ஆர்.எஸ்.எஸ்.சின் தாக்குதல்

கே.என். பணிக்கர்
தமிழில் எம். அசோகன்

முகமது அலி ஜின்னா ஒரு மதச்சார்பின்மைவாதி என்று லால் கிருஷ்ண அத்வானி மதிப்பிட்டார். அந்தக்கூற்று வரலாற்று ரீதியாகத் துல்லியமானதா இல்லையா என்பது, இந்து வகுப்புவாத அரசியலின் எதிர்காலத்திற்கும் அத்வானியின் சொந்த தத்துவார்த்த நிலையெடுப்பிற்கும் அந்தக் கூற்றுக்கும் இருக்கும் சம்பந்தத்தை விட முக்கியமானதல்ல. இத்துணைக் கண்டத்தின் இருபதாம் நூற்றாண்டு அரசியலில் ஜின்னாவின் பங்கு குறித்த முழுமையான மதிப்பீடாக அத்வானியின் பாகிஸ்தான் பேச்சு இருக்கவில்லை என்பது கண்கூடு. திரட்டுவதற்காக ஜின்னா மதத்தைப் பயன்படுத்திய விதத்தைப் பற்றி இவர் குறிப்பிடவில்லை; மதவாத அரசான பாகிஸ்தான் ஜின்னாவை ஏன் தேசத் தந்தையாக பூஜிக்கிறது என்று கேள்வி எழுப்பவில்லை.

தன்னுடைய ஆரம்பகால அரசியல் வாழ்வில் தாராளவாதியாக இருந்த ஜின்னா பக்திசிரத்தையுள்ள முஸ்லீம் அல்ல. எனினும், இந்துத்துவாவின் மூலகர்த்தாவான வினாயகக் தாமோதர் சாவர்காரைப் போல தேசிய அடையாளத்திற்கு ஒரு மூலமாக மதம் இருக்க முடியும் என்பதை உணர்ந்தார். அரசியல் நோக்கங்களுக்காக அதை வெற்றிகரமாகக் கையாண்டார். 1947, ஆகஸ்ட் 11ல் பாகிஸ்தான் அரசியல் நிர்ணய சபைக் கூட்டத்தில், புதிய நாடு மதச்சார்பற்ற நாடாக ஆக வேண்டுமென்று பாகிஸ்தான் நிறுவனர் ஜின்னாவின் அந்தப் பேச்சை மட்டும் அத்வானி குறிப்பிட்டது கவனிக்கத்தக்க தாகும். மேலும் அரசின் பார்வையில் அனைத்து குடிமக்களும் சமம் மற்றும் அனைத்துக் குடிமக்களும் தாங்கள் விரும்புகிற மதத்தைப் பின்பற்ற சுதந்திரம் உண்டு என்பதே மதச்சார்பின்மைக்கு விளக்கம் கொடுத்தார். இதைத்தான் நாங்கள் இந்தியாவில் மதச்சார்பற்ற அல்லது மதவாத மற்ற அரசு என்று அழைக்கிறோம்.. அந்த அரசில் (நாட்டில்) மத வெறிக்கோ, வெறுப்பிற்கோ, சகிப்பின்மைக்கோ மற்றும் மதத்தின் பெயரால் பாரபட்சம் காட்டுவதற்கோ இடமில்லை என்று மேலும் கூறினார்.

ஆனாலும், இதை மதச்சார்பின்மை என்று அத்வானி இந்தியாவில் கூறுவதில்லை. ஆனால் அதை வர்ணிப்பதற்கு கிட்டத்தட்ட இவருடைய அரசியலைப் போலவே அங்கே ஜின்னாவின் அரசியலும் இருந்ததால் ஜின்னாவிற்கு மதச்சார்பின்மைவாதி என்ற மகுடம் சூட்டுவதால் இவருக்கு ஆதாயம் இருக்கிறது. அப்படிச் செய்யும் போது, ஜின்னாவின் ஆகஸ்ட் உரை பாதை பிறழ்வு என்பதையும், பின்னாளில் ஜின்னாவே அதைத் திருத்திக் கொண்டார் என்பதையும், ஆகஸ்ட் உரை பாகிஸ்தானில் முற்றிலும் மறக்கப்பட்டுவிட்டது என்பதையும் அத்வானி கண்டும் காணாதது போல் விட்டுவிட்டார். ஆதலால் அத்வானி பேச்சின் அர்த்தமும் நோக்கமும் ஜின்னாவை மதிப்பிடுவதற்கு அப்பால் வெகுதூரம் செல்கிறது. அந்தப் பேச்சுக்கு பல்வேறு விளக்கங்கள் கொடுக்கப்படுவது மட்டுமின்றி, சங்பரிவாருக்குள் கடுமையான உணர்வுகளைக் கிளறிவிட்டது. தன்னுடைய பேச்சு என்னென்ன அரசியல் விளைவுகளை உண்டாக்கும் என்பதை அத்வானி அறியாமலிருத்திருக்க முடியாது.

அப்படியெனில், மதச்சார்பின்மை குறித்த ஜின்னாவின் கருத்துக்களுக்கு அத்வானி ஒப்புதல் அளித்தது, ஆழ்ந்த – கவனமான யோசனையில் விளைவாக மட்டுமே இருக்க முடியும். பாகிஸ்தானில் அவருக்கேற்பட்ட ஞானோதயம் அவர் இது நாள்வரைக் கடைப்பிடித்து வந்த அரசியலின் தன்மை குறித்து வேண்டுமென்று நடத்தப்பட்ட தற்சோதனையின் விளைவாகவும், கடந்த பொதுத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி மற்றும் அதன் விளைவாக தே.ஜ.கூ. உடைந்து சிதறிய பின்னணியில் பாஜக தன்னுடைய தத்துவத்தையும் அரசியல் நடைமுறையையும் மறுவடிவமைக்க வேண்டுமென்ற அவருடைய திட நம்பிக்கையைக் குறிப்பதாகவும் இருக்கக் கூடுமா?

அத்வானியும் இந்துத்துவமும்

இந்துத்துவத்தின் தீவிர முகமாக அத்வானி இருந்து வருகிறார். ஆர்.எஸ்.எஸ்.சின் தத்துவத்திலிருந்து கடந்த காலத்தில் அவர் கடுகளவு கூட விலகியதில்லை. உண்மையில் அவர்தான் பாஜகவில் ஆர்.எஸ்.எஸ்.சின் முக்கிய குரலாக இருந்தார். சங்பரிவார் உறுப்பினர்கள் நாகரீகமான நடத்தையின் எல்லைகளை அடிக்கடி மீறியதெல்லாம் வாஜ்பாய் போல இவர் மனசாட்சியின் உறுத்தலுக்கோ, தொந்தரவுக்கோ ஆளானதில்லை. பாபர் மசூதி இடிக்கப்பட்டதை இவர் கொண்டாடியதாகச் செய்திகள் கூறுகின்றன; குஜராத்தில் நரேந்திடி மோடியை பாதுகாத்திருக்கிறார், ஆதரித்திருக்கிறார். இந்து உணர்வுகளை அவர் திறமையாகவும் சூழ்ச்சியாகவும் கையாண்டதால் பாஜக அதிகாரத்திற்கு வந்தது என்று சரியாகவே குறிப்பிடப்படுகிறது. மதச்சார்பின்மையின் மீது இடைவிடாமல் தாக்குதல் தொடுத்தார்; போலி மதச்சார்பின்மை எனற கருத்தை உருவாக்கி அதை இடைவிடாமல் பிரச்சாரம் செய்தார்; இந்துக்களின் மத உணர்வுகளைத் தூண்டும் வகையில் அயோத்திக்கு ரதயாத்திரையை தலைமையேற்று நடத்தினார். இவ்விதமாக அவர் இந்து வகுப்புவாத அரசியலுக்கு பெரும் ஊக்கத்தை அளித்தார்; பாஜக அதிகாரத்திற்கு உயர்ந்ததற்கு காரணகர்த்தாவாக அங்கீகரிக்கப்பட்டார். சமரசமின்றி ஆர்எஸ்எஸ் தத்துவத்தைக் கடைப்பிடித்தால் அவர் இதைச் சாதித்தார். கடந்த தேர்தலில் தே.ஜ.கூ. வெற்றி பெற்றிருந்தால் எப்போதும் ஊசலாடிக் கொண்டிருக்கும் வாஜ்பாய்க்குப் பதில் பிரதமர் பதவிக்கு ஆர்எஸ்எஸ்சின் தேர்வாக இவரே இருந்திருப்பார்.

இந்தப் பின்னணியில் பார்க்கும் போது, அவரது பாகிஸ்தான் பயணம் ஒரு மாறுபாட்டைத் தெரிவித்தது. அநேகமாக அது தனக்கும் தனது கட்சிக்கும் ஒரு புதிய பிம்பத்தை காட்டும் முயற்சி, இத்துணைக் கண்ட அரசியல் வரலாறு பற்றியும், அவ்விஷயத்தில் இந்துத்துவ அணுகுமுறை பற்றியும் ஒரு விவாதத்தைத் துவக்கி வைக்கலாம் என அத்வானி நம்பியது போல் தெரிகிறது. ஆனால் ஜின்னாவும் அவரது அரசியலும் தேசப் பிரிவினைக்கும் மற்றும் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் படுகொலைக்கும் இட்டுச் சென்றது என்ற சங்பரிவாரின் புரிதலை விவாதத்திற்கு இடமில்லை என்று வலியுறுத்தியதன் மூலம் அதற்கான சாத்தியக் கூற்றை மூடி அடைத்து விட்டது. அத்வானியின் பாகிஸ்தான் பயணம் சங்பரிவாரின் அரசியல் மற்றும் நடைமுறையை பலஹீனப்படுத்தி விட்டது என்று ஆர்எஸ்எஸ் கருதியது. ஹிந்து லட்சியத்தின் மீதான அவரது பற்றுருதி இழந்து விட்டார் என்றே கருதினர். ஆர்எஸ்எஸ் மட்டும் இப்படிக் கருதவில்லை. ஏராளமான பாஜக தலைவர்களும் தொண்டர்களும் கூட அப்படியே கருதினார்கள். ஏனெனில் கண்டனம் பிரவீன் தொகாடியா மற்றும் அசோக் சிங்கால் போன்ற வெறியர்களிடமிருந்து மட்டும் வரவில்லை. ஆனால் முரளி மனோகர் ஜோஷி, யஷ்வந்த்சின்கா போன்ற மூத்த தலைவர்களிடமிருந்தும் வந்தது. அத்வானியின் பேச்சை சங்பரிவாரின் தத்துவத்தை நீர்த்துப்போகச் செய்வது என யஷ்வந்த் சின்கா வர்ணித்தார். கட்சியிலிருந்து அவரது நெருங்கிய நண்பர்கள் கூட ஜாக்கிரதையாக மௌனம் சாதித்தனர்.

கட்சித் தலைவர் பதவியிலிருந்து அவர் விலக வேண்டுமென்று கோரி அவரது ராஜினாமாவைப் பெறும் அளவிற்கு விஎச்பியும் ஆர்எஸ்எஸ்சும் அதிகக் கோபமடைந்தன. தன்னுடைய பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக பாகிஸ்தானில் எடுத்த கருத்து நிலையிலிருந்து அத்வானி பின்வாங்க வேண்டியிருந்தது. யாருடைய கட்டளை பரிவாரத்திற்குள் செல்லுப்படியாகிறது என்பதை ஆர்எஸ்எஸ் மீண்டுமொருமுறை உறுதிப்படுத்தியது.

சங்பரிவாரின் உடடினயான கடும் எதிர்வினையை, பாகிஸ்தான் மற்றும் முஸ்லீம்கள் அதன் அரசியல் தத்துவத்தில் என்ன இடத்தில் இருக்கிறார்கள் என்ற பின்னணியில் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். முஸ்லீம்கள் மற்றவர்கள் (அவர்கள்) என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்து வகுப்புவாதத் தத்துவம் அவர்களை அந்நியர்களாகக் கணக்கிட்டது மட்டுமின்றி அவர்களது மதவெறியும் கலாச்சார செல்வங்களை அழிக்கும் குணமும் இந்திய நாகரீகத்திற்கு கணக்கிட முடியாத அளவு சேதத்தை உண்டு பண்ணியதாகவும் கருதுகிறது. வி.டி. சாவர்கர் மற்றும் மாதர் சதாசிவ கோல்வால்கர் போன்ற ஆரம்பகால வகுப்புவாத தத்துவவாதிகளால் முன்வைக்கப்பட்ட இத்தகைய கண்ணோட்டம் பின்னர் சங்பரிவாரின் அரசியல் மற்றும் அறிவுசார் நடைமுறையின் மையமாக பின்பற்றப்பட்டது. அவர்களைப் பொறுத்த வரையில், கலாச்சார ரீதியாகவோ அரசியல் ரீதியாகவோ முஸ்லீம்கள் இந்த தேசத்தைத் சேர்ந்தவர்களில்லை; முஸ்லீம்களின் தனிமையுணர்வின் விளை வாகவே பாகிஸ்தான் உருவானது. இதனால் அவர்களால் (சங்பரி வாரங்களால்) 1947-ல் சுதந்திர பாகிஸ்தான் நாடு உருவான அரசியல் யதார்த்தத்தை ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. பாகிஸ்தான் முறைதவறிப் பிறந்த நாடாகக் கருதப்பட்டது. அதை இல்லாமல் செய்வது 1947-லிருந்து சங்பரிவார் இடைவிடாமல் கடைப்பிடித்து வந்த வகுப்புவாத நிகழ்ச்சி நிரலின் உள்ளார்ந்த பகுதியாக இருந்தது. ஒன்றுபட்ட இந்து நாட்டை மீண்டும் நிறுவுவது அதன் உறுதியான குறிக்கோளாக இருந்தது. பாகிஸ்தானையும் பங்களாதேஷையும் இணைத்து அகண்ட பாரதம் உருவாக்குவதன் மூலம் 1947ல் பாகிஸ்தான் உருவான வரலாற்று யதார்த்தத்தை அழிப்பது. இந்தியப் பிரிவினைக்கு இந்து தேசத்தின் மீது முஸ்லீம்களுக்கு இருந்த பகைமையுணர்வே காரணம் என்று அவர்கள் கூறினார்கள். மேலும் பிரிட்டிஷ் ஆதரவுடன் செயல்பட்ட முகமது அலி ஜின்னா இந்துக்களுக்கு ஏற்பட்ட துயரத்திற்குக் காரண கர்த்தா என்று கருதப்பட்டார். இந்த கருத்திற்காக தொடர்ந்து வாதாடி வந்தார் அத்வானி. அவர் பாகிஸ்தானில் அடித்த பல்டி சங்பரிவாரை மூச்சு திணற வைத்து விட்டது.

பாகிஸ்தானை மையமாக வைத்து வகுப்புவாதப் பிரச்சாரம் செய்யப்பட்ட போதும் உண்மையில் நாட்டிற்குள் முஸ்லீம்களை பேய் பிசாசுகளைப் போல் சித்தரிப்பதன் நீட்சியே அது. இந்த நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்ட பல பிரச்சினைகளில் முஸ்லீம் ஆட்சியாளர்களால் இந்துக் கோவில்கள் மிக வலுவானது. சங்பரிவாரின் தத்துவவாதிகள் (அல்லது அவர்கள் வரலாற்று அறிஞர்களா?) முஸ்லீம் ஆட்சியாளர்களால் 1000 கோவில்கள் இடிக்கப்பட்டதாகப் பட்டியலிட்டுள்ளார்கள். இந்தக் கோவில்களை மீண்டும் பெறுவதன் மூலம் முஸ்லீம் படையெடுப்பாளர்களால் இந்துக்களுக்கு அழைக்கப்பட்ட அவமானத்திற்குப் பழி தீர்ப்பதே வகுப்புவாதத்தின் திட்டம்.

உறங்கிக் கொண்டிருந்த ராமஜென்மபூமி கோவில் கட்டுவதற்கான இயக்கத்திற்கு உயிரூட்டினார் அத்வானி. ராமஜென்மபூமி கோவில் முகலாயப் பேரரசர் அக்பரின் படைத் தளபதி மீர் பாகியால் மசூதி கட்டுவதற்காக இடிக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. சோம்நாத்திலிருந்து அயோத்திக்கு அத்வானியால் நடத்தப்பட்ட ரதயாத்திரை இறுதியில் மசூதியை இடித்துத் தள்ளுவதை சாத்தியமாக்கியது; இந்திய நாகரீகத்தின் மீது ஆழமான தழும்பை உண்டாக்கிய அச்சம்பவமானது தற்கால இந்திய வரலாற்றின் நிர்ணயகரமான ஒரு தருணமாகும். சமீபகாலங்களில் காணப்பட்டவற்றில் மதரீதியான அணி திரட்டல்களில் மிகவும் சக்தி வாய்ந்த இயக்கமான அது பாஜகவிற்கு கணிசமான அரசியல் ஆதாயங்களைப் பெற்றுத் தந்தது. இதன் விளைவாக, இந்து அபிலாஷைகளை ஈடேற்றியவர், அதன் மூலம் பாஜகவின் அரசியல் வெற்றிக்கு பாடுபட்டவர் என்று அத்வானி புகழப்பட்டார். கடந்த தேர்தலில் பாஜகவிற்கு ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு, முன்பு போலவே கட்சிக்கு சக்தியூட்டுவார் என்ற எதிர்பார்ப்புடன் அத்வானி மீண்டும் கட்சித் தலைவராக்கப்பட்டார்.

பாகிஸ்தான் பயணத்தின் அர்த்தம்

அத்வானியின் பாகிஸ்தான் பேச்சுக்கள் மேற்குறிப்பிடப்பட்ட சங்பரிவாரின் அடிப்படையான கருத்துக்களுக்கு முரணாக இருந்தது. இந்தக் கருத்துக்களை உருவாக்கவும், பரப்பவும், நிலை நாட்டவும் அத்வானியே உதவியிருக்கிறார். பாகிஸ்தான் சம்பந்தப்பட்ட வகையில் யுத்த வெறியராகக் கருதப்படும் அந்த அத்வானி, பரிவாரத்தால் தொடர்ந்து பிடிவாதமாக எதிரியாக சித்தரிக்கப்படும் ஒரு நாட்டிற்கு, அதனுடன் நட்புறவை வளர்ப்பதற்காக பயணம் மேற்கொண்டதை முந்தைய நிலைப்பாட்டிலிருந்து விலகிச் செல்வதாகக் கூறலாம். அவர் அரசாங்கத்தின் உறுப்பினர் என்ற முறையில் சடங்கை நிறைவேற்றவொன்றும் அவர் சொல்ல வில்லையே! ஆகவே இந்தப் பயணமானது பாகிஸ்தான் எனும் நாட்டை அங்கீகரிக்கத் தயராக இருப்பதைக் குறிக்கிறது. இன்னும் முக்க்கியமாக போற்றி வளர்க்கப்பட்ட அகண்ட பாரத லட்சியத்தைக் கைவிடுவதையும் குறிக்கிறது. இப்பயணத்தின் அரசியல் அர்த்தம் குறித்து பாகிஸ்தானும் சங்பரிவாரும் உணர்ந்தே இருந்தன. ஆகவே, பகையான கடந்த காலம் இருந்த போதும், பாகிஸ்தான் அதிகாரிகள் இப்பயணத்தைப் பெரிதுபடுத்தினர். தங்களுடைய தத்துவார்த்த திட நம்பிக்கைகளின் மீது அப்பயணம் தொடுத்த பலத்த அடியால் சங்பரிவாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

பாபர் மசூதி இடிப்பைத் தூண்டிவிட்டவர்களில் பிரதானமான வரான அத்வானி மசூதி இடிப்பிற்கு வருத்தம் தெரிவிப்பதற்கு இப்பயணத்தை ஒரு வாய்ப்பாகவும் பயன்படுத்திக் கொண்டார். மசூதி இடிக்கப்பட்ட தினம் தன் வாழ்நாளின் மிக இருண்ட தினம் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். இது போன்ற உணர்வுகளை அதற்கு முன்பாக, வெளிப்படுத்தியிருந்த போதும் பாகிஸ்தானில் பேசியது கூடுதல் முக்கியத்துவம் பெற்றது. முஸ்லீம் உலகத்திற்கு அளிக்கப்பட்ட ஒப்புதல் வாக்குமூலம் போலவும் மன்னிப்பு கோருவது போன்ற தொனியிலும் அது இருந்தது. சங்பரிவாரத்திற்கோ மசூதி இடிப்பு வருத்தப்படுதவற்கான விஷயமல்ல. அதை மத மற்றும் தேசபக்த செயலென்று ஆரவாரம் செய்தது; இந்து தேசிய பெருமிதத்தையும் சுயமரியாதையையும் மீட்டெடுத்த செயல் என்றது. வாஜ்பாய் கூட அதை தேசிய உணர்வுகளின் வெளிப்பாடு என்று வர்ணித்தார். மசூதி இடிப்பிற்கும் அப்பால் ஒரு அர்த்தத்தை அச்செயலின் மீது சங்பரிவார் சுமத்தியது. முஸ்லீம்கள் செய்த வரலாற்றுத் தவறுக்குப் பழிவாங்கும் அடையாளச் செயல் என்று அர்த்தம் கற்பித்தது. அவர்களது குறி மசூதி அல்ல; உலகம் முழுவதும் இருக்கும் முஸ்லீம்கள். ஆகவே, மசூதி இடிப்பின் மூலம் மீட்டெடுக்கப்பட்ட சுயமரியாதையை அத்வானி அழித்து விட்டது போல் சங்பரிவாருக்குத் தோன்றியது.

தத்துவம் பலஹீனப்படுத்தப்பட்டது

“இந்து ராஷ்டிரா” எனும் கருத்தாக்கத்தைச் சுற்றிக் கட்டமைக்கப் பட்ட இந்து வகுப்புவாத சக்திகளின் தத்துவார்த்த பிணைப்பு சில காலமாக சிக்கலில் இருந்து வந்தது. இந்து வகுப்புவாத நிகழ்ச்சி நிரலில் மையமாக இருக்கக் கூடிய பிரச்சனைகளில் ஆர்எஸ்எஸ்சும் விஎச்பியும் பாஜகவும் வெவ்வேறு குரல்களில் பேசின. கூட்டணி அரசியல் நிர்ப்பந்தத்தாலும் அதிகாரத்தை அடைவதற்காகவும் ராமர் கோவில், அரசியல் சட்டத்தின் 370வது பிரிவு மற்றும் பொதுசிவில் சட்டம் ஆகிய பிரச்சனைகளை முடக்கி வைக்க பாஜக ஒப்புக் கொண்டது. இவ்வாறாக தன்னுடைய அரசியல் எதிர்காலத்தை விருத்தி செய்து கொள்ளவும் இப்படிச் செய்தது. வீரியம் குறையாமல் வகுப்புவாதப் பாதையைக் கடைப்பிடிக்க பாஜக தலைமை காட்டிய தயக்கம் சங்பரிவாரின் இதர பிரிவுகளை பெரிதாக மகிழ்ச்சியடையச் செய்யவில்லை. மதச்சார்பின்மையை ஒரு அரசியல் நடைமுறை என்ற வகையில் மறுத்தத்தைச் சுற்றியே அவர்களது செல்வாக்கும் ஆதரவு அணிகளும் கட்டப்பட்டது என்பது பொதுவாக பகிர்ந்து கொள்ளப்பட்ட கருத்து.

எதிர்க்கட்சியாக இருந்த வரை இந்துத்துவ நிகழ்ச்சி நிரலுக்காக வாதிடும் கட்சியாக பாஜக தன்னை முன்னிறுத்திக் கொண்டது. ஆனால் கூட்டணி அரசியலுக்குள் நுழைந்தவுடன் அதனால் முடியவில்லை; மாறாக மதச்சார்பற்ற கட்சிகளின் ஆதரவைப் பெறுவதற்காக இந்துத்துவத்தின் மையப் பிரச்சனைகளில் கூட சமசரம் செய்து கொள்ள வேண்டியிருந்தது. இதனால், பாஜக தலைமையிலான அரசாங்கம் இந்து வகுப்புவாத நிகழ்ச்சி நிரலை அனுசரித்த போதும் அதனால் இந்துத்துவ திட்டத்தை முழுமையாக அமுல்படுத்த முடியவில்லை. குறிப்பாக, ராமர் கோவில் கட்டுவது, பொது சிவில் சட்டத்தை அறிமுக்கப்படுத்துவது மற்றும் அரசியல் சட்டத்தின் 370 வது பிரிவை ரத்து செய்வது போன்றவை.

இதன் விளைவாக, பாஜகவிற்கும் பரிவாரத்தின் இதர உறுப்பினர்களுக்குமிடையே சிக்கல் வளர்ந்தது. வாஜ்பாயின் தாராளவாதம் சங்பரிவாருக்கு வெறுப்பைத் தந்தது. தங்களின் கோரிக்கைகளுக்கு அத்வானி கூடுதல் விசுவாசமாக இருக்க வேண்டுமென்று எதிர்பார்த்தது. ஆனால் கூட்டணி செயல்பாட்டிற்காக வாஜ்பாயும், அத்வானியும் மிகவும் கவனமாக நடக்க வேண்டியிருந்தது; மற்றும் ஆர்எஸ்எஸ் மற்றும் மற்றும் விஎச்பியிடமிருந்து சுதந்திரமானவர்கள் போன்ற வெளித்தோற்றத்தை பாவனை செய்ய வேண்டியிருந்தது. அவ்வாறு செய்யும் போது சங்பரிவாரின் இதர உறுப்பினர்களுடனான உறவைத் தேவையின்றி சிக்கலாக்காமல் கூட்டணியை விரிவுபடுத்த முடியுமென்றும், கட்சிக்கென்று சுதந்திரமான தளத்தை செதுக்கி எடுத்துக் கொள்ள முடியுமென்றும் நம்பினார்கள். எனினும் இது ஆர்எஸ்எஸ் மற்றும் விஎச்பியிலும் கணிசமான அமைதியின்மையை உருவாக்கியது. ஆகையால் அவர்கள் வாஜ்பாய் மற்றும் அத்வானியை விமரிசப்பவர்கள் ஆனார்கள். இந்து நலன்களை அனுசரிக்க பாஜக தலைமை தயங்கியதால் தான் தேஜகூ தோல்வியடைந்தது என விஎச்பியும் ஆர்எஸ்எஸ்சும் குற்றம் சாட்டின.

தேர்தல் தோல்வி ஆர்எஸ்எஸ்சுக்கும் பாஜகவின் ஒரு பகுதிக்கும் இடையிலான பிளவை அதிகரித்தது. இன்னும் கூடுதலான அடிப்படைவாத நிலை எடுக்க வேண்டுமென்றும் இந்துத்துவ தத்துவத்தின் அடிப்படையில் இந்துக்களை திரட்டினால் மட்டுமே கட்சி மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும் என்று ஆர்எஸ்எஸ் நம்பியது. ஆதிவாசிகளையும் தலித்துகளையும் இந்துக்களாக்கும் செயல்பாடுகளை விரிவாக்கியதன் மூலம் ஆர்எஸ்எஸ்சும் விஎச்பியும் இத்திசையில் நடவடிக்கைகளைத் துவக்கின. இதற்கு மாறாக, மதரீதியான ஆதரவு தளத்தை விட்டுக் கொடுக்காமலும், ஆனால் முழுமையாக அதையே சார்ந்தது இராமலும் கட்சிக்கு மித வலதுசாரி தோற்றத்தை உருவாக்குவதில் மட்டுமே கட்சிக்கு எதிர்காலம் இருக்கிறது என்பதை வாஜ்பாய் மற்றும் அத்வானி மற்றும் நவீன இரண்டாம் தலைமுறை தலைவர்களைக் கொண்ட பாஜகவின் ஒரு பகுதியினர் உணர்ந்திருந்தனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் சாதிக் கட்சிகளின் செல்வாக்கு, இடதுசாரி கட்சிகளின் ஆதரவாளர்களின் எண்ணிக்கை சீராக உயர்ந்து வருவது, சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் புதிய சக்தியும், உற்சாகமும் கண்டு வருவது என்ற பின்னணியில் அதிகாரத்தை மீண்டும் பெறும் அளவிற்கு பாஜகவின் இப்பகுதி உணர்ந்தது. எனவே மக்கள் தொகையின் பெரும்பகுதியினரை ஈர்க்கக் கூடிய வகையிலான திருத்தல் வாதக் கொள்கையே உசிதமென இவர்கள் கருதினர். அத்வானியின் பாகிஸ்தான் பேச்சுக்கள் நடைபெறக் கூடிய இந்தப் பாதை மாற்றத்திற்கான முன்னோடியாகும். போதுமான தயாரிப்புகள் இல்லாததாலும், சரியான காலத்திற்கு முன்னரே பேசியதாலும் அது குறிதவறியது.

தேஜகூ ஆட்சிக் காலத்தில் பாஜகவிற்கென சுயேட்சையான தளத்தை உருவாக்கி எடுக்க வாஜ்பாயும், அத்வானியும் முயற்சித்து கொண்டிருந்தார்கள் என்பதை ஆர்எஸ்எஸ் அறிந்தே இருந்தது. இந்து ஆட்சி நீடிக்க வேண்டுமென்ற அக்கறையினால் அதனால் அப்போது வெளிப்படையாக எதுவும் சொல்ல முடியவில்லை. மேலும் வாஜ்பாயும், அத்வானியும் இந்திய அரசியலில் சங்பரிவாரில் வேறு எவரும் ஈடு என்று சொல்ல முடியாததொரு நிலையை பெற்றிருந்தனர். இதனால் அவர்களால் ஓரளவு தாராளத் தன்மையை பிரயோகிக்க முடிந்தது. ஆர்எஸ்எஸ் மற்றும் விஎச்பியால் நிர்ப்பந்தம் கொடுக்கப்படும் போது திரித்து; புரட்டிப் பேசி சமாளிக்கவும் முடிந்தது. (ஆர்எஸ்எஸ்-விஎச்பியை முற்றிலும் சார்ந்திராமல்) சுதந்திரமாக இருப்பதற்காக இத்தலைவர்கள் முயற்சித்தது ஆர்எஸ்எஸ் மற்றும் விஎச்பியை கோபமடையச் செய்ததும், இது அத்தலைவர்களிடம் தனிப்பட்ட முறையில் தெரிவிக்கப்பட்டதும் பதிவாகியுள்ளது.

புது இந்துக் கட்சியொன்றை அமைக்கப் போவதாக விஎச்பி அடிக்கடி எச்சரித்தது. ஆர்எஸ்எஸ் அதன் தலைவர்களை அவ்வப்போது அழைத்து சமாதனம் செய்தது. இந்த மோதலின் விளைவாக ஆர்எஸ்எஸ் தலைவர் கே.எஸ். சுதர்சன் அத்வானியும் வாஜ்பாயும் இளம் தலைவர்களுக்கு வழிவிட வேண்டுமென்று கோரினார். குறைவான அந்தஸ்துள்ள தலைவர்களை சுதர்சன் தேடிக் கொண்டிருந்தார். ஏனெனில் அவர்களை ஆர்எஸ்எஸ்சின் சொல்படி கீழ்படியச் செய்ய முடியும். மரண அடி கொடுப்பதற்கு முன்னர் நட்பு ரீதியில் வழங்கப்பட்ட ஆலோசனையாகும் அது.

அத்வானியின் பாகிஸ்தான் பேச்சுக்களை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி அது தாக்கியது. இருந்த போதிலும், தாக்குதலுக்கான காரணம், சங்பரிவாரின் தத்துவத்திலிருந்து விலகிச் சென்ற அத்வானியின் பேச்சுக்களை விட மிக மிகத் தீவிரமானது. இந்த வாய்ப்பை பரிவாரத்திறக்குள் தன்னுடைய மேலதிகாரத்தை மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்வதற்கு ஆர்எஸ்எஸ் பயன்படுத்திக் கொண்டது. மேலும், பாஜக தலைவர்களுக்கு அவர்களுடைய கட்சியொன்றும் சுயேட்சையான அமைப்பல்ல, ஆர்எஸ்எஸ்சின் கீழ் செயல்படும் அதன் அரசியல் அங்கமே என்பதை நினைவூட்டவும் பயன்படுத்திக் கொண்டது. ஐந்தாண்டு காலம் அதிகாரத்தில் இருந்த போது அனுபவித்த சுதந்திரம் வேறுவிதமான எண்ணத்தை உருவாக்கியிருந்தால் பாஜக அதை உடனடியாகத் திருத்திக் கொள்ள வேண்டும். அத்வானி விவகாரம் யாருடைய கையில் சாட்டை இருக்கிறது என்பதில் எந்த சந்தேகத்திற்கும் இடம் வைக்கவில்லை. இரும்பு மனிதரை இவ்விதமாக பணிய வைக்க முடியுமென்றால் கட்சியின் சிறிய தலைவர்கள் எம்மாத்திரம்? ஆர்எஸ்எஸ் தன் அதிகாரத்தை உறுதிப்படுத்திக் கொண்டதானது நாட்டின் எதிர்கால அரசியலில் ஏற்படுத்தக் கூடிய அபாயகரமான விளைவுகளைக் கவனிக்காமல் விட முடியாது. ஏனெனில் ஆர்எஸ்எஸ்சின் பிடி இறுகுவதன் அர்த்தம் என்னவெனில் பாஜக இன்னும் கூடுதலான அடிப்படை வாத மற்றும் இருண்மைவாத அரசியல் பாதையை மேற்கொள்ளக் கூடும் என்பதாகும்.

நன்றி: பிரண்ட்லைன், ஜூலை 1, 2005

 

சம உரிமைகள், சம சட்டங்கள்

நான் மதத்தை வெறுக்கிறேன். ஏனெனில் மதம் பெண்களின் உரிமைகள் பற்றி கவலைப்படுவதில்லை.

ஆண் – பெண் சமத்துவத்தைப் பற்றி கவலைப்படுவதில்லை. எனவே, மதத்தை நான் வெறுக்கிறேன்.

– தஸ்லீமா  நஸ்ரீன், வங்கதேச எழுத்தாளர்

இந்தியா ஒரு மதச்சார்பற்ற, ஜனநாயக குடியரசாகும். சாதி, இனம், பால், வர்க்க வேறுபாடின்றி அனைவருக்கும் சமஉரிமைகள் உண்டு என அரசியல் சாசனம் உறுதிப்படுத்துகிறது. சைவர், வைணவர், குல தெய்வங்களை கும்பிடுவோர் ஜெயினர், பௌத்தர், முஸ்லீம், கிறித்துவர், சீக்கியர் என பல்வேறு நம்பிக்கைகளைச் சேர்ந்தோர் இங்கு வசிக்கின்றனர். வேற்றுமையில் ஒற்றுமை என நாம் பெருமிதம் கொள்கிறோம். பாரதிய ஜனதா கட்சி போன்ற மதவாத கட்சிகள் இந்துத்வா கோட்பாட்டின் அடிப்படையில் ஒரு பொது சிவில் சட்டம் கொண்டு வரவேண்டுமென வலியுறுத்துகின்றன. மதத்தின் பெயரால், ஆணாதிக்க சமுதாயம் பெண்ணடிமைத்தனத்தை வலியுறுத்துவதை எதிர்த்து, இடதுசாரி மகளிர் அமைப்பும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் போராடி வருகின்றன. தவிர தனிப்பட்ட பெண்களும் போராடி வருகின்றனர்.

பொதுவாகவே, பெண்களுக்கு நீதிமன்றம், காவல்துறை போன்றவற்றை அணுக தயக்கம் இருப்பதை காணமுடியும். நிறைய பெண்கள் மத்தியில் சட்டம் ஒன்றும் தங்களுக்கு பெரிய உதவியை செய்து விடப் போவதில்லை என்ற கருத்து நிலவுகிறது. இதற்கு காரணம் என்ன என ஆராயும் போது, ஒவ்வொரு கட்டத்திலும் ஆணாதிக்க மனப்பான்மை பிரதானமாக வெளிப்படுகிறது என்கிறார் பிரபல பெண்ணியவாதி கமலா பாசின். இதைப் பற்றி நந்திதா ஹக்சர் தனது பெண்களுக்கான சட்டம் என்ற நூலில் கீழ்க்கண்ட கேள்விகளை எழுப்பி, பதிலும் தருகிறார்.

சட்டத்தை இயற்றுவது யார்? மிஸ்டர் எம்.பி.
சட்டத்தை அமுலாக்குவது யார்? மிஸ்டர் காவல்துறை
சட்ட நுணுக்கங்களை ஆய்வு செய்து தீர்ப்பளிப்பது யார்? மிஸ்டர் நிதிபதி
சட்டம் என்பது ஆண்களுடன் இணைத்தே பார்க்கப்படுகிறது. ஆனாலும், சட்டம் பெண்களுக்கு உரிமைகளை அளிக்க இயலும். ஆண் உயர்ந்தவன் என்றும், ஆண்தான் குடும்பத்தின் தலைவன் என்றும், மதங்கள் வலியுறுத்துவதையே, சட்டங்களும் உறுதிப்படுத்தும் வண்ணம் அமைக்கப்படும்போது, ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமமமான உரிமைகள் எவ்வாறு கிட்டும்?

மதங்களும் சட்டங்களும்

காவல்துறையினர் கட்டுப்பாட்டிற்குள் வருகின்ற கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் போன்ற விஷயங்கள் குற்றவியல் அல்லது கிரிமினல் சட்டத்திற்குட்பட்டவையாகும். மாறாக, திருமணம், சொத்து, விவாகரத்து, ஜீவனாம்சம், தத்தெடுத்தல் போன்றவை சிவில் சட்டத்திற்குட்பட்டவையாகும். ஆனால், இவற்றிலேயே சொத்துக்கான கொலை, வரதட்சணை கொலை ஆகியவை சிவில், கிரிமினல் இரண்டிற்குமே பொருந்தும்.

இந்து மதத்தை பின்பற்றுவோரின் சட்டங்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன் மனு என்பவரால் எழுதப்பட்ட விதிகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை. மனு 9அ) தர்மம் என்ன சொல்கிறது? குழந்தை பருவத்தில் தந்தைக்கும், குமரி பருவத்தில் கணவனுக்கும், முதுமை பருவத்தில் மகன்களுக்கும் கட்டுப்பட்டு ஒரு பெண் இருக்க வேண்டும். கணவன் கெட்டவனாக இருப்பினும், மனைவி அவனிடம், விசுவாசமாக இருக்க வேண்டும். இந்து மதத் தலைவர்கள் இதையே வலியுறுத்துகின்றனர். பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் என்ன கூறுகிறார்? பெண்ணும், சொத்தும், உலகம் முழுவதையும் பாவம் என்ற குழிக்குள் தள்ளுகின்றனர் பெண்கள் மோசமானவர்கள். அழிவுக்கு காரணமானவர்கள் என்ற கருத்தே நிலவி வந்துள்ளது. ராமாயணம் எழுதிய துளசிதாசர், பெண்ணுக்கு சுதந்திரம் அளிப்பது மிகவும் கெடுதல் விளைவிக்கக்கூடியது. மேளம், கிராமத்து முட்டாள், சூத்திரர்கள், மிருகங்கள், பெண்கள்… ஆகியவற்றை அடித்தால்தான் சரிப்பட்டு வரும் என்கிறார்.

புனித பைபிள் என்ன சொல்கிறது?

கடவுளிடம் உங்களை ஒப்படைப்பது போல, பெண்களே கணவனிடம் உங்களை ஒப்படையுங்கள், யேசு தேவாலயத்தின் தலைவர். அது போல கணவன் மனைவிக்கு தலைவன். அவன்தான் அவளது உடலுக்கு பாதுகாவலன் (6, 22-24)

புனித குரான் சொல்வதென்ன?

ஆணுக்கு பெண் மீது அதிகாரம் உண்டு. அல்லாஹ் ஒருவரை, மற்றவரைவிட உயர்வாக படைத்துள்ளான்…. நல்ல பெண்கள் கீழ்படிந்து நடப்பார்கள். அவர்கள் தங்கள் உடலின் மறைவாக இருக்கும் பகுதிகளை காப்பாற்றிக் கொள்வார்கள். கீழ்படியாத பெண்ணை படுக்கையிலிருந்து விலக்கி வையுங்கள். அவர்களை திட்டுங்கள், அடியுங்கள். அதன்பின் அவர்கள் கீழ்படிந்தால், மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் அவர்களுக்கெதிராக எடுக்க வேண்டாம். ஏனெனில் அல்லாஹ் அனைவருக்கும் மேலானவன்

சீக்கிய மதத்தில் பெண்ணுக்கு பெற்றோர் சொத்தில் பங்கு கிடையாது. கணவன் இறந்தால் மைத்துனரை திருமணம் செய்து கொள்ள வேண்டும். கணவன் சொத்தில் பங்கு உண்டென்ற போதிலும் ஒரு பெண் நடத்தை ஆசாரப்படி இல்லையெனில் பங்கு கேட்க இயலாது. இவ்வாறு, எந்த மதத்தை எடுத்துக் கொண்டாலும், பெண்களுக்கெதிரான பாரபட்சத்தை மிகத் தெளிவாக காண முடியும்.

இந்திய அரசியல் சாசனம் சொல்வதென்ன?

இந்திய அரசியல் சாசனத்தில் 14ஆம் பிரிவின்படி சட்டத்தின் முன் அனைவரும் சமம். 15ஆம் பிரிவின்படி மதம், ஜாதி, இனம், பால் அடிப்படையில் எந்தவிதமான பாரபட்சமும் காண்பிக்கக்கூடாது. 21ஆம் பிரிவின்படி, உயிர் வாழ உரிமை, தனி மனித சுதந்திரம் உண்டு.

அரசியல் சாசனம் சமஉரிமை அளித்த பின்பும், நடைமுறையில் ஏன் பிரச்சினைகள் எழுகின்றன?

25வது பிரிவு மதச் சுதந்திரத்திற்கு உத்திரவாதம் அளிக்கிறது. இந்த பிரிவு பெண்களை பாதிக்கிறது. சொத்தில் பெண்களுக்கு சமஉரிமை இல்லை. குடும்பத்திற்குள் சம அந்தஸ்து இல்லை. திருமணத்திற்கு பின்னர் எங்கு வசிப்பதென்ற உரிமை இல்லை. விவாகரத்து செய்யும் உரிமை ஆண்களைப் போல இல்லை. பொதுவான ஒரு சிவில் சட்டம் இல்லாத சூழலில், எந்த மதத்தில் ஒருவர் பிறக்கிறாரோ, அந்த மதச் சட்டம் அவரது வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும், ஒவ்வொரு நடவடிக்கையையும் நிர்ணயிக்கிறது.

இந்தியா விடுதலை அடைவதற்கு முன்பிருந்தே பெண்கள் தொடர்பான சட்டங்களில் மாற்றம் கொண்டுவர முயற்சிகள் நடந்தன. அகில இந்திய பெண்கள் மாநாடு பொது சிவில் சட்டத்திற்கான கோரிக்கையை முன்வைத்தது. ஆனால், அன்று காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த பிற்போக்குவாதிகளின் குரல் ஓங்கி ஒலித்தது. பிற்போக்குவாதிகளை எதிர்க்கும் திராணி தலைமைக்கு இல்லை. இந்த சட்டம் தொடர்பான திருத்தம் கொண்டு வருவதற்கான மசோதா 1952இல் முன்வைக்கப்பட்டது. இதனால் பெண்களுக்கு சொத்துரிமை கிடைக்க வழி இருந்தது. ஆனால் மந்திரி சபைக்குள்ளேயே சட்ட திருத்தத்திற்கு கடுமையான எதிர்ப்பு இருந்தது. இந்து மதத்தின் அடித்தளமே அசைந்து விட்டதாக, இந்து மதவாதிகள் கருதினர். அப்போது ஜனாதிபதியாக இருந்த ராஜேந்திர பிரசாத், எனது மனைவியோ, சகோதாரியோ கூட இதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அப்படியே இந்த மசோதா வந்தாலும் கையெழுத்திட மாட்டேன் என்றார். எனவே, இதையொட்டி பிரதமர் நேருவும் பின்வாங்கினார். இப்படிப்பட்ட பிற்போக்கான கருத்தை கண்டித்து அன்று சட்ட அமைச்சராக இருந்த அம்பேத்கார் தனது பதவியை ராஜினாமா செய்தார்.  தனிநபர் சட்டங்கள் தான் ஒருவரின் மதத்திற்கு முத்திரை, அடித்தளம், ஒரு சமூகத்தினரின் தனித்துவத்தை நிர்ணயிக்கிறது என்ற தவறான கருத்து அன்று மட்டுமல்ல இன்றும் பரவலாக உள்ளது என்பது கசப்பான உண்மை.

மாதிரி திருமண ஒப்பந்தம்: பின்னணி, வளர்ச்சி போக்குகள்

அனைத்து மதங்களுமே, பெண்களுக்கு இரண்டாந்தர குடிமக்கள் என்ற அந்தஸ்தை அளிக்கின்றன என்ற போதிலும், முஸ்லீம் பெண்கள் கூடுதலான பாதிப்புக்கு ஆளாகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் மொத்த மக்கள் தொகையில் முஸ்லீம்கள் 13 சதம் உள்ளனர். ஆயினும், அரசு வேலைகளில் வெறும் 3 சதம் மட்டுமே உள்ளனர். அதிலும் முஸ்லீம் பெண்கள் மிகவும் ஒதுக்கப்பட்ட  நிலையில் உள்ளனர். மிகவும் சிறிய வயதில் திருமணம், அடுத்தடுத்து பிள்ளைப்பேறு, கல்வியின்மை, சுகாதாரம் குறைவான சூழலில், ஏழ்மை காரணமாக வாழ வேண்டிய நிர்ப்பந்தம், வீட்டிற்குள்ளேயே அடைபடும் நிலை என இந்தப் பெண்கள் படும் துயரம் சொல்லில் அடங்கா.

முஸ்லீம் மத அடிப்படைவாதிகள் முஸ்லீம் மக்களின் அன்றாட வாழ்க்கையில், செயல்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்துபவர்கள். என்னிடம் உதவி கேட்டு வரும் முஸ்லீம் பெண்கள் எங்கு இந்த முஸ்லீம் சட்டம் எழுத்து வடிவத்தில் உள்ளதா என்று கேட்கின்றனர். அது இல்லை என்பது தான் உண்மை. வானத்தில் எவ்வளவு நட்சத்திரங்கள் உள்ளனவோ, அவ்வளவு முல்லாக்களும், மதகுருமார்களும் இங்கு உண்டு. முஸ்லீம் சட்டத்தைப் பற்றி தங்களுக்குத்தான் தெரியுமென ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி விளக்குவார்கள். (பதர் சயீத்)

முஸ்லீம் திருமணம் என்பது இரண்டுபேர் செய்து கொள்கின்ற ஒப்பந்தம் நிக்காஹ் எனப்படுவது இரண்டு பேரை இணைக்கின்றது. சன்னி சட்டப்படி நிக்காஹ் செல்லுபடியாக வேண்டுமென்றால், இரண்டு சாட்சிகள் இருக்க வேண்டும். ஷியா பிரிவினருக்கு இந்த நிபந்தனை இல்லை. இரண்டு பேரும் திருமணத்திற்கு சம்மதிக்க வேண்டும் என்ற போதிலும், மணப் பெண்ணைப் பொறுத்த மட்டில் மௌனம் சம்மதம் என ஏற்கப்படும். விவாகரத்து என்பது முஸ்லீம் சட்டத்தில் உண்டு. ஒன்றுக்கு மேற்பட்ட மனைவி இருக்க அனுமதி உண்டு. நான்கு மனைவிகள் வரை இருக்கலாமென முஸ்லீம் சட்டம் கூறுகிறது.

மெஹர் : மெஹர் என்பது ஆண், பெண்ணுக்குத் தருகின்ற தொகை பரிசுப்பணம் என மணமகன் வீட்டார் கொடுப்பதைப் போன்றதாகும். திருமணத்திற்கு பின்னர் கணவன் வேறு பெண்ணுடன் தொடர்பு கொண்டு மனைவியை கைவிட்டு விட்டால், அவளுக்கு பாதுகாப்பு கருதி அளிக்கப்படும் தொகை இது. சன்னி பிரிவினரைப் பொறுத்தவரை மெஹர் தொகை எப்படி செலுத்த வேண்டுமென்பதற்கு வரையறைகள் குறிப்பிடப்படவில்லை. ஆனால், ஷியா பிரிவினர் மத்தியில் மெஹர் தொகை கறாராக கட்டப்பட வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது.

மனைவியின் உரிமைகளும், கடமைகளும்

கணவனுக்கு கீழ்ப்படிந்து, அவனுடன் இணைந்து வாழ வேண்டும். பர்தா அணிய வேண்டும். மனைவியின் பொருளாதார பின்னணி எப்படி இருப்பினும் சரி, கணவனின் அந்தஸ்துக்கு ஏற்ப அவள் பராமரிக்கப்படுவாள். ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் இருப்பின், அனைத்து மனைவிகளும் சமமாக நடத்தப்பட வேண்டும். கணவன் வீட்டில் வசிக்கும் உரிமை உண்டு. மனைவி தனது சொத்தை பராமரிக்கும் உரிமை உண்டு.

மூத்தா திருமணம்

மூத்தா திருமணம் என்பது, இரண்டு பேர் ஏற்றுக் கொண்டு ஒரு குறிப்பிட்ட காலம் வரை நீடிக்கும் திருமணம். திருமணம் நீடிக்கும் காலம், மெஹர் தொகை போன்றவை நிர்ணயம் செய்யப்பட்டு அந்த அடிப்படையில் இருவரும் வாழ்க்கை நடத்த மூத்தா திருமணம் ஷியா பிரிவினரிடையே அதிகம் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இது போன்ற திருமணத்தின் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு பெற்றோரின் சொத்தில் பங்கு உண்டு. அங்கீகாரம் உண்டு.

மூத்தா திருமணம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குத்தான் என்பதால், அந்த காலம் முடிந்தவுடன், திருமணமும் முடிவுக்கு வந்து விடுகிறது. அந்த குறிப்பிட்ட காலம் முடிவதற்குள் கணவன் விரும்பினால், திருமணத்தை முறித்து கொள்ளலாம். கணவன் மனைவியிடையே உறவு ஏற்பட்டால் மனைவிக்கு முழு மெஹர் தொகை தரப்பட வேண்டும். உறவு ஏற்படாவிடில், திருமணம் முறிந்தால், மெஹர் தொகையில் பாதி அளிக்கப்பட வேண்டும். மனைவிக்கு ஜீவனாம்சம் கிடையாது.

முறையற்ற திருமணங்கள்

சாட்சிகள் இல்லாத திருமணங்கள், நான்கு மனைவிகள் உயிருடன் இருக்கும் போதே, ஐந்தாவதாக ஒரு பெண்ணை திருமணம் செல்தல், இத்தக் காலத்தில் உள்ள ஒரு பெண்ணை திருமணம் செய்தல் (விவாகரத்தான பெண் எந்த காலம் வரை மறுமணம் செய்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறாளோ அதற்கு இத்தத் என்று பெயர்). சாதாரணமாக, விவாகரத்து ஆனபின் 3 மாதவிடாய் காலம் வரை அவள் கர்ப்பிணியாக இருப்பின் பிள்ளை பெற்று முடியும் வரை) தடை செய்யப்பட்ட மதத்து பெண்ணை திருமணம் செய்தல் (கிறித்துவ, இந்து, யூத) ஆகியவற்றை முறையற்ற திருமணங்கள் என முஸ்லீம் சட்டம் கருதுகிறது.

தனது கர்ப்பத்திற்கு காரணமாக இல்லாத ஒரு ஆணை, ஒரு கர்ப்பிணிப் பெண் மணம் புரிந்தால், அது குற்றமாக கருதப்படுகிறது. செல்லுபடியாக திருமணங்களில் கணவன் மனைவி இருவருக்கும் ஒருவர் மேல் மற்றவருக்கு அதிகாரம் கிடையாது. இந்த திருமணங்கள் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கும், சட்டப்பூர்வமான அந்தஸ்து கிடையாது.

விவாகரத்து

முஸ்லீம்கள் விவாகரத்து செய்ய காரணங்கள் கொடுக்கப் பட்டுள்ளன. அவை:
கணவன் நீதிமன்றம் செல்லாமலேயே மனைவியை விவாகரத்து செய்யலாம். அதற்கு எந்த காரணமும் தேவையில்லை. தலாக் என்ற சொல்லை கணவன் மூன்று முறை கூறி விட்டால் (முத்தலாக்கு) அந்த திருமணம் ரத்து செய்யப்படும். தலாக் என்றால் திருமண ஒப்பந்தத்திலிருந்து மனைவி விடுவிக்கப்படுகிறாள் என்று அர்த்தம்.

தலாக் சொல்லப்படும் முறைகள்

 1. அஹ்சான் ஒரு முறை தலாக் சொல்வது. இந்தத் காலத்தில் மாற்றிக் கொள்ளலாம்.
 2. ஹஸ்ஸான் 3 முறை கால இடைவெளி கொடுத்து சொல்வது. 3வது முறை சொல்வது இறுதியானது.
 3. தலாக் – ஏ- பித்தத் – ஒரே நேரத்தில் 3 முறை தலாக் சொல்வது.
 4. தலாக்-ஏ-தஃப் வீத் – கணவன் தன் சார்பாக தலாக் சொல்ல வேறு ஒருவருக்கு அதிகாரமளிப்பது.
 5. முபாரா – கணவன் – மனைவி இருவரும் பரஸ்பரம் ஒப்புக் கொண்டு விவாகரத்து செய்தல்.
 6. குலா – மனைவி விவாக ரத்து கோருதல் குலா முறைப்படி விவாகரத்து பெற்றால் மனைவி மெஹர் தொகையை இழக்க நேரிடும்.

முஸ்லீம் பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள்

திருமணம், விவாகரத்து போன்றவற்றில் சட்டத்திற்கு புறம்பாக பெண்களுக்கெதிராக நடைமுறையில் பல்வேறு பிரச்சினைகள் எழுகின்றன. ஷாபானு என்ற பெண் ஐம்பதாண்டு மணவாழ்க்கைக்குப் பின், விவாகரத்து செய்யப்பட்டு, வீட்டிலிருந்து வெளியேற்றப் பட்டார். ஷாபானுவின் கணவரே ஒரு வக்கீல். குற்றவியல் சட்டம் 125வது பிரிவின் கீழ் ஏழை முஸ்லீம் பெண்கள் ஜீவனாம்சம் பெறலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. முஸ்லீம் மதவாதிகள் தங்கள் மத உரிமைகள் பறிக்கப்படுகின்றன என பிரச்சாரம் செய்தனர். ஷாபானு வழக்கில், முஸ்லீம் தனிநபர் சட்டக்குழு சார்பில் முகமது யூனுஸ் சலீம் என்பவர் வாதாடினார். மனைவி கணவனிடமிருந்து ஜீவனாம்சம் கேட்டுப் பெறுவதென்பது லஞ்சம் வாங்குவதற்கு சமம். இது இஸ்லாத்திற்கு புறம்பானது எனக் கூறினார். ஷாபானு வழக்கில் 12வது பிரிவு முஸ்லீம் பெண்களுக்கு பொருந்தா வகையில் சட்டம் கொண்டு வந்து, மதவாதிகளை திருப்திப்படுத்தினார் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி என்பது குறிப்பிடத்தக்கது.

ஷாபானு வழக்கு ஆரம்பித்தது முதல் மகளிர் அமைப்புகள் குறிப்பாக அ.இ. ஜனநாயக மாதர் சங்கம், முஸ்லீம் பெண்கள் பிரச்சினைகளில் கூடுதல் கவனம் செலுத்த ஆரம்பித்தன. பல மாநிலங்களில் ஆய்வு நடத்தப்பட்டதில், குரானில் சொல்லப்படாத, ஆனால் நடைமுறையில் பின்பற்றப்படும் விஷயங்கள் வெளி வந்துள்ளன.

வரதட்சணை என்பது குரானில் இல்லை

மெஹர் தொகை எனபதை வாங்கிய பின்னரே பெண்ணின் கையை தொட முடியும். ஆனால் தவணை முறையில் மெஹர் பணம் கொடுப்பது சர்வ சாதாரணமாக உள்ளது.

அரபு நாட்டில் பெண்கள் நகை, பணம், கார்கூட கேட்கின்றனர். அதை கொடுக்க முடியாத ஆண்கள் இங்கு வந்து ஏழைப் பெண்களை போதிய அளவு மெஹர் கொடுக்காமல் கல்யாணம் செய்து கொள்கின்றனர். மூத்தா திருமணம் கேரளத்தில் நிறைய நடக்கிறது. ஒரு பெண்ணுக்கு இப்படி 22 தடவை அரபுகாரர்களுடன் திருமணம் நடந்துள்ளது. ஒருஅரபுகாரன் இப்படி மூத்தா திருமணம் செய்து கொண்டு கொஞ்ச நாளில் அந்த பெண்களை விட்டு விட்டு போய் விடுவான். ஒரு கட்டத்தில் தன் பெண்ணையே அவன் கல்யாணம் செய்து கொள்ள இருந்தான். ஒரு வாரம் கூட நீடிக்காத மூத்தா திருமணங்கள் உண்டு. வறுமை காரணமாக, ஒரு வாரமாவது நல்ல சாப்பாடு, நல்ல இடத்தில் வசிப்பது என்றிருப்பதால், பெண்களிடமிருந்தே இந்த திருமணங்களுக்கு எதிர்ப்பு இல்லை என்பது கவலையளிக்கும் விஷயமாகும்.

குரானில், ஒரு ஆண் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை எப்படி, எந்த சூழலில் திருமணம் செய்து கொள்லளாம் என கூறப்பட்டுள்ளது. நபிகள் காலத்தில் போரில் நிறைய பேர் மாண்டு போனதால், விதவைகள் அதிகமிருந்தனர். எனவே, அத்தகைய சூழலில் நான்கு திருமணங்கள் நியாயப்படுத்தப்பட்டது. ஆனால், இன்று நிலையான வருமானமின்றி, ஒரு மனைவியையே சரியாக பராமரிக்க முடியாத ஆண்கள் இப்படி சட்டத்தை தவறாக, தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, பெண்களுக்கு துன்பம் தருகின்றனர்.

முஸ்லீம் பெண்களை அதிகம் படிக்க வைப்பதில்லை. வயதுக்கு வந்தவுடன், இரண்டாம் தாரமாகவோ அல்லது எப்படியோ ஒரு ஆணுக்கு திருமணம் செய்து விட துடிக்கும் பெற்றோர்களே அதிகம் உள்ளனர். குறிப்பாக பொருளாதார ரீதியில் பின்தங்கிய குடும்பங்களில் நிலைமை இது போன்றுள்ளது. படித்த, வசதியான குடும்பங்களில், பெண்களின் திருமணம் செய்விக்கையில் ஓரளவு அக்கறை காட்டப்படுகிறது.

ஜீவனாம்சம் மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. கேரளத்தில் செய்தித்தாள் மூலம் தலாக் சொன்ன சம்பவம் நடந்துள்ளது. இணையதளம் மூலம் தலாக் சொல்லப்படுகிறது. வயதான காலத்தில் தலாக் சொல்லப்படும் போது, வயது வந்த குழந்தைகளை வைத்துக் கொண்டு ஜீவனாம்சமும் கிடைக்காமல், நிர்க்கதியாகப்படும் பெண்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. பல ஜமாத்துக்களிலும் பணத்தை வாங்கிக் கொண்டு தலாக் தரப்படுகிறது.
அகில இந்திய முஸ்லீம் தனி நபர் சட்டவாரியம் மாதிரி சட்டம் கொண்டு வந்துள்ளது இதில் இரண்டு அமைப்புகள் உள்ளன. ஒரு அமைப்பில் உள்ள நூறு உறுப்பினர்களில் ஒரே ஒரு பெண் மட்டுமே உள்ளார். மற்றொரு அமைப்பு பொதுக்குழுவாகும். இதில் 25 சதம் பெண்கள் உள்ளனர்.

போபால் பிரகடனம்

2005 மே மாதம் 1ஆம் தேதி போபலில், தனது 18வது பொதுக்குழு கூட்டத்தை நடத்திய அ.இ. முஸ்லீம் தனிநபர் சட்டவாரியம் மாதிரி திருமண ஒப்பந்தத்தை வெளியிட்டுள்ளது. இந்த வாரியத்தில் மொத்தம் 400 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் முஸ்லீம் மதத்திலுள்ள எல்லா பிரிவினருக்கும் பிரதிநிதித்துவம் உண்டு. இந்த நாட்டில் ஷரியத் சட்டத்தை பாதுகாக்க தோற்றுவிக்கப்பட்ட இந்த வாரியம், இன்று மிகவும் சக்தி வாய்ந்த அமைப்பாக, முஸ்லீம் மக்களின் வாழ்க்கையை தீர்மானிக்கும் விதிகளை உருவாக்கும் அமைப்பாக மாறியுள்ளது. மிகவும் பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய போபால் கூட்டம், ஏமாற்றத்தை அளித்துள்ளது என்றால் மிகையாகாது.

மாதிரி திருமண ஒப்பந்தம், முத்தலாக்கு முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கமென்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு மாறாக, முத்தலாக்கு தவிர்க்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. நியாயமற்ற, இந்த முத்தலாக்கு முறை கடுமையாக எதிர்க்கப்பட்ட போதிலும், வாரியம், மென்மையாக இதை அணுகி இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

போதுமான அளவு ஜீவனாம்சம் கொடுக்காமல், மனைவி கைவிடப்படும்போது, அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதத்தில் இந்த ஒப்பந்தத்தில் எதுவுமே கூறப்படவில்லை என்பதும் ஏமாற்றமளிப்பதாகவே உள்ளது.

பெற்றோர் சம்மதித்தாலும், குழந்தை திருமணமென்பது சட்ட விரோதமானது. மாதிரி திருமண ஒப்பந்தத்தில் குழந்தை திருமணம், பலதார மணம் ஆகிய இரண்டு மிக முக்கியமான பிரச்சினைகள் பற்றி எதுவுமே குறிப்பிடப்படவில்லையென்பது கண்டிக்கதக்கதாகும். முஸ்லீம் மகளிர் அமைப்புகள், முற்போக்கு மாதர் சங்கங்கள், வாரியத்தின் மாதிரி ஒப்பந்தம் பெண்களுக்கு சாதகமான சூழலை தோற்றுவிக்க வேண்டுமென வலியுறுத்தியும், இந்த ஒப்பந்தம் எந்த மாற்றத்தையும் அளிக்கப் போவதில்லை என்ற கருத்து பரவலாக உள்ளது. இவை அனைத்துக்கும் மேலாக, தற்போது நிலவுகின்ற முறையை மாற்றி முஸ்லீம் பெண்களுக்கு நீதி கிடைக்க செய்யும் என்ற எண்ணம் பொய்த்து விட்டது. 2004 டிசம்பரில் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்ற போதே வாரியம் முடிவு செய்ய வேண்டிய விஷயங்கள் பட்டியலிடப்பட்டன.

மாதிரி திருமண ஒப்பந்தம் மூன்று முக்கிய பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

 1. நிக்காஹ்நாமா (திருமண ஒப்பந்தம்)
 2. ஹிதயத்நாமா (ஷரியத் சட்டத்தின் படி திருமணத்தின் போது கடைபிடிக்கப்பட வேண்டிய விதிமுறைகள்),
 3. கரார் ஷரியத்தை கடைப்பிடிக்க பின்பற்ற வேண்டிய பிரகடனம்.

அதாவது சச்சரவு ஏற்படும் போது தம்பதிகள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்கள் இதில் அடங்கியுள்ளன. ஷரியத் சட்டத்திற்குட்பட்டு பிரச்சினை எப்படி தீர்க்கப்பட வேண்டுமென்றும் அதில் கூறப்பட்டுள்ளது பிணக்கை தீர்த்து வைக்க சமசரசம் செய்து வைப்போரை பயன்படுத்திக் கொள்வதற்கு அழுத்தம் தரப்பட்டுள்ளது. அதனால் தீர்வு கிட்டவில்லையெனில் தாரூல் காபாவை அணுக வேண்டும் என கூறப்பட்டுள்ளது. தாரூல் காஸா என்பது ஷரியத் நீதிமன்றமாகும். கணவன் மனைவி இருவரும் நீதிமன்றம் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது கவனத்தில் கொள்ள, வேண்டிய விஷயமாகும்.

மாதிரி ஒப்பந்தத்தில் மெஹர் தொகை அசையா, சொத்தாக கொடுக்கப்பட வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது. ஆனால், அதே சமயம், திருமணத்தின் போது, மெஹர் தொகையில் பாதியை கொடுத்தால் கூட போதும் என்றும் சொல்கிறது. விதிமுறைகள் தெளிவாக இல்லையெனில், அவரவர் இஷ்டத்திற்கு விளக்கம் அளிக்கப்படுவதென்பது தவிர்க்க இயலாது.

போபால் பிரகடனம் வரதட்சணை கூடாது எனக் குறிப்பிடுகிறது.

ஒரு ஆண், தன் மனைவியின் சகதரிகளையோ, அத்தைகளையோ திருமணம் செய்து கொள்ளக்கூடாது.

ஒரு ஆண் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள விரும்பினால், முதல் மனைவியிடமிருந்து எழுத்துப்பூர்வமான ஒப்புதலை பெற வேண்டும்.

ஆனால் இவை எதுவுமே கட்டாயமாக அமுலாக்க வேண்டும் என்றோ, அப்படி இல்லையெனில் என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றோ, கூறப்படவில்லை.

ஹிதயத் நாமாவைப் பொறுத்தவரை சில விதிமுறைகள் பெண்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கணவனுக்கு மனைவி கீழ்படிந்து நடக்க வேண்டியது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது, கடுமையான விமர்சனத்திற்குள்ளாகி இருப்பது வியப்பில்லை.

திருமண ஒப்பந்தத்தில், கணவன் மனைவிக்குள் பிணக்கு ஏற்பட்டால், சமரசம் செய்பவர்கள் காலம் தாழ்த்தாமல் நான்கு மாதத்திற்குள் ஒரு முடிவுக்கு வர வேண்டுமென கூறப்பட்டுள்ளது. இதனால் கால தாமதம் தவிர்க்கப்படும். மேலும், திருமணம் தொடர்பான அனைத்து ரெக்கார்டுகளும் எழுத்துப்பூர்வமாக இருக்க வேண்டுமென்பதுடன், கணவன் மனைவி இருவரிடமும், அதன் நகல்களை தரப்பட வேண்டுமென்பது நல்ல அம்சம். திருமணத்தின் போது பெற்றோர் அல்லது பாதுகாவலர் இருக்க வேண்டும். இது கட்டாய திருமணத்தை தடுக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

போபால் பிரகடனத்தின் எதிரொளி

போபால் கூட்டம் முடிந்து அறிக்கை வெளியிடப்பட்டதும் பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டன.
அகில இந்திய முஸ்லீம் மகளிர் தனிநபர் சட்டவாரியம் ஒட்டுமொத்தமாக மாதிரி திருமண ஒப்பந்தம் பற்றிய அறிக்கையை நிராகரித்துள்ளது. பல மகளிர் அமைப்புகள் ஒன்றுகூடி மும்பையில் ஒரு அறிக்கை வெளியிட்டன. நிக்காஹ் நாமாவை கண்டித்துள்ள அந்த அறிக்கை, போபால் பிரகடனம் பிற்போக்குத்தனமானது என்றும், பாலின சமத்துவத்திற்கெதிரானது என்றும் வலியுறுத்தியுள்ளது. மனைவி கணவனுக்கு கீழ்படிந்து நடக்க வேண்டும். கணவனின் அனுமதி இன்றி, அவன் வீட்டை விட்டு வெளியே போகக் கூடாது, தன் கௌரவம், பொறுப்பு உணர்ந்து செயல்பட்டு தேவை ஏற்பட்டால் மட்டுமே பெற்றோர், உறவினர் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்பன அபத்தனமானவையாகும்.

முஸ்லீம் பெண்களுக்கு சட்டப்பூர்வமான பாதுகாப்பு இருந்தும், அவர்களுக்கு தெரியவில்லை. பத்து ஆண்டுகளுக்கு முன்பே, மும்பையிலுள்ள மகளிர் அமைப்புகள் சேர்ந்து மாதிரி நிக்காஹ் நாமா ஒன்றை தயாரித்தன. அதில் தாஃபீஸ், ஏ-தலாக் என்ற பிரிவு சேர்க்கப்பட்டது. இந்த பிரிவின்படி மனைவியின் ஒப்புதலின்றி கணவன் வேறு திருமணம் செய்து கொண்டால், அவனை விவாகரத்து செய்யும் உரிமை ஒரு பெண்ணுக்கு உண்டு. ஒரே சமயத்தில் மூன்று தலாக் சொன்னால், அந்த ஆண் இரண்டு மடங்கு மெஹர் தொகை அளிக்க வேண்டும். ஆனால் இதை அ.இ.மு. தனிநபர் சட்டவாரியம் ஏற்க மறுத்து விட்டது. 100 ஆண்டுகளுக்கு முன்பே தாஃபீஸ் – ஏ – தலாக் இருந்ததென்றும், இருமடங்கு மெஹர் அளித்தற்கான சான்றுகள் சன்னி முஸ்லீம்களின் மதச்சட்டங்களில் உள்ளன எனக் கூறப்படுகிறது.

பெண்களுக்கு குலா (பெண் விவாகரத்து கோருதல்) கொடுக்கும் உரிமை உள்ளது என்றாலும், அதில் பல சிக்கல்கள் உள்ளன என்பதால் பெண்கள் விவாகரத்து கோருவதில்லை. அது மட்டுமல்ல குலா பற்றி முஸ்லீம் பெண்களுக்கு தெரியவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

ஆவாஸ் ஏ நிஸ்வான் என்ற முஸ்லீம் மகளிர் அமைப்பு, அற்ப காரணங்களுக்காக தலாக் சொல்வதால், பெண்களின் வாழ்க்கையே நாசமாகி விடுகிறது என்றும், வாரியம், மகளிர் அமைப்புகளை கலந்தாலோசித்து, ஆவணத்தை தயாரித்திருக் வேண்டும் என்ற கருத்தை வெளியிட்டுள்ளது.

முஸ்லீம் நாடுகளிலேயே முத்தலாக்கு முறை இல்லை. அவர்கள் இம்முறையை சாடுகின்றனர். கொஞ்சம், கொஞ்சமாக முத்தலாக்கு முறை அழிந்து விடுமென வாரியத்தின் முக்கிய உறுப்பினர்கள் கருதுகின்றனர்.

முஸ்லீம் பெண்கள் வாரியம் தயாரித்த இக்ரார் நாமாவில் முத்தலாக்கினால், முஸ்லீம் பெண்களுக்கு ஏற்படும் குறிப்பிடத்தக்க பிரச்சினைகள் எழுப்பப்பட்டுள்ளன. குரானில் குறிப்பிடப் பட்டுள்ளபடி கணவன் முதலில் தலாக் சொன்னபிறகு ஒரு மாத காலம் சேர்ந்து வாழ வேண்டும். பின்னர் 2வது முறை தலாக் சொல்லாம். அதற்கு பின்னரும் இருவரும் சேர்ந்து வாழ வேண்டும். கடைசியில் மூன்றாவது முறையாக சொல்ல வேண்டும். இதன் மூலம் அவகாசம் தரப்படுவதால், தம்பதிகள் பேசி தங்கள் பிரச்சினையை தீர்த்துக் கொள்ள வாய்ப்பு உள்ளது. ஆனால், ஒரே நேரத்தில் மூன்று முறை தலாக் சொல்வது குரானில் தரப்பட்டுள்ள உரிமைகளை புறக்கணிப்பதாகும் என்ற கருத்து வலுவாக உள்ளது.

ஏற்க இயலாத அம்சங்கள் போபால் பிரகடனத்தில் இருந்த போதிலும், ஒரு ஆரோக்கியமான விவாதத்திற்கு வழி கோரி இருக்கிறதென்று அ.இ. ஜனநாயக மாதர் சங்கம் கருதுகின்றது. ஒரு சிலர் குறிப்பிட்ட சமூகத்தின் கலாச்சார தனித்தன்மையை பாதுகாப்பது என்ற பெயரில் பொது சட்டத்திலிருந்து முழு விதி விலக்கு அளிப்பது என்ற தவறான வாதத்தை முன்வைக்கின்றனர். ஆனால் தத்துவ ரீதியில் இந்த வாதத்தை இடதுசாரி கட்சிகள் ஏற்கவில்லை. எனவேதான், இரண்டு கோஷங்கள் வைக்கப்பட்டன.

 1. பொது சிவில் சட்டத்திற்கான நடைமுறைக்கான கோஷம்.
 2. பொது சிவில் சட்டத்திற்கான பிரச்சார கோஷம்.

இன்றைய சூழலில் அனைத்து மத மக்களும் பொது சிவில் சட்டத்தை ஏற்க தயாராக இல்லை. எனவேதான், அப்படிப்பட்ட சூழலை, பெரும்பான்மை கருத்தை உருவாக்க இரண்டு கோஷங்கள் உதவும். தவிர, சில இடைக்கால கோஷங்களை ஸ்தூலமாக அனுபவ அடிப்படையில் உருவாக்க வேண்டும். அனைத்துப் பகுதி பெண்களுக்கும் பொருந்தக்கூடிய சட்டங்கள் கொண்டுவர நாம் போராட வேண்டும்.

சமத்துவத்திற்கான எந்த போராட்டமும் (பெண் சமத்துவம் உட்பட) மனித சமத்துவம் என்ற அடிப்படை கொள்கைகளில் ஒன்று என்பது உலகெங்கும் பொருந்தும். கலாச்சார தனித்தன்மை என்ற பெயரில் அதை சுருக்குவதை மார்க்சிஸ்ட்டுகள் ஏற்க இயலாது. சமத்துவத்தை அடைய பல படிகளை கடந்தாக வேண்டும். அதற்கு, முதல்படியாக தனிநபர் சட்டங்களில் சில மாற்றங்கள் தேவை. அந்தந்த மதத்திலுள்ள முற்போக்கு சக்திகளை திரட்ட வேண்டும். அத்துடன், அனைத்து சமூகப் பெண்களையும் பாதிக்கும் விஷயங்களில், அனைவரையும் திரட்டும் பிரச்சாரம் தொடர்ந்து நடைபெற வேண்டும். எடுத்துக்காட்டாக, சொத்துரிமை, திருமணங்களை பதிவு செய்வது போன்ற பிரச்சினைகளை அக்கறையுடன் அணுகி, பெண்களை இணைக்கும் கோஷங்களை வைத்து, மதசீர்திருத்தங்கள் பற்றி இயக்கங்கள் நடத்தி, அனைத்து பகுதி மக்களையும் வென்றெடுக்க வேண்டும். சம சட்டங்களுக்கான அணுகுமுறை படிப்படியாக தொடர வேண்டும். சம உரிமைகள், சம சட்டங்கள் வலியுறுத்தப்பட வேண்டும்.

உதவி நூல்கள்

 1. The Law and India Women – a YWCA Publication
 2. Women’s Equality Jan-June 1993
 3. Women and Law – SWB Publication 1990
 4. Our Laws, Ourselves
 5. Demystification of Law of Ivomea – Nandita Thakar Kamala Basia.
 6. பெண்களும், சட்டமும் – தமிழ்நாடு சமூக நல வாரியம் மாதிரி.
 7. திருமண ஒப்பந்தம் – இணையதள கட்டுரைகள்