நவீன தொழிலாளர்களும், கம்யூனிஸ்ட் அறிக்கையும்

சுகுமால் சென்

Download APP

தமிழில் சுறுக்கமாக : ஆர்.எஸ்.செண்பகம்

வளர்ந்து வரும் தொழில்நுட்ப புரட்சி, உழைப்பில் ஏற்படும் மாற்றங்கள், செயல்முறைகள் ஆகியவற்றின் காரணமாக பாட்டாளி வர்க்கம் வேகமாகக் குறைந்து வருகிறது என்றும், அந்த இடத்தில் ஒரு  ‘புதிய நடுத்தர வர்க்கம்’ வளர்ந்து வருகிறது என்றும், ஒரு கருத்து மார்க்சிய வட்டாரங்களிலும் மற்ற இடதுசாரிகளிடமும் நிலவுகிறது. நடுத்தர வர்க்கத்திற்கு எந்தவொரு புரட்சிகர முன்னோக்குப் பார்வையோ, புரட்சிகர ஆற்றலோ இல்லை என்றும்,  அதிவேகமாக வீழ்ச்சியடைந்து வரும் பாட்டாளி வர்க்கமும் இயற்கையாகவே தன்னுடைய புரட்சிகரத் திறனை  இழந்து கொண்டிருக்கிறது என்றும் குறிப்பிடும் அவர்கள் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வலியுறுத்துகின்ற பாட்டாளி வர்க்க புரட்சிக்கான அறைகூவலை மதிப்பற்ற ஒன்றாக ஆக்கிட முயற்சிக்கிறார்கள்.  இக்கட்டுரையில் நாம் இந்த விஷயத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள்வதுடன், வளர்ந்து வரும் யதார்த்தத்தை சுட்டிக் காட்டவும் முயற்சிப்போம்.

தொழிலாளி வர்க்கத்தின் கட்டமைப்பு மாற்றங்கள்

தற்போது நடந்துவரும் அறிவியல் தொழில்நுட்பப் புரட்சி உற்பத்திசக்திகளின் தனிச்சிறப்புகளில் புதிய அம்சங்களை திறந்து விடுகிறது.  இதனால் தொழிலாளி வர்க்கத்தின் பாரம்பரிய கட்டமைப்பிலும் மாற்றம் ஏற்படுகிறது.  தொழில்நுட்பப் புரட்சியின் விளைவாக உருவாகியுள்ள நவீன தொழில்துறை குறித்து கார்ல் மார்க்ஸ் இவ்வாறு குறிப்பிடுகிறார் “நவீன தொழில் துறையானது பலதரப்பட்ட, ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத,  பழைய தொழிலுற்பத்தி வடிவங்களிலிருந்து வெளிவந்து,  இயற்கை விஞ்ஞானத்தை உணர்வுப்பூர்வமாக கவனமாகவும்,  திட்டவட்டமான ஒழுங்குமுறையுடனும் பயன்படுத்தி, தனக்கான பயனுள்ள செயல்திறனையும் விளைவுகளையும் அடைய முயல்கிறது” என்றார். 1867 தொழில் புரட்சியின் துவக்கக் கட்டத்திலேயே, உற்பத்தியில், அறிவியல் வளர்ச்சி செலுத்தும் தாக்கத்தை உணரத்தொடங்கிய காலத்திலேயே மார்க்ஸ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.  இது எத்தனை முன்னுணர்ந்த கண்ணோட்டம்?  தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் அறிவியல், தொழில்நுட்பப் புரட்சியானது ‘இயற்கை விஞ்ஞானத்தை உணர்வுப்பூர்வமாக பயன்படுத்துவதன்’ மூலமாக உற்பத்தி சக்திகள் புரட்சிகரமாக மாற்றியமைக்கப்படுவதும், அதனால் எழுகின்ற புதிய சாத்தியங்களையும், சிக்கல்களையும் நாம் பார்க்கிறோம்.

தொழிற்புரட்சி என்பது சில தனிப்பட்ட விஞ்ஞானிகளின் குறிப்பிட்ட கண்டுபிடிப்புகளினால் விளைந்தது.  அதிலும் குறிப்பாக நீராவி எஞ்சினின் கண்டுபிடிப்பு, தொழில் புரட்சிக்கான முதன்மை இயக்கியாக இருந்ததை நாம் பார்க்கலாம்.  ஆனால், தற்போதைய எந்தவொரு கண்டுபிடிப்பும் இத்தகையதொரு இடத்தினை பிடிக்க முடியவில்லை.  ஆலைப்பாட்டாளியும், மார்க்சிய அறிஞருமான ஹாரி பிரேவர்மேன் (Harry Braverman) என்பவர், மார்க்சின் உழைப்பு நிகழ்முறை குறித்து ஆழமான ஆய்வினை நடத்தியவர்.  அவர் தனது “உழைப்பு மற்றும் ஏகபோக மூலதனம்” என்னும் நூலில்,  “அறிவியல் தொழில்நுட்பப் புரட்சி என்பதை, குறிப்பிட்ட கண்டுபிடிப்புகளை வைத்து புரிந்துகொள்ள முடியாது. அதனால்தான் நம்மால் ஒரு குறிப்பிட்ட கண்டுபிடிப்பை வைத்து புரிந்துகொள்வது சாத்தியப்படவில்லை… சாதாரண செயல்பாடுகளோடு இணைந்திருக்கும் முழுமையான பொறியியல் மற்றும் அறிவியல் ஆய்வுப்பார்வையை உள்ளடக்கிய உற்பத்தி முறையினைப் புரிந்துகொள்வதன் மூலமே  அதை அறிய வேண்டும். மிக முக்கியமான கண்டிபிடிப்பினை, வேதியலிலோ, மின்னணுவியலிலோ, தானியங்கி இயந்திரங்கள், வானியல், அணு இயற்பியல், அல்லது இந்த அறிவியல் – தொழில்நுட்பத்தின் ஏதேனும் ஒன்றிலோ காண முடிவதில்லை, மாறாக அறிவியலே மூலதனமாக மாற்றமடைவதில் காண முடியும்” என்று குறிப்பிடுகிறார்.

அறிவியல், தொழில்நுட்பப் புரட்சி உற்பத்திசக்திகளை புரட்சிகரமாக மாற்றியமைப்பதுடன், உழைப்பு முறையிலும் அளவில்லா மாற்றத்தை கொண்டு வருகிறது.  ஏற்கனவே உருவான ஏகபோக மூலதனமும், நிர்வாகப் பணிகளின் விரிவாக்கமும், மிகப் பெருமளவில் எழுத்தர் பணிகளில் தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்தது.  தற்போது, அறிவியல், தொழில்நுட்பப் புரட்சியின் விளைவாக, மிகப் பெரிய சேவைத் துறை என்பது உருவாக்கப்பட்டு, அதில் தனித்திறன் மிக்க பணியாளர்கள், தொழில் நுட்பவியலாளர்கள், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்கள், பிற சிறப்பு அறிவுத் திறனுடன் கூடிய தொழிலாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

எர்னஸ்ட் மண்டேல், “முதலாளித்துவ சேவைத்துறையின் விரிவாக்கம் என்பது சமீபத்திய முதலாளித்துவ வடிவத்தின் சான்றாக நம் முன் உள்ளது.  இந்த சேவைத் துறையின் விரிவாக்கம் முதலாளித்துவ உற்பத்தி முறையில் உள்ள அனைத்து முக்கிய முரண்பாடுகளையும் கொண்டுள்ளது.  உற்பத்தியின் சமூக, தொழில்நுட்ப, அறிவியல் சக்திகளின் அபரிமிதமான விரிவாக்கத்தை அது பிரதிபலிக்கிறது.  இதனோடு உற்பத்தியாளர்களிடம் கலாச்சார, நாகரீக தேவைகளையும் அது அதிகரிக்கிறது. அவ்வாறே, இது முதலாளித்துவ அமைப்பில் நடக்கிற காரணத்தால், விரோத மனப்பான்மையையும் அது பிரதிபலிக்கிறது. மேலும், இந்த சேவைத்துறையின் விரிவாக்கம் என்பது பெருமளவு மூலதன மயமாக்கலுடன் சேர்ந்து நடக்கிறது.  இதனால், பலன்களை பெறுவதில் அதிகப்படியான சிரமங்களையும், பொருள்மதிப்புகள் வீணாக்கப்படுதலையும் ஏற்படுத்துகிறது. உற்பத்தி நடவடிக்கையிலும், நுகர்வுத்தளத்திலும் தொழிலாளர்கள் அந்நியப்படுதலும் நடக்கிறது” என்று கூறுகிறார்.

ஒவ்வொரு நாடும் இதுபோன்ற தனித்துவமான சேவைத்துறை வளர்ச்சியை காண்கின்றன. இதனால் சேவைத் துறை தொழிலாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.  இது இந்தியாவிற்கும் பொருந்தும். சேவைத்துறை ஊழியர்கள் அல்லது தொழிலாளர்கள் பெரிய, தேசிய கூட்டமைப்புகளின் கீழ் திரட்டப்பட்டுள்ளனர்.  அவர்கள் தொழிற்சங்க இயக்கத்தில் மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளனர். ஆனால் அடிக்கடி ஒரு கேள்வி எழுப்பப்படுகிறது. இந்த சேவைத்துறை என்பது உற்பத்தி சார்ந்ததா? இல்லையா? என்று. உற்பத்தி சார்ந்த  துறை இல்லை என்றால், இந்த முதலாளித்துவ சமுதாயத்தில், ஒரு வர்க்கப் போராட்டத்தை தொடர்ச்சியாக நடத்துவதில், அதைக் கூர்மைப்படுத்துவதில் இந்தத் துறையின் ஊழியர்கள், தொழிலாளர்கள் என்ன பங்கு வகிக்கமுடியும் என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது. இந்த தலைப்பின் கீழ் விவாதத்தை தொடர்வதற்கு முன் மார்க்ஸ் இதுகுறித்து ஏதேனும் பேசியிருக்கிறாரா என்று பார்ப்போம்.

வணிக கூலித் தொழிலாளர்கள்

வர்த்தக மூலதனம் பற்றிய ஆய்வினை மேற்கொள்ளும்போது மார்க்ஸ்  “வணிக கூலித் தொழிலாளர்கள்” (commercial wage-workers) என்ற பதத்தை பயன்படுத்துகிறார்.  இவர்களையும்,  முதலாளிகளுக்காக தங்களுடைய உபரி உழைப்பை உபரி மதிப்பாக உருவாக்கும்  “கூலித்தொழிலாளர்கள்” என்றே மார்க்ஸ் குறிப்பிடுகிறார்.  வணிக முதலாளியாக இருக்கும் வியாபாரிகளால் பணிக்கு அமர்த்தப்படும் இவர்களைக் குறித்த கேள்வியை எழுப்பி அதற்கான விடையையும் மார்க்ஸ் தருகிறார்.

முதலாவதாக, இந்தத் தொழிலாளியின் உழைப்பு சக்தியானது மூலதனத்தை பெருக்குவதற்காக மாறும் மூலதனத்தால் விலைக்கு வாங்கப்படுகிறது.   இரண்டாவதாக, இவர்களுடைய உழைப்பு சக்தியின் மதிப்பும் அதாவது சம்பளமும் பிற கூலித் தொழிலாளர்களைப் போன்றே உற்பத்திக்கான செலவு மற்றும் அவர்களுடைய உழைப்புச் சக்தியை மறுஉற்பத்தி செய்வதற்கான செலவைக் கொண்டே தீர்மானிக்கப்படுகிறது.

இங்கே மார்க்ஸ் இரண்டு முக்கியமான விஷயங்களை மிகத் தெளிவாகக் கூறுகிறார்.  1. வணிக கூலித் தொழிலாளர்களும் பிற கூலித்தொழிலாளர்களைப் போன்ற கூலித் தொழிலாளரே ஆவார்.  2.  அவரது கூலியும் பிற கூலித்தொழிலாளர்களைப் போன்றே நிர்ணயம் செய்யப்படுகிறது என்பதாகும்.

மார்க்ஸ் அதற்கு மேலும் விளக்கம் தருகிறார்.   “தொழில் துறை மூலதனத்திற்கும், வணிக மூலதனத்திற்கும் இடையே உள்ள வேறுபாட்டைப் போலவே, தொழில்துறை மூலதனத்தால் நேரடியாக பணியமர்த்தப்படுகிற கூலித்தொழிலாளியையும், வணிக கூலித்தொழிலாளியையும் வேறுபடுத்திப்பார்க்க வேண்டும்”, “வெறுமனே சுற்றோட்ட முகவராக ஒரு வர்த்தகர் இருக்கும் வரையில் அவர் மதிப்பையோ, உபரி மதிப்பையோ உற்பத்தி செய்வதில்லை… எனவே, அதே பணிகளில் அமர்த்தப்படுகிற வணிக தொழிலாளர்களும் நேரடியாக உபரி மதிப்பை அவருக்காக படைத்துக்கொடுக்க முடியாது. “

மேலும் மார்க்ஸ் விளக்குகிறார், “உபரி மதிப்புக்கும் வணிக மூலதனத்திற்குமான உறவு, தொழில்துறை மூலதனத்திற்கும் உபரி மதிப்புக்குமான உறவில் இருந்து வேறுபட்டதாகும். தொழில் துறை மூலதனம் பிறரது ஊதியமில்லா உழைப்பை நேரடியாகத் தனதாக்கிக் கொள்வதன் மூலம் உபரி மதிப்பை உற்பத்தி செய்கிறது. வணிக மூலதனமோ இந்த உபரி மதிப்பில் ஒரு பகுதியை தொழில் துறை மூலதனத்திடமிருந்து தனக்கு மாற்றிக் கொள்வதன் மூலம் தனதாக்கிக் கொள்கிறது” வேறு வார்த்தைகளில் சொன்னால், வணிக கூலித்தொழிலாளரும் உபரியை படைக்கிறார், வழிமுறைகள் வேறுபடுகின்றன.

“தனியொரு வணிகரின் இலாபமானது, அவர் இந்த நிகழ்முறையில் ஈடுபடுத்தும் மூலதனத்தின் அளவைப் பொருத்ததாகும்; அவருடைய எழுத்தர்களின் ஊதியமில்லா உழைப்பு எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ அவ்வளவு அதிகமாக அவர் வாங்குவதற்கும் விற்பதற்கும் அந்த மூலதனத்தை பயன்படுத்த முடியும்… இந்த எழுத்தர்களின் ஊதியமில்லா உழைப்பு மதிப்பை படைப்பதில்லை என்றாலும் வணிகர் உபரி-மதிப்பை தனதாக்கிக் கொள்வதற்கு வழிவகை செய்கிறது. அவரது மூலதனத்தை பொறுத்தவரை உபரி-மதிப்பை படைப்பதும் தனதாக்கிக் கொள்வதும் விளைவளவில் ஒன்றுதான். ஆகவே இந்த ஊதியமில்லாத உழைப்புதான் அவரது இலாபத்திற்கு ஆதாரம்.” மேலும், “திறனுடை மூலதனத்திற்கான உபரி மதிப்பை ஒரு தொழிலாளியின் ஊதியமில்லா உழைப்பு நேரடியாக படைத்தளிப்பதைப் போலவே வணிக கூலித் தொழிலாளியின் ஊதியமில்லா உழைப்பும் இந்த உபரி மதிப்பில் ஒரு பங்கை வணிக மூலதனத்திற்கு பெற்றுக் கொடுக்கிறது”

வணிக முதலீடும் லாப உற்பத்தியும்

சுற்றோட்டத் துறையில் உள்ள தொழிலாளி உற்பத்தியை உண்டு பண்ணுகிறவரா இல்லையா என்ற கேள்விக்கு வந்து ஒரு முடிவான விளக்கத்தினை மார்க்ஸ் தருகிறார்.   “தொழில் மூலதனத்திற்கு சுற்றோட்டச் செலவுகள் என்பவை பலனற்ற செலவுகள் போல் தெரிகின்றன. ஆம், அது அவ்வாறே. ஆனால் ஒரு வணிகருக்கு, பொது லாப வீதத்தைப் பொருத்தும், அளவைப் பொருத்தும் நேர் விகிதத்தில் லாபமடைவதற்கான ஆதாரமாக அந்தச் செலவுகள் அமைந்திருக்கின்றன. ஆகவே இந்த சுற்றோட்டச் செலவுகளுக்கு செய்யும் முதலீடு வணிக-மூலதனத்திற்கு பலன் தரும் செலவே ஆகும்.” இவ்வாறு குறிப்பிடும் கார்ல் மார்க்ஸ், “இந்தக் காரணத்தினால்வணிக மூலதனத்தால் வாங்கப்படும் உழைப்பு உடனடியாக நேரடியாக உடனடி பலன் தரக்கூடியதாக இருக்கிறது” என்ற விளக்கத்தை தருகிறார்.

இவ்வகைப்பட்ட கூலித் தொழிலாளர்களை குறிப்பிட, மார்க்ஸ் “white collar worker” (அறிவுசார் தொழிலாளி) என்ற பதத்தை பயன்படுத்தவில்லை, தொழில்துறை கூலித்தொழிலாளர்களை அழைப்பதை ஒத்த வகையில் “வணிக பாட்டாளிகள்” என்ற பதத்தையும் அவர் பயன்படுத்தவில்லை. இருப்பினும், மார்க்ஸ் இவர்களை கூலித் தொழிலாளர்கள் என்றும், முதலாளித்துவ உற்பத்தி உறவுகளில் இவர்கள் ஒடுக்கப்படுபவர்களாகவும், சுரண்டப்படுபவர்களாகவும் இருக்கின்றனர் என்றும் தெளிவுபடுத்துகிறார்.

சுரண்டலின் அளவுகோள்

அதே போன்று, இந்த தொழிலாளர்கள் குறித்து இன்னொரு கருத்து நிலவுகிறது.  அவர்கள் அதிகம் சம்பளம் பெறுபவர்கள்.  அதனால், இவர்கள் போராட முன்வருவதற்கு வாய்ப்பில்லை என்ற கருத்து நிலவுகிறது.  மார்க்ஸ் இந்த இடத்தில் இன்னொரு விவாதத்தினை முன்வைக்கிறார்.   “வணிக தொழிலாளர் – இச்சொல்லுக்கு உரிய கண்டிப்பான பொருளிலில் – ஓரளவுக்கு நல்ல ஊதியம் பெறும் கூலித்தொழிலாளி வர்க்கத்தைச் சேர்ந்தவர், தேர்ச்சி பெற்ற உழைப்பாக வகைப்படுத்தப்பட்டு சராசரி உழைப்புக்கு மேற்பட்டதாக இருக்கும் உழைப்புக்கு உரியவர்களான கூலித்தொழிலாளர் வகையைச் சேர்ந்தவர்கள். என்றாலும், முதலாளித்துவ பொருள் உற்பத்தி முறையில் முன்னேற்றம் ஏற்படும்போது சராசரி உழைப்பு தொடர்பாகவும் கூட கூலி குறைந்து செல்லும் போக்கு வெளிப்படுகிறது.” சமூகத்தின் எந்த பகுதியிலிருந்து இவர்கள் பணியில் அமர்த்தப்படுகிறார்கள்?  மார்க்ஸ் அதனை விளக்குகிறார், “பொதுக்கல்வி அனைவருக்குமாக பரவலாக்கப்படுவதால், சமூகத்தில் அடித்தட்டில், மிகவும் தரம் குறைந்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்த மக்களிடையே இருந்தவர்களும் கல்வி பெறும் வாய்ப்பு ஏற்பட்டது.  இதனால், தனித்திறன் மிக்க தொழிலாளர்கள் அதிக அளவில் உருவாவதும், அவர்களிடையே போட்டி ஏற்படும் நிலையும் உருவானது.  இதனால், ஒரு சில விதிவிலக்குகளைத் தவிர்த்து இவர்களின் உழைப்பு சக்தியானது மதிப்பிழக்கும் நிலை முதலாளித்துவ உற்பத்தி முறையின் முன்னேற்றப் பாதையில் உருவானது” என்று குறிப்பிடுகிறார்.  இதன் பொருள் தெளிவானது.  முதலாளித்துவம் முன்னேற முன்னேற, இந்த பகுதி தொழிலாளர்கள் மிகப் பெருமளவிற்கு சுரண்டலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பதுதான்.

எனவே, மார்க்சின் மிகத் தெளிவான வரையறைகளின்படி பார்க்கும்பொழுது பொதுவான தொழிலாளி வர்க்க இயக்கத்தில் சுரண்டலுக்கு எதிரான போராட்டங்களில் இவர்களது பங்கு குறித்து இருக்கும் கருத்துக்கள் தவறானவை என்பது மிகத் தெளிவாக நிரூபிக்கப்படுகிறது.

பாட்டாளி வர்க்கத்தின் வரையறை

மார்க்சின் நாட்களில் இருந்து, இன்று மிகப் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன.  அதுவும் தொழில்நுட்ப புரட்சியின் காரணமாக உழைப்பு முறையிலும் புரட்சிகரமான பல மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன.  தற்காலத்திய மார்க்சிஸ்டுகள் இந்த மாற்றங்களை புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.  அந்த புரிதல்களின் அடிப்படையில் விஷயங்களை மதிப்பிட வேண்டும்.  மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோரின் அடிப்படை சூத்திரங்கள், கொள்கைகளின் அடிப்படையில் விஷயங்களை பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும்.

முதலாளித்துவ கட்டமைப்பு, மூலதனக் குவிப்பு, உழைப்புக் கருவிகளின் தொழில் நுட்ப முன்னேற்றங்கள் ஆகியவற்றைப் பொறுத்து தான் தொழிலாளி வர்க்கத்தின் உழைப்பு முறையிலும் மாற்றங்கள் நிகழ்கின்றன.  தொழிற்சாலைகளில் கூட, இயந்திரமயமாக்கல் என்பது இயந்திரங்களை பயன்படுத்தி அதிக அளவில் உற்பத்தி செய்வதற்காக முதலாளித்துவ உற்பத்தி முறையில் புகுத்தப்பட்டது என்ற முறையில் மூலதனத்தின் முதல் பகுதியில் மார்க்ஸ்  தனது ஆய்வினை மேற்கொள்கிறார்.  19-ம்நூற்றாண்டில் லான்ஷயர் காட்டன் வர்த்தக நிறுவனம் போன்ற ஒரு சில முன்னேறிய தொழிற்சாலைகள் தவிர்த்து, பெரும்பகுதி முதாலாளித்துவ நிறுவனங்கள் நீராவி இயந்திரங்களை விட மனித உழைப்பு சக்தியைத்தான் பயன்படுத்தின.  உண்மையில் தொழில் புரட்சி காலத்திலேயே கூட பெருமளவில் இயந்திரமயமாக்கல் நிகழவில்லை.  19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 20-ம் நூற்றாண்டிலும்தான் மிகப் பெருமளவில் அமெரிக்காவில் அது பயன்படுத்தப்பட்டது.

தொழிலாளி வர்க்கம் எப்போதுமே ஒரு குறிப்பிட்ட நிலையான கட்டமைப்பை உடையதாகவோ அல்லது கலவையானதொரு அமைப்பை உடையதாகவோ இருந்ததில்லை.  மாறாக, தொழிலாளி வர்க்கத்தின் கலவை அமைப்பும், கட்டமைப்பும் மூலதன சேர்க்கையின் தேவைக்கேற்ப மாற்றி அமைக்கப்படுகிறது.  மறுகட்டமைப்பு மற்றும் ஒருங்கிணைப்புகள் நிகழும்போது, திவாலானவை கையகப்படுத்தப்படும்போது, திறனற்ற துறைகள் பயனற்றதாகும்போது, புதிய துறைகள் உருவாகும் போது, அதிக திறன் படைத்த மூலதனங்கள் வரும்போது நெருக்கடிகள் எழுவதுண்டு.  தொழிலாளி வர்க்கத்திற்குள்ளும் இதே அழிக்கப்படுதலும், உருவாக்கப்படுதலும் நிகழ்கிறது.

தற்போதைய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப புரட்சி காலக்கட்டத்தில், முதலாளித்துவ பொருளாதார உலகமயமாக்கலின் கீழ், முதலாளிகள் அதிக அளவில் தொழிலாளர்கள் தேவைப்படாத வகையில் சாதனங்களை பயன்படுத்துகின்றனர்.  மினனணுவியல், சைபர்நெட்டிக்ஸ் எனும் தன்னாள்வியல், ஆட்டோமேஷன் எனும் தானியங்கல் ஆகியவை முதலாளிகளுக்கு அதிக அளவில் தொழிலாளர்கள் தேவைப்படாத வகையில் சாதனங்களை பயன்படுத்த உதவுகின்றன.

மார்க்ஸ் சொன்னது போல், கல்வி பொதுவாக்கப்பட்டதன் காரணமாக வர்த்தக முதலாளிகளுக்கு வேலை செய்யக்கூடிய தொழிலாளர்கள் பெருமளவில் கணக்காளர்களாக, எழுத்தர்களாக, கொடுக்கல் வாங்கல் துறைகளில் வேலை செய்ய தயாராக இருக்கிறார்கள்.  அதேபோல, தானியங்கித் துறை மற்றும் கணிணித் துறையில் உள்ள உயர் மட்ட தொழில் நுட்பக் கல்வியின் காரணமாக, சேவைத்துறையின் முதலாளிகளுக்கு தொழில்நுட்ப தனித்திறன் பெற்ற தொழிலாளர்களை அவர்கள் விரும்பும் வேலைகளில் பணியமர்த்த முடிகிறது. அதாவது, தொழிலதிபர்களுக்குத் தேவையான பல்வேறு வகையான தொழிலாளர்களை பல்வேறு பணிகளில் பணியமர்த்திக் கொள்கின்றனர்.  உண்மையில் தொழிலாளர்களின் பெருக்கம் என்பது முதலாளிகளின் நலன்களை பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் பல்வேறு வகையான வேலைகளுக்கு தொழிலாளர்களை பணியமர்த்த உதவுகிறது என்பதை மார்க்ஸ் கண்ணுற்று கூறுகிறார்.

வர்க்கங்கள் குறித்து கார்ல் மார்க்ஸ் சொல்வது

மார்க்சின் மூலதனம் நூலின் பகுதி மூன்றில், வர்க்கங்கள் குறித்த அத்தியாயத்தில், எழுதியவை முடிக்கப்படாமல் கையெழுத்துப் பிரதி பாதியில் நின்று விடுகிறது.  மார்க்ஸ், “கூலித் தொழிலாளர்களும், முதலாளிகளும், நிலவுடைமையாளர்களும் முப்பெரும் சமுதாய வர்க்கங்களாக அமைவது எதனால்? “ என்ற கேள்வியை எழுப்பி விடை காண முயல்கிறார்.

“முதல் பார்வையில் – வருவாய் ஆதாரங்களும், வருவாய்க்கான மூலங்களும் காரணமாகவே என்று தோன்றுகிறது.” கூலித் தொழிலாளர்களும், முதலாளிகளும், நிலவுடைமையாளர்களும் “உழைப்பு சக்தியாலும், மூலதனத்தாலும், நிலச் சொத்தாலும் கிடைக்கிற கூலியையும் இலாபத்தையும் நில வாடகையையும் நம்பி வாழ்கின்றனர்.”

“எனினும், இந்தக் கண்ணோட்டத்தில் மருத்துவர்களும், அலுவலர்களும் கூட இரு வர்க்கங்களாவர்.  ஏனென்றால், அவர்கள் இரு வேறு சமூகக் குழுக்களைச் சேர்ந்தவர்கள்.  ஒவ்வொரு குழுவின் உறுப்பினர்களும் ஒரே ஆதாரத்திலிருந்து தமது வருவாயைப் பெறுகிறவர்கள்.   சமுதாய உழைப்புப் பிரிவினை தொழிலாளர்களையும், அதே போல் முதலாளிகளையும், நிலவுடைமையாளர்களையும் அவர்கள் பெறக்கூடிய நலன்கள் என்ற வகையிலும், தரம் என்ற வகையிலும் எல்லையற்ற முறையில் பிரித்துக் கூறு போடுகிறது.  உதாரணமாக, நிலவுடைமையாளர்களை திராட்சை தோட்ட உடைமையாளர்கள், பண்ணை உடைமையாளர்கள், வன உடைமையாளர்கள், சுரங்க உடைமையாளர்கள், மீன் வள உடைமையாளர்கள் என்று பிரிக்கிறது.  அதற்கும் இதுவே பொருந்தும்.  கெடுவாய்ப்பாக  கையெழுத்துப் பிரதி இங்கே நின்றுவிடுகிறது.

சேவைத் துறை உள்ளிட்ட நவீன உற்பத்தித் துறையில் தொழிலாளர்களின் வேலைப்பிரிவினை என்பது அவர்களுடைய தனித் திறன் சார்ந்தது என்பதையும்,  தர வகைப்பட்டது என்பதையும் நாம் வெளிப்படையாக இன்று கண்டு கொண்டிருக்கிறோம்.

இன்னொரு இடத்தில் மார்க்ஸ்,  “ஒட்டுமொத்த தொழில் முறையின் உண்மையான நெம்புகோல் அல்லது முன்னோக்கி எடுத்துச் செல்லும் சக்தி என்பது தனிப்பட்ட தொழிலாளர்கள் அல்ல.  மாறாக, உழைப்பு சக்தி சமூக அளவில் ஒருங்கிணைக்கப்படும்போது, அது கூட்டு  வேலையாகும்போது,  பல்வேறு உழைப்பு சக்திகள் ஒருங்கே சேர்ந்து ஒட்டு மொத்த உற்பத்தி நிகழ்முறையை உருவாக்கி, பொருட்களை உற்பத்தி செய்யும் பல்வேறு வழிகளில் பங்கெடுக்கும்போது, அதுவே ஒட்டுமொத்த தொழில் முறையின் உண்மையான நெம்புகோலாகிறது.  சிலர் கரங்களால் சிறப்பாக வேலை செய்வார்கள்; சிலர் கருத்தால் வேலை செய்வார்கள். மேனேஜராக, என்ஜினியராக, தொழில் நுட்ப வல்லுநராக, கண்காணிப்பாளராக, உடலுழைப்பு தொழிலாளியை விட இன்னும் கடின உழைப்பாளியாக சிறப்பாக செயல்படுவார்கள்.  எப்போதுமே அதிகரித்துக் கொண்டிருக்கும் எண்ணற்ற உழைப்பு வகைகள் உற்பத்தி உழைப்பு பற்றிய கருத்தாக்கத்திற்குள் அடக்கப்படும்.  அதைச் செய்பவர்கள் உற்பத்தித் தொழிலாளர்கள் என வகைப்படுத்தப்படுவார்கள். இந்தத் தொழிலாளர்கள் நேரடியாக  மூலதனத்தால் சுரண்டப்படுகிறார்கள்.  அதே போல அவர்கள் மூலதனத்தின் உற்பத்தி மற்றும் விரிவாக்கத் தாக்கங்களுக்கு உட்படுத்தப்படுகிறார்கள்” என்று கூறுகிறார். 

கூட்டு வேலை என்பது முதலாளித்துவ உற்பத்தி முறைக்கே உரிய சிறப்பியல்பு அல்ல.  முதலாளித்துவ கூட்டு வேலையில் சுயேச்சையான கூலித் தொழிலாளியும், உற்பத்தி சாதனங்களின் தனி உடைமையும் தேவைப்படுகிறது.  கூட்டு வேலை முறை வளரும் போது உழைப்பு மூலதனத்துக்கு கீழ்படிந்து செயல்படுவது என்பது வெறும் புறவடிவமாக இருந்த நிலையிலிருந்து உண்மையான நேரடியான கீழ்ப்படிதல் நடைபெறும் நிலைக்கு மாறி விடுகிறது.

எனவே, மார்க்சின் வாதத்தின்படி, யாரெல்லாம் கூட்டு வேலையின் பங்களிப்பாளர்களாக ஆகிறார்களோ, அவர்கள் அனைவருமே உற்பத்தி தொழிலாளர்கள் ஆவர்.  அவர்கள் கரத்தால்தான் வேலை செய்ய வேண்டும் என்பதில்லை.  அதே போல மார்க்ஸ் வணிக தொழிலாளர்கள் பற்றி குறிப்பிடும்போது உற்பத்தி தொழில்துறையில் வேலை செய்பவர்கள் மட்டும் பாட்டாளி வர்க்கம்  என்று சொல்லவில்லை.  இதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. 

உழைப்புச் சக்தியும், கட்டாயமும்

உண்மையில், உற்பத்தி மற்றும் உற்பத்திசாரா தொழிலாளர்கள் என்பதற்கான வேறுபாடு என்னவென்றால் மூலதனத்தின் விரிவாக்கத்திற்கு பங்களிப்பவர்கள்  என்பதும், பங்களிக்காதவர்கள் என்பதுமே ஆகும்.  19-ம் நூற்றாண்டின் இரண்டாவது பகுதியில் (பிரிட்டனில் விக்டோரியா மகாராணியின் காலம்) நடுத்தர மற்றும் உயர்தட்டு மக்களால் அவர்களுடைய வருமானத்தில் இருந்து பணிக்கமர்த்தப்பட்ட வீட்டு வேலை தொழிலாளர்களை இதற்கு உதாரணமாக மார்க்ஸ் குறிப்பிடுகிறார்.  ஆனால், வீட்டு வேலை செய்யும் அவ்வகைப்பட்ட தொழிலாளர்களுக்கு வேறு வாழ்க்கை ஆதாரங்கள் இல்லாததால் உழைப்புச் சக்தியை இவ்வகையில் விற்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள் என்பதை அவர் குறிப்பிடத் தவறிவிட்டார். மார்க்ஸ் தொழிலாளர்களின் பல்வேறு வகைகள் பற்றி குறிப்பிடும்போது, நாம் இன்னொன்றையும் மார்க்சினுடைய முதலாளித்துவ ஆய்வின் அடிப்படையிலேயே புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.  தன்னுடைய உழைப்பு சக்தியை விற்றால்தான் வாழ முடியும் என்ற சமூகப் பொருளாதார நிர்ப்பந்தம் அல்லது கட்டாயம் என்பதுதான் பாட்டாளி வர்க்கத்தின் வெளிப்படையான குணாம்சமாகும்.

இதனால் அனைத்து கூலித்தொழிலாளர்களும் முதலாளித்துவ உற்பத்தி உறவுகளின் அடிப்படை கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடுகிறார்கள்.  உற்பத்திக்கான வழிமுறைகள் சொந்தமின்மை, நிலஉடமையின்மை மற்றும் அவை கைக்கெட்டாமை, உழைப்பு சக்தியை (தொடர்ச்சியாக) விற்காமல் வாழ்வாதாரத்திற்குத் தேவையானவற்றை வாங்குவதற்கு போதுமான பணமின்மை என்பது போன்ற சமூகப் பொருளாதார நிர்ப்பந்தங்களுக்கு ஆளாக்கப்படுகின்றனர்.  இந்த பிரிவில் வணிக தொழிலாளர்களும், அரசாங்கத்தின் கீழ் நிலை ஊழியர்களும், சிதறிக் கிடக்கும் தினக் கூலிகளும் (வீட்டு வேலை பணியாளர்களும்) அடங்குவர்.  ஏனென்றால், இவர்களுக்கும் வாழ்வாதாரத் தேவைகளுக்காக தங்களுடைய உழைப்பு சக்தியை விற்பதைத் தவிர வேறு வழியில்லை.

இங்கே ரோசா லக்சம்பர்க் தன்னுடைய மூலதனக் குவிப்பு குறித்த நூலில், அத்தியாயம் 16-ல் ‘மூலதன மறு உருவாக்கம் மற்றும் சமூக அமைப்பாக்கம் என்ற தலைப்பின் கீழ் எழுதியுள்ளதை நாம் கவனிக்க வேண்டியுள்ளது’. அவர் கிராமப்புற மற்றும் நகர்ப்புற பாட்டாளி வர்க்கத்தின் உற்பத்தி நிலைகள் பற்றி விவாதிக்கும்போது,  “விவசாயப் பொருளாதாரம் மற்றும் கைவினைத் தொழில்கள் தொடர்ச்சியாக நசிவடைந்தபோது, கிராமப்புற மற்றும் நகர்ப்புற மத்தியதர வர்க்கத்தினர் எப்படி பாட்டாளி வர்க்கமாக மாற்றப்பட்டார்கள்” என்று குறிப்பிடுகிறார், ” அதாவது, முதலாளித்துவம் கோலோச்சாத நிலையில் இருந்து, உழைப்பு சக்தியானது முதலாளித்துவ  நிர்ப்பந்தங்களுக்கு இடைவிடாது உட்படுத்தப்பட்டு, மாற்றங்கள் ஏற்பட்டது, முதலாளித்துவத்திற்கு முந்தைய நிலையிலிருந்து, உற்பத்தி முறையில் முன்னோக்கிய சிதைவுகளும் முறிவுகளும் ஏற்பட்டன”.  இது 19-ம் நூற்றாண்டு ஐரோப்பாவிற்கு மட்டும் பொருந்தும் ஆய்வல்ல;  தற்போது இந்தியாவில் நிலவும் சூழலுக்கும் இது மிகச் சரியாகப் பொருந்துகிறது.

உழைப்புச் சக்தியும் சேவைத்துறையும்

இன்னொரு முக்கியமான விஷயம்  கருத்தில் கொள்ளப்பட வேண்டியுள்ளது.  சேவை குறித்து மார்க்ஸ் குறிப்பிடும்போது, ”சேவை என்பது ஒரு பொருளின் அல்லது ஒரு உழைப்பின் பயன் மதிப்பின் பயனுள்ள விளைவு என்பதன்றி வேறில்லை” என்று பொதுவான வரையறை ஒன்றினை கூறியுள்ளார்.  அதன் பிறகு அவர் தனித் திறன் பெற்ற தொழிலாளர்கள் மற்றும் திறன்பெறாத சாதாரண தொழிலாளர்கள் குறித்து ஒரு சுவாரஸ்யமான விளக்கம் அளித்துள்ளார். “மதிப்பினை உருவாக்கும் ஒவ்வொரு உற்பத்தி செயல் முறையிலும், தனித்திறன் பெற்ற தொழிலாளி மற்றும் சாதாரண சமூகத் தொழிலாளியின் குறைப்பு  (உ-ம்)  திறன் பெற்ற தொழிலாளியின் 1 நாள் முதல் திறனற்ற தொழிலாளியின் 6 நாள் வரை குறைப்பு என்பது தவிர்க்க முடியாதது” என்று குறிப்பிடுகிறார்.

ஒரு முதலாளியால் பொருட்களின் உற்பத்திக்கென பணியில் அமர்த்தப்படும் ஒரு தொழிலாளி முதலாளிக்கு தனது சேவையை செய்கிறார்.  இந்த சேவையின் மூலம் அவர் உறுதியான விற்பனைக்குரிய ஒரு பொருளை சரக்காக மாற்றுகிறார்.  உழைப்பின் பயனுள்ள விளைவு விற்பனைக்குரிய ஒரு பொருளாக மாறாத போது வித்தியாசமான ஒரு சூழல் உருவாகிறது.  ஹாரி ப்ரேவர்மேன் இந்த சூழல்கள் குறித்து மிகவும் தர்க்கரீதியான விளக்கத்தினை அளிக்கிறார். “ஒரு தொழிலாளி தன் உழைப்பால் பயன்பெறக் கூடியவருக்கு நேரடியாக தனது உழைப்பை வழங்காமல், ஒரு முதலாளியிடம் விற்று, அந்த முதலாளி சரக்கு சந்தையில் அதனை மறுவிற்பனை செய்வார் என்றால், அது சேவைத் துறையில் நடைபெறும் உற்பத்தியின் முதலாளித்துவ வடிவமாகும்” என்று குறிப்பிடுகிறார்.

அதே போல, ஹாரி ப்ரேவர்மேன் அத்தகைய சேவை என்பது முதலாளித்துவ உற்பத்தி முறையில், உபரிமதிப்பை உற்பத்தி செய்கிற பயனுள்ள உழைப்பாகும் என விளக்கும் விதத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.  

“முதலாளித்துவத்தின் வரலாற்றில் ஏகபோக மூலதனத்தின் காலத்தில் பல்வேறு வகையான உழைப்பு முறைகளானது மூலதனத்தின் லாபகரமான முதலீட்டின் ஒரு பகுதியாக ஆகிவிடுவதன் காரணமாக, அவை மூலதன விரிவாக்கத்திற்கே பயன்படுகின்றன.  தற்போதைய நவீன  “கார்ப்பரேட்டுகள்” அல்லது  “பெரு நிறுவனங்கள்” வடிவத்தில் அனைத்து வகையான தொழிலாளர்களும் எவ்வித வேறுபாடுமின்றி பணிக்கமர்த்தப்படுகிறார்கள்.  நவீன கார்ப்பரேட் குழுமங்களில் உற்பத்தி, வர்த்தகம், வங்கி, சுரங்கம் மற்றும் சேவை போன்றவற்றை கவனிப்பதற்கென சில பிரிவுகள் இருக்கின்றன. அவற்றில் அவரவர் வேலையை அமைதியாக அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.  இறுதியில் கம்பெனியின் பேலன்ஸ் ஷீட் வெளிவரும்போது அனைத்து வகையான உழைப்பு வடிவங்களும் மறைந்து போய் அவை அனைத்தும் மதிப்புருக்களாக தெரிகிறது” என்று சேவை குறித்த தனது விளக்கத்தினை மிகத் தெளிவாக தருகிறார்.

மார்க்ஸ் இது குறித்து கம்யூனிஸ்ட் அறிக்கையை எழுதும் முன்பே  “கூலி உழைப்பு,  மூலதனம்” என்ற நூலில் விளக்கியுள்ளார்

 “உற்பத்தி மூலதனம் வளரும்போது, தொழிலாளர்களுக்கான கிராக்கியும் வளர்கிறது.  இதன் விளைவாக, உழைப்பின் விலை, கூலி அனைத்தும் உயர்கின்றன…….

 “கவனிக்கத்தக்க ஒரு கூலி உயர்வு ஏற்படுகிறது என்றால், அது  உற்பத்தி மூலதனத்தின் துரித வளர்ச்சியை சுட்டிக்காட்டுகிறது.  உற்பத்தி மூலதனத்தின் துரித வளர்ச்சி என்பது அதற்கு சமமான செல்வாதார வளர்ச்சியை, ஆடம்பர மற்றும் சமூகத் தேவைகளின் வளர்ச்சியை, சமூக போகங்களின் வளர்ச்சியை உருவாக்குகிறது.  இப்படி தொழிலாளியின் அனுபோகங்கள் வளர்ச்சி அடைந்தாலும், முதலாளியின் அனுபோகங்களின் வளர்ச்சியோடு ஒப்பிடும்போது அது குறைவாக இருப்பதால், முதலாளியின்  அனுபோகங்கள் தொழிலாளிக்கு எட்டாதவையாக இருப்பதால், சமூகத்தின் பொதுவான முன்னேற்றத்தோடு ஒப்பிடுகையில், தொழிலாளியின் அனுபோக வளர்ச்சிகள் போதுமானதாக இல்லாமல் இருப்பதால், ஒரு தொழிலாளி பெறும் அனுபோகங்களில் சமூக திருப்தி என்பது குறைவாகவே இருக்கிறது.  நமது ஆசைகளும் இன்பங்களும் சமூகத்தில் இருந்தே முளைத்தெழுகின்றன.  நாம் அவற்றை சமூகத்தின் அளவுகோலால் மட்டுமே அளக்கிறோம்.  நம்மிடம் இருக்கும் பொருட்களால் அல்ல.  ஏனென்றால் அவை சமூகத்துடன் தொடர்புடையவை;  சமூகத் தன்மையுடன்,  இயல்புடன் கூடியவை.  பொதுவாக, கூலி என்பது சரக்குகளின் விலையால் மட்டும் தீர்மானிக்கப்படுவதல்ல.  அது பல்வேறு உறவுகளை உள்ளடக்கியதாகும்” என்று மார்க்ஸ் குறிப்பிடுகிறார்.

மார்க்சின் இந்த வார்த்தைகள் தற்போதைய சூழலை புரிந்து கொள்ள மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.  தொழிலாளர்களின் போராட்டங்கள் மற்றும் பல்வேறு பிற காரணிகளால், தொழிலாளர்களின் கூலியும்  வசதி வாய்ப்புகளும் உயர்ந்தாலும் அவர்களின் வாழ்க்கைத் தரம் என்பது 19-ம் நூற்றாண்டின் மத்திய காலத்தின் அளவிற்கு இல்லை என்பதே இன்றைய நிலை.  முதலாளித்துவம் முதலாளிகளுக்கும் கூலித் தொழிலாளர்களுக்கும் இடையே ஒரு பரந்த பொருளாதார ஏற்றத்தாழ்வினை உருவாக்குகிறது.  தொழிலாளர்கள் ஒரு வேளை கூடுதலான ஊதிய விகிதம் அல்லது வசதிவாய்ப்புகளை பெறலாம்.  ஆனால் உடைமையாளர்களின் செல்வச் செழிப்புகளும் வசதிகள் மற்றும் சொத்துக்களும்  ஒரு நிரந்தர விகிதாச்சாரத்தில் அதைவிட கூடிக் கொண்டே போகிறது.

இந்த முதலாளித்துவ உலகமயமாக்கல் காலக்கட்டத்தில், குறிப்பாக நிதி மூலதனத்தின் ஆதிக்கத்தின் கீழ், வருமான ஏற்றத் தாழ்வுகள் என்பது இதற்கு முன்பு இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது.  உலகமயமாக்கலின் கதாநாயகன் என்று சொல்லப்படும் உலக வங்கியே கூட, அதனுடைய அடுத்தடுத்த அறிக்கைகளில் இந்த வருமான ஏற்றத்தாழ்வுகள் குறித்து கவலை தெரிவித்துள்ளது.  மேலும் மேலும் மக்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்படுவது குறித்தும், வேலையில்லாமல் இருப்பது குறித்தும் உலக வங்கி கவலை தெரிவித்துள்ளது.  அதே போல ஆட்சியாளர்களுக்கு எதிராக துன்பப்படும் ஏழை எளிய மக்களின் அதிருப்தியை கண்டுணர்ந்துளளது.

எனவே, ஊதியத்தில் எவ்வளவு உயர்வு ஏற்பட்டிருக்கிறது என்ற கேள்வியல்ல இப்போது முக்கியத்துவம் பெறுவது.  தற்போதைய வினா என்னவென்றால், ஒரு நாட்டின் செல்வாதாரத்தை -/ வருமானத்தை உருவாக்கும் சாமானிய மக்களுக்கு அவர்களுக்கு சேர வேண்டிய பங்கு உரிய விகிதத்தில் / உரிய முறையில் சேர்கிறதா என்பதுதான்.  இந்த இழப்புணர்வும், ஏற்றத்தாழ்வான நிலையும்தான் தொழிலாளி வர்க்கத்தின் போர்க்குணத்திற்கு உண்மையான கரு ஆகிறது.

இந்த எல்லா வகையான உண்மைகளையும், சூத்திரங்களையும் கருத்தில் கொண்டு, இன்றைய உற்பத்தித் துறை தொழிலாளர்கள், திறன் பெற்ற சேவைத் துறை தொழிலாளர்கள், வணிக நிறுவனங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள், நிதி நிறுவனங்களாகிய வங்கிகள், இன்சூரன்ஸ் துறை ஊழியர்கள், அரசுத் துறைகளில் – அரசு அலுவலகங்களில் எழுத்தர்களாகவும் அதற்கும் கீழான பியூன் போன்ற வேலையில் இருக்கும் தொழிலாளர்கள், முதலாளிகளுக்கு சேவை செய்வதில் இது போன்ற வேலைகளில் இருக்கும் தொழிலாளர்கள், ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் தனித் தனியான தினக் கூலிகள்  என அனைவருமே கூலித் தொழிலாளர்கள் என்ற வரையறையின் கீழ் இயற்கையாகவே வந்துவிடுகிறார்கள்.  அதே நேரத்தில் பாட்டாளி வர்க்கத்தின் மையமாக, முக்கிய கருவாகத் திகழ்பவர்கள் தொழில் துறை கூலித் தொழிலாளர்கள் ஆவர்.

தங்களுடைய உழைப்பு சக்தியை விற்பதைத் தவிர வேறு வாழ்வாதாரம் இல்லாத வீட்டு வேலை தொழிலாளர்கள், அவர்கள் மதிப்பினை உருவாக்கவில்லை என்றாலும், முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிராக அணி திரளாவிட்டாலும், மிக அதிக அளவில் சுரண்டலுக்கு உட்படுத்தப்படுகின்ற, அனைத்தையும் இழந்து நிற்கும் தொழிலாளர்கள் என்ற முறையில் பாட்டாளி வர்க்கம் என்பதன் பரந்த வரையறைக்குள் வந்துவிடுகின்றனர்.

இந்த காரணிகள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது, பாட்டாளி வர்க்கம் என்பது இன்றைக்கு மிக வேகமாகக் குறைந்து கொண்டே வரும் வர்க்கமாகவும், மறைந்து போகிற வர்க்கமாகவும் இருக்கிறது என்பதும், அந்த இடத்தில் புதிதாக போர்க்குணமற்ற, புரட்சிகர திறனற்ற, மிக அதிக அளவில் ஊதியம் மற்றும் பிற வசதி வாய்ப்புகளை பெற்ற வாழும் ஒரு மத்திய தர வர்க்கம் உருவாகி  இருக்கிறது என்பதுமான கருத்து ஏற்றுக்கொள்ளத் தக்கதாக இல்லை.

தொழிலாளி வர்க்கத்தின் வர்க்க உணர்வு (புரட்சிகர குணாம்சம்)

மார்க்சிய இயக்கவியல் கொள்கையின்படி, வர்க்க உணர்வு என்பது ஒரு மனிதனின் புறச் சூழலுக்கும்,  அதன் காரணமாக அவனுள் ஏற்படும் உணர்வு நிலைக்குமான உள்ளார்ந்த தொடர்பு குறித்த விழிப்புணர்வில் இருந்து உருவாகிறது.

“தத்துவத்தின் வறுமை” என்ற தனது நூலில் வர்க்கத்திற்குள்ளும், வர்க்கத்திற்காகவும்  என்ற இரண்டிற்குமான முக்கியமான வேறுபாட்டினை பற்றி மார்க்ஸ் பேசுகிறார்.  இந்த இடத்தில்தான் தொழிலாளி வர்க்கத்தின் உணர்வு மட்டத்தின் வேர் இருக்கிறது என்று குறிப்பிடுகிறார்.

 “பொருளாதார நிலைமைகள் முதன்முதலில் நாட்டின் திரளான மக்களை தொழிலாளிகளாக மாற்றிவிட்டது.  மூலதனத்தின் ஆதிக்கம் இந்த மக்கள் திரளுக்கு ஒரு பொதுவான நிலைமையை, பொதுவான நலனை உண்டாக்கிவிடுகிறது.  எனவே, இந்த மக்கள் திரள் ஏற்கனவே மூலதனத்துக்கு எதிரான வர்க்கமயமாகியுள்ளது என்றாலும் தனக்காக நிற்கும் வர்க்கமாக இன்னும் ஆகவில்லை.  இந்தப் போராட்டத்தில் – அதன் சில கட்டங்கள் மட்டும் நாம் குறிப்பிட்டிருக்கிறோம்.  இந்த மக்கள் திரள் ஒன்றுபடுகிறது.  தனக்காக நிற்கும் வர்ககமாக உருவமைத்துக் கொள்கிறது.  அது காத்து நிற்கும் நலன்கள் வர்க்க நலன்களாகி விடுகின்றன.  ஆனால் வர்க்கத்துக்கு எதிராக வர்க்கம் நடத்தும் போராட்டம் ஒரு அரசியல் போராட்டமாகும்.” என்று மார்க்ஸ் குறிப்பிடுகிறார்.

இங்கு நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது,  மார்க்ஸ்  “பொருளாதார போராட்டங்களை” புரட்சிகர அரசியல் உணர்வு மட்டத்துடனோ அல்லது சோசலிசத்துடனோ தொடர்புடையது அல்ல என்று ஒரு போதும் சொல்லவில்லை.  மார்க்சைப் பொறுத்த வரையில்,  “பொருளாதாரப் போராட்டங்கள்”தான் ஒரு பிரத்தியேகமான, பரந்துபட்ட அரசியல் உணர்வினை உருவாக்குவதற்கு மையமான முக்கிய அம்சமாகும்.

அதே நேரத்தில், இந்த அரசியல் உணர்வு – சோசலிச குணாம்சம் என்பது தானாக தொழிலாளி வர்க்கத்திற்கு வந்துவிடாது என்று லெனின்கூறுகிறார்.  அதாவது ஒரு புரட்சிகர கட்சியின் தலையீட்டினால் மட்டுமே இந்த சோசலிச உணர்வு மட்டம் என்பது பாட்டாளி வர்க்கத்திற்கு ஊட்டப்பட முடியும் என்று லெனின் குறிப்பிடுகிறார்.

தற்போது நவீன முதலாளித்துவ சமுதாயத்தில் பாட்டாளி வர்க்கம் மட்டுமே புரட்சிகர வர்க்கமாக இருக்கிறது.  ஆனால், அவர்களுடைய அரசியல் உணர்வு மட்டம் அல்லது புரட்சிகர குணாம்சம் என்பது லெனின் கூறியபடி தானாக வந்துவிடாது.  அதே போல எல்லா சந்தர்ப்பங்களிலும் எல்லா இடங்களிலும் முதலாளித்துவ நெருக்கடிக்கு எதிரான போராட்டங்கள் ஒரே மாதிரியாக இருக்காது.

ஹங்கேரியன் மார்க்சிஸ்ட் ஜார்ஜ் லூகாக்ஸ்,   “பொருளாதார நெருக்கடிக்கு எதிரான பாட்டாளி வர்க்கத்தின் உணர்வு மட்டம் என்பது பல நேரங்களில் போதுமான அளவிற்கு அதன் தீவிரமான தாக்குதலுக்கு எதிர் வினையாற்றும் தீவிரத்துடன்  இருப்பதில்லை” என்று குறிப்பிடுகிறார்.

தற்போதைய தலைமுறை தொழிலாளி வர்க்கம் முதலாளித்துவ நெருக்கடிகளுக்கு எதிரான போராட்டங்களில் உலகம் முழுவதும் ஆங்காங்கே  ஈடுபட்டுக் கொண்டு தான் இருக்கிறது.  ஆனால், உலகளாவிய அளவில் இந்த போராட்டங்கள் நடப்பதில்லை.  தற்போது புரட்சிகர பாட்டாளிவர்க்க அரசியல் கட்சிகளின் முக்கிய கடமை என்பது தேவையான தலையீடுகளை செய்து, பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் உணர்வு மட்டத்தை வளர்த்தெடுப்பதாகும்.  அவர்களுக்கு சோசலிசமே மாற்று என்பதனை அறிவுறுத்தி, ஒரு புரட்சிகரப் போராட்டத்தினை நடத்துவதற்குத் தேவையான வழிகாட்டுதல்களை அளிக்க வேண்டியதாகும்.  இதைத்தான் கம்யூனிஸ்ட் அறிக்கை அறிவுறுத்துகிறது.

எங்கெல்ஸ் என்ற புரட்சியாளன் !

ரகுராம் நாராயணன்

(ஜெர்மனியின் ரைன் பகுதியிலும் இங்கிலாந்தின் மான்செஸ்டர் பகுதியிலும் செயல்பட்டு வந்த பருத்தி ஆலைகளின் உரிமையாளரான பிரெடெரிக் எங்கெல்ஸ் (சீனியர்) –  அவரது மனைவி எலிசபெத் பிரான்சிஸ்கா மெளரிஷியா தம்பதியினருக்கு நவம்பர் 28, 1820 ஆண்டு பிறந்தார் பிரெடெரிக் எங்கெல்ஸ். அவர் பிறந்த 200 வது ஆண்டு நவம்பர் 28, 2019 தொடங்குகிறது. இந்தக் கட்டுரை கார்ல் மார்க்ஸ் – எங்கெல்ஸ் இடையிலான அறிமுகத்திலிருந்து தொடங்குகிறது. அவரின் மிக முக்கியமான படைப்புகள் மற்றும் பங்களிப்புகளை நமக்கு கவனப்படுத்துகிறது – ஆசிரியர் குழு)

துடிப்புமிக்க இளைஞராக இருந்த பிரெடெரிக் எங்கெல்ஸ், தனது புரட்சித் தோழன் கார்ல் மார்க்சுடன் பழகுவதற்கு முன்னரே (அக்டோபர் 1842) மார்க்ஸ் ஆசிரியராக இயங்கிய ரைனிஸ் ஜைதுங் பத்திரிக்கைக்கு கட்டுரைகள் எழுதியிருந்தார். “உள்நெருக்கடிகள் பற்றிய ஆங்கிலேயர்களின் பார்வை”, “உள் நெருக்கடிகள்”, “இங்கிலாந்தில் பாட்டாளி வர்க்கத்தின் நிலை” மற்றும் “கார்ன் விதிகள்” போன்றவை அவரின் முக்கியமான கட்டுரைகளாகும். இங்கிலாந்தின் சமூக அமைப்பையும், வெவ்வேறு வர்க்கங்களையும், வர்க்கங்களுக்கு இடையேயான சமூக உறவுகளையும் மிக நுட்பமாக ஆராய்ந்து அக்கட்டுரைகளை அவர் எழுதினார்.

இங்கிலாந்தில் வளர்ந்து கொண்டிருந்த பாட்டாளி வர்க்க இயக்கமான “சார்டிஸ்டு இயக்கத்தை” அவர் ஆர்வமுடன் நோக்கினார். அந்த இயக்கத்தின் பாட்டாளிகளைச் சந்தித்தார். அதே சமயம் “சட்டரீதியான புரட்சி என்பது நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்று” என மிகச் சரியான விமர்சனத்தையும் அவர் முன்வைத்தார்.

அவர் எழுத்தராகப் பணிபுரிந்த நிறுவனத்தில் பணியாற்றிவந்த அயர்லாந்தைச் சேர்ந்த மேரி பர்ன்ஸ் என்பவரை மணம் புரிந்தார். அவரோடு இணைந்து மான்செஸ்டர் நகரில் உள்ள கூலித் தொழிலாளர்கள் வசிக்கும் இடங்களுக்குச் சென்றார்.

சோசலிச, கம்யூனிச இயக்கங்கள் குறித்த ஆய்வுகளையும் மேற்கொண்டார். ஆங்கிலேய சோசலிஸ்டுகளின் பத்திரிக்கையான “நியூ மாரல் வேல்டிற்க்காக எழுதிய கட்டுரையில் “ஐரோப்பியக் கண்டத்தில் உள்ள மனித நாகரீகம் வளர்ச்சியடைந்த நாடுகளான இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி முதலான நாடுகள் அனைத்திலும் பொதுச்சொத்தை அடிப்படையாகக் கொண்ட சமூகக் கட்டமைப்பைப் புரட்சியின் மூலம் உருவாக்குவது தவிர்க்கமுடியாததாகவும், அவசியமானதாகவும் உள்ளது” என முன்வைத்தார். அதேசமயம் அவர் கற்பனாவாத கம்யூனிசத்தை ஏற்கவில்லை.

மார்க்ஸ்–எங்கெல்ஸ் சந்திப்பு:

கார்ல் மார்க்சும் ரூகேவும் இணைந்து நிறுவிய டச்சு-பிரன்சு ஆண்டறிக்கை என்ற பத்திரிக்கையில் அரசியல் பொருளாதார விமர்சனத்தின் வரையறுப்பு என்ற கட்டுரை வெளியானது. அந்தக் கட்டுரை மார்க்சும், எங்கெல்சும் இணைந்து பணிபுரியவும், விவாதிக்கவும் உதவியாக அமைந்தது. 1844 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜெர்மனியிலிருந்து மான்செஸ்டர் நகருக்குச் செல்லும் வழியில் பாரிஸ் நகரில் எங்கெல்ஸ், மார்க்சை சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது மார்க்சுடன் சுமார் 10 நாட்கள் தங்கியிருந்தார். மார்க்சுடனான இச்சந்திப்பைப்பற்றி “1844 இல் பாரீஸ் நகரில் மார்க்சை சந்தித்தபோது தத்துவார்த்த தளத்தில் அவருடன் இணைந்து இயங்குவது என்ற முடிவை இருவரும் எட்டினோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதே காலகட்டத்தில் ஹெகலின் மாணவர்களான ப்ருனோ பவுர்(Bruno Bauer) உள்ளிட்டவர்களுக்கு எதிரான தத்துவச் சமருக்கு கார்ல் மார்க்ஸ் தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்தார்.1844ஆம் ஆண்டில் மார்க்சும், எங்கெல்சும் இணைந்து “புனிதக் குடும்பம் அல்லது விமர்சன பகுப்பாய்வின் மீதான விமர்சனம்” என்ற நூலை எழுதினார்கள். 1845இல் வெளியான இந்நூலே அவர்கள் இருவரும் பொறுப்புகளை தங்களுக்குள் பிரித்துக் கொண்டு எழுதத் தொடங்கிய முதல் நூல் ஆகும்.

1844 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பர்மன் நகருக்குத் திரும்பிய எங்கெல்ஸ் கம்யூனிஸம் மற்றும் சோசலிஸத்திற்கு ஆதரவாக பர்மன் மற்றும் எல்பேர்பில்த் நகரங்களில் பிரச்சாரங்களில் பங்கேற்றார். பிப். 8 நடைபெற்ற முதல் கூட்டத்தில் சுமார் 40 நபர்கள் பங்கேற்றனர். பிப். 15, இரண்டாவது கூட்டத்தில் 130 பேரும், 22 ஆம் தேதி கூட்டத்தில் சுமார் 200 பேரும் பங்கேற்றனர்.  எங்கெல்ஸ் தனது சொற்பொழிவில் முதலாளித்துவத்தால் நேர்ந்த, நேர்ந்து கொண்டிருக்கின்ற, நேரஇருக்கின்ற பல இன்னல்களை விரிவாக விளக்கியிருந்தார். சுருக்கமாக “தாராளவாதம் என்பது பொருளாதாரத்தைச் சீர்குலைப்பது, சுரண்டல் நிறைந்தது, ஒவ்வொரு நாடும் மற்ற நாட்டிற்கு எதிராகப் பகைமையை  வளர்த்துக் கொண்டு போர்முனையில் சந்திக்க வைப்பது, சுயலாபத்திற்காகபொதுநலம்என்ற பெயரில் ஒவ்வொருவருக்கு இடையேயும் பகைமையை வளர்க்கிறது, சமூகத்தின் பெரும்பான்மையானவர்களை ஏழைகளாகவும், சிலரை மிகவும் வளமிக்க பணக்காரர்களாகவும் மாற்றுவது, சமூகத்தைத் தொடர்ச்சியான பொருளாதார மந்தநிலைக்கு இட்டுச் செல்வது, முரண்பாடான பொருள்உற்பத்தி மற்றும் நுகர்வுகலாச்சாரம் என முதலாளித்துவம் பல சிக்கல்கள் நிறைந்தது” எனக் கடுமையாகச் சாடினார்.

பாட்டாளி வர்க்கம் பற்றிய ஆய்வு:

நவம்பர் 19, 1844 இல் மார்க்சுக்கு எழுதிய கடிதத்தில் எங்கெல்சின் ஆகச் சிறந்த படைப்புகளில் ஒன்றான இங்கிலாந்து பாட்டாளி வர்க்கத்தின் நிலையைப் பற்றி மார்க்சுக்கு தெரியப்படுத்தினார். பாட்டாளி வர்க்கத்தின் நிலையை எழுதும்போது எங்கெல்ஸின்வயது 24 மட்டுமே. தொழிற்சங்கம் மற்றும் வேலைநிறுத்தம் பற்றிப் பேசிய முதல் கம்யூனிஸ்டு எங்கெல்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. “பொதுவேலைநிறுத்தம் என்பது உழைக்கும் மக்களை ஒரு பெரும் போராட்டத்திற்காக தயார்ப்படுத்துகிற ஒரு இராணுவப் பள்ளி என்றும், அப்பெரும் போராட்டத்தை ஒருவராலும், ஒருபோதும் தடுத்து நிறுத்த இயலாது என்றும், உழைக்கும் மக்கள் யாவரையும் ஒரே இயக்கமாக இணைக்கும் பாலமே பொதுவேலைநிறுத்தம்” எனக் கூறியுள்ளார்.

1845 ஆம் ஆண்டில் பாரிஸிலிருந்து பிரஸ்ஸல்ஸ் நகருக்கு மார்க்ஸ் குடிபெயர்ந்தார். தன்னுடைய பதிப்பாளர் உடனான ஒப்பந்தத்தின்படி “அரசியல் மீதான விமர்சனம் (Critique of Politics)” மற்றும் அரசியல் பொருளாதாரத்தின் இரண்டு தொகுதிகளின் கையெழுத்துப் பிரதியை மிக விரைவாக முடித்துக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் இருந்தார். இவ்விரு தொகுதிகளை முடிக்கவேண்டுமெனில் அன்றைய காலகட்டத்தில் ஆங்கிலத்தில் வெளிவந்திருந்த பொருளாதாரம் சார்ந்த கட்டுரைகள் பலவற்றை வாசிக்க வேண்டியிருந்தது. மார்க்சின் ஆங்கிலப் புலமை சற்று குறைவு. ஆகையால் எங்கெல்சையும் தன்னுடன் இங்கிலாந்திற்கு அழைத்துச் சென்றார்.

ஜூலை 12, 1845லிருந்து ஆகஸ்ட் 21 ஆம்தேதி வரை மான்செஸ்டர் நகரில் இருவரும் தங்கியிருந்தனர். அப்போது இங்கிலாந்தின் புகழ்பெற்ற நூலகமான சாத்தம்(Chatham) நூலகத்தில் பொருளாதாரம் சார்ந்த கட்டுரைகள், புத்தகங்கள் எனப் பலவற்றை இருவரும் வாசித்தனர். இருவரும் சார்டிஸ்ட் இயக்கத்தின் தலைவர்கள் மற்றும் லீக் ஆப் ஜஸ்ட்-ன் தலைவர்கள் பலரைச் சந்தித்தனர். சார்டிஸ்ட் இயக்கக் குழுஉறுப்பினர்களையும், அவ்வியக்கத்தின் இடதுசாரி உறுப்பினர்களையும் சந்தித்தனர். ஆகஸ்ட் மாத மத்தியில் வெவ்வேறு நாடுகளிலிருந்து வந்திருந்த ஜனநாயக வாதிகளின் கூட்டத்தில் மார்க்சும், எங்கெல்சும் பங்கேற்றனர். இக்கூட்டத்தின் முடிவில் “சகோதர ஜனநாயக வாதிகள் (Fraternal Democrats)” என்னும் ஒரு குழு தோற்றுவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து எழுதிய கட்டுரையில் எங்கெல்ஸ் “வெவ்வேறு தேசங்களில் நிலவுகின்ற அநீதிக்கும், தேசியவாதத்திற்கும் எதிரானதாகவும், மனித நேயத்திற்கு ஆதரவாகவும் பாட்டாளி  வர்க்கம் வளர்ந்து வருகின்றது. பாட்டாளி வர்க்கத்தால் மட்டுமே தேசிய வாதத்தை அழித்தொழித்து, தேசங்களுக்கிடையே சகோதரத்துவத்தையும் நட்புறவையும் வென்றெடுக்க இயலும்” என முதல்முறையாக “சர்வதேசியம்” வேண்டி அறைகூவல் விடுத்தார்.

விஞ்ஞான கம்யூனிசத்தின் பிறப்பு:

1845 ஆம் ஆண்டு ஹெகலின் தத்துவார்த்தங்களை விமர்சிக்கும் விதத்திலும், அதே ஆண்டு வெளிவந்த பயர்பாக்கின் கட்டுரைகளை விமர்சிக்கும் விதத்திலும் மார்க்சும், எங்கெல்சும் இணைந்து மிகப்பெரிய தத்துவார்த்த போரில் ஈடுபடத் துவங்கினர். இத்தத்துவார்த்த போரின் இறுதிவடிவமே உலக கம்யூனிச வரலாற்றின் மிகவும் புகழ்பெற்ற படைப்பான “ஜெர்மானிய சித்தாந்தம்(German Ideology)”ஆகும்.

ஜெர்மன் சித்தாந்தத்தில் இருவரும் முதலாளித்துவ அமைப்பில் அரசு என்பது சுதந்திரமாகத் தனித்துச் செயல்படுகிறது என்று நிலவிவந்த மாயையைத் தகர்த்தெறிந்துள்ளனர். மேலும் தற்போது நிறுவப்பட்டுள்ள அரசு என்பது “முதலாளிகளின் சொத்துகளைப் பாதுகாக்கவும், அவர்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்துகொள்ளத் தேவையான அனைத்து நிபந்தனைகளைக் கொண்ட அமைப்பு” என அறிவியல் பூர்வமாக நிறுவியுள்ளனர். மேலும் ஒவ்வொரு சகாப்தத்திலும் ஆளும் வர்க்கம் பெருந்திரளான மக்களை அடக்கி ஒடுக்குவதற்கான ஆளும் வர்க்க கருத்தாக்கங்களைக் கொண்டிருந்தது. அதாவது ஆளும் வர்க்கம், சமூகத்திலிருந்த உற்பத்தி சக்திகளைக் கட்டுப்படுத்தி வைத்திருந்த அதேநேரத்தில் தத்துவார்த்தக் கோட்பாடுகளையும், அறிவார்ந்த கோட்பாடுகளையும் தனக்குக் கீழ் கட்டுப்படுத்தியே வைத்திருந்தது.

ஜெர்மன் சித்தாந்தத்தில் மார்க்சும், எங்கெல்சும் கம்யூனிச சித்தாந்தத்தை “கற்பனாவாத கம்யூனிசம்” என்னும் நிலையிலிருந்து “விஞ்ஞான கம்யூனிசம்” என்னும் உயர்ந்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றனர்.

அக்காலகட்டத்தில் ஸ்டிர்னர் என்பவர் “கம்யூனிச சமூகத்தில் தனியுடைமை சொத்து அழித்தொழிக்கப்படுவதால் ஒவ்வொருவரின் தனித்தன்மையும் அழிக்கப்படுகிறது என்றும் ஒவ்வொரு தனிமனிதர்களும் சமூகத்தின் அடிமையாகும் அபாயம் உள்ளது” எனக் குற்றம் சாட்டிப் பல இடங்களில் கம்யூனிசத்திற்கு எதிராகப் பிரச்சாரம் செய்து வந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த மார்க்சும், எங்கெல்சும் “தனியுடைமை சொத்து என்பது முதலாளித்துவ அமைப்பில் பின்பற்றப்படும் தனிமனிதத்துவத்துக்கான அடிப்படைக் கூறாகும். முதலாளித்துவ அமைப்பு சொத்து ஏதுமில்லாத பெருவாரியான மக்களின் தனித்தன்மையை சூறையாடுகின்றது. அவ்வாறு சூறையாடப்பட்ட பாட்டாளி மற்றும் ஏழை, எளிய மக்களின் தனித்தன்மையை முதலாளித்துவத்திற்கு எதிரான வர்க்கப் போராட்டங்களின் மூலமே வென்றெடுக்க இயலும்” என ஜெர்மன் சித்தாந்தத்தில் விவரித்துள்ளனர்.

“சுதந்திரம் என்னும் கருத்தாக்கத்திற்கு வரலாற்றுரீதியான அணுகுமுறைகளை அளித்ததோடு, ஒவ்வொரு சகாப்தத்திலும் நிலவியிருந்த ஒடுக்குமுறைகள் மற்றும் சமூக உறவு முறைகளுக்குத் தகுந்தாற் போன்று, ஒடுக்கப்பட்ட மக்கள் குழு ஒரு குறிப்பிட்ட அளவு சுதந்திரத்தைப் போராட்டத்தின் மூலம் வென்றெடுத்தனர். சமூக உறவு முறையின் மிகவும் உச்சகட்ட வளர்ச்சியான கம்யூனிச சமூகத்தில் மட்டுமே, மனித குலம் முழுமையான சுதந்திரத்தை அடைய முடியும்.” என இருவரும் வாதிட்டனர்.

இடைவிடாத விமர்சனத்துக்குள்ளான இப்படைப்பை கையெழுத்துப் பிரதி வடிவத்திலேயே நாங்கள் பல காலம் வைத்திருந்தோம் என 1859 ஆம் ஆண்டு மார்க்ஸ் வேடிக்கையாகக் கூறியிருந்தார். இவ்வரிய நூலின் முதற்பதிப்பு சோவியத் ஒன்றியத்தில் 1933 ஆம் ஆண்டுதான் வெளியிடப்பட்டது.

கம்யூனிஸ்ட் லீக் உருவானது:

மார்க்சும், எங்கெல்சும் “லீக் ஆப் ஜஸ்ட்” அமைப்பில் இணைந்தபிறகு சங்கத்தின் முதல் மாநாடு ஜூன் 2 ஆம் தேதி 1847 ஆம் ஆண்டு லண்டன் நகரில் துவங்கியது. பாரிஸ் கமிட்டியின் பிரதிநிதியாக எங்கெல்சும், பிரஸ்ஸல்ஸ் கமிட்டியின் பிரதிநிதியாக வில்ஹம் வொல்ஃப் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர். பொருளாதார நெருக்கடியின் காரணமாக மார்க்ஸ் இம்மாநாட்டில் கலந்துகொள்ள இயலவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அப்போதுதான் அந்த அமைப்பின் பெயர் “கம்யூனிஸ்ட் லீக்” என மாற்றம் செய்யப்பட்டது. சங்கத்தின் முதன்மையான நோக்கமாக இருந்து வந்த “அனைவரும் சகோதரர்களே” என்பது “உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்!” என பிரகடனம் செய்யப்பட்டது. இம்மாநாடு கம்யூனிஸ்டுகளின் பொதுவேலைத் திட்டத்தைத் தயாரிக்குமாறு எங்கல்சிடம் கேட்டுக்கொண்டது. வினா-விடை வடிவத்தில் “கம்யூனிசத்தின் கோட்பாடுகள் (Principles of Communism)” எனும் சிறு புத்தகத்தை இதனை ஒட்டியே எங்கெல்ஸ் எழுதினார்.

கம்யூனிஸ்ட் லீகின் இரண்டாவது மாநாடு அதே ஆண்டு நவம்பர் 29 ஆம் தேதி துவங்கியது. இம்மாநாட்டில் மார்க்சும் கலந்து கொண்டார். பின்னாளில் இம்மாநாட்டை மார்க்ஸ் “முதல் அகிலம்” எனக் கூறினார். பத்து நாட்கள் நடைபெற்ற இம்மாநாட்டில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் அனைவரும் கம்யூனிஸ்டுகளுக்கான “பொது வேலைத்திட்டம்” ஒன்றைத் தயாரிக்குமாறு மார்க்சையும் எங்கல்சையும் கேட்டுக் கொண்டனர்.

முதல் அகிலம் முடிவடைந்தபிறகு எங்கெல்ஸ் பாரிஸ் நகருக்கும் மார்க்ஸ் பிரஸ்ஸல்ஸ் நகருக்கும் திரும்பினர். 1848 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இறுதிக்குள் பொது வேலைத்திட்டத்தை அவர்கள் எழுதி முடித்தார்கள். இதற்கு “கம்யூனிஸ்டு கட்சி அறிக்கை” எனப் பெயரிட்டனர்.

கிளர்ச்சிப் போராட்டக் களத்தில்:

1848 முதல் 1849 வரையிலான இடைப்பட்ட காலங்களில் மார்க்ஸ் மற்றும் எங்கல்சின் இருவரது வாழ்வும் போராட்டம் நிறைந்ததாகவே இருந்தது. பிப்ரவரி 22 முதல் 24 ஆம் தேதி வரை குடியரசு வேண்டி மற்ற சமூக அமைப்புகளுடன் இணைந்து பாரிஸ் நகரத் தொழிலாளர்கள், பிரான்சு நாட்டில் நடைபெற்று வந்த லூயிஸ் பிலிப்பேயின் ஏகாதிபத்திய முடியாட்சியை எதிர்த்து கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அதே காலகட்டத்தில் இத்தாலி, ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியா எனப் பல நாடுகளில் குடியரசு வேண்டி பல எழுச்சிப் போராட்டங்கள் நடைபெற்றன. பெல்ஜியத்திலும் ஜனநாயக வாதிகள் பலர் குடியரசு வேண்டி கிளர்ச்சிப் போராட்டங்களைத் துவங்கினர்.

கம்யூனிஸ்ட் லீகின் பிரஸ்ஸல்ஸ் குழு தினமும் கூடி கிளர்ச்சிப் போராட்டங்களைப் பற்றி விவாதிப்பது வழக்கம். பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் சங்கக் கமிட்டி மிக விரிவான இயக்கத்தை ஆரம்பிக்கவும், முனிசிபல் கமிட்டியின் கவுன்சில்கள் ராணுவ அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் அவற்றில் பூர்சுவா சிவில் படையுடன் தொழிலாளர்கள் மற்றும் கைவினைஞர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கோரவும் தீர்மானித்தது. ஜனநாயக சங்கமே நேரடியாகத் தொழிலாளர்களை ஆயுதபாணியாக்கத் தொடங்கியது. இதற்குச் சுமார் இரு வாரங்களுக்கு முன்புதான் மார்க்சிற்கு அவருடைய தகப்பனாருடைய சொத்துக்களிலிருந்து பங்குத்தொகையாக பணம் கிடைத்தது. அதிலிருந்து கணிசமான அளவு தொகையை தொழிலாளர்களுக்கு ஆயுதங்கள் வாங்க அவர் செலவிட்டார்.

1848 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மார்க்சும், எங்கெல்சும் அக்காலகட்டத்தில் ஜெர்மனியில் ஏற்பட்ட கிளர்ச்சியில் பங்கேற்பதற்காகத் தங்கள் தாய்நாடு திரும்பியதோடு, சொந்தமாக பத்திரிக்கையொன்றை துவக்க முடிவு செய்து ரைனிஷ் ஜைதுன் பத்திரிக்கையை புதிப்பித்து புதிய ரைனிஷ் ஜைதுங் எனும் பெயரில் வெளியிட்டனர்.

எங்கெல்ஸ் இப்பத்திரிகைக்கு கட்டுரைகள் எழுதியது மட்டுமின்றி, பத்திரிக்கையின் பதிப்பாசிரியர் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார். மார்க்ஸ் “எங்கெல்ஸ் ஒரு கலைக்களஞ்சியம், இரவு-பகல் பாராமல் மிகவும் களிப்பாகத் தன் பணியைச் செவ்வனே செய்து முடிக்கும் திறமை பெற்றவர்” என புகழ்ந்துள்ளார் கார்ல் மார்க்ஸ். தெற்கு ஜெர்மனியில் உள்நாட்டுப் போர் உச்சகட்டத்திலிருந்த சமயத்தில் மார்க்சும், எங்கெல்சும் பாட்டாளிகளை ஒன்றிணைப்பதில் முழுமூச்சாக ஈடுபட்டிருந்தனர். எல்பேர் பில்த் செல்லும் வழியில் சுமார் 400 உழைப்பாளிகளைக் கொண்ட கிளர்ச்சிப் படையொன்றை மே 10, 1849 ஆம் தேதி சொளிங்கேன் எனும் ஊரில் உருவாக்கினர். இக்கிளர்ச்சிப் படையுடன் எல்பேர் பில்த் நகரில் உள்ள பாலம் ஒன்றை அடையும்போது தேவாலயம் சென்று கொண்டிருந்த தனது தந்தையை சந்தித்தார் எங்கெல்ஸ். ஆங்காங்கே நடைபெற்று வந்த கிளர்ச்சிப் போராட்டங்களில் பங்கேற்ற எங்கெல்சை கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இக்கிளர்ச்சிப் போராட்டங்களுக்கிடையில் மார்க்சும், எங்கெல்சும் இணைந்து நடத்தி வந்த பத்திரிக்கையின் இறுதிப்பதிப்பைக் குறிக்கும் விதத்தில் “சிகப்பு நிறத்தில்” மே 19, 1849 ஆம்தேதி வெளியிட்டனர்.

1851 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் லீக் கலைக்கப்பட்டது. மார்க்ஸ் முதலில் பாரிஸ் நகருக்கும் பிறகு லண்டன் நகருக்கும் இடம்பெயர வேண்டியதாயிற்று. பிரஷ்ய அரசு மார்க்சுக்கு குடியுரிமை தர மறுத்துவிட்டது.

தந்தையின் ஆலையில் எங்கெல்ஸ்:

எங்கெல்ஸ் இரு காரணங்களுக்காகவே மான்செஸ்டர் நகரில் உள்ள தனது தந்தை பங்குதாரராகவுள்ள நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். மார்க்சின் குடும்பத்திற்குப் பொருளாதார உதவி அளிக்கவும், ஐரோப்பியக் கண்டம் முழுவதும் பரவிவந்த கிளர்ச்சிகளை ஐரோப்பிய அரசுகள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கிய பின், புரட்சியாளர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து அடுத்த புரட்சிப் போராட்டத்திற்கு தங்களை தயார்ப்படுத்தி கொள்வதற்குக் காலஅவகாசம் தேவைப்படுகிறது என்பதை மனதில் கொண்டும் அவர் இதைச் செய்தார். 1850 முதல் 1869 ஜூலை வரை பணியாற்றினார்.

மார்க்ஸ் அமெரிக்காவைச் சேர்ந்த நியூயார்க் டெய்லி எனும் பத்திரிக்கைக்கு கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். அப்போது ஆங்கிலத்தில் குறைந்த புலமையுடையவராக இருந்த மார்க்ஸ் எங்கெல்சின் உதவியை நாடினார். மார்க்சின் கட்டுரைகள் பலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார் எங்கெல்ஸ். பின்னர் அதே பத்திரிக்கைக்கு மார்க்சின் பெயரிலேயே எங்கெல்ஸ் பல கட்டுரைகளை எழுதி அனுப்பினார்.

எங்கெல்ஸ் “துருக்கி நாட்டின் உண்மையான பிரச்சினை”, “துருக்கியின் பிரச்சினைகள் (The Turkish Question)” மற்றும் “ஐரோப்பியக் கண்டத்தில் துருக்கி என்னவாகவுள்ளது? (What is to Become of Turkey in Europe?)” போன்ற கட்டுரைகளில் ஐரோப்பியக் கண்டத்தின் மிகப் பெரிய பேரரசுகளான இங்கிலாந்து மற்றும் பிரான்சு ஆகிய நாடுகள் துருக்கி நாட்டின் உள்விவகாரங்களில் ஈடுபட்டு வருவதைக் கடுமையாகச் சாடியிருந்தார். ஐரோப்பியப் பேரரசுகளின் தலையீட்டால் தனிநாடு பெற்றிராத ஸ்லாவோனிய இன மக்களின் விடுதலையை நசுக்கிய துருக்கி அரசையும் அவர் கடுமையாகச் சாடினார். இக்கட்டுரைகளின் வாயிலாக எங்கெல்ஸ் இன விடுதலைக்கு ஆதரவாக இருந்தார் என்பதை அறிந்துகொள்ள முடியும்.

இச்சமூகம் மற்றும் உலக வரலாற்றின் தனது புரிதலிலிருந்து எதிர்காலத்தில் வரஇருந்த புரட்சி இயக்கங்களையும் அவர் யூகித்திருந்தார். “ஐரோப்பியக் கண்டத்தில் ஏற்பட்ட புரட்சிகர அடையாளங்கள் 1789 ஆம் ஆண்டு முதல் நிதானமாக முன்னேறியிருந்தது. ஐரோப்பியப் புரட்சிகளின் அரணாக வார்சா (Warsaw), தெப்ரஜின் (Debreczin) மற்றும் புச்சறேஸ்ட் (Bucharest) ஆகிய இடங்கள் இருந்தன. அடுத்த கட்ட முன்னேற்றமடைந்த புரட்சி பீட்டர்ஸ்பர்க் (Petersburg) மற்றும் கோன்ச்டண்டி நோப்லே (Constantinople) ஆகிய இடங்களாக இருக்க வேண்டும்” என அவர் கணித்திருந்தார். எங்கெல்சின் இக்கணிப்பை தோழர் லெனின் தலைமையிலான ரஷ்யப் புரட்சி உண்மையென நிரூபித்துக் காட்டியது.

இந்தியாவைக் குறித்து எங்கெல்ஸ்:

1856 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அன்றைய உலகின் பேரரசுகள் அனைத்தும் தங்களுடைய சந்தையை விரிவுபடுத்திக் கொள்ளும் நோக்கத்தோடு ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளைக் காலனி நாடுகளாகப் பங்கிட்டுக் கொண்டிருந்தது. முதலாளித்துவ சக்திகளின் காலனி வெறியை நுட்பமாகக் கவனித்து அவர்களின் கோர முகத்தை வெளிக்கொணர்ந்தார் ஏங்கெல்ஸ். காலனி நாடுகளில் ஏற்பட்ட தேசிய விடுதலை இயக்கங்களைக் கவனிக்கத் தவறவில்லை. இதுபற்றிய கட்டுரை ஒன்றில் “பொருளாதாரம், இராணுவம் மற்றும் பொதுப்பணித் துறையென மூன்று துறைகளை மட்டுமே கொண்டிருந்த கீழை நாடுகளில் முதல் இரண்டு துறைகளும் இங்கிலாந்து அரசின் கட்டுப்பாட்டிலிருந்தது. மேலும் பொதுப்பணித் துறையைக் கைவிட்டதோடு கீழை நாடுகளின் முக்கிய தொழிலான விவசாயத்தை முற்றிலுமாக அழித்தனர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

எங்கெல்சின் காலனி ஆதிக்கம் பற்றிய கருத்தை அடிப்படையாகக் கொண்டு மார்க்ஸ் பின்னாளில் “இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி” எனும் புகழ்பெற்ற நூல் ஒன்றை எழுதினார். தேசிய எழுச்சியில் ஆர்வம் கொண்ட எங்கெல்ஸ் இந்தியாவில் 1806ஆம் ஆண்டு நடைபெற்ற வேலூர் சிப்பாய்கள் எழுச்சி, 1857 ஆம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய்கள் கலகம் பற்றி பல கட்டுரைகளை எழுதினார். அவற்றில் “டெல்லியைக் கைப்பற்றுதல் (The Capture of Delhi)”, “லக்னோவின் விடுதலை (The Relief of Lucknow)”, “வின்தமின் தோல்வி(The Defeat of Windham)” மற்றும் “இந்தியாவில் கிளர்ச்சி (The Revolt in India)” போன்றவை முக்கியமான கட்டுரைகளாகும்.

இக்கட்டுரைகள் மற்றும் புத்தகங்களின் உதவியுடன், பின்னாளில் இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றை மார்க்சிய மற்றும் வரலாற்றுப் பொருள்முதல்வாத பார்வையுடன் தொடர்கட்டுரைகளைத் தோழர் இ.எம்.எஸ். எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.

வேலூர் சிப்பாய்க் கலகத்தைப் பற்றி எழுதிய பல கட்டுரைகளில் ஒன்றில் “கலகத்தை ஒடுக்கியபின் இந்தியாவின் பெரும்பகுதிகளை பிடிக்கத் தொடங்கிய இங்கிலாந்து அரசு மற்றும் கிழக்கிந்தியக் கம்பெனியின் காலனி ஆதிக்கத்தை இந்திய மக்கள் முன்பை காட்டிலும் அதிகமாகவே வெறுத்தனர்” எங்கெல்சின் இக்கூற்றை இந்திய விடுதலைப் போராட்டம் நிரூபித்துக் காட்டியது.

தொடர் எழுத்தும், இயக்கப் பணியும்:

மனிதவியலாளர் (anthropologist) எங்கெல்ஸ் அவர்கள் அறிவியலையும் விட்டுவைக்கவில்லை. அறிவியலின் உட்பிரிவுகளான இயற்பியல், உடல் உட்கூறு அமைப்பியல், கரிமவேதியியல் மற்றும் உடலியங்கியல் பற்றியும் கற்கத் துவங்கினார். மேலும் மத்தியாஸ் ஸ்ஹெளேய்டன் (Matthias Scheleiden) அவர்களின் செல் பற்றிய கண்டுபிடிப்புகளிலும், தியோடர் ஸ்வான் அவர்களின் ஆற்றல் பரிமாற்ற விதிகளிலும் ஆர்வம் மிக்கவராக இருந்தார் எங்கெல்ஸ்.

முதலாளித்துவ முறை பிறந்த சில ஆண்டுகளிலேயே குறிப்பாக 1857 ஆம் ஆண்டு ஐரோப்பியக் கண்டத்தில் பொருளாதார நெருக்கடி ஏற்படத் துவங்கியது. இப்பொருளாதார நெருக்கடியால் மேலும் உத்வேகமடைந்த எங்கெல்ஸ் “பொருளாதார வீழ்ச்சிக்குப் பிறகே கம்யூனிச மற்றும் சோசலிச புரட்சி இச்சமூகத்தில் சாத்தியப்படும்” என நம்பிக்கை தெரிவித்தார். கட்டுரைகள் பல எழுதிவந்த எங்கெல்ஸ் பிரசுரங்கள் எழுதவும் துவங்கியிருந்த அத்தருணங்களில் “Po and the Rhine” எனும் தலைப்பில் மூன்றாவது நெப்போலியனின் அரசியல் நடவடிக்கைகளை விவரிக்கும் விதத்தில் பிரசுரத்தைப் பெயரின்றி ஜெர்மனியில் வெளியிட்டார். ஜெர்மானிய பாட்டாளிகளுடனான தங்களது உறவை ஏற்படுத்திக் கொள்ளும் விதமாக மார்க்சும் எங்கெல்சும் தாஸ் வொலக்(Das Volk) எனும் ஜெர்மானியப் பத்திரிகையில் தொடர்ந்து பல கட்டுரைகள் எழுதினர்.

1860 ஆம் ஆண்டு மார்ச் மாதம் எங்கெல்சின் தந்தை காலமானார். அவர் இறந்து இரண்டு நாட்களுக்குப் பிறகே  எங்கெல்சால் தனது சொந்த ஊருக்குச் செல்ல முடிந்தது. அவரது தந்தையின் சொத்துக்கள் பங்குபிரித்தபோது மான்செஸ்டர் நகரில் உள்ள எர்மென் மற்றும் எங்கெல்ஸ் நிறுவனத்தில் 10,000 பவுண்டுகள் மதிப்புள்ள பங்குகள் எங்கெல்சுக்கு கிடைத்தது. அவருடைய தந்தையாரின் மரணம் எங்கெல்சை பொருளாதார ரீதியாக உயர்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது. 1863 ஆம் ஆண்டு சனவரி 6 ஆம் தேதி எங்கெல்சின் மனைவி மேரி பர்ன்ஸ் காலமானார்.

சுமார் 19 ஆண்டுகள் தான் பணியாற்றிவந்த நிறுவனத்திலிருந்து 1869 ஆம் ஆண்டு சூன் 30ஆம் தேதி எங்கெல்ஸ் ஓய்வு பெற்றார். மார்க்சின் மகள் எலீனார், எங்கெல்ஸ் ஓய்வுபெற்ற தினத்தை இவ்வாறு நினைவு கூர்ந்துள்ளார். “அன்றைய தினம் நான் ஜெனரல் எங்கல்சுடன் இருந்தேன். சுமார் 19 ஆண்டுகள் அவர் அடைந்த வேதனைகளை நான் நன்கு அறிந்திருந்தேன். அன்று வெகுசீக்கிரமாகவே அலுவலகம் சென்ற எங்கெல்சின் வருகைக்காக நாங்கள் காத்திருந்தோம். சில மணி நேரத்திற்குப் பிறகு தன் கைத்தடியைக் காற்றில் சுழற்றியவாறு முகம் முழுவதும் மகிழ்ச்சி பொங்க, பாட்டு ஒன்றைப் பாடிக்கொண்டே  அவர் வந்தார். பிறகு நாங்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து திராட்சை ஒயினை அருந்தி அந்த மகிழ்ச்சியான தருணத்தைக் கொண்டாடினோம்” எனக் குறிப்பிட்டுள்ளார். அப்பணியிலிருந்து ஓய்வுபெற்றபிறகு எங்கெல்ஸ் தன்னை முழுவதுமாகப் பாட்டாளி வர்க்க இயக்கப் பணியில் ஈடுபடுத்திக் கொண்டார்.

1867 ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேசிய பொதுச்சபைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட முடிவுகளின்படி 1869 மற்றும் 1870 ஆண்டுகளில் அயர்லாந்து நாட்டின் வரலாற்றையும், பல நூற்றாண்டுகளாகப் பிரிட்டிஷ் அரசிடம் அடிமைப்பட்டுக் கிடக்கின்ற இதர நாடுகளைப் பற்றியும் வாசிக்கத் துவங்கினார். இத்தகைய காலகட்டங்களில் அயர்லாந்து நாட்டில் ஏற்பட்ட புரட்சி இயக்கங்களுக்கு ஆதரவாளராகவிருந்த தனது முதல் மனைவி மேரி பர்ன்ஸின் சகோதரி லிஸ்ஜி பர்ன்ஸை மணந்துகொண்டார். “பண்டைய அயர்லாந்து” எனும் தலைப்பில் இரண்டாவது அத்தியாயத்தை எழுதத் துவங்கியபோது 1870 மற்றும் 1871 ஆம் ஆண்டுகளின் இடைப்பட்ட காலங்களில் ஏற்பட்ட பிரான்கோ-பிரஷ்யா போர் பற்றி எழுதுமாறு பாரீஸ் கம்யூன் எங்கெல்சை கேட்டுக் கொண்டது.

1870 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் தேதி லண்டன் நகருக்குக் குடிபெயர்ந்த எங்கெல்ஸ் மார்க்ஸ் வீட்டிற்கு மிக அருகிலேயே வசித்தார். லண்டன் நகருக்குக் குடிபெயர்ந்த நாள்முதல் இருவரும் சந்தித்துப் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

பாரீஸ் நகரத்தில் பாட்டாளிகளின் கிளர்ச்சி:

1871 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் தேதி பாரீஸ் நகர உழைப்பாளிகள் ஆயுதமேந்திய போராட்டத்தைத் துவங்கினார்கள். இக்கிளர்ச்சிப் போராட்டத்திற்கு சில காலம் முன்னரே சர்வதேச ஜெனரல் கவுன்சிலின் உறுப்பினரான எங்கெல்ஸ், பாரீஸ் நகரில் துவங்கிய புரட்சிப் போராட்டங்களைப் பற்றிச் சொற்பொழிவாற்றினார். இதைத் தொடர்ந்து மார்க்சுக்கு எழுதிய கடிதமொன்றில் “பாரீஸ் நகரில் ஆயுதமேந்தி போராடத் துவங்கியுள்ள பாட்டாளி மக்களைக் காப்பாற்ற வேண்டும். ஒரு அமைதியான சூழல் திரும்பும்வரை அனைத்துப் பாட்டாளிகளையும் ஒருங்கிணைப்பதன் மூலம் ஜெர்மன் படைகளிடமிருந்து கிளர்ச்சியாளர்களை ஒடுக்கிவிடாதவாறு காக்க வேண்டும். இல்லையெனில் கிளர்ந்தெழுந்துள்ள பாட்டாளி வர்க்கம் 20 ஆண்டுகளுக்கு முன்னிருந்த அவலநிலையை நோக்கித் தள்ளப்பட்டு விடும்” எனக் கூறினார்.

1871, செப்டம்பர் 17 ஆம் தேதி லண்டன் நகரில் துவங்கிய மாநாட்டில் புரட்சி பற்றி உரையாற்றிய எங்கெல்ஸ் “புரட்சி என்பது உச்சக்கட்டமான ஓர் அரசியல் போராட்டம். இந்தச் சமூகத்தில் உள்ள அவலநிலையை மாற்ற விரும்பும் ஒவ்வொருவரும் புரட்சிக்கான அரசியல் போராட்டங்களிலும், புரட்சிக்காகப் பாட்டாளி மக்களைத் தயார்ப்படுத்துவதில் ஈடுபடுவதும் தலையாய கடமையாகும். பாட்டாளி வர்க்கத்திற்கான நமது அரசியலில் எக்காரணத்தைக் கொண்டும் முதலாளித்துவ கட்சிகளையோ, நிறுவனங்களையோ அண்டிப் பிழைக்கக் கூடாது என்றும், பாட்டாளி வர்க்கத்திற்கென தன்னிச்சையான குறிக்கோள்களும், கொள்கைகளும் அவசியம்” எனக் கூறினார். இம்மாநாட்டிற்குப் பிறகு அகிலத்தின் ஸ்பெயின் மற்றும் இத்தாலி நாட்டிற்கான தொடர்பாடல் குழுவிற்கு செயலாளராக அவர் நியமிக்கப்பட்டார். இதன் மூலம் ஸ்பெயின் மற்றும் இத்தாலி நாட்டில் உள்ள புரட்சியாளர்களுடனான தனது நட்பை வளர்த்துக் கொண்டார்.

பக்கூனிஸ்டுகளுக்கு எதிரான போராட்டம்:

1870 களின் துவக்கத்தில் கற்பனாவாத கம்யூனிச கொள்கைகள் சமூகத்தில் மீண்டும் தலையெடுக்கத் துவங்கியது. பல பாட்டாளி குழுக்களும், சமூக ஜனநாயக வாதிகளும் இணைந்து செயல்படத் துவங்கியிருப்பதை மார்க்ஸ்-எங்கெல்ஸ் மற்றும் இதர விஞ்ஞானரீதியான கம்யூனிஸ்டுகளும் எச்சரிக்கையுடன் கவனித்தனர்.

பக்கூனிஸ்டுகளின் வேலைத் திட்டத்தைப் பகுப்பாய்வு செய்து மார்க்சும் எங்கெல்சும் கீழ்க்கண்டவாறு விவரித்தனர். “அது வெறும் பகட்டான வெற்று வார்த்தைகளால் ஆன கருத்துக் குப்பையைத் தவிர வேறு ஒன்றுமில்லை. இந்தக் கருத்துக்கள் வெகுகாலத்திற்க்கு முன்பே செத்துவிட்டவை. அவை சில முதலாளித்துவ அசடுகளைப் பயமுறுத்துவதற்கு உதவுமேயன்றி வேறு எதுவும் செய்யத் திறனற்றவை அல்லது அகிலத்தின் உறுப்பினர்களுக்கு எதிராகப் போனபார்ட்டிஸ்டுகளோ அல்லது இதர காவல்துறை மற்றும் வழக்குமன்ற அதிகாரிகளோ சாட்சியமாக உபயோகப்படுத்துவதற்கு உதவுமேயன்றி வேறு எதற்கும் பயன்படாது.” அராஜக வாதம், தொழிலாளி வர்க்க இயக்கத்திற்கும் தொழிலாளி வர்க்கத்தின் உண்மையான புரட்சிகரமான தத்துவத்திற்கும் ஒத்துவராததும் பகைமையானதுமாகும் என்று அவர்கள் நிரூபித்தனர்.

1872 – 73 ஆம் ஆண்டு காலங்களில் எங்கெல்ஸ் எழுதிய புத்தகம், கட்டுரை மற்றும் பிரசுரங்கள் என அனைத்திலும், அனைத்து விதமான அராஜகவாதத்திற்கு எதிரான தங்களது கருத்துக்களை வெளியிட்டனர்.

டூரிங்கிற்கு எதிர்ப்பு:

பல்வேறு தரப்பட்ட குட்டி பூர்ஷ்வா கற்பனாவாதக் கருத்துக்களும் புத்தம்புதிய பாணிகளில் பூர்ஷ்வா தத்துவஞான மற்றும் பொருளாதார தத்துவக் கருத்துக்களும் வளர்ந்து கொண்டிருந்தன. யுஜின் டூரிங் (Eugen Duhring) பெர்லின் பல்கலைக் கழகத்தில் துணைப் பேராசிரியராக இருந்தார். அவர் தன்னை “ஒரு புதிய உலகு தழுவிய சர்வாம்ச விஞ்ஞான முறையின் சிற்பி” என்று வர்ணித்துக் கொண்டார். தத்துவ ஞானம், அரசியல் பொருளாதாரம் மற்றும் சோசலிசக் கருத்துக்கள் கொள்கைகள் என எல்லாவற்றையும் விமர்சனம் செய்துவந்த அவர் மார்க்சியத்தையும் தாக்கினார்.

மார்க்ஸ் மற்றும் எங்கெல்சின் செல்வாக்கின்கீழ் கட்சித்தலைவர்கள் டூரிங்கியனிஸத்திற்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்தனர். 1877 ஜனவரி 3 ஆம் தேதியிலிருந்து 1878 ஜூலை 7 ஆம் தேதி வரை எங்கெல்ஸ் ஜெர்மானிய சோசலிஸ்டு தொழிலாளர் கட்சியின் பத்திரிக்கையான வோர்வார்ட்ஸில் தொடர்ச்சியாக விமர்சனக் கட்டுரைகள் எழுதினார். எங்கெல்சின் அக்கட்டுரைகளில் சில பிரசுரங்களாகவும் வெளியிடப்பட்டன.

அவற்றில் தத்துவ ஞானத்தில் இயக்கவியல் பொருள் முதல் வாதம் பற்றி விவரித்துள்ளார். டூரிங், பொருள் மற்றும் அதன் இயக்கங்களை வேறுவேறாகப் பார்த்தார். ஆனால் “பொருளின் இயக்கம் என்பது அப்பொருளின் இருத்தலுக்கான காரணமேயன்றி இரண்டையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்ப்பது தவறாகும்” என்றார் எங்கெல்ஸ்.

மார்க்ஸ் மறைவிற்குப் பின்

1878 செப்டம்பர் 12 ஆம்தேதி எங்கெல்சின் மனைவி லிஸ்ஜெ பர்ன்ஸ் காலமானார். “அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த பாட்டாளியான என் மனைவி என்னுடைய வாழ்க்கையின் மிகவும் கடினமான காலங்களைக் கடந்து செல்வதற்கு உறுதுணையாகவும், பாட்டாளி வர்க்கப் போராட்டத்தில் மிகவும் ஆர்வத்துடனும் ஈடுபட்டிருந்தார்” என எங்கெல்ஸ் கூறினார்.

1881 ஆம் ஆண்டு கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வாடிய மார்க்சின் மனைவி ஜென்னி மார்க்ஸ் அதே ஆண்டு டிசம்பர் மாதம் காலமானார். அப்போது படுத்த படுக்கையாக இருந்த மார்க்ஸ் தனது மனைவியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க இயலவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உடல்நலம் தேறி வந்து கொண்டிருந்த மார்க்சிற்கு அடுத்ததாக மீண்டும் ஒரு துயர நிகழ்வு நிகழ்ந்தது. மார்க்சின் மூத்த மகள் ஜென்னி மார்க்ஸ் 1883, ஜனவரி 11 ஆம் தேதி இறந்தார். மார்க்ஸ்  ஏழ்மையில் வாடிய போதெல்லாம் அவரது குடும்பச் சுமையை எங்கெல்ஸ் ஏற்றுக் கொண்டார். தன் ஆருயிர் மனைவி மற்றும் அருமை மகள் இறந்தபிறகு மிகவும் சோகத்தில் ஆழ்ந்திருந்த மார்க்ஸ் அதே ஆண்டு மார்ச் 14 ஆம் தேதி இரத்தபோக்கு காரணமாக மதியம் 2:45 மணியளவில் நாற்காலியில் அமர்ந்தவாறே உயிர் நீத்தார். அவர் இறந்து மூன்று நாட்களுக்குப் பிறகு மார்ச் 17 ஆம் தேதி லண்டன் ஹைகேட் கல்லறையில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது “அரசுகள், அவை எதேச்சதிகார அரசுகளாயினும் சரி, குடியரசுகளாயினும் சரி, அவர்களுடைய பிரதேசங்களிலிருந்து அவரை வெளியேற்றி நாடு கடத்தினார்கள். பூர்ஷுவாக்கள் அவர்கள் பழமைவாதிகள் ஆயினும் சரி, அதிதீவிர ஜனநாயக வாதிகள் ஆயினும் சரி,  அவர் மீது அவதூறுக் குப்பைகளை எறிவதில் ஒருவருக்கொருவரை மிஞ்சுவதில் போட்டி போட்டனர்.  இவற்றையெல்லாம் அவர் நூலாம்படையைத் தள்ளிவிடுவதைப் போல் துடைத்துத் தள்ளினார்… கோடிக்கணக்கான தோழர்களின் துயரம் பெருக, கண்கள் குளமாக இந்த மாமனிதர் மறைந்து விட்டார். நான் உச்சி மீதிருந்து உறுதியாக ஒன்று கூற முடியும். அவருக்கு எத்தனையோ மாற்றுக் கருத்துக் கொண்டிருந்தவர்கள் இருந்திருந்தாலும் தனிப்பட்ட விரோதி ஒருவர்கூட இருந்ததில்லை. யுகயுகாந்திரத்திற்கு அவர் பெயர் நிலைத்து நின்று நீடித்திருக்கும். அதேபோல் அவருடைய மாபெரும் பணியும் என்றும் நிலைத்திருக்கும்.” இவ்வாறு எங்கெல்ஸ் மார்க்சுக்கு புகழஞ்சலி செலுத்தினார்.

மார்க்சின் மறைவிற்குப் பிறகு ஐரோப்பிய சோசலிஸ்டுகளின் தலைவராகவும், உலக பாட்டாளி வர்க்கத்தினரை வழிநடத்திச் செல்லும் பொறுப்பை எங்கெல்ஸ் ஏற்றார்.

மூலதனத்தின் முதல் தொகுதி மட்டுமே மார்க்ஸ் வாழ்ந்த காலத்தில் வெளியிடப்பட்டது. மூலதனத்தின் மற்ற இரு தொகுதிகளை வெளியிடும் பொறுப்பை எங்கெல்ஸ் ஏற்றுக் கொண்டு திறம்பட செய்து முடித்தார். “இதற்கு மிகவும் கடினமாக உழைக்க வேண்டியது அவசியம். ஏனென்றால் மார்க்ஸ் போன்ற மாமனிதரின் ஒவ்வொரு பொன்னான வார்த்தையும் மிகவும் முக்கியமானது. இவ்வாறு கடினமாக உழைப்பதை நான் மிகவும் மகிழ்ச்சியான தருணமாகவே கருதுகிறேன். ஏனென்றால், என் நீண்ட நாள் நண்பன் மீண்டும் என்னருகில் இருப்பதாகவே உணருகிறேன்” எனக் கூறியுள்ளார். ஒருகால் எங்கெல்ஸ் இல்லாமல் இருந்திருந்தால் மூலதனம் என்னும் அறியப் படைப்பைப் பற்றி நாம் அறிந்து கொள்ளாமலேயே இருந்திருப்போம்.

மார்க்ஸ் இறந்தபிறகு “குடும்பம், தனிச்சொத்து, அரசுஆகியவற்றின்தோற்றம்” என்னும் புத்தகத்தை இரண்டே மாதங்களில் எழுதி முடித்தார். இப்புத்தகத்தில் மனிதகுல வரலாற்றையும், எவ்வாறு மனித சமூகம் பழமையான சமூகத்திலிருந்து தனிச்சொத்தை அடிப்படையாகக் கொண்ட வகுப்புவாத சமூகமாக மாறியது என்பதை விஞ்ஞான ரீதியாக ஆய்வு செய்து விவரித்துள்ளார். “நவீன சோசலிஸத்தின் அடிப்படையான கூறுகளைக் கொண்ட முக்கிய நூல்களில் ஒன்று” என லெனின்  இந்நூலைப் பற்றிக் கூறியுள்ளார்.

மார்க்சின் மறைவிற்குப் பிறகு உலக பாட்டாளி வர்க்க புரட்சியாளர்களை வழிநடத்திய எங்கெல்ஸ் ஐரோப்பியக் கண்டங்களில் உள்ள பல நாடுகளில் சோசலிஸ கட்சிகளைத் தோற்றுவித்ததில் பெரும் பங்காற்றினார். 1885 ஆம் ஆண்டுகளில் பெல்ஜியத்திலும் மற்றும் சுவீடனிலும், 1887 ல் நார்வே நாட்டிலும், 1888ல் சுவிட்சர்லாந்திலும் மற்றும் ஆஸ்திரியாவிலும், 1879 ல் ஸ்பெயினிலும் பொதுவுடைமைக் கட்சிகளைத் துவக்குவதில் அரும்பணியாற்றினார். எங்கெல்சின்  வீடு இருந்த  122, ரிஜென்டு பார்க் சாலை அக்கால புரட்சியாளர்களின் “புனிததளமாகவேகருதப்பட்டது.

1893 ஆம் ஆண்டு ஆயுதக் குறைப்பு பற்றிப் பேசிய எங்கெல்ஸ் “ஐரோப்பாவால் ஆயுதங்களைக் குறைக்க முடியுமா?” என்னும் கட்டுரையொன்றை எழுதினார். அக்கட்டுரையில் உலக அமைதியை நிலைநாட்டவும் ஆயுதப் பெருக்கத்தைத் தடுக்கவும் முதலாளித்துவத்தை எதிர்த்துப் பாட்டாளி வர்க்கம் எவ்வாறு போராட வேண்டும் எனவும் விவரித்துள்ளார். 8 மணி நேர வேலை வேண்டி லண்டன் நகரில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்ட எங்கெல்ஸ் முதலாளித்துவ அமைப்பில் நிகழ்ந்துவந்த மாற்றங்களை உற்றுக் கவனித்து வந்தார்.

1894 ஆம் ஆண்டு தனது உயிலை எழுதிய எங்கெல்ஸ், தனது சொத்தின் பெரும்பான்மையான பகுதியை மார்க்சின் குடும்பத்தினருக்கே எழுதி வைத்தார். தன்னுடைய 74 ஆவது வயதில் பவுல் லஃபர்குவெ (Lafargue) அவர்களுக்கு எழுதிய கடிதமொன்றில் “நான் இரு இளைஞர்களைப் போன்றே பணியாற்ற விரும்புகிறேன். முதலாவது இளைஞனுக்கு 40 வயதும், இரண்டாவது இளைஞனுக்கு 34 வயதுமாக இருக்கவேண்டும்.” (ஆம். தனது 74 வயதை இரண்டாகப் பிரித்துப் பார்த்தார்.)

1894 ஆம் ஆண்டிலிருந்து புற்றுநோயால் அவர் அவதியுற்றார். 19 ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த சிந்தனைவாதிகளில் ஒருவரான எங்கெல்ஸ், 1895 ஆகஸ்டு மாதம் 5 ஆம் தேதி காலமானார். மார்க்சியம் என்ற தத்துவம் நிலைத்திருக்கும் வரையில் எப்படி மார்க்சின் பெயர் நிலைத்திருக்குமோ, அதே போன்று மார்க்சின் இணைபிரியாத் தோழனான எங்கெல்சின் பெயரும் அவரோடு இணைந்து என்றும் நிலைத்திருக்கும்.

அவரது இறுதிச் சடங்கில் சொற்பொழிவாற்றிய வில்ஹெம் லிம்கினெட்ச் “உலக பாட்டாளி வர்க்க மக்களின் தலைவரும், போராளியுமான ஏங்கெல்ஸ் அமைத்துக்கொடுத்த புரட்சிகர பாதையில் நாம் பயணிப்பதின் மூலம் முதலாளித்துவ முறையை அழிக்க முடியும்” எனக் கூறினார்.

“ஜென்ரல் ஏங்கெல்ஸ் இன்று நம்மை விட்டுப் பிரிந்த போதிலும், எண்ணற்ற பாட்டாளி வர்க்க படைகளை வழிநடத்திய தலைவர்களான மார்க்ஸ், ஏங்கெல்ஸின் கருத்துக்களைக் கொண்டு உலகத் தொழிலாளர்கள் ஒன்று கூடுவதன் மூலம் அவர்களுடைய தத்துவார்த்த கோட்பாடுகள் மென்மேலும் வலுவடைவதோடு சுரண்டலற்ற சமுதாயத்தை அமைப்பதில் வெற்றி காண இயலும்” எனப் பவுல் லஃபர்குவெ கூறினார்.

தோழர் லெனின் குறிப்பிடுவதைப் போல, “ஒவ்வொரு பாட்டாளியும் ஏங்கெல்ஸின் வாழ்க்கையை அறிந்து கொள்வது அவசியம்”

தேர்தல்கள் பற்றி மார்க்சும் எங்கெல்சும்

வீ. பா. கணேசன்

இன்று இந்திய சமூகத்தில் அதிகரித்து வரும் அனைத்து வகையான அரசியல், பொருளாதார, சமூக, கலாச்சார சிக்கல்களை இன்றைய அரசியலை அவதானிக்கும் ஒவ்வொருவருமே எதிர்நோக்கி வருகின்றனர். ஓர் எதிர்க்கட்சியின் வேலை என்பது ஆளும் கட்சியின் அனைத்து நடவடிக்கைகளையும் குறைகூறுவது மட்டுமே என்பதற்கு மாறாக கம்யூனிஸ்ட் இயக்கம் சுயமாக பரிசீலித்து, நாட்டை எதிர்நோக்கி வரும் பிரச் சனைகளை எதிர்கொள்வதற்கான தனது செயல் பாட்டிற்கான அணுகுமுறையை உருவாக்கிக் கொள்ள வேண்டியது அவசியமாகும். தொழிற் புரட்சி தலையெடுத்த காலத்தில் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவந்த எண்ணற்ற பிரச்சனைகளை மார்க்சிய ஆசான்கள் அன்று எதிர்கொண்டார் களெனில், இன்றைக்குத் தலையெடுத்துள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் போன்ற, இன்றைய காலப்பகுதியில் நாம் சந்திக்கின்ற, சந்திக்கவிருக் கும் பிரச்சனைகளும் கணக்கில் அடங்காதவையே.

அவ்வகையில் இந்த ஆண்டு மே மாதம் நடை பெற்ற  இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு நாட்டில் உருவாகியுள்ள கடினமானதொரு சூழ்நிலை மார்க்சிய ஆதரவாளர்கள் மத்தியில் பல பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது. உலகின் பல நாடுகளைப் போன்றே இந்தியாவும் வலதுசாரிப் பாதையை நோக்கித் திரும்பியுள்ளதா என்ற கேள்வியும் நம்மிடையே எழுந்துள்ளது.  இத்தகைய பின்னணியில் அரசு, நாடாளுமன்றம், தேர்தல் ஆகியவை குறித்தும் ஒரு தொழிலாளி வர்க்கக் கட்சியின் இலக்குகள் பற்றியும் மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோரின் சீரிய கருத்துக்கள் இந்த விஷயத்தில் தற்கால நடப்புகளை ஆய்வு செய்வதற்கு வழிகாட்டுகின்றன.

ஒரு வர்க்கம் என்ற வகையில் அதன் அளவு எவ்வளவு சிறியதாக இருப்பினும் சரி, அதன் வளர்ச்சி எவ்வளவு குறைவாக இருந்தபோதிலும் சரி, பாட்டாளி வர்க்கம் தன்னை முதலில் ஓர் அமைப்பாகவும், பின்னர் ஓர் அரசியல் கட்சியாக வும் அணிதிரட்டிக் கொள்ள வேண்டும் என்று பாட்டாளி வர்க்கத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க பாத்திரம் குறித்து உறுதிப்பட எடுத்துக் கூறியது மார்க்ஸ்-எங்கெல்ஸின் கம்யூனிஸ்ட் அறிக்கை.

1848-ம் ஆண்டில் ஜெர்மனியில் உருவான கிளர்ச்சிக்குப் பிந்தைய சூழலில், ஒரு நாடாளு மன்றம் உருவாகும் வாய்ப்பு இருக்குமானால் தொழிலாளர்களின் கட்சி தன் வேட்பாளர்களை முன்நிறுத்த வேண்டும் என்றும், அக்கட்சியின் தனிப்பட்ட நடவடிக்கையின் மூலம் வெற்றி பெறும் ஒரு சில வேட்பாளர்களின் இருப்பு அத்தகைய அவையில் மிக முக்கியமானதாகும் என்றும் ஜெர்மன் தொழிலாளர் கட்சியின் மத்தியக் குழுவிற்கு மார்க்ஸ் அறிவுரை வழங்கி யிருந்தார்.

ஜெர்மனியில் புரட்சிகர சூழ்நிலை தணிந்த நிலையில் மார்க்சின் இந்த 1848 மார்ச் மாத கடிதம் கட்சியின் பொதுக் கவனத்திற்கு வைக்கப் படவில்லை என்றபோதிலும், ஜெர்மனியில் முதலாவது வெகுஜன சோஷலிச தொழிலாளர் கட்சி உருவாக்கப்படுவதையும், தனது வர்க்க நலன்களை முன்னெடுத்துச் செல்ல ஜெர்மன் நாடாளுமன்றத்தை அது பயன்படுத்திக் கொள் வதையும் மார்க்ஸ்- எங்கெல்ஸ் ஆகியோரால் தங்கள் வாழ்நாளிலேயே காண முடிந்தது.

அதைப் போன்றே அன்றைய ஜெர்மானிய சமூக ஜனநாயக கட்சியின் தலைவரும், புரட்சிகர கோட்பாடுகளை திருத்தி செயல்பட்டு வந்தவரும் நாடாளுமன்ற வாதத்தில் மூழ்கிப் போனவரு மான பெர்ன்ஸ்டைன் போன்றவர்களின் சந்தர்ப்ப வாதப் போக்கை எதிர்த்து மார்க்சும் எங்கெல்சும் தங்கள் கருத்துக்களை சுட்டிக் காட்டுகையில், நவீன சமூகப் புரட்சியின் மிகப்பெரும் உந்து சக்தியாக விளங்கும் முதலாளி வர்க்கத்திற்கும் பாட்டாளி வர்க்கத்திற்கும் இடையிலான  வர்க்கப் போராட்டத்தை இயக்கத்திலிருந்து ஒருபோதும் அகற்றலாகாது. தொழிலாளி வர்க்கம் தனது சொந்த வர்க்கப் போராட்டத்தின் மூலமாகவே தனது வர்க்கத்தின் விடுதலையை வென்றடைய முடியும் என்பதையும் அவர்கள் ஆழமாக வலியுறுத்தினர்.

ஜெர்மனியில் 1871-ல் வலிவு பெற்ற பிஸ்மார்க் கின் ஆட்சிக் காலத்தில் 1878 முதல் 1891 வரை நடைமுறையில் இருந்த சோஷலிசத்தைத் தடை செய்யும் சட்டங்களுக்கு மத்தியிலும் 1884-ல் 5 லட்சம் வாக்குகளைப் பெற்றிருந்த ஜெர்மன் தொழிலாளர் கட்சியின் செல்வாக்கு 1890-ல் இரண்டு மடங்கானது. அது மீண்டும் 1898-ல் மேலும் இரண்டு மடங்காக உயர்ந்தது. (1912-ல் அக்கட்சி 40 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்கு களைப் பெற்றது.) இந்தப் பின்னணியில் கட்சி யின் வளர்ச்சியை சுட்டிக்காட்டிய எங்கெல்ஸ் ப்ரான்சில் வர்க்கப் போராட்டங்கள் என்ற மார்க்சின் நூலுக்கு 1895-ல் எழுதிய முன்னுரை யில் ஜெர்மன் நாடாளுமன்றத்தைப் பயன்படுத்து வதன் முக்கியத்துவம் குறித்து கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்:

“அனைவருக்குமான வாக்குரிமை என்பது வேறெந்த பயனையும் அளிக்கவில்லை என்றாலும் ஒவ்வொரு மூன்றாண்டுகளுக்கும் நமது ஆதரவாளர் களின் எண்ணிக்கையைக் கணக்கெடுக்க நமக்கு வாய்ப்பளிக்கிறது. தொடர்ச்சியாகவும் துரிதமாக வும் நமக்கு அதிகரித்து வரும் ஆதரவு என்பது நமது வெற்றியை உறுதிப்படுத்தும் அதே நேரத் தில் நம் எதிரிகளுக்கு கலக்கத்தையும் ஏற்படுத்து கிறது. அவ்வகையில் பிரச்சாரத்திற்கான ஒரு கருவியாகவும் அது மாறுகிறது. நமது சொந்த வலிமையையும், நம்மை எதிர்க்கும் அனைத்துக் கட்சிகளின் வலிமையையும் அது நமக்கு உணர்த்துவதோடு நம்மை விட்டு விலகி நிற்கும் விரிவான பகுதி மக்களிடையே தேர்தல் நேரத்தில் சென்று நமது கருத்துக்களை பரப்புவதற்கான வாய்ப்பையும் இவை நமக்கு வழங்குகின்றன. நாடாளுமன்றத்தில் நமது உறுப்பினர்கள் மக்களின் பிரச்சனைகளைப் பேசுவது போலவே, நமக்கு எதிரான தாக்குதல்கள் குறித்தும் மக்களிடையே உரக்கப் பேச முடிகிறது. நமது பொதுக் கூட்டங் கள், பத்திரிக்கைகள் ஆகியவற்றின் மூலமாக மக்களிடம் நாம் பேசுவதை விட மேலும் அதிக மான சுதந்திரத்துடன் நம்மால் பேச முடிகிறது. இந்த விஷயத்தில் நாடாளுமன்றத்திலும் பொது வெளியிலும் சோஷலிச கருத்தோட்டங்களுக்கு எதிரான சட்டங்கள் பயனற்றவை என்பதை நம்மால் தொடர்ந்து நிரூபிக்கவும் முடிந்துள்ளது.” (மார்க்ஸ்-எங்கெல்ஸ் தொகுப்பு நூல்கள் தொகுதி 27, பக். 516)

எனினும் இத்தகைய தேர்தல் வெற்றிகளின் விளைவாக கட்சியின் நீண்ட கால இலக்குகளை கட்சித் தலைவர்கள் ஒதுக்கித் தள்ளும் போக்கை மேற்கொள்வதை உணர்ந்து கொண்ட எங்கெல்ஸ் ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சியில் தலையெடுத்துள்ள இந்தப் போக்கிற்கு எதிராகவும் குரல் கொடுத்தார். 1891-ம் ஆண்டின் கட்சித் திட்டத்திற்கான நகல் குறித்த தனது விமர்சனத்தில் இதைச் சுட்டிக் காட்டிய எங்கெல்ஸ் இத்தகைய சந்தர்ப்ப வாதம் மிகவும் அபாயகரமானது என்றும் குறிப்பிட்டார்.

1871-ம் ஆண்டில் பிரெஞ்சு பாட்டாளி வர்க்கம் மிகக் குறுகிய காலத்திற்கு பாரீஸ் நகரைக் கைப்பற்றியிருந்த போதிலும் இறுதியில் பெரும் அழிவுக்கு வழிவகுத்த பாரீஸ் கம்யூன் நிகழ்வில் கிடைத்த அனுபவத்தைக் கணக்கில் கொண்ட மார்க்சும் எங்கெல்சும் கம்யூனிஸ்ட் அறிக்கையில் ஒரே ஒரு முக்கிய திருத்தத்தை மேற்கொண்டனர். “ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் அரசு இயந்திரத்தை தனக்கு ஆதரவாகவும், தனது நோக்கங்களுக்காகவும் பாட்டாளி வர்க்கத்தால் பயன்படுத்த இயலாது. பொருளாதார ரீதியாக வலிமைமிக்க ஆளும் வர்க்கத்தின் ஆட்சியை நிலைநிறுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட அரசை புதியதொரு சோஷலிச சமூகத்தைப் படைக்க விழையும் தொழிலாளர்கள் கையி லெடுத்து அப்படியே பயன்படுத்திக் கொண்டு விட முடியாது” என்றும் அவர்கள் குறிப்பிட்ட னர்.

மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட நவீன அரசு என்பது கூலி உழைப்பை மூலதனம் பயன்படுத்திக் கொள்வதற்கான ஒரு கருவியே என குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் என்ற தனது நூலில் குறிப்பிடும் எங்கெல்ஸ்  “அனைவருக்குமான வாக்குரிமை என்பது தொழிலாளி வர்க்கம் எந்த அளவிற்கு முதிர்ச்சி அடைந்துள்ளது என்பதைக் காட்டும் ஓர் அளவுமானியே ஆகும். நவீன உலகில் அதுவே போதுமானது. பொதுமக்களின் கருத்தை வெளிப் படுத்தும் இந்த அளவுமானி தொழிலாளர் களிடையே கொதிநிலை அதிகரித்துள்ளதை சுட்டிக் காட்டும்போது, அவர்களும் சரி, முதலாளி களும் சரி, தாங்கள் எங்கே நிற்கிறோம் என்பதை உணர்ந்து கொள்வார்கள்” என்றும் விரிவாக எடுத்துரைத்துள்ளார்.

மார்க்சிய ஆசான்களின் தெளிவான இந்தக் கருத்துக்களை உள்வாங்கி தொழிலாளி வர்க்கத் தின் வலிமையை அதிகரிக்கும் வகையிலான வர்க்கப் போராட்டங்களை மேலும் தீவிரப்படுத்தும் கடமையை மேற்கொள்வதே இன்றைய தேவை யாகும். அதே நேரத்தில் சோஷலிச சமூகம் குறித்த சிந்தனையை பெரும்பகுதி உழைக்கும் மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கான அனைத்து வகையான வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஆசான்களின் அறிவுரை யையும் நாம் முழுமையாக கையகப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியமும் உள்ளது. கம்யூனிஸ்ட் அறிக்கை வெளியாகி 170 ஆண்டுகளுக்குப் பிறகும் கூட, உலகெங்கிலும் பல்வேறு பரிசோதனைகளுக்கும், சோதனை களுக்கும் பிறகும் கூட, சமூகத்தின் அவலங்களுக் கான மாமருந்தாக சோஷலிச கருத்தாக்கம் செயலூக்கம் மிக்கதொரு தத்துவமாக இன்றள வும் தொடர்ந்து நீடித்து வருகிறது. சமகாலப் பிரச்சனைகளை இணையற்ற உத்வேகத்துடன் எதிர்கொண்ட மார்க்சும் எங்கெல்சும் வழங்கி யுள்ள அறிவுரைகள் நமக்கு உரிய வழிகாட்டும் கலங்கரை விளக்கங்கள் என்பதை உணர்ந்து செயல்படுவதே இக்காலப் பகுதியின் தேவையாகும்.

கீழ் வெண்மணி 50 ஆண்டுகள்: தஞ்சைக் களத்தில், உழைக்கும் வர்க்கத்தின் போராட்டம் !

 • இரா. சிந்தன்

கீழ் வெண்மணியில் நிகழ்த்தப்பட்டபடுகொலைகள், தனித்த சம்பவம் அல்ல. அது கீழத் தஞ்சையில் (இப்போதைய நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில்) கூர்மையடைந்திருந்த வர்க்கப் போராட்டத்தின் வெளிப்பாடே.

பிரிட்டிஷ் காலனியாதிக்க காலமாக இருந்தாலும், இந்திய விடுதலைக்கு பிறகான சூழலிலும், மாநிலத்தில் ஆட்சி மாறிய பின்னணியிலும், தொடரும் வர்க்கப் போராட்டத்தின் உக்கிரத்தை வெளிக்காட்டும் நிகழ்வுகளில் ஒன்றே கீழ்வெண்மணி தியாகம் ஆகும்.

பிரிட்டிஷ் ஆதிக்க காலம் :

அப்போதைய தஞ்சாவூர் இந்திய அரிசி உற்பத்தியில் சுமார் 30 சதவீதத்தை கொடுத்து வந்தது. வளமான இப்பகுதியில் விவசாயிகளும் தொழிலாளர்களும் பல்வேறு வகைகளில் சுரண்டப்பட்டார்கள். அரசனுக்கும்,கோயிலுக்கும் விளைச்சலில் பங்கு, இலவச உழைப்பு, காவல் வரி, தொழில் வரி (இறை) ஆகியவை நிலவின. வட்டி திரும்ப செலுத்த முடியாதவர்கள், உரிய வரி செலுத்த முடியாதவர்களின் நிலங்கள் பிடுங்கப்பட்டன. மேலும்,பிரம்மதேயம் உள்ளிட்டு கட்டாயமாக நிலம் தானம் பெறப்பட்டது. இவையெல்லாம் நிலவுடமை ஏகபோகங்களை வளர்த்தன.

1799 ஆம் ஆண்டு முதல் பிரிட்டிஷ் ஆளுகையில் வந்தது தஞ்சை. பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு லாபவெறியே அடிப்படையாக இருந்தது. அவர்கள் பழைய நில உறவுகளின் ஒடுக்குமுறைகளை பயன்படுத்திக் கொண்டார்கள். மேலும் துல்லியமாக்கினார்கள்.

நிலத்தில் நேரடியாக உழைப்பவர்களுக்கும், காலனி அரசுக்கும் இடையில் ஜமீன்தார்கள், பண்ணையார்கள், மடங்கள் என்ற  இடைத்தட்டினை காலனி அரசு பயன்படுத்திக்கொண்டது. காலனி அரசு இந்த இடைத்தட்டு பகுதியிடம் வரி வசூல் செய்துகொள்ளும். நேரடியாக நிலத்தில் உழைப்பவர்களிடம்,  இடைத்தட்டு பகுதியினர் வரி வசூல் செய்து கொள்வார்கள் என்ற ஏற்பாடு உருவாக்கப்பட்டது. “விவசாயிகளிடம் அவர்கள் எப்படியும் வசூலிக்கலாம், வேலை வாங்கலாம். அதற்கு அரசு நிர்வாக அமைப்பு பூரண உதவி செய்யும்.” என விவரிக்கிறார் கோ.வீரய்யன்.

(ஆதாரம்: விவசாய இயக்கத்தின் வீர வரலாறு)

‘(தனது) மூலதனத்திற்கு சராசரி லாபத்தைக் கூட (விவசாயி) அடைய முடியாத நிலையில் நிலப்பிரபு (நில)வாரத்தை (அதாவது குத்தகைத் தொகையை) நிர்ணயிக்கிறார். அதன் மூலம் கொள்ளையடிக்கிறார்” என இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் தனது ‘மார்க்சியமும் நிலவாரமும் என்ற கட்டுரையில் குறிப்பிடுவதைப் போலவே, தஞ்சையிலும் சுரண்டல் நிலவியது. பிரிட்டிஷ் முதலாளிகள், பழைய நிலைமைகளை மாற்றினார்கள், அதே சமயம் தங்கள் சுரண்டலுக்கு ஏதுவாக, முதலாளித்துவத்திற்கு முந்தைய சுரண்டல் அமைப்பையும் தக்க வைத்துக் கொண்டார்கள்.

அதிகமான வரி வசூல் மட்டுமல்ல; இலவச உழைப்பு, நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாதவர்களுக்கு கொடூரமான தண்டனைகளும் தஞ்சை முழுவதும் நிலவி வந்தன. ரயத்துவாரி நிலப்பிரபுக்களுக்கு சொந்தமாக பண்ணைகள் இருந்தன. அங்கேயே குடி வைக்கப்பட்டிருந்த பண்ணைகளில் அடிமைகள் ஒட்டச் சுரண்டப்பட்டார்கள். மிக மோசமான தீண்டாமை வடிவங்கள் நிலவின. சாணியைக் கரைத்து வாயில் ஊற்றுவது (சாணிப்பால்), சவுக்கடி வழங்குவது ஆகிய மனிதத் தன்மையற்ற தண்டனைகளும், பொதுக்கிணறுகள், ஆற்று நீர், சாலை, கோயில் வழிபாடு மற்றும் கல்வி மறுப்பு நிலவியது. இக்கொடுமைகளில் இருந்து தப்பித்து ஓட முயன்றவர்கள் பிடித்து வரப்பட்டு கடுமையாக தண்டிக்கப்பட்டனர்.

லாபவெறியும்,எதிர்ப்பு இயக்கமும்:

உலக நிலைமைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் தஞ்சை விவசாயிகளுடைய வாழ்க்கையிலும், விவசாயத் தொழிலாளர்களுடைய வாழ்க்கையிலும் நேரடி தாக்கங்களை ஏற்படுத்தின. இரண்டாம் உலகப் போரின் காலத்தில், தஞ்சையிலும் சுரண்டலும், அடக்குமுறைகளும் கடுமையானது. போர்க்காலத்தில், தானியங்களை அதிக விலையில் விற்று கொள்ளை லாபம் பார்க்கும் வெறியுடன் உற்பத்தியை அள்ளிச் சென்றார்கள் காலனியாதிக்கவாதிகள். மக்களின் உணவுக்குக் கூட கையிருப்பு இல்லாத விதத்தில், தஞ்சைப்பகுதி நிலப்பிரபுக்களும், மடங்களும் விளைபொருட்களை எடுத்துக் கொண்டார்கள். உணவுப் பஞ்சத்தினாலும், கொள்ளை நோய்களாலும் மக்கள் செத்து மடிந்தார்கள்.

5,000 – 6,000 ஏக்கர் நிலச் சொந்தக்காரர்களான குன்னியூர் சாம்பசிவ அய்யர், வலிவலம் தேசிகர், பூண்டி வாண்டையார், கபிஸ்தலம் மூப்பனார் போன்ற நிலப்பிரபுக்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்தனர். வடபாதி மங்கலம், நெடும்பலம் போன்ற பகுதிகளில் இருந்த நிலப்பிரபுக்கள் திராவிட இயக்க ஆதரவாளர்களாக இருந்தனர். (`தென்பரை முதல் வெண்மணி வரை’ மு.அப்பணசாமி) 1937 டிசம்பர் மாதத்தில் நீடாமங்கலத்தில் நடந்த தென்தஞ்சை மாவட்ட காங்கிரஸ் கட்சி மாநாட்டில் சமபந்தி போஜனம் நடைபெற்றது. இதில் சாப்பிட்ட தாழ்த்தப்பட்ட தொழிலாளர்களை நிலவுடைமையாளர்கள் கட்டி வைத்து அடித்தார்கள். அவர்களே காங்கிரஸ் கட்சியில் கோலோச்சினார்கள்.

அடக்குமுறைகளை மக்கள் அமைதியாக ஏற்கவில்லை. சுரண்டலுக்கும், ஒடுக்குமுறைகளுக்கும் எதிர்ப்பு இயக்கங்கள் உருவாகின. 1936-39ஆண்டுகளில் மணலூர் மணியம்மை என்ற கைம்பெண், வைதீக ஆச்சாரங்களையும், பண்ணையார்களையும், பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தையும் எதிர்த்து மக்களைத் திரட்டினார். விவசாயிகள் சங்கம் சேர்வதை ஊக்குவித்தார். முதலில் காங்கிரஸ் கட்சியில் செயல்பட்ட அவர், பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து இயங்கினார். (1954 ஆம் ஆண்டில் அவர் கொல்லப்பட்டார்.).

ஒடுக்குமுறைகளுக்கு எதிராக விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளர்களையும் திரட்ட கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்தது. தஞ்சையில் நிலவி வந்த தீவிர ஒடுக்குமுறைகளை அறிந்த கட்சி, பி. சீனிவாச ராவை இப்பகுதிக்கு அனுப்பி வைத்தது. மதராஸ் மாகாணத்தின் தென் கர்நாடகப் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசராவ். தமிழ் பேசுவார்; ஆனால் எழுதவோ படிக்கவோ தெரியாது. தஞ்சைக்கு வந்த அவரது வழிகாட்டுதலில் சாதி ஒடுக்குமுறைகளுக்கும், சுரண்டலுக்கும் எதிராக உழைக்கும் மக்களை அணிதிரட்டினார்கள் கம்யூனிஸ்டுகள்.

‘ஆரம்பத்தில் சாதி இந்துக்களான வார தாரர்களும் குத்தகைதாரர்களும் சிறு விவசாயிகளும் விவசாயிகள் சங்கத்தை சரிவர புரிந்து கொள்ளாமல் சந்தேகப்பட்டுக் கொண்டிருந்தனர். விவசாயிகள் சங்கத்தை ஆதிதிராவிடர்களின் சாதி சங்கம் என்று நினைத்தார்கள். சாதி வெறுப்பு அதிகமாய் இருந்தபடியால் விவசாயிகள் சங்கத்தின் கொள்கைகளையும், திட்டத்தையும் பற்றி அறிந்துகொள்ள அவர்களுக்கு காலதாமதமாயிற்று’ என விவரிக்கிறார் சீனிவாசராவ். தென்பரை கிராமத்தில் 1943 ஆம் ஆண்டு விவசாயிகள் சங்கத்தின் (கிசான் சபை) முதல் கிளை உருவாக்கப்பட்டது.

சாதி இந்துக்களின் வெறுப்பு மனநிலையை பயன்படுத்தி, உழைக்கும் மக்களிடையே பிரிவினையை உருவாக்க பண்ணையார்கள் முயற்சித்தனர். விவசாயிகள் சங்கம் இந்த சூழ்ச்சியை புரிந்துகொண்டது. சாதி ஆதிக்கத்திற்கு எதிரான களத்தில் நின்று, உழைக்கும் மக்கள் ஒற்றுமையை முன்னெடுத்தது. தோளில் துண்டு அணியக் கூடாது, வேட்டி அணியக் கூடாது, செருப்பு அணியக் கூடாது, தேநீர் வழங்குவதில்  பாகுபாடு (இரட்டைக் குவளை, சந்து வழியாக வழங்குவது), தண்ணீர் வழங்குவதில் பாகுபாடு என அங்கு நிலவிய சாதிக்கொடுமைகளுக்கு எதிரான போராட்டங்களை கம்யூனிஸ்டுகள் தலைமையேற்று நடத்தினர். அதே சமயம், பண்ணையாட்களையும், விவசாயிகளையும் ஒட்டச் சுரண்டிக் கொண்டிருந்த பண்ணையார்கள், மடாதிபதிகள், மிராசுதார்களுக்கு எதிரான போராட்டங்களும் வலுப்பட்டன.

தென்பரை கிராமத்தில் உத்திராபதி மடத்திற்கு சொந்தமான நிலத்தில் உழைத்து வந்த குத்தகை விவசாயிகள், குத்தகையாக 82 சதவீத விளைச்சலைக் கொடுத்துக் கொண்டிருந்த நிலைமையை மாற்றி 33 சதவீதம்தான் தர முடியும் என சங்கம் முடிவு செய்தது .உடனே சங்க செயலாளராக இருந்த வீராசாமியை, 3 ஏக்கர் குத்தகை நிலத்திலிருந்து விரட்டியது உத்திராபதி மடம். சங்கத்தை அனுமதிப்பதை விட பயிர்கள் வயலிலேயே கருகட்டும் என முடிவு செய்தனர் மடத்தினர். விளைந்த நெல்லை அறுவடை செய்ய தடை போட்டார்கள். ஆனால் குத்தகை விவசாயிகள் உத்தரவை மீறினார்கள். போராட்டம் குறிப்பிடத்தக்க வெற்றியடைந்தது.

பெரும்பகுதி தாழ்த்தப்பட்டவர்களாக இருந்த விவசாயத் தொழிலாளர்களுக்கு கண்ணியமான வாழ்க்கையை மறுத்த வன்கொடுமைகளுக்கு எதிரான போராட்டங்களை கம்யூனிஸ்டுகள் வழிநடத்தினர். போராட்டத்தை ஒடுக்க அடியாட்களை ஏவினார்கள் பண்ணையார்கள். ஆனால் கம்யூனிஸ்டுகளின் உறுதியான போராட்டம், அரசு நிர்வாகத்தை தலையிடச் செய்தது. அடுத்தடுத்த வெற்றிகள் கம்யூனிஸ்டுகள் மீது நம்பிக்கையை அதிகரித்தது. இந்தச் சூழலில் இந்தியா விடுதலையடைந்தது.

இந்திய விடுதலையும், அடக்குமுறையும்:

காலனியாதிக்கம் முடிவுக்கு வந்ததென்றாலும், அது நிலஉறவுகளில் உடனடி மாற்றங்களைக் கொண்டு வரவில்லை. மாறாக கம்யூனிச இயக்கத்தை அடக்கும் முயற்சிகள் தொடங்கின. 1948 முதல் 1951 வரை நான்கு ஆண்டுகளுக்கு தஞ்சையில்144 தடை உத்தரவு அமலில் இருந்தது. இந்த உத்தரவு கம்யூனிஸ்ட் இயக்கத்தை பலவீனப்படுத்தவே பயன்படுத்தப்பட்டது.

தலைவர்கள் தலைமறைவாக இயங்கினார்கள். சுதந்திர இந்தியாவில் போராட்டக் களத்தில் கைது செய்யப்பட்ட களப்பால் குப்பு, திருச்சி சிறையில் விஷம் கொடுத்து கொல்லப்பட்டார். பொய் வழக்குகள் புனையப்பட்டன. நிலப்பிரபுக்களுடன் சமரசம் செய்துகொண்ட இந்திய அரசின் வர்க்கத்தன்மை மிகத் தெளிவாக வெளிப்பட்டது.

இக்காலகட்டத்தில், முதல் சட்டமன்றத் தேர்தல் நடந்தது. தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 6  தொகுதிகளில் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது. மக்களிடம் கம்யூனிஸ்டுகளுக்கு இருந்த செல்வாக்கு வெளிப்பட்டது. அடக்குமுறைகள் பலிக்கவில்லை என உணர்ந்து கொண்ட ஆளும் வர்க்கம் இறங்கி வர நேர்ந்தது. ஜமீன் ஒழிப்பு, இனாம் ஒழிப்பு சட்டங்கள், விவசாயிகளுக்கு மூன்றில் ஒரு பங்கு வாரம், பண்ணையாட்களுக்கு கூலி ஒப்பந்தங்கள் என சில மாற்றங்கள் இந்தப் பின்னணியில்தான் ஏற்பட்டன.

இக்காலத்தில், நிலச் சீர்திருத்தசட்டம் வந்தபோதும் பெரும்பகுதி நிலம் ஏகபோகத்திலேயே தொடர்ந்தது. பெற்ற சட்டங்களை அமலாக்குவதற்காகவும் போராட வேண்டியிருந்தது.

உதாரணமாக ‘தஞ்சாவூர் பண்ணையாள், சாகுபடிதாரர் பாதுகாப்புச் சட்டத்தை’ தமிழகம் முழுமைக்கும் அமலாக்க கம்யூனிஸ்ட்டுகள் வலியுறுத்தினார்கள். இதற்காக  சிதம்பரத்தில் விவசாயிகள் பெருந்திரளாக போராடினார்கள். சிதம்பரம் வட்டத்திற்கு மட்டும் அச்சட்டம் விரிவாக்கப்பட்டது. இப்படி படிப்படியாகவே மாற்றங்கள் சாத்தியமாகின. இனாம் ஒழிப்புச்சட்டத்தின்படி நிலம் எடுக்கும் பட்டியலில் 198 கிராமங்களை இணைக்க 17 ஆண்டுகள் போராட வேண்டியிருந்தது. இந்திய விடுதலையும், மெல்ல மெல்ல ஏற்பட்ட மாற்றங்களும், நில உறவுகளை மாற்றியமைத்தன. பண்ணை அடிமைச் சுரண்டல் வீழ்த்தப்பட்டு, கூலி உழைப்பு முறை வந்தது.

1959 ஆம் ஆண்டில் விவசாயத் தொழிலாளர் சங்கம் உருவாக்கப்பட்டது. கூலி உயர்வு, கூலி ஒப்பந்தங்களுக்கான கோரிக்கைகள் எழுந்தன. எனவே தங்கள் ஏகபோகத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன், மிராசுதார்கள் நெல் உற்பத்தியாளர் சங்கத்தை உருவாக்கினார்கள். அவர்கள் கூலிஉயர்வை மறுத்தது மட்டுமல்ல; கூலியை உயர்த்திக் கொடுக்கக்கூடாதென்று சிறு நிலவுடமையாளர்களுக்கும் தடை  போட்டார்கள்.

கூலி உயர்வுப் போராட்டங்களை திராவிட இயக்கம் விமர்சித்தது. வர்க்கப் போராட்டம் தீவிரமடைந்த சூழலில், திராவிட இயக்கத்தின் இந்த நிலைப்பாடு விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களிடையே கேள்விகளை உருவாக்கின. இப்பகுதியில் குறிப்பிடத்தக்க வகையில் செயல்பட்டுவந்த திராவிட விவசாயிகள் சங்கத்திற்குள் அதிர்வுகள் ஏற்பட்டன.

ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் ஏ.ஜி.கஸ்தூரிரங்கன் உள்ளிட்ட திராவிட விவசாயிகள் சங்கத்தினர் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணைந்தார்கள். 1963, கம்யூனிஸ்ட் இயக்கத்திற்குள் தத்துவார்த்த மோதல் வலுவாக நடந்து வந்த காலம். 1964 ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கட்சி உருவானது. கீழத்தஞ்சையில் வர்க்க இயக்கத்தை மார்க்சிஸ்ட் கட்சி வழிநடத்தியது.

மாநிலத்தில் ஆட்சி மாற்றம்:

சில ஆண்டுகளில், (1967)  தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சியுடன் தொகுதி உடன்பாடு கொண்டு தேர்தலை சந்தித்தது திமுக. தேர்தல் முடிவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்து, திமுக ஆட்சியமைத்தது. அரசு இயந்திரம் எப்போதும் போல் தன் வர்க்கத்திற்கு சேவையாற்றியது.

1957 ஆம் ஆண்டிலேயே கேரளத்தில் அமைந்த கம்யூனிஸ்ட் அமைச்சரவை, தொழிலாளர் பிரச்சனைகளில் காவல்துறை தலையிடாது என கொள்கையை மேற்கொண்டது.  பிராந்திய முதலாளித்துவ கட்சியான திமுக, நிலவுடைமையாளர்களோடு சமரசம் செய்துகொண்டது. திமுக ஆட்சியில் ‘கிசான் போலீஸ்’ என்று அழைக்கப்பட்ட காவலர்கள் உள்ளூர் அளவில் மிராசுதார்களின் அடக்குமுறைகளுக்கு சாதகமாக செயல்பட்டனர். கம்யூனிஸ்ட் இயக்கத்தை ஒடுக்குவதற்கான ஏற்பாடாகவே அது இருந்தது. கூலி உயர்வுக்காக முத்தரப்பு பேச்சுவார்த்தையை விவசாயத் தொழிலாளர்கள் வலியுறுத்தியபோது, திமுக அரசாங்கம்  அதை ஏற்கவில்லை.

1966 அக்டோபர் 6 ஆம் தேதி பூந்தாழங்குடி கிராமத்தில் நடைபெற்ற போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் பக்கிரி என்ற விவசாயத் தொழிலாளர் கொல்லப்பட்டார். மிகப்பெரும் எழுச்சி வெடிக்கும் என்ற நிலையில்தான் முத்தரப்பு பேச்சுவார்த்தை சாத்தியமானது.

வெண்மணி என்ற கொதிகலன்:

நாகப்பட்டினம் வட்டத்தில் நெல் உற்பத்தியாளர் சங்கத்தின் ஒரு கிளை இருஞ்சூர் கோபால கிருஷ்ண நாயுடு என்ற காங்கிரஸ்காரரின் கட்டுப்பாட்டில் இருந்தது. கம்யூனிச இயக்கத்தின் முன்னே தங்கள் சுரண்டல் சாம்ராஜ்யம் நொறுங்குவதை மிராசுதாரர்களால் ஏற்க முடியவில்லை. எத்தகைய அடக்குமுறைக்கும் தயாரானார்கள்.

சிக்கல் பக்கிரி கொல்லப்பட்டார். நிலக்கிழாராக இருந்தும் விவசாய தொழிலாளர்கள் பக்கம் நின்ற கீழக்கரை ஏ.ஜி.ராமச்சந்திரன் போலீசார் முன், வயலில் வெட்டிக் கொல்லப்பட்டார். இக்கொலைகளை கண்டித்து பொதுக்கூட்டம் நடந்த நாளிலேயே சின்னப்பிள்ளை கடத்தி கொல்லப்பட்டார். மேலும், நெல் உற்பத்தியாளர் சங்கம் நடத்திய பொதுக்கூட்டத்தில் ‘வெண்மணி சேரியை தீ வைத்து கொளுத்துவோம்’ என்று எச்சரித்து பேசினார்கள். எதிர்  வரவுள்ள சூழல் கடுமையாக இருக்கும் என்பதை கம்யூனிஸ்டுகள் உணர்ந்தார்கள்; எச்சரித்தார்கள். ஆனால், அரசு இயந்திரம் திட்டமிட்ட மெத்தனத்துடன் இயங்கியது. காங்கிரஸ் தலைவர் காமராஜர், விவசாயத் தொழிலாளர்கள் மீதே குற்றஞ் சாட்டிக் கொண்டிருந்தார்.

19.09.1968 அன்று மத்திய, மாநில அரசு ஊழியர்கள் குறைந்தபட்ச சம்பளம் கேட்டு நடத்தியபோராட்டத்திற்கு ஆதரவாக தஞ்சையில் விவசாயத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள். அதில் கீழ்வெண்மணி தொழிலாளர்களும் பங்கெடுத்துக் கொண்டார்கள். இதிலிருந்து அப்பகுதியில் நிலவிய அரசியல் உணர்வையும், உறுதிப்பாட்டையும் உணர்ந்து கொள்ள முடியும். பண்ணையார்கள் இந்த அரசியல் உறுதிப்பாட்டை ஒடுக்க நினைத்தார்கள். இப்போராட்டத்தில் பங்கெடுத்ததற்காகவும் சேர்த்து ரூ.250 அபராதம் விதித்தார்கள்.

டிசம்பர் 25 ஆம் தேதி இரவில் காவல் துறையும்,கோபாலகிருஷ்ண நாயுடு தலைமையில் சென்ற ரெளடிகளும் கீழ் வெண்மணி கிராமத்தை சூழ்ந்து கொண்டு தாக்கினர். தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக ராமய்யாவின் குடிசைக்குள் 48 பேர்  மறைந்து கொண்டார்கள். குடிசையின்  கதவைப் பூட்டினார்கள் ஏவலாட்கள். குடிசைக்கு நெருப்பு வைக்கப்பட்டது. தீயின் வெப்பம் தாளாமல் தப்பி ஓடியவர்கள் 6 பேர். அவர்களில் இருவரைப் பிடித்து மீண்டும் நெருப்புக்குள் வீசினார்கள் அடியாட்கள். ஒரு தாய் தன்னுடைய ஒரு வயது குழந்தையை நெருப்பில் இருந்த காப்பாற்றுவதற்காக வெளியே வீசினாள். பச்சிளம் குழந்தையென்றும் பாராமல் அதை மீண்டும் நெருப்பில் தூக்கியெறிந்தார்கள். வெளியிலிருந்து இச்சம்பவங்களை பார்த்து அலறிய குழந்தைகளையும் தாக்கினார்கள்.

சம்பவம் நடைப்பெற்ற அன்று இரவு எட்டு மணிக்கு கீவளுர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நள்ளிரவு 12-மணிக்கே காவல் துறையினர் வந்தனர். கனன்று கொண்டிருந்த குடிசையின் உள்ளே மனித உயிர்கள் சாம்பல்களாகி விட்டிருந்தன. இரவு இரண்டு மணிக்கு தீயணைப்புப் படை வந்தது. காவல் அதிகாரிகள் அடுத்த நாளில்தான் வந்தார்கள்.

1969 ஜனவரி 12 ஆம் தேதி, பீப்பிள்ஸ் டெமாக்ரசி இதழில் பி.டி.ரணதிவே பின்வருமாறு எழுதினார்: “சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிடும் என்ற காங்கிரஸ் பிரச்சாரத்திற்கு அஞ்சியும், தன் கட்சிக்குள் இருக்கும் நிலவுடைமையாளர்கள் அழுத்தத்திற்கு பணிந்தும், தாமதத்திற்கு (திமுக)  அமைச்சரவை வழிவகுத்தது, அது பின்னவர்கள் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நிலையெடுக்க ஊக்கமளித்தது” .

யார் யார், எந்தப் பக்கம் என தெளிவானது:

வெண்மணியின் தியாகமும் அதன் தொடர்ச்சியான நிகழ்வுகளும், வர்க்கப் போராட்டக் களத்தில் யார், எந்தப் பக்கம் நிற்கிறார்கள் என்பதை உணர்த்துகின்றன.

கோபாலகிருஷ்ண நாயுடு உட்பட இப்படுகொலையை முன்நின்று நடத்தியவர்களில் பலர் காங்கிரஸ்காரர்கள். காவல்துறையை கையாண்ட திமுக அரசாங்கம், மிராசுதார்களுக்கு சாதகமாக நடந்து கொண்டது. மேலும், பெரியார் தலைமையில் செயல்பட்ட திராவிடர் கழகமும், கூலி உயர்வுப் போராட்டங்களையே வன்முறைக்கு காரணமாக கற்பிக்க முயன்றது.

மேலும், வெண்மணி படுகொலைகள் குறித்து செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகள் “விவசாயிகள் இருபிரிவினர் இடையே நடைபெற்ற மோதலைத் தொடர்ந்து” படுகொலைகள் நடந்ததாகக் கூறின. “விவசாய பணிகளுக்கு அமர்த்தப்பட்ட வெளியாட்களை 200 பேர் சூழ்ந்து கொண்டு தாக்கி, கொலை செய்ய முயன்றதால் மோதல் மூண்டதாகவும், அந்த மோதலில் துப்பாக்கிச் சூடு நடந்திருக்கலாம்” என்றும் தெரிவித்தன.

இதுகுறித்து எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி ‘கீழவெண்மணி கொலை பாதகம் பற்றிய செய்திகளை தீக்கதிரில் தேடித் தேடிப் படித்தேன். எல்லா இதழ்களும் மௌனம் சாதிக்கிற தருணத்தில் இந்த தீக்கதிர் இதழ் மட்டும் இந்தச் செய்தி பற்றிய பேருண்மைகளை சத்தம் போட்டுச் சொன்னது’ என்கிறார்

இவ்வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு இன்னமும் அப்பட்டமாய் மிராசுதார்களை ஆதரித்தது “இந்த வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ள அனைத்து 23 குற்றவாளிகளும் மிராசுதாரர்களாக இருப்பதும் திகைக்க வைக்கும் விஷயமாக உள்ளது. இவர்களில் பெரும்பாலோர் பெருமளவு நிலத்தைச் சொந்தமாகக் கொண்டுள்ள பணக்காரர்கள். முதலாவது குற்றவாளி கார் ஒன்றை சொந்தமாகக் கொண்டிருக்கிறார் என்பது தெளிவு. இத்தகைய மிராசுதாரர்களா இடது கம்யூனிஸ்ட் விவசாயிகளைப் பழிவாங்கும் அளவுக்கு பலவீனமான எண்ணம் கொண்டிருப்பார்கள்(?)” என வியாக்கியானம் கொடுத்தது நீதிமன்றம்.

போராட்டக் கனல் அணையவில்லை:

நிலவுடைமைச் சுரண்டலுக்கு எதிராகவும், அதன் சாதி ஆதிக்கத்திற்கு எதிராகவும் உழைக்கும் மக்களைத் திரட்டி, தெளிவான தாக்குதலைத் தொடுத்து வந்த கம்யூனிஸ்ட் இயக்கம், தொடர்ந்து முன்னேறியது. படுகொலைகளும், அடக்குமுறைகளும் ஏவப்பட்டன. உண்மைகளை இருட்டடிக்க முயற்சி நடந்தது. விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் பல உயிர்த் தியாகங்களைச் செய்து போராடினார்கள், நிலவுடைமை ஏகபோகத்தை தாக்கினார்கள். உடைப்பை ஏற்படுத்தினார்கள். அரசியல், சமூகத் தளங்களில் வெற்றிகள் கிடைத்தன.

கீழ்வெண்மணி படுகொலைகளை விசாரிக்க அமைக்கப்பட்ட கணபதியா பிள்ளை ஆணையம், கீழத்தஞ்சையில் நிலவிய கடுமையான உழைப்புச் சுரண்டலை வெளிக்கொண்டு வந்தது. அதன் அடிப்படையில் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இச்சட்டம் முதலில் தஞ்சையிலும், அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அமலாகின.

1970களில் நில விநியோகத்திற்கான இயக்கங்கள் வேகம் பிடித்தன. நிலச்சீர்திருத்தத்திற்கான முந்தைய சட்டம் திருத்தப்பட்டது. 1970 முதல் 1991 வரையிலான காலகட்டத்தில் திருவாரூர், நாகை மாவட்டங்களில் சாகுபடிக்கு தகுதியான சுமார் 6 லட்சம் ஏக்கர் நஞ்சை நிலத்தில் சுமார் 3 லட்சம் ஏக்கர் நிலம், நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு விநியோகிக்கச் செய்தது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் பழைய நில உறவுகள் இயல்பாக மாறிவிடவில்லை. சாதீய ஒடுக்குமுறைகளை வீழ்த்தவும், நிலவுடைமை ஏகபோகத்தை தகர்க்கவும் ஒன்றுபட்ட போராட்டங்களும், அளப்பரிய தியாகமும் தேவைப்பட்டன. வர்க்கப் போராட்டமே மேம்பட்ட சமுதாயத்தை உருவாக்கும் என்ற பாடத்தை கீழத்தஞ்சை கம்யூனிஸ்ட் இயக்கம் நமக்கு கற்பிக்கிறது.

சமுதாய மாற்றம் பற்றிய மார்க்சீய சித்தாந்தத்தில் தத்துவம் வகிக்கும் பங்கு

பி. டி. ரணதிவே

(இக்கட்டுரை, மார்க்ஸ் நினைவுநாள் நூற்றாண்டை ஒட்டி பி.டி.ரணதிவே எழுதிய கட்டுரையின் சுறுக்கம்)

மார்க்ஸ் மறைவின் நினைவு நூற்றாண்டைக் கொண்டாடும் இவ்வேளையில் மற்றொரு பேரறிஞரான பிரடரிக் எங்கல்சுடன் இணைந்து மார்க்ஸ் உருவாக்கித்தந்த தத்துவம் தொடர்ந்து வெற்றிகரமாக முன்னேறி வருவதைக் காண்கிறோம். சமுதாய வளர்ச்சி மற்றும் மாற்றங்கள் பற்றிய மார்க்சிய சித்தாந்தம் இறந்த காலத்தைப் பற்றி புரிந்துகொள்வதற்கு மட்டுமல்ல, சமுதாய மாற்றத்தின் விதிகளுக்கு உட்பட்டு உணர்வுப் பூர்வமாக வரலாற்றை உருவாக்குவதற்கு இன்று மக்களுக்குத் துணை நிற்கிறது.

வரலாறெங்கும் காணக்கிடைக்கும் புரட்சிகளிலேயே சோசலிசப் புரட்சிதான் முதன் முதல் உணர்வுபூர்வமாக நடத்தப்பட்ட புரட்சியாகும். அதாவது புரட்சியின் முன்னணி சக்திகள் தங்களது குறிக்கோள்களையும் லட்சியங்களையும் முழுவதுமாக உணர்ந்து செயல்பட்டு உருவாக்கிய புரட்சியாகும்.

அனைத்து சகாப்தங்களிலும் மனித குல நடவடிக்கைகளின் மீது செல்வாக்கு வகிக்கின்ற தத்துவ ஞானம், மதம், பாரம்பரியங்கள் முதலிய அம்சங்களை வரலாறு பற்றிய பொருள்முதல்வாதம் கவனிக்காமல் புறக்கணித்துவிட்டதென பொருள்முதல்வாதத்தின் எதிரிகள் குற்றஞ்சாட்டுவதுண்டு. இத்தகைய கண்டனம் சரியானதல்ல. ஏனென்றால் மார்க்சிய மூலவர்கள் தங்களது தத்துவத்தை விளக்கமாகக் கூறும்போது, மேற்சொன்ன தத்துவங்களின் செல்வாக்கைப் பற்றி கவனிக்க என்றுமே தவறியதில்லை.

உற்பத்தி உறவுமுறைகளில் மாறுதல் ஏற்பட்டவுடன், மனிதகுலம் ஒரு தத்துவத்திலிருந்து மற்றொரு தத்துவத்திற்கு தானாகவே தாவிக் குதித்துவிடும் என அவர்கள் கருதியிருந்தார்களேயானால் , பழைய தத்துவ அரசியல் அமைப்புகள் புதியவற்றிற்கு எளிதில் வழிவிட்டு ஒதுங்கிவிடும் என அவர்கள் கருதியிருந்தார்களேயானால் பழைமையான கருத்துகளை எதிர்த்து ஒரு தத்துவப் போராட்டத்தை நடத்தியிருக்க மாட்டார்கள். முதலாளித்துவ அரசைத் தூக்கியெறிவதற்கும், பாட்டாளிவர்க்க சர்வாதிகார அரசை உருவாக்கும் வகையிலும் தொழிலாளி வர்க்கத்திற்கு ஒரு அரசியல் ஸ்தாபனம் வேண்டும் என விரும்பியிருக்க மாட்டார்கள்.

மேலோங்கிவரும் புதிய உறவுகளை எதிர்ப்பதில் பழைய தத்துவங்கள் போன்ற மேல்கட்டுமானங்களின் முனைப்பான பாத்திரம் பற்றி அவர்கள் முழுவதுமான விளக்கியிருக்கிறார்கள். ஏற்கனவே வழக்கத்திலிருக்கும் தத்துவங்களையும் ஆதிக்கம் புரியும் அரசியல் அதிகாரத்தையும் எதிர்த்துப் போராடுவது தவிர்க்க முடியாதது. ஏனெனில் புதிய மாற்றங்களினால் பழைய ஆதிக்க வர்க்கங்களின் நலன்கள் பாதிக்கப்படுகின்றன. ஆகவே அவர்களது தத்துவங்களை எதிர்ப்பது அவசியமாகிறது.

மாற்றத்தை ஏற்படுத்துவதிலும், பழைய அமைப்பை எதிர்த்துப் போராடுவதிலும் அக்கறை கொண்ட மக்கள் தங்களது பழைய கருத்துகளை உடனடியாகக் கைவிட்டுவிடுவதில்லை. இதன் காரணமாக பிற்போக்குத்தனமான திசை திருப்பும் தத்துவங்களுக்கு அவர்கள் இரையாகின்றனர். இதனால் சமுதாயப் போராட்டத்தை ஒருமுகப்படுத்துவதில் தடையும் தாமதமும் ஏற்படுகின்றன.

ஆதிக்கச் சக்திகளின் சமுதாய உணர்வு என்பது சக்தியற்று நிற்கும் உணர்வு அல்ல. வளர்ந்துவரும் மாற்றங்களைக் கண்டு அது அமைதியாக இருப்பதில்லை. புதிய மாற்றங்களை எதிர்த்துப் போராடவரும்; புதுமையான சமுதாய உணர்வுகள் தோன்றும்போது அவைகளை முழுமையாக முறியடிக்க முன்வரும்.

இந்தியா சுதந்திரமடைந்து முப்பத்தைந்து ஆண்டுகள் ஆகிய பின்னரும், சில தவிர்க்க முடியாத பொருளாதார விளைவுகள் ஏற்பட்டுவிட்ட பின்னரும், மதவெறி, சாதி வெறி, தேசிய ஒற்றுமை உணர்வின்மை இவையெல்லாம் குறைவதற்கு பதிலாக அதிகரித்துக்கொண்டிருக்கின்றன.

இது ஏன் என்று பலருக்கு குழப்பமாகவே இருக்கிறது. விடுதலைப் போராட்டம் நடைபெற்ற நீண்ட நெடிய காலத்தில் முற்போக்கு சக்திகள் அன்று நடத்திய போராட்டங்களை மீண்டும் புதிதாக நடத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. வர்க்கப் போராட்டமோ, மார்க்சியமோ இந்திய சூழ்நிலையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை எனவும், சாதி, மத உணர்வுகள் என்றும்போல் தொடர்ந்து வலுவாக இருந்துவருகின்றன எனவும் சிலர் வாதிடுகின்றனர். முந்தைய காலங்களில் இவர்கள் ஒரு வாதத்தை எழுப்புவதுண்டு இந்தியாவின் ஆன்மீகப் பின்னணியும் பாரம்பரியங்களும் மேற்கத்திய பொருள்முதல்வாதக் கண்ணோட்டங்களினால் எக்காலத்திலும் பாதிக்கப்பட மாட்டா என்ற கருத்தைக் கொண்டிருந்தனர்.

பொருளாதார வளர்ச்சிதான் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் உந்து சக்தி:

1892 ஆம் ஆண்டு “கற்பனாவாத சோசலிசமும், விஞ்ஞான சோசலிசமும்’ என்ற தனது ஆங்கில நூலுக்கு எங்கல்ஸ் ஒரு முன்னுரை எழுதினார். அதில் பின்வருமாறு கூறுகிறார். “நான் வரலாற்றுப் பூர்வமான பொருள் முதல்வாதம் என்ற சொற்களை ஆங்கிலத்திலும் இதர மொழிகளிலும் பயன்படுத்தும்போது, பிரிட்டிசாரின் மரியாதைக்கு, மதிப்புக்கொடுக்கும் மனப்பாங்கு அதிர்ச்சியடையாது என நம்புகிறேன்” இந்த சொற்றொடரை நான் எதற்காக பயன்படுத்துகிறேன்?

வரலாற்றில் நிகழும் அனைத்து முக்கிய நிகழ்ச்சிகளுக்கும் உந்து சக்தியாகத் திகழ்வது இறுதியான ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் பொருளாதார வளர்ச்சிதான். இந்த மாறுதலுக்குக் காரணமான உந்து சக்தி என்பதைக் குறிப்பிடவே பயன்படுத்துகிறேன். உற்பத்தி முறையிலும் பொருட்களின் பரிவர்த்தனையிலும் மாறுதல் ஏற்படுவதும் அதன் விளைவாக சமூக அமைப்பானது தெளிவான, வர்க்கங்களாகப் பிளவுபடுவதும், அதன் விளைவாக ஒன்றுக்கு மற்றொன்று எதிராக வர்க்கப் போராட்டங்களில் ஈடுபடுவதும்தான் வரலாற்றில் நிகழும் அனைத்து முக்கிய நிகழ்ச்சிகளுக்கும் முக்கியக் காரணங்களாகத் திகழ்கின்றன என்பதைக் குறிப்பிடவே மேற்கூறிய சொற்றொடரைப் பயன்படுத்துகிறேன்” (வரலாற்று ரீதியான பொருள்முதல்வாதம்)

பொருளதார அடிப்படைதான் இறுதியாக நிர்ணயிக்கின்ற சக்தி என்ற கருத்தை வலியுறுத்தும் எங்கல்ஸ், அதே வேளையில் பொருளாதார அடிப்படை அல்லாமல் வேறு சில அம்சங்களுக்கு பங்கே இல்லை எனப் பொருள்கொள்ளக் கூடாது எனவும் விளக்குகிறார். சி. ஸ்மித் என்பவருக்கு 1990 ஆம் ஆண்டு எழுதிய கடிதத்தில் ‘பொருளாதார அமைப்புதான் அடிப்படைக்  காரணம்’ என்றாளும் கூட தத்துவங்களும் (சமூக அமைப்பின் மீது) தங்களது செல்வாக்கைச் செலுத்துகின்றன என்பதை மறுக்க முடியாது. தத்துவங்களின் விளைவு இரண்டாம்பட்சமே என்பது வேறு விசயம். இந்த உண்மையை இந்த மனிதர் இன்றும் அறிந்திருக்கவில்லையென்றால், அவர் எழுதும் விசயங்களைப் பற்றியும் அவர் புரிந்துகொண்டிருக்க முடியாது’ எனக் குறிப்பிடுகிறார்.

ஜே.ப்ளோக் என்பவருக்கு தான் எழுதிய கடிதத்தில் (செப்டம்பர் 1890) நாங்கள் இதைப்பற்றி மேலும் விளக்கும் வகையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

“வரலாற்றைப் பற்றிய பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தின்படி யதார்த்த வாழ்வின் உற்பத்தியும் மறு உற்பத்தியுமே இறுதியாக வரலாற்றை நிர்ணயிக்கும் சக்தியாக விளங்குகின்றன. மார்க்சோ, நானோ இதற்கு மேல் எதையும் வலியுறுத்திச் சொன்னதில்லை. ஆகவே பொருளாதார அம்சம் மட்டுமே நிர்ணயிக்கும் சக்தி கொண்டது என எவராவது திருத்துக் கூறுவார்களேயானால் அது அர்த்தமற்ற பிதற்றல் என்றே கொள்ள வேண்டும். பொருளாதாரச் சூழல் என்பது அடிப்படை – ஆனால் அதன் மேல்கட்டுமானத்தில் உள்ள பல்வேறு அம்சங்களும் இதில் பங்கு வகிக்கின்றன. வர்க்கப் போராட்டத்தின் அரசியல் வடிவங்கள் மற்றும் அதன் விளைவுகள், உதாரணமாக வெற்றிபெறும் வர்க்கப் போராட்டத்திற்குப் பின் உருவாகின்ற அரசியல் சாசன சட்டங்கள் நீதி நிர்வாக முறைகள், இந்தப் போராட்டத்தில் நேரடியாக பங்கேற்பவர்களின் மனதில் அரசியல் நீதி, தத்துவஞானம், மதம் ஆகிய அம்சங்களின் மற்றும் இத்தகைய அம்சங்களின் மற்றும் இத்தகைய அம்சங்களை உள்ளடக்கிய பொதுவான தத்துவங்களின் பிரதிபலிப்புகள் ஆகிய அனைத்துமே வரலாற்றில் நிகழும் போராட்டங்களின் வளர்ச்சிப் போக்கில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இன்னும் சொல்லப்போனால், இந்த அம்சங்கள் பல நேரங்களில் போராட்டங்களின் வடிவத்தை தீர்மானிப்பதில் அதிக செல்வாக்கு வகிக்கின்றன. இத்தகைய பல்வேறு அம்சங்கள்: ஒன்றுக்கொன்று பாதிப்புகளை உண்டாக்குகின்றன. அதனூடே பல தற்செயல் நிகழ்ச்சிகள் நிகழ்வதும் உண்டு . இந்த தற்செயல் நிகழ்ச்சிகளுக்கான தொடர்பு என்ன என்பது நிரூபிக்கப்பட முடியாமல் இருக்கலாம். அதன் விளைவாக அவை கணக்கிலெடுத்துக் கொள்ளத் தேவையில்லாத ஒன்றாகவும் இருக்கலாம். எனினும் இறுதியாக வரலாற்றை நிர்ணயிக்கும் சக்தி, பொருளாதார இயக்கம் தேவையான ஒன்றாக தன்னை ஊர்ஜிதம் செய்துகொள்கின்றது. இப்படிப்பட்ட சிக்கலான தன்மை, இந்த தத்துவ அணுகுமுறையை ஒவ்வொரு காலகட்டத்திற்கும் பொருத்திப் பார்க்கும்போது தோன்றத்தான் செய்யும். இப்படிப்பட்டதொரு எதார்த்த அணுகுமுறை இல்லையென்றால், வரலாற்றைப் பற்றிய ஒரு ஞானம் சாதாரண பெருக்கல் வாய்ப்பாடு போல சுலபமானதாகக் கருத இடமளிக்கும்”

ஜோசப் ப்ளோக் எழுப்பி கேள்விக்கே எங்கல்ஸ் மேற்கண்டவாறு கூறினார். அந்தக் கேள்வி என்ன? வரலாற்றைப் பற்றிய பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தின் படி, வரலாற்றை நிர்ணயிக்கும் அம்சம் யதார்த்த வாழ்வில் நிகழும் உற்பத்தியும் மறு உற்பத்தியும் என்று கூறுகிறீர்கள். அப்படியானால், இதை எப்படி புரிந்துகொள்வது? பொருளாதார உறவுகள் மட்டுமே சமூக வாழ்வில் அம்சமாகிவிடுமா? அல்லது தாங்களாகவே செயல்படுகிற மற்ற உறவுகளுக்கு பொருளாதார உறவுகள் ஓரளவு அடிப்படையாக அமைகின்றனவா? வரலாற்றின் வளர்ச்சிப் போக்கில் முழுக்க முழுக்க அரசியல் வம்சாவளி ஆட்சி தவிர தனிநபர் நலன்கள் கூட பாத்திரம் வகித்ததில்லையா?” என்ற ப்ளோக்கின் இந்தக் கேள்வியைக் குறிப்பிட்டு எங்கல்ஸ் ஸ்மித்துக்கு எழுதிய கடிதத்தில் (அக்டோபர் 1980) பின்வருமாறு குறிப்பிடுகிறார்; “பொருளாதார இயக்கத்தின் அரசியல் பிரதிபலிப்புகள் முதலிய ஒவ்வொரு எதிர் விளைவும் அந்த இயக்கத்தையும் பாதிக்கும் என்பதையும் நாம் மறுக்கிறோம் என ப்ளோக் நினைப்பாரேயானால் அவர் சுழற்காற்றாடி எந்திர மில்லில் சிக்கிக் கொண்டு தவிக்கிறார் என்றுதான் பொருள்”

பொருளாதார மாற்றங்களுக்கு எதிரான அரசுகள் சிதறும்

மார்க்சும் எங்கல்சும் தங்களது காலத்திய நிகழ்ச்சிப் போக்குகளையும், இறந்த காலத்தையும் பற்றி ஆய்வு செய்யும்போது, பொருளாதார அம்சத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த அதே வேளையில் மற்ற அனைத்து அம்சங்களையும் கணக்கில் கொண்டே ஆய்வு செய்தனர், இறந்தகாலத்தை பற்றி ஆய்வுசெய்யும்போது, வரலாற்றின் வளர்ச்சிப் போக்கில் ஒரு கட்டத்தில் ஏற்பட்ட அரசு பிற்கால வரலாற்றில் அது வகித்த பாத்திரம் பற்றியெல்லாம் அவர்கள் கணக்கிலெடுத்துக் கொள்ளத் தவறவில்லை. அரசு அதை ஊக்குவித்துச் சென்றதுமுண்டு அல்லது அத்தகைய பொருளாதார மாற்றங்களுக்கு எதிராக செயல்பட்டதும் உண்டு. எதிராகச் செயல்படும் நேரங்களில் அரசு துண்டுதுண்டாக நொறுங்கிவிடும், பொருளாதார மாற்றம் ஒரு குறிப்பிட்ட திசையில் செல்வதைத் தடுத்து, வேறு ஒரு பாதையில் செல்லவைக்கும் பணியையும் அரசு மேற்கொள்வதுண்டு. இவைகளைப் பற்றியெல்லாம் மார்க்சும் எங்கல்சும் கவனிக்கத் தவறவில்லை.

1894 ஆம் ஆண்டு டபிள்யூ, போர்ஜியஸ் என்பவருக்கு எழுதிய கடிதத்தில் எங்கல்ஸ் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “அரசியல், சடம், தத்துவம், மதம், இலக்கியம், கலை முதலியவற்றின் வளர்ச்சிக்கு பொருளாதார வளர்ச்சியே அடிப்படையாகும். ஆனால் இவையனைத்தும் ஒன்றின் மீது ஒன்றும் பொருளாதார அடிப்படையின் மீதும் விளைவுகளை ஏற்படுத்துகின்றன. பொருளாதாரச் சூழ்நிலை மட்டும்தான் காரணமாகவும் தனித்துச் செயல்படக்கூடியதாகவும் இருக்கிறது. மற்ற அனைத்தும் அதற்கு உட்பட்டு இணைந்து செல்லக் கூடியதாகவே இருக்கும் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். மாறாக, பல்வேறு அம்சங்களின் பரஸ்பர நிகழ்வுகளுக்கு அடிப்படைப் பொருளாதாரத் தேவையேயாகும். அந்தத் தேவைதான் இறுதியாக தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது. அரசை எடுத்துக்கொள்வோமானால், அதனுடைய நடவடிக்கைகளுக்கு ஒரு பொருளாதார விளைவு உண்டு. தற்காப்பு வரிகளை விதிப்பது, சுதந்திரமான வணிகத்தை அனுமதிப்பது நல்லதாகவோ அல்லது மோசமானதாகவோ வரைமுறைகள் கொ?ண்டிருப்பது இவையெல்லாமே பொருளாதாரத்தின் மீது செல்வாக்கு செலுத்துகிற அம்சங்களே.

அரசியல், தத்துவம், ஆதிக்கம் செலுத்தினாலும் இறுதியாக நிர்ணயிப்பது

1648 லிருந்து 1830 வரை, ஜெர்மனியில் ஒருவகையான அரசு இருந்தது, மத சம்பந்தமான விசயங்களில் அதீதமான பயபக்தி அதீதமான ஆன்மீக ஒழுக்கம், அரசர்களுக்கும், பிரபுக்களுக்கும் அடிபணிந்து நடக்க வேண்டும் என்று அரசு செய்துவந்த போதனைகளுக்கு பொருளாதார விளைவுகள் இல்லாமலில்லை. பொருளாதார முன்னேற்றம் ஏற்பட தடையாக இல்லாமல் இருந்ததற்கு இதுவும் ஒரு காரணம். இதற்கு அடுத்தாற்போல் நடந்த புரட்சிப் போராட்டங்கள் நெப்போலியன் படையெடுப்புகள் நிகழும்வரை மேற்கூறிய நிலைமை நீடித்தது. அந்த நிலைமை நாட்டுக்கு ஏற்படுத்திய துயரம் கொடுமையானதாகும். இதிலிருந்து ஒரு விஷயம் தெளிவு, ஒரு பொருளாதார  வளர்ச்சிப் போக்கு நிகழ்ந்துவிட்டவுடனேயே சிலர் தங்கள் வசதிக்கு நினைத்துக்கொள்வதைப் போல உடனடியாக சமூக மேல்கட்டுமானத்தில் மாறுதல்களைச் செய்துவிடுவதில்லை. மனிதர்கள்தான் வரலாற்றைப் படைக்கின்றனர்; ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில்தான் அவ்வாறு செய்கின்றனர்; அந்தக் குறிப்பிட்ட சூழ்நிலைக்கு ஏற்கனவே இருந்து வரும் உறவுகளுக்குள் பிரதானமாக பொருளாதார உறவுகளே அடிப்படையாக அமைகின்றன. அரசியல் மற்றும் தத்துவம் போன்ற மற்ற உறவுகள் பொருளாதார உறவுகளின் மீது எவ்வளவு ஆதிக்கம் செலுத்தியபோதும், பொருளாதார உறவே இறுதியாக நிர்ணயிக்கும் அம்சமாக இருக்கிறது. அதன் அடிப்படையில்தான் விசயங்களைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியும்”

(மார்க்ஸ் எங்கல்ஸ் கடிதங்களின் திரட்டு, புத்தகம்)

சமுதாய வாழ்வில் பொருளாதார அம்சங்கள் வகிக்கும் நிர்ணயமான பங்கின் முக்கியத்துவத்தை யாரும் ஒப்புக்கொள்ளாத காலத்தில் மார்க்சும், எங்கல்சும் அவைகளை வலியுறுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதனால்தான் குழப்பம் உண்டாயிற்று என்று சிலர், பொருளாதார அம்சத்திற்கு தேவைக்கு மீறிய அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இந்தக் குழப்பத்திற்கு மார்க்சும், நானும் ஓரளவுக்குப் பொறுப்பேற்க வேண்டும். எங்கள் எதிர்ப்பாளர்கள் எங்களது முக்கியமான சித்தாந்தத்தை மறுக்கும்போது நாங்கள் அதை வலியுறுத்திக் கூற வேண்டியிருந்தது. மற்ற அம்சங்களுக்கும் அவைகளுக்கு உரித்தான அளவில் முக்கியத்துவம் அளித்து விளக்குவதற்கு எங்களுக்கு எப்போதும் நேரமோ சந்தர்ப்பமோ, இடமோ வாய்க்கவில்லை. அதே நேரத்தில் வரலாற்றின் ஒரு பகுதியை விளக்க முற்படும்போது தத்துவத்தை நடைமுறைக்கு பொருத்திப்பார்க்கும்போது அது முற்றிலும் வேறான விசயமாக உள்ளது. அந்த விசயத்தில், தவறு எதையும் அனுமதிக்க முடியாது” என்று கூறுகிறார்.

தனிநபர் பக்தி வகித்த பாத்திரம்:

இது உண்மைதான். மார்க்சும், எங்கல்சும் எழுதிய ஒவ்வொரு விசயத்திலும் பொருளாதார  அம்சம் சமூக வாழ்வி நிர்ணயிக்கும் தன்மை வாய்ந்தது என்று வலியுறுத்திக் கூறும் அதே நேரத்தில் மற்ற அம்சங்களைப் பற்றியும் லூயி போனபார்ட்டின் 18 ஆம் புருமர் என்ற நூலைப் பற்றிக் குறிப்பிடும் எங்கல்ஸ், சமகால நிகழ்ச்சிகளை புரிந்துகொள்வதற்காக தத்துவத்தைப் பயன்படுத்தும் முறைக்கு அந்நூல் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று கூறுகிறார்.

இந்த நூலில் வரலாற்றின் ஒரு காலகட்டத்தை மதிப்பிடும்போது பொருளாதார அம்சங்களுடன் அரசியல் மற்றும் தத்துவ அம்சங்களையும் கணக்கிலெடுத்துக்கொள்ளும் மார்க்ஸ், ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் பாதிப்பை விளைவிக்கும் பல்வேறு அரசியல் கட்சிகளின் பங்கு பற்றியும் அலசி ஆராய்கிறார். விவசாயிகள் லூயி போனபார்ட் என்பவனை சர்வாதிகாரியாக பதவியில் அமர்த்தியதற்கு ஆதரவளித்தனர். நெப்போலியன் மீது அவர்கள் கொண்டிருந்த தனிநபர் பக்தி எத்தகைய செல்வாக்கை வகித்தது என்பது பற்றி மார்க்ஸ் விளக்குகிறார்: “நெப்போலியன் என்ற பெயர் கொண்டவனால்தான் தாங்கள் இழந்துவிட பெருமையை தங்களுக்கு மீட்டுத்தர முடியும் என்பது பிரெஞ்சு விவசாயிகளின் மனதில் வரலாற்றுப் பாரம்பரியம் ஏற்படுத்தியிருந்த ஒரு நம்பிக்கையாகும் (பழைய) நெப்போலியனின் (குடும்பப்) பெயரான போனபார்ட் என்ற பெயரைக் கொண்ட ஒருவன்தான்  அதைச் செய்ய முடியும் என்று தங்களது நம்பிக்கையின்படி மக்கள் அவனை பிரெஞ்சு சக்கரவர்த்தியாக (லூயி போனபார்ட்டை) ஆக்குகின்றார்கள். மருமகனின் (முந்தைய நெப்போலியன் போனப்பார்ட்டின் மருமகன்) விருப்பம் நிறைவுபெறக் காரணம், அந்தக் கருத்து பிரெஞ்சு மக்களில் மிகப்பெருமளவு வர்க்கங்களின் குறிப்பிட்ட கருத்துடன் ஒத்திருந்ததே” என மார்க்ஸ் குறிப்பிடுகிறார். இவ்வாறு பொருளாதார வளர்ச்சிப் போக்கினால் கட்டவிழ்த்து விருப்பப்படும் சமுதாய மாறுதலில் மேல் கட்டுமானமாக உள்ள அம்சங்கள் மனிதர்களின் அந்தந்தக் காலத்திய உணர்வுகளிலும் பாதிப்புகள் ஏற்படுத்துகின்றன என்பதை மார்க்சியம் அங்கீகரிக்கிறது. அதே சமயத்தில் எவ்வாறு மனிதர்களின் உணர்வுகளும், சித்தாந்தங்களும் பொருளாதார அம்சங்களுக்குத் தக்கவாறு மாறுகின்றன என்பதை மார்க்சியம் சரியாகவே கணித்துள்ளது.

சட்டங்களைப் பற்றிய பார்வை:

ஒரு சமுதாய அமைப்பின் சட்டங்களைப் பற்றிக் குறிப்பிடும் எங்கல்ஸ் பின்வருமாறு கூறுகிறார்: ஒரு நவீன அரசமைப்பில், சட்டம் என்பது பொதுவான பொருளாதார சூழ்நிலைக்கும், அதன் வெளிப்பாடுகளுக்கும் பொருந்துவதாக அமைய வேண்டும். அது மட்டுமல்ல, அந்தச் சட்டத்தில் முன்னுக்குப் பின் முரணில்லாத வகையில் உள்ளார்ந்த இசைவும் இருக்க வேண்டும். அதாவது உள் முரண்பாடுகளின் காரணமாக சட்டம் தன்னையே மறுத்துவிடக் கூடாது. இதை நிறைவேற்ற முயலும்போது பொருளாதாரத் தேவைக்கு சரியான பிரதிநிதித்துவத்தை சட்டம் வழங்குவதற்கு மேலும் மேலும் பாதிப்பு ஏற்படுகிறது. சட்டங்கள் என்பவை ஆதிக்க வர்க்கங்களின் அப்பட்டமான கலப்பற்ற எண்ணங்களை, விருப்பங்களை பிரதிபலிப்பது மிகவும் அபூர்வம். அப்படிச் செய்தால் மனித உரிமை பற்றிய பார்வையை அது பாதித்துவிடுமல்லவா? புனிதமான நெப்போலியனிய சட்டக் கோட்பாடுகளில் கூட 1792-1796 காலத்திய புரட்சிகர பூர்ஷ்வாக்கள் மனித உரிமைபற்றி நெடுங்காலமாகக் கொண்டிருந்த கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டது. மனித உரிமையைப் பற்றிய கருத்தை சட்டக் கோட்பாடுகளாக மாற்றிய பின்னர், பாட்டாளி வர்க்கத்தின் சக்தி வளர்ந்தோங்கியதன் விளைவாக மனித உரிமை பற்றிய அக்கருத்தை தினமும் பலவாறாக மாற்றிக் கொள்ள வேண்டியதாயிற்று. முதலில் பொருளாதார உறவுகளை சட்டக் கோட்பாடுகளாக மாற்றும்போது ஏற்படும் முரண்பாடுகளைக் களைந்து ஒரு இசைவான அமைப்பாக சடங்களை மாற்றும் முயற்சி நடைபெறுகிறது. அதன் பிறகு தொடர்ந்து நிகழும் பொருளாதார வளர்ச்சி ஏற்படுத்தும் நிர்ப்பந்தங்கள், சட்ட அமைப்பின் மீது செலுத்தும் செல்வாக்கு ஆகியவற்றின் காரணமாக ஏற்கனவே உருவாக்கப்பட்ட சட்டங்கள் அடிக்கடி மீறப்படுகின்றன. இது சட்டங்கள் பற்றிய வளர்ச்சிப் போக்கின் நிலைமையாகும். (மார்க்ஸ் – எங்கல்ஸ் கடிதங்கள்)

முழுக்க முழுக்க சட்டத்தின் எல்லைக்குள் நின்று பேசுவதாகவும், காரணத்திலிருந்துதான் விளைவுகளை ஆராயும் முறையிலேயே செயல்படுவதாகவும் சில சட்ட அறிஞர்கள் கற்பனை செய்துகொள்கின்றனர். இது உண்மையல்ல. சட்ட அறிஞர்களின் மூளைக்குள் உதிக்கும் ஒரு தலைகீழ் பார்வை என்று எங்கல்ஸ் குறிப்பிடுகிறார். இந்தத் தலைகீழ் வடிவத்தைத்தான் நாம் தத்துவக் கண்ணோட்டம் என அழைக்கிறோம். இத்தகைய கண்ணோட்டம் பொருளாதார அடிப்படையின் மீதும் செல்வாக்கைச் செலுத்த முடியும். சில சமயங்களில் ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் சில மாற்றங்களையும் ஏற்படுத்தக் கூடிய. இதற்கு ஒரு எடுத்துக்காட்டை எங்கல்ஸ் தருகிறார். பாரம்பரிய உரிமை என்பதற்கு அடிப்படையாக அமைவது பொருளாதாரம்தான். குடும்பத்தைப் பற்றிய வளர்ச்சி மட்டம் எங்கும் ஒரே மாதிரி இருக்கும்போது இது சரியானதே ஆனால், இங்கிலாந்திற்கும், பிரான்சிற்கும் இதே விசயத்தில் வேறுபாடுகள் உள்ளன. இங்கிலாந்தில் ‘உயில்’ எழுதுபவர்களுக்கு அபரிமிதமான சுதந்திரம் உண்டு ஆனால் பிரான்சில் ‘உயில்’ எழுதுவதற்கு பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கின்றன. இவற்றுக்கெல்லாம் அடிப்படை என்ன? இவற்றிற்கெல்லாம் முக்கியமான காரணங்கள் பொருளாதாரக் காரணங்களே தவிர வேறில்லை. காரணம் சொத்துரிமையை விநியோகம் செய்வதன் தேவை இந்த இரு தேசங்களிலும் இருவேறுவிதமான செல்வாக்குகள் செலுத்துகின்றன.

மனம் சிந்தனை பற்றி :
பொருளாதார நடவடிக்கைகளுக்கு நேரடியாகத் தொடர்பில்லாத மனம், சிந்தனை பற்றிய தத்துவங்களின் அடிப்படையே வேறு. அவை இறந்த காலத்தினாலேயே அதிக ஆதிக்கம் செலுத்தப்படுபவை. இறந்த காலத்தின் அறிவு அல்லது அறியாமையின் குவியலே அவை. நிகழ்காலம், இறந்த காலத்தை சிறிது மாற்றி புதிய வடிவில் அவர்களை வேரூன்றச்செய்கிறது. மதம், தத்துவஞானம் ஆகியவற்றில் வரலாற்றுக்கு முந்திய காலத்திய சிந்தனைகளின் பாதிப்பு உண்டு. உதாரணமாக, மனிதன் தன்னைப்பற்றியும் , இயற்கையைப் பற்றியும் கொண்டிருந்த பண்டைக்காலத்திய தவறான எண்ணப்போக்குகளின் பாதிப்பும் இருக்கும்.
“என்னைப் பொறுத்தவரை, இந்தத் துறைகளிலும் கூட, பொருளாதார வளர்ச்சியே இறுதியாக மேலாதிக்கம் செலுத்தக்கூடியது என்பது நிலைநிறுத்தப்பட்ட உண்மை. ஆனால் இந்தக் குறிப்பிட்ட துறைகளின் சில நிபந்தனைகளுக்குட்பட்டுத்தான் அந்த உண்மை செயல்படுகிறது. உதாரணமாக தத்துவஞானத்தை எடுத்துக் கொள்ளுங்கள். முந்தைய தலைமுறையினர் அளித்திருக்கும் தத்துவஞான விஷயங்களின் மீது பொருளாதார செல்வாக்கு செயல்படுகிறது (இது பொதுவாக அரசியல் வெளிப்பாடு போன்றவை மூலமாக செயல்படுகிறது). இங்கு பொருளாதாரம் புதிதாக எதையும் படைப்பதில்லை. ஆனால் ஏற்கனவே நடைமுறையிலிருக்கும் சிந்தனைப் போக்கில் மாறுதல் செய்து வளர்ச்சி பெறச் செய்கிறது. இதுவுங்கூட பெரும் பகுதி மறைமுகமாகவே நடைபெறுகிறது. ஏனெனில் அரசியல் சட்ட தார்மீ்க தாக்கமே தத்துவஞானத்தின் மீது நேரடியான செல்வாக்கைச் செலுத்துகின்றன.”(மார்க்ஸ்-எங்கெல்ஸ் கடிதங்கள் பக்கம்–401)

மதங்களின் மீது செல்வாக்கு

பொருளாதார நடவடிக்கையினின்றும் வேறுபட்டது என்று ஒதுக்கி வைக்கப்படும், மதமானது பல்வேறு வரலாற்று கால கட்டங்களையும் தாண்டி ஜீவிக்கிறது. ஆனால் அது பல்வேறு பட்ட காலங்களில் பல்வேறுவிதமான, வர்க்க எஜமானர்களுக்கு சேவை செய்திருக்கிறது. மதம் என்பது மிகப் புராதனமான ஆதிசமுதாய காலங்களில் தோன்றியதாகும். ஒவ்வொரு தத்துவமும், அது தோன்றிய பிறகு, அந்தந்த காலங்களில் உருவாகி வளரும் எண்ணங்களின் சூழ்நிலையில் வளர்கிறது: அந்த எண்ணங்களை மேலும் வளர்க்கிறது. அப்படிச் செய்யாவிட்டால் அது ஒரு தத்துவமாகவே இருக்க முடியாது. அந்தச் சிந்தனைகள், எண்ணங்கள் சுதந்திரமான தன்மையைப் பெற்று அதற்கே உரித்தான வழிமுறைகளின்படி சுதந்திரமாக வளர்கின்றன. எங்கெல்ஸ்(பஃவர்பாக்-எங்கெல்ஸ்) இந்த இடத்தில் எங்கெல்ஸ் கிறித்துவ மதம், நிலப்பிரபுத்துவத்தின் மறுபதிப்பான மத ஸ்தாபனமாக வளர்ந்தது எனக் குறிப்பிடுகிறார். மத்திய காலத்தில் இந்த வளர்ச்சியை அடுத்து கிறிஸ்தவ மதமும் நிலப்பிரபுத்துவம் போன்ற ஒரு அதிகார அமைப்பு முறையை ஏற்படுத்திக் கொண்டது. இந்தக் கட்டத்தில்தான் முதலாளி வர்க்கம் என்பது தோன்றுகிறது. இந்த புதிய சூழ்நிலைக்குத் தக்கவாறு மதத்திலும் மாறுதல் ஏற்படுகிறது. கத்தோலிக்க மதத்திற்கு எதிராக புராட்டஸ்டெண்ட் மதம் என ஒன்று தோன்றுகிறது. உழைக்கும் மக்களின் புரட்சிகரமான எதிர்ப்பும் இத்துடன் தோன்றுகிறது “மக்களின் உணர்ச்சிகளுக்கு மற்ற எதையும் விட மதம் அதிகம் தீனி போடுகிறது. அவர்களின் நலன்களை மதப் போர்வையுடன் பிரதிபலிக்கிறது. மேலும் வளர்ச்சிக்கு உதவிகரமாக இத்தகைய மாற்றம் ஏற்படுகிறது. எவ்வளவு முயன்ற போதிலும் புராட்டஸ்டெண்ட் மதத்தை அது தோன்றிய காலத்தில் கொன்றுவிட முடியவில்லை. காரணம் புராட்டஸ்டெண்ட் மதமானது வளர்ந்து வந்த முதலாளித்துவ நலன்களைப் பிரதிபலித்தது.”
மதம் சம்பந்தமான தத்துவம் மேலும் வளர்கிறது…ஆனால் அதனுடைய புதிய பதிப்புகள் பல்வேறு வர்க்கங்களின்  பல்வேறு சமுதாயங்களின் நலன்களை பிரதிபலிக்கின்றன. மாற்றமடையாத மதம் தனது எஜமானர்களையே மாற்றிக்கொண்டது.
போப்பாண்டவரும், கிறிஸ்துவ மத ஆலயங்களும் வாழ்க்கையில் தலையிடுகின்றன. கத்தோலிக்கர்களுக்கும், புராட்டஸ்டெண்டினருக்கும் இடையே யுத்தங்கள் நிகழ்கின்றன. இவை அனைத்தும் சமுதாய அரங்கில் தோன்றிவிட்ட புதிய உணர்வும், புதிய தத்துவமும் செயலூக்கமான பங்கை வகிக்கின்றன என்பதையே காட்டுகின்றன.
இந்தியாவில் மதவாதமும் வகுப்புவாதமும் நீடிக்க காரணம் என்ன?

இந்தியாவில் இப்போது இருந்து வரும் அரசியல் மேல் கட்டுமானமும், உணர்வுகளும் அதாவது மதவாத, சாதீய உணர்வுகளும் மாற்றங்களை முறியடித்து, முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்துவதில் முனைப்பாகச் செயல்பட்டு வருகின்றன. தேசிய உணர்வுகளை ஒன்றுபடுத்தி, ஏகாதிபத்தியத்தை முறியடித்த சக்திகள், நாடு விடுதலையடைந்து கடந்த முப்பதாண்டுகளாக சுதந்திரமாக இயங்கிவரும் இக்காலத்தில் பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டதுபோல் தோன்றுகிறது.

ஏன் இந்த நிலைமை : சந்தேகமில்லாமல், கடந்த நூறு ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க பொருளாதார மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. சுதந்திரத்திற்குப் பிறகு பல பொருளாதாரத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டிருக்கின்றன. மன்னர் சமஸ்தானங்கள் ஒழிக்கப்பட்டுவிட்டன. தொழிலுற்பத்தி அளவு உயர்ந்திருக்கிறது. கிராமங்கள் தனிமைப்பட்டுக்கிடந்த நிலைமை மாற்றப்பட்டுள்ளது. அவைகளும் முதலாளித்துவ சந்தைக்குள் திணிக்கப்பட்டுவிட்டன. சாலைகளும் இரயில் போக்குவரத்தும் இத்தகைய நிலையை உறுதிப்படுத்தியிருக்கின்றன.

இவையனைத்தையும் மீறி, மத, வகுப்பு, சாதீய உணர்வுகள் வளர்வதுபோல் தோன்றுகின்றன. ஜோதிடர்கள், கைரேகை நிபுணர்கள், சாயிபாபாக்கள் ஆகியோருடைய வியாபாரம் செழித்தோங்கி வருகிறது. கேரளாவிலும், வேறு பல இடங்களிலும் புதிய கடவுள்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களின் அருளை வேண்டி பல்லாயிரக்கணக்கில் மக்கள் பயணம் மேற்கொள்கின்றனர். வரலாற்றைப் பற்றிய பொருள் முதல்வாதக் கண்ணோட்டத்தில், இந்தியா மட்டும் விதிவிலக்கா… இந்தியாவின் மதவாதத்திலும், வகுப்புவாதத்திலும், சாதிய உணர்வுகளுக்குள்ளும், வளர்ந்து வரும் பொருளாதார மாற்றங்கள் உட்புகுந்து பாதிப்பை ஏற்படுத்த முடியவில்லையா..

பாரம்பரியமான சக்திகளின் புதிய தாக்குதல்களையும் மீறி மற்ற சக்திகள் – அவை இன்னும் பலவீனமாக இருந்தாலும் கூட – எதிர்த்துப் போராடுகின்றன என்பதை முதலில் உணர்ந்து கொள்ளவேண்டும்.

இரண்டு கேள்விகளுக்கு இப்போது பதில் கூறியாக வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களது பொதுவான துன்ப துயரங்கள் அதிகரித்துக் கொண்டே செல்லும்போது தங்களது ஒற்றுமையையும் போராட்டத்தையும் சீர்குலைக்கின்ற பிற்போக்குத்தனமான உணர்வுகளுக்கு ஏன் இரையாகிறார்கள்.

மனித சமுதாய அமைப்புகளில் தீவிரமான, புரட்சிகரமான மாற்றங்கள் தோன்றி மதம், வகுப்புவாதம் ஆகியவற்றின் தத்துவங்களை நேருக்கு நேர் சந்திக்கின்றன. இதன் விளைவு என்ன. இந்த மதவாத தத்துவங்களுககு ஆதாரமானவற்றை தகர்த்தெறிய வேண்டுமல்லவா. இந்தியாவில் நிகழ்ந்ததென்ன. இந்தியாவில் புரட்சிகரமான மாற்றங்கள் எதுவும் நடைபெறவில்லை. மாறாக ஒரு சமரசமேற்பட்டுள்ளது. இந்திய. கிராமப்புற சமுதாய அமைப்புடன் ஒரு சமரச ஏற்பாடே நிகழ்ந்துள்ளது.

இயற்கை வழங்கும் மழையையும், தற்போதுள்ள விற்பனை சந்தையின் வேடிக்கை வினோதங்களையும், வியாபாரிகளின் நேர்மையின்மையையும், அரசாங்கக் கொள்முதல் அமைப்புகளையும், நம்பி வாழவேண்டிய நிலையிலுள்ள சிறிய பொருளுற்பத்தி முறை, நவீன உழைப்புச் சந்தைக்குள் நுழைந்து நவீன தொழிலாளி வர்க்கமாக மாறமுடியாத நிலையில் சிக்கித் தவிக்கும் பெரும்பான்மையான நிலமற்ற விவசாயிகள் ஆகிய இந்த நிலைமை தான் மதவாத, ஜாதி,வகுப்பு உணர்வுகளுக்கு ஊற்றுக் கண்களாய் விளங்குகின்றன.

கிராமப்புறங்களில் நிலப்பிரபுத்துவ, அரைநிலப்பிரபுத்துவ உறவுகள் நீடிப்பதும் ஒரு சிலர் கையில் நிலம் குவிந்திருப்பதும் அதிபயங்கரமான குத்தகை முறைகள், கந்துவட்டி முறைகளும் கொத்தடிமை முறையும், நிலமற்றவர்களின் நிலப்பசியும் இவையனைத்தும் நெடுங்காலத்திய சாதிப் பிரிவினை அமைப்புக்குள் இருப்பதால் மேற்கூறிய மதவாதமும், வகுப்புவாதமும் நீடிப்பதற்கு காரணமாக இருக்கின்றன.

மதவாதம், சாதீய முறைகள் அனைத்துமே முந்தைய காலத்துப் பரம்பரைச் சொத்து ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடிய தேசீய இயக்கமும், இதை எதிர்க்கவில்லை. மாறாக, பிறபோக்குத்தனமான இந்த சக்திகளுடன் ஒவ்வொரு கட்டத்திலும் தேசீய இயக்கம் சமரசம் செய்து கொண்டே வந்தது. விடுதலைப் போராட்ட காலத்தில் நிலப்பிரபுத்துவ சக்திகளுடன் முன்னணி தேசீய பூர்ஷ்வா தலைமை செய்து கொண்ட சமரசத்தின் நேரடி விளைவே அது.

பூர்ஷ்வா தலைமையின் கீழ் நடைபெற்ற விடுதலை இயக்கம் பழம்பெருமையைக் கூறியே மக்களது கவனத்தைக் கவருவதையே சார்ந்து நின்றது: பழங்கால பெருமைகளைப் பேசியது. பழங்கால மதப் பழக்க வழக்கங்களையும் தத்துவங்களையும், தத்துவ ஞானங்களையும் ஆதாரமாகக் கொண்டு செயல்பட்டது.

காலஞ்சென்ற பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவரான ரஜனி பாமி தத் இந்த பழம் பெருமை பேச்சுக்களின் குணாம்சங்களைப் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறார்: ” முடை நாற்றமடிக்கும் மோசமான நிலை, அழிந்து வரும் தத்துவங்கள், நொறுங்கி விட்ட கிராம அமைப்பின் சிதிலமடைந்த அடையாளச் சின்னங்கள்: மறைந்துவிட்ட நாகரீகத்தின் அலங்கார அரண்மனைகளின் மிச்சமீதிகள் இவைதான் அன்றிருந்த நிலை. இந்த நிலையிலிருந்துதான் இந்துக் கலாச்சாரம் பற்றிப் பேசி – ஒரு பொற்கனவை உருவாக்கி அதை தங்களது எதிர்கால லட்சியமாக முன் வைத்தார்கள். வழிகாட்டும் ஒளிவிளக்காகவும் ஏற்றிப் போற்றினர். பிரிட்டிஷ் பூர்ஷ்வா கலாச்சாரமும் தத்துவமும், இந்தியாவிற்குள் வெள்ளமெனப் பிரவேசித்த நிலையில், அவை இந்திய பூர்ஷ்வாக்களையும், அறிவாளிகளையும், கவ்விப் பிடித்த நிலையில் புனரமைப்புச் செய்யப்பட்ட இந்து தத்துவத்தை ஓரளவு கேடயமாகக் கொள்வதற்கு இந்திய விடுதலை இயக்கத் தலைமை முயன்றது. ஆனால் இந்தியாவின் யதார்த்தமான வாழ்க்கை நிலைமைகளில், அந்தத் தத்துவம் நிலைத்திருப்பதற்கு இயற்கையான ஆதாரம் ஏதுமில்லை. இந்தக் கொள்கையின் தீவிர பக்தர்கள் புதிதாக இந்தியாவுக்குள் வந்த சமுதாய, விஞ்ஞான முன்னேற்றங்கள் அனைத்தையுமே, ஆக்கிரமிப்பாளர்களின் கலாச்சாரம் என வர்ணிக்கத் தலைப்பட்டனர். பழங்கால, வழக்கொழிந்துவிட்ட பாரம்பரியங்களையும், தவறான பாரம்பரியங்களையும் சலுகைகளையும், மதவாத பிற்போக்குத்தனத்தையும் பக்தி சிரத்தையுடன் போற்றி புகழ்ந்தனர்.”

பாமி தத் இவ்வாறு குறிப்பிட்டிருப்பது முழுவதையும் சரியென்று கூறமுடியாது: யதார்த்தமான நிலைமையின் ஒரு பகுதியை மட்டுமே அவர் குறிப்பிடுகிறார். ஏனெனில் தேசீய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்காக பழைய நாகரீகத்தைப் பற்றிக் கூறி மக்களைத் திரட்டுவது ஒரு பகுதியாக அன்று அமைந்தது. அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் சுயமரியாதை உணர்வுகளைத் தட்டி எழுப்புவதற்கு அது பயன்பட்டது. “அழிந்துவிட்ட தலைமுறைகள் அனைத்தின் பாரம்பரியமும், வாழும் தலைமுறையின் மூளையில் அச்சுறுத்தும் கனவுகளாகக் கனத்துக் கொண்டிருக்கும். மக்கள் தங்களையோ அல்லது தங்களது விஷயங்களையோ பரட்சிகரமான மாற்றத்திற்கு ஆட்படுத்த விரும்பும் காலங்களில் எப்போதுமே இருந்திராத ஒன்றை உருவாக்க முயலும்போதும். குறிப்பாக புரட்சிகரமான நெருக்கடி நிலவும் காலங்களில், தங்களது பணியை நிறைவேற்றிக் கொள்ள இறந்த காலத்தின் ஆவிகளை வேகமாக வரவழைத்துக்கொண்டு இறந்த காலத்திலுள்ள பெயர்கள், போர்க்கோஷங்கள், உடைகள் ஆகியவற்றையும் கடன் வாங்கிக் கொள்கின்றனர். உலக வரலாற்றில் ஒரு புதிய காட்சியை உருவாக்குவதற்காகவே காலத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தோற்றத்தையும், கடன் வாங்கப்பட்ட மொழியையும் பயன்படுத்திக் கொள்கின்றனர். இதே மாதிரி தான் கிறிஸ்தவ மதத்தை எதிர்ப்பதற்கு அதற்குள்ளேயே புராட்டஸ்டெண்ட் மதத்தின் தலைவராகத் தோன்றிய மார்ட்டின் லூதர் ஒரு தேவதூதன் என்ற முகமூடியை தரித்துக் கொண்டு போராட்டக் களத்தில் இறங்கினார்” என்று மார்க்ஸ் சரியாகவே குறிப்பிட்டார். (மார்க்ஸ் பதினெட்டாவது புருமர்.)

இந்தியாவை பொறுத்தவரை, நிகழ்காலத்திற்கு தேவையான ஊக்கத்தை பெறுவதற்காகவே, பழங்காலத்தைப் பயன்படுத்திக்கொண்டார்கள் என சாதாரணமாக கூறிவிடமுடியாது. ஜனநாயக விரோதமான சாதி  அமைப்புடன் சமரசம் செய்துகொள்வதற்காகவும், மத வாத பிற்போக்குத்தனங்களுடன் சமரசம் செய்துகொள்வதற்காகவுமே இந்தப் பண்டை கால பெருமை பேச்சு  பயன்படுத்தப்பட்டன. அன்று பாட்டாளி வர்கம் பலவீனமாக இருந்ததால், வளர்ந்துக்கு கொண்டிருந்த பூர்ஷ்வா வர்க்கம் தேசிய இயக்கத்தின் தலைமைப் பாத்திரத்தை கையிலெடுத்துக் கொண்டது. அந்த   பூர்ஷ்வா தலைமை தொடக்கத்திலிருந்தே நில உடைமையாளர்களுடனும் கண்மூடித்தனமான மதத்தையும் சாதியையும் வளர்க்கின்ற கிராமப்புற அமைப்பு முழுவதுடனும்  சமரசம் செய்துகொள்வதில் அக்கறை காட்டியது.

மதவாதம்,  வகுப்புவாதம், ஜாதியம் ஆகியவற்றைத் தொடரச்செய்வது இந்த சமரசங்களுக்குள் ஆழமாகப் பதிந்திருந்தது, அத்தகைய தொடர்ச்சியான சமரசமும், அந்தச் சமரசத்தின் பின்னணியில் அனுஷ்டிக்கப்பட்ட  முதலாளித்துவப்  பாதையின் விளைவே ஆகும். அதனால்தான், அடுத்தடுத்து பல ஐந்தாண்டுத்  திட்டங்கள் வெற்றியடைந்த பின்னருங்கூட, இறந்த காலத்தின் இத்தகைய அச்சுறுத்தும் கனவுகளை தவிர்க்க இயலவில்லை அது தொடர்ந்து நாட்டின் ஒற்றுமையை அரித்து வருகிறது.

மதத்தத்துவங்களை முறியடிக்கும் எதிர் சக்தி
பொருள் முதல்வாத தத்துவமே!

வகுப்புவாதம், மதப்பிரிவினைவாதம், சாதிய வாதம் இவையனைத்தும் நமது நாடு ஒரு நவீன தேசமாக வளர்ச்சியடைவதை தடுத்து நிறுத்துகின்றன. மக்களின் சமத்துவத்திற்கு, மற்ற  அனைத்தையும் நாட்டு விசுவாசத்திற்கு கீழே தள்ளி, நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் விசுவாசமாக இருக்கவேண்டும் என்ற நிலைமைக்கு இவை தடையாக நிற்கின்றன. ஒரு தேசீய முதலாளித்துவச் சந்தையின் மூலம் ஒன்றுபட்ட நவீன பூர்ஷ்வா தேசம் உருவாக வேண்டுமானால், முதலாளித்துவத்திற்கு முந்தய பிரிவினைத்  தத்துவங்கள்  அனைத்தையும் நமது தேவைகளின் அடிப்படையில் முறியடிப்பதன் மூலம் தான் செய்ய முடியும்.

ஐரோப்பாவில், வளர்ச்சி பெற்று வந்த பூர்ஷ்வாக்கள் நிலப்பிரபுத்துவ தத்துவங்களை தோற்கடித்தனர். அதற்காக அவர்கள் ரோமன் கத்தோலிக்க மதத்துடன் போராடினர்.ஆனால் அது மட்டும் போதவில்லை, கத்தோலிக்க மதத்தின் ஆதிக்கத்தையும் நிலப்பிரபுத்துவ சக்திகளின்

அதிகாரத்தையும் உடைத்தெறிந்தனர். ஆட்சியாளர்களின் பொருளாதார, அரசியல் அதிகாரங்களையும் தகர்த்தெறிந்தனர். இங்கிலாந்தில் செய்தது போல் அதிகாரமில்லாத அரசனை உருவாக்கினார். இருந்த போதிலும் முன்னேற்றம் அடைந்த முதலாளித்துவ சமுதாயங்களில் மதமும் அதன் செல்வாக்கும் முற்றும் மறந்துவிடவில்லை. உண்மையில், இவை நவீன பொருள் உற்பத்தியாளர்களின் புதிய சமுதாயத்திற்கு பொருந்துகின்ற வகையில் ஒரு புதிய மதம் தோன்றியது. ஸ்தூலமற்ற மனிதன் என்ற தத்துவத்தின் அடிப்படையில், குறிப்பாக பூர்ஷ்வா வளர்ச்சிக்கேற்றாற்போல் தன்னை மாற்றிக் கொண்ட கிறிஸ்துவ மதம் புராட்டஸ்டண்ட் மதமாக

உருவெடுத்தது. ஆனால், புதிய சமூதாயத்தின் தேவைகளுக்கேற்ப செயல்பட நேர்ந்தது. சில சமயங்களில்,பூர்ஷ்வா சமுதாயத்திற்கான போராட்டத்தில், மதங்களின் அடிப்படைத் தத்துவங்களுக்கே பொருள்முதல்வாதத்  தத்துவம் நேரடிச் சவாலாய் அமைந்தது .

இது ஏன் நடைபெற்றதென்றால், அரசியால் அதிகாரத்தை அடைவதற்காகவும்,  நிலப்பிரபுத்துவ ஆட்சியாளர்களை தூக்கியெறிவதற்காகவும், நிலப்பிரபுக்களின் பொருளாதார அதிகார தளங்களையும் அந்த அதிகாரங்களுக்கு உயிரூட்டி வந்த தத்துவ மேல்கட்டுமானங்களையும் உடைத்தெறிவதற்காக வளர்ந்து வரும் பூர்ஷ்வாக்கள் ஜீவமரணம் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது. இவ்வாறு எதிர்க்கப்பட  வேண்டி வந்த தத்துவங்களில் ரோமன் கத்தோலிக்க மதத்தின் தத்துவமும் ஒன்று.

இந்திய நிலைமை

இந்தியாவிலும், புதிதாக விடுதலையடைந்த நாடுகளிலும் நிலைமை அப்படியல்ல. பிரிவினை என்னும் பிரச்னை மதத்தினால் ஊக்குவிக்கப்பட்டு, நமது தேசிய போராட்டம் நடந்த காலம் முழுவதும் தொடர்ந்தது. இறுதியில் பிரிவினைக்கே இட்டு சென்றது. இதை நமது நாட்டில் கண்டோம். அது  மீண்டும் இன்று தலை தூக்கி, நாட்டின் ஒற்றுமைக்கே சவால் விடுகிறது.

பூர்ஷ்வாக்களின் தலைமையில் விடுதலைப் போராட்டம் நடைபெறும்போது நிலவிய ஒரு வினோதமான சூழ்நிலையே இதற்கு காரணம். தங்களின் தேவைகளின் அடிப்படையில் இந்திய பூர்ஷ்வாக்கள் ஒரு வர்க்கமாக உருவெடுத்து வந்த சமயத்தில், இந்தியாவிலிருந்த நிலப்பிரபுத்துவ ஆட்சி அதிகாரம் பிரிட்டிஷ்காரர்களால் ஏற்கனவே நொறுக்கப்பட்டது. அதே சமயத்தில் இந்திய பூர்ஷ்வாக்கள்  அதிகாரத்திற்காக ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராட வேண்டி இருந்தது. இவ்வாறு  பூர்ஷ்வா வர்க்கம் தனது வாழ்விற்காகவே, நிலப்பிரபுத்துவ அரசையோ அல்லது அவர்களது தத்துவத்தையோ எதிர்த்துப் போராட வேண்டிய தேவை ஏற்படவில்லை.

அது மட்டுமல்ல, ஒருசமயம்  இந்திய பூர்ஷ்வா வர்க்கம் ஏகாதிபத்தியத்தின்

உப விளைபொருளாகவே தோன்றியது என்று கூறப்பட்டது. தரகு முதலாளி வர்க்கம், வர்த்தகர்கள், வணிகர்கள், வியாபாரம் மற்றும் லேவாதேவியில் ஈடுபட்டிருந்தவர்கள் ஆகியவர்களிடையே இருந்து  தோன்றியதே இந்திய பூர்ஷ்வா வர்க்கம். நெடுங்காலமாக இவர்கள் தங்களது நிலப்பிரபுத்துவச்  சுரண்டல் முறைகளை மாற்றிக் கொள்ளாமலேயே, இந்தியப் பூர்ஷ்வாக்களின் பங்காளிகளாய் இருந்தனர்.

ஐரோப்பாவில் பூர்ஷ்வா வர்க்கம் தொழில் உடைமையாளர்களிடமிருந்தும் பொருள் உற்பத்தியாளர்களிடமிருந்தும் தோன்றியது. ஆனால் இந்தியாவில் விவசாயம் சம்மந்தப்பட்டவர்களுடனும் இந்திய பூர்ஷ்வா வர்க்கத்திற்கு ஆரம்பத்திலிருந்தே தொடர்பிருந்தது வந்தது. வர்த்தக பகுதியிலிருந்து வந்தவர்கள், நிலப்பிரபுத்துவ  சுரண்டல்களுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள், நிலப்பிரபுத்துவ ஆட்சியாளர்களை அதிகாரத்திலிருந்து தூக்கியெறியும்

கடமையை செய்யாதவர்கள் ஆகியோரே இந்திய பூர்ஷ்வாக்கள். ஆகவே அவர்களுக்கு நிலப்புரட்சி தேவைப்படவில்லை. நிலப்புரட்சி பற்றி அவர்கள் அஞ்சினார்கள். உண்மையில், ஏகாதிபதியத்தியதை எதிர்த்த போராட்டத்தில், அவர்கள் நிலப்பிரபுக்களின் ஆதரவை நம்பியிருந்தனர். சமஸ்தானங்களில் மன்னராட்சிமுறையை ஒழிப்பதற்கு காங்கிரஸ் இறுதிவரை எதிர்ப்பு தெரிவித்தது  தெரிந்ததே. நிர்பந்தம் ஏற்பட்ட பின்னர்தான் அதை ஏற்றுக்கொண்டது. நிலப்பிரபுக்களுக்கான விவசாயிகளின் கோரிக்கைகள் காங்கிரஸின் திட்டத்தில் என்றுமே இடம் பெற்றதில்லை.

இது இரண்டு விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.  தடுத்து நிறுத்தப்பட்டது ஒன்று. மற்றொன்று முதலாளித்துவத்திற்கு முந்தய கால தத்துவங்களான இந்து மதம், சாதி, வகுப்பு வாதம் ஆகிய அனைத்தும் பெருமளவிற்கு அப்படியே நிலைத்து நின்றன.

இந்ததியாவில் சாதி அமைப்பு தோற்றம் எப்படியிருந்த போதிலும், இஸ்லாம் மதம் தோன்றிய காலத்தில் அது ஒரு புரட்சிகரமான பாத்திரம் வகித்த போதிலும், இன்று நிலப்பிரபுத்துவ விவசாய உறவுகள் நீடிப்பதின் காரணமாகவும், விரிந்த அளவில் தொழில் வளர்ச்சி ஏற்படாததன் காரணமாகவும், மதப்பிரிவினை வாதங்களின் உண்மையான பாத்திரம் பற்றி மக்களுக்கு புரியாததன் காரணமாகவும், சாதி வெறியும், இந்து- முஸ்லீம் பிரிவினைகளும் தொடர்ந்து வளர்ந்து வருகின்றன.

இதன் விளைவாக, மதத்தையும், முதலாளித்துவத்திற்கு முந்தைய காலத்திய தத்துவங்களையும் எதிர்த்துப் போராடுவதற்கு, இந்திய பூர்ஷ்வா வர்க்கத்திற்கு தேவை ஏதும் ஏற்படுவதில்லை.

மேற்கத்திய  நாடுகளில் நிகழ்ந்தது போன்று, ஒரு புதிய மதத்தை உருவாக்க வேண்டும் என்ற அவசியம் அவர்களுக்கு தோன்றவில்லை.

இந்து மதத்தில்  ” சமூக சீர்திருத்தம் ” “இந்து-முஸ்லீம் ஒற்றுமை ஓங்குக” என்ற கோஷங்களுடன் அவர்கள் திருப்தியடைந்துவிடுகின்றனர். பின்வரும் வாசகங்கள் இதனைச் சரியாக விளக்கும் என நினைக்கிறேன் :

“இந்தியாவிலுள்ள- இஸ்லாம், புத்தமதம் அனைத்திற்கும் மேலாக இந்துமதம் ஆகிய எந்த மதத்தின் நடைமுறையிலும், ஒரு தீவிரமான பூர்ஷ்வா சீர்த்திருத்தம் ஏற்படவில்லை. இதன் பொருள் என்ன? புதிதாக தோன்றியுள்ள நிலைமையில், அதாவது வர்க்க முரண்பாடுகள், தொழில் ஏகபோக முதலாளித்துவ குறுக்கீட்டால் தீவிரப்படுத்தப்பட்ட சூழ்நிலையில், பாரம்பரியமாக உள்ள முதலாளித்துவத்திற்கு முந்திய வகுப்புவாத உணர்வுகள் சிறு உற்பத்தியாளர் பிரிவிலிருந்தே   இந்த புதிய மாற்றங்களுக்கு எதிரானதாகத் தோன்றுகின்றன.”

மேலேகூறியதன் கடைசி வார்த்தைகள் ஜாதிய வகுப்புவாத சச்சரவுகள் தோன்றி அதிகரித்து வருவதை சரியாக விளக்குகின்றன.

பழங்காலத்தை புதுப்பிப்பதில் நம்பிக்கை கொண்ட இந்திய தேசிய விடுதலைப் போராட்டத் தலைமையினர், மக்களின் மதநம்பிக்கைகளை அரவணைத்துச் செல்வது ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தில் சரியான ஆயுதமாக பயன்படும் என நினைத்தனர். அவர்கள் நினைத்ததெல்லாம் பல்வேறு மதநம்பிக்கை கொண்ட மக்கள் ஒருவருக்கொருவர் எதிராக மோதிக் கொள்ளக்கூடாது என்பதுதான். மதங்கள் அனைத்தையுமே, விமர்சனம் செய்யக்கூடாத புனிதமான விஷயங்களாக மதிக்கவேண்டும் என அவர்கள் விரும்பினர். ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பது என்ற நவீனமான நோக்கத்திற்காக மதங்களுடன் செய்து கொண்ட சமரசம் இது.

இந்த சமரசத்தால் விடுதலைப் போராட்டம் நடந்த குறுகியகாலத்தில் பலன் கிடைத்தபோதிலும், அது அழிவிலே முடிந்தது.

கிலாஃபத் இயக்கமும் அதன் பின்விளைவும்

தங்களது ஆளும் உரிமையை மறுத்து தங்களது ஆட்சி அதிகாரத்தை பிரிட்டிஷ்காரர்கள் பறித்துக் கொண்டதாக வைதீகமான முஸ்லீம்கள் கருதினர். கல்விமுறை உள்ளிட்ட மேற்கத்திய நாகரீகமானது பாவம் என்றும், முஸ்லீம் விரோதத் தன்மை கொண்டது என்றும், காந்தி கண்டனம் செய்வதற்கு முன்பாகவே, கிறிஸ்தவ மதத்தை எதிர்க்க வேண்டும் என்ற கருத்துடன் தங்களது இஸ்லாமிய பாரம்பரியங்களை முஸ்லீம்கள் எண்ணிப் பார்க்கத் தொடங்கினர். ஜனநாயகக் கோட்பாடுகள், சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு அந்த வகுப்பினர் நவீனப்படுத்தப்படுவதும் மிகக் குறைந்த வேகத்திலேயே நடைபெற்றது.

சேவ்ரீஸ் ஒப்பந்தத்தின் மூலம் முஸ்லீம் பேரரசான துருக்கிக்கு பிரிட்டிஷ் ஆட்சி இழைத்த அநீதியை எதிர்த்து நடைபெற்றதுதான் கிலாஃபத் இயக்கம். முதல் உலகப்போருக்குப் பின்னர் முஸ்லீம் மக்களிடையே இருந்த அதிருப்தியை ஒருமுகப்படுத்துவதற்கு அந்த இயக்கம் பயன்பட்டது. துருக்கி மக்களின் உரிமைகள் மீறப்படுவதை எதிர்த்து மட்டும் நடைபெற்ற இயக்கமல்ல அது: இஸ்லாம் மதத்தின் ஆன்மீகத்தலைவர் என்ற முறையில் தனது அலுவல்களை மேற்கொள்ளும் வகையில் கலீஃபாவுக்கு (துருக்கி அரசர்) அரசு அதிகாரத்தை மீட்டுத் தரவேண்டும் என்பதும் அந்த இயக்கத்தின் கோரிக்கையாகும். இதில் முஸ்லீம் மத உணர்வுகள் மேலோங்கியிருந்த போதிலும், ஒத்துழையாமை இயக்கம் என்ற இந்திய தேசியப் போராட்டத்தில் இந்த கிலாஃபத் இயக்கமும் இணைந்தது. காந்தியும், தேசீய காங்கிரசும் இந்த கிலாஃபத் இயக்கத்திற்கு ஆதரவளித்தனர். அதன் மூலம், முன்னெப்போதும் கண்டிராத அளவில் இந்திய மக்களின் ஒற்றுமையை உருவாக்கியதன் மூலமாக 1857-ல் நடந்த விடுதலைப் போராட்ட நாட்களை பிரிட்டிஷாருக்கு நினைவுபடுத்தி, அவர்களை குலைநடுங்க வைக்க முடிந்தது.

சுயராஜ்யம் என்றால் முழுமையான சுதந்திரம் என்றே பொருள் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முதலில் எழுப்பியவர்கள் கிலாஃபத் தலைவர்களே. 1921-ல் அகமதாபாத்தில் நடைபெற்ற தேசீயகாங்கிரசின் கூட்டத்தில்தான் மௌலானா அஸ்ரத் மொகானி என்பவர் இந்த கோரிக்கையை முன்வைத்தார். இந்த கோரிக்கைக்கு ஏற்பட்ட எதிர்ப்புக்கு தலைமை வகித்தவர்தான் காந்திஜி.

அதேபோன்று, 1919–ம் ஆண்டிலேயே முஸ்லீம்கள் எவரும் இந்திய ராணுவத்தில் சேரக்கூடாது என முஸ்லீம்லீக் தனது அமிர்தசரஸ் கூட்டத்தில் அறைகூவல் விட்டது.

“இந்தியாவின் நலன்களையும், முஸ்லீம்களின் நலன்களையும் கவனத்தில் கொண்டு நோக்கும்போது, ‘சுயராஜ்யம்’ என்ற தனது முழக்கத்திற்கு  பதிலாக, “முழு சுதந்திரம்” (பூர்ணசுயராஜ்யம்) என்ற முழக்கத்தை காங்கிரஸ் உருவாக்க வேண்டும்” என 1922 ஜூன் மாதம், லக்னோவில் கிலாஃபத் இயக்கமும், ஜமாதி-எ-உல்-உலீமாவும் இணைந்து நடத்திய மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதியநிலைமை

இந்த காலத்தில்தான் இந்தியாவிலிருந்த பாரம்பரியங்களும், பரம்பரையான பிளவுகளும் உடைத்து நொறுக்கப்பட்டன. இந்திய அரசாங்கத்தின் வெளியீடு ஒன்று (1919-20-ம்ஆண்டுகளில் இந்தியா என்ற வெளியீட்டில்) பின்வருமாறு குறிப்பிடுகிறது:

“என்றுமில்லாத அளவுக்கு இந்து-முஸ்லீம் சகோதரத்துவம் ஏற்பட்டது. பொதுவான பரபரப்பான சூழ்நிலையில் குறிப்பிட்டுக் கூறவேண்டிய ஒரு அம்சம் என்னவெனில், தலைவர்களிடம் ஏற்பட்ட ஒற்றுமை, ஒரு தேசியமேடை அமைப்பதற்கு உதவிகரமான, நீண்டகாலமாக சிந்திக்கப்பட்ட, ஒரு திட்டமாக அது அமைந்தது. பொதுமக்களிடம் பரபரப்பு ஏற்பட்டிருந்தநிலையில் கீழ்நிலையிலிருந்த வர்க்கங்கள் கூட தங்களது வேறுபாடுகளை முதல்தடவையாக மறந்துவிடுவதற்கு சம்மதித்தனர். மிக அபூர்வமான இந்து-முஸ்லீம் சகோதரத்துவக் கட்சிகள் நாட்டில் ஏற்பட்டன. இந்துக்கள் முஸ்லீம்கள் கைகளிலிருந்தும், முஸ்லீம்கள் இந்துக்களின் கைகளிலிருந்து பகிரங்கமாக தண்ணீர் வாங்கி அருந்தினர். ஊர்வலங்களில் முழங்கிய கோஷங்களிலும், பதாகைகளிலும் “இந்து-முஸ்லீம் ஒற்றுமை” என்பது தாரகமந்திரமாக மாறியது. மசூதிகளின் மேடைகளிலிருந்து உரையாற்ற இந்துமதத்தைச் சார்ந்த தலைவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.”

இந்த சமயத்தில்தான் விவசாயிகள் பகிரங்கமாக நிலச்சுவான்தார்களை எதிர்த்து போராடினர். இந்த போராட்டத்தை காங்கிரஸ் காரியக்கமிட்டி பர்தோலி கூட்டத் தீர்மானத்தின்மூலம் வாபஸ் வாங்கியது. இவ்வாறு வாபஸ் வாங்கியது, போராடிய மக்களிடையே சோர்வை உண்டாக்கி இந்து-முஸ்லீம் வகுப்புகளைச் சார்ந்த விவசாயிகள் என்ற வகையில் ஒன்றுபட்டு நிலப்பிரபுகளுக்கு எதிராக ஒற்றுமையாக போராடியதை தடுத்து விட்டது. இந்து முஸ்லீம் ஒற்றுமை நிலப்பிரபுகளுக்கு எதிராக வளர்வதைத் தடுத்துவிட்டது. இந்த சமயத்தில் துருக்கியில் காலிப் பதவியிறக்கம் செய்யப்பட்டார். இது கிலாஃபத் இயக்கத்தின் உற்சாகத்தை குறைத்து விட்டது. கிலாஃபத் இயக்கத்தின் முக்கியமான கோஷத்திற்கு மதிப்பில்லாமல் போய்விட்டதால் காங்கிரசிடமிருந்தும், பொதுவான போராட்டங்களிலிருந்தும் முஸ்லீம் மக்கள் விலகிச் சென்றனர். அதற்குப்பின் தேசீயப் பேரெழுச்சிகளில் அவ்வளவு பெரிய அளவில் அவர்கள் கலந்துகொள்ளவேயில்லை. இதற்குப் பிறகு, பொதுவான ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்திலிருந்து அவர்களை பிரித்துவைக்கும் வகையில் அவர்களது முஸ்லீம் மத உணர்வுகள் நவீன சுயநலசக்திகளுக்கு பயன்பட்டது.
இவ்வாறு சிறுபான்மை மதத்தினருக்கு வேண்டுகோள் விடுவது, அவர்களை தேசீய இயக்கத்தில் சேர்த்துக் கொள்வது என்ற போக்கு தேசிய இயக்கத்திற்கு பாதகமாக முடிந்தது, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமும், முஸ்லீம் நிலப்பிரபுக்களும் 1920–ம் ஆண்டு நிகழ்ச்சிகள் மீண்டும் இந்து-முஸ்லீம் ஒற்றுமை ஏற்பட்டுவிடாமல் கவனமாகப் பார்த்துக் கொண்டனர். மக்களிடம் மதவெறி பரப்பப்பட்டது. ஆனால் அதன் உண்மையான உள்ளடக்கம் என்னவென்றால் ஆளும் ஏகாதிபத்தியத்தின் நலன்கள் உள்ளிட்ட அக்காலத்திய சுயநல சக்திகளின் அனைத்து நலன்களையும் பாதுகாக்க வேண்டும் என்பதே.

சிறுபான்மையோர் பிரிந்துசென்று விட்டனர்; அது நாட்டுப் பிரிவினையில் போய்முடிந்ததென்று கூறப்படுவதன் பின்னால் உள்ள நவீன வர்க்கநலன்களை பற்றி ரஜனி பாமி தத் மிகத் தெளிவாகவே விளக்குகிறார். “பம்பாய், கல்கத்தா, சென்னை ஆகிய பெரும்பான்மையாக இருக்கும் பகுதிகளில்,  வடக்கில் முஸ்லீம்கள் சிறுபான்மையாக இருக்கும் பகுதிகளைவிட மிக முன்னதாகவே, வர்த்தகம், வணிகம், கல்வி ஆகியவற்றின் வளர்ச்சி தொடங்கிவிட்டது. இந்திய பூர்ஷ்வா வர்க்கம் தோன்றியதையடுத்து, இரண்டு பகுதியினருக்கிடையே இருந்த போட்டி மிக எளிதாக வகுப்புவாத உணர்வுகளாக மாறியது. முஸ்லீம் மேல்தட்டு மக்களில் பெரும்பான்மையோர் பெரிய நிலப்பிரபுக்களே. வளர்ந்துவரும் தொழில் முதலாளிகளைக் கண்டு அவர்கள் அதிருப்தியடைந்தனர். அந்த முதலாளிகளின் முன்னேற்றத்தை, இந்து பனியாக்களின் முன்னேற்றமாகவே அவர்கள் கருதினர்’ என்று பாமி தத் குறிப்பிடுகிறார்.

மதப் பிரச்சனையில் காங்கிரஸ் இயக்கத்தின் முரண்பாடுகள்.

பிற்காலத்தில் ஏற்பட்ட சிறுபான்மையோர் பிரிவினைவாதம் வர்க்க நலன்களில் ஏற்பட்ட மோதல்களின் நேரடி விளைவேயாகும். (முஸ்லீம்) நிலப்பிரபுக்கள் பூர்ஷ்வாக்களின் முன்னேற்றத்திற்காக முஸ்லீம் மக்களைத் திரட்டியதன் விளைவே இந்து ஆதிக்க எதிர்ப்பு உணர்வாக பிரதிபலித்தது. வர்க்க ரீதியான மோதல்களுக்கு மதவேறுபாடுகளினால் ஏற்பட்ட வகுப்புச்சண்டை என்ற போர்வை போர்த்தப்பட்டது.

காங்கிரஸ் தலைவர்களின் தேசீயம் ஐயத்திற்கிடமில்லாமல் இந்துமதக் கோட்பாடுகளுடன் தொடர்பு கொண்டிருந்தது. இதுவும் ஒரு சாதாரண முஸ்லீமைப் பொறுத்தவரை நிலைமையை மேலும் சிக்கலாகியது.

சாதி உணர்வுகள் நிலைத்து நிற்பதும் அதைப் போன்ற காரணங்களினால்தான். விவசாயப் புரட்சி (நிலச் சீர்திருத்தம்) நடத்தப்படவில்லை; முன்னணி பூர்ஷ்வா வர்க்கமும், நிலப்பிரபுத்துவ வர்க்கமும் இணைந்து நின்று பண்டைய பெருமைவாத உணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்; இந்துமதத்தில் சமூக சீர்திருத்தம் செய்யப்படவில்லை. ஏறக்குறைய உயர்சாதிகளிருந்தே வருகின்ற பூர்ஷ்வா அறிவாளர்கள் சாதி ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டம் பற்றிய பிரச்சனையை எடுத்துக் கொள்வதையே விரும்பவில்லை. அப்படிச் செய்தால், அது அரசியலில் மதத்தைக் கலப்பதாக அமையும் என கூறுகின்றனர். அதனால்தான், முந்தைய காலத்திய சாதி எதிர்ப்பு இயக்கங்களும், ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்களின் நியாயமான எதிர்ப்பியங்கங்களும், காங்கிரசிடமிருந்து தனித்து நின்றே வளர்ந்தன.

சாதி எதிர்ப்பு இயக்கங்களும், தங்களது போராட்டத்தை விவசாய உற்பத்தி உறவுகளை மாற்றுவதற்கான போராட்டத்துடன் இணைத்துக் கொள்ளவில்லை. இன்னும் சொல்லப்போனால், ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களினின்றும் கூட அவை தம்மை விலக்கிக் கொண்டன.

சாதி அமைப்புடன் சமரசம் செய்துகொண்டு அதைப் பாதுகாப்பது என்ற தத்துவத்தின் பிரதிநிதி வேறுயாருமல்ல; காந்திஜியே அதைச் செய்தார். தனது முதல் ஒத்துழையாமை இயக்கத்தின்போது, ஒரு புனித போரின் போர்வீரன்போல் தீண்டாமையை எதிர்த்துப் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர் மகாத்மா என்பதால், அவரைப் பற்றி இப்படிக் கூறுவது விநோதமாயிருக்கும்.

ஆரம்ப காலத்தில், பிரிட்டிஷாருக்கெதிரான போராட்டத்தில் ஒரு தேசிய பேரெழுச்சி தேவைப்பட்ட காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கையே அது. இவ்வாறு அவர் கிளர்ச்சிப் போராட்டத்தை நடத்தியபின்பு, இந்து மக்கள் தங்களிடையே சமூக சீர்திருத்தம் செய்துகொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளுடன் தனது இயக்கத்தை முடித்துக் கொண்டார். நில உறவுகளை மாற்றுவதற்கான போராட்டத்திலிருந்தும் தனது இயக்கத்தை விலக்கியே வைத்தார். அதைத் தவிர வர்ணாஸ்ரம தர்மம் என்ற தத்துவத்தையும் அவர் நியாயப்படுத்தினார். “தீண்டாமையை நாம் ஒழிக்கவில்லை என்றால், பூமியின் பரப்பிலிருந்து நாம் ஒழிக்கப்பட்டு விடுவோம். ….எண்ணிலடங்கா சாதிகள் தேவையற்ற, இயற்கைக்கு விரோதமான வளர்ச்சித் தோற்றங்கள்;  அதேவேளையில் நான்கு வர்ணங்கள் மிகவும் அடிப்படையானவை; இயல்பானவை; தேவையானவை. சக்தியையும், பொருளாதாரத்தையும் சீரான நிலையில் பாதுகாப்பது என்ற இயற்கையின் விதியை வர்ணங்கள் நிறைவு செய்கின்றன. சுயகலாச்சாரத்தின் வேறுபட்ட அமைப்புகளின் வகைப்படுதலே அது.  ஸ்திரத் தன்மைக்கும், சுபிட்சத்திற்கும் மிகவும் சிறப்பான முறையிலான அனுசரணையான ஏற்பாடு அது. ஒரு குறிப்பிட்ட வாழ்க்கைமுறையை உருவாக்க அது முயல்கிறது. ஒரு குறிப்பிட்ட குடும்பம் எந்த ஒரு குறிப்பிட்ட வகையைச் சேர்ந்தது என்ற பிரச்னையில், சில அறிஞர்கள் தம் மனம்போன போக்கில், ஒருதலைப்பட்சமாக தீர்ப்பளிப்பதை அது அனுமதிப்பதில்லை. பாரம்பரியம் என்ற கோட்பாட்டில் அது நம்பிக்கை கொள்கிறது. ஒரு குறிப்பிட்ட நபரோ அல்லது குடும்பமோ தங்களது நல்வாழ்விற்காக தங்களது வாழ்க்கைமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும் என முடிவெடுத்திருப்பினுங்கூட தொடர்ந்து பழைய குழுவிலேயே இருக்கவேண்டியிருப்பதை, ஒரு கலாச்சார அமைப்பு என்ற அதை ஒரு அநீதியாக வர்ணாஸ்ரம தர்மம் கருதுவதில்லை.”

இதைவிட ஒரு அனுசரணையான அமைப்பை கற்பனை செய்வது கடினம். சாதி என்றால் அதற்கு உயர்வு தாழ்வு என்று ஏதுமில்லை. வேறுபட்ட கண்ணோட்டத்தையும், அதற்கிசைந்த வாழ்க்கை முறையையும் அது அங்கீகரிக்கிறது,  அவ்வளவுதான்” ( தான் எழுதிய ‘ இந்தியாவில் சாதியின் சவால்’ என்ற நூலில் மேற்கண்ட காந்தியின் வாசகங்களை ஜெகஜீவன் ராம் மேற்கோள் காட்டியிருக்கிறார்.)

ஜவகர்லால் நேரு முற்போக்கான, மதசார்பற்ற கண்ணோட்டம் கொண்டவராகயிருந்தாலும்கூட,  காந்தியக் கண்ணோட்டம்தான் காங்கிரஸ் தலைவர்களிடமும் ஊழியர்களிடமும் ஆதிக்கம் வகித்தது. ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னணியிலிருந்த பூர்ஷ்வாக்களின் வர்க்கத் தேவைகளை அது சரியாக பிரதிநித்துவப்படுத்தியது. ‘முதலிலும், முடிவிலும் தேசமே’ என தேசியத் தலைவர்கள் முழங்கியதென்னவோ உண்மைதான். ஆனால் சாதியைக் கடைப்பிடிப்பதில் அவர்கள் காந்தியின் கண்ணோட்டத்தையே நடைமுறைப்படுத்தினர்.

அரசியல் சாசனத்தின்படி சட்டத்தின் முன் அனைத்துக் குடிமக்களும் சமம் என பூர்ஷ்வா தலைவர்கள் கூறினார்கள். ஆனால் அது ஒரு சம்பிரதாயமான அறிவிப்புதான். யதார்த்த வாழ்வில், பல்வேறு சாதிகளிடையே சமத்துவம் என்பது இல்லை.

சுதந்திரத்திற்குப் பின் வளர்ந்து வரும் சாதி, மத உணர்வு

சுதந்திற்குப்பின் அண்மைக் காலங்களில், இந்தச் சாதி உணர்வு வளர்ச்சி பெற்றிருப்பதாகவே தோன்றுகிறது. தேர்தல்களிலும், சில சலுகைகளை பெறுவதிலும், அமைச்சரவைகளில் இடம்பிடிப்பதிலும் இது அப்பட்டமாக பயன்படுத்தப்படுகிறது. ஆளுங்கட்சிகூட, தேர்தல்களில், வாக்குகளை சேகரிப்பதற்கு, அமைச்சரவை அமைப்பதற்கு இதைக் கையாளுகின்றது. ஜனநாயகப் போராட்டங்களிலும், வர்க்கப் போராட்டங்களிலும் சாதி என்ற மேல்கட்டுமானமும், சாதி உணர்வுகளும் ஊடுருவியிருக்கின்றது என்பது தெளிவானதாகும். மற்ற பிரிவினை சக்திகளுக்கு உதவுவதில், முனைப்பாக நிற்கும் சக்திகளில் இதுவும் ஒன்று.

தீங்கு விளைவிக்கும் இந்த சாதிய செல்வாக்கு, உயர்சாதிகளிலும், நல்ல நிலைமையிலிருக்கும் சாதிகளில் மட்டுமே இருப்பதாகக் கூறமுடியாது. இந்தியாவில் ஏற்பட்ட பொருளாதார மாற்றங்களும், அரசியல் எழுச்சிகளும், சாதியின் பொருளாதார அடிப்படை மீது மிகக் குறைவான பாதிப்பையே ஏற்படுத்தியிருக்கின்றன. பாதிப்பு எந்த அளவிற்கு குறைவானதென்றால் தீண்டப்படாத மக்கள் தங்களுக்குள்ளேயே சாதிக் கண்ணோட்டங்கள் காரணமாக பாதிக்கப்படுகின்றனர். ‘இந்தியாவில் சாதியின் சவால்’ என்னும் தனது புத்தகத்தில் ஜெகஜீவன் ராம் கூறுகிறார்; “இந்த (சாதி) அமைப்பின் விளைவுகள் எந்த அளவுக்கு தீங்கு பயப்பதாயும், எங்கும் வியாபித்திருப்பதாயும் இருக்கிறதென்றால், பிற்படுத்தப்பட்ட மக்களே பெரும்பான்மையாக இருக்கும் இந்த நாட்டின் மக்கள், சாதி விலங்குகளை உடைத்தெறிவதற்கு பதிலாக, உயர்சாதிகளின் பழக்க வழக்கங்களை பழகிக் கொள்வதிலேயே கவனம் செலுத்தி வருகின்றனர்.

தீண்டப்படாத மக்கள் தங்களுக்குள்ளேயே தீண்டாமையை அனுஷ்டிக்கிறார்கள் என்ற வியத்தகு நிலைக்கு சென்றிருக்கிறார்கள் என்றால் பிராமணர்களை இவர்கள் மிகவும் உளப்பூர்வமாக பின்பற்றுகிறார்கள், ஆனால் மோசமாகப் பின்பற்றுகிறார்கள் என்றுதான் பொருள்கொள்ள முடியும்.”

யதார்த்தத்தில், தீண்டப்படாத மக்கள் மத்தியில் சாதியின் பிடிப்பையே இது வெளிப்படுத்துகிறது. இது பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து வருவதும் அவர்களுக்கெதிரான கொடுமைகளுக்குப் பின்னும் அவர்களால் உடைத்தெறிய முடியாததுமான அந்த தத்துவம் அவர்களையே கவ்விப் பிடித்திருக்கிறது. ஆளும் பகுதியினரின் தத்துவம் ஒடுக்கப்பட்டவர்கள்மீது இவ்வாறுதான் தொடர்ந்து ஆதிக்கம் வகித்து வருகிறது. இந்த சாதியத் தத்துவம் பாட்டாளிகளின் வர்க்கப் போராட்டங்களிலும் சமத்துவம்கோரி தீண்டப்படாதவர்களும் மற்றவர்களும் நடத்தும் போராட்டங்களிலும் முனைப்பாக ஊடுருவி அப்போராட்டங்களை சீர்குலைக்கிறது. ஆளுகின்ற இரண்டு பிரிவினரின் வர்க்கக் கூட்டின் விளைவாக தோன்றிய இன்றைய சாதிய உணர்வு, அந்த வர்க்கங்களின் தேவைகளுக்கு சேவைசெய்து வருகிறது.

சாதி, மத வாதத்தைஎதிர்த்துப் போராடும் சக்திகள்

ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல், சாதியையும், வகுப்புவாதத்தையும் எதிர்த்துப் போராடும் சக்திகளும் களத்திலிருக்கின்றன. சாதி, மத வேறுபாடுகளின்றி பொதுவான போராட்டங்களில் மக்களை ஒன்றுபடுத்தும் சக்திகளாக அவை செயல்படுகின்றன. வெகுஜன ஸ்தாபனங்களும், இடதுசாரிக் கட்சிகளும் சேர்ந்து எடுக்கும் வெகுஜன கூட்டு நடவடிக்கைகள், மக்களை தெளிவுபடுத்துகின்ற வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மற்ற இடதுசாரிக் கட்சிகளும் நடத்துகின்ற தத்துவ, அரசியல் பிரச்சாரங்கள், இரண்டரை லட்சம் பம்பாய் பஞ்சாலை தொழிலார்களின் வேலைநிறுத்தம் போன்ற உழைக்கும் வர்க்கத்தின் நீண்ட நெடிய போராட்டங்கள் எல்லாம் புதிய உணர்வுகளை உருவாக்குகிற சக்திகளின் நடவடிக்கைகளாகும். பொதுவான போராட்டத்திற்கான அவசியத்தின் அடிப்படையில்தான் இந்த புதிய உணர்வு உருவாகிறது. ஆனால் முதலில் வருவது நடைமுறை செயல். அதன் பின்னர்தான் பேச்சும் உணர்வும். இந்த போராட்டங்களின் அனுபவம் என்ன? மக்களது உணர்வில் உடனடியான மாற்றத்தை ஏற்படுத்தி விடுவதில்லை. திடீர் குமுறல்கள், பின்னடைவுகள் ஆகியவற்றுடன் சேர்த்து வரும் இந்த வளர்ச்சிப்போக்கு மெள்ளமெள்ளத்தான் முன்னேற்றமடையும். சூழ்நிலையில் ஏற்பட்டு வரும் மாற்றத்தையும், சாதிஎதிர்ப்பு மோதல்கள் வளர்ந்து வருவதையும், அந்தப் போராட்டம் வர்க்கப் போராட்டத்துடன் இணைவதையும் வெளிப்படுத்துகின்ற மற்றொரு அறிகுறியாக கிராமப்புறங்களில் தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அது தற்போது நிலப்பிரபுகளுக்கு (மேல்ஜாதியைச் சேர்ந்த நிலப்பிரபுக்களுக்கு) எதிராக விவசாயத் தொழிலாளர்களின் நேரடிப் போராட்டமாக உருவெடுத்து வருகிறது.

தாழ்த்தப்பட்ட மக்கள் தொடர்ந்து குனிந்து கொடுத்துக் கொண்டிருப்பதை விரும்பவில்லை. அவர்களும் எதிர் நடவடிக்கைகளில் இறங்கத் தொடங்கிவிட்டனர். அத்தகைய நடவடிக்கைகள்மீது பூர்ஷ்வா-நிலப்பிரபுத்துவ ஆட்சி அதிகாரம் இரக்கமற்ற முறையில் அடக்குமுறையை ஏவிவிடுகிறது. பொருளாதார நெருக்கடியும், வறுமையும் மக்கள் மத்தியில் ஒரு புதிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. மக்கள் தங்களது ஜனநாயகப் போராட்டங்களை பாரம்பரியமான முறையில் (சாதி முதலிய முறைகளில்) வெளிப்படுத்தி வருகின்றனர். இதை சாதி உணர்வு என்று கருதக் கூடாது; மாறாக, இது சாதிக்கு எதிரான போராட்டமே.

மதவெறி கட்சிகளின் அழிவு வேலையும் அரசின் அலட்சியப் போக்கும்

இஸ்லாமிய அடிப்படைவாத உணர்வுகளும், முஸ்லீம் மக்கள் மத்தியில் அதிகரித்து வருகின்றன. தற்போதைய சூழ்நிலையினுடைய வர்க்கசக்திகளின் செயல்பாடுகளினுடைய தர்க்கரீதியான தொடர்விளைவே இது. மேற்குஆசிய நாடுகளில், முற்போக்கு ஜனநாயக பாட்டாளி வர்க்கச் சக்திகளை எதிர்த்து போராடுவதற்கும், ஏகாதிபத்தியத்திற்கு வால்பிடிக்கின்ற பிற்போக்கு ஆட்சியாளர்களை பதவியிலமர்த்துவதற்கும் இஸ்லாமிய அடிப்படைவாதம் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் வறுமையினால் பாதிக்கப்பட்டும், ஓரவஞ்சனை செய்யப்பட்டும்,   இரண்டாந்திர குடிமகனாக நடத்தப்பட்டு வரும் முஸ்லீம்களின் செவிகளில் இது தேனாக பாய்கிறது. வறுமையில் சிக்கித் தவிக்கும் மற்ற மக்களுடன் துன்பங்களை பகிர்ந்து கொள்ளும் உணர்வுக்கு மாறாக, அரசாங்கத்திலிருக்கும் தலைவர்கள் வேறு மத நம்பிக்கை கொண்டவர்கள் என்பதால் அவர்களால் அநீதி இழைக்கப்படுகிறது என்ற வகையில் உணர்வுகள் உருவாகின்றன. பொதுவான ஜனநாயகப் போராட்டம் மற்றும் வர்க்கப் போராட்டத்தினின்று முஸ்லீம் மக்களை விலைக்கு வைக்கவும், தேசீய உணர்வுகளுக்கு ஊறுவிளைவிக்கவும் தேசீய ஒற்றுமை உணர்வை அரிக்கச் செய்யவும், மதத் தத்துவம் இப்போது முனைப்பாக தலையிடுகிறது. சிறுபான்மையினருக்கு, அதாவது, மதம், கலாச்சாரம் முதலானவற்றின் அடிப்படையிலான சிறுபான்மையினருக்கு ஒரு பூர்ஷ்வா-நிலப்பிரபுத்துவ ஆட்சி நீதி வழங்கிட முடியாது. இந்தியாவை போன்ற புதிதாக விடுதலையடைந்த ஒரு நாட்டில், முதலாளித்துவத்திற்கு முந்தைய தத்துவங்கள் மக்களின் உணர்வுகளில் ஆதிக்கம் புரியும் நிலையில், மதச் சிறுபான்மையினர் ஒடுக்கப்படுகின்றனர். நாட்டின் ஒற்றுமையை உருக்குலைத்து ஏகாதியத்திற்கு உதவும் வகையில் மக்களை ஒருவருக்கொருவர் எதிர்த்து மோதவைப்பதற்கு, பகைமை உணர்வுகளை மதவெறியர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர். சுதந்திரத்திற்கு முற்பட்ட காலத்தில், சிறுபான்மை பிரிவினைவாதம் என்பது சில கற்பனையான மனக்குறைகளின் அடிப்படையில் தோன்றியவை. ஆனால் இன்று அவை நியாயமான மனக்குறைகளாகும். ஜனநாயக உரிமைகள் மீறப்படுவதால் ஏற்படும் உண்மையான குறைபாடுகளாகும். . ஆனால், இஸ்லாமிய அடிப்படைவாதிகளும், வகுப்புவாதிகளும், அதை மதவாத, வகுப்புவாத பிரச்சினையாக  மாற்றி விட்டனர். மனக் குறைபாடுகள் ஏதுமில்லாமலேயே ஒரு பிரிவினைவாதக் கண்ணோட்டம் உண்டென்றால், அது ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான இந்து வகுப்புவாதம்தான். பகைமைகளை தூண்டி விடுவதற்காக வேண்டுமென்றே கிளப்பிவிடும் வாதம் அதனுடையது.

இந்து வகுப்புவாதப் பிரச்சாரத்திற்கு ஆயிரக்கணக்கான மக்கள் இரையாகின்றனர் என்றால், ஆளும் வர்க்கங்கள் இந்த நாட்டிற்கு விளைத்திருக்கும் தீமையின் அளவையே, இந்த நிலைமை எடுத்துக்காட்டுகிறது. இந்துமத வழிபாடான பசு-பாதுகாப்பு என்பது நாட்டின் அரசியல்சாசனத்தில் அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைகளில் ஒன்றாக இடம் பெற்றிருப்பதின்மூலம், இந்துமத வைதீகத்திற்கு எத்தகைய சலுகை வழங்கப்பட்டிருக்கிறது என்பது தெளிவு.

தேசீயஒற்றுமை என்ற அஸ்திவாரத்தைக் கட்டுவதற்காக, எந்தெந்த தத்துவங்களையும் கண்ணோட்டச் செல்வாக்குகளையும் ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகள் எதிர்த்துப் போராடினவோ, அவையெல்லாம் இன்று நிலைத்து நிற்கின்றன. பூர்ஷ்வா நிலப்பிரபுத்துவக் கூட்டணிக்குள் இருந்துவரும் உள்ளார்ந்த சமரசம், தீவிர நிலச்சீர்திருத்தங்கள் செய்ய மறுப்பது, தொழில்வளர்ச்சியில் மந்தப்போக்கு ஆகிய அனைத்தும் ஒன்று சேர்ந்துதான் அவற்றை அவ்வாறு நிலைபெறச் செய்திருக்கின்றன. இன்று அதே செல்வாக்குகள் மேலும் உயரச் செல்லுவதற்காக போராடுகின்றன. பிரிவினை கோரிக்கைகளுக்கு வழிகோலும் சீர்குலைவு சக்திகளிடமிருந்து புதிய சவால்கள் தோன்றியிருக்கின்றன. பல்வேறு மொழி பேசும் மக்களை ஒன்றாக இணைந்து இருக்கச் செய்து மொழி வழி தேசிய ஒற்றுமை காப்பது அவசியம். இதை இந்த பூர்ஷ்வா-நிலபிரபுத்துவ ஆட்சியால் செய்ய இயலவில்லை என்பதையே அஸ்ஸாமும், காலிஸ்தானும் மீண்டும் உணர்த்தியிருக்கின்றன. இந்தியாவை துண்டாடும் அமெரிக்காவின் திட்டம் மேற்கூறிய தத்துவங்கள் செய்துவருகின்ற சீர்குலைவு வேலைகளை ஆதாரமாக கொண்டிருக்கிறது.

“பல ஆசிய-ஆப்பிரிக்க நாடுகளில் பரம்பரையான வகுப்புவாதம், இனம், சாதி, இடம், குழு, அரை-நிலப்பிரபுத்துவ மதவெறித்துவம் ஆகியவையெல்லாம், ‘எஜமானர்களாகவும்’, வர்த்தகர்களாகவும், மாற விரும்புகின்ற சிறிய உடைமையாளர்களின் தினசரி வாழ்க்கையின் தத்துவங்களாக இருக்கின்றன. அதனால்தான் அவர்கள் பழங்குடிஇனம், சாதி, மதம், தார்மீக முறைகள் ஆகியவற்றைப் பின்பற்றி வருகின்றனர். இவையனைத்தையும் வரலாறு விரும்புகின்ற வேகத்தில் மாற்றிவிட்டு அந்த இடத்தில் தூய்மையான மதச்சார்பின்மை தத்துவத்தையும், ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசீயத்தையும் உருவாக்கிவிடுவது என்பது அவ்வளவு எளிதான காரியமா? சாதாரணமாக அது முடியாது” என்று கூறுகிறார்கள். இப்படிக் கூறுவது சரியாக இருக்குமா? இது ஓரளவு உண்மைதான். ஆனால் பிரச்சனை என்னவென்றால், இந்த உணர்வுக்கு வெகுமுன்பாகவே நடைமுறை தேவை செயல்தான் முதலில் தோன்ற வேண்டும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

இத்தகைய முயற்சி ஏற்கனவே இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டுதானிருக்கிறது. வகுப்புவாதம், சாதி, மதம் முதலான சீர்குலைவு சக்திகளின் அபாயத்தை குறைத்து மதிப்பிடுவது கூடாது. இதை எதிர்க்கின்ற சக்திகளின் பலவீனம் பற்றி, குறிப்பாக தொழிலாளி வர்க்கத்தின் உணர்வு பற்றி ஏற்கனவே குறிப்பிட்டாகிவிட்டது.

இடதுசாரி கட்சிகளின் முன்னுள்ள பிரதான கடமைகள்

ஆனால், இந்தியாவில் இன்று மோசமாகிவரும் பொருளாதார நெருக்கடி, விவசாயிகள் மொத்தமாக வறுமைக்குள் தள்ளப்படுவது, தொடர்ந்து விலைவாசிஉயர்வும் அதன் விளைவுகளும், சட்டம் ஒழுங்கும் சீர்குலைந்து சரிந்து வருவது ஆகிய இவையனைத்தும் மக்களை போராடத் தூண்டியிருக்கின்றன. அத்துடன்கூடவே, அவர்களது சாதி, மத உணர்வுகள், மூடநம்பிக்கைகள் தொடர்கின்றன. நடைமுறையில், இந்த பலவீனங்களையும் மீறி ஆளுங்கட்சிகளை அவர்கள் ஆட்சியிலிருந்து இறக்கி விடுகின்றனர்; இ.காங்கிரசை தோற்கடிக்க லட்சக்கணக்கில் அணிதிரளுகின்றனர்; நம்பிக்கைத் துரோகம் செய்த கட்சிகளை விரட்டி விடுகின்றனர்; ஒருதடவை ஆட்சியில் அமர்த்திவிட்டால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமைதாங்கும் இடதுசாரிகட்சிகளிடம் நம்பிக்கையை மீண்டும் புதுப்பித்துக் கொள்ளுகின்றனர்.

இதுவெல்லாம் ஒரு ஆரம்ப முயற்சிதான்.  மக்களது இந்தப் பரிசோதனைகளிலிருந்து, தவறுகளிலிருந்து அனுபவம் பெற்று வருகின்றனர். லெனின் கூறியதுபோல், மக்களுக்குக் கிடைக்கும் உண்மையான போதனையை, புரட்சிகரமான போராட்டங்களிலிருந்து பிரித்துவிட முடியாது. இந்த போராட்டங்களின் அனுபவம்தான் அவர்களது உணர்வுகளில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. விவசாயிகள் மத்தியில் வளர்ந்துவரும் அதிருப்தி, பெரிய போராட்டங்கள் அண்மையில் வெடிக்கவிருக்கின்றன என்பதையே காட்டுகிறது. அவர்களுக்கு ஒரு சரியான வழிகாட்டுவது இன்று இடதுசாரி ஜனநாயக சக்திகளுக்கும், தொழிலாளி வர்க்கத்திற்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் முன்பாக இருக்கும் மிகப் பெரிய கடமையாகும். இதற்கு தொழிலாளி வர்க்கம் தன் நடவடிக்கைகள் மூலம் பக்கபலமாக நின்று நாட்டுமக்கள் உணர்வுநிலைகளில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

அதேவேளையில், தொழிலாளி வர்க்க இயக்கமும், கம்யூனிஸ்ட் இயக்கமும் தங்களிடம் தொடர்ந்து இருந்துவரும் பலவீனங்களைக் களைய வேண்டும்; சமுதாயப் போராட்டங்களிலும், பொதுவான இயக்கங்களிலும் ஆளும் வர்க்கங்களின் தத்துவம் தலையிட்டு சீர்குலைத்து வருகிறது. மற்ற போராட்டங்களை நடத்தும்போதே ஒரு தத்துவப் போராட்டத்தையும் சேர்த்து நடத்துவதன் மூலமே பிற்போக்கு சக்திகளின் தலையீட்டையும், சீர்குலைவுகளையும் முறியடிக்க முடியும். மக்களுடைய நடைமுறை நடவடிக்கைகளுடன் தத்துவப் போராட்டங்களும் ஒன்றிணைக்கப்பட வேண்டும். இந்தக் கடமையை நிறைவேற்றுவதிலும், மதத்தைப் பற்றியும் இந்தியாவில் அதனுடைய பிற்போக்குத் தனமான சமுதாய வெளிப்பாடுகள் பற்றியும் பொருள்முதல்வாத அடிப்படையில் விமர்சனம் செய்வதிலும், கம்யூனிஸ்ட் இயக்கமும், இடதுசாரி இயக்கமும் இன்னமும் பலவீனமாகவே உள்ளன. பூர்ஷ்வா தலைமை இந்த கடமையை நிறைவேற்றவில்லை. தொழிலாளி வர்க்கமும் அந்த கடமையை புறக்கணித்துவிட்டது. பிற்போக்குத் தனமான தத்துவங்களின் அடிப்படைக் கோட்பாடுகளின்மீது நேரடியாகத் தாக்குதல் தொடுக்காமல், பிரச்சனைகள் தோன்றும்போதுமட்டும் சில தந்திரோபாய அணுகுமுறைகளை மேற்கொள்வதன் காரணமாக, நடைமுறையில், குழப்பமும் சந்தர்ப்பவாதமும்தான் உருவாகின்றன. இந்த பலவீனம் களையப்பட வேண்டும்.

மக்கள்மீது ஆதிக்கம் வகிக்கின்ற மதம், சாதி, வகுப்புவாதம் ஆகிய தத்துவங்கள் மற்ற இடங்களைப் போலவே, இந்தியாவிலும் பொருளாதார வளர்ச்சியின் பாதிப்பிற்கு உட்படுபவைதான். இந்திய சமுதாயத்தில் புரட்சிகரமான மாற்றம் ஏதும் உருவாகாத நிலையில், அந்தத் தத்துவங்களுக்கு உயிரூட்டுகின்ற சமுதாய சூழ்நிலைகள் தொடர்ந்து நீடிக்கின்றன. ஆகவே அத்தத்துவங்களும் ஒரு புதிய மாறுபட்ட வடிவில் தொடர்ந்து செயல்படுகின்றன. தற்போதைய காலகட்டத்தில் இன்றுள்ள பூர்ஷ்வா நிலப்பிரபுத்துவ ஆட்சி ஆளும் வர்க்கங்களின் தேவைகளுக்கே சேவைசெய்கின்றன. இந்நாட்டின் ஒற்றுமையை உருக்குலைக்க நினைக்கும் ஏகாதிபத்தியத்தின் சதிக்கும் இந்தப் போக்கு துணைபுரிகிறது.

மக்களிடையே ஜனநாயகப் புரட்சி நலன்களுக்கு உதவுகின்ற தத்துவங்களின் முனைப்பான தலையீட்டின் மூலம்தான், பிற்போக்குத் தத்துவங்களின் தலையீட்டை முறியடிக்க முடியும்.

பூர்ஷ்வா நிலப்பிரபுத்துவக் கட்சிகள் எதுவும் இந்தத் தத்துவப் போராட்டத்தில் அக்கறை காட்டுவதில்லை. ஜனநாயக, தொழிலாளி வர்க்க சக்திகள் வெகுஜனப் போராட்டங்களை நடத்தும்போது, ஒரு திட்டமிட்ட தத்துவத் தாக்குதலையும் நடத்தியாக வேண்டும்.

லெனினின் பார்வையில் அரசும் புரட்சியும் …

– ஜி.செல்வா

ரகசிய உத்தரவு வந்திருக்கிறது. லெனின் யார் தெரியுமா? அவர் இங்கே மறைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பிடிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கெள்ளுங்கள். லெனினைப் பிடித்தால் பெரும் பரிசுகள் கிடைக்கும்.

இது, ரஷ்ய நாட்டின் ஒரு பகுதியாக அப்போதிருந்த பின்லாந்து நாட்டின் கவர்னர் ஜெனரல் தனது தலைமை காவல்துறை அதிகாரியான ரேவியேவிடம் சொன்னது.
உத்தரவுகளை உள்வாங்கிக் கொண்டு ரேவியே நேரடியாக ரயில் நிலையம் செல்கிறார். அங்கிருந்த தபால்காரரிடம் கடிதங்களை பெற்று தனது சட்டைப்பைக்குள் செருகிக்கொள்கிறார். மளிகைக் கடைக்கு சென்று பத்து முட்டைகள், ரொட்டி, வெண்ணெய் வாங்கிக் கொண்டு அலுவலகத்திற்கு செல்லாமல் ஒரு பெரிய வீட்டின் ஐந்தாவது மாடியில் உள்ள தனது சிறிய வீட்டுக்கு செல்கிறார்.

அந்த வீட்டுக்குள்ளே அப்போது என்ன நடந்து கெண்டிருந்தது. அறையின் மூலையில் ஒரு மேஜை அருகே உட்கார்ந்து அரசும் புரட்சியும் என்ற நூலை எழுதிக் கொண்டிருந்தார் லெனின்.
நிற்க…

அரசும் புரட்சியும் லெனினது படைப்புகளில் மிக அடிப்படையான ஒன்றாக கருதப்படும் நூல். ரஷ்ய புரட்சிக்கு முன்னால் தலைமறைவு காலத்தின்போது எழுதப்பட்டது. 1917 ஆகஸ்ட் மாதத்தில் முதல் பதிப்பு வெளியிடப்பட்டு, 1918 டிசம்பர் 17-ல் இரண்டாம் பதிப்பு வெளியிடும்பேது அது ஒரு சிறு பகுதியை மட்டும் சேர்த்து வெளியிட்டார் லெனின்.

இந்நூல் முற்றுப்பெறாத படைப்பு.

1905ஆம் ஆண்டு மற்றும் 1917ஆம் ஆண்டு ரஷ்யப் புரட்சியின் அனுபவங்களை தொகுத்து இறுதியாக ஒரு அத்தியாயத்தை எழுதுவதாக லெனின் திட்டமிட்டிருந்தார். ஆனால், எழுத்தில் கொண்டுவர இயலவில்லை. காரணத்தை அவரே தெரிவிக்கிறார். 1917 அக்டோபர் புரட்சியின் தறுவாயில் அரசியல் நெருக்கடி குறுக்கிட்டுவிட்டது, இது போன்ற குறுக்கீடு
வரவேற்கத்தக்கதே!

புரட்சியின் அனுபவத்தை எழுதுவதைக் காட்டிலும் நேரில் வாழ்ந்து காண்பது மேலும் இனிதாகவும், பயனுள்ளதாகவும் இருக்கிறது.

புரட்சி, புரட்சி, புரட்சி இதையே மையமாகக் கொண்டு  இலக்காகக்கெண்டு முழு நேரமாக சிந்தித்து, செயல்பட்டு வாழ்ந்த போராளிகளுக்கு உண்மையில் இதைவிட ஆனந்தம் என்னதான் இருக்கமுடியும். எதற்காக எழுதினார் லெனின்

பாட்டாளி வர்க்கப் புரட்சியை நோக்கி ரஷ்ய தேசம் வீறுநடை போட்டு சென்று கெண்டிருந்த காலக்கட்டம். ஜார் மன்னன் விரட்டப்பட்டு, தற்காலிக அரசாங்கம் சோசலிஸ்டுகள், காடெட்டுகள் உள்ளிட்டு மார்க்சிய பெயரிலான குழுக்கள் அதிகாரத்தில் பங்கெடுத்திருந்தனர். பதவிக்கு வந்தவுடன் இவர்கள் அடித்த அந்தர் பல்டிகளை லெனின் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தினார்.

மார்க்சியத்தின் மிக முக்கியமான கருத்துகளை திரித்துக் கூற முயன்றனர். அதில் ஒன்று அரசு குறித்த மார்க்சிய பார்வை. எனவேதான், இந்நூலின் முன்னுரையின் முதல் வரியிலேயே, அரசு பற்றிய பிரச்சனை தத்துவத்திலும், நடைமுறை அரசியலிலும் இன்று மிகுந்த முக்கியத்துவம் பெற்று வருகிறது எனக் குறிப்பிட்டு உலகப் பாட்டாளி வர்க்கப் புரட்சி முற்றி வருவது தெளிவாகத் தெரிகிறது.

அரசின்பால் இதற்குள்ள உறவு பற்றி பிரச்சனை நடைமுறை முக்கியத்துவமுடையதாகி விடுகிறது என்கிறார். மேலும், அரசு குறித்து சந்தர்ப்பவாதத் தப்பெண்ணங்களை எதிர்த்துப் போராடாமல், பொதுவில் முதலாளித்துவ வர்க்கத்தின் செல்
வாக்கிலிருந்தும், குறிப்பாய் ஏகாதிபத்திய முதலாளித்துவ வர்க்கத்தின் செல்வாக்கிலிருந்தும் உழைப்பாளி மக்களை விடுவிக்கப் போராடுவது சாத்தியமன்று… ஆகவே, அரசின்பால் சோசலிசப் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்குள்ள உறவு குறித்த பிரச்சனை நடைமுறை அரசியல் முக்கியத்துவம் மட்டுமின்றி, இன்றைய மிக அவசர அவசியப் பிரச்சனையாகவும் முக்கியத்துவம் பெற்று வருகிறது என்கிறார்.

பெரும்பாலான லெனினது நூல்களைப் போல் அரசும் புரட்சியும் தனது எதிராளிகளுக்கு அதாவது மார்க்சிய தத்துவத்தின் எதிராளிகளுக்கு விளக்கமளிக்கவும், அதன்வழி போல்ஷ்விக் கட்சி ஊழியர்களை தத்துவார்த்த ரீதியாக
வளர்த்தெடுக்கவுமே எழுதியுள்ளார். இந்த நூலானது, அரசு குறித்த மார்க்ஸ், ஏங்கெல்ஸ் ஆகியேரின் கருத்துகளை எடுத்துரைப்பதாகவே அமைந்துள்ளது. இதன் காரணமாக லெனின் சொன்னது போல் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் ஆகியோரின் நீண்ட மேற்கோள்கள் புத்தகம் எங்கும் விரவியிருப்பதை காணலாம்.

மார்க்சியப் பார்வையில் அரசு வர்க்கப் பகைமைகள் இணக்கம் காணமுடியாதவை ஆனதன் விளைவே அரசு. எங்கே எப்போது எந்த அளவிற்கு வர்க்கப் பகைமைகள் புறநிலை காரணங்களால் இணக்கம் காண முடியாதவை
ஆகின்றனவோ அங்கே அப்போது, அந்த அளவுக்கு அரசு உதித்தெழுகிறது. எதிர்மறையாக கூறுகையில், அரசு ஒன்று இருப்பதானது, வர்க்கப் பகைமைகளை இணக்கம் காண முடியாததன் இருத்தலை நிரூபிக்கிறது என அரசு குறித்து
லெனின் வரையறுக்கிறார்.

எங்கெல்சின் புகழ்பெற்ற நூல்களில் ஒன்றான குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் என்ற நூலிலிருந்தே பெரும்பாலான மேற்கோள்களை எடுத்துக்காட்டி லெனின் முதல் அத்தியாயம் முழுவதையும் எழுதியுள்ளார். ஏங்கெல்ஸ் நூலின் ரஷ்ய மொழிபெயர்ப்பு பெரும்
பிழைகளுடன் இருப்பதால் ஜெர்மன் மூலத்திலிருந்தே மேற்கோள்களை மொழிபெயர்த்துள்ளதாக லெனின் தெரிவிக்கிறார்.

லெனின் அரசின் தோற்றம் குறித்து இவ்வளவு அக்கறையோடு வெளிப்படுத்துவவற்கு காரணம் என்ன?

அன்றைக்கு அவர் முன்னால் இருந்த கடமையானது, ரஷ்ய பாட்டாளி வர்க்க சோசலிசப்புரட்சி. அதை நிறைவேற்றுவதற்கான சூழல்கள்பொருந்தியிருந்தன. ஆனால், தத்துவார்த்த தளத்தில் இதற்கு இடையூறு மிக நாசூக்காக மேற்கொள்ளப்பட்டது. இந்த இடையூறுகளை
அம்பலப்படுத்துவதும், அப்போதைய சோசலிசப் புரட்சிக்கு அரசு அதிகாரத்தை அழித்தொழிப்பதும் பிரதான விசயமாக முன்னிருந்தது.

எனவே, அரசும் புரட்சியும் நூலில் இந்த கருத்துகளை மையமாகக் கொண்டே லெனின் தனது எழுத்துகளை வார்த்தெடுத்தார். இதற்கு வரலாற்று காரணங்களும் உண்டு.

லெனின் தன் சமகாலத்தில் பல நாடுகளில் அதிகாரத்திலிருந்த முதலாளித்துவ வர்க்கங்கள் தொழிலாளி வர்க்க இயக்க்ததை பிளவுபடுத்த எடுத்த முயற்சிகளை கண்கூடாகப் பார்த்தார்.

பாட்டாளி வர்க்கப் புரட்சியை திசைதிருப்பும் பொருட்டு தொழிலாளி வர்க்கத்திற்கு சிறு சலுகைகள் வழங்குவது, பிற்போக்கு முதலாளித் துவ அரசாங்கங்களில் சோசலிஸ்டு கட்சிகளின் சீர்திருத்தவாத தலைவர்களுக்கு பதவிகள் தருவது போன்றவை. 1892-ல் ஆங்கில நாடாளுமன்றத்திலும், 1899 பிரெஞ்சு அரசாங்கத்திலும் சோசலிஸ்டுகள் அதிகாரத்தில் பங்கு கொண்டனர்.

பிரெஞ்சு நாடாளுமன்றத்தில் சோசலிஸ்ட் தலை வர் மில்லிரான் பங்கு பெற்றதானது, பிரான்சில் தொழிலாளி வர்க்க இயக்கத்திற்கு மாபெரும் தீங்கு விளைவித்தது. இதை லெனின் கடுமையாக கண்டித்தார். இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் இத்தாலியிலும், சோசலிஸ்ட் கட்சியினர் முதலாளித்துவ அரசாங்கத்தில் இணைந்து கொண்டனர்.
முதல் உலகப் போரின்பேது பல நாடுகளிலிருந்து சோசலிசம் பேசும் கட்சிகள், அதன் தலைவர்கள், தத்தம் நாடுகளின் முதலாளித்துவ அரசாங்கங்களில் பதவியில் பங்கேற்று, அவர்களது கொள்கைக்கு ஆதரவாக பேசவும் ஆரம்பித்தனர். இவ்வாறு பேசுபவர்களில் மிக முக்கிய மானவர் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த காவுட்ஸ்கி (1854-1938). இவர் இரண்டாம் கம்யூனிஸ்ட் அகிலத்தின் தலைவராக இருந்தவர். மார்க்சியவாதியாக இருந்து மார்க்சின்ப டைப்புகளை மொழிபெயர்த்தவர். ஆனால், பிறகு மார்க்சியத் துக்கு விரோதமாக செயல்பட ஆரம்பித்தார்.

மார்க்சியத்தை கொச்சைப்படுத்தினார். குறிப்பாக நாடாளுமன்ற ஜனநாயக முறையின் மூலமே தொழிலாளி வர்க்கத்தின் விடுதலைக்கு சாத்தியம் உண்டு என பேசினார். இத்தகைய கருத்துகளுக்கு எதிராக மிக உக்கிரமான போராட்டத்தை லெனின் நடத்தினார்.

ஜனநாயக குடியரசானது முதலாளித்துவத்தில் பாட்டாளி வர்க்கத்துக்கு மிகச் சிறந்த அரசு அமைப்பாகுமென நாம் அதனை ஆதரிக்கிறோம். ஆனால், மிகவும் ஜனநாயகமான முதலாளித்துவக் குடியரசிலும்கூட கூலியடிமையிலேதான் மக்கள் உழல வேண்டியிருக்கிறது. மேலும், ஒவ்வொரு அரசும் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தை அடக்கி ஆள்வதற்கான தனிவகை சக்தியே. எனவே, எந்தவொரு அரசும் சுதந்திரமானது
அல்ல; மக்கள் அரசும் அல்ல. மார்க்சும் ஏங்கெல்சும் 1870ஆம் ஆண்டுகளில் தமது கட்சித் தோழர்களுக்கு இதைத் திரும்பத் திரும்ப விளக்கக் கூறினார்கள் என லெனின் காவுட்ஸ்கிவாதங்களுக்கு பதிலடி கெடுத்தார்.

மார்க்ஸ் கருத்தோட்டத்தில் ஏற்பட்ட வளர்ச்சிப் போக்கு மார்க்சிய தத்துவமானது நடைமுறைச் செயல்பாடுகளுக்கான வழிகாட்டியாகும். அப்படியெனில் அத்தத்துவ வளர்ச்சிப் போக்குக்கும் நடை முறை அனுபவத்தின் வாயிலாகவே செழுமைப் பட்டிருக்கும் அல்லவா. அரசு குறித்த கருத் தோட்டத்திற்கும் இதுவே அடிப்படை.

லெனின் இந்த வளர்ச்சிப் போக்கை, மிகச் சிரத்தையுடன் எடுத்துச் செல்லும் பாங்கே மிக அற்புதமாக அமைந்துள்ளது. மார்க்சின் நூல்கள் அதிலும் முதிர்ச்சியுற்ற மார்க்சியத்தின் முதலாவது நூல்களான மெய்யறிவின் வறுமை, கம்யூனிஸ்ட் அறிக்கை இதைத் தொடர்ந்து லூயி போனப்பர்த்தின் பதினெட்டாம் புரூமேர் நூல்களிலிருந்து மேற்கோள்களை எடுத்தாண்டு மார்க்சியத்தின் அரசு குறித்த பார்வையை வளர்ச் சியை விவரிக்கிறார் லெனின்.  வர்க்கங்கள் ஒழிக்கப்பட்டதும், அரசு மறைந்து விடுமென பொதுவான விளக்கத்தை மெய்யறிவின் வறுமை நூலில் சொன்ன மார்க்ஸ், அடுத்த சில மாதங்கள் கழித்து ஏங்கெல்சுடன் இணைந்து எழுதிய கம்யூனிஸ்ட் அறிக்கையில் இன்னும் துல்லியமாய் பேசுகிறார்.

பாட்டாளி வர்க்கம் தனது அரசியல் மேலாண்மையைப் பயன்படுத்தி முதலாளித்துவ வர்க்கத்திடமிருந்து படிப்படியாய் மூலதனம் முழுவதையும் கைப்பற்றும். உற்பத்திக் கருவிகள் யாவற்றையும் அரசின்கைகளில் அதாவது ஆளும் வர்க்கமாய் ஒழுங்கமைந்த பாட்டாளி வர்க்கத்தின் கைகளில் ஒருசேர மையப்படுத்தும். இங்கு அரசு, அதாவது ஆளும் வர்க்கமாய்
ஒழுங்கமைந்த பாட்டாளி வர்க்கம் என்பது வரலாற்றில் பாட்டாளி வர்க்கத்துக்குரிய புரட்சி பாத்திரம் குறித்த மார்க்சிய போதனை என்கிறார் லெனின். அப்படியெனில் முதலாளித்துவ வர்க்கத்தினர் தமக்கென உருவாக்கிக் கொண்ட அரசுப் பொறியமைவை முதலில் ஒழித்திடாமல்,
தகர்த்தெறியாமல் இத்தகைய ஒழுங்கமைப்புகளை உருவாக்க முடியுமென நினைக்கலாமா? இதற்கான கருத்துகளை, விடைகளை மார்க்ஸ் 1848-51ஆம் ஆண்டுகளில் பிரான்ஸ் நாட்டு புரட்சி வரலாற்றிலிருந்து பெறப்பட்ட படிப்
பினைகள் வாயிலாக லூயி போனபர்த்தின் பதினெட்டாம் புரூமேர் நூலில் கூறுகிறார். அதன் சாராம்சத்தை லெனின், அரசை வர்க்க ஆதிக்கத்துக்கான உறுப்பாக கருத வேண்டும். பாட்டாளிவர்க்கம் முதலாளி அரசு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றாமல், அரசியல் அதிகாரத்தைப் பெறாமல் ஆளும் வர்க்கமாய் ஒழுங்கமைக்கப்பட்ட பாட்டாளி வர்க்கமாய் மாற்றாமல் முதலாளித்துவத்தை வீழ்த்த முடியாது. முந்திய புரட்சிகள் எல்லாம் அரசுப் பொறியவையைச் செம்மை செய்தன. ஆனால், இந்தப் பொறியமைவை தகர்த்து நொறுக்க வேண்டும் என்கிறார்.

இங்கு ஒரு கேள்வி இயல்பாக எழக்கூடும். பிரெஞ்சு நாட்டின் வரலாற்றை மட்டுமே மையமாகக் கெர்ணடு ஒரு பொதுவான முடிவுக்கு வர முடியுமா? அதுவும் 1848-51க்கு இடைப்பட்ட மூன்று ஆண்டுகள் பிரெஞ்சு வரலாற்றை விரிவான அரங்கில் கையாள்வது சரியா? இதற்கு விடையாய் இந்நூலில் ஏங்கெல்ஸ் பதினெட் டாம் புரூமேர் நூலுக்கு எழுதிய முன்னுரையை லெனின் குறிப்பிட்டுள்ளார். படித்து, இன்புற்று, கிளர்ச்சியடைய வேண்டிய எழுத்துக்கள் அவை. பாரிஸ் கம்யூனும் மார்க்சும் 1871ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18ஆம் நாள் பாட்டாளி வர்க்கப் புரட்சி பாரிஸ் கம்யூனை பிரகடனம் செய்தது. பாரிஸ் தொழிலாளர்கள் ஒரு சாதகமில்லாத சூழ்நிலையில் பக்குவமில்லாத நடவடிக்கையை எடுத்துவிடுவார்கள் என மார்க்ஸ் முதலில் பயந்தார். எனினும் புரட்சி வெடித்தவுடன் கம்யூனர்டுகளுடைய வீரத்தையும் தன்னலமற்ற தியாகத்தையும் ஈடுபாட்டையும் வெகுவாகப் பாராட்டி, போற்றிப் புகழ்ந்தார்.

கம்யூனின் செயல்பாட்டில் நடவடிக்கைகளின் மகத்தான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்னவென்றால், அது வரலாற்றிலேயே முதல் தடவையாக பூர்ஷ்வா வர்க்கத்தினுடைய ராணுவ – அதிகார வர்க்க அரசாங்க எந்திரத்தை தகர்த்து எறிவதற்கு முதலாவது நடைமுறை முயற்சி எடுக்கப்பட்டதில் அடங்கியிருக்கிறது. அந்த நடவடிக்கை சோசலிசப் புரட்சியின் வெற்றிக்கு ஒரு அவசியமான நிபந்தனையாகும் என்றார் மார்க்ஸ்.

நூற்றுக்கணக்கான வேலைத் திட்டங்கள், வாதங்களை காட்டிலும் மிக முக்கியமானதாக பாரிஸ் கம்யூனின் அனுபவத்திலிருந்து மார்க்ஸ் பார்த்தார் இந்த புரட்சி இயக்கத்திலிருந்து அனுபவங்களையும், படிப்பினைகளையும் பெற்று தமது தத்துவப் பார்வையை மறுபரிசீலன செய்து பார்க்க முயன்றார் மார்க்ஸ். கம்யூனிஸ்ட் அறிக்கையில் திருத்தத்தினை மேற்கெண்டார்.

பாரிஸ் கம்யூனானது முக்கியமாய் ஒரு விவரத்தை அதாவது ஏற்கனவே உள்ள ஒரு அரசுப் பொறியமைவைத் தொழிலாளி வர்க்கம் அப்படியே கைப்பற்றி தனது செந்த நோக்கத் திற்காக பயன்படுத்திக் கொள்ள முடியாது என்பதை நிரூபித்துக் காட்டியது அதாவது, அதிகார வர்க்க – ராணுவ அரசுப் பொறியமைவை அழித்தொழிப்பது மெய்யான மக்கள் புரட்சி ஒவ்வொன்றின் முன் நிபந்தனையாகும் என்கிறார் மார்க்ஸ்.

இங்கு மக்கள் புரட்சி என்று மார்க்ஸ் சொல்வதற்கு காரணம் உண்டு. அன்று 1871-ல் ஐரோப்பாவில் பாட்டாளி வர்க்கம் எங்கும் பெரும்பான்மையிராக இல்லை. பாட்டாளி வர்க்கம், விவசாயிகள் இவ்விரு வர்க்கங்கள் தான் அன்று மக்கள் என்போர். அதிகார வர்க்க – ராணுவ அரசுப் பொறியமைவு இந்த இரண்டு வர்க்கங்களையும் ஒடுக்கியும் நசுக்கியும் சுரண்டி வருகிறது என்பதால் இயல்பாக ஒன்றிணைக்கப் படுகின்றன.

இவ்வாறு மார்க்சால் முன்வைக்கப்பட்டு லெனினால் வளர்த்தெடுக்கப்பட்ட தொழிலாளி – விவசாயி கூட்டணி என்னும் கருத்து ரஷ்யப் புரட்சியின்போதும் வெற்றிகரமான சோசலிச நிர்மாணத்தின் போதும் எதார்த்த நிலைக்கு மாற்றப்பட்டது. சோசலிசப் புரட்சியில் விவசாயிகளின் தீர்மானமான பங்கைப் பற்றி நரேத்னிக்குகள் மற்றும் சோசலிஸ்டு புரட்சி கட்சியினரின் தவறான தத்துவங்களையும் விவசாயிகள் புரட்சி கரமான வாய்ப்புகளை இயல்புகளை மறுத்த மென்ஷ்விக்குகளின் தவறான கருத்தோட்டங்க ளையும் உடைத்தெறிந்தார் லெனின்.

கம்யூனது அனுபவத்தை ஏங்கெல்ஸ் தொடர்ந்து பலமுறை பல்வேறு தத்துவார்த்த விவாதங்களில் பகுத்து ஆராய்ந்து எழுதியிருக்கிறார். இதன் காரணமாகவே இந்நூலில் ஏங்கெல்ஸ் கூறிய படைப்புகளின் சாராம்சத்தை தனி அத்தியாயமாகவே லெனின் தொகுத்து கொடுத்துள்ளார். அதில் ஒன்று குடியிருப்பு பிரச்சனை பற்றி ஏங்கெல்ஸ் 1872-ல் தனது நூலில் எடுத்துரைத்தது.

பாட்டாளி வர்க்க அரசு அதிகாரத்திற்கு வந்தவுடன் குடியிருப்பு பிரச்சனைக்கு எவ்வாறு தீர்வு காணும்? இது முதலாளித்துவ ஆட்சியதிகாரத்திலிருந்து எப்படி வேறுபட்டிருக்கும்? என்பதை பாரிஸ் கம்யூன் அனுபவத்திலிருந்து ஏங்கெல்ஸ் ஆராய்கிறார்.

சோசலிசம், கம்யூனிசம் ஆகிய இரண்டு கட்டங்களில் அரசு புரட்சி குறித்து எவ்வளவு தெளிவான தீர்க் கமான பார்வையேடு செயல்பட வேண்டுமென் பதை மார்க்சிய மூலவர்களின் எழுத்துகளும் சிந்தனைகளும் இங்கு நமக்கு
புரியவைக்கப்படுகின்றன. அரசு உலர்ந்து உதிர்ந்து விழும் என்ற ஏங்கெல்சின் சொற்றொடர் எவ்வாறெல்லாம் அந்த கருத்தின்

சாராம்சத்தை புரிந்து கெள்ளாமல் திரித்து கூறப்படுகிறது என்பதை லெனின் மிகுந்த கவனத்துடன் எடுத்துரைக்கிறார்.
அரசு எப்போது மறையும், வர்க்கங்களற்ற சமுதாயம் எந்த கட்டத்தில் உருவாகும் என்பதை மார்க்ஸ், ஏங்கெல்ஸ் எழுத்துகளின் வழிநின்று எடுத்துரைக்கிறார்.

முதலாளித்துவ ஜனநாயகத் தின் பலவீனங்களை கிழி கிழி என்று கிழித்துத் தொங்கப் போட்டுவிட்டு அதைவிட மேலான ஜனநாயகம், வாழ்க்கை முறை, சோசலிசத்திலும், கம்யூனிச சமூகத்திலும் எப்படி இருக்கும் என் பதை வெளிப்படுத்துகிறார். முதலாளித்துவ ஜனநாயகம் என்பது மிக சிலருக்கு, அதாவது செல்வந்தருக்கான ஜனநாயகம் தான். வாக்குரிமை, பிரதிநிதித்துவ சபையில் பங்கேற்பு, கூட்டம் கூடும் உரிமைகள் போன்றவை முதலாளித்துவ சமூகத்தில் இருந்தபோதிலும் இதன் மீது ஏழ மக்களுக்கு, உழைக்கும் வர்க்கத்தினருக்கு விதிக் கப்படும் கட்டுப்பாடுகளும் விலங்குகளும் விலக்கல்களும் ஏராளம் ஏராளம். இது ஜனநாயகத்தில் நேரடியாக பங்கு கொள்வதிலிருந்து ஒதுக்கி வெளியே தள்ளுவதற்கு சமமாகும்.

கம்யூனிச சமுதாயத்தில்தான் முதலாளிகளுடைய எதிர்ப்பு அடியோடு நசுக்கப்பட்டு முதலாளிகள் மறைந்துபோய் வர்க்கங்கள் இல்லாமல் போய்விடும். …அப்பொழுதுதான் முழு நிறைவான ஜனநாயகம் விதிவிலக்கு எதுவுமில்லாத ஜனநாயகம் சாத்தியமாகும். அப்போது அரசு உலர்ந்து உதிரத் தொடங்கும் என்கிறார் லெனின். இந்த கம்யூனிச சமுதாயத்தின் வளர்ச்சிப் போக்குகளை ஆராய்ந்து கம்யூனிசத்தின் முதற் கட்டத் தில் அதாவது சோசலிசத்தில் முதலாளித்துவ உரிமை அதன் முழு அளவிலும் ஒழிக்கப்படுவதில்லை. பகுதி அளவுக்கே. இதுகாறும் உருப்பெற்றுள்ள பொருளாதார புரட்சிக்கு ஏற்ற அளவுக்கே அதாவது உற்பத்தி சாதனங்களை பொறுத்தமட்டிலுமே ஒழிக்கப்படுகிறது. முதலாளித்துவ உரிமை இவற்றை தனிநபருடைய தனி உரிமையாய் அங்கீகரிக்கிறது. சோசலிசம் இவற்றை பொதுவுடைமையாய் மாற்றுகிறது. அந்த அளவுக்கு – அந்த அளவுக்கு – மட்டுமே முதலாளித்துவ உரிமை மறைகிறது. இதற்கு அடுத்த உயர் கட்டமான கம்யூனிச சமுதாயத்தில்தான் அரசு பூர்ணமாய் உலர்ந்து உதிர பாதை திறக்கப்பட்டுவிடும். இப்படியாய் அரசின் தோற்றம் முதற்கொண்டு அதன் மறைவு வரை மார்க்சிய பார்வையை லெனின் அரசும் புரட்சியும் நூலில் எடுத்துரைக்கிறார்.

நிறைவாக

அரசு, புரட்சி இன்று இந்திய சமூகத்தில் கம்யூனிஸ்டுகள் எதிர்கொள்ளும் மிக முக்கியமான கருத்துகள். அரசு குறித்தும் அரசாங்கத்தின் நிர்ணயிப்புகள் சம்பந்தமாகவும், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தில் நடைபெற்ற தத்துவார்த்த விவாதங்களும், மோதல்களும், பிளவுகளும் கற்றுணர வேண்டிய மிக முக்கியமான பாடங்கள். இந்திய அரசு குறித்து மார்க்சிஸ்ட் கட்சி நிர்ணயிப்பும், இந்திய புரட்சியின் கட்டம் குறித்த நிலைபாடுகளும் உள்வாங்கிக் கொண்டு செயலாற்றுவது மிக முக்கியமானது.

அவ்வாறு செயல்படும்போது இயக்கவியல் வரலாற்று பொருள் முதல்வாதப் பாதையில் சமூகத்தில் நடைபெறும் நிகழ்வுப் போக்குகளை எவ்வாறு ஆராய்வது, கம்யூனிச இயக்கத்திற்குள் எப்படியெல்லாம் தவறான கருத்துகள் உருவெடுக்கும், அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதையெல்லாம் மார்க்சிய செவ்விலக்கிய நூல்களிலிருந்து அறிய முடியும். எவ்வளவுதான் நூல்கள்வழி கற்றறிந்தாலும் இன்று எதிர்கொள்ளும் நடைமுறை பிரச்சனைகளேடு உரசிப்
பார்த்து தத்துவப் பார்வையை வளர்த்தெடுத்து செயல்படுவதுதான் சிறந்தது. இதைத்தான் லெனினது அரசும் புரட்சியும் சுட்டிக்காட்டுகிறது.

கூலியுழைப்பும் மூலதனமும் …

ஓவியம்: இராமமூர்த்தி

கேலிச் சித்திரத்துடன் இணைத்து புரிந்துகொள்வதற்காக …

தொழிலாளி வர்க்கத்தின் உழைப்புச் சக்தியை விலைக்கு வாங்குவதற்கு வகைசெய்யும் மூலப்பொருள்கள், எந்திரங்கள், கருவிகள், நிதி ஆகியவற்றின் உடைமையாளர்களுக்குச் சொந்தமாக உள்ளன. ஆக, தொழிலாளி வர்க்கம் தான் உற்பத்தி செய்யும் பொருள்களின் ஒட்டுமொத்தத் திரளில் ஒரு பகுதியை மட்டுமே திரும்பப் பெறுகிறது. மறுபகுதியை முதலாளித்துவ வர்க்கம் தன்னிடமே வைத்துக்கொள்கிறது. அதிகப்பட்சம் நிலவுடைமை வர்க்கத்துடன் மட்டும் அதனைப் பங்கிட்டுக் கொள்ள வேண்டியிருக்கலாம். நாம் சற்றுமுன் பார்த்தவாறு, முதலாளித்துவ வர்க்கம் வைத்துக்கொள்ளும் இந்தப் பங்கு, ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்பையும் புத்தாக்கத்தையும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போகிறது. அதே வேளையில், தொழிலாளி வர்க்கத்துக்குக் கிடைக்கும் பங்கானது (ஒரு நபருக்குக் கிடைப்பது) மிகக் குறைவாகவும் மிக மெதுவாகவும் அதிகரிக்கிறது. அல்லது அதிகரிக்காமலே உள்ளது. சில நிலைமைகளில் குறையவும் செய்கிறது.
ஆனால், மென்மேலும் அதிகரித்துச் செல்லும் வேகத்தில் ஒன்றை இன்னொன்று மிஞ்சுகின்ற இந்தக் கண்டுபிடிப்புகளையும் புத்தாக்கங்களையும் தொடர்ந்து, இதற்குமுன் கண்டு கேட்டிராத அளவுக்கு நாளுக்குநாள் அதிகரிக்கும் இந்த மனித உழைப்பின் உற்பத்தித் திறன், இறுதியாக ஒரு மோதலுக்கு வழி வகுக்கிறது. இந்த மோதலில் இன்றைய முதலாளித்துவப் பொருளாதாரம் சிதைந்தழிந்தே தீரும்.

 

ஒருபுறம், அளவிட முடியாத செல்வமும், வாங்குவோரால் சமாளிக்க முடியாத அளவுக்குத் தேவைக்கு அதிகமான உற்பத்திப் பொருள்களும் [குவிந்து கிடக்க], மறுபுறம், சமுதாயத்தின் மிகப்பெரும் மக்கள் திரள் பாட்டாளிகளாக்கப்பட்டு, கூலித் தொழிலாளர்களாக மாற்றப்பட்டு, அதன் காரணமாக, அவ்வாறு தேவைக்கு அதிகமாகக் குவியும் உற்பத்திப் பொருள்களைத் தங்களுக்கென உடைமையாக்கிக் கொள்ள இயலாதவர்களாய் ஆக்கப்பட்டுள்ளனர். அளவு கடந்த செல்வமுடைய ஒரு சிறு வர்க்கம், சொத்து ஏதுமற்ற கூலித் தொழிலாளர்களைக் கொண்ட ஒரு பெரிய வர்க்கம் எனச் சமுதாயம் பிளவுறுவதானது, இந்தச் சமுதாயத்தைத் தன்னுடைய தேவைக்கதிக உற்பத்தியில் தானே சிக்கி மூச்சுத் திணரும் நிலைக்குத் தள்ளியுள்ளது. அதேவேளையில், சமுதாயத்தின் மிகப் பெரும்பான்மையான உறுப்பினர்கள் மிகக் கொடிய வறுமையிலிருந்து சொற்ப அளவுக்கே பாதுகாக்கப் படுகின்றனர் அல்லது ஒருசிறிதும் பாதுகாப்பே இல்லாமல் இருக்கின்றனர்.
இத்தகு நிலை ஒவ்வொரு நாளும் மென்மேலும் அபத்தமாகி வருகிறது. மென்மேலும் தேவையற்றதாகவும் ஆகிவருகிறது. இந்நிலை ஒழிக்கப்பட்டாக வேண்டும்.

– கூலியுழைப்பும் மூலதனமும் – எங்கல்ஸ் முன்னுரை (1891)

மார்க்ஸ் பற்றி எங்கல்ஸ் – லெனின் …

மார்க்ஸ் பற்றி எங்கல்ஸ்

 1. தனது காலத்தில் மிகப்பெரிய அளவிற்கு நிந்திக்கப்பட்டவர் மார்க்ஸ். வெறுக்கப்பட்டவர் மார்க்ஸ்.சர்வாதிகார அரசுகளும் குடியரசுகளும் ஒருசேர அவரை வெறூத்தனர், நாடு கடத்தினர், முதலாளி வர்க்கங்கள், அவை பிற்போக்காக இருந்தாலும், அதிதீவிர ஜனநாயகவாதியாக இருந்தாலும், ஒன்றோடு ஒன்று போட்டி போட்டுக்கொண்டு மார்க்ஸ் மீது அவதூறுகளைப் பொழிந்தனர். இவற்றையெல்லாம் அவர் கண்டுகொள்ளவில்லை. தூசுகள் எனக் கருதினார்.மிகவும் அவசியம் எனக் கருதியபொழுது மட்டுமே பதில் அளித்தார். மேலும், அவர் இறக்கும் போழுது, சைபீரியாவின் சுரங்கங்களிலிருந்து கலிஃபோர்னியா வரை, அனைத்து ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள பலபத்து லட்சம் தொழிலாளிகள் அவரை வணங்கினர், கண்ணீர் சிந்தினர். நான் ஒன்றூ சொல்லமுடியும். மார்க்ஸை எதிர்த்தவர்கள் பலர் இருந்தனர். ஆனால், அவருக்கு ஒரு நபர் கூட தனிப்பட்ட முறையில் எதிரி இல்லை. அவர் பெயரும் அவர் பணியும் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

மார்க்ஸ் பற்றி லெனின்

 1. மார்க்சீய தத்துவத்துவம் சர்வ வல்லமை கொண்டது.ஏனென்றால், அது உண்மையானது. அது முழுமையானது. முன்பின் முரண் அற்றது. மனிதனுக்கு ஒன்றிணைந்த உலக கண்ணோட்டத்தை தருகிறது. இக்கண்ணோட்டம், முதலாளித்வ சுரண்டலுக்கான வாதங்களையும் பிற்போக்குத்தனத்தையும் அனைத்துவடிவிலான மூட நம்பிக்கைகளையும் முற்றிலுமாக எதிர்க்கிறது. (லெனின், மார்க்சீயத்தின் மூன்று தோற்றுவாய்களும் அம்சங்களும்)
 2. முதலாளித்வ பொருளியல்  அறிஞர்கள் சரக்குகளின் பரிமாற்றத்தில் பொருட்களிடையே உறவுகளைத்தான் கண்டனர். ஆனால், இதில் மனிதர்களுக்கிடையேயான உறவு உள்ளதை மார்க்ஸ் வெளிப்படுத்திக் காட்டினார். (லெனின், மார்க்சீயத்தின் மூன்று தோற்றுவாய்களும் அம்சங்களும்)

வெல்வதற்கோர் பொன்னுலகம்

‘கம்யூனிஸ்ட் பிரகடனம்’ பற்றிய இந்த நூல், அதன் நூற்றைம்பதாம் ஆண்டு நிறைவு விழாவினை ஒட்டி வெளியிடப்படுகிறது. 1998ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து பிரகடனத்தின் நூற்றைம்பது ஆண்டு நிறைவு விழா உலகளாவிய அளவில் கொண்டாடப்பட்டது.

 • மகத்தானதொரு ஆவணமாகிய கம்யூனிஸ்ட் பிரகடனத்தின் வரலாற்று முக்கியத்துவத்தை மறுமதிப்பீடு செய்வதற்கு,
 • மார்க்சியத் தத்துவத்தின் சமகால நிலைமை பற்றி விமர்சனப் பூர்வமான முறையில் கூர்மையாகப் பரிசீலிப்பதற்கு,
 • 21 ஆம் நூற்றாண்டுக்குள் நுழையும் வேளை யில் உழைப்பாளி வர்க்க இயக்கம் பயணிக்க வேண்டிய புதிய திசைவழிகளை ஆராய்வதற்கு

இதுவே தக்க தருணம் என்று கருதப்பட்டது.

கம்யூனிச இயக்கத்தின் முதல் திட்ட அறிக்கை என்று இப்பிரகடனத்தைக் குறிப்பிடலாம். (மார்க்ஸ்- ஏங்கல்ஸ்) சிந்தனைகளின் பரிணாம வளர்ச்சியின் உரையான வரலாற்றுப் பொருள் முதல்வாதம் என்ற கோட்பாட்டின் வளர்ச்சி பெற்ற வடிவத்தின் வெளிப்பாடாக – ஒரு விளக்க உரையாக இப்பிரகடனம் அமைந்தது. கம்யூனிஸ்ட் பிரகடனத்தின் முக்கியத்துவத்தை லெனின் பின்வருமாறு தொகுத்துக் கூறுகிறார்:

“ஒரு மேதைக்கு உரிய தெளிவுடனும் மதிநுட்பத்துடனும் உலகத்தைப் பற்றிய ஒரு புதிய கண்ணோட்டத்தைப் பிரகடனம் வழங்குகிறது.

சமூக வாழ்க்கைக் களத்தை உள்ளடக்கிய ஒரு முரண்பாடற்ற பொருள் முதல்வாதத் தத்துவ மாகவும்,

வளர்ச்சி பற்றிய விரிவான, மிகச் சிறந்த கோட்பாடாகிய இயக்கவியல் தத்துவமாகவும்,

வர்க்கப் போராட்டத் தத்துவமாகவும்,

ஒரு புதிய பொதுவுடைமைச் சமூகத்தின் படைப்பாளியாகிய உழைப்பாளி வர்க்கத்தின் (உலக) வரலாற்றுச் சிறப்புமிக்க புரட்சிகரப் பங்களிப்பை விளக்கும் தத்துவமாகவும் கம்யூனிஸ்ட் பிரகடனம் அமைந்துள்ளது”.

முதலாளித்துவ எதிர்ப்புப் புரட்சியின் புரட்சிகர சாசனமாக கம்யூனிஸ்ட் பிரகடனம் அமைந்துள்ளது. சோஷலிச சமுதாய அமைப்பு, கம்யூனிச சமுதாய அமைப்பு ஆகிய புதிய தரிசனங்களை – மாற்றுப் பார்வைகளை – உழைப்பாளி வர்க்கத்துக்கும், சமூகத்தின் பிற ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கும் வழங்கக்கூடிய செயல்திட்டமாக கம்யூனிஸ்ட் பிரகடனம் அமைந்துள்ளது. முந்தைய சோஷலிச கற்பனாவாத குட்டி முதலாளித்துவவாதிகளின் சோஷலிசம் போன்றதொரு திட்டம் அல்ல கம்யூனிஸ்ட் கட்சியின் பிரகடனம். சமுதாய அமைப்பின் யதார்த்த நிலைகளையும் வரலாற்று வளர்ச்சியையும் அடிப்படையாகக் கொண்டு முதலாளித்துவ அமைப்பைத் தூக்கி ஏறிந்துவிட்டு சோஷலிச சமூக அமைப்பை உருவாக்குவதற்கான பாதையை அது விளக்குகிறது. முதலாளித்துவத்திற்குக் கல்லறை கட்டக்கூடிய ஒரே புரட்சிகர வர்க்கம் என்ற வகையில் உழைப்பாளி வர்க்கத்துக்கு மையமான பாத்திரத்தை பிரகடனம் வழங்குகிறது. சுரண்டலிலிருந்து சமுதாயம் முழுமையையும் விடுவிக்காமல் உழைப்பாளி வர்க்கம் தன்னை மட்டும் விடுவித்துக் கொள்ள முடியாது என்பதைப் பிரகடனம் தெளிவுபடுத்துகிறது.

புரட்சிகர இயக்கத்தின் அடிப்படையான இலக்குத் திட்டமும், அறிவியல் ரீதியான தத்துவத்தின் வலிமையும் இணைந்து உருவாக்கப்பட்ட ஆவணமாக கம்யூனிஸ்ட் பிரகடனம் அமைந்துள்ளதால்தான் ஒரு உயிரோட்டமுள்ள ஆவணமாக அது தொடர்ந்து நீடிக்கிறது. எளிய நடையில், ஆனால் ஆழமாக பொருளுடன் எழுதப்பட்டிருப்பதால், புரிவதற்குக் கடினமான தத்துவம் கூட சாதாரணத் தொழிலாளியும் புரிந்து கொள்ளும் வகையில் தெளிவாக, கச்சிதமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. கம்யூனிச இயக்கம் உருவாக்கியுள்ள நூல்களிலேயே மிகவும் சக்தி வாய்ந்த நுலாக கம்யூனிஸ்ட் பிரகடனம் இன்றளவும் நீடிக்கிறது.

பிரான்ஸ் நாட்டுத் தொழிலாளர்கள் தங்கள் புரட்சியை ஒரு பிப்ரவரி மாதத்தில் துவக்கி னார்கள் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க காலத் தில் உருவானதான் கம்யூனிஸ்ட் பிரகடனம். ஆனால் இப்புரட்சி கருவிலேயே சிதைந்து போனது. இருபது ஆண்டுகள் கழித்து- 1871ஆம் ஆண்டில் ‘பாரிஸ் கம்யூன்’ (பாரிஸ் சமூக ஆட்சி மன்ற) புரட்சி அரங்கேற்றப்பட்டது. பாரிஸ் நகரின் உழைப்பாளி மக்கள் அமைத்த பாரிஸ் கம்யூன் சிறிது காலம் மட்டும் நீடித்தது. உழைப்பாளி வர்க்க இயக்கம் நிகழ்த்திய இந்த இரண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனை களுக்கு இடைப்பட்ட காலத்தில்தான் விஞ்ஞான சோஷலிசம் என்ற தத்துவத்திற்கு மார்க்ஸ் – ஏங்கல்ஸ் இருவரும் இறுதி வடிவம் அளித்தனர். முதலாளித்துவம் பற்றிய முதிர்ச்சிமிக்க ஆய்வாக ‘மூலதனம்’ (முதல் பாகம்) 1867 ஆம் ஆண்டில் வெளியானது.

அதே காலகட்டத்தில் 1864 ஆம் ஆண்டில் ‘உழைப்பாளி மக்களின் சர்வதேச கங்கம்’ அமைக்கப்பட்டது. உழைப்பாளி வர்க்கத்தை ஒரு வர்க்க உணர்வு படைத்த சக்தியாகத் திரட்டுவதற் காக மார்க்சிய சிந்தனைகள் விரைவான முறையில் அக்காலத்தில்தான் வளர்ச்சி பெற்றன. இந்தியா உள்ளிட்ட காலனி நாடுகளின்பால் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. இது பற்றி கம்யூ னிஸ்ட் பிரகடனத்தில் குறிப்பிடப்படவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

பாரிஸ் கம்யூன் தோல்வியைச் சந்தித்த பிறகு அடுத்த புரட்சி அலை ரஷ்யாவிலிருந்து கிளம்பும் என்று மார்க்சும் – ஏங்கல்சும் எதிர்பார்த்தனர். 1882 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட கம்யூனிஸ்ட் பிரகடனத்தின் ரஷ்ய மொழிப் பதிப்புக்கு தாங்கள் கூட்டாக எழுதிய முன்னுரையில் அவர் களிருவரும் இது பற்றிக் குறிப்பிடுகின்றனர். மேற்கத்திய நாடுகளில் நிகழவிருக்கின்ற பாட்டாளி வர்க்கப் புரட்சியின் அடையாளமாக ரஷ்யப் புரட்சி அமையும் என்ற தங்கள் கணிப்பை அவர்கள் அப்போது வெளிப்படுத்தினர்.

முதலாளித்துவ வளர்ச்சி பற்றிய தத்துவ ஆய்வில் ஏகாதிபத்தியம் என்ற கருத்தைப் பற்றிய லெனின் அளித்த விரிவான விளக்கம் ஒரு முக்கியமான முன்னேற்றம் ஆகும். 1917 ஆம் ஆண்டு நிகழ்வுற்ற ரஷ்யப் புரட்சிக்கான களத்தை அமைத்த ஒருங்கிணைந்த தத்துவத்தில் இது இரண்டாவது சிகரம் என்று பிரபாத் பட்நாயக் தமது புரட்சி உலக அளவில் உருவாக்கிய பேரலைகளின் காரணமாக கம்யூனிஸ்ட் பிரகடனத்தின் செய்தி உலகம் முழுவதும் பரவியது.

1948 ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் பிரகடனத்தின் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற்றபோது, முற்றிலும் மாறுபட்ட நிலைக்கு உலகம் வந்திருந்தது. தீரமிகு தியாகங்களுக்குப் பிறகு சோவியத் யூனியன் பாசிச வீழ்ச்சிக்குக் காரணியாக இருந்தது; உலகம் சீனப் புரட்சியின் வெற்றியைக் காணும் தறுவாயில் இருந்தது; வியட்நாம் மற்றும் கொரியப் புரட்சிகளில் பெரும் முன்னேற்றங்களை உலகம் காணவிருந்தது. கிழக்கு ஐரோப்பாவின் பல நாடுகளில் “மக்கள் ஜனநாயக அரசுகள்” மலர்ந்திருந்தன. தேசிய விடுதலை இயக்கங்கள் அலையாக எழுந்திருந்தன – இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த பிறகு அரங்கேறிய வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றங்களாக இவை அமைந்திருந்தன.

சோவியத் யூனியனில் சோஷலிசப் பரிசோதனை முடிவுக்கு வந்ததை ஒரு சகாப்தத்தின் முடிவாகக் குறிப்பிடலாம். 1980களின் இறுதி ஆண்டுகளில் உலக அளவில் ஏற்பட்ட பிரதிபலிப்பின் பின்னணியில் முற்போக்கான வளர்ச்சிப் போக்குகள் அனைத்தும் தடைபட்டுப் போயின. ஒரு தத்துவம் என்ற அடிப்படையிலும் ஒரு அரசியல் என்ற வழிமுறை வகையிலும் மார்க்சியம் தனது நிலைத்திருத்தலுக்கும், நடைமுறைப்படுத்துதலுக்கும் ஒரு பெரும் சவாலை எதிர் கொண்டது.

சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு கழிந்த ஒன்பதாண்டுகளில் இடையறாத பிரச்சாரம் ஒன்றை உலகம் சந்தித்து. “சோசலிசம் செத்துவிட்டது”, “மார்க்சியம் காலாவதியாகிவிட்டது” என்ற பிரச்சாரத்தை ஏகாதிபத்திய வட்டாரங்களும், அதன் தத்துவவாதிகளும் இடையறாமல் கட்டவிழ்த்துவிட்டனர். இந்த தத்துவார்த்தத் தாக்குதல் நடைபெற்றபோதே அதற்கு இணையான முறையில் உலக நிதி மூலதனம் தனது சாம்ராஜ்யத்தை விரிவாக்கும் முயற்சியிலும், உலகின் மூலைமுடுக்குகளிலெல்லாம் தனது தலையை நுழைப்பதற்கான முயற்சியிலும் மிகுந்த உறுதிப்பாட்டுடன் ஈடுபட்டு வந்தது. உலகமயமாக்கல் என்ற பெயரில், வளரும் நாடுகள், வளர்ந்த நாடுகள் என்ற பாகுபாடு இன்றி அனைத்து முதலாளித்துவ நாடுகளிலும் வசிக்கும் உழைப்பாளி மக்களின் மீது கடுமையான தாக்குதல் தொடுக்கப்பட்டது. இந்த பாதகமான வளர்ச்சிப் போக்குகளின் தொடர் விளைவாக சில கம்யூனிஸ்ட் கட்சிகள் நிலை குலைந்துபோயின. மார்க்சியம்தான் வழிகாட்டும் தத்துவம் என்ற நிலைப்பாட்டை அவை கைகழுவின.

இத்தகைய பின்னணியில் கம்யூனிஸ்ட் பிரகடனத்தின் 150வது ஆண்டு நிறைவு விழா, தற்காலத்துக்குப் பொருத்தமற்றதாகிவிட்ட அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆவணத்தின் நினைவைப் போற்றும் விழாவாகவோ, விஞ்ஞான சோஷலிசத்தைக் கருக்கொண்டிருந்த அந்த நூலில் என்ன தவறு நிகழ்ந்தது என்ற பரிசீலனையாகவோ நடந்திருக்கக்கூடும். மாறாக, உலக முதலாளித்துவத்தின் பலவீனங்களைப் பரிசீலனை செய்யும் விழாவாக, உலகளாவிய முதலாளித்துவ அமைப்பு முறையைப் பற்றிய மார்க்சின் ஆய்வுகள் எவ்வாறு பொருத்தமாக உள்ளன என்பதைச் சுட்டிக்காட்டும் விழாவாக அந்த விழா அமைந்தது. 1998-ல் நிகழ்ந்த தென்கிழக்கு ஆசிய நிதி நெருக்கடி உலக முதலாளித்துவ நெருக்கடியின் துவக்கமாகக் காணப்பட்டது. அது பின்னர் கிழக்கு ஆசியப் பகுதிக்குப் பரவி தென்கொரியாவைத் தாக்கியது. வலிமை மிக்க பொருளாதார நாடுகளின் வரிசையில் உலக அளவில் இரண்டாவது இடத்தில் இருந்த ஜப்பானில் நிதி நெருக்கடியையும், பொருளாதாரப் பின்னடைவையும் ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து ரஷ்ய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. பிரேசில் நாட்டின் பொருளாதார அடித்தளம் ஆட்டம் கண்டது.

இத்தகைய இருள் கவிந்த சூழலில உலக முதலாளித்துவம் தனது வெற்றிக் களிப்புக்கு விடைகொடுக்க நேரிட்டது. ஐ.எம்.எப். பின்பற்றி வரும் கொள்கைகள் பற்றி, உலகமயமாக்கலுக்குத் தொடங்கின. ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டும் போக்கு வெளிப்படத் துவங்கியது. “பனிப்போர் முடிவடைந்த பிறகு உலகத்தை ஆட்கொண்ட சுதந்திரச் சந்தை பற்றிய ஆச்சாரக் கோட்பாடுகள் சந்தித்த மிகப் பெரிய சவாலாக இந்தக் கொள்கைப் பின்னடைவு அமைந்திருந்தது” என்று ‘வால் ஸ்ட்ரீட ஜர்னல்’ என்ற இதழ் குறிப்பிட்டது. இதற்கு நேர் மாறான நிலையில் 90களின் மத்திய காலத்தில் உழைப்பாளி வர்க்கப் போராட்டங்கள் புதிய உத்வேகம் பெற்று எழுந்தன. முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் தொழிற்சங்க இயக்கம் நீண்ட காலமாக சந்தித்து வந்த பின்னடைவு நிலைகள் மாறத் தொடங்கின. பிரான்ஸ் நாட்டுத் தொழிலாளர்கள் 1995 ஆம் ஆண்டில் நடத்திய வேலை நிறுத்தம் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. உழைப்பாளி வர்க்கத்தின் எதிர்ப்பு இயக்கத்தை மேலும் மேலும் எழுச்சி மிக்கதாக அது மாற்றி அமைத்தது.

இத்தகைய பின்னணியில்தான் கம்யூனிஸ்ட் பிரகடனத்தின் நூற்றைம்பதாண்டு நிறைவு விழா நடைபெற்றது. உலகெங்கிலும் நூற்றுக்கணக்கான கூட்டங்கள், விவாதங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இவற்றில் சிறப்பாகக் குறிப்பிட வேண்டிய ஒரு நிகழ்ச்சியாக பாரிஸ் மாநகரில் 1998 மே மாதத்தில் நடைபெற்ற மாநாடு அமைந்தது. அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், சமூக இயக்கங்கள், வேறு பல நிறுவனங்கள் ஆகியவை சார்பாக 1500 பேர் அந்த மாநாட் டில் கலந்து கொண்டனர். 300க்கு மேற்பட்ட ஆய்வறிக்கைகள் அந்த மாநாட்டில் வெளியிடப்பட்டன. அந்த நிகழ்ச்சிகளின் போது வெளியிடப்பட்ட அனைத்து ஆவணங்களைப் பற்றிய விபரங்களுக்குள்ளும் செல்வது இப்போது சாத்தியமானதல்ல. ஓராண்டு காலம் நடைபெற்ற 150 ஆம் ஆண்டு நிறைவு விழா 1999 பிப்ரவரியில் நிறைவடைந்தது. மாநாடுகள், கூட்டங்கள், கருத்தரங்கங்கள் ஆகியவற்றில் நடைபெற்ற விவாதங்களின் தன்மையையும், உள்ளடக்கத்தையும் கூர்மையாகப் பரிசீலிக்கும்போது ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் வெளிப்படையாகத் தெரிந்தது. மார்க்சியதைப் பின்பற்றுபவர்களிடையே 1991 ஆம் ஆண்டு முதல் ஏற்பட்ட விரக்தி மனப்பான்மை காணாமல் போயிற்று; மீண்டுமொருமுறை ஆழமாக சிந்திக்க வேண்டியதன் தேவை மையமான அம்சமாக வலியுறுத்தப்பட்டாலும் தத்துவார்த்த ரீதியாகப் புதுப்பித்துக் கொள்வதிலும் நடைமுறைக்கான வழியிலும் நம்பிக்கை உணர்வுகள் மேலோங்கத் தொடங்கின.

நூற்றாண்டு விழாவினையொட்டி இந்தியாவில் நடைபெற்ற விவாதங்கள் மற்றும் அறிவுத்தளப் பணிகள் பற்றிய ஒரு மதிப்பீட்டைப் பெறுவதற்காக மூன்று முன்னணி மார்க்சிய அறிஞர்களை இந்த நூலுக்குப் பங்களிப்புச் செய்யுமாறு கேட்டுக் கொண்டோம். அவர்கள் எழுதியுள்ள மூன்று கட்டுரைகள் பின்வரும் அம்சங்கள் குறித்து கவனம் செலுத்துகின்றன:

 1. மார்க்ஸ் – ஏங்கல்ஸ் சிந்தனைகளின் அடிப்படையில் கம்யூனிஸ்ட் பிரகடனத்தின் பங்குப் பணி.
 2. மார்க்சிய தத்துவக் கருவூலத்தில் பிரகடனத்தின் முக்கியத்துவம்
 3. எதிர்காலக் கொள்கை மற்றும் செயற் முறைக்கான வழிகாட்டி என்ற முறையில் பிரகடனத்தின் பங்குப் பணி.

கம்யூனிஸ்ட் பிரகடனத்தில் இடம் பெற்றுள்ள வரலாற்று தொடர்பான கருத்தையும் அதன் பிந்தைய கால வளர்ச்சியையும் இர்ஃபான் ஹபீப் தனது கட்டுரையில் விளக்கியுள்ளார்.

மார்க்சிய தத்துவம் புதிய சிகரங்களை எட்டும் வகையில் செய்யப்பட வேண்டிய மறு கட்டுமானத்துக்கான முயற்சியில் தேவையை பிரபாத் பட்நாயக் விளக்குகிறார். இதற்காக சமகால உலகப் பொருளாதாரத்தில் உரிய முறையில் பரிசீலிக்கப்பட வேண்டிய வளர்ச்சிப் போக்குகளை அவர் ஆய்வு செய்துள்ளார்.

கம்யூனிஸ்ட் பிரகடனத்தில் இடம் பெற்றுள்ள, புரிந்து கொள்வதற்குக் கடினமான புரட்சிகரமான சிந்தனைகளை அய்ஜாஸ் அகமது தெளிவான முறையில் விளக்குகிறார்.

பொருளாதாரக் கட்டுமானம் மற்றும் தொடர்புடைய அரசியல் மற்றும் பண்பாட்டு அம்சங்களின் மீது அந்தப் புரட்சிகர சிந்தனைகள் ஏற்படுத்திய தாக்கத்தை அவர் மதிப்பீடு செய்துள்ளார்.

‘மூலதனம்’ நூலின் முதல் பாகத்தில் விவரிக்கப்பட்டுள்ள முதலாளித்துவ வளர்ச்சி பற்றிய கோட்பாடுகளில் காலனி ஆதிக்கம் குறித்து போதுமான அளவில் மார்க்ஸ் கவனம் செலுத்தவில்லை என்பதை சிந்தனையைத் தூண்டும் வகையில் எழுதப்பட்டுள்ள மூன்று கட்டுரைகளும் சுட்டிக் காட்டுகின்றன. சோவியத் யூனியனில் சோஷலிசத்தைக் கட்டும்போது ஏற்பட்ட அனுபவங்களை உள்வாங்கிக் கொள்ளுதல் தொடர்பான பிரச்சனைகள் பற்றி இக்கட்டுரையில் பரிசீலிக்கப்படவில்லை. மார்க்சியத் தத்துவத்தையும், அதன் செயல்முறையை மறுஆய்வு செய்வதற்கும் புத்துயிர் ஊட்டுவதற்கும் சோவியத் யூனியன் அனுபவம் குறித்த பரிசீலனை தேவையான ஒரு அம்சமாகும். இந்த அம்சம் குறித்து தனியாகவும், விரிவாகவும் கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளது.

முதலாளித்துவ அமைப்பு குறித்து கம்யூனிஸ்டு பிரகடனம் அளித்துள்ள விளக்கங்கள் இன்றைய முதலாளித்துவ அமைப்பு முறையைத் திகைப்பூட்டும் வகையில் துல்லியமான முறையில் பிரதிபலிக்கின்றன. இந்த அம்சம் மார்க்சியவாதிகளாலும் மற்றவர்களாலும் கவனிக்கப்பட்டுள்ளது. முதலாளித்துவ உறவு முறைகளின் விரிவாக்கம் பற்றிய பத்திகளில் கம்யூனிஸ்ட் பிரகடனம் 20 ஆம் நூற்றாண்டின் உலகமயமாக்கப்பட்ட முதலாளித்துவத்தை கூர்ந்த மதிநுட்பத் தெளிவுடனும், தீர்க்க தரிசனத்துடனும் படம் பிடித்துக் காட்டுகிறது. “முதலாளித்துவ வர்க்கத்தின் உற்பத்திப் பொருட்களுக்கு மேலும் மேலும் விரிவடையும் சந்தை தேவைப்படுகிறது. இந்தத் தேவை முதலாளித்துவம் வர்க்கத்தைப் புவிப் பரப்பு முழுவதும் தொடர்ந்து விரட்டுகிறது. முதலாளித்துவ தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்காக அனைத்து இடங்களிலும் தனக்கென உறைவிடத்தையும் அனைத்துப் பகுதிகளிலும் தொடர்புகளையும், இணைப்புகளையும் உருவாக்கிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.”

1848 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கம்யூனிஸ்ட் பிரகடனத்தில் முதலாளித்துவம் பற்றிய மார்க்சின் ஆய்வு முழுமை பெறவில்லை. ‘மூலதனம்’ நூலில் இந்த ஆய்வு முழு வடிவத்தைப் பெற்று முன்னேறியுள்ளது. அதன் பின்னர், ‘ஏகாதிபத்தியம்’ பற்றிய லெனினின் சிந்தனை கம்யூனிச இயக்கத்துக்கு புதிய முன்முயற்சிகளுக்கான பாதையைத் திறந்துவிட்டுள்ளது. இருபதாம் நூற்றாண்டின் கடைசி இருபதாண்டுகளில் ஏகாதிபத்தியக் கட்டுமானத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிப் போக்குகள், குறிப்பாக ஊகச் சூதாட்ட சர்வதேச நிதி மூலதனத்தின் வளர்ச்சி, மார்க்சியத் தத்துவமும் உலகளாவிய உழைக்கும் வர்க்க இயக்கமும் பெரிய அளவில் கவனம் செலுத்த வேண்டியவையாகும்.

சர்வதேச நிதி மூலதனத்தின் வளர்ச்சி ஒரு குறிப்பிட்ட பிரச்சனையை முன்னுக்குக் கொண்டு வந்துள்ளது. உலகமயமாக்கப்பட்ட ஏகாதிபத்திய அமைப்பில் தேசிய அரசுகளின் பங்குப் பணி என்ன என்பதே புதிதாக முன்னுக்கு வந்துள்ள கேள்வி. இந்த அம்சம் வர்க்கப் போராட்டத்தின் மீது நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாகும். சர்வதேச நிதி மூலதனம் கடுமையான ஏற்ற இறக்கங்களுடன் செயல்படும் தன்மை வாய்ந்தது. ஊகச் சூதாட்ட சர்வதேச நிதி மூலதனம் எத்தகைய கட்டுப்பாடுகளுக்கும் உட்படாமல், நாடுகளின் எல்லைகளைப் பொருட்படுத்தாமல் சுதந்திரமாகப் பயணம் செய்கிறது. இந்த சர்வதேச நிதி மூலதனத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதோ அதன் இயக்கத்தை ஒழுங்குபடுத்துவதோ தேசிய அரசுகளுக்கு இயலாத காரியமாக ஆகிவிட்டது. இதனால் தேசிய அரசுகளின் தன்னாளுமையே  அரிக்கப்பட்டுவிட்டது. சர்வதேச நிதி மூலதனத்தின் இத்தகைய தன்மையும் அதன் பிரம்மாண்டமான வளர்ச்சியும் நம்முடைய ஆய்வுக்குக் குறுக்கே வரத் தேவையில்லைதான்.

ஆனால் நிதி மூலதனத்தின் இடம்விட்டு இடம் பாயும் தன்மை தேசிய அரசுகளுக்கு ஏற்படுத்தி வரும் ஏராளமான இன்னல்களை கவனிக்க வேண்டியது அவசியமாகிறது. தேசிய அரசுகளால் தமது நாடுகளுக்குள் நுழைந்து கொள்ளை லாபம் அடிக்கும் நிதி மூலதனத்தின் ஊடுருவலைத் தடுத்து நிறுத்த முடிவதில்லை. சர்வதேச நிதி மூலதனம் தனது ஏவல் அமைப்புகளாகச் செயல்படும் பன்னாட்டு நிதியம் (ஐ.எம்.எப்.), உலக வங்கி, உலக வர்த்தக அமைப்பு ஆகியவற்றின் துணையோடு நாடுகளின் மீது திணிக்கும் கொள்கைகளை தேசிய அரசுகளால் எதிர்க்க முடிவதில்லை. தேசிய அரசுகளை பயன்படுத்தி சர்வதேச நிதி மூலதனத்தால் உருவாக்கக்கூடிய தீய விளைவுகளை எதிர்த்துப் போராட முடியுமா என்பதும், வர்க்கப் போராட்டத்தின் மையமான அம்சமாக தேசிய அரசுகளை மாற்ற முடியுமா என்பதுமே தற்போது எழுந்துள்ள கேள்விகள்.

தேசிய அரசுகளை வர்க்கப் போராட்டம் நிகழும் களமாகப் பயன்படுத்தவது பற்றிய முறையான பரிசீலனை தற்போது தேவைப்படுகிறது. முதலாளித்துவச் செயல்பாடுகளின் உலகளாவிய தன்மையினை விளக்குகின்ற கம்யூனிஸ்ட் பிரகடனம் அதேநேரத்தில் தேசிய எல்லைகளுக்குள் நடத்தப்பட வேண்டிய வர்க்கப் போராட்டத்தின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறது? முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்த்து பாட்டாளி வர்க்கம் நடத்தும் போராட்டம் உள்ளடக்கத்தில் தேசியத் தன்மையுடன் இல்லை என்றாலும் வடிவத்தைப் பொறுத்த வரை முதலில் அது ஒரு தேசியப் போராட்டமாகவே அமையும். ஒவ்வொரு நாட்டின் பாட்டாளி வர்க்கமும் தனது நாட்டின் முதலாளி வர்க்கத்துடன் முதலில் கணக்குத் தீர்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. “கம்யூனிஸ்ட் பிரகடனம் வெளியிடப்பட்டு நூற்றைம்பது ஆண்டுகள் கழிந்துவிட்ட போதிலும், மூலதனம் விரிவான அளவில் மேலும் மேலும் அதிகமான அளவில் சர்வதேசியத் தன்மை பெற்றுவிட்ட நிலையிலும், வர்க்கப் போராட்டம் குறித்த இந்தக் கோட்பாடு இன்றும் செல்லத்தக்கதாக இருக்கிறது.

குறைவான அளவிலேயே வளர்ச்சி பெற்றுள்ள முதலாளித்துவ நாடுகளின் ஆளும் வர்க்கங்களின் பங்குப் பணி பற்றி புரிந்து கொள்வது தற்போது முக்கியத்துவம் பெறுகிறது. இந்த நாடுகளின் முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ வர்க்கங்கள், தங்களுடைய நாடுகள் சுயேச்சையான ஒரு முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையில் முன்னேறுவதற்கான முயற்சிகளை கைவிட்டுவிட்டன. எதிர்ப்பு அரணாகத் திகழ்ந்த சோவியத் யூனியன் உலக அரங்கில் இல்லாமல் போனது இத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச நிதி மூலதனத்தின் உலக ஒழுங்கமைப்பில் தங்களையும் இணைத்துக் கொள்வதுதான் தங்களின் வர்க்க வளர்ச்சிக்கான ஒரே பாதையாக அவை கருதுகின்றன. ஆனால், இதுவே ஒரு நிரந்தரமான நிகழ்ச்சிப் போக்காக இருக்க முடியாது. உலக முதலாளித்துவ அமைப்பில் முரண்பாடுகள் தீவிரமடையும்போது உள்நாட்டு ஆளும் வர்க்கங்களும் தங்கள் நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கும்.

சர்வதேச நிதி மூலதனத்தின் ஊடுருவலால் தேசிய அரசுகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருவது உண்மையே. ஆனால் நிதி மூலதனத்தை எதிர்த்து எதுவுமே செய்ய முடியாதே என்ற நிலைக்கு அவை தள்ளப்பட்டுவிட்டதாக நாம் அதனை மிகைப்படுத்திவிடக் கூடாது. மூலதனத்தின் சுதந்திரமான இயக்கத்தை அனுமதிக்காமல் எந்தவொரு நாடும் உயிர்வாழ முடியாது என்றும், வளர்ச்சி அடைய முடியாது என்றும் ஐ.எம்.எப். உலக வங்கியின் ஆச்சார சீலர்கள் அடித்துப் பேசி வருகின்றனர். ஆனால், எத்தகைய கட்டுப்பாடுமற்ற முறையில் மூலதனப் பாய்ச்சலை அனுமதிப்பது தவறு என்று தென்கிழக்கு ஆசிய நாடுகள் சந்தித்த நிதி நெருக்கடிகள் தெளிவான முறையில் படம் பிடித்துக் காட்டியுள்ளன. நிதி மூலதனத்தின் தாக்குதலால் ஏற்படக்கூடிய சீரழிவுகளை கட்டுப்படுத்தக்கூடிய கருவியாக இருக்கக் கூடியது தேசிய அரசுகள் மட்டுமே என்பதும், சர்வதேச அமைப்புகளின் பரிசீலனைக்கு இதனைக் கொண்டு செல்லக் கூடிய நிலையில் தேசிய அரசுகள் மட்டுமே உள்ளன என்பதையும் தென்கிழக்கு ஆசியாவின் அனுபவங்கள தெளிவாக்குகின்றன. எடுத்துக்காட்டாக, மலேசியாவின் மகாதிர் ஆட்சி, தன்னை ஒரு முதலாளித்துவ ஆட்சிதான் எனக் கூச்சமின்றிக் கூறிக் கொண்டாலும்கூட, ஐ.எம்.எப் / உலக வங்கியின் நிர்ப்பந்தங்களுக்கு எதிராக சவால் விடுத்தது. நிதி மூலதனப் பாய்ச்சலுக்கு கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தது.

தேசிய அரசுகளையும் அவற்றின் ஆட்சி இயந்திரத்தையும் பயன்படுத்திக் கொண்டு உள்நாட்டு வர்க்கங்கள் சர்வதேச நிதி மூலதனத்தின் ஆணைகளைச் செயல்படுத்துவதை அனுமதிக்க முடியாது? உழைப்பாளி வர்க்கத்தின் உடனடி நலன்களைப் பேணிப் பாதுகாக்கவும், ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கத்துக்கு எதிராகப் போராடவும் ஏற்ற வகையில் தேசிய அரசுகளை சரியான திசைவழிக்கு நெறிப்படுத்துவதான போராட்டம் உறுதியுடன் நடத்தப்பட வேண்டும்.

இதற்கான அனைத்து வகைப் போராட்டங்களுக்கும் உழைக்கும் வர்க்க இயக்கம் தலைமைப் பாத்திரத்தை ஏற்க வேண்டும். “உழைக்கும் வர்க்கம் தேசத்தை வழிநடத்தும் இயக்கமாக உயர வேண்டும்”, “உழைக்கும் வர்க்கம் தன்னையே தேசமாக உருவாக்கிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அரசியல் மேலாதிக்கத்தை அது பெறமுடியும்” என்றெல்லாம் கம்யூனிஸ்ட் பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மக்களின் போராட்டத்துக்கு உழைக்கும் வர்க்கம் தலைமைப் பாத்திரம் வகிக்க வேண்டும் என்ற பொருளில்தான் மேற்கண்டவாறு கம்யூனிஸ்ட் பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். நாடுகளை அடிமைப்படுத்தும் ஏகாதிபத்தியத்தின் போக்குகளுக்கு எதிராக உழைப்பாளி வர்க்கத்தின் தலைமையில் நடைபெறும் ஜனநாயக இயக்கம் வர்க்க சக்திகளின் பலாபலன்களில் மாற்றங்களை ஏற்படுத்தும். அத்துடன் உள்நாட்டு ஆளும் வர்க்கங்கள் மத்தியில் உருவாகக் கூடிய ஏகாதிபத்திய ஆதரவுப் போக்கைத் தடுத்து நிறுத்தவும், அதனை எதிர்த்துப் போராடவும் அது வழிவகுக்கும்.

நாடுகளின் எல்லைகளுக்குட்பட்ட பகுதிகளில்தான் வர்க்கப் போராட்டங்கள் பெருமளவில் நடைபெறுகின்றன. இவ்வாறு நிகழ்வது சர்வதேசியக் கோட்பாட்டுக்கு எதிரானது அல்ல. தனது கொள்கைகளை தேசிய அரசுகளின் மீது திணிப்பதற்காக லஞ்சம் கொடுப்பது உள்ளிட்ட அனைத்து வழிமுறைகளையும் ஏகாதிபத்தியம் வன்மத்துடன் கையாள்கிறது. உள்நாட்டு வர்க்கங்கள் மற்றும் மக்களின் நலன்களுக்கு முன்னுரிமை கொடுத்து தேசிய அரசுகள் செயல்படுவதற்கு ஏகாதிபத்தியம் அனுமதிப்பதில்லை. ஒரு நாடு தனது உயர் தன்னாளுமையை இழக்கிறது என்றால் அந்த நாட்டு மக்கள் தங்களைத் தாங்களே ஆளும் உரிமையையும் பிற உரிமைகளையும் இழக்கிறார்கள் என்றுதான் பொருள். தேசிய அரசுகளையும் அதன் குடிமக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய ஜனநாயக அமைப்புகள் மூலம்தான் ஒரு நாட்டின் மக்கள் தங்களின் சுயாதிபத்திய உரிமையை வெளிப்படுத்துகிறார்கள். உயர் தன்னாளுமை பறிபோகிறது என்றால் அது பொருளாதார அடிப்படையில் மட்டும் தாக்கம் ஏற்படுத்தும் என்று நினைக்கக் கூடாது. அது நாட்டில் அரசியல் அமைப்புகளையும், ஏன் அந்த நாட்டின் ஜனநாயகத்தையும் கூட சீர்குலைக்கும். பொதுக்கல்வி, சுகாதாரம், சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றைப் பெறுவதற்கான மக்களின் உரிமைகளும் இதனால் பாதிக்கப்படும்.

குறிப்பாகச் சொல்லப்போனால் இந்தியா தற்போது சந்தித்து வரும் பிரச்சனைகள் மேலே குறிப்பிட்டுள்ள வகையைச் சேர்ந்தவைதான். மூன்றாம் உலக நாடுகளுக்குள்ளே வளர்ச்சியடைந்த ஒரு முதலாளித்துவ வர்க்கத்தையும், குடியரசுத் தன்மையுடன் கூடிய ஒரு அரசமைப்புச் சட்டத்தையும் கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது.

அந்த அரசமைப்புச் சட்டத்தில் அடித்தளமாக இருப்பது, குறைபாடுகளுடன் கூடிய, ஆனால் செயல்படக்கூடிய நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பு முறை. 1990களில் துவங்கி இந்திய ஆளும் வர்க்கம் பின்பற்றி வரும் உலகமயமாக்கல் திட்டம் இந்த ஜனநாயக வடிவத்தின் மீது நேரடியான தாக்குதலுக்கான பாதையைத் திறந்துவிட்டுள்ளது.

ஜனநாயக வடிவம் கொண்ட அரசியல் அமைப்பு முறை ஒருபுறம்; சமத்துவத்தன்மை அறவே இல்லாத சர்வாதிகாரத் தன்மை மிக்க பொருளாதாரக் கட்டுமானம் மறுபுறம்; இப்படிப்பட்ட முரண்பட்ட தன்மையைக் கொண்ட ஒன்றாகவே இந்தியா தொடர்ந்து காட்சி அளிக்கிறது. வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளில்தான் இப்படிப்பட்ட முரண்பாடு சாதாரணமாகக் காணப்படும். மற்றொரு முரண்பட்ட தன்மையும் இந்திய அரங்கில் முன்னுக்கு வந்துள்ளது. மக்களின் ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சிக்கும் அரசாங்க முடிவுகள் எடுக்கப்படும் தன்மைக்குமான முரண்பாடுதான் அது. எந்த முதலாளித்துவ கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அது பின்பற்றும் அடிப்படைப் பொருளாதாரக் கொள்கைகள் ஒரே மாதிரியான முறையில் அமைகின்றன. 1991 ஆம் ஆண்டு முதல் ஆட்சிக் கட்டிலில் ஏறிய தொடர்ச்சியான மூன்று அரசாங்கங்கள் – அவை வெவ்வேறு அரசியல் கட்சிகள் அல்லது கூட்டணிகளைச் சேர்ந்தவையாக இருந்தபோதிலும் – ஒரே மாதிரியான அடிப்படைப் பொருளாதாரக் கொள்கைகளைத்தான் பின்பற்றின. நவீன தாராளமயமாக்கல் கொள்கைகள், பொருளாதார நடவடிக்கைகளிலிருந்து அரசு விலகி நிற்பது போன்ற கொள்கைகளை முறியடிப்பதற்கு மூன்றாம் உலக நாடுகளின் ஆளும் வர்க்கக் கட்சிகளுக்கிடையே நிலவும் பொதுவான கருத்தொற்றுமை பெரும் தடையாக அமைந்துள்ளது.

இத்தகைய கருத்தொற்றுமையில் இடதுசாரிகள் தங்களை இணைத்துக் கொள்ள மறுத்து வருகிறார்கள். ஏகாதிபத்திய நிர்ப்பந்தங்களுக்கு எதிரான இயக்கங்களை உருவாக்க வருகிறார்கள் என்பது வெளிப்படை. அதேநேரத்தில், பொருளாதாரக் கொள்கை மாற்றங்களின் அடிப்படையில் மட்டுமே உண்மையான மாற்றுத் திட்டத்தை முன் வைத்துவிட முடியாது. பொருளாதாரக் கொள்கை மாற்றங்கள் முக்கியமானவைதான். ஆனால், அவை மட்டுமே போதுமானவை அல்ல. தன்னாளுமைக்கான போராட்டத்தை நடத்துவது, ஜனநாயகத்துக்கான போராட்டத்தை நடத்துவது மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவது ஆகிய அனைத்துக்கும் ஒரு அரசியல் தத்துவார்த்த உள்ளடக்கம் தேவைப்படுகிறது.

கம்யூனிஸ்ட் பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ளதைப் போல வர்க்கப் போராட்டம் என்பது உண்மையில் ஒரு அரசியல் போராட்டம்தான்? பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய வர்க்க போராட்டத்தை நாம் திறமையான முறையில் கையாள்வதை பொறுத்துதான் மூன்றாம் உலக நாடுகளில் – ஏகாதிபத்திய உலக நாடுகளில் – மார்ச்சியத் தத்துவத்தையும் அதன் செயல் முறைகளையும் முன்னுக்குக் கொண்டுவர முடியும்.

உலக முதலாளித்துவ ஆதிக்கத்தின் வெற்றிகரமான வளர்ச்சியை தீர்க்கதரிசனத்துடன் சரியாகக் கணித்துக்கூறிய பிரகடனம் மற்றொரு அம்சத்தில் மிகையான எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியது. தேசியத் தடைகளை முறிக்கக் கூடியதாக உலக முதலாளித்துவத்தின் ஆற்றல் பற்றி மிகையான முறையில் மதிப்பீடு செய்தது. “நாடுகளுக்கிடையேயும், மக்களுக்கிடையேயும் நிலவிவந்த கருத்து வேறுபாடுகளும், பகைமைப் போக்குகளும் மேலும் மேலும் அதிக அளவில் மறைத்து வருகின்றன. முதலாளிகளின் வளர்ச்சி, வர்த்தகத்துக்கான சுதந்திரம், உலக அளவிலான சந்தை, உற்பத்தி முறையில் காணப்படும் ஒரே மாதிரியான தன்மை போன்றவையே இதற்குக் காரணம்” என்று பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், ஏகாதிபத்திய சகாப்தத்தில் இரண்டு உலகப் போர்களை இருபதாம் நூற்றாண்டு கண்ணுற்றது. ஆதிபத்திய நோக்கத்துடன் முடுக்கிவிடப்பட்ட தேசங்களுக்கிடையேயான போட்டிகளும், தேசங்களுக்கிடையே ஏற்பட்ட வேறு பல மோதல்களும் மிகப்பெரும் மனித பலிகளுக்கு இட்டுச்சென்ற அந்த இரு உலகப் போர்களுக்கு காரணமாயின. தேசங்களுக்கிடையோன முரண்பாடுகளை மேலும் கிளறிவிட்டுள்ளது. முதலாளித்துவத்திலிருந்து மாறி வந்த நாடுகளில் கூட அதன் விளைவுகள் தொடர்கின்றன என்பது வெளிப்படை.

இனக்குழுவாத அடிப்படையிலும், தேசிய அடிப்படையிலும், மத அடிப்படையிலும் எழுந்துள்ள எண்ணற்ற சிக்கல் மிகுந்த பிரச்சனைகள் மூன்றாம் உலக நாடுகளிலும் முன்னாள் சோஷலிச நாடுகளிலும் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டங்களுக்குத் தடையாக அமைந்துள்ளன. சுதந்திரச் சந்தைக் கோட்பாடுகள் திணிக்கப்படுதல், சோஷலிச முகாமின் செல்வாக்கில் ஏற்பட்ட பின்னடைவுகள், சமுதாய மற்றும் கலாச்சார அரங்கங்களில் உலகமயமாக்கலால் ஏற்படும் சீரழிவுகள் ஆகியவை இனக்குழு மற்றும் மத அடையாளங்களையும் – உணர்வுகளையும் தூண்டிவிடுபவையாகவும் அவற்றை மேலும் மோசமடையச் செய்பவையாகவும் அமைந்துள்ளன. உலகின் அனைத்துப் பகுதியிலுமுள்ள தேசங்களிலும், பல்வேறு தேசிய இனங்களை உள்ளடக்கிய நாடுகளிலும் ஏற்பட்டு வரும் நெருக்கடிகள் பிற்போக்குத்தனமான எதிர் விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றன. அந்த நாடுகளில் மத சகிப்புத் தன்மையற்ற இயக்கங்களும் இன மற்றும் சாதிய மோதல்களும் வளர்ந்து வருகின்றன. இத்தகைய சக்திகளுடன் இணக்கமான முறையில் செயல்படும் ஆற்றல் ஏகாதிபத்தியத்துக்கு கைவந்த கலையாக உள்ளது. தெற்கு ஆசியப் பிராந்தியத்தில் அமைந்துள்ள ஆப்கானிஸ்தானில் தாலிபான் என்னும் அடிப்படைவாத அமைப்புடனும், பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமிய அடிப்படைவாத சக்திகளுடனும், இந்திய நாட்டில் இத்து மதவாதிகளுடனும் இணைந்து செயல்படுவது அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு சாத்தியமாகியுள்ளது. சிறுபான்மை மக்களின்பால் ஆளும் வர்க்கங்கள் காட்டக்கூடிய மதவெறிப் போக்கு மற்றும் ஜனநாயகத் தன்மையற்ற போக்குகளால் மக்களின் ஒற்றுமை சீர்குலைகிறது. ஏகாதிபத்திய சக்திகளின் ஆதரவுடன் வளர்ந்து வரும் சகிப்புத் தன்மையற்ற சக்திகளும் மக்கள் ஒற்றுமைக்கு வேட்டு வைக்கின்றன. இதனையெல்லாம் உழைக்கும் வர்க்க இயக்கமும், இடதுசாரி சக்திகளும் எதிர்த்துப் போராட வேண்டியுள்ளது.

இனக் குழுக்கள் மற்றும் மதச் சிறுபான்மையினருக்கும் உரிமைகளை வழங்கக்கூடிய, அவற்றுக்கு உத்தரவாதமளிக்கக் கூடிய ஒரு ஜனநாயக இயக்கத்தை, தேசிய அளவிலான தலைமைப் பாத்திரத்தை எதிர்பார்க்க முடியாது. ஏகாதிபத்திய எதிர்ப்புத் தன்மை கொண்ட தேசியத்துக்கு தலைமைப் பாத்திரம் வகித்த உழைக்கும் வர்க்கம் விரும்பினால் அது சிறிய அளவிலான மத, இன, மொழி, பிராந்திய வாதப் போக்குகளுக்கு எதிராகவும், பெரிய அளவில் இத்தகைய போக்குகளுக்கெதிராகவும் போராட வேண்டியிருக்கும். சிறுபான்மை மக்களின் ஜனநாயக வேட்கைகளைப் பூர்த்தி செய்வதற்கும் அதேநேரத்தில் பிரிவினை வாதத்துக்கு எதிராகப் போராடுவதற்கும் இடதுசாரிகள் கவனம் செலுத்த வேண்டும். இதற்காக மாநில சுயாட்சிக் கோட்பாடுகளுக்கும் பிரதேச சுயாட்சி உரிமைகளுக்கும் இடதுசாரிகள் கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தெற்கு ஆசிய நாடுகளில் கிடைத்துள்ள அனுபவங்கள் இதனையே உணர்த்துகின்றன. நிர்வாக அமைப்புகளிலும் பொருளாதார அம்சங்களிலும் முடிவு எடுக்கும் அதிகாரத்தைக் கீழ்மட்டத்துக்கு விரிவுபடுத்த வேண்டும் என்பதற்கான போராட்டம் தற்போது நடைபெற்று வருகின்றன. மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டங்களின் பிரதிபலிப்பாகவே இவற்றை கருத வேண்டும்.

பல்வேறு தேசிய இனங்களைக் கொண்டிருந்த சோவியத் யூனியனும், யூகோஸ்லேவியாவும் பிளவுபட்டு உடைந்துபோன காட்சியை நாம் கண்டோம். பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட நாடுகளின் பிரச்சனை பற்றி மார்க்சியத் தத்துவம் மற்றும் நடைமுறைகள் காட்டும் வழிகாட்டுதல் குறித்த ஒரு புதிய பார்வையின் அவசியத்தை இந்த அனுபவங்கள் உணர்த்துகின்றன.

சமூக அமைப்பைப் புரட்சிகரமான முறையில் மாற்றிட நடத்தப்படும் இயக்கத்தின் தலைமைப் பாத்திரத்தை பாட்டாளி வர்க்கத்துக்கு கம்யூனிஸ்ட் பிரகடனம் வழங்குகிறது. பிரகடனம் அளிக்கும் இச்செய்தியை நிராகரிப்பதற்கான முயற்சிகள் அனைத்து வகையிலும் நடைபெற்று வருவதை நாம் காண முடிகிறது. கடந்த பத்தாண்டுகளில் சோஷலிசம் சந்தித்த பின்னடைவுகள் மார்க்சியத் தத்துவத்தின் இந்த அம்சங்களை மாற்றி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தும் இந்த அம்சங்களை மாற்றி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தும் திரிபுவாதப் போக்குகளுக்கு உரம் சேர்த்துள்ளன. உலகமயமாக்கலுக்கு எதிராக நடைபெற்றுள்ள அண்மைக்கால போராட்டங்களின் அனுபவங்கள் மேலே குறிப்பிடப்பட்டுள்ள திரிபுவாதப் போக்குகளுக்கு எதிராக அமைந்துள்ளன. அவை பாட்டாளி வர்க்கத்தின் மையமான பாத்திரத்தின் தேவையை வலியுறுத்திக் கூறுவதற்கான போதிய அடிப்படைகளை உருவாக்கியுள்ளன. ஏகாதிபத்தியத் தாக்குதலைத் தொடர்ச்சியாக எதிர்த்து வரும் வர்க்கம் தொழிலாளி வர்க்கம் மட்டுமே. அந்த எதிர்ப்பு எவ்வளவு தற்காப்புத் தன்மையுடன் இருந்தாலும் கூட அதுதான் உண்மை நிலை. 1995 ஆம் ஆண்டில் நடைபெற்ற பிரான்ஸ் நாட்டுத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தமும், 1996 ஆம் ஆண்டில் தென்கொரியாவில் ஒரு மாத காலம் நடைபெற்ற தொழிலாளர்களின் வீரஞ்செறிந்த வேலை நிறுத்தமும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பெருமுதலாளி ஆதரவுக் கொள்கைகளுக்கு எதிராக மேற்கு ஐரோப்பாவில் வளர்ந்து வரக்கூடிய தொழிற்சங்கங்களின் புதிய ஒருங்கிணைந்த ஆரம்ப கட்டப் போராட்டங்களும் வரக்கூடிய காலங்களில் பாட்டாளி வர்க்கம் ஆற்றவுள்ள மையமான பங்களிப்பை உறுதி செய்துள்ளன.

உழைக்கும் வர்க்கம் இன்று ஒரு மறைந்துவரும் வர்க்கமோ, எண்ணிக்கையில் சுருங்கி வரும் வர்க்கமோ அல்ல என்பதை அய்ஜாஸ் அகமது தனது கட்டுரையில் சுட்டிக் காட்டுகிறார். முன்னேறிய முதலாளித்துவ நாடுகளிலும் கூட இதே நிலைதான் காணப்படுகிறது. உழைப்பாளி வர்க்கத்தின் கூட்டமைவுகளிலும் உள் கட்டமைவுகளிலும் முந்தைய நிலைகளிலிருந்து மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பது உண்மையே. இந்திய நாட்டைப் பொறுத்த வரை தொழிலாளர்களின் உணர்வுகளில் சாதி மற்றும் இனக்குழு அடிப்படையிலான வேறுபாடுகள் இன்றும் தொடர்கின்றன. தொழிலாளர் வர்க்கத்தின் வர்க்க உணர்வை மேம்படுத்த அதன் அரசியல் மற்றும் ஸ்தாபன நடவடிக்கைகள் மட்டும் போதுமானவையல்ல. தத்துவார்த்த ரீதியிலும், கலாச்சார அடிப்படையிலும் குறுக்கிடுவதன் மூலம் வர்க்க உணர்வை மேலும் வளர்த்திட நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. ஆனால், இந்த அம்சத்தில் மிகச் சிறிய அளவுக்கே கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இது தவிர தொழிற்சங்கங்களும் உழைக்கும் வர்க்க இயக்கமும் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டிய மற்றொரு அம்சமும் உள்ளது. நாம் குறிப்பிடுவது – தொழிற்சங்க இயக்கத்தில் பெண் தொழிலாளர்களின் பங்குப் பணி பற்றய அம்சம். தொழில்துறை உழைப்பாளிகளின் அணியில் மேலும் மேலும் அதிக எண்ணிக்கையில் பெண் தொழிலாளர்கள் சேர்க்கப்படுவார்கள் என்று பிரகடனம் முன்கூட்டியே மதிப்பீடு செய்திருந்தது. “நவீன தொழில்துறை மேலும் மேலும் வளரும் போது ஆடவரின் உழைப்பு மேலும் மேலும் அகற்றப்பட்டு அந்த இடத்தில் பெண் தொழிலாளர்கள் அமர்த்தப்படுவர்” என்று கம்யூனிஸ்ட் பிரகடனம் மதிப்பிடப்பட்டிருந்தது. மலிவான உழைப்புச் சக்தி என்ற வகையில் வளர்ந்து வரும் பாட்டாளிகளின் அணியில் பெண்களும் இணையும் நிலை உருவாகும் என்று கருதப்பட்டது. 20 ஆம் நூற்றாண்டின் இறுதியில் எடுக்கப்பட்ட கணக்கின் படி முன்னேறிய முதலாளித்துவ நாடுகளின் உழைப்பாளர் படையில் 60 சதம் பேர் பெண்கள் என்பது தெரிய வந்துள்ளது? பணித் துறையிலும், குறைந்த ஊதியம் வழங்கப்படுகிறது. பகுதிநேரப் பகுதிகளிலும்? ஒப்பந்தப் பணிகளிலும் மேலும் மேலும் அதிக எண்ணிக்கையிலான பெண்கள் பெரிய அளவில் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். வளர்ந்து வரும் நாடுகளிலும்கூட இதே நிலையைக் காண முடிகிறது. இந்தியாவில் உள்ள பெண் தொழி லாளர்களின் எண்ணிக்கை சுமார் 12 கோடியே 70 லட்சம் பாட்டாளி வர்க்கத்தின் முக்கியமான அங்கமாக அவர்களும் விளங்குகின்றனர் என்பது உரிய அளவில் புரிந்து கொள்ளப்படவில்லை. பெண் தொழிலாளர்கள் சந்திக்கும் வர்க்க சுரண்டல், சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுடன் பாலியல் ரீதியில் அவர்கள் சந்திக்கும் பிரத்தியேகமான பிரச்சனைகளின் மீதும் உழைக்கும் வர்க்கக் கட்சி கவனம் செலுத்த வேண்டியது முக்கியமானதாகும். உழைக்கும் வர்க்க இயக்கத்தின் ஒருங்கிணைந்த அங்கமாக பெண் தொழிலாளர்கள் மாற்றப்படவில்லையானால் உழைக்கும் வர்க்கத்தின் தலைமையில் மிகப் பெருமளவில் பெரும்பான்மை மக்களின் ஜனநாயகத்துக்கான போராட்டத்தை வென்றெடுப்பது என்ற பிரகடன நோக்கம் நினைத்து பார்க்கக்கூட முடியாத ஒன்றாகவே இருக்கும்.

ஜெர்மன் தொழிலாளர்களின் கட்சியாகிய கம்யூனிஸ்ட் லீகிற்காக கம்யூனிஸ்ட் பிரகடனம் எழுதப்பட்டது. (அக்கட்சி ஒரு சிறிய கட்சியே) கம்யூனிஸ்ட்டுகள் பின்பற்ற வேண்டிய இலக்கு, திட்ட முறைகள் பற்றியும் உடனடி நடைமுறைகளைப் பற்றியே அது விளக்குகிறது. கம்யூனிஸ்ட் இயக்கம் பிற்காலத்தில் பின்பற்றிய நடைமுறைகளுக்கு அவை முன்னோடியாக இருந்தன. அமைப்பு ரீதியாக திரட்டப்பட்ட ஒரு கட்சியாக உழைப்பாளி வர்க்கம் மாற வேண்டியதன் தேவையை பிரகடனம் விளக்கியுள்ளது. பாட்டாளிகளை வர்க்கமாகத் திரட்டுவது பற்றியும், பின்னர் அதனை அரசியல் கட்சியாக மாற்றுவது பற்றியுமான கருத்து கம்யூனிஸ்ட் பிரகடனத்தில் அதன் ஆரம்பகட்ட வடிவத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த கருத்துக் கருவின் அடிப்படையில் ஒரு புரட்சிகரக் கட்சி பற்றிய முழுமையான கோட்பாட்டை லெனின் பின்னர் வடிவமைத்தார். “அனைத்து நாடுகளிலுமுள்ள தொழிலாளி வர்க்கக் கட்சிகளுக்குள்ள கம்யூனிஸ்ட்கள்தான் மிகவும் முன்னேறிய, மிகவும் நெஞ்சுறுதி படைத்த பகுதியினர்” என்று கம்யூனிஸ்ட் பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளது. கம்யூனிஸ்ட்கள் உழைப்பாளி வர்க்கத்தின் முன்னணிப் படை என்ற கோட்பாடு இந்த வாசகங்களின மூலம் பிரகடனத்திலேயே இடம் பெற்றுள்ளது என்று குறிப்பிடலாம். சிலர் இக்கருத்துக்கு எதிராக வாதிடுகின்றனர் என்ற போதிலும் இதுவே சரியான நிலை. அதேநேரத்தில் ஒவ்வொரு நாட்டிலும் பல தொழிலாளி வர்க்கக் கட்சிகள் உருவாகும் என்று மார்க்சும் ஏங்கல்சும் கருதினார்கள். சொத்துடைமை வர்க்கங்களின் கட்சிகளுக்கும் தொழிலாளி வர்க்கக் கட்சிகளுக்கும் இடையே உள்ள அடிப்படை வேறுபாடுகளையும் அவர்கள் சுட்டிக் காட்டினார்கள்.

அப்படிப்பட்ட புரட்சிகரத் தத்துவார்த்த அடிப்படைகளை நிலைநாட்டுவதற்காகத்தான் கம்யூனிஸ்ட் பிரகனடத்தின் மூன்றாவது பகுதி சோஷலிசம் பற்றிய தவறான கண்ணோட்டங்களை நிராகரிப்பதில் முழுமையான கவனம் செலுத்தியுள்ளது. விஞ்ஞான சோஷலிசத்துக்கும் மற்ற தவறான சோஷலிசக் கோட்பாடுகளுக்கும் இடையே உள்ள பொருத்தமின்மையும், முரண்பாடுகளும் அப்பகுதியில் விளக்கப்பட்டுள்ளன. பல்வேறு வரலாற்றுக் காலங்களில் உழைப்பாளி வர்க்கக் கண்ணோட்டத்தைப் பிரதிபலிக்காத பல்வேறு விதமான சோஷலிசக் கோட்பாடுகள் உருவாகக்கூடும். இவற்றுக்கு எதிரான தொடர்ச்சியான தத்துவப் போராட்டங்கள் தேவையானவை என்பதை நினைவுபடுத்தும் வகையிலேயே கம்யூனிஸ்ட் பிரகடனத்தின் இப்பகுதி அமைந்துள்ளது.

ஐரோப்பாக் கண்டத்தின் பல்வேறு நாடுகளிலுமுள்ள எதிர்க் கட்சிகளின்பால் கம்யூனிஸ்ட்கள் பின்பற்ற வேண்டிய அணுகுமுறை பற்றி கம்யூனிஸ்ட் பிரகடனத்தின் கடைசிப் பகுதி விளக்குகிறது. தொழிலாளி வர்க்கத்தின் உடனடி நோக்கங்களை வென்றெடுப்பதற்கு கம்யூனிஸ்டுகள் பின்பற்ற வேண்டிய யுக்திகளைப் பற்றி, அதாவது ‘ஐக்கிய முன்னணித் தந்திரம்’ பற்றி இப்பகுதியில் விளக்கப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட சூழலில் தொழிலாளி வர்க்க நலன்களைப் பாதுகாப்பதற்காகப் பின்பற்றப்படும் உத்திகளாகவே அவை குறிப்பிடப்பட்டுள்ளதால் அத்தகைய சூழ்நிலை மாறும்போது அவற்றைக் கைவிட்டுவிட வேண்டியது அவசியமானது என்று புரிந்து கொள்ள வேண்டும். கம்யூனிஸ்ட் பிரகடனத்தின் பிந்தைய காலப் பதிப்பு ஒன்றிற்கு எழுதியுள்ள முன்னுரையில் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உத்திகள் சில காலாவதியாகிவிட்டதைப் பற்றி மார்க்சும் ஏங்கல்சுமே குறிப்பிட்டுள்ளனர். கட்சியின் பங்குப் பணி, வர்க்கத்துடனான அதன் தொடர்பு, முதலாளித்துவ அரசின் தன்மை, புரட்சிகர இயக்கத்தின் இலக்குத் திட்டம் மற்றும் உடனடி நடைமுறைத் திட்டங்கள் ஆகியவை கம்யூனிஸ்ட் பிரகடனத்தில் அரசியல் சார்ந்த பகுதிகளாக இடம் பெற்றுள்ளன. இந்த வளமான சிந்தனை ஆதாரங்கள் பிற்காலத்தில் கட்சிகளின் வளர்ச்சி தொடர்பாகப் பெறப்பட்ட அனுபவங்கள், அகிலங்களின் வளர்ச்சியில் கிடைத்த அனுபவங்கள ஆகியவற்றின் அடிப்படையில் சிந்திக்கப்பட வேண்டியவை, பரிசீலிக்கப்பட வேண்டியவை. 20 ஆம் நூற்றாண்டில் உருவான சோவியத் யூனியன் மற்றும் இதர சோஷலிச நாடுகள் சந்தித்த அனுபவங்களின் அடிப்படையில் கட்சி பற்றியும், வர்க்கம் பற்றியும் அரசு பற்றியும் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. இன்றளவும் விடை காணப்படாதவையாகவே அவை நீடிக்கின்றன.

இந்த நூலில் இடம் பெற்றுள்ள படைப்புகள் மார்ச்சியத் தத்துவம் மற்றும் நடைமுறை பற்றிய பொதுவாக விளக்கங்களாக அமைந்துள்ளன. இருந்தபோதிலும் இந்தியச் சூழல் பற்றியும் தொடர்ச்சியான குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. இந்திய நாட்டில் கம்யூனிஸ்ட் இயக்கம் தனது எழுபதாண்டு வரலாற்றில் ஏராளமான போராட்டங்களை நடத்தியுள்ளது. மதிப்புமிக்க பல அனுபவங்களைப் பெற்றுள்ளது. அவைகளெல்லாம் ஆழமான ஆய்வு செய்யப்பட்டு, அலசப்பட்டு கோட்பாடுகளாகத் தொகுக்கப்பட வேண்டியவை. 1991 ஆம் ஆண்டுக்குப் பின்னரும் (வேறு பல நாடுகளைப் போலன்றி) இந்திய நாட்டில் மார்சியத்தைப் பின்பற்றும் கட்சிகள் மக்கள் ஆதரவுத தளத்துடன் தொடர்ந்து நீடிக்கின்றன. இந்திய நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சிகளிலும் குழுக்களிலுமுள்ள உறுப்பினர் எண்ணிக்கை 15 லட்சம். இது தவிர இடதுசாரி தன்மையுள்ள வர்க்க வெகுஜன ஸ்தாபனங்களில் 5.5 கோடி முதல் 6 கோடி பேர் வரை உறுப்பினர்களாக இருக்கின்றனர்.

இந்த செல்வாக்குடன் ஒப்பிடுகையில், தத்து வார்த்த ரீதியான பணிகள் கண்டு கொள்ளப்படவில்லை. தத்துவார்த்துவப் பணிகளை வலுப்படுத்துவதற்காக அடிப்படைகளில் போதிய கவனம் செலுத்தப்படவில்லை. இந்திய மொழிகளில் வெளிவந்துள்ள மார்ச்சியப் படைப்புகள் பற்றி கருத்துப் பரிமாற்றங்கள் எதுவும் நடைபெறுவதில்லை. ஆங்கிலத்தில் எழுதப்பட்ட படைப்புகள் மட்டுமே விதி விலக்காக உள்ளன. இந்திய துணைக் கண்டத்தின் பல்வேறு மொழிகளில் கம்யூனிஸ்ட் பிரகடனம் வெளியிடப்பட்ட வரலாறு குறித்த தகவல்கள் எதுவும் இல்லை என்பது இந்த நூலை தயாரிக்கும் போது உணரப்பட்டது. இது பற்றிய சில விபரங்கள் சேகரிக்கப்பட்டு அதற்கான குறிப்புகள் இந்த நூலின் இறுதிப் பகுதியில் இணைக்கப்பட்டுள்ளன. இங்கு ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்திலும், இதர இயக்கங்களிலும் முனைப்புடன் ஈடுபட்ட சில மிகச் சிறந்த இந்திய உள்ளங்களை 1920 ஆம் ஆண்டுகளிலிருந்தே கம்யூனிஸ்ட் பிரகடனம் ஈர்த்துள்ளது.

சிறந்த தேசிய இயக்கத் தலைவரும் இஸ்லாமிய அறிஞருமாகிய அபுல் கலாம் ஆசாத், தலைசிறந்த சமூகச் சீர்திருத்தவாதியும் திராவிட இயக்க முன்னோடித் தலைவருமான பெரியார் ஆகியோர் முதல் பிற்காலத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்களாக உருவான பி. சுந்தரய்யா, இ.எம்.எஸ். நம்பூதிபாட் வரை கம்யூனிஸ்ட் பிரகடனத்தால் ஈர்க்கப்பட்டவர்கள்தான். அவர்கள் அனைவருமே கம்யூனிஸ்ட் பிரகடனத்தை மொழிபெயர்ப்பதிலோ பதிப்பிப்பதிலோ தங்களை ஈடுபடுத்திக் கொண்டவர்கள். அந்தத் தலைவர்களின் மாறுபட்ட அரசியல் பின்னணிகளைப் பார்க்கும்போது, விடுதலைப் போராட்டக் காலத்தில் மார்ச்சியச் சிந்தனைகள் எத்தகைய விரிவான செல்வாக்கைக் கொண்டிருந்தன, எவ்வளவு விரிவான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

கம்யூனிஸ்ட் பிரகடனம் பற்றிய இந்த நூலுடன் ‘லெஃப்ட் வேர்டு புக்ஸ்’ பதிப்பகம் துவங்கப்பட்டிருப்பது ஒரு நல்ல அறிகுறி. மார்க்சியத் தத்துவ மற்றும் செயல்முறைகள் குறித்துப் புத்தொளி பெறுகிற முயற்சியில் கம்யூனிஸ்ட் பிரகடனம் பேருதவியாக அமையும். முன்னோக்கிய பயணத்துக்கான பாதையைப் புரிந்து கொள்ள உதவும்.

இந்த நூலை உருவாக்குவதற்கான சிந்தனை 1998 ஆம் ஆண்டில் பிறந்தது. இந்த நூலுக்கான முன்னுரையை எழுதித் தருமாறு தோழர் இ.எம்.எஸ். அவர்களைக் கேட்டிருந்தோம். அந்த முயற்சியில் பெரும் ஆர்வம் காட்டிய அவர் முன்னுரையை எழுதித்தர ஒப்புக்கொண்டிருந்தார். ஆனால், அது நடைபெற முடியவில்லை. சில வாரங்களில் அவர் மறைந்துவிட்டார். அவரது நினைவுக்கு இந்த நூலைக் காணிக்கையாக்குகிறோம்.

குறிப்புகள்:

 1. வி.ஐ. லெனின் – தொகுதி நூல்கள் 21 பக்.48 (ஆங்கிலம்)
 2. வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகையில் குறிப்பிட்டதாக ராபர்ட் வேட் மற்றும் ஃரபாக் வெனரசோ எழுதிய, ‘மூலதன ஆதிக்கத்திற்கான போராட்டம்’ என்ற நியூ லெஃப்ட் ரிவ்யூ பத்திரிகைக் கட்டுரை, பக்.231, செப்.4 1998.
 3. பிரபாத் பட்நாயக் மற்றும் அய்ஜாஸ் அகமது ஆகிய இருவருமே தேசிய அரசு மற்றும் உலகமயமாதல் குறித்து எழுதியுள்ளனர். பார்க் கவும் பட்நாயக்., ‘உலகமயமாகும் மூலதனமும், ஏகாதிபத்தியம் பற்றிய கோட்பாடும்’, ‘சோசியல் சயின்டிஸ்ட் 282-83, நவ.டிச.1996 மற்றும் அகமது ‘உலகமயமாக்கலும் தேசிய அரசும்’ செமினார் 437, ஜனவரி 1996..
 4. எல்லன் மெய்சின்ஸ்வுட் முதலாளித்துவ அமைப்பில் எவ்வாறு அரசியலும், பொருளா தாரமும் வேறுவேறாகப் பிரிக்கப் படுகின்றன என விளக்கியுள்ளார். அவருடைய ‘முதலாளித்துவத் துக்கு எதிராக ஜனநாயகம்: வரலாற்றுப் பொருள் முதல்வாதத்தைப் புதுப்பித்தல்’, (கேம்பிரிட்ஜ் 1995) என்ற நூலைப் பார்க்கவும்.
 5. ‘தொழில் வளர்ச்சி அடைந்த (OECD ) நாடுகளில் 1994 ஆம் வருட கணக்குப்படி மொத்தமாக 11.5 கோடி மக்கள் தொழிற்சாலைகளில் பணி புரிகிறார்கள். இது 1973-ல் 11.2 கோடி ஆகும்’. கிம் மூடி, ஒர்க்கர்ஸ் இன் எ லுன் வோர்ல்ட், லண்டன் 1997.
 6. OECD நாடுகளில் 15 முதல் 64 வயது வரை பணிபுரியும் பெண் தொழிலாளர்களின் எண் ணிக்கை 1980ல் 53 சதவீதமாக இருந்தது. 1990ல் 60 சதவீதமாக உயர்ந்தது என உலகத் தொழிலாளர் அமைப்பின் வேலை நியமன அறிக்கை (1994) குறிப்பிடுகிறது.
 7. “சொத்துடைமை படைத்த வர்க்கங்களுடைய ஒட்டுமொத்தமான சக்தியை எதிர்த்த தனது போராட்டத்தில் தொழிலாளி வர்க்கம், மற்ற அனைத்து சொத்துடைமை வர்க்கங்களி லிருந்தும் மாறுபட்ட, அவற்றை எதிர்த்து நிற்கக் கூடிய ஒரு அரசியல் கட்சியை உருவாக்காமல் ஒரு வர்க்கமாக நின்று போராட முடியாது.” ஹேக் நகரில் கூடிய உலகத் தொழிலாளர் அமைப்பில் 1872 செப்டம்பரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மார்க்ஸ், ஏங்கல்ஸ், தொகுதி நூல்கள் (ஆங்கிலம்) 23, பக்.243.

சாதியமைப்பு – ஒடுக்குமுறைகளுக்கு எதிராக கம்யூனிஸ்டுகள்!

இதுவரை உள்ள மனிதகுல வரலாறு முழுவதும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே (ஆதிகாலப் பொதுவுடைமைச் சமுதாயம் தவிர) என பிரகடனப்படுத்துகிறது மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் வெளியிட்ட கம்யூனிஸ்ட் அறிக்கை. இது இந்தியாவின் வரலாறு மற்றும் சமூக அமைப்புக்கும் பொருந்தும். உலகின் பல்வேறு நாடுகளின் சமூக அமைப்பும், வர்க்கப் போராட்டங்களும் ஒரே மாதிரியானதாக இல்லை. இந்த அம்சங்களில் ஒவ்வொரு நாட்டிற்கும் பிரத்யேகத்தன்மைகளும் பின்னணியும் உண்டு.

இந்தியாவின் பிரத்யேகத் தன்மை:

ஒவ்வொரு நாட்டின் பிரத்யேகத்தன்மையை சரிவர ஆய்வு செய்து புரிந்து கொண்டுதான் அந்நாடுகளின் நடைபெற வேண்டிய வர்க்கப் புரட்சியையும், அதற்கான பாதையையும் அந்நாட்டின் புரட்சிகர இயக்கம் தீர்மானிக்க வேண்டுமேயொழிய மார்க்சிய கோட்பாடுகளை இயந்திர பாணியில் அமல்படுத்துவதன் மூலம் அல்ல. “திட்டவட்டமான நிலைமைகளை திட்டவட்டமாக ஆய்வு செய்து திட்டவட்டமான முடிவுகளுக்கு வர வேண்டும்” என்றே மார்க்சியம் நமக்கு போதிக்கிறது.

இந்த அடிப்படையில் இந்தியச் சமுதாயத்தை ஆய்வு செய்தால் அதன் பிரத்யேகத் தன்மைகளில் ஒன்றுதான் இங்கு நிலவும் சாதியமைப்பு. இச்சாதியமைப்பையும் இதோடு இங்கு நிலவும் மூடப்பழக்க வழக்கங்கள் மற்றும் பத்தாம்பசலித் தனமான சம்பிரதாயங்களையும் எதிர்த்துப் போராடாமல் – அவ்வாறு போராடி முறியடிக்காமல் இங்கே புரட்சிகரமான சிந்தனைகள் மற்றும் இயக்கம் வளர்வதோ அல்லது சமுதாய மாற்றத்திற்கான புரட்சி வெற்றிகரமாக நடைபெறுவதோ சாத்தியமல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

சுரண்டல் முறையின் அங்கமாக வருணாசிரமம்:

இந்திய வரலாறு நெடுகிலும் சாதியத்திற்கு ஆதரவான, எதிர்ப்பான பல்வேறு போக்குகள் இருந்துள்ளன. இவை அனைத்தையும் சந்தித்து இன்றளவும் சாதியம் வீரியத்துடன் நீடித்து வருவது பல சமூக ஆய்வாளர்களை வியப்படைய வைத்துள்ளது. இது குறித்து பிரபல சமூக ஆய்வாளர்களில் ஒருவரான சியாமா சரண்தூபே கூறியதாவது “இந்தியாவில் நிலவும் சாதியமுறை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் கடும் கண்டனத்திற்கு உள்ளாகி இருக்கிறது”. ஆனாலும் வருணாசிரம அமைப்பும், சாதிய முறையும் வியக்கத்தக்க விதத்தில் தொடர்ந்து உறுதியாக நிலைத்து நிற்கின்றன. எதிர்ப்புகளை சமாளித்து வந்துள்ளன. எல்லா வகையான தாக்குதல்களையும் பொறுத்துக் கொண்டு எவ்விதத்திலாவது தப்பித்து நீடித்து வந்திருக்கின்றன”. எனவே, இந்தியச் சாதியமைப்புக்கு எதிரான போராட்டம் மிக நுட்பமானதும், கடினமானதுமான ஒன்று என்பதை கடந்த கால அனுபவங்களிலிருந்து புரிந்து கொள்ள முடியும்.

இந்தியச் சாதியமைப்பிற்கு எதிரான போராட்டத்தை வலுவாகவும், திறமையாகவும் நடத்திட அது உருவானதற்கான பின்னணி மற்றும் அடிப்படைகளை சரிவர புரிந்துகொள்ள வேண்டும். இந்தியச் சாதியமைப்பை வேறு எவரையும்விட மார்க்சிய ஆய்வாளர்கள் இயக்கவியல் அடிப்படையில் சரிவர ஆய்வு செய்துள்ளனர். அவர்கள் வெளிப்படுத்தும் விவரங்கள் யதார்த்த நிலைமைகளுக்கு பொருந்தி வருவதாக உள்ளன. இந்தியச் சமுதாயத்தில் வர்க்கக் கட்டமைப்பு உருவானதன் ஒரு பகுதியாகவே சாதியமைப்பு உருவானது என்பதே இவர்கள் வெளிப்படுத்தும் உண்மை. இது குறித்து தலைசிறந்த மார்க்சிய சமூக ஆய்வாளர் டி.டி.கோசாம்பி கூறுவதாவது: “சாதி அமைப்பு என்பது இந்திய உற்பத்தி முறையின் துவக்ககட்டத்தில் வர்க்க அமைப்பாகவே இருந்தது” எனக் குறிப்பிடுகிறார்.

டி.டி.கோசாம்பியின் ஆய்வை பலப்படுத்தும் வகையில் மார்க்சிய அறிஞர் தோழர் இ.எம்.எஸ் இதுகுறித்து கூறும்போது, “கிரீசில் அடிமை முறை உருவானது போல இந்தியாவில் வேறு ஒரு வடிவத்தில் வர்க்க சமுதாயம் உருவாகியது. அடிமைகள், எஜமானர்கள் என்ற கிரேக்க வர்க்க வேற்றுமைக்குப் பதிலாக இங்கு உருவானது தாசர்கள் (ஆந்திரர்கள்), ஆரியர்கள் என்ற வடிவிலான வருண வேற்றுமைதான். இதுதான் பிற்காலத்தில் நான்கு வருணத்தின் மூலமாக அநேக சாதிகளும், உபசாதிகளும் உள்ள அமைப்பாக மாறியது. பிராமணர்கள், ஷத்திரியர்கள், வைசிகர்கள் என்ற மூன்று பிரிவுகளைச் சார்ந்த ஆக்கிரமிப்பாளர்களின் சுரண்டலுக்கு இரையாகி அடக்கப்பட்டவர்களாக சூத்திரர்கள் (தாசர்கள்) மாறினர். இதில் மூன்று பிரிவினர் ஆளும் வர்க்கத்தைச் சார்ந்தவர்கள். நான்காவது பிரிவினர் ஆளப்படுவோர். இதுதான் இந்தியாவின் வர்க்க, வருண வேற்றுமையின் முதல் படிவம் ஆகும்” எனக் குறிப்பிடுகிறார். பிற்காலத்தில் மிகவும் கடினமானதும் சுகாதாரக் கேடு ஏற்படுத்தக் கூடியதும், இழிவானது எனக் கருதப்பட்டதுமான பணிகளுக்கு ஒரு பிரிவினர் ஒதுக்கப்பட்டனர். அவர்கள் பஞ்சமர்கள் என அழைக்கப்பட்டனர். ஆக இந்தியாவில் சுரண்டல் அமைப்பு முறையின் கவசமாகவே அதனுடன் பின்னிப்பிணைந்து உருவாக்கப்பட்டதே வருணாசிரம அமைப்பு என்பதில் ஐயமில்லை.

வருணாசிரமத்திலிருந்து பல்லாயிரம் சாதிகளாக:

வருணாசிரம முறைதான் இந்தியாவில் சாதி அமைப்பு உருவானதன் ஆரம்ப அடிப்படையாகும். துவக்க காலத்தில் இந்திய உற்பத்தி முறையில் நான்குவித உழைப்புப் பிரிவினைகள் இருந்தன. நான்கு வருணத்தைச் சேர்ந்தவர்கள் இந்த நான்குவித உழைப்பு பிரிவினையை மேற்கொண்டவர்களாக இருந்தனர். பிராமணர்கள் (வேதம் ஓதுதல்), ஷத்திரியர்கள் (யுத்தம் செய்தல்), வைசியர்கள் (வாணிபம் செய்தல்), சூத்திரர்கள் (உடல் உழைப்பு செய்தல்) என்ற முறையில் வருணாசிரம முறை இருந்தது. பிற்காலத்தில் புதிய உற்பத்திக் கருவிகள் கண்டு பிடிக்கப்பட்டு உற்பத்தி முறையில் முன்னேற்றம் ஏற்பட்டு ஏராளமான உழைப்புப் பிரிவினைகள் உருவாயின. அதன் அடிப்படையில் வருணாசிரம முறையின் உள்ளடக்கத்திலும் மாற்றம் ஏற்பட்டு எண்ணற்ற சாதிகளும், உப சாதிகளும் உருவாயின. இன்று பல்லாயிரக்கணக்கான சாதிகளும், உப சாதிகளும் உள்ளன என்றாலும் இதன் ஆரம்பகால அடிப்படை என்பது வேதகால வருணாசிரம முறையேயாகும். இது குறித்தும் தோழர் ஈ.எம்.எஸ். விவரிக்கிறார் “படிப்படியாக தொழில்நுணுக்கத்திலும் பொருளாதார ரீதியாகவும் ஏற்பட்ட முன்னேற்றங்களைத் தொடர்ந்து சூத்திரர்களிலும் அதே போல மேல்சாதி வருணங்களான பிராமணர், ஷத்திரியர், வைசியர், வருணங்களிலும் பல்வேறு கிளைகள் தோன்றி வளர்ந்தன. அடிமை வேலை, போர் முறை, கடவுள் வழிபாடு-சடங்குகள், வாணிபம் முதலிய ஒவ்வொரு படியிலும் ஏராளமான பிரிவுகள் – உப பிரிவுகள் இவ்விதமான தொழில் வேறுபாடுகள் பரவலாகத் தொடங்கியதுடன் ஆரம்ப காலத்தில் இருந்து வந்த நான்கு வருணத்தவர்களும் நூற்றுக்கணக்கான சாதிகளாகவும், உபசாதிகளாகவும் மாறினர். இந்திய சமுதாய வளர்ச்சியின் ஒரு பிரத்யேகத்தன்மை இது”.

இங்கு தோழர் இ.எம்.எஸ். தொழில்நுட்பம் குறித்தும், பொருளாதார வளர்ச்சி குறித்தும் சாதியமைப்பின் விரிவாக்கம் பற்றியும் குறிப்பிடுகிறார். இதை நாம் வரலாற்று ரீதியாக புரிந்து கொள்ள வேண்டுமென்றால் அடிமை சமுதாய காலத்தில் உருவான வர்ணாசிரம அமைப்பு, நிலப்பிரபுத்துவ சமுதாய காலத்தில் பலப்படுத்தப்பட்டு இன்றைய முதலாளித்துவ சமுதாயத்திலும் பல்வேறு மாற்றங்களுடன் பிரிவுகளுடனும் நீடிக்கிறது என்பதாகும். பண்டைய வர்ணாசிரம அமைப்புதான் அதன் பரிணாம வளர்ச்சியில் பல்லாயிரம் சாதிகளைக் கொண்ட இன்றைய சாதி அமைப்பாக மாறியுள்ளது.

சாதியம் அமல்படுத்தப்பட்ட முறை:

கொடூரமான சுரண்டலையும், ஆதிக்கத்தையும் அடிப்படையாகக் கொண்ட சாதியமைப்பை இந்தியச் சமூகத்தில் நிலைநாட்டவும் அமல்படுத்தவும் ஆளும் வர்க்கத்தினர் பன்முக முயற்சிகளை மேற்கொண்டனர். சாதிய ஏற்றத்தாழ்வுகள் இழிநிலைக்கு எதிராக மக்கள் மத்தியில் உருவாகி வந்த எதிர்ப்பையும், வெறுப்பையும் வெறும் ஒடுக்குமுறைகள் மூலம் மட்டும் முறியடிக்க முடியாது என்பதால் தத்துவார்த்த ரீதியாகவும் மக்களை இதற்கு தயார்படுத்தினர். வருணாசிரம – சாதியமைப்பு கடவுளின் படைப்பு எனவும் அதனை மாற்றமுனைவது கடவுளை நிந்திப்பதாகும் என பரப்பினர். இந்நோக்கத்தோடுதான் வேதங்கள், உபநிஷத்துகள், மனுஷ்மிருதிகள் உருவாக்கப்பட்டன. சாதியமைப்பை நியாயப்படுத்தும் வகையில் புராணங்களும், இதிகாசங்களும் உருவாக்கப்பட்டன. புராணங்களில் வரும் கதைகளும் – பாத்திரங்களும் வர்ணாசிரம வேறுபாட்டை நியாயப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தன. ஆயினும் சுரண்டலும் ஒடுக்குமுறையும் கடுமையான போது இத்தகைய தத்து வார்த்த கண்ணோட்டங்களையும் மீறி வருணாசிரம சாதிய முறைக்கு எதிர்ப்பு வரவே செய்தன. அவ்வாறு உருவான எதிர்ப்பையும் கலகங்களையும் அடக்க அவர்கள் மீது கையை வெட்டுவது, காலை வெட்டுவது, மரண தண்டனை, சிறைக் கொடுமைகள் உள்ளிட்ட கடும் தண்டனைகளும் அடக்குமுறைகளும் ஏவப்பட்டன. வர்ணாசிரம ஒடுக்குமுறைக்கு அடங்க மறுத்தவர்கள் மட்டுமல்ல வர்ணாசிரமத்தையும் வேதங்கள், மனுஷ்மிருதி, புராணங்களையும் மறுத்த விமர்சித்த அக்காலத்திய அறிவுஜீவிகளும் கூட கடுமையாகத் தண்டிக்கப்பட்டார்கள். மனுஷ்மிருதியில் வர்ணாசிரமத்தை மீறுபவர்களுக்கும் அத்தத்துவங்களை எதிர்ப்பவர்களுக்கும் மேற்கண்ட கடும் தண்டனைகள் வழங்க வகை செய்யப்பட்டுள்ளது. இந்த மனுஷ்மிருதிதான் அக்காலத்தில் அரசர்களுக்கான அரசியல் சட்டமாக இருந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

ஆளும் வர்க்கம் – அரசு – அரசியல் கட்சிகள் நிலைபாடு :

இந்தியாவில் சுரண்டல் முறையோடு இணைந்து அதன் ஒரு பகுதியாக உருவான (வருணாசிரம) சாதியமைப்பு பல உருவங்களைக் கடந்து பல்லாயிரம் சாதிகளாக மாறி இன்று உழைக்கும் மக்களை பிளவுபடுத்தி மோதவிடும் அபாயகரமான பாத்திரத்தை வகிக்கிறது. வரலாறு நெடுகிலும் சுரண்டல் அமைப்பின் கேடயமாகவே சாதியமைப்பு இருந்து வருகிறது. எனவேதான் இதுவரை உள்ள அனைத்து சுரண்டும் வர்க்கங்ககளும் (அடிமை எஜமானர்கள், நிலப்பிரபுக்கள் இன்று முதலாளிகள்) இதனை பாதுகாத்து வந்துள்ளனர். சாதி ஆதிக்க சக்திகளுக்கு ஏதாவது ஒரு விதத்தில் துணைநிற்கவே செய்துள்ளனர். இன்று அரசியல் சட்டபூர்வமாக ஜனநாயகம், சமத்துவம் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்ற போதிலும் அரசு நிர்வாகமும், காவல்துறையும் இதனை சரிவர அமல்படுத்தாததால் சாதிய ஒடுக்குமுறைகள் கடந்த கால நிகழ்வுகளாக அல்லாமல் இன்றளவும் தொடர்கின்றன. முதலாளித்துவ அரசியல் கட்சிகள் சாதியமைப்பிற்கு எதிராக பசப்பு வார்த்தைகளை பேசி வருகிற போதிலும் அடிப்படையில் அவற்றின் செயல்பாடுகள் சாதிய உணர்வை பாதுகாக்கும் விதத்திலும் பல சந்தர்ப்பங்களில் சாதியமைப்புகளை பயன்படுத்தும் வகையிலுமே அமைந்துள்ளன.

பிற்படுத்தப்பட்ட மக்களும் தலித் மக்களும்

இந்தியாவில் வருணாசிரம சாதியமைப்பு உருவான பின்னணி, அதன் வளர்ச்சி, அதை அமல்படுத்த ஆளும் வர்க்கமும் ஆதிக்க சக்திகளும் கையாண்ட முறை போன்ற அம்சங்களை வர்க்கப் பின்னணியோடு பரிசீலித்தோம். இத்தகைய அமைப்பை எதிர்த்ததவர்கள் சந்தித்த கொடூரமான ஒடுக்குமுறைகளையும் வரலாற்று ரீதியாக பார்த்தோம்.

ஆக இந்தியச் சமூகத்தில் மிகவும் கடுமையான உடலுழைப்புச் செய்பவர்களும் இழிவான சுகாதாரக்கேடு விளையும் தொழிலைச் செய்பவர்களும் பிற்படுத்தப்பட்ட சாதிகளாகவும் தாழ்த்தப்பட்ட சாதிகளாகவும் வைக்கப்பட்டுள்ள சமூக வரலாற்றையும் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள ஒடுக்குமுறைகளையும், இழிவுகளையும் இப்பின்னணியில் சரிவர புரிந்து கொள்ள வேண்டும். இன்று பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் மிகக் கணிசமான பகுதியினர் எவ்வித உடைமையுமின்றி நகர்ப்புற, கிராமப்புற உழைப்பாளிகளாக உள்ளனர் என்பது இத் தகைய வளர்ச்சிப் போக்கின் பரிணாம வளர்ச்சியேயன்றி தற்செயலாக ஏற்பட்ட நிகழ்ச்சி போக்கல்ல. இம்மக்கள் தங்கள் மீதான சாதியக் கட்டுமானங்களை மீறும்போது அதற்கு சாதிய சக்திகள் கடும் தண்டனை வழங்குவதைக் கண் கூடாக காண்கிறோம்.

இன்று தமிழகம் உள்ளிட்டு இந்தியா முழு வதும் நாம் சந்திக்கின்ற முக்கியமான பிரச்சனை எதுவென்றால் சாதிய வேறுபாடுகளைக் காட்டி பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்குமிடையே மோதலை உருவாக்கும் நடவடிக்கைகளில் சாதிய சக்திகள் இறங்கியிருப்பதும் அதை ஆளும் வர்க்கத்தினரும் அரசும் உரிய முறையில் தடுக்க தவறுவதும்தான். பிற்படுத்தப்பட்ட மக்களில் 70 சதம் பேர் உழைப்பாளிகள். இதேபோல கிராமப்புற தாழ்த்தப்பட்ட மக்களில் 88 சதம் பேர் விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற உழைப்பாளிகள். நகர்ப்புறங்களிலும் இவர்களில் கணிசமானவர்கள் உழைப்பாளிகளே. தமிழக, இந்திய பாட்டாளி வர்க்கத்தின் மிகக் கணிசமான பகுதியினராக பிற்படுத்தப்பட்ட மக்களும் தாழ்த்தப்பட்ட மக்களும் இணைந்து உள்ளனர். இவர்களுக்கிடையே மோதல்கள், பிணக்குகளை உருவாக்குவது என்பது உழைக்கும் வர்க்கத்தின ஒற்றுமையை பாதிக்கும் ஆபத்தான அம்சங்களாகும். இந்த ஆபத்தை முறியடிப்பதோடு இதர சாதிப் பிரிவுகளில் உள்ள உழைக்கும் மக்களையும் அணிதிரட்டி ஆளும் வர்க்கத்தின் சவாலை எதிர்கொள்ள தொழிலாளி வர்க்கத்தின் பரவலான ஒற்றுமையை உருவாக்க வேண்டிய பிரதான கடமை நம்முன் உள்ளது.

கம்யூனிஸ்ட் அணுகுமுறையும் வரலாறும் :

இந்தியாவில் உழைக்கும் வர்க்க ஒற்றுமையை உருவாக்கி சமுதாய மாற்றத்திற்கான புரட்சி நடத்துவதில் உறுதிபூண்டுள்ளது கம்யூனிஸ்ட் இயக்கம். இதற்காக தொழிலாளர்கள், விவசாயிகள், மத்திய தர வர்க்கத்தினர் உள்ளிட்ட பரவலான மக்கள் திரளை அணிதிரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இத்தகைய பரவலான மக்களை அணிதிரட்ட வேண்டுமெனில் அதற்கு பிரதான தடைகளில் ஒன்றாக இருக்கக்கூடிய சாதியமைப்பையும், சாதிய ஒடுக்குமுறைகளையும் எதிர்த்துப் போராடுவதும் முறியடிப்பதும் பிரதான கடமையாகும். இந்தியாவின் விடுதலைப் போராட்டம் நடைபெற்ற போதே அதில் பிரதான பங்கு வகித்த கம்யூனிஸ்ட் இயக்கம் “இந்தியாவுக்கு விடுதலை என்றால் அது தலித்துகளுக்கும் விடுதலையாக இருக்க வேண்டும்” என 1928லேயே முழங்கியது. இந்திய விடுதலைப் போராட்டத்தை சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்துடன் மிகச்சரியாக அக்காலத்திலேயே இணைத்தது. மிகக் கடுமையான அடக்குமுறைகளைச் சந்தித்துக் கொண்டே, தலைவர்கள் பலரும் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டே இத்தகைய முழக்கத்தை கம்யூனிஸ்ட் இயக்கம் எழுப்பியது என்பதை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

விடுதலைப் போராட்டத்தின் ஒரு பகுதியாகவும் நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராகவும் கம்யூனிஸ்டுகள் தலைமையில் நடைபெற்ற அக்காலத்திய பல போராட்டங்கள் சாதிய ஒடுக்கு முறைகளுக்கு எதிரான போராட்டங்களாகவும் இருந்தன. ஆந்திராவில் நடைபெற்ற தெலிங்கானா போராட்டம், கேரளாவில் நடைபெற்ற புன்னப்பரா வயலார் போராட்டம், வங்கத்தில் நடைபெற்ற தெபேகா போராட்டம், மராட்டிய மாநிலத்தில் நடைபெற்ற வோர்லி ஆதிவாசி மக்கள் போராட்டம் என இத்தகைய பல போராட்டங்களை உதாரணங்களாகக் குறிப்பிட முடியும். இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான தமிழகத்தைச் சேர்ந்த தோழர் சிங்காரவேலர் பெரியாரோடு இணைந்தும் தனித்தும் சாதியமைப்புக்கு எதிரான கருத்துப் பிரச்சாரத்திலும் போராட்டங்களிலும் தனிக்கவனம் செலுத்தினார்.

காங்கிரஸ் கட்சியும் கம்யூனிஸ்ட் இயக்கமும்:

இந்திய விடுதலையில் பிரதான பங்கு வகித்த மற்றொரு இயக்கமான காங்கிரஸ் கட்சிக்கு இத்தகைய பார்வையும், அணுகுமுறையும் இருக்கவில்லை. எனவே கடுமையான சாதிய ஒடுக்குமுறைகளைச் சந்தித்த மிகக் கணிசமான தாழ்த்தப்பட்ட மக்களை விடுதலைப் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியால் இணைக்க முடியவில்லை. பிற்காலத்தில் இதனை உணர்ந்த காந்தி தாழ்த்தப்பட்ட மக்களை கவருவதற்காக தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தை நடத்தினார். ஒரு பகுதி தாழ்த்தப்பட்ட மக்களை அவரால் திரட்டவும் முடிந்தது. எனினும் அது காந்தியின் தனிப்பட்ட முயற்சியாகவும் ஒரு பகுதி காங்கிரஸ் ஊழியர்களை மட்டுமே இணைத்தாகவும் இருந்ததேயொழிய ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியின் பணியாக அமையவில்லை. உண்மை யில் பல காங்கிரஸ் தலைவர்கள் சாதிய அணுகு முறையுடன் செயல்பட்டார்கள் என்பதும் தங்கள் சொந்த வாழ்க்கையில் தீண்டாமையைக் கடைபிடித்தார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும். இக்காலத்தில் சாதிய ஒடுக்கு முறைகளுக்கு எதிராக கடுமையாக போராடிய வரும் கணிசமான தாழ்த்தப்பட்ட மக்களை தன் தலைமையில் அணிதிரட்டியவருமான டாக்டர் அம்பேத்கர் காங்கிரஸ் கட்சியை பரவலாக அம்பலப்படுத்தியும் அக்கட்சி முழுவதையும் தீண்டாமை ஒழிப்பில் ஈடுபடுத்த முடியாமல் இருந்த காந்தியை விமர்சித்தும் பரவலான பிரச் சாரம் செய்தார் என்பதைக் கவனிக்க வேண்டும்.

சமூக சீர்திருத்த இயக்கத்தின் பாத்திரம்:

இந்தியாவில் சாதியமைப்புக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக சமூக சீர்திருத்த இயக்கங்கள் வகித்த பாத்திரத்தை கம்யூனிஸ்ட் இயக்கம் அங்கீகரிக்கிறது. ஜோதிபாபுலே, அம்பேத்கர், பெரியார், ஸ்ரீநாராயண குரு மற்றும் பலருடைய மகத்தான பங்களிப்பு இங்கு குறிப்பிடத்தக்கதாகும். இன்றைய சமூக அமைப்புக்குள்ளேயே சாதியமைப்பினை அம்பலப்படுத்துவதிலும், கொடூரங்களை தணிப்பதிலும் சாதிய ஒடுக்கு முறைக்கு உள்ளான மக்களுக்கு பல நிவாரணங்கள் பெற்றுத் தருவதிலும் சமூக சிர்திருத்த இயக்கம் முக்கிய பங்கு வகித்தது. கம்யூனிஸ்ட் இயக்கத்தைப் பொறுத்த வரை இன்றைய சமூக அமைப்பை மாற்றியமைப்பதன் மூலமே அனைத்துவிதமான சுரண்டல் மற்றும் ஒடுக்கு முறைகளுக்கும் முடிவுகட்ட முடியும் எனக் கருதுகிறது. அதேசமயம் சமூக மாற்றத்திற்கான புரட்சிக்கு மக்களை தயார்படுத்தவும், ஒன்று படுத்தவும் சாதிய ஒடுக்குமுறைகள் முடிவுக்குக் கொண்டு வருவது அவசியம் என உறுதியாகக் கருதுகிறது. எனவே, கடந்த கால சமூக சீர்திருத்த இயக்கங்களிலிருந்து உரிய படிப்பினைகள் பெற்று அதனை மென்மேலும் முன்னெடுத்துச் செல்வது அவசியம் என முடிவுக்கு வந்துள்ளது.

விடுதலைக்குப் பிறகும்:

இந்திய விடுதலைக்குப் பிறகும் வர்க்கப் போராட்டங்களை நடத்திக் கொண்டே சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடிய பாரம்பரியம் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு உண்டு. மேற்கு வங்கம், கேரளா, திரிபுரா ஆகிய மாநிலங்களில் கம்யூனிஸ்ட் தலைவர்கள் வர்க்கப் போராட்ட தலைவர்களாக மட்டுமின்றி தீண்டாமை மற்றும் சாதிய பாரபட்சங்களுக்கு எதிரான போராட்ட தலைவர்களாகவும் விளங்கினார்கள் என்பது வரலாறு. மேற்கு வங்கத்தில் ராஜாராம் மோகன்ராய் முன்னெடுத்துச் சென்ற சமூக சீர்திருத்த இயக்கத்தை கம்யூனிஸ்ட் இயக்கம் முன்னெடுததுச் சென்றது. கேரளாவில் ஏ.கே.ஜி., ஈ.எம்.எஸ் போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஆலய பிரவேசம் உள்ளிட்ட தலித் மக்களின் ஏராளமான உரிமைப் போராட்டங்களுக்குத் தலைமை தாங்கினர். திரிபுராவில் பழங்குடி மக்களின் சமூக பொருளாதார உரிமைகளுக்காக மகத்தான தியாகங்களைச் செய்த பாரம்பரியம் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு உண்டு. தமிழகத்தின் கீழத்தஞ்சையில் சிறு விவசாயிகள், கூலித் தொழிலாளர்களின் குத்தகை உரிமை மற்றும் கூலி உயர்வுக்கான வர்க்கப் போராட்டத்துடன் சவுக்கடி, சாணிப்பால் குடிக்க வைப்பது போன்ற சாதிய ஒடுக்கு முறைகளுக்கு எதிரான போராட்டங்களையும் கம்யூனிஸ்ட்டுகள் இணைத்தே நடத்தினர் என்பதும் இதில் தோழர் சீனிவாசராவ் உள்ளிட்ட தலைவர்களின் மகத்தான பாத்திரமும் வீரகாவியமாகும்.

சிபிஐ(எம்) திட்டமும் செயல்பாடும்:

ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வர்க்கப் போராட்ட மற்றும் சமூகச் சீர்திருத்த பாரம்பரியத்தை தன்னகத்தே கொண்டுதான் 1964ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவானது. இப்பாரம்பரியத்தையும் பாதையையும் முன்னெடுத்துச் செல்லும் வகையில்தான் கட்சித் திட்டத்தையும் உருவாக்கியது. இந்தியாவில் சோசலிச சமுதாயம் நிர்மாணிப்பதை லட்சியமாகக் கொண்டு அதன் முதல் கட்டப்பணியாக மக்கள் ஜனநாயகப் புரட்சி நடத்திட பரந்துபட்ட உழைப்பாளி மக்களை அணிதிரட்டும் முயற்சிகளில் கட்சி ஈடுபட்டு வருகிறது. இதற்கு தடையாக உள்ள அனைத்து அம்சங்களையும் தகர்த்தெறிய விரும்புகிறது. இதன் ஒரு பகுதியாக இந்தியாவில் சாதியமைப்பு மற்றும் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்திற்கு கட்சித் திட்டத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே முன்பகுதியில் இந்தியாவில் வருணாசிரம சாதியமைப்பு எவ்வாறு வர்க்கக் கட்டமைப்பு உருவானதன் பின்னிப்பிணைந்த பகுதியாக உருவானது என்பதை வரலாற்று ரீதியாக பரிசீலித்தோம். இத்தகைய மார்க்சியப் புரிதல் அடிப்படையில் கட்சித் திட்டத்தின் கீழ்க்கண்ட பகுதிகள் அமைந்துள்ளன என்பதைப் பார்க்க முடியும்.

“ஒரு சாதி மற்ற சாதியினரை ஒடுக்குவதும் தீண்டாமை அகற்றப்படுவதும் சட்ட விரோதமாக்கப்பட்டு தண்டனைகளுக்கு உள்ளாக்கப்படும் தாழ்த்தப்பட்ட மக்கள் பழங்குடியினர், பின்தங்கிய வகுப்பினர் ஆகியோருக்கு வேலை வாய்ப்பு, கல்வி ஆகியவற்றில் பிரத்யகேச் சலுகைகள் வழங்கப்படும். (1964 கட்சித் திட்டம், பாரா 15)

“சாதிய ஒடுக்குமுறை, சாதிய பாரபட்சம் என்ற பிரச்சனைக்கு நீண்டதொரு வரலாறு உள்ளது. இது முதலாளித்துவத்திற்கு முந்தைய கால சமூக முறையிலேயே ஆழமாக வேரோடி விட்டது. முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையிலான சமூகம் ஏற்கனவே இருந்த சாதிய முறையுடன் சமரசம் செய்து கொண்டது. இந்திய முதலாளி வர்க்கமே கூட இந்த சாதிய வேறு பாடுகளை வளர்த்து வருகிறது. தலித் மக்களின் மிகப்பெரும்பாலானோர் உழைக்கும் வர்க்கத்தின் பகுதியாக உள்ள நிலையில் சாதிய முறைக்கும் தலித் மக்கள் மீதான ஒடுக்குமுறைக்கும் எதிரான ஒற்றுமை உழைக்கும் மக்களின் ஒற்றுமையே ஆகும். சமூக சீர்திருத்த இயக்கங்கள் மூலம் சாதியமுறை மற்றும் அதன் அனைத்து வடிவத்திலான சமூக ஒடுக்குமுறையை எதிர்த்துப் போராட வேண்டியது ஜனநாயகப் புரட்சியின் முக்கியமான பகுதியாகும். சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் வர்க்கச் சுரண்டலுக்கு எதிரான போராட்டத்துடன் பின்னிப்பிணைந்த ஒன்றாகும்.” (2000-இல் மேம்படுத்தப்பட்ட கட்சித் திட்டம், பாரா 5.12)

மேற்கண்ட அணுகுமுறையின் அடிப்படையில் இந்தியாவில் சாதியமுறை மற்றும் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களில் தனி கவனம் செலுத்தப்படுகிறது. இடைக்காலத்தில் இதனை அமல்படுத்துவதில் சில தொய்வுகள் பலவீனங்கள் ஏற்பட்டபோதிலும் கட்சித் திட் டத்தின் அடிப்படையில் இதனைப் பரிசீலனை செய்து அத்தகைய போராட்டங்களை கட்சி தீவிரப்படுத்தியுள்ளது. கட்சியின் அகில இந்திய மாநாடுகள் அனைத்திலும் சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் சமூகப் பொருளாதார நிலைமைகளை பரிசீலிப்பதும் அவர்களின் நலன்கள், உரிமைகளுக்கான போராட்டங்களை தீவிரப்படுத்துவதுமான பணிக்கு தொடர்ச்சி யான முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

விரிந்து பரந்த ஜனநாயக மேடை:

இப்பின்னணியில்தான் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, திரிபுரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஹரியானா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்முயற்சியில் தலித் மக்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராகவும் அவர்களின் சமூக, பொருளாதார உரிமைகளுக்காகவும் ஏராளமான போராட்டங்கள் சமீப காலங்களில் நடத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி உருவாக்கப்பட்டு இயங்கி வருவதையும் அதன் செயல்பாடுகள் தலித் மக்கள் மற்றும் இதர ஜனநாயக சக்திகளிடையே ஏற்படுத்தியுள்ள தாக்கத்தையும் நன்கு அறிவோம். இதேபோல தலித் மக்களின் பரச்சினைகளுக்காக போராடு வதற்கென்றே மேலே குறிப்பிட்டுள்ள மாநிலங்கள் அனைத்திலும் தனித்தனி அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த 2014 நவம்பர் 27ல் மேற்கண்ட மாநில அமைப்புகள் அனைத்தும் இணைந்து “தலித் மக்கள் ஒடுக்கமுறை விடுதலை முன்னணி” என்ற அகில இந்திய அமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளது. தலித் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண தலித்துகள்தான் போராட வேண்டும் என்ற கருத்தை சில அமைப்புகளும் நபர்களும் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் தலித்துகளின் பிரச்சனை தேசத்தின் பிரச்சனை, உழைக்கும் வர்க்கத்தின் பிரச்சனை என்ற அணுகுமுறையோடு ஒட்டு மொத்த உழைப்பாளி மக்களையும், ஜனநாயக சக்திகளையும் இப்போராட்டத்தில் இணைத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மகத்தான முயற்சிகளை செய்து வருகிறது. மேலே குறிப்பிட்டுள்ள அமைப்புகள் சார்பாகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாகவும் தலித் மக்கள் உரிமைகளுக்காக நடத்தப்பட்ட போராட்டங்களில் ஏராளமான தலித் அல்லாத மக்களும் பங்குபெற்றார்கள் என்பதும், அத்தகைய பல போராட்டங்கள் அவர்களின் உரிமைகளை மீட்டுத் தந்த போராட்டங்களாகவும், பல்வேறு நிவாரணங்களைப் பெற்றுத்தந்த போராட்டங்களாகவும் வெற்றிகரமாக அமைந்தன என்பதும் சிறந்த அனுபவங்களாகும்.

தமிழகத்தின் தலையீடுகள் – வெற்றிகள்:

தமிழகத்திலும் அவ்வாறு நடைபெற்ற சமீபத்திய பல போராட்டங்களையும் தலையீடுகளையும் இங்கு பெருமையுடன் குறிப்பிட முடியும். நாலுமூலைக்கிணறு (தூத்துக்குடி) மக்களுக்கு ரூ.23 லட்சம் நஷ்ட ஈடு தாக்குதல் நடத்திய காவல்துறை அதிகாரிகளுக்கு தண் டனை, கொடியன்குளம் காவல்துறை தாக்குதல் குறித்து சிபிஐ விசாரணை, தென்மாவட் டங்களிலும் பல வட மாவட்டங்களிலும் நடைபெற்ற சாதிய மோதல்களில் மிகவும் பாதிக்கப் பட்ட தலித் மக்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க தலையீடுகள் – இதையொட்டி நாம் நடத்திய தீண்டாமை ஒழிப்புப் பிரச்சாரம், உத்தப்புரம் தீண்டாமைச் சுவர் உடைப்பு, ஒவ்வொரு ஆண்டும் பி.சீனிவாசராவ் நினைவு தினமான செப்டம்பர் 30ல் நடத்திய பல தீண்டாமை ஒழிப்பு போராட்டங்கள் – அதன் வெற்றிகள், பல ஆலயங்களில் தலித் மக்களின் வழிபாட்டு உரிமையை நிலைநாட்டியது, பல கிராமங்களில் தலித் மக்களின் நில உரிமையை மீட்டுத்தந்தது. 20 ஆயிரம் அருந்ததியர் மக்களை திரட்டி சென்னையில் நடத்திய பேரணி இதையொட்டி அருந்ததியர் மக்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் கிடைத்த 3 சதவிகித உள்ஒதுக்கீடு, கடந்த சில ஆண்டுகளில் 2 முறை சென்னை கோட்டை நோக்கி பல்லாயிரம் பேரைத் திரட்டி நாம் நடத்திய கோட்டை நோக்கிய பேரணி – அதன் தாக்கம், வாச்சாத்தி மலைவாழ் பெண்கள் மற்றும் மக்கள் மீதான வனக்காவலர்களின் வன்கொடுமைத் தாக்குதலை எதிர்த்து நடைபெற்ற போராட்டங்கள், வழக்கினால் கிடைத்த நிவாரணம் மற்றும் குற்றவாளிகளுக்கு தண்டனை, பரமக்குடி காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் சிபிஐ விசாரணை, தர்மபுரி மாவட்ட தலித் மக்கள் மீதான தாக்குதல்களின் பாதிப்புக்கு அரசு நஷ்ட ஈடு மற்றும் நமது இயக்கங்களில் சார்பாக பல லட்ச ரூபாய் நிவாரணம் – இப்பிரச்சனையில் நாம் தொடுத்த வழக்கு, சாதி மறுப்பு திருமணங்களையொட்டி நடைபெற்ற பல கௌரவக் கொலைகளில் நமது தலையீடுகள் – வழக்கு – நிவாரணம், தலித் – பழங்குடியினர் உபதிட்ட நிதி ஒதுக்கீடு மக்கள் தொகைக்கு ஏற்ப அரசு ஒதுக்குவதிலும் பயன்படுத்தவதிலும் கிடைத்த முன்னேற்றம், தமிழகத்தின் 12 மாவட்டங்களில் அம்பேத்கர் கல்வி வேலைவாய்ப்பு பயிற்சி மூலம் பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான பயிற்சி மையம், இப்பயிற்சியின் காரணமாக பல நூற்றுக்கணக்கானவர்கள் தேர்வில் வெற்றி பெற்று வேலைநியமனம் பெற்றது, சில வங்கிகள் இடஒதுக்கீட்டு முறைக்கு எதிரான உத்தரவை வெளியிட்ட போது அதனை தடுத்து நிறுத்தி முறியடித்தது என எண்ணற்ற நமது தலையீடுகள் மற்றும் போராட்டங்கள் தலித், பழங்குடியின மக்களுக்கு பெரும் பயன் அளிப்பதாக அமைந்தன.

தமிழகத்தில் நமது செயல்பாடுகள் மற்றும் அதன் வெற்றிகள் காரணமாக தலித் மக்களின் உரிமைகளுக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் போராடி வரும் பல தலித் அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள், தனி நபர்கள் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியில் இணைந்து அதன் அங்கமாக செயல்பட்டு வருகின்றனர் என்பதையும் இங்கு பெருமையுடன் குறிப்பிட முடியும். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முதல் மாநில மாநாடு 2010ல் புதுக்கோட்டையில் நடைபெற்ற போது அதன் மாவட்டக்குழுக்களிலிருந்தும் மேற்கண்ட அமைப்புகளிலிருந்தும் தலைவர்களும் ஊழியர்களுமாக நூற்றுக்கணக்கான பிரதிநிதிகள் உற்சாகத்தோடு கலந்து கொண்டதோடு அதன் இறுதிப் பேரணியில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலித் மற்றும் இதர பகுதி உழைப்பாளி மக்கள் எழுச்சியுடன் பங்கேற்றனர். அதன்பிறகு கடந்த 4 ஆண்டுகளில் இந்த அமைப்பின் செயல்பாடு மென்மேலும் பலமடைந்துள்ளது. ஏராள மான தலையீடுகள் மற்றும் இயக்கங்கள் நடந்த தின் பின்னணியில் 2வது மாநில மாநாடு விருதுநகரில் 2014 மே மாதம் நடைபெற உள்ளது. இந்த மாநாடும் பெரும் தாக்கத்தை ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் ஜனநாயக சக்திகளிடையே ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

முன்னெடுத்துச் செல்வோம்:

ஆக சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட தலித் – பழங்குடி மக்களின் உரிமைப் போராட்டங்களில் வேறு எந்த அரசியல் இயக்கங்களும் செய்திராத பங்களிப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செய்துள்ளது. பல முதலாளித்துவ கட்சிகள் வாக்கு வங்கியை உருவாக்குவதற்காக தங்கள் அமைப்புகளில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவுகளை உருவாக்கியுள்ளன. இக்கட்சிகளின் நிலைபாட்டிற்கு முற்றிலும் மாறாக தலித்-பழங்குடி மக்கள் மீதான சமூக ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடவும் அப்போராட்டங்களில் அனைத்து சாதிகளையும் சார்ந்த உழைப்பாளி மக்கள் பங்கேற்கும் வகையிலும் தமிழகத்தின் தீண்டாமை ஒழிப்பு முன்னணி இதேபோல அகில இந்திய அளவில் தலித் ஒடுக்குமுறை விடுதலை முன்னணி போன்ற விரிந்து பரந்த ஜனநாயக மேடைகளை உருவாக்கியுள்ளது. இப்போராட்டங்களை வர்க்கப் போராட்டத்தின் பின்னிப்பிணைந்த பகுதியாக முன்னெடுத்துச் செல்கிறது. தனது 50 ஆம் ஆண்டு பொன்விழாவில் அடியெடுத்து வைத்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இக்கடமையை நிறைவேற்றுவதில் மென்மேலும் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயலாற்றும் என உறுதி ஏற்கிறது.