வடகொரியாவின் அணுச்சோதனை!

பலமிக்க அமெரிக்காவின் ராணுவத்தளம் மற்றும் ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் சுற்றி வளைத்து பொருளாதார, ராணுவ தாக்குதல் நடத்துகிற சூழல் வடகொரியாவிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தது. இதனால், கடந்த அக்டோபர் 9 ம் தேதியன்று வடகொரியா அணுச் சோதனையை நடத்தியது. இந்தச் சோதனை உலகின் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.

முனனாள் சோவியத் யூனியனோடு வடகொரியா போட்டுள்ள ஒப்பந்தத்தில் அணு ஆயுத தயாரிப்பு முயற்சிகளை மேற்கொள்ள மாட்டோம் என்று உறுதியளித்திருந்தது. இது மீறப்பட்டுள்ள நிலையில் வடகொரியாவின் நட்பு நாடான சீனாவும் இச்சோதனை யை கண்டிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. தொழிலாளி வர்க்க நாடுகள் உலக ஒப்பந்தங்களை ஏற்று நடப்பது தான் கடந்த கால வரலாறு. ஏராளமான பிராந்திய மோதல்கள், கருத்து மோதல்கள் நிரம்பிய பகுதியாக இந்த வடகிழக்கு ஆசியா உள்ளது. இந்நிலையில் மேலும் அணு ஆயுதங்கள் அதிகரிப்பது ஆபத்தானது. அந்த வகையில் வடகொரிய அணுச் சோதனை கவலைக்குரிய நிகழ்வு; மிகவும் துரதிருஷ்டமான விளைவு.

அணு ஒப்பந்தங்கள் அணு ஆயுதங்களைக் குறைத்ததா?

அணு ஆயுதம் பயன்படுத்துவது குற்றம் என்பது சர்வதேச சட்டமாக ஆக்கப்பட்டுள்ளது. அணு ஆயுதங்களை ஒழிக்க அரசுகள் பல்வேறு பேச்சுவார்த்தைகளில் இறங்கின. நாட்டாமை செய்து உலகைச் சுரண்டி வரும் ஏகாதி பத்தியங்கள் இருக்கும் வரை, அணு ஆயுதங்களற்ற உலகம் சாத்தியமாகுமா? ஏகாதிபத்தியங்கள் தங்களது பொருளாதாரச் சுரண்டல் மேலாதிக்கத்தை மற்ற நாடுகள் மீது நிலை நிறுத்த, நிச்சயமாக ஆயுதங்கள் தேவை. அதிலும் சாதாரண ஆயுதங்களை விட பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்கள் தேவை. இதற்கு அவர்களுக்கு சரியான வழி, அணு ஆயுதத் தயாரிப்பு தான்.

இந்த எண்ணத்தின் அடிப்படையில் தான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அணு ஆயுதங்களை விடாப்பிடியாக, உலக மக்களின் விருப்பத்திற்கு விரோதமாக தங்களிடம் சேர்த்து வைத்துள்ளன.

அமெரிக்காவும், சோவியத் யூனியனும் அணு ஆயுத குறைப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தின.  தற்போது அணு ஆயுதம் வைத்திருப்போர் வைத்திருக்கட்டும். ஆனால், புதிதாக யாரும் தயாரிக்க வேண்டியதில்லை என்கிற நிலைபாட்டில் போடப்பட்ட ஒப்பந்தம்  அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தம் (NPT – Non – Proliferation Treaty). இந்த நிலைபாட்டை இந்தியா உள்ளிட்ட நாடுகள் மிகச் சரியாகவே எதிர்த்தன. பாரபட்சமான ஒப்பந்தம் என்றும், முற்றாக அணு ஆயுதங்களை ஒழிக்க வேண்டுமே தவிர அணு ஆயுதம் கொண்ட நாடு,  அணு ஆயுதமில்லாத நாடு என்று இருவகையாகப் பிரித்து ஒரு அணுகு முறையை உருவாக்கிடக் கூடாது என்று இந்தியா கருதியது. இதனால் இந்தியா இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.

ஆக, இன்றைய உலகில் ஒப்பந்தங்கள் பல உருவானாலும், அணு ஆயுதங்களை ஒழிப்போம் என்ற முழக்கங்கள் விடாது ஒலித்தாலும், கொடூரங்களை நிகழ்த்தக் கூடிய அணு ஆயுதங்கள் இன்று உலகில் பலரிடம் உள்ளன என்பதே உண்மை.

உலகத்திற்கே ஆபத்தா?

இந்தப் பின்னணியில் வடகொரியா நடத்திய சோதனை பெரும் அச்சுறுத்தல் என்று பூதாகரமாக சித்தரிக்கப்படுகிறது. வட கொரியா அணுச்சோதனை செய்ததால் உலகமே இன்று ஆபத்தில் மூழ்கி இருப்பது போன்று பேசப்படுகிறது.

வடகொரிய அணுச்சோதனை, அளவுக்கு அதிகமாக ஊதிவிடப்படுகிறது. ஆனாலும், இந்தச் சோதனை பல எதிர் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தென்கிழக்கு ஆசிய மக்களுக்குப் பாதகமான பல நிகழ்வுப் போக்குகளுக்கு காரணமாக அமைந்துள்ளது.

முதன்மையாக, அணு ஆயுதங்களற்ற உலகை உருவாக்க விழையும் லட்சியத்திற்கு வடகொரியச் சோதனை ஊறு விளைவித்துள்ளது. வடகொரியச் சோதனையின் விளைவாக பதட்டம் அதிகரித்துள்ளது. கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் நாடுகள் அச் சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளன. ஆனால், இதற்கு வடகொரியாவை மட்டுமே குறைசொல்ல முடியுமா? இந்த நிலைமைகளுக்கு உண்மையில் யார் காரணம்? நிச்சயமாக, அமெரிக்காவின் அடாவடித்தனமான ஆதிக்கப் போக்குதான், அடிப்படைக் காரணம். கொரியத் தீபகற்பத்தில் இன்று ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு அமெரிக்காவே முக்கிய காரணம்.

தீமைகளின் அச்சு – புஷ்ஷா? வடகொரியாவா?

2002 ம் ஆண்டு தீமைகளின் அச்சு என்று புஷ் குறிப்பிட்ட நாடுகள் இராக், இரான், வடகொரியா ஆகியன. பிறகு இராக் போருக்குப் பிறகு, சதாம் உசேனை வீழ்த்திய பிறகு, இராக்கினை அந்த பட்டியலிலிருந்து எடுத்துவிட்டனர். அதற்குப் பதிலாக சிரியாவை 2005 ம் ஆண்டிலிருந்து இணைத்து விட்டனர். ஆக, தீமைகளின் அச்சு நாடுகள் என்ற கொள்கை தொடருகிறது. இந்தக் கொள்கை அடிப்படையிலான ஆத்திரமூட்டல் மோதல் நடவடிக்கைகளை புஷ் நிர்வாகம் செய்து வந்துள்ளது. உலக வரலாற்றில் இல்லாத ஒரு அரக்கத்தனமான கொள்கையை புஷ் நிர்வாகம் தனது வெளியுறவு கொள்கையாக அறிவித்தது.

ஒரு நாடு தன்னைத் தாக்க முனைந்தால், பதிலடியாக யுத்தத்தில் இறங்குவதுதான் நாடுகளின் இயல்பான செயல்பாடாக இருந்து வந்துள்ளது. இதற்கு மாறாக ஒரு நாடு தன்னை தாக்கவில்லை என்றாலும் கூட, அது தாக்கக்கூடும் என்று முடிவுக்கு வந்து அந்த நாட்டின் மீது தாக்குதல் தொடுப்பது என்ற வித்தியாசமான கொள்கையை புஷ் அறிவித்தார்.  இதற்குப் பெயர் “Pre Emptive War” என்பது.

இத்தகைய போர்களை தூண்டுகிற, அழிவை ஆராதிக்கிற கொள்கையை அதிபர் புஷ், துணை அதிபர் டிக் செனேய் ஆகியோர் கொண்ட வெறிக்கூட்டம் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது.

இதன் விளைவாக பல நாடுகள் நிரந்தர அச்சுறுத்தலுக்கு ஆளாக வேண்டிய சூழல் ஏற்பட்டது. அடிபணியாத நாடுகள் மீது யுத்தம் நடத்தினர். இந்த நிலைதான் வடகொரியா தன்னை ஆயுத பாணியாக்கிக் கொள்ள காரணமாக அமைந்தது. தற்கால உலக அரசியல் உறவுகளை ஆய்வு செய்யும் எந்த ஒரு மாணவனும் இதனை ஏற்றுக் கொள்வான்.

புஷ் கூட்டம் வடகொரியாவை மட்டும் தீமைகளின் அச்சு என்று குறிப்பிட்டதோடு நிற்கவில்லை. அந்த நாட்டின் அதிபரான கிம் – ஜாங் – இல் லின் மீது பொய்யான அவதூறுகளைப் பொழிந்து வருகின்றனர். அவரை சுகவாசி, மனநோயாளி, ஆடம்பரப் பொருளின் பிரியர் என்றெல்லாம் தூற்றுகின்றனர். புஷ்கூட அவரை குள்ளன் என்றும், அதிக செல்லம் கொடுத்ததால் கெட்டுப் போன குழந்தை என்றெல்லாம் தரம் தாழ்ந்து வர்ணித்துள்ளார்.

உண்மையில், ஆசியாவிற்கு அணு ஆயுத ஆபத்து வடகொரியாவினால் மட்டும் ஏற்படவில்லை. அமெரிக்கா அவ்வப்போது இரான் மூலம் ஆசியாவிற்கு ஆபத்து, லிபியாவினால் அணு ஆபத்து, ஈராக்கினால் ஆபத்து என்று சொல்லியே ஆசியாக் கண்டத்தில் தனது தலையீட்டையும், செல்வாக்கையும் அதிகரித்து வந்துள்ளது. ஆனால், வேடிக்கை என்னவென்றால், இதுவரை அணு ஆயுதத்தைப் பயன்படுத்தி அப்பாவி மக்களை அழித்த ஒரே நாடு அமெரிக்காதான். ஆபத்து எனில், அது அமெரிக்காவினால் தான் ஆசியாவிற்கு ஏற்படும்.

வடகொரியச் சோதனை பற்றி பெரும் கூச்சல் எழுப்பு கிறவர்கள் அமெரிக்கா தான் உலகிலேயே அதிக அணுச்சோதனை செய்த  நாடு என்பதை மறக்க, மறைக்கப் பார்க்கின்றனர். அது மட்டுமல்லாது, ஆசியாவில் வடகொரியாவை விட இஸ்ரேல் மூலம் தான் அதிக அணு ஆபத்து உள்ளது. ஏனெனில் 200 க்கும் மேற்பட்ட பயங்கரமான அணு ஆயுதங்களைக் கொண்ட நாடு இஸ்ரேல். கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களுக்கு இடமில்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும். கொரிய தீபகற்பம் அணு ஆயுதங்களின் களமாக மாறுவது, தென் கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் மட்டுமல்ல, ஆசியக் கண்டத்தின் பாதுகாப்பிற்கே ஆபத்தானது.

இதை வடகொரியா உணர்ந்திருக்கிறது. முற்றிலும் அணு ஆயுதங்களை ஒழிப்பதற்கான பேச்சுவார்த்தை அவசியம் என்ற கொள்கை நிலைபாட்டிலிருந்து தான் இப்பிரச்சனையை வடகொரியா அணுகுகிறது. இதனை பாரபட்சமின்றி சிந்திக்கும் ஆய்வாளர்கள் ஒத்துக் கொள்கின்றனர்.

பேச்சுவார்த்தையை வெறுத்து ஒதுக்கும் புஷ்

2002 ம் ஆண்டு தீமைகளின் அச்சு நாடு என்று வடகொரியாவைக் குறிப்பிட்ட பிறகு பேச்சுவார்த்தைக்கான கதவுகளை மூடினார் புஷ். அது மட்டுமல்லாது ஆத்திரமூட்டல் நடவடிக்கைகள் வேகம் பெற்றன. அமெரிக்கா, வடகொரியாவை ஆக்கிரமித்து, அச்சுறுத்தி வருகிற வரலாறு 1950 லிருந்து நடைபெற்று வருகிறது. எனினும், புஷ் நிர்வாகத்தின் கீழ் போர் வெறி அதிகரித்தது. இன்றைக்கும் கூட 40000 அமெரிக்கத் துருப்புகள் தென் கொரிய எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன. அணு ஆயுதங்களும் தென்கொரியாவிடம் உள்ளன. தொடர்ந்து அமெரிக்க – தென் கொரிய கூட்டு ராணுவப் பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன.

புஷ் நிர்வாகத்தின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் உலகம் முழுவதும் கண்டனத்திற்கு ஆளாயின. இதைவிட முக்கியமானது, அமெரிக்காவிலேயே புஷ் நிர்வாகத்தின் அடாவடித்தனத்தை எதிர்த்துக் கண்டனக் குரல்கள் கடுமையாக எழுந்தன. அமெரிக்க அச்சுறுத்தலின் தன்மையை முழுவதும் உணர்ந்த பல ஆய்வாளர்கள் வடகொரியாவிற்கு வேறு வழியில்லாத சூழலில் வடகொரியா செய்தது நியாயமானது என வாதிடுகின்றனர்.

இடதுசாரி சிந்தனையாளரான நோம் சாம்ஸ்கி கூறினார்: அந்த பிராந்தியத்தில் அமெரிக்கா ஏராளமான அணு ஆயுதங்களை குவித்துள்ளது. இதனால் வடகொரியா அச்சுறுத் தலுக்கு ஆளாகியுள்ளது. எனவே, வடகொரியா தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது என்றார் அவர்.

முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர், ஒரு நாட்டோடு பிரச்சனை இருக்கிறதென்றால், பேச்சுவார்த்தை நடத்திடாமல் இருப்பது முட்டாள்தனம் என்று புஷ்ஷைக் கண்டித்தார். ஜனநாயகக் கட்சியின் வளர்ந்து வரும் செல்வாக்கு மிக்க தலைவரான செனட்டர் பராக் ஓபமா (Barack Obama of Illinois) கூறினார்.

பனிப்போர் தீவிரமாக இருந்த காலத்தில் கூட-  அமெரிக்காவின் ஒவ்வொரு நகரத்தையும் குறிவைத்து அணு ஏவுகணைகள் நிறுத்தப்பட்ட சூழலிலும் கூட, வெள்ளை மாளிகைக்கும், கிரெம்ளினுக்கும் நேரடித் தொடர்பு இருந்தது எனக் குறிப்பிட்டு வடகொரியாவோடு புஷ் நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தாமல் இருக்கின்ற மூடத்தனத்தையும் எதிர்த்துள்ளார்.

எந்த முரண்பாடான பிரச்சனைகளையும் சுமுகமாக முடிக்காமல், பேச்சுவார்த்தையை அறவே வெறுக்கிற போக்கும், தான் சொல்வதையே மற்ற நாடுகள் ஏற்க வேண்டுமென்ற ஜனநாயக விரோதத் தன்மையும் கொண்டதாக புஷ் கூட்டம் இருந்து வந்துள்ளது.

இதோ அதற்கு ஓர் உதாரணம்.

சமீபத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஜார்ஜ் புஷ்ஷிடம் பத்திரிக்கையாளர்கள் ஒரு கேள்வி கேட்டனர். அண்டை நாடுகளான இரானும், சிரியாவும் இராக்கில் அமைதி திரும்ப ஒத்துக்கொண்டால், அவர்களோடு சேர்ந்து செயல்பட அமெரிக்கா தயாராக இருக்கிறதா? இராக்கில் தற்போதுள்ள நிலையில் அண்டை நாடுகளின் ஒத்துழைப்பை, அறிவுள்ள யாரும் நிராகரிக்க மாட்டார்கள். ஆனால் புஷ் என்ன கூறினார்?

இந்தக் கேள்விக்குப் புஷ் கீழ்க்கண்டவாறு பதிலளித்தார்.

இரானும், சிரியாவும் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இராக்கிற்கு அவர்கள் உதவ வேண்டுமென்று உலகம் எதிர் பார்க்கிறது. இப்படி ஆணவத்தோடு கூறிவிட்டு, சரமாரியாக பல நிபந்தனைகளைப் போட்டு, தொடர்பில்லாத பல பிரச்சனைகளை இத்துடன் இணைக்கிறார் புஷ்.

இரானியர்கள் செறிவூட்டப்பட்ட யுரேனியம் தயாரிப்பதை நிறுத்த வேண்டும். அப்படிச் செய்தால் தான் அமெரிக்க வெளியுறவு அதிகாரிகள் அவர்களோடு பேசுவார்கள். பிறகு, அமெரிக்காவின் கடைக்கண் பார்வை கிடைக்க வேண்டுமென்றால், சிரியா என்னென்ன செய்ய வேண்டு மென்ற ஒரு பெரிய பட்டியலை புஷ் தெரிவித்தார். அத்துடன் லெபனான் அரசு இஸ்ரேல் தனது பிணைக் கைதிகளை திரும்பப் பெற ஹமாசினை நிர்பந்தப்படுத்த வேண்டும். ஹமாஸ், ஹிஸ்புல்லா இயக்கங்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு எதிராக சதி செய்வதை கைவிட வேண்டும். என்றெல்லாம் புஷ் அடுக்குகிறார். இப்படிப்பட்ட போக்கு, எந்த உலகப் பிரச்சனையையாவது தீர்த்திட உதவிடுமா? சட்டாம் பிள்ளைத் தனம், அதிகார ஆணவம் எல்லாம் சேர்ந்து இன்று உலகின் பல நாடுகளில் மோசமான விளைவுகளை உருவாக்கியுள்ளது. இதுவே அணு ஆயுதங்களைத் தயாரித்தால்தான் தன்னை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்ற துரதிருஷ்டமான முடிவுக்கு வடகொரியாவைத் தள்ளியது.

வடகொரிய அணுப் பிரச்சனையைத் தீர்க்க ஆறு நாடுகள் கொண்ட ஒரு அமைப்பு நிறுவப்பட்டது. சீனா, அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா, ரஷ்யா, வடகொரியா என்ற ஆறு நாடுகள் கொண்ட அமைப்பில் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டன. பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட முடிவுகள் மீதான தொடர் நடவடிக்கைகள் இல்லை. உதாரணமாக 1994ம் ஆண்டு அமெரிக்கா அங்கீகரிக்கப் பட்ட வரையறை என்ற ஒப்பந்தத்தில் வடகொரியாவுடன் சேர்ந்து கையெழுத்திட்டது.

இதன்படி வடகொரியாவின் அணு கிராபைட் உலைகளுக்கு மாற்றாக லைட் வாட்டர் (Light Water) உலைகளை நிறுவ அமெரிக்கா ஒத்துக் கொண்டது. அதாவது, அணுசக்தி மூலம் மின் , எரிசக்தி தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள வடகொரியாவிற்கு அமெரிக்கா உதவிட வேண்டுமென்றும், பதிலாக வடகொரியா அணு ஆயுதத் தயாரிப்பு முயற்சிகளை கைவிடுவது எனவும் முடிவாக்கப்பட்டது. ஆனால், தான் ஏற்றுக் கொண்ட  எந்த வாக்குறுதியையும், அமெரிக்கா நடைமுறைப்படுத்தவில்லை. இவை அனைத்தும் சேர்ந்துதான் தற்போதைய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் அச்சுறுத்தல் வரலாறு

அணு ஆயுத மிரட்டல் என்ற பாணத்தை வடகொரியா இப்போதுதான் கையிலெடுத்திருக்கிறது. ஆனால் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அமெரிக்கா செய்து வருகிறது. கொரியப் போர் நடந்து கொண்டிருந்த போது அன்றைய அமெரிக்க அதிபர் ட்ரூமென்னை ஒரு பத்திரிகை நிருபர், நீங்கள் இந்த யுத்தத்தில் அணு குண்டை பயன்படுத்துவீர்களா? என்று கேட்டனர். அதற்கு ட்ரூமென், எங்களிடம் இருக்கும் எல்லா ஆயுதங்களையும் பயன்படுத்துவோம் என்றார். இப்படி அவர் பதிலளிக்கும் போது ஹிரோஷிமா, நாகாசாகி அழிவு ஏற்பட்டு ஐந்து ஆண்டு காலம்தான் முடிந்திருக்கிறது.

இதே போன்று 1953ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஐசன்ஹோவர் இவ்வாறு கூறினார். வடகொரியா சரியாக நடந்து கொள்ளவில்லை என்றால், ஆயுதங்களை பயன்படுத்துவதற்கு உள்ள கட்டுப்பாடுகள் அனைத்தையும் அகற்றுவோம் என்றார்.

இதைவிட அதிர்ச்சியான ஒரு தகவல் தற்போது வெளி வந்துள்ளது. பின்கஸ் என்ற பத்திரிக்கையாளர் வாஷிங்டன் போஸ்டில் எழுதியுள்ளார். 1957ஆம் ஆண்டு முதல் இரண்டு கொரியாவையும் பிரிக்கும் இடத்தில் அணு ஆயுத வல்லமை கொண்ட ஏவுகணைகளை அமெரிக்கா நீண்ட காலமாக நிறுத்தியிருந்தது. கடுமையான நிர்ப்பந்தத்திற்குப் பிறகு 1970ஆம் ஆண்டில் தான் அதிபர் ஜிம்மி கார்ட்டர் அதனை விலக்கிக் கொண்டனர்.

ஆக, வடகொரியா அமெரிக்காவின் அரை நூற்றாண்டு அச்சுறுத்தலுக்கு ஆளான நாடு. இந்த வரலாறு தெரியாதவர்கள்தான் இன்று வடகொரிய அணுச் சோதனை மனித குலத்துக்கே அழிவு என்று எழுதி வருகின்றனர். வடகொரியா, அணு ஆயுத முயற்சிகளை கைவிட வேண்டுமென்பதில் மாற்றுக் கருத்து இருந்திட முடியாது. ஆனால் இதற்கு அமெரிக்காவின் அச்சுறுத்தல் ஆரவாரங்கள் முற்றாக கைவிடப்பட வேண்டும்.

தென்கொரியா மூலம் அச்சுறுத்தல்

தென் கொரியாவில், அமெரிக்க தலையீட்டிற்கு எதிராக பெரும் போராட்டம் நடைபெறுகிறது. அங்கு அமெரிக்கா தனது ராணுவ தளத்தை விரிவாக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

தென்கொரியாவில் வலுவான ராணுவ தளம் என்பது வெறும் வடகொரியாவை மிரட்டுவதற்கு மட்டுமல்ல; அமெரிக்காவிற்கு பெரும் சவாலாகவும், உலகப் பொருளாதாரத்தில் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் சீனாவின் ஆதிக்கம் வளராமல் தடுப்பதற்கும் வலுவான ராணுவ தளம் தென் கொரியாவில் இருப்பது அவசியம் என அமெரிக்கா கருதுகிறது.
ஏற்கெனவே வலுவான தளம் இருந்த போதிலும், மேலும் அதனை விரிவுபடுத்தி விரிவாக்கிட அமெரிக்கா முயற்சித்து வருகின்றது.

இதற்கென அங்குள்ள விவசாயிகளின் நிலங்களை அபகரிக்க முயற்சிகள் நடந்தது. உடனே விவசாயிகள் ஆர்ப்பரித்து எழுந்து போராட்டத்தில் குதித்தனர். கடந்த ஜூலை மாதம் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை அவர்கள் மேற்கொண்டனர்.

ஏற்கனவே உலக வர்த்தக நிறுவனம் மூலம் தென்கொரிய விவசாயிகளை அமெரிக்கா பழிவாங்கி வருகின்றது. இதனை யொட்டி பிரம்மாண்டமான போராட்டங்களும் நடைபெற்றன. தற்போது அமெரிக்க ராணுவதள விரிவாக்கம் கூடாது என்ற கோரிக்கையை எதிர்த்தும் விவசாயிகள் போராடி வருகின்றனர்.

இந்தியாவின் கண்டனம்

இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி வடகொரியா அணுச் சோதனையை கண்டித்து கடுமையான அறிக்கையை வெளியிட்டனர். இந்தச் சோதனை மூலம் வடகொரியா உலகிற்கு அளித்த வாக்குறுதிகளை மீறி விட்டதாக கண்டித்தார்.

1994ஆம் ஆண்டே அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தில் இருந்து விலகிக் கொண்டதாக வடகொரியா அறிவித்து விட்ட நிலையில், அணுச் சோதனை செய்வதன் மூலம் எந்த ஒப்பந்த வாக்குறுதிகளையும் அது மீறவில்லை. எனவே, இந்தியா இவ்வாறு கண்டிப்பது அர்த்தமற்றதாகும்.

வடகொரியாவின் அணுச்சோதனையை இந்தியா கண்டிப்பது வேடிக்கையானது. இரண்டு முறை அணு வெடிச் சோதனை நடத்திய நாடு இந்தியா. இந்திய நாட்டு மக்களிடம் நீண்ட காலமாக அணு ஆயுதமற்ற உலகம் என்ற லட்சியத்திற்கு பெரும் ஆதரவு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் தான் அணு ஆயுதத் தயாரிப்பு சோதனையில் ஈடுபடுத்திக் கொண்டவர்கள் இந்திய ஆட்சியாளர்கள். எனவே, இந்தியாவிற்கு வடகொரியச் சோதனையை கண்டிக்க என்ன உரிமை இருக்கிறது? அமெரிக்கா கண்டிப்பதால், தானும் கண்டிக்க வேண்டும் என்று முனைகிறது இந்திய ஆளும் வர்க்கம்.

இந்திய ஆட்சியாளர்களுக்கு உள்ள பயம் என்னவென்றால், வடகொரிய சோதனை ஏற்படுத்தியுள்ள ஆரவாரத்தில், இந்திய – அமெரிக்க அணு ஒப்பந்தத்தை அமெரிக்கா கை கழுவி விட்டால் என்ன செய்வது என்பதுதான். இதனால்தான் அவசர அவசரமாக வடகொரியாவை கண்டித்தனர்.

பிறகு, அமெரிக்க ஆதரவு செயலாளர் நிக்கோலஸ் பார்ன்ஸ் இந்தியா, பாகிஸ்தான் செய்த அணுச் சோதனைகளோடு, வடகொரியச் சோதனையை ஒப்பிட முடியாது என்ற தத்துவ முத்தினை உதிர்த்தார். இது எப்படி என்றெல்லாம் தலையை பிய்த்து கொள்ளாமல் இந்திய அரசு நிம்மதிப் பெரு மூச்சு விட்டது.

தீர்வு என்ன?

அக்டோபர் 14ஆம் தேதி ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் 1718 எண் கொண்ட தீர்மானத்தை நிறைவேற்றியது. இதன்படி எல்லா அரசாங்கங்களும் வடகொரியாவுடன் ஏவுகணை உள்ளிட்ட பேரழிவு ஏற்படுத்தும் ஆயுதங்களை வாங்குவதோ, விற்பதோ கூடாது. அதே போன்று சில பொருட்களின் வர்த்தகமும் தடை செய்யப்பட்டது. இப்படிப்பட்ட தடைகள் பிரச்சனையை தீர்க்கப் போவதில்லை. மாறாக, பதட்டத்தை மேலும் அதிகரிக்கவே செய்திடும்.

அமெரிக்கப் பத்திரிக்கைகளும், ஆளுகிற வட்டாரத்தைச் சேர்ந்தவர்களும் வடகொரியா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், ராணுவத் தலையீடு உடன் தேவை என்றும் போர் வெறியோடு கூச்சல் போட்டுக் கொண்டிருந்தனர்.

வடகொரியாவுடன் கடந்த பல ஆண்டுகளாக நெருக்கமாக இருந்து வந்துள்ளது சீனா. எனவே, சீனா அமைதியாக இருக்கக் கூடாது; வடகொரியாவிற்கு அனுப்புகிற உணவு, மருந்து சப்ளை எல்லாவற்றையும் நிறுத்திட வேண்டுமென கூக்குரலிட்டனர் அமெரிக்கர்கள். இதே போன்று தான் இராக் மீது 1980 களில் உணவு மருந்து சப்ளைக்கு ஐ.நா. சபை மூலம் தடை விதித்தது அமெரிக்கா. அதனால் சொல்லொண்ணாக் கொடுமையை இராக்கின் சாதாரண பொதுமக்கள் அனுபவித்தனர். 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகள் உணவின்றி, பட்டினியால் மடிந்து போயினர்.

இதே போன்ற கொடூரம், வடகொரியாவிலும் நிகழ வேண்டும் என்பது புஷ் கூட்டத்தினரின் ஆசை. ஆகையால், அவர்கள் சீனா விடம் நிர்பந்தம் செய்கின்றனர்.  ஆனால், சீனா அறிவுப் பூர்வமாகச் செயல்பட்டது.

முதலில் வடகொரியாவின் அணுச் சோதனையை கண்டித் தனர்.  பிறகு ஐ.நா. சபையில் கடும் பொருளாதாரத் தடையை விதிக்க அமெரிக்கா முயற்சித்த போது, அதைச் சீனா ஏற்றுக் கொள்ளவில்லை. இதர வீட்டோ நாடுகளைச் சேர்த்துக் கொண்டு இதை எதிர்த்தது. குறிப்பாக, ரஷ்யாவோடு கைகோர்த்து அமெரிக்க முயற்சியை தடுத்து நிறுத்தியது.

பிறகு அணு ஆயுத மூலப் பொருட்களுக்கும், சில குறிப்பிட்ட பொருட்களுக்கும் தடை என்று ஐ.நா. சபையில் முடிவு எடுக்கப்பட்டது. வடகொரியாவுடன் பேச்சுவார்த்தையைத் தொடருவது எனும் வகையில் சீன வெளியுறவு அமைச்சர் வடகொரியா சென்றார். வடகொரிய அதிபர் கிம் – ஜாங் – இல் லுடன் பேச்சுவார்த்தை நடத்தியது சீனக்குழு. தொடர்ந்து பலமுறை இத்தகைய தொடர்பு களை சீனா வடகொரியாவுடன் ஏற்படுத்திக் கொண்டது.

கடைசியாக, சீனாவின் கடும் முயற்சிக்கு வெற்றி கிட்டியது. வடகொரியா ஆறு நாடுகள் சேர்ந்து நடத்தி வந்த பேச்சுவார்த்தை தொடருவதற்கும் அதில் தாங்கள் கலந்து கொள்வதற்கும் சம்மதித்தது.

இந்தப் பிரச்சனைக்கு மிரட்டல், யுத்தம் ஆகிய வழிமுறை களைத் தவிர்த்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டு மென்பது தான் ஜனநாயக எண்ணம் கொண்டோர் அனைவரின் விருப்பம். இந்தக் கோட்பாடே சிறந்தது என்பதற்கான எடுத்துக் காட்டாக, சீனாவின் முன்முயற்சியும், அதற்கான வெற்றியும் சான்றாக அமைந்தன.

உலகமயமாகும் நிலச்சீர்திருத்த அரசியல்!

உலகமயம் இது பன்னாட்டு பெருவணிக நிறுவனங்களின் கோஷம். ஏகாதிபத்திய நவீன சுரண்டலின் புதிய வடிவம். உலக மக்கள் வெறுக்கும் விரிவாக்கம்; இந்த ஏகாதிபத்திய சுரண்டலுக்கு எதிராக உலகளவில் தொழிலாளர்களும், ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளும், இடதுசாரி – ஜனநாயக அமைப்புகளும் போராட்ட இயக்கங்களை கட்டியெழுப்பி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக உலக சமூக மாமன்றம் போன்ற அமைப்புகள் விரிந்த சங்கிலி இணைப்புகளை உருவாக்கி, விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. 1848-இல் உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்று மார்க்சும் – ஏங்கெல்சும் கம்யூனிஸ்ட் அறிக்கையில் முன்வைத்த முழக்கம் இன்று நிஜமாகி வருகிறது.

ஏகாதிபத்திய – முதலாளித்துவ சக்திகள் தொழில்நுட்ப ரீதியிலும், அறிவியல் ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் ஈபிள் கோபுரம் அளவிற்கு சாதனைகளை நிகழ்த்தியிருந்தாலும், உலக மக்களின் வறுமையை அவர்களால் தீர்க்க முடியவில்லை. மாறாக உலக மக்களை வறுமையின் புதைக்குழிகளுக்கே தள்ளி வருகின்றன. குறிப்பாக கிராமப்புற விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மிகக் கொடூரமான சுரண்டலுக்கு உள்ளாவதோடு, பட்டினிச் சாவுகளுக்கும், தற்கொலைகளுக்கும் இட்டுச் செல்லக்கூடிய அளவிற்கு அவர்களது வாழ்நிலை மிகவும் சீரழிந்து வருகிறது.

இந்த பின்னணியில்தான் இந்தியா உட்பட, லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஏற்பட்டு வரும் இடதுசாரிகளின் எழுச்சி விவசாயிகள் – தொழிலாளர்கள் வாழ்க்கையில் நம்பிக்கை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. அதோடு வெனிசுலா, பிரேசில், பொலிவியாவில் நடைபெற்று வரும் இடதுசாரி அரசுகளின் நிலச்சீர்திருத்த இயக்கம் விவசாயிகளுக்கு நம்பிக்கையூட்டி வருகிறது.

இந்தியாவில் இடதுசாரி அரசுகளான கேரளம், மேற்குவங்கம், திரிபுராவில் மேற்கொள்ளப்பட்ட நிலச்சீர்திருத்தத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தமிழகத்திலும் நிலச்சீர்திருத்தம் ஒரு அரசியல் கோஷமாக முன்னுக்கு வந்துள்ளது.

உலகிலேயே முதன் முதலில் நிலச்சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்ட நாடு சோசலிச சோவியத் யூனியன் தான்; தற்போது நடைபெற்று வரும் இந்த இயக்கங்களுக்கு முன்னோடி என்பதை நாம் இங்கே நினைவுகூர்ந்திட வேண்டும். சீனா, வடகொரியா, வியட்நாம் உட்பட சோசலிச நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட நிலச்சீர்திருத்த நடவடிக்கைகள் இன்றைக்கு விரிவடைந்து தென்னாப்பிரிக்கா, தென்கொரியா உட்பட பல்வேறு நாடுகளில் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக நிலச் சீர்திருத்தம் என்பது உலகளவில் அரசியல் கோஷமாக உலக மக்கள் விரும்புகிற உலகமயமாகி வருகிறது.

உலக உழைப்பாளி மக்களின் வறுமைக்கு அடிப்படையாக அமைந்திருப்பது உற்பத்தி கருவிகள் சுரண்டும் வர்க்கங்களின் கைகளில் குவிந்திருப்பதுதான். அதிலும் குறிப்பாக கிராமப்புற நிலவுடைமை இன்றைக்கும் பெரும் பன்னாட்டு நிறுவனங்களின் கைகளிலும், நிலப்பிரபுக்களின் கைகளிலும்தான் குவிந்திருக்கிறது. இந்த உற்பத்தி கருவிகளிலும், உற்பத்தி உறவுகளிலும் அடிப் படையான மாற்றத்தை ஏற்படுத்திடாமல் கிராமப்புற வறுமைக்கு தீர்வு காண முடியாது.

உலக விவசாயிகளின் நிலை

உலக மக்கள் தொகையில் சரி பாதி பேர் விவசாயத்தையே நம்பியுள்ளனர். 45 சதவீத மக்களது வாழ்க்கை விவசாயத்தோடு இணைக்கப்பட்டுள்ளது. அவர்களது வாழ்நிலை, வருமானம், பாதுகாப்பு என அனைத்தும் விவசாயத்தைச் சார்ந்தேயுள்ளது.

இவர்களது வாழ்க்கை பாதுகாப்பிற்கு மையக் கேள்வியாக இருப்பது நிலம். குறிப்பாக வளரும் நாடுகளில் உள்ள 50 கோடி மக்களுக்கு நிலமோ அல்லது நிலத்தின் மீதான உறவோயின்றி, விவசாயத் தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இதில் மிகக் குறைந்த பகுதியினர்தான் குத்தகை விவசாயிகளாக உள்ளனர். இவர்கள் நிலவுடைமையாளர்களால் கடுமையாக சுரண்டப் படுவதோடு, கந்துவட்டி, குறைந்தகூலி, ஆண்டுமுழுவதும் சீரான வேலையின்மை, அதிகமான நிலவாடகை என பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக விவசாயிகள் அதிகமாக உள்ள நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இந்தோனேஷியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா, கொலம்பியா மற்றும் தென்னமெரிக்க நாடுகளில் உள்ள கிராமப்புற மக்கள் கடுமையான வறுமைக்கு ஆளாகியுள்ளனர்; சுகாதாரம், கல்வி, வீடு மற்றும் அடிப்படைத் தேவைகள்கூட கிடைக்காத பகுதியினராக திகழ்கின்றனர்.

அதேசமயம், சோவியத் யூனியன் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளான முன்னாள் சோசலிச நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட நிலச்சீர்திருத்தத்தால் 58 கோடி மக்கள் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளனர். சீனா, வடகொரியா, வியட்நாம், கியூபா உட்பட சோசலிச நாடுகளில் நிலச்சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டு கிராமப்புற பொருளாதாரத்தில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளன. இந்தியாவிலும் மேற்குவங்கம், கேரளம், கர்நாடகா போன்ற மாநிலங்களில் நிகழ்த்தப்பட்ட நிலச்சீர்திருத்த நடவடிக்கைகயால் கிராமப்புற மக்களின் வாழ்க்கைத்தரம், வாங்கும் சக்தி, உள்ளாட்சி நிர்வாகத்தில் பங்கேற்பு என பன்முனைகளில் ஜனநாயக ரீதியான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்று கிராமப்புற வளர்ச்சி நிறுவனத்தின், 21 ஆம் நூற்றாண்டில் நிலச்சீர்திருத்தம் என்ற ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

பிரேசில் விவசாயிகள் எழுச்சியும் நில மீட்பும்

உலகில் வளம் பொருந்திய நாடுகளில் ஒன்று பிரேசில், ஆனால், அதே அளவிற்கு வறுமையையும் கொண்டுள்ளது; இந்த நாட்டின் வளங்களை சுரண்டிச் செல்வதிலும், அதற்கேற்ப பொம்மை ஆட்சியாளர்களை அமர்த்துவதிலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைங்கரியம் உண்டு. குறிப்பாக பிரேசிலில் உள்ள மூன்றில் இரண்டு பகுதி விவசாய நிலங்கள், வெறும் மூன்று சதவீதம் பேருக்கு சொந்தமானது. அதிலும் குறிப்பாக 1.6 சதவீதம் பேரிடம் பிரேசிலின் 46.8 சதவீத விவசாய நிலங்கள் குவிந்திருக்கிறது. இவர்களின் கையில்தான் மொத்த விவசாயமும் – விவசாய கொள்கையை தீர்மானிக்கும் சக்தியாக திகழ்கின்றனர். இந்த நவீன விவசாய பண்ணைகளில் 2.5 கோடி மக்கள் தங்களது வாழ்க்கைக்காக விவசாயம் சார்ந்த வேலைகளையே நம்பியிருக்கின்றனர். நிலமற்ற விவசாயிகளாக – அத்துகூலிக்கு வேலை செய்யும் ஆட்களாக, வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் மக்களாக, சத்தற்ற நடைபிணங்களாக ஆக்கியது கடந்தகால ஆட்சியாளர்களின் கொள்கைகள்.

வெளிச்சத்தை கொண்டு வந்த விவசாய இயக்கம்

1984இல் துவங்கப்பட்ட கிராமப்புற நிலமற்ற விவசாயிகள் இயக்கத்தில் (ஆளுகூ-ஆடிஎஅநவேடி னடிளகூசயயெடாயனடிசநள சுரசயளை ளுநஅ கூநசசய  ஞடிசவரபரநளந – டுயனேடநளள றுடிசமநசள ஆடிஎநஅநவே)  1.5 கோடி பேர் உறுப்பினர்களாக உள்ளனர். எம்.எஸ்.டி. என்று அழைக்கப்படும் கிராமப்புற நிலமற்ற விவசாயிகள் இயக்கத்தில், 10 முதல் 15 குடும்பங்களைச் சார்ந்தவர்கள் ஒரு கிளையாக செயல்பட்டு வருகின்றனர். இந்த கிளைகளில் இருந்து மேல் கமிட்டிக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரண்டு உறுப்பினர்களை தேர்வு செய்கின்றனர். இந்த இயக்கத்தில் பெண்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த இயக்கம் பிரேசில் முழுவதும் உள்ள 27 மாநிலங்களில் 23 மாநிலங்களில் தங்களது கிளைகளை விழுதுகளாக ஆழப்பதித்திருக்கிறது.

2003 ஆம் ஆண்டு லூலா தலைமையில் அமைந்த இடதுசாரி அரசாங்கம் கிராமப்புற நிலமற்ற விவசாயிகள் இயக்கத்திற்கு பெரும் ஆதர்ச சக்தியாக திகழ்கிறது. கடந்த 20 ஆண்டு காலமாக  அவர்கள் நடத்தி வரும் நிலமீட்பு போராட்டம், லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ள நிலமற்ற விவசாயிகளுக்கு ஒரு முன்னுதாரனமாக திகழ்கிறது. இந்த இயக்கம் கிராமப்புற மக்களின் ஆத்மாவாக, நம்பிக்கை நட்சத்திரமாக செயல்படுவதோடு, மிக அதிக அளவிலான விவசாயிகளைக் கொண்ட பேரியக்கமாக செயல்பட்டு வருகிறது.

நிலமற்ற கிராமப்புற விவசாயிகள் இயக்கத்தின் அடிப்படை நோக்கமே வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிப்பது, ஜீரோ வேலையில்லாத் திண்டாட்டம் என்பதுதான். அத்துடன் செல்வத்தை பகிர்வது, சமூக நீதி, சம உரிமை ஆகியவற்றை அடிப்படையாக வைத்து செயல்படுகிறது.

பிரேசிலில் உள்ள மொத்த விவசாய நிலத்தில் 60 சதவீத விவசாய நிலம் தரிசு நிலம். இத்தகைய தரிசு நிலத்தை நிலமற்ற விவசாயிகளுக்கு வழங்கக் கோரி நடத்திய விவசாயிகளின் வீரஞ்செறிந் போராட்டத்தின் மூலமாக, இதுவரை இரண்டரை லட்சம் குடும்பங்களுக்கு 15 மில்லியன் ஏக்கர் (1.5 கோடி ஏக்கர்) நிலம் கிடைத்துள்ளது. இந்த போராட்டத்தின் போது பல இடங்களில் நில முதலாளிகளின் தாக்குதல்களுக்கு 2000-த்துக்கும் மேற்பட்ட எம்.எஸ்.டி. ஊழியர்கள் பலியாகியுள்ளனர்.

விவசாயிகள் இயக்கம் நிலமீட்பு போராட்டத்தை மட்டும் நடத்துவதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. மீட்கப்பட்ட நிலத்தில் வர்த்தக பயிர்*களை தவிர்த்து, மாற்று கொள்கைகளை உருவாக்கி, புதிய விவசாய கலாச்சாரத்தை உருவாக்கி, செயல்படுத்தி வருகிறது. விவசாயம் உணவுப் பாதுகாப்பை உத்திரவாதப்படுத்துவதோடு, வேலையின்மைக்கு முற்றுப் புள்ளி வைப்பதாகவும் அமைய வேண்டும் என்ற நோக்கோடும், பொருளாதார தேவைகளை உயர்த்துவதாகவும், அவர்களது வறுமைக்கு தீர்வு காண்பதாகவும் இருக்க வேண்டும் என்ற முனைப்போடு எம்.எஸ்.டி. செயல்பட்டு வருகிறது. இதற்காக 60 உணவு கூட்டுறவு அமைப்புகளையும், சிறிய விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகளையும் உருவாக்கி, உணவுக்கும் – வேலைக்கும் உத்திரவாதத்தை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது.

இது தவிர, கிராமப்புற விவசாய மக்களிடையே உள்ள எழுத்தறிவின்மையை போக்குவதற்கு எழுத்தறிவு இயக்கத்தை தொடர்ந்து நடத்தி வருகிறது. கிட்டத்தட்ட 600க்கும் மேற்பட்ட எம்.எஸ்.டி. ஊழியர்கள் எழுத்தறிவு இயக்கத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 2002 – 2005 கால கட்டத்தில் மட்டும் 56,000 கிராமப்புற மக்களுக்கு கல்வியறிவை புகட்டியுள்ளனர். அதேபோல் 1000க்கும் மேற்பட்ட ஆரம்ப பள்ளிகளையும் இந்த இயக்கம் நடத்தி வருகிறது.  இதில் 2000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும், 50,000 குழந்தைகளும் பயின்று வருகின்றனர்.

இவ்வாறான விழிப்புணர்வின் மூலம் போராட்டத்தின் வாயிலாக பெற்ற நிலத்தை தாங்களே பாதுகாத்துக் கொள்ளவும், உணவு பாதுகாப்பையும், உணவுத் தேவையையும் பூர்த்தி செய்து கொள்ளவும், குடும்ப பாதுகாப்பையும், பொருளாதார மேம்பாட்டையும் உத்திரவாதப்படுத்திக் கொள்ள இத்தகைய செயல்பாடு பயன்படுகிறது.

சமீபத்தில் பிரேசில் தலைநகரில் நடத்தப்பட்ட பிரம் மாண்டமான இயக்கத்தில் பல்லாயிரக்கணக்கான எம்.எஸ்.டி. ஊழியர்கள் கலந்து கொண்டுள்ளனர். லூலா தேர்தல் காலத்தில் நான்கு லட்சம் குடும்பங்களுக்கு நில விநியோகம் செய்வதாக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் தற்போதைய வேகம் போதாது என்று எம்.எஸ்.டி. இயக்கம் விமர்சிக்கிறது. அதே சமயம் லூலா மீது தங்களுக்கு நம்பிக்கை இருப்பதாகவும், லூலா எங்கள் இயக்கத்தில் ஒருவர்; அவர் தங்களது நண்பர் என்றும் எம்.எஸ்.டி. இயக்கம் நம்பிக்கை கொள்கிறது.

பிரேசில் பிரம்மாண்டமான நிலவளத்தை கொண்டிருந் தாலும், அதனுடைய உணவுத் தேவைக்கு இறக்குமதியையே நம்பியிருக்கிறது. ஒரு நாட்டில் அதிகமான நிலம் இருப்பதால் மட்டும் அங்குள்ள விவசாயிகளுக்கும், மக்களுக்கும் உணவு கிடைக்கும் என்பதற்கு உத்திரவாதமில்லை. அந்நாட்டு அரசுகள் பின்பற்றும் கொள்கை, குறிப்பாக நிலவுடைமையாளர்கள் – பண்ணைகள் தங்களது நிலங்களில் உணவுப் பயிர்களுக்கு பதிலாக வர்த்தகப் பயிர்களையே விளைவிக்கின்றனர். மறுபுறத்தில் விவசாயத் தொழிலாளர்களுக்கு போதுமான கூலி கிடைக்காமல் வறுமையின் சுழலுக்குள் சிக்கி, சின்னாபின்னமாவதுதான் நடக்கிறது.

நிலமற்ற விவசாயிகளுக்கு நிலம் என்பது, அந்த விவசாயிகளின் வாழ்க்கையில் தன்னம்பிக்கை ஏற்படுத்துவதோடு, அவர்களது உணவுக்கான உத்திரவாதத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கிறது. அந்த அடிப்படையில் தற்போது பிரேசிலில் நடந்துவரும் நிலமற்ற கிராமப்புற விவசாயிகள் இயக்கம் லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ள விவசாயிகளுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது.

நிலச்சீர்திருத்தம் வெனிசுலா காட்டும் பாதை

அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு சிம்ம சொப்பனமாக திகழ்வது கியூபாவும் – பிடலும். லத்தீன் அமெரிக்க நாடுகளில் அமெரிக்க சுரண்டலுக்கு எதிராக சிங்கத்தின் கர்ஜனையோடு பிடலுடன் கைகோர்த்திருப்பவர் வெனிசுலா அதிபர் யூகோ சாவேஸ். உலக எண்ணெய் வளத்தில் 5-வது இடத்தை வகிப்பது வெனிசுலா.

வெனிசுலா பெட்ரோலிய ஏற்றுமதியில் மிக முக்கியமான இடத்தை வகிக்கிறது. அமெரிக்கா தன்னுடைய எண்ணெய் தேவையில் 25 சதவீதத்தை வெனிசுலாவில் இருந்து பெற்றுக் கொள்கிறது. வெனிசுலாவின் பொருளாதாரத்தில் மிக முக்கியமான இடத்தை வகிப்பது அதன் எண்ணெய் உற்பத்தியே; 80 சதவீத வருமானம் இதனை நம்பியே உள்ளது. அமெரிக்கா வெனிசுலாவின் எண்ணெய் வளத்தை கொள்ளைக் கொண்டதோடு, தனது நவீன காலனியாக பயன்படுத்தி வந்தது. சாவேஸ் ஆட்சிப் பொறுப் பேற்றதும், வெனிசுலாவின் எண்ணெய் வயல்களை அரசுடைமை யாக்கி, அமெரிக்க நிறுவனங்களின் சுரண்டலுக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.

1999 இல் ஆட்சிக்கு வந்த சாவேஸ் நிலச் சீர்திருத்தம்தான் எனது அரசின் முக்கிய இலக்கு என்று அறிவித்தார். விவசாயிகளின் உணவுப் பாதுகாப்பிற்கு அவர்களுக்கான நிலவுரிமையை உத்திரவாதப்படுத்துவதே எனது நோக்கம் என்று பிரகடனப் படுத்தினார். அத்தோடு நிற்காமல், வெனிசுலாவின் அரசியல் சாசனத்தையும் திருத்தியமைத்தார் சாவேஸ்.

அதிபர் சாவேசின் புரட்சிகர நடவடிக்கைகளை எதிர்கொள்ள முடியாத ஏகாதிபத்திய ஆளும் வர்க்கம், சாவேசை ஆட்சியில் இருந்து கவிழ்ப்பதற்கு பல்வேறு சதி வேலைகளில் ஈடுபட்டு மூக்கை உடைத்துக் கொண்டது. ஓராண்டுக்கு முன் கிறித்துவ மதப் பிரசங்கம் செய்யும் பாதிரியார், சாவேசை கொல்ல வேண்டும் என்று வெளிப்படையாக மதப் பிரசங்கத்திலேயே அறிவித்தார் ஏகாதிபத்திய சுரண்டும் வர்க்கம் சாவேஸ் அரசை கவிழ்ப்பதற்கு எத்தகைய சீரழிந்த நடவடிக்கைகளை கைக்கொள்கிறது என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் தேவையில்லை.

வெனிசுலாவில் உள்ள மொத்த விவசாய நிலத்தில் 75 சதவீத நிலம் 5 சதவீதத்தினர் கையில் உள்ளது. இத்தகைய நில முதலைகள் ஒவ்வொருவரிடமும் 1000 ஹெக்டேர்களுக்கு மேல் நிலம் குவிந்துள்ளது. இங்கும் பிரசிலில் நடைபெற்றது போல் பருத்தி, சோயா, கோக்கோ போன்ற வர்த்தகப் பயிர் விளைச்சல்தான். மறுபுறம் ஐந்தில் மூன்று பங்கு விவசாயிகள் நிலமற்ற கூலி விவசாயிகளாக உள்ளனர். மேலும் லத்தீன் அமெரிக்க நாடு களிலேயே கிராமப்புற மக்கள் தொகை குறைவாக கொண்ட நாடு வெனிசுலாதான். கடந்த 35 ஆண்டு காலமாக கிராமப்புறத்தில் இருந்த மக்கள் நிலங்களில் இருந்து விரட்டப்பட்டு, நகரங்களில் குவிந்துள்ளனர்.

1960-களில் 35 சதவீதமாக இருந்த கிராமப்புற மக்கள் தொகை படிப்படியாக குறைந்து 1990-களில் 12 சதவீதத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இது 2000 ஆம் ஆண்டில் 8 சதவீதம் அளவிற்கு குறைந்துள்ளது. வர்த்தகப்பயிர் உற்பத்தி மற்றும் நவீன விவசாய கருவிகளை கையாள்வதன் மூலமும், கிராமப்புற விவசாய மக்கள் முதலாளித்துவ ஆட்சியாளர்களின் தவறான கொள்கைகளின் விளைவாக எப்படி நிலத்தில் இருந்து அகற்றப்படுகிறார்கள் என்பதற்கு வெனிசுலா சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது. வெனிசுலாவின் விவசாய உற்பத்தி அதன் மொத்த ஜி.டி.பி.யில் வெறும் 6 சதவீதம் மட்டுமே. மொத்தத்தில் வெனிசுலா தன்னுடைய உணவுத் தேவைக்கு 88 சதவீதம் இறக்குமதியையே நம்பியுள்ளது.

ஒரு பக்கத்தில் வெனிசுலாவின் எண்ணெய் வளத்தை சுரண்டுவதும், மற்றொரு புறத்தில் தங்களது விளை பொருட்களை வெனிசுலா தலையில் கட்டுவதுமாக இருபுற சுரண்டலை அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் மேற்கொண்டு வந்தனர்.

கிராமத்திற்கு திரும்புவோம்!

சாவேஸ் ஆட்சிக்கு வந்ததும் கிராமத்திற்கு திரும்புவோம் என்ற முழக்கத்தை முன்வைத்தார். இதன் மூலம் பெரும் நிலப் பண்ணைகளை வைத்திருப்பவர்களுக்கு எதிரான போராட்டம் வெனிசுலாவில் தீவிரமடைந்தது. 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் வறுமையில் உழலும் வெனிசுலாவில் 75 சதவீத விவசாய நிலங்கள் 5 சதவீத நிலவுடைமையாளர்கள் வசம் இருந்தது. இதில் எஸ்டேட் என்று அழைக்கக்கூடிய 44 நவீன விவசாய பண்ணை களை நடத்தும் முதலாளிகளிடம் மட்டும் 6,20,000 ஏக்கர் நிலங்கள் குவிந்திருக்கிறது. இந்த நிலக்குவியல்தான் வெனிசுலாவின் அரசியல் அதிகார மையமாக இருக்கிறது. இந்த நிலக்குவியலை தகர்க்கும் உளியாக செயல்படுகிறார் சாவேஸ்.

சாவேஸ் ஆட்சிக்கு வந்தவுடன், அரசியல் சட்டத்தை திருத்தியதோடு, நிலவுடைமை குறித்த சட்டத்தையும் திருத்தி அமைத்தார். இதன் மூலம் தரிசு நிலங்களை கைப்பற்றுவது உள்ளிட்ட நடவடிக்கைகள் வெகுவேகமாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.

18 வயதில் இருந்து 35 வயதுக்கு உட்பட்டவர்கள் குடும்பத் தலைவரோ அல்லது தனி நபரோ நிலம் வேண்டி அரசுக்கு விண்ணப்பித்தால், அவர்களுக்கு உரிய நிலம் அளிக்கப்படும். அவருக்கு கிடைக்கும் நிலத்தில் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து விவசாயம் செய்து வந்தால், அந்த நிலம் அவருக்கு முழு உரிமையாக்கப்படும். அதே சமயம் அத்தகைய நிலத்தை யாருக்கும் விற்கவோ, அதேபோல் வேறு நிலங்களை வாங்கவோ சட்டத்தில் இடமில்லை. 2003ஆம் ஆண்டு 60,000 நிலமற்ற விவசாய குடும்பங்களுக்கு 5.5. மில்லியன் ஏக்கர் (55 லட்சம் ஏக்கர்) நிலத்தை விநியோகம் செய்து, அந்த மக்களுக்கு சட்ட உத்திரவாதம் வழங்கியுள்ளது வெனிசுலா அரசு. இந்த ஆண்டில் அரசின் இலக்கு 3.5 மில்லியன் ஏக்கர் நிலத்தை விநியோகிப்பது என்பதுதான்; அரசின் உறுதியான நடவடிக்கையால் இலக்கையும் மிஞ்சியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2004ஆம் ஆண்டு மட்டும் 1.5 மில்லியன் ஹெக்டேர் நிலங்கள் 1,30,000 குடும்பங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 6,50,000 பேர் பயனடைந்துள்ளனர் என்று வெனிசுலா நிலவிநியோக புள்ளி விவரம் கூறுகிறது. கிட்டத்தட்ட ஒவ்வொரு குடும்பத் திற்கும் 11.5 ஹெக்டேர் நிலம் கிடைத்துள்ளது. வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கையை 2 மில்லியன் ஹெக்டேர் அளவுக்கு விநியோகிக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.

இத்தகைய நிலவிநியோக நடவடிக்கையால், கிராமப் புறங்களில் நிலவுடைமை வர்க்கங்கள் நடத்திய தாக்குதல்களில், வன்முறைச் சம்பவங்களில் 150க்கும் மேற்பட்ட விவசாய இயக்கத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். வெனிசுலாவில் முதலாளித் துவ ஆட்சியாளர்கள் கிராமப்புற விவசாயிகளை நிலத்தைவிட்டு விரட்டியுள்ளதால், அங்கே விவசாயிகள் இயக்கம் என்பது கூடுதல் வலுப்பெறாத நிலையுள்ளது. பலமான விவசாயிகள் இயக்கம் வெனிசுலாவில் இருந்திருக்குமேயானால், சாவேசின் புரட்சிகர நடவடிக்கை மேலும் வெகுவேகமாக செயல்படுத்துவதற்கு உத்வேகமாக அமையும்.

வெனிசுலாவில் நடைபெறும் நிலச் சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து நேரில் பார்வையிட்ட  பிரேசில் நிலமற்றோர் இயக்கத் தலைவர் ஜோஹோ பெட்ரன் கூறுகையில், நான் காதுகளில் கேட்பதை விட கண்களில் பார்ப்பது அதிகம் என்று புகழ்ந்துரைத்துள்ளார்.

நிலச் சீர்திருத்தம் பொலிவேரியன் பாதை

லத்தீன் அமெரிக்க நாடுகளில் இடதுசாரி அலை வேகமாக சுழன்று அடித்துக் கொண்டிருக்கிறது. புரட்சி வீரன் சேகுவேரா சுடப்பட்ட மண்ணில் இன்றைக்கு இடதுசாரி சிந்தனை கொண்ட ஈவோ மொரேல்ஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஈவோ மொரோல்ஸ் மற்றொரு சாவேசாக உருவெடுத்து வருகிறார். பிடல், சாவேஸ், மொரோல்ஸ் கூட்டு ஏகாதிபத்திய அமெரிக்காவின் அடிவயிற்றை கலக்கிக் கொண்டிருக்கிறது.

இவர் ஆட்சிக்கு வந்தவுடன் எடுத்த முதல் நடவடிக்கையே பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுவை அரசுடைமையாக்கியதுதான். பொலிவியாவில் நிலவுடைமை மிக வித்தியாசமானது. அங்கே இரண்டு விதமான நிவுடைமை நிலவுகிறது. ஒன்று மினிபன்டாஸ் என்று அழைக்கக்கூடிய விவசாய நிலம் மேற்கு பகுதியிலும், லாட்டிபண்டாஸ் என்று அழைக்கக்கூடிய தொழிற்சாலை நிலங்கள் கிழக்குப் பகுதியிலுமாக பிரிக்கப்பட்டு ஆதிக்கம் செலுத்தப்பட்டு வருகிறது.

இங்கும், விவசாய நிலங்களில் ஏகாதிபத்திய வர்த்தகப் பயிர்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. விவசாயம் என்றாலே அது உள்நாட்டு மக்களின் தேவைக்கு என்பது மாறி, அது ஏற்றுமதி செய்வதற்கு என்ற நிலையினை தோற்றுவித்துள்ளது ஏகாதிபத்திய கட்டமைப்பு.

சின்னஞ்சிறு பொலிவியாவில் 35 லட்சம் கிராமப்புற மக்கள் வறுமையின் பிடியில் சிக்கியுள்ளனர். இதில் 40 சதவிகித விவசாயிகள் கடுமையான வறுமையில் உழல்வதாக கூறப்படுகிறது. இவர்களது ஆண்டு வருமானம் வெறும் 600 டாலர் மட்டுமே. அதாவது, ஒரு நாளைக்கு இரண்டு டாலருக்கும் குறைவு.

பொலிவியாவில் எழுந்த நிலத்துக்கான இயக்கம்

பிரேசிலிய அனுபவத்தைத் பின்பற்றி பொலிவியன் நிலமற்றோர் இயக்கம் இன்றைக்கு வெகு வேகமாக பரவி வருகிறது. பொலிவியாவில் உள்ள தரிசு நிலங்களை நிலமற்ற விவசாயிகளுக்கு வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையோடு இந்த இயக்கம் செயல் பட்டு வருகிறது.  இந்த இயக்கத்தின் வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாத முதலாளித்துவ நில பண்ணை முதலாளிகள் நூற்றுக்கணக்கான ஊழியர்களை கொலை செய்து வருகின்றனர்.

இந்த நிலப் பண்ணைகள் குறித்து கூறும் போது பரான்கோ மார்னிக்கோவ் என்ற ஒரே ஒரு நிறுவனம் மட்டும் 14,000 ஹெக்டேர் நிலத்தை தன் வசம் வைத்துள்ளது. இதிலிருந்து அங்குள்ள பண்ணைகளின் ஆதிக்கத்தை அறியலாம். இதேபோல் 100 குடும்பங்கள் மட்டும் 25 மில்லியன் ஹெக்டேர் நிலத்தை தன்வசம் வைத்துக் கொண்டுள்ளது.

அதே சமயம் 2 மில்லியன் மக்கள் (20 லட்சம் பேர்) தங்கள் வசம் வெறும் 5 மில்லியன் ஹெக்டேர் நிலத்தை மட்டுமே வைத்துள்ளனர்.

மொரேல்ஸ் அரசு நிலச்சீர்திருத்த நடவடிக்கையை நிறைவேற்றுவதற்கு முதல் கட்டமாக அரசியல் சட்டத்தில் அடிப்படையான மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. முதல் கட்டமாக பொலிவியாவில் உள்ள 4.5 மில்லியன் ஹெக்டேர் நிலங்களை விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பொலிவிய அரசின் நில விநியோகத் திட்டத்தை எப்படியும் தடுத்துவிட வேண்டும் என்ற நோக்கோடு நிலமுதலைகள் நில பாதுகாப்பு கமிட்டி அமைத்துள்ளனர். இவர்கள் நிலமற்ற விவசாயிகளுக்கு எதிராக வன்முறைத் தாக்குதல்களைத் தொடுப் பதற்கும் தயாராகி வருகின்றனர்.

மொரேல்ஸ் அடிப்படையில் கோக்கோ பயிரிடும் விவசாயிகள் இயக்கத்தின் தலைவர். மேலும், அவரது இயக்கமான சோசலிசத்தை நோக்கி (ஆடிஎநஅநவே வடிறயசன ளுடிஉயைடளைஅ  – ஆடிஎஅநைவேடி யட ளுடிஉயைடளைஅடி, ஆஹளு) என்ற கட்சியும் நிலச் சீர்திருத் தத்தை உறுதியாக மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. முதற் கட்டமாக தரிசு நிலங்களை நிலமற்ற விவசாயி களுக்கு விநியோகிப்பதற்கான நடவடிக்கை துவங்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில் லத்தீன் அமெரிக்க நாடுகளில் இடதுசாரி அலை வீசுவதோடு, கிராமப்புற மக்களின் விடிவெள்ளியாக திகழ்கிறது. இந்த நாடுகளில் மேற்கொள்ளப்படும் நிலச்சீர்திருத்த நடவடிக்கை, லத்தீன் அமெரிக்கா முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி யுள்ளது. இது எதிர்காலத்தில் அந்த கண்டம் முழுவதையுமே மாற்றியமைக்கும் நடவடிக்கைக்கு கொண்டுச் செல்லும். உலகம் முழுவதும் இருக்கும் உழைப்பாளி மக்களுக்கும், இடதுசாரி எண்ணம் கொண்டவர்களுக்கும் லத்தீன் அமெரிக்காவில் நடைபெறும் மாற்றங்கள் ஒரு ரசாயன மாற்றத்தை ஏற்படுத்துவ தோடு, அந்தந்த நாடுகளில் ஒரு இடதுசாரி, சோசலிச எண்ணத்தை கட்டமைப்பதில் மேலும் புது உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விவசாயிகள் தற்கொலையும், வங்க பஞ்சமும்

இந்தியாவின் ஆத்மா கிராமப்புறத்தில் உள்ளது. இந்தியா பெரும் விவசாய நாடுகளில் ஒன்று. 70 சதவீத மக்கள் கிராமப்புறத்தை நம்பியே உள்ளனர். உலகமயமாக்கல், உலக வர்த்தக அமைப்பு டனான ஒப்பந்தம் போன்ற புதிய பொருளாதார கொள்கைகளால், இந்தியாவின் விவசாய கொள்கையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த கொள்கைகள் யாரை வாழ்விப்பதற்காக என்ற கேள்வி பலமாக எழுந்துள்ளது. பசுமைப்புரட்சி கண்ட இந்தியா என்று பீற்றிக் கொண்ட நாட்டில்தான் தற்போது உலகிலேயே விவசாயிகள் தற்கொலை அதிகமாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் பிரதமர் மன்மோகன் சிங் மகாராஷ்டிரத்தில் உள்ள விதர்பா மாவட்டத்திற்கு சென்று 3750 கோடி அளவிலான நிவாரணங்களை வழங்கியுள்ளார். பரிதாபம் என்னவென்றால், பிரதமர் ஒருபுறம் நிவாரணங்களை வழங்கிக் கொண்டிருக்கும் போதே, தற்கொலைகளும் சமகாலத்தில் நிகழ்ந்து கொண்டிருந்தது தான். மகாராஷ்டிரம், ஆந்திரா, கர்நாடகம், கேரளம், பஞ்சாப் என பல மாநிலங்களில் ஆண்டுக்கு 4000 விவசாயிகள் தற்கொலைக்கு உள்ளாகின்றனர். இந்த எண்ணிக்கை இதைவிட அதிகம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஏன் இந்த நிலைமை?

இந்திய ஆட்சியாளர்கள் கடந்த 20 ஆண்டு காலமாக அமெரிக்க மற்றும் மேற்கத்திய நாடுகளின் செல்லப்பிள்ளையாக மாறியதும், உலக வர்த்தக அமைப்பு மற்றும் உலகவங்கியின் கட்டளைக்கு அடிபணிந்து பன்னாட்டு முதலாளிகளுக்கு சேவகம் செய்யும் கொள்கையை கடைப்பிடித்ததன் விளைவுதான் இன்றைக்கு இந்திய விவசாயிகளை இந்த நிலைக்குத் தள்ளியுள்ளது. ஏற்றுமதியை நோக்கமாக கொண்ட வர்த்தக பயிர் (பருத்தி, சோயா…) உற்பத்தியில் ஈடுபடுமாறு விவசாயிகளை ஆசை காட்டி மோசம் செய்ததோடு, உள்நாட்டில் உற்பத்தியாகும் 800க்கும் மேற்பட்ட விவசாய பொருட்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய அனுமதித்தது போன்ற தவறான விவசாய கொள்கைகளால் இந்திய விவசாயிகள் ஓட்டாண்டியாக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் மான்சாண்டோ என்கிற பன்னாட்டு நிறுவனங்களின் போல்கார்ட் பருத்தி விதைகளை பயன்படுத்தி பருத்தி விவசாயத்தில் ஈடுபட்டதும், உற்பத்தி செய்த விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்காததும், உரவிலை உயர்வு, மின்சார கட்டணம், தண்ணீரின்மை, கடன் சுமை, கந்து வட்டி என்று தொடர் சங்கிலியாக பருத்தி விவசாயிகள் கட்டுண்டு கிடக்கின்றனர். இதிலிருந்து மீள்வது எப்படி என்று வழி தெரியாத விவசாயிகள் தங்களுக்கான விடுதலை ஆயுதமாக தற்கொலையை தேர்ந் தெடுக்கின்றனர்.

1987 இல் ஆந்திராவில் மட்டும் 0.4 மில்லியன் ஹெக்டேரில் பருத்தி விவசாயம் மேற்கொள்ளப்பட்டது. 2005இல் இது 1.2 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவு விரிவடைந்துள்ளது. அதாவது, வர்த்தகப் பயிர் உற்பத்தி எந்த அளவிற்கு விவசாயிகளை பொறியில் சிக்க வைத்துள்ளது என்பதை இந்த விவரம் காட்டுகிறது. மேலும் வர்த்தகப் பயிர் உற்பத்தியில் ஈடுபட்ட நிலங்கள் தற்போது வேறு எந்தவிதமான பாரம்பரிய நெல், கோதுமை போன்ற உணவுப் பயிர்களை உற்பத்தி செய்ய முடியாத சூழலுக்கு தள்ளியுள்ளது. பணப் பயிர் (வர்த்தகப் பயிர்) என்ற சொல்லே ஒரு ஏமாற்றுதான். முதலாளித்துவ அரசியல்வாதிகள்தான் இந்த சொல்லை வைத்து விவசாயிகளை ஏமாற்றுகிறார்கள். உணவுப் பாதுகாப்பு குறித்த உணர்வற்ற சுரண்டும் கூட்டத்திற்கு, விவசாயிகளை சுரண்ட இந்த ஏமாற்றுச் சொல் பயன்படுகிறது.

மேற்கண்ட அனைத்து நடவடிக்கைகளையும் மிஞ்சும் வகையில் மன்மோகன் சிங் அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, அந்நிய நாட்டில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்திய நாட்டிற்குள் விவசாயம் செய்துக் கொள்வதற்கு 100 சதவீதம் அனுமதிக்கப்போவதாக அறிவித்துள்ளது. உள்நாட்டு நவீன பண்ணையார்களை சமாளிப்பதற்கே கடினமாக உள்ள சூழ்நிலையில், விவசாயத்தில் அந்நியரை அனுமதிப்பது என்பது இந்திய நாடே தற்கொலைப் பாதைக்கு செல்வதற்கு ஒப்பாகும். நிலவிநியோகம் குறித்து அதிகமான விழிப்புணர்வு ஏற்பட்டு வரும் நேரத்தில் கார்ப்பரேட் விவசாய முதலாளிகள் இந்திய கிராமப்புறத்தில் உள்ள ஒட்டுமொத்த நிலத்தையும் சுரண்டிச் செல்வதற்குத்தான் இந்த அறிவிப்பு பயன்படும்.

இறக்குமதியாகும் உணவு தானியம்

தற்போது மத்தியில் உள்ள மன்மோகன் சிங் அரசு 5 லட்சம் டன் கோதுமையை ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்துள்ளது.  இந்த உணவு தானிய இறக்குமதி குறித்து ஆட்சியாளர்கள் பல்வேறு நொண்டிச்சாக்குகளை கூறி வருகின்றனர். அதாவது, நம்முடைய உணவு தானிய கையிருப்பை சமப்படுத்துவதாக கூறுகின்றனர். அதுவும் இறக்குமதி செய்யப்பட்டுள்ள கோதுமையில் பூச்சுக் கொல்லி மருந்துகள் சாதாரண அளவைவிட கூடுதலாக இருப்பதாக நாடாளுமன்றத்திலேயே குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட கிராமப்புறத்தை கொண்ட ஒரு நாட்டில் தானிய இறக்குமதி என்ற கொள்கை எதை நோக்கிச் செல்லும் என்பதே நமது கேள்வி! நமது விவசாயம் திவாலாகி வருவதையும், உட்டோ (WTO) உடன்பாட்டின் அடிப்படையில் விவசாய பொருட்களை இறக்குமதி செய்யவும், நமது மார்க்கெட்டை பன்னாட்டு நிறுவனங்களுக்கு திறந்து விடும் மோசமான போக்கைத்தான் இது வெளிப்படுத்துகிறது. மேலும் நமது நாட்டு விளை பொருளான பருப்பு போன்றவற்றின் ஏற்றுமதிக்கு தடை விதித்து வருவதையும் கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது.

விவசாயத்துறையில் அந்நியர்களை ஈடுபட அனுமதித்தால் நம்நாட்டில் உற்பத்தி செய்து, அதை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்து, அங்கிருந்து நாம் இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம். இத்தகைய ஆபத்துக்களை நமது பொருளாதார புலி சிதம்பரம் வகையறாக்களுக்கு தெரியாததல்ல; எல்லாம் ஏகாதிபத்திய – உலகவங்கியின் அடிமைத்தன விசுவாசம்தான் இத்தகைய செயல்பாடுகளில் அவர்களை தீவிரமாக ஈடுபடத் தூண்டுகிறது.

கடந்த வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் 6 லட்சம் டன் உணவு தானியம் கையிருப்பில் உள்ளதாக கூறிக் கொண்டு, இது நம்முடைய கையிருப்பு தேவையை விட அதிகமாக இருக்கிறது என்று கூறி, பொது விநியோகத்திற்கு வழங்கப்படும் தொகையை விட மிகக் குறைவான அளவுக்கு வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது.

24 சதவீதம் பேர் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள நம் நாட்டில், ஒரு புறத்தில் பட்டினிச் சாவுகளும், விவசாயிகள் தற்கொலைகளும் நடைபெற்று வருவது மத்திய அரசு கடைப் பிடிக்கும் புதிய விவசாய கொள்கை நம் மக்களை வாழ்விக்காது என்பதை பட்டவர்த்தனமாக உணர்த்துகிறது.

வங்கப் பஞ்சம் படிப்பினை!

பிரிட்டிஷ் இந்தியாவில் 1943 இல் வங்கத்தில் ஏற்பட்ட கடுமையான பஞ்சமும், அதனால் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இறப்புக்கும் யார் காரணம்? இதன் மூலம் இந்திய அரசு பெற்ற அனுபவம் என்ன? இது குறித்து ஜவஹர்லால் நேரு, தன்னுடைய கண்டுணர்ந்த இந்தியாவில் எழுதியவற்றை பார்ப்போம்:

அதிகாரிகளின் தொலைநோக்கின்மையும், அலட்சிய மனோபாவமும் போரின் பின் விளைவும்தான் இப்பஞ்சத் திற்கு காரணம். சாதாரணமான அறிவுடையவர்களாலேயே பஞ்சத்தின் அறிகுறியைக் கணிக்க முடிந்தது. உணவு நிலையைச் சரிவரக் கையாண்டிருந்தால், இத்தகைய பஞ்சத்தைத் தவிர்த்திருக்க முடியும். போரால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நாட்டிலும், போரால் விளையும் இத்தகைய பொருளாதார சிக்கலை, போர் தொடங்கும் முன்னரே கணித்துத் தயார் நிலையில் இருந்திருக்கிறார்கள். இந்தியாவில் போர் தொடங்கி மூன்றரை ஆண்டுகள் கழித்தே உணவுத்துறை  துவக்கப்பட்டது.

மேலும், இந்தியாவில் உணவுப் பற்றாக்குறை 40 லட்சம் டன் என்று கணிக்கப்பட்ட சூழ்நிலையில், பிரிட்டிஷ் – இந்திய அரசு 10 லட்சம் டன் உணவுதானியத்தை ஏற்றுமதி செய்தது. விலை யேற்றம் 10 சதவீதத்திற்கும் அதிகமாக ஏறிக் கொண்டே சென்றது. மக்களின் வாங்கும் சக்தி முற்றிலும் பறிக்கப்பட்டு, உணவுக்காக கடுமையாக சுரண்டப்பட்டனர். பசியும், பட்டினியுமாக கிடந்த மக்கள் வாழ வழித்தெரியாமல் கடுமையான நோய்களுக்கு ஆளாகி, எலும்பு கூடுகளாய் – நடைபிணங்களாய் மாறி தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்களை பலிகொண்டது வங்கப் பஞ்சம். ஒரு புறம் எந்த உணவுப் பொருட்களும் கிடைக்காததால் பஞ்சம் வந்ததோ, அந்த பொருட்களை விற்பனை செய்ததால் கிடைத்த கொள்ளை லாபத்தில் ஆளும் வர்க்கம் சுகம் கண்டு கொண்டிருந்தனர்.!

வங்கப் பஞ்சம் குறித்தும், அதனுடைய கொடுமைகள் குறித்தும், மக்களது துன்ப – துயரங்களை விளக்கியும் பங்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய ஆனந்த மடம் நாவலைப் படித்தால் அதன் முழுமையான பரிணாமத்தை உணர முடியும்.

மொத்தத்தில் அரசுகளின் தவறான உணவுக் கொள்கையும், விவசாய கொள்கையும் மக்களை பசி – பட்டினிச் சாவுகளுக்கு கொண்டுச் செல்லும் என்பதைத்தான் வங்கப் பஞ்சம் உணர்த்து கிறது. இதன் பின்னணியில் தற்போது இந்திய அரசின் செயல் பாடுகளை ஒப்பு நோக்கும் போது, இந்திய அரசின் விவசாய கொள்கை எதை நோக்கிச் செல்கிறது என்பதை உணரலாம்.

தற்போது மேற்குவங்கத்தில் இந்த பஞ்சத்தின் அனுபவங்களை உணர்ந்த இடதுசாரி அரசு செய்த நிலச்சீர்திருத்தத்தின் விளைவாக 14 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் விநியோகிக்கப்பட்டு 26 லட்சம் நிலமற்ற விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இதில் 56 சதவீதம் பேர் தலித் மற்றும் பழங்குடியின மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் ஒட்டுமொத்தமாக மேற்கொள்ளப்பட்ட நில விநியோகத்தில் மேற்குவங்கத்தில் மட்டும் வழங்கப்பட்டது  20 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் விளைவாக மேற்கு வங்கத்தில் உணவு உற்பத்தி மிக கணிசமான அளவுக்கு பெருகி யிருக்கிறது. இதேபோல் கேரளத்தில் மேற்கொள்ளப்பட்ட நிலச்சீர்திருத்த நடவடிக்கையும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்துள்ளது.

தமிழகத்தில் நில விநியோகம்

சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக தேர்தலில் வெற்றி பெற்ற திமுக தனது தேர்தல் அறிக்கையில் 55 லட்சம் ஏக்கர் தரிசு நிலங்களை இரண்டு ஏக்கர் விதம் 26 லட்சம் குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது. திமுக அரசின் நில விநியோக அறிவிப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது. இந்த நில விநியோக நடவடிக்கையை வெற்றி பெறச் செய்வதில் மார்க்சிஸ்ட்டுகளுக்கு மிக முக்கியமான பங்குள்ளது. கிராமப்புறத்தில் உள்ள நிலமற்ற விவசாய தொழிலாளர்களை அணிதிரட்டி, அரசுக்கு சொந்தமான தரிசு நிலங்களை அடையாளம் காணுவதோடு, அதற்காக எழுச்சிமிக்க வலுவான விவசாய இயக்கத்தை நடத்துவதன் மூலம்தான் இந்த நில விநியோக நடவடிக்கையை வெற்றிகரமாக பூர்த்தி செய்ய முடியும்.

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் அம்மையார் ஜெயலலிதா இந்த 55 லட்சம் ஏக்கர் நிலத்தை பெரும் கார்ப்பரேட் நிறுவனங் களுக்கு தாரைவார்க்க திட்டமிட்டிருந்தார். ஆனால், இப்போது கூறுகிறார் 55 லட்சம் ஏக்கர் தரிசு நிலம் தமிழகத்தில் இல்லவே இல்லையென்று. ஜெயலலிதாக்களின் விசுவாசம் நிலமற்ற கூலி விவசாயிகள் மீதல்ல; கார்ப்பரேட் பண்ணைகளிடத்தில்தான்.

மேலும், தமிழகத்தில் நிலச்சீர்திருத்த சட்டத்தை அமலாக்குவதில் திமுக அரசு உரிய – தீவிர நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இதைத்தான் இடதுசாரிகளும், மக்களும் விரும்புகின்றனர். நிலச்சீர்திருத்த சட்ட அமலாக்கம் குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் 26வது மாநில மாநாடு முன்வைத்த அறிக்கையில் உள்ள பகுதியை இங்கே சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்கும்.

தமிழகத்தில் நிலச்சீர்திருத்த சட்டம் என்பது முற்றிலும் முடமாக்கப்பட்ட நிலையிலேயே இருக்கிறது. உச்சவரம்பு சட்டத்தின் மூலம் 20 லட்சம் ஏக்கர் நிலம் உபரியாக கிடைக்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், சட்டம் நிறைவேற்றப்பட்டு 40 ஆண்டுகளுக்கு பின்னரும் கையகப்படுத்தியுள்ள நிலம் 1.9 லட்சம் ஏக்கர் எனவும் அரசு தெரிவித்துள்ளது.

அதே போல்,

தலித் மக்களுக்கென்றே ஒதுக்கப்பட்ட சுமார் 3 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலம் அம்மக்களிடமிருந்து அபகரிக்கப்பட்டு பலருடைய அனுபவத்தில் உள்ளது. இந்நிலங்களை மீட்டு தலித்துக்கள் வசம் ஒப்படைக்க சட்டரீதியான தடைகள் ஏதுமில்லை

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மேற்கண்ட கூற்று, தமிழக நிலச்சீர்திருத்தத்தில் செய்ய வேண்டிய இலக்கினை மிகச் சரியாக சுட்டிக்காட்டியுள்ளது. தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளபடி 55 லட்சம் ஏக்கர் தரிசு நிலத்தை விநியோகிப்பதோடு நிற்காமல், நில உச்சவரம்பு சட்டத்தில் உள்ள ஓட்டைகளை அடைத்து, நிலச்சீர்திருத்த நோக்கிலான நிலஉச்சரம்பை கொண்டு வரவேண்டும்.

காமராஜர் ஆட்சிகாலத்தில் 30 ஸ்டாண்டர்டு ஏக்கர் என்று இருந்ததை கலைஞர் ஆட்சிக்காலத்தில் 15 ஸ்டாண்டர்டு ஏக்கராக மாற்றப்பட்டது. இருப்பினும் இந்த உச்சவரம்பு சட்டத்தில் நிலவுடை மையாளர்களது நிலங்கள் குடும்பத்தில் உள்ள அனைத்து நபர்களின் பெயர்களிலும், பினாமிகள் பெயர்களிலும் மாற்றம் செய்யப்பட்டு அனுபவித்து வரப்படுகிறது. அதோடு விவசாய நிலங்கள் கரும்பு விளைச்சல் நிலம், பழத்தோட்டங்கள், பால்பண்ணைகள், டிரஸ்டுகள், தர்ம ஸ்தாபனங்கள் என்று பல்வேறு வடிவங்களில் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி அனுபவித்து வருகின்றனர். இதனாலேயே இந்தச் சட்டம் உச்சரம்பா, மிச்ச வரம்பா என்ற கேலிக்கும் இட்டுச் சென்றது. எனவே கடந்தகால அனுபவத்தை கணக்கில்கொண்டு  நிலஉச்சவரம்பு சட்டத்தை முழுமையாக அமலாக்கி நிலமற்ற விவசாய தொழிலாளர்களது வாழ்வில் அடிப்படையான மாற்றத்தை கொண்டுவருவதன் மூலம் தமிழக வரலாற்றில் புதிய சகாப்தத்தை ஏற்படுத்திட முடியும். இத்தகைய அடிப்படையான விஷயங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடதுசாரி – ஜனநாயக சக்திகளும் களத்தில் உறுதியாக துணை நிற்கும்.

நிலம் – உணவு – வேலைக்கான இயக்கம்

ஜூன் 8 – 10, 2006 நடந்து முடிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி ஆகஸ்ட் மாதத்தில் உணவு – நிலம் – வேலை என்ற மூன்று முழக்கத்தை முன்வைத்து நாடு தழுவிய இயக்கம் நடத்துவதற்கு அறைகூவல் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நிலச்சீர்திருத்த நடவடிக்கை என்பது கிராமப்புற மக்களின் வேலைவாய்ப்பு, உணவு தேவை போன்றவற்றை பூர்த்தி செய்யும் இணைப்பு சங்கிலியாக செயல்படும் மிக முக்கியமான நடவடிக்கை! லத்தீன் அமெரிக்காவில் நடைபெறும் நிலச்சீர்திருத்த நடவடிக்கையும், இந்தியாவில் மேற்குவங்கம் – கேரளத்தில் மேற்கொள்ளப்பட்ட நிலச்சீர்திருத்த நடவடிக்கையும் நாடு முழுவதும் உள்ள விவசாய தொழிலாளர் களுக்கும், கிராமப்புற விவசாயிகளுக்கும் நம்பிக்கையூட்டும் நிகழ்வாகும்.

நிலச்சீர்திருத்தம் உலக அரசியல் அரங்கின் முக்கிய அஜண்டாவாக மாறி வருவதைத்தான் மேற்கண்ட லத்தீன் அமெரிக்க அனுபவங்கள் உணர்த்துகின்றன. இந்திய அரசியலிலும் நிலச்சீர்திருத்த முழக்கத்தை ஒரு பௌதீக சக்தியாக மாற்றுவது மார்க்சிஸ்ட்டுகளின் வரலாற்று கடமையாகிறது.

தகவல் ஆதாரம்

http://www.landaction.org
http://en.wikipedia.org/wiki/Landless_Workers%27_Movement
http://www.pbs.org/frontlineworld/rough/2005/12/brazil_cutting.html#
http://news.bbc.co.uk/1/hi/world/americas/4550855.stm
http://www.zmag.org/weluser.htm
http://www.venezuelanalysis.com

Rural Development Institute, Land Reform in the 21st Century
http://www.rdiland.org

நிலப்பிரபுத்துவத்தை ஒழிக்க நாம் காட்டும் பாதை, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வெளியீடு – 1974.