19 ஆம் நூற்றாண்டு தென் தமிழக சமூக இயக்கம்

பேரா.  கா. அ. மணிக்குமார்

தற்கால தமிழகத்தில் சமூக எழுச்சி, சாதி எதிர்ப்பு இயக்கங்கள் எப்போதும் ஈ.வெ.ரா.  பெரியார், திராவிட இயக்கங்களாலேயே நடந்ததாகக் கருதப்படுகின்றன. துவக்க காலத்திய சாதிக் கட்டமைப்பு, சமூக ஏற்ற தாழ்வுகளுக்கு எதிரான போராட்டங்களில்  தீவிர பங்களிப்பு செய்த தனிநபர்கள், அமைப்புகளின் பெயர்கள் பொது விவாதத்தில் இடம் பெறாமல் போய் விட்டது.  மக்களைக் கவர்ந்த ஒரு பிரசித்தி பெற்ற தலைவரின் தலைமையில் இல்லாத கூட்டு இயக்கங்கள் பெரும்பாலும் நிராகரிக்கப்பட்டனவாகவே உள்ளன. நாடார்கள் (சாணார்கள் என்றும் அழைக்கப்பட்டனர்) ஒரு சமூக பிரிவு என்ற வகையில் திராவிட இயக்கங்கள், ஈ.வெ.ரா பெரியாரின் காலத்திற்கு முன்பே, தென் தமிழகத்தில் பல சமூக எழுச்சி இயக்கங்களை நடத்தியுள்ளனர்.  சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக அவர்களின் முதல் எதிர்ப்பு இயக்கம் என்பது கிறித்தவ மதத்தை தழுவுதல் என்ற வகையில் அமைந்தது. இந்த மத மாற்றம் அவர்களுக்கு ஆங்கில கல்வி கற்கவும், அதன் மூலம் சமுதாயத்தில் அங்கீகாரம், அதிகாரம் பெற பயன்பட்டது. இதில் ஐரோப்பிய கிறிஸ்தவ மிஷினரிகளின் பங்களிப்பு பாராட்டத்தக்கது. மதமாற்ற முறையை தேர்வு செய்யாதவர்கள், பின்னர் சிறு வியாபாரம், வணிகத்தில் ஈடுபட்டு, தங்களுக்கென்று சுதந்திரமான வாழ்நிலையை ஏற்படுத்திக் கொண்டனர்.

ஐரோப்பிய வர்த்தகர்களின் நம்பிக்கை, நன்மதிப்பைப் பெற்ற நாடார் மக்கள், அவர்களின் அனுசரணையோடு பணப்பயிர்கள் பயிரிடுவது, பஞ்சு, புகையிலை வர்த்தக தரகுப் பணிகளில் ஈடுபட்டு, பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைந்தனர்.  இவர்களின் வாழ்க்கைத் தரத்தில் ஏற்பட்ட முன்னேற்றம், பண்பாடு, கலாச்சார ரீதியான மேம்பாட்டிற்கான எதிர்பார்ப்பை அவர்களிடையே ஏற்படுத்தியது. அக்காலத்தில் நிலவிய சமூக சூழலில், பின்தங்கிய பிரிவினராக இருந்த நாடார் சமுதாய மக்கள் எப்படி தங்கள் அபிலாசைகளை வெளிப்படுத்தினார்கள் என்பதையும், சமூக அமைப்பில் இருந்த ஏற்றத் தாழ்வுகளை எப்படி எதிர்த்து நின்றார்கள் என்பதையும் இக்கட்டுரை விவாதிக்கிறது.

1

“ஒர் சமூக இயக்கம் என்பது ஒரு பொதுவான நலனை முன்னிறுத்தி, இலக்கை அடைவதற்காக அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு வெளியே எடுக்கும் கூட்டு முயற்சி” என்று வரையறுக்கப்படுகிறது. “சூழலியலும் – சமூகமும்: ஓர் அறிமுகம்”  என்ற நூலின் ஆசிரியர் லூக் மார்டெல் இன் கருத்துப்படி, இதில் மூன்று அம்சங்கள் உள்ளன :

 • 1.  சமூக இயக்கம் ஒரு பொது நலனை முன்னிறுத்தி, இலக்கை வென்றிட, கூட்டு இயக்கதில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறது.
 • 2.  இது ஒர் சமூகப் பொது நலனை அடிப்படையாகக் கொண்டது.
 • 3.  இது அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளுக்கு வெளியே தன் அரசியல், பண்பாட்டு இலக்குகளை அடைய தொடர் நடவடிக்கை எடுக்கும்.

            இந்த விளக்கம் தங்கள் குடியுரிமையை வலியுறுத்தி தென் தமிழகத்தில் நாடார்கள் நடத்திய இயக்கங்களுக்கு சரியாக பொருந்துவதாக உள்ளது.

உயர் சாதி என்று சொல்லப்பட்வர்களால் அடக்குமுறையையும், துன்பங்களையும் அனுபவித்து வந்த நாடார் சமுதாய மக்களிடையே, கிறிஸ்தவ மிஷினரிகள் சாதிய அமைப்பின் மீது ஏற்படுத்திய தாக்குதல்கள், கிறிஸ்தவ மதத்தை பரப்ப அவர்கள் எடுத்த முயற்சிகள் மிகச் சரியாக செயல்பட்டது.  1797ஆம் ஆண்டு கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய நாடார் சமூகத்தை சார்ந்த சுந்தரம் என்ற டேவிட், திருச்சபையின் உபதேசியராக நியமனம் செய்யப்பட்ட பிறகு, திருநெல்வேலி மாவட்டத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நாடார் சமுதாய மக்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாறியதை காண முடிந்தது.   அப்போது திருநெல்வேலி மாவட்ட முதலூரில் (தற்போது முதலூர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது), முதல் கிறிஸ்தவ நாடார் குடியிருப்பு ஏற்படுத்திய பிறகு (1799), 40 ஆண்டுகள் கழித்து கால்டுவெல் திருநெல்வேலி வந்தார். 1841ஆம் ஆண்டின் இறுதியில் கால்டுவெல் திருநெல்வேலிக்கு வந்த போது, திருநெல்வேலி மாவட்டத்தில் 40,000 நாடார்  கிறிஸ்தவர்கள்  இருந்தார்கள். கால்டுவெல் திருநெல்வேலி மாவட்டத்தில் நாடார் மக்களோடு 30 ஆண்டுகள் இணைந்து பணிபுரிந்தார்.

விசித்திரம் என்னவென்றால், நாடார் சமுதாயத்தைப் பற்றி கால்டுவெல்-இன் கருத்திற்கு ஆட்சேபணை தெரிவித்தவர்கள் நாடார் சமுதாயத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்களே. கால்டுவெல் எழுதிய “திருநெல்வேலி சாணார்கள்” என்ற நூலில் அவர் எழுதிய குறிப்பைப் பார்த்தால் இந்த ஆட்சேபணைக்கான காரணம் வெளிப்படையாக தெரியும். அந்த குறிப்பில் கால்டுவெல், “…மேற்கிந்திய தீவுகளில் வசிக்கும் விடுதலை பெற்ற அடிமைகளை சாணார் இன மக்களோடு ஒப்பீடு செய்தவர்கள், அறிவுத்திறமை, தேக பலம், சுறுசுறுப்பில் நீக்ரோக்கள் சாணார் மக்களை விட உயர்ந்தவர்களாக உள்ளனர் என்று கருதுகின்றனர்…  காலனி நாடுகளில் உடல் உழைப்புப் பணிகளில்  ஈடுபட்டுள்ள கடை நிலையில் உள்ள இந்துக்களை விட, நீக்ரோக்கள் மேம்பட்ட நிலையில் இருப்பதைப் பார்க்கும் போது, ஒரு இனத்தின் உடல் வலிமைக்கும், மனத்திண்மையை மேம்படுத்தும் திறமைக்கும்  பொதுவானதோர் சம்பந்தம் இருக்கிறது என்ற  கருத்து சரியானதென நிருபணமாகிறது” என்றார்.

    நாடார் சமுதாய மக்களை பிற தாழ்த்தப்பட்ட சாதி மக்களோடு ஒப்பீடு செய்த கால்டுவெல் “மேற்குக் கரையோர அடிமைகள் அல்லது மலைப்பகுதியை சார்ந்த அடிமைகளின் அறிவுத்திறன் பற்றி நான் முழுமையாக அறிந்திருக்கவில்லை. ஆனால் சமூக படிநிலையில் மேல் நிலையில் உள்ள சாதிகள் தொடங்கி கீழ் நிலையில் உள்ள சாதிகள் வரை பார்த்தால், சாணார் சமுதாய மக்களின் பயம் கலந்த, குழப்பமான மனநிலையை வேறு யாரோடும் ஒப்பீடு செய்ய முடியாது என்பதில் உறுதியாக உள்ளேன்” … சாணார் மக்களைவிட உயர்சாதி மக்களோடு தங்களுடைய அன்றாட தொடர்புகளை கூடுதல் நெருக்கத்துடன் கொண்டுள்ள பறையர் இன மக்களின் அறிவுத்திறன் கூடியுள்ளது. அவர்களின் பேச்சு மற்றும் உச்சரிப்புத்திறன் கூட துல்லியம் அடைந்துள்ளது” என முடிக்கிறார்.

 நாடார் மக்களின் குணம், சரீரம், அறிவாற்றல் பற்றி கால்டுவெல்-இன் வரையறையை வெறும் பிதற்றல்கள் என்று தற்கால ஆய்வாளர்கள் கண்டித்து நிராகரிக்கின்றனர். கால்டுவெல்-இன் இந்த கருத்து “வெள்ளையர்கள்தான் உயர்ந்தவர்கள்” என்ற காலனி ஆதிக்க கருத்தோட்டத்தின் அடிப்படையில் சொல்லப்பட்டது.  ஏனென்றால் அதே நேரத்தில் கிறிஸ்தவ பாதிரியார்கள் எடுத்துக்  கொண்ட முயற்சியின் விளைவாக நாடார் சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்களை விவரிக்கும் கால்டுவெல், நாடார்களை பண்படுத்தி நாகரீகமாக்க எடுத்த முயற்சிகள் வெற்றிபெற்றது போல் “சாணார் இன மக்களின் பூர்வீக நிலைமை எப்படி இருந்திருந்தாலும் இப்போது தென் இந்தியாவில் உள்ள முற்போக்கான பூர்வ குடிமக்கள் மற்றும் சாதிகளில், இவர்கள் மிக உயர்ந்த இடத்தை பிடித்துள்ளார்கள் என்று நான் கருதுகிறேன்” என்று சொல்கிறார்.

சில குறிப்பிட்ட நாடார்களின் எதிர்ப்புகள் மட்டுமல்லாது, கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய நாடார்களில் அருமைநாயகம் என்ற சட்டாம்பிள்ளையின் தலைமையில் ஒரு நாடார் பிரிவினர் கால்டுவெல் சொன்னது தவறு என்று நிரூபித்தனர். சரிசம வாய்ப்பு கிடைத்தால் எவ்வளவு ஒடுக்கப்பட்டவர்களாக இருந்தாலும் சமூகத்தில் சிறப்பான அந்தஸ்துகளில் பரிணமிக்க முடியும் என்பதற்கு அருமை நாயகம் ஒரு உதாரணம். அருமை நாயகம் ஒரு சிறந்த அறிவாளி. அவர் ஆங்கிலம், சமஸ்கிருதம், ஹீப்ரு, லத்தீன், கிரேக்கம் ஆகிய மொழிகளில் பாண்டித்தியம் பெற்றிருந்தார். அவர் மேற்கத்திய கிறிஸ்தவத்தை விமர்சனம் செய்தார். நாசரேத்தில் விவிலிய சேவையில் சுமார் 20 ஆண்டுகள் பணியாற்றிய அருள்திரு A.F. கேமியரர் என்ற பாதிரியாரின் அதிகாரத்திற்கு அடிபணிய மறுத்தார். அருமைநாயகம் அவர் வகித்த பொறுப்பிலிருந்து திருச்சபையால் நீக்கப்பட்ட பின்னர், பிரகாசபுரத்தில் (தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது) “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இந்து தேவாலயத்தை” தொடங்கினார். இந்த புதிய அமைப்பில் உடனடியாக சுமார் 2,500 பேர் உறுப்பினராக இணைந்தனர்.

நாடார் சமுதாய மக்கள் இலங்கையிலிருந்து வந்தவர்கள் என்று கால்டுவெல் மேலும் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை முன்வைத்தார். திருநெல்வேலி மாவட்டத்தின் பூர்வீக குடிமக்கள் பற்றி விவாதிக்கும் போது, அவர் பின் வருமாறு எழுதுகிறார்: “பிராமணர்கள் வடக்கிலிருந்து வந்தவர்கள் என்று சொல்லப்படுவதில் எந்தவித சந்தேகமும் இல்லை. நாயக்கர்களும், பிற தெலுங்கு சாதி மக்களும் வடக்கிலிருந்து வந்தவர்கள் என்பதிலும் எந்த சந்தேகமும் இல்லை. அதுபோல வெள்ளாளர்கள் சோழ நாட்டிலிருந்தும், சாணார்கள் இலங்கையிலிருந்தும் வந்தவர்கள் என்றும் பொதுவாக கருதப்படுகிறது.” 

இது எந்தவித ஆதாரமும் இல்லாத வெற்று அறிக்கை. ஈழவர்கள் (அவர்கள் பெயர் குறிப்பிடுவது போல்) இலங்கையிலிருந்து கேரளாவிற்கு வந்தவர்கள். வடக்கு கேரளாவில் உள்ள ஈழவர்கள் “தீயர்கள்” என்று அழைக்கப்பட்டனர். வரலாற்று ஆசிரியர் K.M. பணிக்கர்   “நாடார்கள் பாலிநேச பூர்வீகக் குடியினர். இவர்கள் பாரம்பரியமாக தென்னை மரம் வளர்த்தல், மரம் வெட்டுதலை தொழிலாக கொண்டவர்கள்” என்கிறார்.  ஈழவ மக்களைப் போன்று, பனை மரத்திலிருந்து கள் இறக்கும் தொழில் திருநெல்வேலியில் உள்ள சாணார்கள் செய்து வந்ததால், அவர்களும் இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து இந்தியாவிற்கு வந்தவர்கள் என்ற முடிவுக்கு கால்டுவெல் வந்திருக்கலாம். பின்னாளில் மாவட்டக் குறிப்புகள் தயாரித்த அதிகாரிகள் உட்பட அனைத்து  ஆய்வாளர்களும் கால்டுவெல் எழுதிய “திருநெல்வேலி மாவட்ட வரலாற்றை” முழுமையான பரிசீலனைக்கு உட்படுத்தாமல் தங்களுக்குகந்தவாறு பயன்படுத்திக் கொண்டனர்.

இலங்கையின் வரலாற்றை முழுமையாக அறிந்த ஒரு நபர், சாணார்கள் இலங்கையிலிருந்து வந்தவர்கள் என்ற கால்டுவெல்-இன் கருத்தை ஏற்று கொள்ள மாட்டார்கள்.  மானுடவியலாளர்களிடையேயான ஒருமித்த கருத்து என்னவென்றால், ஆரியர்களின் வருகைக்கு முன்பே இலங்கையில் உள்ள பூர்வ குடிமக்களான வேடர்கள், நாகர்கள், மற்றும் யாக்கர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். ஆரியர்களின் குடியேற்றம் என்று சொல்லப்பட்டது பெரும்பாலும் கி.பி. 4ஆம் அல்லது 5 ஆம் நூற்றாண்டில் கலிங்க நாட்டிலிருந்து விஜயன் என்ற அரசனின் வருகையை யொட்டி நடந்திருக்க வேண்டும் என்று கருதலாம். அதிலிருந்து இலங்கையோடு உள்ள எல்லா வித நடவடிக்கைகளும் தென் இந்தியாவிலிருந்தே நடந்து வந்துள்ளது.

இலங்கையை தமிழ்நாட்டிலிருந்து பிரிக்கும் கடல் பகுதி 20 மைல் தூரம் மட்டுமே என்பதால், தமிழ்நாட்டின் பல பகுதியிலிருந்து மக்கள் புலம் பெயரவும், இலங்கையின் வட பகுதியில் உள்ள பூர்வகுடி மக்களோடு கலந்து வாழவும் செய்தனர். மகாபலிபுரம் ஒரு துறைமுகமாக செழித்து விளங்கியுள்ளது என்றும், பல்லவர்கள் காலத்தில் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே கடல் வணிகம், கடற்பயணம் தழைத்தோங்கியிருந்திருந்தது என்றும் வரலாற்று அறிஞர் K. K. பிள்ளை எழுதுகிறார். தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு பெருமளவு மக்கள் பயணம் செய்தது, தொடர்புகள் ஏற்பட்டது இக்கால கட்டத்திலிருந்து தொடங்கியிருக்கலாம். 16வது நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து சென்ற சுமார் 40 சாதி மக்கள் இலங்கையின் யாழ்ப்பாணத்தில் குடியேறியுள்ளனர். அப்படி குடியேறியவர்களில் பிராமணர்கள், வெள்ளாளர்கள் தவிர செட்டியார்கள், அகமுடையார், மறவர்கள், மீனவர்கள், வன்னியர்கள், ஆசாரிகள், தச்சர்கள், வண்ணார்கள், சவரத்தொழிலாளர்கள் ஆகியோர் முக்கியமானவர்கள்.  பிற சாதிகளான வெள்ளாளர்கள், மறவர்கள், செட்டியார்கள் போன்று நாடார்கள், சாணார்கள் பற்றி இலங்கையின் வரலாற்றுக் குறிப்புகளில் தகவல்கள் ஏதும் கிடையாது. தற்போது இலங்கையில் உள்ள கள் இறக்கும் தொழிலாளர்கள் “துருவர்கள்” என்றே அழைக்கப்படுகிறார்கள்.

ஒரு காலத்தில் நாடார் மக்கள் பிறர் பொறாமைப்படும் அளவிலான இடத்தில் இருந்துள்ளார்கள் என்றும், அவர்கள் பாண்டிய மன்னர்களை எதிர்த்து நிற்கும் அளவிற்கு வலிமையாக இருந்துள்ளார்கள் என்றும் வாய் மொழி வரலாறு ஒன்று கூறுகிறது. அவர்களின் தகுதிக்கு மீறிய அகந்தையால் வெறுப்படைந்த ஒரு பாண்டிய மன்னர், நாடார் இன மக்களை தண்டிக்கும் வகையில், அவர்களை திருநெல்வேலி மாவட்டத்திற்குள் உள்ள வறண்ட, சாகுபடிக்கு உதவாத தரிசு நிலப்பகுதியில் வாழ வேண்டும் என்று உத்தரவிட்டு, அவர்களை அப்பகுதிக்குள் கட்டுப்படுத்தி வைத்தார். இருந்தாலும், தங்கள் கடின உழைப்பினால், தற்போது திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகமாக காணப்படும் பனை மரங்களை வளர்த்து, பனை பொருட்கள் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்து வாழ்ந்து முன்னேறினர்.

நாடார் இன மக்களின் காவல் தெய்வங்கள் பெரும்பாலும் திருநெல்வேலி மாவட்டத்தின் பத்ரகாளி (பத்ர என்றால் பனை ஓலை), வேறு பட்ட வடிவங்களை கொண்ட அய்யனார் போன்ற தெய்வங்களாகும். நாடார்களின் பூர்வீகம்  திருநெல்வேலி மாவட்டம் என்று உரிமை கொண்டாடுவதற்கு இது உதவுகிறது.  நாடார் மக்கள் கொற்கையை (கடல் கொண்டு அழிந்ததால் அதன் முக்கியத்துவத்தை இழந்த ஊர்) தலைமையிடமாகக் கொண்டு ஆண்ட பாண்டிய மன்னர்களின் சந்ததியினர் என்ற ஓர் கருத்தும் நிலவுகிறது. பிரச்சனை என்னவென்றால், பிற தாழ்த்தப்பட்ட சாதி மக்களைப் போலவே, நாடார் மக்களுக்கும் தங்கள் பூர்வீகத்தைப் பற்றி அறிய எழுத்து வடிவிலான ஆதாரப்பூர்வமான ஆவணங்கள் ஏதும் இல்லை. நாடார்களின் பூர்வீகம் எதுவாயினும், யதார்த்த நிலை என்பது, அவர்கள் மிக ஏழ் நிலையில் இருந்துள்ளார்கள். மேலும் ஆங்கிலேயர் ஆட்சியின்போது தீண்டப்படாத சாதிகளில் ஒன்றாகவே நாடார் சாதி இருந்துள்ளது.            

2

சமுதாயத்தில் தாழ்த்தப்பட்ட நிலையிலிருந்து வெளியேறி, அடுத்த கட்ட உயர்நிலைக்கு முன்னேற தங்களை ஆரியர்கள், சத்திரியர்கள் என கூறிக்கொண்டு சமஸ்கிருதப் பாதையில் செல்ல கட்டுக்கதைகளையும், புராணக் கதைகளையும் கற்பனையாக இட்டுக்கட்டி கூறுதல் என்பது எல்லா தீண்டத்தகாத சாதிகளாகக்  கருத்தப்பட்டவர்களின்  உரிய குணமாக இருந்து வந்துள்ளது.  இந்த பரிதாபப்படக்கூடியக் பைத்தியத்திற்கு நாடார்களும் விதிவிலக்கல்ல. நாடார் சமுதாயத்தில் பொருளாதாரத்தில் முன்னேறிய ஒரு பகுதியினர், 19ஆம் நூற்றாண்டின் மத்திய காலத்திலிருந்து இதனை எவ்வித தொய்வும் இன்றி செய்து வந்துள்ளனர்.

கமுதி ஆலய நுழைவு வழக்கில் பிரதிவாதிகளான நாடார்கள் கொடுத்த வாக்குமூலத்தில் அவர்கள் பரம்பரையாக இராணுவ வம்சாவழி வந்தவர்கள் என்று உரிமை கோரியுள்ளனர்.  மதராஸ் உயர்நீதி மன்றத்தில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய இரண்டு ஆங்கிலேய நீதிபதிகள், “வழக்கில் பிரதிவாதிகள் வாதிடுவது போன்று, அவர்கள் சத்திரியர்கள் அல்லது இந்து மதத்தை சார்ந்த இராணுவ வம்சாவழி வந்தவர்கள் என்றோ, அல்லது பாண்டியர், சேரர், சோழ அரசர்களின் வம்சாவழி வந்தவர்கள் என்பதற்கோ எந்தவித ஆதாரமும் இல்லை. அப்படி இருப்பதற்கான ஒரு சந்தர்ப்பம் இருந்தது என்று கூட சொல்ல முடியவில்லை. சாணார்கள் இப்படி அரசகுலம், இராணுவ பரம்பரையோடு தங்களை தொடர்பு படுத்தி வீணாக, பொய்யாக, உரிமை கோர எடுத்த முயற்சி பரிகசிக்க வேண்டிய ஒன்று” என்று நாடார்கள் மீது எந்தவித பரிவுமின்றி கூறியுள்ளனர்.

1908ஆம் ஆண்டு சங்கரலிங்க நாடார் vs. ராஜராஜேஷ்வர துரை கமுதி ஆலய நுழைவு வழக்கில், மதராஸ் உயர்நீதிமன்றம் “சாணார்கள் கோயிலுக்குள் சென்றது என்பது, “சிவ வழிபாடு செய்யும் இந்துக்களின் மதக் கொள்கைக்கு எதிராகவும், கடவுளை வழிபடும் சாதி இந்துக்கள் கடைபிடிக்கும் பழக்க வழக்கம், உணர்வுகளுக்கு எதிராகவும் அமைந்துள்ளது” என்று கூறி மேல் முறையீடு செய்த நாடார் மனுதாரர்கள் கோயிலை சுத்தப்படுத்துவதற்கு ரூ. 500 அபராதம் செலுத்த வேண்டும் என்று தீர்ப்பளித்தது. ஆனால் நாடார்கள் இந்த பிரச்சனையை இத்தோடு விட்டு விடவில்லை.

பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைந்த இந்து நாடார்கள், பத்தொன்பதாம் நாற்றாண்டின் பிற்பகுதியில் சமூக தளத்தில் தங்கள் உரிமைகளை வலியுறுத்த முயன்றபோது, பல கோயில் நுழைவுப் போராட்டங்களை நடத்தினர். இது மேல் சாதி மக்களோடு மோதலுக்கு இட்டுச் சென்றது. சமூகக் கட்டுப்பாடுகளை உடைத்தெறிந்து அவர்கள் கோயில்களுக்குள் நுழைய முற்பட்ட போது அவர்களின் போராடும் குணம், ஒற்றுமை தெளிவாக வெளிப்பட்டது.  1872இல் திருச்செந்தூர், 1874இல் மதுரை, 1876இல் திருத்தங்கல், 1897இல் கமுதி, உச்சகட்டமாக 1899இல் சிவகாசியில் என ஆலய நுழைவுப் போராட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டன. அந்த நாட்களில் நாடார் மக்களின் மனநிலையை தெரிந்து கொள்ளும் விதமாக, 1899ஆம் ஆண்டு நடந்த சிவகாசி கலவரம் பற்றிய சிறு குறிப்பு இங்கே கொடுப்பது பொருத்தமாகும்.

சிவகாசியில் வணிகம் மற்றும் வியாபாரம் சிறிது சிறிதாக முஸ்லீம்கள் கையிலிருந்து நாடார்கள் கைகளுக்கு மாறியது. இந்த வியாபார போட்டியின் காரணமாக முஸ்லீம்களுக்கும் நாடார்களுக்குமிடையே பகைமை இருந்து வந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசி கால் பகுதியில் – 1876 முதல் 1878 வரையான தாது வருடப்பஞ்சம் குறிப்பிடத்தக்க ஒன்று – அடிக்கடி பஞ்சம் ஏற்பட்டது. விவசாயத்தை நம்பியிருந்த சாதி என்ற வகையில் தேவர் சமூகத்தினர் (முக்குலத்தோர்: கள்ளர், மறவர், அகமுடையார்) பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டனர்.  அதே நேரம், வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த நாடார் சமுதாயத்தினர் உணவு தானியங்கள் பற்றாக்குறையை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அதிக அளவில் லாபம் சம்பாதித்தனர். இதனால் இந்த கால கட்டத்தில் இவர்களுக்கிடையே மனக்கசப்பு ஏற்பட்டு, இரு சமுதாயத்தினரிடையேயான உறவு மோசமடைந்தது.

நாடார்கள் கோயில் நுழைவில் தங்கள் உரிமையை வலியுறுத்துவதும், அதுவரை உயர் சாதி இந்துக்கள் சமூகத்தில் அனுபவித்து வந்த சில சலுகைகளை கேட்பதும், பிற இந்து ஆதிக்க சாதியினருக்கு நாடார் மக்கள் மீது மனக்கசப்பை ஏற்படுத்தியிருந்தது. இவையெல்லாம் சேர்ந்து “சிவகாசி அழிவிற்கு” அடிப்படையான காரணமாக அமைந்தது.

1895ஆம் ஆண்டு சிவகாசி நாடார்கள் ஊரில் உள்ள கைலாசநாதர் கோயில் அறங்காவலர்களாக நாடார்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியபோது பிரச்சனை வெடிக்கத் தொடங்கியது. நாடார்களுக்கு சிவகாசியின் புறநகர் பகுதியில் மாரியம்மன், பத்ரகாளியம்மன் கோயில்கள் இருந்தன. கைலாசநாதர் கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படாததால் அவர்கள் இந்த இரண்டு கோயில்களையும் கட்டியிருந்தனர்.  இந்த கோயில்களில் வள்ளுவர் சாதியை சார்ந்த “பண்டாரம்” எனப்படுபவர்கள் பூஜை செய்து வந்தனர். 1897ஆம் ஆண்டு நாடார்கள் சிதம்பரத்திலிருந்து பிராமண புரோகிதர்களை வரவழைத்து இந்த கோயில்களில் பூஜை செய்தனர்.  மேலும் பிராமண புரோகிதர்கள் வசதி படைத்த நாடார்கள் வீடுகளுக்கு சென்று சடங்குகளும், பூஜைகளும் செய்தனர்.  இது சாதி இந்துக்களை கூடுதலாக கோபமடையச் செய்தது. 1898ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி, நாடார்கள் கோயில் கதவை உடைத்துக் கொண்டு கைலாசநாதர் கோயிலுக்குள் நுழைந்தனர். இத் தகவல் பரவியதும், கோபத்தின் உச்சிக்கு சென்ற சாதி இந்துக்கள், பத்ரகாளி அம்மன் கோயில் வளாகத்தில் இருந்த தோட்டத்திற்கு நெருப்பு வைத்தனர். இந்த மோதலில் ஒன்பது நாடார்கள் கைது செய்யப்பட்டு சாட்சியங்கள் முறையாக இல்லாததால் பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

1899ஆம் ஆண்டு நாடார் சமுதாய மக்களின் சேமிப்பு கிடங்கிகளை தேவர் சமுதாயத்தை சேர்ந்த சிலர் தீ வைத்து கொளுத்தியதால் சிவகாசி சாதி கலவரம் வெடித்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நாடார்கள் தேவர் சமுதாய மக்களின் குடியிருப்புகளை தாக்கினர். இதன் விளைவாக தேவர்-நாடார் மக்களிடையே மூர்க்கத்தனமான மோதல் வெடித்தது. திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த கார்டோசன் என்பவர் தன் போலீஸ் படையோடு கலவரப் பகுதிக்கு விரைந்து கலவரத்தை கட்டுப்படுத்தினார். அவர் 15 சுற்று துப்பாக்கிச் சூடு நடத்தி எச்சரிக்கை செய்த பின்னரே கலவரக்காரர்கள் கலைந்து சென்றனர். ஆனால், தேவர் சமுகத்தினர் சமாதானம் அடையவில்லை. அவர்கள் இந்த சம்பவத்திற்கு பழிவாங்க வேண்டும் என்று திட்டமிட்டு, திருநெல்வேலி மாவட்டத்தின் வடக்குப் பகுதியிலிருந்தும், ராமநாதபுரத்தின் கிழக்குப் பகுதியிலும் உள்ள பல கிராமங்களிலிருந்தும் தேவர் சமுதாய மக்களை திரட்டினர்.

பிராமணர்கள், பிள்ளைமார்கள், மறவர் சமுதாய ஜமீன்தார்கள் ஆதரவோடு, அவர்கள் கட்டுப்பாட்டிற்குள் அப்போதிருந்த பள்ளர் சமுதாய விவசாயத்தொழிலாளர்கள், முஸ்லீம்கள் என சுமார் 5000 பேர் 1899ஆம் ஆண்டு ஜூன் மாதம் 6ஆம் நாள்  சிவகாசியில் உள்ள நாடார் மக்களின் வீடுகளைத் தாக்கி அவர்களின் உடமைகளை சூறையாடினர். பின்னர் அவர்கள் சிவகாசியைச் சுற்றியுள்ள 150 கிராமங்களை தாக்கி கொள்ளையடித்தனர். போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 21 பேர் இறந்தனர். காயம்பட்ட மூன்று பேர் பின்னர் இறந்தனர். அவர்களில் ஒருவர் பெண். சிவகாசி நாடார்கள் “இந்த தாக்குதலில் தாங்கள் ரூ. 43,000 மதிப்புள்ள பொருட்களை இழந்தோம்” என்று அரசாங்கத்திற்கு கடிதம் அனுப்பினர் என்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த “தானே” என்ற அதிகாரி கூறியுள்ளார். இந்த தாக்குதலில் சிவகாசிப் பகுதியில் மொத்தம் 4,000 வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன என மற்றொரு புள்ளிவிவரம்  கூறுகிறது. மொத்தம் கைது செய்யப்பட்ட 1958 பேரில், 552 பேர் குற்றவாளி என தண்டிக்கப்பட்டனர். ஏழு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

3

நாடார் மக்களின் சமூக இயக்கத்தை விவரிக்கும் போது தென் திருவிதாங்கூர் பகுதியில் (தற்போது கன்யாகுமரி மாவட்டம்) நடந்த முக்கியமான சாதி எதிர்ப்பு எழுச்சியை நாம் தவிர்க்க முடியாது. அங்கு தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்டவர்கள் நடத்தப்பட்ட விதம் மிகவும் கொடூரமானது. ஜேம்ஸ் போர்ப்ஸ் எழுதிய “கீழ்த் திசை நாடுகளின் நினைவுகுறிப்புகள்” என்ற புத்தகத்தில் அவர்  எடுத்துக்காட்டியுள்ள கொடுமையான நிகழ்ச்சிகள் கூர்ந்து கவனிக்கத் தக்கது:

“தங்களின் உடற் காற்றினால் சுற்றுப்புற சூழல் மாசுபடுவதிலிருந்து தவிர்ப்பதற்காக, தீண்டத்தகாதவர்கள் தாங்களாகவே குழிக்குள் மறைந்து கொள்ள வேண்டும்; அல்லது மரங்களின் மேல் ஏறி தங்களை மறைத்து கொள்ள வேண்டும்.  நாயர் சாதியை சார்ந்த ஒருவர் எதேச்சையாக இவர்களில் ஒருவரை சாலையில் சந்தித்தால், எவ்வித பச்சாதபமும் இல்லாமல் கொடூர மிருகத்தை கொல்வது போல் வாளால் வெட்டி கொன்று விடுவார்.  பசுவை விற்பவர் அல்லது அதை இறைச்சிக்கு விற்பவர் கொலை செய்யப்படுவார். 1772ஆம் ஆண்டு ஐரோப்பியர் ஒருவருக்கு மாடு ஒன்றை விற்பனை செய்த ஒருவர் உயிரோடு எரிக்கப்பட்டார். தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்கள் தங்கள் மார்பை மூடக்கூடாது. அரச குடும்பத்தை சார்ந்த ஒருவரின் முன்னால் நிற்கும் போது, மேலாடையுடன் காணப்பட்ட பெண்களின் மார்பகங்கள் வெட்டி எறியப்படும்”

“சாதிய ஒடுக்குமுறையின் கொடுமை எந்த அளவிற்கு இருந்தது என்பதற்கு கேரளா சிறந்த உதாரணமாக இருந்தது. அங்கு தீண்டத்தகாதவர்களை, உயர் சாதியினர் பார்வையிலிருந்து விலகி இருக்க வேண்டிய தூரத்தை வைத்து தீண்டாமை தரவாரியாக பிரிக்கப்பட்டிருந்தது” என்று வரலாற்றறிஞர் K.M. பணிக்கர் குறிப்பிடுகிறார். 1809ஆம் ஆண்டு மைலாடியில் இலண்டன் மெஷினரி சபை (LMS) தொடங்கப்பட்டதிலிருந்து, கிறிஸ்தவ மிஷினரிகள் ஒடுக்கப்பட்ட மக்களை குறிவைத்து மதமாற்றம்  செய்தனர். அருள்திரு. T. ரிங்கல்டாப் என்ற பாதிரியார் முதலில் ஒரு கணிசமான அளவிற்கு தாழ்த்தப்பட்ட சாதியினரை (குறிப்பாக நாடார், ஈழவர்களை) வெற்றிகரமாக மதமாற்றம் செய்தார். அவர் 1813இல் LMS சபையில் 600 கிறிஸ்தவர்கள் இருந்தனர் என்கிறார்.  கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாறியவர்களின் மனநிலை, பழக்க வழக்கங்களை மாற்றும் முயற்சியின் ஒரு பகுதியாக, கிறிஸ்தவ மிஷினரிகள் ஆண்களுக்கு மட்டுமின்றி, பெண்களுக்கும் பள்ளிக் கூடங்கள் தொடங்கினர். இந்த பள்ளிக்கூடங்களில் பெண்களின் தனித்திறமையை வளர்க்கும் வகையில் தையல், எம்பிராய்டரிங் பயிற்சிகள் கொடுக்கப்பட்டன. கிறிஸ்தவ மிஷினரிகளின் வேண்டுகோளுக்கு இணங்கவும், அப்போதைய திவான் மற்றும் திருவிதாங்கூர் சமஸ்தான பிரிட்டீஷ் பிரதிநிதியுமான கர்னல் ஜான் மன்றோவின் ஆதரவுடன் 1814ஆம் ஆண்டு கிறிஸ்தவ நாடார் பெண்கள் மட்டும் குட்டையான கை வைத்த தொள தொளப்பான மேல்சட்டை அணிய அனுமதிக்கப்பட்டனர்.

அரசாங்கத்தின் உத்தரவு இருந்தபோதும், பிற நாயர் சாதி பெண்களைப் போல கிறிஸ்தவ நாடார் பெண்கள் பொது இடங்களில் மேல் சட்டை அணிந்து தோன்றினால், அவர்கள் அவமானப்படுத்தப்பட்டு தாக்குதலுக்கும் உள்ளானார்கள். பெண் மிஷினரிகள் வடிவமைத்த பெண்களுக்கான மேல் சட்டையும் கிறிஸ்தவ நாடார் பெண்களுக்கு பிடித்தமானதாக இருக்கவில்லை. எனவே, கிறிஸ்தவ நாடார் பெண்கள் – ஆண்கள் போராட்ட நடவடிக்கையில் இறங்கினர். இதற்கிடையே, இப்பிரச்சனையில் நீதிமன்றத்தின் தலையீடு கோரி உள்ளூர் நீதிமன்றத்தையும் அவர்கள் அணுகினர்.

1823ஆம் ஆண்டு போராட்டம் நடத்திய கிறிஸ்தவ நாடார் பெண்களுக்கு சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இருந்தாலும் கண்ணியமான உடை அணியும் நாடார் பெண்கள், உயர்சாதி என்று சொல்லப்பட்டவர்களால் தெருக்களிலும், பொது வெளியிலும் துன்புறுத்தப்படுவது தொடர்ந்தது. கிறிஸ்தவ மிஷினரிகள் கொடுத்த அழுத்தம் காரணமாக, 1829ஆம் ஆண்டு இறுதியில் திருவிதாங்கூர் அரசு, கிறிஸ்தவ நாடார் பெண்கள் மேல்சட்டை அணிய அனுமதியளித்து உத்தரவிட்டது.  ஆனால் நீதிமன்ற தீர்ப்போ, அல்லது திருவிதாங்கூர் அரசின் அறிவிப்போ, இந்து நாடார் பெண்களுக்கு பொருந்தவில்லை. இந்து நாடார் பெண்களின் பிரச்சனை அடுத்த பத்து ஆண்டுகளுக்குப் பிறகு வைகுண்டசாமி அவர்களால் எடுக்கப்பட்டு தீர்வு காணப்பட்டது.

முத்துக்குட்டி என்ற வைகுண்டசாமி தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்ட மக்களுக்கு உதவி செய்து அவர்களின் அடிமை விலங்கை உடைத்தெறிய வேண்டும் என்ற நோக்கத்தோடு அம்மக்களை ஒருங்கிணைத்தார். 1830களின் மத்தியில் வைகுண்டர் நடத்திய இயக்கங்கள் மற்றும் அவர் உருவாக்கிய அய்யா வழி என்ற புதிய மதக்கோட்பாடு கிறிஸ்தவ மிஷினரிகளின் மதமாற்ற முயற்சிகளை எதிர்த்து வந்த நாடார் மக்களை, குறிப்பாக வசதி படைத்த தென் திருவிதாங்கோடு பகுதியை சார்ந்த நாடார்களை வெகுவாக ஈர்த்தது. மேலும் வைகுண்டர், ஒடுக்கப்பட்ட மக்கள் நாகரீக, நவீன பழக்க வழக்கங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

வைகுண்டரின் இந்த முயற்சியின் ஒரு பகுதியாக அவர் தன் கொள்கைகளையும், கருத்துக்களையும் பின்பற்றும் பெண்களை மேல்சட்டை அணியும்படி உபதேசித்தார். வைகுண்டர் மேற்கத்திய கிறிஸ்தவக் கலாச்சாரத்தை கடைபிடிக்கிறார் என்று மேல் சாதி இந்துக்கள் அவர் மீது குற்றம் சாட்டினர். அதே போல, கிறிஸ்தவ மிஷினரிகள் வைகுண்டர் மீதும், அவர் தொடங்கிய புதிய மத வழிமுறை பற்றியும் கேலியும் கிண்டலும் செய்தனர். எதிர்ப்புகள் இருந்தாலும், வைகுண்டசாமி அதிகப்படியான நாடார் இன மக்களை தன் வயப்படுத்தினார். இது தென் திருவிதாங்கூர் பகுதிகளில் கிறிஸ்தவ மதத்தை மேலும் பரப்புவதற்கு பெரும் முட்டு கட்டையாக இருந்தது.

1851ஆம் ஆண்டு வைகுண்டர் இறந்த போதிலும், அவரின் ஆவி கிறிஸ்தவ மிஷினரிகளை தொடர்ந்து மிரளச்செய்தது என்ற நம்பிக்கை நிலவியது. அவர் இறந்து 13 ஆண்டுகளுக்குப் பிறகு 1864ஆம் ஆண்டு நாகர்கோவில் கிறிஸ்தவ மிஷினரி மாவட்டத்திலிருந்து கொடுத்த அறிக்கையில் “வைகுண்டரின் கொள்கையை பின்பற்றுபவர்கள் முன் நாட்களில் உயிர்த்தெழுதல் கோட்பாடு பற்றி தெரியாதவர்களாக இருந்தனர். ஆனால் இப்போது அவர்கள் “முத்துக்குட்டி மீண்டும் வருவார். மரணமடைந்த அவரின் பக்தர்களை உயிர்த்தெழச் செய்து, அவர்களை சொர்க்கத்திற்கு அழைத்து செல்வார் என்று சொல்கிறார்கள்” என்று சொல்லப்பட்டுள்ளது.  அதற்கு பத்தாண்டுகளுக்கு பிறகும் கூட, வைகுண்டசாமி  எதிப்பு இயக்கத்தின் தாக்கம் தொடர்ந்து இருந்ததாக மிஷினரிகள் உணர்ந்தார்கள். 1874இல் நாகர்கோவில் கிறிஸ்தவ மிஷினரி மாவட்டம் கொடுத்த அறிக்கையை மீண்டும் இதற்கு ஆதாரமாகக் கொள்ளலாம்.  அந்த அறிக்கை இவ்வாறு சொல்கிறது: “சாத்தானின் தந்திரமான சூழ்ச்சியினால், இந்த பகுதியில் நமது முன்னேற்றம் பெருமளவு தடைபட்டுள்ளது. இச் சூழ்ச்சியை முறியடிக்க நாம் இடைவிடாது போராட வேண்டும். நம்முடைய ஆயுதம் பலம் வாய்ந்தது… நம் பக்கம் உண்மை உள்ளது. இதற்கு எதிராக “முத்துக்குட்டியிசமோ “அல்லது வேறு ஏதோ நரகத்தின் வாசலோ” ஒன்றும் செய்து விட முடியாது. நமக்கு தேவையானது எல்லாம், கிறிஸ்தவ தேவாலயங்களில் அதிகமான உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்பதே. கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகும் போது, முத்துகுட்டி எந்த தளத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக செயல்பட்டாரோ, இன்றும் கிறிஸ்துவிடமிருந்து கைப்பற்ற முயற்சிக்கிறாரோ, அந்த தளத்திலிருந்து அவமானப்பட்டு இழிவடைந்து ஒதுங்கிவிடுவார் “.

வைகுண்ட சாமியைப் பற்றி கிறிஸ்தவ தேவாலயங்களின் ஆவணங்களில் கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தை பார்க்கும் போது, வைகுண்டரின் இயக்கம், அவர் இறந்த பின்பு கூட எந்த அளவிற்கு துடிப்பாக இருந்தது என்பது விளங்கும்.

கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி முடிவுக்கு வந்த பின்னர் தான், தோள் சீலைப் போராட்டம் தீவிரமடைந்தது. 1858ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பிரிட்டீஷ் மகாராணியின் அறிவிப்பு பின்வருமாறு கூறியது: ” பிரிட்டீஷ் அரசு தன் விருப்பத்தின் பேரில் மகிழ்ச்சியோடு இதை அறிவிக்கிறது…அவரவர்களுடைய மத நம்பிக்கை அல்லது மத பழக்க வழக்கங்களை கடைப்பிடிப்பதால் யாரும் அவமானப்படுத்தப்படவோ, வெறுப்புடன் நடத்தப்படவோ கூடாது. யாருக்கும் கூடுதல் சலுகை காட்டக் கூடாது. எந்தவித பாகுபாடும் இன்றி சட்டத்தின் முன் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும்”.

நாடார்கள், அப்போதய திவான் மாதவராவ்- ஐ சந்தித்து மகாராணியின் உத்தரவை அமுல்படுத்த அவர் தலையீட வேண்டும் என்று மனு கொடுத்தனர்.  இதற்குப் பதிலடியாக திருவிதாங்கூர் அரசு மனுதாரர்கள் மீது போலீஸ் அடக்குமுறையை ஏவியது. இந்த அடக்குமுறை நடவடிக்கைக்கு பிறகு, நாடார்கள் இந்த பிரச்சனையில் ஒரு இறுதி கட்ட நடவடிக்கை எடுக்கத் துணிந்தனர். இந்து, கிறிஸ்தவ நாடார்கள் இணைந்து போராட முடிவு செய்தனர். மத நம்பிக்கையை விட சாதிப்பற்று மேலோங்கி இருந்ததால், நாடார் பெண்கள் மேல் சட்டை அணியும் உரிமைக்கான போராட்டத்தில் அய்யாவழி இயக்கத்தில் தீவிரமாக இருந்தவர்கள் கூட கிறிஸ்தவ நாடார்களுடன் இணைந்து போராடுவதில் எவ்வித தயக்கமும் காட்டவில்லை.

பெரும்பான்மையான இந்து நாடார்கள் “அய்யா வழி”யை  பின்பற்றுபவர்களாக இருந்தனர். தங்களுடைய நீண்ட காலப் போராட்டத்தில் கிறிஸ்தவ நாடார்கள் கலந்து கொள்ளாமல் இருந்ததால் வெறுப்படைந்த இந்து நாடார்கள் இந்த இயக்கத்தில் கிறிஸ்தவ மிஷினரிகளின் தலையீட்டை எதிர்த்தனர். ஆகவே, கிறிஸ்தவ மிஷினரிகள் இதற்கு மறைமுக ஆதரவு மட்டுமே கொடுத்தனர். நாடார் பெண்கள் மேல்சட்டை அணிய உரிமை கோரிய போராட்டத்தில் பல இடங்களில் வன்முறை வெடித்தது.  இந்துக்கள், கிறிஸ்தவர்கள் ஒன்றுபட்டு நடத்திய உறுதியான போராட்டத்தினால், 1859ஆம் ஆண்டு பிரிட்டீஷ் அரசு ஒரு அறிக்கை வெளியிட்டது. அந்த பிரகடனம் பின் வருமாறு சொல்கிறது: “அனைத்து பிரிவைச் சார்ந்த சாணார் இனப் பெண்கள் பிற கிறிஸ்தவ சாணார் இனப் பெண்களைப் போல் மேல் சட்டை அணிவதற்கோ அல்லது கோரா துணியிலான உடை அணிவதற்கோ அல்லது மீனவ இனப் பெண்கள் அணிவது போல் கோரா துணியை சுற்றிக் கொள்வதற்கோ அல்லது வேறு வடிவத்தில் மார்புப் பகுதியை மறைத்துக் கொள்வதற்கோ எந்தவித ஆட்சேபணையும் இல்லை. ஆனால் அவர்கள் உயர்சாதி பெண்கள் அணிவது போல் உடை அணியக்கூடாது “.

4

நாடார்களின் சமூக இயக்கம் நடந்து கொண்டிருந்தாலும், அடுத்த பத்தாண்டுகளில் ஈ. வெ. ரா பெரியாரின் சுயமரியாதை இயக்கம், மகாத்மா காந்தியின் ஆதரவோடு இந்திய தேசிய காங்கிரஸ் நடத்திய ஆலய நுழைவுப் போராட்டங்களுக்குப் பின்னர்தான் தென்தமிழ் நாட்டில் நாடார்கள் கோயிலில் நுழையும் கோரிக்கை நிறைவேறியது. காங்கிரஸ் கட்சி முன்னெடுத்த முயற்சிகள், நிறைவேற்றிய தீர்மானங்கள் இறுதியில் நடைமுறைக்கு வந்தன. குருவாயூர் ஆலய நுழைவு போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய ராஜாஜி மதராஸ் ராஜதானிக்கு பிரதம மந்திரியாக இருந்த போது, 1939ஆம் ஆண்டு அவர் தலைமையிலான மந்திரிசபையில் “ஆலய நுழைவு உரிமை மற்றும் இழப்பீடு சட்டம்” இயற்றப்பட்டது.

கல்வி மற்றும் வியாபாரம் மூலமாக சமூகத்தில் அந்தஸ்து பெற்ற நாடார் சமூகத்தினர், தற்போது கல்வி, சமூக, பொருளாதார தளத்தில் வளர்ச்சியடைந்திருப்பது பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டினால் அல்ல. அரசாங்கத்தின் ஆதரவை மட்டும் நம்பி இருக்காது, கல்வி கற்பதன் மூலம் சுயசார்பு நிலையை அடைந்து, ஒரு சுதந்திரமான வாழ்நிலையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று நாடார் சங்கம் விரும்பியது. 1913இல் நாடார் என்ற பெயர் பிற்படுத்தப்பட்ட சாதி பட்டியலில் இடம் பெற்றிருந்தது. பொருளாதார ரீதியாக முன்னேற்றமடைந்த ஒரு பகுதி நாடார்கள் (அவர்கள் நாடார் மகாஜன சங்கத்தில் ஆதிக்கம் செலுத்தியவர்களாக இருந்தனர்) நாடார் சாதி பெயரை பிற்படுத்தப்பட்ட சாதி பட்டியலிருந்து எடுக்க வேண்டும் என்று1917இல் வலியுறுத்தினர்.

1921 மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, தங்கள் சாதிப் பெயரை நாடார் சத்திரியர் என்று பதிவு செய்வதில் நாடார் மகாஜன சங்கம் வெற்றி கண்டது. சென்னை மாகாணத்தின் முதன்மை செயலாளராக இருந்த G.T. போக் என்பவர் “1911இல் சாணார் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டவர்கள் தற்போது “நாடார்” என பதிவு செய்யப்பட்டுள்ளனர். இது சென்னை மாகாண அரசாங்கத்தின் உத்தரவின் பேரில் செய்யப்பட்டுள்ளது. நாடார் சமுதாயத்தின் வேண்டுகோளுக்கு இணங்க அரசு ஆவணங்களில் “சாணார்” என்ற வார்த்தை இனி பயன்படுத்தக் கூடாது” என்று பதிவு செய்துள்ளார்.  நாடார்களும் விரைவில் தங்கள் முட்டாள் தனத்தை உணர்ந்து சென்னை மாகாண அரசாங்கத்திடம், நாடார் சமுதாயத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைக்க வேண்டும் என்று 1935, 1940, 1950ஆம் ஆண்டுகளில் கோரிக்கை வைத்தனர். ஆனால் அந்த கோரிக்கை 1957இல் தான் நிறைவேறியது. 

தமிழில் – ஆர்.எஸ். துரைராஜ்

(Article published in Social Scientist, March-April, 2022)

‘சுரங்கம்’ நாவல்: ஒரு ஆய்வு !

 • இரா. குமரகுருபரன்

(நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள், சங்கமாக இணைந்து எழுச்சியுற்ற கதைக் கருவைக் கொண்ட முதல் நாவல் சுரங்கம் ஆகும். சமீபத்தில் மறைந்த எழுத்தாளர் கு.சின்னப்ப பாரதி எழுதிய இந்த நாவலை பற்றி சர்வதேச தமிழ் ஆய்விதழில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் சுருக்கம் – ஆசிரியர் குழு)

இந்தியாவின் நிலக்கரிச் சுரங்கத் தொழில் 1774-ஆவது ஆண்டில் தனியாரால் தொடங்கப்பட்டது, உலகிலேயே துரிதமாகச் செயல்படும் சுரங்கங்களில் இரண்டாவது இடம் இந்தியாவிற்கே. உலகின் மிகப்பெரும் பத்து சுரங்க விபத்துகளில் இரண்டு இந்தியாவில் நிகழ்ந்துள்ளன.

தன்பாத் (ஜார்கண்ட்) தோரி நிலக்கரிச் சுரங்கத்தில் 28 மே 1965-ஆம் ஆண்டு நிகழ்ந்த தீ விபத்தைத் தொடர்ந்து சுரங்கம் வெடித்துச்சிதறி 268 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்தச் சுரங்கம் தனியாரான ராஜா ராம்கருக்குச் சொந்தமானது.  இந்த விபத்தின் எதிர்வினையாக, தனியார் நிலக்கரிச் சுரங்கங்களை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்ற தொழிலாளர்களின் போராட்டங்கள் வலுத்தன.  இந்நிலையில், மத்திய அரசு 1971-72 ஆம் ஆண்டில் சுரங்கங்களை நாட்டுடைமை ஆக்கியது. உலோகவியல் நிலக்கரிச் சுரங்க தேசியமயமாக்கல் சட்டம் 1972 நிலக்கரிச் சுரங்கம் (தேசியமயமாக்கல்) சட்டம் 1973 ஆகியன நிறைவேற்றப்பட்டன.

அடுத்ததாக. 27 டிசம்பர், 1975 சாஸ்நளா (ஜார்கண்ட்) நிலக்கரிச் சுரங்கம் வெடித்து அதன் உடனடி விளைவாக 32,000 கியூபிக் மில்லியன் தண்ணீர் உட்புகுந்த வெள்ளப்பெருக்கில் 383 சுரங்கத் தொழிலாளர்கள் (இதில் 130 பேர் ஒப்பந்த ஊழியர்கள்) சிக்கிப் புதைந்து மாண்டனர். இந்தச் சுரங்கம் பொதுத்துறை இஸ்கோவுக்குச் சொந்தமானது. இந்த நிறுவனம் உலகத்தரத்தில் உள்ளதாகச் சொல்லித் தப்பித்ததை எதிர்த்து வழக்கு நடைபெற்றது. நாற்பது ஆண்டுகள் கழித்து 2012 ல் விபத்து குறித்த தீர்ப்பு வெளியானது. கவனக்குறைவினால் நடைபெற்ற விபத்து என்று குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கு ஓராண்டுச் சிறையும் ஆளுக்கு ரூபாய் 5,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

எழுத்தாளர் கு. சின்னப்பபாரதி

சரஸ்வதி’ சிற்றிதழ் தொடங்கிய காலம் முதலாகவே 1950களிலிருந்து சிறுகதைகளையும் கட்டுரைகளையும் கவிதைகளையும் எழுதி வந்தவர் கு.சி. பா. என்று அழைக்கப்படும் எழுத்தாளர் கு. சின்னப்ப பாரதி ஆவார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்த அனுபவம் மிக்கவர்.

ஜனசக்தி, தீக்கதிர் முதலான நாளிதழ்களிலும் தாமரை, செம்மலர், சிகரம் முதலான மாத இதழ்களிலும் இவரது படைப்புகள் வெளியாகி வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. இவர் எழுதிய ‘சங்கம்’ புதினம் 1985 இலக்கியச் சிந்தனை விருது பெற்றது. “செம்மலர் மாத இதழில் இவர் எழுதிய தாகம், சங்கம், சர்க்கரை உள்ளிட்ட படைப்புகள் தொடராக வெளிவந்தன. தாகம், சங்கம், சர்க்கரை, பவளாயி. தலைமுறை மாற்றம் முதலான நாவல்கள் ஆங்கிலம், இந்தி, வங்காளி, குஜராத்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, ஃபிரெஞ்சு ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘சுரங்கம்’ நாவல் உபாலி நாணயக்காரவின் மொழிபெயர்ப்பில் சிங்கள மொழியில் வெளியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது

‘சுரங்கம்’ நாவலின் பின்புலம்

மேற்கு வங்கத்தின் தலைநகரான கொல்கத்தாவிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) புரமோத் தாஸ்குப்தா மையத்தில் கு.சி.பா. 1998 ஆம் ஆண்டு தங்கியிருந்தபோது, அசன்சால் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரான பிகாஸ் சௌதரியைச் சந்தித்தார். அவரது வேண்டுகோளை ஏற்று அவரது தொகுதியில் அமைந்துள்ள நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பற்றி நாவல் எழுதும் முயற்சியைத் தொடங்கினார்.

பிகாஸ் சௌதரியின் வழிகாட்டலில் தன்பாத், ஜாரியா, அசன்சால் பகுதிகளிலுள்ள நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களிடையே தங்கி எண்ணூறு அடி முதல் ஆயிரத்து நூறு அடி ஆழம் வரை கொண்ட சுரங்கங்களுக்குள் சென்று, தொழில் நுணுக்கங்களையும், தொழிலாளர்கள் படும் சிரமங்களையும், வேதனைகளையும் கற்றறிந்து மொழிபெயர்ப்பாளரும் எழுத்தாளருமான தமது நண்பர் கல்கத்தா கிருஷ்ணமூர்த்தி துணையுடன் வங்காளி, இந்தித் தொழிலாளர்களிடம் பேசிப்பழகி விவாதித்து, அவர்களின் வாழ்க்கைப்பாடுகளை அறிந்து, புதினமாகப் படைத்துள்ளார்.

“மனித வாழ்வின் சிரமங்களும் பிரச்சினைகளும் எங்கும் ஒரேவகைப்பட்டதானதால் மனிதர்களைப் புரிந்து கொள்வதிலான தடைகள் இடையூறுகளாக அமையவில்லை என்பது சாதகமான விஷயம். இருப்பினும் அம் மக்களின் முழு ஆன்மாவையும் தரிசிப்பதென்பது சாத்தியமற்ற விஷயம். அம் மனிதர்களுடன் கைபிடித்து, அம்மனிதர்களுக்குள் உருவாகும் அகமனப் போராட்டத்தை வெளிப்படுத்துவதும் கடினமான ஒன்று. இச் சிரமங்களுக்கு மத்தியில்தான் அவர்களின் கரங்களைப் பற்றவும் ஆன்மாவை தரிசிக்கவும் முயன்றிருக்கிறேன்” என்று மிகுந்த தன்னடக்கத்துடன் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.

‘சுரங்கம்’ கதைச் சுருக்கம்

வேலை, கூலி, உயிர்ப் பாதுகாப்பு என எந்த உத்தரவாதமும் அற்ற நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள், இழப்பதற்கு ஏதுமின்றி. தங்களது உழைப்புச்சக்தியை முதலாளிகளின் லாபத்திற்காக மட்டுமே விரயப்படுத்தி உழல்கின்றனர் முதலாளிமார்களின் கஜானாவை நிரப்புகிறார்கள். சிறு சிறு தவறுகளைச் சொல்லி நியாயமான கூலியையும் சுரண்டிக் கொழுக்கிறார்கள் மேலதிகாரிகள். இதைக் களைவதற்காக போராடத் தங்களுள் ஒருவனான பிகாஸ் சௌதரியிடம் தலைமைப்பண்பு இருப்பதை மக்கள் சோதனைக்காலங்களில் உணர்கிறார்கள். பிகாஸ் குண்டர்களால் தாக்கப்படுகிறான். போராட்டம் தொடர்கிறது. பண்ணையடிமைகளாக இருந்தபோதிருந்து தொடரும் அச்சம் போராட்டப்பாதை ஊடாகக் குறுக்கிட்டுத் தடைசெய்கிறது.

எப்படியாவது காலம் மாறிவிடும்; காளி கண்திறப்பாள் என்ற நம்பிக்கையுடன் இருந்த பல தொழிலாளர்கள் இப்போது நிலைமையை உணர்ந்து தொழிற்சங்க உணர்வோடு வேலைநிறுத்தத்தில் இறங்கி, நிலக்கரிச் சுரங்கத் தொழில் நாட்டு உடைமை ஆக்கப்பட வேண்டுமென அணிதிரள்கிறார்கள். சுரங்கம் அமைக்கத் தங்களது விளைச்சல் நிலங்களை இழப்பீடு ஏதுமற்று விட்டுக்கொடுத்து எதிர்பார்ப்பில் இருந்த விவசாயிகளையும் தனி அமைப்பின் கீழ் இணைத்துக்கொண்டு போராட்டம் நடத்த அறைகூவல் விடுக்கிறார் பிகாஸ். மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பம், உண்ணாவிரதம், முற்றுகை, சிறை என்று பலவழிகளில் போராட்டப்பாதை தீர்மானிக்கப்படுகிறது.

இப்படி ஒருவாறாக, நிலக்கரிச் சுரங்கம் நாட்டுடைமையாக்கப்பட்டு விட்டது. ஆனால், முதலாளி அகற்றப்பட்டு அதற்குப் பதிலாக, அரசுத் தலைமைப் பொறுப்பு, தனி அமைச்சர், பெர்சனல் மேனேஜர், ஜெனரல் மேனேஜர் என்று நிர்வாக அமைப்பின் பெயர்களில் மட்டுமே மாற்றம். கூலி கூடினாலும், நிலக்கரி வெட்டி எடுப்பதில் அதே நடைமுறையான முறையற்ற சுரண்டல் தொடர்கிறது. தொழிற்சங்கத்தலைவராக பிகாஸ் பலமுறை எச்சரித்தும் சுரங்கக் கட்டமைப்பு சரிசெய்யப்படாத நிலையில், நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாக விபத்து நேர்ந்து, பல தொழிலாளர்கள் பலியாகின்றனர். சகலபகுதித் தொழிலாளர்களும் உயிர் நீத்தோரின் நினைவாகத் திரண்டெழுப்பிய அஞ்சலி கீதம் எதிர்கால சமத்துவ வளவாழ்வுக்கான எழுச்சி கீதமாகிறது.

யதார்த்த சூழல் சித்திரிப்பு

மனிதர்கள், கறையான் புற்றுப் போன்ற குடிசைகளில் குடும்பம் நடத்துகின்றனர். கறையான் புற்றுக்கு பாம்புகள் வருவது வழக்கம்தானே? விஷப்பாம்புக்கடிக்கு இரையாகும் மக்களும் உண்டு. பன்றிகள், நாய்கள் படுத்த கெட்ட வாடை பகலில் உட்கார உதவும் கயிற்றுக் கட்டில், இரவில் குழந்தைகளிடமிருந்து கணவன் மனைவியின் அந்தரங்கம் காக்கும் தடுப்புச்சுவராக எழுந்து நிற்கும். ஆறுமணிக்கு காலைச்சங்கு ஒலித்ததும் கூண்டிலிருந்து சர்க்கஸ் வளையத்துக்குள் நுழையும் மிருகங்களைப்போல் சுரங்கத்துக்குள் நுழையும் தொழிலாளர்கள் கறையான் புற்றிலிருந்து ஈசல்கள் இறக்கை முளைத்துப் பறப்பது போல லிப்டிலிருந்து வெளியேறுகிறார்கள். மேல்பகுதி இயந்திரக் கொட்டகையில் ‘பிட் பாட்டத்தில்’ (உள் அடித்தளம்; இருப்பவர்களுக்குக் கேட்குமாறு மின்சார மணியொலிப்பு பணிநேரம் முடிவடைவதைத் தெரிவிப்பதும் விளக்கையும் ஹெல்மெட்டையும் தொப்பியையும் காவலாளியிடம் ஒப்படைத்துக் கையெழுத்திட்டு தொழிலாளர்கள் கீழிருந்து மேலாக வெளியேறுவதும் அடுத்த ‘ஷிப்ட் தொழிலாளர்கள் மேலிருந்து கீழிறங்கி அவசர அவசரமாக உள்வேலைக்கான உடைகளை மாற்றிக் கொண்டு கேப் லேம்ப்’ அறைக்குச் செல்வதும், ஹெல்மெட்-ஹெட்லைட்-பேட்டரி அணிகலன்களை இடுப்பில் இறுக்கமாகக் கட்டிக் கொள்வதும் எந்திரத்தனமாக நடைபெறுகின்றன.

தண்டா (மூங்கில் கழி கொண்டு சுவற்றைத் தட்டிப்பார்த்து சுவர்க்கூரை வலுவை சோதிப்பது, ‘சேப்டி லேம்ப்’ மூலம் மீதேன் கேஸ், கார்பன்-டை- ஆக்ஸைடு கசிவு சோதிப்பது மைனிங் சர்தார் கடமை. நீர்க்கசிவு உடைப்பு சோதனை, நீர் எந்திரம் செயல்பாட்டைக் கண்காணிப்பது ‘பம்ப் கலாசி யின் பணி, நிலக்கரிப் படிவத்தை லேசான வெடிவைத்துத் தகர்க்கும் டிரில்லர்’ உடைபட்ட கரியை வெட்டிக் குவிப்பவர், அதை இரும்புத் தொட்டியில் அள்ளிப்போட்டுப் பாரம் ஏற்றுபவர்கள் என்று மூவகைப் பிரிவினர் இங்கு உடலுழைப்புத் தொழிலாளர்கள்.

கிணற்றுத்துளை வழி மேல்தளத்திலிருந்து இறங்கிவரும் மின்சார ஏணி, குடைவுச்சுவர் வழி ஒழுகும் நீர், மேற்கூரை இற்றுவிழும் ஓட்டை ஏணி, ஏணியின் துரு வாடை, கிரீசின் எண்ணெய் கமறல் ஏற்படுத்தும் குமட்டல் வாடை இருளில் ஏணி செல்லும்போது கூரையிலும் சுவர்களிலும் புரண்டோடும் ஊற்றுவெள்ளம். சுவர்ப்பக்கவாட்டு வாய்க்காலில் மழைவெள்ள இரைச்சல், ராட்சத மின் எந்திரங்கள் பள்ளங்களில் சேகரமான நீரை உறிஞ்சி தாரையாகக்கொட்டுவது, ஏணியிலிருந்து இறங்கிய தொழிலாளர்கள் ஒரேசமயத்தில் தங்களது ஹெல்மெட்கள் மூலம் இயக்கும் பேட்டரி வெளிச்சம் குறுக்களவு பதிமூன்று அடி – உயரம் ஒன்பது அடியுள்ள குடைவுப்பாதைகள், ஐம்பது அடி தடிமனான கிளைக் குடைவுத் தூண்கள் கரிப்படிவம் வரையிலான தோண்டுமிட எல்லைகள் என்ற சித்திரிப்புகள் யதார்த்தமான சுரங்கப்பாதைக்குள் திகிலுடன் நம்மைப் பயணிக்க வைப்பன.

கதை மாந்தர்கள்

பிகாஸ் சௌதரி

கதை எழுதத் தூண்டிய பிகாஸ் சௌதரியின் சொந்த தொழிற்சங்க வாழ்க்கை காரணமாக, நாயகன் பெயரும் பிகாஸ் சௌதரியாகவே அமைந்துவிட்டது. அரசியல் தொழிற்சங்க வாழ்க்கைக்குத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டதால் நிஜ மனிதர் தோழர் பிகாஸ் சௌதரி இறுதி வரை திருமணம் செய்து கொள்ளவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர் பிகாஸ் சௌதரி குறித்த நாடாளுமன்ற இணையதள விவரக்குறிப்பு இதை உறுதிப்படுத்துகிறது மேற்கு வங்க மாநில சிபிஐ எம் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராகவும், மேற்கு வங்க மாநில இந்திய தொழிற்சங்க மையத்தின் (சிஐடியு) மாநில செயற்குழு உறுப்பினராகவும், நான்கு முறை மேற்கு வங்க சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருமுறை நாடாளுமன்ற அவை உறுப்பினராகவும். மத்திய அரசின் நிலக்கரித்துறை தொடர்பான ஆலோசனைக் குழுக்களிலும் உறுப்பினராக இடம்பெற்றவர். புதின நாயகனும் இவரைப்போலவே தொழிற்சங்கவாதி; மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர். தத்துவப் பார்வையும் அரசியல் வழிகாட்டுதலும் தீர்மானம் மேற்கொள்வதில் தெளிந்த ஞானமும் பெறவேண்டும். அத்தோடு நிறையப் படிக்க வேண்டும் என எண்ணினான். அன்றாட உழைக்கும் மக்கள் நடத்தும் கோரிக்கைகளுக்கான போராட்டத்தையும் அரசியல் பொருளாதார. நடவடிக்கைகளையும் கற்றுத்தெளிவடைய ‘கணசக்தி’ பத்திரிகையைத் தற்பொழுது முறையாகப் படிக்க ஆரம்பித்தான். “கணசக்தி” என்பது மேற்கு வங்க மாநிலத்தின் சிபிஐ (எம்) கட்சி வெளியிட்டுவரும் வங்காள நாளிதழ் ஆகும்.

ஜமுனா குமாரி

பிகாஸ் பெற்றோர் இருவரும் காலமான பின்னர் தாய் ஸ்தானத்திலிருந்து வளர்த்துப் படிக்சு வைத்த பிகாஸின் அக்கா தம்பிக்குத் திருமணம் செய்து குடியும் குடித்தனமுமானால் வாழ்க்கை முன்னேறிவிடும் என்று நம்புபவள். ஒவ்வொரு முறையும் சுரங்கத்தில் தொழிற்சங்கத்தின் வேலை நிறுத்தம், மறியல் நடக்கும் போதும் நிர்வாகம், காவல்துறையின் தாக்குதலுக்கு ஆளாகும் பிகாஸ், துர்காதேவி அருளால் உயிருக்கு ஆபத்தில்லாமல் தப்பிப்பதாக’ நம்பும் ஜமுனா குமாரி தம்பியின் சமூக வாழ்க்கைக்குத் தடை செய்யவில்லை. எனவே தம்பியின் தொழிற்சங்க சமூக வாழ்வு இடையறாது தொடர்கிறது.

சகுந்தலா தேவி

வஞ்சகனான சுரங்க முதலாளி திவாரியின் மனைவி சகுந்தலா தேவி ’கருணைமிக்க சூழல் கைதி’ பூர்வீக கிராம வாழ்க்கையை ஏக்கத்துடன் அசைபோடுபவள். ஏழையான தன் பெற்றோருடன் உறவு அறுபடக் காரணம் கணவனின் ‘ திடீர் ‘ பணக்கார புத்தியும், பணக்கார ஒழுக்கக்கேடும் என்பதை நன்குணர்ந்தவள். அமைச்சர் பெருமக்கள் உள்ளிட்ட சமூக உயர்வட்டாரம்’ பங்கேற்கும் தமது மகளின் ஆடம்பரத் திருமண நிச்சயதார்த்தத்தில் தன் பெற்றோர் பங்கேற்பது இழிவு எனக் கணவன் கருதவே மனவேதனை கொள்கிறாள். அவனைப்பழிக்கிறாள். அவ்வப்போது பல பெண்களுடன் பாலியல் சகவாசம் வைத்திருக்கும் தன் கணவனை அறிவாள். தட்டிக்கேட்டு தனது மணவாழ்வு முறிந்துபட்டால் வரும் வலியை உணரக்கூடியவள் என்பதால், எதிர்க்க இயலாது அமைதி காக்கிறாள். ஆனால் தன்னையொத்த

சீமாட்டிகளைப் போல, கணவனின் ஒழுக்கக்கேட்டிற்குத் துணை போகும் பாத்திரமல்ல. பொதுவாக வில்லன் என்றாலே அவன் மனைவியும் அப்படித்தான் என்று சித்திரிக்கும் இலக்கிய பாத்திரங்களைப் போலல்லாதது சகுந்தலாதேவியின் பாத்திரப்படைப்பு.

கதையில் இடம்பெறும் அங்கத காட்சிகள் சமூக அழுக்குகள் அலசப்படும் இடமாக அமைகின்றன.

மாண்பற்ற முதலாளித்துவம்

ஒருமுறை சுரங்கத்தினுள் சிறுவெடி வைத்துக் கரிப்படிவத்தைப் பிளந்தெடுக்கத் துளையிடும்பொழுது தண்ணீர் பீய்ச்சியடிக்கத் துவங்கி விட்டது. அதை உடனடியாக அடைத்து விடும் முயற்சியில் ஈடுபடாவிட்டால் பெரிய விரிசல் ஏற்பட்டு நீர்ப்பிரவாகம் எடுத்து விடும். உள்ளே உள்ள அத்தனை பேர்களுக்கும் ஆபத்து ஏற்படும். இந்நிலையில் ஒரு தொழிலாளி தன் முதுகை அத்துவாரத்தின் மீது சாய்த்து தன் பலங்கொண்ட மட்டும் அமுக்கி நின்று கொண்டான். தொழிலாளர்கள் முட்டுப்பலகையை எடுத்தோடி வந்தனர். உடன் புதிய நெருக்கடி ஒன்று உருவாகிவிட்டது. அவன் அமுக்கிக் கொண்டிருந்த துவார வடும்பை ஒட்டி தண்ணீர் பீய்ச்சியடிக்கத் துவங்கிவிட்டது. அவன் நகர்ந்து ஒதுங்கினால் போதும், சுவரில் பெரும்பிளவு உருவாகிவிடும் இதையுணர்ந்த பொறியாளர் உடன் ஆபத்தைத் தடுக்க அமுக்கிக் கொண்டிருந்த தொழிலாளி மீதே பலகைகளை அழுத்தி முட்டடிக்க உத்தரவிட்டான். சிலுவையில் அறையப்பட்ட ஏசுவைப் போல உயிரோடு அத்தொழிலாளி சுவற்றில் அறையப்பட்டான் தன் சக தொழிலாளியின் உடல் மீது மனதைக் கல்லாக்கிக் கொண்டு மற்றவர்கள் அவ்வேலையைச் செய்து முடித்தனர். அவர்களால் மறுத்துப் பேசமுடியாத நிலை. சுரங்கப் பாதுகாப்புக்காகவும் தன் சக தொழிலாளர்களின் உயிருக்காகவும் அவன் தவிர்க்க முடியாமல் தன் உயிரைத் தியாகம் செய்தான். அந்த கொடும் நிர்ப்பந்தத்தால் விளைந்த தியாகம், நிர்வாகத்தால் சர்வ சாதாரணமாக கடந்து செல்லப்படுகிறது.

சோசலிச எதார்த்தவாதம்

எஸ். தோதாத்ரி சோசலிச எதார்த்தவாதத்தின் அடிப்படைகள் எனும் தமது நூலில் அதன் பண்புகளைக் கீழ்க்காணுமாறு கூறுவார். “உலக இலக்கிய அரங்கில் யதார்த்தவாதம் வளர்த்து வைத்திருந்த விதிமுறைகளை அடியொற்றியே சோசலிச எதார்த்தவாதம் எழுந்தது; எதார்த்தவாதத்தில் காணப்படும் சமூக ஆய்வு முறை வகைப்பாடான பாத்திரப்படைப்பு. சமூகத்தைப் புறவயமாக (objective) ஏற்றுக்கொள்ளுதல் ஆகியவை இதிலும் தொடருகின்றன. சமூக விமரிசனமும் ஆழமாக இடம் பெறுகிறது. இவற்றிற்கெல்லாம் மேலாக சோசலிச எதார்த்தவாதத்தில் வேறு சில புதிய அம்சங்களும் இடம்பெறுகின்றன. உழைப்பு மனிதனது வாழ்வின் அடிப்படை என்ற நோக்கம் இந்த இலக்கியங்களில் காணப்படுகிறது சமூகம் இயங்கியல் பொருள்முதல்வாத முறையில் ஆய்வு செய்யப்படுகிறது. வர்க்கப் போராட்டத்தின் தன்மை சித்தரிக்கப்படுகிறது. உழைப்பவனைச் சார்ந்து நிற்கும் போக்கு காணப்படுகிறது. இதனையொட்டிய வரலாற்று உணர்வும் மனிதநேயமும் சமூக உணர்வும் மற்ற இலக்கியங்களில் காணமுடியாத அளவிற்கு இந்தவகை இலக்கியங்களில் மிகவும் விரிவாக இடம்பெற்றுள்ளன.

வரலாற்றுச் சூழமைவு

சுரங்கம் புதினம் முழுவதுமாக தொழிலையும் தொழிற்சங்கத்தையும் வளர்ப்பதாகவும், படிப்படியாக சமூக மாற்றம் கோரியுமாக வளர்கிறது. ஒடுக்கப்பட்ட முதல் போராட்டத்தில் சுரங்க முதலாளிகளின் கூலிப்படைகளால் தாக்கப்பட்டு அதிலிருந்து பாடம் கற்றுத் தெளிகிறான் பிகாஸ்.  சகதொழிலாளிகளிடமிருந்து எழுச்சி பெறும் ஒரு தலைமைப் பண்பாளனை அடையாளம் கண்டடைந்து, மேலும் போராட்டத்திற்கு ஊக்குவிக்கிறது தொழிலாளி வர்க்கம். எதார்த்தமான சூழலுடன் கிளர்ச்சிப் பிரச்சாரம் இணையவே கூடுதல் வலு கிடைக்கிறது. போராட்டம் வெற்றிபெறுகிறது. சூழல் கனியவே, சுரங்கத்தொழில் பொதுத்துறை வசமாகிறது,

கொள்ளை லாபமீட்டும் முதலாளித்துவ அமைப்பின் மீதான உரையாடல் தொழிலாளர்கள் மத்தியிலும் விவசாயிகள் மத்தியிலும் கொந்தளிப்பையும் அச்சத்தையும் தோற்றுவிக்கிறது. தனியார் நிலக்கரிச் சுரங்கம் தோண்ட இழப்பீடு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நிலம் தந்து ஏமாந்த விவசாயிகளையும் போராட்டத்தில் இணைப்பதன் தேவையை உணர்த்தும் தொழிற்சங்கத்தலைவர். வர்க்க சமரசமின்றிப் போராடும் தலைமையின் அவசியம் உள்ளிட்ட அம்சங்கள் சமூக விமர்சனமாக விவாதங்களில் இடம் பெறுவதோடு முரண்பாடுகளை கூர்மைப்படுத்துகின்றன.

சுரண்டலின் உச்சம்

கூலியைக் கூட ஏமாற்றிப் பிடித்தம் செய்து சுரண்டுவது முதலாளித்துவ நடைமுறை கந்துவட்டிக்காரர்களும் சாராயக்கடைக்காரர்களும் முதலாளிகளுக்கு மறைமுகமாக சேவைபுரிவது முதலாளித்துவ சுதந்திரத்தில் அனுமதிக்கப்படுகிறது. நியாயமான கூலிகேட்டு அணிதிரளாமல் பார்த்துக் கொள்வதில் இது முதலாளிகளுக்கு உதவுகிறது. சாராயம், கந்துவட்டியில் அவதியுறும் தொழிலாளர் வர்க்கம் இற்று அழிவதை முதலாளி வர்க்கம் வெறுமனே வேடிக்கை பார்க்கிறது. தன்னுயிரைத் திரணமாக மதித்து வளமான எதிர்காலத்திற்காக உழைப்பவர்கள் ஒருமுறையே சாகிறார்கள்; அடிமைகள் அன்றாடம் சாகின்றனர் என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது.

வர்க்கப் போராட்ட பார்வை நாவலின் ஆதாரமாக ஓடுகிறது.  தாக்குதலுக்கு உள்ளான தொழிலாளர்கள் மீண்டும் பிகாஸ் சௌதரி தலைமையில் அணிதிரள்கிறார்கள் வர்க்கப் போராட்ட எதிர்ப்பைத் தாங்கிக்கொள்ள இயலாத நிர்வாகம், தொழிலாளர்களை உளவறிய முயல்வதையும், திரள விடாமல் தடுக்க எடுக்கும் முயற்சிகளையும் அலட்சியப்படுத்திவிட்டு முன்னேறுகிறது தொழிலாளி வர்க்கம்.

வர்க்கப் போராட்டம்

‘சுரங்கம்’ புதினம் முழுவதுமே அனுபவ ரீதியான படிப்பினைகளைக் கற்றுக் கொண்டு தொழிலாளி வர்க்கம் முன்னேறியதைக் காணலாம். நிலக்கரிச் சுரங்க நாட்டுடைமை எவ்வாறு நிறைவேறியது? ஒன்றுபட்ட தொழிலாளர்கள் விவசாயிகளின் உருக்குப்போன்ற ஒற்றுமையினால் தான். அளவில் ஏற்படும் மாற்றம் குணத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும். அதேபோலக் குணத்தில் ஏற்படும் மாற்றம் அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும். குறைந்த தொழிலாளர்கள் எண்ணிக்கை முதலாளிகளுக்குச் சாதகமே. கூடுதல் எண்ணிக்கை இதர பகுதி தொழிலாளர்களையும் வேலை இழப்பு அச்சத்திலிருந்து விடுவிக்கிறது. ‘ஒற்றுமைக்கான போராட்டம், போராட்டத்திற்கான ஒற்றுமை என்பதை தொழிற்சங்க இயக்கம் இயங்கியல் அடிப்படையில் அணுகுவதால் முதல் தோல்வியிலிருந்து பெறும் படிப்பினை படிநிலைகளில் வெற்றியடைவதில் முடிகிறது.

முடிவுரை

நாவலின் காலகட்டம் 1975 வரைக்குமானது என்று ஆசிரியர் கு.சி.பா., நாவலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார். எண்ணற்ற போராட்டங்கள் மூலம் தனியாரிடமிருந்து பொதுத்துறைக்கு சுரங்கத்தொழில் மாறியது. இருந்தபின்னும் சுரண்டல் முறை தொடர்கிறது சுரங்கத் தொழில் இப்போது மாஃபியாக்களின் பிடியில் சிக்கித் தவிக்கிறது. கொள்ளை லாபம் ஈட்டும் சுரங்கத்தொழில் மீண்டும் தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டுவிட்டது. 1972- 73 ஆம் ஆண்டு தேசிய மயமாக்கப்பட்ட சுரங்கத்தொழில் சட்டங்கள், மார்ச் 2015 ஆம் ஆண்டு திரும்பப் பெறப்பட்டு மீண்டும் தனியாருக்குத் திறந்துவிடப்பட்டுள்ளது.

கரியற்ற சக்கையான சுரங்கங்கள் கைவிடப்பட்டு வேறு இடங்களை நாடுவதற்கு ஒப்பாக தொழிலாளர்களும் சக்கையானபின் தூக்கி வீசப்படுகிறார்கள். மீண்டும் பொதுத்துறைக்கு மாற்றப்பட்டு சுரண்டல் முறைக்கு முடிவுகட்டும் வரை விடியல் இல்லை. உலகமயமாக்கல் காலகட்டத்தில் ‘மீண்டும் லாபம், அதிக லாபம் மட்டுமே குறிக்கோள்’ எனும் சுரண்டல் புதுப்புது வடிவங்களில் உருவாகிறது.

சுரங்கம் நாவலில்,“தன்பாத் சுரங்கத்தில் ஒரு தொழிலாளி பிறருக்காக எப்படி தன்னைத்தானே உயிர்ப்பலி கொடுத்துக் கொண்டான்? என்ற தொழிலாளர்களின் அடிமனதில் உறைந்துவிட்ட சித்திரம் வீரயுக எழுச்சிப்பாடலாக ஒலிக்கும். பிகாஸ் விகாஸ் என்னும் வங்கமொழிப் பதத்திற்கு ‘வெளிச்சம்’, ‘பிரகாசம்’, ‘வளர்ச்சி’ என பல பொருள் உண்டு.  சுரங்க வாயிலில் வெளிச்சம் பரவி, நிரந்தர விடியல் காணும் இந்த புதினத்தின் வெற்றியையும் அவ்வாறே சொல்லலாம். வேற்று மொழி பேசும் மக்கள் வாழும் பகுதியில் செய்யப்பட்ட கள ஆய்வில் விளைந்த இந்த நாவல், தமிழில் வெளியானது. பல்வேறு வட்டார மொழிகளில் வெளியாகி உணர்வூட்டுகிறது. அதில்தான் அதன் வெற்றி அடங்கியுள்ளது.

முற்றுகையின் கீழ் இந்திய ஜனநாயகம்…

 • பிரகாஷ் காரத்

இந்திய மக்களாகிய நாம் நமது தேசத்தின் 75வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் வேளையில், விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் கடந்த பின்பும் கூட, இந்திய நாட்டின் நாடாளுமன்ற ஜனநாயகம் நடைமுறையில் இருக்கிறது என்பது நமது சாதனைகளுள் ஒன்றாகும். இதற்கு முழுமுதற் காரணம், 1950 ஆம் வருடம் நாம் ஏற்றுக் கொண்ட இந்திய அரசியல் அமைப்பு சட்டமும் அதன் பலனாக இந்திய மக்கள் அனைவரின் குரல்களும் அரசியலில் ஒலித்துக்  கொண்டிருப்பதும்தான். இன்றைக்கு இந்திய மக்கள் எழுப்பும் இந்த குரல், இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தில் எழுப்பப்பட்ட குரல்களின் எதிரொலி என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.

இந்திய நாட்டில், முதலாளித்துவ சக்திகளின் குறுகிய பார்வை போன்ற கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் கூட, சுதந்திரம் பெற்று ஏழு பத்தாண்டுகள் கடந்த பின்னரும், நாடாளுமன்ற ஜனநாயகம் என்பது உயிர்ப்புடன் இருக்கிறது. இவ்வளவு காலம் நாடாளுமன்ற ஜனநாயகம் நிலைத்திருப்பதற்கு முக்கிய காரணம், இந்திய மக்களும், ஜனநாயக சக்திகளும் இணைந்து நடத்திய போராட்டங்கள்தான்.

எனினும், நாம் 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலம் இருண்டதாக தெரிகிறது. நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பும், இந்திய அரசியல் அமைப்பு நமக்கு கட்டமைத்து கொடுத்திருக்கிற ஜனநாயகத்தை பாதுகாத்திடும் அடித்தளங்களும் மிகத் தீவிரமான தாக்குதல்களுக்கு உள்ளாகி இருக்கின்றன. இன்றைக்கு முழு அளவிலான சர்வாதிகார போக்கு என்பது தலைதூக்கி வருகிறது. இது இந்திய நாட்டின் ஜனநாயகம் வழங்கியுள்ள அரசு நிறுவனங்கள்  அமைப்புகளின் அதிகாரங்களை குறைத்துவிட்டதால், இந்திய நாட்டின் ஆட்சி அதிகாரம், நீதிமன்றம் மற்றும் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றங்களுக்கு இடையேயான சமநிலையை பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது.

முழு அளவிலான சர்வாதிகாரத்தனம்..

கூடுதலான நாடாளுமன்ற உறுப்பினர்களோடு, 2019ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க., ஒரு கட்சி சர்வாதிகாரத்தை கட்டமைப்பதற்கான இலக்கினை தனக்குத் தானே நிர்ணயித்துக் கொண்டுள்ளது. பா.ஜ.க.வின் இந்த நிர்ணயிப்பிற்கு எதிராக அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரணியில் நின்று கடுமையான எதிர்த்தாக்குதலை நடத்திட வேண்டும். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல்களை ஒடுக்குவது, எதிர்க்கட்சிகள் ஆட்சி புரியும் மாநிலங்களில், ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி ஆட்சிக் கவிழ்ப்பை செய்வது, மத்திய அரசின் சிபிஐ, வருமானவரி, அமலாக்கத்துறை போன்ற   அமைப்புகளை தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களின் மீதும், எதிர்க்கட்சி தலைவர்கள் மீதும்  தாக்குதலுக்கு பயன்படுத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது சர்வாதிகார பா.ஜ.க. அரசு.

நாடாளுமன்றத்தின் மாண்புகளை குறைப்பது, நாடாளுமன்ற நடவடிக்கைகளை சீரழிப்பது என்பது  மோடியின் இரண்டாவது ஆட்சியில் மிகவும் தீவிரத்தன்மையோடு உள்ளது. இந்திய நாடாளுமன்றம் கடந்த 2021 ஆம் ஆண்டில் மொத்தத்தில் 50 நாட்களுக்கும் குறைவாகவே நடைபெற்றுள்ளது. எந்தவொரு மசோதா மீதும் விவாதங்கள் என்பது நடப்பதில்லை; எதிர்க்கட்சிகளுக்கு விவாதங்களுக்கான நேரம் என்பது ஒதுக்கப்படுவது கிட்டத்தட்ட இல்லை என்ற அளவில்தான் உள்ளது. அதே போல், எந்தவொரு மசோதாவும் ஆய்விற்கு உட்படுத்துவது என்பதும் இல்லை. கடந்த UPA ஆட்சியில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 60 முதல் 70 சதவீத மசோதாக்கள், நாடாளுமன்ற நிலைக்குழு அல்லது தேர்வுக்குழுக்களுக்கு அனுப்பப்பட்டன. ஆனால் இந்த சதவீதம் பா.ஜ.க. வின் முதலாம் ஆட்சியில் 23 சதமாகவும், இரண்டாவது ஆட்சியில் 13 சதமாகவும் குறைந்து விட்டன. இவற்றோடு இணைந்து, எதிர்க்கட்சிகள் பிரச்னைகளை எழுப்புவதற்கும், ஓட்டெடுப்பு கோருவதற்கும் நாடாளுமன்றத்தில் மறுக்கப்பட்டு வருகிறது. பல்வேறு மசோதாக்களை பண மசோதாக்களாக (Money Bill) கொண்டு வந்து, ராஜ்ய சபையின் மாண்புகளை தரம் தாழ்த்தி விட்டது மோடி அரசு.

பா.ஜ.க. அரசின் சர்வாதிகாரப் போக்கு, இந்திய அரசியல் அமைப்பு சட்டம் வழங்கியுள்ள பொது மக்களின் ஜனநாயக உரிமைகள் மற்றும் குடிமக்களின் சுதந்திரம் ஆகியவற்றை காலில் போட்டு மிதிப்பது என்கிற இடத்திற்கு ஆட்சியாளர்களை இட்டுச் சென்றுள்ளன.

எதிர்ப்புக் குரல்களை குற்றவாளிகளாக சித்தரித்து தண்டிப்பது, குடிமக்களின் உரிமைகளை நசுக்குவது என்பது சர்வாதிகார மோடி ஆட்சியின் முத்திரையாக மாறிவிட்டது. கொடூரமான சட்டங்களான உவாபா (UAPA)  போன்றவற்றின் மூலம் எதிர்ப்பு குரல்களை நசுக்கும் போக்கு வரலாறு காணாத அளவிற்கு அதிகரித்துள்ளது. 2014 முதல் 2020 ஆம் வருடங்களுக்கு இடையிலான ஆறு வருட காலத்தில் 690 குற்ற வழக்குகள் இந்திய நாட்டு மக்களின் மீது போடப்பட்டுள்ளன. இந்த வழக்குகளின் வாயிலாக 10,552 பேர் கைது செய்யப்பட்டுள்ள கொடூரம் நிகழ்ந்துள்ளது. அவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் அரசியல் செயல்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள், அறிவுஜீவிகள், எழுத்தாளர்கள் என அந்தப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. பீமா கோரேகான் வழக்கில் 16க்கும் மேற்பட்ட சமூக செயல்பாட்டாளர்கள், அறிவு ஜீவிகள் கைது செய்யப்பட்டு சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் மூன்று வருட காலமாக அடைக்கப்பட்டுள்ளனர்.

உச்சநீதிமன்றம் தனது சுயேச்சையான செயல்பாட்டை நிறுத்திவிட்டு அதிகாரிகளின் கைப்பவைகளாக செயல்பட ஆரம்பிப்பதுதான் சர்வாதிகார ஆட்சியின் மோசமான அம்சம். உச்சநீதிமன்றம் ஒரு நிர்வாக நீதிமன்றமாக செயல்படத் துவங்கியுள்ளது. சமீபத்தில் வழங்கப்பட்ட தீர்ப்புகளான ஜாக்கியா ஜாஃப்ரி வழக்கிலும், பண மோசடி வழக்குகளில் அமலாக்கப் பிரிவின் அதிகார வரம்பு பற்றிய வழக்கிலும் உச்ச நீதி மன்றம் குடிமக்களின் உரிமைகள் மீது நிர்வாகத் தாக்குதல்கள் நடத்தியிருப்பதை காண முடியும்.

75 ஆண்டுகால இந்திய வரலாற்றை பார்க்கையில், 1975ஆம் வருடம் ஜூன் மாதம் இந்திராகாந்தி  ஆட்சி காலத்தில், இந்திய ஜனநாயகத்திற்கு நெருக்கடி நிலை என்கிற பெயரில் மிகப் பெரிய தாக்குதல் ஏற்பட்டது. ஆனால் அது 20 மாத காலம் மட்டுமே நீடித்தது.  அந்த காலகட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். சிவில் உரிமைகள் பறிக்கப்பட்டு, அனைத்து பத்திரிக்கைகளும் தணிக்கைக்கு உள்ளாக்கப்பட்டன. அடுத்து வந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோற்கடிக்கப்பட்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஆனால் இன்றைக்கு ஜனநாயகத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ள தாக்குதலானது, எமர்ஜென்சி காலத்தை விட மிகவும் தீவிரமானது; விரிவானது. குடியாட்சி என்கிற தத்துவத்தின் முக்கியமான அம்சங்களான மதச்சார்பின்மை மற்றும் கூட்டாட்சி இரண்டையும் துண்டித்து வருகிறது.

ஏன் இந்த கொடூர வடிவிலான சர்வாதிகாரம் இந்திய நாட்டின் ஜனநாயகத்தை முடக்கத் துடிக்கிறது? இது ஏதோ பிறழ்வோ அல்லது தற்செயலாக ஏற்பட்ட விபத்தோ அல்ல. இது தனிநபர் சர்வாதிகாரப் போக்கு என்றும் நாம் குறிப்பிட முடியாது. இத்தகைய சர்வாதிகாரம் கருக்கொள்வதற்கு பல்வேறு பாசிச சக்திகள் ஒன்றிணைந்து செயல்பட்டுள்ளன என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

அரசியல் ஜனநாயகம் குறித்து அம்பேத்கர் …

இந்திய நாட்டின் அரசியல் அமைப்பு சட்டத்தினை நாட்டிற்கு அர்ப்பணிக்கும் நேரத்தில், டாக்டர். அம்பேத்கர் அவர்கள் கூறியதை தற்போது நினைவு கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. பொருளாதார சமத்துவமும், சமூக நீதியும் வெற்றி பெறாமல் அரசியல் சுதந்திரம் என்பது வெற்றி பெறாது என்று கூறினார். இந்தியாவில் ஜனநாயகம் என்பது வெறும் மேல்பூச்சாக மட்டுமே உள்ளது; அது ஜனநாயகத்திற்கு முற்றிலும் விரோதமானது என்றும் அம்பேத்கர் எச்சரித்தார்.

இவ்வளவு காலமும், தேர்தல் ஜனநாயகம் நடைமுறையில் இருந்தாலும், பொருளாதார மற்றும் சமூக ஜனநாயகம் தோற்றுப் போயுள்ளது. ஆட்சியாளர்கள் தேர்ந்தெடுத்த முதலாளித்துவ பாதை இவற்றையெல்லாம் சீரழித்துவிட்டதோடு, பிராந்திய அளவிலான வேற்றுமைகளையும் அதிகரித்துள்ளது. கடந்த 30 ஆண்டுகாலமாக இந்தியாவில் அமல்படுத்தப்பட்டு வரும் புதிய தாராளமயக் கொள்கைகள், பொருளாதார அசமத்துவத்தை மேலும் மேலும் விரிவுபடுத்தி, இந்திய நாட்டின் வளங்களை எல்லாம் ஒரு சிலரின் கைகளில் கொண்டு சேர்த்திருக்கிறது. மற்றொரு புறம் முதலாளித்துவ வர்க்கம், நிலப்பிரபுக்களிடம் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, சாதிய ஒடுக்குமுறைகளை களைவது போன்ற ஒரு நாடகத்தை மட்டுமே நிகழ்த்தியுள்ளனர்.

அம்பேத்கர் அவர்கள் அரசியல் ஜனநாயகத்திற்கும், பொருளாதார மற்றும் சமூக நிலைமையில் விரிவடைந்து வரும் சமத்துவமற்ற போக்கிற்கும் உள்ள முரண்பாட்டினை முன் கூட்டியே உணர்ந்து சொல்லியிருக்கிறார்.

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், அம்பேத்கரின் இந்த பகுப்பாய்வும், இந்தியாவில் மார்க்சிஸ்டுகள் சொல்லி வரும் கருத்துக்களும் இணையானதாக உள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி துவக்கத்திலிருந்தே சொல்லி வருவது என்னவென்றால், சமூக மற்றும் விவசாய உறவுகளில் ஜனநாயகப் பூர்வமான மாற்றத்தை  முழுமையாக கொண்டு வராமல் முதலாளித்துவ வளர்ச்சியே சாத்தியமில்லை என்பதுதான். நவீன தாராளமயக் கொள்கைகளும், இந்துத்துவா சர்வாதிகாரமும் கைகோர்த்து பவனி வரும்போது, சமூக மற்றும் பொருளாதார நீதி என்பது முற்றிலும் தோல்வியுறும். இது முற்றிலும் ஜனநாயகத்தை வேரறுத்து சர்வாதிகாரத்தை வளர்ந்துவிடும்.

ஜனநாயகத்தை கட்டுப்படுத்தும் புதிய தாராளமயம்…

புதிய தாராளமயக் கொள்கைகள் ஜனநாயகத்தின் மாண்புகளை குறைத்தும் கட்டுப்படுத்தியும் வருகின்றது. குடிமக்கள் மற்றும் அவர்களது உரிமைகளை விட சந்தை தான் முக்கியமானது என்று வற்புறுத்துகிறது. நிதி மூலதனம் அரசியல் அமைப்பிற்குள் ஊடுருவி விட்டது. அனைத்து முதலாளித்துவ கட்சிகளும் பெரும் மூலதனத்திற்கு கீழ்ப்படிந்து கிடக்கின்றன.  இந்தப் போக்கு நாடாளுமன்ற அமைப்பையே சீரழிக்கிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் இதைத்தான் சொல்கிறது: “நாடாளுமன்ற அமைப்புகளுக்கும், ஜனநாயகத்திற்கும் ஆபத்து என்பது ஒருபோதும் தொழிலாளி வர்க்கத்தால் அல்லது அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் எந்த அரசியல் கட்சிகளாலும் ஏற்படாது. ஆனால் அந்த ஆபத்து சுரண்டும் வர்க்கத்தால் மட்டுமே ஏற்படும். முதலாளித்துவ சுரண்டும் வர்க்கம்தான் நாடாளுமன்றத்திற்குள்ளும் வெளியேயும் இருந்து கொண்டு, அவர்களின் குறுகிய லாபத்திற்காக நாடாளுமன்ற அமைப்பையே சிதைக்கிறார்கள்.

2014 ஆம் ஆண்டில் இந்துத்துவா சக்திகளின் வளர்ச்சியும், பா.ஜ.க. தனிக்கட்சியாக ஆட்சி அமைத்ததும் ஒரு முக்கிய மாற்றத்தை இந்திய அரசியலில் கொண்டு வந்தது. ஆர்.எஸ்.எஸ். என்கிற மதவாத சக்திகளால் தூண்டப்பட்ட ஒரு அரசியல் கட்சி அதை பயன்படுத்திக் கொண்டு நாட்டின் ஆட்சியைப் பிடிக்கிறது. இந்த அரசு, ஜனநாயகம் என்பதையே இழிவாக பார்க்கும், இந்துத்துவா சித்தாந்தத்தை புகுத்தி, இந்து ராஷ்ட்ரம் அமைத்திட துடிக்கிறது. இந்து ராஷ்ட்ரம் என்பது சிறுபான்மையினருக்கு சாம் அந்தஸ்தும், சம உரிமைகளையும் மறுக்கின்ற ஒரு கொள்கையாகும்.

இந்துத்துவா கொள்கைகளுக்கு ஆதரவாக அரசின் சட்டங்களையும், இந்து தீவிரவாத அமைப்புகளின் சிறுபான்மையினருக்கு எதிரான தீவிர நடவடிக்கைகளையும் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். சிறுபான்மையினர் என்றால், குறிப்பாக இஸ்லாமிய மக்களை குறி வைத்து தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. அவர்களை தொடர்ந்து அச்சத்திலும், வன்முறையிலும் வைத்திருக்கின்றன மத வாத அரசுகள். குறிப்பாக, பா.ஜ.க. ஆட்சி புரியும் உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், கர்நாடகா, குஜராத் போன்ற மாநிலங்களில் இஸ்லாமிய மக்கள் அனுதினமும் துன்புறுத்தப்படுகிறார்கள் அல்லது அச்சுறுத்தப்படுகிறார்கள்.

இந்துத்துவா-கார்ப்பரேட் கூட்டணி…

சர்வாதிகாரம் என்பது கார்ப்பரேட் மற்றும் இந்துத்துவா சக்திகளினால் நெய் ஊற்றி வளர்க்கப்படும் பெரு நெருப்பாகும். இரு தீய சக்திகளுக்கும் நவீன தாராளமயக் கொள்கைகளை முன்னெடுப்பது என்பது அடிப்படை தேவைகளாகும். அதற்கு உயர்ந்தபட்ச சர்வாதிகாரம் என்பது தேவைப்படுகிறது. அதன் ஒரு வெளிப்பாடுதான் தொழிலாளர்களின் உரிமைகளுக்கான அனைத்து சட்டங்களையும் வெட்டிச் சுருக்கி நான்கு தொழிலாளர் விதிகளாக (four labour codes) மாற்றி அமைத்தது ஆகும்.

அரசியல் அமைப்பு என்கிற போர்வைக்குள் இருந்து கொண்டு, ஜனநாயகத்தின் அத்தனை தூண்களையும் தகர்க்கும் வேலையை இந்த கூட்டணி செய்து கொண்டிருக்கிறது. சர்வாதிகாரம் என்பது அரசியல் ரீதியாக முன்னெடுக்கப்படாமல், சமூகம் மற்றும் பண்பாட்டுத் தளங்களில் வளர்த்தெடுக்கப் படுகிறது. பசு மாடுகளை கொல்லத்தடை, மாட்டிறைச்சி உண்பதற்குத் தடை, ஒழுக்க காவலர்களாக மாறுதல், கலைஞர்களை எழுத்தாளர்களை கட்டுப்படுத்துவது, – இவையெல்லாம் சர்வாதிகாரத்தின் கூறுகளாக நாம் தினம் தினம் காண்கிறோம்.

ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் போர்…

ஆகவே, இந்திய நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் கடந்த பின்பு, இந்திய நாட்டின் ஜனநாயகம் என்பது மோசமான திருப்புமுனையில் உள்ளது. மோடி அரசால் பின்பற்றப்படும் இந்த சர்வாதிகாரம் இந்திய ஜனநாயக மாண்புகளுக்கும் குடிமக்களின் உரிமைகளுக்கும் எதிரானது. அது நாட்டின் சமத்துவம் கூட்டாட்சித் தத்துவங்களின் மீதான தீவிர தாக்குதல்களை செய்து வருகிறது. வரும் காலங்களில் அனைத்து தரப்பு மக்களும் சாதி, மத, இன, மொழி பேதமின்றி இத்தகைய தாக்குதல்களுக்கு எதிராக போர் புரிய வேண்டும். அப்படி ஜனநாயகத்தை காக்கும் போராட்டம் என்பது நவீன தாராளமய கொள்கைகளுக்கும், இந்துத்துவா சக்திகளுக்கும் எதிரான போர் என்பதை உணர்ந்து போரிட வேண்டும்.

தொழிலாளர் வர்க்கத்தைப் பொறுத்த மட்டில், ஜனநாயக உரிமை என்பது மிகவும் அடிப்படையான தேவையாகும். ரோசா லக்சம்பர்க் சொல்வது போல், முதலாளித்துவ சாதிகளுக்கு ஜனநாயகம் என்பது தேவையற்றது மட்டுமல்லாமல் தொந்தரவானதும் கூட; ஆனால் அதுவே, தொழிலாளி வர்க்கத்திற்கு மிகவும் முக்கியமானது மட்டுமல்லாமல் தவிர்க்க முடியாததும் கூட. ஏனென்றால் முதலாளித்துவ பூர்ஷ்வா சக்திகளை அழித்துவிட்டு, சமத்துவ சமூக மாற்றத்தினை முன்னெடுப்பதற்கு ஜனநாயகம் என்பது சக்கரங்களாகவும், அதிர்வு தாங்கிகளாகவும் உள்ளது. அது இன்றியமையாதது; ஏனெனில் அதில் மட்டுமே, ஜனநாயகத்திற்கான போராட்டத்தில், பாட்டாளி வர்க்கம் அதன் வர்க்க நலன்கள் மற்றும் அதன் வரலாற்றுப் பணியை உணர்ந்து கொள்ள முடியும்.

இடதுசாரிகள் நவீன தாராளமயக் கொள்கைகளுக்கும், இந்துத்துவா சக்திகளுக்கும் முற்றிலும் எதிரானது என்ற நிலையில், நாட்டிலுள்ள அனைத்து ஜனநாயக முற்போக்கு சக்திகளை ஓரணியில் இணைத்து ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. முன்னெடுக்கும் சர்வாதிகாரத்திற்கு எதிராக போராடுவதற்கு முன்முயற்சி எடுக்க  வேண்டும்.

தமிழில்: வெ. ராகுல்ஜி

திராவிட இயக்கம்: மாற்றைத் தேடும் மறு வாசிப்பு !

 • என்.குணசேகரன்

( ‘திராவிட இயக்கம் ஒரு மறுவாசிப்பு’ நூலில் இருந்து சில பகுதிகள் இங்கே தரப்படுகின்றன…)

திராவிட இயக்கம், தமிழகத்தில் உருவான மாபெரும் மக்கள் இயக்கம் என்பதை யாராலும் மறுக்க இயலாது. கடந்த அரை நூற்றாண்டாக, தமிழ்நாட்டின் அரசியலில் திராவிட இயக்கப் பிரிவுகளே ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளன.

திராவிட இயக்கத்தின் இன்றைய நிலை குறித்து, பகுத்தறிந்து சிந்திப்பவர்கள் அந்த இயக்கங்களின் எதிர்காலம் குறித்த பல கேள்விகளை எதிர்கொள்கின்றனர். அதில் “திராவிட இயக்கம்  நெருக்கடியில் இருக்கிறதா” என்கிற கேள்வியும் ஒன்று. “அப்படி எந்த நெருக்கடியும் இல்லை” என திராவிட இயக்க ஆதரவாளர்கள் அதனை அவசரமாக மறுக்கலாம். தற்போது “திராவிட மாடல்” என்று முன்வைத்து இன்றும் ‘திராவிடக் கருத்தியல்’ வலுவாக உள்ளதாக முன்னிறுத்தப்படுகிறது.

இதற்கு நேர்மாறாக, வேறு சிலர், திராவிட இயக்கத்திற்கு முடிவு வந்துவிட்டது என்கிறார்கள். அவர்கள் தமிழகத்தில் தற்போது வெற்றிடம் நிலவுவதாகவும், அதனை தாங்கள் நிரப்பப் போவதாகவும் சொல்கிறார்கள். தமிழக பாஜக தலைவர்கள் அந்த இடத்தை பிடிப்போம் என்று தொடர்ந்து பேசி வருகின்றனர்.

உண்மையில், தமிழக அரசியலில் வெற்றிடம் எதுவும் ஏற்பட்டு விடவில்லை. திமுக, அதிமுக அல்லாத சில கட்சிகள். அரசியலில் ஆதிக்கம் செலுத்த விரும்புகின்றனர் என்பதற்காக திராவிட இயக்கம் நெருக்கடியில் உள்ளது என்ற முடிவுக்கு வர இயலாது. அதே போன்று, ஜெயலலிதா, கருணாநிதி போன்ற, தலைவர்கள் திராவிட  அரசியல் களத்தில் இல்லாததால் அந்த இயக்கம் நெருக்கடியில் இருக்கிறது  என்று சொல்கிற கருத்தும் சரியானதல்ல. எனினும், எதற்காக நெருக்கடியில் திராவிட இயக்கம் இருப்பதாகக் கருத வேண்டியுள்ளது? 

தமிழகத்தின் சமுகத் தேவைகளிலிருந்து திராவிட இயக்கத்தினர் முன்வைத்த இலக்குகளை அவர்களால் தொடர முடியவில்லை என்பது வரலாற்று உண்மை. இனி அவர்களால் அவற்றை சாதிக்க முடியுமா என்ற அவநம்பிக்கையும் தற்போது ஏற்பட்டுள்ளது. இது அந்த இயக்கம் எதிர்கொள்ளும் முக்கிய நெருக்கடியாகும்.

முன்னிறுத்திய இலக்குகள் எங்கே?

திராவிட இயக்கம் தன்னை பல வகையில் அடையாளப் படுத்தி வந்துள்ளது. பகுத்தறிவுக்கான பாசறை, சமூக நீதி, பிற்பட்டோருக்கான இயக்கம், பெண் விடுதலை, தமிழுக்காக உயிர் கொடுக்கும் இயக்கம் என, தன் அடையாளங்களை வெறும் முழக்கங்களாக மட்டும் வைத்துக்கொள்ளாமல், அவற்றை பயன்படுத்தி வெகு மக்களை தனது செல்வாக்குத் தளத்தில் கொண்டு வந்தது. ஆனால் இன்று மேற்சொன்ன அடையாளங்களில் காலூன்ற இயலாத நிலையில் உள்ளது. அதனால்தான், திராவிட இயக்கம் நெருக்கடியில் உள்ளது எனும் மதிப்பீடு முன்வருகிறது.

எடுத்துக்காட்டாக, 1957-ம் ஆண்டில் திமுக சந்தித்த முதல் தேர்தலிலேயே மத்திய மாநில உறவுகளை சீரமைக்க திமுக வலியுறுத்தியது. அப்போது வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

“இன்றைய அமைப்பில்   அதிகாரங்களும் வருவாயும் மத்திய ஆட்சிக்கே பெரிதும் அளிக்கப்பட்டுள்ளன மாநில அரசு வருவாயை பெருக்கிக் கொள்ள வழியில்லை சாதாரண பிரச்சினைகளில்கூட முடிவெடுக்கும் உரிமை மாநில அரசுகளிடம் இல்லை. மாநிலங்களின் அதிகார வரம்பும் வரிவிதிப்பும் உரிமைகளும் அதிகரிக்கப்பட்டு மத்திய அரசுக்கான அதிகார வரம்பும் வரிவிதிப்பு உரிமைகளும் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.”

கடந்த பல ஆண்டுகளாகவே இந்த நிலையை திராவிட இயக்கங்கள் வலியுறுத்தவில்லை. திமுக எதிர்க்கட்சியாக இருக்கும் போது, அல்லது அதிமுக எதிர்க்கட்சியாக இருக்கும் போது பெயரளவுக்கு இதனை பேசியிருக்கக்கூடும். சமீபத்திய காலங்களில் ஜிஎஸ்டி வரி விதிப்பிற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால், மத்திய, மாநில அரசாங்கங்களுக் கிடையேயான அதிகாரங்கள் ஜனநாயக அடிப்படையில் மாற்றி அமைக்க வேண்டுமென்ற கோரிக்கைக்கு தொடர்ச்சியான அழுத்தம் கொடுக்க இயலாத நிலையில்தான் திராவிட இயக்கம் இருந்து வந்துள்ளது.

இதற்கு காரணம் என்ன? மாநில உரிமைகளை மறுத்து வந்துள்ள, பாஜக,காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளோடும் அவ்வப்போது அரசியல் தேவைக்காக இரண்டு கழகங்களும் கூட்டணி கண்டு வந்துள்ளன. இந்தக் கட்டாயமும்  எதற்காக என்பதை ஆழமாக அறிந்திட வேண்டும்.

பாஜக, காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும், பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களைப் பாதுகாக்க, மக்கள் வழ்வாதாரங்களை பறிக்கிற கொள்கை கொண்டவை. மாநில மட்டத்தில், இந்த கொள்கை வழித்தடத்தில் இரண்டு கழகங்களும் 1990-ம் ஆண்டுகளிலிருந்து பயணித்து வருகின்றன. இதன் எதிரொலியாகவே, மாநில நலன் சார்ந்த உரிமைகளை அடக்கி வாசிக்கும் நிலைக்கு திராவிட இயக்கங்கள் தள்ளப்பட்டு விட்டன. இவ்வாறு ஒவ்வொரு இலக்கும் கைவிடப்பட்டது.

திராவிட இயக்கத்தின் எதிர்காலம் 

திராவிட இயக்கம் என்றும் நிலைத்திருக்கும் என்றும் அது மக்கள் ஆதரவோடு நீடிக்கும் என்று பலர் நினைக்கலாம். திராவிட இயக்கப் பற்றாளர்கள் எந்த நெருக்கடி வந்தாலும் அவற்றை முறியடித்து முன்னேறுவோம் என முழங்கிடலாம். ஆனால், ஒரு வரலாற்றுப் போக்கினை நாம் மறந்துவிடக்கூடாது. எந்தக் கருத்தியலும், அது சார்ந்த இயக்கங்களும் வரலாற்றில் ஒரே வடிவத்தில் மாறுதலுக்கு உட்படாமல் நீடித்ததில்லை.

எடுத்துக்காட்டாக, இங்கிலாந்தில் 1838 முதல்  1857 -ம் ஆண்டு வரை பெரும் மக்கள் இயக்கமாக செயல்பட்ட மக்கள் சாசன இயக்கம். வாக்குரிமை உள்ளிட்ட அரசியல் சீர்திருத்தக் கோரிக்கைகளை முன்வைத்து எழுந்த இயக்கம் அது. ஆனால், துவங்கிய பத்தாண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து வரலாற்றில் ஏற்பட்ட மாற்றங்களின் ஊடாக, அந்த இயக்கத்தின் தேவை மழுங்கி, பின்னர் அது மறைந்தது.

இதனை குறிப்பிடுவதால் அந்த இயக்கம் எதையும் சாதிக்கவில்லை என்று கருதக்கூடாது. எந்த இயக்கமாக இருந்தாலும் அதன் எதார்த்தத் தேவை முடிந்த பிறகு மறைந்து போவது இயல்பானது. இடையில் அந்த இயக்கம் தன்னை இருத்திக் கொள்வதற்கு பல மாற்றங்களை தனக்குள் ஏற்படுத்திக்கொள்ள முயற்சிக்கக்கூடும். இந்த வரலாற்றுப் போக்கிற்கு  உலக இயக்கங்கள் அனைத்தும் ஆட்பட்டிருக்கின்றன. எனவே, இதற்கு திராவிட இயக்கமும் விதிவிலக்கல்ல.

திராவிட இயக்கத்திலேயே உருவான பல கிளை இயக்கங்கள் மறைந்து போய்விட்டன. அண்ணா அவர்களோடு திராவிடர் கழகத்திலிருந்து வெளியேறி திராவிட முன்னேற்ற கழகம் உருவாக்கியவர்களில் முக்கியமானவர், ஈ.வி.கே.சம்பத். அவர், திமுகவிலிருந்து பிரிந்து, “தமிழ் தேசியக் கட்சி” துவங்கினார். பிறகு அவர் காங்கிரசில் சேர்ந்தார். அவர் அமைத்த கட்சி அத்துடன் மறைந்து போனது. இவையெல்லாம் குறுகிய கால நிகழ்வுகள். சமூக இயக்கத்தின் தேவையை நிறைவேற்ற பயன்படாதபோது, இயக்கங்களும், அவை பேசிய கருத்து நிலைப்பாடுகளும் நிலைத்து நிற்கும் என்று கூற இயலாது.

திராவிட இயக்கம் துவங்கிய காலத்திலிருந்து இது போன்ற பல வகையான மாற்றங்களை சந்தித்து வந்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய தலைவராக விளங்கிய மறைந்த முரசொலி மாறன், “திராவிட இயக்கத்தின் தலைமகன்” என்று நீதிக்கட்சியைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். 1916-ம் ஆண்டு நவம்பர் 20 அன்று தென்னிந்திய நல உரிமைச் சங்கம் எனும் பெயரில் தனி அரசியல் கட்சி துவங்கப்பட்டது. அதுவே பிறகு நீதிக்கட்சி என அழைக்கப்பட்டது. இதிலிருந்துதான் திராவிடர் கழகமும், பிறகு திராவிட முன்னேற்றக் கழகமும் தோன்றின. 

எந்த இயக்கமும் திடீரென அழிந்து போகாது. ஆனால் ஒரு இயக்கம் தோன்றி, வளர்ந்து, வலுப்பெற்று வந்ததற்கான நிலைமைகள் மாறுகிற போது, அந்த இயக்கத்தின் இருப்பும்,அதன் தேவையும் கேள்விக்குறியாகிறது. இதனால் அது மீள முடியாத நெருக்கடியில சிக்குண்டு தவிக்கும் நிலை ஏற்படுகிறது.            திராவிட இயக்கத்திற்கு தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி அதன் வரலாற்று வளர்ச்சியில் அடங்கியுள்ளது. எனவே அந்த இயக்கத்தின் வரலாறு குறித்த மறு வாசிப்பு, தேவைப்படுகிறது.

            இந்த மறுவாசிப்பு, ஆராய்ச்சி ஆர்வத்திற்காக மேற்கொள்ளும் முயற்சி அல்ல. நீண்ட கால நோக்கில் மாற்று வாய்ப்பு என்ன என்பதை அறிவதும், அதை நோக்கி தமிழகத்தை கொண்டு செல்லவுமே, இந்த மறுவாசிப்பு தேவை.

 •  

நீதிக்கட்சி செய்தது என்ன?

நீதிக்கட்சி தலைமையிலான  ஆட்சிகள் அவர்களது முக்கிய நோக்கமான பிராமணரல்லாதோர் அரசுப் பணிகளுக்கு வர வேண்டும் என்ற நோக்கத்தை ஓரளவு  நிறைவேற்றிக் கொண்டது. இதற்காக, பிற்பட்டோருக்கு அரசுப்பணிகளில் இடஒதுக்கீடு அளிக்கும் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்ற அரசாணையை நீதிக்கட்சி அரசாங்கம்  கொண்டு வந்தது. இது ஒரு முக்கியமான சமூதாய நடவடிக்கையாக அமைந்தது. சமூக ரீதியில் காலம் காலமாக பின்னுக்குத் தள்ளப்பட்ட மக்களை முன்னுக்கு கொண்டு வருவதற்கு இட ஒதுக்கீடு முறை அவசியம் என்ற ஒரு  கோட்பாட்டை மைசூர் சமஸ்தானம் 1918ல் அறிமுகப் படுத்தியது. அதற்கு பிறகு சென்னை மாகாணத்தில் அறிமுகம் செய்த பெருமை நீதிக்கட்சி அரசாங்கத்தையே சாரும்.

நீதிக்கட்சி அரசு மேலும்  சில சமூக சீர்திருத்த நடவடிக்கைகளை கொண்டு வந்தது. தேவதாசி முறை என்றழைக்கப்பட்டு வந்த பெண்களை இழிவுபடுத்தும் ஒரு வழக்கத்தை ஒழித்தது. பெண்கள் சட்டமன்ற உறுப்பினர் ஆவதற்கு தடையாக இருந்த ஆங்கிலேய அரசின் சட்டத்தை மாற்றி அவர்கள் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட உறுதி செய்தது. இது போன்று கல்வியிலும் சில முற்போக்கான நடவடிக்கைகளை  அந்த அரசாங்கங்கள் கொண்டு வந்தன. அந்தக் காலத்திய சூழலில் இவை அனைத்தும் வரவேற்கத்தக்க, முற்போக்கு  நடவடிக்கைகள் என்பதனை மறுக்க இயலாது.

சுயமரியாதை இயக்கம் !

சுயமரியாதை  இயக்கத்தின் பிரச்சாரத்திற்கு அதன்  அமைப்பு ரீதியான வளர்ச்சி உதவிகரமாக அமைந்தது. குடி அரசு இதழில் வெளிவந்த விவரங்கள் அடிப்படையில் பார்த்தால் சுயமரியாதை  இயக்கத்தின் கிளைகள் கிராமப்புறங்களிலும் பரவி இருந்தன. அந்த இயக்கம் துவக்கப்பட்ட ஓராண்டிற்குள் தஞ்சை, கோவை, இராமநாதபுரம், தென்னாற்காடு, வடாற்காடு, நெல்லை மாவட்டங்களில் 60 கிளைகள் செயல்படத் துவங்கின. அடுத்த ஏழாண்டுகளில் 117 கிளைகளுடன்  10,000 உறுப்பினர்கள் செயல்படுகிற இயக்கமாக வளர்ந்தது. 

சுயமரியாதை இயக்கத்தின் செயல்பாடு அன்றாட வாழ்க்கையின் அனைத்துத் தளங்களையும் தழுவியது. குறிப்பாக குடும்ப வாழ்க்கையில் உறைந்திருக்கும்  சாதி மத வெளிப்பாடுகளில் அது தலையிட்டது. அந்த தலையீடுகளில் முக்கியமானது சுயமரியாதை திருமணங்கள்.

            சுயமரியாதை திருமணம் என்பது குடும்பம், உள்ளூர் சமூகத்தை பிற்போக்குத் தனங்களிலிருந்து மீட்கும் முயற்சியாக விளங்கியது. இயக்கம் துவங்கிய  முப்பது வருடங்களில் அனைத்து தமிழக மாவட்டங்களிலும் சாதி மறுப்பு, பிராமணிய  சடங்குகள் மறுப்பு, புரோகிதர் மற்றும் சமஸ்கிருத மந்திரங்கள் தவிர்த்த சுயமரியாதை திருமணங்கள் நடந்துள்ளன.

            குடும்பம் என்பதை சுயமரியாதைக் குறிக்கோள்களை அடைவதற்கான போராட்டக் களமாக சுயமரியாதை இயக்கம் பயன்படுத்தியது, இது அந்த இயக்கத்தின் மகத்துவமாகத் திகழ்கிறது.

சாதியக் கண்ணோட்டம், மூட நம்பிக்கைகள், பெண்ணடிமைத்தனம், பிற்போக்கான மத சடங்குகள், தீண்டாமை  போன்றவை அன்று தமிழ்க சமூகத்தில்  மண்டிக் கிடந்தன.இவற்றை எதிர்த்த கலகக் குரல்களும் அவ்வப்போது எழுந்துள்ளன. இப்படிப்பட்ட    சமூக முரண்பாடுகளைத் தீர்த்திட  முற்போக்கு கருத்தாக்கங்களை முன்கொண்டு சென்ற  இயக்கமாக  சுயமரியாதை இயக்கம் திகழ்ந்தது. தனது குறிக்கோள்களை எட்டும் பயணத்தின் போது, சுயமரியாதை இயக்கம் அன்றைய காங்கிரசோடும், நீதிக்கட்சியோடும் முரண்பாடு கண்டது.

சுயமரியாதை இயக்கம் சாதித்தவை குறித்து சரியாக மதிப்பிட வேண்டும். இதற்கு பெரியாரின் கீழ்கண்ட வழிகாட்டுதலையே கையாள வேண்டும் :

“எந்த அபிப்பிராயத்தையும் அதனால் ஏற்படும் பலனைக் கொண்டுதான் மதிக்க வேண்டுமே யொழிய வார்த்தை இனிப்பைக் கொண்டும், அழகைக் கொண்டும், செல்வாக்கைக் கொண்டும் மதிப்பது அறிவுடைமை ஆகாது.”

இந்த கோணத்தில் அதனை ஆராய்வதுதான் பலன் தரும்.மாறாக, சுயமரியாதை இயக்கத்தை விமர்சனமற்று போற்றுவது அதனை அடுத்த கட்டத்திற்கு முன்னெடுக்க உதவிடாது.

ஒரு மனிதர் சுயமரியாதையுடன் கூடிய வாழ்வினை நடத்த வேண்டுமெனில் அவர்  சுய காலில் நிற்பதற்கான பொருளாதார பலம் பெற வேண்டும்.சுயமரியாதை  இயக்கத்தின் செயல்பாட்டில்  பொருளாதார விடுதலைக்கான கடமைகள் வரையறுக்கப் படவில்லை.இது அந்த இயக்கத்தின்  முக்கிய குறைபாடு. பொருளாதார விடுதலைப்  பார்வையை இணைத்திட கம்யூனிஸ்ட் தலைவர்களான சிங்காரவேலர், ஜீவானந்தம்  போன்றோர் முயற்சிகள் மேற்கொண்டனர்.

1930 ஆம் ஆண்டுகளில் “….ஆங்கிலேய ஆட்சியாக இருந்தாலும், இந்தியர்களால் ஆளப்படும் ஆட்சியாக இருந்தாலும், அது உடைமை வர்க்கங்களின் ஆட்சியாக இருந்தால் அகற்றப்பட வேண்டும்..” பெரியார் அதனை தெளிவாகவே குறிப்பிட்டார் “மகாராஜாக்கள், ஜமீன்தார்கள், முதலாளிமார்கள், ஆதிக்கம் கொண்ட ஆட்சியை அழிக்க வேண்டியவர்களாயிருக்கிறோம். அப்படிப்பட்ட ஆட்சி பிரிட்டிசாரால் நடத்தப்படுவதானாலும் சரி, இந்தியரால் நடத்தப்படுவதானாலும் சரி, மற்றவரால் நடத்தப்படுவதானாலும் சரி, நமக்கு அதைப் பற்றி கவலையில்லை; அடியோடு ஒழிக்க வேண்டியதுதான் கடமையாகும்;(குடி அரசு;1933)” இந்த சமதர்ம இலட்சிய முழக்கம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போனது. இது  சில ஆண்டுகளிலேயே நிகழ்ந்ததுதான் வேடிக்கையான வேதனை.

 •  

அண்ணாவின் சில சாதனைகள்

மாநிலத்தின் பெயர் மாற்றம். 1968 ஆம் ஆண்டு மதராஸ் மாகாணம் என்று இருந்த பெயரை தமிழ்நாடு என்று மாற்றியது அண்ணா ஆட்சி. இது முக்கியமான நடவடிக்கை என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. தமிழக வரலாற்றுப் பரம்பர்யத்தின் முக்கியத்துவத்தை  வெளிப்படுத்துவதாகவும் தமிழர்களுக்கு பெருமை சேர்ப்பதாகவும்  இது அமைந்தது.

கடந்த காலத்தில் திராவிட இயக்கத்தினர்  பேசி வந்த இன மேன்மைவாத கருத்தியலுக்கு ஏற்ற நடவடிக்கையாகவும் அது இருந்தது. இதனை அன்றும் இன்றும் சாதனையாக முன்னிறுத்தி அரசியல் செல்வாக்கைத் தக்க வைத்துக் கொள்ளும் பணியை மிகச் சிறப்பாகவே திமுக தலைவர்கள் செய்து வந்துள்ளனர். குறிப்பாக, இந்தித் திணிப்பு  எதிர்ப்புப் போராட்டத்தில் அவர்களிடம் நெருங்கிய இளைய தலைமுறையை உணர்வூட்டி உற்சாகம் கொள்ளச் செய்திட இது போன்ற நடவடிக்கைகள் அவர்களுக்கு கைகொடுத்தது..

இரண்டு ஆண்டுக்காலம் மட்டுமே இருந்த அண்ணா தலைமையிலான ஆட்சியால், என்ன சாதிக்க முடியும் என்ற கேள்வி எழுப்பப்படலாம். ஆனால், எதிர்கால, மாற்றுக்  கொள்கைக்கான  பாதையில் செல்ல, துவக்கம் எப்படிப்பட்டதாக இருந்தது என்பதும் முக்கியமானது.

சுயமரியாதைத் திருமண முறைக்குச் சட்டப் பாதுகாப்பு வழங்கியதும், விதவை மணம் புரிந்தோருக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை, இரு மொழிக் கொள்கையைக் அமலாக்கியது போன்றவை  அண்ணாவின் ஆட்சி மேற்கொண்ட முக்கியமான நடவடிக்கைகள். இவை தமிழக சமூகத்தை ஜனநாயகப்படுத்தும் கடமையில் முக்கிய மைல்கற்களாகத் திகழ்கின்றன.

அரசியல் களத்தில் தனிப்பட்ட மனிதர்களின் குணநலன்கள் மாற்றங்களை நிகழ்த்துவதில்லை. எனினும், அண்ணா நேர்மை, எளிய வாழ்க்கை, அயராத உழைப்பு, அர்ப்பணிப்பு உணர்வு, மாற்றுக் கட்சியினரையும் மதித்துப் போற்றும்  பாங்கு, என சிறந்த  பல பண்புகளை கொண்டவராக வாழ்ந்தார். கலை, இலக்கியம் என பல துறைகளில் பன்முகத்திறமைகள் கொண்டவராகவும் அவர் வாழ்ந்தார்.

 •  

மாற்றுக்கான தேடல்: 

ஆட்சியில் இருக்கும் ஒரு கட்சியை மக்கள் அடுத்த தேர்தலில் தோற்கடிப்பதுண்டு. ஆளுகிற கட்சி தனது கொள்கைகளால்  மக்கள் அதிருப்திக்கு ஆளாகி, தேர்தலில் தோல்வியை சந்திக்கிறது. தமிழகத்தில் எம்.ஜி.ஆர்  மறைவுக்குப் பிறகு, 1989-லிருந்தே திமுக, அதிமுக என ஆட்சிகள் மாறி மாறி அமையும் நிலை ஏற்பட்டிருந்தது. மக்கள் நலனைப் பாதுகாக்கும் கொள்கையுடன்,மக்கள் நம்பிக்கை பெற்ற மாற்று வலுவாக உருவாகாததால்  இந்த நிலை தொடர்ந்தது.1991-2011 வரை நடந்த சட்டமன்ற தேர்தல்களில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவும் கருணாநிதி தலைமையிலான திமுகவும் மாறி மாறி ஆட்சி அமைத்தன. 

 ஆனால்,இந்த நிலை 2016 தேர்தலில் மாறியது. 2011 முதல் ஐந்தாண்டு காலம் ஆட்சியிலிருந்த அதிமுக 2016 தேர்தலில் மீண்டும் ஆட்சிக்கு வந்தது.அப்படியானால் 2011-2016 ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவின் ஆட்சி மக்கள் வாழ்வை மேம்படுத்திய ஆட்சியாக இருந்ததா? திராவிட இயக்க சித்தாந்த அடிப்படையில் நடத்தப்பட்ட ஆட்சியாக ஜெயலலிதா ஆட்சி இருந்ததா?

தேர்தல் பிரச்சாரத்தில் திராவிடம்

 இதற்கான விடைகளை 2016-ல் நடந்த தேர்தலில் இரு கட்சிகளுக்கும் இடையே நடந்த தேர்தல் பிரச்சாரத்திலேயே அறிய முடியும்,இந்தப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஜெயலலிதாவிற்கு வயது 68.தேர்தலுக்குப் பிறகு ஜெயலலிதா அந்த ஆண்டிலேயே காலமானார்.ஆட்சியை மீண்டும் பிடிப்பதற்கு  2016-தேர்தலில் பிரச்சாரம் மேற்கொண்ட கருணாநிதிக்கு வயது 92.இரு தரப்பிலும் ஊழல் உள்ளிட்ட   குற்றச்சாட்டுக்கள் வழக்கம் போல் முன்வைக்கப்பட்டன.

 திருவாரூர் கூட்டத்தில் பேசிய கருணாநிதி “ஊழலில் யாருமே ஜெயலலிதாவை மிஞ்ச முடியாது;அவரைப் போல் தவறுகள் செய்தவர்களும் யாருமில்லை;சட்டத்தை தன் கையில் எடுத்துக்கொண்டு ஆட்சி செய்கிறார்;இந்த சர்வாதிகார ஆட்சியை வீழ்த்துவதுதான் நமது கடமை”என்று பேசினார்.  அதே நேரத்தில் திராவிடம் பற்றி சொல்லாமல் விடுபடக் கூடாது என்பதற்கு “திராவிட ஆட்சி அமைந்தால்தான் திராவிட மக்களுக்கு நல்ல வாழ்க்கை அமையும்” என்றார் கருணாநிதி. ஜெயலலிதா ஆட்சி ஆரிய ஆட்சி என்று பொருள் கொள்ளத்தக்க வகையில் இந்த கருத்தை பிரச்சாரத்தில் சொல்லிவைத்தார்,கருணாநிதி.திராவிட ஆட்சியின் கொள்கைகள் என்ன, அந்த ஆட்சி அடித்தட்டு மக்கள் பொருளாதாரத்தை மேம்படுத்த என்ன செய்யும் என்பதைப் பற்றியெல்லாம்  திமுக பிரச்சாரத்தில் எதுவுமில்லை.அதிமுகவை பொறுத்தவரை திராவிடம் என்ற சொல் கூட பிரச்சாரத்தில் இடம் பெறவில்லை.

 தேர்தலில் திமுகவின் பிரச்சாரத்தை ஜெயலலிதா வழக்கமான பாணியில் எதிர்கொண்டார்.திமுகவின் வாரிசு அரசியல், 2ஜி ஸ்பெக்ட்ரம் உள்ளிட்ட ஊழல்கள், மூன்று பேர் படுகொலை செய்யப்பட்ட மதுரை தினகரன் அலுவலகத்தின் மீதான தாக்குதல், கடந்த திமுக ஆட்சிகளின் போது நடந்த தொடர் குற்றங்கள்,நில மோசடிகள் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை திமுக மீது சுமத்தி ஜெயலலிதா பிரச்சாரம் செய்தார்.  

 பண விநியோகம் இந்த தேர்தலில் பெரும் பங்கு வகித்ததை ஊடகங்கள் வெளிப்படுத்தின.தேர்தல் பிரச்சாரத்தின் போதே இதை உணர்ந்த கருணாநிதி கடலூர் கூட்டத்தில் “அதிமுக உங்களுக்கு ஒட்டு போட பணம் கொடுத்தால் நீங்கள் நினைவு வைத்துக் கொள்ள வேண்டும்,அந்தப் பணம் கொள்ளையடித்த பணம்…” என்றார் .   

 அதிமுக 2011-2016 ஆட்சிக்காலத்தில் பல நலத் திட்டங்களை அமலாக்கிய போதும்,ஏராளமான தவறுகளையும் செய்தது.  2015-ஆம் ஆண்டு கனமழை வெள்ளம் மக்களை பாதித்தபோது அதிமுக அரசாங்கம் மக்களை பாதுகாக்கவும்,முறையான நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளாததும் மாபெரும் தவறு.சென்னை உள்ளிட்டு தமிழகத்தின் பல பகுதிகளில் 400-க்கும் மேற்பட்டோர் இதில் உயிரிழந்தனர்.இப்படிப்பட்ட மெத்தனப்போக்கு அதிமுக ஆட்சியில் இருந்த போதிலும்  அதிமுக 2016 தேர்தலில் மீண்டும் ஆட்சிக்கு வந்தது.

 •  

இந்துத்துவ சக்திகளுடன் 

1996-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தது. நான்காவது முறையாக கருணாநிதி முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.2001-வரை ஆட்சியிலிருந்த திமுகவின் ஐந்து ஆண்டுகளில் ஏற்பட்ட முக்கியமான ஒரு திருப்பம் பாஜகவுடன் திமுக ஏற்படுத்திக் கொண்ட உறவு.

 அதுமட்டுமல்லாது,1999- ஆம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான ஒன்றிய அரசில் திமுக பங்கேற்றது. ஒரு இந்துத்துவ கட்சியின் ஆட்சியில் பகுத்தறிவு நெறியில் வந்த கட்சி கூட்டு சேர்ந்து ஆட்சியில் பங்கேற்றது, திராவிட இயக்க வரலாற்றில் ஒரு கொள்கை சறுக்கலாக அமைந்தது. 

 ஏற்கனவே அதிமுக இந்த சந்தர்ப்பவாதத்தை 1998-ஆம் ஆண்டு துவக்கி வைத்தது. ஜெயலலிதா தலைமையிலான அதிமுக,பாஜகவோடு கூட்டு சேர்ந்தது. இதுவும் மிகப்பெரும் சந்தர்ப்பவாத செயல்பாடாக திராவிட இயக்க கொள்கைகள் மீது பற்று கொண்டவர்கள் கருதினார்கள். 

 ஆனால்,இதுபோன்ற அரசியல் முடிவுகள் தலைமை எடுக்கிற போது கட்சியின் தொண்டர்கள் எவ்வாறு ஏற்றுக் கொள்கிறார்கள்? திராவிட அடிப்படைகளையே புறந்தள்ளி விட்டு முற்றிலும் சந்தர்ப்பவாத நிலை எடுக்கிற தலைமையின் முடிவிற்கு கட்சி அணிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை ?கட்சியின் தொண்டர்கள் இவற்றை ஜீரணித்துக் கொண்டு எப்படி கடந்து போனார்கள் ?இக்கேள்விகளை திராவிட இயக்க வரலாறு எழுதிய பலர்  கண்டுகொள்ளவில்லை. 

 பாஜகவோடு கூட்டு சேர்ந்தது தவறு என்று ஜெயலலிதா இறந்த பிறகும் கூட சொல்வதற்கு அதிமுகவில் யாரும் முன்வரவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடியில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில்,நீண்டகாலம் அதிமுக தலைவராகவும்,அமைச்சராகவும் இருந்த கடம்பூர் ராஜு பேசினார்:

“1998- ஆம் ஆண்டுகளில் பாரதிய ஜனதா கட்சி வகுப்புவாத கட்சி என்று கருதப்பட்டது.ஜெயலலிதா முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்காக பாஜகவை ஆதரித்தார்.அன்றைக்கு அதிமுக ஆதரவு இல்லாமல் போயிருந்தால், பாஜக மத்தியில் அதிகாரத்திற்கு வந்திருக்க முடியாது'” என்று மிகவும் பெருமையாக கடம்பூர் ராஜு பேசினார்.(DTNEXT,ஜனவரி 22,2018)

 பின்னாளில் பாஜகவுடன் கூட்டு சேர்ந்தது தவறு என்ற தொனியில் ஜெயலலிதாவும் கருணாநிதியும் பல சந்தர்ப்பங்களில் பேசினாலும், 1998,1999- ஆம் ஆண்டுகளில் பாஜகவுடன் கூட்டு சேர்ந்தது, தமிழகத்தில் பாஜக உள்ளே நுழைய ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியது. ஒரு பகுதியினர் மத்தியில் பாஜகவும் ‘ஒரு நல்ல கட்சி;அதனுடைய தலைவர்களும் நல்ல தலைவர்கள்’ என்கிற ஒரு கருத்தினை உருவாக்குவதற்கு திராவிட கட்சிகள் அவர்களோடு சேர்ந்தது உதவியது.

 இன்றுவரை இந்துத்துவ சித்தாந்தத்தை தமிழ் அடையாளத்துடன் இணைத்துக்கொண்டு தமிழக மக்கள் மனதில் பதியவைக்க சங்கப்  பரிவாரங்கள் முயற்சித்து வருகின்றனர். இதற்கு களம் அமைத்து கொடுத்தது 90-களில் திமுக, அதிமுகவிற்கு ஏற்பட்ட கொள்கை சறுக்கல்கள். 

 2001-ல் ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு இந்துக்களின் ஆதரவைப் பெறுவதற்கு சங்கப் பரிவாரங்களின் உத்தியை ஜெயலலிதா தலைமையிலான அதிமுக முயற்சித்தது. கட்டாய மத மாற்றத் தடைச் சட்டம், கோவில்களில் ஆடு, மாடு, கோழிகளைப் பலியிடத் தடைச் சட்டம் ஆகியவற்றை ஜெயலலிதா கொண்டுவந்தார். பெரியார் தலைமையிலான திராவிட இயக்கம் அன்று மேற்கொண்ட பகுத்தறிவு, மத நல்லிணக்க கருத்துக்களை கைவிட்டு விட்டோம் என்று பறை சாற்றும் வகையில் இந்த நடவடிக்கைகள் இருந்தன.

திமுகவும் 2001-தேர்தலில் பாஜகவுடன் கூட்டு வைத்துக்கொண்டு 21 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட வைத்து,நான்கு தொகுதிகளில் அவர்களை  வெற்றி பெற வைத்தது.திமுக,அதிமுக கட்சிகளால் கிடைத்த அரசியல் அங்கீகாரத்தை வைத்து வகுப்புவாத விஷத்தை தமிழகத்தில் இந்துத்துவா சக்திகள் பரப்பி வருகின்றனர்.

 பெண்கள்,பட்டியலின மக்கள்,சிறுபான்மையினர்,பிற்பட்டோர் என நாட்டின் பெரும்பான்மை மக்களை இரண்டாந்தர குடிமக்களாக்கிடஆர்எஸ்எஸ்  அமைப்பு முயன்று  வருகிறது,இந்த நோக்கத்தை நிறைவேற்ற  இந்து மதத்தினரிடம் இந்து தேசியம் என்ற மத ரீதியிலான உணர்வை தூண்டி,இந்து மத வெறியை ஒருங்கிணைக்க முயற்சிக்கின்றனர்.இதற்கு ஆரிய இனம் என்ற கருத்தையும் ஆரிய இனம் மேலானது என்ற பொய்மையையும் கட்டமைக்க தொடர்ந்து முயன்று வருகின்றனர்.ஆரியர் என்ற தனித்த நிலப்பரப்பு கொண்ட இனம் என்பது இருந்ததில்லை.ஆரிய என்ற மொழிவகை சார்ந்த நாடோடி மக்கள் குழுக்கள் தான் இடம் பெயர்ந்து வந்துள்ளனர்.அவர்களை உயரிய வேத  நாகரிகம் கொண்டவர்கள் என சித்தரித்து மிக பிற்போக்கான பிராம்மணிய  கருத்தியலை பரப்பி  வருகின்றனர்.

 •  

 கடந்த நூற்றாண்டில் சமூக,அரசியல்,நிர்வாக மேலாதிக்கத்தில் இருந்த பிராமணர்கள் இந்த ஆரிய இன மேலாண்மை கருத்தினை ஏற்று, அதனை பரப்பி வந்தனர்.இதற்கு எதிர்வினையாக எழுந்த பிராமணரல்லாதார் இயக்கம் திராவிட இன மேலாண்மை  பேசியது. மொழி.பண்பாடு,நிலப்பரப்பு சார்ந்த தமிழர்கள் ஒரு இனம் என்று பார்க்கிற பார்வையில் பொருள் உண்டு, ஆனால் விந்திய மலைக்கு அப்பால் உள்ள மக்களை ஒரே இனமாக பார்ப்பதற்கு அடிப்படை ஏதுமில்லை. கடந்த கால இந்த சர்ச்சையை மீண்டும் புத்துயிரூட்டி தங்களது சமூகப் பிளவு நோக்கங்களை நிறைவேற்ற தமிழக ஆளுநர் ரவியை சங்கப் பரிவாரங்கள் பயன்படுத்த முனைந்து வருகின்றனர்.இந்து மத உணர்வை,மதவெறியாக  வளர்ப்பதற்கு கடும் முயற்சிகளை பல தளங்களில் சங்கப் பரிவரங்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில்,திராவிட இயக்கங்கள் கடந்த கால தவறுகளை செய்திடாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

 திராவிட இயக்கக் கொள்கைகளில் பல சமூகசீர்திருத்தத்தை அடிப்டையாகக் கொண்டவை.மதத்தின் பெயரால் பிற்பட்ட பட்டியலின மக்களை ஒதுக்கிடும் பிற்போக்குத்தனங்களை திராவிட இயக்கம் எதிர்த்து மக்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.ஆனால் எந்த ஒரு முற்போக்கு  கொள்கையும், சமூக சீர்திருத்த இலட்சியமும் ஒரு ஜனநாயக அமைப்பு இல்லாமல் சாத்தியமில்லை. கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலமாக திராவிட இயக்கங்களில் அப்படிப்பட்ட நிலை இல்லை.

 எதேச்சாதிகார நடைமுறைகளோடு உருவாக்கப்பட்ட கட்சி கட்டமைப்புடன்  கொள்கைகளை நடைமுறைப் படுத்த முடியுமா என்கிற கேள்வி எழுகிறது. சாதி ஒழிப்பு,சாதிய ஏற்றத்தாழ்வுகள் இல்லாத ஒரு சமூகம் படைப்பதற்கான இலட்சிய நோக்கு, பகுத்தறிவு பார்வை கொண்ட மக்கள் போன்ற குறிக்கோளை அடைய தலைமைக்கு ராஜ பக்தியுடன் செயலாற்றும் கட்சி அமைப்பினால் சாத்தியமில்லை; இது கொள்கைகள் மீது அர்ப்பணிப்பு கொண்ட இலட்சக்கணக்கான தொண்டர்கள் தங்களது தனித்தன்மை குறைந்திடாமல் செயலாற்றக் கூடிய ஒரு பெரும் இயக்கத்தினால்தான் அது  சாத்தியமாகும். குறிக்கோள்கள்,இலட்சியங்கள் மீது தான் விசுவாசம் இருக்க வேண்டுமே தவிர தனிநபர்களுக்கு விசுவாசம் காட்டுகிற அரசியல் நாகரீகம், கடந்தகால நிலப்பிரபுத்துவ பண்பாடாகும்.இதிலிருந்து தமிழகம்  மீள வேண்டும்.

அண்மைக் கால நிகழ்வுகள்

 ஜெயலலிதா மறைவு நிகழ்ந்ததும் அதிமுகவில் சசிகலா,தினகரன், எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் என அதிகார மையங்களுக்குள் நடந்த அதிகாரப் போட்டி,கருணாநிதி மறைவு ஏற்படுத்திய தாக்கம்,2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியடைந்து மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்தது என இவை  அனைத்தும் அண்மைய நிகழ்வுகள்.இவை பற்றி சரியான மதிப்பீடு செய்ய சிறிது காலம் தேவைப்படலாம்.

 ஆனால் 2011-2021 வரையிலான பத்தாண்டு அதிமுக ஆட்சி  குறிப்பிடத்தக்க மாறுதல்கள் எதையும் நிகழ்த்தவில்லை.இந்தக் காலம் முழுவதும் தொழிலாளர்,விவசாயிகள் உள்ளிட்ட உழைக்கும் வர்க்கங்களின் போராட்டங்கள் ஓய்ந்திடாமல் தொடர்ந்து நிகழ்ந்தன.இதுவே மக்களுக்கு விரோதமான நவீன தாராளமய ஆட்சியே பத்தாண்டுகள் தொடந்தது என்பதற்கான சான்று.

 துவக்க காலங்களில் அண்ணா முன்வைத்த முழக்கமான “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்” என்ற இலட்சியம் கானல் நீராகவே நீடித்தது.ஜெயலலிதா,கருணாநிதி ஆகிய இருவரும் மறைந்த போதிலும் அவர்கள் வெகு மக்கள் வாக்கு வங்கியை தக்க வைப்பதற்கு பின்பற்றிய தவறான அரசியல் வழிமுறைகள் அறவே ஒழிக்கப்படுமா?அவர்கள் காலத்தில் திராவிட கருத்தியலின் சாதகமான அம்சங்களை நீர்த்துப் போக வைத்த அந்த தவறுகள் களையப்படுமா?இவை அனைத்தும் தற்போது முன்னிற்கும் முக்கிய கேள்விகள்.

 கடந்த 20 ஆண்டுகளில் தமிழகத்தின் நடுத்தர வர்க்க மக்கள் அரசியல் ரீதியாக பல மாறுதல்களுக்கு உட்பட்டு வந்துள்ளனர்.அதிமுக,திமுக இரு கட்சிகளும் தனியார்மய தாராளமய கொள்கைகளை பின்பற்றிய நிலையில் சமூக அக்கறை குறைந்து அதீத நுகர்வு கலாச்சாரம்,சுயநலம் அதிகரித்துள்ளது.திராவிட இயக்க ஆரம்ப காலங்களில் அந்த இயக்க வளர்ச்சிக்கு ஆதரவு தளமாக  இருந்த நடுத்தர வர்க்கப் பிரிவினர் இன்று இந்துத்துவ வகையிலான ஆன்மிக நாட்டம் கொண்டவர்களாக மாறுவது பெரிய பின்னடைவு.இதற்கும் திராவிட கட்சிகள் பொறுப்பேற்க வேண்டும்.

 வர்ணாசிரமம், சாதிய ஒடுக்குமுறை,தீண்டாமை  உள்ளிட்ட சமூக கொடுமைகளை களைவதற்கு திராவிட இயக்க முன்னோடிகள் கொண்டிருந்த உறுதிப்பாடு தற்போதைய திராவிட கட்சிகளிடம் இருக்கிறதா?பெண்ணடிமைத்தனம் ஒழித்திட சுயமரியாதை-சமத்துவ இயக்கம் கொண்டிருந்த அக்கறை திராவிட கட்சிகளிடம் இருக்கிறதா? இவ்வாறு இன்றைய நிலைப்பற்றி அடுக்கடுக்கான கேள்விகள் எழுகின்றன.

தொடரும் மக்களின் தேடல் 

திராவிட இயக்கம் பல உருமாற்றங்களை சந்தித்து தற்போதைய கட்டத்திற்கு வந்துள்ளது.

 • அரசு நிர்வாகம் மற்றும் கல்வித்துறைகளில் பிராமண மேலாதிக்கத்தை ஒழிக்கும் நோக்கத்துடன் எழுந்த நீதிக்கட்சி,
 • சமூக தளத்தில் அந்த மேலாதிக்கத்தை ஒழிக்க எழுந்த பகுத்தறிவு-சுயமரியாதை இயக்கம்,
 • அரசியல் தளத்தில் நுழைந்து, மாநில அதிகாரத்தைக் கொண்டு பிற்பட்டோர் நலன் காக்க அரசியல் இயக்கமாக வடிவெடுத்த திமுக,
 • அதிகாரப் போட்டி முன்னுக்கு வந்த நிலையில் போட்டியாளராக நுழைந்த அதிமுக
 • அதிகாரத்திற்கான போட்டாபோட்டியில் வெகு மக்கள் செல்வாக்கை தக்க வைத்துக் கொள்ள சாதாரண மக்களுக்கான ஏராளமான  நல திட்டங்கள்
 • பணபலம்,அதிகார பலம் கொண்டு தேர்தல் வெற்றியே இலட்சியம் என செயல்படுவது.

இவ்வாறான வளர்ச்சியில்தான் தற்போதைய கட்டத்திற்கு திராவிட இயக்கம் வந்துள்ளது. இந்த நீண்ட வரலாற்றில், திராவிட இயக்க இலக்குகளாக முன்வைக்கப்பட்ட இலக்குகள் அனைத்தையும் அடைவதற்கான எதிர்காலப்பார்வை முனை மழுங்கிப் போனது;பதவி,அதிகாரம்,சுயநலம் முக்கியமானதாக முன்னிற்கிறது.

 மக்களும் இந்த உண்மைகளை உணர்ந்து வந்துள்ளனர்.1970-ஆம் ஆண்டுகளின் பிற்பகுதி காலத்திலிருந்தே சமத்துவம், சுயமரியாதை உள்ளிட்ட கொள்கைகளுக்கு திராவிட கட்சிகள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பதை மக்கள் உணரத் துவங்கினர்.இதனால்தான் 1989 முதல் தேர்தல்களில்  அதிமுக,திமுக என  மாறி மாறி மக்கள் தேர்வு செய்தனர். ‘எது குறைந்த தீமை’ என்ற முனையிலிருந்து தங்கள் தேர்வை அமைத்துக் கொண்டு வந்துள்ளனர். எந்த கட்சி தேவை என்பதை விட எது தேவையில்லை என்று மக்கள் முடிவெடுத்து வந்துள்ளனர்.மக்களுக்கான உண்மையான மாற்று தேவை என்கிற தேடலின் வெளிப்பாடாகவே இந்த எதிர்மறையான தேர்வு நிகழ்ந்து வந்துள்ளது.மக்களின் இந்த தேடல் தொடரும். 

 துவக்க காலத்திலிருந்தே ஒரு அடிப்படையான,ஆழமான குறைபாடு திராவிட கட்சிகளிடம் இருந்து  வந்துள்ளது.இந்திய அளவில் பெரும் கார்ப்பரேட்,நிலவுடைமை சக்திகள் மற்றும் பன்னாட்டு பெரு மூலதன சக்திகளே மத்திய அதிகாரத்தில் இருந்து வந்துள்ளன.அடித்தட்டு மக்களை வாட்டிவதைக்கும் இந்த சக்திகளை எதிர்கொள்வதற்கு,எதிர்ப்பு இயக்கத்தை வலுப்படுத்துவதற்கான உறுதியான திட்டம் திராவிட இயக்க கட்சிகளிடம் இல்லை.மாறாக அவர்களோடு சமரசம் செய்து கொள்வது,அந்த சக்திகளின் ஒரு பிரிவாக உள்ள பிரதேச,மாநில ,பெரிய முதலாளிகள் மற்றும் நிலவுடைமை சக்திகளின் பிரதிநிதிகளாக செயல்படுவது என்ற பாதையில்தான் திராவிட கட்சிகள் பயணித்து வருகின்றன.

 தற்போது திராவிட மாடல் என்று பெரிதாக பேசப்பட்டாலும் மேற்கண்ட குறைபாடு உள்ளவரை பெரிய மாற்றம் எதுவும் திராவிட கட்சிகளிடம் ஏற்படாது.தமிழகத்தில் பெருவாரியான உழைக்கும் மக்கள் தங்களுக்கான மாற்றை ஏற்பதைத் தவிர வேறு வழியில்லை.இதற்கு தமிழகத்தில் உள்ள ஜனநாயக இடதுசாரி சக்திகள் சரியான திட்டத்தையும் வியுகத்தையும் உருவாக்கிட வேண்டும்.திராவிட இயக்கம் செய்த சில சாதகமான பணிகளையும் துடைத்தெறிய ஆர்எஸ்எஸ்-பாஜக சக்திகள் முயற்சிக்கிற இன்றைய சூழலில் இது அவசியம்.

சாவர்க்கர்: முகத்திரைக்குபின்னால் !

(பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள, முகத்திரை விலக்கப்பட்ட சாவர்க்கர் என்ற நூலின் அறிமுக உரை இங்கே தரப்படுகிறது )

“வீர் (வீரம்) சாவர்க்கர்” என்னும் விநாயக் தாமோதர்  சாவர்க்கர், தற்போது தேசத் தந்தை, மோகன்தாஸ் கரம் சந்த் காந்திக்கு இணையாகத் தூக்கி நிறுத்தப்பட்டு, இந்திய  நாடாளுமன்றத்தின் மத்தியக் கூடத்தில் அவருடைய படத்திற்கு  எதிரே வைக்கப்பட்டிருக்கிறார். காந்தியைக் கொலை செய்ததில் சாவர்க்கருக்கு இருந்த பங்கு குறித்து, அன்றைய தினம் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் படேல் கூறியவற்றை அறிந்துகொள்வது இப்போது பொருத்தமாக இருக்கும்.

அவர், 1948  பிப்ரவரி 27 அன்று நேருவுக்கு எழுதிய ஒரு கடிதத்தில், “இந்து  மகா சபாவின்; சாவர்க்கரின் நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கிய  வெறித்தனமான பிரிவு, சதித்திட்டம் தீட்டி, இக்கொடுஞ்செயல் நடைபெறுவதைப் பார்த்தது.”

சாவர்க்கரின் உருவப்படம் காந்தியின் படத்திற்கு அருகே வைக்கப்பட்டிருப்பது இந்துத்துவாவை இன்றையதினம்  பின்பற்றுவோரால் சாவர்க்கரைத் துதிபாடும் வெறித்தனமான கூட்டத்தாரின் பிரச்சாரத்தின் விளைவேயாகும். சாவர்க்கரைப்  போற்றிப் புகழ்தல் சமீபத்திய நடவடிக்கைகளேயாகும். 1990களின்  பிற்பகுதியில் அடல் பிகாரி வாஜ்பாய், எல்.கே. அத்வானி  ஆகிய ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள்/ தொண்டர்கள் தலைமையின்கீழ் தேசிய ஜனநாயகக் கூட்டணி  அரசாங்கம், ஆட்சிக்கு வந்தபின்னரே தொடங்கப்பட்டதாகும்.

இந்திய விடுதலைப் போராட்டத்தின் சின்னமாக இந்துத்துவா சித்தாந்தத்தை முன்மொழிந்தவரை மாற்றியிருப்பது இந்து  தேசத்தின் கொள்கையாக ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை சட்டபூர்வமாக்குவதற்கான நடைமுறையின் ஒரு பகுதியேயாகும்.  2002 மே 4 அன்று, வீ.டி.சாவர்க்கரின் பெயரை அந்தமான போர்ட் பிளேர் விமான நிலையத்திற்கு வைத்த அதே சமயத்தில்,  அப்போது உள்துறை அமைச்சராக இருந்த எல்.கே.அத்வானி  “சாவர்க்கரால் முன்மொழியப்பட்ட இந்துத்துவா, நாட்டின்  பாரம்பர்யத்தில் அதன் வேருடன் அனைத்தையும் உள்ளடக்கிய  சித்தாந்தமாக இருந்தது,” என்று ஆர்.எஸ்.எஸ். கருத்தோட்டத்தை எதிரொலித்தார். இந்துத்துவாவைக் கொண்டுவந்த நபரைப்  புகழ்வது இத்துடன் நின்றுவிடவில்லை. 2003 பிப்ரவரி 26  அன்று, சாவர்க்கரின் உருவப்படம் ஒன்று நாடாளுமன்றத்தில் திறந்துவைக்கப்பட்டது. இவ்வாறு நாடாளுமன்றத்தின் மத்தியக் கூடத்தில் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற காந்தி மற்றும்  முக்கிய தலைவர்களின் படங்களுடன் சாவர்க்கரின் படமும்  அவர்களுக்கு இணையாக பங்கேற்றது.

நாட்டை இரண்டாகத் துண்டாட வேண்டும் என்ற கோட்பாட்டைக் கொண்டிருந்த, இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் வேண்டுமென்றே ஒதுங்கியிருந்த ஒரு நபரை ‘இந்திய தேசியவாதி என்றும், ‘நாட்டுப்பற்று மிகுந்தவர் என்றும் கொண்டாடலாம் என்றால், பின் ஏன் அதேபோன்ற அந்தஸ்தைப் பெற்றிருந்த முகமது அலி ஜின்னாவையும் அவ்வாறு  போற்றிப் பாராட்டுவதைத் தடுத்திட முடியுமா என்று எழும்  கேள்விக்கு திருப்தியடையக்கூடிய விதத்தில் பதிலை நாம் பெற வேண்டியிருக்கிறது.

சாவர்க்கர் 1966இல் இறந்தபோது பெரிய அளவில் துக்கம்  அனுசரிக்கப்படவில்லை என்பது பலருக்குத் தெரியாது. 83  வயதாகி முதுமையில் அவர் இறந்த சமயத்தில் மிகக் குறைந்த அளவிற்குத்தான் அவர் அறியப்பட்டிருந்தார். அவருடைய வாழ்நாள்  காலத்தில் மகாத்மாவின் உயிரைப் பறித்த சதித் திட்டத்தில் அவரும் ஓர் அங்கமாக இருந்தார் என்கிற வடுவை அவரால் அழிக்கவே முடியவில்லை.

வீர் சங்வி என்னும் குறிப்பிடத்தக்க கட்டுரையாளர், ‘‘1990 வரையிலும் அநேகமாக எவரும் அவரை அறிந்திருக்கவில்லை என்று சரியாகவே குறிப்பிட்டார் .  1990களில்தான் “சாவர்க்கருக்கு மறுவாழ்வு அளிப்போம்” என்னும்  இயக்கம்(‘Rehabilitate Savarkar’ movement), பாரதிய ஜனதா  கட்சியால் அதிகாரபூர்வமாக எடுத்துக்கொள்ளப்பட்ட பின்புதான்,  ‘இந்துத்துவா என்னும் சொற்றொடரை உருவாக்கிய நபர் என நமக்கு சொல்லப்பட்ட நபர், இந்தியாவின் விடுதலைக்காகப்  போராடிய நபர்களில் வீரமுதல்வனாக இருந்தார் என்றும்  கூறப்பட்டார். அதன்பின்புதான் சாவர்க்கர் மாபெரும்  விடுதலைப் போராட்ட வீரர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டார்.

இது முற்றிலும் உண்மை. 1998 க்கு முன்பு, இந்துத்துவா  படையணியினர் சாவர்க்கரை தேசிய அளவில் ஒரு சின்னமாக  மாற்றுவதற்கான விருப்பத்தைக் கொண்டிருக்கவில்லை. 1998 க்கு முன்பு பல ஆண்ட காலம் ஆட்சியிலிருந்த மகாராஷ்ட்ராவில் இருந்து வந்த பா.ஜ.க.-சிவசேனைக் கூட்டணி அரசாங்கம்,  மும்பையில் உள்ள சட்டமன்றப் பேரவையின் சுவர்களில் சாவர்க்கரின் உருவப்படத்தை வைத்திட சிந்திக்கவே இல்லை.  2003க்குப் பின்னர்தான், நாடாளுமன்ற அவையில் அவருடைய  படம் வைக்கப்பட்ட பின்னர்தான், மும்பையில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கமும் அவருடைய  படத்தையும் தொங்க விட்டது. 

பின்னர் காங்கிரஸ் தலைமையில் ஒரு பிரிவும்கூட ,  “சாவர்க்கருக்கு மறுவாழ்வு அளிப்போம் இயக்கத்தில்” தன்னையும்  சேர்த்துக்கொண்டது. 2004 ஆகஸ்ட் 4 அன்று புதுதில்லியில் மன்மோகன் சிங் பிரதமரானவுடன் நடத்திய முதல் பத்திரிகையாளர்  கூட்டத்தின்போது, விநாயக் தாமோதர் சாவர்க்கரை, “தேச பக்தர்”  என்றும் “விடுதலைப் போராட்ட வீரர்” என்றும் வர்ணித்தார்.  சாவர்க்கரின் “தேச பக்தர்” என்பதற்கான ஆதாரச் சான்றுகள்  குறித்து பல்வேறு கேள்விகளை காங்கிரஸ் கட்சியின் மற்றொரு  தலைவரும், பெட்ரோலியத் துறை அமைச்சராகவுமிருந்த மணி  சங்கர் ஐயர் எழுப்பியபோது, பிரதமர் கூறியதாவது: “சாவர்க்கர்  குறித்த சர்ச்சையைப் பொறுத்தவரை, இது ஐயரின் தனிப்பட்ட கருத்து. அது அரசாங்கத்தின் கருத்து அல்ல. அது ஒரு தேவையற்ற சர்ச்சை.” 

சாவர்க்கருக்கு ஆதரவாகத் தன்னால் முடிந்த அளவிற்கு  மன்மோகன் சிங் முயற்சித்திருக்கிறார். “வரலாறு பல வழிகளில் நடந்துள்ள நிகழ்வுகளை நமக்கு வியாக்கியானம்  செய்திருந்தபோதிலும், இறந்தவரின் மோசமான விஷயங்கள்  குறித்துப் பேசுவதால் எவ்விதமான நன்மையையும் பெற்றிட  முடியும் என்று நான் நினைக்கவில்லை,” என்று அவர் கூறியுள்ளார்.  காங்கிரஸ் தரப்பிலிருந்து சாவர்க்கருக்கு ஆதரவாக ஒரு பிரதமர்  இவ்வாறு முதன்முறையாக முன்வந்திருக்கிறார். இதேபோன்றே முன்னதாக மன்மோகன் சிங் அமைச்சரவையில், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சராக இருந்த குலாம் நபி ஆசாத்,  ஐயரின் விமர்சனங்களை வெளிப்படையாக மறுதலித்து, சாவர்க்கர்  குறித்து அவர் கூறிய கருத்துக்கள் அவருடைய தனிப்பட்ட கருத்துக்கள் என்றும், அரசாங்கம் “அவருடன் ஒத்துப்போகவில்லை”  என்றும் அறிவித்தார்.

மகாராஷ்ட்ராவில், முதலமைச்சர் சுசில் குமார் ஷிண்டே,  சாவர்க்கர் குறித்த ஐயரின் விமர்சனங்களுக்கு எதிராகக் கோபத்துடன் எதிர்வினையாற்றியது மட்டுமல்ல, மற்றொரு  காங்கிரஸ் தலைவரான ஆர்.அதிக், சாவர்க்கரைப் புகழ்ந்து,  கையெழுத்துடன்கூடிய முகப்புக் கட்டுரை ஒன்றையே சிவ சேனா  இதழான சாம்னா (Saamna)வில் எழுதினார்.

சாவர்க்கர்வாதிகள் கூட்டத்துடன் இவ்வாறு காங்கிரசும்  இணைந்து கொண்டிருப்பது துரதிர்ஷ்டவசமாகும். வீர் சங்வியின்  கூற்றுப்படி, “காங்கிரசின் சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டிருக்கும்  எவருக்கும், ஏன், அடிப்படை மதச்சார்பின்மைக் கொள்கையை  ஏற்றுக்கொண்டிருப்பவர்களுக்கும், வீர் சாவர்க்கரை வணங்குவது  கடினம். காங்கிரசார் ஆர்.எஸ்.எஸ். மற்றும் சிவ சேனை ஆகியவற்றின் சித்தாந்தங்களோடு ஒத்துப்போகவில்லை எனினும்,  திடீரென்று சாவர்க்கரை துதிபாடத் தொடங்கியிருக்கிறார்கள்.”  விடுதலைப் போராட்டத்திற்குத் துரோகம் இழைத்த ஒரு நபர்  மட்டுமல்ல; காந்தியைக் கொல்வதற்குக் கருவியாகவும் இருந்த ஒரு நபருக்கு ஆதரவாக காங்கிரசார் குரல் கொடுப்பது மிகவும்  கொடுமையாகும். 

இன்றையதினம் உள்ள காங்கிரஸ் தலைமை, காந்தி, நேரு,  வல்லபாய் பட்டேல் ஆகியோரின் தலைமையின்கீழ் செயல்பட்ட காங்கிரஸ் காரியக் கமிட்டியானது, 1934 ஜூனில் தன்னுடைய கட்சி  உறுப்பினர்கள் முஸ்லிம் லீக்குடனோ, இந்து மகா சபாவுடனோ மற்றும் ஆர்.எஸ்.எஸ்.-உடனோ எவ்விதமான தொடர்பும்  வைத்துக்கொள்ளக்கூடாது எனத் தீர்மானம் நிறைவேற்றியிருந்ததை மறந்துவிட்டார்கள். காங்கிரஸ் கட்சி அன்று பிறப்பித்த அந்தக் கட்டளை இன்றைக்கும் செல்லத்தக்கதாகும். ஏனெனில் அந்தத்  தீர்மானம் இதுவரையிலும் ரத்து செய்யப்படவில்லை.

இவ்வாறு பாசிஸ்ட் மற்றும் பிளவுவாதச் சித்தாந்தங்களுக்கு  எதிராக சவால்விடக்கூடிய விதத்தில் செயல்பட்ட மறக்கமுடியாத  பாரம்பர்யங்களைக் கொண்ட காங்கிரஸ் கட்சியின் இன்றைய  தலைமை தன்னுடைய பிரகாசமான கடந்த காலத்தை மறந்துவிட்டு,  செயல்பட்டுக்கொண்டிருப்பது துரதிர்ஷ்டவசமாகும். இந்தக்  காரணத்தால்தான் சாவர்க்கர்வாதிகள், ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக  இந்தியாவை எந்தக் காலத்திலுமே விரும்பாத சாவர்க்கர்  போன்றவர்களின் சிந்தனைகளையும், செயல்பாடுகளையும்  இணைத்து இந்திய விடுதலைப் போராட்டத்தின் மகத்தான ஜனநாயக, மதச்சார்பற்ற பாரம்பர்யத்தைக் குழப்புவதில் வெற்றி  பெற்றிருக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அரசியல் அங்கமாகத் திகழும் பாரதிய ஜனதா கட்சி 2014இல் தேசிய அளவில் ஆட்சிக்கு வந்தபின், சாவர்க்கரைப் போற்றிப் புகழ்வது மேலும்  உத்வேகம் பெற்றது. பிரதமர் நரேந்திர மோடி, “வீர சாவர்க்கர்  இறப்பதற்கு அஞ்சாத ஒரு வீர புருஷர்”1 என்று வீர சாவர்க்கரைப்  போற்றிப் புகழ்ந்து பேசும் அதே சமயத்தில், தான் ஆர்.எஸ். எஸ். இயக்கத்தின் ஓர் உறுப்பினன் என்று வெளிப்படையாகவோ சொல்லிக்கொள்வதிலும் பெருமை கொண்டார். மோடி, சாவர்க்கர்தான் தன்னைப் பக்குவப்படுத்தி, செயல்பட வைத்த வழிகாட்டி என்று கூறும் அளவிற்குச் சென்றார்.

இந்துத்துவாவின் சின்னமாக விளங்கும் சாவர்க்கரின் 131ஆவது  பிறந்த தின விழா நடைபெற்ற சமயத்தில் பிரதமர் நரேந்திர  மோடியும் அவருடைய அமைச்சரவை சகாக்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தின் மத்தியக் கூடத்தில் நிறுவப்பட்டிருக்கும் சாவர்க்கரின் உருவப்படத்தின் முன் நின்று  வணக்கம் செலுத்திக் கொண்டனர். சாவர்க்கரின் உருவப்படத்திற்கு  அஞ்சலி செலுத்திய பிரதமர்களில் அடல் பிகாரி வாஜ்பாய்க்கு  அடுத்ததாக மோடி இரண்டாவது பிரதமராக மாறினார்.3 விஷயம்  இத்துடன் முடிந்துவிடவில்லை. பா.ஜ.க.-வின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான சாக்சி மகராஜ் என்பவர், சாவர்க்கரின்  நெருங்கிய மற்றும் நம்பிக்கைக்குரிய சகாவாக விளங்கியவரும்,  தேசப் பிதா மகாத்மா காந்தியைக் கொன்றதற்காக, தூக்குத்  தண்டனை விதிக்கப்பட்டவருமான நாதுராம் கோட்சேயையும்  போற்றிப் புகழ வேண்டும் என்கிற அளவிற்குப் பேசியுள்ளனர்.  கோட்சேயைப் புகழ்ந்து, அவரை காந்திக்கு இணையாக  முன்னிறுத்தி அவர், “நான் நாதுராம் கோட்சேயையும் ஒரு  தேசியவாதி என நம்புகிறேன். மகாத்மா காந்தியும் நாட்டிற்காக  ஏராளமாகச் செய்துள்ளார். கோட்சே ஒரு பாதிக்கப்பட்ட நபராக  இருந்தார். அவர் தவறாக ஏதேனும் செய்திருக்கலாம். ஆனால் அவர் ஒரு தேச விரோதி அல்ல. அவர் ஒரு தேசபக்தர்.”

சுதந்திரம் பெற்று ஒரு ஜனநாயக மதச்சார்பற்ற இந்தியா  உருவாகி சுமார் நூறாண்டுகளான பின்னரும்கூட, சாவர்க்கர்வாதிகள்  வரலாற்றுக்குப் பேரழிவினை ஏற்படுத்தும் விதத்தில் விளையாடிக் கொண்டிருப்பது வருத்தத்தை அளிக்கிறது. சாவர்க்கரை ஒரு மாபெரும் புரட்சியாளர் என்றும், அசைக்கமுடியாத சுதந்திரப்போராட்ட வீரர் என்றும், மகத்தான பகுத்தறிவாளர்  என்றும், ஏன், என்னதான் கூறாமல் விட்டிருக்கிறார்கள்?  அனைத்து வழிகளிலும் அவரைப் பாராட்டி, தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். சாவர்க்கர் அவர் காலத்தில் அவர் கைப்பட  எழுதிய எழுத்துகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தாலே, அவர்  குறித்துக் கூறும் அனைத்தும் தவறானவை என்பதை மெய்ப்பித்திட  முடியும். அதை இந்தப் புத்தகம் செய்திருக்கிறது.

இந்திய விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றை வரலாற்று  உண்மைகளுடன் வெளிச்சத்திற்குக் கொண்டுவர வேண்டும் என்கிற நேர்மையான தூண்டுதலின் விளைவே இந்தப் புத்தகமாகும்.  சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் இருந்த உண்மையான சாவர்க்கரை அறிந்து கொள்வதற்காக, இந்த நூலின் ஆசிரியர்,  இந்து மகா சபா, ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்திய அரசாங்கத்தின்  ஆவணக் காப்பகங்களில் கிடைத்த ஒரிஜினல் ஆவணங்களையே பிரதானமாகச் சார்ந்திருக்கிறார். செல்லுலர் சிறையில் சாவர்க்கருடன்  இருந்த புரட்சியாளர்களின் நினைவுக்குறிப்புகளும் மாபெரும்  தகவல் களஞ்சியங்களாக மெய்ப்பிக்கப்பட்டிருக்கின்றன.

சாவர்க்கரின் தேச விரோதப் பண்பு 1963இல் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட சாவர்க்கரின் தொகுப்பு நூல்கள் மற்றும்  சமக்ரா சாவர்க்கர் வாங்மாயா:இந்து ராஷ்ட்ரா தர்ஷன் (Samagra  Savarkar Wangmaya:Hinduj Rashtra Darshan) (Collected Works  of Savarkar in English published in 1963) மற்றும் விநாயக் தாமோதர் சாவர்க்கரின் சூறாவளிப் பிரச்சாரம்: 1937 டிசம்பர்  முதல் 1941 அக்டோபர் வரையிலும் அவருடைய பிரச்சாரப்  பயணங்கள் – நேர்காணல்களின் தலைவரின் நாட்குறிப்பிலிருந்து  எடுக்கப்பட்ட சாராம்சங்கள் (Vinayak Damodar Savarkar’s  Whirlwind Propaganda:Extracts from the President’s Diary of  his Propagandist Tours Interviews from December 1937 to October 1941) ஆகியவற்றில் நன்கு வெளிப்படுகின்றன. இவற்றை இந்து மகா சபா வெளியிட்டிருக்கிறது. இரண்டாவது புத்தகம்  முக்கியமாக உண்மையான சாவர்க்கரை அறிந்துகொள்ள மிகவும்  முக்கியமான ஒன்றாகும். இது 1941இல் வெளியாகி இருக்கிறது.  இதனை சாவர்க்கரின் நெருங்கிய சகாவாக விளங்கிய ஏ.எஸ். பிதே (A.S.Bhide) தொகுத்திருக்கிறார்.

இந்தப் புத்தகத்தின் முன்னுரையில் கூறப்பட்டிருப்பதாவது:  “இந்தப் புத்தகமானது, இன்றைய தினம் இந்துக்கள் இயக்கத்தின் அடிப்படைச் சித்தாந்தத்தை நடைமுறைப்படுத்தும்போது  பொதுவாகவும், இந்து மகாசபா இயக்கத்தின் தலைவர்கள்,  பிரச்சாரகர்கள் மற்றும் முன்னணி ஊழியர்கள் குறிப்பாகவும்  எ திர்கொள்கிற பல்வேறுபட்ட பிரச்சனைகள் மற்றும்  கேள்விகளுக்கு விடையளிக்கக்கூடிய விதத்தில் அமைந்திருக்கிற அதிகாரபூர்வமானதும் நம்பிக்கைக்குரியதுமான வழிகாட்டியாகும்.”

இந்தப் புத்தகத்தை இந்து மகா சபாவின் ஒவ்வொரு கிளையும்  முன்னணி ஊழியர்களின் அரசியல் கல்விக்காக மட்டுமல்ல;  பல்வேறு பிரச்சனைகளின்மீது தீர்மானகரமான நிலைப்பாட்டினை மேற்கொள்வதற்கு உதவும் விதத்திலும் இதனைக் கட்டாயமாக  வைத்திருக்க வேண்டும். விடுதலைப் போராட்டத்தில் சாவர்க்கரின்  பங்களிப்பை உண்மையிலேயே மேதைமை மிகுந்ததாக ,  இந்துத்துவா அணியினர் நினைத்தார்கள் என்றால் அவர்கள்  இந்தப் புத்தகத்தை இப்போது மக்கள் மத்தியில் வெளியிட்டால்,  மக்கள் சாவர்க்கர் யார் என்பதை அவர் மூலமாகவே நன்கு  தெரிந்துகொள்ள முடியும்.

இந்து மகா சபாவின் ஆவணக் காப்பகத்தில் உள்ள  சாவர்க்கரின் நூல்களிலிருந்து, சாவர்க்கரும் முஸ்லிம் லீகைப்  போலவே இந்தியா இரு நாடுகளாகப் பிரிய வேண்டும்  என்கிற இருநாட்டுக் கோட்பாட்டின் மீது (two nation theory)  நம்பிக்கை கொண்டிருந்ததோடு, அதற்கான நடவடிக்கைகளையும்  மேற்கொண்டிருந்தார் என்பதை நமக்குக் காட்டுகின்றன.

1937இல் அகமதாபாத்தில் நடைபெற்ற இந்து மகா சபாவின்  19ஆவது மாநாட்டு அமர்வில் தலைமையுரையாற்றுகையில் சாவர்க்கர் கூறியதாவது: “இப்போதுள்ள நிலையில்,  இந்தியாவில் இரு விரோதமான தேசங்கள் அடுத்தடுத்து  இருந்து வருகின்றன. சிறுபிள்ளைத்தனமான அரசியல்வாதிகள் பலர் இந்தியா ஏற்கனவே அனைத்துத்  தரப்பினரும் இணக்கமாக வாழ்ந்துகொண்டிருப்பதுபோன்று  கூறிக்கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு அவர்கள் ஆழமான தவறினைப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். அல்லது அவ்வாறு  இணக்கமாக வாழமுடியும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்.  இவை நல்ல அர்த்தமுடையவைதான். ஆனாலும் அவர்களின்  கனவுகள் எதார்த்தமாவதை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.  அதனால்தான் அவர்கள் மத அடிப்படையில் வகுப்புவாதச் சிக்கல்கள் ஏற்படும்போது பொறுமையற்று இருக்கிறார்கள், தங்கள்  மதஞ்சார்ந்த அமைப்புகளில் தங்களை இணைத்துக்கொள்கிறார்கள்.  ஆனாலும் திடமான உண்மை என்னவென்றால், பல நூறு  ஆண்டுகளாகவே இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே கலாச்சார ரீதியாகவும், மத அடிப்படையிலும் பிரச்சனைகளும்,  தேசிய அளவில் விரோதங்களும் இருந்து வருகின்றன.  இவ்வாறிருந்துவரும் சங்கடமான உண்மைகளை நாம் துணிவுடன்  எதிர்கொள்வோம். இந்தியா இன்றையதினம் இருப்பதுபோல் ஒன்றாகவே இருந்திடும் என்று கருத முடியாது. மாறாக  இந்தியாவிற்குள் இருவிதமான தேசங்கள், இந்துக்களுக்காக  ஒன்றும், முஸ்லிம்களுக்காக ஒன்றும் என்கிற முறையில் இருந்து வருகின்றன.”

1940களில் இந்து மகா சபா, சாவர்க்கரின் ஒரே தலைமையின்கீழ்,  முஸ்லிம் லீக் கட்சியுடன் சேர்ந்து கூட்டணி அரசாங்கங்கள்  நடத்தி இருக்கின்றன. இவ்வாறு முஸ்லிம் லீக்குடன் கூட்டாகச்  செயல்படுவதை வெளிப்படையாகவே நியாயப்படுத்தி, 1942இல் கான்பூரில் நடைபெற்ற இந்து மகா சபாவின் 24ஆவது அமர்வில் ஆற்றிய தலைமையுரையின்போது அவர் பேசியதாவது: 

நடைமுறை அரசியலிலும்கூட, இந்து மகா சபா நியாயமான சமரசங்கள் மூலமாக முன்னேற வேண்டும் என்பதை அறிந்திருக்கிறது. இதற்கு சமீபத்தில் சிந்த் (Sind) பகுதியில் நடைபெற்றுள்ள சம்பவங்கள் சாட்சியமாகும். அங்கேயுள்ள   சிந்த்-இந்து-சபா அழைப்பின்பேரில் லீகுடன் கூட்டணி  அரசாங்கத்தில் இணைந்துகொண்டிருக்கிறது. வங்கத்தின்  நிலைமையும் எல்லாருக்கும் நன்கு தெரியும். காங்கிரசார்  எவ்வளவுதான் பணிந்துபோனாலும் அவர்களுடன் சமாதானமாகப்  போக விரும்பாத காட்டுத்தனமான லீகர்கள்கூட இந்து மகா  சபாவுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு, ஃபஸ்லுல் ஹக் தலைமையின் கீழும், நம் மதிப்பிற்குரிய மகா சபா  தலைவர் டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி தலைமையின்கீழும்  கூட்டணி அரசாங்கத்திற்கு ஒத்துக்கொண்டு வந்திருக்கிறார்கள்.  சுமார் ஓராண்டு காலம் வெற்றிகரமாக ஆட்சி செய்து இரு  சமூகத்தினருக்கும் பயனளித்திருக்கிறார்கள்.

சாவர்க்கர், விடுதலைப் போராட்டத்திலிருந்து ஒதுங்கியிருந்தது  மட்டுமல்லாமல், பிரிட்டிஷாரின் நலன்களுக்கு எங்கெல்லாம்  சவால்கள் ஏற்படுகின்றனவோ அங்கெல்லாம் அவற்றை ஒடுக்குவதற்கு உதவியும் செய்தார். 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது, காலனிய எஜமானர்களின்  கொடூரமான அடக்குமுறையை எதிர்கொண்டிருந்த சமயத்தில்,  சாவர்க்கர் கீழ்க்கண்டவாறு பிரகடனம் செய்தார்:

இந்து மகா சபா தன்னுடைய அடிப்படை நடைமுறை அரசியல் கொள்கையாக, பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் இணக்கமான ஒத்துழைப்பை நல்குவது என்னும் கொள்கையைப் பின்பற்றுகிறது.  மற்றும், அதன்படி, இந்து மகா சபையைச் சேர்ந்தவர்கள்,  அரசாங்கத்தின் பல அமைப்புகளின்கீழ் பணியாற்றும் கவுன்சிலர்கள்,  அமைச்சர்கள், சட்டமன்ற/நாடாளுமன்ற உறுப்பினர்கள் ,  மற்றும் நகராட்சிகள் மற்றும் பல உள்ளாட்சி அமைப்புகளில் செயல்படுபவர்கள் இந்துக்களின் நியாயமான நலன்களைப்  பாதுகாத்து, மேம்படுத்தும் அதே சமயத்தில், மற்றவர்களின்  நியாயமான நலன்கள்மீது ஆக்கிரமிப்பு எதையும் செய்திடாது,  தேசத்திற்கு மிகவும் உயர்ந்த அளவில் தேசபக்தி சேவையைச்  செய்துகொண்டிருக்கிறார்கள். தாங்கள் வேலை செய்கையில் தங்களுக்குள்ள வரம்புகளை நன்கு அறிந்தேதான் அவர்கள், மகா  சபாவைச் சேர்ந்தவர்கள் அவர்களிடம் அந்தச் சூழ்நிலைமைகளில் எந்த அளவுக்கு நல்லதைச் செய்யமுடியுமோ அந்த அளவுக்கு  அதைச் செய்வதை மட்டுமே அவர்களிடமிருந்து எதிர்பார்த்தார்கள்.  அதைச் செய்வதற்கு அவர்கள் தோல்வியுறாவிட்டால், அதற்காக  அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்கள். வரம்புகள்  என்பவை கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கி,  நாளடைவில் அவர்கள் முற்றிலுமாக வெளியேற்றப்பட்டு  விடுவார்கள். பரவலான ஒத்துழைப்புக் கொள்கையின் ஒட்டுமொத்த வரம்புகளும் நிபந்தனையற்ற ஒத்துழைப்பிலிருந்து தீவிரமான,  ஆயுதபாணியிலான எதிர்ப்பு வரைக்கும்கூட சென்றிடும். அது  அன்றைய காலத்தில் உள்ள நிலைமை, நம் கைவசம் உள்ள  வளங்களைச் செலவு செய்யக்கூடிய வல்லமை மற்றும் நம்  தேசிய நலன் நமக்கு உத்தரவிடுவது ஆகிய அனைத்தையும்  பொறுத்ததாகும். (ஒரிஜினலில் உள்ளபடி சாய்வு எழுத்துக்கள்  தரப்பட்டிருக்கின்றன.) 

இரண்டாம் உலக யுத்தம் நடந்துகொண்டிருந்த சமயத்தில்,  சுபாஷ் சந்திர போஸ், இந்தியாவை ராணுவரீதியாக விடுவித்திட  முயற்சித்துக் கொண்டிருந்தபோது, சாவர்க்கர் பிரிட்டிஷாரின் யுத்த முயற்சிகளுக்கு வெளிப்படையாகவே உதவும் அளவிற்குச் சென்றார்.  சாவர்க்கர் எந்த அளவுக்கு பிரிட்டிஷாரின் கூட்டத்துடன் சேர்ந்து  அவர்களின் யுத்த நடவடிக்கைகளுக்கு உதவிடத் தீர்மானித்தார் என்பதைக் கீழ்க்கண்ட அவருடைய வார்த்தைகளிலிருந்து நன்கு  அறியலாம்.

‘‘இந்து தேசம் இந்தியாவின் பாதுகாப்பைப் பொறுத்தவரை,  இந்து தேசத்தைச் சேர்ந்த நம் நலன்களைப் பாதுகாத்திட,  இந்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டிருக்கும் வரையிலும்,  அதற்கு எவ்விதமான தங்குதடையுமின்றி, ராணுவ ரீதியாகவும்,  கப்பல்படை மற்றும் விமானப்படை மூலமாகவும், இணைந்து,  இராணுவத் தளவாடங்கள் உற்பத்தி, வெடிமருந்துகள் உற்பத்தி  மற்றும் போர்த்தந்திரக் கருவிகள் உற்பத்தி என அனைத்திலும்  பொறுப்புமிக்க ஒத்துழைப்பினை நல்கிட வேண்டும் . . .  ஜப்பான் யுத்தத்தில் நுழைந்திருப்பது என்பது, பிரிட்டனின்  எதிரிகளால் நாம் நேரடியாகவும், உடனடியாகவும் தாக்குதலுக்கு  உள்ளாகும் நிலைமையை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை நாம் குறித்துக்கொள்ள வேண்டும். இதன் விளைவாக, நாம்  விரும்பினாலும் சரி; அல்லது விரும்பாவிட்டாலும் சரி; யுத்தத்தின்  அழிவுகளிலிருந்து நாம் நம் உயிரையும் உடைமைகளையும்  பாதுகாத்துக்கொள்ள வேண்டுமானால், அது இந்தியாவைப்  பாதுகாப்பதற்காக அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளைத்  தீவிரப்படுத்துவதன் மூலம் மட்டுமே சாத்தியம். எனவே,  இந்து மகாசபைவைச் சேர்ந்தவர்கள், இந்துக்களை, குறிப்பாக  வங்கம் மற்றும் அஸ்ஸாம் மாகாணங்களில் உள்ள இந்துக்களை எழுச்சியுறச்செய்து அவர்கள் அனைவரும் ராணுவத்தின் அனைத்துப்  படைகளிலும் இனியும் ஒரு நிமிடத்தைக்கூட வீணாக்கிடாது,  தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும்.”  சாவர்க்கர், சாதியம் மற்றும் இனவெறி ஆகியவற்றின் தீவிரமான நம்பிக்கையாளராக இருந்தார். அவர் தன் வாழ்நாள் முழுவதும்  பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் ஆதரவாளராகவே விளங்கினார்.  அதனை அவர் இந்துத்துவா என்று அழைத்திட்டார். இவை அனைத்தும் இன்றைய சாவர்க்கர்வாதிகளுக்கு நன்கு தெரியும்.  எனினும் அவர்கள் இந்த ஆவணங்களை மக்கள் பார்வைக்குக் கொண்டுவராமல் ஒளித்து வைத்திடவே விரும்புகிறார்கள்.  ஏனெனில் சாவர்க்கரின் உண்மையான சொரூபத்தை மக்களிடம்  காட்டினால், இந்துத்துவா படையணியினருக்குப் பேரழிவு நிச்சயம்  என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள். எனவேதான் அதனை வரலாற்றின் குப்பைக்கூடையில் போட்டு வைத்திருக்கிறார்கள்.

சுயமரியாதை உள்ள எந்தவொரு இந்தியனும் , ஏன்,  காலனியாதிக்க எதிர்ப்புப் பாரம்பர்யத்தில் கொஞ்சமாவது நம்பிக்கையுள்ள எவரும், ‘வீர்’ சாவர்க்கரைப் போற்றிப் புகழ்வதை சகித்துக்கொள்ள முடியாது., எனவேதான் இந்துத்துவாவாதிகள்  இதனை மூடிமறைத்திட முயற்சிக்கிறார்கள். அது நம்மால் புரிந்துகொள்ளக்கூடிய ஒன்றுதான். ஆனால், இந்தியா விடுதலை  பெற்று முக்கால் நூற்றாண்டுக்குப் பின்னரும்கூட, ஜனநாயக-மதச்சார்பற்ற இந்திய அரசியலுக்காக நிற்பவர்கள் சாவர்க்கர் தொடர்பான ஆவணங்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவரத் தயங்குவதுதான்  உண்மையில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. 

இந்தப் புத்தகத்தில் வெளிக்கொணரப்பட்டுள்ள ஆவணங்கள்  நிச்சயமாக ஏமாற்றுதல், மோசடி மற்றும் தவறான தகவல்களையே முழுமையாக நம்பியிருக்கும் இந்துத்துவா படையணியினருக்குக் கலக்கத்தை ஏற்படுத்தும்.

‘வீர்’ சாவர்க்கர் குறித்து எதுவும்  தெரியாது அவரைப் போற்றிப் புகழும் தலைவர்களுக்கும்,  நபர்களுக்கும் இந்தப் புத்தகமானது அவர் குறித்துக் கூறப்படும்  சரடுகளிலிருந்து உண்மைகளைத் தெரிந்துகொள்வதற்கு  உதவிடும் என்று நம்புகிறோம்.

இந்தப் புத்தகத்தின் ஏழாவது  அத்தியாயமும் சாவர்க்கரால் எழுதப்பட்ட இந்துத்துவாவின்  1923ஆம் ஆண்டு பதிப்பினை மதிப்பீடு செய்கிறது. ஏனெனில் அப்போதுதான் இந்தியாவை இல்லாது ஒழித்திட கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட சிந்தனைகள் மற்றும் அதன்வழி  மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பதையும்  அவற்றின் ஆபத்துகளையும், ஜனநாயக மதச்சார்பற்ற இந்தியாவை நெஞ்சார நேசிக்கும் அனைவரும் புரிந்துகொள்ள முடியும்.

பாரதி புத்தகாலயம் வெளியீடு

முகத்திரை விலக்கப்பட்ட சாவர்க்கர்

சம்சுல் இஸ்லாம்

தமிழில்: ச.வீரமணி

விலை: ரூ.200

பாசிசத்தை வீழ்த்துவது வரலாற்றுக் கடமை – பிரபாத் பட்நாயக்

 • பேரா.  பிரபாத் பட்நாயக்

(மார்க்சிஸ்ட் கட்சியின் மேற்கு வங்க நாளிதழ் கணசக்திக்கு பொருளாதார அறிஞர் பிரபாத் பட்நாயக் அளித்த நேர்காணல்)

சக்தி –  75 ஆண்டு கால சுதந்திரத்திற்கு பிறகும் தேசத்தின் வளத்தில்  அசமத்துவமும் வேலையின்மையும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. மக்கள் தொகையின் பெரும்பகுதியினருக்கு வேலைவாய்ப்பும். வருவாயும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இவற்றை பார்க்கும்போது இந்தியாவானது மக்கள் நல அரசாக  நீடித்திருக்க முடியுமா?

பிரபாத் பட்நாயக் – மக்கள் நல அரசு பற்றிய அர்த்தத்தை மிகச் சரியான முறையில் பரிசீலித்தால் இந்தியா ஒருபோதும் மக்கள் நல அரசாக இருந்ததில்லை. மக்கள் நல அரசானது ஒரு குறிப்பிட்ட பகுதியினரைச் சார்ந்தவர்களுக்கு என்பதற்கு பதிலாக அனைவருக்குமான  அரசாக அது செயல்பட்டிருக்க வேண்டும். ஒவ்வொருவருடைய சிற்சில குறைந்தபட்ச உத்திரவாதத்தையாவது செய்து தர முயற்சித்திருக்க வேண்டும். ஆனால் இந்தியாவின் விசயத்தில் இது  ஒருபோதும் நடக்கவில்லை. நாட்டின் உணவு பாதுகாப்பை உத்திரவாதப்படுத்துவதற்காக பொதுவிநியோக முறை கொண்டுவரப்பட்டது. ஒருசில மாநில அரசுகளே கிராமப்புறங்களில் ரேசன்கடைகளுக்கு நிதியளித்தன. தற்போது திட்டத்தில் பொது விநியோகம் என வார்த்தை இருந்தபோதிலும் உண்மையில் அவ்வாறு இல்லை. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் விதிகளின்படி மக்கள் நல அரசு அமைப்பின் நடைமுறையானது மாநில அரசின்  கொள்கை வழிகாட்டுதல்களின் கீழ் செயல்படுத்த வேண்டும். ஆனால் இதை எந்த நீதி மன்றமும் அமுலாக்குவதற்கான உத்திரவுகளை பிறப்பிக்க முடியாது. எனவே மாநில அரசுகள் இதை கறாராக பின்பற்றுவதில்லை.

இந்தியா ஒரு மக்கள் நல அரசாக செயல்பட வேண்டும் என்பதை துவக்கத்திலிருந்தே இந்திய அரசியலமைப்பின் இலக்காக இருந்தது என்பதே உண்மையாகும். இந்த இலக்கு தற்போது வெளிப்படையாகவே கைவிடப்பட்டுவிட்டது. இல்லையென்றால், பெருமுதலாளிகளுக்கு வரிச்சலுகைகளை அளித்து உதவி செய்வதை அரசால் தன்னெழுச்சியாக செய்திருக்க முடியாது. நல அரசு கொள்கையை கைவிடுவது என்பது நவீன தாராளமயத்தின் கொள்கையின் ஒரு பகுதியாகும். இது பல்வேறு தளங்களில் வெளிப்படுத்துகிறது.  உதாரணமாக உணவுப் பொருட்களை பொது விநியோக முறையில் வழங்குவது திரும்ப பெற்றதும், கல்வியை நுகர்வு பொருட்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டதுமாகும். இதனால் பெரும்பான்மையான மக்கள் உணவு மற்றும் கல்வியை பெறமுடியாதவர்களாக்கப்பட்டனர். இது பொது சுகாதார மருத்துவத்தையும் பலவீனப்படுத்தி வருகிறது. இது போன்ற பல உதாரணங்களை சொல்ல முடியும்.

சுதந்திரத்திற்கு பிறகு என்றுமில்லாத நிலையில்  வேலையின்மை விகிதம் மிக உச்ச அளவில் உள்ளது. வேலையில்லாதவர்களுக்கான உதவி கூட தேசிய அளவில் ஒரு பொது வடிவம் இல்லை. கடந்த நூற்றாண்டுகளை விட தற்போது நாட்டின் அசமத்துவம் தீவிரமடைந்துள்ளது. பொருளாதார நிபுணர்கள் பிக்கட்டி மற்றும் கான்சல் ஆகியோரின் கூற்றுப்படி மக்கள் தொகையின் பெரும்பகுதியினர் மத்தியில் ஊட்டச்சத்து குறைந்து வருகிறது. பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்ற பிறகு  கடுமையான விளைவுகள் அதிகரித்து வருகிறது என்பதை அனுபவம் உணர்த்துகிறது. இத்தகைய போக்குகள் நவீன தாராளமய  காலத்தில் தான் சரிந்து  வருகிறது என்பதை வெளிப்படுத்துகின்றன.

கணசக்தி – நவீன தாராளமயக் கொள்கைகள் அமுலாக்க துவங்கி 30 ஆண்டுகள் கழிந்து விட்டன. இந்த கொள்கையின் மிக முக்கியமான விளைவு எது? தற்போதைய தருணத்தில் இந்த கொள்கை முற்றிலுமாக தோல்வியடைநதுவிட்டது என்று நம்மால் கூறமுடியுமா?

பி.ப – இந்தியாவின் நவீன தாராளமயத்தினை இரண்டு பகுதிகளாக பிரிக்கலாம். ஒன்று அதிகமான பொருளாதார வளர்ச்சி விகிதம் மற்றது நவீன தாராளமயத்தினால் துவங்கிய பொருளாதார நெருக்கடி. பின்னர் வந்த நெருக்கடி உலகளாவிய அளவில் பரவியது. இவ்விரண்டு பகுதிகளுக்கும் இடையே கோடு பிரிக்கலாம். அமெரிக்காவில்  வெடித்து கிளம்பிய வீட்டுக் கடன் நெருக்கடியும்  அதன் பிறகு இரண்டாவது ஐ.மு.கூட்டணி அரசின் கால கட்டம் ( 2009-2014). இந்திய தன்மையில் நெருக்கடிகள் சிறிது காலம் தாழ்த்தி துவங்கின.

உண்மையில் நவீன தாராளமயத்தின் துவக்க காலத்தில் வளர்ச்சி விகிதம் அதிகரித்தபோதிலும் கூட அதைப்போலவே  மொத்த வறுமை விகிதமும் அதிகரித்தது. 

இந்தியாவின் கிராமப்புறத்தில் ஒருவர் தினசரி 2200 கலோரிகளை எடுத்துக்கொள்ள வேண்டும்  என்ற  வறுமையை வரையறைக்குட்படுத்தப்பட்ட அளவிளை எடுத்துக்கொள்ள முடியாத மக்கள் தொகை 1993-94இல் 58 சதவிகித இருந்தது 2011-12ஆம் ஆண்டில் 68 சதவிகிதமாக உயர்ந்தது. நகர்புறத்தில் 2100 கலோரிகளை எட்டமுடியாதவர்கள் இதே காலத்தில் 57 சதவிதகத்திலிருந்து 65 சதவிகிதமாக அதிகரித்தது.

எவ்வாறாயினும், நவீன தாராளமயக் கொள்கைகளின் நெருக்கடிகளும் தேக்கநிலையும் உழைக்கும் மக்கள் பிரிவினரை மிகக் கடுமையாக தாக்கியது. 2017-18ஆம் ஆண்டின் தேசிய மாதிரி ஆய்வு அறிக்கையினை மோடி அரசு வெளியிடாமல் நிறுத்தி வைத்திருந்ததிலிருந்தே மோசமான நிலைமையினை உணர்ந்து கொள்ள முடியும்.  இவைகளை  மறைப்பதற்காக தேசிய மாதிரி ஆய்வு துறையையே மூடிவிடவும் கூட மோடி அரசு முடிவெடுத்தது. மேற்படி அறிக்கை கசிந்த நிலையில் அதன் விபரப்படி இந்திய கிராமப்புற உண்மையான தனி நபர் நுகர்வு சக்தி 2011-12க்கும் 2017-18ஆம் ஆண்டுகளுக்கு இடையே 9 சதவிகிதம் குறைந்துவிட்டது. இது ஒட்டு மொத்த சராசரியாகும். உழைக்கும் மக்களின் நிலைமையை ஒப்பிடும்போது மிகவும் மோசமாக உள்ளது. பெருந்தொற்றுக் காலமும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட உலகளாவிய பணவீக்கமும் சேர்ந்து இந்த நிலைமையை மேலும் கடுமையாக்கியுள்ளது.

பெருந்தொற்று மற்றும் உக்ரைன் போர் பாதிப்பிலிருந்து உலக முதலாளித்துவம் மீண்டு வந்தபோதிலும், நவீன தாராளமயத்தின் நீண்ட கால கட்டமைப்பு நெருக்கடியானது ஏற்கனவே 2019-20க்குமுன்னரே வெளிப்படுத்திவிட்டது; அது தற்போதும் நீடிக்கிறது. நவீன தாராளமயத்தின் நெருக்கடியை எதிர்கொள்ள முதலாளிகளுக்கு சலுகைளை வாரி வழங்குவதன் மூலம் அவர்கள் அதை தொழிற்துறையில்  முதலீடு செய்வதன் மூலம் பொருளாதார நடவடிக்கைகள் அதிகரிக்கும். அதன் விளைவாக வேலைவாய்ப்யை அதிகரிக்க செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் முயற்சிக்கிறது. ஆனால்  நெருக்கடியான காலங்களில் சந்தை முதலாளிகள் எந்தவொன்றிலும் முதலீடு செய்ய மாட்டார்கள். எனவே நெருக்கடி மேலும் ஆழமாகி வருகிறது என்பதே உண்மை. நவீன தாராளமயம் நீடிக்கும் வரை மக்களின் சமூக பொருளாதார நிலைமைகளும்  தொடர்ந்து மோசமடைந்து வரும். எவ்வளவு விரைவாக இந்த கொள்கையிலிருந்து நாடு  வெளியேறுவதுதான் ஒரே வழி.

கணசக்தி – இந்திய பொருளாதாரத்தில் எந்த ஒரு துறை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று உங்களிடத்தில் கேட்டால் நீங்கள் எந்த ஒன்றை தேர்வு செய்வீர்கள்?

பி.ப – நவீன தாராளமயத்தின் மிகப்பெரிய பிரச்சனை குறிப்பாக சிறு உற்பத்தியாளர்கள் மற்றும் நேரடியாக உழைப்பை செலுத்திடும் விவசாயத்தின் மீதான  அதன் தாக்குதல் தான். தாராளமயம் உருவானது முதல் அது பெரும் முதலாளிகள் மற்றும் பன்னாட்டு நிதி மூலதனத்தின் கூட்டணியால்  வழிநடத்தப்படுகிறது. அது விவசாயிகளை சார்ந்து உள்ள உழைப்பை செலுத்திடும் விவசாயத்திற்கான ஆதரவினை திரும்ப பெற்றது. உண்மையில் உணவுப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையினை ஒழித்துக்கட்டுவதற்காக எடுத்த முயற்சியானது மேடி அரசின் இறுதிக்கட்ட நடவடிக்கையாயாகும். விவசாயிகளும் எழுச்சிமிக்க போராட்டத்தின் காரணமாக தற்காலிகமாக பின்வாங்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதன் ஆபத்து நீடிக்கிறது.

அரசாங்கம் விவசாய பொருளாதாரத்துறைக்கான தனது ஆதரவினை குறைப்பதன் விளைவாக விவசாயிகளின் லாபத்தை தடுத்துவிடும். மேலும் அரசாங்கம் முதலீடுகளை குவிப்பததற்கு  முதன்மையானது என சொல்லி  இந்த துறையில் பெரும் பெரு நிறுவனங்களை அனுமதிக்க ஊக்கப்படுத்துகிறது. தற்போதைய விவசாயத்துறையின் நெருக்கடிக்கான காரணங்களின் பின்னணி இதுவே. நாட்டின் விடுதலைக்கு பிறகு என்றுமில்லாத நிலையில் லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதும் இந்த நெருக்கடியின் விளைவுகளால் தான். பெருந்திரளான விவசாயிகள் வேலை தேடி கிராமப்புறங்களிலிருநது நகரங்களை நோக்கி இடம்பெயர்கிறார்கள் இங்கு ஏற்கனவே உள்ள வேலையில்லா தொழிலாளர்களோடு சேர்ந்து  வேலையின்மை மேலும் அதிகரிக்கிறது.  இதுவும் நெருக்கடியின் மற்றொரு பகுதியாக மாறுகிறது. வேலைக்காக காத்திருப்போர் எண்ணிக்கை அதிகரித்து வேலைக்கான ஆட்கள் எண்ணிக்கையைக் காட்டிலும் வேலை தேடுவோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பில் விவசாயிகள் என்று வகைப்படுத்துவோர் எண்ணிக்கை 1991 மற்றும் 2001 ஆகிய இரு கணக்கெடுப்பிற்கு இடையில் ஒன்றரை கோடி விவசாயிகள் எண்ணிக்கை குறைந்துவிட்டது.

விவசாயிகளின் வறுமையானது அணிதிரட்டப்பட்ட தொழிலாளர்களின் பேரம் பேசும் சக்தியை வலுவிழக்க செய்வதோடு,  மக்கள் தொகையில்  மொத்த வறுமையும் உயருகிறது. நவீன தாராளமய முதலாளித்துவத்தின் மிகவும் குறிப்பிடத்தக்க குணமும், அதன்  மையமான கருவும்   இதுதான். இந்தியா போன்ற ஒரு நாட்டில் நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு விவசாயம் உயிரோட்டமாக இருக்க வேண்டும் என்பதுதான் வளர்ச்சிக்கான  மிக முக்கியமான திறவுகோல் . மேலும்  அது விவசாய தொழிலாளர்களின் சூழ்நிலைமையோடு மிக நெருக்கமான உறவுகளை கொண்டுள்ளது. நவீன தாராளமயம் விவசாயத் தொழிலாளர்களின்  வாழ்வாதாரத்தினை கேள்விக்குறிக்கு தள்ளியுள்ளது.

கணசக்தி – இந்திய கார்ப்பரேட் துறை இந்து அடிப்படைவாத தத்துவத்தின் அபாயத்தினை உணர்ந்துள்ள போதிலும் கூட அதற்கு சிறியதாகவே அல்லது அதிகமாகவே ஆதரவு தெரிவிக்கிறது.இது ஏன் நிகழ்கிறது? இந்திய பெரு முதலாளிகள் தங்களின் கலாச்சார, தத்துவார்த்த கொள்கையினை மாற்றிக்கொண்டார்களா?

பி.ப – இல்லை. இந்திய பெரும் முதலாளிகள் தங்களின் கலாச்சார தத்துவார்த்த கொள்கைககளை  இதுபோல மாற்றிக் கொள்ளவில்லை. பன்னாட்டு  நிதி மூலதனம் மற்றும் உள்ளுர் பெரும் முதலாளிகள் கீழிருந்து வரும் மாற்றங்களின்போது அவர்கள் அச்சப்படுவது சாத்தியம். இது  நவீன தாராளமய நெருக்கடியின் விளைவாகும். நவீன தாராளமயத்தின் முதற்கட்ட காலத்தின்போது பொருளாதார வளர்ச்சி அதிகரித்து இருந்தபோதே வரி சலுகை உள்ளிட்டவை மூலம் உழைக்கும் வெகுமக்களுக்கு ஆதரவை பெற முயற்சித்தது.  இதன் மூலமாக நவீன தாராளயமத்திற்கு எதிரான எதிர்ப்பினை எவ்வாறு  தவிர்க்கவும் அல்லது தள்ளிப்போடவும் என்பதற்கான நோக்கமாக  அது   இருந்தபோதிலும் உழைக்கும் மக்களின் துயரம் நீடித்தது. இது நவீன தாராளமயத்தின் ஆதரவு அமைப்பு முறையின் ஒரு பகுதியாகும். ஆனால் நெருக்கடியை நோக்கி வந்தடைந்தபோது இந்த ஆதரவு அமைப்பு முறை ஒழிந்து போனது. எந்த மட்டத்திலும்  வளர்ச்சியில்லை என்ற நிலைமையில், ஆதரவு முறை ஒன்றுமில்லை என்றாகிவிட்டது. இந்த சூழ்நிலையில் நவீன தாராளமயத்திற்கு ஒரு புதிய ஆதரவு அமைப்பு முறை தேவையாகிறது. நவீன பாசிசமே அதன் ஆதரவு அமைப்பு. இது நவீன தாராளமய மற்றும் நவீன பாசிச கூட்டணிக்கு கொண்டு சென்றது. இந்தியாவில் இது கார்ப்பரேட் மற்றும் இந்துத்துவ சக்திகளின் கூட்டணியாக உருவாகியது. இந்த கூட்டணி நவீன தாராளமய முதலாளித்துவம்  நீடித்திருக்க உதவி செய்ய முயற்சிக்கிறது. இந்த கூட்டணி கதையை மாற்றியமைத்து  சிறுபான்மை மக்களுக்கு எதிராக வெறுப்பு உணர்வை உருவாக்குவதன் மூலமாக, உழைக்கும் மக்கள் தங்களின் வாழ்நிலை பாதிப்பிற்கு எதிரான நியாயமான உணர்வுகள் திசைதிருப்பப்படுகிறது.   இது நவீன தாராளமயத்திற்கு இருவழிகளில் துணைபோகிறது. இது உழைக்கும் வர்க்கத்தை பிளவுபடுத்துகிறது. மேலும் அவர்களின் வாழ்வாதார பிரச்சனைகளிலிருநது மத ரீ தியான பிரச்சனைகளுக்கு திசைதிருப்புகிறது. இந்த கார்ப்பரேட் –  இந்துத்துவ கூட்டணி  பாசிசத்தின் ஒரு ஆயுதமாகும்.

கம்யூனிஸ்ட் அகிலத்தின் 7வது மாநாட்டில் பேசிய ஜார்ஜ் டிமிட்ரோவ் முதலாளித்துவத்தின் நெருக்கடியான காலத்தில் தான் பாசிசம் உருவாகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.1930களில் ஏற்பட்ட பெரும் மந்தநிலையே இதற்கு மிகச் சிறந்த உதாரணமாகும். தற்போதைய நவீன தாராளமயத்தின் நெருக்கடியும் அதைப்போன்றே நவீன பாசிசம் உருவாக காரணமாகியுள்ளது. மேலும் 1930களில் உருவான  பாசிசம் போலவே தற்போதைய நவீன பாசிசமும் உலகம் முழுவதும் உருவாகியுள்ளது. எனவே இது இந்தியாவிற்கு மட்டும் கட்டப்பட்டதாக இல்லை என்பது குறிப்பிட வேண்டியதாகும்.

எவ்வாறாயினும் 1903களின் நிலைமைக்கும் இன்றைய நிலைமைக்கும் வித்தியாசம் உள்ளது. 1930களில் பாசிசம் தன்னுடைய போர் நடவடிக்கைகளுக்கு ஏராளமான ஆயுதங்களை உற்பத்தி செய்வதற்காக  அரசாங்கங்கள் பெருமளவு செலவு செய்ததன் மூலமாக  முதலாளித்துவதை நெருக்கடியிலிருந்து காப்பாற்றியது  இந்த கூடுதல் செலவுகளுக்கு நிதி நிறுவனங்களிடமிருந்து கடன்களை பெற்றன. ஆனால் தற்போது அரசாங்கங்களால் கூடுதல் செலவிற்கு கடன்களை பெற முடியாது. இது கேள்விகளுக்கு அப்பாற்பட்டது. ஏனென்றால் அளவுக்கதிகமான நிதிப்பற்றாக்குறைப் போக்கினை நிதி மூலதனம் அனுமதிப்பதில்லை. மேலும் நிதி மூலதனமானது ஒரு சர்வதேசமயமானது. ஆனால் அரசுகள் ஒரு நாட்டிற்கு உட்பட்டது. எனவே நிதிமூலதனம் நாட்டை விட்டு வெளியேறாத வகையில் அரசாங்கம் சலுகைகளை அளிக்க முயற்சிக்க வேண்டும். அதேசமயம் அதிகப்படியான உபரி மதிப்பால் குவிந்துள்ள செல்வத்திற்கு எதிராக கூடுதல் வரி விதித்து கஜானாவிற்கு வருவாய் ஈட்டலாம் என்பதும் நவீன தாராளமயத்தில் அரசுகளால் முடியாது.  இதற்கு பதிலாக, அரசுகள் தங்களின் செலவுகளை ஈடுசெய்ய உழைக்கும் மக்கள் மீதே வரிகளை சுமத்த முயற்சிக்கின்றன. ஆனால் உண்மையில் இத்தகைய கூடுதல் வரிகள் மூலமாக மொத்த வருவாய் அளவை உயர்த்த முடியாது. ஏனென்றால் உழைக்கும் மக்கள் தங்களின் வருவாயின் பெரும்பகுதியை அடிப்படை வாழ்க்கைத் தேவைகளுக்காகவே செலவிட வேண்டியுள்ளது. எனவே பழைய பாசிச அரசு பாணியில்  தற்போதைய நெருக்கடியிலிருந்து முதலாளித்துவத்தை மீட்க முடியாது.இதுவே 20ஆம் நூற்றாண்டு  பாசிசத்திற்கும் இன்றைய  நவீன பாசிசத்திற்குமான வித்தியாசம் என்பதோடு இது நவீன பாசிசத்தின் ஒரு பலவீனமுமாகும்.

கணசக்தி – கார்ப்பரேட்-இந்துத்துவா கூட்டணியால் இந்தியா பாசிசத்தை நோக்கி நகரும் என்று நீங்கள் கருதுகிறீர்களா? அவ்வாறெனில் இந்திய பாசிசத்திற்கான பண்புகள் எவ்வாறு இருக்கும்?

 1930கள் போன்று இல்லாமல்  தற்போதைய சூழ்நிலை வித்தியாசமாக உள்ளது. இன்றைய பாசிசம் 1930களின் பாசிசத்தை நகல் எடுத்தாற்போல் இருக்காது. இருப்பினும், பாசிசத்திற்கான அத்தனை பொதுவான பண்புகளும் இந்தியாவில் ஏற்கனவே இருந்து வருகிறது. உதாரணமாக, பெரும் வர்த்தக மற்றும் பாசிச கட்சிக்கு இடையேயான கூட்டணி, அச்சத்திற்கு இடமளிக்கும் வகையில்,  சிறுபான்மை மக்களுக்கு எதிரான வன்ம பிரச்சாரங்களும் அவர்களை  குறிவைத்து பாசிச சக்திகளின் வன்முறை கும்பல்களும் அரசாங்கத்தால் தொடுக்கப்படும் அரசியல் ரீதியான துன்புறுத்தல்களும்  சர்வாதிகார அரசை போன்ற அடிப்படையில்தான் இருந்து வருகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, இத்தகைய சர்வாதிகார அரசிற்கு எதிராக குரல் கொடுக்கும் அறிவுஜிவிகள், சமூக இயக்கங்கங்களுக்கு எதிராக பரவலான அடக்குமுறைகளும் வன்முறைகளும் ஏவப்படுகின்றன. இவையெல்லாம் தன்னுடைய அரசியல் பலத்தை இழந்து விடுவோம் என்ற அச்சத்திலிருந்து பாசிச அரசால்  மேற்கொள்ளப்படுகிறது. எனினும்  இன்றைய பாசிசமாகட்டும் அல்லது நவீன பாசிசமாகட்டும், அவை ஜனநாய கட்டமைப்புக்குள் செயல்படுவதற்கு தள்ளப்படுகின்றன. எனவே நவீன பாசிசமானது ஜனநாயகத்தை அழித்தொழிக்கும் வேலையை செய்து கொண்டே, அதை பாதுகாப்பது போன்ற தோற்றத்தினையும் மேற்கொள்கிறது. அது எப்போதும் ஜனநாயகத்தை பற்றி பாசாங்குத்தனமாக நடந்து கொள்ளும். இன்றைய பாசிசம் ஒரு கபட வேடம் பூண்டுள்ளது என்பதே இதன் பொருள். எனவே இன்றைய கார்ப்பரேட்- இந்துத்துவ கூட்டணியானது பாசிசத்தை நோக்கி செல்லும் என்பதை நம்மால் சொல்ல முடியாது. இந்த கூட்டணி மாறுவேடம் தரித்த பாசிசமாகும். இது ஒரு சரியான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறது. அதுவரை வேடம் தரித்தும், அதற்கு பின்னர் ஒளிவு மறைவின்றியும் நேரடியான நடவடிக்கையில் இறங்கும்.

ஜனநாயக  முகமூடி அணிவது என்பது இந்திய பாசிசத்தின் ஒரு குணாம்சம் என்று மட்டும் என்றிருப்பது ஒரு தனித்துவம் இல்லையென்றாலும், அதன் முக்கிய பண்புகளில் ஒன்று மற்றவர்கள் என வரையறுத்த மத அடையாளத்தைப் பயன்படுத்துவதாகும். இந்த மற்றவர்கள் இந்தியாவின் மதச் சிறுபான்மையோர் ஆவர். இது மற்ற நாடுகளில் இனம், தேசியம் போன்ற இதர அடையாளங்களை வைத்து மற்றவர்கள் என்று அடையாளப்படுத்தப்படுவார்கள். இந்தியாவில்  மதத்தையே அடிப்படைவாதமாக பயன்படுத்தப்படுகிறது.

பாசிசம் தோற்கடிக்கப்படவும்   ஜனநாயகத்தையும்  மீட்டெடுக்கவும் உழைக்கும் மக்களின் பொருளாதார நிவாரண நடவடிக்கைகளை மீட்டெடுக்க வேண்டும் என்றால்  இடதுசாரிகளின் பலத்தை அதிகப்படுத்த வேண்டும். நவீன தாராளமயத்திலிருந்து வெளியேறவும், நவீன பாசிசத்தையும்  தோற்கடிக்கவுமான ஒரே வழி இடதுசாரிகள் பலமடைவதுதான்.  பாசிசத்திற்கு எதிரான  சக்திகள்  ஒரே மேடையில் ஒன்றிணைக்கப்பட வேண்டும். இதற்காக இடதுசாரிகள் விரிவான மக்கள் இயக்கத்தை கட்டமைக்க வேண்டும்.  இதே இடதுசாரி சக்திகளால்தான் கடந்த நூற்றாண்டில் பாசிசம் தோற்கடிக்கப்பட்டது. இத்தகைய வரலாற்றுக்  கடமையினை இப்போதும் முன்னெடுத்துச் செல்வோம்.

தமிழில்:  எஸ்.ஏ.மாணிக்கம் –  நன்றி – மன்த்லி ரெவ்யூ  இணைய தளம்

மாறும் உலகச் சூழலும் மார்க்சிஸ்ட் கட்சியின் புரட்சிகர பாரம்பரியமும் நடைமுறையும் !

பேரா. பிரபாத் பட்நாயக்

1.     இந்திய காலனியாதிக்க எதிர்ப்புப் போராட்டத்தின்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஐக்கிய முன்னணி தந்திரத்தின் முதல் கட்டம்

போல்ஷ்விக் புரட்சி 1917இல் நடந்தது.  உலகின் பல்வேறு பகுதிகளில் உதயமான கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து 1919இல் சர்வதேச கம்யூனிஸ்ட் அகிலம் உருவானது.  1920இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உதயமானது. இந்தியாவில் காலனியாதிக்கத்தை எதிர்த்து முதலாளி வர்க்கத்தின் தலைமையில் விடுதலை போராட்டம் நடந்து கொண்டிருந்த நேரம் அது.  உதயமானவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன் ஒரு மிகப் பெரிய கேள்வி எழுந்தது.  இந்த காலனியாதிக்க எதிர்ப்புப் போராட்டத்தில் முதலாளிகளுடனும், சமூகத்தின் பிற பிரிவினருடனும் கட்சியின் பங்கு பாத்திரம் என்னவாக இருக்க வேண்டும்?  இந்தப் போராட்டத்தில் இவர்களுடன் இணையும் இடத்தில் கட்சியின் யுத்த தந்திரம் என்னவாக இருக்க வேண்டும்? என்ற கேள்வி பெரிதாக எழுந்து நின்றது.  அந்த நேரத்தில் 1928இல் நடந்த ஆறாவது சர்வதேச அகிலத்தில் காலனித்துவம் குறித்த ஆய்வறிக்கையின் மீது விவாதம் நடத்தப்பட்டு, ”காலனியாதிக்கத்திற்கு உட்படுத்தப்படும் நாடுகளின் விவசாயிகள் மிகவும் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்படுகிறார்களே தவிர, பாட்டாளி வர்க்கமாக்கப்படவில்லை” என்ற முக்கிய முடிவிற்கு வந்தது.  மிகப் பெருமளவில் விவசாயக் கூலிகள் இருந்தாலும், விவசாயம்  முதலாளித்துவ மயமாக்கப்படுகிறது என்ற முடிவிற்கு அகிலம் வரவில்லை.  அதன் காரணமாக, காலனியாதிக்க நாடுகளில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இதனை எதிர் கொள்வதற்கு பொருத்தமான தந்திரங்களோ உத்திகளோ இல்லாமல் போனது.

அப்போது இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியினர் கடுமையான அடக்குமுறைகளை சந்தித்ததோடு, பல்வேறு சதி வழக்குகளையும் சந்தித்தனர்.  பெஷாவர் சதி வழக்கு (1922-27), கான்பூர் சதி வழக்கு (1924) மற்றும் மீரட் சதி வழக்கு (1929).  முக்கிய தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டதால் கட்சியின் வளர்ச்சி தடை செய்யப்பட்டாலும், இளைஞர்கள் மத்தியில் கம்யூனிஸ்டுகளுக்கு மரியாதையும் கட்சியின் பால் ஈர்ப்பும் ஏற்பட்டது.  பகத் சிங்கும் அவரது தோழர்களும் இந்துஸ்தான் சோசலிச குடியரசு படையில் இருந்து ஈர்க்கப்பட்டவர்கள் தாம்.  பகத் சிங் தூக்கிலிடப்பட்ட சில நாட்களில் நடைபெற்ற கராச்சி காங்கிரசில் தான் சுதந்திர இந்தியா குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.   சுதந்திர இந்தியாவின் கருத்துருவாக்கத்தில் மதச்சார்பின்மை, ஜனநாயகம், சமத்துவம் என்ற முற்போக்குக் குணாம்சங்கள் இடம்பெற்றிருந்தன.  வயதிற்கு வந்த அனைவருக்கும் வாக்குரிமை, சாதி, இன, பாலின வேறுபாட்டினை கடந்து அனைத்து பிரஜைகளும் சட்டத்தின் முன் சமம் என்பன போன்ற முற்போக்குக் கருத்துகளும் அதில் இடம் பெற்றிருந்தன. 

ஜெர்மனியில் நாஜிக்களின் ஆதிக்கம் துவங்கிய நேரத்தில் 1935இல் ஏழாவது அகிலம் கூடியது.  அகிலம், பாசிஸ்ட்டுகளுக்கு எதிராக ஒரு ஐக்கிய முன்னணி அமைக்கப்பட வேண்டும் என்று அறைகூவல் விடுத்தது.  அதே போன்று காலனியாதிக்க நாடுகளில் ஏகாதிபத்தியத்தை எதிர்த்த போராட்டத்தில் பல்வேறு வர்க்கங்களைச் சார்ந்த மக்கள் பிரிவினரையும் உள்ளடக்கிய ஒரு ஐக்கிய முன்னணி உருவாக்கப்பட வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்தது.  இந்தியச் சூழலில் இது தத்-பிராட்லி (Dutt-Bradley thesis) ஆய்வறிக்கையில் உள்ளடக்கப்பட்டது.  அப்போதும் கம்யூனிஸ்டுகளில் ஒரு பிரிவினர் காங்கிரசில் இரகசியமாக (காங்கிரசிலும், கம்யூனிஸ்ட் கட்சியிலும் உறுப்பினர் என்ற இரட்டை உறுப்பினர் அந்தஸ்த்துடன்) இணைந்து வேலை செய்வது என்று முடிவெடுக்கப்பட்டது.  கம்யூனிஸ்ட் கட்சியும்  காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியுடன் இணைந்து செயல்பட்டது.  இதனால் காலனியாதிக்க எதிர்ப்புப் போராட்டத்தின் போது ஒரு வலுவான இடதுசாரி கருத்தோட்டம் எழுச்சி பெற்றது.

ரஜினி பாமி தத்தும் பென் பிராட்லியும் ஜவஹர்லால் நேருவை சுவிட்சர்லாந்தில், அவருடைய மனைவியின் மருத்துவத்திற்காக போயிருந்த இடத்தில், சந்தித்துப் பேசிய பின்னர் இந்த ஒருங்கிணைப்பு இன்னும் வலுவானது.  ஏகாதியத்திய எதிர்ப்பு மக்கள் ஐக்கிய முன்னணிக்கான பொருளாரத் திட்டத்திற்கு தத்-பிராட்லி அறிக்கை வைத்த முன்மொழிவில், ”வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் தொழிலாளர்களின் ஊதியத்தினை குறைப்பதை தடுத்து நிறுத்துவது, தொழிலாளர்களை வேலையில் இருந்து தூக்குவது போன்றவை இல்லாமல் தொழிலாளர்களுக்கு வேலைநிறுத்தத்திற்கான உரிமை, தேவைக்கேற்ற குறைந்தபட்ச ஊதியம், எட்டு மணி நேர வேலை, வாடகையை பாதியாகக் குறைப்பது, ஏகாதிபத்திய ஆட்சியாளர்களும், உள்நாட்டு இளவரசர்களும், ஜமீன்தாரர்களும், லேவாதேவிக்காரர்களும் விவசாயிகளிடம் இருந்து நிலங்களை கடன்களுக்காக பறிப்பதை தடுத்து நிறுத்துவது”  போன்றவை உள்ளடக்கப்பட்டிருந்தன.

1930 பெருமந்தத்தின் போது, விவசாயிகள் கடுமையான  நெருக்கடிக்குள்ளாயினர்.  பெரும் கடனுக்கு ஆளாகினர்.  விவசாயத்தை விட்டு நகரங்களை நோக்கி விவசாயிகள் இடம் பெயர்ந்ததன் காரணமாக வேலைக்குக் காத்திருக்கும் தொழிலாளர் படை வீங்கிப் போனது.   ஐக்கிய முன்னணி தந்திரம் மட்டுமல்லாமல், இந்திய புறச் சூழலும் காலனியாதிக்க எதிர்ப்புப் போராட்டத்தை மேலும் வலுவடையச் செய்தது.  கம்யூனிஸ்ட் இயக்கம் விவசாயிகளிடையேயும் தொழிலாளர்களிடையேயும் வலுவடைந்தது.   நிலப்பிரபுத்துவ ஆட்சியாளர்களுக்கு எதிரான பிரஜா (குடிமக்கள்) இயக்கம் மறு பகுதியில்  பெரிய அளவில் எழுந்தது. அங்கும் கம்யூனிஸ்டுகளே பல பகுதிகளில் தலைமை தாங்கி வழிநடத்தினர். இந்த எழுச்சிகள் 1930-களின் இறுதியில் நடைபெற்ற மாகாண சபை தேர்தல்களில் காங்கிரஸின் வெற்றிக்கு வழிவகுத்தது. அந்த தேர்தல்களில் பல கம்யூனிஸ்டுகள்  தேர்ந்தெடுக்கப்பட்டனர். சோவியத் யூனியன் மீது ஜெர்மனி தாக்குதல் நடத்திய போது, நமது போராட்டத்தின் தன்மை மாறிவிட்டது என்று கம்யூனிஸ்ட் கட்சி முடிவிற்கு வந்தது. இதனை காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியும், காங்கிரசும் அதிகாரப்பூர்வமாக நிராகரித்தன. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை அறிவித்தன.  ஐக்கிய முன்னணி தந்திரத்தின் இந்த கட்டம் சோவியத் யூனியன் மீது ஜெர்மனி தாக்குதல் நடத்திய போது முடிவிற்கு வந்தது.

வெள்ளையனே வெளியேறு இயக்கத்திற்கு எதிரான காலனியாதிக்க அரசின் ஒடுக்குமுறையின் ஒரு பகுதியாக காங்கிரஸில் அங்கம் வகித்த பல கம்யூனிஸ்டுகளும் நீண்ட காலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.  ஆனால், வெள்ளையனே வெளியேறு இயக்க தீர்மானத்தை கம்யூனிஸ்ட் கட்சி எதிர்த்ததன் காரணமாக, அவர்கள் அடையாளம் காணப்பட்டு, காங்கிரஸிலிருந்து வெளியேற்றப்பட்டனர். நாடு சுதந்திரத்தை நோக்கி நகர்ந்தபோது, காங்கிரஸில் உள்ள கம்யூனிஸ்டுகளுடன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டி வந்து விடுமோ என்ற அச்சமும் முதலாளித்துவ காங்கிரஸ் தலைமைக்கு பெரிய அளவில் இருந்தது.

2.     சுதந்திரத்திற்குப் பின் அமைந்த இந்திய அரசு குறித்த கட்சியின் மதிப்பீடு

சுதந்திரத்தின் போது, புதிய அரசின் தன்மை எப்படி இருக்க வேண்டும்? என்பதும், ஆளும் கட்சியுடன் கம்யூனிஸ்டுகளின் உறவு எப்படி இருக்க வேண்டும்? என்ற கேள்வியும் முன்னுக்கு வந்தது.  இது குறித்தெழுந்த கடுமையான விவாதம் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் பிளவினை ஏற்படுத்தியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தத்துவார்த்த நிலைப்பாடு அதன் கட்சி திட்டத்தில் பொதிந்துள்ளது.   ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சிக்குள் புரட்சிக்கு முன்பு நடந்த விவாதத்தின் போது லெனின் எடுத்த நிலைப்பாட்டிலிருந்து தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு எடுக்கப்பட்டது.  வரலாற்றில் எந்தெந்த நாடுகளில் எல்லாம் முதலாளித்துவம் தாமதமாக போராட்டத்தில் இணைந்ததோ, அங்கெல்லாம் நிலப்பிரபுத்துவ சொத்து மீதான தாக்குதல் முதலாளித்துவ சொத்து மீதான தாக்குதலாக மாறிவிடும் என்ற பயத்தில் நிலப்பிரபுத்துவ-எதிர்ப்பு ஜனநாயகப் புரட்சியை நடத்தும் திறனை முதலாளிகள் பெற்றிருக்கவில்லை என்பதுதான் லெனினின் வாதம்.  எனவே, விவசாயிகளின் ஜனநாயகப்பூர்வமான விருப்பங்கள் பூர்த்தி செய்யப்பட முடியாது.  தொழிலாளி வர்க்கம் விவசாயிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, நிலப்பிரபுத்துவ சொத்துக்களை உடைத்து, நிலப்பிரபுத்துவ சலுகைகளை அடித்து நொறுக்கி, நில மறுவிநியோகம் செய்யும் புரட்சியினை நடத்தும்போது மட்டுமே, ஜனநாயகப் புரட்சி முழுமை பெறும்.   அதிலிருந்து சோசலிசத்தை நோக்கி நகர முடியும்.   நிலச் சீர்திருத்தங்கள் மூலமாக உள்நாட்டுச் சந்தையின் அளவை விரிவுபடுத்த முடியும்.  இதன் மூலம், விவசாயத்தின் வளர்ச்சியை தீவிரமாக விரைவுபடுத்த முடியும்.  இருபதாம் நூற்றாண்டில் அனைத்து மூன்றாம் உலக நாடுகளின் புரட்சிகர திட்டத்திலும் லெனினின் நிலைப்பாடே ஏதேனும் ஒரு வகையில் பொதிந்திருந்தது.

சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்திய அரசாங்கம் நில மறு விநியோகத்தை தவிர்த்தது என்பதுடன், உயர் தட்டு விவசாயிகளும், ஜமீந்தார்களும் தங்கள் நிலங்களை முதலாளித்துவ விவசாயமாக மாற்றுவதை ஊக்குவித்தது. இதுவே முதலாளித்துவம் நிலப்பிரபுத்துவத்துடன் சமரச உடன்பாடு செய்து கொண்டது என்பதை நிரூபிக்கப் போதுமானது. சுதந்திரத்திற்குப் பின் உருவான இந்திய அரசு, பெருமுதலாளிகளின் தலைமையிலான முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ அரசு என்பதால், அது முதலாளித்துவ வளர்ச்சிக்கு வழிவகுத்தது.  இதன் காரணமாக கிராமங்களில் நிலப்பிரபுக்களும் விவசாய முதலாளித்துவமும் கலந்திருக்கும் நிலை ஏற்பட்டது.  எனவே, பாட்டாளி வர்க்கத்தின் கடமை என்பது, விவசாயிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டு ஒரு ஜனநாயகப் புரட்சியை நடத்தி, இந்த நிலப்பிரபுத்துவ – முதலாளித்துவ அரசாங்கத்தினை மாற்றி, ஒரு மாற்று அரசாங்கத்தை உருவாக்கி, அதிலிருந்து சோசலிசத்திற்கு நகர்வது என்பதே ஆகும்.  அதே நேரத்தில், முதலாளித்துவ வர்க்கம் ஏகாதிபத்தியத்திற்கு அடிபணியாமல்,  ஒப்பீட்டளவில் தன்னாட்சி பெற்ற ஒரு முதலாளித்துவப் பாதையைத் தொடரும் லட்சியங்களைக் கொண்டிருந்தாலும், அது பெருமளவில் வெளிநாட்டு நிதி மூலதனத்துடன் ஒத்துழைப்பதாகவும் உள்ளது என்றும் கட்சி மதிப்பீடு செய்தது.

இதில் இரண்டு அம்சங்கள் கவனத்திற்குரியவையாகும். முதலாவது அம்சம் –  முதலாளித்துவ வளர்ச்சியை நோக்கி நகரும்போது, இடதுசாரி அதிதீவிரவாதிகள் சித்தரிப்பது போல, முதலாளித்துவம் ஏகாதிபத்தியத்தின் கீழ் இல்லை என்பதோடு, அது எந்த வகையிலும் ஏகாதிபத்தியத்திற்கு அடிபணியவில்லை என்பதாகும்.  இது உண்மை என்பதற்கான சான்றுகள் -பொதுத்துறை உருவாக்கம், சோவியத் யூனியனின் உதவியுடன் பொருளாதார இறையாண்மை, பெருநகர மூலதனத்தின் கட்டுப்பாட்டிலிருந்து நாட்டின் இயற்கை வளங்களின் மீதான கட்டுப்பாட்டை மீட்டெடுத்தல், மற்றும் அயலுறவுக் கொள்கையில் அணிசேராமை போன்றவையாகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உள்நாட்டில் முதலாளித்துவ வளர்ச்சியை ஊக்கப்படுத்துகிறது என்பதால் சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்திய அரசாங்கம் உலக முதலாளித்துவத்தின் முகாமில் இணைந்துவிட்டது என்பதல்ல என்பதுதான் இதற்குப் பொருள்.

இரண்டாவது அம்சம் – அரசு, முதலாளித்துவ மற்றும் நிலப்பிரபுக்களின் சொத்துக்களைப் பாதுகாப்பதில் அதன் வர்க்கத் தன்மையை வெளிப்படுத்தியபோதும், முதலாளிகளுக்கு மானியங்களையும் சலுகைகளையும் அள்ளி அள்ளி கொடுத்து, அவர்களை அரசியல் அதிகாரம் படைத்தவர்களாக மாற்றும் ஜங்கர் முதலாளித்துவத்திற்கு வழிவகுத்தாலும், முதலாளித்துவம் மற்றும் நிலப்பிரபுக்களின் நலன்களுக்காக மட்டுமே அது பிரத்தியேகமாக செயல்படவில்லை. அது அனைத்து வர்க்கத்தினருக்கும் மேலானதாக தன்னை காட்டிக் கொண்டது – தோற்றமளித்தது. அவ்வப்போது தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு ஆதரவாகத் தலையீடு செய்தது. புராதன மூலதனக் குவிப்பின் ஒரு பகுதியாக, முதலாளித்துவ விவசாயத்திற்காக நிலத்தை குத்தகைதாரரிடமிருந்து கைப்பற்றி நிலப்பிரபுக்கள் விவசாய முதலாளித்துவத்தை செய்ய வழிவகுத்தாலும், மறு புறம் புராதன மூலதனக் குவிப்பின் செயல்முறையை தடுக்கும் வகையில் நகர்ப்புற பெரு முதலாளித்துவம் விவசாயத்தையோ அல்லது கைவினைஞர்களின் கைவினைக் கலைகளையோ ஆக்கிரமிப்பதை தடுத்து நிறுத்தியது. மாறாக, கைத்தறி துறையின் சிறு உற்பத்தியாளர்கள் ஒரு பகுதி துணி உற்பத்தியை செய்வதற்கென்று ஒதுக்கியது.  அதே போல, குலாக்களோ நிலப்பிரபுக்களோ மட்டும் பயனாளிகளாகிவிடாமல், விவசாயச் சந்தைகளில் தலையீடு செய்து விளைபொருட்களை லாப விலைக்கு வாங்கவும் ஏற்பாடு செய்தது.   சர்வதேச சந்தையின் ஏற்ற இறக்கங்களிலிருந்து பாதுகாப்பளித்தல், மானிய விலையில் இடுபொருட்கள் கிடைத்தல், மானியத்துடன் கூடிய நிறுவன கடன் வசதிகள், அரசு நிறுவனங்களின் மூலம் புதிய நடைமுறைகள் மற்றும் விரிவாக்கச் சேவைகள், மற்றும் விதை ரகங்கள் கிடைத்தல் போன்ற விவசாயத்திற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தது.  இவற்றின் பெரும் பயன்களை கிராமப்புறங்களில் வளர்ந்து வரும் முதலாளித்துவ வர்க்கத்தினர் அடைந்தனர் என்றாலும், பெரும் எண்ணிக்கையில் இருந்த விவசாயிகளும் பயனடைந்தனர்.  ஏகாதிபத்தியத்தின் ஆசிர்வாதங்களின் தேவையின்றி, தொழில்நுட்பத்தைப் பெறுவதற்கு பெருநகர மூலதனத்துடன் அதிகரித்து வரும் ஒத்துழைப்பைப் பொருட்படுத்தாமல், பெருநகர மூலதனத்தையே கூட தியாகம் செய்து, இந்த முதலாளித்துவ வளர்ச்சி என்பது ஒருவிதமான தனித்தன்மையுடன் நடத்தப்பட்டது.

இந்த விசித்திரமான குணாம்சத்தின் காரணமாக, காலனித்துவ எதிர்ப்புப் போராட்டத்தின்போது ஏகாதிபத்தியத்திற்கெதிராக ஒன்றிணைந்து போராடிய வர்க்க அணிகளுக்குள் இணைப்பை ஏற்படுத்த முடியாத அளவு இடைவெளி ஏற்படவில்லை. இதையே வேறுவிதமாகக் கூறினால், காலனித்துவ எதிர்ப்புப் போராட்டத்தின்போது வழங்கப்பட்ட உழுபவனுக்கு நிலம் போன்ற பல வாக்குறுதிகளை முதலாளித்துவம் மீறினாலும், டிரிஜிஸ்ட் ஆட்சி (dirigiste regime) – அதாவது ஒரு முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரத்தின் மீது வெறும் ஒழுங்குமுறை தலையீட்டுப் பாத்திரத்திற்கு மாறாக, ஒரு வலுவான அதிகாரபூர்வமான பாத்திரத்தை வகிக்கும் வகையில் அரசு இருந்த வரை, அது காலனித்துவ எதிர்ப்பு போராட்டத்தின் வாக்குறுதிகளை முற்றிலுமாக மீறவில்லை. அதனால்தான், கட்சி முதலாளித்துவ ஆட்சி முறைக்கு எதிராக இருந்தாலும், அதனுடைய பல்வேறு நடவடிக்கைகளை – வங்கிகளின் தேசியமயம், பொதுத்துறைகளின் உருவாக்கம், பொதுத்துறைகளை பயன்படுத்தி  பெருநகர மூலதனத்தின் கைகளிலிருந்து இயற்கை வளங்களை மீண்டும் கைப்பற்றியது, அந்நிய செலாவணி ஒழுங்குமுறை சட்டம் போன்ற பிறவற்றையும் ஆதரித்தது.

முதலாளித்துவம் வளர்த்துக் கொண்ட இந்த தனித்துவமான குணாதிசயத்தின் காரணமாக, அது முதலாளித்துவமே இல்லை என்று பலரை தவறாக நம்ப வைத்துள்ளது. அந்த தவறான புரிதலின் ஒரு பகுதிதான் இந்த பொருளாதார ஆட்சி முறையை ‘முதலாளித்துவத்தை நடைமுறைப்படுத்தாத  அல்லது முதலாளித்துவத்தை ஆதரிக்காத வளர்ச்சி முறை’ என்று வகைப்படுத்துவதாகும். இது ஆளும் வர்க்கத்தின் குணாம்சத்தை அடையாளம் காணாத எதிர்மறையான விளக்கமாகும். அந்த தவறான புரிதலின் மற்றொரு பகுதிதான் ஆளும் வர்க்கத்தையும் அதன் வளர்ச்சிப் பாதையையும் அடிப்படையற்ற வகையில் – ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் அடையாளப்படுத்துகிறது. அது நகர்ப்புறத்தில் மற்றும் கிராமப்புறத்தில் உள்ள நடுத்தர வர்க்கத்தை அல்லது குட்டி முதலாளித்துவ வர்க்கத்தை, வசதி படைத்த விவசாயிகளை, முதலாளித்துவம் அல்லாத, சோசலிசம் அல்லாத ஒரு ‘இடைநிலை ஆட்சியின்’ பொதுவான வளர்ச்சிப் பாதையில் ஆளும் வர்க்கமாகப் பார்க்கிறது. வரலாற்று ரீதியாக, நடுத்தர வர்க்க மேலாதிக்கம் ஒரு நீடித்த நிகழ்வாக இருந்ததில்லை என்றாலும், போருக்குப் பிந்தைய உலகில் ஒரே நேரத்தில் முதலாளித்துவமும் சோசலிச முகாமும் இருப்பதன் காரணமாக அது நீடித்த நிகழ்வாக இருக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது என்று வாதிடுகிறது. இது  தவறு என்று ஏற்கனவே பல நிகழ்வுகள் சுட்டிக் காட்டியுள்ளன. ஆனால் இந்த தவறான புரிதல்கள்தான்  சுதந்திரத்திற்குப் பிந்தைய முதலாளித்துவ ஆட்சி முறையின் தனித்துவமான தன்மைக்கு சான்றாகும்.

3.     சர்வதேச நிதி மூலதன உருவாக்கப் பின்னணியில் இந்திய டிரிஜிஸ்ட் ஆட்சிமுறை கைவிடப்பட்டு நவ தாராளவாத அமலாக்கம்

இந்த டிரிஜிஸ்ட் ஆட்சி முறையில் உள்ள அதன் உள்ளார்ந்த முரண்பாடுகளின் காரணமாக வெகுகாலத்திற்கு அதனை நீட்டிக்க முடியாது என்பது ஆரம்பம் முதலே தெளிவாகத் தெரிந்தது. அதனுடைய வளர்ச்சி என்பது உள்நாட்டுச் சந்தையை அடிப்படையாகக் கொண்டது. உள்நாட்டு சந்தையின் வளர்ச்சி விவசாயத் துறையின் வளர்ச்சியை, குறிப்பாக உணவு தானிய உற்பத்தியை, சார்ந்தது.  ஒட்டுமொத்த கிராக்கி குறைவதன் காரணமாக பொருளாதாரம் மந்தமடைந்து விடக்கூடாது என்பதில் டிரிஜிஸ்ட் அரசு தலையீடு செய்து சரி செய்ய வேண்டும் என்பதால், தேவையான உணவு தானியங்களை நுகர்விற்கு வாங்கிய பிறகு, ஆலைகளில் தயாராகும் பொருட்களை, சேவைகளை வாங்குமளவிற்கு மக்களின் கையில் உபரியாக வாங்கும் சக்தி இருப்பதையும் உத்தரவாதப்படுத்த வேண்டும்.  ஏனென்றால் மக்களின் வாங்கும் சக்தி உபரியாக இருப்பதை, வாங்கும் சக்தியின் அதிகரிப்பை உறுதிப்படுத்தினால் மட்டுமே உள்நாட்டுச் சந்தையின் வளர்ச்சி சாத்தியமாகும்.  மக்கள் தொகை வளர்ச்சியை விட அதிகமான உணவு தானிய உற்பத்தி வளர்ச்சி, அதைவிட துரித உபரியின் வளர்ச்சி, அதன் மூலம் உள்நாட்டு சந்தையின் வளர்ச்சி என்பதுதான் டிரிஜிஸ்ட் ஆட்சி முறை.

இந்தியாவில் இருபதாம் நூற்றாண்டின் துவக்கதில் சுதந்திரத்தின் போது தனிநபர் உணவு தானியம் கிடைத்தல் என்பது 150 கிலோ கிராமுக்கும் குறைவாக இருந்தது.  டிரிஜிஸ்ட் ஆட்சியின் கீழ் இது 1980களின் இறுதியில் 180 கிலோ கிராமாக மாறியது.  ஆனாலும், உணவு தானிய உற்பத்தியின் வளர்ச்சி வீதம், உள்நாட்டுச் சந்தையை விரிவுபடுத்தும் அளவுக்கு வேகமாக இல்லை. கடுமையான பணவீக்கத்தை ஏற்படுத்தாமல், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதத்தை சுமார் 3.5 முதல் 4 சதவிகிதத்திற்கு அதிகமாக உருவாக்க முடியாது. பணவீக்கம் என்பது தேர்தல் காலத்தில் அரசிற்கு பாதகமாக அமையும் என்பதால் அதனை தவிர்க்க வேண்டியிருந்தது.  தற்போதைய உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதத்தில் அந்த நேரத்தில் இருந்த மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்திற்கு சமமாக ஆண்டிற்கு 2 சதவீத வேலைவாய்ப்பு வளர்ச்சி விகிதத்தைத்தான் தர முடிந்தது.  இதனால் வேலையின்மையும் இதே விகிதத்தில் வளர்ந்து கொண்டே வந்தது.  சுருக்கமாகச் சொன்னால், நவீனத்துறையில் வேலைவாய்ப்புகளின் வளர்ச்சி தாமதமடைந்தது என்பது சுதந்திரத்தின் போது அளித்த வாக்குறுதிகளை பொய்யாக்கிக் கொண்டிருந்தது.

நிலச் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கும் உணவு தானிய உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் போதுமானதாக இல்லை என்பதற்கும் தொடர்புள்ளது. இந்தியாவில் சுதந்திரத்தின்போது எடுக்கப்பட்ட நிலச் சீர்திருத்தங்களின் விளைவு என்னவென்றால், முதல் 15 சதவீத நில உடமைகளின் உரிமையில் அமைப்பு மாற்றம் ஏற்பட்டது என்பது மட்டுமே. பெரிய அளவில் காட்சியில் இல்லாத நில உரிமையாளர்கள் கைகளிலிருந்து அவர்களின் நிலங்கள் பணக்கார குத்தகைதாரர்களுக்கு பணத்தை பெற்றுக் கொண்டு உரிமை மாற்றம் செய்யப்பட்டது. மொத்தத்தில், உயர்மட்ட அளவில் செய்யப்பட்ட இந்த 15 சதவீத நில உரிமை மாற்றம் என்பது உண்மையில் தீவிர நிலச்சீர்திருத்த நடவடிக்கையாக அமையவில்லை.   மொத்த விதை நிலத்தின் அளவு கூட வேண்டும். அந்த விளை நிலத்தில் ஒரு ஏக்கருக்கான உற்பத்தி விகிதமும் அதிகரிக்க வேண்டும்.  அப்போதுதான் விவசாய வளர்ச்சி சாத்தியமாகும். நீர்ப்பாசனம் இரண்டையும் அதிகரிக்கும் என்றாலும், எத்தனை விவசாயிகள் அதன் பலன்களை பயன்படுத்துகிறார்கள் என்பதை பொறுத்தது.  எத்தனை விவசாயிகள் பயன்படுத்துகிறார்கள் என்பது நில மறுபகிர்மானத்தை, கூட்டு விவசாய முறையை, கூட்டுறவு திட்டங்களை  என அனைத்தையும் பொறுத்தது.  எனவே சுருக்கமாகச் சொன்னால் டிரிஜிஸ்ட் ஆட்சி முறையின் கீழ் நில மறு பகிர்மானம் அல்லது நிலச் சீர்திருத்தம் இல்லாததால் வேலைவாய்ப்பிலும் வளர்ச்சி ஏற்படவில்லை.

இதனால் பொதுவான மக்களிடையே இந்த டிரிஜிஸ்ட் ஆட்சியின் மீது ஒரு ஏமாற்றம் ஏற்பட்டது.  அதே நேரத்தில் இந்த டிரிஜிஸ்ட் ஆட்சியின் வலுவான ஆதரவாளராக இருந்த நகர்ப்புற மத்திய தர வர்க்கம், பொருளாதாரத்தை சுதந்திர வர்த்தகத்திற்கும் மூலதன பாய்ச்சலுக்கும் திறந்து விட்டால் அதிக அளவு வளர்ச்சி வாய்ப்புகள் உருவாகும் என்று நினைத்தது.  இப்படி நாட்டின் பொருளாதாரம் திறந்து விடப்படும்போது அதிக சம்பளம் கொடுக்கும் வளர்ந்த நாடுகளில் இருந்து குறைந்த சம்பளம் கொடுக்கும் மூன்றாம் உலக நாடுகளுக்கு மூலதனம் வரும். அதனால் நன்மைகள் கிடைக்கும் என்றும், நாடு விட்டு நாடு புலம் பெயர்வது எளிதாகும் என்றும், நகர்ப்புற மத்திய தர வர்க்கம் நினைத்ததால் டிரிஜிஸ்ட் ஆட்சிக்கு அதனுடைய ஆதரவு குறையத் தொடங்கியது.

இது எப்படி இருந்தாலும், உலக முதலாளித்துவக் கட்டமைப்பில் ஏற்பட்ட மாற்றமே டிரிஜிச ஆட்சி முறையின் அழிவுக்குப் பின்னால் இருந்த மிக முக்கியமான காரணி. சோவியத் யூனியனையும் சீனாவையும் சுற்றி வளைக்க அமெரிக்கா உலகெங்கிலும் தனக்கான தளங்களை பராமரித்து வந்தது.  அதே நேரத்தில், காலனியாதிக்க காலம் போல காலனி நாடுகளில் இருந்து ‘செல்வத்தின் வடிகால்’ கிடைக்காததால், அமெரிக்காவின் பேலன்ஸ் ஆஃப் பேமெண்ட்களில் நிலையான நடப்புக் கணக்குப் பற்றாக்குறை ஏற்பட்டதில் அமெரிக்காவால் எந்த மாற்றத்தையும்  ஏற்படுத்த முடியவில்லை. எனவே இந்தப் பற்றாக்குறைகளை சரி செய்ய தேவையான நிதிகளை பெறுவதற்காக டாலர்களை அச்சிட வேண்டியிருந்தது. அவை போருக்குப் பிந்தைய பிரெட்டன் வுட்ஸ் அமைப்பின் கீழ் ‘தங்கம் போல் நல்லது’ என்று அறிவிக்கப்பட்டது. மற்றும் அதிகாரப்பூர்வமாக ஒரு அவுன்ஸ் தங்கத்திற்கு 35 டாலர்கள் ($35) என மாற்றப்பட்டது. இது அமெரிக்காவிலிருந்து டாலர்கள் வெளியேற வழி வகுத்தது. ஐரோப்பிய மற்றும் அமெரிக்க வங்கிகளின் கருவூலங்களை நிரப்ப வழிவகுத்தது. ஐரோப்பாவும் அமெரிக்காவும் அந்த மூலதனங்களை லாபகரமான இடங்களில் கடனாகக் கொடுக்க விரும்பின. பிரெட்டன் வுட்ஸ் அமைப்பின் கீழ் எந்த நாட்டிலும் எந்த மூலதனக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுவதையோ அந்த கட்டுப்பாடுகளினால் தங்கள் மூலதனப் பாய்ச்சல் தடைபடுவதையோ அவை விரும்பவில்லை. நிதி மூலதன நடவடிக்கைகளுக்காக உலகம் முழுவதும் திறக்கப்பட வேண்டும் என்று அவை விரும்பின.

பண வடிவில் உலகம் முழுவதும் பாய்ந்து கொண்டிருக்கும் இந்த சர்வதேச நிதி மூலதனம் 1973-74லும் 1979-80லும் ஏற்பட்ட இரண்டு எண்ணெய் விலை உயர்வுகளால் மேலும் வீங்கிப் பெருத்தது.   இதனால் இந்தியா போன்ற நாடுகளின் மீதும் நிர்ப்பந்தத்தினை அதிகப்படுத்தியது. இந்த நாடுகளின் நிதிப் பற்றாக்குறையை ஈடுகட்ட எளிதில் கிடைக்கக்கூடிய நிதி ஆதாரத்தினை இதற்கு சர்வதேச நிதியம் (IMF) போன்ற நிறுவனங்கள் வழங்கும் என்று ஆசை காட்டப்பட்டது. ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவைப் போல் அல்லாமல், இந்த கவர்ச்சி வார்த்தைகளை எதிர்த்து இந்தியா சில காலம் நின்றது. ஆனால் இறுதியாக எண்பதுகளில் இந்தியாவும் அடிபணிந்தது. அது முதல் ஒரு நவ-தாராளவாத ஆட்சியின் முழுமையான அறிமுகத்திற்கான வழியை இந்தியா திறந்தது.

இதற்கிடையில் இந்திய பெரு முதலாளித்துவ வர்க்கத்தின் அணுகுமுறையில் ஏற்பட்ட ஒரு ஆழமான குறிப்பிடத்தக்க மாற்றமே இந்த அடிபணிவிற்கு முக்கிய காரணமாகும். ஏகாதிபத்தியத்தை சாராமல் ஒப்பீட்டளவில் தன்னாட்சி பெற்ற ஒரு முதலாளித்துவத்தை இந்தியாவில் கட்டியெழுப்பும் திட்டத்தை இந்திய பெரு முதலாளி வர்க்கம் கைவிட்டது.  உள்நாட்டுச் சந்தையில் மட்டும் இருப்பது என்பது அதற்கு முட்டுக்கட்டையாகத் தோன்றியது.  சில காலம் உள்நாட்டுச் சந்தையை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டு, அந்நிய மூலதனத்துடன் சேர்ந்து சர்வதேச சந்தையில் நுழைவதற்கு  சில முன்னெடுப்புகளை செய்தது. ஆனால் அந்நிய மூலதனம் சர்வதேச சந்தையில் இந்திய மூலதனம் தன்னுடன் கூட்டு முயற்சிகளை மேற்கொள்ள அனுமதித்ததற்கு ஈடாக இந்தியாவின் உள்நாட்டு சந்தையில்  நுழைவதை விரும்பியது. இந்தியப் பெரு முதலாளித்துவ வர்க்கம் இறுதியாக இதற்கு அடிபணிய வேண்டியிருந்தது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் நவ-தாராளமயம் நுழைவதில் சிறு காலதாமதம் ஏற்பட்டது.  சோவியத் யூனியன் இருக்கும்போதே இதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டாலும், சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகுதான் வர்க்க பலாபலன்களின் சமநிலையை நவதாராளவாதத்திற்கு சாதகமான நிலைக்கு மாற்ற முடிந்தது.   

4.     நவ தாராளவாத ஆட்சிக் காலத்தில் இடதுசாரி அரசாங்களின் சாதனைகள்

இந்தியாவில் டிரிஜிஸ்ட் ஆட்சி முட்டுச் சந்திற்கு வந்தது.  வேலையின்மை பெருகியது.  இந்த ஆட்சி முறையில் வேலையின்மையின் வீச்சை குறைப்பதற்காக எடுக்கும் எந்தவொரு முயற்சியும் பணவீக்கத்தில் கொண்டு விட்டது.  உணவுப் பொருட்களின் விலைகள் உட்பட தாறுமாறாக ஏறியபோது மக்கள் தங்கள் கோபத்தினை தேர்தல் ஜனநாயகத்தில் காட்டினர்.  1975-77 காலக்கட்டத்தில் எமர்ஜென்சியை விதித்ததன் மூலம், தேர்தல் ஜனநாயகத்தின் கட்டமைப்பை முழுவதுமாக தூக்கி எறியும் ஒரு முயற்சிக்கு மத்திய அரசு சென்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவசரநிலையை கடுமையாக எதிர்த்தது. மற்றும் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் உறுதியாக நின்றது. 1977 ஆம் ஆண்டு மாநில சட்டமன்றத் தேர்தலில் அது முதல் முறையாக மேற்கு வங்கத்தில் இடது முன்னணி அரசாங்கத்தை அமைத்தது.

நிலச் சீர்திருத்த நடவடிக்கைகள் இடது முன்னணி அமைச்சத்தால் மேற்கு வங்கத்தில் ஆப்பரேஷன் பர்கா என்ற பெயரில் எடுக்கப்பட்டன.  குத்தகைதாரர்களை பதிவு செய்ய அனுமதித்து இந்த அரசு அங்கீகரித்தது.  (ஷேர்கிராப்பர் என்பது நில உரிமையாளர் ஒரு ரை அவர் தரும் பயிரின் பங்கிற்கு ஈடாக நிலத்தைப் பயன்படுத்த அனுமதிக்கும் முறையாகும்).  அதுவரையில் இந்த குத்தகைதாரர்களுக்கு குத்தகை உரிமை மறுக்கப்பட்டிருந்தது.

நிலச்சீர்திருத்தங்களுடன் விவசாயத்திற்கு தேவையான நீர்ப்பாசனம் உள்ளிட்ட   வேறு சில அத்தியாவசிய நடவடிக்கைகளும் அதற்கான நிதி அதிகரிப்பும் சேர்த்து எடுக்கப்பட்டதால், மேற்கு வங்கத்தில் விவசாயத் துறையின் வளர்ச்சி விகிதத்தில் துரித முன்னேற்றம் ஏற்பட்டது. மற்றொரு முக்கியமான நடவடிக்கையாக ‘நிலத்தை உழுபவரே அறுவடை செய்ய வேண்டும்’ என்ற விதியை மாநில அரசு கொண்டு வந்தது. முன்பு, நிலத்தை குத்தகைதாரர் பயிரிட்ட பிறகு, நில உரிமையாளர்களின் குண்டர்கள் அறுவடையை எடுத்துச் செல்வார்கள்.  குத்தகைதாரருக்கு நில உரிமையாளர் என்ன நினைக்கிறாரோ அதனை கொடுப்பார். இது கிராமப்புறங்களில் அதிகார சமநிலையை மாற்ற உதவியது. இதனால் 1990 களில், நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களை விடவும் விவசாயத் துறையின் வளர்ச்சியில் மேற்கு வங்கம் மிக உயர்ந்த விகிதத்தை எட்டியது. இப்படி துரிதப்படுத்தப்பட்ட விவசாய வளர்ச்சி கிராமப்புறங்களில் விவசாயம் சாரா பொருட்களுக்கான கிராக்கியை அதிகப்படுத்தியது.  இதன் காரணமாக சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களும் வளர்ந்தன.

 மேற்கு வங்கத்தின் இடது முன்னணி அரசாங்கம் கால் பதித்த மற்றொரு தடம் உள்ளூர் சுயாட்சி அரசு நிறுவனங்களை (LSGIs) உருவாக்கியது.  இதனால் ஜனநாயக அதிகாரப் பகிர்வு ஏற்பட்டது. இதற்கான அத்தனை ஆதாரங்களும் இந்த உள்ளூர் சுயாட்சி அரசு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டன.  திட்டங்கள் உள்ளூர் மட்டத் தேவைகளுக்கிணங்க தீட்டப்பட்டன.  அதற்கான முடிவினை தீர்மானிக்கும் இடங்களாக இந்த ஜனநாயக அமைப்புகள் இருந்தன.  மக்கள் பங்கேற்புடன் இவை செயல்பட்டன.  பிற்காலத்தில் இந்த ஜனநாயக அதிகாரப் பகிர்வு நாடு முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்ட கொள்கையாக மாறியது.  அரசியலமைப்புச் சட்டத்திலும் திருத்தம் கொண்டு வரப்பட்டது.  இதற்கெல்லாம் மேற்கு வங்கத்தின் இடது முன்னணி அரசாங்கம்  முன்னோடியாகத் திகழ்ந்தது. 

கேரளத்தின் இடது ஜனநாயக முன்னணி அரசு ஒரு படி மேலே சென்றது. அது பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் போன்ற பல நிறுவனங்களின் நிர்வாகத்தை, இந்த நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுடன் சேர்த்து, உள்ளூர் சுயாட்சி அரசு நிறுவனங்களிடம்(LSGI) ஒப்படைத்தது. அதே நேரத்தில் அவர்களின் சம்பளப் பணத்தை மாநில அரசு தொடர்ந்து கொடுத்தது. கூடுதலாக, கிராம சபைகளால் அவர்களின் சொந்தத் தேவைகளின் அடிப்படையில் முன்னுரிமை அளிக்க வேண்டிய திட்டங்கள் என்று தீர்மானிக்கப்படும் திட்டங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் திட்ட நிதியில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை மாநில நிதி ஆணையம் LSGI களுக்கு மாற்றுவது கட்டாயமாக்கப்பட்டது.

கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி (LDF) அரசாங்கத்தின் கீழ் விவசாய வளர்ச்சி ஒரு படி அதிகரிக்கவே செய்தது. இருப்பினும் மாநிலத்தின் புவியியல் கட்டுப்பாடுகள் காரணமாக விவசாயத் துறையின் வளர்ச்சி விகிதம் குறைவாகவே இருந்தது. ஆனால் மாநில பட்ஜெட்டில் மக்கள் நலச் செலவினங்களை அதிகரித்ததன் மூலம் மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்தது. உள்ளூர் கிராக்கி அதிகரித்தது. இது விரிவாக்கத்திற்கும் பங்களித்தது. எனவே விவசாயம் அல்லாத சிறு துறைகள் விரைவான வளர்ச்சியடைந்தன. 2004-05க்கும் 2011-12க்கும் இடையில் கேரளாவில் தனிநபர் உண்மை மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, மோடியின் குஜராத்தைப் போலவே இருந்தது. குஜராத்தின் உயர் வளர்ச்சி குறித்து இடைவிடாமல் தம்பட்டமடிக்கப்பட்டது.  ஆனால், உண்மையில், அதே அளவு வளர்ச்சி கேரளாவிலும் இருந்தது.

இடதுசாரிகள் ஆளும் மூன்றாவது மாநிலமாக இருந்த திரிபுராவில் இந்தக் காலகட்டத்தில் சமூகக் குறியீடுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டது. மேற்கு வங்கத்தில் கூர்க்காலாந்து இயக்கம் மற்றும் திரிபுரா பழங்குடியினர் சுயாட்சி இயக்கம் போன்ற பிரிவினைவாத இயக்கங்களின் கோரிக்கைகளைத் தீர்ப்பதற்கான ஒரு வழிமுறையாக சுயாட்சி கவுன்சில்கள் திரிபுராவில்  உருவாக்கப்பட்டன.

 இந்த மூன்று இடது முன்னணி (LF) அரசாங்கங்களின் நடவடிக்கைகளின் மூலம், வளர்ச்சிக்கான ஒரு குறிப்பிட்ட இடதுசாரி உத்தி தெளிவாகப் புலனாகிறது. அதன் முக்கிய கூறுகள்:

உழைக்கும் மக்களின் வாங்கும் சக்தியை ஒரு துரிதமான விவசாய வளர்ச்சியின் மூலமும், மாநில அரசிடமிருந்து போதுமான நிதி ஒதுக்கீடு செய்து அளிப்பதன் மூலமும் அதிகரித்தல்.

கிராமப்புற சமுதாயத்தில் பல்வேறு வர்க்கங்களுக்கு இடையே அதிகார சமநிலையில் மாற்றம் கொண்டு வருதல்.

உள்ளூர் வாங்கும் சக்தி அதிகரிப்பிலிருந்து எழும் கிராக்கியின் உயர்வு சிறு உற்பத்தித் துறைகளின் உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்கும். இதன் மூலம் உள்ளூர் மட்டத்தில் பெரிய அளவில் வேலைவாய்ப்பை உருவாக்கும். மேலும் இதன் தாக்கம் பொருளாதாரத்தில் பெரிய விளைவுகளை ஏற்படுத்தும். சமூகச் செலவினங்களை, குறிப்பாகக் கல்வி மற்றும் கிராமப்புற மக்களின் செல்வாதரங்களுக்கான செலவுகளை கணிசமாக உயர்த்துதல்.

உள்ளூர் அளவிலான பங்கேற்பு ஜனநாயகத்தை அதிகாரப் பகிர்வின் மூலம் வலுப்படுத்துதல்.

மாநிலங்களின் வரி வருவாயைக் குறைக்கும் வகையில் மத்திய அரசு பெரு முதலாளிகளுக்கு வழங்கிய வரிச் சலுகைகள், மற்றும் நிதியாதாரங்களை மையப்படுத்தும் நடவடிக்கைகள் போன்றவற்றின் காரணமாக மாநில அரசுகளின் மீது பெருகிவரும் இறுக்கமான நிதிக் கட்டுப்பாடுகள் காரணமாக இந்த இடதுசாரி உத்தியை மாநிலங்களில் தொடர்ந்து பின்தொடர்வது காலப்போக்கில் கடினமாகிறது. ஆனால் உழைக்கும் மக்களின் அமோக ஆதரவு இந்த இடதுசாரி உத்திக்கு இருந்தது என்பதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி அரசாங்கங்களின் நீண்ட தேர்தல் வெற்றிகளிலிருந்து தெளிவாக உணர முடிகிறது. உண்மையில் மேற்கு வங்கத்தில் உழைக்கும் மக்கள் இடது முன்னணி அரசாங்கத்தின் மீது 34 ஆண்டு காலமாக நம்பிக்கை வைத்திருந்தனர்.

இருப்பினும், மத்திய அரசு கடைபிடிக்கும் நவ தாராளவாத உத்திக்கும், இந்த இடதுசாரி உத்திக்கும் இடையில் முரண்பாடு உள்ளது. சர்வதேச நிதி மூலதனத்தின் உத்தரவின் பேரில், விவசாயிகள் மற்றும் விவசாயத்துறை உள்ளிட்ட சிறு உற்பத்தித் துறைகளுக்கு மத்திய அரசின் ஆதரவு திரும்பப் பெறப்பட்டதால், பெருமளவில் ஏற்பட்டுள்ள விவசாய நெருக்கடி, உழைக்கும் மக்களின் கைகளில் வாங்கும் சக்தியைக் குறைக்கிறது. உலக வங்கி, ஐ.எம்.எஃப் போன்ற பிரெட்டன் வுட்ஸ் நிறுவனங்களின் பரிந்துரையின்படி விதிக்கப்பட்டுள்ள சரக்கு மற்றும் சேவை வரி போன்ற நடவடிக்கைகளின் மூலம் நிதியாதாரங்களை மையப்படுத்தும் மத்திய அரசின் நடவடிக்கைகளால், அரசு நடத்தும் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளின் பராமரிப்பு உள்ளிட்ட சமூக நலச் செலவினங்களுக்கு மாநிலங்களுக்கு சிறிதளவு மட்டுமே நிதி கிடைக்கிறது. கல்வித்துறை மற்றும் சுகாதாரத்துறையின் தனியார்மயமாக்கலின் காரணமாக உழைக்கும் மக்களின் உண்மை வருமானம் மேலும் குறைகிறது.

தொழில்துறை வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்காக தனியார் துறையின் பெரிய அளவிலான முதலீட்டை மாநிலத்திற்கு வரவழைக்க முனைந்த மேற்கு வங்க மாநில இடதுசாரி அரசாங்கத்தின் தீர்மானத்தை இந்த பின்னணியில் பார்க்க வேண்டும். எனினும் இது மட்டும் போதாது என்பதை அனுபவம் காட்டுகிறது. தொழில்மயமாக்கலுக்கு தேவையான பிற முயற்சிகளும் கூடுதலாக எடுக்கப்பட வேண்டும். சீனாவின் டவுன்ஷிப் மற்றும் கிராம நிறுவனங்களின் நிர்மாண முறையில், LSGI-க்கு சொந்தமான யூனிட்கள்  உருவாக்கப்பட வேண்டும்.  அல்லது கேரளாவில் சில இடங்களில் முயற்சிப்பது போல, கூட்டுறவுக்கு சொந்தமான யூனிட்கள் மூலம் தொழில்மயமாக்கலை ஊக்குவிக்கும் புதுமையான நடவடிக்கையை எடுக்கலாம். மேலும் சில முதலாளிகள் மாநிலத்தில் தொழிற்சாலைகளை தொடங்கும் போது, இந்த நோக்கத்திற்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்ட போது அந்த நிலத்திற்காக வழங்கப்பட்ட நிறுவனப் பங்குகளை வாங்கி LSGI அல்லது விவசாய கூட்டுறவு நிறுவனங்களை உருவாக்க முயற்சி செய்யலாம். இதன் மூலம் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான முரண்பாடுகள் எழுவது குறைக்கப்படும். சுருக்கமாகச் சொன்னால், இடதுசாரி உத்தியை முன்னெடுத்து முன்னேறிச் செல்வதற்கு முழு அளவிலான புதுமையான நடவடிக்கைகள் இடதுசாரிகளால் அவசரமாக எடுக்கப்பட வேண்டியுள்ளது.

5.     மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரிகளும் இன்று சந்தித்து வரும் முன்னெப்போதுமில்லாத சவால்கள்

இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரிகளும் முன்னெப்போதும் இல்லாத சவால்களை சந்தித்து வருகின்றனர்.  முதலாவதாக ஏகாதிபத்தியங்களுக்கிடையேயான முரண்பாடுகள் சமீபகாலமாக சத்தமின்றி அமுக்கப்படுகின்றன.  ஏகாதிபத்தியங்களிடையே தொடர்ந்து மிகத் தீவிரமாக இருக்கும் முரண்கள் புரட்சிகர நடவடிக்கைகளுக்கு சாதகமானது என்று கம்யூனிஸ்ட் கட்சிகளால் ஆரம்பம் முதல் கணிக்கப்பட்டு வருகிறது.  உண்மையில், ஏகாதிபத்திய நாடுகளிடையே எழுந்த உள் முரண்களும் மோதல்களும்தான் போல்ஷ்விக் புரட்சியை நடத்துவதற்கும் தக்க வைப்பதற்குமான கால அவகாச இடைவெளியை அளித்தது என்று லெனின் எழுதியுள்ளார். அப்படியிருக்கையில், இன்று ஏகாதிபத்தியங்களுக்கு இடையேயான உள் முரண்கள் சத்தமில்லாமல் அமுக்கப்படுகின்றன என்பது சோவியத் யூனியன் வீழ்ச்சியடைந்துள்ள சூழலில், கம்யூனிஸ்டுகளின் நடைமுறை உத்திக்கு எல்லா இடங்களிலும் மிகப் பெரிய சவாலாக மாறிப் போயுள்ளது.

இரண்டாவது சவால், நவ தாராளவாதம் உழைக்கும் மக்களை முழுவதுமாக மூழ்கடிப்பது மட்டுமல்லாமல், அவர்களை எதிர்த்துப் போராடும் திறனற்றவர்களாக பலவீனப்படுத்துவதாகவும் உள்ளது. இந்தியாவில் உழைக்கும் மக்கள் முழுமையான வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.  கிராமப்புற மக்களில் நபர் ஒருவருக்கு ஒரு நாளைக்கு 2200 கலோரி உணவு கிடைக்க முடியாத நிலையில் உள்ளவர்களின் விகிதம் திட்டக் கமிஷனின் முந்தைய அளவுகோலின்படி, 1993-94க்கும் 2011-12க்கும் இடையில் 58 சதவீதத்திலிருந்து 68 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 2100 கலோரிகள் என்ற அளவுகோலாக இருக்கும் நகர்ப்புற இந்தியாவிற்கு இது முறையே 57 சதவீதம் மற்றும் 65 சதவீதம் ஆகும்.  இது எப்படி நடக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்ததே.  விவசாயம் மற்றும் சிறு உற்பத்தித் துறைக்கான அரசின் ஆதரவினை அரசு விலக்கிக் கொள்ளும் போது இந்தத் துறைகள் நெருக்கடிக்குள்ளாகின்றன.  அதனால் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் அதிகமாக இருந்தாலும், விவசாயிகள் நகர்ப்புறங்களை நோக்கி வேலை தேடி புலம் பெயரும் போது வேலை வாய்ப்பும் அதே விகித அளவிலோ அல்லது அந்த விகிதத்தை விடவும் குறைவாகவோ குறைகிறது. 1991 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கும் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கும் இடையில் விவசாயிகளின் எண்ணிக்கை 15 மில்லியன் குறைந்துள்ளது.  சிலர் விவசாயக் கூலிகளாக மாறிப் போயுள்ளனர்.  இன்னும் சிலர் நகர்ப்புறங்களுக்கு புலம் பெயர்ந்து, அங்கு ஏற்கனவே இருக்கிற வேலைகளை பகிர்ந்து கொள்ளும் கூலிகளாக மாறிப் போயுள்ளனர்.    

வேலை தேடும் தொழிலாளர் பட்டாளத்தின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, ஏற்கனவே அமைப்பு சார்ந்த துறையில் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் ஊதிய விகிதத்திலும் இது தாக்கத்தினை ஏற்படுத்துகிறது.  அவர்களின் பேரம் பேசும் சக்தி குறைகிறது.  இன்னும் இரண்டு காரணிகளும் தொழிலாளர்களின் பேரம் பேசும் சக்தியின் மீது தாக்கத்தை செலுத்துகின்றன.  உலகம் முழுவதும் பாய்ந்து செல்லும் நிதி மூலதனம் போர்க்குணமிக்க அணி திரட்டப்பட்ட தொழிலாளர்கள் உள்ள நாடுகளை விட்டு வெளியேறி, அணி திரட்டப்பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள நாடுகளை நோக்கி நகர்ந்துவிடும்.  எனவே, இது தொழிலாளர்களின் போர்க்குணத்தினை தணிக்கும் தாக்கத்தினை செய்கிறது.  அடுத்த மற்றொரு காரணி பொதுத்துறை ஊழியர்கள் போர்க்குணம் மிக்கவர்களாக அணி திரட்டப்பட்டவர்களாக இருப்பதால், பொதுத்துறைகள் தனியார்மயமாக்கப்படுகின்றன.  தனியார்மயமாக்கல் என்பதும் தொழிலாளர்களின் போர்க்குணத்தினை தணிக்கும் தாக்கத்தினை செய்கிறது.

டிரிஜிஸ்ட் காலத்துடன் ஒப்பிடும் போது நவ தாராளவாதம், தொழிலாளர்களின் போராட்டத் திறனை பலவீனப்படுத்தியுள்ளது. இந்தியாவில் நவ-தாராளமயக் காலத்தில் தொழிலாளர்கள் பெரிய வேலைநிறுத்தங்களை நடத்துகின்றனர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் முன்பை விட அவர்களது வேலைநிறுத்த சக்தி பலவீனமடைந்துள்ளது என்பதுதான் உண்மை. அதேபோல், நவ தாராளமயத்தால் இரக்கமின்றி பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் சிறு உற்பத்தியாளர்களை அணிதிரட்டுவது என்பது மிகவும் கடினமான மற்றும் நீடித்த செயல்முறையாகும். நவ தாராளவாதம் தொழிலாளர்களின் எதிர்ப்பினை தெரிவிக்கும் வேலைநிறுத்த வடிவத்தின் திறனை பலவீனப்படுத்தியுள்ளது. இதன் காரணமாக அவர்கள் தங்களது எதிர்ப்பினை தெரிவிக்க அணிதிரட்டப்பட்ட போராட்டங்களாக நடத்துவதற்குப் பதிலாக தற்கொலை செய்து கொள்கின்றனர். தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  மூன்று வேளாண் மசோதாக்களுக்கு எதிராக, தொழிலாளர்களின் ஆதரவுடன் விவசாயிகளால் நடத்தப்பட்ட சமீபத்திய போராட்டம், இவற்றையெல்லாம் மீறி நடந்தேறியதற்காக மிகவும் பெருமைப்பட வேண்டியுள்ளது.

நவ தாராளவாதம் ஒருபுறம் வர்க்கப் போராட்டத்தினை தணிப்பதாக உள்ளது.  மறுபுறம் அடையாள அரசியலை ஊக்கப்படுத்துகிறது.  அடையாள அரசியலை பட்டியலின அல்லது பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளை வென்றெடுக்க ஊக்கப்படுத்தவில்லை.  மாறாக, ஆளும் வர்க்கம் தொழிலாளி வர்க்கத்தின் சாதி உள்ளிட்ட அடையாளங்களை பயன்படுத்தி, அவர்களது விசுவாசத்தை பெற்று, அவர்களை பிளவுபடுத்துகிறது.  நவீன தாரளமயக் கொள்கைகள் நெருக்கடிக்குள்ளாகும்போது, அடையாள அரசியலின் தீவிர அரசியல் வடிவமாக வகுப்புவாத பாசிச வடிவத்தினை எடுக்கிறது.  பெரு முதலாளி வர்க்கம் நிதியாதாரங்கள் உள்ளிட்ட அனைத்தையும் அளித்து இதனை வளர்த்தெடுக்கிறது.

டிரிஜிஸ்ட் ஆட்சிமுறையின்போது இருந்தது போல்  கம்யூனிச அரசியல் முன்னிலையில் இல்லை என்றாலும், ஒரு தகுந்த சந்தர்ப்பம் வரும்போது இது போன்ற பிளவுவாத அரசியலை முற்றிலுமாக முறியடித்து அது வெடித்துச் சிதறி கிளம்பலாம். நவ-தாராளவாத முதலாளித்துவத்தின் நெருக்கடி அத்தகைய ஒரு சந்தர்ப்பம் வருமென்பதை முன்னறிவிக்கிறது. நவீன தாராளமயக் கொள்கைகளின் காரணமாக, உலகம் முழுவதும் மற்றும் ஒவ்வொரு நாட்டிற்குள்ளும், மிக வேகமாக அதிகரித்து வரும் செல்வ மற்றும் வருமான சமத்துவமின்மையின் விளைவுதான் இந்த நெருக்கடி. இதன் காரணமாக எழுகிற அதீத உற்பத்திப் போக்கை அரசு தலையீடு செய்து தடுத்து நிறுத்த முடியும்.  ஆனால், சர்வதேச நிதி மூலதனம் தேசிய அரசுகளை அதனுடைய கட்டளைகளுக்கு அடிபணியச் சொல்வதன் காரணமாக, தேசிய அரசுகளின் தலையீடு என்பது தற்போது இல்லாமல் போய் விட்டது.   ஏனெனில் உலகமயமாக்கப்பட்ட நிதி மூலதனம் தேசிய-அரசை எதிர்கொள்வது பிந்தையதை அதன் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய நிர்ப்பந்திக்கிறது. இந்த கட்டளைகளில் நிதிப் பற்றாக்குறை தவிர்க்கப்பட வேண்டும் என்பதும் செல்வந்தர்கள் மீது வரி போடக் கூடாது என்பதும் அடங்கும்.  ஆனால், நாட்டின் பொருளாதாரத்தை தூண்டுவதற்கு அரசின் செலவினங்களை அதிகரிக்க தேவையான நிதியை உருவாக்க உள்ள  இரண்டு வழிகள் இவை மட்டுமே.  .

6.     தூண்டப்படும் வெறுப்பரசியலும் அதனை விஞ்சிய விவசாயிகளின் போராட்டம் அளிக்கும் நம்பிக்கையும்

இந்த சூழ்நிலையில்தான் உலகம் முழுவதிலும் உள்ள பல நாடுகளில் உள்ள பெருநிறுவன-நிதிமூலதன தன்னலக்குழுக்கள் நவ-தாராளவாத நிகழ்ச்சி நிரலை தொடர்ந்து நடத்த பாசிச சக்திகளை ஊக்குவித்து வருகின்றன. இந்தப் போக்கிற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல. இங்குள்ள பெருநிறுவன-நிதி மூலதன தன்னலக்குழுக்கள் பாசிச இந்துத்துவாவுடன் கூட்டணி வைத்துக் கொண்டுள்ளது. இந்த கார்ப்பரேட்-இந்துத்துவா கூட்டணி தற்போது நமது அரசியலில் ஆதிக்கம் செலுத்துகிறது. இது முஸ்லிம்களை, (மற்றும் சில சமயங்களில் தலித் மற்றும் கிறிஸ்தவர்களை) ‘நாம் அல்லாத மற்றவர்கள்’ என சித்தரித்து வெறுப்பின் இலக்காக ஆக்குகிறது. மேலும் மக்களின் வாழ் நிலைமைகளின் நெருக்கடிகளில் இருந்து அவர்களின் கவனத்தை திசைதிருப்பும் வழிமுறையாக இந்த வெறுப்பரசியலை பயன்படுத்துகிறது, இதன் காரணமாக பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் போன்ற விஷயங்கள் மறக்கப்பட்டு, நெருக்கடிக்கிடையிலும் கார்ப்பரேட் இந்துத்துவா கூட்டணி ஆட்சி அதிகாரத்தில் உள்ளது.

இந்த கார்ப்பரேட் இந்துத்துவா கூட்டணியானது, உள்நாட்டு மற்றும் அந்நிய பெருநிறுவன-நிதிமூலதன தன்னலக்குழுக்களின் நலன்களுக்காக மட்டுமே பிரத்தியேகமாக செயல்படுகிறது. தொழிலாளர்களின் உரிமைகளைத் தடுக்கும் சட்டங்கள், பின்னர்  கொரோனா பெருந்தொற்று காலத்தை தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கும் சட்டத் தொகுப்பு மசோதாக்கனை மற்றும் மூன்று வேளாண் சட்டங்களை நிறைவேற்ற பயன்படுத்திக் கொண்டது.  விவசாயத்திற்கென எஞ்சியிருந்த கொஞ்சநஞ்ச மாநில ஆதரவையும் முற்றிலுமாக விலக்குவதாகவும், கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கத்திற்கும் அத்துமீறலுக்கும் விவசாயத் துறையை திறந்துவிடுவதற்கு வழிவகுப்பதாகவும் இந்த மூன்று வேளாண் சட்டங்களும்  இருந்தன. மோசமான இந்த சட்டங்களுக்கு எதிராக, தொழிலாளர்களின் ஆதரவுடன், விவசாயிகள் நடத்திய ஓராண்டு காலப் போராட்டத்தின் காரணமாக, இறுதியாக அவை திரும்பப் பெறப்பட்டுள்ளன. ஆனாலும் அரசாங்கம் தனது நிகழ்ச்சி நிரலை கைவிட்டுவிடவில்லை.  தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் அதன் ஆதரவு பெருவணிக நிறுவனங்களுக்கிடையில் அது உருவாக்கியுள்ள விவசாயத்திற்கான இணைக் கடன் ஏற்பாடு என்பது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பொதுமக்கள் வைப்பு நிதியாக வைத்துள்ள நிதி வளங்களை பயன்படுத்தி, பெரு நிறுவனங்கள் விவசாயத் துறையில் ஆக்கிரமிப்பு அத்துமீறல் செய்ய வழி வகுக்கும். இதில் இருந்து, அரசாங்கம் தனது நிகழ்ச்சி நிரலை கைவிட்டுவிடவில்லை என்பது தெளிவாகிறது.

எனினும், ஒப்பீட்டளவில் எதிர்ப்பு நிலை மந்தமாகி, எதிர்ப்பற்ற நிலை போன்றிருந்த காலப் பின்னணியில், நடைபெற்ற விவசாயிகளின் போராட்டம் என்பது உழைக்கும் மக்களின் போராட்டங்களின் எழுச்சிக்கான வழியைத் திறந்துள்ளது. அரசியலமைப்பைத் தகர்க்கும் முயற்சி செய்யும் கார்ப்பரேட்-இந்துத்துவா கூட்டணியை தோற்கடிப்பதன் மூலம் அது ஜனநாயக.அரசியலுக்கான வாய்ப்பைத் திறக்கும். ஆனால், பாசிசக் கூறுகளின் தோல்வி என்பது தீர்மானகரமானதாக இருக்க வேண்டுமானால், இந்தக் கூறுகள் உருவாகக் காரணமான நவ தாராளவாத முதலாளித்துவத்தை கடந்து வர வேண்டும். கார்ப்பரேட் இந்துத்துவா கூட்டணியை தோற்கடிப்பது என்று அரசியலமைப்பு உறுதி கூறும் அனைத்து கூறுகளையும் பாதுகாக்க  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் ரீதியாக ஒன்றுபட்ட முயற்சிகள்  மேற்கொள்வதுடன், உழைக்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான குறைந்தபட்ச பொருளாதார நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்து நவ தாராளமயத்தின் எல்லைகளை உடைக்க வேண்டும்.

தமிழில்: ஆர். எஸ். செண்பகம்

சங் பரிவாரத்தின் உத்திகள்!

ஜி.ராமகிருஷ்ணன்

அரசியல் தலைமைக்குழு  உறுப்பினர், சிபிஐ(எம்)

(ஆர்.எஸ்.எஸ். செயல்படுத்தி வரும் உத்திகளை எதிர்கொள்வது தொடர்பாக கோவை, திருப்பூர், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்ட கட்சி முன்னணி தோழர்கள் பங்கேற்ற பயிற்சி பட்டறையில் முன்வைக்கப்பட்ட குறிப்பின் சில பகுதிகள் இங்கு கட்டுரை வடிவில் தரப்பட்டுள்ளது – ஆசிரியர் குழு)

 “இந்துத்துவா சித்தாந்தம் பழமையை மீட்டெடுக்கும் வாதத்தை முன்னெடுப்பதாக இருப்பதோடு, இந்து ராஷ்ட்ராவை நிறுவ வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்தியாவின் பன்முகத்தன்மை மிக்க கலாச்சாரத்தை மறுதலிப்பதாகவும் இருக்கிறது” என நமது கட்சித் திட்டம் குறிப்பிடுகிறது.

ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங் பரிவார அமைப்புகள் தொடக்க காலத்தில் இருந்தே இந்துத்துவா – இந்து ராஷ்ட்டிராவை நோக்கிய பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. 2014 ஆம் ஆண்டு பாஜக ஒன்றிய ஆட்சிக்கு வந்த பிறகு அவர்களுடைய இந்த நோக்கத்தில் வேகமாக செயல்படுகின்றனர்.

கடந்த எட்டு ஆண்டு காலமாக “சமூக, இன பிளவுகளைத் தாண்டி, அனைத்தையும் உள்ளடக்கிய குறிப்பிடத்தக்க இந்து அடையாளத்தை உருவாக்குவதில் கணிசமான வெற்றியை பாஜக பெற்றுள்ளது. அதோடு சேர்ந்து நுண்ணிய நிலையில் (Micro Level) சாதியத் திரட்டலையும் அது மேற்கொள்கிறது” என்று 23 வது அகில இந்திய மாநாட்டின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

மேலும், “இந்துத்துவாவையும் அதன் பல்வேறு வகையான வகுப்புவாத அமைப்புகளையும் எதிர்த்துப் போராடுவதென்பதை அரசியல், தத்துவம், கலாச்சாரம் மற்றும் சமூகத் தளங்களில் நீடித்த வகையில் மேற்கொள்ள வேண்டும். இந்துத்துவா நிகழ்ச்சி நிரலுக்கு எதிரான இந்தப் போராட்டத்தை வலுப்படுத்த, உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” எனவும் அது குறிப்பிடுகிறது.

கட்சித்திட்டம் மற்றும் 23வது கட்சி காங்கிரஸ் சுட்டிக்காட்டிய அம்சங்களை கணக்கில் எடுத்துக் கொண்டு கோவை மற்றும் திருப்பூரில் பாஜக பின்பற்றிவரும் சில உத்திகளை காண்போம்.

கோவை – திருப்பூரில் எதிர்ப்பு உணர்வும், வகுப்புவாதமும்

கோவை மாவட்டம் தொழில்கள் நிறைந்த பகுதி. பஞ்சாலை மற்றும் இன்ஜினியரிங் துறையில் சில கார்ப்பரேட் நிறுவனங்களை தவிர்த்து பெரும்பான்மையாக சிறு-குறு தொழில் நிறுவனங்களே இயங்கி வருகின்றன. திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 1,200 ஏற்றுமதி நிறுவனங்கள் உள்ளன. கோவை, திருப்பூருக்கு தேவையான முக்கிய கச்சா பொருட்களில் ஒன்று பருத்தி. பருத்தி பதுக்கலுக்கு சாதகமான கொள்கைகளால் நூல் விலை சென்ற 2020 அக்டோபர் மாதம் கிலோவுக்கு ரூ.237 என்பதிலிருந்து, 2022 மே மாதம் ரூ.474 என இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. இதன் காரணமாக கோவை, திருப்பூரில் ஜவுளி, விசைத்தறி மற்றும்  பின்னலாடைத் தொழில்கள் பாதிக்கப்படுகின்றன.

மூலதனம் சுருங்குவதாலும், வங்கிகளிலிருந்து கடன் பெற இயலாததாலும் சிறு – குறு நிறுவனங்கள் நெருக்கடியில் உள்ளன. தொழிலாளர்களும் பாதிக்கப்படுகின்றனர். வெளிநாடுகளிலிருந்து திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்களுக்கு கிடைத்த ஆர்டர்களில் மூன்றில் இரண்டு பங்கு குறைந்துவிட்டது. சம்பந்தப்பட்ட நாடுகள் ஆர்டர்களை பங்களாதேஷூக்கும், வியட்நாமுக்கும் மாற்றி கொடுக்கின்றன. உள்நாட்டில் பஞ்சு விலையை சீராக்கவும், ஜவுளித் துறையை தடங்கலின்றிச் செயல்பட வைப்பதற்கும் முதலாளிகள் சங்கத்தினர் தங்களின் கோரிக்கைகளை ஒன்றிய அரசிடம் தெரிவித்தும் அரசின் ஒத்துழைப்பு முழுமையாக கிடைக்கவில்லை.

பொதுத்துறை நிறுவனமான இந்திய பருத்திக் கழகம் (சிசிஐ) விவசாயிகளிடமிருந்து பருத்தியைக் கொள்முதல் செய்ய ஜவுளித் துறையினர் ஒன்றிய அரசிடம் கேட்டபோது,  துறைக்கான அமைச்சர் பியூஸ் கோயல், “அரசை தலையிடச் சொல்லி யாரும் நிர்ப்பந்திக்க முடியாது. சந்தை சக்திகள் சுதந்திரமாக செயல்படட்டும்” என (19.11.2021) கூறிவிட்டார்.

கடந்த காலத்தில் பாஜக எதிர்க்கட்சியாக இருந்தபோது, இந்து முன்னணியைச் சார்ந்தவர்கள் திருப்பூர் தொழில் பாதுகாப்புக்குழு என்ற ஒரு அமைப்பை உருவாக்கி கடையடைப்பு உள்ளிட்ட போராட்டத்தை நடத்தினர். அதன் மூலம் சிறு குறுந்தொழில்முனைவோர் மத்தியில் ஆதரவை பெற்றனர். ஆனால், இப்போது மத்தியில் பாஜக ஆட்சியில் உள்ளது. எனவே, பின்னலாடைத் தொழிலை பாதுகாக்க மகா யாகம் ஒன்றை நடத்தினர். யாகம் நடத்துவதன் வழியாக, அரசியல் சார்ந்த பிரச்சனைக்கு, நம்பிக்கை சார்ந்த ‘தீர்வை’ முன்னிறுத்துகின்றனர்.

1984களில் திருப்பூர் மாவட்டத்தில், பஞ்சப்படி கோரி வீறுகொண்ட வேலை நிறுத்த போராட்டம் நடந்த போது, அதனை முறியடிப்பதற்காக, முதலாளிகளோடு கைகோர்த்து, சங் பரிவாரத்தினர் ஆலைகளை இயக்க முயன்றனர். ஆனால், ஒன்றுபட்ட தொழிலாளர் படையின் எதிர்ப்பின் முன்னால் சரணடைந்து ஓட்டம் எடுத்தனர். இப்போதும், இந்தப் பகுதிகளில், தொழில் மற்றும் தொழிலாளர் நலன் காக்க இடதுசாரி இயக்கமும், தொழிற்சங்க இயக்கமும் தொடர்ந்து வலுவாக இயங்குவதற்கான தேவை உள்ளது. இந்த சூழலில் பாஜகவும், சங் பரிவாரமும் பலமடைந்தால், அது இடதுசாரி இயக்கத்தையும், தொழிற்சங்க இயக்கத்தையும் பலவீனப்படுத்தும்.

கோவை, திருப்பூரில் ஜவுளித் தொழிலில் மட்டும் நெருக்கடி ஏற்படவில்லை. கோவை மாவட்டத்தில் உள்ள இஞ்சினியரிங் தொழில்களில் லட்சத்திற்கும் மேற்பட்ட சிறு/குறு நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை நெருக்கடியில் உள்ளன. கடந்த 20.12.2021 அன்று அகில இந்திய சிறு – குறு நிறுவனங்களின் 170 கூட்டமைப்புகள் இணைந்து நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தின. இப்போராட்டத்தில் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டன.

பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., கச்சா பொருட்கள் விலையேற்றம் என அடுத்தடுத்து நெருக்கடியை உருவாக்கும் கொள்கைகளை மத்திய பாஜக அரசு மேற்கொள்கிறது. இருப்பினும், அண்மையில் நடைபெற்ற திருப்பூர் மற்றும் கோவை மாநகராட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்ட பாஜக கடந்த காலத்தைவிட சற்று கூடுதலாகவே வாக்குகளை பெற்றுள்ளது. தொழில்கள் பாதிப்பதற்கும், தொழிலாளர்களின் வேலையிழப்பிற்கும் காரணம்  பாஜக அரசின் கடைப்பிடிக்கும் கொள்கைகளே என்ற போதிலும் கூட, பாஜகவிற்கு வாக்கு அதிகமாவது வகுப்புவாத உணர்வு வலுப்படுவதை காட்டுகிறது.

வகுப்புவாதத்தின் பல முகங்கள்

வகுப்புவாதத்திற்கு முக்கியக் காரணம் மதம்தான் என சிலர் கருதுகிறார்கள். அப்படி அல்ல. மதநம்பிக்கையும் மதத்தின் மீது பற்றுகொண்டவர்கள் அனைவரும் வகுப்புவாதிகளாக மாறுவதில்லை. மதநம்பிக்கை கொண்ட மக்கள் பலர் இதர மதத்தைச் சார்ந்தவர்களோடு சகோதரத்துவத்தோடும் நேயத்தோடும் வாழ்ந்து வருவதைக் காண்கிறோம். வகுப்புவாதத்திற்கு மதம் அடிப்படை காரணம் அல்ல. அதே நேரத்தில் மத நம்பிக்கையாளர்களைத்தான் வகுப்புவாதிகளாக மாற்றுகிறார்கள்.

வகுப்புவாத உணர்வை உருவாக்கும் நடைமுறைக்கு பேராசிரியர் கே.என்.பணிக்கர் ஒரு கேரளப் பெண்மணியை உதாரணம் காட்டி தனது நூலில் குறிப்பிடுகிறார். (மதச்சார்பற்ற நடவடிக்கைக்கான கையேடு)

”அந்தப் பெண்மணிக்கு ராமர் மீது பக்தி உண்டு. தினமும் கோவிலுக்கு செல்வதில்லை என்றாலும் ராமாயணத்தில் ஒன்றிரண்டு பக்கங்களை தினமும் காலையில் படிக்கும் பழக்கமுண்டு, இப்படிப் பட்டவர் அயோத்தியில் ராமர் கோவிலை பாஜக மேற்கொண்டபோது அதன் ஆதரவாளராக மாறினார்.

அயோத்தியா இயக்கத்தை எதிர்க்கும் முஸ்லீம் சிறுபான்மையினர் மீது அந்தப் பெண்மணிக்கு பகையுணர்வு ஏற்பட்டிருக்கக்கூடும். சாதாரண பக்தி/மத உணர்வு வகுப்புவாத உணர்வாக மாற்றப்பட்டது.

எனவே வகுப்புவாத உணர்வு நிலைக்கு கொண்டு வர மதநம்பிக்கை பயன்படுத்தப்படுகிறது. சாதாரண மக்களிடம் இந்த வகுப்புவாத உணர்வை உருவாக்கிட ராமர் கோவில் பிரச்சனை, முஸ்லீம்களுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரம் நடத்துவது, கிறிஸ்தவர்கள் மீது பொய்ப் பிரச்சாரம் செய்து அவர்கள் மீது தாக்குதல் நடத்துவது போன்ற நடவடிக்கைகளுக்கு உதவுகின்றன.

வகுப்புவாத உணர்வினை உருவாக்கிய பிறகு, வதந்தி மற்றும் பொய்களை கட்டமைத்து, மத மோதல்களையும், கலவரங்களையும் உருவாக்குகிறார்கள். இதுபோன்ற வன்முறைகள் அவர்களின் அடுத்தகட்ட பாய்ச்சல் வேக வளர்ச்சிக்கு பயன்பட்டிருக்கின்றன.

கோவை – திருப்பூரில் சங் பரிவார அமைப்புகள்:

1940களில் தமிழகத்தில் கன்னியாகுமரி, சேலம், கோவை, மதுரை போன்ற மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ். சாகாக்கள் நடக்கத் துவங்கின. 1949 ஆம் ஆண்டு கோவை மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு உருவானது. கோவை மற்றும் திருப்பூர் என்ற இரண்டு வருவாய் மாவட்டங்களை மாநில அரசு 2009ல் தான் உருவாக்கியது.

இந்து வியாபாரிகள் சங்கம்

கோவை நகரில் உள்ள திருப்பூர் குமரன் மார்க்கெட்டில் கடன் வசூல் செய்வதில் வியாபாரிகளுக்கிடையில் முரண்பாடு ஏற்பட்டது. கடன் கொடுத்தல், வசூலில் ஏற்பட்ட முரண்பாட்டை இந்து வியாபாரிகள், இஸ்லாமிய வியாபாரிகளுக்கிடையிலான முரண்பாடாக மாற்றி இந்து முன்னணி அங்கே இந்து வியாபாரிகள் சங்கத்தை துவக்கியது. மத ரீதியில் துவங்கப்பட்ட முதல் சங்கம் இது ஆகும்.

கோவையில் ஜவுளி விற்பனை துறையிலும், எலக்ட்ரானிக் துறையிலும் இஸ்லாமிய வியாபாரிகளுக்கும் மார்வாடிகளுக்கும் போட்டி ஏற்பட்டது. பெரியார் திராவிட கழகம் சார்பில் மார்வாடிகளை தமிழகத்திலிருந்து விரட்டுவோம் என துண்டு பிரசுரம் வெளியிட்டனர். இந்து முன்னணி மார்வாடிகளுக்கு ஆதரவாக நின்றது. மார்வாடிகளும் இந்து முன்னணிக்கு நிதி உதவி செய்தார்கள். இச்சூழலில் கோவை நகரில் 1981ல் நடந்த பொதுக்கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். பேச்சாளர் திருக்கோவிலூர் சுந்தரம் நபிகள் நாயகத்தை தாக்கி பேசியிருக்கிறார். அவரை இஸ்லாமிய பழமைவாதிகள் தாக்கியிருக்கிறார்கள். அடுத்தடுத்து திருக்கோவிலூர் சுந்தரம், ராமகோபாலன் போன்றோரின் வெறுப்பு பேச்சு நகரில் பதட்டத்தை உருவாக்கியது. 1982இல் ஹக்கிம் என்ற மாணவர் திராவிடர் கழக கூட்டத்தில் கலந்து கொண்டு திரும்பிய போது படுகொலை செய்யப்பட்டார்.

கலவரமும், குண்டு வெடிப்பும்

1997ஆம் ஆண்டு நவம்பர் 29 அன்று கான்ஸ்டபிள் செல்வராஜ் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, பதட்டம் விசிறிவிடப்பட்டது. நவம்பர் 30, டிசம்பர் 1 ஆகிய தேதிகளில் கலவரம் வெடித்தது. காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூடு, படுகொலையில் 19 பேர் கொல்லப்பட்டனர். இவர்களுக்கும் செல்வராஜ் படுகொலைக்கும் எந்த தொடர்பும் இல்லை.

1998 பிப்ரவரி மாதத்தில், கோவைக்கு அத்வானி தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்தார். அப்போது அல்-உம்மா பயங்கரவாதிகள் ரயில் நிலையத்திலும், மருத்துவமனையிலும், மக்கள் கூடும் இடங்களிலும் குண்டு வைத்தார்கள். இதிலும் அப்பாவி மக்களே கொல்லப்பட்டார்கள். மேலும் இந்த சம்பவம் இந்து முன்னணியின் கொலைபாதகங்களுக்கு நியாயம் கற்பிக்க உதவியது. இஸ்லாமியர் மீதான வெறுப்பு பிரச்சாரமும், தாக்குதல்களும் அதிகரித்தன.

திருப்பூர் தொழில்முனைவோர் மத்தியில்

திருப்பூரில் தொழில் முனைவோர் மத்தியில் தனது செல்வாக்கை அதிகரிப்பதற்காக சங் பரிவாரம் மேற்கொண்ட முயற்சிகள் முக்கியமானவை. 2011 ஆம் ஆண்டு சாய ஆலைகளுக்கு உயர்நீதிமன்றம் சாயக்கழிவுநீரை வெளியேற்றும் பிரச்சனையில் முழுத் தடை விதித்தது. இதனால் மொத்த பின்னலாடை தொழிலும் நின்று போகும் நிலை ஏற்பட்டது. அப்போது “தொழில் பாதுகாப்புக் குழு” என்ற பெயரில் ஒரு அமைப்பை இந்து முன்னணியினர் உருவாக்கினர். ஏற்கனவே செயல்பட்டு வரும் வழக்கமான தொழில் அமைப்புகளைத் தாண்டி இந்த அமைப்பு சிறப்பாக செயல்படுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயன்றனர். சாயஆலைப் பிரச்சனை, நூல் விலைப் பிரச்சனை ஆகியவற்றில் பிரம்மாண்ட இயக்கங்களை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தில் தேர்தல் வந்தபோது ஆர்எஸ்எஸ் குழுவினர் மாற்றத்துக்கான அணி என்ற பெயரில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றனர். இந்த வெற்றியை பயன்படுத்தி ஆர்எஸ்எஸ் கருத்தியலைப் பரப்ப முயற்சி மேற்கொண்டு, அதில் கணிசமான அளவுக்கு வெற்றியும் பெற்றுள்ளனர்.

ஆடிட்டர்கள் மத்தியில் உள்ள செல்வாக்கை பயன்படுத்தியும், “ஸ்ரீபுரம் அறக்கட்டளை” போன்ற தன்னார்வ அமைப்புகளை உருவாக்கியும் இயங்குகிறார்கள். கடந்த காலத்தில் தொழில் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் கூட்டாக சேர்ந்து அரசின் கொள்கை சார்ந்த பிரச்சனைகளில் கருத்து தெரிவிப்பது, இயக்கம் நடத்துவது ஆகியவற்றில் புகுந்து, சீர்குலைக்கும் வேலையை தற்போது நுட்பமாக செய்து வருகின்றனர். சமீபத்தில் தொழிற்சங்கங்கள் நடத்திய அகில இந்திய வேலை நிறுத்தம் மோசமாக சீர்குலைக்கப்பட்டது.

கல்வித்தளத்தில்

பெரும்பான்மையான தனியார் பள்ளிகள் தற்போது சிபிஎஸ்இ பாடத் திட்டத்திற்கு மாறிவிட்டன. இப்பள்ளி நிர்வாகங்களே ஆர்.எஸ்.எஸ். மாணவர்களை திரட்டுவதற்கு உதவி செய்கின்றன. தற்போது கோவையில் சில அரசு பள்ளிகளிலும், பள்ளி மைதானங்களிலும் சாகாக்கள் மற்றும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

திருப்பூரில் ஜெய்வாபாய் அரசுப் பள்ளி தமிழகத்தில் 6ஆயிரம் மாணவிகள் படிக்கக்கூடிய பெரிய மாநகராட்சிப் பள்ளியாகும். அப்பள்ளியில் பெண் ஏன் அடிமையானாள்? என்ற பெரியாரின் புத்தகத்தை விநியோகித்ததை பிரச்சனை செய்தனர். அந்த சம்பவத்தில் இருந்து தொடர்ந்து இப்பள்ளியைக் குறி வைத்து வருகின்றனர். இப்பள்ளியில் படிக்கும் மாணவியை ஆசிரியர்கள் மதமாற்றம் செய்வதாக சமீபத்தில் பிரச்சனையை தூண்டி சமூக ஊடகங்களில் பரப்பினர். ஆர்ப்பாட்டம் நடத்தினர். கல்வித் துறை விசாரித்து அது உண்மையில்லை என்று கூறியது.

இந்து முன்னணியின் திட்டம்

இந்து முன்னணி அமைப்பு விநாயகர் சதுர்த்தி விழாவை நான்கு நாள் நிகழ்வாக நடத்துகிறது. இந்த நிகழ்வை பயன்படுத்தி உள்ளூர் குடியிருப்புகள் மட்டத்தில் மிக இளவயது (15 – 20 வயதுடையோர்) இளைஞர்களை அணிதிரட்டுவது நடந்து வருகிறது. இதில் வெளியூரில் இருந்து இங்கு வந்து குடியிருக்கும் சமூகங்களின் பாதுகாப்பின்மை உணர்வை பயன்படுத்தி, தங்கள் பக்கம் ஈர்த்துக் கொள்கின்றனர்.

சிலைகளை ஆற்றில், குளத்தில் அல்லது கடலில் கரைக்கும் ஊர்வலம் நடைபெறுகிறது. இந்த ஊர்வலத்தை இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையிலான மோதலை உருவாக்குவதற்கும் பயன்படுத்துகிறார்கள்.

ஏன் விநாயகர் சதுர்த்தியை தேர்ந்தெடுத்தார்கள்?

தமிழகத்தில் இந்து மதத்தில் உள்ள சைவர்களும், வைணவர்களும் வெவ்வேறு கடவுள்களை வழிபடுகிறார்கள். இரண்டு பகுதிகளை சார்ந்தவர்களும் சங் பரிவார அமைப்புகளில் உறுப்பினர்களாக சேருகிறார்கள். சைவ, வைணவ அடையாளங்களுக்கு அப்பாலும், சாதி வேறுபாட்டிற்கு அப்பாலும் கிராமங்களிலும் நகரங்களிலும் விநாயகரை இந்துக்கள் வழிபடுகிறார்கள். எனவே, விநாயகரை கையில் எடுத்தால் சைவ, வைணவ வேறுபாட்டு பிரச்சனை வராது என்று ஆழமாக பரிசீலித்து முடிவெடுத்திருக்கிறார்கள்.

இ.மு. நிர்வாகிகளாக இருப்போர் கம்பெனி கொடுக்கல், வாங்கல் வரவு செலவு பிரச்சனைகள், நிலப் பிரச்சனைகளில் கட்டப்பஞ்சாயத்து செய்வதும், சட்டரீதியாக காவல் துறையை நாடி நீண்ட காலதாமதத்தைச் சந்திப்பதை விட, இவர்களிடம் போனால் விரைவில் பிரச்சனை முடியும் என்ற தொழில் செய்வோர் மனநிலையும் இ.மு.வுக்கு ஒரு பிடியை உருவாக்கி உள்ளது. இதனால் அவர்கள் பொருளாதார ஆதாயமும் அடைகின்றனர்.

யாகம் – நம்பிக்கை, வியாபாரம்:

இந்து முன்னணி அமைப்பின் சார்பில் மகா யாகம் நடத்தப்பட்டதை முன்பே குறிப்பிட்டோம். அதில் மூட நம்பிக்கை மட்டுமல்லாது வியாபார நோக்கமும் இணைந்துள்ளது. திருப்பூரை அடுத்த  பொங்கலூரில் சோடஷ மகாலட்சுமி மகா யாகம் நடத்தி அதில் சுமார் 10 ஆயிரம் பேரை திரட்டினார்கள். பிறகு யாகம் நடத்திய இடத்தை ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்து விட்டனர்.

ஆர்.எஸ்.எஸ். நடத்தும் சாகாக்கள்

கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய 3 மாவட்டங்களில் சுமார் 250 சாகாக்கள் நடந்து வருகின்றன. இப்படிப்பட்ட சாகாக்கள் சில அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பெரும்பாலும் தனியார் பள்ளி வளாகங்களில் நடந்து வருகின்றன. சங் பரிவார நடவடிக்கைகளில் இது முக்கியமானது. இதில் பயிற்சி பெறுபவர்களைத்தான் முழுநேர ஊழியர்களாக்குகிறார்கள். வெறுப்பு பிரச்சாரம் செய்வது, மத மோதலை உருவாக்குவது, சிறுபான்மை மக்களை தாக்குவது போன்ற நடவடிக்கைகளுக்கு வகுப்புவாத அரசியல் பயிற்சியோடு ஆயுதப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

ஆர்.எஸ்.எஸ்.ஸின் சாகா என்பது, கம்பு, வாள், குண்டெறிதல் போன்ற பயிற்சிகளை உள்ளடக்கியது. உடற்பயிற்சி விளையாட்டுகள், வில்கள், அணிவகுப்புகள் போன்றவை மைதானங்களிலும் பிற பொது இடங்களிலும் நடத்தப்படுகின்றன. உடற்பயிற்சி என்கிற பெயரில்தான் இவை அனைத்தும் நடத்தப்படுகின்றன. ஒரு தீவிரவாத அணுகுமுறையையும், குடிமைச் சமூகத்தில் எவ்விதமான தாக்குதலையும், நடத்துவதற்கான மனநிலையையும் உருவாக்குவதே, இந்த நடவடிக்கைகளின் நோக்கம். இவை சிறுபான்மையினரின் மனதில் சந்தேகத்தையும் அச்சத்தையும், பாதுகாப்பற்ற உணர்வுகளையும் அடிக்கடி ஏற்படுத்துகின்றன.

மதக்கலவரத்தை ஆர்.எஸ்.எஸ். உருவாக்கும் முறை இதுதான்.

1. சிறுபான்மையினர் இந்த நாட்டுக்கு விசுவாசமான குடிமகன்கள் அல்ல என்று பிரச்சாரம் செய்து, பெரும்பான்மை சமூகத்தின் மத உணர்வைத் தூண்டுவது.

2. சிறுபான்மையினரின் எண்ணிக்கை கூடுகிறது, இந்துக்கள் எண்ணிக்கை குறைகிறது என்று தந்திரமாக பிரச்சாரம் செய்து பெரும்பான்மையினரிடம் அச்சத்தை ஆழமாக்குவது.

3. நிர்வாகத்தில் ஊடுருவி, ஆட்சிப் பணியிலும், காவல் பணியிலும் இருக்கும்  அதிகாரிகளுக்கு மதவாத கண்ணோட்டத்தை ஏற்படுத்தி, மதவாத அணுகுமுறையை மேற்கொள்ளத் தூண்டுவது.

4. பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு கத்தி, வாள், ஈட்டி போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்த பயிற்சியளிப்பது.

5. எந்த ஒரு சிறு சம்பவத்திற்கும், மதச்சாயம் பூசி, மத ரீதியிலான பிளவை அதிகரித்து, மத வெறுப்பு உணர்வுகளை ஆழமாக்குவது.

சாதி வாரியாக மக்களை திரட்டும் முயற்சி

ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக அமைப்புகளின் தலைமையில் பிராமணர்களே இருக்கிறார்கள் என்ற தோற்றத்தை மாற்றுவதற்காக சங் பரிவார அமைப்புகளின் தலைமை பொறுப்பில் பிராமணர் அல்லாதவர்களை திட்டமிட்டு கொண்டு வருகிறார்கள். எல்லா மாவட்டங்களிலும் இந்து முன்னணி அமைப்பிற்கு பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின பகுதியிலிருந்து தலைமைப் பொறுப்பிற்கு நியமனம் செய்கிறார்கள். மாநிலத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்கள் பகுதியில் பிரதானமான சாதி எது என்று கண்டறிந்து, அம்மக்களை சாதி ரீதியில் திரட்டுவதை சங் பரிவார அமைப்புகள் அணுகுமுறையாக கடைப்பிடித்து வருகிறார்கள்.  கோவை மாவட்டத்தில் உள்ள தேவாங்க செட்டியார் சாதியில் உள்ள சில பிரமுகர்களை பிடித்து அவர்கள் மூலமாக அந்த சாதியில் உள்ள கணிசமான மக்களை சென்றடைந்துள்ளார்கள். இதே போல சாதிய பெருமித உணர்வைத் தூண்டிவிட்டு கவுண்டர் சமூகத்தினரிடம் கணிசமாக ஊடுருவி உள்ளனர். சாதிய அணி திரட்டலுக்காக சமூக ஊடகங்களை நுட்பமாகவும், திறம்படவும் பயன்படுத்துகின்றனர். கோவை, திருப்பூர் பகுதிகளில் அருந்ததியர் சமூக மக்களையும் தங்கள் வளையத்திற்குள் கொண்டு வர பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஊடக வலிமை

வாட்சாப், சமூக ஊடகங்களை பாஜக திறமையாக பயன்படுத்துவதை அறிவோம். அத்துடன் பாரம்பரிய ஊடகங்களையும் அவர்கள் தொடர்ந்து பயன்படுத்துகிறார்கள். கோவை, திருப்பூர் இரண்டு மாவட்டங்களிலும் தினமலர் பத்திரிக்கை கூடுதலாக விற்பனையாகிறது. இந்த இதழில் பாஜகவுக்கு ஆதரவாகவும், இடதுசாரிகளுக்கு எதிராகவும் செய்திகள் வெளியாகின்றன. குறிப்பாக கேரளாவில் தோழர் பினராயி விஜயன் தலைமையிலான அரசை பற்றி அங்குவரும் அவதூறுகளை அப்படியே தினமலர் பரப்புகிறது.

சங் பரிவார உத்திகளை எதிர்கொள்ள

                பாஜக தலைமையிலான ஒன்றிய அரசாங்கமும், சங் பரிவார அமைப்புகளும் இந்துத்துவ வகுப்புவாத திட்டத்தை அமலாக்கிட அனைத்து வழிகளிலும் முயற்சிக்கிறார்கள். இந்த முயற்சிகள் மேக்ரோ (நாடு தழுவிய அளவிலும், மாநில மற்றும் மாவட்ட அளவிலும்) மற்றும் மைக்ரோ (உள்ளூர் சமூக) அளவிலும் மேற்கொள்ளப்படுகின்றன. இரண்டு தளத்திலும் இதனை நாம் எதிர்கொள்ள வேண்டும்.

மேக்ரோ அளவில்

நாடு தழுவிய அளவில் பாஜக ஒன்றிய அரசும், சங் பரிவாரமும் பல்வேறு திட்டங்களை முன்னெடுக்கிறது. (உ.ம்., குடியுரிமை திருத்தச் சட்டம், ராமர் கோவில், அரசியல் சட்டத்தின் 370 வது பிரிவு நீக்கம், பொது சிவில் சட்டம்). இதே போல மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் பல்வேறு பிரச்சனைகளை கிளப்புகிறார்கள்.

நமது அரசமைப்பு சட்டத்தின் மதச்சார்பற்ற ஜனநாயக உள்ளடக்கத்திற்கு எதிராக இந்த செயல்பாடுகள் உள்ளன. மக்களை மத அடிப்படையில் பிளவுபடுத்துகின்றன. இந்த திட்டங்களுக்கு எதிராக கட்சியும், வர்க்க வெகுஜன அமைப்புகளும் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். எதிர் செயல்பாடுகளை கட்டமைக்க வேண்டும்.

மக்களிடையே ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும், மதச்சார்பின்மையையும் பாதுகாக்கும் திட்டத்தை சுயேட்சையான முறையில் முன்னெடுப்பதுடன், ஒத்த கருத்துள்ள கட்சிகள் மற்றும் அமைப்புகளோடு கைகோர்க்க வேண்டும்.

மைக்ரோ அளவில்

                வகுப்புவாத சக்திகள், தனிநபர்களை அணுகும் தன்மையோடு மைக்ரோ செயல்பாடுகளை வகுத்துக் கொண்டுள்ளார்கள். வெளிப்படையாகத் தெரியும் அரசியல் நிகழ்வுகளில் இருந்து இவை மாறுபட்டுள்ளன. அதிகம் வெளியே தெரிவதில்லை.

மதச் சார்பின்மைக்காக இந்தத் தளத்தில் நாம் மேற்கொள்ளும் போராட்டம், மனித மனங்களை வென்றெடுப்பதற்கான ஒன்றாகும். அதற்கு ஏற்ப செயல்திட்டத்தை வகுத்துக்கொள்ள வேண்டும். மத நம்பிக்கையாளர்களை அணுகுகிறபோது அவர்களுடைய மத நம்பிக்கையை புண்படுத்திவிடக் கூடாது.

குழந்தைகளுக்கான மழலையர் பள்ளிகளை சங் பரிவாரத்தினர் பலர் தொடங்கி நடத்துகிறார்கள். அந்த நிலையிலேயே, வகுப்புவாத செயல்பாடுகளை தொடங்குகிறார்கள். ஆங்கில எழுத்துக்களை கற்பிக்கும்போதும் கூட, ஏ எனில் அர்ஜூனன், பி எனில் பீமன் என்பதாக கற்பிக்கிறார்கள். கோயில் வளாகங்களையும் கைப்பற்றுகிறார்கள்.

மேக்ரோ அளவில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை, மைக்ரோ அளவில் மத நம்பிக்கையுள்ள மக்களிடம் எடுத்துச் சென்று மெல்ல மெல்ல அவர்களை வகுப்புவாதிகளாக மாற்றும் விதத்தில் சங்க பரிவாரம் இயங்குகிறது.

எனவே, வகுப்புவாத திட்டத்தை முன் உணர்ந்து தலையீடு மேற்கொள்வது அவசியமாகும். மதச்சார்பற்ற, ஜனநாயக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். அறிவியல் பூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். கூர்மையாக கவனம் செலுத்தி, வகுப்புவாத நடவடிக்கைகளை கண்டறிந்து, உரிய தலையீடு மேற்கொண்டு தடுக்கவும் வேண்டும். (உ.ம்., அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் வளாகங்களில் ஆர் எஸ் எஸ் சாகாக்கள் நடத்துவதை தடுத்து நிறுத்திட அரசு நிர்வாகத்தை அணுக வேண்டும்)

மதச்சார்பற்ற/ஜனநாயக நடவடிக்கைகள்:

கட்சியின் 23 வது அகில இந்திய மாநாடு, இந்துத்துவாவை எதிர்த்து போராடுவதற்கான 7 வழிமுறைகளை பட்டியலிட்டுள்ளது.

 1. கருத்தியல் அடிப்படையில் இந்துத்துவா கொள்கையை தொடர்ந்து அம்பலப்படுத்த வேண்டும். 2) வெறுப்பு/பயங்கரவாத தாக்குதல்களை எதிர்த்து முன்நிற்க வேண்டும். பொது இடங்களை வகுப்புவாதமயமாக்கும் முயற்சிகளை எதிர்க்க வேண்டும். 3) பழமைவாத, மூடநம்பிக்கை, கண்மூடித்தனமான போக்குகள், பகுத்தறிவின்மை போக்குகளை எதிர்த்து – அறிவியல் அடிப்படையிலான, பகுத்தறிவின் பார்ப்பட்ட கருத்துக்களை முன்னெடுக்க வேண்டும். 4) சமூக ஒடுக்குமுறைக்கு எதிராக, பாலின சமத்துவத்தை முன்னெடுக்க வேண்டும். பட்டியல் சாதி/பட்டியல் பழங்குடி மக்கள் மத்தியில் வகுப்புவாத சித்தாந்தம் பரவுவதை எதிர்கொள்ள வேண்டும். 5) பன்மைக் கலச்சாரத்தை முன்னிறுத்தும் நிகழ்வுகளில் சிறப்பு கவனம், செலுத்திட வேண்டும். 6) சமூக சேவை நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். 7) கல்வித் துறையில் மதச் சார்பற்ற, ஜனநாயகப்பூர்வமான, ஒன்றிணைப்பு நிரம்பிய உள்ளடக்கத்தை உருவாக்கி பரப்பும் விதத்தில் முன்முயற்சி எடுக்க வேண்டும்.

நம்முடைய நடவடிக்கைகளும் உள்ளூர் சமூக தளத்தில் முன்னெடுக்கப்பட வேண்டும்.

குழந்தைகள்

குழந்தைகளுக்காக துளிர் இல்லங்கள், பாலர் சங்கங்களை உருவாக்க வேண்டும். கிராமங்களிலும், நகரங்களிலும் உள்ள பள்ளிகளை (குறிப்பாக அரசுப் பள்ளிகளை) மேம்படுத்திட முயற்சி எடுக்க வேண்டும். இரவு பள்ளிகளை நடத்தலாம். மாணவர்களின் இடைநிற்றலை தடுக்க திட்டமிட்டு பயிற்சிகள் தர வேண்டும். அதே போல மாணவர் மன்றங்களை ஏற்படுத்தி, சேவைப் பணிகளில் ஈடுபடுத்த வேண்டும்.

இளைஞர்

பொதுவாகவே இளம் வயதில் வீர விளையாட்டுக்கள் மீது ஆர்வம் ஏற்படுகிறது. எனவே நாம் விளையாட்டு பயிற்சிகளில் கவனம் செலுத்த வேண்டும். பொங்கல் திருவிழாவை ஒட்டி நாம் விளையாட்டு போட்டிகளை நடத்திவருகிறோம். அதில் கண்டறியப்படும் திறன்களை மேலும் மேம்படுத்தும் விதத்தில் ஒன்றிய, நகர, மாவட்ட/மாநில அளவில் போட்டிகளை நடத்திட வேண்டும். வேலைவாய்ப்பு தொடர்பான பயிற்சிகளையும் வழங்க வேண்டும்.

சமூக செயல்பாடுகள்

யோகா உள்ளிட்ட உடற்பயிற்சிகள் ஆரோக்கிய நோக்கில் மிக உதவிகரமான நடவடிக்கைகளாகும். அது ஆன்மீகச் செயல்பாடு அல்ல. கேரளாவில் ஒன்றிய நகர அளவிலும் கிராம மற்றும் வார்டு அளவிலும் நமது கட்சியின் சார்பில் யோகா பயிற்றுவிக்கும் ஆசிரியர்களை தயார் செய்து, அனைத்து மக்களுக்குமே பயிற்சி அளிக்கிறார்கள். இதே போல, நலவாழ்வுக்கான நடவடிக்கைகளை திட்டமிட்டு முன்னெடுக்க வேண்டும்.

படிப்பகங்கள், நூலகங்களை உருவாக்குவதுடன், கலை/இலக்கிய பயிற்சிகள், , குறும்படம்/பாடல் போன்ற நவீன கலை செயல்பாடுகளையும் முன்னெடுக்க வேண்டும். ஈர்ப்பான விதத்தில் கலைக்குழுக்கள், நாடகக் குழுக்களை உருவாக்கி நிகழ்ச்சிகள் நடத்துவது, அதன் மூலம் மத நல்லிணக்க கருத்துக்களை பரப்புவது உதவி செய்யும்.

மரங்கள் நடுவது, ஏரி/குளங்களை ஆக்கிரமிப்புகளில் இருந்து பாதுகாப்பது என நடவடிக்கைகளை உருவாக்கி சாதி மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு மக்களை இணைத்திட முடியும்.

கோயில் நிர்வாகத்தில் பங்கேற்பு

                இந்து கோயில்கள், உள்ளூர் அளவில் பண்பாட்டு மையங்களாகத் திகழ்கின்றன. அவற்றை கைப்பற்றும் சங் பரிவார அமைப்புகள், கோயில்களை பயன்படுத்தி தங்களுடைய நோக்கங்களை முன்னெடுக்கிறார்கள்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு சில கோயில் நிர்வாகத்தில் நமது தோழர்கள் பங்கேற்று நிர்வாகத்தை ஊழலற்ற, தூய்மையான சிறப்பான முறையில் நடத்திட பங்களிக்கிறார்கள். நாம் கோயில் நிர்வாக நடவடிக்கைகளில் பங்கேற்க வேண்டும்.  கோயில்/ மத நிகழ்ச்சிகள்  நடைபெறும் சூழல்களில் வகுப்புவாதிகளின் தலையீட்டை தடுக்க நம்முடைய செல்வாக்கை பயன்படுத்த வேண்டும்.

                வெறுப்பு பிரச்சாரம்/வகுப்புவாத சூழல் உருவாக்கப்பட்டு, வன்முறையோ கலவரமோ வெடிப்பதற்கு ஏதுவான நிலைமை உருவானால் – அந்த நிலைமையை மாற்றிட தீவிரமான திட்டமிட்ட தலையீடுகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.

இதைப்போலவே, மசூதி, சர்ச் ஆகிய வழிபாட்டுத்தலங்களுடைய நிர்வாகத்திலும் பங்கேற்று, வகுப்புவாத நடவடிக்கைக்கு பயன்படுத்தாமல் தடுக்க முயற்சிகள் எடுக்க வேண்டும்.

இந்துத்துவா நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் மாற்று நடவடிக்கைகளை முன்னெடுக்க பல்வேறு துறைகளில் மேடைகளை உருவாக்குவதுடன் தேவைக்கு ஏற்ப முழு நேர ஊழியர்களை உருவாக்கிட வேண்டும்.

மேலே குறிப்பிட்ட பண்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுப்பது தனியாக ஒரு அரங்கத்தின் பணி அல்ல. நம்முடைய அனைத்து அமைப்புகளும் மேற்சொன்ன விதத்தில் செயல்பட வேண்டும். வாய்ப்புள்ள மதச்சார்பற்ற சக்திகளோடு, அமைப்புகளோடு, தொண்டு நிறுவனங்களோடு கைகோர்க்க வேண்டும். தனி நபர்களும் கூட உள்ளூர் அளவில் பல்வேறு நடவடிக்கைகளை உருவாக்கி முன்னெடுக்க முயற்சிக்க வேண்டும்.

உலகமய காலத்தில் வாழ்விட உத்தரவாதமும் சமூக நீதியும்

ச. லெனின்

குரல்: தோழர் பீமன்

சென்னை உள்ளிட்டு தமிழகத்தின் பல இடங்களில் வாழ்விட பாதுகாப்பிற்கான போராட்டங்கள் முன்னுக்கு வந்துள்ளது. குறிப்பாக, நீர்நிலைப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மேம்பட்ட வாழ்விடம் வழங்குதல் என்ற பெயரில் ஏழை எளிய மக்களின் குடியிருப்புக்கள் அகற்றப்படுவதும், அதை எதிர்த்த மக்களின் போராட்டங்களும் தொடர்கின்றன. நகர்ப்புறங்களின் மையத்திலிருந்து, உழைக்கும் மக்களின் பெரும்பகுதியினர் நகரங்களின் விளிம்பிற்கு துரத்தப்படுகின்றனர். இதுபோன்ற நிலைகள் எதுவும் திடீர் நிகழ்வுகளோ, தவிர்க்க முடியாத விஷயங்களோ அல்ல. இதன் பின்னால் உள்ள அரசியல் பொருளாதாரத்தை விளக்கிடும்  சிறு முயற்சியை இக்கட்டுரை மேற்கொள்கிறது.

சென்னை (மெட்ராஸ்), கல்கத்தா, மும்பை உள்ளிட்ட நகரங்கள் பிரிட்டிஷ் ஆட்சி காலத்திலேயே துறைமுகம், வர்த்தகம் சார்ந்து வளர்ச்சிபெற்று வந்தன. இந்திய விடுதலைக்கு பிறகான காலப்பகுதியில் புதிய வளர்ச்சிப் போக்குகளின் விளைவாக நகரங்கள் விரிவடைந்தது. அதன் முக்கிய விளைவாக, நகரத்தின் வளர்ச்சிக்கான அடித்தளமாக விளங்கிய உழைக்கும் மக்களும் நகரங்களில் குவிந்தனர். அதேநேரம் சுரண்டல் நிறைந்த முதலாளித்துவ அமைப்பு முறையில் அவர்களுக்கு கிடைத்த குறைந்த கூலியில் குடிசை பகுதிகளில்தான் குடியிருக்க முடிகிறது. கூவம் ஆற்றங்கரையிலும், நெருக்கடி நிறைந்த, காற்றோட்டம் இல்லாத, குடிநீர், கழிப்பிடம், அடிப்படைகள் வசதிகள் ஏதுமற்ற, குறுகிய சந்துகளையே சாலைகளாக கொண்ட, மழை / வெயில் என எந்த காலத்திலும் வாழ தகுதியற்ற மூச்சுத்திணறும் சிறு அறைகளை கொண்ட அல்லது அறைகளற்ற வீடுகளில், அங்கு நிலவும் சுகாதாரமற்ற சூழலில் வாழவேண்டும் என்பது அவர்களது விருப்பமல்ல. உழைப்பாளிகளின் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கொடுக்கப்படாத சூழலே அவர்களை ஏழ்மையில் தள்ளியது. அதுவே மோசமான வாழ்நிலையிலும் குடியிருப்புக்களிலும் அவர்களை வாழவைக்கிறது. ஆனால், முதலாளித்துவமும் அதன் கண்ணோட்டம் கொண்ட மேட்டிமை சிந்தனையுடையவர்களும், ஏதோ குடிசை பகுதி மக்களின் தவறான போக்கின் விளைவாகவே அவர்கள் அங்கு இருப்பதுபோன்ற கருத்துக்களை பதிவு செய்கின்றனர். முதலாளித்துவம்தான் அவர்களின் அப்படியான வாழ்நிலைக்கு காரணம் என்பதிலிருந்து தப்பித்துக் கொள்ளும் அரசியலும் அதில் உள்ளது.  இன்று நேற்றல்ல; மார்க்ஸ், எங்கெல்ஸ் காலத்திலேயே இப்படியான கருத்துக்களை அவர்கள் முன்வைத்துள்ளனர்.

“வாடகையில் சிறிதளவு பணத்தை மிச்சப்படுத்த முடியுமென்றால், அவர்கள் இருண்ட, ஈரப்பதமான, போதுமானதாக இல்லாத, சுருக்கமாகச் சொல்வதென்றால் சுகாதார நிபந்தனைகள் அனைத்தையும் கேலிக்கூத்தாக்குகின்ற குடியிருப்புக்களை வாடகைக்கு எடுத்துக் கொள்கிறார்கள். பெரும்பாலானவற்றில் சில குடும்பங்கள் ஓர் அறைக்கட்டை, ஒரு சிறு அறையைகூட எடுத்துக் கொள்கிறார்கள். வாடகையை இயன்ற அளவுக்குக் குறைக்க வேண்டும் என்பதற்காக இதைச் செய்கிறார்கள். ஆனால், மறு பக்கத்தில் அவர்கள் தம்முடைய வருமானத்தை உண்மையிலேயே பாபகரமான வழியில் குடிப்பதிலும் எல்லா விதமான சிற்றின்பங்களிலும் விரயம் செய்கிறார்கள்.” என்று ஸாக்ஸ் என்பவர் பதிவு செய்கிறார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் “சாதாரண மக்கள் மதுக்கடைக்குப் போகிறார்கள். அந்தஸ்துடையவர்கள் மனமகிழ் மன்றங்களுக்குப் போகிறார்கள்” என்று தனது ஆசிரியர் இவ்வாறு கூறுவார் என்று எங்கெல்ஸ் அதை நையாண்டி செய்கிறார். மேலும் “முதலாளிகளை பொறுத்தமட்டில், குற்றம் அறியாமையாகக் குறைந்துவிடுகிறது; ஆனால் தொழிலாளர்களைப் பொறுத்தமட்டில், அறியாமையே அவர்களுடைய குற்றத்திற்குக் காரணமாகிவிடுகிறது” என்கிறார் எங்கெல்ஸ்.

துவக்கத்தில் குடிசை பகுதிகள் இருந்த இடங்களிலேயே அதை மேம்படுத்திடும் திட்டங்களை ஆட்சியாளர்கள் மேற்கொண்டனர். புதிய பொருளாதார வளர்ச்சிப் போக்குகள் உழைக்கும் மக்கள் குடியிருக்கும் நிலத்தின் மதிப்பின் மீது தனது பார்வையை செலுத்தியது. அதன் விளைவாக, குடிசை பகுதிகளை மேம்படுத்துவது என்பதிலிருந்து குடிசை பகுதிகளை அகற்றுவது  என்கிற நிலைக்கு அரசும் ஆட்சியாளர்களும் வந்தனர். அதற்கு தேவையான காரணங்களையும் கட்டமைத்தனர். தற்போது குடிசை பகுதிகளை அகற்றுவது என்பதை கடந்து இது ‘ஆக்கிரமிப்பு’ பகுதி, நீர்நிலைகள், மேய்ச்சல் நிலம் என அதன் கைகள் நீள்கிறது. அதுவும் சாஸ்தா பல்கலைக் கழகம் போன்ற பெருநிறுவனங்களின் மீது அவை நீள்வதில்லை. இருக்க இடமின்றி ஒண்டிக்குடித்தனம் செய்யும் எளிய மக்களின் வீடுகள் மீதே அரசின் புல்டோசர்களின் கைகள் நீள்கிறது. இதுவே குடியிருப்புக்கள் மீதான அரசின் வர்க்க கண்ணோட்டத்தை வெளிப்படுத்திவிடுகிறது.

குடியிருப்புகள் குறித்த அரசின் கொள்கைகள்

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் குடியிருப்புகள் குறித்த ஒரு விரிவான அணுகுமுறைகள் எதுவும் உருவாக்கப்படவில்லை. விடுதலை இந்தியாவில் தமிழகம் சார்ந்த கொள்கை ஆவணங்களில் 1956ஆம் ஆண்டுதான் முதன் முதலாக குடிசை பகுதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 1956இல் “குடிசை பகுதி (மேம்பாடு மற்றும் அகற்றுதல்) சட்டம்” இயற்றப்பட்டுள்ளது. மனிதர்கள் வாழ தகுதியற்ற நிலையில்தான் குடிசை பகுதிகள் இருக்கிறது என்று சட்டம் கூறுகிறது. ஒன்று குடிசை பகுதி மக்களை அவர்கள் வசிக்கும் இடத்திலேயே மேம்பாட்டு பணிகளை செய்து கொடுத்து குடியிருக்க அனுமதிப்பது அல்லது அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி வேறு இடத்தில் குடியமர்த்துவது என்பதே அதன் முன்னால் இருக்கும் இரண்டு வழிகளாக அமைந்திருந்தது. இந்த இரண்டு வழிகளில் எதை அமலாக்குவது என்பதை அவ்வப்போது இருந்த சமூக, அரசியல், பொருளாதார சூழல்களே தீர்மானித்துள்ளன.

தேசிய திட்டக் குழுவின் மூலம் 1960களுக்கு முந்தைய இரண்டு தேசிய திட்டங்களிலும் குடிசை பகுதிகளை வேறு இடங்களுக்கு மாற்றுவது குறித்து பரிந்துரைகளை வழங்கியுள்ளன. குறிப்பாக, மும்பை மற்றும் கல்கத்தா சார்ந்து அதிகம் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், நகர்ப்புறங்களின் விளிம்பில் அவர்களை மறு குடியமர்வு செய்யவும் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் இதற்கு கூடுதல் செலவுகளை மேற்கொள்ள வேண்டி வரும் என்பதோடு, அவர்களின் வேலை, சமூகத் தொடர்பு, கல்வி உள்ளிட்டவை கடுமையாக பாதிக்கப்படும் என்பதால், அப்போது அது முன்னெடுக்கப்படவில்லை என்று டில்லி குடிசை பகுதி அகற்றம் குறித்த கட்டுரையில் கெர்ட்னர்தெரிவித்துள்ளார். 1960 முதல் 1970கள் வரை மறுகுடியமர்வு என்பதை விட அவர்கள் குடியிருக்கும் இடத்தை மேம்படுத்துவது என்பதாகவே இருந்து வந்துள்ளது. ஆனால், தற்போது உலக வங்கியின் கடன் மூலம் நிதி கிடைக்கிறது. மக்களின் வேலை, சமூக தொடர்பு, கல்வி குறித்த எவ்வித அக்கறையுமின்றி அரசு மக்களை நகரத்தின் விளிம்பிற்கு துரத்துகிறது.

விடுதலைக்கு பிந்தைய காலப்பகுதியில் சென்னையை நோக்கி வரும் மக்கள் கூட்டம் அதிகரித்தது. இது குடியிருப்பு குறித்த பிரச்சினைகளின்பால் அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி கவனம் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியது. போதுமான அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் உள்ள குடிசை பகுதிகளை மேம்படுத்தி வழங்கிடும் வேலைகளை அரசு மேற்கொள்ளும் என்று ஆட்சியாளர்கள் தெரிவித்தனர். குடியிருப்பு பிரச்சினைக்கான அரசின் தலையீடு என்பது சமூக நிர்ப்பந்தத்தால் விளைந்ததே அன்றி அது யாருடைய கனவு திட்டமாகவும் எழவில்லை. குறைந்த வருமானமுடைய ஏழை எளிய புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் குடிசை பகுதி மக்களுக்கு மேம்படுத்தப்பட்ட குடியிருப்புக்களை வழங்குவோம் என்று காங்கிரஸ் கட்சியினரை வாக்குறுதி வழங்க வைத்தது. இதன் தொடர்ச்சியாகவே, குடிநீர் வசதி, கழிப்பறைகள், மின்சாரம் உள்ளிட்ட வசதிகளை கொண்ட குடியிருப்புகளை உருவாக்குதல் என்கிற வகையிலேயே காங்கிரஸ் ஆட்சி காலத்தில் “மெட்ராஸ் மாகாண வீட்டு வசதி வாரிய சட்டம் 1961” உருவாக்கப்பட்டது. இதுவே தற்போது தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் என்றுள்ளது. குடிசை பகுதிகளை மேம்படுத்தி வாழ்வதற்கு தகுதியான அடிப்படை வசதிகளை கட்டமைப்பது என்கிற வகையில் இது துவங்கப்பட்டது. ஆனபோதும் அதில் போதுமான முன்னேற்றத்தை அதனால் ஏற்படுத்த முடியவில்லை.

1967இல் திமுக தமிழகத்தின் ஆட்சி பொறுப்பிற்கு வந்தது. திமுக-விற்கு சென்னையின் குடிசைபகுதி மக்களிடம் வலுவான செல்வாக்கு இருந்தது.  அவர்களை உள்ளடக்கி திட்டமிடும் நோக்கில் 1970ஆம் ஆண்டு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் உருவாக்கப்பட்டது. இது தமிழகம் முழுவதும் உள்ள குடிசை பகுதிகளின் பிரச்சினைகளை மாநில அளவிளான நோக்கோடு அணுகிட வழி செய்தது. “தமிழ்நாடு குடிசை பகுதிகள் மேம்படுத்துதல் மற்றும் அகற்றுதல் சட்டம் 1971” இயற்றப்பட்டது. குடிசை பகுதிகளில் அதிகமான செல்வாக்கையும் கூடுதல் வாக்கு வங்கியையும் பெற்றிருந்த திமுக-விற்கு அப்பகுதி மக்களை அங்கிருந்து அகற்றி நகரத்தின் விளிம்பிற்கு துரத்துவது என்பது அப்போது விருப்பமானதாக இல்லை. எனவே, குடிசை பகுதிகளை கண்டறிதல், வரைமுறைப் படுத்துதல், மக்கள் குடியிருக்கும் பகுதிகளிலேயே புதிய கட்டிடங்களை கட்டுதல், பொதுக்கழிப்பிடங்கள் அமைத்தல், குடிநீர் விநியோகம் என்பனவற்றை தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் செய்தது. பொதுவாக சமூக நல திட்டங்களை அமலாக்குதல், பொது செலவீனங்களுக்கான நிதி ஒதுக்குவது என்பதெல்லாம் எளிய மக்களுக்கு குறைந்தபட்ச ஆதாரங்களை உருவாக்கும் நோக்கம் கொண்டதாக அமைந்தது. முழுக்க வர்க்க நோக்கோடு உழைக்கும் மக்களை மையப்படுத்தி அமலாக்கப்படாத போதும், பிரபலமான வகையில் சமூக நீதி என்கிற நோக்கோடு எளிய மக்களின் ஒரு பகுதியை அது ஆசுவாசப்படுத்தியது. “ஒவ்வொரு லிபரல் அரசாங்கமும் நிர்பந்திக்கப்படும்போது மட்டுமே சமூக சீர்திருத்தச் சட்டங்களை அவை கொண்டு வரும்…..”. உழைக்கும் மக்களின் அப்படியான போராட்டங்களும் எதிர்வினைகளுமே இன்றுவரை எளிய மக்களை பாதுகாக்கின்ற சட்டங்களையும் ஆணைகளையும் சாத்தியமாக்கியுள்ளன.

மாநில அரசின் கொள்கை மாற்றம்

“ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்” என்பதாகவே ஆரம்பக்கால நடவடிக்கைகள் துவங்கின. கொள்கை ரீதியாக ஏற்பட்ட மாற்றங்கள் ஏழைகளின் சிரிப்பை பறித்தது. குறிப்பாக 1970களின் மத்தியில் சர்வதேச நிதியத்தின் நிதி பங்களிப்பு குடிசை பகுதிகள் மேம்பாடு குறித்த கொள்கை திட்டங்களில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது. 1975இல் தமிழகத்திற்கு உலக வங்கி நிதி பங்களிப்பு செய்தது. குடிசை பகுதிகள் மேம்பாட்டிற்காக 240 லட்சம் டாலரை நிபந்தனைக்குட்பட்ட கடனாக உலக வங்கி வழங்கியது. நிபந்தனையின் பகுதியாக அரசு கட்டிக் கொடுக்கும் வீடுகளுக்கு பயன்பாட்டுக் கட்டணம் வசூலிக்கும்படி கூறியது. தற்போது வரை இந்த உலக வங்கியின் கைகள் மக்களின் பாக்கெட்டில் உள்ள பணத்தை எடுப்பதற்கான துவக்கப் புள்ளியாக அமைந்தது. “மெட்ராஸ் நகர்புற மேம்பாட்டு திட்டம் 1இல் (1971) கொள்கை ரீதியான ஒரு மாற்றத்தை உட்கொண்டது. இதில் பயன்பாட்டாளர் பங்களிப்பு என்கிற வகையில் பணத்தை திரும்பப் பெறுதல் என்பது அறிமுகப்படுத்தப்பட்டது” என்கிறது 1982இல் வெளியான உலக வங்கி அறிக்கை. இதன் விளைவாக ஏழை எளிய மக்கள் வாடகை என்பதாகவோ, மேம்பாட்டிற்கான கட்டணம் என்றோ, பயன்பாட்டு கட்டணம் என்கிற வகையிலோ, பணம் செலுத்த வேண்டிய கட்டாயம் உருவானது. இது மக்கள் மத்தியில் எதிர்வினையை உருவாக்கக்கூடும். அது ஆட்சிக்கு எதிராக திரும்பும் என்கிற சிறு அச்சம் ஆட்சியாளர்களுக்கும் உண்டு. ஆனால், இவ்வாறான கட்டணங்களை வசூலிக்காவிட்டால், தங்களின் நிதி பங்களிப்பை இழக்க வேண்டிவரும் என்றும், பணத்தை வசூலிக்க தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் கூடுதல் முன்முயற்சி எடுக்க வேண்டும் என்றும், உலக வங்கியின் அறிக்கை தெரிவிக்கிறது. கட்டணமில்லா குடியிருப்பு வசதி மற்றும் மேம்பாடு என்பதாக இருந்த குடிசை பகுதி கொள்கை நிலையை உலக வங்கியின் தலையீடு மாற்றியமைத்தது. பல்வேறு நேரடியான மற்றும் மறைமுக காரணங்களால் அதை ஏற்று, ஆட்சியாளர்களும் அதற்கேற்ற வகையில் கொள்கை திட்டங்களை மாற்றி அமைத்தனர். எளிய மக்களிடம் கட்டணம் வசூலிப்பதும் அரசின் பங்களிப்பை குறைப்பதும் அவர்கள் பேசிய சமூக நீதிக்கும் எதிரானது என்பது வெளிப்படை.

இதற்கு பிறகு வந்த எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக அரசு புதிய கொள்கை திட்டத்திற்கு தன்னை முழுமையாக உட்படுத்திக் கொண்டது. திமுக ஆட்சியில் இருந்தபோது, அதனை எதிர்ப்பதற்கும், அந்த ஆட்சியை வீழ்த்தும் செயல்பாட்டிற்கும், ஒன்றிய அரசுடன் இணக்கம் பாராட்டிய அதிமுக, ஆட்சிக்கு வந்தவுடன் ஒன்றிய அரசின் கொள்கை திட்டத்திலும் தன்னை இணைத்துக் கொண்டது. மாநில நலன், தமிழ் நிலம் என்றெல்லாம் பேசிவந்த தமிழக அரசியல் களம் இந்த காலகட்டத்தில் மேலும் அமைதியானது. 1980களில் சர்வதேசிய நிதியத்தின் நிதியை ஏற்றுக் கொண்டது. உலக வங்கி கூறியபடி குடியிருப்புக்களை மேம்படுத்த அரசு செய்த செலவீனங்களை குறைத்துக் கொண்டு, மக்கள் செலுத்த வேண்டிய பயன்பாட்டு கட்டணத்தை அதிகரித்தது. ஏழைகளுக்காகவே வாழ்வதாக தனது படங்களில் நடித்ததின் விளைவாக மக்கள் மத்தியில் பெரிய பிம்பத்தை ஏற்படுத்திய எம்ஜிஆர் ஆட்சி காலத்தில்தான் இவையெல்லாம் நிகழ்ந்தது. உலக வங்கியின் பரிந்துரைகள்படி தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் செயல்பட துவங்கியது. இக்காலத்தில்தான் முந்தைய 240 லட்சம் டாலர் கடன் என்பதை கடந்து 3,000 லட்சம் டாலர் கடனை சர்வதேச நிதியம் வழங்கியது. இதுவும் நிபந்தனைக்குட்பட்ட கடன் என்பதை தனியாக சொல்ல வேண்டியதில்லை. இதைத்தொடர்ந்து 1990களில் தாராளமயத்தை உள்ளடக்கிய புதிய பொருளாதார கொள்கையை இந்திய அரசு அமலாக்கியது, மேலும் உழைக்கும் மக்களின் குடியிருப்பு பிரச்சினையை சிக்கலாக்கியது. தற்போது தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம் என்பது தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என பெயர் மாற்றம் கண்டுள்ளது. அது பெயர் மாற்றம் மட்டுமல்ல; அதன் உள்ளடக்கமும் மாறிவிட்டது. தனியார் பங்களிப்பு, அரசின் பங்களிப்பு குறைப்பு, பராமரிப்பு பணியிலிருந்து வாரியம் வெளியேறுவது, மக்களிடம் பயன்பாட்டு கட்டணத்தை கூடுதலாக பெறுவது என்று அதன் முழுமையான சமூக நோக்கு சிதைக்கப்பட்டுள்ளது. சமூக நீதி எனும் திராவிட சித்தாந்தம் இங்கு கடுமையாக பாதிக்கப்படுகிறது. தனியார்மயத்தை ஆதரிப்பதும், அதனை அமலாக்குவதும், எளிய மக்களை சிக்கலுக்கு உள்ளாக்கும். அது சமூகநீதிக்கு எதிரான அப்பட்டமான செயல்பாடுதான் என்பதை அனுபவங்கள் நிருபிக்கின்றன.

புதிய பொருளாதார கொள்கை அமலாக்கப்பட்ட காலத்திலும், அதற்கு பின்னரும், அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகள்தான் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பில் மாறி மாறி இருந்துள்ளன. இதே காலக்கட்டத்தில் ஒன்றிய அரசுடன் இரு கட்சிகளும் உறவு பாராட்டி வந்துள்ளன. திமுக கணிசமான காலம் ஒன்றிய ஆட்சியில், அமைச்சரவையிலும் பங்கேற்றுள்ளது. பொதுத்துறையை விற்க நேரும் தருணங்களில், சில எதிர்ப்புகளை தெரிவித்ததை தவிர, தனியார்மயத்தையும், தாராளமயத்தையும் உள்ளடக்கிய உலகமயமாக்கலின் புதிய பொருளாதார கொள்கைகளை இவ்வரசுகள் எதிர்த்ததில்லை. இது மாநில அரசில் அவர்கள் மேற்கொண்ட கொள்கை மாற்றங்களிலும் வெளிப்பட்டது. அது குடியிருப்பு பிரச்சினையிலும் தாக்கத்தை செலுத்தியது.

வளர்ச்சித் திட்டங்கள் அனைத்திலும் தனியார் பங்களிப்பு பிரதானமாக்கப்பட்டுள்ளது. அரசின் பங்களிப்பு வெட்டி சுருக்கப்பட்டது. இக்காலத்தில் குடிசை பகுதிகள் மேம்படுத்துவதற்கு பதிலாக அம்மக்களை நகரத்தை விட்டு அகற்றுவதற்கே ஏற்பாடுகள் செய்யப்பட்டன. குறிப்பிட்ட கட்சியின் கோட்டை, இங்குள்ள வாக்குகள் இன்னாருக்குத்தான் என்றில்லாமல் இம்மக்களின் வாக்கு செலுத்தும்முறை மாற்றம் கண்டு விட்டதும், எனவே, அவர்கள் மீதான கவனமும், அவர்களை அங்கேயே தக்க வைக்க வேண்டும் என்கிற தேவையும், ஆட்சியாளர்களுக்கு இல்லாமல் போனது.

குடிசை மக்கள் குடியிருக்கும் இடம் சுகாதாரமாக இல்லை; குடிநீர் சுத்தமாக இல்லை; கழிப்பறை இல்லை; வீடுகள் காற்றோட்டத்துடன் வாழ்வதற்கு ஏற்றதாக இல்லை என்று பிரதானமாக பேசப்பட்டது. எனவே, இவற்றை அங்கு ஏற்படுத்திக் கொடுப்பது முதன்மையாக பேசப்பட்டது. அப்புறப்படுத்துதல் என்பது இரண்டாவதாக இருந்தது. இன்று தனியார் பங்களிப்பு அதிகரித்தவுடன் புதிய வகையில் இந்த விவாதங்கள் திட்டமிட்ட வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்படியான சூழலில், அவர்கள் அங்கு வாழ்வது ஆபத்தானது என்பதாக இருந்த விவாதம், கூவம் கரையோரம் அவர்கள் வாழ்வது அந்த ஆற்றை சீரழிக்கிறது என்றும், அந்த ‘ஆக்கிரமிப்பே’ சுற்றுச்சூழலை சீர்கெடுக்கிறது; இது சமூகத்திற்கே ஆபத்து என்று மாற்றப்பட்டது. கொசஸ்தலை ஆறும், அடையாறு ஆறும், கூவம் ஆறும் மாசு அடைந்ததற்கு அந்த மக்கள் எந்த வகையிலும் காரணம் இல்லை. மோசமான நகர்ப்புற திட்டமிடல், எவ்வித சுத்திகரிப்பும் செய்யாமல் கழிவுகளை கலப்பது போன்ற ‘வளர்ச்சிப் போக்குகளே’ காரணமாகும். ஆனால், கரையோரம் வாழும் மக்கள் மீது மிக எளிதாக பழி சுமத்தி மக்களின் பொதுப்புத்தியில் நச்சுக் கருத்தை புகுத்தி, சமூக ஒப்புதலுடன் அவர்களை நகரை விட்டே விரட்டியடிக்கிறது அரசு. இப்படியான பகுதிகளில் இருந்த மக்களை அகற்றிவிட்டு, அவை எதுவும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கோடு பராமரிக்கப்படவில்லை என்பதுதான் நிதர்சனம். அவ்விடங்கள் தனியாரின் கைகளுக்கு மாற்றப்படுவதும், பொழுதுபோக்கு பூங்காக்கள், வணிகவளாகங்கள் (மால்கள்) என கட்டிடங்களின் தொகுப்பாகவே மாறுகிறது. சென்னையில் பங்கிங்காம் கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்று கூறி கரையோரம் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். ஆனால், அரசின் ஆக்கிரமிப்பில் அந்த கால்வாயில் தூண்கள் போட்டுதான் பறக்கும் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. கூவம் ஆற்றங்கரையில் வாழ்ந்து வந்த மக்கள் இதேபோல் அப்புறப்படுத்தப்பட்டனர். அதே கூவத்தின் இடையில் தூண்களைர் அமைத்துதான் மதுரவாயல் முதல் துறைமுகம் வரையிலான பறக்கும் சாலை திட்டம் அமையவுள்ளது. இதே கூவம் மற்றும் பக்கிங்காம் கரையோரம் இருந்த குடிசைகள் இடிக்கப்பட்ட நிலையில், பெரிய பெரிய தனியார் கட்டிடங்கள் இடிக்கப்படவில்லை. இப்படியான நிலையில் இவர்கள் முன்வைத்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்னவானது?

குடிசை பகுதிகள்தான் அனைத்து குற்றச் செயல்களுக்கும் ஆதாரமான இடம் என்று குறிப்பிடப்பட்டு, இது சுற்றுப்புற மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கிறது என்கிற கருத்தும் பரவலாக்கப்பட்டது. சாராயம் காய்ச்சுவதை பார்க்கும் பார்வையோடு பீர் தொழிற்சாலை மற்றும் மது உற்பத்தி செய்யும் உரிமையாளரை பார்ப்பதில்லை. கஞ்சா உற்பத்தி எந்த குடிசை பகுதிகளிலும் நடக்கவில்லை. கப்பல்கள் மூலமாகவும், விமானம் மூலமாகவுமே கடத்தல்கள் நடக்கிறது. இந்த கனவான்கள்தானே உண்மையில் குற்றவாளிகள். ஆனால் பழி என்னவோ குடிசை பகுதி மக்கள் மீதுதானே?

நகரத்தைவிட்டு விரட்டப்பட்டவர்கள்

இயற்கை பேரிடர்களை காரணம் காட்டியும், குடிசைபகுதி மக்கள் தங்களது குடியிருப்புகளிலிருந்து அப்புறப்படுத்தப்படுகின்றனர். குறிப்பாக, சுனாமி காலத்தில் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்புகிறோம் என்கிற பெயரில், கடற்புற மக்கள் நிரந்தரமாகவே வேறு இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டனர். சென்னை துரைப்பாக்கத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வரிய குடியிருப்பு பகுதியில் சுனாமி குடியிருப்பு என்ற பெயரில் குடியிருப்புகள் உள்ளது. சென்னையின் மைய பகுதியிலிருந்து நகரத்தின் விளிம்பிற்கு துரத்தப்பட்ட மக்களின் வாழ்விட பிரச்சனை மேலும் கூடுதலான சிரமத்திற்குள் அவர்களை தள்ளியுள்ளது. துரைப்பாக்கம் கண்ணகி நகர் பகுதியில் மட்டும் சுமார் 20ஆயிரம் வீடுகள் ஒரே இடத்தில் குவியலாக உள்ளது. இக்குடியிருப்பு சென்னையின் மையத்திலிருந்து பல பத்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.  அங்கிருந்து மேலும்  10 கிலோ மீட்டர் தெலைவில் செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் பகுதியில் சுமார் 27,000 குடியிருப்புக்கள் உள்ளன. இங்குள்ள மக்கள் அனைவரும் சென்னையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு விரட்டப்பட்டவர்களே. இவர்களுக்கான வேலை, கல்வி, சுகாதாரம் வாழ்வாதாரம் என எல்லாமும் கேள்விக்குறியாகவே உள்ளது. எந்த சுகாதார சீர்கேட்டிலிருந்து இம்மக்களை பாதுகாக்கப் போவதாக கூறி அரசு இவர்களை இவ்வளவு தெலைவில் விரட்டியடித்த்தோ அங்கு எவ்வித நலமும், சமூக பாதுகாப்பும் இல்லாமல் வசிக்கின்றனர்.

“முதலாளித்துவ வர்க்கம் நடைமுறையில் குடியிருப்பு பிரச்சினைகளை எப்படி தீர்க்கிறது என்பதற்கு இது ஒரு குறிப்பிடத்தக்க உதாரணமாகும். முதலாளித்துவ உற்பத்தி முறையில் நம்முடைய தொழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்புக்கள் நோயின் பிறப்பிடங்களாக விளங்குகிறது. அத்தகைய கேவலமான பொந்துகள் மற்றும் நிலவறைகளை முதலாளித்துவ உற்பத்தி முறையில் ஒழிக்கப்படுவதில்லை. அவை வேறெங்காவது மாற்றப்படுபடுகிறது.” என்கிற எங்கெல்சின் வார்த்தைகளின் உண்மையை, சென்னையை விட்டு விரட்டப்பட்டுள்ள மக்களின் தற்போதைய குடியிருப்புகள் நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

சென்னை வெள்ளதின்போதும் அதை தொடர்ந்தும் பல்வேறு குடியிருப்புக்கள் அகற்றப்பட்டன. இங்குதான் குடிசை பகுதிகளை கடந்து அடுத்த நிலையில் உள்ள பட்டா இல்லாத குடியிருப்புகளில் வாழும் மக்கள் குடியிருப்புக்களின் மீது அரசின் கைகள் நீள்கிறது. மயிலாப்பூர் கோவிந்தசாமி நகர் குடிசைமாற்று வாரியத்தால் குடியிருப்பு பகுதி என வரையறுக்கப்பட்டுள்ளது. ஒரு பொதுநல வழக்கை பயன்படுத்தி அரசு நிர்வாகம் குடியிருப்புகளை அகற்றுகிறது. ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரில் உள்ள குடியிருப்புகளுக்கு ஆட்சியர் பரிந்துரைத்த பிறகும், மேய்ச்சல் புறம்போக்கு நிலம் என்று கூறி குடியிருப்புகளை அகற்ற துடிக்கின்றனர். பயன்பாடற்ற நீர்நிலை பகுதியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் குடியிருந்து வருகின்றனர். அரசு நீர்நிலை என வரையறுத்து கரைகளை கட்டிய பிறகும், பொதுப்பயன்பாட்டில் உள்ள நிலங்களை நீர்நிலை என வகைப்படுத்தி நீதிமன்றங்களின் துணையோடு அகற்ற முயற்சிக்கின்றனர். அடுத்தகட்டமா அரசே ஒதுக்கிய நிலம், குடிசைமாற்று வாரியத்தால் குடியிருப்பு பகுதி என வரையறுக்கப்பட்ட நிலத்தில் வசிப்போரையும் அகற்ற முயற்சிக்கின்றனர். இதற்கு சாதகமாக நீதிமன்றங்களை பயன்படுத்திக் கொள்ளும் ஆட்சியாளர்கள் தங்களின் வர்க்க நிலையை எடுத்துக் காட்டுகின்றனர்.

“முதலளித்துவ உற்பத்தி முறை நீடிக்கின்ற வரை குடியிருப்பு பிரச்சினை, அல்லது தொழிலாளர்களை பாதிக்கின்ற, வேறு சமூகப் பிரச்சினைனையை தனியாக தீர்க்க முடியும் என்று நம்புவது முட்டாள்தனமே.” “பாட்டாளி வர்க்கம், அரசியல் அதிகாரத்தை வென்றெடுத்த உடனே பொதுநன்மையைப் பற்றிய அக்கறையினால் தூண்டப்பட்டுகின்ற நடவடிக்கைகள்  நிறைவேற்றப்படும். (உடைமை வர்க்கத்திடமிருந்து சொத்துக்கள் பறிக்கப்பட்டு உழைக்கும் மக்களுக்கு வழங்கும் நடவடிக்கைகள்) இன்றைய அரசு செய்கின்ற உடைமை பறித்தல்கள், தங்குமிட ஆணைகளைப் போல், அதுவும் சுலபமாக நிறைவேறும்.” என்கிற எங்கெல்சின் வார்த்தைகளே உழைக்கும் மக்களை அணிதிரட்டுவதற்கான போர்குரலாகும்.

——————————————————————————————————————–

CITY and Community என்கிற ஆங்கில இதழில் டிசம்பர் 2019இல் Pranath Diwakar எழுதியுள்ள A Recipe for Disaster: Framing Risk and Vulnerability in Slum Relocation Policies In Chennai, India. எனும் கட்டுரையில் உள்ள தரவுகளை அடிப்படையாக கொண்டு இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

உக்ரைன் போர்: நாம் யார் பக்கம்?

இ.பா. சிந்தன்

(பெல்ஜியம் நாட்டில் மென்பொருள் துறையில் பணியாற்றிவரும் இ.பா. சிந்தன், உக்ரைனில் நடப்பது என்ன? என்ற தலைப்பில் எழுதி, பாரதி புத்தகாலயம் சமீபத்தில் வெளியிட்ட நூலின் பகுதிகள்)

நூல் வாங்க: Buy

இரஷ்யாவை ஒட்டிய கிழக்கு உக்ரைனில் போரும் சண்டைகளும் உயிரிழப்புகளும் இதுவரை முடிந்தபாடில்லை. அமெரிக்காவின் ஆதரவு கிடைக்கப்பெற்ற அசோவ் பட்டாலியன் படைகள் ஒருபுறமும், இரஷ்யாவின் ஆதரவைப் பெற்ற டொனட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் அரசுகளின் இராணுவமும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டே இருந்தன. ஒரு போருக்குப் பின்னர் இன்னொரு போர் என்று அது தொடர்கதையாகிப் போனது.

2014 ஆம் ஆண்டு முதல் போரும் சண்டையும் மோதலும் மரண ஓலங்களும் இல்லாத நாளே இல்லை எனலாம். ஸ்லோவியான்ஸ்க் சண்டை, கிரமாட்டோர்ஸ்க் சண்டை, டொனட்ஸ்க் விமான நிலைய சண்டை, லுகான்ஸ்க் எல்லைக்கான சண்டை, செலினோபிலா ராக்கெட் தாக்குதல், சகார்ஸ்க் சண்டை, ஹொர்லிவ்கா மோதல், இலோவாய்ஸ்க் மோதல், நோவோவிட்லிவ்ஸ்கா அகதிகள் தாக்குதல், நோவோசோவ்ஸ்க் சண்டை, மரியோபோலில் பலகட்ட மோதல்கள், ஸ்வித்லோதர்ஸ்க் மோதல், அவ்டிவ்கா மோதல், ஒடஸ்ஸா மோதல் என தொடர்ந்தன.

இரஷ்யாவும் ஐரோப்பிய ஒன்றியமும் உக்ரைனும் இணைந்து ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டு சமமாக வளர்வதற்கு பதிலாக ஒருவருக்கொருவர் அடித்துக்கொள்வதால், இம்மூன்று பகுதியினருக்குமே நிம்மதியோ, அமைதியோ, இலாபமோ இல்லை என்பதை அவர்கள் உணரவில்லை. இம்மூன்று பகுதியினரும் அடித்துக்கொள்வதால் உக்ரைனில் இருந்து பல ஆயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள அமெரிக்க ஏகாதிபத்தியமே லாபமடைகிறது.

ஐரோப்பாவிற்கும் இரஷ்யாவிற்கும் இடையிலான மோதலை உயிர்ப்போடு வைத்திருப்பதன் மூலம்தான் இவ்வுலகின் ஒரே ஆதிக்க நாடாக நீடித்து இருக்கமுடியும் என்று அமெரிக்க பெருமுதலாளிகளும் ஆட்சியாளர்களும் திட்டமிட்டே செயல்படுகிறார்கள். இரஷ்யாவுக்கும் ஐரோப்பாவிற்கும் இடையில் ஒரு தொடர்புப் புள்ளியாகவும், எரிபொருள் மற்றும் எரிவாயு வர்த்தகத்திற்கு உதவும் வகையிலும் இருக்கிற உக்ரைனில் பெருங்குழப்பத்தை விளைவிப்பதன் மூலம் அதை செய்கிறார்கள்.

இரஷ்யாவில் இருந்து ஜெர்மனி வரையிலும் கடல்வழியாக வரும் முதலாம் நார்த் ஸ்ட்ரீம் குழாயின் வழியாக எரிவாயு கொண்டு வரப்பட்டு, ஐரோப்பிய வீடுகளில் விளக்கு எரிகிறது. அதைப்  பார்த்து அமெரிக்காவின் வயிறு எரிந்து, கெடுப்பதற்கு பல வழிகளில் கடந்த பல ஆண்டுகளாகவே முயன்று வருகிறது. இப்போது இரஷ்யாவுக்கும் ஜெர்மனிக்கும் இடையில் இரண்டாவது எரிவாயுக் குழாயினை கடலில் அமைக்கும் பணியும் முடிவடைந்துவிட்டதை அமெரிக்காவால் தாங்கவே முடியவில்லை. அதனாலேயே, இரஷ்யாவை ஐரோப்பாவின் எதிரியாக்கிடும் ஒரு பொதுக்கருத்தை உருவாக்க விரும்பித்தான், உக்ரைனின் கிழக்குப் பகுதியில் வெள்ளை இனவெறி அமைப்புகளை உருவாக்கி பயங்கரவாதத்தை அமெரிக்கா துவக்கியிருக்கிறது.

இரஷ்யாவுடன் கைகோர்ப்பதால் கிடைக்கிற பலனுக்காக அமெரிக்காவை பகைத்துக்கொள்ள முடியாத சூழலிலும் ஐரோப்பிய நாடுகள் இருக்கின்றன. அதற்கு இரஷ்யாவை கம்யூனிசத்துடன் இணைத்து கடந்த 75 ஆண்டுகளாக ஐரோப்பிய மக்களிடையே ஐரோப்பிய ஆளும்வர்க்கம் ஏற்படுத்திவரும் அச்சத்தினால், திடீரென ஒரேநாளில் அமெரிக்காவை எதிரியாக்கி இரஷ்யாவை நட்பு நாடாக அறிவித்துவிட முடியாத சூழலில் ஐரோப்பிய ஆட்சியாளர்கள் சிக்கிக்கொண்டனர். எனவே, அமெரிக்கா போடும் தாளத்திற்கு ஆடியே ஆகவேண்டிய கட்டாயத்திற்கு ஐரோப்பிய ஆட்சியாளர்கள் தள்ளப்பட்டிருக்கின்றனர்.

2014 முதல் 2022 வரையிலும் 15,000த்திற்கும் மேற்பட்ட உக்ரைனிய மக்களை அமெரிக்க ஆதரவுடன் உருவாக்கப்பட்ட வெள்ளையின பயங்கரவாதிகள் கொன்றிருக்கிறார்கள். ஆங்காங்கே கூட்டங்கூட்டமாக மக்களைக் கொன்று புதைத்திருக்கிறார்கள். 2021 ஆம் ஆண்டில் டொன்பாஸ் பகுதியில் எதேச்சையாகத் தோண்டுகையில் 292 பிணங்கள் ஒரே இடத்தில் கண்டெடுக்கப்பட்டன. அவை அமெரிக்க ஆதரவு வெள்ளையின பயங்கரவாதிகளால் கொன்று புதைக்கப்பட்ட உக்ரைனியர்களின் உடல்கள்தான் என்று ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றத்தில் இரஷ்யா வழக்கும் தொடுத்திருக்கிறது.

என்றைக்கிருந்தாலும் ஒருநாள் உக்ரைனை நோக்கி தன்னுடைய படையினை இரஷ்யா கொண்டுவந்தே ஆகவேண்டும் என்பதை, 2014 முதல் அமெரிக்காவின் தொடர் நடவடிக்கைகளை கவனித்துவந்த எவருமே எளிதாக யூகித்துவிடுவார்கள். அதுதான் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதியன்று நடந்தது. அன்றைக்கு யார் மகிழ்ந்தார்களோ இல்லையோ, அமெரிக்க அரசும் அமெரிக்க பெருமுதலாளிகளும் அவரவர் அலுவலகங்களில் துள்ளிக் குதித்துக் கொண்டாடியிருப்பார்கள்.

உக்ரைனுக்காக கண்ணீர் வடிப்பது தவறா?

ஆயிரம்தான் இருந்தாலும் இரஷ்யா நடத்தும் இந்த போரை ஆதரிக்க முடியாது என்ற வாதத்தை ஏற்கத்தான் வேண்டும். வீடுகளை இழந்து, சொந்த நிலத்தை இழந்து இலட்சக்கணக்கான அப்பாவி உக்ரைனிய மக்கள் புலம்பெயர்வதைப் பார்க்கவே கொடூரமாக இருக்கிறது. அவர்கள் மீண்டு வருவதற்கான வழிகள் ஏதும் தென்படாமல் இருப்பதும்  கவலையைத் அதிகரிக்கிறது. அதனாலேயே இந்தப் போர் குறித்த எந்த செய்தியைப் பார்த்தாலும், எந்த புகைப்படங்களைப் பார்த்தாலும் நமது கண்களில் இருந்து கண்ணீர் வெளியேறுவது இயல்பாகி விடுகிறது.

ஆனால், உக்ரைனிய போர் குறித்தான தகவல்களும் புகைப்படங்களும், கண்ணீர்க்கதைகளும் எப்படி நம்மிடம் இவ்வளவு வேகமாக வந்து சேர்கின்றன என்பதையும், உலகில் வேறெந்த நாட்டிலும் இப்படியான போர்கள் ஏதும் நடைபெறவில்லை என்பது போன்ற தோற்றத்தை யார் நம் மீது திணிக்கிறார்கள் என்கிற கேள்வியை நமக்கு நாமே எழுப்ப வேண்டும். அப்போதுதான் பல உண்மைகள் நமக்குப் புலப்படும்.

உலக ஊடகங்கள் அனைத்தும் மேற்கு நாடுகளின் வசமே இருப்பதால், மேற்குலகம் இவ்வுலகில் நடத்திக் கொண்டிருக்கும் போர்களையும் செய்து கொண்டிருக்கும் கொலைகளையும் மறைத்துவிட்டு, அவர்களுக்கு சாதகமான அரசியலுக்காக, இரஷ்யாவின் போரைப் பற்றி மட்டுமே நம்மைக் கவலைப்பட வைக்கிறார்கள். இது அவர்களின் தந்திரமான சூழ்ச்சி.

சிரியாவை ஏன் மறந்தோம்?

மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து சிரியா வழியாக ஐரோப்பாவிற்கு பூமிக்கடியில் குழாய் பதித்து, அதன் மூலம் எரிபொருள் கொண்டு செல்வதற்கு போடப்பட்ட திட்டத்தை எப்படியாவது முறியடிக்க வேண்டும் என்கிற ஒரே குறிக்கோளுடன், சிரியாவில் குழப்பம் விளைவித்து, போரைத் துவங்கும் பணியைச் செய்தது அமெரிக்கா. அதற்காக, ஈராக் சிறைகளில் இருந்த பல்லாயிரக்கணக்கான மரணதண்டனைக் கைதிகளை விடுவிக்க வைத்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைக்க வைத்தது வரை அமெரிக்காவின் பங்கு இருக்கிறது என்பதற்கு பல ஆதாரங்கள் இருக்கின்றன. சிரியாவின் அரசுக்கும் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்திற்கும் இடையிலான சண்டையில் நியாயப்படி சிரியாவின் அரசுக்குத்தானே யாராக இருந்தாலும் ஆதரவாக இருக்கவேண்டும்? ஆனால், இவ்விருவருடனும் இணையாமல், மூன்றாவதாக ஒரு அணியை உருவாக்கி, மறைமுகமாக ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்கள் வழங்கும் பணியினை அமெரிக்க அரசு செவ்வனே செய்தது.

 சிரியாவில் போர் துவங்கி பத்து ஆண்டுகளுக்கும் மேலாகிறது. எதற்காக அந்த போர் துவங்கியது? யாரின் நலனுக்காகத் துவங்கியது? எதை நோக்கிய போர் அது? என்கிற எந்த கேள்விக்கும் இன்று எவரிடமும் பதில் இல்லை. இஸ்ரேலும், துருக்கியும், குர்து படைகளும், ஐஎஸ்ஐஸ் அமைப்பும், அமெரிக்க ஆதரவு பயங்கரவாதக் குழுக்களும் சிரியாவின் பல பகுதிகளை ஆக்கிரமித்து, சிரியா என்கிற நாட்டை ஒன்றுமில்லாமல் செய்திருக்கிறார்கள்.

இதுமட்டுமில்லாமல், கடந்த பத்தாண்டுகளில் இப்போரால் இலட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்திருக்கின்றனர். பல்வேறு அமைப்புகளின் அதிகாரப்பூர்வ ஆய்வுகளின்படியே ஐந்து இலட்சத்திற்கும் மேலான சிரிய மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். உண்மையான கணக்கு இதைவிடவும் அதிகமாக இருக்கும்.

வீடு வாசல் அனைத்தையும் இழந்து, ஒன்றரை கோடி மக்கள் அகதிகளாகி இருக்கின்றனர். அவர்களில் சுமார் 60 இலட்சத்திற்கும் மேலானவர்கள் சிரியாவை விட்டே வெளியேறி, துருக்கி, லெபனான், ஜோர்டான், ஜெர்மனி என பல்வேறு நாடுகளுக்கு விரட்டியடிக்கப்பட்டிருக்கின்றனர். மீதமுள்ளோரோ, சொந்த நாட்டிலேயே அகதிகளாக, எவ்வித அடிப்படை வசதியும் இல்லாமல் முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். கொரோனாவினாலும், வறுமையினாலும், சுகாதாரமின்மையினாலும் இறந்தவர்கள் எண்ணிக்கையெல்லாம் எந்தக் காலத்திலும் வெளிவராத தகவலாகவே தான் இருக்கப்போகிறது.

ஒரு தேசத்தையே துண்டாக்கி விட்டு, கோடிக்கணக்கான மக்களை அகதிகளாக்கி, இலட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்த இந்தப் போர் இன்றைக்கும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால், அந்தப் போருக்குக் காரணமான எவர் மீதும், உலகின் எந்த அமைப்புகளும், எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அமெரிக்கா மேல் எந்த நாடும் பொருளாதாரத் தடை விதித்ததாகத் தெரியவில்லை. அமெரிக்க டாலரை இனி  பயன்படுத்தவே மாட்டோம் என்று ஐரோப்பிய யூனியன் சொல்லவில்லை. அமெரிக்காவுடன் யாரும் ஒட்டோ உறவோ வைக்கவே கூடாது என்று ஐநா சபையில் தீர்மானமெல்லாம் நிறைவேற்றப் படவில்லை. இவ்வளவு ஏன், நம்முடைய கண்ணீரைக் கோரும் செய்திகளைக் கூட ஊடகங்கள் நமக்கு வழங்கவில்லை.

உக்ரைனிய மக்கள் மட்டுமல்லாமல், சிரியாவின் மக்களுக்கும் நம்முடைய கண்ணீர் தேவைப்படும் தானே! நாம் ஏன் சிரிய மக்களை மறந்தோம்? திட்டமிட்டு நம்மை மறக்க வைத்தது யார்?

ஏமனை ஏன் மறந்தோம்?

உலகின் மிகவும் ஏழ்மையான நாடுகளில் ஒன்று ஏமன். வளைகுடாப் பகுதியில் மிகப்பெரிய பணக்கார நாடாக இருக்கும் சவுதி அரேபியாவுடன் 1,000 கிலோமீட்டர் நீண்ட எல்லையைக் கொண்டிருக்கும் நாடுதான் ஏமன்.

1962இல் நிகழ்ந்த மக்கள் கிளர்ச்சியின் காரணமாக, மன்னராட்சியிலிருந்து குடியரசாக மாறியது வடக்கு ஏமன். அன்றிலிருந்து “ஏமன் அரபு குடியரசு” என்று வடக்கு ஏமன் அழைக்கப்பட்டது. அரபுலக சுதந்திரத்தை முன்னிறுத்திய எகிப்து அதிபர் நாசர், வடக்கு ஏமனின் ஆட்சி மாற்றத்திற்கு உதவியாக இருந்தார். அப்போது, அமெரிக்கா, பிரிட்டன், சவுதி அரேபியா மற்றும் பழைய ஈரான் போன்ற நாடுகள் தங்களது படைகளை அனுப்பி, வடக்கு ஏமனில் மன்னராட்சியையே தொடர வைக்கவும், நாசரை பலவீனப்படுத்தவும் கடுமையாக முயன்றன. அதுவே ஒரு போராகவும் மாறியது.  வடக்கு ஏமனுக்கு விடுதலை பெற்றுத் தருவதற்காக, 10,000த்திற்கும் மேற்பட்ட எகிப்து படையினர் உயிரிழந்தனர். இறுதியாக, வடக்கு ஏமனில் “ஏமன் அரபு குடியரசு” உருவெடுத்தது. ஆனாலும் அது பலம் பொருந்தியதாக இல்லை. அந்தப் போரின் காரணமாக எகிப்தும் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகியது. புதிதாக உருவான ஏமன் அரபு குடியரசால், பெரியளவு கலாச்சார ரீதியாகவோ, பொருளாதார ரீதியாகவோ வளர்ச்சியடைய முடியவில்லை. மன்னராக இருந்தவர், சவுதி அரேபியாவிற்குத் தப்பியோடினார். வடக்கு ஏமனுக்கு சொந்தமான பல பகுதிகளை சவுதி அரேபியா ஆக்கிரமித்துக்கொண்டது.

தெற்கு ஏமனின் வரலாறு சற்றே வித்தியாசமானது. அரபு நாடுகளையும் ஆப்பிரிக்க நாடுகளையும் கடல்வழியாக இணைக்கிற குறுகிய ஆப்பிரிக்கப் பகுதிகளை ஆக்கிரமித்து, ஜிபூடி என்கிற புதிய நாட்டை உருவாக்கி வைத்திருந்தது பிரெஞ்சு அரசு. அதற்குப் போட்டியாக, அரபுப் பிரதேசத்தில் தெற்கு ஏமனை ஆக்கிரமித்து வைத்திருந்தது பிரிட்டன். தெற்கு ஏமனில் ஆடன் துறைமுகத்தையும் உருவாக்கியது பிரிட்டன்தான். அந்நகரை அப்போதைய ஹாங்காங் என்று கூட சொல்லலாம். பிரிட்டன் தன்னுடைய காலனி நாடுகளிலிருந்து வேலையாட்களை கொண்டுவந்து சேர்த்தது. எல்லாவிதமான அதிகாரங்களையும் வைத்திருந்த பிரிட்டன் அதிகாரிகள், தங்களுக்கு ஒருபடி கீழேவைத்தே புலம்பெயர் இந்தியர்களையும் சோமாலியர்களையும் நடத்தினர். அவர்களுக்கும் கீழ்நிலையில் வைத்து ஏமன் மக்களை நடத்தினர். பிரிட்டனின் மற்ற காலனி நாடுகளிலெல்லாம் பிரிட்டன் ஆட்சியை எதிர்த்துப் போராடிய தேசியவாதிகள் மற்றும் கம்யூனிஸ்டுகளை அங்கிருந்து நாடுகடத்தி, ஏமனின் ஆடன் நகருக்கு கொண்டு வந்துவிட்டது பிரிட்டன். அப்படியாகக் குவிக்கப்பட்டவர்கள் ஒன்றிணைந்து பிரிட்டனின் ஆதிக்கத்தை எதிர்த்து ஏமனிலும் போராடினர். அதன் விளைவாகவே 1967இல் பிரிட்டனிடமிருந்து தெற்கு ஏமன் மட்டும் விடுதலை பெற்று, “ஏமன் மக்கள் ஜனநாயகக் குடியரசு” என்கிற புதிய நாடு உருவானது. கம்யூனிஸ்டுகளும் தேசியவாதிகளும் பாத் சோசலிசவாதிகளும் இணைந்து ஏமன் சோசலிசக் கட்சியின் கீழ் தெற்கு ஏமனை ஆட்சி செய்தனர்.

அரபுலகத்தில் மிகவும் முற்போக்கான நாடாகத் திகழ்ந்தது தெற்கு ஏமன். சட்டங்கள் மூலமாக நிலச்சீர்திருத்தம் நடைபெற்றது; பெண்-ஆண் சமத்துவம் நிலைநாட்டப்பட்டது. ஆட்சியை நிர்வகித்துவந்த சோசலிசக் கட்சியில் பலதரப்பட்ட குழுக்கள் இடம்பெற்றிருந்தன. அவர்களில், கம்யூனிஸ்டுகள் முக்கியப் பங்காற்றினார். பல்வேறு விதமான குழுக்கள் இருந்தமையால், ஒவ்வொரு முறையும் புதிதாக எதையாவது செய்ய முயலும் போதும், பல்வேறு விவாதங்களும் தடைகளும் குழப்பங்களும் வந்துகொண்டே இருந்தன. அவற்றையெல்லாம் சமாளித்தபடியே தான் முற்போக்கான நாடாக தெற்கு ஏமன் முன்னேறிக் கொண்டிருந்தது. ஆண்டாண்டு காலமாக நிலவுடைமையாளர்களாலும், அதிகாரத்தை அனுபவித்து வந்தவர்களாலும், அரசின் மக்கள் நலச் சட்டங்களை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால், அரசில் அவ்வப்போது நிலவிய கருத்துவேறுபாடுகள், சண்டைகளாகவும் கொலைகளாகவும் மாறின. அரசின் முக்கியமான தலைவர்களைக் கூட இழக்க வேண்டியிருந்தது. பனிப்போர் காலத்தில், தெற்கு ஏமனை அமெரிக்காவும் சவுதி அரேபியாவும்  முக்கிய எதிரியாகவே பார்த்தன. மூன்று முறை ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி நடைபெற்றன. இறுதி முயற்சியில், பல முக்கியத் தலைவர்களின் உயிரிழந்ததால் அது சோசலிசக் கட்சியினை பலவீனமாக்கியது. உடனே லிபரல் குழுக்கள் ஆட்சியதிகாரத்தைப் பிடித்துக்கொண்டன.  அதன்பின்னர், வீரியம் குறைந்த, பலமற்ற சோசலிசக் கட்சியாக அது மாறியது.

அதேவேளையில், 1962 முதலே அதிபர் சாலேவின் தலைமையிலான பிற்போக்குவாத அரசின் கட்டுப்பாட்டிலேயே வடக்கு ஏமன் இருந்தது. வடக்கு ஏமன் என்கிற தனியான தேசம் உருவாகிவிடக் கூடாதென்று அமெரிக்காவும், சவுதி அரேபியாவும் பிரிட்டனும் 1962இல் கடுமையாக முயன்றன. ஆனால், தெற்கு ஏமனைக் கம்யூனிஸ்டுகள் ஆட்சி செய்கிறார்கள் என்றவுடன், வடக்கு ஏமனுடன் இணைந்து தெற்கு ஏமனை அழிக்க, எல்லாவித முயற்சிகளையும் அமெரிக்காவும் சவுதி அரேபியாவும் எடுத்தன. வடக்கு ஏமனின் அதிபர் சாலேவை நல்லவர், வல்லவர் என்றெல்லாம் உலகிற்கு சொல்லத் துவங்கிவிட்டார்கள்.

1990ஆம் ஆண்டு சோவியத்தின் சரிவும், தெற்கு ஏமன் கம்யூனிஸ்டு தலைவர்களின் இழப்பும் ஒன்று சேர்ந்து, எவ்வித சமரசத்திற்கும் உடன்பட தெற்கு ஏமன் அரசை தயாராக்கி விட்டது. அதன்படி, தெற்கு ஏமனும் வடக்கு ஏமனும் ஒன்றிணைந்து, 1990இல் “ஏமன்” என்கிற ஒரே நாடாக மாறியது. வடக்கு ஏமனின் அதிபராக இருந்த சாலே ஒருங்கிணைந்த ஏமனின் அதிபரானார். துவக்கத்தில் நடுநிலைவாதி போல தன்னைக் காட்டிக் கொண்டார் சாலே. சோசலிச பின்னணியைக் கொண்ட தெற்கு ஏமனைச் சேர்ந்தவர்களும் ஒருங்கிணைந்த அரசில் இணைக்கப்பட்டனர். ஏமன் உருவான சமயத்தில் வளைகுடாப் போர் துவங்கியது. ஏமனில் இணைந்திருந்த முற்போக்குவாதிகள், வளைகுடாப் போரை ஏமன் அரசு ஆதரிக்கக்கூடாது என்று வலியுறுத்தினர். சாலேவும் வளைகுடாப் போரை ஏமன் எதிர்க்கிறது என்று அறிவித்து விட்டார். அதன்மூலம் அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியாவின் எதிர்ப்பை ஏமன் சம்பாதிக்க வேண்டியிருந்தது. சவுதி அரேபியாவில் பணிபுரிந்துகொண்டிருந்த 10 இலட்சம் ஏமன் தொழிலாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். அவர்கள் ஏமனுக்குத் திரும்ப வந்ததால், பெரிய பொருளாதார நெருக்கடியை ஏமன் சந்திக்க நேரிட்டது. சவுதி அரேபியாவின் சொல்பேச்சை எப்போதும் கேட்டுக்கொண்டிருக்கவேண்டும் என்கிற செய்தியை அழுத்தமாக சொல்வதற்காகவே இத்தகைய நடவடிக்கையை சவுதி அரேபியா எடுத்தது. அப்போதே, சவுதி அரேபியாவையும் அமெரிக்காவையும் பகைத்துக்கொண்டு எதுவும் செய்யமுடியாது என்கிற நிலைக்கு சாலேவின் ஏமன் அரசு தள்ளப்பட்டது

பலம்வாய்ந்த அதிபராக சாலே உருவெடுத்த பின்னர், ஏற்கெனவே பலமிழந்து காணப்பட்ட தெற்கு ஏமனின் சோசலிசக் கட்சி, மேலும் வலுவிழந்தது. அரசின் எல்லாவித அதிகாரங்களிலிருந்தும் தெற்கு ஏமன் புறக்கணிக்கப்பட்டது. வடக்கு ஏமனோடு இணைந்தது மிகப்பெரிய தவறு என்று சொல்லிக் கொண்டு சில பிரிவினைவாதக் குழுக்கள் தெற்கு ஏமனில் உருவாகின. 1994இல் மீண்டும் தெற்கு ஏமன் தனிநாடாக வேண்டும் என்கிற கோரிக்கையோடு தெற்கு ஏமனில் கலவரங்களும் போராட்டங்களும் வெடிக்கத் துவங்கின. இதில் வேடிக்கை என்னவென்றால், அப்போராட்டக் குழுக்களுக்கு மறைமுக ஆதரவும் ஆயுதங்களும் வழங்கியது வேறு யாருமல்ல, சவுதி அரேபியாதான். ஏமனில் ஒரு நிலையான அரசு அமைவதை எப்போதும் விரும்பாத சவுதி அரேபியா, தெற்கு ஏமனின் போராட்டக் குழுக்களுக்கு ஆதரவளித்தது. அதற்கு முன்பு வரலாற்றில் எப்போதும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளாத தெற்கு மற்றும் வடக்கு ஏமன் மக்களிடையே பிரிவினை எண்ணங்கள் பரப்பப்பட்டன. உள்நாட்டுக் கலவரம், சவுதி அரேபியாவில் இருந்து வெளியேற்றப்பட்ட பத்து இலட்சம் பேரின் வருகை, அதனால் ஏற்பட்ட வேலைவாய்ப்பின்மை என பலவும் ஏமனை வாட்டி வதைத்தது.

உழைப்பதற்கு வேலையும், மூன்று வேளை உணவும் கிடைக்காத மக்களிடத்திலே பிரிவினைவாதத்தை எளிதில் உருவாக்கிவிடமுடியும் என்று சவுதி அரேபியா தீர்க்கமாக நம்பியது. நாளடைவில் அதுவே பெரிய உள்நாட்டுப் போராக உருவெடுத்தது. 1994  மே மாதம், “ஏமன் ஜனநாயகக் குடியரசு” என்கிற நாடு மீண்டும் உருவாகிவிட்டதாக தெற்கு ஏமனின் போராட்டக் குழுவினர் அறிவித்தும் விட்டனர். வடக்கு ஏமனைப் பூர்வீகமாகக் கொண்ட அதிபர் சாலே, மதரீதியாக வடக்கு மக்களை தெற்கு மக்களுக்கு எதிராகத் திரட்டினார். இசுலாமின் சைதி பிரிவைச் சேர்ந்த வடக்கு ஏமன் மக்களை, சுன்னி பிரிவைச் சேர்ந்த தெற்கு ஏமன் மக்களுக்கு எதிராக நிறுத்தினார் அதிபர் சாலே. மக்களிடையே மதவுணர்வு தூண்டப்பட்டு, காலங்காலமாக ஒற்றுமையாக வாழ்ந்து வந்த மக்கள், எதிரெதிர் திசையில் நிறுத்தப்பட்டனர். இரண்டு மாதங்களாக நடந்த போரின் இறுதியில், தெற்கு ஏமனின் போராட்டக் குழுவினர் முற்றிலுமாக அழிக்கப்பட்டனர். அதிலும் குறிப்பாக, தெற்கு ஏமனில் மிச்சமிருந்த சோசலிசக் கட்சியினரும், இன்னபிற ஜனநாயக விரும்பிகளும் குறிவைத்துக் கொல்லப்பட்டனர். வெளிப்படையான கணக்குப்படியே 10,000த்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மறைமுகமாக பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று எளிதாக யூகித்துவிட முடியும். ஏமனின் சர்வாதிகாரியாக அலி அப்துல்லா சாலே உருவெடுத்தார்.

ஏமனின் பொருளாதாரம் பெரிதும் விவசாயத்தை சார்ந்தே இருந்து வந்திருக்கிறது. அரசின் அலட்சியப் போக்கினால், விவசாயம் பொய்க்கத் துவங்கியிருக்கிறது. எண்ணெய் வளங்களினாலும், மீன்பிடித்தொழிலாலும், சர்வதேச உதவிகளாலும், வெளிநாடுவாழ் ஏமன் மக்கள் அனுப்பும் பணத்தாலும் மட்டுமே ஏமனின் வருமானம் அடங்கியிருக்கிறது. அதிபர் சாலேவும் அவரை சுற்றியுள்ள அதிகாரமிக்க சில நபர்களுமே வசதியான வாழ்க்கை வாழ்வதும், பெரும்பான்மையான மக்கள் ஒருவேளை சோற்றுக்கே வழியற்ற நிலையில் தவிப்பதுமே 20 ஆண்டுகளாக இயல்பாகிப் போயிற்று. ஏமனின் பெரும்பகுதி மக்கள் 30 வயதுக்கு உட்பட்டோர்தான் எனினும், வேலையில்லாத் திண்டாட்டம் உச்சத்தில் இருக்கிறது. 2009 இல் 40% ஏமன் மக்களுக்கு வேலை இல்லாத நிலைதான். இவற்றுக்கெல்லாம் தீர்வு கேட்டு, 2004 இல் ஹூத்திகள் என்கிற போராட்டக்குழுவொன்று வடக்கு ஏமனில் உருவானது. வடக்கு ஏமனைச் சேர்ந்த ஹுசைன் அல் ஹூத்தி என்பவரால் உருவாக்கப்பட்டது தான் ஹூத்திகள் இயக்கம். வடக்கு ஏமன் மிகவும் பின்தங்கிய பகுதியாகவும், குடிக்கத் தண்ணீர் கூட இல்லாத நிலையும், உள்கட்டமைப்பு வசதியேதும் இல்லாத சூழலும் தொடர்ந்து கொண்டிருந்ததை ஏன் என்று கேள்வி எழுப்பினர். 20 ஆண்டுகளுக்கும் மேலாக எல்லாவற்றையும் தட்டிக்கழித்த அதிபர் சாலே, ஹூத்திகளை அலட்சியப்படுத்தினார். அதனைத்தொடர்ந்து ஆயுதப் போராட்டத்தை துவக்கினர் ஹூத்திகள் இயக்கத்தினர்.

எகிப்து, துனிசியா போன்ற நாடுகளில் அரபு வசந்தம் என்னும் பெயரில் மக்கள் கிளர்ச்சி நடந்ததை நாம் நன்கு அறிவோம். ஆனால், அதே காலகட்டத்தில் ஏமனில் ஜனநாயகத்தை விரும்பிய மக்கள், சாலேயின் சர்வாதிகார ஆட்சியை எதிர்த்துப் போராடினர். அமெரிக்காவின் நட்பு வட்டத்திற்குள் இருந்த காரணத்தாலேயே, ஏமன் மக்களின் போராட்டங்கள் உலக மக்களுக்கு சொல்லப்படவில்லை.

அரபுலகத்தின் எந்த நாட்டிலும் தனக்கு எதிரான அரசு அமைவதை அமெரிக்கா விரும்புவதில்லை. குறிப்பாக சவுதி அரேபியாவின் தெற்கே இருக்கும் ஏமனை எக்காரணம் கொண்டும் இழக்கத் தயாராக இல்லை. ஏமனிலோ, சவுதி அரேபியாவிலோ நிலையற்ற தன்மை உருவாகுமானால், அது தன்னுடைய பொருளாதாரத்தை பெரியளவில் பாதிக்கும் என்பதை அமெரிக்கா உணர்ந்தே இருக்கிறது. ஒரு கட்டத்திற்கு மேல் சாலேவுக்கான ஆதரவைத் தொடர முடியாமல், அமெரிக்காவும் சவுதி அரேபியாவும் இன்னபிற மத்தியகிழக்கு நாடுகளும் இணைந்து துணை அதிபராக இருந்த ஹாதியை அதிபராக்கின. ஆனால் அது வெறுமனே ஒரு கண்துடைப்பு தான் என்பதைப் புரிந்துகொண்ட ஹூத்தி அமைப்பினரும் மக்களும் அமெரிக்க ஆதரவு ஹாதி அரசினை தொடர்ந்து எதிர்த்தனர். அதற்குள் அல்கொய்தா அமைப்பின் வளைகுடாப் பிரிவு ஏமனில் துவக்கப்பட்டது. அதற்காக சவுதி அரேபியாவின் ஏராளமான சிறைக்கைதிகள் விடுவிக்கப்பட்டு ஏமனுக்கு அனுப்பப்பட்டுவிட்டதாக ஹூத்திகள் குற்றம் சாட்டுகின்றனர்.

அமைதியாக இருந்த ஏமன் நாட்டில் இப்படியாக பலதரப்புக் குழுக்கள் அடித்துக் கொள்ளும் ஒரு உள்நாட்டுப் போரினை தன்னுடைய சுயலாபத்திற்காக சவுதி அரேபியாவும் அமெரிக்காவும் இணைந்து செய்திருக்கின்றன.

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக நடக்கிற இப்போரில், இதுவரை ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். 75% மக்கள் மிகக்கொடூரமான வறுமையில் இருப்பதாக சர்வதேச அமைப்புகளின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை உணவு கூட கிடைக்காமல் இலட்சக்கணக்கான குழந்தைகள் பசியோடும் பட்டினியோடும் சாவோடும் போராடிக் கொண்டிருக்கின்றனர். பள்ளிகளையெல்லாம் பார்த்தே பத்தாண்டுகள் ஆகிப்போன குழந்தைகள் அவர்கள். இது மட்டுமில்லாமல் ஏறத்தாழ ஏமனின் பாதி மக்கள் காலரா தொற்றின் அச்சத்தில் வாழ்கின்றனர். இவை எல்லாவற்றுக்கும் மேலாக கொரோனா தாக்கத்தால் எவ்வளவு பேர் இறந்தார்கள் என்கிற புள்ளிவிவரம் கூட திரட்டமுடியாத நிலை உருவாகி இருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் ஏமனில் நடக்கிற போரை முடிவுக்குக் கொண்டு வரவில்லையென்றால், மக்களே வாழாத பகுதியாக ஏமன் மாறிவிடும் அபாயம் இருக்கிறதாக சுகாதார அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துக்கொண்டே இருக்கின்றன.

இப்போது இந்த வரியைப் படித்துக்கொண்டிருக்கும்போதே சில நூறு குண்டுகள் ஏமனில் வீசப்பட்டுக் கொண்டிருக்கும். பள்ளிகளும், மருத்துவமனைகளும் இடிந்து நொறுங்கிக் கொண்டிருக்கும். அதற்கு பிரிட்டனும், அமெரிக்காவும், பிரான்சும், சவுதி அரேபியாவும் தங்களுடைய மக்களிடம் வசூல்செய்த வரிப்பணத்தைத்தான் செலவு செய்து கொண்டிருக்கின்றன. தங்களுக்கு எவ்வகையிலும் தொடர்பில்லாத ஒரு போரினால் கடந்த பத்தாண்டுகளாக தவித்துக்கொண்டிருக்கும் ஏமன் மக்களுக்காக நம்முடைய கண்ணீரில் ஒரு துளியைக் கூட சிந்தச் சொல்லி எந்த ஊடகமும் நம்மிடம் ஏன் கோரவே இல்லை? ஏமன் மக்களின் துயரமெல்லாம் துயரக்கணக்கில் வராதா? இதுவரையிலும் ஏமன் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தையைக் கூட யாருமே துவக்காதது ஏன்? இத்தனை இலட்சம் ஏமன் மக்களைக் கொன்ற காரணத்திற்காக, சவுதி அரேபியா மீதும், அமெரிக்கா மீதும், இதுவரை ஐநா பாதுகாப்புக் கவுன்சிலோ, ஐரோப்பிய யூனியனிலோ, எந்தத் தீர்மானமும் நிறைவேற்றாதது ஏன்? அமெரிக்காவின் டாலரைப் புறக்கணிக்கும் கோரிக்கையை எந்த நாடும் எழுப்பாதது ஏன்?

யார் பக்கம் நாம் நிற்க வேண்டும்?

உக்ரைனின் கடந்தகால வரலாற்றையும் தற்போதைய நிலவரத்தையும் விரிவாக இதுவரையிலும் பார்த்திருந்தாலும், இன்றைய போர்ச்சூழலில் நாம் யாரின் பக்கம் நிற்க வேண்டும் என்பதில் பெருங்குழப்பம் இருக்கத்தானே செய்கிறது. இன்றைய சூழலைப் பொறுத்தவரையில் பல்வேறு அரசுகளும் குழுக்களும் உக்ரைனியப் பிரச்சனையில் ஈடுபட்டிருப்பதால், அவர்களில் யாருக்கு நாம் ஆதரவளிக்க வேண்டும் என்று முடிவெப்பது கடினம் எனினும் முக்கியமே.

இரஷ்ய அரசின் பக்கமா?

இன்றைய இரஷ்யாவை சோவியத் யூனியன் காலத்து இரஷ்யாவாகக் கருதிக் கொண்டு, இரஷ்யாவின் இப்போரை நாம் ஆதரித்துவிடமுடியாது. இன்றைய இரஷ்யா என்பது இலாபவெறி பிடித்த ஒரு முழுமையான முதலாளித்துவ நாடுதான். இன்னும் சொல்லப்போனால், 1991க்குப் பிறகான இரஷ்யா என்பதே அமெரிக்காவின் சந்தைப் பொருளாதார ஆட்சிமுறையை கொஞ்சம் கொஞ்சமாகப் நகல் எடுத்துக்கொண்டிருக்கும் ஒரு நாடுதான். சுமார் நூறாண்டுகளுக்கு முன்னர் ஜார் மன்னராட்சியைக் கவிழ்த்து, சோவியத் புரட்சியின் மூலம் உருவான, மக்களாட்சிக்குப் பின்னர், மக்களின் சொத்துக்களாக உருவாக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான அரசு நிறுவனங்கள், சோவியத் வீழ்ச்சிக்குப் பின்னர் ஒன்றன்பின் ஒன்றாக சில தனிநபர்களின் கைகளில் கொண்டு சேர்க்கப்பட்டன.

1992 முதல் 1994 வரையிலான இரண்டாண்டுகளில் மட்டுமே அரசுக்கு சொந்தமாக இருந்த 15,000 மிகப்பெரிய தொழிற்சாலைகளும் நிறுவனங்களும் ஒரு சில தனியார் முதலாளிகளுக்கு தாரை வார்க்கப்பட்டு விட்டன. அத்துடன் 85,000 கடைகள், உணவகங்கள் உள்ளிட்ட தொழிற்சாலைகளற்ற அரசு வணிக சொத்துக்களும், அதேபோல தனியாரின் வசம் கொடுக்கப்பட்டுவிட்டன. இதனால் தனியார் முதலாளிகள் வைப்பதே சட்டமாகிப் போனது. தொழிலாளர்களின் ஊதியம் குறையத் துவங்கியது. அதனை எதிர்த்துக் கேட்பதற்கான தளத்தையும் புதிய பொருளாதாரக் கொள்கையைப் பின்பற்றிய முதலாளித்துவ இரஷ்ய அரசுகள் முற்றிலுமாக அழித்து விட்டன. முயன்று கேள்விகேட்ட மக்களெல்லாம் ஒடுக்கப்பட்டனர். கேள்வி கேட்க முடியாத சூழலில் இருந்த மக்களெல்லாம் தற்கொலை செய்து மாண்டு போயினர்.

கோர்ப்பச்சேவ், எல்சின் எனத்துவங்கி இன்றைக்கு புடின் ஆட்சிக்காலம் வரையிலும் இப்படித்தான் மக்களின் போராட்டக்குரல் தொடர்ச்சியாக ஒடுக்கப்பட்டுக்கொண்டே வருகிறது. இரஷ்ய முதலாளிகளின் தேவை தான் இரஷ்ய அரசின் கொள்கையாக பிரதிபலிக்கிறது. உக்ரைனுக்குப் பின்னால் அமெரிக்க அரசின் தந்திரங்கள் இருக்கிறபோதிலும், உக்ரைனில் தனக்கு சாதகமான ஒரு அரசுதான் அமைய வேண்டும் என்பதிலும், அதன்மூலம் தன்னுடைய வியாபார நலன்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதிலும் இரஷ்ய பெருமுதலாளிகள் கவனமாகவே இருக்கிறார்கள்.

இன்று டொன்பாஸ் பகுதிகளெல்லாம் உக்ரைனுக்கு சொந்தமா அல்லது இரஷ்யாவுக்கு சொந்தமா அல்லது தனிநாடுகளாக மாறவேண்டுமா என்கிற பஞ்சாயத்தில் தான் போரே நடந்துகொண்டிருக்கிறது. “அந்த டொன்பாஸ் பகுதியை உக்ரைனுடன் இணைத்து இரஷ்யாவுக்கு லெனினின் துரோகம் இழைத்துவிட்டார்” என்று சொல்லிவிட்டுத்தான் உக்ரைனுக்கு எதிரான போரையே புடின் அறிவித்தார் என்பதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

எனவே, கிழக்கு உக்ரைனில் இயங்கும் அதிதீவிர வெள்ளை இனவெறி நாஜி இயக்கங்களை அழிப்பது தான் நோக்கம் என்று கூறிவிட்டு இப்போரை புடின் துவக்கியிருந்தாலும், உக்ரைனின் சில பகுதிகளை ஆக்கிரமித்து இரஷ்யாவுடன் வலுக்கட்டாயமாக இணைத்துக்கொள்வது தான் புடினின் உண்மையான நோக்கமாக உள்ளது என்று சந்தேகப்படாமலும் இருக்கமுடியவில்லை.

அதிலும், ஆயிரம் காரணங்கள் சொன்னாலுமே கூட, போர் என்றாலே அப்பாவி உழைக்கும் மக்கள் தான் அதிகமாக உயிரையும் உடமைகளையும் வாழ்விடங்களையும் இழப்பார்கள். போருக்குத் தகுந்தவாறு பயங்கரவாதிகளும் உக்ரைனிய அரசு அதிகாரிகளும் மறைவிடத்தில் ஒளிந்துகொள்ள முடியும். ஆனால் அப்பாவி மக்களால் என்ன செய்துவிடமுடியும். கிழக்கு உக்ரைனில் வாழ்ந்த இலட்சக்கணக்கான மக்கள் ஏற்கெனவே வீடிழந்து வாழ்க்கை இழந்து எங்கெங்கோ அகதிகளாக அலையத் துவங்கிவிட்டார்கள். காலங்காலமாக அரசியல் முரண்பாடுகளும் எல்லையோர சண்டைகளையும் கொண்டிருக்கிற போலந்து நாட்டிற்குத் தான் அதிகமான உக்ரைனிய மக்கள் இப்போது புலம்பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள். அங்கே அம்மக்களுக்கு நிச்சயமாக சமமான மரியாதை கிடைப்பதற்கான வாய்ப்பே இல்லை.

அதேபோல இந்தப் போருக்கு இரஷ்யா செலவிடும் பணம் எங்கிருந்து வருகிறது? இரஷ்யாவில் உழைக்கும் மக்கள் செலுத்திக்கொண்டிருக்கும் வரியைத் தானே புடின் தலைமையிலான இரஷ்ய அரசு போருக்கு செலவிடுகிறது? ஆக, இப்போரினால் இரஷ்யாவில் வாழும் மக்களின் உழைப்பும் தானே சுரண்டப்படுகிறது? அண்டை நாடான உக்ரைனில் வாழும் உழைக்கும் வர்க்கத்து மக்களைக் கொல்வதற்கு இரஷ்ய உழைக்கும் மக்களின் வியர்வைப்பணம் பயன்படுத்தப்படுவது எத்தனை பெரிய கொடூரம். இறுதியில்  இப்போரினால்  இலாபமடையப் போவது ஆளும்வர்க்கத்தினர் என்றாலும், இழப்பு மட்டும் இருநாடுகளில் வாழும் உழைக்கும் வர்க்கத்தின் தலையில் சுமத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

அதனால் எக்காரணம் கொண்டும் இரஷ்யாவின் பக்கம் நின்று இப்போரை நம்மால் ஆதரிக்கவே முடியாது.

உக்ரைனிய அரசின் பக்கமா?

இன்றைய உக்ரைனிய அரசென்பது முழுக்க முழுக்க அமெரிக்காவின் அடிமை அரசாகத்தான் இருக்கிறது. தற்போதைய உக்ரைனிய அதிபரான செலன்ஸ்கி செய்யும் வேடிக்கையான சேட்டைகளையெல்லாம் நாம் அன்றாடம் செய்திகளில் பார்க்க முடிகிறது. அவர் எப்படி உக்ரைனின் அதிபரானார் என்பதை அறிந்துகொண்டாலே, அவரை எளிதாக நம்மால் புரிந்துகொள்ள முடியும். இரஷ்ய மொழி பேசும் யூதக் குடும்பத்தில் பிறந்தவர் செலன்ஸ்கி. சோவியத் செஞ்சேனையில் கர்னலாக இருந்து, அதிகார வர்க்கத்தை எதிர்த்துக் காலமெல்லாம் போரிட்டவர் செலன்ஸ்கியின் தாத்தா. செலன்ஸ்கியின் கொள்ளுத்தாத்தாவும் அவருடைய தாத்தாவின் சகோதர்கள் மூவரும் யூதர்கள் என்பதாலேயே ஹிட்லரின் படையினரால் கொடூரமாகக் கொல்லப்பட்டவர்கள். ஆனால், தான் செல்வந்தராக இருக்கிற காரணத்தினாலேயே இரஷ்ய மொழி பேசும் மக்களுக்காகவோ அல்லது ஒட்டுமொத்த உக்ரைனிய மக்களுக்காகவோ குரல்கொடுக்காமல், தன்னுடைய வர்க்கம் சார்ந்து முதலாளித்துவ நலனிலேயே அக்கறை கொண்டவராக இருக்கிறார் செலன்ஸ்கி.

குவார்தல் 95 என்கிற பெயரில் ஒரு தொலைக்காட்சி சானலை நடத்தி வந்தார். அதில் அவரே நடித்தும் சில நாடகங்கள் ஒளிப்பரப்பானது. அதன்மூலம் தன்னுடைய முகத்தையும் ஒட்டுமொத்த உக்ரைன் மக்களின் மனதில் தொடர்ந்து பதியவைத்துக்கொண்டே இருந்தார்.

அப்படித்தான் “மக்கள் ஊழியன்” என்கிற பொருளில் சர்வன்ட் ஆஃப் தி பீப்பிள் என்கிற ஒரு தொலைக்காட்சித் தொடரில் நடித்தார். அது அவருடைய தொலைக்காட்சி சானலிலேயே ஒளிபரப்பானது. அதில் அவர் ஒரு பள்ளிக்கூட ஆசிரியராக நடித்திருந்தார். கதையின்படி, ஒருமுறை பள்ளியில் இருக்கும் மாணவர்களுக்கு உக்ரைனை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று மாணவர்களிடம் வகுப்பில் பேசிக்கொண்டிருப்பார். அதனை அவருக்குத் தெரியாமல் ஒரு மாணவர் வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவேற்றிவிடுவார். உடனே அது நாடு முழுவதிலும் பரவலாகிவிடும். செலன்ஸ்கி கதாபாத்திரம் நாட்டு மக்களிடையே பெரிய எழுச்சியை உண்டாக்கிவிடும். அதனைத் தொடர்ந்து அவர் உக்ரைன் அதிபர் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைக்கிறார்கள். வேறு வழியின்றி ஓப்புக்கொண்டு உக்ரைனிய அதிபராகிறார் அந்த ஆசிரியர். இதுதான் செலன்ஸ்கி ஆசிரியராக நடித்த தொலைக்காட்சித் தொடரின் கதை.

இந்தத் தொடர் உக்ரைனிய மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அதையே முதலீடாக வைத்துக்கொண்டு அரசியலில் குதிக்க வேண்டும் என்கிற ஆவல் அவருக்கு ஏற்பட்டது. அதனால் அவர் நடித்த “மக்கள் ஊழியன்” என்கிற தொடரின் பெயரிலேயே ஒரு அரசியல் கட்சியினைப் பதிவு செய்தார். அவருடைய தொலைக்காட்சி சானலில் பணிபுரியும் அனைவரையும் அந்த அரசியல் கட்சியின் கட்டாய உறுப்பினர்களாக்கி, கட்சிக்காக வேலை செய்ய வைத்தார். 24 மணி நேரமும் அவரையும் அவரது கட்சியையும் பிரபலமாக்கவே அவருடைய தொலைக்காட்சி சானல் பயன்படுத்தப்பட்டது. அரசியலே தெரியாத ஒரு ஆள் உக்ரைனிற்கு அதிபராவது அமெரிக்காவிற்கும் நல்லது என்பதால் அவர்களும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர்.

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் போட்டியிட்டு 75% வாக்குகளைப் பெற்று உக்ரைனின் புதிய அதிபரானார் செலன்ஸ்கி. இதில் என்ன வேடிக்கையென்றால், அந்தத் தேர்தலுக்காக தேர்தல் அறிக்கை கூட வெளியிடாத வேட்பாளராக அவர் இருந்தார். அதுமட்டுமல்லாமல், வரலாறோ, அரசியலோ, சமூகப்புரிதலோ, உக்ரைனின் பிரச்சனைகளோ தெரியாத காரணத்தால், அவர் எங்கேயும் எப்போதும் பத்திரிக்கையாளர் சந்திப்பைக்கூட நடத்தியதே இல்லை. எத்தனையோ முறை பத்திரிக்கையாளர்கள் கேட்டுப் பார்த்தும், அவர்களிடம் இருந்து நழுவித் தப்பித்து ஓடிக்கொண்டே இருக்கிறார் செலன்ஸ்கி. இந்தியாவிலும் கூட செலன்ஸ்கியைப் போல பத்திரிக்கையாளர்களை சந்திக்காமல் கடந்த 8 ஆண்டுகளாக பிரதமர் மோடி நழுவிக்கொண்டிருக்கிறார் என்பதை இணைத்துப் பார்த்தும் நாம் புரிந்துகொள்ளலாம்.

இன்றைக்கும் இரஷ்ய மொழியை அதிகாரப்பூர்வ மொழியாக அங்கீகரிக்காதது; அம்மொழி பேசும் மக்களைப் புறக்கணிப்பதோடு, கிழக்கு உக்ரைனில் அவர்களைக் கொன்றுகுவிக்கும் அசோவ் பட்டாலியன் உள்ளிட்ட அதிதீவிர வலதுசாரி பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிப்பது என தொடர்ந்து பிரிவினைவாத ஆட்சியை செலன்ஸ்கி நடத்தி வருகிறார்.

இன்றைய அசோவ் பயங்கரவாத அமைப்பின் தலைவர்களுக்கு உக்ரைனிய இராணுவத்திலும் காவல்துறையிலும் பெரிய பதவிகளையெல்லாம் அவர் வழங்கியிருக்கிறார். ஆனால் அந்த இயக்கத்தின் முன்னோர்கள்தான் ஹிட்லருடன் கைகோர்த்துக்கொண்டு, செலன்ஸ்கியின் கொள்ளுத்தாத்தாக்கள் உட்பட இலட்சக்கணக்கான  யூதர்களைக் கொன்று குவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 2014ஆம் ஆண்டு தேர்தலைப் போலவே 2019ஆம் ஆண்டு தேர்தலிலும் கம்யூனிஸ்ட் கட்சியைப் போட்டியிடவே அனுமதிக்காமல், அவர்களுக்குள்ளாகவே போட்டியிட்டு, அவர்களாகவே வென்றுகொண்ட ஒரு ‘ஜனநாயக’ அமைப்புதான்  இன்றைய உக்ரைனிய அரசு.

அதுமட்டுமில்லாமல், ஐஎம்எஃப் மற்றும் உலக வங்கிகளிடம் தொடர்ச்சியாக கடன் வாங்கிக் குவிப்பதையும் வழக்கமாக்கி வைத்திருக்கிறது இன்றைய உக்ரைனிய அரசு. அப்படியாக வாங்கப்படும் கடன்களையும் ஆயுதங்கள் வாங்கவே பயன்படுத்தி வீணாக்கி வருகிறது. கடனைக் கொடுத்த ஐஎம்எஃப் இன் கட்டளைகளில் மிக முக்கியமானது என்ன தெரியுமா? உக்ரைனிய அரசில் புதிதாக யாருக்கும் வேலை கொடுக்கக் கூடாது என்பதும், தனியார் முதலாளிகளை அனைத்துத் துறைகளிலும் அனுமதிக்க வேண்டும் என்பதும் தான். அதாவது கடனைக் கொடுத்துவிட்டு, மக்களின் உழைப்பை சுரண்டுவதுதான் ஐஎம்எஃப்- இன் ஒரே குறிக்கோள். பல்லாயிரக்கணக்கான கோடிகள் கடனில் உக்ரைன் மூழ்கியிருக்கிறது. அது தற்செயலாக நடந்தது அல்ல.

உக்ரைனிய அரசு இன்றைக்கு நினைத்தாலும் அமெரிக்காவையும் உலக வங்கிகளையும் எதிர்த்துப் பேசமுடியாத நிலையில் இருக்கிறது. போர் துவங்கிய அடுத்த சில நாட்களிலேயே 2500 கோடி ரூபாயினை ஐரோப்பிய ஒன்றியமும், 3000 கோடி ரூபாயினை உலக வங்கியும், 75,000 கோடி ரூபாயினை அமெரிக்காவும், 10,000 கோடி ரூபாயினை ஐம்எஃப் அமைப்பும் உக்ரைனுக்குக் கடனாக வழங்குவதாக அறிவித்துவிட்டன. போர் காலகட்டத்திலும் அமெரிக்க நலனுக்கு எதிராக  உக்ரைன் சென்றுவிடக் கூடாது என்பதை உறுதிசெய்வதற்கான ஏற்பாடுதான் இதெல்லாம்.

இப்படியான ஒரு சூழலில், நம்மால் உக்ரைனிய அரசுக்கு எவ்வித ஆதரவையும் தந்துவிடவே முடியாது. போரை நிறுத்துவதற்கான விருப்பமோ, சொந்த நாட்டு மக்களின் நலனில் கொஞ்சமும் அக்கறையோ, அவர்களிடம் இல்லை. எனவே அவர்களை ஆதரிப்பது கடந்த 8 ஆண்டுகளாக கொல்லப்பட்ட 15,000 த்திற்கும் மேற்பட்ட கிழக்கு உக்ரைனிய மக்களின் உயிர்களுக்கு நாம் மதிப்பளிக்காததற்கு இணையாகிவிடும். உக்ரைனிய அரசுக்கு நாம் கொடுக்கும் ஒவ்வொரு ஆதரவும், மேலும் பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் கொல்வதற்கு அவர்களுக்கு நாமே அனுமதி கொடுப்பதுபோலாகிவிடும்.

இப்போரைக் காரணம் காட்டி, போருக்காக செலவிடுவதற்காகவே, உலக நாடுகளிடம் கடன் வாங்கினால், அந்தச் சுமையையும் ஏற்கவேண்டிய நிலைக்கு உக்ரைனின் உழைக்கும் வர்க்க மக்கள் தான் தள்ளப்படுவார்கள். போரின் காரணமாக அழிந்துகொண்டிருக்கிற உள்நாட்டுக் கட்டமைப்பு வசதிகளை மீட்டெடுப்பதற்கு ஆகிற செலவுகளையும் அம்மக்கள் தான் ஏற்கவேண்டியிருக்கும். ஆயுதங்களை அனுப்புமாறு ஐரோப்பிய ஒன்றியத்திடமும், அமெரிக்காவிடமும், நேட்டோ படைகளிடமும் கோரிக்கை வைத்துக்கொண்டிருக்கிறது உக்ரைனிய அரசு. போர் தொடங்குவதற்காக இத்தனை ஆண்டுகளாக பல தந்திர வேலைகளைச் செய்துவந்தவர்களிடமே போய் ஆயுதங்கள் கேட்கும் உக்ரைனிய அரசை எந்த வகையிலும் ஆதரிக்க முடியாது.

உலக அமைதிக்காக

ஐரோப்பாவைப் பொறுத்தவரையில், ஒவ்வொரு வீட்டிலுமே 75 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த உலகப்போர்களின் காயங்களும் கதைகளும் வாய்வழிக் கதைகளாகவாவது இன்றைக்கும் அசைபோடப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. அத்தகைய ஐரோப்பாவில் என்ன விலைகொடுத்தாவது அமைதியைப் பெறுவதற்குத் தான் ஐரோப்பிய ஆட்சியாளர்கள் முயற்சி செய்யவேண்டுமே தவிர, மூன்றாவது முறையாக மீண்டுமொரு போரினைத் துவக்குவதற்கான வேலைகளை செய்வது மனிதகுலத்திற்கே எதிரானது.

75 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற முதலிரண்டு உலகப் போர்களிலும் அமெரிக்காவிற்கு பெரிய இழப்பேதும் இல்லை. ஐரோப்பிய மண்ணில் தான் முழுப்போரும் நடைபெற்றதென்பதாலேயே, போருக்குப் பின்னர் அதிலிருந்து மீண்டெழுவது ஐரோப்பிய நாடுகளுக்கு பெரும்பாடாக இருந்தது. அந்த சூழலைப் பயன்படுத்தித்தான் அமெரிக்கா, இவ்வுலகை ஆட்டிப்படைக்கும் ஒரே பெரியாள் என்கிற மனோபாவத்துடன் உலக மக்களை அதிகாரம் செலுத்தப் புறப்பட்டது. அது இன்றளவும் தொடர்ந்துகொண்டே தான் இருக்கிறது. ஆனால், இரஷ்ய ஊடகங்கள் அனைத்தையும் தடைசெய்துவிட்டு, மேற்குலக ஊடகங்களின் வழியாக வரும் செய்திகளைப் பார்த்துவிட்டு, “இரஷ்யாவே போரை நிறுத்து” என்று மட்டுமே சொல்லி முடித்துக்கொள்ள நமக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இரஷ்யா இப்போரை உடனடியாக நிறுத்தியே ஆக வேண்டும் தான். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், அது மட்டுமே உக்ரைனில் அமைதியை நிலைநாட்டிவிடும் என்று நினைத்தால் அது நிச்சயமாக உண்மையல்ல.

அதனால் உலகின் குடிமக்களாகிய நாம், ‘உக்ரைன் மீது இரஷ்யா தொடுத்திருக்கிற இப்போரை எந்த நிபந்தனையும் விதிக்காமல் உடனடியாக நிறுத்தி ஆகவேண்டும்’ என்று வலுவாக குரல் கொடுக்க வேண்டும். அதனோடு இணைந்தபடி, ‘இரஷ்யாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையில் எரிபொருள் ஒப்பந்தம் கையெழுத்தானால் அமெரிக்காவிற்கு என்ன பிரச்சனை?’ என்று ஐரோப்பிய உழைக்கும் மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஐரோப்பிய அரசுகளைக் கேள்விகேட்கவேண்டும்

‘உக்ரைனில் நடத்தப்படும் போருக்கு எங்களுடைய வரிப்பணத்தைப் பயன்படுத்தாதே’ என்று புடினின்இரஷ்ய அரசைப் பார்த்து இரஷ்ய உழைக்கும் மக்கள் கேள்வியெழுப்ப வேண்டும்.

‘எங்களுடைய வரிப்பணத்தில் ஆயுதம் வாங்கி உலகெங்கிலும் போருக்குச் சென்று இலட்சக்கணக்கான மக்களைக் கொல்லாதே’ என்று அமெரிக்க ஆட்சியாளர்களை நோக்கி அமெரிக்க உழைக்கும் மக்கள் கேட்கவேண்டும்

‘ஆயுதங்களைத் தயாரித்து விற்பனை செய்து, மற்ற நாடுகளில் போரைத் துவங்கும் எந்த நாட்டுடனும் வர்த்தகம் செய்யவே கூடாது’ என்று உலகின் அனைத்து நாடுகளின் உழைக்கும் மக்களும் அவரவர் தேசத்து அரசுகளுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும்.

மத்திய கிழக்கு நாடுகளில் வன்முறைகளைக் கட்டவிழ்க்கும் ஐஎஸ்ஐஎஸ் மட்டுமல்லாமல், உக்ரைனில் பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்துக்கொண்டிருக்கும் வெள்ளை இனவெறி அசோவ் பட்டாலியன் படையினரும் பயங்கரவாதிகள் தான் என்பதை அங்கீகரித்து, அதற்கு நிதியும் ஆயுதமும் வழங்கும் அனைத்து தரப்பினரையும் உலகின் குடிமக்களாகிய நாம் எதிர்க்க வேண்டும்

2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உக்ரைனியத் தேர்தல்களில் சுத்தியல் அரிவாள் சின்னத்தைக் கொண்டிருக்கிறது என்கிற ஒரே காரணத்தை முன்வைத்தே கம்யூனிஸ்ட் கட்சியை போட்டியிடவே அனுமதிக்காத அமைப்பினை ஜனநாயகம் என்றே அங்கீகரிக்க முடியாது என்று நாம் உரக்கச் சொல்லியாக வேண்டும்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக உக்ரைனில் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த உலகிலுமே அமைதி நிலவவேண்டும் என்று உண்மையாகவே நாம் விரும்புவதாக இருந்தால், இன்றைக்கு உலகின் அனைத்து போர்களுக்கும் மையக்காரணமாக இருக்கும் நேட்டோ படையினை முற்றிலுமாக ஒழிக்கப் போராட வேண்டும். நேட்டோவை இல்லாமல் செய்துவிட்டாலே, அமெரிக்காவால் உலகின் எந்த நாட்டிற்கு அருகிலும் சென்று எளிதாக ஒரு போரையோ, கலவரத்தையோ, கலகத்தையோ, ஆட்சிக்கவிழ்ப்பையோ, பயங்கரவாத இயக்கங்களையோ உருவாக்குவது கடினமாகிவிடும். ஆம், நேட்டோ ஒழிப்பில் தான் ஒட்டுமொத்த உலகின் அமைதியே இருக்கிறது.