முற்றுகையின் கீழ் இந்திய ஜனநாயகம்…

  • பிரகாஷ் காரத்

இந்திய மக்களாகிய நாம் நமது தேசத்தின் 75வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் வேளையில், விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் கடந்த பின்பும் கூட, இந்திய நாட்டின் நாடாளுமன்ற ஜனநாயகம் நடைமுறையில் இருக்கிறது என்பது நமது சாதனைகளுள் ஒன்றாகும். இதற்கு முழுமுதற் காரணம், 1950 ஆம் வருடம் நாம் ஏற்றுக் கொண்ட இந்திய அரசியல் அமைப்பு சட்டமும் அதன் பலனாக இந்திய மக்கள் அனைவரின் குரல்களும் அரசியலில் ஒலித்துக்  கொண்டிருப்பதும்தான். இன்றைக்கு இந்திய மக்கள் எழுப்பும் இந்த குரல், இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தில் எழுப்பப்பட்ட குரல்களின் எதிரொலி என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.

இந்திய நாட்டில், முதலாளித்துவ சக்திகளின் குறுகிய பார்வை போன்ற கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் கூட, சுதந்திரம் பெற்று ஏழு பத்தாண்டுகள் கடந்த பின்னரும், நாடாளுமன்ற ஜனநாயகம் என்பது உயிர்ப்புடன் இருக்கிறது. இவ்வளவு காலம் நாடாளுமன்ற ஜனநாயகம் நிலைத்திருப்பதற்கு முக்கிய காரணம், இந்திய மக்களும், ஜனநாயக சக்திகளும் இணைந்து நடத்திய போராட்டங்கள்தான்.

எனினும், நாம் 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலம் இருண்டதாக தெரிகிறது. நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பும், இந்திய அரசியல் அமைப்பு நமக்கு கட்டமைத்து கொடுத்திருக்கிற ஜனநாயகத்தை பாதுகாத்திடும் அடித்தளங்களும் மிகத் தீவிரமான தாக்குதல்களுக்கு உள்ளாகி இருக்கின்றன. இன்றைக்கு முழு அளவிலான சர்வாதிகார போக்கு என்பது தலைதூக்கி வருகிறது. இது இந்திய நாட்டின் ஜனநாயகம் வழங்கியுள்ள அரசு நிறுவனங்கள்  அமைப்புகளின் அதிகாரங்களை குறைத்துவிட்டதால், இந்திய நாட்டின் ஆட்சி அதிகாரம், நீதிமன்றம் மற்றும் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றங்களுக்கு இடையேயான சமநிலையை பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது.

முழு அளவிலான சர்வாதிகாரத்தனம்..

கூடுதலான நாடாளுமன்ற உறுப்பினர்களோடு, 2019ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க., ஒரு கட்சி சர்வாதிகாரத்தை கட்டமைப்பதற்கான இலக்கினை தனக்குத் தானே நிர்ணயித்துக் கொண்டுள்ளது. பா.ஜ.க.வின் இந்த நிர்ணயிப்பிற்கு எதிராக அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரணியில் நின்று கடுமையான எதிர்த்தாக்குதலை நடத்திட வேண்டும். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல்களை ஒடுக்குவது, எதிர்க்கட்சிகள் ஆட்சி புரியும் மாநிலங்களில், ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி ஆட்சிக் கவிழ்ப்பை செய்வது, மத்திய அரசின் சிபிஐ, வருமானவரி, அமலாக்கத்துறை போன்ற   அமைப்புகளை தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களின் மீதும், எதிர்க்கட்சி தலைவர்கள் மீதும்  தாக்குதலுக்கு பயன்படுத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது சர்வாதிகார பா.ஜ.க. அரசு.

நாடாளுமன்றத்தின் மாண்புகளை குறைப்பது, நாடாளுமன்ற நடவடிக்கைகளை சீரழிப்பது என்பது  மோடியின் இரண்டாவது ஆட்சியில் மிகவும் தீவிரத்தன்மையோடு உள்ளது. இந்திய நாடாளுமன்றம் கடந்த 2021 ஆம் ஆண்டில் மொத்தத்தில் 50 நாட்களுக்கும் குறைவாகவே நடைபெற்றுள்ளது. எந்தவொரு மசோதா மீதும் விவாதங்கள் என்பது நடப்பதில்லை; எதிர்க்கட்சிகளுக்கு விவாதங்களுக்கான நேரம் என்பது ஒதுக்கப்படுவது கிட்டத்தட்ட இல்லை என்ற அளவில்தான் உள்ளது. அதே போல், எந்தவொரு மசோதாவும் ஆய்விற்கு உட்படுத்துவது என்பதும் இல்லை. கடந்த UPA ஆட்சியில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 60 முதல் 70 சதவீத மசோதாக்கள், நாடாளுமன்ற நிலைக்குழு அல்லது தேர்வுக்குழுக்களுக்கு அனுப்பப்பட்டன. ஆனால் இந்த சதவீதம் பா.ஜ.க. வின் முதலாம் ஆட்சியில் 23 சதமாகவும், இரண்டாவது ஆட்சியில் 13 சதமாகவும் குறைந்து விட்டன. இவற்றோடு இணைந்து, எதிர்க்கட்சிகள் பிரச்னைகளை எழுப்புவதற்கும், ஓட்டெடுப்பு கோருவதற்கும் நாடாளுமன்றத்தில் மறுக்கப்பட்டு வருகிறது. பல்வேறு மசோதாக்களை பண மசோதாக்களாக (Money Bill) கொண்டு வந்து, ராஜ்ய சபையின் மாண்புகளை தரம் தாழ்த்தி விட்டது மோடி அரசு.

பா.ஜ.க. அரசின் சர்வாதிகாரப் போக்கு, இந்திய அரசியல் அமைப்பு சட்டம் வழங்கியுள்ள பொது மக்களின் ஜனநாயக உரிமைகள் மற்றும் குடிமக்களின் சுதந்திரம் ஆகியவற்றை காலில் போட்டு மிதிப்பது என்கிற இடத்திற்கு ஆட்சியாளர்களை இட்டுச் சென்றுள்ளன.

எதிர்ப்புக் குரல்களை குற்றவாளிகளாக சித்தரித்து தண்டிப்பது, குடிமக்களின் உரிமைகளை நசுக்குவது என்பது சர்வாதிகார மோடி ஆட்சியின் முத்திரையாக மாறிவிட்டது. கொடூரமான சட்டங்களான உவாபா (UAPA)  போன்றவற்றின் மூலம் எதிர்ப்பு குரல்களை நசுக்கும் போக்கு வரலாறு காணாத அளவிற்கு அதிகரித்துள்ளது. 2014 முதல் 2020 ஆம் வருடங்களுக்கு இடையிலான ஆறு வருட காலத்தில் 690 குற்ற வழக்குகள் இந்திய நாட்டு மக்களின் மீது போடப்பட்டுள்ளன. இந்த வழக்குகளின் வாயிலாக 10,552 பேர் கைது செய்யப்பட்டுள்ள கொடூரம் நிகழ்ந்துள்ளது. அவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் அரசியல் செயல்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள், அறிவுஜீவிகள், எழுத்தாளர்கள் என அந்தப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. பீமா கோரேகான் வழக்கில் 16க்கும் மேற்பட்ட சமூக செயல்பாட்டாளர்கள், அறிவு ஜீவிகள் கைது செய்யப்பட்டு சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் மூன்று வருட காலமாக அடைக்கப்பட்டுள்ளனர்.

உச்சநீதிமன்றம் தனது சுயேச்சையான செயல்பாட்டை நிறுத்திவிட்டு அதிகாரிகளின் கைப்பவைகளாக செயல்பட ஆரம்பிப்பதுதான் சர்வாதிகார ஆட்சியின் மோசமான அம்சம். உச்சநீதிமன்றம் ஒரு நிர்வாக நீதிமன்றமாக செயல்படத் துவங்கியுள்ளது. சமீபத்தில் வழங்கப்பட்ட தீர்ப்புகளான ஜாக்கியா ஜாஃப்ரி வழக்கிலும், பண மோசடி வழக்குகளில் அமலாக்கப் பிரிவின் அதிகார வரம்பு பற்றிய வழக்கிலும் உச்ச நீதி மன்றம் குடிமக்களின் உரிமைகள் மீது நிர்வாகத் தாக்குதல்கள் நடத்தியிருப்பதை காண முடியும்.

75 ஆண்டுகால இந்திய வரலாற்றை பார்க்கையில், 1975ஆம் வருடம் ஜூன் மாதம் இந்திராகாந்தி  ஆட்சி காலத்தில், இந்திய ஜனநாயகத்திற்கு நெருக்கடி நிலை என்கிற பெயரில் மிகப் பெரிய தாக்குதல் ஏற்பட்டது. ஆனால் அது 20 மாத காலம் மட்டுமே நீடித்தது.  அந்த காலகட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். சிவில் உரிமைகள் பறிக்கப்பட்டு, அனைத்து பத்திரிக்கைகளும் தணிக்கைக்கு உள்ளாக்கப்பட்டன. அடுத்து வந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோற்கடிக்கப்பட்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஆனால் இன்றைக்கு ஜனநாயகத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ள தாக்குதலானது, எமர்ஜென்சி காலத்தை விட மிகவும் தீவிரமானது; விரிவானது. குடியாட்சி என்கிற தத்துவத்தின் முக்கியமான அம்சங்களான மதச்சார்பின்மை மற்றும் கூட்டாட்சி இரண்டையும் துண்டித்து வருகிறது.

ஏன் இந்த கொடூர வடிவிலான சர்வாதிகாரம் இந்திய நாட்டின் ஜனநாயகத்தை முடக்கத் துடிக்கிறது? இது ஏதோ பிறழ்வோ அல்லது தற்செயலாக ஏற்பட்ட விபத்தோ அல்ல. இது தனிநபர் சர்வாதிகாரப் போக்கு என்றும் நாம் குறிப்பிட முடியாது. இத்தகைய சர்வாதிகாரம் கருக்கொள்வதற்கு பல்வேறு பாசிச சக்திகள் ஒன்றிணைந்து செயல்பட்டுள்ளன என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

அரசியல் ஜனநாயகம் குறித்து அம்பேத்கர் …

இந்திய நாட்டின் அரசியல் அமைப்பு சட்டத்தினை நாட்டிற்கு அர்ப்பணிக்கும் நேரத்தில், டாக்டர். அம்பேத்கர் அவர்கள் கூறியதை தற்போது நினைவு கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. பொருளாதார சமத்துவமும், சமூக நீதியும் வெற்றி பெறாமல் அரசியல் சுதந்திரம் என்பது வெற்றி பெறாது என்று கூறினார். இந்தியாவில் ஜனநாயகம் என்பது வெறும் மேல்பூச்சாக மட்டுமே உள்ளது; அது ஜனநாயகத்திற்கு முற்றிலும் விரோதமானது என்றும் அம்பேத்கர் எச்சரித்தார்.

இவ்வளவு காலமும், தேர்தல் ஜனநாயகம் நடைமுறையில் இருந்தாலும், பொருளாதார மற்றும் சமூக ஜனநாயகம் தோற்றுப் போயுள்ளது. ஆட்சியாளர்கள் தேர்ந்தெடுத்த முதலாளித்துவ பாதை இவற்றையெல்லாம் சீரழித்துவிட்டதோடு, பிராந்திய அளவிலான வேற்றுமைகளையும் அதிகரித்துள்ளது. கடந்த 30 ஆண்டுகாலமாக இந்தியாவில் அமல்படுத்தப்பட்டு வரும் புதிய தாராளமயக் கொள்கைகள், பொருளாதார அசமத்துவத்தை மேலும் மேலும் விரிவுபடுத்தி, இந்திய நாட்டின் வளங்களை எல்லாம் ஒரு சிலரின் கைகளில் கொண்டு சேர்த்திருக்கிறது. மற்றொரு புறம் முதலாளித்துவ வர்க்கம், நிலப்பிரபுக்களிடம் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, சாதிய ஒடுக்குமுறைகளை களைவது போன்ற ஒரு நாடகத்தை மட்டுமே நிகழ்த்தியுள்ளனர்.

அம்பேத்கர் அவர்கள் அரசியல் ஜனநாயகத்திற்கும், பொருளாதார மற்றும் சமூக நிலைமையில் விரிவடைந்து வரும் சமத்துவமற்ற போக்கிற்கும் உள்ள முரண்பாட்டினை முன் கூட்டியே உணர்ந்து சொல்லியிருக்கிறார்.

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், அம்பேத்கரின் இந்த பகுப்பாய்வும், இந்தியாவில் மார்க்சிஸ்டுகள் சொல்லி வரும் கருத்துக்களும் இணையானதாக உள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி துவக்கத்திலிருந்தே சொல்லி வருவது என்னவென்றால், சமூக மற்றும் விவசாய உறவுகளில் ஜனநாயகப் பூர்வமான மாற்றத்தை  முழுமையாக கொண்டு வராமல் முதலாளித்துவ வளர்ச்சியே சாத்தியமில்லை என்பதுதான். நவீன தாராளமயக் கொள்கைகளும், இந்துத்துவா சர்வாதிகாரமும் கைகோர்த்து பவனி வரும்போது, சமூக மற்றும் பொருளாதார நீதி என்பது முற்றிலும் தோல்வியுறும். இது முற்றிலும் ஜனநாயகத்தை வேரறுத்து சர்வாதிகாரத்தை வளர்ந்துவிடும்.

ஜனநாயகத்தை கட்டுப்படுத்தும் புதிய தாராளமயம்…

புதிய தாராளமயக் கொள்கைகள் ஜனநாயகத்தின் மாண்புகளை குறைத்தும் கட்டுப்படுத்தியும் வருகின்றது. குடிமக்கள் மற்றும் அவர்களது உரிமைகளை விட சந்தை தான் முக்கியமானது என்று வற்புறுத்துகிறது. நிதி மூலதனம் அரசியல் அமைப்பிற்குள் ஊடுருவி விட்டது. அனைத்து முதலாளித்துவ கட்சிகளும் பெரும் மூலதனத்திற்கு கீழ்ப்படிந்து கிடக்கின்றன.  இந்தப் போக்கு நாடாளுமன்ற அமைப்பையே சீரழிக்கிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் இதைத்தான் சொல்கிறது: “நாடாளுமன்ற அமைப்புகளுக்கும், ஜனநாயகத்திற்கும் ஆபத்து என்பது ஒருபோதும் தொழிலாளி வர்க்கத்தால் அல்லது அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் எந்த அரசியல் கட்சிகளாலும் ஏற்படாது. ஆனால் அந்த ஆபத்து சுரண்டும் வர்க்கத்தால் மட்டுமே ஏற்படும். முதலாளித்துவ சுரண்டும் வர்க்கம்தான் நாடாளுமன்றத்திற்குள்ளும் வெளியேயும் இருந்து கொண்டு, அவர்களின் குறுகிய லாபத்திற்காக நாடாளுமன்ற அமைப்பையே சிதைக்கிறார்கள்.

2014 ஆம் ஆண்டில் இந்துத்துவா சக்திகளின் வளர்ச்சியும், பா.ஜ.க. தனிக்கட்சியாக ஆட்சி அமைத்ததும் ஒரு முக்கிய மாற்றத்தை இந்திய அரசியலில் கொண்டு வந்தது. ஆர்.எஸ்.எஸ். என்கிற மதவாத சக்திகளால் தூண்டப்பட்ட ஒரு அரசியல் கட்சி அதை பயன்படுத்திக் கொண்டு நாட்டின் ஆட்சியைப் பிடிக்கிறது. இந்த அரசு, ஜனநாயகம் என்பதையே இழிவாக பார்க்கும், இந்துத்துவா சித்தாந்தத்தை புகுத்தி, இந்து ராஷ்ட்ரம் அமைத்திட துடிக்கிறது. இந்து ராஷ்ட்ரம் என்பது சிறுபான்மையினருக்கு சாம் அந்தஸ்தும், சம உரிமைகளையும் மறுக்கின்ற ஒரு கொள்கையாகும்.

இந்துத்துவா கொள்கைகளுக்கு ஆதரவாக அரசின் சட்டங்களையும், இந்து தீவிரவாத அமைப்புகளின் சிறுபான்மையினருக்கு எதிரான தீவிர நடவடிக்கைகளையும் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். சிறுபான்மையினர் என்றால், குறிப்பாக இஸ்லாமிய மக்களை குறி வைத்து தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. அவர்களை தொடர்ந்து அச்சத்திலும், வன்முறையிலும் வைத்திருக்கின்றன மத வாத அரசுகள். குறிப்பாக, பா.ஜ.க. ஆட்சி புரியும் உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், கர்நாடகா, குஜராத் போன்ற மாநிலங்களில் இஸ்லாமிய மக்கள் அனுதினமும் துன்புறுத்தப்படுகிறார்கள் அல்லது அச்சுறுத்தப்படுகிறார்கள்.

இந்துத்துவா-கார்ப்பரேட் கூட்டணி…

சர்வாதிகாரம் என்பது கார்ப்பரேட் மற்றும் இந்துத்துவா சக்திகளினால் நெய் ஊற்றி வளர்க்கப்படும் பெரு நெருப்பாகும். இரு தீய சக்திகளுக்கும் நவீன தாராளமயக் கொள்கைகளை முன்னெடுப்பது என்பது அடிப்படை தேவைகளாகும். அதற்கு உயர்ந்தபட்ச சர்வாதிகாரம் என்பது தேவைப்படுகிறது. அதன் ஒரு வெளிப்பாடுதான் தொழிலாளர்களின் உரிமைகளுக்கான அனைத்து சட்டங்களையும் வெட்டிச் சுருக்கி நான்கு தொழிலாளர் விதிகளாக (four labour codes) மாற்றி அமைத்தது ஆகும்.

அரசியல் அமைப்பு என்கிற போர்வைக்குள் இருந்து கொண்டு, ஜனநாயகத்தின் அத்தனை தூண்களையும் தகர்க்கும் வேலையை இந்த கூட்டணி செய்து கொண்டிருக்கிறது. சர்வாதிகாரம் என்பது அரசியல் ரீதியாக முன்னெடுக்கப்படாமல், சமூகம் மற்றும் பண்பாட்டுத் தளங்களில் வளர்த்தெடுக்கப் படுகிறது. பசு மாடுகளை கொல்லத்தடை, மாட்டிறைச்சி உண்பதற்குத் தடை, ஒழுக்க காவலர்களாக மாறுதல், கலைஞர்களை எழுத்தாளர்களை கட்டுப்படுத்துவது, – இவையெல்லாம் சர்வாதிகாரத்தின் கூறுகளாக நாம் தினம் தினம் காண்கிறோம்.

ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் போர்…

ஆகவே, இந்திய நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் கடந்த பின்பு, இந்திய நாட்டின் ஜனநாயகம் என்பது மோசமான திருப்புமுனையில் உள்ளது. மோடி அரசால் பின்பற்றப்படும் இந்த சர்வாதிகாரம் இந்திய ஜனநாயக மாண்புகளுக்கும் குடிமக்களின் உரிமைகளுக்கும் எதிரானது. அது நாட்டின் சமத்துவம் கூட்டாட்சித் தத்துவங்களின் மீதான தீவிர தாக்குதல்களை செய்து வருகிறது. வரும் காலங்களில் அனைத்து தரப்பு மக்களும் சாதி, மத, இன, மொழி பேதமின்றி இத்தகைய தாக்குதல்களுக்கு எதிராக போர் புரிய வேண்டும். அப்படி ஜனநாயகத்தை காக்கும் போராட்டம் என்பது நவீன தாராளமய கொள்கைகளுக்கும், இந்துத்துவா சக்திகளுக்கும் எதிரான போர் என்பதை உணர்ந்து போரிட வேண்டும்.

தொழிலாளர் வர்க்கத்தைப் பொறுத்த மட்டில், ஜனநாயக உரிமை என்பது மிகவும் அடிப்படையான தேவையாகும். ரோசா லக்சம்பர்க் சொல்வது போல், முதலாளித்துவ சாதிகளுக்கு ஜனநாயகம் என்பது தேவையற்றது மட்டுமல்லாமல் தொந்தரவானதும் கூட; ஆனால் அதுவே, தொழிலாளி வர்க்கத்திற்கு மிகவும் முக்கியமானது மட்டுமல்லாமல் தவிர்க்க முடியாததும் கூட. ஏனென்றால் முதலாளித்துவ பூர்ஷ்வா சக்திகளை அழித்துவிட்டு, சமத்துவ சமூக மாற்றத்தினை முன்னெடுப்பதற்கு ஜனநாயகம் என்பது சக்கரங்களாகவும், அதிர்வு தாங்கிகளாகவும் உள்ளது. அது இன்றியமையாதது; ஏனெனில் அதில் மட்டுமே, ஜனநாயகத்திற்கான போராட்டத்தில், பாட்டாளி வர்க்கம் அதன் வர்க்க நலன்கள் மற்றும் அதன் வரலாற்றுப் பணியை உணர்ந்து கொள்ள முடியும்.

இடதுசாரிகள் நவீன தாராளமயக் கொள்கைகளுக்கும், இந்துத்துவா சக்திகளுக்கும் முற்றிலும் எதிரானது என்ற நிலையில், நாட்டிலுள்ள அனைத்து ஜனநாயக முற்போக்கு சக்திகளை ஓரணியில் இணைத்து ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. முன்னெடுக்கும் சர்வாதிகாரத்திற்கு எதிராக போராடுவதற்கு முன்முயற்சி எடுக்க  வேண்டும்.

தமிழில்: வெ. ராகுல்ஜி