இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை (1926)

(1926 இல் கவுகாத்தியில் நடைபெற இருந்த அகில இந்திய தேசிய காங்கிரஸின் வருடாந்திர கூட்டதில் விவாதிக்குமாறு கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சமர்ப்பித்த அறிக்கையின் சுருக்கமான வடிவத்தை தமிழில் தந்துள்ளோம். இதில் இடம்பெற்றுள்ள பல கோரிக்கைகளை 1930 இல் கட்சி ஏற்றுக் கொண்ட செயல் திட்டத்தில் இணைத்துக் கொண்டது இங்கு குறிப்பிடத்தக்கது.)

வகுப்புவாத மோதல்கள்

கடந்த சில ஆண்டுகளாக நாட்டைச் சீரழித்துக் கொண்டிருக்கும் வகுப்புவாத மோதல்களால் பலருக்கும் அவநம்பிக்கை ஏற்பட்டிருக்கும். நிச்சயமாக அது அவநம்பிக்கை தரக்கூடிய ஒரு அம்சம்தான். என்றாலும் கூட, ஒரு மக்கள் கட்சி அதற்குத் தீர்வு காணும். உயர் வர்க்கங்கள் உரிமைகளுக்காகவும், சலுகைகளுக்காகவும் போராடும் அதே நேரத்தில், இந்து-முஸ்லீம் ஆகிய இந்த இரு பிரிவுகளையும் சேர்ந்த பெருந்திரளான மக்களிடையே மிக முக்கியமானதொரு விஷயம் பொதுவானதாக இருக்கிறது. அதுவே சுரண்டல். இந்து-முஸ்லீம் தொழிலாளர்கள் ஒரே தொழிற்சாலை கூரையின் கீழ் வேர்வை சிந்தப் பாடுபடுகின்றனர். இந்து –முஸ்லீம் விவசாயிகள் கொளுத்தும் வெய்யிலில் நிலத்தில் பாடுபடுகின்றனர். அதே நேரத்தில் இந்த இரு பிரிவினருமே சமமான அளவில் நிலப்பிரபுக்களாலும், கந்துவட்டிக்காரர்களாலும் ஏகாதிபத்தியத்தின் ஏஜெண்டுகளாலும் கொள்ளையடிக்கப்படுகின்றனர். அவரது முதலாளி அதே மதத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக ஒரு முஸ்லீம் தொழிலாளிக்கு நல்ல ஊதியம் வழங்குவதில்லை. அதைப் போலவே,  ஓர் இந்து நிலப்பிரபு முஸ்லீம் குத்தகை விவசாயியை விட குறைவான குத்தகையை இந்து விவசாயியிடம் இருந்து பெறுவதில்லை. (குட்டி அறிவுஜீவிகள், சிறு வியாபாரிகள், கைவினைஞர்கள் போன்ற) சுரண்டலுக்கு ஆளாகும் நடுத்தர வர்க்கத்தினருக்கும் இதே விதி பொருந்தும்.

ஒட்டுமொத்த மக்கள்தொகையில் 98 சதவீதம்பேர் சுரண்டல் என்ற ஒற்றைச் சரடால் பிணைக்கப்பட்டிருக்கும் நிலையில் இத்தகைய வகுப்புவாத மோதல்களில் ஈடுபடுவதற்கு எந்தவிதக் காரணமும் இல்லை. பொருளாதார நலன்களைப் பற்றிய உணர்வு ஏற்படுவதற்கு அவர்களுக்கு உதவுங்கள்;  பொதுவான எதிரியை எதிர்த்துப் போராட துணிவுமிக்க ஒரு தலைமையை அவர்களுக்கு வழங்குங்கள். அப்போது இத்தகைய வகுப்புவாத மோதல்களைத் தூண்டிவிட்டுக் கொண்டிருக்கும் சதிகாரக் கொள்கையின் அடித்தளம் உடைத்தெறியப்படும். இது ஒரே நாளில் நடந்து விடாது என்பது உண்மையே. எனினும், தேசியவாத இயக்கத்திற்குள் புகுந்து அதன் உயிரோட்டமான உறுப்புகளை அரித்துக் கொண்டிருக்கும் வகுப்புவாதம் என்ற புற்றுநோய்க்கு இதைத் தவிர வேறெந்த மருந்தும் இல்லை.

தேசியவாத இயக்கத்தின் சரிவுதான் வகுப்புவாத மோதலுக்கான உந்துதலை அளித்திருக்கிறது. தீவிரமான வெகுஜன நடவடிக்கை என்ற திட்டத்துடன் தேசியவாத இயக்கத்தை சீரமைத்தோம் எனில், அதுவே இத்தகைய உந்துதலை அப்புறப்படுத்தி விடும். அரசியல் உணர்வை உருவாக்குவதற்குப் பதிலாக ஒத்துழையாமை இயக்கமும், கிலாஃபத் கிளர்ச்சியும் மதவாத வெறித்தனத்தை விரைவுபடுத்தியுள்ளன. தேசியவாத இயக்கத்தை உறுதியானதொரு மதசார்பற்ற அடித்தளத்தில் நிலைநிறுத்துவதன் மூலம் இந்த மாபெரும் தவறினை திருத்திக் கொள்ள வேண்டும். உடனடி பொருளாதார கோரிக்கைகளுக்கான முழக்கங்களுடன், தேசியவாதம் என்ற பதாகையின்கீழ், பெருந்திரளான மக்கள் அணிதிரட்டப்பட வேண்டும். நிலக் குத்தகை, நில வாடகை, கந்துவட்டிக்காரர்களின் கொடும் வட்டி, விலைவாசி, ஊதியம், வேலைநிலைமைகள், தொடக்கக் கல்வி ஆகியவையே கிளர்ச்சியின் முக்கிய அம்சங்களாக இருக்க வேண்டும். மக்களின் வாழ்க்கையை மிகப் பெருமளவிற்குப் பாதிக்கின்ற இந்த ஒவ்வொரு அம்சத்தின் மீதும், அதன் வழியாகப் பெறவிருக்கும் நலனுக்கான அடையாளத்தை மிகத் தெளிவாகவும் எளிதாகவும் நம்மால் உணர்த்தவும் முடியும். எனவே, இவ்வகையிலான கிளர்ச்சியானது தேசிய இயக்கத்திற்கான உறுதியான அடித்தளத்தை வளர்த்தெடுக்கும் அதே நேரத்தில் வகுப்புவாத நெருக்கடிக்கு எதிரான பாதுகாப்பான உறுதிமொழியையும் வழங்குவதாக இருக்கும்.

எனினும் ஜனநாயகரீதியான குறிக்கோள்கள் தேசிய சிறுபான்மையினரின் நலன்களுக்கு எதிராகச் செயல்படுவதில்லை. இந்தியாவிலுள்ள இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே நிலவும் பரஸ்பர அவநம்பிக்கை ஒரு வரலாற்றுரீதியான பின்னணியைக் கொண்டதாகும். எனவே, இந்த வகுப்புவாதப் பிரச்சனையை தேசிய சிறுபான்மையினர் என்றதொரு பிரச்சனையாகத்தான் அணுக வேண்டும். தேசிய சிறுபான்மையினரின் நலன்கள் தேசியவாத மேடையின் முக்கியமான தளங்களில் ஒன்றாக இருக்க வேண்டும். இந்தப் பாதுகாப்பினை தேசியவாத இயக்கம் தரத் தவறுமானால், அதைத் தருவதற்கான வாய்ப்பும், அதன் மூலம் நாடு முழுவதிலும் நேர்க்கோடாக ஒரு பிளவை ஏற்படுத்தும் வசதியும் ஏகாதிபத்தியத்திற்குக் கிடைக்கும்.

ஒன்றுக்கும் மேற்பட்ட பிரபலமான இந்து தேசியத் தலைவர்களின் நடத்தையும் அறிவிப்புகளும் முஸ்லீம்களிடையே சந்தேகம் எழுவதற்குப் போதுமான காரணங்களைத் தருகின்றன. மறுபுறத்தில், முஸ்லீம் தலைவர்களில் ஒரு பிரிவினரின் தாய்நாட்டை மீறிய தேசப் பற்று என்பது இந்து பிற்போக்குவாதிகளின் ஊறுவிளைவிக்கும் பிரச்சாரத்திற்குத் தூண்டுகோலாக அமைந்து விடுகிறது. இந்த இரண்டு பிரிவுகளிலுமே அதீதமான போக்கு என்பது தவிர்க்கப்பட வேண்டும். வகுப்புவாதத்திற்கு எதிரான நிச்சயமான காப்புறுதி என்பது பெருந்திரளான மக்களை அவர்களது பொருளாதார நலன்களின் அடிப்படையில் அணிதிரட்டுவதே ஆகும். இந்த வர்க்க ரீதியான எல்லைகள் வகுப்புவாத அடிப்படையில் பெரும்பாலான நேரங்களில் செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ள மேலெழுந்தவாரியான பிரிவினைகளை மிக ஆழமாகவே தாண்டிச் செல்வதாக அமைகின்றன.

தேசிய நலனும் வர்க்க நலனும்

தொடர்ந்து வெடித்து வரும் வகுப்புவாத மோதல்கள் தேசிய இயக்கத்திற்கு பெருமளவிற்கு ஊறு விளைவிப்பதாக அமைகின்றன. எனினும் இந்த இயக்கத்தின் இப்போதைய சீரழிவு தேசியவாத அணிகளுக்கு உள்ளே வர்க்க நலன்களின் அடிப்படையில் உருவாகும் மோதல்களின் காரணமாகவே உருவானதாகும். வேறெந்த நாட்டிலும் உள்ள முதலாளித்துவ சமூகத்தைப் போலவே இந்திய சமூகமும் வர்க்கங்களாகப் பிளவுபட்டுள்ளது.

இந்திய சமூகத்தின் பல்வேறு வர்க்கங்களுடனான பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் உறவு என்பது ஒரே மாதிரியானதாக இருப்பதில்லை. இந்த நாடு அந்நிய சக்தி ஒன்றினால் ஒடுக்கப்படுகிறது; சுரண்டப்படுகிறது. எனினும் இந்த ஒடுக்குமுறையின் அழுத்தமானது இந்திய மக்களின் அனைத்துப் பிரிவினரின் மீதும் சமமாக விழுவதில்லை. அதன் குறிக்கோள் என்பது அனைத்து மக்களையும் சுரண்ட வேண்டும் என்பதுதான். ஆனால் அந்தச் சுரண்டல் தங்கள் உழைக்கும் சக்தியைக் கொண்டு செல்வத்தை உருவாக்கும் வர்க்கங்களின் மீது மட்டுமே விழுகிறது. நாட்டின் 98 சதவீதம் பேராக உள்ள தொழிலாளர்களும் விவசாயிகளுமே உள்ளனர். இந்திய சமூகத்தின் உயர் வர்க்கத்தினருக்கும் ஏகாதிபத்தியத்திற்கும் இடையிலான சச்சரவு என்பது அடிக்கும் கொள்ளையை எப்படிப் பிரித்துக் கொள்வது என்பதில்தான்.

உள்ளூரில் உள்ள நிலப்பிரபுக்களும் முதலாளிகளும் உற்பத்தி செய்யும் உழைக்கும் மக்களை நம்பியே உயிர் வாழ்கின்றனர். எனினும், ஏகாதிபத்தியத்தின் ஏகபோகக் கொள்கையானது தங்குதடையற்ற பொருளாதார வளர்ச்சி அடைவதற்கு அவர்களை அனுமதிப்பதில்லை. அவ்வாறு இருந்தால் தொழிலாளி வர்க்கத்தைச் சுரண்டும் தங்கள் திறனை அவர்களால் மேலும் அதிகரித்துக் கொள்ள முடியும். இந்திய தொழிலாளிகளும் விவசாயிகளும் உற்பத்தி செய்கின்ற மதிப்பில் பெரும்பகுதி ஏகாதிபத்தியத்தின் சட்டைப் பைகளை மேலும் ஊதிப் பெரிதாக்குகிறது. இந்திய முதலாளிகள் பெயரளவிற்கு இடைத்தரகருக்கான பங்கைப் பெறுவதற்கு மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். காலப்போக்கில் கொள்ளையில் கிடைக்கும் இந்தச் சிறிய பங்கைக் கண்டு அவர்கள் அதிருப்தி அடைகின்றனர். இறுதியில், இந்திய மக்களின் உழைப்புச் சக்தியின் ஆதாரம் முழுவதன் மீதான முன்னுரிமையை, அதிகரித்துக் கொண்டே போகும் பங்கைத்தான் அவர்கள் கோருகின்றனர்.

எனினும், ஏகாதிபத்தியத்தின் ஏகபோகத்திற்கு சவால் விடாமல் நாட்டை தங்களது ஆளுகைக்குள் கொண்டுவந்துவிட வேண்டும் என்ற தங்கள் ஆசைகளை இந்திய முதலாளிகளால் நிறைவேற்றிக் கொள்ள முடியாது. மேலும் இதை அவர்களால் தானாகவே செய்துவிடவும் முடியாது. அனைத்து மக்களின் புரட்சிகரமான நடவடிக்கை மூலமாக அல்லாமல் அந்நிய மேலாதிக்கத்திலிருந்து இந்தியா தன்னை விடுவித்துக் கொண்டுவிட முடியாது. எனினும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான வெகுமக்களின் எழுச்சி என்பது தேசிய முதலாளிகளின் மனக்குறைகளால் உருவானது. அதற்கேயுரிய காரணங்கள் அந்த எழுச்சிக்கு உண்டு. பெருந்திரளான மக்கள் சுரண்டலுக்கு எதிராகக் கிளர்ந்தெழுகின்றனர். அதன் காரணமாகவே, நாட்டின் ஒரே எஜமானனாக, ஆட்சியாளராக இருக்க வேண்டும் என்று விரும்புகிற தேசிய முதலாளிகள் நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்துகின்ற ஏகாதிபத்தியத்திற்கு மிக மோசமான அச்சுறுத்தலை தரக்கூடிய வலிமை வாய்ந்த ஒரே ஆயுதத்தைப் பயன்படுத்தத் துணிவதில்லை. இவ்வகையில் தேசிய நலன்கள் – அதாவது 98 சதவீதம் பேரின் நலன்கள் – வர்க்க நலன்களுக்காக பலி கொடுக்கப்படுகின்றன. நாட்டின் மீதான முழுமையான ஆளுமையை பெறுவதற்கான அதன் முயற்சி, மிகுந்த சேதாரத்தை ஏற்படுத்தும் அபாயத்தையும் உள்ளடக்கியுள்ளது என்ற நிலையில் தேசிய முதலாளிகள் கூட்டாகச் சேர்ந்து இந்திய மக்களை சுரண்டுவதற்காக ஏகாதிபத்தியத்துடன் கூட்டணி ஏற்படுத்திக் கொள்கின்றனர்.

குறிப்பிட்டதொரு உள்நாட்டு அம்சத்தின் உதவியின்றி எந்தவொரு அந்நிய சக்தியுமே ஒரு நாட்டை நீண்ட நாட்களுக்கு ஆட்சி செய்ய முடியாது. நிலையானதொரு அரசுக்கு ஒரு சமூக அடிப்படை இருக்க வேண்டும். (முதல்) உலகப் போர் வரையிலான காலத்தில் இரண்டு வகையான சமூக அம்சங்கள் இந்தியாவில் பிரிட்டிஷ் அரசுக்கு உதவி செய்து வந்தன. அவையே நிலப்பிரபுத்துவ வர்க்கமும் விவசாயிகளும் ஆகும். இந்த இரண்டு பிரிவினருமே மக்கள் தொகையில் பெரும்பான்மையினராக உள்ளனர். இவ்வகையில் ஏகாதிபத்தியத்திற்கு உறுதியானதொரு அடித்தளம் இருந்தது.

எனினும் இந்த இரு சமூக சக்திகளுமே ஒரே மாதிரியான வகையில் பிரிட்டிஷ் அரசுக்கு ஆதரவு தரவில்லை. நிலப்பிரபுத்துவ வர்க்கம் சாதகமான, உணர்வுபூர்வமான ஆதரவை வழங்கி வந்த அதே நேரத்தில், விவசாயிகள் அவர்களது செயலூக்கமற்ற விசுவாசத்தின் காரணமாக உணர்வுபூர்வமற்ற ஆதரவை வழங்கி வந்தனர். உலகப் போருக்குப் பின்பு நிலைமை மாறிவிட்டது. விவசாயிகளின் செயலூக்கமற்ற விசுவாசம் சீர்குலைந்தது. அதற்குப் பதிலாக அவர்களின் கோபக் கனல் மிக்க கொந்தளிப்பு அவ்வப்போது எழத் தொடங்கியது. இதன் விளைவாக ஏகாதிபத்தியத்தின் அடித்தளம் இப்போது மிக மோசமான வகையில் கலகலக்கத் தொடங்கியது. அதனை சமப்படுத்துவதற்கு புதியதொரு கூட்டாளியை அது கண்டெடுக்க வேண்டியதாயிற்று.

அந்தப் புதிய கூட்டாளிதான் (வங்கியாளர்கள், வர்த்தகர்கள், உற்பத்தியாளர்கள், உயரதிகாரிகள் மற்றும் இந்த வர்க்கத்தினரோடு நெருங்கிய தொடர்புடைய தொழில்முறை நிபுணர்கள் ஆகியோரை உள்ளடக்கிய) தேசிய முதலாளி வர்க்கம் ஆகும். உலகப் போருக்குப் பிந்தைய வருடங்களில் தேசிய இயக்கம் ஒரு புரட்சியை நோக்கி மிக வேகமாக நகர்ந்து கொண்டிருந்தது. இதன் மோசமான விளைவுகளைக் கண்டு தேசிய முதலாளிகள் அஞ்சினர். பாதுகாப்பானதொரு வழியில் பயணம் செய்வதென்று அவர்கள் தீர்மானித்தனர். இவ்வகையில் இந்திய மக்களை சுரண்டுவதில் ஏகாதிபத்தியத்தின் இளைய கூட்டாளி என்ற அந்தஸ்தை ஏற்றுக் கொள்ள அவர்கள் முன்வந்தனர்.

முதலாளி வர்க்கத்தின் இந்தக் கட்சி மாறல் தேசிய இயக்கத்திலும் அதன் அடையாளத்தை விட்டுச் சென்றது. சமரசமும் சரணாகதியுமே கொள்கையாக மாறின. வர்க்க நலன்கள் என்ற பலிபீடத்தில் மக்களை பலி கொடுப்பது என்பது 1922ஆம் ஆண்டிலிருந்தே படிப்படியாக நடைபெற்று வருகிறது. கூடவிருக்கின்ற புதிய சட்டமன்றமும் கவுன்சிலும் இதன் இறுதிக் கட்டமாக அமைகிறது. அது எத்தகைய வடிவத்தை மேற்கொள்ள இருக்கிறது என்பது முக்கியமில்லை. ஆனால் அடிப்படையில் முதலாளித்துவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான உண்மையான எதிர்ப்புகள் அனைத்தையும் கைவிட்டுவிட்டு, ‘நாகரீகமாகவோ’ அல்லது ‘பதில் நடவடிக்கையாகவோ’ பிரிட்டிஷ் அரசுடன் ஒத்துழைக்கும்.

என்ன செய்ய வேண்டும்?

எவ்வாறாயினும், ஏகாதிபத்தியத்திற்கும் உள்நாட்டு முதலாளித்துவத்திற்கும் இடையிலான பகைமையின் சமரசம் ஒரு தேசியப் புரட்சிக்கான அடிப்படைக் காரணத்தை அகற்றிவிடாது. இந்திய மக்களுக்கு விடுதலையின் அவசியம் தேசியவாத முதலாளித்துவ பிரிவின் நலன்களால் தீர்மானிக்கப்படுவதில்லை. ஏகாதிபத்தியத்துக்கும் உள்நாட்டு முதலாளித்துவத்துக்கும் இடையேயான ஒப்பந்தம் இந்திய மக்களை அரசியல் ஆதிக்கம் மற்றும் பொருளாதாரச் சுரண்டலில் இருந்து விடுவிப்பதில்லை. கிட்டத்தட்ட 98 சதவீத மக்கள் இன்னமும் அரசியல் உரிமைகள் இல்லாமல்தான் உள்ளனர். ஏகாதிபத்தியம் தனது பங்கைக் குறைத்துக் கொள்வதன்மூலம் உள்நாட்டு முதலாளித்துவத்திற்குப் பொருளாதாரச் சலுகைகளை வழங்குவதில்லை. மாறாக, உழைக்கும் மக்கள் ஏகாதிபத்தியத்திற்காக செய்யும் உற்பத்திக்கும் மேலாக உள்நாட்டு முதலாளித்துவத்திற்கான மதிப்பை உற்பத்தி செய்யுமாறு கட்டாயப்படுத்தப்பட்டு, அதன்மூலம் உழைக்கும் மக்களின் சுரண்டலை மேலும் அதிகரிக்கும். இந்த நிலையில், தேசிய விடுதலைக்கான போராட்டத்தைத் தொடர வேண்டியது அவசியமாகும். தேசியவாத இயக்கம் என்பது பெரும்பான்மையான மக்களின் நலன்களைப் பிரதிபலிக்கும் வேலைத்திட்டத்துடன் கூடிய வெகுஜன இயக்கமாக இருக்கவேண்டும். இயக்கத்தின் வேலைத்திட்டம் சுயராஜ்யத் திட்டத்தில் இருந்ததைப் போன்ற குழப்பம் மற்றும் தெளிவின்மை ஆகியவற்றிலிருந்து விடுபட்டதாகவும் இருக்க வேண்டும்.

குறிப்பாக, விவசாயப் பிரச்சினையில் தேசியவாத இயக்கத்தின் நிலைப்பாடு தெளிவாக இருக்கவேண்டும். மக்கள்தொகையில் 70 சதவீதத்திற்கும் அதிகமானோர் விவசாயிகள். இந்திய சமூகத்தின் தற்போதைய நிலையில் இது மிக முக்கியமான பொருளாதார காரணியாகும். தேசிய விடுதலைக்கான இயக்கத்தில் அது உறுதியான பங்கை வகிக்கும். விவசாயிகளுக்கான போராட்டம் என்பது தேசியவாத இயக்கத்தின் முக்கிய பணிகளில் ஒன்றாக இருக்க வேண்டும். விவசாயிகளின் நம்பிக்கையை மீண்டும் பெற ஏகாதிபத்தியம் சாமர்த்தியமாக முயற்சிக்கிறது. கடந்த சில ஆண்டுகளில், பல மாகாணங்களில் நில உரிமையாளர் வர்க்கத்தின்மீது குத்தகை சீர்திருத்தச் சட்டங்களை அது கட்டாயப்படுத்தியுள்ளது. இது 1919-21இல் கடுமையான விவசாயக் குழப்பங்களால் உருவான ஆபத்தான சூழ்நிலையை கையில் எடுக்க உதவியது. விவசாயிகளின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் முயற்சியின் அடுத்தகட்டமாக, விவசாயத்திற்கான அரச ஆணையம் இருந்தது. இந்த நகர்வுகள் அனைத்திற்கும் பின்னால் உள்ள உள்நோக்கம் விவசாயிகளுக்கு உதவுவது அல்ல; மாறாக அவர்களை ஏமாற்றுவதுதான் என்பதைச் சொல்லத் தேவையில்லை. இந்தியாவில் இருந்து ஏகாதிபத்தியம் எடுத்துச் செல்லும் இலாபத்தின் முக்கிய ஆதாரமாக விவசாயிகள் மீதான மிருகத்தனமான  சுரண்டல் அமைகிறது. ஏகாதிபத்தியத்தின் மோசமான திட்டங்களை முறியடிக்கவும், விவசாயிகளின் நம்பிக்கையை மீளப் பெறவும் தேசியவாத இயக்கம் ஒரு தீவிரமான விவசாயத் திட்டத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். மேலும் அரசாங்கத்தால் முன்மொழியப்படும் சீர்திருத்த நடவடிக்கைகளின் உள்நோக்கத்தையும் அம்பலப்படுத்த வேண்டும்.

1923 தேர்தலுக்கு முன்னதாக சுயராஜ்ய கட்சி வெளியிட்ட அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது:

“குத்தகைதாரருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக கட்சி நிற்கிறது என்பது உண்மைதான்; எனினும் அது நிலஉரிமையாளருக்கு ஏதேனும் அநீதி விளைவிப்பதாக இருந்தால், அந்த நீதியின் தரம் மோசமாக இருக்கும்.”

தேசியவாத இயக்கம் விவசாயிகளின் தீவிர ஆதரவைப் பெற விரும்பினால், இந்த மேற்கோளில் வெளிப்படுத்தப்பட்ட பிற்போக்குத்தனமான கண்ணோட்டத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும். நிலவுடைமை பெற்றவர்களின் வாக்குக்காக மீன்பிடிக்கும் கட்சிக்கு இத்தகைய வேலைத்திட்டம் அவசியம்; ஆனால் சுதந்திரத்திற்கான போராட்டத்தில் மக்களை வழிநடத்த முன்மொழியும் ஒரு கட்சிக்கு இது நிச்சயமாக தீங்கு விளைவிக்கும். நிலவுடைமையாளர்களின் சலுகைகள் நிரம்பிய நிலையைத் தொடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தால், விவசாயிகளுக்கு அநீதியை மட்டுமே இழைக்க முடியும். நிலவுடைமை வர்க்கம் என்பது விவசாயிகளின் இரத்தத்தை உறிஞ்சும் ஒரு சமூக ஒட்டுண்ணி. மேலும், கிட்டத்தட்ட நாட்டில் பாதியில் உள்ள நிலங்களுக்கு அரசாங்கமே நிலப்பிரபுவாக உள்ளது. நீதியின் சாரம் அங்கேயும் பொருந்துவதாக வேண்டும். எனவே, விவசாயிகளைப் பற்றிய சுயராஜ்யத் திட்டம் ஒட்டுண்ணி நிலஉரிமையாளர்களைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு வரம்பற்ற வாழ்வாதாரத்தை அளிப்பதாகவும் இருக்கிறது. தேசியவாத இயக்கத்தின் விவசாய வேலைத்திட்டம் விவசாயிகளின் நலன்களைப் பாதுகாப்பதாக இருக்கவேண்டும். விவசாயிகளைச் சுரண்டும் அனைத்து வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முகவர்களுக்கு எதிராக இரக்கமின்றி அது இயங்க வேண்டும்.

தேசியவாத இயக்கத்தின் திட்டம்

தேசிய விடுதலைக்கான இயக்கம் ஒரு மக்கள் கட்சியால் மட்டுமே தலைமை தாங்கப்பட்டு வெற்றிபெற முடியும். தெளிவாக வரையறுக்கப்பட்ட வேலைத்திட்டத்தின்படி செயல்படும் ஒரு கட்சியால் அது வழிநடத்தப்படாவிட்டால், தேசிய விடுதலை இயக்கம் ஒரு சுக்கான் இல்லாத கப்பலைப் போல தத்தளிக்கும். தேசிய விடுதலை இயக்கத்தின் நோக்கம் என்ன என்பதை பல ஆண்டுகளாகவே இந்தத் தலைவர்கள் நாட்டுக்கு சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சுயராஜ்யம் என்பது தேசவிடுதலை என்பதைத் தவிர மற்ற எல்லாமாகவும் விளக்கப்பட்டுள்ளது. அதன் நோக்கம் தேசத்தின் விடுதலையைப் பெறவேண்டும் என்பதாக இல்லாமல் இருக்குமானால், அத்தகைய தேசிய இயக்கம் அதன் உண்மையான பொருளை இழந்துவிடும். இதற்கு சட்டபூர்வமான அல்லது அரசியல்சட்ட ரீதியான விளக்கம் எதுவும் தேவைப்படாது.

இதன் பொருள் என்னவெனில், தனக்கே உரிய அரசாங்கத்தை நிறுவவும், அரசியல்ரீதியான, பொருளாதாரரீதியான, கலாச்சார ரீதியான என்பது போன்ற தனது காரியங்களை தானே பார்த்துக் கொள்ளவும் ஆன சுதந்திரம் என்பதே ஆகும். தேசியவாத வேலைத்திட்டத்தின் இந்த அடிப்படையான அம்சம் இதுவரை தெள்ளத்தெளிவாக நாட்டின்முன் வைக்கப்படவில்லை. தேசியவாத இயக்கத்தை மறுசீரமைப்பதற்கான முதல் செயலாக இது செய்யப்பட வேண்டும். எந்த நிபந்தனைகளின்கீழ் தேசியவாதிகள் பதவி ஏற்க வேண்டும் என்ற சர்ச்சையானது இந்த முக்கிய பிரச்சினையை குழப்பிவிடக் கூடாது. இன்று இருக்கும் அனைத்து தேசியவாத கட்சிகளும் ஆதிக்கத்திற்கு உட்பட்ட அந்தஸ்து என்ற திட்டத்தில் உறுதியாக உள்ளன. அதையும்கூட உடனடியாகத் தரவேண்டும் என்றுகூட அவை கோரவில்லை. தற்போதைய மக்கள் பிரதிநிதித்துவம்அற்ற சட்டமன்றத்திற்கு ஓரளவிற்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பு மிகவும் தீவிரமான சில பிரிவினரை திருப்திப்படுத்துவதாகவும்கூட இருக்கக்கூடும். இது தேசவிடுதலைக்கான போராட்டம் அல்ல. மாறாக, அது ஒரு கேலிக்கூத்தே ஆகும். அப்பட்டமான தேசத்துரோகம் என்றுகூடக் கூறலாம்.

மக்களுக்கு முழுமையான சுதந்திரம், அதுவும் நிபந்தனையற்ற சுதந்திரம் இருக்க வேண்டும். இந்த சுதந்திரத்தைக் கோருவதற்கும் அதற்காகப் போராடுவதற்கும் என ஒரு மக்கள் கட்சி இருக்க வேண்டும்.

மேம்பட்ட ஜனநாயகக் கோட்பாடுகளின் அடிப்படையில் ஒரு குடியரசு வகைப்பட்ட அரசை நிறுவுவது என்பதே தேசவிடுதலையின் உறுதியான வடிவமாகும்.

வயதுவந்தோர் அனைவரின் (ஆண் – பெண் உள்ளிட்டு) வாக்குரிமையால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தேசிய சட்டமன்றம் மக்களின் உயர்ந்தபட்ச அமைப்பாக இருக்கும்; சாதி, வர்க்கரீதியான சிறப்புச் சலுகைகள் அனைத்தும் ஒழிக்கப்படும். நாடு முற்றிலுமாக ஜனநாயகப்படுத்தப்படும்.

இந்த தேசிய விடுதலையானது மக்களுக்கு மேலும் உறுதியான வசதிகளைத் தருவதாக இருக்க வேண்டும். அதாவது அவர்களின் உடனடியான பொருளாதாரக் குறைகளை நீக்குவதாக, உயர்ந்ததொரு வாழ்க்கைத்தரத்திற்கு உத்தரவாதம் அளிப்பதாக இருக்க வேண்டும். தேசவிடுதலையானது கீழ்க்கண்ட குறிக்கோளை நிறுவுவதாக அமைய வேண்டும்: நிலம் என்பது உழவர்களுக்கு மட்டுமே சொந்தமானது. நிலத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஆடம்பரமாக வாழும் ஒட்டுண்ணி வர்க்கங்கள் தங்கள் நலன்களை இழக்க நேரிடும். நிலவுடைமை வர்க்கத்தின் பாக்கெட்டுகளை வீங்கவைத்துக் கொண்டிருந்த பெரும்தொகைகள் இப்போது விவசாயிகளை, அவர்களின் சுமைகளிலிருந்து விடுவிப்பதாக இருக்கும். நிலவாடகையானது அனைத்துவகையிலும் குறைக்கப்படும். பொருளாதார ரீதியாக கட்டுப்படியாகாத நிலங்களை வைத்துக்கொண்டு பரிதாபகரமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்துவரும் ஏழை விவசாயிகளுக்கு நிலவாடகையிலிருந்து முற்றிலுமாக விலக்கு அளிக்கப்படும். கடன் கொடுப்பவர்களின் அத்துமீறலில் இருந்து விவசாயிகள் பாதுகாக்கப்படுவார்கள். தேசிய அரசாங்கம் விரிவான விவசாயக் கடன்கள் மூலம் விவசாயிகளுக்கு உதவும். விவசாயத்தில் இயந்திரங்களை அறிமுகப்படுத்துவதன் மூலமும், இலவச ஆரம்பக்கல்வி மூலமாகவும் விவசாயிகளின் கலாச்சார நிலை உயர்த்தப்படும்.

தேசிய அரசாங்கம் தொழில்துறை தொழிலாளர்களுக்கு எட்டுமணிநேர வேலை மற்றும் குறைந்தபட்ச வாழ்க்கை ஊதியத்திற்கு உத்தரவாதம் அளிக்கும். நாகரீகமான வேலைநிலைமைகள் மற்றும் வீட்டுவசதி குறித்து சட்டம் இயற்றப்படும். வேலையில்லாத தொழிலாளர்களுக்கு அரசு பாதுகாப்பு அளிக்கும்.

ரயில்வே, நீர்வழிகள், தந்தி போன்ற பொதுப்பயன்பாடுகள் தேசத்தின் சொத்தாக இருக்கும். அவை தனிப்பட்ட லாபத்திற்காக அல்லாமல், பொதுமக்களின் பயன்பாட்டிற்காகவே இயக்கப்படும்.

தொழிலாளர்கள் (விவசாயிகளும்) ஒன்றிணைவதற்கான முழு சுதந்திரமும், தங்கள் நலன்களைக் காத்துக்கொள்வதற்காக வேலைநிறுத்த உரிமையையும் பெறுவார்கள்.

மதம் மற்றும் வழிபாடுகளில் முழுமையான சுதந்திரம் இருக்கும். தேசிய இன மற்றும் மதரீதியிலான சிறுபான்மையினர் சுயாட்சி உரிமையை அனுபவிப்பார்கள்.

பெரும்பான்மையான மக்களை ஒருங்கிணைத்து, தவிர்க்கமுடியாத வகையில் அவர்களை செயலில் ஈடுபடுத்தும் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் இவை. (முதலாளித்துவ மற்றும் நிலஉடைமை வர்க்கங்களின் நலன்களைப் பாதுகாத்தல்) என்ற முதலாளித்துவ தேசியவாதத்தின் வேலைத்திட்டம் நாட்டைக் காட்டிக் கொடுத்துள்ளது. முதலாளித்துவத்தின் துரோகத்தையும் தயக்கத்தையும் பொருட்படுத்தாமல் நாடு தன்னை உறுதிப்படுத்திக் கொண்டு விடுதலையை நோக்கி நகர வேண்டும். பாசாங்குத்தனமான முதலாளித்துவ அரசியல்வாதிகளின் செல்வாக்கிலிருந்து தேசிய காங்கிரஸ் விடுவிக்கப்பட வேண்டும். சுதந்திரத்திற்காக நேர்மையாகவும் தைரியமாகவும் போராடத் தயாராக இருப்பவர்களே மக்களின் குரலை எதிரொலிக்கும் பேச்சாளர்களாக மாறவேண்டும். தேசவிடுதலைக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல விரும்பும் கட்சி, வாக்காளர்களில் சில அதிர்ஷ்டசாலிகளை அல்ல; வாக்குரிமையற்ற பெரும்பான்மையினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் கட்சியாக மாற வேண்டும். தற்போது கவுன்சிலின் மாமன்றம் மக்கள் கட்சியின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தவே விழைகிறது. அது மேலும் பரந்த செயல்பாட்டுக் களங்களை கண்டறிய வேண்டியது அவசியமாகும். தேசிய விடுதலை, அனைத்து வகையிலும் தேசிய வாழ்க்கையை முழுமையாக ஜனநாயகப்படுத்துவது – இதுதான் தேசியவாத மேடையின் அடிப்படையான தூண்கள். இந்தத் திட்டத்தை வென்றடைவதற்கான போர் முழக்கம் இதுதான்: ”நிலம்- உணவு- கல்வி.”

தமிழில் : வீ. பா. கணேசன்

மார்க்சிஸ்ட் (ஆங்கிலம்) , Download தொகுதி 36, இதழ் 3-4, ஜூலை-டிசம்பர் 2021 இல் வெளியானது. (சுருக்கப்பட்டது)

புதிய சூழலில் இந்துத்துவா எதிர்ப்பு !

– பிரகாஷ் காரத்

இந்துத்துவா வகுப்புவாத சக்திகளையும், ஆர்.எஸ்.எஸ் பரிவாரத்தையும் எதிர்கொள்ள, அரசியல் தளத்திலும், சித்தாந்த தளத்திலும், சமூக மற்றும் பண்பாட்டு தளத்திலும் திட்டவட்டமான அணுகுமுறைகளை உருவாக்கி  முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். இது நம்முடைய முக்கிய நிகழ்ச்சி நிரலாக உள்ளது.

வகுப்புவாத சக்திகளை எதிர்கொள்வது பற்றி, கடந்த காலத்தில் எடுத்த முடிவுகள் இப்போது போதுமானதாக இல்லை. முந்தைய நிலையில், வகுப்புவாத சக்திகள் சில பிரிவினை திட்டங்களை முன்னெடுத்து இந்து மக்களின் ஆதரவை பெற முயல்வதுடன், சிறுபான்மையினருக்கு எதிரான திட்டங்களை முன்னெடுப்பார்கள். ஆனால் இப்போது இந்துத்துவா வகுப்புவாத சக்திகள் அரசு அதிகாரத்துடன் இயங்குகிறார்கள். இது கடந்த கால சூழலில் இருந்து மாறுபட்டது. இப்போதைய புதிய நிலைமைகளை பயன்படுத்தி, குடியரசின் தன்மையையே மாற்றியமைத்து, அரசியல் சாசனத்தை மாற்றியமைத்து,  ‘இந்து ராஷ்ட்டிராவை’ நோக்கி செயல்பட்டு வருகிறார்கள்.  ஆதரவுத் தளத்தை விரிவாக்கிட, முந்தைய காலத்தில் அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளில் இருந்து இது மாறுபட்டது ஆகும். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அடிப்படையான இலக்குகளை நிறைவேற்றக்கூடிய போக்கினை நாம் எதிர்கொண்டு வீழ்த்த வேண்டியுள்ளது.

பாஜக எப்படிப்பட்ட கட்சி ?

மேம்படுத்தப்பட்ட நம்முடைய கட்சி திட்டம், பாரதிய ஜனதா கட்சியை பிற முதலாளித்துவ கட்சிகளைப் போன்ற இன்னொரு சாதாரண முதலாளித்துவக் கட்சியாக பார்க்கவில்லை. பாஜகவை உருவாக்கியதும், வளர்த்தெடுப்பதும் பாசிச வகைப்பட்ட தத்துவத்தால் வழிநடத்தப்படும் ஆர்.எஸ்.எஸ் இயக்கமாகும். அவர்கள் அதிகாரத்திற்கு வரும்போது, அரசு இயந்திரத்தை பயன்படுத்தி ‘இந்து ராஷ்ட்டிராவை’ நோக்கிய பயணத்தை வேகப்படுத்த முயற்சிப்பார்கள் என்று நம் திட்டத்திலேயே குறிப்பிட்டுள்ளோம். 2000 ஆண்டில் நமது கட்சி திட்டத்தை மேம்படுத்திய போது வாஜ்பாய் அரசாங்கம் இருந்தது.

‘இந்து ராஷ்ட்டிரா’ என்பது இந்து ராஜ்ஜியம் அல்ல. அதாவது அது  மத தலைவர்களின் ஆட்சி அல்ல. (ஈரான் நாட்டில் நடப்பதை மத தலைவர்களின் ஆட்சி எனலாம், அதனை ஒத்த ஆட்சியாக இது இருக்காது). ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஆட்சி என்பதுதான் ‘இந்து ராஷ்ட்டிரா’ என்பதன் பொருள் ஆகும்.  ஏற்கனவே அவர்கள் ஆட்சிக்கு வந்துவிட்ட பின்னணியில் ‘இந்து ராஷ்டிரத்தைக்’ கட்டமைக்கும் பணியும் ஏற்கனவே துவங்கி விட்டது. பாஜக மக்களவையில் பெரும்பான்மை பெற்றுள்ளது. அரசமைப்பின் அடிப்படையான சில அம்சங்களையும், குணாம்சத்தையும் மாற்றியமைக்க முயல்கிறது. நீதித்துறையினுடைய தன்மையையும், அதிகார வர்க்கத்தின் தன்மையையும், ராணுவத்தின் தன்மையையும் மாற்றியமைக்க முயல்கிறார்கள்.

அக்னிபத் திட்டத்தை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வோம். அந்த திட்டத்தின் நோக்கம் என்ன?. ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் முறையை அரசியல் அடிப்படையிலானதாக திட்டமிட்ட விதத்தில்  மாற்றியமைப்பதுதான் அதன் நோக்கம். இவ்வகையில் அவர்கள் ராணுவத்தில் ஆள் எடுக்கும் தன்மையையே மாற்றியமைக்க முயற்சிக்கிறார்கள்.

பரந்துபட்ட உத்தி அவசியம்

எனவே இதுதான் இப்போதைய நிலை என்கிறபோது, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தை  தேர்தல் களத்தில் மட்டும் நடத்தினால் போதாது என்பதை உணர முடியும். தேர்தல் கால உத்திகள் மட்டும் பலன் கொடுக்காது. அவர்கள் தேர்தல் களத்திலும், அரசியல் தளத்திலும் மட்டுமே செயல்படுவதில்லை. தங்களை கலாச்சார அமைப்பு என்று கூறிக்கொள்ளும் ஆர்.எஸ்.எஸ், இந்திய குடியரசின் பண்பு நலன்களை மாற்றியமைப்பதையே  இலக்காக கொண்டு செயல்படுவதை ஒட்டுமொத்தமாக கணக்கில் எடுத்து, அனைத்தையும் உள்ளடக்கிய விரிவான உத்தியோடு செயல்பட வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ்/பாஜக அமைப்புகளால், இந்திய தேசியம் என்ற பெயரில் இந்து பெரும்பான்மை வகுப்புவாதத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க முடிந்துள்ளது. 23 வது அகில இந்திய மாநாட்டின் அரசியல் தீர்மானத்தில் இதை நாம் குறிப்பிட்டுள்ளோம். மக்களின் மனங்களில் தாக்கம் ஏற்படுத்தி, கருத்தை மாற்றியமைக்க அவர்களால் முடிந்துள்ளது. குறிப்பாக இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் வாழும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான சாதாரண மக்களின் மனங்களில் தம் கருத்துக்களை ஆழமாக பதித்துள்ளார்கள். அவர்கள் மட்டுமே  உண்மையான தேசியவாதிகள் என்றும், தேசத்தின் மீது அக்கறை கொண்ட சக்திகள் என்றும் பதிய வைத்துள்ளார்கள்.

இந்துக்கள் வலுவடைந்தால்தான் தேசம் வலுப்படும் என்கிறார்கள். இந்த வாதத்தின் மற்றொரு பகுதி இஸ்லாமியர்கள் இந்த தேசத்தை பலவீனமாக்குகிறார்கள் என்பதாகும். இந்துக்கள் என்றால் ’நாம்’, இஸ்லாமியர்கள் என்றால் ’அவர்கள்’. ‘நாம்’ –  எதிர் –  ‘அவர்கள்’ என்ற உணர்வினை உருவாக்கியுள்ளார்கள். இது கணிசமான மக்களை சென்று சேர்ந்திருக்கிறது.

குறிப்பாக உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இதுதான் நிலைமை. பாஜகவை மக்கள் வலுவான தேசியவாத  சக்தியாக பார்ப்பதுடன், பெரும்பான்மை மக்களுக்கு நல்லது செய்வதற்கே அவர்கள் இருப்பதாக பார்க்கிறார்கள். இந்த சூழலை எவ்வாறு எதிர்கொள்வது?

கடந்த  21, 22 மற்றும் 23 மாநாடுகளில் நிறைவேற்றப்பட்ட அரசியல் தீர்மானத்திலும், அரசியல் ஸ்தாபன அறிக்கையிலும் ‘இந்துத்துவாவை எதிர்கொள்வது’ என்ற தலைப்பிலான பகுதி இடம்பெற்று வந்துள்ளது. கடந்த காலங்களில் நாம் பொதுவாக காங்கிரஸ் கட்சியை எதிர்த்து போராடியிருக்கிறோம். பல மாநிலங்களில் இதர முதலாளித்துவக் கட்சிகளை எதிர்த்துப் போராடியிருக்கிறோம். ஆனால் இது அதிலிருந்து வேறுபட்ட ஒன்றாகும். அதனால்தான் நமது தீர்மானங்களில் தனியாக குறிப்பிட வேண்டி வந்தது.

எனவே 2015ஆம் ஆண்டில் இருந்து தனித்துவமாக, இதுபோல சில திட்டவட்டமான  உத்திகளை உருவாக்க முயற்சிக்கிறோம்.  அரசியல் செயல்பாடுகளிலும், கருத்தியல் செயல்பாடுகளிலும் இந்துத்துவா சக்திகளை எதிர்கொள்ளும் விதத்தில் பணிகளை திட்டமிட்டு முன்னெடுக்க கட்சியை தயார்ப்படுத்த வேண்டியுள்ளது. பல தளங்களிலும் நாம் கால் பதிக்க வேண்டியுள்ளது என்பதை கட்சி அணிகளுக்கு உணர்த்திட வேண்டும்.

கட்சியும், பல்வேறு வர்க்க வெகுஜன அரங்கங்களும், தமது வேலை பாணியை மாற்றியமைக்க வேண்டும். கருத்தியல் தளத்திலும், சமூக – பண்பாட்டுத் தளத்திலும், கல்வித் தளத்திலும் பணிகளை திட்டமிட வேண்டும். கடந்த காலத்தில் இந்த பணிகளை பொதுவாக அலட்சியப்படுத்தியே வந்திருக்கிறோம். கட்சி சில முழக்கங்களை முன்னெடுக்கும், தேர்தலை எதிர்கொள்ளும், வர்க்க – வெகுஜன அமைப்புகள் சில முழக்கங்களை முன்னெடுப்பார்கள், போராட்டங்களை நடத்துவார்கள்.

கருத்தியல் தளத்தில் கட்சி போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக பேசிவந்திருக்கிறோம். ஆனால் இதுவரை அதில் என்ன செய்திருக்கிறோம்? பொதுவாக நம்முடைய கட்சி தொழிலாளி வர்க்க கட்சியாகும். நம்முடைய கட்சியினுடைய கருத்தியல் என்பது தொழிலாளி வர்க்க கருத்தியலே. ஆனால் மும்பை, தில்லி போன்ற பெருநகரங்களில் வாழும்   தொழிலாளர்களோடு பேசினால் அவர்களில்  கணிசமானோர் பின்பற்றும் சித்தாந்தம் இந்துத்துவா சித்தாந்தமாக உள்ளது. இந்துத்துவாவை பின்பற்றிக் கொண்டே சிலர்  நம்முடைய சங்கங்களிலும் இருப்பார்கள். அதுதான் இப்போதைய சூழல்.

எனவே கருத்தியல் தளத்தில் நடத்த வேண்டிய போராட்டத்தில் நாம் முன்னேற வேண்டியுள்ளது.  தொழிற்சங்கம் மட்டுமே இந்த போராட்டத்தை முன்னெடுத்திருக்க முடியாது. கட்சிக்கு தான் அதில் கூடுதலான பங்கு உள்ளது. எனவே அரசியல் தளத்தில் மட்டுமல்லாது, கருத்தியல் மற்றும் சமூக தளத்திலும் பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்பதையே இது காட்டுகிறது.

சில மாநிலங்கள் இந்த சூழலில் விதிவிலக்காக அமைந்துள்ளன. தமிழ்நாட்டினை உதாரணமாக பார்க்கலாம். தமிழ் நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பரிவார அமைப்புகள் பிரதான இடத்தில் இல்லை. ஆனாலும் அவர்கள் வளர முயற்சிக்கிறார்கள். இன்றுள்ள நிலைமையை கணக்கில் எடுத்துக்கொண்டு, தமிழ்நாட்டிலோ, ஆந்திராவிலோ, கேரளத்திலோ ஆர்.எஸ்.எஸ் அமைப்பினுடைய செல்வாக்கிற்கு மக்கள் உட்பட மாட்டார்கள் என்ற நினைப்பில் இருந்துவிடக் கூடாது. ஏற்கனவே கர்நாடக மாநிலத்தில் அவர்கள் கணிசமான செல்வாக்கை பெற்றுள்ளார்கள். பிரதான சக்தியாக உள்ளார்கள். தெலங்கானாவிலும் சில முன்னேற்றங்களை அடைந்துள்ளார்கள். தமிழ் நாட்டில் ஒரு பெரிய சக்தியாக வளர்வதற்கு நீண்ட காலம் பிடிக்கும் என்று அவர்களுக்கு தெரியும். அதற்கு இந்த மாநிலத்தின் அரசியல், கருத்தியல், சமூக சூழல் ஒரு காரணமாக உள்ளது. திராவிட சித்தாந்தம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை சொல்லலாம். ஆனாலும் அவர்கள் இந்த நிலைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும், தமது  குறைபாடுகளை மீறி முன்னேறுவதற்கும் பல தளங்களிலும் முயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

பட்டியல் இனத்தின் மீது குறி !

ஆர்.எஸ்.எஸ் என்றால் ”உயர்” சாதி அமைப்பு எனபலர் நினைக்கிறார்கள். ஆம் அவர்கள்  சிந்தனை, கருத்தியல் இரண்டிலும் நிச்சயமாக “உயர்” சாதி ஆதிக்க கருத்தியல் கொண்டவர்கள்தான். ஆனால் ”உயர்” சாதியினரை மட்டும் கொண்ட கட்சியாக மட்டுமே அவர்கள் இல்லை.

உத்திரப்பிரதேசத்தை எடுத்துக் கொண்டால் ஓபிசி யை சேர்ந்த பெரும்பகுதியினர் பாஜக ஆதரவாளர்களாக இருக்கிறார்கள். அதே போல் தலித் மக்களில் குறைந்த பட்சம் 50 சதவிகிதம் பாஜக ஆதரவாளர்களாக இருக்கிறார்கள். இது எப்படி சாத்தியமானது?. முன்பு ”உயர்”  சாதியினர் கட்சியாக பார்க்கப்பட்ட கட்சி,  இன்றைக்கு ஓபிசி, எஸ்சி /எஸ்டி  மத்தியிலும் வளர்ந்திருக்கிறது என்றால் இது எப்படி நடந்தது? அவர்கள் குறிப்பாக சில சாதிகளைக் குறிவைத்து தங்களுடைய பணிகளைச் செய்தார்கள். அனைத்து இந்து மக்களின் பிரச்சனைகளையும் எடுப்பவர்களாக, அவர்களுக்கான கட்சியாகவும்  தங்களை அடையாளப்பட வைப்பதற்கான முயற்சிகளையும் செய்து கொண்டிருக்கிறார்கள்.

கடந்த காலத்தில் ஆர்எஸ்எஸ் உருவாக்கிய அரசியல் கட்சி யான ஜன சங்கத்தை பனியா கட்சி என்று சொல்வதுண்டு, அதற்குப் பிறகு பாஜக உருவான பின்பும் தொடக்க கட்டத்தில் அவர்களை பனியா கட்சி என்றே குறிப்பிடப்பட்டு வந்தது.

பனியா என்பது வடமாநிலத்தில் உள்ள ஒரு குறிப்பட்ட சமூகம். குறிப்பாக வியாபாரிகள் வணிகர்கள்; அவர்கள் ஜெயின் அல்லது குப்தாக்களாக இருக்கலாம். மார்வாடிகளாக இருக்கலாம். ஒரு வியாபாரம் செய்யக்கூடிய சமூகம். அவர்கள் மத்தியில் பாஜக வலுவாக இருந்தது. எனவே பாஜக அல்லது அதற்கு முன்னதாக ஜனசங்கத்தினுடைய வளர்ச்சி என்பது நகர்ப்புறங்களைச் சார்ந்து இருந்தது. ஆனால் இன்றைக்கு உத்தரப்பிரதேசத்தில் பட்டியலினத்துக்கான தொகுதிகளில் பெரும்பான்மையான தொகுதிகளில் அவர்கள் வெற்றிபெற முடிகிறது.

மாயாவதியினுடைய பகுஜன் சமாஜ் கட்சி  இருக்கிறது என்பது உண்மைதான். அந்த கட்சி யார் மத்தியில் இருக்கிறது என்று சொன்னால், பட்டியல் சாதிகளில்  உள்ள குறிப்பிட்ட துணை சாதி மத்தியில்தான் அவர்கள்  ஆழமாக இருக்கின்றனர். பட்டியல் இனத்தின் இதர துணை சாதிகளுக்குள்  பாஜக ஏகமாக வளர்ந்துள்ளது. பட்டியல்/பழங்குடி பிரிவினரை அவர்கள் குறிவைக்கிறார்கள்.

கடந்த 30, 40 ஆண்டுகளாகவே ஆர்எஸ்எஸ் பழங்குடியினர் மத்தியில் ஆழமாக வேலை செய்து வந்தது.  ஒரு நீண்ட காலத் திட்டத்தின் அடிப்படையில்தான் அவர்கள் பணியாற்றி வந்தார்கள். இவர்களின் ஊடுருவலை நாம் கவனித்து நோக்க வேண்டும்.

பாஜக என்பது நால் வருணத்தில் நம்பிக்கை உள்ள கட்சிதான், மதவாதத்தைப் பின்பற்றுகிற கட்சிதான். இருந்தாலும் அவர்களுடைய அரசியல் நோக்கத்திற்காக அனைவரையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வரும் தேவை அவர்களுக்கு இருக்கிறது. அதனை முயற்சிக்கிறார்கள்.

தெரிந்த பல அமைப்புகள் ஆர்எஸ்எஸ் அமைப்புகளாக இருக்கும். இந்து முன்னணி போல சிலதை சொல்லலாம். ஆனால், தெரியாமல் பல்வேறு  அமைப்புகள், என்ஜிஓ-கள் ஆர்எஸ்எஸ் வழிகாட்டி நடத்தக்கூடிய அமைப்புகளாக இருப்பார்கள். குறிப்பாக இன்றைக்கு ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால் அவர்களுக்கு நிதி என்பது ஒரு பிரச்சனையாக இல்லை.

கேரளாவில் பழங்குடியின மக்கள் ஒட்டு மொத்த மக்கள் தொகையில் 2 சதவிகிதம் கூட இருக்க மாட்டார்கள். ஆனாலும் ஆர்எஸ்எஸ் வழிகாட்டுதலில் செயல்படக்கூடிய பெரும்பகுதி என்ஜிஓ கள் செயல்படும் பகுதி பழங்குடியின மக்கள் பகுதிதான். எனவே ஆர்எஸ்எஸ் நடவடிக்கைளுடைய எல்லை என்ன ?ஆழம் என்ன ? அதனுடைய தன்மை என்ன? வகைகள் என்ன ? என்பதை சரியாக புரிந்துகொண்டு எதிர்க்க வேண்டும்.

கருத்தியல் நடவடிக்கைகள்

இதற்கான திட்டத்தை உருவாக்குவதற்கான பரந்த வழிகாட்டுதல், 23 வது அகில இந்திய மாநாட்டின் அரசியல் ஸ்தாபன அறிக்கையில் தெளிவாக தரப்பட்டுள்ளது. அதில் முதல் விசயம், கருத்தியல் நடவடிக்கைகள் ஆகும்.  இந்துத்துவ வகுப்புவாத கருத்தியலை வீழ்த்துவதற்கான நடவடிக்கைகளுக்கான ஏராளமான விபரங்களை கொண்ட பிரசுரங்கள், வகுப்பு குறிப்புகள், பிரச்சார கருவிகளை, சமூக வலைத்தள உள்ளடக்கங்களை உருவாக்க வேண்டும். இவற்றை உள்ளூர் மட்டத்திலேயே சுலபமாக செய்துவிட முடியாது. கட்சியின்  மத்தியக்குழுவும், மாநிலக்குழுவும் இணைந்து குறிப்பிட்ட காலவரையறைக்குள் இதனை முடிக்க வேண்டும். சமூக வலைத்தளத்தையும் வலுப்படுத்தி கருத்தியல் பிரச்சார நோக்கில் பயன்படுத்த வேண்டும்.

இரண்டாவது விசயம், கட்சி மக்களோடு உயிரோட்டமான தொடர்பில்,  இரண்டற  கலந்திருக்க வேண்டும் என்கிற மாஸ்லைன் கடைப்பிடிப்பது.  மக்கள் மத்தியில் நம்முடைய தலையீடுகளும், பணிகளும் விரிவாக நடக்க வேண்டும் என்பதை நாம் தொடர்ந்து வலியுறுத்துகிறோம். இது  கட்சிக்கும், வெகுஜன அமைப்புகளுக்கும் பொருந்தும்.  மக்களோடு உயிர்ப்பான ஒரு  தொடர்பில் இருக்க வேண்டும் என்பது  கொல்கத்தா பிளீனத்தில் இருந்தே சொல்லப்படுகிறது. மக்களுடன் உயிரோட்டமான தொடர்பு என்று சொல்வதன் மற்றொரு அம்சம், பல்வேறு நல நடவடிக்கைகளை, சமூக சேவை  நடவடிக்கைகளை முன்னெடுப்பது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் இது போன்ற பணிகளை  மேற்கொள்கிறார்கள். நாம் கட்சியாகவும், வர்க்க வெகுஜன அமைப்புகளின் வழியாகவும் இதனைச் செய்ய வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு கல்வி தளத்தில் செயல்படுகிறது. அவர்களை போல ஆயிரக்கணக்கான பள்ளிக்கூடங்களை நாம் நடத்த முடியாது. ஒன்றிரண்டு நடத்தலாம். ஆனால்  இளைஞர், மாணவர் அமைப்புகள்  கல்வி தளத்தில்  பங்களிக்க முடியும். உதாரணமாக மாலை நேர கல்வி (டியூசன்) மையங்கள் நடத்தலாம்.  தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் நடத்தலாம். படிப்பு வட்டங்கள், நூலகங்களை நடத்த முடியும்.

அதே போல, பண்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். பண்பாட்டு நடவடிக்கை என்றாலே  கலைக்குழு அமைப்பு, பாடல்குழு, வீதிநாடகக்குழு என்பது மட்டுந்தான் நினைவில் வருகிறது. அந்த பணிகள் இன்னும் பரந்து பட்டதாக இருக்க வேண்டும். நமக்கு அப்பாற்பட்ட மக்களை ஈடுபடுத்தகூடிய விதமான நடவடிக்கைகளாக செய்ய வேண்டும். உதாரணமாக புத்தகத் திருவிழாக்களை சொல்லலாம். மாணவ/மாணவியருக்கான பேச்சு போட்டி, கட்டுரைப்போட்டிகள் நடத்தலாம். இந்த நடவடிக்கைகளை கட்சியாக மட்டும் நடத்த முடியாது. வர்க்க வெகுஜன அமைப்புகளும் செய்ய வேண்டும். குறிப்பாக தொழிற்சங்கள் சில முயற்சி எடுத்து, தொழிலாளர் வாழும் பகுதிகளில் பண்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம்.

அடுத்து வளர்த்தெடுக்க வேண்டியது பாலர் சங்கம்,  சில மாநாடுகளாகவே நாம் பாலர் சங்கம் பற்றி பேசுகிறோம். இந்த விசயத்தில் தீவிர முன்முயற்சி ஏதும் இல்லை. அதனால்தான் பாலர் சங்கத்தை உருவாக்குவதை மாநாட்டின் கடமையாகவே நாம் வரையறுத்திருக்கிறோம். கேரளாவில் இவ்விசயத்தில் நமக்கு நல்ல அனுபவம் இருக்கிறது. ஒரு பரந்த அமைப்பாக பாலர் சங்கத்தை கட்டமைத்திருக்கிறார்கள். பாலர் சங்கத்தை உருவாக்கும் போது, கட்சி ஏற்கனவே கணிசமாக இருக்கும் பகுதி, செல்வாக்கு இருக்கும் பகுதியில் தொடங்கினால், இதர பகுதிகளுக்கும் விரிவாக்க முடியும் என்பது கேரள அனுபவம்.

மத விழாக்கள்

கோவில் திருவிழாக்களிலும், மத விழாக்களிலும் பங்கெடுத்தல் அடுத்து வருகிறது. பொதுவாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பு கோவில்களை, மத நம்பிக்கைகளை பயன்படுத்துகிறார்கள். கோவில் என்று சொல்லும் போது மதம் சார்ந்த நடவடிக்கைகள் இருக்கும். அடுத்து  கோவில் திருவிழாக்கள் என்று சொல்லும் போது அது மதம் சார்ந்த நடடிவடிக்கையாக மட்டும் இல்லாமல் ஒரு சமூகம் சார்ந்த நடவடிக்கையாகவும் இருக்கும் ஏரளாமான மக்களுடைய பங்கேற்பும் இருக்கும். நாம் சமூகம் சார்ந்த நடவடிக்கைகளில் இருந்து விலகி இருக்க முடியாது.

திருவிழாக்களை நாம் முற்றிலும் நிராகரித்துவிட முடியாது. ஆனால் எந்த திருவிழாவில் பங்கேற்பது. எந்த அளவில் பங்கேற்பது என்பது பற்றி  ஓரே சீரான முடிவினை மேற்கொள்ள முடியாது. ஒவ்வொரு திருவிழாவின் தன்மையை பொருத்து முடிவு செய்ய வேண்டும். சில திருவிழாக்கள் முழுக்க முழுக்க மதம் சார்ந்த நடவடிக்கையாக மட்டும் இருக்கும். அதில் சமூக ரீதியான  பங்கேற்பு பெரியதாக இருக்காது. எனவே ஒவ்வொரு திருவிழாக்களின் தன்மையை கணக்கில் எடுத்து உள்ளூர் மட்டத்தில் முடிவு எடுக்க வேண்டும்.

கோயில்களுக்கும் சமூக வாழ்க்கையில் பாத்திரம் உள்ளது. அவைகளை ஆர்.எஸ்.எஸ் சார்பு அமைப்புகள் கையகப்படுத்துகிறார்கள். இந்துத்துவா நடவடிகைகளுக்கு பயன்படுத்துகிறார்கள். நாம் அதனை அப்படியே தங்குதடையில்லாமல் அனுமதிக்க முடியாது. எனவே கோயில் நிர்வாகத்தில் நாமும் தலையிட வேண்டும். அதற்காக கட்சியின் முக்கிய ஊழியர்கள் அதனை செய்ய முடியாது. கட்சி ஆதரவாளர்கள், மதச்சார்பற்ற மனநிலை கொண்ட நம்பிக்கையாளர்கள் அதில் இணைந்திட முடியும். இது அத்தனை எளிதாக இருக்காது. ஆனால் நாம் இதன் மூலமே கோயில்களை ஆர்.எஸ்.எஸ் செயல்பாட்டுக்கான  களமாக மாறாமல் தடுக்க முடியும்.

விளையாட்டு விழாக்கள், யோகா பயிற்சி போன்ற வேறு பல சமூகம் சார்ந்த நடவடிக்கைகளும் அவசியமே.

பொதுவாகவே மக்கள் மத்தியில் மத உணர்வு அதிகரித்துள்ளது. (மதவாதத்தை குறிப்பிடவில்லை). கிருத்துவர்கள், இஸ்லாமியர்கள் மத்தியிலும் மத உணர்வு கூடுதலாகியுள்ளது. மதத்திற்கு எதிரான போராட்டத்தை நாம் நடத்துவதில்லை. அதற்கு முன்னுரிமை கொடுப்பதில்லை. மதவாத சக்திகள், மதவெறி சக்திகளை எதிர்த்த போராட்டத்திற்குத்தான் முன்னுரிமை கொடுக்கிறோம்.

நேரடியாக மதத்தை விமர்சிக்காத அதே சமயத்தில் அறிவியல் ரீதியான கருத்துக்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும், அதே போல முற்போக்கான சிந்தனைகளை உருவாக்குவதற்கான முயற்சிகளை  மேற்கொள்ள வேண்டும்.  மூடநம்பிக்கைகளையும்,  பழமைவாதத்தையும் எதிர்த்து பிரச்சாரம் செய்ய வேண்டும். இதுபோன்ற முயற்சியின் மூலம் சமூகத்தை  அறிவியல் பாதையில், முற்போக்கு பாதையில் செலுத்துவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

சிறுபான்மை வகுப்புவாதம்

ஆர்எஸ்எஸ் இந்துத்துவச் சக்திகள் வளர்கிறார்கள். அந்த வளர்ச்சி மட்டும் தனியாக நடப்பதில்லை. இன்னொரு பக்கம் இஸ்லாமிய மத அடிப்படை வாதிகளும் வளர்கிறார்கள். அதிலிருந்தும் ஆர்.எஸ்.எஸ் பலனடைகிறது. 1990 களில் கோவையில் என்ன நடந்தது என்பதைப் பார்த்தோம்.

பொதுவாக நாடு முழுவதுமே இஸ்லாமிய மக்கள் மிக மோசமான தாக்குதலுக்கு ஆளாகிவருகிறார்கள். குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில்  இரண்டாம்தர குடிமக்களாக வேகமாக மாற்றப்பட்டு வருகிறார்கள். எல்லாக் குடிமக்களுக்கும் உரிய அடிப்படையான உரிமைகள் கூட இஸ்லாமிய மக்களுக்குமறுக்கப் படுகின்றன. எனவே இந்த மாநிலங்களில் இஸ்லாமிய மக்கள்   விரக்தியின் விளிம்பிற்குத் தள்ளப்படுகிறார்கள். அந்த மாதிரியான சூழலில் அவர்கள்  இஸ்லாமிய அடிப்படைவாத, தீவிரவாத  அமைப்புகள் பக்கம் திரும்புவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

குறிப்பாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அதனுடைய அரசியல் கட்சியான எஸ்டிபிஐ, அதைப்போல ஜமாத்-இ-இஸ்லாமி அதனுடைய அரசியல் கட்சியான வெல்பேர் பார்ட்டி போன்றவற்றை நோக்கி ஒரு பகுதி சிறுபான்மையினர்  திரும்ப வாய்ப்பு இருக்கிறது.

தீவிரவாத போக்குகள்  சிறுபான்மை மக்கள் மத்தியிலிருந்து வந்தாலும் அதை கடுமையாக எதிர்க்க வேண்டும். இந்துத்துவ சக்திகளை எதிர்த்து விட்டு, சிறுபான்மை தீவிரவாதத்தை எதிர்க்கவில்லை என்று சொன்னால், சாதாரண மக்களுக்கு நம் மீது நம்பகத்தன்மை வராது. அது ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு சாதகமாகிவிடும். நம்முடைய நோக்கம் அனைத்து மதங்களையும் சார்ந்த மக்களை ஒரே அணியில் இணைத்து மதவெறிக்கு எதிரான, மதவாதத்திற்கு எதிரான போராட்டத்தை நடத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.

வகுப்புவாத சக்திகளுக்கு எதிரான நடவடிக்கைகளை உள்ளூர் அளவில் திட்டமிட்டு, திட்டவட்டமாக முன்னெடுக்க வேண்டும். மாநில அளவிலும், அகில இந்திய அளவிலும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். நாடும், நாட்டு மக்களும்  எதிர்கொள்ளும் தீவிர அபாயத்திற்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்த வேண்டும்.

தமிழில்: உ.வாசுகி

தொகுப்பு: எம்.கண்ணன் (தீக்கதிர்)

மதமும் வகுப்புவாதமும்

சீத்தாராம் யெச்சூரி

(2002 நவம்பரில் சேவியர் சமூக சேவை கல்வி நிறுவனத்தில் ஆற்றிய உரையின் தமிழாக்கம்)

தமிழில்: கே. ராமசுப்பிரமணியன்

இன்றைய சூழல், அச்சுறுத்துவதாகவும், வகுப்புவாத பாசிச கருமேகங்கள் சூழ்ந்துள்ளதாகவும் இருக்கிறது. நவீன இந்தியாவின் அடித்தளத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் மதச்சார்பற்ற, ஜனநாயக குடியரசின் தன்மையை, சகிப்புத் தன்மையற்ற பாசிச சமூகமாக மாற்றிட அனைத்து நடவடிக்கைகளும் மிக வேகமாக எடுக்கப்படுகின்றன. சமீபத்தில் அரசின் ஆதரவுடனே குஜராத் மாநிலத்தில் நடந்த உறைய வைக்கும் வகுப்புவாத படுகொலைகள், வகுப்புவாத அரக்கனின் கோர முகத்தை வெளிக்காட்டியது. இதற்கு முன்பு குஜராத்திலுள்ள கிறிஸ்துவர்களுக்கு எதிரான மத வன்முறைகள் மற்றும் ஒடிசா போன்ற பல இடங்களில் நடந்துள்ள வகுப்புவாத வெறியாட்டங்களும், கிரஹாம் ஸ்டெயின்ஸ் குழந்தைகளோடு எரித்துக் கொல்லப்பட்டதும் – இவை அனைத்தும் சகிப்புத் தன்மையற்ற பாசிச முகத்தை வெளிக்காட்டுகிறது.

இன்று இந்திய நாட்டுப்பற்றாளர்கள் முன் உள்ள மிகப் பெரிய சவால் என்பது நாம் அறிந்த இந்தியாவை பாதுகாப்பதே ஆகும்.

எனக்களித்த தலைப்பிற்குள்ளே செல்வதற்கு முன்,  சமகால இந்திய அரசியலில், சமூக, பொருளாதார வாழ்வில் ஏன் இத்தகைய அபாயகரமான பண்பு மாற்றம் ஏற்படுகிறது என்பதை அறிந்து கொள்வது அவசியம்.

வகுப்புவாத வன்முறைகளுக்கான காரணங்கள்

இந்திய சமூக, அரசியல் நிகழ்வுகளில் வகுப்புவாத மோதல்களும், விரோதங்களும், ஒரு பகுதியாக கடந்த ஒரு நூற்றாண்டாகவே இருந்து வந்துள்ளன. இன்றைக்கு புதிய பண்புகளோடு எழுந்து வருகிற தாக்குதல்களை ஊக்குவித்து, பதட்டத்தை தொடரச் செய்திடும் மூல காரணங்கள் யாவை?

இதனை ஆராய முற்படுகையில், சுதந்திர இந்தியாவில் இதுவரை நடந்து வந்துள்ள வர்க்க ஆட்சி நடைமுறைகளின் விளைவுகளை பரிசீலித்துப் பார்க்க வேண்டும்.

இந்தியப் பெருமுதலாளிகளும், அதன் தலைமையும், இந்திய ஏகபோக மூலதனமும் தங்களுடைய சமூக அடித்தளம் குறுகியதாக இருக்கும் காரணத்தால், தனது வர்க்க அதிகாரத்தை தொடர்வதற்கு, நிலப்பிரபுக்களின் பகுதியுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டார்கள். இக்கூட்டுச் சேர்க்கையே இந்திய சமூக அரசியலின் மற்றும் பொருளாதார வளர்ச்சியின் உள்ளடக்கத்தையும், வழியையும் தீர்மானிக்கக் கூடிய புதிய முரண்பாடுகளின் தொகுப்பை செயல்படுத்தத் தொடங்கியது.

மேற்சொன்ன கூட்டுச் சேர்க்கையின் காரணமாக ஒருபக்கம் ஆளும் வர்க்கத்தினால் ஏகாதிபத்தியத்தின் பிடியை தீர்க்கமாக உடைத்தெறிய முடியவில்லை. மறுபக்கம் நிலப்பிரபுத்துவம் இந்திய மக்களிடையேயும், பொருளாதாரத்தின் மீதும் கொண்டுள்ள ஆதிக்கத்தைக் களையவும் முடியவில்லை.

இக்கால கட்டத்தில், நடுத்தர வர்க்கம் விரிவடைந்துள்ளது என்றபோதிலும், நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்தினால் உள்நாட்டு சந்தை மேலும் குறுகியிருப்பதையும்  பார்க்க முடிகிறது.

வரலாற்றுக் கண்ணோட்டத்தில் பார்த்தால் நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுகளை திட்டவட்டமாக முறியடிக்காமல், உலகில் எங்கும் முதலாளித்துவம் வளர்ச்சியடையவில்லை. அவ்வாறே இங்கும், ஒரு பக்கம் ஏகாதிபத்தியத்துடன் சமரசமும், மறுபக்கம் நிலப்பிரபுத்துவத்துடன் சமரசமும் செய்து கொண்டதால் இந்திய பெரு முதலாளிகளால் தாங்கள் விரும்பியது போல் சுதந்திர இந்தியாவில் முதலாளித்துவ வளர்ச்சிக்கான அடித்தளத்தை உருவாக்க முடியவில்லை.

நிலப்பிரபுத்துவ கட்டமைப்பின் மேல் முதலாளித்துவத்தை திணிப்பதன் மூலம்  நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்தை அகற்றி விடலாம் என்ற இந்தியப் பெருமுதலாளிகளின் முயற்சி பயனற்று போனது.

இந்த காலகட்டத்தில், பெருவாரியான இந்திய மக்கள் வருமானம் இல்லாமல்,  வாங்கும் சக்தியை இழந்த நிலையில், உள்நாட்டுச் சந்தை மேலும் குறுகத் தொடங்கியது. ஆளும் வர்க்கமோ, வாங்கும் சக்தியை பெருக்கும் விதத்தில்  முழுமையான நிலச் சீர்திருத்தம் எதையும் செய்திட முன்வரவில்லை. இந்த நிலையில், தனது முதலாளித்துவ வளர்ச்சிப் பாதைக்கு தடங்கல் ஏதும் ஏற்படாமலிருக்க அந்நிய சந்தையை நாட வேண்டிய கட்டாயத்திற்கு இந்திய முதலாளிகள் தள்ளப்பட்டனர்.

இப்போக்கின் காரணமாக, ஏகாதிபத்திய நாடுகளின் மூலதனத்தையும் தொழில்நுட்பங்களையும் கூடுதலாக சார்ந்திருக்கும் நிலைக்கு இந்தியப் பொருளாதாரம் தள்ளப்பட்டதுடன், அந்நிய நாட்டு சந்தையோடு போட்டிபோடும் நிலையும் ஏற்பட்டது. இதன் விளைவுதான் புதிய பொருளாதாரக் கொள்கையும், இந்திய மக்களின் மீதான அதனுடைய பேரழிவுத் தாக்குதல்களும் ஆகும்.

மேற்சொன்ன விதத்தில், நிலப்பிரபுத்துவத்துடன் செய்துகொண்ட சமரசம், இந்திய பெருமுதலாளிகளுக்கு பெரும் முரண்பாட்டை ஏற்படுத்தியது. அந்த முரண்பாட்டில் இருந்து விடுபடுவதற்கு, அபாயகரமான வகையில் ஏகாதிபத்தியத்தினை சார்ந்திருக்க வேண்டிய நிலைமையும், மறுபுறம் இதனால் ஏற்பட்ட நெருக்கடியினை பொதுமக்களின் தோள்களில் மாற்ற வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது. முரண்பாட்டின் ஒரு வெளிப்பாடாக இது இருக்கையில், அதற்கு ஈடான, இன்னும் முக்கியத்துவம் வாய்ந்த, மற்றொரு வெளிப்பாடும் உள்ளது. நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்தை, தனது கட்டமைப்பில் இருந்து நீக்க முடியாத காரணத்தால் நிலப்பிரபுத்துவத்தோடு இணைந்த சமூக உணர்வுநிலை இன்றும் நிலைத்து நிற்கிறது’. இந்த நிலைமையினுடைய தாக்கத்தினால் வகுப்புவாதமும், சாதீயமும் சமூக ஒழுக்கத்தின் மீது ஆதிக்கத்தை தொடர்ந்தன. எனவே நிலப்பிரபுத்துவத்தின் மீது முதலாளித்துவத்தை திணிக்கும் இந்த முயற்சியினால், நிலப்பிரபுத்துவத்துடன் இணைந்த பிற்போக்கு உணர்வுடன் கூடவே, சீரழிந்த போட்டி உணர்வுடன் கூடிய முதலாளித்துவமும் உருவானது.

இந்நிலையில் முதலாளித்துவ வளர்ச்சியில் விளைவான வர்க்கங்களின் உருவாக்கம் (தொழிலாளி வர்க்கம் போன்றவை), ஏற்கனவே உள்ள, சாதிப்பிரிவு சமூக நிலைகளின் உள்ளாகவே உருவாகியது. முதலாளித்துவத்திற்கு முன்பு இருந்த சமூக உறவுகளை மாற்றி அமைக்காமலேயே, அதனுடன் முதலாளித்துவம் சமரசம் செய்து கொண்டதால் இந்திய சமூகத்தில் ஏற்பட்டிருக்கிற மிகச் சிக்கலான இப்பிரச்சனையின் காரணத்தையும், அதனால் ஏற்பட்டு இருக்கிற விளைவுகளையும் இந்த போக்கு மிகத் துல்லியமாக விளக்குகிறது.

ஆகவே, வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சி என்பது ஏற்கனவே உயிரோட்டமாக உள்ள சாதியத்தையும், சாதிய ஒடுக்குமுறைகளையும் உள்ளடக்கியதாக உள்ளது. சமகால இந்தியாவில் சுரண்டப்படும் வர்க்கத்திற்கும், ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கும் இடையே ஒட்டிக் கொண்டுள்ள பொதுத்தன்மையை இது துல்லியமாக காட்டுகிறது.

இவ்வாறு தரம் மலிந்த நிலப்பிரபுத்துவமும், சீரழிந்த முதலாளித்துவமும் இணைந்து, சமூகத்தின் மேல்கட்டுமானத்தில் குற்றமயமாக்கல் பெருக வழிவகுக்கின்றன. அத்துடன், சாதிய வகுப்புவாத சக்திகள் ஒன்றாக ‘வளரவும் வழிவகை செய்கின்றன. இந்த நிலைமையை ஆளும் வர்க்கங்கள் தங்களது அரசியல் மற்றும் தேர்தல் வாய்ப்புகளுக்குப் பயன்படுத்திக் கொள்கின்றன.

மேலே குறிப்பிடப்பட்ட முரண்பாடுகளின் வெளிப்பாட்டின் அடிப்படையில், விடுதலை இந்தியாவில் மதவாத வன்முறைகளை வகுப்புவாத சக்திகள் அரங்கேற்றுகிறார்கள். நாட்டில் ஏற்கனவே ஏற்பட்டுள்ள நெருக்கடி, இந்திய மக்களின் மனதில் பல வருடங்களாக சேர்ந்துள்ள அதிருப்தியை மேலும் வளர்த்துள்ளது. பரபரவென்று  வளர்ந்து வருகிற நடுத்தர வர்க்க மக்களிடையேயும் இந்த அதிருப்தி வளர்ந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நடுத்தர வர்க்கம் இன்றும் சுரண்டலுக்கு ஆளாகிற பகுதியிலிருந்து நடுத்தர வர்க்கமாக வந்தவர்களே ஆவர். சுரண்டும் வர்க்கத்தினுடைய உணர்வுகளின் ஆதிக்கத்துடன், நடுத்தர வர்க்கத்தினரின் அதிருப்தியும் இணைவதால் வகுப்புவாத சக்திகள் வளர்வதற்கு ஒரு வளமான தளம் அமைகிறது.

சமூகத்தில், பிற்போக்கு உணர்வுகள் நிலைத்து இருக்கையில், வகுப்புவாத சக்திகள் நிலவுகின்ற அதிருப்தியை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு, வகுப்புவாதத்திற்கு மடை திறந்துவிட்டு, தங்களது அரசியல் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.

அதற்காக அவர்கள் இருமுனைத் தந்திரங்களை கையாளுகின்றனர். ஒருபக்கம் இந்தியாவிலுள்ள பல தரப்பட்ட சமூகங்களாகப் பிரிந்து கிடக்கிற – ஆனால் இந்து மதத்தை தழுவக் கூடியவர்களாக உள்ள அனைவரையும் ஒன்றாகக் கட்டி இணைப்பது. மற்றொரு பக்கம், இந்து அல்லாதவருக்கு எதிராக வெறுப்புணர்ச்சியைத் தூண்டி எதிரிகளாக்குவது – உதாரணமாக முஸ்லீம், கிறிஸ்துவர் இவர்களுக்கு எதிராக –  இந்த இரண்டு முனைகளிலும் தங்களது நோக்கத்தை அடைவதற்காக அவர்கள் கையாளும் பிரச்சார இயந்திரங்கள் பாசிச வெறியோடும், நவீன தொழில்நுட்பங்களோடும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.

பார்க்கப் போனால், இந்து ராஜ்யம் என்பதற்கான அடித்தளம் 1920களில் வி.டி. சாவர்க்கர் என்பவரால் போடப்பட்டது. பின்பு 1925இல் தோன்றிய ஆர்.எஸ்.எஸ். இயக்கம் இக்கொள்கையை தனதாக்கிக் கொண்டது. 1930 பின்பகுதி காலங்களில் ஆங்கிலேய அரசு இந்த மதப்பிரிவு நிலையினை கண்டுகொண்டு அதனை தனது சுயலாபத்திற்காகப் பயன்படுத்தியது.

இந்நோக்கத்தை வெளிப்படுத்தியவர் ஆர்.எஸ்.எஸ்.சின் தலைவராக பணியாற்றிய எம்.எஸ். கோல்வால்கர் தான். 1939இல் அவர் எழுதிய, நாம் அல்லது வரையறுக்கப்பட்ட நமது தேசம் என்ற அவரது நூலில், விளக்கப்படும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நோக்கத் திட்டத்தில், உறைய வைக்கக் கூடிய அளவுக்கு வெளிப்படுத்திய பாசிச எண்ணங்களே இன்றும் காவிக்கும்பலுக்கு ஊக்கமளிக்கிறது.

இந்தியாவில் இந்துக்கள் மட்டுமே தேசிய இனம் என்ற ஆதாரமற்ற கூற்றை பொறுப்பற்று அறிவித்து விட்டு அவர் சொல்வது “(இந்த நாட்டில்) அந்நியர்களாக உள்ளவர்களுக்கு இரண்டே வழிகள் உள்ளன. ஒன்று (இந்து) தேசிய இனத்துடன் ஒன்றரக்கலந்து அதன் கலாச்சாரத்தை ஏற்று வாழ வேண்டும்; அல்லது அந்த தேசிய இனத்தின் கருணையில் அவர்கள் எவ்வளவு நாட்கள் வாழ விடுகிறார்களோ அதுவரையில் வாழ்வது. (அவர்கள் கூறும்போது) அந்த தேசிய இனத்தின் அன்பு கோரிக்கைக்கு இணங்க நாட்டை விட்டு வெளியேற வேண்டும்”.

இந்த நிலைபாட்டிலிருந்து, புத்திசாலித்தனமாக நடந்து கொண்ட முந்தைய நாடுகளின் அனுபவத்திலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது – இந்துஸ்தானில் உள்ள அந்நிய இனங்கள் இந்து கலாச்சாரத்தையும், மொழியையும் கட்டாயம் ஏற்றுக் கொள்ள வேண்டும். மற்றும் இந்து மதத்திற்கு மரியாதையாக இருப்பதுடன், அந்த மதத்தை பய பக்தியுடன் அணுகிட வேண்டும். இந்து இனத்தையும், அதன் கலாச்சாரத்தையும் மகிமைப்படுத்துவது தவிர வேறு எந்த எண்ணத்திற்கும் இடம் கொடுக்கலாகாது – இது இந்த தேசத்திற்கும் சேர்த்து தான். அவர்களுக்கான தனித்துவமாக உள்ள வாழ்க்கையை விட்டு விட்டு இந்து இனத்துடன் ஒன்றிணைந்து விட வேண்டும். மற்றும் இந்து தேசத்திற்கு அடிபணிந்து வாழ வேண்டும். அவர்கள் எந்த உரிமையையும் கேட்கக் கூடாது. அவர்களுக்கு எந்த சலுகையும் கிடையாது. முன்னுரிமை அளிக்கக் கூடிய நடவடிக்கைகள் எதனையும் நினைக்கவே கூடாது. குடிமக்கள் உரிமை என்பது கூடவே கூடாது. அவர்கள் பின்பற்ற வேறு மார்க்கம் எதுவும் இருக்கக் கூடாது. நாம் ஒரு புராதான நாடு. புராதான நாடுகள் அந்நிய இனத்தை எவ்வாறு நடத்துமோ அதேபோன்று நம் நாட்டை தேர்ந்தெடுத்துள்ள அந்நிய இனத்தை நடத்துவோம்”.

புரதான அரசுகள் எப்படி நடத்தின. இனம் மற்றும் கலாச்சாரத்தின் தூய்மையை பாதுகாத்திட ஜெர்மனி தனது நாட்டிலுள்ள யூதர் இனத்தை கொன்று குவித்தது. இனப் பெருமை மிக உயர்ந்து இருப்பதை இது வெளிக்காட்டியது. ஜெர்மனி நமக்கு காட்டுவதெல்லாம் இனத்திலும், கலாச்சாரத்திலும் அடிப்படையில் வேறுபடுகிற நிலையில் உள்ளவை ஒருங்கிணைந்து ஒன்றாக மாறுவது என்பது முடியாதது ஆகும். இதை இந்துஸ்தான் ஒரு படிப்பினையாக ஏற்று நாம் பலனடைந்திட வேண்டும்.

இதே கோல்வால்கர்தான் மகாத்மா காந்தி சுட்டு கொலை செய்யப்பட்ட போது, ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தடை செய்யப்பட்டதை அடுத்து, அன்றிருந்த உள்துறை அமைச்சர் சர்த்தார் பட்டேல் அவர்களிடம் ஆர்.எஸ்.எஸ். மீதான தடையை நீக்கக் கோரினார், “ஆர்.எஸ்.எஸ். இனி கலாச்சார அமைப்பாக மாத்திரம் செயல்படும்” என்றும் உறுதி அளித்தார். இதன் பிறகு மாற்றாக ஒரு அரசியல் அமைப்பை தேடிக் கொண்டிருந்த கோல்வால்கர், அன்றைய ஜவஹர்லால் நேரு மீது அதிருப்தியை வெளியிட்டு, மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேறிய ஸ்யாம பிரசாத் முகர்ஜியை வைத்து 1951இல் ஒரு புதிய அரசியல் கட்சியை ஸ்தாபிக்க சில பிரச்சாரகர்களை அனுப்பினார். அன்றைக்கு ஸ்யாம பிரசாத் முகர்ஜியை சந்தித்துப் பேச அனுப்பப்பட்ட இரண்டு பேரில் ஒருவர் இன்றைய பிரதமர் (வாஜ்பாய்), மற்றொருவர் இன்றைய உள்துறை அமைச்சர் (அத்வானி). ஆக இன்றைக்கு அவதாரம் எடுத்துள்ள பாரதீய ஜனதா கட்சியின் முன் அவதாரமான ஜனசங்கம் இவ்வாறு தான் தொடங்கப்பட்டது.

எனவே, இன்றைக்குள்ள பாரதிய ஜனதா கட்சி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் உறுப்பு என்பதை யாரேனும் மறுப்பார்களேயானால் அவர்கள் முட்டாள்களின் கூடாரத்தில்தான் இருப்பார்கள் என்று சொல்லலாம்.

மேலும், பிறகு கோல்வால்கர் எழுதிய சிந்தனைக் கொத்து என்ற நூலில், ஒரு தனி அத்தியாயத்தில் இவ்வாறு எழுதினார்: இந்திய நாட்டு மதச்சார்பின்மையை அழிப்பதை மூன்று உள்நாட்டு எதிரிகள் தான் தடுத்து நிறுத்துகின்றன. அவை தான் ஆர்.எஸ்.எஸ். பாசிச இந்து ராஜ்யத்தை நோக்கி நடைபோடுவதையும் தடுத்து நிறுத்துகின்றன. ஆர்.எஸ்.எஸ்.சின் கண்ணோட்டத்தில் அவைகள் ஒன்று முஸ்லீம் மதத்தினர், இரண்டாவது கிறிஸ்துவ மதத்தினர். மூன்றாவது கம்யூனிஸ்ட்டுகள். ஆகவே பால் ரோப்ஸன் சொன்னது போல் “நாம் அனைவரும் ஒரே படகில் தான் சகோதரரே” (என்று அங்கு திரண்டு இருந்தவர்களைப் பார்த்துக் கூறினார்)

இதன் பிறகு கிடைத்துள்ள அனுபவங்கள் ஒரு உண்மையை கோடிட்டு காட்டுகிறது.  அதாவது இந்து மதவாத அடிப்படைவாதிகளும், முஸ்லீம் மதவாத அடிப்படைவாதிகளும் (எந்த மதத்தைச் சார்ந்த அடிப்படைவாதிகளாக இருந்தாலும்) அவர்களது இன்றைய நடவடிக்கை என்பது நமது இன்றைய நவீன இந்தியாவின் மதச்சார்பற்ற, ஜனநாயக ஆட்சி முறை பெற்றிருக்கும் சுதந்திரத்தையும், இறையான்மையையும் நேரடியாக தாக்குவதாகவே அமைகிறது. இந்த இரண்டு சக்திகளுமே ஒன்றுக்கொன்று ஊட்டத்தை கொடுத்துக் கொள்கிறார்கள். இந்த இரண்டு சக்திகளும், மதச்சார்பின்மை, ஜனநாயகம், நாட்டுப் பற்று போன்ற நவீன கருத்துக்கள் மீது முன்னெடுக்கும் தாக்குதல்கள் ஒரேமாதிரி உள்ளன. அவர்கள் மதத்தை மையமாகக் கொண்ட ஒரு சிதைந்த தேசியத்திற்குள் தங்களை வரையறுத்துக் கொண்டுள்ளார்கள். எந்த ஒரு தேசியத்தின் உருவாக்கத்திலும், ஒற்றுமைப்படுத்தும் காரணியாக மதம் என்றைக்கும் இருந்ததில்லை; இருக்கப் போவதும் இல்லை என்ற வரலாற்று படிப்பினைகளை ஏற்க மறுக்கின்றனர். (உதாரணமாக பாகிஸ்தானிடமிருந்து பங்களாதேஷ் பிரிந்தது) மாறாக, அரசியலிலும், சமூக அமைப்பிலும் மதம் தான் ஆதிக்கம் செலுத்திட வேண்டுமென்று வாதாடுகின்றனர். இவ்வாறு அவர்கள் வரலாற்றில் விளைந்த, விஞ்ஞான அடிப்படையிலான தேசியத்தை மறுக்கின்றனர்.

வகுப்புவாதமோ அல்லது அதன் அடிப்படைவாதிகளின் தத்துவமோ மதத்தை உயர்த்திப் பிடிப்பதாகவும் இல்லை; அதை பாதுகாக்கவும் இல்லை. மாறாக, மக்களிடையே நிலவுகிற மதப் பிளவுகளைப் பயன்படுத்தி, தனது குறிப்பிட்ட அரசியல் நோக்கத்திற்காக பிளவுகளை தீவிரமாக்கவும், நிலைநிறுத்தவும் செய்கின்றனர். அவர்களது இந்த தத்துவம் மதங்களிடையே மோதலை உருவாக்கி குறிப்பிட்ட அரசியலுக்கு பயன்படுத்துவதற்கு மட்டுமே உதவுகிறது. ஆங்கிலேயர்கள் மதங்களிடையே உள்ள வெறுப்பை தங்களது காலனி ஆதிக்கத்தை நிலைநிறுத்திட பயன்படுத்தினர். பின்பு இந்த மத மோதல்கள் கட்டுக் கடங்காமல் போகவே நமது தேசத்தை இரண்டாகப் பிரிப்பதில் வெற்றி கண்டனர். இன்றும் இக்கசப்பான நிகழ்வுப்போக்கு எண்ணற்ற உயிர்களை பலி வாங்கிக் கொண்டிருக்கிறது. ஆகவே, வகுப்புவாதம் என்பது மதங்களிலிருந்து தன்னை நீக்கிக் கொண்டு தள்ளி இருக்கிறது என்பதை அறிய முடிகிறது. வகுப்புவாதம் பிற மதத்தினரின் பால் வெறுப்பை உண்டாக்கியும், நீடிக்கச் செய்தும், தான் இருப்பதற்கும், வளர்வதற்கும் அடித்தளத்தை அமைத்துக் கொள்கிறது.

மதமும் – மார்க்சியமும்

இப்படிப்பட்ட சூழலில், மார்க்சிஸ்ட்டுகளுக்கு மதம் பற்றி உள்ள புரிதலைக் குறித்து சர்ச்சைகள் அதிகமாக எழுப்பப்படுகின்றன. இதில் மிகப் பிரபலமான கருத்தாக இருப்பதும், கூறப்பட்ட சூழலில் இருந்து விலக்கி எடுத்தாளப்படுவதுமான மதம் என்பது மக்களுக்கு அபின் போன்றது என்ற மார்க்சின் கூற்று ஆகும்.

அந்த மேற்கோள் எந்த பகுதியில் இடம் பெறுகிறதோ அது, வேண்டுமென்றே,  முழுவதுமாக வெளியிடப்படவில்லை. உண்மையில் மார்க்ஸ் கூறியது மத (நம்பிக்கையோடு கூடிய) துயரம் என்பது அதே நேரத்தில் உண்மையான துயரத்தின் வெளிப்பாடே ஆகும். அது உண்மையான துயரத்திற்கு எதிர்ப்பை தெரிவிப்பதும் ஆகும். மதம் (மத நம்பிக்கை) ஒடுக்கப்பட்ட மக்களின் பெருமூச்சு. இதயமற்ற உலகில் (அரவணைக்கும்) இதயம். ஊக்கமற்ற நிலையில் ஊக்கமளிப்பதும் ஆகும். இது மக்களுக்கு அபின் போன்றது. (அக்காலத்தில் காயத்தினால் ஏற்படும் வலியை  மறந்திட அபின் கொடுக்கப்பட்டது – மொழி பெயர்ப்பாளர்)

மதத்தை அபினுடன் ஒப்பிடுவதற்கான காரணம் அபினுக்கு உள்ள குணத்தை ஒத்த விதத்தில் மதமும் ஒரு மாயையை ஏற்படுத்துவதால் தான். துயரம் தாங்க முடியாமல் இருக்கும் மனிதனுக்கு அதிலிருந்து நீக்கம் அளிக்கிறது. இதயமற்ற உலகில் (அரவணைக்கும்) இதயத்தையும், ஊக்கம் அற்ற நிலையில் ஊக்கத்தையும் அளிக்கிறது.

(அவர்களது துன்பமானது) அவர்களது உணர்வு நிலைக்கும், கட்டுப்பாட்டுக்கும் அப்பால் இருக்கும் நிலைப்பாடாகத் தொடர்கிறது என்ற துல்லியமான காரணத்தால் அவர்களை செயலற்ற தன்மைக்கு இட்டுச் சென்று மந்தப்படுத்த இந்த அபின் மக்களுக்கு தேவையாகிறது.

மதங்கள் குறித்து, மார்க்சிஸ்டுகள் கொண்டுள்ள புரிதல், அந்த மதம் ஒரு தத்துவத்தின் அடித்தளத்தை அடிப்படையாகக் கொண்டு ஒருங்கிணைக்கப்பட்டு இருப்பதை புரிந்து கொள்வதே ஆகும். மார்க்ஸ் தான் வாழ்ந்த காலத்தில் மனிதர்களுடைய உண்மையான சுதந்திரத்தையும், அவர்களுடைய முழுமையான விடுதலையையும் எது தீர்மானிக்கிறது என்ற கேள்விக்கு விடை தேடுகையில், ஹெகலின் தத்துவமான மனதின் புரட்சி என்ற தத்துவத்தை – அதை ஃப்யூயர்பாக் அவர்களும் பரிந்துரைத்ததை – மறுத்து எதிர்கால வளர்ச்சிக்கு அவசியமான விளக்கத்தை அளித்தார்.

அது என்னவென்றால்; மனிதர்களுடைய உணர்வுகளை சமூக நிலைமைகளே தீர்மானிக்கிறதே தவிர அதற்கு மாறான  வகையில்  அல்ல. அதாவது, “மனிதர்களின் உணர்வுகள் அவர்கள் இருக்கும் நிலையை தீர்மானிக்கவில்லை. மாறாக, அவர்களது சமூக நிலைகளே அவர்களது உணர்வுகளை தீர்மானிக்கிறது. (Introduction to Critique of Political economy)

மேற்கண்ட முக்கியமானதும், மூல ஆதாரமான முடிவின் அடிப்படையில் மார்க்ஸ் கூறியது, “சமயப் பற்றற்ற இந்த விமர்சனத்திற்கான அடிப்படை. மனிதனே மதத்தினை உருவாக்கினான். மதம் மனிதனை உருவாக்கவில்லை.” வேறு சொற்களில் சொல்வதென்றால், மனிதர்களின் உணர்வுகள் பல விதங்களில் வெளிப்படுவது போல், உதாரணமாக, அவனது சிந்தனையும், அதன் விளைவாக ஏற்படுகிற அறிவுசார் நடவடிக்கைகளும் போல், மதமும் மனிதனுடைய சமூக வாழ்க்கையின் ஒரு விளைவுதானே அன்றி, மதம் தான் சமூக வாழ்க்கைக்கு காரணம் என்றோ, சமூக வாழ்க்கையை உண்டாக்கியது என்றோ கூறுவதற்கில்லை.

இதிலிருந்து நாம் புரிந்து கொள்வது, மதம் என்பது சமூக வரலாற்றின் உந்து சக்தியில் இருந்து விலகி தன்னைத் தானே ஆட்கொண்டதும் அல்ல; தன்னைத் தானே உருவாக்கிக் கொண்டதும் அல்ல. ஆகவேதான், மார்க்சிய தத்துவம் கோபர்நிகஸூக்கு கொடுத்த இடருக்காகவோ அல்லது ஏகலைவனுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காகவோ மதத்தின் மீது குற்றம் சாட்டவில்லை. ஏனெனில் இந்நிகழ்ச்சிகள் அனைத்துமே மதம் ஒரு தத்துவமாக ஆதிக்கம் செலுத்துகிற காலகட்டத்தில் நிகழ்ந்துள்ளது என்பதை பதிவு செய்யப்பட்ட வரலாறு தெளிவாக்குகிறது.

மதம் என்பது ஒரு ஆதிக்கம் செலுத்தும் தத்துவமாக இருக்கும் நிலையில் முற்போக்காளர், பிற்போக்காளர், சொந்த நலன்களையே நோக்கும் அதிகார வர்க்கம் அல்லது சுரண்டப்படுகிற வர்க்கங்களின் கோரிக்கைகள் – இப்படி அனைத்து மனிதர்களின் உணர்வுகளில் மதப் பற்று வேறுபாடில்லாமல் வியாபித்திருக்கிறது. ஆனால், மார்க்சிய தத்துவம் ஆக்கப்பூர்வமான முற்போக்கு கருத்துக்களையும், சீர்திருத்த இயக்கங்களையும் உள்ளடக்கிய மதப் பழக்கவழக்கங்களை கவனத்தில் கொள்கிறது. உதாரணமாக, சுஃபி மற்றும் பக்தி இயக்கங்கள். அதே சமயத்தில் இந்த இயக்கங்கள் தங்களை மதப்பிடிப்புக்குள் இருத்திக் கொண்டதால், சமூகத்தில் தேவையான மாற்றங்களை செய்வதற்கு சாத்தியமில்லை என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. எந்த சமூக நிலைமைகளின் காரணமாக, குறிப்பிட்ட வடிவிலான மத நடவடிக்கைகள் ஆதிக்கம் பெற்றனவோ, அந்த சமூக நிலைமைகளை மாற்றினாலொழிய இந்த குறிப்பிட்ட மதத்துடன் இணைந்த ஒடுக்குமுறைகளை அகற்றிவிட முடியாது. இவ்வாறு மார்க்சியமானது மதங்களின் ஆக்கப்பூர்வமான உள்ளடக்கத்தை அங்கீகரிக்கிறது, அவற்றின் சீர்திருத்தக் கருத்துக்களுடைய வரம்பை அறிந்துள்ளது. மனித நாகரீகத்தின் வளர்ச்சியின் ஒரு பகுதியாக, மனித உணர்விற்குள் பொருந்தி இருக்கும் பகுதியாக மதங்களின் வரலாற்று வளர்ச்சியைப் பார்க்கிறது.

ஆகவே மார்க்சிச தத்துவம் வரலாற்று நிகழ்வுகளுக்கு அறிவியல் விளக்கங்களை தருகிற நிலையிலும், சமூகப் போராட்டங்களில் மதங்கள் ஆற்றியுள்ள சிக்கலான பாத்திரங்களையும் கவனத்தில் கொள்கிறது.

ரோமப் பேரரசின் சிதைவுக்கு காரணமான மக்களின் பேரெழுச்சியின் விளைவாக கிறிஸ்துவ மதம் தோன்றியதை பார்த்திடலாம். அதேபோல் அரேபிய பாலைவனத்தில் வாழ்ந்த நாடோடிகளுக்கும், நகர மக்களுக்கும் நடந்த போராட்ட விளைவுகளாலும், அபிசீனிய ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து நாட்டை மீட்டிட எழுந்த அரேபிய தேசிய உணர்ச்சியும், அதன் மூலம் பல காலமாக உபயோகப்படாமல் இருந்த வர்த்தக வழிகளை மீட்டெடுப்பதுமே இஸ்லாம் மதம் தோன்றக் காரணம் என்பதை மார்க்சும், ஏங்கல்சும் சுட்டிக் காட்டுகின்றனர். இதுபோலவே சிதையும் நிலப்பிரபுத்துவத்திற்கும், வளரும் முதலாளித்துவத்திற்கும் நடந்த போராட்டத்தின் விளைவே பிராட்டஸ்டென்ட் சீர்திருத்தம் தோன்றக் காரணம். அழிக்க முடியாத பிராட்டெஸ்டென்டுகளின் எதிர்ப்புக் கொள்கைகளே வெல்ல முடியாத முதலாளித்துவத்தின் உதயத்திற்கு காரணமானது. (ஏங்கெல்ஸ் – ஃபயர்பாக்)

ஆகவே, மார்க்சுக்கும், மார்க்சிய தத்துவவாதிகளுக்கும், மதம் என்பது சமூக நிலைமைகளினால் ஏற்பட்ட விளைபொருளே; அதில் மனிதர்கள் வாழ்ந்தனர் என்பதும், வாழ்கின்றனர் என்பதையும் கவனத்தில் கொள்கிறோம். மதங்களின் வரலாறு என்பது ஒரு விதத்தில் பார்த்தால் மனித பரிணாம வளர்ச்சியின் பிரதிபலிப்பே ஆகும். இவ்வகையில் மதம் என்பது யதார்த்த உலகின் பிரதிபலிப்பு ஆகும். இயற்கையின் வலிமையும், சமூக நிகழ்வுப்போக்குகளுமே வாழ்வின் வழிகாட்டும் விதி.தால் புரிந்துகொள்ள முடியாத நிலைமையில் இயற்கையினைக் கடந்த வேற்று கிரக சக்தி ஒன்றை கற்பித்துக் கொள்வது அவர்களுக்கு அவசியமாகிறது. ஆகவே மதம் என்பது மனித குலத்திற்கு ஆறுதலையும், வாழ்வின் மீதான ஈர்ப்பையும், நிம்மதியையும் தருகிறது. அதேசமயத்தில், ஆதிக்கம் செலுத்தக்கூடிய தத்துவமாக மதம் அமைகின்றபோது, அந்த காலகட்டத்தில் ஆளும் வர்க்கத்தின் ஆதிக்கத்துடைய வெளிப்பாடாகிறது.

மார்க்சும், மார்க்சிய தத்துவமும் மாத்திரமே மதங்களின் பிறப்பு, தோற்றம் மற்றும் மனித மனங்களில் அவை செலுத்தும் தாக்கம் இவைகளை அறிவியல் பூர்வமாக புரிந்து கொண்டுள்ளதால், மதங்கள் வகிக்கும் பங்கினை வழிப்படுத்துவதும், தீர்மானிப்பதும், அரசின் சமூக அமைப்புகளே என்று அடித்துச் சொல்கிறார்கள். துல்லியமான இந்தக் காரணத்தினால்தான் மார்க்சிய தத்துவம் மதங்களை குறிப்பிட்டு தாக்குவது கிடையாது. மாறாக, மதங்களின் தோற்றங்களுக்கு காரணமான சமூக நிலைகளையும் மற்றும் மனித குலத்தின் மேல் மதம் தொடர்ந்து வைத்து வருகிற பிடிமானத்திற்கான நிலைகளையுமே தாக்குகிறது. மார்க்சிய தத்துவம் மதங்களை நிலைத்திருக்கச் செய்வதற்காக உதவும் நிலைகளை, அதாவது வர்க்கத்தை ஒடுக்கும் ஒரு கருவியாக மதம் இயங்குவதை முற்றிலுமாக மாற்றிட முயல்கிறது.

மார்க்சிஸ்டுகள் பொருள்முதல்வாதிகள். பொருள்முதல்வாதிகளாக இருப்பதினால், வர்க்கமாக பிரிந்து கிடக்கும் சமூகத்தில் சிக்கலான பாத்திரமேற்று மதம் நடத்தும் விளையாட்டின் முழுமையையும் புரிந்து கொண்டுள்ளனர். மதம் என்பது சமூகத்தின் மேல் கட்டுமானமாக தொடர்கிறது. ஒரு வர்க்கமற்ற சமுதாயத்தை நிறுவினாலும் அதிலும் நீண்ட காலத்திற்கு மதம் தொடர்ந்து இருக்கும். மார்க்சிய தத்துவம் மதத்தை குறியிட்டு தாக்குவதில்லை. ஆனால் மதத்தினை தோற்றுவிக்க காரணமான சமூக நிலைகளை தாக்குவதால், இதன் அடிப்படையிலேயே மார்க்சிய தத்துவத்தின் திசைவழி அமைகிறது.

இதுவே பொருள்முதல்வாதிகளான மார்க்சிஸ்ட்டுகளின் மதத்தைப் பற்றிய புரிதலும் சிந்தனையும் ஆகும். மதத்தில் மனித நேய உள்ளடக்கமும் உள்ளது, அதே நேரத்தில் அது ஒரு வர்க்கத்தின் ஆட்சி அதிகாரத்திற்காக உபயோகப்படுத்தப்படும் கருவியாகவும் உள்ளது என்பதை ஒட்டுமொத்தமாகப் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. மதத்தின் பிடிமானம் தொடர்வதற்காக உள்ள சமூக நிலைகளை மாற்ற ஒரு கம்யூனிஸ்ட் முயற்சிக்க வேண்டுமே அல்லாது மதத்தை குறியிட்டு தாக்கக் கூடாது.

வகுப்புவாதத்திற்கு எதிரான போராட்டம்

மதத்தை உயர்த்திப்பிடிக்கும் ஏகபோக உரிமையாக்கிக் கொண்ட வகுப்புவாதிகளையும், மத அடிப்படைவாத சக்திகளையும் அம்பலப்படுத்துவதும், மேற்சொன்னவாறு இன்றைக்கு நிலவும் சமூக நிலைகளுக்கு எதிராக நடத்தப்படும் ஒருங்கிணைந்த போராட்டத்தோடு இணைந்த செயல்பாடு ஆகும். இவ்வாறான மாற்றத்தை இந்தியாவில் ஏற்படுத்திட மார்க்சிஸ்டுகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யும் விழைகின்றனர்.

பார்க்கப் போனால், அடிமை இந்தியாவில், ஆங்கிலேயர்கள் தங்கள் ஆட்சி நிலைத்திருப்பதற்கான கருவியாக வகுப்புவாதத்தை உருவாக்கியும், பயன்படுத்தியும், கீழ்த்தரமானதொரு பிரித்தாளும் கொகையைக் கையாண்டார்கள்.

1857 முதல் சுதந்திரப் போரில் இந்துக்களும், முஸ்லீம்களும் இணைந்து வெளிப்படுத்திய உருக்குப்போன்ற ஒற்றுமையை கண்ட ஆங்கிலேயர்கள், அந்த ஒற்றுமையை சிதைத்தழிப்பதற்காக வகுப்புவாத அரசியலை திட்டமிட்டு கையாண்டனர். வாக்காளர்களை இந்து – முஸ்லீம் என்று பிரித்தார்கள். வங்காளத்தை இரண்டாகப் பிரித்தனர். முஸ்லீம் லீக் அமைப்பிற்கு தனித்த ஆதரவு காட்டினார்கள். இவையெல்லாம் காலனி ஆதிக்கத்தை தொடர்வதற்கான நிகழ்ச்சி நிரலாக மேற்கொள்ளப்பட்டன.

சுதந்திரத்திற்கு பிந்தைய ஆண்டுகளில், (கட்டுரையின் முன் பகுதியில் குறிப்பிட்ட)  நெருக்கடி நிலை மக்களிடையே அதிருப்தியை அதிகப்படுத்தியது. ஆளும் வர்க்கங்கள் இந்த அதிருப்தியில் இருந்து தற்காத்துக்கொள்ள, வகுப்புவாத பிரிவினையை பயன்படுத்தினார்கள். நாட்டுப் பிரிவினையைத் தொடர்ந்து, ஆழமாக வேரூன்றி நிலைத்துவிட்ட வகுப்புவாதத்தை ஒழிப்பதற்கு உணர்வுப்பூர்வமான முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. குறுகிய அரசியல் நோக்கத்துடன், ஊசலாட்டமும் வகுப்புவாத சக்திகளுடனான சமரசமும் செய்துகொள்ளப்பட்டது.

இன்று இந்தியாவில் நடந்துகொண்டிருப்பது, பாசிசத்திற்கான முன் நடவடிக்கை என்று ஒரு புகழ்பெற்ற அறிஞர் கூறினார். இன்று நம் பொதுவாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் அது தென்படத் தொடங்கிவிட்டது. மதத்தின் பெயரால் மக்களை திரட்டும் அருவருக்கத்தக்க முயற்சிகள் தொடர்கின்றன. ஆர்.எஸ்.எஸ் வகைப்பட்ட ‘இந்து ராஷ்ட்டிராவை’ எதிர்க்கும் ஒவ்வொரு நிகழ்வின் மீதும், ஒவ்வொரு குடிமகனின் மீதும் பாசிச வெறுப்பு உமிழப்படுகிறது. நமது ஜனநாயக சமூகத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களிலும் ஆர்.எஸ்.எஸ் ஊடுருவுகிறது. நம் குடியரசின் அரசமைப்புச் சட்டத்தை இழிவுபடுத்துகிறது. நிர்வாகத்தில் நேர்மையற்ற குறுக்கீடுகளைச் செய்கிறது. தன் விருப்பங்களை அடைவதற்காக சூழ்ச்சிகளைக் கையாள்கிறது. விதிகளை மீறியும், நடைமுறைகளை மீறியும், தரக்குறைவான பேரங்களைப் பேசுகிறது. இதுவரை நிகழ்ந்திராத அளவுக்கு மக்களின் மேல் பொருளாதாரச் சுமைகள் குவிக்கப்படுகின்றன. அனைத்து இடங்களிலும் ஊழல் மலிந்திருக்கிறது – என அனைத்தும் நன்றாக தென்படுகின்றன.

பாஜக ஆட்சியில் இருக்கிற இச்சில வருடங்களில், இந்த அரசின் கொள்கைகள் ஏகாதிபத்தியத்திற்கு துணை போவதாகவும், பிற்போக்கான இந்திய ஏகபோக மூலதனத்தின் நோக்கங்களுக்கு துணை செய்வதாகவும் இருக்கிறது. பார்க்கப் போனால், இந்த வாஜ்பாய் அரசு தான் அமெரிக்க அரசிற்கு, இதுவரை சுதந்திர இந்தியாவில் நடந்திராத அளவிற்கு அணுசரணையாக நடந்து கொள்கிறது. அதனுடைய பொருளாதாரக் கொள்கைகள் ஒருபக்கம் இந்தியாவின் இறையாண்மையை அடகு வைத்து விட்டது. மறுபக்கம் பெருவாரியான மக்களை வறுமை நிலைக்கு தள்ளி விட்டுள்ளது. அமெரிக்கா முன்னெடுக்கும் யுத்த நடவடிக்கைகளுக்கு இந்தியாவை கூட்டாளியாக ஆக்கியிருக்கும் அளவு அயல்நாட்டு கொள்கை வளைக்கப்பட்டுள்ளது.

மேலும் இவர்கள் ஆட்சியில் உள்ள இச்சில வருடங்களில் நமது நாட்டில் உள்ள கல்வி முறை மீது ஒரே கண்ணோட்டத்துடன் தாக்குதல்கள் ஏவப்படுகின்றன. இந்து மத நம்பிக்கை வைத்துள்ள மக்களிடையே நிலவும் பன்முக கலாச்சாரத்தை மாற்றி,  கட்டுண்ட ஒரே இந்து கலாச்சாரமாக மாற்றும் ஆர்.எஸ்.எஸ் முயற்சிகளும், வகுப்புவாத பிரிவினை விஷத்தை ஆழமாக பரப்பி, சிறுபான்மை மதத்தினருக்கு எதிராக, முக்கியமாக கிறிஸ்துவர், முஸ்லீம்களுக்கு எதிராக, வன்முறையை விதைத்து, நமது பள்ளி மாணவர்களின் பாடத் திட்டத்தை மாற்றுகின்றனர். இவ்வாறு நமது கல்வித் துறையை சீரமைப்பதன் மூலம், வகுப்புவாத, மத வெறுப்பு எண்ணங்களை புகுத்தி அதை வலுவடையச் செய்து, காவிக் கும்பல் தங்களது பாசிச நோக்கத்திற்கான பயணத்தை எளிதாக்கிட நினைக்கின்றனர்.

இதைப்போலவே, இவ்வருடங்களில் இந்திய வரலாற்றை மாற்றியெழுதும் இடைவிடாத முயற்சிகளையும் பார்க்க முடிகிறது. தாங்கள் தான் இந்தியாவின் மறுக்க முடியாத முன்னோர்கள் என்று நிறுவிட, வரலாற்று உண்மைகளையும், ஆதாரங்களையும் திரித்துக் கூறுவது என்பது சங்க பரிவாரத்திற்கு அவசியமாகிறது. அவர்களுடைய, “இந்து ராஷ்ட்டிரா”விற்கு இந்துக்கள், இந்துக்கள் மாத்திரமே உண்மையான முன்னோர்கள் என நிரூபிக்க இந்த வரலாற்று திருத்தல் அவசியமாகிறது. எனவே, இந்துக்கள் வேறெங்கும் இருந்து இங்கு வரவில்லை என்று நிறுவிட வேண்டியுள்ளது. ஏனெனில், அவர்களும் வெளியில் இருந்து வந்தவர்கள் என்றாகி விட்டால், பிறகு இந்நாட்டின் மீதான அவர்களது உரிமை கோரல் என்பது, அனைத்து மற்ற மதம் சார்ந்தவர்கள் இந்நாட்டிற்கு வந்து குடியேறிய நிலையோடு ஒப்பிட்டு, வேறுபாடு காட்ட முடியாத கோரிக்கையாகி விடும்.

அன்றைய கோல்வால்கருக்கும், இன்றைய ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் இந்து என்றால் ஆரியர்கள் என்றே பொருள். இந்து மதத் தலைவர்கள் ஆர்யவர்த்தா என்றே அழைக்கப்படுகிறார்கள்.

ஒரு பாசிச வெறுப்புடன் தமக்கு எதிராக உள்ள அனைத்து வரலாற்று ஆதாரங்களையும் நிராகரித்து, இந்திய வரலாற்றை மாற்றி எழுதி, இந்தியா தான் ஆரியர்கள் அவதரித்த பூமி என்பதை நிரூபிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தின் உந்துதலில், அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளது. ஆரியர்கள் தான் இந்தியாவிலிருந்து உலகைச் சுற்றி வந்தவர்கள் என்று நம்மையே நம்ப வைக்க முயற்சிப்பார்கள். ஆரிய இனம் தான் உயர்ந்தது என்ற கொள்கையோடு ஜெர்மனியில் பாசிச ஆட்சியை நிலை நாட்டிய ஹிட்லர் உண்மையில், இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்தவரே என்று கூட நம்மை நம்ப வைக்க இந்தக் கூட்டம் முயலும்.

அண்மை வருடங்களில், ஆர்.எஸ்.எஸ். தனது பாசிச குறிக்கோளை முன்னெடுக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. மதவெறியைத் தூண்டி கலவரங்களை ஏற்படுத்துவதே அதன் பிரதான நடவடிக்கையாக உள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவில் நடந்த வகுப்புவாத கலவரங்களை விசாரிக்க அமைக்கப்பட்ட நீதி விசாரணைக் கமிஷன்கள் அனைத்தும் ஆர்.எஸ்.எஸ். தான் முக்கிய குற்றவாளி என தீர்ப்பு வழங்கியிருக்கின்றன. தற்போது ஆட்சிக்கு வந்த பிறகு வகுப்புவாத நடவடிக்கைகள் மிக, மிக, முனைப்பாக பெருகியுள்ளது.

குஜராத்தில் அரசே முன்னின்று முஸ்லீம் மதத்தினருக்கு எதிராக நடத்திய வகுப்புவாத படுகொலை என்பது இதுவரை நடந்தவற்றை எல்லாம் விட நடத்தப்பட்ட கீழ்த்தரமான நடவடிக்கையாகும். குஜராத்தில் நடந்துள்ளது ஒரு இன அழிப்பிற்கு ஒப்பாகும். ஆர்.எஸ்.எஸ்.-உம் அதன் பரிவாரங்களும் குற்ற உணர்வோடு வருந்துவதற்கு பதிலாக, சுரணையற்று பச்சைப் படுகொலைகளை மகிழ்வுடன் வரவேற்று இந்துக்கள் புகழ் ஓங்குக என்று பறைசாற்றினர்.

சாதி, மத, மொழி போன்ற அனைத்து வேறுபாடுகளையும் கொண்ட மக்களை ஒற்றுமைப்படுத்தும் இந்திய நாட்டுப்பற்றினை மாற்றியமைத்து, தேசிய வெறியை உண்டாக்கிட ஆர்.எஸ்.எஸ். முயல்கிறது.

நமது நாடு ஒற்றுமையும், பண்பும் மிகப் பரந்த பன்முகத் தன்மையும் கொண்ட நாடு. மதத்தில், மொழியில், பாரம்பரியத்தில், பழக்க வழக்கங்களில், பன்முகத் தன்மை கொண்ட இந்த நாட்டை பராமரிக்க வேண்டுமானால், பன்முகத் தன்மையின் இடையிலான ஒற்றுமையை வலுவாக்குவதன் மூலமே முடியும். அதற்குப் பதிலாக ஒற்றைத்தன்மையை  திணிக்க முற்பட்டால், அந்தப் போக்கு நம் நாட்டின் ஒற்றுமையையும், பண்பையும் நொறுக்கி விடும். இதைத்தான் வகுப்புவாத பாசிச சக்திகள் துல்லியமாக நிறைவேற்றிடத் துடிக்கின்றன.

வகுப்புவாத விஷத்தை தூவுவதும், மதத்தின் பேரால் திரட்டுவதும் – எதிர் வரும் நாட்களில் நாட்டை பிளவுபடுத்தி, “உள்நாட்டுப் போர்” மூள்வதற்கான ஆபத்தான அடித்தளத்தை உருவாக்குகின்றன. மேலும் மக்கள் ஜனநாயகத்தை நோக்கி முன்னேறுவதற்கு அடிப்படையாக உள்ள உழைக்கும் பகுதி மக்களின் ஒற்றுமையையும் வகுப்புவாதம் சீர்குலைக்கிறது. எந்த அடிப்படை வர்க்கங்களின் ஒற்றுமையைக் கொண்டு, தற்போதுள்ள ஆட்சிக்கு எதிரான போராட்டத்தை நடத்த வேண்டுமோ, அந்த அடிப்படை வர்க்கங்களின் ஒற்றுமையை இன்றைக்கு எழுந்துள்ள வகுப்புவாதம் பலவீனப்படுத்தியுள்ளது என்பதையும் பார்க்க வேண்டியுள்ளது. ஆகவே, வகுப்புவாத சக்திகளுக்கு எதிரான போராட்டம் என்பது நமது வர்க்கத்தின் ஒற்றுமையை வலுப்படுத்திக் கொண்டு அதே நேரத்தில், நமது நாட்டை பாதுகாப்பதற்கும், முன்னேற்றுவதற்குமான போராட்டத்தோடு ஒன்றிணைந்ததும் ஆகும்.

இன்றைய இந்தியாவின் சூழலில் உழைக்கும் மக்கள் தங்களது வாழ்க்கை ஆதாரங்களை உயர்த்திக் கொள்ளவும், நேர்மையான சுதந்திரத்தையும், கண்ணியத்தையும் பெற்றிடவும் கையிலெடுக்கும் போராட்டங்கள் சிதைக்கப்பட்டு வகுப்புவாத பதட்டங்களுக்கும், சண்டைகளுக்கும் இப்போராட்டங்களை திசை திருப்பி விட்டுள்ளன. இப்போராட்டங்களுக்கு வலிமை ஊட்டி, வகுப்புவாத அச்சுறுத்தலை தோல்வி அடையச் செய்யாவிடில் மக்கள் விடுதலைக்கான முன்னேற்றங்கள் முறியடிக்கப்படும்.

இப்படிப்பட்ட சூழலில் வருத்தத்தை அளிக்கக் கூடிய, கொழுந்துவிட்டு எரியும் வகுப்புவாத விரோதங்களினால், தொடர்ந்து கொண்டிருக்கும் துயரங்கள் பெருகிவிடாமல் இருக்க இவ்விசயத்தில் தீவிரமாகத் தலையிடுவது நமது கடமையாகும். தெளிவான மனசாட்சியுள்ள எவரும் இப்போராட்டத்திலிருந்து விலகி நிற்க முடியாது. பொன்மொழிகள் சொல்வது போல் தீயவர்கள் வெற்றி பெற நல்லவர்கள் மௌனமாக இருப்பது ஒன்றே போதுமானது”.

இந்திய நாட்டை சிறந்த நாடாக மாற்றிட நாம் அதை பாதுகாக்க வேண்டியுள்ளது. 1947இல் அரசியல் சுதந்திரம் அடைந்த பிறகு பெறப்பட்ட சிறிய, சிறிய நன்மைகளைக் கூட அகற்றிட வகுப்புவாத சக்திகள் தாக்குதல்களை தொடுக்கின்றனர். இன்றைக்கு அனைத்து இந்திய தேச பக்தர்களின் கடமை என்பது இதுவரை கிடைத்தவற்றைப் பாதுகாத்து சிறப்பான எதிர்காலத்தை நோக்கி முன்னேறுவதேயாகும்.

கருத்தியல் களமும், அரசியல் அதிகாரமும்

(தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்திய பயிற்சிமுகாமில் ஆற்றிய உரையின் வரிவடிவம். நன்றி: அணையா வெண்மணி)

என்.குணசேகரன்

கருத்தியல் களமும் அரசியல் அதிகாரமும் என்கிற இந்தத் தலைப்பு மிக முக்கியமான தலைப்பு. இது நாம் ஆற்றவேண்டிய மிக முக்கியமான பணிகளை நினைவூட்டுவதாக கருதுகிறேன். கருத்தியல் களத்திற்கும் அரசியல் அதிகாரத்திற்கும் ஒரு இணைப்பு உள்ளது என்பதை சொல்லுவதே ஒரு முக்கியமான விஷயம் என்பது மட்டுமல்ல காலம் காலமாக மறைத்துவைக்கப்பட்டிருக்கிற அல்லது மறக்கப்பட்டிருக்கிற செய்தியை இந்தத் தலைப்பு தெரியப்படுத்துகிறது.

சிறிய கூட்டத்தின் ஆட்சி

அரசியல் அதிகாரம் என்பது பல ஆயிரம் ஆண்டுகளாக சமூகத்தின் ஒரு மேல்தட்டு, ஒரு சிறு கூட்டத்துக்குத்தான் சொந்தமாக இருந்திருக்கிறது. அதிகாரம், ஆட்சி, நிர்வாகம் என்கிற இவையெல்லாம் செழுமைப்படுத்தப்பட்டிருக்கிற ஒரு மேம்பட்ட வடிவத்தை பெற்றுள்ள இப்போதைய சமூகம் முதற்கொண்டு, இதற்கு முந்தைய காலங்களிலே மன்னர்களுடைய அரசாட்சி என்கிற முறையில் முடியாட்சி நடைபெற்ற காலம் வரைக்கும், ஆட்சி அதிகாரம் என்பது பெரும்பான்மையான மக்களை ஆள்கிற இடத்தில் ஒரு சிறு கூட்டம் தான் இருந்துவந்திருக்கிறது. உடமை வர்க்கங்கள் என்று சொல்லப்படுகிற ஒரு சிறு கூட்டம் தான் ஆளுகிற இடத்தில் இருந்திருக்கிறது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் அவர்கள் நிலவுடைமைச் சக்திகளாக இருந்திருக்கலாம். அதற்கு முன், சாதியக் கட்டமைப்பு இந்திய சமூகத்தில் வேறூன்றத் தொடங்கிய காலத்தில், கிட்டத்தட்ட அடிமைகள் எஜமானர்கள் என்று இருந்த காலத்திலேயே கூட நிர்வாகம் என ஒரு அமைப்பு இருந்திருக்கிறது. ஓரளவுக்கு அரசு என்ற வடிவம் தோன்றியிருக்கிறது. அப்படிப்பட்ட காலத்திலும் ஒரு சிறு கூட்டம்தான் பெரும்பான்மையினரை அடிமைப்படுத்தியிருந்தது.

ஆனால், சாதாரண மக்களுக்கு இது வெளிப்படையாக தெரியவில்லை. உலகில் கிட்டத்தட்ட 800 கோடி மக்கள் வாழ்கிறார்கள், இதில் 99 % உழைக்கும் மக்கள் ஆவர். இந்த மக்களின் உழைப்பைச் சுரண்டி வாழ்ந்து கொண்டிருக்கிற கூட்டம், ஒப்பீட்டளவில் மிக மிகச் சிரியது. அமெரிக்காவில் வால்ஸ்டீரீட்டைக் கைப்பற்றுவோம் என்ற ஒரு இயக்கம் சில ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கியது. நாங்கள் 99 சதவீதம், நீங்கள் 1 சதவீதம் என்று அவர்கள் முன்வைத்த முழக்கத்திலேயே ஒரு செய்தியை முன்வைத்தார்கள். 1% என்பதுதான் ஆளுகின்ற கூட்டம்.

இப்படி காலம் காலமாக ஒரு சிறு கூட்டம் தான் பெரும்பான்மையை அடக்கி ஒடுக்கி வந்திருக்கிறது.

அதிகாரம் செலுத்தும் வழிமுறை

இந்திய நாட்டை எடுத்துக்கொண்டால், மக்கள் தொகை 130 கோடி. இதில் ஒரு சிறு கூட்டம், ஒரு 250 கம்பெனிகள் இருக்கலாம் (அதில் 10 லிருந்து 12 கம்பெனிகள் அதானி அம்பானி போன்ற பெரும் கார்ப்ரேட் கம்பெனிகள்) இப்படிப்பட்ட ஒரு சிறு கூட்டம், மிகப் பெரும்பான்மையை அடக்கி ஆள்கிறது, நினைத்தை சாதிக்கிறது. கொரோனா பெருந்தொற்றின் காலத்திலும் சாதித்துக்கொண்டிருக்கிறது. அது எப்படி நடக்கிறது?

காலம்காலமாக இது எப்படி சாத்தியமாகிறது என்றால், அடக்குமுறைக்கான, வெகுமக்களை அடக்கி ஆள்வதற்கான இரண்டு கருவிகள் அவர்களுக்கு பயன்பட்டு வந்திருக்கிறது. ஒன்று, நேரடிடையாக அடக்குமுறையை ஏவிவிடக்கூடிய கருவிகள் அவர்களிடம் உள்ளன. ஒரு வலுவான காவல்துறை, ஒரு வலுவான இராணுவம் உள்ளது.  

மக்கள் நலத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு குறைந்துகொண்டேயிருக்கிறது. அதே நேரத்தில், அடக்குமுறைக் கருவிகளைப் பலப்படுத்துவதற்கான நிதி உள்ளிட்ட எல்லாவிதமான ஏற்பாடுகளையும் அவர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். இது இந்திய நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் நடந்துகொண்டிருக்கிற விஷயம்.

உழைக்கும் மக்கள் மீது, இராணுவத்தை ஏவிவிட்டு படுகொலை செய்வது காலம் காலமாக நடந்து கொண்டிருக்கிறது. 1940களில் தெலுங்கானாவில் விவாசிகள் தங்கள் நிலத்துக்காக செங்கொடி ஏந்திப் போராடியபோது, அந்தப் போராட்டத்தை ஒடுக்குவதற்காக இந்திய இராணுவம், (அப்போது தான் இந்தியாவுக்கு விடுதலை கிடைத்திருந்தது) பயன்படுத்தப்பட்டது. மக்களை அழித்தொழித்தது. பல்லாயிரக்கணக்கான கம்யூனிஸ்டுகள் வேட்டையாடப்பட்டார்கள், கொல்லப்பட்டார்கள். எனவே அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை இராணுவம் காவல்துறை உள்ளிட்டவை உழைக்கும் மக்களின் போராட்டங்களை நேரிடையாக ஒடுக்குவதற்கும் தாக்குவதற்கும் இருந்துகொண்டிருக்கிறது. சிறைகூட அதற்காகத்தான் இருந்துகொண்டிருக்கிறது.

ஆனால் இதைவிட பலமான அடக்குமுறைக் கருவி அவர்களிடம் இருக்கிறது. அதன் வழியாக உழைக்கும் மக்களுடைய ஆதரவான கருத்தைப் பெற்றே அவர்களை அடக்கிஒடுக்குகிறார்கள்.

கருத்தியல் எனும் தளம்

கருத்தியல் தளத்தில், ஆளும் வர்க்கங்களுக்கு, ஆள்வதற்கான ஒப்புதலை உருவாக்குகிறார்கள். மன்னர் தெய்வத்தின் அடையாளம் (இங்கிலாந்தில் ஒருகாலத்தில் இந்தக் கருத்து வலுவாக இருந்தது) அதாவது மன்னருக்கும் தெய்வத்துக்கும் வித்தியாசம் இல்லை என்கிற கருத்து. எனவே, தன்னை அடக்கி ஒடுக்குபவரை மன்னருக்கு சமமாக வைத்துப் பார்க்கிற அந்தக் கருத்து, அது மதத்தின் பெயரால் பதியவைக்கப்பட்டது. இந்தியாவைப் பொருத்தவரை கருத்தியல் என்கிற கோட்டையை ஆளும் வர்க்கம் பலமாகக் கட்டுவதற்கு, ஒரு அடித்தளமாக சாதியக் கட்டமைப்பு என்பது பயன்பட்டிருக்கிறது, பயன்பட்டுவருகிறது.

அதாவது கருத்தியல் தளம் என்பது அடக்கி ஒடுக்கப்படுகிற மக்கள் தன்னை அடக்கி ஒடுக்குகிற கூட்டத்துக்கு எதிராகத் திரும்பிடாமல் பார்த்துக்கொள்கிறது. அவர்கள் எல்லாவிதமான உழைப்பையும் சுரண்டி ஊதியத்தைக் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள், உழைப்புக்கான ஊதியம் கிடைப்பதில்லை. ஆனாலும் அவர்களுக்கு எதிராக உழைக்கும் மக்கள் திரும்பிடாமல் இருப்பதற்கு எதிர்ப்புக் களத்துக்கு போகாமல் இருப்பதற்கு கருத்தியல் தளம் பயன்படுத்தப்படுகிறது.  

அது கடவுளின் பெயரால், மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் நடக்கிறது. இவையெல்லாம் நேரடியாகத் தெரியக்கூடியவை. இன்னொரு பக்கம் அது கல்வியின் பெயரால் நடக்கிறது. ஊருக்கு ஊர் இருக்கக்கூடிய பேச்சு வழக்குகளின் ஊடாக அது நடக்கிறது. இந்த ஆளும் வர்க்கத்துக்கும் அதனால் ஆளப்படுகிற, சுரண்டப்படுகிற வர்க்கத்துக்குமான முரண்பாட்டை, வேறுபாடுகளை மட்டுப்படுத்துவதற்கு, அது வெடித்திடாமல் தடுப்பதற்கு இந்தக் கருத்தியல் களம் ஆளும் வர்க்கத்துக்கு பயன்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்தக் கருத்தியல் களமும் அரசியல் அதிகாரமும் பிணைந்த ஒன்று.

கருத்தியல் களத்தில் நாம் செயல்படுகிற போது தீண்டாமை ஒழிப்பு முன்னணி இப்படிப்பட்ட பணியைத் துவங்கியிருப்பது மிகுந்த மகிழ்ச்சிகரமான ஒன்று. இப்போதுதான் ஏதோ கருத்தியல் களத்தில் பணியாற்றுவதாக நான் நினைக்கவில்லை. நீண்டகாலமாக அந்தப் பணி நடந்துகொண்டிருக்கிறது. தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலையிடுகிற எல்லா இடங்களிலேயும் செயல்கள் மூலமாக, தலையீடுகள் மூலமாக அந்தக் குறிப்பிட்ட கிராமத்துக்கு அந்தக் குறிப்பிட்ட பகுதிக்கு ஒரு செய்தியை, ஒரு கருத்தைப் பதியவைக்கிற வேலையும் கூடவே நடந்துகொண்டிருக்கிறது. ஒரு தீண்டாமைக் கொடுமைக்கு எதிர்த்து  வினையாற்றும்போதே கருத்தியல் தளத்திலும் அது வினையாற்றுகிறது. தீண்டாமை ஒழிப்பு என்கிறபோது சாதி ஒழிப்பு என்கிற கருத்தும் பதிகிறது. சாதி ஒழிப்பு என்றால் சாதிக் கட்டமைப்புக்கான எதிர்ப்புக் குரலாக ஆகும். இவ்வாறு அது சமூக சமத்துவம் என்கிற கருத்தியலுக்கான தளத்தினை உருவாக்குகிறது.

சுரண்டலுக்கான கருத்தியல்

இன்று கருத்தியல் களத்தை தன்கைவசம் வைத்துக்கொண்டு ஆளுகிற வர்க்கம், தன்னுடைய அதிகாரத்தை செலுத்திக் கொண்டிருக்கிறது. பெருமபான்மையான மக்கள் மீது தன்னுடைய அதிகாரத்தை அடக்குமுறைக் கருவிகளைவைத்து மட்டுமல்ல, கருத்தியல் என்ற களத்தையும் வைத்துக்கொண்டு அடக்குமுறையையும் சுரண்டலையும் அவர்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதை செயல்பாட்டாளர்களாகிய நாம் உணரவேண்டியிருக்கிறது. எனவே, கருத்தியல் களம் என்பது மிக முக்கியமானது. இது ஒரு பொதுவான அறிவியல் கோட்பாடு என்றே நாம் சொல்லமுடியும். யார் இதைக் கையில் எடுக்கிறார்களோ, யார் இதை சரியாகப் பயன்படுத்துகிறார்களோ அவர்கள் அதில் முன்னேற்றம் காண்கிறார்கள். அந்த வகையில் கடந்த காலங்களில் இதற்கு பல உதாரணங்களைப் பார்க்கலாம்.

உலக முதலாளித்துவம் ஏற்கனவே இதை உணர்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியம் 1970களிலேயே இதை உணர்ந்திருக்கிறது. அதனால்தான் அவர்கள் தொலைக்காட்சி, பத்திரிக்கைகள் போன்றிருக்கக்கூடிய ஊடகங்கள் அத்தனையும் கொண்டு, எந்தச் செய்தியை மக்களிடத்தில் கொண்டு செல்லவேண்டும், எப்படிக் கொண்டு செல்லவேண்டும் என்று வரையறுத்திருக்கிறார்கள். சோவியத் யூனியன் பற்றிய பொய்களை, உண்மை போன்று சொல்லி, சோசலிசமும் கம்யூனிசமும் மோசமானது என்கிற செய்தியை அவர்கள் கொடுப்பது என்கிற முறையில் 1970களிலேயே பக்குவப்பட்டு வந்திருக்கிறார்கள்.

அதே போன்று சின்னங்களைப் பயன்படுத்துவது. சின்னங்களைப் பயன்படுத்துவது என்றால், இந்தியாவிலேயும் தமிழ்நாட்டிலேயும் அதற்கு நிபுணர்கள் பலர் இருக்கிறார்கள். மோடி பெரிய நிபுணர். அவர் அவருடைய படங்களை எல்லா இடத்திலும் வைத்திருப்பது போன்றவை இதில் அடங்கும். இதெல்லாம் ஹிட்லர் காலத்திலேயே நடந்திருக்கிறது.   கருத்தியல் தளத்தில் ‘அவர் ஒரு பிரம்மாண்டமான மனிதர்’, ‘சரித்திரத்தை மாற்ற வந்த மகா புருஷர்’ என்கிற முறையில் சாதாரண மக்கள் மத்தியில் பதியவைப்பது. இப்படிச் சின்னங்கள் மூலமாக தங்களுடைய மேலாதிக்கத்தை பதியவைப்பது என்கிற முறையிலும் ஆளுகிற வர்க்கம் கருத்தியல் மேலாதிக்கத்தை செய்து கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு சமூக ஊடகங்கள் போன்றவை அதற்கு பயன்படுகின்றன.

பாரதிய ஜனதா கட்சியும் ஆர்எஸ்எஸ்சும் பிரம்மாண்டமாக ஐ.டி., செல் (தகவல் தொழில்நுட்பம் பிரிவு) வைத்துக்கொண்டு செய்யும் வேலைகளைஎல்லாம் நாம் அறிவோம். முதலாளித்துவமும் உலக ஏகாதிபத்தியமும் இதை செய்துகொண்டிருக்கிறது. கருத்தியல் களம் என்பது அவர்கள் மேலாதிக்கம் செய்து கொண்டிருக்கிற ஒரு முக்கயமான தளமாக இருந்துகொண்டிருக்கிறது.

மேலாண்மையும், மேலாதிக்கமும்

இப்போது நம்முடைய நோக்கம் என்பது காலம் காலமாக இருந்துகொண்டிருக்கிற பிற்போக்குக் கருத்தியலுக்கு மாறாக முற்போக்குக் கருத்தியலைக் கொண்டு செல்வது என்பதுதான். முற்போக்குக் கருத்தியலைக் கொண்டு செல்வது என்பதற்கு பதில் நான் ஒரு சின்ன மாற்றத்தை, (உண்மையில் அது பெரிய மாற்றம்) சொல்லவேண்டிய அவசியம் இருக்கிறது. முற்போக்குக் கருத்தியல் மேலாண்மை செலுத்துகிற ஒரு நிலையை உருவாக்க வேண்டும்.  நீங்கள் கொஞ்சம் சரியாகக் கவனித்தீர்கள் என்று சொன்னால், ஆளுகிற வர்க்கம் கருத்தியல் தளத்தில் செலுத்துகிற அந்த அடக்குமுறையை நான் மேலாதிக்கம் என்று சொல்கிறேன். அவர்கள் மேலாதிக்கம் செலுத்துகிறார்கள். தவறான விஷயங்களுக்கு மக்களை ஆட்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். மக்களை தவறான, மிகப் பொய்யான, கட்டுக் கதைகளை நம்ப வைக்கிறார்கள். இந்தக் கட்டுக் கதைகள் பொய்கள் எல்லாமே அவர்கள் கருத்தியல் தளத்தில், மேலாதிக்கம் செய்ய உதவுகிற மிக முக்கியமான விஷயங்கள். எனவே, ஆளுகிற வர்க்கம், ஒரு சிறு கூட்டம், பெருங்கூட்டத்தை தங்களுடைய கருத்துக்கு, தங்களுடைய கொள்கைக்கு தங்களுடைய அடக்குமுறைக்கு ஆதரவாக அவர்களுடைய சம்மதத்தைப் பெறுவதற்கும் அவர்களைத் தங்களுடைய கொள்கைக்குக் கொண்டுவருவதற்கும் செய்வது மேலாதிக்கம். அவர்கள் செய்வது கருத்தியல் மேலாதிக்கம். சிறு கூட்டம் கருத்தியல் தளத்தில் பெரும்பான்மை மக்களை தன்வயப்படுத்துகிறது என்று சொன்னால் அது மேலாதிக்கம்.

காலம் காலமாக அடக்கி ஒடுக்கப்பட்டிருக்கிற பெரும்பான்மை மக்களுக்காக, சுரண்டப்பட்டிருக்கிற பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்காக கருத்தியல் தளத்தில், முற்போக்குக் கருத்தியலைக் கொண்டு சென்று, அதில் மேலாண்மை செலுத்தவேண்டும் என்பதுதான் இன்றைக்கு நம் முன்னர் இருக்கக்கூடிய பணி. உழைக்கும் மக்களின் தரப்பு பெரும்பான்மை என்கிற காரணத்தால் அதை மேலாண்மை என்று சொல்கிறோம். இது சரியான காரணத்துக்காக, சரியான லட்சியத்துக்காக, மனித விடுதலைக்கான மேலாண்மை.

3 தளங்களில் போராட்டம்

இந்த வகையில் நம்முடைய பணி என்பது சாதியம், மதவாதம் இதையெல்லாம் எதிர்க்கிற எதிர்ப்புப் பணி மட்டும் அல்ல. அதே நேரத்தில் இது எதிர்மறை நிகழ்ச்சி நிரல் அல்ல, இது நேர்மறையான நிகழ்ச்சி நிரல்.

மூன்று தளங்களில் இதை செய்யவேண்டும் என்று நான் கருதுகிறேன். ஒன்று, இந்த சாதியம் என்கிற ஒரு மிக முக்கியமான பிற்போக்குக் கருத்தியல் தளம், அதில் செயலாற்றவேண்டிய அவசியம் இருக்கிறது. அதை முறியடிக்க வேண்டிய அவசியம இருக்கிறது. அதேபோன்று மதவாதம். வகுப்புவாதம் என்றும் மதவெறி என்றும் வைத்துக்கொள்ளலாம். ஒவ்வொன்றுக்கும் ஒரு தனிப்பொருள் இருக்கிறது என்று சொன்னாலும் கூட, இன்றைக்கு நாம் விவாதிக்கிற சூழலில், மதவாதம் என்றே வைத்துக்கொள்ளலாம். அந்த மதவாத அல்லது வகுப்புவாதக் கருத்தியல் முறியடிக்க வேண்டிய ஒரு இடத்தில் இருக்கிறது. 

மூன்றாவது, நவீன தாராளமய கருத்தியல். இந்த நவீன தாராளமயம் என்று சொல்லும்போது உடனடியாக நம்முடைய மனத்திரைக்கு முன் வருவது என்பது பொருளாதாரம் பற்றியது. நிச்சயமாக நவீன தாராளமயம் என்பது பொருளாதாரத்தோடு இணைந்தது தான். உயிர் காக்கும் மருந்து என்கிற விஷயத்தில் கூட, லாபம், மூலதனக்குவியல் என்பதற்காக அது எந்த வகையில் என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்கிற கொள்கைகள் அடங்கியிருக்கிற ஒரு விஷயம்தான் நவீன தாராளமயம் என்பது.

நவீன தாராளமய கருத்தியல்

அதே சமயம் நவீன தாராளமயம் ஒரு கருத்தியலோடு தான் வந்தது. தனியார் மயம் என்ற கருத்து மக்கள் வெறுத்து ஒதுக்கப்பட்ட ஒரு விஷயமாக இருந்த நிலை இருந்தது. குறிப்பாக 1960களில் 70 வரைக்கும் கூட தனியாரிடம் ஒப்படைத்தால் அவர்கள் லாபம் பார்ப்பார்கள், மக்களைப் பார்க்கமாட்டார்கள் என்கிற நிலை இருந்தது. அதனால் தான் தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில் அதிகமான அளவுக்கு பொது முதலீட்டில் சுகாதார நிலையங்கள் அதிக அளவில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. போக்குவரத்து உட்பட எல்லாமே அரசுத் துறையில் செயல்படுகிற ஒரு நிலை என்பது இருந்தது. இது இந்தியா முழுக்க இருந்தது. இதற்கு பல காரணங்கள் உண்டு.

1950 காலகட்டத்தில் சோவியத் யூனியனில் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் அங்கே ஏற்பட்டிருக்கிறக்கூடிய வளர்ச்சி, அது பொதுத் துறை மூலமாக ஏற்பட்டிருக்கிற ஒரு வளர்ச்சி இங்கே சாத்தியம் என்ற நிலையை உருவாக்கியது. அதனுடைய விளைவாகவும் இந்தக் கருத்து என்பது மக்கள் மத்தியில் நிலவியது. ஆனாலும் ஆளுகிற வர்க்கம் தனியார் துறையை விட்டுவிடவில்லை. அதை வளர்ப்பதற்கான முயற்சிகளை திரைமறைவிலும் சிலநேரங்களில் வெளிப்படையாக வெகுவேகமாக செய்து கொண்டிருந்தார்கள். அதே சமயம், இந்த நேரத்தில் தான் பொதுத் துறையையும் கட்டமைக்கிற வேலை நடந்தது. நவீன தாராளமயம் வருகிறபோது அரசுத் தரப்பிலிருந்தே ஒரு கருத்தை அவர்கள் பதியவைத்துக்கொண்டேயிருந்தார்கள். பொதுத்துறையிடம் இருந்தால் என்றால் அங்கே ஒரு மெத்தனப்போக்கு இருக்கும், நிர்வாகத் திறன் இருக்காது, ஊழல் நிறைந்திருக்கும் என்பதை எல்லாம் சொல்லி பொதுத் துறை என்பது சரியல்ல, தனியார் துறை தான் வெகுவேகமாக செயல்படுவார்கள் என்ற ஒரு கருத்து தொடர்ந்து பதியவைக்கப்பட்டது.

இவ்வாறு கருத்தியல் தளத்தில் செயல்பட்டுக்கொண்டேதான் பொருளாதாரத் தளத்தில் நகர்ந்தார்கள். அதே போல தனிமனித உணர்வில் நவீன தாராளமயம் ஒரு கருத்தை முன்வைத்தது. அதாவது விடுதலைப்போராட்டக் காலத்தில், இளைஞர்களுக்கு சமுதாயத்துக்காக ஏதாவது செய்யவேண்டும் என்கிற சமூக அக்கறை இருந்தது. அது விடுதலைக்கு பிறகும் தொடர்ந்தது. ஒரு மனிதன் என்று பிறந்தால், சமூகத்துக்கு என்ன செய்தான் என்பதுதான் முக்கியமானது. எனவே, தன்னுடைய நலத்தைத் தாண்டி பொதுநலத்தைப் பார்க்கிற அந்த மனப்பாங்கு இருந்தது. 

தனியார்மயம் வரவேண்டும், தனியார் கொள்ளையடிக்க வேண்டும் என்றால், தனியாருக்கு ஒரு மதிப்பு ஏற்படுத்தவேண்டும் என்றால், மேற்சொன்ன தனிமனித உணர்வில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். நீ பணக்காரனாக வேண்டும், நீ மேலும் மேலும் பணம் சேர்க்க வேண்டும், நீ கோடிஸ்வரனாக மாறவேண்டும். அது உன்னுடைய திறமை. நீ திறமையை வளர்த்துக் கொள்ளவேண்டும், அதற்கேற்ற தொழில்நுட்பம், அதற்கேற்ற படிப்பு, அதற்கேற்ற முயற்சி, விடாமுயற்சி, பில்கேட்சைப் பார், அவரைப் பார், இவரைப் பார் என்று அது பற்றிய நூல்கள் என்ற முறையில் ஒரு தனிமனித சுயநலத்தை வலுப்படுத்துகிற கருத்தியல் என்பது பதியப்பட்டது. அந்தக் கருத்தியலைப் பதியவைத்துத் தான் ஆளும் வர்க்கம் நவீன தாராளமயத்தை கொண்டுபோனார்கள்.

முதலாளித்துவமும் சாதியும்

இந்த நவீன தாராளமயம் பல தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கிறது. ஆணாதிக்க கருத்தியலை அது வலுப்படுத்தியிருக்கிறது.  ஆதிக்கக் கருத்தியலை மேலும் கிளர்ந்து எழச் செய்ததில் முக்கிய காரணியாக நவீன தாராளமயக் கொள்கைகள் இருந்தன. பிற்போக்கான கருத்தியல் என்பதில் ஒரு முக்கியமான இடத்தைப் பெறுகிறது சாதியக் கருத்தியலும் மதவாதக் கருத்தியலும் அதே போல நவீன தாராளமயக் கருத்தியல். இதற்குள் எல்லா விஷயங்களையும் அடக்கிவிடலாம். பெண்ணடிமைத்தனம் இதற்குள்ளேயே வருகிறது. சாதியம் என்று சொல்லுகிறபோது, சாதியம் என்கிற சித்தாந்தம் என்பது பெண்ணடிமைத்தனத்தை உள்ளடக்கியதுதான். முதலாளித்துவ சமூக அமைப்பில்கூட சாதியம் தன்னை புதுவடிவம் எடுத்து நிலைநிறுத்திக்கொண்டுள்ளது.

முதலாளித்துவமும் நிலப்பிரபுத்துவமும் கூடிகுலாவுகிற, ஒன்றிணைந்திருக்கிற ஒரு சமூகமாக இந்திய சமூகம் இருக்கிறது. முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ அரசாக இந்த அரசு இருக்கிறது என்று சொல்வது சதாரண ஒரு வரி விஷயம் இல்லை. நிலப்பிரபுத்துவம் சேர்ந்திருக்கிறது என்று சொன்னால், நிலப்பிரபுத்துவத்தின் கருத்தியல் என்பதும் அதன் பொருளாகும். 

முதலாளித்துவமும் நிலப்பிரபுத்துவமும் இணைந்துவிட்டது என்று சொன்னால், நவீன காலமாற்றத்துக்கேற்ப சாதியமும் புது வடிவம் பெற்றிருக்கிறது என்பதுதான் அதன் பொருள். இதை முதன்முதலில் கண்டுபிடித்தவர்கள், இந்திய சமுதாயத்தை மார்க்சிய அடிப்படையில் ஆய்வு செய்தவர்களே.

ஒரு சாதியை இன்னொரு சாதி வெறுப்பது, எல்லா சாதிகளும் அடித்தட்டிலிருக்கக்கூடிய உழைக்கும் மக்களான அருந்ததியர் உள்ளிட்ட தலித் மக்கள் மீது ஒடுக்குமுறையை பிரயோகிப்பது, ஒடுக்குமுறை மனநிலையோடு அவர்களை அணுகுவது அது நகர்புறமாக இருந்தாலும் சரி, கிராமப்புறமாக இருந்தாலும் சரி. எனவே முதலாளித்துவத்தில் அது நவீன வடிவம் பெற்று அந்த ஒடுக்குமுறையே தொடர்கிறது என்கிறபோது முதலாளித்துவத்துக்கு அது மிகப் பெரும் பயன்படுகிற ஒரு கருவியாக இருக்கிறது.

காந்தியுடைய கருத்தியலில் பல குறைபாடுகள் இருக்கலாம், ஆனால் அவர் செய்த போதனைகள் அன்றைய சாதி சமூகத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. அதைவிட ஒரு முக்கியமான தாக்கம், இந்த சாதி அமைப்புக்கே மிகப் பெரும் ஒரு புரட்சிகரமான எதிர்ப்பை உருவாக்கி, ஒரு மாற்றுக் கருத்தியலை உருவாக்கியது என்பது டாக்டர் அம்பேத்கர் அவருடைய சிந்தனைகள்.

ஆனால், இந்த சமூகத்துக்குள்ளே சாதியத்துக்கு எதிரான இந்தக் குரல்களும் அனுமதிக்கப்பட்டு அதுவும் நடந்தகொண்டு, அதே நேரத்தில் சாதியம் என்பதை முதலாளித்துவத்துவத்துக்கு பயன்படக்கூடிய விதத்தில் அவர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள். முதலாளித்துவம் எப்படி சாதியத்தை பயன்படுத்திக்கொண்டது என்பது ஒரு நீண்ட பெரிய ஆய்வுக்குரிய விஷயம்.

உதாரணமாக, இன்றைய காலகட்டத்தில், வாக்கு அரசியலில் முதலாளித்துவ கட்சிகள் சாதியக் குழுக்களை எப்படிப் பயன்படுத்திக் கொள்கிறார்கள், சாதியப் படிநிலையை எப்படி தங்களுக்கு ஆதரவாகப் பயன்படுததிக்கொள்கிறார்கள் என்பதை நம்மால் பார்க்க முடிகிறது. எனவே முதலாளித்துவக் கட்சி, முதலாளித்துவப் பொருளாதாரம் இது அத்தனையிலும் சாதியம் என்பது அந்த முதலாளித்துவத்தை வளர்ப்பதற்கு வாய்ப்பாக அமைந்திருக்கிறது.

சாதியும் மதமும்

முற்போக்குக் கருத்தியலை கொண்டு செல்லவேண்டும் என்பதன் முதல் படி, இந்த சாதியக் கருத்தியலை எதிர்த்துப் போராடவேண்டும் என்பது. சாதியம் என்று சொல்லுகிறபோது, சாதியை அழித்தொழித்தல் என்கிற நிகழ்ச்சி நிரல் முக்கியமானது. அந்த நிகழ்ச்சி நிரலை எப்படி கொண்டுசெல்லவேண்டும் என்பதை நாம் விவாதிக்க வேண்டியிருக்கிறது. அதே போன்று, மதவாதம் என்று சொல்லுகிறபோது, இந்து சமயத்தில் மதமும் சாதியையும் பிரித்துப் பார்க்கமுடியாது. சாதியின் இருப்புக்கு ஒரு ஆன்மீக நியாயத்தைக் கற்பித்து வழங்குவது மதம். கடவுளின் பெயரால்தான் நால்வருணம் படைக்கப்பட்டிருக்கிறது. கடவுளின் பெயரால்தான் சடங்கு சம்பிரதாயங்கள் உள்ளன. இந்து சமயம் என்று சொல்லுகிறபோது சாதி என்பதை அதிலிருந்து பிரிக்கமுடியாது. தனித்தனியாகப் பார்க்க முடியாது.

அதே சமயம் மதவாதம் என்று சொல்லுகிறபோது, பிரித்துப்பார்க்கவேண்டிய தேவை இருக்கிறது. மத நம்பிக்கையாளர்கள் என்கிற ஒரு பிரிவு இருக்கிறார்கள். அவர்கள்தான் கோடான கோடி, ஒடுக்கப்பட்ட, சுரண்டப்பட்ட உழைக்கும் மக்களில் மத நம்பிக்கையாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மதத்தை நம்புவதும் கூட, மத நம்பிக்கையாளர்களாக இருப்பதும் கூட இன்றைய ஆளும் வர்க்கத்துக்கு சாதகமானதுதான். ஏனென்றால் ஆளும் வர்க்கத்தின் சுரண்டலை மறைப்பதற்கு, மத நம்பிக்கையாளர்களாக இருந்தால் அவரவர் படுகிற கஷ்டங்களுக்கு முந்தைய பிறப்பில் அவர் செய்திருக்கக்கூடிய பாவங்கள் தான் காரணம் என்று எளிதாக சொல்லிவிட்டுப் போய்விடலாம். எனவே, மதநம்பிக்கையாளர்களாக இருப்பதும் ஆளும் வர்க்கத்துக்கும் முதலாளித்துவத்துக்கும் சாதகமானதே. அந்த மத நம்பிக்கை என்பதும் மதம் சார்ந்த கருத்துக்கள் என்பதும் நாம் எதிர்நோக்க வேண்டிய முக்கியமான விஷயம்.

மதத்தை எதிர்த்த போராட்டம் என்பதில் இருக்கும் ஒரு சங்கடம் என்னவென்றால், தன்னுடைய வாழ்நிலை, வாழ்வாதாரச் சிக்கல்கள் இதற்கெல்லாம் ஒரு நிம்மதியைத் தருகிற ஒரு புகலிடமாக கோவில்களும் மத நம்பிக்கையும் அவர்களுக்குப் பயன்படுகிற காரணத்தால், நேரிடையாக மதத்தின் மீதான தாக்குதல் என்பது, மத நம்பிக்கையோடு இருக்கிற பெரும்பான்மை மக்களை அந்நியப்படுத்துகிற வேலையைத்தான் செய்கிறது என்பது அனுபவம். எனவே, அனைத்தையும் கணக்கிலெடுத்த அணுகுமுறை தேவை.

அடக்கப்பட்டவர்களின் பெருமூச்சாக மதம் இருக்கிறது. வாழ்க்கைச்சுமையிலிருந்து சிறிது நிம்மதி தருவதற்கான இடத்தில் மதம் இருக்கிறது என்று மார்க்ஸ் மதத்தைப் பற்றி சொல்லியிருக்கிறார். அதே நேரத்தில் சுரண்டுகிற கூட்டத்துடைய கருவியாகவும் மதம் என்றும் மார்க்ஸ் சுட்டிக்காட்டியிருக்கிறார். மதத்துடைய பயன்பாடு பற்றிய பொதுவான நிர்ணயிப்பு இது. எனவே, மத நம்பிக்கை என்பதை இந்த அடிப்படையில் அணுகவேண்டும்.

நாம் ஒரு பிரச்சனையை / இயக்கத்தை எடுக்கிறபோது, அது குறித்து அந்த ஊரில் ஊர் கூட்டம் போடுகிறோம். அப்போது பல விஷயங்களைப் பேசுவோம். அதில் அறிவியலைப் பேசவேண்டும்.  பொருள்முதல்வாதக் கருத்தியலை மக்களுக்கு மனதில் பதிய வைப்பதற்கான வாய்ப்பாக அது அமையும். சாதி ஒழிப்பு பற்றி பேசலாம், சாதியக் கருத்தியல் பற்றி பேசலாம். பிரச்சாரத்திலேயேயும், நேரடியாகவும் கொண்டுபோகலாம். மககளிடம் நெருக்கமாகி விவாதிப்பதன்  மூலமும் கொண்டுபோகலாம்.

இந்துத்துவத்தின் நோக்கம்

அதே நேரத்தில் மதவாதம், வகுப்புவாதம், இந்துத்வாவினை நாம் எதிர்க்க வேண்டியுள்ளது. முதலில் இவைகளுக்கும் மதத்துக்கும் தொடர்பில்லை, மதநம்பிக்கைக்கும் இந்துத்வா சொல்கிற விஷயங்களுக்கும் சம்மந்தமில்லை, மதத்தை அவர்கள் அரசியல் அதிகாரத்துக்குப் பயன்படுத்துகிறார்கள் என்கிற விஷயத்தை மக்கள் மனங்களில் பதியவைப்பது அவசியம். ஒருவரியில்/ வாக்கியத்தில் இதை நான் சொல்லிவிட்டேன், ஆனால் அதைப் பதிய வைப்பது சாதாரண விஷயம் அல்ல. ஏனென்றால் இந்துத்வாவின் மிஷினரி என்பது இந்தியா முழுவதும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அவர்களின் செயல்பாடுகள் குறித்து ஏராளமான விவரங்கள் இருக்கிறது. நிறைய அமைப்புக்கள் இருக்கிறது. வரலாறு, தொல்லியல், சமூகவியல், தத்துவம் உள்ளிட்ட 70 துறைகளில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.  ஒவ்வொன்றுக்கும் ஒரு பார்வை வைத்து அவர்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இந்துத்வா என்று சொல்லுகிறபோது, முதலில் மத அடையாளம் கொண்டிருக்கிற ஒருவருக்கு படிப்படியாக மதப் பிடிமானத்தை அவர்கள் ஏற்படுத்துகிறார்கள். இது இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. மதநம்பிக்கை என்று சொல்லுவது எப்போதாவது நினைவுக்கு வரும். அன்றாடம் 8லிருந்து 16 மணிநேரம் வேலைசெய்துகொண்டிருக்கும் உழைக்கும் மக்கள் மத்தியில் ஒருவருக்கு மத நம்பிக்கை என்பது ஏதாவது ஒரு நேரத்தில் வர வாய்ப்பிருக்கிறது. வாரம் ஒருமுறை கோவிலுக்கு செல்வது போன்ற வகையில் இருக்கிறது. உழைப்பாளி மக்கள் உழைப்பை செலுத்தவேண்டியிருப்பதால் எப்போதும் மதத்தைப் பற்றி சிந்தித்துக்கொண்டிருக்க நேரமில்லை. எந்த மதம் என்று கேட்டாலோ, வழிபாடு நடத்தும்போதோ ஒருவர் தன்னுடைய மதத்தை சொல்வார். மத அடையாளத்துடன் தன்னை இணைத்துக்கொள்வார். ஆனால் இந்துத்வாவாதிகள் செய்வது மதம் தான் எப்போதும் என்று உணர வைப்பது, மதப் பிடிமானத்தை ஏற்படுத்துவது.

கொரோனா காலத்திலேயும் இராமர் கோவில் கட்டுவதற்கான பணியில் இந்துத்வாவாதிகள் இறங்கினார்கள். கொரோனா தொற்று தீவிரமாக பரவிவரும் சூழலில் அடிக்கல் நாட்டுவிழாவை அவர்கள் நடத்தினார்கள். அந்த விழா தொற்றை அதிகரித்தது. இராமர் கோவில் கட்டுவது இப்போது தேவைப்படும் நிகழ்ச்சி நிரலா? இந்தியாவின் பொருளாதாரம் அதள பாதளத்தில் போய்க்கொண்டிருக்கிறது, கோடிக்கணக்கான மக்கள் நடுத்தெருவுக்கு வந்துவிட்டனர். இப்படிப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் இருக்கின்றபோது, இராமர் கோவில் கட்டுகிறார்கள் என்று சொன்னால், ஒரு மத நம்பிக்கை இருக்கிறவருக்கு இந்த செய்தி போய் சேருகிறபோது நம்முடைய இராமருக்கு கோவில் கட்டுகிறார்கள் என்று மதப்பிடிமானம் வலுக்கிறது. சிறுபான்மை மதங்களுக்கு எதிராக இந்து மதப்பிடிமானத்தைக் கெட்டிப்படுத்துகிற வேலை நடந்துகொண்டிருக்கிறது. இதர மதத்தை வெறுக்கும் போது மத உணர்வு வகுப்புவாதமாக, மதவாத வடிவம் எடுக்கிறது. டெல்லியில் இந்த சூழலிலும் இஸ்லாமியர்கள் தாக்கப்படுவது தொடர்ந்துகொண்டிருக்கிறது. அது நீண்டகாலமாக இவர்கள் செய்துகொண்டிருக்கும் வேலை. எனவே கலவரங்களை செய்வதன் மூலம் இந்துக்களை ஐக்கியப்படுத்தும் வேலையை இந்துத்வாவாதிகள் செய்துகொண்டிருக்கிறார்கள்.

இதில் இன்னொரு அம்சத்தையும் நாம் பார்கக வேண்டியிருக்கிறது. இந்துத்வா என்று சொல்லுகிறபோது இந்து மதம் சார்ந்தவர்களை அவர்கள் வகுப்புவாதக் கருத்தியலுக்கு கொண்டுசெல்கிறபோது, ஏதோ இந்துக்களுக்காக பாடுபடுகிற ஒரு இயக்கமாக ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார இயக்கத்தை அவர்கள் முன்னிறுத்துகிறார்கள். ஆனால் அவர்கள் கட்டமைக்க நினைக்கிற இந்து ராஷ்டராவின் கட்டமைப்பு முழுக்க முழுக்க சாதியக் கட்டமைப்பு தான், சாதியப் படிநிலைதான், சாதிய ஒடுக்குமுறைதான். பட்டியல் சாதியினர், பிற்படுத்தப்பட்டோர், ஆதிவாசி உள்ளிட்ட பெருமபான்மை ஒடுக்கப்பட்ட மக்களை ஒரு சிறு கூட்டம் அடித்தட்டில் வைத்து அவர்களை ஒடுக்குகிற முறைதான். பிராமணியம் என்ற கருத்தியல் இந்த ஏற்பாட்டுக்கு உதவுகிறது. அதே நேரத்தில் ஆளுகிற, ஆதிக்கம் செலுத்துகிற பிராமணியம் என்று சொல்லுகிறவர்களின் இன்னொரு முகம், பெருமுதலாளித்துவ கார்ப்பரேட் முகம்.

எனவே, அவர்களின் நிகழ்ச்சிநிரல் என்பது, இந்து ஒற்றுமை என்ற பெயரால் சாதிப் படிநிலையை கெட்டிப்படுத்துவது. இதற்கு சிறுபான்மை எதிர்ப்பு உதவுகிறது. இதுதான் வகுப்புவாதம். இந்த நிகழ்ச்சி நிரலை மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும். அதே நேரத்தில் அம்பலப்படுத்துகிறோம் என்ற பெயரில் எல்லோரையும் திட்டிக்கொண்டிருக்க வேண்டியதில்லை. இதுதான் அவர்கள் கட்டமைக்க விருப்புகிற சமூக அமைப்பு என்று சொல்லுகிறபோது அந்தக் கருத்தியல் அம்பலப்படும்.

சமத்துவக் கருத்தியல்

நவீன தாரளமயக் கருத்தியல், மதவாதக் கருத்தியல், சாதியக் கருத்தியல் இவை மூன்றும் ஒன்றோடொன்று பிணைந்திருக்கிறது. இந்தப் பிற்போக்குக் கருத்தியலுக்கு மாறாக சமத்துவக் கருத்தியலை – சமத்துவ, மதச்சார்பற்ற, ஜனநாயக கருத்தியல் என்பதை கொண்டு செல்லவேண்டியிருக்கிறது.

சமத்துவம் என்று சொல்லுகிறபோது சாதி நீங்கிய, சாதிவேறுபாடுகள் களையப்பட்ட, சாதி ஒழிந்த அனைத்து மத நம்பிக்கை கொண்டவர்களும் ஒற்றுமையாக, இதர மத நம்பிக்கை கொண்டவர்களை மதிப்புமிக்கவர்களாகக் கருதுகிற, அப்படிப்பட்ட மத நம்பிக்கையாளர்களைக் கொண்டிருக்கிற ஒரு சமூகம். அதே நேரத்தில், இந்த சமூகம் இப்படிப்பட்ட முற்போக்குக் கருத்தியலை முன்னெடுக்கக்கூடிய ஒரு சமூகம், முழுக்க முழுக்க பொருளாதாரத்தை தன் கையில் எடுத்திருக்கும். பொருளாதாரத்தை பெரும்பான்மை மக்களுக்கு பலன் அளிக்கும் வகையில், பொருளாதார உற்பத்தி, அதனுடைய பலன், விநியோகம் இந்த மக்களுக்குப் பயன்படக்கூடிய வகையில் அது மாற்றும். முற்போக்குக் கருத்தியலை விதைக்கிற போது அது உடனடியாக இந்த மாற்றங்களை ஏற்படுத்திவிடாது. பொருளாதார அமைப்பில் சமத்துவம் என்று சொல்லுகிறபோது, உழைக்கும் மக்கள் பொருளாதாரத்தைக் கட்டுக்குள் கொண்டுவருகிற அந்த நிலை ஏற்படும். முற்போக்குக் கருத்தியல் அந்த மாற்றத்தைக் ஏற்படுத்தும். அப்படி ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறபோது, முற்போக்கு கருத்தியல் மக்களின் மனங்களைக் கவ்விப்பிடித்து, அந்த உழைக்கும் மக்கள் தங்களுக்கான அரசியல் அதிகாரத்தைக் கட்டமைப்பார்கள். இதுதான் வழி.

இதை நான் சொல்லுகிறபோது, உடனே பலருக்கு இது சாத்தியப்படுமா என்கிற அந்தக் கேள்வி வரும்.  அதற்கு வரலாறுதான் ஒரே பதில். பிற்போக்குக் கருத்தியலுக்கும் முற்போக்கு கருத்தியலுக்குமான அந்தப் போராட்டம் இன்று நேற்றல்ல, பல்லாயிரம் ஆண்டுகளாக நடந்துகொண்டிருக்கிறது. அதில் பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. இன்றைக்கு பல சட்டங்கள், முன்னேற்றங்களைப் பார்க்கிறோம். ஏராளமான போராட்டங்கள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது என்பதே ஒரு நம்பிக்கைக்குரிய விஷயம். முற்போக்குக் கருத்தியல் என்பது பல ஆண்டு காலமாக, இன்னும் சொல்லப்போனால் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே கடவுள் இல்லை என்று நாத்திக்கருத்துக்களை பரப்பியவர்கள் இந்தியாவில் இருந்திருக்கிறார்கள். மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் அடக்கி ஒடுக்குகிற ஆதிக்க நிலையில் இருக்கக்கூடிய பிராமணியம் என்கிற கருத்தியலை எதிர்த்து, பிராமணர்களை எதிர்த்து இந்தக் கருத்துக்களை முன்வைத்திருக்கிறார்கள். இன்றைக்கு வரையில் அதனுடைய தொடர்ச்சி என்பது இருந்து கொண்டிருக்கிறது. எனவே நிச்சயமாக முன்னேற்றம், சாதனைகளைச் செய்யமுடியும்.

இன்றைக்கு சீனாவில், உழைக்கும் மக்களிடம் தான் பொருளாதாரக் கட்டுப்பாடு என்பது இருக்கிறது. நிறைய சாதனைகள், வெற்றிகள் இந்தப் போராட்டப் பயணத்தில் இருக்கிறது. அந்த வகையில், முற்போக்குக் கருத்தியலுக்கும் பிற்போக்குக் கருத்தியலுக்குமான போராட்டத்தை நாம் முன்னெடுத்துச் செல்லவேண்டிய அவசியம் இருக்கிறது. ஆனால் வரலாற்றில் வெற்றி என்பது முற்போக்குக் கருத்தியலுக்குத்தான். நாம் வெற்றிக்கான பயணத்துக்குத்தான் வரலாற்றைப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம் என்ற நம்பிக்கையோடு அதை செய்யவேண்டியிருக்கிறது.

உள்ளூர் சமூகங்கள்

இந்த முற்போக்குக் கருத்தியலை மிக முக்கியமாக உள்ளூர் சமூகங்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்பதை நான் வலியுறுத்திச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். உள்ளூர் மட்டத்தில் தனிநபர்களை அணுகக்கூடிய  வாய்ப்புக்களை முதலாளித்துவம் பெற்றிருக்கிறது. தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்கள் உள்ளிட்ட ஊடகங்கள் அனைத்தும் தனிநபர்களை எட்டியிருக்கிறது. பிற்போக்குக் கருத்தியல் தனிநபர்களை சென்றடைந்திருக்கிறது. அது மதவாதம், சாதியவாதம், நவீன தாராளமயம் இவை எதுவாக இருந்தாலும் அது தனிநபர்களை சென்றடைந்திருக்கிறது.

அதே போன்று முற்போக்குக் கருத்தியல் தனிநபர்கள், தனிநபர்கள் வாழுகிற உள்ளூர் சமூகம், தெரு, நகர வார்டு, கிராமம் என்கிற உள்ளூர் சமூகத்தை நோக்கிச் செல்லவேண்டிய அவசியம் இருக்கிறது. உள்ளூர் சமூக மக்களிடம் உரையாடுவது அவசியம். உரையாடுவதன் மூலமாக மட்டும் மாற்றம் வந்துவிடாது. செயல் முக்கியமானது. ஒரு செயல் பல கருத்துக்களை, பல பாடங்களை மக்களுக்கு இயல்பாக அனுபவங்கள் மூலமாகக் கற்றுத் தருகிறது. மக்கள் அனுபவங்கள் மூலமாக கற்றுக்கொள்கிறார்கள் என்பதை மாவோ சொல்லியிருக்கிறார். அவர்கள் அனுபவங்களைப் பெறுவதற்கான வாய்ப்பை நாம் ஏற்படுத்தவேண்டும்.

முற்போக்குக் கருத்தியலை கொண்டு செல்வதற்கு, உள்ளூர் மட்டத்திலான மதச்சார்பற்ற, அறிவியலான சமூகங்களை நாம் எங்கெங்கெல்லாம் செல்கிறோமோ அங்கெல்லாம் உருவாக்க வேண்டும். உள்ளூர் மட்டத்திலான முற்போக்கு சமூகங்களை பல்லாயிரக்கணக்கில் தமிழகத்தல் நாம் உருவாக்குகிறபோது அது மேலும் மேலும் பரவும். ஒரு அறிவியல் விதியைச் சொல்வார்கள், இயக்கவியல் விதி என்று ‘அளவு மாறுபாடு அடைய குணமாறுபாடு அடையும்’. ஒரு 10 ஊர்களில் செய்தோமென்றால் அடுத்து 11, 12 என்று போகாது, 10 நூறாகும், ஆயிரம் ஆகும், பத்தாயிரம் ஆகும், லட்சமாகும். இப்படிப்பட்ட உள்ளூர் சமூகங்களைக் கட்டி அமைத்தல் என்பது, டெல்லியின் ஆட்சி அதிகாரத்தை உழைக்கும் மக்கள் கைப்பற்றுகிற ஒரு நிலைக்கு அது கொண்டுசெல்லும். ஏனென்றால் மத்தியில் ஆட்சி என்பதுதான் இந்த முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ அதிகாரம் கோலோச்சிய ஆட்சி. எனவே உள்ளூர் சமூகங்கள் வலுவாகக் கட்டமைக்கப்படுவது என்பது முற்போக்கு கருத்தியலைக் கொண்ட கோடிக்கணக்கான உள்ளூர் சமூகங்களை நாம் உருவாக்குகிறபோது, அரசியல் அதிகாரம் முற்போக்காளர்கள் கையில், உழைக்கும் மக்கள் கையில் கைவர வாய்ப்பிருக்கிறது.

மதவாதத்திற்கு எதிராக மக்கள் திரட்டல்:

தமிழகத்தில் மதவாத அலை வேகமாக வீசுகிறது. அனைத்து மாவட்டங்களிலும் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங் பரிவாரத்தின் செயல்பாடுகள் தீவிரமாகியுள்ளன. மதவாதத்தை எதிர்த்து மக்களை அணிதிரட்டும் கடமை முதன்மையான முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. இதையொட்டி வகுப்புவாதத்தை வீழ்த்துவதற்கு ஏற்ற நடைமுறைகள் தேவைப்படுகிறது.

மார்க்சிஸ்ட் கட்சியின் 21வது அகில இந்திய மாநாட்டு நகல் அரசியல் தீர்மானத்தில் வகுப்புவாதத்தை எதிர்கொள்ளும் வழிமுறைகள் பற்றி விவரிக்கிறபோது “வகுப்புவாதத்தை எதிர்த்து மிக விரிவான ஒன்றுபட்ட இயக்கம் கட்டுவதற்கு கூட்டு மேடைகள் அவசியமானது” (2.34) எனக் குறிப்பிடப்படுகிறது. இந்தப் பின்னணியில் உரிய நடைமுறைகளை உருவாக்க வேண்டும்.

அரசியல் தளம் மட்டும் போதுமானதா?

கடந்த முறை வாஜ்பாய் அரசாங்கம் இருந்தபோதும் சங் பரிவார நடவடிக்கைளை எதிர்த்து மதச்சார்பற்ற சக்திகள் ஆவேசமாக திரண்டெழுந்தனர். அது வரவேற்கத்தக்கதாக, வரலாற்றில் போற்றத் தகுந்த நிகழ்வாக அமைந்தது. ஆனால் சமுகத்தை மதச்சார்பற்ற உணர்வுகள் தழைத்து, அந்த உணர்வுகள் வேரூன்றிய சமுகமாக இந்திய சமுகத்தை மாற்ற வேண்டுமென்ற இலட்சியம் ஈடேறவில்லை. அதனால்தான், மீண்டும் சங்பரிவாரங்கள் சமூக உணர்வை கைப்பற்றுவதில் முன்னேறி வருகின்றனர். உதாரணமாக, மாதொரு பாகன் நாவல் பிரச்னையில் அந்தப் பகுதி மக்கள் சிலரிடம் கருத்து கேட்டு ஒரு தின இதழ் செய்தி வெளியிட்டிருந்தது. எழுத்தாளர் பெருமாள் முருகன் தங்களது சமுக வரலாற்றுப் பாரம்பரியத்தை இழிவுபடுத்திவிட்டதாக அவர்களை பேட்டி கண்ட சிலர் கருத்து தெரிவித்திருந்தனர். பாரம்பரியம் பற்றி பிற்போக்கான கருத்துக்கள், சாதிப் பெருமை என்ற வகையில் நீடிக்கிற இந்த மனப்பாங்கு சங் பரிவாரங்களுக்கு பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது. அவர்கள் கருத்துரிமையை பறிப்பதில் வெற்றி கண்டது மட்டுமல்லாது ஒரு பகுதியினரை தங்களுக்கு ஆதரவாகத் திரட்டிடவும் அவர்களால் முடிந்துள்ளது.

மதச்சார்பற்ற சமூக நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடத்துவதில் மதச்சார்பற்ற சக்திகளின் தோல்வியையும் இது காட்டுகிறது. உள்ளூர் மட்டத்தில் முற்போக்கான, மதச்சார்பற்ற உணர்வை வலுப்படுத்திட தொடர்ந்து செயல்படும் உள்ளூர் சமூகங்களை உருவாக்க வேண்டுமென வரலாற்றுப் பேராசிரியர் கே.என்.பணிக்கர் வலியுறுத்தி வந்தார். இரவு பள்ளிகள், படிப்பகங்கள் என பல வடிவங்களை மேற்கொண்டு உள்ளூர் மட்டத்தில் உணர்வு மாற்றத்திற்கான முயற்சிகளை மேற்கொள்ள வலியுறுத்தினார்.

தற்போது வடிவங்களை மேலிருந்து வழி காட்டுவதற்கு பதிலாக கிராமம், நகர வார்டு மட்டத்தில் உள்ள மதச்சார்பற்ற சக்திகள் ஒன்று கூடி விவாதித்து வடிவங்களை உள்ளூர் நிலை மைகளுக்கு ஏற்ப முடிவு செய்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இதில் குறிப்பாக இடதுசாரி சக்திகள் முன்முயற்சி எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது.

ஆனால் இன்னமும் உள்ளூர் அளவில் மக்கள் உணர்வை மாற்றிட உள்ளூர் மட்டத்தில் வினையாற்றிட வேண்டும் என்ற சிந்தனை வரவில்லை. அடையாளப்பூர்வமான எதிர்ப்புக்கள் ஆர்பாட்டங்கள் அறிக்கைகள் எழுத்துக்கள் என்கிற எண்ணவோட்டத்தை மாற்ற இயலாத நிலை உள்ளது. ஒரு சிலர் கூடி ஒரு அடையாளப்பூர்வமாக எதிர்ப்பு அல்லது மக்களோடு ஒட்டாத சிறப்பு கருத்தரங்கங்கள், மாநாடுகள், பேரணிகள் நடத்தி ஊடகங்களின் தலைப்புக்களில் இடம் பெற்றுவிட்டால் வகுப்புவாதத்தை முறியடித்துவிடலாம் என்ற கருத்து நீடித்து வருகிறது. இதனால்தான், மார்க்சிஸ்ட் கட்சியின் நகல் அரசியல் தீர்மானம் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. கூட்டினை அரசியல் தளத்தில் மட்டுமல்லாது “சமூக, கலாச்சார, கல்வித் துறைகளில் எதிர்த்திட சரியான உத்திகளை உருவாக்கிட வலியுறுத்தியுள்ளது.”

கூட்டு மேடையும் கம்யூனிஸ்ட்டுகளும்

வகுப்புவாத கூட்டு மேடை உருவாக்குவதும் அதில் கம்யூனிஸ்டுகள் தீவிரமாக செயல்படுவதும் அவசியமானது. ஆனால் மத நம்பிக்கை, இதர முதலாளித்துவ சித்தாந்தங்கள் பற்றிய சரியான பார்வை இல்லையெனில் இம்முயற்சி தனது இலக்கை எட்டுவது சிரமம்.

“மதம் குறித்த தொழிலாளி வர்க்கக் கட்சியின் பார்வை” என்ற கட்டுரையில் கம்யூனிஸ்ட் அணுகுமுறை குறித்து லெனின் விளக்குகிறார். “விஞ்ஞான சோசலிசம் அமைப்பதை அடிப்படையாகக் கொண்ட மார்க்சிய உலகக் கண்ணோட்டம் கொண்டது… கம்யூனிஸ்ட் கட்சி” என்று துவங்குகிறார் லெனின்.

சோஷலிச சமூகம் அமைகிறபோது மதத்தை தடைசெய்ய வேண்டும் என்று டூரிங் கருத்து தெரிவித்தபோது அதனை ஏங்கெல்ஸ் கடுமையாக எதிர்த்தார். அதைக் குறிப்பிட்ட லெனின் இதுபோன்ற கோரிக்கைகள் எத்தகைய பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்று எழுதுகிறார். நேரடியாக மதத்திற்கு எதிரான கோரிக்கைகள் அரசியல் ரீதியான வித்தியாசங்களை மறைத்துவிட்டு மதரீதியான வித்தியாசங்களை முக்கியமானதாக மாற்றுகின்றன: “தொழிலாளி வர்க்கத்தின் ஒரு பகுதியினரின் கவனத்தை திசை திருப்புகிறது. இது, தொழிலாளி வர்க்கக் கடமையிலிருந்தும் புரட்சிகர போராட்டத்திலிருந்து தடம்புரள வைக்கிறது……”

அதேநேரத்தில் மதம் என்பது தனிநபரின் நம்பிக்கை அதில் தலையிடக்கூடாது என்ற கருத்தைப் பற்றியும் சரியான புரிதல் வேண்டும் என்கிறார் லெனின். கம்யூனிஸ்ட் இதனை கூறும்போது ஆளுகிற அரசு மதத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கிடக் கூடாது; அந்த அரசு மதத்தை தனிநபரிடம் விட்டுவிட வேண்டும் என்று அரசை வலியுறுத்துகின்றனர். ஆனால் இதன் அர்த்தம் மதத்தின் பெயரால் எது நடந்தாலும் மூட, பிற்போக்கு நம்பிக்கை அடிப்படையில் எது நடந்தாலும் பொறுத்துக் கொண்டு வேடிக்கை பார்க்க வேண்டுமென்பதில்லை. கட்சிக்குள் மார்க்சிய தத்துவார்த்தக் கண்ணோட்டமான இயக்கவியல் பொருள்முதல்வாதம் ஆழமாக வேரூன்ற வேண்டும். மக்களிடமும், உழைக்கும் மக்களிடமும் அறிவியல் கண்ணோட்டம் வலுப்பட கம்யூனிஸ்ட் இயக்கங்கள் பாடுபட வேண்டும். அத்துடன் வலுவான வர்க்கப் போராட்டம் உள்ளூர் மட்டத்தில் தீவிரமாக வேண்டும்.

மத எதிர்ப்புப் பிரச்சாரம் தீவிரப்படுத்த வேண்டும் என்ற கருத்தினைப் பற்றி எழுதுகிறபோது லெனின் அழுத்தமாக குறிப்பிடும் கருத்துக்கள் இன்றும் பொருந்துகின்றன. ஆயிரக்கணக்கான புத்தகங்கள் எழுதினாலும் மக்கள் மனங்களிலிருந்து மதம் அகன்றுவிடாது என்கிறார் லெனின். ஏனென்றால், அந்த மக்கள் முதலாளித்துவ உழைப்புச் சுரண்டலால் பாதிக்கப்பட்டவர்கள்: அவர்கள் கண்மூடித்தனமான முதலாளித்துவ அழிவுச் சக்திகளின் பிடியில் இருக்கிறார்கள்.

மூலதனத்தின் அதிகாரத்திற்கு எதிராக அனைத்து வடிவங்களிலும், உணர்வுப்பூர்வமாக, திட்டமிட்டவாறு, அமைப்பு ரீதியாக ஒன்றுபட்டுப் போராடும் மக்கள்தான் மதத்தின் அடிப்படைக்கு எதிராகவும் போராடக் கற்றுக் கொள்வார்கள்.

மத விமர்சனம் செய்யலாமா?

அதேநேரத்தில் மற்றொன்றையும் லெனின் குறிப்பிடுகிறார்.

மதத்தை விமர்சிக்கும் புத்தகங்கள் தேவையற்றது அல்லது தீமையானது என்ற முடிவுக்கு வரலாமா? பெரியார், அம்பேத்கர் உள்ளிட்டு பலரது மத விமர்சன நூல்களை புறக்கணிக்க வேண்டுமா? இதனை வலுவாக மறுக்கிறார் லெனின்… இல்லை, நிச்சயமாக இல்லை. (கம்யூனிஸ்ட் கட்சியின்) அடிப்படையான கடமை, சுரண்டல்காரர்களை எதிர்த்து சுரண்டலுக்கு ஆளான மக்களின் வர்க்கப் போராட்டத்தை வலுப்படுத்துவது. ‘இந்தக் கடமைக்கு உட்பட்டுத்தான் அதன் பகுத்தறிவுப் பிரச்சாரம் அமைய வேண்டும்.’ என்று விளக்குகிறார் லெனின்.

சுரண்டலுக்கு எதிரான போராட்டம் இல்லையெனில் மத அடிப்படையில் எழும் பிற்போக்குத்தனத்தையும் வகுப்புவாதத்தையும் முறியடிக்க முடியாது. பெரியார், அம்பேத்கர் சிந்தனைகளில் உள்ள மத விமர்சனங்கள் மிகுந்த சக்தி வாய்ந்த வாதங்கள். கம்யூனிஸ்ட்கள் அவற்றை தங்கள் வயமாக்கிக் கொண்டு வர்க்கத் திரட்டலுக்கு பொருத்தமாக மக்களை வெறும் நம்பிக்கை என்கிற இருட்டிலிருந்து வெளிக் கொணர்ந்து வர்க்கப் போராட்டத்திற்கு பயன்படுத்த முடியும். ஆனால் சில நேரங்களில் அவை மட்டுமே பிரதானமாக முனவைத்து வர்க்கப் போராட்ட நடைமுறையை பின்னுக்குத் தள்ளுவது தவறானது.

ஒரு ஆர்ப்பாட்டம் நடக்கிறது. தொழிலாளர்கள் திரண்டு இருக்கின்ற அந்த கூட்டத்தில் ஒரு கம்யூனிஸ்ட் கோரிக்கைகளை விளக்கிப் பேசுகின்றார். கம்யூனிஸ்ட் என்பதால் சில தொழிலாளர்கள், குறிப்பாக கடவுள் நம்பிக்கையில் தீவிரமாக இருக்கும் தொழிலாளர்கள், இவரது கருத்துக்களில் ஒன்றிணைவதில் தயக்கம் காட்டலாம் என்று அவருக்குத் தோன்றுகிறது. அந்த சமயத்தில் உங்களுக்கு உங்கள் மதத்தின் மீது நம்பிக்கை இருப்பது போன்று நான் சோஷலிச மதத்தின் மீது நம்பிக்கை கொண்டவன் என்று பேச்சைத் துவங்குகிறார். இவ்வாறு பேசிய அவர் மீது கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டுமா? கூடாது என்கிறார் லெனின். மக்களை கிளர்ந்தெழச் செய்வதற்கும் அவர்களுக்கு முதலாளித்துவ சுரண்டல் பற்றிய போதனை செய்வதற்கும் இதுபோன்று மத நம்பிக்கையை மதிக்கிற வகையில் கருத்துக்கள் கூறுவது தவறாகாது என்கிறார் லெனின். அதேசமயத்தில் கட்சியின் நிலைப்பாடாக சோசலிசமும் ஒரு மதம்தான் என்கிற முடிவிற்கு செல்வது தவறானது; கண்டனத்திற்குரியது என்கிறார், லெனின்.

இந்த லெனினிய வழிகாட்டுதலை இன்றைய நிலைக்குப் பொருத்திப் பார்த்து, வகுப்புவாத எதிர்ப்பிற்கும், வர்க்கங்களைத் திரட்டுவதற்கும் சில நடைமுறைகளை உருவாக்கி அவற்றைப் பின்பற்றிடலாம்.

மத நம்பிக்கையாளர்களும், நாத்திகர்களும் ஓரணியில்…

அனைத்து மதங்களும் மனித நேயத்தை வெளிப்படுத்துகிற உணர்வுகளையும் சிந்தனைகளையும் கொண்டுள்ளது. அந்த மனிதநேய கருத்துக்களை வகுப்புவாதத்தை மத நம்பிக்கையாளர்களிடமிருந்து பிரித்து, தனிமைப்படுத்திட பயன்படுத்தலாம். விஸ்வ ஹிந்து பரிஷத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் போன்று செயல்படுகிற காஞ்சி சங்கராச்சாரியார் பேசுகிற கருத்துக்கள் அனைத்தும் இந்து மதத்தின் கருத்துக்கள் அல்ல. இதனை ஆதாரப்பூர்வமாக, ஆணித்தரமாக வாதிட்டு இந்து மத நம்பிக்கை கொண்டோரை அணிதிரட்டலாம். காந்தியும் இந்துதான் அவருடைய கருத்துக்களும் காஞ்சி சங்கராச்சாரியாரின் கருத்துக்களும் ஒன்றல்ல என்று நிச்சயமாக வாதிட முடியும்.

பல பிரிவுகள் கொண்ட பௌத்த மதத்தில், அதன் கருத்துக்களை எல்லாரும் ஒரே மாதிரி பேசுவதில்லை. அஹிம்சை போதிக்கும் மதம் என்று அறியப்படுகிற பௌத்தம் இலங்கையிலும், இதர தென்கிழக்கு நாடுகளிலும் பெரும் வன்முறை கட்டவிழ்க்கப் பயன்படுத்தப்பட்டது. அதேபோன்று, இன்று இந்தியாவில் சங் பரிவாரம் பேசும் பல இந்துத்துவக் கருத்துக்கள் இந்து மதக் கருத்துக்கள் என்று எடுத்துக் கொள்ள இயலாது. எனவே ஆளுகிற கூட்டங்கள் தங்களது அரசியல் அதிகாரத்தை நிலை நிறுத்துவதற்கும், உழைப்புச் சுரண்டலை தடையின்றி தொடரவும் பயன்படும் கருவியாக மதம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஆக இரண்டு நிலைகளில் மதம் செயல்படுகிறது. ஒருபுறம் சுரண்டல் கருவியாக அது பயன்படுகிறது மற்றொரு வகையில், மார்க்ஸ் கூறியவாறு, அடக்கி ஒடுக்கப்பட்டவர்களின் பெருமூச்சாகவும் இயங்குகிறது. அனைத்து மதங்களும் மனிதநேயக் கருத்துக்களையும் கொண்டிருக்கின்றன. அதே ஆளும் வர்க்கங்களின் தேவைக்கேற்ப உழைக்கும் மக்களை அடக்கி ஒடுக்குவதற்கு ஏற்றவாறு மதக் கருத்துக் கள் ஏராளமான இடைச் செருகல்கள் கொண்ட கலவையாகவும் உருமாற்றம் பெற்று வருகின்றன.

முரண்பாடாகத் தெரிந்தாலும், வகுப்புவாத எதிர்ப்பு திரட்டலில் மத நம்பிக்கையாளர்களும், பகுத்தறிவாளர்கள் என்று அறியப்படுகிற நாத்திகர்களும் அங்கம் வகிக்க வேண்டும். ஏனெனில் மதவாதம் அறிவுபூர்வமான சிந்தனைக்கும் உண்மையான மனிதநேய, மத சிந்தனைக்கும் எதிரானது. இவர்களோடு, வகுப்புவாதத்தை எதிர்க்கும் தனிநபர்களின், மதச்சார்பற்ற அமைப்புகள் கொண்ட விரிவான மேடை எழுவது அவசியம். இது அனைத்திந்திய, மாநில மட்டத்தில் மட்டுமல்லாது பகுதி சார்ந்தும் அத்தகைய மக்களின் மேடைகள் எழ வேண்டும். உள்ளூர் அளவில் மிக மிக விரிவான உள்ளூர் மதச்சார்பற்ற சமூகங்கள் பணியாற்றும் சங்கம மாக இந்த மேடைகள் உருவாக வேண்டும்.

அறிவியல் ஒரு கருவியாக…

மார்க்சிஸ்ட் கட்சியின் 21வது அகில இந்திய மாநாட்டு நகல் அரசியல் தீர்மானத்தில் வகுப்பு வாதத்தை எதிர்கொள்ளும் வழிமுறைகள் பற்றி விளக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு வழிகாட்டுதல் வருமாறு:

“தொழிலாளி வர்க்கத்தினரிடம் மதச்சார்பற்ற, அறிவியல்பூர்வமான உணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். இதற்கான சமூக பண்பாட்டு நடவடிக்கைகளை நடத்துவதில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும். கட்சியும், தொழிற்சங்கங்களும் குடியிருப்புப் பகுதிகளில் இவற்றை மேற்கொள்ள வேண்டும்.(2.35)”

மார்க்சிஸ்ட் கட்சியின் 21வது அகில இந்திய மாநாட்டு நகல் அரசியல் தீர்மானத்தில் வகுப்பு வாதத்தை எதிர்கொள்ளும் வழிமுறைகளில் ஒரு வழிகாட்டுதல் குறிப்பிடப்படுகிறது.

“தீமைகளை விளைவிக்கும் சாதிய, மூட நம்பிக்கைகள் சார்ந்த விழுமியங்களை முறியடிக்கும் விதத்தில் பண்பாட்டு சமூக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த நோக்கத்துடன் மக்கள் அறிவியல் இயக்க செயல்பாடுகளை ஒருங்கிணைக்க வேண்டும் (2.35).”

மதவாத உணர்வுகளை அகற்றுவதற்கு அறிவியல் மனப்பான்மை வளர வேண்டும். இது மதச்சார்பற்ற சக்திகள் செய்திட வேண்டிய முக்கிய கடமை. இயற்கையின் இயக்கத்திற்கு பின்னால் ஆட்டுவிக்கும் சக்தியாக இருப்பது சர்வ வல்லமை கொண்ட கடவுள் என்ற கருத்தியல் நீடிக்கும் வரை மத அடிப்படையில் மக்களைத் திரட்டும் வாய்ப்பும், வகுப்புவாதம் வளரும் வாய்ப்பும் நீடிக்கும். இயற்கையின் இயக்கம், பிரபஞ்ச இயக்கம் குறித்து இதுவரை அறிவியல் வந்தடைந்திருக்கிற முடிவுகளை சாதாரண மனிதர்களும் புரிந்து உள்வாங்கிடும் நிலை ஏற்பட வேண்டும்.

கம்யூனிஸ்ட்கள் எப்போதுமே இதில் அக்கறை காட்டி வந்தனர். சிங்காரவேலர் வாழ்நாள் முழுவதும் அறிவியலை பரப்புவதையே அன்றாடப் பணியாகக் கொண்டிருந்தார். பிரபஞ்சம் பற்றி அன்று வரை கண்டறியப்பட்ட அறிவியல் விவரங்களை அவர் தொடர்ந்து எழுதி வந்தார். தமிழ்நாட்டில் எழுந்த பகுத்தறிவுவாதம் அறிவியலை கருவியாகக் கொண்டு மத மற்றும் மூட நம்பிக்கைகளை அகற்றும் உத்தியைக் கையாளவில்லை. பெரியார் அவ்வப்போது அறிவியலை பேசினாலும் பகுத்தறிவு இயக்கம் பொதுவாக கடவுள் நம்பிக்கை மீதான நேரடித் தாக்குதலாகவே இருந்தது. நம்பிக்கை உணர்வுக்கு மாற்றாக அறிவியல் உணர்வை ஏற்படுத்தும் கடமையில் ஓரளவிற்கு மட்டுமே அவர்கள் பயணித்தார்கள். இது அந்த இயக்கத்தின் முக்கிய குறைபாடாக அமைந்தது. இந்த வரலாற்று படிப்பினையை உணர்ந்து செயல்பட வேண்டும். இன்றைய வகுப்புவாதம் இறுகிப்போன மதப் பிடிமானத்தின் அடித்தளத்தில் கட்டப்படுகிறது. அதன் வேர்களை அறுத்தெறிய அறிவியல் என்ற போர்வாள் பொருத்தமானது. சமூகத்தை மதத்தின் பிடியிலிருந்து விடுபடச் செய்து மத நம்பிக்கை என்பது தனிநபர் உலகத்தில் மட்டும் இருக்கும் நிலை அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. சமூகம் என்று வருகிறபோது அது மதச்சார்பின்மை வழி இயங்கிட வேண்டும். ஒவ்வொருவர் சிந்தனையிலும் அறிவியல் ஞானம் வேரூன்ற செய்திட்டால் இத்தகு மதச்சார்பின்மை சூழல் உருவாகும். உள்ளூர் அளவில் மக்களோடு நெருங்கி அறிவியலைப் பரப்பும் பணியை மதச்சார்பற்ற இயக்கங்கள் மேற்கொள்ள வேண்டும்.

வாழ்வாதாரத் தாக்குதலை எதர்த்து உள்ளூர் சமூகங்கள்

நரேந்திர மோடியின் ஆட்சி இயற்கை வளங்களை அந்நிய மற்றும் இந்திய கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தாரை வார்க்கும் கொள்கைகளை கடைப்பிடித்து வருகின்றது. இதனை எதிர்த்து பொதுவான போராட்டங்கள் நடத்துவது ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் அந்த வளங்களை சார்ந்து வாழும் உள்ளூர் சமூகங்களை அந்த வளங்களை பாதுகாக்கும் மனிதக் கோட்டைகளாகவே மாற்றுவது அவசியம். உதாரணமாக, தற்போது கடலோர மேலாண்மை சட்டத்தின் மூலம் மீனவ சமுதாயங்களை அவர்களது மீன்பிடி வாழ்வாதாரத்திலிருந்து விரட்டியடித்து கடலோரப் பகுதிகளை கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளை லாபம் பெற வாய்ப்பு வசதிகளை மோடி அரசு ஏற்படுத்தி வருகிறது. இதற்கு மீனவர்கள் மத்தியில் எதிர்ப்பு இருந்தாலும் வீச்சாக, அரசின் நடவடிக்கையை தடுத்து நிறுத்தும் வகையில் இன்னும் எழவில்லை. எனவே, மீனவர்கள் ஒன்றிணைந்த மக்கள் இயக்கத்தை உள்ளூர் மீனவர் சார்ந்து எழுப்ப முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். வாழ்வாதாரத்திற்கு ஏற்பட்ட ஆபத்தை உணரச் செய்வதோடு அறிவியல் சார்ந்து மீன்பிடி தொழில், மீன் வளத்தை மேம்படுத்துதல் போன்ற பரிமாணங்களிலும் அந்த உள்ளூர் சமூக செயல்பாடு அமையும் வகையில் முயற்சிக்க வேண்டும். உழைக்கும் மீனவ மக்கள், அறிவியலாளர்கள், மக்கள் இயக்க ஊழியர்கள் என்ற பன்முனை கூட்டு நடவடிக்கைகள் அரசாங்க நடவடிக்ககைளை தடுத்து நிறுத்திடும். அது மட்டுமல்லாது மதச்சார்பற்ற அறிவியல் சிந்தனை சார்ந்த சமூகங்கள் உருவாகவும், வகுப்புவாதத்தைத் தடுக்கும் நிலையும் ஏற்படும்.

இதுபோன்று நீர், நிலம், கனிம வளங்கள் போன்றவற்றை அபகரிக்கும் முயற்சிகளிலும்   இதுபோன்ற உள்ளூர் மதச்சார்பற்ற சமூகங்களை கட்டியமைக்கும் நோக்கோடு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பகுதி வாரியாக மக்கள் திரட்டல், தொடர்ச்சியான உள்ளூர் சார்ந்த, வாழ்வாதாரப் பாதுகாப்பினையொட்டிய அறிவியல், மதச்சார்பற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவையெல்லாம் வகுப்புவாதத்தை முறியடிக்க உறுதியான பாதையாக அமையும்.

பாசிச, கார்ப்பரேட் முதலாளித்துவத்தை நோக்கி…

இந்திய கார்ப்பரேட் முதலாளித்துவம், மோடி தலைமையில் அதிகாரத்திற்கு வந்துள்ள சங் பரிவாரங்களை மிகுந்த நேசத்துடன் அரவணைத்துக் கொண்டுள்ளது. சில அமைச்சர்களின் வகுப்புவாதப் பேச்சுக்கள் கார்ப்பரேட் வட்டாரத்தில் முணுமுணுப்பை ஏற்படுத்தினாலும் மோடி அதிகாரத்தில் இருப்பதை தங்களது மூலதன வளர்ச்சிக்கு கிடைத்த பெரும் வாய்ப்பாகவே பார்க்கின்றனர். கடந்த காலத்தில் மூலதன வளர்ச்சிக்காக காங்கிரஸ் கூட்டணி அரசு செயல்பட்டபோது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டது. ஆனால் தற்போது அந்த அதிருப்தியை மத, சாதிப் பிளவுகளாக திருப்பிவிடும் பணியை சங் பரிவாரங்கள் செய்து வருகின்றன. இதனால் உலகமய பொருளாதாரக் கொள்கைகள் வெகு வேகமாக அமலாகி, மக்கள் வாழ்வாதாரம் இழக்கும் நிலை வருகிறபோது, முதலாளித்துவ எதிர்ப்பு போராட்டப் பாதையை மக்கள் தேர்ந்தெடுத்துவிடாமல் தடுக்க சங் பரிவாரத்திற்கு இருக்கும் ஆயுதம் இந்துத்துவா. இந்துமத பிடிமானத்தையும், வெறியையும் ஏற்படுத்தி இந்து ராஷ்டிரம் (இந்து ராஜ்யம்) என்ற சமூக மாற்றை முன்வைத்து திசை திருப்புகின்றனர். இதற்கு மதவாதத்தை மட்டுமல்லாது சாதியத்தையும் பயன்படுத்துகின்றனர். இது கார்ப்பரேட் சக்திகளுக்கு பேருதவியாக உள்ளது. எனவே ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங் பரிவாரம் முன்வைக்கும் இந்துராஷ்டிரம் என்ற அவர்களது இலட்சிய சமுதாயம் உண்மையில் உழைக்கும் மக்கள் குரூரமாக சுரண்டப்படும் ஏகபோக கார்ப்பரேட் முதலாளித்துவம்தான். இதில் புதிய அம்சம் என்னவென்றால், மக்கள் தங்களது அதிருப்தியை வெளிக்காட்டவும் கூட வழியில்லாமல், ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்ட பாசிசத் தன்மை கொண்ட ஆட்சியாக அது செயல்படும்.

இன்றே அதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. ஜனநாயக ரீதியில் பாராளுமன்றத்தில் விவாதம் செய்யாமல் அவசரச் சட்டங்களை கொண்டுவந்து தாங்கள் நினைத்ததை சாதிப்பது, மாதொருபாகன் நாவல் பிரச்சனையில் கொடூரமாக கருத்துரிமை எழுத்துரிமையை பறித்தது போன்ற பல நிகழ்வுகள் தொடர்கின்றன. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் ‘மதச்சார்பற்ற’, ‘சோசலிச’ சொற்றொடரை நீக்க விவாதம் நடத்திட வலியுறுத்தி, ஊடக மேடைகளில் விவாதமும் நடத்துகிறார்கள். இது ஜனநாயக வேடம் தரித்து, மதவெறி முகாமிற்கு ஆள் சேர்க்கும் உத்தி. இந்திய விடுதலையின்போது இந்தியா மதச்சார்பற்ற நாடாக இருக்க வேண்டுமென்பது மக்கள் முடிவுக்கு விடப்பட்டு, முடிவுக்கு வந்த ஒரு பிரச்சனை. மீண்டும் விவாதம் மூலமாக மக்களை இரு கூறாகப் பிரிக்க முயல்கின்றனர். ஊசலாட்டம் கொண்டோரை மனமாற்றம் செய்யும் உத்தியாக ‘விவாதம்’ என்பதை அவர்கள் பயன்படுத்துகின்றனர்.

எனவே இந்துராஷ்டிரம் என்று அவர்கள் சொல்லும் இலட்சிய சமுதாயம் பழைய இந்து சநாதன நால் வருண சமூகத்திற்கு மீண்டும் திரும்புவதாக அமையாது. ஆனால், அதைவிட கொடுமையான முறையில் தலித், ஆதிவாசிகள், பெண்கள் உள்ளிட்ட உழைக்கும் வர்க்கங்களை ஒடுக்குமுறைக்கு உள்ளாக்குகிற – கார்ப்பரேட் மூலதன அதிகாரம் கொடி கட்டிப் பறக்கிற – நவீன சமூக கொடூரம் அது. எனவே சரியான உத்தியோடு செயல்படுவது அவசரக் கடமை.

சமூக ஒடுக்குமுறை, தீண்டாமை, பெண் சமத்துவம் உள்ளிட்ட பல அம்சங்களில் வலுவான முற்போக்குக் கருத்தாக்கங்கள் கொண்ட உள்ளூர் மதச்சார்பற்ற சமூகங்கள், இன்றைய தேவை. நீண்டகால, தொடர்ச்சியான உள்ளூர் மட்ட செயல்பாடுகள், அந்த செயல்பாடுகளில் ஒவ்வொரு தனிநபர் பங்கேற்பும் உறுதிப்படுகிற சூழல் ஆகியவற்றின் மூலமாகவே அவை உருவாகும். அத்துடன், நீண்டகால நோக்கில் தொழிலாளி வர்க்கம், விவசாய வர்க்கங்கள், நடுத்தர வர்க்கங்கள், அறிவுஜீவிகள் உள்ளிட்ட அணி சேர்க்கை பலமாக உருவாவதும், அது இடது ஜனநாயக அணி யாக பரிணமிக்கவும் அது வழிவகுக்கும்.

வகுப்புவாத அரசியல்!

“மதவெறி மற்றும் பாசிச தன்மை கொண்ட ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான கூட்டம் வளர்ந்து மத்தியில் ஆட்சிப்பொறுப்புக்கு வந்துள்ளதால் மதச்சார்பின்மை அடித்தளத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அரசு, நிர்வாகம், கல்வி அமைப்பு, தகவல்தொடர்பு சாதனங்கள் ஆகியவற்றை மதவெறிமயமாக்க திட்டமிட்ட வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட் டுள்ளன. பெரும்பான்மை மதவெறியின் வளர்ச்சி சிறுபான்மை மதவெறி சக்திகளை வலுப்படுத்தும், மேலும் நாட்டின் ஒற்றுமைக்கு ஆபத்தை விளைவிக்கும். பெரும் முதலாளிகளில் ஒருபகுதியினர் பாஜக மற்றும் அதன் மதவெறி அமைப்புகளுக்கு ஆதரிவளிப்பது நாட்டின் ஜனநாயகம், மதச்சார்பின்மைக்கு தொடர்ச்சி யான ஆபத்தை ஏற்படுத்தும். எனவே, மதச்சார் பின்மை கோட்பாடுகளை தொய்வின்றி செய லாக்க வேண்டுமென்பதற்காக சமரசமற்ற போராட்டத்தை நடத்த நமது கட்சி உறுதி பூண்டுள்ளது”.

2000-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட கட்சித்திட்டம் வகுப்புவாத அபாயம் பற்றியும், அதை எதிர்த்து நடத்த வேண்டிய போராட்டத்தின் அவசியம் பற்றியும் மேற்கண்டவாறு கூறியுள்ளது.

1999-ஆம் ஆண்டிலிருந்து 2004-ஆம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுகள் வரை பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி மத்தியில் இருந்தது. பாஜக அரசின் நடவடிக்கை பற்றியும், ஆர்.எஸ்.எஸ் பற்றியும் கட்சித்திட்டம் துல்லியமாக மதிப்பீடு செய்துள்ளது. தற்போது அறுதிப் பெரும்பான்மையுடன் மோடி தலைமையில் மத்தியில் பாஜக ஆட்சி அமைந்துள்ளது.

16-வது மக்களவைத் தேர்தலில் பாஜக அதிகாரத்திற்கு வந்தது பற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு கீழ்க்கண்டவாறு கூறியுள்ளது.

“பாஜக மத்தியில் அதிகாரத்திற்கு வந்திருப்பது இந்திய அரசியலில் வலதுசாரித் திருப்பம் ஏற்பட்டுள்ளதையே எடுத்துக்காட்டு கிறது”.

ஆர்எஸ்எஸ் தலைமையிலான பாஜக அரசு இந்துத்துவா கொள்கையான இந்து ராஷ்டி ராவை உருவாக்கிட முயற்சிப்பதோடு நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கைகளையும் வேகமாக அமலாக்கி வருகிறது. இதனால்தான் பாஜக ஆட்சிக்கு வந்திருப்பதை ஒரு வலதுசாரி திருப்பமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியிருக்கிறது.

நாடு விடுதலையடைந்த போது இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையையொட்டி நாடு முழுவதும் இந்து, முஸ்லிம் கலவரத்தை உருவாக்கியதோடு, மகாத்மாகாந்தியின் படுகொலைக்கும் ஆர்எஸ்எஸ் காரணமாக இருந்தது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் வகுப்புவாத நடவடிக்கைதான் காந்தியின் படுகொலைக்கு காரணமென அன்றைய உள்துறை அமைச்சர் பட்டேல் கூறினார். ஆர்எஸ்எஸ் அமைப்பு தடை செய்யப்பட்டது. இனி அரசியலில் ஈடுபட மாட்டோம் என ஆர்எஸ்எஸ் அமைப்பு உறுதிமொழி அளித்த பிறகே மத்திய அரசு ஆர்எஸ்எஸ் மீதான தடையை 1949-இல் நீக்கியது.

காந்தியின் படுகொலையையொட்டி ஆர்எஸ்எஸ் தடை செய்யப்பட்டதும் இனி அரசியலில் பங்கு பெற மாட்டோம் என ஆர்எஸ்எஸ் வாக்குறுதியளித்த பின்னணியில், தன்னுடைய வகுப்புவாத நடவடிக்கையை தொடர ஒரு அரசியல் பிரிவு வேண்டும் என்ற நோக்கத்தோடு 1951 ஆம் ஆண்டு ஜனசங்கம் என்ற அரசியல் கட்சியை ஆர்எஸ்எஸ் உருவாக்கியது.

1977ம் ஆண்டு ஜனதா கட்சி உருவான போது ஆர்எஸ்எஸ் அதில் இணைந்தது. (ஜனசங்கம், முன்னாள் சோசலிஸ்டுகள், ஸ்தாபன காங்கிரஸ் இணைந்து ஜனதா கட்சி உருவாக்கப்பட்டது). ஜனதா கட்சி உடைந்து அதிலிருந்து வெளியேறி பாரதிய ஜனதாகட்சியை ஆர்எஸ்எஸ் உருவாக்கியது. ஜனதா கட்சியிலிருந்து போது மற்ற கட்சிகளைச் சார்ந்தவர்களோடு ஆர்எஸ்எஸ்-க்கு ஏற்பட்ட தொடர்பைப் பயன்படுத்தி பாரதிய ஜனதா கட்சி தன்னை விரிவுபடுத்திக் கொண்டது.

நாடு முழுவதும் இந்து, முஸ்லிம் வகுப்பு மோதலை உருவாக்கி அதன் மூலம் தன்னுடைய செல்வாக்கை விரிவுபடுத்தி மத்தியில் ஆட்சியைப் பிடிப்பதற்காக பாரதிய ஜனதா கட்சி முயற்சித்தது. இதற்காக பல உத்திகளை பாஜக கடைபிடித்தது.

ராமர் பிறந்த இடத்தில்தான் பாபர் மசூதி உள்ளது என ஏற்கனவே ஆர்எஸ்எஸ் மேற்கொண்ட தனது வகுப்புவாத நிலைபாட்டை முன்னெடுத்துச் செல்ல பாஜக திட்டமிட்டது. 1986-89ம் ஆண்டுகளில் நாடு முழுவதும் ராம் ஜென்ம பூமி, ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வது, அனைத்து மதத்தைச் சார்ந்தவர்களுக்கும் ஒரு பொதுவான சட்டம், பசுவதை தடை எதிர்ப்பு போன்ற கோரிக்கைகளை முன்வைத்து நாடு முழுவதும் ஆர்எஸ்எஸ் தலைமையிலான சங் பரிவார் அமைப்புகள் பிரச்சாரத்தை துவக்கின.

1980களின் இறுதி ஆண்டுகளில் ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு கடைபிடித்த புதிய பொருளாதாரக் கொள்கையால் நிதி நெருக்கடி ஏற்பட்டது. அரசுக்கு எதிராக மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது. இதை பாஜக பயன்படுத்தத் துவங்கியது.மேலும் பாஜகவும் புதிய பொருளாதாரக் கொள்கையை ஆதரிக்கக் கூடிய கட்சி என்ற பின்னணியில் நேரு காலத்தில் துவங்கப்பட்ட சுயசார்பு பொருளாதாரக் கொள்கையிலிருந்து மத்திய அரசு விலகிச் சென்றது.வகுப்புவாத இயக்கம் தலை தூக்குவதும், புதிய பொருளாதாரக் கொள்கையை அமலாக்கம் துவங்கியதும் இந்தியாவில் ஒரு புதிய நிலைமை உருவானது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பாஜகவின் தலைவரான எல்.கே,அத்வானி தலைமையில் பிரச்சார யாத்திரையைத் துவக்கினர். இந்த யாத்திரை செல்லும் இடங்களி லெல்லாம் வகுப்பு மோதல் ஏற்பட்டது. அத்வானி தலைமையிலான ரத யாத்திரையை அனுமதிக்கக் கூடாது என்று ஜோதிபாசு வலியுறுத்தினார். பீகார் மாநிலத்திற்கு அத்வானி தலைமையிலான ரத யாத்திரை வந்தபோது அத்வானியை கைது செய்து ரதயாத்திரையை லல்லு தலைமையிலான அரசு தடுத்து நிறுத்தியது.

நாடு முழுவதும் பல பகுதிகளில் வகுப்பு மோதல் உருவானது. பல முனைகளிலிருந்து புறப்பட்ட சங் பரிவார் அமைப்புகளின் குழுக்கள் 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி பாபர் மசூதியை தகர்க்க திட்டமிட்டன. தேச ஒற்றுமைக்கு ஆபத்தை உருவாக்கக்கூடிய ஆர்எஸ்எஸ் தலைமையிலான நடவடிக்கைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சிலை கூட்ட வேண்டுமென்று மேற்கு வங்க முதலமைச்சராக இருந்த ஜோதிபாசு வலியுறுத்தினார். தேசிய ஒருமைப்பாட்டுக்குழு கூட்டம் நடைபெற்ற போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் சுர்ஜித், ஜோதிபாசு ஆகிய இருவரும் கலந்து கொண்டனர். பாபர் மசூதியைப் பாதுகாக்க தேவைப்பட்டால் ராணுவத்தையும் பயன்படுத்த வேண்டுமென்று தோழர் ஜோதிபாசு ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டத்தில் பேசினார். ஜோதிபாசுவின் கருத்தை அனைவரும் ஆதரித்தனர். ஆனால், டிசம்பர் 6 அன்று மதவெறி பிடித்த ஆர்எஸ்எஸ் தலைமையிலான சங் பரிவார் அமைப்புகள் பாபர் மசூதியை தகர்த்தன. நாடு முழுவதும் பல பகுதிகளில் மதக்கலவரம் மூண்டு பெருத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டது. இந்திய வரலாற்றில் டிசம்பர் 6 ஒரு கறுப்பு நாள் என குடியரசுத் தலைவர் கூறினார்.

பாஜகவின் வகுப்புவாத நடவடிக்கைகளும் அதைத் தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளில் நிகழ்ந்த வகுப்பு மோதல்கள் பின்னணியில் 1991-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் களில் பாஜக பிரதான எதிர்க்கட்சியாக பலம் பெற்றது. 1996-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 161 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 1999-ம் ஆண்டு பல மதச்சார் பற்ற கட்சிகள் மதவெறிக்கட்சியான பாஜக வோடு கூட்டு சேர்ந்ததையொட்டி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி மத்தியில் ஆட்சியைப் பிடித்தது. 1998ம் ஆண்டு ஆட்சியைப் பிடித்து குறுகிய காலத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு மீண்டும் 1999ம் ஆண்டு பாஜக தலைமையில் ஆட்சி அமைந்தது. இந்த 6 ஆண்டு ஆட்சி காலத்தில் பாஜக எல்லாத்துறைகளிலும் இந்துத்துவாவை புகுத்திட திட்டமிட்ட முயற்சிகளை மேற்கொண்டது. பாஜக தலைவராக இருந்த அத்வானி ஆட்சியைப் பிடிப்பது எங்களது நோக்கமல்ல, இந்தியாவை இந்து ராஷ்டிரமாக மாற்றுவதே எங்கள் நோக்கம் என்று பகிரங்கமாக பேசியிருக்கிறார்.

இதேகாலத்தில் (2002 முதல் 2007 வரை) குஜராத்தில் மோடி தலைமையிலான அரசு அப்பட்டமான வகுப்புவாத அணுகுமுறையை கடைபிடித்தது என்பதை நாடறியும். கோத்ரா ரயில் சம்பவத்தையொட்டி பாஜக தலைமையிலான மாநில அரசின் ஆசியோடு இஸ்லாமியர்களின் மீது ஏவிவிடப்பட்ட வன்முறையில் சுமார் 2 ஆயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டனர். இன்னமும் கூட ஒருபகுதி இஸ்லாமியர்கள் முகாம்களில் வசித்து வருகின்றனர். இன்றும் பாஜக தலைவராக உள்ள அமித்ஷா உள்ளிட்ட பல காவல்துறை அதிகாரி கள் மீது இஸ்லாமியர்களுக்கு எதிரான போலி என்கவுண்டர் குறித்து சிபிஐ தொடுத்த வழக்குகள் நிலுவையில் உள்ளன. இஸ்லாமியர்களுக்கு எதிரான அந்த படுகொலையை நாடே கண்டித்தது. ஆனால், குஜராத் ஒரு பரிசோதனைக் கூடம், எதிர்காலத்தில் குஜராத் பாதையை மற்ற மாநிலங்களுக்கு எடுத்து செல்வோம் என பாஜக தலைவர்கள் இப்போதும் பேசி வருகிறார்கள்.

2004 முதல் 2014ம் ஆண்டு வரையில் 10 ஆண்டு காலம் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சி புரிந்தது. இக்காலத்தில் மத்திய அரசு கடைபிடித்த நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கை பல துறைகளில் நெருக்கடியை உருவாக்கியது. பொருளாதார வளர்ச்சியில் தேக்கம், விலைவாசி உயர்வு, வேலையின்மை, இதுவரை கண்டிராத அளவிற்கு மெகா ஊழல்கள், இப்பின்னணியில் 16-வது மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சி செல்வாக்கை இழந்தது.

மேற்கண்ட சூழலில் நடைபெற்ற 16-வது மக்களவைத் தேர்தலில் கார்ப்பரேட் கம்பெனி கள் பெரும்பான்மையாக பாஜகவை ஆதரித்தன. குறிப்பாக குஜராத் மாடலை (பொய்யான பிரச்சாரம்) நாடு முழுவதும் அமலாக்கிட வேண்டுமென்ற நோக்கத்தோடு பெருமுதலாளிகளும், பெரும்பான்மையான ஊடகங்களும் மோடியை ஆதரித்தார்கள்.

மத்தியில் ஆட்சியைப் பிடிப்பதற்காக தேர்தலுக்கு சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே தயாரிப்புப்பணியை பாஜக துவக்கிவிட்டது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகமாகக் கொண்ட உத்தரபிரதேச மாநிலத்திற்கு அமித்ஷா பொறுப்பாக்கப்பட்டு தேர்தலுக்கு முன்னதாக முசாபர்பூரில் மதக் கலவரத்தை உருவாக்கி தேர்தலில் வெற்றி பெற வகுப்புவாத அணுகுமுறையை பாஜக கடைப்பிடித்தது.

இந்துத்துவா வகுப்புவாதக் கொள்கையை உடைய பாஜகவை பெருமுதலாளிகள் ஆதரிப்பது ஆபத்தான விளைவுகளை உருவாக்கிடுவதோடு, மதச்சார்பின்மைக்கு ஊறு விளைவிக்கும்.

மோடி தலைமையிலான பாஜக அரசு மக்களுக்கு விரோதமான பொருளாதாரக் கொள்கைகளை கடைபிடிக்கிற போது அதை எதிர்த்து போராட முன்வரும் உழைக்கும் மக்களின் ஒற்றுமையை வகுப்புவாத ரீதியில் பிளவுபடுத்துகிறது.

மோடி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த 5 மாதங்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும் இந்துத்துவாவை விதைத்திட பாஜக பல வடிவங்களில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

  • இந்திய வரலாற்று ஆராய்ச்சி நிறுவனத்திற்கு சுதர்சன ராவ் என்ற ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சார்ந்தவரை தலைவர் ஆக்கியது.
  • ஆசிரியர் தினத்தை குரு உத்சவ் என்று சமஸ்கிருத மொழியில் முன்மொழிந்தது.
  • நாடு முழுவதுமுள்ள மத்திய அரசுப் பள்ளிகளில் சமஸ்கிருத வார விழா கொண்டாட வேண்டுமென்று பணித்தது.
  • தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் பாஜக தலைவர் மோகன் பகவத் அதிகாரப்பூர்வமாக இந்துத்துவாவை பிரச்சாரம் செய்ய அனு மதித்தது.
  • இந்துத்துவா என்பதுதான் இந்தியர்களின் அடையாளம் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் பேசியிருப்பது
  • ராஜேந்திர சோழனுக்கு பாஜக விழா எடுக்க முடிவெடுத்திருப்பது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு குஜராத், கர்நாடகா, ஹரியானா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களிலும் வேறு பல பகுதிகளிலும் ஆர்எஸ்எஸ் தூண்டி விட்ட வகுப்புமோதல்கள் நடைபெற்றுள்ளன. அதிகமான சம்பவங்கள் நடைபெற்றது உத்தரபிரதேச மாநிலத்தில்.

இஸ்லாமியர்களுக்கு எதிராக மதவெறிப் பிரச்சாரம் செய்து, மதக்கலவரத்தை உருவாக்கி மக்களை மதரீதியில் பிளவுபடுத்தி இந்துக்கள் மத்தியில் இந்துத்துவா பிரச்சாரத்தை கொண்டு செல்லும் ஆர்எஸ்எஸ்-ன் அடிப்படையான திட்டத்தை இன்று நாட்டின் பல பகுதிகளில் ஆர்எஸ்எஸ் நிறைவேற்றி வருகிறது. நமது கட்சி திட்டம் குறிப்பிடுவது போல் வகுப்புவாத நடைமுறை இங்கு பாசிசத்தின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கியே செயல்படுத்தப்படுகிறது. ‘வன்முறை’ அதன் செயல்திட்டத்தின் ஒரு பகுதி. நாட்டின் பல பகுதிகளிலும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிற நிகழ்வுகள்அதை உறுதி செய்கின்றன. ஆனால் வன்முறை வழியில் மட்டும்தான் பாசிசம் வேரூன்றுகிறது என்பதை கிராம்சி போன்ற அறிஞர்கள் மறுக்கின்றனர்; சமூகத்தின் அனைத்து தளங்களிலும் அதன் ஆதிக்கத்தை நிறுவுவதன் மூலம்தான் வெற்றி பெறுகிறது என்கிறார். ஆகவே, வகுப்பு மோதல் கள் மூலமாக மட்டுமல்ல, பண்பாட்டுத் தளத்திலும் ஆர்எஸ்எஸ் தன்னுடைய இந்துத் துவாவை புகுத்திட பல வடிவங்களில் செயல்பட்டு வருகிறது.

மலைவாழ் மக்கள் வாழும் பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான பள்ளிகளை ஆர்எஸ்எஸ் நடத்தி வருகிறது. அரசுப் பள்ளிகளையும் ஆர்எஸ்எஸ்-சினுடைய உடற்பயிற்சிக்கும், ஸ்தாபனப் பயிற்சிக்கும் பயன்படுத்துகிறது.

ஒவ்வொரு மாநிலத்திலும் வித்தியாசமான அணுகுமுறையை ஆர்எஸ்எஸ் கடைபிடிக்கிறது. உதாரணமாக தமிழகத்தில் ராஜராஜ சோழனுக்கு விழா எடுக்க வேண்டுமென்று ஆர்எஸ்எஸ் முடிவு செய்துள்ளது. ராஜேந்திர சோழன் காலத்தில் எண்ணாயிரம் என்ற கிராமத்தில் (விழுப்புரம் மாவட்டத்தில்) பல்கலைக்கழகத்தை உருவாக்கி, சமஸ்கிருதம் கற்றுத் தந்ததற்காக முதலாம் ராஜேந்திர சோழனுக்கு விழா எடுக்க வேண்டுமென்று ஆர்எஸ்எஸ் முடிவு செய்துள்ளது. உண்மையில் எண்ணாயிரத்தில் சமஸ்கிருதம் கற்றுத்தந்ததாக தன்னுடைய நூலில் குறிப்பிடும் பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரி அங்கு தமிழ் கற்றுத்தந்ததற் கான ஆதாரமில்லை என்று கூறுகிறார். எனவே, சமஸ்கிருதத்தை இந்து மதத்தோடும், இந்துத் துவாவோடும் இணைத்துப் பார்க்கும் ஆர்எஸ்எஸ் சமஸ்கிருதத்தை தூக்கிப் பிடித்ததற் காகத்தான ராஜராஜ சோழனுக்கு விழா எடுக் கிறது.

கேரளத்தில் நாராயண குருவுக்கும், ஐயங் காளிக்கும் ஆர்எஸ்எஸ் விழா நடத்துகிறது. ஆனால், இவர்கள் இரண்டு பேரும் சாதிக் கொடுமைக்கு எதிராக போராடியவர்கள். இந்து மதத்தை தூக்கிப்பிடிக்கும் ஆர்எஸ்எஸ், மனு தர்மத்தை ஆதரிக்கும் ஆர்எஸ்எஸ் சாதி வேறு பாட்டை எதிர்த்த நாராயண குருவுக்கோ, ஐயங்காளிக்கோ விழா நடத்துவது ஒடுக்கப்பட்ட மக்களை தம் பக்கம் திரட்டுவதற்காக அவர்கள் செய்யும் மோசடி வேலை என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை.

“வகுப்புவாதம் என்பது அடிப்படையில் ஆட்சியைப் பிடிப்பதற்கான தந்திரமே ஆகும்…. இங்கு அதிகாரம் என்பது அடிப்படை மக்களின் எண்ணங்களை ஆக்கிரமிப்பதன் மூலம் சமூக அதிகாரத்தை நிலை நாட்டி அதன் மூலம் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவதே வகுப்புவாத சக்திகளின் நோக்கம்” என கூறுகிறார் பேராசிரியர் கே.என்.பணிக்கர். கல்வி உள்ளிட்ட அனைத்து சமூக, பண்பாட்டு தளங்களிலும் ‘இந்துத்துவா’ செயல்திட்டம் செயல்படுத்தப்படு வதிலிருந்து இதை நாம் புரிந்து கொள்ள முடியும்.

வகுப்புவாத அரசியலின் பின்னே உள்ள பொருளாதார அடித்தளத்தையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். உலகமய, தாராளமயக் கொள்கைகளை எதிர்த்து கடுமையான போராட் டங்கள் நடைபெற்று வருகின்றன. அவற்றை ஒருங்கிணைக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் இந்தப் போராட்டங்களை நீர்த்துப் போகச் செய்யும் அல்லது வலுவற்றதாக மாற்றும் தந்திரமான வேலையினை வகுப்புவாத அரசியல் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. திட்டமிட்டு செயல்படுத்தப்படும் மத, சாதிக் கலவரங்கள் மக்களின் ஒற்றுமையினை சீர் குலைக்கிறது; தொழிலாளி வர்க்க ஒற்றுமை யினையும் சிதைக்கிறது. தாராளமய கேடுகளை எதிர்த்து நடத்தப்படும் இயக்கங்களை திசை திருப்ப இந்த சாதி, மத அடையாளங்கள் பயன் படுத்தப்படுகின்றன. ஆகவேதான், இன்று நாம் நடத்த வேண்டிய அரசியல் போராட்டத்தில் வகுப்புவாதத்திற்கு எதிரான போராட்டங்களையும், தாராளமயத்திற்கெதிரான போராட்டங் களையும் ஒருங்கிணைக்க வேண்டிய அரசியல் தேவை நம்முன் உள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி துவக்க காலத்திலிருந்தே வகுப்புவாதத்திற்கெதிரான போராட்டத்தை அரசியல் மற்றும் பண்பாட்டு தளங்களில் தொய்வின்றி பல்வேறு வடிவங்களில் நடத்திக் கொண்டிருக்கிறது. இன்னும் பரவலாக பல்வேறு மக்கட்பிரிவினரிடையே எடுத்துச் செல்ல வேண்டிய தேவை உள்ளது என்ற உணர்வோடு செயல்படுகிறது. இது தொய்வில்லாது நடத்தப்பட வேண்டிய போராட்டம் என்பதை கட்சியின் திட்டமும் அதன் ஸ்தாபன முடிவுகளும் கட்சி அணிகளுக்கு வலியுறுத்துகின்றன.

வகுப்புவாதங்கள்: மாறிவரும் வடிவங்களும் அவற்றின் எதிர்காலமும்

அய்ஜாஸ் அகமது

(தமிழில்: ச.வீரமணி)

வகுப்புவாதங்கள் குறித்து எண்ணற்ற கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன. குறிப்பாக இடதுசாரிகளும் நிறையவே எழுதி இருக்கிறார்கள்.  குறிப்பிடத்தக்க வகுப்புவாத வன்முறை நிகழ்வுகள் குறித்தும், வகுப்புவாத அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் வரலாறுகள் குறித்தும், மத்திய, மாநில அரசுகள் பின்பற்றிய வகுப்புவாதக் கொள்கைகள் குறித்தும்  மிகவும் விரிவாகவே ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன. இப்பொருள் குறித்து நானும் மிகவும் விரிவாகவே எழுதியிருக்கிறேன்.  அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக இங்கே அடுக்க வேண்டும் என்பது என் நோக்கமல்ல. இருப்பினும் சில உண்மைகள் அவ்வப்போது நம் நெஞ்சில் வந்து மோதத்தான் செய்கின்றன.

வகுப்புவாதம், மதச்சார்பின்மை, தேசியம் அல்லது தேசியவாதம் போன்றவை குறித்து நாம் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறோம்?  இது தொடர்பாக என் அடிப்படை நிலைப்பாட்டை மிகவும் கடுமையான வார்த்தைகளுடனேயே தொடங்கிட விரும்புகிறேன்.

அனைத்துவிதமான வகுப்புவாதங்களும் ஓர் ஆரோக்கியமான அரசியலில் தீர்க்கப்பட முடியாத நோயல்ல. ஆர்எஸ்எஸ், சிவசேனை வகைய றாக்கள் பரப்பிடும் வகுப்புவாத வெறி உணர்வுகளுக்கு எதிராக அதைவிட அதிகமான அளவில் மதச்சார்பின்மை, நாட்டுப்பற்று உணர்ச்சிகளைக் கொடுப்பதன் மூலம் இந்நோயைக் குணப்படுத் திட முடியும்.  வகுப்புவாத நடவடிக்கைகள் என்று நாம் அழைத்திடும் –  தற்போது மக்கள்  பின்பற்றி வரும் – சில நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகள் மிகவும் சிக்கலான வரலாற்று வேர்களைக் கொண்டிருக்கின்றன.  இந்திய சமூகத்தின் கட்ட மைப்பிலும், நாள்தோறும் நாம் பின்பற்றும் நடைமுறை அரசியலிலும்  நன்கு ஆழமாக வேரூன்றி இருக்கின்றன.

நாம் பின்பற்றிவரும் தத்துவங்களை விமர்சனத்திற்குள்ளாக்குவது சந்தேகமற மிகவும் முக்கியமானதுதான். ஆனால், எண்ணற்றோர் உயிர்கள் சூறையாடப்படுவதற்குக் காரணமாக விளங்கும் வகுப்புவாத வன்முறை சம்பந்தமான உண்மைகளையும், விவரங்களையும்  திரட்டுவது  அதைவிட மிகவும்  முக்கியமானதாகும்.

அதுமட்டுமல்ல, வகுப்புவாத சிந்தனைகளும் நடைமுறைகளும் மிகவும் போற்றுதலுக்குரியவை என்றும், இவை நியாயமானவை மட்டுமல்ல, அவசியமானவையும், பயனளிக்கக் கூடியதும் என்றும் நாட்டில் உள்ள மக்களில் மிகப் பெரும் பாலானோர் நம்பிக்கொண்டும் இருக்கிறார்களே, இவர்களின் நம்பிக்கைகளை இவர்கள் மனம் கோணாதவாறு எவ்வாறு விமர்சிக்கப் போகிறோம் என்பது குறித்தும் நாம் ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகும்.

நாடு சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டன. குஜராத் மாநிலத்தில் முஸ்லீம்களுக்கு எதிராக இனப்படுகொலையைக் கட்டவிழ்த்துவிட்ட நரேந்திர மோடி பாஜக சார்பில் இந்தியாவின் பிரதம வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டு அதற்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மதவெறி உணர்ச்சியை மக்கள் மத்தியில் கிளப்பி விசிறிவிடுவதன் மூலம் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்பதற்குச் சரியான அடையாளம் நரேந்திர மோடி என்று நான் துணிந்து கூறுவேன்.

அவர் பிரதமராகிவிட்டால், வகுப்புவாதத் திற்கு எதிராக நாம் மேற்கொள்ளும் பயணம் மேலும் சிறிது காலத்திற்கு நீடித்திடும். இதனை வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், தோழர் ரோசா லுக்சம்பர்க் ஒருமுறை கூறுகையில், முதலாளித்துவம், சோசலிசத்திற்கு இட்டுச் செல்ல வேண்டும் என்கிற அவசியம் இல்லை என்றும் மாறாக காட்டுமிராண்டித் தனத்திற்கும் கூட இட்டுச் செல்லலாம் என்றும் சொன்னார். இந்தியாவில் மக்களின் நலன்களைப் பற்றிக் கிஞ்சிற்றும் கவலைப்படாது கொள்ளை அடிக்கும் கும்பலின் தலைமையில் அமைந்துள்ள முதலாளித்துவத்திற்கு லுக்சம்பர்க்கின் கூற்று மிகவும் சரியாகவே பொருந்துகிறது. ஏனெனில், நம்நாட்டில் செயல்பட்டுவரும் வகுப்புவாதங்கள் ஒன்றையொன்று ஊட்டி வளர்ப்பதன் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் நன்கு வளர்வதுடன், ஒருபக்கம் இத்தகைய முதலாளித்துவக் கொள்ளைக் கும்பலை உருவாக்கிடவும், மிகப்பெரிய அளவில் மக்களை பலிகிடா ஆக்கிடவும் இட்டுச் செல்கின்றன.

இவ்வாறு ஓர் இனவெறியால் கொடுமைகளுக்கு ஆளாகி மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள மக்கள், தங்கள் சொத்து சுகங்களை மட்டுமல்ல, தங்கள் அறநெறிப் பண்புகளையும் தொலைத்துவிட்டு நிர்க்கதியாய் இருக்கக்கூடிய நிலையில் பாசிஸ்ட்டுகள் அவர்களை மிக எளிதாகத் தூண்டிவிட்டு, தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிடுகிறார்கள்.

“பாசிசம்” தலைதூக்குவது என்பது புரட்சியை நம்மால் கொண்டுவர முடியாமல் நாம் தோல்வி கண்டதற்கான தண்டனை என்று கிளாரா ஜெட்கின்  கூறினார். அது மிகவும் சரி யான கூற்று என்பதை வரலாறு மெய்ப்பித்திருக்கிறது.

முதலாவதாக, உலக அளவில் இடதுசாரி சக்திகள் தோற்கடிக்கப்பட்டிருப்பது, உலகின் பல பகுதிகளில் வலதுசாரி சக்திகள் வலுவடைவதற்கு இட்டுச் சென்றிருக்கின்றன. இதன் காரணமாக, (1) 1989க்கு முன் வலுவாக இருந்த சோசலிச முகாம் உலகின் பல பகுதிகளிலும் வலுவிழந்தது. இன்றைய தினம் உலகில் மிகச் சிறிய பூப்பந்தில் தான் ((global space)) மார்க்சிசமும், கம்யூனிசமும் கோலோச்சுகிறது. (2) அதிதீவிர முதலாளித்துவம் (extreme capitalism) என நான் அழைத்திடும்  நவீன தாராளமயம் உலகில் பல நாடுகளில் மிகவும் விரிவான முறையில் நுழைந்து வெற்றி பெற்றுள்ளது. உலக அளவில் பொருளாதார மந்தம் ஏற்பட்டுள்ள நிலையிலும் கூட நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிராகப் பெரிய அளவில் தொழிலாளர் வர்க்கத்தின் எதிர்ப்பு என்பது ஏற்படவில்லை. (3)  ஆசிய மற்றும் ஆப்ரிக்கக் கண்டத்தில் உள்ள பல நாடுகள் நவீன தாராளமய உலகமயக் கொள்கைகளுடன் பிணைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக அந்நாடுகளில் மேலோங்கியிருந்த தேசிய உணர்வு மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வு தற்போது முற்றிலுமாக இல்லாது ஒழிந்துவிட் டன. இதற்குச் சரியான எடுத்துக்காட்டு நரேந்திர மோடி. மதவெறியைத் தீவிரமாகப் பின்பற்றும் ஒருவர் – நம்மால் இந்து மதவெறியன் என்றும் அவரது சகாக்களால் இந்து தேசியவாதி என்றும் அழைக்கப்படும் ஒருவர் – பிரதமராக முன்னிறுத்தப்படுவது சரியான எடுத்துக் காட்டாகும்.

இன்றைய தினம் நாட்டில் உள்ள அம்பானிகளும், டாட்டாக்களும், உலகம் முழுவதும் விரவிக் கிடக்கும் நூற்றுக்கணக்கான இந்தியக் கோடீஸ்வரர்களும் நரேந்திர மோடியைச் சூழ்ந்து கொண்டுள்ளனர். அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் இதற்குமுன் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்த பலரும் இப்போது அவரிடம் மன்னிப்பு கோரி அவரை வரவேற்று, அவருடன் கூடிக் கூலாவிக் கொண்டிருக்கின்றனர். எகிப்து நாட்டில் உள்ள முஸ்லீம் பிரதர்ஹூட் கட்சியின் தலைவரும் எகிப்தின் அதிபருமான மோர்சியைப் போன்று மோடி சிறப்பான முறையில்  சித்தரிக்கப்படுகிறார்.

கிளாரா ஜெட்கின் கூற்றின் அடிப்படையில் ஆராய்கையில் இந்தியாவில் இவ்வாறு பல்வேறு வகுப்புவாதங்கள் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணம் இடதுசாரிகளின் தோல்வியேயாகும். வகுப்புவாதத்திற்கு உண்மையான மாற்று என்பது கம்யூனிசம் அல்லது சோசலிசமேயாகும். (The real alternative to communalism is communism or socialism). நிச்சயமாக மதச்சார் பின்மையோ (secularism) அல்லது தேசியவாதமோ (nationalism) கிடையாது. கடந்த கால் நூற்றாண்டில் இடதுசாரிகள் குறிப்பிடத்தக்க அளவிற்கு வளராததன் காரணமாகத்தான் இத்தகைய மதவெறி, இனவெறி மற்றும் பிராந்திய வெறி சக்திகள் நாட்டின் பல பகுதிகளிலும் வளர்ந்துள்ளன.  நவீன தாராளமயக் கொள்கைகள் மற்றும் அயல்துறைக் கொள்கையைப் பொறுத்த அளவில் இத்தகைய சக்திகள் அவற்றுடன் முழுமையாகக் கருத்தொற்றுமை கொண்டு ஒத்துப்போகின்றன.

நாட்டில் இவ்வாறு பத்து விழுக்காட்டின் கட்சிகள் இருக்கின்றன என்பதே என் கருத்து. அவை ஐ.மு.கூட்டணியில் அங்கம் வகித்தாலும் சரி, அல்லது தே.ஜ.கூட்டணியில் அங்கம் வகித்தாலும் சரி, இவை மக்கள் தொகையில் உயர் பத்து விழுக்காட்டினர் நலன்களையே பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. இத்தகைய சக்திகள் வளர்ந்துள்ள இடங்களில் இடதுசாரிகள் தேர்தல் களத்தில் கிட்டத்தட்ட மிகப்பெரிய அளவிற்குத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. வகுப்புவாத அரசியலைப் பொறுத்தவரை, இடதுசாரி அல்லாத அரசியல் கட்சிகளில் எந்தக் கட்சியும் பாஜகவுடன் தீவிரமாக ஒத்துப்போகாதவை அல்ல. ஒருசில கட்சிகள் காங்கிரசுடன் இருக்கின்றன என்றால் அதற்குக் காரணம் காங்கிரசும் பாஜகவும் ஆள்வதில் போட்டி போட்டுக் கொண்டிருப்பதுதான். பாஜக, வகுப்பு வாதத் துருப்புச் சீட்டைத் திட்டமிட்டு பயன்படுத்தும் அளவிற்கு காங்கிரஸ் பயன்படுத்தவில்லை என்ற போதிலும், காங்கிரஸ் கட்சியும் தேவைப்படும் சமயத்தில் பயன்படுத்தத் தயங்குவதில்லை.

முன்னுரை

இவை அனைத்து குறித்தும் மீளவும் நாம் விவாதிப்போம். முதற்கண் வகுப்புவாதம், மதச் சார்பின்மை மற்றும் தேசியவாதம் என்று நாம் அடிக்கடி பயன்படுத்தும் மூன்று முக்கிய சொற் றொடர்கள் குறித்து வழக்கத்துக்கு மாறான வழிகளில் ஆய்வு செய்திடுவோம்.

வகுப்புவாதம் (Communalism), மதச்சார்பின்மை (Secularism) மற்றும் தேசியவாதம் (Nationalism) ஆகிய சொற்றொடர்களுக்கு ஆங்கில அகராதியில் இருக்கும் அர்த்தத்தில் நம் நாட்டில் அவை உபயோகப்படுத்தப்படுவதில்லை. குறிப்பாக வகுப்புவாதம் என்ற சொல் நம் நாட்டில் ஓர் இனம் அல்லது ஒரு மதத்தைச் சார்ந்தவர்கள் மற்ற இனத்தினர் மீது அல்லது மற்ற மதத்தைச் சார்ந்தவர்கள் மீது வெறுப்பை உமிழக்கூடிய சித்தாந்தத்தைப் பிரயோகிப்பதற்கும், வன்முறையை ஏவுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. அதாவது ஒருவகையிலான பாசிச வடிவத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது. வகுப்புக் கலவரம் என்ற நிகழ்வே உலகில் இந்தியாவில்தான் நடைபெறுகிறது.

உதாரணமாக, எகிப்தில் கிறித்துவ சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் நேரடியாகவே இஸ்லாமிஸ்ட் (Islamist), ஜிஹாதி (Jihadi), சலாஃபிஸ்ட் (Salafist) அல்லது வேறெந்த சொற்றொடர் மூலமோதான் அழைக்கிறார்கள். அவர்கள் அதனைத் வகுப்புவாரி (“communal”) தாக்குதல் என்று கூறுவதில்லை.

உண்மையிலேயே மிகவும் சரியாகச் சொல்வதென்றால், வரலாற்று ரீதியாக வகுப்புவாரி என்ற சொல் கம்யூனிஸ்ட் என்ற சொல்லிற்கு மிகவும் நெருக்கமான உறவினைக் கொண்டிருந்தது.  இவ்விரு வார்த்தைகளுமே பொது, (‘common’), நெருங்கிய தொடர்பு கொண்டிரு (‘commune’), சமூகஇனம் (‘community’) என்ற பொருள்களுடன் தொடர்பு கொண்டிருந்தவைதான்.

உதாரணமாக, சமூகத்தினருக்கான சொத்து (‘communal’ property) என்பது தனிச் சொத் துரிமைக்கு (private property) எதிரான சொற்றொடராக இருந்தது.

நம் நாட்டில் மேலும் இரு சிக்கல்களையும் நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அதில் ஒன்று, பெரும்பான்மையினர் சமூகம், சிறு பான்மையினர் சமூகம் என்று பேசுவதில் எதுவும் சிரமம் இருப்பதில்லை. மிகவும் சரியாகச் சொல்வதென்றால், இந்து சமூகத்தினர், முஸ்லீம் சமூகத்தினர், சீக்கிய சமூகத்தினர் போன்று பேசுவதில் சிரமம் இல்லை. ஆனால், அந்தச் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் மற்ற சமூகத்தினர் மீது வகுப்புவாத உணர்வுடன் நடந்து கொள்ளாது, இந்தியாவின் பிரஜைகள் என்ற முறையில் மட்டுமே, அதாவது மதச்சார்பற்ற தேசிய இனத்தினர் (secular nationalists) என்ற உணர்வோடு மட்டும் நடந்து கொள்ள வேண்டும் என்பதே உண்மையில் நம்முடைய விருப்பமாகும். நாடும் அரசாங்கமும் மதச்சார்பற்ற அறநெறியை (secular moralism) உயர்த்திப் பிடித்திருப்பதால், மத ரீதியான வகுப்புவாத அடையாளம் அரசியலிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, தனிநபர் பிரச்சனையாக மாற்றப்பட்டிருக்கிறது.

நாட்டில் உள்ள மக்களில் அறுதிப் பெரும்பான்மையினர், ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வாக்களிப்பதைத் தவிர வேறெந்த பிரஜா உரிமையையும் அனுபவிக்காத சூழ்நிலையில், இம்மக்கள் மத்தியில் தேசிய உணர்வு குறித்த பிரச்சாரங்கள் (nationalist discourses) போய்ச் சேருவதை விட, அவர்களின் சொந்த மத நம்பிக்கை அடிப்படையில் மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்கள் மிக எளிதாக அவர்களை சென்று அடைந்துவிடுகின்றன. அவை பிற மதத்தினருடனான உறவுகள் மற்றும் சமூகப் பழக்க வழக்கங்களில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

இவ்வாறு மக்கள் தங்கள் சொந்த மதத்தின் அடிப்படையில் தங்கள் சமூக மற்றும் பொருளி யல் வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கக் கூடிய சூழ்நிலையில், அத்தகைய மத அடையாளங்களுடைய  மோசமான பக்கத்தை எப்போது அவர்கள் மீறி வெளிவருவார்கள் என்பது குறித்து என்னால் தெளிவாகக் கணிக்க முடியவில்லை.

முஸ்லீமாக இருக்கும் ஒருவரால் தன்னுடைய மத அடையாளத்தைத் துறந்து, சிந்தனை செய்வது சாத்தியமா? வீரஞ்செறிந்த அளப்பரிய துணிவுள்ள ஒருசிலருக்கு வேண்டுமானால் அது சாத்தியமாக இருக்கலாம். ஆனால் பெரும்பான்மை முஸ்லீம்களுக்கு அது சாத்தியமல்ல என்றே தோன்றுகிறது.

அடுத்து, “இந்து சமூகத்தினர்” என்றும் “முஸ்லீம் சமூகத்தினர்” என்றும் கூறுவதுகூட கற்பனையான ஒன்று என்றே நான் கருதுகிறேன். ஒருசில மதம்சார்ந்த சடங்கு சம்பிரதாயங்களைத் தவிர காஷ்மீரில் உள்ள முஸ்லீம்களும் கேரளாவில் உள்ள முஸ்லீம்களும் தங்களுக்கு இடையே உறவுகளைப் பகிர்ந்து கொள்வார்களா என்பது சந்தேகமே.

அதேபோன்றுதான் நாகாலாந்தில் உள்ள கிறித்துவர்களுக்கும், கேரளாவில் உள்ள கிறித்துவர்களுக்கும் இடையே உள்ள உறவுமாகும். அதேபோன்றதுதான் இந்தியா முழுதும் உள்ள இந்துக்களும் தங்கள் பிராந்தியங்கள், சாதிகள், தொழில்களைக் கடந்து ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என்று நினைப்பதும் மிகவும் அபத்தமான ஒன்றேயாகும்.

ஆயினும், நம்முடைய அரசியல் பிரச்சாரங்கள் அனைத்திலும், நாடு முழுவதுமுள்ள மதச் சமூகத்தினர் அனைவரும் ஒரேமாதிரிதான் என்கிற முறையிலேயே நம்முடைய அரசியல் பிரச்சாரங்களும், கொள்கைகளும் உருவாக்கப்படுகின்றன. இத்தகைய கற்பனையான அடையாளம், உண்மையான சமூகத்தினர் மீது அனைத்து மதங்களைச் சார்ந்த சுயநல அரசியல் வாதிகளாலும் மேலிருந்து திணிக்கப்படுகின்றன. அரசுகளும், முந்தைய காலனிய அரசு விரும்பியதைப்போலவே, வர்க்க அரசியலுக்குப் பதிலாக இத்தகைய இனம் சார்ந்த பிரதிநிதிகளையே விரும்புகின்றன.

இரண்டாவதாக, அனைத்து மத நம்பிக்கைகளும், அவை நம்பிக்கையாக இருந்தாலும் சரி அல்லது செயலாக இருந்தாலும் சரி,  வகுப்பு வாதத்தை நோக்கி இட்டுச் செல்வதில்லை. ஆனால் இந்தியாவில் அனைத்துவிதமான  வகுப்புவாதங்களும்  மத அடையாள உணர்வு டன், வேண்டுமென்றே தங்கள் அரசியல் ஆதா யங்களுக்காக அரசியலாக்கப்படுகின்றன. இதற்கு மதங்களையே குறை சொல்லக்கூடாது. ஆயினும், சில வகையான மத உணர்வுகள் மறுக்கமுடியாத விதத்தில் பிற மதத்தினர் மீது மதவெறித் தீயை உசுப்பிவிடும் விதத்தில் தூண்டப்படுகின்றன. உதிரிப்பாட்டாளியாக (lumpen proletariat) இருக்கிற ஒரு கரசேவகரை, மூளைச் சலவை செய்து, ராமபிரானின் ஜன்மபூமியை விடுவித்திட ஆயுதம் ஏந்து, ராமரின் படையில் அனுமானைப் போல பாபர் மசூதியின் குவிமாடத்தின் (dome) மீது தாவி ஏறி அதனைத் தகர்த்திடு, இந்துவாக இருந்து உன் வீரத்தைக் காண்பி என்று சொல்லும்போது அது அந்த கரசேவகருக்கு நியாயமாகவே தோன்றுகிறது.   இதற்கு மதம் பொறுப்பாகாது, அதேபோன்று இத்தகைய செயல் அப்பாவித்தனமான ஒன்றும் கிடையாது.

மதம், அரசியல் வாழ்க்கையின் அனைத்துவிதமான வடிவங்களிலிருந்தும் தனிமைப்படுத்தப்பட்டால், மதத்தால் வன்முறை நிகழ்வுகள் நடைபெறுவது என்பது மிகவும் குறைந்த அளவிலேயே இருந்திடும். மதவெறியைத் தூண்டிவிடுவது என்பதும் அநேகமாக இருக்காது.

அடுத்து, நாம் விவாதத்திற்காக எடுத்துக் கொண்டுள்ள மதச்சார்பின்மை (“secularism”) என்ற சொல்லிற்கு வருகிறேன். மதச்சார்பின்மை என்றால் அனைத்து மதங்களுக்கும் சம அளவில் மரியாதை செய்தல் என்பது மிகவும் விசித்திரமான இந்தியக் கண்டுபிடிப்பாகும், காலங்காலமாக இருந்து வந்த மத சகிப்புத்தன்மை என்பதைப் படிப்படியாக ஒழித்துக் கட்டுவதற்கான வேலையே இது. உண்மையிலேயே மத நம்பிக்கை உள்ள ஒருவனுக்கு அவனுடைய சொந்த மதம்தான் உயர்வானது. எனவே அவன் மற்ற மதங்களுக்கும் சமமாக மரியாதை கொடுப்பது என்பது சாத்தியமே இல்லை. மத நம்பிக்கையுள்ள ஒரு முஸ்லீமுக்கு, இந்து மதம் என்பது இயல்பாகவே மட்டமானது தான். அனைத்து மதங்களுக்கும் சம மரியாதை செலுத்த வேண்டும் என்று கூறுவது, அரசின் விவகாரங்களை அமல்படுத்துவதில், லஞ்ச ஊழல் மிகுந்த தாராளமய ஜனநாயக அரசியலில், பெரும்பான்மையினர் மதத்தினரைப் பெரிய அளவிற்கு மரியாதை செலுத்துவதற்கே இட்டுச் செல்லும். ஏனெனில் எண்ணிக்கையில் அவர்கள் வாக்குகள்தான் அதிகம். பெரும்பான்மையினரின் பண பலமும், அதிகார பலமும்தான் ஆதிக்கம் செலுத்தும், பெரும்பான்மை மதத்தினரில் உள்ள மத்திய வர்க்கத்தினரின் மத்தியிலும் மூர்க்கத்தனமான முறையில் புதிய வகையிலான மதச் சிந்தனைகள் உருவாகி ஆதிக்கம் செலுத்துகின்றன.

இந்தியாவில், எந்த அரசியல் கட்சி ஆட்சியில் இருந்தாலும், மதச்சார்பின்மையைக் கடைப் பிடிப்பதாக அவை சொல்லிக்கொண்டாலும், பெரும்பான்மையாக இருக்கக்கூடிய இந்துக் களுக்கு ஆதரவாகவே செயல்படுகின்றன. பாஜக விற்கும் காங்கிரசுக்கும் சற்றே வித்தியாசம் இருக் கும் எனில் அது அவர்கள் பின்பற்றும் தத்துவங்க ளால் அல்ல, மாறாக அவர்கள் சார்ந்திருக்கிற நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள மக்களின் எண்ணிக்கை அடிப்படையிலேயே அமைந்திருக்கும்.

இது தொடர்பாக, பெர்ரி ஆண்டர்சன்  குறிப்பிடுகையில்,  இந்திய அரசு ஒரு இந்து வகுப்புவாத அரசுதான் என்கிறார். அது மதச்சார்பின்மை என்கிற சொல்லை தன் தத்துவத்தை நியாயப்படுத்துவதற்கானதாக உபயோகித்துக் கொண்டிருக்கிறது என்கிறார். ஆயினும், இதனை நான் வேறு விதமாகக் கூற விரும்புகிறேன்.  இந்து மதம் குறித்து காந்தி, நேரு மற்றும் ஆர்எஸ்எஸ் இயக்கம் வெவ்வேறான அளவுகோல்களை வைத்திருந்தன. அவற்றை ஒரேமாதிரி பார்ப்பதென்பது சரியல்ல. மேலும் இந்தியா என்பது பல்வேறு மதங்களைக் கொண்ட நாடு. இங்கே முஸ்லீம்கள் உட்பட அனைத்து வகையான மதத்தினரும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதனை இந்து நாடு என்று இந்து மதவெறியர்கள் கூறிக் கொண்டிருக்கிறார்கள். ஏனெனில் இந்து மதத்தினர்தான் நாட்டில் பெரும்பான்மையினர் மற்றும் வல்லமைபடைத்தவர்கள். மற்ற அனைத்து மதத்தினரையும் ஒன்றிணைத்தால் கூட அவர்களை விடப் பெரும்பான்மையினராவார்கள்.

அல்லது, இதனை வேறுவிதமாகவும் கூறலாம். இந்தியாவில் மதவெறி வன்முறை நிகழ்வுகள் இல்லாதவரை அல்லது மிகமிகக் குறைவாக நிகழும் வரை அது பல்வேறு மதங்களுடன் மட்டற்ற மகிழ்ச்சியுடன் இருக்க முடியும். அவ்வாறு மிகவும் சிறிய அளவில் மத வன்முறை நிகழ்வுகள் நடைபெறுகையில், மற்ற வன்முறை நிகழ்வுகள் போன்றே அதுவும் ஒரு சட்டம் – ஒழுங்கு பிரச் சனைதான்.  மதச்சார்பின்மையை ஒரு நியாயமான தத்துவமாகக் கருதுவது எந்தவிதத்திலும் சரிதான்.

மதச்சார்பின்மை என்பது நவீனகால ஒழுக்கப் பண்பாகும். பண்டைக் காலங்களில் இது கிடையாது. அதாவது, அரசின் அதிகார வரம்புக்குள்ளிருந்து மதத்தை வெளியேற்றுதல் என்பதாகும். இது ஒரு ஐரோப்பிய ஒழுக்கப் பண்பாகும். இது தொடர்பாக மிக அதிக நாட்டுப்பற்றுடன் இதனை அணுகுவதற்கு முன்பு, மார்க்சிசமும் ஓர் ஐரோப்பிய ஒழுக்கப் பண்புதான் என்பதை நாம் நினைவில் இருத்திக் கொள்ளுதல் வேண்டும். இத்தகைய ஒழுக்கப் பண்புகள் அந்நாட்டின் வரலாற்றுத் தேவைகளின் அடிப்படையில் அங்கே உருவாயின என்பதையும், பின்னர் வரலாற்று நிலைகளின் காரணமாக படிப்படியாக அவை உலகம் முழுவதும் பரவின என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

இந்திய முதலாளித்துவ வர்க்கம் நவீனத்துவத்தைக் கிரகித்துக் கொள்ளாமல் தன்னுடைய சமூகக் கண்ணோட்டத்தில் மிகவும் பிற்போக்குத் தனமாக இருந்ததால், நவீன மதச்சார்பின்மை ஒழுக்கப் பண்பினை சிதைத்து சின்னாபின்னமாக்கி, மதம் சார்ந்த சொற்றொடர்களுடன் மாற்றி வடிவமைத்துக் கொண்டது.

ஐரோப்பாவிலேயே பல நாடுகள் தற்போது கலாச்சாரக் கொந்தளிப்பில் சிக்கிக் கொண்டுள்ளன. ஏனெனில், பல்வேறு இனத்தைச் சேர்ந்த, பல்வேறு நிறத்தைச் சேர்ந்தவர்கள் ஐரோப்பாவிற்குள் குடியேறி வந்துள்ள நிலையில் அவர்களை முழுமையாக ஏற்றுக்கொள்ள இயலாமல் அது திணறுகிறது.

மதச்சார்பின்மையைப் பின்பற்றுவதில் இந்தியா அளவிற்குக் கூட அமெரிக்கா இருக்கிறதா என்பது சந்தேகமே. இரு முதலாளித்துவ அரசுகள்தான் உண்மையில் முறையான மதச்சார் பின்மையை – அங்குள்ள முதலாளிகள் இளைஞர்களாக இருந்த காலத்தில் – பெற்றிருந்தன. அவை புரட்சிகர பிரான்சும் கேமாலிஸ்ட் துருக்கியும் மட்டுமேயாகும். அவைகூட இன்று அவ்வாறு உரிமை கொண்டாட முடியாது. ஆட்சி அதிகாரத்திலிருந்து மதச்சார்பின்மை அடிப்படையில் தேவாலயங்களைப் பிரித்த நாடுகள் என்று சொல்வது என்றால், மதம் ஒருவரின் தனிப்பட்டவரின் உரிமை, அதற்கும் அரசுக்கும் சம்பந்தம் இல்லை என்று சொன்ன நாடுகள் என்றால் அவை கம்யூனிஸ்ட் நாடுகள் மட்டுமேயாகும்.

சோவியத் யூனியன் தகர்ந்த பின்பு, தேச அளவிலும் சர்வதேச அளவிலும் இயங்கும் மதவாத அமைப்புகள் வன்முறை வெறியாட்டங்களைக் கட்டவிழ்த்துவிட்டதை நம்மால் பார்க்க முடிந்தது.

இறுதியாக, இம்மூன்று சொற்களிலும் மிகவும் கடினமான வார்த்தை தேசியவாதம் என்னும் சொல்தான்.

ரஷ்யப் புரட்சியைத் தவிர, சீனா, கியூபா உட்பட மற்ற அனைத்து நாடுகளிலும் ஏற்பட்ட சமூகப் புரட்சிகளும் காலனிய மற்றும் அரைக் காலனிய நாடுகளில் நடைபெற்றவைகள்தான். எனவே, சோசலிசத்திற்கான இயக்கங்கள் தேச விடுதலைக்கான யுத்தங்களுடன் இணைக்கப்பட்டன. மேலும், மூன்றாம் உலக நாடுகளில் இருந்த மிகவும் முற்போக்கான முதலாளித்துவ அரசுகள் தேசப்பற்றுடன் கூடிய பொருளாதாரக் கொள்கைகளைப் பின்பற்றின. பாண்டுங் திட்டக் காலத்தில் நேருவின் இந்தியா, நாசரின் எகிப்து மற்றும் பாதிஸ்ட் அரபு நாடுகளை இவற்றிற்கு எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம். இப்போது வெனிசுலா, பொலிவியா மற்றும் ஈக்வேடார் நாடுகளை இவ்வாறு கூற முடியும்.  இவ்வரலாறுகள் நம்மை இன்றைய தேசியவாதம் அல்லது நாட்டுப்பற்று உணர்வை ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பதுடன் பொருத்திப் பார்க்கும் போக்கிற்கும் இட்டுச் சென்றுள்ளது.

காலனிய நாடுகளில் உருவான தேசியவாத அல்லது நாட்டுப்பற்று சித்தாந்தம் காலனியத்திற்கு எதிரான ஒன்றுதான். ஆனால் இது பல சமயங்களில் ஏகாதிபத்திய எதிர்ப்பு சித்தாந்தமாக தவறான முறையில் தீர்மானிக்கப்படுகிறது. இவ்வாறு காலனியத்திற்கு எதிராக உருவான பல இயக்கங்கள் சோசலிஸ்ட் உள்ளடக்கங்களைக் கொண்டவை என்று சொல்ல முடியாது. இத்தகைய இயக்கங்களில் பல ஏகாதிபத்திய மூலதனத்தின் நவீன காலனிய வடிவங்களுடன் மிக வேகமாகத் தங்களை இணைத்துக் கொண்டு, மட்டற்ற மகிழ்ச்சியில் திளைக்கின்றன.

ஆப்ரிக்காவில் உள்ள நாடுகள் பல இத்தகைய வரலாற்றால் நிரப்பப்பட்டுள்ளன. ஏன், நம் அண்டை நாடுகளாக உள்ள பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் குறித்து கூறத் தேவையே இல்லை. இதில் மிகவும் சிக்கல் நிறைந்த வழக்குகள் எவை எனில், ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கு எதிராக மூர்க்கமான முறையில் யுத்தத்தில் ஈடுபட்டுள்ள தாலிபான்களாகும். ஆயினும் இவர்கள் மக்களுக்கான சோசலிச முற்போக்கு சக்தியாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை.

20 ஆம் நூற்றாண்டின் ஐரோப்பிய பாசிஸ்ட் இயக்கங்கள் அனைத்தும் நடைமுறையில் ஒரு விஷயத்தில் ஒத்துப்போயின. முழுமையான தேசியவாதம் என்று தங்களை அழைத்துக் கொண்ட அவைகள் வலதுசாரி தேசியவாதங்களின் அனைத்து விதமான நச்சுத்தன்மை வாய்ந்த வடிவங்களையும் தம்முள் கொண்டிருந்தன.  ஐரோப்பிய முதலாளித்துவத்தின் 19 ஆம் நூற்றாண்டுக் காலத்தில் ஐரோப்பிய முதலாளித்துவத்தின் சித்தாந்தமாக தேசியவாதம் இருந்தது என்பது மட்டுமல்ல, அந்தக் காலகட்டத்தில் தான் ஐரோப்பாவில் தேசம் என்கிற வடிவம் உருவானது. இவ்வாறு கடுஞ்சிக்கல்கள் நிறைந்த நிலையில் தேசியவாதம் என்ற சொல்லை ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பதுடன் சமமாய்ப் பொருத்திப் பார்க்கக் கூடாது என்றே எனக்குத் தோன்றுகிறது.

தேசியவாதம் அல்லது நாட்டுப்பற்று என்ற சொல்லின் பின்னணியில் எந்தவித வர்க்க உள்ளடக்கமும் இல்லை என்பதே என் சொந்தக்கருத்தாகும். எல்லா நாடுகளிலும் ஆதிக்கம் செலுத்தும் சக்திகள் தங்கள் வர்க்க உள்ளடக்கத்தை அவற்றின் மீது ஏற்றுகின்றன என்பதே என் கருத்தாகும்.

லெனின், தொழிலாளி வர்க்கத்தின் கட்சியின் தலைவர் என்ற முறையில் காலனிய நாடுகளில் இருந்த நிலைமைகளை ஆராய்ந்து அவற்றின் அடிப்படயில் தேசிய இனப்பிரச்சனைக்கு அதிக அழுத்தம் கொடுத்தார். காலனிய எதிர்ப்பு தேசியவாதத்தின் தலைமையை முதலாளித்துவ வர்க்கம் தமதாக்கிக் கொள்வதற்கு முன்பு தேசிய இனப்பிரச்சனை மீது மேலாதிக்கத்தை நிறுவிட விவசாய வர்க்கத்தின் கூட்டணியுடன் தொழிலாளி வர்க்கத்தால் சாத்தியமாகலாம் என்ற அனுமானத்தின் அடிப்படையிலேயே லெனின் அவ்வாறு கூறினார்.

காலனிய எதிர்ப்புப் போராட்டத்தில் தேசிய முதலாளிகளில் நாட்டுப்பற்று கொண்ட பிரிவினர் தலைமைப் பாத்திரம் வகிப்பதை ஏற்றுக் கொள்வது என்பது  விரும்பத்தக்க ஒன்று அல்ல. இது கம்யூனிய இயக்கத்தின் ஒரு பலவீனமேயாகும்.

தேசியவாத சித்தாந்தம் என்பது அடிப்படையில் தேசிய-அரசு (Nation-State) வடிவத்தைக் குறிக்கோளாகக் கொண்டு இணைக்கப்பட்டதாகும். தேசிய-அரசு என்ற வடிவம் இருக்கும் வரை, ஏதாவது ஒரு வகையிலான தேசியவாதம் ஒரு மெய்யான அவசியமாகும். நாஜி ஜெர்மனியின் பாசிஸ்ட் தேசியவாதம், அமெரிக்காவின் ஏகாதிபத்திய தேசியவாதம், வியட்நாம் அல்லது அங்கோலா போன்ற நாடுகளில் விடுதலை இயக்கங்களுக்குத் தலைமை தாங்கிய கம்யூனிஸ்ட்டுகளின் புரட்சிகர தேசியவாதம், மதச்சார்பற்ற அரசு தேசியவாதம், ஈரான் நாட்டின் சமயகுரு மார்களின் தேசியவாதம் என்று எண்ணற்ற தேசியவாதங்கள்.

எங்கெல்லாம் தேசியவாதங்கள் இருக்கிறதோ அங்கெல்லாம் தேசியவாதம் குறித்த பொருள் குறித்தும் எண்ணற்ற சண்டை சச்சரவுகளும் உண்டு. தேசியவாதத்தின் ஒரு வகை, மற்றோர் வகையால் தோற்கடிக்கப்பட்டு, மாற்றியமைக்கப்படுவதும் ஒரே நாட்டில் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. இப்போதெல்லாம், உலகில் பலநாடுகளில், நாட்டின் குணாம்சத்தை வடிவமைப்பதில் அந்நாட்டில் பெரும்பான்மையாகவுள்ள மதத்தையும் இணைத்துக் கொள்வது என்பதும் புதுப்பாணியாக மாறி இருக்கிறது. யூத சமயத்தை ஒரு நாட்டினர் தூக்கிப் பிடிக்கிறார்கள் என்றால், சில நாடுகளில் இஸ்லாமை தூக்கிப் பிடிக்கிறார்கள், இங்கே இந்துயிசத்தைத் தூக்கிப் பிடிக்கிறார்கள். வேறொரு நாட்டில் கத்தோலிக்கத்தைத் தூக்கிப் பிடிக்கிறார்கள்.

ஒரு காரணத்திற்காகவே இவை அனைத்தையும் நான் கூறுகிறேன். என்னைப் பொறுத்தவரை, ஏகாதிபத்திய எதிர்ப்பு மட்டுமே இந்திய தேசியவாதத்திற்கான உண்மையான உள்ளடக்கமாக இருக்க முடியும் என்று நம்பக் கூடிய அளவிற்கு இடதுசாரிகளாகிய நீங்கள் ஏற்கனவே முடிவுக்கு வந்திருப்பீர்கள். நான் அவ்வாறுதான் நம்புகிறேன். ஏனெனில் நான் ஒரு மார்க்சிஸ்ட். துரதிர்ஷ்டவசமாக, மார்க்சிசம் நம் நாட்டில் மிகவும் சிறுபான்மையினர் மத்தியிலேயே இருந்து வருகிறது.

அதேசமயத்தில் இந்துத்துவா கொள்கையையும் புறத்தூண்டுதல் எதுவுமின்றி நகர்ப்புற, உயர்சாதி, மத்தியதர, சமூகத்தில் பத்தாம் பசலியாகவுள்ள இந்துக்கள் எவரும் அப்படியே ஏற்றுக் கொள்வதில்லை. இந்தியாவில் இந்துக்கள்தான் அதிகம். எனவே இந்துக் கலாச்சாரத்தை தேசியக் கலாச்சாரமாக அவர்கள் ஏற்றுக் கொண்டிருந்திருக்க வேண்டும். ஆனால் நடை முறையில் அவ்வாறில்லை.

ஆர்எஸ்எஸ் இயக்கம் 1925 இல் துவக்கப்பட் டது. ஒவ்வோராண்டும் அதன் உறுப்பினர் எண்ணிக்கை கணிசமான அளவிற்கு உயர்ந்து வந்திருக்கிறது. ஆனாலும் 1948க்கும் 1962க்கும் இடையே மட்டும் விதிவிலக்காக அதன் உறுப்பினர் எண்ணிக்கை தேக்க நிலையில் இருந்தது. இவ்வாறு தேக்கநிலை ஏற்பட்டது என்பது காந்தி படுகொலை செய்யப்பட்டதற்கும், நேரு இறந்ததற்கும் இடையிலான காலகட்டம் என்பதை நீங்கள் நினைவுகூர முடியும். 1962 இல் இந்திய – சீன யுத்தம் துவங்கியபின் இதனை, இந்தியக் கம்யூனிஸ்ட்டுகளை அவமானப்படுத்திட, அவர்களுக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்திட,  மிகவும் விரிவான அளவில் பயன்படுத்திக் கொள்ளப்பட் டது. அதன் பின்னர் வலதுசாரிகளும் தங்களை ஸ்தாபன ரீதியாகத் திரட்டிக் கொள்ள முடிந்தது.

ஆயினும், 1948க்கும் 1962க்கும் இடையே ஆர்எஸ்எஸ் வளராமல் தேக்க நிலையில் இருந்ததற்கு மகாத்மா காந்தியின் படுகொலை ஒரு காரணியாக இருந்த போதிலும், அந்த சமயத்தில் காலனி எதிர்ப்புப் போராட்டத்தின் வழிவந்த ஜவஹர்லால் நேருவால் தலைமை தாங்கப்பட்ட அரசியல் மற்றும் கலாச்சார மூலதனம்தான் அதற்கு மிகவும் முக்கியமான காரணி என்பது என் கருத்தாகும். மேலும் அந்த சமயத்தில் நாடாளுமன்றத்தில் நேருவுக்கு எதிர்ப்பைப் பிரதானமாக வழங்கியது கம்யூனிஸ்ட்டுகளும், சோசலிஸ்ட்டுகளும்தான் என்பதையும் நாம் நினைவு கூர்தல் வேண்டும். இவ்வாறு அந்த சமயத்தில் ஒட்டுமொத்த இந்திய அரசியலுமே வகுப்புவாதத்தை எதிர்த்த அரசியல் சக்திகளால் ஆதிக்கம் செலுத்தப்பட்டது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால் ஆளும் கட்சி மட்டுமல்ல, ஹாப்ஸ்வாம் ஒருமுறை சொன்னது போல அறிவிற் சிறந்த இடதுசாரிகளும் (“The Enlightenment Left”) பிரதான எதிர்க்கட்சி சக்திகளாக இருந்து மண்ணின் மாண்புகளை உயர்த்திப் பிடித்தார்கள். ஜவஹர்லால் நேரு முதலமைச்சர்களுடன் கொண்டிருந்த எண்ணற்ற கடிதப் போக்குவரத்துகளிலிருந்து காங்கிரஸ் கட்சிக்குள்ளும் வகுப்புவாதம் புரையோடிப் போயிருந்ததை அவர் கூர்மையாகக் கண்டறிந்திருந்தார் என்பதைக் காண முடியும்.

ஆயினும், அந்த சமயத்தில் இடதுசாரிகளின் மேலாதிக்கம் இருந்தது பற்றி நான்கு அம்சங்களைக் கூற வேண்டியது அவசியம். முதலாவது, நாடு சுதந்திரம் பெற்ற பின்னர், காங்கிரசிலிருந்த வலதுசாரிகள் சூழ்ச்சி செய்தபோதிலும் கூட அவற்றைப் புறந்தள்ளிவிட்டு நாட்டில் பல மாநிலங்களில் ஆட்சியிலிருந்தாலும் சரி மற்றும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, இடதுசாரிகள்  வகுப்புவாதத்திற்கு எதிராக முன்னின்று போராடினார்கள்.

இரண்டாவதாக, முதலாளிகளுக்கு அளவுக்கு மீறிய சலுகைகள் அளிக்கப்பட்ட போதிலும், நாட்டின் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் துறைக்கு சேவகம் செய்யக் கூடிய விதத்தில் செயல்பட்ட அதே சமயத்தில், அவர்களின் அளவுக்கு மீறிய பேராசையை ஒரு சமயத்தில் தடுத்து நிறுத்தவும் முடிந்தது. இந்தியப் பொருளாதாரத்தில் தேக்க நிலை ஏற்பட்டு நெருக்கடிக்கு உள்ளான போது இந்திராகாந்தியுடைய வங்கிகள் தேசியமய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மூன்றாவதாக, அந்த சமயத்தில்தான் இந்திய அரசு மிகவும் உறுதியுடன் பல்வேறு முற்போக்கு நடவடிக்கைகளை மேற்கொண்டது. மிகவும் குளறுபடியாக இருந்த சமூக ஒழுங்கில் நவீன, மதச்சார்பற்ற, முற்போக்கு மாண்புகளை சமூகத்தில் ஆழப் பதித்திட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இவை அனைத்தையும் அப்போது வெளியான புதிய பாடப் புத்தகங்களில் காண முடியும். மேலும் ஆட்சியிலிருந்தவர்களால் மட்டுமல்ல, பிரதான எதிர்க்கட்சியினராலும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய விதத்தில் அரசியல் பேச்சுக்கள் அமைந்திருந்தன. ஏற்கனவே காலனிய எதிர்ப்பு இயக்கத்தில் அரசியலாக்கப்பட்டிருந்த மக்கள் மத்தியில் இவை மேலும் பெரிய அளவில் பக்குவத்தை உருவாக்கின.

இறுதியாக, மதச்சார்பின்மை என்பது தனிப்பட்ட ஒன்றாக பார்க்கப்படவில்லை. மாறாக அது அனைத்து மாண்புகளின் தொகுப்பாகவும், கூட்டுச் செயல்பாடாகவும்  கருதப்பட்டது.

நாட்டில் வாக்குரிமை அளிக்கப்பட்டிருந்தவர்களில் 90 விழுக்காட்டினர் எழுதப்படிக்கத் தெரியாத தற்குறிகளான ஒரு சமூகத்தை நாம் கொண்டிருந்தோம். நாடு சுதந்திரம் பெற்றபின் அயல்துறைக் கொள்கையில் அணிசேராக் கொள்கையை உறுதிபட பற்றி நின்றோம். ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கு எதிராக உற்பத்தி சார்ந்த பொருளாதாரத்தைப் பாதுகாத்தோம். பொருளாதார விவகாரங்களில் சோசலிச வளர்ச்சிப் (“socialistic development”) பாதை முக்கிய பங்கு வகித்தது. இவ்வாறு பல முற்போக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஆட்சியாளர்கள் நடைமுறையில் செய்தார்களோ இல்லையோ வாக்குறுதிகள் தாராளமாகவே அளிக்கப்பட்டன. அத்தகைய வாக்குறுதிகளும் கூட மக்களின் அரசியல் செயல்பாட்டுக்கு சேவை செய்தன.

நேருவினுடைய ஆட்சிக்கு பிரதானமான எதிர்ப்பு என்பது வலதுசாரிகளிடமிருந்து கிடையாது, மாறாக இடதுசாரிகள்தான் பிரதானமான எதிர்ப்பினை மேற்கொண்டிருந்தார்கள். அவை மிகவும் ஆக்கபூர்வமானதாகவும், மதச்சார்பின்மை மாண்புடன் பின்னிப்பிணைந்த சோசலிச சமுதாயத்தை உருவாக்கும் விதத்தில் அது அமைந்திருந்தது.

இப்போது அத்தகைய நடவடிக்கைகள் அனைத்தும் ஆட்சியாளர்களால் கைவிடப்பட்டுவிட்டன. இடதுசாரிகள் ஆட்சியில் உள்ள மாநிலங்களில் மட்டும்தான் இதற்கு விதிவிலக்கு.

நவீன தாராளமய மற்றும் வலதுசாரிகளின் கொள்கைகளில் மதச்சார்பின்மையின் மாண்பு எந்த அளவிற்கு பின்னிப் பிணைந்திருக்கிறது என்று கூறுவது மிகவும் கடினம். உலகின் பல பகுதிகளிலும் என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன? அது அமெரிக்காவாக இருந்தாலும் சரி, ஐரோப்பாவாக இருந்தாலும் சரி மற்றும் முஸ்லீம்கள் பெரும்பான்மையாகவுள்ள நாடுகளாக இருந்தாலும் சரி, நவீன தாராளமயக் கொள்கைகள் எந்த நாடுகளில் அமல்படுத்தப்படுகிறதோ அங்கெல்லாம் வலதுசாரிகள் வெற்றிக் களிப்பில் மிதப்பதைப் பார்க்கலாம். இதற்கு இந்தியா மட்டும் விதிவிலக்காக இருக்க முடியுமா, என்ன?

வகுப்புவாதம் தொடர்பாக நான் இதுவரை மூன்று நூல்கள் வெளியிட்டுள்ளேன். 1993 இல் அயோத்தியில் ஏற்பட்ட வீழ்ச்சிகள் குறித்து (“On the Ruins of Ayodhya) ஒரு நூலும், அதன் பின்னர் பத்தாண்டுகள் கழித்து 2003 இல், குஜராத்தில் முஸ்லீம்களுக்கு எதிரான இனப்படுகொலைகள் நடைபெற்ற சமயத்தில், இரு கட்டுரைகளும் எழுதியிருக்கிறேன். ஆயினும் மதவெறியர்களைக் கட்டுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க அளவிற்கு மாற்றம் எதுவும் இதுவரை ஏற்படவில்லை.

இப்போது கார்ப்பரேட்டு மூலதனம் ஒன்றாக இணைந்து,  மோடியைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி இருக்கிறது. இதன் மூலம் அரசியல் பொருளாதாரத்தின் ஆட்சிப் பரப்பிற்குள் மூலதனத்தின் நவீன தாராளமய எதேச்சாதிகாரம், தத்துவார்த்த ரீதியாக வகுப்புவாத எதேச்சாதிகாரமும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகக் கைகோர்த்துக் கொண்டுள்ளன.

கார்ப்பரேட்டுகளும் அரசாங்கமும் ஒன்றாக இருந்த முசோலினியின் இத்தாலியப் பாசிசத்தின் வடிவம் குறித்து இங்கே நினைவுகூர்தல் நலம் பயக்கும். சமீபத்தில் எழுதிய கட்டுரை ஒன்றில் இந்தியப் பின் நவீனத்துவம் குறித்த பிரச்சனையில், சுதந்திரத்திற்குப் பிந்தைய நாட்டின் வரலாற்றை மூன்று கட்டங்களாகப் பிரிக்கலாம் என்று கூறியிருந்தேன். 1947இலிருந்து 1975 வரை முதல் கட்டம். நேருவின் ஆட்சி தொடங்கி, இறுதியில் நெருக்கடிக்க ஆளாகி, அவசரநிலைக் காலத்தில் சிதைந்தது. அடுத்த இருபது ஆண்டுகள் இரண்டாவது கட்டமாகும். இக்கால கட்டம் பல்வேறு சிந்தனைகளைக் கொண்டவர்களை இணைத்த ஜேபி இயக்கத்தால் துவங்கப்பட்டு, அவசரநிலைக் காலத்திற்குப் பின் ஆட்சி செய்த ஜனதா அரசாங்கத்தின் காலம். இக்கால கட்டத்தில்தான் ஆர்எஸ்எஸ் இயக்கம் இந்திய அரசியலில் ஒரு மரியாதைக்குரிய மதித்துப் போற்றக்கூடிய ஓர் இயக்கமாகவும் சட்ட ரீதியாக இயங்கக் கூடிய ஓர் இயக்கமாகவும் மாற்றப்பட்டது. இதன் அரசியல் அங்கமான ஜனசங்கம் கட்சிக்கும் அதன் தலைவர்கள் வாஜ்பாபி மற்றும் அத்வானிக்கும் ஆட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இந்திய அரசியலில் இது அவர்களுக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்தது. ஒட்டுமொத்தத்தில், இந்தியாவில் காங்கிரஸ் கட்சியால் தலைமை தாங்கப்பட்ட முதலாளித்துவ அரசின் அரசியல் நெருக்கடி காரணமாக மேலும் தொடர்ந்து ஆட்சி செலுத்தும் வல்லமையை இழந்தது. ஆயினும் அதற்கு மாற்றாக வேறொருவரும் தோன்றவில்லை.

இந்தக் காலகட்டத்தில் ஏற்பட்ட நெருக்கடி முடிவுக்கு வந்து,  இரண்டாவது வாஜ்பாயி அரசாங்கம் 1998 இல் ஆட்சிக்கு வந்தது. இது புதியதொரு கட்டத்தைத் தொடங்கி வைத்தது. இடதுசாரிகள் அல்லாத அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கி ஓர் அரசியல் கட்சிகளின் கூட்டணி உருவானது. இது முதலாளித்துவ ஆட்சிக்கு புதியதொரு ஸ்திரத்தன்மையைக் கொடுத்தது. எந்தக் கூட்டணியில் நின்று தேர்தலில் போட்டியிட்டாலும், வெற்றி பெற்ற பின் கூட்டணியை மாற்றிக் கொள்வது என்பதும் இக்காலகட்டத்தில் நடந்தது.

இந்தச் சூழ்நிலையில்தான் 1989இலிருந்து 1992 வரை மூன்றாண்டுகளில் சர்வதேச அளவிலும், தேச அளவிலும் முக்கிய சம்பவங்கள் பல நிகழ்ந்தன. சர்வதேச அளவில்  சோவியத் யூனியனிலும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் வரலாற்றுச் சிறப்பு கொண்ட கம்யூனிஸ்ட் அமைப்பு முறை முடிவுக்கு வந்தது. அமெரிக்கா உலக மேலாதிக்கப் போலிஸ்காரனாக (Hegemon) உருவெடுத்தது. இதனுடன் போட்டிபோடக் கூடிய அளவிற்கு எவரும் இல்லை. இந்திய ஆளும் வர்க்கமும் அதன் அரசும் இப்போது வெளிப்படையாகவே புதிய ஏகாதிபத்திய வல்லரசுக்குப் பின்னால் எவ்விதமான கருத்து வேறுபாடுமின்றி அணிதிரண்டன.

நம் நாட்டிற்குள்ளும் நவீனதாராளமயக் கொள்கைகள் நரசிம்மராவ்-மன்மோகன்சிங் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் களமிறங்கின. வகுப்புவாதத்தின் அமைப்புகளுக்கும், காங்கிரஸ் ஆட்சியாளர்களுக்கும் இடையே அதிகார பூர்வமாக அறிவிக்காமல் குறிப்பறிந்து ஒன்றாய் செயல்படும் விதத்தில் ஒப்பந்தங்கள் ஏற்பட்டன. இதனை 1989 இல் சிலாநியாஸிலும், மிகவும் மோசமான முறையில் 1998 இல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சமயத்தில் பார்க்க முடிந்தது. இக்கால கட்டம் 1998 இல் முடிவுக்கு வந்தது.

அதன்பின் புதிதாக பாஜக தலைமையிலான வலதுசாரிகளின் அரசாங்கம் அமைந்தது. இதனைத் தொடர்ந்து இந்திய ஆளும் வர்க்கத்தின் எண்ணப்போக்கில் மாற்றங்கள் ஏற்பட்டது. அது நாட்டிற்கு வெளியே ஏகாதிபத்தியத்துடன் மிகவும் நெருக்கமாகக் கூட்டணி வைத்துக் கொண்டது, நாட்டிற்கு உள்ளே நவீன தாராளமயக் கொள்கையை (இதனை நான் அதிதீவிர முதலாளித்துவம் என்று அழைப்பேன்) பின்பற்றியது.

ஆளும் வர்க்கத்துக்கு மதச்சார்பின்மை முகத்துடன் காங்கிரஸ் சேவகம் செய்தது, பாஜகவோ வகுப்புவாத முகத்துடன் சேவகம் செய்தது. பாஜக தன்னுடைய ஆட்சிக்கு வேறு பல கூட்டணிக் கட்சிகளைச் சார்ந்து இருக்க வேண்டியிருந்ததால் அது தன்னுடைய சொந்தத் திட்டத்தின் ஆத்திரமூட்டல் அம்சங்களைச் சற்றே நிறுத்தி வைத்திருந்தது.

இப்போது மோடி, தன்னுடைய பிரதமர் பதவிக்கான கனவிற்கு இந்துத்துவாக் கொள்கையை இலக்காக முன்வைக்கவில்லை, மாறாக மன்மோகன்சிங்கிற்கு சேவை செய்த அதே வளர்ச்சிக் கொள்கையைத்தான் முன்வைத்திருக்கிறார்.

வகுப்புவாதப் பிரச்சனையைப் பொறுத்த வரை, அரசியல் அரங்கில் மிக முக்கியமான அம்சம், 1998க்குப் பின், பாஜகவுடன் இடதுசாரிகளைத் தவிர மற்ற அரசியல் கட்சிகள் அனைத்தும் ஏதோ ஒரு சமயத்தில் அல்லது பிறிதொரு சமயத்தில் உறவு கொண்டுள்ளன என்பதாகும்.

மக்கள் மத்தியில் மதவெறி சிந்தனைகளை வளர்த்தெடுப்பதென்பது இரு விதங்களில் நடந்து கொண்டிருக்கின்றன. ஆர்எஸ்எஸ் இயக்கமும் அதன் கீழ் இயங்கும் அமைப்புகளும் மக்கள் மத்தியில் இவ்வேலையை மிகவும் தீவிரமாகச் செய்து கொண்டிருக்கின்றன. கடந்த 80 ஆண்டுகளில் தங்கள் பக்கம் ஆதரவர்களை அதிக அளவில் இவர்கள் பெற்றுள்ளனர். கிராம்சி கூறியதைப்போல சமூகத்தின் அடித்தட்டில் உள்ள மக்கள் மத்தியில் நாள்தோறும் சிறுசிறு இயக்கங்கள் மூலம் இவர்கள் தங்கள் வேலைகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.

இப்போது இத்தகைய வேலைகளை தாங்கள் ஆட்சிபுரியும் மாநிலங்களில் ஆட்சியாளர்கள் மூலமாகவும், அதன் அரசியல் கட்சிகள், கல்வி நிறுவனங்கள், அடக்குமுறை கருவிகள் மற்றும் பல சமயங்களில் நீதித்துறை மூலமாகவும் மேற்கொண்டு வருகின்றனர்.

வகுப்புவாதம் குறித்த நம்முடைய ஆய்வுகள், சங்பரிவாரக் கூட்டத்தின் வேலைகள் குறித்தே அதிக அளவில் கவனம் செலுத்தி இருக்கின்றன. ஏனெனில் நாட்டில்  மிகவும் பெரிய அளவில் ஸ்தாபன ரீதியாக செயல்படும் வகுப்புவாத சக்தி இதுதான். ஆயினும் இது ஒன்று மட்டும் நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கவில்லை. எடுத்துக்காட்டுக்காக நான் மேலும் இரண்டைக் குறிப்பிட விரும்புகிறேன். அவை முறையே முஸ்லீம் வகுப்புவாதம் மற்றும் சிவசேனை ஆகியவைகளாகும்.

பொதுவாக இந்திய முஸ்லீம்களைப் பொறுத்த வரை, ஒரு குறிப்பிடத்தக்க உண்மை என்னவெனில், நாடு சுதந்திரம் அடைந்த பின் முஸ்லீம்களுக்கு என்று அகில இந்திய அளவில் ஒரு கட்சி உருவாகவில்லை. வட்டார அளவிலும் மாநில அளவிலும் ஏராளமாக இருந்தாலும், அகில இந்திய அளவில் அப்படி ஒரு கட்சி இல்லை.

தேசிய அரசியலிலும், ஏன் மாநில அளவிலான அரசியலிலும் கூட, முஸ்லீம்களில் பெரும்பாலோர் ஒரு மதச்சார்பற்ற தேர்தல் மாற்றைத்தான் (secular electoral alternative) கோருகின்றனர். இதற்கு அவர்கள் மதச்சார்பின்மை கண்ணோட்டத்தைப் பெற்றிருக்கிறார்கள் என்பதற்காக அல்ல, மாறாக மதச்சார்பற்ற அரசு மூலம்தான் தாங்கள் பெரும் அளவில் பாதுகாப்பாக இருக்க முடியும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அவர்களில் பெரும்பாலோருக்கு மதச்சார்பின்மை என்பது இவ்வாறு சமூக நவீனமயத்தை (social modernization) அல்லது ஓர் அரசியல் கண்ணோட்டத்தை அல்லது ஒரு தத்துவார்த்த வாழ்நிலையை வெளிப்படுத்தும் ஒன்றாக மட்டுமல்ல, தங்கள் இனத்தின் நலனுக்கு மிகவும் உகந்த ஒன்றாகவும் இது இருப்பதால்தான் அவ்வாறு அவர்கள் கோருகிறார்கள்.

நாட்டில் பெரும்பாலான பகுதிகளில், முஸ்லீம் வகுப்புவாதத் தலைவர்கள், மதத் தலைவர்கள் மற்றும் சமூகரீதியாக பத்தாம் பசலித்தனமான சக்திகள் முஸ்லீம்கள் மீது அதிகாரம் செலுத்தக்கூடிய விதத்தில்தான் பொதுவாக இருக்கிறார்கள். நாடு சுதந்திரம் அடைந்த பின்பு, வருமானம், கல்வியின் நிலைகள், காவல்துறை மற்றும் ராணுவம் போன்ற அரசு நிறுவனங்களில் வேலைக்கு எடுத்தல் என அனைத்திலும் முஸ்லீம்களுக்கும் சாதி இந்துக்களுக்கும் இடையேயான இடைவெளி விரிவடைந்திருப்பதாகத்தான் அனைத்துப் புள்ளி விவரங்களும் கூறுகின்றன. அரசின் நிறுவனங்கள் அனைத்திலும் வகுப்புவாதமயப்படுத்தப்பட்டிருப்பதும், குறிப்பிட்ட கால இடைவெளியில் நன்கு ஸ்தாபனப்படுத்தப்பட்ட வன்முறை அவர்களுக்கு எதிராக ஏவப்படுதலும், முஸ்லீம்கள் மத்தியில், எந்த நிமிடத்திலும் தாங்கள் முற்றுகைக்குள்ளாக்கப்பட்டுத் தாக்கப்படலாம் என்கிற அச்ச உணர்வை ஏற்படுத்தி இருக்கின்றன.

காஷ்மீரில் அரசுப் பயங்கரவாதத்தை, ஜிகாத் பயங்கரவாதிகளுக்கு எதிராக மட்டுமல்ல, சாமானிய மக்களின் கிளர்ச்சிகள் மற்றும் எழுச்சிகளுக்கு எதிராகவும் பயன்படுத்துவது மக்களை ஆட்சியாளர்களிடமிருந்து அந்நியப்படுத்தியுள்ளது. முஸ்லீம்கள் பெரும்பான்மையாகவுள்ள அந்த மாநிலத்தில் அவர்கள் சுயாட்சி கோருவது என்பதையே மதச்சார்பற்ற குடியரசு என்று சொல்லப்படுகின்ற ஆட்சியாளர்களால் ஏற்க முடியவில்லை. முஸ்லீம்களில் உயர்ந்தோர் குழாமைத் தவிர மற்ற சாமானிய முஸ்லீம்கள் அனைவரும் ஆட்சியாளர்களைத் தங்களைக் கிஞ்சிற்றும் மதிக்காது ஒதுக்கி வைத்திருப்பதாகவும், ஆடுமாடுகளைப் போலவே  சமூக ரீதியாக, கலாச்சார ரீதியாக, குடியிருப்புப் பகுதிகளில் நடத்தப்படுவதாகவும் கருதுகிறார்கள்.

இத்தகைய நிலைமைகள் அவர்களை பிற்போக்கான முஸ்லீம் மதத் தலைவர்களிடமும், படுபிற்போக்கு முஸ்லீம் சிந்தனையாளர்களிடமும் மிக எளிதாகத் தள்ளிவிட்டுள்ளது. இவற்றின் விளைவுகளில் ஒன்று, இவர்களை மிகவும் பயபக்தி உடைய கடவுள் நம்பிக்கையாளர்களாக மாற்றி இருப்பதாகும். சாதி இந்துக்களில் உள்ள வளர்ச்சியைவிட இது அதிகம் என்றே கூறலாம். வகுப்புவாத சக்திகள் இவர்களை நன்கு பயன்படுத்திக் கொள்கின்றன. பயபக்தியுடன் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களிடம் படிப்படியாக அரசியலின் வகுப்புவாத வடிவங்களைப் போதிப்பதுடன் வன்முறையை ஏவிடும் வகுப்புவாதக் கட்டமைப்புகளுக்குள்ளும் அவர்களைத் தள்ளிவிடுகின்றன.

பாபர் மசூதி இடிப்பு, அதனைத் தொடர்ந்து குறிப்பாக குஜராத்தில் முஸ்லீம் மக்கள் மீது நடந்த இனப்படுகொலைகள், நகர்ப்புற முஸ்லீம்களில் ஒரு சிலர் மத்தியில் இந்து வகுப்புவாத பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக முஸ்லீம் ஜிகாதி பயங்கரவாத அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று கனவு காணத் தொடங்கியுள்ளனர். இவ்வாறு கனவு காண்பவர்களுக்கு பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் போன்று முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள நாடு‍களில் உருவாகியுள்ள பற்பல ஜிகாதி குழுக்கள் உத்வேகம் அளிக்கின்றன.

இந்திய முஸ்லீம் சமூகத்தில் மதச்சார்பற்ற நீரோட்டத்துடன் எண்ணற்ற முஸ்லீம்கள் இருந்தபோதிலும், அவர்களது சுதந்திரமான எண்ணங்களை வெளிப்படுத்தக் கூடிய விதத்தில் ஓர் அரசியல் ஸ்தாபனம் இல்லை என்பது மிகவும் குறிப்பிடத்தக்க ஓர் அம்சமாகும். இந்தியாவில் உள்ள முஸ்லீம் சமூகத்தினர் இடையே முற்போக்கான முஸ்லீம் நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்லக்கூடிய விதத்தில் ஓர் அமைப்பு இல்லாததன் காரணமாக, இவர்களை இங்கே இருக்கின்ற பல்வேறான பிற்போக்கு சக்திகள் பயன்படுத்திக் கொள்கின்றன.

விளைவு, முஸ்லீம்கள், முற்போக்கு மேடைகளில் அணிதிரட்டப்படுவதென்பது மிகவும் அரிதாகவே இருக்கின்றன. இவர்களில் பெரும்பாலோருக்கு, பாலஸ்தீனப் பிரச்சனை என்பது யூதர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையிலான மோதலாகத்தான் தெரிகிறதேயொழிய, அது காலனியாதிக்கத்தின் மிகக் கொடூரமான காட்டு மிராண்டித்தனமாகப்படவில்லை. ஆப்கானிஸ்தானத்திற்குள்ளோ அல்லது ஈராக்கிற்குள்ளோ ஊடுருவுதல் நடைபெறுவதை அவர்களால் மேற்கத்திய கிறித்தவர்கள் கிழக்கத்திய முஸ்லீம்கள் மீது தொடுத்திடும் இனப்படுகொலைகளாகத்தான் பார்க்கப்படுகிறதேயொழிய, நவீன ஏகாதிபத்தியத்தின் வரலாற்றின் அத்தியாயங்களாக அவர்களுக்குத் தெரியவில்லை.

சமீபத்தில் கூட, இந்திய முஸ்லீம்களில் பலதரப்பினர் வங்கதேச முஸ்லீம் லீகிற்கு ஆதரவாக சக்திமிக்க ஆர்ப்பாட்டங்கள் நடத்தியதைப் பார்த்தோம். ஆனால் அவர்கள் ஷா பாக் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக நிற்கவில்லை. பாகிஸ்தானிலும், வங்க தேசத்திலும் இப்போது கடவுள் பற்றுள்ளவர்களால் கடவுள் பற்றற்றவர்கள் கொல்லப்படுவது என்பதும் சன்னி குழுவினரால் ஷியா குழுவினரும், முற்போக்கான பெண்கள் பிற்போக்கான ஜிஹாதிகளால் கொல்லப்படுவது என்பதும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு பிற்போக்காளர்களால் கொல்லப்படுபவர்களுக்கு ஆதரவாக இந்திய முஸ்லீம்கள் மத்தியில் அர்த்தமுள்ள ஆதரவு இயக்கம் எதுவும் நடைபெறவில்லை.

நாட்டில் உள்ள முஸ்லீம்களில் உயர் அடுக்கில் உள்ளவர்கள் ஆட்சியாளர்களின் கொள்கைகள் சிலவற்றைக் குறித்து அவ்வப்போது எதிர்ப்பினையோ அல்லது விமர்சனங்களையோ காட்டுவார்கள். இது எதற்கு என்றால் அவர்கள் தங்களின் பேரம்பேசும் நிலையை வலுப்படுத்திக் கொள்வதற்காகத்தானேயொழிய,  வேறெதற்காகவும் அல்ல. ஆனால், முஸ்லீம்களில் கீழடுக்கில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் உதிரிப் பாட்டாளிகளாகவே (Lumpen-Proletariat), சிவசேனை மற்றும் சங்பரிவாரக் கூட்டத்தில் உள்ளவர்களைப் போலவே இருக்கிறார்கள். ஆனால் நாட்டில் எங்கு வன்முறை வெடித்தாலும், அந்த சமயங்களில் காவல்துறையினராலும் இதர பாதுகாப்புப் படையினராலும் கைது செய்யப்படும்போது, இந்துக்களுக்கு உள்ளதுபோன்ற அமைப்புகள் எதுவும்  இவர்களைக் காப்பாற்றுவதற்கு முன்வருவதில்லை.

பம்பாயில் சிவசேனை அமைப்பு இவ்வாறு உதிரிப் பாட்டாளிகளைக் கொண்டுதான் உருவானது. இவர்கள் உத்திகளை, தங்கள் எதிரிகளை மற்றும் வன்முறைகளை எவ்வாறு தேர்ந்தெடுத்தார்கள்? தங்களின் கீழ் திரண்ட உதிரிப் பாட்டாளிகளை வைத்து ஒரு பக்கத்தில் கம்யூனிஸ்ட்டுகளையும், தொழிற்சங்கவாதிகளையும் வேட்டையாடினார்கள், மறுபக்கத்தில் தமிழர்களுக்கு எதிராகவும் வன்முறையை ஏவினார்கள். இவற்றிற்கு இந்துத்துவா வெறியர்களை பயன்படுத்திக் கொண்டார்கள்.

பின்னர் பீகாரிகளுக்கு எதிரான இயக்கத்தை நடத்தியபோது இவர்கள் இந்து பீகாரி மற்றும் முஸ்லீம் பீகாரிகளுக்கு இடையே வித்தியாசம் எதையும் பார்க்கவில்லை. இங்கே நான் சிவசேனையைப் பற்றி ஆய்வு செய்திடவில்லை. எனினும் ஒருசில விஷயங்களைக் குறிப்பிட வேண்டியிருந்தது.

தாக்கரேயின் சித்தாந்தத்தின் முக்கிய கூறு என்னவெனில் கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் இடதுசாரிகளுக்கு எதிராக வெறுப்பை உமிழ்வது என்பதுதான்.

1966 இல் உருவான சிவசேனை 1980களில்தான் இந்துத்துவாவின் சித்தாந்தத்தை முழுமையாகத் தழுவிக் கொண்டது. ஒரு சமயத்தில், தாக்கரே அவசரநிலைப் பிரகடனத்தைக் கூட ஆதரித்தார், வடஇந்தியர்களுக்கு எதிராக சமீபத்தில் நடைபெற்ற பிரச்சாரங்களின் போது அது இந்துக்களுக்கும் இந்துக்கள் அல்லாதவர்களுக்கும் இடையே எந்த வேறுபாட்டையும் காட்டவில்லை. அனைவருமே வெளியாட்கள் போன்று தான் சித்தரிக்கப்பட்டார்கள். இவர்கள் பம்பாயில் இருப்பதால்தான் மராத்தியர்களின் துன்பதுயரங்களுக்குக் காரணமாம். நாட்டின் நிதி மையமாக விளங்கும் பம்பாயில் சூறையாடும் முதலாளித்துவத்தால் உருவாக்கப்பட்ட துன்ப துயரங்களுக்கெல்லாம் மிகவும் வறிய நிலையில் வாழ்ந்த, மிக அற்பக் கூலி பெற்ற வட இந்தியர்கள்தான் காரணமாம்.

சிவசேனை தன் கீழ்  இருந்த உதிரிப் பாட்டாளிகளைக் கொண்டு, வன்முறை வெறியாட்டங்களை  தமிழர்கள், முஸ்லீம்கள், பீகாரிகள்  என்று நடத்தியது. பின்னர் வங்காளிகள் மீது இவர்கள் எல்லாம் வங்கதேசத்திலிருந்து வந்தவர்கள் என்று கூறி வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டது. அவர்களின் சொத்துக்களை எல்லாம் கொள்ளையடித்தார்கள், அவர்களின் சிறிய வியாபார நிறுவனங்களை எல்லாம் அபகரித்துக் கொண்டார்கள்.

தாக்கரே ஆரம்பத்தில் ஒரு கார்ட்டூனிஸ்ட்டாகத்தான் தன் வேலையைத் தொடங்கினார். பின்னர் சிவசேனையின் தலைவராக உயர்ந்தபின் அவர் இறக்கும் தருவாயில் அவரது சொத்தின் மதிப்பு 30 ஆயிரம் கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. அது எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும்.

இவ்வாறு வகுப்புவாத வன்முறை என்பது ஸ்தாபன ரீதியாகக் குற்றங்கள் புரிவதற்கான வடிவங்களை எடுத்துக் கொள்கின்றன. இவ்வாறு கிரிமினலாகக் குற்றம் புரியும் அமைப்புகளோடு இவை சிண்டிகேட்டுகள் அமைத்துக் கொள்கின்றன. வகுப்புவாதத்தில் சரியான அம்சம் என்பது பொதுவாக இதுதான். சிவசேனையின் ஆட்கள் உதிரிப் பாட்டாளி வர்க்கத்திலிருந்தே பொறுக்கி எடுக்கப்பட்டார்கள்.

மரபு ரீதியான முடிவுரை கூறி இந்த உரையை நான் முடிக்க முயற்சிக்கப் போவதில்லை. ஆயினும், ஒருசில முக்கிய அம்சங்களை மட்டும் கூறி முடித்துக் கொள்ள விரும்புகிறேன்.

முதலாவதாக, இந்தியாவில் வகுப்புவாதக் கட்டமைப்பிற்கு உதிரிப்பாட்டாளிகள்தான் (lumpen proletariat and the lumpenised petty bourgeoisie) குறிப்பிடத்தக்க பங்களிப்பினைச் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். அது சங்பரிவாரக் கூட்டமாக இருந்தாலும் சரி, அல்லது முஸ்லீம்களாக இருந்தாலும் சரி அல்லது சிவசேனை போன்ற அமைப்புகளாக இருந்தாலும் சரி. ஏனெனில், நவீன தாராளமய கட்டத்தில் இந்திய முதலாளித்துவத்தின் கட்டமைப்பு அம்சம் அதுதான். நாட்டில் தொழிலாளர் வர்க்கச் சேனையை விட வேலையில்லாத இளைஞர்களின் சேனை மிகவும் பெரிதாக இருக்கிறது. இத்தகு நிலையில் சமூகத்தில் ஒரு முறையான தொழிலாளர் வர்க்கக் கலாச்சாரத்தை நிறுவுவது என்பது மிகவும் சிரமம். தொழிலாளர் வர்க்கத்திற்குள்ளேயே கூட உதிரிப் பாட்டாளிகளை உருவாக்கும் வேலையும் நடந்து கொண்டிருக்கிறது. முறையான ஊதியம் கிடையாது, எந்த நிமிடமும் வேலையைவிட்டு விரட்டி அடிக்கப்படலாம் என்ற நிலை. எல்லாவற்றையும் விட மோசம், வேலையில்லாதோர் பட்டாளம் மிகவும் பெரிது, நிரந்தரமானது.

ஆக்கபூர்வமான உழைப்பில் ஈடுபட்டிருப்பவரின் நிலையான வாழ்க்கை ஒருவருக்கு மதிப்பையும் மரியாதையையும் அளிக்கிறது அல்லது குறைந்தபட்சம் வாழ்வதற்கான அடிப்படை ஆதாரத்தை அளிக்கிறது. அவ்வாறு ஆக்கபூர்வமான உழைப்பில் ஈடுபடாதவர்களின் நிலை? காலப்போக்கில் மற்றவர்களைத் துன்புறுத்துவதைப் பற்றிக் கிஞ்சிற்றும் பொருட்படுத்தாது கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். இத்தகைய நபர்களை வகுப்புவாதம் தன்னுடைய வன்முறைச் செயல்களுக்கு நன்கு பயன்படுத்திக் கொள்கிறது.

ஆக்கபூர்வமான உற்பத்தியில் ஈடுபட்டிருப்போர் வாழ்க்கை என்பது அவரைப் போலவே ஆக்கபூர்வமான உற்பத்தியில் ஈடுபட்டுள்ள மற்றவர்களோடும் இணைந்து ஓர் இனமாக, ஒரு சமூகமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் உதிரிப்பாட்டாளிகள் என்று சொல்லப்படுகிற ரவுடிகள், கிரிமினல்கள், திருடர்கள், பொறுக்கிகள் மற்றும் இதுபோன்று சமுதாயத்திற்குக் கேடு பயக்கும் தொழில்களில் ஈடுபட்டிருப்போர் வாழ்க்கை என்பது இயற்கையாகவே குறிப்பிட்ட குணாம்சங்களுடன் கூடிய எவ்விதமான  இனத்தையும் (The life of the lumpenproletariat is by its nature one that creates no community out of any shared conditions of labour) உருவாக்குவதில்லை, தற்காலிகமாக சேர்ந்து கொள்வார்கள், வேலை முடிந்தபின் கலைந்து சென்று விடுவார்கள். தொழிலாளர் வர்க்கக் குணம் பறிக்கப்பட்ட இவர்கள், சாதி, மதம் அல்லது வேறு எந்த விதத்திலாவது வெறியூட்டப்பட்டால் அதற்கு மிக எளிதாக மயங்கிவிடுவார்கள். வகுப்புவாத அரசியல் இத்தகைய உதிரிப் பாட்டாளிகளுக்கு வெகுவாகவே தீனி போடுகிறது.

இத்தகைய உதிரிப் பாட்டாளிகளை வகுப்பு வாத/பாசிஸ்ட் வகையிலான வன்முறை இயக்கங்கள் மிகவும் எளிதாக முழுமையாகப் பயன்படுத்திக் கொள்கின்றன.

மிகவும் பொதுவாகக் கூறுவதென்றால், வகுப்புவாதத்தின் அனைத்து வடிவங்களும் நவீன தாராளமயம் அல்லது அதிதீவிர முதலாளித்துவத்துடன் நேரடியாகத் தொடர்புடையதாகும். அதாவது, முதலாளித்துவத்தின் பணப் பேராசை பிடித்தலைகிற, கொள்ளையிடும் வடிவமாகும். அனைத்து முதலாளித்துவமும் கொள்ளையடிக்கும் குணம் கொண்டவைதான். ஒவ்வொன்றுக்கும் இடையே கொஞ்சம் கூட குறைச்சல் இருக்கலாம், அவ்வளவுதான்.

இத்தகைய முதலாளித்துவ மனப்பாங்கு எப்போதும் இருந்து வந்திருக்கிறது. ஆயினும் நவீனதாராளமய தீவிரவாதம் தலை தூக்குவதற்கு முன் சில கட்டுப்பாடுகளுடன் இருந்தது. இப்போது அத்தகைய கட்டுப்பாடுகள் அனைத்தும் கைவிடப்பட்டுவிட்டன. அரசின் தலையீடு என்பதும் அநேகமாக இல்லை. எப்போதாவது மதவன்முறை வெறியாட்டங்கள் சட்டம் – ஒழுங்கு பிரச்சனையாக மாறும்போதுதான் அரசு தலையிடுகிறது.

நாடு சுதந்திரம் பெற்ற பின் முதல் கட்டத்தின் போது, அரசு ஒரு முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ அரசாக இருந்த போதிலும், ஏகாதிபத்தியத்தின் நிர்ப்பந்தங்களுக்கு எல்லாம் இடம் தராது அதனை எதிர்த்து நின்று இந்தியப் பொருளாதாரத்தை மிகப்பெரிய அளவில் பாதுகாக்க முயற்சிகளை மேற்கொண்டது. இந்திய முதலாளித்துவம் வலுவானதாகவும், அதிகம் கொள்ளையடிக்கக் கூடியதாகவும் மாறியதால், ஏகாதிபத்தியக் கொள்ளையர்களோடு கூடிக்குலாவுவது என்பதும் அதிகமாகியது. பொதுச் சொத்துக்களை தனியாரிடம் தாரைவார்க்கவும் முன்வந்தது. இந்தியப் பொருளாதாரத்தையும் மேலும்மேலும் அந்நியர்களுக்குத் திறந்துவிட வழிவகுத்தது.  இவற்றின் மூலமாக ஒரு சிலரை மட்டும் நிரந்தர வேலையில் வைத்துக் கொண்டு, மற்றவர்களை வேலையில்லாதோர் பட்டாளத்தில் தள்ளியது.

இவற்றின் மூலமாக அரசின் குணாம்சமும் அரசின் பங்கும் மிகவும் மோசமாக மாறியது. நாட்டிற்குள்ளே, இது ஒட்டுமொத்த இந்திய மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தாமல், அநேகமாக முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களை மட்டுமே, அதிலும் குறிப்பாக கார்ப்பரேட்டுகள் நலன்களை மட்டுமே காக்கும் ஒன்றாக மாறியது. உலகப் பொருளாதாரத்துடனான உறவுகளைப் பொறுத்தவரை, அரசு, உலகத்தின் முன்னே இந்திய மக்கள் மற்றும் அவர்களின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. மாறாக, நவீன தாராளமயக் கொள்கைகளை உயர்த்திப் பிடிக்கும் இந்த அரசின் முக்கியமான வேலை என்பது சர்வதேச நிதி மூலதனத்தின் நலன்களையும் கட்டளைகளையும் இந்திய மக்களுக்கு கைமாற்றிக் கொடுப்பதாகும். இத்தகைய சூழ்நிலையில் அரசு மதச்சார்பற்ற தேசியம் (secular nationalism) என்னும் கொள்கையை – நம்முடைய காலனிய எதிர்ப்பு இயக்கங்களின்போது நமக்கு அடிப்படையாக அமைந்திருந்த கொள்கையை – நடைமுறையில் கைவிட்டாக வேண்டும்.  இந்த இடத்தில் வலுவாக உள்ள வலதுசாரிகள் இந்திய தேசியத்தை (Indian nationalism) மதரீதியான, அறிவு பெருகுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிற (obscurantist), உயர் பிராமணத்துவத்திற்கு வக்காலத்து வாங்குகிற மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்காத விதத்தில் மாற்றியமைக்கும் பணியை வேகம் வேகமாகச் செய்து வருகின்றன. நாட்டு மக்கள் இன ரீதியாக, பிராந்திய ரீதியாக, மத ரீதியாக மோதவிடப்பட்டு இந்திய மக்களின் ஒற்றுமை கூட  கேள்விக்குறியாக்கப்பட்டிருக்கின்றன.

நவீனதாராளமயக் கொள்கை கொடூரமான சுரண்டலுக்கு மட்டுமல்ல தொழிலாளர் வர்க்கத்தின் உணர்வுகளை மழுங்கடிக்கக் கூடிய விதத்தில் மிக அற்பக் கூலி தரும் ஒன்றாகவும் அமைந்துள்ளது. மக்களில் பெரும்பான்மையினருக்கு வேலை அளிப்பதற்கோ அல்லது பாதுகாப்பான வேலையை அளிப்பதற்கோ அது மறுக்கிறது.

இவ்வாறு இந்த அமைப்பு முறையானது சுரண்டல் தன்மை கொண்டது மட்டுமல்ல, சமூகத்தையே வேருடன் பிடுங்கி எறியக் கூடியதாகும். மக்களின் சமூக அமைப்பு முறையையும் குழி தோண்டிப் புதைக்கக் கூடியதாகும். இவ்வாறு அதிதீவிர முதலாளித்துவம் சமூகத்தையே அழுகச் செய்துவிட்டது. மக்களில் பெரும்பாலானவர்கள் மத்தியில் நஞ்சை விதைத்திருக்கிறது. ஏன், தொழிலாளர் வர்க்கத்தில் ஒருசில பிரிவினரிடம் கூட இதனை அது செய்திருக்கிறது.

வகுப்புவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் அனைத்து வடிவங்களும் மிகவும் அவசியமானவைகளாகும். ஆயினும் அதே சமயத்தில்,  எவ்வளவு காலத்திற்கு மற்றும் எவ்வளவு கடுமையாக இப்போராட்டத்தை நடத்த வேண்டும் என்பது குறித்து எவ்விதமான மாயையும் நமக்கு இருக்கக் கூடாது.

வகுப்புவாதத்திற்கு எதிரான போராட்டம் என்பது மதச்சார்பின்மைக்கு ஆதரவான தத்துவார்த்த போராட்டம் மட்டுமல்ல, முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியுமாகும். சுருக்கமாகச் சொல்வதென்றால், வகுப்புவாதத்திற்கு (Communalism) மாற்று, கம்யூனிசம் (Communism) அல்லது சோசலிசம்தான். இன்றைய தினம் நாட்டில் வகுப்புவாத சிந்தனைகள் மிகப்பெரிய அளவில் ஊட்டி வளர்க்கப்படுவதை முறியடிக்கக் கூடிய விதத்தில் மதச்சார்பின்மையையும் கம்யூனிஸ்ட்டுகளின் குணங்களில் ஒன்றாக முன்னெடுத்துச் சென்றிட வேண்டும்.