லெனினும் இயங்கியலும்

அபிநவ் சூர்யா

“லெனின்” என்றவுடன் நம்மில் பலருக்கும் மனதில் முதலில் தோன்றுவது பெட்ரோகிராட் நகரத்தில் மாபெரும் உழைக்கும் மக்கள் திரளின் முன்பு “சர்வதேச சோசலிச புரட்சி வாழ்க!” என கோஷமிட்ட நாயகனின் பிம்பம்தான். 20ம் நூற்றாண்டில் உலகெங்கிலும் உள்ள சுரண்டப்பட்ட மக்களின் நம்பிக்கை ஒளியாக மாறிய மாபெரும் ஆளுமை லெனின் என்றால் அது மிகை ஆகாது.


லெனின் ஒரு புரட்சியாளர். உலகத் தலைவர். ஆனால், இந்த வண்ணமிகு புகழாரங்களைத் தாண்டி, அவர் “மார்க்சிய தத்துவத்தை செயலில் நிறுவிக் காட்டியவர்” என்பதுதான் நமக்கு முக்கியமான படிப்பினையாக இருக்கும். பாட்டாளி வர்க்கம், புரட்சியின் மூலம் இந்த சுரண்டல் நிறைந்த முதலாளித்துவ சமுதாயத்தை தூக்கி எறிந்து பாட்டாளி வர்க்க சர்வாதிகார ஆட்சியை நிறுவும் என்பது, அதுவரை ஒரு ஏட்டுக் கணிப்பாக மட்டுமே இருந்து வந்தது. அதை நிறுவிக் காட்டிய அக்டோபர் புரட்சிக்கு தலைமை தாங்கியவர் லெனின்.


மார்க்சிய தத்துவத்தின் மிக முக்கிய சாராம்சம் எது என பார்த்தால் அது “இயங்கியல் பொருள்முதல்வாதம்” தான் என நாம் அறிவோம். லெனின் ஒரு செயற்பாட்டாளர். “என்ன செய்ய வேண்டும்?” என்ற புத்தகத்தை எழுதியவர். அவர் மார்க்சிய தத்துவத்திற்கு என்ன பங்காற்றினார்?

“இயங்கியல்” கோட்பாட்டின் தந்தை என கருதப்படும் ஹெகல் எழுதிய “தர்க்கத்தின் அறிவியல்” (Science of Logic) என்ற நூலை லெனின் 1914-15 கால கட்டத்தில்தான் படித்தார். ஆய்வு வட்டங்களில் சிலர், லெனின், ஹெகலை படிப்பதற்கு முன்னால், இயங்கியல் பொருள்முதல்வாத கோட்பாடு குறித்து அறிந்திருந்தாலும், அவரின் சிந்தனைகளில் ஒரு எந்திரப் பார்வைதான் நிலவியது எனக் கூறும் வழக்கம் உண்டு. ஹெகலை படித்த பிறகுதான் “இயங்கியல்” குறித்த முழுமையான புரிதல் பெற்றார் என்றெல்லாம் அவர்கள் கூறுவர். ஆனால் இது உண்மைக்கு முற்றிலும் மாறானது. இதுபோன்ற வாதங்கள், லெனினின் துவக்க கால படைப்புகளை தவறென சித்தரித்து, கருத்துமுதல்வாத கோட்பாடுகளை முன்நிறுத்தும் உத்தி.

லெனினின் செயல்பாடுகள் அனைத்தும் இயங்கியல் பொருள்முதல்வாத அடிப்படையில்தான் இருந்தது என்பது நமக்கு தெரிந்ததே. 20ம் நூற்றாண்டின் துவக்கத்தில் இருந்தே லெனினின் எழுத்துகளிலும், சிந்தனைகளிலும், நிலைபாடுகளிலும் கூட தொடர்ந்து நிலவும் “இயங்கியல்” பார்வையை நம்மால் பார்க்க முடியும். சொல்லப்போனால், லெனினின் எழுத்துக்களை கூர்ந்து ஆய்வு செய்தால், “இயங்கியல்” குறித்த நம் புரிதல் மேம்படுவதோடு மட்டுமல்லாமல், மார்க்சியத்தின் “இயங்கியல் பொருள்முதல்வாத” தத்துவத்தையே அவர் மெருகூட்டியிருக்கிறார் என்பது நமக்கு விளங்கும்.

மார்க்சும் ஏங்கல்சும் ஹெகலின் “இயங்கியல்” தத்துவத்தை போற்றி எழுதிய அதே வேளையில், அதை பொருள்முதல்வாதத்துடன் இணைத்து, அறிவியல் தத்துவத்தை உருவாக்கினர். ஆயினும், அன்று பல மார்க்சிஸ்டுகளும், ஹெகலிய பாணியில் “இயங்கியல்” என்பதை “ஆய்வுக் கருத்து – எதிர்கருத்து – தொகுப்பு” என்ற மும்முனை அம்சம் கொண்ட தத்துவமாகவே அணுகினர். ஆனால், ஒவ்வொரு நாளும் மார்க்சியத்தை செயலில் அமலாக்க துடித்த லெனின், இயங்கியலை வேறு பாணியில் புரிந்து கொள்ள வேண்டும் என்றார். “சமூகத்தை, தொடர்ந்து மாற்ற நிலையில் இருந்து கொண்டிருக்கும் ஒரு உயிரினம் போல” புரிந்து கொள்வதே சரியான இயங்கியல் பார்வை என எளிமையாக விளக்கினார். “ஒரு நிகழ்வின் அனைத்து நிதர்சனமான சூழல்களையும், அதன் வளர்ச்சியையும் ஆய்வு செய்யும் முறையே” இயங்கியல் என அவர் வரையறுத்தார். செயலில் ஈடுபடும் மார்க்சியவாதிகள், “எப்போதும் எல்லா இடத்திலும் பொருந்தும்” செயல்முறைகளை/விதிமுறைகளை தேடுவது என்பது இயங்கியலுக்கு எதிரானது என வாதிட்டார்.


ஹெகலை படித்த லெனின், “இயங்கியலின் சுறுக்கக் குறிப்பு ” (Summary of Dialectics) என்ற குறிப்பை எழுதி, இயங்கியலின் முக்கிய கூறுகளாக கூறுவது.

  1. ஒரு பொருளை மற்ற அனைத்திற்கும் அதனுடன் உள்ள தொடர்புடன் அதை ஆய்வு செய்து, அதன் வளர்ச்சியை புரிந்து கொள்ள வேண்டும்.
  2. நிகழ்வின் எதிர்மறையான/முரண்பாடான சக்திகளையும் அதன் போக்கையும் புரிந்து கொள்ள வேண்டும்.
  3. எதிர்மறைகளின் உறவாடல் மற்றும் அதன் தொகுப்பு/அதன் மூலம் ஏற்படும் மாற்றம் அவற்றின் தன்மையை புரிந்து கொள்ள வேண்டும்.

இவையே இயங்கியலின் அம்சங்கள் என குறிப்பிடுகிறார். இந்த முக்கிய அம்சங்களின் அடிப்படையில் லெனினின் அரசியல் செயல்பாடு மற்றும் அவர் சிந்தனைகளை பற்றி புரிந்து கொண்டு, “இயங்கியல்” பார்வை குறித்து லெனினியம் நமக்கு அளிக்கும் பாடம் குறிந்து இந்த கட்டுரை ஆராய முனைகிறது.

பொருள்முதல்வாத பார்வை

லெனின் எதற்காக ஹெகலை படித்தார்?

ஹெகல் கூறிய அனைத்தையும் அப்படியே பிரகடனம் செய்யவா? இல்லை!

நாம் அறிந்ததுபோல், ஹெகலின் “இயங்கியல்” என்பது “கருத்துமுதல்வாத” அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது. ஆனால் லெனின், ஹெகலை படிக்கையில் அதை பொருள்முதல்வாத பார்வையுடன் படித்தார்.

ஹெகலை படித்த லெனின், அந்நூல் குறித்த குறிப்புகள் எடுக்கையில், ஒவ்வொரு முறையும் ஹெகல் கூறிய கருத்துமுதல்வாத கருத்துகளை அப்படியே தலை கீழாக மாற்றி, பொருள்முதல்வாத அடிப்படையில் எழுதி வந்தார்.”மனிதனின் இருப்பே சிந்தனையை தீர்மானிக்கின்றது” என்பதுதானே மார்க்சிய புரிதல்? நாம் பெரும்பாலும் எதைப் பற்றி சிந்திக்கிறோம்? நம்மை சுற்றியுள்ள சூழல் பற்றி, நாம் செய்யும் வேலை பற்றி, நம் வாழ்க்கைநிலை பற்றி, நம் உறவுகள் பற்றி.. இதுபோல நம் பொருள்நிலை சூழல் தான் நம் சிந்தனையை தீர்மானிக்கின்றது.இதுவே நாம் சமூகத்தை ஆய்வு செய்வதிலும் அடிப்படையாக இருக்க வேண்டும். “உண்மையாக நிதர்சனமாக இருக்கும் நிலையை, சமூக உறவுகளை, நாம் ஆராய கற்றுக்கொள்ள வேண்டும். அது குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதோடு நாம் அதை குழப்பிக் கொள்ளக் கூடாது” என்கிறார் லெனின். உதாரணமாக, நெருக்கடிக்குப் பின் வளர்ச்சிப் பாதையில் சிறு காலம் முதலாளித்துவ பொருளாதாரம் பயணிக்கையில், அக்காலத்தில் மக்களுக்கு முதலாளித்துவ சமூகம் குறித்து ஆதரவு எண்ணம் இருக்கலாம். ஆனால் நாம் “ஏன் முதலாளித்துவம் நல்ல பொருளாதார முறை?” என்பதைப் பற்றியா ஆராய வேண்டும்? இல்லை. இன்றைய சூழலில் முதலாளித்துவம் எப்படி இயங்குகிறது, அது எவ்வாறு மீண்டும் நெருக்கடியை நோக்கி பயணிக்கிறது என்பதைப் பற்றித்தானே ஆராய வேண்டும்? இதுவே மார்க்சிய இயங்கியல் பார்வையின் அடிப்படை.

இதையே லெனின் அழுத்திக் கூறினார். “மனிதனின் சிந்தனைக்கு வெளியே, சுதந்திரமாக, பொருட்கள் (பொருளியல் நிலை) நிலவுகிறது என்ற முக்கியமான அம்சத்தை ஹெகல் மறைக்கிறார்” என லெனின் எழுதுகிறார். இந்த “முக்கியமான” அம்சத்தை நிலைநாட்டவே, ஹெகலை படிப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பாகவே, லெனின் “பொருள்முதல்வாதமும், அனுபவவாத விமர்சனமும்” (Materialism and Empirio-criticism) என்ற நூலை (1908ல்) எழுதினார். வரலாற்றின் பல ஆய்வாளர்களின் தத்துவங்கள், சமகால வாதங்கள் என அனைத்தையும் ஆய்வு செய்து, அவற்றில் இருக்கும் கருத்துமுதல்வாத அம்சங்களை தவிடுபொடி ஆக்கும் நூல் அது. மேலும் முக்கியமாக, எவ்வாறு “இயற்கை” என்பது மனிதனின் மூளைக்கு வெளியே, நிதர்சனமாக நிலைக்கும் உண்மை என்பதையும், அக்கால அறிவியல் ஆய்வு முறையில் நிலவும் நெருக்கடிகளையும், கருத்துமுதல்வாத போக்குகளையும் அம்பலப்படுத்தி எழுதினார்.

ஆக, ஒரு மனிதனால் எந்த மாற்றத்தை கொண்டுவர முடியும் என்பது அவனின் விருப்பு வெறுப்புகளை சார்ந்து அல்ல. மாறாக பொருளியல் நிலையின் வளர்ச்சி மற்றும் வர்க்கப் போராட்டதின் நிலை சார்ந்தே உள்ளது என்பதை மீண்டும் அழுத்திக் கூறினார் லெனின்.
ஆனால் “இருப்பே சிந்தனையை தீர்மானிக்கின்றது” என்று பொருள்முதல்வாத நிலைபாட்டை சரியாகக் கூறும் மார்க்சியவாதிகள் பலரும், அதில் இருக்கும் “இயங்கியல்” போக்கை மறந்து விடுகின்றனர். தன் பொருளியல் சூழல் குறித்து சிந்திக்கும் மனிதன், அந்த சிந்தனையின் அடிப்படையில் செயல்படவும் செய்கிறான் அல்லவா? அந்த சிந்தனையின் அடிப்படையில் மேற்கொள்ளும் செயல்பாடு, பொருளியல் சூழலையும் மாற்றி அமைக்கிறது அல்லவா? இவ்வாறு பொருளியல் சூழலுக்கும், மனித சிந்தனைக்கும் இடையே நிலவும் இயங்கியல் போக்கை பலரும் மறந்து விடுகின்றனர். இதனால் தான் “மனிதனின் சிந்தனை நிதர்சனமான பொருளியல் சூழலை வெறும் பிரதிபலிப்பது மட்டும் இல்லை. அதை உருவாக்கவும் செய்கிறது” என லெனின் எழுதுகிறார்.


உதாரணமாக, ஒரு ஆலை தொழிலாளியின் இருப்பே அவன் சிந்தனையை தீர்மானிக்கின்றது என்றால், ஒரு கம்யூனிஸ்ட் கட்சி அவரிடம் போய் எதற்காக பிரச்சாரம் செய்ய வேண்டும்? “அவர் இருக்கும் நிலை மாறும்பொழுது, அவரின் சிந்தனையும் மாறும்” என்று சொல்லிவிட்டு அமைதியாக இருக்கலாமே? ஆனால், நாம் ஏன் தொடர்ந்து முதலாளித்துவ ஏகாதிபத்திய சுரண்டல் குறித்து பிரச்சாரம் செய்கிறோம்? ஏனென்றால் சூழல் எவ்வளவு மோசமாக மாறினாலும், வர்க்க உணர்வு ஏற்பட்ட தொழிலாளிகளால் மட்டும்தான் இந்த சமூக அமைப்பை மாற்றி அமைக்க முடியும். நம் பிரசாரங்களின் விளைவாக சங்கமாக இணையும் தொழிலாளர்கள் தானே நல்ல கூலி மற்றும் பணியிட சூழலுக்காக போராடுகின்றனர்? அது பொருளியல் தளத்தில் ஒரு சிறு மாற்றத்தை உண்டாக்குகிறது அல்லவா? இன்று நாம் மேற்கொள்ளும் பிரச்சாரங்கள் அனைத்தும், அனைத்து தொழிலாளர்களையும் சென்றடையாமல் இருக்கலாம். ஆனால், முதலாளித்துவ நெருக்கடி மோசம் அடையும் பொழுது, புரட்சியை நோக்கிய வர்க்க உணர்வு உண்டாக நம் பரப்புரைகள் அவசியமாகும். அதனால் தானே “கிளர்ச்சி-பிரச்சாரம்” (Agitprop) மேற்கொள்வதில் தேர்ந்த திறன் பெற்ற கட்சியை உருவாக்குவதே தலையாய கடமை என லெனின் எழுதினார். (“என்ன செய்ய வேண்டும்?”).

பொருள்முதல்வாத பார்வையை முன்வைக்கும்பொழுது, பொருளியல் சூழலில் ஏற்படும் வளர்ச்சிகளை புரிந்து கொண்டு, அதன் அடிப்படையில் புரட்சிகர மாற்றத்தை உழைக்கும் வர்க்கம் நிகழ்த்துவதற்கான ஆயுதமாக அமையும் தத்துவக் கருத்துக்களை வளர்த்தெடுப்பது ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதான கடமை ஆகும்.

அனைத்தின் இணைப்பு – வரலாற்று சூழல்


அடுத்ததாக பொருள் (பொருளியல் சூழல்) குறித்து ஆய்வு செய்யும் பொழுது, அந்த பொருளை தனியே புரிந்து கொள்ள முடியாது. எந்த ஒரு பொருளும் மற்ற அனைத்து பொருட்களுடனும் இணைப்பில் தான் உள்ளது. இதுவே “இயங்கியல்” முறையின் அடுத்த முக்கிய அம்சம். முதலாளித்துவ பொருளாதார அறிஞர்கள் பலரும், பொருளாதாரத்தை புரிந்து கொள்ள முற்பட்டு, “ஒரு தனி மனிதன், அவனின் ஆசை, தேவை, கிராக்கி இப்படி அப்படி இருக்கலாம். இவ்வாறு அனைத்து மனிதர்களையும் கூட்டினால் பொருளாதாரத்தில் கிராக்கி இப்படி இருக்கும்” என புரிந்து கொள்வர். இதனால்தான் முதலாளித்துவ பொருளாதார ஆய்வு முறை முற்றிலும் தவறான ஆய்வு முறை. எந்த பொருளும் (மனிதனும்) எல்லா சமயங்களிலும் மற்ற அனைத்தினோடும் தொடர்பில், ஓர் உறவில்தான் உள்ளது. இந்த முழுமையை கணக்கில் கொண்டுதான், அந்த முழுமையில்தான் அந்த பொருளை ஆய்வு செய்து புரிந்து கொள்ள முடியும்.


எடுத்துக்காட்டாக, சென்னையில் ஃபாக்ஸ்கான் ஆலையில் போராடும் தொழிலாளர்கள், அவர்களின் அன்றாட உணவு, இருப்பிட தேவைக்காக போராடலாம். ஆனால், அதை புரிந்து கொள்ளும் நாம், அப்போராட்டத்தை தனியே புரிந்து கொள்ள முடியாது. இந்த போராட்டம் நவ தாராளமய கொள்கைகள் காலத்தில், அதை தீவிரமாக அமலாக்கும் இந்துத்துவா அரசின் காலத்தில் நடக்கிறது. இங்கே நவ தாராளமாய கொள்கைகளை தழுவி, அதற்காக தொழிலாளர்களை கைவிட்டு முதலீட்டாளர்களை ஈர்க்க மட்டுமே முனையும் பிராந்திய முதலாளித்துவ கட்சியின் மாநில அரசாங்கம்தான் உள்ளது. இந்த நிறுவனம் உலகளவில் தொழிலாளர்களை சுரண்டி லாபத்தை கூட்டும் ஐஃபோன் நிறுவனத்திற்கு உற்பத்தி செய்கிறது. இந்த சர்வதேச சுரண்டலானது, சர்வதேச நிதி மூலதனத்தின் ஆதிக்கத்தில், ஏகாதிபத்தியத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இவ்வாறு அனைத்தினோடும் தொடர்புடைய சூழலில்தான் இந்த போராட்டம் நிகழ்கிறது. இவ்வாறுதான் இதை புரிந்து கொண்டு ஆய்வு செய்ய முடியும்.

நாம் மேலே கண்ட எடுத்துக்காட்டை பார்த்தாலே, முக்கியமான ஒரு படிப்பினை கிட்டும். ஒரு நிகழ்வை அதன் எல்லா இணைப்புகளோடும் சேர்த்து பார்க்கும் பொழுது, வரலாற்று ரீதியாக அந்த நிலை எவ்வாறு உருவானது, இன்று அதன் சூழல் எவ்வாறாக உள்ளது என்று ஆய்வு செய்த பின்னர்தான் அந்த நிகழ்வை நாம் புரிந்து கொள்ள முடியும். இதுவே “லெனினிய இயங்கியலின்” ஆகச்சிறந்த படிப்பினையாகும். நாம் ஒரு நிகழ்வை ஆய்வு செய்யும் பொழுது, அதே நிகழ்வில் “மார்க்ஸ் என்ன சொன்னார்?, லெனின் என்ன செய்தார்?” என புத்தகங்களை மனப்பாடம் செய்து விளக்கம் அளிப்பது போதுமானதல்ல. அந்த நிகழ்வின் வரலாற்று மற்றும் நிதர்சனமான சூழல் என்ன என்பதை புரிந்து கொண்டு, அதன் அடிப்படையில் அறிவியல் ரீதியாக ஆய்வு செய்து திட்டம் வகுப்பதுதான் மார்க்சியவாதிகள் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய பாடம். இதனால்தான் லெனின், “எந்த ஒரு முன்மொழிவையும் வரலாற்று ரீதியாக, அனைத்தினுடனான இணைப்புகளுடனும் சேர்த்து, வரலாற்றின் நிதர்சனமான அனுபவங்களுடன் இணைத்து புரிந்து கொள்வதே” மார்க்சியத்தின் சாரம் என்கிறார்.

நம் இந்திய சூழலிலிருந்தே இதை நாம் புரிந்து கொள்ள முடியும். சிபிஐ(எம்) கட்சியானது இந்திய சமுதாயத்தின் வரலாற்று சூழலையும், இன்றைய தேசிய சர்வதேச சூழலையும், வர்க்க போராட்டத்தின் நிலையையும் “இயங்கியல்” பார்வையில் புரிந்து, கட்சி திட்டம் உருவாக்கி, அதன் அடிப்படையில் உத்திகள் அமைத்து செயல்படுகிறது. ஆனால், அன்று மாவோயிஸ்டுகளும் சரி, இன்று பல்வேறு அதி தீவிர இடதுசாரி அமைப்புகளும் சரி, கட்சியின் பல்வேறு நிலைபாடுகளை விமர்சித்து, “சிபிஐ(எம்) என்பது புரட்சிகர கட்சியே இல்லை. கம்யூனிஸ்ட்கள் புரட்சிகரமான நிலைபாட்டை எடுக்க வேண்டும்” என சாடுகின்றனர். வரலாற்று அனுபவங்கள் அனைத்துமே, சிபிஐ(எம்)-மின் நிலைபாடு பெரும்பாலும் சரியானதாக இருந்துள்ளதைக் காட்டுகிறது. ஆக, அன்று ரஷ்ய கம்யூனிஸ்டுகளான போல்ஷவிக்கள் எவ்வளவு புரட்சிகரமாக இருந்தார்கள், அதனால் நாமும் அதே நிலைபாட்டை எடுக்க வேண்டும் என்பது தவறான இயங்கியல் பார்வை. “நாம் எப்போதும் ‘அனைவரை விடவும் புரட்சிகரமாக இருக்க வேண்டும்’ என்ற முழக்கத்தை வைக்க மாட்டோம்” என்கிறார் லெனின். வர்க்க நலனிற்கு பயனளித்த ஒரு உக்தி, மாறிய சூழலில் அபாயகரமாக அமையலாம் என்றும், நிலையான, மாறாத கட்டளைகளை நம்பி மார்க்சிஸ்டுகள் செயல்படக் கூடாது எனவும் கூறினார்.

சூழலுக்கேற்ப புரட்சிகரமான நிலைபாட்டை லெனின் எவ்வாறு எடுத்தார் என்பதை அக்கால ரஷ்ய சூழலை புரிந்து கொண்டால் நமக்கு விளங்கும். முதலாம் உலகப் போர் துவங்கியபோது, முதலில் ஜெர்மனிதான் போர் முழக்கம் விடுத்தது. இதனால் இது ரஷ்யா துவங்கிய போர் இல்லை என்றும், இதனால் தாய் நாட்டை காக்க இந்த போரில் ரஷ்ய ராணுவத்திற்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்றும் சில திரிபுவாத சக்திகள் ரஷ்யாவில் முழக்கமிட்டனர். ஆனால், அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக, லெனின் அந்த போர் நடக்கும் சூழலை விளக்கிப் பேசினார். பல ஆண்டுகளாக முதலாளித்துவம் ஏகபோக நிலையை நோக்கி பயணித்து, நிதி மூலதனத்தின் ஆதிக்கம் விரிந்து, ஏகாதிபத்திய சூழல் நிலவுவதை விளக்கிய லெனின், இந்த சூழலில், இந்த போரை யார் தொடங்கியது என்ற கேள்வியே வீணானது என்றும், இது ஒரு ஏகாதிபத்திய போர் என்றும், இதை உழைக்கும் வர்க்கம் முற்றிலுமாக எதிர்க்க வேண்டும் என்றும் விளக்கினார்.
ரஷ்யப் புரட்சிக்கு பின்னரும் கூட, “முழுமையான முதலாளித்துவத்திற்கு பின்னரே சோசலிசத்தை நோக்கி செல்ல முடியும் என மார்க்ஸ் விவரித்து இருக்கிறார்” எனக் கூறி, சோசலிசத்தை நோக்கிய பயணத்தை எதிர்த்த இடதுசாரிகளுக்கு பதில் அளித்தார் லெனின். “சோசலிசம் குறித்த பலனற்ற கேள்விகளை எழுப்புவதற்கு பதிலாக, சோசலிசத்தை நோக்கி முன்னேறாமல் இந்த போர் ஏற்படுத்திய காயங்களை குணமாக்க முடியுமா என்ற நிதர்சனமான கேள்வியை கேளுங்கள்” என வாதிட்டார். நிதர்சனமான சூழலை புரிந்து கொள்வதும், சூழலுக்கேற்றவாறு உக்திகளை வகுப்பதுமே இயங்கியலின் சாராம்சமாக கருதினார் லெனின்.

ஆனால் 1920-30களில், ஏகாதிபத்திய போருக்கு பின்னரும், பொருளாதார நெருக்கடியாலும் ஏகாதிபத்திய சக்திகள் வலுவிழந்து இருந்த காலத்தில் சோவியத் ஒன்றியம் பாய்ச்சல் வேகத்தில் சோசலிசம் நோக்கி பயணித்தது.அது சரியான உத்தியாக இருந்தது. ஆனால், எல்லா நேரத்திலும் “பாய்ச்சல் வேக” மாற்றத்திற்கான உத்தி சரியானதாக இருக்கும் என சொல்ல முடியாது. இன்று, சோவியத் வீழ்ச்சிக்கு பின்னர், உலகளவில் சோசலிச சக்திகள் வலு குறைந்துள்ள வேளையில், ஏகாதிபத்திய சக்திகள் அசுர சக்தியுடன் தாக்கும் நவ தாராளமய காலத்தில், மக்கள் சீனம் “பாய்ச்சல் வேக” உத்தியை பின்பற்றவில்லை. தன் நாட்டு உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி, பல்வேறு வர்க்கங்கள், உடைமை முறைகளின் வளர்ச்சி ஆகியவற்றை ஆய்வு செய்து, 2049ற்குள் சோசலிச சமூகத்தில் அடி எடுத்து வைக்கும் “மிதமான மாற்றத்திற்கான” குறிக்கோளையே கொண்டுள்ளது.


நிதர்சனமான வரலாற்று பின்னணியையும், நிதர்சனமான சூழலையும் ஆய்வு செய்து, அதற்கேற்றார் போல உத்திகளை மாற்றக்கூடிய கட்சிதான் மக்களை விடுதலை பாதையில் வழி நடத்த முடியும்.

நிகழ்வின் வளர்ச்சி

1903ல் ரஷ்யாவில் கட்சியினுள் “போல்ஷ்விக்-மென்ஷ்விக்” பிளவு ஏற்பட்டு, உட்கட்சி போராட்டம் வளரத் துவங்கிய பொழுதே “நிதர்சனமான சூழலை புரிந்து கொள்ளாமல், நம் போராட்டத்தை புரிந்து கொள்ள முடியாது. ஆனால் அதை புரிந்து கொண்ட பின், வளர்ச்சி என்பது இயங்கியல் ரீதியாக தான் நிகழ்கிறது என்பது தெளிவாக தெரியும்” என்றார் லெனின். இது அவர் ஹெகலை படிப்பதற்கு பத்து ஆண்டுகள் முன்னால் எழுதுப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு பொருளின்/நிகழ்வின் சூழலை புரிந்து கொண்ட பின்னர், அது எவ்வாறு வளர்ச்சி அடைகிறது, அந்த வளர்ச்சியின் காரணிகள் என்ன என்பதை புரிந்து கொள்வதுதான் நாம் அடுத்ததாக கவனிக்க வேண்டிய “இயங்கியல்” அம்சம். இதை லெனின் எழுத்துக்கள் வழி புரிந்து கொள்ள முடியும்.

‘நரோத்னிக்கு’கள் என்ற இயக்கம் ரஷ்யாவில் இயங்கி வந்த “மக்கள் செயற்பாட்டாளர்”களின் இயக்கம். அவர்கள் சிறு-குறு வேளாண் அமைப்பையும், ரஷ்யாவின் ஊரக வாழ்வியலையும் காக்க முற்பட்டனர். இதற்காக அவர்கள் ரஷ்யாவில் சிறு-குறு விவசாயிகளின் நிலை, அவர்களின் உடைமை, அவர்கள் மீது அரசு கொள்கைகளின் தாக்கம் என விரிவாக ஆய்வு செய்து, அன்றைய வர்த்தக சூழலால் இந்த வர்க்கம் சந்திக்கும் அவதிகளை அறிக்கையாக வெளியிட்டனர்.

நரோத்னிக்குகளை கடுமையாக விமர்சித்த லெனின், சிறு-குறு விவசாயிகளின் இன்னலை வெளிக்கொணரலாம், ஆனால் இன்றைய பொருளாதார சூழலில் அவதிகளுக்கு மாற்று என்பது ரஷ்யாவின் ஊரக வாழ்வியலில் தேடுவது என்பது அபத்தம் என விவரித்தார். ஏனென்றால், சிறு-குறு விவசாயிகள் உட்பட, அனைவரின் இன்னல்களுக்கும் மூலம், அங்கு நிலவும் முதலாளித்துவ சூழல்தான். இந்த முதலாளித்துவ ஏகாதிபத்திய சூழலின் வளர்ச்சி என்பது உழைப்பிற்கும்-மூலதனதிதிற்கும் இடையேயான மோதலில் அடங்கி உள்ளது என லெனின் விவரித்தார். இதை புரிந்து கொள்ளாத நரோத்னிக்குகளின் தரவுகள் எல்லாம் சரியானதாக இருந்தாலும், ஆய்வின் முடிவுகள் தவறானதாக உள்ளது என லெனின் குறிப்பிட்டார்.


மேலும் நரோத்னிக்குகளின் பிற்போக்குதனத்தை சரியாக விமர்சனம் செய்த சில மார்க்சியவாதிகள், அன்றைய ரஷ்ய பொருளாதாரத்தை எவ்வாறு சீரமைப்பது என்ற கேள்வியை எழுப்பினர். அதற்கும் விடை அளித்த லெனின், “நம் தேசிய பொருளாதாரம் என்பது முதலாளித்துவ பொருளாதாரம். அதை ஒருங்கிணைப்பது எல்லாம் முதலாளிகள்தான். அதை எவ்வாறு சீரமைப்பது என்ற கேள்விக்கு பதிலாக, முதலாளித்துவ பொருளாதாரத்தின் அடுத்தடுத்த கட்ட வளர்ச்சி குறித்த கேள்வியை முன்நிறுத்த வேண்டும்” என விமர்சித்தார்.
இன்றும் கூட இந்தியாவில் வேளாண் நெருக்கடி முற்றிவரும் வேளையில், நமது கலாச்சார தளங்களில் பல இடங்களில் கிராம வாழ்க்கையை பாராட்டி சித்தரிக்கும் போக்கு உள்ளது. ஆனால், லெனின் கூறியது போல், இந்த முதலாளித்துவ சமூகத்தின் அவலங்களுக்கான மாற்று அது கிடையாது.

சிபிஐ (எம்) கட்சி திட்டமும், மக்கள் ஜனநாயக புரட்சிக்கு பின் வேளாண் கேள்விக்கு என்ன கூறுகிறது? நில சீர்திருத்தம் மூலம் நில விநியோகம் செய்வது, சிறு-குறு விவசாயிகளுக்கு நிதி-ரீதியாக ஆதரவு அளிக்கும் அதே வேளையில், கூட்டுறவு மூலம் விவசாயிகளை குழுக்களாக ஒன்று திரட்டுவது, வேளாண் துறையில் நவீன தொழிற்நுட்பம் மூலம் உற்பத்தி சக்திகளை மேம்படுத்துவது என கட்சித் திட்டம் குறிப்பிடுகிறது. ஆக, இன்றைய அவல நிலைக்கான மாற்று கிராம சமுதாயத்தையும், சிறு-குறு விவசாயிகளின் வாழ்வியலையும் அப்படியே நீடித்து பாதுகாப்பதில் இல்லை.

பொருள்/நிகழ்வின் வளர்ச்சியை புரிந்து கொள்வது இயங்கியலின் முக்கிய அம்சமாகும. மாறா நிலை பார்வையில் (Metaphysical) சிந்தித்தால், நரோத்னிக்குகள் செய்த தவறையே நாமும் செய்ய நேரிடும்.

எதிர்மறைகளின் சக்திகளும், போக்குகளும்

இதுவரை, ஒரு பொருள்/நிகழ்வு/சமூகத்தை ஆய்வு செய்யும் பொழுது, அதன் அனைத்து இணைப்புகளையும் கண்டறிந்து, அதை குறிப்பிட்ட சூழலில் பொருத்தி, வளர்ச்சியை புரிந்து கொள்வதே இயங்கியல் என கண்டோம். எந்த ஒரு பொருள்/சமூக முறையும் உள்ளார்ந்த இயக்கத்தில்தான் (Self-Movement) இருக்கும். நிலையான, மாறாத பொருள் என எதுவும் கிடயாது. இந்த உள்ளார்ந்த இயக்கத்தின் மூலத்தை கண்டறிவதே இயங்கியல் பார்வையின் பிரதான கடமை. இந்த வளர்ச்சியின் மூலக்கரு அந்த பொருள்/சமூகத்தின் அகத்தில் உள்ள எதிர்மறை/முரண்பாடான சக்திகளில் அடங்கி உள்ளது. நாம் அறிந்ததுபோல் முதலாளித்துவ சமூகத்தில் இந்த மூலக்கருவானது தனியுடைமை குவியல் மற்றும் சமூகமயமாக்கப்பட்ட உழைப்பு, இரண்டிற்கும் இடையேயான முரண்டபாட்டில் உள்ளது. இது முதலாளி மற்றும் பாட்டாளி வர்க்கங்கள் இடையேயான மோதலாக வெளிப்படுகிறது. பாட்டாளி வர்க்கம் மட்டுமே இந்த முரண்பாட்டை இறுதிக் கட்டம் வரை இட்டுச் சென்று, போராட்டத்தின் நிறைவாக புரட்சியை நிகழ்த்த வல்ல வர்க்கமாகும். இந்த முரண்பாடு குறித்தும், சமூக வளர்ச்சியின் பாதையில் பாட்டாளி வர்க்கமே முன்னேறிய வர்க்கம் என்பதையும் லெனின் மிகத் தெளிவாக உணர்ந்திருந்தார்.

இங்கே முன்னர் குறிப்பிட்டது போல, சூழலை அறிந்து உத்திகள் வகுப்பதே இயங்கியலின் அடிப்படை அம்சம் என கண்டோம். ஆனால், அதற்காக இந்நாட்களில் தமிழகத்தில் பலர் மார்க்சியத்தின் பெயரால் மேற்கொள்ளும் அடையாள அரசியல் உத்திகளையும் இயங்கியல் பார்வையில் நியாயப்படுத்திவிட முடியுமா? இல்லை! இங்கேதான் முரண்பாடான சக்திகளை கண்டறியும் கடமை நமக்கு வழி காட்டுகிறது. இதன் அடிப்படையில் பார்த்தால் பாட்டாளி வர்க்கம் மட்டுமே மிகவும் முன்னேறிய வர்க்கம் என்பது தெளிவாகிறது. லெனினை பொறுத்த வரையில் உத்திக்கான ஒரே ஒரு மாறாத கோட்பாடு உள்ளது என்றால், அது “பாட்டாளி வர்க்கத்தின் நலன்” மட்டுமே.

இப்படிப்பட்ட வர்க்க போராட்டத்தால் கட்டமைக்கப்பட்ட சமூகத்தில் “பாரபட்சமற்ற” சமூக அறிவியல் ஆய்வு என்பது இருக்கவே முடியாது என்பதிலும், வர்க்கங்களின் போராட்டத்தின் விளைவாக நிகழும் சமூக வளர்ச்சியில், பாட்டாளி வர்க்கப் பார்வை மட்டுமே அறிவியல் பூர்வமான கண்ணோட்டத்தை கொண்டுள்ளது என்பதிலும் லெனின் எக்காலத்திலும் உறுதியாக நின்றார்.


குறிப்பாக, பிளக்கனோவ் போன்ற ரஷ்ய அறிஞர்கள், மார்க்ஸ் 1848ல் ஜெர்மானிய புரட்சி சமயத்தில் மேற்கொண்ட ஆய்வை மேற்கோள் காட்டி, ரஷ்யாவில் தாரளவாத முதலாளித்துவ கட்சிகளின் முதலாளித்துவ ஜனநாயக போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என கோரினார். இதை முற்றிலுமாக மறுத்த லெனின், ஏகாதிபத்திய முதலாளித்துவ சூழலில், ரஷ்யாவில் சுரண்டல் முறை ஜார் மன்னனின் ஒடுக்குமுறை ஆட்சியை சார்ந்தே உள்ளது என்பதையும், ஜனநாயக புரட்சிக்கான கடமைகளை பாட்டாளி வர்க்க தலைமையிலான புரட்சிகர அரசுதான் சாத்தியமாக்கும் எனவும் விவரித்தார். அக்காலத்தில் நகர்ப்புற பாட்டாளி வர்க்கமானது ரஷ்ய மக்கள் தொகையில் ஐந்து சதத்திற்கும் குறைவு. அதேநேரம், இயங்கியல் பார்வையில், முன்னேறிய வர்க்கத்தின் மீது நம்பிக்கை வைத்தார் லெனின். இந்த போல்ஷ்விக் நிலைபாட்டை விவரித்து, “தொழிலாளி – விவசாயி வர்க்கங்களின் புரட்சிகர-ஜனநாயக சர்வாதிகாரம்” (The Revolutionary-Democratic Dictatorship of the Proletariat and the Peasantry) என்ற அறிக்கையை 1905ல் வெளியிட்டார். இதே கோட்பாட்டை அடிப்படையாக வைத்துத்தான் மென்ஷ்விக்கள், அதி தீவிர இடதுசாரிகள், திரிபுவாதிகள், சீர்திருத்தவாதிகள் என அனைவரையும் புரட்சி வரை எதிர் கொண்டார்.

ஜனநாயக கோரிக்கைகளை பாட்டாளி வர்க்கம் ஆதரிக்க வேண்டும் என கூறும் அதே வேளையில், “ஏதேனும் ஒரு சமயத்தில், இவற்றில் எந்த ஒரு கோரிக்கையும் முதலாளி வர்க்கத்தின் கையில், உழைக்கும் வர்க்கத்தை ஏமாற்ற பயன்படாமல் இருந்ததே இல்லை” எனக் குறிப்பிடுகிறார் லெனின். “குடியரசிற்கான கோரிக்கை உட்பட, தன் எல்லா ஜனநாயக கோரிக்கைகளையும், முதலாளி வர்க்கத்தை தூக்கி எறியும் தன் புரட்சிகர போராட்டத்தின் கீழ் அடிபணியச் செய்யாமல், பாட்டாளி வர்க்கம் சுதந்திரமாக செயல்பட முடியாது” என அவர் குறிப்பிடுகிறார்.
பாட்டாளி வர்க்க நலனை முன்நிறுத்துதல் என்ற நிலைபாட்டை மையமாக வைத்து நாம் அடையாள அரசியல் முழக்கங்களை நிராகரிப்பதையும் புரிந்து கொள்ளலாம். ஆக, இயங்கியல் பார்வையில், நாம் எப்போதுமே முரண்பாடுகளை வெளிக்கொணர்ந்து, முன்னேற்றத்தை சாத்தியமாக்கும் நோக்கத்துடன் நாம் நிற்க வேண்டும். முதலாளித்துவ சமுதாயத்தில் அது என்றுமே பாட்டாளி வர்க்க நலன் மட்டும்தான்.

எதிர்மறைகளின் மோதல் மூலம் மாற்றம்

எதிர்மறைகளின் ஒற்றுமை இருப்பை சாத்தியமாக்கும். அவற்றின் மோதல் மாற்றத்தை சாத்தியமாக்கும். உதாரணமாக முதலாளித்துவத்தில் தொழிலாளி வர்க்கம் தன் வாழ்வாதாரத்திற்காக முதலாளி வர்க்கத்தை நாடிச் செல்கிறது. உற்பத்திக்காக முதலாளி வர்க்கம் தொழிலாளி வர்க்கத்தை சார்ந்து உள்ளது. இந்த வர்க்கங்களுக்கு இடையேயான ஒற்றுமை முதலாளித்துவத்தை இன்று நிலைக்கச் செய்கிறது. இந்த ஒற்றுமை தற்காலிகமானதே. இந்த வர்க்கங்களுக்கு இடையேயான மோதல்தான் நிலையானது. இந்த வர்க்கங்களுக்கு இடையேயான மோதல் புரட்சிகர மாற்றத்திற்கு இட்டுச் செல்கிறது. இந்த மோதல் தொடர்ந்து இந்த சமூக முறையில் அளவு மாற்றங்களை உண்டாக்கிக் கொண்டே இருக்கிறது. முதலாளித்துவ குவியல், உழைப்பை சமூகமயமாக்குகிறது (அதாவது பாட்டாளி வர்க்கமாக இல்லாமல் இருந்தோரும், மேலும் மேலும் முதலாளித்துவத்தின் பிடியின் கீழ் வர, உழைப்பு எல்லாம் “சமூக” உழைப்பாக மாறுகிறது). தொழிலாளி வர்க்கம் மீதான சார்பை வெறுக்கும் முதலாளிகள், தொடர்ந்து எந்திரமயமாக்கலுக்கு முனைகின்றனர். இவை அனைத்தும் முதலாளித்துவ நெருக்கடியை கூர்மைப்படுத்துகிறது. இறுதியில் இந்த அளவு மாற்றங்கள் புரட்சியில் விளைந்து, தன்மை மாற்றத்தை உருவாக்குகிறது.

இந்த மாற்றம் ஏற்பட்ட பின்னர், பொருள்/சமூகத்தின் சில அம்சங்கள் மீண்டும் அதே நிலைக்கு வந்தது போல தோன்றலாம் (நிலைமறுப்பின் நிலை மறுப்பு – Negation of Negation). ஆனால் பொருள்/சமூகத்தின் மாற்றமும், மனித ஞானமும் ஒரு வட்டத்தின் வடிவில் பயணிப்பதில்லை. அது மேலே செல்லும் சுருள் (Spiral) சுழல் ஏணி போன்றது. ஒவ்வொரு முறையும் அது ஒரு தளம் மேலே செல்கிறது. மனிதனின் ஞானமும் ஆழம் அடைகிறது. மீண்டும் மாற்றத்தை நோக்கிய பயணம் தொடர்கிறது. இதுவே “இயங்கியல்” விதியின் இறுதி சாராம்சம்.


இதை லெனினைப்போல் உணர்ந்தவர்கள் அக்காலத்தில் வேறு எவரும் இல்லை. 20ம் நூற்றாண்டின் துவக்கத்தில் ரஷ்யாவில் நெருக்கடி முற்றியது. 1905ல் புரட்சி வெடித்தது. அந்த புரட்சி நசுக்கப்பட்டது. ஜார் மன்னர் டூமா (ரஷ்யாவின் நாடாளுமன்றம்) உருவாக்குவது போன்ற சிறு ஜனநாயக கோரிக்கைகளை மட்டும் ஏற்று, கொடுங்கோல் ஆட்சியை தொடர்ந்தார். அனைத்தையும் இழந்ததுபோல தோன்றியது. வட்டத்தின் துவக்கப் புள்ளிக்கே மீண்டும் திரும்பியது போல தோன்றிய சமயம். புரட்சிகர உணர்வு சரிந்து, பிற்போக்கு சக்திகள் தலைத்தூக்கத் துவங்கிய தருணம். ஆனால், லெனின் இது சுருளின் அடுத்த தளம் என உணர்ந்திருந்தார். மீண்டும் நெருக்கடி ஆழம் அடையும், மீண்டும் புரட்சிகர உணர்வு ஓங்கும் என நம்பிக்கையுடன் இருந்தார்.

பிற்போக்கு சிந்தனைகள் தலைத்தூக்கிய அதே காலத்தில்தான், நாடு கடத்தப்பட்ட லெனின், தன்னையும், கட்சியையும் தத்துவார்த்த ரீதியாக மேம்படுத்தி, அடுத்து வரவிருக்கும் புரட்சிக்கு தயார் படுத்த முனைந்தார். சுவிட்சர்லாந்து மற்றும் பிரிட்டனில் பல்வேறு நூலகங்களில் பல மாதங்கள் ஆய்வு நடத்தி, “பொருள்முதல்வாதமும், அனுபவவாத விமர்சனமும்” என்ற ஆகச் சிறந்த படைப்பை 1908ல் கொண்டு வந்தார். இதன் மூலம் ரஷ்யாவில் கட்சியில் பலரும் இயங்கியல் பொருள்முதல்வாத சிந்தனையில் ஆழ்ந்த தேர்ச்சி பெற்றனர். இந்த காலத்தில், அவர் “சட்டப்பூர்வ” போராட்டங்களிலும் கட்சியை மேம்படுத்த, டூமாவின் உள்ளே போல்ஷவிக் பிரதிநிதிகளின் உத்தி குறித்த பல அறிக்கைகள் எழுதினார். 1914ல் முதலாம் உலகப் போர் வெடித்த சமயத்தில், சுவிட்சர்லாந்து நூலகத்தில் ஹெகலை படிக்கத் துவங்கினார்.


1916ல், போரின் அயர்ச்சியாலும், வறுமையாலும், புரட்சிகர உணர்வு ஓங்குவதைக் கண்டறிந்த லெனின், புரட்சியை வழிநடத்த கட்சி உறுப்பினர்களை தயார் செய்வதில் அதி தீவிரமாக இறங்கினார். 1916ல் “ஏகாதிபத்தியம்” என்ற நூலில், நிதி மூலதன கட்டுப்பாடு குறித்தும், ஏகாதிபத்திய சக்திகள் இடையேயான மோதல் குறித்தும் உலுக்க வைக்கும் ஆய்வை படைத்து, நடக்கும் போரின் முகத்திரையை கிழித்தார். “அரசும் புரட்சியும்” என்ற நூலின் மூலம் அரசின் ஒடுக்கும் தன்மையை அம்பலப்படுத்தி, பாட்டாளி வர்க்கம் அரசு எந்திரத்தை உடனடியாக கைப்பற்ற வேண்டியதன் அவசியத்தை விளக்கினார். பிப்ரவரி முதலாளித்துவ புரட்சிக்கு பின், தயக்கத்தில் இருந்த போல்ஷ்விக் உறுப்பினர்களை, புரட்சி நிகழ்த்துவதை நோக்கி தள்ளும் பல கட்டுரைகளை எழுதி, முன்னேறிய வர்க்கங்களின் உணர்வு உச்சத்திலும், எதிரி வர்க்கத்தின் படை நலிவடைந்தும் இருக்கும் காலத்தை தவற விடக் கூடாது என எழுதி, உண்மையான புரட்சியாளர்களை உருவாக்கினார் (இந்த கட்டுரைகள் பின் நாளின் “ஏப்ரல் ஆய்வறிக்கை” (April Thesis) என தொகுக்கப்பட்டது). இவ்வாறாக, இயங்கியல் பார்வையில் பொருளியல் சூழலை புரிந்து, மாற்றத்தை நிகழ்த்தும் துல்லிய நடவடிக்கைகளில் ஈடுபட்டார் லெனின்.

புரட்சி நிகழ்ந்த பின்னரும், லெனினின் அரசியல் செயல்பாடுகள் மற்றும் எழுத்துக்களில் “இயங்கியல்” சிந்தனையை அறிந்து கொள்ள முடியும். மார்க்ஸ்-எங்கல்ஸ் எழுத்துக்கள் பலவும் முதலாளித்துவ சமூகத்தின் விமர்சனமாகவே அமைந்தன. முதலாளித்துவத்தை கடந்த சமூகம் அன்று மிகப் புதியதோர் களம். அறிவியல் ஆய்வு முறையை தன் ஆயுதமாக கொண்ட லெனின், தளராது அரசை வழி நடத்தினார்.
பிற்போக்கு சக்திகள் மீண்டும் ரஷ்யாவை முதலாளித்துவப் பிடியில் சிக்க வைப்பதை தடுக்க, லெனின் பல முயற்சிகள் மேற்கொண்டார்.விமர்சனங்களுக்கு மத்தியிலும் பிரஸ்ட்-லிடோவ்ஸ்க் உடன்படிக்கையை ஜெர்மனியுடன் கையொப்பமிட்டு உலகப் போரிலிருந்து விலகி ரஷ்யாவில் பாட்டாளி வர்க்க அரசை காப்பாற்றியது, சோசலிசம் நோக்கிய பயணத்தில் தேசிய பொருளாதாரத்தை ஒருங்கிணைக்கும் கடமைகளை தெள்ளத் தெளிவாக விவரித்தது, “வேளாண் பிரச்சினைகள் குறித்து” என்ற அறிக்கையின் மூலம் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திற்கு ஊரக பகுதியில் எந்த வர்க்கங்கள் ஆதரவாகவும் எந்த வர்க்கங்கள் எதிராகவும் இருக்கும் என்பதை புரிந்து அவர்களை கையாளும் உத்தி வகுத்தது, உள் நாட்டு போரின் விளைவாக ரஷ்ய பொருளாதாரமும் மக்களின் புரட்சிகர உணர்வுகளும் நலிவடைந்த பொழுது உற்பத்தி சக்திகளை வளர்க்க பாட்டாளி வர்க்க அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் சிறு-குறு முதலாளித்துவ பொருளாதார திட்டமான “புதிய பொருளாதார கொள்கை” என்பதை வடிவமைத்து புரட்சியை காத்தது, என அவரின் ஒவ்வொரு நடவடிக்கையிலும், மாறும் சூழலையும், வர்க்கப் போராட்டத்தின் நிலையையும் உணர்ந்து, மாற்றத்திற்கான உத்தியை வடிவமைத்தார்.இதில் துல்லியமான “இயங்கியல்” பார்வையை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

இறுதியாக

லெனினின் வாழ்வை காலவாரியாக அடுக்கி வைத்துப் பார்த்தால், சுரண்டப்படும் மக்களின் விடுதலைக்காக அன்றாடம் களத்தில் பாடுபடும் ஒருவர், கள அனுபவங்கள் மூலமும், படிப்பினைகள் மூலமும் எவ்வாறு படிப்படியாக ஒரு தேர்ந்த, ஆழ்ந்த சிந்தனையாளராக மாறுகிறார் என்று, “இயங்கியல்” மாற்றத்திற்கான மனித எடுத்துக்காட்டாக அவர் விளங்குவார். லெனினின் அரசியல் வாழ்விற்கும், இயங்கியல் முறைக்கும் உள்ள ஒற்றுமையை புரிந்து கொள்வது அவசியம்.

லெனினிய இயங்கியல் நமக்கு தெளிவாக உணர்த்துவது இவைதான்

  1. புரட்சிகர கோட்பாடு இல்லாமல் புரட்சிகர கட்சி இயங்க முடியாது. ஆனால், புரட்சிகர கோட்பாடு என்பது வறட்டு சூத்திரம் அல்ல. நிகழ்வுகளின் நிதர்சன நிலையே கோட்பாட்டின் உண்மைத் தன்மையை நிறுவுகிறது. ஒரு பொருள்/நிகழ்வு/சமூகத்தின் வரலாற்று நிலை மற்றும் சூழலை உணர்ந்து மாற்றத்திற்கான உத்திகளை வகுக்க வேண்டும்
  2. வளர்ச்சி மற்றும் மாற்றத்திற்கான மூலக் கருவை மையமாக வைத்தே நம் உத்திகள் இருக்க வேண்டும். முதலாளித்துவ சமூகத்தில், உழைக்கும் பாட்டாளி வர்க்க நலன் என்பதே அந்த மூலக் கரு
  3. அறிவியல்பூர்வமான சோசலிசம் என்பது இக்கால முரண்பாடான போக்குகளை புரிந்து, அதிலிருந்து எழும் வருங்காலத்தை நோக்கிய புரிதல். இந்த அறிவியல்பூர்வமான புரிதல் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். எதிரி வர்க்கம் சக்திவாய்ந்து இருக்கும் வேளையில், பாட்டாளி வர்க்க கட்சி தத்துவார்த்த ரீதியாகவும், களப் பணியிலும் தன்னை மேம்படுத்திக் கொண்டு, வரவிருக்கும் புரட்சிகர சூழலில் உழைக்கும் வர்க்கங்களை புரட்சி நோக்கி வழி நடத்த தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்

இன்று நம்மிடையே சக்திவாய்ந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகள் போன்ற ஒரு சோசலிச அரண் இல்லை. ஆயினும், இன்றைய சூழலுக்கு ஏற்ப, மக்கள் சீனம், கியூபா, வியட்நாம், லாவோஸ், வட கொரியா ஆகிய நாடுகள் தாங்கள் சந்திக்கும் சவால்களுக்கு இயங்கியல் பார்வையில் அறிவுப்பூர்வமான உத்திகளை வகுத்து வருகின்றனர். உதாரணமாக, அண்மையில் கியூபாவின் புதிய அரசியல் சாசனத்தில், இக்கால சூழலுக்கேற்ப உற்பத்தி சக்திகளை வளர்க்க சிறு-குறு தனிச்சொத்து முறையை சட்டப்பூர்வமாக முதன்முதலில் அங்கீகரித்தது கியூபா.

சீனாவை எடுத்துக்கொண்டால், 1978ல் நிகழ்ந்த சீர்திருத்தங்களை பலரும் லெனினின் “புதிய பொருளாதார கொள்கை”-யுடன் ஒப்பிடுவார். ஆனால், புதிய பொருளாதார கொள்கையில் சிறு-குறு முதலாளித்துவ நிறுவனங்கள் அரசின் கட்டுப்பாட்டில் இயங்கின. இன்று சீனாவில் மாபெரும் தனியார் நிறுவனங்களும் இயங்குகின்றன. இந்நியலையை சமாளிக்க சீனா தொடர்ந்து உத்திகள் வகுக்கின்றது. எடுத்துக்காட்டாக, ஹுவாவே என்ற உலகளாவிய மாபெரும் தனியார் நிறுவனத்தின் 90ரூ உரிமம் அதன் தொழிலாளர் சங்கத்தின் கையில் உள்ளது. அவ்வாறு அல்லாத நிறுவனங்கள் பலவற்றிலும், அதன் நிர்வாகத்தை கட்டுப்படுத்த, அதன் நிர்வாகக்குழுவில் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகள் கட்டாயம் இடம் பெறுகின்றனர். ஆனால் கார்ப்பரேட் சூழல் இந்த கட்சி பிரதிநிதிகளை நச்சுப்படுத்திவிட்டால்? அதற்காக கட்சியினுள் ஊழலை ஒழிக்க நடவடிக்கைகள் எடுத்து, கட்சி மற்றும் மக்கள் இடையேயான ஜனநாயக இணைப்பை ஆழப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்கின்றனர்.

இவ்வாறாக இன்றைய சூழலில் சோசலிசத்தை நோக்கி பயணிக்கும் நாடுகள், இயங்கியல் பார்வையில் தங்கள் நிலைக்கேற்ப உத்திகள் வகுத்து வருகின்றனர். இன்று மக்கள் ஜனநாயகப் புரட்சிக்காக பாடுபடும் நாடான இந்தியாவில், லெனினின் இயங்கியல் பார்வை நமக்கு அநேக பாடங்களை கற்பிக்கின்றது. ஆனால் லெனின் காணாத சூழலிலும் நாம் சரியான உத்திகளை வகுத்து, மக்கள் ஜனநாயகப் புரட்சி நிகழ்ந்த பின்னர் மக்களையும் அரசையும் வழி நடத்தக் கூடிய சரியான முடிவுகளை எடுக்க, நாம் தத்துவார்த ரீதியாகவும், இயங்கியல் பொருள்முதல்வாத பார்வையிலும் தேர்ந்த பயிற்சி பெறுவது அவசியமாக உள்ளது.

அரசியல் என்பது மாறாத “மார்க்சிய கட்டளைகளில்” அடங்கி உள்ளது என யோசித்தால், நம் அன்றாட அரசியல் வாழ்வு நமக்கு வெறுப்பையும் விரக்தியையுமே உண்டாக்கும். இயங்கியல் முறைப்படி, நிதர்சனமான சூழலிலிருந்து எந்நாளும் கற்றுக்கொண்டு, அதன் மூலம் நம் தத்துவார்த்த ஞானத்தையும் மேம்படுத்திக்கொண்டு, நம் கட்சிப் பணிகளை முன்னெடுப்பதே முக்கியமானது.

Reading List

  1. “Summary of Dialectics” by VI Lenin ” Lenin’s Collected Works” (1914)
  2. On the Question of Dialectics” by VI Lenin, “Bolshevik” (1925)
  3. Lenin on Dialectics” by Cliff Slaughter, “Introduction to The Philosophical Notebooks of Lenin” (1962)
  4. Lenin and the Practice of Dialectical Thinking” by Robert Mayer, “Science & Society” (1999)
  5. Reflections on Lenin’s Dialectics” by Pyotr Kondrashov, “Monthly Review” (2023)

புரட்சிக்கு ஒரு நாள் முன்பாக லெனின் எழுதிய கடிதம்!

வி.இ.லெனின்

தமிழில்: அபிநவ் சூர்யா

[ரஷ்யாவில் நடைபெற்ற பிப்ரவரி புரட்சிக்குப் பின் எட்டு மாதங்களில் லெனினின் எழுத்துகள் அனைத்துமே புரட்சியின் பாதையில் போல்ஷ்விக் புரட்சியாளர்களிடையே நிலவிய சித்தாந்த குழப்பங்களை, தயக்கங்களை நீக்கும் வகையில் இருந்தன.

கீழ் காணும் கடிதம் லெனின் அவர்கள் அக்டோபர் புரட்சிக்கு ஒரு நாள் முன்பு மத்திய குழு உறுப்பினர்களுக்கு எழுதிய கடிதம் ஆகும். இதில் அவர், வரலாற்றில் மிக முக்கியமான தருணங்களை புரட்சியாளர்கள் உணராமல், மக்களின் புரட்சிகர உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் போவது எவ்வாறு மாபெரும் குற்றமாக விளையும் என்பதை விளக்குகிறார்.

ரஷ்ய புரட்சி அரங்கேறிய தேதி, தற்போது புழக்கத்தில் உள்ள ஜார்ஜியன் நாள்காட்டி முறைப்படி நவம்பர் 7 ஆகும். ஆனால் 1917 ஆம் ஆண்டில்,  ரஷ்யாவில் ஜூலியன் நாள்காட்டி முறை பழக்கத்தில் இருந்து. அது ஜார்ஜியன் நாள்காட்டி முறையை விட 13 நாட்கள் பின் தங்கியது. அதன்படி புரட்சி அரங்கேறிய தேதி அக்டோபர் 25. அதனால் இந்த கடிதத்தில் தேதிகள்  “அக்டோபர்” மாதத்தில் என குறிப்பிடப்பட்டுள்ளன. – ஆசிரியர் குழு]

தோழர்களே,

நான் 24ஆம் தேதி மாலையில் இவ்வரிகளை எழுதுகிறேன். மிக மிக முக்கியமான நிலமையை எட்டியுள்ளோம். இப்போது எழுச்சியை தாமதிப்பது என்பது மிகவும் ஆபத்தாக விளையும் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

அனைத்துமே ஒரு நூல் இழையில் தொங்கிக் கொண்டிருக்கிறது என்பதை தோழர்கள் உணர என் மொத்த சக்திகளையும் கொண்டு வற்புறுத்துகிறேன்; எந்த சம்மேளனங்களோ, மாநாடுகளோ (சோவியத் மாநாடு உட்பட) தீர்க்க முடியாத பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம். இவை மக்களால், ஜன சக்தியால், ஆயுதம் தாங்கிய மக்களின் போராட்டத்தால் மட்டுமே தீர்க்க முடியும்.

“கோர்னிலோவ்”களின்[1] முதலாளித்துவ சர்வாதிகார தாக்குதல்களும், வெர்கோவ்ஸ்க்கி[2] நீக்கப்பட்டுள்ளதும், நாம் தாமதிக்க முடியாது என்பதை காட்டுகிறது. எந்த நிலையிலும், இன்று மாலையே, இன்று இரவே, நாம் முதலில் இராணுவ அதிகாரிகளின் ஆயுதங்களை பறிமுதல் செய்து (அவர்கள் தடுத்தால், அவர்களை வீழ்த்தி), இந்த அரசாங்கத்தை கைது செய்து, முன்னேற வேண்டும்.

நாம் காத்திருக்க கூடாது! நாம் அனைத்தையும் இழக்கக் கூடும்!

உடனடியாக அதிகாரத்தை கைப்பற்றுவதன் பலனானது மக்களுக்கானதாய் (மாநாடு அல்ல. மக்களுக்கு. குறிப்பாக முதலில் இராணுவ வீரர்களுக்கும்[3] மற்றும் உழவர்களுக்கும்), இந்த கோர்னிலோவிய அரசாங்கத்திடம் இருந்து அவர்களை காப்பதாய் இருக்கும். இந்த அரசாங்கம்தான் வெர்கோவ்ஸ்க்கியை வெளியேற்றி, இரண்டாம் கோர்னிலோவ் சதியை[4] வடிவமைத்தது.

யார் அதிகாரத்தை கையிலெடுக்க வேண்டும்?

இந்த கேள்வி இப்போது முக்கியம் இல்லை. வேண்டுமென்றால், புரட்சிகர இராணுவக் குழு எடுக்கட்டும். இல்லையென்றால், மக்களின் நலனை பாராட்டும் உண்மையான பிரதிநிதிகளுக்கு, (உடனடியாக அமைதிக்கான முன்மொழிவு மேற்கொண்டு) இராணுவ வீரர்களின் நலனை காப்பவர்களுக்கு, (உடனடியாக நிலக்கிழார் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, தனிச்சொத்தை ஒழிக்கும்) உழவர்களின் நலனை காப்பவர்களுக்கு, பட்டினியில் வாடுபவர்களின் நலனை காப்பவர்களுக்கு மட்டுமே அதிகாரத்தை விட்டுத் தருவோம் எனக் கூறும் “ஏதோ ஒரு நிறுவனம்” அதிகாரத்தை கையிலெடுக்கட்டும்.

அனைத்து இராணுவ அமைப்புகளும், அனைத்து சேனைகளும், எல்லா படைகளும் உடனடியாக திரட்டப்பட்டு, அவர்களின் பிரதிநிதிகளை புரட்சிகர இராணுவ குழுக்களுக்கும், போல்ஷ்விக்களின் மத்தியக் குழுக்கும் அனுப்பி, எந்த நிலையிலும் 25ஆம் தேதி வரை கெரென்ஸ்க்கி[5] மற்றும் அவர் கூட்டாளிகள் கையில் அதிகாரத்தை விட்டு வைக்கக் கூடாது என்ற பிரத்தியேக கோரிக்கையை வைக்க வேண்டும். இந்த விஷயம் இன்று மாலையே, இன்று இரவே, உடனடியாக முடிவு செய்யப்பட வேண்டும்.

இன்று வெற்றி பெறும் சாத்தியம் இருக்கையில் (இன்று வெற்றி நிச்சயம்), நாளை பெருமளவில் இழக்க, உண்மையில் அனைத்தையும் இழக்க வாய்ப்பு இருக்கையில், மேலும் தாமதித்தால், வரலாறு புரட்சியாளர்களை மன்னிக்காது.

இன்று நாம் அதிகாரத்தை கைப்பற்றுவது சோவியத்களுக்கு[6] எதிராக அல்ல, அவர்களின் சார்பாக.

எழுச்சியின் பிரதான பணியே அதிகாரத்தை கைப்பற்றுவதுதான்; கைப்பற்றிய பின், எழுச்சியின் அரசியல் கடமை குறித்த தெளிவு கிடைக்கும்.

அக்டோபர் 25ஆம் தேதியின் ஊசலாடும் வாக்களிப்பிற்காக காத்திருப்பது என்பது வெறும் ஒரு சடங்காகவோ, அல்லது அபாயகரமாகவோ கூட முடியக் கூடும். இந்த மாதிரியான கேள்விகளுக்கு முடிவை வாக்களிப்பு மூலம் அல்லாமல், வன்முறை மூலம் தீர்மானிக்க, கடமையும் உரிமையும் மக்களுக்கு உண்டு. புரட்சியின் மிக முக்கியமான தருணங்களில் மக்கள் தங்கள் பிரதிநிதிகளுக்காக, மிகச் சிறந்த பிரதிநிதிகளுக்காகவும் காத்திருக்காமல், பிரதிநிதிகளுக்கு வழிகாட்டுதல் கொடுக்கும் கடமையும், உரிமையும் கூட மக்களுக்கு உண்டு.

அனைத்து புரட்சிகளின் வரலாறும் இதை நிறுவி உள்ளது; புரட்சியை காப்பாற்றுவதும், அமைதிக்கான வாய்ப்பை உருவாக்குவதும், பெட்ரோகார்ட் நகரத்தை காப்பாற்றுவதும், பஞ்சத்திலிருந்து காப்பாற்றுவதும், உழவர்கள் நில உரிமை பெறுவதும் தங்களை சார்ந்தே உள்ளது என புரட்சியாளர்கள் அறிந்திருந்தும், இந்த வாய்ப்பை தவற விட்டால், அது அளவற்ற பெரும் குற்றமாக விளையும்.

இந்த அரசாங்கம் ஊசலாடிக்கொண்டு இருக்கிறது. எந்த நிலையிலும், அதற்கு இறுதி அடி கொடுக்கப்பட்டே ஆக வேண்டும்.

செயல்பாடுகளை மேலும் தாமதிப்பது அபாயகரமாக ஆகிவிடும்.

*

குறிப்புகள்:

[1] இராணுவ தளபதி கோர்னிலோவ் தலைமையிலான பிற்போக்கு அமைப்பு

[2] கோர்னிலோவை எதிர்த்த அமைச்சர்

[3] முதலாம் உலகப் போரில் அவதிப்பட்டு வந்த ரஷ்ய இராணுவம் மற்றும் சாதாரண சிப்பாய்கள்

[4] ஆட்சிக் கவிழ்ப்பு மூலம் இராணுவ ஆட்சியை நிறுவும் முயற்சி

[5] பிப்ரவரி புரட்சிக்குப் பிந்தைய  முதலாளித்துவ அரசின் தலைவர்

[6] தொழிலாளர் கமிட்டிகள்

சோவியத் ஒன்றியத்தின் சோசலிச பொருளாதார சாதனைகள்

ஸ்டீஃபன் கோவன்ஸ்

சிறப்புமிகு சோவியத் ஒன்றியம்

முதலாளித்துவத்துடன் ஒப்பிடுகையில், சோவியத் ஒன்றியத்தின் பொதுவுடைமை அடிப்படையிலான திட்டமிட்ட பொருளாதாரம், குறிப்பிடத்தக்க வகையில் சிறப்பாகச் செயல்பட்டது.

பொதுவுடைமை அடிப்படையிலான திட்டமிட்ட பொருளாதாரம் எதையெல்லாம் உருவாக்கமுடியும் என்பதற்கு, சோவியத் ஒன்றியம் ஒரு நிலையான உதாரணமாகும். முழு நேர வேலைவாய்ப்பு, உத்தரவாதப்படுத்தப்பட்ட ஓய்வூதியம், ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு, வேலை நேர உச்சவரம்பு, இலவச மருத்துவம் மற்றும் கல்வி (உயர்கல்வி உட்பட), மானியத்துடன் கூடிய விடுமுறைகள், கட்டுப்படியாகும் விலையில் வீடுகள், குறைவான குழந்தை பராமரிப்புச் செலவுகள், குறைந்த செலவில் பொதுப் போக்குவரத்து மற்றும் ஏறத்தாழ சமமான வருமானம். நம்மில் பெரும்பாலானோர் இந்த வசதிகளை விரும்புகிறோம். ஆயினும், இவற்றை நிரந்தரமாக அடைய முடியுமா? சோவியத் ஒன்றியம் இந்த வசதிகளை உருவாக்கியது.

சோவியத் ஒன்றியத்தில் பொதுவுடைமை அடிப்படையிலான திட்டமிட்ட பொருளாதாரம் நடைமுறையிலிருந்தபோது, 1928 முதல் 1989 வரை, போர்க்காலம் தவிர பிற சமயங்களில், நம்பிக்கையளிக்கும் விதத்தில் பொருளாதாரம் ஆண்டுதோறும் வளர்ச்சி அடைந்தது. தெளிவாகக் கூறுவதென்றால், முதலாளித்துவப் பொருளாதாரங்கள் ஒவ்வொரு சில ஆண்டுகளுக்கு ஒருமுறை பின்னடைவை தவறாது சந்தித்து, பெரிய மந்தநிலையில் மூழ்கியிருந்த போதும், சோவியத் பொருளாதாரம் இடையறாது வளர்ந்து, அனைவருக்கும் எப்பொழுதும் வேலைவாய்ப்புகளை வழங்கியது. சோவியத் ஒன்றியத்தின், பொதுவுடைமை அடிப்படையிலான திட்டமிட்ட பொருளாதாரமானது, செயல்பட முடியாதது என்ற முதலாளித்துவ பிரச்சாரத்தை பொய்ப்பித்து, குறிப்பிடத்தக்க வெற்றியை ஈட்டியது. மாறாக, பெருவாரியான மக்களுக்கு வேலையின்மை மற்றும் உச்சக்கட்ட வறுமையை அளித்த, பொருளாதார மந்தம் மற்றும் பின்னடைவுகளை வழக்கமாகக் கொண்டிருந்த, முதலாளித்துவ பொருளாதாரம்தான் செயல்பட முடியாததாக உள்ளது. இன்று, எல்லாவற்றிற்கும் மேலாக, முதலாளித்துவம் சுருங்கி, சுணக்கமடைந்து, எண்ணற்ற மக்களை செயலற்ற நிலைக்குக் கட்டாயமாகத் தள்ளியுள்ளது என்பது தெளிவு.

சோவியத் வீழ்ச்சியில் ஏகாதிபத்தியத்தின் பங்கு

உண்மையில் சோவியத் ஒன்றியத்தின் அழிவுக்கு வழிவகுத்தவை எவையெனில், சோவியத்தின் பொருளாதாரத்தை அழிப்பதற்கு திட்டமிட்டவகையில் தொடர்ந்த மேற்குலகின் முயற்சிகள்; ரீகன் நிர்வாகத்தின் கூர்மைப்படுத்தப்பட்ட பனிப்போர்; இந்த இக்கட்டான சூழலில் இருந்து வெளிவர ஒரு வழி கண்டுபிடிக்கத் தெரியாத சோவியத் தலைமையின் இயலாமை ஆகியவையே ஆகும்.

1980களில் பனிப்போரின் பாதிப்புகள் சோவியத் ஒன்றியத்தில் தெரிய ஆரம்பித்தன. தனது தத்துவார்த்த எதிரியான அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு எதிராக, சோவியத் மேற்கொண்ட இராணுவப் போட்டி பலவகையிலும் அதன் பொருளாதார வளர்ச்சியைப் பாதித்தது. பொருளாதாரம் வளர்ந்து கொண்டிருந்த போதிலும், கடந்த காலத்தைவிட மெதுவான வேகத்திலேயே வளர்ச்சி இருந்தது.

முதலாவதாக, ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான அதன் சிறந்த வளங்கள் இராணுவத்தால் ஏகபோகமாக்கிக் கொள்ளப்பட்டன. குடிமக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கான சிறந்த விஞ்ஞானிகள், பொறியியலாளர்கள் மற்றும் இயந்திரக் கருவிகளின் பயன்பாடு, இராணுவத்திற்கு மட்டுமானதாக ஆக்கப்பட்டது.

இரண்டாவதாக, சோவியத்தின் பொருளாதாரத்தை முடக்குவதற்காக ரீகன் நிர்வாகத்தால் வெளிப்படையாகவே ஆயுதப் போட்டி புதுப்பிக்கப்பட்டது. இதற்கு ஈடுகொடுக்க, சோவியத்தின் இராணுவச் செலவினங்கள் உயர்த்தப்பட்டன. அமெரிக்க ஆக்கிரமிப்பை தடுப்பதற்காக, சோவியத் ஒன்றியம் தனது தாங்கும் சக்தியை மீறி, அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மிகப்பெரிய சதவிகிதத்தை, இராணுவத்திற்காக செலவழித்தது.  அதே நேரத்தில், அமெரிக்கர்களும் இராணுவத்திற்காக ஒரு பெரும் தொகையை செலவழித்தபோதிலும், அமெரிக்காவின் மிகப்பெரிய பொருளாதாரத்தின் மொத்த தேசிய வருமானத்தில் அது சமாளிக்கக்கூடிய அளவுக்கே இருந்தது.

மூன்றாவதாக, முக்கியமான மூலப் பொருட்களுக்காக, சோவியத் ஒன்றியம் வெளிநாட்டு இறக்குமதியை நம்பியிருந்தது. தன் நாட்டை மண்டியிடச் செய்வதற்காக மற்ற நாடுகள் விநியோகத்தைத் தடை செய்யும் அபாயங்களிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள, சோவியத் ஒன்றியம் தனது பரந்துபட்ட சொந்த எல்லைக்குள்ளிருந்து மூலப்பொருட்களை அகழ்ந்து எடுக்க முடிவு செய்தது. இது, நாட்டைத் தன்னிறைவு அடையச்செய்த அதே வேளையில், உள்நாட்டு ஆதாரங்களை மட்டுமே நம்பியிருக்கச் செய்தது. எளிதில் கிடைத்துவந்த வளங்கள் தீர்ந்துவிட்டதால், கடினமான வழிகளில், புதியதாக மூலப் பொருட்களைத் தேடவேண்டிய தேவை ஏற்பட்டது. இது உற்பத்தி செலவை அதிகரித்தது.

நான்காவதாக, நாட்டின் பாதுகாப்பிற்காக சோவியத்துகள், கிழக்கு ஐரோப்பாவுடனும் மூன்றாம் உலக நாடுகளுடனும் நட்பை நாடினர். ஆனால் நட்பு பாராட்டிய நாடுகளைவிட சோவியத் ஒன்றியம் பொருளாதார பலத்துடன் இருந்தது. எனவே, அது தன்னுடன் இணைந்த சோஷலிச நாடுகளையும், மேற்கத்திய சக்திகளின் ஆக்கிரமிப்பிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ளப் போராடிய பிற நாடுகளின் விடுதலை இயக்கங்களையும் பாதுகாக்க, அந்த நாடுகளுக்கு அச்சாணியாகவும், அவற்றிற்குப் பொருளாதார நலன்களை வழங்கக் கூடியதாகவும் மாறியது. எனவே, அதன் கூட்டாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. ஆனால், வாஷிங்டன், கம்யூனிச எதிர்ப்புக் கிளர்ச்சிகளுக்கு ஆதரவாக சூழ்ச்சி செய்து, ஆயுதம் மற்றும் நிதி உதவி செய்தது. இதனால் மாஸ்கோ தன் கூட்டாளிகளுக்காகச் செய்யும் செலவுகள் அதிகரித்தன. இதன் காரணமாக, சோவியத் ஒன்றியத்தின் பாதுகாப்பு செலவுகள் தொடர்ந்து அதிகரித்து, அதன் பொருளாதார வளர்ச்சியை தீவிரமாக பாதித்தன. 

நாட்டின் கடைசித் தலைவரான மைக்கேல் கோர்பச்சேவ் நட்பு நாடுகளிடமிருந்து இராணுவ தளங்களைத் திரும்பப்பெற்று, பனிப்போரை முடிவுக்குக் கொண்டுவந்து, அமெரிக்காவுடன் ஒத்துழைக்க உறுதியளித்தார். பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, மேற்கத்திய பாணி சமூக ஜனநாயகத்திற்கு சோவியத் ஒன்றியத்தை மாற்ற முனைந்தார். ஆனால், அவரது பொருளாதார மற்றும் அயலுறவு சரணாகதிக் கொள்கைகள், பொருளாதார தேக்கத்திலிருந்து நாட்டை மீட்பதற்கு பதிலாக பேரழிவிற்கே வழிவகுத்தன. சோவியத் ஒன்றியத்தின் பாதுகாப்புக் கரங்கள் விலக்கப்பட்ட நிலையில், அமெரிக்கா, ஈராக்கில் தொடங்கி யூகோஸ்லாவியா, ஆப்கானிஸ்தான், மீண்டும் ஈராக், பின் லிபியா என சிறியதும் பெரியதுமாக உலகம் முழுவதும் தொடர்ச்சியான ஆக்கிரமிப்புகளில் இறங்கியது. கோர்பச்சேவ் பொருளாதாரத் திட்டமிடலைக் கைவிட்டு, சந்தைப் பொருளாதாரத்தை செயல்படுத்துவதற்கான வழியை அகலத் திறந்துவிட்டதானது, நாட்டை நெருக்கடிக்குள் தள்ளியது. ஐந்து ஆண்டுகளுக்குள் ரஷ்யாவில், வேலையின்மை, வீடில்லாமை, சுரண்டல், பொருளாதார பாதுகாப்பின்மை ஆகியவை வன்மத்துடன் மீண்டும் குடியேறின.

1991 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று, சோவியத் ஒன்றியம் என்பது அதிகாரப்பூர்வமாக இல்லாது ஒழிந்த நிலையில், கோர்பச்சேவ், “நாம் ஒரு புதிய உலகில் வாழ்கிறோம். பனிப்போர் முடிவுக்கு வந்துவிட்டது. நமது பொருளாதாரம் மற்றும் சமூக விழுமியங்களைச் சிதைத்த இராணுவமயமாக்கல் மற்றும் வெறித்தனமான ஆயுதப் போட்டி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. உலகப்போரின் அச்சுறுத்தல் நீக்கப்பட்டது” என்று கூறினார். (ராபர்ட்ஸ், 1999). இதனால் மேற்குலகில் கோர்பச்சேவின் புகழ் பரவியது. ஆனால் ரஷ்யர்கள் சோர்வுற்றிருந்தனர். முதலாளித்துவத்திற்கு மாற்றாக, உலகில் முதன்முதலில் உருவான முயற்சி ஏன் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது என்பதற்கான உண்மையான காரணங்கள் கோர்பச்சேவின் வார்த்தைகளுக்குள் அடங்கியிருந்தன. சோவியத் பொருளாதார அமைப்பு செயல்படமுடியாது என நிரூபிக்கப்பட்டதால் அல்ல. உண்மையில் அது முதலாளித்துவத்தை விட சிறப்பாகச் செயல்பட்டது. இரண்டாம் உலகப்போரின் முடிவில் தொடங்கி, ரீகன் ஆட்சிக்காலத்தில் வீரியத்துடன் வளர்ந்த ஆயுதப் போட்டியால், சோவியத் ஒன்றியத்தின் பொருளாதாரத்தை வீழ்த்த முயன்ற பகையாளியான அமெரிக்காவிற்கு, சோவியத்தின் தலைமை அடிபணிந்ததே அதன் அழிவுக்கான உண்மையான காரணம். நாட்டின் 99 சதவீதம் பேருக்கு செழிப்பை அளித்த சோவியத் பொருளாதாரம் போற்றி வளர்க்கப்பட்டிருந்தால், மேல்மட்டத்தில் உள்ள ஒரு சதவீதம் பேருக்கு மட்டுமே பயன்தரும் தனியார்மய சந்தைப் பொருளாதாரங்களை அது மதிப்பிழக்கச் செய்திருக்கும். சுதந்திரச் சந்தைப் பொருளாதாரத்தில், மேல் மட்டத்தில் இருக்கும் ஒரு சதவீதத்தினரின் தனி உரிமையாக சொத்துக் குவிப்பு, சமூகப் பாதுகாப்பு, சொகுசு வாழ்க்கை அமைய, பெருவாரியான மக்களின் வேலையின்மை, வறுமை, பசி, கீழ்மை மற்றும் பொருளாதார பாதுகாப்பின்மை ஆகியவை இன்றியமையாதவையாக உள்ளன.

தோழர் ஸ்டாலின் ஒலித்த எச்சரிக்கை

பொதுவுடைமை அடிப்படையில் திட்டமிட்ட பொருளாதாரம், ஸ்டாலினின் வழிகாட்டுதலின் கீழ் கட்டியெழுப்பப்பட்டது. அவர் ஒருமுறை தீர்க்க தரிசனத்தோடு, “சோவியத் குடியரசைத் தகர்ப்பதில் முதலாளித்துவம் வெற்றி பெற்றால், அனைத்து முதலாளித்துவ மற்றும் காலனி நாடுகளிலும் ஓர் இருண்ட சகாப்தம் அரங்கேறும். ஒடுக்கப்பட்ட மக்களின், தொழிலாளி வர்க்கத்தின் குரல்வளை நெறிக்கப்படும். கம்யூனிசத்தால் அடைந்த முன்னேற்றங்களை இழக்க நேரிடும்”, என எச்சரித்தார். (ஸ்டாலின், 1954). “நம் நாடு தாக்குதலை எதிர்கொள்ளத் தயாராவதற்கு 10 ஆண்டுகள் மட்டுமே உள்ளன”‘ என நாஜிப் படையெடுப்பு ‘ஆபரேஷன் பார்பரோசா’விற்குப் பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஸ்டாலின் துல்லியமாகக் கூறியதுபோலவே, முதலாளித்துவத்தினால் வீழ்த்தப்படுவதன் பின்விளைவுகளையும் துல்லியமாகக் கணித்தார்.

உண்மையாகவே நாம் தற்போது இருண்ட சகாப்தத்தில் உள்ளோம். இராணுவ வலிமையைப் பயன்படுத்தி, வாஷிங்டனுக்கு தன்னுடைய பிற்போக்குத்தனமான நிகழ்ச்சி நிரலைத் தொடர பரப்பளவு அதிகரித்துள்ளது. கியூபாவும் வடகொரியாவும் பொதுவுடைமையை மையப்படுத்தி திட்டமிடுகின்றன. ஆனால் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் பொருளாதாரத் தடைகள், தந்திரமாகத் தனிமைப்படுத்தல் மற்றும் இராணுவ ரீதியான துன்புறுத்தல்கள் (சோவியத் பொருளாதாரத்திற்கு செய்ததுபோலவே) ஆகியவற்றைப் பயன்படுத்தி அப்பொருளாதாரங்களை நாசம் செய்துவருகின்றன. இதன் மோசமான விளைவுகளை, பொதுவுடைமை அடிப்படையிலான திட்டமிடலின் குறைபாடுகள் என போலியாகக் குற்றம் சுமத்திவிடலாம். உண்மையில் அவை முறையாகத் திட்டமிடப்பட்டு, இரகசியமாக நடத்தப்படும் போரின் விளைவுகளாகும். சோவியத் பொருளாதார அமைப்பு தோல்வியுற்றது என்று திட்டமிட்டு பரப்பப்பட்டதானது, கம்யூனிஸ்ட் ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் உட்பட பலரையும், பொதுவுடைமை அடிப்படையிலான திட்டமிடல் அமைப்பு உள்ளார்ந்த குறைபாடுடையது என்ற முடிவுக்கு இட்டுச்சென்றது. கம்யூனிஸ்டுகள், சமூக ஜனநாயகக் கட்சிகளுக்குத் தாவினர்; அல்லது தீவிர அரசியலை முற்றிலுமாகக் கைவிட்டனர். சமூக ஜனநாயகக் கட்சிகளோ வலதுசாரிகளாக மாறி, சீர்திருத்தங்களைத் தவிர்த்து, புதிய தாராளமயத்தைத் தழுவின. எனவே, மேற்கத்திய அரசுகளுக்கு, பொதுவுடைமைக்கான கோரிக்கைகளை மழுங்கடிக்கவேண்டிய அவசியம் இல்லாது போயிற்று. அனைவருக்கும் வேலைவாய்ப்பு என்ற இலக்கை முழுவதுமாகக் கைவிட்டு, இனி பொது சேவைகள் மக்களுக்குக் கட்டுப்படியாகும் விலையில் கிடைக்காது என்று அறிவித்தன (கோட்ஸ், 2001). அதே நேரத்தில் முன்னாள் சோவியத் ஒன்றியம் மற்றும் கிழக்கு ஐரோப்பிய கம்யூனிஸ்ட் நாடுகளில் கொண்டுவரப்பட்ட தனியார்மயமானது கூலித் தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்தது. அது, முன்னரே கணித்தபடி, ஊதிய மட்டத்தில் உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தியது. சோவியத் ஒன்றியம் தோல்வியைத் தழுவிய நாள், மூலதனத்திற்கு ஒரு நல்ல விடியல் நாளாகும். ஆனால் மற்றவருக்கோ, ஸ்டாலின் எச்சரித்தபடி, அது குரல்வளையை நெறித்த நாளாகும்.

நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் முதலாளித்துவம்

உலகின் மிகப்பெரிய முதலாளித்துவப் பொருளாதாரங்கள் 2008லிருந்து நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன. சில, சிக்கன நடவடிக்கை எனும் மரணச் சுழலில் அகப்பட்டுள்ளன. இன்னும் சில, மெல்ல மெல்ல வளர்ந்துவரும் மந்த நிலையின் பிடியில் சிக்குண்டுள்ளன. சிக்கனம் என்ற பெயரில் பொது சேவைகளை அகற்றுவது என்பது, பரிந்துரைக்கப்பட்ட போலியான தீர்வு. உண்மையான தீர்வு கண்ணுக்கெட்டிய தூரம்வரை தெரியவில்லை. அதிகாரப்பூர்வ அறிக்கைகளின்படி, ஐரோப்பாவின் சில பகுதிகளில் வேலைவாய்ப்பின்மை இரட்டை இலக்கத்தைத் தொட்டுள்ளது. இளைஞர்களின் வேலையின்மை இன்னும் அதிகமாக உள்ளது. ஒரு கோடியே 10 லட்சம் மக்கள் வசிக்கும் கிரீஸில் 37 இலட்சம் பேர் மட்டுமே வேலை செய்கிறார்கள் (வாக்கர் மற்றும் ககௌனகி 2012).

மேலும், அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் சோவியத் ஒன்றியத்தை சிதைக்க, திட்டமிட்டு செயல்பட்டதுபோல், இந்த நெருக்கடியும் ஏதோ வெளிப்புற சக்திகளால் திட்டமிடப்பட்டு முதலாளித்துவத்திற்கு அழிவைக் கொண்டு வருவதாகக் கூற முகாந்திரம் இல்லை. அப்படி யாரும் திட்டமிட்டு அதை மூச்சுத்திணற வைக்காத போதிலும்கூட, முதலாளித்துவம் செயல்படவில்லை என்பதை சிலர் சுட்டிக்காட்டுகின்றனர். ஆனால் இதற்கு நேர்மாறாக, தொடங்கப்பட்டதிலிருந்தே குறிவைக்கப்பட்டு பழிக்கு இலக்கான சோவியத் ஒன்றியத்தின் திட்டமிட்ட பொருளாதாரம், இரண்டாம் உலகப்போர் ஆண்டுகளைத் தவிர பிற சமயங்களில், ஒருபோதும் மந்தநிலையில் தடுமாறவில்லை; முழுமையான வேலைவாய்ப்பு வழங்கத் தவறவில்லை. ஆனாலும், சோவியத் ஒன்றியத்தின் முன்னாள் ஆதரவாளர்கள் உட்பட பலரும், இது செயல்பட முடியாது என்றே கருதுகின்றனர். இது, முற்றிலும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட கருத்து.

பொதுவுடைமை அடிப்படையில் திட்டமிட்ட பொருளாதாரத்தில் உள்ளார்ந்த பலவீனம் இருந்ததாலேயே அது தோல்வியடைந்தது என்பதாக சோவியத் ஒன்றியத்தின் அனுபவம் நமக்குக் காட்டவில்லை. மாறாக, நீடித்த பொருளாதார வளர்ச்சி, அனைவருக்கும் வேலைவாய்ப்பு, இலவச மற்றும் கட்டுப்படியாகும் விலையில் அளிக்கப்பட்ட பொதுச் சேவைகளின் விரிவான பட்டியல், ஏறத்தாழ சமத்துவமான வருமானம் என முதலாளித்துவத்தால் செய்ய முடியாததை பொதுவுடைமை செய்யமுடியும் என்பதை நிரூபித்தது. ஒரு வருடம் இரு வருடமல்ல; தொடர்ந்து ஆண்டுக்கு ஆண்டு சோவியத் ஒன்றியத்தின் தலைமை பொதுவுடைமையிலிருந்து பின்வாங்கும்வரை இது நடந்தது. உயர்மட்டத்தில் இருக்கும் தனிவுடைமையைப் பாதுகாக்கும், ஒரு சதவிகிதத்தினர், தங்களுக்கு எதிரான இப்பொருளாதார அமைப்பை நசுக்க, அரசியல், இராணுவ, பொருளாதார மற்றும் கருத்தியல் ரீதியான அனைத்து வழிகளையும் பயன்படுத்துவார்கள் என்பதைக் கண்கூடாகக் காணமுடிந்தது. ஆனாலும், கீழ்மட்டத்தில் உள்ள 99 சத மக்களுக்காக அது நின்றது. (இன்று கியூபா மற்றும் வட கொரியாவிற்கு எதிராக இதே முயற்சி தொடர்கிறது).

சோவியத் ஒன்றியத்தின் தோல்வி ஓர் இருண்ட காலத்திற்குள் நம்மைத் தள்ளியுள்ளது. ஆயினும், அதை இழிவுபடுத்தி அழிக்க நினைப்பவர்களுக்கு எதிராகப் போராட, பொதுவுடைமை சிறப்பாக செயல்பட்டதை வெளிப்படுத்தும், 1928 முதல் 1989 வரையிலான சோவியத்தின் அனுபவம், நமக்கு உள்ளது.

பொதுவுடமைப் பொருளாதார சாதனைகள்

வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம், பொருளாதார மந்தம், ஒருபுறம் செல்வக்குவிப்பு, மறுபுறம் வறுமை மற்றும் சுரண்டல் ஆகிய முதலாளித்துவத்தின் தீமைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்ததிலும், பரந்த இலவசப் பொது சேவைகளை வழங்கியதிலும் சோவியத் பொருளாதார அமைப்பு முறையின் நன்மைகள் அறியப்பட்டன. வேலையின்மை ஒழிப்பு, சோவியத் பொருளாதார அமைப்பின் மிக முக்கியமான சாதனைகளில் ஒன்று. சோவியத் ஒன்றியம் அனைவருக்கும் வேலை வழங்கியது மட்டுமல்லாது, வேலை ஒரு சமூகக் கடமையாகக் கருதப்பட்டு, அரசியலமைப்பு சட்டத்தில் பொறிக்கப்பட்டது. 1936-ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டம், சோவியத் ஒன்றியத்தின் குடிமக்களுக்கு வேலை செய்யும் உரிமையை அடிப்படை உரிமையாக்கியது. அதாவது, அவர்களது வேலையின் அளவு மற்றும் தரத்திற்கு ஏற்ப பணம் பெறுவதற்கான உத்தரவாதம் அளிக்கப்பட்டது. மறுபுறம், வேலை செய்யாமல் வேறு வழிகளில் வாழ்க்கை நடத்துவது தடை செய்யப்பட்டது. வட்டி, கருப்புச் சந்தை, ஊக வணிக இலாபம் ஆகியவற்றின் மூலம் வருமானம் பெறுவது சமூக ஒட்டுண்ணித்தனம் என்று கருதப்பட்டு சட்டவிரோதமாக்கப்பட்டது (சைமன்ஸ்கி, 1984). உழைப்பு, பற்றாக்குறையாக இருந்ததால் வேலை தேடுவது எளிதாக இருந்தது. இதன் வெளிப்படையான பலன்களாக,   தொழிலாளர்களின் வேலைப் பாதுகாப்பு மற்றும் நிர்வாகம் பணியாளர்களின் நலனில் அதிக கவனம் செலுத்துவது ஆகியவற்றில் அவர்களது பேரம் பேசும் ஆற்றல் அதிகமானது (கோட்ஸ், 2003).

சோவியத் அரசியலமைப்பு சட்டம், 1977-இன் 41வது பிரிவு ஒரு வாரத்திற்கான வேலை நேரத்தை 41 மணி நேரம் என வரையறுத்தது.  இரவுநேரப் பணியில் உள்ள தொழிலாளர்கள், 7 மணி நேரம் வேலை செய்தால், முழு ஊதியம், அதாவது 8 மணி நேரத்திற்கான ஊதியம் பெற்றனர். சுரங்கம் போன்ற ஆபத்தான வேலைகளில் ஈடுபடுவோர் அல்லது தொடர்ந்து விழிப்புடன் இருக்கவேண்டிய மருத்துவர்கள் ஆகியோர், 6 அல்லது 7 மணி நேரம் வேலை செய்தால், முழு ஊதியம் பெற்றனர். சிறப்பு சூழ்நிலைகள் தவிர, பிற சமயங்களில் கூடுதல் நேரம் வேலை செய்வது தடைசெய்யப்பட்டது (சைமன்ஸ்கி, 1984).

1960இல் இருந்து ஊழியர்களுக்கு, சராசரியாக ஒரு மாதம் விடுமுறை கிடைத்தது (கீரன் மற்றும் கென்னி, 2004; சைமன்ஸ்கி, 1984).  மானியத்துடன் கூடிய ஓய்வு விடுதிகளில், விடுமுறையைக் கழிக்க வசதி ஏற்படுத்தப்பட்டது (கோட்ஸ், 2003).

60 வயதில் ஆண்களுக்கும் 55 வயதில் பெண்களுக்கும் என, அனைத்து சோவியத் மூத்த குடிமக்களுக்கும் ஓய்வூதியம் வழங்கப்பட்டது (லெரூஜ், 2010). அரசியலமைப்புச் சட்டம், 1977, பிரிவு 43இன் படி ஓய்வூதிய உரிமை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான நலன்கள் உத்திரவாதம் செய்யப்பட்டன. இது, முதலாளித்துவ நாடுகளில் உள்ளதைப்போல், அரசியல்வாதிகளின் தற்காலிக விருப்பங்களின்பாற்பட்டதல்ல; மாறாக திரும்பப் பெறப்பட முடியாதது.

சோவியத்தின் அரசமைப்பு சட்டம் 1936, பிரிவு 122-இன் படி, பெண்களுக்கு, பல சலுகைகளுடன், முழு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பும் உத்தரவாதப்படுத்தப்பட்டது. மேலும், 1936-ஆம் வருட அரசியலமைப்புச் சட்டம் மகப்பேறு இல்லங்கள், குழந்தைகள் காப்பகங்கள் மற்றும் மழலையர் பள்ளிகள் இணைந்த, பரந்த கட்டமைப்பை ஏற்படுத்த ஏற்பாடு செய்தது. திருத்தப்பட்ட அரசியலமைப்புச் சட்டம், 1977இன் பிரிவு 53, ஒவ்வொரு குழந்தைப் பிறப்பிற்கும் மானியம்; பெரிய குடும்பங்களுக்கு, குழந்தைகளுக்கான பணப்பயன்கள், நிதிச் சலுகைகள் ஆகியவற்றை வழங்குவதன் மூலம் குழந்தைப் பராமரிப்பில் குடும்பங்களுக்கு உதவுவதற்காக ஒரு பரந்த கட்டமைப்பை ஏற்படுத்துவது அரசாங்கத்தின் கடமை என வரையறுத்தது. குழந்தைப் பராமரிப்பிற்கான ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்கிய முதல் நாடு சோவியத் ஒன்றியம்தான் (சைமன்ஸ்கி, 1984).

அதேபோல் அரசியலமைப்புச் சட்டத்தின் சட்டப்பிரிவு 122-இன் படி சோவியத் ஒன்றியத்தில் பெண்களுக்கு பொருளாதாரம், ஆட்சியதிகாரம், பண்பாடு, சமூக மற்றும் அரசியல் வாழ்க்கையின் அனைத்துத் தளங்களிலும்,  கல்வி, வேலைவாய்ப்பு, ஓய்வு, பொழுதுபோக்கு, சமூகக் காப்பீடு உட்பட அனைத்திலும் ஆண்களுக்கு நிகராக சம உரிமை வழங்கப்பட்டது. சோவியத் ஒன்றியத்தின் பல முதன்முதல்களில் ஒன்று, கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கி, அதற்கான மருத்துவ சேவை இலவசம் என அறிவித்ததாகும் (ஷெர்மன் 1969). பெண்களை அரசின் உயர் பதவிகளில் அமர்த்திய முதல் நாடும் இதுதான். மத்திய ஆசியப் பகுதியிலிருந்த சோவியத்தின் பகுதிகளில், இஸ்லாத்தின் பழமைவாத பெண் ஒடுக்குமுறையில் இருந்து அவர்களை விடுவிக்க, தீவிரப் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. இது, இப்பகுதிகளில் பெண்களின் வாழ்க்கை நிலையில் ஓர் அடிப்படை மாற்றத்தை உருவாக்கியது (சைமன்ஸ்கி, 1984).

1977 அரசியலமைப்பு சட்டப்பிரிவு-44, வீட்டுவசதி உரிமையை உறுதி செய்தது. ஆயினும், ஆஸ்திரியா மற்றும் மேற்கு ஜெர்மனியை ஒப்பிடும்போது, ஒரு நபருக்கு நகர்ப்புற வீட்டு வசதிக்கான இடம் பாதியளவே இருந்தது. ஏனெனில், ஜார் மன்னர் ஆட்சிக்காலத்தில் போதிய அளவு கட்டிடங்கள் இல்லை. மேலும் இரண்டாம் உலகப் போரின் போது பெருமளவில் வீடுகள் இடிக்கப்பட்டன. இதுபோக, சோவியத் ஒன்றியம் கனரகத் தொழில் வளர்ச்சிக்கே முக்கியத்துவம் அளித்தது. அக்டோபர் புரட்சிக்கு முன்பு, சாதாரண மக்களுக்கு, நகர்ப்புறத்தில், போதுமான வீடுகள் கட்டப்படவில்லை. புரட்சிக்குப் பிறகு புதிய வீடுகள் கட்டப்பட்டன. ஆனாலும் வீட்டு வசதி போதுமானதாக இல்லை. தொழில்துறைக் கட்டுமானத்திற்கு மூலதனம் தேவையாக இருந்ததால், வீடு கட்டுவதற்காக பெரும் பணம் செலவழிக்க இயலவில்லை. இரண்டாம் உலகப் போரின்போது கூடுதலாக, நாஜிப் படையெடுப்பினால், சோவியத் குடியிருப்புகளில் மூன்றில் ஒரு பங்கில் இருந்து பாதிவரை அழிக்கப்பட்டிருந்தது (ஷெர்மன் 1969). நகரவாசிகள், பொதுவாக தாங்கள் பணிபுரியும் நிறுவனத்திற்கு அல்லது உள்ளாட்சி அமைப்புகளுக்குச் சொந்தமான அடுக்குமாடிக் கட்டிடங்களில் வசித்தனர். சட்டப்படியான வாடகை மிக மிகக் குறைவு. மொத்த குடும்ப நுகர்வுச் செலவு நாலு முதல் ஐந்து சதவீதம் இருந்தபோது, வாடகை சுமார் 2 அல்லது 3 சதவீதம் மட்டுமே இருந்தது (சைமன்ஸ்கி, 1984; கீரன் மற்றும் கென்னி, 2004). அமெரிக்காவை ஒப்பிடும்போது, இது கடுமையாக வேறுபட்டது. அங்கு, ஒரு சராசரிக் குடும்பத்தின் வரவு செலவுத் திட்டத்தில், கணிசமான பங்கை வாடகை எடுத்துக்கொண்டது (சைமன்ஸ்கி, 1984). இன்றும் கூட நிலைமை அப்படியே உள்ளது.

உணவு மற்றும் பிற அடிப்படை அத்தியாவசிய தேவைகள் மானிய விலையிலும், ஆடம்பரப் பொருட்கள் அவற்றின் மதிப்பை விட மிக அதிகமான விலைக்கும் விற்கப்பட்டன.

பொதுப் போக்குவரத்து மிகப் பரவலான இடங்களை உள்ளடக்கி, திறமையாகவும் அதே நேரத்தில் மிகக் குறைவான கட்டணத்துடனோ இலவசமாகவோ வழங்கப்பட்டது. 1930-களில் இருந்து 1970-கள் வரை சுரங்கப்பாதைக் கட்டணம் வெறும் எட்டு சென்ட்களாக மாறாமல் இருந்தது (சைமன்ஸ்கி, 1984). முதலாளித்துவ நாடுகளில், இதனோடு ஒப்பிடக் கூடியதாக எப்பொழுதும் எதுவுமே இருந்ததில்லை. காரணம் என்னவெனில், திறமையான, மலிவான, விரிவான பொதுப் போக்குவரத்தானது, ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள், பெட்ரோலிய நிறுவனங்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்களின் இலாபம் ஈட்டும் வாய்ப்பை கடுமையாகப் பாதிக்கும். எனவே, இந்நிறுவனங்கள் தங்கள் இலாபத்தைப் பாதுகாப்பதற்காக, தங்களுக்குள்ள செல்வாக்கை, செல்வத்தை, தொடர்புகளைப் பயன்படுத்தி, தனியார் போக்குவரத்திற்கு மாற்றாக, சிறந்த, மலிவான, பொதுப் போக்குவரத்து வளர்வதைத் தடுக்கின்றன. தனியார்துறை தொடர்ந்து வேலைவாய்ப்பை வழங்கவேண்டும் என எதிர்பார்க்கும் அரசாங்கங்கள், தனியார் தொழில்துறையை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டியுள்ளது. இதை மாற்றுவதற்கான ஒரே வழி, மூலதனத்தை பொதுச் சொத்தாக ஆக்குவதே.  அப்பொழுதுதான், மக்களுக்காக எனத் திட்டமிடப்பட்ட இலக்குகளை அடையமுடியும்.

சோவியத் ஒன்றியம் தனது முதலாளித்துவப் போட்டியாளர்களை விட சுகாதாரப் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளித்தது.  வேறு எந்த நாட்டிலும், சோவியத் ஒன்றியத்தைவிட அதிக மருத்துவர்களோ, மருத்துவமனைகளோ இல்லை. 1977-இல் சோவியத் ஒன்றியத்தில் 10,000 பேருக்கு 35 மருத்துவர்களும் 212 மருத்துவமனைப் படுக்கைகளும் இருந்தன. இது அமெரிக்காவில், 18 மருத்துவர்கள் மற்றும் 63 படுக்கைகளாக இருந்தது (சைமன்ஸ்கி, 1984). மிக முக்கியமாக, சுகாதாரம் சோவியத் ஒன்றியத்தில் இலவசமாக இருந்தது. ஆனால் அமெரிக்க குடிமக்கள் இதற்காகப் பணம் செலுத்தவேண்டும் என்பது சோவியத்தில் காட்டுமிராண்டித்தனமாகக் கருதப்பட்டது. சோவியத் குடிமக்கள், இந்த விஷயத்தை நம்ப முடியாமல், அமெரிக்க சுற்றுலாப் பயணிகளிடம், மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்பினர் (ஷெர்மன் 1969).

பல்கலைக்கழகக் கல்வியும் இலவசம். முதுகலை மாணவர்களுக்கு, பாடப்புத்தகங்கள், தங்கும் அறை, உணவு மற்றும் பிற செலவுகளுக்கும் போதுமான அளவு உதவித்தொகைகள் கிடைத்தன (ஷெர்மன் 1969, சைமன்ஸ்கி, 1984).

சோவியத் ஒன்றியத்தில், முதலாளித்துவ நாடுகளை ஒப்பிடும்போது, வருமான ஏற்றத்தாழ்வு மிகவும் குறைவு. அதிகபட்ச வருமானத்திற்கும் சராசரி வருமானத்திற்கும் இடையேயான வித்தியாசம், ஒரு மருத்துவருக்கும் சராசரி தொழிலாளிக்கும் இடையேயான வருமான வேறுபாடு, அமெரிக்காவில் சோவியத் ஒன்றியத்தைவிட 8 முதல் 10 மடங்கு அதிகமாக இருந்தது (சைமன்ஸ்கி, 1984). படித்த உயர் வர்க்கத்தினரின் அதிக வருமானம் என்பது, ஒரு சாதாரண வீடு அல்லது கார் வாங்கக்கூடியதை விட அதிக சிறப்புரிமையை வழங்கவில்லை (கோட்ஸ், 2000). கனடாவுடன் ஒப்பிடுகையில், 2010இல் அதிக ஊதியம் பெறும் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளில், முதல் 100 நபர்களின் வருமானம், சராசரி முழுநேர ஊதியத்தை விட 155 மடங்கு அதிகமாக இருந்தது. சராசரி முழுநேர ஊதியம் 43,000 டாலர்களாகும் (மாற்றுக் கொள்கைகளுக்கான கனடிய மையம், 2011). கார்ப்பரேட் உயர்வர்க்கத்தினர் ஒரே வாரத்தில் இதைவிடப் பத்து மடங்கு அதிகமாக, அதாவது 4,30,000 டாலர்கள் வருமானம் ஈட்டினர்.

சோவியத் ஒன்றியத்தில் வருமான வித்தியாசம் குறைவாக இருந்ததற்கான காரணம் என்னவென்றால், அனைத்து சோவியத் குடிமக்களுக்கும் எந்தக் கட்டணமும் இன்றி அல்லது மிகக் குறைந்த கட்டணத்தில் அத்தியாவசியச் சேவைகள் கிடைத்ததாகும். எனவே, வருமான வித்தியாசத்தைவிட வாழ்க்கைக்குத் தேவையான பொருட்கள் கிடைக்காத தன்மையின் அளவு மிகக் குறைவாக இருந்தது (சைமன்ஸ்கி, 1984). பல உலக நாடுகளின் தலைநகரங்களில் உள்ள, ஜனாதிபதிகள், பிரதம மந்திரிகள், மற்றும் மன்னர்களின் ஆடம்பரமான மாளிகைகள் போன்ற வீடுகளில் சோவியத் தலைவர்கள் வசிக்கவில்லை (பேரன்டி, 1997). உதாரணமாக, கோர்பச்சேவ், நான்கு குடும்பங்கள் இருந்த ஓர் அடுக்குமாடிக் கட்டிடத்தில் வசித்துவந்தார். லெனின்கிராட் கட்டுமானத்துறையின் தலைமை அதிகாரி, ஒரு படுக்கையறை கொண்ட குடியிருப்பிலும், மின்ஸ்கில் ஓர் உயர்மட்ட அரசியல் அதிகாரி, மனைவி, மகள், மருமகனுடன் இரு படுக்கையறைகள் கொண்ட குடியிருப்பிலும் வசித்துவந்தனர் (கோட்ஸ் & வேய்ர், 1997). ஆளும் உயர்வர்க்கத்தினரை, சோவியத் ஒன்றியத்தின் விமர்சகர்கள், சுரண்டுபவர்கள் என குற்றம் சாட்டினர். ஆனால், அவர்களது மிதமான வருமானம் மற்றும் பொருட்கள் பயன்பாடு, இந்த மதிப்பீட்டின் மீது கடுமையான சந்தேகத்தை எழுப்புகின்றது. உண்மையில் சோவியத்தின் ஆளும்வர்க்கம் சுரண்டும்  தன்மையது என்று கூறுவது மனிதகுல வரலாற்றில் மிக வினோதமானது.

தமிழில்: சோபனா

மார்க்சிய பார்வையில் அறிவியல் வளர்ச்சி

அபிவ் சூர்யா

அறிவியல் மற்றும் அறிவியல்-தொழில்நுட்ப வளர்ச்சி என்பது மானுட வரலாற்றில் எப்போதுமே முக்கிய பங்கு வகித்து வந்திருந்தாலும், தற்காலத்தில் இதன் தாக்கமும் முக்கியத்துவமும் உச்சத்தை எட்டியுள்ளது. யார் அறிவியல் வளர்ச்சியை கட்டுப்படுத்துகின்றனர்; யாரிடத்தில் தொழில்நுட்ப மேம்பாடு நிரம்பி உள்ளது போன்றவை தேசங்கள் இடையேயான உறவுகளையும், சர்வதேச அளவில் சுரண்டல் முறையின் தன்மைகளையும் தீர்மானிக்கின்றது.

இப்படிப்பட்ட அறிவியல் வளர்ச்சி எப்படி நிகழ்கிறது? அதன் போக்கு என்ன? அதன் போக்கை எது தீர்மானிக்கிறது?  தற்காலத்தில் நிலவும் உற்பத்தி முறைக்கும் அறிவியல்-தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் இடையே என்ன தொடர்பு? உற்பத்தி முறையில் ஏற்படும் நெருக்கடி அறிவியல் வளர்ச்சியை எப்படி பாதிக்கும்? இது போன்ற கேள்விகளுக்கு மார்க்சிய ஆய்வு முறைப்படி விடை கண்டறிந்து, அதன் வாயிலாக புரட்சியின் பாதையில் அறிவியல் ஆற்றும் பணிகளையும், அதை நிர்ணயிக்க ஆற்ற வேண்டிய கடமைகளையும் தெரிந்து கொள்வது அவசியம்.

முதலாளித்துவ அறிஞர்கள், அறிவியல் என்பதை வெறும் லாபத்திற்கான கருவியாக மட்டுமே புரிந்து கொள்கின்றனர். இதனால் லாப நோக்கை மேம்படுத்தும் வகையில் அறிவியலுக்கான கட்டமைப்புகள் இருப்பின் (அதாவது அறிவியல் குறித்த கொள்கைகள், காப்புரிமம் குறித்த சட்டங்கள் போன்றவை) அது அனைத்து தரப்பினருக்கும் சாதகமாக அமையும் என வாதிடுகின்றனர். அதுவும் நவ தாராளமய ஆதரவாளர்கள், கட்டற்ற வர்த்தகம் மற்றும் சந்தை பொருளாதாரத்தின் விளைவாக மூன்றாம் உலக நாடுகளும் தொழில்நுட்பத்தை பெற்று வளர்ச்சி அடையலாம் எனக் கூறுகின்றனர். ஆனால் இது ஏகாதிபத்திய சுரண்டலை நியாயப்படுத்தும் அப்பட்டமான நச்சு சொல்லாடலே ஆகும். அறிவியல் என்பது உற்பத்தியை பெருக்கி லாபத்தை கூட்ட வல்ல “தங்க முட்டையிடும் வாத்து” என்றே பார்ப்பதால், அந்த அறிவியல் தொழில்நுட்பங்களை எந்த ஏழை நாட்டிற்கும் வளர்ந்த நாடுகள் தானாக அளிக்காது என்பது தெளிவாக தெரிகிறது.

அறிவியலை புறந்தள்ளுவதா?

உண்மையில், அறிவியல் என்பது ஆளும் வர்க்கங்களின் கையில் இருக்கும் சுரண்டல் கருவி மட்டுமே அல்ல. மானுட மேம்பாட்டிற்கான மகத்தான கண்டுபிடிப்புகளை அறிவியல் நமக்கு எப்போதும் அளித்து தான் வருகின்றது. அண்மைக்கால பின் நவீனத்துவ சித்தாந்தங்கள், அறிவியலையே முற்றாக புறந்தள்ளவும் சொல்கின்றன. அது மக்கள் மத்தியில் அறிவியல் ஆர்வம் பெருகுவதை தடுக்கின்றது. இதுவும், சுரண்டும் வர்க்கத்திற்கே சாதகமாக அமைந்து விடுகின்றது.

உழைக்கும் மக்கள் அறிவியலை வெறுப்பதனால், அதன் மீதான தங்களின் நியாயமான உரிமையை கோராமல் போய் விடுகின்றனர். இதன் விளைவாக அறிவியல் வளர்ச்சி மீதான கட்டுப்பாடு சுரண்டும் வர்க்கம் கையில் வலுவாக சென்றடைகிறது. இது உழைக்கும் வர்க்கத்தின் சக்தியை மேலும் வலுவிழக்கச் செய்கிறது. அண்மை காலங்களில் இது போன்ற அறிவியல் குறித்த பிற்போக்கான புரிதல் இடதுசாரி இயக்கங்கள் மத்தியிலும் ஊடுருவத் துவங்கி உள்ளன. இந்த பின் நவீனத்துவ போக்குகளின் காரணமாக “இடதுசாரிகள் பிற்போக்காளர்கள்” என முத்திரை குத்த வலதுசாரி சக்திகளுக்கு ஏதுவாக உள்ளது.

ஆனால் அறிவியல்-தொழில்நுட்ப வளர்ச்சி குறித்த தெளிவான புரிதலை மார்க்சிய ஆய்வு மட்டுமே வழங்க முடியும். “லாப நோக்கமே அறிவியலுக்கு சிறந்தது” என்ற வலதுசாரி புரிதலையும், “லாபத்திற்கு மட்டுமே அறிவியல்” என்ற “சர்வதேச சதித் திட்டம்” நிலவுவது போல சித்தரிக்கும் நுட்பமாற்ற புரிதலையும் புறந்தள்ளி, அறிவார்ந்த முறையில் அறிவியல் வளர்ச்சியை அணுகுவது அவசியமாகும்.

இயங்கியல் பொருள்முதல்வாதமும் அறிவியலும்

மார்க்சியம் என்பது இயங்கியல் விதிகளை பொருளியல் தளத்தில் பொருத்தி, இந்த அண்டத்தையும், மானுட சமூகத்தையும் புரிந்து கொள்கிறது. “இயங்கியல்”, அதாவது எதிர்மறைகளின் உறவாடல் மற்றும் மோதல் வழியாக வளர்ச்சி என்ற கோட்பாட்டின் அடிப்படையில், வளர்ச்சியை புரிந்து கொள்ள வேண்டும் என்றால், முதலில் அந்த காலகட்டத்தில் நிலவும் எதிர்மறையான சக்திகளை புரிந்து கொள்வது அவசியம். “பொருள்முதல்வாதம்” என்றால் இந்த எதிர்மறை சக்திகளை எவரின் எண்ண ஓட்டங்களிலும் தேடாமல், “பொருள்” அல்லது பொருளியல் தளத்தில் தேட வேண்டும் என்கிறது. ஆக, மார்க்சிய ஆய்வு என்பது அந்த அந்த வரலாற்று சூழலுக்கும் ஏற்ப, அந்த அந்த கால கட்டத்தில் நிலவும் பொருள்நிலை சக்திகளையும் அதன் முரண்பாடுகளையும் புரிந்து கொள்வதில் அடங்கி உள்ளது. இதே போல தான் அறிவியல் குறித்த மார்க்சிய பார்வையும் அமைய வேண்டும்.

இதனை சுறுக்கமாக சொன்னால், “அறிவியல்” என்பது – மனிதர்கள் மேற்கொள்ளும் சமூக உற்பத்தி முறையின் ஒரு அங்கமாக உள்ள மனித உழைப்பில் ஒரு பகுதியை அறிவு மேம்பாட்டிற்காக ஒதுக்கி வைக்கப் படுவதையே “அறிவியல்” என்கிறோம். மனிதர்களின் மற்ற உழைப்பைப் போலவே இந்த “அறிவியல்” உழைப்பும் முக்கியமான பணியாற்றுகின்றது. இந்த உழைப்பின் மூலமாக இயற்கை மற்றும் இந்த அண்டத்தின் உண்மைகளை வெளிக்கொணர முடியும். இயற்கையோடு மனிதன் உறவாடுவதே “உற்பத்தி”. இதனால் இந்த “அறிவியலில்” செலுத்தப்படும் உழைப்பானது இயற்கையோடு மனிதன் கொண்டிருக்கும் உறவினை மேம்படுத்துகிறது. வழிநடத்துகிறது.

இந்த சுறுக்கமான விளக்கத்தின் மேல் இயங்கியல் பொருள்முதல்வாத ஆய்வை பொருத்தி பார்ப்போம். இப்போது “அறிவியல்” என்பதும் ஒரு வகை மனித உழைப்பு, மற்றும் அதன் வெளிப்பாடு தான். ஆக, மற்ற மனித உழைப்பு போலவே, இந்த உழைப்பும் ஒரு “சமூக” உற்பத்தி முறையின் அங்கமாகத் தான் நிகழ்கிறது. ஆக, எந்த ஒரு காலத்திலும், அறிவியல் ஆய்வு முறையின் நோக்கம் என்ன, அது எப்படி வழி நடத்தப்படுகிறது, முன்னேற்றத்திற்கான அதன் திட்டம் என்ன, அறிவியல் கண்டுபிடிப்புகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன, அறிவியல் ஆய்வில் யார் ஈடுபடுகின்றனர் மற்றும் யார் ஒதுக்கப்படுகின்றனர் என்பது போன்ற அனைத்தையும் வெறும் முந்தைய கால அறிவியல் வளர்ச்சியின் நிலை மட்டும் தீர்மானிப்பதில்லை. அந்த அந்த காலத்தில் நிலவும் சமூக அமைப்பும், உற்பத்தி முறையும் தீர்மானிக்கின்றது.

ஆனால் சமூக சூழல் அறிவியல் மீது தாக்கம் ஏற்படுத்துவது போலவே, அறிவியல் கண்டுபிடிப்புகளும் சமூகத்தின் பொருளியல் வாழ்வின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இப்படி சமூகத்தின் மீது ஏற்பட்ட தாக்கம், மீண்டும் அறிவியல் ஆய்வின் வளர்ச்சிப் பாதையின் மேல் சுழற்சியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

ஆக, அறிவியலில் ஈடுபட்டுள்ள “அறிவுசார்” உழைப்பின் மீது, சமூகத்தில் நடக்கும் வர்க்கப் போராட்டங்கள் பிரதிபலிக்கும். சமூக சூழலுக்கு ஏற்ப, இந்த “அறிவுசார்” உழைப்பின் தன்மை, தரம் ஆகிய அனைத்துமே அறிவியல் கண்டுபிடிப்புகள் மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எந்த ஒரு காலத்திலும், அறிவியல் வளர்ச்சியின் போக்கு எதேச்சையாகவோ, கையளவு மனிதர்களின் அசாதாரண திறமையால் மட்டுமோ ஏற்படுவது இல்லை.

மனித வாழ்வில் ஏற்படும் இயங்கியல் மாற்றங்களானது அறிவியல் “எப்படி பயன்படுத்தப்படுகிறது” என்பதை மட்டும் தீர்மானிப்பதில்லை. அறிவியல் கண்டுபிடிப்புகளின் தன்மை மற்றும் தரத்தையும் கூட தீர்மானிக்கின்றது.

மார்க்சிய புரிதலில் அறிவியல்

“மனிதனின் இருப்பே சிந்தனையை தீர்மானிக்கின்றது” என்பது மார்க்சிய கூற்று. அறிவியல் என்பதை “அறிவுப்பூர்வமான சிந்தனைகளின் உற்பத்தி” என புரிந்து கொண்டால், மனிதனின் இருப்பும், மனிதனின் அன்றாட பொருளியல் வாழ்விற்கான உழைப்பு மற்றும் உற்பத்தியும் தானே இந்த “அறிவுப்பூர்வமான சிந்தனைகளின்” உற்பத்தியையும் தீர்மானிக்க வேண்டும்? இதன் காரணமாகத் தான், ஆதிகால மனித சமூகத்தில் “அறிவியல்” என்பதற்காக தனியே எந்த உழைப்பையும் ஒதுக்கி வைக்காத போதும், அறிவியல் வளர்ச்சி ஏற்படத் தான் செய்தது. ஏனென்றால் அன்றாட வாழ்வின் பொருளியல் உற்பத்தியில் ஏற்படும் உழைப்பின் பழக்க வழக்கங்கள் தான் அறிவுப்பூர்வமான சிந்தனைகளுக்கு அடிப்படை.

எனவே, அறிவியலின் எந்த வளர்ச்சியும் வெறும் ஒரு மனிதனின் மூளையில் “உதிப்பது” அல்ல. ஒரு சிந்தனையின் உண்மை தன்மையானது, அன்றாட வாழ்வின் உழைப்பின் வாயிலாகத் தான் நிரூபணம் ஆகிறது. ஆகையால் அன்றாட பொருளியல் வாழ்வின் முன்னேற்றம் தான், அறிவியல் முன்னேற்றத்தையும் தீர்மானிக்கின்றது. இதன் பொருள், எந்த ஒரு கால கட்டத்திலும், “மனித உழைப்பு எவ்வாறு ஒருங்கிணைக்கப்படுகிறது” என்பதே அறிவியலின் வளர்ச்சியை தீர்மானிக்கிறது என்பதாகும். குறிப்பிட்ட காலத்தின் “உற்பத்தி முறை” (எ.கா. – ஆதி பொதுவுடைமை, நிலப்பிரபுத்துவம்,..) அதற்கு அடிப்படையாக அமைகிறது.

புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள், அதன் காலத்தில் நிலவும் நிலவும் உற்பத்தி முறையில் “அளவு மாற்றம்” ஏற்படுத்துகின்றன. இதன் காரணமாக உற்பத்தி முறையில் முரண்பாடுகளும், நெருக்கடிகளும் உருவாகின்றன. இந்த நெருக்கடியானது அறிவியலில் தாக்கம் செலுத்துகிறது. “சிந்தனை” மற்றும் “செயல்” (Theory and Practice) இரண்டிற்கும் இடயே விரிசல் உண்டாக்கின்றது. உற்பத்தி முறையில் ஏற்படும் “புரட்சிகர” மாற்றமானது, “சிந்தனை முறை”, அதாவது அறிவியல் முறையிலும் மற்றதை ஏற்படுத்தும்.

இதை ஒரு உதாரணம் கொண்டு புரிந்து கொள்ளலாம். இயற்கையில் நிலவும் கடுமையான சூழலில் உயிர் பிழைக்க போராடும் ஆதி கால மனிதனின் சிந்தனைகள் எல்லாம் இயற்கையில் திறம்பட பிழைப்பதை நோக்கியே இருக்கும். அப்படிப்பட்ட சமூகத்தில் “அறிவார்ந்த சிந்தனைகள்” அனைத்துமே பிழைத்திருப்பதற்கான மேம்பட்ட வழிமுறைகளை நோக்கியதாக இருக்கும். ஆனால் முதலாளித்துவ உற்பத்தி முறையில் ஒரு கண்டுபிடிப்பாளரின் சிந்தனைகள் முழுவதும், விற்பனைக்கான ஒரு பண்டத்தை உருவாக்குவதை நோக்கி மட்டுமே இருக்கும்.

இப்போது ஆதி கால மனித சமூகத்தில் நெருக்கடி உண்டானால் என்னாகும்? இப்போது ஆதி மனிதனின் போராட்டம் இயற்கையோடு இல்லாமல், சக மனிதர்களோடு போராட்டம் என மாறிப் போனால், என்னாகும்? இது நாள் வரை “பிழைத்திருப்பது” என்பதை நோக்கி கட்டமைக்கப்பட்ட “அறிவுச் சிந்தனைகளின்” இலக்கு மாற்றப்படும். எனவே சிந்தனைகள் நெருக்கடியை எதிர்கொள்ளும். மனிதர்களோடு போராட்டம் என்ற இலக்கை நோக்கிய சிந்தனைகள் வெளிப்படும். ‘பிழைத்திருப்பதற்கான’ சிந்தனைகளை அமலாக்க பயன்படுத்தப்பட்டு வந்த வழிமுறைகள், கட்டமைப்புகள் பயன் குறைந்தவையாக ஆகிடும்.

இவ்வாறுதான் உற்பத்தி முறையில் ஏற்படும் நெருக்கடி, அறிவியல் முறையிலும் பிரதிபலிக்கின்றது.

அறிவியலை வளர விடாமல் தடுக்கும் உத்தியோடு சிலர் செயல்படுகிறார்கள் என்றோ, குறிப்பிட்ட வர்க்கம் முயற்சிக்கிறது என்றோ ‘சதித்திட்ட கதையாடலை’ மார்க்சியம் முன்வைப்பதில்லை. அறிவியலின் உண்மையைத் தேடிக் கண்டறியும் அடிப்படையை, வலிமையை மார்க்சியம் அங்கீகரிக்கின்றது. ஆனால் எந்த ஒரு காலத்திலும் புதிய சிந்தனை/கண்டுபிடிப்புகளில் ஏற்படும் நெருக்கடியானது அக்கால உற்பத்தி முறையில் ஏற்படும் நெருக்கடியின் விளைவு என்றே அது விளக்குகிறது.

முதலாளித்துவமும் அறிவியலும்

மேற்கண்ட புரிதலினை, தற்கால முதலாளித்துவ உற்பத்திக்கு பொருத்தி, இந்த சூழலில் அறிவியல் வளர்ச்சியை புரிந்த கொள்வதை மார்க்ஸ், எங்கல்ஸ் தொடங்கி பல மார்க்சிய அறிஞர்கள் செய்துள்ளனர்.

முதலாளித்துவ முறையில் நிலவும் போட்டியின் விளைவாக, அதிவேக அறிவியல்-தொழில்நுட்ப வளர்ச்சி, மூலதனத்திற்கு அவசியமாக இருக்கிறது என்பதை தனது “மூலதனம்” நூலில் மார்க்ஸ் விவரித்துள்ளார். ஆனால் அறிவியல் கண்டுபிடிப்புகள் மீதான ஏகபோக கட்டுப்பாடு என்பது முதலாளித்துவத்தின் ஒரு சிறு அம்சம் மட்டுமே. முதலாளிகளுக்கு இடையிலான போட்டியின் காரணமாகவும், முதலாளி-தொழிலாளி இடையிலான வர்க்கப் போராட்டம் காரணமாகவும், முதலாளி வர்க்கம் அறிவியல் வளர்ச்சியைக் கொண்டு எந்திரமயமாக்கலை விரைவு படுத்துகிறது. இதன் விளைவாக லாப விகித நெருக்கடி உருவாகிறது. அதீத உற்பத்தி நெருக்கடி உருவாகிறது.

ஆனால் முதலாளித்துவத்தின் அடிப்படை நெருக்கடி என்ன? முதலாளித்துவம் வளர வளர உழைப்பு மேலும் மேலும் “சமூகமயம்” ஆகிறது (அதாவது மேலும் மேலும் தொழிலாளர்களின் உழைப்பு அனைவரும் சேர்ந்து புரியும் “சமூக” உழைப்பாக மாறுகிறது). ஆனால் உழைப்பின் பலனான உற்பத்தி பண்டங்கள் தனிச்சொத்து குவியலுக்கு செல்கின்றன. இதுவே முதலாளித்துவத்தின் அடிப்படையான சிக்கல். இது நாள் வரை முதலாளித்துவத்தில் அறிவியல் முறையானது தனிச்சொத்து குவியலை மேம்படுத்தவே கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆனால் “சமூகமயம்” ஆன தொழிலாளி வர்க்கத்தின் தேவைகளுக்கு எழுச்சிபெறும்போது முன்பு கட்டமைக்கப்பட்ட அறிவியல் முறை அந்த தேவைகளுக்கு முரணாக அமைகிறது. இந்த நெருக்கடியானது அறிவியலிலும் பிரதிபலிக்கின்றது.

முதலாளித்துவ முறையில் அறிவியல் தழைக்கும் என்று முதலாளித்துவத்தின் ஆதரவாளர்கள் கூறி வந்தாலும், உண்மையில் மேற்சொன்ன நெருக்கடி ஏற்பட்ட பின், அறிவியல் நச்சுப்படுகிறது. முதலாளித்துவத்தில் “அறிவு” வர்த்தகமாக்கப்பட்டதன் விளைவாக, அறிவியல் ஆய்வும் சந்தை நிபந்தனைகளுக்கு உள்ளாக்கப்படுகிறது. இப்போது நிகழ்த்தப்பட்டுவரும் “டிஜிட்டல் புரட்சி” என்பதன் அடிப்படையை பார்த்தால் கூட, மக்களின் தரவுகளை சேகரித்து, விளம்பரப் பிரச்சாரங்கள் மூலம் நம் ஜனநாயகத்தை சீர்குலைத்து, உழைப்பின் மீது மூலதனத்தின் ஆதிக்கத்தை வலுப்பெறச் செய்யும் விதமாகவே பயன்படுத்தப்படுகிறது. இந்த “டிஜிட்டல் புரட்சி”க்கு அடிப்படையாக உள்ள இணையதளம், நுண்கணினி (Microprocessor), போன்ற தொழில்நுட்பங்கள் எல்லாம் மக்கள் செல்வத்தின் மூலம் பொதுப் பல்கலைக்கழகங்களில் கண்டுபிடிக்கப்பட்டன, ஆனால் தனியாருக்கு அதன் காப்புரிமங்கள் உரிமையாக்கப்பட்டன. இது, தொழிலாளி வர்க்கத்தின் தேவைகளை தீர்க்க முடியாத முதலாளித்துவ அமைப்பில், அறிவியலுக்கு ஏற்பட்டிருக்கும் ஆழமான நெருக்கடியின் ஒரு உதாரணமாகும்.

வளரும் அறிவியலை, மூலதனம் தனது லாப நோக்கங்களுக்காக கட்டுப்பாட்டில் வைப்பதனால் மக்கள் மத்தியில் அறிவியல் மீதான ஆழமான அவநம்பிக்கை வளர்வதை பார்க்கிறோம். உலகின் மிகப்பெரும் முதலாளித்துவ பொருளாதாரமான அமெரிக்காவில் கூட இதை பார்க்கலாம். சுகாதாரத்தில் தனியார் ஏகபோகம், நவீன மருந்து தொழில்நுட்பத்தை தனியார் காப்புரிமம், புதிய ஆய்வுகள் பணக்காரர்களின் நோய்களுக்கு மட்டுமே தீர்வு தேடுவது போன்ற போக்குகளின் காரணமாக மக்கள் ஏமாற்ற உணர்வுக்கு ஆளாகின்றனர். இதனால் அறிவியலற்ற “மாற்று” முறைகள் பிரபலமாவது, தடுப்பூசிக்கு எதிரான பிரச்சாரம் போன்ற போக்குகள் எழுவதும், அறிவியல் அடிப்படையிலான மருத்துவ முறைக்கு எதிர்ப்பு உருவாவதையும் பார்க்கிறோம்.

இது போன்ற நெருக்கடியும், அறிவியலுக்கு எதிரான  போக்குகளும் கல்வி, வேளாண்மை போன்ற பல துறைகளில் காணப்படுகிறது. உலகம் முழுவதும் வெளிப்படுகிறது. அறிவியலுக்கு எதிராக முழக்கமிட்டு வலதுசாரிகள் வெற்றிபெறுகிறார்கள். கொரோனா பெருந்தொற்றின் காலத்தில், சோசலிச நாடுகள் மக்களை அறிவியல் பூர்வமாக ஒன்று திரட்டி போராடினார்கள், ஆனால் முதலாளித்துவ நாடுகள் மக்களை கைவிட்டன, போராட்டத்தையும் கைவிட்டன. இதுவே முதலாளித்துவத்தில் “சிந்தனை” மற்றும் “செயல்” (Theory and Practice) இரண்டிற்கும் இடையில் ஏற்பட்டுள்ள விரிசலின் தெளிவான வெளிப்பாடு.

அறிவியல் துறையில் உழைப்பின் தன்மையை பார்த்தால், அதுவும் நெருக்கடியிலேயே உள்ளது. ஏகாதிபத்திய நாடுகள், இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளில் பல்லாயிரம் தொழில்நுட்ப பட்டதாரிகளை அடிமட்ட பணியில் அமர்த்திக் கொண்டு, முன்னேறிய தொழில்நுட்பத்தையும் சர்வதேச திறமைகளையும் தன் வசம் குவித்து வைத்துள்ளன. இது ஏகாதிபத்திய நாடுகளுக்கும் – வளரும் நாடுகளுக்கும் இடையேயான முரண்பாட்டை கூர்மையாக்குகிறது. மேலும் “அறிவுசார்” உழைப்பிற்கும், உடல் உழைப்பிற்கும் இடையிலான முரண்பாட்டையும், இயற்கை பற்றிய அறிவியலுக்கும், சமூக அறிவியலுக்கும் இடையிலான விரிசலையும் தொடரச் செய்கிறது. இவை எல்லாம் உழைப்பு தளத்தில் முதலாளித்துவ நெருக்கடியின் வெளிப்பாடே.

அதிலும் குறிப்பாக, இன்று மானுடம் சந்திக்கும் மிகப்பெரும் சவால் “பருவநிலை மாற்றம்” பற்றிய பிரச்சனையில், அடிப்படை காரணம் என்ன?

முதலாளித்துவத்தில் “அந்நியமாதல்” கோட்பாட்டை மார்க்ஸ் விவரித்தார். தொழிலாளர் உழைப்பை செலுத்தி உருவாக்குவது தான் பண்டங்கள். ஆனால் அதிலிருந்து அவர்கள் அந்நியமாக்கப்பட்டு, அது தனிச்சொத்து குவியலுக்கு செல்கிறது. ஆக, மனிதர்கள் தம் உழைப்பின் பலனிலிருந்து அந்நியமாக்கப்படுகின்றனர். இதன் காரணமாக மனித உழைப்புக்கும், இயற்கைக்கும் இடையேயான “உயிரோட்டமான பிணைப்பு” முறிவுற்று போகிறது. இவ்வாறு தன் உழைப்பில் இருந்தே அந்நியமாகிப் போகும் தொழிலாளி, அந்த உழைப்பு எப்படி ஒருங்கிணைக்கப்பட வேண்டும், இயற்கையோடு இயைந்து எப்படி செயலாற்ற வேண்டும் என்பதை தீர்மானிக்கிற அதிகாரமோ, வழிமுறையோ இல்லாமல் போகிறார். இதன் காரணத்தால், மூலதனம் தன் லாப நோக்கிற்கு வேண்டியது போல  செயல்பட்டு, அது உழைக்கும் மக்களையும் பாதிக்கிறது, இயற்கையையும் பாதிக்கிறது. அதுபற்றிய எந்தக் கவலையும் இல்லாமல் தன்னை பெருக்கிக் கொண்டிருக்கிறது. இதுவே “பருவநிலை நெருக்கடி”யின் அடிப்படை ஆகும்.

இன்று இந்த பருவ நிலை நெருக்கடிக்கு தீர்வு காண அறிவியல் முறைகள் இருப்பினும் கூட, அதனை அமலாக்க இங்கே உள்ள கட்டமைப்பு, மூலதனக் குவியலினை இலக்காக கொண்டு அமைக்கப்பட்டுள்ளதால், அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து பருவ நிலை மாற்றத்தை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு முயற்சிகளை மேற்கொள்வதற்கு, ஏகாதிபத்திய நிதி மூலதனம் தடையாக இருக்கின்றது.

அறிவியல் குறித்த தத்துவார்த்த போக்குகள்

முதலாளித்துவத்தில் அறிவியலின் நெருக்கடி பற்றி புரிந்து கொண்டோம். இங்கே “அறிவியல்” குறித்த மார்க்சிய தத்துவார்த்த போக்குகளின் பரிணாமம் குறித்து பார்ப்போம்.

இயங்கியல் பொருள்முதல்வாத கோட்பாட்டை மேலும் வலுவாக்கும் விதமாக எங்கல்ஸ் இந்த கோட்பாட்டை இயற்கை மற்றும் அண்டத்தையும் புரிந்து கொள்ள பயன்படுத்தி எழுதிய நூல்  தான் “இயற்கையின் இயங்கியல்”. இதன் மூலம் அறிவியலாளர்களுக்கு இயங்கியல் பார்வை ஏன் அவசியம் என்பது குறித்தும் விவரித்தார். இவ்வாறு அறிவியல் ஆய்வில் இயங்கியலை பயன்படுத்தும் தத்துவத்தை ஜே.டி.பெர்னால், ஜே.பி.எஸ்.ஹால்டேன், ஐன்ஸ்டீன் உட்பட பல விஞ்ஞானிகளும் முன்னெடுத்துச் சென்றனர்.

அறிவியல் மற்றும் சமூகத்திற்கு இடையேயான உறவு குறித்த தத்துவங்களும் மார்க்சிய மரபில் பரவலாக புகழ் பெற்றன. முதலாளித்துவ நெருக்கடியால் அறிவியல் நசுக்கப்படாததன் காரணத்தால் சோவியத் ஒன்றியத்தில் அறிவியல் தழைத்தோங்கியது. மக்களின் வாழ்வியல் கலாச்சாரத்தோடு அறிவியல் ஒன்றிப் போனதன் விளைவாக, தொழிலாளர் வர்க்கத்தின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், அறிவியல் ஆய்வுக்குள் “ஆலை சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு”, “சமூக அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்” போன்ற துறைகள் பல்கலைக்கழகங்களில் உருவாக்கப்பட்டு தழைத்தன. இதன் தொடர்ச்சியாக அறிவியல் குறித்த தத்துவ விவாதங்களும் விரிவடைந்தன. போரிஸ் ஹெசன் அவர்களின் பணி எவ்வாறு நியூட்டனின் ஆய்வுகள் பதினேழாம் நூற்றாண்டின் வர்த்தகம் சார் முதலாளித்துவத்தின் எழுச்சியுடன் தொடர்புடையது என்பதைக் காட்டியது. நிகோலாய் புக்கரின், நிகோலாய் வாவிலோவ் போன்றோரின் அறிவியல்-சமூகம் குறித்த ஆழமான விவாதங்கள், அறிவியல் தன் முழு திறனை வெளிக்கொண்டு வர சோசலிச சமூகத்தில் தான் முடியும் என்பதை நிறுவின.

இரண்டாம் உலகப்போருக்கு பின், பிரபல பரிணாம வளர்ச்சி விஞ்ஞானிகளான ரிச்சர்ட் லேவின்ஸ், ரிச்சர்ட் லியோன்டிஃப் போன்றவர்கள் மார்க்சியத்தின் மூலம் அறிவியல் வளர்ச்சியை புரிந்து கொள்ளும் பணியை தொடர்ந்தனர். ஆனால் 1970களில் தொடங்கி, இடதுசாரி ஆய்வாளர்கள் மத்தியிலும் தவறான புரிதல்கள் எழத் தொடங்கின. ஆர்.எம்.யங் என்ற மார்க்சிய ஆய்வாளர், அதி தீவிர நிலைபாட்டை எடுப்பதாக எண்ணி, “அறிவியல் என்றாலே முதலாளித்துவ அறிவியல் மட்டும் தான்” என வாதிட்டார். ஆனால் இது பொருள்முதல்வாத புரிதலுக்கு எதிரானது. இதனைத் தொடர்ந்து எழுந்த பின் நவீனத்துவ கோட்பாடுகள் இடதுசாரி போர்வையில் முற்றிலும் அறிவியலற்ற கோட்பாடுகளை முன் வைத்தன. அவர்கள் மார்க்சிஸ்டுகள் முதலாளித்துவத்தில் அறிவியல் மீது வைக்கும் அதே குற்றச்சாட்டுகளை வைத்துக் கொண்டே கருத்துமுதல்வாத கோட்பாட்டு நிலை எடுக்கின்றனர். இவர்கள், “அறிவியல் மூலம் உண்மை நிலையை கண்டறியவே முடியாது. அந்தந்த வர்க்கங்களின் நலனுக்கு ஏற்றார்போல கோட்பாடுகள் உருவாக்கப்படுகின்றன” என வாதிட்டார்கள். சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கு பின், நவ தாராளமய காலத்தில் இந்த கோட்பாடுகள் மேலும் வலுப்பெற்றன.

இப்படிப்பட்ட பொருள்முதல்வாதத்திற்கு எதிரான கோட்பாடுகள் அறிவியலில் மனித உழைப்பின் பங்கையும், அறிவியல்-உழைப்பு-இயற்கை இடையேயான உறவையும் நிராகரிக்கின்றன. அறிவியல் என்பதை மனித உழைப்பின் அங்கமாக பார்ப்பதையும், அறிவியலின் நெருக்கடியை உற்பத்தி முறையின் நெருக்கடியின் பிரதிபலிப்பாக பார்ப்பதையும் நிராகரிப்பதன் மூலமாக, இந்த பின் நவீனத்துவ கோட்பாடுகள், இயங்கியல் போராட்டம் வழியாக மனித சமூகம் அடையும் வளர்ச்சியையும், அந்த போராட்டத்தில் அறிவியல் ஆற்றும் பங்களிப்பையும் முற்றிலுமாக மறைக்கின்றன.

இறுதியாக

மனித சமூகத்திற்கு அப்பாற்பட்டு நின்று அனைத்து மானுட பிரச்சனைகளுக்கும்  நூதன தீர்வை அளிக்கக் கூடியதாக அறிவியலை பார்க்கும் பார்வையும் தவறு. அதே வேளையில், அறிவியலின் உண்மை அறியும் திறனை முற்றிலுமாக நிராகரித்து, அறிவியல் மொத்தமும் முதலாளித்துவ அறிவியல் என நிராகரிப்பதும் தவறு.

மார்க்சிய புரிதல் மூலம் மட்டுமே இந்த இரண்டு தவறுகளையும் களைந்து, மனித உழைப்பின் வடிவமான அறிவியலின் ஆற்றலை உணரும் அதே வேளையில், அந்த அந்த காலத்தின் சமூக கட்டமைப்பு எவ்வாறு அறிவியல் வளர்ச்சியின் தன்மையை தீர்மானிக்கின்றது என்பதை புரிந்து கொள்ள முடியும். மார்க்சிய புரிதலால் மட்டுமே கோவிட் தடுப்பு மருந்து போன்ற அறிவியலின் வியக்கத்தக்க சாதனைகளை அங்கீகரிக்கும் அதே வேளையில், அணு ஆயுதம் போன்ற அறிவியலின் கோர முகத்தையும் புரிந்து கொள்ள முடியும். மார்க்சிய புரிதலால் மட்டும் தான் அறிவியலின் உண்மை திறனை புரிந்து கொண்டு, அந்த திறன் உழைக்கும் மக்களுக்கு பயன்பட தேவையான இயக்கங்கள் மற்றும் போராட்டங்களை கட்டமைக்க முடியும். இப்படிப்பட்ட போராட்டங்கள் மூலம், இக்கால ஏகாதிபத்திய சூழலில் அறிவியல்-முதலாளித்துவம் இடையேயான முரண்பாடுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து, அதை கூர்மைப்படுத்த இயலும். அறிவியல் பற்றிய மார்க்சிய புரிதல் மட்டுமே பிற்போக்கு சித்தாந்தங்களை எதிர்க்கும் அதே வேளையில், முதலாளித்துவ தளையில் இருந்து இருந்து அறிவியலை விடுவிக்க உதவும்.

உலகமய காலத்தில் வாழ்விட உத்தரவாதமும் சமூக நீதியும்

ச. லெனின்

குரல்: தோழர் பீமன்

சென்னை உள்ளிட்டு தமிழகத்தின் பல இடங்களில் வாழ்விட பாதுகாப்பிற்கான போராட்டங்கள் முன்னுக்கு வந்துள்ளது. குறிப்பாக, நீர்நிலைப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மேம்பட்ட வாழ்விடம் வழங்குதல் என்ற பெயரில் ஏழை எளிய மக்களின் குடியிருப்புக்கள் அகற்றப்படுவதும், அதை எதிர்த்த மக்களின் போராட்டங்களும் தொடர்கின்றன. நகர்ப்புறங்களின் மையத்திலிருந்து, உழைக்கும் மக்களின் பெரும்பகுதியினர் நகரங்களின் விளிம்பிற்கு துரத்தப்படுகின்றனர். இதுபோன்ற நிலைகள் எதுவும் திடீர் நிகழ்வுகளோ, தவிர்க்க முடியாத விஷயங்களோ அல்ல. இதன் பின்னால் உள்ள அரசியல் பொருளாதாரத்தை விளக்கிடும்  சிறு முயற்சியை இக்கட்டுரை மேற்கொள்கிறது.

சென்னை (மெட்ராஸ்), கல்கத்தா, மும்பை உள்ளிட்ட நகரங்கள் பிரிட்டிஷ் ஆட்சி காலத்திலேயே துறைமுகம், வர்த்தகம் சார்ந்து வளர்ச்சிபெற்று வந்தன. இந்திய விடுதலைக்கு பிறகான காலப்பகுதியில் புதிய வளர்ச்சிப் போக்குகளின் விளைவாக நகரங்கள் விரிவடைந்தது. அதன் முக்கிய விளைவாக, நகரத்தின் வளர்ச்சிக்கான அடித்தளமாக விளங்கிய உழைக்கும் மக்களும் நகரங்களில் குவிந்தனர். அதேநேரம் சுரண்டல் நிறைந்த முதலாளித்துவ அமைப்பு முறையில் அவர்களுக்கு கிடைத்த குறைந்த கூலியில் குடிசை பகுதிகளில்தான் குடியிருக்க முடிகிறது. கூவம் ஆற்றங்கரையிலும், நெருக்கடி நிறைந்த, காற்றோட்டம் இல்லாத, குடிநீர், கழிப்பிடம், அடிப்படைகள் வசதிகள் ஏதுமற்ற, குறுகிய சந்துகளையே சாலைகளாக கொண்ட, மழை / வெயில் என எந்த காலத்திலும் வாழ தகுதியற்ற மூச்சுத்திணறும் சிறு அறைகளை கொண்ட அல்லது அறைகளற்ற வீடுகளில், அங்கு நிலவும் சுகாதாரமற்ற சூழலில் வாழவேண்டும் என்பது அவர்களது விருப்பமல்ல. உழைப்பாளிகளின் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கொடுக்கப்படாத சூழலே அவர்களை ஏழ்மையில் தள்ளியது. அதுவே மோசமான வாழ்நிலையிலும் குடியிருப்புக்களிலும் அவர்களை வாழவைக்கிறது. ஆனால், முதலாளித்துவமும் அதன் கண்ணோட்டம் கொண்ட மேட்டிமை சிந்தனையுடையவர்களும், ஏதோ குடிசை பகுதி மக்களின் தவறான போக்கின் விளைவாகவே அவர்கள் அங்கு இருப்பதுபோன்ற கருத்துக்களை பதிவு செய்கின்றனர். முதலாளித்துவம்தான் அவர்களின் அப்படியான வாழ்நிலைக்கு காரணம் என்பதிலிருந்து தப்பித்துக் கொள்ளும் அரசியலும் அதில் உள்ளது.  இன்று நேற்றல்ல; மார்க்ஸ், எங்கெல்ஸ் காலத்திலேயே இப்படியான கருத்துக்களை அவர்கள் முன்வைத்துள்ளனர்.

“வாடகையில் சிறிதளவு பணத்தை மிச்சப்படுத்த முடியுமென்றால், அவர்கள் இருண்ட, ஈரப்பதமான, போதுமானதாக இல்லாத, சுருக்கமாகச் சொல்வதென்றால் சுகாதார நிபந்தனைகள் அனைத்தையும் கேலிக்கூத்தாக்குகின்ற குடியிருப்புக்களை வாடகைக்கு எடுத்துக் கொள்கிறார்கள். பெரும்பாலானவற்றில் சில குடும்பங்கள் ஓர் அறைக்கட்டை, ஒரு சிறு அறையைகூட எடுத்துக் கொள்கிறார்கள். வாடகையை இயன்ற அளவுக்குக் குறைக்க வேண்டும் என்பதற்காக இதைச் செய்கிறார்கள். ஆனால், மறு பக்கத்தில் அவர்கள் தம்முடைய வருமானத்தை உண்மையிலேயே பாபகரமான வழியில் குடிப்பதிலும் எல்லா விதமான சிற்றின்பங்களிலும் விரயம் செய்கிறார்கள்.” என்று ஸாக்ஸ் என்பவர் பதிவு செய்கிறார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் “சாதாரண மக்கள் மதுக்கடைக்குப் போகிறார்கள். அந்தஸ்துடையவர்கள் மனமகிழ் மன்றங்களுக்குப் போகிறார்கள்” என்று தனது ஆசிரியர் இவ்வாறு கூறுவார் என்று எங்கெல்ஸ் அதை நையாண்டி செய்கிறார். மேலும் “முதலாளிகளை பொறுத்தமட்டில், குற்றம் அறியாமையாகக் குறைந்துவிடுகிறது; ஆனால் தொழிலாளர்களைப் பொறுத்தமட்டில், அறியாமையே அவர்களுடைய குற்றத்திற்குக் காரணமாகிவிடுகிறது” என்கிறார் எங்கெல்ஸ்.

துவக்கத்தில் குடிசை பகுதிகள் இருந்த இடங்களிலேயே அதை மேம்படுத்திடும் திட்டங்களை ஆட்சியாளர்கள் மேற்கொண்டனர். புதிய பொருளாதார வளர்ச்சிப் போக்குகள் உழைக்கும் மக்கள் குடியிருக்கும் நிலத்தின் மதிப்பின் மீது தனது பார்வையை செலுத்தியது. அதன் விளைவாக, குடிசை பகுதிகளை மேம்படுத்துவது என்பதிலிருந்து குடிசை பகுதிகளை அகற்றுவது  என்கிற நிலைக்கு அரசும் ஆட்சியாளர்களும் வந்தனர். அதற்கு தேவையான காரணங்களையும் கட்டமைத்தனர். தற்போது குடிசை பகுதிகளை அகற்றுவது என்பதை கடந்து இது ‘ஆக்கிரமிப்பு’ பகுதி, நீர்நிலைகள், மேய்ச்சல் நிலம் என அதன் கைகள் நீள்கிறது. அதுவும் சாஸ்தா பல்கலைக் கழகம் போன்ற பெருநிறுவனங்களின் மீது அவை நீள்வதில்லை. இருக்க இடமின்றி ஒண்டிக்குடித்தனம் செய்யும் எளிய மக்களின் வீடுகள் மீதே அரசின் புல்டோசர்களின் கைகள் நீள்கிறது. இதுவே குடியிருப்புக்கள் மீதான அரசின் வர்க்க கண்ணோட்டத்தை வெளிப்படுத்திவிடுகிறது.

குடியிருப்புகள் குறித்த அரசின் கொள்கைகள்

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் குடியிருப்புகள் குறித்த ஒரு விரிவான அணுகுமுறைகள் எதுவும் உருவாக்கப்படவில்லை. விடுதலை இந்தியாவில் தமிழகம் சார்ந்த கொள்கை ஆவணங்களில் 1956ஆம் ஆண்டுதான் முதன் முதலாக குடிசை பகுதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 1956இல் “குடிசை பகுதி (மேம்பாடு மற்றும் அகற்றுதல்) சட்டம்” இயற்றப்பட்டுள்ளது. மனிதர்கள் வாழ தகுதியற்ற நிலையில்தான் குடிசை பகுதிகள் இருக்கிறது என்று சட்டம் கூறுகிறது. ஒன்று குடிசை பகுதி மக்களை அவர்கள் வசிக்கும் இடத்திலேயே மேம்பாட்டு பணிகளை செய்து கொடுத்து குடியிருக்க அனுமதிப்பது அல்லது அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி வேறு இடத்தில் குடியமர்த்துவது என்பதே அதன் முன்னால் இருக்கும் இரண்டு வழிகளாக அமைந்திருந்தது. இந்த இரண்டு வழிகளில் எதை அமலாக்குவது என்பதை அவ்வப்போது இருந்த சமூக, அரசியல், பொருளாதார சூழல்களே தீர்மானித்துள்ளன.

தேசிய திட்டக் குழுவின் மூலம் 1960களுக்கு முந்தைய இரண்டு தேசிய திட்டங்களிலும் குடிசை பகுதிகளை வேறு இடங்களுக்கு மாற்றுவது குறித்து பரிந்துரைகளை வழங்கியுள்ளன. குறிப்பாக, மும்பை மற்றும் கல்கத்தா சார்ந்து அதிகம் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், நகர்ப்புறங்களின் விளிம்பில் அவர்களை மறு குடியமர்வு செய்யவும் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் இதற்கு கூடுதல் செலவுகளை மேற்கொள்ள வேண்டி வரும் என்பதோடு, அவர்களின் வேலை, சமூகத் தொடர்பு, கல்வி உள்ளிட்டவை கடுமையாக பாதிக்கப்படும் என்பதால், அப்போது அது முன்னெடுக்கப்படவில்லை என்று டில்லி குடிசை பகுதி அகற்றம் குறித்த கட்டுரையில் கெர்ட்னர்தெரிவித்துள்ளார். 1960 முதல் 1970கள் வரை மறுகுடியமர்வு என்பதை விட அவர்கள் குடியிருக்கும் இடத்தை மேம்படுத்துவது என்பதாகவே இருந்து வந்துள்ளது. ஆனால், தற்போது உலக வங்கியின் கடன் மூலம் நிதி கிடைக்கிறது. மக்களின் வேலை, சமூக தொடர்பு, கல்வி குறித்த எவ்வித அக்கறையுமின்றி அரசு மக்களை நகரத்தின் விளிம்பிற்கு துரத்துகிறது.

விடுதலைக்கு பிந்தைய காலப்பகுதியில் சென்னையை நோக்கி வரும் மக்கள் கூட்டம் அதிகரித்தது. இது குடியிருப்பு குறித்த பிரச்சினைகளின்பால் அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி கவனம் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியது. போதுமான அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் உள்ள குடிசை பகுதிகளை மேம்படுத்தி வழங்கிடும் வேலைகளை அரசு மேற்கொள்ளும் என்று ஆட்சியாளர்கள் தெரிவித்தனர். குடியிருப்பு பிரச்சினைக்கான அரசின் தலையீடு என்பது சமூக நிர்ப்பந்தத்தால் விளைந்ததே அன்றி அது யாருடைய கனவு திட்டமாகவும் எழவில்லை. குறைந்த வருமானமுடைய ஏழை எளிய புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் குடிசை பகுதி மக்களுக்கு மேம்படுத்தப்பட்ட குடியிருப்புக்களை வழங்குவோம் என்று காங்கிரஸ் கட்சியினரை வாக்குறுதி வழங்க வைத்தது. இதன் தொடர்ச்சியாகவே, குடிநீர் வசதி, கழிப்பறைகள், மின்சாரம் உள்ளிட்ட வசதிகளை கொண்ட குடியிருப்புகளை உருவாக்குதல் என்கிற வகையிலேயே காங்கிரஸ் ஆட்சி காலத்தில் “மெட்ராஸ் மாகாண வீட்டு வசதி வாரிய சட்டம் 1961” உருவாக்கப்பட்டது. இதுவே தற்போது தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் என்றுள்ளது. குடிசை பகுதிகளை மேம்படுத்தி வாழ்வதற்கு தகுதியான அடிப்படை வசதிகளை கட்டமைப்பது என்கிற வகையில் இது துவங்கப்பட்டது. ஆனபோதும் அதில் போதுமான முன்னேற்றத்தை அதனால் ஏற்படுத்த முடியவில்லை.

1967இல் திமுக தமிழகத்தின் ஆட்சி பொறுப்பிற்கு வந்தது. திமுக-விற்கு சென்னையின் குடிசைபகுதி மக்களிடம் வலுவான செல்வாக்கு இருந்தது.  அவர்களை உள்ளடக்கி திட்டமிடும் நோக்கில் 1970ஆம் ஆண்டு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் உருவாக்கப்பட்டது. இது தமிழகம் முழுவதும் உள்ள குடிசை பகுதிகளின் பிரச்சினைகளை மாநில அளவிளான நோக்கோடு அணுகிட வழி செய்தது. “தமிழ்நாடு குடிசை பகுதிகள் மேம்படுத்துதல் மற்றும் அகற்றுதல் சட்டம் 1971” இயற்றப்பட்டது. குடிசை பகுதிகளில் அதிகமான செல்வாக்கையும் கூடுதல் வாக்கு வங்கியையும் பெற்றிருந்த திமுக-விற்கு அப்பகுதி மக்களை அங்கிருந்து அகற்றி நகரத்தின் விளிம்பிற்கு துரத்துவது என்பது அப்போது விருப்பமானதாக இல்லை. எனவே, குடிசை பகுதிகளை கண்டறிதல், வரைமுறைப் படுத்துதல், மக்கள் குடியிருக்கும் பகுதிகளிலேயே புதிய கட்டிடங்களை கட்டுதல், பொதுக்கழிப்பிடங்கள் அமைத்தல், குடிநீர் விநியோகம் என்பனவற்றை தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் செய்தது. பொதுவாக சமூக நல திட்டங்களை அமலாக்குதல், பொது செலவீனங்களுக்கான நிதி ஒதுக்குவது என்பதெல்லாம் எளிய மக்களுக்கு குறைந்தபட்ச ஆதாரங்களை உருவாக்கும் நோக்கம் கொண்டதாக அமைந்தது. முழுக்க வர்க்க நோக்கோடு உழைக்கும் மக்களை மையப்படுத்தி அமலாக்கப்படாத போதும், பிரபலமான வகையில் சமூக நீதி என்கிற நோக்கோடு எளிய மக்களின் ஒரு பகுதியை அது ஆசுவாசப்படுத்தியது. “ஒவ்வொரு லிபரல் அரசாங்கமும் நிர்பந்திக்கப்படும்போது மட்டுமே சமூக சீர்திருத்தச் சட்டங்களை அவை கொண்டு வரும்…..”. உழைக்கும் மக்களின் அப்படியான போராட்டங்களும் எதிர்வினைகளுமே இன்றுவரை எளிய மக்களை பாதுகாக்கின்ற சட்டங்களையும் ஆணைகளையும் சாத்தியமாக்கியுள்ளன.

மாநில அரசின் கொள்கை மாற்றம்

“ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்” என்பதாகவே ஆரம்பக்கால நடவடிக்கைகள் துவங்கின. கொள்கை ரீதியாக ஏற்பட்ட மாற்றங்கள் ஏழைகளின் சிரிப்பை பறித்தது. குறிப்பாக 1970களின் மத்தியில் சர்வதேச நிதியத்தின் நிதி பங்களிப்பு குடிசை பகுதிகள் மேம்பாடு குறித்த கொள்கை திட்டங்களில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது. 1975இல் தமிழகத்திற்கு உலக வங்கி நிதி பங்களிப்பு செய்தது. குடிசை பகுதிகள் மேம்பாட்டிற்காக 240 லட்சம் டாலரை நிபந்தனைக்குட்பட்ட கடனாக உலக வங்கி வழங்கியது. நிபந்தனையின் பகுதியாக அரசு கட்டிக் கொடுக்கும் வீடுகளுக்கு பயன்பாட்டுக் கட்டணம் வசூலிக்கும்படி கூறியது. தற்போது வரை இந்த உலக வங்கியின் கைகள் மக்களின் பாக்கெட்டில் உள்ள பணத்தை எடுப்பதற்கான துவக்கப் புள்ளியாக அமைந்தது. “மெட்ராஸ் நகர்புற மேம்பாட்டு திட்டம் 1இல் (1971) கொள்கை ரீதியான ஒரு மாற்றத்தை உட்கொண்டது. இதில் பயன்பாட்டாளர் பங்களிப்பு என்கிற வகையில் பணத்தை திரும்பப் பெறுதல் என்பது அறிமுகப்படுத்தப்பட்டது” என்கிறது 1982இல் வெளியான உலக வங்கி அறிக்கை. இதன் விளைவாக ஏழை எளிய மக்கள் வாடகை என்பதாகவோ, மேம்பாட்டிற்கான கட்டணம் என்றோ, பயன்பாட்டு கட்டணம் என்கிற வகையிலோ, பணம் செலுத்த வேண்டிய கட்டாயம் உருவானது. இது மக்கள் மத்தியில் எதிர்வினையை உருவாக்கக்கூடும். அது ஆட்சிக்கு எதிராக திரும்பும் என்கிற சிறு அச்சம் ஆட்சியாளர்களுக்கும் உண்டு. ஆனால், இவ்வாறான கட்டணங்களை வசூலிக்காவிட்டால், தங்களின் நிதி பங்களிப்பை இழக்க வேண்டிவரும் என்றும், பணத்தை வசூலிக்க தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் கூடுதல் முன்முயற்சி எடுக்க வேண்டும் என்றும், உலக வங்கியின் அறிக்கை தெரிவிக்கிறது. கட்டணமில்லா குடியிருப்பு வசதி மற்றும் மேம்பாடு என்பதாக இருந்த குடிசை பகுதி கொள்கை நிலையை உலக வங்கியின் தலையீடு மாற்றியமைத்தது. பல்வேறு நேரடியான மற்றும் மறைமுக காரணங்களால் அதை ஏற்று, ஆட்சியாளர்களும் அதற்கேற்ற வகையில் கொள்கை திட்டங்களை மாற்றி அமைத்தனர். எளிய மக்களிடம் கட்டணம் வசூலிப்பதும் அரசின் பங்களிப்பை குறைப்பதும் அவர்கள் பேசிய சமூக நீதிக்கும் எதிரானது என்பது வெளிப்படை.

இதற்கு பிறகு வந்த எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக அரசு புதிய கொள்கை திட்டத்திற்கு தன்னை முழுமையாக உட்படுத்திக் கொண்டது. திமுக ஆட்சியில் இருந்தபோது, அதனை எதிர்ப்பதற்கும், அந்த ஆட்சியை வீழ்த்தும் செயல்பாட்டிற்கும், ஒன்றிய அரசுடன் இணக்கம் பாராட்டிய அதிமுக, ஆட்சிக்கு வந்தவுடன் ஒன்றிய அரசின் கொள்கை திட்டத்திலும் தன்னை இணைத்துக் கொண்டது. மாநில நலன், தமிழ் நிலம் என்றெல்லாம் பேசிவந்த தமிழக அரசியல் களம் இந்த காலகட்டத்தில் மேலும் அமைதியானது. 1980களில் சர்வதேசிய நிதியத்தின் நிதியை ஏற்றுக் கொண்டது. உலக வங்கி கூறியபடி குடியிருப்புக்களை மேம்படுத்த அரசு செய்த செலவீனங்களை குறைத்துக் கொண்டு, மக்கள் செலுத்த வேண்டிய பயன்பாட்டு கட்டணத்தை அதிகரித்தது. ஏழைகளுக்காகவே வாழ்வதாக தனது படங்களில் நடித்ததின் விளைவாக மக்கள் மத்தியில் பெரிய பிம்பத்தை ஏற்படுத்திய எம்ஜிஆர் ஆட்சி காலத்தில்தான் இவையெல்லாம் நிகழ்ந்தது. உலக வங்கியின் பரிந்துரைகள்படி தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் செயல்பட துவங்கியது. இக்காலத்தில்தான் முந்தைய 240 லட்சம் டாலர் கடன் என்பதை கடந்து 3,000 லட்சம் டாலர் கடனை சர்வதேச நிதியம் வழங்கியது. இதுவும் நிபந்தனைக்குட்பட்ட கடன் என்பதை தனியாக சொல்ல வேண்டியதில்லை. இதைத்தொடர்ந்து 1990களில் தாராளமயத்தை உள்ளடக்கிய புதிய பொருளாதார கொள்கையை இந்திய அரசு அமலாக்கியது, மேலும் உழைக்கும் மக்களின் குடியிருப்பு பிரச்சினையை சிக்கலாக்கியது. தற்போது தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம் என்பது தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என பெயர் மாற்றம் கண்டுள்ளது. அது பெயர் மாற்றம் மட்டுமல்ல; அதன் உள்ளடக்கமும் மாறிவிட்டது. தனியார் பங்களிப்பு, அரசின் பங்களிப்பு குறைப்பு, பராமரிப்பு பணியிலிருந்து வாரியம் வெளியேறுவது, மக்களிடம் பயன்பாட்டு கட்டணத்தை கூடுதலாக பெறுவது என்று அதன் முழுமையான சமூக நோக்கு சிதைக்கப்பட்டுள்ளது. சமூக நீதி எனும் திராவிட சித்தாந்தம் இங்கு கடுமையாக பாதிக்கப்படுகிறது. தனியார்மயத்தை ஆதரிப்பதும், அதனை அமலாக்குவதும், எளிய மக்களை சிக்கலுக்கு உள்ளாக்கும். அது சமூகநீதிக்கு எதிரான அப்பட்டமான செயல்பாடுதான் என்பதை அனுபவங்கள் நிருபிக்கின்றன.

புதிய பொருளாதார கொள்கை அமலாக்கப்பட்ட காலத்திலும், அதற்கு பின்னரும், அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகள்தான் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பில் மாறி மாறி இருந்துள்ளன. இதே காலக்கட்டத்தில் ஒன்றிய அரசுடன் இரு கட்சிகளும் உறவு பாராட்டி வந்துள்ளன. திமுக கணிசமான காலம் ஒன்றிய ஆட்சியில், அமைச்சரவையிலும் பங்கேற்றுள்ளது. பொதுத்துறையை விற்க நேரும் தருணங்களில், சில எதிர்ப்புகளை தெரிவித்ததை தவிர, தனியார்மயத்தையும், தாராளமயத்தையும் உள்ளடக்கிய உலகமயமாக்கலின் புதிய பொருளாதார கொள்கைகளை இவ்வரசுகள் எதிர்த்ததில்லை. இது மாநில அரசில் அவர்கள் மேற்கொண்ட கொள்கை மாற்றங்களிலும் வெளிப்பட்டது. அது குடியிருப்பு பிரச்சினையிலும் தாக்கத்தை செலுத்தியது.

வளர்ச்சித் திட்டங்கள் அனைத்திலும் தனியார் பங்களிப்பு பிரதானமாக்கப்பட்டுள்ளது. அரசின் பங்களிப்பு வெட்டி சுருக்கப்பட்டது. இக்காலத்தில் குடிசை பகுதிகள் மேம்படுத்துவதற்கு பதிலாக அம்மக்களை நகரத்தை விட்டு அகற்றுவதற்கே ஏற்பாடுகள் செய்யப்பட்டன. குறிப்பிட்ட கட்சியின் கோட்டை, இங்குள்ள வாக்குகள் இன்னாருக்குத்தான் என்றில்லாமல் இம்மக்களின் வாக்கு செலுத்தும்முறை மாற்றம் கண்டு விட்டதும், எனவே, அவர்கள் மீதான கவனமும், அவர்களை அங்கேயே தக்க வைக்க வேண்டும் என்கிற தேவையும், ஆட்சியாளர்களுக்கு இல்லாமல் போனது.

குடிசை மக்கள் குடியிருக்கும் இடம் சுகாதாரமாக இல்லை; குடிநீர் சுத்தமாக இல்லை; கழிப்பறை இல்லை; வீடுகள் காற்றோட்டத்துடன் வாழ்வதற்கு ஏற்றதாக இல்லை என்று பிரதானமாக பேசப்பட்டது. எனவே, இவற்றை அங்கு ஏற்படுத்திக் கொடுப்பது முதன்மையாக பேசப்பட்டது. அப்புறப்படுத்துதல் என்பது இரண்டாவதாக இருந்தது. இன்று தனியார் பங்களிப்பு அதிகரித்தவுடன் புதிய வகையில் இந்த விவாதங்கள் திட்டமிட்ட வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்படியான சூழலில், அவர்கள் அங்கு வாழ்வது ஆபத்தானது என்பதாக இருந்த விவாதம், கூவம் கரையோரம் அவர்கள் வாழ்வது அந்த ஆற்றை சீரழிக்கிறது என்றும், அந்த ‘ஆக்கிரமிப்பே’ சுற்றுச்சூழலை சீர்கெடுக்கிறது; இது சமூகத்திற்கே ஆபத்து என்று மாற்றப்பட்டது. கொசஸ்தலை ஆறும், அடையாறு ஆறும், கூவம் ஆறும் மாசு அடைந்ததற்கு அந்த மக்கள் எந்த வகையிலும் காரணம் இல்லை. மோசமான நகர்ப்புற திட்டமிடல், எவ்வித சுத்திகரிப்பும் செய்யாமல் கழிவுகளை கலப்பது போன்ற ‘வளர்ச்சிப் போக்குகளே’ காரணமாகும். ஆனால், கரையோரம் வாழும் மக்கள் மீது மிக எளிதாக பழி சுமத்தி மக்களின் பொதுப்புத்தியில் நச்சுக் கருத்தை புகுத்தி, சமூக ஒப்புதலுடன் அவர்களை நகரை விட்டே விரட்டியடிக்கிறது அரசு. இப்படியான பகுதிகளில் இருந்த மக்களை அகற்றிவிட்டு, அவை எதுவும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கோடு பராமரிக்கப்படவில்லை என்பதுதான் நிதர்சனம். அவ்விடங்கள் தனியாரின் கைகளுக்கு மாற்றப்படுவதும், பொழுதுபோக்கு பூங்காக்கள், வணிகவளாகங்கள் (மால்கள்) என கட்டிடங்களின் தொகுப்பாகவே மாறுகிறது. சென்னையில் பங்கிங்காம் கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்று கூறி கரையோரம் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். ஆனால், அரசின் ஆக்கிரமிப்பில் அந்த கால்வாயில் தூண்கள் போட்டுதான் பறக்கும் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. கூவம் ஆற்றங்கரையில் வாழ்ந்து வந்த மக்கள் இதேபோல் அப்புறப்படுத்தப்பட்டனர். அதே கூவத்தின் இடையில் தூண்களைர் அமைத்துதான் மதுரவாயல் முதல் துறைமுகம் வரையிலான பறக்கும் சாலை திட்டம் அமையவுள்ளது. இதே கூவம் மற்றும் பக்கிங்காம் கரையோரம் இருந்த குடிசைகள் இடிக்கப்பட்ட நிலையில், பெரிய பெரிய தனியார் கட்டிடங்கள் இடிக்கப்படவில்லை. இப்படியான நிலையில் இவர்கள் முன்வைத்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்னவானது?

குடிசை பகுதிகள்தான் அனைத்து குற்றச் செயல்களுக்கும் ஆதாரமான இடம் என்று குறிப்பிடப்பட்டு, இது சுற்றுப்புற மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கிறது என்கிற கருத்தும் பரவலாக்கப்பட்டது. சாராயம் காய்ச்சுவதை பார்க்கும் பார்வையோடு பீர் தொழிற்சாலை மற்றும் மது உற்பத்தி செய்யும் உரிமையாளரை பார்ப்பதில்லை. கஞ்சா உற்பத்தி எந்த குடிசை பகுதிகளிலும் நடக்கவில்லை. கப்பல்கள் மூலமாகவும், விமானம் மூலமாகவுமே கடத்தல்கள் நடக்கிறது. இந்த கனவான்கள்தானே உண்மையில் குற்றவாளிகள். ஆனால் பழி என்னவோ குடிசை பகுதி மக்கள் மீதுதானே?

நகரத்தைவிட்டு விரட்டப்பட்டவர்கள்

இயற்கை பேரிடர்களை காரணம் காட்டியும், குடிசைபகுதி மக்கள் தங்களது குடியிருப்புகளிலிருந்து அப்புறப்படுத்தப்படுகின்றனர். குறிப்பாக, சுனாமி காலத்தில் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்புகிறோம் என்கிற பெயரில், கடற்புற மக்கள் நிரந்தரமாகவே வேறு இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டனர். சென்னை துரைப்பாக்கத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வரிய குடியிருப்பு பகுதியில் சுனாமி குடியிருப்பு என்ற பெயரில் குடியிருப்புகள் உள்ளது. சென்னையின் மைய பகுதியிலிருந்து நகரத்தின் விளிம்பிற்கு துரத்தப்பட்ட மக்களின் வாழ்விட பிரச்சனை மேலும் கூடுதலான சிரமத்திற்குள் அவர்களை தள்ளியுள்ளது. துரைப்பாக்கம் கண்ணகி நகர் பகுதியில் மட்டும் சுமார் 20ஆயிரம் வீடுகள் ஒரே இடத்தில் குவியலாக உள்ளது. இக்குடியிருப்பு சென்னையின் மையத்திலிருந்து பல பத்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.  அங்கிருந்து மேலும்  10 கிலோ மீட்டர் தெலைவில் செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் பகுதியில் சுமார் 27,000 குடியிருப்புக்கள் உள்ளன. இங்குள்ள மக்கள் அனைவரும் சென்னையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு விரட்டப்பட்டவர்களே. இவர்களுக்கான வேலை, கல்வி, சுகாதாரம் வாழ்வாதாரம் என எல்லாமும் கேள்விக்குறியாகவே உள்ளது. எந்த சுகாதார சீர்கேட்டிலிருந்து இம்மக்களை பாதுகாக்கப் போவதாக கூறி அரசு இவர்களை இவ்வளவு தெலைவில் விரட்டியடித்த்தோ அங்கு எவ்வித நலமும், சமூக பாதுகாப்பும் இல்லாமல் வசிக்கின்றனர்.

“முதலாளித்துவ வர்க்கம் நடைமுறையில் குடியிருப்பு பிரச்சினைகளை எப்படி தீர்க்கிறது என்பதற்கு இது ஒரு குறிப்பிடத்தக்க உதாரணமாகும். முதலாளித்துவ உற்பத்தி முறையில் நம்முடைய தொழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்புக்கள் நோயின் பிறப்பிடங்களாக விளங்குகிறது. அத்தகைய கேவலமான பொந்துகள் மற்றும் நிலவறைகளை முதலாளித்துவ உற்பத்தி முறையில் ஒழிக்கப்படுவதில்லை. அவை வேறெங்காவது மாற்றப்படுபடுகிறது.” என்கிற எங்கெல்சின் வார்த்தைகளின் உண்மையை, சென்னையை விட்டு விரட்டப்பட்டுள்ள மக்களின் தற்போதைய குடியிருப்புகள் நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

சென்னை வெள்ளதின்போதும் அதை தொடர்ந்தும் பல்வேறு குடியிருப்புக்கள் அகற்றப்பட்டன. இங்குதான் குடிசை பகுதிகளை கடந்து அடுத்த நிலையில் உள்ள பட்டா இல்லாத குடியிருப்புகளில் வாழும் மக்கள் குடியிருப்புக்களின் மீது அரசின் கைகள் நீள்கிறது. மயிலாப்பூர் கோவிந்தசாமி நகர் குடிசைமாற்று வாரியத்தால் குடியிருப்பு பகுதி என வரையறுக்கப்பட்டுள்ளது. ஒரு பொதுநல வழக்கை பயன்படுத்தி அரசு நிர்வாகம் குடியிருப்புகளை அகற்றுகிறது. ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரில் உள்ள குடியிருப்புகளுக்கு ஆட்சியர் பரிந்துரைத்த பிறகும், மேய்ச்சல் புறம்போக்கு நிலம் என்று கூறி குடியிருப்புகளை அகற்ற துடிக்கின்றனர். பயன்பாடற்ற நீர்நிலை பகுதியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் குடியிருந்து வருகின்றனர். அரசு நீர்நிலை என வரையறுத்து கரைகளை கட்டிய பிறகும், பொதுப்பயன்பாட்டில் உள்ள நிலங்களை நீர்நிலை என வகைப்படுத்தி நீதிமன்றங்களின் துணையோடு அகற்ற முயற்சிக்கின்றனர். அடுத்தகட்டமா அரசே ஒதுக்கிய நிலம், குடிசைமாற்று வாரியத்தால் குடியிருப்பு பகுதி என வரையறுக்கப்பட்ட நிலத்தில் வசிப்போரையும் அகற்ற முயற்சிக்கின்றனர். இதற்கு சாதகமாக நீதிமன்றங்களை பயன்படுத்திக் கொள்ளும் ஆட்சியாளர்கள் தங்களின் வர்க்க நிலையை எடுத்துக் காட்டுகின்றனர்.

“முதலளித்துவ உற்பத்தி முறை நீடிக்கின்ற வரை குடியிருப்பு பிரச்சினை, அல்லது தொழிலாளர்களை பாதிக்கின்ற, வேறு சமூகப் பிரச்சினைனையை தனியாக தீர்க்க முடியும் என்று நம்புவது முட்டாள்தனமே.” “பாட்டாளி வர்க்கம், அரசியல் அதிகாரத்தை வென்றெடுத்த உடனே பொதுநன்மையைப் பற்றிய அக்கறையினால் தூண்டப்பட்டுகின்ற நடவடிக்கைகள்  நிறைவேற்றப்படும். (உடைமை வர்க்கத்திடமிருந்து சொத்துக்கள் பறிக்கப்பட்டு உழைக்கும் மக்களுக்கு வழங்கும் நடவடிக்கைகள்) இன்றைய அரசு செய்கின்ற உடைமை பறித்தல்கள், தங்குமிட ஆணைகளைப் போல், அதுவும் சுலபமாக நிறைவேறும்.” என்கிற எங்கெல்சின் வார்த்தைகளே உழைக்கும் மக்களை அணிதிரட்டுவதற்கான போர்குரலாகும்.

——————————————————————————————————————–

CITY and Community என்கிற ஆங்கில இதழில் டிசம்பர் 2019இல் Pranath Diwakar எழுதியுள்ள A Recipe for Disaster: Framing Risk and Vulnerability in Slum Relocation Policies In Chennai, India. எனும் கட்டுரையில் உள்ள தரவுகளை அடிப்படையாக கொண்டு இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

நகரமயமும், நம் முன் உள்ள கடமைகளும் !

அருண் குமார்

தமிழில்: ச.லெனின்

நாட்டில் வேகமாக நகர்மயமாகும் மாநிலங்களில் தமிழ் நாடும் ஒன்று. புள்ளிவிவரங்களின்படி தமிழகத்தின் 48.5 சதவீத மக்கள் நகரங்களில் வசிக்கின்றனர். இந்த போக்கு அடுத்த சில பத்தாண்டுகளுக்குத் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நகர்மயமாதல் என்பது வாய்ப்பு மற்றும் சவால்கள் என இரண்டையும் ஒருங்கே கொண்டுள்ளது.

பொருளாதார மற்றும் சமூக ரீதியான மேம்பட்ட ஒரு வாழ்நிலைக்கான நம்பிக்கையோடு நகரங்களை நோக்கி புலம்பெயரும் மக்களுக்கு நகர்மயம் சவாலாக உள்ளது. அதேநேரம் அரசிற்கோ அதிகப்படியான வரியை விதித்து அதன் வருவாய்க்கான வழிகளை அதிகப்படுத்துவதற்கான வாய்ப்பாக உள்ளது. இந்தப் பின்னணியில், சமூக மாற்றத்தை நிகழ்த்துவதற்கான உறுதிப்பாடுடன் இருக்கும் புரட்சிகர சக்தி என்கிற வகையில் நகர்பகுதிகளில் நமது தலையீடு அவசியமானதாகும். நமக்கு நகர்மயம் என்பது சவாலாகவும் அதேநேரம் வாய்ப்பாகவும் உள்ளது.

கொல்கத்தா பிளீனத்தின் ஸ்தாபனம் குறித்த அறிக்கையில் நகர்ப்புற மக்கள் மத்தியில் நமது தொடர்பை வலுப்படுத்துவதன் அவசியம் குறித்து கூடுதல் அழுத்தம் கொடுத்து குறிப்பிடப்பட்டுள்ளது. நகரங்கள் என்பது தொழிற்சாலைகளில் மையமாக மட்டுமில்லாமல் சேவை துறை சார்ந்த மையங்களாகவும் வளர்ந்து வருகிறது. நாட்டின் உள்நாட்டு உற்பத்திக்கு இந்த இரண்டு துறைகளும் கூடுதலான பங்களிப்பை செலுத்துகிறது என்பதோடு மட்டுமல்லாமல், அவை அதிகமான வேலைவாய்ப்புகளை வழங்கும் இடமாகவும் உள்ளது. கிராமப்புற இளைஞர்கள் பலர் வேலை மற்றும் மேம்பட்ட வாழ்வை தேடி நகரங்களை நோக்கி புலம்பெயர்கின்றனர். நகரங்கள் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தொழில் துறையில் பணியாற்றும் தொழிலாளர்களுடன், சேவை துறை சார்ந்த பணிகளில் வந்து குவியும் புதிய தலைமுறையினர் கூடுதலாக இணைகின்றனர். அந்தவகையில் நகரங்கள் இன்னமும் உழைக்கும் வர்க்கத்தின் முக்கிய மையமாக திகழ்கிறது. எனவே நகரங்களில் நமது அடித்தளத்தை வலுவாக்க வேண்டியது அவசியமாகிறது.

வங்கி, காப்பீடு, கல்லூரிகள், பள்ளிகள், பயிற்சி மையங்கள் என நிதி மற்றும் கல்வி சார்ந்த நடவடிக்கைகள் நகரங்கள் மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகம் நடைபெறுகிறது. வளர்ந்துவரும் தகவல் தொழில் நுட்பத்துறை புதிய தலைமுறையினரின் துறைசார் வல்லுநர்களை (professionals) நகரங்களை நோக்கி வரவைக்கிறது. இவர்களில் பெரும்பகுதியினர் தங்களின் வாழ்வை மேம்படுத்திக்கொள்ளும் கனவுடன் கூடிய, நன்கு படித்த, மத்தியதர வர்க்கத்தினராக உள்ளனர். இருக்கும் பொருளாதார நிலைமைகளில் அவர்களின் கனவுகள் நிராசைகளாகவே முடியும் என்பதை உணர மறுக்கின்றனர். மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்றாததையும், மாசு நிறைந்த சுற்றுச்சூழல், மோசமான பொது போக்குவரத்து, நெருக்கடியான சாலைகள், தங்களை ஆற்றுப்படுத்தி தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வெளி இல்லாமை என்பது போன்ற மோசமான அரசுகளின் மீது அவர்களுக்கு கோபமும் அதிருப்தியும்  உள்ளது. சொந்த வீடு என்பதன் மீதான விருப்பம் கூடுதலாக உள்ளது.  நில விற்பனை சந்தை இம்மக்களை சார்ந்தே உள்ளது. இம்மக்களின் ஆசைகள் மற்றும் அச்சங்களின் மீதே அவர்கள் தங்கள் முதலீட்டை திட்டமிடுகின்றனர். இம்மக்கள் இன்றளவும் நவதாராளமய கொள்கைகள் குறித்து குழப்பமான பார்வையையே கொண்டுள்ளனர். ஒரு பக்கம் சந்தைகள் மூலம் அது வழங்கியுள்ள வாய்ப்பு வசதிகளை நினைத்து மகிழ்கின்றனர். மறுபுறம் வேலை மற்றும் வாழ்நிலை குறித்த நிச்சயமற்ற தன்மைகளை நினைத்து வருந்துகின்றனர். சமூகத்தின் அடிநாதமாக இருக்கும் இம்மக்கள் தங்களின் அதிருப்திகளை வெளிப்படுத்தும் அதேநேரம், இந்த வளர்ச்சிப்போக்கை ஏற்பதா? நிராகரிப்பதா? என்று முடிவெடுக்க முடியாமல் நிற்கின்றனர்.

அரசுக்கும் இம்மக்களுக்குமான முதல் தொடர்பு உள்ளாட்சி அமைப்புகள்தான். அரசு வழங்கவேண்டும் என்று இம்மக்கள் எதிர்பார்க்கும் தேவைகளை உள்ளாட்சி அமைப்புகள்தான் நிறைவேற்றிட வேண்டும். அதேபோல் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளே அவர்களால் உடனடியாக தொடர்புகொள்ள முடிந்த மக்கள் பிரதிநிதியாகும். உள்ளாட்சி அமைப்புகளில் செய்யவேண்டிய பணிகள் குறித்து அதிகமான எதிர்பார்ப்பு இம்மக்களிடம் உள்ளது. ஆனால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு உள்ள வரம்புகள் குறித்து அவர்கள் அறிவதில்லை. எனவே உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மீதே அவர்களின் கோபங்கள் வெளிப்படுகிறது. உள்ளாட்சி அமைப்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி என்ற வகையில் மக்களின் எதிர்பார்ப்புகளை கூடுமான அளவு நிறைவேற்றிட உழைத்திட வேண்டும். அதேநேரம் மக்கள் மத்தியில் இப்பணிகளை மேற்கொள்வதில் உள்ள வரம்புகளையும் எடுத்துக் கூறிடவேண்டும். சமூகத்தில் நவதாராளமயத்தின் மோசமான தாக்கம் குறித்தும் நமது அரசியல் குறித்தும் மக்கள் மத்தியில் எடுத்துரைப்பதற்கான நல்ல வாய்ப்பை இது வழங்கியுள்ளது. மக்களுடன் நேரடித் தொடர்பு கொள்ளும் நிலையில் உள்ள நாம் நிர்வாகம் மற்றும் செயல்பாடுகளில் நமது மாற்று திட்டத்தின் அடிப்படையிலான சிறப்பான செயல்பாடுகள் மூலம் முன்னணி வகிக்க வேண்டும்.

அதிகாரங்களை குவிக்கும் மத்திய அரசின் இன்றைய போக்கை அம்பலப்படுத்திடவேண்டும். அரசியல் சாசனத்தின் 73 மற்றும் 74 ஆம் பிரிவு வழங்கியுள்ள குறைந்தபட்ச அதிகாரப் பரவலையும் மத்திய அரசு சிதைக்கிறது. அதிகாரப் பரவல் மற்றும் மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு  பிரிவுகள் குறித்து கட்சியின் முன்னாள் அகில இந்திய பொதுச் செயலாளர் இ.எம்.எஸ். கீழ்காணும் வகையில் குறிப்பிடுகிறார். “ஜனநாயகபர்வமான அதிகாரப் பரவல் என்பது, உழைக்கும் மக்கள் தங்கள் மீது நிகழ்த்தப்படுகிற ஒடுக்குமுறை மற்றும் சரண்டலுக்கு எதிரான போராட்டத்திற்கு உதவுவதாக இருக்கவேண்டும் என்பதே எனது நம்பிக்கை. தேசிய மற்றும் மாநில அளவில் ஜனநாயகமும், கீழ்மட்ட அளவில் அதிகாரப் போக்கு என்பதே இந்திய அரசியலின் அரசியல் சாசனம் குறிப்பிடுகிறது. மேலும் அரசியல் அமைப்பின் உள்ளடக்கம் மாநிலங்களின் உரிமைகள் மற்றும் அதிகாரத்தின் மீதான மத்திய அரசின் ஆதிக்கத்தை விரிவுபடுத்த வழிவகை செய்கிறது. எனவே, அரசு அதிகாரிகளோ, அரசியல்வாதிகளோ அரசியல் சாசனம் மாநிலங்களுக்கு வழங்கியுள்ள அதிகாரப் பரவலை அமலாக்க தயாராகாமல் இருப்பது குறித்து ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.” இந்தப் இரண்டு பிரிவுகளும் அரசு நிர்வாகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளதே தவிர, தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகளுக்கு கட்டுப்படும் வகையில் அதிகாரிகள் இல்லை.

இந்த அடிப்படையில் அதிகாரப்பரவல் குறித்து நாம் பேசவேண்டியுள்ளது. 73 மற்றும் 74 ஆவது பிரிவுகளின் சாதகமான பங்களிப்புகள் மற்றும் வரம்புகளையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். அனைத்து மாநிலங்களும் உள்ளாட்சி அமைப்புகளை உருவாக்கி, அதற்கான நிதி ஆதாரங்களை உருவாக்கி செயல்பட வைப்பதோடு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தி அவ்வமைப்புகளுக்கான பிரதிநிதிகளை தேர்வு செய்யவேண்டும் என்கிறது இப்பிரிவுகள். நாடுமுழுவதும் ஒரேமாதிரியான செயல்பாடுகளை உத்தரவாதப்படுத்துவதோடு கிராமப்புற மற்றும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இப்பிரிவு அரசியல் சாசனத்திற்குட்பட்ட அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. 74 ஆவது பிரிவின்படி வழங்கப்பட்ட அதிகாரப் பரவலின்படி ‘வளர்ச்சிக்கான பணிகளை திட்டமிடுவது, சுகாதாரம், கல்வி, வறுமை ஒழிப்பு, வீட்டுவசதி, நகர வளர்ச்சி திட்டங்கள், நிலபயன்பாடுகள் குறித்த வரம்புகள், தண்ணீர் விநியோகம், குடிசை பகுதிகளை மேம்படுத்துதல், சிறு தொழில் வளர்ச்சி உள்ளிட்ட 18 முக்கியமான அம்சங்களில் செயல்பட உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் உண்டு. இவையெல்லாம் அதன் அதிகார வரம்பாக தீர்மானிக்கப்பட்டாலும், மாநிலத்திற்கு மாநிலம் அது வேறுபடும். தேர்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதி என்கிற வகையில் மக்கள் நலன் சார்ந்து அவ்வமைப்பை செயல்பட வலியுறுத்துவது நமது கடமையாகும்.

அதேநேரம் அதன் வரம்புகளையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். வேகமான நவதாராளமய காலத்தில் அதற்கேற்ற வகையில்தான் பொருளாதார கொள்கை, அரசு அமைப்பு முறை எல்லாம் மாறிப் போயுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கப்பட்டு வந்த நிதி கடுமையாக வெட்டிச் சுருக்கப்பட்டுள்ளது. சர்வதேசிய நிதி முகமைகளான உலக வங்கி நவதாராளமய சீர்திருத்தங்களை அமலாக்கிட அழுத்தம் கொடுக்கின்றன. தண்ணீர் விநியோகத்திற்கு மீட்டர் பொருத்தி கட்டணம் வசூலிக்க வேண்டும் என்றும், குடிநீர், குப்பை சேகரிப்பு, கழிவு நீர் சுத்திகரிப்பு, பொது இட பயன்பாடு உள்ளிட்டவைகளுக்கு தனித்தனியாக கட்டணம் வசூலிக்க வேண்டும் என்றும், சொத்துவரி, மின்கட்டணம் மற்றும் நிலப்பயன்பாடு உள்ளிட்டவைகளுக்கான கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்றும் அவை கூறுகின்றன. அரசியல் ரீதியான பின்விளைவுகளை சந்திக்க வேண்டும் என்கிற அச்சத்தில் மத்திய மாநில அரசுகள் இவற்றை ஓரே நேரத்தில் அமலாக்க அஞ்சுகின்றன. எனவே உலக வங்கி கொஞ்சம் கொஞ்சமாக அமலாக்கச் சொல்கிறது. அவ்வாறே தற்போது அது அமலாக்கப்படுவதை நாம் பார்க்கிறோம்.

உள்ளாட்சி அமைப்புகள் தண்ணீர் விநியோகம் உள்ளிட்ட மக்களுக்கு ஆற்றும் சேவைகளை தனியார்மயமாக்க வேண்டும் என்கிறது உலக வங்கி. நகரங்களுக்கு 24 மணி நேரமும் தண்ணீர் விநியோகத்தை தனியார் வந்தால்தான் வழங்கமுடியும் என்கிறது. “கொள்கை அடிப்படடையில், பராமரிப்பு மற்றும் செயல்பாட்டுக்கான பணம் என்பது பயன்பாட்டு கட்டணத்தின் மூலமே திரட்டப்பட வேண்டும். சொத்தின் மீதான தேய்மானம் மற்றும்  சொத்துக்கள் மூலம் ஈட்டப்பட வேண்டிய வருமானம் எல்லாம் வரவாக வேண்டும்” என்கிறது உலக வங்கி (2013). பொதுப் பணத்தின் மூலம் அனைவருக்கும் குடிநீர் வழங்குவது சாத்தியமில்லை. எனவே தனியாரை அனுமதிப்பது அவசியம் என்கிறது. “தற்போது ஏழை மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகள் பொது நிதியை செலவு செய்கின்றன. அவை போதுமான திட்டமிடல்கள் இல்லாமலும் தேவையை நிறைவேற்ற போதுமானதாகவும் இருப்பதில்லை. நிதி ஆதாரத்தை திரட்டுவதாக இல்லாமல் நிதியை  செலவழிப்பதாக உள்ளது. எனவே நிதி ஆதாரங்களுக்கான பழைய வழிமுறைகளுக்கு மாறாக, ஒரு புதிய நிதி திரட்டும் முறையை அரசாங்கம் கண்டறியவேண்டும்.”   செலவுகளை ஈடுகட்ட தனியார் முதலீட்டை அனுமதிக்க வேண்டுமென்கிறது உலக வங்கி. ”அனைவரின் தேவைகளையும் பூர்த்தி செய்யவேண்டும் என்கிற விருப்பத்தை அரசியல் கட்சிகளின் தலைமை அடைய நினைத்தால் அவர்கள் சற்று மாற்றி சிந்திக்க வேண்டும்” (உலக வங்கி 2017)

காங்கிரஸ், பி.ஜே.பி மற்றும அனேகமாக அனைத்து மாநில கட்சிகளுக்கும் நவதாராளமய சீர்திருத்தங்களை அமலாக்குவதில் எவ்வித தயக்கமும் இல்லை. இப்படியான சீர்திருத்தங்களை அமலாக்கினால் மக்களின் கோபத்திற்கு ஆளாக வேண்டி வருமே என்பது குறித்து மட்டுமே அவர்களுக்கு அச்சம் உள்ளது. மக்களின் எதிர்ப்பை எதிர்கொள்ளவே ஜனநாயகமும் ஜனநாயக அமைப்புகளும் மெதுமெதுவாக சீரழிக்கப்படுகிறது. மத்தியில் பி.ஜே.பி ஆட்சிக்கு வந்த பிறகு இதன் வேகம் அதிகரித்ததுள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளை பொருத்தவரை அதன் அதிகாரங்கள் வெட்டிச் சுருக்கப்பட்டு, அதன் ஜனநாயக உள்ளடக்கம் நீர்த்துப்போக செய்யப்படுகிறது. இ.எம்.எஸ். சுட்டிக்காட்டியதுபோல் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளால் எடுக்கப்படும் முடிவுகள் மதிக்கப்படாமல் அரசு நிர்வாகத்தின் அதிகாரம் நிறுவப்படுகிறது. நவதாராளமய கொள்கைகளின் அமலாக்கத்திற்கு பிறகு, உலக வங்கியின் வேறொரு பரிந்துரையின்படி தேர்வு செய்யப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு இணையான அரசு அதிகாரிகளின் மையம் உருவாக்கப்பட்டுள்ளது. நகர வளர்ச்சி குழுமம், குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரியம் ஆகியவை இதற்கான உதாரணங்களாகும்.

பி.ஜே.பி உருவாக்கியுள்ள ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கு பிறகு இந்த அமைப்புகளின் உள்ளடக்கம் மேலும் புதிய பரிணாமத்தை அடைந்துள்ளது. சிறப்பு நோக்க திட்டம் (Special Purpose Vehicle) என்று அது அழைக்கப்படுகிறது. இது அரசு மற்றும் தனியார் மூலம் 50:50 என்கிற பங்குகள் அடிப்படையில் செயல்படும். சந்தையில் தனக்கான அங்கீகாரத்தை உருவாக்கிக் கொண்டு கூடுதல் நிதி ஆதாரங்களை பெருக்கிக் கொள்ள வேண்டும். இது தலைமை நிர்வாக அலுவலரை நியமித்து செயல்படும். அவர் மூன்றாண்டுகள் அப்பொறுப்பில் இருப்பார். அதற்கு முன்பாக அவரை அப்பொறுப்பிலிறுந்து விடுவிப்பதாக இருந்தால், மத்திய அரசிடம் முன் அனுமதி பெறவேண்டும். இது 74வது பிரிவு வழங்கியுள்ள உரிமைகள் மீதான தாக்குதலாகும். அதிகாரப் பரவலை நீர்த்துப் போகச் செய்வதாகும். தனியார் அரசு கூட்டு திட்டங்களை ஊக்குவிப்பதோடு, திட்ட மேலாண்மை ஆலோசகர்களை கொண்டு செயல்படும் தன்மையை கொண்டுள்ளது. இது தவிர்க்க முடியாத வகையில் நகர நிர்வாகத்தில் நேரடி ஆதிக்கத்தை செலுத்தும்.

நகர நிர்வாகம் என்பது ஜனநாயக வழிமுறைப்படியான செயல்பாடுகளில் இருந்து நிர்வாக வழிமுறையாக மட்டும் மாற்றப்படும். உள்ளாட்சி தேர்தல்களின் முக்கியத்துவம் குறையும். மேயர், தலைவர் உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் வார்த்தைகளுக்கு எவ்வித மரியாதையும் இல்லாமல் போகும். மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்கிற குறைந்த பட்ச சிந்தனையும் குறைந்துபோகும். மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு முடிவுகள் எடுக்கப்படாமல், லாப நஷ்ட கணக்கின் அடிப்படையிலும் வருமானத்தை ஈட்டுவதற்கான சிந்தனையோடுமே திட்டங்கள் செயல்படுத்தப்படும். பொதுவாக ஆணையர்களாக உள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும்  தலைமை நிர்வாக அலுவலருமே அனைத்து முடிவுகளையும் எடுப்பார்கள். அவர்கள் யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் அற்றவர்களாவர். இது ஜனநாயகத்தின் மீது தொடுக்கப்படும் மோசமான தாக்குதலாகும். இதை எதிர்த்து கடுமையாக போராட வேண்டும்.

கலங்கரை திட்ட வளர்ச்சி என்கிற ஒன்றும் தற்போது முன்நிறுத்தப்படுகிறது. குறிப்பிட்ட பகுதியை தேர்வு செய்து மேம்படுத்துவது, அதை மற்ற பகுதிகள் பின்பற்றுவது என்பதாகும். இது சிறுதுளி தத்துவம் என்பது போன்றதாகும். ஆனால் எங்குமே வெற்றி பெறாது. இது  சென்னை தி.நகர் பகுதியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஸ்மார்ட் சிட்டி திட்டம் போன்றதாகும். அப்பகுதியின் நிலப்பயன்பாடு, போக்குவரத்து முறை, தகவல் தொடர்பு என எல்லாம் நவீனமயமாக்கப்படும். ”நகர்மயத்தின் மூலம் உருவாகியுள்ள நிலம் குறித்த கொள்கை, கட்டமைப்பு சேவை, போக்குவரத்து மேம்படுத்தப்படுவது, ஒருங்கிணைந்த வளர்ச்சி  ஆகியவை இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கான அறுவடையை வழங்கும்.” என்கிறது உலக வங்கி. ஸ்மார்ட் சிட்டிக்கான இடங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்கள் எல்லாம் ஒன்று பணம் படைத்த மேட்டுகுடி பகுதிகளாக உள்ளன; அல்லது நிலத்தின் மதிப்பு கூடுதலாக உள்ள இடமாகவும், வர்த்தக நோக்குடன் அங்குள்ள ஏழை மக்களிடமிருந்து அவற்றை அபகரிக்கும் நோக்கம் கொண்டதாகவும் உள்ளன.

2008 ஆம் ஆண்டு நெருக்கடிக்கு பிந்தைய காலத்தில் நிலம் ஒரு முக்கியமான ஆதாரமாக உள்ளது. அரசு நிலங்களை குத்தகைக்கு கொடுத்தோ அல்லது விற்பனை செய்தோ நிலங்களை பணமாக மாற்றும்  போக்கு அதிகரித்துள்ளது. அரசு நிலங்களில் உள்ள குடிசை பகுதிகளை அகற்றுவதும், அந்த நிலங்களை தனியாருக்கு வாரிவழங்குவதும் நிகழ்கிறது. நில தரகு என்பது நிதி மூலதனத்தின் கூடாரமாக இருந்து அதிகப்படியான லாபத்தை வழங்குகிறது. உலகம் முழுவதும் அவை நிலம் மற்றும் வீடுகள் குறித்த மாயத்தோற்றதை உருவாக்கி வருகின்றன.  குறைந்த விலையில் வீடுகள் என்பவை எல்லாம் ஏழை மற்றும் புலம்பெயர் மக்களுக்கான வீடு கட்டும் வேலைகளை தனியாருக்கு வழங்கும் வேலைகளே ஆகும். தனியார் – அரசு கூட்டு என்பதன் மூலம் ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் வீடு எனும் உள்ளாட்சி அமைப்புகளின் பங்களிப்பை முடக்குகிறது.

நிலம் சம்மந்தப்பட்ட வர்த்தகத்தின் மூலம் ஊழல் மற்றும் முறையற்ற பணப் பரிவர்த்தனை அதிகரிக்கிறது. உள்ளூர் தலைவர்கள், ஒப்பந்தக்காரர்கள், நில தரகர்கள் ஆகியோர் இதன்மூலம் ஊழலில் திளைக்கின்றனர். அரசும் இதை கண்டுகொள்வதில்லை. இவர்கள் அனைவரும் கூட்டு சேர்ந்து செயல்படுவதன் மூலம் குடிசைகளை எளிதில் காலிசெய்து நிலங்களை கொள்ளையடிக்க முடிகிறது. எனவே இதன் ஊழல் நடவடிக்கைகள் ஊக்குவிக்கப்படுகிறது.

இந்தப் பின்னணியில் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளின் முன்னுள்ள சவால்கள் மகத்தானதாகும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) பிரதிநிதிகளுக்கு கூடுதலாக இது பொருந்தும்.

அவ்வாறு மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் தேர்வாகியுள்ள பிரதிநிதிகளின் முதல் கடமை மக்களின் நலன்சார்ந்து மக்களுடன் இரண்டறக் கலந்து பனியாற்றுவதாகும். உள்ளாட்சி அமைப்புகளுக்குள்ள வரம்புகளும் விளக்கப்படவேண்டும். குடிசை பகுதிகளுக்கு சுகாதாரம், மருத்துவம்,  கல்வி, தண்ணீர் மற்றும் கழிப்பறை வசதிகள் கிடைத்திட முன்னுரிமை வழங்கிட வேண்டும்.

தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதி என்ற வகையில் குடியிருப்போர் நலச்சங்கம், அடுக்குமாடி கட்டிட அமைப்புகள் துவங்கி அவர்கள் மூலம் மக்களின் கோரிக்கைகளை அடையாளப்படுத்தி முன்னெடுப்பது. அந்த அமைப்புகளின் மூலம் ஜனநாயகத்தின் மீதான விருப்பத்தை வளர்த்தெடுத்து, கீழிருந்து வரும் குரல்களுக்கு செவிசாய்த்திட வேண்டும். சொத்துவரி உயர்வு, பயன்பாட்டு கட்டணங்கள் விதிப்பது போன்றவற்றுக்கு எதிராக இந்த குடியிருப்பு சங்கங்கள் செயல்படுவதை முதல் வேலையாக மாற்ற வேண்டும். உள்ளாட்சி அமைப்புள் தங்களின் செயல்பாட்டிற்காக எவ்வாறு ஒன்றிய மற்றும் மாநில அரசுகளை சார்ந்துள்ளன என்பதை விளக்க வேண்டும்.  ஏனெனில் இந்த அரசுகளின் செயல்பாடுகளே நவதாராளமய சீர்திருத்தங்களுக்கு இணங்கச் செய்கிறது. கொரோனா தொற்று காலத்தில் சொத்து வரி உயர்வை உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி வழங்குவதற்கான நிபந்தனையாக மாற்றியுள்ளது ஒன்றிய அரசு. உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி ஒதுக்குவதற்கு பதிலாக, தனியார் மற்றும் வெளி நிதி அமைப்புகளிடம் நிதி பெறுவதற்கான நிர்ப்பந்தத்தை உருவாக்குகிறது. இவ்வளவு இருந்தபோதும் நாட்டின் உள்நாட்டு உற்பத்தியில் வெறும் இரண்டு சதம் மட்டுமே உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கப்படுகிறது. சீனாவில் 11 சதமும் பிரேசிலில் 7 சதமும் ஒதுக்கப்படுகிறது. இவற்றை எல்லாம் அந்த குடியிருப்போர் நல அமைப்புகளில் விவாதிப்பதின் மூலம் அரசின் தவறான கொள்கைகளுக்கு எதிராக அவர்களை கேள்வி எழுப்ப வைக்க முடியும்.

 ஸ்டாலின் கூறியதுபோல் கம்யூனிஸ்டுகள் தனித்த வார்ப்புகள். நமது நடவடிக்கைகளின் மூலம் அதை நிருபிக்க வேண்டும். ஊழல் நடவடிக்கைகளில் நாம் ஈடுபடாதவர்கள்; அதிலிருந்து வெகுதூரம் நிற்பவர்களாக மட்டும் நிற்காமல், ஊழலுக்கு எதிராக மக்களையும் திரட்டிட வேண்டும். பிறப்பு இறப்பு சான்றிதழ்கள் வாங்குவதில் துவங்கி நில பயன்பாடு, கட்டிட அனுமதி என பல அம்சங்களை லஞ்சம் இல்லாமல் பெறுவது பெரும் சிரமமாக உள்ளது. இவைகளை எளிதில் பெற்று மக்கள் பயன்படும்படி இதை மாற்ற முயற்சிக்கவேண்டும்.

உள்ளூர்தான் மக்கள் கூடுவதற்கும் பேசுவதற்கும் உறவுகளை வளர்ப்பதற்குமான இடமாக உள்ளது. விழாக்கள், பண்டிகைகள், திருமணங்கள் போன்றவையே அதற்கான இடங்களாகும். விளையாட்டு மற்றும் கலை நிகழ்வுகளை நாம் நடத்திட முன்முயற்சிகளை  மேற்கொள்ளவேண்டும். திருவிழாக்களில், பண்பாட்டு நிகழ்வுகளில் நாம் கூடுதலாக பங்கேற்க வேண்டும். பழமைவாத மூடநம்பிக்கை நிகழ்வுகளை கவனமாக தவிர்க்க வேண்டும்.

கொரோனா பெருந்தொற்று முக்கியமான படிப்பினையை நமக்கு வழங்கியுள்ளது. நெருக்கடியான காலங்களில் மக்கள் உதவிக்காக தேடி நிற்பார்கள். அதுபோன்ற காலங்களில் நாம்தான் முதலில் உதவிக்கரம் நீட்டுபவர்களாக இருக்க வேண்டும். கேரளாவில் நமது உள்ளாட்சி பிரதிநிதிகள் தான் மக்களுக்கான உதவிகளையும் அவர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்தனர். வெள்ளச் சேதத்தின்போதும் இப்படியான பணிகளை அவர்கள் மேற்கொண்டனர். அதை நாம் அனைத்து பகுதிகளிலும் செய்திடவேண்டும். இதுபோன்ற தன்னலமற்ற பணிகள் மூலம்தான் மக்களின் மனத்தை  வெல்ல முடியும்.

உள்ளாட்சி அமைப்புகளின் தன்னாட்சி தன்மையை சீர்குலைக்கும் முதலாளித்துவ கட்சிகளின் செயல்பாடுகளை எடுத்துரைக்க வேண்டும். ஜனநாயகத்தை சீர்குலைப்பது, தனியாருக்கு வளங்களை தாரைவார்ப்பது, அதிகாரிகளின் கையில் நிர்வாகத்தை ஒப்பளிப்பது போன்ற நடவடிக்கைகளை மக்களுடன் உரையாடும்போது அவ்வப்போது விவாதிக்க வேண்டும். எந்த மாதிரியான அரசியல் சூழ்நிலையில் நாம் பணியாற்றுகிறோம் என்பதை மக்களிடம் பேசாமல் விட்டால் அவர்களால் மக்கள் பிரதிநிதிகளான நமது வேலைகளை புரிந்து கொள்ள இயலாது. தற்போதைய நிலையிலேயே தேங்குவதைவிட நமது குறிக்கோளை நோக்கி பயணிப்பதற்கான வேலைகளை  கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும் செய்ய முனைய வேண்டும். நமது அரசியலை மக்களிடம் பேசுவதன் மூலம்தான் அவர்களின் ஆதரவை தொடர்ந்து பெற்று அதை விரிவுபடுத்திட முடியும்.

மதவாத சக்திகள் நகரங்களை தங்களின் இயற்கையான தளமாக பார்க்கின்றன. மத்திய தர மக்களின் ஊசலாட்டத்தையும், அச்சத்தையும் வளர்த்து அவர்களுக்கான ஆதாயத்தை வளர்த்துக் கொள்கின்றனர். நமது நடவடிக்கைகளில் அவர்களின் ஜனநாயகமற்ற தன்மையை விளக்கி நமது சித்தாந்த பிரச்சாரத்தையும் மேற்கொள்ளவேண்டும்.

இ.எம்.எஸ். கூறியதை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். “ஒன்றிய மற்றும் மாநில நாடாளுமன்ற\ சட்டமன்ற  ஜனநாயகத்தை பாதுகாப்பதோடு, மேலும் அவற்றை மாவட்ட மற்றும் அதற்கடுத்த கீழ்நிலைவரை விரிவுபடுத்துவதே ஜனநாயகத்தின் நான்கு தூண்களாக கருதப்பட்டது.  அதுவே இந்திய சமூகத்தின் முன்னேற்றத்திற்கு முக்கியமானதாகும்.” ஒன்றியத்தில் பி.ஜே.பி ஆட்சியில் இருக்கும் நிலையில் இது கூடுதல் பொருத்தப்பாடுடையதாக உள்ளது.

லெனின் வாசிப்பு எனும் புரட்சிகர பணி

என்.குணசேகரன்

“என்ன செய்ய வேண்டும்?” என்பது லெனினது நூல் தலைப்பு. அது, அவரது வாழ்க்கைத் துடிப்பாகவும் இருந்தது. ‘என்ன. செய்ய வேண்டும்?’ -கேள்வியை இடையறாது எழுப்புவதும், செயல் வியூகத்தை வகுத்து செயல்படுவதும்தான் லெனினது மகத்துவம்!

சொந்த வாழ்க்கையில் சொந்த நோக்கங்கள் அவருக்கு இருந்ததாக எதிரிகள்கூட எழுதவில்லை. பாட்டாளி வர்க்க விடுதலை, உலகப் பாட்டாளி வர்க்க புரட்சிதான் அவரது மூச்சு.


1917-பிப்ரவரியில் புரட்சி நடந்து, முதலாளித்துவ அரசு பதவியேற்ற, அந்த நொடியிலிருந்து, அடுத்து சோசலிசப் புரட்சியை நோக்கி முன்னேற வேண்டும் என்று செயல்பட்டார். அப்போது வெளிநாட்டில் இருந்த அவர், ரஷ்யாவுக்கு திரும்புகிற போதும்கூட, பெண் போராளி கொலந்தாயிற்கு அனுப்பிய குறிப்பில் “அதிகமான புரட்சிகர திட்டங்கள், வியூகங்கள் தேவை!!அதிகமான புரட்சிப் பிரச்சாரம் தேவை!! சர்வதேச பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கான கிளர்ச்சியும் போராட்டமும் தேவை!! அதற்கும் மேலாக, சோவியத்துகள் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும்!!” என்று குறிப்பிட்டிருந்தார்.

அவர் இரண்டு முறை எதிரிகளால் சுடப்பட்டு இருக்கிறார். அவருடைய உடலில் ஒரு குண்டு எடுக்கப்படவில்லை. தனது உடல்நலத்தையும் கூட பொருட்படுத்தாமல் செயல்பட்ட அவரை பல விமர்சகர்கள் ‘மனித வாழ்க்கையின் மீது எவ்வித கருணையும் இல்லாதவர்’ என்று எழுதியுள்ளனர். இது எவ்வளவு தவறான கருத்து என்பதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் உள்ளன.
அவர் தலைமையில் ஆட்சி அமைந்தபோது, அவரை சந்திக்க வருபவர்களும், பல கூட்டங்களிலும் அவருக்கு ஏராளமான பரிசுகள் வழங்கப்படுவதுண்டு. இந்த பரிசுகள் அத்தனையையும் அவர் உடனடியாக குழந்தைகள் மருத்துவமனைக்கு அனுப்பி விடுவார்.

மாற்றுத் திறனாளிகளான இளைஞர்கள், இளம் பெண்களுக்கு தேவையான சிறப்பு உதவிகளை கட்டாயமாக செய்ய வேண்டும் என்பதில் மிகவும் அக்கறை கொண்டிருந்தார்.

ஒருமுறை அவர் படம் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியை ஒரு பெண் கிழித்தெறிந்திருக்கிறார். காவல்துறை அவரை கைது செய்தது. லெனினுக்கு அந்தத் தகவல் கிடைத்தவுடன் இதற்கெல்லாம் கைது செய்யக் கூடாது என்று கண்டித்து அவரை விடுவிக்க செய்தார்.


மாக்சிம் கார்க்கி அவரை மாமுனிவர் என்று புகழாரம் சூட்டினார்.” கடவுளாக்கும் வேலையெல்லாம் கூடாது’ என்று சொல்லி கார்க்கியை லெனின் கடிந்து கொண்டார்.அதுமட்டுமல்லாது இந்தப்போக்கு வளரக் கூடாது என்பதற்காக அரசியல் தலைமைக் குழு சார்பில் தனது உற்ற நண்பரான கார்க்கியை கண்டிக்கவும் செய்தார்.


அவரது 50வது பிறந்தநாள் 1920 ஆம் ஆண்டு வந்தபோது, அவர் ஆட்சிப் பொறுப்பில் இருந்தார்.அவருக்கு ஏராளமான வாழ்த்துக் கடிதங்கள், தந்திகள் குவிந்தன. பிறந்த நாள் கூட்டம் மாஸ்கோவில் நடந்தது. அவரைப் புகழ்ந்து உரை நிகழ்த்தினால், அவருக்குப் பிடிக்காது என்பதால், பேசிய தலைவர்கள் புகழ்ச்சிகள் அதிகம் இல்லாமல் பேசினர். முடிவாக, பேசிய லெனின் தன்னைப் புகழாமல் இருந்ததற்கு அனைவருக்கும் நன்றி என்றார்.


புரட்சிகர சிந்தனை தொகுப்பு
லெனினுடைய எழுத்துக்கள் அனைத்தையும் தொகுத்து வெளியிட வேண்டும் என்று காமனாவ் கூறியபோது,’ முழுக்க முழுக்க தேவையற்ற வேலை’ என்று குறிப்பிட்டார். ‘பழைய எழுத்துக்களை மீண்டும் பிரசுரித்தால் நாம் எவ்வளவு முட்டாள்தனமாக இருந்திருக்கிறோம் என்று வேண்டுமானால் தெரிந்து கொள்ளலாம்” என்று நகைச்சுவையாக குறிப்பிட்டு, அதனை மறுத்தார்.


பிறகு அவரிடம் ‘உங்கள் எழுத்தை பிரசுரிக்காமல் இருந்தால் எதிரிகளுடைய எழுத்துக்களை வருங்கால தலைமுறை படிப்பார்கள்” என்று சக தோழர்கள் பிடிவாதமாக இருந்ததால், அதனை ஏற்றுக்கொண்டார். அவர்கள் உறுதியாக இருந்ததனால்தான் உலகிற்கு புரட்சிகர சிந்தனை பெட்டகம் கிடைத்தது. 45 தொகுதி நூல்கள் உள்ளன. ஒவ்வொன்றும், ஏறத்தாழ 650 பக்கங்கள் கொண்டவை. இன்னமும் அவரது எழுத்துக்கள் ஏராளமாக வெளிவர வேண்டியுள்ளது.


தன்னுடைய சக தோழர்களிடம் லெனின் கடுமையாக நடந்து கொள்வார் என்றும் எழுதுகிறார்கள். அவரோடு கட்சிக் அமைப்புக் கொள்கைகள் விஷயத்தில் கடுமையாக முரண்பட்ட மார்ட்டாவ் எவ்வித நிபந்தனையும் இல்லாமல் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார். அதேபோன்று டிராட்ஸ்கி, ஸ்டாலின், புகாரின், காமனாவ் போன்ற பலர் மீது அவர் கடும் கொள்கை வேறுபாடு கொண்டு, கடுமையாக விமர்சித்திருக்கிறார். ஆனால் அவர்கள் அனைவருமே சோஷலிச உருவாக்கத்தில் முழுமையாக ஈடுபட, அவர்களை முக்கிய பொறுப்புக்களில் அமர்த்தினார். லெனினுக்கு விருப்பு வெறுப்புகளை விட சோஷலிச லட்சியமே பிரதானம்.


ஒரு முறை விளாதிமீர் போன்ச் என்ற அலுவலர் அவருடைய அதிகாரத்துக்கு உட்பட்டு ரஷ்ய அதிபரான லெனினுடைய ஊதியத்தை 500 ரூபிளிலிருந்து, 800 ரூபிள் என்று உயர்த்தினார். இதற்காக அவர் மிக கடுமையாக கண்டிக்கப்பட்டார். தனக்கு ஊதிய உயர்வு கொடுத்ததற்காக ஒருவரை ஊதிய உயர்வு பெற்றவர் தண்டித்தது, வரலாற்றிலேயே முதல் தடவையாக நடந்தது.


லெனினுடைய வாழ்க்கையை வெறும் சம்பவங்களின் தொகுப்பாக வாசிப்பது பலன் தராது. கார்ல் மார்க்சின் பெயரால் அழைக்கப்படும் ஒரு தத்துவத்தை, ஒரு நாட்டில் புரட்சியை நிகழ்த்தும் நடைமுறையோடு இணைத்த மகத்தான வாழ்க்கை லெனினது வாழ்க்கை. ஒரு நாட்டில் நிகழ்ந்த புரட்சி அனுபவத்தில் உலகப் புரட்சிக்கான பொதுக் கோட்பாடுகளை உருவாக்கிய படைப்பாற்றலின் சிகரம் லெனினது வாழ்க்கை. இந்த வகையில் லெனின் வாசிப்பு நிகழ வேண்டும்.


மார்க்சியம் ஐரோப்பிய தத்துவமா?
உலக கம்யூனிஸ்ட் இயக்கங்களின் ஒரு மிகப் பெரிய சவாலாக நீடித்து வருகிற ஒரு பிரச்னை உண்டு. அது என்ன பிரச்னை? தத்துவத்தையும் நடைமுறையையும் இணைத்து, எவ்வாறு வெற்றியை சாதிப்பது என்பதுதான் ஒரு கம்யூனிஸ்ட் இயக்கம் எதிர்நோக்கும் முக்கிய சவால். இதற்கு லெனினியத்தில் ஆழமான பயிற்சி தேவைப்படுகிறது.


லெனினது எழுத்துக்களை வாசித்து, சமகால பிரச்சனைகளோடு பொருத்தி பார்க்கும் நடைமுறையே ஒரு புரட்சிகரமான பணி.


கல்வியாளர்கள், அறிவுஜீவிகள் என அறியப்படுகிற பலர், மார்க்சியம் பற்றி ஒரு கருத்தை தொடர்ந்து எழுதி வருகின்றனர். ‘மார்க்ஸ் ஐரோப்பிய நிலைமைகளில் எழுதிய கருத்துக்கள் எல்லாம் அனைத்து நாடுகளுக்கும் பொருந்தாது; அது மேலைநாட்டுத் தத்துவம்; கீழை நாடுகளுக்குப் பொருந்தாது’ என்ற கருத்துக்களை பல கோணங்களில் வாதிட்டு வருகின்றனர்.


மார்க்ஸ் ஆங்கிலேய தொழிற்சாலை உற்பத்தி முறைகளை ஆராய்ந்துதான் பல கண்டுபிடிப்புக்களை உருவாக்கினார் என்பது உண்மையே. ஆனால் பிரிட்டிஷ் நாட்டு தொழில் நிலைமைகளில் துவங்கி உலக முதலாளித்துவத்தின் வரலாற்று வளர்ச்சியையும், அது இயங்குகிற அடிப்படை விதிகளையும் உருவாக்கினார். குறிப்பான ஒரு நிகழ்விலிருந்து பொது விதிகளுக்கு வந்தடைந்த மார்க்சின் மேதைமையை மேலோட்டமான சிந்தனைக்கு ஆட்பட்ட அறிவுஜீவிகளால் உணர முடியாது.


அதே போன்று, லெனின், ரஷிய நாட்டின் சமூகப் பொருளாதார நிலைமைகளை ஆராய்ந்து பல முடிவுகளுக்கு வந்தது உண்மைதான். ஆனால் உலகளாவிய சோஷலிச மாற்றம் நோக்கிய, புரட்சிக்கு வழிகாட்டுகிற புரட்சியின் பொதுக் கோட்பாடுகளை கண்டறிந்தவர் லெனின். லெனினியத்தின் மகத்துவம் இது. இதனையும், ஆழ்ந்த வாசிப்பு இல்லாத சாதாரண ‘அறிவுஜீவிகள்’ உணர வாய்ப்பில்லை.


முதலாளித்துவத்தின் அழிவும், புரட்சியின் பிறப்பும்
மார்க்சிய அறிஞர் ஜார்ஜ் லுகாக்ஸ் “லெனினது ஒருங்கிணைந்த சிந்தனையைப் பற்றிய ஆய்வு (Lenin: A study in the Unity of His thought) என்ற நூலினை எழுதினார். நிலைத்த புகழ்பெற்ற இந்த நூல் அடுத்தடுத்த மார்க்சிய தலைமுறையை லெனினியத்தில் நெறிப்படுத்தியுள்ளது.
ஜார்ஜ் லுகாக்ஸ் எழுதினார்: “லெனின் எப்போதுமே பிரச்சனைகளை இந்த சகாப்தத்தின் பிரச்னைகள் என்ற முழுமைத்தன்மையுடன் பார்த்தார்”என்று எழுதுகிறார்.


இதில் முக்கிய சில அம்சங்கள் அடங்கியிருக்கின்றன.
முதலாளித்துவத்தின் இறுதிக் கட்டமாக தற்போதைய காலம் விளங்குகிறது.
இது, பாட்டளி வர்க்கத்திற்கு சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, முதலாளித்துவ வர்க்கத்திற்கும், பாட்டாளி வர்க்கத்திற்கான இறுதிப் போராட்டத்தை நடத்திட எண்ணற்ற வாய்ப்புக்களை தவிர்க்க இயலாதவாறு இன்றைய நிலை நமக்கு ஏற்படுத்தி தருகிறது.
இந்த இறுதிப் போராட்டமே, மனித விடுதலைக்கு இட்டுச்செல்லும்.
இதுவே லெனினிய சிந்தனைகளின் அடிப்படை.


வரலாறு உருவாக்கியுள்ள இன்றைய காலம், முதலாளித்துவத்தின் இறுதி கட்டம் என்ற அழுத்தமான இடத்திலிருந்துதான் லெனின் தனது அனைத்துச் செயல்பாடுகளையும் அமைத்துக்கொண்டார். புரட்சியை கனவு என்கிற நிலையிலிருந்து, புரட்சியை சாத்தியமான ஒன்றாக அணுகுகிற தனிச்சிறப்பு கொண்டது லெனினியம்.
புரட்சி என்ற விரிந்த பார்வையிலிருந்து அன்றாடப் பிரச்னைகளை அணுகும் கலையை லெனினியம் கற்றுத் தருகிறது.
புரட்சி எனும் சமூக சித்திரம்
முதலாளித்துவத்தின் அழிவும்,புரட்சியின் பிறப்பும் தவிர்க்க இயலாதது என்ற முடிவினை மார்க்சிய வழியில் வந்தடைந்த லெனின், அடுத்து சில கேள்விகளை எழுப்பினார். புரட்சி எனும் சமுக சித்திரத்தை தீட்டிடும் பணியினை யார் வெற்றிகரமாக செய்து முடிப்பார்கள்? எந்த வர்க்கம் புரட்சிக்கு தலைமையேற்று வெற்றி வாகை சூடிடும்?
லெனினுக்கு முந்தைய தலைமுறையினரும் இதனை சிந்தித்துள்ளனர். பொதுப்படையாக, புரட்சிக்கு,“மக்கள் தலைமை”ஏற்பார்கள் என்று தெளிவற்ற கருத்துக்களை அவர்கள் கொண்டிருந்தனர். ரஷியாவில் தோன்றிய நரோத்னியம் இப்பிரச்னையை வெகுவாக குழப்பிக்கொண்டிருந்தது.


முதலாளித்துவத்தை அழிக்கும் வல்லமையும் ஆற்றலும் கொண்டது பாட்டாளி வர்க்கமே என்ற முடிவுக்கு ஏற்கனவே மார்க்ஸ் வந்தடைந்தார். அதனை முதலாளித்துவம், போர்வெறி கொண்டு, நாடுகளை பங்குபோட்டுக்கொள்ளும் மூர்க்கத்தனத்தோடு, ஏகாதிபத்தியமாக வடிவெடுத்த சூழலில், பாட்டாளி வர்க்கப் புரட்சி என்ற கருத்தாக்கத்தை லெனின் வளமை கொண்டதாக மாற்றினார்.
அதிலும் ரஷிய நிலைமைகளை துல்லியமாக ஆராய்ந்து, தொழிலாளி வர்க்கத்தின் முக்கிய நேச சக்தியாக விவசாயப் பிரிவினர் விளங்குவார்கள் என்பதையும், புரட்சியை அரங்கேற்றுவது “தொழிலாளி-விவசாயி” கூட்டணி என்பதையும் நிறுவினார் லெனின். இந்த கூட்டணி ஒடுக்கப்படுகிற, சுரண்டப்படுகிற வர்க்கங்களின் புரட்சிக் கூட்டணி என்று கூறினார் அவர். இதனை வார்த்தைகளால் விளக்கியது மட்டுமல்ல; நடைமுறையில் அந்தக் கூட்டணியை உருவாக்கி, ரஷியாவில் பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தினை கைப்பற்றும் புதிய வரலாற்றையும் லெனினியம் படைத்தது.
இது தானாக நிகழ்ந்திடாது. தலைமையேற்கும் தகுதியை பாட்டாளி வர்க்கம் உணர்வுரீதியில் பெற்று உயர்ந்திடவேண்டும். இது புரட்சிகர கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி ஆற்ற வேண்டிய கடமை. அத்தகைய கட்சியை எவ்வாறு கட்டிட வேண்டும் என்பதனையும், லெனினியம் விளக்குகிறது. புரட்சி, இந்த சகாப்தத்தில் பிறப்பெடுக்க உள்ளது என்ற பின்னணியில்தான் கட்சிக் கோட்பாடுகளை லெனின் வரையறுத்தார்.


முதலாளித்துவம் வரலாற்றில் அந்திம சகாப்தமாக உள்ளது என்று மார்க்சியம் அறிவியல் பூர்வமாக எடுத்துரைக்கிறது. இயக்கவியல் வரலாற்று பொருள்முதல்வாதம் இந்த முடிவுக்கே இட்டுச் செல்கிறது. இதனை சொல்லுகிறபோது ஒரு தவறான புரிதல் இயல்பாக ஏற்படுகிறது.


முதலாளித்துவம் பொருளாதார ரீதியில் பரிணாம வளர்ச்சி ஏற்பட்டு, தானாக சோசலிசத்தை வந்தடையும் என்ற கருத்து புரட்சி இயக்கத்தில் தோன்றுகிறது. இதனை எதிர்த்த கருத்துப் போராட்டத்தை ரோசா லக்சம்பர்க் போன்ற போராளிகள் நிகழ்த்தியுள்ளனர்.


லெனினும் தீவிரமாக இதனை எதிர்கொண்டார். பிற்போக்கு நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ சித்தந்தங்களிலிருந்து பாட்டாளி வர்க்கம் தானாக மாறி புரட்சிகர வர்க்க உணர்வு பெற்றிடும் என்ற கருத்தை எதிர்த்துப் போராடியதோடு, இப்பிரச்னைக்கு ஒரு தீர்வினையும் லெனினியம் கண்டது.
அதுதான் ”ஸ்தாபனம்” எனப்படும் கட்சி அமைப்பு முறை.


லூக்காக்ஸ் எழுதுகிறார்: “லெனினது ஸ்தாபனம் பற்றிய கருத்தாக்கம் புரட்சி சாத்தியப்படும் என்ற அடித்தளத்திலிருந்து எழுந்தது.”


முதலாளித்துவ அரசு ஒரு மைனாரிட்டி அரசு. ஏனெனில் அது சமூகத்தில் எண்ணிக்கையில் சிறுபான்மையாக இருக்கும் முதலாளித்துவ வர்க்கங்களைப் பாதுகாத்து வளர்த்தெடுக்கிறது. அந்த அரசு உழைக்கும் மக்களை கடுமையாக சுரண்டுவதற்கும் தன்னை பலப்படுத்தி கொள்வதற்கும் இடையறாமல் முயற்சிக்கிறது. அது மட்டுமல்லாது, பாட்டாளி வர்க்கத்தின் ஒற்றுமை வராமல் தடுத்து, அது புரட்சிகர சக்தியாக வளர்ந்திடாமல் தடுக்க, இடைவிடாமல் முயன்று வருகிறது. எனவே அரசு பற்றிய பிரச்னைகளும், அதனை பாட்டாளி வர்க்கம் கைப்பற்றும் பிரச்னைகளும் முக்கியமானதாக லெனினியம் கருதுகிறது.

மானுடம் அடிமைத்தனத்திலிருந்தும், சுரண்டலிலிருந்தும் விடுதலை பெற மார்க்ஸ் ஏங்கெல்ஸ் வடிவமைத்த தத்துவம் வழிகாட்டுகிறது. புரட்சி எனும் வரலாற்று கடமையை பாட்டாளி வர்க்கம் நிறைவேற்றியதற்கு எதிர்ப்படும் பிரச்சனைகளை தீர்த்திட லெனினியம் வழிகாட்டுகிறது.


எனவே, லெனினது எழுத்துக்கள் விரிவான வாசிப்பிற்கு கொண்டு செல்லப்பட வேண்டும். இது இன்றைய சூழலில் தேவைப்படுகிற உன்னதமான பெரும் பணி.

அக்டோபர் புரட்சியின் நினைவுகளில்…

அய்ஜாஸ் அஹமத்

      அக்டோபர் புரட்சி, பொதுவாக ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்கள் நடந்து வந்த கிழக்கு நாடுகளை நோக்கி, புரட்சிகர உந்துவிசையின் மையத்தை  நகர்த்தியது. கம்யூனிசத்திற்கும், ஏகாதிபத்தியத்திய எதிர்ப்புக்கும் இடையிலான இந்த கூட்டினை, அக்டோபர் செம்புரட்சியின் நீடித்த மரபாகக் காணலாம்.

[இந்தக் கட்டுரையில் அக்டோபர் புரட்சிக்குப் பின் ஏற்பட்ட பிரதிபலிப்புக்களை நாம் பார்க்கப் போவதில்லை. மாறாக, இப்புரட்சி ஏற்படுத்தியிருக்கும் உலகளாவிய குறிப்பிடத்தக்க தாக்கத்தைக் குறித்தும், புரட்சியை வடிவமைத்தோர், அதிலும் குறிப்பாக லெனின்,  புரட்சிக்குப் பின் எத்தகைய அரசு மற்றும் சமூகத்தை நிறுவ நினைத்தனர் என்பது குறித்தும் காண இருக்கின்றோம். இதில் குறிப்பிட்டுள்ள தேதிகளெல்லாம் ரஷ்யாவில் புரட்சி வரை பயன்படுத்தப்பட்ட ஜுலியன் காலண்டரின் அடிப்படையில் இருக்கும். ஜூலியன் காலண்டர் என்பது தற்போது வழக்கத்தில் உள்ள  க்ரிகோரியன் காலண்டருக்கு 13 நாட்கள் பின்னதாக இருக்கும். உதாரணமாக, 1917 புரட்சிக்கு வித்திட்ட ரஷ்ய உழைக்கும் பெண்களின் அணிவகுப்பு க்ரிகோரியன் காலண்டர்படி மார்ச் 8 ஆம் நாள் துவங்கியது. ஆனால், ஜூலியன் காலண்டர்படி பிப்ரவரி 23 ஆகும். எனவேதான் அது பிப்ரவரி புரட்சியாக அறியப்படுகிறது.]

1917 அக்டோபரில் நிகழப்பெற்ற மாபெரும் போல்ஷ்விக்குகளின் புரட்சி என்பது ‘ரஷ்யாவில்’ நடந்த புரட்சியை மட்டும் குறிக்கவில்லை. மாறாக அது உலகில் மனிதகுல வரலாற்றில் ஏற்பட்ட, மிக முக்கியமான, திருப்புமுனை நிகழ்வாகும். இப்புரட்சி, 1789 பிரெஞ்சுப் புரட்சியின் விளைவாக ஐரோப்பாவில் சங்கிலித் தொடராக எழும்பிய புரட்சிகளுக்கு பிறகு ஏற்பட்டது என்றாலும், இந்தப் புரட்சியில்தான் மூலதனத்தின் ஆட்சி ஒழிக்கப்பட்டதுடன், தனிச் சொத்துக்கும் முடிவுகட்டி, வர்க்க சமுதாயத்தின் முடிவுக்கு வழிவகுத்தது. 1917, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் தொடக்கத்தில் லெனினின் எழுத்துக்களில் உடனடியாக ‘அரசு உலர்ந்து உதிரும்’ என்ற எண்ணம் வெளிப்பட்டது (ராணுவம், காவல்துறை மற்றும் அதிகாரிகளை ஒழிப்பதுடன், 20 லட்சம் மக்களிடம் இந்த பணிகள் பகிர்ந்தளிக்கப்படும் என்பதும் அவரின் பார்வையில் காணப்பட்டது). இந்த அம்சங்கள், அதுவரை நடந்த புரட்சிகளில் அமைத்துக்கொண்டிராத இலக்குகளாகும்.

முன்னூறு ஆண்டுகால ஜார் முடியாட்சி, 1917 பிப்ரவரி மாதத்தில் வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து, ரஷ்யாவின் இடதுசாரிகளும், பெரும்பான்மையான போல்ஷெவிக்குகளும், மேற்கத்திய பாணியிலான பூஷ்வா ஜனநாயகத்தை நிலைநிறுத்தவே முயற்சித்தனர். அதற்கு நேர்மாறாக, லெனின், தொழிலாளி – விவசாயிகளை திரட்டி, அவர்களின் தலைமையில் சோசலிச புரட்சியை உடனடியாக நடத்துவதே ‘அடுத்தடுத்த ஐரோப்பிய புரட்சிகளுக்கான முன்னுரையாக’ இருக்கும் என்று வாதிட்டார். அதனை ஒத்த விதத்தில், ஏகாதிபத்திய சங்கிலியின் ‘பலவீனமான கண்ணியாக’ ரஷ்யா அமைந்திருப்பதை அவர் கண்ணுற்றதுடன், புரட்சியின் மூலம் அதில் உடைப்பை ஏற்படுத்தும்போது, ஒட்டுமொத்த சங்கிலியும் தகர்ந்து போகும் என்ற கேந்திரமான பார்வையையும் விளக்கினார். இந்த வகையில், போல்ஷெவிக் புரட்சிக்கு ஐரோப்பிய கண்ணோட்டம் மட்டுமல்லாது, உலகு தழுவிய நெருக்கடியாக அமைந்த காலனி ஆதிக்கத்தையும், ஏகாதிபத்தியத்தையும் தகர்த்திடும் கண்ணோட்டமும் ஏற்பட்டது.

இருபதாம் நூற்றாண்டின் வரலாறு தொடங்கியபோது, பின்வரும் இரு பெரும் விடுதலை சக்திகள் அதற்கு அடிப்படையாக அமைந்தன: அவை 1) முதலாளித்துவத்தில் இருந்து சோசலிச எதிர்காலத்தை நோக்கி மாறிச் செல்லும் போராட்டமும், 2) மூலதனம் வித்திட்ட உலகம் தழுவிய காலனி ஆதிக்க முறையினை தகர்ப்பதற்கான போராட்டமும் ஆகும்.

நூற்றாண்டின் இறுதியில் முதலாளித்துவமே உலகளாவிய அமைப்பாக இருந்து வருகிறது. மூலதனம் மற்றும் குடியேற்றத்தின் மெய்நிகர் தோற்றத்தை நாம் 1914 ஆம் ஆண்டுகளில் நிலவிய சூழலில் இருந்து படம்பிடிக்கலாம். காலனி ஆதிக்க சக்திகளும், அவர்களின் குடியேற்ற நாடுகளும், (அமெரிக்க கண்டத்தில் இருந்த) முன்னாள் காலனி நாடுகளும் உலக பரப்பில் 85 சதவீதத்தினைக் கொண்டிருந்தன. இந்த ஒட்டுமொத்த அமைப்பையும் – மூலதனம், காலனி ஆதிக்கம் ஆகிய இரு பக்கங்களையும்  – தகர்ப்பதுதான் போல்ஷ்விக் திட்டத்தின் இலக்காக அமைந்தது. ரஷ்யாவை மாற்றியமைப்பது மட்டும் அல்ல.   

ஜார் மன்னரின் ஆட்சி ரஷ்யாவில் மட்டும் நடக்கவில்லை. அது மிகப்பெரிய காலனி ஆதிக்க சாம்ராஜ்யமாகவும் இருந்தது. பிரிட்டனும், பிரான்சும் தங்கள் எல்லைகளுக்கு அப்பாலும் காலனி நாடுகளைக் கொண்டிருந்தார்கள். ரஷ்யா அத்தனை பலம் பொருந்தியதாக இல்லை. துருக்கிய மொழி பேசுவோரும், இஸ்லாமியர்களும் அவர்களுடைய அப்போதைய உடனடி காலனிகளாக அமைந்திருந்தன. ஐரோப்பிய கண்டத்திலும், ஆசியாவிலும் அவர்கள் வென்ற பிரதேசங்கள் ரஷ்ய எல்லையினை ஒட்டியதாகவே அமைந்திருந்தன. இருபதாம் நூற்றாண்டின் வரலாற்றில், காலனிய சாம்ராஜ்யங்களுடைய தகர்வு பிரிட்டன் அல்லது பிரெஞ்சு காலனிகளில் இருந்து தொடங்கவில்லை. போல்ஷெவிக் புரட்சியில்தான் தொடங்கியது. சோசலிச சோவியத் ஒன்றியத்தோடு இணைந்த, தன்னாட்சி பெற்ற குடியரசுகளாக, ஜார் மன்னனின் காலனிகள் விடுவிக்கப்பட்டன. ரஷ்யாவின் காலனி நாடுகள்தான் வரலாற்றில் முதல் முறையாக காலனிய ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்று சோசலிச நாடுகளாகின.

காலனிய ஆதிக்கமும் தேசிய பிரச்சனையும் பற்றிய லெனினின் பிரபலமான கருத்தாய்வு ரஷ்ய காலனி நாடுகளின் தொடர்பில் உருவாக்கப்பட்டு மற்ற பகுதிகளுக்கும் பொருந்தக்கூடியதாக விரிவாக்கப்பட்டது என்ற உண்மையும் இங்கே நினைவில் கொள்ளத்தக்கது. போல்ஷ்விக்குகளுடைய புரட்சியின் இத்தகைய தன்மைக்கும், அந்த பாரம்பரியத்திலிருந்து உருவான கம்யூனிஸ்டுகளுக்கும் நன்றி. அவர்கள்தான் வர்க்கத்திற்கும், பேரரசுகளுக்கும் இடையிலான உள்ளார்ந்த உறவு பற்றி பேசினார்கள். காலனி எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசியவாதத்திற்கும் சோசலிச புரட்சிக்கும் இடையிலான தொடர்பினை விளக்கினார்கள். போல்ஷெவிக் புரட்சியின் இந்தத் தன்மைதான் முக்கண்ட பகுதிகளில் அதிர்வினை உருவாக்கியது. (முக்கண்டம் என்ற சொல் மூன்றாம் உலகம் அல்லது தென் புவிக்கோள நாடுகள் என்பதற்கு மாறாக நான் விரும்பி பயன்படுத்தும் சொல் ஆகும்)

வரலாற்றை உருவாக்கிய விவசாயிகள்

விவசாயிகள் தங்கள் வரலாற்றினை தாங்களே தீர்மானிப்போராக எழுச்சி பெற்றிட முடிந்த, வரலாற்றின் முதல் எழுச்சியாக, போல்ஷெவிக் புரட்சி அமைந்தது. பிரெஞ்சு புரட்சியின் போதும் விவசாயிகள் கிளர்ச்சியும், போராட்டங்களும் நடைபெற்றன. ஆனாலும் அவர்களால் நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தையும், பாரிஸ் பாட்டாளிகளையும் கடந்த, புரட்சியை முன் நகர்த்தும் சக்தியாக ஆகிவிட முடியவில்லை. பழைய அதிகாரம் வீழ்த்தப்பட்டது. பெரும் நிலக்கிழார்களுக்கு சொந்தமான எண்ணிலடங்கா பண்ணை நிலங்கள் மறுவிநியோகிக்கப்பட்டன. இந்த நடவடிக்கைகள் விவசாயிகளுக்கு பலன் கொடுத்தன. ஆனால் அவர்களுடைய சொந்த முயற்சிகள் பெரும்பாலும் கண்டுகொள்ளாமல் விடப்பட்டன. சிலசமயம் ஒடுக்கவும்பட்டன. அதற்கு நேர்மாறாக போல்ஷெவிக் புரட்சியின் சமயத்தில், அதற்கான தத்துவ தயாரிப்பிலும் கூட, தொழிலாளி-விவசாயி கூட்டணியே புரட்சியை முன்நகர்த்தும் சக்தியாக அடையாளம் காணப்பட்டது. உண்மையில் புரட்சி செயல்பாட்டிற்கு வந்தபோது – லெனின் குறிப்பிட்ட, சீருடை அணிந்த விவசாயிகள் – உழைப்பாளர்களுக்கும், புரட்சிகர அறிவு ஜீவிகளுக்கும் இடையில் உறவை ஏற்படுத்தும் நடைமுறைப் பிணைப்பாக அமைந்தனர். புனித பீட்டர்ஸ்பெர்க் மற்றும் மாஸ்கோ ஆகிய பெருநகரங்களிலேயே உழைப்பாளர்களும், அறிவுஜீவிகளும் குவிந்திருந்தார்கள். மற்ற இடங்களில் விவசாயிகள் பரவியிருந்தார்கள். போல்ஷெவிக் புரட்சியைத் தொடர்ந்து நடைபெற்ற எல்லா சோசலிச புரட்சிகளிலும் – சீனா, வியட்நாம், கியூபா முதல் கினியா-பிசாவு அதைத் தொடர்ந்து பிற இடங்களிலும் – இவை தொடர்ந்தன: தேசிய/காலனிய பிரச்சனை மற்றும் விவசாய வர்க்கத்தின் பிரச்சனை.

இது, மார்க்சிய சிந்தனையிலேயே, மாபெரும் மாற்றமாகவும் முன்னேற்றமாகவும் அமைந்தது. ஐரோப்பாவின் தொழில்மயமான நாடுகளான – ஜெர்மனி, பிரிட்டன், பிரான்சின் பெரும்பான்மை பகுதிகளிலேயே மார்க்சிய ஆய்வுகள் மையம் கொண்டிருந்தவரையில் அது ஆலைப் பாட்டாளிகளை மையப்படுத்தியதாகவே இருந்தது. முதலாளித்துவத்திற்கு ‘சவக்குழி தோண்டும்’ ஒரே வர்க்கமாக பார்க்கப்பட்டது. பகுதி தொழில்மயமான, பெரும்பாலும் வேளாண்மை சார்ந்திருந்த ரஷ்யாவைப் போன்ற நாடுகளில் புரட்சிகர இயக்கங்கள் தத்துவத்தைக் கைக்கொண்ட உடனேயே, அந்த நாடுகளில் நிலவிய மார்க்சிய வகைப்படாத தீவிர விவசாய இயக்கங்களோடு உரையாட வேண்டியிருந்தது. மார்க்சிய தத்துவத்தின் வழியில் விவசாயிகள் பிரச்சனையை அணுகும் வழிமுறையை மறு சிந்தனைக்கு உட்படுத்த வேண்டியிருந்தது.

முதலாம் உலகப் போர் வெடித்த பின், விவசாயக் குடும்பங்களில் இருந்து பல லட்சக்கணக்கான இளைஞர்கள் ராணுவப் பணியில் சேர்க்கப்பட்டனர்.  ஏற்கெனவே விவசாயிகளிடம் நிலவிய அதிருப்தியின் காரணமாகவும், போர்க்களத்தில் பலியாகும் விதத்தில் அனுப்பிய காரணத்தினாலும் அவர்களது மனங்களில் ஆட்சியாளர்களின் மேல் கோபக் கனல் உருவாகியது. சீருடையில் இருக்கும் விவசாயிகளின் இத்தகைய கோபத்தை ஒருங்கிணைத்து புரட்சியை நோக்கி கொண்டு செல்லலாமா என்ற கேள்வியை லெனின் தோழர்களிடம் எழுப்பினார். புரட்சியின் முக்கிய முழக்கங்களாக நில உரிமையும், சமாதானமும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. போல்ஷ்விக் புரட்சியின் இந்த புத்தம் புதிய தன்மை மார்க்சிய தத்துவத்தின் ஆழத்தையும் வீச்சினையும் விரிவாக்கியது. இதுவே நடைமுறையை சாத்தியமாக்கும் திட்டவட்டமான கொள்கையாக அமைந்ததுடன் மனிதகுல வரலாற்றின் முதல் சோசலிச புரட்சிக்கும் வித்திட்டது. ஆம் அதுதான் முதல் புரட்சி; இறுதியானதல்ல.

ரஷ்யாவின் இரண்டு பகுதிகள்

இரண்டு கண்டங்களில் பரந்து விரிந்துள்ள மாபெரும் நாடு, ரஷ்யா. அதன் பெரு நகரங்கள், அரசியல் மற்றும் நிதியதிகாரத்தின் மையங்கள், தொழிற்சாலைகள், முதலாளிகள், உழைக்கும் வர்க்கங்கள் ஆகியன  ஐரோப்பிய கண்டத்தில், அதிலும் குறிப்பாக, அதன் கிழக்கு பகுதிகளில் அமைந்துள்ளன. விவசாயிகளும், ரஷ்யாவின் காலனிகளும் ஆசியாவில் இருந்தன. லெனினும் அவரது தோழர்களும் அந்நாட்டின் இரு பகுதியினருக்கும் ஏற்றவாறு உத்தியை வடிவமைக்க வேண்டியிருந்தது. இதிலிருந்துதான் புரட்சியின் மாபெரும் உண்மை பிறப்பெடுத்தது. ஐரோப்பிய சமூக ஜனநாயக இயக்கத்தின் வரலாற்றில், காலனி நாடுகளின் விடுதலை ஒரு உடனடி சமூகப் பணியாக கருதப்பட்டிருக்கவில்லை. விவசாய வர்க்கம், ஆற்றல் வளமிக்க புரட்சிகரத் தன்மை மிகுந்ததாக பார்க்கப்படவும் இல்லை. பாதி ஐரோப்பியர்களையும் பாதி ஆசியர்களையும் கொண்டிருந்த ரஷ்யாவில்தான் இந்த சிந்தனை நம்பிக்கையோடு எழுவது சாத்தியமானது. சமூக ஜனநாயகவாதிகளை உள்ளடக்கிய மேற்கு ஐரோப்பாவின் பெரும்பாலான மக்கள், ரஷ்யாவை ஆசியாவாகவும், அரை-ஆசியாவாக,… என பல கோணங்களில் இகழ்ந்தார்கள். அந்த வகைப்பட்ட ஐரோப்பிய சமூக ஜனநாயகவாதிகள், புரட்சியை சாத்தியமாக்க முடியாமல் தோற்றது மட்டுமல்லாமல், ஜெர்மானிய புரட்சியை ஒடுக்கும் சக்திகளோடு கைகோர்க்கவும் செய்தார்கள். எனவே அவர்கள் தவிர்க்கவியலாமல் உலக கம்யூனிச எதிர்ப்பு சக்திகளின் பகுதியாகிப் போனார்கள். போல்ஷெவிக் புரட்சி, ஐரோப்பாவில் நடக்காத காரணத்தினால் அது ‘மேம்பட்ட’ ஒன்றல்ல; தோல்வியைத்தான் தழுவும் என்ற கருத்தினை முன்வைத்தார்கள். 1919 ஜனவரி 15 ஆம் தேதி ஜெர்மனியில், வெய்மர் ஜெர்மனியின் சமூக ஜனநாயக அரசாங்கத்தின் ஆதரவுடன், பாசிச குண்டர்கள் ரோசா லக்சம்பர்க்கினை கொலை செய்தார்கள். இந்தக் கொலை, பிறகு நடக்கவுள்ள நிகழ்வுகளை உணர்த்தும் குறியீடாக அமைந்தது. இரண்டாம் உலகப் போருக்கு பிறகும் கூட, மேற்குலகின் அறிவஜீவிகளால் அரசியல் பொருளாதாரம், தத்துவம் மற்றும் இலக்கிய கருதுகோள்களில் மார்க்சிய தத்துவத்தை வளர்த்தெடுக்க முடிந்தது. ஆயினும் சோசலிச புரட்சிக்கான சாத்தியம் எதுவும் அங்கு தென்படவே இல்லை. சமூக ஜனநாயக அரசாங்கங்கள், முத்தரப்பு ஆணையத்திலும், நேட்டோவிலும் ஏகாதிபத்தியத்தின் தரப்பில் நங்கூரமிட்டிருந்தன.

கடந்த கால வாக்குறுதிகள்

1917 அக்டோபர் மாதம் பற்றிய பார்வைகளில் ஒன்று இது; முற்றிலும் புதுமையான தருணம்; புதிய தொடக்கம். கடந்த காலத்தில் தரப்பட்ட வாக்குறுதிகளெல்லாம் மீட்டெடுக்கப்பட்ட தருணமாகவும் ஒருவர் இதனை சிந்திக்கலாம். மார்க்சும், லெனினும் மகத்தான பிரெஞ்சுப் புரட்சின் பாரம்பரிய கூறுகளை தெளிவாக அறிந்திருந்தார்கள். அதில், க்ராகஸ் பாபெஃப் ( GRACCHUS BABEUF) தலைமையில் செயல்பட்ட அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட ‘சமமானவர்களின் சதித்திட்டத்தின்’, வலிமையான கம்யூனிச தன்மையும் இருந்தது. ஐந்து லட்சத்திற்கும் அதிகமானவர்களை கொண்ட ஜாகோபின் அமைப்பின் விரிவான கம்யூனிச அணுகுமுறையும் இருந்தது. 1871  பாரிஸ் கம்யூன்,  1905 ரஷ்யப் புரட்சி மற்றும் பிப்ரவரி 1917 புரட்சி ஆகியவைகளை உருவாக்கிய அதே காரணிகளுடைய சக்திவாய்ந்த பரிணாமங்கள் போல்ஷெவிக் புரட்சியிலும் இருப்பதாக லெனின் கருதினார். பொதுமை அரசு (“The Commune state”) என்று லெனின் குறிப்பிட்ட விடுதலைக்கான முன்மாதிரியை உருவாக்கும் பணியில் 40 ஆயிரம் கம்யூனிஸ்டுகள் தங்கள் உயிர்களை இழந்தார்கள். இந்த அரசுதான் அவர் கற்பனை செய்த ஒன்று. அதிகாரத்தின் புரட்சிகர மறுசீரமைப்பு: அதுவொரு ஆழமான, தீவிரமான ஜனநாயக வடிவம்; தாராளவாத ஜனநாயகத்தின் வடிவம் அல்ல.

பிரெஞ்சு அரசியல், ஜெர்மானிய தத்துவம் மற்றும் ரஷ்ய இலக்கியத்தின் மரபுகளுடைய வழித்தோன்றலும், நன்கு அறியப்பட்ட ரஷ்ய அறிவு ஜீவியுமான அலெக்சாண்டர் ஹெர்சென், அடிமைத்தனம் அழிக்கப்படுவதற்கு முன்பே, 1850களின் தொடக்கத்திலேயே துல்லியமாக இவ்வாறு கூறினார்: “விவசாயியே எதிர்கால ரஷ்யாவின் மனிதன்”. இதே காலகட்டத்தில் கிரிமியாவில் நடந்த போருக்குப்பின் பழைய நிலப்பிரபுத்துவத்தின் தன்னம்பிக்கை நெருக்கடிக்கு ஆளானது. அவர்கள்தான் அடிமைத்தனத்தின் பயனாளிகளாக இருந்தனர். சமூக சீர்திருத்தமும், நவீனமயமும், தொழில்மயமும், மேற்கத்திய போக்கும் அவர்களை கதறச் செய்தன. இந்த சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக 1861 ஆம் ஆண்டில் அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டது. எனினும் அரைகுறை மனதோடே அது ஒழிக்கப்பட்டது. பழைய நிலப்பிரபுத்துவ முதலாளிகள் தங்கள் நிலங்களில் பாதியை, குறிப்பாக வளமான செழிப்புமிக்க நிலங்களை, தம்மிடமே தக்கவைத்துக்கொண்டார்கள். தனியார் நிலவுடமையாளர்களாக மாறினார்கள். பெரும்பாலான நிலங்கள் விவசாயிகளுக்கு மறுவிநியோகம் செய்யப்படவில்லை. சமுதாய கூட்டுக்குழுவிற்கு வழங்கப்பட்டது (சமுதாய கூட்டுக்குழு MIR என அழைக்கப்பட்டது). விடுதலை பெற்ற அடிமைகளில் 40 சதவீதம் பேருக்கு 15% நிலங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன. இந்த நிலங்களில் பெரும்பான்மையானவை, குறைந்த விளைச்சலே இருந்ததனால் வருமானம் உயிர்வாழ சொற்பமாக இருந்தது. இந்த நிலத்திற்கும் அவர்கள் 49 வருட காலம் தவணை செலுத்திட வேண்டும் (இத்தகைய தவணைகள் 1905 புரட்சிக்குப் பின்னர் ஒழிக்கப்பட்டன). மேலும், பேரரசின் படை அணிகளுக்கு விவசாய மகன்களே நியமனம் பெற்றனர்.

19ஆம் நூற்றாண்டின் பிந்தைய பத்தாண்டுகளில், ரஷ்யாவில் பல தீவிரமான அறிவாளிகள் உருவானார்கள். அவர்களில் வெகு சிலரே நகர்ப்புறத்தில் உள்ள தொழிலாளி வர்க்கத்தின் மீது தங்கள் கவனத்தை செலுத்தினார்கள்; அவர்கள் பெரும்பாலும் நரோத்நிக் (ஜனரஞ்சகவாதிகள்) என அறியப்பட்டார்கள் (ரஷ்ய மொழியில் நரோத் என்றால் மக்கள்). ஆனால் இவர்களும் பல குழுக்களாகப் பிரிந்திருந்தார்கள். அவர்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலானோர் அராஜகவாதத்தையும், தீவிர புரட்சிகர நடவடிக்கைகளையும் மேற்கொள்ளத் தள்ளப்பட்டனர்.  அடிமைத்தனத்தை ஒழித்திட்ட பெருமைக்குரிய ஜார் பயங்கரவாத நடவடிக்கையில் கொல்லப்பட்டார் (19ஆம் நூற்றாண்டின் புரட்சிகர தீவிரவாதிகள் “செயல்பாட்டின் பிரச்சாரம்” என்று அறியப்பட்டார்கள்).

பிற்காலத்தில் பிரபலமாக அறியப்பட்ட, ஜார்ஜ் பிளக்கானொவ், வேரா ஜாசுலிச் என்பவரோடு கைகோர்த்தார். அவர்கள் 1882 காலகட்டத்தில் ரஷ்யாவின் முதல் மார்க்சிஸ்ட் குழுவினை உருவாக்கினர். வேரா ஜாசுலிச், புரட்சிகர கொலையாளியாக பின் நாட்களில் மாறிவிட்டார் (அவர் பார்ப்பதற்கு பேரழகாகவும் இருப்பார்). எப்படியாயினும், ஒரு முறையான, மார்க்சிய அரசியல் கட்சியான – ரஷ்ய சமூக ஜனநாயகக் கட்சி 1898ஆம் ஆண்டில்தான் உருவானது. ஐந்தாண்டுகள் கழித்து 1903ஆம் ஆண்டில் இரண்டாக உடைந்தது. சிறுபான்மையான மென்ஷ்விக்குகளும், பெரும்பான்மையான போல்ஷ்விக்குகளும் சமரசம் செய்ய முடியாத இரு பிரிவுகளாகப் பிரிந்தார்கள். லண்டனில் நடந்த கட்சியின் மாநாட்டில் கலந்துகொண்ட 51 பிரதிநிதிகள் தீர்க்கமான முடிவுகளை மேற்கொள்ள நேர்ந்த சமயத்தில்தான் அவர்களின் இந்தப் பெயர்கள் உருவாகின. மார்டொவ் குழுவில் சில உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை. லெனின் குழுவினர் முக்கியத்துவம் வாய்ந்த அளவில் பெரும்பான்மையாக பங்கேற்றார்கள்.

ரஷ்ய நாட்டின் அறிவுஜீவுகள் மற்றும் செயல்பாட்டாளர்கள் மத்தியில் மார்க்ஸ் அறியப்படாமல் இல்லை. சிலர் அவருடன் நேரடி தொடர்பில் இருந்தனர். அவர்கள் மார்க்சிடம் முன்வைத்த கேள்வி: பாரம்பரிய ரஷ்ய குழு வாழ்வு (Russian commune) புரட்சி உருவாவதற்கும் சோஷலிச சமூக உருவாக்கத்திற்கும் அடித்தளமாக இருக்கிறதா? மார்க்ஸ் ஒரு நீண்ட தயக்கத்திற்கு பின், ரஷ்ய வரலாற்றிலும் பொருளாதாரத்திலும் பல வருடங்கள் மூழ்கினார். இந்த ஆய்வின் ஒரு கட்டத்தில் நிபந்தனைக்குட்பட்ட பதிலை அளித்தார். ஆம்! முதலாளித்துவ கட்டத்தைக் கடக்காமல், சோஷலிசத்தை நோக்கிய மாற்றம் சாத்தியம்; ஆனால் அத்தகைய புரட்சி நடக்க வேண்டும் என்றால், ரஷ்ய மக்களுக்கு ஐரோப்பிய பாட்டாளி வர்க்கத்தின் உதவி தேவை. இப்பிரச்சினை குறித்த இரண்டு அம்சங்கள் குறிப்பிடத்தகுந்தவை. முதலாவது, ரஷ்ய கம்யூனிஸ்டுகளில் பெரும்பான்மையானவர்கள், போல்ஷெவிக்குகளில் பெரும்பான்மை உட்பட – முதலாளித்துவ கட்டத்தை கடப்பது அவசியமானது என்று நம்பினார்கள். பொருளாதார கட்டமைப்பில் மட்டுமல்ல; பாராளுமன்ற தாராளவாத ஜனநாயகத்தை கட்டமைக்க வேண்டும் எனவும் நினைத்தனர். சோசலிசத்தை நோக்கி மாறிச் செல்வதற்கு அது அவசியம் என்று நினைத்தார்கள். [அதுதான் வரலாற்று நிலைகளின் கருதுகோள் என்று பிரபலமாக அறியப்படுகிறது (the famous theory of stages)].

இந்த விசயத்தில் லெனினின் தரப்பு, அக்டோபர் புரட்சிக்கு 2 மாதங்கள் முன்பு வரைக்கும் மிகச் சிறுபான்மையாகவே இருந்தது. ஒவ்வொரு முதலாளித்துவ நெருக்கடியையும், புரட்சிகர நெருக்கடியாக மாற்ற முயற்சிப்பதுதான் புரட்சிகர கட்சியின் பிரதான கடமை என்பதால், தாராளவாத ஜனநாயக காலகட்டம் உழைக்கும் மக்களுக்கும், விவசாயிகளுக்கு பயனற்ற கட்டமாக அமைந்துவிடும் என்று அவர் நம்பினார். இரண்டாவதாக, சூழ்நிலைகள் முதிர்ச்சியடையும் போது புரட்சிகர சக்திகள் ரஷ்யாவில் ஆட்சியைக் கைப்பற்ற முடியும் என்று அவர் கருதினார். ஆனால் அதே சமயத்தில், பிற ஐரோப்பிய நாடுகளில் புரட்சி வெற்றிகரமாக இடம் பெறாத வரை, ரஷ்யாவில் சோஷலிச சமூகத்தை கட்டமைக்க இயலாது என்றும் நினைத்தார். இந்த விசயத்தில் மார்க்சும் லெனினும் ஒத்துப்போனார்கள். ரஷ்யாவின் புரட்சிக்கு, ஐரோப்பிய நாடுகளின் முன்னேறிய பாட்டாளி வர்க்கத்தின் ஆதரவு தேவைப்படும் என்று இருவருமே நினைத்தனர்.

முதலாம் உலகப் போரினால், ஐரோப்பிய நெருக்கடி கட்டவிழ்க்கப்பட்டபோது, பல நாடுகளில், அதிலும் குறிப்பாக ஜெர்மனியில், வெற்றிகரமான புரட்சியை சாதிப்பார்கள் என்று லெனின் நம்பிக்கையோடு இருந்தார். எனவே அந்த கணிப்பில் இருந்து அவர் ஐரோப்பிய புரட்சிக்கான முன்னுரையாக ரஷ்ய புரட்சி அமைந்திடும் என்று நம்பினார். அந்த நம்பிக்கை கேள்விக்குறியானது. போருக்கு பின் ஐரோப்பாவில், அதிலும் குறிப்பாக ஜெர்மனியில், புரட்சிகர மார்க்சிசம் அல்லாமல் பாசிசமே தழைத்தது.  வரலாறு கண்ட முதல் வெற்றிகரமான புரட்சிக்கு பின் (ரஷ்ய புரட்சிக்கு பின்) பல வெற்றியடையாத பதிவுகளையே காண நேர்ந்தது. ஐரோப்பாவின் பிற பகுதிகளில் ஏற்பட்ட புரட்சிகளுடைய இத்தகைய தோல்வியின் பின்னணியில், நிக்கோலாய் புகாரின், ஸ்டாலினுக்காகவும், சோவியத் அரசாங்கங்களுக்குமான வாதத்தில் புதிய கருதுகோளை முன்வைத்தார்: அந்த கருதுகோள்தான் ‘ஒரு நாட்டில் சோசலிசம்’.

புதிய முதலாளித்துவ வர்க்கத்தின் எழுச்சி

கிரிமியப் போரில் ரஷ்யா அடைந்த தோல்வி பன்முக நெருக்கடிகளை உருவாக்கியது. இதுவே அடிமைத்தன ஒழிப்பிற்கு வித்திட்டது. மேலும், நவீனமயமாதலுக்கும், தொழில்மயமாதலுக்கும், பிரான்ஸ் மற்றும் பிரிட்டனிலிருந்து பெருமளவு மூலதனம் பெறுவதற்கும் காரணமாக அமைந்தது. தொழிலிலும் நிதியிலும் அடித்தட்டில் இருந்த ஒரு புதிய முதலாளித்துவ வர்க்கம் படிப்படியாக வளர்ந்தது. அதோடு, விவசாயத்தில் இயந்திரமயமாதலை ஏற்படுத்த விரும்புகிற, தனியார் நில உரிமைகளைக் கொண்டுள்ள,  ஒரு புதிய நிலப்பரபுத்துவ வர்க்கமும் வளர்ந்தது. அந்த நூற்றாண்டின் இறுதியில், 1899-இல் லெனின், தன்னுடைய, “ரஷ்யாவில் முதலாளித்துவத்தின் வளர்ச்சி” என்ற நூலை வெளியிட்டார்.

இதில், நாடு விரிவான மாற்றத்திற்கு உள்ளாகியிருக்கிறது என்றும், அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டதனால் மாற்றத்திற்கு உள்ளாகியிருக்கும் விவசாயிகளோடு கூட்டாக பாட்டாளிகளின் புரட்சிக்கான சூழல் உருவாகியுள்ளது என்றும் வாதிடுகிறார். ஜார் ஆட்சியின் எதேச்சதிகார சூழலில், எதேச்சதிகாரத்துடன் நட்புறவும், அரசியல் உறுதியற்ற தாராளவாத போக்கும் கொண்ட முதலாளிகளையும், அமைப்புரீதியாகத் திரட்டப்பட்ட நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினரையும் கொண்டு புதிய புரட்சியை உருவாக்குவது எப்படி? இந்தக் கேள்விக்கு பதிலாக, போல்ஷெவிக் பாரம்பரியத்தை விளக்கும் முதல் முக்கியப் படைப்பாக 1902ஆம் ஆண்டில் வெளியான ‘என்ன செய்ய வேண்டும்’ அமைந்தது. (லெனின் அவர்கள் இந்த தலைப்பினை நிக்கோலாய் செர்ன்செவ்ஸ்கி எழுதிய, மிகவும் கொண்டாடப்பட்ட நாவலில் இருந்து பெற்றார். 1863ஆம் ஆண்டுகளில் இந்த நாவல் ரஷ்ய இளைஞர்களுக்கு உற்சாகம் கொடுக்கக்கூடிய ஒரு படைப்பாக இருந்தது)

இதற்கிடையில் ஜார் மன்னரின் ஆட்சி சில திட்டங்களை வகுத்தது. கொரிய தீபகற்பத்திலும், மங்கோலியா மற்றும் மஞ்சூரியாவிலும், கிழக்கே தொலை தூரத்தில் உள்ள எல்லைகளில் காலனிய பகுதிகளை கைப்பற்றியது. இந்தப் போக்கில், ஜார் ஆட்சி ஜப்பானின் செல்வாக்குப் பகுதிகளுக்குள் அத்துமீறி நுழைந்தது. ஜப்பானியர்களை இழிவாக நடத்தியதுடன், அவர்களுடைய ராணுவ பலத்தை குறைவாக மதிப்பிட்டு, தன்னுடைய ராணுவத்தின் சாத்தியக் குறைபாடுகளை தள்ளுபடி செய்து, 1904ஆம் ஆண்டில் ஜப்பானின் மீது போர் தொடுத்தது. இதனால் அது தோல்விக்கு மேல் தோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக சமூக-பொருளாதார நெருக்கடிகள் வெடித்தன.

1905ஆம் ஆண்டு ஜனவரியில் முதலில் தொழில்மயமான நகரங்களிலும், பின்னர் சாம்ராஜ்ஜியம் முழுவதுமாகவும் போராட்ட அலையடித்தது. இதில் புதிய விசயம் என்னவென்றால் பெண்கள் அவரவராகவே மிகப்பெரும் எண்ணிக்கையில் திரளத் தொடங்கினர். வேலை நிறுத்தங்கள் தொழிலாளர்களிடமிருந்து கீழ்தட்டு நடுத்தர வர்க்கத்தின் பல பிரிவுகளுக்கும், அதிலும் குறிப்பாக, சிறு முதலாளிகள் மத்தியிலும் பரவத் தொடங்கின. ஆனால் 1917ஆம் ஆண்டில் நடக்கவிருந்த புரட்சிக்கும் இதற்குமான வேறுபாடு என்னவென்றால், ஆங்காங்கே ஏற்பட்ட சில தொந்தரவுகளைத் தாண்டி விவசாயிகள் நகர்ப்புற எழுச்சியிலிருந்து பெரும்பாலும் விலகியே இருந்தார்கள். அடுத்தடுத்த தோல்விக்கு பிறகும், போர்களின் பாதிப்புகளுக்கு பிறகும், ராணுவ வீரர்கள் ஆட்சி அதிகாரத்திற்கே விசுவாசமான இருந்தார்கள். இதற்கு மாறாக, உழைக்கும் வர்க்கத்தின் போர்க்குணம் வரலாற்றுச் சிறப்புடையதாக இருந்தது. ஐரோப்பிய ரஷ்யாவின் பாதி பாட்டாளிகள் தொழில்துறை அதிகமுள்ள இடங்களில் ஆண்டுக்கு ஒருமுறையோ, அதைவிட கூடுதலாகவோ வேலை நிறுத்தங்களில் ஈடுபட்டார்கள். தொழிற்சங்கமாக இணைதல் பிரம்மிக்கத்தக்க அளவில் அதிகமாக இருந்தது.

அந்த காலத்தில் போல்ஷெவிக்குகள், எண்ணிக்கையில் குறைந்தவர்களாகவும், அனுபவமற்றவர்களாகவும் இருந்தனர். இராணுவ வீரர்களின் மத்தியில் பணியாற்றாதவர்களாகவும், விவசாயிகளோடு மேலோட்டமான உறவு கொண்டவர்களாகவும், ஒட்டுமொத்தத்தில், ஒரு புதிய புரட்சிகர கட்சியாகவும் இருந்தார்கள். லெனின் தனது சொந்த சிந்தனையில் 1905ஆம் ஆண்டு புரட்சியின் நிகழ்வுகளைப் பற்றி 400 பக்கங்களில் ஏராளமாக எழுதினார். ரஷ்யாவில் பாட்டாளி வர்க்கம் தீர்க்கமான புரட்சிகர வர்க்கமாக எழுந்து வருவதாகவும், ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினருக்கு தலைமை தாங்கிடவும், தனது தலைமையின் கீழ் விவசாயிகள் உள்ளிட்ட மக்களைத் திரட்டும் நிலையில் இருப்பதாகவும் முடிவிற்கு வந்தார். மேலும் அவர், ரஷ்யாவின் முதலாளிகள், ஜாரின் எதேச்சாதிகாரத்தையோ, மேற்கு ஐரோப்பாவின் முன்னேறிய முதலாளித்துவ வர்க்கங்களையோ எதிர்ப்பார்கள் என்பது தவறான எதிர்பார்ப்பு என்ற முடிவுக்கும் வந்தார். மென்ஷ்விக்குகள் நம்பியது போல், சுதந்திரமான, ஒத்திசைவான, தாராளவாத முதலாளித்துவ குடியரசை அமைப்பது சாத்தியமற்றது என்பதுதான் அவரின் முடிவு.

புதிய புரட்சி என்பது நேரடியாக சோஷலிச பாதையிலே செல்ல வேண்டும் என்றார். வர்க்க பலாபலம் சாதகமாக மாறிவிட்டன என்றும் அவர் முடிவு செய்தார். உழைக்கும் வர்க்கத்தை ஒட்டு மொத்தமாக வழிநடத்த, எந்த ஒரு புரட்சிகர முன்னணியும் இல்லை என்கிற முக்கிய காரணத்தினாலேயே 1905-ஆம் புரட்சி தோல்வியுற்றது என்றும், உழைப்பாளர்-விவசாயி கூட்டணியை செயலூக்கம் கொண்டதாகத் தயார்படுத்த வேண்டும் என்றும் கருதினார். சுருங்கக் கூறினால் 1917-இல் அவர் கையாண்ட கொள்கை வரையறைகள் என்பது 1905 -இல் நிகழ்ந்தவற்றின் பிரதிபலிப்பே!

மென்ஷ்விக்குகளிடமிருந்தும், அகிலத்திடமிருந்தும் பிரிவு

அடுத்த பத்தாண்டுகளில் போல்ஷ்விக்குகள் எண்ணிக்கை அதிகமானது. உழைக்கும் வர்க்கத்தினர் மத்தியில் குறிப்பாகவும், பிற சமூக பிரிவினர்களிடையேயும் கூடுதல் இணக்கத்தோடும், களப் பணிகளில் மிகப்பெரிய அனுபவங்களோடும், கூடுதலான பயிற்சிபெற்ற நிலைமையை அடைந்தார்கள். 1912ஆம் ஆண்டில் மென்ஷ்விக்குகளிடம் இருந்து முழுவதுமாக பிரிந்தார்கள். முதல் உலகப்போர் மூண்டபோது, இரண்டாம் அகிலத்தின் உறுப்பாக இருந்த பல (கம்யூனிஸ்ட்) கட்சிகள் அந்தந்த நாடுகளின் அரசாங்கங்களுக்கு (போரில்) ஆதரவு வழங்கிய சமயத்தில், போல்ஷெவிக்குகளுக்கு தலைமை வகித்த லெனின் அகிலத்தில் இருந்து வெளியேறினார். அவர் இந்த போர், காலனி ஆதிக்க நாடுகளை தங்களுக்குள் மறுபங்கீடு செய்துகொள்ள நடக்கும் ‘ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான போர்’ என்ற வரையறையை முன்வைத்தார். பல லட்சக்கணக்கான உயிர்களை பணயம் வைத்த அந்தப் போரில் 60 லட்சம் பேர் மடிந்தனர். அத்தகைய போரை ஆதரிப்பது, அதிலும் குறிப்பாகத் தங்களை சோஷலிஸ்ட் என்றும், புரட்சிகரமானவர்கள் என்றும் கூறிக்கொள்ளும் கட்சிகளின் ஆதரவு, ஒரு குற்றச் செயல் ஆகும்.   அத்தகைய கட்சிகளோடு இணைந்து பணியாற்றுவது சாத்தியமில்லாத ஒன்று. அவர்களிடமிருந்து போல்ஷெவிக்குகள் உடைத்துக்கொள்ள வேண்டியிருந்தது. மேலும், புரட்சியை முன்னெடுப்பதில் கவனம் செலுத்தவேண்டியதும் இருந்தது. இந்த அனைத்திலும் லெனின் சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட விதத்தில் புரட்சிகர நெறிமுறைகளுக்கு உட்பட்டவராக, விசுவாசமானவராக இருந்தார்.

இருப்பினும், ரஷ்யாவில் புரட்சிகர சாத்தியக்கூறுகள் மேலெழுந்த சமயத்தில் போல்ஷெவிக்குகள், ரஷ்யாவிற்கு உள்ளேயும், அகிலத்திலும் இருந்த சோசலிச அமைப்புகளிடம் இருந்தும் முழுவதுமாக விலகியிருந்தார்கள். இப்படிப்பட்ட கூட்டணியை கைவிடாமலே ஒரு வெற்றிகரமான, வரலாற்றில் ஈடு இணையில்லாத புரட்சியை உருவாக்குவது லெனினுக்கு சாத்தியமாக இருந்திருக்காது. இருப்பினும், அந்த விலகலும், வெளியில் இருந்து ஆதரவு இல்லாத சூழலும், தாங்கொணா பாதிப்புகளை உருவாக்கியிருந்ததும் உண்மையே.

உலகப்போர் ஏற்படுத்திய நெருக்கடிகளும், அக்டோபர் புரட்சியின் வெடிப்பும் இணைந்து ஐரோப்பா முழுவதும் புரட்சிக் கனலை பற்றவைக்கும் என்று லெனின் நம்பினார். ஆனால் அந்த புரட்சிக்கு தலைமை தாங்கப்போவது யார்? ஐரோப்பிய நாடுகளில் எல்லா சோசலிச, சமூக ஜனநாயக கட்சிகளும் அந்தந்த நாடுகளின் முதலாளித்துவ வர்க்கத்துடன் இணைந்திருந்தார்கள். இந்த நாடுகளில் கம்யூனிஸ்டுகளின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தது. அவர்களை, முதலாளித்துவ வர்க்கத்தினர் மட்டுமல்லாமல், சமூக ஜனநாயகவாதிகளும் தாக்கினர். ரோம் நகரில், பெனிட்டோ முசோலினியின் தலைமையில் நடந்த பேரணி, பாசிசம் மேலோங்குவதை எடுத்துக் காட்டியது.

இதற்கு 18 மாதங்களுக்கு முன் கிராம்சி மற்றும் போர்ட்டிகாவின் இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டிருந்தது. அக்டோபர் புரட்சி நடந்ஹதவுடனேயே ஜெர்மனியில் இருந்த சமூக ஜனநாயகக் கட்சி அதனை கண்டித்தது. போருக்கு பின் அந்தக் கட்சிதான் ஆளும் கட்சியானது. ரோசா லக்சம்பெர்க் தனது ஸ்பார்ட்டகஸ் லீக் அமைப்பினை ஜெர்மானிய கம்யூனிஸ்ட் கட்சியாக மாற்றினார். ஓராண்டுக்கு பின் 1919 ஜனவரி மாதத்தில் அவருடைய கொலையை ஆளும் கட்சி வேடிக்கை பார்த்தது. ‘ஐரோப்பிய புரட்சிகள்’ என்ற லெனினுடைய நம்பிக்கை உண்மையில் ஜெர்மனியை மையமிட்டதாகத்தான் இருந்தது. மேற்சொன்ன நிகழ்வுக்கு பின் அந்த நம்பிக்கை கற்பனையாகவும், அடிப்படையற்றதாகவும் மாறிப்போனது. லெனினுடைய கணக்கு பொய்த்துப்போன அரிதான நிகழ்வுகளில் ஒன்றாக இது மாறியது.

கிரீமியாவில் நடந்த போரில் ஏற்பட்ட நெருக்கடியின் காரணமாக, அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டது. தொழில்மயம் துரிதமானது. சீர்திருத்தங்கள் எழுந்தன. மறுபக்கத்தில், இதன் விளைவாக, தீவிர சிந்தனையாளர்கள் உருவானார்கள், ஜனரஞ்சகவாதிகள், அராஜகவாதிகள், புரட்சிகர தீவிரவாதிகளும், ஏன் சோசலிசவாதிகளும் கூட உருவானார்கள். மேற்சொன்ன அனைவரும், ஒருவர் மீது இன்னொருவர் தாக்கம் செலுத்துவோராகவும், இணைந்து செயல்படுவோராகவும் இருந்தனர். 1904 ரஷ்ய – ஜப்பானிய போரின் விளைவாக 1905 புரட்சி ஏற்பட்டது. இது 1917 புரட்சிக்கான முன்னோட்டமாக அமைந்தது. முதலாம் உலகப்போர், போல்ஷெவிக் புரட்சிக்கான சூழலை உருவாக்கிட உதவியது. அதைப் போலவே இரண்டாம் உலகப்போர் சீனப் புரட்சிக்கு தேவையான பின்னணி சூழலை உருவாக்கியது. மேலும், தென்கிழக்கு ஐரோப்பாவில் பல நாடுகளில் சோசலிச அரசாங்கங்கள் உருவாவதற்கும் காரணமாக அமைந்தது. இவையே, ஏகாதிபத்தியங்களுக்கு இடையேயான போர்களின் நோக்கமற்ற உடன் விளைவுகளாகும்.

பெண்களின் பேரணி

1917ஆம் ஆண்டு புரட்சியின் முதல் தவணையாக, பிப்ரவரி மாத கடைசியில் நடந்த பிரம்மாண்டமான மகளிர் பேரணியை குறிப்பிடலாம். உணவுத் தட்டுப்பாடு பிரச்சனையை எழுப்பிய அவர்கள், தொழிற்சாலைகளுக்குச் சென்று, தொழிலாளர்களைத் திரட்டி தம்மோடு இணைத்துக் கொண்டார்கள். இதற்கு ஓராண்டு முன்பாகவே, வேலை நிறுத்தப் போராட்டங்கள் தொடங்கியிருந்தன. தற்போது அவை காட்டுத்தீ போல் பரவி அதிகரித்தன. முக்கியமான இரண்டு கோரிக்கைகளாக, உணவும் சமாதானமும் முன்வந்தது. விரைவிலேயே அந்தப் போராட்டம் முக்கியமான தருணத்தை எட்டியது. பிப்ரவரி மாதத்தில் 25-27 காலகட்டத்தில், எதிர்ப்பாளர்களைச் சுடும்படி ராணுவ வீரர்களுக்கு உத்தரவு வந்தது. அவர்களோ, காவல்துறையினரைச் சுட்டுவிட்டு, போராடும் தொழிலாளர்களோடு இணைந்தார்கள். அதற்கு பிறகு பாலங்களும், ஆயுதக் கிடங்குகளும், ரயில் நிலையங்களும் என மூலதனத்தின் பெரும்பகுதியானவை தொழிலாளிகளின் கைகளுக்கு மாறின.

தொழிலாளர்கள் சோவியத்தினை (மக்கள் சபை) நிறுவினார்கள். போராட்டங்கள் பிற நகரங்களுக்கும், கிராமப்புறங்களுக்கும் பரவியது. தொழிலாளர்களுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையில் வலுவான பரந்த கூட்டணி உருவாகத் தொடங்கியது. நகர்ப் புறத்தில் பணியில் இருந்தபோதும் கீழ்ப்படியாத வீரர்களும், ராணுவத்திலிருந்து கைவிடப்பட்டு போர்க்களத்திலிருந்து வெளியேறி வருவோரும் இதில் அடங்குவர். மார்ச் மாதத்தின் மத்தியில் ஜார் தனது பதவியை விட்டு விலகினார். 300 ஆண்டுகால ரொமனோவ் ஆட்சி முடிவுக்கு வந்து, அந்த இடத்தில் தற்காலிக அரசாங்கம் அமைந்தது. துரிதமாக மாறிவந்த சூழலில், மென்ஷ்விக்குகளும் புரட்சிகர சோசலிஸ்டுகள் உள்ளிட்ட வலதுசாரி சோசலிஸ்டுகள், கிரிகோரி சினொவிவ், ஜோசப் ஸ்டாலின் ஆகிய தலைவர்கள் உள்ளிட்ட பல போல்ஷெவிக்குகள் தற்காலிக அரசாங்கத்திற்கு ஆதரவு நல்கும் நிலையை எடுத்தார்கள். ஒரு நிலையான, முறையான முதலாளித்துவ ஜனநாயகக் குடியரசு உருவாக அரசாங்கத்திற்கு உதவினர். மேலும், பேச்சுரிமை, தேர்தல்கள், அரசியலமைப்பு நிர்வாகம் ஆகியவைகளை உள்ளடக்கிய உறுதிசெய்யப்பட்ட பரந்த உரிமைகளைப் பெற்றிடவும் முயற்சித்தனர். மீண்டும் ஜார் ஆட்சி வராமல் தடுக்கும் விதத்தில், போல்ஷ்விக்குகளையும் மென்ஷ்விக்குகளையும் இணைத்து வலிமையான சோஷலிச அமைப்பை உருவாக்குவதற்கான முதற்கட்ட பேச்சு வார்த்தைகளும் நடைபெற்றன.

ஏப்ரல் ஆய்வறிக்கைகள்

ஜூரிச்சிற்கு நாடு கடத்தப்பட்ட லெனின் மேற்கண்ட நிகழ்வுகளை கவனத்துடன் பின்பற்றி வந்தார். அவருடைய பிரபலமான ‘தொலைவில் இருந்து மூன்று கடிதங்களை’ கட்சியின் போர்வாளான பிராவ்தா இதழுக்கு அனுப்பினார். நாடு திரும்பிய பின், பிரபலமான ‘ஏப்ரல் ஆய்வறிக்கைகளை’ வழங்கினார். இதில் தற்காலிக அரசாங்கத்திற்கு ஆதரவாக வளர்ந்துவரும் கருத்தொற்றுமைக்கு தீவிரமான மறுப்பு இடம்பெற்றதுடன் தாராளவாத ஜனநாயக குடியரசை நிறுவவேண்டும் என்ற கருத்தும் சொல்லப்பட்டிருந்தது. தீவிரமாக மாறுபட்ட ஒரு நிலைப்பாட்டினை அவர் முன்வைத்தார். அவருடைய இணையர் நதேழ்தா குரூப்ஸ்காயா மற்றும் நெருங்கிய தோழர் ஆகியோர் லெனினுக்கு தற்காலிகமாக பித்துப்பிடித்திருப்பதாக நினைத்தார்கள். போல்ஷெவிக்குகளின் அமைப்பிற்கு அவர்தான் ஸ்தாபக தலைவர். ஆனால் இந்தச் சூழலில் கட்சியில் இருந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். எனவே தன்னுடைய ஆய்வறிக்கையினை ‘தனிப்பட்ட’ அறிக்கையாகவே முன்வைத்தார்.

மார்ச் – ஏப்ரல் 1917 காலகட்டத்தில் முன்வைக்கப்பட்ட அவருடைய வாதங்களை சுருக்கமாக கீழே வழங்குகிறேன். முக்கியமான கருத்துக்களின் சுருக்கத்தை சில இடங்களில் நேரடியாகவும் அளித்திருக்கிறேன்.

  1. பிப்ரவரி புரட்சியினை, ஏகாதிபத்திய சக்திகளே நேரடியாக தோற்றுவித்தனர்.
  2. முடியாட்சியின் அதிவிரைவான வீழ்ச்சிக்கு ஒரு காரணம், பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு நாட்டு முதலாளிகள், பலவீனமான ரஷ்ய முதலாளித்துவ வர்க்கத்தோடு செய்துகொண்ட சதி உடன்படிக்கையாகும். டூமாவில் இருந்த முதலாளித்துவ பிரதிநிதிகள், ராணுவ ஜெனரல்கள், அதிகாரிகளோடு கைகோர்த்து ஜாரின் ஆட்சியை தூக்கியெறிவதன் மூலம், நடந்துகொண்டிருக்கும் புரட்சியை கட்டுப்படுத்தி, தாராளவாத, அரசமைப்புக்கு உட்பட்ட, முதலாளித்துவ ஜனநாயகம் மற்றும் மேம்போக்கான சீர்திருத்தங்களை முன்வைத்து, மக்களின் அதிருப்தியை சமாளிக்க முயல்கின்றனர்.
  3. 1905-07 காலகட்டத்தில் படிப்பினைகளை பெற்ற பாட்டாளி வர்க்கம், முதிர்ச்சியடைந்துள்ளது. முதல் நிலையில் இருந்து இரண்டாவது நிலைக்கு, அதாவது பாட்டாளி வர்க்க புரட்சியின் நிலைக்கு தலைமை தாங்குவதற்கு தயாரான நிலையில் இருக்கிறது.
  4.  சோசலிச புரட்சிக்கு முன்னேறாமல், நிலையான முதலாளித்துவ ஜனநாயக கட்டத்தினை முன்வைக்கும் மென்ஷ்விக்குகளும், சோசலிச புரட்சியாளர்களும் நடைமுறையில் உள்நாட்டு – அன்னிய மூலதனத்திற்கு கூட்டாளிகளாகவும், சேவகர்களாகவும் செயல்படுகிறார்கள். அவர்களோடு கைகோர்ப்பது என்பது சாத்தியமில்லை.
  5. மத்தியில் தொடங்கி உள்ளூர் வரையிலும் ராணுவத்தையும், அதிகார வர்க்கத்தையும் உடனடியாக கட்டுக்குள் கொண்டுவர அனைத்து முயற்சிகளையும் தற்காலிக அரசாங்கம் எடுத்து வருகிறது. இது தொடர்வதற்கு அனுமதித்தால், பெட்ரோகார்ட் சோவியத்தில் உருவாகி, நடப்பில் இருந்துவரும்  தொழிலாளர்களின் அரசாங்கத்தை விட பலம் பொருந்தியதாக மாறி சோவியத்தை விழுங்கக் கூடும்.
  6. தற்காலிக அரசாங்கத்தினால் போரை முடிவுக்கு கொண்டுவர முடியாது. ஏனெனில் அது பிரிட்டன் மற்றும் பிரான்சின் முன்னேறிய முதலாளித்துவ வர்க்கத்தை சார்ந்ததாக உள்ளது. போரின் நோக்கங்களில் அவர்களுக்கும் பலன் உள்ளது.
  7. அனைத்து அதிகாரங்களும் சோவியத்துகளுக்கே, சமாதானம், உணவு, விடுதலை என்ற இரண்டு முழக்கங்களும் பிரிக்கமுடியாதவை.
  8. பாட்டாளிவர்க்க புரட்சியின் நோக்கத்தில், “அனைத்து மக்களையும் உள்ளடக்கிய, தொழிலாளர்களால் தலைமை தாங்கப்படுகிற போராளிகளை உருவாக்குவது… அது அனைவருக்குமான வெகுஜன அமைப்பாக இருக்க வேண்டும். நல்ல உடல் தகுதியுள்ள ஆண், பெண் இருவரையும் கொண்டிருக்க வேண்டும், இரண்டாவதாக அது காவலர்களின் பணியை மட்டும் மேற்கொள்ளாமல், பொதுவான அரசு, ராணுவ பணிகளையும் மட்டுமல்லாது, சமூக உற்பத்தியையும், விநியோகத்தையும்  மேற்கொள்ள வேண்டும்.

“நாடாளுமன்ற குடியரசாக அது இருக்கக் கூடாது, மாறாக, நாடு முழுவதும் உள்ள சோவியத் அமைப்புகள், தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் பிரதிநிதிகளுடைய குடியரசாக இருக்க வேண்டும்”

“காவல், இராணுவம் மற்றும் அதிகாரத்துவம் ஒழிக்கப்பட வேண்டும்”

“நிலப் பண்ணைகள் அனைத்தையும் கைப்பற்றிட வேண்டும்”

“பொதுமை அரசு” (“A Commune state”) ( அதாவது,  பாரிஸ் கம்யூன்- ஐ முன்மாதிரியாகக் கொண்ட அரசு என்று லெனின் அடிக்குறிப்பில் சேர்த்துள்ளார்)

மேலே குறிப்பிட்ட முதல் ஏழு கருத்துக்கள், அவரது எதிரிகளுடைய நிலைப்பாட்டிற்கு மாறானதாக இருந்ததுடன், அவருடன் நெருக்கமாக இயங்கியவர்களுடைய  நிலைப்பாட்டிற்கும் மாறானதாக இருந்தது. அத்துடன் எட்டாவது கருத்து, புரட்சிக்கு பிறகு எத்தகைய அரசியல் அமைய வேண்டும் என்பதை, லெனினின் நேரடியான வார்த்தைகளில் விவரிப்பதாக, அதிர்வலைகளை ஏற்படுத்துவதாக அமைந்தது. (ராணுவம் இல்லை; அதிகாரத்துவம் இல்லை; ஆயுதபாணியிலான மக்கள் திரள்)

லெனினுடைய ஆய்வறிக்கைகள் கட்சியின் செயல்பாட்டுக்கான திட்டமாக ஏற்கப்படவில்லை. ஆனால் அந்த அறிக்கைகள்தான் மென்ஷ்விக்குகளுடன் இணைந்து கொள்ளும் நடவடிக்கையை தடுத்தது. தற்காலிக அரசாங்கத்திற்கான ஆதரவை விலக்கிக் கொள்ளச் செய்தது. தாராள நாடாளுமன்ற குடியரசை அமைக்கும் முடிவில் இருந்து பின் வாங்கச் செய்து, கட்சியை காத்தது. இந்தத் தளத்தில் போராட்டங்கள் தொடர்ந்தன. தொழிலாளர்-விவசாயி கூட்டணியுடைய இணைந்த உத்தியும், போருக்கு எதிரான உறுதியான நிலைப்பாடும் பிரமிக்கத்தக்க கட்சி வளர்ச்சிக்கு உதவி செய்தன; ஆண்டின் தொடக்கத்தில் 8,000 உறுப்பினர்கள் கொண்டிருந்த போல்ஷ்விக்குகள் 3,00,000 உறுப்பினர்களை பெற்றதுடன், அந்தாண்டு செப்டம்பர் மாதத்திற்குள் ஒவ்வொரு சோவியத் குடியரசிலும் பெரும்பான்மையைப் பெற்றனர். புரட்சியின்போது முளைத்த பிரபல அமைப்பு வடிவங்களில் போல்ஷ்விக்குகள் பெரும்பான்மை பெறும்போதுதான் ஆட்சியைப் பிடிப்பதை நோக்கி நகர எத்தனிக்க முடியும் என்று லெனின் வலியுறுத்தினார். செப்டம்பர் மாத இறுதியில் அந்த நிலையை அவர்கள் அடைந்தனர். எஞ்சியிருப்பது சரியான வழிமுறையைத் தேர்ந்தெடுப்பதும், சரியான நேரத்தில் தாக்குவதுமே ஆகும்.

ஐரோப்பாவிலிருந்து தொலைவில்

சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு ஒருவர் இவ்வாறு வாதிடலாம்: ஐரோப்பிய புரட்சிகளின் தோல்வி, லெனினையும் அவரது கூட்டாளிகளையும் ஆச்சரியப்பட வைத்தது. போல்ஷெவிக்குகளின் மெய்யான, நீண்டகால அணியை ஐரோப்பிய உழைக்கும் வர்க்கத்தோடு ஏற்படுத்திக் கொள்ள முடியாமல், காலனி ஆதிக்கத்தில் சிக்குண்ட நாடுகளின் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்திலேயே அடையாளம் காண முடிந்தது. அதிலும் குறிப்பாக, கம்யூனிஸ்டுகளும் அவர்களுடைய கூட்டணியும் தலைமையேற்று நடத்திய தேசிய விடுதலை இயக்கத்தில் அதனை கண்ணுற முடிந்தது. சுருக்கமாகச் சொல்வதெனில், லெனின் தனது பிரசுரம் ஒன்றில் குறிப்பிட்டதைப் போல, “பின் தங்கிய ஐரோப்பாவில்” இருந்து “முன்னேறிய ஆசியாவை” நோக்கிய மாற்றம்.

ஏகாதிபத்தியத்தின் பலவீனமான கண்ணியில் அடுத்த உடைப்பு அதீத தொழில்மயமான ஜெர்மனியில் நடக்காமல், பெரும்பான்மை விவசாயம் சார்ந்த நாடான சீனாவில் நடந்ததில் ஆச்சர்யப்பட ஏதுமில்லை. சீனாவில் புரட்சியின் போது நகரத்துக்கு வெளியே ஊரகப் பகுதிகளில்தான் புரட்சிகர திறன்களும், விடுதலைப் படைகளும் வளர்ச்சியடைந்தன. விவசாயப் பிரச்சனைகளுக்கும், ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தில் எழுந்த தேசிய பிரச்சனைகளுக்கும், கம்யூனிச நடைமுறைகளின் மூலம் தீர்வு தேடிய முயற்சிகளில்தான் இறுதி வெற்றி சாத்தியமானது. சியாங் உடைய சொந்த பாணி “தேசியவாதிகள்”, ஜப்பானிய எதிர்ப்பு போராட்டத்தின் போது, மா சே துங்-இன் கம்யூனிஸ்டுகளிடம், தேசியவாத களத்திலேயே தோற்கடிக்கப்பட்டார்கள்.

சோவியத் ஒன்றியத்துடைய அடுத்தகட்ட பரிணாமங்களைப் பற்றி பல்வேறு எதிர்மறை அம்சங்களை ஒருவர் குறிப்பிடலாம். ஆனாலும், முக்கண்டத்தின் எல்லாப் பகுதிகளிலும் செயல்பட்ட தேசிய விடுதலை இயக்கங்களுக்கு சோவியத் ஒன்றியம் நிலையான, நீடித்த ஆதரவினை வழங்கியது. அணி சேரா நாடுகளாக இருந்த தேசிய முதலாளித்துவ அரசாங்கங்களுக்கும் இந்த ஆதரவு வழங்கப்பட்டது. அவர்களில், இந்தியாவின் ஜவஹர்லால் நேருவும் இருந்தார். எகிப்தின் கமால் அப்டெல் நாசரும் இருந்தார். ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு, சொந்த வளர்ச்சிப்பாதையில் முன்னே செல்ல அவர்கள் விரும்பினர். இந்த பரஸ்பர அனுதாபத்திற்கு மூலகாரணம் யாதெனில், ஏகாதிபத்தியம் கம்யூனிசத்திற்கு விரோதமாக இருந்துவருவதைப் போல், முக்கண்டத்தில் உள்ள நாடுகளின் பொருளாதார தேசியவாதத்திற்கு விரோதமாகவும் இருப்பதாகும்.

இந்த கட்டுரையின் ஆரம்பத்திலேயே சொன்னதைப் போல, இந்த அக்டோபர் புரட்சிதான் மனித குல வரலாற்றில் கண்ட முதல் சோசலிச புரட்சியாகும்.

அதற்கு பிறகு, புரட்சிகர உந்துவிசையின் மையம் கிழக்கு நோக்கி நகர்ந்தது. அதிலும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போராடி வந்த நாடுகளை நோக்கி நகர்ந்தது குறிப்பிடத்தக்கது. கம்யூனிசத்திற்கும், ஏகாதிபத்திய எதிர்ப்புக்கும் இடையிலான இத்தகைய கூட்டு, அக்டோபர் கம்யூனிச புரட்சியின் நீடித்த மரபாகத் தொடர்ந்து வருகிறது.

நன்றி: பிரண்ட்லைன்

தமிழில்: ஜெ. விஜயா

லெனினும் புரட்சிகர கட்சியும்

குரல்: பூங்கொடி மதியரசு

அன்வர் உசேன்

ஜனவரி 21 லெனின் நினைவு தினம். அவர் மறைந்து 98 ஆண்டுகள் கடந்துவிட்டன. சமூக மாற்றத்துக்கான சோசலிச புரட்சியை சாத்தியமாக்க வேண்டும் எனில் கம்யூனிஸ்டு கட்சி அவசியம் என்பதும் அத்தகைய கட்சி அந்தந்த சமூகத்துக்கு பொருத்தமான சித்தாந்த கோட்பாடுகளையும் ஸ்தாபன கோட்பாடுகளையும் கொண்டிருக்க வேண்டும் எனும் ஆழமான புரிதலையும் உருவாக்கிய மாபெரும் அமைப்பாளர் லெனின் அவர்கள்.

“அரசு அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான தனது போராட்டத்தில் பாட்டாளி வர்க்கத்துக்கு ஸ்தாபனம் எனும் ஆயுதம் தவிர வேறு எதுவும் இல்லை” – வி.இ.லெனின்

“அரசு அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான தனது போராட்டத்தில் பாட்டாளி வர்க்கத்துக்கு ஸ்தாபனம் எனும் ஆயுதம் தவிர வேறு எதுவும் இல்லை” என லெனின் மிக தெளிவாக கூறினார். “மார்க்சிய கோட்பாடுகளின் அடிப்படையில் உருவான சித்தாந்த ஒற்றுமை, ஸ்தாபன ஒற்றுமையின் வழியாக மேலும் உறுதிப்படுவதன் மூலம்தான் தொழிலாளி வர்க்கம் வெல்லற்கரிய சக்தியாக பரிணமிக்க முடியும்” எனவும் லெனின் வலுவாக பயிற்றுவித்தார். சோசலிசப் புரட்சிக்காக போராடும் ஒவ்வொரு கம்யூனிஸ்டு கட்சிக்கும் சித்தாந்த ஒற்றுமையும் அந்த சித்தாந்தத்தை செயல்படுத்துவதற்கு இசைந்த அமைப்பு கோட்பாடுகளும் தவிர்க்க முடியாத ஒன்று என்பது லெனின் உருவாக்கிய மிக முக்கியமான பாடம் ஆகும்.

கட்சி இல்லாமல் புரட்சி சாத்தியமில்லை

மார்க்சும் ஏங்கெல்சும் கம்யூனிஸ்டு கட்சியின் தேவையினைக் குறித்து எதுவும் சொல்லவில்லை என்றும் அப்படிப்பட்ட சர்வாதிகார அமைப்பை உருவாக்கியது லெனின்தான் எனவும் சில மேற்கத்திய ‘ஆய்வாளர்கள்’ சிலர் குற்றம் சாட்டுகின்றனர். இது உண்மைக்கு முற்றிலும் மாறானது.

தொழிலாளர்கள் ‘தங்களை ஒரு வர்க்கமாகவும், அதன்மூலம் ஓர் அரசியல் கட்சியாகவும்’ உருவாக்கிக்கொள்வதை கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையிலேயே குறிப்பிடும் மார்க்சும் எங்கெல்சும், “முதலாளித்துவ மேலாதிக்கத்தை வீழ்த்துதல், பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தை வென்றெடுத்தல்” ஆகியவை இரண்டையும் கம்யூனிஸ்டுகளின் கடமைகளாக வகுத்துள்ளார்கள்.

முதல் அகிலம் எனப்படும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் எங்கெல்ஸ் கீழ்க்கண்டவாறு அறிவுறுத்தினார்:

“அனைத்து இடங்களிலும் அனுபவம் நமக்கு எடுத்து காட்டுவது என்னவெனில் தொழிலாளர்களை பழைய கட்சிகளின் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்றால் அதற்கு சிறந்த வழி சுயேச்சையான பாட்டாளி வர்க்க கட்சியை உருவாக்குவதுதான். இந்த கட்சிக்கு தனது சொந்த கொள்கைகள் இருக்க வேண்டும்; அந்த கொள்கைகள் ஏனைய கட்சிகளின் கொள்கைகளிலிருந்து வேறுபட்டிருக்க வேண்டும்”

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் ஸ்பானிய பிரிவுக்கு 1871ம் ஆண்டு எங்கெல்ஸ் எழுதிய கடிதம்…

எனவே கம்யூனிஸ்டு கட்சி கட்டமைப்பு கோட்பாடுகள் ஆகியவையெல்லாம் சர்வாதிகார விருப்பத்துடன் லெனின் உருவாக்கியவை என்பது மிகப்பெரிய அவதூறு என்பது மிகை அல்ல. உண்மையில், லெனின் வழிகாட்டிய கம்யூனிஸ்டு கட்சிகளில்தான், கட்சிக்குள் மிக உயர்ந்த செழுமையான ஜனநாயகம் உள்ளது. மார்க்சும் எங்கெல்சும் சுயேச்சையான கட்சியை உருவாக்குவதன் அவசியத்தை வலியுறுத்தினாலும் அதன் கட்டமைப்பையும் அதன் பல்வேறு உட்கூறுகளையும் வடிவமைத்த சிற்பி லெனின் ஆவார். புரட்சிகர சித்தாந்தத்தை அடிப்படைக் கொள்கையாகக் கொண்ட ஒரு புரட்சிகர அமைப்பு இல்லாமல் சமூக மாற்ற புரட்சி சாத்தியம் இல்லை என்பதை லெனின் தொடர்ந்து வலியுறுத்தினார். ரஷ்ய சோவியத் புரட்சியின் மூலம் அதனை நிரூபித்தும் காட்டினார். பின்னர் நடந்த சீனப் புரட்சியிலிருந்து வியட்நாம் புரட்சி வரை அனைத்தும் கம்யூனிஸ்டு கட்சிகளால்தான் சாத்தியமாக்கப்பட்டன. 

இன்று சில இடதுசாரி சக்திகள் இந்தியாவிலும் வெளி தேசங்களிலும் சமூக மாற்றத்துக்கு கம்யூனிஸ்டு கட்சி தேவையில்லை எனவும் கம்யூனிஸ்டு கட்சிகள் காலாவதியாகி விட்டன எனவும் கூறுகின்றனர். ஆனால் கம்யூனிஸ்டு கட்சி இல்லாமல் எந்த ஒரு சமூக முன்னேற்றத்தையும் வலுவாக தொடர்ச்சியாக செயல்படுத்துவது சாத்தியம் இல்லை என்பதுதான் அனுபவங்களில் அறிய முடிவது. பிரிட்டனில் தொழிலாளர் கட்சியில் ஜெர்மி கோபின் அனுபவமும் அமெரிக்க ஜனநாயக கட்சியில் பெர்னி சாண்டர்ஸ் அனுபவமும் பழைய கட்சிகளை ஒரு எல்லைக்கு மேல் முற்போக்கு பாதையில் செலுத்த இயலாது என்பதை நிரூபிக்கின்றன.

கிரேக்கத்தில் மிகவும் நம்பிக்கையோடு உருவான இடதுசாரிகளின் சிர்சியா ஆட்சி இன்று அடையாளம் தெரியாமல் மறைந்து போனது வேதனையான உதாரணம் . இதே நிலைதான் ஸ்பெயினில் பொடோமஸ் எனும் இடதுசாரி அமைப்புக்கும் உள்ளது. இந்த பட்டியலில் சேர்க்க வேண்டிய இன்னொரு இயக்கம் “இயற்கை சூழலை பாதுகாக்க” உருவான “Greens Party” எனப்படும் பசுமை கட்சிகள் ஆகும். மேற்கண்ட இந்த இயக்கங்கள் இடதுசாரிகள்தான் என்றாலும் தொழிலாளி வர்க்கத்தின் முன்னணி படையான கம்யூனிஸ்டு கட்சிக்கு இருக்கும் அறிவியல் பூர்வமான சமூகக் கோட்பாடுகளும் வர்க்க அணுகுமுறைகளும் இல்லாததால் நாளடைவில் அவை பின்னடைவை சந்தித்துள்ளன.

இந்தியாவிலும் சிலர் தங்களை “புதிய இடதுசாரிகள்” என அழைத்து கொண்டு கம்யூனிஸ்டு கட்சிகள் காலாவாதியான பழைய இடதுசாரிகள் எனவும் அவர்களுக்கு எதிர்காலம் இல்லை எனவும் உளறுகின்றனர். அவர்களுக்கு மேற்சொன்ன உதாரணங்கள் உதவும்.

யார் கட்சி உறுப்பினர்?

1903ம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது ரஷ்ய கம்யூனிஸ்டு கட்சி மாநாட்டில் (அன்று ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சி) போல்ஷ்விக் பிரிவினரான லெனின் ஆதரவாளர்களுக்கும் மென்ஷ்விக் பிரிவினருக்கும் கடும் கருத்து மோதல் உருவான முக்கிய அம்சம் “கட்சி உறுப்பினர் ஆவதற்கு யாருக்கு தகுதி உள்ளது?” என்ற கேள்விதான்.  ஒருவர் கட்சி திட்டத்தை ஏற்றுக்கொண்டாலே போதுமானது; அவர் கட்சி உறுப்பினர் ஆகிவிடலாம் என மென்ஷ்விக் பிரிவின் தலைவரான மார்டோவ் வாதிட்டார். ஒரு படி மேலே போய் “வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும் எவர் ஒருவரும் கட்சி உறுப்பினராக ஆவதற்கு நாம் அனுமதிக்க வேண்டும்” எனவும் மார்டோவ் கூறினார்.

இந்த கருத்தை லெனின் மிகக்கடுமையாக நிராகரித்தார். ஒருவர் கட்சி உறுப்பினர் ஆவதற்கு கீழ்கண்ட தகுதிகள் இருக்க வேண்டும் என வாதிட்டார்:

  • கட்சி திட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
  • கட்சி அமைப்பு ஏதாவது ஒன்றில் இணைந்து பணியாற்ற வேண்டும்.
  • கட்சி கட்டுப்பாடுக்கு தன்னை உட்படுத்தி கொள்ள வேண்டும்.

அரசு இயந்திரத்தை எதிர்த்து போராடும் ஒரு அமைப்பின் உறுப்பினர்கள் ஊசலாட்டம் இல்லாதவர்களாகவும் வர்க்க உணர்வை பெற்றவர்களாகவும் தொழிலாளி வர்க்கத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். தொழிலாளி வர்க்கத்தின் மிகவும் உன்னதமான வர்க்க உணர்வு படைத்த போராளிகள்தான் கட்சியில் உறுப்பினராக வேண்டும். தொழிலாளி வர்க்கத்தின் முன்னணி படைதான் கட்சியாக உள்ளது; வர்க்கம் முழுவதுமே கட்சி அல்ல என்றார்.

கம்யூனிஸ்ட் கட்சி தரமானதாக செயல்படுவதற்கு அதன் உறுப்பினர்களின் தரம் உயர்ந்திருக்க வேண்டியது மிக அவசியம். கட்சி உறுப்பினர்களின் தரத்தை உயர்த்துவதன் அவசியத்தை மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கட்சி உறுப்பினர்கள் தரம் குறித்து 2015 கொல்கத்தா பிளீனம் கீழ்கண்ட சில முக்கிய அம்சங்களை முன்வைக்கிறது:

  • கட்சி உறுப்பினர்கள் முதலில் துணைக்குழு உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டாலும் பெரும்பாலான துணைக்குழுக்கள் செயல்படுவது இல்லை; அவற்றை செயல் படுத்துவதற்கான முனைப்புகளும் குறைவாக உள்ளன.
  • துணைக்குழு உறுப்பினர்கள் பரீட்சார்த்த உறுப்பினர்களாக உயர்வு பெறும் பொழுது தேவையான தகுதிகள் பெற்றனரா என்பது பல சமயங்களில் ஆய்வு செய்யப்படுவது இல்லை.
  • உறுதியற்ற முறையில் கட்சி உறுப்பினர்கள் சேர்க்கப்படுவதாலும் அவர்களுக்கு முறையான அரசியல் பயிற்சியும் கட்சி அமைப்பு பற்றிய புரிதல் போதிக்கப்படாததாலும் அவர்களின் அரசியல் உணர்வு கீழ்மட்டத்தில் உள்ளது.
  • கட்சி உறுப்பினர்களின் கணிசமான பிரிவினர் கிளைக்கூட்டங்களில்/ அரசியல் வகுப்புகளில்/கட்சி இயக்கங்களில் பங்கேற்பது இல்லை.
  • இந்த குறைகள் உடனடியாக சரி செய்யப்பட வேண்டும். கட்சி உறுப்பினர்களை சேர்ப்பதில் ஒரு அடிப்படையான மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும். வர்க்க/ வெகுமக்கள் போராட்டங்களில் பங்கேற்பு என்பதுதான் கட்சி உறுப்பினர் சேர்ப்புக்கான அடிப்படை தகுதிகளாக இருக்க வேண்டும்.
  • ஐந்து கடமைகளான கிளைக்கூடங்களில் பங்கேற்பு/கட்சி வகுப்புகள் மற்றும் போராட்டங்களில் திருப்திகரமான பங்கேற்பு/ ஏதாவது ஒரு வெகு மக்கள் அமைப்பில் செயல்படுவது/ லெவி தருதல்/கட்சி பத்திரிக்கைகளை படித்தல் ஆகியவற்றின் அடிப்படையில்தான் கட்சி உறுப்பினர் பதிவு புதுப்பிக்கப்பட வேண்டும்.

இந்திய சமூகத்தை சூறையாடுவதற்காக  கை கோர்த்துள்ள வகுப்புவாதிகள் – கார்பரேட்டுகள் கூட்டணியை ஒருசேர எதிர்கொள்ளும் தகுதி படைத்த ஓரே அரசியல் இயக்கம் கம்யூனிஸ்டு கட்சிதான். அந்த கடமையை நிறைவேற்ற கம்யூனிஸ்டு கட்சியின் தரமும் அதன் உறுப்பினர்களுடைய தரமும் மேலும் உயர்ந்த தளத்திற்கு செல்ல வேண்டும். இந்த வரலாற்று கடமையை நிறைவேற்றிட கட்சி உறுப்பினர்களின் தரம் குறித்த லெனின் போதனைகள் நமக்கு வழிகாட்டியாக செயல்படும்.

ஜனநாயக மத்தியத்துவம்

இணையற்ற கட்சி அமைப்பாளர் என்ற முறையில் லெனின் அவர்களின் மகத்தான பங்களிப்பு ‘ஜனநாயக மத்தியத்துவம்’ எனும் கோட்பாடு ஆகும். கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு கோட்பாடுகளின் உயிர்நாடி அதுவே. ஜனநாயக மத்தியத்துவத்தை புறந்தள்ளிவிட்டு தனது புரட்சிகர நோக்கங்களை கம்யூனிஸ்டு கட்சி சாத்தியமாக்கிய அனுபவம் இல்லை. புரட்சிக்கு பின்னரும் கட்சியின் செயல்பாட்டில் (அரசின் செயல்பாட்டில் அல்ல) ஜனநாயக மத்தியத்துவம் தொடர்வது அவசியம்.

முதலாளித்துவவாதிகளால் மிகவும் மூர்க்கத்தனமான தாக்குதலுக்கு உள்ளாகும் சில முக்கிய கோட்பாடுகளில் ஒன்று ஜனநாயக மத்தியத்துவம் ஆகும். சில சமயங்களில் கட்சி ஊழியர்கள் கூட இந்தக் கோட்பாடு குறித்து ஊசலாட்டம் அடைகின்றனர்.

கட்சி பொறுப்புகளுக்கு தேர்தல் மூலம் தேர்வு செய்வது

ஒவ்வொரு கமிட்டியும் தன் கீழ் உள்ள கமிட்டிகளுக்கும் மேல் உள்ள கமிட்டிகளுக்கும் தனது பணி குறித்து தெரிவிப்பது

கட்சி உறுப்பினர்களின் கருத்துகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிப்பது

கூட்டு முடிவு தனி நபர் பொறுப்பு என்ற முறையில் செயல்படுவது

ஆகிய முக்கிய அம்சங்களுடன் இணைந்து சிறுபான்மை கருத்து உடையவர்கள் பெரும்பான்மை கருத்துக்கு கட்டுப்படுவது என்பது ஜனநாயக மத்தியத்துவத்தின் முக்கிய உட்கூறுகள் ஆகும். இதனை நமது கட்சி அமைப்பு சட்டம் தெளிவாக கூறுகிறது.

ஜனநாயகமும் மத்தியத்துவமும் முரண்பட்ட அம்சங்கள் போல தோன்றினாலும் உண்மையில் அவை ஒன்றுக்கொன்று இயைந்தவை. ஒரு குறிப்பிட்ட சூழலில் எந்த அம்சம் கூடுதல் அழுத்தம் பெறவேண்டும் என்பதை தீர்மானிப்பதில் சரியான அணுகுமுறை தேவைப்படுகிறது.

லெனின் வழிகாட்டுதலில் கம்யூனிஸ்டு அகிலம் 1921ம் ஆண்டு உருவாக்கிய “கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பின் கோட்பாடுகள்” எனும் மிகச்சிறந்த ஆவணத்தில் ஜனநாயக மத்தியத்துவம் குறித்து கீழ்கண்டவாறு குறிப்பிடப்படுகிறது:

“கம்யூனிஸ்டு கட்சியில் ஜனநாயக மத்தியத்துவம் என்பது பாட்டாளி வர்க்க ஜனநாயகமும் மத்தியத்துவமும் இரண்டறக் கலந்த பிரிக்க முடியாத (fusion) கோட்பாடாக இருக்க வேண்டும். ஒன்றிலிருந்து இன்னொன்றை பிரிக்க முடியாத உண்மையான செழுமைப்படுத்தப்பட்ட புத்தாக்க கலவையாக (synthesis) இருக்க வேண்டும்” என முன்வைக்கிறது.

மத்தியத்துவம் என்பது தலைமையின் கைகளில் அதிகாரங்களை குவித்து கொள்வது என பொருள் அல்ல; அல்லது கட்சி உறுப்பினர்கள் மீது தலைமை தனது மூர்க்கத்தனமான அதிகாரத்தை திணிப்பது என்பது அல்ல. மாறாக கம்யூனிஸ்டு நடவடிக்கைகளை செயலாக்கத்தை மத்தியத்துவப்படுத்துவது என்று பொருளாகும் எனவும் இந்த ஆவணம் குறிப்பிடுகிறது.

விவாதங்களில் ஜனநாயகம்! அமலாக்கத்தில் மத்தியத்துவம்!

கருத்துகள் விவாதிக்கப்படும் பொழுது அனைவரும் தமது கருத்துகளை தமது கிளைகள் அல்லது குழுக்களில் விரிவாக பேசும் உச்சபட்ச ஜனநாயகமும் முடிவுகள் எடுக்கப்பட்ட பின்னர் கட்சி ஒரே மனிதனாக நின்று செயல்படுத்தும் மத்தியத்துவமும் இணைந்து இருப்பது ஜனநாயக மத்தியத்துவத்தின் முக்கிய அம்சம் ஆகும். இந்த கோட்பாட்டினை அமலாக்கும் பொழுது பல பிரச்சனைகள் உருவாகின்றன. விவாதங்களுக்கு பின்னர் கருத்தொற்றுமை மூலம் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்பது சாலச்சிறந்தது. ஆனால் கருத்து வேறுபாடுகள் இருந்தால் வாக்கெடுப்பு மூலம் முடிவு என்பது தவிர்க்க இயலாத ஒன்றாகிறது. வாக்கெடுப்பில் பெரும்பான்மை கருத்துதான் முடிவாக உருவாகும். இந்த முடிவுதான் சிறுபான்மை கருத்து உடையவர்களையும் கட்டுப்படுத்தும். ஆனால் சிறுபான்மை கருத்துடையவர்கள் முடிவை அமலாக்குவதில் சுணக்கம் காட்டுவதோ அல்லது தமது சிறுபான்மை கருத்துகளை தமது கிளை அல்லது கமிட்டிக்கு வெளியே முன்வைப்பதோ கட்சியின் ஒற்றுமைக்கு பயன்படாது; அது ஜனநாயக மத்தியத்துவத்துக்கு விரோதமான செயல் ஆகும்.

சமீப காலங்களில் சிலர் தமது  மாறுபட்ட கருத்துகளை சமூக ஊடகங்களில் பதிவிடுவதும் அவ்வாறு பதிவிடுவது தமது உரிமை எனவும் வாதிடுகின்றனர்.  அத்தகையோர் லெனின் அவர்களின் கட்சி வாழ்க்கையை உள்வாங்குவது பயன் தரும்.

“அமைப்பு(ஸ்தாபனம்) இல்லாமல் ஒற்றுமை சாத்தியம் இல்லை; சிறுபான்மை கருத்துடையோர் பெரும்பானமை கருத்துக்கு தலைவணங்காமல் அமைப்பு சாத்தியம் இல்லை” என லெனின் தெளிவாக குறிப்பிடுகிறார்.

“விமர்சிக்கும் சுதந்திரமும் செயல்பாட்டுக்கான ஒற்றுமையும்” எனும் சிறு பிரசுரத்தில் லெனின் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்:

“ஒரு உதாரணத்தை எடுத்து கொள்வோம். கட்சி மாநாடு நாடாளுமன்ற (டூமா) தேர்தல்களில் பங்கேற்பது என முடிவு செய்தது. தேர்தல்களில் பங்கேற்பது என்பது ஒரு மிக முக்கியமான முடிவார்ந்த செயல் நடவடிக்கை! தேர்தல் காலத்தில் தேர்தல்களை புறக்கணிக்க வேண்டும் எனவோ அல்லது  பங்கேற்புக்கு எதிராக விமர்சனம் செய்யும் உரிமையோ எந்த கட்சி உறுப்பினருக்கும் கிடையாது. ஏனெனில் இது கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தை சீர்குலைக்கும். ஆனால் தேர்தல்கள் அறிவிக்கப்படுவதற்கு முன்பாக பங்கேற்பு குறித்து விமர்சனம் செய்யும் உரிமை ஒவ்வொரு கட்சி உறுப்பினருக்கும் முழுமையாக உண்டு”

விமர்சிக்கும் சுதந்திரமும் செயல்பாட்டுக்கான ஒற்றுமையும்

ஜனநாயகம் மற்றும்  மத்தியத்துவம் என்பது என்ன? செயல் நடவடிக்கைகளுக்கான முடிவுகள் எடுக்கப்படுவதற்கு முன்பு விமர்சனத்துக்கான முழு சுதந்திரமும் முடிவு எடுக்கப்பட்ட பின்னர் செயல் நடவடிக்கையில் ஒற்றுமையும் இருக்க வேண்டும். முடிவினை அமலாக்கும் பொழுது அங்கு விமர்சனத்துக்கு இடமில்லை. லெனின் முன்வைக்கும் விமர்சன உரிமைக்கும் செயல் நடவடிக்கைகளுக்கும் உள்ள இயக்கவியல் இணைப்பை உள்வாங்குவது மிக அவசியம். இரண்டில் எந்த அம்சத்தை தவறாக பயன்படுத்தினாலும் அது தீங்காகவே முடியும்.

லெனின் வாழ்வு கற்றுதரும் படிப்பினை

தனது நியாயமான கருத்து நிராகரிக்கப்பட்டதாக ஒருவர் நினைத்தால் என்ன செய்வது? அதற்கும் லெனின் வாழ்வு நமக்கு படிப்பினையை தருகிறது. 1917 பிப்ரவரியில் ரஷ்ய தொழிலாளி வர்க்கமும் ஏனைய உழைப்பாளிகளும் முதலாளித்துவ வர்க்கங்களை பிரதிநித்துவப்படுத்திய அரசியல் கட்சிகளும் இணைந்து ஜார் மன்னனுடைய ஆட்சியைத் தூக்கியெறிந்தனர். ஒரு ஜனநாயக குடியரசை நிறுவுவது என்பதே குறிக்கோள். ஆனால் ஆட்சியைக் கைப்பற்றிய முதலாளித்துவவாதிகள் வழக்கம் போல உழைப்பாளிகளுக்கு துரோகம் இழைக்க முனைந்தனர்.  எனவே பிப்ரவரி முதலாளித்துவ ஜனநாயக புரட்சியை சோசலிச  புரட்சியாக நீட்டிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக லெனின் கணித்தார். எனவே அதற்காக “ஏப்ரல் ஆய்வு குறிப்புகள்” எனும் ஆவணத்தை உருவாக்கினார். அதனை போல்ஷ்விக் கட்சி முன் வைத்தார். ஆனால் கட்சி அதனை  ஏற்கவில்லை. மிக முக்கியத்துவம் வாய்ந்த பீட்டர்ஸ்பர்க் கமிட்டி 13க்கு 2 என்ற வாக்கு விகிதத்தில் லெனின் கருத்தை நிராகரித்தது. மாஸ்கோ மற்றும் பல கமிட்டிகளும் லெனின் கருத்தை நிராகரித்தன. பிராவ்டா பத்திரிக்கை லெனின் கருத்தை கண்டித்து கட்டுரை வெளியிட்டது. பல முக்கிய தலைவர்களும் லெனின் கருத்தை ஏற்கவில்லை. ஆனால் லெனின் பொறுமையாக தனது கருத்தின் நியாயத்தை விளக்கினார்.  புறச்சூழல்கள் குறித்து எடுத்துரைத்தார். 

நீண்ட கருத்து பரிமாற்றத்துக்கு பின்னர் போல்ஷ்விக் கட்சி லெனின் கருத்தை (பெரும்பான்மை அடிப்படையில்) அங்கீகரித்தது. அதற்கு பின்னர் இந்த கருத்தை கட்சியின் அனைத்து மட்டங்களிலும் விவாதிப்பதை லெனின் உத்தரவாதப்படுத்தினார். மென்ஷ்விக்குகளும் லெனின் கருத்தை ஏற்க வேண்டிய சூழல் உருவானது. எல்லாவற்றிற்கும் மேலாக புரட்சியின் தேவையை பெரும்பான்மையான உழைப்பாளிகளும் அங்கீகரிப்பதையும் லெனின் உத்தரவாதப்படுத்தினார். அதற்கு பின்னர்தான் புரட்சி எழுச்சிக்கு அறைகூவல் விடுக்கப்பட்டது. தனது கருத்தின் நியாயத்தை பெரும்பான்மையோர் ஏற்கும்வரை பொறுமையாக லெனின் செயல்பட்டார். தான் சரியென நினைக்கும் கருத்தை பெரும்பான்மை நிராகரித்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை லெனின் வாழ்வு நமக்கு கற்று கொடுக்கிறது.

லெனின் கருத்தை எல்லா சமயங்களிலும் போல்ஷ்விக் கட்சி ஏற்றுக்கொண்டதில்லை. பல சமயங்களில் அவரது கருத்து நிராகரிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட உதாரணத்தையே எடுத்து கொண்டால் போல்ஷ்விக் கட்சி புரட்சிக்கு அறைகூவல் விட வேண்டும் என முடிவு செய்தபொழுது சியனோவ்/கமனொவ் எனும் இரு தலைவர்கள் அந்த முடிவை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது மட்டுமல்ல; அவர்கள் மென்ஷ்விக் பத்திரிக்கைகளில் பகிரங்கமாக புரட்சி அறைகூவல் தவறு என பேட்டி அளித்தனர். இது லெனினுக்கு கடும் கோபத்தை உருவாக்கியது. ஏனெனில் இது புரட்சியை காட்டி கொடுக்கும் செயலாகும். எனவே அவர்கள் இருவரையும் கட்சியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என லெனின் மத்தியகுழுவுக்கு கோரிக்கை வைத்தார். ஆனால் கட்சி அந்த இரு தலைவர்களின் கடந்தகால சேவையை கருத்தில் கொண்டு அவர்கள் தவறை உணர்ந்தால் கட்சியில் நீடிக்க அனுமதிக்க வேண்டும் என தீர்மானித்தது. அதன்படி அவர்கள் தவறை உணர்ந்ததாக வெளிப்படுத்தினர். பின்னர் கட்சியில் தொடர்ந்து செயல்பட்டனர்.

சில சமயங்களில் லெனின் கருத்து சிறுபான்மையாக இருந்தது. ஆனால் அவர் பெரும்பான்மை முடிவுக்கு கட்டுப்பட்டார். சில சமயங்களில் விட்டுக்கொடுத்தார். சில அடிப்படை முக்கிய பிரச்சனைகளில் இடைவிடாது கட்சிக்குள் போராடினார். தனது கருத்தை கட்சி ஏற்றுக்கொள்ள வைப்பதில் முனைப்பு காட்டினார். அதே சமயத்தில் சிறுபான்மை கருத்து பெரும்பான்மை கருத்துக்கு கட்டுப்படுவது எனும் ஜனநாயக மத்தியத்துவத்தின் முக்கிய அம்சத்தை அவர் தொடர்ந்து வலியுறுத்தினார்; தனது செயல்பாடுகளில் கடைபிடித்தார். அதே சமயத்தில் ஜனநாயகம் இல்லாமல் மத்தியத்துவம் சாத்தியம் இல்லை என்பதிலும் லெனின் உறுதியாக இருந்தார். முடிவுகள் எடுக்கப்படுவதற்கு முன்பு உச்சபட்ச ஜனநாயக விவாத உரிமை அனைத்து உறுப்பினர்கள் மற்றும் கமிட்டுகளுக்கு இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.

ஜனநாயக மத்தியத்துவம் மாறாநிலை கோட்பாடு அல்ல!

ஜனநாயக மத்தியத்துவம் அனைத்து சூழல்களிலும் அனைத்து கட்சிகளுக்கும் ஒரே மாதிரியாக பொருந்தும் கோட்பாடு அல்ல. ஓரே கட்சியின் நீண்ட பயணத்தில் கூட வெவ்வேறு காலகட்டங்களில் வெவேறு அணுகுமுறைகளை உருவாக்க வேண்டிய அவசியம் உருவாகலாம். 1903 முதல் 1912ம் ஆண்டு வரை போஷ்விக்குகளும் மென்ஷ்விக்குகளும் இணைந்து செயல்பட்டனர். 1912ல் போல்ஷ்விக் கட்சி சுயேச்சையான அமைப்பாக செயல்பட்டது. இரு சூழல்களிலும் ஜனநாயக மத்தியத்துவம் குறித்து  ஒரே மாதிரியான அணுகுமுறை லெனின் கொண்டிருக்கவில்லை. போல்ஷ்விக் கட்சி உதயமான பின்னர் அமைப்பு கோட்பாடுகள் செழுமைப்படுத்தப்பட்டன. ஜனநாயக மத்தியத்துவ கோட்பாடும் அதற்கேற்றவாறு செழுமைப்பட்டது.

ஒரு கட்சி  அடக்குமுறைக்கு உள்ளாகும் பொழுது அங்கு மத்தியத்துவம் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. ஏனைய சமயங்களில் ஜனநாயக அம்சம் கூடுதல் அழுத்தம் பெற வேண்டும். எனினும் முடிவுகள் எடுப்பதற்கு முன்பு உச்சபட்ச ஜனநாயகமும் அந்த முடிவுகளை அமலாக்குவதில் ஒன்றுபட்ட செயல்பாட்டின் அடிப்படையிலான மத்தியத்துவமும் அனைத்து சூழல்களுக்கும் பொருந்தும். ஜனநாயக மத்தியத்துவம் தவறானது என அதனை கைவிட்ட பல கட்சிகள் காணாமல் போய்விட்டன என்பதும் அனுபவம் ஆகும்.

ஜனநாயக மத்தியத்துவம் என்பது வெறும் பெரும்பான்மைக்கு சிறுபான்மை கட்டுப்படுவது மட்டுமல்ல; ஜனநாயக மத்தியத்துவத்தின் செழுமை என்பது கட்சிக்குள் வெளிப்படையான விரிவான விவாத உரிமை/கட்சி உறுப்பினர்களின் சித்தாந்த அரசியல் உணர்வை அதிகரித்தல்/ கட்சி உறுப்பினர்களையும் அவர்கள் சார்ந்த கிளைகளையும் செயல்பட வைத்தல்/ விமர்சனம் சுயவிமர்சனத்தை ஊக்குவித்தல்/குழுவாத போக்குகளை தவிர்த்தல்/ கருத்து வேறுபாடுகளை பொது வெளியில் பேசாமல் இருத்தல் ஆகிய அம்சங்களுடனும் இணைந்துள்ளது.  இதனை நமது கட்சியின் அமைப்புசட்டம் தெளிவாக முன்வைக்கிறது. அதுவே லெனின் நமக்கு புரட்சிகர கட்சி அமைப்பு பற்றி கற்று தரும் பாடம் ஆகும். அத்தகைய ஒரு வலுவான கட்சியை உருவாக்க உறுதியேற்போம்!   

– கட்டுரைக்கு உதவிய நூல்கள் :

1) ஓரடி முன்னால் ஈரடி பின்னால் – லெனின்

2) விமர்சன உரிமையும் செயல்பாட்டுக்கான ஒற்றுமையும் – லெனின்

3) கட்சி அமைப்பின் கோட்பாடுகள்-கம்யூனிஸ்டு அகிலம்

4) லெனினும் புரட்சிகர கட்சியும் – பால் பிளான்க்

5) 2015 CPI(M) பிளீனம் ஆவணம்

6) CPI(M) கட்சி அமைப்பு சட்டம்.

மானுட எதிரி ஏகாதிபத்தியம்; வர்க்கப் புரட்சியே தீர்வு !

என். குணசேகரன்                           

ரஷ்ய சோசலிசப் புரட்சி இன்றைக்கும் பல பாடங்களை மனித சமூகத்திற்கு கற்றுத் தருகிறது. முதலாளித்துவம் உலகளாவிய ஒரு அமைப்பு முறையாக செயல்பட்டு வந்தாலும் அது சமச்சீரற்ற முறையில் வளர்கிறது.

 உலகின் பல பிரதேசங்கள் வளர்ச்சியில் பின்தங்கி, வறுமை, வேலையின்மை பிரச்சனைகளால் கடும் துயரங்களை அனுபவித்து வருகின்றன. ஆனால் உலகின் ஒரு பகுதி மேலும் மேலும்  செல்வக் குவிப்புக்கான தளங்களாக உள்ளன. ஒரு சிறு முதலாளித்துவ கூட்டம் பெரும்பான்மை மக்களை சுரண்டி வேட்டையாடி வருகிறது. இந்த சமச்சீரற்ற வளர்ச்சி பல பகுதிகளில் புரட்சிகர எழுச்சிகளை ஏற்படுத்துகிறது. 

1917நவம்பரில் மானுட வரலாற்றில் ஒரு திருப்பமாக ஏற்பட்ட ரஷ்யப் புரட்சியும் உலக முதலாளித்துவத்தின் ஒரு பலவீனமான பகுதியில் வெடித்து எழுந்தது. முதலாளித்துவத்தின் சமச்சீரற்ற வளர்ச்சி என்பது ஒரு விதியாகவே நிகழ்ந்து வருகிறது. முதலாளித்துவத்தின் இன்றைய கட்டமான ஏகாதிபத்தியமும் அந்த விதிக்கு உட்பட்டு இயங்கிவருகிறது. எனவே புரட்சிகர எழுச்சிக்கான  வாய்ப்புகள் மங்கிவிடவில்லை. மாறாக, மேலும் மேலும் சோசலிசத்திற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருந்து வருகின்றன.

ஏகாதிபத்தியத்தின் தோற்றம் 

லெனின் 1916- ஆம் ஆண்டில் சூரிச் நகரில் தலைமறைவு வாழ்க்கையின்போது  “ஏகாதிபத்தியம்: முதலாளித்துவத்தின் உச்சகட்டம்” என்ற நூலை எழுதினார். அதில் கடந்த நூற்றாண்டில் முதலாளித்துவம் வந்தடைந்த புதிய கட்டத்தினை  லெனின் விளக்கியிருந்தார்.

முதலாளித்துவத்தின்  வளர்ச்சி  நீண்ட வரலாறு கொண்டது. வெகு நீண்ட பாதையைக் கடந்து தற்போதைய நிலைக்கு இன்றைய முதலாளித்துவம் வந்துள்ளது.  பல வளர்ச்சிக் கட்டங்களை தாண்டித்தான் இன்றைய முதலாளித்துவம் உருப்பெற்றது.

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் அது ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியது. இதனை லெனின் ஏகாதிபத்திய கட்டம் என்று விவரித்தார். இந்தக் கட்டத்தில் உலகம் முழுவதும் அரசியல், பொருளாதார வளர்ச்சி பல வேறுபாடுகள், ஏற்றத்தாழ்வுகள் கொண்டதாக இருந்தது.

அரசியல் வளர்ச்சியை எடுத்துக் கொண்டால் பல நாடுகளில் ஜனநாயக அமைப்பு முறையும், பல நாடுகளில் சர்வாதிகார முறையும் இருந்தன. பல நாடுகளில் ஒரு ஜனநாயக அமைப்பு வளர்ச்சி பெறாத சூழலும் இருந்துவந்தது. பொருளாதாரத்திலும் வேறுபாடுகள் இருந்தன.சில நாடுகள் பெரும் வளர்ச்சி பெற்றிருந்தன. பல நாடுகள் வளர்ச்சி குன்றிய நிலையில் இருந்தன.

உலகின் முன்னணி நாடுகள் தங்களது பொருளாதார ஆதிக்கத்தை வெளிநாடுகளில் வலுப்படுத்திக் கொள்ளவும் , நாட்டின் எல்லைகளை பங்கு போட்டுக் கொள்ளவும் முனைந்தன. இதற்கான நாடுகளின் கூட்டணி அமைந்தன. இவை பொருளாதார ஆதிக்கத்திற்கும் பல நாடுகளை ஆக்கிரமிப்பதற்கும் ஏற்படுத்திக்கொண்ட கொள்ளைக்கார கூட்டணிகள். இந்த கூட்டணிகளுக்கு இடையே ஏற்பட்ட கடுமையான போட்டி , இரண்டு உலகப் போர்களுக்கு இட்டுச் சென்றது.

கடந்த இருபதாம் நூற்றாண்டின் முதல் ஐம்பது ஆண்டுகளில் நிகழ்ந்தளுக்கு இரண்டு உலகப் போர்களின் பாதிப்பை ஆசிய நாடுகளும் , ஏழை நாடுகளும் எதிர்கொண்டன.

கடுமையான வறுமையும், மோசமான பொருளாதார நிலைமைகளும் அந்த நாடுகளை வாட்டி வதைத்தன. போர்களால் உலகத்தின் முன்னேறிய நாடுகளின்  முதலாளித்துவ வர்க்கங்கள் அதிகமாக பலன் பெற்றன.

சில நாடுகள் புரட்சிகரமாக உலக முதலாளித்துவ பிடியிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டன. அவை பொருளாதாரத்தில் வளர்ச்சியடையாத நாடுகளாக இருந்தாலும், சோசலிச  வளர்ச்சிப் பாதையை பின்பற்றத் தொடங்கின. அந்த சோஷலிச நாடுகளில் மக்களின் வாழ்க்கைத் தரம் காலனி ஆட்சிக் காலத்தில் இருந்ததைவிட முன்னேற்றம் கண்டது.

உலகில் முதலாளித்துவ முகாமிற்கும் சோசலிச முகாமிற்கும் முரண்பாடுகள் தீவிரமடைந்தன. இதனால், உலக முதலாளித்துவம் கடும் நெருக்கடிகளுக்கு ஆளானது. எனினும் முதலாளித்துவம் தன்னை நிலைநிறுத்திக் கொண்டது. 1980-90-களில் நவீன தாராளமய காலம் துவங்கியது. இந்தக் கொள்கைகள் முதலாளித்துவ மூலதன  வளர்ச்சிக்கு மேலும் ஊக்கமளிப்பதாக அமைந்தன. 

சோவியத் வீழ்ச்சிக்குப் பிறகு ஏகாதிபத்திய உலக மேலாதிக்கம் மேலும் வலுப்பெற்றது. பொருளாதார சுரண்டல் மட்டுமல்லாது இயற்கை வளங்களை கொள்ளையடித்தல், பாட்டாளி வர்க்க புரட்சி மீண்டும் எழுந்திடாமல் தடுக்க வலதுசாரி, பிற்போக்கு சக்திகளை வலுப்படுத்துவது, இன்றுள்ள சீனா உள்ளிட்ட சோசலிச நாடுகளுக்கு எதிராக பல நடவடிக்கைகளையும், பல கூட்டணிகளையும் உருவாக்குவது என பல வழிகளில் அமரிக்கா உள்ளடங்கிய உலக ஏகாதிபத்தியம் தனது மேலாதிக்கத்தை நிலை நிறுத்த இடைவிடாது முயற்சித்து வருகிறது.

ஏகாதிபத்தியத்தின் இயல்புகள் 

லெனின் தனது ஏகாதிபத்தியம் நூலின் ஏழாவது அத்தியாயத்தில் ஏகாதிபத்தியத்தின் ஐந்து இயல்புகளை விளக்குகிறார்.

 1) உற்பத்தியும்  மூலதனமும் ஒன்றுகுவியும்  நிலை வளர்ந்து, ஏகபோகங்கள் உருவாகின்றன. இவை பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் சக்திகளாக வளர்கின்றன.

 2) வங்கி மூலதனம் தொழில்துறை மூலதனத்துடன் ஒன்று சேர்கின்றன. இந்த “நிதி மூலதனம்” அடிப்படையில் நிதியாதிக்கக் கும்பல் உருவாகிறது.

 3) அதுவரை முக்கியத்துவம் கொண்ட  சரக்கு ஏற்றுமதி என்ற நிலையிலிருந்து மாறி, மூலதன ஏற்றுமதி முக்கியத்துவம் பெறுகிறது.

 4) சர்வதேச அளவில்  ஏகபோக முதலாளித்துவக் கூட்டுகள் உருவாகின்றன; அவை உலகையே தங்களுக்குள் பங்கு போட்டுக் கொள்கின்றன.

5) முன்னணி முதலாளித்துவ அரசுகள்  உலகப் பரப்பினையே தங்களுக்குள் பங்குபோட்டுக் கொள்கின்றன.

இது கடந்த நூற்றாண்டில், நூற்றாண்டின் துவக்கத்தில்  ஏகாதிபத்தியம் வளர முற்பட்ட சூழலில், அதன் இயல்புகளைப் பற்றி லெனின் வழங்கியுள்ள ஆய்வு. அவர் குறிப்பிட்டுள்ள அந்த ஐந்து  அடிப்படை இயல்புகளும் இன்றைக்கும் நீடிக்கிறதா? இன்றைய ஏகாதிபத்தியத்திற்கும் அவை பொருந்துவதாக உள்ளதா? மார்க்ஸ் முதலாளித்துவ இயக்கத்தையு ஆராய்ந்து விளக்கியது போன்று, அவருக்குப் பிறகு லெனின், முதலாளித்துவத்தின் புதிய வளர்ச்சிப் போக்குகளை ஆராய்ந்து விளக்கினார். இவர்கள் வகுத்தளித்த பாதையில் இன்றைய ஏகாதிபத்தியத்தையும்,  அதன் இயல்புகளையும் அறிதல் அவசியம். ஏனெனில், முதலாளித்துவத்தை வீழ்த்தி, உழைக்கும் வர்க்கத்தின் அதிகாரத்தை நிலைநாட்டவும், சோசலிச மாற்றத்தை  ஏற்படுத்துவதற்கும் இந்தப் புரிதல் மிக அவசியமானது.

லெனின் குறிப்பிட்ட ஏகாதிபத்தியத்தின் அந்த  ஐந்து இயல்புகளும் இன்றைய ஏகாதிபத்தியத்திற்கும் பொருந்தும் ; எனினும் கடந்த நூற்றாண்டிற்கும், இந்த 21-வது நூற்றாண்டிற்கும் இடையில் ஏராளமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. புதிய சூழல், புதிய நிலைமைகளை உள்வாங்கி, ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தை சோஷலிச சக்திகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

லெனின் உற்பத்தியும் , மூலதனமும்  மையப்படுவது ஏகாதிபத்தியத்திற்குரிய தன்மையாக குறிப்பிடுகிறார். தீவிரமான போட்டி முதலாளித்துவ சமூகத்தில் நடப்பதால் உற்பத்தியும் மூலதனமும் மையப்படுகிறது. போட்டியினால் பெரிய சில கம்பெனிகள்  உற்பத்தியின் குவி மையமாக மாறுகின்றன. இவ்வாறு மையப்படுவது ஒரு கட்டத்தில் தொழில் ஏகபோகங்களை உருவாக்குகிறது. சுதந்திரமான போட்டி என்ற இடத்தில் ஏகபோக கூட்டணிகள் உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்தும் நிலை வருகிறது. இந்த ஏகபோகங்கள் பொருளாதார வாழ்வில் நிர்ணயிக்கும் சக்திகளாக விளங்குகின்றன. இதற்கு லெனின் தனது காலத்தில் ஏற்பட்ட மாற்றங்களை ஆய்வு செய்து விளக்குகிறார்.

மூலதனக் குவியல் 

லெனின் காலத்திற்குப் பிறகு முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டன.1970-ஆண்டுகளின் துவக்கத்தில் பத்தாண்டுகளுக்கு மேலாக கடும் நெருக்கடியையும் தேக்கத்தையும் உலகப் பொருளாதாரம் சந்தித்தது. அதன் வளர்ச்சி விகிதமும் வீழ்ந்தது. உள்நாட்டு சந்தை வீழ்ச்சியால் ஏகபோக மூலதனம் வெளிநாடுகளில் வாய்ப்புக்கள்ளை தேய்ந்த நிலையில்யாது. தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி, தகவல் தொடர்பு வளர்ச்சி ஆகியவற்றின் உதவியுடன் நேரடி அந்நிய முதலீட்டு வாய்ப்புக்களை பயன்படுத்தி முதலாளித்துவம் புதிய வளர்ச்சியை அடைந்தது. உற்பத்தியும் விநியோகமும் மேலும் கடந்த காலங்களை விட மேலும் சர்வதேசமயமானது.

மேலும் மேலும் மூலதனம் குவிந்து, மிகப்பெரும் பிரம்மாண்டமான, ஏகபோக, பன்னாட்டு கார்ப்பரேஷன்கள் வளர்ந்தன. அவற்றில் பல,  நாடுகள் பலவற்றின் சொத்துக்களை விட அதிக சொத்து படைத்ததாக வளர்ச்சி பெற்றன. உண்மையில், சர்வதேச, ஏகபோக முதலாளித்துவத்தின் இன்றைய பிரதிநிதிகளாக இந்த பன்னாட்டு கார்ப்பரேஷன்கள் விளங்குகின்றன. 

உலக அளவில் இந்த வகையிலான கார்ப்பரேஷன்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவை நேரடி அந்நிய முதலீட்டுக்கான வாய்ப்புகளைப் பயன்படுத்தி தங்களுடைய கிளைகளையும், ,இணைப்பு நிறுவனங்களையும்  உலகம் முழுதும் அமைத்து செயல்படுகின்றன.1980-லிருந்து 2008 வரை உலக பன்னாட்டு நிறுவனங்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்திலிருந்து 82 ஆயிரமாக  உயர்ந்துள்ளது. வெளிநாட்டு கிளை  நிறுவனங்களின் எண்ணிக்கையும் சேர்த்துப் பார்த்தால் 35 ஆயிரத்திலிருந்து 8 லட்சத்து பத்தாயிரம் வரை  உயர்ந்துள்ளது.

உலகம் முழுவதும் பெரும்பான்மையான நாடுகள் பெரும் பன்னாட்டு கார்ப்பரேஷன்களின் சர்வதேச உற்பத்தி மற்றும் வர்த்தக இணைப்புகளில் இணைந்துள்ளனர். உலகப் பெரும் கார்ப்பரேஷன்களின் இந்த வளர்ச்சி ஏகாதிபத்தியத்தின் நவீன கட்டமாக உருவாகியுள்ளது. இது மூலதனத்தின் சர்வதேச தன்மையை வலுப்படுத்தியுள்ளது.,உற்பத்தி மற்றும் மூலதனம் மேலும் மேலும் ஓர் இடத்தில் குவியும் நிலை மிகப்பெரும் அளவிற்கு தீவிரமடைந்துள்ளது. வாழ்வின் அனைத்துப் பகுதிகளிலும் சில ஆயிரம் பன்னாட்டு கார்ப்பரேஷன்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. பன்னாட்டு ஏகபோக மூலதனம் மேலும் மேலும் குவிந்து பெருகி வருகிற நிலையில் ஒரு பன்னாட்டு கார்ப்பரேட் பேரரசு உருவாகியுள்ளது.

பன்னாட்டு முதலாளித்துவ கார்ப்பரேஷன்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் அவை மிகப்பெரும் பலம் வாய்ந்தவையாக விளங்குகின்றன. அவை வளர்ச்சிப் பணிகளில் முக்கிய பங்கினை வகிக்கின்றன. புதிய தொழில்நுட்பங்களின்ள் பயன்பாடு, சந்தை செயல்பாடு, இயற்கை வளங்கள், நிதியாதாரங்கள் உள்ளிட்ட அனைத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். இதனால்தான் உற்பத்தி பொருட்கள் மற்றும் அவற்றின் விநியோகத்தில் ஏகபோக கட்டுப்பாடும், போட்டியில் பெரும் கார்பரேஷன்களுக்கு சாதகமான நிலையும் உள்ளது. இந்த பெரும் கார்ப்பரேஷன்கள் அரசு அதிகாரம், மற்றும் அரசு நிறுவனங்களுடன் வலுவான கூட்டணி கொண்டுள்ளன.

உலகமயமாக்கலும், ஏகபோக மூலதனம் நிதிமயமாக்கலும் இந்த கம்பெனிகளின் சொத்துக் குவியலுக்கு உதவுகின்றன. எடுத்துக்காட்டாக, வால்மார்ட் நிறுவனம் உலகின் மிகப்பெரிய பன்னாட்டு  நிறுவனம். 2017- ஆம் ஆண்டு அதனுடைய மொத்த வருமானம் 500 பில்லியன் டாலரை தாண்டியது. இது பெல்ஜியம் நாட்டினுடைய ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி தொகையைவிட மிக அதிகம்.

இந்த கம்பெனிகளின் கிளைகளின் பொருளாதார செயல்பாடுகள் உலகம் முழுவதும் பல மையங்களில் பரவியிருந்தாலும், அதிக அளவிலான லாபம் வளர்ந்த நாடுகள் சிலவற்றுக்கு மட்டுமே சென்று சேர்கிறது. ஏனென்றால் முன்னணி பன்னாட்டு ஏகபோக நிறுவனங்கள் முன்னேறிய நாடுகளை மையப்படுத்தியே உள்ளன. 2017- ஆம் ஆண்டில் உலகின் முன்னணி 500 கம்பெனிகளில் 250 கம்பெனிகள் அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சார்ந்த பெரும் கார்ப்பரேஷன்கள். உலகின் முதல் 100 பன்னாட்டு கம்பெனிகளில் மூன்றில் ஒரு பங்கு முன்னணி நிறுவனங்கள் இந்த நாடுகளைச் சார்ந்தவை.

கடந்த 30 ஆண்டுகளாக அனைத்து நாடுகளும் முதலீட்டை ஊக்குவிப்பதற்கான கொள்கை முடிவுகளை எடுத்துள்ளன. அன்னிய நேரடி முதலீட்டுக்கான கட்டுப்பாடுகளை அவை தளர்த்தி உள்ளன. இந்திய நாட்டில் 1990-களில் கொண்டுவரப்பட்ட நவீன தாராளமயம் இதற்கோர் எடுத்துக்காட்டு. பிரதமர் மோடி ஆட்சி காலத்தில் இன்றுவரை பொருளாதாரத்தை அந்நிய  பன்னாட்டு கம்பெனிகளுக்கு திறந்து விடுகிற கொள்கைகள் வேகமாக பின்பற்றப்பட்டு  வருகின்றன. சமீபத்திய பணமயமாக்கல் கொள்கை, பொதுத்துறை நிறுவனங்களை உள்நாட்டு, வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் நடவடிக்கை ஆகியவற்றை இதற்கு உதாரணமாகக் கூறலாம். அனைத்து நாடுகளிலும் மிகப்பெரிய அளவிலான தனியார்மயமாக்கல் இன்றுவரை தீவிரமாக நடந்து வருகிறது. இதன் விளைவாக மூலதனக் குவியல் மேலும் அதிகரித்து வந்தது. பல கம்பெனிகள் மேலும் மேலும் பெரிய கம்பெனிகளுடன் இணைக்கப்பட்டன. சிறிய, நடுத்தர கம்பெனிகள் பன்னாட்டு கம்பெனிகளுடன் இணைய வேண்டியந்திடும் கட்டாயத்துக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டது. பல சிறிய நடுத்தர கம்பெனிகள்ளில் திவாலாகி மூட வேண்டிய நிலை ஏற்பட்டன. 

பெரும் கார்ப்பரேட்டுகளின் மேலாதிக்கம் 

ஒவ்வொரு தொழிலிலும் பெரும் கார்ப்பரேட் கம்பெனிகள் மேலாதிக்கம் செலுத்துகின்றன. எடுத்துக்காட்டாக, விதை, பூச்சிக்கொல்லி மருந்தின் உலக சந்தை, ஆறு பன்னாட்டு கம்பெனிகளின்ள் கட்டுப்பாட்டில்டுக்குள் உள்ளது. டூபாண்ட், மான்சான்டோ, சின்ஜென்டா, பாயர், டவ், பிஎஎஸ்எப் ஆகிய கம்பெனிகள் 2015 விவரங்கள் அடிப்படையில், 75 சதம் பூச்சிக்கொல்லி மருந்தின்  உலக சந்தையையும், 63 சதம் விதைக்கான உலக சந்தையையும் மும், 75 சதம் உலக தனியார் ஆராய்ச்சியையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தன. 10 பெரும் பன்னாட்டு கம்பெனிகள் மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்களில் உலக சந்தையில் 47 சதம் அளவிற்கு தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளன.

இந்த வகையில் தனியார் பகாசுர முதலாளித்துவ கம்பெனிகள் அதிக அளவிலான சமூக சொத்தினை கையகப்படுத்திக் கொண்டு வரும் நிலையில், அவை தொழிலாளர் உழைப்பின் மீது கடுமையான கட்டுப்பாட்டை செலுத்துகின்றன. அத்துடன், சுரண்டலையும் மேலும் மேலும் தீவிரப்படுத்தி வருகின்றன. இது உலக அளவில் மூலதனக் குவியலை அதிகரிக்கிறது. உலக அளவில் ஏழை-பணக்காரர் இடைவெளி அதிகரித்து ஏற்றத்தாழ்வு தீவிரமடைந்துள்ளது.

பெரும் கம்பெனிகளின் மூலதனக் குவியல்  அதிகரிப்புக்கு முக்கிய காரணம், குறைந்த ஊதிய செலவில் உலக அளவில் தொழிலாளர் உழைப்பு கிடைப்பதுதான். பன்னாட்டு கம்பெனிகள் சிறந்த முறையில் வலுவான அமைப்பாக செயல்படுகின்றன. உலக உழைக்கும் மக்களால் ஒன்று சேர்வதற்கும், தங்களுடைய உரிமைகளை பாதுகாப்பதற்கும் வாய்ப்பு இல்லாமல் உள்ளது. கடந்த பல பத்தாண்டுகளாக பன்னாட்டு கம்பெனிகள் தங்களது தொழில்களை வளரும் நாடுகளிலும், வளரும் ஏழை நாடுகளிலும்ல் அமைத்தன. அங்கு வேலையில்லாப் பட்டாளம் அதிக அளவில் இருப்பதால், குறைந்த ஊதியத்திற்கு ஆட்கள் கிடைத்து வருகின்றனர். இந்த கம்பெனிகளில் பொதுவாக குறைந்த ஊதியம், கடுமையாக வேலை வாங்குவது, அதிக வேலை நேரம், மோசமான வேலைச் சூழல் போன்ற கொடுமையான நிலைமைகள் உள்ளன.

வளரும் நாடுகளின் அரசாங்கங்களை தங்களது கைக்குள் போட்டுக் கொண்டு தங்களது மூலதன தேவை மற்றும் முதலீட்டுக்கு ஏற்ற கொள்கைகளை பின்பற்ற தூண்டுகின்றனர். சர்வதேச முதலீடுகள் வழியாக மொத்த உள்நாட்டு வளர்ச்சியை பெருக்கிடலாம் என்ற நோக்கில் ஏழை நாடுகளின் அரசாங்கங்கள் இந்த சூழ்ச்சிக்கு பலியாகின்றனர். இதற்கு விலையாக தங்களது மக்களுக்கான சமூக நல  திட்டங்களை குறைப்பது, தொழிலாளர் உரிமைகள் பறிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். அத்துடன் உள்நாட்டு வெளிநாட்டு காப்பரேட் கம்பெனிகளுக்கு  ஏராளமான வரிச்சலுகைகள், கடன் ஏற்பாடு போன்றவற்றை இந்த அரசாங்கங்கள் உறுதி செய்கின்றன. இத்தகையந்த மக்கள் விரோத நடவடிக்கைகள் இந்தியாவிலும் நடந்து வருவது கண்கூடானது. இதனால் இந்தப் பெரும் கம்பெனிகள் கொள்ளை லாபம் அடிக்கின்றன. அமெரிக்க கம்பெனிகளுக்கு கிடைக்கும் மொத்த லாபத்தில் வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் இலாபம் 1950-இல்  4 சதம் மட்டுமே இருந்தது ஆனால் 2019இல் இது 29 சதமாக உயர்ந்து, இன்று பெரும் கொள்ளை லாபமாக வடிவெடுத்துள்ளது.

குறைந்த எண்ணிக்கையிலான பன்னாட்டு வங்கிகள் உலகப் பொருளாதாரத்தை ஆதிக்கம் செலுத்துகின்றன. நிதி மூலதன கூட்டமும் அவர்களின் ஏஜெண்டுகளும் வர்த்தகம் மற்றும்  முதலீடுகளின் விதிகளை நிர்ணயிப்பவர்களாக உள்ளனர். பல பொருளாதார நிபுணர்களும் உலக நிதி மூலதனத்தின் குரலாக தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்வார்கள். உலகமயமாக்கல், நிதிமயமாக்கல் போன்றவற்றிற்கு ஆதரவாக கருத்துக்களை வெளிப்படுத்தி, ஏகபோகங்கள் பல நாடுகளின் பொருளாதாரத்தில் மேலாதிக்கம் செலுத்த அவர்கள் உதவுகின்றனர். நிதி ஏகபோக மூலதனம் ஊக வணிகத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு உடனடி லாப வேட்டையை துரிதப்படுத்துகிறது. 

மதிப்பிழந்த ஜனநாயகம் 

கடந்த 30 ஆண்டுகளில் நிதி மூலதனம், தொடர்ச்சியான  தொழில்மயத்தை தடுத்து வந்துள்ளது. இதனால் உற்பத்தி சார்ந்த முதலீட்டுக்கான வாய்ப்புகள் குறைந்து போனது. பெரிய கம்பெனிகளின் மூலதனம் நிரந்தர தொழில் முதலீட்டிலிருந்து மாறி, அதிகமாக ஊக வணிக நிதி பரிமாற்ற செயல்பாடுகளாக மாறின.

மக்களின் வாக்குகள், ஜனநாயக அமைப்பு முறை எதுவுமே பெரும் கம்பெனிகளின் கொள்ளை லாபத்திற்கு தடையாக இருப்பதில்லை. உண்மையில், அமெரிக்காவின் கொள்கைகளை நிர்ணயிப்பது வால் ஸ்ட்ரீட் நிதி மூலதன கும்பல் மற்றும் ராணுவ தொழில் கம்பெனிகள்தான். அவற்றின் நலன்கள்தான் நாட்டின் நலன்களானாக முன்னிறுத்தப்படுகின்றனது. அரசு பெரும் கம்பெனிகளின் சேவகனாக செயல்பட்டு வருகிறது. இது அனைத்து முதலாளித்துவ நாடுகளுக்கும் பொருந்தும்.

உலக பொருளாதாரத்தில் அமெரிக்க நாணயமான டாலர் ஆதிக்கம் செலுத்துகிறது. உலகின் எண்பது சதவீதமான அந்நிய செலாவணி பரிவர்த்தனைகளும் 90 சதவீதமான சர்வதேச வங்கி பரிவர்த்தனை களும் டாலரில் மேற்கொள்ளப்படுகின்றன.  இதனை அமெரிக்கா தனக்கு சாதகமாக பயன்படுத்தி வருகிறது. டாலர் மதிப்பை குறைத்து அமெரிக்கா தனது அந்நிய கடன்களை குறைக்கிறது. இந்த வகையிலும் ஏழை நாடுகள் வஞ்சிக்கப்பட்டு வருகின்றன.

லெனின் ஏகாதிபத்தியம் நூலில் முதலாளித்துவ கூட்டணிகள் வளர்ந்து உலகம் பங்கு போடப்படுவதை குறிப்பிடுகிறார். இது இன்றைய உலகுக்கும் பொருந்துகிறது. சர்வதேச பொருளாதார நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றவைக்கிற பிரிட்டன்வுட் ஓட்ஸ்  அமைப்புநிறுவனம் முறை என்று சொல்லப்படுகின்லுகிற உலக வங்கி, சர்வதேச நிதி நிறுவனம், உலக வர்த்தக அமைப்பு போன்றவைகளும் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் மூலதன குவியலுக்கு ஏற்ற வகையில் தங்களது நடவடிக்கைகளை அமைத்துக் கொள்கின்றன. சர்வதேச முதலாளித்துவ ஏகபோக கூட்டணி நலன்களுக்கு ஏற்ப இந்த அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. 

அமெரிக்கா தலைமையில் ஏகாதிபத்திய நாடுகள் அங்கம் வகிக்கும் நேட்டோ(NATO) இராணுவக் கூட்டணி உண்மையில் ஏகபோக முதலாளித்துவ நலன்களை பாதுகாப்பதற்கானக இராணுவக் கூட்டணியாக செயல்பட்டு வருகிறது. சீனா உள்ளிட்ட சோஷலிச நாடுகளுக்கு எதிராகவும் பல கூட்டணிகளை அமெரிக்கா அமைத்து வருகிறது.

பல விஷயங்களில் ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவான சர்வதேச கருத்தை உருவாக்குவதற்கு ஊடகங்களைள்யும், பண்பாட்டு தளங்களையும் பயன்படுத்தி வருகின்றனர். ஏகாதிபத்திய கலாச்சார மதிப்பீடுகளை கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆதரவுடன் பரப்பி வருகின்றனர்.

இராணுவ கூட்டணிகள் 

ஏகாதிபத்திய நாடுகள் தங்களது ராணுவத்தை பெருமளவுக்கு பலப்படுத்தி வருகின்றனர். சோவியத் வீழ்ச்சிக்குப் பிறகு அதிக அளவில் அமெரிக்கா தனது ராணுவ பலத்தை அதிகரித்து வருகிறது. சோவியத் வீழ்ச்சிக்குப் பிறகு, வளைகுடாப் போர், ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா, சிரியா போர்கள்  என ஆறு ஆக்கிரமிப்பு  போர்களை அமெரிக்கா மேற்கொண்டது. அவையும், தற்போது நடந்து வரும் ராணுவ மோதல்கள் அனைத்தும் ஏகபோக மூலதனத்தை பாதுகாக்கவே நடைபெறுகின்றன. மனித சமூகத்திற்கு மிகப்பெரும் அழிவையும் நாசத்தையும் அவை ஏற்படுத்தியுள்ளன.

இயற்கை வளங்களை சூறையாடும் அமைப்பாக ஏகாதிபத்தியம் வளர்ந்துள்ளது. காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதிப்பு என ஏராளமான பாதிப்புகளை ஏகபோக மூலதனத்தின் இலாப வேட்டையும், சுரண்டலும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்த பூமிப்பந்தின் இருப்பே இன்றைக்கு கேள்விக்குறியாகியுள்ளது.

ஏகபோக மூலதனத்தின் நலனுக்காக தங்களுடைய நாடுகளில் நவீன தாராளமயத்தை பின்பற்றிய பல நாடுகளில் தற்போது இனவெறி, நிறவெறி, வகுப்புவாத வெறி போன்ற சமூகப் பிளவு ஏற்படுத்தும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. வாழ்வாதார பாதிப்பு, வேலையின்மை,வறுமை போன்ற ஏகாதிபத்திய கொள்கைகளின் விளைவுகள் இப்படிப்பட்ட சமூகப்பிளவுகளுக்கு வழியஅமைக்கின்றன. குறிப்பாக பல மூன்றாம் உலக நாடுகளில்ள் இவைதைத் திட்டமிட்டு தூண்டப்படுகின்றன.

லெனின்  குறிப்பிட்டதுபோல் ஏகாதிபத்தியம் பல வகைகளில் இன்று ஒரு பெரும்  அழிவு சக்தியாக உள்ளது. மனித நாகரிகத்தை அழிக்கும் இந்த கொடூரமான அமைப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். உலகப் பாட்டாளி வர்க்கம் சோசலிச இலக்கை நோக்கி முன்னேற வேண்டும். இதற்கு மார்க்சிய-லெனினியமும், ரஷிய புரட்சி வரலாறும் பாட்டாளி வர்க்க இயக்கத்திற்கு வழிகாட்டும்.

===============================================================.

கட்டுரை உதவி:

Five Characteristics of Neo-imperialism: Building on Lenin’s Theory of Imperialism in the Twenty-First Century by Cheng Enfu and Lu Baolin; (Monthly Review; May 01, 2021)