மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொல்கத்தா ஸ்தாபன பிளீனத்தின் அறிக்கையில் ஊடும் பாவுமாய் இருப்பது மக்களுடன் உயிரோட்டமான தொடர்பில் இருத்தல் என்கிற மாஸ் லைன். இது கம்யூனிஸ இயக்கத்துக்குப் புதிதல்ல. அதே சமயம் மக்களுடன் தொடர்பு, மக்கள் பங்கேற்பு போன்ற அம்சங்கள் மார்க்சீய தத்துவம் உருவாவதற்கு முன்னாலும் பேசப்பட்டுள்ளன. ஆனால் அதைப் புரட்சிகர தத்துவத்தின் நடைமுறையுடன் இணைத்தது மார்க்சீய அணுகுமுறையே. ” செல்வாக்கு பெற்ற தனி நபர்கள் அல்ல, மக்களே வரலாற்றைப் படைக்கிறார்கள்” என்று மார்க்ஸ் கூறுவது சமூக மாற்றம் குறித்த கருத்தியல் மட்டுமல்ல, மாற்றத்தை ஏற்படுத்த மக்களின் பங்கேற்பு வேண்டும் என்ற புரிதலை அதிலிருந்து நாம் பெறமுடியும். லெனின் தலைமை ஏற்று நடத்திய ரஷ்ய புரட்சியின் வெற்றிக்குள் மக்கள் தொடர்பில் இருத்தல் என்கிற அம்சம் இருக்கிறது. அந்தப் பெயர் பயன்படுத்தப் படாமல் இருந்திருக்கலாம். ஆனால், சாராம்சம் இது தான்.
மாவோவின் பங்களிப்பு:
பொதுவாக ஒரு செய்முறையாகக் கருதப்பட்ட மக்களுடன் உயிரோட்டமான தொடர்பில் இருத்தலை, ஒரு கருத்தாக்கமாக உருவாக்கியதில் மாவோவின் பங்களிப்பு அலாதியானது. தலைமை முறை (பாணி) குறித்த சில கேள்விகள் என்ற கட்டுரையில் (1943) விரிவாக இதனைக் குறிப்பிடுகிறார். அதற்கும் முன்னதாகவே மக்களின் அனுபவம், அறிவு குறித்து பெரும் மரியாதையும், மதிப்பும் அவரது எழுத்துக்களில் வெளிப்பட்டிருக்கிறது. ”அக்டோபர் புரட்சி என்ற பாரம்பரியம் மற்றும் மக்களை சார்ந்திருப்பது என்ற தோழர் லெனினின் மாஸ் லைன் ஆகியவற்றின் நீட்சியாக” என்று ஒரு கட்டுரையில் பகிர்ந்து கொள்கிறார். புரட்சிகர இயக்கத்தின் சரியான தலைமை என்பது மக்களிடமிருந்து மக்களுக்கு என்ற முழக்கத்தின் அடிப்படையில் செயல்படுவதாக இருக்க வேண்டும் என்பது உயிரோட்டமான மக்கள் தொடர்பில் இருத்தலின் சாரமாக வெளிப்படுகிறது. சீனப்புரட்சியின் அனுபவம் இதை முழுமையடைய செய்திருக்கிறது.
மக்களுடன் உயிரோட்டமான தொடர்பில் இருத்தல் என்பது, மக்கள் விரும்புவதை எல்லாம் செய்வது என்பதல்ல. மக்களின் உணர்வுகளும், ஞானமும் மூலப்பொருட்களைப் போல, அவற்றைப் பயன்படுத்தி முழுமைப்படுத்தப் பட்ட பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்பது அதன் ஒரு முக்கிய பகுதி என்று மாவோ விளக்குகிறார்.
அடுத்து வர்க்கப் போராட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை பாத்திரம் அத்தியாவசியமானது, அதே சமயம், தொழிலாளி வர்க்கத்துக்கு பதிலியாக, கட்சி செயல்பட முடியாது. அந்த வர்க்கம் திரட்டப்பட வேண்டும். மேலும் கட்சியின் தலைமை பாத்திரம் என்பது, தொழிலாளி வர்க்கத்தைக் கையைப்பிடித்து இழுத்துச் செல்வதல்ல, புரட்சியை வழி நடத்துவதற்குத் தேவையான மார்க்சீய தத்துவம் என்கிற ஆயுதத்தை அவ்வர்க்கத்திடம் கொடுப்பதே தேவை. அந்த வர்க்கம் தன் பங்கை ஆற்ற வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.
வரலாறு படைக்க உந்துசக்தியாகத் திகழ்பவர்கள் மக்களே, மக்கள் மட்டுமே என்று மாவோ திட்டவட்டமாக முழங்குகிறார். புரட்சிகர இயக்கம் மக்களை விட சில அடிகள் முன்னால் இருக்கலாம், மக்களை விட சற்று ஆழமான புரிதல் இருக்கலாம், தத்துவார்த்த அடித்தளம் இருக்கலாம். ஆனாலும் மக்கள் இல்லாமல் எந்த ஒரு தத்துவத்தையும், கருத்தையும், திட்டத்தையும், புரிதலையும் நடைமுறைப்படுத்திட முடியாது. நடைமுறையில் தான் தத்துவம் அல்லது கருத்தின் சரியான தன்மையை உறுதி செய்ய முடியும். ஒவ்வொரு ஆசிரியரும் மாணவரே, ஒவ்வொரு மாணவரும் ஆசிரியரே என்று கிராம்சி சொல்வதும், புத்தகங்கள் மட்டுமே கற்றுக் கொடுப்பதற்குப் போதாது, தொழிலாளிகளிடமிருந்து, விவசாயிகளிடமிருந்து, மாணவர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது அதிகம் உண்டு என்று மாவோ சொல்வதும் மாஸ் லைனின் வெளிப்பாடு தான். அனைத்துக் கேள்விகளுக்கும் சகல பதில்களையும் தெரிந்தவர்களாகக் கம்யூனிஸ்டுகள் எப்படி இருக்க முடியும்? மக்கள் மத்தியிலிருந்து உருவானவர்கள் தானே கம்யூனிஸ்டுகள்? மக்களுடன் நாம் இணைந்திருந்தால் தான், பிறகு மக்கள் நம்முடன் இணைவார்கள். மக்களுடன் உயிரோட்டமான தொடர்பு என்பது இதை மையப்படுத்தி அமைக்கப் பட வேண்டும்.
மார்க்சிய அணுகுமுறையுடன் இணைப்பது:
நான் என்றும் மக்கள் ஊழியனே என்று தோழர் ஏகேஜி முழங்கியதிலும், மேற்கு வங்க முதல்வராகப் பொறுப்பேற்ற தோழர் ஜோதிபாசு, இனி தலைமை செயலகம் ரைட்டர்ஸ் பில்டிங்கிலிருந்து அல்ல, மக்கள் மத்தியிலிருந்தே செயல்படும் என்று கூறியதிலும் மாஸ் லைன் பிரதிபலிக்கிறது. மக்களுடன் உயிரோட்டமான தொடர்பு என்பதே இதன் மையப்பொருள். இதை மார்க்சிய அணுகுமுறையுடன் எப்படி இணைப்பது? மூடிய கதவுகளுக்குப் பின் உட்கார்ந்து கொண்டு, மக்கள் விரும்புவது இதைத் தான் என்று முடிவு செய்வது அறிவியல்பூர்வமானது அல்ல, மார்க்சீயமும் அல்ல. திட்டவட்டமான சூழ்நிலையைத் துல்லியமாக ஆய்வு செய்வது என்ற மார்க்சீய அணுகுமுறை சுட்டிக் காட்டுவது என்ன?
- திட்டவட்டமான சூழ்நிலையை அடையாளம் காண்பது
- விருப்பு வெறுப்பு இன்றித் துல்லியமாக அதை ஆய்வு செய்வது
- சரியான அரசியல் நடைமுறை உத்தியை உருவாக்குவது
- அதை அமல்படுத்த பொருத்தமான ஸ்தாபன/போராட்ட வடிவத்தைத் திட்டமிட்டு செயல்படுத்துவது
சூழ்நிலையை அடையாளம் காண்பதும், இயக்கவியல் முறையில் ஆய்வு செய்வதும் மக்களுடன் உரையாடாமல், அவர்களின் அனுபவங்களைப் பயன்படுத்தாமல் செய்ய முடியாது. அவர்களின் உணர்வு மட்டம், புரட்சிகர இயக்கத்தின் வலு, எதிரி வர்க்கங்களின் பலம் போன்றவற்றின் அடிப்படையில் தான் உத்திகளை உருவாக்க முடியும். உத்தியை நடைமுறைப்படுத்த மக்களின் பங்கேற்பு அவசியம். மக்களுடன் நெருக்கமாக இருப்பதன் மூலமே, பங்கேற்பை உறுதிப்படுத்த முடியும்.
அதே சமயம் மக்களைத் திரட்டி வைத்துக் கொண்டு சீர்திருத்தங்களிலேயே கரைத்துக் கொண்டு புரட்சிப்பாதையை விட்டு விலகி நின்றால் மக்களையும் இழப்போம், இயக்கமும் நீர்த்துப் போகும். மக்கள் பங்கேற்பை மறுதலிக்கும் தனிநபர் சாகசங்களையும், தனிநபர் தீர்த்துக்கட்டலையும் சார்ந்த பாதையை சில ‘இடது’ அதிதீவிர குழுக்கள் பின்பற்றுகின்றனர், இப்பாதையை மார்க்சிஸ்ட் கட்சி நிராகரிக்கிறது. மார்க்சிஸ்ட் கட்சி உருவானதே இந்திய கம்யூனிச இயக்கத்தில் நிலவிய திருத்தல்வாதப் பார்வையை எதிர்த்துத் தான். அதன் பிறகு நக்சலைட் இயக்கமாக முன்னுக்கு வந்த அதிதீவிரவாதத்தை எதிர்த்த போராட்டமும் நடத்தப் பட்டது. சர்வதேச அளவில் முன்னுக்கு வந்த இத்தகைய தவறான போக்குகளை எதிர்த்தும் தத்துவார்த்த ரீதியில் மார்க்சிஸ்ட் கட்சி போராட வேண்டியிருந்தது.
வெகுஜனமா வெகுஜன தளமா?
1978ல் சால்கியா பிளீனம், அன்றைக்கு இருந்த சூழலில் வெகுஜன புரட்சிகட்சி என்ற முழக்கத்தை முன்வைத்த போது, புரட்சிகரத் தன்மையுடன் கூடிய விரிவான கம்யூனிஸ்ட் கட்சி என்ற அம்சம் அதற்குள் இருந்தது. ஆனால் அதுகுறித்த புரிதல் பற்றாக்குறை பல மட்டங்களில் நிலவியதுடன், காலப்போக்கில் “கட்சி உறுப்பினர்களின் தரத்தின் அளவு குறைந்து கொண்டே போனது என்பது வெகுஜன புரட்சிகர கட்சியை உருவாக்குவதை சாத்தியமற்றதாக்கியது. கட்சி, புரட்சிகர உள்ளடக்கம் இல்லாத வெகுஜன கட்சி போன்றதாகி விட்டது” என்று பிளீன அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. புரட்சிகர குணாம்சங்கள் சரிந்ததற்குப் பல்வேறு புறசூழல் மற்றும் ஸ்தாபன காரணங்கள் உள்ளன. எனவே, இன்றுள்ள சூழலில் விரிவான வெகுஜன தளத்துடன் கூடிய புரட்சிகரக் கட்சி என்ற முழக்கத்தை கொல்கத்தா பிளீனம் முன் வைத்திருக்கிறது. சால்கியா முழக்கம் முற்றிலும் மாறி விட்டதாகப் பார்க்க வேண்டியதில்லை. கட்சி திட்டத்தில் வெகுஜன புரட்சிகரக் கட்சி என்பதே இடம் பெற்றிருக்கிறது. கொல்கத்தா அறிக்கையில், தற்போதைய காலகட்டத்தில் நிலவுகிற சூழ்நிலையில் முறிப்பை ஏற்படுத்த, தரத்தின் மீதான அழுத்தம் கூட்டப்படுகிறது. இது எண்ணிக்கையை மறுதலிப்பதல்ல, புரட்சிகர குணாம்சத்தை வலியுறுத்துவது. இரண்டும் இணைந்ததே விரிவாக்கம்
மேலிருந்து கீழ் வரை அரசியல் ஸ்தாபன தத்துவார்த்த தரம் உயர்ந்த உறுப்பினர்களைக் கொண்டதாகக் கட்சி இருக்க வேண்டும் என்று சொல்வது எதற்காக? கட்சியின் அரசியல் உத்தி, மக்களின் உணர்வாக மாற வேண்டும், அதற்கு உத்தியின் அரசியல் தத்துவார்த்த அம்சத்தை உள்வாங்கி, அதை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். பேரவைகளுக்கும் வகுப்புகளுக்கும் பங்கேற்பு குறைவாக இருப்பது என்பது வெறும் வருகை சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல. தர உயர்வுக்குத் தயாராக இல்லாத நிலையை அது காட்டுகிறது. கட்சி உறுப்பினர்களின் உணர்வாகவே அது மாறாத போது, மக்களின் உணர்வாக எப்படி மாறும்?
கிளைகளின் திட்டமிடல்:
கட்சி ஸ்தாபனத்தில், மக்களுக்கு அருகில் இருக்கும் கட்சியின் கட்டமைப்பு கிளைகள் தாம். கட்சி திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து கிளைகளுக்கு ஒரு திட்டமிடல் இருக்க வேண்டும், திட்டவட்டமான பார்வை இருக்க வேண்டும். கட்சியின் இலக்காக மக்கள் ஜனநாயகப் புரட்சி வரையறுக்கப் பட்டுள்ளது. இப்புரட்சியை நடத்தும் படையாக மக்கள் ஜனநாயக அணியை உருவாக்க வேண்டும். இந்த அணியின் அடிப்படையான, கேந்திரமான கூட்டாளிகளாக தொழிலாளி விவசாய வர்க்கங்கள் அமையும். புரட்சியை நடத்தும் பணியில் இதர வர்க்கங்களின் பங்கு பாத்திரம், தொழிலாளி விவசாயி கூட்டணியின் பலத்தைப் பொறுத்தும், ஸ்திரத் தன்மையைப் பொறுத்தும் அமையும்.
எனவே, தலைமை பாத்திரம் வகிக்க வேண்டிய தொழிலாளி வர்க்கத்தைத் திரட்ட வேண்டும். கிராமப்புறத்தில் விவசாய தொழிலாளிகள், ஏழை விவசாயிகள், நடுத்தர விவசாயிகளைத் திரட்டும் பணி முக்கியத்துவம் பெறுகிறது. நகர்ப்புறத்தில், தொழிலாளிகளைத் திரட்டும் பணிக்கு முன்னுரிமை கொடுப்பதுடன், நடுத்தர வர்க்கத்தினரைத் திரட்ட வேண்டும். நவீன தாராளமய கொள்கைகளின் அமலாக்கத்தில், நடுத்தர வர்க்கத்தில் அடுக்குகள் ஏற்பட்டுள்ளன. உயர்மட்டப் பகுதியினர், தாராளமயத்தினால் பலன் பெறுபவர்களாகவும், அதை ஆதரிப்பவர்களாகவும் உள்ளனர். எனவே இதர நடுத்தர வர்க்க பகுதியினரை ஈர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும். ஆசிரியர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், அரசு/தனியார் துறை ஊழியர்கள், அறிவு ஜீவிகள் உள்ளிட்ட பகுதியினர் இதில் இடம் பெறுவார்கள்.
வர்க்கங்களைத் திரட்டுவதற்கு ஏதுவாக முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ திட்டத்திலிருந்தும், கொள்கையிலிருந்தும் முற்றிலும் வேறுபட்ட திட்டம், மாற்றுக் கொள்கைகளை முன்வைத்து, பிரம்மாண்டமான போராட்டங்களை உருவாக்கி, அதன் நிகழ்முறையாக இடது ஜனநாயக அணி கட்டப்பட வேண்டும் என்பதும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. மக்கள் ஜனநாயக அணியில் இடம்பெற வேண்டிய வர்க்கங்களும், ஜனநாயக சக்திகளும் இந்த அணியின் திட்டத்தால், போராட்டங்களால் ஈர்க்கப்பட்டு, திரட்டப்பட வேண்டும். இதுவே கட்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வழி.
எனவே நகர்ப்புறமா, கிராமப்புறமா என்பதைப் பொறுத்து, ஒவ்வொரு பகுதியில் அல்லது தளத்தில் உள்ள தொழிலாளர், விவசாயிகள், இதர உழைப்பாளி மக்கள் மற்றும் ஒடுக்கப்படும் சமூகப் பிரிவினரைத் திரட்டுவது கிளையின் முக்கிய கடமையாகிறது. அதற்கு என்ன செய்ய வேண்டும்? ஏற்கனவே வர்க்கங்களையும், வெகுமக்களையும் திரட்டும் நோக்குடன் வர்க்க, வெகுஜன அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இத்தகைய அமைப்புகளில் கட்சி உறுப்பினர்களை ஈடுபடுத்தி, மக்களின் ஸ்தல மற்றும் வாழ்வுரிமை பிரச்னைகளை எடுக்க வேண்டும், வர்க்கப் பிரச்னைகள், சமூக ஒடுக்குமுறை பிரச்னைகளில் தலையிட வேண்டும். கிளர்ச்சிகளையும் போராட்டங்களையும் முன்னெடுத்து, அரசியல் பிரச்சாரம் செய்ய வேண்டும்.
உதாரணமாக, நவீன தாராளமய கொள்கைகள் ஏற்படுத்தியுள்ள மாற்றங்களின் விளைவாக கிராமப்புறங்களில் நிலப்பிரபுத்துவ பணக்கார வர்க்கங்களின் கூட்டு உருவாகியிருக்கிறது. இதற்கு எதிராக விவசாய தொழிலாளர்கள், சிறு குறு விவசாயிகள், கிராமப்புற தொழிலாளிகள், இதர உழைப்பாளிகளைத் திரட்ட வேண்டும் என்று பிளீன அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. உள்ளூரில் இந்த முரண்பாடு எந்த வடிவத்தில் வருகிறது, என்ன பிரச்னையாக உருவெடுக்கிறது என்று பார்த்து, அதில் பாதிக்கப்படும் மக்களைத் திரட்டுவதற்கான திட்டமிடல் வேண்டும். அது கந்து வட்டி பிரச்னையாக வடிவெடுக்கலாம், கூட்டுறவு அமைப்புகளின் நிதி ஆதாரத்தை அவர்களுக்கு சாதகமாகப்பயன்படுத்திக் கொண்டு, சிறு குறு விவசாயிகளின் விண்ணப்பத்தைப் புறக்கணிப்பதாக இருக்கலாம், நில ஆக்கிரமிப்பாக இருக்கலாம், விளையாட்டு மைதானங்களைக் கபளீகரம் செய்யும் நடவடிக்கையாக இருக்கலாம். நீராதார பயன்பாடாக இருக்கலாம். எதில் மோதல் வெடிப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று கிளைகளும், இடைக்குழுக்களும் ஆலோசிக்க வேண்டும். கிளை/கமிட்டி கூட்டங்களின் நிகழ்ச்சி நிரலாக இது போன்ற பிரச்னைகள் அமைய வேண்டும். இன்றைய நிலைமையில் கிளை/கமிட்டி கூட்டங்களை நடத்தும் முறையில் மேற்கூறிய நோக்கத்துடன் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும்.
வெகுமக்கள் போராட்டங்களிலும், அரசியல் பணிகளிலும் ஈடுபடுகிற போர்க்குணம் மிக்கவர்களைத் துணை குழுக்களில் இணைப்பது கட்சிக் கிளையின் பணியாகும். இதில் கிளை செயலாளர் பணி தலையாயது. இதற்கான பயிற்றுவிப்பை மேல் கமிட்டிகள் திட்டமிட வேண்டும். கட்சித் திட்டம் வெறும் வகுப்புகளில் கேட்பதற்காக என்ற நிலைமை மாற வேண்டும். அது நடைமுறை சாத்தியம் மிக்கது என்பது உணர்த்தப்பட வேண்டும். நடைமுறைப்படுத்த மக்களின் உணர்வுபூர்வ பங்கேற்பு அவசியம். எனவே ஸ்தாபனத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் அதற்கான திட்டமிடல் தேவை.
நிதி திரட்டுதல் என்ற இயக்க செயல்பாட்டைக் கூட வெகுஜனத் தன்மை கொண்டதாக மாற்ற வேண்டும் என்று பிளீனம் அறிக்கை கூறுகிறது. வீடு வீடான வசூல் என்பது வெறும் காசு பணம் அல்ல, செழுமையான அனுபவம், அரசியல் உரையாடல், பிரச்னைகளைக் கண்டறியும் வழி முறை. விருதுநகர், நெல்லை, திண்டுக்கல் போன்ற மாவட்டக் குழுக்களுக்கு இது குறித்த சிறப்பான அனுபவம் உண்டு.
வர்க்க வெகுஜன அமைப்புகள்:
தேர்தலில் தோல்வி அடையும் போது, வெகுஜன அமைப்புகளில் இத்தனை உறுப்பினர்கள் இருந்து என்ன பலன், எனவே திரள் உறுப்பினர் பதிவில் நேரத்தையும் உழைப்பையும் செலவழிக்க வேண்டாம் என்ற கருத்தும், இவற்றை வெகுஜன அமைப்புகளாக நடத்துவதால் தான் வாக்குகள் கிடைப்பதில்லை என்ற கருத்தும் முன்னுக்கு வருகிறது. பல மட்டங்களில் இக்குரல்களைக் கேட்க முடிகிறது. முதலாளித்துவ கட்சிகளைப் போன்று, மகளிர் அணி, இளைஞர் அணியாக இவை மாற வேண்டும் என்ற தொனி இதற்குள் இருக்கிறது. இது அவசரகதியில் உருவாகும் கருத்து; பலவீனம் எங்கிருந்து வருகிறது என்பதை மார்க்சீய அடிப்படையில் ஆய்வு செய்யாத போக்கு; கட்சி ஸ்தாபன குறைபாடுகளை லேசாகப் பார்க்கும் பார்வை.
பெருமளவு மக்களை வர்க்க மற்றும் ஜனநாயக அரசியலின் பக்கம் வென்றெடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் வெகுஜன அமைப்புகள் என்ற கருத்தாக்கம் உருவாக்கப்பட்டது. அப்படியானால் நடைமுறையில் பரந்த அளவிலான செல்வாக்கு பெற்ற, மக்களைத் திரட்டும் திறன் வாய்ந்ததாக இவை செயல்பட வேண்டும். கட்சி உறுப்பினர்கள் ஆதரவாளர்களை மட்டும் சுற்றிய குறுகிய குழுவாக இவை செயல்பட்டால், அது நோக்கத்தை நிறைவேற்றாது. கட்சி வட்டத்துக்கு வெளியில் இருக்கும் வெகுமக்களை இவை ஈர்ப்பவையாக இயங்க வேண்டும். சுதந்திரமான, ஜனநாயக செயல்பாட்டை உறுதி செய்வதன் மூலமும், பொதுமக்களின் பிரச்னைகளில் வலுவான தலையீடு செய்வதன் மூலமும், போராட்டங்களை உருவாக்குவதன் மூலமும் கட்சியின்பால் வேறுபாடுகளைக் கொண்டுள்ள அல்லது கட்சிக்கு அப்பாற்பட்ட பொதுமக்களை அணுக முடியும்.
அத்தகைய தொடர்புகளை முதலில், பொருத்தமான வர்க்க வெகுஜன அமைப்புகளின் உறுப்பினர்களாக ஆக்க வேண்டும். கிளையாக அமைத்து செயல்படுத்த வேண்டும். அந்த அரங்கத்தின் அரசியல் குறித்தும், மக்களின் பிரச்னைகள் குறித்தும் கிளர்ச்சி பிரச்சாரம் செய்வதன் மூலம் அவர்களை அரசியல் படுத்த முடியும். பிரச்னைகள் ஏன் ஏற்படுகின்றன, அரசின் கொள்கையும், நடவடிக்கையும் ஏன் சாதகமாக இல்லை, என்ன முரண்பாடுகள் ஏற்படுகின்றன, மார்க்சிஸ்ட் கட்சி முன் வைக்கும் மாற்றுக் கொள்கை என்ன என்பன போன்ற விஷயங்கள் எடுத்துச் சொல்லப்பட வேண்டும். இந்த சங்கிலித்தொடர் போன்ற நடவடிக்கைகளை எடுப்பதில் உண்மையில் பலவீனம் உள்ளது. இது இடைவெளியை ஏற்படுத்துகிறது.
மற்றொரு பக்கம், வர்க்க வெகுஜன அமைப்புகள், தம் உறுப்பினர் பதிவு இலக்கை இயந்திரகதியாகப் பார்க்கும் பார்வையும் நிலவுகிறது. அமைப்புகளுக்குள் வருபவர்கள் ஆண்டு தோறும் புதுப்பிக்கப் பட வேண்டும், தக்க வைக்கப்பட வேண்டும், செயல்பாட்டாளர்களாக மாற்றப் பட வேண்டும். எண்ணிக்கையை மட்டும் அடிப்படையாக வைத்துக்கொண்டு ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு இடத்தில் எண்ணிக்கை நிறைவேறுவதற்காக உறுப்பினர்களை இணைப்பது எதிர்பார்க்கும் பலனைத் தராது. இது பள்ளிகளில் சேரும் குழந்தைகள் இடை நிற்றல், விடுபடுதல் போல; புதியவர்களை சேர்த்து எண்ணிக்கையை நேர் செய்யலாம். ஆனால் சேர்ந்தவர்கள் விடுபட்டுக் கொண்டே இருந்தால் கல்வி முழுமை பெறாது. அனைவரையும் படிப்பிக்க வேண்டும் என்ற நோக்கம் நிறைவேறாது. அதே போல் கிளைகளுக்குக் கீழ் உள்ள உறுப்பினரின் எண்ணிக்கை, தொடர்பு கொள்ளத் தக்க அளவாக இருக்க வேண்டும். உறுப்பினர்களுடன் நெருக்கமாக இடைக்குழு, மாவட்டக் குழு இருக்க முடியாது என்பதற்காகக் கிளை அமைக்கப்படுகிறது. 1000 முதல் 3000 வரை உள்ள உறுப்பினர்களுக்கு ஒரு கிளை என்பது, பேருக்கு அமைக்கப்பட்ட கிளையாக இருக்குமே தவிர, உறுப்பினர்களை நெருக்கமாக சந்தித்து உரையாட வாய்ப்பு இருக்காது. நோக்கத்தைக் கணக்கில் எடுக்காமல் இயந்திரகதியாக செயல்படுவதன் விளைவுகளில் இதுவும் ஒன்று.
வெகுஜன அமைப்புகளில் செயல்படும் கட்சி உறுப்பினர்கள் இந்த அரசியல் நோக்கத்தை உணர்ந்து, புரிந்து பணிகளை ஆற்ற வேண்டும். பிராக்ஷன் கமிட்டிகள் இதற்கான வழிகாட்டுதலை உருவாக்க வேண்டும். இல்லையேல் உழைப்பு முழுதும் விழலுக்கு இறைத்த நீராகி விடும். வருடம் முழுதும் வெகுஜன அமைப்பின் உறுப்பினர் பதிவில் கழிப்பது, அதன் கிளைகள் செயல்பாட்டைப் புறக்கணிப்பது, அரசியல் படுத்த எவ்வித முயற்சிகளையும் எடுக்காமல் இருப்பது, ஆனால் தேர்தல் வந்தால் வாக்குகள் மட்டும்விழ வேண்டும் என்று எதிர்பார்ப்பது எப்படி சாத்தியமாகும்?
வெகுஜன அமைப்புகளில் பல மட்ட பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டும் அதன் படி இயங்காத கட்சி உறுப்பினர்கள் ஒருபுறம், எந்த அமைப்பிலும் உறுப்பினர் கூட ஆகாத கட்சி உறுப்பினர்கள் மறுபுறம் என்கிற நிலை நீடிக்கிறது. பலவீனமும், சரிவும் இங்கிருந்து தான் துவங்குகிறது. மக்களுடன் உயிரோட்டமான தொடர்பு என்பது அவ்வப்போது வெளியிலிருந்து சென்று அவர்களைப் பார்வையிட்டு வருவது அல்ல, நமக்கு எல்லாம் தெரியும் என்ற நிலையிலிருந்து சில ஆலோசனைகளை சொல்லிச் செல்வது அல்ல. இடைக்குழு தலைமை அந்த இடத்திலிருந்து திரும்பி வந்து விட்டாலும், கட்சி/வர்க்க வெகுஜன அமைப்புகளின் கிளைகள் அங்கு இருக்க வேண்டும். அப்போது தான் தொடர்பு அறுபடாமல் இருக்கும். வெகுஜன அமைப்புகளின் நோக்கம் என்ன, கட்சி உறுப்பினர்களுக்கு அவ்வமைப்புகளில் இருக்கும் அரசியல் கடமை என்ன என்பது புரிந்தாலே மாஸ் மெம்பர்ஷிப் வேண்டாம் என்பதும், கட்சியின் பாசறைகளாக அமைப்புகளைக் குறுக்க வேண்டும் என்பதும் அடிபட்டுப் போய் விடும்.
ஆனால் கட்சி கிளைகள் உள்ள இடங்களில் வெகுஜன அமைப்புகள் இல்லை என்பதும், வெகுஜன அமைப்புகள் உள்ள இடங்களில் கட்சிக் கிளைகள் இல்லை என்பதும் சுட்டிக் காட்டும் அம்சம் என்ன? உயிரோட்டமாக மக்கள் தொடர்பில் இருத்தல் குறித்த புரிதலை முற்றாகத் தவற விடுகிறோம் என்பது தான். ஒரு கட்சிக் கிளை செயல்படும் இடத்தில் வெகுஜன அமைப்பும் இல்லை, துணை குழுவும் இல்லை என்றால் அந்தக் கிளை என்ன வேலை செய்திருக்க முடியும்? செயல்பாட்டின் ரிசல்ட் அரசியல் ஸ்தாபன விரிவாக்கமாக இருக்க வேண்டாமா? மக்களை நம் அமைப்புக்குள் கொண்டு வருவதன் மூலமாகத் தானே தொடர்பை ஸ்திரப்படுத்த முடியும், தக்க வைக்க முடியும், தளமாக மாற்ற முடியும்..
தேர்தலில் வெற்றி பெறுவது அப்படிப்பட்ட வெகுஜன தளத்தைக் கட்டி அமைப்பதைப் பொறுத்தது. அது எளிதல்ல, அதற்குக் குறுக்கு வழியும் இல்லை. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நினைத்த மாத்திரத்தில் மாற்றுகிற ரிமோட் எதையும் புரட்சிகர இயக்கம் எதிர்பார்க்க முடியாது. “புரட்சி என்பது ஆப்பிள் பழத்தைப் போல அல்ல, பழுத்து தானாக உங்கள் மடியில் உதிர; அது நடத்தப்பட வேண்டும், நிகழவைக்கப் பட வேண்டும்” என்ற சே குவாராவின் வார்த்தைகள் மிகப் பொருத்தமானவை.. மக்களை நேசிப்பதும், அவர்களுடன் இருப்பதும், அவர்களின் வாழ்க்கையிலிருந்தும் உணர்வு மட்டத்திலிருந்தும் கற்றுக் கொண்டு மாற்றத்துக்கான தத்துவத்தை அவர்களுக்குக் கற்றுக்கொடுப்பதுமே தேவை.
வேலை முறையில் மாற்றம்
செயல்படாத தன்மையினால் உறுப்பினர்கள் விடுபடுகிறார்கள் என்ற பிரச்னை வருகிறது; சில சமயம், என்ன வேலை பார்த்து என்ன என்பதான சோர்வு மனநிலை ஏற்படுகிறது. இவற்றுக்குப் பல காரணிகள் உண்டு. அதில் இயந்திரகதியான வேலை முறை என்பதும் அடங்கும். அடிப்படை புரிதல் இல்லாமல் வேலை செய்வதானது, சிறு தோல்விகள் வந்தாலே ஓட வைத்து விடும். மாற்றங்களற்ற ஒரே மாதிரியான வேலை முறை பயன் தராது. ஒவ்வொரு இடத்துக்கும், ஒவ்வொரு களத்துக்கும், ஒவ்வொரு சூழலுக்கும் பொருத்தமான முறை வேண்டும். ஒன்று தோற்றால் அடுத்தது என்று முயற்சிகள் தொடர வேண்டும். பொதுவாக உயர்மட்ட கமிட்டிகளுக்குப் போக போக, மக்களிடமிருந்து ஓர் இடைவெளி உருவாகும். கிளை, இடைக்குழு அளவுக்கான நெருக்கம் வர வாய்ப்பில்லை. அப்படியே விட்டு விட்டால், பழைய அனுபவங்களிலிருந்து மட்டும் வழி காட்ட வேண்டியிருக்கும். அல்லது கீழ் கமிட்டிகள் சொல்வதை அடிப்படையாக வைத்து மட்டுமே முடிவுக்குப் போக வேண்டியிருக்கும். இது மார்க்சீய அணுகுமுறையாக இருக்காது. தலைமையின் அனுபவம், மக்களின் அனுபவங்களை, தொழிலாளி வர்க்கத்தின் அனுபவங்களின், விவசாயிகளின் அனுபவங்களை உள்வாங்கியதாக இருக்க வேண்டும் என்று லெனின் கவனப்படுத்துகிறார்.
மார்க்சிஸ்ட் கட்சியின் சில மாவட்டக் குழுக்கள் சில சம்பவங்கள் நடந்ததாகத் தெரிந்த உடன், அந்த இடத்துக்கு விரைகின்றன. கள நிலைமையைப் பரிசீலிக்கின்றன. தலையீட்டுக்கு அது தான் முதல் படி.. அலுவலகத்திலேயே இருந்து கொண்டு செய்தியைக் கேட்பதும், வரும் தகவல்களைப் பெறுவதும் கள நிலையைக் காட்சிப்படுத்தாது. நேரில் செல்லும் போது கூடுதல் விவரங்களை சேகரிக்க முடியும், மக்களின் மனநிலையை அறிந்து கொள்ள முடியும். அந்த இடத்தின் தன்மை, குடியிருப்புகளின் நிலை போன்றவை நிலைமையை மதிப்பீடு செய்ய உதவும்.
100 நாள் வேலை பற்றிய ஒரு பிரச்னை வருவதாக எடுத்துக் கொள்வோம். வேலை நடக்கும் ஒரே ஒரு இடத்துக்குக் கூட போகாத மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உண்டு. அவர்களும் இடம் பெறும் மாவட்டத் தலைமை, கூட்டுத்தலைமையாக எப்படி வழி காட்டும்? அந்த அரங்கின் பொறுப்பாளர் என்ன கருத்தை வைக்கிறாரோ அது விமர்சனமின்றி ஏற்றுக் கொள்ளப்படும் என்கிற நிலைமையே உருவாகும். சட்டம் எப்படியெல்லாம் மீறப்படுகிறது என்பது நேரில் சென்று அத்தொழிலாளிகளுடன் உரையாடினால் தான் புரியும். நிழல் பந்தல் இல்லாமல் கொளுத்தும் வெயிலில் மதிய உணவை முடிப்பதற்குள் படும் அவஸ்தை, குழந்தைகளைப் பராமரிக்க ஆள் இன்றிப் புழுதியில் அவர்களை விடும் நிலை, குடிநீர் விநியோக ஏற்பாடு இல்லாததால் வீட்டிலிருந்து 3 லிட்டர் தண்ணீர், மதிய உணவு இவற்றை எல்லாம் தூக்கிக்கொண்டு வரும் சிரமம், எப்போது கடைசியாகக் கூலி கிடைத்தது, எவ்வளவு போன்ற விவரங்களை எப்படிப் புரிந்துகொள்ள முடியும்? அது விவசாய இயக்கங்களின் பணி மட்டுமா? கிராமப்புற பிரச்னைகளைக் கையாளும் பொறுப்பு கம்யூனிஸ்ட் கட்சிக்கு உண்டல்லவா? பெரும்பகுதி அல்லது சரி பாதி மாநகர/நகர பகுதிகளைக் கொண்ட மாவட்டங்களில் கிராமப்புற பிரச்னைகள் மைய பிரச்னைகளாக அவ்வளவு சுலபமாக வருவதில்லை என்பதை இதனுடன் இணைத்துப் பார்க்கவேண்டும்.
பிளீனம் அறிக்கை கட்சித் தலைமைக்கு சில வழிகாட்டுதல்களை அளிக்கிறது. பொது கூட்டங்களிலும், பேரணிகளிலும் மக்கள் முன் பேசுவது என்பது மட்டுமே மக்களுடன் தொடர்பு கொள்ளும் முறை என்ற மாயை உடைக்கப் பட வேண்டும். வீடு வீடான பிரச்சாரம், நிதி வசூல் போன்ற இயக்கங்களில் பங்கேற்க வேண்டும். கட்சி பேரவை, ஆதரவாளர் கூட்டங்களில் பங்கேற்று கிளை மட்டத்திலிருந்து வரும் கருத்துக்களைப் பொறுமையுடன் கேட்டுப் புரிந்து கொள்ள வேண்டும். நிகழ்ச்சி முடிந்த பின் கிராமங்களிலும் தொழிலாளர் குடியிருப்புகளிலும் தங்கி மக்களுடன் உறவாட வேண்டும். போராட்டங்கள் திட்டமிடும் இடங்களில் தங்கி வழி காட்ட வேண்டும்.
மக்களின் தேவையிலிருந்தே பணிகள் வகுக்கப் பட வேண்டும், தனிப்பட்ட தோழரின் சொந்த விருப்பத்திலிருந்து அல்ல. சில சமயம் பிரச்னைகள் இருக்கும், மாற்றத்துக்கான அவசியமும் இருக்கும், ஆனால் மக்கள் அதை இன்னும் உணராமல் இருப்பார்கள், மாற்றத்துக்குத் தயாராகாமல் இருப்பார்கள். அங்கு அவசரப்படக் கூடாது, பொறுமையுடன் பணி செய்து, அவர்களை உணர வைக்க வேண்டும், தயார் நிலைக்குக் கொண்டு வர வேண்டும். உதாரணமாக ஒரு நிகழ்ச்சிப் போக்கு மக்களை பாதிக்கும் என்று முன்கூட்டியே உணருகிறோம் என்று வைத்துக் கொள்வோம். அது நிலம் கையகப்படுத்தும் பிரச்னையாக இருக்கலாம், நிலத்தடி நீர் பாதிப்பாக இருக்கலாம். அதை மக்கள் உணரும் முன்பே, தட்டி வைத்து, துண்டுப்பிரசுரம் விநியோகித்து, இயக்கமும் நடத்தினால் மக்கள் பங்கேற்பு இருக்காது. ஆனால் நமது பிரச்சாரத்தின் தாக்கத்தில் மக்கள் அதை உணர்ந்து களத்துக்கு வரும் போது, ஏற்கனவே பலமுறை நாம் எடுத்த பிரச்னை என்பதால், அதை முடித்து விட்டு அடுத்த பிரச்னைக்கு நாம் போயிருப்போம். அது பலன் தராது. சோர்வைத் தான் தரும். முதன்மை நோக்கம் என்பது மக்களைத் திரட்டி செயல்பாட்டில் இறக்குவதாக இருக்க வேண்டும்.
மக்களைத் திரட்டினால் மட்டும் போதாது, வர்க்க அரசியல் உணர்வு பெற்றவர்களாக அவர்கள் மாறும் போது தான் சோஷலிச புரட்சி உருவாகும். இதற்கு முன் நடந்த சமூக மாற்றங்களில் மக்களின் பங்குபாத்திரம் இருந்தது என்பது உண்மை தான். ஆனால் மக்களின் அதிருப்தியைப்பயன்படுத்தி அதிகாரத்தைக் கைப்பற்றியது மற்றொரு சுரண்டும் வர்க்கம் தான். சோஷலிச புரட்சி மட்டுமே பெரும்பான்மை வர்க்கங்களின் கையில் அதிகாரத்தைக் கொடுக்க வல்லது. வர்க்க பேதம் அற்ற சமூகத்தை நோக்கிய பயணத்தைத் துவங்கக் கூடியது. எனவே, வெறும் எண்ணிக்கையில் அல்ல, அரசியல் உணர்வு பெற்ற, சோஷலிச கருத்துக்களில் ஈர்க்கப்பட்டிருக்கிற மக்கள் திரள் திரட்டப்பட வேண்டும்.
மக்களைக் கவ்விப் பிடிக்கும் போது தான் தத்துவம் ஒரு பவுதீக சக்தியாக மாறும் என்று மார்க்ஸ் சொன்னதாக இருக்கட்டும். கம்யூனிஸ்டுகளுக்கு மக்கள்மீது மாறா காதல் வேண்டும். யார் ஒருவருக்காவது அநீதி நடக்கும் போது பொங்கி எழுகிறவரே எனது தோழர் என்று சே குவாரா சொன்னதாக இருக்கட்டும். மக்களே உண்மையான கதாநாயகர்கள் என்று மாவோ சொன்னதாக இருக்கட்டும். ஒரு நொடி கூட மக்களுடனான தொடர்பு பலவீனமாக அனுமதிக்கக் கூடாது என்று ஸ்டாலின் கூறியதாக இருக்கட்டும். எல்லாவற்றிலும் பின்னிப் பிணைந்து இருப்பது உயிரோட்டமாக மக்கள் தொடர்பில் இருத்தல் என்பது தான். மக்கள் ஜனநாயகப் புரட்சியை இக்கால கட்டத்தின் இலக்காக வரையறுத்து, இடது ஜனநாயக அணி என்ற இடைக்கால முழக்கத்தை முன் வைத்து செயல்படும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் அதன் உறுப்பினர்களுக்கும் இது முற்றிலும் பொருந்தும்.