மாவோ எழுதிய நமது பயில் முறை சீர்திருத்தம் கட்டுரையில் இருந்து …

தமிழில்: இரா.சிந்தன்

நடப்பு நிலைமைகளை பயில்வதைப் புறந்தள்ளுதல், வரலாறு பயில்வதைப் புறந் தள்ளுதல், மார்க்சிய – லெனினியத்தைப் பயன்படுத்துதலை புறந்தள்ளுதல் ஆகியவை அனைத்தும் மோசமான வேலைப் பாணியை விளைவிக்கின்றன. அதன் பரவல், நம்மில் பல தோழர்களுக்கு தீங்கிழைத்துள்ளது.

உண்மையில் நமது அணிகளில் உள்ள பல தோழர்கள் இந்த வேலைப்பாணியால் தவறிழைக்கிறார்கள் நாட்டுக்கு உள்ளும் வெளியிலும், நாடு, மாகாணம், கவுண்டி அல்லது மாவட்டங்களிலும் குறிப்பான நிலைமைகளை முறையாகவும், முழுமையாகவும் ஆய்ந்து பயின்று செயல்பட விரும்புவதில்லை, மாறாக தங்கள் குறைபாடான அறிவைக் கொண்டும், ”எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது எனவே அப்படித்தான் இருக்க வேண்டும்” என்று கருதியும் உத்தரவுகளை மேற்கொள்கின்றனர். நம்மிடையே பெரிய அளவில் பல தோழர்களிடம் இன்னமும் இந்த அகநிலைவாதப் பாணி நிலவுகிறது அல்லவா?

சிலர் தம் சொந்த வரலாற்றைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் இருப்பதற்கும், குறைந்த அளவே தெரிந்திருப்பதற்கும் வெட்கப்படுவதற்கு பதிலாக, இறுமாப்புடன் இருக்கிறார்கள்…

***

… நாம் மார்க்சியத்தைப் பயின்று கொண்டிருக்கிற போதிலும் நம்மில் பலர் அதைப் பயிலும் வழியானது மார்க்சியத்திற்கு நேர் எதிராக இருக்கிறது. அதாவது, மார்க்சும், எங்கல்சும், லெனினும், ஸ்டாலினும் அக்கறையுடன் நமக்கு வலியுறுத்திய ”நடைமுறையையும் தத்துவத்தையும் இணைத்தல்” என்ற அடிப்படைக் கொள்கை நெறியையே மீறுகின்றனர். அப்படி மீறுவது மட்டுமல்லாமல், தமக்கேற்ற வகையில் எதிர்நிலையான ஒரு சொந்த நெறியை வளர்த்தெடுத்து, தத்துவத்தையும், நடைமுறையையும் பிரிக்கின்றனர்…

***

… இந்தக் கருத்தினை மேலும் விளக்குவதற்கான, நேரெதிரான இரண்டு உளப்பாங்குகளை வேறுபடுத்திக் காட்டுகிறேன்.

முதலில், அகநிலை உளப்பாங்கு.

இந்த உளப்பாங்கோடிருக்கும் ஒரு நபர் சூழல் குறித்த ஆழமான, முறையான பயிலுதல் எதுவும் செய்யாமல் தன் தனிப்பட்ட அகவய உற்சாகத்தின் அடிப்படையில் பணிபுரிகிறார், இன்றுள்ள சீன நிலைமைகளைப் பற்றி மங்கலான புரிதலே கொண்டிருக்கிறார். தனது மனநிலையின் வழியே சீன வரலாற்றை வெட்டிக் குறுக்குகிறார், நேற்றும், நேற்று முன் தினமும் சீனா கடந்துவந்திருக்கும் நிலைமைகளைப் பற்றி தெளிவில்லாத நிலையில் உள்ள அவருக்கு பண்டைய கிரேக்கம் பற்றி மட்டுமே தெரிகிறது. இந்த மனநிலையில் இருக்கும் ஒருவர் மார்க்சிய-லெனினியக் கோட்பாட்டை அருவமாக, குறிக்கோள் ஏதுமின்றிப் பயில்கிறார்.

அவர் சீனப் புரட்சியின் தத்துவார்த்தப் பிரச்சனைகளுக்கும், உத்தி ரீதியிலான பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்பதற்கான வழிமுறையையும், கண்ணோட்டத்தையும், நிலைப்பாடுகளையும் அறிந்துகொள்வதற்காக அல்லாமல், தத்துவத்தை வெறும் தத்துவமாக வாசிக்கவே மார்க்ஸ், எங்கல்ஸ் லெனின் மற்றும் ஸ்டாலினை அணுகுகிறார். இலக்கை நோக்கி அம்பெய்தாமல், அங்கொன்றும் இங்கொன்றுமாக எய்துகிறார். மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின், ஸ்டாலின் ஆகியோர் நாம் புறவய எதார்த்தங்களில் இருந்து நம் செயல்பாடுகளைத் தொடங்கவேண்டும் என்கின்றனர். அதிலிருந்து நாம் விதிகளை உய்த்துணர்ந்தால் அவை நம் செயல்பாடுகளுக்கு வழிகாட்டியாக அமையும் என்று கற்பித்துள்ளனர்.

அதற்கு நாம், மார்க்ஸ் கூறியிருப்பதைப் போல, விரிவான தரவுகளைப் பெற்று அவற்றை விளக்கமாகவும், அறிவியல் பகுப்பாய்வுக்கு உட்படுத்தியும் செயல்பட வேண்டும். நம்மில் பலர் இப்படி செயல்படாமல், எதிர்திசையில் செயல்படுகின்றனர். அவர்களில் ஒரு குறிப்பிட்ட பகுதியினர் ஆய்வுகளை மேற்கொள்கிறார்கள் ஆனால் அவர்களிடத்தில் இன்றைக் குறித்தோ, நேற்றைய சீனா குறித்தோ கற்க விருப்பமிருப்பதில்லை, எதார்த்தத்திலிருந்து விலகிய வெற்றுக் “கோட்பாடுகளை” பயில்வதற்கே பழக்கப்பட்டுள்ளனர். மேலும் பிறர் நடைமுறைப் பணிகளை மேற்கொள்கின்றனர்.

ஆனால், அவர்கள் கூட புறவய நிலைமைகளைப் பயில்வதற்கு தங்களது கவனத்தினைச் செலுத்தாமல், பெரிதும் தங்கள் சொந்த ஆர்வத்தினைச் சாந்து தங்கள் தனிநபர் உணர்வுகளை கொள்கைகளிடத்தில் முன்வைக்கின்றனர். இவ்விரு வகையிலான நபர்கள் அகநிலையைச் சார்ந்துள்ளதோடு புறவய எதார்த்தங்களையும் புறக்கணிக்கின்றனர். அவர்கள் உரைவீச்சுக்களில் பெரியளவில் வாய்ச்சவடால் அடிப்பார்கள், கட்டுரைகளில்  A, B, C, D, 1, 2, 3, 4 என நீண்ட வரிசையில் மனம் போன போக்கில் எழுதுவார்கள். அவர்கள் நடந்தவைகளிலிருந்து பேருண்மையை தேடும் நோக்கமில்லாமல் இருக்கின்றனர்; மாறாகப் பகட்டாரவாரத்தின் வாயிலாக பிறர் கவனம் ஈர்க்கும் விருப்பத்தை மட்டுமே கொண்டிருக்கின்றனர்.

அவர்கள் உள்ளீடு ஏதுமின்றி வெளிப்புறத்தே ஒளிர்கின்றனர், உடையும் தன்மையோடு உறுதியற்றுள்ளனர். அவர்களே எப்போதும் சரியானவர்கள், சொர்கத்தின் கீழே அவர்கள் மட்டுமே முதன்மை அதிகாரம் கொண்டவர்கள். இந்த “ஏகாதிபத்திய தூதுவர்கள்” எல்லாவிடத்தும் ஓடிக் கொண்டுள்ளனர். நம் அணிகளில் உள்ள சில தோழர்களிடம் இந்த வேலைப்பாணி காணப்படுகிறது. ஒருவரை இந்தப் பாணி ஆட்கொள்ளும்போது அவர் பாதிக்கப்படுகிறார், மற்றவர்களுக்கு கற்றுத் தரும்போது அவர்களும் கெடுகின்றனர், புரட்சியை வழிநடத்தை இந்த வழிமுறையைப் பயன்படுத்துவதானது புரட்சியையே பாதிக்கிறது.

தொகுத்துச் சொன்னால், இந்த அகநிலைப்பட்ட வழிமுறையானது மார்க்சிய – லெனினியத்திற்கும் அறிவியலுக்கும் முரண்பட்டதாகவும் (உழைக்கும் வர்க்கம், மக்கள் மற்றும் தேசத்திற்கே) ஒரு வல்லமைமிக்க எதிரியாகவும் உள்ளது; இது ஒரு கட்சியின் உயிரோட்டத்தில் ஏற்பட்ட பிழையின் விளைவாகும். ஒரு வல்லமை மிக்க எதிரி நம் முன் நிற்கிறான், நாம் அவனை வீழ்த்தியாகவேண்டும். அகநிலைவாதம் வீழ்த்தப்பட்டால் மட்டுமே மார்க்சிய-லெனினியம் என்ற பேருண்மை மேலோங்கும்; கட்சியின் உயிரோட்டம் வலுப்படுத்தப்படும், புரட்சி வெற்றிகரமாகும், அறிவியல் மனப்பான்மை இல்லாமல் போவதானது அதாவது தத்துவத்தையும் நடைமுறையையும் இணைக்கும் மார்க்சிய-லெனினிய அணுகுமுறை இல்லாமல் போவதானது, கட்சியின் உயிரோட்டம் இல்லாமல் போவதை அல்லது பற்றாக்குறையைக் காட்டுகிறது.

இப்படிப்பட்ட நபர்களைச் சித்தரிக்கும் ஈரடிப் பாடல் ஒன்றுள்ளது, அது இவ்வாறு பொருள் தரும்,

சுவற்றில் வளரும் நாணலின்  தலை கனத்திருக்கும் தண்டு மெலிந்திருக்கும், வேர்கள் பிடிப்பற்றவை

குன்றிலே விளைந்த மூங்கிலின் முனை கூர்மையாய் இருக்கும், தோல் கணத்திருக்கும், உள்ளீடற்று இருக்கும்

அறிவியல் மனப்பான்மை இன்றி, மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின், ஸ்டாலினின் படைப்புகளில் இருந்து சொற்களையும் வாக்கியங்களையும் மட்டுமே மனனம் செய்து ஓதியபடி, மெய்யான கற்றறிதல் இல்லாமல் புகழை அனுபவிப்போருக்கு இதுவல்லவா பொருத்தமானதொரு விளக்கப்பா? ஒருவர் தன் பிணியிலிருந்து நலம்பெற விரும்பினால், அவரை இந்த ஈரடிப் பாடலை மனப்பாடம் செய்துகொள்ளவோ அல்லது இன்னும் அதிக வீரத்தோடு தன் அறையின் சுவர்களில் இந்த வரிகளை எழுதிவைத்துக் கொள்ளுமாறு அறிவுருத்துவேன். மார்க்சியம்-லெனினியம் ஓர் அறிவியலாகும். மேலும், அறிவியலின் பொருள், நேர்மையான உறுதியான அறிவு ஆகும்; அங்கே தந்திரச் செயல்களுக்கு இடமில்லை. ஆகையால் நாம், நேர்மையாக இருப்போம்.

இரண்டாவதாக, மார்க்சிய லெனினிய அணுகுமுறை உள்ளது.

இந்த அணுகுமுறை கொண்டு, ஒரு நபர் தத்துவத்தையும் மார்க்சிய லெனினிய வழிமுறையையும் படிப்படியாக, ஆழமான ஆய்வுகள் செய்து, சூழலைக் குறித்து நன்கு பயின்று அமலாக்குகிறார். தன் சொந்த ஆர்வத்தால் மட்டும் அவர் செயல்படுவதில்லை, ஸ்டாலின் சொல்வதைப் போல நடைமுறைத் தன்மையை புரட்சிகர வீச்சோடு இணைக்கிறார். இந்த உளப்பாங்குடன் அவர் வரலாற்றை வெட்டிக் குறுக்கமாட்டார்…

***

… இதுபோன்றதொரு உளப் பாங்கை மேற்கொள்வது என்பது மெய்நிகழ்வுகளிலிருந்து (facts) பேருண்மையை தேடுவது ஆகும். “மெய் நிகழ்வுகள்” என்பன புறவயமாக நிலவும் பொருட்களாகும். பேருண்மையின் பொருள் என்பது அவற்றின் உள் உறவுகள் ஆகும். அதாவது, அவற்றை ஆட்சி செய்யும் விதிகள் “தேடுவது” என்றால் பயில்வதாகும். நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும், மாகாணத்திலும், மாவட்டத்திலும் அல்லது கவுண்டியிலும் நிலவும் உண்மையான நிலைமைகளிலிருந்து நம் செயல்பாட்டைத் தொடங்க வேண்டும், நமது செயலுக்காக கற்பனையாக இல்லாமல், உள்ளார்ந்திருக்கும்  வழிகாட்டு நெறிகளையும், விதிகளையும் கண்டறிய வேண்டும், அதாவது நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளில் ஒன்றுக் கொண்டு உள்ள தொடர்புகளைக் கண்டறிய வேண்டும்.

மேலும் இதைச் செய்வதற்காக நாம் அகவய கற்பனையையோ, அப்போதைய ஆர்வத்தையோ அல்லது சாரமற்ற புத்தகங்களையோ சார்ந்திருக்கக் கூடாது, புறவயமாக நிலவுகின்ற சூழல்களைத்தான் சார்ந்திருக்க வேண்டும். உரிய வகையில் தகவல்களைச் சேகரித்து, மார்க்சிய-லெனினிய பொதுக்கொள்கை நெறிகளினை சரியாகப் பின்பற்றி அதிலிருந்து முடிவுகளை வகுக்க வேண்டும். இத்தகைய முடிவுகள் வெறும் அ, ஆ, இ, ஈ வரிசையாலான நிகழ்ச்சிப்போக்குகள் நிறைந்த பட்டியல்களோ, பயனற்ற கூற்றுகள் நிரம்பிய எழுத்துக்களோ அல்ல, அவை அறிவியல் பூர்வமான முடிவுகள் ஆகும். இத்தகைய உளப்பாங்கு என்பது மெய் நிகழ்வுகளிலிருந்து பேருண்மையை தேடுவது, வெற்று பசப் புரையிலிருந்து அணுகூலமானதைப் பெறுவது அல்ல.

இதுதான் மார்க்சிய-லெனிய வழியில் தத்துவத்தையும் நடைமுறையையும் இணைப்பதாகும், உயிரோட்டமான கட்சியின் வெளிப்பாடு இதுவே. எந்தவொரு கட்சி உறுப்பினரும் இந்த அணுகுமுறையை மிக குறைந்த அளவிலேனும் கைக் கொண்டிருக்கவேண்டும்.  இந்த அணுகுமுறையைக் கைக்கொள்ளும் ஒருவருக்கு “தலை கனத்து, தண்டு மெலிந்து, வேர்ப்பிடிப்பில்லாமல்” இருக்காது. “கூரான நாக்கும், தடித்த தோலும், உள்ளீடற்றும்” கொண்டவராக இருக்க மாட்டார்…

காலத்தை வென்ற கார்ல் மார்க்ஸ்

 

வெங்கடேஷ் ஆத்ரேயா

அறிமுகம்

கார்ல் மார்க்ஸ் பிறந்தது 1818ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் தேதி. 2017 ஆம்ஆண்டு மே 5 ஆம் தேதி 200 ஆவது பிறந்த நாள். எனவே மார்க்ஸின் இருநூறாம் பிறந்த நாள் மற்றும் 200 ஆண்டுகள் நிறைவு கொண்டாட்டம் இந்த ஆண்டு மே 5 இல் துவங்கி அடுத்த ஆண்டு மே 5 வரை நிகழும்.

நடப்பு ஆண்டிற்கு இன்னொரு சிறப்பும் உண்டு. மார்க்சின் மகத்தான படைப்பான மூலதனம் நூல் முதன் முதல் பிரசுரிக்கப்பட்டது 1867 இல். இப்பொழுது மூலதனம் நூல் வெளியிட்டு 150 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன.

நவீன உலகை ஜனநாயகப்படுத்தியதில் மார்க்சுக்கும் அவரது தத்துவத்தை புரிந்து கொண்டு அதன் அடிப்படையில் மாறிவரும் நிலைமைகளுக்கு ஏற்ற ஸ்தூலமான ஆய்வுகளையும் யுக்திகளையும் கண்டறிந்து மார்க்சீய தத்துவத்தையும், நடைமுறையையும் இணைத்து செழுமைப்படுத்திய லெனின், ஸ்டாலின், மாவோ, ஹோ சி மின், காஸ்ட்ரோ போன்ற ஆளுமைகளுக்கும் பெரும்பங்கு உண்டு.

நவீன சமூக அறிவியலின் சிற்பி

அறுபத்தி ஐந்து ஆண்டுகள் தான் மார்க்ஸ் வாழ்ந்தார். பிறந்தது மே 5, 1818. இறந்தது மார்ச் 14, 1883. அவர் பிறந்த பொழுது இங்கிலாந்து நாட்டில் முதலாளித்துவ உற்பத்தி அமைப்பு வேகமாக சமூகத்தில் ஆதிக்கம் செய்யும் நிலையை நோக்கி பயணித்துக்கொண்டிருந்தது. ஐரோப்பிய கண்டத்து நாடுகள் சற்று பின்தங்கியிருந்தன. இருப்பினும் அங்கும் முதலாளித்துவம் விரைவாகப் பரவும் என்பதை தனது ஆய்வுகள் மூலம் எடுத்துரைத்தார் மார்க்ஸ். சொல்லப்போனால், இன்று நாம் பேசும் உலகமயத்தைபற்றி 1847 இலேயே கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் மார்க்ஸ் பேசினார்.

அப்பொழுது அவருக்கு முப்பது வயது கூட நிறையவில்லை. அடுத்த இருபது ஆண்டுகளில் ஆழமான ஆய்வுகளை அயராமல் மேற்கொண்டு, 1867 இல் மூலதனம் என்ற உலகையே புரட்டிப் போட்ட மாபெரும் படைப்பை மார்க்ஸ் உருவாக்கி பிரசுரித்தார். இதில் பெரும்பகுதி லண்டனில் இருந்த பிரதான நூலகமான பிரிட்டிஷ் மியூசியத்தில் தனது நேரத்தை மார்க்ஸ் செலவழித்தார். ஆனாலும் புத்தகப்புழுவாகவோ, சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டு சமூகம் பற்றிப் பேசும் ‘அறிவுஜீவி’யாகவோ மார்க்ஸ் ஆகவில்லை. மாறாக, ஐரோப்பிய நாடுகளில் மக்கள் எழுச்சி ஏற்பட்ட பல சமயங்களில் களத்தில் நின்றார். 1844 -1850 இத்தகைய பல மக்கள் எழுச்சிகளில் பங்கேற்று பல ஐரோப்பிய அரசுகளால் பல முறை நாடு கடத்தப்பட்டார். மூலதனம் எழுதும் மிகக் கடுமையான பணியில் ஈடுபட்டிருந்த பொழுதும் கூட தொழிலாளி வர்க்கத்தின் முதல் அகிலத்தை உருவாக்குவதில், 1864இல் அதன் முதல் மாநாட்டை லண்டன் நகரில் நடத்துவதில், அதற்கான முக்கிய ஆவணங்களை தயாரிப்பதில் மார்க்ஸ் மிகப்பெரிய பங்கு ஆற்றினார். மாநாட்டின் துவக்க உரையை மார்க்ஸ் தான் எழுதினார்.

மார்க்ஸ் மறைந்து 134 ஆண்டுகள் கடந்துவிட்டன. இருப்பினும் மார்க்ஸ் இன்றும் உலகில் மிகக் கணிசமான செல்வாக்கு பெற்ற சிந்தனையாளராக உள்ளார். முதலாளித்துவ சமூக-பொருளாதார அமைப்பு பற்றி அவர் முன்வைத்த கருத்துக்களும் ஆய்வுகளும் இன்றும் முக்கிய விவாதங்களுக்கு அடிநாதமாக திகழ்கின்றன. பொருளியல், வரலாற்றியல், தத்துவம், அரசியல் என்று அனைத்து முக்கிய சமூக அறிவியல் சார்ந்த துறைகளிலும் மார்க்ஸ் தனது ஆய்வுகள் மூலமும் படைப்புகள் மூலமும் மிக முக்கிய சிந்தனையாளராக இன்றுவரை திகழ்கிறார்.

மார்க்ஸ், தனது பேராசிரியராக இருந்த, அன்றைய ஐரோப்பிய அறிவு உலகில் கொடிகட்டிப் பறந்த ஜெர்மானிய தத்துவ பேரறிஞர் ஹெகெல் முன்வைத்த கருத்துமுதல்வாத தன்மையிலான இயக்கவியல் அணுகுமுறையை ஆய்வுக்கு உட்படுத்தி, அதன் கருத்துமுதல்வாத தன்மையை நிராகரித்தார். பொருள்முதல்வாதத்தின் உண்மையை, அவசியத்தை நிலைநாட்டினார். அதே சமயம் ஹெகெல் முன்வைத்த இயக்கவியல் அணுகுமுறையை தலைகீழாக புரட்டிப்போட்டு, பொருள்முதல்வாத அடிப்படையில் இயக்கவியல் அணுகுமுறையை உருவாக்கினார். மெய்யியலில் மார்க்சின் மிக முக்கிய சாதனை என்று இதைக் கூறலாம். மார்க்ஸ் உருவாக்கிய இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்ற மெய்யியல் அணுகுமுறை மிகச்சரியானது என்று இன்றுவரை நிகழ்ந்துவரும் நவீன அறிவியல் வளர்ச்சி நமக்கு அறிவுறுத்துகிறது.

இயக்கவியல் பொருள்முதல்வாத அணுகுமுறையை பயன்படுத்தி மானுட வரலாற்று வளர்ச்சியை ஆய்வு செய்து, மானுட உயிரினத்தின் வரலாற்று வளர்ச்சி பற்றிய அறிவியல் பூர்வ அணுகுமுறையான வரலாற்றியல் பொருள்முதல் வாதத்தை நிலைநாட்டினார். முதலாளித்துவ உற்பத்தி அமைப்பின் தன்மையையும் செயல்பாட்டையும் நீண்ட, ஆழமான ஆய்வுக்கு உட்படுத்தி, அதன் இயக்க விதிகளை உலகிற்கு எடுத்துரைத்தார். முதலாளித்துவம் மானுட சமூகத்தின் உற்பத்தி சக்திகளை வளர்த்தெடுப்பதில் ஒரு முக்கிய வரலாற்றுப் பங்கு ஆற்றும் என்பதையும், அதே சமயம் தனது உள்முரண்பாடுகள் காரணமாக முதலாளித்துவம் மானுட சமூகத்தின் தொடர் வளர்ச்சிக்கு எதிரியாக அமையும் என்பதையும் மார்க்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையிலேயே முன்வைத்தார். முதலாளித்துவ அமைப்பை முடிவுக்குக் கொண்டுவந்து மானுடத்தை பொதுவுடைமை சமூகத்த்தை நோக்கிக் கொண்டு செல்லும் சக்தியாக நவீன தொழிலாளிவர்க்கம் ஆகப்பெரிய வரலாற்றுப்பணி ஆற்றும் என்பதையும் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையிலும் தனது மூலதனம் நூலிலும் அறிவுபூர்வமாகவும் கவித்துவமாகவும் மார்க்ஸ் விளக்கியுள்ளார்.

மார்க்ஸ்ஸின் மனித நேயம்

தனது பதின்பருவத்திலேயே – 17 வயதிலேயே – மானுடத்தின் மீதான தனது அக்கறையை, மானுடத்தை நேசிப்பவர் என்ற தனது தன்மையை, ஒரு இளைஞன் தனது தொழிலை தேர்வு செய்வது பற்றிய சிந்தனைகள்’ (Reflections of a young man on the choice of a Profession) என்ற அற்புதமான கட்டுரையில் மார்க்ஸ் வெளிப்படுத்தினார். அக்கட்டுரையின் இறுதியில் மறக்க முடியாத வரிகளில் அவர் கூறுகிறார்:

மானுடத்திற்காக நாம் சிறப்புற செயலாற்றிட பொருத்தமான ஒரு வாழ்க்கையை தேர்வு செய்தோமென்றால், எந்த சுமையும் நம்மை வீழ்த்தாது. ஏனெனில், அவை அனைத்தும் அனைத்து மக்களின் நலனுக்கான தியாகங்கள். இத்தகைய வாழ்க்கையில் குறுகிய சுயநலம் சார்ந்த மகிழ்ச்சியை நாம் அனுபவிப்பதற்குப் பதிலாக, நமது மகிழ்ச்சி கோடிக்கணக்கான மக்களின் சொத்தாக அமையும். நமது நற்பணிகள் சத்தமின்றி, ஆனால் நிரந்தரமாக வேலைசெய்துகொண்டே இருக்கும். நமது மறைவிற்குப்பின் நம் சாம்பலின் மீது நன்மக்களின் கண்ணீர் சிந்தப்படும்.”

இவ்வரிகள் எழுதப்பட்டது 1835 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம்தேதிவாக்கில். அப்பொழுது மார்க்சின் வயது பதினேழு முடிந்து பதினெட்டு துவங்கிய சமயம்.

பின்னர், கூர்மையான அறிவியல் அணுகுமுறையில் உலகை ஆய்ந்து அவர் எழுதிய மூலதனம் நூலிலும் இந்த மனித நேயம் பிசகின்றித் தொடர்கிறது. தனது இளம் வயதிலேயே இவ்வாறு மனித நேயத்தை வெளிப்படுத்திய மார்க்ஸ் இதையொத்த கருத்தை 1867 இல் கடும் சிரமங்களை எதிர்கொண்டு மூலதனம் நூலை எழுதி முடித்து பிரசுரித்த தருவாயில் கூறுகிறார். சிக்ப்ரிட் மேயர் என்ற நண்பருக்கு 1867 ஏப்ரல் 30ஆம்தேதி மார்க்ஸ் எழுதிய கடிதத்தில் அவர் கூறுவதைப் பாருங்கள்:

நான் ஏன் உங்களுக்கு முன்பே கடிதம் எழுதவில்லை? ஏனெனில் ஒவ்வொரு தருணத்திலும் நான் மரணத்தின் விளிம்பில் இருந்தேன். எனவே என்னால் வேலை செய்ய முடிந்த ஒவ்வொரு நொடியையும் எனது (மூலதனம்) நூலை முடிப்பதற்கு பயன்படுத்த வேண்டியிருந்தது. எனது குடும்பம், எனது உடல்நலம், எனது மகிழ்ச்சி அனைத்தையும் மூலதனம் நூலை முடிக்க நான் அர்ப்பணித்தேன். இந்த விளக்கம் தங்களுக்குப் போதுமானதாக இருக்கும் என்று நம்புகிறேன்.நடைமுறை’ சார் மனிதர்கள், அவர்களின் ‘மேன்மையான அறிவு’ இரண்டையும் கண்டு எனக்கு சிரிப்புதான் வருகிறது. நிச்சயமாக, ஒருவர் எருது போல் இருக்க விரும்பினால், அவர் மானுடத்தின் கஷ்டங்களை புறக்கணித்துவிட்டு தனது நலனை மட்டுமே கவனித்துக்கொள்ளலாம். ஆனால், (எனதுபார்வையில்) மூலதனம் நூலை கைப்பிரதி வடிவத்திலாவது முடிக்காமல் வெளியேறி இருந்தால் அதை நான் (செய்யவேண்டிய) நடைமுறைக்கு விரோதமானது என்றே கருதியிருப்பேன்.

மார்க்ஸ் ஏன் இன்றும் பேசப்படுகிறார்?

அறிவுத்தளத்தில், பல்கலைக்கழகங்களில், முதலாளித்துவ அறிவுஜீவிகள் பல வழிகளில் மார்க்ஸின் சமூக அறிவியல் சாதனைகளை, கண்டுபிடிப்புகளை ஏளனம் செய்யவும் புறக்கணிக்கவும் முயன்று வந்துள்ளனர். அந்த “திருப்பணி” இன்றும் தொடர்கிறது. பல்கலை பொருளாதாரப் பாடத்திட்டத்தில் பெரும்பாலான கல்வி நிறுவனங்களில் மார்க்ஸ் இடம் பெறுவதே இல்லை. அப்படி இடம் பெற்றால், பொருளாதார சிந்தனை வரலாறு என்ற பாடத்திட்டத்தில் ஒரு சிறிய குறிப்பிடத்தக்கவர் அல்லாத அறிஞராக சொல்லப்படுகிறார். இந்த நிலை 1991க்கு முன் நிலவியது என்றால், அதன் பின், அப்பொழுது சோசலிசத்திற்கு ஏற்பட்ட பின்னடைவு ஆளும் வர்க்க அறிவுஜீவிகளின் இறுமாப்பை மேலும் கூட்டியது. வரலாறு முடிந்துவிட்டது; சோசலிசத்தின் கதை முடிந்துவிட்டது; மானுட வரலாற்று வளர்ச்சியின் உச்ச கட்டம், இறுதிகட்டம் முதலாளித்துவம் தான் என்று அவர்கள் கொக்கரித்தனர். ஆனால் 2007ஆம் ஆண்டின் இறுதி கால்பகுதியில் தோன்றி இன்றுவரை தொடரும் உலக முதலாளித்துவப் பொருளாதாரத்தின் தீவிர மந்தநிலை, அதிகரித்துவரும் வேலையின்மை, முதலாளித்துவ உலகமயத்திற்கு எதிராக உலகம் முழுவதும் எழுந்துள்ள எதிர்ப்பு பேரலைகள் இவையெல்லாம் மார்க்சின் அவசியத்தை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டுவந்து, இன்னொரு சமயத்தில் மார்க்ஸ் கூறியதுபோல், முதலாளித்துவ அறிவுஜீவிகளின் மண்டைகளில் பேரொலியுடன் ஏறிக்கொண்டிருக்கிறது! போப்பாண்டவரில் துவங்கி நிதிமூலதன உலகின் உச்சத்தில் உலாவும் பெருந்தகைகளையும் மார்க்சை கவனிக்கவைத்துள்ளது. “முதலாளித்துவ உற்பத்தி அமைப்பில் நிகழும் மூலதனத் திரட்டலின் பொதுவிதி செல்வங்கள் ஒருபுறம் குவிவதும், பெரும் துயரங்கள் மறுபுறம் குவிவதும்தான்” என்று மார்க்ஸ் மூலதனம் நூலில் முன்வைத்த கருத்தை மறுக்க இயலாமல் பிக்கெட்டி உள்ளிட்ட அறிவுஜீவிகள் அதிகரித்துவரும் சொத்து மற்றும் வருமான ஏற்றத்தாழ்வு பற்றி பேசிவருகின்றனர். உலக வங்கியும் பன்னாட்டு நிதியமும் வளர்ந்தநாடுகளின் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பாகிய OECD யும் இத்தகைய ஏற்றத் தாழ்வுகளைக் குறைக்காவிட்டால் பெரும் கலகம் வரும் என்று அறிக்கை விடும் காலம் இது. மார்க்ஸ்சும் மூலதனம் நூலும் சோசலிச தத்துவமும் இன்று முதலாளித்துவ அமைப்பை அச்சுறுத்தும் பூதமாக உருவாக்கி வருகின்றன! இச்சூழலில் மார்க்ஸின் முக்கிய சாதனைகளை நினைவு கூறுவது பொருத்தமாக இருக்கும்.

முதலாவதாக, மானுட சிந்தனை வளர்ச்சியில் தனது அடிப்படை பங்களிப்புகள் மூலம் புதிய தடத்தை மார்க்ஸ் பதித்தார். மனிதகுல வரலாற்று வளர்ச்சி மனித சமூகங்கள் தங்களை உற்பத்தி, மறு உற்பத்தி செய்த வழிகளை ஆய்வு செய்வதன் மூலம் அறிவியல் பூர்வமாக அறிந்துகொள்ளப்படலாம் என்பதை உலகுக்கு அவர் காட்டினார். இதன்மூலம் வரலாறு என்பது அரண்மனை சதிகள், ராஜாக்கள், அவர்களின் வம்சங்கள், அவர்களது வீர சாகசங்கள் என்ற புரிதலுக்கு சாவுமணி அடித்து வரலாறு ஒரு இயல் என்று தெளிவுபடுத்தினார். மானுட வரலாறு பற்றிய தனது ஆய்வில் மார்க்ஸ் மனிதர்களையும் அவர்களது உணர்வுபூர்வமான, நோக்கம் சார்ந்த உழைப்பையும் மையப்பொருளாக வைத்தார். மானுட உயிரினத்தின் பிரத்தியேகத்தன்மை தனது சிந்தனைபூர்வமான உற்பத்திசார் நடவடிக்கைகளால் இயற்கையை மாற்றி தனது தேவைகளை உற்பத்தி செய்துகொண்டதுதான் என்று அவர் நிரூபித்தார். இவ்வாறு செயல்பட்டு, மனிதர்கள் புதிய அறிவை தொடர்ந்து பெற்றுக்கொண்டே இருந்தனர். புதிய திறன்களை வளர்த்துக் கொண்டே இருந்தனர். இயற்கை எவ்வாறு செயல்படுகிறது என்பது பற்றி மேலும் மேலும் அறிந்தனர். இந்த அறிவை பயன்படுத்தி சமூகத்தின் உற்பத்தி சக்தியை வளர்த்தனர். இத்தகைய ஓய்வற்ற உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி எண்பதுதான் மானுட வரலாற்று வளர்ச்சியின் நிரந்தர அம்சம்.

மானுட வரலாற்று வளர்ச்சி தொடர்பாக மார்க்ஸ் வெளிக்கொணர்ந்த இரண்டாவது முக்கிய விஷயம் இதுதான்: உற்பத்தி எனும் நடவடிக்கையில் மனிதர்கள் இயற்கையோடு மட்டும் உறவுகொள்ளவில்லை. மனிதர்கள் பரஸ்பரம் ஒத்துழைப்பதும் அவசியமாகிறது. சமூகத்தில் உற்பத்தி தொடர்பான ஏற்பாடுகள், பல்வேறு மக்கட்பகுதியினர் அந்த ஏற்பாட்டில் ஆற்றும் பங்கு போன்றவற்றை மார்க்ஸ் உற்பத்தி உறவுகள் என்று குறிக்கிறார். மிக அதிக அளவு, உலகின் பல்வேறு நாடுகளையும் உள்ளடக்கி செயல்படும் முதலாளித்துவ அமைப்பிலும் சரி , முந்தைய அமைப்புகளிலும் சரி, மானுட சமூகங்கள் உற்பத்தியை சமூக நடவடிக்கையாகவே மேற்கொண்டிருக்கின்றன. நவீன முதலாளித்துவ உலகில் ‘தனி நபர்’ என்ற கருத்தாக்கத்தை முன்னிறுத்தி, உற்பத்தியும் மனித வாழ்வும் எல்லாக் காலங்களிலும் சமூகம் சார்ந்தவையே என்ற உண்மை மறைக்கப்படுகிறது.

மூன்றாவதாக, மனித சமூகத்தின் உற்பத்தி சக்திகள் தொடர்ந்து தவிர்க்க முடியாமல் வளர்ந்துகொண்டே இருப்பதனால், இவை ஒரு கட்டத்தில் நிலவும் உற்பத்தி உறவுகள் என்ற கூட்டை/சட்டகத்தை உடைத்துக்கொண்டு, அடுத்த கட்ட வளர்ச்சிக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்படுகிறது என்பதை மார்க்ஸ் விளக்கினார். இவ்வாறு வரலாற்றில் உற்பத்தி சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்குமான உறவு குறிப்பிட்ட காலம் ஒற்றுமை மேலோங்கிய தன்மையிலும், பின்னர் முரண்பாடு முன்வரும் தன்மையிலும் அமையும் என்பதை மார்க்ஸ் தெளிவுபடுத்தினார். இதன் பொருள் மானுட வரலாற்று வளர்ச்சியில் உற்பத்தி அமைப்புகள் சாசுவதம் அல்ல; மாறாக அவை மாறிக்கொண்டே இருக்கும் என்பதும், உற்பத்தி சக்திகளின் இடையறா வளர்ச்சியின் காரணமாக புதிய உற்பத்தி அமைப்புகள் உருவாகும் என்பதும் ஆகும்.

நான்காவதாக மார்க்ஸ் சுட்டிக்காட்டியது, உற்பத்தி சக்திகள் வளர்ச்சி அடைவதனால், ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் மானுட சமூகம் தன் வழக்கமான மறுஉற்பத்தியை உறுதி செய்துகொள்வது மட்டுமல்லாமல் உபரி உற்பத்தியும் சாத்தியம் ஆகும் என்பதாகும். உபரி உற்பத்தி ஏற்படும் நிலைக்கு ஒரு சமூகம் வளர்ந்து விட்டால், அந்த சமூகத்தில் உழைக்கும் தகுதியுள்ள அனைவரும் உழைக்க வேண்டியதில்லை. உற்பத்தி அமைப்பை கைப்பற்ற முடிந்தால், பிறரை உழைக்க வைத்து அவர்களால் உருவாக்கப்படும் உபரி உற்பத்தியில் ஒருசாரார் உழைக்காமல் உயிர் வாழலாம் என்ற வாய்ப்பு ஏற்படுகிறது. வேறுவகையில் சொன்னால், உபரி உருவாகும் நிலையில் ஒரு சமூகம் இரண்டு அடிப்படை வர்க்கங்களாக பிரிந்து நிற்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. பெரும்பாலான மக்கள் உழைப்பது; அவர்களால் ஏற்படும் உபரி உற்பத்தியில் ஒரு சிறிய பகுதியினர் சௌகர்யமாக வாழ்வது என்பது சாத்தியமாகிறது. இத்தகைய வர்க்க சமூகம் இயல்பாக ஏற்பட்டு விடாது. உற்பத்தியின் மீதான ஆதிக்கம் ஒரு சிலர் கையில் வரும்பொழுது அவர்கள் பிறரை தங்களுக்காக உழைக்க வைக்க முடியும். உற்பத்திக் கருவிகள் ஒருபகுதியினரின் தனி சொத்தாக மாற்றப்பட்டு, பெரும்பகுதி மக்கள் இவற்றை இழந்து நிற்பதால் உடமையாளர்களிடம் அண்டி உழைத்துப் பிழைக்கும் நிலை ஏற்படுவது வர்க்க சமூகத்திற்கு அவசியம். இத்தகைய ஏற்றத்தாழ்வான சமூக ஏற்பாட்டை அமலாக்குவதற்கு வன்முறையும் தேவை. உழைக்க நிர்பந்திக்கப்படும் மக்கள் இந்த சமூக ஏற்பாட்டை நியாயம் என்றோ ஆண்டவன் செயல் என்றோ இன்ன பிற வாதங்களின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ள வைப்பதும் அவசியம். வன்முறை மட்டுமே போதாது. உடைமையாளர்களையும் அவர்களின் சொத்தையும் நலனையும் பாதுகாக்கும் வன்முறை அமைப்பாக தான் ‘அரசு’ என்ற அமைப்பு வரலாற்றில் உருவகிறது. உழைப்பாளி மக்கள் இந்த ஏற்பாட்டை ஏற்க மதம், பண்பாடு, இலக்கியம் என்று பலதளங்களில் தத்துவ ஆயுதங்களும் நிறுவன ஆயுதங்களும் பயன்படுகின்றன.

வர்க்கப்போராட்டம்

மார்க்ஸ் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி தவிர்க்க முடியாதது; அதன்வழி உபரியும் ஏற்படும் வர்க்க சமூகங்களும் என்று விளக்கியதுடன் நின்றுவிடவில்லை. மானுட வரலாற்றில் உருவாகும் வர்க்க சமூகங்கள் இயற்கையின் படைப்பும் அல்ல; நிரந்தரமும் அல்ல என்பதை மார்க்ஸ் நிரூபித்தது அவருடைய ஆகப்பெரிய சாதனையாகும். ஒவ்வொரு வர்க்க சமூகமும் தன் வளர்ச்சியையும் அழிவையும் தன்னகத்தில் தாங்கியே வருகிறது என்பதை அவர் காட்டினார். இவ்வாறாக மானுடம் படிப்படியாக முன்னேறுவதற்கு வர்க்கப் போராட்டமே கருவியாக உள்ளது என்பதையும் மார்க்ஸ் விளக்கினார். மார்க்ஸின் தனிப்பட்ட பங்களிப்பு என்பது ஒவ்வொரு கட்டத்திலும் நிலவும் வர்க்க சமூகத்தை தூக்கி எறிந்து அடுத்தகட்ட வளர்ச்சிக்கு சமூகம் பயணிக்க முக்கிய சக்தியாக எந்த வர்க்கம் செயல்படும் என்பதை விளக்கியதாகும். இவ்வாறு மார்க்ஸ்–எங்கல்ஸ் எழுதிய கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை நிலப்பிரபுத்துவ சமூகத்தில் இருந்து முதலாளித்துவ சமூகத்திற்கு மானுடம் பயணிக்கையில் முதலாளிவர்க்கம் வகிக்கும் புரட்சிகரப்பங்கை மறக்க முடியாத வரிகளில் சித்தரிக்கிறது. இன்னும் முக்கியமாக, பதினேழாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வளரத்துவங்கி அடுத்த இருநூறு ஆண்டுகளில் உலகம் முழுவதும் முதலாளித்துவம் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டியது அதன் நிரந்தரத் தன்மைக்கு சான்று அல்ல என்று மார்க்ஸ் அடித்துக் கூறினார். முதலாளித்துவ உற்பத்தி அமைப்பின் வளர்ச்சிப் போக்கில் தொழிலாளிவர்க்கம் அமைப்பு ரீதியான திரண்ட சக்தியாக உருவெடுக்கும் என்றும், இந்த வர்க்கம்தான் முதலாளித்துவ அமைப்பை வீழ்த்தி மானுடத்தை அடுத்த உயர்நிலை வளர்ச்சிக்கு – முதலில் சோசலிச சமூகத்திற்கும், பின்னர் அனைத்து வளங்களையும் அனைவருக்கும் சாத்தியமாக்கும் கம்யூனிச சமூகத்திற்கும் இட்டுச்செல்லும் திறன் கொண்ட வர்க்கம் என்பதை மார்க்ஸ் சிறப்பாக விளக்கினார்.

மார்க்ஸின் சமகால பொருத்தப்பாடு

சமகால முதலாளித்துவத்தின் தொடரும் நெருக்கடி மார்க்ஸின் சமகால பொருத்தப்பாட்டை காட்டுகிறது. முதலாளித்துவ வளர்ச்சி விதிகள் தொடர்பாக பல முக்கிய விஷயங்களை மார்க்ஸ் கூறியுள்ளார். முதலாளித்துவ வளர்ச்சி பெரும் அளவிலான உற்பத்திசாலைகளை உருவாக்கி மூலதனத்தை குவிக்கும். போட்டியில் பல முதலாளிகள் அழிந்து, மூலதனம் சிலர் கைகளில் மையப்படுத்தப்படும். ஏகபோகம் உருவாகும். முதலாளிகளுக்கிடையில் போட்டி, முதலாளி வர்க்கத்திற்கும் தொழிலாளிவர்க்கத்திற்கும் இடையிலான வர்க்கப் போராட்டம் ஆகியவற்றின் காரணமாக இயந்திர மயமாக்கல் வேகமாக நிகழும். இதனால் எல்லாக் காலங்களிலும் கணிசமான எண்ணிக்கையில் வேலையில்லா பட்டாளம் ஏற்படும். முதலாளித்துவ மூலதன சேர்க்கை செல்வங்களை ஒருசில ஏகபோக முதலாளிகளிடம் குவிக்கும். மறுமுனையில், உழைப்பாளி மக்கள் பெரும் துயரங்களை எதிர்கொள்வார்கள். இந்த முதலாளித்துவ மூலதன சேர்க்கையின் பொதுவிதி மீண்டும் மீண்டும் பொருளாதார மந்த நிலையையும் நெருக்கடியையும் ஏற்படுத்தும் என்று மார்க்ஸ் மூலதனம் நூலில் விவரித்தார். கடந்த இருநூறு ஆண்டுகளின் வரலாறு மார்க்ஸ் கூறியதன் உண்மையை நிரூபித்துள்ளது. இன்றைய உலகில் இதை நாம் கடந்த பத்து ஆண்டுகளாக கண்கூடாக பார்த்துக்கொண்டிருக்கிறோம்.2007 ஆண்டின் இறுதி பகுதியில் துவங்கிய மந்தநிலை ஏறத்தாழ பத்து ஆண்டுகளாக தொடர்கிறது.

மீண்டும் மீண்டும் சமகால முதலாளித்துவம் நெருக்கடியில் சிக்குவது மட்டுமே மார்க்ஸ் முன்வைத்த கருத்துக்களின் – அவரது முதலாளித்துவம் பற்றிய ஆய்வுகளின் – வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தின் – சமகால பொருத்தப்பாட்டிற்கு சான்றாக அமைகின்றன. ஆனால் இவை தவிர வேறு பல விஷயங்களிலும் மார்க்ஸ் முன்வைத்த கருத்துக்கள் நமக்கு சுற்றுச்சூழல் உள்ளிட்ட சமகாலப் பிரச்சினைகளில் வெளிச்சம் தருகின்றன. மூலதனம் நூலின் முதல் பாகத்தில் லாபவெறி அடிப்படையில் இயங்கும் முதலாளித்துவம் வேளாண்மையில் “சாதிக்கும்” முன்னேற்றம் உழைப்பாளியையும் அவரது மனவளத்தையும் சீர்குலைக்கின்றது என்பதை சுட்டிக் காட்டுகிறார். இன்று நாம் ஏகாதிபத்திய உலகமயமாக்கலின் தாக்குதலை எதிர்கொண்டுள்ளோம். ஏகாதிபத்தியம் வளரும் நாடுகளை மீண்டும் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர முயற்சித்துவருகிறது. சுற்றுச்சூழலுக்கும் நாம் வாழும் உலகிற்கும் பெரும் நாசத்தை – சீர்செய்ய இயலாத அளவிலான நாசத்தை – ஏற்படுத்திவருகிறது. இத்தகைய பின்னணியில், மார்க்சின் ஆய்வுகளும் கூற்றுகளும் நமக்கு வெளிச்சமும் உற்சாகமும் தருகின்றன. பண்பாடு தொடர்பாக, முதலாளித்துவ வாழ்க்கையில் ஏற்படும் அந்நியமாதல் தொடர்பாக, பாலின சமத்துவம் தொடர்பாக, காலனிய ஆதிக்கத்தின் கொடுமைகள் பற்றி, அவை இன்றைய மேலை நாடுகளின் வளர்ச்சியில் ஆற்றிய பங்குபற்றி என – இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம் – பல பிரச்சினைகளில் மார்க்ஸ் எழுதியுள்ள நூல்களும் கட்டுரைகளும் நமக்கு, நமது களப்பணிகளுக்கு உதவும். எனவேதான் மார்க்சியம் கற்போம்; மார்க்சிடம் கற்போம் என்ற முழக்கம் சாலப்பொருத்தமாக உள்ளது.

வரலாறு பற்றிய நீள்பார்வை தேவை

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் உலகம் முழுவதும் ஏகாதிபத்திய நாடுகளின் பிடியில் இருந்தது. முதலாளித்துவம் சர்வ வல்லமை படைத்ததாக கருதப்பட்டது. ஐரோப்பிய நாடுகளில் 1830இல் துவங்கி உழைப்பாளி மக்கள் பங்கேற்ற பல ஜனநாயகப் போராட்டங்கள் ரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டன. இவற்றை எல்லாம் கண்டு துவளாமல், 1871 பாரிஸ் கம்யூன் புரட்சி நடந்தது. ஏறத்தாழ 90 நாட்கள் பாரிஸ் நகரில் தொழிலாளி வர்க்க ஆட்சி தாக்குப் பிடித்தது. ஆனால் இறுதியில் ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களின் தாக்குதலுக்கு அது இரையானது. 1905 இல் வெடித்த முதல் ரஷ்யப் புரட்சி அடக்கப்பட்டது முதல் உலக யுத்தம் துவங்கும் வரை சோசலிசம் ஒரு தத்துவமாகவே இருந்தது. அது எங்கும் ஆட்சி அதிகாரத்தில் இல்லை. அடுத்த நாற்பது ஆண்டுகளில் உலகம் வேகமாக மாறியது. 1950 களின் பிற்பகுதியில் உலகமக்களில் மூன்றில் ஒருபங்கு மக்கள் சோசலிசநாடுகளில் வாழும் மகத்தான முன்னேற்றம் நிகழ்ந்தது. அதன்பின் 1990 களின் துவக்கத்தில் ஏற்பட்ட பின்னடைவையும் அதன் பின்விளைவுகளையும் நாம் இன்று எதிர்கொள்கிறோம். நமக்கு வரலாறு தொடர்பாக நீள்பார்வை தேவை.

வரலாறும் வரலாற்று சகாப்தங்களும் பத்தாண்டுகளிலும் நூறு ஆண்டுகளிலும் கூட அளவிட முடியாதவை. முதலாளித்துவ உற்பத்தி அமைப்புக்கு, உலகம் முழுவதும் பரவவும் ஆதிக்கம் செலுத்தவும் பல நூற்றாண்டுகள் தேவைப்பட்டன. இவ்வளவுக்கும் இந்த அமைப்பு – லாப வெறியை அடிப்படையாக கொண்ட அமைப்பு – இயல்பாகவே விரிவாகும், ஆக்கிரமிக்கும் தன்மை கொண்டது. இன்று அது நீண்ட நெருக்கடியில் சிக்கியுள்ளது. வர்க்க சுரண்டலற்ற, தன்னைத்தானே உணர்வு பூர்வமாக நிர்வகித்துக்கொள்ளும் ஒரு சமூகத்தை அமைப்பது என்ற பயணத்தில் சில ஆரம்ப முயற்சிகள் கடந்த நூறு ஆண்டுகளில் நிகழ்ந்துள்ளன. இவற்றில் சில முதலாளித்துவ எதிரிகளால் வீழ்த்தப்பட்டதில் சோர்வு அடைய வேண்டியதில்லை. இது ஒரு நீண்ட பயணம். அதிலும், சோசலிச நிர்மாணத்திற்கான ஆரம்ப புரட்சிகள் மிகவும் பின்தங்கிய நாடுகளில் நிகழ்ந்துள்ளன என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். இவை உலகம் தழுவிய ஏகாதிபத்தய எதிர்முகாமை சந்திக்கவேண்டியிருந்தது. சோசலிச நாடுகளை, மானுடத்தின் அற்புத பரிசோதனைகளை முளையிலேயே கிள்ளி எறிய எல்லா யுக்திகளையும் ஆயுதங்களையும் ஏகாதிபத்தியம் கட்டவிழ்த்துவிட்டது. எனினும் மானுட விடுதலைக்கான, ஒரு அறிவியல்பூர்வமான, சமத்துவ சமூகம் நோக்கிய, சுரண்டலற்ற சமூகத்தை நோக்கிய பயணம் தொடர்கிறது. இதுவரை மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடனும் தைரியத்துடனும் சோசலிசத்தை நிர்மாணிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் நமக்கு உத்வேகம் அளிக்கின்றன. கடந்த கால அனுபவத்தில் இருந்து படிப்பினைகளைப் பெற்று, மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், இதர மாபெரும் சோசலிச புரட்சியாளர்கள் நமக்கு அளித்துள்ள தத்துவார்த்த வளங்களையும் நடைமுறை அனுபவங்களையும் பயன்படுத்தி பயணத்தை தொடர்வோம்.

நம் முன் உள்ள போராட்டம் நீண்ட நெடிய ஒன்றுதான். குறுக்குவழிகள் இல்லை. ஆனால் இப்பயணத்தின் இறுதிப்பரிசு அனைத்து மானுடத்தின் விடுதலை. இதைவிட பெரிய இலக்கு இருக்க முடியாது. மார்க்சின் மனித நேயத்தையும் அவர் நமக்கு தந்துள்ள அற்புதமான இயக்கவியல் வரலாற்றியல் பொருள்முதல் வாதத்தையும் நமது ஆயுதங்களாகக் கொண்டு முன்னேறுவோம். இதுதான் நாம் மார்க்ஸ் என்ற மாமனிதனுக்கு செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும்.

மக்களிடமிருந்து மக்களுக்கு …

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொல்கத்தா ஸ்தாபன பிளீனத்தின் அறிக்கையில் ஊடும் பாவுமாய் இருப்பது மக்களுடன் உயிரோட்டமான தொடர்பில் இருத்தல் என்கிற மாஸ் லைன். இது கம்யூனிஸ இயக்கத்துக்குப் புதிதல்ல. அதே சமயம் மக்களுடன் தொடர்பு, மக்கள் பங்கேற்பு போன்ற அம்சங்கள் மார்க்சீய தத்துவம் உருவாவதற்கு முன்னாலும் பேசப்பட்டுள்ளன. ஆனால் அதைப் புரட்சிகர தத்துவத்தின் நடைமுறையுடன் இணைத்தது மார்க்சீய அணுகுமுறையே. ” செல்வாக்கு பெற்ற தனி நபர்கள் அல்ல, மக்களே வரலாற்றைப் படைக்கிறார்கள்” என்று மார்க்ஸ் கூறுவது சமூக மாற்றம் குறித்த கருத்தியல் மட்டுமல்ல, மாற்றத்தை ஏற்படுத்த மக்களின் பங்கேற்பு வேண்டும் என்ற புரிதலை அதிலிருந்து நாம் பெறமுடியும். லெனின் தலைமை ஏற்று நடத்திய ரஷ்ய புரட்சியின் வெற்றிக்குள் மக்கள் தொடர்பில் இருத்தல் என்கிற அம்சம் இருக்கிறது. அந்தப் பெயர் பயன்படுத்தப் படாமல் இருந்திருக்கலாம். ஆனால், சாராம்சம் இது தான்.

மாவோவின் பங்களிப்பு:

பொதுவாக ஒரு செய்முறையாகக் கருதப்பட்ட மக்களுடன் உயிரோட்டமான தொடர்பில் இருத்தலை, ஒரு கருத்தாக்கமாக உருவாக்கியதில் மாவோவின் பங்களிப்பு அலாதியானது. தலைமை முறை (பாணி) குறித்த சில கேள்விகள் என்ற கட்டுரையில் (1943) விரிவாக இதனைக் குறிப்பிடுகிறார். அதற்கும் முன்னதாகவே மக்களின் அனுபவம், அறிவு குறித்து பெரும் மரியாதையும், மதிப்பும் அவரது எழுத்துக்களில் வெளிப்பட்டிருக்கிறது. ”அக்டோபர் புரட்சி என்ற பாரம்பரியம் மற்றும் மக்களை சார்ந்திருப்பது என்ற தோழர் லெனினின் மாஸ் லைன் ஆகியவற்றின் நீட்சியாக” என்று ஒரு கட்டுரையில் பகிர்ந்து கொள்கிறார். புரட்சிகர இயக்கத்தின் சரியான தலைமை என்பது மக்களிடமிருந்து மக்களுக்கு என்ற முழக்கத்தின் அடிப்படையில் செயல்படுவதாக இருக்க வேண்டும் என்பது உயிரோட்டமான மக்கள் தொடர்பில் இருத்தலின் சாரமாக வெளிப்படுகிறது. சீனப்புரட்சியின் அனுபவம் இதை முழுமையடைய செய்திருக்கிறது.

மக்களுடன் உயிரோட்டமான தொடர்பில் இருத்தல் என்பது, மக்கள் விரும்புவதை எல்லாம் செய்வது என்பதல்ல. மக்களின் உணர்வுகளும், ஞானமும் மூலப்பொருட்களைப் போல, அவற்றைப் பயன்படுத்தி முழுமைப்படுத்தப் பட்ட பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்பது அதன் ஒரு முக்கிய பகுதி என்று மாவோ விளக்குகிறார்.

அடுத்து வர்க்கப் போராட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை பாத்திரம் அத்தியாவசியமானது, அதே சமயம், தொழிலாளி வர்க்கத்துக்கு பதிலியாக, கட்சி செயல்பட முடியாது. அந்த வர்க்கம் திரட்டப்பட வேண்டும். மேலும் கட்சியின் தலைமை பாத்திரம் என்பது, தொழிலாளி வர்க்கத்தைக் கையைப்பிடித்து இழுத்துச் செல்வதல்ல, புரட்சியை வழி நடத்துவதற்குத் தேவையான மார்க்சீய தத்துவம் என்கிற ஆயுதத்தை அவ்வர்க்கத்திடம் கொடுப்பதே தேவை. அந்த வர்க்கம் தன் பங்கை ஆற்ற வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.

வரலாறு படைக்க உந்துசக்தியாகத் திகழ்பவர்கள் மக்களே, மக்கள் மட்டுமே என்று மாவோ திட்டவட்டமாக முழங்குகிறார். புரட்சிகர இயக்கம் மக்களை விட சில அடிகள் முன்னால் இருக்கலாம், மக்களை விட சற்று ஆழமான புரிதல் இருக்கலாம், தத்துவார்த்த அடித்தளம் இருக்கலாம். ஆனாலும் மக்கள் இல்லாமல் எந்த ஒரு தத்துவத்தையும், கருத்தையும், திட்டத்தையும், புரிதலையும் நடைமுறைப்படுத்திட முடியாது. நடைமுறையில் தான் தத்துவம் அல்லது கருத்தின் சரியான தன்மையை உறுதி செய்ய முடியும். ஒவ்வொரு ஆசிரியரும் மாணவரே, ஒவ்வொரு மாணவரும் ஆசிரியரே என்று கிராம்சி சொல்வதும், புத்தகங்கள் மட்டுமே கற்றுக் கொடுப்பதற்குப் போதாது, தொழிலாளிகளிடமிருந்து, விவசாயிகளிடமிருந்து, மாணவர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது அதிகம் உண்டு என்று மாவோ சொல்வதும் மாஸ் லைனின் வெளிப்பாடு தான். அனைத்துக் கேள்விகளுக்கும் சகல பதில்களையும் தெரிந்தவர்களாகக் கம்யூனிஸ்டுகள் எப்படி இருக்க முடியும்? மக்கள் மத்தியிலிருந்து உருவானவர்கள் தானே கம்யூனிஸ்டுகள்? மக்களுடன் நாம் இணைந்திருந்தால் தான், பிறகு மக்கள் நம்முடன் இணைவார்கள். மக்களுடன் உயிரோட்டமான தொடர்பு என்பது இதை மையப்படுத்தி அமைக்கப் பட வேண்டும்.

மார்க்சிய அணுகுமுறையுடன் இணைப்பது:

நான் என்றும் மக்கள் ஊழியனே என்று தோழர் ஏகேஜி முழங்கியதிலும், மேற்கு வங்க முதல்வராகப் பொறுப்பேற்ற தோழர் ஜோதிபாசு, இனி தலைமை செயலகம் ரைட்டர்ஸ் பில்டிங்கிலிருந்து அல்ல, மக்கள் மத்தியிலிருந்தே செயல்படும் என்று கூறியதிலும் மாஸ் லைன் பிரதிபலிக்கிறது. மக்களுடன் உயிரோட்டமான தொடர்பு என்பதே இதன் மையப்பொருள். இதை மார்க்சிய அணுகுமுறையுடன் எப்படி இணைப்பது? மூடிய கதவுகளுக்குப் பின் உட்கார்ந்து கொண்டு, மக்கள் விரும்புவது இதைத் தான் என்று முடிவு செய்வது அறிவியல்பூர்வமானது அல்ல, மார்க்சீயமும் அல்ல. திட்டவட்டமான சூழ்நிலையைத் துல்லியமாக ஆய்வு செய்வது என்ற மார்க்சீய அணுகுமுறை சுட்டிக் காட்டுவது என்ன?

 1. திட்டவட்டமான சூழ்நிலையை அடையாளம் காண்பது
 2. விருப்பு வெறுப்பு இன்றித் துல்லியமாக அதை ஆய்வு செய்வது
 3. சரியான அரசியல் நடைமுறை உத்தியை உருவாக்குவது
 4. அதை அமல்படுத்த பொருத்தமான ஸ்தாபன/போராட்ட வடிவத்தைத் திட்டமிட்டு செயல்படுத்துவது

சூழ்நிலையை அடையாளம் காண்பதும், இயக்கவியல் முறையில் ஆய்வு செய்வதும் மக்களுடன் உரையாடாமல், அவர்களின் அனுபவங்களைப் பயன்படுத்தாமல் செய்ய முடியாது. அவர்களின் உணர்வு மட்டம், புரட்சிகர இயக்கத்தின் வலு, எதிரி வர்க்கங்களின் பலம் போன்றவற்றின் அடிப்படையில் தான் உத்திகளை உருவாக்க முடியும். உத்தியை நடைமுறைப்படுத்த மக்களின் பங்கேற்பு அவசியம். மக்களுடன் நெருக்கமாக இருப்பதன் மூலமே, பங்கேற்பை உறுதிப்படுத்த முடியும்.

அதே சமயம் மக்களைத் திரட்டி வைத்துக் கொண்டு சீர்திருத்தங்களிலேயே கரைத்துக் கொண்டு புரட்சிப்பாதையை விட்டு விலகி நின்றால் மக்களையும் இழப்போம், இயக்கமும் நீர்த்துப் போகும். மக்கள் பங்கேற்பை மறுதலிக்கும் தனிநபர் சாகசங்களையும், தனிநபர் தீர்த்துக்கட்டலையும் சார்ந்த பாதையை சில ‘இடது’ அதிதீவிர குழுக்கள் பின்பற்றுகின்றனர், இப்பாதையை மார்க்சிஸ்ட் கட்சி நிராகரிக்கிறது.  மார்க்சிஸ்ட் கட்சி உருவானதே இந்திய கம்யூனிச இயக்கத்தில் நிலவிய திருத்தல்வாதப் பார்வையை எதிர்த்துத் தான். அதன் பிறகு நக்சலைட் இயக்கமாக முன்னுக்கு வந்த அதிதீவிரவாதத்தை எதிர்த்த போராட்டமும் நடத்தப் பட்டது. சர்வதேச அளவில் முன்னுக்கு வந்த இத்தகைய தவறான போக்குகளை எதிர்த்தும் தத்துவார்த்த ரீதியில் மார்க்சிஸ்ட் கட்சி போராட வேண்டியிருந்தது.

வெகுஜனமா வெகுஜன தளமா?

1978ல் சால்கியா பிளீனம், அன்றைக்கு இருந்த சூழலில் வெகுஜன புரட்சிகட்சி என்ற முழக்கத்தை முன்வைத்த போது, புரட்சிகரத் தன்மையுடன் கூடிய விரிவான கம்யூனிஸ்ட் கட்சி என்ற அம்சம் அதற்குள் இருந்தது. ஆனால் அதுகுறித்த புரிதல் பற்றாக்குறை பல மட்டங்களில் நிலவியதுடன், காலப்போக்கில் “கட்சி உறுப்பினர்களின்  தரத்தின் அளவு குறைந்து கொண்டே போனது என்பது வெகுஜன புரட்சிகர கட்சியை உருவாக்குவதை சாத்தியமற்றதாக்கியது. கட்சி, புரட்சிகர உள்ளடக்கம் இல்லாத வெகுஜன கட்சி போன்றதாகி விட்டது” என்று பிளீன அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. புரட்சிகர குணாம்சங்கள் சரிந்ததற்குப் பல்வேறு புறசூழல் மற்றும் ஸ்தாபன காரணங்கள் உள்ளன.  எனவே, இன்றுள்ள சூழலில் விரிவான வெகுஜன தளத்துடன் கூடிய புரட்சிகரக் கட்சி என்ற முழக்கத்தை கொல்கத்தா பிளீனம் முன் வைத்திருக்கிறது. சால்கியா முழக்கம் முற்றிலும் மாறி விட்டதாகப் பார்க்க வேண்டியதில்லை. கட்சி திட்டத்தில் வெகுஜன புரட்சிகரக் கட்சி என்பதே இடம் பெற்றிருக்கிறது. கொல்கத்தா அறிக்கையில், தற்போதைய காலகட்டத்தில் நிலவுகிற  சூழ்நிலையில் முறிப்பை ஏற்படுத்த, தரத்தின் மீதான அழுத்தம் கூட்டப்படுகிறது. இது எண்ணிக்கையை மறுதலிப்பதல்ல, புரட்சிகர குணாம்சத்தை வலியுறுத்துவது. இரண்டும் இணைந்ததே விரிவாக்கம்

மேலிருந்து கீழ் வரை அரசியல் ஸ்தாபன தத்துவார்த்த தரம் உயர்ந்த உறுப்பினர்களைக் கொண்டதாகக் கட்சி இருக்க வேண்டும் என்று சொல்வது எதற்காக? கட்சியின் அரசியல் உத்தி, மக்களின் உணர்வாக மாற வேண்டும், அதற்கு உத்தியின் அரசியல் தத்துவார்த்த அம்சத்தை உள்வாங்கி, அதை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.  பேரவைகளுக்கும் வகுப்புகளுக்கும் பங்கேற்பு குறைவாக இருப்பது என்பது வெறும் வருகை சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல. தர உயர்வுக்குத் தயாராக இல்லாத நிலையை அது காட்டுகிறது. கட்சி உறுப்பினர்களின் உணர்வாகவே அது மாறாத போது, மக்களின் உணர்வாக எப்படி மாறும்?

கிளைகளின் திட்டமிடல்:

கட்சி ஸ்தாபனத்தில், மக்களுக்கு அருகில் இருக்கும் கட்சியின் கட்டமைப்பு கிளைகள் தாம். கட்சி திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து கிளைகளுக்கு ஒரு திட்டமிடல் இருக்க வேண்டும், திட்டவட்டமான பார்வை இருக்க வேண்டும். கட்சியின் இலக்காக மக்கள் ஜனநாயகப் புரட்சி வரையறுக்கப் பட்டுள்ளது. இப்புரட்சியை நடத்தும் படையாக மக்கள் ஜனநாயக அணியை உருவாக்க வேண்டும். இந்த அணியின் அடிப்படையான, கேந்திரமான கூட்டாளிகளாக தொழிலாளி விவசாய வர்க்கங்கள் அமையும். புரட்சியை நடத்தும் பணியில் இதர வர்க்கங்களின் பங்கு பாத்திரம், தொழிலாளி விவசாயி கூட்டணியின் பலத்தைப் பொறுத்தும், ஸ்திரத் தன்மையைப் பொறுத்தும் அமையும்.

எனவே, தலைமை பாத்திரம் வகிக்க வேண்டிய தொழிலாளி வர்க்கத்தைத் திரட்ட வேண்டும். கிராமப்புறத்தில் விவசாய தொழிலாளிகள், ஏழை விவசாயிகள், நடுத்தர விவசாயிகளைத் திரட்டும் பணி முக்கியத்துவம் பெறுகிறது. நகர்ப்புறத்தில், தொழிலாளிகளைத் திரட்டும் பணிக்கு முன்னுரிமை கொடுப்பதுடன், நடுத்தர வர்க்கத்தினரைத் திரட்ட வேண்டும். நவீன தாராளமய கொள்கைகளின் அமலாக்கத்தில், நடுத்தர வர்க்கத்தில் அடுக்குகள் ஏற்பட்டுள்ளன. உயர்மட்டப் பகுதியினர், தாராளமயத்தினால் பலன் பெறுபவர்களாகவும், அதை ஆதரிப்பவர்களாகவும் உள்ளனர். எனவே இதர நடுத்தர வர்க்க பகுதியினரை ஈர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும். ஆசிரியர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், அரசு/தனியார் துறை ஊழியர்கள், அறிவு ஜீவிகள் உள்ளிட்ட பகுதியினர் இதில் இடம் பெறுவார்கள்.

வர்க்கங்களைத் திரட்டுவதற்கு ஏதுவாக முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ திட்டத்திலிருந்தும், கொள்கையிலிருந்தும் முற்றிலும் வேறுபட்ட திட்டம், மாற்றுக் கொள்கைகளை முன்வைத்து, பிரம்மாண்டமான போராட்டங்களை உருவாக்கி, அதன் நிகழ்முறையாக இடது ஜனநாயக அணி கட்டப்பட வேண்டும் என்பதும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. மக்கள் ஜனநாயக அணியில் இடம்பெற வேண்டிய வர்க்கங்களும், ஜனநாயக சக்திகளும் இந்த அணியின் திட்டத்தால், போராட்டங்களால் ஈர்க்கப்பட்டு, திரட்டப்பட வேண்டும். இதுவே கட்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வழி.

எனவே நகர்ப்புறமா, கிராமப்புறமா என்பதைப் பொறுத்து, ஒவ்வொரு பகுதியில் அல்லது தளத்தில் உள்ள தொழிலாளர், விவசாயிகள், இதர உழைப்பாளி மக்கள் மற்றும் ஒடுக்கப்படும் சமூகப் பிரிவினரைத் திரட்டுவது கிளையின் முக்கிய கடமையாகிறது. அதற்கு என்ன செய்ய வேண்டும்? ஏற்கனவே வர்க்கங்களையும், வெகுமக்களையும் திரட்டும் நோக்குடன் வர்க்க, வெகுஜன அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இத்தகைய அமைப்புகளில் கட்சி உறுப்பினர்களை ஈடுபடுத்தி, மக்களின் ஸ்தல மற்றும் வாழ்வுரிமை பிரச்னைகளை எடுக்க வேண்டும், வர்க்கப் பிரச்னைகள், சமூக ஒடுக்குமுறை பிரச்னைகளில் தலையிட வேண்டும். கிளர்ச்சிகளையும் போராட்டங்களையும் முன்னெடுத்து, அரசியல் பிரச்சாரம் செய்ய வேண்டும்.

உதாரணமாக, நவீன தாராளமய கொள்கைகள் ஏற்படுத்தியுள்ள மாற்றங்களின் விளைவாக கிராமப்புறங்களில்  நிலப்பிரபுத்துவ பணக்கார வர்க்கங்களின் கூட்டு உருவாகியிருக்கிறது. இதற்கு எதிராக விவசாய தொழிலாளர்கள், சிறு குறு விவசாயிகள், கிராமப்புற தொழிலாளிகள், இதர உழைப்பாளிகளைத் திரட்ட வேண்டும் என்று பிளீன அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. உள்ளூரில் இந்த முரண்பாடு எந்த வடிவத்தில் வருகிறது, என்ன பிரச்னையாக உருவெடுக்கிறது என்று பார்த்து, அதில் பாதிக்கப்படும் மக்களைத் திரட்டுவதற்கான திட்டமிடல் வேண்டும். அது கந்து வட்டி பிரச்னையாக வடிவெடுக்கலாம், கூட்டுறவு அமைப்புகளின் நிதி ஆதாரத்தை அவர்களுக்கு சாதகமாகப்பயன்படுத்திக் கொண்டு, சிறு குறு விவசாயிகளின் விண்ணப்பத்தைப் புறக்கணிப்பதாக இருக்கலாம்,  நில ஆக்கிரமிப்பாக இருக்கலாம், விளையாட்டு மைதானங்களைக் கபளீகரம் செய்யும் நடவடிக்கையாக இருக்கலாம். நீராதார பயன்பாடாக இருக்கலாம். எதில் மோதல் வெடிப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று கிளைகளும், இடைக்குழுக்களும் ஆலோசிக்க வேண்டும். கிளை/கமிட்டி கூட்டங்களின் நிகழ்ச்சி நிரலாக இது போன்ற பிரச்னைகள் அமைய வேண்டும். இன்றைய நிலைமையில் கிளை/கமிட்டி கூட்டங்களை நடத்தும் முறையில் மேற்கூறிய நோக்கத்துடன் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும்.

வெகுமக்கள் போராட்டங்களிலும், அரசியல் பணிகளிலும் ஈடுபடுகிற போர்க்குணம் மிக்கவர்களைத் துணை குழுக்களில் இணைப்பது கட்சிக் கிளையின் பணியாகும். இதில் கிளை செயலாளர் பணி தலையாயது. இதற்கான பயிற்றுவிப்பை மேல் கமிட்டிகள் திட்டமிட வேண்டும். கட்சித் திட்டம் வெறும் வகுப்புகளில் கேட்பதற்காக என்ற நிலைமை மாற வேண்டும். அது நடைமுறை சாத்தியம் மிக்கது என்பது உணர்த்தப்பட வேண்டும். நடைமுறைப்படுத்த மக்களின் உணர்வுபூர்வ பங்கேற்பு அவசியம். எனவே ஸ்தாபனத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் அதற்கான திட்டமிடல் தேவை.

நிதி திரட்டுதல் என்ற இயக்க செயல்பாட்டைக் கூட வெகுஜனத் தன்மை கொண்டதாக மாற்ற வேண்டும் என்று பிளீனம் அறிக்கை கூறுகிறது. வீடு வீடான வசூல் என்பது வெறும் காசு பணம் அல்ல, செழுமையான அனுபவம், அரசியல் உரையாடல், பிரச்னைகளைக் கண்டறியும் வழி முறை. விருதுநகர், நெல்லை, திண்டுக்கல் போன்ற மாவட்டக் குழுக்களுக்கு இது குறித்த சிறப்பான அனுபவம் உண்டு.

வர்க்க வெகுஜன அமைப்புகள்:

தேர்தலில் தோல்வி அடையும் போது, வெகுஜன அமைப்புகளில் இத்தனை உறுப்பினர்கள் இருந்து என்ன பலன், எனவே திரள் உறுப்பினர் பதிவில் நேரத்தையும் உழைப்பையும் செலவழிக்க வேண்டாம் என்ற கருத்தும், இவற்றை வெகுஜன அமைப்புகளாக நடத்துவதால் தான் வாக்குகள் கிடைப்பதில்லை என்ற கருத்தும் முன்னுக்கு வருகிறது. பல மட்டங்களில் இக்குரல்களைக் கேட்க முடிகிறது. முதலாளித்துவ கட்சிகளைப் போன்று, மகளிர் அணி, இளைஞர் அணியாக இவை மாற வேண்டும் என்ற தொனி இதற்குள் இருக்கிறது. இது அவசரகதியில் உருவாகும் கருத்து;  பலவீனம் எங்கிருந்து வருகிறது என்பதை மார்க்சீய அடிப்படையில் ஆய்வு செய்யாத போக்கு; கட்சி ஸ்தாபன குறைபாடுகளை லேசாகப் பார்க்கும் பார்வை.

பெருமளவு மக்களை வர்க்க மற்றும் ஜனநாயக அரசியலின் பக்கம் வென்றெடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் வெகுஜன அமைப்புகள் என்ற கருத்தாக்கம் உருவாக்கப்பட்டது. அப்படியானால் நடைமுறையில் பரந்த அளவிலான செல்வாக்கு பெற்ற, மக்களைத் திரட்டும் திறன் வாய்ந்ததாக இவை செயல்பட வேண்டும். கட்சி உறுப்பினர்கள் ஆதரவாளர்களை மட்டும் சுற்றிய குறுகிய குழுவாக இவை செயல்பட்டால், அது நோக்கத்தை நிறைவேற்றாது. கட்சி வட்டத்துக்கு வெளியில் இருக்கும் வெகுமக்களை இவை ஈர்ப்பவையாக இயங்க வேண்டும். சுதந்திரமான, ஜனநாயக செயல்பாட்டை உறுதி செய்வதன் மூலமும், பொதுமக்களின் பிரச்னைகளில் வலுவான தலையீடு செய்வதன் மூலமும், போராட்டங்களை உருவாக்குவதன் மூலமும் கட்சியின்பால் வேறுபாடுகளைக் கொண்டுள்ள அல்லது கட்சிக்கு அப்பாற்பட்ட பொதுமக்களை அணுக முடியும்.

அத்தகைய தொடர்புகளை முதலில், பொருத்தமான வர்க்க வெகுஜன அமைப்புகளின் உறுப்பினர்களாக ஆக்க வேண்டும். கிளையாக அமைத்து செயல்படுத்த வேண்டும். அந்த அரங்கத்தின் அரசியல் குறித்தும், மக்களின் பிரச்னைகள் குறித்தும் கிளர்ச்சி பிரச்சாரம் செய்வதன் மூலம் அவர்களை அரசியல் படுத்த முடியும். பிரச்னைகள் ஏன் ஏற்படுகின்றன, அரசின் கொள்கையும், நடவடிக்கையும் ஏன் சாதகமாக இல்லை, என்ன முரண்பாடுகள் ஏற்படுகின்றன, மார்க்சிஸ்ட் கட்சி முன் வைக்கும் மாற்றுக் கொள்கை என்ன என்பன போன்ற விஷயங்கள் எடுத்துச் சொல்லப்பட வேண்டும். இந்த சங்கிலித்தொடர் போன்ற நடவடிக்கைகளை எடுப்பதில் உண்மையில் பலவீனம் உள்ளது. இது இடைவெளியை ஏற்படுத்துகிறது.

மற்றொரு பக்கம், வர்க்க வெகுஜன அமைப்புகள், தம் உறுப்பினர் பதிவு இலக்கை இயந்திரகதியாகப் பார்க்கும் பார்வையும் நிலவுகிறது. அமைப்புகளுக்குள் வருபவர்கள் ஆண்டு தோறும் புதுப்பிக்கப் பட வேண்டும், தக்க வைக்கப்பட வேண்டும், செயல்பாட்டாளர்களாக மாற்றப் பட வேண்டும். எண்ணிக்கையை மட்டும் அடிப்படையாக வைத்துக்கொண்டு ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு இடத்தில் எண்ணிக்கை நிறைவேறுவதற்காக உறுப்பினர்களை இணைப்பது எதிர்பார்க்கும் பலனைத் தராது. இது பள்ளிகளில் சேரும் குழந்தைகள் இடை நிற்றல், விடுபடுதல் போல; புதியவர்களை சேர்த்து எண்ணிக்கையை நேர் செய்யலாம். ஆனால் சேர்ந்தவர்கள் விடுபட்டுக் கொண்டே இருந்தால் கல்வி முழுமை பெறாது. அனைவரையும் படிப்பிக்க வேண்டும் என்ற நோக்கம் நிறைவேறாது. அதே போல் கிளைகளுக்குக் கீழ் உள்ள உறுப்பினரின் எண்ணிக்கை, தொடர்பு கொள்ளத் தக்க அளவாக இருக்க வேண்டும். உறுப்பினர்களுடன் நெருக்கமாக இடைக்குழு, மாவட்டக் குழு இருக்க முடியாது என்பதற்காகக் கிளை அமைக்கப்படுகிறது. 1000 முதல் 3000 வரை உள்ள உறுப்பினர்களுக்கு ஒரு கிளை என்பது, பேருக்கு அமைக்கப்பட்ட கிளையாக இருக்குமே தவிர, உறுப்பினர்களை நெருக்கமாக சந்தித்து உரையாட வாய்ப்பு இருக்காது. நோக்கத்தைக் கணக்கில் எடுக்காமல் இயந்திரகதியாக செயல்படுவதன் விளைவுகளில் இதுவும் ஒன்று.

வெகுஜன அமைப்புகளில் செயல்படும் கட்சி உறுப்பினர்கள் இந்த அரசியல் நோக்கத்தை உணர்ந்து, புரிந்து பணிகளை ஆற்ற வேண்டும். பிராக்‌ஷன் கமிட்டிகள் இதற்கான வழிகாட்டுதலை உருவாக்க வேண்டும். இல்லையேல் உழைப்பு முழுதும் விழலுக்கு இறைத்த நீராகி விடும். வருடம் முழுதும் வெகுஜன அமைப்பின் உறுப்பினர் பதிவில் கழிப்பது,  அதன் கிளைகள் செயல்பாட்டைப் புறக்கணிப்பது, அரசியல் படுத்த எவ்வித முயற்சிகளையும் எடுக்காமல் இருப்பது, ஆனால் தேர்தல் வந்தால் வாக்குகள் மட்டும்விழ வேண்டும் என்று எதிர்பார்ப்பது எப்படி சாத்தியமாகும்?

வெகுஜன அமைப்புகளில் பல மட்ட பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டும் அதன் படி இயங்காத கட்சி உறுப்பினர்கள் ஒருபுறம், எந்த அமைப்பிலும் உறுப்பினர் கூட ஆகாத கட்சி உறுப்பினர்கள் மறுபுறம் என்கிற நிலை நீடிக்கிறது. பலவீனமும், சரிவும் இங்கிருந்து தான் துவங்குகிறது. மக்களுடன் உயிரோட்டமான தொடர்பு என்பது அவ்வப்போது வெளியிலிருந்து சென்று அவர்களைப் பார்வையிட்டு வருவது அல்ல, நமக்கு எல்லாம் தெரியும் என்ற நிலையிலிருந்து சில ஆலோசனைகளை சொல்லிச் செல்வது அல்ல. இடைக்குழு தலைமை அந்த இடத்திலிருந்து திரும்பி வந்து விட்டாலும், கட்சி/வர்க்க வெகுஜன அமைப்புகளின் கிளைகள் அங்கு இருக்க வேண்டும். அப்போது தான் தொடர்பு அறுபடாமல் இருக்கும். வெகுஜன அமைப்புகளின் நோக்கம் என்ன, கட்சி உறுப்பினர்களுக்கு அவ்வமைப்புகளில் இருக்கும் அரசியல் கடமை என்ன என்பது புரிந்தாலே மாஸ் மெம்பர்ஷிப் வேண்டாம் என்பதும், கட்சியின் பாசறைகளாக அமைப்புகளைக் குறுக்க வேண்டும் என்பதும் அடிபட்டுப் போய் விடும்.

ஆனால் கட்சி கிளைகள் உள்ள இடங்களில் வெகுஜன அமைப்புகள் இல்லை என்பதும், வெகுஜன அமைப்புகள் உள்ள இடங்களில் கட்சிக் கிளைகள் இல்லை என்பதும் சுட்டிக் காட்டும் அம்சம் என்ன? உயிரோட்டமாக மக்கள் தொடர்பில் இருத்தல் குறித்த புரிதலை முற்றாகத் தவற விடுகிறோம் என்பது தான். ஒரு கட்சிக் கிளை செயல்படும் இடத்தில் வெகுஜன அமைப்பும் இல்லை, துணை குழுவும் இல்லை என்றால் அந்தக் கிளை என்ன வேலை செய்திருக்க முடியும்? செயல்பாட்டின் ரிசல்ட் அரசியல் ஸ்தாபன விரிவாக்கமாக இருக்க வேண்டாமா? மக்களை நம் அமைப்புக்குள் கொண்டு வருவதன் மூலமாகத் தானே தொடர்பை ஸ்திரப்படுத்த முடியும், தக்க வைக்க முடியும், தளமாக மாற்ற முடியும்..

தேர்தலில் வெற்றி பெறுவது அப்படிப்பட்ட வெகுஜன தளத்தைக் கட்டி அமைப்பதைப் பொறுத்தது. அது எளிதல்ல, அதற்குக் குறுக்கு வழியும் இல்லை. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நினைத்த மாத்திரத்தில் மாற்றுகிற ரிமோட் எதையும் புரட்சிகர இயக்கம் எதிர்பார்க்க முடியாது. “புரட்சி என்பது ஆப்பிள் பழத்தைப் போல அல்ல, பழுத்து தானாக உங்கள் மடியில் உதிர; அது நடத்தப்பட வேண்டும், நிகழவைக்கப் பட வேண்டும்” என்ற சே குவாராவின் வார்த்தைகள் மிகப் பொருத்தமானவை.. மக்களை நேசிப்பதும், அவர்களுடன் இருப்பதும், அவர்களின் வாழ்க்கையிலிருந்தும் உணர்வு மட்டத்திலிருந்தும் கற்றுக் கொண்டு மாற்றத்துக்கான தத்துவத்தை அவர்களுக்குக் கற்றுக்கொடுப்பதுமே தேவை.

வேலை முறையில் மாற்றம்

செயல்படாத தன்மையினால் உறுப்பினர்கள் விடுபடுகிறார்கள் என்ற பிரச்னை வருகிறது; சில சமயம், என்ன வேலை பார்த்து என்ன என்பதான சோர்வு மனநிலை ஏற்படுகிறது. இவற்றுக்குப் பல காரணிகள் உண்டு. அதில் இயந்திரகதியான வேலை முறை என்பதும் அடங்கும். அடிப்படை புரிதல் இல்லாமல் வேலை செய்வதானது, சிறு தோல்விகள் வந்தாலே ஓட வைத்து விடும். மாற்றங்களற்ற ஒரே மாதிரியான வேலை முறை பயன் தராது. ஒவ்வொரு இடத்துக்கும், ஒவ்வொரு களத்துக்கும், ஒவ்வொரு சூழலுக்கும் பொருத்தமான முறை வேண்டும். ஒன்று தோற்றால் அடுத்தது என்று முயற்சிகள் தொடர வேண்டும். பொதுவாக உயர்மட்ட கமிட்டிகளுக்குப் போக போக, மக்களிடமிருந்து ஓர் இடைவெளி உருவாகும். கிளை, இடைக்குழு அளவுக்கான நெருக்கம் வர வாய்ப்பில்லை. அப்படியே விட்டு விட்டால், பழைய அனுபவங்களிலிருந்து மட்டும் வழி காட்ட வேண்டியிருக்கும். அல்லது கீழ் கமிட்டிகள் சொல்வதை அடிப்படையாக வைத்து மட்டுமே முடிவுக்குப் போக வேண்டியிருக்கும். இது மார்க்சீய அணுகுமுறையாக இருக்காது. தலைமையின் அனுபவம், மக்களின் அனுபவங்களை, தொழிலாளி வர்க்கத்தின் அனுபவங்களின், விவசாயிகளின் அனுபவங்களை உள்வாங்கியதாக இருக்க வேண்டும் என்று லெனின் கவனப்படுத்துகிறார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் சில மாவட்டக் குழுக்கள் சில சம்பவங்கள் நடந்ததாகத் தெரிந்த உடன், அந்த இடத்துக்கு விரைகின்றன. கள நிலைமையைப் பரிசீலிக்கின்றன. தலையீட்டுக்கு அது தான் முதல் படி.. அலுவலகத்திலேயே இருந்து கொண்டு செய்தியைக் கேட்பதும், வரும் தகவல்களைப் பெறுவதும் கள நிலையைக் காட்சிப்படுத்தாது. நேரில் செல்லும் போது கூடுதல் விவரங்களை சேகரிக்க முடியும், மக்களின் மனநிலையை அறிந்து கொள்ள முடியும். அந்த இடத்தின் தன்மை, குடியிருப்புகளின் நிலை போன்றவை நிலைமையை மதிப்பீடு செய்ய உதவும்.

100 நாள் வேலை பற்றிய ஒரு பிரச்னை வருவதாக எடுத்துக் கொள்வோம். வேலை நடக்கும் ஒரே ஒரு இடத்துக்குக் கூட போகாத மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உண்டு. அவர்களும் இடம் பெறும் மாவட்டத் தலைமை, கூட்டுத்தலைமையாக எப்படி வழி காட்டும்? அந்த அரங்கின் பொறுப்பாளர் என்ன கருத்தை வைக்கிறாரோ அது விமர்சனமின்றி ஏற்றுக் கொள்ளப்படும் என்கிற நிலைமையே உருவாகும். சட்டம் எப்படியெல்லாம் மீறப்படுகிறது என்பது நேரில் சென்று அத்தொழிலாளிகளுடன் உரையாடினால் தான் புரியும். நிழல் பந்தல் இல்லாமல் கொளுத்தும் வெயிலில் மதிய உணவை முடிப்பதற்குள் படும் அவஸ்தை, குழந்தைகளைப் பராமரிக்க ஆள் இன்றிப் புழுதியில் அவர்களை விடும் நிலை, குடிநீர் விநியோக ஏற்பாடு இல்லாததால் வீட்டிலிருந்து 3 லிட்டர் தண்ணீர், மதிய உணவு இவற்றை எல்லாம் தூக்கிக்கொண்டு வரும் சிரமம், எப்போது கடைசியாகக் கூலி கிடைத்தது, எவ்வளவு போன்ற விவரங்களை எப்படிப் புரிந்துகொள்ள முடியும்? அது விவசாய இயக்கங்களின் பணி மட்டுமா? கிராமப்புற பிரச்னைகளைக் கையாளும் பொறுப்பு கம்யூனிஸ்ட் கட்சிக்கு உண்டல்லவா? பெரும்பகுதி அல்லது சரி பாதி மாநகர/நகர பகுதிகளைக் கொண்ட மாவட்டங்களில் கிராமப்புற பிரச்னைகள் மைய பிரச்னைகளாக அவ்வளவு சுலபமாக வருவதில்லை என்பதை இதனுடன் இணைத்துப் பார்க்கவேண்டும்.

பிளீனம் அறிக்கை கட்சித் தலைமைக்கு சில வழிகாட்டுதல்களை அளிக்கிறது. பொது கூட்டங்களிலும், பேரணிகளிலும் மக்கள் முன் பேசுவது என்பது மட்டுமே  மக்களுடன் தொடர்பு கொள்ளும் முறை என்ற மாயை உடைக்கப் பட வேண்டும். வீடு வீடான பிரச்சாரம், நிதி வசூல் போன்ற இயக்கங்களில் பங்கேற்க வேண்டும். கட்சி பேரவை, ஆதரவாளர் கூட்டங்களில் பங்கேற்று கிளை மட்டத்திலிருந்து வரும் கருத்துக்களைப் பொறுமையுடன் கேட்டுப் புரிந்து கொள்ள வேண்டும். நிகழ்ச்சி முடிந்த பின் கிராமங்களிலும் தொழிலாளர் குடியிருப்புகளிலும் தங்கி மக்களுடன் உறவாட வேண்டும். போராட்டங்கள் திட்டமிடும் இடங்களில் தங்கி வழி காட்ட வேண்டும்.

மக்களின் தேவையிலிருந்தே பணிகள் வகுக்கப் பட வேண்டும், தனிப்பட்ட தோழரின் சொந்த விருப்பத்திலிருந்து அல்ல. சில சமயம் பிரச்னைகள் இருக்கும், மாற்றத்துக்கான அவசியமும் இருக்கும், ஆனால் மக்கள் அதை இன்னும் உணராமல் இருப்பார்கள், மாற்றத்துக்குத் தயாராகாமல் இருப்பார்கள். அங்கு அவசரப்படக் கூடாது, பொறுமையுடன் பணி செய்து, அவர்களை உணர வைக்க வேண்டும், தயார் நிலைக்குக் கொண்டு வர வேண்டும். உதாரணமாக ஒரு நிகழ்ச்சிப் போக்கு மக்களை பாதிக்கும் என்று முன்கூட்டியே உணருகிறோம் என்று வைத்துக் கொள்வோம். அது நிலம் கையகப்படுத்தும் பிரச்னையாக இருக்கலாம், நிலத்தடி நீர் பாதிப்பாக இருக்கலாம். அதை மக்கள் உணரும் முன்பே, தட்டி வைத்து, துண்டுப்பிரசுரம் விநியோகித்து, இயக்கமும் நடத்தினால் மக்கள் பங்கேற்பு இருக்காது. ஆனால் நமது பிரச்சாரத்தின் தாக்கத்தில் மக்கள் அதை உணர்ந்து களத்துக்கு வரும் போது, ஏற்கனவே பலமுறை நாம் எடுத்த பிரச்னை என்பதால், அதை  முடித்து விட்டு அடுத்த பிரச்னைக்கு நாம் போயிருப்போம். அது பலன் தராது. சோர்வைத் தான் தரும். முதன்மை நோக்கம் என்பது மக்களைத் திரட்டி செயல்பாட்டில் இறக்குவதாக இருக்க வேண்டும்.

மக்களைத் திரட்டினால் மட்டும் போதாது, வர்க்க அரசியல் உணர்வு பெற்றவர்களாக அவர்கள் மாறும் போது தான் சோஷலிச புரட்சி உருவாகும். இதற்கு முன் நடந்த சமூக மாற்றங்களில் மக்களின் பங்குபாத்திரம் இருந்தது என்பது உண்மை தான். ஆனால் மக்களின் அதிருப்தியைப்பயன்படுத்தி அதிகாரத்தைக் கைப்பற்றியது மற்றொரு சுரண்டும் வர்க்கம் தான். சோஷலிச புரட்சி மட்டுமே பெரும்பான்மை வர்க்கங்களின் கையில் அதிகாரத்தைக் கொடுக்க வல்லது. வர்க்க பேதம் அற்ற சமூகத்தை நோக்கிய பயணத்தைத் துவங்கக் கூடியது. எனவே, வெறும் எண்ணிக்கையில் அல்ல, அரசியல் உணர்வு பெற்ற, சோஷலிச கருத்துக்களில் ஈர்க்கப்பட்டிருக்கிற மக்கள் திரள் திரட்டப்பட வேண்டும்.

மக்களைக் கவ்விப் பிடிக்கும் போது தான் தத்துவம் ஒரு பவுதீக சக்தியாக மாறும் என்று மார்க்ஸ் சொன்னதாக இருக்கட்டும். கம்யூனிஸ்டுகளுக்கு மக்கள்மீது மாறா காதல் வேண்டும். யார் ஒருவருக்காவது அநீதி நடக்கும் போது பொங்கி எழுகிறவரே  எனது தோழர் என்று சே குவாரா சொன்னதாக இருக்கட்டும். மக்களே உண்மையான கதாநாயகர்கள் என்று மாவோ சொன்னதாக இருக்கட்டும். ஒரு நொடி கூட மக்களுடனான தொடர்பு பலவீனமாக அனுமதிக்கக் கூடாது என்று ஸ்டாலின் கூறியதாக இருக்கட்டும். எல்லாவற்றிலும் பின்னிப் பிணைந்து இருப்பது உயிரோட்டமாக மக்கள் தொடர்பில் இருத்தல் என்பது தான். மக்கள் ஜனநாயகப் புரட்சியை இக்கால கட்டத்தின் இலக்காக வரையறுத்து, இடது ஜனநாயக அணி என்ற இடைக்கால முழக்கத்தை முன் வைத்து செயல்படும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் அதன் உறுப்பினர்களுக்கும் இது முற்றிலும் பொருந்தும்.

 

 

சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தின் விழுந்து எழும் ஆற்றல்!

1848ல் “உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்” என்ற முழக்கத்தோடு கம்யூனிஸ்ட் இயக்கம் லன்டனில் பிறந்தது. அன்றிலிருந்து அதன் இயக்கமும் பரவலும் நித்திய கண்டம் பூர்ண ஆயுசு என்றே இருந்து வருகிறது. உண்மையில் அது சர்ச்சைகளால், சர்ச்சைகளுக்கிடையே, சர்ச்சைகளின் வழியே, சர்ச்சைகளைத் தேடி வளர்கிற சமூக விஞ்ஞானம் ஆகும். அது திண்ணை வேதாந்தமல்ல. யாரோ ஒருவர் தவமிருந்து கண்டதல்ல. அது உழைப்பாளி மக்களின் நடைமுறைகளையும் கருத்தோட்டங்களையும் கூட்டு செயல்பாட்டையும் கொண்ட அனுபவ விஞ்ஞானமாகும். அது நடைமுறையால் வளர்கிற விஞ்ஞானமாகும்.

இந்த சமூக விஞ்ஞானத்திற்கு அடிப்படை போட்டவர்களை பாராட்டவே மார்க்சிசம்-லெனின்னிசம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த ஆசான்கள் எழுத்துக்கள் அனைத்துமே அவர்கள் காலம் வரை திரண்ட அறிவுச் செல்வத்தையும் எதார்த்த வாழ்க்கையையும் ஒப்பிட்டு எங்கு பொருந்துகிறது. எங்கு பொருந்தாமல் போகிறது என்பதில் தொடங்கி அடுத்தகட்ட மாற்றம் எதுவாக இருக்க வேண்டுமெனத் தேடுவதில் முடிவன.

எனவே, மார்க்சிசம்-லெனினிசம் என்பது அவர்கள் சொல்லியது, செய்தது மட்டுமல்ல. ஒவ்வொரு நாட்டின் மார்க்சிசம்-லெனினிச அணுகுமுறையில் செயல்படும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் அனுபவங்களும் மார்க்சிசம்-லெனினிசம் என்ற சமூக விஞ்ஞானத்தின் பகுதியாகும். தவறுகளிலிருந்து பாடம் பெறுவதின் மூலமே மார்க்சிசம்-லெனினிசம் வளர்கிறது என்பதையே வரலாறு காட்டுகிறது. மார்க்சிசம்-லெனினிசத்தைத் தாக்குகிற எதிரிகள் கூட கம்யூனிஸ்ட்டுகளின் தவறுகளை காட்டி கத்துவார்களே தவிர அதன் சாரத்தில் கை வைப்பதில்லை. அதனுடைய 167 ஆண்டு வரலாறு ஒன்றைக் காட்டுகிறது. மார்க்சிசம் – லெனினிசம் என்ற சமூக விஞ்ஞானம் போல் வேகமாக வளர்ந்த விஞ்ஞானம் வேறு எதுவுமில்லை. அதுமட்டுமல்ல அந்த வரலாறு கம்யூனிச இயக்கத்தின் தவறுகளால் விழுந்து அதனை திருத்தி எழும் ஆற்றலை பறைசாற்றுகிறது.

அதன் வரலாறும் உழைப்பாளி மக்களின் போராட்ட வரலாறும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகும். இருவருமே அடக்குமுறைகளையும் ஏமாற்றுக்களையும் சந்திக்க வேண்டியிருக்கிறது. இருவருமே தவறுகளை திருத்தியே முன்னேற வேண்டியிருக்கிறது. தவறுகளை சரியாக கணிக்கவில்லையானால் அதுவே இயக்கத்தை முடக்கி விடுகிறது. உழைப்பாளி மக்களின் அணுகுமுறையில் குறைகள் இருந்தாலும் மார்க்சிச இயக்கம் தளர்வுறும், மார்க்சிசத்தை ஏற்றுக் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சிகள் தவறு செய்தாலும் உழைப்பாளி மக்களின் போராட்டம் வலுவிழக்கும்.

கம்யூனிஸ்ட் கட்சிகள் தனது தவறுகளால் வீழ்ந்தாலும் அதனை திருத்தி எவ்வாறு எழுகிறது என்பதை சுருக்கமாகக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். அடக்குமுறைக்கும் அவதூறுக்கும் ஆட்படுவதால் ஏற்படும் பின்னடைவோடு அந்தந்த காலத்தில் கம்யூனிஸ்ட்டு கட்சிகளின் பல ரகமான தவறுகளால் வலு இழக்க நேரிடுகிறது.

அத்தகைய தருணங்களில் தவறுகளை கண்டுபிடிப்பதிலும் சரியான கோட்பாட்டை உருவாக்குகிற முயற்சியிலும் கம்யூனிஸ்ட் இயக்கங்கள் ஈடுபடுவதை மார்க்ஸ் காலத்திலிருந்து தொடர்வதை காணலாம். 1942ல் மாசேதுங் கட்சி உறுப்பினர்களிடையே பேசுகிற பொழுது குறிப்பிட்டதைக் கவனியுங்கள்: “இன்றும் நம்மில் சில பேர் மார்க்சிசம்-லெனினிசம் ஒரு ரெடிமேடு மருந்து. அதுமட்டும் கிடைத்துவிட்டால் சிரமப்படாமல் எல்லா நோய்களையும் குணப்படுத்திவிடலாம் என்று கருதுகின்றனர். மார்க்சிசம்-லெனினிசத்தை ஒரு வேதம்போல் கருதுகின்றவர்களின் இத்தகைய குழந்தைத்தனமான குருட்டு நம்பிக்கையுள்ளவர்களிடம் உனது வேதத்தால் எந்த பலனும் இல்லை என்று வெளிப்படையாகச் சொல்ல வேண்டும். கண்ணியமற்ற மொழியிலே சொல்லவதென்றால் உனது வேதம் மனித மலத்தைவிட கேவலமானது. அதுவாவது நாயிக்கு உணவாகும். நாயின் விட்டையோ வயலுக்கு உரமாகும். உனது வேதம் நாயிக்கும் உணவாகாது. வயலுக்கும் உரமாகாது, எதுக்கும் பயன்படாது” என்றார் (Mao Tse-tung, Feb., 1, 1942 in Stuart Schram, The Political Thought of Mao Tse-tung)

மார்க்சிசத்தை ஒரு மதமார்க்கமாக ஆக்குவதை தவறான போக்கு என்பதை மாவோ மட்டுமல்ல. இதேபோல் லெனினும் மார்க்சிசத்தை வேதாந்தமாக ஆக்குவோரை கடுமையாகத் தாக்கி எழுதியுள்ளார். லெனின் தான் தவறுகளை வகைப்படுத்தி அதன் அடிப்படைகளையும் அதை எதிர்த்த போரை எப்படி நடத்துவது என்பதை முன்மொழிந்தார். சரியான கருத்திற்கான போராட்டம் தத்துவார்த்தப் போராட்டத்தோடு நின்றுவிடுவதில்லை. தப்பைக் கண்டுபிடிக்க அது முதன்மையாகவுமில்லை. தெளிவினைப் பெறவும் நடைமுறையோடு பொறுத்தவும் அது அவசியமாகிறது. நடைமுறையில் ஒரு கருத்தை அன்றாடப் பிரச்சனைகளை தீர்க்க ஈடுபடுத்தும் பொழுதுதான் அது சரியா தவறா என்பதைக் கண்டுபிடிக்க முடியும்.

தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்வதின் மூலமே மார்க்சிசம்-லெனிசம் கற்கப்படுகிறது. எனவே, தவறாகிவிடுமோ என்று தயங்காதீர். ஒரே தவறை திரும்பத் திரும்பச் செய்யாதீர் என்பதுதான் மார்க்சிசம்-லெனினிசம் கற்க ஒரே வழி.

மார்க்சிசம்-லெனினிசம் எவ்வாறு உருவாகிறது? சரியான கருத்து எப்படி உருவாகிறது? மாவோ மேலும் சொல்கிறார்.

“எங்கிருந்து சரியான கருத்து வருகிறது. வானத்திலிருந்து விழுமா? தீடீரென மனதிலே உதிக்குமா?

இல்லை. அது சமூக நடைமுறையால் பெறப்படுகிறது. பொருளுற்பத்திக்கான போராட்டம், வர்க்கப் போராட்டம், விஞ்ஞான சோதனை, இவைகளினால் பெறப்படுகிறது.

முன்னேறிய வர்க்கத்தின் இந்த சரியான கருத்து ஒரு முறை மக்களை ஈர்க்குமானால் இந்தக் கருத்து பௌதீக சக்தியாகி சமூகத்தை மாற்றும் உலகையே மாற்றிவிடும்” என்கிறார்.

மாவோ, மேலும் கூறுகிறார்;

“கட்சி உறுப்பினர்களுக்கு ஞானத்தைப் பெறுதல் பற்றிய இயக்கவியல் பொருள் முதல்வாதக் கோட்பாட்டைக் கற்றுக் கொடுப்பது அவசியம். அந்தக் கோட்பாடு அவர்களது சிந்தனை முறையை சரியானதாக ஆக்க உதவிடும்.

தேடுதல் திறமையை வளர்க்கும். அனுபவங்களைத் தொகுக்கும் ஆற்றல் மேன்மைப்படும். கஷ்டங்களை வெல்ல கற்றுக் கொடுக்கும். பணிகளை திறமையாக செய்ய பயிற்சியளிக்கும்” என்கிறார்.

ஞானம் பற்றிய மார்க்சிய கோட்பாடு

அது என்ன? ஞானம் பற்றிய மார்க்சிய கோட்பாடு 1330 குறளையும் ஒப்புவிப்பதோ பொருள் கூறுவதோ ஞானமாகிவிடாது. வள்ளுவர் காலத்திய சமூக வாழ்வு, குடும்ப உறவு, அரசியல், பொருள் உற்பத்திகள் அவைகளை உருவாக்கும் சமூக உறவு சொற்களின் உள்ளடக்கம். சொல் நயம் (வள்ளுவர் காலத்தில் காமம் என்ற சொல்லின் பொருள் வேறு. இன்று அதன் பொருள் வேறு இந்த மாற்றம் எதனால் ஏற்பட்டது) தத்துவ ஞானம். அவைகளில் நீடித்து எவைகள் உள்ளன. அவைகளில் பேணவேண்டியது எவைகள். களைய வேண்டியவைகள் எவைகள். இவைகளைத் தேடினால் அது மார்க்சிய-லெனினிய ஞான கோட்பாட்டை குறளுக்கு பொறுத்துவதாகும். அதாவது ஒரு தகவலை அதற்கும் மற்றதிற்கும் உள்ள தொடர்பு அதன் வரலாறு இவைகளை தேடுவதே மார்க்சிசம்-லெனினிய ஞான கோட்படாகும்.

தவறுகளும் பாடங்களும்

இந்த ஞானம் இருந்தாலும் நடைமுறையில் தவறுகள் நேராமல் சரியான கோட்பாடு உருவாவதில்லை. அதைப் பெறுவதே ஒரு போராட்டமாகிவிடுகிறது. அவ்வாறு கோட்பாட்டுத் தவறுகளை சரிசெய்யும் போராட்டக் காலங்களில் என்ன நடக்கிறது?

பல ரகமான தவறான கருத்துக்களுக்கெதிராக போராட்டம் உருவாகிறது. அந்த தவறான கருத்திற்கும் மார்க்சிசத்திற்கும் உள்ள உறவினையும் வரையறை செய்ய நேரிடுகிறது. இந்தப் போராட்டம் வனாந்திரத்திலோ, நடுக்கடலிலோ நடைபெறவில்லை. எதார்த்த அரசியல் சமூக நிலவரங்களை பரிசீலிப்பதிலும், வளர்ச்சிப் போக்கை எப்படி மாற்றுவது என்பதிலும் கருத்து மோதல் உருவாகி போராட்டமாகிவிடுகிறது. மார்க்சிசத்தை ஏற்றுக் கொள்பவர்களே பல கோஷ்டிகளாகப் பிரிந்து தங்களது கருத்துதான் சரி என்று நிலைநாட்ட முயற்சிக்கின்றனர். சித்தாந்தப் போர் மூள்கிறது. இதனால் தெளிவு பெறலாமே தங்களது கருத்து சரியா? தவறா? என்பதைக் கண்டுகொள்ள இயலாது. அந்த கருத்தின் அடிப்படையில் செயல்படும் பொழுதும் பிரச்சனைகளுக்கு அதனடிப்படையில் தீர்க்க முயற்சிக்கிற பொழுதும் தவறு எது? சரி எது? என்பது துலங்குகிறது. இவ்வாறு தவறான கருத்துக்களை நீக்கி முழுமையை நோக்கி மார்க்சிசம்-லெனினிசம் நடைபோடுகிறது.

உதாரணமாக 1960களில் சோவியத் படை செக்கோஸ்லோவிக்கியாவில் புகுந்தவுடன் கம்யூனிஸ்டுகள் கருத்து வேறுபட்டனர். சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி, சீன கம்யூனிஸ்ட் கட்சி, ஐரோப்பிய கம்யூனிஸ்டு கட்சிகள் அவரவர் கருத்துக்களை முன்நிறுத்தினர். மூன்று விதமான கருத்துக்கள் மோதின. சோவியத் புரட்சிக்குப் பிறகு ஏற்பட்ட மாற்றங்களில் ஒன்று வறட்டு தத்துவக் கோட்பாட்டுத் தவறுகள் அறவே ஒழியாவிட்டாலும் குறைந்துபோனது.

உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தை பின்னுக்கு தள்ளிய தவறு எது? என்று உடனடியாகக் கண்டுபிடிக்க முடியாவிட்டாலும் சோவியத் கட்சியின் தலைமை முன்மொழிந்த முதலாளித்துவமற்ற பாதை என்ற கோட்பாடுதான் வலது திரிபுகளுக்கு அடிப்படையாக அமைந்தது. உலக நிலைமைகளின் வளர்ச்சிப்போக்கு காட்டிவிட்டது.

லெனின் காலத்தில் இரண்டு விதமான தவறுகளும் நேர்ந்து இயக்கத்தை ஸ்தம்பிக்க வைத்தன. வறட்டு தத்துவ அடிப்படை கொண்டவைகள் மற்றது வர்க்க சமரசப்போக்கு. இப்பொழுது மேலை நாடுகளில் கம்யூனிஸ்ட்டுகள் வறட்டு தத்துவ தவறுகள் செய்வது குறைந்துவிட்டது. வர்க்க சமரசக் கோட்பாட்டால் எழும் தவறுகள் அதிகமாகிவிட்டன. பின்தங்கிய நாடுகளில் இந்த இரண்டு வகையான தவறுகளும் நேருகிற சூழ்நிலை உள்ளது.

சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கம்

20 நூற்றாண்டின் மத்தியில் வர்க்க சமரசக் கோட்பாடால் தவறு செய்வதை எதிர்த்து கொள்கைப் போரை துவக்கியது. இந்த கொள்கைப் போரை எதிரிகள் மார்க்சிசத்தின் அழிவை உறுதி செய்யும் போராட்டமாக சித்தரித்தனர். இந்த கருத்து மோதலினால் சில தவறான கருத்துக்கள் எடுபட்டனவே தவிர மார்க்சிசம்-லெனினிசம் அழியவில்லை. வர்க்க சமரசக் கோட்பாட்டை முன்நிறுத்திய யூரோ கம்யூனிசம் காணாமல் போய்விட்டது. கடுகு சிறுத்தாலும் காரம் போகவில்லை என்பது போல மார்க்சிசம்-லெனினிசம் அதன் சக்தியை இழக்கவில்லை. எதை வைத்து இது கூறப்படுகிறது என கேட்கலாம்.

முதலாளித்துவப் பிரச்சாரக் கருவிகள் இன்றும் மார்க்சிசத்தை தாக்கிக் கொண்டே இருப்பதையும் கம்யூனிஸ்ட்டுகளின் தவறுகளை காட்டி அதுதான் மார்க்சிசம் என்றும் ஊளையிடுவதும் எதைக் காட்டுகிறது. அதன் உயிர்த்தெழும் ஆற்றலைக் காட்டவில்லையா. உழைப்பு கோட்பாட்டையும், வர்க்கப் பிரிவினைகளையும் முன் மொழிந்த ஆடம்ஸ்மித்தையும், டேவிட் ரிக்கார்டோவையும் மறந்துபோனது போல் ஏன் இவர்களால் மார்க்சை மறக்க முடியவில்லை?

முதலாளி வர்க்க அரசியல்வாதிகளால் வர்க்கப் போராட்டங்களை முடிவிற்கு ஏன் கொண்டுவர முடியவில்லை?

பாட்டாளி வர்க்கத்தை அரசியலிலிருந்து ஒதுக்குகிற முயற்சி தற்காலிகமானது என்பதை உணரப்போய்த்தானே பாட்டாளி மக்களை மார்க்சிசமும் பக்கம் போகாமல் தடுக்க கம்யூனிஸ்டுகள் மீது அவதூறுகளைப் பொழிகின்றனர். வரலாற்றையே புளுகுமூட்டைகளாக ஆக்குகின்றனர்.

சீனாவில் மார்க்சிசம் வழிகாட்டவில்லை முதலாளித்துவமே வழிகாட்டுவதாக கூறுகிறவர்கள் அந்த முதலாளித்துவம் ஏன் இந்தியாவில் பொருளாதாரத்தை வளர்க்கவில்லை? ஏன் ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் நெருக்கடியைக் கொண்டு வருகிறது. சீன கம்யூனிஸ்ட் கட்சி கூறுவதென்ன. எங்களுக்கு வழிகாட்டி மார்க்சிசம்-லெனினிசமும் எங்களது அனுபவமாகும். அதனால் எங்களது தவறுகளிலிருந்து பாடம் கற்கும் ஆற்றலை நாங்கள் இழக்கவில்லை என்று கூறுவதைப் பார்க்கலாம்.

இந்திய கம்யூனிஸ்ட்டுகளும் திரிபுகளும்

இன்று இந்தியாவில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவு கம்யூனிஸ்ட் அல்லாத நல்லெண்ணம் கொண்டோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. சொத்துடைமை கோட்பாட்டில் மாறுபட்டு கருதுவோரும்கூட அரசியலை சொத்துகுவிக்கப் பயன்படுத்துவதை ஏற்பதில்லை. அவர்களும் இந்த பின்னடைவு அரசியலதிகாரத்தைச் சொத்துகுவிக்கப் பயன்படுத்தும் திருடர்களுக்கு ஊக்கம் கொடுக்கும் என்று அஞ்சுகின்றனர். சொத்துகுவிக்கும் ஆசையில் பொருளாதார நெருக்கடியைக் கொண்டுவருவதை விரும்பாதவர்களும் அரசியலில் நேர்மையை விரும்புவோர்களும் இந்த பின்னடைவு ஆபத்து என்றே கருதுகின்றனர். அதையும்விட உலக கம்யூனிஸ்ட் இயக்கமே கவலை கொள்கிறது. இந்த கவலைக்கு அடிப்படை உண்டு.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தலைதூக்கிய வலதுசாரி திருத்தல்வாதத்தையும், மக்கள் ஈடுபடாத ஆயுதக்குழு மனப்பான்மை கோட்பாடான இடது திருத்தல்வாதத்தையும் எதிர்த்து திறமையாக போராடுவதில் மார்க்சிஸ்ட் கட்சி முத்திரை பதித்தது. பூர்சுவா கைக்கூலிகள் இந்த இரண்டு தவறுகளையும் காட்டி மார்க்சிசத்தை இழிவுபடுத்த எடுத்த முயற்சிகளை மார்க்சிஸ்ட் கட்சி செயல்களால் முறியடித்தது. வெகுஜன அமைப்புகளின் இயக்கத்தின் மூலமே அரசியலில் சமூக வாழ்வில் சோசலிச லட்சியத்தை அடைய முடியும். சுரண்டலற்ற பொருளாதார உறவை உருவாக்க முடியும் என்ற மார்க்சிச-லெனினிச கோட்பாட்டை மார்க்சிஸ்ட் கட்சி உயர்த்திப் பிடித்தது. இப்பொழுதும் இனியும் வெகுஜன அமைப்புகளின் இயக்கத்தையே உயிர்நாடியாக கருதுகிறது.

வலது திரிபு நாடு விடுதலையான பிறகு நேரு தலைமையில் உருவான அரசு முழங்கிய ஆவடி சோசலிசம் மக்களை மயக்கிய காலம். அரசு பொதுத்துறையை வளர்த்தது. அதேவேளையில் பெருமுதலாளிகளை கொழுக்க வைக்க பல சலுகைகள், மான்யங்கள் வழங்கியது. தெலங்கானா பகுதியில் கம்யூனிஸ்டுகள் உதவியுடன் விவசாய சங்கம் நிலப்பிரபுக்களின் நிலத்தை விவசாயிகளுக்கு பிரித்து கொடுத்த விதம் நாடு முழுவதும் உழுபவனுக்கு நிலம் என்ற போராட்டம் வெடிக்க வைத்தது. குத்தகை விவசாயிகள் வீறுகொண்டு எழுந்தனர். அதனை அடக்குமுறையால் நேரு அரசு ஒடுக்கியது. நிலப்பிரபுக்களின் உரிமையை பாதுகாக்கும் முறையில் நிலஉடைமை சட்டத்தை கொண்டு வந்தது.

அன்று நேரு அரசிற்கு ஆதரவாக இருப்பது சோசலிசத்திற்கு அடிப்படை போட தேவையான தொழில் வளர்ச்சிக்கு அவசியம் என்ற கருத்து தலைதூக்கியது. நேரு அரசிற்கு ஆதரவு என்ற பெயரில் வர்க்க சமரசம் கூடாது, மக்களின் இயக்கத்தின் மூலம் மொழிவழி மாநிலம் அமைந்ததுபோல் வர்க்கப் போராட்டத்தின் (அதாவது வெகுஜன அமைப்புகளின் இயக்கத்தின்) மூலம் இந்த அரசை பணிய வைக்க முடியும் என்ற கருத்து வர்க்க சமரசக் கருத்தோடு மோதியது. அன்று உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தில் வலது திரிபு அணுகுமுறையை ஆபத்து என்று ஏற்றுக் கொண்ட சோவியத் கட்சியே நடைமுறையில் அந்த திரிபிற்கு வக்காலத்து வாங்கி புதிதாக விடுதலை அடைந்த நாடுகளில் உள்ள கம்யூனிஸ்ட் இயக்கங்களை நிலைகுலையச் செய்தது.

அன்று அரபு நாடுகளிலும். ஆசியாவிலும் சோவியத் புரட்சிக்குப் பிறகு பிறந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் சொந்த அனுபவத்தின் மூலம் பாடம் கற்க இயலாமல் போனதற்கு சோவியத் கட்சியின் நடைமுறை பெரிதும் காரணமாக இருந்தது. ஆசியாவில் வியட்நாம் கம்யூனிஸ்ட் இயக்கமும், இந்தியாவில் மார்க்சிஸ்ட் இயக்கமும் வலது திருத்தல்வாதத்திற்கு பலியாகாமல் சொந்த அனுபவங்களால் பாடம் கற்கும் ஆற்றலோடு மிஞ்சின. பல நாடுகளில் கம்யூனிஸ்ட் இயக்கம் சுருங்கின. இன்று நிலைமை வேறு.

முதலாளித்துவம் உருவாக்கும் நெருக்கடிகள் இன்று உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தை மார்க்சிச-லெனினிச வழியில் சரியான கோட்பாட்டை தேட வைத்துள்ளது. இந்தியாவிலும் இதே நெருக்கடி இருப்பதைக் காண்கிறோம். தொழில் வளர்ச்சிக்கு இடிமுழக்கம் செய்யும் அந்நிய முதலீட்டின் போலித்தனத்தை ஸ்ரீபெரும்புதூர் தொழில் வளாகம் காட்டிக் கொண்டே இருக்கிறது. பால் விலை உயர்வு விவசாயியின் வாழ்க்கை தரத்தை ஒரு மில்லி மீட்டர் கூட உயர்த்தப் போவதில்லை என்பது தெரிவிக்கிறது. மாட்டுத் தீவன விலையாகவும், மாடு வாங்க வாங்கிய கடனுக்கு வட்டியாகவும் அந்த உயர்வு போய்விடும்.

முன்நாட்களில் அன்ஸ்கில்டு லேபர்தான் காசுவலாக இருந்தது. இன்று நிர்வாகிகளைத் தவிர பேராசிரியர்கள், விஞ்ஞானிகள், மருத்துவர்கள், என்ஜினியர்கள் எல்லாமே காண்ட்ராக்ட் காசுவுல் லேபர் ஆக்கப்படுகின்றனர். உழைக்கும் விவசாயிகளின் வறுமையும், அறிவாற்றலையும், உடல் உழைப்பையும் சார்ந்து நிற்கும் பெரும் திரள் மக்களின் உத்தரவாதமற்ற வேலை வாய்ப்புக்களும், இவைகளெல்லாம் சமூக கொந்தளிப்பின் காரணிகளாக ஆகிவருகின்றன. இத்தகைய சூழலில் பூர்சுவா கருத்தோட்டங்கள் பாட்டாளி வர்க்கத்தை பிளவுபடுத்தியிருப்பதை காண்கிறோம். வர்க்கப் பார்வையற்ற அரசியலின் ஆபத்தை உணர்த்த வேண்டியிருக்கிறது. மார்க்சிசம் கற்க வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது. மார்க்சிச-லெனினிச அணுகுமுறையை பாட்டாளி வர்க்கத்தின் போராட்ட இயக்கத்தோடு அனுபவப் படிப்பிணையாக இணைக்க வேண்டியிருக்கிறது.

வலது, இடது திரிபுகளை கடந்து வந்த மார்க்சிஸ்ட் இயக்கம் இந்தப் பணியை செய்ய உறுதி பூண்டுள்ளது. ஏற்பட்ட பின்னடைவையும் சரி செய்யும். நம் மீது நம்பிக்கை வைத்திருக்கும் நல்ல உள்ளங்களுக்கு சொல்வோம்.

எங்களது வழிகாட்டி மார்க்சிசம்-லெனினிசமும் எங்களது அனுபவமாகும். எங்களுக்கு தவறுகளை திருத்தி முன்னேறும் ஆற்றலுண்டு. இந்திய பாட்டாளி வர்க்கத்தின் துணையோடு விவசாயி, பாட்டாளி ஒற்றுமையைக் கட்டி அரசியலில் நேர்மையையும் ஆட்சியில் ஜனநாயகத்தையும் பொருளாதாரத்தில் மக்கள் வாழ்வையும் பாதுகாக்கும் படையாக திகழ்வோம்.

இலங்கையும் – தேசிய இனப்பிரச்சனையும்!

இலங்கைத் தமிழர் பிரச்சனை இந்த நூற்றாண்டின் துயரம். அரசியல் அதிகாரம், மொழி, கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் சிங்கள மேலாதிக்க ஆட்சியாளர்களால் தமிழ் மக்களுக்கு உரிமை மறுக்கப்பட்டது.

முப்பது ஆண்டுகளுக்கு மேல் அமைதியான வழியில் உரிமைக்காகப் போராடியவர்கள் ஆயுதம் ஏந்தி போராட வேண்டிய நிலை உருவானதற்கு சிங்கள மேலாதிக்கம் தான் காரணம் என்பது மறுக்க முடியாத ஒன்று.

“சமரசம் என்பது கெட்ட சொல் என்று கருதக் கூடாது” என்று “மாவீரன் பகத்சிங்” ஒருமுறை குறிப்பிட்டார். புலிகளுக்கும் அரசுக்கும் உருவான சமரசத் தீர்வுகள் ஒவ்வொரு முறையும் தட்டி விடப்பட்ட உண்மையை மறைக்க முடியாது. அதுவும் இன்றைய துயரத்திற்கு முக்கியமான காரணமாகும்.

நேபாள மாவோயிஸ்ட், இதே காலத்தில் உலக சூழ்நிலையில் ஏற்பட்ட மாற்றத்தைக் கணக்கில் எடுத்து ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு, தேர்தலில் வெற்றி பெற்று – நேபாள மன்னனை நீக்கி ஜனநாயகத்தை உருவாக்கினார் கள்.

தமிழ் ஈழ வரலாறு, பண்டைய மன்னர்கள் பெருமை, சிங்களத்தை வென்ற பெருமைகள் இப்போதும் பேசப்பட்டு, எழுதப்பட்டு அதன் பின்னணியில் ஈழம் தவிர எந்த யோசனையையும் ஏற்காத இயக்கங்கள், அறிவு ஜீவிகள், எழுத்தாளர்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை தத்துவார்த்த ரீதியாக கடுமையாக விமர்சிக்கிறார்கள். நய்யாண்டி செய்கிறார்கள். இந்திய வர லாற்றில், தமிழக வரலாற்றில் அதிகமாக துப் பாக்கி ரவைகளை தாங்கிய கட்சி, சித்திரவதை களை சந்தித்த கட்சி. இதை விமர்சிக்கும் சாய்வு நாற்காலி அரசியல்வாதிகள் சற்று நிதானமாக உண்மைகளை பார்க்க வேண்டும். இலங்கைத் தமிழர் நலனில் சிபிஐ(எம்)-க்கு மற்றவர்களுக்கு உள்ள அக்கறை உண்டு என்பது அவர்களுக்கும் தெரியும். கடந்த 30 ஆண்டுகளில் தனக்குரிய பங்கை சிபிஐ(எம்) நிறைவேற்றியுள்ளது. மற்ற இயக்கங்கள் பேசுவது போல் சிபிஐ(எம்) பேசவில்லை என்பது உண்மை. எங்கள் எழுத்துக்கள், நாடாளுமன்ற விவாதங்களை கேட்டவர்கள், படித்தவர்கள் எந்த இடத்தில் தவறு என்று இன்று வரை சுட்டிக் காட்டவில்லை.

கார்ல் மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், ஸ்டாலின் காலத்து வரலாறுகளையும் தத்துவார்த்த விளக்கங்களையும் தாராளமாக எடுத்து வைக்கிறார்கள்.

“மார்க்சியத்தின் பால் அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கை நம்மை புல்லரிக்க செய்கிறது”. அவர்களுடைய மார்க்சிய பக்தி சுயநிர்ணய உரிமை பற்றி மட்டுமே என்பதும் நமக்குத் தெரியும். தங்களுக்கு உதவும் வார்த்தை களை பெருத்த நம்பிக்கையுடன் அள்ளி வீசுவார்கள்.

இந்த பிரச்சனையின் உண்மையான ஆர்வம் உள்ளவர்களுக்கு சில உண்மைகளை எடுத் துரைக்க வேண்டியுள்ளது:

அரசியல் போராட்டங்களில் வரலாறு ஓர் ஆயுதமாக பல இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. பலர் இதுகுறித்து தங்கள் கவலைகளை தெரிவித்துள்ளனர்.

பிரபல வரலாற்று அறிஞராகிய பேராசிரியர் ஏரிக் ஹோப்ஸ்பாம் தெரிவித்துள்ள கருத்து மிகவும் கவனிக்கத்தக்கது.

“ஹெராயின் என்ற போதைப் பொருளுக்குப் பொப்பி மலர் மூலப்பொருள். அதுபோல தேசியவாதக் கருத்துக்கள், இனக்குழு சார்ந்த கருத்துக்கள் மற்றும் அடிப்படை வாதங்கள் ஆகியவற்றிற்கு வரலாறு மூலப் பொருளாக அமைகிறது. இப்படியுமான கருத்துக்கு கடந்த காலம் என்பது ஓர் அத்தியாவசியமான கூறு. இக்கருத்துக்கு பொருத்தமான கடந்த காலம் இல்லை என்றால், அதனை வேண்டிய வகையில் ஆக்கிக் கொள்ள முடியும். எதையும் நியாயப்படுத்த கடந்த காலம் உதவுகின்றது. மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கு அதிகம் இல்லாத நிகழ்காலத்துக்கு ஒரு புகழ் பூத்த பின்னணியை கடந்த காலம் வழங்குகிறது”.

அவர் மேலும் கூறுகிறார்,

“வரலாறு எழுதும் தொழிலானது அணு ஆய்வுப் பௌதீகவியல் போல அல்லாது யாருக்கும் தீங்கு விளைவிக்காத ஒரு தொழில் என நான் எண்ணிப் பார்த்தேன். ஆனால், இத்தொழில் தீங்கு விளைவிக்கக் கூடியது என்பதை இப்போது உணர்கிறேன்”. பிரித்தானியாவில் ஐரிஷ் குடியரசுப் படையினர் ரசாயன உரத்தை வெடிகுண்டாக மாற்றுவதற்குப் பயன்படுத்திய தொழிற்சாலைகள் போல் எங்கள் படிப்பறைகள் குண்டு தொழிற்சாலைகளாக மாறக்கூடியவை. இந்நிலை எங்களை (வரலாறு எழுதுவோரை) இருவகையில் பாதிக்கிறது.

ஒன்று, வரலாற்று உண்மைகளை எடுத்துரைக்கும் பொறுப்பு எமக்கு இருப்பதைப் பொதுவாக உணர்ந்து கொள்வது.

இரண்டாவதாக, அரசியல் தத்துவ நோக்கங்களுக்காக வரலாறு தவறாகப் பயன்படுத்தப்படுவதைக் கண்டிக்கும் பொறுப்பு எமக்கு இருப்பதை சிறப்பாக உணர்ந்து கொள்வது.

“உலகம் இன்றைய நிலையை எப்படி அடைந்தது என்பதை விளங்க வைப்பதில் வரலாறு முன்னேற்றம் கண்டுள்ளது என்பது பேராசிரியர் ஏரிக் ஹோப்ஸ்பாம் கருத்தாகும்”.

தற்போது காணப்படும் அரசியல் நிலைக்கு அடிகோலிய தமிழர் உரிமைப் போராட்டம் இன்றைய உலகில் ஏற்றுக் கொள்ளப்பட்ட மனித உரிமைகளின் அடிப்படையில் தீர்க்கப்பட வேண்டியது. இது அவர் அவர் வரலாற்றின் அடிப்படையில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனை ஆகாது.

இரண்டாவது உலக யுத்தத்திற்கு பின் உலகின் விடுதலை அடைந்த நாடுகளில் இன்று இனப்பிரச்சனை, மொழிப் பிரச்சனை, மதப் பிரச்சனை, ஏற்றத்தாழ்வுகள் போன்ற ஏராளமான பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் உள்ளது.

இந்தியாவில் இருந்து பாகிஸ்தானை பிரித்தது ஒரு விபத்து. இதை அன்று காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள் ஆதரித்தது உண்மை.

பாகிஸ்தான் கோரிக்கை பலம் பெற்றவுடன் சீக்கியர்கள் தனிநாடு கோரினர், இந்து மகாசபை இந்துராஷ்புரா என்ற கோஷத்தை முன்வைத்தன. தெற்கே திராவிட நாடு என்கிற கோரிக்கை உருவானது. பல மொழிகள், பல இனங்கள் கொண்ட மக்கள் மத்தியில் ஒற்றுமையை உருவாக்குவது என்பது கம்யூனிஸ்ட்டுகள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியது. 500-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்கள் மீண்டும் உருவாவது வளர்ச் சிக்கு உதவாது. இதுகுறித்து ,

கம்யூனிஸ்ட் இயக்கத்திலும் வலுவான வாதங்கள், பிரதிவாதங்கள் உருவானது மார்க்சிய ஆதாரங்கள் கொடுக்கப்பட்டது.

தென்னகத்தைப் பொருத்தவரை மொழியால் பிரிந்து (திராவிடம்) இனம் நாடு உருவாக்குவது.

சுயநிர்ணய உரிமை குறித்து திமுக தலைவர்கள் இன்று வைக்கும் வாதங்களை விட ஆயிரம் மடங்கு வாதங்கள், தத்துவார்த்த சான்றுகள், வரலாறு போன்றவற்றை திராவிட இயக்கம் வைத்தது. அன்று திமுக விடம் 60-க்கு மேற்பட்ட வார இதழ்கள் இருந்தது. ஒரு ஜனசக்தி அதற்கு எதிரானப் போராட்டத்தை நடத்தியது.

சோவியத் ஒன்றியம் உருவானபோது இதர சிறிய இன மக்களுக்கு நம்பிக்கை கொடுக்க வேண்டிய தேவை அன்றைய ரஷ்ய கம்யூனிஸ்டுகளுக்கு இருந்தது. அந்த சிறிய இன மக்கள் சாரிஸ்ட ரஷ்ய மேலாதிக்கத்தினால் ஒடுக்கப்பட்டு இருந்தனர். ஆகவே தான், தோழர் லெனின் சோவியத் அரசியல் சட்டத்தின் பிரிவு 17-ல் தேசிய குடியரசுகளுக்கு பிரிந்து போகும் உரிமை உண்டு என்று வடிவமைக்கப்பட்டது: சிலகாலம் யூகோஸ்லாவியாவின் அரசியல் சட்டத்தில் இருந்து பிறகு அது நீக்கப்பட்டுவிட்டது.

“சுயநிர்ணய உரிமை குறித்து குரல் கொடுக்கும் நண்பர்கள் மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் என்று முடித்து விடுகிறார்கள். அவர்கள் வாதத்திற்கு அது உதவுகிறது”.

“1948 மக்கள் சீனத்தில் மாவோ தலைமையில் ஆட்சி அமைத்த கம்யூனிஸ்டுகள் தங்கள் அரசியல் சட்டத்தில் லெனின் பாதையை பின்பற்றவில்லை. திபெத்தியர்களுக்கு தனி நாடு வேண்டும் என்ற தலாய் லாமா-வின் கோரிக்கையை மக்கள் சீனம் ஏற்கவில்லை. அவருடைய மடத்தை சார்ந்த பஞ்சன் லாமா சீன நிலை சரி என்று சீனாவில் இருந்துவிட்டார்”.

சீன கம்யூனிஸ்ட் கட்சியில் இதுகுறித்து 1942 காலங்களில் விவாதம் தொடங்கிவிட்டது. பல பிரச்சனைகளுக்கு மார்க்ஸ், லெனின் உரைகளில் இருந்து மேற்கோள் காட்டி பல தோழர்கள் பேசினர்.

அந்த விவாதத்திற்கு பதில் உரைக்கும் போது தோழர் மாவோ கூறுகிறார்:

இப்போதும் கூட சிலர் மார்க்சிய-லெனினிய எழுத்தாளர்கள் அவையிலிருந்து சில மேற்கோள்களை எடுத்துச் சொல்லி அவைகளே அனைத்து தீங்குகளையும் எளிதாக தீர்க்கவல்லது என்று கருதுகின்றனர். அறியாமையில் உழலும் அத்தகையோர் தான் மார்க்சிசம்-லெனினிசத்தை ஒரு வகையான சமயகோட்பாடாக கருதுகின்றனர். அவர்களிடம் மழுப்பல் எதுவுமில்லாமல் தெளிவாகச் சொல்லிட வேண்டும்.

“உங்கள் கோட்பாடு எந்தப் பயனுமற்றது நம்முடைய கொள்கை வறட்டுச் சிந்தாந்தமல்ல; செயலுக்கான வழிகாட்டி என மார்க்ஸ், லெனின் மற்றும் ஸ்டாலின் திரும்பத் திரும்ப வலியுறுத்தியுள்ளனர். அத்தகைய சிறப்புமிக்க மிகமிக முக்கியமான வழிகாட்டுதலை இந்த மனிதர்கள் மறந்துவிடுகிறார்கள்”.

சுயநிர்ணய உரிமைக்காக வாதாடுகிறவர்கள் மார்க்ஸ், லெனின், ஸ்டாலினுடன் நின்றுவிடு வார்கள். தோழர் மாவோவிடம் நெருங்கமாட் டார்கள். இந்த வியாபாரிகள் தேவைப்பட்டால் மாவோ – கம்யூனிஸ்ட் அல்ல என்றும் எழுதுவார் கள். உலக வரலாற்றில் இயற்கையை புரிந்து கொள்ள  நிக்கோலஸ் கோபர்நிக்கஸ், கலிலியோ போன்றவர்கள் எடுத்த முயற்சிக்கு மேல் புதிய கண்டுபிடிப்புக்களை ஐசக் நியூட்டன் கண்டு பிடித்தவுடன், மற்றவர்களை ஐசக் நியூட்டன் நிராகரிக்கவில்லை. மாறாக 1676-ல் ஐசக் நியூட்டன் ராபர்ட் ஹீக்குக்கு எழுதிய கடிதத்தில்  எனக்கு முன்னோடியாக இருந்த பேரறி வாளர்களின் தோள்களின் மீது நின்று தான் என்னால் முன்னோக்கி பார்க்க முடிகிறது என்று கூறினார்.  இன்றைய உலக நிலைகளை புரிந்து கொள்ள திட்டவட்டமான நிலைமைகள் குறித்து திட்ட வட்டமான பகுப்பாய்வை அடிப்படையாகக் கொண்டு இருக்க வேண்டும் மார்க்சிய-லெனி னியத்தின் மீற முடியாத கருவியாக இக்கோட் பாடு கருதப்படுகிறது. இதைத்தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) பின்பற்றுகிறது.

எந்த அரசும், முதலாளித்துவ அரசாகவோ, சோசலிச அரசாகவோ இருந்தாலும், பிரிவினையை கொண்டுவரும் வழிமுறைகளுக்கான அடிப்படை விதியினை எடுத்து விளம்பியதில்லை: அப்படிச் செய்யும் என எதிர்பார்க்கவும் இயலாது. ஆப்ரகாம் லிங்கன் சொன்னது போல் எந்த அரசும் தானே கலைந்து (கரைந்து) போவதற்கான வழி வகுப்பதில்லை.

எதற்காக இந்த நண்பர்கள் சிபிஐ (எம்) ஐ தாக்குகிறார்கள். இந்தியாவில் சிபிஐ, சிபிஐ(எம்-எல்), சிபிஐ(எம்) ஆகிய அனைவரும் இலங்கை இனப்பிரச்சனை குறித்து ஒரே நிலை எடுத்துள்ளது. உலகில் எந்த கம்யூனிஸ்ட் கட்சியும் இலங்கையில் பிரிவினை கோருவதும் ஈழம் அமைவதும் தேவை என்று கூறவில்லை என்பது புரிந்தும், சிபிஐ(எம்) கட்சியை விமர்சிக்கும் இவர்களுக்கு ஓர் அரசியல் நோக்கம் இருக்கிறது. அந்த நோக்கம் நிறைவேறாது…

“தொழிலாளிகளிடையே சமூக-ஜனநாயகவாத (கம்யூனிச) உணர்வு இருந்திருக்க முடியாது என்று சொன்னோம். அது வெளியிலிருந்துதான் அவர்களுக்கு கொண்டுவரப்பட வேண்டும். பாட்டாளி வர்க்கம் தனது சொந்த முயற்சிகள் மூலமாகத் தொழிற்சங்க உணர்வு மட்டுமே அதாவது தொழிற் சங்கங்களில் ஒன்றுபடுவது, முதலாளிகளை எதிர்த்துப் போராடுவது, இன்றியமையாமையாத தொழிலாளர் சட்டங்களை நிறைவேற்றுமாறு அரசாங்கத்தைக் கட்டாயப்படுத்த முயல்வது, முதலியவற்றின் இன்றியமையாமைப் பற்றிய துணிவு மட்டுமே – வளர்த்துக்கொள்ள முடிகிறது என்று எல்லா நாடுகளின் வரலாறு புலப்படுத்துகிறது. ஆனால் சோஷலிசத்தின் கொள்கை, மெய்யறிவுவகைப்பட்ட, வரலாறு வழிப்பட்ட, பொருளாதார வகைப்பட்ட கொள்கைகளிலிருந்து வளர்ந்ததாகும். சொத்துள்ள வர்க்கங்களின் பிரதி நிதிகள், அறிவுத்துறையினர், அவற்றை வகுத்து விளக்கினர். நவீன விஞ்ஞான சோசலிஸத்தின் மூலவர்களான மார்க்சும், எங்கெல்சும் முதலாளி வர்க்கப் போக்கான படிப்பாளிப் பகுதியினரைச் சேர்ந்தவர்கள்” – லெனின் – என்ன செய்ய வேண்டும் என்ற நூலிலிருந்து.

உனக்கு மலைகளும் தலைவணங்கும் நதிகளும் வழிவிடும்

நூல் அறிமுகம் மாவோ – தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் – தொகுதி 5, 6

கம்யூனிஸ்டுகளின் முன் எத்தகைய பிரச்சனைக்கும் தீர்வும் வழியும் உண்டு

(மாவோ)

மக்கள் சீனத்தில் சோஷலிச புரட்சி கால கட்டம் எவ்வாறு இருந்தது என்பதைப் பற்றியும், சோஷலிசத்தை எவ்வாறு நிர்ணயிப்பது என்பது பற்றிய மாவோவின் கருத்துக்கள் தொகுதி ஐந்தில் முன் வைக்கப்படு கின்றன. முதல் ப்ளீனக் கூட்டத்தில் மாவோ ஆற்றிய உரையுடன் இத்தொகுதி துவங்குகிறது. முதல் இரண்டு கட்டுரைகள் வாழ்த்துச் செய்திகளாக உள்ளன. தொகுதி ஐந்தில் முக்கியமான கட்டுரையாக வருவது 1950ல் விவசாய சீர்திருத்தங்கள் தொடர்பான கட்டுரைகள் நிறைய உள்ளன. விவசாய அமைப்புகளைக் கட்டுதல், வர்க்க உணர்வை ஊட்டுதல் போன்றவற்றிற்கு அழுத்தம் தரப்பட்டுள்ளது.

புரட்சிக்குப்பின் பொருளாதார கட்டமைப்பு

ஏழை விவசாயிகள் அதிக எண்ணிக்கையில் உள்ள நாட்டில், அரசு அவர்களுக்கு கடன் உதவி செய்தல் விவசாயிகள் நிலத்தை அரசுக்கு விட்டுக்கொடுப்பதன் மூலம் ஏற்படும் இழப்பை அரசு ஈடுசெய்தல் போன்ற நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வது அவசியம் என்று மாவோ வலியுறுத்தியுள்ளார். அதே போன்று, வேலையில்லா திண்டாட்டத்தை குறைக்க, ஒழிக்க, தொழில் மற்றும் வணிகத் துறைகளில் முறையான சீரமைப்பு செய்ய வேண்டும். வரி விதிப்பில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும். கல்வி முறையில் சீர்திருத்தங்கள் கொண்டுவர வேண்டும். கடவுள்தான் மனிதனை உருவாக்கி னான் என்று கூறினால், கூறிவிட்டு போகட்டும் நாம் கூறுவோம் மனிதன் குரங்கிலிருந்து வந்தவன் என்று. நாட்டிலுள்ள சிந்தனையாளர் களில் பலர் முதியவர்கள். அவர்கள் நமது கட்சி யையும், மக்கள் அரசையும் ஆதரிக்கின்ற வரை நாமும் அவர்களுக்கு வேண்டிய உதவியை செய் வோம். அதுபோன்று மக்கள் தொகையில் கணிசமாக உள்ள தேசிய சிறுபான்மை இன மக்களுடைய ஒற்றுமையை கட்டுதல் அவசியம். இவற்றையெல்லாம் செய்யாமல், புரட்சி வந்த வுடன் அனைத்து துறைகளிலும் மாற்றம் வந்து விடாது. சோஷலிச கட்டமைப்பை கட்டுவது அவ்வளவு எளிதானதல்ல என விளக்குகிறார். மற்றும் எதிர்புரட்சியாளர்களை எவ்வாறு எதிர்கொள்வது, புரட்சியின் பலன்களை எப்படி தக்கவைத்துக்கொள்வது, மேம்படுத்துவது என்றும் மாவோ நிறைய எழுதியுள்ளார். இப் பகுதியில் மக்கள் சீன எதிர்புரட்சி நடைபெற்ற காலம் சூழல் ஆகியவற்றை புரிந்துகொள்ள பெரிதும் உதவுகின்றன.

மாவோ ஒரு சிறந்த புரட்சியாளர் மட்டுமல்ல, கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர் என்ற பல பரிமாணங்கள் அவருக்கு உண்டு. ஒரு திரைப் படத்தை எப்படி விமர்சன கண்ணோட்டத் துடன் அணுக வேண்டும் என்பதற்கு மே 1951ல் `ஆசூனின் வாழ்க்கை வரலாறு என்ற திரைப் படத்தை பற்றிய அவரது சிறிய கட்டுரை சான் றாகும். அதில் வரலாறு பற்றிய அவரது பார்வை குறிப்பிடத்தக்கதாகும். வரலாறு என்பது பழையதை தூக்கி எறிந்துவிட்டு புதிய தடத்தில் முன் நகர்வதல்ல, மாறாக, எல்லாவித பிரயத் தனங்களையும் செய்து பழையதை அப்படியே பாதுகாப்பதன் மூலமே வரலாறு நகர்கின்றது என சில எழுத்தாளர்கள் கருத்தை கூறிவிட்டு, வரலாற்றை எப்படி பார்க்க வேண்டும் என்று சுட்டிக்காட்டுகிறார். வரலாறு முன்னேறுகிறது என்பதற்கு அடையாளம் தூக்கி எறிந்தே ஆக வேண்டிய பிற்போக்குவாத நிலப்பிரபுத்துவ ஆட்சியாளர்களைத் தூக்கியெறியும் குறிக் கோளுடன் வர்க்க போராட்டத்தை முன்னெடுத் துச் செல்வது அல்ல. மாறாக, ஒடுக்கப்பட்டவர் களின் வர்க்கப் போராட்டத்தை மறுதலிப்பதும், நிலப்பிரபுத்துவ ஆட்சியாளர்களிடம் சரணாகதி அடைவதே வரலாறாகும் என்று வாதிடுகிறார்கள்,. இது தவறு என மாவோ சுட்டிக்காட்டு கிறார். வரலாற்றை ஆராயும்பொழுது, தர்க்க ரீதியான விமர்சனங்களை எழுப்ப வேண்டும். பிற்போக்கு தத்துவங்களிடம் சரணாகதி அடையக் கூடாது.

ஊழல்களை ஒழிக்க என்ன செய்ய வேண்டும்? ஊழல் சிறியதோ, பெரியதோ, எதுவாக இருப் பினும் களைய வேண்டும். மிகப்பெரிய ஊழலில் ஈடுபடுவோர் மீது கடும்  நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறிய அளவில் தவறு செய்தவர்களை மறு உருவாக்கம் செய்வதன் மூலம் மீண்டும் தவறு செய்வதை தடுக்க முடியும். அதன் மூல மாகத்தான் முதலாளித்துவ வர்க்கத்தால் அரிக் கப்படும் அபாயத்திலிருந்து கட்சி உறுப்பினர் களை காப்பாற்ற இயலும் என்று மாவோ 1952ல் எழுதியது இன்று மிகவும் பொருத்தமானதாகும். சமீபத்தில் நடைபெற்று முடிந்த சீன கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில்  ஊழல் மிகப்பெரிய விவாதப் பொருளாக இருந்துள்ளது என்பது கவனிக்கத் தக்கது. லஞ்சம், வரி ஏய்ப்பு, பொதுச் சொத்தை திருடுவது, அரசு வேலைகளுக்கான ஒப்பந்தங் களை ஏய்ப்பது, பொருளாதாரம் குறித்த தகவல் களை திருடுவது போன்ற மக்கள் விரோத செயல் களில் ஈடுபடுவோருக்கு எதிராக வலுவான போராட்டங்கள் நடைபெற வேண்டும். ஐந்து தீமைகளுக்கு எதிரான போராட்டம் என்பதன் கீழ் நிறைய ஆலோசனைகளை முன்வைக்கிரார். குறிப்பாக, ஊக வணிகத்தை அழித்து ஒழித்தால் தான் முதலாளித்துவ வர்க்கம் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்படும்படி செய்ய இயலும் என்கிறார்.

தனியார்துறையை பொறுத்தவரை, அரசு வரையறுத்துள்ள எல்லைகளுக்கு உட்பட்டு தனியார் தொழில்களை வளர்க்கலாம். காலப் போக்கில் தனியார் வணிகத்தைப் படிப்படியாக குறைக்க வேண்டும் என்று தனியார் முதலீட்டுக்கு லாப விகித உச்ச அளவை நிர்ணயித்து, சிறிது லாபம் ஈட்ட ஏதுவாக வழி செய்யலாம். ஆனால் அதுவே கொள்ளை லாபமாக இருந்துவிடக் கூடாது. வரி ஏய்ப்பு செய்தவர்களை கட்டாயமாக வரி செலுத்த அனுமதிப்பது இல்லையெனில் சொத்து பறிமுதல் செய்து அரசுக்கும் மக்களுக்கும் ஏற்படும் பெரும் பொருளாதார இழப்பு களை ஈடு செய்ய இயலுமென்கிறார்.

திபெத் பற்றி மாவோ

தற்போது, இந்திய தலைநகரில் மற்றும் சில வடகிழக்கு மாநிலங்களில் திபெத்திய மக்களின் போராட்டங்கள் – தீக்குளிப்பு உள்ளிட்டவை நடைபெற்று வருவதைக் காண்கிறோம். 1952ம் ஆண்டு திபெத் பற்றிய சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை அந்த பிரச்சனைகளின் பின்னணியை புரிந்துகொள்ள உதவும். திபெத் ஒரு வித்தி யாசமான தேசிய சிறுபான்மை இன மக்களைக் கொண்ட பூமி என்பதை சீனா உணர்ந்துள்ளது. அம்மக்களின் ஆதரவைப் பெற வேண்டுமெனில், வரவு-செலவிற்கு திட்டமிடுவது, ராணுவத்தின் தேவைகளை பூர்த்தி செய்வது, அம்மக்களை வென்றெடுக்கும் அடிப்படையாக இருக்கட்டும். தலாயையும் அங்குள்ள உயர்மட்டக்குழுவில் உள்ள பெரும்பான்மையை வென்றெடுக்க வேண் டும் எனக் குறிப்பிட்டுள்ளார். தவிர, இந்தியா வுடன் வணிக உறவுகளை ஏற்படுத்தி வணிகப் பொருட்களை கொண்டு செல்வது, திபெத்திய மக்களின் வாழ்க்கைத் தரம் கீழே போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் சுட்டிக் காட்டியுள்ஐர். மாவோ இதை எழுதி (1952) 50 ஆண்டுகள் கழிந்துவிட்டன. சீன ராணுவத்தைக் கண்டு திபெத்தியர்களிடம் ஒரு அச்சமிருப்பதாக பொதுக் கருத்து நிலவுகிறது. திபெத்திய மக்களின் ஆதரவும் இல்லை என்று அப்பொழுதே குறிப் பிடப்பட்டுள்ளது. தலாய் லாமாவின் எச்சரிக்கை பற்றியும் மாவோ சுட்டிக் காட்டியுள்ளார். இன்றுவரை தீர்க்கப்படாத சூடான பிரச்சனை யாக உள்ளது.

இளைஞர் சங்கம்

வாலிபர் சங்கம் கட்சி சாராமல் செயல்பட வேண்டுமென மாவோ வலியுறுத்துகிறார். தனியாக இயங்குவது மட்டுமின்றி, சுதந்திரமாக செயல்பட வேண்டுமென்கிறார். வாலிபர் சங்கம் தனது பணிகளில் இளமையின் குணநலன்களை கணக்கில் கொள்ள வேண்டும். வாலிபர் சங்கம், கட்சியின் மையத் திட்டங்களுடன் தனது செயல் பாடுகளை ஒருங்கிணைத்துக்கொண்டு செயல்பட வேண்டும்.

கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ் செயல்படும் வாலிபர் சங்கம், சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும். தொழிற்சாலைகள், வயல்கள், ராணுவப் பிரிவு கள், பள்ளி, கல்லூரி, பலகலைக்கழகங்கள் என இளைஞர் இல்லாமல் வெற்றிஈட்ட முடியாது. சீனாவில் சோஷலிசத்தை கட்டுவதில் இளைஞர் பங்குபற்றி மாவோ அழுத்தமாக கருத்துக்களை முன்வைக்கிறார். சோஷலிச கட்டுமானத்திற் கான பணிகளை செய்ய ஆய்வுகளை மேற் கொள்ள வேண்டியுள்ளது. அனுபவம் வாய்ந்த மூத்தவர்களுடன் இளைஞர்களை ஒன் றிணைத்து தலைமைதாங்கிச் செல்வது எப்படி என்பதை அறிந்துகொள்ள வேண்டியுள்ளது. 14 – 20க்கு உட்பட்ட இளைஞர்கள் கல்வி பயில் வதுடன் வேலை செய்கின்றனர். இளமை பருவம் உடல்  வளர்ச்சிக்கான பருவம் என்பதை கவனத் தில் கொள்ள வேண்டும். முதியோரிடமிருந்து, நிறைய கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. தமது பருவத்திற்கேற்ப கண்ட நேர விளையாட்டு, மனமகிழ் நடவடிக்கைகளில் ஈடுபடாவிட்டால், அவர்கள் மகிழ்ச்சியுடன் இருக்க முடியாது. காதல், திருமணம் ஆகியவை இல்லையெனில் இளமை என்பதன் பொருள் என்ன என மாவோ வினவுகிறார். உடல்நலம், கல்வி, வேலைகளில் வெற்றி பெற இளைஞர்கள் முயல வேண்டும். மனமகிழ்வு, ஓய்வு, தூக்கம் மிகவும் முக்கியம். மூத்த தோழர்களுக்கு, இளம் தலைமுறையை காக்கும் கடமை உள்ளது.

தலைவர்கள் புரட்சிகரப் பணிகளில் ஈடுபடும் போது, அவர்களின் நடவடிக்கைகள் எவ்வாறு இருக்கின்றதோ, அதனடிப்படையில்தான் அவர் கள் மக்களின் மதிப்பையும் நம்பிக்கையையும் பெறுகின்றனர். ஒரு இளைஞன் இயக்கத்தில் புதிய பொறுப்பை ஏற்கும்போது, விமர்சனங்கள் ஏற்படும். பெரிய மரியாதையும் இருக்காது. வெளிப்படையாக கருத்துக்களை சொல்ல இடமில்லாமல், கிசுகிசுக்கள் பரவும். எனவே, முழுமையான ஜனநாயகத்தை நோக்கிச் செல்வது, எல்லா விஷயங்களிலும் எச்சரிக்கை யாக இருப்பது நல்லது என மாவோ இளைஞர் கள் செயல்பட வேண்டிய விதம் பற்றி நிறையவே எழுதியுள்ளார். இந்த கட்டுரை வாலிபர் சங்கத் தோழர்களுக்கு மிகவும் பயனிளிக்கும் என்பதில் ஐயமில்லை.

தொகுதி ஐந்தில் நிறைய கட்டுரைகள் பொரு ளாதாரம் சம்பந்தப்பட்டவை. குறிப்பாக விவ சாயத்துறையில் மேற்கொள்ள வேண்டிய சீர் திருத்தங்கள், கூட்டுறவுத்துறைகள் செயல்பட வேண்டிய விதம் பற்றி மாவோவின் கருத்துக்கள் இன்றைய இந்திய சூழலுடன் பொருத்திப்பார்க்க இயலும். தமது விவசாயத்தை தனியார் சொத்து என்ற நிலையிலிருந்து கூட்டுறவுத்துறை சொத்து என்ற அமைப்புக்கு கொண்டுவர வேண்டு மெனில் விவசாயிகளை அதற்கு தயார்படுத்த வேண்டியுள்ளது.

முதலாளித்துவ சிந்தனை கட்சிக்குள் இருப் பதை எதிர்த்து போராட வேண்டுமென வலி யுறுத்தும் மாவோ, அது எளிதானதல்ல என் கிறார். ஏனெனில் முதலாளித்துவம் மிகவும் கவன மாக தனது துப்பாக்கி ரவைகளை மக்களை நோக்கி பாய்ச்சுகிறது. அந்த ரவைகள் கரடுமுர டானவை அல்ல. மாறாக பூப்பந்தைப்போல் மென்மையான ரவைகள். சோஷலிசத்தின் வெற்றியை உறுதிப்படுத்த வேண்டுமானால், கட்சிக்குள் இருக்கின்ற வலது சந்தர்ப்பவாத சிந்தனைகளை, முதலாளித்துவ சிந்தனைகளை எதிர்த்துப் போராட வேண்டும். முந்தைய தொகுப்புகளில் வெளியிட்டதைப் போல, இதிலும் அகநிலைவாதத்தை எதிர்த்து போராட வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.

அரசு முதலாளித்துவம்

சீன சோஷலிச கட்டமைப்பு – சோவியத் யூனியனில் நடைபெற்றதிலிருந்து மாறுபட்டது. முதலாளித்துவம் சோஷலிச கட்டுமானத்திற்கு உதவுமா என்ற கேள்வி எழும். 1953ல் எழுதிய கட் டுரையில், முதலாலித்துவத்திலிருந்து சோஷலிச கட்டத்திற்கு மாற்றத்தைக் கொண்டுவரும் ஒரே வழி அரசு முதலாளித்துவம் என்கிறார் மாவோ. தனியார் தொழில் மற்றும் வணிகத்தை அரசு முதலாளித்துவத்தின் மூலம் சோஷலிச கட்டத் திற்கு கொண்டு செல்ல முடியும் என்றும், அதற்கு மூன்று திட்டங்கள் உள்ளன என்றும் கூறுகிறார்.

 1. அரசு – தனியார் கூட்டு நிர்வாகம்
 2. பொருட் களை உற்பத்தி செய்வதற்கான ஆணைகளை தனியார் தொழிற்சாலைகளுக்கு வழங்குதல்
 3. அதற்கான மூலப் பொருட்களை அரசே வழங்கி, உற்பத்தி செய்யப்பட்ட பொருளை (அதிகபட்ச பொருளை) அரசே எடுத்துக்கொள்ளுதல். அரசு முதலாளித்துவ பொருளாதாரத்தில் லாபம் எவ்வாறு பிரிக்கப்பட வேண்டும் என்பதைக் கூட மாவோ விளக்குகிறார்.

வருமானவரி 34.5 சதம், நலநிதி 15 சதம், தொடர் சேமநிதி 30 சதம். முதலாளிகளுக்கு லாபம் 20.5 சதம். எது அவசியமோ, எது சாத் தியமோ அதன் அடிப்படையில்தான் அரசு முத லாளித்துவம் அமைக்கப்பட வேண்டும் என் கிறார். தேசத்தின் தொழில்மயத்தை முதலில் சோஷலிச கட்டத்துக்கு கொண்டுவருவது, விவசாயம், வணிகம் என அனைத்தையும் அதை நோக்கி கொண்டு செல்வது அவசியம். இதை உடனடியாக சாதிக்க முடியாது. பல ஐந்தாண்டு திட்டங்கள் பிடிக்கலாம் என்கிறார்.

எது தேசபக்தி?

பிற்போக்குவாதத்தை விமர்சிக்கையில் மூன்று வகையான தேசபக்தியைப் பற்றி மாவோ விளக்குகிறார்.

 1. உண்மையான தேசபக்தி
 2. போலி தேச பக்தி
 3. அரைகுறை ஊசலாட்ட தேசபக்தி. ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பவர்கள் பிற்போக்கு வாதிகளாக இருந்தாலும் அவர்கள் உண்மை யான தேசபக்தி கொண்டவர்கள் என்கிறார்.

(தற்போதைய சீனத் தலைமை ஏகாதிபத்தியம் என்ற சொல்லையே பயன்படுத்தாத சூழலில், அவர்களின் தேசபக்தி எப்படிப்பட்டது என்ற கேள்வி நம் மனதில் எழுகிறது.  போலி தேசபக்தர் கள் அழகான முகமூடி அணிந்திருப்பார்கள் என்றும், அரைகுறை ஊசலாட்ட தேசபக்தி உள்ளவர்கள் சமயத்திற்கேற்ப வேஷம் போடு வார்கள் என்றும் விளக்கும் மாவோ, அன்றைய சூழலில் சீனாவில் பெரும்பான்மையோர் உண் மையான தேசபக்தர்கள் என்கிறார். அவரது விளக்கத்தின் அடிப்படையில், இன்றுள்ளவர் களின் தேசபக்தி விவாதப் பொருளாகிறது என்பதை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.)

சோஷலிச கட்டுமானத்தில் கூட்டுறவு அமைப்புகளுக்கு முக்கிய பங்கு உண்டு என்பதை பல இடங்களில் வலியுறுத்துகிறார். அதிலும் கிராமப்புறங்களில் விவசாயிகளின் கூட்டுறவு சங்கங்கள் நிறுவுவது மிகவும் அவசியம். ஏனெ னில் விவசாயிகள் உற்பத்தியில் சாதனை புரிய அத்தகைய அமைப்பு தேவை. நிலவுடைமைக்கும் உற்பத்தி சக்திகளுக்கும் இடையேயான முரண் பாட்டை தீர்ப்பது, நிலம் யார் கையில் இருக்க வேண்டும் என்ற கேள்விக்கு விடை தேடுவது உடனடியாக செய்யப்பட வேண்டும் என்கிறார். அதற்கு அழகான பழமொழியை மேற்கோள் காட்டுகிறார். மீன்வலையின் தலைக்கயிற்றை இழு, மொத்த வளையும் திறந்து கொள்ளும் முக்கிய கண்ணியை கையில் வைத்துக்கொண் டால், மற்ற அனைத்தும் தானாகவே அதனதன் இடத்தில் பொருந்திவிடும். முக்கிய கண்ணி என்பது மையமான கருப்பொருள்-அதாவது சோஷலிசத்துக்கும், முதலாளித்துவத்துக்கும் இடையேயான முரண்பாடு. இதற்கான படிப் படியான தீர்வுதான் மையக் கருப்பொருள். முக்கிய கண்ணி, அதைக் கைப்பற்றினால் மற் றவை அதற்கேற்ப பொருந்திவிடும். சொத் துடமை தொடர்பாக ஸ்டாலினின் கருத்துக் களை மேற்கோள் காட்டுகிறார்.

1955ம் ஆண்டிலேயே மூன்றாவது உலகப் போர் என மூண்டால், அதற்கு முழு பொறுப்பு அமெரிக்காவே என மாவோ சாடுகிறார். அணு ஆயுதங்களை பயன்படுத்தி மற்ற நாடுகளை மிரட்டுவதை கடுமையாக கண்டிக்கிறார்.

தொகுதி ஐந்தில் நிறைய பக்கங்கள் சோஷலிச கட்டுமான பணியைச் செய்வது பற்றிய கருத்துக் களை கொண்டவை. சோஷலிச நிர்மாணத்தில் ஊழியர்களின் பங்கைப் பற்றி குறிப்பிடுகையில், கிராமம், நகரம் என வேறுபாடின்றி அனைத்துப் பகுதிகளிலும் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.  `ஐயோ நதியினில் வெள்ளம், கரை யிலோ நெருப்பு என்று பயந்தால் ஊழியர்களை உருவாக்க முடியாது. ஊழியர்களை உருவாக்கி, சங்கங்களை வலுவாக கட்ட வேண்டும். தரம் தான் முக்கியம். எண்ணிக்கைகளை பூதாகரமாக காட்டுவதால் பயனில்லை என்ற கொள்கையை கறாராக துவக்கத்திலிருந்தே கடைப்பிடிக்க வேண்டும் கடந்தகால அனுபவங்களின் அடிப் படையில் திட்டமிட வேண்டும். தவறான ஆலோசனைகளை விமர்சிக்க வேண் டும். விமர்சனம் பற்றிய விளக்கத்தில், விமர்சனம் கூர்மையாக இருக்க வேண்டும் என்கிறார் மாவோ. கூர்மையாக விமர்சனம் வைத்தால், சக தோழர்களுடனான உறவு சகஜமாக இருக்கும். எருதுக்கு இரண்டு கொம்புகள் உண்டு. எதற்கு? சண்டையிடுவதற்கு, தற்காப்புக்கு, தாக்குவதற்கு… கொம்புகளை உள்ளே இழுத்துக்கொள்ளாதீர் கள்… கொம்பு தேவை. அது மார்க்சிய தத்துவத் திற்கு உடன்பாடான ஒன்றுதான். மார்க்சியத்தின் தனித்துவமான கோட்பாடுகளில் விமர்சனமும், சுய விமர்சனமும் ஒன்று… (பக்கம் 239)

கிராமப்புறத்தில் சோஷலிசத்தை கட்டமைப் பதில் உள்ள பிரச்சனைகளைப் பற்றி நிறைய கட்டுரைகள் உள்ளன. குறிப்பாக, கூட்டுறவு சங்க செயல்பாடு பற்றி ஏராளமான விபரங்களை, பொருத்தமான எடுத்துக்காட்டுகள், அனுபவங் கள் மூலம் விளக்கியுள்ளார். யார், யாரை சங்க பதவிகளில் அமர்த்துவது, அரசு பண்ணைகள் செயல்பட வேண்டிய விதம் பற்றிய கருத்துக்கள் மிகவும் பயனுள்ளவை. நூற்றுக்கணக்கான பக்கங் களில் கிராமங்களில் சோஷலிச கட்டுமானம் பற்றி எழுதியுள்ள மாவோ, பெண்களின் பங் களிப்பை அழுத்தமாக குறிப்பிட்டுள்ளார். ஒரு வலிமையான சோஷலிச சமூகத்தை கட்டும் நமது நோக்கம் நிறைவேற வேண்டுமெனில் நமது சமூகத்தின் பெண்கள் உழைப்பில் ஈடுபடுவது மிக முக்கியமானதாகும். `சமமான வேலைக்கு சமமான ஊதியம் என்ற கோட்பாடு ஆண்-பெண் இருபாலாருக்கும் பொதுவானது. ஒட்டு மொத்த சமுதாயமும் சோஷலிச கட்டத்தை எட்டும்போதுதான் உண்மையான பாலியல் சமத்துவம் என்பது எட்டப்படும்.

கிராமப்புறங்களில் கைவினைக் கலைஞர்கள் அதிகம். கைவினைக் கலையை சோஷலிசமாக்கல் பற்றிய பத்து அம்ச கட்டுரை மிகவும் மிக்கிய மானது. அதையடுத்து முக்கியமான பத்து உறவு கள் என்ற கட்டுரையில் (1956) சீனப் பொருளா தாரம் எதிர்கொண்ட பத்து பிரச்சனைகள் பற்றிய விரிவாக குறிப்பிட்டுள்ளார். சோவியத் யூனியனில் சோஷலிச கட்டுமானம் மேற் கொண்ட பொழுது அவர்கள் செய்த தவறுகள் தடுக்கப்பட வேண்டிய விதத்தையும் சுட்டிக் காட்டுகிறார். சோவியத் யூனியனில் கடைப் பிடித்த வழிகள் விவசாயிகளை கசக்கிப் பிழிவ தாக இருந்தன என விமர்சிக்கையில் கோழிக்கு தீனி போடாமல் நாம் சொல்லும் பொழுதெல் லாம் முட்டைபோட வைக்க முடியுமா, குதி ரையை மேய விடாமல் ஏறி அமர்ந்ததும் காற் றாய் பறக்க வேண்டும் என்றால் முடியுமா? இது என்ன கொள்கை என வினவுகிறார். இந்த கட்டுரை முழுவதும் முக்கியமான விஷயங்களை விவாதிக்கின்றன.

கட்சியை பலப்படுத்துவோம் என்ற கட்டு ரையில் முந்தைய தொகுதிகளில் சுட்டிக்காட்டப் பட்ட பிரச்சனைகளை மீண்டும் விவாதத்திற்கு உட்படுத்தியுள்ளார். குறிப்பாக அகநிலை தவறு கள் பற்றி எழுதுகையில் ஸ்டாலின் ஏன் சில தவறுகளை செய்தார் என்ற கேள்வியை எழுப்பி, பல விஷயங்களை ஸ்டாலின் யதார்த்த நிலையில் இருந்து அணுகாமல், அகநிலையிலிருந்து அணு கியதே காரணம் என்ற பரிசீலனையை முன்வைக்கிறார். சோவியத் யூனியனிடமிருந்து கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது என்றும், அங்கே நன்மைகள் அதிகம், தவறுகள் குறைவு என்றும் மாவோ கூறுகிறார். ஏழாவது மத்தியக் குழு தேர்தல்,  நம்பர்கள் பற்றியும் அகில சுவாரசிய மாக விளக்கியுள்ளார். (பக்கம் 455, 456, 457) நகைச்சுவையுடன் பழமொழிகளை பயன்படுத்தி வலுவாக தன் கருத்துக்களை முன்வைக்கிறார்.

கட்சி வரலாற்றில் சில அனுபவங்கள் (1956) என்ற கட்டுரை அருமையான கட்டுரை சீன வர லாறும், கட்சி வரலாறும் பின்னிப் பிணைந்துள்ளதையும், கட்சி பிரச்சனைகளை சந்தித்த விதமும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. அதை யடுத்த கட்டுரையில் டாக்டர் சன்யாட் சென் ஆற்றிய பணி, அவருக்கு சூட்டிய புகழாரம் பற்றியதாகும். அந்த அற்புதமான மனிதரைப் பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்பு இதன் மூலம் கிட்டுகிறது.

அதையடுத்த கட்டுரைகளில் சோவியத் யூனியன் மற்றும் ஹங்கேரியில் நடைபெற்ற நிகழ்வுகளில் சீனாவின் நிலைபாட்டை விளக்கு கிறார். ஸ்டாலின் ஆதரவாளர்களோ, அவரது எதிரிகளாக மாறியதும், ஹங்கேரியில் அதிக ஜனநாயகம் பாசிசத்தை ஒழிப்பதாக கூறிக் கொண்டே, சோஷலிசம் உயர்ந்த தத்துவம் அல்ல என்ற கருத்து முன்வைக்கப்படுவதை மாவோ விமர்சிக்கிறார். நூறு பூக்கள் மல ரட்டும் நூறு சிந்தனைகள் மலரட்டும் என்ற கோஷத்தைக் கூட தவறாக திரித்து, சோஷலிசத் திற்கெதிராக பயன்படுத்தியதை சாடுகிறார். எந்த ஒரு கோஷமும், எதிர்புரட்சியாளர்களால் எவ் வாறு பயன்படுத்தப்படுமென்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டு. (இந்த கோஷத்திற்கு வர்க்க குணாம்சம் கிடையாது. ஆனால் பாட்டாளி வர்க்கம், இதை தனக்கு சாதகமாக திருப்பிக் கொள்ள முடியும்.) மார்க்சிய இயக்கவியல் பற்றிய ஸ்டாலின், லெனின் மற்றும் க்ளாஷ் வைட்சினின்  கருத்துக்களை விவாதம் செய் கிறார். முரண்பாடுகள், எதிர்மறை கூறுகள், ஒத்தியல்பு பற்றிய விளக்கம் மார்க்சிய தத்துவத்தை ஆராய, விவாதிக்க உதவும்.

மக்களிடையே நிலவும் முரண்பாடுகளை எவ்வாறு களைவது? தொழிலதிபர்கள், வணிகர் கள், மாணவர்கள், அறிவு ஜீவிகள் தொடர்பான கொள்கைகள் மூலம் மாவோ எத்தகைய அணுகு முறை வேண்டுமென சுட்டிக்காட்டுகிறார். மார்க்சிய தத்துவத்தை இந்த உலகம் அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்ளவில்லை. தொடக்கத்தில் பல திசைகளிலிருந்தும் கடும் தாக்குதல்களை சந்தித்தது. அது ஒரு நச்சுப்பயிர் என்றார்கள். இப்போதும் அப்படித்தான்… சோசலிச நாடு களிலும் மார்க்சியத்தை ஏற்காதவர்களும், எதிர்ப் பாளர்களும் இப்போதும் இருக்கின்றார்கள் என்பது வெளிச்சமான உண்மை. (பக்கம் 600)

பிரச்சார உத்திகளை வகுப்பது எப்படி? என்ற கட்டுரையும் மிகவும் பயனுள்ள கட்டுரை யாகும். இதில் அறிவு ஜீவிகளை எவ்வாறு கம்யூனிஸ்ட் கட்சி அணுக வேண்டுமென்று மாவோ விவரிக்கிறார். சீனாவில் ஏறத்தாழ ஐம்பது லட்சம் அறிவு ஜீவிகள் இருப்பார்கள் என 1957ல் அவர் குறிப்பிட்டு, அவர்கள் மக்களுக்கு தொண்டு செய்ய உளப்பூர்வமாக விரும்புபவர்கள் மட்டுமே சோஷலிச அரசை விரும்பாதவர்கள், கசப்புடன் சந்தேகக் கண் ணுடன் பார்ப்பவர்கள். ஏகாதிபத்தியமா, தேசமா என்ற கோள்வி எழுகையில் தாய் நாட்டிற்காக நிற்பார்கள். ஆனால் சிலர் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை எதிர்ப்பவர்களாக உள்ளனர். இந்த அறிவு ஜீவிகளில் பத்து சதம் பேர் மார்க் சியத்தை, கம்யூனிசத்தை புரிந்து கொண்டவர்கள் என்றும், அவர்கள்தான் மாபெரும் இயக்க சக்தியாக, கருத்து பெட்டகமாக இருக்கிறார்கள் என்றும் கூறுகிறார். மார்க்சியத்தை பயின்றாலும் பலருக்கும் உறுதியான நிலை எடுக்க முடிவதில்லை.

மதப்பற்று உள்ளவர்களில் பலர் தேசியவாதி கள் மார்க்சிஸ்டுகளை கடவுள் மறுப்பாளர்கள் என்று பார்க்கிறார்கள். கடவுள் மறுப்பாளர்கள் என்று பார்க்கிறார்கள். மார்க்சியத்தை ஏற்றுக் கொண்டே ஆகவேண்டுமென வற்புறுத்த முடி யுமா? களப்பணியில் ஈடுபடும் தோழர்கள் யதார்த்தத்தை புரிந்துகொண்டு மார்க்சியத்தை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்கிறார் மாவோ. அதுமட்டுமின்றி, அறிவு ஜீவிகளை மறு உருவாக்கம் செய்வது எளிதா என்ற கேள்வி எழாமல் இல்லை. அறிவு ஜீவிகள் ஆசிரியர்களாக, எழுத்தாளர்களாக, கலைஞர் களாக, விஞ்ஞானிகளாக, தொழில்நுட்ப வல் லுனர்களாக பணிபுரிகின்றனர். இவர்களில் பலருக்கும் முதலாளித்துவ சிந்தனை இருக்கும். மார்க்சிய நூல்களை கரைத்து குடித்ததாகக் கூட சிலர் நினைக்கலாம். சிலர் புத்தகப் புழுக்கள் மார்க்சியம் படித்திருப்பார்கள். ஆனால், நடை முறை வாழ்க்கையில் சிக்கல்கள், போராட்டங்கள் வரும்பொழுது, இவர்கள் உழைக்கும் வர்க்கத் துக்கும், விவசாயிகளுக்கும் முற்றிலும் எதிரான நிலை எடுப்பார்கள். கற்றல் என்பது ஒரு தொடர் நிகழ்வு. அறிவு ஜீவிகளுக்கும் மறு உருவாக்கம் தேவையென மாவோ வற்புறுத்துகிறார். மாறும் சமூக சூழலுக்கேற்ப, மார்க்சிஸ்டுகள் தொடர்ந்து கற்க வேண்டும். கற்பதை நிறுத்தவே கூடாது. புத்தகங்களிலிருந்தும், அதற்கு அப்பாற்பட்டும் கம்யூனிஸ்டுகள் கற்றுக்கொள்ள நிறைய உள்ளன. ஒரு நல்ல ஆசிரியனின் முதல் தகுதி ஒரு நல்ல மாணவனாக இருப்பதுதான் என்கிறார் மாவோ.

அறிவு ஜீவிகள் கிராமங்களுக்கும், தொழிற் சாலைகளுக்கும் சென்று, விவசாயிகள், தொழி லாளர்களுடன் கலந்து பழகி வாழவேண்டும். சில அறிவு ஜீவிகள் எப்பொழுதாவது கிராமத் திற்கு, தொழிற்சாலைக்கு செல்வார்கள் – சுற் றுலா செல்வதைப்போல – பல்லக்கில் அமர்ந்து தோட்டத்தை பார்வையிடுவதால் என்ன பலன்? என்ற கேள்வி, நம் கட்சியில் உள்ள அறிவு ஜீவி களுக்கும் பொருந்தும். புத்தக அறிவுடன் அனுபவ அறிவும் இணையும்போதுதான் அறிவு முதுமை பெறுகிறது (பக்கம் 625)  அறிவு ஜீவிகளுக்கு மாவோ வேண்டுகோள் விடுக்கிறார்: அனைவருக்கும் பொதுவான தேச பக்தியின் மொழி, சோஷலிச சமூக அமைப்பின் மொழி, கம்யூனிச உலகப் பார்வையின் மொழி என்பதை…. கற்றுக்கொள்ள முடியும் வெறும் புத்தக அறிவு போதாது, மக்களுடன் நெருங்கி உறவாடுங்கள். வர்க்கப் போராட்டமும், அன்றாட வாழ்க்கை அனுபவமும் மட்டுமே மார்க்சியத்தை கிரகிக்க வழி செய்யும்….

முந்தைய தொகுப்புகளில் நெறிப்படுத்தும் இயக்கம் பற்றி எழுதியுள்ளதைப் போலவே, இந்தத் தொகுதியிலும், அணுகுமுறை, கட்சி தலைமை, ஊழியர் செயல்பாடு, நெறிப்படுத்து தல் பற்றிய கருத்துக்கள் பரவலாக உள்ளதைக் காணமுடிகிறது. குறிப்பிட வேண்டியது, கருத்துக் களை எப்படி உரக்கக் கூறுவது பற்றிய விவாத மாகும். கதவுகளை அகலத் திறந்து வைக்கலாமா? அல்லது கட்டுப்பாடு விதிக்கலாமா? என்ற கேள்விகளை எழுப்பி, மாவோ விடையும் அளிக் கிறார். இதோ இரண்டு வழிகளில் தேசத்தை நடத்திடலாம். அகலமாக திறந்து வைப்பது என்றால், மக்கள் தங்கள் கருத்துக்களை ஒளிவு மறைவின்றி வெளிப்படுத்த சுதந்திரம் அளிப்பது என்றாகும். தவறான ஆபத்தான கருத்துக்களைக் கண்டு அஞ்சாமல் இருப்பதும் சுதந்திரமே. விமர்சனம், எதிர் விமர்சனத்தை வெளிப்படுத்த விவாதங்களை தூண்டிவிடும் சுதந்திரம் அளிக் கப்பட வேண்டும். தவறான கருத்துக்களை மக்கள் மீது திணிப்பது சுதந்திரமாகாது. கட்டுப்பாடு விதிப்பது என்றால் தடை விதிப்பது. கருத்துக் களை வெளிப்படுத்தினால், ஒரே அடியில் அடித்து வீழ்த்தி விடுவது இது அணுகுமுறை முரண்பாடுகளை தீர்க்க உதவாது. மாறாக, முரண்பாடுகளை கூர்மையாக்கி, முற்றச்செய்யும். (அறிவு ஜீவிகளுடன் கம்யூனிஸ்டுகள், கட்சிகள் இணைந்து நிற்க வேண்டுமானால், அவர்களது சிந்தனையில் மாற்றத்தைக் கொண்டுவர விரும்பி னால் கதவுகளை அகலத் திறந்து வைக்கும் கொள்கையே சிறந்தது என்ற பதிலை அளிக்கிறார்.

கதவுகளை அகலமாக திறக்கையில் விமர்சனங் கள் எழும். மார்க்சியம் என்பது விஞ்ஞான உண்மை. விமர்சனங்களைக் கண்டு அது அஞ்சுவ தில்லை. எந்த விமர்சனத்தாலும் மார்க்சியம் அழிந்துவிடாது… தீய விஷயங்கள் எப்போதும் இவ்வுலகில் இருந்துகொண்டுதானிருக்கும். அது குறித்து கவலைப்படவோ, அஞ்சவோ அவசியம் இல்லை. அஞ்சிப்பயனில்லை என்று அழுத்த மாக மாவோ குறிப்பிடுகிறார்.

கம்யூனிஸ்டுகள் எளிமையான வாழ்க்கை, கடும் உழைப்பு, சாமானிய மக்களுடன் இணைந்த வாழ்க்கை என்பதை கடைப்பிடிக்க வேண்டு மென மாவோ வலியுறுத்துகிறார். சீனாவில் புரட்சிக்குப் பின், பல தோழர்களின் புரட்சிகர சிந்தனை தேய்ந்து வருவதை சுட்டிக்காட்டுகிறார். ஒரு கம்யூனிஸ்டுக்கு ஊசலாட்டம் என்பது கூடாது. புரட்சிகர உணர்வு மழுங்க ஆரம்பித் தால், அதற்கான காரணங்களை கண்டறிந்து, தன்னை கூர்மைப்படுத்திக் கொண்டு சரியான தடத்தில் நடைபோட வேண்டியது கம்யூ னிஸ்டின் கடமை என்கிறார். மூத்த தோழர் களைப் பற்றிக் குறிப்பிடுகையில் அவர்களின் அளப்பரிய தியாகங்களை மக்கள் பாராட்டும் அதே நேரத்தில், தவறு செய்தால் ஏற்க முடியாது என்பதையும் கூறுகிறார். உயர் பதவி, மூப்பு என்பதை நம்பி செயல்படக் கூடாது. புதிய ஊழியர்களிடம் கற்றுக்கொள்ள நிறைய விஷ யங்கள் உள்ளன என்பதை மூத்த தோழர்கள் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.

உட்கட்சி ஒற்றுமையை கட்டுவதற்கான இயக்க வியல் அணுகுமுறை பற்றிய கட்டுரையுடன் ஐந்தாம் தொகுதி நிறைவுறுகிறது. அதையடுத்து பிற்போக்கு வாதிகள் காகிதப் புலிகள் என்று முந்தைய தொகுதிகளில் வெளிப்படுத்தப்பட்ட இருபக்க கட்டுரை இணைக்கப்பட்டுள்ளது. உட் கட்சி ஒற்றுமை கட்டுதல் தொடர்பாக வறட்டு வாதம், தவறான சிந்தனைகள் எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும் என்பது விளக்கப் பட்டுள்ளது. கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்துவிட் டால் ஒருவர் ஞானியாகி விடுவார் என்று அர்த்த மல்ல. மார்க்சிய – லெனினிய தத்துவத்திற்கு குந்தகம் ஏற்படாதவரை, அடுத்தவர்கள் கருத்தை ஏற்பது சரி. தவறு செய்யும் தோழருடன் மார்க் சியத்தை சரியாக புரிந்துகொள்ளும் போராட் டத்தை நடத்த வேண்டும். ஒரு தோழரை இழந்து விடாமல் இருக்க அவருடன் இணைந்து நிற்க வேண்டும். தத்துவமும், இணக்கமும் இணைந்து செல்வதுமே மார்க்சிய தத்துவம். அது எதிர்மறை கூறுகளின் ஒருங்கிணைவு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சரியான அணுகுமுறை மூலம்தான் தவறான சிந்தனைகளிலிருந்து வெளி வர முடியும் என்று முடிக்கிறார் மாவோ.

தொகுதி ஐந்தை தமிழாக்கம் செய்திருப்பவர் மு. இக்பால் அகமது. சிறப்பாக மொழியாக்கம் செய்துள்ளார்.

தொகுதி ஐந்து அலைகள் வெளியீட்டகம்
பக்கங்கள்  –  760
விலை ரூ. 480

கற்பு-கருத்து சுதந்திரம்-கலாச்சாரம்

“சுதந்திரம் என்றால் நான் எதைக் கூறுகிறேன்? தேக சம்பந்தப்பட்ட சுதந்திரம் என்று சொன்னால் பிறர் சந்தோஷத்திற்குப் பாதகம் ஏற்படாதபடி நான் எதை செய்யவும் எனக்கு உரிமை வேண்டும். அறிவு சம்பந்தப்பட்ட சுதந்திரம் என்று சொன்னால், சரியாக நினைக்கும் சுதந்திரமும், தவறாக நினைக்கும் சுதந்திரமும் எனக்கு வேண்டும். சத்தியத்தை அடைவதற்கு சாதனமாயிருப்பது சிந்தனை. நமக்கு சத்தியம் இன்னதென்று தெரிந்திருந்தால், நாம் சிந்திக்க வேண்டிய அவசியமே இல்லை”.

– இங்கர்ஸால்

சமீபத்தில், திரைப்படக் கலைஞர் குஷ்பு, பெண்களது பாலியல் நடவடிக்கைகள் குறித்து தெரிவித்த கருத்து பலத்த சர்ச்சையை உருவாக்கியது. பின்னர் சுகாசினி தெரிவித்த கருத்து மேலும் பிரச்சனையை ஏற்படுத்தியது. எனினும், தற்போது, குஷ்புவும், சுகாசினியும் என்ன சொன்னார்கள்? அது சரியா? தப்பா? என்ற தளத்திலிருந்து, அப்படி செய்ய அவர்களுக்கு உரிமை உண்டா? என்கிற கருத்துரிமை தளத்திற்கு விவாதம், தமிழகத்தில் வந்திருக்கிறது.

நடந்தது என்ன?

இந்தியா டுடே பத்திரிக்கை, பாலியல் வாழ்க்கை குறித்த ஆய்வை, பெருநகரங்களில் உள்ள ஆண்களிடமும், பெண்களிடமும் செய்து, அறிக்கையாய் பிரசுரித்து, அந்தந்த நகரங்களில் உள்ள , பல துறைகளைச் சார்ந்த 10 பேரிடம் கருத்து கேட்டு வெளியிட்டிருந்தது. தமிழகத்தில் 10 பேர் கருத்து சொல்லியிருந்தார்கள். அதில் 7 பேர் பெண்கள். அதில் குஷ்புவும் ஒருவர். 10 பேருமே இளைஞர்களின், இளம் பெண்களின் பாலியல் வாழ்க்கை குறித்தும், சிலர் அந்த ஆய்வின் ஒரு பகுதியாக இருந்த, திருமணத்திற்கு முன் பாலியல் உறவு கொள்ளுதல் குறித்தும் பேசியிருந்தார்கள். ஆய்வின்படி, அனைத்துப் பெருநகரங்களிலும் பெண்களிடயே இவ்வழக்கம் இருக்கிறது என்பதும், மற்ற பல நகரங்களை ஒப்பீடு செய்யும் போது சென்னையில் குறைவு என்பதும் தெரிய வந்தது. ஒரு பக்கம் நிறைய குஷ்பு பேசியிருந்தார். அதைப்படித்துப் பார்க்கும் போது, வரைமுறை யற்ற பாலுறவை அல்லது பாலியல் அராஜகத்தை அவர் ஆதரித்தாகத் தெரியவில்லை என்பதையும், திருமணத்தைப் பற்றி நிச்சயமாக இருந்தால், சேர்ந்து வாழலாம் அல்லது உறவு கொள்ளலாம்; அதிலும் கூட, எய்ட்ஸ் வராமலும், கர்ப்பமடையாமல் பார்த்துக் கொள்ளும் படியும் கூறியிருந்தார் என்பதையும் புரிந்து கொள்ள முடியும். ஆனால், தமிழகத்தில் யார் தான் இப்படி செய்யவில்லை என்று குஷ்பு பொதுமைபடுத்திருக்க வேண்டியதில்லை என்பதும் பரவலான கருத்தாக முன் வந்தது. பொதுவாக, எய்ட்ஸ் தடுப்பு விளம்பரங்களின் தொனியும் இப்படியாகவே இருப்பதைக் காண முடியும். அதாவது, பாதுகாப்பான உறவு (Safe Sex) என்பதே, அவ்விளம்பரங்களில் பிரதானமாக முன் வைக்கப்படுகிறது. எப்படியுமே நடந்து கொண்டுள்ள இவ்விஷயத்தை, கூடாது என்பதால் மட்டும் தடுத்து நிறுத்த முடியாது; எனவே கவனமாக இரு என்று சொல்வது ஒன்றுதான் வழி என்று அவர்கள் நினைத்திருக்கக் கூடும்.

சரி இந்த வாதத்தை ஏற்றக் கொள்ள வேண்டும் என்கிற அவசியமில்லை. மாற்றுக்கருத்து சொல்லலாம்; எதிர்க்கலாம்; கண்டனமும் தெரிவிக்கலாம். இக்கருத்தை மாபாதகம் என ஒருவர் கருதினால் மக்களின் கருத்தை திரட்டுவதற்கு இயக்கமும் நடத்தலாம்.

கலாச்சார அடிப்படைவாதம்

ஒரு சிவில் சமூகத்தில் எதிர்ப்பு தெரிவிப்பதற்கு ஒரு எழுதப்பட்ட நாகரீக எல்லை இருக்கிறது. ஆனால், குஷ்புவின் கருத்துக்களுக்கான எதிர்ப்பு எல்லை தாண்டியதாக இருந்தது. நடத்திய விதத்திலும், முன் வைத்த கோஷங்களிலும், அடிப்படைவாதிகளின் குரலின் சாயம் தெரிந்தது.

உதாரணமாக, இந்துத்துவ வகுப்பு வாதிகளை எடுத்துக்கொள்ளுங்கள். அவர்களது நடவடிக்கைகளைப் படிப்படியாகக் கவனித்தால், கீழ்க்கண்டவாறு இருப்பதைக்காண முடியும்.

 1. கருத்துருவாக்கம்
 2. அனைவராலும் அங்கீகரிக்கும் ஒரு விஷயத்தோடு இணைத்தல்
 3. அராஜகமாக நடத்தல்
 4. அதற்கு அப்பாற்பட்டுப் பார்க்கவிடாமல், ஒட்டு மொத்த சமூகத்தை, அந்த வட்டத்துக்குள் நிறுத்தி, ஆம் – இல்லை என்று சொல்ல நிர்பந்தப்படுத்தி, இல்லை என்று சொல்பவர்களை எதிரிகளாக்குதல்.

ராமஜென்ம பூமி விஷயத்தை எடுத்துக் கொள்வோம். அதுதான் ராமர் பிறந்த இடம் என்ற கருத்து முதலில் உருவாக்கப்பட்டது. அது உண்மையல்ல என்றாலும், அந்தக் கருத்து ஆழமாக உருவாக்கப் பட்டது. மத நம்பிக்கை என்கிற அங்கீகரிக்கப்பட்ட விஷயத்துடன் அது இணைக்கப்பட்டது. பாபர் மசூதி இடிப்பு, கரசேவை போன்ற அராஜக நடவடிக்கைகள் தொடர்ந்தன. மத நம்பிக்கை உளளவராகவும், அதே சமயம் மசூதி இடிப்பதை ஏற்காதவராகவும், ஒருவர் இருப்பது சாத்தியம். ஆனால், அடிப்படை வாதம் அதற்கு இடம் கொடுக்காது. மசூதி இடிப்பை ஆதரிப்பவர்கள் தான் மதநம்பிக்கை உடையவர்கள், இந்துக்கள், தேச பக்தர்கள் என்று குறிப்பான அடையாளங்களை அது உருவாக்கியது.

அதுபோல, இங்கு, குஷ்பு சொல்லாத ஒரு விஷயம் – அதாவது தமிழ் பெண்களுக்கு கற்பு இல்லை என்பது – சொல்லப்பட்டதான கருத்து உருவாக்கப்பட்டது. அது, தமிழ் கலாச்சாரம், பண் பாட்டோடு இணைக்கப்பட்டது. எதிர்ப்பு என்கிற பெயரில், குஷ்பு மும்பைக்குப் போ என்கிற கோஷம் உள்ளிட்ட அராஜக நடவடிக்கைகள் தொடர்ந்தன. ஒரு சகிப்புத் தன்மையற்ற சமூக சூழலுக்கு அடி கோலப்பட்டது. குஷ்பு சொன்னதை எதிர்ப்பவர்கள் தான், தமிழ் கலாச்சார காவலர்கள் என்ற நிலை நம் மீது திணிக்கப்பட்டது.

எது தமிழ் கலாச்சாரம்?

இந்தியக் கலாச்சாரம் மட்டும் பன்முகத் தன்மை கொண்டதல்ல. ஒரே மாநிலத்தில் கூட பன்முகக் கலாச்சாரத்தைப் பார்க்க முடியும். கலாச்சாரம் என்பது மனிதர்கள் வாழும் முறை தானே? உடை, உணவு, பழக்க வழக்கம், திருமண முறை பேச்சு எல்லாமே கலாச்சார அடையாளங்கள் தான். மாவட்டத்துக்கு மாவட்டம், மதத்துக்கு மதம், சாதிக்கு சாதி வேறுபடும். வர்க்க வேறுபாடும் கலாச்சாரத்திற்கு உண்டு. இந்த வேறுபாடுகளைக் கணக்கில் எடுக்காமல், ஒற்றைக் கலாச்சாரத்தை முன்னிறுத்துவது எப்படி சரியாக இருக்க முடியும்? பெரியப்பா, சித்தப்பாவை சம்பந்தியாக்கும் கலாச்சாரமும் உண்டு. மாமா, அத்தையை சம்பந்தியாக்கும் கலாச்சாரமும் உண்டு. இதில் எது சரி என்று எப்படி வாதிட முடியும்? (பார்க்கப் போனால், அறிவியல் ரீதியில், இரண்டுமே தவறு) நின்று, கை கூப்பி தொழுவது சரியா? மண்டியிட்டு குனிந்து தொழுவது சரியா என்றால் என்ன சொல்வது? (இல்லாத கடவுளை இருப்பதாக நினைத்துக் கொண்டிருப்பவர், எப்படி தொழுதால் என்ன என்றும் சொல்லலாம்) சைவம் நல்லதா? அசைவம் நல்லதா? இதற்கெல்லாம் பதில்கள் இல்லை. இவை அவரவர் வாழ்க்கை முறை, அவரவர் கலாச்சாரம் – அவ்வளவுதான்.

இதிலும் கருத்து வித்தியாசம் எழலாம். ஏன்? எதில் வேண்டுமானாலும் மாற்று கருத்து சொல்லலாம். வால்டேர் அழகாக சொல்லியிருக்கிறார் –

நீ சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும் நான் மறுக்கிறேன். ஆனால் அதைச் சொல்ல உனக்குள்ள உரிமைக்காக சாகும் வரை போராடுவேன்.

இங்கர்ஸால் இதே கருத்தை எதிர்மறையாக சற்று காட்டமாகக் கூறுகிறார் – … எவனொருவன் தனக்கென்று சில அறிவு சம்பந்தப்பட்ட உரிமைகள் – அதாவது எண்ண உரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன – வேண்டுமென்று பாத்தியங் கொண்டாடிக் கொண்டு அதே சமயத்தில் அதே உரிமைகளை மற்றவர்களுக்கு வழங்க மறுக்கிறானோ அவன் அயோக்கியன்; சுயநலக்காரன்; மிருகத் தன்மை வாய்ந்தவன். அவன், காட்டு மிராண்டியின் நிலைக்கு சமீபத்திலே வசிப்பவனாகிறான்.

ஆக, மாற்றுக் கருத்து சொல்லலாம் என்பது மட்டுமல்ல; சொல்வதற்கு உரிமை வேண்டும் என்பது தான் முக்கியம். நோபல் பரிசு பெற்ற அமர்த்தியாசென், சமீபத்தில் எழுதி வெளியிட்டுள்ள The Argumentative Indian (வாதிடும் இந்தியன்) என்ற நூல், தர்க்கம் செய்யும் இந்திய பாரம்பரியத்தை சுட்டிக் காட்டுகிறது. மன்னர்களின் கொலு மண்டபவங்களில் பட்டி மண்டபமும் இருக்கும். அங்கே வல்லுநர்களின் வாத பிரதிவாதங்களும் நடக்கும் என்பதையும் படித்திருக்கிறோம். இன்று வரை பட்டி மன்றங்கள் தொடர்கின்றன.

சீனப் புரட்சியின் தலைவர் மாவோ சொன்ன

“நூறு பூக்கள் மலரட்டும்
நூறு சிந்தனைகள் வளரட்டும்”

என்பதும், பல்வேறு கருத்துக்கள் வெளிப்பட வேண்டும் என்கிற அடிப்படையில் தான். பொதுக் கூட்ட மேடைகள் கூட அவரவர் நிலைபாட்டை விளக்கவும், மற்ற கட்சிகளின் / இயக்கங்களின் கருத்துக்களை ஆதரிக்கவும், நிராகரிக்கவும் பயன்படுகின்றன. பத்திரிக்கைகளில் வரும் வாசகர் கடிதங்களும் இந்த வழி இருப்பதை எடுத்துக்காட்டுகின்றன. தொலைக்காட்சி அலைவரிசைகளில் வரும் நேருக்கு நேர், விவாத மேடைகளும் இப்படித் தான். எனவே கருத்து சொல்லவும் உரிமை உண்டு; எதிர்க்கவும் உரிமை உண்டு.

அதற்காக, தீண்டாமை நியாயம் என்று மேடை போட்டு பேச முடியாது. பெண்ணைப் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்குவதில் தவறேதும் இல்லை என்று வாதிட முடியாது. ஒருவனைக் கொல்ல உரிமை உண்டு என்பது என் கருத்து என்று பகிரங்கமாகக் கூற முடியுமா?  இப்படிப்பட்ட விஷயங்களில் வாதிக்கும் எல்லை முடிந்து, சட்டங்களும் வந்து விட்டன. அதற்குப் பிறகு பேசினால், அது சட்டப்படி குற்றமாகிவிடும்.

இவ்வாறாக, பல கருத்துக்கள் மோதும் போது தான் பல பரிமாணங்களைப் புரிந்து கொள்ள முடியும், ஒரு நிலைபாட்டுக்கும் போக முடியும். ஒரு குறிப்பிட்ட கருத்தைக் கொண்டவரை மாற்ற வேண்டும் என்றால், துன்புறுத்தி மாற்ற முடியாது. வாதம் செய்து புரிய வைத்துத் தான் மாற்ற முடியும்.

ஸ்ரீராம் கே ஜெய் என்று இந்து அல்லாதவர்களை கோஷம் போட வைப்பதும், அல்லா ஹோ அக்பர் என்று முலீம் அல்லாதவர்களை சொல்ல வைப்பதும், மிரட்டினாலும் அடித்து உதைத்தாலும் சாத்தியம் தான். ஆனால், மனதில் உள்ளது மாறிவிடுமா? அவரவர் சாகும் வரை, ஆழமாய் அரியணை போட்டு அமர்ந்திருக்காதா? இதைத்தான், என் மனதை நான் மாற்றிக் கொண்டு விட்டேன் என்று ஒரு மனிதனை சொல்லுமாறு நீங்கள் செய்துவிடலாம். ஆனால், அவன் மட்டும் எப்பொழுதும் போல் ஒரே அபிப்பிராயம் உடையவனாகத்தான் இருக்கிறான். அவனை நெருப்பிலிட்டு கொளுத்துங்கள், ஆனால் அவனுடைய சாம்பல், முன்போல் ஒரே அபிப்பிராயத்தை கொண்டிருக்கும் என்கிறார் இங்கர்ஸால்.

கற்பு என்கிற ஆயுதம்

குஷ்பு கூறிய விஷயம் குறித்த விவாதத்தில் கற்பு அதிகம் அடிபட்டது. குஷ்பு சொன்னது, கற்புக்கு எதிரானது என்ற வாதமும், கற்பு பெண்ணை ஒடுக்குவதற்கான ஆயுதம், எனவே அது தேவையில்லை என்று ஓரிரு அமைப்புகள் கூறிய வாதமும் எதிரும் புதிருமாக முன் வைக்கப்பட்டன. வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், தனியுடமையைப் பாதுகாக்க, வாரிசு தேடி, தனக்கு மட்டுமே ஒரு பெண் மனைவியாக இருக்க வேண்டும் என்று உடமையாளனாக இருந்த ஆண் முடிவெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பாலியல் சுதந்திரம் இருபாலருக்கும் இருந்த நிலை மாறி, ஒரு சாரார் மீது திடீரென கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால், அவை நிறைவேறுவது கடினம். எனவே, தெய்வாம்சம், பத்தினித் தன்மை, கற்பு போன்ற கோட்பாடுகள் உருவாயின. அந்த அர்த்தத்தில் பார்த்தால், கற்பு பெண்ணை ஒடுக்குவதற்காக முன் வைக்கப்பட்ட ஆணாதிக்க ஒழுக்கவியல் சித்தாந்தம் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், காலம் மாறி, நாகரீக சமூகத்தில், வாழ்வியல் ஒழுங்கு முறைகள் தேவைப்படும் போது கற்பு என்பது ஒழுக்க நெறி என்ற அடிப்படையில் நீடிப்பது தேவையாக உள்ளது. அது இருபாலருக்கும் பொருந்த வேண்டும் என்று கேட்பது தான் பொருத்தமாக இருக்கும்.

கற்பு பெண்களைப் பொறுத்த வரை புனிதமான எல்லைக் கோடாகவும், ஆண்களைப் பொறுத்த வரை அலட்டிக் கொள்ளத் தேவையற்ற விஷயமாகவும் பார்க்கப்படுவதுதான் பாரபட்சமானது. இந்த இரட்டை அளவுகோல் கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டும். குஷ்புவின் கருத்தை எதிர்த்த இயக்கத்திற்குப் பின்புலமாக இருந்த இயக்குநர் தங்கர் பச்சான், எனது படங்களில் கற்புள்ள தமிழ் பெண்களைத் தான் காட்டுகிறேன் என்று சொல்லுகிறாரே தவிர, கற்புள்ள தமிழ் ஆண்களைத் தான் காட்டுகிறேன் என்று சொல்லவில்லை. அவரால் சொல்லவும் முடியாது. அவரது தென்றல், படக் கதாநாயகன், தினசரி ஒரு பெண்ணோடு உறவு வைப்பவன். அவனைக் காதலிக்கும் கதாநாயகியையும் அனுப்பப்பட்ட பெண்ணாக நினைத்து விட, அவள் கர்பமாகி ஒரு குழந்தையையும் பெற்று விடுகிறாள். ஆனால் கடைசி வரை, வேறு எவரையும் திருமணம் செய்யாமல் கற்போடு வாழ்கிறாள் என்பது தான் கதை. இப்படியாக இப்படத்தில் தமிழ் பண்பாடு காப்பாற்றப்படுகிறது. பாலியல் அராஜகவாதியான கதாநாயகனால் தமிழ் பண்பாடு எதுவும் ஆகவில்லை!! பரத்தையர் வீதி என்ற தனி வீதியை அனுமதித்த தமிழ் சமூகத்தின் மிச்ச சொச்சம் இன்னும் இருக்கலாம் என்றால் பெண்ணுக்கு மட்டும் தான் எல்லைக்கோடா? பண்பாட்டைக் காக்க வேண்டிய பொறுப்பு பெண்களுக்கு மட்டும் தானா? குஷ்புவுக்கு முன்னால் எத்தனையோ ஆண்கள் இது போன்ற கருத்துக்களைக் கூறியதே இல்லையா? இன்றைக்கும் சிவப்பு விளக்குப் பகுதிக்கு ஆண்கள் போகிறார்களே, அவர்களெல்லாம் திருமணத் துக்குப் பின் தான் போகிறார்களா? முன்னால் போகவில்லையா? அப்போது கலாச்சாரம் என்ன ஆனது? சரி, திருமணத்திற்குப் பின்னால் போனால், கலாச்சாரத்துக்கும் கற்புக்கும் பங்கம் ஏற்படாதா? எடுத்தால் கற்பு குறித்த ஒரே நிலைபாடு எடுக்க வேண்டியது தானே? ஆண் செய்தால் தப்பில்லை பெண் பேசினாலே தவறு என்றால் அது அறிவியல் பூர்வ நிலைபாடாக இருக்க முடியாது. பெண்கள் பாலியல் குறித்து பேசவே கூடாது என்பது அடிப்படை வாதமல்லவா?

குஷ்பு ஒன்றும் பெண்ணுரிமைப் போராளி அல்ல! அவர் கூறிய கருத்துக்கள் முற்போக்கும் அல்ல. அதே சமயம் பிற்போக்கும் அல்லவே? எந்த விஷயமும் கறுப்பாகவோ, வெள்ளையாக மட்டுமே இருப்பதல்ல. இரண்டுக்கும் இடையே சாம்பல் நிறமாகவும் இருக்கலாம். சில விஷயங்களைப் பற்றிப் பேசும் போது, ழுசநல ஹசநய என்று கூட சொல்லுவார்கள்.

மெகாத் தொடர்களில், வரிசையாக அத்தனை கதாநாயகர் களுக்கும் இரண்டு மனைவிகள், ஒரு உறவு இருக்கும் போது,  அதற்கு துரோகம் செய்து, மற்றொரு உறவை ஏற்படுத்துபவர் கற்பிழந்தவராக ஏன் ஆவதில்லை? ஆணாதிக்க கலாச்சாரம் தான் இதற்குக் காரணம். தனி உடமை பின்னணியில், உடமையாளர்கள் மத்தியில் தோன்றிய இந்தக் கலாச்சாரம் ஏன் உடமையற்றவர்களையும் கட்டுப்படுத்துகிறது?

மார்க்சியப் பார்வையில், பொருளாதார அதிவாரத்தின் மீது கட்டப்படுவதில் ஒன்று தான் கலாச்சாரம். அதிவாரத்தைக் கட்டுப்படுத்துபவர்கள் தான், மேல் கட்டுமானத்தையும் கட்டுப்படுத் துகிறார்கள். ஆளும் வர்க்கம், பெண்ணடிமை தனத்தை, தனது வர்க்கச் சுரண்டலுக்குப் பயன்படுத்துவதால், ஆணாதிக்கக் கலாச்சாரத்தைப் பாதுகாக்கிறது. அது தான் மேலாதிக்கம் செலுத்துகிற கலாச்சார மாகிறது. உழைப்பாளி மக்கள் அதைத் தன்வயப்படுத்திக் கொள்கிறார்கள்.

சுகாஸினி, குஷ்பு வை ஆதரித்து பேசியவுடன், அவரது சாதி அலசப்பட்டது. அவர், கைபர் கணவாய்க்குப் போக வேண்டும் என்று பேசப்பட்டது. பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதோர் பிரச்சனையாக இது மாறக் கூடும் என்று எச்சரிக்கை விடப்பட்டது. உண்மையிலேயே, சாதியத்தை தாங்கிப் பிடிக்கிற அதிவாரத்தின் ஒரு முக்கியப் பகுதியாகவும் கற்பு கோட்பாடு உள்ளது. சாதித் தூய்மை கெட்டுவிடக் கூடாது என்பதற்காகவும் கற்பு வலியுறுத்தப்பட்டது. எனவே, பார்ப்பனியத்திற்கும், கற்பு கருத்தியலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆனால் அந்தக் கற்பை கேள்வி கேட்டதாக சொல்லப்பட்ட குஷ்புவை சுகாஸினி ஆதரித்திருக்கிறார். பெரியார் வழி வந்ததாக கூறும் திருமாவளவனோ, அதைப் பெண்ணுக்கு மட்டும் உயர்த்திப் பிடிக்கிறார். தந்தை வழி உரிமை சார்ந்த ஆண் மேலாதிக்க தலைமைப் பண்பால் கட்டமைக்கப்பட்ட கருத்தியல் தான் கற்பு.

கற்பின் உள்ளடக்கம்

கற்பு என்பதன் உள்ளடக்கம் கூட, ஒவ்வொரு கால கட்டத்திலும் மாறி மாறித் தான் வந்திருக்கிறது. தமிழ் இலக்கியங்களில் தலை கற்பு, இடை கற்பு, கடை கற்பு என்கிற கருத்தியல்களைப் பார்க்க முடியும். கணவன் இறந்தவுடனேயே ஆதங்கத்தினால் இயல்பாய் உயிரை விடுதல் தலை கற்பாகவும், உடன்கட்டை ஏறி உயிர் போக்குதல் இடை கற்பாகவும், கைம்மை நோன்பு நோற்பது கடை கற்பாகவும் உருவகப்படுத்தப்படுகிறது. அதே சமயம், கைம்மை நோன்பு என்கிற கொடுமையை அனுபவிப்பதை விட, ஈமத் தீயில் இறப்பது நல்லது என்று பெண்கள் பாடிய வரிகளும் இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளன. மற்றொரு பெண்ணிடம் வாழ்ந்து திரும்பிய கோவலனை வெறுக்காது, அவன் மூலதனத்துக்காக சிலம்பையே எடுத்துக் கொடுத்த கண்ணகியும், தொழுநோயால் பீடிக்கப்பட்ட கணவனை தாசியிடம் கூடையில் சுமந்து சென்ற நளாயினியையும் கற்பரசிகள் என்று தமிழ் சமூகம் புகழ்ந்ததை மறந்து விட முடியாது. கற்புடைய மகளிர் கணவன் உடனுறையும் போது மட்டுமே தலைவாரி பூச்சூடினர். அவனைப் பிரிந்திருந்த பொழுது புனையாத ஓவியமாக இருந்துள்ளனர் என்றும் இலக்கியங்கள் கூறுகின்றன.

குழந்தைத் திருமணம் கூட, பெண்ணின் கற்பு நிலையை பாதுகாக்க என்றே கூறப்பட்டது.  அவளுக்கு பாலியல் சுதந்திரம் இருக்கக் கூடாது என்பது தான் இதன் பொருள். ஆணாதிக்க சமூகம், பெண்ணின் பாலியலை கட்டுப்படுத்த எவ்வளவு மெனக்கெட்டிருக்கிறது என்பது இக்கோட்பாடுகளைப் பார்த்தால் புரியும். கற்பு என்பதைப் பெண்களின் பெருமையாகவே தொல்காப்பியர் சித்தரிக்கிறார் என்றாலும், பழந்தமிழரின் வாழ்க்கையை களவு, கற்பு என்று இரு நிலைகளாகப் பிரிகிக்கிறார். திருமணத்துக்கு முன் ஆணும் பெண்ணும் உறவு கொள்வதைக் களவு வாழ்க்கை என்றும், கற்பு என்கிற வாழ்வியல் நெறி திருமணம் என்று சடங்கின் மூலம் தொடங்குகிறது என்றும் கூறுகிறார். அதாவது கற்பு நெறி என்பது திருமணம் செய்து கொண்ட பெண்களுக்கு மட்டுமே சொல்லப்பட்ட ஒன்றாக தொல்காப்பியர் காலத்திலிருந்து, பின்னர் அது மாறி மாறி, மணிமேகலை பிற நெஞ்சு புகாதவர் தான் கற்புடையவர் என்று கூறுகிறது.

பாரதி, பாரதிதாசன், புதுமை பித்தன், ராஜம் கிருஷ்ணன், வாசந்தி என்று பலரும் கற்பு கோட்பாடுகளைக் கேள்விக்குள்ளாக்கி யிருக்கிறார்கள். புதுமைப்பித்தன், பொருளாதாரத்தில் கற்பு அடிபட்டு போகிறது என்பதையும், அது மனம் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதையும் பொன்னகரம் கதையில் கூறுகிறார். மு.வரதராசனார் இதையே “எப்பொழுது எவனுடன் வாழ்கிறாளோ, அவனுக்கு துரோகம் செய்யாமலிருந்தால் போதும் அதுதான் கற்பு” என்கிறார்.

“கற்புநிலை யென்று சொல்ல வந்தார்
இருகட்சிக்கும் அஃது பொதுவில்
வைப்போம்”

(பெண்கள் விடுதலை விரும்பு – பாரதி)

... கற்பென்று பூச்சி காட்டும்
கழுதைகளை நிந்தனை செய்

– ஜீவா

…கற்பு நலந் தருமாயின் அதையிரு
பாலரும் கைக் கொள்வோம் – அது
காளையர்க்கில்லை கன்னியர்க் கென்றிடில்
கட்டுப்படுவோமா

– சாமி சிதம்பரனார்

கற்பு என்ற வார்த்தையும், அதைப்பயன்படுத்தும் முறையும் புரட்டானது. பெண்ணடிமை கொள்ள ஏற்படுத்திய வார்த்தை அது.

– பெரியார்

கற்பு என்பதை உடல் தூய்மையோடு பொருத்திப்பார்ப்பது சரியல்ல, மனத்தூய்மை தான் கற்பு என்கிற விளக்கமே ஏற்புடையதாக உள்ளது. மனதளவில் துரோகம் செய்ய விரும்பாத ஒரு பெண், உடல் அளவில் பலவந்தப்படுத்தப்பட்டால், அதில் அவளுடைய தவறு என்ன இருக்கிறது? அது அவளுடைய கற்பு நெறியை எப்படி பாதிக்கும்? நடந்தது விபத்து, தாக்குதல், பலாத்காரம், வன்முறை! அவள் விரும்பி நடந்ததல்லவே அது?

ஆயினும் பொதுவாகக் கற்பழிப்பு என்கிற வார்த்தை பிடிவாதமாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம், கற்பு உள்ள பெண்களை, கற்பிழந்தவர்களாக சித்தரிக்கிறோம். இது எப்பேர்ப் பட்ட அநியாயம்? இந்த நடவடிக்கையில் மனதறிந்து ஈடுபட்டதன் மூலம் அந்த ஆணின் கற்பு தானே அழிகிறது? எனவே அவன் தான் கற்பழிந்தவன் ஆகிறான். இதை மாற்றிக் கூறுவதன் மூலம் ஆணாதிக்க சித்தாந்தத்தின் பிரச்சாரகர்களாக நாம் மாறிப்போகிறோம்.

இப்போது குழந்தை திருமணம் சட்டத்தால் தடுக்கப்பட்டு, விதவை மறுமணம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. விவாகரத்தும் மறுமணமும் சட்டத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட விஷயமாக மாறிவிட்ட சூழலில், கற்பு என்பதன் பல உள்ளடக்கங்கள் அடிபட்டு போகின்றன. குஷ்பு சொன்னது தவறு என்றால், உச்ச நீதி மன்றம் சொல்வதும் தவறுதான். திருமணம் ஆகாமலேயே சேர்ந்து வாழ்வதை உச்ச நீதி மன்றம் அங்கீகரிக்கிறது. உச்ச நீதி மன்றம் முன் செருப்பும், துடைப்பமும் காட்டப்படுமா?

திருமாவளவன் ஒரு பேட்டியில் பெண்ணியவாதிகள் தம் வீட்டில் குழந்தைகள் வெளியே போகும் போது ஆணுறையைக் கையில் கொடுத்து எப்படி வேண்டுமானாலும் இருந்து விட்டு வா என்று அனுப்புவார்களா? எனக் கூறியிருக்கிறார். இதைவிட பெண்ணுரிமையைக் கொச்சைப்படுத்த முடியாது. பெரியார் ஒரு பெண்ணியவாதியாக இருந்தார். திருமாவளவனின் கேள்வி அவருக்கும் சேர்த்து தான் என்று எடுத்துக் கொள்ளலாமா?

பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் யாரும் யார் மீதும் திணிக்க முடியாது. அவற்றைக் காக்கிற போலீ வேலையை யாரும் எடுத்துக் கொள்ள வேண்டியதும் இல்லை. அப்படி எடுத்துக் கொள்பவர்கள் கூட, நமது பண்பாட்டின் நல்ல அம்சங்கள் நீர்த்துப் போகும் போது கவலைப்படுவதில்லை. பரிசம் தான் பழக்கமாக இருந்தது. இன்று, அந்த பண்பாடு சிதைந்து, உலகமய நுகர்வு கலாச்சாரத்தின் ஒத்துழைப்போடு வரதட்சணை எங்கும் பரவி நிற்கிறது. ஆனால் இவர்களது சொல்லாடல்களில் கணவன் வழிபாட்டு கருத்தியலுக்கு இடம் இருந்ததில்லை. இன்று அதுவும் சமகிருத மயமாக்கலில் சரிந்து கொண்டு வருகிறது. பழந்தமிழ் சமூகத்தில் பாலியல் வல்லுறவுக்கு குழந்தைகள் ஆளானதில்லை. இன்று ஆகிறார்கள். இவையெல்லாம் கலாச்சார சீரழிவு இல்லையா? வேலைக்கு செல்லும் பெண்களில் 10 சதம் தான் ஒழுக்கமானவர்கள் என்று சொல்லி, 90 சதம் உழைக்கும் பெண்களின் கற்பை விமர்சித்த சங்கராச்சாரியை எதிர்த்து எத்தனை செருப்புகள், துடைப்பங்கள் உயர்ந்தன?எத்தனையோ  வாழ்வியல் பிரச்சனைகள் அழுத்திக் கொண்டிருக்கும் போது முதலாளித்துவ ஊடகங்கள் பாலியல் பிரச்சனைகளை ஏலம் போட்டுக் கொண்டிருப்பதன் நோக்கம், வணிக நோக்கமேயன்றி வேறென்ன? உலகமயம் உருவாக்கும் கலாச்சாரம், நம்மை நுகர்வோராக மட்டுமே பார்க்கிறது. சமூகப் பொறுப்புணர்வு அதற்கு இல்லை. இந்த அம்சமே முக்கிய முன்னிறுத்தப்பட்டு  எதிர்க்கப்பட வேண்டும்.

எனவே, ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட சமூகத்தில் அகவாழ்விலும், புற வாழ்விலும் இருபாலருக்கும் சில கட்டுப்பாடுகள் தேவை என்பதில் எவ்வித பிரச்சனையும் இல்லை. ஆனால், புறவாழ்வின் விதிமுறைகளை அடிப்படையே அக வாழ்க்கைக்கு பொருத்தி விட முடியாது. குறிப்பாக அகவாழ்வின் ஒரு பகுதியான பாலியல் நடவடிக்கைகளை அரசு எட்டிப்பார்த்துக் கொண்டே இருக்கவும் முடியாது. அதனால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று பொருளல்ல. உதாரணமாக ஒருவரின் சம்மதம் அதில் ஈடுபடுத்துவது போன்றவை சட்டத்தின் கீழ் குற்றமாகக் கருதப்படுகின்றன. இவையெல்லாம் சமூகப் பரிணாம வளர்ச்சியில் வந்த ஒழுங்குமுறைகள். அவை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். மனைவியின் விருப்பம் இல்லாமல் கணவன் தாம்பத்ய உறவில் ஈடுபடுவதையும் பாலியல் வல்லுறவு குற்றமாக்க வேண்டும் என்கிற வாதம், கடந்த 10 ஆண்டுகளாக முன் வந்து கொண்டிருக்கிறது. இதுவும் பரிசீலிக்கப்பட வேண்டும். இப்படியாக, தவிர்க்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை விவாதத்தின் மூலம் தான் நிர்ணயிக்க முடியுமே தவிர கலாச்சார காவலர்களாகிய கும்பல் (ஆடி) சேர்ந்து தடுத்து விட முடியாது. அதுவும் செலக்டீவ் அம்னீஸியா போல் பெண்ணுக்கு மட்டுமே உரித்தான விதிமுறையாக்கவும் கூடாது.

வாழ்வியல் சூழல் ஆரோக்கியமாக, சமத்துவக் கோட்பாடு அடிப்படையில், சகிப்புத் தன்மையோடு இருக்கும் போது மனித வாழ்வின் அகம், புறம் அனைத்துமே ஆரோக்கியமாக இருக்கும். அவற்றை நோக்கிப் போகலாமே?

ஆதாரம்:

கற்பெனும் சிறையினிலே – கவிஞர் குடந்தையான்
பெண்ணியம் – அணுகு முறைகள் – இரா.பிரேமா
தமிழ் இலக்கியமும் பெண்ணியமும் – அரங்க மல்லிகா
மனித ஜாதியின் சுதந்திரம் – இங்கர்ஸால்
வால்டேர் பொன் மொழிகள்
ஆணாதிக்கமும் பெண்ணியமும்

– பி.இரயாகரன்

மாவோயிசம்-அராஜகத்திற்கான ஒரு பயிற்சி!

அனில் பிஸ்வாஸ்

தமிழில்: எஸ்.ஏ.மாணிக்கம்

மேற்கு வங்கத்தின் சில பகுதிகளில் மாவோயிஸ்ட்  குழுக்களின் நடவடிக்கைகளை சமீப காலமாகக் காண முடிகிறது.  பயங்கர கொலைகள் மற்றும் வெடிகுண்டு வீச்சு நடவடிக்கைகள் மூலம் தங்களின் மீது கவனத்தை திருப்ப இந்த அமைப்பு  முயலுகிறது.  பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களையொட்டியுள்ள மேற்கு மாநிலத்தின் எல்லையோர தொலைதூரப் பகுதிகளை தங்களது தளங்களாக உருவாக்க முயற்சித்து வருகிறார்கள். இதேபோன்றே, மாநிலத்தின்  ஒரு சில மாவட்டங்களிலும் காலூன்ற விரும்புகிறார்கள். பான்குரா, புருளியா, மேற்கு மித்னாப்பூர் மாவட்டங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களையும், முன்னணி ஊழியர்களையும் மாவோயிஸ்ட்  ஆட்களால் படுகொலை செய்யப்படுவதை நியாயப்படுத்துவதன் மூலம் ஒரு  பிரிவு மீடியா நிறுவனங்கள் இவர்களுக்கு ஊக்கமளிக்கின்றன.

சிபிஐ(எம்.எல்), மக்கள் யுத்தக்குழு, மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் சென்டர், நக்சலைட் குழுவின்  இரு பிரிவுகள் ஆகியன ஒன்றாகச் சேர்ந்து 2004ம் ஆண்டு செப்டம்பர் 21 அன்று  சிபிஐ (மாவேயிஸ்ட்) என்ற ஒரு புதிய கட்சியினை அமைத்தனர்.  ஆந்திரப் பிரதேசம், ஒரிசா, சத்திஸ்கர், பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட  பகுதிகளில்  நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.  இரகசிய முறையிலான இவர்களுடைய அரசியல் பார்வை,  நடவடிக்கைகளின் காரணமாக பெரும்பான்மையான மக்களுக்கு இவர்களைப் பற்றி  தெரியாது.  சிபிஐ (மாவோயிஸ்ட்) அமைப்பானது வன்முறை நடவடிக்கைகளுடன் பயங்கர வாதத்தையும் கொண்டதாகும். அவர்களுடன் திட்டத்தையும், தத்துவார்த்த நிலையினையும் பார்க்கும்போது அவர்கள் பயங்கரவாத அமைப்பாகவே காண முடியும்.  இத்தகைய பயங்கரவாதமானது ஜனநாயகப் போராட்டத்திற்கும், இடதுசாரி இயக்கங்களுக்கும் தீங்கானதாகும்.  இக் கட்சியினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் மற்றும் தத்துவார்த்த ரீதியாக எதிர்கொள்ளும்.

நீண்ட  தத்துவார்த்த விவாதங்களுக்கு பின்னரே 1964ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவானது. அத்துடன்  ஒரு புதிய கட்சி திட்டத்தையும்  உருவாக்கியது.  சீர்திருத்த வாதம் மற்றும் திருத்தல்வாதத்திற்கு எதிரான போராட்டத்தில்  குறுகிய வாதமும், அதிதீவிர இடதுசாரி போக்கும் இக்காலங்களில் முன்னுக்கு வந்தன. அந்த ஆண்டுகளில் நாடு முழுவதும் குறிப்பாக, மேற்கு வங்கத்தில்  மக்கள் விரோத  ஆளும் கட்சிக்கு எதிராக பொதுமக்கள் வெகுண்டனர்.  குறிப்பாக மேற்கு வங்கத்தில்  வெகுஜன எழுச்சியால் அலைஅலையான  இயக்கங்களை காண முடிந்தது.

1967ல் ஐக்கிய முன்னணி அரசாங்கம் அமையப்பெற்றதற்குப் பிறகு நிலப் போராட்டத்துடன், தொழிலாளர்கள், மத்திய தர ஊழியர்கள், மாணவர்கள், இளைஞர்கள், என அனைத்து தரப்பாரின் போராட்டங்களும்  மேலும் அதிகரித்தன.  நக்சல்பாரி வட்டாரத்தில்    நிலத்திற்கான போராட்டத்தை நடத்தப்பட்டு அதன் மூலமாக மாநில அதிகாரத்தைப் பிடிப்பது என  ஒருபகுதி  விவசாயிகள் இயக்கம் திரட்டுவதில் இறங்கியது. 1969 மே மாதத்தில்  சிபிஐ(எம்எல்) ஆரம்பிக்கப்பட்டது. விடுதலைபெற்ற மண்டலங் களை  உருவாக்குவதும்  1970 களின் பத்தாண்டு காலத்தை   விடுதலைக்கான பத்தாண்டு காலமாக மாற்றுவது என நோக்கமாக அறிவித்து இறங்கியது.  இதன் மிகப் பிரதான தாக்குதலுக்கு  சிபிஐ(எம்) யைத்தான் தேர்ந்தெடுத்தது.  சிபிஐ(எம்)ஐ பொறுத்த வரையில், ஆளும் காங்கிரஸ் கட்சி மற்றும் நக்சலைட்டு களின் நேரடித் தாக்குதல்களை சந்தித்துக் கொண்டே  அரசியல் தத்துவார்த்தப் போராட்டத்தை நடத்த வேண்டிய கடினமான பணியினை மார்க்சிஸ்ட் கட்சி மேற்கொண்டது.

துவக்கப்பட்ட ஐந்தாண்டு காலத்திற்குள்ளேயே  நக்சலைட் இயக்கம் பிளவுண்டது.  நக்ஸலைட்டுகள் எண்ணற்ற  சிறு சிறு குழுக்களாகப் பிரிந்தனர். பிளவும் அதில் மீண்டும் பிளவு ஏற்படுவதுமானது கிட்டத்தட்ட  முப்பதாண்டுகளுக்கும் மேலாக நடந்தது.  இத்தகைய நிலையில்  ஆந்திரப் பிரதேசத்தில்  கொண்டப்பள்ளி சீதாராமையா தலைமையில் மக்கள் யுத்த குழு (Peoples War Group)  துவங்கப்பட்டது.  நக்சலைட் தலைவர் சாரு மஜூம்தாரின் பாதையே எங்கள் பாதை என முழங்கினர்.  சாரு மஜூம்தாருக்கு எதிரான குழுவின் தலைவர்களான கனைய் சட்டர்ஜி, அமுல்யா சென், சந்திரசேகர் தாஸ் ஆகியோர் தலைமையில்  மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் சென்டர் (MCC)  என்ற அமைப்பை உருவாக்கினர்.  புதியதாக உருவான சிபிஐ (மாவோயிஸ்ட்) கட்சியானது சட்டர்ஜி, மஜூம்தார் ஆகிய  இருவரையும் மகத்தான தலைவர்கள் எனவும்  அவர்களையே  தாங்கள் மதிக்கும் தலைவர்களாகவும்  தேர்ந்தெடுத்துக் கொண்டனர். தற்போது இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந் துள்ளது  தவிர்க்கவியலாத நிலை என்றாலும், இவர்களுடைய 1980 முதல் 2000 இறுதி வரையிலான  காலத்தில் இவர்களுக்குள் எவ்வாறு ஒருவர் மீது ஒருவர் தொடுக்கப்பட்ட தாக்குதல்களும், அதனால் இரு பக்கங்களிலும் ஏற்பட்ட தேய்வையும்  ஆவணங்களிலிருந்து காண முடிகிறது.

சிபிஐ (மாவோயிஸ்ட்)-ன் வரைவுத் திட்டம் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மாபெரும் பாரம்பரியத்தை கேவலப்படுத்தி குறிப்பட்டு வருகிறது. இதைப் பொறுத்தளவில்  ஆர்எஸ்எஸ்ஸின் பிரச்சாரத்துடன் இவர்கள் ஒன்று சேருகிறார்கள். இந்தியாவில் பூரண சுதந்திரத்திற்கான  கோரிக்கையினை முதலில் முன் வைத்தது கம்யூனிஸ்ட்டுகள் தான் என்பதை மறந்துவிட்டார்கள். சுதந்திரத் திற்கான கோரிக்கையின் போதே சமூக-பொருளாதாரத்திற்கான உள்ளடக்கத்துடன் கம்யூனிஸ்ட் இயக்கம் போராடியது. மேலும் மக்கள் பெருந்திரளிலிருந்து வெகுஜன தளத்தை கட்டுவதிலும் கம்யூனிஸ்ட்டுகள் தீவிரமாக ஈடுபட்டனர். இதன் காரணமாக கம்யூனிஸ்ட் இயக்கம் கடுமையான அடக்குமுறைகளுக்கு உள்ளானது. மீரட், கான்பூர், மற்றும் பெஷாவர் போன்ற சதிவழக்குகளும் தொடர்ச்சியாக  பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கம்யூனிஸ்ட்டுகள் மேல் சுமத்தினர். மேலும்  இந்தியாவில்  ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தை கட்டுவதிலும் முன்னணி படையாக கம்யூனிஸ்ட்  கட்சி திகழ்ந்தது.

பிரிட்டிஷ் இந்தியாவில் புரட்சிகர நிலைமை இருந்ததாகவும், கம்யூனிஸ்ட்டுகள் காட்டிக் கொடுத்துவிட்டதால் மாற்றம் தடுக்கப்பட்டதாகவும் எழுதி நம்மை நம்பச் சொல்கிறார்கள். இதன் மூலம் இந்தியாவில் உருவான கம்யூனிச இயக்கத்தின் பகுதியாக தாங்கள் இல்லை என்பதை பிரகடனப்படுத்தி சுயரூபத்தை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டார்கள் எனலாம். இந்த ஒன்றே அவர்களின் பார்வை எந்தளவிற்கு தெளிவில்லாதது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

எதனை  மாவோயிசம் என அழைக்கிறார்கள்?

இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த புரட்சிகரத் தலைவர்களில் மாசேதுங் ஒருவராவார் என்பதில் எந்தவிதமான சந்தேகமுமில்லை.  இவரின் தலைமையின் கீழ் தான்  சீன கம்யூனிஸ்ட் கட்சி மிகவும் பின்தங்கிய அந்த  நாட்டில் மக்களைத் திரட்டி ஜனநாயகப் புரட்சியை நடத்தி சோசலிசத்தைக் கட்டும் பணி துவங்கப்பட்டது.  புதிய ஜனநாயகம் அல்லது மக்கள் ஜனநாயகம் என்பது  தொழிலாளர்கள், விவசாயிகள் ஒற்றுமையின் அடிப்படையில்  ஜனநாயகத்திற்கும்   சோசலிச புரட்சிக்கும் இடையே இணைப்பை உருவாக்குவதாகும்.  சீனப் புரட்சியின் வெவ்வேறான கட்டங்களின் வளர்ச்சியின்போதும் சீனத் தன்மைக்கேற்ற மார்க்சிசம், லெனினிசத்தை விசேஷமான முறையில் வெற்றிகரமாக அமுலாக்கினார். குறிப்பாக  மார்க்சின் பொருள்முதல்வாதத்தின் அடிப்படையில் ஆய்வினை விளக்கியும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உதவியோடும்,  சீனப் புரட்சியின் ஒவ்வொரு கட்டங்களின் போதும் சரியான நிலையினை மாவோ மேற்கொண்டார்.

“முன்னேற்றத்தை நோக்கி  மாபெரும் பாய்ச்சலில்” ஏற்பட்ட தவறுகளை ஏற்றுக்கொண்ட  போதிலும் கூட சீனாவின் சோசலிசத்தை கட்டமைப்பு எனும் கடுமையான பணியில் முன்வரிசையில் மாவோ இருந்தார்.

மாவோயிசம் என்றால் என்ன? 

அது உள்நோக்கம் மலிந்த முழுமையாக,  தவறான கோட்பாடாகும். மார்க்சிஸம் – லெனினிசம் என்ற மாபெரும் தத்துவ வளர்ச்சிப் பாதையிலிருந்து, மாவோவின், கோட்பாட்டையும், நடை முறையையும்  தனியாகப் பிரித்தெடுக்கும் முயற்சியாகும்.

மாவோயிசம் என்ற சொல் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியை எதிர்ப்பவர்கள் பயன்படுத்தும் சொல். ஸ்டாலினிசம் என்ற சொல்லை இதே அளவு எள்ளி நகையாட பயன்படுத்திய பூர்சுவா மார்க்சிய ஆய்வாளர்களின் சொல்லின் பியாவோ காங்கிரஸ் என்று அழைக்கப்படும் அல்லது சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 9வது காங்கிரஸ் (1969 ஏப்ரல்) மாவோயிஸ்ட்டுக்களின் உரைகல்லாகும். ஏனெனில் அந்த மாநாடு  மார்க்சியம் – லெனினியம் மற்றும் மா-சே-துங் சிந்தனை ஆகியவற்றையே சீன கம்யூனிஸ்ட் கட்சி  தனது  தத்துவார்த்த மற்றும்  வழிகாட்டி, அடிப்படையாக நம்புகிறது என பிரகடனப்படுத்தியது.  மாவோ புகழ் பாடிய லின்பியா கூட மாவோயிசம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தவில்லை. அவர் மாவோவின் சிந்தனை என்று தான் குறிப்பிட்டதை  புரிந்து கொள்ள வேண்டும்.

மா-சே-துங் சிந்தனை பற்றி சீனக்கம்யூனிஸ்ட் கட்சி விளக்குகிறபோது; சீனாவின் எதார்த்த நிலைக்கும், சீனப் புரட்சியின் நடைமுறைக்கும் மார்க்சிஸம் – லெனினிசம் என்ற பொதுவான கோட்பாட்டையும் கோட்பாடு ரீதியாக இணைக்கிற சிந்தனை என்று குறிப்பிடுகிறது.

இது ஒரு தவறான கோட்பாட்டை அடிப்படையாக கொண்ட கருத்தாகும். ஏகாதிபத்தியம் அழிந்து சோசலிசம் உலகளாவிய முறையில் பரவிவிட்ட ஒரு சகாப்தத்தின் மார்க்சிஸ – லெனினிசமாக, மாவோவின் சிந்தனையை சித்தரிக்கப்படுகிறது.

உண்மையில், இந்த சகாப்தம் ஏகாதிபத்தியம் அழிந்து, சோசலிசம் உலகளவில் பரவும் சகாப்தம் என்பது சரியான மதிப்பீடல்ல. மேலும், சீன சோசலிச நிர்மாண அனுபவங்களை உலகத்தின் மீது திணிக்கிற இன்னொரு முயற்சியையும் இது செய்தது.

உண்மையில் இம்மாதியான முயற்சிகள் மாவோவின் சொந்த சிந்தனைகளையும், அவருடைய  செயல்பாட்டின் மிகவும்   குறிப்பிடத்தக்க அம்சங்களையும் மறுப்பதாகும். மார்க்சிய  லெனினியத்தை  மாவோ தனது சிந்தனையாலும், நடை முறையாலும் நிச்சயமாக மேலும் உயர்த்தினார். ஆனால் அதேசமயம் மார்க்சியம் – லெனினியத்தை அவரது சிந்தனையால்  ஒரு முழுமையான புதிய கட்டத்திற்கு கொண்டு சென்றார் என்று சொல்வது சரியானதாக இருக்காது.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக லின் இருந்த காலத்தில் மாவோவின்  கோட்பாடுகளை  தத்துவங்களாக பூசனைக் குறியதாக ஆக்கப்பட்டது. மாவோவின் கீழ் இருந்த மத்தியக்குழு லின்னை அவருடைய நடவடிக்கைகளுக்காக பின்னர் விமர்சனம் செய்தது.  சீன மக்கள் குடியரசின் 30வது ஆண்டு விழாவின்போது, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் துணைத் தலைவர் மார்ஷல் ஜியானிங் தனது துவக்கவுரையில் 9வது கட்சி காங்கிரசின் நடத்தையினை கடுமையாக தாக்கியதிலிருந்து உறுதிப்படுத்த முடிகிறது.  சீனப் புரட்சியில் மார்க்சிய – லெனினியத்தின்  வளர்ச்சியும் அமுலாக்கமும்,  மா-சே-துங் சிந்தனையாகவே இருந்தன என இரண்டையும் ஒன்றோடு ஒன்றை இணைத்தே சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும், சீன மக்களும் பார்த்தனர் என மார்ஷல் தெரிவித்தார். மேலும் அவர் குறிப்பிடும்போது, மா-சே-துங் சிந்தனை என்பது மாவேவின் தனிப்பட்ட  தயாரிப்பல்ல அது சீனாவின் 50 ஆண்டு கால புரட்சிகர போராட்ட அனுபவத்தின் தெளிவிலிருந்தும் மேலும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின்பொதுவான அனுபவ தெளிவிலிருந்தும் உருவானதாகும் என்கிறார்.

கலாச்சாரப் புரட்சி நடந்த பொழுது, அவர்கள், எல்லாவற்றையும் தலைகீழாக்கிப் பார்த்தார்கள்; எதார்த்தத்தையும், மனப்பிரதிபலிப்பையும், தலை கீழாகப் பார்த்தார்கள். அதாவது எதார்த்தத்தை மனப்பிரதிபலிப்பாகவும், மனப் பிரதிபலிப்பை எதார்த்தமாகவும் பார்த்தார்கள்.

அதேபோல், கருத்து முதல்வாதத்தையும், யாந்திரீக பொருள் முதல் வாதத்தையும், இயக்க இயலாகவும், பொருள் முதல்வாதமாகவும் சித்தரித்தனர். வரலாற்றுக் கருத்து முதல் தத்துவத்தை, வரலாற்று பொருள் முதல் வாதக்கருத்தாக சித்தரித்தனர். அவர்களது கேடு கெட்ட போலி சோசலிசத்தை, விஞ்ஞான சோசலிசமாக நம்பவைக்க முயற்சித்தனர்.

11வது மத்தியக் கமிட்டியின் 6வது விசேசக் கூட்டம் மா-சே -துங் சிந்தனை பற்றி குறிப்பிடுவதாவது  கட்சியின் தத்துவார்த்த வழிகாட்டுதலோடு கட்சியின் கூட்டுப் போராட்டம்  சீன மக்கள் மூலமாக உருவானதாகும். மேலும் மார்க்சியம் -லெனினியம் என்ற சர்வதேச கோட்பாட்டிற்கும் சீனப் புரட்சியின் ஸ்தூலனமான நடைமுறைக்கும் மா-சே-துங் சிந்தனை இணைப்பு கொண்டதாகும். மா-சே-துங் சிந்தனையை பொதுமைபடுத்துவதை இந்த ஆவணம் மிகக் கடுமையாக  எதிர்க்கிறது. சீன சூழ்நிலைமையையும்  சீன அனுபவமும் விசேசமானது என இந்த ஆவணம் திரும்பத் திரும்ப குறிப்பிடுகிறது. ஆனால் பெரு நாட்டிலோ, நேபாளம்  அல்லது இந்தியாவில் எங்கெங்கு மாவோயிஸ்ட்டுகள் உள்ளார்களோ அவர்கள் மாவோவின் சொற்களை, பொதுக் கோட்பாடாக்கி  ஒட்டுமொத்தமாக சேர்ந்து குரல் கொடுப்பதையே பழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். சீனாவின் தலைவரே எங்கள் தலைவர் என்று கூறுவோரிடம் ஒன்று சேர்கிறார்கள். மார்க்சிஸ்ட் கட்சியைப் பொறுத்த வரை மாவோயிசம்  குறித்து மா-சே-துங்கின் வரலாற்றுப் பங்கிலிருந்து சரியான பாடத்தை பெற வேண்டிய தேவையினை அங்கீகரிக்கிறது.

எம்.சி.சி துவக்கப்பட்டு 31 ஆண்டுகள் கழித்துத்தான் சிபிஐ(மாவோயிஸ்ட்) கட்சியால் மிகுந்த விவாதங்களுக்குப் பிறகு முரண்பாடுகளுடன் மாவோயிசம் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று சிபிஐ (மாவோயிஸ்ட்) கட்சியின் தலைவரான கிசன் தெரிவிக்கிறார். ( பீப்பிள்ஸ் மார்ச் – நவம்பர் 7, 2004)

மார்க்சியத்தின் வளர்ச்சியில் மாவோயிசம் என்பது மூன்றாவது உயர்கட்ட தத்துவம் என நம்புகிறார்.

மாவோயிசம் பற்றி புஷ்ப குமார் தஹால் (ஏ.கே.ஏ. பிரசந்தா)  என்ன சொல்கிறார் என்பதை இப்போது  பார்ப்போம். மாசேதுங் சிந்தனை குழப்பமானது, மாவோயிசம்  விஞ்ஞானப்பூர்வமானது என்கிறார்.

இதோடு பிரசாந்தா கூறுகிற அபத்தங்களையும், சேர்த்துப்பார்க்க வேண்டும். மா-சே-துங் தான் வர்க்கப் போராட்டத்தை அடையாளம் கண்டதாகவும், உற்பத்திக்கான போராட்டம், விஞ்ஞான ரீதியான சோதனை முறைகளைப் புகுத்தியதாகவும் பிரசாந்தா பேசுகிறார். பிரசாந்தாவின் கூற்றுப்படி, மா-சே-துங், தத்துவ ஞானிகளின் படிப்பறையிலிருந்த தத்துவத்தை, வெளியே கொண்டு வந்தார்; அவர் தான் தத்துவத்தை மக்களின் சக்தியாக ஆக்கியவர். அப்படியெனில், மார்க்சின் புகழ்பெற்ற பயர்பாக் பற்றிய 11வது ஆய்வு அறிக்கையுடன் பிரசாந்தாவிற்கு உடன்பாடில்லையா? லெனினும் படிப்பறையை விட்டு வெளியே வராதவரா?

பிரசாந்தா மேலும் மா-சே-துங்கை சிறப்பிக்க கூறுவதாவது, மா-சே-துங் தான் முதன் முதலாகவும்,  சிறப்பாகவும் நிலப்பிரபுத்துவத்தை ஒழித்துக்கட்ட, விவசாயிகளுக்கு நிலம் வழங்கினார். வெளிநாட்டு ஏகபோக நிதி நிறுவனங்களை தேசியமயமாக்கி, தனியார் மூலதனத்தின் மீது கட்டுப்பாடு கொண்டு வந்தார் என்கிறார். “துப்பாக்கியின் ரவைகளே அதிகாரத்திற்கான ஆதாரம்”.

ஏகாதிபத்தியம் ஒரு காகிதப் புலி போன்ற மாவோவின் கோஷங்களுடன் மக்கள் யுத்தத்திற்கான கருத்தும் மாவோவின் விஞ்ஞான சோசலிசத்திற்கான  உண்மையான பங்களிப்பாகும் என பிரசந்தா குறிப்பிடுகிறார். இவைகளிலிருந்து இந்த நபர் மாவோவின் சிந்தனையின் நடைமுறையையோ அல்லது அதன் ஆழத்தையோ புரிந்து கொள்ளவில்லை என்பதையே தெளிவாகக்  காட்டுகிறது.

உண்மையில்  மாவோயிஸ்டுகளை  ஆட்டிப்படைக்கும்  ஆயுதமேந்திய நடவடிக்கைகள், தனிநபர் பயங்கரம் மற்றும் நிர்மூலமாக்குதல் என்பவை தவிர்க்க முடியாத விளைவுகளாகின்றன.  மக்கள் யுத்தம் என்ற கோஷம் வாய்வீச்சான வாதங்களைத் தான் அதிகமாக உருவாக்குகிறதே தவிர சமூகப் பொருளாதார ஆய்வுகளையும், அரசியல் நடவடிக்கைகளையும் புறக்கணிக்கிறது. எந்தவிதமான ஆய்வுகள் இல்லாமல்  மாவோ தெரிவித்துள்ள சில குறிப்பிட்ட இராணுவ  விஞ்ஞானங்களையும் கொரிலலா தாக்குதல்களையும் மாவோயிசம் உருவாக்கப்படுவதை அனுமதிக்கிறது.

உலக சூழ்நிலைகள் பற்றிய குழப்பான பார்வை  ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் முன் உள்ள  மிக முக்கியமான விசயமானது அதன்  அரசியல்  யுக்திகளை உருவாக்குவதற்கு உலகச் சூழ்நிலை குறித்த அதன் பார்வை தான். இதில் மாவோயிஸ்டுகள் மிகவும் பரிதாபகரமாக உள்ளனர். இவர்களுடைய 2005 பிப்ரவரி  நகல் ஆவணத்தில் அவர்களுடைய உலகச் சூழ்நிலை பற்றி  குழப்பமான ஆய்வுகளால் குழப்பமடையச்செய்யும் சில வரிகள் மட்டும் ஒதுக்கியிருந்தார்கள்.

முதலாளித்துவ நாடாக சோவியத் யூனியன் தேய்ந்து விட்டதாக அவர்கள் சோவியத்தை கேவலப்படுத்திவிட்டு, அமெரிக்காவுடன் நடத்திய போலியுத்தத்தால் பல பில்லியன் மக்களை அரசு  காவு கொடுத்ததாக உலக நிலையை விளக்குகின்றனர்.

மார்க்சிஸ்ட்  கட்சி 1960 களிலும் 1970 களிலும் முன்னாள் சோவியத் யூனியனின் முழுமையான நிலைமைகளை கண்டறிந்தது. குறிப்பாக, 14வது அகில இந்திய மாநாட்டில் சோவியத் கட்டமைப்பில் ஏற்பட்ட பாதிப்புக்களைப் பற்றி விவாதித்தது. எவ்வாறாயினும் 1960 களில் சோவியத் யூனியன் முதலாளித்துவ நாடாக மாறிச் சென்று விட்டது என்று மார்க்சிஸ்ட் கட்சி கருதவில்லை. புதிதாக விடுதலை பெற்ற நாடுகளுக்கு சோவியத் யூனியன் பாதுகாவலனாக இருந்தது. தன்னுடைய அணு ஆயுத வலிமையை அமைதிக்காகவே பயன்படுத்தியது. போருக்காகப் பயன்படுத்தவில்லை. அமெரிக்க ஏகாதிபத்தியமானது மூன்றாம் உலக நாடுகளின் மேல்  தொடுக்கப்பட்ட  கெடுபிடி யுத்தத்தால் தனது மேலாதிக்கத்தினை கெட்டிப்படுத்தியது. சோவியத் யூனியனில் ஏற்பட்ட சோசலித்தின் பின்னடைவை தனது  புதிய உலக ஒழுங்கிற்கு அமெரிக்க ஏகாதிபத்தியம் பயன்படுத்திக் கொண்டது. சோவியத் யூனியன் மீதான தார்மீகமற்ற  எதிர்ப்பால் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை பாதுகாப்பதை மாவோயிஸ்ட்டுகள் விரும்புகிறார்களா?

இன்னும் விசேடமான விசயம் என்னவென்றால்  சோசலிச சக்திகளுக்கும், ஏகாதிபத்தியத்திற்கும் இடையேயான முரண்பாடு பிரதானமானது என்பதைக் கூட மாவோயிஸ்ட்டுகள் கருதுவதில்லை.  இதன் காரணமாக முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்திற்கான மாறுதல் கட்டத்தை நிராகரித்தும் புறக்கணிக்கவும் செய்கிறார்கள். மாவோவின் மறைவிற்கு பிறகு மக்கள் சீனக் குடியரசு முதலாளித்துவ நாடாக மாறிவிட்டது என எந்தவொரு விவாதத்திற்கும் ஒத்துவராத வகையில் வகைப்படுத்துகிறார்கள்.

இதேபோன்று வியாட்நாம், கியூபா மற்றும் ஜனநாயக கொரியா ஆகிய நாடுகளில் நடைபெற்று வரும் சோசலிச கட்டுமானத்தைக் கூட கண்டுகொள்வதில்லை.  உலகச் சூழல் குறித்த மாவோயிஸ்ட்டுகளின் ஆய்வுகள் எந்தளவிற்கு சிறுபிள்ளைத் தனமானது என்பதை அவர்களது ஆவணங்கள் தெளிவாகக் காட்டுகிறது.  முன்னெப்போதும் இல்லாத அளவில் புரட்சிகர நடவடிக்கைகளுக்கு சாதகமான உலகச் சூழல் உள்ளது என்றும், ஏகாதிபத்தியம் கடினமான சிக்கலில் உள்ளதாலும் உலகின் முன்னேறிடும் சக்தியாக புரட்சியே உள்ளது என கிசன் எழுதுகிறார்.

ஏகாதிபத்தியம் எப்போதுமே சிக்கலில் சிக்கித் தவிப்பதும் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கங்கள் உலகம் முழுவதும் வளர்ந்து வருவதும் உண்மையானதே.  எவ்வாறாயினும் 1970 களில்  விரும்பத்தகாத அராஜகத்தினால் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தினை மேற்கொள்ளப்பட வேண்டிய தேவையினை புறக்கணித்தனர். முன்பு நக்ஸலைட்டுகளால் சொல்லப்பட்ட அதே வழியைத்தான் அவர்களுடைய சீடர்களான மாவோயிஸ்ட்டுகளும்  இன்று பயன்படுத்துகிறார்கள்.

இந்திய அரசின்  வர்க்க குணாம்சத்தை தவறாக மதிப்பீடு செய்தல்

இந்திய அரசின் வர்க்க குணாம்சம் குறித்து மாவோயிஸ்ட்டுகள் கீழ்கண்டவாறு பார்க்கிறார்கள். 1947ல்  ஒரு போலியான  சுதந்திரத்தை பெற்றுள்ளதும், அரை காலனி மற்றும் அரை நிலபிரபுத்துவத்துடன் ஏகாதிபத்திய சக்திகளினால் அரசு கட்டுப்படுத்தப்படுகிறது. மேலும் அவர்கள் பெரும் முதலாளிகளை  தரகு அதிகாரவர்க்க முதலாளித்துவம் என்றும் இவர்கள் கிராமப்புறத்தில் ஆதிக்கம் வகிக்கும் பெரும் நிலப்பிரபுத்துவ வர்க்கத்துடன் உறவு வைத்துள்ளார்கள் என்கிறார்கள்.

மாவோயிஸ்ட்டுகளின்  கூற்றுப்படி, இந்தியப் புரட்சியை அவர்கள் புதிய ஜனநாயகப் புரட்சியாக இருக்கும் எனவும், இந்திய புரட்சியை தேசியப் புரட்சியாகவும் அவர்கள்  சித்தரித்தாலும், இந்தியாவில் சுதந்திரம் சுயசார்பு மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றை ஏற்படுத்துவதே அவர்களின் நோக்கம் என்கின்றனர். இந்த விளக்கத்தை குழப்பத்தின் உச்சி எனலாம்.

கம்யூனிஸ்ட் அகிலத்தின் 6வது  காங்கிரஸ் தரகு முதலாளித்துவம் பற்றி விளக்கும்போது ஏகாதிபத்திய நாடுகளுக்கு மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்தும், பின்னர் அங்கிருந்து தயாரிக்கப்பட்ட பொருட்களாக  இறக்குமதி செய்து ஏகாதிபத் தியத்திற்கு துணைபோகும் வேலைகளில் ஈடுபடுவோரையே தரகு முதலாளிகள் எனக் குறிப்பிடுகிறது.

மேற்கண்ட விளக்கத்தின்படி இந்தியப் பெரும் முதலாளிகளின் வர்க்கத்தை தரகு முதலாளித்துவம் என்று ஒப்பிட முடியாது.  இந்திய  மூலதன பெருக்கமும், நாட்டின் தொழிற்துறை அடித்தளத்தை மாவோயிஸ்ட்டுகள் தங்களது வசதிக்காக மறந்து அவசரகதியாக இந்தியா ஒரு சார்பு நாடாக தொடர்கிறது என்கிறார்கள்.

சீன முதலாளித்துவம் நேரடியாக ஏகாதிபத்தியத்திற்கு துணைபோனதோடு ஏகாதிபத்தியத்தால் வளர்க்கப்பட்ட  காரணத்தினால் அதைத் தரகு முதலாளித்துவ வர்க்கமாக மா-சே -துங் வகைப்படுத்தினார். இந்த விளக்கப்படியும்,  இந்தியப் பெரு முதலாளிகள் தரகர்களாக கருத முடியாது.

இந்தியப் பெருமுதலாளித்துவம் தனது வர்க்க நலனுக்கு ஏற்ற வகையில் ஏகாதிபத்தியத்துடன் முரண்பட்டும் இணக்கத்துடனும் இரட்டைத் தன்மையிலான போராட்டத்தை மேற்கொள்கிறது என மார்க்சிஸ்ட் கட்சி கருதுகிறது. அரசுத் துறையினை சோசலிச உள்ளடக்கத்தோடு இல்லையெனினும்  அதன் தொழில்நுட்ப மற்றும் தொழிற்துறை வளர்ச்சியானது ஏகாதிபத்திய சார்பை குறைத்துக் கொள்வதற்கு  துணையாக இருந்தது.

பின்னர் குறிப்பாக  1980களில் தாராளமயத்தின் பலன்களை பெரும் முதலாளித்துவம் பயன்படுத்திக் கொண்டது. கேந்திரமான அரசுத் துறைகளைக் கூட கைப்பற்றும் வேலைகளில் துவங்கிவிட்டனர்.

இந்தியப் பெருமுதலாளித்துவம் தரகர்கள் என்ற காரணத்தினால் தான் தாராளமயத்தின் கொள்கைகளுக்கு இடமளித்தனர் என்பதும் தவறானதாகும்.  இந்தியப் பெரும் முதலாளிகள்  ஏகாதிபத்தியத்துடன், பன்னாட்டு நிதி மூலதனத் துடன் அவர்களின் பலத்திலிருந்து கைகோர்த்துக் கொள்கிறதே  தவிர பலவீனத்தினால் அல்ல.

இந்திய ஜனநாயகப் புரட்சியின் தன்மையே பெருமுதலாளிகளை குறிவைத்துதான் இருக்கும். பெருமுதலாளிகளை எதிர்க்க மாவோயிஸ்ட்டுகள் மேற்கொள்ளும் நிலைபாடு, தடையாக இருக்குமே தவிர பெருமுதலாளிகளை எதிர்த்த போராட்டத்திற்கு உதவாது.

இந்தியா இன்னும் விடுதலை பெற வேண்டியுள்ளது என்றும் நவீன காலனியாதிக்கதில் உள்ள அரை காலனி அரசை பெற்றுள்ளோம் என்றும் மாவோயிஸ்ட்டுகள்  சிந்திக்கின்றனர். அவர்களுடைய தத்துவங்களில் இந்திய அரசு என்று குறிப்பிடுவதை மிகக் கவனமாக தவிர்க்கிறார்கள். ஏகாதிபத்திய சக்திகள் இந்திய பொருளாதாரத்தையும், நிர்வாகத்தையும் கட்டுப்படுத்துகிறது என்பதை தற்போதைய நடைமுறையில் மார்க்சிஸ்ட் கட்சி நம்பவில்லை. அதேவேளையில்  இந்தியப் பெருமுதலாளிகள் தரகு முதலாளிகளிடமிருந்து வெகு தொலைவிற்கு தள்ளி நிற்கிறார்கள் என்ற வாதங்களும் தற்சமயம் முன்னுக்கு வருகிறது.

மாவோயிஸ்ட்டுகளின் வாதத்தை நம்பினால் இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் ஏகாதிபத்தியத்திற்கு அடிமைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். இதில் மாவோயிஸ்ட்டுகள் மட்டும்  விதிவிலக்காக எப்போதும் இருப்பார்கள்.

இவர்களின் இன்னொரு தவறான புரிதல் என்பது இந்தியா இன்னும் சுதந்திரமடையவில்லை என்பதாகும்.  ஏகாதிபத்திய சக்திகள் மூன்றாம் உலக நாடுகளின் கொள்கைகளை தீர்மானிக்க தலையீடுவதில் தொடர்ந்து அவர்கள் முயற்சிகளில் இறங்கி வருகின்றனர். இருந்தபோதிலும்  இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் புதிதாக விடுதலையடைந்த மூன்றாம் உலக நாடுகள் இன்னும் சுதந்திரம் பெறவில்லை என்று மிகச் சுலபப்படுத்துவது தவறான முடிவிற்கு வருவதாகும். இந்த நாடுகளில் அரசியல் சுதந்திரமானது விரிவான அரசியல் அதிகாரமாக  மக்கள் பகுதிக்கு  மாறாததற்கு அந்த நாடுகளின் முதலாளித்துவ வர்க்கத்தின் ஆதிக்கம் தான் காரணம்.  எவ்வாறாயினும் மூன்றாம் உலக நாடுகள் இன்னும் சுதந்திரம் அடையவில்லை என்று எளிதாக்கி பார்க்கும் போக்கு கூடாது.  இது மாவோயிஸ்ட்டுகளின்  தவறான வறையறுப்பின் ஒரு பகுதியாகும்.

சீனப் பாதை  – ஒரு செயற்கைத்தனமான கட்டுமானம்

சீனாவின் எதர்த்தமான மதிப்பீட்டுடன், மார்க்சிய மற்றும் லெனினிய கோட்பாடுகளுடன் இணைந்தது தான் சீனாவின் புரட்சி என்ற மாவோவின் அடிப்படையான நிலையை புறக்கணித்துவிட்டு, சீன பாதையின் வழியே இந்திய புரட்சி என்று மாவோயிஸ்ட்டுகள் பேசுகிறார்கள்.  சீனப் புரட்சிக்கு முன்னர் கையாண்ட  வழியையே  இங்கும் வற்புறுத்துகிறார்கள். சீனப் புரட்சிக்கு முந்தைய நிலைமையின் வரலாற்றை மட்டுமல்ல இந்தியாவின் எதார்த்த நிலைமையையும் மாவோயிஸ்ட்டுகள் கற்க வேண்டிய தேவை உள்ளது.  புரட்சியின் தன்மையானது நாட்டுக்கு நாடு வேறுபடும். நடைமுறை இல்லாத தத்துவம் எவ்வாறு பயன்படாது என்பதை ஸ்டாலின் விளக்கியுள்ளார்.

சில திருத்தல்வாதங்களைப் பற்றி மாவோ சொல்லும்போது கண்ணை மூடிக்கொண்டு சிட்டுக் குருவியை பிடிக்க விரும்புவது போல இருக்கும் என்கிறார். சீன நிலைமைக்கும் இந்திய எதார்த்தத்திற்கும் வித்தியாசம் உள்ளன. இரு நாடுகளின்  வெளிப்படையான காலனிய பாரம்பரியத்தின் வித்தியாசங்கள் முதல், பொருளாதாரம், அரசியல் அமைப்பு மற்றும் வளர்ச்சி ஆகிய பகுதிகள் வரையிலும் வித்தியாசங்கள்  உள்ளன. சீனப் புரட்சிக்கு முந்தைய நிலைமையினை இந்திய மாதிரிக்காக உதவிக்கு அழைப்பதன் மூலம் மாவோயிஸ்ட்டுகள் வரலாற்றைப் புறக்கணிக்கிறார்கள். கட்சிகளிடையேயான விவாதம் உச்ச கட்டத்தில் இருந்த போது மா-சே-துங் வாதிட்ட  கருத்துக்களையும் கூட அலட்சியம் செய்கின்றனர். இது அவர்கள் செய்யும் மோசமான தவறு.

கட்சியானது  அதன் சொந்த நாட்டின் சூழ்நிலைகளை மதிப்பீடுகளின் அடிப்படையில் ஆய்வு செய்யாமல் மற்றொரு நாட்டின் அனுபவங்களை இரவல் பெறுமானால் அது திருத்தல் வாதம் மற்றும் அராஜக வாதிகளிடம் சிக்கிக் கொள்வதோடு  மார்க்சிய  லெனினிய  கோட்பாடுகளின்படி ஒருபோதும் அது வழிநடத்தப்படாது என்று மாவோ மிக அழுத்தமான கேள்வியெழுப்புகிறார்.

மாவோயிஸ்ட்டுகள் தற்போது செய்வதைப்போல் மற்றொரு நாட்டின் அனுபவத்தை எந்தவொரு ஆய்வுக்கும் உட்படுத்தாமல் இயந்திரத்தனமாக பயன்படுத்துவதில் மார்க்சிஸ்ட் கட்சி  நம்பிக்கை கொள்வதில்லை.

1970களில் நக்ஸலைட்டுகள் சீனாவின் தலைவரே எங்கள் தலைவர் என்ற கோஷத்திலும், எந்தவிதமான சிந்தனையுமின்றி இந்திய சூழலுக்கு பொருந்தாத விடுதலைப் பிரதேசம் என்று பேசுவதையும், சீன கம்யூனிஸ்ட் கட்சி விமர்சனம் செய்தது. மாவோயிஸ்ட்டுகள் வரலாற்றிலிருந்து பாடங்களை கற்றுக் கொள்வதில்லை, மாவோவின் கம்யூனிஸ்ட் கட்சியிடமிருந்தும்  கூட கற்றுக் கொள்வதில்லை.

நாடாளுமன்ற அமைப்பில் வர்க்கப் போராட்டத்தின் கூறுகள் பற்றிய அறியாமை

லெனின்  வெகு ஆண்டுகளுக்கு முன்பே  பாராளுமன்ற முறையின் தன்மை பற்றி தெரிவிக்கையில்,  அது வர்க்கப் போராட்டத்தின் ஒருபகுதியே என்கிறார்.  இடதுசாரி கம்யூனிசம் பற்றி லெனின் தெரிவித்த கருத்து வலைக்குள் சிக்கிக் கொண்டவர்களைப் போலவே  மாவோயிஸ்ட்டுகளும் இந்திய ஜனநாயகம் மற்றும் பாராளுமன்றம், சட்டமன்றம், பஞ்சாயத்துக்கள் உள்ளிட்ட தேர்தல் முறைகளை மாயை அளிக்கும் நிறுவனங்கள் என்று பெயர் சூட்டி அதைப் புறக்கணிக்கிறார்கள். அவர்களுடைய கண்ணோட் டமானது தவறானதும், ஏற்றத் தாழ்வுகள் மற்றும் சுய முரண்பாடுகளைக் கொண்டதாகும். ஆதிக்கம் செலுத்தும் வர்க்கத்தின் குணாம்சத்தை நிர்ணயிப்பது அரசும் அதன் அரசியல் குணத்தாலேயே என்பதை மார்க்சிஸ்ட்டுகள் அறிவர்.  மார்க்சிஸ்ட் கட்சி தனது கட்சித் திட்டத்தில்  பெருமுதலாளித்துவம் மற்றும் நிலபிரபுத்துவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தியும்,  பன்னாட்டு நிதி மூலதனத்தின் ஒத்துழைப்புடன் இந்திய அரசானது பெருமுதலாளித்துவ வர்க்கத்தின் தலைமையில்  செயல்படுகிறது என்று வரையறுக்கிறது.

இந்தியாவில்  முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி முழுமையாக பூர்த்தியடையாததால் உண்மையான ஜனநாயகத்தை ஏற்படுத்தும் கடமை நீடிக்கிறது. இந்த அடிப்படையில் மக்களின் முன்னேற்றத்திற்கான அடையாளமாகவும், மக்களின் ஜனநாயக உரிமைகளை பெற்றுத் தரும் ஆயுதமாகவும் பாராளுமன்ற அமைப்பு உள்ளது என்ற உண்மையை ஒருபோதும் புறக்கணிக்க முடியாது.  இடைவிடாத போராட்டங்களின் மூலமாக ஜனநாயக உரிமைகள் பெறப்பட்டவையே  தவிர  மேற்கண்ட வர்க்கங்களினால் இலவசமாக அளிக்கப்பட்டது அல்ல.

1970 களில் முன்னுக்கு வந்த ஏதேச்சதிகாரத்தினால் ஜனநாயக அரசுகள் கவிழ்க்கப்பட்டன, உள்நாட்டு அவசர நிலைமை அமுலாக்கப்பட்டது, அரசாங்கத்தில் வகுப்புவாத சக்திகள் ஊடுருவின. பிரம்மாண்டமான போராட்டங்களினால் ஏதேச்சதி காரம் தோல்வியடைந்தது.

மாவோயிஸ்ட்டுகளின் தவறான வாதமானது பாராளுமன்ற அமைப்பு முழுக்க முழுக்க மாயை என்பதாகும்.  முதலாளித்துவ அமைப்பினை அம்பலப்படுத்துவதற்கான சந்தர்ப்பமாக பாராளுமன்றத்தை கம்யூனிஸ்ட்டுகள் பயன்படுத்த வேண்டும் என முதலாளித்துவ அமைப்புக்குள் பாராளுமன்றத்தின் அவசியத்தை  லெனின் வரையறுக்கிறார்.  பாராளுமன்றத்திற்கு உள்ளேயும்  வெளியேயும்  நடக்கும் போராட்டத்தை பலப்படுத்த பாராளுமன்ற அமைப்பு வழங்கும் முழுப் பயன்களையும் பயன்படுத்தாமல் இருப்பது அசட்டுத்தனமானதாகவே இருக்கும்.  அரசாங்கம், முதலாளித்துவ அரசியல் மற்றும் முதலாளித்துவ கட்சிகளின் பங்குகளைப் பற்றி  அம்பலப்படுத்தக் கிடைக்கும் சந்தர்ப்பம் என்பதோடு, தேர்தல்  நடவடிக்கைகளில்  பல லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கிற காரணத்தினால்    வாக்காளர்களின் போராட்டமாகவே தேர்தல் பார்க்கப்படுகிறது. முதலாளித்துவ கட்சிகளின் செல்வாக்கிலிருந்து மக்களை வெளியே கொண்டு வரும் சந்தர்ப்பத்தையும் உருவாக்குகிறது. எவ்வாறாயினும் மார்க்சிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரையில் பாராளுமன்ற தேர்தல் முறையினை, பாராளுமன்றப் போராட்டத்தினை  அப்பாற்பட்டு நடக்கும் போராட்டத்திற்கு  பதிலாக இல்லாமல் அதற்கு துணையான பகுதியாக உறுதியாக மேற்கொண்டு வருகிறது.

பாராளுமன்ற போராட்டக் களத்தில் பெருவாரியான மக்கள் அசைவற்று காணப்படும் நிலைமை தொடர்கிறது என்பதை எந்த அடிப்படையில் மாவோயிஸ்ட்டுகள் கருதுகிறார்கள்?  முதலாளித்துவ பாராளுமன்ற முறைக்குள் பங்கேற்று  அதன் செயல்பாட்டு முறை பற்றியும், அந்த அமைப்பை அம்பலப்படுத்தவும் அதனை அப்புறப்படுத்துவதற்காக மக்களைத் தயார்படுத்தவும் மிக நீண்ட காலம் ஆகும் என்று லெனின் சொல்லியுள்ளதை மாவோ யிஸ்ட்டுகள் ஏன் நினைவு கொள்வதில்லை?  வரலாற்றிலிருந்து மாவோயிஸ்ட்டுகள் பாடம் கற்றுக் கொள்வார்களா?

மக்களின் அன்றாட போராட்டங்களிலிருந்து விலகி  நிற்பது

நீடித்த ஆயுத மேந்திய விவசாயிகள் போராட்டம் நடத்துவதன் மூலம் விவசாயப் புரட்சியை நோக்கி செல்வதைத் தவிர புரட்சிகர கட்சிக்கு முன் வேறு மாற்று இல்லை என்று அறிவிக்கிறார்கள்.  கொரில்லா யுத்தம்,  மண்டலங்களை விடுவிப்பது, தலைமை நிலையங்கள், நகரங்களை கைப்பற்றுவது மற்றும் இந்த கடமைகளை அடையாளம் காண்பது மட்டுமே புரட்சிகர கடமை என்ற ஒன்றை மட்டுமே மாவோயிஸ்ட்டுகள் பேசி வருகிறார்கள்.  இந்த கடமைகளை வளர்த்தெடுப்பதன் மூலம் அரசு அதிகாரத்தை கைப்பற்றுவது என்பது அவர்கள் நோக்கம்.  இராணுவ யுத்திகளுக்கும், இராணுவ தந்திரோபாயங்களுக்கு மட்டுமே மாவோயிஸ்ட்டுகள் பிரதான கவனத்தை அளிக்கின்றனர். அவர்களைப் பொறுத்தவரையில் மக்களின் அரசியல் உணர்வு மட்டத்தை வளர்த்தெடுப்பதற்கோ, அரசியல், சமூகப் பிரச்சனைகளில் அவர்களை ஒன்றுபடுத்த நேரம் ஒதுக்குவதற்கு அவர்களுக்கு நேரம் இல்லை.  தொழிற்சங்க இயக்கத்தின் முக்கியத்துவத்தையும் தொழிலாளர்களை வர்க்க உணர்வு பெற்றவர்களாக உருவாக்குவதற்கான பங்களிப்பையும் மாவோயிஸ்ட்டுகள் புறக்கணிக்கிறார்கள்.  ஜனநாயக புரட்சி முழுமை பெறாமல் சிற்சில இயக்கங்களால் விரிவான நிலச் சீர்திருத்தத்திற்கு அழைத்துச் செல்லுமா? என்ற கேள்வியை எழுப்பி நிலப் போராட்டத்திலிருந்து தங்களுடைய முகத்தை திருப்பிக் கொள்கிறார்கள்.

அடிப்படையான மாறுதல்களுக்கு தேவையான முதலாளித்துவ  நிலப்பிரபுத்துவ கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்திற்கு லட்சக்கணக்கான மக்களை எவ்வாறு அவர்கள் தயார்படுத்தப் போகிறார்கள்?  ஆயுதங்களைச் சார்ந்து நிற்கும் மக்கள் குழுவின் ஒரு சிறு பகுதி மிக மோசமான குணத்தைக் கொண்டதாகவே இருக்கும். பெருவாரியான மக்கள் திரளிடமிருந்து கம்யூனிஸ்ட் டுக்கள் ஒருபோதும் தனிமைப்படக்கூடாது என்றும்  ஒட்டுமொத்த சூழ்நிலைகள் குறித்து போதுமான சிந்தனையை பெற்றிருக்க வேண்டும் என மாவோ எழுதியுள்ளார்.

மாவோயிஸ்ட்டுகள் பன்னாட்டு நிதி மூலதனத்திற்கு பலத்த எதிர்ப்பு தெரிவிப்பார்கள். ஆனால் நாடு முழுவதும் நடைபெறும் உண்மையான போராட்டங்களில் அவர்கள் பங்கேற்பதில்லை. இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியும் இதர இடதுசாரி கட்சிகளும், தொழிற்சங்கங்களும்  நம்பிக்கைக்கு பாத்திரமாக பங்காற்றுகிறார்கள். இத்தகைய அன்றாடப் போராட்டங் களிலிருந்து மாவோயிஸ்ட்டுகள் விலகி நிற்பது என்ன காரணத்திற்காக?  கிராமப்புறங்களிலோ அல்லது நகரங்களிலோ மாவோயிஸ்ட்டுகளால் ஏகாதிபத்திய சக்திகளை எதிர்த்து  போராட்டங்களை கட்டமுடியாது  என்பதை அவர்களின் தலைவர் கிசன்  பீப்பிள்ஸ் மார்ச் பத்திரிக்கையில் ஒத்துக்கொள்கிறார்.  மேலும் ஒரு ஒப்புதல் வாக்குமூலம் சாரு மஜூம்தார் வாயிலாக நமக்கு கிடைக்கிறது. 1972ல் அவர் தனது மனைவிக்கு எழுதிய கடிதத்தில் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டம் பாதித்து விட்டது என்று மிகவும் கவலையுடன் குறிப்பிடுகிறார். இதேபோல வகுப்புவாத சக்திகளின் தாக்குதல்களுக்கு எதிரான போராட்டத் திற்கு திரட்டுவதற்கு போதுமான அக்கறையினை மாவோயிஸ்ட் டுகள் எடுத்துக்கொள்ளவில்லை என்றும் இந்தப்போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியும், இடதுசாரி கட்சிகளும் ஒரு வெற்றிகரமான பங்கினை வகித்தனர் என்றும் கிசன் குறிப்பிடுகிறார்.

கொரில்லா யுத்தம் பற்றி தவறான விளக்கம்

மாவோயிஸ்ட்டுகளின் உலகப் பார்வையில் ஜனநாயகப் போராட்டத்திற்கும், வெகுஜன அரசியல் திட்டத்திற்கும் இடமில்லை. கொரில்லாப் படையினரால் கிராமங்கள் கட்டப்பட்டு சிவப்புத் தளங்களுடன் ஆயுதமேந்திய போராட்டமே புதிய ஜனநாயகத் திற்கான முழுமையான போராட்டமாக அவர்கள் நம்புகிறார்கள். அவர்கள் தங்களுடைய ஆவணங்களில் பெரும் பகுதியை இந்தியப் புரட்சியில் கொரில்லா யுத்த தந்திரங்களுக்கான நடவடிக்கை களுக்காகவே ஒதுக்கியுள்ளனர்.

மதிப்பிழந்துபோன சீனத் தலைவர் லின்பியோ தான் முதலில் இந்த கொரில்லா கோட்பாட்டை முன்வைத்தார். அதைத்தான் இந்த மாவோயிஸ்ட்டுகள் இப்பொழுது தழுவி நிற்கின்றனர்.

கிராமங்களினால் (வளரும் நாடுகளால்) நகரங்களை (வளர்ந்த நாடுகள்) சுற்றிவளைப்பது பற்றி லின் பேசியுள்ளார். ஜப்பான்  முற்றுகை இராணுவத்திற்கு எதிராக மாவோவின் பூண்டோடு ஒழித்தல் கோட்பாடு பற்றி விளக்கும்போது லின்பியாவோ  இதுபோன்ற நடவடிக்கைகள் மூன்றாம் உலகத்தின் ஆயுதம் தாங்கிய விவசாயப் போராட்டத்தின் வெற்றிக்குத் தேவையானது என்கிறார்.  நக்சலைட்டுகள் இந்தக் கோட்பாட்டை தங்கள் மடியில் வைத்துக் கொண்டனர்.

மாவோவின் அழித்தொழிக்கும் கோட்பாட்டை லின்பியோ வோ தவறாக வியாக்கியானம் செய்துள்ளார் என்று சீன கம்யூனிஸ்ட் கட்சி எச்சரித்தது. (இதைப் பல்வேறு நக்சலைட்டு தலைவர்கள் ஏற்றுக்கொண்டதாக 1970 களில் வெளியான ஆவணங்களில் உள்ளது)

புரட்சிகரமான பாதையானது, அகச்சூழல், புறச் சூழல் ஆகியவைகளை கணக்கில் கொள்ளாத ஒரு ரகசிய திட்டமாக இருக்கவே முடியாது. புரட்சி நடத்துவதற்கு எந்தவொரு இரசவாதமும் இல்லை. (1850ல் மார்க்ஸ் குறிப்பிட்டது போல்) புரட்சியை நடத்துவதற்கு பிரதான அமலாக்கத்தின் இரகசியத் திட்டம் ஏற்படுத்துவது என்பது வறட்டுத்தனமானதும், சுய தோல்வியைக் கொண்ட கருத்தாகும். இந்தக் கருத்திற்கு மாவோயிஸ்ட்டுகள் விடாப்பிடியான நடவடிக்கையுடன் உண்மையாக உட்பட்டுக் கொண்டுள்ளார்கள்.

எந்த நாட்டில் புரட்சியை நடத்த வேண்டுமோ  அந்த நாட்டின் அப்போதைய நிலைமைகள் அனைத்தையும் சிக்கலானவை களையும்  திறமையாகக் கையாண்டு தனது ஆளுமைக்குள் கொண்டு வரவேண்டியது  தொழிலாளி வர்க்கக் கட்சியின் பொறுப்பாகும். அதேபோல  எவ்வளவு சாத்தியமோ அந்தளவிற்கு நேச சக்திகளையும் இணைத்துக் கொள்ள வேண்டும். ஐக்கிய முன்னணியோ அல்லது  கூட்டணியையோ உருவாக்கும்போது இந்த அடிப்படையில் இருத்தல் வேண்டும்.

லெனின் இது குறித்து விளக்கும்போது ஒரு புரட்சிகர கட்சிக்கு வெகுஜன கூட்டணியை தழுவும்போது அது முதலாளித்துவத்தின் கீழ் திரண்டிருப்பார்கள், கூட்டணியின் சிலர் அமைதியற்ற வர்களாக,  நம்பிக்கைக்கு உரியவர்களாக இல்லாதவர்களாகவும், நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஆதரவு கேட்பவர்களாகவும் இருப்பார்கள் என்கிறார்.  இதை புறக்கணிப்பது என்பது  விஞ்ஞான சோசலித்தின் அடிப்படை கோட்பாடுகளுக்கு மிகுந்த நஷ்டத்தை ஏற்படுத்தும் என லெனின் தெரிவிக்கிறார்.  இந்த கருத்தின்படி மாவோயிஸ்ட்டுகள் நிச்சயமாக பாதிக்கப்படுவார்கள். புரட்சிகர பாதையினை  இம்மியளவு கூட அவர்களால் புரிந்து கொள்ள முடியாது.

English Version

– தொடரும்…..