று அத்தீர்மானம் அறைகூவல் விடுத்தது.

கட்சியின் மேற்கண்ட 9வது மாநாட்டில், கட்சித் திட்டத்தில் முக்கியத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

1968 டிசம்பரில் 25ல் கீழவெண்மணியில் 44 விவசாயக் கூலித் தொழிலாளர்கள் கொடூரமாக எரித்துப் படுகொலை செய்யப்பட்ட பயங்கரத்திற்குப் பிறகு நடைபெற்ற மாநாடு இது என்பதால் தஞ்சை தரணியிலிருந்து ஏராளமான விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மதுரை மாநாட்டுப் பேரணியில் குவிந்தார்கள். கீழவெண்மணி தியாகிகள் ஜோதி தமுக்கம் மைதானத்தில் பொதுச் செயலாளர் பி.சுந்தரய்யாவால் ஏற்றப்பட்டது.

இந்த மாநாட்டில் இந்தியாவின் தேசிய இனப்பிரச்சனை தொடர்பான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைபாடு குறித்த மிக முக்கியத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேற்கண்ட மாநாடுகளில் நிறைவேற்றப்பட்ட அரசியல் மற்றும் தீர்மானங்கள், கட்சித் திட்டம் மற்றும் திருத்தப்பட்ட திட்டம் போன்ற அனைத்தும் பல நூறு பக்கங்கள் கொண்டவை. மதுரை மாநாட்டுத் தீர்மானங்கள்தான் இன்றைய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) -யின் இயக்கு சக்திகளாக திகழ்ந்துகொண்டிருக்கின்றன என்றால் மிகையல்ல. அந்த அடிப்படையில் மதுரை மாநாடுகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கலங்கரை விளக்கங்கள்; அதன் நீட்சியாக, புதிய சவால்களை எதிர்கொள்ள வியூகங்கள் வகுக்கும் மாநாடு 2022 மார்ச் மாதம் மதுரையில் கூடுகிறது.

வரலாற்றை படிப்போம், வரலாற்றை படைப்போம் !

கே. பாலகிருஷ்ணன், மாநில செயலாளர், தமிழ்மாநிலக் குழு, சிபிஐ(எம்).

ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய நான்காவது மாநாடு கேரள மாநிலம் பாலக்காடு நகரில் 1952ஆம் ஆண்டு நடைபெற்றது. அதில் 407 பேர் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த மாநாட்டின் தகுதிகாண் குழுவின் அறிக்கையின்படி, இந்தப் பிரதிநிதிகள் அனைவரும் சிறையில் கழித்தஒட்டுமொத்த காலம் 1344 ஆண்டுகள் ஆகும். அதாவது, சராசரியாக ஒவ்வொருவரும் மூன்று ஆண்டுகளுக்கு மேல் சிறையில் கழித்துள்ளனர். இந்தப் பிரதிநிதிகள் தலைமறைவாக இருந்து செயல்பட்ட மொத்த காலம் 1021 ஆண்டுகள் ஆகும். அதாவது, சராசரியாக ஒவ்வொருவரும் இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாகத் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டுள்ளனர். இத்தகைய வீரஞ்செறிந்த வீரர்களின் துடிப்பான செயல்பாடும், தனனிகரில்லா தியாகங்களும் கொண்டதே இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம்.

இந்திய கம்யூனிச இயக்கத்தின் வரலாறு குறித்தும், அதன் தலைமையில் நடைபெற்ற எண்ணற்ற வீரஞ்செறிந்த போராட்டங்கள் குறித்தும் ஏராளமான நூல்களும்,ஆய்வு ஆவணங்களும் இதுவரை வெளிவந்துள்ளன. இந்த இயக்கத்தின் நூறாண்டு நிறைவு நிகழ்வினை ஒட்டி கட்சியின் அதிகாரபூர்வ வார இதழான பீப்பிள்ஸ் டெமாக்ரசி அவற்றின் சாரத்தை வரலாற்று வரிசைக் கிரமமாக 2019 அக்டோபர் முதல் வாரந்தோறும் வெளியிட்டு வந்தது. ‘குறுகத் தறித்த குறளாக’ வெளிவந்த இந்திய கம்யூனிச இயக்கத்தின் வரலாற்றின் தமிழ் மொழி பெயர்ப்பு தற்போது நூலாக வெளிவந்துள்ளது.

இந்தியாவில் கம்யூனிச கருத்துக்கள் பரவத் தொடங்குகையில் அன்றைய மதராஸ் மாகாணத்தில் இந்தப் பணியை முதன்முதலில் முன்கையெடுத்துச் செயல்பட்டவர் சிந்தனைச் சிற்பி தோழர் ம.சிங்காரவேலர் ஆவார். 1925ஆம் ஆண்டில் இந்திய மண்ணில் (கான்பூரில்) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உருவாக்க நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கும் பேறு பெற்ற தோழர் சிங்காரவேலர், அன்றைய மதராஸ் மாகாணத்தில் தொழிற்சங்க இயக்கம், விவசாய இயக்கம், பகுத்தறிவு இயக்கம், அறிவியல் இயக்கம் ஆகிய அனைத்திற்கும் அடித்தளம் அமைத்தவர் என்ற பெருமையும் மிக்கவர்.

சிங்காரவேலரின் வழிகாட்டுதலில் 1923ஆம் ஆண்டில் மே தினம் இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னையில் கொண்டாடப்பட்டது மட்டுமின்றி, அதே நாளில் தொழிலாளர்- விவசாயிகள் கட்சியும் உருவாக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

தோழர்கள் சிங்காரவேலர், பி. ராமமூர்த்தி, ப. ஜீவானந்தம், ஏ.எஸ்.கே. அய்யங்கார், பி. சீனிவாச ராவ் போன்ற தலைவர்கள் தமிழ் மண்ணில் கம்யூனிச கருத்துக்கள் பரவுவதற்கு முன்னெடுத்த முயற்சிகள் என்றும் நம் நினைவை விட்டு நீங்காதவை. பின்னாளில் தெலுங்கானா ஆயுதப் போராட்டத் தளபதியாகவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 1964இல் உருவான போது அதன் முதல் பொதுச் செயலாளராகவும் திகழ்ந்த தோழர் பி. சுந்தரய்யாவின் அரசியல் பயணமும் அன்றைய மதராஸ் நகரில் இருந்தே தொடங்கியது.

1920 அக்டோபர் 17ஆம் தேதி, முன்பிருந்த சோவியத் யூனியனின் தாஷ்கண்ட் நகரில் (இன்றைய உஸ்பெக்கிஸ்தான் தலைநகர்) இந்தியக் கம்யூனிஸ்டுகளின் ‘முதல் கிளை’ உருவானபோது அதில் சென்னையைச் சேர்ந்த மண்டயம் பிரதிவாதி பயங்கரம் திருமலாச்சாரியா எனும் எம்.பி.பி. ட்டி ஆச்சாரியா அவர்களும் ஓர் உறுப்பினர். அப்படி உருவான கிளை இந்தியாவில் சிறு அளவுகளில் இயங்கிக் கொண்டிருந்த கம்யூனிஸ்ட் குழுக்களை ஒருங்கிணைத்து, இந்திய நாடு தழுவிய, மையப்படுத்தப்பட்ட ஒரு கம்யூனிஸ்ட் கட்சியை கட்டியமைக்க முயற்சி எடுத்தது. அவ்வாறு அது தொடர்பு கொண்டு இணைக்க முயற்சித்த குழுக்களில் சென்னையில் இயங்கிக் கொண்டிருந்த குழுவும் ஒன்று. தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் என அறியப்படும் சிங்காரவேலர் தலைமையிலான குழுதான் அது.

சிங்காரவேலர் தலைமையிலான சென்னை குழு, எஸ். ஏ. டாங்கே தலைமையிலான பம்பாய் குழு, முசாபர் அகமது தலைமையிலான கல்கத்தா குழு ஆகியவற்றோடு பெஷாவர்,லாகூர், ஜலந்தர், கான்பூர், காசி, அலகாபாத் ஆகிய மையங்களில் இயங்கிய சிறு குழுக்கள், தனிநபர்கள் ஆகியோரை ஒன்றிணைக்க எம்.என். ராயும் அவரது தோழர்களும் முயற்சித்தனர். ஆனால் இந்த முயற்சியைத் தடுப்பதற்கு பிரிட்டிஷ் இந்திய காலனி அரசு சகலவிதமான எதிர்நடவடிக்கைகளையும் எடுத்தது. அடுத்தடுத்து சதிவழக்குகளை தொடுத்தது. கம்யூனிஸ்ட் இயக்கத்தை முளையிலேயே கிள்ளியெறிய காலனியாதிக்க அரசு எடுத்த முயற்சிகளை முறியடித்து வெடித்து வெளிவந்தது இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம்.

செம்பூவாய் மலர்ந்த இயக்கத்தை காலனிய அரசு தனது ராணுவ, போலீஸ் பூட்சுக் கால்களால் மிதித்து நசுக்கி அழிக்க முயற்சித்தது. தாஷ்கண்டில் மார்க்சிய பாலபாடம் கற்றுத் திரும்பியவர்களை வளைத்துப் பிடித்து பெஷாவர் சதி வழக்கில் சிக்கவைத்து பல ஆண்டுகாலம் சிறையில் தள்ளியது. பின் மீண்டும் கான்பூர் சதி வழக்கில் எம்.என்.ராய், சிங்காரவேலர், எஸ்.ஏ. டாங்கே, முசாபர் அகமது, செளகத் உஸ்மானி, நளினி குப்தா உள்ளிட்டோரை தண்டிக்க முயற்சித்தது. இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட ஏனைய நால்வரும் கடும் சிறைத் தண்டனைக்கு ஆளானார்கள். இதனையெல்லாம் மீறி 1925 டிசம்பர் 25 அன்று கான்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பு ரீதியாகத் தோற்றுவிக்கப்பட்டது குறித்த விவரங்கள் இந்த நூலில் விரிவாக இடம்பெற்றுள்ளன.

கட்சியின் முடிவுப்படி நாட்டின் தென்பகுதிக்கு வந்து செயல்பட்ட தோழர் எஸ்.வி. காட்டே, அமீர் ஹைதர் கான் ஆகியோர் தோழர் சுந்தரய்யாவை கட்சிக்கு கொண்டுவந்தனர். பின்னர் எஸ்.வி.காட்டேயும் சுந்தரய்யாவும் தமிழகத்தின் முதல் கிளையாக தோழர்கள் ப. ஜீவானந்தம், பி. ராமமூர்த்தி, ஏ.எஸ். கே. அய்யங்கார், பி. சீனிவாச ராவ், சி.எஸ். சுப்பிரமணியம் உள்ளிட்டோர் கொண்ட கிளை உருவாக உதவினர். இவ்வாறு இந்த 100 ஆண்டு கால வரலாற்றில் தமிழகத்தின் பொதுவுடமை இயக்க வரலாறும் ஊடுபாவாக பின்னிப் பிணைந்து விளங்குவது பெருமைக்குரியது. தொடக்கத்தில் இருந்தே சர்வதேச இயக்கத்தின் ஒரு பகுதி, நாடு தழுவிய கட்சியின் ஒரு அங்கம் என்ற உணர்வோடு, இந்த மண்ணின் தன்மைக்கு ஏற்ப, மக்களின் உடனடி பிரச்சனைகளுக்கான போராட்டத்தில் முன்னணியில் நின்று தோழர்கள் இயங்கி வந்துள்ளனர்.

ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னணிப் பங்கு என்பதோடு சுதந்திர இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த போராட்டத்தை காங்கிரஸ் கட்சிக்கு உள்ளே இருந்தும், வெளியிலும் அவர்கள் தொடர்ந்து நடத்தி வந்தனர். இந்திய கம்யூனிச இயக்கமானது ஏகாதிபத்திய எதிர்ப்பு, காலனி ஆதிக்க எதிர்ப்பு விடுதலைப் போராட்டம் என்பதோடு நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராகவும் அமைந்தது. இதனை கூரிமைப்படுத்த அகில இந்திய விவசாயிகள் சங்கம் உருவாக்கப்பட்டது. தொழிலாளர்களை அணிதிரட்ட அகில இந்திய அளவிலான தொழிற்சங்கம், எழுத்தாளர்கள், பண்பாட்டு போராளிகளை அணிதிரட்ட அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கம், இந்திய நாடக மன்றம் போன்ற அமைப்புகள் உருவாக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து மாணவர், மாதர், வாலிபர் அமைப்புகள் உருவாக்கப்பட்டதோடு, பத்திரிகைகள், பதிப்பகங்களும் உருவாகின. இவ்வாறு ஆங்கில காலனிய அரசை எதிர்த்தும், பின்பு இங்கு அமைந்த பெரு முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ கூட்டு அரசை எதிர்த்தும் வலுவான வலைபின்னல் உருவாக்கப்பட்டது.

இந்தியாவின் மூலை முடுக்கெங்கும் செயல்பட்டு வந்த நூற்பாலைகள், சணல் ஆலைகள், தோல் பதனிடும் ஆலைகள், இரும்பு உருக்காலைகள் ஆகியவற்றில் பணிபுரியும் தொழிலாளர்கள் தொடங்கி ரயில்வே, தபால்-தந்தி, போக்குவரத்து ஊழியர்கள் வரை கரத்தாலும், கருத்தாலும் உழைக்கும் மக்களை அணிதிரட்டியது கம்யூனிஸ்ட் இயக்கம். கம்யூனிஸ்டுகள் முன்னின்று நடத்திய எண்ணற்ற போராட்டங்களும், அதில் அவர்கள் செய்த தியாகங்களுமே தொழில் தகராறு சட்டம், 8 மணி நேர வேலை, போனஸ் போன்ற பல்வேறு உரிமைகள் சலுகைகளுக்கான சட்டங்களை இயற்ற வழிவகுத்தன.

அதைப் போன்றே கிராமப்புறங்களில் விவசாயிகளை, விவசாயத் தொழிலாளர்களை, பண்ணை அடிமைகளை, பழங்குடிகளை நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராக நாடெங்கும் அணிதிரட்டிப் போராடியதன் விளைவாகவே நில உச்சவரம்புச் சட்டம், இனாம் ஒழிப்புச் சட்டம், ஜமீன்தாரி ஒழிப்புச் சட்டம், ஒப்பந்தமுறை ஒழிப்புச் சட்டம், கட்டாய இலவச உழைப்பு முறை ஒழிப்புச் சட்டம் போன்ற பல்வேறு சட்டங்களை விவசாய சங்க இயக்கத்தால் நடைமுறைக்குக் கொண்டுவர முடிந்தது.

கடையரிலும் கடையராய், தீண்டத்தகாதவராய் சமூகத்தால் காலம் காலமாக ஒடுக்கப்பட்டு வந்த உழைப்பாளி மக்களை அணிதிரட்டி, சாணிப்பால், சவுக்கடியை ஒழித்துக் கட்டிய பெருமையும் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கே உரியது. அதன் வீச்சை கீழத் தஞ்சை மாவட்டத்திலும், கேரளாவில் தொடங்கி வடகிழக்கே அசாமில் சுர்மா பள்ளத்தாக்கு, திரிபுரா வரை நம்மால் இன்றைக்கும் காண முடியும்.

சாதிய பிளவுகளில் சிக்கியிருந்த தொழிலாளர்களை வர்க்க ரீதியாக அணிதிரட்டியது கம்யூனிஸ்ட் இயக்கம். கிராமப்புறங்களில் நிலவிய நிலப்பிரபுத்துவ ஒடுக்குமுறை உள்ளிட்ட அனைத்து வகையான சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் குரல் எழுப்பி, களத்தில் இறங்கி வெற்றி கண்ட ஒரே இயக்கம் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம்தான் என்பதை இந்நூலில் இடம்பெற்றுள்ள நிகழ்வுகள் நமக்குத் தெளிவாக எடுத்துக் கூறுகின்றன. தேச விடுதலை போராட்டத்தின் ஒரு பகுதியாக நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ எதிர்ப்புப் போராட்டத்தை ஒருங்கிணைத்தது இந்திய பொதுவுடைமை இயக்கம்.

நாட்டின் விடுதலைக்குப் பின்பு மொழிவாரியாக மாநிலங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்பதற்காக நாடு முழுவதிலும் போராட்டம் நடத்தி, உயிர்த்தியாகம் செய்தவர்கள் கம்யூனிஸ்டுகளே என்பதையும் இந்நூல் விரிவாக எடுத்துக் கூறுகிறது. கம்யூனிஸ்டுகள் நடத்திய போராட்டத்தின் விளைவாகவே மாநிலங்கள் சீரமைப்புக் குழு அமைக்கப்பட்டு அதன் சிபாரிசின் அடிப்படையில் சென்னை, கேரளம், கர்நாடகம் என்ற மாநிலங்கள் 1956 நவம்பர் 11இல் உருவாக்கப்பட்டன. இவ்வாறு உருவாக்கப்பட்ட சென்னை மாநிலத்திற்கு தமிழ்நாடு என பெயர்மாற்ற வேண்டும் என்ற வரைவு தீர்மானத்தை அன்றைய நாடாளுமன்றத்தில் முன்வைத்தவர் தோழர் பி. ராமமூர்த்தி ஆவார். ஒன்றுபட்ட மதராஸ் மாகாண சட்டமன்றத்தில் இடம் பெற்றிருந்த கம்யூனிஸ்டுகள் தமிழ், மலையாளம், தெலுங்கு என அவரவர் தாய்மொழியில் பேசினர். அதுவரை ஆங்கிலமே சட்டமன்ற அலுவல் மொழியாக இருந்த நிலையில் தாய்மொழிக்காக குரல் எழுப்பியவர்கள் கம்யூனிஸ்டுகள் என்பதும் வரலாறாகும்.

1947இல் பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து நம் நாடு விடுதலை பெற்றபிறகும் சில பகுதிகளில் காலனி ஆதிக்கம் நீடித்தது. பிரெஞ்சு, போர்ச்சுக்கீசிய ஆட்சிப் பகுதிகளை அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கும் போராட்டத்திற்குத் தலைமையேற்று நடத்தி இன்றைய புதுச்சேரி, கோவா பகுதிகளை காலனிஆதிக்கத்திலிருந்து விடுவித்தவர்களும் கம்யூனிஸ்டுகள்தான்.

தமிழ்நாட்டில் கம்யூனிஸ்டுகள் சந்தித்த அடக்குமுறைகள் ஏராளம். நெல்லை சதிவழக்கு தொடங்கி 16க்கும் மேற்பட்ட சதிவழக்குகள் பதிவு செய்யப்பட்டு கம்யூனிஸ்டுகள் வேட்டையாடப்பட்டனர். சேலம் சிறையில் துப்பாக்கிச் சூடு, கடலூர் சிறையில் துப்பாக்கிச் சூடு, சின்னியம்பாளையம் தியாகிகள், வீர வெண்மணி தியாகிகள் என தியாகிகள் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். கம்யூனிஸ்டுகளின் அளப்பரிய தியாகத்தாலும் இவர்களின் தலைமையின் நடத்தப்பட்ட வீரஞ்செறிந்த போராட்டங்களின் விளைவாகவும், 1952இல் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் சென்னை மாகாணத்தில் கம்யூனிஸ்டுகளின் தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது. ஆட்சிக் கட்டிலில் அமர மக்கள் அளித்த வாய்ப்பை காங்கிரஸ் கட்சியின் அரசியல் வியாபாரம் தட்டிப் பறித்து விட்டது.

அவசரநிலை பிரகடனத்தால் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை காங்கிரஸ் அரசு தட்டிப் பறித்தபோதும், சாதி மோதல்களால் பட்டியலின மக்கள் கொடுந்தாக்குதல்களுக்கு உள்ளான போதும், மதவெறி அரசியலால் சிறுபான்மை மக்கள் தாக்கப்பட்ட போதும் தயக்கமின்றி இம்மக்களுக்குக் கேடயமாக செயல்பட்டவர்கள் கம்யூனிஸ்டுகள் என்பதை தமிழகத்தின் நெடிய அரசியல் வரலாறு எடுத்துக் கூறும்.

இன்றைய தாராளமயப் பொருளாதார யுகத்தில் உழைக்கும் வர்க்கம் கடந்த நூறாண்டுகளாகப் போராடிப் பெற்ற உரிமைகள் தொடர்ச்சியாகப் பறிக்கப்பட்டு வருகின்றன. மதத்தின் பேரால் மக்களை, குறிப்பாக உழைக்கும் மக்களை, பிளவுபடுத்தி, வகுப்புவாத விஷத்தை ஊட்டி வருகின்ற, சுதந்திரப் போராட்டத்தில் எவ்வகையிலும் பங்கேற்காத ஆர்.எஸ்.எஸ். கருத்துக்களை அடியொற்றிச் செயல்பட்டு வரும் மோடி தலைமையிலான பாஜக அரசு நாட்டின் விடுதலைப் போராட்ட நாட்களில் முன்னெடுக்கப்பட்ட விழுமியங்கள், நாட்டின் விடுதலைக்குப் பின்னர் மக்களின் இடைவிடா உழைப்பினால் பேணி வளர்க்கப்பட்ட பொதுத்துறை அமைப்புகள் ஆகியவற்றை உள்நாட்டு, பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் அகோரப் பசிக்கு இரையாகப் பலி கொடுப்பதில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

கடந்த ஏழு ஆண்டுகளாக மக்களை ஏமாற்றி, அவர்களின் கவனத்தைத் திசைதிருப்பி, கையளவு பணக்காரர்களின் நலனுக்காக நாட்டின் 130 கோடி மக்களுக்கும் துரோகம் இழைத்துவரும் பாஜகவின் மோடி அரசை எதிர்த்துப் போராட வேண்டிய மிகப்பெரும் வரலாற்றுக் கடமை இந்திய உழைப்பாளி வர்க்கத்திற்கு உரியது. அந்த வர்க்கத்தின் முன்னணிப் படையாகத் திகழும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அதன் நேச சக்திகளும் ஒன்றிணைந்து இந்த மக்கள்விரோத அரசை தூக்கியெறிய தீவிரமாகச் செயல்பட வேண்டியுள்ளது.

உலகளாவிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள மக்களை வலதுசாரி சக்திகள் தங்களுக்கு சாதகமாக திரட்டும் போக்கு வலுவடைந்துள்ளது. மதவெறி, இனவெறி, நிறவெறி மற்றும் பிரிவினை கோஷங்களை முன்னிறுத்தி ஏகாதிபத்திய சக்திகள் வலதுசாரி திருப்பத்தை உருவாக்கி பல நாடுகளில் தேர்தல் வெற்றிகளை பெற்றுள்ள காலமாக இது உள்ளது. இதன் ஒரு பகுதியாக இந்தியாவிலும் வலதுசாரி சக்திகள் சாதி, மத மற்றும் பழமைவாத கருத்துக்களை முன்னிறுத்தி ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துள்ளனர். இச்சவால்களை சந்திப்பதில் இடதுசாரிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்பது உண்மையே.

எனினும், இந்தியப் பொதுவுடமை இயக்கம் அதன் 100 ஆண்டு வரலாற்றில் வளர்ச்சியையும், வீழ்ச்சிகளையும் சந்தித்தே வந்துள்ளது. அத்தகைய அனுபவங்களின் வெளிச்சத்தில் இன்றைய நிலைமைகளை மதிப்பிட்டு, நாம் மேற்கொள்ள வேண்டிய பாதையை, நடைமுறை உத்திகளை சீரமைத்து முன்னேற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடி வருகின்றது.

இந்நூலை தோழர் வீ. பா. கணேசன் எளிய நடையில் மொழிபெயர்த்துள்ளார். இவர் 1978ஆம் ஆண்டிலிருந்து கட்சியின் பல்வேறு ஆவணங்களை மொழிபெயர்த்து வந்தவர் என்பது மட்டுமின்றி, இடதுசாரி சிந்தனையை பரப்ப உதவும் வகையில் சுமார் 60க்கும் மேற்பட்ட நூல்களை ஆங்கிலத்திலிருந்தும், வங்க மொழியிலிருந்தும் தமிழுக்குக் கொண்டு வந்தவர். தமிழில் ஆற்றொழுக்கான எழுத்துத் திறனும் கொண்டவர். அவ்வகையில் “இந்திய கம்யூனிச இயக்கத்தின் ஒரு நூறாண்டுப் பயணம்” என்ற இந்த நூலையும் தெள்ளிய தமிழில் உருவாக்கித் தந்திருக்கிறார். அவருக்கு நமது இனிய தோழமை வாழ்த்துக்கள்.

இந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு என்பது வீரத்தாலும், தியாகத்தாலும் எழுதப்பட்ட ஒன்று. ஒன்றிய பாஜக அரசு மதவெறி நோக்கில் இந்திய அரசியல் வரலாற்றை திருத்தி எழுத முயலும் சூழலில் உண்மையான இந்திய வரலாற்றை மக்கள் முன் வைப்பது அவசியம். இந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றை தவிர்த்துவிட்டு இந்திய வரலாற்றை எழுத முடியாது. விடுதலை போராட்டக் காலத்தில் துவங்கி நவீன இந்தியாவை உருவாக்குவது வரை கம்யூனிஸ்டுகளின் பங்கு பாத்திரம் அளவற்றது. அந்த வகையில் இந்திய வரலாற்றின் ஒருங்கிணைந்த பகுதி கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு.

இந்தப் போராட்ட வரலாற்றை, கட்சியின் இளம் தலைமுறைக்கு உத்வேகம் தரும் வரலாற்று நிகழ்வுகளை இந்நூல் விரித்துரைக்கிறத. ”ஆகாவென்றெழுந்தது பார் யுகப் புரட்சி!” என்று நவம்பர் புரட்சி பற்றி இங்கு முரசறைந்த மகாகவி பாரதியின் நினைவு நூற்றாண்டும், இந்தியர்களின் சுயமரியாதையை தூக்கிப் பிடித்த கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி.யின் 150ஆவது பிறந்த ஆண்டும், தமிழக கம்யூனிஸ்ட் முன்னோடிகளில் ஒருவரான தோழர் சங்கரய்யாவின் 100வது பிறந்த ஆண்டும் ஒன்று கூடியுள்ள இந்தத் தருணத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நூலை பாரதி புத்தகாலயம் வெளியிடுகிறது. மார்க்சிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் மட்டுமின்றி, வர்க்கச் சுரண்டலால் புரையோடிப் போயிருக்கும் இந்தச் சமூகத்தை மாற்றி அமைக்க நினைக்கின்ற, அதற்கு முன் வருகின்ற தோழர்களும், நண்பர்களும் இதனைப் படிப்பது நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும் என துணிந்து சொல்ல முடியும். அவ்வகையில் கட்சியின் இளந்தலைமுறையினரிடையே இந்த மதிப்பிற்குரிய ஆவணத்தைக் கொண்டு செல்வது நம் அனைவரது கடமையாகும்.

இந்திய கம்யூனிச இயக்கம் ஒரு நூறாண்டுப் பயணம் ( பீப்பிள்ஸ் டெமாக்ரசி வார இதழில் வெளிவந்த தொடர்க்கட்டுரைகளின் தமிழாக்கம்) தமிழில்: வீ. பா. கணேசன்

வெளியீடு: பாரதி புத்தகாலயம், 7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை-18

பக்கங்கள்: 448 விலை: ரூ. 420

கலாச்சார அரங்கில் கம்யூனிஸ்டுகளின் கடமைகள் !

(2017 அக்டோபர் 14-16 தேதிகளில் நடைபெற்ற கட்சியின் மத்தியக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த ஆவணம் இன்றைய தருணத்தில் மிகுந்த கவனம் பெறத்தக்க ஒன்றாக அமைகிறது.  எனவே அதன் முக்கியத்துவம் கருதி இதனை தொடராக வெளியிட முடிவு செய்துள்ளோம். – ஆசிரியர் குழு)

மனித இனம் தனது சமூக வாழ்வின் அனைத்து வெளிப்பாடுகளையும் உள்ளடக்கி வெளிப்படுத்துகின்ற ஒரு களமாக கலாச்சாரம் விளங்குகிறது. இசை, நடனம், ஓவியம், சிற்பம், இலக்கியம் போன்ற பல்வேறு வடிவங்களின் வழியாக கலாபூர்வமாக வெளிப்படுத்தும் ஒன்றாக மட்டுமே அது இருப்பதில்லை. இத்தகைய கலாபூர்வமான வெளிப்பாடுகளோடு கூடவே நடத்தை, கருத்து வெளியீடு, அங்க அசைவுகள் போன்ற முழுமையான வாழ்க்கையை வெளிப்படுத்துவதாகவும் கலாச்சாரம் விளங்குகிறது. எனவே, கலாச்சார அரங்கில் நமது தலையீடுகள்  மனித விடுதலைக்கான போரில் வெற்றி பெறுவதையும், மனிதர்களால் மனிதர்கள் சுரண்டப்படுவதை முடிவுக்குக் கொண்டு வருவதையும் நோக்கமாகக் கொண்டு எல்லா நேரங்களிலும் கருத்துப் போராட்டத்தில் நாம் இணைவதையே குறிப்பிடுகிறது.

  1. சர்வதேச அளவிலும் சரி, உள்நாட்டு அளவிலும் சரி, தற்போதைய வர்க்க சக்திகளின் பலாபலன் வலதுசாரி அரசியலுக்குச் சாதகமானதாகவே நகர்ந்துள்ளது. தங்களது விடுதலைக்காகப் போராடுகின்ற மக்கள், இடதுசாரி அரசியல் மற்றும் அனைத்து வடிவங்களிலும் முற்போக்கான, ஜனநாயகரீதியான, மதசார்பற்ற சக்திகள் ஆகியோருக்கு எதிராக மிகக் கடுமையான தத்துவார்த்த தாக்குதலையும் அது கட்டவிழ்த்துவிட்டுள்ளது.

1.3 சர்வதேச அளவில், உலக முதலாளித்துவத்தின் தற்போதைய தொடரும் நெருக்கடி, புதிய   தாராளவாதத்தின் செல்லுபடியாகும் வெற்றியை முற்றிலும் மறுதலிக்கிறது. இது தீவிரமான முதலாளித்துவ சுரண்டலுக்கான வேறொரு பெயரைத் தவிர வேறில்லை. எனினும், உலகளாவிய முதலாளித்துவம், தனது அதிகபட்ச இலாபத்தைப் பாதுகாப்பதற்காகவே, இந்தப் பாதையைத் தொடர்கிறது. இரக்கமற்ற வகையிலும், கண்மூடித்தனமாகவும் மனித மற்றும் இயற்கை வளங்களை சுரண்டுவதன் மூலம் கொடூரமான ‘புராதன (மூலதன) சேகரிப்பு’ என்ற செயல்முறையை அது தீவிரப்படுத்துகிறது. இது புதிய தாராளவாதத்திற்கு எதிராக வளர்ந்து வருகின்ற, முதலாளித்துவ அமைப்பிற்கே சவால் விடுமளவிற்கு திறமை வாய்ந்த, மக்களின் அதிருப்தியை சீர்குலைக்க வடிவமைக்கப்பட்ட ஒரு கருத்தியல்-கலாச்சார கட்டமைப்பை நிறுவுவதன் அடிப்படையில்  ஒரு வலதுசாரி அரசியலை நோக்கி மாறுவதை அவசியமாக்குகிறது. இவ்வாறான கட்டமைப்பிற்கு இனம், மதம், சாதி, நிறம் அல்லது மக்களைப் பிளவுபடுத்தும் வேறு எந்தவொரு அம்சத்தின் அடிப்படையிலும் வெறுப்பினை பரப்ப வேண்டியுள்ளது. இதன் விளைவாக ஏற்படும் சகிப்பின்மை, வெறுப்பு, இனவெறி போன்றவை கலாச்சாரத்தில் பிரதிபலிக்கின்றன. இது வலதுசாரி அரசியலின் ‘கலாச்சாரத்தை’ தோற்கடிக்க நாம் அணி சேர வேண்டிய கலாச்சார முன்னணியின் கருத்துப் போர் ஆகும்.

  1. தற்போதைய ஆர் எஸ் எஸ்/பாஜக தலைமையின்கீழ் செயல்பட்டு வரும் இந்திய அரசு இந்திய அரசியலில் தெள்ளத்தெளிவானதொரு வலதுசாரி மாற்றத்தை நிறுவனமயமாக்கி வருகிறது. இவ்வகையில் புதிய தாராளவாத பொருளாதாரக் கொள்கைகளும் ஊக்கம்பெற்றதொரு வகுப்புவாத ஒரு துருவ முனைப்பும் ஒன்றிணைந்து முழுமையானதொரு தாக்குதலை மேற்கொள்கின்றன.  கருத்தியல்ரீதியாக, இந்தியாவின் செறிவுமிக்க, ஒத்திசைவுமிக்க நாகரீக வரலாற்றின் இடத்தில் இந்துப் புராணங்கள், இந்து தத்துவத்துடன் கூடிய இந்திய தத்துவார்த்த பாரம்பரியங்களை நிலைநிறுத்துவதே இதன் நோக்கமாகும். நாட்டின் விடுதலைக்காக நாட்டு மக்கள் நடத்திய வரலாற்றுச் சிறப்புமிக்க ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தின் மூலமாக உருவான நமது அரசியல் அமைப்புச் சட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ள நவீன இந்தியாவின் அடித்தளங்களை இது முற்றிலும் மறுதலிப்பதாக உள்ளது. புரட்சிகரமானதொரு மாற்றம் என்ற தங்களது இலக்கை வென்றடைவதை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும் இந்தியாவின் வர்க்கப் போராட்டங்களின் அடித்தளமாக விளங்கும் நவீன இந்திய குடியரசினை இத்தகைய செயல்பாடுகள் நிலைகுலையச் செய்ய முயற்சிக்கின்றன.

இவ்வகையில் கலாச்சார அரங்கில் நடத்தப்படும் போராட்டங்கள் நமது காலத்தின் ஸ்தூலமான நிலைமைகளில் இந்தியாவில் நடத்தப்படும் வர்க்கப் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வதில் உள்ளடங்கியதொரு பகுதியாகவே அமைகின்றன. நமது இந்த ஆய்வின் இறுதியில் நமக்குத் தேவைப்படுவதெல்லாம் சமூக மாற்றத்திற்கான புரட்சிகர ஆயுதத்தை மேலும் கூர்மைப்படுத்துவதும், வலுப்படுத்துவதுமே ஆகும். ”கொள்கையின் கடமையும், அறிவியலின் நோக்கமும் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் உண்மையான போராட்டத்திற்குச் செய்யப்படும் ஓர் உதவி என்று இங்கு வரையறுக்கப்படுவது உண்மையல்லவா?” என்று லெனின் கேட்டார். (லெனின் தொகுப்பு நூல்கள், தொகுதி 1, பக். 327-8) ‘கொள்கை’, ‘அறிவியல்’ ஆகிய இரண்டுமே கலாச்சாரத்தைப் புரிந்து கொள்வதன் ஒரு பகுதியாகவே அமைகின்றன.

1.5  மார்க்ஸ்-எங்கெல்ஸ் கூறினர்: “ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆளும் வர்க்கத்தின் கருத்துக்களே ஆட்சி செய்யும் கருத்துக்களாக இருக்கின்றன. அதாவது சமூகத்தின் பொருளாயத சக்தியை ஆளுகின்ற வர்க்கமே அதே நேரத்தில் அறிவுபூர்வமாக ஆளும் சக்தியாகவும் விளங்குகிறது. பொருள் உற்பத்திக்கான கருவிகளை தன் வசம் வைத்திருக்கும் வர்க்கமே மனதின் மூலமாக உற்பத்தி செய்வதையும் கட்டுப்படுத்துகிறது. இதன் மூலம் மனதின் மூலமாக உற்பத்தி செய்வதற்கான வழிவகை இல்லாதவர்களின் கருத்துக்களையும் அது தனது ஆளுகைக்குள் எடுத்துக் கொள்கிறது. ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்த தனிநபர்கள் மற்றவற்றோடு கூடவே உணர்வையும், அதன் வழியாக சிந்தனையையும் கொண்டவர்களாக இருக்கின்றனர். எனவே ஒரு வர்க்கமாக அவர்கள் ஆட்சி செய்வதோடு, வரலாற்று ரீதியான ஒரு காலகட்டத்தின் பரப்பையும் வீச்சையும் அவர்களே தீர்மானிக்கின்றனர். இதை அவர்கள் முழுமையான வகையில் செய்கின்றனர் என்பதும் கூட தெள்ளத் தெளிவானது. எனவே மற்ற விஷயங்களோடு கூடவே அவர்கள் சிந்தனையாளர்களாக, கருத்துக்களின் உற்பத்தியாளர்களாக ஆட்சி செய்வதோடு, தங்களது காலத்திற்கான கருத்துக்களை உற்பத்தி செய்து பரப்புவதையும் ஒழுங்குபடுத்துகின்றனர். இவ்வகையில் அவர்களது கருத்துக்களே அந்த காலகட்டத்தினுடைய ஆளும் கருத்துக்களாக இருக்கின்றன. (ஜெர்மானிய தத்துவம், மாஸ்கோ, 1976, பக். 67. இங்கு வலியுறுத்தப்படும் கருத்து தனித்துக் காண்பிக்கப்பட்டுள்ளது)

1.6  ஆளும் வர்க்கங்களினது கருத்துக்களின் இந்த மேலாதிக்கமானது அரசினால் மட்டுமே அமலாக்கப்படுவதில்லை என்பதையும் அண்டோனியோ கிராம்சி விளக்குகிறார். இந்த வகையில் அரசு என்பது கோட்டைக்கு முன்னால் உள்ள ஓர் ’அகழி’ மட்டுமே. அதற்குப் பின்னால் ‘வலுவான கோட்டையும் கொத்தளங்களும்’ உள்ளன. அதாவது ஆளும் வர்க்கங்களின் மேலாதிக்கத்திற்கு உதவுகின்ற கலாச்சார நிறுவனங்களின் வலைப்பின்னலும் மதிப்பீடுகளுமே இந்தக் கோட்டையும் கொத்தளங்களும் ஆகும்.

1.7  சமூக உறவுகளின் மிகச் சிக்கலான வலைப்பின்னல், அதனைத் தொடர்ந்த சமூக கட்டமைப்புகள் ஆகியவற்றின் மூலம் இந்த மேலாதிக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆளும் வர்க்கத்தின் கருத்துக்களின் மேலாதிக்கத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் மதிப்பீடுகளையும் கருத்தாக்கங்களையும் வடிவமைப்பதில் குடும்பம், இனக்குழு, சாதி, மதம், அவற்றின் வழிபாட்டுத் தலங்கள் ஆகியவை தொடர்ந்து பங்களித்து வருகின்றன. இத்தகையதொரு செயல்முறையில் அவர்கள் ‘(அனைவருக்கும்) பொதுவான ஒரு கலாச்சாரம்’ என்ற மாயையை உருவாக்குகின்றனர். இந்தப் ‘பொதுக் கலாச்சாரம்’ என்பது ’இயல்பான அறிவு’ என்ற பெயரில் வர்க்க மேலாதிக்கம் பெற்ற மதிப்பீடுகளை குறிப்பிட்ட வகையில் பரவச் செய்வது என்பதைத் தவிர வேறில்லை.

1.8 கலாச்சார அரங்கில் நமது தலையீடு என்பது புரட்சிகர வர்க்கங்களால் தானாகவே ஊக்குவிக்க முடியாத, அந்தக் காலப்பகுதியின் கலாச்சாரம், மொழி, உணர்வுகள், அனுபவங்கள் ஆகியவற்றின் மூலம் புரட்சிகர இயக்கத்திற்கு ஊக்கமளிப்பதாகவே இருக்க வேண்டும். உற்பத்தி உறவுகள் மட்டுமின்றி, அரசு (அரசியல் சமூகம்), மக்கள் சமூகம் ஆகியவற்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டு ‘புதியதொரு கலாச்சாரத்தை’ உருவாக்குவது புரட்சிகரமான மாற்றத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு அவசியமாகும். சமூகத்தின் மீதான மேலாதிக்கத்திற்கு எதிரான இத்தகைய உணர்வை உருவாக்குவதும் அவசியமாகும். கலாச்சார அரங்கில் உள்ள நமது செயல்பாட்டாளர்கள் நடைமுறை வாழ்க்கையில் தீவிரமாகப் பங்கேற்கும் அதே நேரத்தில் தற்போது நிலவும் சமூக உறவுகளை பலவீனப்படுத்த இத்தகைய மாற்று மேலாதிக்கத்தை உருவாக்க வேண்டும். இவையே கருத்துக்களை உருவாக்குவதற்கான அத்தியாவசிய அம்சங்களாக அமைகின்றன. மார்க்ஸ் ஒரு முறை கூறியது போல “ மக்களின் மனதைக் கவ்விப் பிடித்தவுடனேயே அவை ஒரு பொருளாயத சக்தியாக மாறிவிடுகின்றன.”  (கார்ல் மார்க்ஸ்- ப்ரெடரிக் எங்கெல்ஸ், தொகுப்பு நூல்கள், தொகுதி 3, பக். 182)

1.9 ஆளும் வர்க்கங்களின் ஒட்டுமொத்த மேலாதிக்கத்தையும் குறிக்கும் அறிகுறி என்ற வகையில் கலாச்சாரமானது இயல்பாகவே அறிவுஜீவிகளின் வளர்ச்சிக்கான களமாக அமைகிறது. இவ்வகையில் அவர்கள் உருவாக்கும் இந்த மேலாதிக்கத்திற்கான மாற்று என்பது மனித இருப்பு, மனித சாரம் ஆகியவற்றை முழுமையாக உள்வாங்கிய ஒன்றாகவும் அமைகிறது.

உணர்ச்சிமிக்க ஒப்புதல், உணர்வுகள், நடத்தை, இன்பம், எழில்மிகு உருவாக்கங்களின் பல்வேறு தோற்றங்கள் ஆகியவற்றின் மூலம் இயற்கையோடும், சக மனிதர்களோடுமான ஊடாடலின் விளைவாக ஏற்படும் மனிதர்களின் மனநிறைவு பல்வேறு வகையில் வெளிப்படுகின்றது. ‘மாற்று கலாச்சாரத்தின்’ உள்ளார்ந்த அம்சங்களை முன்வைப்பதன் மூலம் ஆளும் வர்க்கத்தின் மேலாதிக்கத்தால் உருவாக்கப்பட்ட  அறிவார்ந்த ‘நோக்கங்களை’ மறுப்பதை உள்ளடக்கியதாகவும் இந்த மனநிறைவின் பல்வேறு வகைகள் அமைகின்றன. இதன் மூலம் மேலாதிக்கத்திற்கான மாற்று கட்டமைப்புகளை கலாச்சார செயல்பாட்டாளர்கள் உருவாக்குகின்றனர்.

இத்தகைய ஒப்புதல்களின் முழுமையான தன்மை, அதாவது மனிதர்களின் மன நிறைவு குறித்த பல்வேறு வகைகளின் முழுமையான தன்மை, படைப்புச் செயலின் அனைத்து வடிவங்களிலும் வெளிப்படுகிறது. அதன் மூலமாக, புரட்சிகர இயக்கத்தின் ‘மாற்று கலாச்சாரம்’ என்று நாம் அழைக்கக் கூடிய ஒன்றை வடிவமைக்கிறது.

1.10  இத்தகைய கலாச்சாரமானது எப்போதும் இருப்பின் பொருளாயத நிலைமைகளை அடிப்படையாகக் கொண்டதாகவே இருக்கும். உற்பத்தி, நுகர்வு ஆகியவை பற்றி எழுதுகையில் மார்க்ஸ் இவ்வாறு குறிப்பிடுகிறார்: ”உற்பத்தியானது தேவைக்கு உகந்த வகையில் ஒரு பொருளை வழங்குவது மட்டுமின்றி, பொருளுக்கான தேவையையும் வழங்குகிறது. நுகர்வானது அதன் இயற்கையான செப்பமிடாத நிலை மற்றும் உடனடித் தன்மை ஆகிய தொடக்க நிலையில் இருந்து வெளிப்படும்போது – அது இந்த நிலையிலேயே நீடிக்குமானால், உற்பத்தியே அசைவற்றுப் போகுமானால் இத்தகைய நிலை ஏற்படும் – அந்தப் பொருளினால் உந்தப்பட்டதாக மாறிவிடுகிறது. நுகர்வானது ஒரு பொருளுக்கான தேவையை உணர்வதென்ற வகையில் அதன் உள்ளுணர்வால் உருவாக்கப்படுவதாகும். மற்றெந்தப் பொருளைப் போலவே கலையின் நோக்கமும் கலையை உணர்கின்ற, அதன் அழகை அனுபவிக்கின்ற மக்களை உருவாக்குவதாகும்.  இவ்வாறு உற்பத்தி என்பது மக்களுக்கான ஒரு பொருளை உருவாக்குவது மட்டுமல்ல; ஒரு பொருளுக்கான மக்களை உருவாக்கவும் செய்கிறது. இவ்வகையில் உற்பத்தியானது (1) அதற்கான பொருளை உருவாக்குவதன் மூலமும் (2) நுகர்வுத் தன்மையை தீர்மானிப்பதன் மூலமும் (3) நுகர்வோர் அதன் தேவையை உணர்ந்த வகையில் தொடக்கத்தில் நோக்கங்களாக முன்வைக்கப்பட்டு பின்பு பொருட்களாக உருவாக்குவதன் மூலமும் நுகர்வை உருவாக்குகிறது. இவ்வாறு அது நுகர்விற்கான பொருளையும், நுகர்வுத்தன்மையையும், நுகர்விற்கான நோக்கத்தையும் உருவாக்குகிறது.” (க்ரண்ட்ரைஸ், பக். 92) பொருள் உற்பத்தியைப் போன்றே அறிவுசார் உற்பத்திக்கும் இது பொருந்துவதாகும்.

1.11 ஆளும் வர்க்கக் கலாச்சார மேலாதிக்கத் தளத்தில் உருவாக்கப்படும் மிகப்பெரும் விஷயங்களிடையே, வெளிப்படையாக தோற்றமளிக்காவிடினும், இந்திய அரசியலில் இந்த வலதுசாரி மாற்றத்திற்கான, ‘இந்துத்துவா’ கலாச்சார அம்சங்களைக் கொண்ட பொருட்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன. இன்றைய இந்தியப் பின்னணியில் இது நம் கவனத்திற்கு உரியதாகும்.

1.12  நவீனமும் நவீனத் தன்மையும்: சமத்துவ உணர்வு, மற்றவர்கள் மீதான கரிசனம் ஆகியவை நவீன சமூகத்தில் கலாச்சாரத்தினை வரையறுக்கும் ஒரு பண்பாகக் கருதப்படுகிறது. எனினும் ஒரு நவீன சமூகத்தில் உண்மையில் அனைவரும் சமமானவர்களாக இருப்பதில்லை. இருந்தபோதிலும், மக்களிடையே பல்வேறு வகையான வேற்றுமைகள் நிலவிய போதிலும், சமத்துவத்திற்கான ஓர் அடிக்கோடு இருக்க வேண்டும் என்று நவீன சமூகம் கோருகிறது. இதன் மூலம் மக்கள் கண்ணியத்தோடு வாழ முடியும் என்பதோடு, தங்களது இருப்பு நிலைகளை மேம்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகளையும் உண்மையாகவே பயன்படுத்திக் கொள்ள முடியும். சமத்துவத்தின் இந்த அடித்தளத்தின்மீதுதான் இதர வேறுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் சேர்த்துக் கொள்ளப்பட முடியும். எனினும் இத்தகைய அடிப்படையான சமத்துவத்திற்காக எவ்வித சமரசமும் செய்து கொள்ள முடியாது. ஏனெனில், நவீன சமூகங்களில் இதன் அடிப்படையிலேயே குடியுரிமை என்பது கோரப்படுகிறது. நிலப்பிரபுத்துவ அமைப்பில் அரசர்களும் அவர்களுக்குக் கீழ்ப்படிந்த மக்களும் இருந்தார்களே தவிர, குடிமக்கள் இருக்கவில்லை.

‘மேற்கத்திய மயமாக்கல்’ என்பதற்குப் பதிலாக, ‘மேற்கத்திய நச்சுமயமாக்கல்’ என்றதொரு சொற்றொடரை ஈரானைச் சேர்ந்த ஓர் அறிவுஜீவி உருவாக்கினார். புகழ்பெற்ற நிறுவனங்கள் தயாரிக்கும் ஆடம்பர ஆடை, மிக முன்னேறிய கருவிகள் ஆகியவற்றை பணக்காரர்கள் மற்றவர்களுக்கு முன்பாக காட்டிக் கொண்டிருப்பதைக் குறிக்கும் வகையிலேயே அவர் அதைக் குறிப்பிட்டார். இந்தியாவைப் பொறுத்த வரையில் இதை நவீனம், நவீனத்தன்மை என்பதாக நாம் எடுத்துக் கொள்ளலாம். சமீப காலத்தில் உருவாக்கப்பட்ட பொருட்கள், கருவிகள் ஆகியவற்றை நுகர்வோருக்காக காட்சிப்படுத்துவதில் அதீத ஆர்வம் காட்டுவது நவீனத்திற்கு இணையானதாகக் கருதப்படுகிறது. ஜி-20 நாடுகள் கூட்டத்தின் உயர்ந்த மேடைகளில் அமர்ந்து உலக வல்லரசு நாடுகளின் தலைவர்களின் தோள்களை உரசுவதே ‘பொருளாதாரத்தில் உயர்ந்து வரும் நாடு’ என்ற இந்தியாவின் முத்திரையாக இது மாறியுள்ளது. இந்திய மண்ணில் எப்போதுமே காலடி எடுத்து வைத்திராத வெளிநாடுவாழ் இந்தியர்கள் உள்ளிட்டு, நமது சமூகத்தின் மிக ‘நவீனமான’ பிரிவினர் எவ்வாறு தங்களது உட்பிரிவு சாதியிலேயே மணப்பெண்/ மணமகன் வேண்டும் என்று கோரி வருகிறார்கள் என்பதையும் திருமணம் தொடர்பான விளம்பரங்களை மேலோட்டமாகப் பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம். இது நவீன நச்சுத் தன்மையின் கலாச்சாரமே தவிர நவீனம் அல்ல. வலதுசாரி அரசியலை நோக்கிய இந்த மாற்றத்தை இது மிக அழகாக மறைக்கிறது.

நவீனத்தை நோக்கிய இந்தியாவின் பயணமானது சாதி அடிப்படையிலான சமூக ஒடுக்குமுறை, ஆணாதிக்க சமூக அமைப்பு, வன்முறை கொண்டு சாதியை நிலைநிறுத்தும் காப் பஞ்சாயத்துகள், மதரீதியான சிறுபான்மையினரை சமமற்ற வகையில் நடத்துவது போன்ற கடந்தகால சமூக நிறுவனங்களின் கொடுமைகள் தொடர்ந்து நீடித்து நிற்கும் தன்மையாலேயே அவை தடுத்து நிறுத்தப்படுவதில்லை. நவீன தாராளவாத  நுகர்வுக் கலாச்சாரம், பெண்களை மனிதர்களாக மதிக்காமல் அவர்களை காட்சிப் பொருளாக, அடக்கி ஆளப்பட வேண்டியவர்களாக, சுரண்டப்பட வேண்டியவர்களாக நடத்துவது ஆகியவற்றின் மூலம் இவை நிலைநிறுத்தப்படுவதோடு, மூடி மறைக்கவும் படுகிறது. நமது தேர்தல் அமைப்பில் உள்ளார்ந்த வகையில் பொதிந்து கிடக்கும் பரவலான சந்தர்ப்பவாதத்தின் மூலமாகவும் இது மேலும் வலுப்படுத்தப்படுகிறது. தேர்தல் வெற்றிகளுக்காக நமது சமூக அமைப்பில் நிலவும் இத்தகைய அநீதியான, சமத்துவமற்ற அம்சங்கள் அனைத்தும் புத்துயிர் ஊட்டப்படுகின்றன. இவ்வாறு நவீனமான, நாகரீகமான ஆடைகளை அணிந்தபடி, மிக நவீனமான கருவிகளை கையில் ஏந்தியபடி நம்மிடையே உலாவரும் நபர்கள் நவீன ஜனநாயகத்திற்கு முற்றிலும் பொருத்தமற்றது என தூக்கியெறிய வேண்டிய இந்த நடைமுறைகள் அனைத்திலும் ஈடுபட்டு வருவது எவ்வகையிலும் முரண்பட்ட ஒன்றாகவே தோன்றுகிறது.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் உறுதியளித்துள்ளபடி சாதி, மதம் அல்லது பாலினம் என்ற எவ்வித வேறுபாடுமின்றி, அனைத்துக் குடிமக்களுக்கும் சம உரிமை என்பதாகவே நவீனத்துவம் வரையறுக்கப்படுகிறது. இவ்வகையில் புரட்சிகர இயக்கத்தின் மேலாதிக்கத்திற்கான மாற்றை நிலைநிறுத்துவதற்குத் தவிர்க்கவியலாத ஒரு கலாச்சார கூறாகவும் அது அமைகிறது.

1.13 கலாச்சார தொழில்: இந்த நவீன தாராளவாத சீர்திருத்தங்கள் செல்வம் மற்றும் சொத்துக்களின் மிகப்பெரும் செறிவோடு கூடவே ஒரு கலாச்சார தொழிலின் வளர்ச்சிக்கும் வழிவகுக்கிறது. உலகளவில், தகவல், தகவல்தொடர்பு, பொழுதுபோக்கு ஆகிய பெருநிறுவனங்களின் இணைப்பானது ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றுக்கான பொருட்களின் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் பெரும்பகுதியை கட்டுப்படுத்தி, உலகளாவிய தனித்ததொரு கலாச்சார சந்தையாக உலகத்தை மாற்றுவதற்கும் முயற்சிக்கிறது.

இத்தகையதொரு செயல்முறையை விரும்புகின்ற கலாச்சார மேலாதிக்கமானது மக்களின் ரசனையை ஒரே மாதிரியானதாக உருவாக்க வேண்டியதன் தேவையையும் வெளிப்படுத்துகிறது. இந்த ரசனையானது எந்த அளவிற்கு ஒரே மாதிரியானதாக இருக்கிறதோ, அந்த அளவிற்கு பெருமளவிலான மக்களுக்கான கலாச்சார பொருட்களை இயந்திரகதியாக மறு உற்பத்தி செய்வதற்கான தொழில்நுட்பங்களை வளர்த்தெடுப்பதும் எளிதாகிறது. மூன்றாம் உலக நாடுகள் பலவற்றிலும் கல்வியறிவின்மை பரவலாக இருந்தபோதிலும் வால்ட் டிஸ்னியின் கார்ட்டூன் சித்திரங்கள் குழந்தைகளுக்கு நன்கு அறிமுகமான ஒன்றாக இருக்கின்றன. (ஆப்ரிக்காவின் சஹாரா உட்புற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் இதை உறுதி செய்துள்ளன) வர்க்க மேலாதிக்கம் என்ற கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும்போது, நவீன தாராளவாதத்தின் கலாச்சாரமானது அன்றாட வாழ்க்கையின் உண்மையான நிலைமைகளில் இருந்து மக்களை பிரித்து வைக்க முயல்கிறது. கலாச்சாரமானது இங்கு அழகியலைக் கோருவதாக இல்லாமல், வறுமை, துயரம் ஆகிய பிரச்சனைகளில் இருந்து மக்களை திசைதிருப்புவதாக, மடைமாற்றுவதாகவே செயல்படுகிறது.

இதன் விளைவாக, தங்களது இந்த துன்பகரமான வாழ்க்கையை மாற்றியமைப்பதற்கான போராட்டத்தை மக்கள் மேற்கொள்வதற்கான உந்துதலை சீர்குலைக்கவே அது முயற்சிக்கிறது. மைக்கேல் பாரெண்டி கூறுகிறார்: “ நமது கலாச்சாரத்தின் பெரும்பகுதியானது ‘மக்கள் கலாச்சாரம்’, ‘பிரபலமான கலாச்சாரம்’ என்று மிகப் பொருத்தமாகவே இப்போது பெயரிடப்பட்டுள்ளது. மிகப்பெரும் நிறுவனங்களுக்குச் சொந்தமான, அவற்றால் நடத்தப்படுகின்ற ‘ஊடக கலாச்சார’த்தின் முக்கிய நோக்கம் என்பது செல்வத்தைப் பெருக்குவது, தங்களது உரிமையாளர்களை பாதுகாக்கும் வகையில் உலகத்தை நிலைநிறுத்துவது என்பதே ஆகும். இவர்களின் நோக்கம், பயன் மதிப்பு என்பதற்கு பதிலாக பரிமாற்ற மதிப்பாகவும், சமூக ரீதியான படைப்பூக்கம் என்பதற்கு பதிலாக சமூகக் கட்டுப்பாடு என்பதாகவே இருக்கிறது. வாழ்க்கையின் பெரும் யதார்த்தங்கள் குறித்து சிந்திப்பதில் இருந்து நம்மை திசைதிருப்பும் வகையிலேயே பெரும்பாலான வெகுஜன கலாச்சாரம் என்பது ஒழுங்கபடுத்தப்பட்டுள்ளது. உடனடி தேவையான, ஊட்டமளிக்கக் கூடிய விஷயங்களை ஒதுக்கித் தள்ளுவதாகவே பொழுதுபோக்கு கலாச்சாரத்தின் வீக்கமும் குப்பைகளும் உள்ளன. மக்களின் அடிமட்ட ரசனையை தொடர்ந்து தூண்டி விடுவதன் மூலம், பரபரப்பு மிக்க வெகுஜன கலாச்சாரமானது பொதுமக்களின் ரசனையை மேலும் கீழிறக்கி விடுகிறது.  இதன் விளைவாக, மக்களின் ரசனையானது கலாச்சார ரீதியான குப்பைகள், பெரும் பரபரப்பு, அதிர்ச்சியூட்டும்படியான, மிக கவர்ச்சிகரமான, மிகுந்த வன்முறை நிரம்பிய, உடனடியாக உணர்ச்சிகளைத் தூண்டக்கூடிய, பெரும்பாலும் மேம்போக்கான விஷயங்களையே முன்வைக்க விரும்புவதாகவும் மாறியுள்ளது.

”இத்தகைய விஷயங்கள்தான் பெரும்பாலான நேரங்களில் அதன் உண்மையான தத்துவார்த்த உள்ளடக்கமாக இருக்கின்றன. அதன் நோக்கம் அரசியல்நோக்கம் அற்றதாக இருந்தபோதிலும் கூட, பொழுதுபோக்கு கலாச்சாரமானது ( உண்மையில் அது பொழுதுபோக்குத் தொழிலே ஆகும்) அதன் தாக்கத்தில் அரசியல்தன்மை கொண்டதாகவும், கீழ்த்தரமான பாலியல் மதிப்பீடுகள், இனவெறி, நுகர்வுக் கலாச்சாரம், எதேச்சாதிகார உணர்வு கொண்ட, ராணுவ வெறிபிடித்த, ஏகாதிபத்தியத் தன்மை கொண்ட சித்திரங்களையும் மதிப்பீடுகளையுமே பிரச்சாரம் செய்கிறது.” ( மன்த்லி ரிவ்யூ, பிப்ரவரி 1999)

1.14  இவ்வகையில் நவீன தாராளவாதமும் வகுப்புவாதமும் உள்நாட்டளவில் பொது ரசனையை ஒரே மாதிரியாக மாற்ற முயல்கின்றன. கலாச்சார மேலாதிக்கத்தை வலுப்படுத்தவும், அதீதமான லாபத்தை ஈட்டவும் நவீன தாராளவாதம் செயல்படுகிறது. இதனோடு கூடவே, ஆர் எஸ் எஸ் ஸின் இலக்கான ‘இந்து ராஷ்ட்ரா’ என்ற மிக மோசமான, சகிப்புத்தன்மையற்றதொரு பாசிஸ அரசை நிறுவுவதற்கான பாதையை வகுப்புவாதம் உருவாக்கிக் கொண்டிருக்கிறது. ’ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே கலாச்சாரம்’ என்ற அதன் கோஷமானது இந்தியாவின் வளமான, செறிவான பன்முகக் கலாச்சாரத்தின் அடிப்படைகளையே  மறுதலித்து, இத்தகைய ஒருமுகப்படுத்தலின் மூலமே உண்மையான அந்தஸ்தையும் பொருளையும் அடைய முடியும். மேலும் புதிய தாராளவாதம், வகுப்புவாதம் ஆகிய இரண்டுமே அன்றாடப் பிரச்சனைகளிலிருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பவும், அதிலும் முக்கியமாக, தற்போது நிலவுகின்ற சுரண்டல்மிக்க அமைப்பிற்கு எதிரான அவர்களது போராட்டத்தை பலவீனப்படுத்தவுமே முயல்கின்றன.

1.15 இவ்வகையில் தொழிலாளி வர்க்கம் மற்றும் உழைக்கும் மக்களின் ‘மாற்று மேலாதிக்கத்தை’ நிறுவுவதற்கான போராட்டங்களுக்கு மக்கள் பிரச்சனைகளுக்கான கலாச்சார நிகழ்ச்சிநிரலை மீண்டும் கொண்டுவர வேண்டிய தேவை உள்ளது. இவற்றை நமது பார்வையிலிருந்து மறைத்து, அழிப்பதே புதிய தாராளவாதம் மற்றும் வகுப்புவாத கலாச்சாரத்தின் அடிப்படை இயல்பாக உள்ளது. இதுவே கலாச்சார அரங்கில் நமது கடமைகளின் அடிப்படையான நோக்கமாக அமையும்.

4.1. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கட்சி உறுப்பினர்கள் தீவிரமாகச் செயல்பட்டு வரும் கலாச்சாரக் குழுக்கள், அரங்கங்கள், மேடைகள், சங்கங்கள் ஆகியவை தங்களது செயல்பாடுகளில் மிக விரிவான அளவில் கலைஞர்களையும், கலாச்சார செயல்பாட்டாளர்களையும், அறிவுஜீவிகளையும் ஈடுபடுத்த வேண்டும். இத்தகைய நடவடிக்கைகளில் படைப்பூக்கமும், தனிச்சிறப்பான தன்மையும் ஈர்த்தெடுக்கப்பட வேண்டும். இதற்கான நமது அணுகுமுறை என்பது விரிவானதாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும், பாரபட்சமற்றதாகவும் இருக்க வேண்டும். குறிப்பிட்ட சில விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கூட,  ஜனநாயக ரீதியான, முற்போக்கான, மதசார்பற்ற மதிப்பீடுகளின் மீது பற்றுறுதி கொண்டுள்ள கலைஞர்கள் அல்லது அறிவுஜீவிகளுக்கு கலாச்சார செயல்பாடுகளில் பங்கேற்க நமது மேடையில் விரிவான அளவில் இடம் தர வேண்டியதும் அவசியமாகும். நம்மோடு இணைந்து செயல்படும் கலாச்சார அமைப்புகளின் தலைமைப் பொறுப்புகளில் கட்சி சார்பற்ற கலைஞர்களை உணர்வுபூர்வமாக ஊக்கப்படுத்த வேண்டும்.

4.2.  வெகுஜன, வர்க்க அமைப்புகள் ஜனநாயகபூர்வமாகவும், சுயேச்சையாகவும் செயல்படுவதன் முக்கியத்துவத்தை சால்கியா, கொல்கத்தா பிளீனங்கள் வலியுறுத்தி வந்துள்ளன. கலாச்சார அமைப்புகளின் விஷயத்தில் இந்த அம்சம் மேலும் முக்கியமான ஒன்றாக இருப்பதோடு, அவற்றுக்கு கணிசமான அளவிற்கு சுயாட்சி வழங்கப்பட வேண்டும். இந்தக் கலாச்சார அமைப்புகளை கட்சியோடு ஒட்டிக் கொண்டிருக்கும் உறுப்புகளாகப் பார்க்கலாகாது. கட்சி முழுமையும், அதைப் போன்றே  அதன் வர்க்க, வெகுஜன அமைப்புகளும் சமூக மாற்றத்திற்கான போராட்டத்தில் கலாச்சார ரீதியான தலையீட்டினை அங்கீகரிப்பதன் மூலமே, இந்த விஷயத்தில் சரியானதொரு அணுகுமுறையை உருவாக்க முடியும். கலாச்சார அமைப்புகளுக்கு உள்ளேயும் கூட சுதந்திரமான, விமர்சனபூர்வமான சிந்தனைக்கு ஊக்கம் தருவதை உறுதிப்படுத்த வேண்டும். இதை உறுதிப்படுத்துவதன் மூலம் மட்டுமே கலாச்சாரத் தளத்தில் இளமையான, புதுமையான தலைமையை நம்மால் வளர்த்தெடுக்க முடியும். அமைப்பின் அனைத்து மட்டங்களிலும் சிறுபான்மையினர் உள்ளிட்டு, தலித்கள், பழங்குடிகள் மற்றும் சமூகத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள, நலிந்த குழுக்களையும் இனங்களையும் சேர்ந்த கலைஞர்கள், பெண்கள் ஆகியோர் தீவிரமாகச் செயல்படுவதற்கு ஊக்கம் அளிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு தலைமைப் பொறுப்புகளும் வழங்கப்பட வேண்டும்.

4.3. கலாச்சாரம் என்பது கலாச்சார அமைப்புகள் மட்டுமே செயல்படுகின்ற ஒரு களம் அல்ல. கட்சி உறுப்பினர்கள் வேலை செய்யும் வெகுஜன, வர்க்க அரங்கங்களும் கலாச்சார நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் விரிவான கலாச்சார சமூகத்தை ஈடுபடுத்துவது முக்கியம். எனினும், அவர்கள் எதில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதிலும், நமது  பிரச்சாரங்களில் அவர்களை கவர்ந்திழுக்க முயற்சிக்கும்போது அவர்கள் எந்த நடவடிக்கைகளில் சிறந்தவர்கள் என்பதை அளவிடுவதிலும் நாம் கவனமாக இருக்க வேண்டும். அதேபோல், இந்த ஈடுபாடு தேர்தல் அரசியலுக்கு மட்டுமே ஆனதாகவும் மட்டுப்படுத்தப்படக்கூடாது. சாத்தியமான இடங்களில், வகுப்புவாத அல்லது சமூக விரோதக் குழுக்களால் ஆதிக்கம் செலுத்தப்படாத, தற்போது செயல்பட்டு வரும் கலாச்சார அமைப்புகளில் நமது தோழர்கள் நுழைந்து பணியாற்ற வேண்டும். இது அவர்களுக்கு ஒரு முற்போக்கான, மதச்சார்பற்ற, ஜனநாயக பூர்வமான திசைவழியை  காட்ட முயற்சிப்பதாக அமையும்.

4.4. ஒரு கலைஞரின் அகநிலைப்பட்ட, தனிப்பட்ட பார்வைகள் குறித்த நமது எதிர்வினையை அந்தக் கலைஞரது படைப்பு குறித்த புறநிலை மதிப்பீட்டில் இருந்து நாம் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். நமது செயல்பாட்டாளர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்வதன் மூலமும், சமூகத்தில் நடக்கும் பல்வேறு வகையான கலாச்சார முயற்சிகளில் ஈடுபடுவதன் மூலமும் மட்டுமே, நமது இலக்கை நோக்கி நகர்வதற்கு எது உதவக்கூடும் என்பதை வரையறுக்கவும், மதிப்பீடு செய்யவும் முடியும். கருத்து சுதந்திரம், முற்போக்கான முயற்சிகளை அனுமதிக்கும் ஆக்கபூர்வமான மற்றும் தகவல் தொடர்பு தளங்களை நாம் இப்போது எங்கே காண முடியும்? இலாப நோக்கத்தினால் அல்லது சமூக/மத பழமைவாதத்தினால் இவை எங்கே முழுமையாக உள்வாங்கப்பட்டு சிதைக்கப்பட்டன? நமது போராட்டங்களை வலுப்படுத்தும் ஆதாரங்களுக்கான இந்தத் தேடலில் கடுமையான முன்முடிபுகளால் நாம் கட்டுண்டு விடமுடியாது. எனினும் நாம் ஏற்கனவே அடையாளம் கண்டுள்ள ஆதாரங்களின் அடிப்படையில்தான் இந்தச் சோதனை அமைய வேண்டும்.

4.5. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மதச்சார்பற்ற, ஜனநாயக பூர்வமான கலாச்சார அமைப்புகள் பல  உள்ளன. ஒரு மாநிலத்திற்கு உள்ளேயும் கூட, நம்மிடம் பல முற்போக்கான, மதச்சார்பற்ற கலாச்சார அமைப்புகள், தனிநபர்கள் ஆகியோர் பல்வேறு கலை வடிவங்களில் செயல்பட்டு வருகின்றனர். அதில் நமது கட்சி உறுப்பினர்களும் கூட தீவிரமாகச் செயல்பட்டு வரலாம். நம்மால் முடிந்தவரை இவற்றோடு மிகப்பெரிய ஒற்றுமை, ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றை உருவாக்க நாம் முயற்சி செய்ய வேண்டும். இந்த நோக்கத்திற்காக, கலாச்சார மாநாடுகள் அல்லது கூட்டங்கள், திருவிழாக்கள், பட்டறைகள், கருத்தரங்குகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்வதற்கான சாத்தியக் கூறுகளையும் நாம் ஆராய வேண்டும். மாநிலங்களுக்கு இடையேயான சமூக ஊடகக் குழுக்கள் இருப்பதற்கான சாத்தியத்தையும் நாம் ஆராய வேண்டும். உடனடி பிரச்சினைகளுக்கும், குறிப்பாக தணிக்கை மற்றும் கருத்து சுதந்திரத்தின் மீதான தாக்குதல்களின் போது விரைவாகவும், ஒருங்கிணைந்த முறையிலும் பதில் நடவடிக்கைகளை மேற்கொள்ள இது உதவும்.

5.0 மேலே விவரிக்கப்பட்டுள்ள ஒட்டுமொத்த அணுகுமுறையோடு கூடவே, கலாச்சார அரங்கில் நம் முன்னே உள்ள முக்கிய பணிகளாவன:

5.1. தொடர்ச்சியான சுய ஆய்வு மற்றும் சுயவிமர்சனம் மூலம் நமது நடத்தை, தினசரி நடைமுறைகளில் ஒரு தரத்தை முன்னிறுத்துவது என்பது, கிராமப்புற, நகர்ப்புற இந்தியாவின் உழைக்கும் மக்களை உள்ளடக்கிய நமது அடிப்படை வர்க்கத்தினருடன் தகவல் தொடர்பு கொள்ளவும் அவர்களின் நம்பிக்கையை வெல்லவும் உதவும்.

5.2 வெறுமனே அது ஒரு ‘கலை’ என்பதாக அல்லாமல், மாறாக மக்களின் ‘வாழ்ந்த வாழ்க்கை’ என்ற வகையில் கலாச்சாரத் துறையினை அதன் முழுமைத் தன்மையோடு காண வேண்டும். நமது பேச்சு முறை, நம் உணவின் சுவைகள், நம் ஆடைகளின் நிறங்கள் மற்றும் அவை வெட்டப்படும் முறை மற்றும் வேறு பல விஷயங்களும் மக்களின் சாதாரண, அன்றாட வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி வடிவமைந்ததாக இந்தக் கலாச்சார காரணிகள் அமைகின்றன. இந்த காரணத்தினாலேதான், கலாச்சார ரீதியான தலையீடுகளில் இருந்து நம் கவனத்தை மாற்ற வேண்டும். அதாவது, ஒரு கருத்தினை வெளிப்படுத்தவும், கலாச்சாரத்தில் தலையீடுகளை மேற்கொள்ளவும், இசைக்கருவியைப் பயன்படுத்தும் ஒரு கலைஞர் கலையை ‘பயன்’படுத்துகிறார். அதாவது, அன்றாட வாழ்வில், நடைமுறையில் முற்போக்கான, மதச்சார்பற்ற, ஜனநாயக கருத்துக்களை  வடிவமைக்க வேண்டும். அன்றாட வாழ்க்கையிலும் சமூகத்திலும் அமைப்புகளிலும் குடும்பத்திலும் அவை எவ்வாறு ஒழுங்கமைக்கப்படுகிறது என்பதன் மூலமாகவும் இவை வெளிப்படுகின்றன.

5.3. மதச்சார்பற்ற ஜனநாயக கலாச்சார மரபுகளுக்கான சமூக களத்தை நாம் மீட்டெடுக்க வேண்டுமெனில், நம் நாட்டிலும், உலகின் பிற பகுதிகளிலும் ஆதிக்கம் செலுத்தும்  மேலாதிக்கங்களை எதிர்த்த முற்போக்கு சிந்தனை போக்குகள், காலனியத்திற்கு எதிரான சிந்தனை மரபுகள், இவற்றோடு கூடவே மக்களுக்கு உயிரோட்டமான வகையில் செய்திகளை எடுத்துச் செல்லும் செவ்வியல், நவீன, நாட்டுப்புற கலை வடிவங்களை உருவாக்குவோரைப் பற்றியும், மார்க்சிய சிந்தனையின் வரலாறு மற்றும் சோஷலிசத்தை நோக்கி முன்னேறும் புரட்சிகர இயக்கங்கள் ஆகியவை பற்றியும் அறிந்தவர்களாகவும் நாம் இருக்க வேண்டும். கூடவே, இந்த அறிவை பயன்படுத்திய வகையில் கலாச்சாரத்தில் ஓர் இறை தத்துவம், எதேச்சாதிகாரப் போக்கு, குழுவாதப் போக்கு ஆகியவற்றையும் எதிர்த்துப் போராட வேண்டும்.

5.4. கலாச்சார தேசியம் என்ற பெயரிலோ அல்லது ‘மத ரீதியான உணர்வு’ என்ற பெயரிலோ அல்லது ‘சாதிய உயர்தன்மை’ என்ற பெயரிலோ வகுப்புவாத சக்திகள் முன்வைக்கின்ற  சகிப்புத்தன்மையற்ற அனைத்து வடிவங்களையும் எதிர்த்துப் போராட வேண்டும். மக்களின் கலாச்சார நடைமுறைகளில் மொழிரீதியான, இனரீதியான, பிராந்திய அடிப்படையிலான  பன்முகத்தன்மையை அங்கீகரித்து ஊக்குவிக்க வேண்டும். இத்தகைய மாறுபட்ட சிந்தனையை கடைப்பிடிப்பவர்களிடையே நல்ல தொடர்புகளையும் கருத்துப் பரிமாற்றங்களையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இத்தகைய பன்முகத் தன்மை கொண்ட பாரம்பரியங்களை பிரதிபலிக்கும் சிந்தனையாளர்கள், கலைஞர்கள் ஆகியோர் மீதான தாக்குதல்கள் எழும்போது அவர்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டும்.

5.5. பழமைவாதம், மதவெறி, மூடநம்பிக்கை, பகுத்தறிவின்மை ஆகியவற்றை எதிர்ப்பது; பொதுக் கல்வி முறை, அறிவியல், அறிவு சார்ந்த, கலாச்சார நிறுவனங்களின் சுயாட்சி ஆகியவற்றைப் பாதுகாப்பது; உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையங்கள் மீதான தாக்குதல்களை எதிர்ப்பது; நமது வரலாறு மற்றும் சுதந்திரப் போராட்டத்தின் பகுத்தறிவு, ஒத்திசைவு மற்றும் கலாச்சார மறுமலர்ச்சியின் மதச்சார்பற்ற மரபுகளை பாதுகாப்பது.

5.6. உணர்வுபூர்வமான உதவி,   ஆழமான மக்களின் ஆழமான நம்பிக்கைக்கான தேவையை, பல்வேறு மதங்களைச் சேர்ந்த  ‘மத’ நிறுவனங்களும் ஆன்மீகத் தலைவர்களும்  தங்களது பெரும் வணிக நலன்களுக்காக, பகுத்தறிவின்மை, மூடநம்பிக்கை பிரச்சாரம் போன்றவற்றைப் பயன்படுத்துவதோடு, அவர்களைப் பின்பற்றுபவர்களிடையே பிரிவினைவாத உணர்வு,  வகுப்புவாதம் ஆகியவற்றையும் விதைக்கின்றனர். இந்நிலையில் மக்களின் துன்பங்களுக்குக் காரணமாக உள்ள பரந்துபட்ட சுரண்டலுக்கு எதிராகவும் கிளர்ந்தெழுவது.

5.7. பல வழிபாட்டுத் தலங்களிலும் வகுப்புவாத, தீவிரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. அங்கு நடைபெறும் திருவிழா செயல்பாடுகள் மீது மக்களை தவறாக வழிநடத்தும் நோக்கமுடைய வகுப்புவாத பிளவுப் பிரச்சாரம் ஆதிக்கம் செலுத்துகிறது. ஒவ்வொரு இடத்திலும் நிலவும் ஸ்தூலமான சூழ்நிலையைப் பொறுத்து, நமது செயல்பாட்டாளர்களின் தலையீட்டின் மூலம் சாத்தியமான அளவில் இதைத் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

5.8. பொருளாதார ரீதியிலான சுரண்டல் மட்டுமின்றி, சாதி, பாலினம் போன்றவற்றின் அடிப்படையிலான சமூகச் சுரண்டலுக்கும் இடமில்லாத, மனித சமுதாயத்தின் சமத்துவமான எதிர்காலத்தை எதிர்நோக்கிய, ஆக்கப்பூர்வமான முயற்சிகளை ஆதரித்து நிற்பது.

5.9. உழைக்கும் மக்களின் பாரம்பரிய கலை வடிவங்களை ஆதரித்து நிற்பது; (பொம்மலாட்டக்காரர்கள், சுருள் சீலைகளில் கதைகளை ஓவியமாக வழங்கும் ஓவிய கலைஞர்கள், கிராமப்புற,  நகர்ப்புற தெரு கலைஞர்கள், கிராமப்புற உடற்பயிற்சி வல்லுநர்கள் போன்ற) இந்த கலை வடிவங்களின் கண்ணியம் மற்றும் அவற்றின் மதிப்பை மக்கள் சமூகம் அங்கீகரிப்பதற்காக உழைப்பது; இவற்றில் பல கலை வடிவங்களும், மக்களின் சொந்த படைப்பாற்றலை உள்ளடக்கியதாக இருப்பதோடு, அவர்களுக்கு வாழ்வாதாரத்தையும் வழங்குகின்றன. இந்தக் கலைகள் இப்போது பெரிய மத நிறுவனங்கள்/பெரிய வணிக நிறுவனங்களால் முழுமையாக உள்வாங்கப்பட்டு வருகின்றன; அல்லது அழிக்கப்படுகின்றன. இதனால் அவர்களின் உண்மையான பயிற்சியாளர்கள், புரவலர்கள், பயனாளிகள், நுகர்வோர் ஆகிய உழைக்கும் மக்கள் கலாச்சார இடைவெளியை எதிர்கொள்கின்றனர்; இந்த கலைஞர்கள் தங்கள் படைப்பாற்றலுடன் மக்களுக்கு சேவை செய்யும் வகையில் ஊக்குவிக்கப்பட வேண்டும்.

5.10. (பொருளாதார, அரசியல், சாதி அடிப்படையிலான, பாலின அடிப்படையிலான, சிறுபான்மையினருக்கு எதிரானவை போன்ற) குறிப்பான அடக்குமுறை அல்லது அநீதியான  நிகழ்வுகளுக்கு எதிராக (அறிவுஜீவிகள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள், சமூக ஊடக பயனர்கள் போன்ற) கலாச்சார சக்திகளை அணிதிரட்டுவது. இதன் மூலம் அவர்கள் மக்களையும் சமுதாயத்தையும் பாதுகாப்பதில் தங்கள் சிறப்புத் திறன்களை புதுமையான, ஆக்கப்பூர்வமான வழிகளில் பயன்படுத்தலாம்.

5.11. கட்டற்ற நுகர்ச்சி, தனிப்பட்ட மகிழ்ச்சியை மட்டுமே விரும்புவதைத் தூண்டி கலாச்சார மதிப்புகளை பண்டமாக்குவதை எதிர்ப்பது; பண்டமாக்கல் என்பது இன்று அனைத்து கலாச்சார தயாரிப்புகளும் சந்தையின் மூலம் மத்தியஸ்தம் செய்யப்பட வேண்டும் என்பது மட்டுமல்லாமல், பெருநிறுவன மூலதனமானது அதன் பார்வையில் எந்த சந்தை மதிப்பையும்,  அந்தப் பொருட்களை உற்பத்தி செய்பவர்களின், அதாவது, கலைஞர்கள், ஆசிரியர்கள், நிகழ்த்துக் கலைஞர்கள் ஆகியோரின், படைப்பாற்றலின் மீதும், அது போன்ற அனைத்து பொருட்களின் மீதும், தனது முழுமையான உரிமையை நிலைநாட்ட முயல்கிறது. பெருநிறுவனத்தால் நடத்தப்படும் உலகளாவிய கலாச்சார சந்தையின் விருப்பத்திற்கு ஏற்ப அடிமைத்தனத்துடன் அடிபணியச் செய்கிறது. இது கலைஞர்கள் மற்றும் கலாச்சாரத்தின் உண்மையான களஞ்சியங்களான மக்களின் முக்கிய மன திறன்களை அழிக்கிறது; அனைத்து வகையிலும் இதை எதிர்க்க வேண்டும்.

5.12. தொழில்நுட்ப ரீதியாக முன்னேறிய அச்சு மற்றும் ஒலி-ஒளி ஊடக உலகத்திற்குள்ளான இடத்தை மக்களுக்காக மீட்டெடுக்கப் போராடுவது; மின்னணு ஊடகத்தின் மீது பெருநிறுவன மூலதனத்தின் பிடிப்பு வலுவாக இருக்கும் நிலையில், இத்தகைய தொழில்நுட்ப முன்னேற்றத்தின் பயன்கள் மக்களுக்கு மறுதலிக்கப்படுகின்றன. இதன் விளைவாக அற்பமான, பொருளற்ற செய்திகள், உண்மை நிகழ்வுகள் என்ற பெயரால் நடைபெறும் கேவலமான, மேம்போக்கான நிகழ்ச்சிகள், பிற்போக்குத்தனமான, ஆணாதிக்க, பெண் வெறுப்பு மிக்க காட்சித் தொடர்கள் மற்றும் இதுபோன்ற மின்னணு பொருட்கள் கட்டற்ற விளம்பரங்களால் பின்னிப் பிணைந்து மக்களின் மீது மேலாதிக்கம் செலுத்த வழியேற்படுகிறது. இணையவழி வெளியீடுகள், சமூக ஊடகங்கள், ஆவணப்படங்கள், மக்கள் வானொலி போன்ற, மக்களுக்குப் பொருத்தமானதாக இருக்கும் சில இடங்களை மீட்டெடுப்பது இத்தகைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தக்கூடிய சில வழிகள் ஆகும்; இந்தத் துறைகளில் திறமையுள்ளவர்கள் இந்த வழியில் திட்டமிட வேண்டும் என்பதோடு அவர்கள் முறையாக ஊக்குவிக்கப்படவும் வேண்டும்.

5.13. குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்களைப் பாதுகாக்க முன் நிற்க வேண்டும்.  இதன் மூலம் தனித்திறன்மிக்க படைப்பு திறன்களை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புகளை அவர்கள் பெற முடியும். இக்காலத்தின் இரக்கமற்ற போட்டி, நுகர்வோர் மதிப்புகள் அல்லது வெறுப்புக் கலாச்சாரம் மற்றும் பரஸ்பர அழிவு உணர்வு ஆகியவற்றால் அவர்களின் விருப்பங்கள் விழுங்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அவர்களின் கல்வி உரிமைகள் மற்றும் மிகவும் மேம்பட்ட அறிவுக்கான உரிமைகள் வலியுறுத்தப்பட வேண்டும்; கல்வி நிறுவனங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் நமது சிறப்பான அறிவுத் திறன்,  ஆக்கப்பூர்வமான மரபுகள் ஆகியவற்றுடன் அவர்கள் தொடர்பு கொள்ள பல வகையிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

5.14. பல்வேறு  வகையான தீவிரவாத, மதவெறி,  பயங்கரவாத அமைப்புகளும் சித்தாந்தங்களும் வளர்ந்து வருகின்ற, வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்ற ஓர் உலகில் நாம் வாழ்கிறோம். உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் அதிக அளவிலான சர்வாதிகாரத்தை நோக்கிச் செல்ல இது தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. சாத்தியமான இடங்களில், சிறப்பு அதிகாரங்களும் அரசால் கைக்கொள்ளப்படுகின்றன. பல நேரங்களில், தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் இத்தகைய நடவடிக்கைகளை ஆதரிக்குமாறு பொது மக்கள் தூண்டப்படுகிறார்கள்; அல்லது வற்புறுத்தப்படுகிறார்கள். எங்கெல்லாம் எதேச்சாதிகார அரசால்  மீறப்படுகிறதோ அங்கெல்லாம் மக்கள் உரிமைகள், ஜனநாயக மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாக்க நாம் முன்நிற்கிறோம்; பொதுமக்களுக்கு எதிராக இராணுவம், துணை இராணுவப் படைகளைப் பயன்படுத்துவதை நாம் எதிர்க்கிறோம்; மாறுபட்ட கருத்துக்களை ஒடுக்குவதற்கு  தடையற்ற அதிகாரத்தையும் சுதந்திரத்தையும் அரசுக்கு வழங்கும் கொடுங்கோன்மை சட்டங்களையும் நாம் எதிர்க்கிறோம்.

5.15. மேற்கண்ட கடமைகளை நிறைவேற்ற, ஒவ்வொரு மட்டத்திலும் கலாச்சார முன்னணியில் உள்ள பணிகளில் கட்சி மேலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்; குறிப்பிட்ட கால வரம்பிற்குள் இலக்குகள் எட்டப்படுவதற்கு உகந்த வகையில் ஒவ்வொரு மட்டத்திலும் தகுதியான ஊழியர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

5.16. பாடல் குழுக்கள், வீதி நாடகக் குழுக்கள் போன்ற கலாச்சாரப் பிரிவுகளை உருவாக்க வெகுஜன அமைப்புகள், ஆசிரியர்கள், சேவை நிறுவனங்கள், திட்டத் தொழிலாளர்கள் போன்ற இதர வகைப்பட்ட ஊழியர்களின் அமைப்புகள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்பதோடு, அவை முறையாக வழிநடத்தப்பட வேண்டும். கலாச்சார அரங்கின் பணியை கைவிட்டு விடக்கூடாது என்பதோடு, அந்தப் பணி கலாச்சார அரங்கிலுள்ள ஆர்வலர்களுக்கு மட்டுமேயான ஒரு பணி என்பதாகப் பிரித்துப் பார்க்கவும் கூடாது.

5.17. கலாச்சார, கல்வி மற்றும் விளையாட்டு நடவடிக்கைகளின் மூலம் ஜனநாயக, மதச்சார்பற்ற, முற்போக்கு எண்ணங்களை வளர்த்தெடுக்க அக்கம்பக்கத்தில் உள்ள சிறுவர், சிறுமிகளுக்கு ‘பாலவேதி’ அல்லது ‘பாலர் சங்கம்’ போன்ற அமைப்புகளை உருவாக்க உதவ வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகள் ஏற்கனவே வெற்றிகரமாக செயல்படும் இடங்களில், அவற்றை மேலும் விரிவுபடுத்தவும் ஒருங்கிணைக்கவும் உதவ வேண்டும்.

5.18. இத்தகைய கலாச்சார அரங்க நடவடிக்கைகள் எதுவும் இல்லாத மாநிலங்களில், இந்தப் போதாமையை சரிசெய்யும் வகையில் திட்டமிட்ட நடவடிக்கைகள் உடனடியாகத் தொடங்கப்பட வேண்டும்.

5.19. (அ) பல்வேறு மட்டங்களிலும் செயல்பாடுகளை மேலும் தீவிரப்படுத்தவும், (ஆ) எதிர்கால திட்டங்கள், படைப்பூக்க ரீதியான தலையீடுகள் ஆகியவற்றுக்கு பொதுவான வழிகாட்டுதலை வழங்கவும், படைப்புத் திறன் மிக்க கலை-கலாச்சார செயல்பாட்டாளர்கள் பங்கேற்கும் வகையில் குறிப்பிட்ட கால இடைவெளியில் கலாச்சார மாநாடுகள் நடத்தப்பட வேண்டும்.

5.20. இந்த அரங்கின் முன்னேயுள்ள கடமைகள் குறித்த இந்த ஆவணத்தில் கூறப்பட்டவை அனைத்தும் குறிப்பிட்ட கால வரம்பில் பல்வேறு மட்டங்களிலும் எந்த அளவிற்கு அமலாக்கப்பட்டுள்ளது என்பதை ஆய்வு செய்யும் வகையில் தொடர்ந்து முறையாகப் பரிசீலனை மேற்கொள்ளப்பட வேண்டும்.

தமிழில்: வீ. பா. கணேசன்

தேர்தல்களும், மார்க்சியவாதிகளும் …

பிரகாஷ் காரத்

(சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தல்களை ஒட்டி, மார்க்சிஸ்ட் இதழில் ஆசிரியர் குழு முன்வைத்த கேள்விகளுக்கு, கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் பதில்கள்)

  • இன்றைய காலகட்டத்தில் தேர்தல்களில் பணபலம் முக்கிய பங்கினை ஆற்றி வருகிறது.  இந்நிலையில் தேர்தல்களில் தங்களது இருப்பை காட்டுவது என்பது இடதுசாரிகளுக்கு மிகுந்த சிரமமான ஒன்றாக ஆகிவிடுகிறது.  இந்நிலையை எப்படிக் கையாள்வது? தேர்தல் பணிகளில் ஈடுபடுவதற்கு பணம் கொடுப்பது என்ற நடைமுறைக்கு அரசியல் கட்சிகளின் தொண்டர்கள் பழகிவிட்டனர்.  இதன் காரணமாக பணம் கொடுக்காமல் அவர்களை தேர்தல் வேலைகளில் நடைமுறையில் ஈடுபடுத்த முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.  இந்நிலையை எவ்வாறு கையாள்வது?

முதலாளித்துவ சமூக அமைப்பில் தேர்தல்களில் எப்போதும் பணம் பெரும் பங்கை ஆற்றிடும்.  எனவேதான், மக்களின் அரசியல் புரிதலை உயர்த்துவது அவசியமாகிறது.  தேர்தல்களில் பணத்தை பயன்படுத்துவது தொடர்பாக விதிமுறைகளும், கட்டுப்பாடுகளும் உள்ளன என்பதை நாம் வற்புறுத்த வேண்டும்.  சில வளர்ந்த முதலாளித்துவ நாடுகளில் இத்தகைய கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன.  முழுமையாக இல்லை என்றாலும் கூட அவை ஓரளவிற்கு பலனளிக்கின்றன.  பூர்ஷ்வா கட்சிகளின், குறிப்பாக ஆளும் கட்சிகளின் பணபலத்தை எதிர்கொள்வது என்பது இடதுசாரிக் கட்சிகளைப் பொறுத்தவரை மிகக் கடினமான காரியமாகும்.  வலுவான அரசியல் பிரச்சாரத்தை மக்களிடையே நடத்துவதற்கான வழிமுறைகளை நாம் கண்டறிந்திட வேண்டும்.  இத்தகைய பிரச்சாரங்களுக்கு நிதியாதாரம் தேவையாகும்.  கம்யூனிஸ்ட் கட்சியானது தனது நிதியாதாரத்தை மக்களிடமிருந்தே திரட்டிட வேண்டும்.  இவ்வாறு திரட்டிய நிதியைக் கொண்டே நம்மால் பிரச்சாரத்தை நடத்த இயலும்.  இதைத் தவிர வேறு வழி ஒன்றும் இல்லை.  பூர்ஷ்வா கட்சிகளைப் பொறுத்தவரை, அவர்கள் பிரச்சாரங்களுக்கு பணம் கொடுத்து மக்களை/ஊழியர்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.  இப்படி கம்யூனிஸ்ட் கட்சியால் செய்யமுடியாது,  அது அப்படி செய்யவும் செய்யாது. மக்களிடையே அரசியல் வேலைகளில் ஈடுபடுவது என்ற கருத்துக்கு எதிரானது என்பதால் கம்யூனிஸ்ட் கட்சி இத்தகைய செயல்களில் ஈடுபடாது.  எனவே, தேர்தல் நேரங்களில் மக்களிடையே செயல்படுவதை நிறைவேற்ற வேண்டிய அரசியல் கடமையாக எண்ணி அரசியல் அர்ப்பணிப்போடும், உணர்வுமட்டத்தோடும் செயல்படும் தொண்டர்களைக் கொண்டிருக்க வேண்டும்.  பிரதானமான அரசியல் பிரச்சனைகளை எழுப்பி, அதன் மூலம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த நம்மால் முடிகிறபோதே இது சாத்தியமாகும்.  அப்போதுதான் கட்சிகளோ அல்லது தொண்டர்களோ பணம் கொடுத்தால்தான் வேலை செய்வது என்றில்லாமல் தாமாக முன் வந்து வேலை செய்யும் கலாச்சாரம் உருவாகும். 

தமிழகத்தில் இன்றைக்கு இக்கேள்வி முன்னுக்கு வந்திருக்கிறது என்றால் அதற்குக் காரணம், இன்றைக்கு நாட்டில் வேறெந்த பகுதியிலும் இல்லாத அளவிற்கு பணபலம் இங்கு பயன்படுத்தப்படுகிறது.  ஆந்திராவிலும், வேறு சில இடங்களிலும் மட்டும்தான் இவ்வாறு பணபலம் பயன்படுத்தப்படுகிறது.  வாக்காளர்களுக்கே பணம் பட்டுவாடா செய்யப்படுவது என்பது ஊழலின் சில்லறை வடிவமாகும். சமீபத்திய சட்டமன்ற தேர்தல்களின்போது சில பிரதான கட்சிகள் தங்களது பொதுக்கூட்டங்களிலும், ஊர்வலங்களிலும் மக்கள் கலந்து கொள்ள எவ்வாறு பணத்தை மக்களுக்கு விநியோகித்தது என்று பார்த்தோம்.  எனவே, இத்தகைய பிரச்சனையை இடதுசாரி கட்சிகள் தமிழகத்தில் சந்தித்து வருகின்றன.  தன்னலம் பாராது மக்களிடையே செயல்படுவதோடு, அரசியல் பிரச்சனைகளை எழுப்பி, அவற்றின்பால் மக்களை ஈர்த்து அல்லது இத்தகைய அரசியல் பிரச்சனைகளில் மக்களை ஈடுபடுத்துவதன் மூலம் தேர்தல்களின் போது இலக்கை உயர்த்துவதன் மூலம் மட்டுமே இது சாத்தியம் என நான் கருதுகிறேன். 

மேலும், பணபலத்தைக் கொண்டு வரம்பிற்கு உட்பட்ட செல்வாக்கினையே  மக்கள் மீது செலுத்த இயலும்.  ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக பல கோடிக்கணக்கான ரூபாய்களை சட்டமன்ற தேர்தல்களில் செலவு செய்தது.  இருந்தபோதும், அவர்கள் தேர்தலில் தோல்வியடைந்துள்ளனர்.

  • வழக்கமான பிரச்சார வடிவங்கள் மூலம் தொகுதியில் வாக்காளர்களை சென்றடைவது சிரமமாகிறது.  நவீன வடிவங்களில் பிரச்சாரங்களை மேற்கொள்ள ஏராளமான வளங்கள் தேவைப்படுகின்றன.  இத்தகைய மாற்றங்களுக்கு இடதுசாரிகள் ஈடுகொடுக்க வேண்டியுள்ளது.  இதனை எவ்வாறு செயல்படுத்துவது?

ஆம். இன்றைய தகவல் தொழில்நுட்ப, இணைய தள, சமூக ஊடக யுகத்தில் வழக்கமான வடிவங்களிலான பிரச்சாரங்கள் போதுமானவையல்ல.  எனவே, நாம் நம்மை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.  மேலும், சமூக ஊடகங்களை பயனுள்ள வகையில் உபயோகித்திட வேண்டும்.  தொழில்நுட்பத்தையும், தகவல் தொழில்நுட்பத்தையும் பெரிய அளவிற்கு பயன்படுத்திட வேண்டும்.  இவற்றை ஜனநாயக ரீதியாக, கூட்டாக செயல்படுத்தினோமேயானால்,  அதிக அளவில் பணத்தை கொடுத்து தனியார் நிறுவனங்களைச் சார்ந்திருந்து உங்களது பிரச்சாரத்தை நடத்திட வேண்டியிருக்காது.  இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தக் கூடிய, மக்களிடையே பிரச்சாரத்திற்கு பயன்படுத்தக் கூடிய வகையில் புதுமையான உள்ளடக்கத்தை உருவாக்கிடும் குழுக்களை நாம் உருவாக்கிட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் பிரச்சாரங்களுக்கு ஊழல் பணத்தையும், வாக்காளர்களுக்கு பணத்தை அளிக்க வேண்டியும் இருக்காது.

  • தேர்தல் ஆணையம் அதிகாரம் இல்லாது இருக்கிறது.  அவர்கள் மேற்கொள்ளும் ஒரு சில நடவடிக்கைகளுமே கூட, பிரச்சாரம் செய்யும் இடங்கள், பிரச்சார வடிவங்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகளையே ஏற்படுத்துகின்றன.  அடிப்படை பிரச்சனைகளுக்கு உரிய தீர்வை அவர்கள் அளிப்பதில்லை.  இந்நிலையில் நாம் செய்ய வேண்டியது என்ன?

தேர்தல் பிரச்சாரங்களை நடத்துவது, மட்டுப்படுத்துவது, கட்டுப்படுத்துவது ஆகியனவற்றை செய்வதில் தேர்தல் ஆணையத்தின் பங்கு என்பதை பரந்துபட்ட கோணத்தில் பார்க்க வேண்டும்.  தேர்தல் செலவுகளுக்கான நிதியை அரசு அளிப்பது என்பது குறித்து நாம் பேசி வருகிறோம்.  இன்றைய சூழலில் தேர்தல்களில் பணம் கோலோச்சி வருவதை தடுப்பதில் தேர்தல் ஆணையத்தால் அதிகளவில் செயல்பட முடியாது. ஆனால், தேர்தலுக்கான நிதியை அரசு அளித்தால் அதன் மூலம் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ளத் தேவையான வளங்களையும்ம், ஆதரவையும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு அளித்திட இயலும்.  இவ்வாறு செய்வதன் மூலம் தேர்தல்களில் பணம் முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதை பெருமளவில் தடுத்திடலாம்.  அதே நேரத்தில், தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத்தையும், தன்னாட்சியையும் பாதுகாத்திடவும், அரசியலமைப்புச் சட்டம் அதற்கு அளித்துள்ள கடமைகளை நிறைவேற்றிடவும் சில விதிகளில் மாற்றங்களை கொண்டு வருவது மட்டும் போதாது.  மாறாக, தேர்தல் ஆணையத்தின் கட்டமைப்பில் சீர்திருத்தங்களும், மாற்றங்களும் செய்யப்பட வேண்டும்.  உதாரணமாக, தலைமைத் தேர்தல் ஆணையரும், இதர இரண்டு தேர்தல் ஆணையர்களும் அதிகாரத்தில் இருக்கும் அரசாலேயே நியமிக்கப்படுகிறார்கள்.  இதனாலேயே அவர்கள் அரசுக்கு நன்றிக்கடன் பட்டவர்களாக இருக்கிறார்கள்.  தேர்தல் ஆணையரை நியமிப்பதில் கூடுதல் சுயேச்சையான வழிமுறை ஏற்படுத்தப்பட வேண்டும்.  சீர்திருத்தம் என்பது தேர்தல் ஆணையத்திலிருந்தே துவங்க வேண்டும் என நான் நினைக்கிறேன்.

  • வேட்பாளரின் குற்றப் பின்னணி குறித்த விவரங்களை வெளியிடுவது என்பது ஒரு நல்ல நோக்கமே.  ஆனால், அதனை பத்திரிகைகள்/ஊடகங்களில் வெளியிடுவதற்கான செலவுகளை அவர்களே ஏற்க வேண்டுமென்பது அடித்தட்டு மக்களை பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சிகளுக்கு மிகப் பெருஞ்சுமையாக ஆகிவிடுகிறதே.  இதற்கு நம் தரப்பிலிருந்து எத்தகைய ஆலோசனைனை முன்வைத்திடலாம்?

இது ஒன்றும் மிக முக்கியமான விஷயமல்ல.  வேட்பாளரின் குற்றப் பின்னணி எனும் சொற்றொடரே தவறான புரிதலுக்கு இட்டுச் செல்லக் கூடிய ஒன்றாகும்.  குற்ற வழக்குகள் எனக் கருதப்படக் கூடிய வழக்குகள் எந்தவொரு அரசியல் செயல்பாட்டாளர் அல்லது தலைவரின் மீதும் இருக்கும்.  நீங்கள் ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருந்து, பிரிவு 144ஐ மீறியிருந்தால், உங்களுக்கு எதிராக குற்ற வழக்கு இருக்கும்.  பல்வேறு வடிவங்களிலான போராட்ட இயக்கங்களை நடத்தும் போது நீங்கள் சட்டத்தை மீறியிருந்தால் உங்களுக்கு எதிராக வழக்குகள் இருக்கும்.  எனவே, இது தவறான புரிதலுக்கு இட்டுச் செல்லும் சொற்றொடராகும்.  குற்ற வழக்குகள் என்றால் எத்தகைய குற்றங்கள் என்று குறிப்பிடப்பட வேண்டும்.  பாலியல் வல்லுறவு, கொலை அல்லது இதர மிகக் கொடூரமான குற்றங்கள், பெருமளவில் பணமோசடியில் ஈடுபட்டது போன்ற குற்றங்கள் ஏதேனும் செய்துள்ளாரா?  எனவே, உச்சநீதிமன்றம் மேற்கொண்ட நடவடிக்கையை அடுத்து வேட்பாளரின் குற்றப்பின்னணியை வெளியிட வேண்டும் என்று மட்டும் சொல்வது அர்த்தமற்றது என நான் கருதுகிறேன். ஆனால் அப்படி வெளியிடும்போது, அதற்கான செலவுகளை வேட்பாளரின் மீது திணிக்கப்படக் கூடாது என்பது சரியானதே.  இதற்கான செலவுகளை அரசு ஏற்பதற்கான வழிமுறைகள் கண்டறியப்பட வேண்டும்.

  • மின்னணு வாக்கு இயந்திரங்கள் பற்றி சந்தேகங்கள் உள்ளன.  விவிபேட் இயந்திரங்கள் மூலம் சரிபார்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் தேர்தல் ஆணையத்தால் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.  நாடாளுமன்ற தேர்தல்களின்போது பதிவான வாக்குகளின் எண்ணிக்கை குறித்து சர்ச்சை ஏற்பட்டது.  அது இன்னமும் தீர்க்கப்படாமலும் உள்ளது.  தேர்தல்களில் வாக்குச் சீட்டு பயன்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நாம் ஏன் முன்வைக்கக் கூடாது?

என்னைப் பொறுத்தவரை மின்னணு வாக்கு இயந்திரம் என்பது முந்தைய வாக்குச் சீட்டு முறையிலிருந்து ஒரு படி முன்னேற்றம் ஆகும்.  அது ஒரு சிறந்த முறையாக இருக்கக் கூடும்.  அதே நேரத்தில், மின்னணு இயந்திரங்களின் செயல்பாடு குறித்து சந்தேகங்கள் உள்ளன.  ஒரு சில ஆண்டு காலமாக, மின்னணு வாக்கு இயந்திரங்களிலும், அவற்றின் செயல்பாடுகளிலும் முன்னேற்றங்களை நாம் கோரி வருகிறோம்.  இத்தகைய விவாதங்களின் அடிப்படையிலேயே வாக்காளர் இயந்திரத்தின் பொத்தானை அழுத்தி எந்த வேட்பாளருக்கு வாக்களித்தார் என்பதை தாளில் பதிவு செய்யும் விவிபேட் நடைமுறை ஒரு சில ஆண்டுகளுக்கு முன் வடிவமைக்கப்பட்டது.  ஆனால் தற்போதும் வாக்கு இயந்திரத்தின் தொழில்நுட்ப நடைமுறையின் வரிசைக்கிரமம், அதாவது முதலில் வாக்காளர் இயந்திரத்தில் பொத்தானை அழுத்துவது, பின்னர் விவிபேட் வழியாக தாளில் அதை பதிவு செய்வது, அதன் பின்னர் இறுதியாக அவரது வாக்கு திரையில் பதிவது என்று உள்ளது.  நம்மைப் பொறுத்தவரை இந்த வரிசைக்கிரம் மாற்றப்பட வேண்டும்.   அதாவது இந்த வரிசைக்கிரமத்தில் மத்தியில் உள்ள விவிபேட் பதிவு இறுதியில் இருந்திட வேண்டும்.  இதன் மூலம் வாக்காளர் பொத்தானை அழுத்தியவுடன், அவரது வாக்கு திரையில் பதிவு செய்யப்பட்ட வின்னர், விவிபேட் இயந்திரத்தில் தோன்றி அதன் பின்னர் அவரது வாக்கு பதிவு செய்யப்பட்ட தாள் முத்திரையிடப்பட்ட வாக்குப் பெட்டிக்குள் செல்கிறது.  மின்னணு வாக்குப் பதிவின் நம்பகத்தன்மையைப் பாதுகாப்பது இரண்டாவது அம்சமாகும்.  இது குறித்தே பெரும்பாலான அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பின.  ஒரு குறிப்பிட்ட தொகுதியில் 10 சதவீத வாக்கு சாவடிகளை மாதிரியாக எடுத்துக் கொண்டுஅவற்றின் 10 சதவீத வாக்குகளை சரிபார்க்க வேண்டும் என்று கோரப்பட்டது.  பதிவான வாக்குகளின் எண்ணிக்கைக்கும் இயந்திரத்தில் உள்ள எண்ணிக்கைக்கும் இடையே வித்தியாசம் காணப்பட்டால் அந்த குறிப்பிட்ட வாக்கு சாவடியில் மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.  ஆக, மின்னணு வாக்கு இயந்திர நடைமுறையில் இத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.  அவ்வாறின்றி மீண்டும் வாக்குச் சீட்டு நடைமுறைக்கே திரும்புவது என்பது தீர்வாகாது.  இப்பிரச்சனைக்கு தீர்வென்பது மின்னணு வாக்கு இயந்திரத்தில் வாக்களிப்பது என்ற தொழில்நுட்ப நடைமுறையை குறைபாடுகள் இல்லாததாக செய்வதிலேயே உள்ளது.  துரதிர்ஷ்டவசமாக, மின்னணு வாக்கு இயந்திர செயல்பாடுகளின் வரிசைக்கிரமத்தில் மாற்றத்தைக் கொண்டு வர தேர்தல் ஆணையம் ஒப்புக் கொள்ளவில்லை.  இத்தகைய நடவடிக்கைகளுக்கான கோரிக்கை அதிகளவில் முன்னுக்கு வரும் என்றே நான் நினைக்கிறேன்.  மின்னணு வாக்கு இயந்திர நடைமுறையில் முன்னேற்றம் கொண்டு வரப்பட வேண்டும்.

  • ஒவ்வொரு முறை தேர்தல் முடிந்த பிறகும் தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து நாம் பேசுகிறோம்.  ஆனால், இது மக்களிடையே இன்னமும் வேகம் பெறவில்லை.  இப்பிரச்சனையில் குறிப்பிட்ட வடிவங்களில், அறைகூவல்களில் நாம் ஏன் இயக்கங்களை மேற்கொண்டு மக்களின் கருத்தைத் திரட்டிடக் கூடாது?

விகிதாச்சார பிரதிநிதித்துவம் என்பது நல்ல கருத்தாகும்.  இது தொடர்பாக உலக அரங்கில் ஏதேனும் சிறந்த முன்னுதாரணங்களைக் குறிப்பிட இயலுமா?

நம்மைப் பொறுத்தவரை தேர்தல் சீர்திருத்தங்கள் என்பது அடிப்படையான ஒன்றாகும்.  தேர்தல்கள் நடைபெற்று முடிந்த பின்னர் மட்டுமே நாம் இப்பிரச்சனையை எழுப்புவதில்லை.  இதன் அடிப்படை அம்சமாக இருப்பது தேர்தல் நடைமுறையிலேயே மாற்றம் கொண்டு வர வேண்டும் என்பதாகும்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடதுசாரிக் கட்சிகளும் பகுதி பட்டியல் நடைமுறையோடு (partial list system) கூடிய விகிதாச்சார பிரதிநிதித்துவத்தையே எப்போதும் பரிந்துரைத்து வருகின்றன.  விகிதாச்சார பிரதிநிதித்துவம் என்றால் என்ன பொருள்?  அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர்களின் பட்டியலை வெளியிடும்.  அதன் பின்னர் மக்கள் சம்பந்தப்பட்ட கட்சிக்கு வாக்களிப்பார்கள் என்பதே அதன் பொருளாகும்.  மக்கள் கட்சிக்கே வாக்களிப்பார்களேயன்றி, தனிப்பட்ட வேட்பாளர்களுக்கல்ல.  ஒரு கட்சிக்கு கிடைத்த வாக்குகளின் விகிதாச்சாரத்தின் அடிப்படையில் அக்கட்சியின் வேட்பாளர் பட்டியலிலிருந்து உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.  உதாரணத்திற்கு, ஒரு மாநில சட்டசபையில் 100 இடங்கள் உள்ளன.  இந்த 100 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நடந்த சட்டசபை தேர்தல்களில் ஒரு கட்சிக்கு 10 சதவீத வாக்குகள் கிடைத்தன என்றால், மொத்த 100 இடங்களிலிருந்து அக்கட்சிக்கு 10 இடங்கள் கிடைக்கும்.  விகிதாச்சார பிரதிநிதித்துவத்தின் அடிப்படை அம்சம் இதுவேயாகும்.  ஆனால், பகுதி பட்டியல் நடைமுறையோடு கூடிய விகிதாச்சார பிரதிநிதித்துவம் என்று நாம் குறிப்பிடுவதன் பொருள், விகிதாச்சார பிரதிநிதித்துவம் மற்றும் பிராந்திய அடிப்படையிலான பிரதிநிதித்துவம் ஆகியவற்றின் கலவையாகும்.  அதாவது,  பிராந்திய அடிப்படையிலான தொகுதிகள் இருக்கும்.  இத்தொகுதிகளுக்கான பிரதிநிதிகள் அத்தொகுதிகளின் வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.  அதனுடன் கட்சியின் பட்டியலிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவதற்கான சட்டமன்ற இடங்களும் இருக்கும்.  ஆக, மொத்த இடங்களில் 50% இடங்களுக்கு பிராந்திய அடிப்படையிலான தொகுதிகளிலிருந்தும், மீதி 50% இடங்களுக்கு கட்சியின் பட்டியலிலிருந்து தேர்வு செய்யும் நடைமுறையின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.  இந்நடைமுறையின் கீழ், வாக்காளர் ஒருவர் இரண்டு வாக்குகளை அளிப்பார்.  ஒரு வாக்கை பிராந்திய அடிப்படையிலான தொகுதியின் வேட்பாளருக்கும், மற்றொரு வாக்கை கட்சிக்கும் அளிப்பார்.  இது ஒரு வகையான கணக்கீடாகும்.  இது போன்ற பல்வேறு வகையிலான விகிதாச்சார பிரதிநிதித்துவ நடைமுறையின் சேர்க்கைகள் உள்ளன.  தற்போது, இதுபோன்ற விகிதாச்சார பிரதிநிதித்துவ நடைமுறை பல்வேறு நாடுகளில் நடைமுறையில் உள்ளதோடு, சிறந்த முறையில் செயல்பட்டும் வருகிறது. உலக நாடுகளில் கிட்டத்தட்ட 60 நாடுகளில் விகிதாச்சார பிரதிநிதித்துவ நடைமுறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. சிறிய நாடுகளில் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையை முழுமையாகச் செயல்படுத்துவது சுலபமான ஒன்றாகும்.  ஆனால் பெரிய நாடுகளுக்கு, கட்சியின் பட்டியல் மற்றும் பிராந்திய அடிப்படையிலான தொகுதிகள் என சேர்த்து செயல்படுத்துவது சரியானதாக இருக்கும்.  நமது அண்டை நாடுகளான இலங்கை, நேபாளம் போன்றவற்றில் கூட பலதரப்பட்ட விகிதாச்சார பிரதிநிதித்துவ நடைமுறை தற்போது செயல்பாட்டில் உள்ளது.

  • நம்பகமான மாற்று இல்லாததே அரசியலில் வலதுசாரி சாய்மானத்திற்கு பிரதானமான காரணமாகும்.  தேர்தலின் போது நமது கூட்டணியில் இருக்கும் கட்சிகளும் இத்தகைய மோசமான நடைமுறைகளில் ஈடுபடுவதால், நமது ஐக்கிய முன்னணி தந்திரம் நமது நம்பகத்தன்மையில் அரிப்பை ஏற்படுத்தி விடாதா?

நம்பகமான மாற்று இல்லாததே அரசியலில் வலதுசாரி சாய்மானத்திற்கு பிரதான காரணம் என்று சல்வது சரியல்ல என நான் கருதுகிறேன்.  அரசியலில் வலதுசாரி சாய்மானம் என்பது மிகவும் சிக்கலானதொரு நிகழ்வாகும்.  உலகம் முழுவதிலும் அதிதீவிர வலதுசாரி மற்றும் வலதுசாரி சக்திகளும், தத்துவங்களும் எழுச்சி பெற்றதை நாம் கண்டோம்.  குறிப்பாக சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகும், சோசலிசத்திலிருந்து பின்வாங்கிய பிறகும் இதனை நாம் கண்டோம். சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு முன்னரே கூட, அதாவது 1980களில் முதலாளித்துவ சமூக அமைப்பின் உள்ளேயே நவீன தாராளவாத முதலாளித்துவம் வளர்ச்சியடைந்தது.  இதுவே அரசியலில் வலதுசாரி சாய்மானத்திற்கு கட்டியம் கூறுவதாக இருந்தது.  ஏனெனில், இது மிகவும் வலதுசாரி சாய்மானம் கொண்ட முதலாளித்துவ வளர்ச்சிப் போக்காகும்.  மேலும், இது வலதுசாரி அரசியலில் பிரதிபலித்தது.  ஆனால், சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னர் இது வேகம் பிடித்தது.  அத்தோடு உலகம் முழுவதிலும், வலதுசாரி சக்திகளின் தத்துவங்கள் வேரூன்றி, வலதுசாரி அரசியலும் வேரூன்றி, வர்க்க அரசியலின் இடத்தில் அடையாள அரசியல் தோன்றுவது போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்தியாவிலும் கூட, இதன் பிரதிபலிப்பை நாம் பார்த்தோம்.  குறிப்பாக 1990களிலிருந்து, முதலாளித்துவத்தின் தாராளமயமாக்கல் அல்லது நவீன தாராளவாத கொள்கைகள் வளர்ச்சியடைந்ததைக் கண்டோம்.  அதோடு அடையாள அரசியலின் ஒரு பகுதியான இந்துத்துவா மதவாதமும் வளர்ச்சியடைந்ததைக் கண்டோம்.  இவ்விரு காரணிகளே இந்தியாவில் அதிதீவிர வலதுசாரி அரசு – தற்போது ஆட்சியதிகாரத்தில் உள்ள மோடி அரசு வருவதற்கு காரணமாக அமைந்தன.  எனவே, வலதுசாரி சக்திகள் ஏற்கனவே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன என்பது உண்மையாகும்.  மேலும், இந்துத்துவா தத்துவம் ஆளும் வர்க்கங்களின் மேலாதிக்க சித்தாந்தமாக மாறி வருகிறது.  இவர்களுக்கு எதிரானதொரு மாற்றே தேவைப்படுகிறது.  அந்த மாற்று என்பது, தத்துவார்த்த அடிப்படையில், அரசியல் அடிப்படையில், கொள்கைகள் மற்றும் திட்டங்களின் அடிப்படையில் இருக்க வேண்டும்.  எனவே, இடதுசாரிகளைப் பொறுத்தவரையில், இது மிக முக்கியமான விஷயமாகும்.  அன்றாட அரசியலான அரசியல் சூழ்ச்சிகள் மற்றும் தேர்தல் உத்திகளைக் கொண்டு மட்டுமே வலதுசாரி சாய்மானத்தையும், இந்துத்துவா தத்துவத்தையும் எதிர்த்திட முடியாது.  ஒத்திசைவானதொரு கருத்தியல் மாற்றை முன் வைக்க வேண்டும்.  மேலும், அதனைச் சுற்றி மாற்று கொள்கையை, மாற்று திட்டத்தை, மாற்று மேடையை கட்டமைக்க வேண்டும்.  இத்தகைய மாற்று கொள்கையை கொண்ட மேடையை ஒட்டி வர்க்கப் போராட்டங்களை நடத்துவது, வெகுமக்கள் இயக்கங்களை கட்டுவது, மக்களைத் திரட்டுவது என்பதன் மூலமே ஒத்திசைவானதொரு கருத்தியல் மாற்றத்தை உருவாக்கிட இயலும்.  இதன் வாயிலாக இடதுசாரி, ஜனநாயக மாற்று மக்களிடையே வலுப்பெறும்.  எனவே, இன்று நம்முன் உள்ள பிரதானமான இயக்கம் இதுவேயாகும்.  ஐக்கிய முன்னணி தந்திரத்தைப் பொறுத்தவரை, வலதுசாரி இந்துத்துவா சக்திகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாஜக-ஆர்எஸ்எஸ் எனும் பொதுவான எதிரி நம்முன் உள்ளது.  அவர்களை எதிர்த்துப் போராட, நமக்கு ஐக்கிய முன்னணி தந்திரம் தேவைப்படுகிறது.  அனைத்து மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகளை ஒன்றிணைத்து, அணி திரட்டி, மோடி அரசு மற்றும் ஆர்எஸ்எஸ் பாஜக சக்திகள் விடுக்கும் யதேச்சதிகார அபாயத்திற்கு எதிரான பரந்துபட்ட ஒற்றுமையைக் கட்ட வேண்டும்.  இதற்கு ஐக்கிய முன்னணி தந்திரம் மிகவும் அவசியமான ஒன்றாகும்.  இப்போராட்ட இயக்கத்தில் நமது கூட்டாளிகளை அணி திரட்டிட வேண்டும்.  ஆனால் இந்த முன்னணி என்பது தேர்தல்களுக்காக மட்டும் உருவாக்கப்படுவது அல்ல.  ஐக்கிய முன்னணி என்பது தேர்தல் சமயங்களில் மட்டுமே தேவைப்படுகிற ஒன்று என்ற கருத்து கேள்வியில் பிரதிபலிக்கிறது.  ஆனால், ஐக்கிய முன்னணி என்பது மாற்று அரசியல் மேடைக்கு தேவைப்படுகிற ஒன்றாகும்.  வலதுசாரி சக்திகளுக்கான மாற்றாகும்.  வெகுமக்கள் இயக்கங்கள் மற்றும் போராட்டங்கள் மூலம் இத்தகைய மாற்று உருவாக்கப்பட்டு, அது தேர்தல்களிலும், தேர்தல் அரசியலிலும் தானாகவே பிரதிபலித்திடும். இவ்வாறாக, அனைத்து மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகளைக் கொண்டு நாம் உருவாக்கும் ஐக்கிய முன்னணியானது, தேர்தல் நடைபெறும்போது நாம் நிறைவேற்றிடும் ஐக்கிய முன்னணி தேர்தல் உத்திகளிலும் பிரதிபலிக்கும்.  அந்தந்த மாநிலத்தின் அரசியல் அணி சேர்க்கைக்கு ஏற்ப இத்தகைய ஐக்கிய முன்னணி தந்திரம் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும்.  அகில இந்திய அளவிலான அரசியல் சக்திகளின் அணிசேர்க்கையைப் பொறுத்து அகில இந்திய அளவில் இந்த ஐக்கிய முன்ணனியின் தன்மை அமைந்திடும்.  ஆனால், தேர்தல் உத்தியானது ஒட்டு மொத்த அரசியல் உத்தியாகிய, நமது நாட்டிலுள்ள வலதுசாரி யதேச்சதிகார பாஜக அரசுக்கு எதிராக அனைத்து இடதுசாரி, ஜனநாயக மதச்சார்பற்ற சக்திகளை அணி திரட்டி ஒற்றுமையைக் கட்டுவது என்பதற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.  எனவே, ஐக்கிய முன்னணியை நாம் அமைக்கும்போது அல்லது தேர்தல் கூட்டணி அல்லது முன்னணியை நாம் ஏற்படுத்தும்போது, அது ஓர் குறைந்தபட்ச புரிதலின் அடிப்படையிலானதாக இருக்க வேண்டும். எல்லா விஷயங்களிலும் நாம் ஒத்த கருத்துடன் இருக்க இயலாது.  தேர்தலை எதிர்கொள்ளவோ அல்லது பரந்த இயக்கத்தை கட்டவோ நாம் அணி திரட்டும் கட்சிகள் சிலவற்றின் கொள்கை நிலைபாடுகளோ அல்லது இதர அம்சங்களோ நமக்கு உகந்ததாகவோ அல்லது எதிர்மறையானதாகவோ இருக்கக் கூடும்.  ஆனால், பொதுவான கடமையை முன்னிறுத்தி, இத்தகைய வேறுபாடுகளை பின்னுக்கு வைத்து, அரசியல் ரீதியாகவும், தத்துவார்த்த ரீதியாகவும் நமது சுயேட்சையான நிலைபாட்டை பராமரித்துக் கொண்டே செயல்பட வேண்டும்.  இது மிக முக்கியமான விஷயமாகும்.

  • நமது பிரதான எதிரியை எதிர்கொள்ள நமது அணியிலுள்ள அரசியல் கட்சிகளோடு தொகுதிப் பங்கீடு செய்து கொள்வது என்பது தவிர்க்க இயலாததாகிறது.  அப்போது தேர்தல் களத்தில் நமது மாண்புகள் நீர்த்துப் போகாமல் பார்த்துக் கொண்டு, மற்றவர்களிடமிருந்து இடதுசாரிகள் தங்களை எவ்வாறு வேறுபடுத்திக் காட்ட என்ன செய்ய வேண்டுமென நினைக்கிறீர்கள்?

ஐக்கிய முன்னணியின் அனைத்து நடவடிக்கைகளின்போதும், கூட்டாக இயக்கங்களை மேற்கொள்கிற அதே நேரத்தில் நாம் நமது சுயேட்சையான நிலைபாடுகளையும், செயல்பாடுகளையும் விட்டுவிடுவதில்லை என்பதை நீங்கள் பார்க்கிறீர்கள்.  போராட்டங்களிலும் இயக்கங்களிலும் கூட, ஒத்த கருத்து கொண்டுள்ள விஷயங்களில் கூட்டுப் போராட்டங்கள், கூட்டியக்கங்களை நடத்துகிறோம்.  நமக்கு இதர முக்கியமான அரசியல் நிலைபாடுகளும், பிரச்சனைகளும் இருப்பதால், அவற்றை நாம் சுயேட்சையாக கையிலெடுக்கிறோம்.  இவற்றில் நமது நிலைபாட்டை நாம் அணிதிரட்டியுள்ள இதர கட்சிகள் உடன்படாது போகலாம் அல்லது அவற்றை கையிலெடுக்காதும் இருக்கலாம்.  எல்லாவற்றிற்கும் மேலாக, கம்யூனிஸ்ட் கட்சியாகிய நாம், உழைக்கும் வர்க்கத்தின், விவசாயிகளின் நலனைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள்.  இதர வர்க்கங்களின் நலன் சார்ந்திருக்கும் இதர சில கட்சிகளையும் நாம் அணி திரட்டுகிறோம்.  எனவே, நமக்கிடையே பொதுவாக உள்ள விஷயங்களை நாம் அதிகப்படுத்தி, ஒன்றிணைந்து செயல்படுகிறோம்.  அதே நேரத்தில் நாம் நமது அரசியல் நிலைபாடுகளை, நமது வர்க்க நிலைபாடுகளை, தத்துவார்த்த நிலைபாடுகளை வேறுபடுத்திக் காட்டி, அதனைத் தொடர்ந்து வலியுறுத்துவதோடு அத்தகைய நிலைபாட்டின் பால் மக்களை அணிதிரட்ட வேண்டும்.  எனவே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிகளின் சுயேட்சையான செயல்பாடுகளும், இயக்கங்களும் போராட்டங்களும் இன்றியமையாதவையாகும்.  இவற்றைச் செய்யாது நாம் நம்மை வலுப்படுத்திக் கொள்ள முடியாது.  ஐக்கிய முன்னணி தந்திரத்தின் மூலம் மட்டுமே நாம் நம்மை வலுப்படுத்திக் கொள்ள இயலாது.  நமது சுயேட்சையான அரசியல், தத்துவார்த்த, ஸ்தாபன நடவடிக்கைளை, நமது சுயேட்சையான இயக்கங்களை முன்னெடுத்துச் செல்லாமல், ஐக்கிய முன்னணி தேர்தல் நடவடிக்கைகளை மட்டும் நாம் செயல்படுத்தினால், இடதுசாரி சக்திகள் வளர்ச்சியடைய முடியாது.  இடதுசாரிகள் வளர்ச்சியடையாமல், மாற்றுக் கொள்கையையும் வளர்த்தெடுக்க இயலாது.  இத்தகைய அணுகுமுறையையே நாம் கையாள வேண்டும். 

ஒவ்வொரு தேர்தலின்போதும் ஒரு குறிப்பிட்ட அணி சேர்க்கை ஏற்படும்.  இவையெல்லம் நிலையானவை அல்ல.  ஆனால், நமது சுயேட்சையான வேலைகள், செயல்பாடுகள் மற்றும் இடதுசாரி, ஜனநாயக மாற்றை கட்டமைக்க செயல்படும் வர்க்க அடிப்படையிலான நமது ஐக்கிய முன்னணி ஆகியவையே நமது அடிப்படை நோக்கமாக, செயல்பாடாக இருக்க வேண்டும்.  தேர்தல் கூட்டணி மற்றும் ஐக்கிய முன்னணியை உருவாக்குவது என்பது முழுக்க முழுக்க தேர்தல் நேரத்தில் செய்யப்படும் தற்காலிக நடவடிக்கையாகவே இருக்க வேண்டும்.  நமது கட்சியின் சுயேட்சையான நடவடிக்கைகளையும், வர்க்க மற்றும் வெகுமக்கள் அமைப்புகளின் கூட்டியக்கங்களையும், வர்க்க அடிப்படையிலான நமது அரசியல் மற்றும் தத்துவார்த்த போராட்டங்களையும் நாம் கைவிடவோ அல்லது பின்னுக்குத் தள்ளவோ இயலாது.

தமிழில்: கிரிஜா

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் உருவான வரலாறு

இந்திய கம்யூனிஸ்ட் இயக்க நூற்றாண்டு கட்டுரை

ஹர்கிசன் சிங் சுர்ஜித்

தமிழில்: க.சுவாமிநாதன்

இது இந்திய கம்யூனிச இயக்கத்தின் நூற்றாண்டு துவங்குகிற வேளை. அதன் பெருமைமிகு உருவாக்கம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) யின் முன்னாள் பொதுச் செயலாளர் ஹர்கிசன் சிங் சுர்ஜித் அவர்கள் 1984 ல் மார்க்சிஸ்ட் (ஆங்கிலம்) ஜனவரி-மார்ச் இதழில் 75 வது ஆண்டு விழா குறித்து எழுதிய கட்டுரை. நூற்றாண்டு கொண்டாடும் வேளையிலும் பொருந்துகிற, இன்றைய  தலைமுறைக்கு பகிர்ந்து கொள்கிற கட்டுரை.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அக்டோபர் 17, 1920 ல் தாஷ்கென்ட் நகரில் உருவாக்கப்பட்டது. அதன் உருவாக்கம், வளர்ச்சி பற்றிய ஓர் ஆய்வை இங்கு செய்ய முயற்சித்துள்ளோம்.

சுரண்டலுக்கு முற்றுப்புள்ளி

கம்யூனிஸ்ட் கட்சி, சமூகத்தின் வெவ்வேறு வர்க்கங்களை பிரதிநிதித்துவப்படுத்துகிற மற்ற அரசியல் கட்சிகளிடம் இருந்து மாறுபடுகிற தனித்துவம் கொண்டதாகும். சமூகத்தின் பரிணாமம் குறித்த ஆய்வில், மார்க்சும் எங்கெல்சும் சமூகத்தில் நிலவுகிற பகைமைகளும், முரண்பாடுகளுமே அதன் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு இட்டு செல்லவும் தீர்மானிக்கவும் செய்கின்றன என்றார்கள்.

கம்யூனிச அறிக்கையில் மார்க்சும், எங்கெல்சும் “சமூகத்தின் இதுவரையிலான வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே!” என்றார்கள்.

“சுதந்திரமானவனும் அடிமையும், உயர்குலச் சீமானும் (patrician) பாமரக் குடிமகனும் (plebeian), நிலப்பிரபுவும் பண்ணையடிமையும், கைவினைக் குழும எஜமானும் (guild-master) கைவினைப் பணியாளனும் (journeyman), சுருங்கக் கூறின், ஒடுக்குவோரும் ஒடுக்கப்படுவோரும் ஒருவருக்கொருவர் தீராப் பகைமை கொண்டிருந்தனர். சில நேரம் மறைவாகவும், சில நேரம் வெளிப்படையாகவும், இடையறாத போராட்டத்தை நடத்தி வந்தனர். ஒவ்வொரு முறையும் இந்தப் போராட்டம் சமுதாயம் முழுவதையும் புரட்சிகரமாக மாற்றியமைப்பதிலோ அல்லது போராடும் வர்க்கங்களின் பொதுவான அழிவிலோதான் முடிந்திருக்கிறது.” (கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை, அத்தியாயம்-1)

ஆகவே முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த முரண்பாடுகள் சோசலிச நிர்மாணத்திற்கு இட்டு செல்லும் என்ற முடிவுக்கு அவர்கள் வந்தனர். ஆகவே வரலாற்றின் இந்த உந்து சக்தி சமூகத்தை முன்னோக்கி செலுத்துகிறது என்றார் மார்க்ஸ். இதற்கு முந்தைய எல்லா புரட்சிகளைக் காட்டிலும் சோசலிச புரட்சி குணத்தில் தனித்துவம் வாய்ந்ததாகும். அறிக்கை மேலும் சொல்கிறது.

“நிலப்பிரபுத்துவத்தை எந்த ஆயுதங்களால் முதலாளித்துவம் தரையில் வீழ்த்தியதோ அதே ஆயுதங்கள் இன்று முதலாளித்துவத்தை குறி பார்த்தே திரும்பி நிற்கின்றன… தனக்கு மரணத்தை கொண்டு வரக் கூடிய ஆயுதங்களை மட்டும் அது திரட்டித் தரவில்லை; அந்த ஆயுதங்களை கையாளக் கூடிய மனிதர்களையும் – நவீன தொழிலாளி வர்க்கம்-  உருவாக்கித் தந்துள்ளது”

கம்யூனிச அறிக்கை அறுதியிட்டு கூறுவது என்னவெனில், “முதலாளித்துவத்தை முகத்திற்கு நேராய் எதிர்கொள்ளும் எல்லா வர்க்கங்களின் மத்தியில் பாட்டாளிகள் மட்டுமே உண்மையான புரட்சிகர வர்க்கமாக உள்ளனர். மற்ற வர்க்கங்கள் நவீன தொழில்களின் வளர்ச்சியில் சிதைந்து இறுதியில் மறைந்து போய் விடுவார்கள்; பாட்டாளிகள் சிறப்பான, தவிர்க்க இயலாத உருவாக்கம் கொண்டவர்கள்.

நிலப்பிரபுத்துவ கட்டத்தில் இருந்து முதலாளித்துவத்திற்கு மாறியதன் அடையாளமாய் திகழ்கிற தொழிற் புரட்சி இங்கிலாந்து நாட்டை தனது மையமாக கொண்டிருந்தது. அது அதி வேகமான வளர்ச்சியையும், புதிய பாதைகளை உருவாக்க வல்ல ஏராளமான கண்டுபிடிப்புகள் மூலம் வெவ்வேறு தொழில்களின் விரிவாக்கத்தையும் கொண்டிருந்தது. இந்த அதிவேக வளர்ச்சி தொழில், வர்த்தக விரிவாக்கத்தின் வாயிலாக பணக்கார முதலாளித்துவ வரக்கத்தின் பிறப்பிற்கு வழி வகுத்தது. இது நிலப்பிரபுத்துவ முறைமைக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்தியது. முதலாளித்துவம் தன்னை ஓர் முறைமையாக நிலை நிறுத்திக் கொள்கிற வழியிலே தொழிலாளி வர்க்கத்தைப் பிரசவிக்கவும் செய்தது. மார்க்சு சொல்வது போல முதலாளித்துவத்திற்கு “சவக் குழி தோண்டுகிறவர்கள்” இவர்கள். இந்த வர்க்கம், அதாவது தொழிலாளி வர்க்கம், தன்னை தனக்கான கட்சியின் கீழ்  திரட்டிக்கொள்கிறது. முதலாளித்துவ அமைப்பை தூக்கியெறிந்து அதிகாரத்தை கைப்பற்றி மனிதரை மனிதரை சுரண்டுவதற்கு முற்றுப் புள்ளி வைக்க பாடுபடுகிறது.

கம்யூனிஸ்ட் அறிக்கை ஓர் திருப்பம்

கம்யூனிஸ்ட் அறிக்கை வெளி வருவதற்கு முன்பு வரை சோசலிசத்திற்கான இயக்கம் குழப்பத்தில் இருந்தது. அதாவது முதலாளித்துவ முறைமை குறித்த அதன் ஆய்வு, அதன் நோக்கங்கள், இலக்குகள் மற்றும் முதலாளித்துவ முறையை தூக்கி எறிவதற்கான வடிவங்கள், வழி முறைகள் ஆகியன பற்றிய சித்திரம் இல்லாமல் இருந்தது. முதல் முறையாக கருத்து முதல் வாத அணுகுமுறைகளையும், திட்ட வட்டமற்ற கருத்துக்களையும் அடித்து செல்கிற அலையாக கம்யூனிஸ்ட் அறிக்கை அமைந்தது. அது ஓர் அறிவியல்பூர்வமான இயங்கு தளத்தை சோசலிச இயக்கத்திற்கு தந்தது. மார்க்ஸ், லெனின் வர்ணித்தது போன்று ” அது அறிவுப் பெட்டகம். மூன்று வளர்ந்த நாடுகள் மானுடத்திற்கு 19 வது நூற்றாண்டில் அளித்த மூன்று மிக முக்கியமான பிரதான தத்துவ நீரோட்டங்களின் தொடர்ச்சியை உறுதி செய்து அவற்றை நிறைவு செய்கிற பணியையும் அது ஈடேற்றியது. அதாவது “ஜெர்மனியின் தூய தத்துவ இயல், இங்கிலாந்தின் தூய அரசியல் பொருளாதாரம், பிரான்சின் சோசலிசம் மற்றும் அதன் புரட்சிகர கருத்தியல்” ஆகியனவே அம் மூன்று தத்துவ நீரோட்டங்கள். மார்க்சீயத்தின் அடிப்படைக் கூறுகளில் முக்கியமானவை எவையெனில், பொருள் முதல் வாத தத்துவம், இயக்கவியல் பொருள் முதல் வாதம், வரலாற்று பொருள் முதல் வாதம், வர்க்க போராட்டம் மற்றும் தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிகர பாத்திரம் ஆகியனவாகும்.

லெனின் சொல்கிறார். ” மார்க்ஸ் நமக்கு தரும்  முக்கியமான கல்வி, சோசலிச சமூகத்தை நிர்மாணிப்பதில் பாட்டாளி வர்க்கத்தின் உலகளாவிய பங்கை எடுத்துரைத்ததாகும்.” ஆகவே தொழிலாளி வர்க்கத் தலைமை என்பது புரட்சிகர தொழிலாளி வர்க்க கோட்பாட்டிற்கு அடிப்படையானது ஆகும். இது அடிப்படையில் முதலாளிகளை, விவசாயிகளை, குட்டி முதலாளிகளை முன்னிறுத்துகிற பல்வேறு கருத்தோட்டங்களுக்கு மாறுபட்டதாகும். கம்யூனிஸ்ட் அறிக்கை, முதலாளித்துவத்தை வெற்றி பெற தொழிலாளி வர்க்கத்திற்கு உணர்வு மிக்க, போர்க் குணம் கொண்ட, ஒழுங்கமைக்கப்பட்ட கட்சி தேவை என்பதை அழுத்தமாக வலியுறுத்துகிறது. அறிக்கையின் வார்த்தைகளில் ” கம்யூனிஸ்டுகள்… ஒரு புறம், நடைமுறையில், ஒவ்வோர் நாட்டின் தொழிலாளி வர்க்க கட்சிகளின் முன்னேறிய, உறுதி மிக்க பகுதியினர் ஆவர்; இன்னொரு பக்கம், தத்துவ கோணத்தில், பாட்டாளி வர்க்கத்தின் பெரும் திரளில், மாற்றத்திற்கான பாதை- சூழ்நிலைகள்- பாட்டாளி வர்க்க இயக்கத்தின் பொதுவான இறுதி விளை பொருள் ஆகியன பற்றிய தெளிவான புரிதல் கொண்டிருக்கும் பகுதியுமாகும்”. ஆளும் வர்க்கங்கள் தங்களின் சக்தியை முழுவதும் திரட்டி தங்களின் அதிகாரத்தை தக்க வைக்க வன்முறையைப் பிரயோகிக்கும் போது அதை எதிர்கொள்கிற சக்தியை கொண்டதாக தொழிலாளி வர்க்கம் தயாராக இருக்க வேண்டும் என்பதே மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவரின் புரிதல் ஆகும். மார்க்சின் வார்த்தைகளில் “புதிய மாற்றத்திற்கான  கருவைச் சுமந்து கொண்டிருக்கிற ஒவ்வொரு சமூகத்திற்குமான  செவிலித் தாயே புரட்சி”

மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவரின் பங்களிப்பு, சமூகத்தை உயர்ந்த சோசலிச கட்டத்திற்கு மாற்றுவதற்கான முழுமையான கருத்தாக்கத்தை வளர்த்தெடுப்பதாக மட்டும் இல்லை; மாறாக பல்வேறு நாடுகளில் நிகழ்கிற வர்க்கப் போராட்டங்களையும் கணக்கிற் கொள்வதாக அமைந்தது. அவர்கள் பல்வேறு வர்க்கங்களின் பாத்திரத்தை- முதலாளித்துவத்திற்கு எதிரான குட்டி முதலாளிகள், விவசாயிகளின் பங்கு- ஆய்வு செய்ததோடு தொழிலாளி வர்க்கமே முதன்மையான புரட்சிகர வர்க்கம் என்பதையும் சுட்டிக் காட்டினர். இத்தகைய வலுவான அடித்தளத்தோடு அவர்கள் ” கம்யூனிஸ்ட் லீக்” ஐ துவக்கினர். (அதற்கு முன் லீக் ஆஃப் தி ஜஸ்ட்). கம்யூனிஸ்ட் அறிக்கை, கம்யூனிஸ்ட் லீக் அமைப்பின் திட்டமாக அமைந்தது.

பிறந்தது சர்வதேச அகிலம்

தொழிலாளி வர்க்கத்தின் பெயரில் இயங்கும் பல்வேறு சக்திகளை, வளர்ந்து வருகிற தொழிற் சங்கங்களை ஒருங்கிணைத்து அவர்கள் சர்வதேச தொழிலாளர் சங்கத்தை உருவாக்கினார்கள். அதுவே முதல் அகிலம் என்று அழைக்கப்பட்டது.

ஆகவே அதன் விதிகளில், நோக்கங்களில் ஓர் தெளிவான புரட்சிகர உள்ளடக்கத்தை இணைக்க முடியவில்லை என்பதை அவர்கள் ஏற்றுக் கொண்டனர். முதல் அகிலம் உருவாவதற்கு முன்பே ஓர் வரலாற்றுப் பெரு நிகழ்வை உலகம் கண்டது. அதுவே பாரிஸ் கம்யூன். முதலாளித்துவத்தை தூக்கி எறிய தொழிலாளி வர்க்கம் எடுத்த முதல் முயற்சி என்று அதை அவர்கள் வர்ணித்தனர். முதல் அகிலம் 1864 முதல் 1876 வரையிலான குறைவான காலமே வாழ்ந்தது. இருப்பினும் மார்க்சீய கருத்துக்களை வெகு மக்கள் மத்தியில் கொண்டு செல்வதில் முக்கியப் பங்கை அது ஆற்றியது. 1889 ல் வந்த இரண்டாவது அகிலம் புரட்சிகர தத்துவத்திற்கும், திருத்தல் வாதத்திற்கும் இடையிலான பெரும் போராட்டத்தை எதிர்கொண்டது. இரண்டாவது அகிலத்தில் இருந்த சக்தி மிக்க, செல்வாக்கு மிக்க தலைமையையும் மீறி லெனின் மார்க்சீயத்தை ஏகாதிபத்திய வளர்ச்சி கட்டத்தில், புதிய சூழ் நிலைகளுக்கு ஏற்ற புதிய உயரங்களுக்கு கொண்டு சென்றார். ரஷ்யாவின் சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சி (RSDLP)க்குள் எழுந்த உட் கட்சி போராட்டம் 1903 ல் கட்சி பிளவுக்கு வழி வகுத்தது. போல்ஷ்விக், மென்ஷ்விக் கட்சிகள் பிறந்தன. லெனினின் தலைமையில் போல்ஷ்விக் கட்சி வெற்றிகரமாக சோசலிச புரட்சியை நடத்தி முடித்தது. இதுவே 1917 ல் நடந்தேறிய அக்டோபர் புரட்சி.

காலனி நாடுகளில் எதிரொலி

இந்த காலம் முழுவதும் கம்யூனிஸ்ட் இயக்கம் ஐரோப்பா, அமெரிக்க கண்டங்களுக்குள்ளேயே சுருங்கி நின்றது. காலனி நாடுகளுக்கு அது விரிவடையவில்லை. அக்டோபர் புரட்சிக்குப் பின்னரே காலனி நாடுகளில் சோசலிச சிந்தனைகள் பரவத் துவங்கின. முதலாளித்துவத்தின் இறுதிக் கட்டம், உச்ச கட்டம் ஏகாதிபத்தியம் என்கிற லெனினின் ஆய்வு அவரை ஓர் முடிவுக்கு இட்டுச் சென்றது. சோசலிச புரட்சிகள் வளர்ந்த முதலாளித்துவ நாடுகள் மட்டுமின்றி ஏகாதிபத்திய நாடுகளின் கண்ணி பலவீனமாக உள்ள, ஒப்பீட்டளவில் பின் தங்கிய பொருளாதாரம் கொண்ட நாடுகளிலும் வெற்றி பெறும் என்பதே அது. லெனின் மதிப்பீட்டில், உலகம் முழுவதும் புரட்சி ஏக காலத்தில் நடந்தேற வேண்டியதில்லை; மாறாக தனித்தனி நாடுகளிலும் அது வெற்றி பெறலாம். அக்டோபர் புரட்சி இக் கருது கோளை நடைமுறையில் நிரூபித்தது.

கம்யூனிஸ்ட் அறிக்கையின் உள்ளடக்கத்தை செழுமை செய்கிற வகையில், தொழிலாளி வர்க்கம் மட்டுமே புரட்சிகர வர்க்கம் என்றாலும் மற்ற வர்க்கங்களுக்கும் புரட்சியில் இணைய வேண்டிய நிர்ப்பந்தம் – அவை சிதைவதாலும், அடிமட்ட உழைப்பாளிகளோடு இணைய வேண்டியிருப்பதாலும்- ஏற்படுகிறது; சொத்தின் மீதான அவர்களின் விருப்பங்கள், எதிர்பார்ப்புகள் ஆகிய உள்ளுணர்வுகள் தடுத்தாலும் இது நடந்தேறும் என்ற முடிவுக்கு லெனின் வந்தார்.

அக்டோபர் புரட்சி முடிந்து ஒன்றரை ஆண்டுகள் கழிந்த பின்னர் மூன்றாவது சர்வதேச அகிலம் பிறந்தது. பல்வேறு நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகள், குழுக்கள் அகிலத்தில் இடம் பெற்றன.

ரஷ்யப் புரட்சியின் வெற்றி உலகம் முழுவதும் இருந்த கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு உத்வேகம் அளித்தது. லெனின் வார்த்தைகளில்,

“தொழிலாளர்களுக்கு முக்கியமானது எதுவெனில், இரண்டு போக்குகளின் கோட்பாடுகளை வித்தியாசப்படுத்தி பார்ப்பதாகும். அடிமைப்படுத்தப்பட்ட நாட்டின் முதலாளித்துவம் ஒடுக்குமுறையாளர்களை எதிர்த்துப் போராடுகிறது. நம்மை பொருத்த வரையில், ஒவ்வொரு வகையிலும் மற்ற எவரையும் விட நாம் வலிமையானவர்கள். நாம்தான் ஒடுக்குமுறைக்கு எதிராக மிக வலிமையோடு, சற்றும் இடைவெளியின்றி போராடுகிறவர்கள். ஒடுக்குமுறையின் எதிரிகள். அடிமை தேசத்து முதலாளிகள் தங்களின் சொந்த முதலாளித்துவ தேசியத்திற்காக நிற்பவர்கள். நாம் அதற்கு எதிரானவர்கள்”.

காலனி நாடுகளின் மக்கள் ஆதிக்கத்திற்கு எதிராக போராடும் போது தேச விடுதலைக்காக போராடும் போது அவர்களின் நம்பகமான நண்பனை, தோழமையை புரட்சியில் கண்டனர். அக்டோபர் புரட்சி உலகம் முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் தேசிய உணர்வுகளை, எதிர்பார்ப்புகளை விசிறி விட்டது. கம்யூனிஸ்ட் கட்சிகள் உலகம் முழுவதும் பல பகுதிகளில் வளரத் துவங்கின. 1918 ல் இருந்து 1931 க்குள்ளாக கிட்டத் தட்ட 12 நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சிகள் பிறந்தன. இதில் துருக்கி, இந்தோனேசியா, சீனா, இந்தியா, ஜப்பான், பர்மா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளும் அடக்கம்.

இந்தியாவில் விதைகள்

லெனின் இந்திய நிலைமைகளை ரஷ்யப் புரட்சிக்கு முன்னரே கூர்ந்து கவனித்து வந்தார். 1908 ல் பால கங்காதர திலகர் கைது செய்யப்பட்டதை கண்டித்து மும்பை பஞ்சாலை தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்த போது, இந்திய புரட்சிகர வர்க்கம் அரசியல் நடவடிக்கையோடு இந்திய அரசியல் களத்தில் பிரவேசித்துள்ளது என்று வர்ணித்தார்.

உலகம் முழுவதும் இருந்த புரட்சிக்காரர்கள் போன்றே இந்தியப் புரட்சியாளர்களும் ரஷ்ய புரட்சியால் ஈர்க்கப்பட்டனர். ஜெர்மனி, ஆப்கானிஸ்தான் மற்றும் பல நாடுகளில் இருந்த இவர்களில் பலர் மாஸ்கோ சென்றனர். லெனின் அவர்களை சந்தித்தார். தேசிய விடுதலைப் போராட்டத்தின் முக்கியத்துவத்தை அவர்களுக்கு எடுத்துரைத்தார். தனது ஆதரவினையும் தெரிவித்தார். ஜெர்மனி, ஆப்கானிஸ்தானில் அக்டோபர் புரட்சிக்கு முன்னரே இருந்த இந்திய புரட்சியாளர்கள் சான் பிரான்சிஸ்கோவை தலைமையகமாக கொண்டிருந்தனர். பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்து இந்தியாவை விடுவிப்பதற்காக 1913-14 லிலேயே கத்தார் கட்சியை துவக்கியிருந்தனர்.

அதற்கும் முன்னதாக 1905-07 ல் தலைமறைவாக இருந்த புரட்சியாளர் வட்டம் லண்டனில், பின்னர் பாரீசில் செயல்பட்டது. வெளி நாட்டில் வாழ்ந்த இவர்கள் போல்ஷிவிக் கட்சியோடு நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்தினர்.

முதல் உலகப் போர் உலகம் முழுவதும் புதிய எழுச்சியை உருவாக்கியது. இந்தியாவும் அதற்கு விதி விலக்கு அல்ல. இந்த போரின் போது இந்திய இராணுவத்திற்குள் இந்த கத்தார் கட்சியினர் ஊடுருவி புரட்சிக்கு திட்டமிட்டனர். அவர்கள் கடுமையான அடக்குமுறைக்கு ஆளாயினர். பலர் சிறைச் சாலைக்கு அனுப்பப்பட்டனர். மற்றவர்கள் அந்தமானில் இருந்த இருண்ட செல்களில் அடைக்கப்பட்டனர். ஜாலியன் வாலாபாக் கூட்டத்தில் திரண்ட பெரும் திரள், மக்கள் மத்தியில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக இருந்த கோபத்தின் வெளிப்பாடு. இப்படி வளர்கிற சவாலை நசுக்கவே அமைதியான கூட்டத்தின் மீது அடக்குமுறையை ஏவி விட்டது. பெரும் கொலையையும் நிகழ்த்தியது.

பிந்தைய காலங்களில் இலட்சியங்களில் இருந்து விலகிச் சென்று கட்சியில் இருந்து நீக்கப்பட்டவராயினும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்குவதில் எம்.என்.ராய் செய்த பங்களிப்பை நாம் மறுதலிக்க இயலாது. இந்தியாவில் இயக்கத்தின் உருவாக்கத் தலைவர்களில் ஒருவரான எம்.என்.ராய் மெக்சிகோ கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். அவர் கம்யூனிஸ்ட் அகிலத்தின் செயற் குழுவிற்கு அதன் மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அனுஷிலான் சமிதி  என்ற பரவலாக அறியப்படாத புரட்சிகர குழுவில் இருந்த ராய் ஆயுதங்கள் சேகரிப்பதற்காக மெக்சிகோ சென்றார். அப்போது இந்திய புரட்சியாளர்களுக்கு ஆயுதப் பஞ்சம் இருந்தது. மெக்சிகோவில்தான் சோசலிச கருத்துக்களால் ஈர்க்கப்பட்டார். அதன் உறுப்பினர் ஆனார். பிறகு அதன் செயலாளர் ஆகவும் உயர்ந்தார். இவரின் தலைமையில்தான், இவர் கம்யூனிச கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட பிறகு அந்த சோசலிச கட்சி, மெக்சிகோ கம்யூனிஸ்ட் கட்சியாக மாறியது. தோழர் முசாபர் அகமது ” நானும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும்” என்ற நூலில், ராய் மெக்சிகோ கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதியாக  சென்றாலும் ” மாஸ்கோவில் அவருக்கு கிடைத்த இதமான வரவேற்புக்கும், பாராட்டுகளுக்கும் காரணம் அவர் இந்தியர் என்பதும் மார்க்சிஸ்ட் என்பதுமே ஆகும். இரண்டாவது கம்யூனிஸ்ட் அகிலத்தில், தேசிய, காலனியப் பிரச்சினைகள் குறித்த லெனினின் துவக்க நிலை நகல் மீது விவாதங்கள் நடந்தேறுகிற முடிவு இருந்ததால் இந்திய மார்க்சிஸ்ட் ஆன எம்.என்.ராய் இருப்பு அம்மாநாட்டில் மிக முக்கியமானதாக கருதப்பட்டது” என்கிறார். 

ஏற்கெனவே குறிப்பிட்டது போல, இவையெல்லாம் கம்யூனிச இயக்கத்தின் உலகளாவிய துவக்க காலங்களாக இருந்தன. ஐரோப்பா கண்டம் விதி விலக்கு ஆகும். இந்த கட்சிகள் எதற்கும் வெகு சன அடித்தளம் அப்போது இல்லை. ஓர் இயக்கத்திற்கான தெளிவான கருத்தாக்கமும் இல்லை.

விவசாயிகளும், தொழிலாளர்களும் அதிகமாக இருந்த நிறைய காலனி நாடுகள் வளர்ச்சி பெறாமல் இருந்தன. ஒப்பீட்டளவில் இந்தியா மற்ற காலனி நாடுகளை விட மேம்பட்டதாக இருந்தது. பிரிட்டனின் போர்த் தேவைகள், இந்திய முதலாளிகளை சில உற்பத்தி தளங்களில் இருந்த தொழிற் சங்கிலிகளில் அனுமதிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் ரயில்வே, தகவல் தொடர்பு உள்ளிட்ட கட்டமைப்புத் துறைகளில் பிரிட்டன் முதலீடு செய்தது.

கம்யூனிஸ்ட் கட்சி உதயம்

இப் பின்னணியில் பல நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சி முளை விடுமென்ற நிலை இருந்தது. இந்தியக் கிளை தாஷ்கென்ட் நகரில் அக்டோபர் 17, 1920 ல் உருவானது. முசாபர் அகமது தனது மேற்கூறிய நூலில்,

“எம்.என்.ராய்… அவர்தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை தாஷ்கென்ட் நகரில் துவங்க முன் முயற்சி எடுத்தார்.”

அந்த முதல் கூட்டத்தின் நிகழ்ச்சிப் பதிவேட்டில்,

“இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அக்டோபர் 17, 1920 அன்று துவக்கப்பட்டது”

என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அக் கூட்டத்தில் கலந்து கொண்ட 7 பேர் முகமது ஃஷாபிக் அவர்களை செயலாளர் ஆகத் தேர்ந்தெடுத்தனர். அடுத்த கூட்டம் டிசம்பர் 15, 1920 ல் நடைபெற்றது.

இவ்விரு கூட்டங்களின் நிகழ்ச்சிப் பதிவேடுகள் தாஷ்கென்ட் நகரின் ஆவணக் காப்பகத்தில் இருக்கின்றன. எனினும் இது குறித்து சந்தேகிக்கிறவர்கள் உள்ளனர். வெளி நாட்டில் துவங்கப்பட்டது என்று சொல்லாவிட்டாலும், இந்தியாவில் கம்யூனிச இயக்கத்தின் இலக்குகளை எட்ட அக் கிளை இந்தியர்களால் உருவாக்கப்பட்ட வரலாறை அழித்து விட முடியாது. இயக்கத்தின் துவக்க காலங்களில் கம்யூனிச கருத்துக்களை வெகு சனங்கள் மத்தியில் பரப்புவதே முதன்மையான நோக்கமாக இருந்தது. இக் கட்சியின் முயற்சிகளால்தான் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கைகள், இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடுகளில் – அகமதாபாத், கயா மற்றும் அடுத்து நடந்த மாநாடுகளில்-  சுற்றுக்கு விடப்பட்டன. முழு சுதந்திரம் என்கிற இலக்கை நோக்கி முன்னேறவும், அதற்கான முயற்சிகளை முனைப்போடு காங்கிரஸ் எடுக்கவுமான நிர்ப்பந்தத்தை இந்த அறிக்கைகளின் சுற்று ஏற்படுத்தியது.

முசாபர் அகமது எழுதுகிறார்.

“டிசம்பர் 1921ல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வாழ்க்கையில் ஓர் முக்கியமான நிகழ்வு நடந்தேறியது. கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை அச்சிடப்பட்டு முதல் முதலாக சுற்றுக்கு விடப்பட்டது. இந்திய தேசிய காங்கிரஸ் தனது 36 வது அமர்வை குஜராத் அகமதாபாத் நகரில் நடத்தியது. அதில் கம்யூனிஸ்ட் கட்சியின்  முதல் அறிக்கை பிரதிநிதிகள் மத்தியில் வழங்கப்பட்டன… இந்த அறிக்கை மாஸ்கோவில் அச்சிடப்பட்டது. மனபேந்திர நாத் அதனை எழுதியவர்”

அந்த அறிக்கை இவ்வாறு பிரகடனப்படுத்தியது.

“காங்கிரஸ் புரட்சிக்கு தலைமை தாங்குவது எனில், இந்தியாவின்  அடித்தளத்தையே அசைக்க வேண்டுமெனில், நீங்கள் வெறும் ஆர்ப்பாட்டங்கள், கடும் கூச்சல்கள் என்ற தற்காலிக மகிழ்ச்சிகளோடு மட்டும் நிறுத்தி விடக் கூடாது. தொழிற்சங்கங்களின் உடனடி கோரிக்கைகளை உங்களின் சொந்த கோரிக்கைகளாக முன் வையுங்கள். விவசாயி சங்கங்களின் திட்டத்தை உங்கள் சொந்த திட்டமாக முன் வையுங்கள். எந்த தடைகளாலும் காங்கிரஸ் நிற்காது என்ற காலம் விரைவில் வரும். பொருளியல் முன்னேற்றத்திற்காக உணர்வு பூர்வமாக போராடும் ஒட்டு மொத்த மக்களின் வெல்லற்கரிய சக்தி உங்களுக்கு பின்னால் அணி வகுத்து நிற்கும்” (இந்தியா டுடே, ரஜினி பாமி தத், இரண்டாவது புதுப்பிக்கப்பட்ட பதிப்பு)

ஓர் சின்ன கருவை சுற்றி கட்சி உருவாகியிருந்த நேரத்தில் இதுவெல்லாம் சாதாரண பணி அல்ல.

எல்லா நாடுகளிலுமே கம்யூனிஸ்ட் கட்சிகள் துவங்கப்பட்ட காலங்களில் அவற்றில் உறுப்பினர்கள் குறைவாக இருந்தனர். சிறு குழுக்களாகவே இருந்தனர். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியிலும் இதே நிலைதான். அதன் துவக்க மாநாட்டில் கிடடத்தட்ட 12 பேர் மட்டுமே இருந்தார்கள். ஆனால் அந்த கட்சியே பின்னாளில் ஓர் புரட்சியை அங்கு நடத்தி முடித்தது.

கம்யூனிசம் ஈர்த்த முஹாஜிர்கள்

இதே காலத்தில் ஹிஜ்ரத் இயக்கம் தொடங்கி இருந்தது. பல மொஹாஜிர்கள் இந்தியாவை விட்டு வெளியேறி துருக்கி நோக்கி சென்றனர். துருக்கியில் நுழைய முடியாததால் அவர்களில் பலர் தாஷ்கென்ட்டிற்கு சென்றனர்.

ஹிஜ்ரத் இயக்கம் கிலாஃபத் இயக்கத்தில் இருந்து முகிழ்த்ததாகும். துருக்கியில் தனது முயற்சிகளுக்காக இஸ்லாமியர்களுக்கு தந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற பிரிட்டிஷ் அரசு தவறியதால் இந்தியா தங்களுக்கு பாதுகாப்பு தருவதற்கு பொருத்தமான நாடு இல்லை என்ற உணர்வு இஸ்லாமியர்களுக்கு ஏற்பட்டது.

அவர்கள் நாட்டை விட்டு வெளியேறத் துவங்கினர். பட்டாபி சீதாராமய்யா தனது “இந்திய தேசிய காங்கிரசின் வரலாறு” என்ற நூலில் 18000 இஸ்லாமியர்கள் இந்தியாவை விட்டு வெளியேறியதாக குறிப்பிடுகிறார்.  சுயமாய் வேறு தேசங்களில் தஞ்சம் புகுந்தவர்கள் (ஹிஜ்ரத்) முஹாஜிர்கள் என்று அழைக்கப்பட்டனர். சில முஹாஜிர்கள் ஆப்கானிஸ்தானில் தஞ்சம் புகுந்தாலும் அவர்கள் துருக்கிக்கு ஆதரவாக அங்கு போய் போர் புரிவது என்பதை விரும்பினார்கள். துருக்கியில் நுழைய முடியாத முஹாஜிர்கள் துர்கிஸ்தான் (இப்போதைய உஸ்பெக்கிஸ்தான்) சென்றனர். அவர்களில் பலர் தாஷ்கெண்டிலும், மாஸ்கோவிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தனர்.

கிழக்கு உழைப்பாளிகளுக்கான பல்கலைக் கழகத்தில் (University of Toilers of the East) படிப்பை முடித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த முஹாஜிர்கள் இந்தியாவிற்கு திரும்புவது என்று முடிவெடுத்தனர். அவர்களில் 10 பேர் தாஷ்கென்ட்டில் இருந்து இந்தியாவிற்கு வந்து தலைமறைவாக கட்சி பணியாற்ற புறப்பட்டனர். இந்தியாவிற்குள் நுழையும் போது நான்கு பேர் – மீர் அப்துல் மஜீத், ரபீக் அகமது, ஹபீப் அகமது, பெரோசுதீன் மன்சூர்- கைது செய்யப்பட்டனர். காவல்துறை கண்காணிப்போடு அவர்கள் பெஷாவருக்கு அனுப்பப்பட்டார்கள். இன்னொரு மூன்று பேர் கொண்ட முஹாஜிர் குழு சித்ரால் எல்லை அலுவலகத்தில் சரண் அடைந்தனர். அவர்களும் பெஷாவருக்கு அனுப்பப்பட்டனர். பின்னர் மற்ற சில முஹாஜிர்களும் கைது செய்யப்பட்டனர். கம்யூனிஸ்ட்டுகள் மீது வழக்குகள் போடுவதில் போய் முடிந்தது. முதலாவது, இரண்டாவது பெஷாவர் சதி வழக்குகள் அவை.

இவ் வழக்குகள் 1922-24 காலத்தில் ஓர் செய்தியை தெரிவித்தன. தொழிலாளி வர்க்கமும், அதன் புரட்சிகர கட்சியும் இந்திய அரசியல் களத்தில் இறங்கி விட்டது என்பதே அது. இக் கட்சியின் தாக்கத்தால் பல்வேறு அச்சு இதழ்கள் மக்கள் மத்தியில் சுற்றுக்கு வந்தன. அவை லாகூர், பம்பாய், கல்கத்தா ஆகிய நகரங்களில் இருந்து வெளி வந்தன. சற்று தெளிவின்மையோடு இருந்தாலும் அறிவியல் பூர்வமான சோசலிசத்தை அந்த இதழ்கள் முன்வைத்தன. இது மாநிலங்களில் பல குழுக்கள் உருவாவதற்கான உந்துதலை தந்தது. கான்பூர் சதி வழக்கு அடுத்து போடப்பட்டது. முசாபர் அகமது, எஸ்.ஏ.டாங்கே, சௌஹத் உஸ்மானி மற்றும் பலர் இவ் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டனர்.

வளர்ந்த கதை

டிசம்பர் 1925 ல் கம்யூனிஸ்ட்டு குழுக்களின் மாநாடு சிங்கார வேலர் தலைமையில் கான்பூரில் நடைபெற்றது. அம் மாநாட்டின் தீர்மானம்,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கம் பம்பாயை தலைமையகமாக கொண்டு அமைவதாக அறிவித்தது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கம்யூனிஸ்ட்டுகளை முடக்கி செயல்பட விடாததால் ஓர் வெளிப்படையான மேடை ஒன்று தொழிலாளர் விவசாயிகள் கட்சி (Workers and Peasants Party) என்ற பெயரில் உருவாக்கப்பட்டது. அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (AITUC) ஏற்கெனவே 1920 ல் உருவாகியிருந்தது. கம்யூனிஸ்ட்டுகள் அந்த அமைப்பில் பெரும் பங்களிப்பை நல்க வேண்டியிருந்தது. இதே காலத்தில் தேசத்தின் சில பகுதிகளில் விவசாயி அமைப்புகள் உருவாகின. பின்னர் 1935 ல் அகில இந்திய மாணவர் கூட்டமைப்பும் (AISF) பிறந்தது. அது தோன்றி சில ஆண்டுகளிலேயே கம்யூனிஸ்ட்டுகளின் செல்வாக்கு வரம்பிற்குள் வந்தது.

ஆனாலும் ஓர் மத்திய கட்டமைப்பை கொண்ட கட்சி மீரட் கைதிகள் விடுதலையான பின்னர் 1933 ல்தான் அமைந்தது. கம்யூனிஸ்டுகளை ஒடுக்குவதற்காக மீரட் சதி வழக்கு போடப்படடாலும், அது கம்யூனிஸ்ட்டுகள் தங்களின் கருத்துக்களை பரப்புரை செய்வதற்கான வாய்ப்பாக அமைந்து விட்டது. கட்சி தனக்கென்று ஓர் அறிக்கையை வெளியிட்டு 1934 ல் கம்யூனிச அகிலத்தோடும் இணைந்து கொண்டது.

துவக்கத்தில் இருந்தே கம்யூனிஸ்ட் இயக்கம் பல் முனை சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. வர்க்க எதிரிகளிடம் இருந்து தொடர்ச்சியான தாக்குதல்கள் இருந்தன. மட்டுமின்றி கட்சிக்கு உள்ளேயும் பல்வேறு வழுவல்கள் மற்றும் தவறான புரிதல்கள் ஏற்பட்டன. மார்க்சும் எங்கெல்சும் தங்களது காலத்திலும் இது போன்ற கருத்துக்களை எதிர்த்து போராடினார்கள். இதற்கு பின்னர் திருத்தல்வாதம், இடது அதி தீவிர வாதம் மற்றும் அந்நிய போக்குகள் ஆகியவற்றையும் கம்யூனிச இயக்கம் எதிர்கொண்டது.

இந்தியாவிலும் இத்தகைய சவால்களை இயக்கம் சந்திக்க வேண்டியிருந்தது. பிரிட்டிஷ் ஆட்சி தனது சக்தி முழுவதையும் திரட்டி இயக்கத்தை நசுக்க முனைந்தது. சோசலிசம் சம்பந்தமான எதையும் அச்சிடவும், சுற்றுக்கு விடவும் கடும் தடைகள் விதிக்கப்பட்டாலும் அத்தகைய கருத்துகளின் பரவலை கட்டுப்படுத்த இயலவில்லை. ஆனாலும் அத்தகைய பிரசுரங்கள் அரியதாய் இருந்ததால் இங்கு கிடைத்தவை கூர்மையான கருத்துக்களை கொண்டவையாக இல்லை. இதனால் குழப்பங்களும் ஏற்பட்டது என்றாலும் கொள்கை உறுதி, அர்ப்பணிப்பின் காரணமாக தொழிற்சங்க இயக்கத்தை வளர்த்தெடுப்பதில் கம்யூனிஸ்ட்டுகள் குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றினர்.

இந்தியாவில் கம்யூனிச இயக்க வளர்ச்சியில் இன்னும் இரண்டு காரணிகள் முக்கியப் பங்காற்றின. முதலாவதாக, தீவிர வாத பாதையை தெரிவு செய்திருந்த புரட்சியாளர்கள் அதை விடுத்து கம்யூனிஸ்ட்டுகளின் படையில் இணைந்தனர். தீவிரவாத வழிமுறைகள் தீர்வைத் தராது என உணர்ந்து, கம்யூனிச கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு கட்சியிலும் சேர்ந்தனர். இவர்களில் அனுசீலன், ஜூகாந்தர், பகத் சிங்கின் இந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிக்கன் கட்சி மற்றும் சில குழுக்கள் இடமிருந்து ஈர்க்கப்பட்டவர்களும் உண்டு. இதனால் இந்திய சுதந்திர இயக்கத்தின் புரட்சிகர பாரம்பரியத்தின் சிறந்த அமசங்களை கம்யூனிஸ்ட் கட்சி உள்வாங்க முடிந்தது.

மத்திய தலைமை, கட்டமைப்பு ஆகியன அமைந்த சில ஆண்டுகளுக்குள்ளேயே கம்யூனிஸ்ட் கட்சி தேச விடுதலைப் போராட்டத்தில் ஓர் முக்கிய பங்கை ஆற்ற வேண்டியிருந்தது. அது போல அறிவியல் பூர்வமான சோஷலிச சிந்தனைகளையும் பரப்ப வேண்டியிருந்தது. பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சி பலவீனமானதாக இருந்தாலும் இந்திய கம்யூனிஸ இயக்கத்தின் வளர்ச்சிக்கு நல்கிய பங்களிப்பை மறக்க இயலாது. 1926 லிருந்தே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியோடு இடைவிடா தொடர்பில் இருந்தனர். அவர்களில் பலர் நேரடியாகவே இயக்கப் பணிகளில்  இணைந்திருந்தனர். அவர்களில் ஒருவர் ரஜனி பாமி தத். பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவரான அவர் எழுதிய “இந்தியா டுடே” பிரிட்டிஷ் இந்தியா பற்றிய, அதன் சுரண்டல் குறித்த அப்பழுக்கற்ற புரிதலுக்கு உதவியது. பிரிட்டன் கட்சி அங்கு பயின்ற மாணவர்கள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அம் மாணவர்களில் பலர் இந்தியா திரும்பியதும் இயக்கத்தில் இணைந்தனர். பிரிட்டன் கட்சி உறுப்பினர்கள் பலர் (கம்யூனிச அகிலத்தால் அனுப்பப்பட்டு) இங்கே வந்து உதவி புரிந்தார்கள். சிலர் புனைப் பெயர்களில் வந்தார்கள். தொழிற்சங்கங்களில், இதர அமைப்புகளில் பணி ஆற்றினார்கள். சிலர் பிரிட்டிஷ் அரசால் கைதுக்கும் கூட ஆளானார்கள். இப்படி வந்தவர்களில் பென் பிராட்லி, பிலிப் ஸ்பிராட், ஜார்ஜ் அல்லிசன் ஆகியோரும் உண்டு. சிலர் மீரட் சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டனர். இத்தகைய போக்குகள் அனைத்தும் இணைந்து கம்யூனிஸ்ட் கட்சியை முன்னெடுத்து சென்றன.

சோதனைகளும் வேதனைகளும்…

கம்யூனிச இயக்கம் இக் காலத்திற்கு பின்னர் பல்வேறு சோதனைகளையும் வேதனைகளையும் கடக்க வேண்டியிருந்தது. 1930 களின் பெரும் பகுதியும், 40 களின் துவக்கமும் தலை மறைவு காலமாக கழிந்தது. 1942 ல்,  பாசிச எதிர்ப்பு போர் காலத்தில்தான், சட்ட பூர்வ இயக்கமாக இது மாற முடிந்தது. சுதந்திரத்திற்கு பின்னரும் கூட புதிய ஆட்சியாளர்கள் (இந்திய முதலாளிகள்) கரங்களில் கடும் அடக்குமுறையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஆனாலும் இயக்கத்தைப் பணிய வைக்க நடந்த முயற்சிகள் எதுவும் இயக்கத்தின் வளர்ச்சியை தடுக்க இயலவில்லை.

1920 களில் இயக்கம் துவங்கப்பட்ட காலத்தோடு ஒப்பிடுகையில் நிறைய தூரம் பயணித்து விட்டோம். இயக்கத்தின் இன்றைய வயது, இந்தியா போன்ற பல தேசிய இனங்கள், இனக் குழுக்களை கொண்ட தேசத்தில் வரலாற்றின் அளவுகோலில் நீண்ட காலம் இல்லை. இத்தகைய பல்வேறு குழுக்கள் மத்தியில் ஒற்றுமையை கட்டுவதில் கம்யூனிஸ்ட் கட்சி பெரும் பங்கை ஆற்றியுள்ளது.

இயக்கம் அந்நிய வர்க்க தாக்கங்களை, திரிபுகள், வழுவல்களை எதிர்கொள்ளும் போது கடுமையான தவறுகளை செய்துள்ளது. உதாரணமாக, சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் முதலாளிகளின் பங்களிப்பு பற்றி லெனின் மதிப்பீட்டை கணக்கில் கொள்ளாதது. இதனால் தொழிலாளர் வர்க்க கட்சியின் சுயேட்சையான பங்கை பின்னுக்குத் தள்ளி சில நேரங்களில் வலதுசாரி நிலைகளுக்கு இரையான சூழ்நிலைகள் ஏற்பட்டன. இரண்டாம் உலகப் போர் முடிவில் திருத்தல் வாத பள்ளியின் தாக்கத்திற்கு ஆளானது.

அதற்கு பிந்தைய காலத்தில் வெகுசன எழுச்சி இருந்தது. கம்யூனிஸ்டுகள் அதில் குறிப்பிடத் தக்க பங்கை ஆற்றினர். இந்திய கப்பற்படை கைதிகளை சிறையில் இருந்து விடுதலை செய்யக் கோரி பெரும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. கப்பற்படை புரட்சியும், அதற்கு தொழிலாளர் மத்தியில் கிட்டிய ஆதரவும் காங்கிரஸ் கட்சிக்குள் அதிர்ச்சி அலைகளை உருவாக்கி இருந்தது. வெகுசன எழுச்சி அலைகள் முதலாளிகளை அச்சுறுத்தியது. இது தொழிலாளி வர்க்கத்தின் கைகளுக்கு புரட்சியின் தலைமையை மாற்றிவிடும் என்று அஞ்சினர். கம்யூனிஸ்ட்டுகள் அந்த நேரத்தில் கடைப்பிடித்த நடைமுறைத் தந்திரங்களை இங்கு விரிவாக ஆய்வு செய்யாவிட்டாலும் மற்ற நாடுகளின் அனுபவங்களோடு ஒப்பிட முடியும். தேசிய விடுதலைப் போராட்டத்தில் எந்தெந்த நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தலைமை வகிக்கவில்லையோ அங்கெல்லாம் அவர்கள் சோஷலிச பாதைக்கு புரட்சியை முன்னெடுத்துச் செல்ல இயலவில்லை. முதலாளிகள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பின்னர் இக் கடமை மிக கடினமாக மாறி உள்ளது.

இரண்டாவது கட்சி காங்கிரசுக்குப் பின்னர் நாமே இடது அதி தீவிர வாதத்திற்கு இரையாகி பெரும் விலையையும் கொடுத்தோம். நாம் அதை சரி செய்ய முயற்சித்த போது இன்னொரு வகையான, வலது அபாயம் எழுந்தது. வலது அபாயத்திற்கு, அதாவது செல்வாக்கு மிக்க தலைமையின் வழிக்கு, எதிரான போராட்டம் கட்சிக்குள் 10 ஆண்டுகள் நடந்தேறியது. கடைசியில் அது கட்சி பிளவுபடுவதில் முடிந்தது. பிந்தைய நிகழ்வுகள் நமது நிலை சரியென நிரூபித்தன.

தலை நிமிர்வோடு

பிளவுக்குப் பின்,  அதாவது சி.பி.ஐ (எம்) உருவான பின்பான காலத்தில் நாம் சர்வதேச அளவிலான சவால்களை எதிர்கொண்டோம். வெவ்வேறு நேரங்களில்  சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியும், சீன கம்யூனிஸ்ட் கட்சியும் நமது கட்சி மீது தாக்குதல் தொடுத்தன. ஆனால் நாம் உறுதியாக சொந்த கால்களில் நின்றோம். எந்தவொரு கட்சியின் உத்தரவுகளையும் ஏற்க மாட்டோம்; எங்கள் பாதையை எங்கள் நாட்டில் உள்ள திட்ட வட்டமான யதார்த்தங்கள், நிலைமைகளைப் பொருத்து வகுத்துக் கொள்வோம் என்றோம். தத்துவார்த்த விவாதங்கள், சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பெரும் இயக்கங்களோடு முட்டி நிற்றல், சர்வதேச அரங்கில் நமக்கு ஏற்பட்ட தனிமை ஆகியவற்றோடு ஆளும் வர்க்கங்களுக்கு எதிராக உள் நாட்டில் நாம் நடத்திய போராட்டங்களும் இணைந்து கொண்டன. இவையெல்லாம் கட்சியை கசப்பான சவால்களை எதிர்கொள்ள பயிற்றுவித்தன.  இத்தகைய காரணங்களால்தான் பல கம்யூனிஸ்ட் கட்சிகள் வீழ்ந்த போதும், பல கம்யூனிச அரசுகள் அலைகளில் சிக்கி கவிழ்ந்த போதும் சி.பி.ஐ (எம்) உறுப்பினர்கள் ஊசலாடவில்லை. குழப்பம் அடையவில்லை. இந்தியப் புரட்சியை முன்னெடுத்து செல்கிற உறுதியோடு தலை நிமிர்ந்து நின்றனர்.

17வது மக்களவை தேர்தல் முடிவுகள்: உறுதிப்படுத்தப்பட்ட வலதுசாரி திருப்பம்

உ.வாசுகி

நடந்து முடிந்த 17வது மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தீர்மானகரமான வெற்றியை ஈட்டி ஆட்சியை அமைத்திருக்கிறது. பதிவு செய்யப்பட்ட வாக்குகளில் தனியாக 37.4ரூ,  கூட்டணியாக 45ரூ பெற்றிருக்கிறது. 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அது 50ரூ வாக்கு சத வீதத்தைத் தாண்டியுள்ளது. இமாசல பிரதேசத் தில் 69.11ரூ, உத்தராகண்டில் 61ரூ பெற்றுள்ளது. தமிழகம், கேரளா, ஆந்திரா, ஓரளவு தெலுங் கானாவில் இந்தப் போக்கு பிரதிபலிக்கவில்லை. மறுபக்கம் இடதுசாரிகள் பெரும் தோல்வியை சந்தித்துள்ளனர். அவர்களின் வாக்கு சதவீதம் சரிந்துள்ளது. இவை குறித்துப் பரிசீலித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு, இந்தச் சரிவைத் தடுத்து நிறுத்தி, நிலைமைகளில் முன்னேற்றம் காணவும், அடுத்து மக்கள் மீது வரவிருக்கும் கடும் தாக்குதல்களை எதிர்கொள்ள வும் சில கடமைகளை முன்மொழிந்திருக்கிறது.

உலக அளவில் முதலாளித்துவத்தின் தொடர் நெருக்கடி  பல்வேறு நாடுகளில் அரசியலில் வலதுசாரி திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பீப்பிள்ஸ் டெமாக்ரசியில் பேராசிரியர் பிரபாத் பட்நாயக் இதைப் பட்டியலிட்டுள்ளார். இஸ்ரே லின் நேதன்யாகு மீண்டும் தேர்வு,  துருக்கியில் எர்டோகன் மீண்டும் தேர்வு, ஆஸ்திரேலியாவில் கன்சர்வேட்டிவ் கட்சி அமோக வெற்றி. லத்தீன் அமெரிக்காவின் பல நாடுகளில் வலதுசாரிகள் முன்னேறி வருகிறார்கள். பிரேசிலில் போல் சனோரோ இதற்கு மோசமான ஓர் உதாரணம். ஐரோப்பிய ஒன்றிய தேர்தல்களில் பிரான்சில் லே பென் தலைமையிலான  தீவிர வலதுசாரி கட்சி மிகப்பெரும் கட்சியாகவும், இத்தாலியில் மாட்டியோ சால்வினியின் மிக மோசமான பிற்போக்கான கட்சி அந்நாட்டின் ஆகப்பெரும் கட்சியாகவும் தேர்வாகியுள்ளன. ஜெர்மனியில் ஆல்டர்னேடிவ் ஃபார் ஜெர்மனி என்ற வலதுசாரி கட்சி 10ரூ வாக்குகளைக் கூடுதலாகப் பெற்றிருக் கிறது. ஹங்கேரியில் விக்டர் ஓப்ரான் தலைமை யிலான வலதுசாரி கட்சி வெற்றிபெறும் நிலை யில் உள்ளது. இங்கெல்லாம் நவீன தாராளமய கொள்கைகளின் தொடர் விளைவுகளால் அனைத்துப் பகுதி மக்களும் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறார்கள். வலதுசாரி சக்திகள், பிரச்னைகளை மறைப்பது என்பதை விட, பிரச்னைகளுக்குக் காரணம் புலம்பெயர் தொழிலாளி கள், கறுப்பின மக்கள், இசுலாமியர்கள் என்று கைகாட்டி பெரும்பான்மை மத/இன/உள்நாட்டு மக்களின் ஆதரவைப் பெறுகின்றனர்.

வெகுமக்கள் அதிருப்தியை சரியான அரசியல் பாதையில் கொண்டு செல்ல இடதுசாரிகள் வலுவாக இல்லாத போது, மாயத்தோற்றங் களால், வார்த்தை ஜாலங்களால், இன, மத, தேசிய வெறியைக் கிளப்பும் வலதுசாரிகள் அதை அறுவடை செய்கிறார்கள் என்ற மதிப்பீடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடந்த அகில இந்திய மாநாட்டின் அரசியல் தீர்மானத்திலும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. எந்த நவீன தாராளமயப் பாதை மக்களுக்குக் கொடுமையான பிரச்னைகளை ஏற்படுத்துகிறதோ, அதே கொள் கைகளைத்தான் வலதுசாரி கட்சிகளும் கடைப் பிடிக்கிறார்கள் என்பது பல்வேறு காரணிகளால் மறைக்கப்படுகிறது. இந்த சர்வதேச போக்கினைப் போலவே இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட வலதுசாரி அரசியல் திருப்பம் தற்போது வலுவாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

பாஜகவின் தீவிர மதவெறி, தேசியவாதப் பிரச்சாரம்  

செல்லா நோட்டு, ஜிஎஸ்டி, வேலையின்மை, விவசாயிகள் நெருக்கடி உள்ளிட்ட ஏராளமான வாழ்வுரிமை பிரச்னைகளில் பாஜக அரசுக்கு எதிராக மக்களின் கடும் அதிருப்தி தலை தூக்கி யிருந்ததை வெளிப்படையாகக் காண முடிந்த போதும், அது ஏன் தேர்தலில் பிரதிபலிக்கவில்லை? பாஜகவுக்கும், அதன் கூட்டணிக்கும் வாக்குகள் எப்படி குவிந்தன? என்பது முக்கியமான கேள்வி.  ஆர்.எஸ்.எஸ்.சின் வழிகாட்டுதலில் தேர்தலை சந்தித்த பாஜக, 2014 தேர்தலைப் போல் வளர்ச் சியை மையப்படுத்தி பிரச்சாரத்தைக் கட்டமைக்க வில்லை. ஐந்தாண்டுகளில் அனைத்து துறைகளி லும் பெரும் தோல்வியை அடைந்துள்ள சூழலில்  அது சாத்தியமும் இல்லை. எனவே 2019ல் தேசத் தின் பாதுகாப்பு, பாகிஸ்தானுக்கு பதிலடி, அதை  மோடியால்தான் செய்ய முடியும் என்கிற ரீதியில் ‘இந்து’ இந்தியாவைப் பாதுகாக்க ‘இசுலாமிய’ பாகிஸ்தானை முறியடிக்க வேண்டும் என்று எழுப்பப்பட்ட பாஜகவின் தீவிர மதவெறி, தேசியவாத குரல் வலுவாக எடுபட்டுள்ளது. 5 ஆண்டுகளில் நடந்த  சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல்களும், பசு பாதுகாப்பு, கர் வாப்சி, லவ் ஜிகாத் கருத்தியல் பிரச்சாரங்களும் இதற்குக் களம் அமைத்துக் கொடுத்துள்ளன. 

தேசம், தேசிய அரசு, தேசிய உணர்வு போன் றவை முதலாளித்துவ வளர்ச்சியின்போது முழு மைப்பட்ட கருத்தியல்கள். இவற்றுக்கு வர்க்க பரிமாணம் உண்டு. ஆளும் வர்க்கம் தனது நலனுக்காக இவற்றைப் பயன்படுத்தும். எனவே தொழிலாளி வர்க்கத்தின் கண்ணோட்டத்தி லிருந்து இவற்றின் உள்ளடக்கத்தை வரையறை செய்ய வேண்டும். இந்த வித்தியாசத்தைக் கணக்கில் எடுக்காமல் தேசியம் என்ற ஆளும் வர்க்கத்தின் ஒற்றை வார்த்தையில் வீழ்ந்து விட முடியாது. தீவிர தேசியம், தேசிய வெறி, மதவெறி யின் அடிப்படையிலான கலாச்சார தேசியம் போன்ற கருத்தியல்கள் இந்துத்வ கோட்பாட்டின் அம்சங்கள் என்பதைப் பார்க்கத் தவறக் கூடாது.

புல்வாமா தீவிரவாதத் தாக்குதல் அதன் அனைத் துப் பரிமாணங்களிலும் தேசிய வெறியை ஏற்ற பயன்படுத்தப்பட்டது. பாலாகோட்டில் இந்திய விமானப்படை கொடுத்த பதிலடி பெருமிதம் ஏற்படுத்த உதவியது. இதோடு சேர்த்து, இதனை எதிர்கொள்ள, பலமற்ற காங்கிரஸ் உதவாது,  தேசத்துக்கு வலுவான தலைவர், பாதுகாவலர் தேவை, அது மோடி தான் என்ற வகையில் பிரச்சாரம் முன்வைக்கப்பட்டது. தொகுதி வேட்பாளர் யாராக இருந்தாலும் பரவாயில்லை. மோடிக்கு வாக்களியுங்கள் என்பதே ஜனாதிபதி தேர்வு போல பிரச்சார உத்தியாக அமைந்தது. சவுகிதார் என்று பெயர் சூட்டிக் கொண்டதோ, பாலாகோட்டில் தாக்குதல் தொடுக்க இந்திய விமானப்படையே தயங்கிய போது, எனது அடிப்படை அறிவில் பட்டதை அதிகாரிகளுக் குச் சொல்லி தாக்குதல் நடத்த வழி காட்டினேன் என்று மோடி கூறியது, ஒரு புறம் கேலிக்கு உரிய தாக இருந்தாலும்,  கவனமாகத் திட்டமிடப்பட்ட பிரச்சாரம் என்பது தெளிவாகிறது. பாஜகவின் ஒட்டுமொத்த பிரச்சாரம் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் பரிவாரங்களின் கதை வசனம் இயக்கம் தயாரிப்புதான். உதாரணமாக, இமாச்சல பிரதேசத் தில் 4 தொகுதிகளிலும் லட்சக்கணக்கான வாக்கு கள் வித்தியாசத்தில் பாஜக வெற்றி பெற்றிருக் கிறது. அநேகமாக ஒவ்வொரு குடும்பத்திலும் ஆயுத படையில் பணியாற்றுபவர்கள் அல்லது ஓய்வு பெற்றவர்கள் அல்லது போரில் கணவனை இழந்த பெண்கள் உள்ளனர். இப்பிரச்சாரம் அவர்கள் மத்தியில் வெகுவாக எடுபட்டிருக்கிறது. இத்தகைய நிலைமை வாழ்வுரிமை பிரச்னை களைப் பின்னுக்குத்தள்ளியிருக்கிறது.

இது சமூக வலைத்தளத்தின் மூலம் நுட்பமாக மக்கள் மத்தியில், இளைஞர்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சி யும், புதிய தகவல்-தொடர்பு சாதனங்களும் பயன்படுத்தப்பட்டு, 25 கோடி பேருக்கு அவரவர் மொழியில், தனிப்பட்ட முறையில் செய்தி அனுப் பப்பட்டிருக்கிறது. மிகப்பெரிய அளவிலான, சிக்கலான புள்ளிவிவரங்களை படு வேகத்தில் ஒழுங்குபடுத்தி, ஆய்வு செய்து கொடுக்கும் பிக் டேட்டா அனலிட்டிக்ஸ் (அதிக அளவிலான புள்ளிவிவரங்களை அலசி ஆராயும்) முறை பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

உயர் கல்வி நிறுவனங்கள், அரசியல் சாசன அடிப்படையில் உருவாக்கப்பட்ட நிறுவனங்கள், நீதித்துறை, தேர்தல் ஆணையம், மத்திய புலனாய்வு பிரிவு, ரிசர்வ் வங்கி என பல்வேறு இடங்களில் தலைமைப் பொறுப்புகளில் ஆர்.எஸ்.எஸ். நபர் கள் அமர்த்தி வைக்கப்பட்டார்கள். தீவிர மத வெறி, தேசிய வெறி உணர்வுகளை உருவாக்கித் தக்க வைப்பதில் இந்நிறுவனங்கள் முக்கிய பங்கு வகித்தன. 

கார்ப்பரேட்டுகளின் ஆதரவும், பணப் பயன்பாடும்

இந்திய கார்ப்பரேட்டுகளும், பெரும் தொழில் நிறுவனங்களும் மிகப்பெரும் அளவில் பாஜக வுக்கும், மோடிக்கும் ஆதரவு அளித்துள்ளனர். மொத்த தேர்தல் செலவில் 45ரூ (சுமார் ரூ.27,000 கோடி) பாஜகவால் மட்டுமே செலவழிக்கப் பட்டிருக்கிறது. தேர்தல் செலவினங்களை தேர்தல் ஆணையமே செய்திட வேண்டும். அதுவரை வேட்பாளர் செலவுக்கு மட்டுமல்ல; கட்சிகளின் தேர்தல் செலவுக்கும் உச்சவரம்பு வைக்க வேண் டும் என்ற மார்க்சிஸ்ட் கட்சியின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டால், பொருளாதாரத்தில் ஓரளவு சம தளத்தில் நின்று கட்சிகள் போட்டியிட முடியும். ஆளும் கட்சி என்ற அடிப்படையிலும், மிக வெளிப்படையான ஆளும் அரசியல்வாதி கள்- அதிகார வர்க்கம்- கார்ப்பரேட்டுகளின் கள்ளக் கூட்டணி (குரோனி கேபிடலிசம்) காரண மாகவும், கடந்த 5 ஆண்டுகளில் மிகப் பெரும் நிதியாதாரம் பாஜகவின் கைக்கு வந்திருக்கிறது.

மோடியின் ஆட்சியில் முகேஷ் அம்பானியின் தொழில் சாம்ராஜ்யம் 23 பில்லியன் டாலர் மதிப்பிலிருந்து 55 பில்லியன் டாலராக உயர்ந் திருக்கிறது. அதாவது, அம்பானியின் வாழ்நாள் காலத்தில் சேர்த்த சொத்தை விட, மோடியின் கடந்த 5 ஆண்டு கால ஆட்சி அவருக்கு அதிக சொத்தைக் கொடுத்திருக்கிறது. மோடி குஜராத் முதலமைச்சராக இருந்த போதே கவுதம் அதானி யின் சொத்து 5000ரூ உயர்ந்தது. 2014-18ல் அது 4 மடங்குக்கு மேலாக அதிகரித்து 2.6 பில்லியன் டாலராக உள்ளது. பாபா ராம்தேவின் பதஞ்சலி சாதாரணமாக ஆரம்பித்து, தற்போது 2018ல் 6 பில்லியன் டாலர் பிசினசாக மாறி, இந்தியாவின் முதல் 20 பணக்காரர்களில் ஒருவராக ராம்தேவ் ஆகிவிட்டார்.  தேர்தல் பத்திரங்கள் மூலம் வந்த ரூ.4,794 கோடி நன்கொடையில் சுமார் 95ரூ பாஜகவுக்கே சென்றிருக்கிறது.

சமூக ஊடகத்துக்கு, விளம்பரத்துக்கு, நமோ டிவி துவங்கி நடத்துவதற்கு, ஊழியர்களும், பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களும் தங்கிப் பணியாற்றவும், கட்டமைப்பு வசதிகளுக்கும், உப கரணங்களுக்கும்,  ஊடகங்களுக்கும் என கோடிக் கணக்கில்  பாஜகவால் பணம் செலவிடப்பட்டிருக் கிறது. பல மாநிலங்களில் இதர கட்சியின் முன்னணி ஊழியர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கவுன்சிலர் கள் விலைக்கு வாங்கப்பட்டிருக்கின்றனர். மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் ஸ்லீப்பர் செல்லாகப் பணியாற்ற பாஜக ஊழியர்களை அனுப்பியுள்ளனர்.

வாக்காளர் பட்டியலில், ஒரு பக்கத்துக்கு ஒருவர் பொறுப்பு, அதாவது ஒரு பக்கத்தில் உள்ள வாக்காளர்களின் ஆதரவைப் பெற செயல்படு வதற்கு ஒருவர் பொறுப்பு எனப் போடப்பட்ட னர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வேட் பாளர்கள் பெரும்பாலான தொகுதிகளுக்கு இறுதி செய்யப்பட்டு, அவர்களை வெற்றி பெற வைக்க, ஓராண்டிலிருந்து இரண்டு ஆண்டுகள் வரை ஆர்.எஸ்.எஸ். ஊழியர்கள் வெவ்வேறு மாநிலங்களிலிருந்து வந்து தங்கிப் பணியாற்றிய உதாரணங்கள் உண்டு.  குடும்பங்களை நேரிலும் சந்தித்தனர். வாக்களித்தால் அந்தக் குடும்பத்துக்கு வேண்டிய அரசு நலத் திட்டங்களை வாங்கிக் கொடுப்பதாக வாக்குறுதி அளித்துள்ளனர். சில தொகுதிகளில் எதிர்கட்சியினரின் போட்டி வேட்பாளரை நிறுத்த பாஜக நிதி செலவழித் திருக்கிறது. மஹாராஷ்டிராவில் ஓவைசியின் எம்.ஐ.எம். கட்சியும், பிரகாஷ் அம்பேத்கரின் பகுஜன் மஹாசங் கட்சியும் சேர்ந்து  வாஞ்சித் பகுஜன் அஹாதி என்ற அணியாக நின்று தேர்தலை சந்தித்தனர். இது மதச்சார்பற்ற கட்சிகளின் வாக்குகளைப் பிரித்தது. ஹெலிகாப்டரில் பறந்து பறந்து இவர்கள் பிரச்சாரம் செய்ய பாஜக நிதி கொடுத்திருப்பார்கள் என்ற ஊகங்கள் நிலவு கின்றன.

மேற்கு வங்கத்தில்  ராய்கஞ்ச் தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுவதில்லை என்ற முடிவை எடுத்ததை ஒட்டி, நீண்ட கால காங்கிரஸ் தலை வர் மறைந்த  பிரியரஞ்சன் தாஸ் முன்ஷியின் மனைவி தீபா தாஸ் முன்ஷியைத் தாங்கள் ஆதரிப்ப தாகக் கூறி பாஜக போட்டியிட வைத்தது.  அதே போல் கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் சார்பில் 3 முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற அம்பரீஷின் தொகுதியான மாண்டியாவை மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு விட்டுக் கொடுத்த சூழலில், அம்பரீஷின் மனைவி சுமலதாவை சுயேச்சை வேட்பாளராக நிற்க வைத்துத் தன் ஆதரவைத் தெரிவித்தது. அவரை வெற்றி பெறவும் வைத்தது. இவ்வாறு பல்வேறு தளங்களில் ஆர்.எஸ்.எஸ்./பாஜகவின் உத்திகள் அமல்படுத்தப்பட்டன. 

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு

நேர்மையான, நியாயமான தேர்தலை நடத் தும் வகையில் தேர்தல் ஆணையத்தின் செயல் பாடுகள் இருக்கவில்லை. பாஜக தரப்பில், குறிப்பாக மோடி, அமித் ஷா போன்றவர்கள், தீவிரவாத தாக்குதல்களை அரசியலாகப் பயன்படுத்தியது; சட்ட விரோதமாக நமோ டிவியைத் துவக்கியது; மத வெறியை எழுப்பும் வகையில் பேசியது போன்றவை குறித்து எதிர்க்கட்சிகள் அளித்த புகார்களை தேர்தல் ஆணையம் நிராகரித்தது. இத்தகைய அனுபவத்தை வைத்துப் பார்க்கும் போது இனியும் பதவியில் இருக்கும் அரசாங்கம் மட்டுமே தேர்தல் ஆணைய உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் முறை நீடிக்கக் கூடாது. லோக் பால் உறுப்பினர்களைத் தேர்வு செய்ய ஒரு குழு (கொலிஜியம்) இருப்பதைப் போல்,  தேர்தல் ஆணைய உறுப்பினர்கள் தேர்வுக்கும் ஒரு குழு அமைக்க வேண்டும். பதவிக் காலம் முடிந்த பின், தேர்தல் ஆணைய உறுப்பினர்களுக்கு வேறு பொறுப்பு/பதவிகள் அளிப்பதைத் தடை செய்ய வேண்டும்.  மேற்கு வங்கத்தில் பிரச்சாரம் செய்வதற் கான அனுமதி தேர்தல் ஆணையத்திடம் பெறுவ தும் கடினமாக இருந்தது. டயமண்ட் ஹார்பர் தொகுதியில் தேர்தல் காலத்தில் 90 நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி கோரிய போது 18க்குத்தான் அனுமதி கிடைத்தது.

இதர காரணிகள்

அரசு நலத் திட்டங்கள், குறிப்பாக உஜ்வாலா இலவச எரிவாயு இணைப்பு திட்டம், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், ஆயுஷ்மான் மருத்துவ காப்பீடு திட்டம் போன்றவை பல ஏழை குடும்பங்களுக்கு நம்பிக்கை ஊட்டியிருக் கிறது. பெண்களின் வாக்குகள் கடந்த தேர்தலை விட அகில இந்திய அளவில் பாஜகவுக்கு 7ரூ அதிகரித்திருப்பது இதன் விளைவாக இருக்கக் கூடும். தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்பாக அல்லது தேர்தல் அன்று பலரின் வங்கிக் கணக்குக்கு மானியங்கள் நேரடி பணப்பலனாக சேர்க்கப்பட்டுள்ளன. விவசாயிகளின் பயிர் காப் பீடு, உதவி தொகை, பல்வேறு விஷயங்களுக் கான  மானிய தொகை கொடுக்கப்பட்டுள்ளது. இமாச்சல பிரதேசத்தில் 86ரூ சிறு குறு விவசாயி களுக்கு 4 ஆண்டு கால நிலுவை மானிய தொகை ஒரேயடியாக தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் வழங்கப்பட்டிருக்கிறது.

இதர கட்சிகளின் சாதிய அணி திரட்டலை முறியடித்து, தமக்கு சாதகமாக அதனை மாற்ற பல நுட்பமான திட்டமிடல் (மைக்ரோ சோஷி யல் என்ஜினியரிங்) பாஜக தரப்பில் செய்யப் பட்டிருக்கிறது. உதாரணமாக, உபி மாநிலத்தில், பகுஜன் சமாஜ் கட்சி, தலித் வகுப்பினரில் ஜாதவ் என்ற பிரிவினரைத் தன் செல்வாக்கில் வைத்துக் கொண்டபோது,  ஜாதவ் அல்லாத தலித் பிரி வினரை பாஜக தன் வசமாக்கியது. சமஜ்வாதி கட்சி யாதவ சமூகத்தில் செல்வாக்கு செலுத்திய பின்னணியில், யாதவ் அல்லாத பிற்பட்ட வகுப் பினரை பாஜக அணி திரட்டியது. அதே போல் பல்வேறு பழங்குடியின சமூகங்களை ஒருங்கிணைத்தது. ‘இந்துக்கள்’ என்ற அடையாளம் கொடுத்து பல்வேறு சாதிகளை  திரட்டியது.

மின்னணு வாக்கு இயந்திரங்கள்

இந்த இயந்திரங்களைப் பயன்படுத்தி, தவறான முறையில் வாக்குகளை பாஜக பெற்றதாக ஊடகச் செய்திகள் வருகின்றன. ஃபிரண்ட்லைன் பத்திரிகை, மஹாராஷ்டிராவில் ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டப்படி பெற்ற விவரங்களைப் பயன்படுத்தி, தேர்தல் ஆணையம் வாங்கிய இயந்திரங்களுக் கும், பயன்படுத்திய இயந்திரங்களுக்கும் இடையே 19 லட்சம் இயந்திரங்கள்  இடைவெளியாக இருந்தன; அப்படியானால் அவை எங்கே என்ற கேள்வியை எழுப்பியது. 370 தொகுதிகளில் பதிவான வாக்குகளுக்கும், மின்னணு இயந்திரத்தில் எண்ணப் பட்ட வாக்குகளுக்கும் இடையே வேறுபாடு இருந்தது என்று ஊடகச் செய்திகள் வந்துள்ளன. உதாரணமாக, பீஹாரில் பாட்னாசாஹிப் தொகுதியில் 65,000 வாக்குகளும், குஜராத்தில் ஆனந்த் தொகுதியில் 1,32,000 வாக்குகளும் பதிவான வாக்குளைவிட எண்ணப்பட்ட வாக்குகள் அதிகமாக இருந்துள்ளன. இப்பிரச்னை காரணமாகத் தேர்தல் ஆணையத் தால் இதுவரை அகில இந்திய அளவில் ஒவ்வொரு கட்சிக்கும் கிடைத்த வாக்கு சதவீதத்தை அறிவிக்க முடியவில்லை. மின்னணு வாக்கு இயந்திரம் பற்றி இவ்வாறு எழுந்துள்ள சந்தேகங்கள் குறித்து ஆய்வு செய்வது  என்று  மார்க்சிஸ்ட் கட்சியின் மத்திய குழு முடிவு செய்துள்ளது.

காங்கிரசின் தோல்வி

2014 தேர்தலை விட 8 தொகுதிகளில் கூடுதலாக 52ல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. வாக்கு சதவீதத்தையும் அது தக்க வைத்துக் கொண் டுள்ளது. பாஜகவைத் தோற்கடிக்க மதச்சார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியை, செல் வாக்கு சரிந்துள்ள நிலையில் இடதுசாரி கட்சி களால்  செய்ய இயலவில்லை. அடுத்து ஆட்சியைப் பிடிக்கும் நோக்கத்துடன் செயல்பட்ட காங்கிரஸ் அப்பணியை செய்திருக்க வேண்டும். ஆனால் அதில் மிகுந்த பலவீனம் இருந்தது. உதாரணமாக, டெல்லியில் ஆம் ஆத்மியுடனும், உபியில் பகுஜன் சமாஜ், மற்றும் சமஜ்வாதி கட்சிகளுடனும் காங்கிரஸ் கூட்டு வைத்திருந்தால் சில தொகுதிகளிலாவது பாஜகவை முறியடிக்க முடிந்திருக்கும்.  அவர்கள் சமீபத்தில் சட்டமன்றத்தில் வெற்றி பெற்ற ஹரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசத்திலும் இதர கட்சிகளை ஒருங்கிணைக்கவில்லை. மேற்கு வங்கத்தில் ஏற்கனவே அவரவர் வெற்றி பெற்ற 6 தொகுதிகளில் பரஸ்பரம் போட்டி வேண்டாம் என்ற இடது முன்னணியின் குறைந்தபட்ச வேண்டுகோளைக் கூட அக்கட்சி நிராகரித்து விட்டது. கேரளாவில் வயநாட்டில் அதன் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தி இடது ஜனநாயக முன்னணியை எதிர்த்துப் போட்டியிட்டார். பாஜக எதிர்ப்பைக் காட்டிலும் இடதுசாரிகளுக்கு எதிரான போட்டிக்கு காங்கிரஸ் முக்கியத்துவம் கொடுத்ததான தோற்றமே ஏற்பட்டது.

பாஜகவின் மதவெறி நடவடிக்கைகளைத் தேர்தலுக்கு முன்னும், தேர்தல் பிரச்சாரத்தின் போதும் தேவையான அளவு அம்பலப்படுத்த காங்கிரஸ் தவறி விட்டது. மென்மையான இந்துத்வாவைக் கடைப்பிடித்தது. முரண்பாடு இந்துத்வாவுக்கும் மதச்சார்பின்மைக்கும் தானே தவிர, மென்மையான இந்துத்வாவுக்கும், கடுமை யான இந்துத்வாவுக்கும் அல்ல.  இதர கட்சிகளும் இது குறித்த திறன் மிக்க பிரச்சாரத்தை நடத்த வில்லை.

மார்க்சிஸ்ட் கட்சியின் தேர்தல் உத்தி

பாஜகவைத் தோற்கடிக்க வேண்டும்; நாடாளு மன்றத்தில் மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரி கட்சிகளின் பிரதிநிதிகள் கூடுதலாக இடம் பெற வேண்டும்; மத்தியில் ஒரு மதச்சார்பற்ற அரசை அமைக்க முயற்சிகள் எடுக்க வேண்டும் என்பது மார்க்சிஸ்ட் கட்சியின் தேர்தல் உத்தியின் உள்ளடக்கமாக இருந்தது. மாநிலத்துக்கு மாநிலம் நிலைமைகள் வித்தியாசமாக இருந்த பின்னணி யில், அகில இந்திய அளவில் ஒரு கூட்டணி சாத்தியம் இல்லை என்ற புரிதலோடு, பாஜக எதிர்ப்பு வாக்குகளை ஒருமுகப்படுத்தி குவிக்க வேண்டும் என்ற அளவில், மாநிலங்களில் இந்த உத்தியை அமல்படுத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் பாஜக தோற்கடிக்கப் பட்டது. பொதுவாக உத்தியின் 3 அம்சங்களும் நிறைவேறவில்லை என்பதே தேர்தல் முடிவுகள் காட்டும் செய்தியாகும்.

கேரளாவைப் பொறுத்தவரை இடது ஜனநாயக முன்னணிக்கு 5.1ரூ வாக்குகள் குறைந்துள்ளன. காங்கிரசுக்கு 5.10ரூம், பாஜகவுக்கு 4.76ரூம் அதிகரித்துள்ளன. பொதுவாக சட்டமன்றத்துக் கும் நாடாளுமன்றத்துக்கும் வித்தியாசமாக வாக்களிப்பது கேரளாவின் அனுபவம்.  மேலும், இடது ஜனநாயக முன்னணி 1977ல் ஒரு தொகுதி கூட வெற்றி பெறாததும், 2004ல் 20க்கு 18ல் வெற்றி பெற்றதும் நிகழ்ந்திருக்கிறது. பாஜகவைத் தோற்கடிக்க வேண்டும் என்று நினைத்த சிறுபான்மை வகுப்பினரும் (மக்கள் தொகையில் இவர்கள் சுமார் 45ரூ), இதர சக்திகளும் மத்தியில் ஆட்சி அமைக்க காங்கிரசால் முடியும் என்ற நம்பிக்கையோடு அவர்களுக்கு வாக்களித்தனர். மேலும், சபரிமலை பிரச்னையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியும், மாநில அரசும் எடுத்த நிலைபாடு சரியானது, இதைத் தவிர வேறு நிலைபாட்டை எடுத்திருக்க முடியாது. ஆனால், துவக்கத்தில் நீதிமன்ற தீர்ப்பை ஆதரித்த காங்கிரஸ், பாஜக கட்சிகள், மாநில அரசுக்கும் மார்க்சிஸ்ட் கட்சிக்கும் எதிராக இதனை மாற்ற முடியும் என்ற நிலையில், எதிர் நிலை எடுத்து, கடுமையான பிரச்சாரம் செய்ததில், மத நம்பிக்கை உள்ளவர்கள் மத்தியில் ஒரு குழப்பம் ஏற்பட்டது. அதில் ஒரு பகுதியினர், பாரம்பர்யமாக மார்க் சிஸ்ட் கட்சிக்கு வாக்களிப்பவர்கள், மாற்றி வாக்களித்துள்ளனர். இவர்களை மீட்டெடுக்க வேண்டியிருக்கிறது. சபரிமலை பிரச்னையில் சரியான நிலைபாடு எடுத்திருந்தாலும், வெவ் வேறு அளவில் பல்வேறு பகுதிகளில் இதனால் பாதிப்பு நிகழ்ந்திருக்கிறது. ஆனாலும் மாநில அரசின் நடவடிக்கைகள் மீது பொதுவாக இருக் கும் நன்மதிப்பு வாக்குகளாக ஏன் மாறவில்லை என்று பரிசீலிக்க வேண்டும். பாஜக ஒரு தொகுதி யில் கூட வெற்றி பெறவில்லை என்றாலும், வாக்கு சதவீதம் 15ரூக்கு மேல் என்பது ஒரு அபாய எச்சரிக்கையே. பல்வேறு தொகுதிகளில் பாஜக, தன் ஒரு பகுதி வாக்குகளை காங்கிரசுக்கு மடை மாற்றம் செய்யும் வழக்கமான வேலை இந்தத் தேர்தலிலும் நடந்தது.

மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சி அடைந் திருக்கும் படு தோல்வி, கட்சியின் வரலாற்றிலேயே இதுவரை காணாதது. இடது முன்னணிக்கு 7.44ரூ மட்டுமே வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன. கடும்  வன் முறை, அச்சுறுத்தல்கள், வாக்குச்சாவடி கைப் பற்றல் ஆகிய பிரச்னைகளுக்கு மத்தியில் தேர்தல் நடந்தது. மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் மீதான எதிர்ப்புணர்வு வலுவாக இருந்தது. அவர்களின் வன்முறையை முறியடிக்க இடது சாரிகளை விட பாஜகவால்தான் முடியும் என்ற உணர்வு இருந்தது. அதேபோல் பாஜகவைத் தோற்கடிக்க நினைத்தவர்கள், திரிணமூல் காங் கிரசையே மாற்றாகப் பார்த்தார்கள். பாரம்பரிய மாக இடதுசாரிகளுக்கு வாக்களிக்கும் ஒரு பகுதியினர் திரிணமூல் மீதான வெறுப்பின் காரணமாக பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர். இது மதவெறியைக் குறைத்து மதிப்பிடுவதாகும். மக்கள் பிரச்னைகளில் போராட்டங்களை உருவாக் கும்போது இடது முன்னணிக்கு ஆதரவாக வரும் மக்கள், தேர்தலில் அதே அளவு ஆதரிக்கவில்லை.

பொதுவாக 10 ஆண்டுகளுக்கும் மேலாக இடது முன்னணியின் சரிந்து வரும் வாக்கு சதவீ தம், அதிக அளவு வன்முறையை சந்திக்க வேண்டிய நிலை போன்றவையும் இதற்கு ஒரு காரணம்.  சிறுபான்மை மத அடிப்படைவாதிகளை திரிண மூல் காங்கிரஸ் தாஜா செய்யும் முறையானது, பெரும்பான்மை மதவாதத்தை தூண்டி விட பாஜகவுக்குக் களம் அமைத்துக் கொடுத்தது. இரண்டும் போட்டி போட்டுக்கொண்டு மத வெறியைக் கிளப்பி விடும் சூழலில், ஜனநாயகத் துக்கான இடதுசாரிகளுக்கான வெளி குறைகிறது. தேர்தல் களத்தில் திரிணமூல், பாஜக இரண்டு கட்சிகள்தான் நிற்கின்றன; மற்ற கட்சிகள் அருகில் கூட இல்லை என்ற திட்டமிட்ட பிரச் சாரத்தை ஊடகங்கள் செய்தன. கடந்த 50 ஆண்டு களில் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவ முடியாத மேற்கு வங்கத்தில் திரிணமூல் ஆட்சியில் ஷாகாக்கள் அதிகரித்துள்ளன. 47 மதவெறி தாக்குதல்கள் நடந்துள்ளன. கடந்த 8 ஆண்டுகளில் 209 மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளனர். உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் சேர்த்து சுமார் 40,000 பேர் குடியிருப்பிலிருந்து வெளி யேற்றப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில்தான் கட்சி உறுப்பினர்கள் செயல்படுகின்றனர். மத வெறிக்கு எதிரான வலுவான, சித்தாந்த ரீதியான போராட்டத்தை மக்கள் மத்தியில் செய்வதன் மூலமாகத்தான் இந்த இரு கட்சிகளின் போட்டி மதவெறி அபாயத்தைக் குறைக்க முடியும். இடது சாரிகளின் அரசியல் செல்வாக்கிலிருந்து விலகிச் சென்றவர்களை மீட்டெடுப்பது முன்னுரிமை கடமையாக இருக்கிறது.

திரிபுராவில் வன்முறை, அச்சுறுத்தல், நிர்வாகம் மற்றும் காவல்துறையின் முழு உதவி, தேர்தல் ஆணையத்தின் பாராமுகம் போன்றவை பாஜக வெற்றி பெற உதவி செய்தன. திரிபுரா மேற்கு தொகுதியில் மொத்த வாக்குச்சாவடிகளில் 50ரூக்கும் மேல் கள்ள ஓட்டு, வாக்குச்சாவடி கைப் பற்றல் நடந்த பின்னணியில் மறு வாக்குப்பதிவு கேட்கப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் ஒரு குழுவும் விசாரணை செய்து, பிரச்னை நடந் தாகவே அறிக்கை கொடுத்தது. ஆனாலும் 168 வாக்குச்சாவடிகளில், அதாவது நாம் கோரியதில் 20ரூ வாக்குச்சாவடிகளில் மட்டுமே மறு வாக்குப் பதிவு நடத்தப்பட்டது. இந்த 168 வாக்குச்சாவடி களில் மறுவாக்குப்பதிவு என்பதும் கூட, இந்தியாவிலேயே மிக அதிகமான ஒன்றாகும். கிழக்கு தொகுதியிலும் பல பிரச்னைகள் நடந்தன. பெரும்பாலான இடங்களில் மார்க்சிஸ்ட் கட்சி யின் ஊழியர்கள் மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்யவே போக முடியவில்லை. தொடர்ச்சி யான வன்முறைக்கு மத்தியில் கட்சி கிளைகளில் பெரும்பகுதியை கூட்டவே முடியவில்லை.

பொதுவாக

மார்க்சிஸ்ட் கட்சியின் சொந்த பலமும், மக்கள் பிரச்னைகளில் தலையீடு செய்யும் திறனும் பல வீனமடைந்துள்ளது. வாக்கு சதவீதம் தொடர்ந்து சரிகிறது. வர்க்க, வெகுஜன அமைப்புகள் மூலமாகக் கிடைக்கும் தொடர்புகளை அரசியல்படுத்துவ தில் குறைபாடு உள்ளது. போராட்டங்களில் வருபவர்களை அரசியல்படுத்தத் தவறும்போது, வெகுஜன தளம் உருவாகாது; தேர்தல் வாக்குகளி லும் அது பிரதிபலிக்காது. இளைஞர்களின் பங்கேற்பை அதிகரிக்க வேண்டியிருக்கிறது. அடிப் படை வர்க்கங்களின் வாக்குகள் கிடைப்பதில்லை. இவற்றை சரி செய்வதற்கு கூடுதல் கவனத்தோடு அரசியல் ஸ்தாபன பணிகளை ஆற்ற வேண்டும். இழந்த தளங்களை மீட்க வேண்டும். ஸ்தாபன பிளீனம் எடுத்த முடிவுகளை அமல்படுத்தியது பற்றி பரிசீலனை செய்ய வேண்டும். குறிப்பாக, மக்களுடன் உயிரோட்டமான தொடர்பு என்ற ஸ்தாபன பிளீனத்தின் சாராம்சத்தை உள்வாங்க வேண்டும்.

வரவிருக்கும் 5 ஆண்டுகளில், பாஜக அரசு உழைக்கும் மக்களின் வாழ்வுரிமை மீது கூடுதல் தாக்குதல்களைத் தொடுக்கும். மத அடிப்படை யில் மக்களைப் பிரிக்கும் வேலையைக் கடுமை யாக முன்னெடுக்கும். கருத்துச் சுதந்திரம் பறிப்பு, போராட்டங்கள் ஒடுக்கப்படுவது போன்ற நட வடிக்கைகள் அதிகரிக்கும். பொதுத்துறை தனி யார்மயமாக்கப்படுவது விரைவாகும். கார்ப் பரேட்டுகளுக்கு சாதகமாக நிலங்கள் பறிக்கப் படும். தலித், சிறுபான்மை, பெண்கள் மீதான  ஒடுக்குமுறை அதிகரிக்கும். மதச்சார்பின்மை மீது பெரும் தாக்குதல் வரும். மதச்சார்பற்ற, ஜனநாயக பூர்வமான இந்திய கட்டமைப்பு இந்து ராஷ்டிர மாக மாற்றப்பட திட்டமிட்ட முயற்சிகள் தீவிர மாக மேற்கொள்ளப்படும். திரிபுரா, மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளைப் பின்னுக்குத் தள்ளிய பின், கேரளாதான் அடுத்த குறி. பரந்து பட்ட மக்களைத் திரட்டியே நம்மால் இவற்றை எதிர்கொள்ள முடியும்.

இது சோர்வடையும் தருணமல்ல; பரிசீலனை செய்து, படிப்பினைகளைப் பெற்று, துணிச் சலாக முன்னேற வேண்டிய நேரம். சவால்களை எழுச்சியோடு சந்திக்க வேண்டிய நேரம். தேர்தல் வெற்றி தோல்விகளைத் தாண்டிய கண்ணோட்டம் இடதுசாரிகளுக்கு உண்டு. சமூக மாற்றத்தை ஏற்படுத்த, அரசியல் மாற்றை முன்னெடுக்க, சோஷலிசத்தை நோக்கி முன்னேற உறுதி பூண்டுள்ள இயக்கம் இது. இடதுசாரிகள் எதிர்ப்பது இந்த அல்லது அந்த அரசியல் கட்சி மட்டுமல்ல. ஏகாதி பத்திய, ஏகபோக, நிலப்பிரபுத்துவ சக்திகள், சாதியம், மத வெறி, பணபலம் உள்ளிட்ட எதிரி களை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் உண்டு. இடதுசாரிகள் வீழ்ந்து விட்டனர் என்று பிரச் சாரம் செய்யப்படுகிறது. உலக அளவிலும், இந்தியாவிலும் இதை விட மோசமான நிலைக் குத் தள்ளப்பட்டபோதெல்லாம் மீண்டு வந்திருக் கும் இயக்கம்தான் மார்க்சிய இயக்கம். அரசியலில் வலதுசாரி திருப்பத்துக்கு ஒரே பதில் இடதுசாரி திருப்பம்தான். இதை அடைய குறுக்கு வழி எதுவும் கிடையாது. இடை விடாத அரசியல், ஸ்தாபன, சித்தாந்த செயல்பாடு கள் இதற்குத் தேவைப்படுகின்றன.