இயக்கவியல் விதி: எதிர்மறைகளின் ஒற்றுமை இருப்பை சாத்தியமாக்கும்

குரல்: ஆனந்த்ராஜ்

வெங்கடேஷ் ஆத்ரேயா

எதிர்மறைகளின் ஒற்றுமை இருப்பை சாத்தியமாக்கும்; ஆனால் அவற்றின் தவிர்க்க முடியாத முரண்பாடு / மோதல் வளர்ச்சிக்கு இட்டுச் செல்லும் இயக்கம் என்பதுதான் பொருளின் இருப்பு வடிவம் என்ற கருத்தை இயக்கவியல் பொருள் முதல்வாதம் முன்வைக்கிறது மாற்றம் என்பதே பொருளின் இயல்பு நிலை. விதிவிலக்கின்றி ஒவ்வொரு பொருளுக்கும்  இவ்விரு தன்மைகள் – இயக்கம், மாற்றம் பொருந்தும் என்பது– மார்க்சீய தத்துவத்தின் புரிதல்.

மார்க்சீய தத்துவம் ஒவ்வொரு பொருளிலும் எதிர்மறை அம்சங்கள் இணைந்துள்ளன என்று கூறுகிறது. இந்த எதிர்மறை அம்சங்களின் பரஸ்பர உறவில் ஒற்றுமை, முரண்பாடு ஆகிய இரண்டு அம்சங்களும் உண்டு ஒற்றுமை என்ற அம்சம்தான் பொருளின் இருப்பை உறுதிசெய் கிறது. பொருள் தனது இருப்பை இழக்காமல் இருக்க எதிர்மறை அம்சங்களின் ஒற்றுமை அவசியமாகிறது. இருப்பை காக்கும் பங்கை அது ஆற்றுகிறது. எனினும், பொருளின் இருப்பு வடிவமே இயக்கம், மாற்றம் என்பதால், அந்த மாற்றத்திற்கான உந்துசக்தியாக இருப்பது பொருளில் புதைந்திருக்கும் எதிர்மறை அம்சங் களுக்கு இடையேயான முரண்பாடுதான்.  பொருளில் உள்ள எதிர்மறை அம்சங்களின் உறவிலுள்ள ஒற்றுமை என்ற தன்மை பொருளின் இருப்பை சாத்தியமாக்குகிறது. எதிர்மறை அம் சங்களின் உறவில் உள்ள முரண்பாடு என்ற அம்சம்தான் மாற்றத்தை சாத்தியமாக்குகிறது.  ஒற்றுமை என்ற அம்சம் தற்காலிகத் தன்மை கொண்டது. ஏனெனில் பொருள் மாறாமல், வளராமல் இருக்க இயலாது. பொருளின் தன்மை மாறும்வரை உள்ள இருப்பு என்பதை ஒற்றுமை என்ற அம்சம் சாத்தியமாக்கினாலும், இறுதியில் தவிர்க்க முடியாதது மாற்றமே.  ஒற்றுமை அம்சம் ஒரு கட்டத்தில் – பொருளின் தன்மை மாற்ற கட்டத்தில் – காலாவதி ஆகிவிடும். ஆனால், முரண்பாடு என்ற அம்சம் நிரந்தரமானது; அடிப் படையானது. அதுவே அடுத்த கட்ட வளர்ச்சிக்கு தன்மை மாற்றத்தை உருவாக்கி, இட்டுச் செல்கிறது. 

இயற்கையில்  பல உயிரினங்கள் முட்டை போட்டு குஞ்சு பொறித்து இனப்பெருக்கம் செய்கின்றன.  முட்டையின் ஓடுதான் குஞ்சுகள் உயிருடன்  வெளிவருவதற்கான கட்டம் வரும் வரை குஞ்சுகள் வளர்வதற்கான பாதுகாப்பை அளிக்கின்றது. ஆகவே, முட்டையின் ஓட்டுக்கும் குஞ்சுகளுக்கும் உள்ள உறவில் ஒற்றுமை என்ற அம்சம் உள்ளது.  ஆனால், முட்டையின் ஓடு உடைவதன் மூலம் தான் குஞ்சுகளின் உயிரும் அடுத்தகட்ட வளர்ச்சி யும் சாத்தியமாகும். எனவே பொறிக்கப்படும் குஞ்சுகளுக்கும் முட்டையின் ஓடுக்கும் உள்ள உறவில் முரண்பாடு என்ற அம்ச மும் உள்ளது. அதுவே, அடுத்தகட்ட வளர்ச்சிக்கு அவசியம் ஆகிறது. இயற்கையில் இத்தகைய நிலைமைதான் பொதுவானது.

சமூகத்தில் முதலாளித்துவ அமைப்பில் தொழிலாளி களும் முதலாளிகளும் இரு பெரும் வர்க்கங்களாக மோதுகின்றனர். நமது அனுபவம் கூறுவது என்ன? முதலாளித்துவ அமைப்பு நடப்பில் இருக்கும்பொழுது, தனது வாழ்வாதாரத் திற்கே தொழிலாளி வர்க்கம் முதலாளி வர்க்கத்தை சார்ந்து இருக்கிறது. தனது இருப்பு என்பதே வேலையும் சம்பளமும் கிடைத்தால்தான் என்ற நிலையை தொழிலாளி வர்க்கம் சந்திக்கிறது. அதேபோல், தொழிலாளிகளை வர்க்க எதிரியாக முதலாளி வர்க்கம் உணர்ந்தாலும், லாபம் ஈட்ட தொழிலாளிகளின் உழைப்பு இன்றியமையாதது என்பதை முதலாளி வர்க்கம் சந்திக்கிறது. (“செயற்கை நுண்ணறிவு” என்று தற்காலத்தில் பரவலாக பேசப்படும் AI – Artificial Intelligence இந்த நிலைமையை மாற்றாது).

எனவே முதலாளித்துவம் என்ற அமைப்பின் இருப்பிற்கு எதிர்மறையான தொழிலாளி-முதலாளி வர்க்க உறவில் உள்ள ஒற்றுமை என்ற அம்சம் அவசியமாகிறது. ஆனால், முதலாளித்துவம் வளர்வதே தொழிலாளி வர்க்கம், முதலாளி வர்க்கம் ஆகிய இரு வர்க்கங் களின் மோதலால் தான். இதுதான் இயந்திர மாக்கலுக்கும்  பெரும் வேலையின்மைக்கும், உற்பத்தி சக்திகளின் அதிவேக வளர்ச்சிக்கும்,  போட்டி முதலாளித்துவம் ஏகபோக முதலாளித் துவமாக மாறவும் இட்டுச்செல்கிறது. இதுவே  இறுதியில் வர்க்க முரண்பாடு முற்றி, தொழிலாளி வர்க்கம் முதலாளி வர்க்கத்தை வீழ்த்தி, சோசலிச அமைப்பை உருவாக்கவும் இட்டுச் செல்கிறது.  இங்கும் எதிர்மறை அம்சங்களின் ஒற்றுமை அம்சம் இருப்பையும் அவற்றின் முரண்பாடு மாற்றத்தையும் சாத்தியப்படுத்துவதை காண முடிகிறது.