ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை 2023-24:மக்கள் மீதான துல்லிய தாக்குதல்

பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா

அறிமுகம்


ஆட்சியில் உள்ள ஆர்எஸ்எஸ்–பாஜக அரசின் இறுதி முழுநிதிநிலை அறிக்கை பாராளுமன்றத்தில் பிப்ரவரி 1இல் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கம் போல நிதி அமைச்சர் பட்ஜெட் உரை வார்த்தை ஜாலங்கள் நிறைந்ததாக அமைந்தது. பங்கு சந்தையையும் பெரு முதலாளிகளையும் குஷிப்படுத்த பல அறிவிப்புகள் அவரது உரையில் இருந்தன. ஆளும் கட்சி உறுப்பினர்கள் வழக்கம் போல, அவ்வப்பொழுது குரல் ஒலியும் கர ஒலியும் எழுப்பினர். இருந்தும் அன்றைய தின பங்குச்சந்தை நிலவரங்கள் அரசின் அறிவிப்புகளால் உற்சாகம் அடையவில்லை. மாறாக, இந்த அரசுக்கும் பிரதமருக்கும் மிகநெருக்கமானவர் என்று கருதப்படும் அதானி குழுமத்தின் பங்குகள் தொடர்ந்து வேகமாக சரிந்த வண்ணம் இருந்தன. பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட ஒரு வாரம் இருந்த நிலையில், ஜனவரி 24, 2023 அன்று அமெரிக்க கம்பனி ஹிண்டென்பர்க் இரண்டு ஆண்டுகள் அதானி குழுமத்தின் செயல்பாடுகளை ஆழமாக ஆய்வு செய்து, ஒரு விரிவான அறிக்கையை வெளியிட்டிருந்தது. அக்குழுமத்தின் நெறிமுறை மீறல்களையும், அதன் பலவீனங்களையும், அக்குழுமம் செய்துள்ளதாக கருதப்படும் பல தில்லு முல்லுகளையும், அவ்வறிக்கை அம்பலப்படுத்தியது. அதானி குழுமத்தின் கடன்கள் பற்றியும் அக்குழுமத்தின் பங்கு விலைகள் செயற்கையாக உயர்த்தப்படுவதற்கு பயன்படுத்தப்பட்ட உத்திகள் பற்றியும், அவ்வறிக்கை தெரிவித்தது. இந்த அறிக்கையின் ஆதாரங்களையும் தரவுகளையும், தக்க விவரங்களை முன்வைத்து நிராகரிப்பதற்கு பதிலாக, அதானி நிறுவனம் ஹிண்டென்பர்க் நிறுவனத்தை எதிர்த்து வழக்கு தொடர்வதாக மிரட்டியது. பங்கு சந்தையில் இது எடுபடவில்லை. அதானி குழுமத்தின் சரிவு, தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதானி குழுமத்தின் மீது பொதுவெளியில் ஹிண்டென்பர்க் நிறுவனம் வைத்துள்ள குற்றச்சாட்டுகள் பற்றி விசாரிக்க, ஒன்றிய அரசு முன்வரவில்லை என்பது மட்டுமின்றி, பாராளுமன்றத்தில் இப்பிரச்சினையை விவாதிக்க, தொடர்ந்து மறுத்து வருகிறது. இப்பிரச்சினை ஒருபுறம் இருக்க, ஒன்றிய பட்ஜெட் பற்றி சுருக்கமாக விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.


பட்ஜெட்டை விவாதிப்பது ஜனநாயகக் கடமை


பல ஆண்டுகளாகவே ஒன்றிய அரசின் பட்ஜெட் தாக்கல் என்பது ஒரு மிகைப்படுத்தப்பட்ட ஊடக நிகழ்வாக மாறிவிட்டது. பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கும் முன்பே ஒன்றிய அரசின் பட்ஜெட் பற்றி தேவையற்ற பரபரப்பை ஊடகங்கள் கிளப்பி விடுகின்றன. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்பு, அதுபற்றி ஊடக உலகில் ஆழமற்ற பரப்புரைகளும், பொழிப்புரைகளும், வந்தவண்ணமே இருக்கின்றன. உண்மையில் ஒன்றிய அரசின் பட்ஜெட்டிற்கு ஒரு எல்லைக்குட்பட்ட முக்கியத்துவம்தான் உண்டு. அரசு தனது பல நடவடிக்கைகள் மூலம் வருடம் முழுவதும் பொருளாதாரத்தின் மீது தாக்கம் ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கிறது. அவ்வப்பொழுது பெரு முதலாளிகளுக்கு சலுகைகளை அறிவிப்பது, மக்கள் மீது வரிச்சுமையை அதிகரிப்பது, கச்சா எண்ணய் மற்றும் சமையல் எரிவாயு போன்ற அத்தியாவசிய பண்டங்கள் மீதான விலையை உயர்த்துவது, மாநிலங்களின் நிதி ஆதாரங்களுக்கு ஊறுவிளைவிக்கும் வகையில், வரிவருமான பகிர்வில் மாற்றம் செய்வது போன்ற நடவடிக்கைகளை ஒன்றிய அரசு தொடர்ந்து செய்துவருகிறது.
பட்ஜெட் உரை என்பது உண்மையில் ஒரு அரசியல் நிகழ்வே. அரசு பட்ஜெட் தாக்கல் செய்யும்பொழுது நிலவுகின்ற பொருளாதார நிலைமைகளை புறந்தள்ளி விட முடியாது. நாட்டில் பெரும்பகுதி  செல்வங்கள் ஒரு சிலரிடம் இருக்கிறது. அவர்கள்தான் பன்னாட்டு, இந்நாட்டு முதலாளிகள். அவர்கள்தான் செல்வாக்கு மிக்கவர்களாக இருக்கிறார்கள். அரசியல் கொள்கைகளை அவர்கள்தான் நிர்ணயிக்கிறார்கள் முதலாளித்துவ அரசியல் கட்சிகளுக்கும் இவர்களிடமிருந்துதான் நிதி கிடைக்கிறது. உற்பத்தி சார் சொத்துக்களின் விநியோகமும் வருமான விநியோகமும் யார் செல்வாக்கு மிக்கவர்கள் என்பதை நிர்ணயம் செய்கிறது. அந்த வரம்புகளுக்கு உட்பட்டுதான் பட்ஜெட் அமையும் என்பது எதார்த்தம். பட்ஜெட்டுக்கு முந்தைய கலந்தாலோசனை என்ற ஒரு நாடகம் நடக்கிறது. அதற்கு பெரு முதலாளிகளை அழைக்கிறார்கள். தொழிலாளிகள், விவசாயிகள் மற்றும் சாதாரண மக்களை அழைத்து விவரமாக கருத்து கேட்பதில்லை. அரசு அந்நிய, இந்திய பெருமுதலாளிகளின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.


  கடந்த 30 ஆண்டுகளாக தாராளமயக் கொள்கைகள் பின்பற்றப்படுவதால் இந்திய பொருளாதாரத்திற்கும் உலகப் பொருளாதாரத்திற்கும் பெருமளவு இணைப்பு ஏற்பட்டு இருக்கிறது. 1991இல் இந்தியாவின் மொத்த தேசிய உற்பத்தி மதிப்பில் இறக்குமதி, ஏற்றுமதி இரண்டும் சேர்ந்தே ஏழில் ஒரு பங்குதான் இருந்தது. ஆனால் இன்று அது தேச உற்பத்தி  மதிப்பில் 50 % க்கு மேல் இருக்கிறது. எனவே பன்னாட்டு சூழலை புறக்கணித்து பட்ஜெட் போடுவதிலும் சிரமம் இருக்கிறது. இந்த ஆண்டு பொருளாதார சூழல் எப்படி இருக்கிறது என்பதை சொல்வதற்கு பொருளாதார ஆய்வு அறிக்கை என்பது ஒரு முயற்சி. ஆனால் அவ்வறிக்கை பெரும்பாலும் ஆளும் அரசின் கொள்கைகளையும் செயல்பாடுகளையும் புகழும் ஆவணமாகி விட்டது. பட்ஜெட் தாக்கல் செய்வதில் பொருளாதாரம் மட்டுமல்ல; அரசியலும் கூட முக்கியத்துவம் பெறுகிறது. இந்த ஆண்டில் ஒன்பது மாநில தேர்தல்கள் வருகின்றன. 2024 இல் அகில இந்திய பொதுத் தேர்தல் வருகிறது. எனவே ஆளும் கட்சி இதையெல்லாம் கணக்கில் கொண்டுதான் பட்ஜெட்டை உருவாக்கும்.
இந்த அரசாங்கம் அவ்வப்பொழுது சுங்க வரியை உயர்த்தி இருக்கிறது.

அவ்வப்பொழுது பெட்ரோல் விலையையும் உயர்த்தி இருக்கிறது. பாராளுமன்றத்தை கேட்காமலே அன்றாடம் அரசு பட்ஜெட் போட்டுக் கொண்டிருக்கிறது. அதேபோல, 2017இல் குளறுபடியான ஜிஎஸ்டி அறிமுகம், 2016 இல் மோடி எடுத்த முற்றிலும் தவறான பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஆகியவை தொடர்ந்து நமது பொருளாதாரத்தை, குறிப்பாக முறைசாராத்துறை மற்றும் சிறுகுறு விவசாயிகள், தொழில்முனைவோர் ஆகியோரை, பாதித்து வருகின்றன.
தற்போதைய ஒன்றிய அரசாங்கம் தேச உற்பத்தி மதிப்பின் விகிதமாக செலவுகளை குறைத்துக் கொண்டே வருகிறது என்பதும் உண்மை. ஒன்றிய அரசு அதிதீவிர தாராளமய கொள்கைகளை பின்பற்றுகிறது. எனவே செலவுகளை குறைத்து வருகிறது.
பலவகைகளில் இவ்வாறு பட்ஜெட்டின் வர்க்கத்தன்மை நிர்ணயிக்கப்பட்டு விட்டாலும், நாம் பட்ஜெட்டை விவாதிப்பது அவசியம். பல ஆண்டு விவரங்களை வைத்து பார்த்தால் ஒன்றிய அரசின் மொத்த செலவு மற்றும் வரவு நமது உழைப்பாளி மக்களால் உருவாக்கப்பட்ட தேச உற்பத்தி மதிப்பில் ஏழில் ஒரு பங்கு, அதாவது, கிட்டத்தட்ட 14 சதவீதம் என்பதை சுற்றி வருகிறது. ஆகவே பொது வெளியில் பட்ஜெட்டை விவாதிப்பதும் வர்க்க நிலைபாட்டில் இருந்து விமர்சிப்பதும், இதனை தொடர்ந்து கிளர்ச்சி பிரச்சார இயக்கங்கள் மேற்கொள்வதும், அதன்மூலம் ஆளும் வர்க்கங்களை அம்பலப்படுத்துவதும் நமது ஜனநாயகக் கடமை.


ஆழமற்ற பட்ஜெட்


தொடர்ந்து சில வருடங்களாக ஒன்றிய நிதி அமைச்சர் தாக்கல் செய்யும் பட்ஜெட்டை Non budget அதாவது “பட்ஜெட் அற்ற பட்ஜெட்” என்றே கூறலாம்.* பெரும்பாலும் பல வெற்று அறிவிப்புகள் மற்றும் ஆளுங்கட்சிக்கு ஊக்கம் தரும் முனைவுகள்தான் பட்ஜெட்டில் உள்ளன. இந்த முறை தனிநபர் வருமான வரியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அரசின் மொத்த செலவில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்பொழுது இந்த ஆண்டு பெரிய மாற்றம் எதுவும் இல்லை. 2022-23 ஆண்டின் மொத்த செலவுகள் திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி ரூ 41.9 லட்சம் கோடி. வரும் 2023-24 கக்கான ஒதுக்கீடு ரூ 45 லட்சம் கோடிதான். 7 சதவீதம் பண வீக்கத்தை கணக்கில் கொண்டால், இது உயர்வே அல்ல, உண்மையளவில் சரிவு. மேலும், தேச வருமானம், அரசின் தரவுகள்படி 7 % உயர்ந்துள்ளதாக சொல்லப்படும் நிலையில், தேச வருமானத்தின் விகிதமாக மொத்த ஒதுக்கீடு குறைந்துள்ளது. இது ஒட்டு மொத்த பொருளாதாரத்தில் முதலீடுகளை பெருக்கிட, வேலை வாய்ப்புகளை விரிவு செய்ய, கிராக்கியை உயர்த்திட, அதன் மூலம் மக்கள் வருமானத்தை உயர்த்த எந்த வகையிலும் உதவாது.


நிலையற்ற பன்னாட்டு சூழல், உலக அளவிலான விலைவாசி நிலைமைகள், மேலை நாடுகள் வட்டி விகிதங்களை உயர்த்துவது ஆகியவற்றை இணைத்து பட்ஜெட்டை பார்க்க வேண்டி உள்ளது. ஆனால் உலகத்திலேயே இந்தியாதான் ஒளிமயமான நாடு என்று அனைவரும் சொல்கிறார்கள் என்றும், 7 சதவீத வளர்ச்சி என்றும் நிதி அமைச்சர் பேசுவது நகைப்பிற்கு உரியது.


2014இல் ஆர்எஸ்எஸ் பாஜக அரசு ஆட்சியில் அமர்ந்தது. ஒரு ஒன்றரை ஆண்டுகாலம் சாதகமான பன்னாட்டு சூழல் (குறிப்பாக, கச்சா எண்ணய் விலை சரிவு) இருந்தும், பணமதிப்பிழப்பு , ஜிஎஸ்டி கொள்கைகள் வீழ்ச்சியை நோக்கி பொருளாதாரத்தை தள்ளின. 2019-20லேயே வளர்ச்சி விகிதம் குறைந்து விட்டது. 2020இல் பெருந்தொற்று வந்தது. 2020-21இல் GDP பெருமளவு சரிந்தது (மைனஸ் 10.5%). அதனுடைய மீட்சிதான் 2021-22 மற்றும் 2022-23ல் ஏற்பட்டது. ஆகவே 7 சதவீதம் வளர்ச்சி என்று அரசு தம்பட்டம் அடித்துக்கொள்வதை ஏற்க இயலாது. இது பெரும் சரிவில் இருந்து ஏற்பட்டுள்ள மீட்சியின் பகுதியாக வருகிற வளர்ச்சி விகிதம் என்றே கூற வேண்டும். 2022-23 இல்தான் முதல் முறையாக தேச உற்பத்தி மதிப்பு 2019-20ஆம் ஆண்டின் மொத்த தேசிய உற்பத்தி அளவை எட்டி, அதை சற்று தாண்டி இருக்கிறது. அதாவது, மூன்று ஆண்டுகளில் கிட்டத்தட்ட பூஜ்ய வளர்ச்சி!


வரி கொள்கைகள்


 பணவீக்கம் அதிகரிக்கும்பொழுது வரி அடுக்குகளும் மாறித்தான் ஆக வேண்டும். எனவே கொடுக்கப்பட்டுள்ள தனி நபர் வருமான வரி சலுகைகளை தவறு என்று கூற முடியாது. மிக சொற்பமான பலன்தான் சம்பள உழைப்பாளிகளுக்கு கிடைக்கும்.
இந்த ஒன்றிய அரசின் எட்டு ஆண்டு ஆட்சியில் கார்ப்பரேட் வருமான வரி விகிதங்கள் பெரிதும் குறைக்கப்பட்டது சொத்துவரி முற்றாக நீக்கப்பட்டது. பெரும் சொத்து மற்றும் வருமான ஏற்றத்தாழ்வுகள் நிலவும் இந்தியாவில் வாரிசு வரியே இல்லை. Oxfam அறிக்கை இந்தியாவின் தீவிரம் அடைந்துவரும் வருமான ஏற்றத்தாழ்வுகளை ஆவணப்படுத்தியுள்ளது. இந்த விவரங்கள் பொது வெளியில் உள்ளன. ஆனால் அரசும் ஆளும் வர்க்கங்களும் இதனை பேச மறுக்கின்றன. கள்ள மௌனம் சாதிக்கின்றன. மோடி அரசின் செல்வந்தர் மற்றும் கார்ப்பரேட் சாய்மானத்தால் பல லட்சம் கோடி ரூபாய் வரி வருமானம் இழக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஒன்றிய அரசின் வரிக்கொள்கைகளால் ஏற்பட்டுள்ள அரசு வருமான இழப்பு மாநிலங்களையும் கடுமையாக பாதிக்கிறது.


மேலும் ஒரு முக்கிய அம்சத்தை நாம் கவனிக்க வேண்டும். கார்ப்பரேட்டுகளின் லாபம் உடைமையின் அடிப்படையில் கிடைக்கிறது. உழைப்பாளி மக்களின் வருமானம் உழைப்பின் அடிப்படையில் கிடைக்கின்றது. உழைப்பின் அடிப்படையில் வரும் வருமானத்திற்கு ஓரளவு வரிச்சலுகை கொடுத்தால் தவறில்லை. சம்பளம் வாங்குவோரில் ஒருபகுதிக்கு தரப்பட்டுள்ள வரி சலுகையைப்போல் பல மடங்கு வரி சலுகைகள் இந்திய அந்நிய பெரு முதலாளிகளுக்கு மோடி அரசால் தொடர்ந்து தரப்பட்டுவருகிறது. 2019லேயே நிதி அமைச்சர் கார்ப்பரேட்டுகளுக்கான வரியை 30 % லிருந்து 22 % ஆகக் குறைத்தார். இதனால் அரசுக்கு ஒரு ஆண்டுக்கு அன்றைய தேதியில் ஏற்பட்ட இழப்பு 145000 கோடி ரூபாய் என்றும் அவரே கூறினார். 2020 பட்ஜெட்டில் நேர்முக வரியில் 65,000 கோடி ரூபாய்கக்கு சலுகை அளித்து அரசுக்கு இழப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் மந்த நிலையை காரணம் காட்டி ஏற்றுமதிக்கு 50,000 கோடி ரூபாய், பன்னாட்டு நிதி மூலதனத்திற்கு 10000 கோடி ரூபாய் மற்றும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட துறைகளுக்கு 25000 கோடி ரூபாய் என்று மொத்தம் 300000 கோடி ரூபாயை விரல் விட்டு எண்ணக்கூடிய பெரிய முதலாளிகளுக்கும், பணக்காரர்களுக்கும் 2019-20இல் பாஜக அரசு ஒதுக்கியது.


இதனை ஈடுகட்ட மக்களின் சொத்துக்களாகிய பொதுத்துறையின் பங்குகளை விற்க வேண்டும் என்று அரசு கூறுகிறது. ஆனால் அரசால் நினைத்த அளவிற்கு பங்குகளை விற்க முடியவில்லை. பட்ஜெட்டில் மூலதன வருவாய் என்பது கடன் வாங்குவது மற்றும் சிறுசேமிப்புகள் மூலம் வருகிறது. அது போக பிற மூலதன வரவுகள் என்பது பங்கு விற்பனை மூலம் வருவது. இதற்காக பெரும் இலக்குகளை அரசு நிர்ணயித்தாலும் அதில் ஒரு பகுதியைத்தான் நிறைவேற்ற முடிந்துள்ளது. வலுவான பொதுத்துறைகளை, அவற்றில் உள்ள உபரியை நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என்ற சிந்தனை அரசுக்கு வரவில்லை. அதற்குப் பதில் தேசத்தின் பொதுத்துறை சொத்துக்களை மிகக்குறைந்த செலவில் பயன்படுத்திக்கொள்ள “தேசீய சொத்துக்களை பணமாக்கும்” திட்டத்தை அமலாக்க அரசு தீவிரமாக செயல்படுகிறது. அப்படியானால் மக்களுக்கான கல்வி, சுகாதாரம், கட்டமைப்பு ஆகியவற்றை யார் செய்வார்கள்? லாப நோக்கில் செய்தால் அது மக்களை சென்றடையாது. செல்வந்தர்கள் மட்டுமே அனுபவிப்பதாக இருக்கும். இது அரசின் கடமை என்று நினைத்த ஒரு காலம் உண்டு. இன்றைய தாராளமய சிந்தனையில், மக்களுக்கான தேவைகள் பின்னுக்குச் சென்று விட்டன. இந்த பட்ஜெட்டில் சாதாரண மக்களுக்கு எதுவுமே இல்லை என்று சொல்லலாம். வரி உட்பட பல சலுகைகள் செல்வந்தர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மறைமுக வரியினுடைய பங்கு அதிகரித்துக் கொண்டே வருகிறது. 


GST அதிகமாக வசூல் ஆகிறது என்று அரசு பெருமையாக சொல்கிறது. அடுத்த வருடத்திற்கு 9,56,600 கோடி ரூபாய் வரும் என்று அரசு சொல்கிறது. பட்ஜெட் தரவுகளின்படி கார்ப்பரேட்டுகளிடம் வசூலிக்கும் மொத்த வரி சுமார் 900000 கோடி ரூபாய். உழைதது வருமானம் ஈட்டும் மக்களில் ஒருபகுதியினர் இதற்கு சமமான வருமான வரி கொடுக்கின்றனர். ஆனால் எக்சைஸ் வரி, சுங்க வரி, GST மற்றும் இதர மறைமுக வரிகள் ஆகியவை சேர்ந்து இதைவிட அதிகமாக உள்ளது. ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் அனைத்தும் சேர்த்து வசூலிக்கும் வரி மொத்த தேச உற்பத்தி மதிப்பில் 16% அளவுக்கு உள்ளது. இதில் மூன்றில் இரண்டு பங்கு மறைமுக வரி ஆகும். அதாவது மக்களை பாதிக்கின்ற வரி. மூன்றில் ஒரு பங்குதான் செல்வந்தர்கள் தரும் வரி. இந்த வரிமுறையானது பெரும்பான்மை மக்களுடைய வாங்கும் சக்தியை பாதிக்கும். ஆனால் செல்வந்தர்கள் முதலீடு செய்வார்கள் என்று உத்தரவாதம் இல்லை. ஏனென்றால் அதன் மீது எந்த கட்டுப்பாடும் இல்லை. அவர்கள் வெளிநாட்டில் கூட முதலீடு செய்யலாம்.  


இன்னொரு அம்சம், அறிவிக்கப்பட்ட சலுகைகள் என்னவாயிற்று? அதன் மூலம் கிடைத்த பயன்கள் என்ன? என்று கேள்வி உள்ளது. பெரு முதலாளிகளுக்கு சலுகைகள் அளித்தால் அவர்கள் முதலீடு செய்வார்கள். அதனால் வேலை வாய்ப்பு உருவாகும் என்ற முதலாளிகளின் கதையாடல் மீண்டும் மீண்டும் முன்வைக்கப்படுகிறது. ஆனால் அதற்கான எந்த தரவுகளும்  இல்லை. பெரும் கார்ப்பரேட்களுக்கு அளித்த சலுகையினால் அரசுக்கு ஏற்பட்ட இழப்புகள் எவ்வளவு, இச்சலுகைகள் மூலம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு, உற்பத்தி பெருகியிருந்தால், அதன் கணக்கு என்ன, சூழலுக்கு என்ன பாதிப்பு போன்ற தரவுகள் எதுவுமே மக்கள் மத்தியில் வைக்கப்படுவதில்லை. இடதுசாரிகள் இவை தொடர்பான வெள்ளை அறிக்கையை பல முறை கோரிவந்துள்ளனர். ஆனால் பதில் இல்லை. இதையெல்லாம் பரிசீலித்தால் பட்ஜெட் என்பது திருடன் சொல்லும் கணக்கு தானோ என்று யாராவது கேட்டால், பளிச்சென்று “இல்லை” என்று சொல்லிவிட முடியாது என்றே கருதவேண்டியுள்ளது!


 ஒதுக்கீடுகள்


இதுவரை துறைவாரி ஒதுக்கீடுகள் பற்றி நாம் விவாதிக்கவில்லை. இதனை மிக சுருக்கமாக காண்போம்.
2020-21இல் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டது ரூ 98,468 கோடி. 2022-23 பட்ஜெட் மதிப்பீடு 73000 கோடி ரூபாய். திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி செலவழிக்கப்பட்டது 89400 கோடி ரூபாய். வேலை நாட்களும் குறைந்துள்ளன. ஆனால் 2023-24 இல் பட்ஜெட் மதிப்பீடு 60000 கோடி ரூபாய் மட்டுமே. ஊதியம் மற்றும் வேலை நாட்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை உள்ள இந்த சூழலில் ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது ஒரு மக்கள் விரோத செயல். அரசின் சார்பாக பல அதிகாரிகளும் அமைச்சர்களும் பிற ஊரக வேலை வாய்ப்புகக்கு கூடுதலாக கொடுத்துள்ளதாக சொல்வதன் மூலம் சட்ட உரிமையான ரேகா வேலை நாட்களை குறைப்பதை நியாயப்படுத்த முடியாது. இந்த ஒதுக்கீட்டில் கூலி பாக்கிகளே ஒரு கணிசமான தொகையாக உள்ளது. அனைத்து ஊரக வேலை திட்ட ஒதுக்கீடுகளை கூட்டினாலும் பெரும் பள்ளம் விழுகிறது. அதுமட்டுமல்ல. உண்மையில் சட்டத்தில் உள்ளபடி வேலை கேட்கும் அனைத்து குடும்பங்களுக்கும் ஒரு ஆண்டில் 100 நாட்கள் வேலை கொடுக்க ரூ 2.72 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும்! அதில் நான்கில் ஒரு பங்கு கூட இல்லை. ‘செலவழித்துவிட்டு கேளுங்கள், தருகிறோம்’ என்று அரசு கூறுவது ஏற்கத்தக்கதல்ல. நம்பத் தகுந்ததும் அல்ல.
ஊரக வளர்ச்சித்துறை, வேளாண் மற்றும் விவசாயிகள் நலனுக்கான துறை, கல்வித் துறை, ஆரோக்கியத்துறை உள்ளிட்ட துறைகளுக்கான ஒதுக்கீடுகள் எதிலும் கடந்த ஆண்டு திருத்தப்பட்ட மதிப்பீட்டுடன் ஒப்பிடுகையில் சரிவு அல்லது மிகக் குறைவான உயர்வே காணப்படுகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள், பட்டியலின் மக்கள், பழங்குடி மக்கள், சிறுபான்மையினர் ஆகிய பகுதியினர் முற்றிலும் வஞ்சிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் நலத்திட்டங்களில் குறைந்த ஊதியத்திற்கு, பல ஆண்டுகளாக பணியாற்றிவரும் ஊழியர்களுக்கு (இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள்) எந்த நன்மையும் பட்ஜெட்டில் இல்லை. அரசின் முதலீட்டு செலவு கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட 7.5 லட்சம் கோடியில் இருந்து 10 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது என்று தம்பட்டம் அடிக்கிறது ஒன்றிய அரசு. ஆனால், இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட, சுங்க வரிகள் குறைக்கப்பட்டுள்ள பின்னணியில் இத்தொகையில் கணிசமான பகுதி அயல்நாட்டு இயந்திரங்களையும் தொழில்நுட்பங்களையும் பெற செலவிடப்படும், உள்நாட்டு தொழிலை வேகமாக முன்னேற்றவோ, வேலை வாய்ப்பை பெருக்கவோ பெருமளவிற்கு உதவாது என்பதையும் நாம் பதிவிட வேண்டும்.


அந்நிய இந்திய பெருமுதலாளிகள் நலன் சார்ந்த பட்ஜெட்


பட்ஜெட்டில் பல்வேறு விஷயங்கள் அறிவிப்புகளாகவே உள்ளன. ஒதுக்கீட்டுத் தொகை இல்லை. திட்டம் இல்லை. காலக்கெடு எதுவும் குறிப்பிடப்படவில்லை. அண்மைக்காலங்களில் அரசின் தரவுகள் நம்பிக்கையை இழக்கின்றன என்பதுதான் நிலைமை. விவசாயம் மற்றும் விவசாயிகள் நலன்களுக்கான ஒதுக்கீடு அதிகரிக்கப்படவில்லை. ஒவ்வொரு துறையிலும் இதே நிலைதான். உலகெங்கும் செல்வந்தர்கள் மீது வரிவிகிதங்கள் உயர்த்தப்பட வேண்டும், சொத்து வரி, வாரிசு வரி ஆகியவை பெருகிவரும் பொருளாதார ஏற்றத்தாழ்வை தடுத்து, வேலை வாய்ப்புக்கும், கல்வி, ஆரோக்கியம் உள்ளிட்ட மனித வள முதலீடுகளுக்கும், உணவு பாதுகாப்பிற்கும், சுய சார்பு அடிப்படையிலான தொழில் வளர்ச்சிக்கும் கூடுதல் ஒதுக்கீடுகள் செய்து, கூடுதல் முனைவுகளை மேற்கொள்ள வேண்டும் என்ற குரல்கள் ஓங்கி வருகின்றன. ஆனால் அந்தப் பாதையை முற்றிலும் புறக்கணித்துவிட்டு, அதி தீவிர தாராளமய பாதையில் ஒன்றிய பட்ஜெட் பயணிக்கிறது.


தொடர் தாராளமய கொள்கைகளின் விளைவாக நமது நாட்டிற்கு பொருட்களுக்கான ஏற்றுமதி-இறக்குமதி வர்த்தகத்தில் பற்றாக்குறை (இதனை சரக்கு வர்த்தக பற்றாக்குறை, merchandise trade deficit என்று அழைப்பார்கள்) அதிகமாக உள்ளது. ஆனால் சேவைத் துறையில் இறக்குமதியை விட ஏற்றுமதி அதிகமாக உள்ளது. இது ஓரளவு பற்றாக்குறையை குறைக்க உதவுகிறது. ஆனால் அது போதுமான அளவு இல்லை. ஆனால் வெளிநாட்டில் வாழும் இந்திய உழைப்பாளி மக்கள் தங்கள் குடும்பத்திற்கு அனுப்பும் பணம் நமக்கு சாதகமாக உள்ளது. இதை கணக்கில் கொண்ட பின்னரும் ஒரு பள்ளம் உள்ளது. அதற்குப் பெயர்தான் அன்னிய செலாவணியில் நடப்பு கணக்கு பற்றாக்குறை (Current account deficit) என்பதாகும். இந்த பள்ளத்தை நிரப்ப நாம் பல சலுகைகளை கொடுத்து அந்நிய நிதி மூலதனத்தை ஈர்க்க முயல்கிறோம். வரும் ஆண்டில் மேலை நாடுகளின் பொருளாதார மந்தம் ஏற்படும் என்ற அனுமானம் வலுவாக உள்ளது. அவ்வாறு நிகழ்ந்தால், நமது ஏற்றுமதி பாதிக்கப்படும். இதற்கிடையில் நாம் இறக்குமதி செய்யும் பொருட்களின் விலைகள் வேகமாக அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது. இதனால் அந்நிய செலாவணி இடைவெளி அதிகரிக்கும். அது, ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட நெருக்கடியை ஏற்படுத்தும். இதைப் பற்றிய குறைந்தபட்ச விழிப்புணர்வு கூட பட்ஜெட்டில் இல்லை.


அதானி விவகாரம் நமக்கு தரும் பாடங்களில் ஒன்று ஆயுள் காப்பீட்டுக்கழகம், ஸ்டேட் வங்கி போன்றவை கணிசமான உபரிகளை ஈட்டுகின்றனர். இந்த உபரிகளை பொதுத்துறை வாயிலாக நாட்டு வளர்ச்சிக்கு பயன்படுத்த அரசு தயாராக இல்லை. மாறாக, இந்த நிறுவனங்களை பங்கு சந்தை ஊக வணிகத்தில் தள்ளி விடுகிறது. நாட்டுக்கு உபரி தரும் பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும் தனியாருக்கு தாரை வார்ப்பதே ஒன்றிய அரசின் கொள்கையாக உள்ளது.


 மொத்தத்தில், இந்த பட்ஜெட் ஒரு ஆழமே இல்லாத, தேசம் சந்திக்கிற பொருளாதார பிரச்சினைகள் மீதான மேலோட்டமான அணுகுமுறை கொண்டது என்பது மட்டுமல்ல; ஆளும் வர்க்க நலனை தூக்கிப்பிடிக்கும் பட்ஜெட் என்பதுதான் உண்மை.

மோடி அரசின் பாசிச போக்குகள்: டோக்ளியாட்டி தரும் வெளிச்சத்தில் ஒரு பார்வை

பேரா. ஆர். சந்திரா.

(கடந்த இதழில் பால்மிரோ டோக்ளியாட்டி எழுதிய “பாசிசம் குறித்த விரிவுரைகள்” எனும் நூல் அறிமுகத்தை வெளியிட்டிருந்தோம். அதன் தொடர்ச்சியாக அந்நூல் குறித்த சமகால பொருத்தப்பாட்டை இக்கட்டுரை விவரிக்கிறது.)

சமீபகாலமாக உலகின் பலபகுதிகளிலும், பாசிச சக்திகள் வலுப்பெற்று வருகின்றன. இவை, 1930களில் ஐரோப்பிய நாடுகளின், குறிப்பாக , ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகளின் நிகழ்வுகளை நினைவுபடுத்துவதாக உள்ளன. பாசிச அரசு ஏகபோக முதலாளிகளின் நலன்களை முன்னிறுத்தி, முழுமையாக அதற்கேற்ப செயல்படும் தன்மை கொண்டது. இந்தியாவில் தற்போது மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு பாசிச அரசா, இல்லையா என்பது பற்றி நிறைய விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தச் சூழலில்,1930களில் இத்தாலிய  கம்யூனிஸ்ட் தலைவர்களில் முக்கியமான ஒருவரான பல்மிரோ டோக்ளியாட்டி  பாசிசம் பற்றி 1935ஆம் ஆண்டு மாஸ்கோவில் லெனின் பள்ளியில் ஆற்றிய விரிவுரைகள் பாசிசம் பற்றிய புரிதலுக்கு உதவும். அது மட்டுமல்ல. பாசிசம் என்பது முறியடிக்க முடியாத ஒன்று இல்லை.  பாசிச சக்திகளை முறியடிக்க கம்யூனிஸ்டுகள் எத்தகைய நிலைபாடுகளை எடுக்க வேண்டும் என்பதை ஜெர்மனி மற்றும்  இத்தாலிய நாடுகளின் அனுபவங்களின் மூலம் அவர் விளக்கி இருப்பதை புரிந்து கொண்டு, அப்புரிதலின்  வெளிச்சத்தில், நமது கட்சி திட்டத்தின் மீது நின்று, சமகால இந்திய சூழலையும் கணக்கில் கொண்டு, தக்க செயல் திட்டங்களை உருவாக்க இந்த வாசிப்பு உதவும்.

பாசிசம் என்பது என்ன?

பாசிசம் என்பதற்கு பல வகையான விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. “பாசிசம் என்பது நிதி மூலதனத்தின் மிகவும் பிற்போக்கான, மிகவும் இனவெறி கொண்ட, மிக மோசமான ஏகாதிபத்திய சக்திகளின் அப்பட்டமான பயங்கரவாத சர்வாதிகாரமாகும்” என்று 1935ஆம்  ஆண்டு நடைபெற்ற கம்யூனிஸ்ட் அகிலத்தின் 7வது உலக காங்கிரசுக்கு அளித்த அறிக்கையில் தோழர். ஜார்ஜ் டிமிட்ரோவ் கூறியதை டோக்ளியாட்டி எடுத்துரைக்கிறார். இங்கு மாமேதை  லெனின் அவர்கள் “ஏகாதிபத்தியம் குறித்து நீங்கள் அறிந்திருக்கவில்லை என்றால், பாசிசம் என்ன என்பது குறித்து நாம் தெரிந்து கொள்ள முடியாது“ என்று கூறியுள்ளதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். சுருங்கச் சொன்னால், ஏகாதிபத்தியம் என்பது ஏகபோகமூலதனம் ஆதிக்கம் செலுத்தும் கட்டம்.

பாசிசமானது ஒவ்வொரு நாட்டில் ஒவ்வொரு வடிவம் எடுக்கும் . ஒரே நாட்டில் கூட அந்தந்த கால கட்டத்திற்கேற்ப அதன் நோக்கங்கள், அணுகுமுறைகள் மாறும். ஏகபோக முதலாளித்துவம் நெருக்கடியை எதிர்கொள்ளும் பொழுது, பூர்ஷ்வா சக்திகள் சில “முதலாளித்துவ ஜனநாயக” நெறிமுறைகளை கைவிட்டுவிட்டு பாசிசத்தின்பால் திரும்பும் என்பதை பல எடுத்துக்காட்டுகளுடன் டோக்ளியாட்டி விளக்குகிறார்.

பாசிசத்தின் முக்கிய அம்சங்களும்  இந்திய சூழலும்

பாசிசத்தின் முக்கிய அம்சங்கள் சமகால இந்திய சூழலுக்கு எப்படி பொருந்துகின்றன என்று பார்க்கலாம்.

பாசிச கட்சி ஆட்சியில் அமர்ந்தால் பெரு முதலாளிகளுக்கு ஆதரவான பொருளாதார கொள்கைகளை முழுமையாக முன்பின்முரணின்றி அமலாக்கும். பா.ஜ.கவிற்கு முந்தைய  காங்கிரஸ் தலைமையிலான அரசு நவீன தாராளமயக் கொள்கைகளை அமுலாக்கியது. இடது சாரிகள் மற்றும் ஜனநாயக சக்திகளின் தொடர் போராட்டங்களின் விளைவாக, கிராமப்புற வேலை உறுதி சட்டம், தகவல் அறியும் உரிமை சட்டம், வன உரிமைச் சட்டம் போன்ற சட்டங்கள் இயற்றப்பட்டு  அமலுக்கு வந்தன. இடதுசாரிகளின் ஆதரவுடன் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு செயல்பட்ட 2004-2008 காலத்தில் வேளாண் மற்றும் ஊரக கட்டமைப்புகளில் ஒன்றிய அரசு முதலீடுகள் நிகழ்ந்தன. 2009லிருந்து இது நீர்த்துப் போனது. பின்னர் 2014இல் மோடி அரசு ஆட்சிக்கு வந்ததும், நவீன தாராளமயக் கொள்கை மேலும் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டது. பெரு முதலாளிகளுக்கு ஆதரவாக, நெருக்கமாக இருந்து ஒன்றிய அரசு செயல்பட்டுவருகிறது. தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் சட்டம், விவசாயத்தை கார்பரேட்மயமாக்கி, விவசாயிகளை நிர்க்கதியாக தவிக்க விடும் சட்டம், லாபம் ஈட்டும்  நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் தனியாருக்கு தாரை வார்க்கும் சட்டம், ஆதிவாசிகள், பழங்குடி மக்கள் தமது வாழ்வாதாரங்களை இழக்கும்  வகையில்  இயற்கை வளங்களை கார்பரேட்டுகள் கைவசப்படுத்தி லாபம் ஈட்டும் சட்டம்  என பல சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இவற்றை எதிர்ப்போர் வளர்ச்சிக்கு எதிரானவர்கள்; தேச விரோதிகள் என்று முத்திரை குத்தப்படுகின்றனர். இச்சட்டங்களை மோடி எப்படி நியாயப்படுத்துகிறார்? பெரு முதலாளிகள்தான் “செல்வத்தை உருவாக்குபவர்கள்” என்கிறார். மோடி அரசின் பொருளாதார  கொள்கைகளால் வேலை இழப்பு, கடும் விலை வாசி உயர்வு, விளிம்பு நிலைக்கு தள்ளப்படுவோர்  எண்ணிக்கை அதிகரிப்பு  போன்றவற்றை பற்றி எந்த கவலையும் ஒன்றிய அரசுக்கு கிடையாது என்பதே யதார்த்தம்.

பாசிச கட்சி ஆட்சிக்கு வந்தால்

டோக்ளியாட்டி இந்த அமசத்தை பின்வருமாறு விளக்குகிறார்? “அரசியல் விவாதங்கள் நடைபெறாது. பாசிச கட்சி கொள்கையில் மாற்றம் கொண்டு வந்தால் கூட, அக்கட்சியின் உறுப்பினர்கள் இதர குடிமக்களை போல, செய்தித்தாள்களை படித்து தெரிந்து கொள்ள வேண்டியிருக்கும். கட்சி உறுப்பினர்களுக்கு  அதன் கொள்கை உருவாக்கத்தில் பங்கு இருக்காது. உட்கட்சி  ஜனநாயகம் என்பது  இருக்காது. அதிகார வர்க்க பாணியில், கட்சி மேலிருந்து கட்டப்படும்… ஆண்டுக்கொருமுறை கூட்டப்படும் கூட்டங்களில் தலைவர் ஆற்றும் உரைகளை கேட்பதுடன், தலைமை எடுக்கும் முடிவுகளை உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்வார்கள். ஜனநாயக அடிப்படையில்  கட்சிக்குள் தேர்தல் என்பது கிடையாது ..”

கடந்த ஏழு ஆண்டுகளில் மோடி அரசின் செயல்பாடு எப்படி இருந்திருக்கிறது? ஆகப்பெரிய நாசம்  விளைவித்த பணமதிப்பு இழப்பு நடவடிக்கை சம்பந்தப்பட்ட நிதித்துறையும்  ரிசர்வ் வங்கியும் கலந்து முன்மொழிவு உருவாக்கப்பட்டு விவாதித்து முடிவு எடுக்கப்படவில்லை. திடீரென மோடியால் அறிவிக்கப்பட்டது. இதனால் சிறுகுறு தொழில்களும் விவசாயமும் இதர முறை சாரா தொழில்களும் பெரும் சேதத்திற்கு உள்ளாயின. மக்களுக்கு எந்த நன்மையையும் இல்லை. மிஞ்சியது உயிரிழப்பு உட்பட கடும்பாதிப்பு மட்டுமே. சென்ற ஆண்டு  பெரும்தொற்று  பரவிய பொழுது எந்த மாநிலத்தையும் கலந்தாலோசிக்காமல், திடீரென சர்வாதிகார பாணியில் பிரதமர் நாடு தழுவிய முழு ஊரடங்கு  கொண்டு வந்தார். மக்கள் பெரும் துயருக்கு உள்ளாயினர். ஆனால்  இந்திய பெரு முதலாளிகளின் சொத்துக்கள் பெரும் தொற்று காலத்தில் பல்கிப்பெருகியுள்ளன. பெரும் தொற்று கால நிலைமைகளை பயன்படுத்தி விவசாயிகள், தொழிலாளிகள், கிராமப்புற ஏழைகள் ஆகியோருக்கு எதிரான சட்டங்களை பாராளுமன்ற நெறிமுறைகளை மீறி ஒன்றிய அரசு  நிறைவேற்றியுள்ளது. பாராளுமன்ற ஜனநாயகம் மறுக்கப்பட்டு சர்வாதிகார போக்குகள் மேலோங்கி வருவதை இந்நிகழ்வுகள்  காட்டுகின்றன .  

ஜனநாயக அரசு நிறுவன அமைப்புகள் அழிப்பு

பாசிச கட்சி ஆட்சியில் இருக்கும் பொழுது, அரசின் நிறுவனங்கள் ஜனநாயக அடிப்படையில் செயல்படுவது படிப்படியாக அழிக்கப்படும்.. “GLEICHSHALTUNG” என்ற ஜெர்மானிய வார்த்தையின் அர்த்தம் ஒன்றிணைந்து செயல்படுதல் என்பதாகும். இது அபாயகரமான வார்த்தை அல்ல. ஆனால், நாஜிக்கள் அந்தச் சொல்லை எப்படி பயன்படுத்தினார்கள் என்பதை டொக்ளியாட்டி விளக்குகிறார். நாட்டில் உள்ள அனைத்து நிறுவனங்கள், பொது வாழ்வுடன் தொடர்புள்ள அனைத்து அமைப்புகள், சங்கங்கள் ஆகியவற்றை தங்களின் – பாசிஸ்டுகளின் –  கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என்பதே பாசிஸ்டுகளின் நோக்கமும் நடைமுறையுமாக நாஜி ஆட்சியில் இருந்தது. எதுவுமே அவர்களின் கட்டுப்பாட்டிற்கு வெளியே இருக்கக்கூடாது என்பதில் தீவிரமாக இருந்தனர். தற்போதுள்ள இந்திய ஒன்றிய அரசும் பாஜகவும் இதேபாணியில் செல்ல முயல்வதை நாம் கண்கூடாக பார்க்கலாம்.

கடந்த ஏழு ஆண்டுகளில் இந்தியாவின் அரசியல் சாசன அடிப்படையில் அமைக்கப்பட்ட நிறுவனங்களின் சட்டப்படியான செயல்பாடுகள் கடும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. நீதிமன்றங்கள் சுயமாக செயல்பட முடிவதில்லை. தேர்தல் ஆணையம், ரிசர்வ் வங்கி, அரசின் வரி வசூல் அமைப்புகள், நிதி கட்டுப்பாட்டு அமைப்புகள் உள்ளிட்ட நிறுவன அரசு அமைப்புகள் அச்சமின்றி நேர்மையாக செயல்பட முடியாத நிலை உருவாகிவருகிறது. பாராளுமன்றத்தில் நெறிமுறைகளை மீறி அரசியல் சாசனத்திற்கு புறம்பான  சட்டங்கள் இயற்றப்படுகின்றன. விவாதத்திற்கு இடமே இல்லை

கம்யூனிஸ்டுகளே பிரதான எதிரிகள்

தனது உரைகளில் டொக்ளியாட்டி பாசிசம் கம்யூனிஸ்டுகளையும் முற்போக்குவாதிகளையும் தான் தனது முக்கிய எதிரிகளாக பார்க்கும் என்பதை வலியுறுத்துகிறார்.

பாஜகவும் சங்க பரிவாரும் யாரை  தங்கள் எதிரிகளாக கருதுகின்றனர்? அவர்களின் குருவாக கருதப்படும் கோல்வால்கர் கூறுகிறார்: ”நமது மூன்று பிரதான எதிரிகள் முஸ்லிம்கள், கிறித்துவர்கள் மற்றும் கம்யூனிஸ்டுகள். இவர்கள் அந்நிய சக்திகளை விட அபாயகரமானவர்கள்.” ஒன்றிய அரசின் செயல்பாடுகளும் பாஜக சங்க பரிவார அமைப்புகளின் செயல்பாடுகளும் கோல்வால்கர் கருத்துக்களின் அடிப்படையில் இருப்பது தெளிவு.  கடந்த ஏழு ஆண்டுகளில் முற்போக்குவாதிகள், கம்யூனிஸ்டுகள் குறி வைத்து தாக்கப்பட்டிருக்கின்றனர். இடதுசாரிகளின் தலைமையில் செயல்படும் மாநில அரசுகளும் வர்க்க வெகுஜன அமைப்புகளும் சங்க பரிவாரத்தின் அன்றாட தாக்குதலை எதிர்கொள்கின்றனர். இடதுசாரிகள் நாட்டின் ஒற்றுமையை குலைக்கின்றனர்; நாட்டை பலவீனப்படுத்துகின்றனர் என்று குற்றம் சாட்டப்படுகின்றனர். மாணவர்கள், இளைஞர்கள் கூட  இந்த தாக்குதலில் இருந்து தப்பவில்லை.

பாசிசத்தின் அணுகுமுறை

பாசிசம் அதனுடன்  இணையாதவர்களை/எதிராகப் பேசுபவர்களை தண்டிக்கும் நோக்குடன் செயல்படும். டோக்ளியாட்டி இதனை ஒரு எடுத்துக்காட்டு மூலம் விளக்குகிறார். இத்தாலியின் கூட்டுறவு அமைப்பு போன்ற ஒன்றின் பணியாளர் ஒருவர் கம்யூனிஸ்ட் கட்சி தோழரிடம் அழுதுகொண்டே கூறினார்: “நான் பாசிச கட்சியில் சேர நாற்பது லிரா கொடுக்கவேண்டும், ஆனால் என்னிடம் பணம் இல்லை. கட்சியில் சேராவிட்டால் நான் பணியில் இருக்கமுடியாது.” இவ்வாறு மிரட்டி கட்சிக்கு அதிக அளவில் உறுப்பினர் சேர்த்தனர் அன்றைய இத்தாலிய பாசிஸ்டுகள்.  சமகால இந்தியாவில் பாஜக மிரட்டியும் ஆள் சேர்க்கிறது. காசு கொடுத்தும் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குகிறது. ஊழல் செய்ததாக பாஜகவால் குற்றம் சாட்டப்பட்டவர்களை மிரட்டி கட்சிக்குள் சேர்த்துக்கொள்கிறது. அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, மைய புலனாய்வுத்துறை என்று அரசு நிறுவனங்கள் அனைத்தையும் இவ்வாறு ஆள் சேர்க்க பயன்படுத்துகிறது.

இராணுவமய இந்து சமூகமே  இலக்கு

பாசிச கட்சி இளைஞர்கள் மீது அதிக கவனம் செலுத்துகிறது என்று அன்றைய இத்தாலிய நிலைமை பற்றி டோக்ளியாட்டி கூறுகிறார். அங்கும் ஜெர்மனியிலும் பாசிஸ்டுகள் வேலையில்லா இளைஞர்களை திரட்டுவதில், அவர்களை ‘ராணுவமயமாக்குவதில்’ தீவிரமாக செயல்பட்டனர். இந்த இளம் படைகள் தொழிலாளர்களையும் கிராமப்புற மக்களையும் திரட்டவும் உதவினர். ஆர் எஸ் எஸ் இளைஞர்களை ஈர்த்து அவர்களை ராணுவபாணியில் பயிற்சி அளிக்க முற்படுகிறது என்பது இன்று நேற்றல்ல. 1920களின் பிற்பகுதியில் ஆர் எஸ் எஸ். முன்னோடித் தலைவர் மூஞ்சே, இத்தாலி சென்று முசோலினியை சந்தித்தார். மூஞ்சே இத்தாலியின் ராணுவ கல்லூரிக்கும் பயிற்சி கூடங்களுக்கும் சென்று வந்தபின், இது போன்ற அமைப்புகள் இந்தியாவிற்கு மிகவும் தேவை; இந்து சமூகம் ராணுவமயமாக்கப்படவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினார். மராத்திய ஊடகங்கள் 1925 முதல் 1935 வரை பாசிசத்தையும் முசோலினியையும் பெருமைப்படுத்தி முன்னிறுத்தின என்பதை வலதுசாரி ஆர் எஸ் எஸ் ஆதரவாளர் ராகேஷ் சின்ஹா குறிப்பிட்டுள்ளார். இன்றும் இத்தகைய   பயிற்சிகள் தொடர்கின்றன. இந்திய பிரதமர் உள்ளிட்ட ஆர் எஸ் எஸ் தலைவர்கள் இப்பயிற்சிகளில் பங்கு பெற்றுள்ளனர்.

பன்முகத்தன்மை மறுப்பு

பாசிசம் பன்முகத்தன்மையை ஏற்பதில்லை. ஒரு நாடு, ஒரே இனம், ஒரே கலாச்சாரம் என்று ஒற்றைத்தன்மையை திணிக்கும் தன்மை கொண்டது பாசிசம். இதனை டோக்ளியாட்டி நினைவுபடுத்துகிறார்.

இந்தியா இந்துக்கள் நாடு என்று கூறுகிறது ஆர் எஸ் எஸ். பிற மத மக்கள் இரண்டாம் தர குடிமக்களாக வாழ மட்டுமே அனுமதி என்கிறது. குடியுரிமை திருத்த சட்டம், தேசீய குடிமக்கள் பதிவேடு போன்றவற்றிற்குப்பின் உள்ள நிகழ்ச்சி நிரல் இதுவே.

அதேசமயம், இந்து மதத்தையும் அதன் ஜாதி அமைப்பையும் கேள்விக்குள்ளாக்கக் கூடாது என்பதே ஆர் எஸ் எஸ் நிலை. பட்டியல் சாதியினர், பழங்குடி மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் ஆகிய மக்கள் திரள்கள் மீது கட்டவிழ்க்கப்படும் சமூக ஒடுக்குமுறையை ஆர் எஸ் எஸ் எதிர்ப்பதில்லை என்பது மட்டுமல்ல; சனாதனம் என்ற பெயரில் சாதி ஒடுக்கு முறைகளையும் படிநிலைகளையும் அது நியாயப்படுத்துகிறது. தேசீய கல்விக்கொள்கையில் கூட இவற்றை மறைமுகமாக கொண்டு வந்துள்ளது. தனியார் மயமாக்கல் என்பதும் சமூக ஒடுக்குமுறைக்கு உள்ளாகியுள்ள மக்களுக்கு நீதிமறுக்கும் செயலாகும். ஆர் எஸ் எஸ் தனது கனவு இலக்கான இந்து ராஷ்டிரத்தை நோக்கி நாட்டை இழுக்க முயன்றுவருகிறது.

கலாச்சாரம் என்ற பெயரில்

பாசிச கட்சி கலாச்சார தளத்தை குறிவைத்து பயன்படுத்தும். அது வரையறுக்கும் தேசீய கலாச்சாரம் என்பதற்கு மாற்றாக உள்ள எதையும் ஏற்காது. “ஐரோப்பாவில் உள்ள 16 தீவிர வலதுசாரி கட்சிகள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை  பொருளாதார கொள்கை பற்றி எதுவுமே குறிப்பிடாமல் ஐரோப்பாவில் தேசீய கலாச்சாரம் எப்படி பாதுகாக்கப்படவேண்டும் என்பதற்கு அழுத்தம் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த அறிக்கை மத சிறுபான்மையினரை தாக்கும் வகையில் அமைந்துள்ளது.” என்று பேராசிரியர் பிரபாத் பட்நாயக் அண்மையில் எழுதியுள்ளார்.

இந்தியாவில் கடந்த 7 ஆண்டுகளில் கலாச்சார தளத்தில் கடுமையான தாக்குதல்கள்  நிகழ்ந்துள்ளன. மதம், மொழி, உணவு, உடை என பலவற்றிலும் வேறுபாடுகளைக் கொண்டுள்ள இந்தியர்களை பாஜக அரசு ஒற்றை (இந்துத்வா) கலாச்சாரத்தை நோக்கி நகர்த்த பெரிதும் முனைந்துள்ளது. சிறுபான்மையினரின் மதவழிபாட்டுத்தலங்கள் தாக்கப்படுகின்றன. இந்தி மொழியை அம்மொழி பேசாத மக்கள் மீது பாஜக அரசு திணிக்கிறது. மாட்டிறைச்சிக்கு தடை சட்டம் மூலம் முஸ்லிம்கள், கிறித்தவர்கள் மற்றும் தலித்துகளின் உணவு பழக்கங்கள் மீது தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இதனால் உணவில் மட்டுமின்றி மாட்டுக்கறி வணிகம், மாடுகளின் சந்தை போன்றவற்றில் பொருளாதார ரீதியான பாதிப்புகளும் ஏற்படுகின்றன. லவ் ஜிஹாத் என்ற பெயரில் இருவேறு மதங்களை சேர்ந்தவர்கள்  திருமணம் செய்து கொண்டால் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. உபி மாநிலத்தில் ஒரு இந்து முஸ்லிமை திருமணம் செய்துகொள்வதற்கு தடை விதிக்கும் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

சமீபத்தில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொண்டால் அரசு நலத்திட்டங்களின் பயன்களை பெற இயலாது; தேர்தலில் போட்டியிட முடியாது என்பது போன்ற அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் சட்டத்தை உ பி அரசு கொண்டுவந்துள்ளது. முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல் தொடுப்பது என்ற உள்நோக்கமும் இச்சட்டத்தில் உள்ளது. முஸ்லிம்கள் அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்கிறார்கள் என்றும், அவர்கள் எண்ணிக்கை இந்துக்களைவிட அதிகமாகிவிடும் என்ற பொய்யான பிரச்சாரத்தை பாஜக கட்சியும் அதன் அரசுகளும் செய்துவருகின்றன.

கல்வித்துறையிலும் கலாச்சார தாக்குதல்கள் நடத்தப்படுகிறது.  வரலாறு திரித்து எழுதப்படுகிறது. கடந்த காலத்தில் நடந்த சம்பவங்களை திரித்து எழுதி பாட திட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன. பிஞ்சு நெஞ்சங்களில் வகுப்புவாத நஞ்சை புகுத்தும் பணியை ஆர் எஸ் எஸ் பாஜக அரசுகள் முனைப்புடன் செய்து வருகின்றன. நோக்கம் முற்போக்கு வர்க்க அமைப்புகளை அழிப்பதே!

தொழிலாளர் நலன் காக்கும் வர்க்க அமைப்புகளுக்கெதிராக பாசிசம் போட்டி அமைப்புகளை அரசு ஆதரவுடன் உருவாக்கி செயல்படும். தொழிலாளர்கள், விவசாயிகள், இளைஞர்கள், மாணவர்கள் என்று பல பகுதி மக்களுக்கான அமைப்புகளை பாசிஸ்டுகள் உருவாக்குவதன் நோக்கம், இவை மூலம் தனக்கென்று ஒரு படையை திரட்டிக்கொண்டு தனது பாசிச பிரச்சாரத்தை விரிவாக மக்களிடம் கொண்டுசெல்ல அவற்றை பயன்படுத்தவே. இதனை டொக்ளியாட்டி வலுவாக எடுத்துரைக்கிறார். நமது நாட்டில் இத்தகைய முனவுகளில் ஆர் எஸ் எஸ் பாஜக ஈடுபட்டிருப்பது கண்கூடு.

பாசிசமும் “தேசீயவாதமும்”

பாசிசம் தேசீயவாதம் என்பதை ஒரு கருவியாக பயன்படுத்தி தனது நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ளும் தன்மை கொண்டது என்கிறார் டோக்ளியாட்டி. பாசிச கட்சி தேசப்பற்று என்ற சொல்லை பயன்படுத்தி மக்களை தனக்குப்பின் திரட்ட முயலும். இந்தியாவில் பாஜக பொருளாதார பிரச்சினைகள் தீவிரம் அடையும் பொழுதெல்லாம் தேசப்பற்று, தேசப்பாதுகாப்பு ஆகியவற்றை முன் நிறுத்தி மக்கள் கவனத்தை திசை திருப்புகிறது. பாஜக அரசின் கொள்கைகள் மக்களின் நலனுக்கு புறம்பானவை;  அடிப்படை உரிமைகளைப் பறிக்கின்றவை; அரசியல் சாசனத்திற்கு எதிரானவை என்று கூறுவோரை தேச விரோதிகள் என்று முத்திரை குத்தி தேசத் துரோக வழக்கில் கைது செய்து சிறையில் தள்ளுகிறது.

பாசிசம் தனது அடிப்படை இலக்கை கைவிடாமல் தந்திரங்களையும் அணுகுமுறைகளையும் சூழலுக்கு ஏற்றவாறு மாற்றிக்கொண்டே இருக்கும் என்பது இத்தாலிய அனுபவம். சொல்லாடல்களையும் சூத்திரங்களையும் அது பச்சோந்தி போல் மாற்றிக்கொள்ளும். பொய்களை கட்டவிழ்த்துக்கொண்டே இருக்கும். இதுவே கடந்த ஏழு ஆண்டுகால இந்திய அனுபவம்.

ஜனநாயக அமைப்புகளை பயன்படுத்தியும் தாக்கியும் பாசிசம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முனையும். 1930களின் துவக்கத்தில் ஜெர்மனி நாட்டில் அன்றைய ஆளும் கட்சிகளுக்கு எதிராக மக்களை ஈர்த்து பாசிச கட்சி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. தேசப்பற்று, நாட்டின் சுய மரியாதை, மாபெரும் ஜெர்மானிய தேசம் போன்ற முழக்கங்களை முன்வைத்து மக்கள் ஆதரவை திரட்டியது. ஆட்சியை கைப்பற்றும் பயணத்தில் எதிர்க்கட்சிகள் மீது வன்முறைகளையும் பயன்படுத்தியது. தொழிற்சங்கங்களையும் கம்யூனிஸ்டுகளையும் குறிவைத்து தாக்கி, அவர்களுக்கெதிராக பெரும் பொய்பிரச்சாரம் செய்தும் வன்முறையில் ஈடுபட்டும் அவர்களை முற்றிலுமாக அழிக்க முயன்றது. அதில் ஓரளவு வெற்றி பெற்றபின் முதலாளித்துவ கட்சிகளை அழித்தது.

கடந்த 7 ஆண்டுகளாக மோடி அரசு இந்தியாவில் வளர்ச்சி, தேசப்பற்று, தேசீயம், வல்லரசு போன்ற முழக்கங்களை முன்வைத்து தனது ஆதரவு தளத்தை விரிவுபடுத்திக்கொண்டுள்ளது. இதனுடன் அரசு இயந்திரத்தையும் பெருமுதலாளிகளின் ஆதரவையும் பயன்படுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட முதலாளித்துவ கட்சிகளை பெரிதும் பலவீனப்படுத்தியுள்ளது. இடதுசாரிகளை குறிவைத்து தாக்கிவருகிறது. பாசிசம் ஏகபோக மூலதனத்தின் விசுவாசமான பிரதிநிதி என்பதை மோடி ஆட்சி எடுத்துக்காட்டுகிறது. கார்ப்பரேட் ஹிந்துத்வா என்பது அதன் சிறப்பு முத்திரை.

பாசிசத்தை வீழ்த்துவது பற்றி டோக்ளியாட்டி

பாசிச சக்திகள் மேலோங்கி இருக்கும் பொழுது அவற்றை வெல்ல முடியாது என்ற பிம்பம் உருவாகும். ஆனால் இத்தாலிய அனுபவமும் பிற நாடுகளின் அனுபவமும் பாசிசத்தை வீழ்த்த முடியும் என்று நமக்கு கற்றுத்தருகின்றன என்பதை டோக்ளியாட்டி வலியுறுத்துகிறார். “பாசிசத்தால் முதலாளித்துவ அமைப்பின் முரண்பாடுகளில் இருந்து மீள முடியாது. அவை தொடரும். இந்த முரண்கள் பாசிசத்திற்கு எதிரான போராட்டங்களுக்கு வழிவகுக்கும். திட்டமிட்ட, ஒருங்கிணைந்த மக்கள் போராட்டங்கள் மூலமே பாசிசத்தை வெல்ல முடியும்” என்று டோக்ளியாட்டி தெளிவுபடுத்துகிறார். அவர்: “பாசிச கட்சியில் இருப்பவர்கள், அதன் ஆதரவாளர்கள், தொழிலாளிவர்க்க புரட்சியை நோக்கி வந்து விடுவார்கள் என்று நம்பிவிடக்கூடாது.” என்று எச்சரிக்கவும் செய்கிறார். ஒவ்வொரு பிரச்சினையிலும் கொள்கை சார்ந்த நிலைப்பாடு எடுத்து, பிரச்சனைகளை துல்லியமாக கணித்து அதற்கு ஏற்ப உரிய தீர்வுகளை நோக்கி நமது தந்திரங்கள் அமைய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார். சந்தர்ப்ப வாதங்களுக்குப் பலியாகிவிடக்கூடாது என்கிறார்.

பாசிசம் தனது உள்முரண்பாடுகளால் தானே வீழ்ந்துவிடாது. ஆனால் இந்த உள்முரண்பாடுகளை தக்கவகையில் பயன்படுத்தி பாசிசத்தை வீழ்த்த முடியும் என்றும் டோக்ளியாட்டி கூறுகிறார்.

சம கால இந்தியாவில்

டோக்ளியாட்டி முன்வைத்துள்ள பல கருத்துக்களும் அவர் அளித்துள்ள வெளிச்சமும் நமக்கு உதவும். எனினும், இன்று இந்தியாவில் பாசிசத்தன்மை கொண்ட ஒன்றிய அரசும் அதன்பின் உள்ள ஆர் எஸ் எஸ் என்ற பாசிச அமைப்பும், இந்தியாவை பாசிசத்தின் பிடியில் கொண்டு செல்ல நினைத்தாலும், அவர்களுக்கு எதிரான அரசியல் சக்திகளும் களத்தில் உள்ளன என்பது பாசிச இத்தாலிக்கும் நமக்கும் உள்ள ஒரு முக்கிய வேறுபாடு. அரசியல் சாசனத்தையும் அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள பல்வேறு நிறுவனங்களையும் பாஜக ஆர் எஸ் எஸ் பலவீனப்படுத்தியுள்ள போதிலும், இந்தியாவின் ஆட்சி அமைப்பு பாசிஸ்ட் ஆக மாறிவிட்டது என்ற வரையறையை நாம் ஏற்கவில்லை. ஆட்சி அமைப்பு யதேச்சாதிகாரத்தன்மை நிறைந்துள்ளதாக இருக்கிறது; அத்திசைவழியில் பயணிக்கிறது என்பதை நாம் குறிப்பிடுகிறோம். ”இந்தியப் பெருமுதலாளிகள் தலைமையில் இந்திய அரசு செயல்படுகிறது. இதில் முதலாளி வர்க்கமும் நிலப்பிரபுக்களும் இடம்பெறுகிறார்கள். ஆளும் வர்க்க கூட்டணிக்கு தலைமை தாங்கும் பெருமுதலாளிகள் இன்று மேலும் மேலும் பன்னாட்டு நிதி மூலதனத்துடன் இணைந்துவருகிறார்கள்” என்ற கட்சி திட்டத்தின் வெளிச்சத்தில் நின்று, சமகால இந்திய அரசியல் களத்தைப்  பரிசீலிக்கும் பொழுது  ஆர் எஸ் எஸ் பாஜகவின் கார்ப்பரேட் ஹிந்துத்வா கொள்கைகளையும் எதேச்சாதிகார முனைவுகளையும் வலுவான வர்க்க வகுஜன போராட்டங்கள் மூலமே பின்னுக்கு தள்ள முடியும் என்பதை நாம் வலியுறுத்துகிறோம். டோக்ளியாட்டி தந்துள்ள வெளிச்சத்தில், கட்சி திட்ட நிலைபாட்டில் நின்று, ஆர் எஸ் எஸ் -பாஜக பாசிச முனைவுகளை நாம் வர்க்க வெகுஜன திரட்டல்கள் மூலமும் போராட்டங்கள் மூலமும் தக்க அரசியல் நடைமுறை தந்திரங்கள் மூலமும் முறியடிப்போம்.

இந்துத்துவா அரசியலை பாஜக கைவிடுமா? அய்ஜாஸ் அகமது-உடன் ஓர் உரையாடல்

ஜிப்ஸன் ஜான், ஜிதேஷ் பி.எம்.

தமிழில்: வீ. பா. கணேசன்

மோடியின் காலத்தில் இந்துத்துவ வலதுசாரிகளின் தாக்குதல்கள் புதிய உச்சங்களைத் தொட்டுள்ளன. கூட்டமாகச் சேர்ந்து அடித்துக்கொலை செய்வது; வெட்ட வெளிச்சமாகவே படுகொலை செய்வது; கொலை செய்வதற்கான சதித்திட்டங்களை தீட்டுவது; மாற்றுக்கருத்துக்களை சொல்ல முயற்சிப்பவர்களை பயமுறுத்திப் பேசவிடாமல் தடுப்பது என வலதுசாரிக் குழுக்களின் செயல்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் அன்றாட நிகழ்வுகளாக இருந்தன. இவை இப்போது மேலும் தீவிரமாகத் தொடர்கின்றன. இவற்றை நீங்கள் எப்படிப்பார்க்கிறீர்கள்?

இத்தகைய நிகழ்ச்சிகள் அதிகரித்துக் கொண்டே போகின்றன என்று நீங்கள் சொல்வது சரிதான். என்றாலும் இத்தகைய விஷயங்களை அதற்குரிய கண்ணோட்டத்தில்தான் அணுக வேண்டும். வகுப்புவாதப் படுகொலைகள், பாகிஸ்தானில் இருந்து இந்துக்களும் சீக்கியர்களும் இந்தியாவிற்கும், இந்தியாவில் இருந்து முஸ்லீம்கள் பாகிஸ்தானுக்கும் என மனித குல வரலாற்றிலேயே மிகப்பெரிய அளவில் மத அடிப்படையில் நிகழ்ந்த மக்களின் இடப்பெயர்வு ஆகியவற்றுக்கு இடையேதான் நமது குடியரசு பிறந்தது. இன்னும் சொல்லப்போனால் நமது நாட்டின் விடுதலைக்கும், நமது நாடு இரண்டாகப் பிரிக்கப்படுவதற்கும் முன்பிருந்தே இந்த வகுப்புவாத வன்முறை இருந்து வருகிறது. தங்கள் சமூக வாழ்க்கையில் மற்றவர்களை சிறந்த வகையில் அனுசரித்துப் போகிற, தங்கள் அரசியல் நடத்தையில் மதசார்பற்ற கண்ணோட்டத்தைப் பின்பற்றுகின்ற கோடானுகோடி இந்திய மக்கள் இருக்கிறார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. சாதியை அடிப்படையாகக் கொண்ட, கடவுள் மீது அதீதமான பற்று கொண்ட ஒரு சமூகத்தில் எந்த அளவிற்கு மற்றவர்களை அனுசரித்துப் போகிற, மதசார்பற்ற அணுகுமுறையை பின்பற்ற முடியும் என்பதற்கும் வரம்பு இருக்கிறது என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியதும் அவசியமாகும்.\

வகுப்புவாத வன்முறையின் லாபங்கள்

1980களின் நடுப்பகுதியில் இருந்தே வகுப்புவாத வன்முறையானது கலாச்சார ரீதியாகவும், தேர்தல் மூலமாகவும் மிக நல்ல லாபத்தை கொடுத்து வருவதை நாம் மீண்டும் மீண்டும் பார்த்து வருகிறோம் என்பது இதில் இரண்டாவது விஷயமாகும். நாட்டின் தலைநகரிலேயே ஆயிரக்கணக்கில் சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டது இந்து தேசத்தை ஒன்றுபடுத்த பயன்பட்டது மட்டுமின்றி, இதுவரையில் பெற்றதிலேயே மிக அதிகமான மக்களவை இடங்களையும் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கியது.

பெரும்பான்மையான இந்துக்களை காங்கிரஸ் கட்சியிடமிருந்து பிரித்து சங் பரிவாரம் அவர்களை வென்றெடுக்க வேண்டும் என்பதற்காகவே ராமஜன்ம பூமி இயக்கம் கட்டவிழ்த்து விடப்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக வன்முறையை கட்டவிழ்த்து விட்டபடி நடைபெற்ற ஐந்தாண்டு கிளர்ச்சிக்குப் பிறகு, நாடாளுமன்ற மக்களவையில் இரண்டே இடங்களை மட்டுமே வைத்திருந்த பாஜகவினால் 85 இடங்களை கைப்பற்ற முடிந்தது. மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு ரதயாத்திரைகளையும், ரத்த ஆறுகளையும் ஓடவிட்ட பிறகு அதனிடம் 120 இடங்கள் வசமாயின. பாப்ரி மசூதி தரைமட்டமாக்கப்பட்ட பிறகு நடந்த முதல் தேர்தலில் 161 இடங்களை வென்று நாடாளுமன்றத்தில் இரண்டாவது இடத்தை கைப்பற்றியது மட்டுமின்றி, மிகக் குறுகிய மட்டுமேயானாலும் மத்தியில் அதனால் ஆட்சியையும் அமைக்க முடிந்தது.

இத்தகையதொரு சாதனையைப் படைத்துள்ள நிலையில் அதற்கு மிகவும் இயற்கையாகவே கைவரப்பெற்ற வகுப்புவாத வன்முறையை சங் பரிவாரம் கைவிடுவதென்பது அரசியல் ரீதியாக முட்டாள்தனமான ஒரு நடவடிக்கையாகவே இருக்கும். இந்த இடத்தில் ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். 2002-ம் ஆண்டில் நடைபெற்ற குஜராத் படுகொலைகளுக்கு முன்னால் பாஜகவின் அரசியல் வானில் மோடி மிகச் சாதாரணமான ஒரு நபராகத்தான் இருந்தார். இந்தப் படுகொலைகளுக்குப் பிறகோ, முதலில் குஜராத் மாநிலத்திலும் பின்னர் அகில இந்திய அளவிலும் அவரையும் அமித் ஷாவையும் யாராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. தேர்தல் ரீதியான கணக்குகளால் ஒரு சில நேரங்களில் தற்காலிகமான பின்னடைவுகளை அது சந்தித்திருந்த போதிலும், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது 1980களின் நடுப்பகுதியில் இருந்தே சங் பரிவாரம் ஆட்சி அதிகாரத்தை மட்டுமின்றி தனது பெருமையையும் அதிகரித்துக் கொண்டே வந்துள்ளது.

மத்திய மாநில அரசுகளுக்கான தேர்தல்களில் ஆர் எஸ் எஸ், பாஜக தொடர்ந்து வலுப்பெற்றுக் கொண்டே வந்துள்ளன என்பது மட்டுமின்றி சமூக ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் நாட்டின் உறுதித் தன்மையையே மாற்றுவதிலும் கூட அவை வெற்றி பெற்றுள்ளன. 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இன்றைய இந்தியா அதிகமான அளவிற்கு இந்துமயமாகி உள்ளது. இன்றைய நாகரீகமாக காவியை ஏற்றுக் கொண்டிருக்கும் இளைஞர்கள் மட்டுமின்றி, பணக்கார விவசாயிகள், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் உள்ள அடித்தட்டு சாதிகளை சேர்ந்தவர்களுக்கும் இது பொருந்தும்.

உதாரணமாக, வாஜ்பேயி அரசு அதன் தொடக்க நாட்களில் மாட்டுக் கறிக்கு தடைவிதிக்கும் சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த முயற்சித்தது. எனினும் நாடாளுமன்றத்தில் எழுந்த பெருங்கூச்சலைத் தொடர்ந்து அது பின்வாங்கியது. ஆனால் எந்தவிதமான எதிர்ப்பும் இன்றி மாட்டுக் கறி விற்பனையை தடை செய்யும் சட்டத்தை மோடி-ஷா இரட்டையரின் அரசினால் அமலாக்க முடிந்துள்ளது. ஆர் எஸ் எஸ் அமைப்பின் நிகழ்ச்சி நிரலில் உள்ள பல விஷயங்களை அமலாக்க முடிந்துள்ளது. அவர்கள் வளர்ச்சி பெறுவதற்கு முன்னால் ஒரு சிறு கட்சியின் தலைவர்களாக நாடாளுமன்றத்தில் மிக நீண்ட காலத்திற்கு தங்கள் வாழ்க்கையைக் கழித்த வாஜ்பேயி, எல். கே. அத்வானி ஆகியோரை விட கொடூரமானவர்களாக, ரத்தவெறி பிடித்தவர்களாக மோடியில் இருந்து தொடங்கி (யோகி) ஆதித்யநாத் வரையிலான புதிய தலைமுறை தலைவர்கள் இருக்கின்றனர். சின்னாபின்னமாக சிதறிக் கிடக்கும் எதிர்க்கட்சிகளைப் பற்றி நான் எதுவும் சொல்ல வேண்டியதே இல்லை. சுருக்கமாகச் சொல்வதெனில், அதன் வாக்குவலிமையில் உச்சகட்டத்தை பாஜக எட்டிப் பிடித்திருக்கும் சரியானதொரு தருணத்தில்தான் ஆர் எஸ் எஸ் அமைப்பின் மிக மோசமான நபர்கள் அதிகாரத்தில் வந்து அமர்ந்திருக்கின்றனர். அப்படியிருக்கும்போது இத்தகைய அதிகாரத்தை அவர்களுக்குப் பெற்றுத் தந்த நடைமுறை உத்தியை அவர்கள் ஏன் கைவிட வேண்டும்?

பாப்ரி மசூதி தரை மட்டமாக்கப்பட்ட பின்னணியில் நாட்டில் பாசிசம் வலுப்பெற்றுவருகிறது என்று எச்சரித்த அறிவாளர்களில் நீங்கள்தான் முதலாமவர். இதுகுறித்த உங்களது உரை பின்னர் “பாசிசமும் தேசிய கலாச்சாரமும்: இந்துத்துவ நாட்களில் க்ராம்சியை பயில்வது” என்ற தலைப்பில் கட்டுரையாகவும் வெளியானது. இந்தியாவில்இந்துத்துவ பாசிசம் எழுச்சிபெற்றுவருவது குறித்த மிகச்சிறந்த கட்டுரை அது. அந்தக் கட்டுரையில் “ ஒவ்வொரு நாடும் அதற்குத் தகுதியான பாசிசத்தை பெறுகிறது” என்று குறிப்பிட்டிருந்தீர்கள். அவ்வாறெனில், இப்போது இந்தியா அதற்கேயுரிய பாசிசத்தை பெற்றிருக்கிறதா?

ஆம். இந்த சம்பவம் நடந்து முடிந்த நாட்களில் முதலில் அதுதான் எனது பிரதிபலிப்பாக இருந்தது. அந்த நேரத்தில் பாசிசம் என்ற வார்த்தையை நான் கொஞ்சம் தேவைக்கு அதிகமாகவே பயன்படுத்தி இருந்தேன். எனினும் அந்த தொடக்க நாட்களுக்குப் பிறகு மிக விரைவிலேயே இந்த வார்த்தையைப் பயன்படுத்துவது குறித்து பல முன் எச்சரிக்கைகளையும் அறிமுகம் செய்யத்  தொடங்கினேன். பாப்ரி மசூதியை இடித்துத் தரைமட்டம் ஆக்கியது ஒரு பாசிச வெளிப்பாடு என்றும், ஆர் எஸ் எஸ் தனித்துவமான பல பாசிச தன்மைகளைக் கொண்டதாக இருக்கிறது என்றும் நான் இப்போதும் நம்புகிறேன். இருந்தபோதிலும் ஆர் எஸ் எஸ் அமைப்பிற்கும் வரலாற்று ரீதியாகவே மிகவும் தனித்துவமான அரசியல் கட்சியாக இருக்கும் அதன் வெகுஜன அரசியல் முன்னணிப் படைக்கும் இடையே ஒரு வேறுபாட்டையும் நான் காண்கிறேன்.

மிக எளிதாக இந்தக் கட்சியின் மீது ஒரு முத்திரையை குத்துவதற்கு முன்பாக அதன் புதுமையான கட்டமைப்பைப் புரிந்து கொள்வதற்கு நமக்கு மிகத் துல்லியமான இயங்கியல் செயல்முறைகள் தேவைப்படுகின்றன. நீங்கள் சுட்டிக்காட்டிய எனது உரை/கட்டுரையும் கூட அயோத்தியா இடிப்பு சம்பவம் நடைபெற்ற உடனேயே எழுதப்பட்டதுதான். ஆனால் அந்தக் கட்டுரை நீங்கள் குறிப்பிட்டதுபோல “இந்துத்துவ பாசிசத்தின் எழுச்சி” குறித்ததல்ல. மாறாக, க்ராம்சி தனக்குள்ளேயே எழுப்பிக் கொண்ட கேள்வியைப் போலவே இந்தியாவிற்கு உள்ளிருந்தபடி, நெருக்கடியின் குறிப்பிட்டதொரு கட்டத்தில், குறிப்பிட்டதொரு பிரச்சனையை பற்றி சிந்தித்ததே ஆகும்.

1920-ம் ஆண்டில் மிகச் சிறிய, ஒழுங்கமைப்பில்லாத பாசிச அணியை விட இத்தாலிய இடதுசாரிகள் ஒப்பில்லாத வகையில் வலுவானவர்களாகத் திகழ்ந்தனர். ஆனால் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு (பெனிட்டோ) முசோலினி ஆட்சியில் இருந்தார். 1926-ம் ஆண்டிலோ அவரது அதிகாரம் முழுமையானதாக இருந்தது; அதே நேரத்தில் ஓர் அரசியல் சக்தியாக இடதுசாரிகள் முழுமையாகத் துடைத்தெறியப்பட்டிருந்தனர். இவை அனைத்துமே ஜெர்மனியில் நாஜிகள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே நடந்துவிட்டிருந்தன.

இந்தப் பின்னணியில்தான் க்ராம்சி தனக்குள் கேட்டுக் கொண்டார்: பாசிசம் மிக எளிதாக வெற்றி அடைய, இடதுசாரிகள் மிக எளிதாகத் தோல்வி அடைய நமது நாட்டு வரலாற்றிலும், சமூகத்திலும், நமது நாட்டு முதலாளித்துவ தேசிய வாதத்திலும் என்ன இருந்தது? என்ற கேள்வி அவருக்குள் எழுந்தது. அவரது சிறைக் குறிப்புகள் நூலின் பெரும்பகுதி இத்தாலிய வரலாறு குறித்த, அந்த வரலாற்றில் வாடிகனுக்கு இருந்த சிறப்பான இடம் குறித்த, ரிசோர்ஜிமெண்டோவின் தனித்துவமான தன்மைகள் மற்றும் இத்தாலியை ஒன்றுபடுத்தும் முயற்சி, இத்தாலிய முதலாளித்துவ வர்க்கத்தின், அதன் தொழில்நகரங்களின் சிதைந்த தன்மை, வெகுஜன ஆதரவைப் பெற்ற புதினங்கள், என்பது போன்ற வெகுஜன உணர்வின் வடிவங்களைப் புரிந்து கொள்ள முயற்சிக்கும் ஒரு சிந்தனை ஓட்டமாகவே அந்தக் குறிப்புகள் இருந்தன.

இதேபோன்று இந்தியாவைப் பற்றிய கேள்விகளை எழுப்பவே நான் முயன்றேன். அந்தக் கட்டுரையைப் பொறுத்தவரையில் இருந்த பிரச்சனை என்னவெனில் அதில் பெரும்பகுதி ஒப்பீட்டு முறையிலான சிந்தனையை அடிப்படையாகக் கொண்டதாகும். இத்தகைய சிந்தனை மிகவும் தரம் தாழ்ந்ததாகும். அதன் பிறகு மிக விரைவிலேயே இத்தாலிய பாசிசம் குறித்து மிக நீண்ட கட்டுரை ஒன்றை நான் எழுதினேன். அந்தக் கட்டுரை எனக்கு மிகுந்த விருப்பமுள்ளதாகவும் இருந்தது.

ஒவ்வொரு நாடுமே அது பெறுவதற்குத் தகுதியுள்ள பாசிசத்தையே பெறுகிறது என்று நான் குறிப்பிட்டிருந்தேன். ஜெர்மனிக்கும் இத்தாலிக்கும் இடையே, இத்தாலிக்கும் ஜெர்மனிக்கும் அல்லது ஸ்பெயினுக்கும் இடையே என்பது போல் இருந்த பெரும் வேறுபாடுகளைத்தான் நான் அப்போது மனதில் கொண்டிருந்தேன். இந்தியாவிற்குப் பாசிசம் வருவதாக இருந்தால் அது நமது சொந்த வரலாறு, சமூகம் ஆகியவற்றிலிருந்து உருவானதாக மற்றவற்றிலிருந்து வேறுபட்டதாக இருக்கும் என்பதையே குறிக்கிறது. இப்போது பாசிசம் இந்தியாவிற்கு வருகிறதா என்று நீங்கள் என்னைக் கேட்டீர்கள். இதற்கான பதில் இல்லை என்பதுதான். இந்திய முதலாளி வர்க்கத்திற்கோ அல்லது ஆர் எஸ் எஸ் அமைப்பிற்கோ இப்போது பாசிசம் தேவைப்படவில்லை.

இரண்டு உலகப் போர்களுக்கு இடையேயான ஐரோப்பாவில் தொழிலாளி வர்க்க இயக்கம் மிக வலுவாக இருந்த, ஒரு கம்யூனிஸ்ட் புரட்சி நடைபெறுவதற்கான வாய்ப்பு இருந்த நாடுகளில் பாசிசத்தின் பல்வேறு வகைகள் வெளிவந்தன. இத்தகையதொரு நிலைமை இப்போது இந்தியாவில் இல்லை. அது எவ்வளவு கோரமானதாக இருந்தாலும், அல்லது சரியாக குறிப்பிட்ட நேரத்தில் தலைதூக்கினாலும் சரி, வகுப்புவாத வன்முறை என்பது பாசிசம் அல்ல. அப்படியானால் ஆர் எஸ் எஸ் அமைப்பு மற்றும் நாடாளுமன்ற வகைப்பட்டதாக இல்லாத அதன் பல்வேறு அணிகளில் பாசிச குணாம்சங்கள் இருக்கிறதா? ஆம். அவற்றுள் பாசிச குணாம்சங்கள் இருக்கின்றன. என்றாலும் உலகம் முழுவதிலும் அதிதீவிர வலதுசாரித்தன்மை கொண்ட பல இயக்கங்கள்,கட்சிகளிலும் கூட இத்தகைய குணாம்சங்கள் இருக்கத்தான் செய்கின்றன. 1880களில் இருந்தே பாசிச போக்கு என்பது முதலாளித்துவ அரசியலில் தொடர்ந்து நீடித்தே வருகிறது. என்றாலும் ஒரு சில நாடுகள் அல்லது அரசியல் கட்சிகளைத்தான், அதன் உண்மையான பொருளில்,  பாசிசத் தன்மை கொண்டவை என்று குறிப்பிட முடியும்.

குறைந்த அழுத்தம் கொண்ட ஜனநாயகம்

இந்தியாவில் உள்ள தாராளவாத அரசியல் கட்டமைப்பினை முழுமையாக உடைத்து நொறுக்கி, அதை அகற்றவேண்டிய அவசியம் சங்பரிவாரத்தைப்போன்ற வலதுசாரிசக்திகளுக்கு இல்லை என்று நீங்கள் கூறினீர்கள்.  அதற்குப்பதிலாக,  அதற்குள்ளேயே இருந்து செயல்பட்டு,  அதைப் பயன்படுத்திக்கொள்ள அவற்றால்முடியும் என்றும் குறிப்பிட்டீர்கள்.  வலதுசாரி எதேச்சாதிகார போக்கின் கீழ் நொறுங்கிப் போய்விடாமல் ஒரு தாராளவாத ஜனநாயக பாராளுமன்ற அமைப்பாக நீடிக்கவைக்கும் அளவிற்கு நமது ஜனநாயகப்பாரம்பரியமும் தாராளவாத அரசியல் அமைப்பும் வலுவாக உள்ளனவா?

அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஒரு சில அம்சங்களை மாற்றுவதும் தாராளவாத அமைப்பை உடைத்து நொறுக்குவதும் ஒரே விஷயமல்ல. அமெரிக்க அரசியல் அமைப்புச் சட்டத்திலும் கூட பல திருத்தங்கள் அடங்கியிருக்கின்றன. ஓர் அரசியல் அமைப்புச் சட்டத்தில்  புதிய அம்சங்களை அறிமுகப்படுத்துவதற்கான நாடாளுமன்ற நெறிமுறைகள் இருக்கின்றன. இந்த மாற்றங்களை நீங்களோ அல்லது நானோ விரும்பாமல் கூட இருக்கலாம். இருந்தாலும் எவ்வளவு தூரம் இந்த நாடாளுமன்ற நெறிமுறைகளை பின்பற்றுகிறோமோ அந்த அளவிற்கு தாராளவாத அமைப்பு தொடர்ந்து நிலைத்து நிற்கும். ஒரு விஷயத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஜனநாயகத்தை நான் பெரிதும் ஆதரிப்பவன் தான். எனினும் தாராளவாதத்தை நான் வெறுக்கிறேன். உண்மையில் ஜனநாயகத்தை தாராளமயமாக்குவதை கண்டித்து நான் ஒரு கட்டுரையையும் கூடப் பதிப்பித்திருக்கிறேன். கடந்த ஐந்தாண்டு காலத்தில் மிகவும் அச்சமூட்டக் கூடியதாக இருந்த வளர்ச்சிப் போக்கு என்பது நீதித்துறை, தேர்தல் ஆணையம், இன்னும் சொல்லப்போனால் பெருமளவிலான மின்னணு ஊடகம், மேலாதிக்கம் வகிக்கும் தொலைக்காட்சி நிலையங்கள் போன்ற தாராளவாத அமைப்பின் மிக முக்கிய பிரிவுகளிடமிருந்து தனது விருப்பத்திற்கு ஏற்ற நடத்தையை பாஜகவினால் பெற முடிந்துள்ளது ஆகும். எப்போதுமே நமது ஜனநாயகம் மிகவும் குறைந்த அழுத்தமுடைய ஒன்றாகும். ஆனால் இப்போது அதற்கு இதுவரை இருந்து வந்த அழுத்தமும் கூட அரிக்கப்பட்டுவிட்டது. இன்னும் ஒரு விஷயம்.  “எதேச்சாதிகாரம்” என்ற வார்த்தையை நான் அறவே வெறுக்கிறேன். கம்யூனிஸ்ட் நாடுகளை அவமதிப்பதற்காகவே இந்த வார்த்தை கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு கம்யூனிசம் பாசிசம் ஆகிய இரண்டுமே சம அளவில் எதேச்சாதிகார தன்மை கொண்டவை என்பதை நிறுவவும் முயற்சிக்கப்பட்டது.

21-ம்நூற்றாண்டின்காலனியப்பின்னணியில்ஆர்எஸ்எஸ்இந்துத்துவஅரசியல்தோன்றியதைநீங்கள்எப்படிப்பார்க்கிறீர்கள்இரண்டுஉலகப்போர்களுக்குஇடையேயானஇதேபோன்றஎதிர்ப்புரட்சிசக்திகள்உதாரணமாகமுஸ்லீம்சகோதரத்துவஅமைப்புபோன்றவைஉலகின்பல்வேறுபகுதிகளிலும்தோன்றினஎன்றுமுன்புநீங்கள்எழுதியிருந்தீர்கள்இத்தகையஅமைப்புகள்தோன்றுவதற்குஎதுகாரணமாகஇருந்ததுகுணத்தில்அவைஎவ்வாறுஒரேபோன்றவையாகஇருக்கின்றன?

இந்தக் கேள்விக்கு திருப்திகரமான பதிலளிப்பதற்கு மிக நீண்ட நேரமும் இடமும் தேவைப்படும். என்றாலும் மூன்று விஷயங்களைக் கொண்டு அதற்கு சுருக்கமாக பதிலளிக்கலாம். புரட்சிக்கும் எதிர்ப்புரட்சிக்கும், பகுத்தறிவிற்கும் பகுத்தறிவற்ற நிலைக்கும், தேசியவாதம் குறித்த மதசார்பற்ற விளக்கங்களுக்கும் தேசியவாதம் குறித்த இன ரீதியான அல்லது மதரீதியான விளக்கங்களுக்கும், பல்வேறு வகைப்பட்ட தாராளவாத நிறுவனங்களுக்கும் பல்வேறு வகையான எதேச்சாதிகார நிறுவனங்களுக்கும் என்பது போன்று இருவேறு வகையான கருத்தோட்டங்களுக்கு இடையேயான போராட்டங்களின் மிக நீண்ட வரலாற்றைக் கொண்டதாகவே ஐரோப்பா கண்டம் அமைந்திருக்கிறது. காலனியாதிக்கமானது இந்த நோய்கள் அனைத்தையும் தனது ஆளுகைக்குக் கீழுள்ள காலனி நாடுகளுக்கும் கொண்டு சென்றது. இதன் வழியாக இத்தகைய போட்டிகள் நமது சமூகத்திலும் மிகவும் சாதாரணமான ஒன்றாக மாறிவிட்டிருந்தன. எனவே இந்து தேசியவாதம், முஸ்லீம் தேசியவாதம் ஆகியவற்றில்  குறிப்பாக இந்தியத் தன்மை என்ற எதுவும் இல்லை. இன்னும் சொல்வதானால் அவை அரசாட்சியையும் கத்தோலிக்க தேவாலயங்களின் தனியுரிமைகளையும் இல்லாமல் ஆக்கிய ப்ரெஞ்சு புரட்சியை பெரிதும் வெறுத்தொதுக்கிய அதே ப்ரெஞ்சு நாட்டின் எதிர்ப்புரட்சியின் பாரம்பரியத்தின் வேறு வகையான கண்ணோட்டம் காலனி நாடுகளில் வந்து சேர்ந்தவையே ஆகும். மதரீதியான சிறுபான்மை மக்களுக்கு எதிரான வகுப்புவாத வன்முறை என்பதும் கூட ஐரோப்பிய நாடுகளில் யூதர்களுக்கு எதிராக நிலவி வந்த கசப்புணர்வின் பிரதியைத் தவிர வேறல்ல.

இரண்டாவதாக, இந்து மகாசபா, முஸ்லீம் சகோதரத்துவ அமைப்பு போன்ற நநன்கு அறிந்தே இருந்தன என்பதோடு, ஓரளவிற்கு அவற்றிடமிருந்து கற்றுக் கொள்ளவும் செய்தன. உதாரணமாக, ஜெர்மனியின் யூதப் பிரச்சனைக்கு நாஜிகள் தீர்வு கண்டதைப் போலவே, அதாவது இன அழிப்பின் மூலம், இந்துக்களும் முஸ்லீம்கள் குறித்த தங்களது பிரச்சனையை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று வி.டி. சவார்க்கர் கூறினார்.

மூன்றாவதாக, இதுபோன்ற இயக்கங்கள் ஒரு நாட்டிலோ அல்லது வேறொரு நாட்டிலோ, ஒரு குறிப்பிட்ட காலத்திலோ அல்லது வேறொரு காலத்திலோ, தோன்றுவதற்கும், அவை வெற்றியோ அல்லது தோல்வியோ அடைவதற்கும் ஒவ்வொரு நாட்டிற்கும் உரிய தனித்தன்மையான அம்சங்களே காரணமாக அமைகின்றன. இதுபோன்ற விஷயங்களில் பொதுவான போக்கில் அணுகுவது என்பது நம்மை தவறான வழிக்கு திசைதிருப்பி விடும்.

மதச்சார்பின்மை என்ற கருத்தோட்டம் எந்த அளவிற்கு முக்கியமானதாக இருக்கிறது?

எல்லா நேரங்களிலுமே மதச்சார்பின்மை என்பது நல்லதொரு கருத்தோட்டமே ஆகும். எவரொருவரும் அதை இறுகப் பற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. எனினும் பெரும்பான்மை இந்துத்துவ கருத்தோட்டத்தை எதிர்த்த போராட்டத்திற்கு அனைத்துவகைப்பட்ட, வேறு விதமான கருத்தோட்டங்களும் தேவைப்படுகிறது. மிகக் கொடூரமான வடிவங்களிலான ஒடுக்குமுறை, சுரண்டல் ஆகியவற்றின் அடிப்படையிலான ஓர் அமைப்பிற்குள் காங்கிரஸ் வகைப்பட்ட மதச் சார்பின்மையும், பாஜக வகைப்பட்ட பெரும்பான்மைவாதமும் ஒன்றுக்கொன்று போட்டியிடும் தத்துவங்களே ஆகும். இந்தியாவின் தேர்தல் அடிப்படையிலான அரசியல் பெருமளவிற்கு சாதி, மதம், பல்வேறு வகைப்பட்ட சொத்துரிமை ஆகியவற்றைச் சுற்றியே கட்டமைக்கப்பட்டுள்ளது. மதச்சார்பின்மை என்ற கருத்தோட்டமானது “சுதந்திரம், சகோதரத்துவம், சமத்துவம்” என்ற விழிப்புணர்வுக் கோட்பாட்டிலிருந்தே  உருவெடுத்தது. “சகோதரத்துவம்” என்ற விரிவான வகைப்படுத்தலுக்குள்தான் மதச்சார்பின்மை அடங்குகிறது. சாதியை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூகம் “சகோதரத்துவம்” நிரம்பியதாக இருக்க முடியுமா? அப்படியில்லையென்றால், அதன் முழுமையான அர்த்தத்தில் மதச்சார்பற்றதாக அது இருக்க முடியுமா? சமத்துவம் இல்லாமல் சகோதரத்துவம் என்பது இருக்க முடியுமா? அல்லது வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சோஷலிசம் என்பது இல்லாமல் ஜனநாயகம் இருக்க முடியுமா? போல்ஷ்விக் புரட்சி கூட அல்ல; ப்ரெஞ்சுப் புரட்சி நடைபெறுவதற்கு முன்பாகவே ரூசோ இதற்கு பதிலளித்திருந்தார்: ”உலகத்தில் உள்ள பொருட்களை அணுகுவதில் சம உரிமை இல்லாதவர்கள் எந்த காலத்திலும் சட்டத்தின் முன்பாக  சமமானவர்களாக இருக்க முடியாது!” நாம் அறிந்துள்ள கம்யூனிசம் என்பது ப்ரெஞ்சுப் புரட்சியின் போதுதான் முதன்முதலாகத் தென்பட்டது. அதே ப்ரெஞ்சுப் புரட்சிதான் மதத்தின் அதிகாரத்திற்கு எதிரான ஒரு கருத்தாக்கம் என்ற வகையில் மதச்சார்பின்மையை, ஃப்ராங்காய் நோயெல் பாவூஃப்-இன்  “சமமானவர்களின் சதித்திட்டம்” என்பதை – இதைக் கிட்டத்தட்ட ஒரு கம்யூனிச அமைப்பு என்றே சொல்லலாம் – நமக்குத் தந்தது. அந்தக் கம்யூனிச போக்கு தோற்கடிக்கப்பட்டது. நமக்கு மிச்சமிருந்ததெல்லாம் மதச்சார்பின்மையும், தாராளவாதமும்தான். எனவே கடந்த 200 வருடங்களுக்கு மேலாகவே ஒரு கேள்வி தொடர்ந்து நீடித்து வருகிறது: “தாராளவாதத்தால் மட்டுமே மதச்சார்பின்மையை பாதுகாத்துவிட முடியுமா? சோஷலிசம் என்பதில்லாமல் மதச்சார்பின்மை என்பது சாத்தியமா?” 

இல்லை என்பதே இதற்கு எனது பதில். தாராளவாத ப்ரான்ஸ், ஐரோப்பா முழுவதிலும் உள்ள மற்ற தாராளவாத நாடுகள் ஆகியவற்றின் யூதர்களுக்கு எதிரான, இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புணர்வின் வரலாற்றையே பாருங்கள். எனவே உங்கள் கேள்வியைப் பொறுத்தவரையில், ஆம். மதச்சார்பின்மை என்ற கருத்தோட்டம் மிக முக்கியமானது. எனினும் நடைமுறையில் இந்த கருத்தோட்டத்தைச் செயல்படுத்துவதற்கு முன்னதாக, உங்களிடம் உண்மையானதொரு சோஷலிச சமூகம் இருக்க வேண்டும். இன்றைய இந்தியாவில், இந்தக் கருத்தோட்டத்தையை உண்மையாக நடைமுறைப்படுத்துவதென்பது இயலாத ஒன்றே ஆகும். பெரும்பான்மைவாதம் எவ்வளவு விஷமத்தனமானது என்பது நமக்குத் தெரியும். என்றாலும் தாராளவாதம் எப்போதுமே மதச்சார்பின்மைக்கு துரோகம் செய்துதான் வந்துள்ளது; எதிர்காலத்திலும் எப்போதும் அது அப்படித்தான் நடந்து கொள்ளும் என்ற உண்மையை நாம் பெரும்பாலும் மறந்து விடுகிறோம்.

நன்றி: ஃப்ரண்ட்லைன் ஆங்கில இதழ்

மத்திய பட்ஜெட் 2016 – 17: ஏமாற்றுவித்தை பொருளாதாரம் தொடர்கிறது

 

வழக்கம் போல் மத்திய நிதி அமைச்சர் ஜெயட்லி  பிப்ரவரி இறுதி நாள் பட்ஜெட்டை சமர்ப்பித்தார். ஆனால் இதற்கு ஒருமாதம் முன்னதாகவே, முதலாளித்துவ பத்திரிகைகளிலும் .தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களிலும் இந்த பட்ஜெட் எப்படி இருக்கவேண்டும் என்று பல ஆலோசனைகள் பெருமுதலாளிகள் சார்பாக முன்வைக்கப்பட்டன, பொதுவாக அவை அனைத்துமே (இதுவும் வழக்கம் போல்தான்!) உணவு எரிபொருள் மற்றும் உர மானியங்கள் வெட்டப்படவேண்டும், பொதுத்துறை நிறுவன பங்குகள் விற்கப்படவேண்டும், கார்ப்பரேட்டுகளுக்கு வரி சலுகைகள் தரப்படவேண்டும் என்ற பாணியில் இருந்தன. ஓரிருவர் அரசு முதலீடுகளை மேற்கொண்டு பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும் என்று சொன்ன பொழுதும், இதற்கான வளங்களை வரி விதித்து திரட்டக்கூடாது என்றும் மானியங்களை வெட்டியே வளங்கள்  திரட்டப்படவேண்டும் என்றும் கூறினர். ஜெயட்லியின் பட்ஜெட் இத்தகைய எதிர்பார்ப்புகளை நிறைவு செய்வதாகவே, பெருமுதலாளிகள் மற்றும் அந்நிய நிதி மூலதனத்தை தாஜா செய்வதாகவே அமைந்துள்ளது.

வரி விதிப்பு: வரி ஏய்ப்போருக்கு அழைப்பு

பா.ஜ.க. அரசின் மூன்றாம் பட்ஜெட் இது. ஆட்சிக்கு வரும் முன்பு தங்களது தேர்தல் பிரச்சாரத்தில் ஆட்சிக்கு வந்தால் வெளிநாடுகளில் வங்கி கணக்குகளிலும் வேறுவகைகளிலும் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் பல லட்சம் கோடி ரூபாய்களை இந்தியாவிற்கு திருப்பிக் கொணர்ந்து ஒவ்வொரு வாக்காளர் வங்கி கணக்கிலும் பல லட்சம் ரூபாய் போடுவதாக வாக்குறுதி மோடி துவங்கி அனைத்து பா ஜ க தலைவர்களும்.தேர்தல் மேடைகளில் உரக்க முழங்கினர். ஆனால் தேர்தல் முடிந்து சில மாதங்களிலேயே அடிக்கடி நம்மை எல்லாம் பாகிஸ்தானுக்குப் போகச் சொல்லிவரும் பா ஜ க தலைவர் அமீத் ஷா இந்த வாக்குறுதியின் குட்டை உடைத்துவிட்டார். ஒரு பேட்டியில், தேர்தலில் தரப்பட்ட இந்த வாக்குறுதி “ஜூம்லா” தான் – அதாவது, ஒரு பேச்சு வழக்காக சொல்லப்பட்டதுதான் –இதையெல்லாம் அமல்படுத்த முடியாது என்று மிகத் தெளிவாக கூறிவிட்டார். இந்த ஆண்டு பட்ஜெட்டில் அமீத் ஷாவிற்கு ஒருபடி மேலே போய், ஜெய்ட்லி அவர்கள், மறைத்த பணத்தை அரசிடம் ஒப்புக் கொண்டுவிட்டால், அந்த தொகையில் நாற்பத்தி ஐந்து சதமானம் வரியாக  கட்டினால் போதும். மீதி பணத்தை நீங்களே வைத்துக் கொள்ளலாம். உங்கள் மீது எந்த வழக்கும் தொடரமாட்டோம், நீங்கள் சட்டத்தை மீறி, அதனை ஏமாற்ற முயன்றதை நாங்கள் கண்டுகொள்ள மாட்டோம். நீங்கள் வருமானத்தை வேண்டுமென்றே மறைத்துள்ள போதிலும் உங்களை தண்டிக்க மாட்டோம்.’ என்று பொருள்பட தனது பட்ஜெட் உரையில் கருப்பு பணக்காரர்களை அன்புடன்  அழைத்துள்ளார்.

தனி நபர் வருமானத்தின் மீது வரி விதிப்பை பொறுத்தவரையில் பட்ஜெட் பெரிதாக மாற்றம் செய்யவில்லை. ஆனால் ஐந்து லட்சம் ரூபாய் அல்லது அதற்கு குறைவாக ஆண்டு வருமானம் பெறுவோருக்கு வருமான வரி ரத்து செய்யப்படவேண்டும் என்று கடந்த மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் முழங்கிய ஜெயிட்லி, தனது மூன்றாவது பட்ஜெட்டிலும் அதை செய்யவில்லை.  அதேசமயம், தனியார் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களின் வைப்பு நிதியில் இருந்து பணம் அவர்கள் எடுக்கும் பொழுது அதை வருமானமாக கருதி அதன் மீது வரி விதிக்கப்படும் என்று முன்மொழிந்திருப்பது உழைப்பாளி மக்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்துள்ளது.

மொத்தத்தில், நேர்முக வரியான, கொடுக்கும் திறன் அடிப்படையிலான,  வருமான வரி தொடர்பாக பட்ஜெட் முன்மொழிவுகளின்படி அரசுக்கு 1000 கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்படும் என்று ஜெயிட்லி கூறியுள்ளார். மறுபுறம், சாதாரண மக்கள் மீது கடும் சுமையாக உள்ள மறைமுக வரிகள் –கலால் வரி, சுங்க வரி, சேவை வரி- ஆகியவை தொடர்பான பட்ஜெட் முன்மொழிவுகளால் அரசுக்கு ரூ 20,000 கோடி கூடுதல் வருமானம் கிடைக்கும் என்றும் பட்ஜெட் உரை கூறுகிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. 2015 – 16 பட்ஜெட்டில் கார்ப்பரேட் வருமான வரி, தனி நபர் வருமான வரி, கலால் வரி, சுங்க வரி, சேவை வரி ஆகிய வரி இனங்களின் மூலம் அரசுக்கு எவ்வளவு வரி வருமானம் கிடைக்கும் என்ற மதிப்பீட்டை கடந்த ஆண்டு பட்ஜெட்டில் ஜெயிட்லி கொடுத்தார். இம்முறை தனது பட்ஜெட் உரையில் இவ்வரி இனங்கள் மூலம் கிடைத்துள்ள வருமானம் பற்றிய திருத்தப்பட்ட மதிப்பீட்டை கொடுத்துள்ளார். அதன்படி, கார்ப்பரேட் வருமான வரி வசூல் பட்ஜெட் மதிப்பீட்டை விட ரூ 18.000  கோடி குறைவாகவும் தனி நபர் வருமான வரி வசூல் ரூ 28,000  கோடி குறைவாகவும் தான் இருக்கும் என்று பட்ஜெட் உரை தெரிவிக்கிறது. ஆக மொத்தம், செல்வந்தர்களிடம் இருந்து வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட வரி வருமானத்தில் அரசுக்கு விழுந்துள்ள துண்டு 46,000 கோடி ரூபாய். ஆனால், கலால் வரி மூலம் பட்ஜெட்டில் கடந்த ஆண்டு மதிப்பிடப்பட்டதை விட 55,௦௦௦ கோடி ரூபாய் வசூல் ஆகியுள்ளது. இதன் சூட்சுமம் என்ன? பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணய் விலை பாரெல் ஒன்றுக்கு 130 அமெரிக்க டாலரில் இருந்து 30 க்கு குறைந்த பொழுது  மீண்டும் மீண்டும் கலால் வரியை உயர்த்தி பெட்ரோல், டீசல் விலை குறையாமல் மத்திய அரசு பார்த்துக்கொண்டது. இதனால் அரசுக்கு கலால் வரி வருமானம் பட்ஜெட் மதிப்பீட்டை விட பெருமளவு கூடியுள்ளது. அதாவது, அரசின் மொத்த வரிவருமானத்தில் மக்களை வாட்டி வதைக்கும் மறைமுக வரிகளின் பங்கு கணிசமாக கூடியுள்ளது. ஆனால் செல்வந்தர்கள் தர வேண்டிய வரி வருமானம் உரிய அளவு வரவில்லை.

சென்ற ஆண்டு ஜெயிட்லி தனது பட்ஜெட்டில் சொத்துவரியை அறவே நீக்கி விட்டார். நூறு டாலர் சீமான்கள் கையில் தலா 1 பில்லியனுக்கு அதிகமாக சொத்து குவிந்துள்ள நாடு நமது இந்தியா. அதாவது, 130 கோடி மக்கள் வசிக்கும் இந்தியாவில் 100 பெரும் செல்வந்தர்கள் கையில் தலா ரூ 7000 கோடிக்கும் அதிகமாக சொத்து உள்ளது. இவர்களின் மொத்த சொத்து நாட்டின் ஆண்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட நாலில் ஒரு பங்கு. இத்தகைய நாட்டில் தான் சொத்து வரி வேண்டாம், வாரிசு வரி வேண்டாம், வருமான வரியை குறைக்கவேண்டும் என்று செல்வந்தர்கள் கூவுகின்றனர். அவர்கள் ஊதுகுழலாக உள்ள ஊடகங்களும் இதையே உரக்கச் சொல்லுகின்றன. மத்திய மாநில அரசுகள் திரட்டும் மொத்த வரிப்பணத்தில் 65% க்கும் கூடுதலாக ஏழை மக்களை தாக்கும் மறைமுக வரிகளே உள்ளன. (தீப்பெட்டி வாங்கும் பொழுதும் மண்ணெண்ணய் வாங்கும் பொழுதும் எந்த ஒரு பொருளையோ சேவையையோ வாங்கும் பொழுதும் சாதாரண மக்கள் மறைமுக வரி கட்டுகின்றனர். இந்த வரி வாங்கும் பொருளின் விலையில் ஒளிந்திருப்பதால் மறைமுக வரி என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய வரிகள் அம்பானிக்கும் ஒன்றுதான் ஆண்டிக்கும் ஒன்றுதான். ஏழைகளின் வருமானம் குறைவாக இருப்பதால், ஏழைகள் மீது இவை பெரும் சுமையாக ஆகின்றன. செல்வந்தர்களுக்கு இது ஒரு கொசுக்கடிதான்.)

வருமான வரி சலுகைகளை செல்வந்தர்களுக்கு அளித்தது மட்டுமின்றி, வரிஏய்ப்போருக்கு சாதகமாக இருப்பது மட்டுமின்றி, பட்ஜெட் வரி தொடர்பான சச்சரவு அரசுக்கும் பணக்காரர்களுக்கும் இருக்கும் பட்சத்தில் அதனை பரஸ்பர பேரம் மூலம்  தீர்த்துக் கொள்ளவும் வலியுறுத்தி, பணக்காரர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

அரசின் வரவு-செலவு கொள்கை   

மத்திய பட்ஜெட் என்பது அடிப்படையில் மத்திய அரசின் ஒரு ஆண்டுக்கான வரவுகள் மற்றும் செலவுகள் பற்றிய மதிப்பீடுகள் தரும் அறிக்கை. இதன் அடிப்படையாக இருப்பது நாட்டின் பொருளாதார நிலையும் அரசின் வரவு மற்றும் செலவு தொடர்பான கொள்கைகளும் தான். அரசின் நடப்பு வரவுகளில், வரிகள் தவிர, பொதுத்துறை  நிறுவனங்கள் ஈட்டும் லாபங்கள், மற்றும் அரசு தான் வழங்கும் சேவைகளுக்கு வசூலிக்கும் கட்டணங்கள் ஆகியவையும் சேரும். மூலதன வரவு என்பது அரசு பொதுத்துறை சொத்துக்களை விற்று பெறும் தொகையும் அரசு கடன் வாங்கி பெறும் தொகையும் தான். கடந்த ஆண்டு பட்ஜெட் சமர்ப்பித்த பொழுது பொதுத்துறை சொத்துக்களை விற்று அரசு அறுபத்தெட்டாயிரம் கோடி ரூபாய் பெறும் என்று மதிப்பிடப்பட்டது. ஆனால் சுமார் 25,௦௦௦ கோடி ரூபாய்தான் கிடைத்துள்ளது. இந்த ஆண்டு 56,5௦௦ கோடி ரூபாய் அளவிற்கு பொதுத்துறை சொத்துக்களை விற்று பெறப்போவதாக பட்ஜெட் கூறுகிறது. இப்படி, பெரும் பன்னாட்டு, இந்நாட்டு கம்பனிகள் மீதும் செல்வந்தர்கள் மீதும் உரிய வரி விதித்து வசூலித்து வளங்களை திரட்டுவதற்குப் பதிலாக, மக்கள் சொத்துக்களாகிய பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்று வருமானம் ஈட்ட முனைகிறது அரசு. கடன் மூலம் அரசின் வரவை கூட்டுவதற்கு முதலாளிகளும் பன்னாட்டு மூலதனமும் உலக வங்கி, ஐ.எம்.எஃப். போன்ற அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. எனவே, தாராளமய கொள்கைகளை பின்பற்றும் மத்திய அரசு வளங்களை திரட்டுவதற்குப் பதிலாக, செலவுகளை குறைப்பதற்கே அழுத்தம் அளிக்கிறது. அதிலும் உணவு, உரம், எரிபொருள் போன்ற மக்களுக்கும் வேளாண்மைக்கும் அவசியமான மானியங்களை வெட்டி செலவை சுருக்கிக்கொள்ள அரசு விழைகிறது. இதுதான் இந்த ஆண்டும் நடந்துள்ளது.

அரசின் ஒதுக்கீடுகள்

ஊடகங்களில் அரசு இந்த பட்ஜெட்டில் வேளாண்மை, கல்வி, ஆரோக்கியம் ஆகிய துறைகளுக்கு மிகவும் கூடுதல் நிதி ஒதுக்கியுள்ளதாக பொய்ப்பிரச்சாரம் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட் ‘வறுமை ஒழிப்பு’ பட்ஜெட் என்றெல்லாம் அபத்தமாக சொல்லப்படுகிறது; எழுதப்படுகிறது. உண்மை என்ன? எல்லா விவரங்களுக்கு உள்ளும் போக முடியாவிட்டாலும் சில முக்கிய தகவல்களை பார்ப்போம்.

வேளாண்துறைக்கு இந்த ஆண்டு கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட தொகையைப் போல்  இரண்டு மடங்குக்கும் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளதாக தம்பட்டம் அடிக்கப்படுகிறது. ஆனால் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன் என்ற தலைப்பின் கீழ் முப்பத்து  எட்டாயிரத்தி ஐந்நூறு கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இதில் விவசாயிகள் செலுத்த வேண்டிய வங்கி கடன் வட்டிக்கு அரசு அளிக்கும் மான்யமும் அடங்கும்.. சுமார் 15,000 கோடி ரூபாய் என்ற அளவில் உள்ள இந்த மானியம் கடந்த ஆண்டும் கொடுக்கப்பட்டது. ஆனால் நிதி அமைச்சகத்தின் செலவாக அது காட்டப்பட்டது. இந்த ஆண்டு பட்ஜெட் கணக்கில் அதே தொகையை விவசாயிகள் நலன் என்ற இனத்தின் கீழ் கொண்டு வந்துள்ளனர். அவ்வளவுதான் விஷயம். உண்மையில், சென்ற ஆண்டு ஒதுக்கீட்டை விட இந்த ஆண்டு வேளான்துறைக்கான ஒதுக்கீடு சுமார் 33% தான் கூடியுள்ளது. விலைவாசி உயர்வை கணக்கில் கொண்டால் உண்மையில் அதைவிட குறைவாகத்தான் அதிகரிப்பு உள்ளது. கடும் வறட்சி, விளை பொருளுக்கு நியாய விலை இல்லை, நாளும் நிகழும் ஏராளமான விவசாயிகளின் தற்கொலைகள் என்ற பின்புலத்தில் பார்த்தால் இந்த ஒதுக்கீடு உயர்வு, நிலவும் வேளாண் நெருக்கடியை எதிர்கொள்ள யானை பசிக்கு சோளப்பொறி என்பதுதான் உண்மை.

அதேபோல் ஊரக வேலை உறுதி திட்டத்திற்கான ஒதுக்கீடு முப்பத்தி எட்டாயிரத்து ஐந்நூறு கோடி ரூபாய். இது கடந்த ஆண்டை விட சுமார் 10 சதவீதம் அதிகம். ஆனால் சென்ற ஆண்டுக்கான கொடுபடா கூலித் தொகையே பல ஆயிரம் கோடி ரூபாய்கள். அவற்றை கொடுத்த பிறகு மிஞ்சுவது சென்ற ஆண்டை விட பண அளவிலும் உண்மை அளவிலும் குறைவாகவே இருக்கும். அது மட்டுமல்ல. 2009-10 ஆண்டிலேயே இத்திட்டத்திற்கு ,நாற்பதாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இன்றைய விலைவாசியில் அதன் மதிப்பு ரூ 63,௦௦௦ கோடி ரூபாயாகும். உண்மையில், மக்கள் இடதுசாரிகள் தலைமையில் போராடிப்பெற்ற ரேகா திட்டத்தை   பா ஜ க அரசு தொடர்ந்து வெட்டிச் சுருக்கி வருகிறது. இதை வெளிப்படையாகவே நிதி அமைச்சகத்தின்  2014 நடு ஆண்டு பொருளாதார பரிசீலனை அறிக்கை கூறுகிறது. கல்வி, ஆரோக்கியம், குழந்தைகள் நலன் என்று ஒவ்வொரு சமூக நலத்துறையிலும் இதுதான் கதை. பெண்கள் மற்றும் சமூக நலத்துறையின் ஒதுக்கீடு சென்ற ஆண்டைவிட குறைந்துள்ளது. ஆரோக்கியத்தை பொறுத்தவரையில், அரசே மக்களுக்கு மருத்துவ வசதிகளை உறுதிபட அளிப்பதற்குப் பதிலாக, காப்பீட்டு ஏற்பாடுகள் மூலம் மக்கள் தனியார் மருத்துவ மனைகளுக்கு தள்ளப் படுகின்றனர். இதனால் அதிகம் பயனடைவது தனியார் மருத்துவத்துறையும் தனியார் காப்பீட்டு நிறுவனங்களும்தான். அதிலும் கூட ஒதுக்கீடு மிகக் குறைவாகவே உள்ளது. அடுக்களை புகையிலிருந்து பெண்களை விடுவிப்பதாக தம்பட்டம் அடிக்கும் அமைச்சர், ஏழை மக்களுக்கு எரிவாயு இணைப்புக்கு வெறும் 2000 கோடி ரூபாய் ஒதுக்கி இருப்பது அரசின் அணுகுமுறையை அம்பலப்படுத்துகிறது. அதே சமயம், உணவு மானியமும், உர மானியமும் இரண்டும் சேர்ந்து 7000 கோடி ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற அடிப்படையில் நாம் வேறு சில அம்சங்களுக்குச் செல்லலாம். .

பட்ஜெட்டும் பொருளாதார வளர்ச்சியும்

தனது பட்ஜெட் உரையில் பன்னாட்டுப் பொருளாதாரம் மந்தமான நிலையில் இருந்தும் இந்தியா சிறந்த வளர்ச்சி பெற்றிருப்பதாக நிதி அமைச்சர் மார் தட்டிக் கொள்கிறார். உண்மையில் இவர் தரும் வளர்ச்சி விகிதப் புள்ளி விவரங்களைப்பற்றி  அரசின் அங்கமாக செயல்படும் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். அடிப்படை ஆண்டு மாற்றம், மறைமுக வரிகளைக் கூட்டி சந்தை விலைகள் அடிப்படையில் உற்பத்தி மதிப்பை கணக்கிடுதல், கணக்கிடும் வழிமுறைகளில் பல மாற்றங்கள் இவையெல்லாம் அரசின் வளர்ச்சி “சாதனை”யின் பின்னால் உள்ளன. இவை ஒரு புறமிருக்க, மிக முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது, பன்னாட்டு சந்தையில் பெட்ரோலியம் கச்சா எண்ணய் .விலைகள் பெருமளவிற்கு சரிந்ததால், அயல் வர்த்தகத்தில் அந்நியச் செலாவணி பற்றாக்குறை பிரச்சினை எழவில்லை என்பதுதான். வரும் ஆண்டில் கச்சா எண்ணய் .விலைகள் உயரக் கூடும் என்பதும் அமெரிக்க மத்திய வங்கி வட்டி விக்தங்களை உயர்த்த உள்ளது என்பதும் கூடுதல் சவால்களாக அமையும். பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கியமான அம்சம் இந்த வளர்ச்சியின் தன்மை. அரசு தரும் புள்ளிவிவரப்படியே, வேளாண்துறை வளர்ச்சியும் தொழில் வளர்ச்சியும் மிக மந்தமாக உள்ளன. வேலை வாய்ப்புகள் மேலும் சுருங்கி, கடும் வேலையின்மை நிலவுகிறது. விவசாயிகள் தற்கொலை முடிவின்றி தொடர்கிறது. சட்டப்படி ஒவ்வொரு கிராம குடும்பத்திற்கும் ஆண்டுக்கு நூறு நாள் வேலை தர வேண்டிய சட்ட நிபந்தனை இருந்தும் சராசரி ரேகா வேலை நாட்கள் நாற்பதுக்கும் கீழே உள்ளன. பல ஆயிரம் கோடி ரூபாய் கூலி பாக்கி வைக்கப்பட்டுள்ளது. இவற்றை எல்லாம் மறைத்துவிட்டு, வளர்ச்சி பற்றி பேசப்படுகிறது.

இதுமட்டுமல்ல. பன்னாட்டு சூழல் மேலும் மந்தமாகும் என்று தனது பட்ஜெட் உரையில் குறிப்பிடும் அமைச்சர் தனது பட்ஜெட்டில் அரசின் ஒட்டுமொத்த ஒதுக்கீடுகளை போதுமான அளவு உயர்த்தியுள்ளாரா என்றால் இல்லை. மாறாக, அரசின் நிதிப் பற்றாக்குறையை கட்டுக்குள் வைக்கவேண்டும் என்ற தாராளமய தாரக மந்திரத்தை முன்வைத்து முதலீடுகள் உள்ளிட்டு  அரசின் செலவுகள் சுருக்கப்பட்டுள்ளன. நிதிப் பற்றாக்குறை என்பது அரசின் மொத்த செலவுகளில் இருந்து கடன் அல்லாத வரவுகளைக் கழிப்பதால் கிடக்கும் தொகை. இதனை குறைப்பதை இலக்காக ஆக்குவதன் பொருள் என்னவெனில், நாட்டு வளர்ச்சிக்கு அரசு கடன் வாங்கி முதலீடுகளை மேற்கொள்ளக்கூடாது என்பதாகும். முதலீடுகளை லாப நோக்கு அடிப்படையில் முதலாளிகள் செய்யட்டும், தொழிலாளிகளை கட்டுப்படுத்தி, அவர்கள் உரிமைகளை மறுத்து, சட்டம் ஒழுங்கை முதலாளிகள் சார்பாக அரசு பாதுகாக்கட்டும் என்பதுதான் தாராளமயத்தின் அடிப்படை வர்க்க அரசியல். நமது வாதம் அரசு கடன் வாங்கித்தான் முதலீடு செய்ய வேண்டும் என்பது அல்ல. முறையாக பெரும் கம்பனிகள், செல்வந்தர்கள் மீது வரிவிதித்து வசூல் செய்தாலே, அரசு கட்டமைப்புகளை மேம்படுத்தவும், கல்வி, ஆரோக்கியம் ஆகிய துறைகளை வலுப்படுத்தவும் கூடுதல் முதலீடுகளை மேற்கொள்ள முடியும். அதற்குப் பதிலாக, பொதுத்துறை பங்குகளை அடிமாட்டு விலைக்கு பெருமுதலாளிகளுக்கு  விற்று தனது செலவுகளை அரசு செய்து கொள்கின்ற தாராளமய அணுகுமுறைதான் பட்ஜெட்டில் தொடர்கிறது. கடந்த ஆண்டிலும் இதேதான் செய்யப்பட்டது. பணக்காரர்கள் மீது வரியும் போட மாட்டோம், பொதுத்துறை பங்குகளையும் சகாய விலையில் அவர்களிடம் ஒப்படைப்போம் என்ற அரசின் கொள்கை பொதுத்துறையை பற்றி வைத்துள்ள அணுகுமுறை இதுதான்: “ லாபத்தில் செயல்பட்டால் விற்று விடு, நட்டத்தில் இருந்தால் மூடி விடு ”

கட்டமைப்பு முதலீடுகள் பற்றி பட்ஜெட் உரை பேசுகிறது. ஆனால், கடந்த ஆண்டு அரசின் மூலதனச்செலவு தேச உற்பத்தியில் 1.8 %  ஆக இருந்தது, இந்த ஆண்டு  1.6% ஆக குறைக்கப்பட்டுள்ளது. கட்டமைப்பை கட்டும் பாணி பொது – தனியார் இணை பங்கேற்பு (PPP OR PUBLIC PRIVATE PARTICIPATION) என்ற முறையில் நடத்தப்படும். இது பெரிய கம்பெனிகள் கொள்ளை லாபம் ஈட்ட உதவுமே தவிர அரசின் பணம் முறையாக, மக்களுக்குப் பயன் தரும் வகையில் செலவிடப்படுவதை உத்தரவாதம் செய்யாது.

இறுதியாக ஒருவிஷயம். மத்திய மாநில உறவுகளில் கூட்டுறவுப் போக்கை கடைப்பிடிப்பதாக சொல்லிக்கொள்ளும் பா ஜ க அரசு, தொடர்ந்து மாநிலங்களின் வரி வருவாய்களை குறைத்து வருகிறது. வருமான வரிகளில் அரசு செல்வந்தர்களுக்கும் பெரும் கம்பனிகளுக்கும் அளிக்கும் சலுகைகள், மாநிலங்களின் வரி வருமானத்தை பாதிக்கிறது. பதினான்காவது நிதி ஆணையம் பகிரப்படும் வரி தொகையில்  மாநிலங்களின் பங்கை அதிகரித்துள்ள போதிலும், சர்சார்ஜ், செஸ் போன்ற வழிகளில் மாநிலங்களுடன் பகிராத வகையில் மத்திய அரசு தனது வரிப்பங்கை கூட்டிக் கொள்கிறது. திட்ட அடிப்படையிலான மாநில ஒதுக்கீடுகள் குறைந்துள்ளதால், நிகரமாக மாநிலங்கள் பெரும் வரவு தேச உற்பத்தியின் சதவிகிதமாக பார்த்தால் குறைந்து வருகிறது. மாநில முதலாளித்துவ கட்சிகள் இதை எதிர்த்து வலுவாக குரல் கொடுப்பதில்லை.

மொத்தத்தில் “அச்சே தின் “ என்ற நல்ல நாட்கள் கருப்பு பணக்காரர்கள், வரி ஏய்ப்போர், பன்னாட்டு, இந்நாட்டு பெரும் கம்பெனிகள், கோடி டாலர் கனவான்கள், அந்நிய மூலதனம் ஆகியோருக்கு மட்டுமே தொடரவுள்ளன.

 

பாஜக அரசின் ஓராண்டு: பொருளாதார ‘சாதனை’ அல்ல வேதனை

மோ(ச)டி பிரச்சாரம்

கடந்த ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் மோடியும் பாஜகவும் வாக்குறுதிகளை அள்ளிவீசினர். அவர்கள் ஆட்சிக்கு வந்து விட்டால், பொருளாதாரம் பாய்ச்சல் வேகத்தில் முன்னேறும் என்றார்கள். வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை இந்தியாவிற்கு கொண்டு வருவது மட்டுமல்ல, ஒவ்வொரு இந்தியக் குடிமகனு(ளு)க்கும் அவர் வங்கிகணக்கில் பல லட்சம் ரூபாய் ஏற்றப்படும் என்றார்கள். விவசாய நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வருவோம் என்றார்கள். விவசாயிகளின் தற்கொலைக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்றார்கள். ஆனால் தங்கள் பொருளாதாரக்கொள்கைகள் என்னவாக இருக்கும் என்பதைப் பற்றி அதிகம் பேசவில்லை. எனினும் காங்கிரசுக்கும் பாஜகவிற்கும் பொருளாதாரக் கொள்கைகளில் வேறுபாடு இல்லை என்பதும் இருவருமே தாராளமய தனியார்மய உலகமய நாசகர கொள்கைகளைத்தான் பின்பற்றுவார்கள் என்பதும் நாம் அறிந்ததே.

மோடி அரசின் ஓராண்டு ஆட்சியில் என்ன நடந்துள்ளது என்பதை காண்போம்.

நிதி நிலை அறிக்கைகள்

பாஜக அரசின் இரண்டு பட்ஜெட்டுகள் அவர்களின் வர்க்கப் பாசத்தை தெளிவாக்குகின்றன. 2014-15 பட்ஜெட்டும் சரி,2015-16 பட்ஜெட்டும் சரி, முழுக்க முழுக்க அந்நிய நிதி மூலதனத்திற்கும் இந்திய பெருமுதலாளிகளுக்கும் என்றே போடப்பட்டவை தான்.

2014-15 பட்ஜெட்பாதுகாப்புத்துறையில் அந்நிய நேரடி மூலதனத்தின் பங்கின் வரம்பை 26% இலிருந்து 49% ஆக உயர்த்தியது.. அதேபோல், காப்பீட்டு துறையிலும் இந்த காரியத்தை செய்தது. இவ்விரு துறைகளும் நாட்டின் தற்சார்பிற்கு மிக கேந்திரமான துறைகள். இதில் பாதிப்பங்கு அன்னியமூலதனத்தின் கையில் தரப்படுவது என்பது நாட்டின் இறையாண்மையைக் காவு கொடுப்பதாகும்.அது மட்டுமின்றி, இப்படி செய்வதற்கு எந்தப் பொருளாதார காரணமும் கிடையாது.காப்பீட்டு துறையில் அந்நிய மூலதனம் வெறும் பணமாக வருகிறது. எந்த புதிய தொழில்நுட்பத்தையும் அது கொண்டு வரப்போவதில்லை.மூன்றாவது அபாயகரமான முன்மொழிவு ஒன்றும் 2014-15 பட்ஜெட்டில் உள்ளது. பொதுத்துறை வங்கிகளின் மொத்த மூலதன அஸ்திவாரத்தை உயர்த்திட, அரசு இந்த வங்கிகளுக்குள் கூடுதல் மூலதனம் செலுத்தி இப்பணியை செய்ய தயாராக இல்லை. மாறாக, புதிய பங்குகள் சிறு முதலீட்டாளர்களுக்கு விற்கப்படும் என்றும் அதன் மூலம் பொதுத்துறை வங்கிகளின் மூலதன அஸ்திவாரம் பலப்படுத்தப்படும் என்றும் இந்த பட்ஜெட் கூறுகிறது. இதன் பொருள் பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவது என்பதே.2014-15 பட்ஜெட்டைத் தொடர்ந்து பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, உரம் உள்ளிட்ட அனைத்து முக்கிய சரக்குகளின் விலைகள் பாஜக அரசின் கொள்கைகள் காரணமாக அதிகரித்துள்ளன. பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக குறைந்த பொழுதும் அதன் பயன் மக்களுக்குப் போய்ச்சேராமல் இருக்க கலால் வரிகளை மீண்டும் மீண்டும் உயர்த்தியது அரசு. உணவுப் பாதுகாப்பு சட்ட அமலாக்கத்தைத் தொடர்ந்து ஒத்திவைத்துள்ளது. பாதுகாப்பு மற்றும் காப்பீட்டு துறைகளில் அந்நிய நேரடி முதலீடு வரம்பை உயர்த்தவும், நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான சட்டத்தை பெருமுதலாளிகளுக்கு சாதகமாகத் திருத்தியும் அவசரச் சட்டங்களை பிறப்பித்து நாடாளுமன்ற ஜனநாயகத்தை அவமதித்து தனது மக்கள் விரோத நடவடிக்கைகளை தொடர்கிறது. ரயில்வே சரக்கு கட்டணங்களை உயர்த்தி விலைவாசி உயர்வை தீவிரப்படுத்தியுள்ளது.

2015-16பட்ஜெட்செல்வந்தர்களுக்கும் இந்திய மற்றும் பன்னாட்டு பெரு முதலாளிகளுக்கும் மேலும் பல சலுகைகளை வழங்கியுள்ளது. சொத்துவரி முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. சொல்லப்படும் காரணம் என்ன? “ஆயிரம் கோடி ரூபாய் கூட வசூலாவதில்லை, இதை வசூலிப்பதற்கு நிறைய செலவாகிறது, எனவே நீக்கிவிடலாம்” என்பது அரசின் வாதம். இது என்ன வாதம்? திருடனைப் பிடிக்க முடியாவிட்டால் திருட்டை சட்டப் பூர்வமாக ஆக்கி விடலாமா? அது மட்டுமல்ல. இது எந்த சூழலில் சொல்லப்படுகிறது? நூற்று இருபத்தைந்து கோடி மக்கள் வசிக்கும் நமது நாட்டில் நூறு செல்வந்தர்கள் வசம் தலா ஆறாயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்கள் உள்ளன. இவர்கள் வசம் உள்ள சொத்துக்களின் மொத்த மதிப்பு தேச உற்பத்தி மதிப்பில் நான்கில் ஒரு பங்கு என்று கணக்கிடப்பட்டுள்ளது. மறுபுறம் பல கோடி மக்கள் – குறைந்த பட்சம் நாற்பது கோடிக்கும் அதிகமானோர் – அரசு கணக்குப்படியே வறுமை கோட்டின் கீழ் உள்ளனர். இத்தகைய ஏற்றத்தாழ்வு நிலவும் நாட்டில் சொத்து வரியும் வாரிசு வரியும் இல்லை என்பது பெரும் கொடுமை அல்லவா?2015-16 பட்ஜெட்டில் கலால் வரி, சுங்க வரி, சேவை வரி என்ற மறைமுக வரிகள் மூலம் 23,568 கோடி ரூபாய் வரிப்பளு மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. மறுபுறம் தனி நபர் மற்றும் கார்ப்பரேட் வருமானவரி சலுகைகளால் அரசுக்கு 8000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று பட்ஜெட்கூறுகிறது. மக்களுக்கு வரிச்சுமை, செல்வந்தர்களுக்கு வரிச்சலுகை, இது தான் பாஜக பட்ஜெட்டுகளின் வர்க்க அரசியல்.விலைவாசி உயர்வை கணக்கில் கொண்டால்மோடி அரசின் இரண்டு பட்ஜட்டுகளிலுமே விவசாயம், கல்வி, ஆரோக்கியம், ஊரக வளர்ச்சி உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த துறைகளுக்கான அரசின் திட்ட ஒதுக்கீடுகள் உண்மை அளவில் சரிந்து வருகின்றன.கணக்குகளின் பொது கட்டுப்பாட்டு அதிகாரி (Controller General of Accounts) தரும் விவரப்படி, 2012-13 இல் மத்திய அரசின் மொத்த செலவு நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் 14.1% ஆக இருந்தது. 2014-15 இல் 13% ஆக குறைந்துள்ளது. மக்கள் நலத் திட்டங்கள் கடுமையாக வெட்டி சுருக்கப்படுவதை இந்த புள்ளி விவரங்கள் தெளிவாக்குகின்றன.

மக்களை வஞ்சிக்கும் “வளர்ச்சி”

மத்திய அரசின் நிதி அமைச்சகம் 2014-15க்கான நடு ஆண்டு பரிசீலனை அறிக்கை (Mid Year Review) ஒன்றை தனது இணைய தளத்தில் கடந்த ஆண்டு நவம்பரில் போட்டது. அதில்பண வீக்கம் குறைந்திருப்பதாக தன்னைத்தானே மெச்சிக் கொண்டது. அரசின் பணவீக்க கணக்கில் உள்ள மோசடிகளை விட்டுவிடுவோம். விலைவாசி உயர்வின் வேகம் குறைந்தது என்று கூறிய அந்த அறிக்கை அதற்கான் காரணங்களை பட்டியல் இட்டது. பன்னாட்டு சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை சரிந்ததை ஒரு காரணம் என்று ஏற்றுக்கொண்டது. (அரசு வரிகளை உயர்த்தியதால் இதன் பலன்கள் மக்களை சென்று அடையவில்லை என்ற செய்தியை அது கூறவில்லை). மேலும் அது விவசாயிகளின் விளைபொருட்களுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலையை அரசு உயர்த்த மறுத்ததும் ஒரு காரணம் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறது. அது மட்டுமல்ல. ஊரக வேலை உறுதி சட்டத்திற்கான ஒதுக்கீடுகள் குறைக்கப்பட்டதால் கிராமப்புறங்களில் கூலி உயர்வு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பதும் முக்கிய காரணம் என்று பகிரங்கமாகவே கூறுகிறது. பாடுபடும் விவசாயிகளையும் கிராமப்புற கூலித் தொழிலாளிகளையும் வஞ்சித்துத்தான் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அரசு முனைகிறது என்பது தான் இதன் பொருள். “தொழில் மந்த நிலையும் வேலை இன்மையும் கூலி முடக்கமும் விவசாயிகளுக்கு உரிய விலை மறுக்கப்படுவதும் தான் வளர்ச்சியின் லட்சணமா?” என்ற கேள்வி இயல்பாக எழுகிறதல்லவா?

அண்மையில் ஒரு கார்ப்பரேட் வணிக பத்திரிகை ஒரு ஆண்டு மோடி ஆட்சியில் யாருக்கு நலன், யாருக்கு தீது என்று ஒரு பட்டியல் தந்துள்ளது. லைவ்மின்ட் என்ற இப்பத்திரிகையில் மே மாதம் பத்தொன்பதாம் தேதி இதில் வெளியான கட்டுரை தரும் விவரப்படி:

  • சென்செக்ஸ் புள்ளிகள் பல ஆயிரம் உயர்ந்துள்ளதாலும் கடந்த ஒரு ஆண்டில் தினசரி பங்குச்சந்தையில் மொத்த விற்பனை மதிப்பு இரட்டிப்பானதாலும் பங்கு சந்தை சூதாடிகள் பயனடைந்துள்ளனர்.
  • பங்கு முதலீடுகள் தொகை 2013-14 இருந்ததைப்போல் இரண்டு மடங்காக 2014-15இல் இருந்தது. இதனால் முதலீட்டு வங்கிகள் பெரும் லாபம் ஈட்டின.
  • பெரிய கம்பனிகளின் லாபமும் லாப விகிதமும் பெருகியது. ஆனால் சிறு நடுத்தர முதலாளிகள் நட்டத்தை சந்தித்தனர்.
  • கார், வீடு போன்ற அதிக மதிப்பு கொண்ட பொருட்கள் விற்பனை அதிகரித்தது.
  • விவசாயிகள் இடுபொருள் விலை உயர்வு, விலை பொருள் விலை வீழ்ச்சி, கொள்முதல் விலை தேக்கம் ஆகிய காரணங்களால் நட்டமடைந்தனர்.
  • கிராமப்புற கூலித் தொழிலாளிகள் கூலி தேக்கம் அடைந்ததால் இழப்புகளை எதிர்கொண்டனர். நகர்ப்புற தொழிலாளிகள் நிலையும் அப்படித்தான்.
  • கட்டமைப்பு பணிகள் நடைபெறாததால் காண்ட்ராக்டர்கள் கூட லாப இழப்பை சந்தித்தனர்.

ஒரு கார்ப்பரேட் நிறுவன பத்திரிக்கையே கூட சாதாரண உழைப்பாளி மக்களுக்கும் விவசாயிகளுக்கும் சிறு நடுத்தர தொழில்முனைவோருக்கும் மோடி அரசின் ஓராண்டு ஆட்சியில் பயன் கிடைக்கவில்லை என்று ஒத்துக்கொள்கிறது என்பது கவனிக்கத்தக்கது.

ரேகாவை குழி தோண்டி புதைக்கும் மோடி அரசு

ஊரக வேலை உறுதி திட்டத்திற்கான ஒதுக்கீட்டை கடந்த ஆண்டும் அரசு வெட்டியது. இந்த ஆண்டிலும் வெட்டியுள்ளது. 2009 முதல் 2012 வரை ஓரளவு செயல்பட்ட இத்திட்டத்திற்கு முந்தைய அரசு அடுத்த இரண்டு ஆண்டுகளில் குறைத்தது. மோடி அரசோ இத்திட்டத்தை மொத்தமாக ஒழிக்கும் பணியில் இறங்கியுள்ளது. ஒதுக்கீட்டை குறைத்தது மட்டுமல்ல. கூலியே கொடுக்காமல் பல மாதங்கள் இழுத்தடிப்பது, வேலைக்கு விண்ணப்பம் செய்வதற்கே வாய்ப்பு மறுப்பது என்று பல யுக்திகளை பயன்படுத்தி கிராமப்புற கூலி தொழிலாளிகளை திட்டத்தை விட்டு விரட்டும் வேலை நடந்து வருகிறது. 2012-13 இல் நூறு நாள் வேலை பெற்ற குடும்பங்கள் கிட்டத்தட்ட ஐம்பத்திரண்டு லட்சம். அடுத்த ஆண்டில் –முந்தைய அரசின் கடைசி ஆண்டில் – இது சுமார் நாற்பத்தேழு லட்சமாக குறைந்தது. பாஜக ஆட்சியின் முதலாண்டில் அதிலும் பாதியாக, இருபத்திமூன்று லட்சமாக குறைந்துள்ளது. 2013-14 இல் இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு 27.48 ஆயிரம் கோடியாக இருந்தது.2014-15 இல் இது 17.07 ஆயிரம் கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. சட்டப் பூர்வமான உரிமையையே காலில் போட்டு மிதிக்கிறது மோடி அரசு என்றால் எந்த அளவிற்கு சட்டத்தை அது மதிக்கிறது என்பது தெளிவாகிறது.

எதையும் ஏலம் போடும் அரசு

முந்தைய யு.பி.ஏ அரசு நிலக்கரி மற்றும் அலைக்கற்றை ஊழல்களில் “சாதனை” படைத்தது என்றால், மோடி அரசு தனது பாணியில் நாட்டின் இயற்கை வளங்களையும் பொதுத்துறை நிறுவனங்களையும் ஏலம் போடுவதில் மிகுந்த முனைப்பு காட்டுகிறது. நிலக்கரி துறையை தனியார்மயம், இந்த ஆண்டில் அறுபத்து எட்டாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு பொதுத் துறை நிறுவன பங்குகளை விற்று விடுவது, இயற்கை எரிவாயு மற்றும் கச்சா எண்ணை வளங்களை தனியாருக்கு தாரை வார்த்து, அவர்களிடம் இருந்து அதிக விலை கொடுத்து நுகர்வோரை வாங்க வைப்பது என்று பல தளங்களில் நாட்டின் வளங்களை பன்னாட்டு இந்நாட்டு ஏகபோகங்களுக்கு வாரி வழங்கும் விதேசி அரசாக மோடி அரசு செயல்பட்டு வருகிறது.

தொழிலாளர் விரோத அரசு

ஆட்சிக்கு வந்த நாள் முதல் பெருமுதலாளிகளுக்கு சேவகம் செய்யும் அரசாகவே மோடி அரசு செயல்பட்டுள்ளது. இந்திய நாட்டின் உழைப்புப் படையில் 95 சதமானோர் எந்த சட்டப் பாதுகாப்புமின்றி முறைசாரா நிலையில் உள்ளனர். இத்தகைய நாட்டில் தொழிலாளர் நல சட்டங்கள் தான் வளர்ச்சிக்கு தடையாக உள்ளன என்று வாதாடுவது அபத்தம் மட்டுமல்ல, அப்பட்டமான முதலாளித்வ விசுவாசம். இருக்கும் ஓரிரு சட்டப் பாதுகாப்புகளையும் நீக்க வேண்டும் என்பதில் பெருமுதலாளிகளும் மோடி அரசும் மிகவும் தீவிரமாக உள்ளன. இத்திருப்பணியை துவக்கி வைத்தது ராஜஸ்தான் பாஜக அரசு. இப்பொழுது மோடி அரசு ஒரு படி மேலே சென்று குழந்தை உழைப்பை முதலாளிகள் சுரண்டுவதற்கு வழி வகுக்கும் சட்ட முன்வரைவைக் கொண்டுவந்துள்ளது, கடந்த மாதம் மே 13 அன்று மோடியின் அமைச்சரவை 19 ஆம் ஆண்டு குழந்தை உழைப்புத் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டத்தில் குடும்பங்கள் தங்கள் குழந்தைகளின் உழைப்பை வயல்வெளியிலும் இதர குடும்ப தொழில்களிலும் வனப் பகுதிப் பணிகளிலும் ஈடுபடுத்தலாம் என்ற மிக மோசமான பகுதியைச் சேர்க்க ஒப்புதல் அளித்துள்ளது. பீடி, தீப்பெட்டி, கண்ணாடி, நெசவு, காட்டு வேலை, தோட்ட வேலை உள்ளிட்ட துறைகளில் பெற்றோர்களையே மேற்பார்வையாளர்களாக மாற்றி குழந்தை உழைப்பை முதலாளிகள் சுரண்ட இத்திருத்தம் வழி தரும். பாஜகவின் தேர்தல் செலவுகளையும் அவர்களுக்கு என்று ஊடகங்களில் ஏராளமான நேரத்தையும் தங்கள் செலவில் செய்து கொடுத்த பெருமுதலாளிகளுக்கு மிகவும் ஆர்வத்துடன் மோடி அரசு சேவை செய்வதாக இதை கொள்ளலாமா?

2013 நிலம் கையகப்படுத்தும் சட்டமும்

நிலம் கைப்பற்றும் அவசரச் சட்டங்களும்

பாஜக சென்ற நாடாளுமன்றத்தின் இறுதி காலத்தில் நிறைவேற்றப்பட்ட 2013 நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை ஆதரித்து வாக்களித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்தவுடனேயே மோடி அரசு இச்சட்டத்தில் பல திருத்தங்களை கொண்டுவந்து அவற்றை மக்களவையில் தனது பெரும்பான்மையை வைத்து நிறைவேற்றி விட்டது. இத்திருத்தங்கள் அனைத்துமே விவசாயிகளின் உரிமைகளை பறிப்பதானவை. இவற்றின் முக்கிய அம்சங்கள் இவை தான்:

  • நிலங்களை கையகப்படுத்தும்முன் திட்டத்தின் சமூக தாக்கத்தை மதிப்பீடு செய்ய வேண்டியதில்லை.
  • “பொது நோக்கம்” என்ற பெயரில் நிலம் கையகப்படுத்த அரசு விரும்பினால், விவசாயிகளின் ஒப்புதல் தேவையில்லை. இந்த ஷரத்தை பொது-தனியார் பங்கேற்பு திட்டங்களுக்கும் பொருத்தலாம். ‘பொதுநோக்கம்’ என்பது பெருமுதலாளிகளுக்கு சாதகமாக வரையறுக்கப்பட்டுள்ளது.
  • விவசாயிகளுக்கு மட்டுமே நட்ட ஈடு தரப்படும் என்ற ஷரத்தும் உள்ளது.
  • இருப்புப்பாதை, தேசிய நெடுஞ்சாலை ஆகியவற்றின் இருமருங்கிலும் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு தொழில் வழி அமைவு (Industrial corridor) என்ற பெயரில் அரசு விரும்பினால் விவசாயிகளின் ஒப்புதல்இன்றி அரசு கையகப்படுத்தலாம்.

இதுபோன்று இன்னும்பல மோசமான, விவசாயிகளுக்கும் கிராமப்புற உழைப்பாளி மக்களுக்கும் விரோதமான அம்சங்கள் உள்ளன.மாநிலங்களவையில் எதிர்கட்சிகள் பலவும் ஒன்றிணைந்து செயலாற்றியதாலும் பாஜகவின் கூட்டணிக் கட்சிகளில் சிலவும் இத்திருத்தங்களை எதிர்ப்பதாலும் இவை நிறைவேறவில்லை. எனவேதான் தொடர்ந்து மூன்றாம் முறையாக அவசரச் சட்டத்தை பிறப்பித்து தனது கார்ப்பரேட் எஜமான விசுவாசத்தை மோடி அரசு வெளிப்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் குழுவிடம் மசோதா உள்ள பொழுதே அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது நாடாளுமன்ற ஜனநாயகம் பற்றிய பாஜகவின் பார்வையைக் கோடிட்டுக் காட்டுகிறது. விவசாயிகள் தற்கொலை தொடரும் நிலையில், விவசாயம் அரசின் கொள்கைகளாலும் பன்னாட்டு நிலவரங்களாலும் பருவநிலையாலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சூழலில் மோடி அரசின் இந்த நடவடிக்கை இந்த அரசு விவசாயிகளுக்கும் தொழிலாளிகளுக்கும் எதிரான அரசு என்பதை உறுதி செய்கிறது.

வளர்ச்சியின் தன்மையும்வளர்ச்சி விகித மோசடியும்

தனது தேர்தல் பிரச்சாரத்தில் மோடிய ‘வளர்ச்சி’ என்ற முழக்கத்தை முன்வைத்தார். அவரது பாஜக சகாக்கள் அப்பட்டமான இந்துத்வா மதவெறி பிரச்சாரத்தில் அன்றாடம் ஈடுபட்டனர். மோடியும் மேற்கு வங்கம் சென்ற பொழுது தனது பிரச்சாரத்தில் அகதிகள் பிரச்சனையை மதவெறி கண்ணோட்டத்தில் தேர்தல் ஆதாயத்திற்கு பயன்படுத்தினார். ஆட்சிக்கு வந்தபின்பும் இந்த இரட்டை வேடம் தொடர்கிறது. அண்மையில் பொருளாதார வளர்ச்சி பற்றி மோடியும் மத்திய அமைச்சர்களும் அதிகமாக பேசுகின்றனர். அரசின் புள்ளி விவரக்கணக்கில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு இந்திய உலகிலேயே மிக வேகமாக வளரும் நாடாக இந்த ஆண்டு இருக்கும் என்று மத்திய அரசு தம்பட்டம் அசித்து வருகிறது. உண்மை என்ன? இதுவரை நாட்டின் உற்பத்தி மதிப்பை உற்பத்திக் காரணிகளுக்கான மொத்தச்செலவு என்ற அடிப்படையில் (GDP at factor cost) கணக்க்கிட்டு வந்தனர் ஆனால் இப்பொழுது உற்பத்திக்குப் பின் அரசு வசூலிக்கின்ற சரக்குவரிகளையும் (இதில் கலால் வரி, சுங்கவரி, விற்பனை வரி, சேவை வரி உள்ளிட்டு அனைத்து மறைமுக வரிகளும் அடங்கும்) சேர்த்து உருவாகும் சந்தை விலை அடிப்படையில் மொத்த உற்பத்தியை கணக்கிடுகிறது. இதன் பொருள், ஒரு ஆண்டில் உற்பத்தியில் எந்த மார்ரமும் இல்லாமல், ஆனால் சரகுகள் மீதான வரிகள் உயர்த்தப்பட்டால், நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பு அந்த வரிகள் அளவிற்கு அதிகரிக்கும். ஆகவே வளர்ச்சி ஏற்பட்டதாக தோற்றம் உண்டாகும். இது ஒருமாற்றம். அரசு செய்துள்ள மற்றொரு மாற்றம் என்பது, உற்பத்தி மதிப்பை 2004-05 விலைவாசிகளுக்குப்பதிலாக 2011-12 விலைவாசிகள் அடிப்படையில் கணக்கிடுவது என்பதாகும். இவ்விரண்டு அண்மை ஆண்டுகளின் வளர்ச்சி விகிதங்களை உயர்த்திக் காட்டும். உதாரணமாக, புதிய கணக்கிடும் அடைப்படையில், ஏற்கெனவே 4.7 % என்று கணக்கிடப்பட்ட 2012-13 வளர்ச்சி விகிதம் 5.0 % என்று திருத்தப்பட்டுள்ளது.5.1 % என்று கணக்கிடப்பட்ட 2013-14 வளர்ச்சி விகிதம் 6.9 % என்று திருத்தப்பட்டுள்ளது. ஆனால் இவ்விரண்டாண்டுகளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்த ஆண்டுகள். எனவே இந்த உயர்வுகள் மோடி அரசு கணக்கில் சேர்க்க முடியாது. 2014-15 ஆண்டில் புதிய கணக்குப்படி வளர்ச்சிவிகிதம் 7.5 % என்று அரசு அனுமானித்தது. ஆனால் ரிசர்வ் வங்கி 7.3 % தான் இருக்கும் என்று அறிவித்துள்ளது.ஆகவே சென்ற ஆண்டு வளர்ச்சி விகிதத்திற்கும் இந்த ஆண்டு விகிதத்திற்கும் மிக குறைவான வேறுபாடு தான் இருக்கும். மோடி அரசால் வளர்ச்சியை வேகப்படுத்த முடியவில்லை என்பது தெளிவு. இந்த அதிகப்படியான வளர்ச்சி விகிதக் கணக்கும் வரையறை மாற்றப்பட்டதாலும் அடிப்படை ஆண்டு 2004-05 இலிருந்து 2011-12 என்று மாற்றப்பட்டதாலும் அரசு சரக்குவரிகளையும் சேவை வரிகளையும் உயர்த்தியதாலும் தான் பெரும்பாலும் நிகழ்ந்துள்ளது.

வளர்ச்சி கணக்கு பற்றிய சர்ச்சையைவிட முக்கியமானது வளர்ச்சியின் தன்மை. இது கடந்த ஒரு ஆண்டில் எப்படி உள்ளது என்று பார்த்தால் நிலைமை புரியும். வேளாண் துறை வளர்ச்சி 1%ஐக்கூட எட்டாது. உணவுதானியங்களின் மொத்த உற்பத்தி2013-14இல் 26.5 கோடி டன்களாக இருந்தது.2014-15 இல் 25.1 கோடியாக சரிந்துள்ளது.இது அண்மைகாலங்களில் மிகப் பெரிய சரிவாகும். மோடி அரசின்முதல் ஆறு மாதங்களில் தொழில் உற்பத்தி கிட்டத்தட்ட 5.6 % குறைந்தது. அடுத்த ஆறு மாதங்களில் சுமார் 2.2 % என்ற அளவிற்குத்தான் அதிகரித்துள்ளது.

நெருங்கி வரும் பேராபத்துகள்

மோடி அரசு நமது நாட்டின் அந்நியச்செலாவணி கையிருப்பு கூடியுள்ளதையும் நடப்பு கணக்கு பற்றாக்குறை குறைந்துள்ளதையும் சாதனைகளாக சித்தரிக்கிறது. உண்மை என்ன? கடந்த ஆறுமாதங்களாக ஏற்றுமதி குறைந்து வருகிறது. மேலை நாடுகளில் பொருளாதாரம் மந்தமாகவே நீடிக்கிறது. கச்சா எண்ணெய் விலை சரிந்தும் பிரசர்க்குகளின் இறக்குமதி மதிப்பு பெரிதும் கூடியுள்ளது. அமெரிக்க அரசு தனது பணக்கொள்கையை மாற்றி அங்கே வட்டி விகிதம் உயர உள்ளது. அது நிகழும்பொழுது அந்நிய நிதி மூலதனம் நம் நாட்டை விட்டு அங்கே செல்லும். இதுவெல்லாம் சேர்ந்து அந்நிய செலாவணி நெருக்கடியை ஏற்படுத்தும். ஏற்கெனவே ஒரு அமெரிக்க டாலருக்கு 64 ரூபாய் என்ற அளவிற்கு ரூபாய் மதிப்பு சரிந்துள்ளது. மேலும் சரியலாம். இது பணவீக்கத்தை அதிகரிக்கும். வேளாண்மை, தொழில் இரண்டுமே மந்தமாக உள்ள நிலையில் வேலை வாய்ப்புகளும் முடங்கியே உள்ளன. கடும் நெருக்கடியை நோக்கி மோடி அரசு நாட்டை இட்டுச்செல்கிறது.

மோடி அரசின் அரசியல் பொருளாதாரம்

மோடி அரசின் பொருளாதார கொள்கைகளுக்கும் முந்தைய ஐக்கிய முற்போக்கு முன்னணியின் கொள்கைகளுக்கும் அடிப்படையில் வேறுபாடு கிடையாது. எனினும், தனது பெரும்பான்மை பலத்தை வைத்து முந்தைய அரசைவிட மிகத்தீவிரமாக அதே கொள்கைகளை மோடி அரசு கடந்த ஓராண்டாக அமலாக்கி வருகிறது. எதிர்கட்சிகள் சிதறுண்டு இருப்பதும் இடது சாரிகள் பலவீனம் அடைந்துள்ளதும் இந்தத்தன்மையில் பயணிக்க மோடி அரசுக்கு இடமளித்துள்ளன.இக்கொள்கையின் சில அடிப்படை அம்சங்கள் வருமாறு:

  • தனியார் மூலதனத்தை மையமாக வைத்து வளர்ச்சியை சாதிப்பது.
  • அந்நிய நிதி மூலதனத்திற்கு கட்டுப்பாடுகளின்றி செயல்பட அனுமதி அளிப்பது
  • அந்நிய, இந்திய பெருமுதலாளிகளுக்கு அனைத்துச் சலுகைகளையும் அளிப்பதன் மூலம் அவர்களை “குஷி”ப்படுத்தி முதலீடுகளை மேற்கொள்ள ஊக்குவிப்பது.
  • இதன் பகுதியாக, வரிச்சலுகைகள் அளிப்பது, உழைப்பாளர் உரிமைகளை பறிப்பது, பெருமுதலாளிகளின் மீதான அனைத்துக் கட்டுப்பாடுகளையும் நீக்குவது, கல்வி, ஆரோக்கியம், கட்டமைப்பு உள்ளிட்டு அனைத்துத் துறைகளையும் பெரும் கம்பனிகள் லாபம் ஈட்டும் வேட்டைக்காடாக மாற்றுவது, ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்கி, பரந்த சந்தையை பெருமுதலாளிகளுக்கு உருவாக்கிக் கொடுப்பது, இதற்கென இந்தியாவிற்கு உள்ளேயும் ஒரே சந்தையைவரி அமைப்பு மாற்றங்கள் மூலம் ஏற்படுத்திக் கொடுப்பது (இது தான் GST – பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரி என்ற முயற்சி) ஆகிய நடவடிக்கைகள்
  • அந்நிய நிதி மூலதனம் நாட்டை விட்டு வெளியே சென்றுவிடாமல் இருக்க வேண்டும் என்றால் இந்திய பொருளாதாரத்தின் மீது அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும். இதற்கு பணவீக்கம் கட்டுக்குள் இருக்க வேண்டும். அரசு பொருளாதாரத்தில் குறைந்த பங்கே ஆற்ற வேண்டும். அரசின் வரவு-செலவு சிக்கனமாக இருக்கவேண்டும். வரவு செலவு இடைவெளியை குறைக்கவேண்டும். மேலும் இதை பணக்காரர்கள் மீது வரிகள் போட்டு வளங்களை திரட்டி செய்யக் கூடாது. அப்படி செய்தால் “முதலீட்டாளர்கள்” என்று செல்லமாக அழைக்கப்படும் செல்வந்தர்கள் உற்சாகம் இழந்து வேறு எங்கேனும் சென்றுவிடுவார்கள். ஆகவே, அரசின் செலவுகளை குறைத்துதான் பற்றாக்குறையை சரி செய்ய வேண்டும்.இந்த எல்லைகள் தான் அரசின் பட்ஜெட்டுகளை நிர்ணயிக்கின்றன.[1]

இந்த கோணத்திலிருந்து பார்த்தால் மோடி அரசின் கொள்கைகள் புரியும். சமூக நலத்துறை ஒதுக்கீடுகள், அறிவியல் தொழில்நுட்பத்திற்கான ஒதுக்கீடுகள், வேளாண் மற்றும் கட்டமைப்பு துறைகளில் அரசு முதலீடுகள் இவை அனைத்தும் ஏன் வெட்டப்படுகின்றன என்றால் நாட்டையே இந்திய அந்நிய பெருமுதலாளிகளின் வேட்டைக்காடாக ஆக்கிட இதையெல்லாம் செய்தாக வேண்டும்.

ஆனாலும், இதில் பல முரண்பாடுகளும் உள்ளன. உலக முதலாளித்துவம் தொடர்ந்து கடும் நெருக்கடியில் உள்ளது. இது இந்தியாவின் ஏற்றுமதி வரவை உயர்த்துவதை கடினமாக்குகிறது. இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதால், இறக்குமதி கூடுகிறது. அந்நியச்செலாவணி பிரச்சனை ஏற்படுகிறது. இதை எதிர்கொள்ள எப்படியாவது அந்நிய மூலதனத்தை இந்தியாவிற்கு கொண்டுவர வேண்டும் என்று அரசு முனைகிறது. இதற்காக அந்நிய நிதி மூலதனத்தை கட்டுப்பாடின்றி உள்ளே வரவும் வெள்யே செல்லவும் அரசு அனுமதிக்கிறது. வரிச்சலுகைகளையும் அளிக்கிறது. இதனால் அரசு வரி வருமானம் சரிகிறது. இது அரசின் செலவுகளை வெட்டும் திசைவழியில் செல்லவைக்கிறது. ஏற்றுமதியும் பலவீனமாகி, அரசின் செலவும் வெட்டப்பட்டு மக்களின் வாங்கும் சக்தியும் நாட்டின் ஏற்றத்தாழ்வு, நிறைவு பெறாத ஜனநாயகப் புரட்சி, தொடரும் நில ஏகபோகம் ஆகிய நிலைமைகளால் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் உள்நாட்டு சந்தை விரிவடைவதில்லை. எனவே எவ்வளவு சலுகைகளை மூலதனத்திற்கு அளித்தாலும் வண்டி வேகமாக செல்வதில்லை. உலக முதலாளித்வத்தில் ஏற்படும் மீட்சியையும் உள்நாட்டில் ஒரு சிறிய பகுதி செல்வந்தர்களின் வாங்கும் சக்தியை சார்ந்தும் உள்ள இந்தியப் பொருளாதாரத்தை தாராளமய கொள்கைகள் மூலம் பாய்ச்சல் வேகத்தில் வளர்ச்சி அடைய வைக்க இயலும் என்ற ஆளும் வர்க்க கனவு கனவு தான். அவ்வப்பொழுது இவை நிகழலாம், சில ஆண்டுகள் பன்னாட்டு சூழலாலும் உந்தப்பட்டு வண்டி சற்று வேகமாக ஓடலாம். ஆனால் இவை அதே வேகத்தில் தொடர்வது கடினம் என்பது மட்டுமல்ல. அத்தகைய வளர்ச்சி பல ஆண்டுகள் ஏற்பட்டாலும் பெரும்பகுதி மக்களுக்கு – உழைப்பாளி மக்களுக்கு – வழ்வாதாரப் பிரச்சனைகள் தொடரும் என்பது தான் நமது அனுபவம்.

நிறைவாக

லட்சக்கணக்கான விவசாயிகளின் தற்கொலைகள் வேளாண் நெருக்கடியின் துயரமான வடிவமாக இருக்கலாம். ஆனால் நெருக்கடி அது மட்டுமல்ல. அதை விட ஆழமானது. அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்காத, சேவைத்துறை சார்ந்த வளர்ச்சி தான் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் இருந்துள்ளது. தொழில் வளர்ச்சி என்பதும் வேலை வாய்ப்பு விரிவாக்கம் என்பதும் விவசாய உறவுகளில் மாற்றம் ஏற்படாவிட்டால் எளிதில் நிகழாது. மக்கள் சீனத்திற்கும் இந்தியாவிற்கும் உள்ள முக்கிய வேறுபாடுகளில் இதுவும் ஒன்று.

விவசாய உறவுகளை முற்றிலும் மாற்றி அமைக்காமல், நில ஏகபோகத்தை தகர்க்காமல், விவசாய மலர்ச்சி சாத்தியமில்லை. ஆனால் அது மட்டும் போதாது. அதைத்தொடர்ந்து அரசு முன்முயற்சியில், திட்டமிட்ட வேளாண் மற்றும் தொழில் வளர்ச்சி நடக்க வேண்டும். வேறு ஒரு சந்தர்ப்பத்தில் இது பற்றி இன்னும் விவரமாக பார்க்கலாம். இங்கே நாம் கோடிட்டுக் காட்டியிருப்பது நமது இடது ஜனநாயக மாற்றின் ஒரு அம்சம் என்பதை மட்டும் பதிவு செய்து இக்கட்டுரையை முடிக்கலாம்.

 

 

 

[1]நிதி மூலதனத்தின் சுழற்சி மீது கட்டுப்பாடுகள் விதிப்பது என்பது இயலாத காரியமாகக் கருதப்படுகிறது. அப்படி ஒரு நாடு செய்தால் அந்நிய நிதி மூலதனம் வேறு நாட்டுக்கு ஓடி விடும் என்று தாராளமயவாதிகள் மிரட்டுகின்றனர். உண்மையில் இதை எதிர்கொள்ளமுடியும். சொந்தக்காலில் நின்று நமது உபரிகளையும் வளங்களையும் தக்க வகையில் திட்டமிட்டு பயன்படுத்தினால், நாடு வளரும். நாட்டை நோக்கி உள்நாட்டு வெளிநாட்டு நிதி மூலதனம் அல்ல, உற்பத்தி மூலதனமே வரும் என்பது சீன சோசலிச அனுபவம் தரும் பாடம்.அதற்கு நிதி அமைப்பு அரசின் கையில் இருக்கவேண்டும். இறக்குமதி ஏற்றுமதி கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும். உற்பத்தி சொத்துக்கள் பயன்படும் விதங்களை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் அரசிடம் இருக்க வேண்டும். அரசின் வர்க்கத்தன்மை     உழைக்கும் மக்களுக்கு சாதகமாக இருக்கவேண்டும்! சுருங்கச் சொன்னாள் சோசலிசம் நோக்கி நாடு பயணிக்க வேண்டும்!

 

இந்தியா : உலகமய வெற்றியும் மனிதவள தோல்வியும்!

உலகம் முழுவதிலும் உள்ள நாடுகளின், நாட்டு மக்களின் முன்னேற்றம், வாழ்க்கைத்தரம், வளர்ச்சி நிலை, கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி என மொத்தத்தில் மனிதவளம் குறித்த ஆய்வினை ஒவ்வொரு ஆண்டும் ஐக்கிய நாடுகள் சபை மேற்கொண்டு வெளியிட்டு வருகிறது. சரியான வளர்ச்சி நிலையை எட்ட நாம் எங்கே செல்ல வேண்டியுள்ளது? என்ற கேள்வியை ஒவ்வொரு நாடும், நாட்டு மக்களும் எழுப்ப இவ்வறிக்கை காலக்கண்ணாடியாக இருக்கிறது.

2005 ஆம் ஆண்டுக்கான மனிதவள மேம்பாட்டு அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபை செப்டம்பர் 7, 2005 அன்று வெளியிட்டது. 177 நாடுகள் உறுப்பினராக உள்ள இவ்வமைப்பில் ஒவ்வொரு நாட்டைப் பற்றிய மதிப்பீடும், தற்போது அந்தந்த நாடுகள் வகிக்கும் இடத்தையும் பட்டியலிட்டுள்ளது. இப்பட்டியலில் இந்தியாவிற்கு 127வது இடமே கிடைத்துள்ளது. இதிலிருந்தே நம்முடைய நாட்டின் மனிதவளத்தில் நாம் எங்கே இருக்கிறோம் என்பதை அறிந்து கொள்ளலாம். நமக்கு பக்கத்தில் இருக்கக்கூடிய இலங்கையில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இனச்சண்டைகள் நடந்து வருவதை நாம் அறிவோம். இருப்பினும் கூட மனிதவளத்தில் நம்மை விட அவர்கள் முன்னிற்கின்றனர்; இலங்கை இப்பட்டியலில் 93வது இடத்தை பிடித்துள்ளது.

இந்தியா ஒளிர்கிறது என்று பிரச்சாரம் செய்த அத்வானி, வாஜ்பாய், மோடி வகையறாக்கள் நமக்கு பின்னால் 135வது இடத்தில் பாகிஸ்தானும், 139வது இடத்தில் வங்காளதேசமும் இருப்பதைக் கண்டு திருப்தியடையலாம். இது அவர்களது அரசியலுக்கு வேண்டுமானால் உதவலாம். ஆரோக்கியமான அரசியலில், மனிதவளத்தை உண்மையிலேயே மேம்படுத்த வேண்டும் என்று பாடுபடுகிற நாட்டு மக்களுக்கு இது உதவாது.

ஓங்காரமாய் ஒலிக்கும் உலகமயம்

உலகமய கொள்கைகளை அமலாக்குவதில் இந்திய நாடு வெற்றி பெற்றுள்ளதையும், மனிதவளத்தில் பின்தங்கியிருப்பதையும் மனிதவள மேம்பாட்டு அறிக்கை மிகச் சரியாக சுட்டிக் காண்பித்திருக்கிறது. குறிப்பாக, …உலக பொருளாதார வளர்ச்சியில் இந்தியா முன்னணி வகிப்பதோடு, உயர் தொழில் நுட்பங்களை ஏற்றுமதி செய்வதில் பெரும் பங்கை வகிக்கிறது. அத்தோடு, இந்தியாவில் உள்ள நடுத்தர வர்க்கத்தினர் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் காந்தமாக திகழ்கின்றனர்… என்று அவ்வறிக்கையின் துவக்கத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிக்கை அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல், உலகளாவிய மனிதவள மேம்பாட்டு வளர்ச்சியில், இந்தியா மிகக்குறைந்த கவனத்தையே பெற்றுள்ளது என மறக்காமல் குட்டியுள்ளது. மேலும், (வறுமை) வருமான விகிதத்தைப் பொறுத்தவரை 1990களில் 36 சதவீதமாக இருந்தது, தற்போது 25 முதல் 30 சதமாக உள்ளது.

உலகமய கொள்கையால் புளங்காகிதம் அடைந்திருக்கும் முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ ஆட்சியாளர்கள், உலக பெரு முதலாளிகளையும், பன்னாட்டு ஏகபோகங்களையும் இந்திய நாட்டில் பண முதலீடு செய்திட சுதந்திரமாக வரவேற்பதும், லாபகரமாக இயங்கும் பொதுத்துறை தொழில்களை, தேசத்தின் கனிவள சொத்தினை விற்பதும் அன்றாட வாடிக்கையாகி விட்டது. உலகமயக் கொள்கை உலக முதலாளித்துவ வளர்ச்சிக்கும், உள்நாட்டு பெருமுதலாளி களின் வளர்ச்சிக்கும் மட்டுமே பயன்படக்கூடிய ஒன்றே என்பதை இடதுசாரிகள் நீண்டகாலமாக கூறி வருவதை நமது மத்திய – மாநில ஆட்சியாளர்கள் காதில் போட்டுக் கொண்டதே இல்லை. இலாபத்தில் இயங்கக்கூடிய பொதுத்துறை நிறுவனங்களை விற்கக்கூடாது, உள்நாட்டு தொழில்களை பாதிக்கக்கூடிய தொழில்களில் வெளிநாட்டு பண முதலீடுகளை அனுமதிக்கக் கூடாது, குறிப்பாக விவசாயம் போன்ற ஆதாரத் தொழில்களில் நவீன ரக விதை என்ற பெயரில் மான்சாண்டோ போன்ற அந்நியநாட்டு நிறுவனங்களை அனுமதிப்பதின் மூலம் நமது விவசாயிகள் திவால் ஆவது, இதன் மூலம் மக்கள் வாழ்க்கைத்தரம் அதள, பதாளத்திற்கு செல்லும் என்று கம்யூனிஸ்ட்டுகள் குரலெழுப்பும் போது, சிதம்பரம், மன்மோகன், வாஜ்பாய், மாறன், ஜெயா வகையறாக்களுக்கு எட்டிக்காயாக் கசக்கிறது. அவர்கள் பொருளாதாரம் வளர்ந்தால் செல்வம் தானாக சொட்டு நீர்போல் மக்களிடம் பரவும் என்று நம்புகின்றனர். இந்த மூட நம்பிக்கைக்குத் தான் மனித வள மேம்பாட்டு ஆய்வறிக்கை வேட்டு வைக்கிறது.

வருங்கால மன்னர்களின் இன்றைய நிலை

இந்திய குழந்தைகளின் இன்றைய நிலை குறித்தே! அறிக்கை மிக முக்கியமாக சுட்டிக்காட்டியுள்ளது. குழந்தை பிறப்பு – இறப்பு விகிதம் மிக கவலையளிப்பதாக உள்ளது; மில்லினிய இலக்கில் இருந்து இந்தியா விலகியிருக்கிறது. இந்தியாவின் தெற்கத்திய நகரங்களில் தொழில்நுட்ப வளர்ச்சி ஓங்கியிருக்கிறது; ஆனால், 11 குழந்தைகளில் 1 குழந்தை அதன் 5 வயதை எட்டுவதற்குள் இறக்கிறது. இதற்கு காரணம் ஊட்டச்சத்துக் குறைவு, சொற்பத் தொகை  அரசின் ஒதுக்கீடு, குறைந்த தொழில் நுட்பம் போன்றவைகளே! மேலும் 4 பெண் குழந்தைகளில் 1 குழந்தைக்கும், 10 ஆண் குழந்தைகளில் 1 ஒரு குழந்தைக்கும் ஆரம்பக் கல்வி கிடைப்பதில்லை. மொத்தத்தில் இந்திய குழந்தைகளில் 50 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளனர். என்று அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது. பொருளாதாரம் 8 சதவீத வேகத்தில் வளர்வதாக பெருமைப்படுபவர்கள், அந்த வளர்ச்சி குழந்தைகளின் வாழ்விற்கு உதவிடவில்லை என்பதை பார்க்கவே மறுக்கிறார்கள்.

இந்தியா வல்லரசாக வேண்டும் என்று ஓயாது ஒலித்து வருபவர்கள் மக்களின் வலிமை தான் நாட்டின் வளமை  என்பதை ஏற்க மறுக்கிறார்கள். இந்திய நாட்டில் உள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் அவர்களது வறிய நிலைக்கு தீர்வு காண்பதில் ,  வீடின்மை பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் தான் வளமை இருக்கிறது என்பதையும் உணரவில்லை.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகஸ்ட் 15, 2005 முதல் நாடு முழுவதும் நிலம், உணவு, வேலை கேட்டு மகத்தான பிரச்சார இயக்கத்தை நடத்தி வருகிறது. இவ்வியக்கம் வெற்றிகரமாக மக்களைச் சென்றடைந்துக் கொண்டிருக்கக்கூடிய தருவாயில் இவ்வறிக்கை வந்திருப்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கையில் – வைத்திருக்கக்கூடிய முழக்கத்தில் உள்ள நியாயத்தை உணர வைக்கிறது. இது வெறும் வெற்று கோஷமல்ல! இந்திய நாட்டின் உயிர் நாடி பிரச்சினை!!

குழந்தை இறப்பு உண்மை நிலை!

உலகில் குழந்தை இறப்பில் 5வது இடத்தை வகிக்கும் இந்தியாவில், ஆண்டுதோறும் 25 லட்சம் குழந்தைகள் இறக்கின்றன என்று அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. மேலோட்டமாக படிப்பவர்களுக்கு ஆச்சரியமாகக் கூட இருக்கும்! இது சரியாக இருக்குமா என்ற கேள்விகூட எழும்! உண்மை இதுதான்!

சமீபத்தில்  பணக்கார மாநிலங்களில் ஒன்றான மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்று வரும் குழந்தை இறப்புச் சம்பவங்களை டெக்கான் கிரானிக்கல், ஃபிரண்ட் லைன் போன்ற ஒரு சில ஆங்கிலப் பத்திரிக்கைகள் வெளியிட்டுள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள பழங்குடி மக்கள் வசிக்கக்கூடிய விதர்பா மாவட்டங்களில், குறிப்பாக அமராவதி, நாசிப், தேண், நான்-தர்பர், காச்சிரோலி ஆகிய 5 மாவட்டங்களில் மட்டும் கடந்த ஏப்ரல் – ஜூலை, 2005 மாதங்களில் மட்டும் 2675 குழந்தைகள் இறந்துள்ளன. இந்த புள்ளி விவரம் கூட மகாராஷ்டிர அரசு கொடுத்ததே.

சமீபத்தில் மும்பை உயர்நீதிமன்றத்தில் திரு. கிரண் பதுக்கூர் என்பவர் தொடுத்த பொதுநல வழக்கில் மேற்கண்ட குறிப்பிடப் பட்டுள்ள மூன்று மாவட்டங்களில் 3000க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஊட்டச்சத்தின்மையால் இறந்துள்ளன. மாவட்ட நிர்வாகமும், மாநில அரசும் எந்தவிதமான அக்கறையுமின்றி இருக்கின்றன என்று தொடுத்த வழக்கின் மூலம் இது அம்பலத்திற்கு வந்துள்ளது. இது தவிர 33,000 குழந்தைகள் போதுமான ஊட்டச்சத்தின்மையால் பாதிக்கப்பட்டு கை, கால்கள் சூம்பி, வயதிற்கேற்ற எடையின்றி சோமாலியாவில் காணுகின்ற  எலும்புக்கூடு குழந்தைகளாகவே இருக்கின்றனர். இதில் 16,000 குழந்தைகள் இறக்கும் தருவாயில் இருக்கின்றன. இக்குழந்தைகளின் படத்தை காணும் எந்த ஒரு மனித இதயமும் திடுக்கிடாமல் இருக்க முடியாது நம்முடைய முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ ஆட்சியாளர்களைத் தவிர.

மகாராஷ்டிர அரசு சமர்ப்பித்த புள்ளிவிவரங்களின் படியே 1085 குழந்தைகள் முதல் பிறந்தநாளை எட்டுவதற்குள் தங்களது வாழ்க்கையை முடித்துக் கொண்டன. 1590 குழந்தைகள் 6 வயதைக்கூட எட்டவில்லை.

நம்முடைய தமிழ் பத்திரிகை உலகம் இப்பிரச்சினை குறித்து பெரும் மவுனமே சாதிக்கிறது. பாலியல் உறவு பற்றி யாராவது உளறினால் போதும், அது குறித்து பக்கத்திற்கு பக்கம் வண்ணப்படங்களுடன் விளக்கும் பத்திரிகை உலகம், நம்முடைய இந்திய குழந்தைகளின் சுவாசத்தை நிறுத்தும் அரசு பயங்கரவாதத்தை குறித்து மவுனமே சாதிக்கிறது.

மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தின் கவலையெல்லாம் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 8000 புள்ளிகள் உயர்ந்துள்ளதும், அதை கீழே விழாமல் பார்த்துக் கொள்ள காவல் இருப்பதுமே.

மகாராஷ்டிர சம்பவம் ஏதோ திடீரென்று ஒரு மாநிலத்தில் முளைத்த சம்பவமல்ல; கடந்த 5 ஆண்டுகாலமாகவே இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. சமூக ஆர்வலர்கள் இதற்கெதிராக தொடர்ந்து பல மாநிலங்களில் குரலெழுப்பியும் வருகின்றனர். ஏன் அமெரிக்க ஆதரவு பத்திரிக்கையான டைம் இதழ் கூட டிசம்பர் 2004இல் இது குறித்து ஒரு சிறப்புக் கட்டுரை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவில் 61,000 மில்லினிய பணக்காரர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கையில் புதியதாக 11,000 பணக்காரர்கள் இப்பட்டியலில் சேர்ந்துள்ளனர். அதே சமயம் ஒரு நாளைக்கு ஒரு டாலருக்கும் குறைவான வருமானம் பெறுபவர்கள் 30 கோடி பேர் என சுட்டிக்காட்டியுள்ளது. இதுதான் உலகமய மாக்கலின் உண்மையான வெற்றி! அந்த டைம் பத்திரிக்கை 30 கோடிப்பேரை ஏழை ஆக்காமல் சில ஆயிரம் பேர் பணக்காரர்களாக ஆக முடியாது என்ற சுரண்டல் உறவை மறைத்து, ஏழை, பணக்காரன் ஆவது தனித்தனி நிகழ்வுகள் என சித்தரிக்கிறது என்பதை பார்க்கத் தவறக் கூடாது.

மக்களை ஏழையாக்கும் பொருளாதார வளர்ச்சி கண்டு !

பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை போகவோ!

நாங்கள் சாகவோ!

என்ற பாரதியின் ஆவேசக் கனல் நெஞ்சத்தில் மூளாமலில்லை.

வேலைவாய்ப்பற்ற வளர்ச்சி

மனிதவள மேம்பாட்டு அறிக்கையில் அதிகரித்து வரும் வேலையின்மை குறித்தும் எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கிராமப்புற வேலையின்மை என்பது கடந்த காலத்தை விட தற்போது அதிகரித்து வருவதாக குறிப்பிட்டுள்ளது. விவசாய உற்பத்தி என்பது ஆண்டுக்கு 2 சதவீதம் என்ற அளவுக்கு அதிகரித்து வருகிறது. அதே சமயம் விவசாய கூலியில் தேக்க நிலை நிலவுகிறது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் வேலைவாய்ப்பற்ற வளர்ச்சி நிலவுகிறது. 1980, 1990களில் தேசிய அளவில் ஒரு சதவீத வளர்ச்சி இருந்தால், அது 3 சதவீத வேலைவாய்ப்பை உருவாக்கியது.

குறிப்பாக பாலின (ஆண் – பெண்) ஏற்றத்தாழ்வு என்பது அதிகரித்து வருகிறது. அதேபோல் மாநிலங்களுக்குள் ஏற்றத்தாழ்வு என்பது நிலவுகிறது. என்று இந்தியாவின் இன்றைய நிலையை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியுள்ளது மனிதவள மேம்பாட்டு அறிக்கை 2005.

நாடு முழுவதிலும் விவசாயிகள் தற்கொலை அதிகரித்து வருவதை பல்வேறு ஊடகங்கள் படம் பிடித்து வருகின்றன. அதே போல் ஒரு மாநிலத்தில் இருந்து வேறு மாநிலத்திற்கு பிழைப்பைத் தேடி விவசாயிகள் இடம் பெயர்வது என்பது அன்றாட நிகழ்வாகி விட்டது. தமிழக விவசாயிகள் சென்னை நகரை நோக்கியும், வேறு பல ஊர்களுக்கும் புலம் பெயர்ந்து வருகின்றனர். சமீபத்தில் மத்திய அரசு அமலாக்கிய கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம் – வேலைக்கு உணவுத் திட்டம் தமிழகத்தில் உள்ள நலிந்த விவசாயிகளை பயன்படுத்தி திட்டங்களை அமலாக்காமல், எவ்வாறு இயந்திரங்களை வைத்து அமலாக்கப்பட்டது என்பதையும் நாம் அறிவோம்! ஆட்சியாளர்களின் கவனமெல்லாம் கோடிகளை ஒதுக்கிக் கொள்வதுதானோயொழிய வறுமைக் கோட்டினை ஒழிப்பது அல்ல!

உலகமயமாக்கல் என்ற ஏகாதிபத்திய பொருளாதார கொள்கை ஏழை – எளிய – நடுத்தர மக்களின் வாழ்க்கையில் ஏமாற்றத்தையும், விரக்தியையும், வேலையின்மையையும் மட்டுமே கொண்டு வந்துள்ளது. இந்திய ஆட்சியாளர்களாலும், நமது மக்களின் வாழ்கைப் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியவில்லை. உண்மையில் முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பு கோடிக்கணக்கான மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என்பதே நிதர்சனம்.
பாலின ஏற்றத்தாழ்வு குறித்து கூறும் அறிக்கை, ஒரு வயது முதல் ஐந்து வரை உள்ள குழந்தை இறப்புகளில் 50 சதவீதத்திற்கும் மேல் பெண் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

மனிதவளத்தை எவ்வாறு அளக்கிறார்கள் என்பதையும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. சர்வதேச அளவில் உயிர் வாழ்தல், கல்வி, வருமானம், சுகாதாரம், சொத்து, வர்த்தகம், அறிவு என அந்தந்த நாடுகளில் பல்வேறு அமைப்புகள் மேற்கொள்ளும் கருத்தாய்வுகளை வைத்து சர்வதேச தர அடிப்படையில்தான் இந்த மனிதவள மேம்பாட்டு அறிக்கையினை ஐக்கிய நாடுகள் சபை மேற்கொள்கிறது.

இதன்படி 127வது இடத்தில் உள்ள இந்திய மக்களின் உயிர் வாழ்தல் காலம் 64 ஆண்டுகள் மட்டுமே, அதே சமயம் சோசலிச நாடுகளான கியூபாவில் இது 87 ஆண்டுகளாக உள்ளதோடு, மனிதவள மேம்பாட்டில் 52வது இடத்தைப் பிடித்துள்ளது. அதேபோல் சீனாவில் 78 ஆண்டுகளாக உள்ளதோடு, மனித வளத்தில் 85வது இடத்தைப் பிடித்துள்ளது. மக்கள் தொகையில் உலகிலேயே சோசலிச சீனா முதலிடம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வியட்நாமில் 76 ஆண்டுகளாகவும், மனித வளத்தில் 108வது இடத்திலும் உள்ளது. மனிதவளத்தில் 93வது இடத்தில் உள்ள இலங்கை உயிர் வாழ்தலுக்கு 82 ஆண்டுகளாக உள்ளது.
மேற்கண்ட விவரத்தின் மூலம் இந்திய நாட்டில் மனித உயிர் வாழ்தலுக்கான உத்திரவாதம் என்பது மிக குறைந்த ஆண்டுகளாக உள்ளதை அறிய முடிகிறது. மனிதர்களின் அடிப்படைத் தேவைகளான நிலம், உணவு, வேலை ஆகியவற்றை உத்திரவாதம் செய்வதன் மூலம்தான் மனிதவளத்தை உண்மையிலேயே மேம்படுத்த முடியும். சோசலிச நாடுகளில் மனித வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. நமது நாட்டில் செல்வந்தர்களை உற்பத்தி செய்வதிலும், அதில் உலக நாடுகளோடு போட்டியிடுவதற்கும் முக்கியத்துவம் தரப்படுகிறது. உலக பணக்காரர்கள் குறித்து பட்டியலிடும் போர்ப்ஸ் 2003ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் 5 இந்தியர்களின் சொத்து மதிப்பு 24.8 பில்லியன் டாலர்கள். (1,24,000 கோடி ரூபாய்) இது பிரிட்டனில் உள்ள 5 கோட்டீஸ்வரர்களின் சொத்து மதிப்பை விட அதிகம். அவர்களது சொத்து மதிப்பு 24.2 பில்லியன் டாலர் (1,21,000 கோடி ரூபாய்).

இந்தியா 2020

ஜனாதிபதி அப்துல்கலாம் எழுதிய இந்தியா 2020 புத்தகம் இந்திய நாட்டில் மிக புகழ்பெற்றது. படித்த இளம் தலைமுறையினரிடைய ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது என்றால் மிகையாகாது. இதன் விற்பனையும் எக்கச் சக்கம். இதைத் தொடர்ந்து இந்திய அரசும் விஷன் 2020 என்ற இலக்கை தீர்மானித்து நாட்டை முன்னேற்றுவதற்கான திட்டத்தை அறிவித்துள்ளது. டாக்டர் எஸ்.பி. குப்தா தலைமையில் அமைக்கப்பட்ட குழு இந்திய நாட்டில் உள்ள பல்வேறு பிரச்சினைகளை ஆராய்ந்து அவற்றிற்கு தீர்வு காணும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டதே இந்த விஷன் 2020. குறிப்பாக வேலையின்மை, வறுமை, எழுத்தறிவு, குழந்தை பிறப்பு – இறப்பு, ஊட்டச்சத்தின்மை போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். அதற்காக உருவாக்கப்பட்டதே இந்த திட்டம்.

உண்மை என்ன? மனிதவள மேம்பாட்டு அறிக்கை 2005 இந்திய நாடு அனைத்து விதத்திலும் முன்னேறிய நாடுகளை எட்ட வேண்டும் என்று சொன்னால் இதே வழியில் போனால் குறைந்தபட்சம் இன்னும் 100 ஆண்டுகள் ஆகும் என்று அறிவித்துள்ளது. அதாவது 2106வது ஆண்டில்தான் இந்த இலக்கை எட்ட முடியும் என்று குறிப்பிட்டுள்ளது. இந்திய அரசு உருவாக்கிய விஷன் 2020-அடைய கூறப்படும் வழி முறையை நாம் விமர்சிக்கும் போது, படித்த மேதாவிகளுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. ஆனால் ஐக்கிய நாட்டு மனிதவள அறிக்கையே இவையெல்லாம் இந்த வழியில் போனால் விஷன்கள் எல்லாம் வெறும் கனவிற்குள் வரும் கனவாகும் என்று குட்டு வைத்துள்ளது.

உண்மையில் நம்நாட்டின் முதலாளித்துவ –  நிலபிரபுத்துவ சார்பு அரசியல் கட்சிகளால் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது. முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ அரசியல் சித்தாந்தவாதிகள் வகுக்கக்கூடிய திட்டங்கள் வெறும் வெற்று ஆரவாரத்தை மட்டுமே மக்களிடம் ஏற்படுத்தும், அத்துடன் அவர்களது வர்க்க நலன் சார்ந்த திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள். உதாரணத்திற்கு, மனிதவள மேம்பாட்டு அறிக்கை 2005 இல் எந்தவொரு நாட்டின் அடிப்படையான இயற்கை  ஆதாரங்கள், எண்ணை மற்றும் கனிவளங்கள் சுரண்டப்படுவதை கடுமையாக எச்சரித்துள்ளது. ஆனால் சமீபத்தில் ஒரிஸா மாநில அரசு ஒரிஸாவில் உள்ள இரும்புத் தாதுவை ஆண்டுக்கு 12 மில்லியன் டன் என்ற அளவில் கொள்ளையடித்துக் கொண்டுச் செல்ல போஸ்கோ என்ற தென்கொரிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. பணக்கார நாடுகள் எதுவும் இரும்புத் தாது ஏற்றுமதிக்கு அனுமதிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஐக்கிய நாட்டின் மனித வள மேம்பாட்டு அறிக்கையை உற்று கவனித்தால், ஏழைநாடுகளின் இயற்கை வளங்களை கண்மூடித்தனமாக சுரண்டுவதில் பணக்கார நாடுகள் அரசியல் ஒற்றுமையுடன் இருப்பதை அந்த அறிக்கை கூறாவிட்டாலும், புள்ளி விபரங்கள் அதனையே உணர்த்துகின்றன. மக்களுக்காக பொருளாதார வளர்ச்சியே தவிர, பொருளாதார வளர்ச்சிக்காக மக்கள் என்ற  சுரண்டல் பார்வையை ஒழித்துக்கட்டவும், இந்திய நாட்டில் உண்மையாகவே மனிதவளத்தை மேம்படுத்தவும் மக்கள் ஜனநாயக புரட்சியால் மட்டுமே சாத்தியம். நமது இலக்கு அதை நோக்கியதாக இருக்கட்டும்!!