சர்வதேச மகளிர் தினம் பற்றி அலெக்சாண்ட்ரா கொலந்தாய்

[ரஷ்யாவில் முதன்முதலாக 1913ஆம் ஆண்டு மார்ச் 8 அன்று (பழைய நாட்காட்டி அடிப்படையில் பிப்ரவரி 23) உழைக்கும் மகளிரின் சர்வதேச ஒற்றுமையின் வெளிப்பாடாக சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வை முன்னிட்டு கொண்டாட்டத்திற்கு ஒருவார காலத்திற்கு முன்பு அலெக்சாண்ட்ரா கொலந்தாயின் இக்கட்டுரை ரஷ்ய போல்ஷ்விக் கட்சியின் இதழான பிராவ்தாவில் வெளியானது. அரசியல் மற்றும் பொருளாதார உரிமைகளுக்கான கோரிக்கைகளை வலியுறுத்தியும், பிரச்சாரங்களை முன் வைத்தும், உழைக்கும் வர்க்கத்தின் ஒற்றுமையை பறைசாற்றும் வகையிலும், உழைக்கும் மகளிரின் உணர்வு நிலையை உயர்த்தும் நோக்குடனும் புனித பீட்டர்ஸ்பர்க் நகரில் இத்தினம் கொண்டாடப்பட்டது.]


மகளிர் தினம் என்பது என்ன? அப்படியான ஒரு தினம் அவசியம்தானா? பெண்களுக்கு வாக்குரிமை கேட்டுப் போராடுபவர்களுக்கும் பெண்ணியவாதிகளுக்கும் முதலாளித்துவ வர்க்கத்தைச் சார்ந்த பெண்களுக்கும் கொடுக்கப்படும் சலுகைதானே அது? அது தொழிலாளி வர்க்க இயக்கத்தின் ஒற்றுமைக்கு ஆபத்தை விளைவிக்காதா? இப்படியான கேள்விகளை இப்போதும் ரஷ்யாவில் கேட்க முடிகிறது. இக்கேள்விகளுக்கான தெளிவான பதிலை  வாழ்க்கை நமக்கு முன்பே வழங்கியுள்ளது.


மகளிர் தினம் என்பது உழைக்கும் மகளிர் இயக்கத்தின் வலுவான, நீளமான சங்கிலியின் இணைப்புக் கண்ணியாகும். ஒவ்வொரு ஆண்டும் உழைக்கும் மகளிரின் திரட்டப்பட்ட அணி வளர்ந்து வருகிறது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு தொழிற்சங்கங்களில் உழைக்கும் மகளிர் சிறு எண்ணிக்கையில்தான் இருந்தனர். தொழிலாளர் கட்சியிலும் மிகச் சில பெண்களே இருந்தனர். தற்போது பிரிட்டனில் 2,92,000 பெண்கள் தொழிற்சங்கங்களில் உள்ளனர். ஜெர்மனியில் 2,00,000 பேர் தொழிற்சங்கங்களிலும், 1,50,000 பேர்  தொழிலாளர் கட்சியிலும் உள்ளனர். ஆஸ்திரியாவில் 47,000 பேர் தொழிற்சங்கத்திலும், 20,000 பேர் கட்சியிலும் உள்ளனர்.


இத்தாலி, ஹங்கேரி, டென்மார்க், ஸ்வீடன், நார்வே, சுவிட்சர்லாண்ட் என எங்கும் உழைக்கும் மகளிர் தங்களை தாங்களே அணிதிரட்டி வருகின்றனர். சோஷலிச பெண்கள் படையில் சுமார் பத்து லட்சம் பேர் உள்ளனர்.  இது ஒரு சக்திமிக்க படையாகும். விலைவாசி உயர்வு, குழந்தை தொழிலாளர்கள், மகப்பேறு காப்பீடு, உழைக்கும் மகளிரைக் காப்பதற்கான சட்டம் என எல்லாம் கேள்விக்குள்ளாகும் இன்றைய நிலையில், உலகின் சக்திவாய்ந்த உழைக்கும் மகளிரைத் திரட்டுவதில் ஏற்பட்டுள்ள உயர்வு கவனிக்கத்தக்கதாகும்.


மூலதனத்திற்கு எதிரான போராட்டத்தின் சுமையை தாங்கள் மட்டுமே சுமக்க வேண்டுமென்று ஆண் தொழிலாளர்கள் நினைப்பதும், பெண்களின் உதவியில்லாமல் இந்த ‘பழைய உலகின்’ மீது தலையீடு செய்ய வேண்டும் என்று அவர்கள் கருதிய காலமும் இருந்தது. தங்களது கணவன, தந்தையோ வேலையிழந்த சூழலில், தவிர்க்க முடியாத காரணங்களால், பெண்கள் உழைக்கும் மகளிராக உழைப்புச் சந்தைக்கு வருகின்றனர். பெண்களை வர்க்க உணர்வு அடையவிடாமல் தடுப்பதன் மூலமாகவே தங்களின் சுயநலனை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதை ஆண் தொழிலாளர்கள் நன்றாக அறிந்து வைத்துள்ளனர்.


எந்த அளவிற்கு வர்க்க உணர்வு பெற்ற போராளிகள் அதிகரிக்கின்றனரோ அந்த அளவிற்கு வெற்றிக்கான வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன. குடும்பம், சமூகம், அரசு என எங்கும் அதிகாரம் மறுக்கப்பட்ட நிலையில், அடுப்படியில் அமர வைக்கப்பட்டிருக்கும் பெண்கள் என்ன அளவிலான உணர்வைப் பெற்றிருக்க முடியும்? அவர்களுக்கென்று ‘சொந்த சிந்தனை’ எதுவுமின்றி, அவர்களது கணவனோ, தந்தையோ சொல்வதைக் கேட்டு, அதற்கேற்ற வகையில் கீழ்ப்படிந்து செயல்படுவதே அவர்களுக்கு வழக்கமாகிவிடுகிறது. எவ்வித உரிமைகளுமின்றி பின்தங்கிய நிலையில் பெண்களை வதைப்பதும், அவர்களை அலட்சியமாகவும் அடிமை போலவும் நடத்துவது உழைக்கும் வர்க்கத்திற்கு எவ்வித பலனையும் தராது. இன்னும் சொல்வதெனில் அது வர்க்க நலன்களுக்கு எதிரானதாகும். அதேநேரம் பெண் தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை இயக்கத்திற்குள் எவ்வாறு இணைப்பது? எனும் கேள்வியும் எழுகிறது.


வெளிநாடுகளில் உள்ள சமூக ஜனநாயகவாதிகளால் உடனடியாக இதற்கான தீர்வினை கண்டடைய முடியவில்லை. அங்கு தொழிலாளர் இயக்கங்களில் பெண் தொழிலாளர்கள் இணைவதற்கான வாசல்கள் திறந்திருந்தபோதும் மிகச்சிலரே அதில் சேர்ந்துள்ளனர். ஏனெனில், தொழிலாளி வர்க்கத்தில் உள்ள பெண் தொழிலாளர்களே சட்ட ரீதியாகவும், சமூக ரீதியாகவும் கடுமையான இழப்புகளைச் சந்திக்கிறார்கள் என்கிற புரிதலை உழைக்கும் வர்க்கம் அங்குப் பெறவில்லை. நூற்றாண்டுகளுக்கு மேலாகப் பெண்களை அடித்துத் துன்புறுத்துவது, அச்சுறுத்துவது என்பது நிகழ்ந்து வருகிறது. எனவே, அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையிலும், அவர்கள் புரிந்துகொள்ளும் மொழியிலும் பேசி, அவர்களை மன ரீதியாகவும் இதய பூர்வமாகவும் இணைக்கும் வகையிலான சிறப்பு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

சுரண்டல் நிறைந்த, உரிமைகளற்ற இந்த உலகில் தொழிலாளர்கள் உடனடியாக சில முன்முயற்சிகளை வரவேற்க மாட்டார்கள். பெண்கள் உழைப்பை விற்பவர் என்கிற முறையில் (பொருளாதார ரீதியாக) சுரண்டப்படுவதோடு, தாய், பெண் என்கிற வகையில் (சமூக ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும்) ஒடுக்கப்படுகிறார்கள். உழைக்கும் மக்களின் சோஷலிஸ்ட் கட்சி இவற்றை  புரிந்து கொண்டுள்ளது. உழைப்பாளி என்ற வகையிலும் தாய், பெண் எனப் பெண்கள் ஒடுக்கப்படும் அனைத்து நிலைகளிலும், மிகத்துணிவோடு அவர்களுக்கு ஆதரவாக சோஷலிஸ்ட் கட்சி நிற்கிறது.


பெண்களுக்கு அரசியல் உரிமைகளை வழங்கு! பெண் தொழிலாளர்களுக்குச் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடு! தாய் மற்றும் குழந்தைகளுக்குக் காப்பீடு வழங்கு! என்பன உள்ளிட்ட பெண்களுக்கு ஆதரவான கோரிக்கைகளை அனைத்து நாடுகளிலும் சோஷலிஸ்டுகள் முன்வைக்கின்றனர். தொழிலாளர்களின் கட்சி மிகத்தெளிவாக இக்கோரிக்கைகளை முன்னெடுத்தது. அதேபோல், பெண் தொழிலாளர்களும் மிகுந்த விருப்பத்துடன் கட்சியில் இணைந்தனர். பெண்களுக்கான தனித்துவமான, அத்தியாவசியமான கோரிக்கைகளை முன்னெடுப்பதில் தொழிலாளர்களின் கட்சியே முதன்மை பாத்திரம் வகிக்கிறது என்றும் வரவேற்றனர். உழைக்கும் மகளிர் தங்களை அமைப்பாக ஒருங்கிணைத்துக் கொண்டதும், அதன்மூலம் வர்க்க உணர்வு பெற்றதுமே, இந்த இலக்குகளைத் தெளிவுபடுத்துவதற்கான மிகச்சிறந்த வாய்ப்பாக அமைந்தது.

சோஷலிச இயக்கத்தின்பால் உழைக்கும் மகளிரை ஈர்க்கும் கடினமான பணி தற்போது நம்முன் உள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் பெண்களுக்கான செயற்குழு மற்றும் தலைமைக் குழுக்கள் உள்ளன. இக்குழுக்கள் அரசியல் உணர்வு பெறாத பெண்கள் மத்தியில் பணியாற்றி, அவர்களை அணி திரட்டி, அவர்கள் மத்தியில் வர்க்க உணர்வை வளர்க்கின்றனர். பெண்களை அதிகம் பாதிக்கும் பிரச்சனைகளையும் அடையாளம் காண்கின்றனர். விலைவாசி உயர்வுக்கு எதிராகவும், குடியிருப்புகளை மேம்படுத்துவதற்கான கோரிக்கைகளை முன்வைத்தும், பெண்களுக்கான அரசியல் உரிமைகளுக்காகவும், பெண் தொழிலாளர்களுக்கான சட்ட பாதுகாப்பிற்காகவும், பாலூட்டும் தாய்மார்களுக்கான உணவு மற்றும் பாதுகாப்பிற்காகவும், குழந்தை இறப்பு மற்றும் விபச்சாரத்திற்கு எதிரான பிரச்சாரம் என்பன உள்ளிட்டவற்றை அவர்கள் முன்னெடுக்கின்றனர்.


கட்சி உறுப்பினர்கள் என்ற வகையில் பொதுவான வர்க்க நலன்களுக்காகப் போராடுவதோடு, தாய், குடும்பத் தலைவி, பெண் என்கிற வகையில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும், அவர்களுக்கான தேவைகளையும், பெண் தொழிலாளர்கள் முன்வைக்கின்றனர். கட்சியும், இக்கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்துப் போராடுகிறது. பொதுவான தொழிலாளர் நல அம்சங்களின் ஒருபகுதியே  உழைக்கும் மகளிரின் இக்கோரிக்கைகளுமாகும். மகளிர் தினத்தன்று தங்களுக்கு மறுக்கப்பட்டுள்ள உரிமைகளை வென்றெடுக்க அணி திரட்டப்பட்ட பெண்கள் போராடுகின்றனர்.

எதற்காகப் பெண் தொழிலாளர்களைத் தனியாக அணிதிரட்ட வேண்டும்? தொழிலாளி வர்க்கத்தைச் சார்ந்த பெண்களுக்கு தனியான துண்டுப் பிரசுரங்கள், கூட்டங்கள் மற்றும் மாநாடுகளை ஏன் நடத்த வேண்டும்? இது இறுதியில் முதலாளித்துவ பெண்ணியவாதமாகவோ, முதலாளித்துவ ஜனநாயகம் முன்வைக்கும் வெறும் வாக்குரிமைக்கான விஷயமாகவோ ஆகிவிடாதா? என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர். வாக்குரிமைக்கான போராட்டத்தை மட்டும் முன்வைக்கும் முதலாளித்துவ ஜனநாயகத்திற்கும், தீவிரமான சோஷலிச பெண் இயக்கத்திற்குமான வித்தியாசத்தை அறியாதவர்கள்தான் இப்படியான கேள்விகளை எழுப்புவர்.


முதலாளித்துவ சமூக அமைப்பில் அவர்களின் தந்தையும், கணவரும் மற்றும் சகோதரர்களும் பெறும் உரிமைகளை தாங்களும் அடைவது மட்டுமே முதலாளித்துவ பெண்ணியவாதிகளின் இலக்காகும். பிறப்பின் அடிப்படையிலோ, செல்வ வளத்தின் அடிப்படையிலோ நிலவும் அனைத்து சலுகைகளையும் ஒழிப்பதே உழைக்கும் மகளிரின் இலக்காகும். தங்களை ஆளுகைக்கு உட்படுத்துவது ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், உழைக்கும் மகளிர் அதை எதிர்ப்பதில் எவ்வித பாகுபாடும் காட்டுவதில்லை. ஏனெனில், ஒரு தொழிலாளி என்கிற வகையில் இந்நிலையை அவர் மிக எளிதில் அடைகிறார்.


எங்கும் எப்போதும் முதலாளித்துவ பெண்ணியவாதிகள் சம உரிமை என்று கோருகின்றனர். உழைக்கும் மகளிரோ, ஆண், பெண் என அனைத்து குடிமக்களுக்கும் சம உரிமை கோருகிறோம். அதே நேரம் குடிமக்கள், தொழிலாளி என்பதாக மட்டுமல்லாமல், பெண்கள் தாய்மார்களாகவும் உள்ளனர் என்பதை நாங்கள் மறப்பதற்கில்லை. ஒரு தாய் என்கிற வகையில் எதிர்காலத்திற்கான தலைமுறையை உருவாக்குபவர்கள் பெண்கள்தான். எனவே, அரசும் சமூகமும் அவர்களையும், அவர்கள் பெற்றெடுக்கும் குழந்தைகளையும், பாதுகாப்பதற்கான சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்கிறோம்.


முதலாளித்துவ பெண்ணியவாதிகள் அரசியல் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கின்றனர். உழைக்கும் மக்களைச் சுரண்டிக் கொழுக்கும் இவ்வுலக அமைப்பிற்குள்ளேயே அவர்கள் வசதியாக செயல்படுவதற்கான சூழலையே அவர்கள் முன்வைக்கும் அரசியல் உரிமைகள் கூறுகின்றன. (உழைக்கும் மக்களைச் சுரண்டிக் கொழுக்கும் இவ்வுலக அமைப்பையே தூக்கியெறிந்துவிட்டு) உழைக்கும் மக்களின் அரசைப் படைக்கும் மிகக் கடினமான பாதையை உள்ளடக்கியதே உழைக்கும் மகளிர் முன்வைக்கும் அரசியல் உரிமையாகும்.


உழைக்கும் மகளிருக்கும் முதலாளித்துவ வாக்குரிமையை மட்டும் கோருவோருக்குமான பாதைகள் வெவ்வேறானவை. வாழ்க்கை அவர்களுக்கிடையில் அவர்களின் இலக்குகளை தீர்மானிப்பதில் ஒரு பெரிய வித்தியாசத்தைக் கொடுத்துள்ளது. எஜமானருக்கும் சேவகனுக்கும் இருப்பது போன்ற ஒரு முரண்பாடு, முதலாளித்துவ பெண்ணுரிமையாளர்களுக்கும், உழைக்கும் மகளிருக்குமிடையே உள்ளது. இவர்களுக்கிடையில் எவ்வித தொடர்போ, சமரசமோ இல்லை. எனவே, உழைக்கும் வர்க்க பெண்களுக்கான சிறப்பு மாநாடு குறித்தோ, தனியான மகளிர் தினம் குறித்தோ, ஆண் தொழிலாளர்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை.
ஒரு பிரகாசமான எதிர்காலத்திற்கான போராட்டத்தில் பங்கேற்கச் செய்வதற்கான உணர்வினை பெண் தொழிலாளர்கள் மத்தியில் உருவாக்குவதே உழைக்கும் வர்க்க பெண்கள் மத்தியில் ஆற்ற வேண்டிய தனித்துவமான பணியாகும். மகளிர் தினம், பெண் தொழிலாளர்கள் மத்தியில் நிதானமாகவும், அதேநேரம் கவனமாகவும், ஒரு சுய விழிப்புணர்வை அவர்களிடம் ஏற்படுத்துகிறது. அது தொழிலாளி வர்க்கத்தை பிரிக்கவில்லை; மாறாக ஒன்றிணைக்கிறது.


உழைக்கும் மகளிர், வர்க்க விடுதலைக்கான போராட்டத்தோடு பெண் விடுதலை என்பதையும் இணைத்து  மகளிர் தினக் கொண்டாட்டத்தில் இணைய வேண்டும்.

தமிழில்: ச. லெனின்

பிப்ரவரி  1913, லெக்சாண்ட்ரா கொலந்தாய், தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள், முன்னேற்றப் பதிப்பகம்,1984 மற்றும் marxist.org (2000)

முதலில் வெளியானது: பிராவ்தா,  No. 40(244), 17 பிப்ரவரி 1913, புனித பீட்டர்ஸ்பர்க்



சோவியத் புரட்சியும் தமிழகமும்

– இரா.சிசுபாலன்

உலக வரலாற்றில் நவம்பர் புரட்சி ஒரு புதிய அத்தியாயத்தைத் துவக்கி வைத்தது. இதற்கு முன் நடைபெற்ற புரட்சிகள் – சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என முழங்கிய பிரெஞ்சு புரட்சி உட்பட – அனைத்துமே ஒரு சுரண்டல் வர்க்கத்தின் ஆட்சியை அகற்றிவிட்டு பிறிதொரு சுரண்டல் வர்க்கத்தின் ஆட்சியை நிலைநாட்டுவனவாகவே அமைந்தன. மகத்தான சோவியத் புரட்சியே முதன்முறையாக சுரண்டல் சமூக அமைப்பை வீழ்த்தி, சுரண்டலற்ற சமுதாயத்தைப் படைத்தது.

நவம்பர் புரட்சி உலகம் முழுவதும் விடுதலைப் போராட்ட சக்திகளுக்கு பெரும் ஆதர்சமாய் விளங்கியது. இந்திய விடுதலையின் உள்ளடக்கம் என்னவாக அமைய வேண்டும் என்ற சாரத்தை சோவியத் புரட்சியில் இருந்தே விடுதலைப் போராட்ட வீரர்கள் பெற்றனர்.

தமிழகத்தில் மகாகவி பாரதி ,சுப்பிரமணியம் சிவா, வ.உ.சிதம்பரம், திரு. வி.க, சக்கரைச் செட்டியார், ம.சிங்காரவேலர், ஜீவானந்தம்,பி.ராமமூர்த்தி உள்ளிட்ட பல விடுதலைப் போராட்ட தலைவர்கள் நவம்பர் புரட்சியால் ஈர்க்கப்பட்டு இந்தியாவிலும் அதே போன்ற மாற்றம் ஏற்பட வேண்டும் எனப் போராடினர். பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அற்ற, சமூக நீதியை நிலைநாட்டும் சுதந்திரமே தமது லட்சியம் என விடுதலை இயக்க வீரர்கள் முழக்கமிட்டனர்.

ரஷ்யப் புரட்சியை உச்சி மீது வைத்துக் கொண்டாடிய மகாகவி பாரதி, ‘ஆஹா வென்று எழுந்தது பார் யுகப் புரட்சி’  எனப் பாடினார். நவம்பர் புரட்சி வெற்றி பெற்ற சில தினங்களில் (29.11.17) சுதேசமித்திரன் பத்திரிகையில்,’ ரஷ்யாவில் சோசிலிஸ்ட் கட்சியார் ஏறக்குறைய தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றி விடக் கூடுமென்று தோன்றுகிறது… இக்கொள்கை மேன்மேலும் பலமடைந்து வருகிறது. ஏற்கனவே ரஷ்யாவில் ஸ்ரீமான் லெனின்… முதலியவர்களின் அதிகாரத்தின் கீழ் ஏற்பட்டிருக்கும் குடியரசில் தேசத்து விளை நிலமும் பிற செல்வங்களும் தேசத்தில் பிறந்த அனைத்து ஜனங்களுக்கும் பொது உடமையாகி விட்டது. ருஷ்யாவிலிருந்து இது (இக்கொள்கை) ஆசியாவிலும் தாண்டி விட்டது’ என எழுதுகிறார்.

ரஷ்யாவில் புரட்சிக்குப் பின் ஏற்பட்ட ஆண் – பெண் சமத்துவம் குறித்து தமது உரைநடையில் மகாகவி  எழுதுகிறார்:

‘சில தினங்களுக்கு முன்பு இங்கிலாந்து தேசத்தில் மான்செஸ்டர் நகரத்தில் பிரசுரம் செய்யப்படும் ‘மான்செஸ்டர் கார்டியன்’ என்ற பத்திரிக்கை நவீன ருசியாவின் விவாக விதிகளைப் பற்றிய உண்மையான விவரங்களை பிரசுரம் செய்திருக்கிறது. அது கூறுவதாவது: ‘தெற்கு சோவியத் (போல்ஷிவிஸ்ட்) ரஷ்யாவில் இதுவரையில் இருந்து வந்த வீண் நிர்பந்தங்கள் இனி விவாக விஷயத்தில் இல்லாதபடி ஒழித்து விடப்படும். அதாவது வேற்றுமைகள் முதலியன விவாகங்களுக்கு தடையாகக் கணிக்கப்பட மாட்டா. இப்போது உள்ள சட்டப்படி ஸ்திரீகளுக்கும் புருஷர்களுக்கும் எவ்விதத்திலும் வேற்றுமை கிடையாது. இருபாலாரும் சமானமாகவே கருதப்படுவர். எல்லாக் குழந்தைகளும் சமூகச் சட்டப்படி பரிபூரண சமத்துவம் உடையனவாம். பாதுகாப்பில்லாத குழந்தைகள் யாருக்கு பிறந்த போதிலும் அவற்றைப் பாதுகாக்க ஒரு தனி இலாகா ஏற்பட்டிருக்கிறது. இந்த சட்டம் ராஜாங்க சாசனப்படி நடைபெறும்  விவாகங்களையே அங்கீகாரம் செய்யும். பெண்கள் 14 வயதுக்குள்ளும், ஆண்கள் 18 வயதுக்குள்ளும் விவாகம் செய்து கொள்ள வேண்டும். இருதிறத்தாரும் மனமொத்தால்தான் விவாகம் செய்யலாம். விவாகம் முடிந்ததும் புருஷன் அல்லது ஸ்திரியின் பெயரைக் குடும்பத்தின் பெயராக வைத்துக் கொள்ளலாம். விவாகத்துக்குப் பிறகு தம்பதிகள் பரஸ்பரம் உதவியாக வாழ கடமைப்பட்டிருக்கிறார்கள். புருஷனேனும், ஸ்திரீயேனும் விவாக பந்தத்தை நீக்கிக் கொள்ள விரும்பினால் அங்ஙனமே நீக்கிக் கொள்ள சட்டம் இடம் கொடுக்கிறது’ என்ற மேற்கோளை முன்வைத்து இந்திய நிலைமைகளில், பெண்கள் அடிமைகளாக வாழ்வதைச் சுட்டிக்காட்டி பெண் விடுதலைக்காக குரல் கொடுக்கிறார்.

1918-19 ம் ஆண்டிலேயே பக்கிங்ஹாம் அண்ட் கர்னாடிக் (பி அண்ட் சி) மில் தொழிலாளர் சங்கத்தை உருவாக்கிய முன்னோடிகளில் ஒருவர் திரு.வி.க., அவர் சென்னையில் தொழிலாளி வர்க்கப் போராட்டங்களுக்கு தலைமை ஏற்றார். அப்போராட்டங்களில் உரையாற்றுகையில்,

‘பொருளாதார உரிமையற்ற வெறும் அரசியல் உரிமை என்பது பணக்காரர் ஆட்சியாய் சாதி, மதப் பூசல்களைப் பெருக்கி விரிப்பதாகும். நமது நாட்டுக்கு அரசியல் விடுதலையும் வேண்டும்;அதனூடே பொருளாதார விடுதலையும் விரவி நிற்றல் வேண்டும். பொருளாதார விடுதலை என்பது அன்னிய முதலாளிகளிடமிருந்து மாத்திரமல்ல, உள்நாட்டு முதலாளிகளின் பிடியிலிருந்தும் விடுதலை பெற்று சமதர்ம ஆட்சி மலர வேண்டும்’ என்றார்.

 ‘திரு.வி.க., சமூகத் துறையில் காந்தியத்தையும், மார்க்சியத்தையும் இயைவிப்பதற்கு முயன்று வந்தார். காந்தியத்தின் அடிப்படையான அகிம்சையும், மார்க்சியத்தின் லட்சியமான பொதுவுடமைக் கொள்கையும் திருவிக – வைக்  கவர்ந்தன. எனவே அன்பு நெறியைக் கடைபிடித்து பொதுவுடமைச் சமுதாயத்தை அமைக்கும் வகையைப் பற்றி இடைவிடாது சிந்தித்தும், பேசியும், எழுதியும் வந்தார்’ என நவசக்தியில் கல்கி எழுதினார்.

இந்திய விடுதலை இயக்கத்துடன் தொழிலாளி வர்க்கத்தின் பாத்திரத்தை இணைக்கும் நோக்குடன் வ.உ.சிதம்பரமும்,சுப்பிரமணியம் சிவாவும் செயல்பட்டனர். தூத்துக்குடி கோரல் மில் தொழிலாளர் போராட்டத்திற்கு அவர்கள் தலைமையேற்றனர். போராட்டத்தில் வ.உ.சி., க்கு இரட்டை ஆயுள் தண்டனையும், சிவாவுக்கு பத்தாண்டு கடுங்காவல் தண்டனையும் கிடைத்தது. வ.உ.சி., தொடங்கிய சுதேசிக் கப்பல் நிறுவனம் ஆங்கிலேயரின் வணிகத்தை பெரிதும் பாதிக்கும் என்பதால் ஆங்கிலேயர்கள் வ.உ.சி., மீது கடும் ஆத்திரம் கொண்டனர்.

1920 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற ட்ராம்வே தொழிலாளர் வேலை நிறுத்தம், மதுரை தொழிலாளர் வேலை நிறுத்தம் ஆகிய தொழிலாளி வர்க்கப் போராட்டங்களில் சுப்பிரமணியம் சிவா தீவிரமாகப் பங்கேற்றார். கம்யூனிஸ்ட் தலைவர் சிங்காரவேலரோடு மிக நெருங்கிய நட்பு பாராட்டினார்.

1920 ஆம் ஆண்டு நடைபெற்ற அகில இந்திய தொழிற்சங்கக் காங்கிரசுக்கு சென்னை சோசலிஸ்டுகள் சார்பாக சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் ஒரு தந்தி அனுப்பினார். அதில் அரசியல், சமூக, பொருளாதார இலட்சியங்களை தொடருவதே தேசிய சோசலிசத்தின் பிரதான ஸ்வரம்… தனது சமுதாயப் புணரமைப்பு என்ற இலட்சியத்துக்கு பொருந்த அரைகுறை சீர்திருத்தங்களோடு சமாதானம் ஆகிப்போகும் முயற்சிகளால் மட்டுமே எந்த நன்மையும் விளையாது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதே ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் இந்தியாவுக்கு முழு விடுதலை என்ற தீர்மானத்தை கம்யூனிஸ்டான ஹஸ்ரத் மோகானி முன்மொழிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்காரவேலர்  தொழிலாளர்- விவசாயிகள்  கட்சி ஒன்றை நிறுவினார். அதன் சார்பில் 1923 ஆம் ஆண்டு சென்னை கடற்கரையில் இந்தியாவிலேயே முதன் முறையாக  மே தினத்தைக் கொண்டாடினார். அந்த மே தின பொதுக்கூட்டத்தில் சுப்பிரமணியம் சிவா வீர உரையாற்றினார்.

ஆங்கிலேயருக்குச் சொந்தமான ‘மெட்ராஸ் மெயில்’ என்ற பத்திரிகை ‘தேசிய இயக்கத்தில்  போல்ஷெவிக்குகளின் தங்கம்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டு இருந்தது. அதை மறுத்து, ‘எங்கே இருக்கிறது போல்ஷெவிக்குகளின்  தங்கம்’ ?என்ற தலைப்பில் 1922 ஜூன் மாதம் சிங்காரவேலர் ஒரு கட்டுரை எழுதினார். அதில், ‘அப்படியே அதை வாங்கி மக்களின் நன்மைக்கு உபயோகப்படுத்துவதில்தான் என்ன தவறு ?என்றும் கேட்டிருந்தார்.

சென்னை  மாமன்ற உறுப்பினராக சிங்காரவேலர் செயல்பட்ட காலத்தில்தான் அவரது முன் முயற்சியில் தமிழகத்தில் முதன்முறையாக பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சாதிமுறையை, வருணாசிரம தருமத்தை இந்தியப் புரட்சியின் அடிப்படையான பிரச்சனைகளில் ஒன்றாகவே சிங்காரவேலர் பார்த்தார். 1931ஆம் ஆண்டு விருதுநகரில் நடைபெற்ற மூன்றாவது சுயமரியாதை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை வரவேற்று 30.8.1931  தேதியிட்ட குடியரசு பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் காங்கிரஸ் கட்சியைப் பின்வருமாறு சாடினார்:

 ‘ஜாதி என்பது நமது இந்திய தேசத்தில் மட்டும் பிறந்த ஒரு ஸ்தாபனம்.இதை ஒழிக்காமல் சகோதரத்துவம் வெறும் சொல்லே. காங்கிரஸ்காரர்கள் ஆயினும் இதை ஒழிக்காத வரை இவர்கள் நடிப்பெல்லாம் வேஷம் எனக் கொள்ளல் வேண்டும். தீண்டாமை ஒழிய வேண்டும் என சொல்லிக்கொண்டு, பூணூலையும், சந்தியா வந்தனத்தையும் வைத்துக்கொண்டிருத்தல் வஞ்சனை அல்லாது வேறில்லை.இந்தக் கபட நாடக சூஸ்திரம் போகாமல் காங்கிரஸ்காரர்கள் பொதுஜனத் தலைவர்கள் என்று சொல்லிக் கொள்வது பெரும் பித்தலாட்டம். இதனை சுயமரியாதையோர் வற்புறுத்துவது உண்மையே. தீண்டாமையை விட்டவர்கள் ஏன் ஆச்சாரியார்கள் எனவும், ஐயர், ஐயங்கார் எனவும் அழைக்க சம்மதிக்க வேண்டும்?ஜாதியை உண்மையில் ஒழித்தார்கள் என்பார்களாயின் ஜப்பான் தேசத்தில் சாமுரே பிரபுக்கள் தங்கள் ஜாதியை பகிரங்கமாக ஒழித்தெறிந்த விதமாக பூணூலையும், அர்த்தமில்லா வர்ணாசிரமங்களையும் ஏன் ஒழித்தெறியல் ஆகாது? இதைச் செய்யும் வரை தீண்டாமை நீங்க வேண்டும் என்பது மதி மயக்கே’ என்றார்.

சுயமரியாதைக்காரர்களின் கருத்தோட்டத்தில் உள்ள சிக்கல்களையும் சுட்டிக்காட்டிய அவர்,’அறிவுமிக்க ஆதாரமாகிய விஷயங்களைக் குறித்து நமது சுயமரியாதைக்காரர் எவ்வளவு ஊக்கத்துடன் உழைத்து வருகின்றாரோ, அவ்வளவு மனவிசாலத்துடன் சீல ஆசாரம், பொருளாதாரம் முதலிய முக்கிய விஷயங்கள் குறித்து பாடுபட வேண்டுமாய் நமது தோழர்களைக் வேண்டிக் கொள்கிறோம். உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்றதையும் கவனித்தல் வேண்டும். அறிவை அந்தகார இருளில் இருந்து நீக்குவதைப்போல், உயிரையும் தாங்கொணா பசிப்பிணியிலிருந்து காக்க வேண்டும். உணவு இன்றி அறிவு விளங்காது. ஆகையால் உணவே உயிருக்கும் அதில் தோன்றும் அறிவுக்கும் ஆதாரம். ஆதலின் 35 கோடி மக்கள்  இனிது உண்டு, உடுத்தி, வாழ்வதற்கு வேண்டிய ஆதாரங்களை சுயமரியாதைப் பெரியோர் கண்டெடுத்து அளிப்பார்கள் என்று நம்புகிறோம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

தந்தை பெரியார் சோவியத் யூனியன் உள்ளிட்ட பல மேலை நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தாயகம் திரும்பி சோசலிச பிரச்சாரத்தை வலுவாக முன்னெடுத்தார். சுயமரியாதை இயக்கத்தை சமுதாய சீர்திருத்த இயக்கமாக மட்டுமின்றி அரசியல் குறிக்கோள்களைக் கொண்ட ஒரு இயக்கமாக மாற்ற வேண்டும் என்ற விருப்பம் அவர்களிடத்தில் ஏற்பட்டது அதைத் தொடர்ந்து தந்தை பெரியார் சிங்காரவேலரைக் கலந்து இயக்கத்தின் நோக்கத்தையும் அதற்கான திட்டத்தையும் தயாரித்தார். ஈரோட்டில் ஈவெரா வீட்டில் 1932 டிசம்பர் 28 ,29 தேதிகளில் நடைபெற்ற கூட்டத்தில் தென்னிந்திய சம தர்மக் கட்சி என்ற ஒரு பிரிவை சுயமரியாதை இயக்கத்தில் அமைத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. தந்தை பெரியார், சிங்காரவேலர், ஜீவா ஆகியோர் ஈரோட்டு திட்டத்தை விளக்கி தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டனர். தமிழகத்தில் 154க்கும் மேற்பட்ட கிளைகள் அமைக்கப்பட்டன. 1933 ஆம் ஆண்டு குடியரசு பத்திரிகையின் ஒவ்வொரு இதழிலும் ரஷ்யாவின் சாதனைகளைப் பற்றிய கட்டுரைகள் வெளியிடப்பட்டன. மதத்தைப் பற்றி லெனின் எழுதிய கட்டுரைகள் தொடராக வெளிவந்தன. பகத்சிங் எழுதிய ‘நான் ஏன் நாத்திகன் ஆனேன்?’என்ற நூலை 1934 இல் அரசாங்கம் தடை செய்தது. அதனைத் தமிழில்

ப. ஜீவானந்தம் மொழிபெயர்த்தார். அது ஈவெரா- வின் சகோதரர் ஈ வெ கிருஷ்ணசாமி அவர்களுடைய உண்மை விளக்கம் அச்சகத்தில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. இதனால் அரசாங்கம் ஜீவாவையும், ஈ வெ கிருஷ்ணசாமியையும் கைது செய்தது. கம்யூனிசக் கருத்துக்கள் பரவுவதைத் தடுப்பதில் ஆங்கிலேய அரசு குறியாக இருந்தது.

புதுச்சேரியில் பிரெஞ்சுக் காலனி ஆதிக்கத்தை வீழ்த்தும் போராட்டத்தில் முன்னணியில் நின்ற கம்யூனிஸ்ட் தலைவர் வ.சுப்பையாவின் தலைமையில் 1935ஆம் ஆண்டு தொழிலாளர் வேலை நிறுத்தம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் பின்வரும் கோரிக்கைகளை முன் வைத்தனர்:

  • நாள் ஒன்றுக்கு பத்து மணி நேர வேலை
  • தினக்கூலி 3 அணாவிலிருந்து 6 அணா
  • பெண்களுக்கு இரவு வேலை கூடாது
  • குழந்தைத் தொழிலாளர்களை வேலையில் பங்கேற்க வைக்கக் கூடாது
  • பெண் தொழிலாளியின் மகப்பேறு காலத்தில் சம்பளத்தோடு கூடிய ஒரு மாத விடுமுறை
  • பிள்ளை பேறுக்காக அரை மாதச் சம்பளம்.

84 நாட்களுக்கு போராட்டம் தொடர்ந்தது. தொழிலாளர்களின் விடாப்பிடியான போராட்டத்தின் விளைவாக கோரிக்கைகள் ஏற்கப்பட்டன. 1936 ஜூலை 23 அன்று புதுவைத் தொழிலாளர் வர்க்கம் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வீரம் செறிந்த போராட்டத்தில் ஈடுபட்டது. இப்போராட்டத்தின் விளைவாக ஆசியாவிலேயே முதன்முறையாக 8 மணி நேர வேலையை புதுவைத் தொழிலாளர் சங்கம் உறுதிப்படுத்தியது.

பொருளாதார சமத்துவம் மட்டும் இல்லாமல் சமூக சமத்துவத்துக்கான போராட்டங்களிலும் கம்யூனிஸ்டுகள் முன்னோடிகளாக விளங்கினர். 1930 களில் காங்கிரசும் காந்தியும் விடுத்த அழைப்பை ஏற்று பி. இராமமூர்த்தி அரிசன சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்கு அருகே வசித்து வந்த தாழ்த்தப்பட்ட மக்கள் 200 பேருக்கு சில மந்திரங்களைச் சொல்லிக் கொடுத்து,தோள்பட்டையில் சங்கு சக்கர அடையாளமிட்டு அக் கோயிலின் தர்மகர்த்தா தேர்தலில் வாக்களிக்க ஏற்பாடுகளைச் செய்தார். கோயில் நிர்வாகத்தினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நீதிமன்றம் வரை சென்று அம்மக்களின் வாக்குரிமையை நிலைநாட்டினார்.

நவம்பர் புரட்சியும், சோவியத் இலக்கியங்களும், சோவியத் மக்களும் அரசும் சாதித்த சாதனைகள் தமிழக இலக்கியப் பரப்பில் பெரும் செல்வாக்கு செலுத்தின. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை எழுதுகிறார்: ‘இரஷ்ய ஆட்சி பொதுமக்கள் ஆட்சி. பொதுவுடமை ஆட்சி. அதனைச் சர்வாதிகாரம் என்பது தவறு. இரஷ்யர்கள் கூட்டாக உழைக்கிறார்கள். உழைப்பின் பயனை அனுபவிக்கிறார்கள். தம்மைத் தாமே ஆண்டு கொள்கிறார்கள். அதற்கேற்ற சமூக அமைப்பை அமைத்து அதன் வழியிலே செல்கின்றார்கள். அங்கே இரப்பாரும் இல்லை. புரப்பாரும் இல்லை. ஆண்டியும் இல்லை. ஆண்டையும் இல்லை. வயிற்றை எக்கி திரிவோரையும், வயிற்றை உப்ப வைத்துத் திரிவோரையும் காண முடியாது. தன்னலம் பேணாமல் பொதுநலம் பேணி உயர்கின்றது நாடு. இப்படி ஒரு நாடு இருந்தால் அதுவே ஒரு பூகோள சுவர்க்கம் என்பதற்கு ஐயமென்ன ?’என்கிறார்.

நவம்பர் புரட்சி ஏற்படுத்திய தாக்கம் தமிழக மண்ணில் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வை தீவிரப்படுத்தியதுடன், எதிர்கால இந்தியா எத்தகைய திசைவழியில் பயணிக்க வேண்டும் என்பதற்கான பார்வையையும் அளிப்பதாக அமைந்தது. புதியதோர் உலகம் காண போராடும் அனைவருக்கும் நவம்பர் புரட்சியே தொடர்ந்து உத்வேகம் அளிக்கும்.

சோவியத் ஒன்றியத்தின் சோசலிச பொருளாதார சாதனைகள்

ஸ்டீஃபன் கோவன்ஸ்

சிறப்புமிகு சோவியத் ஒன்றியம்

முதலாளித்துவத்துடன் ஒப்பிடுகையில், சோவியத் ஒன்றியத்தின் பொதுவுடைமை அடிப்படையிலான திட்டமிட்ட பொருளாதாரம், குறிப்பிடத்தக்க வகையில் சிறப்பாகச் செயல்பட்டது.

பொதுவுடைமை அடிப்படையிலான திட்டமிட்ட பொருளாதாரம் எதையெல்லாம் உருவாக்கமுடியும் என்பதற்கு, சோவியத் ஒன்றியம் ஒரு நிலையான உதாரணமாகும். முழு நேர வேலைவாய்ப்பு, உத்தரவாதப்படுத்தப்பட்ட ஓய்வூதியம், ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு, வேலை நேர உச்சவரம்பு, இலவச மருத்துவம் மற்றும் கல்வி (உயர்கல்வி உட்பட), மானியத்துடன் கூடிய விடுமுறைகள், கட்டுப்படியாகும் விலையில் வீடுகள், குறைவான குழந்தை பராமரிப்புச் செலவுகள், குறைந்த செலவில் பொதுப் போக்குவரத்து மற்றும் ஏறத்தாழ சமமான வருமானம். நம்மில் பெரும்பாலானோர் இந்த வசதிகளை விரும்புகிறோம். ஆயினும், இவற்றை நிரந்தரமாக அடைய முடியுமா? சோவியத் ஒன்றியம் இந்த வசதிகளை உருவாக்கியது.

சோவியத் ஒன்றியத்தில் பொதுவுடைமை அடிப்படையிலான திட்டமிட்ட பொருளாதாரம் நடைமுறையிலிருந்தபோது, 1928 முதல் 1989 வரை, போர்க்காலம் தவிர பிற சமயங்களில், நம்பிக்கையளிக்கும் விதத்தில் பொருளாதாரம் ஆண்டுதோறும் வளர்ச்சி அடைந்தது. தெளிவாகக் கூறுவதென்றால், முதலாளித்துவப் பொருளாதாரங்கள் ஒவ்வொரு சில ஆண்டுகளுக்கு ஒருமுறை பின்னடைவை தவறாது சந்தித்து, பெரிய மந்தநிலையில் மூழ்கியிருந்த போதும், சோவியத் பொருளாதாரம் இடையறாது வளர்ந்து, அனைவருக்கும் எப்பொழுதும் வேலைவாய்ப்புகளை வழங்கியது. சோவியத் ஒன்றியத்தின், பொதுவுடைமை அடிப்படையிலான திட்டமிட்ட பொருளாதாரமானது, செயல்பட முடியாதது என்ற முதலாளித்துவ பிரச்சாரத்தை பொய்ப்பித்து, குறிப்பிடத்தக்க வெற்றியை ஈட்டியது. மாறாக, பெருவாரியான மக்களுக்கு வேலையின்மை மற்றும் உச்சக்கட்ட வறுமையை அளித்த, பொருளாதார மந்தம் மற்றும் பின்னடைவுகளை வழக்கமாகக் கொண்டிருந்த, முதலாளித்துவ பொருளாதாரம்தான் செயல்பட முடியாததாக உள்ளது. இன்று, எல்லாவற்றிற்கும் மேலாக, முதலாளித்துவம் சுருங்கி, சுணக்கமடைந்து, எண்ணற்ற மக்களை செயலற்ற நிலைக்குக் கட்டாயமாகத் தள்ளியுள்ளது என்பது தெளிவு.

சோவியத் வீழ்ச்சியில் ஏகாதிபத்தியத்தின் பங்கு

உண்மையில் சோவியத் ஒன்றியத்தின் அழிவுக்கு வழிவகுத்தவை எவையெனில், சோவியத்தின் பொருளாதாரத்தை அழிப்பதற்கு திட்டமிட்டவகையில் தொடர்ந்த மேற்குலகின் முயற்சிகள்; ரீகன் நிர்வாகத்தின் கூர்மைப்படுத்தப்பட்ட பனிப்போர்; இந்த இக்கட்டான சூழலில் இருந்து வெளிவர ஒரு வழி கண்டுபிடிக்கத் தெரியாத சோவியத் தலைமையின் இயலாமை ஆகியவையே ஆகும்.

1980களில் பனிப்போரின் பாதிப்புகள் சோவியத் ஒன்றியத்தில் தெரிய ஆரம்பித்தன. தனது தத்துவார்த்த எதிரியான அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு எதிராக, சோவியத் மேற்கொண்ட இராணுவப் போட்டி பலவகையிலும் அதன் பொருளாதார வளர்ச்சியைப் பாதித்தது. பொருளாதாரம் வளர்ந்து கொண்டிருந்த போதிலும், கடந்த காலத்தைவிட மெதுவான வேகத்திலேயே வளர்ச்சி இருந்தது.

முதலாவதாக, ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான அதன் சிறந்த வளங்கள் இராணுவத்தால் ஏகபோகமாக்கிக் கொள்ளப்பட்டன. குடிமக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கான சிறந்த விஞ்ஞானிகள், பொறியியலாளர்கள் மற்றும் இயந்திரக் கருவிகளின் பயன்பாடு, இராணுவத்திற்கு மட்டுமானதாக ஆக்கப்பட்டது.

இரண்டாவதாக, சோவியத்தின் பொருளாதாரத்தை முடக்குவதற்காக ரீகன் நிர்வாகத்தால் வெளிப்படையாகவே ஆயுதப் போட்டி புதுப்பிக்கப்பட்டது. இதற்கு ஈடுகொடுக்க, சோவியத்தின் இராணுவச் செலவினங்கள் உயர்த்தப்பட்டன. அமெரிக்க ஆக்கிரமிப்பை தடுப்பதற்காக, சோவியத் ஒன்றியம் தனது தாங்கும் சக்தியை மீறி, அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மிகப்பெரிய சதவிகிதத்தை, இராணுவத்திற்காக செலவழித்தது.  அதே நேரத்தில், அமெரிக்கர்களும் இராணுவத்திற்காக ஒரு பெரும் தொகையை செலவழித்தபோதிலும், அமெரிக்காவின் மிகப்பெரிய பொருளாதாரத்தின் மொத்த தேசிய வருமானத்தில் அது சமாளிக்கக்கூடிய அளவுக்கே இருந்தது.

மூன்றாவதாக, முக்கியமான மூலப் பொருட்களுக்காக, சோவியத் ஒன்றியம் வெளிநாட்டு இறக்குமதியை நம்பியிருந்தது. தன் நாட்டை மண்டியிடச் செய்வதற்காக மற்ற நாடுகள் விநியோகத்தைத் தடை செய்யும் அபாயங்களிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள, சோவியத் ஒன்றியம் தனது பரந்துபட்ட சொந்த எல்லைக்குள்ளிருந்து மூலப்பொருட்களை அகழ்ந்து எடுக்க முடிவு செய்தது. இது, நாட்டைத் தன்னிறைவு அடையச்செய்த அதே வேளையில், உள்நாட்டு ஆதாரங்களை மட்டுமே நம்பியிருக்கச் செய்தது. எளிதில் கிடைத்துவந்த வளங்கள் தீர்ந்துவிட்டதால், கடினமான வழிகளில், புதியதாக மூலப் பொருட்களைத் தேடவேண்டிய தேவை ஏற்பட்டது. இது உற்பத்தி செலவை அதிகரித்தது.

நான்காவதாக, நாட்டின் பாதுகாப்பிற்காக சோவியத்துகள், கிழக்கு ஐரோப்பாவுடனும் மூன்றாம் உலக நாடுகளுடனும் நட்பை நாடினர். ஆனால் நட்பு பாராட்டிய நாடுகளைவிட சோவியத் ஒன்றியம் பொருளாதார பலத்துடன் இருந்தது. எனவே, அது தன்னுடன் இணைந்த சோஷலிச நாடுகளையும், மேற்கத்திய சக்திகளின் ஆக்கிரமிப்பிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ளப் போராடிய பிற நாடுகளின் விடுதலை இயக்கங்களையும் பாதுகாக்க, அந்த நாடுகளுக்கு அச்சாணியாகவும், அவற்றிற்குப் பொருளாதார நலன்களை வழங்கக் கூடியதாகவும் மாறியது. எனவே, அதன் கூட்டாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. ஆனால், வாஷிங்டன், கம்யூனிச எதிர்ப்புக் கிளர்ச்சிகளுக்கு ஆதரவாக சூழ்ச்சி செய்து, ஆயுதம் மற்றும் நிதி உதவி செய்தது. இதனால் மாஸ்கோ தன் கூட்டாளிகளுக்காகச் செய்யும் செலவுகள் அதிகரித்தன. இதன் காரணமாக, சோவியத் ஒன்றியத்தின் பாதுகாப்பு செலவுகள் தொடர்ந்து அதிகரித்து, அதன் பொருளாதார வளர்ச்சியை தீவிரமாக பாதித்தன. 

நாட்டின் கடைசித் தலைவரான மைக்கேல் கோர்பச்சேவ் நட்பு நாடுகளிடமிருந்து இராணுவ தளங்களைத் திரும்பப்பெற்று, பனிப்போரை முடிவுக்குக் கொண்டுவந்து, அமெரிக்காவுடன் ஒத்துழைக்க உறுதியளித்தார். பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, மேற்கத்திய பாணி சமூக ஜனநாயகத்திற்கு சோவியத் ஒன்றியத்தை மாற்ற முனைந்தார். ஆனால், அவரது பொருளாதார மற்றும் அயலுறவு சரணாகதிக் கொள்கைகள், பொருளாதார தேக்கத்திலிருந்து நாட்டை மீட்பதற்கு பதிலாக பேரழிவிற்கே வழிவகுத்தன. சோவியத் ஒன்றியத்தின் பாதுகாப்புக் கரங்கள் விலக்கப்பட்ட நிலையில், அமெரிக்கா, ஈராக்கில் தொடங்கி யூகோஸ்லாவியா, ஆப்கானிஸ்தான், மீண்டும் ஈராக், பின் லிபியா என சிறியதும் பெரியதுமாக உலகம் முழுவதும் தொடர்ச்சியான ஆக்கிரமிப்புகளில் இறங்கியது. கோர்பச்சேவ் பொருளாதாரத் திட்டமிடலைக் கைவிட்டு, சந்தைப் பொருளாதாரத்தை செயல்படுத்துவதற்கான வழியை அகலத் திறந்துவிட்டதானது, நாட்டை நெருக்கடிக்குள் தள்ளியது. ஐந்து ஆண்டுகளுக்குள் ரஷ்யாவில், வேலையின்மை, வீடில்லாமை, சுரண்டல், பொருளாதார பாதுகாப்பின்மை ஆகியவை வன்மத்துடன் மீண்டும் குடியேறின.

1991 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று, சோவியத் ஒன்றியம் என்பது அதிகாரப்பூர்வமாக இல்லாது ஒழிந்த நிலையில், கோர்பச்சேவ், “நாம் ஒரு புதிய உலகில் வாழ்கிறோம். பனிப்போர் முடிவுக்கு வந்துவிட்டது. நமது பொருளாதாரம் மற்றும் சமூக விழுமியங்களைச் சிதைத்த இராணுவமயமாக்கல் மற்றும் வெறித்தனமான ஆயுதப் போட்டி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. உலகப்போரின் அச்சுறுத்தல் நீக்கப்பட்டது” என்று கூறினார். (ராபர்ட்ஸ், 1999). இதனால் மேற்குலகில் கோர்பச்சேவின் புகழ் பரவியது. ஆனால் ரஷ்யர்கள் சோர்வுற்றிருந்தனர். முதலாளித்துவத்திற்கு மாற்றாக, உலகில் முதன்முதலில் உருவான முயற்சி ஏன் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது என்பதற்கான உண்மையான காரணங்கள் கோர்பச்சேவின் வார்த்தைகளுக்குள் அடங்கியிருந்தன. சோவியத் பொருளாதார அமைப்பு செயல்படமுடியாது என நிரூபிக்கப்பட்டதால் அல்ல. உண்மையில் அது முதலாளித்துவத்தை விட சிறப்பாகச் செயல்பட்டது. இரண்டாம் உலகப்போரின் முடிவில் தொடங்கி, ரீகன் ஆட்சிக்காலத்தில் வீரியத்துடன் வளர்ந்த ஆயுதப் போட்டியால், சோவியத் ஒன்றியத்தின் பொருளாதாரத்தை வீழ்த்த முயன்ற பகையாளியான அமெரிக்காவிற்கு, சோவியத்தின் தலைமை அடிபணிந்ததே அதன் அழிவுக்கான உண்மையான காரணம். நாட்டின் 99 சதவீதம் பேருக்கு செழிப்பை அளித்த சோவியத் பொருளாதாரம் போற்றி வளர்க்கப்பட்டிருந்தால், மேல்மட்டத்தில் உள்ள ஒரு சதவீதம் பேருக்கு மட்டுமே பயன்தரும் தனியார்மய சந்தைப் பொருளாதாரங்களை அது மதிப்பிழக்கச் செய்திருக்கும். சுதந்திரச் சந்தைப் பொருளாதாரத்தில், மேல் மட்டத்தில் இருக்கும் ஒரு சதவீதத்தினரின் தனி உரிமையாக சொத்துக் குவிப்பு, சமூகப் பாதுகாப்பு, சொகுசு வாழ்க்கை அமைய, பெருவாரியான மக்களின் வேலையின்மை, வறுமை, பசி, கீழ்மை மற்றும் பொருளாதார பாதுகாப்பின்மை ஆகியவை இன்றியமையாதவையாக உள்ளன.

தோழர் ஸ்டாலின் ஒலித்த எச்சரிக்கை

பொதுவுடைமை அடிப்படையில் திட்டமிட்ட பொருளாதாரம், ஸ்டாலினின் வழிகாட்டுதலின் கீழ் கட்டியெழுப்பப்பட்டது. அவர் ஒருமுறை தீர்க்க தரிசனத்தோடு, “சோவியத் குடியரசைத் தகர்ப்பதில் முதலாளித்துவம் வெற்றி பெற்றால், அனைத்து முதலாளித்துவ மற்றும் காலனி நாடுகளிலும் ஓர் இருண்ட சகாப்தம் அரங்கேறும். ஒடுக்கப்பட்ட மக்களின், தொழிலாளி வர்க்கத்தின் குரல்வளை நெறிக்கப்படும். கம்யூனிசத்தால் அடைந்த முன்னேற்றங்களை இழக்க நேரிடும்”, என எச்சரித்தார். (ஸ்டாலின், 1954). “நம் நாடு தாக்குதலை எதிர்கொள்ளத் தயாராவதற்கு 10 ஆண்டுகள் மட்டுமே உள்ளன”‘ என நாஜிப் படையெடுப்பு ‘ஆபரேஷன் பார்பரோசா’விற்குப் பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஸ்டாலின் துல்லியமாகக் கூறியதுபோலவே, முதலாளித்துவத்தினால் வீழ்த்தப்படுவதன் பின்விளைவுகளையும் துல்லியமாகக் கணித்தார்.

உண்மையாகவே நாம் தற்போது இருண்ட சகாப்தத்தில் உள்ளோம். இராணுவ வலிமையைப் பயன்படுத்தி, வாஷிங்டனுக்கு தன்னுடைய பிற்போக்குத்தனமான நிகழ்ச்சி நிரலைத் தொடர பரப்பளவு அதிகரித்துள்ளது. கியூபாவும் வடகொரியாவும் பொதுவுடைமையை மையப்படுத்தி திட்டமிடுகின்றன. ஆனால் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் பொருளாதாரத் தடைகள், தந்திரமாகத் தனிமைப்படுத்தல் மற்றும் இராணுவ ரீதியான துன்புறுத்தல்கள் (சோவியத் பொருளாதாரத்திற்கு செய்ததுபோலவே) ஆகியவற்றைப் பயன்படுத்தி அப்பொருளாதாரங்களை நாசம் செய்துவருகின்றன. இதன் மோசமான விளைவுகளை, பொதுவுடைமை அடிப்படையிலான திட்டமிடலின் குறைபாடுகள் என போலியாகக் குற்றம் சுமத்திவிடலாம். உண்மையில் அவை முறையாகத் திட்டமிடப்பட்டு, இரகசியமாக நடத்தப்படும் போரின் விளைவுகளாகும். சோவியத் பொருளாதார அமைப்பு தோல்வியுற்றது என்று திட்டமிட்டு பரப்பப்பட்டதானது, கம்யூனிஸ்ட் ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் உட்பட பலரையும், பொதுவுடைமை அடிப்படையிலான திட்டமிடல் அமைப்பு உள்ளார்ந்த குறைபாடுடையது என்ற முடிவுக்கு இட்டுச்சென்றது. கம்யூனிஸ்டுகள், சமூக ஜனநாயகக் கட்சிகளுக்குத் தாவினர்; அல்லது தீவிர அரசியலை முற்றிலுமாகக் கைவிட்டனர். சமூக ஜனநாயகக் கட்சிகளோ வலதுசாரிகளாக மாறி, சீர்திருத்தங்களைத் தவிர்த்து, புதிய தாராளமயத்தைத் தழுவின. எனவே, மேற்கத்திய அரசுகளுக்கு, பொதுவுடைமைக்கான கோரிக்கைகளை மழுங்கடிக்கவேண்டிய அவசியம் இல்லாது போயிற்று. அனைவருக்கும் வேலைவாய்ப்பு என்ற இலக்கை முழுவதுமாகக் கைவிட்டு, இனி பொது சேவைகள் மக்களுக்குக் கட்டுப்படியாகும் விலையில் கிடைக்காது என்று அறிவித்தன (கோட்ஸ், 2001). அதே நேரத்தில் முன்னாள் சோவியத் ஒன்றியம் மற்றும் கிழக்கு ஐரோப்பிய கம்யூனிஸ்ட் நாடுகளில் கொண்டுவரப்பட்ட தனியார்மயமானது கூலித் தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்தது. அது, முன்னரே கணித்தபடி, ஊதிய மட்டத்தில் உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தியது. சோவியத் ஒன்றியம் தோல்வியைத் தழுவிய நாள், மூலதனத்திற்கு ஒரு நல்ல விடியல் நாளாகும். ஆனால் மற்றவருக்கோ, ஸ்டாலின் எச்சரித்தபடி, அது குரல்வளையை நெறித்த நாளாகும்.

நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் முதலாளித்துவம்

உலகின் மிகப்பெரிய முதலாளித்துவப் பொருளாதாரங்கள் 2008லிருந்து நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன. சில, சிக்கன நடவடிக்கை எனும் மரணச் சுழலில் அகப்பட்டுள்ளன. இன்னும் சில, மெல்ல மெல்ல வளர்ந்துவரும் மந்த நிலையின் பிடியில் சிக்குண்டுள்ளன. சிக்கனம் என்ற பெயரில் பொது சேவைகளை அகற்றுவது என்பது, பரிந்துரைக்கப்பட்ட போலியான தீர்வு. உண்மையான தீர்வு கண்ணுக்கெட்டிய தூரம்வரை தெரியவில்லை. அதிகாரப்பூர்வ அறிக்கைகளின்படி, ஐரோப்பாவின் சில பகுதிகளில் வேலைவாய்ப்பின்மை இரட்டை இலக்கத்தைத் தொட்டுள்ளது. இளைஞர்களின் வேலையின்மை இன்னும் அதிகமாக உள்ளது. ஒரு கோடியே 10 லட்சம் மக்கள் வசிக்கும் கிரீஸில் 37 இலட்சம் பேர் மட்டுமே வேலை செய்கிறார்கள் (வாக்கர் மற்றும் ககௌனகி 2012).

மேலும், அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் சோவியத் ஒன்றியத்தை சிதைக்க, திட்டமிட்டு செயல்பட்டதுபோல், இந்த நெருக்கடியும் ஏதோ வெளிப்புற சக்திகளால் திட்டமிடப்பட்டு முதலாளித்துவத்திற்கு அழிவைக் கொண்டு வருவதாகக் கூற முகாந்திரம் இல்லை. அப்படி யாரும் திட்டமிட்டு அதை மூச்சுத்திணற வைக்காத போதிலும்கூட, முதலாளித்துவம் செயல்படவில்லை என்பதை சிலர் சுட்டிக்காட்டுகின்றனர். ஆனால் இதற்கு நேர்மாறாக, தொடங்கப்பட்டதிலிருந்தே குறிவைக்கப்பட்டு பழிக்கு இலக்கான சோவியத் ஒன்றியத்தின் திட்டமிட்ட பொருளாதாரம், இரண்டாம் உலகப்போர் ஆண்டுகளைத் தவிர பிற சமயங்களில், ஒருபோதும் மந்தநிலையில் தடுமாறவில்லை; முழுமையான வேலைவாய்ப்பு வழங்கத் தவறவில்லை. ஆனாலும், சோவியத் ஒன்றியத்தின் முன்னாள் ஆதரவாளர்கள் உட்பட பலரும், இது செயல்பட முடியாது என்றே கருதுகின்றனர். இது, முற்றிலும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட கருத்து.

பொதுவுடைமை அடிப்படையில் திட்டமிட்ட பொருளாதாரத்தில் உள்ளார்ந்த பலவீனம் இருந்ததாலேயே அது தோல்வியடைந்தது என்பதாக சோவியத் ஒன்றியத்தின் அனுபவம் நமக்குக் காட்டவில்லை. மாறாக, நீடித்த பொருளாதார வளர்ச்சி, அனைவருக்கும் வேலைவாய்ப்பு, இலவச மற்றும் கட்டுப்படியாகும் விலையில் அளிக்கப்பட்ட பொதுச் சேவைகளின் விரிவான பட்டியல், ஏறத்தாழ சமத்துவமான வருமானம் என முதலாளித்துவத்தால் செய்ய முடியாததை பொதுவுடைமை செய்யமுடியும் என்பதை நிரூபித்தது. ஒரு வருடம் இரு வருடமல்ல; தொடர்ந்து ஆண்டுக்கு ஆண்டு சோவியத் ஒன்றியத்தின் தலைமை பொதுவுடைமையிலிருந்து பின்வாங்கும்வரை இது நடந்தது. உயர்மட்டத்தில் இருக்கும் தனிவுடைமையைப் பாதுகாக்கும், ஒரு சதவிகிதத்தினர், தங்களுக்கு எதிரான இப்பொருளாதார அமைப்பை நசுக்க, அரசியல், இராணுவ, பொருளாதார மற்றும் கருத்தியல் ரீதியான அனைத்து வழிகளையும் பயன்படுத்துவார்கள் என்பதைக் கண்கூடாகக் காணமுடிந்தது. ஆனாலும், கீழ்மட்டத்தில் உள்ள 99 சத மக்களுக்காக அது நின்றது. (இன்று கியூபா மற்றும் வட கொரியாவிற்கு எதிராக இதே முயற்சி தொடர்கிறது).

சோவியத் ஒன்றியத்தின் தோல்வி ஓர் இருண்ட காலத்திற்குள் நம்மைத் தள்ளியுள்ளது. ஆயினும், அதை இழிவுபடுத்தி அழிக்க நினைப்பவர்களுக்கு எதிராகப் போராட, பொதுவுடைமை சிறப்பாக செயல்பட்டதை வெளிப்படுத்தும், 1928 முதல் 1989 வரையிலான சோவியத்தின் அனுபவம், நமக்கு உள்ளது.

பொதுவுடமைப் பொருளாதார சாதனைகள்

வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம், பொருளாதார மந்தம், ஒருபுறம் செல்வக்குவிப்பு, மறுபுறம் வறுமை மற்றும் சுரண்டல் ஆகிய முதலாளித்துவத்தின் தீமைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்ததிலும், பரந்த இலவசப் பொது சேவைகளை வழங்கியதிலும் சோவியத் பொருளாதார அமைப்பு முறையின் நன்மைகள் அறியப்பட்டன. வேலையின்மை ஒழிப்பு, சோவியத் பொருளாதார அமைப்பின் மிக முக்கியமான சாதனைகளில் ஒன்று. சோவியத் ஒன்றியம் அனைவருக்கும் வேலை வழங்கியது மட்டுமல்லாது, வேலை ஒரு சமூகக் கடமையாகக் கருதப்பட்டு, அரசியலமைப்பு சட்டத்தில் பொறிக்கப்பட்டது. 1936-ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டம், சோவியத் ஒன்றியத்தின் குடிமக்களுக்கு வேலை செய்யும் உரிமையை அடிப்படை உரிமையாக்கியது. அதாவது, அவர்களது வேலையின் அளவு மற்றும் தரத்திற்கு ஏற்ப பணம் பெறுவதற்கான உத்தரவாதம் அளிக்கப்பட்டது. மறுபுறம், வேலை செய்யாமல் வேறு வழிகளில் வாழ்க்கை நடத்துவது தடை செய்யப்பட்டது. வட்டி, கருப்புச் சந்தை, ஊக வணிக இலாபம் ஆகியவற்றின் மூலம் வருமானம் பெறுவது சமூக ஒட்டுண்ணித்தனம் என்று கருதப்பட்டு சட்டவிரோதமாக்கப்பட்டது (சைமன்ஸ்கி, 1984). உழைப்பு, பற்றாக்குறையாக இருந்ததால் வேலை தேடுவது எளிதாக இருந்தது. இதன் வெளிப்படையான பலன்களாக,   தொழிலாளர்களின் வேலைப் பாதுகாப்பு மற்றும் நிர்வாகம் பணியாளர்களின் நலனில் அதிக கவனம் செலுத்துவது ஆகியவற்றில் அவர்களது பேரம் பேசும் ஆற்றல் அதிகமானது (கோட்ஸ், 2003).

சோவியத் அரசியலமைப்பு சட்டம், 1977-இன் 41வது பிரிவு ஒரு வாரத்திற்கான வேலை நேரத்தை 41 மணி நேரம் என வரையறுத்தது.  இரவுநேரப் பணியில் உள்ள தொழிலாளர்கள், 7 மணி நேரம் வேலை செய்தால், முழு ஊதியம், அதாவது 8 மணி நேரத்திற்கான ஊதியம் பெற்றனர். சுரங்கம் போன்ற ஆபத்தான வேலைகளில் ஈடுபடுவோர் அல்லது தொடர்ந்து விழிப்புடன் இருக்கவேண்டிய மருத்துவர்கள் ஆகியோர், 6 அல்லது 7 மணி நேரம் வேலை செய்தால், முழு ஊதியம் பெற்றனர். சிறப்பு சூழ்நிலைகள் தவிர, பிற சமயங்களில் கூடுதல் நேரம் வேலை செய்வது தடைசெய்யப்பட்டது (சைமன்ஸ்கி, 1984).

1960இல் இருந்து ஊழியர்களுக்கு, சராசரியாக ஒரு மாதம் விடுமுறை கிடைத்தது (கீரன் மற்றும் கென்னி, 2004; சைமன்ஸ்கி, 1984).  மானியத்துடன் கூடிய ஓய்வு விடுதிகளில், விடுமுறையைக் கழிக்க வசதி ஏற்படுத்தப்பட்டது (கோட்ஸ், 2003).

60 வயதில் ஆண்களுக்கும் 55 வயதில் பெண்களுக்கும் என, அனைத்து சோவியத் மூத்த குடிமக்களுக்கும் ஓய்வூதியம் வழங்கப்பட்டது (லெரூஜ், 2010). அரசியலமைப்புச் சட்டம், 1977, பிரிவு 43இன் படி ஓய்வூதிய உரிமை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான நலன்கள் உத்திரவாதம் செய்யப்பட்டன. இது, முதலாளித்துவ நாடுகளில் உள்ளதைப்போல், அரசியல்வாதிகளின் தற்காலிக விருப்பங்களின்பாற்பட்டதல்ல; மாறாக திரும்பப் பெறப்பட முடியாதது.

சோவியத்தின் அரசமைப்பு சட்டம் 1936, பிரிவு 122-இன் படி, பெண்களுக்கு, பல சலுகைகளுடன், முழு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பும் உத்தரவாதப்படுத்தப்பட்டது. மேலும், 1936-ஆம் வருட அரசியலமைப்புச் சட்டம் மகப்பேறு இல்லங்கள், குழந்தைகள் காப்பகங்கள் மற்றும் மழலையர் பள்ளிகள் இணைந்த, பரந்த கட்டமைப்பை ஏற்படுத்த ஏற்பாடு செய்தது. திருத்தப்பட்ட அரசியலமைப்புச் சட்டம், 1977இன் பிரிவு 53, ஒவ்வொரு குழந்தைப் பிறப்பிற்கும் மானியம்; பெரிய குடும்பங்களுக்கு, குழந்தைகளுக்கான பணப்பயன்கள், நிதிச் சலுகைகள் ஆகியவற்றை வழங்குவதன் மூலம் குழந்தைப் பராமரிப்பில் குடும்பங்களுக்கு உதவுவதற்காக ஒரு பரந்த கட்டமைப்பை ஏற்படுத்துவது அரசாங்கத்தின் கடமை என வரையறுத்தது. குழந்தைப் பராமரிப்பிற்கான ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்கிய முதல் நாடு சோவியத் ஒன்றியம்தான் (சைமன்ஸ்கி, 1984).

அதேபோல் அரசியலமைப்புச் சட்டத்தின் சட்டப்பிரிவு 122-இன் படி சோவியத் ஒன்றியத்தில் பெண்களுக்கு பொருளாதாரம், ஆட்சியதிகாரம், பண்பாடு, சமூக மற்றும் அரசியல் வாழ்க்கையின் அனைத்துத் தளங்களிலும்,  கல்வி, வேலைவாய்ப்பு, ஓய்வு, பொழுதுபோக்கு, சமூகக் காப்பீடு உட்பட அனைத்திலும் ஆண்களுக்கு நிகராக சம உரிமை வழங்கப்பட்டது. சோவியத் ஒன்றியத்தின் பல முதன்முதல்களில் ஒன்று, கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கி, அதற்கான மருத்துவ சேவை இலவசம் என அறிவித்ததாகும் (ஷெர்மன் 1969). பெண்களை அரசின் உயர் பதவிகளில் அமர்த்திய முதல் நாடும் இதுதான். மத்திய ஆசியப் பகுதியிலிருந்த சோவியத்தின் பகுதிகளில், இஸ்லாத்தின் பழமைவாத பெண் ஒடுக்குமுறையில் இருந்து அவர்களை விடுவிக்க, தீவிரப் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. இது, இப்பகுதிகளில் பெண்களின் வாழ்க்கை நிலையில் ஓர் அடிப்படை மாற்றத்தை உருவாக்கியது (சைமன்ஸ்கி, 1984).

1977 அரசியலமைப்பு சட்டப்பிரிவு-44, வீட்டுவசதி உரிமையை உறுதி செய்தது. ஆயினும், ஆஸ்திரியா மற்றும் மேற்கு ஜெர்மனியை ஒப்பிடும்போது, ஒரு நபருக்கு நகர்ப்புற வீட்டு வசதிக்கான இடம் பாதியளவே இருந்தது. ஏனெனில், ஜார் மன்னர் ஆட்சிக்காலத்தில் போதிய அளவு கட்டிடங்கள் இல்லை. மேலும் இரண்டாம் உலகப் போரின் போது பெருமளவில் வீடுகள் இடிக்கப்பட்டன. இதுபோக, சோவியத் ஒன்றியம் கனரகத் தொழில் வளர்ச்சிக்கே முக்கியத்துவம் அளித்தது. அக்டோபர் புரட்சிக்கு முன்பு, சாதாரண மக்களுக்கு, நகர்ப்புறத்தில், போதுமான வீடுகள் கட்டப்படவில்லை. புரட்சிக்குப் பிறகு புதிய வீடுகள் கட்டப்பட்டன. ஆனாலும் வீட்டு வசதி போதுமானதாக இல்லை. தொழில்துறைக் கட்டுமானத்திற்கு மூலதனம் தேவையாக இருந்ததால், வீடு கட்டுவதற்காக பெரும் பணம் செலவழிக்க இயலவில்லை. இரண்டாம் உலகப் போரின்போது கூடுதலாக, நாஜிப் படையெடுப்பினால், சோவியத் குடியிருப்புகளில் மூன்றில் ஒரு பங்கில் இருந்து பாதிவரை அழிக்கப்பட்டிருந்தது (ஷெர்மன் 1969). நகரவாசிகள், பொதுவாக தாங்கள் பணிபுரியும் நிறுவனத்திற்கு அல்லது உள்ளாட்சி அமைப்புகளுக்குச் சொந்தமான அடுக்குமாடிக் கட்டிடங்களில் வசித்தனர். சட்டப்படியான வாடகை மிக மிகக் குறைவு. மொத்த குடும்ப நுகர்வுச் செலவு நாலு முதல் ஐந்து சதவீதம் இருந்தபோது, வாடகை சுமார் 2 அல்லது 3 சதவீதம் மட்டுமே இருந்தது (சைமன்ஸ்கி, 1984; கீரன் மற்றும் கென்னி, 2004). அமெரிக்காவை ஒப்பிடும்போது, இது கடுமையாக வேறுபட்டது. அங்கு, ஒரு சராசரிக் குடும்பத்தின் வரவு செலவுத் திட்டத்தில், கணிசமான பங்கை வாடகை எடுத்துக்கொண்டது (சைமன்ஸ்கி, 1984). இன்றும் கூட நிலைமை அப்படியே உள்ளது.

உணவு மற்றும் பிற அடிப்படை அத்தியாவசிய தேவைகள் மானிய விலையிலும், ஆடம்பரப் பொருட்கள் அவற்றின் மதிப்பை விட மிக அதிகமான விலைக்கும் விற்கப்பட்டன.

பொதுப் போக்குவரத்து மிகப் பரவலான இடங்களை உள்ளடக்கி, திறமையாகவும் அதே நேரத்தில் மிகக் குறைவான கட்டணத்துடனோ இலவசமாகவோ வழங்கப்பட்டது. 1930-களில் இருந்து 1970-கள் வரை சுரங்கப்பாதைக் கட்டணம் வெறும் எட்டு சென்ட்களாக மாறாமல் இருந்தது (சைமன்ஸ்கி, 1984). முதலாளித்துவ நாடுகளில், இதனோடு ஒப்பிடக் கூடியதாக எப்பொழுதும் எதுவுமே இருந்ததில்லை. காரணம் என்னவெனில், திறமையான, மலிவான, விரிவான பொதுப் போக்குவரத்தானது, ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள், பெட்ரோலிய நிறுவனங்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்களின் இலாபம் ஈட்டும் வாய்ப்பை கடுமையாகப் பாதிக்கும். எனவே, இந்நிறுவனங்கள் தங்கள் இலாபத்தைப் பாதுகாப்பதற்காக, தங்களுக்குள்ள செல்வாக்கை, செல்வத்தை, தொடர்புகளைப் பயன்படுத்தி, தனியார் போக்குவரத்திற்கு மாற்றாக, சிறந்த, மலிவான, பொதுப் போக்குவரத்து வளர்வதைத் தடுக்கின்றன. தனியார்துறை தொடர்ந்து வேலைவாய்ப்பை வழங்கவேண்டும் என எதிர்பார்க்கும் அரசாங்கங்கள், தனியார் தொழில்துறையை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டியுள்ளது. இதை மாற்றுவதற்கான ஒரே வழி, மூலதனத்தை பொதுச் சொத்தாக ஆக்குவதே.  அப்பொழுதுதான், மக்களுக்காக எனத் திட்டமிடப்பட்ட இலக்குகளை அடையமுடியும்.

சோவியத் ஒன்றியம் தனது முதலாளித்துவப் போட்டியாளர்களை விட சுகாதாரப் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளித்தது.  வேறு எந்த நாட்டிலும், சோவியத் ஒன்றியத்தைவிட அதிக மருத்துவர்களோ, மருத்துவமனைகளோ இல்லை. 1977-இல் சோவியத் ஒன்றியத்தில் 10,000 பேருக்கு 35 மருத்துவர்களும் 212 மருத்துவமனைப் படுக்கைகளும் இருந்தன. இது அமெரிக்காவில், 18 மருத்துவர்கள் மற்றும் 63 படுக்கைகளாக இருந்தது (சைமன்ஸ்கி, 1984). மிக முக்கியமாக, சுகாதாரம் சோவியத் ஒன்றியத்தில் இலவசமாக இருந்தது. ஆனால் அமெரிக்க குடிமக்கள் இதற்காகப் பணம் செலுத்தவேண்டும் என்பது சோவியத்தில் காட்டுமிராண்டித்தனமாகக் கருதப்பட்டது. சோவியத் குடிமக்கள், இந்த விஷயத்தை நம்ப முடியாமல், அமெரிக்க சுற்றுலாப் பயணிகளிடம், மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்பினர் (ஷெர்மன் 1969).

பல்கலைக்கழகக் கல்வியும் இலவசம். முதுகலை மாணவர்களுக்கு, பாடப்புத்தகங்கள், தங்கும் அறை, உணவு மற்றும் பிற செலவுகளுக்கும் போதுமான அளவு உதவித்தொகைகள் கிடைத்தன (ஷெர்மன் 1969, சைமன்ஸ்கி, 1984).

சோவியத் ஒன்றியத்தில், முதலாளித்துவ நாடுகளை ஒப்பிடும்போது, வருமான ஏற்றத்தாழ்வு மிகவும் குறைவு. அதிகபட்ச வருமானத்திற்கும் சராசரி வருமானத்திற்கும் இடையேயான வித்தியாசம், ஒரு மருத்துவருக்கும் சராசரி தொழிலாளிக்கும் இடையேயான வருமான வேறுபாடு, அமெரிக்காவில் சோவியத் ஒன்றியத்தைவிட 8 முதல் 10 மடங்கு அதிகமாக இருந்தது (சைமன்ஸ்கி, 1984). படித்த உயர் வர்க்கத்தினரின் அதிக வருமானம் என்பது, ஒரு சாதாரண வீடு அல்லது கார் வாங்கக்கூடியதை விட அதிக சிறப்புரிமையை வழங்கவில்லை (கோட்ஸ், 2000). கனடாவுடன் ஒப்பிடுகையில், 2010இல் அதிக ஊதியம் பெறும் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளில், முதல் 100 நபர்களின் வருமானம், சராசரி முழுநேர ஊதியத்தை விட 155 மடங்கு அதிகமாக இருந்தது. சராசரி முழுநேர ஊதியம் 43,000 டாலர்களாகும் (மாற்றுக் கொள்கைகளுக்கான கனடிய மையம், 2011). கார்ப்பரேட் உயர்வர்க்கத்தினர் ஒரே வாரத்தில் இதைவிடப் பத்து மடங்கு அதிகமாக, அதாவது 4,30,000 டாலர்கள் வருமானம் ஈட்டினர்.

சோவியத் ஒன்றியத்தில் வருமான வித்தியாசம் குறைவாக இருந்ததற்கான காரணம் என்னவென்றால், அனைத்து சோவியத் குடிமக்களுக்கும் எந்தக் கட்டணமும் இன்றி அல்லது மிகக் குறைந்த கட்டணத்தில் அத்தியாவசியச் சேவைகள் கிடைத்ததாகும். எனவே, வருமான வித்தியாசத்தைவிட வாழ்க்கைக்குத் தேவையான பொருட்கள் கிடைக்காத தன்மையின் அளவு மிகக் குறைவாக இருந்தது (சைமன்ஸ்கி, 1984). பல உலக நாடுகளின் தலைநகரங்களில் உள்ள, ஜனாதிபதிகள், பிரதம மந்திரிகள், மற்றும் மன்னர்களின் ஆடம்பரமான மாளிகைகள் போன்ற வீடுகளில் சோவியத் தலைவர்கள் வசிக்கவில்லை (பேரன்டி, 1997). உதாரணமாக, கோர்பச்சேவ், நான்கு குடும்பங்கள் இருந்த ஓர் அடுக்குமாடிக் கட்டிடத்தில் வசித்துவந்தார். லெனின்கிராட் கட்டுமானத்துறையின் தலைமை அதிகாரி, ஒரு படுக்கையறை கொண்ட குடியிருப்பிலும், மின்ஸ்கில் ஓர் உயர்மட்ட அரசியல் அதிகாரி, மனைவி, மகள், மருமகனுடன் இரு படுக்கையறைகள் கொண்ட குடியிருப்பிலும் வசித்துவந்தனர் (கோட்ஸ் & வேய்ர், 1997). ஆளும் உயர்வர்க்கத்தினரை, சோவியத் ஒன்றியத்தின் விமர்சகர்கள், சுரண்டுபவர்கள் என குற்றம் சாட்டினர். ஆனால், அவர்களது மிதமான வருமானம் மற்றும் பொருட்கள் பயன்பாடு, இந்த மதிப்பீட்டின் மீது கடுமையான சந்தேகத்தை எழுப்புகின்றது. உண்மையில் சோவியத்தின் ஆளும்வர்க்கம் சுரண்டும்  தன்மையது என்று கூறுவது மனிதகுல வரலாற்றில் மிக வினோதமானது.

தமிழில்: சோபனா

உக்ரைன் போர்: மானுடத்தின் புறந்தள்ளப்பட்ட சிக்கல்கள் !

விஜய் பிரசாத்

திடுக்கிடும் தலைப்புடன் ஒரு புதிய செய்தி வெளியாகிறது. ஆயுதங்களுக்காக உலகம் மேற்கொள்ளும் ஆண்டு செலவுத்தொகை  2 லட்சம் கோடி டாலர்களை கடந்துள்ளது. இந்த பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. பட்டியலில் அடுத்து உள்ள பத்து நாடுகளின் ஒட்டுமொத்த செலவீனத்தை விட அமெரிக்காவின் செலவீனம் அதிகமாக இருக்கிறது. அமெரிக்காவின் உளவுத்துறை செலவீனங்களையும், அணு ஆயுத பராமரிப்பு செலவீனங்களையும் சேர்த்து கணக்கிட்டால் வரும் தொகை மட்டுமே 1 லட்சம் கோடி டாலர்களை கடக்கும். இது மிக மிக அதிகமான தொகை ஆகும். மனித உழைப்பையும் அறிவையும் வீணடிக்கும் கடும் செயல்.

இன்னொரு செய்தி. சட்டவிரோத வரி ஏய்ப்புக்கு வழிவகுக்கும் நாடுகளில் குவிந்திருக்கும் செல்வத்தின் மதிப்பு 37 லட்சம் கோடி டாலர்களை கடந்திருப்பதாக ஒரு கணிப்பு வெளியாகியுள்ளது. பெரும் செல்வந்தர்கள், மனித வளத்தை சூறையாடிச் சேர்த்த செல்வம் இப்படிப்பட்ட நாடுகளில் பணமாகவும், தங்கமாகவும், வைப்பு நிதியாகவும் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் மொத்த தொகையில் ஒரு சிறு பகுதி மட்டுமே. மேற்சொன்ன கணிப்பில் நிலம், விலை உயர்ந்த கலை பொருட்கள், நகைகள் போன்றவை உள்ளடங்காது. அவற்றையும் சேர்த்தால், கையளவு மனிதர்களிடம் குவிந்துள்ள செல்வத்தின் அளவு மிகக் கொடுமையானது. உலகின் முதல் 22 செல்வந்தர்கள் கையில் உள்ள சமூக வளத்தின் மதிப்பு, ஆப்ரிக்காவில் மொத்தம் உள்ள 3.25 கோடி பெண்களிடம் உள்ள ஒட்டுமொத்த செல்வத்தை விட அதிகம் ஆகும்.

உலகில் நிலவும் ஏழ்மை, பட்டினி மற்றும் எழுத்தறிவின்மை போன்ற சிக்கல்களுடைய அவல நிலைமை குறித்தும்,  கால நிலை மாற்ற பிரச்சனையால் எழும் அதிபயங்கர தாக்கங்கள் குறித்தும் தொடர்ந்து அறிக்கைகள் வந்து கொண்டே இருக்கின்றன. இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக செலவிடப்பட வேண்டிய நம்முடைய சமூக வளத்தின் பெரும் பகுதியை, ஆயுதங்களை குவிக்க செலவிடுவதுடன், வெளிநாடுகளில் பதுக்கியும் வைக்கிறார்கள். ஐக்கிய நாடுகள் சபையின் 17 நிலைத்த நீண்டகால வளர்ச்சிக் குறிக்கோள்களை – பட்டினியை ஒழித்து அமைதியை நிலைநாட்டும் இலக்கினை – எட்டுவதற்கு ஆண்டுக்கு 2.5 லட்சம் கோடி டாலர்கள் செலவிட வேண்டியுள்ளது.  இப்போது இந்த குறிக்கோள்களை எட்டுவதற்கு மிகச் சிறிய தொகை மட்டுமே செலவிடப்படுகிறது. பெருந்தொற்றுக் காலத்திலும், அதன் பிறகு அதிகரித்து வரும் விலைவாசி உயர்வுக் காலத்திலும், இந்த செலவினங்களில் மென்மேலும் வெட்டு ஏற்படும். நாம் இந்தக் குறிக்கோள்களை விட்டு மென்மேலும் விலகிச் செல்வோம்.  மானுடத்தின் மிக முக்கியமான சிக்கலான பட்டினியை ஒழிக்கும் பாதையில் நாம் நெடுந்தொலைவு செல்லவேண்டியுள்ளது. (மக்கள் சீனம் தவிர. அங்கு 2021இல் கடும் ஏழ்மை ஒழிக்கப்பட்டுவிட்டது). உலக மக்களில் 300 கோடிபேர் ஏதோ ஒரு வித பட்டினியால் அவதிப்படுவதாக கணிக்கப்படுகிறது.

விடுதலைக்கு பதிலாக ஆதிக்கம்

மானுடத்தின் இந்த சிக்கல்களை தீர்க்கும் உலகு தழுவிய ஒரு சமூக – அரசியல் திட்டத்தை உருவாக்குவதற்கு பதிலாக, அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளான ஜி7 நாடுகளும், தங்களின் உலக ஆதிக்கத்தை நீடிப்பதற்கான உத்தியை நோக்கியே செல்கின்றன. சோவியத் ஒன்றியமும், கிழக்கு ஐரோப்பிய சோசலிச நாடுகளும் வீழ்ந்த 1991 ஆம் ஆண்டுக்கு பின், மூன்றாம் உலக நாடுகள் கடன் வலையில் சிக்க வைக்கப்பட்டதில் இருந்து இந்த ஆதிக்க போக்கு  தொடங்கியது. இந்த ஆதிக்கம் கால வரம்பின்றித் தொடரும் என்றும், அமெரிக்காவுக்கு எதிரான ஒரு அணியின் வரலாறு முடிந்து போனது என்றும், அமெரிக்க அறிவுஜீவிகள் மார் தட்டினார்கள். ஆனால் அமெரிக்காவும், ஜி7 நாடுகளும் “உலக பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” என்ற பெயரில் எல்லை மீறி சென்றதாலும், (குறிப்பாக சட்டவிரோதமாக ஈராக் மீது 2003இல் போர் தொடுத்தது)  2007-08இல் ஏற்பட்ட பெரும் பொருளாதார நெருக்கடியின் காரணமாகவும், அந்நாடுகளின் ஆதிக்கம் நிலை குலைய துவங்கியது.

அமெரிக்கா மற்றும் ஜி7 நாடுகளில் வறண்டு போன வங்கி அமைப்பிற்கு நிதியளிக்க இந்தியா, சீனா, இந்தோனேசியா போன்ற நாடுகளை அணுகின. அதனால், ஜி7 கூட்டமைப்பை மூடிவிட்டு, உலகளாவிய சட்ட-திட்டங்களை தீர்மானிப்பதை ஜி20 என்ற கூட்டமைப்பின் கீழ் கொண்டு வந்து, அதில் நிதி அளிக்கும் இந்த புதிய நாடுகளையும் சேர்க்க உறுதி அளித்தது. ஆனால் மேற்கத்திய வங்கிகள் மீண்டு வந்த பின்னர், ஜி20 ஒதுக்கப்பட்டு,  முந்தைய ஜி 7   ஆதிக்கம் நிலைநாட்டப்பட்டது. இதர சக்திகளை எதிரியாக பார்க்காமல், மானுட சிக்கல்களை தீர்ப்பதில் கூட்டாளியாக பார்க்கலாம் என்ற முன்மொழிவை ஏற்க அமெரிக்கா மறுத்தது. இந்த கூட்டு சக்தியாக ஜி 20 அமைப்பில்  பங்கு வகித்த சில நாடுகள் சேர்ந்து  BRICS (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா) கூட்டமைப்பு 2009 இல் துவங்கப்பட்டது. இந்நாடுகள் ஒன்றிணைந்து, மேற்கத்திய நாடுகளால் கட்டுப்படுத்தப்படாத, ஐ.எம்.எஃப்-பின் சிக்கன அஜெண்டாவிற்கு அப்பாற்பட்ட, வளர்ச்சி திட்டங்களுக்கு வழி வகுக்கும் நிறுவன அமைப்பை ஏற்படுத்த முன் வந்தன.

BRICS கூட்டமைப்பு துவங்கப்படுவதற்கு முன், ரஷ்யாவின் விளாடிமிர் புதின் (அதுவரை பல விஷயங்களில் மேற்கத்திய நாடுகளுடன் நெருங்கி இருந்தார்)  முனிச் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்று ஒரு முக்கிய உரையாற்றினார்.  “ஒரு துருவ உலகம் என்றால் என்ன?” என புதின் கேட்டார். “இந்த வார்த்தையை எவ்வளவு அழகு படுத்தி காட்டினாலும், அதன் அர்த்தம் ஒரே அதிகார புள்ளி, ஒரே ஒரு ஆதிக்க மையம் மற்றும் ஒற்றை ஆண்டான்” என்பதுதான். அந்த ஒற்றை அதிகார புள்ளி என்பது அமெரிக்காவையே குறிக்கிறது என்று அனைவரும் அறிந்திருந்தனர். மேற்கத்திய நாடுகளின் “சர்வதேச உறவுகளில் அதீதமாக பயன்படுத்தப்படும் கட்டுக்கடங்காத தாக்குதல் ” குறித்து புதின் கடுமையாக விமர்சித்தார். மேலும் “சர்வதேச சட்டம்” மேற்கத்திய நாடுகளை அவை மேற்கொள்ளும் போர் குற்றங்களிலிருந்து பாதுகாப்பதை குறிப்பிட்டார். “யாரும் பாதுகாப்பாக உணர்வதில்லை. ஏனெனில் யாரும் சர்வதேச சட்டம் தங்களை பாதுக்காக்கும் அரண் என்பதாக உணரவில்லை. இப்படிப்பட்ட சூழல் ஆயுத குவியலை ஊக்குவிப்பதில் ஆச்சரியம் இல்லை”. அமெரிக்கா ஐரோப்பாவை சுற்றி ஏவுகணை வளையத்தை உருவாக்குவதை நிறுத்திவிட்டு, 2002இல் அது கைவிட்டுவிட்ட “அணு ஆயுத ஏவுகணைக்கு எதிரான ஒப்பந்த”-த்திற்கு திரும்பிச் செல்ல வேண்டும் என புதின் குறிப்பிட்டார். அன்றைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் இந்த முன்மொழிவை ஏற்க மறுத்தார்.

அச்சுறுத்தல்கள்

21ஆம் நூற்றாண்டில் தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்ட அமெரிக்காவும் அதன் ஆதரவு நாடுகளும் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டனர். லிபியாவின் மீது 2011 ஆம் ஆண்டு நேட்டோ முன்னெடுத்த தாக்குதல் மேற்கத்திய நாடுகள் தம் ஆதிக்கத்தை நிலைநாட்ட எடுத்த முன்னெடுப்புகளுக்கான குறியீடாக அமைந்தது. இதுவே தெற்கு சீன கடல் பகுதி முதல் கரீபிய கடல் பகுதி வரை உலகளாவிய நேட்டோ ஆதிக்கம் தொடர்பான வாதங்களுக்கு  முன்னோட்டமாக அமைந்தது. 30 நாடுகள் மீதான பொருளாதார தடை விதிப்பு மூலம் அமெரிக்காவையும், அதன் கூட்டாளி நாடுகளையும் எதிர்ப்பவர்களை ஒழுங்கு படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இது மட்டுமல்லாமல் ஐ.எம்.எஃப் அமைப்பின் புதுப்பிக்கப்பட்ட சிக்கன திட்டத்தின் காரணமாக, பல ஏழை நாடுகள் கொரோனா காலத்தில் கூட, தங்களுக்கு கடன் கொடுத்த செல்வச் செழிப்பு மிக்கவர்களுக்கு வழங்க வேண்டியிருந்த பணம், தங்கள் நாட்டு மக்களை காக்க சுகாதாரத்திற்கு மேற்கொண்ட செலவினை விடவும் அதிகம்.

2018இல் “தீவிரவாதத்திற்கு எதிரான போர்” நிறைவுற்றதாக அமெரிக்கா அறிவித்தது, அதன் தேச பாதுகாப்பு உத்தியில், சீனாவும் ரஷ்யாவும் அடைந்துவரும் எழுச்சியே மிகப்பெரும் ஆபத்தாக குறிப்பிட்டது. அமெரிக்கா பாதுகாப்பு செயலாளர் ஜிம் மாட்டிஸ் அமெரிக்காவை “நெருங்கி வரும் எதிரி நாடுகளை” கட்டுப்படுத்துவது என்று வெளிப்படையாகவே பேசினார். சீனா மற்றும் ரஷ்யாவை இவ்வாறு தம் எதிரி நாடுகளாக குறிப்பிட்ட அவர், அமெரிக்காவின் மொத்த ஆதிக்கத்தையும் பயன்படுத்தி இந்நாடுகளை அடிபணிய வைப்பது என்று பேசினார். ஐரோப்பா மற்றும் ஆசியாவை சுற்றி அமெரிக்காவின் பல ராணுவ தளங்கள் (மொத்தம் 800) உள்ளதோடு, ஜெர்மனி முதல் ஜப்பான் வரை ரஷ்யா மற்றும் சீனாவை முன் நின்று தாக்கும் பல கூட்டாளி நாடுகளை அமெரிக்கா கொண்டிருக்கிறது. அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளி நாடுகளின் கடற்படைகள், “பயணிப்பதற்கான சுதந்திரம்” என்ற பெயரில் ரஷ்யா (ஆர்டிக் பகுதி) மற்றும் சீனாவிற்கு (தெற்கு சீன கடல் பகுதி) எதிராக மிக அச்சுறுத்தலான படைப் பயிற்சிகளில் ஈடுபட்டன. இப்படிப்பட்ட செயல்பாடுகளோடு, 2014 ஆம் ஆண்டில் அமெரிக்கா உக்ரைன் நாட்டின் அரசியலில் தலையிட்டதும், 2015இல் தைவானிற்கு பெருமளவு ஆயுதங்கள் அளித்ததும், ரஷ்யாவையும், சீனாவையும் மேலும் மிரட்டுவதாக அமைந்தது. மேலும் 2018இல் அமெரிக்கா தன்னிச்சையாக “இடைநிலை தூர அணு-ஆயுத சக்திகள்” ஒப்பந்தத்திலிருந்து விலகியதன் காரணமாக, சர்வதேச அணு-ஆயுத கட்டுப்பாட்டு கட்டமைப்பை நலியச் செய்தது. ரஷ்யாவுக்கும், சீனாவுக்கும் எதிரான போர்க்கள அணு ஆயுத உத்தியை அமெரிக்கா வகுத்துவருகிறது என்பதுதான் இந்த பின்வாங்கலின் வெளிப்பாடு.

அமெரிக்காவின் தேச பாதுகாப்பு உக்தியில் சீனாவையும், ரஷ்யாவையும் கட்டுப்படுத்துவது பற்றி குறிப்பிட்டிருப்பதும், “இடைநிலை தூர அணு-ஆயுத சக்திகள்” ஒப்பந்தத்திலிருந்து விலகியதும், ரஷ்யாவுக்கும், சீனாவுக்கும்  அமெரிக்காவால் உள்ள அச்சுறுத்தல் கற்பனையானது அல்ல என்பதை தெளிவாக்குகிறது. இதுவரை, ஆசிய பகுதியில் அமெரிக்காவின் நட்பு நாடுகளான தென் கொரியாவும், ஆஸ்திரேலியாவும்  இடைநிலை தூர அணு-ஆயுதங்களை அனுமதிக்க தயாராக இல்லை. ஆனால் குவாம் மற்றும் ஒக்கினாவா-வில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களில் ஆயுதங்களை குவிக்க வாய்ப்பு உண்டு. பல ஆண்டுகளாக இவ்வாறு கட்டமைக்கப்பட்டு வரும்  அமெரிக்க அச்சுறுத்தலை ரஷ்யா உணர்ந்ததன் விளைவாகவே உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை முன்னெடுக்கிறது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர்ந்தாலும், இல்லாவிட்டாலும் அமெரிக்கா உக்ரேனில் அணு ஆயுதங்களை குவிக்க வாய்ப்பு உள்ளது என்ற கவலை எழுந்துள்ளது.

உக்ரைனில் நடந்துவரும் போர் பற்றிய வாதங்களுக்கு பின் ஒரு முக்கியமான கேள்வி உள்ளது: இயற்கையாகவே  யூரேசியா (ஆசிய-கிழக்கு ஐரோப்பிய) நாடுகள் நெருங்கி வரும் போக்கை அமெரிக்காவும் அதன் ஆதரவு நாடுகளும் அனுமதிக்குமா? இல்லையேல் இதை தடுக்க ஐரோப்பிய மற்றும் சில ஆசிய நாடுகளில் தலையிடும் முயற்சிகளை தொடருமா? ஐரோப்பிய நாடுகளை ஆங்கிலேய-அமெரிக்க-ஆர்டிக் கூட்டமைப்பினுள் கொண்டு வந்து, ஐரோப்பிய-ஆசிய நாடுகள் இணைப்பை, குறிப்பாக ரஷ்யா மற்றும் சீனா உடனான இணைப்பை தடுக்கும் அமெரிக்காவின் முயற்சியும் உக்ரைன் மீதான போரில் ஒரு பங்கு ஆற்றியுள்ளது என்பதை நிராகரிக்கவே முடியாது.

இந்த நிலையில் மானுடத்தின் மிக முக்கிய சிக்கல்கள் கண்டுகொள்ளப் படாமல் போகின்றன. பட்டினியும் போர்களும் பூமியை வாட்டுகின்றன. அன்றாட வாழ்வின் நிதர்சன பிரச்சனைகளை தீர்ப்பதற்காகச் செல்ல வேண்டிய சமூக வளங்களோ, ராணுவ ஆதிக்கத்திலும் போர்களிலும் வீணடிக்கப் படுகின்றன.

தமிழில்: அபிநவ் சூர்யா

பாசிசத்தின் மீதான சோவியத் வெற்றியின் விளைவு

என்.சங்கரய்யா

(பாசிச ஹிட்லரை, சோவியத் செஞ்சேனை வீழ்த்தியதை போற்றும் வகையில் 30.04.1985 அன்று வெளியான “தீக்கதிர்” சிறப்பிதழில் தோழர் என்.சங்கரய்யா எழுதிய கட்டுரை)

1942 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 22 ம் தேதி வேலூர் மத்திய சிறை; அரசியல் பாதுகாப்பு கைதிகள் அடைக்கப்பட்டிருந்த பகுதி; சோவியத் யூனியன் மீது ஹிட்லரின் நாஜிப் படைகள் திடீரென்று தாக்குதலைத் தொடுத்துவிட்டன என்று வானொலி அறிவித்தது. பாதுகாப்புக் கைதிகள் வாழ்ந்த பகுதியில் காங்கிரஸ் தலைவர்கள் திரு பட்டாபி சீத்தாராமையா, காமராஜ், சாம்பமூர்த்தி போன்றவர்களும் தோழர் ஏ.கே. கோபாலன், டாக்டர் கே.பி.கிருஷ்ணா மற்றும் பல கம்யூனிஸ்ட் தோழர்களும் சேர்ந்து இருந்தனர். அந்தத் தோழர்களில் நானும் ஒருவன்.

அச்செய்தியைக் கேட்டவுடனேயே, ஹிட்லரின் படைகள் இன்னும் ஆறு வார காலத்தில் ரஷ்யாவின் கிழக்கு எல்லையான விளாடிவாஸ்டாக் நகரத்தை கைப்பற்றிவிடும் என்று பட்டாபி சீத்தராமையா படபடவென்று பொரிந்து தள்ளினர். டாக்டர் பட்டாபி சீத்தாராமையா தான் காங்கிரஸ் கட்சியின் வரலாற்றை எழுதிய ஆசிரியராவார். அவர், வரலாற்றை அறிந்து கொள்ள முடிந்த மேதாவித்தனம் அவ்வளவுதான்!

பொன்மொழிகள் பொய்மொழியானது

கம்யூனிஸ்டுகளான நாங்கள் கூடினோம். அதில் மார்க்சிஸ்ட் தத்துவ ஆசிரியர் கே.பி.கிருஷ்ணா பேசினார். டாக்டர் பட்டாபி போன்ற  ‘பெரியவர்கள்’ என்ன சொன்னபோதிலும், சோவியத் செஞ்சேனை தனது ராட்சசக் கால்களைக் கொண்டு நாஜிப் படைகளை மிதித்து அழித்துவிடும்: இது உறுதி என்று தோழர் கே.பி கிருஷ்ணா முழங்கினார். பலத்த கைதட்டல் எங்களிடமிருந்து கிளம்பியது.  ‘பூர்ஷ்வா வரலாற்று ஆசிரியர்’  பட்டாபியின்  ‘பொன்மொழிகள்’ பொய்மொழிகளாகின.

மெய்யான விஞ்ஞானமாம் மார்க்சிசம் – லெனினிசத்தின் வெளிச்சத்தில் தோழர் கே.பி.கிருஷ்ணா வெளியிட்ட சொற்களை வரவாறு உண்மை என நிரூபித்துக் காட்டியது.

சோவியத்- ஜெர்மன் யுத்தத்தைப் போல் பிரம்மாண்டமானதொரு யுத்தத்தை உலகம் இதுவரை கண்டதில்லை. சோவியத் கம்யூனிசம் அழிந்துவிடும் என்றும் அதேசமயத்தில் தங்களுடைய போட்டியாளனாகவும் எதிரியாகவுமிருந்த ஹிட்லர் ஜெர்மனியும் சோவியத் யூனியன் பிடியில் சிக்கி அடிபட்டுப்போவான் என்றும் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் எகாதிபத்திய நாடுகள் திட்டமிட்டு செயலாற்றின.

பாசிசம் அனைத்து மக்களையும் அழிக்கும் என்று சோவியத் யூனியன் மேற்கத்திய நாடுகளை எச்சரித்தது. ஹிட்லருக்கு எதிராக பாசிஸ்ட் எதிர்ப்பு முன்னணியை அமைக்க முன்வருமாறு சோவியத் யூனியன் மேற்கத்திய ஏகாதிபத்திய நாடுகளையும் அழைத்தது.

ஆனால், மேலை நாடுகள் அதை ஏற்க மறுத்துவிட்டன. செக்கோஸ்லாவாகியா, போலந்து போன்ற பல ஐரோப்பிய நாடுகளை ஹிட்லர் ஆக்கிரமித்து அடிமைப்படுத்தினான். இந்த நாடுகளை ஹிட்லருக்கு பலியாக கொடுத்தன மேலை நாடுகள். இந்த நாடுகளை பிடித்தபின் ஹிட்லர் அடுத்தாற்போல் சோவியத் யூனியன் மீது பாய்வான் என்று அவை எதிர்பார்த்தன. மேலை நாடுகளின் நயவஞ்சகத் திட்டத்தை முறியடிக்கும் வகையிலும், தன்னுடைய பாதுகாப்பை பலப்படுத்திக் கொள்வதற்கு அவசியமான அவகாசத்தை தேடிக் கொள்வதற்காகவும், சோவியத் ராஜதந்திரம் முயற்சித்தது. சூழ்ச்சியை சூழ்ச்சியால் முறியடிக்க பரஸ்பரம் ஒருவரை ஒருவர் ஆக்ரமித்துக் கொள்வதில்லை என்றதொரு ஒப்பந்தத்தை சோவியத் யூனியன் ஹிட்லர்ஜெர்மனியுடன்செய்துகொள்ள வேண்டியதாயிற்று.

 இது, பாசிஸ்ட் ஜெர்மனிக்கு துணை போவதாகும் என்று மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள் கதறின. பாஸிசத்தை முறியடிக்க முன்னணி அமைக்க வாருங்கள் என்று சோவியத் யூனியன் பன்முறை வற்புறுத்தி அழைத்தபோது மறுத்து விட்ட மேற்கத்திய ஏகாதிபத்திய நாடுகளின் கொள்கையே, இந்த உடன்பாட்டை செய்துகொள்ள வேண்டிய நிர்பந்தத்தை சோவியத் யூனியனுக்குத் ஏற்படுத்தியது என்பதை உலக பாட்டாளி மக்கள் தெளிவாக உணர்ந்தனர்.

சோவியத் நாட்டைத் தாக்குவதற்கு ஏகாதிபத்திய நாடுகளினால் வளர்க்கப்பட்ட ஹிட்லர், தன்னை வளர்த்த பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் மீதும் யுத்தப் பிரகடனம் செய்தான். வளர்த்த கடா அவர்கள் மார்பிலேயே பாய்ந்தது. இதனால் இரண்டாவது உலகப் போர் 1938இல் ஆரம்பித்து விட்டது. பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய ஏகாதிபத்திய நாடுகள் ஒருபுறமும், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய பாசிஸ்டு நாடுகள் மறுபுறமும் போரில் குதித்தன.

உலக முதலாளித்துவ அமைப்பு, ஏகாதிபத்திய பகுதியாகவும், பாசிஸ பகுதியாகவும் போரில் இறங்கின. தனக்குச் சாதகமான தருணம் பார்த்து ஹிட்லர் சோவியத் பூமியைத் தாக்குவான் என்று சோவியத் தலைமைக்கு நிச்சயமாக தெரியும். எனவே கிடைத்த அவகாசத்தைப் பயன்படுத்திக் கொண்டு சோவியத் யூனியன் தன் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தியது.

சோவியத் மீது பாய்ந்தான்

எதிர்பார்த்தபடியே ஹிட்லர், சோவியத் யூனியன் மீது திடீரென்று மாபெரும் தாக்குதலைத் தொடுத்தான். சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி, தோழர் ஸ்டாலின் தலைமையில், இந்த ஜீவ மரணைப் போராட்டத்தை உறுதியாகச் சந்தித்தது. முதல் கட்டத்தில், பின்வாங்கிக் கொண்டே எதிரியை மேலும் மேலும் உள்ளே இழுத்து, அவனுக்கு பலத்த சேதத்தை உண்டுபண்ணியது. ஹிட்லரால்  ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில், சோவியத் தேச பக்தர்கள் சக்திவாய்ந்த கொரில்லாப் போராட்டங்களை நடத்தி, எதிரியை நிலைகொள்ள விடாமல் தவிக்க வைத்தனர். சோவியத் மக்களின் வீரஞ்செறிந்த போராட்டம் உலக மக்களின் ஆதரவையும் பாராட்டுக்களையும் பெற்றது. 

ரஷ்யாவுக்கு ஏற்பட்டுள்ள அபாயம் நமக்கு ஏற்படும் அபாயமாகும் என்று பிரிட்டிஷ் பிரதமர் சர்ச்சில் அறிவித்தார். ஜெர்மனியை எதிர்ப்பதற்கு முன்வர மறுத்த மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள் இப்பொழுது தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவே  சோவியத் யூனியனுடன் சேர்ந்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சோவியத் யூனியன் முன்பிருந்தே விரும்பிய பாசிஸ்ட் எதிர்ப்பு முன்னணி இப்பொழுதுதான் உருவானது. கோரமான போர்களில் சோவியத் படைகள் பாசிஸ்ட் ஜெர்மனியை பலவீனப்படுத்தின. லெனின்கிராட், ஸ்டாலின்கிராட், மாஸ்கோ மற்றும் இதர போர் முனைகளில் லட்சக்கணக்கான சோவியத் வீரர்கள் தங்களின் உயிர்களைத் தியாகம் செய்து எதிரியை தடுத்து நிறுத்தினர். லட்சக்கணக்கில் எதிரிப்படைகளை அழித்தனர்.

சோவியத்தின் சாதனை

சோவியத்தின் பிரம்மாண்டமான யுத்த நடவடிக்கைகள் உலகத்தை வியக்கச் செய்தன. விடுதலைபெற்றுவிட்ட உழைப்பாளி மக்களின் பொதுவுடைமை சமுதாயமும், அரசும் மட்டுமே இத்தகைய சாதனைகளை புரியமுடிந்தது என்பதை மனித வர்க்கம் கண்டது. சோவியத் யூனியன் மீது ஜெர்மனியின் வெறித் தாக்குதலின் வேகத்தை மட்டுப்படுத்த, ஜொமனியின் மேற்குப் பகுதியில், சோவியத்தின் நேச நாடுகளாகிய அமெரிக்கா, பிரிட்டன் ஆகியவை ஐரோப்பாவின் மேற்குப் பகுதியில் தங்களின் துருப்புகளை இறக்கி, எதிரிக்கு எதிராக இரண்டாவதுபோர்முனையைத் துவக்க வேண்டுமென்று சோவியத்யூனியனும் முற்போக்கு சக்திகளும் கோரின.

ஆனால் இரண்டாவது போர் முன்னயைத் துவக்குவதற்கு அமெரிக்கா, பிரிட் டன் அக்கறை காட்டவிலை. காரணம் என்னவென்றல், அவர்களின் பழைய நோக்கம்தான். அதாவது ஜெர்மனி, சோவித் யூனியனை அடித்து நொறுக்கி  பலவீனப்படுத்த வேண்டும். அதே நேரத்தில் சோவியத் யூனியன், ஜெர்மனியை சக்தி இழக்கும்படி செய்துவிட வேண்டும். அப்படிப்பட்ட நிலைமை ஏற்படும்பொழுது, அமெரிக்காவும் பிரிட்டனும் தமது படைகளை இறக்கி ஐரோப்பா முழுவதையும் தங்கள் ஆதிக்கத்தில் கொண்டு வந்துவிடவேண்டும் என்பதுதான் அந்த நோக்கம். ஆனால், உள்ளதற்கே  ஆபத்து வந்துவிட்டது.

இரண்டு பக்க தாக்குதலுக்கு ஆளான ஹிட்லரின் ஜெர்மனி வீழ்ந்தது. இதுவே ஏகாதிபத்திய நேச நாடுகளின் நேச பார்வையாக நேச பாதையாக இருந்தது. நாளை சோவியத் தலைமை இவர்களின் இந்த சூழ்ச்சியையும் முறியடித்தது. பலமான எதிர் தாக்குதல்களை தொடுத்து ஜெர்மன் படைகளை சோவியத் பூமியிலிருந்து விரட்டியது ஜெர்மனியின் மூல பலத்தை அழித்தது. 

அதைத் தொடர்ந்து சோவியத் பூமி முழுவதையும் விடுவித்துவிட்டு ஜெர்மனியால் அடிமைப்படுத்தப்பட்டிருந்த போலந்து, ருமேனியா, செக்கோஸ்லோவாக்கியா, யூகோஸ்லோவியா, பல்கேரியா, ஹங்கேரி, அல்பேனியா போன்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகளை செஞ்சேனை ஹிட்லரின் கொடுமையில் இருந்து விடுவித்தது.

வென்றது கம்யூனிசம்

இந்த நாடுகளின் மக்கள் சோவியத் யூனியனுக்கு நன்றி செலுத்தினார்கள். இந்த நாடுகளில் எல்லாம் தொழிலாளர்களும் ஜனநாயகவாதிகளும் கம்யூனிச கட்சியின் தலைமையின் கீழ் விடுதலை அரசுகளை ஏற்படுத்தி, நாளடைவில் அவற்றை கம்யூனிஸ்ட் அரசுகளாக அமைத்தார்கள். சோவியத் செஞ்சேனை ஜெர்மனியை நோக்கி முன்னேறியது. இதைக்கண்ட மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள் பயந்து அலறின. சோவியத் யூனியனை பலவீனப்படுத்தவே இரண்டாம் போர்முனையை அவர்கள் துவக்காமல் இருந்தனர். சோவியத் செஞ்சேனையோ ஜெர்மனியின் தலைநகரான பெர்லினை கைப்பற்றி வெற்றி வாகை சூடியது. சோவியத் படைகளால் விடுதலை செய்யப்பட்ட ஜெர்மன் பிரதேசம்தான் இன்று ஜெர்மன் ஜனநாயக குடியரசாக கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையின் கீழ் இயங்குகிறது. எந்த ஜெர்மன் பூமி கம்யூனிஸ்ட் எதிர்ப்புக்கு பாசிசத்தை உருவாக்கியதோ அதே ஜெர்மன் பூமியின் ஒரு பகுதியில் இன்று கம்யூனிசம் வெற்றிவாகை சூடிவிட்டது. ஜெர்மனியை தோற்கடித்த பின் சோவியத் யூனியன் பாசிஸ்ட் ஜப்பானுக்கு எதிராக யுத்த பிரகடனம் செய்தது. ஆசியாவின் தூரக் கிழக்கு பகுதிகளான சீனாவிலும் கொரியாவிலும் இருந்த ஜப்பானின் படைகள் அனைத்தும் களமிறங்கின.

இதன்மூலம் மகத்தான சீன தேசமும் கொரிய நாடும் தங்களது தேச விடுதலையை பெறுவதற்கு சோவியத் யூனியன் உதவி செய்தது. இதன் விளைவாகவே பின்னர் சீன மக்களின் போராட்டம் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் வெற்றி பெற்றது. 1949 அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி அன்று சீன மக்கள் குடியரசை அமைத்தது. வடகொரியாவும் விடுதலை அடைந்தது.

சோசலிச அமைப்பு 

எனவே, இந்த யுத்தத்தில் சோவியத் யூனியனின் வெற்றியின் காரணமாக ஒரு நாட்டில் இருந்த சோசியலிசம் பல நாடுகளுக்கும் பரவியது. ஒரே ஒரு சோசலிச நாடாக இருந்த சோவியத் யூனியனுக்கு பதிலாக, பல்வேறு சோசலிச நாடுகள் அடங்கிய ஒரு உலக சோசலிச அமைப்பு வரலாற்று ரீதியில் உருவெடுத்தது.

1917 இல் சோசலிச புரட்சி ரஷ்யாவில் வெற்றி பெற்ற பொழுது, உலக முதலாளித்துவ அமைப்பின் பொது நெருக்கடியின் முதல் கட்டம் துவங்கியது. பல நாடுகளை கொண்ட சோசலிச அமைப்பு உருவானதை தொடர்ந்து, உலக முதலாளித்துவ அமைப்பின் பொது நெருக்கடியின் இரண்டாவது கட்டம் ஆரம்பமானது. சோவியத் வெற்றியினால் ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் தங்களை அடக்கி ஆண்ட ஏகாதிபத்திய நாடுகளுக்கு எதிராக தேச விடுதலை புரட்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். சோவியத் யூனியனின் உதவியினாலும் இதர சோசலிச நாடுகளின் ஆதரவாலும், 100 கோடி ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க மக்கள் ஏகாதிபத்திய நுகத்தடியில் இருந்து அரசியல் விடுதலை பெற்று, இன்று தங்கள் சுதந்திரத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்கும், பொருளாதார சுதந்திரத்தை அடைவதற்கும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நூறு கோடி மக்களின் விடுதலையை தொடர்ந்து, உலக ஏகாதிபத்திய அமைப்பு மேலும் பாதிக்கப்பட்டு, அதன் விளைவாக உலக முதலாளித்துவ அமைப்பில் பொருளாதார நெருக்கடியின் மூன்றாவது கட்டம் ஆரம்பமாகிவிட்டது. மேலும், சோவியத் யூனியனின் பாசிஸ்ட் எதிர்ப்பு வெற்றியின் காரணமாக, முதலாளித்துவ உலகம் முழுவதிலும் தொழிலாளி வர்க்க இயக்கங்களும், கம்யூனிஸ்ட் இயக்கங்களும் ஆழமாக வேரூன்றி வளர்ந்து வருகின்றன.

செங்கொடி இல்லாத நாடு இன்று உலகத்தில் இல்லை. இந்த வளர்ச்சி மனித வர்க்கத்தை எல்லா பாதைகளும் கம்யூனிசத்திற்கே இட்டு செல்கின்றன என்ற நிலையை உலகத்தில் ஏற்படுத்தி விட்டது. பாசிஸ்ட் எதிர்ப்பு யுத்தத்தில் சோவியத் யூனியன் பெற்ற மகத்தான வெற்றியின் காரணமாக ஏற்பட்ட இந்த விளைவுகள் இன்றைய சகாப்தத்தின் எதிர்காலத்தை நிர்ணயித்து வருகின்றன.

போர் முனையில் கலைஞர்கள்

நாஜி ஜெர்மனிக்கு எதிரான சோவியத் மக்களின் மாபெரும் தேசபக்தி யுத்த வரலாற்றில் கலைஞர்களுக்கும், கலாச்சார துறை ஊழியர்களுக்கும் முக்கியமான இடம் உண்டு. பாடகர்களும், இசைவாணர்களும், கவிஞர்களும், புகழ்பெற்ற நாடக, சினிமா நடிகை, நடிகர்களும் போர்முனைகளுக்கு சென்று போர் வீரர்களுக்கும், காயமுற்று மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த போர் வீரர்களுக்கும் கலை நிகழ்ச்சிகள் நடத்தி மகிழ்ச்சியூட்டி வந்தனர்.

மார்ஷல் ஆந்திரி ஏரெமென்கோ பின்னர் எழுதிய நினைவு குறிப்புகளில், இதுபற்றிக் குறிப்பிட்டிருப்பதாவது; “யுத்தத்தின் போது பத்து முனைகளில் நான் கமாண்டராக இருந்தேன். அவை ஒவ்வொன்றிலும் கலைஞர்கள் கலைநிகழ்ச்சிகள் நடத்துவதைக் கண்டேன். போர் வீரர்களுக்கு உற்சாகமூட்டி அவர்களுடைய மன உறுதியை உயர்த்துவதில் கலைஞர்கள் பெரும் தொண்டு ஆற்றினர்” என்று ஏரெமென்கோ குறிப்பிட்டு இருக்கிறார். போர்முனையில் இவ்விதம் தொண்டாற்றிய கலைஞர்களில் புகழ்பெற்ற “ராஸ்கோ ஆர்ட் தியேட்டர்” நாடக நடிகர்களும் இருந்தனர். மாபெரும் தேசபக்த யுத்தத்தின் போது சோவியத் போர்முனைகளில் 1500க்கும் அதிகமான நாடகம், இசை முதலிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

புஷ்கின், டால்ஸ்டாய், செக்காவ், ஆஸ்த்ரோவஸ்கி, மாயாகோவ்ஸ்கி, த்வார் தோவ்ஸ்கி, ஸ்பார் தோவாஸ்கி முதலியவர்களின் படைப்புகள் இந்த கலை நிகழ்ச்சிகளில் இடம்பெற்றன. முன்னணி போர் வீரர்கள் எங்கும் கலைஞர்களை உற்சாகத்துடன் வரவேற்றதாக ஆர்ட் தியேட்டரின் பிரபல நடிகையான அல்வா தரசோவா தம் நினைவு குறிப்புகளில் எழுதி உள்ளார். போர்முனைகளுக்கு சென்ற இந்த தியேட்டரின் மற்றொரு கலைஞரான அனஸ் தாஸ்யாஜ் யோர்கியோகி மேவ்ஸ்காயா, யுத்தத்தில் தாம் ஆற்றிய தொண்டு பற்றி எழுதுகையில், துப்பாக்கி சுடக் கற்றுக்கொண்டு, போர்முனைக்கு சென்று நாஜிகளை எதிர்த்து போராடத் தாம் விரும்பியதாகவும், ஆனால் அதற்கு அனுமதி கிடைக்காததால், கலை நிகழ்ச்சிகள் மூலம் போர் முனையில் வீரர்களுக்கு உற்சாகமூட்டவாவது முடிந்தது பற்றி மகிழ்ச்சி அடைவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். 

மனித குலத்தின் பாதுகாவலன்

சோவியத் யூனியனின் வெற்றிதான் இன்று சோசலிச முகாமும், உலக தொழிலாளி வர்க்க இயக்கமும், தேச விடுதலைப் புரட்சியும் இன்றைய உலகத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் சக்திகளாக ஆகிக்கொண்டு வருகின்றன என்ற பேருண்மைக்கு அடித்தளமாகும். பாசிஸ்ட் அபாயத்திலிருந்து மனித குலத்தை பாதுகாத்த பெருமை சோவியத் யூனியனையே சாரும். சோசலிச உலக அமைப்பின் வெற்றிகளை கண்டு மூர்க்கத்தனமான கோபத்துடன் சோவியத் யூனியனையும் இதர சோசலிச நாடுகளையும் அழிப்பதற்கும், உலக மக்கள் மீது மீண்டும் தன் ஆதிக்கத்தை ஏற்படுத்துவதற்கும், அணு ஆயுத யுத்தத்திற்கு தீவிரமாக தயாரிப்பு செய்து வரும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் யுத்த சதி திட்டங்களை முறியடிப்பதிலும், உலக சமாதானத்தை பாதுகாப்பதிலும் சோவியத் யூனியனும் இதர சோசலிச நாடுகளும் இன்று முன்னணியில் இருக்கின்றன. சோவியத் யூனியனுடன் ஒன்றுபட்டு நின்று அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் யுத்த சதிகளை முறியடிப்பதும், உலக சமாதானத்தை பாதுகாப்பதும் இந்திய மக்கள் அனைவரின் பிரதான கடமையாகும்.

(ச. லெனின் தொகுத்துள்ள “என். சங்கரய்யா – தேர்ந்தெடுக்கப்பட்ட உரை, பேட்டி, கட்டுரை, ஆவணம்” எனும் புத்தகத்தில் இக்கட்டுரை வெளியாகியுள்ளது.)

2022 ரஷ்ய – உக்ரைன் போர்:ஒரு பார்வை!

அன்வர் உசேன்

ரஷ்யா- உக்ரைன் இடையிலான போர் உலகம் முழுவதும் பல விவாதங்களை உருவாக்கியுள்ளது. ஒரு புறம் புடின் இட்லருக்கு இணையாக விமர்சிக்கப்படுகிறார். இன்னொரு புறம் அவரது நடவடிக்கைகள் அனுதாபத்துடன் பார்க்கப்படுகின்றன. போர் என்பது எப்படியாக இருந்தாலும், எங்கே நடந்தாலும், அது மனித உயிர்களைப் பலி வாங்குகிறது. அரும்பாடுபட்டு உருவாக்கிய உற்பத்தி சாதனங்களும் வளங்களும் இமைப்பொழுதில் அழிக்கப்படுகின்றன. போரில் ஈடுபடும் தேசங்களில், உழைக்கும் மக்களே கடும் இழப்புக்கு ஆளாகின்றனர். இது வெற்றி பெற்ற, தோல்வி அடைந்த இரு தேச உழைப்பாளிகளுக்கும் பொருந்தும். ஆனால், சுரண்டும் வர்க்கங்கள் போர்களுக்கு ஆதரவான கருத்துக்களை கட்டமைப்பதில் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள். அவற்றில் இருந்து விலகி நின்று போர்களை ஆய்வுக்கு உட்படுத்திட வேண்டும்.

இப்போதைய சூழலில், நாம் ஒரு முக்கியமான உண்மையை கணக்கிலெடுப்பது அவசியம். சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 42% பேர் ரஷ்யாவை இன்னமும் அதுவொரு கம்யூனிஸ்ட் நாடு என்று எண்ணுவதாக தெரியவந்துள்ளது. இந்தியாவிலும் பலர் அவ்வாறு நினைக்க வாய்ப்பு உண்டு. ஆனால், இன்றைய ரஷ்யா ஒரு சோசலிச நாடு அல்ல. அங்கு நடக்கும் ஆட்சி முதலாளித்துவ ஆட்சியே. விளாடிமிர் புடின் அந்த  முதலாளித்துவ நாட்டின் தலைவரே.

வரலாற்று பின்னணி:

1917ம் ஆண்டு சோவியத் புரட்சி வெற்றியடைந்த பிறகு, வெவ்வேறு காலகட்டங்களில் அதனோடு 14 குடியரசுகள் இணைந்துகொண்டன. அவை:

1. உக்ரேனியா

2. பைலோரஷ்யா

3. உஸ்பெகிஸ்தான்

4. கஜகஸ்தான்

5. ஜார்ஜியா

6. அஜர்பைஜான்

7. லிதுவேனியா

8. மால்டோவா

9. லத்திவியா

10. எஸ்தோனியா

11. கிர்கிஸ்தான்

12. தஜிகிஸ்தான்

13. துர்க்மெனிஸ்தான்

14. அர்மீனியா

இதுவே பின்னர்  ‘சோவியத் ஒன்றியமாக’ அமைந்தது. ரஷ்ய மொழியோடு சேர்த்து, மேற்சொன்ன 14 தேசங்களின் மொழிகளும் அதிகாரப்பூர்வ மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டன. 15 தேசிய இனங்களை உள்ளடக்கியிருந்ததால் அவ்வப்பொழுது சில முரண்பாடுகள் ஏற்பட்டாலும், பொதுவாக, சோவியத் குடி மக்கள் எனும் அடையாளம் உருவானது. மேலும், சோவியத் யூனியனின் அரசியல் சட்டம் சுயநிர்ணய உரிமையை உள்ளடக்கியிருந்தது. இதன் பொருள் என்னவெனில், எந்த ஒரு குடியரசும் தாம் விரும்பினால் ஒன்றியத்திலிருந்து பிரிந்து செல்லலாம். இந்த உரிமையை உருவாக்க லெனினும், ஸ்டாலினும் கடுமையாக பாடுபட்டனர். இந்த பிரச்சனையில் லெனினுக்கும், ஜெர்மன் கம்யூனிஸ்டு ரோசா லக்சம்பர்குக்கும் இடையே கடும் விவாதங்கள் நடைபெற்றன. தேசிய இனப்பிரச்சனைகளில் கம்யூனிஸ்டுகளின் நிலையை புரிந்து கொள்ள முயல்பவர்களுக்கு லெனின்-ரோசா லக்சம்பர்க் விவாதங்கள் ஒரு புதையல் எனில் மிகை அல்ல.

சோசலிச சமூக அமைப்பின்  நன்மைகளான வேகமான தொழில் வளர்ச்சி/ விவசாய முன்னேற்றம்/ இலவச கல்வி மற்றும் மருத்துவம்/ உழைக்கும் மக்களின் உரிமைகள் அனைத்தையும் இந்த 14 குடியரசுகளும் பெற்றன. எனினும், 1970களில் சோவியத் ஒன்றியத்தில் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி தேக்கமுற்றது. 1980களில் முதலாளித்துவ உலகுடன் ஒப்பிடும் பொழுது அது பின் தங்கியிருந்தது. மின்னணு புரட்சி/ கணிணி மயம் என முதலாளித்துவம் தனது உற்பத்தி சக்திகளை வேகமாக வளர்த்தெடுத்தது. இதனால், கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் சோவியத் ஒன்றியம் இரு சவால்களை சந்தித்தது. ஒன்று, அதன் பொருளாதாரம் கடுமையாக பின்னடைவை எதிர் கொண்டது. இன்னொருபுறம், சோசலிச ஜனநாயகம் சிதைவுகளுக்கு உள்ளானது. ஏகாதிபத்தியமும் தனது தொடர் தாக்குதல்களை பல முனைகளில் முன்னெடுத்தது.

இந்தச் சூழலில் சோசலிசம் பின்னடைவை சந்திப்பதற்கு சற்று முன்னதாக லிதுவேனியா/லத்திவியா/எஸ்தோனியா ஆகிய மூன்று குடியரசுகளும் பிரிந்து போயின. சோசலிசம் பின்னடைவை சந்தித்த பொழுது, அனைத்து குடியரசுகளும் சோவியத் யூனியனிலிருந்து பிரிந்து, தம்மை தனி சுதந்திர தேசங்களாக அறிவித்து கொண்டன. இதில் உக்ரைனும் அடங்கும். எனினும், இந்த நிகழ்வு வேறு ஒரு பிரச்சனையை உள்ளடக்கியிருந்தது. சோவியத் ஒன்றியம் இருந்த பொழுது, ரஷ்ய மக்கள் வேறு குடியரசுகளுக்கு புலம்பெயர்வதும், ஏனைய குடியரசு மக்கள் ரஷ்யாவுக்குள் வருவதும் பரவலாக நடந்தது. குறிப்பாக, இந்த பரஸ்பர புலம்பெயர்வு ரஷ்யா/உக்ரைன்/பைலோரஷ்யா ஆகிய மூன்று குடியரசுகளிடைய வலுவாக நடந்தது. இதன் விளைவுதான், இன்றைய உக்ரைனின் கிழக்கு பகுதியில் சுமார் 20% பேர் ரஷ்ய மொழி பேசுபவர்களாக உள்ளனர்.

வாக்குறுதி மீறிய ஏகாதிபத்தியம்

அந்த சமயத்தில், சோவியத் ஒன்றியத்திலிருந்து பிரிந்த எந்த தேசத்தையும் நேட்டோ எனும் ராணுவ அமைப்புக்குள் இணைக்கக்கூடாது எனவும், ரஷ்யாவின் எல்லை நாடுகளில் நேட்டோ ராணுவத்தையோ அல்லது ஆயுதங்களையோ நிறுத்தக் கூடாது எனவும், ரஷ்யா அமெரிக்காவிடம் முன்வைத்தது. அன்றைய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ் பேக்கர் “ரஷ்யா இருக்கும் கிழக்கு நோக்கி ஒரு இன்ச் கூட நேட்டோ விரிவாக்கம் செய்யப்பட மாட்டாது” என வாக்குறுதி அளித்தார். ஆனால் ஏகாதிபத்தியத்தின் பல வாக்குறுதிகள் போல் இதுவும் காற்றில் விடப்பட்டது.  

நேட்டோ என்ற அமைப்பு இரண்டாம் உலகப்போர் முடிந்த  ஆண்டுகளில் (1949) அமெரிக்கா/ பிரிட்டன்/ பெல்ஜியம்/ கனடா/ டென்மார்க்/ பிரான்ஸ்/ ஐஸ்லாந்து/ இத்தாலி/ லக்ஸம்பர்க்/ நெதர்லாந்து/ நார்வே/ போர்ச்சுகல் ஆகிய நாடுகள் சேர்ந்து உருவாக்கிய ராணுவ கூட்டமைப்பு ஆகும். அமெரிக்காவே இந்த அமைப்பின் தலைமை என்பதை கூறத் தேவையில்லை. பின்னர் 1950களில், நேட்டோவுடன் மேற்கு ஜெர்மனி/கிரீஸ் ஆகிய நாடுகளும் 1982இல் ஸ்பெயினும் இணைக்கப்பட்டன. கம்யூனிஸ்ட் நாடுகளிடமிருந்து தம்மை பாதுகாத்து கொள்ளவே இந்த கூட்டமைப்பு என்று நேட்டோ கூறியது. எனவே அதன் எதிர்வினையாக சோவியத் யூனியன்/ கிழக்கு ஜெர்மனி/ அல்பேனியா/ போலந்து/ செக்கோஸ்லேவாகியா/ ஹங்கேரி/ பல்கேரியா/ ருமேனியா ஆகிய சோசலிச நாடுகள் தங்களுக்குள் வார்சா ஒப்பந்த அமைப்பு எனும் கூட்டமைப்பை உருவாக்கின. எனினும், இந்தியா/எகிப்து/யுகோஸ்லவியா/கியூபா/வியட்நாம் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் இந்த இரு அமைப்பிலும் சேராமல் அணிசேரா நாடுகளின் அமைப்பை உருவாக்கின.

1991இல் சோவியத் யூனியனும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் சோசலிசத்தை கைவிட்ட பிறகு வார்சா ஒப்பந்த அமைப்பும் இல்லாமல் ஆகியது. நாளடைவில் அணிசேரா அமைப்பும் செயலிழந்துவிட்டது. ஆனால் நேட்டோ தொடர்ந்து விரிவடைந்தது. முதலாளித்துவ நாடுகள், குறிப்பாக அமெரிக்கா, தாங்கள்தான் உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் மேலாதிக்கம் பெற வேண்டும் என்று கொண்டிருந்த பேராசையின் வெறிதான் இதற்கு அடிப்படையான காரணம். இந்த வெறியின் ராணுவ முகம்தான் நேட்டோ. எனவே, கிட்டத்தட்ட அனைத்து முன்னாள் சோசலிச நாடுகளையும் நேட்டோ தனது வளையத்திற்குள் கொண்டு வந்தது. பின்னர் எஸ்தோனியா/லத்திவியா/லிதுவேனியா ஆகிய முன்னாள் சோவியத் குடியரசுகளையும் சேர்த்தது. இறுதியாக 2008ஆம் ஆண்டு உக்ரைன் மற்றும் ஜார்ஜியாவை இணைக்கும் விருப்பத்தை வெளிப்படுத்தியது. அன்றிலிருந்துதான் ரஷ்யாவுக்கும் நேட்டோ நாடுகளுக்கும் ஆழமான பிரச்சனைகள் உருவாயின. இந்த பிரச்சனைகளின் மையமாக உக்ரைன் உருவெடுத்தது.

நேட்டோவை நாங்கள் விரிவாக்கம் செய்ய மாட்டோம் என ஒரு போதும் உறுதி அளிக்கவில்லை என இப்பொழுது அமெரிக்கா கூறுகிறது. ஆனால் இது வடிகட்டிய பொய் ஆகும். 1991ஆம் ஆண்டே போலந்து நேட்டோவில் சேர விண்ணப்பித்தது. ஆனால் ஜெர்மனி இதனை கடுமையாக எதிர்த்தது. இது குறித்து அமெரிக்கா/ ஜெர்மனி/ பிரான்சு/பிரிட்டன் ஆகிய நாடுகளின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டம் 06.03.1991இல் பான் நகரில் நடந்தது. அதில் ஜெர்மனியின் பிரதிநிதியான  ஜுர்கன் ஸ்ரோபோக் கீழ்கண்டவாறு கூறினார்:

“ஜெர்மனியின் எல்பே நதிக்கு அப்பால் நேட்டோவை விரிவாக்குவது இல்லை எனும் உறுதிமொழியை நாம் ரஷ்யாவுக்கு தந்துள்ளோம். எனவே போலந்தின் கோரிக்கையை நாம் ஏற்க இயலாது”.

1992ஆம் ஆண்டிலிருந்தே பல அமெரிக்க அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் நேட்டோவை கிழக்கே விரிவாக்கம் செய்வது ரஷ்யாவை போருக்கு தள்ளிவிடும் என எச்சரித்துள்ளனர். அந்த எச்சரிக்கைகளில் சில:

  • 1997ஆம் ஆண்டு அமெரிக்காவின் முன்னாள் ராணுவ அமைச்சராக இருந்த ராபர்ட் மக்னமாரா சி.ஐ.ஏ. இயக்குநர் ஸ்டேன்ஸ் டர்னர் உட்பட 12க்கும் அதிகமானவர்கள் இணைந்து பில் கிளிண்டனுக்கு எழுதிய கடிதத்தில் “நேட்டோவை கிழக்கு நோக்கி விரிவாக்கம் செய்வது வரலாற்று பிழையாக மாறி விடும்” என எச்சரித்தனர்.
  • பனிப்போர் காலத்தில் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளை வகுத்தவர்களில் ஒருவரான ஜார்ஜ் கேனன் 1990களிலேயே கீழ்கண்டவாறு கூறுகிறார்:

“கிழக்கு பகுதியில் நேட்டோவை விரிவாக்கம் செய்வது பனிப்போரின் பிந்தைய காலகட்டத்தின் மிகப்பெரிய தவறான கொள்கையாகும். இது பல விரும்பத்தகாத விளைவுகளை உருவாக்கும். அமெரிக்க-ரஷ்யா உறவை சீர்குலைத்துவிடும். ரஷ்யா நிரந்தர எதிரியாக ஆகிவிடும்”

  • ரஷ்ய விவகாரங்கள் குறித்த ஆய்வாளர் ஸ்டீபன் கொஹேன் 2014ஆம் ஆண்டு கூறினார்:

“நாம் நேட்டோவை ரஷ்யாவை நோக்கி விரிவாக்கம் செய்வது என்பது பிரச்சனையை ராணுவமயமாக்கிவிடும். ரஷ்யா பின்வாங்காது. வாழ்வா-சாவா போராட்டமாக ரஷ்யா இதனை பார்க்கும்”

  • அமெரிக்காவின் பிரபல வெளியுறவு கொள்கை நிபுணர் ஹென்ரி கிசிங்கர் 2014இல் கூறினார்:

“உக்ரைனை நேட்டோவில் சேர்க்க கூடாது. அவ்வாறு சேர்த்தால் உக்ரைன் கிழக்கு- மேற்கத்திய நாடுகளின் போர்க்களமாக மாறிவிடும். ரஷ்யா நிரந்தரமாக எதிர் தரப்பில் நிற்கும் ஆபத்து உருவாகும்.”

  • 2008ஆம் ஆண்டில் சி.ஐ.ஏ.வின் இயக்குநர் வில்லியம் பர்ன்ஸ் அமெரிக்க தலைமையகத்துக்கு அனுப்பிய ஒரு குறிப்பில் கீழ்கண்டவாறு கூறுகிறார்:

“உக்ரைனை நேட்டோவில் இணைப்பது குறித்து உக்ரைன் மக்களிடையே செங்குத்தான பிளவுபட்ட கருத்து நிலவுகிறது என ரஷ்யா கவலை அடைந்துள்ளது என நமது நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக உக்ரைனில் உள்ள ரஷ்ய இன மக்கள் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இத்தகைய பிளவு கடும் விளைவுகளை உருவாக்கும். மோசமான சூழலில் இது உள்நாட்டு போருக்கும் வழிவகுக்கலாம். அப்படிப்பட்ட நேரத்தில் உக்ரைனில் தலையிடும் முடிவு எடுக்க வேண்டி வரும் என ரஷ்யா கவலைப்படுகிறது. அத்தகைய சூழலை ரஷ்யா விரும்பவில்லை.”

இவ்வளவு எச்சரிக்கைகளையும் அறிவுறுத்தல்களையும் மீறித்தான், நேட்டோ விரிவாக்கம் திட்டமிடப்பட்டது. அமெரிக்க அரசியல் தலைமை தனது மேலாதிக்கத்தை ஐரோப்பாவில் நிறுவுவதற்காக, ரஷ்யாவை போருக்கு தள்ளினால் தவறு இல்லை எனும் முடிவுக்கு வந்தது என்பதையே இது காட்டுகிறது. அமெரிக்க ஏவுகணைகள் ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன. உக்ரைன் எல்லையிலும் படைகள் நிறுத்தப்படும் என்றால், அது தனது பாதுகாப்பிற்கு ஆபத்து என்று  ரஷ்யா கருதுகிறது. உக்ரைன் எல்லையிலிருந்து ஏவுகணைகள் 10 முதல் 15 நிமிடங்களுக்குள் மாஸ்கோவை தாக்கிவிடும். 2008ஆம் ஆண்டு உக்ரைனையும் ஜார்ஜியாவையும் நேட்டோவில் இணைக்கும் அமெரிக்காவின் விருப்பம் ரஷ்யாவிடம் கடும் எதிர்ப்பை விளைவித்தது. அதே போல் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி சமீபத்தில் அணுஆயுதங்களை நிறுவ உக்ரைன் முனைப்புடன் உள்ளது என பேசினார். இவையும் ரஷ்யாவின் அச்சத்தை அதிகரித்தன.

உக்ரைன் அரசியலில் அமெரிக்க தலையீடு

உக்ரைன் நாட்டின் உள் அரசியலில் ஒரு திருப்புமுனையாக 2014ஆம் ஆண்டினை பார்க்கலாம். அதற்கு முன்பாக, 2010இல் நடந்த தேர்தலில் விக்டர் யோனுகோவிச் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போதே உக்ரைன் மேற்கு பகுதியும் கிழக்கு பகுதியும் பல்வேறு பண்பாடு, அரசியல் அம்சங்களில் பிளவுபட்டிருந்தன. கிழக்கு பகுதியில் வாழும் மக்கள் ரஷ்ய மொழியும், மேற்கு பகுதி மக்கள் உக்ரைன் மொழியும் பெரும்பான்மையாக பேசுகின்றார்கள். எனவே, கிழக்கு பகுதி மக்கள் ரஷ்யாவின் ஆதரவாளர்களாகவும், மேற்கு பகுதி மக்கள் ரஷ்ய எதிர்ப்பாளர்களாகவும் மாறும் வகையில் பல கருத்துகள் கட்டமைக்கப்பட்டன. இதில் அமெரிக்காவின் பங்கு மிக முக்கியமானது.

ஜனாதிபதி யோனுகோவிச் தொடக்கத்தில் அமெரிக்காவுடன் நட்பு பாராட்டினார். ஆனால் அவர் எதிர்பார்த்தபடி அமெரிக்க முதலீடுகள் உக்ரைனுக்கு வரவில்லை. எனவே அவர் ரஷ்யாவுடன் முதலீடுகளுக்காகவும், பொருளாதார ஒத்துழைப்புக்காகவும் ஒப்பந்தம் போட்டார். உக்ரைன் தனது பிடியிலிருந்து நழுவுகிறது என்பதை உணர்ந்த அமெரிக்கா, மேற்கு உக்ரைன் மக்களை யோனுகோவிச்சுக்கு எதிராக தூண்டியது. 2014ஆம் ஆண்டில் ஏராளமான கலவரங்கள் நடைபெற்றன. இந்த கலவரங்களை உருவாக்குவதில் உக்ரைன் நாட்டில் இயங்கும் நாஜி ஆதரவாளர்கள் முக்கிய பங்கை ஆற்றினார்கள். “மைதான் புரட்சி” என ஊடகங்களால் அழைக்கப்பட்ட இந்த கலவரங்களின் காரணமாக யோனுகோவிச் பதவி விலகினார். பின்னர் பதவியேற்ற ஜனாதிபதிகள் கிழக்கு உக்ரைன் மக்களுக்கு எதிராக விஷம் கக்கினார்கள். ரஷ்யா மீது வன்மத்தை வெளிப்படுத்தினார்கள். இப்படியான பின்னணியில் கிரீமியா தீவினை ரஷ்யா தன்னோடு இணைத்து கொண்டது. ஏனெனில் ரஷ்யாவின் முக்கிய கப்பற்படை தளம் அங்கு இருந்தது.

டோன்பாஸ் எனப்படும் பகுதியில் உள்ள லுகான்ஸ்க் மற்றும் டோன்டெஸ்க் ஆகிய மாநிலங்களில் உள்ள  ரஷ்ய மொழி பேசும் மக்கள் தங்களுக்குள் பொது வாக்கெடுப்பு நடத்தி தங்களை சுயாட்சி பிரதேசங்களாக அறிவித்து கொண்டன. உக்ரைனில் வாழும் ரஷ்ய மொழி பேசும் மக்கள் தாக்கப்படுவது ரஷ்யாவில் பெரிய தாக்கத்தை உருவாக்கியது. அவர்களுக்கு ரஷ்ய அரசாங்கம் உதவ வேண்டும் எனும் கருத்து மக்களிடையே இருந்தது. இதுபோன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண 2015ஆம் ஆண்டு மின்ஸ்க் நகரில் உக்ரைன்/ரஷ்யா/பிரான்ஸ்/ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு இடையே பேச்சு வார்த்தைகள் நடந்தன. இறுதியில் ஒரு  ஒப்பந்தம் போடப்பட்டது. அதன் முக்கிய அம்சங்கள்;

  • லுகான்ஸ்க் மற்றும் டோன்டெஸ்க் பகுதிகளுக்கு உக்ரைன் அரசாங்கம் சுயாட்சி வழங்குவது. ரஷ்ய மொழியை அங்கீகரிப்பது.
  • லுகான்ஸ்க் மற்றும் டோன்டெஸ்க் மக்கள் பிரிவினை எண்ணத்தை கைவிடுவது. உக்ரைனின் ஒன்றுபட்ட தன்மையை பாதுகாப்பது.

எனினும் இந்த ஒப்பந்தம் அமலாக்கப்படவில்லை. நடைமுறையில் ரஷ்ய மொழி உதாசீனப்படுத்தப்பட்டது. லுகான்ஸ்க் மற்றும் டோன்டெஸ்க் மக்கள் மீது தாக்குதல்களும் தொடர்ந்தன. அன்றிலிருந்து கிழக்கு உக்ரைன் பகுதி மக்கள் மீது உக்ரைன் ராணுவமும், நாஜி சித்தாந்தவாதிகளும் ஏராளமான தாக்குதல்களை நடத்தினர். கடந்த 7 ஆண்டுகளில் சுமார் 18,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

நாஜிக்களை ஊக்கப்படுத்திய நேட்டோ

உக்ரைனில் கடந்த 10 ஆண்டுகளாக வலதுசாரி பயங்கரவாதிகளும் நாஜி சித்தாந்தவாதிகளும் பெரும் எண்ணிக்கையில் உருவாகியுள்ளனர். இவர்களை ஆதரிப்போர் உக்ரைன் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் உள்ளனர். நேட்டோவின் ஆய்வு அமைப்பான “அட்லாண்டிக் கவுன்சில்” இவர்களை ஆதரித்தும் புகழ்ந்தும் பல கட்டுரைகளை வெளியிட்டுள்ளது.

நாஜி அமைப்புகளில் முக்கியமானது “அசோவ் பட்டாலியன்” என்ற அமைப்பாகும். அசோவ் பட்டாலியன் கோட்பாடுகள் என்ன?

  • உக்ரைன் மக்கள் பரிசுத்த வெள்ளை இனத்தை சேர்ந்தவர்கள்.
  • கிழக்கு உக்ரைனில் வசிக்கும் ரஷ்யர்கள் அசுத்தமான ரத்தம் உடையவர்கள். அவர்கள் உக்ரைனின் பரிசுத்த ரத்தத்தை மாசுபடுத்த முயல்கின்றனர்.
  • எனவே கிழக்கு உக்ரைன் மக்களை அடிமைப்படுத்த வேண்டும். தேவை எனில் அவர்களை படுகொலை செய்ய வேண்டும்.

இட்லரின் பல்வேறு நாஜி அடையாளங்களை இந்த அமைப்பு பயன்படுத்துகிறது. இத்தகைய கோட்பாடுகளை கொண்ட அமைப்பை நேட்டோ அமைப்பு ஆதரித்தது;  இன்றும் ஆதரிக்கிறது. அசோவ் பட்டாலியன் என்ற இந்த அமைப்புதான் 2014ஆம் ஆண்டில் நடந்த கலகங்களில் முக்கிய பங்கை ஆற்றியது. பின்னர் உக்ரைன் ராணுவத்தின் ஒரு பகுதியாக அது இணைக்கப்பட்டது. டோன்பாஸ் பகுதியில் வாழும் ரஷ்ய மொழி சிறுபான்மையினரை கொன்று குவித்ததும் இந்த அமைப்புதான். இந்த அமைப்பின் கொடூரங்கள் அனைத்தும் நேட்டோ அமைப்புக்கு நன்றாக தெரியும். சில அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த அமைப்பை பயங்கரவாத அமைப்பாக வகைப்படுத்த வேண்டும் என தீர்மானம் கொண்டு வந்தனர். அமென்ஸ்டி மனித உரிமை அமைப்பும் இந்த அமைப்பு தடை செய்யப்பட வேண்டும் என கோரியது. அமென்ஸ்டி தனது அறிக்கையில் கூறியது:

“பயங்கரவாத அமைப்புகள் செயல்படுத்தும் கட்டுப்படுத்தப்படாத வன்முறையில் உக்ரைன் சிக்கி மூழ்கி கொண்டுள்ளது. கொடூரங்களை நிகழ்த்தும் இந்த அமைப்புகள் எவ்வித தண்டனைக்கும் உள்ளாக்கப்படுவது இல்லை.”

ஆனால், “அசோவ் பட்டாலியன்தான் நாம் ரஷ்யாவுக்கு தரும் பரிசு” என அட்லாண்டிக் கவுன்சில் கருத்து தெரிவித்தது. எத்தகைய வன்மம் நேட்டோவுக்கு உள்ளது என்பதை இதிலிருந்து நாம் அறியலாம்.

அமெரிக்க செனட் நாடாளுமன்ற உறுப்பினர் பாப் மெனென்டஸ் உக்ரைனுக்கு 500 மில்லியன் டாலர் அதாவது சுமார் 3,800 கோடி ரூபாய் அளவுக்கு ஆயுதங்களை வழங்கிட தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார். இந்த ஆயுதங்கள் நாஜிக்களின் கைகளுக்கு செல்வதை தடுக்க என்ன வழிமுறைகள் உள்ளன என அவரிடம் கேட்ட பொழுது “நாம் ஏன் அதைப்பற்றி கவலைப்பட வேண்டும்?” என பதில் கூறினார்.

புடினின் தேசிய வெறி

ரஷ்யாவை நேட்டோ சுற்றி வளைப்பதையும் உக்ரைனில் உள்ள ரஷ்ய மொழி சிறுபான்மையினரை பாதுகாப்பதும் முக்கியம்! இது குறித்த புடினின் கவலை நியாயமானது; அது ரஷ்ய மக்களின் கவலையை பிரதிபலிக்கிறது. ஆனால் தனது போர் நடவடிக்கைகளை நியாயப்படுத்த லெனின் மற்றும் ஸ்டாலின் முன்னெடுத்த தேசிய இனக் கொள்கைகளை புடின் இழிவுபடுத்துகிறார். உக்ரைன் எனும் நாடு வரலாற்றில் இருந்ததே இல்லை எனவும், அதனை உருவாக்கியது லெனினும் ஸ்டாலினும்தான் எனவும் புடின் கூறுகிறார்.  சுயநிர்ணய உரிமை தந்தது மிகப்பெரிய தவறு எனவும், அதனால்தான் சோவியத் ஒன்றியம் சிதறுண்டது எனவும் குற்றம் சாட்டுகிறார். “மகா ரஷ்யா” எனும் கோட்பாட்டையும் வலியுறுத்தும் புடின், உக்ரைன் ஒரு தேசமாக நீடிக்க உரிமை இல்லை எனவும் கூறுகிறார்.

புடின் போன்ற முதலாளித்துவ அரசியல்வாதிகளுக்கு, தேசிய பிரச்சனையில் கம்யூனிஸ்டுகள் முன்வைக்கும் கோட்பாடுகள் பிடிக்காமல் போவதில் ஆச்சர்யம் இல்லை. ஜார் மன்னனின் ரஷ்ய சாம்ராஜ்யம் பல தேசிய இனங்களை அடிமைப்படுத்தியிருந்தது. எனவேதான் “ரஷ்யா தேசிய இனங்களின் சிறைச்சாலை” என லெனின் வர்ணித்தார். சுயநிர்ணய உரிமை வழங்கப்படாவிட்டால் எந்த ஒரு குடியரசும் சோவியத் ஒன்றியத்தில் இணைந்திருக்காது. சோவியத் ஒன்றியம் வெறும் ரஷ்யாவாகவே இருந்திருக்கும்.

தற்போது, “மகா ரஷ்யா” எனும் சாம்ராஜ்யத்தை உருவாக்கும் எந்த வாய்ப்பும் இல்லை என்பதை புடின் உணர மறுக்கிறார். சோவியத் ஒன்றியம் சிதறுண்டது மனித குலத்திற்கு ஏற்பட்ட பின்னடைவுதான். ஆனால் அதற்கு காரணம் சுயநிர்ணய உரிமை அல்ல.

ரஷ்யாவின் ராணுவ பாதுகாப்பு மற்றும் உக்ரைனில் உள்ள ரஷ்ய மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு எனும் இரு நோக்கங்களுக்கு அப்பாற்பட்ட  வேறு எந்த இலக்கையும் உக்ரைன் படையெடுப்பு மூலம் சாதிப்பதற்கு புடின் முயன்றால், அது விரும்பத்தகாத விளைவுகளையே தோற்றுவிக்கும். உலகின் இரு மிகப்பெரிய தேசங்களான சீனாவும், இந்தியாவும் மற்றும் சில நாடுகளும் ரஷ்யாவின் நியாயமான கவலையை ஏற்கிறார்கள். அதே சமயம், புடினின் நோக்கம் குறிப்பிட்ட எல்லையைத் தாண்டி நீளுமானால், உலக நாடுகளின் எதிர்ப்பையே அவர் சம்பாதிக்க நேரிடும்.

பாசிச எதிர்ப்பு போரில் உலக மக்களின் ஆதரவை பெற்றார் ஸ்டாலின். ஆனால் புடின் ஸ்டாலின் அல்ல. உக்ரைனில் ஒருவேளை ரஷ்யா வெற்றியடையுமானால், அதுவும் ஆபத்தான விளைவுகளையே ஏற்படுத்தும்.

முதலாளித்துவ ஜனநாயகத்தின் உண்மை முகம்

ரஷ்ய படைகள் உக்ரைனில் நுழைந்ததுமே பல முதலாளித்துவ  நாடுகளும் பொருளாதாரத்  தடைகளை விதித்தன. இது எதிர்பார்த்த ஒன்றுதான். எனினும், அதன் மூர்க்கத்தனம் எல்லையில்லாமல் விரிவடைந்தது. ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுடனான எண்ணெய் ஒப்பந்தங்களை திரும்ப பெற்றன. ரஷ்யாவில் செயல்பட்ட ஷெல் போன்ற நிறுவனங்கள் தமது செயல்பாட்டை நிறுத்தின. ஆப்பிள் நிறுவனம்/சாம்சங்/வால்வோ இப்படி பலநிறுவனங்கள் வெளியேறின. ரஷ்ய வங்கிகள் ‘ஸ்விப்ட்’ எனப்படும் நிதி பரிவர்த்தனையை பயன்படுத்த முடியாத அளவுக்கு தடைகள் விதிக்கப்பட்டன. ஐரோப்பா மற்றும் அமெரிக்க வான்வெளிகளில் ரஷ்ய விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டன. தன்னுடன் முரண்பட்டால் எந்த ஒரு நாட்டையும் மண்டியிட வைக்க முடியும் என முதலாளித்துவ உலகம் முயல்கிறது. கால்பந்து/ஹாக்கி/மோட்டார் பந்தயம்/மாற்று திறனாளிகள் ஒலிம்பிக் போட்டிகள்  என அனைத்து விளையாட்டு போட்டிகளிலுமிருந்து ரஷ்யா வெளியேற்றப்பட்டுள்ளது. ரஷ்யாவின் பூனைகளுக்கும் யோக் மரங்களுக்கும் கூட தடை விதிக்கப்பட்டுள்ளன. இந்த தடைகளால் பாதிக்கப்படப்போவது புடின் அல்லது பிற அரசியல்வாதிகள் அல்ல; ரஷ்ய மக்கள்தான்.

ரஷ்ய ஊடகங்கள் முழுவதும் ஐரோப்பா/அமெரிக்காவில் தடை செய்யப்பட்டுள்ளன. தொலை காட்சி விவாதங்களில் ரஷ்யாவை சிறிதளவு ஆதரித்து பேசுவோரும் வெளியேற்றப்படுகின்றனர். டோன்பாஸ் பகுதியில் 5 ஆண்டுகளாக ரஷ்ய மொழி பேசும் மக்கள் அடைந்த துன்பங்களை ஆய்வு செய்த ஒரு ஃபிரான்சு பத்திரிக்கையாளர் தனது அனுபவத்தை சொன்னதற்காக நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். பி.பி.சி./கார்டியன் போன்ற புகழ்பெற்ற ஊடகங்கள் கூட பொய்ச் செய்திகளை தாராளமாக பரப்பின. முதலாளித்துவ ஊடகங்கள் தமது அரசுகளின் கருத்துகளை மட்டுமே மக்கள் கேட்க வேண்டும் என எண்ணுகின்றன. எதிர்த்தரப்பு கருத்துகளை மக்கள் கேட்க கூடாது என கங்கணம் கட்டிக் கொண்டுள்ளன. இது முதலாளித்துவ ஜனநாயகம். இந்த ஜனநாயகத்தில் மாற்று கருத்துக்கு இடமில்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தப் போர் முதலாளித்துவத்தின் நிறவெறியை  வெளிப்படுத்தியுள்ளது. ஒரு தொலைகாட்சி செய்தியாளர் கூறினார்:

“இது சிரியாவோ அல்லது ஆப்கானிஸ்தானோ அல்ல; நாகரிக ஐரோப்பா. இங்கு தாக்குதல் நடக்கிறது”

அப்படியானால் சிரியாவும் ஆப்கானிஸ்தானும் நாகரிகமற்ற காட்டுமிராண்டி தேசங்களா?

இன்னொரு செய்தியாளர் கூறினார்:

“நெஞ்சம் பதைக்கிறது. ஊதா கண்களும் பொன் நிறத்திலான முடியையும் உடைய மக்கள் தாக்கப்படுகின்றனர்.”

அப்படியானால் மற்றவர்கள் தாக்கப்பட்டால் பரவாயில்லையா? ஆம். அப்படிதான் அந்த  ஊடகங்கள் முன்வைக்கின்றன.

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்த அதே நாளில் அமெரிக்க விமானங்கள் சோமாலியா மீது குண்டு பொழிந்தன. அமெரிக்க ஆதரவுடன் சவூதி படைகள் ஏமன் மீது தாக்குதலை நடத்தின. இஸ்ரேல் விமானங்கள் பாலஸ்தீனம் மீது தாக்குதல்கள் நடத்தின. இஸ்ரேல் ராணுவத்தினர் 15 வயது பாலஸ்தீன் பெண்ணை சித்திரவதை செய்து கொன்றனர். இது குறித்த காணொளி பரவலாக வலம் வந்தது. அமெரிக்காவின் ஆசியோடு ஏமன் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3,00,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 70% பேர் குழந்தைகள். ஆனால் இவை குறித்து முதலாளித்துவ ஊடகங்களில் ஒரு விவாதம் கூட  இல்லை. 

மேற்கத்திய ஊடகங்களின் செய்தி மற்றும் கட்டுரைகள் வெளியிடப்பட்டதில் பாரபட்சத்தை பாருங்கள்:

  • உக்ரைன் மீது ரஷ்ய தாக்குதல்- 1400
  • சவூதி ஏமன் மீது தாக்குதல்-0
  • இஸ்ரேல் சிரியா மீது தாக்குதல்- 5.

சிறிது நாட்கள் முன்புவரை அரேபிய அல்லது ஆப்பிரிக்க அகதிகளுக்கு அனுமதியில்லை என கூறிய போலந்து போன்ற நாடுகள் இன்று உக்ரைன் அகதிகளை இரு கரம் கூப்பி வரவேற்கின்றன. ஆஸ்திரேலியாவில் உள்ள ரஷ்ய தூதரகத்துக்கு வெடி பொருட்கள் பார்சல் அனுப்பப்பட்டன. நெதர்லாந்தில் ரஷ்யர்களுக்கு சொந்தமான உணவுவிடுதி தாக்கப்பட்டது. அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாம் ரஷ்யாவை சேர்ந்த எவராவது புடினை கொன்று விடுவது ரஷ்யாவின் எதிர்காலத்துக்கு நல்லது என பகிரங்கமாக கூறியுள்ளார். இவையெல்லாம் முதலாளித்துவ ஜனநாயகத்தின் உண்மை முகத்தை தோலுரித்து காட்டுகிறது.

முதலாளித்துவம் கைவிட்ட முதலாளித்துவ குழந்தை

ரஷ்யா சோசலிசத்தை கைவிட்ட பொழுது அதன் ஒரே கனவு முதலாளித்துவ உலகம் தன்னை சம பங்காளியாக கருதி அரவணைத்து கொள்ளும் என்பதுதான். அந்த விருப்பத்துடனேயே அனைத்து அரசு நிறுவனங்களும் தனியார்மயமாக்கப்பட்டன. கம்யூனிச கருத்துகளும் அவற்றை கடைப்பிடிப்போரும் வேட்டையாடப்பட்டனர். லெனின் மற்றும் ஸ்டாலின் சிலைகள் உடைக்கப்படடன. தாராளமய பொருளாதார கொள்கைகள் அமலாக்கப்பட்டன. அந்தோ பரிதாபம்! முதலாளித்துவ உலகம் ரஷ்யாவை தனது சம பங்காளியாக பார்க்கவில்லை. மாறாக தனக்கு அடிபணிந்து இருக்கும் ஒரு நாடாக ரஷ்யா இருக்க வேண்டும் என்றே கருதியது.

மார்க்சிய ஆய்வாளர் டேவிட் ஹார்வி ஒரு சுவையான ஒப்பீட்டை முன்வைக்கிறார். இரண்டாம் உலகப்போரில் துவம்சம் செய்யப்பட்ட நாடுகள் ஜப்பானும் ஜெர்மனியும். ஆனால் இந்த இரு நாடுகளையும் மறுநிர்மாணம் செய்ய ஏராளமான நிதி உதவிகளை முதலாளித்துவ உலகம் செய்தது. அதற்கு “மார்ஷல் திட்டம்” எனவும் பெயரிட்டது. ஆனால் சோசலிசத்தையே தூக்கி எறிந்த ரஷ்யாவுக்கு எந்த உதவியும் செய்யப்படவில்லை. குறைந்தபட்சம் ஐரோப்பிய நாடுகள்  கூட ரஷ்யாவை அரவணைக்க முன்வரவில்லை.

அதே சமயத்தில் சோவியத் ஒன்றியத்தின் ஒரு வலிமையே ரஷ்யாவை தொடர்ந்து பாதுகாத்தது. அதுதான் ராணுவ வலிமை. புடினை பார்த்து ஓரளவு முதலாளித்துவ நாடுகள் அச்சப்படுகின்றன என்றால் அதற்கு முக்கிய காரணம்   ராணுவ வலிமைதான்! இதற்கு புடின் ஸ்டாலினுக்கும் அவருக்கு பின்னால் ஆட்சியிலிருந்த ஏனைய கம்யூனிஸ்டு தலைவர்களுக்கும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டவர். “சமாதானத்துக்கு சமாதானம்! ஏவுகணைக்கு ஏவுகணை” என முழக்கமிட்ட யூரி ஆண்ட்ரோபோவ் போன்றவர்கள்தான் இந்த ராணுவ வலிமையை உருவாக்கினர்; பாதுகாத்தனர். இப்போது இந்த ராணுவ வலிமையைதான்  முதலாளித்துவ நாடுகள் சிதைக்க முயல்கின்றன.

இந்த போர் எப்படி முடியும் என்பது இக்கட்டுரை எழுதப்பட்ட சமயத்தில் தெளிவற்றதாகவே இருந்தது. எனினும், ஏற்கெனவே இரு தரப்பிலும் ஏராளமான உயிர்கள் பலியாகியுள்ளன. உக்ரைனின் ஆலைகளும் கட்டடங்களும் கடும் சேதத்தை சந்தித்துள்ளன.

உலக அளவில் கம்யூனிஸ்டுகள் ஒரே குரலில்தான் ஒலிக்கிறார்கள்:

  • போர் தொடர்வதில்  எந்த நியாயமும் இல்லை. போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். 
  • நேட்டோ தனது விரிவாக்கத்தை கைவிட வேண்டும்.
  • ஐரோப்பாவில் உள்ள அணு ஆயுதங்கள் அகற்றப்பட வேண்டும்.
  • உக்ரைனில் ரஷ்ய மொழி பேசும் மக்களின் வாழ்வும் பண்பாடும் பாதுகாக்கப்பட வேண்டும்.
  • உக்ரைன் சமாதான வழியில் பயணிப்பதை உத்தரவாதம் செய்யவேண்டும்.

இதுதான் சரியான பார்வையாக இருக்க முடியும்.

ஆதாரங்கள்: Consortiumnews/ Fair.org/davidharvey.org/Mint Press/MR online/ Newsclick/ RT.com/ Tricontinental newsletter/multipolarista.

புரட்சிகர கட்சி அமைப்புக்கான போராட்டம் …

ஜி. செல்வா

“அது கடினமானதல்ல, சட்டென புரிந்து கொள்ளக்கூடிய எளிமை உள்ளது அது. நீ சுரண்டல்வாதியல்லன். எனவே உன்னால் அதை  எளிதில் புரிந்துகொள்ள முடியும். அது உன் நன்மைக்கு வழி. எனவே அதைப் பற்றி நீ தெரிந்து கொள்.

அதனை மடமை என்போர் மடையர்கள். அது மோசம் என்போர் மோசடிக்காரர். மோசடிகளுக்கு எதிரானது அது. சுரண்டல்வாதிகள் அதனை ‘கிரிமினல்’ ஆனது என்பர். ஆனால் உண்மை விஷயம் நமக்குத் தெரியும். கிரிமினல் ஆன அனைத்திற்கும் அது முடிவு கட்டும். அது கிறுக்குத்தனமானது அல்ல. கிறுக்குத்தனங்கள் அனைத்தையும் முடிவுகட்டுவது அது.

அது குழப்பமல்ல; ஒழுங்கு. எளிமையான விஷயம்தான். எனினும் செய்யக் கடினமானது”

“கம்யூனிசத்திற்கு வாழ்த்து’ என்ற தலைப்பில் ஜெர்மன் நாடக ஆசிரியர் பெர்டோல்ட் ப்ரெக்ட் எழுதிய புகழ்பெற்ற வரிகள் இவை. இதிலுள்ள “அது குழப்பமல்ல; ஒழுங்கு’ என்ற வார்த்தைக்கான பொருள் என்ன? அந்த ‘ஒழுங்கு’ கம்யூனிச இயக்கத்திற்குள் உருப்பெற்றது எப்படி? அப்படியான ‘ஒழுங்குக்குள்’ கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்கள் உட்பட்டு இருக்க வேண்டியதன் தேவை என்ன? 

கம்யூனிசத்தை, மார்க்சியத்தை, பெயரளவில் அல்லது கொள்கைரீதியாக ஏற்றுக் கொள்பவர்கள் கூட,  கம்யூனிஸ்ட் இயக்கங்கள் வளராததற்கு கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு ரீதியான ஒழுங்குகளை விமர்சனமாக சுட்டி காட்டுகின்றனர். தொடர்ந்து விவாதத்தின் மையப்புள்ளியாய் முன்வைத்து வருகின்றனர். 

இந்தியாவில் எத்தனையோ இடர்ப்பாடுகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்கொண்டாலும் அதையெல்லாம் முறியடித்து சமாளித்து இன்று இந்தியாவில் உயிர்த்துடிப்புள்ள  இயக்கமாக செயலாற்றுவதற்கு கட்சியின் அமைப்பு ரீதியான ஒழுங்கு மிக முக்கியமானது என உறுதியாக கருதுகிறது. இதன் காரணமாகவே எப்போதெல்லாம் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு ரீதியான ஒழுங்குமுறைகள் விமர்சனத்துக்குள்ளாக்கப் படுகிறதோ அப்போதெல்லாம் கட்சி அவ்விவாதங்களுக்கு பதிலளித்தே செயலாற்றி வருகிறது.

கட்சியின் அமைப்புச் சட்ட விதிகளை ஏற்று செயலாற்றும் உறுப்பினர்களை மட்டுமே கட்சியில் வைத்திருக்கமுடியும் என உறுதியாக தீர்மானித்து அதை செயல்படுத்த முயன்று வருகிறது கட்சி. 

இதை கருத்தியல் நோக்கில் புரிந்து கொள்ள மார்க்சிய ஆசான் லெனினிடமே செல்ல வேண்டும்.

கம்யூனிச இயக்கத்திற்குள் ஸ்தாபன ஒழுங்கை கொண்டுவந்தவரிடம் கற்றுத் தெளிய,  வாசிக்க வேண்டிய புத்தகம் “ஓரடி முன்னால் ஈரடி பின்னால்”. 

சுமார் 116 ஆண்டுகளுக்கு முன்பு 1903ல் எழுதப்பட்ட புத்தகம். அதை இன்றைக்கு கம்யூனிஸ்ட் ஊழியர்கள் ஏன் வாசிக்க வேண்டும்? அதுவும் ரஷ்யாவில் அன்றிருந்த சூழலுக்கு லெனினால் எழுதப்பட்டதை இந்தியாவில் புரட்சிகர இயக்கத்திற்காக அர்ப்பணித்துள்ள ஊழியர் இப்போது ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்? இக்கேள்விக்கு விடைதேட இக்கட்டுரை முயல்கிறது.

1906 ஆண்டு லெனின் “பத்து ஆண்டுகள்” என்று ஒரு தொகுப்பு நூலை வெளியிடுகிறார். அதில் 1895 முதல்1905 வரை எழுதிய முக்கிய நூல்களை மட்டும் தொகுத்து, அதற்கு ஒரு முன்னுரையும் எழுதி உள்ளார். அதில்  ‘ஓரடி முன்னால் ஈரடி பின்னால்’ நூலினைப் பற்றி குறிப்பிடும் போது அதை எழுதியதற்கான காரணங்களை சுட்டிக் காண்பித்து 18 அத்தியாயம் கொண்ட நூலின் உள்ளடக்கத்திலிருந்து  ஏழு அத்தியாயங்களை நீக்கி அதன் சாராம்சத்தை மற்ற அத்தியாயங்களோடு இணைத்து மேம்படுத்தியதை குறிப்பிட்டுள்ளார்.

நூலினை எழுதுவதற்கு தூண்டிய நிகழ்வு போக்குகள்: 

ரஷ்ய கம்யூனிஸ்ட் இயக்கத்திற்குள் உருவாகி வளர்ந்த கருத்து மோதல்கள் முட்டி மோதி இரு குழுவாக பிரிந்து செயலாற்ற வேண்டிய நிலை 1903ல் இரண்டாவது கட்சி காங்கிரஸில் நடந்தேறியது. இம்மாநாட்டில் பெரும்பான்மையான பிரதிநிதிகள் லெனின் முன்மொழிந்த வழிகாட்டுதலை ஏற்றுக்கொண்டனர். அவர்கள் போல்ஷ்விக் என அழைக்கப்பட்டனர். போல்ஷ்விக் என்றால் ரஷ்ய மொழியில் பெரும்பான்மை என்று அர்த்தம் . லெனினது நிலைபாடுகளுக்கு மாறான  கருத்துக்களை பிளக்கனோவ், மார்த்தவ் போன்றோர்முன்மொழிந்தனர். அவர்களை பின்பற்றியவர்கள் மென்ஷ்விக்குகள் என அழைக்கப்பட்டனர். 

கட்சி காங்கிரஸ் நிறைவேற்றிய முடிவுகளின் அடிப்படையில் செயல்படாமல், அதற்கு நேர்மாறாக மென்ஷ்விக்குகள் செயல்பட ஆரம்பித்தனர்.குறிப்பாக, கட்சியின் பத்திரிக்கையான இஸ்க்ரா (தீப்பொறி) வுக்கு கட்சி காங்கிரஸில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர் குழுவுடன், தேர்ந்தெடுக்கப்படாத பழைய உறுப்பினர்களையும் இணைத்துக் கொள்ள வேண்டுமென பிளக்கனோவ் வற்புறுத்தினார். இதை லெனின் ஒப்புக்கொள்ளவில்லை. கட்சியின் மத்திய குழுவில் வலுவாக காலூன்றி நின்று கொண்டே சந்தர்ப்பவாதிகளின் மண்டையில் ஓங்கி அடிக்க வேண்டும் என கருதினார். எனவே இஸ்க்ரா பத்திரிக்கையின் ஆசிரியர் குழுவில் இருந்து லெனின் ராஜினாமா செய்தார். பிளக்கனோவ் கட்சி காங்கிரஸின் விருப்பத்தை காலில் போட்டு மிதித்து  தன்னிச்சையாக ஆசிரியர் குழுவை உருவாக்கினார். அன்று முதல்  மென்ஷ்விக்குகளின் சொந்த பத்திரிக்கையாக இஸ்க்ரா மாற்றப்பட்டது. கட்சி காங்கிரஸின் முடிவுகளுக்கு மாறாக தங்களுக்கு விருப்பமான சந்தர்ப்பவாத கருத்துகளை அப்பத்திரிக்கையில் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தனர்.  “செய்யக்கூடாது என்ன?”என்ற தலைப்பில் பிளக்கனோவ் கட்டுரை எழுதினார். இக்கட்டுரையானது லெனின் எழுதிய இன்றளவும் உலக கம்யூனிஸ்ட் இயக்க ஊழியர்களின் கையேடாக விளங்கும் “என்ன செய்ய வேண்டும்?”  நூலுக்கு மறுப்பாக எழுதப்பட்டது.  தொடர்ந்து கட்சி காங்கிரசின் முடிவுகளுக்கு எதிராக மென்ஷ்விக்குகள் எழுத ஆரம்பித்தனர்.  ‘கட்சி ஸ்தாபனத்தை ஒழுங்கற்ற முறையிலான ஒரு பொருளாக’   மார்த்தவ் கருதினர். 

இத்தகைய போக்குகளுக்கு எதிராக கட்சி காங்கிரஸ்  முடிவுகளை கட்சி அணிகளுக்கு தெளிவுபடுத்த விரும்பினார் லெனின். ஆனால் கட்சிப் பத்திரிகையோ மென்ஷ்விக்குகள் வசம் இருந்தது. எனவே தனது கருத்துக்களை ஒரு  நூலாக எழுத தொடங்கினார். அதுதான்  ‘ஓரடி முன்னால் ஈரடி பின்னால்’ . இந்நூலில் கட்சிக் காங்கிரசில் நடைபெற்ற நிகழ்வுகளை துல்லியமான ஆய்வுக்கு உட்படுத்தினார் . இத்தகு பணிக்கு லெனின் ஆதாரமாக  எடுத்துக் கொண்டது மாநாட்டு தீர்மானங்கள், பிரதிநிதிகள் பேச்சு, விவாதத்தின் போக்கில் பல்வேறு குழுக்கள் தெரிவித்த கருத்தோட்டங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய மாநாட்டு மினிட்ஸ் புத்தகங்கள்.

மினிட்ஸ் புத்தகங்களின் முக்கியத்துவம்

மாநாடுகளில் மினிட்ஸ் குழுவை தேர்ந்தெடுப்பதன் தேவையை, அதில் செயல்படுபவர்களின் பணிகளின் முக்கியத்துவத்தை, லெனினது வார்த்தைகளை வாசிக்கையில் உணரமுடியும்.

” கட்சிக் காங்கிரசின் கூட்ட நடவடிக்கை குறிப்புகள் நமது கட்சியின் உண்மையான நிலையைப் படம் பிடித்துக் காட்டுவதாக விளங்குகின்றன. இந்த வகையில் அவசியமானதாயும், துல்லியம், பூரணத்துவம், சர்வாம்சத்தன்மை, அதிகாரபூர்வ தன்மை ஆகியவற்றில் ஈடு இணையற்றது.

இயக்கத்தில் பங்கு கொண்டவர்கள் தாங்களாகவே தீட்டிய கருத்துகள், உணர்வுகள், திட்டங்கள் ஆகியவற்றின் படம் இது.அரசியல் சாயங்களின் ஒரு சித்திரம். அவற்றின் பரஸ்பர உறவுகள், போராட்டங்கள் ஆகியவற்றை காட்டும் ஒரு கருவி” என்கிறார் லெனின்.

“உட்கட்சி விவாதங்களில் விவேகமான பங்களிப்பை செலுத்த விரும்பும் ஒவ்வொரு தோழரும், கட்சி உறுப்பினரும், நமது கட்சி காங்கிரஸ் பற்றி கவனமாக படிக்க வேண்டியது அவசியம்” எனச் சொல்லும் லெனின், “கவனத்துடனும் சுயமுயற்சியால் படித்து அறிவதன் மூலம் மட்டுமே, சொற்பொழிவுகளின் சுருக்கங்கள், விவாதங்களின் சுவையற்ற பகுதிகள்  சிறு ( சிறியவையாக தோன்றும்) பிரச்சினைகள் மீது சில்லறை மோதல்கள் ஆகியவற்றை கொண்டு முழுமையானதொரு வடிவத்தை இணைத்து காணமுடியும்.” 

இப்படியாய் எழுதப்பட்ட இந்நூலை கட்சி உறுப்பினர்கள் மத்தியில் செல்லாமல் தடுப்பதற்கு சிறு குழுவினர் முயற்சி செய்தனர். இன்னும் ஒரு படி மேலே சென்று இப்புத்தகத்தை மத்திய குழு தடை செய்ய வேண்டும் என்று பிளக்கனோவ் வாதிட்டார். இத்தகைய தடைகளை தகர்த்து தான் லெனினது நூல் கட்சி உறுப்பினர்களிடம் சென்றடைந்தது.

கட்சி காங்கிரஸை எப்படி புரிந்து கொள்வது?: 

கட்சி அமைப்பு குறித்து தத்துவார்த்த ரீதியில் விரிவாக மார்க்சிய நோக்கில் எழுதப்பட்ட முதல் நூல் இது. குறிப்பாக கட்சி அமைப்பு முறை, கட்சி உறுப்பினர் என்பவர் யார்? அவரது செயல்பாடுகள், பங்களிப்புகள் எவ்வாறு இருக்க வேண்டும் ? என்பது போன்ற வரையறைகளை இந்நூல் உலக கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு வழங்கியுள்ளது.

விவாதத்திற்கு உள்ளான இரண்டாவது கட்சிக் காங்கிரசின் பிரதான பணிகளை சுட்டிக் காண்பிக்கும் லெனின் கட்சி காங்கிரஸ்-ஐ எப்படி புரிந்து கொள்ள வேண்டும் என வழிகாட்டுகிறார்.

நூலின் ஓட்டத்தில்  அவர் சுட்டிக் காட்டியுள்ள  கருத்துக்கள் இன்றைக்கும்  பொருத்தப்பாடு உடையவை. 

“கட்சிக் காங்கிரசின் எல்லா முடிவுகளும், அது நடத்தி முடிக்கும் எல்லாத் தேர்தல்களும், கட்சியின் முடிவுகளாகும். அவை கட்சி அமைப்புகள் அனைத்தையும் கட்டுப்படுத்துவதாகும். எக்காரணம் கொண்டும் அவற்றை ஏற்றுக் கொள்ள எவரும் மறுக்க கூடாது. கட்சி காங்கிரசால் மட்டுமே அவை நீக்கப்படவோ அல்லது திருத்தப்படவோ முடியும். 

மேலும் கட்சி காங்கிரஸ் முடிவுகளையும், தேர்தல்களையும் ஏற்றுக்கொள்ள  மறுப்பதை கட்சிக்கு செய்யும் நம்பிக்கை துரோகமாகக் கருத வேண்டும்”   எனக் கூறியிருக்கிறார். அம் மாநாட்டில் பங்கேற்ற பல்வேறு கருத்தோட்டம் உடைய குழுக்களின் நிலைப்பாடுகளை லெனின் ஒவ்வொன்றாய் நம்முன் வைக்கிறார். அவ்வாறு சொல்லும் பொழுது “ஓரிடத்தில் முக்கியமல்லாத சிறு பிரச்சினைகள் மீது நடந்த எண்ணற்ற வாக்களிப்புகளை நாம் விட்டுவிடுவோம். நம்முடைய காங்கிரஸின் பெரும்பகுதி நேரத்தை இதுதான் எடுத்துக் கொண்டது” என்கிறார். இது அன்று மட்டுமல்ல; இன்றும் தொடர்கிறது என்பதை நமது அனுபவம் சுட்டிக்காட்டுகிறது. அது மட்டுமல்ல; மாநாட்டு நிகழ்வுகளை பிரதிநிதிகளின் செயல்பாடுகளை லெனின் கூர்மையான விவாதங்களுக்கு மட்டும் உட்படுத்தவில்லை. நையாண்டிக்கும் நமட்டு சிரிப்புக்கும் வாசகரை உள்ளாக்கும் வகையில் தனது எழுத்தை கையாண்டுள்ளார்.

அகநிலை பார்வையற்ற ஆய்வு

லெனின் தனது நூலில் இரண்டு முக்கிய பிரச்சனைகளை மைய தளமாக கொண்டு விவாதத்தை முன்னெடுத்துச் செல்கிறார். ஒன்று அரசியல் முக்கியத்துவம் பற்றியது. அதாவது  கட்சிக் காங்கிரசில்  உருவெடுத்த பெரும்பான்மை – சிறுபான்மை  பிளவுக்கான அம்சங்கள். இதை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள கட்சிக் காங்கிரசில் நடைபெற்ற கருத்தியல் போராட்டத்தை தளமாக கொள்கிறார்.

இரண்டாவது, கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. இதற்கு  இஸ்க்ரா பத்திரிகை ஆசிரியர் குழுவில் இருந்து அவர் விடுபட்ட பிறகு  வந்திருந்த கட்டுரைகளை, எழுத்துக்களை விவாதத்திற்கு எடுத்துக் கொள்கிறார்.

கட்சிக் காங்கிரசில் பங்கேற்ற பல்வேறு கருத்தோட்டம் உடைய குழுவினரை எதிர் கொள்வதன் வழியாக “அகநிலை பார்வையற்று” செயலாற்ற  நமக்கு கற்றுக் கொடுக்கிறார் லெனின். அதுமட்டுமல்ல; மாற்றுக் கருத்துக்களை எப்படி ஜனநாயகரீதியில் எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் பக்குவமாக சுட்டி காண்பிக்கிறார். அதேவேளையில் வார்த்தை ஜாலங்களில் வித்தை காண்பிப்பவர்களை, உதட்டளவில் புரட்சிகரமாக பேசி செயலளவில் ஜம்பமாக செயல்பட்டோரை, கிழி கிழி என்று கிழித்து தொங்க விடுகிறார்.

உதாரணத்திற்கு இந்நூலில் பிளக்கனோவ், மார்த்தவ் ஆகியோர் கடும் விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட்டு  உள்ளனர். பிளக்கனோவ் லெனினுக்கு முந்தைய தலைமுறையைச் சேர்ந்தவர். மார்த்தவ் சமகாலத்தவர்.ஆனால் அவர்களது பங்களிப்புகளை மிக உயர்வாக மதிப்பிடுவது மட்டுமல்ல; அதை கட்சி அணிகளுக்கும் கடத்துகிறார். இவர்களை வர்க்க பகைவர்கள் போல் புரிந்து கொள்ளாமல் அவர்களின் கருத்தியல் குறைபாடுகளைத் தான் முதன்மையாக கொள்ளவேண்டும் என்பதற்காகவே எத்தனை அடிக்குறிப்புகள். இதுதான் கம்யூனிஸ்ட்  இயக்கத்தின் ஜனநாயக செயல்பாட்டுக்கு உதாரணம் என்பதை பெருமை பொங்க வாசிப்பின் வழி உணரமுடிகிறது.

குழுவாத போக்குக்கு “தான் எதிரி என தம்மை தாமே அழைத்துக் கொள்கிறார்” மார்த்தவ். இருப்பினும் கட்சி காங்கிரசுக்கு பிறகு அவற்றின் ஆதரவாளர் ஆனார் என கிண்டல் அடிக்கும் லெனின் அதை ஆதாரத்துடன் எடுத்து சொல்கிறார்.

கட்சி காங்கிரசுக்கு பிறகு ஸ்தாபன கோட்பாடுகளை எதிர்த்து, லெனினை தாக்கி எழுதப்பட்ட கட்டுரை இஸ்க்ரா பத்திரிகையில் பிரசுரிக்கப் படுகிறது. இக்கட்டுரையின் சில அம்சங்களில் மாறுபடுவதாக சொல்லி மொத்தத்தில் அக்கட்டுரையை ஏற்றுக்கொண்டு, அதன் ஆய்வுரைகளை ஒப்புக்கொள்கிறது ஆசிரியர் குழு. இதை விரிவாக எடுத்துச் சொல்லும் லெனின், “கட்சிக் காங்கிரசின் போது தாங்கள் சொன்னதற்கு நேர் விரோதமாக காங்கிரஸுக்கு பிறகு பேசும் ஆசிரியர் குழுவை கொண்ட ஒரு கட்சிப் பத்திரிகையை எவராவது என்றாவது கண்டதுண்டா?” என கேள்வி எழுப்புகிறார். 

நூலின் உள்ளடக்கம்

1, மார்க்சிஸ்ட் கட்சியானது தொழிலாளி வர்க்கத்தின் ஒரு பகுதி

2, தொழிலாளி வர்க்கத்தின் அமைப்புரீதியாக உருவாக்கப்பட்ட படைப் பகுதி

3, தொழிலாளி வர்க்கத்தின் அமைப்புகளுக்கெல்லாம் தலைசிறந்த உயர்ந்த அமைப்புகளாகும்.

4, பல லட்சக்கணக்கான தொழிலாளிவர்க்க மக்களுடன் தொழிலாளி வர்க்கத்தின் முன்னணிப் படை இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த இணைப்பின் உருவமே கட்சி.

5, ஜனநாயக மத்தியத்துவ கோட்பாட்டை அடிப்படையாக கொண்டு கட்சி இருக்க வேண்டும்.

6, தத்துவ ரீதியான ஒற்றுமை மட்டுமல்ல; எதார்த்தத்தில்  தெரியும்படியான ஸ்தாபன ஒற்றுமையோடு கட்சி இருக்க வேண்டும்.

இந்த கருதுகோள்களை விளக்கி, ஏன் இதனடிப்படையில் கம்யூனிஸ்ட் கட்சி கட்டப்பட வேண்டும் என்பதை, தனது காலத்தில் தான் எதிர்கொண்ட பிரச்சினைகள் வழி லெனின் உலக கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்கு ஸ்தாபனம் குறித்த அடிப்படைகளை எடுத்துரைத்துள்ளார்.

வர்க்கத்தின் ஒரு பகுதி என்றால் என்ன?

வேலைநிறுத்தம், போராட்டங்களில் பங்கேற்பவர்களை  கட்சி உறுப்பினராக கருத வேண்டும் என்ற வாதம் கட்சிக் காங்கிரசில் முன்வைக்கப்பட்டது. அதற்கு லெனின் “கட்சியையும் வர்க்கத்தையும் ஒன்றாக போட்டு யார் குழப்புகிறார்களோ அவர்கள் கட்சியின் உணர்வை ‘ஒவ்வொரு வேலைநிறுத்தக்காரனுடைய’ உணர்வின் அளவுக்கு குறைத்து தாழ்த்துகிறார்கள்” என கடுமையாக விமர்சிக்கிறார்.

மார்க்சிஸ்ட் கட்சி ஆனது தொழிலாளி வர்க்கத்தின் ஒரு பகுதி ஒரு பிரிவு. ஆனால் தொழிலாளி வர்க்கம் பல்வேறு பகுதிகளை கொண்டுள்ளது. தொழிலாளி வர்க்கத்தின் இத்தகைய  பகுதிகளை கட்சியாக கருதக்கூடாது. காரணம் தொழிலாளி வர்க்கத்தின் முன்னணிப் படையான வர்க்க உணர்வு கொண்ட பகுதிதான் மார்க்சிஸ்ட் படைப்பகுதி. ஏனெனில் சமூக வாழ்க்கை, சமூகத்தின் வளர்ச்சி விதிமுறைகள் குறித்தும், வர்க்கப் போராட்டத்தின் வழிமுறைகள் பற்றிய அறிவையும் ஆயுதமாக கொண்டுள்ளது இப்படை. மேலும் இந்த காரணத்தினால்தான் அதனால் தொழிலாளி வர்க்கத்தை தலைமை தாங்கி நடத்தி செல்ல முடிகிறது. வழிகாட்டி செயல்பட முடிகிறது.ஆகவே பகுதியை முழுமையாக போட்டு குழப்பக்கூடாது என சுட்டிக் காட்டுகிறார் லெனின்.

முதலாளித்துவ சமூகத்தின் கீழ் இருக்கும் போது 

வர்க்கத்தின் முன்னணிப் படையாக உள்ள கட்சியினரின் உணர்வின் அளவிற்கு, செயல்களின் அளவிற்கு தொழிலாளி வர்க்கம் முழுவதும் எழும்பி உயரும் என்று எந்த சமயத்திலாவது நினைத்தால் அது கண்மூடித்தனமான வெறும் திருப்தியாகவே இருக்கும். வர்க்க உணர்வு ஊட்டப்பட்ட பகுதியினருக்கும் வெகுமக்களுக்கும் உள்ள உணர்வு மட்ட வித்தியாசத்தை பார்க்க தவறுவதை, குறைத்து மதிப்பிடுவதை “நம் முன் நிற்கும் வேலைகளின் பிரம்மாண்ட அளவை பார்க்காமல், கண்களை மூடிக் கொள்வதற்கு ஒப்பாகும். மேலும், இந்த வேலைகளை மிகவும் சுருக்கிக் குறுக்குவதே என்றே அர்த்தம்” என எடுத்துரைக்கிறார்.

அமைப்புரீதியாக ஒன்று திரட்டுவதின் தேவை

“கட்சி உறுப்பினர் என்ற பட்டம் எந்த அளவுக்குப் பரந்து இருக்கிறதோ, அந்த அளவுக்கு நல்லது” என மார்த்தவ் தனது கருத்தை வலுவாக முன்வைக்கிறார். அதற்கு லெனின் ” வர்க்கத்தின் முன்னணிப் படை என்ற முறையில் எவ்வளவு தூரம் அமைப்புரீதியாக ஒன்று திரட்டி உருவாக்க முடியுமோ, அவ்வளவு தூரம் கட்சியை உருவாக்க வேண்டும். ஒரு குறைந்தபட்ச அமைப்புக் கோட்பாடுகளுக்கு எத்தகைய நபர்கள் தங்களை உட்படுத்தி கொள்வார்களோ, அத்தகைய நபர்களை கட்சிக்குள் உறுப்பினர்களாக அனுமதிக்க வேண்டும்” என்கிறார். மேலும் “கட்சியின் கட்டுப்பாட்டை பார்த்து முகம் சுளித்து பின்வாங்குபவர்கள், கட்சியின் அமைப்பில் சேர்வதற்கு பயப்படுபவர்கள் கட்சிக்கு உறுப்பினர்களாக தேவைப்படவில்லை. கட்டுப்பாட்டையோ, அமைப்பையோ பார்த்துத் தொழிலாளர்கள் பின்வாங்குவதில்லை. கட்சியில் உறுப்பினராக சேருவது என்று தீர்மானித்து விட்டால் அவர்கள் மனப்பூர்வமாக அமைப்பில் சேருகிறார்கள். தன்னந்தனியான போக்குடைய  படைப்பாளிகள்தான் கட்டுப்பாட்டையும் அமைப்பையும் கண்டு பயப்படுகிறார்கள்” என்கிறார்.

கட்சி, அமைப்பு ரீதியாக உருவாக்கப்பட்ட சாதாரண பகுதி மட்டுமல்ல. தொழிலாளி வர்க்கத்தின் அமைப்பு வடிவங்களிலெல்லாம் தலை சிறந்த, உயர்ந்த அமைப்பு வடிவம் ஆகும். “அதிகாரத்திற்காக பாட்டாளிவர்க்கம் நடத்துகிற போராட்டத்தில் அமைப்பைத் தவிர வேறு ஆயுதம் எதுவும் இல்லை” என்பதே லெனினியத்தின் அடிப்படை.

கட்டுப்பாடுகளை ஸ்தாபன ஒழுங்கை கட்சி முன்னிறுத்துவதன் அடிப்படைகள்

“தன்னுடைய கூட்டுக்குள்ளேயே எந்த கட்சி அடைபட்டு கிடைக்கிறதோ, பொதுமக்களிடமிருந்து எந்த கட்சி தன்னை தனிமைப்படுத்திக் கொள்கிறதோ, தன்னுடைய வர்க்கத்துடன் எந்த கட்சி தொடர்பு அற்று இருக்கிறது அல்லது அந்த தொடர்பை தளர்த்திக் கொள்கிறதோ, அந்த கட்சி மக்களுடைய நம்பிக்கையை ஆதரவை இழப்பது திண்ணம். இதன் பயனாக அது அழிந்தும் போகும். பூரணமாக வாழ்வதற்காகவும், வளர்ச்சி அடைவதற்காகவும் மக்களுடன் வைத்திருக்கும் தன்னுடைய தொடர்புகளை கட்சி பன்மடங்கு அதிகமாக்க வேண்டும். தன்னுடைய வர்க்கத்தைச் சேர்ந்த பல லட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கைகளை பெருமுயற்சி செய்து பெற வேண்டும்” இவ்வாறு  லெனின் சொல்வதை கருத்தளவில் ஏற்றுக் கொள்பவர்கள் கூட அதை அடைய கட்சியின் ஒழுங்கு, கட்டுப்பாடு குறித்து சொல்லும்போது கண்டுகொள்ளாமல் சென்றுவிடுகின்றனர். அந்த ஒழுங்கை ரஷ்ய கம்யூனிஸ்ட் இயக்கத்திற்குள் கொண்டு வருவதற்கு லெனின் நடத்திய கருத்தியல் போராட்டத்தை கூர்ந்து வாசிப்பது இன்றைய தேவைக்கு மிக முக்கியமானது. 

கட்சி ஸ்தாபனத்தை ‘கொடூரமானதாக கருதுவதை, முழுமைக்கு பகுதி கட்டுப்படுவதை, பெரும்பான்மைக்கு சிறுபான்மை உட்படுத்தப்படுவதை, ‘பண்ணை அடிமைத்தனமாக’ கூக்குரலிட்டு கத்தி பேசுவதை லெனின் தனது வாதங்களின் வழி நையப் புடைக்கிறார்.

“கட்சியை கட்டுவதில்  தொடர்ந்து ஈடுபடும்போது தொழிலாளி வர்க்க ஊழியரின் மனோபாவத்திற்கும் தன்னுடைய அராஜகப் பேச்சுகளை ஜம்பமாகப் பேசுகிற முதலாளித்துவப் படிப்பாளியின் சிந்தனை போக்கிற்கும்  இடையே உள்ள வேறுபாட்டை வர்க்க உணர்வு ஊட்டப்பட்ட தொழிலாளர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். சாதாரண உறுப்பினர்கள் மட்டுமல்லாமல், ‘தலைமையில் உட்கார்ந்து இருப்பவர்களும்’ தங்களது கடமையை நிறைவேற்றி பூர்த்தி செய்ய வேண்டும் என்று வற்புறுத்த கற்றுக்கொள்ள வேண்டும்.” இவ்வாறு வழிகாட்டி புரட்சிகர இயக்கத்தை வளர்த்தெடுக்க பாடுபட்ட லெனின் தன்னை ஓரிடத்தில் சுயவிமர்சனத்துக்கு உட்படுத்தி பேசும் வார்த்தைகள் நெகிழ்ச்சி அளிக்கிறது. 

“நான் அடிக்கடி திகில் தரும் எரிச்சலான நிலையில் சீற்றம் கொண்டவனாக நடந்திருக்கிறேன்; செயல்பட்டிருக்கிறேன் என்பதை உணருகிறேன். என்னுடைய அந்தப் பிழையை நான் எவரிடத்திலும் ஒத்துக் கொள்ள விருப்பமுள்ளவனாகவே இருக்கிறேன். அது ஒரு குற்றம் என்று கருதப்படுமேயானால், அது சூழல், எதிர்செயல்கள், போராட்டம் ஆகியவற்றின் இயற்கையான விளைவே.

அவ்விளைவுகளை ஆராய்ந்து பார்த்தோமேயானால், கட்சிக்கு ஊறு விளைவிப்பதாக எதுவுமில்லை. சிறுபான்மையை புண்படுத்தும் அல்லது இழிவுபடுத்தும் என்று சொல்லக்கூடியது எதுவுமில்லை.” என்கிறார்.

அறிவுஜீவிகள் யார்? முதலாளித்துவ சமூக அமைப்பில் அவர்களது உணர்வோட்டம் எப்படி கட்டமைக்கப்படுகிறது? என்பதை விரிவாக ஆய்வுக்கு இந்நூலில் உட்படுத்தி உள்ளார். ஓர் அறிவுஜீவி எப்படி இருக்க வேண்டும் என்ற உதாரணத்தையும் எடுத்துரைத்துள்ளார். ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த சர்வதேச தொழிலாளி வர்க்க இயக்கத்தின் தலைசிறந்த தலைவர் லீஃப்னெக்ட்-ஐத் தான் லெனின் சுட்டிக்காட்டுகிறார்.

“அவர் சிறப்பான எழுத்தாளராக இருந்தும், ஓர் அறிவுஜீவியின் தனிப்பட்ட மனப்பான்மையை முற்றிலும் இழந்து விட்டு, தொழிலாளர்களுடைய அணியில் மகிழ்ச்சியுடன் நடைபோட்டார். அவருக்கு என ஒதுக்கித் தரப்பட்ட எந்த பதவியிலும் பணிபுரிந்தார். மாபெரும் லட்சியத்திற்காக தன்னை முழு மனதோடு ஆட்படுத்திக்கொண்டார்” என புகழாரம் சூட்டுகிறார் லெனின்.

நிறைவாக,

தமிழகத்தில் உறுதியான, புரட்சிகர குணாம்சமிக்க கட்சியை கட்டுவதில் உள்ள பலவீனமான அம்சங்களை  மத்திய குழு சுட்டிக்காட்டி உள்ளது. அப் பலவீனங்களை களைய கட்சி முழுவதும் எப்படி செயல்படுவது என பல்வேறு வழிகாட்டுதல்களை கட்சியின் மாநிலக்குழு விவாதித்து உருவாக்கி நடைமுறைப்படுத்தி வருகிறது. அதை கோட்பாட்டு ரீதியாக புரிந்து கொள்ளவும், இன்னும் முழு ஈடுபாட்டுடன் செயல் தளத்தில் நடைமுறைப்படுத்தவும், லெனினது ” ஓரடி முன்னால் ஈரடி பின்னால்” நூல் நமக்கு வழிகாட்டும்; உற்சாகமூட்டும். இது நான்கு சுவர்களுக்குள் உருவான கருத்தியல் பெட்டகம் அல்ல. மாறாக, கள அனுபவங்களை  மார்க்சிய தத்துவ ஒளியின் கண் கொண்டு பார்த்து சித்தாந்தரீதியான உரையாடல்களை ஜனநாயகரீதியாக மேற்கொண்டு உருவாக்கப்பட்ட ஆய்வு நூல். அதைவிடவும் முக்கியமானது, இப்படியாகக் கட்டப்பட்ட கட்சியின் மூலம் தான் ரஷ்ய புரட்சி சாத்தியம் ஆனது.

ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் விடுதலை – சோஷலிசத்தின் சாதனை

பிரகாஷ் கராத்

1917ல் முதல்முறையாக, தொழிலாளி வர்க்க தலைமையில் நடைபெற்ற அக்டோபர் புரட்சியால், சோஷலிச கட்டமைப்பை வெற்றிகரமாக ஏற்படுத்த முடிந்தது. அத்துடன், தேசிய இன பிரச்சனைக்கு ஒரு சோஷலிச தீர்வை  அடைவதற்கான பாதையை ஏற்படுத்த முடிந்தது.  லெனினும், போல்ஷ்விக்கட்சியும் புரட்சி நடந்த காலத்திலேயே  தேசிய இனங்களின் ஒடுக்குமுறை மற்றும் அவற்றின் சுய நிர்ணய உரிமை தொடர்பான நிலைபாட்டை உருவாக்கி இருந்தனர். தேசிய இனங்களின் சுய நிர்ணய பிரச்சினையில் பூர்ஷ்வா அணுகுமுறை தீர்வு எட்டா  நிலைக்கு  போய்விட்டது. தேசிய விடுதலை மற்றும் சமத்துவம் பற்றிய பூர்ஷ்வாக்களின்  பார்வையும்,   ஏகாதிபத்தியத்தின் விளைவாக உலகம் ஒடுக்கும தேசிய இனங்கள், ஒடுக்கப்படும் தேசிய  இனங்கள் என்று  பிரிந்திருந்த நிலையில், பூர்ஷ்வா பார்வைக்கு முற்றிலும் மாறான நடைமுறையும்,  ஒடுக்கப்பட்ட மக்களிடம் பூர்ஷ்வா நிலைப்பாடு ஏற்கத்தக்கதாக இல்லாத நிலையை உருவாக்கியிருந்தன.

தேசங்களின்  சுய நிர்ணய  உரிமை:

தேசிய பிரச்சினையை மார்க்சிய அணுகுமுறையை பின்பற்றி,  ஜாரின்     ரஷ்யாவில் ஓடுக்கப்பட்ட அனைத்து தேசிய இனங்களுக்கும்  சுய நிர்ணய  உரிமை  அளிக்க  போல்ஷெவிக் கட்சிக்குள் லெனின்  உறுதியான நிலைபாட்டை எடுத்திருந்தார். ஜாரின் எதேச்சதிகார ஆட்சியை தூக்கி எறிய ரஷ்ய உழைக்கும் வர்க்கம், ஒடுக்கப்பட்ட அனைத்து தேசிய இன மக்களுடன்   இணைய வேண்டும்.அக்டோபர் புரட்சிக்குப் பின்னர், துவக்கமாக, லெனின் சமமாக உள்ள தேசிய இனங்களின் கூட்டமைப்பு கட்டப்பட வேண்டுமென அறைகூவல் விடுத்தார். உள்நாட்டு கழகம் முடிவுக்கு வந்த பின், லெனினின் வழிகாட்டுதலுடன், போல்ஷ்விக்குகள் தேசிய பிரச்சினையில் விடுதலையிலிருந்து சமத்துவம் என்ற  அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல ஆரம்பித்தனர்  சோவியத் யூனியன் புதிய சோஷலிச அமைப்பை உருவாகிய பொழுது அது, தேசிய இன பிரச்னை தொடர்பான புதிய புரட்சிகர அணுகுமுறையை உட்கொண்டதாக இருந்தது. பூர்ஷ்வா வட்டங்களில் பேசுவது போல, தேசிய இனங்களின் விடுதலை என்று பேசினால் மட்டும் போதாது.  இந்த விடுதலை தேசிய இனங்களுக்கு இடையே சமத்துவத்தை ஏற்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். தேசிய இனங்களுக்கிடையே உள்ள பொருளாதார, சமூக ஏற்றத் தாழ்வுகள் நீக்கப்பட்டு சமத்துவத்திற்கான  உண்மையான அடித்தளம் அமைக்கப்பட வேண்டும்.  லெனின் காட்டிய இந்த பாதையில் சோவியத் யூனியனின் கம்யுனிஸ்ட் கட்சி செயல்பட்ட விதம் சோவியத் யூனியனின் வரலாற்றில் குறிப்பிடத்தக்க அத்தியாயமாகும் அத்துடன், சோவியத் அரசை தோற்றுவித்த லெனின் தொலைநோக்கு பார்வைக்கு கிடைத்த பாராட்டு ஆகும்.

தேசிய இனங்கள் தொடர்பான சோவியத்  கொள்கையின் முக்கியத்துவம்   பற்றி சோவியத்  புரட்சி பற்றி எழுதியுள்ள நிலைத்த புகழ் பெற்ற வரலாற்று  அறிஞர்ஈ.எச்.கார் கூறுகிறார்: “போர், புரட்சி  உள்நாட்டு கலகம் இதர இடையூ றுகளுக்கு பின்னர் ஜாரின் ஆளுமைக்கு உட்பட்டிருந்த அ னைத்து முன்னாள், பகுதிகளையும்  மறுசேர்க்கை  செய்த பணியானது லெனினின் பிரமிக்கத்தக்க  சாதனைகளில் முக்கியமான அம்சமாக கருத  வேண்டிய ஒன்றாகும்.”

ஜாரின் சிறை வீடு

அந்த பிரமிக்கத்தக்க சாதனை என்பது என்ன? ஜாரின்  ரஷ்யா பல தேசிய இனங்களின் சிறை வீடாக இருந்தது. அதில் பிரதான தேசிய இனமாக இருந்த ரஷ்ய தேசிய இனம் இதர அனைத்து தேசிய இனங்களையும் ஒடுக்கும் இனமாக இருந்தது.ஜாரின் ஆட்சியில், மாபெரும் ரஷ்ய ஆளும் வர்க்கம் இதர தேசிய இனங்களை காலனிகளாக்கி ஒடுக்குமுறைக்கு ஆட்படுத்தியது. ரஷ்ய மாகாணங்களில் மட்டுமே தொழில்மயம் நடைபெற்றது. ரயில்வேதொழிலாளர்    உள்ளிட்ட  மொத்த 2.8 மில்லியன்    தொழிலாளர்களில் ,2.2   மில்லியன்  ரஷ்யர்கள் ஆவர். 1913 ம்  ஆண்டு   கணக்கின்படி, மத்திய ஆசியா மற்றும் காக்கஸ் பகுதிகளில் உள்ள ஐந்து குடியரசுகளில்  மொத்தம்  30  புராதன இயந்திர  ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டன.  காலனியாக்கப்பட்ட  தேசிய இனங்கள் விவசாய, மற்றும் கச்சாப்பொருட்களை அளிப்பவர்களாக இருந்தனர். அக்டோபர் புரட்ச்சிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை, கஜககஸ்தான் மற்றும் கிர்கிஸ்தானில் 18   மில்லியன் ஹெக்டேர் நிலங்கள் ரஷ்ய நிலபிரபுக்கள், அரசு அதிகாரிகள் மற்றும் குலக்குகளுக்கு கொடுக்க வேண்டி இருந்தது.  காலனிய ஆட்சியில் இத்தகைய பொரளாதார பின்னடைவுடன், சமூக பின்னடைவும் சேர்ந்து கொண்டது. ரஷ்ய ஆட்சியாளர்கள் இதர மக்களின் மொழி மற்றும் பண்பாடுகளை ஒடுக்கினர். ரஷ்யர்கள் அல்லாத இதர இன மக்கள் கல்வி அற்றவர்களாகவும்  மருத்துவ வசதிகள் அற்றரவர்களாகவும் இருந்தனர்.

சமான தேசியங்ளைக் கொண்ட புதிய யூனியன் :

1918  முதல்  1922வரை, கடுமையான உள்நாட்டு கலகம்நடைபெற்றது. உக்ரைன் ஜியார்ஜியா , அர்மெனியா  போன்ற முன்பு ஒடுக்கப்பட்ட தேசங்களில் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டன. 1922 ல் சோஷலிச அமைப்பின் கீழ்   பல தேசங்களின் கூட்டமைப்பு தோன்றும் சூழல் உருவாகியது. பல தேசங்கள் தாமாகவே முன்வந்து இணைந்ததன் விளைவாக யு.எஸ்.எஸ்.ஆர் உருவாகியது. இந்த மாபெரும் சாதனைக்குப் பின்புலமாக தேசிய இனங்களின் ஒடுக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைப்பது, அனைத்து தேசிய இனங்களுக்கும் விடுதலை அளிப்பது, தேசிய இனங்களில் உள்ள மிக சிறிய அளவில் உள்ள சிறுபான்மை இனத்தவருக்கும் சுய நிர்ணய உரிமை வழங்குவது என்கின்ற கொள்கையை உணர்வுபூர்வமாக போல்ஷெவிக்குகள் அமுலாக்கிய விதம் குறிப்பிடத்தக்கது.

மிகபிரம்மண்டமான இந்த பணியை லெனின் தொடர்ந்து கண்காணித்து வந்தார். 1918ல், தேசிய இனங்களின் விஷயங்களை கவனிக்க ஒரு கமிசா ர் பதவி ஏற்படுத்தப்பட்டது முதல் மக்கள் கமிசாராக நியமிக்கப்பட்டவர்  ஸ்டாலின் ஆவார். லினின் வழிகாட்டுதலுடன், தேசிய இனக் கொள்கை பற்றி கட்சியின் முக்கிய பேச்சாளராக அவர் இருந்தார். தேசிய இனங்களின் மக்கள் கமிசாரியத்தின் கீழ் பல்வேறு தேசிய இனங்களின் விஷயங்களை கவனிக்க பல பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டன. மிகச் சிறிய குழுக்களான பாஷ்கிர்கள், டா ட்டர்களுக்கு என பிரிவுகள் தொடங்கப்பட்டு சுவாஷ் மொழியில் அவர்களுடைய பிரச்னைகள் பற்றி புகார் அளிக்க தனி அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. தவிர, மாவட்ட மற்றும் கிராம சோவியத்துகள் மக்கள் கூட்டங்களை  நடத்தி, மிகவும் சிறிய குழுக்கள் கூட புரிந்து கொள்ளும் வகையில், செய்திதாள்கள் வாசிப்பது, முக்கிய தகவல்கள்,பிரகடனங்களை அவர்கள் மொழியில் வாசித்து காண்பிக்கும் பணியை மேற்கொண்டனர்.

சகாப்தம் படைத்த முன்னேற்றம் 

இந்த கொள்கையின் விளைவுகள் உண்மையிலேய அற்புதமானவை. பொருளாதார, சமூக, கலாச்சார தளங்களில், நூற்றுக்கும் மேற்பட்ட தேசிய இனங்கள் அடைந்த முன்னேற்றம் மிக வேகமாகவும் முன் எப்போதும் காணாத விதத்திலும் இருந்தது. புதிய சோவியத் அரசு ரஷ்ய  இனம் அடைந்த முன்னேற்றத்தை இத ர வளர்ச்சி அடையாத இனங்களும்   அடைய உதவ வேண்டும் என்பதை  தேசிய இனக் கொள்கையின் அடிநாதமாக வலியுறுத்தியது. 1940ற்குள் மத்திய ஆசிய, காகேசிய குடியரசுகள் அடைந்த முன்னேற்றம் சகாப்தம் படைத்தது. 1940  வாக்கில், தொழில் துறையில், கசகஸ்தான்,கிர்கிஸ்தான், ஜியார்ஜியாமற்றும் அர்மேனியா ரஷ்ய குடியரசுக்கு இணையாக /கூடுதலாக முன்னேறின.   1960. களில் இந்த வளர்ச்சி போக்கு பரவலாகியது.  கல்வியில் மோசமாக, பின்தங்கிய நிலையில் இருந்த மத்திய ஆசிய குடியரசுகள் முன்னேற்றம் அடைந்து, பல மேற்கத்திய நாடுகளில், உயர் கல்வி  பெறும் மாணவர்கள் எண்ணிக்கையை விட கூடுதலான எண்ணிக்கையில் இருந்தனர். ஆரோக்கியத்தை பொறுத்த வரை, 1940  வாக்கில், மத்திய ஆசிய குடியரசுகளில் ஆயிரம் மக்களுக்கான மருத்துவர் விகிதம்   இந்தியாவில் 1956 ல்  இருந்ததை விட அதிகமாக இருந்தது. சம வேலைக்கு சம கூலி என்ற கொள்கை தொடர்ந்து கூலியை சமப்படுத்துவதை உறுதி செய்தது.

கசகஸ்தான், கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான்,அசர்பெய்ஜான் ஆகிய குடியரசுகளில் வாழ்க்கை தரம் வெகுவாக உயர்ந்தது. இறப்பு விகிதம் கணிசமாக குறைந்தது. கல்வி துறையில்; சேர்க்கை எண்ணிக்கை பல மடங்கு பெருகியது.

லெனினிய தேசிய இனக் கொள்கையால் பல தேசிய இனங்களின்  மொழிகள் மற்றும் அவற்றின் பயன்பாட்டை மீட்டெடுத்ததை காண முடிந்தது.புரட்சிக்கு பின்னர்    கிட்டத்தட்ட ஐம்பது தேசிய இனங்களுக்கு  அவர்களுடைய மொழிகளுக்கு எழுத்து வடிவங்கள் உருவாக்கப்பட்டன. சில மொழிகளுக்கு சிரில்லிக் [ரஷ்ய, ஸ்லாவோனிக் மொழிகளில் இருந்து பெறப்பட்ட] எழுத்துருவாக்கம் செய்யப்பட்டு, எழுதும் மொழியாக அவை மாற்றப்பட்டன. கல்வியாளிப்பதிலும், பல மொழிகளின் பயன்பாட்டையும், வளர்ச்சியையும்  காண முடிந்தது”. அனைத்து குழந்தைகளும் முதல் வகுப்பு முதல் உயர் கல்வி வரை, தங்கள் தாய் மொழியிலேயே  கல்வி  கற்கும் ” கொள்கை  அக்டோபர், 29,1917 அன்று    வெளியிடப்பட்ட  பிரகடனத்தில் உறுதி செய்யப்பட்டிருந்தது. சோவியத் யூனியனில் எந்த பகுதியாக இருப்பினும், அம்மக்கள்  எவ்வளவு சிறிய எண்ணிக்கையில் இருப்பினும், தங்கள் குழந்தைகளை அவர்கள் தாய்    மொழியிலேயே கல்வி கற்கும் வசதி பள்ளிகளில் இருந்தது.

லெனினின் பங்களிப்பு

சோஷலிச குடியரசுகள்,  சுயேச்சை அதிகாரம் படைத்த குடியரசுகள்,சிறிய தேசிய இனங்களுக்கும் சிறுபான்மை இகுழுக்களுக்கும்சுயேட்சையான,பகுதிகள் – என தன்னார்வ கூட்டமைப்பு மூலம் சோவியத் யூனியன் உருவாகியது இந்த உருவாக்கம் தேசிய இனக் கேள்வி பற்றிய மார்க்சிீய புரிதலின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்டது.  ஒரு தேசிய இனம் மற்ற தேசிய இனங்களை  ஒடுக்கும் பொழுது   ஒரு நாட்டின்  உழைக்கும் வர்க்கம் விடுதலை அடைய  முடியாது என்பதே இதன் அடிப்படை ஆகும். தேசிய இனம் பற்றிய விஷயத்தில் லெனினின் ஆழ்ந்த பார்வையும், புரிதலும் சோவியத் யூனியனை உருவாக்க நேரடி பங்களிப்பு செய்துள்ளது. அது மட்டுமின்றி, சர்வதேசிய அளவில், ஏகாதிபாத்தியம் மற்றும் உலக முதலாளித்துவத்திற்கு எதிரான உழைக்கும் வர்க்க போராட்டங்களில், தேசிய,   காலனியாதிக்கத்திற்குட்பட்ட மக்களின் போராட்டங்கள் கேந்திரமான நேச சக்தியாக பார்க்கப்பட வேண்டுமென்ற முக்கியமான கோட்பாட்டையும் தந்துள்ளது.1920ல் லெனின் கம்யுநிஸ்ட் இண்டர்னஷனலின் இரண்டாவது மாநாட்டில் சமர்ப்பித்த தேசிய மற்றும் காலனியாதிக்கம் பற்றிய ஆய்வறிக்கை என்பது லெனின் உயர்த்திப் பிடித்த சர்வதேசெய கோட்பாடு மற்றும் தேசிய விடுதலை ஆகிய இரண்டையும் உள்ளடக்கியதாகும்.

லெனினைப் பொறுத்தவரை, சுய நிர்ணயம் என்பது வெறும் எட்டில் உள்ள உரிமை அல்ல. பிரத்யேக நிலைமைகளுக்கு ஏற்றவாறு நடைமுறைபடுத்தப்பட வேண்டும். எனவே, அந்த உரிமைகளை அனுபவிப்பதற்கு ஏற்ப சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டியது அவசியம். உழைக்கும் வர்க்கத்தை பொறுத்தவரை, சுய நிர்ணயம் என்பது அவர்களின் வர்க்க நலனடிப்படையில் தான் தீர்மானிக்கப்படுகிறது. எனவே, அது ஒரே மாதிரியாக, பூர்ஷ்வக்களுக்கு வால் பிடிக்கும் தன்மையில் இருக்காது. காலனிய ஒடுக்குமுறைக்கு எதிரான, தேசிய விடுதலை என்கிற வரலாற்று கால கட்டத்தில்,நிலப்பிரபுக்களையும், அந்நிய ஒடுக்குமுறையாளர்களையும் எதிர்க்கும் போராட்டத்தில், உழைக்கும் வர்க்கம் பூர்ஷ்வாக்களுடன் இணைந்து நிற்கும். தேச விடுதலை சமூக வர்க்கங்கள், வேறுபாடுகளை உருவாக்க வழி வகை செய்து கொடுத்து, வர்க்க போராட்டத்தை முன்னெடுத்து செல்ல எதுவாக அமையும்.

அடுத்த கட்டமாக, பூர்ஷ்வா அரசிலிருந்து, உழைக்கும் வர்க்க ஜனநாயகத்தை நோக்கி செல்கையில், உழைக்கும் வர்க்கம் அனைத்து தேசங்களின் உழைக்கும் மக்களுடனும் ஒற்றுமை வேண்டும் என்பதை வலியுறுத்தும். தேசம் செல்லும் வழியை தீர்மானிக்கும் ஒரே சக்தியாக, பூர்ஷ்வாக்கள் இருந்து தேசத்தின் எதிர்காலத்தை தங்கள்கைகளில் வைத்திருக்க முடியாது. சோஷலிச கால கட்டத்தில்,  சர்வதேச சோஷலிச  நலன்களுக்கு உதவுவதாக இ ருந்தால் மட்டுமே, உழைக்கும் வர்க்கம் சுய நிர்ணய உரிமையை நிலை நாட்டும்.

ரஷ்யர்கள் உயர்வானவர் என்ற நிலைக்கு எதிரான எச்சரிக்கை

ரஷ்யர்கள் தான் உயர்வானவர்கள் என்ற இன கருத்தாக்கத்தை எதிர்த்து லெனின் தொடர்ந்து  எச்சரிக்கை செய்து வந்தார். தமது கடைசி கலத்தல், கட்சிக்குள்ளேயும், சமூகத்திலும் அத்தகைய மேலாதிக்கத்தை எதிர்த்து போராடினார். அது    உழைக்கும் வர்க்க புரட்சியாளர்கள் அனைவரும் கற்க வேண்டிய பாடம்  ஆகும்.

1920ல் உக்ரைனில், மீண்டும் சோவியத் அதிகாரம் நிலைநாட்டப்பட்ட பொழுது “உக்ரைனில் சோவியத் அதிகாரம்” என்ற தீர்மானத்தின் வரைவை சிறப்பு கட்சி மாநாட்டில் முன்வைத்தார். உக்ரைன் மொழி இரண்டாம் இடத்திற்கு தள்ள மேற்கொள்ளப்பட்ட செயற்கையான முயற்சிகள் அதில் கண்டனத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந்தது. அனைத்து அதிகாரிகளுக்கும் உக்ரைன் மொழியில் பேச தெரிந்திருக்க வேண்டுமெனக் கோரியது.

பின்னாளில்    ஜார்ஜியாவில் சில பிரச்னைகளை கையாண்ட விதம் சரி இல்லை என் தனது நெருங்கிய சக ஊழியர்களான ஒர்ஜோநிகிட்சே.   மற்றும் ஸ்டாலினை லெனின் திட்டிய சம்பவம் பரவலாக அறியப்பட்ட ஒன்று. ரஷ்ய மேலாதிக்க உணர்வை அவர்கள் வெளிப்படுத்தியதற்காக, அவர்களை லெனின் கடுமையாக விமர்சித்தார். செர்சின்ச்கி  போன்ற ரஷ்யர்கள் அல்லாத போல்ஷெவிக் தலைவர்கள் கூட அத்தகைய உணர்வை கொண்டிருப்பதை சுட்டிக்காட்டினார்.

புதிய பிரச்னைகளும், திரிபுகளும்

முந்தைய சில பத்தாண்டுகளில் செய்த  நூதனமான சாதனைகளை தொடர்ந்து எடுத்து செல்ல இயலவில்லை. அதற்கு பல காரணங்கள் உண்டு. தொடர்ந்து கண்காணிப்பு இல்லாமல், போராட்டங்கள் நடத்தாமல் இருந்தால், ரஷ்ய மேலாதிக்க, மையப்படுத்தும்  வளர்ச்சிப் போக்கு தலைதூக்கும் என்று லெனின் நினைத்தது சில விஷயங்களில் உண்மையாகியது. முப்பதுகள், நாற்பதுகளில் நிலவிய அசாதாரண சூழல், மிக அதிக  மத்தியத்துவம் நாஜிக்களின் படையெடுப்பின் விளைவுகளை எதிர்க்க வேண்டிய நிலை -ஆகிய அனைத்தும், சமத்துவத்தை வலியுறுத்தும் தேசிய இனக் கொள்கையை பின்னுக்கு தள்ளியது. அதிகார போக்கும், சோஷலிச ஜனநாயகத்தை விரிவடையச் செய்யாமல் இருந்ததும் பல குடியரசுகளிலும், சுயாட்சி பகுதிகளிலும் சமூக பிரக்ஞையையும்  வளர்ச்சி தொடர்பான விஷயங்களிலும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தின. பொருளாதார தளத்தில் நிலவிய தேக்கம், குறிப்பாக, எழுபதுகளின் நடுவில்  ஏற்பட்டதென்பது அதிருப்தியை ஏற்படுத்தியது. முன்பு பின்தங்கிய நிலையில் இருந்த அனைத்து தேசிய இனங்களிலும், ஐம்பது முதல் அறுபது ஆண்டுகள் வரையிலான பொருளாதார, சமூக முன்னேற்றம் புதிய வர்க்கங்களை யும், அறிவுஜீவிகளின் வளர்ச்சியையும் தோற்றுவித்திருந்தது. சோவியத் யூனியனில்  ஒருங்கிணைப்பு . ஒரு புறம் வலுபெற்றது. அத்துடன் தேசிய உணர்வும் தலை தூக்கியது. தங்களது கலாச்சார, தேசிய பாரம்பரியத்தை கண்டுபிடித்து, தேசிய வாழ்வில் தலை பங்கு வகிக்க வேண்டுமென் புதிதாக கல்வி பெற்ற பிரிவினர் எண்ணியது இயல்பான் ஒன்று. தேவைகளையும்,அபிலாஷைகளையும் சோஷ்லிச, ஜனநாயக அடிப்படையில் இணைத்து கொண்டு போவதில் தோல்வி ஏற்பட்டது.

உலக புரட்சி முறை, தேசியத்தின் பங்கு  பற்றி நன்றாகவே புரிந்து வைத்திருந்த லெனின், எச்சரிக்கை செய்கிறார்:”உலக அளவில், தொழிலாளி வர்க்க எதேச்சாதிகாரம் அமைந்த பின்னரும் நீண்ட காலம் தேசியமற்றும் அரசு வேறுபாடுகள் தொடர்ந்து  இருக்கும்.” ஆனால், சோவியத் யூனியனில் கம்யுனிஸ்ட் தலைவர்களும், சோவியத் கம்யுனிஸ்ட் கட்சியும் தேசிய இன பிரச்னை தீர்க்கப்பட்டு விட்டதென்றும் முடிவுற்றது என்ற மேம்போக்கான நிலைப்பாட்டை எடுத்தனர். ஆக்கத்திறன் மிக்க லெனினிய அணுகுமுறை உறைந்து செயலிழக்கச்செய்யப்பட்டதால்            [ossification] புதிய வளர்ச்சிப் போக்குகள் மற்றும் பிரச்னைகளை எதிர் கொள்ளும் வகையில் புதிய முன்முயற்சிகளையும் ,நடவடிக்கைகளையும் எடுப்பது நிகழவில்லை. பல குடியரசுகளில் பெரும் அளவில் நடந்த குடிபெயர்வுகளும், பல தேசிய இனங்கள் புதிய பகுதிகளில் மையங்களில் கலந்து பழகியதும், அவர்கள்  குறிப்பிடத்தக்க வகையில் அமைதியான, இசைந்த வாழ்வை மேற்கொண்டதை வெளிப்படுத்தியது.  ஆனால், சோவியத் ஒன்றியத்தின் இறுதி இருபது ஆண்டுகளில் நிலவிய பொருளாதார தேக்கம் , தேசிய அபிலாஷைகள் தலை தூக்குதல் ஆகியவற்றால்,  புதிய உரசல்கள் வளர்ந்தான.. சோவியத் தேசப்பற்றிற்கு அழுத்தம் கொடுத்த போதிலும், தேசிய உணர்வு நிலைக்கு ஏற்ப இல்லாததால், பல திரிபுகளும், எரிச்சல்களும் தோன்றின. தத்துவார்த்த கருத்துக்கள் அரிக்கப்பட்டு, அந்த வெற்றிடத்தை தேசிய கருத்துக்கள் நிரப்பின.

நிலைத்தகு கொடை

அக்டோபர் புரட்சியும், உலகின் முதல் சோஷலிச அரசு கொண்டு வந்த தேசிய இனக் கொள்கையும் நீடித்து நிலைக்கும் கொடைகளாகும்.   விடுதலை அடைநத முன்னாள் காலனி நாடுகலின் கொள்கைகள் மீதும் தேசிய இயக்கங்களின் மீதும் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதை இருபதாம் நூற்றாண்டின் வரலாறும் தேசிய இயக்கங்களும் வெளிப்படுத்துகின்றன. இந்தியாவும் சிக்கலான, பல தேசிய இனங்களைக் கொண்ட நாடு. அக்டோபர் சோஷலிச புரட்ச்சிக்குப் பின்னர் சோவியத் யூனியன் கடைபிடித்த பிரத்ஏகமான தேசிய இனக் கொள்கையின் அனுபவங்கள் படித்து புரிந்துகொள்ளப்பட வேண்டியவை. வருகின்ற காலத்தில், உலக சோஷலிச சக்திகளை    முன்னெடுத்து செல்வதும், வியுக மாற்றங்களை மேற்கொள்வதும் கடுமையான, சிக்கலான பணியாகும். அதை செய்வதற்கு, தேசிய பிரச்னையில் லெனின் அவர்களின் கொள்கையிலிருந்து நல்ல பாடங்களை கற்பதுடன், இந்த முக்கிய பிரச்னையில், மார்க்சிீய லெனினிய நிலைபாட்டை மேலும் உருவாகுவது அவசியமாகும்.

தமிழகத்தில் சோவியத் புரட்சியின் தாக்கம்

– இரா.சிசுபாலன்

மகத்தான நவம்பர் புரட்சி மனிதகுல வரலாற் றில் மாபெரும் திருப்பு முனையாக அமைந்தது. சோசலிசப் புரட்சி இயக்கத்தில் புதிய கட்டம் துவங்கியது. கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் மக்கள் ஜனநாயகப் புரட்சிகள், மகத்தான சீனப்புரட்சி, வியட்நாம், கியூபப்புரட்சிகள், ஆசிய, ஆப்பிரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடுகளின் தேசிய விடுதலைப்புரட்சிகள் மகத்தான வெற்றி பெற நவம்பர் புரட்சியே ஆதர்ச மாய் விளங்கியது.

இந்திய விடுதலை இயக்கம் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்த சமயத்தில் நவம்பர் புரட்சி இந்தியப் புரட்சியாளர்கள் மீது புதிய வெளிச் சத்தைப் பாய்ச்சியது. அவர்கள் இந்திய விடுதலையை வெறும் அரசியல் விடுதலையாக மட்டுமல்லா மல், அது சமூகப் பொருளாதார விடுதலையாக மட்டுமல்லாமல், அது சமூகப் பொருளாதார விடுதலையாகவும் அமையவேண்டும் என்ற புதிய கண்ணோட்டத்தைப் பெற்றனர். தமிழகத்தில் நவம்பர் புரட்சி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

ரஷ்யப்புரட்சியை யுகப்புரட்சி என வரவேற்ற மகாகவி பாரதி, முப்பது கோடி ஜனங்களின் சங்க முழுமைக்கும் பொதுவுடைமை, ஒப்பில்லாத சமுதாயம் உலகிற்கொரு புதுமை எனப் பாடி னார். புரட்சி, பொதுவுடைமை ஆகிய கருத்து களைத் தமிழகத்தில் முதன்முதலில் விதைத்தவர் மகாகவியே ஆவார். மேலும், குடிமக்கள் சொன்ன படி குடிவாழ்வு, மேன்மையுறக் குடிமை நீதி என சோசலிசத்தைப் புரிந்து கொண்டு இந்தியா விலும் அத்தகைய இலட்சியம் ஈடேற வேண்டும் என்றார். சோசலிசம் என மேலை நாட்டினர் குறிப்பிடுவது என்னவென்று இங்குத் தெளி வாகப் புரிந்து கொள்ளப்படவில்லை. எனினும் மேலை நாட்டுக்கும் சரி, கீழை நாட்டுக்கும் சரி கவுரவமான வாழ்க்கை நடத்து வதற்கு ஒரே மார்க்கம்தான் உள்ளது. உலகைப் பொது வுடைமையாக்கி, அதில் சகத் தொழிலாளிகளாகவும், கூட்டுப் பங்காளிகளாகவும் வாழ்வதே அந்த மார்க்க மாகும் என 1925ம் ஆண்டு The Coming Age என்ற ஆங்கிலக் கட்டுரையில் மகாகவி குறிப் பிட்டார். நவம்பர் புரட்சியைப் பற்றி இந்திய மொழிகளிலேயே தமிழில் தான் பாரதியார் முதலில் பாடினார்.

சமரச சன்மார்க்கமே தேச விடுதலையின் சாராம்சம் எனக் குறிப்பிட்ட தியாகி சுப்பிரமணிய சிவா தனது பாரதீய மதத்தின் இலட்சியமாக எல்லோருக்கும் பொதுவான சமரச சன்மார்க்க விடுதலையையே பிரகடனப்படுத்தினார். ஆன்மீக விடுதலை என்பதே தேச விடுதலைதான் என அவர் விளக்கினார். தன் மீதான வழக்குகளில் நீதிமன்றங்களில் அவர் அளித்த வாக்கு மூலங்கள் இதனை உறுதிப் படுத்துகின்றன. எப்பொழுது, எங்கே சுதந்தரம் நசுக்கப்படுகிறதோ, நசுக்கப்பட முயற்சி செய்யப் படுகிறதோ அப்பொழுது அங்கே என்னால் முடிந்த வன்மையுடன், எனது எதிர்ப்புக்குரலைக் கிளப்புவதும், சிரமப்பட்டு சுதந்தரம் ஒளிர்விட பாடுபடுவதும் எனது தர்மமாகும். உலகிலே அடிமைப்பட்டுக்கிடக்கும் சகல மக்களுக்கும் நியாயத்தை எடுத்துரைப்பது எனது தர்மமாகும் எனக் குறிப்பிட்டார்.

1919ம் ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி சென்னையில் சுப்பிரமணிய சிவா ஏற்பாடு செய்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய வ.உ.சி, ஆங்கி லேயரின் கொடுங்கோன்மை, பலாத்காரம், நீதி யின்மை ஆகியவையே அவர்களுக்கு எதிரான சதி வேலைகளுக்கு அடிப்படையாக அமைந்தது என்றார். 1920 ஜூன் 21ல் திருநெல்வேலியில் நடைபெற்ற காங்கிரசின் இருபத்தி ஆறாவது மாநில மாநாட்டில் வ.உ.சி இரண்டு தீர்மானங்களை முன்மொழிந்தார். அதில் ஒன்று தொழிலா ளர் சங்கங்களைப் பற்றியது. காங்கிரஸ் கட்சி நாடுமுழுவதும் தொழிற் சங்கங்களைத் துவக்க வேண்டுமெனவும், நியாயமான குறைந்தபட்ச ஊதியம், அளவான பணிநேரம், நிறைவான கண்ணியமிக்க குடியிருப்பு வசதி, முழுமையான தடையற்ற சங்கம் அமைக்கும் உரிமை வேண்டும் எனவும் அத்தீர்மானம் குறிப்பிட்டது. மேலும் சென்னை மாநில மேலவைக்குத் தொழிலாளர் களிடமிருந்து போதுமான பிரதிநிதிகள் தேர்ந் தெடுக்கப்பட வழிவகை செய்யப்பட வேண்டு மெனவும் அத்தீர்மானம் வலியுறுத்தியது.

1921ம் ஆண்டு மகாத்மா காந்திக்கு பொதுவுடைமைச் சிற்பி சிங்காரவேலர் பகிரங்கக் கடிதம் ஒன்றை எழுதினார். ஊமையராய் உள்ள இந்த நாட்டின் லட்சக்கணக்கானவர்களின் நல்வாழ்வுக்கு தாங் கள் பாடுபடுவதால் நான் தங்களை ஆதரிக்கிறேன். துர்பாக்கிய நிலையிலுள்ள நமது மக்கள் தற்போ தைய அந்நிய அதிகார வர்க்கத்தை எதிர்த்து வெற்றி பெற்றால் மட்டும் போதாது; நமது சொந்த மக்களின் எதிர்கால அதிகாரவர்க்கத்தை எதிர்த்தும் போராடி முறியடித்தால்தான் சுதந்தர மும், மகிழ்ச்சியும் கிட்டும். நிலமும், ஆலைகளும் அனைவருக்கும் பொதுவாக்கப்பட்டு நாட்டில் தொழிலாளர் அனைவரின் நன்மைக்காகவும் பயன்படும் கம்யூனிசம் மட்டுமே நமது மக்களுக்கு விடுதலை கிட்டியதற்கான உண்மையான அளவு கோலாக இருக்க முடியும் என அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

1922ம் ஆண்டு கயாவில் நடை பெற்ற இந்திய தேசியக்காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்ற சிங்காரவேலர், உலகக் கம்யூனிஸ்டு களின் பிரதிநிதியாகத் தன்னைப் பிரகடனப்படுத் தினார். 1923ம் ஆண்டு சென்னை மெரினா கடற்கரையில் நாட்டிலேயே முதன்முறையாக மே தினக் கொடியை ஏற்றி வைத்து தொழிலாளர் சுயராஜ்ஜியம் அமைய வேண்டும் என முழங் கினார். இக்கூட்டத்துக்கு வேலாயுதம் தலைமை தாங்கினார். தியாகி சுப்பிரமணிய சிவா, கிருஷ்ண சாமி சர்மா ஆகியோர் உரையாற்றினர்.
இக்கூட்டத்தில் தொழிலாளர் – விவசாயிகள் கட்சி ஒன்று அமைக்கப்பட்டு, அதன் கொள்கை அறிக்கை வெளியிடப்பட்டது; இந்திய தேசியக் காங்கிரஸ், நாடு என்பதை உடமை வார்க்கத்தின் உரிமையாகவே வரையறுக்கிறது. அவர்களது சுயராஜ்ய திட்டத்தில் தொழிலாளிகளும், ஏழை விவசாயிகளும் செல்வர்களின் நலனுக்குத் தன் னையே தியாகம் செய்து கொள்ள வேண்டும். இன்றைய ஐரோப்பிய எஜமானர்களுக்கு பதிலாக இந்திய அதிகார வர்க்கத்தை உருவாக்குவதே அவர்களது நோக்கமாக உள்ளது. முதலாளி களும், ஜமீன்தார்களும் காங்கிரசின் முதுகெலும் பாக உள்ளதால் தொழிலாளர்களுக்குக் காங் கிரஸ் ஒரு நன்மையும் செய்யாது. எனவே தொழி லாளர், விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கக் கூடிய, வர்க்க உணர்வு கொண்ட அரசியல் கட்சி தேவைப்படுகிறது எனக் கட்சியின் கொள்கை அறிக்கை பிரகடனப்படுத்தியது. நாட்டின் அர சாட்சி முறை இந்துஸ்தான் பஞ்சாயத்து என்னும் கூட்டாட்சியாக இருக்கும். கிராம மட்டத்தி லிருந்து மத்திய அரசு மட்டம் வரை பஞ்சாயத் துக்கான உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். மத்திய அரசின் மைய உறுப்பாக அனைத்துப் பஞ்சாயத்துகளின் காங்கிரஸ் அமைந்திருக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியை மக்கள் திருப்பி அழைத்துக் கொள்ள உரிமை உண்டு என அப்பிரகடனம் மேலும் குறிப்பிட்டது.

இக்கட்சியின் பத்திரிகைகளாக லேபர் -கிசான் கெசட் என்ற ஆங்கில இதழும், தொழிலாளி என்ற தமிழ் இதழும் வெளிவந்தன. இவற்றின் மூலம் கொள்கைப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

மாமேதை லெனின் மறைந்தபொழுது லேபர் – கிசான் கெசட் தனது அஞ்சலியில் பின்வரு மாறு குறிப்பிட்டது: அரசியல் சிந்தனையிலும், தத்துவத்திலும் லெனின் அவர்கள் தமது சொந்த நாட்டின் செய்த மகத்தான புரட்சி ஒரு வேளை அழிக்கப்படலாம் அல்லது சில சுயநல மனிதர் களால் துடைத்தெறியப்படலாம். ஆனால் அது மீண்டும் மீண்டும் தன்னைப் புனரமைத்துக் கொண்டு உலகை வெல்லும், உலகம் முழுவதும் உள்ள உழைப்பாளர்களுக்கு உன்னத வாழ்வளிக்கும் தீர்க்கதரிசனமான வார்த்தைகள்!

தமிழ்த்தென்றல் திரு.வி.க தேசபக்தன் (1917), நவசக்தி (1920) ஆகிய இதழ்களில் பொதுவு டைமைக் கருத்துகளை எழுதிவந்தார். முற்போக் காளராகத் திகழ்ந்த அவர், சன்மார்க்கமும், சமதர்மமும் கலக்க வேண்டும் என வலியுறுத் தினார். நவசக்தி-யின் இலட்சியங்களாகப் பின் வருவனவற்றைப் பட்டியலிட்டுள்ளார் (22.10.1920)

  1. மக்கள் சுதந்தரத்துக்கு அடிப்படையானது ஜனநாயக முறையாதலால் அதை நாடி உழைத்தல்.
  2. ஜனநாயக முறைக்கு அடிகோல வேண்டு வது தொழிலாளர் இயக்கமாதலால் அவ்வியக் கத்தை வளர்க்க முயலல்.
  3. தொழிலாளர் இயக்கத்தை வலுப்படுத்த வும், அவர்களது குறைகளை நிவர்த்திக்கவும், அவர்கள் வழி ஆட்சி முறையைத் திருப்பவும், அவர்கட்கெனத் தனியாக உழைக்கவும் தொழிற் கட்சியை ஓம்பவும், விவசாயிகளின் கஷ்டங்களைப் போக்க முயலவும் தொழிற்சாலைகளைப் பெருக்குதல்
  4. பெண்கள் நலனுக்குப் பாடுபடுதல்.
  5. தமிழ் மொழியையும், தமிழ்நாட்டுப்பழைய பழக்க வழக்கங்களையும் செப்பஞ்செய்தல்.
  6. தமிழ்நாட்டில் தோன்றியுள்ள சாதியப்பகை, வகுப்பு துவேசம் முதலியவற்றை ஒழித்துச் சகோதர நேயத்தை வளர்த்தல்.
  7. தேசத்துக்குத் தீங்கிழைக்கும் கட்சிகளைக் கண்டித்து, அக்கட்சித் தலைவர்களை நேசித்துத் தேச வளர்ச்சியை நாடும் கட்சியில் அவர்களைத் திருப்பமுயலல்.
  8. இந்தியாவில் பிறந்த அனைவரையும் இந்திய ராகக் கருதி, அவரை ஒரினமாக்கி, அவர் நலத்துக் காகத் தியாகம் செய்தல்.

சென்னை நகரில் ஆங்கிலேய முதலாளிக்குச் சொந்தமான பக்கிங்காம் கர்னாடிக் பஞ்சாலை யில் தொழிற்சங்கம் துவக்கப்பட்ட அனுபவத்தைத் தனது வாழ்க்கைக் குறிப்பில் திரு.வி.க பின்வரு மாறு குறிப்பிட்டுள்ளார்:

1918ம் ஆண்டு மார்ச் மாதம் 2ம் தேதி ஜங்கார மாயம்மாள் பங்களாவில் வெங்கடேச குணாமிர் தவர்ஷினி சபை சார்பில் தொழிலாளர் கூட்டம் ஒன்று நடைபெற்றுது. பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்கள் கடந்து கூட்டத்தைச் சிறப்பித் தனர். தொழிலாளர் மைதானத்தை நிரப்பினர்; மதில்களை நிரப்பினர், மரங்களையும் நிரப்பினர்… யான் மேல் நாட்டில் தொழிலாளரியக்கம் தோன்றிய வரலாற்றையும், பொருளாதார விடுதலையின் மாண்பையும், தொழிலாளர் சங்கத்தின் அவசியத் தையும் விளக்கிப்பேசினேன். தொழிலாளர்களிடையே புத்துணர்ச்சி தோன்றித்ததும்பி வழிந்தது.. அன்று போலீஸ் நடவடிக்கை வெறுக்கத் தக்கதாக இருந்தது. தொழிலாளர் பொறுமை காத்தனர்.
1918ம் ஆண்டு ஏப்ரல் 27 அன்று சென்னைத் தொழிலாளர் சங்கம் காணப்பட்டது. திரு.வாடியா தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். திவான் பகதூர் கேசவப் பிள்ளையும், யானும், வேறு சிலரும் உதவித் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப் பட்டோம். தோழர்கள் இராமாஞ்சலு நாயுடுவும், செல்வபதி செட்டியாரும் காரியதரிசிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

1943ம் ஆண்டு நவம்பர் புரட்சி தினத்தன்று சோவியத் யூனியனுக்கு திரு.வி.க வாழ்த்துச் செய்தி அனுப்பினார்:
கவிஞர்களும், தத்துவஞானிகளும் நீண்டகாலமாகச் சுதந்தரச் சூரியன் என்று பாடியும், பேசியும் வந்தனர். அச்சூரியன் தோன்றி ஏறக்குறைய கால் நூற்றாண்டாகிறது. அச்சூரியன் எது? அதுவே சோவியத் யூனியன். அந்த யூனியனிடத்தில் எனது உள்ளம் தவழ்ந்து ஏறக்குறைய இருபது ஆண்டு களாகின்றன. 1921ம் ஆண்டு சென்னைத் தொழி லாளர் சங்கத் தலைவன் என்ற முறையில் எனக்கு முதன்முதல் சோவியத் கதிராகிய லெனின் படம் கிடைத்தது. அன்று முதல் லெனின் கொள்கை களை என்னால் இயன்றவரை பரப்பி வருகிறேன். உலகம் முழுவதும் சோவியத்மயமாக வேண்டு மென்று கனவு காண்பவருள் யானும் ஒருவன். அக்கனவு நினைவாய்ச் செயலாய் முகிழ்க்கும் காலம் அணித்தே நிற்றல் கண்டு மகிழ்வெய்து கிறேன். சோவியத் யூனியனை மூடப்பாசிச மேகங் கள் தவழ்கின்றன. அம்மேகங்கள் ஒழிந்ததும், உல கம் முழுவதும் சதந்தரச் சூரியனால் ஒளி காணும். அப்பொழுது உலகின் பீடைகள் போகும், கவன நீங்கும், எங்கும் பொதுமை தாணடவம் புரியும், அமைதி நிலவும். செஞ்சேனை வெற்றி உண்டாவ தாகுக என அச்செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.

1932ம் ஆண்டு தந்தை பெரியார் ஐரோப்பிய நாடுகளுக்கும், சோவியத் யூனியனுக்கும் பயணம் மேற்கொண்டார், அதன் விளைவாக சோசலிசக் கருத்துகள் மீது அவருக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. வெளிநாட்டுப் பயணம் முடித்து வந்து தமிழகத் தில் சோசலிசத்தின் மேன்மையைப் பிரச்சாரம் செய்யும் பணியில் ஈடுபட்டார். அவ்வாண்டு டிசம்பரில் ஈரோட்டில் பெரியார் இல்லத்தில் சுயமரியாதை சமதர்மக்கட்சி தொடங்கப்பட்டது. அக்கட்சியின் திட்டம் ஈரோடு திட்டம் என்ற அழைக்கப்பட்டது.அத்திட்டத்தின்முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

  1. பிரிட்டிஷ் முதலிய எந்தவித முதலாளித் துவத் தன்மை கொண்ட ஆட்சியிலிருந்தும் இந்தி யாவைப் பூரண விடுதலை அடையச்செய்வது.
  2. எல்லா தேசக் கடன்களும் ரத்து.
    தொழிற்சாலை, ரயில்வே, வங்கிகள் தேசியமயம்.
    விவசாய நிலம், காடுகள்- மக்களின் உரிமை.
    விவசாயக் கடன் ரத்து.
  3. சுதேச சமஸ்தானங்களை ஒழித்து இந்தியா வைத் தொழிலாளர் விவசாயிகள் ஆட்சியின் கீழ் கொண்டு வருதல்.
  4. ஏழு மணி நேர வேலை நாள் இத்திட்டத்தை விளக்கி தந்தைபெரியார், ஜீவா, சிங்காரவேலர் ஆகியோர் தமிழகம் முழுவ தும் பட்டிதொட்டி எங்கும் பிரச்சாரம் மேற் கொண்டு வந்தனர்.

1935ம் ஆண்டு மாவீரன் பகத்சிங் எழுதிய நான் ஏன் நாத்திகன் ஆனேன்? என்ற நுலை ஜீவா மொழிபெயர்க்க, அதனைக்குடியரசு இதழில் வெளியிட்டதால் ஜீவாவும், தந்தை பெரியாரின் சகோதரரும், விடுதலை இதழ் வெளியீட்டாளரு மான ஈ.வெ.கிருஷ்ணசாமியும், தந்தை பெரியாரும் கைது செய்யப்பட்டனர். குடியரசு (1925), சம தர்மம் (1934), பகுத்தறிவு (1935), புரட்சி (1934) சுநஎடிடவ (1928), விடுதலை (1934), உண்மை (1970) ஆகிய இதழ்களை ஈ.வெ.ரா நடத்தி வந்தார். மக்களிடம் சுயமரியாதையும், சமத்துவமும், சகோதரத்து வமும் ஓங்கிவளரவேண்டும் என்ற கருத்தை இவ்விதழ்களில் வெளியிட்டு வந்தார். லெனினும் மதமும், பொதுவுடைமைத் தத்துவங்கள் ஆகிய நூல்களையும் வெளியிட்டார்.

இந்திய விடுதலைப் போராளிகள் பலர் ரஷ்யா வில் மேதை லெனினை நேரில் சந்தித்து இந்திய விடுதலைப்போராட்ட நிகழ்வுகள் குறித்து விவாதித்துள்ளனர். அவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.டி ஆச்சார்யாவும் ஒருவராவார். 1920ம் ஆண்டு அக்டோபர் 17 அன்ற தாஷ்கண்டில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைத் துவக்கியவர் களில் எம்.பி.டி ஆச்சார்யாவும் ஒருவர் என்பது குறிப்பிட்டத்தக்கது.

சோவியத் புரட்சியை சாத்தியமாக்கிய போல்ஷ்விக் கட்சி வரலாறு

– ஜி.செல்வா

1903-ல் குறைந்த எண்ணிக்கையில் தலை மறைவு புரட்சிக் குழுக்களாக இருந்த இயக்கம், ஆயிரக்கணக்கான உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாக 1912-ல் உருவெடுக்கிறது. 1917-ல் சோசலிசப் புரட்சியை தலைமைதாங்கி வழி நடத்த 3 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாக பல்கிப் பெருகுகிறது. அதுதான் ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சி (போல்ஷ்விக்).

“புரட்சிகளின் நூற்றாண்டாக” இருபதாம் நூற்றாண்டை மாற்றி ரஷ்யாவில் புரட்சியை நடத்தி, சோசலிசப் பாதைக்கு அடித்தளமிட்டு, உலக மெல்லாம் பாட்டாளி வர்க்க கருத்துக்கள் வெடித்து எழும்ப வித்திட்டது ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி. இதன் வரலாற்றை மிகக் கச்சிதமாக மார்க்சிய, லெனினிய சித்தாந்தப் பார்வையில், எழுதப்பட்ட புத்தகம்தான் சோவியத் கம்யூனிஸ்ட் (போல்ஷ்விக்) கட்சியின் வரலாறு என்னும் நூல்.

நூல் உருவானப் பின்னணி
உலக மக்களுக்கு ஆதர்ஷ சக்தியாக சோசலி சப் பாதையில் சோவியத் யூனியன் முன்னேறிக் கொண்டிருந்த காலம். அப்போது சோசலிச கட்டு மானத்தைத் துரிதப்படுத்துவதில் ஏற்பட்ட அளவிடற்கரிய பிரச்சனைகள், சோவியத் யூனியன் எதிர்கொண்ட அபாயங்கள் மற்றும் சவால்களால் கட்சி ஊழியர்களுக்கு தத்துவார்த்த, அரசியல் பயிற்சி அளிப்பது முக்கியத்துவம் பெற்றது.

மார்க்சிய – லெனினிய அடிப்படை ஞானத்தில் தேர்ச்சி பெற்று அதனை சோசலிச கட்டுமானத் தில் முறையாகப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலுவாக வலியுறுத்திய ஸ்டாலின் “அனைத்து நடைமுறைப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்பதற்குத் தேவையானது கட்சி ஊழியர் களுக்கு சித்தாந்தப் பயிற்சி அளிப்பதும் அவர் களை அரசியல் ரீதியில் பயிற்றுவித்து வலுப் படுத்துவதும்தான்” எனக் கருதினார்.
இதற்கு உதவியாய் கட்சி வரலாற்றை சொல்லித் தரும் வகையில் புத்தகம் எழுதுவதற்கு ஸ்டாலின் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. 1937ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அக்குழுவினர் எழுதியதை அரசியல் தலைமைக் குழு சரிபார்த்து கொடுத்தது. அதன் ஆலோசனைகளை ஏற்று அடுத்த நான்கு மாதங்களில் மேம்படுத்தப்பட்டு புத்தகமாக உருவெடுத்தது. இப்புத்தகம் 1938 ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி முதல் 50 லட்சம் பிரதி கள் வெளியான பிராவ்தா கட்சி நாளிதழில் தொடராக வெளியிடப்படுகிறது. 1938 ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி சோவியத் கம்யூனிஸ்ட் (போல்ஷ்விக்) கட்சியின் வரலாறு என்ற நூலாக வெளியிடப்படுகிறது. அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டும் என்பதற்காக மிகக் குறைவாக விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

1939 மே மாதத்தில் இந்நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு அமெரிக்காவில் மட்டும் ஒரு லட்சம் பிரதிகள் அச்சடிக்கப்பட்டு 3 மாதத்திற் குள் 70,000 பிரதிகள் விற்பனை ஆயின. அதே காலகட்டத்தில் 28 மொழிகளில் மொழிபெயர்க் கப்பட்டுள்ளது. 1953க்குள் ரஷ்யாவில் மட்டும் 301 முறை பதிப்பிக்கப்பட்டு 42,82,60,000 புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன.

1947 ஜனவரி மாதம், ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கவுன்சில் உறுப்பினராக இருந்த வரும், சமரன் பத்திரிகையின் ஆசியரிரும், ஜூலியஸ் பூசிக்கின் தூக்கு மேடைக் குறிப்பு நூலை தமிழில் மொழி பெயர்த்தவருமான எம்.இஸ்மத் பாஷாவால் இந்நூல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

இதன் இரண்டாவது பதிப்பு 1979 டிசம்பர் மாதம் ஸ்டா லின் நூற்றாண்டு விழாவின்போது சென்னை புக் ஹவுஸ் வெளியிட்டுள்ளது. நவம்பர் புரட்சி நூற்றாண்டினை முன்னிட்டு பாரதி புத்தகாலயம் இந்நூலினை மீண்டும் பதிப்பித்துள்ளது.

1883 முதல் 1937ஆம் ஆண்டு வரையிலான வரலாறு சுமார் 600 பக்கங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நூலின் மையக் கருவாக விளங்கும் கருத்துக் களை இக்கட்டுரையில் சுருக்கமாகப் பார்க்கலாம்.

கரு உருமாறி வெளியேறும் காலக்கட்டம்
புரட்சியாளர் லெனின், அரசியல் தளத்திற்கு வருவதற்கு முன்பாகவே, ரஷ்ய தேசத்தில் உழைக் கும் மக்களுக்கான போராட்ட அமைப்புகள் தொடங்கப்பட்டு விட்டன. ஜார் ஆட்சியின் கொடுமைக்கும்,சுரண்டலுக்கும் உள்ளாகியிருந்த மக்கள் வெடித்துக் கிளம்பினர்.அதே காலக் கட்டத்தில் ரஷ்யாவின் நகரங்களில் மட்டுமல்லா மல், கிராமங்களிலும் தொழிற்சாலைகள் அமைந் ததால் முதலாளித்துவம் வளர்ச்சியடையத் தொடங்கி இருந்தது.

1875-ல் தென் ரஷ்ய தொழிலாளர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அது ஒன்பது மாதங் களுக்குள் ஆட்சியாளர்களால் நிர்மூலமாக்கப் படுகிறது. 1878-ல் வட ரஷ்ய தொழிலாளர் சங்கத்தை ஒரு தச்சுத் தொழிலாளியும், பிட்டரும் இணைந்து உருவாக்குகின்றனர். இப்படிப்பட்ட அமைப்புகள் உருவானது குறித்தும், உருவாக் கியவர்கள் குறித்தும் மிகச் சுவையான செய்திகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. 1881-1886 கால கட்டங்களில் மட்டும் 48 வேலை நிறுத்தங்கள் நடந்துள்ளன. இதில் 80 ஆயிரம் தொழிலாளர் கள் பங்கேற்றுள்ளனர்.
ரஷ்யாவில் முதல் மார்க்சிஸ்ட் குழு 1883-ல் ஜி.வி.பிளக்கனோவ் தலைமையில் ‘தொழிலாளர் விடுதலைக்குழு’ என்ற பெயரில் அமைக்கப் படுகிறது. இவ்வமைப்பு மார்க்ஸ், ஏங்கல்ஸ் நூல்களை ரஷ்ய மொழியில் வெளியிடுகிறது. கம்யூனிஸ்ட் அறிக்கை, கூலி உழைப்பும் மூலதன மும், கற்பனாவாத சோசலிசமும் விஞ்ஞான சோசலிசமும் ஆகிய நூல்களை வெளிநாடுகளில் அச்சடித்து, ரஷ்ய நாட்டு தொழிலாளிகளிடம் விநியோகிக்கின்றனர்.
இக்காலக் கட்டத்தில் ‘நரோத்னிக்’ என்ற அமைப்பினரும், பிளக்கனோவும் நிகழ்த்திய சித்தாந்தப் போராட்டம் மிக முக்கியமானது. நரோத்னிக் என்ற ரஷ்ய வார்த்தையின் பொருள் மக்களிடம் செல்வது. புரட்சிகர எண்ணம் கொண்ட படித்த இளைஞர்கள் இந்த அமைப் பில் சேர ஆரம்பித்தனர். இவர்கள் ரஷ்யாவில் தற்செயலான நிகழ்வுப் போக்குதான் முதலாளித் துவம். எனவே, இது வளராது என்றும், கிராமப் புற விவசாயிகள் தான் புரட்சிகரமானவர்கள், தனிச்சிறப்பு வாய்ந்த தனி நபர்களால்தான் சரித்திரம் உருவாக்கப்படுகிறது என்றும் கருதினர்.

இவர்களுக்கு எதிராக பிளக்கனோவும், அவரைத் தொடர்ந்து லெனினும் நடத்திய உரையாடல், எழுத்துக்கள் மிக விரிவாக இந்நூலில் கொடுக் கப்பட்டுள்ளது. இதே பிளக்கனோவ், எதிர் காலத்தில் லெனினின் கருத்துக்கு எதிர்திசைக்கு சென்றார். இருந்தாலும் அவரது பங்களிப்பு இந்நூலில் உரிய முறையில் அங்கீகரிக்கப்பட்டு உள்ளது. பிளக்கனோவ் 1895-ல் வெளியிட்ட சரித்திரத்தின் ஒருமைவாத வளர்ச்சியைப் பற்றி என்ற புத்தகம் “ரஷ்ய மார்க்சிஸ்டுகளின் ஒரு தலைமுறை முழுவதையும் அறிவியல் பக்குவப் படுத்த பணிபுரிந்தது” என லெனின் கூறியுள்ளார்.

தத்துவ அடிப்படையில் தொழிலாளி வர்க்க இயக்கத்தைக் கட்ட முதல் வேலையைச் செய்தது தொழிலாளர் விடுதலைக் குழு என லெனின் புகழாரம் சூட்டியுள்ளார். எனவேதான் அக்கால கட்டத் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் வளர்ச் சியை கரு உருமாறி வெளியேறும் வளர்ச்சியில் இருந்ததாக லெனின் கூறினார்.

புரட்சிகர தத்துவம் ; புரட்சிகர இயக்கம்
புரட்சிகரமான தத்துவம் என்றால் என்ன? புரட்சிகரமான இயக்கம் என்றால் என்ன? தத்துவத்திற்கும்,நடைமுறைகளுக்குமான தொடர்பு எப்படி இருக்க வேண்டும்? இப்படி யான கேள்விகளுக்கு ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி வரலாறும், அதில் லெனினும் அவர்தம் தோழர் களின் எழுத்துகளும், செயல்பாடுகளுமே நமக்கு விடையாக அமையும்.
லெனின் என்னும் மனிதரின் ஆளுமையும், அவர் புரட்சிகர இயக்கத்தில் இணைந்த பிறகு ஏற்பட்ட மாற்றங்களும், மிக விரிவாக இந்நூலில் சொல்லப்பட்டுள்ளது.
மார்க்சைப் பற்றி அவர் தெரிந்து கொண்டிருந்த அசாதாரணமான விஷய ஞானம், அன்றைய ரஷ்யாவில் நிலவிய அரசியல், பொருளாதார நிலைமைகளுக்கு ஏற்றவாறு மார்க்சியத்தைப் பொருத்திக் காண்பிப்பதில் அவருக்கிருந்த திறமை, தொழிலாளர்களின் லட்சியம், நிச்சயம் வெற்றிய டையும் என்பதில் அவருக்கிருந்த அசைக்க முடி யாத நம்பிக்கை, அமைப்புகளை உருவாக்குவதில் அவர் காட்டிய தனிச்சிறப்பு வாய்ந்த ஆற்றல் ஆகியவையெல்லாம் லெனினை செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மார்க்சிஸ்டுகள் அனைவராலும் மனப்பூர்வமாக ஒப்புக்கொள்ளப்பட்ட தலைவ ராக ஏற்கச் செய்தன.

1898-ல் ரஷ்ய சமூக ஜனநாயக தொழிற் கட்சி முதல் மாநாட்டில் 9 பேர் தான் பங்கு கொண் டனர். அப்போது லெனின் நாடு கடத்தப்பட்டு சைபீரியாவில் இருந்ததால் பங்கெடுக்க முடிய வில்லை.இம்மாநாட்டிலிருந்துதான் ரஷ்ய கம்யூ னிஸ்ட் கட்சியின் வரலாறு கூறப்பட்டுள்ளது.
நரோத்னிக்குள் மற்றும் பொருளாதாரவாதிகள் அதாவது பொருளாதார கோரிக்கைகளுக் காக நடத்தப்படும் போராட்டங்களில் மட்டும் தான் தொழிலாளர்கள் ஈடுபட வேண்டும் என விடாப்பிடியாக கருதும் குழுவினர். இவர்களின் கருத்தோட்டத்திற்கு எதிராக லெனின் நடத்திய சித்தாந்தப் போராட்டம் மிகத் தெளிவாக நூலில் சொல்லப்பட்டுள்ளது. லெனினது மிக முக்கியப் படைப்பான ரஷ்யாவில் முதலாளித் துவ வளர்ச்சி நூலிலிருந்து கொடுக்கப்பட்டுள்ள கருத்துகள் கம்யூனிஸ்ட்களுக்கு மிக தேவையான ஒன்றே. வேதனை என்னவெனில் இதுவரை தமிழில் வெளிவரவில்லை.

லெனின் எழுதுகிறார் “உடனடியாக நிறை வேற்ற வேண்டிய வேலையை நம்முன் இன்று சரித்திரம் வைத்திருக்கிறது. இந்த உடனடியான வேலை மிகமிகப் புரட்சிகரமானது. மற்ற நாட்டு பாட்டாளிகளின் முன் நிற்கின்ற உடனடியான வேலைகள் யாவற்றையும் விட மிகவும் புரட்சி கரமான வேலையாகும். இந்த வேலையைச் செய்து முடித்தால், ஐரோப்பிய பிற்போக்கிற்கு மட்டுமல்லாமல் ஆசியாவின் பிற்போக்கிற்கும் மிகவும் வலுவான கோட்டையாக திகழும் ஜார் ஆட்சியை அழித்து ஒழிப்பதால், புரட்சிகரமான சர்வதேசப்பாட்டாளி வர்க்கத்துக்கு ரஷ்ய பாட்டாளி வர்க்கம் முன்னணிப்படையாக ஆகும்.” எவ்வளவு தீர்க்கமான, தெளிவான பார்வை. அதை நோக்கி லெனின் நடத்திய பயணம்தான் கற்க வேண்டிய பாடம்.

கட்சி அமைப்பு எப்படி இருக்க வேண்டும் என உலக கம்யூனிச இயக்கத்துக்கு வலுவான கருத் தியலை கொடுத்தது மட்டுமல்லாமல் நடைமுறைப் படுத்தியும் காண்பித்தவர் லெனின். கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபன செயல்பாடுகளை கொச்சை யாக, கேலியாக, விஷமத்தனமாக இன்றும் அதி கார வர்க்கத்தினர் எழுதியும், பேசியும் வருகின் றனர். சில நேரங்களில் இக்கருத்துக்கள் கம்யூனிஸ்ட் ஊழியர்களிடத்தும் செல்வாக்கு செலுத்தும்.

புரட்சி நடத்த வேண்டுமானால் புரட்சிகர இயக்கம், அதாவது கம்யூனிஸ்ட் கட்சி கட்டப்பட வேண்டும். அது எப்படி இருக்க வேண்டும், எப்படி கட்ட வேண்டும் என்பதற்கு இந்நூலில் உள்ள விசயங்கள் இன்றும் நமக்கு வழிகாட்டும்.
கம்யூனிஸ்ட் கட்சிக்குள் நடைபெற்ற கருத்தி யல் ரீதியான போராட்டம் இரண்டு குழுக்களா கப் பிளவுபட நேர்ந்தது. லெனினைப் பின்பற்றிய வர்கள் போல்ஷ்விக்குகள் (அதாவது பெரும் பான்மை உறுப்பினர்கள் என்ற அர்த்தத்தில்) என்றும், எண்ணிக்கையில் குறைவாக இருந்தவர் கள் மென்ஷ்விக்குகள் எனவும் அழைக்கப்பட்டனர்.

போல்ஷ்விக்குகளுக்கும், மென்ஷ்விக்குகளுக் கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதலின் காரணங்கள், அக்காலகட்டத்தில் லெனின் எழுதிய நூல்களிலிருந்து பல்வேறு கருத்துக்கள் இந்நூலில் எடுத்தாளப்பட்டுள்ளது.

ரஷ்ய நாட்டிற்குள் மட்டும் இக்கருத்துப் போராட்டத்தை லெனின் நடத்தவில்லை. மேற்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்த சமூக ஜனநாயக கட்சிகளுடனும் சித்தாந்தப் போராட்டத்தை நடத்தி வந்தார். ஏங்கெல்ஸ் காலமான பிறகு மேற்கு ஐரோப்பிய சமூக ஜனநாயகக் கட்சிகள் சீரழிந்து போனதை போல்ஷ்விக்குகள் பார்த் தனர். ஏங்கெல்ஸ் காலத்தில் சமூகப் புரட்சிகர கட்சிகளாக இருந்த இயக்கங்கள் சமூக சீர்திருத் தக் கட்சிகளாக மாறி சீரழிந்து போயின. அவை ஒவ்வொன்றும் அமைப்பு ரீதியில், அந்தக் கட்சி யின் நாடாளுமன்ற சந்தர்ப்பவாதக் குழுக்களு டைய தொங்கு சதையாக ஏற்கனவே மாற்றப் பட்டு விட்டன. அத்தகைய கட்சிகளால் பாட்டாளி களுக்குப் பயன் எதுவும் இல்லை. தொழிலாளி வர்க்கத்தை அக்கட்சிகளால் வழிகாட்டி புரட் சியை நோக்கி அழைத்துச் செல்ல முடியாது என்பதை போல்ஷ்விக்குகள் தெளிவாக உணர்ந்தனர்.

உண்மையான மார்க்சியக் கட்சியை பெற்றி ருக்க விரும்புகிற எல்லோருக்கும் ஒரு உதாரண மாகத் திகழும் புதிய கட்சியை, போல்ஷ்விக் கட்சியைப் படைப்பதற்கு போல்ஷ்விக்குகள் விரும்பினார்கள். என்ன நேர்ந்தபோதிலும், எத்தகைய கஷ்டங்கள் வந்தபோதிலும் மனம் தளராமல் உறுதியுடன் விடாப்பிடியாக உழைத்து வந்தனர்.

இந்த வேலையில் லெனினுடைய நூல்கள் கட்சிக்கு மிகவும் அடிப்படையான – செல்நெறியை நிர்ணயிக்கும்படியான பங்கு வகித்தன. லெனின் எழுதிய என்ன செய்ய வேண்டும்? என்ற நூல் தான் அதற்கு அவசியமான கருத்தையும், கண்ணோட்டத் தையும் கொடுத்து தயாரிப்பு செய்தது. லெனின் எழுதிய ஓரடி முன்னால் ஈரடி பின்னால் என்ற நூல்தான் அத்தகைய கட்சிக்கு அமைப்பு ரீதியான தயாரிப்பாக இருந்தது. லெனின் எழுதிய, ஜன நாயகப் புரட்சியில் சமூக ஜனநாயகத்தின் இரு நடைமுறை உத்திகள் என்ற புத்தகம்தான் அரசியல் ரீதியான தயாரிப்பாக இருந்தது. லெனின் எழுதிய பொருள் முதல்வாதமும், அனுபவவாத விமர்சனமும் என்ற புத்தகம் கட்சிக்குத் தத்துவ ரீதியான அடித்தளமாக இருந்தது.

இப்படியாக கட்டப்பட்ட கட்சி புரட்சிக்கு மட்டுமல்ல, புரட்சிக்குப் பின்னரும் சோசலிசப் பாதை நோக்கி, இயந்திர தொழில்மயமாக்கு வதற்கு சோவியத் ஆட்சி மேற்கொண்ட அனைத் திற்கும் உதவிகரமாக இருந்ததுதான் இந்நூலின் வரலாறு நமக்கு சுட்டிக்காட்டுகிறது.

புரட்சி… புரட்சி… புரட்சி…
சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறே மூன்று புரட்சிகளின் வரலாறுதான். 1. 1905ஆம் ஆண்டு நடந்த முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி 2. 1917 மார்ச்சில் நடைபெற்ற முதலாளித் துவ ஜனநாயகப் புரட்சி 3. 1917-ல் நடைபெற்ற நவம்பர் சோசலிஸ்ட் புரட்சி. எப்படி இத்தகைய புரட்சிகள் சாத்தியமாயின?
எங்கள் தேவை
துண்டுத் துணி அல்ல;
முழு ஆடை
பருக்கைகளல்ல
முழுச் சாப்பாடு
ஒரு வேலை மட்டுமல்ல;முழுத் தொழிற்சாலையும் எங்களுக்குத் தேவை.

நிலக்கரி, தாதுப்பொருள், உலோகக் கரி
அத்தனையும் எங்களுக்குத் தேவை
எல்லாவற்றுக்கும் மேலாக
நாட்டின் ஆளும் அதிகாரமும்
எங்களுக்குத் தேவை
நல்லது
இவ்வளவும் எங்களுக்குத் தேவை
ஆனால்
நீங்கள் கொடுப்பது என்ன?

இது பிரக்டின் கவிதை வரிகள். இக்கவிதை வரிகளின் சாராம்சம்தான் மூன்று புரட்சிகளின் போதும் ரஷ்ய தொழிலாளிகளுக்கும், விவசாயி களுக்கும் ஜார் ஆட்சியை நோக்கிய, அதிகார வர்க்கத்தை நோக்கிய உணர்வுமிக்க முழக்கங் களாக மாறின.

ரஷ்ய தேசத்தின் வளர்ச்சியில் ஒரு சரித்திரப் பூர்வமான கட்டம் முழுவதையும் முதல் ரஷ்யப் புரட்சி (1905) குறித்தது.
இப்புரட்சி மக்களின் பரம விரோதி ஜார் ஆட்சி என்றும், முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சிக்குத் தலைமை தாங்குவதாக தொழிலாளி வர்க்கம் மட்டும்தான் இருக்க முடியும். ஊசலா டியபோதும் பாடுபடும் விவசாய வர்க்கம் தான் தொழிலாளி வர்க்கத்துடன் கூட்டுறவை ஏற்படுத் திக் கொள்ளத்தக்க முக்கியமான சக்தி என்பதும் நிரூபணமாயிற்று.

புரட்சியை குலைத்துக் கலைத்துவிடுவதை மென்ஷ்விக்குகள் தங்கள் பாதையாக கருதினர். எழுச்சியின் மூலம் ஜார் ஆட்சியை வீழ்த்துவதற் குப் பதில் அதை சீர்படுத்துவது எனக் கூறினர். இவ்விதம் சமரச சகதியில் மென்ஷ்விக்குகள் சிக் கினர். கட்சியிலும் தேசத்திலும் ஒரே ஒரு புரட்சி கரமான மார்க்சிஸ்ட் சக்தி, போல்ஷ்விக்கு கள்தான் என நிரூபிக்கப்பட்டது.

இப்புரட்சி தோல்வியில் முடிவடைந்ததைத் தொடர்ந்து 1908 முதல் 1912ஆம் ஆண்டு வரை மிக நெருக்கடியான காலக்கட்டத்தில் புரட்சிக் கான வேலை செய்வது கடினமானதாக மாறியது. இந்தச் சூழல்களுக்கு ஏற்றாற்போல் போல்ஷ் விக்குகள் நடைமுறை உத்திகளை மாற்றினர்.
சட்ட விரோதமான நடவடிக்கைகளையும், சட்டப்பூர்வமான செயல்பாடுகளையும் திறமை யாக இணைத்தனர். கட்சி விரோதமான பேர் வழிகளுக்கு எதிராக பிளக்கனோவ் உடன் சேர்ந்து தற்காலிக அணியை லெனின் அமைத் தார். இது கட்சிக்கு சாதகமாகவும், கட்சி விரோ திகளுக்கு பாதகமாகவும் இருக்க வேண்டும் என்பதே அடிப்படை.
இந்த நடைமுறை உத்தி எப்படி போல்ஷ் விக்குகளின் புரட்சிப் பணிக்கு சாத்தியமாயிற்று என்பதை நூலை வாசிக்கும்போது தெளிவாக உணரலாம். பத்திரிகைக்கு சந்தா சேர்ப்பு இயக் கம், தொழிலாளர் தொகுதியில் வெற்றி பெறு தல், சங்கத் தேர்வுகளில் பெற்ற வாக்குகள் என தொடர்ந்தது போல்ஷ்விக்குகளின் வெற்றிப் பயணம்.

முதலாவது உலக யுத்தம் தொடங்குவதற்கு முன்பே, லெனின் தலைமையிலான போல்ஷ்விக் குகள் அதை உணர்ந்தனர். “யுத்தம் என்பது முதலாளித்துவத்துடன் இரண்டறக் கலந்து நிற்கிற தவிர்க்க முடியாத விளைவு” என்று லெனின் சுட்டிக் காட்டினார். யுத்தத்திற்கு எதிராக எத்தகைய நிலைபாடுகளை மேற்கொள்ள வேண்டுமென லெனின் எழுதியும், பேசியும் வந்தார். சமாதானம் நிலவ வேண்டும் என்ற லட்சியத்துடன், பாட்டாளி வர்க்கப் புரட்சி வெற்றியடைய வேண்டும் என்ற லட்சியத்தைப் போல்ஷ்விக்குகள் இணைத்தனர். இந்த காலக்கட்டத்தில்தான் 1916-ல் லெனின் எழுதிய நூல் ஏகாதிபத்தியம் : முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம். இந்நூல் உலகத் தொழிலாளி வர்க்க இயக்கத்துக்கு லெனின் வழங்கிய அறிவுக் கருகூலம். இதன் வாயிலாக மார்க்சியத்தை லெனின் வளர்த்தெடுத்த நிகழ்வும் நடந்தேறியது. அதேபோல் இந்த யுத்த காலத்தின்போது லெனின் எழுதிய எழுத்துக்கள், இப்புத்தகத்தில் மேற்கோள்களாகத் தரப்பட்டுள்ளன.

ஏகாதிபத்தியம் குறித்து லெனின் ஆய்வு செய்த பல்வேறு விசயங்களை சுட்டிக்காட்டுகிறது இந்நூல். தனியாக ஒரு தேசத்தை மட்டும் எடுத்துக் கொண்டால், தனிதேசத்தில் சோசலி சம் வெற்றியடைய முடியாது என்றும், நாகரிகத் தில் முதிர்ந்த சகல தேசங்களிலும் ஒரே சமயத் தில்தான் அது வெற்றியடையும் என்றும் அக்காலத் திய மார்க்சிஸ்டுகள் சிலர் கருதினர். ஆனால், “லெனினோ ஏகாதிபத்திய முதலாளித்துவத் தைப் பற்றிய உண்மையான புள்ளி விவரங்களை ஆதாரமாகக் கொண்டு பழைய கருத்துக்கு மாறாக புதிய கருத்தை வளர்த்தெடுத்தார். இதன் படி ஒரே சமயத்தில் எல்லா தேசங்களிலும் சோசலி சம் வெற்றியடைவது என்பது அசாத்தியம். தனியான ஒரு முதலாளித்துவ நாட்டில் சோசலிசம் வெற்றியடைவதும் சாத்தியமே!” என்றார்.

இதுதான் யுத்தம், சமாதானம், புரட்சி ஆகிய வற்றைப் பற்றிய பிரச்சனைகளில் போல்ஷ்விக் குகள் கைக்கொண்ட தத்துவமும், நடைமுறை உத்தியுமாகும். இந்தக் கொள்கைகளை கொண்டு தான் ரஷ்யாவில் நடைமுறை வேலைகளை போல்ஷ்விக்குகள் நிறைவேற்றினர்.
விளைவு போல்ஷ்விக்குகள் மார்ச் மாத இரண்டா வது புரட்சியில் ஜனநாயகப் புரட்சியில் வெற்றி பெற்றனர். இதை நூலின் வாயிலாக வாசிக்க வாசிக்க புரட்சிகர உணர்வுகளும், சிந்தனைகளும் பெருக்கெடுத்து வருவதை வாசகரால் உணர முடியும்.

இதைத் தொடர்ந்து தற்காலிக அரசாங்கம் அமைந்தவுடன், அதில் பங்கு பெறவும் மந்திரி பதவிகள் பெறவும் மென்ஷ்விக்குகள் உள்ளிட்ட குழுவினர் வாய் பிளந்து காத்துக் கிடக்க, லெனினோ சோசலிசப் புரட்சியை நோக்கி களத்தை விரிவு படுத்தினார்.

முதலாளித்துவ புரட்சிகர கட்டத்திலிருந்து சோசலிசப் புரட்சிக் கட்டத்திற்கு முன்னேறி செல்வதற்கு கட்சிக்கும், பாட்டாளி வர்க்கத்திற் கும் வழிகாட்டினார். அது ஏப்ரல் கொள்கை என்ற நூலின் வழியாக நடந்தேறியது. மாறும் சூழல்களை மிக லாவகமாக உணர்ந்து, மார்க்சிய பகுப்பாய்வில் வர்க்கங்களின் நிலை அறிந்து வழி காட்டிய லெனின் நமக்குப் பேராசானாகத் திகழ்கிறார்.

போல்ஷ்விக் கட்சியினால் வழிகாட்டப்பட்டு ஏழை விவசாயிகளுடன் கூட்டுறவு ஏற்படுத்திக் கொண்டு, ராணுவ வீரர்கள், கடற்படையினரின் ஆதரவையும் பெற்று, முதலாளிகளுடைய அதி காரத்தை தொழிலாளி வர்க்கம் அடியோடு வீழ்த்தியது. “நவம்பர் 7 சோசலிசப் புரட்சி” முதலாளித்துவத்தை தகர்த்து தவிடுபொடியாக் கியது.

சோசலிசத்தை நோக்கி…

நவம்பர் புரட்சியைத் தொடர்ந்து லெனின் தலைமையிலான புரட்சிகர அரசு மேற்கொண்ட பயணம், உலகக் கம்யூனிஸ்டுகளுக்கு ஒரு பாடம். பன்னாட்டு முதலாளித்துவ சக்திகளிடமிருந்தும், உள்நாட்டில் வெண் படைகளை சமாளித்தும், புரட்சி மீதான மக்களின் ஆசைகளை, வேண்டு கோளை நிறைவேற்ற லெனின் எடுத்த நிலைபாடு கள், செயல்பாடுகள் இந்நூலில் கொடுக்கப் பட்டுள்ளன.
இந்த சோசலிசப் பாதை எவ்வளவு கடுமை யாக இருந்திருக்கும் என்பதை சார்லஸ் பெட்டில் ஹெய்ம் என்ற பிரெஞ்சு பொருளாதார நிபுணரின் கணிப்பின் மூலம் அறிய முடிகிறது. “சோவியத் யூனியனில் சோசலிசத்தைக் கட்டுவதற்காகப் பணிக்கப்பட்டவர்களில் நான்கில் மூன்று பேர் ஜார் மன்னனின் அதிகார வர்க்கத்தைச் சேர்ந்த முன்னாள் ஊழியர்கள். ஒரு புரட்சிகரமான சமு தாயத்தைக் கட்டியமைக்க எந்த வகையிலும் பொருத்தமற்றவர்கள். அதேவேளையில் சோவியத் பொருளாதாரம் போருக்கு முன்பிருந்த நிலையி லிருந்து 10 சதவீத வீழ்ச்சியை சந்தித்தது. இத்தகைய கடினமான சூழ்நிலையில் தங்களின் வாழ்க்கையை வேறு எங்காவது அமைத்துக்கொள்ள வாய்ப் புடைய படித்தவர்கள் உள்ளிட்ட 20 லட்சம் மக்கள் ரஷ்யாவிட்டு வெளியேறினர்.”

இப்படியான சூழல்களுக்கு மத்தியில் தான் சோசலிசத்திற்கான அடித்தளத்தை லெனின் நிறுவினார். லெனின் மறைவைத் தொடர்ந்து ஸ்டாலின் தலைமையில் போல்ஷ்விக் கட்சி வீறுநடை போட்டது. சோசலிசப் புரட்சியை கொச்சைப்படுத்தி ட்ராட்ஸ்கி எழுதிய எழுத்துக் களுக்கு எதிராக ஸ்டாலின் தத்துவார்த்த போரை உறுதியுடன் நடத்திச் சென்றார். அவர் எழுதிய லெனினியத்தின் அடிப்படைகள் என்ற புத்தகம் போல்ஷ்விக்குகள் கையில் சக்தி மிக்க ஆயுதமாக மாறியது.

இயந்திர தொழில்மயமாக்கலும், கூட்டுப் பண்ணை அமைப்பு முறைகளும் எவ்வாறு நிகழ்ந் தேறின. அதன் பலன்கள் எப்படி சோசலிசத்தை உயர்த்திப் படிக்க உதவிற்று போன்றவை மிக விரிவாக நூலில் படித்து அறிய முடியும்.

நிறைவாக
சோவியத் யூனியனின் உழைக்கும் மக்கள், சோசலிசத்திற்காக வெற்றிகரமாகப் போராடிய அனுபவமும், படிப்பினைகளும் இந்நூலில் காணக் கிடைக்கின்றன.
சோசலிசத்திற்கான போராட்டத்தில் மார்க்சிய போதனைகள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டன என இந்நூல் எடுத்துக் காட்டுகிறது. மேலும், அப்போராட்டத்தின் ஊடே லெனினும், ஸ்டாலினும் அவற்றை எவ்வாறு மேலும் வளர்த்தெடுத்தனர் என்பதை விளக்குகிறது.
மார்க்சிய – லெனினியத்தின் அடிப்டைக் கருத்து களை அறிமுகப்படுத்தி, அவற்றை எவ்வாறு நடைமுறையில் செயல்படுத்தி வளர்த்தெடுப்பது, எவ்வாறு அவற்றுக்காகப் போராடுவது என்பதை எடுத்துக் காட்டுகிறது. சமுதாய வளர்ச்சியின் விதிகளைப் பற்றிய அறிவைத் தந்து நம்மை ஆயத்தமாக்குகிறது. உலகம் முழுவதும் கம்யூனி சத்தின் வெற்றி நிச்சயம் என்ற நமது நம்பிக்கையை வலுப்படுத்துகிறது” என மார்க்சிய அறிஞர் மாரிஸ் கார்ன்ஃபோர்த் மார்க்சிய மூல நூல்களுக்கு வாசகர் வழிகாட்டி எனும் நூலில் இப்புத்தகத்தை பற்றி குறிப்பிட்டுள்ளார்.
இந்திய நாட்டில் மக்கள் ஜனநாயக புரட்சியை மூல உத்தியாகக் கொண்டு சிபிஐ(எம்) செயல்பட்டு வருகிறது. இப்புரட்சியை நிறைவேற்றுவதற்கு புரட்சிகர கட்சியை கட்டுவது மிக அவசியம். நவம்பர் புரட்சி நூற்றாண்டைக் கொண்டாடும் இத்தருணத்தில் புரட்சிகர கட்சியை கட்டுவதற்கு, புரட்சியை நடைமுறையில் சாத்தியப்படுத்திய போல்ஷ்விக் கட்சியின் வரலாறு மிகப்பெரும் உந்து சக்தியாக இருக்கும் என்பது நிச்சயம்.