19 ஆம் நூற்றாண்டு தென் தமிழக சமூக இயக்கம்

பேரா.  கா. அ. மணிக்குமார்

தற்கால தமிழகத்தில் சமூக எழுச்சி, சாதி எதிர்ப்பு இயக்கங்கள் எப்போதும் ஈ.வெ.ரா.  பெரியார், திராவிட இயக்கங்களாலேயே நடந்ததாகக் கருதப்படுகின்றன. துவக்க காலத்திய சாதிக் கட்டமைப்பு, சமூக ஏற்ற தாழ்வுகளுக்கு எதிரான போராட்டங்களில்  தீவிர பங்களிப்பு செய்த தனிநபர்கள், அமைப்புகளின் பெயர்கள் பொது விவாதத்தில் இடம் பெறாமல் போய் விட்டது.  மக்களைக் கவர்ந்த ஒரு பிரசித்தி பெற்ற தலைவரின் தலைமையில் இல்லாத கூட்டு இயக்கங்கள் பெரும்பாலும் நிராகரிக்கப்பட்டனவாகவே உள்ளன. நாடார்கள் (சாணார்கள் என்றும் அழைக்கப்பட்டனர்) ஒரு சமூக பிரிவு என்ற வகையில் திராவிட இயக்கங்கள், ஈ.வெ.ரா பெரியாரின் காலத்திற்கு முன்பே, தென் தமிழகத்தில் பல சமூக எழுச்சி இயக்கங்களை நடத்தியுள்ளனர்.  சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக அவர்களின் முதல் எதிர்ப்பு இயக்கம் என்பது கிறித்தவ மதத்தை தழுவுதல் என்ற வகையில் அமைந்தது. இந்த மத மாற்றம் அவர்களுக்கு ஆங்கில கல்வி கற்கவும், அதன் மூலம் சமுதாயத்தில் அங்கீகாரம், அதிகாரம் பெற பயன்பட்டது. இதில் ஐரோப்பிய கிறிஸ்தவ மிஷினரிகளின் பங்களிப்பு பாராட்டத்தக்கது. மதமாற்ற முறையை தேர்வு செய்யாதவர்கள், பின்னர் சிறு வியாபாரம், வணிகத்தில் ஈடுபட்டு, தங்களுக்கென்று சுதந்திரமான வாழ்நிலையை ஏற்படுத்திக் கொண்டனர்.

ஐரோப்பிய வர்த்தகர்களின் நம்பிக்கை, நன்மதிப்பைப் பெற்ற நாடார் மக்கள், அவர்களின் அனுசரணையோடு பணப்பயிர்கள் பயிரிடுவது, பஞ்சு, புகையிலை வர்த்தக தரகுப் பணிகளில் ஈடுபட்டு, பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைந்தனர்.  இவர்களின் வாழ்க்கைத் தரத்தில் ஏற்பட்ட முன்னேற்றம், பண்பாடு, கலாச்சார ரீதியான மேம்பாட்டிற்கான எதிர்பார்ப்பை அவர்களிடையே ஏற்படுத்தியது. அக்காலத்தில் நிலவிய சமூக சூழலில், பின்தங்கிய பிரிவினராக இருந்த நாடார் சமுதாய மக்கள் எப்படி தங்கள் அபிலாசைகளை வெளிப்படுத்தினார்கள் என்பதையும், சமூக அமைப்பில் இருந்த ஏற்றத் தாழ்வுகளை எப்படி எதிர்த்து நின்றார்கள் என்பதையும் இக்கட்டுரை விவாதிக்கிறது.

1

“ஒர் சமூக இயக்கம் என்பது ஒரு பொதுவான நலனை முன்னிறுத்தி, இலக்கை அடைவதற்காக அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு வெளியே எடுக்கும் கூட்டு முயற்சி” என்று வரையறுக்கப்படுகிறது. “சூழலியலும் – சமூகமும்: ஓர் அறிமுகம்”  என்ற நூலின் ஆசிரியர் லூக் மார்டெல் இன் கருத்துப்படி, இதில் மூன்று அம்சங்கள் உள்ளன :

 • 1.  சமூக இயக்கம் ஒரு பொது நலனை முன்னிறுத்தி, இலக்கை வென்றிட, கூட்டு இயக்கதில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறது.
 • 2.  இது ஒர் சமூகப் பொது நலனை அடிப்படையாகக் கொண்டது.
 • 3.  இது அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளுக்கு வெளியே தன் அரசியல், பண்பாட்டு இலக்குகளை அடைய தொடர் நடவடிக்கை எடுக்கும்.

            இந்த விளக்கம் தங்கள் குடியுரிமையை வலியுறுத்தி தென் தமிழகத்தில் நாடார்கள் நடத்திய இயக்கங்களுக்கு சரியாக பொருந்துவதாக உள்ளது.

உயர் சாதி என்று சொல்லப்பட்வர்களால் அடக்குமுறையையும், துன்பங்களையும் அனுபவித்து வந்த நாடார் சமுதாய மக்களிடையே, கிறிஸ்தவ மிஷினரிகள் சாதிய அமைப்பின் மீது ஏற்படுத்திய தாக்குதல்கள், கிறிஸ்தவ மதத்தை பரப்ப அவர்கள் எடுத்த முயற்சிகள் மிகச் சரியாக செயல்பட்டது.  1797ஆம் ஆண்டு கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய நாடார் சமூகத்தை சார்ந்த சுந்தரம் என்ற டேவிட், திருச்சபையின் உபதேசியராக நியமனம் செய்யப்பட்ட பிறகு, திருநெல்வேலி மாவட்டத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நாடார் சமுதாய மக்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாறியதை காண முடிந்தது.   அப்போது திருநெல்வேலி மாவட்ட முதலூரில் (தற்போது முதலூர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது), முதல் கிறிஸ்தவ நாடார் குடியிருப்பு ஏற்படுத்திய பிறகு (1799), 40 ஆண்டுகள் கழித்து கால்டுவெல் திருநெல்வேலி வந்தார். 1841ஆம் ஆண்டின் இறுதியில் கால்டுவெல் திருநெல்வேலிக்கு வந்த போது, திருநெல்வேலி மாவட்டத்தில் 40,000 நாடார்  கிறிஸ்தவர்கள்  இருந்தார்கள். கால்டுவெல் திருநெல்வேலி மாவட்டத்தில் நாடார் மக்களோடு 30 ஆண்டுகள் இணைந்து பணிபுரிந்தார்.

விசித்திரம் என்னவென்றால், நாடார் சமுதாயத்தைப் பற்றி கால்டுவெல்-இன் கருத்திற்கு ஆட்சேபணை தெரிவித்தவர்கள் நாடார் சமுதாயத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்களே. கால்டுவெல் எழுதிய “திருநெல்வேலி சாணார்கள்” என்ற நூலில் அவர் எழுதிய குறிப்பைப் பார்த்தால் இந்த ஆட்சேபணைக்கான காரணம் வெளிப்படையாக தெரியும். அந்த குறிப்பில் கால்டுவெல், “…மேற்கிந்திய தீவுகளில் வசிக்கும் விடுதலை பெற்ற அடிமைகளை சாணார் இன மக்களோடு ஒப்பீடு செய்தவர்கள், அறிவுத்திறமை, தேக பலம், சுறுசுறுப்பில் நீக்ரோக்கள் சாணார் மக்களை விட உயர்ந்தவர்களாக உள்ளனர் என்று கருதுகின்றனர்…  காலனி நாடுகளில் உடல் உழைப்புப் பணிகளில்  ஈடுபட்டுள்ள கடை நிலையில் உள்ள இந்துக்களை விட, நீக்ரோக்கள் மேம்பட்ட நிலையில் இருப்பதைப் பார்க்கும் போது, ஒரு இனத்தின் உடல் வலிமைக்கும், மனத்திண்மையை மேம்படுத்தும் திறமைக்கும்  பொதுவானதோர் சம்பந்தம் இருக்கிறது என்ற  கருத்து சரியானதென நிருபணமாகிறது” என்றார்.

    நாடார் சமுதாய மக்களை பிற தாழ்த்தப்பட்ட சாதி மக்களோடு ஒப்பீடு செய்த கால்டுவெல் “மேற்குக் கரையோர அடிமைகள் அல்லது மலைப்பகுதியை சார்ந்த அடிமைகளின் அறிவுத்திறன் பற்றி நான் முழுமையாக அறிந்திருக்கவில்லை. ஆனால் சமூக படிநிலையில் மேல் நிலையில் உள்ள சாதிகள் தொடங்கி கீழ் நிலையில் உள்ள சாதிகள் வரை பார்த்தால், சாணார் சமுதாய மக்களின் பயம் கலந்த, குழப்பமான மனநிலையை வேறு யாரோடும் ஒப்பீடு செய்ய முடியாது என்பதில் உறுதியாக உள்ளேன்” … சாணார் மக்களைவிட உயர்சாதி மக்களோடு தங்களுடைய அன்றாட தொடர்புகளை கூடுதல் நெருக்கத்துடன் கொண்டுள்ள பறையர் இன மக்களின் அறிவுத்திறன் கூடியுள்ளது. அவர்களின் பேச்சு மற்றும் உச்சரிப்புத்திறன் கூட துல்லியம் அடைந்துள்ளது” என முடிக்கிறார்.

 நாடார் மக்களின் குணம், சரீரம், அறிவாற்றல் பற்றி கால்டுவெல்-இன் வரையறையை வெறும் பிதற்றல்கள் என்று தற்கால ஆய்வாளர்கள் கண்டித்து நிராகரிக்கின்றனர். கால்டுவெல்-இன் இந்த கருத்து “வெள்ளையர்கள்தான் உயர்ந்தவர்கள்” என்ற காலனி ஆதிக்க கருத்தோட்டத்தின் அடிப்படையில் சொல்லப்பட்டது.  ஏனென்றால் அதே நேரத்தில் கிறிஸ்தவ பாதிரியார்கள் எடுத்துக்  கொண்ட முயற்சியின் விளைவாக நாடார் சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்களை விவரிக்கும் கால்டுவெல், நாடார்களை பண்படுத்தி நாகரீகமாக்க எடுத்த முயற்சிகள் வெற்றிபெற்றது போல் “சாணார் இன மக்களின் பூர்வீக நிலைமை எப்படி இருந்திருந்தாலும் இப்போது தென் இந்தியாவில் உள்ள முற்போக்கான பூர்வ குடிமக்கள் மற்றும் சாதிகளில், இவர்கள் மிக உயர்ந்த இடத்தை பிடித்துள்ளார்கள் என்று நான் கருதுகிறேன்” என்று சொல்கிறார்.

சில குறிப்பிட்ட நாடார்களின் எதிர்ப்புகள் மட்டுமல்லாது, கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய நாடார்களில் அருமைநாயகம் என்ற சட்டாம்பிள்ளையின் தலைமையில் ஒரு நாடார் பிரிவினர் கால்டுவெல் சொன்னது தவறு என்று நிரூபித்தனர். சரிசம வாய்ப்பு கிடைத்தால் எவ்வளவு ஒடுக்கப்பட்டவர்களாக இருந்தாலும் சமூகத்தில் சிறப்பான அந்தஸ்துகளில் பரிணமிக்க முடியும் என்பதற்கு அருமை நாயகம் ஒரு உதாரணம். அருமை நாயகம் ஒரு சிறந்த அறிவாளி. அவர் ஆங்கிலம், சமஸ்கிருதம், ஹீப்ரு, லத்தீன், கிரேக்கம் ஆகிய மொழிகளில் பாண்டித்தியம் பெற்றிருந்தார். அவர் மேற்கத்திய கிறிஸ்தவத்தை விமர்சனம் செய்தார். நாசரேத்தில் விவிலிய சேவையில் சுமார் 20 ஆண்டுகள் பணியாற்றிய அருள்திரு A.F. கேமியரர் என்ற பாதிரியாரின் அதிகாரத்திற்கு அடிபணிய மறுத்தார். அருமைநாயகம் அவர் வகித்த பொறுப்பிலிருந்து திருச்சபையால் நீக்கப்பட்ட பின்னர், பிரகாசபுரத்தில் (தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது) “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இந்து தேவாலயத்தை” தொடங்கினார். இந்த புதிய அமைப்பில் உடனடியாக சுமார் 2,500 பேர் உறுப்பினராக இணைந்தனர்.

நாடார் சமுதாய மக்கள் இலங்கையிலிருந்து வந்தவர்கள் என்று கால்டுவெல் மேலும் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை முன்வைத்தார். திருநெல்வேலி மாவட்டத்தின் பூர்வீக குடிமக்கள் பற்றி விவாதிக்கும் போது, அவர் பின் வருமாறு எழுதுகிறார்: “பிராமணர்கள் வடக்கிலிருந்து வந்தவர்கள் என்று சொல்லப்படுவதில் எந்தவித சந்தேகமும் இல்லை. நாயக்கர்களும், பிற தெலுங்கு சாதி மக்களும் வடக்கிலிருந்து வந்தவர்கள் என்பதிலும் எந்த சந்தேகமும் இல்லை. அதுபோல வெள்ளாளர்கள் சோழ நாட்டிலிருந்தும், சாணார்கள் இலங்கையிலிருந்தும் வந்தவர்கள் என்றும் பொதுவாக கருதப்படுகிறது.” 

இது எந்தவித ஆதாரமும் இல்லாத வெற்று அறிக்கை. ஈழவர்கள் (அவர்கள் பெயர் குறிப்பிடுவது போல்) இலங்கையிலிருந்து கேரளாவிற்கு வந்தவர்கள். வடக்கு கேரளாவில் உள்ள ஈழவர்கள் “தீயர்கள்” என்று அழைக்கப்பட்டனர். வரலாற்று ஆசிரியர் K.M. பணிக்கர்   “நாடார்கள் பாலிநேச பூர்வீகக் குடியினர். இவர்கள் பாரம்பரியமாக தென்னை மரம் வளர்த்தல், மரம் வெட்டுதலை தொழிலாக கொண்டவர்கள்” என்கிறார்.  ஈழவ மக்களைப் போன்று, பனை மரத்திலிருந்து கள் இறக்கும் தொழில் திருநெல்வேலியில் உள்ள சாணார்கள் செய்து வந்ததால், அவர்களும் இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து இந்தியாவிற்கு வந்தவர்கள் என்ற முடிவுக்கு கால்டுவெல் வந்திருக்கலாம். பின்னாளில் மாவட்டக் குறிப்புகள் தயாரித்த அதிகாரிகள் உட்பட அனைத்து  ஆய்வாளர்களும் கால்டுவெல் எழுதிய “திருநெல்வேலி மாவட்ட வரலாற்றை” முழுமையான பரிசீலனைக்கு உட்படுத்தாமல் தங்களுக்குகந்தவாறு பயன்படுத்திக் கொண்டனர்.

இலங்கையின் வரலாற்றை முழுமையாக அறிந்த ஒரு நபர், சாணார்கள் இலங்கையிலிருந்து வந்தவர்கள் என்ற கால்டுவெல்-இன் கருத்தை ஏற்று கொள்ள மாட்டார்கள்.  மானுடவியலாளர்களிடையேயான ஒருமித்த கருத்து என்னவென்றால், ஆரியர்களின் வருகைக்கு முன்பே இலங்கையில் உள்ள பூர்வ குடிமக்களான வேடர்கள், நாகர்கள், மற்றும் யாக்கர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். ஆரியர்களின் குடியேற்றம் என்று சொல்லப்பட்டது பெரும்பாலும் கி.பி. 4ஆம் அல்லது 5 ஆம் நூற்றாண்டில் கலிங்க நாட்டிலிருந்து விஜயன் என்ற அரசனின் வருகையை யொட்டி நடந்திருக்க வேண்டும் என்று கருதலாம். அதிலிருந்து இலங்கையோடு உள்ள எல்லா வித நடவடிக்கைகளும் தென் இந்தியாவிலிருந்தே நடந்து வந்துள்ளது.

இலங்கையை தமிழ்நாட்டிலிருந்து பிரிக்கும் கடல் பகுதி 20 மைல் தூரம் மட்டுமே என்பதால், தமிழ்நாட்டின் பல பகுதியிலிருந்து மக்கள் புலம் பெயரவும், இலங்கையின் வட பகுதியில் உள்ள பூர்வகுடி மக்களோடு கலந்து வாழவும் செய்தனர். மகாபலிபுரம் ஒரு துறைமுகமாக செழித்து விளங்கியுள்ளது என்றும், பல்லவர்கள் காலத்தில் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே கடல் வணிகம், கடற்பயணம் தழைத்தோங்கியிருந்திருந்தது என்றும் வரலாற்று அறிஞர் K. K. பிள்ளை எழுதுகிறார். தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு பெருமளவு மக்கள் பயணம் செய்தது, தொடர்புகள் ஏற்பட்டது இக்கால கட்டத்திலிருந்து தொடங்கியிருக்கலாம். 16வது நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து சென்ற சுமார் 40 சாதி மக்கள் இலங்கையின் யாழ்ப்பாணத்தில் குடியேறியுள்ளனர். அப்படி குடியேறியவர்களில் பிராமணர்கள், வெள்ளாளர்கள் தவிர செட்டியார்கள், அகமுடையார், மறவர்கள், மீனவர்கள், வன்னியர்கள், ஆசாரிகள், தச்சர்கள், வண்ணார்கள், சவரத்தொழிலாளர்கள் ஆகியோர் முக்கியமானவர்கள்.  பிற சாதிகளான வெள்ளாளர்கள், மறவர்கள், செட்டியார்கள் போன்று நாடார்கள், சாணார்கள் பற்றி இலங்கையின் வரலாற்றுக் குறிப்புகளில் தகவல்கள் ஏதும் கிடையாது. தற்போது இலங்கையில் உள்ள கள் இறக்கும் தொழிலாளர்கள் “துருவர்கள்” என்றே அழைக்கப்படுகிறார்கள்.

ஒரு காலத்தில் நாடார் மக்கள் பிறர் பொறாமைப்படும் அளவிலான இடத்தில் இருந்துள்ளார்கள் என்றும், அவர்கள் பாண்டிய மன்னர்களை எதிர்த்து நிற்கும் அளவிற்கு வலிமையாக இருந்துள்ளார்கள் என்றும் வாய் மொழி வரலாறு ஒன்று கூறுகிறது. அவர்களின் தகுதிக்கு மீறிய அகந்தையால் வெறுப்படைந்த ஒரு பாண்டிய மன்னர், நாடார் இன மக்களை தண்டிக்கும் வகையில், அவர்களை திருநெல்வேலி மாவட்டத்திற்குள் உள்ள வறண்ட, சாகுபடிக்கு உதவாத தரிசு நிலப்பகுதியில் வாழ வேண்டும் என்று உத்தரவிட்டு, அவர்களை அப்பகுதிக்குள் கட்டுப்படுத்தி வைத்தார். இருந்தாலும், தங்கள் கடின உழைப்பினால், தற்போது திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகமாக காணப்படும் பனை மரங்களை வளர்த்து, பனை பொருட்கள் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்து வாழ்ந்து முன்னேறினர்.

நாடார் இன மக்களின் காவல் தெய்வங்கள் பெரும்பாலும் திருநெல்வேலி மாவட்டத்தின் பத்ரகாளி (பத்ர என்றால் பனை ஓலை), வேறு பட்ட வடிவங்களை கொண்ட அய்யனார் போன்ற தெய்வங்களாகும். நாடார்களின் பூர்வீகம்  திருநெல்வேலி மாவட்டம் என்று உரிமை கொண்டாடுவதற்கு இது உதவுகிறது.  நாடார் மக்கள் கொற்கையை (கடல் கொண்டு அழிந்ததால் அதன் முக்கியத்துவத்தை இழந்த ஊர்) தலைமையிடமாகக் கொண்டு ஆண்ட பாண்டிய மன்னர்களின் சந்ததியினர் என்ற ஓர் கருத்தும் நிலவுகிறது. பிரச்சனை என்னவென்றால், பிற தாழ்த்தப்பட்ட சாதி மக்களைப் போலவே, நாடார் மக்களுக்கும் தங்கள் பூர்வீகத்தைப் பற்றி அறிய எழுத்து வடிவிலான ஆதாரப்பூர்வமான ஆவணங்கள் ஏதும் இல்லை. நாடார்களின் பூர்வீகம் எதுவாயினும், யதார்த்த நிலை என்பது, அவர்கள் மிக ஏழ் நிலையில் இருந்துள்ளார்கள். மேலும் ஆங்கிலேயர் ஆட்சியின்போது தீண்டப்படாத சாதிகளில் ஒன்றாகவே நாடார் சாதி இருந்துள்ளது.            

2

சமுதாயத்தில் தாழ்த்தப்பட்ட நிலையிலிருந்து வெளியேறி, அடுத்த கட்ட உயர்நிலைக்கு முன்னேற தங்களை ஆரியர்கள், சத்திரியர்கள் என கூறிக்கொண்டு சமஸ்கிருதப் பாதையில் செல்ல கட்டுக்கதைகளையும், புராணக் கதைகளையும் கற்பனையாக இட்டுக்கட்டி கூறுதல் என்பது எல்லா தீண்டத்தகாத சாதிகளாகக்  கருத்தப்பட்டவர்களின்  உரிய குணமாக இருந்து வந்துள்ளது.  இந்த பரிதாபப்படக்கூடியக் பைத்தியத்திற்கு நாடார்களும் விதிவிலக்கல்ல. நாடார் சமுதாயத்தில் பொருளாதாரத்தில் முன்னேறிய ஒரு பகுதியினர், 19ஆம் நூற்றாண்டின் மத்திய காலத்திலிருந்து இதனை எவ்வித தொய்வும் இன்றி செய்து வந்துள்ளனர்.

கமுதி ஆலய நுழைவு வழக்கில் பிரதிவாதிகளான நாடார்கள் கொடுத்த வாக்குமூலத்தில் அவர்கள் பரம்பரையாக இராணுவ வம்சாவழி வந்தவர்கள் என்று உரிமை கோரியுள்ளனர்.  மதராஸ் உயர்நீதி மன்றத்தில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய இரண்டு ஆங்கிலேய நீதிபதிகள், “வழக்கில் பிரதிவாதிகள் வாதிடுவது போன்று, அவர்கள் சத்திரியர்கள் அல்லது இந்து மதத்தை சார்ந்த இராணுவ வம்சாவழி வந்தவர்கள் என்றோ, அல்லது பாண்டியர், சேரர், சோழ அரசர்களின் வம்சாவழி வந்தவர்கள் என்பதற்கோ எந்தவித ஆதாரமும் இல்லை. அப்படி இருப்பதற்கான ஒரு சந்தர்ப்பம் இருந்தது என்று கூட சொல்ல முடியவில்லை. சாணார்கள் இப்படி அரசகுலம், இராணுவ பரம்பரையோடு தங்களை தொடர்பு படுத்தி வீணாக, பொய்யாக, உரிமை கோர எடுத்த முயற்சி பரிகசிக்க வேண்டிய ஒன்று” என்று நாடார்கள் மீது எந்தவித பரிவுமின்றி கூறியுள்ளனர்.

1908ஆம் ஆண்டு சங்கரலிங்க நாடார் vs. ராஜராஜேஷ்வர துரை கமுதி ஆலய நுழைவு வழக்கில், மதராஸ் உயர்நீதிமன்றம் “சாணார்கள் கோயிலுக்குள் சென்றது என்பது, “சிவ வழிபாடு செய்யும் இந்துக்களின் மதக் கொள்கைக்கு எதிராகவும், கடவுளை வழிபடும் சாதி இந்துக்கள் கடைபிடிக்கும் பழக்க வழக்கம், உணர்வுகளுக்கு எதிராகவும் அமைந்துள்ளது” என்று கூறி மேல் முறையீடு செய்த நாடார் மனுதாரர்கள் கோயிலை சுத்தப்படுத்துவதற்கு ரூ. 500 அபராதம் செலுத்த வேண்டும் என்று தீர்ப்பளித்தது. ஆனால் நாடார்கள் இந்த பிரச்சனையை இத்தோடு விட்டு விடவில்லை.

பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைந்த இந்து நாடார்கள், பத்தொன்பதாம் நாற்றாண்டின் பிற்பகுதியில் சமூக தளத்தில் தங்கள் உரிமைகளை வலியுறுத்த முயன்றபோது, பல கோயில் நுழைவுப் போராட்டங்களை நடத்தினர். இது மேல் சாதி மக்களோடு மோதலுக்கு இட்டுச் சென்றது. சமூகக் கட்டுப்பாடுகளை உடைத்தெறிந்து அவர்கள் கோயில்களுக்குள் நுழைய முற்பட்ட போது அவர்களின் போராடும் குணம், ஒற்றுமை தெளிவாக வெளிப்பட்டது.  1872இல் திருச்செந்தூர், 1874இல் மதுரை, 1876இல் திருத்தங்கல், 1897இல் கமுதி, உச்சகட்டமாக 1899இல் சிவகாசியில் என ஆலய நுழைவுப் போராட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டன. அந்த நாட்களில் நாடார் மக்களின் மனநிலையை தெரிந்து கொள்ளும் விதமாக, 1899ஆம் ஆண்டு நடந்த சிவகாசி கலவரம் பற்றிய சிறு குறிப்பு இங்கே கொடுப்பது பொருத்தமாகும்.

சிவகாசியில் வணிகம் மற்றும் வியாபாரம் சிறிது சிறிதாக முஸ்லீம்கள் கையிலிருந்து நாடார்கள் கைகளுக்கு மாறியது. இந்த வியாபார போட்டியின் காரணமாக முஸ்லீம்களுக்கும் நாடார்களுக்குமிடையே பகைமை இருந்து வந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசி கால் பகுதியில் – 1876 முதல் 1878 வரையான தாது வருடப்பஞ்சம் குறிப்பிடத்தக்க ஒன்று – அடிக்கடி பஞ்சம் ஏற்பட்டது. விவசாயத்தை நம்பியிருந்த சாதி என்ற வகையில் தேவர் சமூகத்தினர் (முக்குலத்தோர்: கள்ளர், மறவர், அகமுடையார்) பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டனர்.  அதே நேரம், வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த நாடார் சமுதாயத்தினர் உணவு தானியங்கள் பற்றாக்குறையை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அதிக அளவில் லாபம் சம்பாதித்தனர். இதனால் இந்த கால கட்டத்தில் இவர்களுக்கிடையே மனக்கசப்பு ஏற்பட்டு, இரு சமுதாயத்தினரிடையேயான உறவு மோசமடைந்தது.

நாடார்கள் கோயில் நுழைவில் தங்கள் உரிமையை வலியுறுத்துவதும், அதுவரை உயர் சாதி இந்துக்கள் சமூகத்தில் அனுபவித்து வந்த சில சலுகைகளை கேட்பதும், பிற இந்து ஆதிக்க சாதியினருக்கு நாடார் மக்கள் மீது மனக்கசப்பை ஏற்படுத்தியிருந்தது. இவையெல்லாம் சேர்ந்து “சிவகாசி அழிவிற்கு” அடிப்படையான காரணமாக அமைந்தது.

1895ஆம் ஆண்டு சிவகாசி நாடார்கள் ஊரில் உள்ள கைலாசநாதர் கோயில் அறங்காவலர்களாக நாடார்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியபோது பிரச்சனை வெடிக்கத் தொடங்கியது. நாடார்களுக்கு சிவகாசியின் புறநகர் பகுதியில் மாரியம்மன், பத்ரகாளியம்மன் கோயில்கள் இருந்தன. கைலாசநாதர் கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படாததால் அவர்கள் இந்த இரண்டு கோயில்களையும் கட்டியிருந்தனர்.  இந்த கோயில்களில் வள்ளுவர் சாதியை சார்ந்த “பண்டாரம்” எனப்படுபவர்கள் பூஜை செய்து வந்தனர். 1897ஆம் ஆண்டு நாடார்கள் சிதம்பரத்திலிருந்து பிராமண புரோகிதர்களை வரவழைத்து இந்த கோயில்களில் பூஜை செய்தனர்.  மேலும் பிராமண புரோகிதர்கள் வசதி படைத்த நாடார்கள் வீடுகளுக்கு சென்று சடங்குகளும், பூஜைகளும் செய்தனர்.  இது சாதி இந்துக்களை கூடுதலாக கோபமடையச் செய்தது. 1898ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி, நாடார்கள் கோயில் கதவை உடைத்துக் கொண்டு கைலாசநாதர் கோயிலுக்குள் நுழைந்தனர். இத் தகவல் பரவியதும், கோபத்தின் உச்சிக்கு சென்ற சாதி இந்துக்கள், பத்ரகாளி அம்மன் கோயில் வளாகத்தில் இருந்த தோட்டத்திற்கு நெருப்பு வைத்தனர். இந்த மோதலில் ஒன்பது நாடார்கள் கைது செய்யப்பட்டு சாட்சியங்கள் முறையாக இல்லாததால் பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

1899ஆம் ஆண்டு நாடார் சமுதாய மக்களின் சேமிப்பு கிடங்கிகளை தேவர் சமுதாயத்தை சேர்ந்த சிலர் தீ வைத்து கொளுத்தியதால் சிவகாசி சாதி கலவரம் வெடித்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நாடார்கள் தேவர் சமுதாய மக்களின் குடியிருப்புகளை தாக்கினர். இதன் விளைவாக தேவர்-நாடார் மக்களிடையே மூர்க்கத்தனமான மோதல் வெடித்தது. திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த கார்டோசன் என்பவர் தன் போலீஸ் படையோடு கலவரப் பகுதிக்கு விரைந்து கலவரத்தை கட்டுப்படுத்தினார். அவர் 15 சுற்று துப்பாக்கிச் சூடு நடத்தி எச்சரிக்கை செய்த பின்னரே கலவரக்காரர்கள் கலைந்து சென்றனர். ஆனால், தேவர் சமுகத்தினர் சமாதானம் அடையவில்லை. அவர்கள் இந்த சம்பவத்திற்கு பழிவாங்க வேண்டும் என்று திட்டமிட்டு, திருநெல்வேலி மாவட்டத்தின் வடக்குப் பகுதியிலிருந்தும், ராமநாதபுரத்தின் கிழக்குப் பகுதியிலும் உள்ள பல கிராமங்களிலிருந்தும் தேவர் சமுதாய மக்களை திரட்டினர்.

பிராமணர்கள், பிள்ளைமார்கள், மறவர் சமுதாய ஜமீன்தார்கள் ஆதரவோடு, அவர்கள் கட்டுப்பாட்டிற்குள் அப்போதிருந்த பள்ளர் சமுதாய விவசாயத்தொழிலாளர்கள், முஸ்லீம்கள் என சுமார் 5000 பேர் 1899ஆம் ஆண்டு ஜூன் மாதம் 6ஆம் நாள்  சிவகாசியில் உள்ள நாடார் மக்களின் வீடுகளைத் தாக்கி அவர்களின் உடமைகளை சூறையாடினர். பின்னர் அவர்கள் சிவகாசியைச் சுற்றியுள்ள 150 கிராமங்களை தாக்கி கொள்ளையடித்தனர். போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 21 பேர் இறந்தனர். காயம்பட்ட மூன்று பேர் பின்னர் இறந்தனர். அவர்களில் ஒருவர் பெண். சிவகாசி நாடார்கள் “இந்த தாக்குதலில் தாங்கள் ரூ. 43,000 மதிப்புள்ள பொருட்களை இழந்தோம்” என்று அரசாங்கத்திற்கு கடிதம் அனுப்பினர் என்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த “தானே” என்ற அதிகாரி கூறியுள்ளார். இந்த தாக்குதலில் சிவகாசிப் பகுதியில் மொத்தம் 4,000 வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன என மற்றொரு புள்ளிவிவரம்  கூறுகிறது. மொத்தம் கைது செய்யப்பட்ட 1958 பேரில், 552 பேர் குற்றவாளி என தண்டிக்கப்பட்டனர். ஏழு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

3

நாடார் மக்களின் சமூக இயக்கத்தை விவரிக்கும் போது தென் திருவிதாங்கூர் பகுதியில் (தற்போது கன்யாகுமரி மாவட்டம்) நடந்த முக்கியமான சாதி எதிர்ப்பு எழுச்சியை நாம் தவிர்க்க முடியாது. அங்கு தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்டவர்கள் நடத்தப்பட்ட விதம் மிகவும் கொடூரமானது. ஜேம்ஸ் போர்ப்ஸ் எழுதிய “கீழ்த் திசை நாடுகளின் நினைவுகுறிப்புகள்” என்ற புத்தகத்தில் அவர்  எடுத்துக்காட்டியுள்ள கொடுமையான நிகழ்ச்சிகள் கூர்ந்து கவனிக்கத் தக்கது:

“தங்களின் உடற் காற்றினால் சுற்றுப்புற சூழல் மாசுபடுவதிலிருந்து தவிர்ப்பதற்காக, தீண்டத்தகாதவர்கள் தாங்களாகவே குழிக்குள் மறைந்து கொள்ள வேண்டும்; அல்லது மரங்களின் மேல் ஏறி தங்களை மறைத்து கொள்ள வேண்டும்.  நாயர் சாதியை சார்ந்த ஒருவர் எதேச்சையாக இவர்களில் ஒருவரை சாலையில் சந்தித்தால், எவ்வித பச்சாதபமும் இல்லாமல் கொடூர மிருகத்தை கொல்வது போல் வாளால் வெட்டி கொன்று விடுவார்.  பசுவை விற்பவர் அல்லது அதை இறைச்சிக்கு விற்பவர் கொலை செய்யப்படுவார். 1772ஆம் ஆண்டு ஐரோப்பியர் ஒருவருக்கு மாடு ஒன்றை விற்பனை செய்த ஒருவர் உயிரோடு எரிக்கப்பட்டார். தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்கள் தங்கள் மார்பை மூடக்கூடாது. அரச குடும்பத்தை சார்ந்த ஒருவரின் முன்னால் நிற்கும் போது, மேலாடையுடன் காணப்பட்ட பெண்களின் மார்பகங்கள் வெட்டி எறியப்படும்”

“சாதிய ஒடுக்குமுறையின் கொடுமை எந்த அளவிற்கு இருந்தது என்பதற்கு கேரளா சிறந்த உதாரணமாக இருந்தது. அங்கு தீண்டத்தகாதவர்களை, உயர் சாதியினர் பார்வையிலிருந்து விலகி இருக்க வேண்டிய தூரத்தை வைத்து தீண்டாமை தரவாரியாக பிரிக்கப்பட்டிருந்தது” என்று வரலாற்றறிஞர் K.M. பணிக்கர் குறிப்பிடுகிறார். 1809ஆம் ஆண்டு மைலாடியில் இலண்டன் மெஷினரி சபை (LMS) தொடங்கப்பட்டதிலிருந்து, கிறிஸ்தவ மிஷினரிகள் ஒடுக்கப்பட்ட மக்களை குறிவைத்து மதமாற்றம்  செய்தனர். அருள்திரு. T. ரிங்கல்டாப் என்ற பாதிரியார் முதலில் ஒரு கணிசமான அளவிற்கு தாழ்த்தப்பட்ட சாதியினரை (குறிப்பாக நாடார், ஈழவர்களை) வெற்றிகரமாக மதமாற்றம் செய்தார். அவர் 1813இல் LMS சபையில் 600 கிறிஸ்தவர்கள் இருந்தனர் என்கிறார்.  கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாறியவர்களின் மனநிலை, பழக்க வழக்கங்களை மாற்றும் முயற்சியின் ஒரு பகுதியாக, கிறிஸ்தவ மிஷினரிகள் ஆண்களுக்கு மட்டுமின்றி, பெண்களுக்கும் பள்ளிக் கூடங்கள் தொடங்கினர். இந்த பள்ளிக்கூடங்களில் பெண்களின் தனித்திறமையை வளர்க்கும் வகையில் தையல், எம்பிராய்டரிங் பயிற்சிகள் கொடுக்கப்பட்டன. கிறிஸ்தவ மிஷினரிகளின் வேண்டுகோளுக்கு இணங்கவும், அப்போதைய திவான் மற்றும் திருவிதாங்கூர் சமஸ்தான பிரிட்டீஷ் பிரதிநிதியுமான கர்னல் ஜான் மன்றோவின் ஆதரவுடன் 1814ஆம் ஆண்டு கிறிஸ்தவ நாடார் பெண்கள் மட்டும் குட்டையான கை வைத்த தொள தொளப்பான மேல்சட்டை அணிய அனுமதிக்கப்பட்டனர்.

அரசாங்கத்தின் உத்தரவு இருந்தபோதும், பிற நாயர் சாதி பெண்களைப் போல கிறிஸ்தவ நாடார் பெண்கள் பொது இடங்களில் மேல் சட்டை அணிந்து தோன்றினால், அவர்கள் அவமானப்படுத்தப்பட்டு தாக்குதலுக்கும் உள்ளானார்கள். பெண் மிஷினரிகள் வடிவமைத்த பெண்களுக்கான மேல் சட்டையும் கிறிஸ்தவ நாடார் பெண்களுக்கு பிடித்தமானதாக இருக்கவில்லை. எனவே, கிறிஸ்தவ நாடார் பெண்கள் – ஆண்கள் போராட்ட நடவடிக்கையில் இறங்கினர். இதற்கிடையே, இப்பிரச்சனையில் நீதிமன்றத்தின் தலையீடு கோரி உள்ளூர் நீதிமன்றத்தையும் அவர்கள் அணுகினர்.

1823ஆம் ஆண்டு போராட்டம் நடத்திய கிறிஸ்தவ நாடார் பெண்களுக்கு சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இருந்தாலும் கண்ணியமான உடை அணியும் நாடார் பெண்கள், உயர்சாதி என்று சொல்லப்பட்டவர்களால் தெருக்களிலும், பொது வெளியிலும் துன்புறுத்தப்படுவது தொடர்ந்தது. கிறிஸ்தவ மிஷினரிகள் கொடுத்த அழுத்தம் காரணமாக, 1829ஆம் ஆண்டு இறுதியில் திருவிதாங்கூர் அரசு, கிறிஸ்தவ நாடார் பெண்கள் மேல்சட்டை அணிய அனுமதியளித்து உத்தரவிட்டது.  ஆனால் நீதிமன்ற தீர்ப்போ, அல்லது திருவிதாங்கூர் அரசின் அறிவிப்போ, இந்து நாடார் பெண்களுக்கு பொருந்தவில்லை. இந்து நாடார் பெண்களின் பிரச்சனை அடுத்த பத்து ஆண்டுகளுக்குப் பிறகு வைகுண்டசாமி அவர்களால் எடுக்கப்பட்டு தீர்வு காணப்பட்டது.

முத்துக்குட்டி என்ற வைகுண்டசாமி தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்ட மக்களுக்கு உதவி செய்து அவர்களின் அடிமை விலங்கை உடைத்தெறிய வேண்டும் என்ற நோக்கத்தோடு அம்மக்களை ஒருங்கிணைத்தார். 1830களின் மத்தியில் வைகுண்டர் நடத்திய இயக்கங்கள் மற்றும் அவர் உருவாக்கிய அய்யா வழி என்ற புதிய மதக்கோட்பாடு கிறிஸ்தவ மிஷினரிகளின் மதமாற்ற முயற்சிகளை எதிர்த்து வந்த நாடார் மக்களை, குறிப்பாக வசதி படைத்த தென் திருவிதாங்கோடு பகுதியை சார்ந்த நாடார்களை வெகுவாக ஈர்த்தது. மேலும் வைகுண்டர், ஒடுக்கப்பட்ட மக்கள் நாகரீக, நவீன பழக்க வழக்கங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

வைகுண்டரின் இந்த முயற்சியின் ஒரு பகுதியாக அவர் தன் கொள்கைகளையும், கருத்துக்களையும் பின்பற்றும் பெண்களை மேல்சட்டை அணியும்படி உபதேசித்தார். வைகுண்டர் மேற்கத்திய கிறிஸ்தவக் கலாச்சாரத்தை கடைபிடிக்கிறார் என்று மேல் சாதி இந்துக்கள் அவர் மீது குற்றம் சாட்டினர். அதே போல, கிறிஸ்தவ மிஷினரிகள் வைகுண்டர் மீதும், அவர் தொடங்கிய புதிய மத வழிமுறை பற்றியும் கேலியும் கிண்டலும் செய்தனர். எதிர்ப்புகள் இருந்தாலும், வைகுண்டசாமி அதிகப்படியான நாடார் இன மக்களை தன் வயப்படுத்தினார். இது தென் திருவிதாங்கூர் பகுதிகளில் கிறிஸ்தவ மதத்தை மேலும் பரப்புவதற்கு பெரும் முட்டு கட்டையாக இருந்தது.

1851ஆம் ஆண்டு வைகுண்டர் இறந்த போதிலும், அவரின் ஆவி கிறிஸ்தவ மிஷினரிகளை தொடர்ந்து மிரளச்செய்தது என்ற நம்பிக்கை நிலவியது. அவர் இறந்து 13 ஆண்டுகளுக்குப் பிறகு 1864ஆம் ஆண்டு நாகர்கோவில் கிறிஸ்தவ மிஷினரி மாவட்டத்திலிருந்து கொடுத்த அறிக்கையில் “வைகுண்டரின் கொள்கையை பின்பற்றுபவர்கள் முன் நாட்களில் உயிர்த்தெழுதல் கோட்பாடு பற்றி தெரியாதவர்களாக இருந்தனர். ஆனால் இப்போது அவர்கள் “முத்துக்குட்டி மீண்டும் வருவார். மரணமடைந்த அவரின் பக்தர்களை உயிர்த்தெழச் செய்து, அவர்களை சொர்க்கத்திற்கு அழைத்து செல்வார் என்று சொல்கிறார்கள்” என்று சொல்லப்பட்டுள்ளது.  அதற்கு பத்தாண்டுகளுக்கு பிறகும் கூட, வைகுண்டசாமி  எதிப்பு இயக்கத்தின் தாக்கம் தொடர்ந்து இருந்ததாக மிஷினரிகள் உணர்ந்தார்கள். 1874இல் நாகர்கோவில் கிறிஸ்தவ மிஷினரி மாவட்டம் கொடுத்த அறிக்கையை மீண்டும் இதற்கு ஆதாரமாகக் கொள்ளலாம்.  அந்த அறிக்கை இவ்வாறு சொல்கிறது: “சாத்தானின் தந்திரமான சூழ்ச்சியினால், இந்த பகுதியில் நமது முன்னேற்றம் பெருமளவு தடைபட்டுள்ளது. இச் சூழ்ச்சியை முறியடிக்க நாம் இடைவிடாது போராட வேண்டும். நம்முடைய ஆயுதம் பலம் வாய்ந்தது… நம் பக்கம் உண்மை உள்ளது. இதற்கு எதிராக “முத்துக்குட்டியிசமோ “அல்லது வேறு ஏதோ நரகத்தின் வாசலோ” ஒன்றும் செய்து விட முடியாது. நமக்கு தேவையானது எல்லாம், கிறிஸ்தவ தேவாலயங்களில் அதிகமான உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்பதே. கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகும் போது, முத்துகுட்டி எந்த தளத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக செயல்பட்டாரோ, இன்றும் கிறிஸ்துவிடமிருந்து கைப்பற்ற முயற்சிக்கிறாரோ, அந்த தளத்திலிருந்து அவமானப்பட்டு இழிவடைந்து ஒதுங்கிவிடுவார் “.

வைகுண்ட சாமியைப் பற்றி கிறிஸ்தவ தேவாலயங்களின் ஆவணங்களில் கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தை பார்க்கும் போது, வைகுண்டரின் இயக்கம், அவர் இறந்த பின்பு கூட எந்த அளவிற்கு துடிப்பாக இருந்தது என்பது விளங்கும்.

கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி முடிவுக்கு வந்த பின்னர் தான், தோள் சீலைப் போராட்டம் தீவிரமடைந்தது. 1858ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பிரிட்டீஷ் மகாராணியின் அறிவிப்பு பின்வருமாறு கூறியது: ” பிரிட்டீஷ் அரசு தன் விருப்பத்தின் பேரில் மகிழ்ச்சியோடு இதை அறிவிக்கிறது…அவரவர்களுடைய மத நம்பிக்கை அல்லது மத பழக்க வழக்கங்களை கடைப்பிடிப்பதால் யாரும் அவமானப்படுத்தப்படவோ, வெறுப்புடன் நடத்தப்படவோ கூடாது. யாருக்கும் கூடுதல் சலுகை காட்டக் கூடாது. எந்தவித பாகுபாடும் இன்றி சட்டத்தின் முன் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும்”.

நாடார்கள், அப்போதய திவான் மாதவராவ்- ஐ சந்தித்து மகாராணியின் உத்தரவை அமுல்படுத்த அவர் தலையீட வேண்டும் என்று மனு கொடுத்தனர்.  இதற்குப் பதிலடியாக திருவிதாங்கூர் அரசு மனுதாரர்கள் மீது போலீஸ் அடக்குமுறையை ஏவியது. இந்த அடக்குமுறை நடவடிக்கைக்கு பிறகு, நாடார்கள் இந்த பிரச்சனையில் ஒரு இறுதி கட்ட நடவடிக்கை எடுக்கத் துணிந்தனர். இந்து, கிறிஸ்தவ நாடார்கள் இணைந்து போராட முடிவு செய்தனர். மத நம்பிக்கையை விட சாதிப்பற்று மேலோங்கி இருந்ததால், நாடார் பெண்கள் மேல் சட்டை அணியும் உரிமைக்கான போராட்டத்தில் அய்யாவழி இயக்கத்தில் தீவிரமாக இருந்தவர்கள் கூட கிறிஸ்தவ நாடார்களுடன் இணைந்து போராடுவதில் எவ்வித தயக்கமும் காட்டவில்லை.

பெரும்பான்மையான இந்து நாடார்கள் “அய்யா வழி”யை  பின்பற்றுபவர்களாக இருந்தனர். தங்களுடைய நீண்ட காலப் போராட்டத்தில் கிறிஸ்தவ நாடார்கள் கலந்து கொள்ளாமல் இருந்ததால் வெறுப்படைந்த இந்து நாடார்கள் இந்த இயக்கத்தில் கிறிஸ்தவ மிஷினரிகளின் தலையீட்டை எதிர்த்தனர். ஆகவே, கிறிஸ்தவ மிஷினரிகள் இதற்கு மறைமுக ஆதரவு மட்டுமே கொடுத்தனர். நாடார் பெண்கள் மேல்சட்டை அணிய உரிமை கோரிய போராட்டத்தில் பல இடங்களில் வன்முறை வெடித்தது.  இந்துக்கள், கிறிஸ்தவர்கள் ஒன்றுபட்டு நடத்திய உறுதியான போராட்டத்தினால், 1859ஆம் ஆண்டு பிரிட்டீஷ் அரசு ஒரு அறிக்கை வெளியிட்டது. அந்த பிரகடனம் பின் வருமாறு சொல்கிறது: “அனைத்து பிரிவைச் சார்ந்த சாணார் இனப் பெண்கள் பிற கிறிஸ்தவ சாணார் இனப் பெண்களைப் போல் மேல் சட்டை அணிவதற்கோ அல்லது கோரா துணியிலான உடை அணிவதற்கோ அல்லது மீனவ இனப் பெண்கள் அணிவது போல் கோரா துணியை சுற்றிக் கொள்வதற்கோ அல்லது வேறு வடிவத்தில் மார்புப் பகுதியை மறைத்துக் கொள்வதற்கோ எந்தவித ஆட்சேபணையும் இல்லை. ஆனால் அவர்கள் உயர்சாதி பெண்கள் அணிவது போல் உடை அணியக்கூடாது “.

4

நாடார்களின் சமூக இயக்கம் நடந்து கொண்டிருந்தாலும், அடுத்த பத்தாண்டுகளில் ஈ. வெ. ரா பெரியாரின் சுயமரியாதை இயக்கம், மகாத்மா காந்தியின் ஆதரவோடு இந்திய தேசிய காங்கிரஸ் நடத்திய ஆலய நுழைவுப் போராட்டங்களுக்குப் பின்னர்தான் தென்தமிழ் நாட்டில் நாடார்கள் கோயிலில் நுழையும் கோரிக்கை நிறைவேறியது. காங்கிரஸ் கட்சி முன்னெடுத்த முயற்சிகள், நிறைவேற்றிய தீர்மானங்கள் இறுதியில் நடைமுறைக்கு வந்தன. குருவாயூர் ஆலய நுழைவு போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய ராஜாஜி மதராஸ் ராஜதானிக்கு பிரதம மந்திரியாக இருந்த போது, 1939ஆம் ஆண்டு அவர் தலைமையிலான மந்திரிசபையில் “ஆலய நுழைவு உரிமை மற்றும் இழப்பீடு சட்டம்” இயற்றப்பட்டது.

கல்வி மற்றும் வியாபாரம் மூலமாக சமூகத்தில் அந்தஸ்து பெற்ற நாடார் சமூகத்தினர், தற்போது கல்வி, சமூக, பொருளாதார தளத்தில் வளர்ச்சியடைந்திருப்பது பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டினால் அல்ல. அரசாங்கத்தின் ஆதரவை மட்டும் நம்பி இருக்காது, கல்வி கற்பதன் மூலம் சுயசார்பு நிலையை அடைந்து, ஒரு சுதந்திரமான வாழ்நிலையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று நாடார் சங்கம் விரும்பியது. 1913இல் நாடார் என்ற பெயர் பிற்படுத்தப்பட்ட சாதி பட்டியலில் இடம் பெற்றிருந்தது. பொருளாதார ரீதியாக முன்னேற்றமடைந்த ஒரு பகுதி நாடார்கள் (அவர்கள் நாடார் மகாஜன சங்கத்தில் ஆதிக்கம் செலுத்தியவர்களாக இருந்தனர்) நாடார் சாதி பெயரை பிற்படுத்தப்பட்ட சாதி பட்டியலிருந்து எடுக்க வேண்டும் என்று1917இல் வலியுறுத்தினர்.

1921 மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, தங்கள் சாதிப் பெயரை நாடார் சத்திரியர் என்று பதிவு செய்வதில் நாடார் மகாஜன சங்கம் வெற்றி கண்டது. சென்னை மாகாணத்தின் முதன்மை செயலாளராக இருந்த G.T. போக் என்பவர் “1911இல் சாணார் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டவர்கள் தற்போது “நாடார்” என பதிவு செய்யப்பட்டுள்ளனர். இது சென்னை மாகாண அரசாங்கத்தின் உத்தரவின் பேரில் செய்யப்பட்டுள்ளது. நாடார் சமுதாயத்தின் வேண்டுகோளுக்கு இணங்க அரசு ஆவணங்களில் “சாணார்” என்ற வார்த்தை இனி பயன்படுத்தக் கூடாது” என்று பதிவு செய்துள்ளார்.  நாடார்களும் விரைவில் தங்கள் முட்டாள் தனத்தை உணர்ந்து சென்னை மாகாண அரசாங்கத்திடம், நாடார் சமுதாயத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைக்க வேண்டும் என்று 1935, 1940, 1950ஆம் ஆண்டுகளில் கோரிக்கை வைத்தனர். ஆனால் அந்த கோரிக்கை 1957இல் தான் நிறைவேறியது. 

தமிழில் – ஆர்.எஸ். துரைராஜ்

(Article published in Social Scientist, March-April, 2022)

மதச்சார்பற்ற குடியரசை காத்து நிற்போம் !

நாட்டு மக்கள்  அனைவரும் தமது வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்பதை மையப்படுத்தி இந்திய விடுதலையின் 75வது ஆண்டை ஆசாதி கா அம்ரித் மகாத்சவ் என்ற பெயரில் மோடி அரசு ஒரு பெரும் பிரச்சாரத்தை முன்னெடுத்தது.  கதர், பருத்தி,பட்டு போன்ற இயற்கை துணிகளுக்கு மாறாக பாலியஸ்டர் துணியில் கொடி தயாரிக்கலாம் என்ற வகையில் 2021 டிசம்பரில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. நாட்டின் மிகப்பெரும் பாலியஸ்டர் உற்பத்தியாளர் யார் என்பதை அனைவரும் அறிவர். கூட்டுக் களவாணி முதலாளிகள் கொள்ளையடிப்பதற்கு இது வழி வகை செய்தது.

அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமர் பொறுப்பேற்கும் வரை ஆர் எஸ் எஸ்-ம், பாஜக-வும் எப்போதும் தேசியக் கொடியை ஏற்றவில்லை. காவிக்கொடியின் மீதே அவர்களது விசுவாசம் குவிந்திருந்தது. ஆர்எஸ்எஸ் ஒருபோதும் இந்திய விடுதலைப் போரில் பங்கேற்கவில்லை. இந்துத்துவ ஆதரவு வரலாற்று ஆசிரியர்களாலும் பதிவு செய்யப்பட்டு ஆங்கிலேய உளவுத்துறையினரால் உறுதிப்படுத்தப்பட்ட உண்மை இது.

கம்யூனிஸ்டுகளின் போற்றத்தக்க பங்கு

மாறாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைத் தோற்றுவித்த ஒன்பது அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்களும் விடுதலைப் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டு பல்லாண்டு காலம் சிறைகளில் வாடினர். அந்தமான் செல்லுலார் சிறையில் பளிங்கு கற்களில் பொறித்து வைக்கப்பட்டுள்ள பெரும்பாலான பெயர்கள் புரட்சிகர கம்யூனிஸ்ட் இயக்கத்துடன் தொடர்புடையவை ஆகும்.1947 ஆகஸ்டு 15 ல் சிறையில் இருந்தே தோழர் ஏ.கே.கோபாலன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். ஹோசியாபூர் மாவட்ட ஆட்சியரகத்தில் இருந்த யூனியன் ஜாக் கொடியை இறக்கிவிட்டு மூவர்ணக் கொடியை ஏற்றியதற்காக 16 வயதே நிரம்பிய ஹர்கிஷன் சிங் சுர்ஜித் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டார். கம்யூனிஸ்ட்களுக்கும், மார்க்சிஸ்ட் கட்சிக்கும் தேச பக்தி யும், தியாக உணர்வும் இந்திய சோசலிச மாற்றத்துக்கான புரட்சிகர பார்வையின் உள்ளார்ந்த அம்சமாகும்.

1920 ம் ஆண்டு தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே கம்யூனிஸ்ட் கட்சி விடுதலை இயக்க நிகழ்ச்சி நிரல்களை வடிவமைப்பதில் செல்வாக்கு செலுத்தத் தொடங்கியது. 1921 ஆம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் அகமதாபாத் மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மௌலானா ஹஸ்ரத் மோகனியும், சுவாமி குமாரனந்தாவும் முழு விடுதலை தீர்மானத்தை முன்மொழிந்தனர். காந்தியடிகள் இந்த தீர்மானத்தை ஏற்கவில்லை.(1929 ஆம் ஆண்டிலேயே முழு விடுதலை தீர்மானம் ஏற்கப்பட்டது) 1922 ஆம் ஆண்டு கயாவில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் அடுத்த மாநாட்டில் தேசிய இயக்கத்தின் நோக்கங்கள் அடங்கிய சாசனத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விநியோகித்தது. அடுத்தடுத்து நடைபெற்ற காங்கிரஸ் மாநாடுகளிலும் இது தொடர்ந்தது.

விடுதலை இயக்கத்தின் நிகழ்ச்சி நிரல் மீது செல்வாக்கு செலுத்துவதில் கம்யூனிஸ்டுகள் பெரும் பங்காற்றினார். நிலப் பிரச்சனை: நாட்டின் பல பகுதிகளில் குறிப்பாக 1940 களில் கம்யூனிஸ்டுகள் நிலப் பிரச்சனையில் பெரும் போராட்டங்களில் ஈடுபட்டனர். கேரளாவில் புன்னப்புரா- வயலாரு, வங்காளத்தில் தெபாகா இயக்கம், அசாமில் சுர்மா பள்ளத்தாக்கு போராட்டம், மகாராஷ்டிராவில் வார்லி கிளர்ச்சி,  இவற்றின் உச்சமாக  தெலுங்கானா ஆயுதப் போராட்டம் ஆகியன நிலச்சீர்திருத்தம், ஜமீன்தாரி முறை ஒழிப்பு போன்ற பிரச்சனைகளை முன்னுக்குக் கொண்டு வந்தன.

இந்தியாவின் மொழி பன்மைத்துவத்துக்காகவும், மொழி ரீதியிலான பல்வேறு தேசிய இனக் குழுக்களை விடுதலைப் போராட்டத்தில் ஒருங்கிணைப்பதற்காகவும் கம்யூனிஸ்டுகள் அரும்பாடுபட்டனர். இது விடுதலை பெற்ற இந்தியாவில் மொழி அடிப்படையிலான மறுசீரமைப்புக்கு இயல்பாக  இட்டுச் சென்றது.

விடுதலைப் போராட்ட காலத்தில் வகுப்புக் கலவரங்கள் வெடித்தபொழுது அமைதியையும், நல்லிணக்கத்தையும் நிலை நாட்டுவதில் கம்யூனிஸ்டுகள் மதச்சார்பின்மையின்   பால் கொண்டிருந்த உறுதியான அர்ப்பணிப்பு பெரும் பங்காற்றியது. இன்றும்  மதச்சார்பின்மையை உயர்த்திப் பிடிப்பதில் கம்யூனிஸ்டுகளே முன்னணி பாத்திரம் வகித்து வருகின்றனர்.

விடுதலைப் போராட்டத்தில் இந்தியாவின் கிராமப்புறங்களில் உள்ள ஆகப் பெரும்பான்மையான சுரண்டப்படும் மக்களையும், சமூக ரீதியில் ஒடுக்கப்பட்ட, குறிப்பாக அருவருப்பான சாதிய அடிப்படையிலான ஒடுக்குமுறைக்கும், தாக்குதலுக்கும் தொடர்ந்து உள்ளாக்கப்பட்டு வரும் மக்களையும், மொழி அடிப்படையிலான ஏராளமான தேசிய இனங்களையும், பல்வேறு மதங்களைச் சேர்ந்த  மக்களைத் திரட்டுவதிலும், எல்லாவற்றிற்கும் மேலாக, பொருளாதாரத்திலும், சமூக நீதி அடிப்படையிலும் உள்ளடக்கிய பாதையில் இந்தியர்கள் அனைவரையும் திரட்டுவதிலும் கம்யூனிஸ்டுகள் மகத்தான பங்காற்றினர்.

வரலாற்றைத் திருத்தி, பொய்மையைக் கட்டமைத்தல்

விடுதலை இயக்கத்தில் ஆர்எஸ்எஸ்-ம், பாஜக-வும் தங்களையும் ஒரு அங்கமாகக் காட்டும் வகையில் வரலாற்றைத் திருத்துவதற்கான ஒரு வாய்ப்பை சுதந்திர தின  நிகழ்வுகள் வழங்கியுள்ளன. இந்துத்துவ , ஆர்எஸ்எஸ் தலைவர்களை விடுதலைப் போராட்ட வீரர்களாகச் சித்தரிக்கும் வகையில் அரசு ஆதரவில் ஆர்ப்பரிக்கும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பிரச்சாரத்தில் வி.டி.சவர்க்கரின் பெயர் முதன்மையாகக் குறிப்பிடப்படுகிறது. 1923 ஆம் ஆண்டு சவர்க்கர், இந்து மதத்துடன் எவ்விதத்திலும் தொடர்பற்ற இந்துத்துவா என்று சொல்லாடலை ஒரு அரசியல் திட்டமாக முன் வைத்தார். காந்திஜியின் படுகொலைக்கு சதித் திட்டம் தீட்டியதில் பின்னணியாக செயல்பட்டதால் கைது செய்யப்பட்டார்.  போதுமான சாட்சியம் இல்லை எனக்கூறி கிரிமினல் சட்டத்திலுள்ள ஓட்டைகளைக் காட்டி  விடுதலை செய்யப்பட்டார். சிறந்த கிரிமினல் வழக்குரைஞராகவும் திகழ்ந்த சர்தார்பட்டேல்  குற்றத்தை உணர்ந்ததால் தான் அவரை விசாரணைக்கு உட்படுத்தினார்.

ஆங்கிலேயர்களின்  உதவியுடனும், ஆதரவுடனும் துயரம் நிறைந்த பிரிவினைக்கு இட்டுச் சென்ற, முஸ்லிம்களுக்கு தனி நாடு எனும் கோரிக்கையை முன்வைத்து முகமது அலி ஜின்னா  போராடியதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே சவர்க்கர் 

இரு தேசக் கொள்கையை முதலில் முன்வைத்தார். செல்லுலார் சிறையில் கைதியாக இருந்த பொழுது சவர்க்கர் தன்னை விடுதலை செய்யக்கோரி ஆங்கிலேய அரசுக்கு கருணை மனு அனுப்பியதை இந்துத்துவ ஆதரவு வரலாற்று ஆசிரியர்களின் பதிவுகளே உறுதிப்படுத்து கின்றன.தனது மனுவில் ஆங்கிலேய அரசுக்கு பின்வரும் உறுதிமொழியை சவர்க்கர் அளித்திருந்தார்:

“1906-07ல் நிலவிய பதட்டமான, நம்பிக்கையற்ற இந்தியச் சூழலினால் ஏமாந்து போய் நாங்கள் அமைதியான முன்னேற்றப் பாதையிலிருந்து விலகி முட்கள் மண்டிய பாதைகளில் சென்றது போல் இன்று இந்தியாவையும், மனித குலத்தின் நன்மையையும் மனதில் கொண்ட ஒருவரும் கண்ணை மூடிக்கொண்டு செல்ல மாட்டார்கள். எனவே ,அரசாங்கம் அளவற்ற அறத்தையும், கருணையையும் காட்டி என்னை விடுதலை செய்தால், நான் அரசியல் சட்ட ரீதியான முன்னேற்றத்திற்காகவும் ,அத்தகைய முன்னேற்றத்திற்கு முன் நிபந்தனையாக ஆங்கிலேய அரசின்பால் காட்ட வேண்டிய விசுவாசத்துக்காக வும் தீவிரமாக வாதிடுபவனாக இருப்பேன். (ஆர்.சி மஜும்தார் அந்தமானில் தண்டனை, பக்கம் 211- 213)

ஆங்கிலேயர்களுடன் சமாதான உடன்பாடு செய்து கொண்டதற்குப் பின்னர் தமது வாழ்வின் பெரும்பாலான காலங்களில் ஆங்கிலேய ஆட்சியை எதிர்க்கவில்லை என்பது மட்டுமல்லாமல் காங்கிரசையும், இடதுசாரிகளையும் எதிர்ப்பதே அவரது அரசியலாக இருந்தது. 1942 ஆம் ஆண்டின் வெள்ளையனே வெளியேறு  இயக்கம் போன்றவை இந்து மகாசபை அல்லது சங்பரிவார் உறுப்பினர்களின் எவ்விதப் பங்கேற்புமின்றி நடைபெற்றதாக இந்து மகாசபையின் தலைவர் என்ற வகையில் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

‘அரசாங்கத்தின் எந்த ஒரு பதவியிலும் அல்லது ,பொறுப்பி லும் உள்ள இந்து சங்பரிவாரத்தினர் அனைவரும் அப்பொறுப்புகளில் தொடர்ந்து நீடிப்பதுடன், தமது வழக்கமான கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற உறுதியான வழிகாட்டல்களை நான் வழங்குகிறேன்’  

 (நூராணி மேற்கோள், பிரண்ட்லைன், டிசம்பர் 1 ,1995) என்றார்.

1942 ம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது பம்பாய் உள்துறை அமைச்சகம் பின்வருமாறு பதிவு செய்துள்ளது: சங் பரிவார் அமைப்புகள் தம்மைத்தாமே கண்காணித்துக் கொண்டு சட்டத்துக்கு உட்பட்டு செயல்பட்டு வந்தனர். குறிப்பாக 1942 ஆகஸ்ட்டில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை ஒட்டி வெடித்த போராட்டங்களில் அவர்கள் பங்கேற்கவில்லை’.

உண்மையை மறைக்க அவர்கள் கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக வதந்திகளைப் பரப்பினர். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் ஐம்பதாம் ஆண்டு விழாவை நாடு கொண்டாடிய பொழுது ,அன்றைய குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா, 1992 ஆகஸ்ட் 9ஆம் தேதி நள்ளிரவு நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தில் ஆற்றிய உரையில்,

 ‘கான்பூர், ஜாம்செட்பூர், அகமதாபாத் ஆகிய இடங்களில் ஆலைகளில் மிகப்பெரும் வேலை நிறுத்தங்கள் நடைபெற்றதைத் தொடர்ந்து 1942 செப்டம்பர் 5 ம் தேதி டெல்லியிலிருந்து லண்டனுக்கு அனுப்பப்பட்ட குறிப்பில்  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி  ஆங்கிலேய எதிர்ப்புப் புரட்சியாளர்களைக் கொண்ட அமைப்பு  என்பதை இதன் உறுப்பினர்கள் பலரது நடவடிக்கைகள் தெள்ளத் தெளிவாகக் காட்டுகின்றன’ என பதிவு செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். இத்தகையதுதான் சவர்க்கரின் வெட்கக்கேடான பங்களிப்பு.

நேர்மாறாக, அரசாங்கம் மேற்கொண்டு வரும் பிரச்சாரங்களில் கம்யூனிஸ்டுகளை விடுங்கள், ஜவஹர்லால் நேருவைப் பற்றியும்  எதுவும் குறிப்பிடவில்லை அல்லது பெயரளவிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. மதச்சார்பற்ற, ஜனநாயக இந்தியாவுக்கான பெரும் விவாதங்களை முன்னெடுத்து, தீர்மானங்களை நிறைவேற்றி, விடுதலை பெற்ற இந்தியாவை ஒரு நவீன மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசாக வடிவமைப்பதற்குரிய அரசியல் சாசனத்தை உருவாக்குவதில் நேரு மகத்தான பங்கையாற்றியதால் இதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. சவர்க்கரும், 

ஆர்எஸ்எஸ் -ம்  வெறித்தனமான, சகிப்புத்தன்மையற்ற, பாசிச இந்து ராஷ்டிரமாக இந்தியாவை உருவாக்க நினைத்த பார்வைக்கு இது நேரெதிரானதாகும். தற்போது ஆர்எஸ்எஸ்- ன் அரசியல் பிரிவான பாஜக இத்தகைய இந்துத்துவத்தை முன்னெடுப்பதில் தீவிரம் காட்டி வருகிறது.

அரசியல் சாசனத்தின் மீதான தாக்குதல்

அரசியல் சாசனம் உறுதிப்படுத்தியுள்ள இந்தியக் குடியரசின் மதச்சார்பற்ற, ஜனநாயகத் தன்மையை வீழ்த்திட, அதன் மீது தாக்குதல் தொடுப்பதும், சிறுமைப்படுத்து வதும், இறுதியில் அதனை ஒழிப்பதும் பாசிச திட்டத்தை நிறைவேற்றுவதற்கு அவசியமாகும். ‘குறிப்பாக, 2019 ஆம் ஆண்டு மோடி அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு நமது அரசியல் சாசனத்தின் நான்கு அடிப்படைத்  தூண்களான மதச்சார்பற்ற ஜனநாயகம், கூடாடாட்சி, சமூக நீதி, பொருளாதார இறையாண்மை ஆகியவற்றின் மீது கொடூரத் தாக்குதல் நடைபெற்று வருகிறது’ என சிபிஐ(எம்) 23 வது அகில இந்திய மாநாட்டு அறிக்கை குறிப்பிடுகிறது.

அரசியல் சாசனத்தின் மீதான இந்தத் தாக்குதலானது அரசியல் சாசனத்தின் செயல்பாட்டைப் பாதுகாப்பதையும், மக்களுக்கு அரசியல் சாசன ரீதியில் அளிக்கப்பட்டுள்ள உத்தரவாதங்களை உறுதிப்படுத்தவதையும் கண்காணித்து பராமரிப்பதை உறுதிப்படுத்தும் கருவிகளாக செயல்படும் சுதந்திரமான அரசியல் சாசன ரீதியிலான நிறுவனங்களையும், அதிகார அமைப்புகளையும் சிறுமைப்படுத்தி செயலிழக்கச் செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படுகிறது.

நாடாளுமன்றத்தின் வழக்கமான நடைமுறைகள் அனைத்தும் மோசமாக சிறுமைப்படுத்தப் பட்டு, நாடாளுமன்றக் குழுக்களின் செயல்பாடுகளும், விவாதங்களும் புறம் தள்ளப்பட்டு வருகின்றன. பெரும்பான்மை பலத்தைக் கொண்டு எவ்வித விவாதமோ, பரிசீலனையோ இன்றி சட்டங்கள் நிறைவேற்றப்படு கின்றன. அதிகரித்து வரும் பண வீக்கம், வேலையின்மை போன்ற மக்களின் கடுமையான பிரச்சனைகள் குறித்து போதுமான விவாதங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்திய ‘குற்றத்துக்காக’  

27 நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் சென்ற கூட்டத்தொடரில் தற்காலிகப் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.  மக்களுக்கு பதில் அளிக்கக் கடமைப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்றத்திற்கு பதிலளிக்கக் கடமைப்பட்ட அரசாங்கமும் என்ற வகையிலான முறையை மையப்படுத்தப்பட்ட அதிகாரத்தைக் கொண்டு  செயலிழக்கச் செய்வது ஆபத்தானதாகும். இவ்வாறு தான் ‘மக்களாகிய நாம்’ நமது இறையாண்மையை அனுபவித்து வருகிறோம். நாடாளுமன்றத்தைச் செயலிழக்கச் செய்வதென்பது மக்களின் இறையாண்மையைப் பறிப்பதும், அரசாங்கம் தனது பொறுப்பிலிருந்தும் பதிலளிக்கும் கடமையிலிருந்தும் தப்பிப்பதும் ஆகும். பாசிச வழிமுறைகளின் மூலம் சர்வாதிகாரத்தை நோக்கி அச்சுறுத்தும் வகையில் நாடு நகர்கிறது.

அரசியல் சாசனப் பிரிவு 370 , 35 ஏ  நீக்கம், குடியுரிமை திருத்தச் சட்டம் ,அரசியல் ஊழலை சட்டபூர்வமாக்கும் தேர்தல் பத்திரங்கள் போன்ற அரசியல் சாசனத்துக்குப் புறம்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு சுமார் மூன்று ஆண்டுகளாகியும் உச்சநீதிமன்றம் இன்னமும் இவற்றை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவில்லை. நீதித்துறையின் பாரபட்சமற்ற தன்மையும், சுதந்திரமும் கடுமையாக சமரசம் செய்யப்படுகையில், அரசியல் சாசன விதிகளை நடைமுறைப்படுத்துவதிலும், ஜனநாயக உரிமைகளையும், குடிமை உரிமைகளையும் உத்தரவாதப்படுத்துவதிலும்  நீதித்துறையின் பார்வை நீர்த்துப்போய் விடும்.

அதேபோல, ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு மிகவும் இன்றியமையாத, சுதந்திரமாகவும், நியாயமாகவும் தேர்தல் நடத்துவதை உத்திரவாதப்படுத்து வதற்கு தேர்தல் ஆணையத்தின் பாரபட்சமற்ற, சுதந்திரச் செயல்பாடு அவசியமாகும். இது சமரசம் செய்யப்படுகையில் அரசாங்கங்கள் மக்களின் ஜனநாயகக் கருத்துக்களையும், மக்களின் தீர்ப்புகளையும் இனி பிரதிபலிக்க வாய்ப்பில்லாமல் போய்விடும்.

மத்திய புலனாய்வுத் துறை, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகள் மோடி அரசாங்கத்தின் அரசியல் நிகழ்ச்சி நிரலை அமலாக்குவதற்கான கருவிகளாகப் பயன்படுத்தப்பட்டு வரும் விதத்தை நாடு உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர்களைக் குறி வைப்பது, ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களைச்  சீர்குலைப்பது, தேர்தலில் தோல்வியுற்ற பிறகும் கட்சித் தாவல்களை ஊக்குவித்து பாஜக அரசாங்கங்களை அமைப்பது போன்ற ஜனநாயகக் கேலிக்கூத்துகளும், ஜனநாயகத்தை சீரழிப்பதுமான நடவடிக்கைகளும் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.

தீவிர வகுப்புவாதப் பிளவு

அரசியல் சாசன முறைமையை மிகப்பெருமளவில் அழித்தொழிப்பதுடன் நச்சு வெறுப்புகளைப் பரப்புவதன் அடிப்படையில் வகுப்புவாத ரீதியில் தீய பிரச்சாரமும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்தியக் குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயகப் பண்புகளை அழிப்பதற்கான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. சிறுபான்மைச் சமூகத்தைக் குறிவைத்து நடத்தப்பட்டு வருகிற பெருமளவிலான ‘புல்டோசர் அரசியல்’ பல மாநிலங்களில் வன்முறைக்கு இட்டுச் சென்றுள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மீது தேசியச் சின்னத்தைப் பொறிக்கும் பொழுது இந்து மதச் சடங்குகளை நடத்துவது போன்றவற்றின் மூலம் இந்திய அரசை, அரசியல் சாசனத்துடன் அல்லாமல் இந்துத்துவாவுடன் அடையாளப்படுத்தும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

எதேச்சதிகாரத் தாக்குதல்கள்

வகுப்புவாதப் பிளவு அச்சுறுத்தல் அதிகரித்து வருவதோடு ஜனநாயக உரிமைகள் மீதும், மக்களின் குடிமை உரிமைகள் மீதும் முன்னெப்போதும் இல்லாத தாக்குதல் நடைபெறுகிறது. தீஸ்தா செடால்வட் கைது செய்யப்பட்ட விதத்திலும், பீமா கோரேகான் கைதிகள் தொடர்ந்து சிறையில் வாடுவதையும், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலரையும் கொடூரச் சட்டங்களின் கீழ் காவலில் வைத்திருப்பதையும் கண்டு வருகிறோம். மாற்றுக் கருத்துக்கள் ஒவ்வொன்றும் ‘தேச விரோதமாக’ச் சித்தரிக்கப்பட்டு கண்காணிப்பு அரசின் ‘தீயக் கண்களால்’ கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

பகுத்தறிவுக்கும், அறிவியலுக்கும் எதிரான தாக்குதல்

இந்துத்துவக் கதையாடலை வெற்றி பெறச் செய்ய, பாசிச திட்டத்தின் கருத்தியல் உள்ளடக்கத்தை நிலைநாட்ட, இந்திய வரலாற்றை திருத்தி எழுதுவது அவசியமாகும். ஆகையால், சிந்தனையிலும், செயலிலும் பகுத்தறிவைப் புறம் தள்ளி மூடநம்பிக்கையை ஊக்குவிக்கும் வகையில் கல்வி முறை புதுப்பிக்கப்படுகிறது. அறிவியல் மனோபாவத்தை மறுத்து மூடநம்பிக்கை , இருண்மை வாதம், புராண கட்டுக்கதைகள் ஊக்குவிக்கப்படு கின்றன. இந்தியப் பண்பாட்டின் ஒத்திசைவுத்தன்மை, ஒற்றைப் பண்பாட்டுக் கதையாடலைத் திணிப்பதன் மூலம் மாற்றி அமைக்கப்படுகிறது. இந்து புராணங்களையும், இந்து இறையியல் தத்துவத்தையும் கொண்டு, இந்தியாவின் வளமை மிக்க பன்மைத்துவம் அழிக்கப்படுகிறது.

பெருகிவரும் மக்கள் எதிர்ப்பு

மக்கள் மத்தியில்  இந்துத்துவ அடையாளத்தை நிலை நிறுத்துவது, வாழ்வாதாரங்கள் மீதான தினசரி தாக்குதல்களுக்கு உள்ளாகும் நமது மக்களின் அவலமான வாழ்க்கை நிலைமைகளைப் பின்னுக்குத் தள்ள பயன்படுகிறது. இந்தியாவின் மதச்சார்பற்ற, ஜனநாயக அரசியல் சாசனத்தைப் பாதுகாத்து வலுப்படுத்திட, விலைவாசி உயர்வு, வேலையின்மை, பட்டினி, ஊட்டச்சத்துக் குறைபாடு போன்ற அன்றாடப் பிரச்சினைகளில் பெருமளவில் மக்கள் போராட்டங்களை ஒருங்கிணைப்பது அவசியம். ஜனநாயக உரிமைகள், குடிமை உரிமைகள், மதச்சார்பின்மை ஆகியவற்றைத் தீவிரப் போராட்டங்களின் மூலமே காக்க முடியும்.

பெருகிவரும் வலிமைமிக்க போராட்டங்களின் மூலம் சிபிஐ(எம்) -ன் சுய பலத்தை அதிகரிப்பது, இடதுசாரி ஒற்றுமையை வலுப்படுத்துவது, இடது ஜனநாயக சக்திகளை அணி திரட்டுவது, இந்துத்துவ வகுப்புவாத நடவடிக்கைகளுக்கு எதிராக பரந்துபட்ட சக்திகளைத் திரட்டுவது, நமது அரசியலமைப்பின் அடிப்படையான மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசைப் பாதுகாப்பது ஆகியவையே இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தை அனுசரிப்பதற்கான வழிமுறையாகும். இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதே தேசபக்திக்கு அடிப்படையாகும். இதையொட்டி மார்க்சிஸ்ட் கட்சி   அலுவலகங்களில் தேசியக்கொடியை ஏற்றி, ஆங்கிலேய ஆட்சியிலிருந்து நாடு விடுதலை பெற்றதன் 75 ஆம் ஆண்டு தினமான ஆகஸ்ட் 15 அன்று நமது அரசியல் அமைப்பின் முகவுரையை முன்வைத்து உறுதியேற்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நமது மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசை அழிக்கும் பாசிச இந்துத்துவா ராஷ்டிரத்தைத் திணிக்கும் வெறித்தனமான முயற்சிகளிலிருந்து நாட்டைக்காக்கும் போராட்டத்தை அனைவரும் ஒருங்கிணைந்து வலுவாக முன்னெடுப்போம்.

 தமிழில்: சிசுபாலன்

பாசிசத்தை வீழ்த்துவது வரலாற்றுக் கடமை – பிரபாத் பட்நாயக்

 • பேரா.  பிரபாத் பட்நாயக்

(மார்க்சிஸ்ட் கட்சியின் மேற்கு வங்க நாளிதழ் கணசக்திக்கு பொருளாதார அறிஞர் பிரபாத் பட்நாயக் அளித்த நேர்காணல்)

சக்தி –  75 ஆண்டு கால சுதந்திரத்திற்கு பிறகும் தேசத்தின் வளத்தில்  அசமத்துவமும் வேலையின்மையும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. மக்கள் தொகையின் பெரும்பகுதியினருக்கு வேலைவாய்ப்பும். வருவாயும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இவற்றை பார்க்கும்போது இந்தியாவானது மக்கள் நல அரசாக  நீடித்திருக்க முடியுமா?

பிரபாத் பட்நாயக் – மக்கள் நல அரசு பற்றிய அர்த்தத்தை மிகச் சரியான முறையில் பரிசீலித்தால் இந்தியா ஒருபோதும் மக்கள் நல அரசாக இருந்ததில்லை. மக்கள் நல அரசானது ஒரு குறிப்பிட்ட பகுதியினரைச் சார்ந்தவர்களுக்கு என்பதற்கு பதிலாக அனைவருக்குமான  அரசாக அது செயல்பட்டிருக்க வேண்டும். ஒவ்வொருவருடைய சிற்சில குறைந்தபட்ச உத்திரவாதத்தையாவது செய்து தர முயற்சித்திருக்க வேண்டும். ஆனால் இந்தியாவின் விசயத்தில் இது  ஒருபோதும் நடக்கவில்லை. நாட்டின் உணவு பாதுகாப்பை உத்திரவாதப்படுத்துவதற்காக பொதுவிநியோக முறை கொண்டுவரப்பட்டது. ஒருசில மாநில அரசுகளே கிராமப்புறங்களில் ரேசன்கடைகளுக்கு நிதியளித்தன. தற்போது திட்டத்தில் பொது விநியோகம் என வார்த்தை இருந்தபோதிலும் உண்மையில் அவ்வாறு இல்லை. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் விதிகளின்படி மக்கள் நல அரசு அமைப்பின் நடைமுறையானது மாநில அரசின்  கொள்கை வழிகாட்டுதல்களின் கீழ் செயல்படுத்த வேண்டும். ஆனால் இதை எந்த நீதி மன்றமும் அமுலாக்குவதற்கான உத்திரவுகளை பிறப்பிக்க முடியாது. எனவே மாநில அரசுகள் இதை கறாராக பின்பற்றுவதில்லை.

இந்தியா ஒரு மக்கள் நல அரசாக செயல்பட வேண்டும் என்பதை துவக்கத்திலிருந்தே இந்திய அரசியலமைப்பின் இலக்காக இருந்தது என்பதே உண்மையாகும். இந்த இலக்கு தற்போது வெளிப்படையாகவே கைவிடப்பட்டுவிட்டது. இல்லையென்றால், பெருமுதலாளிகளுக்கு வரிச்சலுகைகளை அளித்து உதவி செய்வதை அரசால் தன்னெழுச்சியாக செய்திருக்க முடியாது. நல அரசு கொள்கையை கைவிடுவது என்பது நவீன தாராளமயத்தின் கொள்கையின் ஒரு பகுதியாகும். இது பல்வேறு தளங்களில் வெளிப்படுத்துகிறது.  உதாரணமாக உணவுப் பொருட்களை பொது விநியோக முறையில் வழங்குவது திரும்ப பெற்றதும், கல்வியை நுகர்வு பொருட்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டதுமாகும். இதனால் பெரும்பான்மையான மக்கள் உணவு மற்றும் கல்வியை பெறமுடியாதவர்களாக்கப்பட்டனர். இது பொது சுகாதார மருத்துவத்தையும் பலவீனப்படுத்தி வருகிறது. இது போன்ற பல உதாரணங்களை சொல்ல முடியும்.

சுதந்திரத்திற்கு பிறகு என்றுமில்லாத நிலையில்  வேலையின்மை விகிதம் மிக உச்ச அளவில் உள்ளது. வேலையில்லாதவர்களுக்கான உதவி கூட தேசிய அளவில் ஒரு பொது வடிவம் இல்லை. கடந்த நூற்றாண்டுகளை விட தற்போது நாட்டின் அசமத்துவம் தீவிரமடைந்துள்ளது. பொருளாதார நிபுணர்கள் பிக்கட்டி மற்றும் கான்சல் ஆகியோரின் கூற்றுப்படி மக்கள் தொகையின் பெரும்பகுதியினர் மத்தியில் ஊட்டச்சத்து குறைந்து வருகிறது. பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்ற பிறகு  கடுமையான விளைவுகள் அதிகரித்து வருகிறது என்பதை அனுபவம் உணர்த்துகிறது. இத்தகைய போக்குகள் நவீன தாராளமய  காலத்தில் தான் சரிந்து  வருகிறது என்பதை வெளிப்படுத்துகின்றன.

கணசக்தி – நவீன தாராளமயக் கொள்கைகள் அமுலாக்க துவங்கி 30 ஆண்டுகள் கழிந்து விட்டன. இந்த கொள்கையின் மிக முக்கியமான விளைவு எது? தற்போதைய தருணத்தில் இந்த கொள்கை முற்றிலுமாக தோல்வியடைநதுவிட்டது என்று நம்மால் கூறமுடியுமா?

பி.ப – இந்தியாவின் நவீன தாராளமயத்தினை இரண்டு பகுதிகளாக பிரிக்கலாம். ஒன்று அதிகமான பொருளாதார வளர்ச்சி விகிதம் மற்றது நவீன தாராளமயத்தினால் துவங்கிய பொருளாதார நெருக்கடி. பின்னர் வந்த நெருக்கடி உலகளாவிய அளவில் பரவியது. இவ்விரண்டு பகுதிகளுக்கும் இடையே கோடு பிரிக்கலாம். அமெரிக்காவில்  வெடித்து கிளம்பிய வீட்டுக் கடன் நெருக்கடியும்  அதன் பிறகு இரண்டாவது ஐ.மு.கூட்டணி அரசின் கால கட்டம் ( 2009-2014). இந்திய தன்மையில் நெருக்கடிகள் சிறிது காலம் தாழ்த்தி துவங்கின.

உண்மையில் நவீன தாராளமயத்தின் துவக்க காலத்தில் வளர்ச்சி விகிதம் அதிகரித்தபோதிலும் கூட அதைப்போலவே  மொத்த வறுமை விகிதமும் அதிகரித்தது. 

இந்தியாவின் கிராமப்புறத்தில் ஒருவர் தினசரி 2200 கலோரிகளை எடுத்துக்கொள்ள வேண்டும்  என்ற  வறுமையை வரையறைக்குட்படுத்தப்பட்ட அளவிளை எடுத்துக்கொள்ள முடியாத மக்கள் தொகை 1993-94இல் 58 சதவிகித இருந்தது 2011-12ஆம் ஆண்டில் 68 சதவிகிதமாக உயர்ந்தது. நகர்புறத்தில் 2100 கலோரிகளை எட்டமுடியாதவர்கள் இதே காலத்தில் 57 சதவிதகத்திலிருந்து 65 சதவிகிதமாக அதிகரித்தது.

எவ்வாறாயினும், நவீன தாராளமயக் கொள்கைகளின் நெருக்கடிகளும் தேக்கநிலையும் உழைக்கும் மக்கள் பிரிவினரை மிகக் கடுமையாக தாக்கியது. 2017-18ஆம் ஆண்டின் தேசிய மாதிரி ஆய்வு அறிக்கையினை மோடி அரசு வெளியிடாமல் நிறுத்தி வைத்திருந்ததிலிருந்தே மோசமான நிலைமையினை உணர்ந்து கொள்ள முடியும்.  இவைகளை  மறைப்பதற்காக தேசிய மாதிரி ஆய்வு துறையையே மூடிவிடவும் கூட மோடி அரசு முடிவெடுத்தது. மேற்படி அறிக்கை கசிந்த நிலையில் அதன் விபரப்படி இந்திய கிராமப்புற உண்மையான தனி நபர் நுகர்வு சக்தி 2011-12க்கும் 2017-18ஆம் ஆண்டுகளுக்கு இடையே 9 சதவிகிதம் குறைந்துவிட்டது. இது ஒட்டு மொத்த சராசரியாகும். உழைக்கும் மக்களின் நிலைமையை ஒப்பிடும்போது மிகவும் மோசமாக உள்ளது. பெருந்தொற்றுக் காலமும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட உலகளாவிய பணவீக்கமும் சேர்ந்து இந்த நிலைமையை மேலும் கடுமையாக்கியுள்ளது.

பெருந்தொற்று மற்றும் உக்ரைன் போர் பாதிப்பிலிருந்து உலக முதலாளித்துவம் மீண்டு வந்தபோதிலும், நவீன தாராளமயத்தின் நீண்ட கால கட்டமைப்பு நெருக்கடியானது ஏற்கனவே 2019-20க்குமுன்னரே வெளிப்படுத்திவிட்டது; அது தற்போதும் நீடிக்கிறது. நவீன தாராளமயத்தின் நெருக்கடியை எதிர்கொள்ள முதலாளிகளுக்கு சலுகைளை வாரி வழங்குவதன் மூலம் அவர்கள் அதை தொழிற்துறையில்  முதலீடு செய்வதன் மூலம் பொருளாதார நடவடிக்கைகள் அதிகரிக்கும். அதன் விளைவாக வேலைவாய்ப்யை அதிகரிக்க செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் முயற்சிக்கிறது. ஆனால்  நெருக்கடியான காலங்களில் சந்தை முதலாளிகள் எந்தவொன்றிலும் முதலீடு செய்ய மாட்டார்கள். எனவே நெருக்கடி மேலும் ஆழமாகி வருகிறது என்பதே உண்மை. நவீன தாராளமயம் நீடிக்கும் வரை மக்களின் சமூக பொருளாதார நிலைமைகளும்  தொடர்ந்து மோசமடைந்து வரும். எவ்வளவு விரைவாக இந்த கொள்கையிலிருந்து நாடு  வெளியேறுவதுதான் ஒரே வழி.

கணசக்தி – இந்திய பொருளாதாரத்தில் எந்த ஒரு துறை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று உங்களிடத்தில் கேட்டால் நீங்கள் எந்த ஒன்றை தேர்வு செய்வீர்கள்?

பி.ப – நவீன தாராளமயத்தின் மிகப்பெரிய பிரச்சனை குறிப்பாக சிறு உற்பத்தியாளர்கள் மற்றும் நேரடியாக உழைப்பை செலுத்திடும் விவசாயத்தின் மீதான  அதன் தாக்குதல் தான். தாராளமயம் உருவானது முதல் அது பெரும் முதலாளிகள் மற்றும் பன்னாட்டு நிதி மூலதனத்தின் கூட்டணியால்  வழிநடத்தப்படுகிறது. அது விவசாயிகளை சார்ந்து உள்ள உழைப்பை செலுத்திடும் விவசாயத்திற்கான ஆதரவினை திரும்ப பெற்றது. உண்மையில் உணவுப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையினை ஒழித்துக்கட்டுவதற்காக எடுத்த முயற்சியானது மேடி அரசின் இறுதிக்கட்ட நடவடிக்கையாயாகும். விவசாயிகளும் எழுச்சிமிக்க போராட்டத்தின் காரணமாக தற்காலிகமாக பின்வாங்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதன் ஆபத்து நீடிக்கிறது.

அரசாங்கம் விவசாய பொருளாதாரத்துறைக்கான தனது ஆதரவினை குறைப்பதன் விளைவாக விவசாயிகளின் லாபத்தை தடுத்துவிடும். மேலும் அரசாங்கம் முதலீடுகளை குவிப்பததற்கு  முதன்மையானது என சொல்லி  இந்த துறையில் பெரும் பெரு நிறுவனங்களை அனுமதிக்க ஊக்கப்படுத்துகிறது. தற்போதைய விவசாயத்துறையின் நெருக்கடிக்கான காரணங்களின் பின்னணி இதுவே. நாட்டின் விடுதலைக்கு பிறகு என்றுமில்லாத நிலையில் லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதும் இந்த நெருக்கடியின் விளைவுகளால் தான். பெருந்திரளான விவசாயிகள் வேலை தேடி கிராமப்புறங்களிலிருநது நகரங்களை நோக்கி இடம்பெயர்கிறார்கள் இங்கு ஏற்கனவே உள்ள வேலையில்லா தொழிலாளர்களோடு சேர்ந்து  வேலையின்மை மேலும் அதிகரிக்கிறது.  இதுவும் நெருக்கடியின் மற்றொரு பகுதியாக மாறுகிறது. வேலைக்காக காத்திருப்போர் எண்ணிக்கை அதிகரித்து வேலைக்கான ஆட்கள் எண்ணிக்கையைக் காட்டிலும் வேலை தேடுவோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பில் விவசாயிகள் என்று வகைப்படுத்துவோர் எண்ணிக்கை 1991 மற்றும் 2001 ஆகிய இரு கணக்கெடுப்பிற்கு இடையில் ஒன்றரை கோடி விவசாயிகள் எண்ணிக்கை குறைந்துவிட்டது.

விவசாயிகளின் வறுமையானது அணிதிரட்டப்பட்ட தொழிலாளர்களின் பேரம் பேசும் சக்தியை வலுவிழக்க செய்வதோடு,  மக்கள் தொகையில்  மொத்த வறுமையும் உயருகிறது. நவீன தாராளமய முதலாளித்துவத்தின் மிகவும் குறிப்பிடத்தக்க குணமும், அதன்  மையமான கருவும்   இதுதான். இந்தியா போன்ற ஒரு நாட்டில் நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு விவசாயம் உயிரோட்டமாக இருக்க வேண்டும் என்பதுதான் வளர்ச்சிக்கான  மிக முக்கியமான திறவுகோல் . மேலும்  அது விவசாய தொழிலாளர்களின் சூழ்நிலைமையோடு மிக நெருக்கமான உறவுகளை கொண்டுள்ளது. நவீன தாராளமயம் விவசாயத் தொழிலாளர்களின்  வாழ்வாதாரத்தினை கேள்விக்குறிக்கு தள்ளியுள்ளது.

கணசக்தி – இந்திய கார்ப்பரேட் துறை இந்து அடிப்படைவாத தத்துவத்தின் அபாயத்தினை உணர்ந்துள்ள போதிலும் கூட அதற்கு சிறியதாகவே அல்லது அதிகமாகவே ஆதரவு தெரிவிக்கிறது.இது ஏன் நிகழ்கிறது? இந்திய பெரு முதலாளிகள் தங்களின் கலாச்சார, தத்துவார்த்த கொள்கையினை மாற்றிக்கொண்டார்களா?

பி.ப – இல்லை. இந்திய பெரும் முதலாளிகள் தங்களின் கலாச்சார தத்துவார்த்த கொள்கைககளை  இதுபோல மாற்றிக் கொள்ளவில்லை. பன்னாட்டு  நிதி மூலதனம் மற்றும் உள்ளுர் பெரும் முதலாளிகள் கீழிருந்து வரும் மாற்றங்களின்போது அவர்கள் அச்சப்படுவது சாத்தியம். இது  நவீன தாராளமய நெருக்கடியின் விளைவாகும். நவீன தாராளமயத்தின் முதற்கட்ட காலத்தின்போது பொருளாதார வளர்ச்சி அதிகரித்து இருந்தபோதே வரி சலுகை உள்ளிட்டவை மூலம் உழைக்கும் வெகுமக்களுக்கு ஆதரவை பெற முயற்சித்தது.  இதன் மூலமாக நவீன தாராளயமத்திற்கு எதிரான எதிர்ப்பினை எவ்வாறு  தவிர்க்கவும் அல்லது தள்ளிப்போடவும் என்பதற்கான நோக்கமாக  அது   இருந்தபோதிலும் உழைக்கும் மக்களின் துயரம் நீடித்தது. இது நவீன தாராளமயத்தின் ஆதரவு அமைப்பு முறையின் ஒரு பகுதியாகும். ஆனால் நெருக்கடியை நோக்கி வந்தடைந்தபோது இந்த ஆதரவு அமைப்பு முறை ஒழிந்து போனது. எந்த மட்டத்திலும்  வளர்ச்சியில்லை என்ற நிலைமையில், ஆதரவு முறை ஒன்றுமில்லை என்றாகிவிட்டது. இந்த சூழ்நிலையில் நவீன தாராளமயத்திற்கு ஒரு புதிய ஆதரவு அமைப்பு முறை தேவையாகிறது. நவீன பாசிசமே அதன் ஆதரவு அமைப்பு. இது நவீன தாராளமய மற்றும் நவீன பாசிச கூட்டணிக்கு கொண்டு சென்றது. இந்தியாவில் இது கார்ப்பரேட் மற்றும் இந்துத்துவ சக்திகளின் கூட்டணியாக உருவாகியது. இந்த கூட்டணி நவீன தாராளமய முதலாளித்துவம்  நீடித்திருக்க உதவி செய்ய முயற்சிக்கிறது. இந்த கூட்டணி கதையை மாற்றியமைத்து  சிறுபான்மை மக்களுக்கு எதிராக வெறுப்பு உணர்வை உருவாக்குவதன் மூலமாக, உழைக்கும் மக்கள் தங்களின் வாழ்நிலை பாதிப்பிற்கு எதிரான நியாயமான உணர்வுகள் திசைதிருப்பப்படுகிறது.   இது நவீன தாராளமயத்திற்கு இருவழிகளில் துணைபோகிறது. இது உழைக்கும் வர்க்கத்தை பிளவுபடுத்துகிறது. மேலும் அவர்களின் வாழ்வாதார பிரச்சனைகளிலிருநது மத ரீ தியான பிரச்சனைகளுக்கு திசைதிருப்புகிறது. இந்த கார்ப்பரேட் –  இந்துத்துவ கூட்டணி  பாசிசத்தின் ஒரு ஆயுதமாகும்.

கம்யூனிஸ்ட் அகிலத்தின் 7வது மாநாட்டில் பேசிய ஜார்ஜ் டிமிட்ரோவ் முதலாளித்துவத்தின் நெருக்கடியான காலத்தில் தான் பாசிசம் உருவாகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.1930களில் ஏற்பட்ட பெரும் மந்தநிலையே இதற்கு மிகச் சிறந்த உதாரணமாகும். தற்போதைய நவீன தாராளமயத்தின் நெருக்கடியும் அதைப்போன்றே நவீன பாசிசம் உருவாக காரணமாகியுள்ளது. மேலும் 1930களில் உருவான  பாசிசம் போலவே தற்போதைய நவீன பாசிசமும் உலகம் முழுவதும் உருவாகியுள்ளது. எனவே இது இந்தியாவிற்கு மட்டும் கட்டப்பட்டதாக இல்லை என்பது குறிப்பிட வேண்டியதாகும்.

எவ்வாறாயினும் 1903களின் நிலைமைக்கும் இன்றைய நிலைமைக்கும் வித்தியாசம் உள்ளது. 1930களில் பாசிசம் தன்னுடைய போர் நடவடிக்கைகளுக்கு ஏராளமான ஆயுதங்களை உற்பத்தி செய்வதற்காக  அரசாங்கங்கள் பெருமளவு செலவு செய்ததன் மூலமாக  முதலாளித்துவதை நெருக்கடியிலிருந்து காப்பாற்றியது  இந்த கூடுதல் செலவுகளுக்கு நிதி நிறுவனங்களிடமிருந்து கடன்களை பெற்றன. ஆனால் தற்போது அரசாங்கங்களால் கூடுதல் செலவிற்கு கடன்களை பெற முடியாது. இது கேள்விகளுக்கு அப்பாற்பட்டது. ஏனென்றால் அளவுக்கதிகமான நிதிப்பற்றாக்குறைப் போக்கினை நிதி மூலதனம் அனுமதிப்பதில்லை. மேலும் நிதி மூலதனமானது ஒரு சர்வதேசமயமானது. ஆனால் அரசுகள் ஒரு நாட்டிற்கு உட்பட்டது. எனவே நிதிமூலதனம் நாட்டை விட்டு வெளியேறாத வகையில் அரசாங்கம் சலுகைகளை அளிக்க முயற்சிக்க வேண்டும். அதேசமயம் அதிகப்படியான உபரி மதிப்பால் குவிந்துள்ள செல்வத்திற்கு எதிராக கூடுதல் வரி விதித்து கஜானாவிற்கு வருவாய் ஈட்டலாம் என்பதும் நவீன தாராளமயத்தில் அரசுகளால் முடியாது.  இதற்கு பதிலாக, அரசுகள் தங்களின் செலவுகளை ஈடுசெய்ய உழைக்கும் மக்கள் மீதே வரிகளை சுமத்த முயற்சிக்கின்றன. ஆனால் உண்மையில் இத்தகைய கூடுதல் வரிகள் மூலமாக மொத்த வருவாய் அளவை உயர்த்த முடியாது. ஏனென்றால் உழைக்கும் மக்கள் தங்களின் வருவாயின் பெரும்பகுதியை அடிப்படை வாழ்க்கைத் தேவைகளுக்காகவே செலவிட வேண்டியுள்ளது. எனவே பழைய பாசிச அரசு பாணியில்  தற்போதைய நெருக்கடியிலிருந்து முதலாளித்துவத்தை மீட்க முடியாது.இதுவே 20ஆம் நூற்றாண்டு  பாசிசத்திற்கும் இன்றைய  நவீன பாசிசத்திற்குமான வித்தியாசம் என்பதோடு இது நவீன பாசிசத்தின் ஒரு பலவீனமுமாகும்.

கணசக்தி – கார்ப்பரேட்-இந்துத்துவா கூட்டணியால் இந்தியா பாசிசத்தை நோக்கி நகரும் என்று நீங்கள் கருதுகிறீர்களா? அவ்வாறெனில் இந்திய பாசிசத்திற்கான பண்புகள் எவ்வாறு இருக்கும்?

 1930கள் போன்று இல்லாமல்  தற்போதைய சூழ்நிலை வித்தியாசமாக உள்ளது. இன்றைய பாசிசம் 1930களின் பாசிசத்தை நகல் எடுத்தாற்போல் இருக்காது. இருப்பினும், பாசிசத்திற்கான அத்தனை பொதுவான பண்புகளும் இந்தியாவில் ஏற்கனவே இருந்து வருகிறது. உதாரணமாக, பெரும் வர்த்தக மற்றும் பாசிச கட்சிக்கு இடையேயான கூட்டணி, அச்சத்திற்கு இடமளிக்கும் வகையில்,  சிறுபான்மை மக்களுக்கு எதிரான வன்ம பிரச்சாரங்களும் அவர்களை  குறிவைத்து பாசிச சக்திகளின் வன்முறை கும்பல்களும் அரசாங்கத்தால் தொடுக்கப்படும் அரசியல் ரீதியான துன்புறுத்தல்களும்  சர்வாதிகார அரசை போன்ற அடிப்படையில்தான் இருந்து வருகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, இத்தகைய சர்வாதிகார அரசிற்கு எதிராக குரல் கொடுக்கும் அறிவுஜிவிகள், சமூக இயக்கங்கங்களுக்கு எதிராக பரவலான அடக்குமுறைகளும் வன்முறைகளும் ஏவப்படுகின்றன. இவையெல்லாம் தன்னுடைய அரசியல் பலத்தை இழந்து விடுவோம் என்ற அச்சத்திலிருந்து பாசிச அரசால்  மேற்கொள்ளப்படுகிறது. எனினும்  இன்றைய பாசிசமாகட்டும் அல்லது நவீன பாசிசமாகட்டும், அவை ஜனநாய கட்டமைப்புக்குள் செயல்படுவதற்கு தள்ளப்படுகின்றன. எனவே நவீன பாசிசமானது ஜனநாயகத்தை அழித்தொழிக்கும் வேலையை செய்து கொண்டே, அதை பாதுகாப்பது போன்ற தோற்றத்தினையும் மேற்கொள்கிறது. அது எப்போதும் ஜனநாயகத்தை பற்றி பாசாங்குத்தனமாக நடந்து கொள்ளும். இன்றைய பாசிசம் ஒரு கபட வேடம் பூண்டுள்ளது என்பதே இதன் பொருள். எனவே இன்றைய கார்ப்பரேட்- இந்துத்துவ கூட்டணியானது பாசிசத்தை நோக்கி செல்லும் என்பதை நம்மால் சொல்ல முடியாது. இந்த கூட்டணி மாறுவேடம் தரித்த பாசிசமாகும். இது ஒரு சரியான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறது. அதுவரை வேடம் தரித்தும், அதற்கு பின்னர் ஒளிவு மறைவின்றியும் நேரடியான நடவடிக்கையில் இறங்கும்.

ஜனநாயக  முகமூடி அணிவது என்பது இந்திய பாசிசத்தின் ஒரு குணாம்சம் என்று மட்டும் என்றிருப்பது ஒரு தனித்துவம் இல்லையென்றாலும், அதன் முக்கிய பண்புகளில் ஒன்று மற்றவர்கள் என வரையறுத்த மத அடையாளத்தைப் பயன்படுத்துவதாகும். இந்த மற்றவர்கள் இந்தியாவின் மதச் சிறுபான்மையோர் ஆவர். இது மற்ற நாடுகளில் இனம், தேசியம் போன்ற இதர அடையாளங்களை வைத்து மற்றவர்கள் என்று அடையாளப்படுத்தப்படுவார்கள். இந்தியாவில்  மதத்தையே அடிப்படைவாதமாக பயன்படுத்தப்படுகிறது.

பாசிசம் தோற்கடிக்கப்படவும்   ஜனநாயகத்தையும்  மீட்டெடுக்கவும் உழைக்கும் மக்களின் பொருளாதார நிவாரண நடவடிக்கைகளை மீட்டெடுக்க வேண்டும் என்றால்  இடதுசாரிகளின் பலத்தை அதிகப்படுத்த வேண்டும். நவீன தாராளமயத்திலிருந்து வெளியேறவும், நவீன பாசிசத்தையும்  தோற்கடிக்கவுமான ஒரே வழி இடதுசாரிகள் பலமடைவதுதான்.  பாசிசத்திற்கு எதிரான  சக்திகள்  ஒரே மேடையில் ஒன்றிணைக்கப்பட வேண்டும். இதற்காக இடதுசாரிகள் விரிவான மக்கள் இயக்கத்தை கட்டமைக்க வேண்டும்.  இதே இடதுசாரி சக்திகளால்தான் கடந்த நூற்றாண்டில் பாசிசம் தோற்கடிக்கப்பட்டது. இத்தகைய வரலாற்றுக்  கடமையினை இப்போதும் முன்னெடுத்துச் செல்வோம்.

தமிழில்:  எஸ்.ஏ.மாணிக்கம் –  நன்றி – மன்த்லி ரெவ்யூ  இணைய தளம்

வரலாற்றை படிப்போம், வரலாற்றை படைப்போம் !

கே. பாலகிருஷ்ணன், மாநில செயலாளர், தமிழ்மாநிலக் குழு, சிபிஐ(எம்).

ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய நான்காவது மாநாடு கேரள மாநிலம் பாலக்காடு நகரில் 1952ஆம் ஆண்டு நடைபெற்றது. அதில் 407 பேர் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த மாநாட்டின் தகுதிகாண் குழுவின் அறிக்கையின்படி, இந்தப் பிரதிநிதிகள் அனைவரும் சிறையில் கழித்தஒட்டுமொத்த காலம் 1344 ஆண்டுகள் ஆகும். அதாவது, சராசரியாக ஒவ்வொருவரும் மூன்று ஆண்டுகளுக்கு மேல் சிறையில் கழித்துள்ளனர். இந்தப் பிரதிநிதிகள் தலைமறைவாக இருந்து செயல்பட்ட மொத்த காலம் 1021 ஆண்டுகள் ஆகும். அதாவது, சராசரியாக ஒவ்வொருவரும் இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாகத் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டுள்ளனர். இத்தகைய வீரஞ்செறிந்த வீரர்களின் துடிப்பான செயல்பாடும், தனனிகரில்லா தியாகங்களும் கொண்டதே இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம்.

இந்திய கம்யூனிச இயக்கத்தின் வரலாறு குறித்தும், அதன் தலைமையில் நடைபெற்ற எண்ணற்ற வீரஞ்செறிந்த போராட்டங்கள் குறித்தும் ஏராளமான நூல்களும்,ஆய்வு ஆவணங்களும் இதுவரை வெளிவந்துள்ளன. இந்த இயக்கத்தின் நூறாண்டு நிறைவு நிகழ்வினை ஒட்டி கட்சியின் அதிகாரபூர்வ வார இதழான பீப்பிள்ஸ் டெமாக்ரசி அவற்றின் சாரத்தை வரலாற்று வரிசைக் கிரமமாக 2019 அக்டோபர் முதல் வாரந்தோறும் வெளியிட்டு வந்தது. ‘குறுகத் தறித்த குறளாக’ வெளிவந்த இந்திய கம்யூனிச இயக்கத்தின் வரலாற்றின் தமிழ் மொழி பெயர்ப்பு தற்போது நூலாக வெளிவந்துள்ளது.

இந்தியாவில் கம்யூனிச கருத்துக்கள் பரவத் தொடங்குகையில் அன்றைய மதராஸ் மாகாணத்தில் இந்தப் பணியை முதன்முதலில் முன்கையெடுத்துச் செயல்பட்டவர் சிந்தனைச் சிற்பி தோழர் ம.சிங்காரவேலர் ஆவார். 1925ஆம் ஆண்டில் இந்திய மண்ணில் (கான்பூரில்) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உருவாக்க நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கும் பேறு பெற்ற தோழர் சிங்காரவேலர், அன்றைய மதராஸ் மாகாணத்தில் தொழிற்சங்க இயக்கம், விவசாய இயக்கம், பகுத்தறிவு இயக்கம், அறிவியல் இயக்கம் ஆகிய அனைத்திற்கும் அடித்தளம் அமைத்தவர் என்ற பெருமையும் மிக்கவர்.

சிங்காரவேலரின் வழிகாட்டுதலில் 1923ஆம் ஆண்டில் மே தினம் இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னையில் கொண்டாடப்பட்டது மட்டுமின்றி, அதே நாளில் தொழிலாளர்- விவசாயிகள் கட்சியும் உருவாக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

தோழர்கள் சிங்காரவேலர், பி. ராமமூர்த்தி, ப. ஜீவானந்தம், ஏ.எஸ்.கே. அய்யங்கார், பி. சீனிவாச ராவ் போன்ற தலைவர்கள் தமிழ் மண்ணில் கம்யூனிச கருத்துக்கள் பரவுவதற்கு முன்னெடுத்த முயற்சிகள் என்றும் நம் நினைவை விட்டு நீங்காதவை. பின்னாளில் தெலுங்கானா ஆயுதப் போராட்டத் தளபதியாகவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 1964இல் உருவான போது அதன் முதல் பொதுச் செயலாளராகவும் திகழ்ந்த தோழர் பி. சுந்தரய்யாவின் அரசியல் பயணமும் அன்றைய மதராஸ் நகரில் இருந்தே தொடங்கியது.

1920 அக்டோபர் 17ஆம் தேதி, முன்பிருந்த சோவியத் யூனியனின் தாஷ்கண்ட் நகரில் (இன்றைய உஸ்பெக்கிஸ்தான் தலைநகர்) இந்தியக் கம்யூனிஸ்டுகளின் ‘முதல் கிளை’ உருவானபோது அதில் சென்னையைச் சேர்ந்த மண்டயம் பிரதிவாதி பயங்கரம் திருமலாச்சாரியா எனும் எம்.பி.பி. ட்டி ஆச்சாரியா அவர்களும் ஓர் உறுப்பினர். அப்படி உருவான கிளை இந்தியாவில் சிறு அளவுகளில் இயங்கிக் கொண்டிருந்த கம்யூனிஸ்ட் குழுக்களை ஒருங்கிணைத்து, இந்திய நாடு தழுவிய, மையப்படுத்தப்பட்ட ஒரு கம்யூனிஸ்ட் கட்சியை கட்டியமைக்க முயற்சி எடுத்தது. அவ்வாறு அது தொடர்பு கொண்டு இணைக்க முயற்சித்த குழுக்களில் சென்னையில் இயங்கிக் கொண்டிருந்த குழுவும் ஒன்று. தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் என அறியப்படும் சிங்காரவேலர் தலைமையிலான குழுதான் அது.

சிங்காரவேலர் தலைமையிலான சென்னை குழு, எஸ். ஏ. டாங்கே தலைமையிலான பம்பாய் குழு, முசாபர் அகமது தலைமையிலான கல்கத்தா குழு ஆகியவற்றோடு பெஷாவர்,லாகூர், ஜலந்தர், கான்பூர், காசி, அலகாபாத் ஆகிய மையங்களில் இயங்கிய சிறு குழுக்கள், தனிநபர்கள் ஆகியோரை ஒன்றிணைக்க எம்.என். ராயும் அவரது தோழர்களும் முயற்சித்தனர். ஆனால் இந்த முயற்சியைத் தடுப்பதற்கு பிரிட்டிஷ் இந்திய காலனி அரசு சகலவிதமான எதிர்நடவடிக்கைகளையும் எடுத்தது. அடுத்தடுத்து சதிவழக்குகளை தொடுத்தது. கம்யூனிஸ்ட் இயக்கத்தை முளையிலேயே கிள்ளியெறிய காலனியாதிக்க அரசு எடுத்த முயற்சிகளை முறியடித்து வெடித்து வெளிவந்தது இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம்.

செம்பூவாய் மலர்ந்த இயக்கத்தை காலனிய அரசு தனது ராணுவ, போலீஸ் பூட்சுக் கால்களால் மிதித்து நசுக்கி அழிக்க முயற்சித்தது. தாஷ்கண்டில் மார்க்சிய பாலபாடம் கற்றுத் திரும்பியவர்களை வளைத்துப் பிடித்து பெஷாவர் சதி வழக்கில் சிக்கவைத்து பல ஆண்டுகாலம் சிறையில் தள்ளியது. பின் மீண்டும் கான்பூர் சதி வழக்கில் எம்.என்.ராய், சிங்காரவேலர், எஸ்.ஏ. டாங்கே, முசாபர் அகமது, செளகத் உஸ்மானி, நளினி குப்தா உள்ளிட்டோரை தண்டிக்க முயற்சித்தது. இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட ஏனைய நால்வரும் கடும் சிறைத் தண்டனைக்கு ஆளானார்கள். இதனையெல்லாம் மீறி 1925 டிசம்பர் 25 அன்று கான்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பு ரீதியாகத் தோற்றுவிக்கப்பட்டது குறித்த விவரங்கள் இந்த நூலில் விரிவாக இடம்பெற்றுள்ளன.

கட்சியின் முடிவுப்படி நாட்டின் தென்பகுதிக்கு வந்து செயல்பட்ட தோழர் எஸ்.வி. காட்டே, அமீர் ஹைதர் கான் ஆகியோர் தோழர் சுந்தரய்யாவை கட்சிக்கு கொண்டுவந்தனர். பின்னர் எஸ்.வி.காட்டேயும் சுந்தரய்யாவும் தமிழகத்தின் முதல் கிளையாக தோழர்கள் ப. ஜீவானந்தம், பி. ராமமூர்த்தி, ஏ.எஸ். கே. அய்யங்கார், பி. சீனிவாச ராவ், சி.எஸ். சுப்பிரமணியம் உள்ளிட்டோர் கொண்ட கிளை உருவாக உதவினர். இவ்வாறு இந்த 100 ஆண்டு கால வரலாற்றில் தமிழகத்தின் பொதுவுடமை இயக்க வரலாறும் ஊடுபாவாக பின்னிப் பிணைந்து விளங்குவது பெருமைக்குரியது. தொடக்கத்தில் இருந்தே சர்வதேச இயக்கத்தின் ஒரு பகுதி, நாடு தழுவிய கட்சியின் ஒரு அங்கம் என்ற உணர்வோடு, இந்த மண்ணின் தன்மைக்கு ஏற்ப, மக்களின் உடனடி பிரச்சனைகளுக்கான போராட்டத்தில் முன்னணியில் நின்று தோழர்கள் இயங்கி வந்துள்ளனர்.

ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னணிப் பங்கு என்பதோடு சுதந்திர இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த போராட்டத்தை காங்கிரஸ் கட்சிக்கு உள்ளே இருந்தும், வெளியிலும் அவர்கள் தொடர்ந்து நடத்தி வந்தனர். இந்திய கம்யூனிச இயக்கமானது ஏகாதிபத்திய எதிர்ப்பு, காலனி ஆதிக்க எதிர்ப்பு விடுதலைப் போராட்டம் என்பதோடு நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராகவும் அமைந்தது. இதனை கூரிமைப்படுத்த அகில இந்திய விவசாயிகள் சங்கம் உருவாக்கப்பட்டது. தொழிலாளர்களை அணிதிரட்ட அகில இந்திய அளவிலான தொழிற்சங்கம், எழுத்தாளர்கள், பண்பாட்டு போராளிகளை அணிதிரட்ட அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கம், இந்திய நாடக மன்றம் போன்ற அமைப்புகள் உருவாக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து மாணவர், மாதர், வாலிபர் அமைப்புகள் உருவாக்கப்பட்டதோடு, பத்திரிகைகள், பதிப்பகங்களும் உருவாகின. இவ்வாறு ஆங்கில காலனிய அரசை எதிர்த்தும், பின்பு இங்கு அமைந்த பெரு முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ கூட்டு அரசை எதிர்த்தும் வலுவான வலைபின்னல் உருவாக்கப்பட்டது.

இந்தியாவின் மூலை முடுக்கெங்கும் செயல்பட்டு வந்த நூற்பாலைகள், சணல் ஆலைகள், தோல் பதனிடும் ஆலைகள், இரும்பு உருக்காலைகள் ஆகியவற்றில் பணிபுரியும் தொழிலாளர்கள் தொடங்கி ரயில்வே, தபால்-தந்தி, போக்குவரத்து ஊழியர்கள் வரை கரத்தாலும், கருத்தாலும் உழைக்கும் மக்களை அணிதிரட்டியது கம்யூனிஸ்ட் இயக்கம். கம்யூனிஸ்டுகள் முன்னின்று நடத்திய எண்ணற்ற போராட்டங்களும், அதில் அவர்கள் செய்த தியாகங்களுமே தொழில் தகராறு சட்டம், 8 மணி நேர வேலை, போனஸ் போன்ற பல்வேறு உரிமைகள் சலுகைகளுக்கான சட்டங்களை இயற்ற வழிவகுத்தன.

அதைப் போன்றே கிராமப்புறங்களில் விவசாயிகளை, விவசாயத் தொழிலாளர்களை, பண்ணை அடிமைகளை, பழங்குடிகளை நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராக நாடெங்கும் அணிதிரட்டிப் போராடியதன் விளைவாகவே நில உச்சவரம்புச் சட்டம், இனாம் ஒழிப்புச் சட்டம், ஜமீன்தாரி ஒழிப்புச் சட்டம், ஒப்பந்தமுறை ஒழிப்புச் சட்டம், கட்டாய இலவச உழைப்பு முறை ஒழிப்புச் சட்டம் போன்ற பல்வேறு சட்டங்களை விவசாய சங்க இயக்கத்தால் நடைமுறைக்குக் கொண்டுவர முடிந்தது.

கடையரிலும் கடையராய், தீண்டத்தகாதவராய் சமூகத்தால் காலம் காலமாக ஒடுக்கப்பட்டு வந்த உழைப்பாளி மக்களை அணிதிரட்டி, சாணிப்பால், சவுக்கடியை ஒழித்துக் கட்டிய பெருமையும் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கே உரியது. அதன் வீச்சை கீழத் தஞ்சை மாவட்டத்திலும், கேரளாவில் தொடங்கி வடகிழக்கே அசாமில் சுர்மா பள்ளத்தாக்கு, திரிபுரா வரை நம்மால் இன்றைக்கும் காண முடியும்.

சாதிய பிளவுகளில் சிக்கியிருந்த தொழிலாளர்களை வர்க்க ரீதியாக அணிதிரட்டியது கம்யூனிஸ்ட் இயக்கம். கிராமப்புறங்களில் நிலவிய நிலப்பிரபுத்துவ ஒடுக்குமுறை உள்ளிட்ட அனைத்து வகையான சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் குரல் எழுப்பி, களத்தில் இறங்கி வெற்றி கண்ட ஒரே இயக்கம் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம்தான் என்பதை இந்நூலில் இடம்பெற்றுள்ள நிகழ்வுகள் நமக்குத் தெளிவாக எடுத்துக் கூறுகின்றன. தேச விடுதலை போராட்டத்தின் ஒரு பகுதியாக நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ எதிர்ப்புப் போராட்டத்தை ஒருங்கிணைத்தது இந்திய பொதுவுடைமை இயக்கம்.

நாட்டின் விடுதலைக்குப் பின்பு மொழிவாரியாக மாநிலங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்பதற்காக நாடு முழுவதிலும் போராட்டம் நடத்தி, உயிர்த்தியாகம் செய்தவர்கள் கம்யூனிஸ்டுகளே என்பதையும் இந்நூல் விரிவாக எடுத்துக் கூறுகிறது. கம்யூனிஸ்டுகள் நடத்திய போராட்டத்தின் விளைவாகவே மாநிலங்கள் சீரமைப்புக் குழு அமைக்கப்பட்டு அதன் சிபாரிசின் அடிப்படையில் சென்னை, கேரளம், கர்நாடகம் என்ற மாநிலங்கள் 1956 நவம்பர் 11இல் உருவாக்கப்பட்டன. இவ்வாறு உருவாக்கப்பட்ட சென்னை மாநிலத்திற்கு தமிழ்நாடு என பெயர்மாற்ற வேண்டும் என்ற வரைவு தீர்மானத்தை அன்றைய நாடாளுமன்றத்தில் முன்வைத்தவர் தோழர் பி. ராமமூர்த்தி ஆவார். ஒன்றுபட்ட மதராஸ் மாகாண சட்டமன்றத்தில் இடம் பெற்றிருந்த கம்யூனிஸ்டுகள் தமிழ், மலையாளம், தெலுங்கு என அவரவர் தாய்மொழியில் பேசினர். அதுவரை ஆங்கிலமே சட்டமன்ற அலுவல் மொழியாக இருந்த நிலையில் தாய்மொழிக்காக குரல் எழுப்பியவர்கள் கம்யூனிஸ்டுகள் என்பதும் வரலாறாகும்.

1947இல் பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து நம் நாடு விடுதலை பெற்றபிறகும் சில பகுதிகளில் காலனி ஆதிக்கம் நீடித்தது. பிரெஞ்சு, போர்ச்சுக்கீசிய ஆட்சிப் பகுதிகளை அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கும் போராட்டத்திற்குத் தலைமையேற்று நடத்தி இன்றைய புதுச்சேரி, கோவா பகுதிகளை காலனிஆதிக்கத்திலிருந்து விடுவித்தவர்களும் கம்யூனிஸ்டுகள்தான்.

தமிழ்நாட்டில் கம்யூனிஸ்டுகள் சந்தித்த அடக்குமுறைகள் ஏராளம். நெல்லை சதிவழக்கு தொடங்கி 16க்கும் மேற்பட்ட சதிவழக்குகள் பதிவு செய்யப்பட்டு கம்யூனிஸ்டுகள் வேட்டையாடப்பட்டனர். சேலம் சிறையில் துப்பாக்கிச் சூடு, கடலூர் சிறையில் துப்பாக்கிச் சூடு, சின்னியம்பாளையம் தியாகிகள், வீர வெண்மணி தியாகிகள் என தியாகிகள் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். கம்யூனிஸ்டுகளின் அளப்பரிய தியாகத்தாலும் இவர்களின் தலைமையின் நடத்தப்பட்ட வீரஞ்செறிந்த போராட்டங்களின் விளைவாகவும், 1952இல் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் சென்னை மாகாணத்தில் கம்யூனிஸ்டுகளின் தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது. ஆட்சிக் கட்டிலில் அமர மக்கள் அளித்த வாய்ப்பை காங்கிரஸ் கட்சியின் அரசியல் வியாபாரம் தட்டிப் பறித்து விட்டது.

அவசரநிலை பிரகடனத்தால் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை காங்கிரஸ் அரசு தட்டிப் பறித்தபோதும், சாதி மோதல்களால் பட்டியலின மக்கள் கொடுந்தாக்குதல்களுக்கு உள்ளான போதும், மதவெறி அரசியலால் சிறுபான்மை மக்கள் தாக்கப்பட்ட போதும் தயக்கமின்றி இம்மக்களுக்குக் கேடயமாக செயல்பட்டவர்கள் கம்யூனிஸ்டுகள் என்பதை தமிழகத்தின் நெடிய அரசியல் வரலாறு எடுத்துக் கூறும்.

இன்றைய தாராளமயப் பொருளாதார யுகத்தில் உழைக்கும் வர்க்கம் கடந்த நூறாண்டுகளாகப் போராடிப் பெற்ற உரிமைகள் தொடர்ச்சியாகப் பறிக்கப்பட்டு வருகின்றன. மதத்தின் பேரால் மக்களை, குறிப்பாக உழைக்கும் மக்களை, பிளவுபடுத்தி, வகுப்புவாத விஷத்தை ஊட்டி வருகின்ற, சுதந்திரப் போராட்டத்தில் எவ்வகையிலும் பங்கேற்காத ஆர்.எஸ்.எஸ். கருத்துக்களை அடியொற்றிச் செயல்பட்டு வரும் மோடி தலைமையிலான பாஜக அரசு நாட்டின் விடுதலைப் போராட்ட நாட்களில் முன்னெடுக்கப்பட்ட விழுமியங்கள், நாட்டின் விடுதலைக்குப் பின்னர் மக்களின் இடைவிடா உழைப்பினால் பேணி வளர்க்கப்பட்ட பொதுத்துறை அமைப்புகள் ஆகியவற்றை உள்நாட்டு, பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் அகோரப் பசிக்கு இரையாகப் பலி கொடுப்பதில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

கடந்த ஏழு ஆண்டுகளாக மக்களை ஏமாற்றி, அவர்களின் கவனத்தைத் திசைதிருப்பி, கையளவு பணக்காரர்களின் நலனுக்காக நாட்டின் 130 கோடி மக்களுக்கும் துரோகம் இழைத்துவரும் பாஜகவின் மோடி அரசை எதிர்த்துப் போராட வேண்டிய மிகப்பெரும் வரலாற்றுக் கடமை இந்திய உழைப்பாளி வர்க்கத்திற்கு உரியது. அந்த வர்க்கத்தின் முன்னணிப் படையாகத் திகழும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அதன் நேச சக்திகளும் ஒன்றிணைந்து இந்த மக்கள்விரோத அரசை தூக்கியெறிய தீவிரமாகச் செயல்பட வேண்டியுள்ளது.

உலகளாவிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள மக்களை வலதுசாரி சக்திகள் தங்களுக்கு சாதகமாக திரட்டும் போக்கு வலுவடைந்துள்ளது. மதவெறி, இனவெறி, நிறவெறி மற்றும் பிரிவினை கோஷங்களை முன்னிறுத்தி ஏகாதிபத்திய சக்திகள் வலதுசாரி திருப்பத்தை உருவாக்கி பல நாடுகளில் தேர்தல் வெற்றிகளை பெற்றுள்ள காலமாக இது உள்ளது. இதன் ஒரு பகுதியாக இந்தியாவிலும் வலதுசாரி சக்திகள் சாதி, மத மற்றும் பழமைவாத கருத்துக்களை முன்னிறுத்தி ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துள்ளனர். இச்சவால்களை சந்திப்பதில் இடதுசாரிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்பது உண்மையே.

எனினும், இந்தியப் பொதுவுடமை இயக்கம் அதன் 100 ஆண்டு வரலாற்றில் வளர்ச்சியையும், வீழ்ச்சிகளையும் சந்தித்தே வந்துள்ளது. அத்தகைய அனுபவங்களின் வெளிச்சத்தில் இன்றைய நிலைமைகளை மதிப்பிட்டு, நாம் மேற்கொள்ள வேண்டிய பாதையை, நடைமுறை உத்திகளை சீரமைத்து முன்னேற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடி வருகின்றது.

இந்நூலை தோழர் வீ. பா. கணேசன் எளிய நடையில் மொழிபெயர்த்துள்ளார். இவர் 1978ஆம் ஆண்டிலிருந்து கட்சியின் பல்வேறு ஆவணங்களை மொழிபெயர்த்து வந்தவர் என்பது மட்டுமின்றி, இடதுசாரி சிந்தனையை பரப்ப உதவும் வகையில் சுமார் 60க்கும் மேற்பட்ட நூல்களை ஆங்கிலத்திலிருந்தும், வங்க மொழியிலிருந்தும் தமிழுக்குக் கொண்டு வந்தவர். தமிழில் ஆற்றொழுக்கான எழுத்துத் திறனும் கொண்டவர். அவ்வகையில் “இந்திய கம்யூனிச இயக்கத்தின் ஒரு நூறாண்டுப் பயணம்” என்ற இந்த நூலையும் தெள்ளிய தமிழில் உருவாக்கித் தந்திருக்கிறார். அவருக்கு நமது இனிய தோழமை வாழ்த்துக்கள்.

இந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு என்பது வீரத்தாலும், தியாகத்தாலும் எழுதப்பட்ட ஒன்று. ஒன்றிய பாஜக அரசு மதவெறி நோக்கில் இந்திய அரசியல் வரலாற்றை திருத்தி எழுத முயலும் சூழலில் உண்மையான இந்திய வரலாற்றை மக்கள் முன் வைப்பது அவசியம். இந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றை தவிர்த்துவிட்டு இந்திய வரலாற்றை எழுத முடியாது. விடுதலை போராட்டக் காலத்தில் துவங்கி நவீன இந்தியாவை உருவாக்குவது வரை கம்யூனிஸ்டுகளின் பங்கு பாத்திரம் அளவற்றது. அந்த வகையில் இந்திய வரலாற்றின் ஒருங்கிணைந்த பகுதி கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு.

இந்தப் போராட்ட வரலாற்றை, கட்சியின் இளம் தலைமுறைக்கு உத்வேகம் தரும் வரலாற்று நிகழ்வுகளை இந்நூல் விரித்துரைக்கிறத. ”ஆகாவென்றெழுந்தது பார் யுகப் புரட்சி!” என்று நவம்பர் புரட்சி பற்றி இங்கு முரசறைந்த மகாகவி பாரதியின் நினைவு நூற்றாண்டும், இந்தியர்களின் சுயமரியாதையை தூக்கிப் பிடித்த கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி.யின் 150ஆவது பிறந்த ஆண்டும், தமிழக கம்யூனிஸ்ட் முன்னோடிகளில் ஒருவரான தோழர் சங்கரய்யாவின் 100வது பிறந்த ஆண்டும் ஒன்று கூடியுள்ள இந்தத் தருணத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நூலை பாரதி புத்தகாலயம் வெளியிடுகிறது. மார்க்சிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் மட்டுமின்றி, வர்க்கச் சுரண்டலால் புரையோடிப் போயிருக்கும் இந்தச் சமூகத்தை மாற்றி அமைக்க நினைக்கின்ற, அதற்கு முன் வருகின்ற தோழர்களும், நண்பர்களும் இதனைப் படிப்பது நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும் என துணிந்து சொல்ல முடியும். அவ்வகையில் கட்சியின் இளந்தலைமுறையினரிடையே இந்த மதிப்பிற்குரிய ஆவணத்தைக் கொண்டு செல்வது நம் அனைவரது கடமையாகும்.

இந்திய கம்யூனிச இயக்கம் ஒரு நூறாண்டுப் பயணம் ( பீப்பிள்ஸ் டெமாக்ரசி வார இதழில் வெளிவந்த தொடர்க்கட்டுரைகளின் தமிழாக்கம்) தமிழில்: வீ. பா. கணேசன்

வெளியீடு: பாரதி புத்தகாலயம், 7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை-18

பக்கங்கள்: 448 விலை: ரூ. 420

இந்திய வரலாற்றில் இஸ்லாம்

ரொமிலா தாப்பார்

பேட்டி கண்டோர்: ஜிப்சன் ஜான் – ஜிதேஷ், பி.எம்.

நன்றி: ஃப்ரண்ட்லைன்

கேள்வி: இந்திய வரலாற்றில் இஸ்லாமிய மதத்தை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

இஸ்லாமிய தன்மை  குறிப்பிடத்தக்க ஒன்றா அல்லது பெயரளவிற்கானதா என்பதை எல்லாம் பொருட்படுத்தாமல், இஸ்லாமியத்தோடு  தொடர்புடைய அனைத்தையும் முஸ்லிம் என்பதாக அழைக்கும் பழக்கம் நமக்கு உள்ளது. ஆக்கிரமிப்பதற்காக இந்தியாவுக்குள் வந்தவர்கள் என்று ‘முஸ்லிம்களை’ ஒரே மாதிரியாக கருதிக் கொண்டு  இஸ்லாத்தை ஒரு மதமாக நாம் கருதுகிறோம். இதற்கு முன் என்ன நடந்தது என்பதை விளக்குவதற்கு “முஸ்லீம் படையெடுப்பாளர்கள்” மூலம் பெற்ற விளைவு பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது. ஆனால் உண்மையில் இந்தியாவிற்குள் வந்த மற்றவர்களிடமிருந்து வேறுபட்ட சில வழிகளில்தான் இஸ்லாம் இந்தியாவிற்குள் வந்தது. அதைக் கொண்டுவந்தவர்கள் உலகின் வெவ்வேறு பகுதிகள் மற்றும் சமூகங்களிலிருந்து வந்தவர்கள் என்பது மட்டுமின்றி, அவர்கள் பின்பற்றிய மதத்தின் பதிப்புகளும் வேறுபட்டவையாக இருந்தன. எனவே, இந்தியாவில் இஸ்லாத்தின் பல்வேறு வகைகள் நடைமுறையில் இருந்தன. சிலர் தங்களுக்கு கற்பிக்கப்பட்ட இஸ்லாத்துடன் நெருக்கமாக இருந்தனர். ஆனால் பலர் இந்து நம்பிக்கை மற்றும் நடைமுறையின் சில பிரிவுகள் போன்ற உள்ளூர் மதங்களிலிருந்து கடன் வாங்கிக் கொண்டனர்.

இன்று நாம் பயன்படுத்தும் இந்த வார்த்தையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்னவென்றால், காலனி ஆதிக்கத்திற்கு முந்தைய காலத்தில், சமஸ்கிருதத்தில் உள்ள இந்திய ஆதாரங்களும் பிராந்திய மொழிகளும் “முஸ்லிம்களை” குறிப்பிடும்போது இஸ்லாத்துடன் இணைக்கப்பட்ட சொற்களை எப்போதாவதுதான் பயன்படுத்துகின்றன. அவற்றில் குறிப்பிடப்படும் மக்கள் இனத்தின் வரலாற்று தொடர்ச்சியைக் குறிக்கும் சொற்களால் அழைக்கப்படுகிறார்களே அன்றி,  அவர்களின் மதத்தால் அல்ல. இவ்வாறு இந்தியாவிற்குள் வந்த குழுக்கள் எவ்வாறு உணரப்பட்டன என்பது பற்றி இது நிறைய கூறுகிறது. இஸ்லாம் இந்தியாவுக்கு வந்த சில வழிகளாவன:

 • அ. எட்டாவது நூற்றாண்டில் அரேபியர்கள் சிந்து பகுதியின் மீதும், பதினோராவது நூற்றாண்டில் துருக்கியர்களும் ஆப்கானியர்களும் வட மேற்கு பகுதியின் மீதும், வடக்குப் பகுதியின் மீதும் படையெடுத்தனர் எனில், பதினாறாம் நூற்றாண்டில் முகலாயர்கள்  வட இந்தியா முழுவதையும் தங்கள் ஆதிக்கத்திற்குள் கொண்டு வந்தனர்.
 • ஆ. இந்தியத் துணைக் கண்டத்தின் பிற பகுதிகளில், இந்தத் தொடர்புகள் வேறு வழியில் வந்தன. அரேபியா மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்து வந்த அரேபியர்களின் சமூகங்கள் எட்டாம் நூற்றாண்டிலிருந்து (அல்லது அதற்கு முன்னதாகவும் கூட) மேற்கு இந்தியாவுடன் வர்த்தகம் செய்து வந்தன. மேலும் கி.பி ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்து மேற்கு இந்தியாவின் கரையோரங்களில் அவர்கள் குடியேறினர். இது உள்ளூர் சமூகங்களுக்கும் குடியேறிய அராபியர்களுக்கும் இடையே உருவான தொடர்புகளில் இருந்து பல்வேறு மதக் குழுக்கள் உருவாகவும் வழிவகுத்தது. போஹ்ராஸ், கோஜாஸ், நவாயத் மற்றும் மாபில்லாஸ் போன்ற பிரிவினர் இவ்வாறு மாற்றம் பெற்றவர்கள் ஆவர்.

இதேபோல், ஆப்கான் மற்றும் துருக்கி நாடுகளைச் சேர்ந்த வர்த்தகர்கள் மத்திய ஆசியாவிலிருந்து வந்து வட இந்தியாவுடன் வர்த்தகம் செய்தபடியே அந்த பகுதிகளில் வந்து குடியேறினர்.

 • இ. பணம் ஒன்றையே இலக்காகக் கொண்ட போர்வீரர்களும் இந்தப் பகுதிகளில் இருந்து இந்திய அரசர்களின் ராணுவங்களில் சேர்ந்து கொண்டனர். இந்த ராணுவங்களில் சிலவற்றுக்கு அரசர்களும் வேறு சிலவற்றுக்கு சுல்தான்களும் தலைமை தாங்கினர். கி.பி. ஆயிரம் ஆண்டு காலத்திய ராணுவங்களில் இதுபோன்ற அபிசீனிய, எத்தியோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் பணியாற்றிய குறிப்புகள் உள்ளன.

அதேபோன்று அல்-இந்த் பகுதியிலிருந்தும் படைவீரர்கள் பணத்திற்காக ஆப்கானிய, துருக்கிய ராணுவப் படைகளில் பணிபுரிந்துள்ளனர். கஜினி நகரத்தைச் சேர்ந்த முகமதுவின் மிகுந்த நம்பிக்கைக்குரிய தளபதியாக இருந்த திலக், அல்-இந்த் பகுதியைச் சேர்ந்த படைவீரர்களைக் கொண்ட மிகப்பெரும் படையணியுடன் அவருக்காகப் போர் செய்திருக்கிறார். அந்நாட்களில் நாடுகளின் எல்லைகள் பெருமளவிற்குத் திறந்தே இருந்தமையால் எல்லைகளைத் தாண்டி பல்வேறு தொழில்களையும் மேற்கொள்ள ஆட்களை வேலைக்கு எடுக்க முடிந்தது.

 • ஈ. இஸ்லாம் மதத்தினைப் பரப்புவதற்கான மிகப்பெரும் பிரச்சாரக் குழுக்கள் என்பது சுஃபிக்கள் என்று அழைக்கப்பட்டவர்களைக் கொண்டதாகவே இருந்தன. இவர்களில் சிலர் பாரசீகத்திலிருந்து வந்தவர்கள் எனில், மிகப் பலர் மத்திய ஆசியப் பகுதியில் இருந்து வந்தவர்கள். இஸ்லாம் மதத்தினை சேர்ந்த இவர்களது மத வடிவங்கள் அரேபியர்களின் இஸ்லாம் மதத்தைப் போன்றதாக இருக்கவில்லை. இவ்வாறு இந்தியாவிற்கு வந்த சுஃபிக்களில் சிலர் ஓரளவிற்குப் பழமைவாதிகளாக இருந்தபோதிலும், மற்றவர்கள் தங்களது மதத்தை உள்ளூர் மதங்களோடு கலக்கச் செய்தனர். அவர்களது இத்தகைய செயல்களை கட்டுப்பெட்டியான முஸ்லீம் மதகுருக்கள் ஒப்புக் கொள்ள மறுத்தனர்.

இவர்களை சுட்டிக் காட்டுகின்ற சமஸ்கிருத நூல் ஆதாரங்களில் இருந்தே இஸ்லாம் மதத்தில் நிலவிய இத்தகைய வேறுபாடுகளை நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது. அவர்களது மதத்தின் பெயரால் அவர்களை சுட்டிக் காட்டுவதென்பது மிகவும் அபூர்வமாகவே உள்ளது. பெரும்பாலான நேரங்களில் அவர்களுக்கான சுட்டுப் பெயர் என்பது முந்தைய காலத்திய மேற்கு மற்றும் மத்திய ஆசியாவிலிருந்து வந்தவர்களை அடையாளப்படுத்திக் கூறப்பட்ட பெயர்களாகவே இருந்தன. இவ்வகையில் மேற்கிலிருந்து வந்தவர்கள் யவனர்கள் என்று அழைக்கப்பட்டனர். இதே பெயர்தான் கிரேக்கர்களைக் குறிப்பிடவும், நவீன காலத்தில் பிரிட்டிஷ் நாட்டவர்களைக் குறிப்பிடவும் பயன்படுத்தப்பட்டது. துருக்கியர்களைக் குறிப்பிட டுருஷ்காக்கள் என்ற பெயரும், ஆஃப்கானியர்களை குறிப்பிட ஷாகாக்கள் என்ற பெயரும் பயன்பட்டன. பண்டைய காலத்தில் குறிப்பிடப்பட்ட ஷாகாக்கள் மத்திய ஆசியாவிலிருந்து வந்தவர்கள் ஆவர். சமஸ்கிருத குறிப்பேடுகளில் துக்ளக் வம்சத்தினர் ஷாகாக்கள் என்றே குறிப்பிடப்படுகின்றனர். டுருஷ்கா என்பது துருக்கி என்பதற்கான சமஸ்கிருதச் சொல்லாகும். குஷாணர்கள் என்பதைப் போன்று மத்திய ஆசியாவிலிருந்து வந்த மக்களைக் குறிப்பிட முன்னாளில் இந்தப் பெயர் பயன்படுத்தப்பட்டது. மதத்தினால் ஏற்பட்ட வேறுபாடுகள் பெரும்பாலான நேரங்களில் அடையாளமாக இருக்கவில்லை என்றே தோன்றுகிறது. பூகோள அமைப்பும், இன அடையாளமுமே இந்தச் சுட்டுப் பெயரில் முக்கியமான அம்சங்களாக இருந்தன.

மதரீதியான சகிப்புத் தன்மை

பொதுவாகவே மத ரீதியான சகிப்புத்தன்மை என்பதே இந்திய நாகரீகத்தின் தனித்ததொரு அடையாளம் என்று போற்றப்படுகிறது. டாக்டர். எஸ். ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் இந்தக் கருத்தை பெரிதும் முன்னெடுத்துச் செல்பவர்களாக இருந்தனர். இத்தகைய மதரீதியான சகிப்புத் தன்மை என்பது இந்திய வகைப்பட்ட மதச்சார்பின்மையே என்று விளக்கம் கூறுவது அல்லது அதற்குச் சமமானது என்றும் கூறப்படுகிறது. இந்த ஆய்வுப் பொருட்கள் பற்றி உங்கள் கருத்து என்ன? அந்தக் கருத்துக்கள் எந்த அளவிற்குப் பொருத்தமுடையவை?

மதச்சார்பின்மை மற்றும் மத சகிப்புத்தன்மை ஆகியவை முற்றிலும் வேறுபட்டவை. மதச்சார்பின்மை என்பது அனைத்து மதங்களின் சகவாழ்வு, ஒரு சமூகத்தில் உள்ள அனைத்து மதங்களின் சமத்துவம் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, எந்தவொரு மதத்திற்கும் அன்றைய மக்கள் சமூகத்தின் சட்டங்கள் மற்றும் அதன் அரசியல் ஆகியவற்றுக்கு இடையிலான தூரத்தை பராமரித்தல் ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது. எனவே மதச்சார்பின்மை  என்பதும் மத சகிப்புத்தன்மை என்பதும் ஒன்றாக இருக்க முடியாது. அதுவும் போக, மத சகிப்புத்தன்மை என்பது இந்திய நாகரிகத்தின் ஒரு அடையாளமாகவும் இருந்ததில்லை. பண்டைய காலங்களிலிருந்தே சகிப்பின்மைக்கு போதுமான வரலாற்று சான்றுகள் உள்ளன. ஒவ்வொரு மதத்தின் வரலாற்றிலும் இதேதான் நடக்கிறது. உதாரணமாக, பவுத்த மதம், வேறு எந்த மதத்தையும் விட அகிம்சை குறித்த போதனைகளில் மிகவும் வலுவான முத்திரையைக் கொண்டுள்ளது. எனினும், அது ஆதிக்கம் செலுத்தும் மதமாக இருக்கும் சமூகங்களில், வன்முறையிலிருந்து அது விடுபடவில்லை. ஒரு மதத்தில் கற்பிக்கப்படுவதும், உண்மையில் கடைப்பிடிக்கப்படுவதும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டியதில்லை.

எனவே, ஒன்றுக்கு மேற்பட்ட மதங்கள் இருந்தால், சில பரஸ்பர கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த கருத்து வேறுபாடு சில நேரங்களில் இறையியலுடன்  மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் மற்ற நேரங்களில் அது வன்முறையாக இருக்கக்கூடிய எதிர்ப்பு வடிவத்தை எடுக்கும்.  இந்திய வரலாற்றின் ஆரம்ப கால நூல்களில் இது பதிவு செய்யப்பட்டுள்ளது. இது வன்முறையை பாரம்பரியமாக கையாளுவது மற்றும் மதரீதியான வேறுபாடுகளைக் குறிக்கிறது, உதாரணமாக, சைவர்களுக்கும் கடவுள் மறுப்பு மதங்களான பவுத்தர்கள், சமணர்களுக்கு இடையிலான வேறுபாடுகள் சில சமயங்களில் வன்முறையாக வெடித்ததைக் கூறலாம். இத்தகைய வேறுபாடுகள் எழக் கூடும்தான். ஏனெனில் அரசரின் ஆதரவைப் பெறுவதற்கு அவற்றுக்கு இடையே ஒரு போட்டி உள்ளது. அதிலும் குறிப்பாக அரசர்கள் வழங்கும் பகட்டான நன்கொடைகளுக்காக. மேலும் அதிக எண்ணிக்கையில் தம்மைப் பின்தொடர்பவர்களைப் பெறுவதற்கான முயற்சிகளிலிருந்தும் போட்டி வரலாம். இது இந்தியாவுக்கு மட்டுமல்ல; ஒவ்வொரு சிக்கலான சமூகத்திற்கும் இது பொருந்தும்.

சிந்து சமவெளி நாகரிகம் தொடர்பான ஏழு தளங்களில் சுமார் 4,600 ஆண்டுகளுக்கு முற்பட்ட பீங்கான் பாத்திரங்களில் கால்நடை மற்றும் எருமை இறைச்சி உள்ளிட்ட விலங்கு பொருட்களின் எச்சங்கள் இருப்பதை ஒரு புதிய ஆய்வு சமீபத்தில் கண்டறிந்துள்ளது. மொத்தத்தில் மாட்டிறைச்சியை தடைசெய்யும் மசோதாவை கர்நாடக அரசு நிறைவேற்றும் நேரத்தில் இந்த கண்டுபிடிப்பு வெளிப்பட்டுள்ளது. ஒரு வரலாற்றாசிரியராக இந்த  ஆய்வையும் இந்த சட்டத்தையும் நீங்கள் எவ்வாறு  பார்க்கிறீர்கள்?

இந்த ஆய்வு குறித்த விவரங்களை நான் பார்க்கவில்லை. எனவே இது குறித்து என்னால் கருத்து தெரிவிக்க முடியாது. செய்திகளில் வரும் விஷயங்களின் நம்பகத்தன்மை குறித்து ஒருவர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்த செய்தி அகழ்வாராய்ச்சிகளிலிருந்து பெற்றதாக இருக்கக்கூடும். எனினும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும், அத்தகைய ஆதாரத்தை முதலில் தொழில்முறை ரீதியான தொல்பொருள் ஆய்வாளர்கள் ஆராய வேண்டும். மேலும் அதைப் பற்றி விவாதிக்கவும் கருத்துத் தெரிவிக்கவும் முன்பாக அவர்களின் கருத்துக்களை கேட்க வேண்டிய தேவை உள்ளது.

இந்திய சமூகம் ஒருபோதும் மாறாத, தேக்கமான ஒரு சமூகமாக இருந்ததில்லை; இப்போதும் அப்படி இல்லை. 4,600 ஆண்டு காலத்தில், நம்பிக்கை மற்றும் சமூக  நடைமுறையில் ஆழமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இன்று நாம் எப்படி இருக்கிறோம், நாம் எதை செயல்படுத்துகிறோம் என்பதெல்லாம் இந்த மாற்றங்களிலிருந்து உருவானதே ஆகும். ஆகவே, நமது நல்வாழ்வை உறுதி செய்யும் என்று நாம் நம்புகின்ற விதிகளுக்கு இணங்க விரும்பினால், ஐந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய, தொலைதூர கடந்த காலத்திலிருந்தோ அல்லது சமீபத்திய கடந்த காலத்திலிருந்தோ  சட்டபூர்வமான தன்மையை நாம் தேடிக் கொண்டிருக்க மாட்டோம். இப்போது நாம் என்ன செய்கிறோம் என்பதற்கான அனுமதியைப் பெற ஐந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பார்க்க வேண்டுமா என்பதுதான் கேள்வி. இது நிச்சயமாக தேவைப்படவில்லை. சமூகம் முன்னேறுவதற்கு மாற்றம் என்பது அடிப்படை. ஒவ்வொரு சமூகமும் அதன் விதிகளை தேவைப்படும்போதெல்லாம் மாற்றிக் கொள்கிறது. சமூக மாற்றம்  என்ற ஒன்று இருந்தால், அதற்கேற்ப சமூக விதிகளும் மாறியே ஆக வேண்டும்.

குறிப்பாக சமூகத்தின் சமூக ரீதியான வரிசைப்படுத்தலில் பதிவு செய்யப்பட்டுள்ள மாற்றங்களில் காணப்படுகிறது. எனவே, பெண்கள், தலித்துகள், ஆதிவாசிகள் மற்றும் ஓபிசிக்கள் [பிற பிற்படுத்தப்பட்டோர்] ஆகிய பிரிவினருக்கு சமூகத்தில் சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்ற நியாயமான கோரிக்கை இன்று எழுகிறது. அவர்கள் முழு உரிமைகளைக் கொண்ட, சுதந்திரமான  குடிமக்கள். இந்நிலையில் மனு தர்ம சாஸ்திரத்தால் அவர்களுக்கு விதிக்கப்பட்டபடி கீழ்ப்படிதல் மற்றும் ஒடுக்குமுறை என்பது  தொடர்ந்து நீடிக்க முடியாது.

இதைப் போலவே, உணவுப் பழக்கவழக்கங்களைப் பற்றிய விதிகளும் கூட அவற்றுக்குக் கீழ்ப்படியுமாறு கோரப்படும் நபர்களுடன் விவாதிக்கப்பட வேண்டும்.  கடந்த காலங்களில் இவை இருந்திருக்கலாம் என்று வெறுமனே கூறி அவர்கள் மீது இதைச் சுமத்த முடியாது. கடந்த கால ஆதாரங்கள்படி மக்கள் கால்நடை-இறைச்சி சாப்பிட்டதற்கான சான்றுகள் உள்ளன. நடப்புக் காலத்தில் இது தடை செய்யப்பட வேண்டுமானால், அதற்கான வாதம் என்பது கடந்த காலத்தில் சாப்பிடவில்லை என்பதைத் தவிர வேறு ஒன்றாகவும் இருக்க வேண்டும். ஆட்சி செய்யவும் பொதுமக்களின் கருத்தின்படியும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பல்வேறு கூட்டங்களிலும் இத்தகைய தடைகள் குறித்த பொருளாதாரம் மற்றும் அரசியல் ஆகியவை முழுமையாக விவாதிக்கப்பட வேண்டும்.

அது நிரூபிக்கப்பட்ட ஒன்றாக இருந்தாலும் சரி, அல்லது கருதப்படுகின்ற ஒன்றாக இருந்தாலும் சரி, தொலைதூர கடந்த காலத்திலிருந்து வருவதாக நம்பப்படும் ஒரு பாரம்பரியம் என்பது நிகழ்காலத்தில் புதிய ஒரு விதியை விதிக்க யாருக்கும் தானாகவே உரிமை வழங்கி விடாது. பாரம்பரியம் என்பது தொடர்ந்து கண்டுபிடிக்கப்படும் ஒன்று எனவும், அவை கடந்த காலத்திலிருந்து வந்தவை போல முன்வைக்கப்படுகின்றன என வரலாற்றாசிரியர்கள் வாதிட்டு வந்துள்ளனர். ஆனால் கண்டுபிடிப்பு என்பது தற்காலத்தின் தேவைகளிலிருந்து பெறப்பட்டது; மேலும் அதை நியாயப்படுத்தவும் பயன்படுகிறது.

இங்கே அடிப்படை கேள்வி என்னவென்றால், தற்போது விதிக்கப்பட்டுள்ள விதியானது ஒரு சமகால அரசியல் கொள்கையின் தேவைகளிலிருந்து எழுகிறதா? அல்லது அதை  பாரம்பரியம் என்று நம்பும் மக்கள் சிலர் கடைப்பிடிக்கும் உணர்வுகளின் பிரதிபலிப்பா? அனைத்து குடிமக்களின் நலனையும் உறுதி செய்யும் சூழலில் தற்போதைய கருத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதே அரசாங்கம். அதேபோல், இவ்வாறு விதிக்கப்படுபவர்களுக்கு அந்த விதிகளைப் பற்றி விவாதிக்க, உரிமை உண்டு. அதை நிராகரிப்பது என்று அவர்கள் முடிவு செய்தால் அவ்வாறே அது நிராகரிக்கப்பட வேண்டும். ஒரு ஜனநாயகம் செயல்படுவதற்கு இத்தகைய செயல்முறை மிகவும் அத்தியாவசியமானதும் கூட.

ஆரியர்களின் தோற்றம் என்பது இந்திய வரலாற்றில் விவாதத்திற்குரிய மிக முக்கியமானதொரு கேள்வி. உங்களைப் போன்ற வரலாற்றாசிரியர்கள் மத்திய ஆசிய பிராந்தியத்திலிருந்து ஆரியர்கள் இந்தியாவுக்கு குடிபெயர்ந்ததை சுட்டிக்காட்டுகின்றனர். இது ஆரியர்கள் இந்தியாவிலேயே பூர்வீகமாகத் தோன்றினார்கள் என்ற கோட்பாட்டை நிராகரிக்கிறது. சமீபத்திய டி.என்.ஏ ஆய்வுகள்  இடப்பெயர்வு குறித்த உங்களது கண்டுபிடிப்புகளை உறுதிப்படுத்துகின்றன. இத்தகையதொரு சூழலில், உங்கள் கருத்துப்படி, ஆரம்பகால இந்தியர்கள் என்று யாரைக் குறிப்பிட முடியும்?

கடந்த 5000 ஆண்டு காலமாக உள்ள, மொழியியல், தொல்பொருள் மற்றும் மரபணு போன்ற எங்களிடம் உள்ள சான்றுகளின் அடிப்படையில் ஆராயும்போது, ​​ஆரம்பகால இந்தியர்கள் என்பவர்கள்  கலவையான, ஒரு சில மரபணு குழுக்களை அதிகம் கொண்டு உருவான ஒரு மக்கள்தொகையினர் என்பது தெளிவாகிறது. தொடக்க கால கலாச்சாரங்கள் பலவற்றுக்கும் இந்த அம்சம் பொதுவானதாகும். கலாச்சாரங்களின் முன்னேற்றத்திற்கு மக்கள், வெவ்வேறு மக்களுடன் தொடர்புடைய தொழில்நுட்பங்கள், தொழில்கள், மொழிகள், வாழ்க்கை முறைகள், நம்பிக்கை அமைப்புகள் போன்ற பல காரணிகளின் பரஸ்பர தொடர்பு தேவைப்படுகிறது. தனித்துவமானதொரு மக்கள் கூட்டத்தோடு தொடர்புடைய அதிநவீன கலாச்சாரங்கள் மற்றும் நாகரிகங்கள் மூலமே  தனித்துவமானதொரு கலாச்சாரமும் நாகரீகமும் தோன்றியது என்று வற்புறுத்த முயல்வதை ஒரு கனவு என்றே சித்தரிக்க முடியும்!

தமிழில்: வீ.பா.கணேசன்

கலாச்சார அரங்கில் கம்யூனிஸ்டுகளின் கடமைகள் !

(2017 அக்டோபர் 14-16 தேதிகளில் நடைபெற்ற கட்சியின் மத்தியக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த ஆவணம் இன்றைய தருணத்தில் மிகுந்த கவனம் பெறத்தக்க ஒன்றாக அமைகிறது.  எனவே அதன் முக்கியத்துவம் கருதி இதனை தொடராக வெளியிட முடிவு செய்துள்ளோம். – ஆசிரியர் குழு)

மனித இனம் தனது சமூக வாழ்வின் அனைத்து வெளிப்பாடுகளையும் உள்ளடக்கி வெளிப்படுத்துகின்ற ஒரு களமாக கலாச்சாரம் விளங்குகிறது. இசை, நடனம், ஓவியம், சிற்பம், இலக்கியம் போன்ற பல்வேறு வடிவங்களின் வழியாக கலாபூர்வமாக வெளிப்படுத்தும் ஒன்றாக மட்டுமே அது இருப்பதில்லை. இத்தகைய கலாபூர்வமான வெளிப்பாடுகளோடு கூடவே நடத்தை, கருத்து வெளியீடு, அங்க அசைவுகள் போன்ற முழுமையான வாழ்க்கையை வெளிப்படுத்துவதாகவும் கலாச்சாரம் விளங்குகிறது. எனவே, கலாச்சார அரங்கில் நமது தலையீடுகள்  மனித விடுதலைக்கான போரில் வெற்றி பெறுவதையும், மனிதர்களால் மனிதர்கள் சுரண்டப்படுவதை முடிவுக்குக் கொண்டு வருவதையும் நோக்கமாகக் கொண்டு எல்லா நேரங்களிலும் கருத்துப் போராட்டத்தில் நாம் இணைவதையே குறிப்பிடுகிறது.

 1. சர்வதேச அளவிலும் சரி, உள்நாட்டு அளவிலும் சரி, தற்போதைய வர்க்க சக்திகளின் பலாபலன் வலதுசாரி அரசியலுக்குச் சாதகமானதாகவே நகர்ந்துள்ளது. தங்களது விடுதலைக்காகப் போராடுகின்ற மக்கள், இடதுசாரி அரசியல் மற்றும் அனைத்து வடிவங்களிலும் முற்போக்கான, ஜனநாயகரீதியான, மதசார்பற்ற சக்திகள் ஆகியோருக்கு எதிராக மிகக் கடுமையான தத்துவார்த்த தாக்குதலையும் அது கட்டவிழ்த்துவிட்டுள்ளது.

1.3 சர்வதேச அளவில், உலக முதலாளித்துவத்தின் தற்போதைய தொடரும் நெருக்கடி, புதிய   தாராளவாதத்தின் செல்லுபடியாகும் வெற்றியை முற்றிலும் மறுதலிக்கிறது. இது தீவிரமான முதலாளித்துவ சுரண்டலுக்கான வேறொரு பெயரைத் தவிர வேறில்லை. எனினும், உலகளாவிய முதலாளித்துவம், தனது அதிகபட்ச இலாபத்தைப் பாதுகாப்பதற்காகவே, இந்தப் பாதையைத் தொடர்கிறது. இரக்கமற்ற வகையிலும், கண்மூடித்தனமாகவும் மனித மற்றும் இயற்கை வளங்களை சுரண்டுவதன் மூலம் கொடூரமான ‘புராதன (மூலதன) சேகரிப்பு’ என்ற செயல்முறையை அது தீவிரப்படுத்துகிறது. இது புதிய தாராளவாதத்திற்கு எதிராக வளர்ந்து வருகின்ற, முதலாளித்துவ அமைப்பிற்கே சவால் விடுமளவிற்கு திறமை வாய்ந்த, மக்களின் அதிருப்தியை சீர்குலைக்க வடிவமைக்கப்பட்ட ஒரு கருத்தியல்-கலாச்சார கட்டமைப்பை நிறுவுவதன் அடிப்படையில்  ஒரு வலதுசாரி அரசியலை நோக்கி மாறுவதை அவசியமாக்குகிறது. இவ்வாறான கட்டமைப்பிற்கு இனம், மதம், சாதி, நிறம் அல்லது மக்களைப் பிளவுபடுத்தும் வேறு எந்தவொரு அம்சத்தின் அடிப்படையிலும் வெறுப்பினை பரப்ப வேண்டியுள்ளது. இதன் விளைவாக ஏற்படும் சகிப்பின்மை, வெறுப்பு, இனவெறி போன்றவை கலாச்சாரத்தில் பிரதிபலிக்கின்றன. இது வலதுசாரி அரசியலின் ‘கலாச்சாரத்தை’ தோற்கடிக்க நாம் அணி சேர வேண்டிய கலாச்சார முன்னணியின் கருத்துப் போர் ஆகும்.

 1. தற்போதைய ஆர் எஸ் எஸ்/பாஜக தலைமையின்கீழ் செயல்பட்டு வரும் இந்திய அரசு இந்திய அரசியலில் தெள்ளத்தெளிவானதொரு வலதுசாரி மாற்றத்தை நிறுவனமயமாக்கி வருகிறது. இவ்வகையில் புதிய தாராளவாத பொருளாதாரக் கொள்கைகளும் ஊக்கம்பெற்றதொரு வகுப்புவாத ஒரு துருவ முனைப்பும் ஒன்றிணைந்து முழுமையானதொரு தாக்குதலை மேற்கொள்கின்றன.  கருத்தியல்ரீதியாக, இந்தியாவின் செறிவுமிக்க, ஒத்திசைவுமிக்க நாகரீக வரலாற்றின் இடத்தில் இந்துப் புராணங்கள், இந்து தத்துவத்துடன் கூடிய இந்திய தத்துவார்த்த பாரம்பரியங்களை நிலைநிறுத்துவதே இதன் நோக்கமாகும். நாட்டின் விடுதலைக்காக நாட்டு மக்கள் நடத்திய வரலாற்றுச் சிறப்புமிக்க ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தின் மூலமாக உருவான நமது அரசியல் அமைப்புச் சட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ள நவீன இந்தியாவின் அடித்தளங்களை இது முற்றிலும் மறுதலிப்பதாக உள்ளது. புரட்சிகரமானதொரு மாற்றம் என்ற தங்களது இலக்கை வென்றடைவதை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும் இந்தியாவின் வர்க்கப் போராட்டங்களின் அடித்தளமாக விளங்கும் நவீன இந்திய குடியரசினை இத்தகைய செயல்பாடுகள் நிலைகுலையச் செய்ய முயற்சிக்கின்றன.

இவ்வகையில் கலாச்சார அரங்கில் நடத்தப்படும் போராட்டங்கள் நமது காலத்தின் ஸ்தூலமான நிலைமைகளில் இந்தியாவில் நடத்தப்படும் வர்க்கப் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வதில் உள்ளடங்கியதொரு பகுதியாகவே அமைகின்றன. நமது இந்த ஆய்வின் இறுதியில் நமக்குத் தேவைப்படுவதெல்லாம் சமூக மாற்றத்திற்கான புரட்சிகர ஆயுதத்தை மேலும் கூர்மைப்படுத்துவதும், வலுப்படுத்துவதுமே ஆகும். ”கொள்கையின் கடமையும், அறிவியலின் நோக்கமும் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் உண்மையான போராட்டத்திற்குச் செய்யப்படும் ஓர் உதவி என்று இங்கு வரையறுக்கப்படுவது உண்மையல்லவா?” என்று லெனின் கேட்டார். (லெனின் தொகுப்பு நூல்கள், தொகுதி 1, பக். 327-8) ‘கொள்கை’, ‘அறிவியல்’ ஆகிய இரண்டுமே கலாச்சாரத்தைப் புரிந்து கொள்வதன் ஒரு பகுதியாகவே அமைகின்றன.

1.5  மார்க்ஸ்-எங்கெல்ஸ் கூறினர்: “ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆளும் வர்க்கத்தின் கருத்துக்களே ஆட்சி செய்யும் கருத்துக்களாக இருக்கின்றன. அதாவது சமூகத்தின் பொருளாயத சக்தியை ஆளுகின்ற வர்க்கமே அதே நேரத்தில் அறிவுபூர்வமாக ஆளும் சக்தியாகவும் விளங்குகிறது. பொருள் உற்பத்திக்கான கருவிகளை தன் வசம் வைத்திருக்கும் வர்க்கமே மனதின் மூலமாக உற்பத்தி செய்வதையும் கட்டுப்படுத்துகிறது. இதன் மூலம் மனதின் மூலமாக உற்பத்தி செய்வதற்கான வழிவகை இல்லாதவர்களின் கருத்துக்களையும் அது தனது ஆளுகைக்குள் எடுத்துக் கொள்கிறது. ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்த தனிநபர்கள் மற்றவற்றோடு கூடவே உணர்வையும், அதன் வழியாக சிந்தனையையும் கொண்டவர்களாக இருக்கின்றனர். எனவே ஒரு வர்க்கமாக அவர்கள் ஆட்சி செய்வதோடு, வரலாற்று ரீதியான ஒரு காலகட்டத்தின் பரப்பையும் வீச்சையும் அவர்களே தீர்மானிக்கின்றனர். இதை அவர்கள் முழுமையான வகையில் செய்கின்றனர் என்பதும் கூட தெள்ளத் தெளிவானது. எனவே மற்ற விஷயங்களோடு கூடவே அவர்கள் சிந்தனையாளர்களாக, கருத்துக்களின் உற்பத்தியாளர்களாக ஆட்சி செய்வதோடு, தங்களது காலத்திற்கான கருத்துக்களை உற்பத்தி செய்து பரப்புவதையும் ஒழுங்குபடுத்துகின்றனர். இவ்வகையில் அவர்களது கருத்துக்களே அந்த காலகட்டத்தினுடைய ஆளும் கருத்துக்களாக இருக்கின்றன. (ஜெர்மானிய தத்துவம், மாஸ்கோ, 1976, பக். 67. இங்கு வலியுறுத்தப்படும் கருத்து தனித்துக் காண்பிக்கப்பட்டுள்ளது)

1.6  ஆளும் வர்க்கங்களினது கருத்துக்களின் இந்த மேலாதிக்கமானது அரசினால் மட்டுமே அமலாக்கப்படுவதில்லை என்பதையும் அண்டோனியோ கிராம்சி விளக்குகிறார். இந்த வகையில் அரசு என்பது கோட்டைக்கு முன்னால் உள்ள ஓர் ’அகழி’ மட்டுமே. அதற்குப் பின்னால் ‘வலுவான கோட்டையும் கொத்தளங்களும்’ உள்ளன. அதாவது ஆளும் வர்க்கங்களின் மேலாதிக்கத்திற்கு உதவுகின்ற கலாச்சார நிறுவனங்களின் வலைப்பின்னலும் மதிப்பீடுகளுமே இந்தக் கோட்டையும் கொத்தளங்களும் ஆகும்.

1.7  சமூக உறவுகளின் மிகச் சிக்கலான வலைப்பின்னல், அதனைத் தொடர்ந்த சமூக கட்டமைப்புகள் ஆகியவற்றின் மூலம் இந்த மேலாதிக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆளும் வர்க்கத்தின் கருத்துக்களின் மேலாதிக்கத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் மதிப்பீடுகளையும் கருத்தாக்கங்களையும் வடிவமைப்பதில் குடும்பம், இனக்குழு, சாதி, மதம், அவற்றின் வழிபாட்டுத் தலங்கள் ஆகியவை தொடர்ந்து பங்களித்து வருகின்றன. இத்தகையதொரு செயல்முறையில் அவர்கள் ‘(அனைவருக்கும்) பொதுவான ஒரு கலாச்சாரம்’ என்ற மாயையை உருவாக்குகின்றனர். இந்தப் ‘பொதுக் கலாச்சாரம்’ என்பது ’இயல்பான அறிவு’ என்ற பெயரில் வர்க்க மேலாதிக்கம் பெற்ற மதிப்பீடுகளை குறிப்பிட்ட வகையில் பரவச் செய்வது என்பதைத் தவிர வேறில்லை.

1.8 கலாச்சார அரங்கில் நமது தலையீடு என்பது புரட்சிகர வர்க்கங்களால் தானாகவே ஊக்குவிக்க முடியாத, அந்தக் காலப்பகுதியின் கலாச்சாரம், மொழி, உணர்வுகள், அனுபவங்கள் ஆகியவற்றின் மூலம் புரட்சிகர இயக்கத்திற்கு ஊக்கமளிப்பதாகவே இருக்க வேண்டும். உற்பத்தி உறவுகள் மட்டுமின்றி, அரசு (அரசியல் சமூகம்), மக்கள் சமூகம் ஆகியவற்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டு ‘புதியதொரு கலாச்சாரத்தை’ உருவாக்குவது புரட்சிகரமான மாற்றத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு அவசியமாகும். சமூகத்தின் மீதான மேலாதிக்கத்திற்கு எதிரான இத்தகைய உணர்வை உருவாக்குவதும் அவசியமாகும். கலாச்சார அரங்கில் உள்ள நமது செயல்பாட்டாளர்கள் நடைமுறை வாழ்க்கையில் தீவிரமாகப் பங்கேற்கும் அதே நேரத்தில் தற்போது நிலவும் சமூக உறவுகளை பலவீனப்படுத்த இத்தகைய மாற்று மேலாதிக்கத்தை உருவாக்க வேண்டும். இவையே கருத்துக்களை உருவாக்குவதற்கான அத்தியாவசிய அம்சங்களாக அமைகின்றன. மார்க்ஸ் ஒரு முறை கூறியது போல “ மக்களின் மனதைக் கவ்விப் பிடித்தவுடனேயே அவை ஒரு பொருளாயத சக்தியாக மாறிவிடுகின்றன.”  (கார்ல் மார்க்ஸ்- ப்ரெடரிக் எங்கெல்ஸ், தொகுப்பு நூல்கள், தொகுதி 3, பக். 182)

1.9 ஆளும் வர்க்கங்களின் ஒட்டுமொத்த மேலாதிக்கத்தையும் குறிக்கும் அறிகுறி என்ற வகையில் கலாச்சாரமானது இயல்பாகவே அறிவுஜீவிகளின் வளர்ச்சிக்கான களமாக அமைகிறது. இவ்வகையில் அவர்கள் உருவாக்கும் இந்த மேலாதிக்கத்திற்கான மாற்று என்பது மனித இருப்பு, மனித சாரம் ஆகியவற்றை முழுமையாக உள்வாங்கிய ஒன்றாகவும் அமைகிறது.

உணர்ச்சிமிக்க ஒப்புதல், உணர்வுகள், நடத்தை, இன்பம், எழில்மிகு உருவாக்கங்களின் பல்வேறு தோற்றங்கள் ஆகியவற்றின் மூலம் இயற்கையோடும், சக மனிதர்களோடுமான ஊடாடலின் விளைவாக ஏற்படும் மனிதர்களின் மனநிறைவு பல்வேறு வகையில் வெளிப்படுகின்றது. ‘மாற்று கலாச்சாரத்தின்’ உள்ளார்ந்த அம்சங்களை முன்வைப்பதன் மூலம் ஆளும் வர்க்கத்தின் மேலாதிக்கத்தால் உருவாக்கப்பட்ட  அறிவார்ந்த ‘நோக்கங்களை’ மறுப்பதை உள்ளடக்கியதாகவும் இந்த மனநிறைவின் பல்வேறு வகைகள் அமைகின்றன. இதன் மூலம் மேலாதிக்கத்திற்கான மாற்று கட்டமைப்புகளை கலாச்சார செயல்பாட்டாளர்கள் உருவாக்குகின்றனர்.

இத்தகைய ஒப்புதல்களின் முழுமையான தன்மை, அதாவது மனிதர்களின் மன நிறைவு குறித்த பல்வேறு வகைகளின் முழுமையான தன்மை, படைப்புச் செயலின் அனைத்து வடிவங்களிலும் வெளிப்படுகிறது. அதன் மூலமாக, புரட்சிகர இயக்கத்தின் ‘மாற்று கலாச்சாரம்’ என்று நாம் அழைக்கக் கூடிய ஒன்றை வடிவமைக்கிறது.

1.10  இத்தகைய கலாச்சாரமானது எப்போதும் இருப்பின் பொருளாயத நிலைமைகளை அடிப்படையாகக் கொண்டதாகவே இருக்கும். உற்பத்தி, நுகர்வு ஆகியவை பற்றி எழுதுகையில் மார்க்ஸ் இவ்வாறு குறிப்பிடுகிறார்: ”உற்பத்தியானது தேவைக்கு உகந்த வகையில் ஒரு பொருளை வழங்குவது மட்டுமின்றி, பொருளுக்கான தேவையையும் வழங்குகிறது. நுகர்வானது அதன் இயற்கையான செப்பமிடாத நிலை மற்றும் உடனடித் தன்மை ஆகிய தொடக்க நிலையில் இருந்து வெளிப்படும்போது – அது இந்த நிலையிலேயே நீடிக்குமானால், உற்பத்தியே அசைவற்றுப் போகுமானால் இத்தகைய நிலை ஏற்படும் – அந்தப் பொருளினால் உந்தப்பட்டதாக மாறிவிடுகிறது. நுகர்வானது ஒரு பொருளுக்கான தேவையை உணர்வதென்ற வகையில் அதன் உள்ளுணர்வால் உருவாக்கப்படுவதாகும். மற்றெந்தப் பொருளைப் போலவே கலையின் நோக்கமும் கலையை உணர்கின்ற, அதன் அழகை அனுபவிக்கின்ற மக்களை உருவாக்குவதாகும்.  இவ்வாறு உற்பத்தி என்பது மக்களுக்கான ஒரு பொருளை உருவாக்குவது மட்டுமல்ல; ஒரு பொருளுக்கான மக்களை உருவாக்கவும் செய்கிறது. இவ்வகையில் உற்பத்தியானது (1) அதற்கான பொருளை உருவாக்குவதன் மூலமும் (2) நுகர்வுத் தன்மையை தீர்மானிப்பதன் மூலமும் (3) நுகர்வோர் அதன் தேவையை உணர்ந்த வகையில் தொடக்கத்தில் நோக்கங்களாக முன்வைக்கப்பட்டு பின்பு பொருட்களாக உருவாக்குவதன் மூலமும் நுகர்வை உருவாக்குகிறது. இவ்வாறு அது நுகர்விற்கான பொருளையும், நுகர்வுத்தன்மையையும், நுகர்விற்கான நோக்கத்தையும் உருவாக்குகிறது.” (க்ரண்ட்ரைஸ், பக். 92) பொருள் உற்பத்தியைப் போன்றே அறிவுசார் உற்பத்திக்கும் இது பொருந்துவதாகும்.

1.11 ஆளும் வர்க்கக் கலாச்சார மேலாதிக்கத் தளத்தில் உருவாக்கப்படும் மிகப்பெரும் விஷயங்களிடையே, வெளிப்படையாக தோற்றமளிக்காவிடினும், இந்திய அரசியலில் இந்த வலதுசாரி மாற்றத்திற்கான, ‘இந்துத்துவா’ கலாச்சார அம்சங்களைக் கொண்ட பொருட்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன. இன்றைய இந்தியப் பின்னணியில் இது நம் கவனத்திற்கு உரியதாகும்.

1.12  நவீனமும் நவீனத் தன்மையும்: சமத்துவ உணர்வு, மற்றவர்கள் மீதான கரிசனம் ஆகியவை நவீன சமூகத்தில் கலாச்சாரத்தினை வரையறுக்கும் ஒரு பண்பாகக் கருதப்படுகிறது. எனினும் ஒரு நவீன சமூகத்தில் உண்மையில் அனைவரும் சமமானவர்களாக இருப்பதில்லை. இருந்தபோதிலும், மக்களிடையே பல்வேறு வகையான வேற்றுமைகள் நிலவிய போதிலும், சமத்துவத்திற்கான ஓர் அடிக்கோடு இருக்க வேண்டும் என்று நவீன சமூகம் கோருகிறது. இதன் மூலம் மக்கள் கண்ணியத்தோடு வாழ முடியும் என்பதோடு, தங்களது இருப்பு நிலைகளை மேம்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகளையும் உண்மையாகவே பயன்படுத்திக் கொள்ள முடியும். சமத்துவத்தின் இந்த அடித்தளத்தின்மீதுதான் இதர வேறுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் சேர்த்துக் கொள்ளப்பட முடியும். எனினும் இத்தகைய அடிப்படையான சமத்துவத்திற்காக எவ்வித சமரசமும் செய்து கொள்ள முடியாது. ஏனெனில், நவீன சமூகங்களில் இதன் அடிப்படையிலேயே குடியுரிமை என்பது கோரப்படுகிறது. நிலப்பிரபுத்துவ அமைப்பில் அரசர்களும் அவர்களுக்குக் கீழ்ப்படிந்த மக்களும் இருந்தார்களே தவிர, குடிமக்கள் இருக்கவில்லை.

‘மேற்கத்திய மயமாக்கல்’ என்பதற்குப் பதிலாக, ‘மேற்கத்திய நச்சுமயமாக்கல்’ என்றதொரு சொற்றொடரை ஈரானைச் சேர்ந்த ஓர் அறிவுஜீவி உருவாக்கினார். புகழ்பெற்ற நிறுவனங்கள் தயாரிக்கும் ஆடம்பர ஆடை, மிக முன்னேறிய கருவிகள் ஆகியவற்றை பணக்காரர்கள் மற்றவர்களுக்கு முன்பாக காட்டிக் கொண்டிருப்பதைக் குறிக்கும் வகையிலேயே அவர் அதைக் குறிப்பிட்டார். இந்தியாவைப் பொறுத்த வரையில் இதை நவீனம், நவீனத்தன்மை என்பதாக நாம் எடுத்துக் கொள்ளலாம். சமீப காலத்தில் உருவாக்கப்பட்ட பொருட்கள், கருவிகள் ஆகியவற்றை நுகர்வோருக்காக காட்சிப்படுத்துவதில் அதீத ஆர்வம் காட்டுவது நவீனத்திற்கு இணையானதாகக் கருதப்படுகிறது. ஜி-20 நாடுகள் கூட்டத்தின் உயர்ந்த மேடைகளில் அமர்ந்து உலக வல்லரசு நாடுகளின் தலைவர்களின் தோள்களை உரசுவதே ‘பொருளாதாரத்தில் உயர்ந்து வரும் நாடு’ என்ற இந்தியாவின் முத்திரையாக இது மாறியுள்ளது. இந்திய மண்ணில் எப்போதுமே காலடி எடுத்து வைத்திராத வெளிநாடுவாழ் இந்தியர்கள் உள்ளிட்டு, நமது சமூகத்தின் மிக ‘நவீனமான’ பிரிவினர் எவ்வாறு தங்களது உட்பிரிவு சாதியிலேயே மணப்பெண்/ மணமகன் வேண்டும் என்று கோரி வருகிறார்கள் என்பதையும் திருமணம் தொடர்பான விளம்பரங்களை மேலோட்டமாகப் பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம். இது நவீன நச்சுத் தன்மையின் கலாச்சாரமே தவிர நவீனம் அல்ல. வலதுசாரி அரசியலை நோக்கிய இந்த மாற்றத்தை இது மிக அழகாக மறைக்கிறது.

நவீனத்தை நோக்கிய இந்தியாவின் பயணமானது சாதி அடிப்படையிலான சமூக ஒடுக்குமுறை, ஆணாதிக்க சமூக அமைப்பு, வன்முறை கொண்டு சாதியை நிலைநிறுத்தும் காப் பஞ்சாயத்துகள், மதரீதியான சிறுபான்மையினரை சமமற்ற வகையில் நடத்துவது போன்ற கடந்தகால சமூக நிறுவனங்களின் கொடுமைகள் தொடர்ந்து நீடித்து நிற்கும் தன்மையாலேயே அவை தடுத்து நிறுத்தப்படுவதில்லை. நவீன தாராளவாத  நுகர்வுக் கலாச்சாரம், பெண்களை மனிதர்களாக மதிக்காமல் அவர்களை காட்சிப் பொருளாக, அடக்கி ஆளப்பட வேண்டியவர்களாக, சுரண்டப்பட வேண்டியவர்களாக நடத்துவது ஆகியவற்றின் மூலம் இவை நிலைநிறுத்தப்படுவதோடு, மூடி மறைக்கவும் படுகிறது. நமது தேர்தல் அமைப்பில் உள்ளார்ந்த வகையில் பொதிந்து கிடக்கும் பரவலான சந்தர்ப்பவாதத்தின் மூலமாகவும் இது மேலும் வலுப்படுத்தப்படுகிறது. தேர்தல் வெற்றிகளுக்காக நமது சமூக அமைப்பில் நிலவும் இத்தகைய அநீதியான, சமத்துவமற்ற அம்சங்கள் அனைத்தும் புத்துயிர் ஊட்டப்படுகின்றன. இவ்வாறு நவீனமான, நாகரீகமான ஆடைகளை அணிந்தபடி, மிக நவீனமான கருவிகளை கையில் ஏந்தியபடி நம்மிடையே உலாவரும் நபர்கள் நவீன ஜனநாயகத்திற்கு முற்றிலும் பொருத்தமற்றது என தூக்கியெறிய வேண்டிய இந்த நடைமுறைகள் அனைத்திலும் ஈடுபட்டு வருவது எவ்வகையிலும் முரண்பட்ட ஒன்றாகவே தோன்றுகிறது.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் உறுதியளித்துள்ளபடி சாதி, மதம் அல்லது பாலினம் என்ற எவ்வித வேறுபாடுமின்றி, அனைத்துக் குடிமக்களுக்கும் சம உரிமை என்பதாகவே நவீனத்துவம் வரையறுக்கப்படுகிறது. இவ்வகையில் புரட்சிகர இயக்கத்தின் மேலாதிக்கத்திற்கான மாற்றை நிலைநிறுத்துவதற்குத் தவிர்க்கவியலாத ஒரு கலாச்சார கூறாகவும் அது அமைகிறது.

1.13 கலாச்சார தொழில்: இந்த நவீன தாராளவாத சீர்திருத்தங்கள் செல்வம் மற்றும் சொத்துக்களின் மிகப்பெரும் செறிவோடு கூடவே ஒரு கலாச்சார தொழிலின் வளர்ச்சிக்கும் வழிவகுக்கிறது. உலகளவில், தகவல், தகவல்தொடர்பு, பொழுதுபோக்கு ஆகிய பெருநிறுவனங்களின் இணைப்பானது ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றுக்கான பொருட்களின் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் பெரும்பகுதியை கட்டுப்படுத்தி, உலகளாவிய தனித்ததொரு கலாச்சார சந்தையாக உலகத்தை மாற்றுவதற்கும் முயற்சிக்கிறது.

இத்தகையதொரு செயல்முறையை விரும்புகின்ற கலாச்சார மேலாதிக்கமானது மக்களின் ரசனையை ஒரே மாதிரியானதாக உருவாக்க வேண்டியதன் தேவையையும் வெளிப்படுத்துகிறது. இந்த ரசனையானது எந்த அளவிற்கு ஒரே மாதிரியானதாக இருக்கிறதோ, அந்த அளவிற்கு பெருமளவிலான மக்களுக்கான கலாச்சார பொருட்களை இயந்திரகதியாக மறு உற்பத்தி செய்வதற்கான தொழில்நுட்பங்களை வளர்த்தெடுப்பதும் எளிதாகிறது. மூன்றாம் உலக நாடுகள் பலவற்றிலும் கல்வியறிவின்மை பரவலாக இருந்தபோதிலும் வால்ட் டிஸ்னியின் கார்ட்டூன் சித்திரங்கள் குழந்தைகளுக்கு நன்கு அறிமுகமான ஒன்றாக இருக்கின்றன. (ஆப்ரிக்காவின் சஹாரா உட்புற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் இதை உறுதி செய்துள்ளன) வர்க்க மேலாதிக்கம் என்ற கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும்போது, நவீன தாராளவாதத்தின் கலாச்சாரமானது அன்றாட வாழ்க்கையின் உண்மையான நிலைமைகளில் இருந்து மக்களை பிரித்து வைக்க முயல்கிறது. கலாச்சாரமானது இங்கு அழகியலைக் கோருவதாக இல்லாமல், வறுமை, துயரம் ஆகிய பிரச்சனைகளில் இருந்து மக்களை திசைதிருப்புவதாக, மடைமாற்றுவதாகவே செயல்படுகிறது.

இதன் விளைவாக, தங்களது இந்த துன்பகரமான வாழ்க்கையை மாற்றியமைப்பதற்கான போராட்டத்தை மக்கள் மேற்கொள்வதற்கான உந்துதலை சீர்குலைக்கவே அது முயற்சிக்கிறது. மைக்கேல் பாரெண்டி கூறுகிறார்: “ நமது கலாச்சாரத்தின் பெரும்பகுதியானது ‘மக்கள் கலாச்சாரம்’, ‘பிரபலமான கலாச்சாரம்’ என்று மிகப் பொருத்தமாகவே இப்போது பெயரிடப்பட்டுள்ளது. மிகப்பெரும் நிறுவனங்களுக்குச் சொந்தமான, அவற்றால் நடத்தப்படுகின்ற ‘ஊடக கலாச்சார’த்தின் முக்கிய நோக்கம் என்பது செல்வத்தைப் பெருக்குவது, தங்களது உரிமையாளர்களை பாதுகாக்கும் வகையில் உலகத்தை நிலைநிறுத்துவது என்பதே ஆகும். இவர்களின் நோக்கம், பயன் மதிப்பு என்பதற்கு பதிலாக பரிமாற்ற மதிப்பாகவும், சமூக ரீதியான படைப்பூக்கம் என்பதற்கு பதிலாக சமூகக் கட்டுப்பாடு என்பதாகவே இருக்கிறது. வாழ்க்கையின் பெரும் யதார்த்தங்கள் குறித்து சிந்திப்பதில் இருந்து நம்மை திசைதிருப்பும் வகையிலேயே பெரும்பாலான வெகுஜன கலாச்சாரம் என்பது ஒழுங்கபடுத்தப்பட்டுள்ளது. உடனடி தேவையான, ஊட்டமளிக்கக் கூடிய விஷயங்களை ஒதுக்கித் தள்ளுவதாகவே பொழுதுபோக்கு கலாச்சாரத்தின் வீக்கமும் குப்பைகளும் உள்ளன. மக்களின் அடிமட்ட ரசனையை தொடர்ந்து தூண்டி விடுவதன் மூலம், பரபரப்பு மிக்க வெகுஜன கலாச்சாரமானது பொதுமக்களின் ரசனையை மேலும் கீழிறக்கி விடுகிறது.  இதன் விளைவாக, மக்களின் ரசனையானது கலாச்சார ரீதியான குப்பைகள், பெரும் பரபரப்பு, அதிர்ச்சியூட்டும்படியான, மிக கவர்ச்சிகரமான, மிகுந்த வன்முறை நிரம்பிய, உடனடியாக உணர்ச்சிகளைத் தூண்டக்கூடிய, பெரும்பாலும் மேம்போக்கான விஷயங்களையே முன்வைக்க விரும்புவதாகவும் மாறியுள்ளது.

”இத்தகைய விஷயங்கள்தான் பெரும்பாலான நேரங்களில் அதன் உண்மையான தத்துவார்த்த உள்ளடக்கமாக இருக்கின்றன. அதன் நோக்கம் அரசியல்நோக்கம் அற்றதாக இருந்தபோதிலும் கூட, பொழுதுபோக்கு கலாச்சாரமானது ( உண்மையில் அது பொழுதுபோக்குத் தொழிலே ஆகும்) அதன் தாக்கத்தில் அரசியல்தன்மை கொண்டதாகவும், கீழ்த்தரமான பாலியல் மதிப்பீடுகள், இனவெறி, நுகர்வுக் கலாச்சாரம், எதேச்சாதிகார உணர்வு கொண்ட, ராணுவ வெறிபிடித்த, ஏகாதிபத்தியத் தன்மை கொண்ட சித்திரங்களையும் மதிப்பீடுகளையுமே பிரச்சாரம் செய்கிறது.” ( மன்த்லி ரிவ்யூ, பிப்ரவரி 1999)

1.14  இவ்வகையில் நவீன தாராளவாதமும் வகுப்புவாதமும் உள்நாட்டளவில் பொது ரசனையை ஒரே மாதிரியாக மாற்ற முயல்கின்றன. கலாச்சார மேலாதிக்கத்தை வலுப்படுத்தவும், அதீதமான லாபத்தை ஈட்டவும் நவீன தாராளவாதம் செயல்படுகிறது. இதனோடு கூடவே, ஆர் எஸ் எஸ் ஸின் இலக்கான ‘இந்து ராஷ்ட்ரா’ என்ற மிக மோசமான, சகிப்புத்தன்மையற்றதொரு பாசிஸ அரசை நிறுவுவதற்கான பாதையை வகுப்புவாதம் உருவாக்கிக் கொண்டிருக்கிறது. ’ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே கலாச்சாரம்’ என்ற அதன் கோஷமானது இந்தியாவின் வளமான, செறிவான பன்முகக் கலாச்சாரத்தின் அடிப்படைகளையே  மறுதலித்து, இத்தகைய ஒருமுகப்படுத்தலின் மூலமே உண்மையான அந்தஸ்தையும் பொருளையும் அடைய முடியும். மேலும் புதிய தாராளவாதம், வகுப்புவாதம் ஆகிய இரண்டுமே அன்றாடப் பிரச்சனைகளிலிருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பவும், அதிலும் முக்கியமாக, தற்போது நிலவுகின்ற சுரண்டல்மிக்க அமைப்பிற்கு எதிரான அவர்களது போராட்டத்தை பலவீனப்படுத்தவுமே முயல்கின்றன.

1.15 இவ்வகையில் தொழிலாளி வர்க்கம் மற்றும் உழைக்கும் மக்களின் ‘மாற்று மேலாதிக்கத்தை’ நிறுவுவதற்கான போராட்டங்களுக்கு மக்கள் பிரச்சனைகளுக்கான கலாச்சார நிகழ்ச்சிநிரலை மீண்டும் கொண்டுவர வேண்டிய தேவை உள்ளது. இவற்றை நமது பார்வையிலிருந்து மறைத்து, அழிப்பதே புதிய தாராளவாதம் மற்றும் வகுப்புவாத கலாச்சாரத்தின் அடிப்படை இயல்பாக உள்ளது. இதுவே கலாச்சார அரங்கில் நமது கடமைகளின் அடிப்படையான நோக்கமாக அமையும்.

4.1. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கட்சி உறுப்பினர்கள் தீவிரமாகச் செயல்பட்டு வரும் கலாச்சாரக் குழுக்கள், அரங்கங்கள், மேடைகள், சங்கங்கள் ஆகியவை தங்களது செயல்பாடுகளில் மிக விரிவான அளவில் கலைஞர்களையும், கலாச்சார செயல்பாட்டாளர்களையும், அறிவுஜீவிகளையும் ஈடுபடுத்த வேண்டும். இத்தகைய நடவடிக்கைகளில் படைப்பூக்கமும், தனிச்சிறப்பான தன்மையும் ஈர்த்தெடுக்கப்பட வேண்டும். இதற்கான நமது அணுகுமுறை என்பது விரிவானதாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும், பாரபட்சமற்றதாகவும் இருக்க வேண்டும். குறிப்பிட்ட சில விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கூட,  ஜனநாயக ரீதியான, முற்போக்கான, மதசார்பற்ற மதிப்பீடுகளின் மீது பற்றுறுதி கொண்டுள்ள கலைஞர்கள் அல்லது அறிவுஜீவிகளுக்கு கலாச்சார செயல்பாடுகளில் பங்கேற்க நமது மேடையில் விரிவான அளவில் இடம் தர வேண்டியதும் அவசியமாகும். நம்மோடு இணைந்து செயல்படும் கலாச்சார அமைப்புகளின் தலைமைப் பொறுப்புகளில் கட்சி சார்பற்ற கலைஞர்களை உணர்வுபூர்வமாக ஊக்கப்படுத்த வேண்டும்.

4.2.  வெகுஜன, வர்க்க அமைப்புகள் ஜனநாயகபூர்வமாகவும், சுயேச்சையாகவும் செயல்படுவதன் முக்கியத்துவத்தை சால்கியா, கொல்கத்தா பிளீனங்கள் வலியுறுத்தி வந்துள்ளன. கலாச்சார அமைப்புகளின் விஷயத்தில் இந்த அம்சம் மேலும் முக்கியமான ஒன்றாக இருப்பதோடு, அவற்றுக்கு கணிசமான அளவிற்கு சுயாட்சி வழங்கப்பட வேண்டும். இந்தக் கலாச்சார அமைப்புகளை கட்சியோடு ஒட்டிக் கொண்டிருக்கும் உறுப்புகளாகப் பார்க்கலாகாது. கட்சி முழுமையும், அதைப் போன்றே  அதன் வர்க்க, வெகுஜன அமைப்புகளும் சமூக மாற்றத்திற்கான போராட்டத்தில் கலாச்சார ரீதியான தலையீட்டினை அங்கீகரிப்பதன் மூலமே, இந்த விஷயத்தில் சரியானதொரு அணுகுமுறையை உருவாக்க முடியும். கலாச்சார அமைப்புகளுக்கு உள்ளேயும் கூட சுதந்திரமான, விமர்சனபூர்வமான சிந்தனைக்கு ஊக்கம் தருவதை உறுதிப்படுத்த வேண்டும். இதை உறுதிப்படுத்துவதன் மூலம் மட்டுமே கலாச்சாரத் தளத்தில் இளமையான, புதுமையான தலைமையை நம்மால் வளர்த்தெடுக்க முடியும். அமைப்பின் அனைத்து மட்டங்களிலும் சிறுபான்மையினர் உள்ளிட்டு, தலித்கள், பழங்குடிகள் மற்றும் சமூகத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள, நலிந்த குழுக்களையும் இனங்களையும் சேர்ந்த கலைஞர்கள், பெண்கள் ஆகியோர் தீவிரமாகச் செயல்படுவதற்கு ஊக்கம் அளிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு தலைமைப் பொறுப்புகளும் வழங்கப்பட வேண்டும்.

4.3. கலாச்சாரம் என்பது கலாச்சார அமைப்புகள் மட்டுமே செயல்படுகின்ற ஒரு களம் அல்ல. கட்சி உறுப்பினர்கள் வேலை செய்யும் வெகுஜன, வர்க்க அரங்கங்களும் கலாச்சார நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் விரிவான கலாச்சார சமூகத்தை ஈடுபடுத்துவது முக்கியம். எனினும், அவர்கள் எதில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதிலும், நமது  பிரச்சாரங்களில் அவர்களை கவர்ந்திழுக்க முயற்சிக்கும்போது அவர்கள் எந்த நடவடிக்கைகளில் சிறந்தவர்கள் என்பதை அளவிடுவதிலும் நாம் கவனமாக இருக்க வேண்டும். அதேபோல், இந்த ஈடுபாடு தேர்தல் அரசியலுக்கு மட்டுமே ஆனதாகவும் மட்டுப்படுத்தப்படக்கூடாது. சாத்தியமான இடங்களில், வகுப்புவாத அல்லது சமூக விரோதக் குழுக்களால் ஆதிக்கம் செலுத்தப்படாத, தற்போது செயல்பட்டு வரும் கலாச்சார அமைப்புகளில் நமது தோழர்கள் நுழைந்து பணியாற்ற வேண்டும். இது அவர்களுக்கு ஒரு முற்போக்கான, மதச்சார்பற்ற, ஜனநாயக பூர்வமான திசைவழியை  காட்ட முயற்சிப்பதாக அமையும்.

4.4. ஒரு கலைஞரின் அகநிலைப்பட்ட, தனிப்பட்ட பார்வைகள் குறித்த நமது எதிர்வினையை அந்தக் கலைஞரது படைப்பு குறித்த புறநிலை மதிப்பீட்டில் இருந்து நாம் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். நமது செயல்பாட்டாளர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்வதன் மூலமும், சமூகத்தில் நடக்கும் பல்வேறு வகையான கலாச்சார முயற்சிகளில் ஈடுபடுவதன் மூலமும் மட்டுமே, நமது இலக்கை நோக்கி நகர்வதற்கு எது உதவக்கூடும் என்பதை வரையறுக்கவும், மதிப்பீடு செய்யவும் முடியும். கருத்து சுதந்திரம், முற்போக்கான முயற்சிகளை அனுமதிக்கும் ஆக்கபூர்வமான மற்றும் தகவல் தொடர்பு தளங்களை நாம் இப்போது எங்கே காண முடியும்? இலாப நோக்கத்தினால் அல்லது சமூக/மத பழமைவாதத்தினால் இவை எங்கே முழுமையாக உள்வாங்கப்பட்டு சிதைக்கப்பட்டன? நமது போராட்டங்களை வலுப்படுத்தும் ஆதாரங்களுக்கான இந்தத் தேடலில் கடுமையான முன்முடிபுகளால் நாம் கட்டுண்டு விடமுடியாது. எனினும் நாம் ஏற்கனவே அடையாளம் கண்டுள்ள ஆதாரங்களின் அடிப்படையில்தான் இந்தச் சோதனை அமைய வேண்டும்.

4.5. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மதச்சார்பற்ற, ஜனநாயக பூர்வமான கலாச்சார அமைப்புகள் பல  உள்ளன. ஒரு மாநிலத்திற்கு உள்ளேயும் கூட, நம்மிடம் பல முற்போக்கான, மதச்சார்பற்ற கலாச்சார அமைப்புகள், தனிநபர்கள் ஆகியோர் பல்வேறு கலை வடிவங்களில் செயல்பட்டு வருகின்றனர். அதில் நமது கட்சி உறுப்பினர்களும் கூட தீவிரமாகச் செயல்பட்டு வரலாம். நம்மால் முடிந்தவரை இவற்றோடு மிகப்பெரிய ஒற்றுமை, ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றை உருவாக்க நாம் முயற்சி செய்ய வேண்டும். இந்த நோக்கத்திற்காக, கலாச்சார மாநாடுகள் அல்லது கூட்டங்கள், திருவிழாக்கள், பட்டறைகள், கருத்தரங்குகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்வதற்கான சாத்தியக் கூறுகளையும் நாம் ஆராய வேண்டும். மாநிலங்களுக்கு இடையேயான சமூக ஊடகக் குழுக்கள் இருப்பதற்கான சாத்தியத்தையும் நாம் ஆராய வேண்டும். உடனடி பிரச்சினைகளுக்கும், குறிப்பாக தணிக்கை மற்றும் கருத்து சுதந்திரத்தின் மீதான தாக்குதல்களின் போது விரைவாகவும், ஒருங்கிணைந்த முறையிலும் பதில் நடவடிக்கைகளை மேற்கொள்ள இது உதவும்.

5.0 மேலே விவரிக்கப்பட்டுள்ள ஒட்டுமொத்த அணுகுமுறையோடு கூடவே, கலாச்சார அரங்கில் நம் முன்னே உள்ள முக்கிய பணிகளாவன:

5.1. தொடர்ச்சியான சுய ஆய்வு மற்றும் சுயவிமர்சனம் மூலம் நமது நடத்தை, தினசரி நடைமுறைகளில் ஒரு தரத்தை முன்னிறுத்துவது என்பது, கிராமப்புற, நகர்ப்புற இந்தியாவின் உழைக்கும் மக்களை உள்ளடக்கிய நமது அடிப்படை வர்க்கத்தினருடன் தகவல் தொடர்பு கொள்ளவும் அவர்களின் நம்பிக்கையை வெல்லவும் உதவும்.

5.2 வெறுமனே அது ஒரு ‘கலை’ என்பதாக அல்லாமல், மாறாக மக்களின் ‘வாழ்ந்த வாழ்க்கை’ என்ற வகையில் கலாச்சாரத் துறையினை அதன் முழுமைத் தன்மையோடு காண வேண்டும். நமது பேச்சு முறை, நம் உணவின் சுவைகள், நம் ஆடைகளின் நிறங்கள் மற்றும் அவை வெட்டப்படும் முறை மற்றும் வேறு பல விஷயங்களும் மக்களின் சாதாரண, அன்றாட வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி வடிவமைந்ததாக இந்தக் கலாச்சார காரணிகள் அமைகின்றன. இந்த காரணத்தினாலேதான், கலாச்சார ரீதியான தலையீடுகளில் இருந்து நம் கவனத்தை மாற்ற வேண்டும். அதாவது, ஒரு கருத்தினை வெளிப்படுத்தவும், கலாச்சாரத்தில் தலையீடுகளை மேற்கொள்ளவும், இசைக்கருவியைப் பயன்படுத்தும் ஒரு கலைஞர் கலையை ‘பயன்’படுத்துகிறார். அதாவது, அன்றாட வாழ்வில், நடைமுறையில் முற்போக்கான, மதச்சார்பற்ற, ஜனநாயக கருத்துக்களை  வடிவமைக்க வேண்டும். அன்றாட வாழ்க்கையிலும் சமூகத்திலும் அமைப்புகளிலும் குடும்பத்திலும் அவை எவ்வாறு ஒழுங்கமைக்கப்படுகிறது என்பதன் மூலமாகவும் இவை வெளிப்படுகின்றன.

5.3. மதச்சார்பற்ற ஜனநாயக கலாச்சார மரபுகளுக்கான சமூக களத்தை நாம் மீட்டெடுக்க வேண்டுமெனில், நம் நாட்டிலும், உலகின் பிற பகுதிகளிலும் ஆதிக்கம் செலுத்தும்  மேலாதிக்கங்களை எதிர்த்த முற்போக்கு சிந்தனை போக்குகள், காலனியத்திற்கு எதிரான சிந்தனை மரபுகள், இவற்றோடு கூடவே மக்களுக்கு உயிரோட்டமான வகையில் செய்திகளை எடுத்துச் செல்லும் செவ்வியல், நவீன, நாட்டுப்புற கலை வடிவங்களை உருவாக்குவோரைப் பற்றியும், மார்க்சிய சிந்தனையின் வரலாறு மற்றும் சோஷலிசத்தை நோக்கி முன்னேறும் புரட்சிகர இயக்கங்கள் ஆகியவை பற்றியும் அறிந்தவர்களாகவும் நாம் இருக்க வேண்டும். கூடவே, இந்த அறிவை பயன்படுத்திய வகையில் கலாச்சாரத்தில் ஓர் இறை தத்துவம், எதேச்சாதிகாரப் போக்கு, குழுவாதப் போக்கு ஆகியவற்றையும் எதிர்த்துப் போராட வேண்டும்.

5.4. கலாச்சார தேசியம் என்ற பெயரிலோ அல்லது ‘மத ரீதியான உணர்வு’ என்ற பெயரிலோ அல்லது ‘சாதிய உயர்தன்மை’ என்ற பெயரிலோ வகுப்புவாத சக்திகள் முன்வைக்கின்ற  சகிப்புத்தன்மையற்ற அனைத்து வடிவங்களையும் எதிர்த்துப் போராட வேண்டும். மக்களின் கலாச்சார நடைமுறைகளில் மொழிரீதியான, இனரீதியான, பிராந்திய அடிப்படையிலான  பன்முகத்தன்மையை அங்கீகரித்து ஊக்குவிக்க வேண்டும். இத்தகைய மாறுபட்ட சிந்தனையை கடைப்பிடிப்பவர்களிடையே நல்ல தொடர்புகளையும் கருத்துப் பரிமாற்றங்களையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இத்தகைய பன்முகத் தன்மை கொண்ட பாரம்பரியங்களை பிரதிபலிக்கும் சிந்தனையாளர்கள், கலைஞர்கள் ஆகியோர் மீதான தாக்குதல்கள் எழும்போது அவர்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டும்.

5.5. பழமைவாதம், மதவெறி, மூடநம்பிக்கை, பகுத்தறிவின்மை ஆகியவற்றை எதிர்ப்பது; பொதுக் கல்வி முறை, அறிவியல், அறிவு சார்ந்த, கலாச்சார நிறுவனங்களின் சுயாட்சி ஆகியவற்றைப் பாதுகாப்பது; உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையங்கள் மீதான தாக்குதல்களை எதிர்ப்பது; நமது வரலாறு மற்றும் சுதந்திரப் போராட்டத்தின் பகுத்தறிவு, ஒத்திசைவு மற்றும் கலாச்சார மறுமலர்ச்சியின் மதச்சார்பற்ற மரபுகளை பாதுகாப்பது.

5.6. உணர்வுபூர்வமான உதவி,   ஆழமான மக்களின் ஆழமான நம்பிக்கைக்கான தேவையை, பல்வேறு மதங்களைச் சேர்ந்த  ‘மத’ நிறுவனங்களும் ஆன்மீகத் தலைவர்களும்  தங்களது பெரும் வணிக நலன்களுக்காக, பகுத்தறிவின்மை, மூடநம்பிக்கை பிரச்சாரம் போன்றவற்றைப் பயன்படுத்துவதோடு, அவர்களைப் பின்பற்றுபவர்களிடையே பிரிவினைவாத உணர்வு,  வகுப்புவாதம் ஆகியவற்றையும் விதைக்கின்றனர். இந்நிலையில் மக்களின் துன்பங்களுக்குக் காரணமாக உள்ள பரந்துபட்ட சுரண்டலுக்கு எதிராகவும் கிளர்ந்தெழுவது.

5.7. பல வழிபாட்டுத் தலங்களிலும் வகுப்புவாத, தீவிரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. அங்கு நடைபெறும் திருவிழா செயல்பாடுகள் மீது மக்களை தவறாக வழிநடத்தும் நோக்கமுடைய வகுப்புவாத பிளவுப் பிரச்சாரம் ஆதிக்கம் செலுத்துகிறது. ஒவ்வொரு இடத்திலும் நிலவும் ஸ்தூலமான சூழ்நிலையைப் பொறுத்து, நமது செயல்பாட்டாளர்களின் தலையீட்டின் மூலம் சாத்தியமான அளவில் இதைத் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

5.8. பொருளாதார ரீதியிலான சுரண்டல் மட்டுமின்றி, சாதி, பாலினம் போன்றவற்றின் அடிப்படையிலான சமூகச் சுரண்டலுக்கும் இடமில்லாத, மனித சமுதாயத்தின் சமத்துவமான எதிர்காலத்தை எதிர்நோக்கிய, ஆக்கப்பூர்வமான முயற்சிகளை ஆதரித்து நிற்பது.

5.9. உழைக்கும் மக்களின் பாரம்பரிய கலை வடிவங்களை ஆதரித்து நிற்பது; (பொம்மலாட்டக்காரர்கள், சுருள் சீலைகளில் கதைகளை ஓவியமாக வழங்கும் ஓவிய கலைஞர்கள், கிராமப்புற,  நகர்ப்புற தெரு கலைஞர்கள், கிராமப்புற உடற்பயிற்சி வல்லுநர்கள் போன்ற) இந்த கலை வடிவங்களின் கண்ணியம் மற்றும் அவற்றின் மதிப்பை மக்கள் சமூகம் அங்கீகரிப்பதற்காக உழைப்பது; இவற்றில் பல கலை வடிவங்களும், மக்களின் சொந்த படைப்பாற்றலை உள்ளடக்கியதாக இருப்பதோடு, அவர்களுக்கு வாழ்வாதாரத்தையும் வழங்குகின்றன. இந்தக் கலைகள் இப்போது பெரிய மத நிறுவனங்கள்/பெரிய வணிக நிறுவனங்களால் முழுமையாக உள்வாங்கப்பட்டு வருகின்றன; அல்லது அழிக்கப்படுகின்றன. இதனால் அவர்களின் உண்மையான பயிற்சியாளர்கள், புரவலர்கள், பயனாளிகள், நுகர்வோர் ஆகிய உழைக்கும் மக்கள் கலாச்சார இடைவெளியை எதிர்கொள்கின்றனர்; இந்த கலைஞர்கள் தங்கள் படைப்பாற்றலுடன் மக்களுக்கு சேவை செய்யும் வகையில் ஊக்குவிக்கப்பட வேண்டும்.

5.10. (பொருளாதார, அரசியல், சாதி அடிப்படையிலான, பாலின அடிப்படையிலான, சிறுபான்மையினருக்கு எதிரானவை போன்ற) குறிப்பான அடக்குமுறை அல்லது அநீதியான  நிகழ்வுகளுக்கு எதிராக (அறிவுஜீவிகள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள், சமூக ஊடக பயனர்கள் போன்ற) கலாச்சார சக்திகளை அணிதிரட்டுவது. இதன் மூலம் அவர்கள் மக்களையும் சமுதாயத்தையும் பாதுகாப்பதில் தங்கள் சிறப்புத் திறன்களை புதுமையான, ஆக்கப்பூர்வமான வழிகளில் பயன்படுத்தலாம்.

5.11. கட்டற்ற நுகர்ச்சி, தனிப்பட்ட மகிழ்ச்சியை மட்டுமே விரும்புவதைத் தூண்டி கலாச்சார மதிப்புகளை பண்டமாக்குவதை எதிர்ப்பது; பண்டமாக்கல் என்பது இன்று அனைத்து கலாச்சார தயாரிப்புகளும் சந்தையின் மூலம் மத்தியஸ்தம் செய்யப்பட வேண்டும் என்பது மட்டுமல்லாமல், பெருநிறுவன மூலதனமானது அதன் பார்வையில் எந்த சந்தை மதிப்பையும்,  அந்தப் பொருட்களை உற்பத்தி செய்பவர்களின், அதாவது, கலைஞர்கள், ஆசிரியர்கள், நிகழ்த்துக் கலைஞர்கள் ஆகியோரின், படைப்பாற்றலின் மீதும், அது போன்ற அனைத்து பொருட்களின் மீதும், தனது முழுமையான உரிமையை நிலைநாட்ட முயல்கிறது. பெருநிறுவனத்தால் நடத்தப்படும் உலகளாவிய கலாச்சார சந்தையின் விருப்பத்திற்கு ஏற்ப அடிமைத்தனத்துடன் அடிபணியச் செய்கிறது. இது கலைஞர்கள் மற்றும் கலாச்சாரத்தின் உண்மையான களஞ்சியங்களான மக்களின் முக்கிய மன திறன்களை அழிக்கிறது; அனைத்து வகையிலும் இதை எதிர்க்க வேண்டும்.

5.12. தொழில்நுட்ப ரீதியாக முன்னேறிய அச்சு மற்றும் ஒலி-ஒளி ஊடக உலகத்திற்குள்ளான இடத்தை மக்களுக்காக மீட்டெடுக்கப் போராடுவது; மின்னணு ஊடகத்தின் மீது பெருநிறுவன மூலதனத்தின் பிடிப்பு வலுவாக இருக்கும் நிலையில், இத்தகைய தொழில்நுட்ப முன்னேற்றத்தின் பயன்கள் மக்களுக்கு மறுதலிக்கப்படுகின்றன. இதன் விளைவாக அற்பமான, பொருளற்ற செய்திகள், உண்மை நிகழ்வுகள் என்ற பெயரால் நடைபெறும் கேவலமான, மேம்போக்கான நிகழ்ச்சிகள், பிற்போக்குத்தனமான, ஆணாதிக்க, பெண் வெறுப்பு மிக்க காட்சித் தொடர்கள் மற்றும் இதுபோன்ற மின்னணு பொருட்கள் கட்டற்ற விளம்பரங்களால் பின்னிப் பிணைந்து மக்களின் மீது மேலாதிக்கம் செலுத்த வழியேற்படுகிறது. இணையவழி வெளியீடுகள், சமூக ஊடகங்கள், ஆவணப்படங்கள், மக்கள் வானொலி போன்ற, மக்களுக்குப் பொருத்தமானதாக இருக்கும் சில இடங்களை மீட்டெடுப்பது இத்தகைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தக்கூடிய சில வழிகள் ஆகும்; இந்தத் துறைகளில் திறமையுள்ளவர்கள் இந்த வழியில் திட்டமிட வேண்டும் என்பதோடு அவர்கள் முறையாக ஊக்குவிக்கப்படவும் வேண்டும்.

5.13. குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்களைப் பாதுகாக்க முன் நிற்க வேண்டும்.  இதன் மூலம் தனித்திறன்மிக்க படைப்பு திறன்களை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புகளை அவர்கள் பெற முடியும். இக்காலத்தின் இரக்கமற்ற போட்டி, நுகர்வோர் மதிப்புகள் அல்லது வெறுப்புக் கலாச்சாரம் மற்றும் பரஸ்பர அழிவு உணர்வு ஆகியவற்றால் அவர்களின் விருப்பங்கள் விழுங்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அவர்களின் கல்வி உரிமைகள் மற்றும் மிகவும் மேம்பட்ட அறிவுக்கான உரிமைகள் வலியுறுத்தப்பட வேண்டும்; கல்வி நிறுவனங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் நமது சிறப்பான அறிவுத் திறன்,  ஆக்கப்பூர்வமான மரபுகள் ஆகியவற்றுடன் அவர்கள் தொடர்பு கொள்ள பல வகையிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

5.14. பல்வேறு  வகையான தீவிரவாத, மதவெறி,  பயங்கரவாத அமைப்புகளும் சித்தாந்தங்களும் வளர்ந்து வருகின்ற, வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்ற ஓர் உலகில் நாம் வாழ்கிறோம். உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் அதிக அளவிலான சர்வாதிகாரத்தை நோக்கிச் செல்ல இது தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. சாத்தியமான இடங்களில், சிறப்பு அதிகாரங்களும் அரசால் கைக்கொள்ளப்படுகின்றன. பல நேரங்களில், தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் இத்தகைய நடவடிக்கைகளை ஆதரிக்குமாறு பொது மக்கள் தூண்டப்படுகிறார்கள்; அல்லது வற்புறுத்தப்படுகிறார்கள். எங்கெல்லாம் எதேச்சாதிகார அரசால்  மீறப்படுகிறதோ அங்கெல்லாம் மக்கள் உரிமைகள், ஜனநாயக மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாக்க நாம் முன்நிற்கிறோம்; பொதுமக்களுக்கு எதிராக இராணுவம், துணை இராணுவப் படைகளைப் பயன்படுத்துவதை நாம் எதிர்க்கிறோம்; மாறுபட்ட கருத்துக்களை ஒடுக்குவதற்கு  தடையற்ற அதிகாரத்தையும் சுதந்திரத்தையும் அரசுக்கு வழங்கும் கொடுங்கோன்மை சட்டங்களையும் நாம் எதிர்க்கிறோம்.

5.15. மேற்கண்ட கடமைகளை நிறைவேற்ற, ஒவ்வொரு மட்டத்திலும் கலாச்சார முன்னணியில் உள்ள பணிகளில் கட்சி மேலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்; குறிப்பிட்ட கால வரம்பிற்குள் இலக்குகள் எட்டப்படுவதற்கு உகந்த வகையில் ஒவ்வொரு மட்டத்திலும் தகுதியான ஊழியர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

5.16. பாடல் குழுக்கள், வீதி நாடகக் குழுக்கள் போன்ற கலாச்சாரப் பிரிவுகளை உருவாக்க வெகுஜன அமைப்புகள், ஆசிரியர்கள், சேவை நிறுவனங்கள், திட்டத் தொழிலாளர்கள் போன்ற இதர வகைப்பட்ட ஊழியர்களின் அமைப்புகள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்பதோடு, அவை முறையாக வழிநடத்தப்பட வேண்டும். கலாச்சார அரங்கின் பணியை கைவிட்டு விடக்கூடாது என்பதோடு, அந்தப் பணி கலாச்சார அரங்கிலுள்ள ஆர்வலர்களுக்கு மட்டுமேயான ஒரு பணி என்பதாகப் பிரித்துப் பார்க்கவும் கூடாது.

5.17. கலாச்சார, கல்வி மற்றும் விளையாட்டு நடவடிக்கைகளின் மூலம் ஜனநாயக, மதச்சார்பற்ற, முற்போக்கு எண்ணங்களை வளர்த்தெடுக்க அக்கம்பக்கத்தில் உள்ள சிறுவர், சிறுமிகளுக்கு ‘பாலவேதி’ அல்லது ‘பாலர் சங்கம்’ போன்ற அமைப்புகளை உருவாக்க உதவ வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகள் ஏற்கனவே வெற்றிகரமாக செயல்படும் இடங்களில், அவற்றை மேலும் விரிவுபடுத்தவும் ஒருங்கிணைக்கவும் உதவ வேண்டும்.

5.18. இத்தகைய கலாச்சார அரங்க நடவடிக்கைகள் எதுவும் இல்லாத மாநிலங்களில், இந்தப் போதாமையை சரிசெய்யும் வகையில் திட்டமிட்ட நடவடிக்கைகள் உடனடியாகத் தொடங்கப்பட வேண்டும்.

5.19. (அ) பல்வேறு மட்டங்களிலும் செயல்பாடுகளை மேலும் தீவிரப்படுத்தவும், (ஆ) எதிர்கால திட்டங்கள், படைப்பூக்க ரீதியான தலையீடுகள் ஆகியவற்றுக்கு பொதுவான வழிகாட்டுதலை வழங்கவும், படைப்புத் திறன் மிக்க கலை-கலாச்சார செயல்பாட்டாளர்கள் பங்கேற்கும் வகையில் குறிப்பிட்ட கால இடைவெளியில் கலாச்சார மாநாடுகள் நடத்தப்பட வேண்டும்.

5.20. இந்த அரங்கின் முன்னேயுள்ள கடமைகள் குறித்த இந்த ஆவணத்தில் கூறப்பட்டவை அனைத்தும் குறிப்பிட்ட கால வரம்பில் பல்வேறு மட்டங்களிலும் எந்த அளவிற்கு அமலாக்கப்பட்டுள்ளது என்பதை ஆய்வு செய்யும் வகையில் தொடர்ந்து முறையாகப் பரிசீலனை மேற்கொள்ளப்பட வேண்டும்.

தமிழில்: வீ. பா. கணேசன்

விடுதலை75: நவீன இந்தியாவின் அடிப்படைகளைக் காப்போம் !

 • பிரகாஷ் காரத்

(மார்க்சிஸ்ட் இதழின் சார்பில், இந்திய விடுதலையின் பவள விழா ஆண்டில் நடைபெறும் தொடர் இணைய வழி கருத்தரங்கங்களின் தொடக்க நிகழ்வாக ஆகஸ்ட் 15 அன்று காலை நடைபெற்ற நிகழ்வினை தொடங்கி வைத்து  தோழர் பிரகாஷ் காரத் ஆற்றிய ஆங்கில உரையின் தமிழாக்கம்)

இந்திய விடுதலையின் 75வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம்.  74 ஆண்டுகளுக்கு முன்னர் ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று இந்தியா தன் அரசியல் விடுதலையைப் பெற்றது. 200 ஆண்டுகள் காலனியாதிக்கத்தின் கீழ் சிக்கிக் கிடந்த இந்தியா ஒரு சுதந்திர நாடாக பரிணமித்தது. இது உலகளாவிய முக்கிய நிகழ்வு ஆகும். ஏனெனில், உலகின் இரண்டாவது மிகப் பெரிய மக்கள் தொகை கொண்ட இந்திய நாட்டின் விடுதலைப் போராட்டம், நவீன வரலாறு கண்ட மிகப் பெரிய வெகுமக்கள் இயக்கங்களில் ஒன்று. உலகத்தில் நிலவிய பழைய பாணியிலான காலனி ஆதிக்க முறை, 19 ஆம் நூற்றாண்டுடன் முடிவுக்கு வரத் தொடங்கியதை இந்திய விடுதலை உணர்த்துகிறது.

இந்தியா ஒரு நவீன தேசமாக உருவானது. நம்மைப் பொறுத்தவரை இந்திய தேசியமானது ஏகாதிபத்தியத்திற்கு எதிராக நாம் நடத்திய போராட்டத்தின் விளை பொருளே ஆகும். ஆங்கிலேயர்கள் இங்கே வருவதற்கு முன் இந்தியா ஒரு தேசமாக இருக்கவில்லை. சாம்ராஜ்ஜியங்களாக, பேரரசுகளாக, சிறு-குறு நில மன்னர்களின் ஆட்சிப் பகுதிகளாகவே அது இருந்தது. ஆங்கிலேயர்களின் காலனி ஆதிக்கத்தை எதிர்த்து நடத்திய போராட்டத்தில்தான் இது ஒரு தேசமாக  உருவெடுத்தது என்பதை புரிந்து கொள்வது அவசியமாகும்.

இந்திய தேசியத்தின் உருவாக்கம்

இன்றைக்கு இந்தியாவில் ஆட்சி அதிகாரத்தில் உள்ள பாஜகவும், அதன் தாய் அமைப்பாகிய ஆர்எஸ்எஸ் அமைப்பும் புராதன இந்து தேசம் அல்லது புராதன இந்திய தேசியம் என்பதாக தொடர்ந்து பேசிக் கொண்டுள்ளனர். இவ்வாறு கூறுவதின் மூலம் இந்தியாவை அவர்கள் இந்து தேசமாகக் குறிப்பிடுகிறார்கள்.  அவர்களைப் பொறுத்தவரை, இத்தகைய இந்து தேசமானது 3,000 ஆண்டுகளாக இருந்து வருகிறது.  ஆனால், வரலாற்று ரீதியாகப் பார்த்தால், அதற்கு முன்பிருந்த நிலப்பிரபுத்துவ அரசியல் நடைமுறையை தூக்கி எறிந்து புதிதாகத் தோன்றிய முதலாளித்துவ வர்க்கத்தின் வளர்ச்சிப் போக்கோடு இணைந்தே நவீன தேசம் என்ற கருத்தாக்கம் உருவானது. எனவேதான், ஐரோப்பாவில் – குறிப்பாக 18ஆம் நூற்றாண்டில் பல தேசிய இயக்கங்கள் உருவானதையும், முதலாளித்துவவாதிகள் தலைமையில் அந்த இயக்கங்கள் நிலப்பிரபுத்துவ அரசுகளை தூக்கி எறிந்து, இன்றுள்ள நவீன தேசங்களை நிர்மாணித்ததையும் நாம் பார்த்தோம். 

இந்தியாவிலும், ஏகாதிபத்தியத்தையும், காலனியாதிக்கத்தையும் எதிர்த்து நடந்த விடுதலைப் போராட்டம், சாதி, மதம், இனம், மொழி ஆகிய அனைத்து வேறுபாடுகளுக்கும் அப்பாற்பட்டு நடந்தது. அனைத்துப் பகுதி மக்களையும் ஒன்றிணைத்தது.  ஆக, இந்திய தேசிய அடையாளம் என்பது தேச விடுதலைப் போராட்ட கனலிலிருந்தே தோன்றியது.  நாம் அனைவரும் இந்தியர்கள்; நமக்கென்று ஒரு சுதந்திர நாடு இருக்க வேண்டும்; இந்த நாட்டின் தலைவிதியை நாமே தீர்மானிக்க வேண்டும் போன்ற உணர்வுகளை இதுவே தட்டியெழுப்பியது.  எனவே, நவீன இந்தியாவின் அடிப்படை கோட்பாடுகளைப் பற்றி பேசும் போது, அவை தேச விடுதலைப் போராட்டத்தின்போது எழுந்த மாண்புகள், லட்சியங்கள், குறிக்கோள்களோடு இரண்டற கலந்து பின்னிப் பிணைந்தவையே ஆகும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அடிப்படை கோட்பாடுகளின் உருவாக்கம்

இந்தியாவை அல்லது நவீன இந்தியாவின் அடிப்படைக் கோட்பாடுகளை வடிவமைப்பதில், அந்த காலகட்டத்தில் மிகச் சிறியதொரு சக்தியாக இருந்தபோதிலும் கம்யூனிஸ்டுகள் மிக முக்கியமான பங்களிப்பை ஆற்றினார்கள்.  “முழு விடுதலை” என்ற முழக்கத்தை முதலில் முன்வைத்தவர்கள் கம்யூனிஸ்டுகளே அன்றி காங்கிரஸ் தலைமை அல்ல என்பதை நாம் மறந்து விடலாகாது.  1921ஆம் ஆண்டில் அகமதாபாத்தில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் அமர்வில், அப்போதிருந்த கம்யூனிஸ்ட் குழுக்களோடு நெருக்கமான தொடர்பில் இருந்த மௌலானா ஹஸ்ரத் மொஹானி அவர்கள்தான் முழுமையான விடுதலையைக் கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தார். 

அதன் பிறகும், தேசவிடுதலை என்பது வெறும் அரசியல் விடுதலை மட்டுமல்ல; அது பொருளாதார மற்றும் சமூக உள்ளடக்கத்தையும் அகத்தே கொண்டிருக்க வேண்டுமென்று கம்யூனிஸ்டுகள் வாதிட்டனர்.  இவ்வாறாக, 1929ஆம் ஆண்டில்தான்ஆண்டில்தான் “முழு விடுதலை” என்ற கருத்தாக்கம் காங்கிரஸ் கட்சியால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 

1931ஆம் ஆண்டு கராச்சியில் நடைபெற்ற காங்கிரஸ் அகில இந்திய அமர்வில், விடுதலை இந்தியா எப்படி அமைய வேண்டும் என்பதைக் குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  ‘அடிப்படை உரிமைகள் மற்றும் தேசிய பொருளாதார திட்டம்’ என இத்தீர்மானம் அழைக்கப்பட்டது. அதில்தான் முதன் முறையாக நவீன இந்தியா குறித்த கருத்தாக்கம் முன்வைக்கப்பட்டது.  கருத்துச் சுதந்திரம், கூட்டம் கூடுவதற்கான உரிமை, பத்திரிகை சுதந்திரம் என்பன போன்ற குடிமக்களின் அடிப்படை உரிமைகள் குறித்து அதில்  பேசப்பட்டன.  இவற்றோடு, தொழிலாளர்களின், விவசாயிகளின் உரிமைகள், குத்தகை விவசாயிகள் செலுத்த வேண்டிய குத்தகைக் கட்டணத்தை குறைப்பது, தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச வேலை நேரம், பெண்களுக்கு சமஉரிமை, தொழிற்சங்கத்தை உருவாக்குவதற்கான உரிமை, விவசாயிகளுக்கான அமைப்புகளை ஏற்படுத்துவதற்கான உரிமை ஆகியன குறித்தும் பொருளாதார திட்டத்தில் பெருமளவில் பேசப்பட்டது.  இவ்வகையில், கராச்சி தீர்மானமானது அப்போது காங்கிரஸ் இயக்கத்திற்குள் இருந்த இடதுசாரிகளின் செல்வாக்கைப் பெற்றிருந்தது.  எனவேதான், பின்னாளில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்டது. 

தேச விடுதலைக்கான இயக்கத்தின் இத்தகைய போக்கில்தான், மதச்சார்பற்ற, ஜனநாயகம் கொண்ட, பொருளாதார, சமூக நீதியை உள்ளடக்கிய நவீன இந்தியா குறித்தான கண்ணோட்டம் வடிவம் பெற்றது.

1950 ஆம் ஆண்டில் இந்தியா ஒரு குடியரசானது. தேச விடுதலை இயக்கத்தில் வடிவம் பெற்ற மதச்சார்பின்மை, ஜனநாயகம் போன்ற கருத்தாக்கங்கள், இந்திய அரசியல் சாசனத்தில் இடம் பெற்றிருந்தன.  கூட்டாட்சி தத்துவமும், வேற்றுமையில் ஒற்றுமையும் அதில்  அடங்கியிருந்தன.

அடிப்படைகள் மாறவில்லை

1947இல் விடுதலையின் போது, இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையும் சேர்ந்தே நடந்தது. இது பெருமளவிலான வன்முறைகளுக்கும், படுகொலைகளுக்கும் வழிகோலியது.  நாட்டின் மேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பயங்கர வன்முறைகள் நடைபெற்றன. பிரிவினையின் வலியை நினைவு கூறும் வகையில் ஆகஸ்ட் 14ஆம் தேதி ஆண்டுதோறும் அனுசரிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இத்தகைய அறிவிப்பின் பின்னால் உள்ள நோக்கம் சந்தேகத்திற்குரியதே. ஏனென்றால், ஒருபுறம் முஸ்லீம் லீக் கட்சியும், மறுபுறம் இந்து மத அடிப்படைவாதிகளுமாக, வகுப்புவாத சக்திகளே பிரிவினையை கூர்மைப்படுத்தியதுடன் ,   மதக்கலவரங்களையும், வன்முறைகளையும் தூண்டிவிட்டனர் என்பதை நாம் அறிவோம்.

ஆகஸ்ட் 14 என்பது பாகிஸ்தானின் விடுதலைநாள் ஆகும்.  எனவே, பிரதமர் மோடி மேற்கொண்டுள்ள அறிவிப்பின் நோக்கம், இந்நிகழ்வுகளை நினைவு படுத்துவதன் மூலம் இஸ்லாமியர்களுக்கு எதிரான உணர்வுகளைத் தூண்டுவதும், இவ்வகையில் மதஉணர்வுகளின் அடிப்படையில் மக்களிடையே பிளவினை அதிகரிப்பதும் ஆகும்.

பிரிவினையின்போது பயங்கர வன்முறைகள் நிகழ்ந்தபோதும், பாகிஸ்தான் போன்று மத அடையாளத்தின் அடிப்படையிலான நாடாக அல்லாமல், இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகவே அமைந்தது.  மதத்தின் அடிப்படையில் குடிமக்கள் யார் மீதும் பாகுபாடு காட்டப்படாது என்பதை இந்திய அரசியல் சாசனம் தெளிவாக வரையறுத்தது. இது மிகவும் முக்கியமாக கவனிக்க வேண்டியதாகும். ஏனென்றால், இன்றைக்கு நாட்டின் அதிகாரத்தில் இருப்பவர்களால் இந்த அடிப்படைக் கோட்பாடு குறித்து கேள்வி எழுப்பப்படுகிறது, இந்தக் கோட்பாடு அரிக்கப்படுகிறது.

கைவிடப்பட்ட வழிகாட்டு நெறிகள்

விடுதலைப் போராட்டத்தில் முன்னுக்கு வந்த மாண்புகளையும், கண்ணோட்டங்களையும் பெருமளவில் உள்ளடக்கியதாக நமது அரசியல் சாசனம் அமைந்துள்ளது என்பதை  ஏற்கனவே குறிப்பிட்டேன்.  1931இல் நிறைவேற்றப்பட்ட கராச்சி தீர்மானமானது இந்திய அரசியல் சாசனத்திலும் எதிரொலிக்கிறது.  அரசியல் சாசனத்தில் வழிகாட்டும் நெறிமுறைகள் என்றொரு பகுதி இருக்கிறது.  இது கண்டிப்பாக நடைமுறைபடுத்தப்பட வேண்டிய பகுதியல்ல என்றபோதும், நாடு பயணிக்க வேண்டிய திசை வழியை இது காட்டுகிறது.  அதிலிருந்து சில பகுதிகளை மேற்கோள் காட்ட விரும்புகிறேன். 

முதலாவதாக, தேசிய வாழ்க்கையோடு இணைந்த அனைத்து நிறுவனங்களிலும் நீதி உத்திரவாதப்படுத்தப்பட வேண்டும்.  அதேபோன்று, சமூக, பொருளாதார, அரசியல் வாழ்க்கையிலே பாகுபாடு எதுவுமின்றி நீதியும், நேர்மையும், நியாயங்களும் இருக்க வேண்டும்.  இவற்றின் வாயிலாக மக்கள் நலனை ஊக்குவித்திட அரசை வலியுறுத்துகிறது.

இரண்டாவதாக, ஊதியத்தில் காணப்படும் சமமற்ற நிலைமையை குறைத்திட வலியுறுத்துகிறது. இதனை செயல்படுத்திட, சமூகத்திற்குச் சொந்தமான வளங்களின் மீதான கட்டுப்பாடு என்பது பொதுநலனுக்கு உட்பட்டதாகத்தான் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிடுகிறது.

இந்தியாவின் பொருளாதார முறைமை செயல்படுத்தப்படுவதன் மூலம் பொதுநலனுக்கு எதிரான விதத்தில் ஒருபோதும் செல்வமும், உற்பத்தி சாதனங்களும் ஒரு சிலரின் கைகளில் குவிந்திடக் கூடாது.

ஆக, இந்த வழிகாட்டு நெறிமுறைகளில் அரசியல், பொருளாதார, சமூக நீதியின் அடிப்படையிலான நவீன இந்திய அரசின் கொள்கைகள் தெளிவாக வரையறை செய்யப்பட்டுள்ளன.

இந்தியா தற்போது 75வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தருணத்தில், இந்த வழிகாட்டு நெறிமுறைகளைப் பார்க்கும்போது, இந்திய அரசு நிர்வாக அமைப்பும்,  அடுத்தடுத்து ஆட்சியதிகாரத்திற்கு வந்த அரசுகளும் இந்த நெறிமுறைகளை அதன் மெய்யான சாராம்சத்தோடு செயல்படுத்த முனைந்ததாக கூற முடியுமா?  சொல்லப்போனால், இன்றைக்கு அரசால் செயல்படுத்தப்படும் பல கொள்கைகள் அரசியல் சாசனத்தின் வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டவற்றிற்கு நேர்எதிராகவே உள்ளன.  ஏனெனில், விடுதலைக்கு பின் உருவாக்கப்பட்ட அரசுகளின் அதிகாரம் ஆளும் வர்க்கங்களின் கைகளிலேயே இருந்தது.  அதாவது நவீன இந்தியாவில் முன்னெழுந்த வர்க்கமாகிய முதலாளித்துவ வர்க்கத்தின் கைகளில் இருந்தது.  புதிதாக உருவான வர்க்கம் எனும் போதிலும் அது ஓரளவிற்கு வலுவானதாகவே இருந்ததையும் நாம் கவனிக்க வேண்டும். அவர்கள் உண்மையில் என்ன செய்திருக்க வேண்டும்?  வழிகாட்டும் நெறிமுறைகளில் இடம் பெற்றிருந்த கண்ணோட்டங்களையும், லட்சியங்களை நிறைவேற்றுவதற்கான முயற்சியிலே ஈடுபட்டிருக்க வேண்டும். அதை கவனத்தில் கொள்ளவே இல்லை என்பதோடு மொத்தமாக கைவிட்டு விட்டார்கள் என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.  இவர்கள் பழைய நிலவுடைமை, அரைநிலவுடைமை சக்திகளோடு சமரசம் செய்து கொண்டனர்.  அரசு அதிகாரத்தில் பங்காளியாக இணைத்துக் கொண்டார்கள்.  எனவேதான், இந்திய அரசின் வர்க்கத்தன்மையை குறிப்பிடும்போது  முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ அரசு என்று குறிப்பிடுகிறோம். 

பழைய கண்ணோட்டங்களோடு சமரசம்

நிலப்பிரபுத்துவத்தோடு இவர்களின் சமரசம் நவீன இந்தியாவின் வடிவமைப்பில் பலப்பல விதங்களில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தியதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.  இந்த சமரசத்தின் காரணமாகவே தீவிரமான நிலச்சீர்திருத்தம் நடைபெறவில்லை.  நிலத்தின் மீதான உரிமை ஒரு சிலர் கைகளில் குவிந்திருந்த நிலையை பெரிதாக மாற்ற இயலவில்லை.  நிலப்பிரபுத்துவ சமூக உறவுகளில் பெரிய அளவிற்கு முறிப்பை ஏற்படுத்த இயலவில்லை.  குறிப்பாக, சாதி ஒழிப்பிற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.  கராச்சி தீர்மானத்திலும், தேச விடுதலைப் போராட்டத்தின்போது முன்னெழுந்த மாண்புகள், லட்சியங்கள், அரசியல் சாசனத்தின் வழிகாட்டும் நெறிமுறைகள் முன்வைத்த விஷயங்கள் எல்லாம் பாதிக்கப்பட்டதற்கு இத்தகைய சமரசமே முக்கியமான காரணமாகும். 

இதற்கு உதாரணமாக கல்வியை நாம் குறிப்பிடலாம். இவர்கள் ஆட்சியதிகாரத்திற்கு வந்தவுடனேயே அனைவருக்கும் ஆரம்பநிலைக் கல்வியை உறுதி செய்யும் முயற்சியை தீவிரமாக முன்னெடுத்திருக்க வேண்டும்.  ஆனால், விடுதலையடைந்து 20-25 ஆண்டுகள் கடந்த பின்னரும் கூட – அதாவது 70களின் துவக்கத்திலும் கூட இந்தியாவின் அனைத்துக் குழந்தைகளுக்கும் ஆரம்ப கல்வி கிடைக்கவில்லை. அந்த குழந்தைகளை எல்லாம் பள்ளிகளில் சேர்ப்பதற்கான முயற்சி பெரிய அளவில் ஆளும் வர்க்கங்களிடமிருந்து வரவில்லை என்கிறபோது, அதிகார வர்க்கமும் அது பற்றி பெரிய அளவில் முனைப்பு காட்டவில்லை.  நேரு உள்ளிட்டவர்களுக்கு இந்த பார்வை இல்லை என்றோ,  அல்லது இந்த விஷயம் அவர்களுக்குத் தெரியவில்லை என்பதால் இது நடக்கவில்லை என்றோ சொல்லிவிட முடியாது.  தெரிந்தும் ஏன் நடக்கவில்லை என்றால், சாதிய அமைப்பு முறை உடைக்கப்படாதது தான் முதன்மையான காரணமாக முன்னுக்கு வருகிறது.  கல்வி என்றால் அது எங்களுக்குத்தான், மற்றவர்களுக்கு இல்லை என்ற அடிப்படையில்தான் உயர்சாதிகளைச்  சார்ந்தவர்கள்  செயல்பட்டு வந்தனர். எனவே, அதிகார வர்க்கமும் இதில் முனைப்புக் காட்டவில்லை. இதன் காரணமாக, அனைவருக்கும் ஆரம்ப கல்வி என்பது தோல்வியை அடைந்தது.

முதலாளித்துவ பாதையின் சிக்கல்கள்

மேலும் ஆளும் வர்க்கங்கள், இந்தியாவிற்கு முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையை தேர்வு செய்தார்கள். இது முதலாளித்துவத்தை மேலும் வளர்த்தெடுக்க உதவும். ஆனால் இந்தியாவிற்காக  ஏற்கனவே முன்வைத்துள்ள கோட்பாடுகளை பின்னுக்குத் தள்ளிடும்.  பொருளாதார ரீதியாக, அரசியல் ரீதியாக, சமூக ரீதியாக முன்வைக்கப்பட்டுள்ள விடுதலைக்கான லட்சியங்களுக்கு நேர் எதிரானதாக, பிற்போக்கானதாக, முதலாளித்துவ பாதை இருக்கும் என்று  கம்யூனிஸ்டுகள் எச்சரித்தோம். இந்த முதலாளித்துவ வளர்ச்சிப் பாதை, செல்வ வளங்களை ஒரு சிலரின் கைகளிலே குவிந்திடச் செய்யும்; ஏகபோகங்களை உருவாக்கும்; மிகப் பெரிய தொழிலதிபர்கள் உருவாவார்கள் என்று நாம் சொன்ன  எல்லாம் பின்னாளில் நிகழ்ந்தன. 

அதுமட்டுமின்றி, முதல் மூன்று ஐந்தாண்டுத் திட்டங்கள் வரை பொருளாதார தளத்திலே நிகழ்ந்த முன்னேற்றங்களும், அவற்றின் பலன்களும் ஒரு சிலரின் கைகளிலேயே குவிந்தன.  தீவிர நிலச்சீர்திருத்தம் நடைபெறவில்லை.  நிலஉறவுகளில் ஜனநாயக ரீதியிலான மாற்றங்கள் ஏற்படவில்லை. அதே போல முதலாளித்துவ பாதையை பின்பற்றினால் அதன் காரணமாக நெருக்கடிகள் உருவாகும் என்பதையும் நாம் சுட்டிக் காட்டினோம். இந்தப் பாதை அந்நிய மூலதனம், சர்வதேச நிதிமூலதனத்தை சார்ந்து செயல்படக் கூடிய பாதையாகும்.  எனவே, நிச்சயமாக இதில் நெருக்கடிகள் உருவாகும்.  உள்நாட்டு சந்தைகளை பலப்படுத்த வேண்டும்.  அதற்கு மக்கள் கைகளிலே வாங்கும் சக்தி வேண்டும்.  எனவே, தீவிர நிலச்சீர்திருத்தம் உள்ளிட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்தால்தான் வாங்கும் சக்தி உருவாகும். அது உள்நாட்டு சந்தைகளை வலுப்படுத்தும்.  எனவே அந்நிய மூலதனத்தை சார்ந்து இருக்க வேண்டிய அவசியம் இருக்காது என்று நாம் குறிப்பிட்டோம்.  ஆனால், அவர்கள் பின்பற்றிய வளர்ச்சிப் பாதை இவற்றுக்கெல்லாம் நேர் எதிராகவே இருந்த காரணத்தால் நாம் சுட்டிக் காட்டியவாறு நெருக்கடிகள் நிகழ்ந்தன என்பதைக் காண வேண்டும்.  சொல்லப்போனால், 1970களிலேயே இந்த நெருக்கடிகள் இந்தியாவில் உருவாயின. 

இந்தியாவில் இவர்கள் கடைப்பிடித்த முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையில் அரசு ஒரு முக்கியமான பங்கை வகித்தது.  கனரகத் தொழில்கள், உள்கட்டமைப்பு வசதிகள் போன்றவை எல்லாம் பொதுத்துறையில் உருவாக்கப்பட்டன. முதலாளித்துவத்தின் வளர்ச்சிக்காக அரசு தலையிட்டு இந்த உதவிகளை எல்லாம் செய்தது.  ஆனால், நெருக்கடி உருவான பின்னணியில் இந்த போக்குகளைக் கூட கைவிட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. 

1991ஆம் ஆண்டு தொடங்கி நவீனதாராளவாத பாதைக்கு இந்தியா மாறியது. இந்த மாற்றத்திற்கும் உலக  அளவிலான நிகழ்ச்சிப் போக்குகளுக்கும் தொடர்பு உண்டு.  சோவியத் ஒன்றியம் சிதறுண்டது; உலகளாவிய நிதிமூலதனத்தின் ஆதிக்கம் ஏற்பட்டது; உலகமயச் சூழலுடனான நவீன தாராளவாத கொள்கைகள் உலக நாடுகளிலுள்ள பல அரசுகளால் பின்பற்றப்பட்ட நிலை ஆகிய காரணங்களால் இந்தியாவிற்கும் அந்த நிலைமை ஏற்பட்டது.  

ஏற்கனவே சொன்னபடி, முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ வர்க்கங்களால் வழிநடத்தப்பட்ட இந்திய அரசு, தனது ஜனநாயகக் கடமைகளை முழுமையாக செய்து முடிக்காத நிலைமையும், முதலாளித்துவ வளர்ச்சிப்பாதையை தேர்ந்தெடுத்ததால் வந்த நெருக்கடிகளும் நிலவுகிற சூழலில், நவீன தாராளமய கொள்கைகளும் கடைப்பிடிக்கப்படும் ஒரு புதிய கட்டத்தில் நாம் இருக்கிறோம்.

பெற்றதையும் இழப்பதா?:

இந்திய ஆளும் வர்க்கங்கள் தங்களது ஜனநாயக புரட்சியின் கடமைகளை நிறைவேற்றுவதில் தோல்வி அடைந்தது மட்டுமல்ல; அந்த கடமைகளுக்கு நேர்எதிரான பாதையில் செல்கின்றன. விடுதலையால் பெற்ற கொஞ்சநஞ்ச பலன்களும், வளர்ச்சியும் மீண்டும் பறிக்கப்படும் நிலைக்குத்தான் இவர்கள் இட்டுச் செல்கிறார்கள்.  எனவேதான், மதச்சார்பின்மைக்கு, ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கைகள், கூட்டாட்சி கோட்பாட்டை சீர்கெடுப்பது,  தேசியம் என்று பேசிக்கொண்டே நாட்டின் இறையாண்மையை காலில் போட்டு மிதிப்பது போன்றவை எல்லாம் பாஜக ஆட்சிக்கு வந்த கடந்த 7 ஆண்டுகளில் நடந்து கொண்டிருக்கின்றன. இவ்வகையில்  நவீன இந்தியாவின் அடிப்படை கோட்பாடுகள் மீது ஒரு தாக்குதல் நடந்து கொண்டிருக்கிறது.

இந்திய விடுதலையின் 75வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள இந்தச் சூழலில் நாட்டின் எதிர்காலம் குறித்த கேள்வி எழுகிறது.  எப்படி இருக்க வேண்டும் என நினைத்தார்கள் என்று பார்த்தோம். இடைக்காலத்தில் எப்படி இருந்தது என்பதையும் பார்த்தோம்.  எதிர்கால இந்தியா குறித்த ஊகங்களை கடந்த மூன்றாண்டுகளாகவே பிரதமர் மோடி சொல்லிக் கொண்டிருக்கிறார். 

2018ஆம் ஆண்டு பிரதமர் மோடி நிகழ்த்திய சுதந்திர தின உரையிலே புதிய இந்தியா என்ற கருத்தாக்கத்தை முன்வைத்தார்.  புதிய இந்தியா முழுமையாக எப்போது வடிவம் பெறும் என்று சொன்னால் 2022இல் – அதாவது இந்திய விடுதலையின் 75 ஆண்டுகள் நிறைவு பெறும்போது அது நிகழ்ந்திடும் என்று அவர் சொன்னார்.  அவர் சொல்வதைப் பார்க்கும்போது, இந்தப் புதிய இந்தியாவின் பாதை ஒருபுறம் இந்துத்துவ மதவெறிப் பாதையாகவும், மறுபுறம் நவீன தாராளவாத கார்ப்பரேட் பாதையாகவும் இருக்கும் என்று தெரிகிறது.  இந்தக் கலவை நச்சுத்தன்மை கொண்டது.  மிக ஆபத்தானது.  இதுதான்  இந்திய விடுதலையின் பவள விழா தருணத்தில் மிகப் பெரிய அச்சுறுத்தலாகவும், ஆபத்தாகவும் இந்திய மக்களின் முன் வந்து நிற்கிறது.

மோடி ஆட்சி, ஒரு நச்சுக் கலவை

2019 மக்களவை தேர்தலில், மிகப் பெரிய பலத்தோடு பாஜக ஆட்சியமைத்தது. அந்த ஆண்டே ஆகஸ்ட் 5ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, மாநிலத்தை சிதைத்தது. அரசியல் சாசனத்தின் பிரிவு 370ஐ ஒழித்துக் கட்டியது. முதன் முறையாக, இந்தியாவில் மாநிலங்களின் எண்ணிக்கை 29 என்பதிலிருந்து 28 ஆகக் குறைந்தது. இந்தச் செயல் புதிய இந்தியா பற்றிய ஒரு முன்னோட்டமாகும்.  இந்த ஒரே நடவடிக்கை நாட்டின் மதச்சார்பின்மை மீதான தாக்குதலாகவும், கூட்டாட்சி கோட்பாட்டின் மீதான தாக்குதலாகவும் இருந்தது. எந்தவொரு மாநிலமும் சுயேச்சையாக சில விஷயங்களில் முடிவு செய்வதை இந்த ஆட்சியும், அரசும் ஒருபோதும் ஏற்காது. மேலும், இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் ஒரு மாநிலம் என்பதாலும், அதனை சிதைக்கும் நோக்கத்தோடு இதனை முன்னெடுத்தார்கள்.

இதற்கு அடுத்து, 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதியன்று ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டிய பூமி பூஜை அரசு விழாவாக நடத்தப்பட்டது. அந்த நிகழ்வில் பங்கேற்ற பிரதமர் மோடி, ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது.  ஆனால், ஆகஸ்ட் 5ஆம் தேதிதான் இந்தியாவிற்கு விடுதலை கிடைத்தது என்று ராமர் கோவில் அஸ்திவார நிகழ்வோடு இணைத்துப் பேசினார்.  அப்படியானால், புதிய இந்தியா ஒரு இந்து ராஷ்டிரமாக இருக்கும் என்பதற்கான அடையாளமாக இந்தக் கோயில் இருக்கும் என்பதை அவரது உரை சுட்டிக் காட்டியது. 

2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது.  சுதந்திர இந்தியாவில் முதன் முறையாக குடியுரிமைக்கான தகுதியாக மதம் என்பது நிறுவப்பட்டது.  இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தின் விவரங்களுக்குள் போக விரும்பவில்லை. ஆனால், நவீன இந்தியாவில் குடியுரிமை பெறுவதற்கான தகுதிகள் என்னவாக இருக்க வேண்டும் என்று அரசியல் சாசனம் சுட்டிக் காட்டியதோ, அதற்கு மாறாக, மதம் என்பதை ஒரு தகுதியாகக் கொண்டு வருகிற வேலையை குடியுரிமை திருத்தச் சட்டம் செய்தது.  ஏற்கனவே இந்தியாவின் அரசியல் சாசனம் மத அடிப்படையிலோ, பாலின அடிப்படையிலோ, மொழி அடிப்படையிலோ பாகுபாடுகள் இருக்கக் கூடாது என்பதை அடிப்படைக் கோட்பாடாக முன்வைத்துள்ளது என்பது நமக்குத் தெரியும்.  எனவே, இப்போது கொண்டுவரப்பட்டுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது அரசியல் சாசனம் சுட்டிக் காட்டியிருக்கக் கூடிய நவீன இந்தியா என்ற கருத்தாக்கத்திற்கு அடித்தளமாக இருக்கக் கூடிய அடிப்படைக் கோட்பாடுகளுக்கு முரணானதாக, அதை சிதைக்கக் கூடியதாக இருக்கிறது.

அடுத்தடுத்து, பாஜக ஆட்சியதிகாரத்தில் இருக்கக் கூடிய உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், அசாம், ஹரியானா போன்ற மாநிலங்களில் கொண்டு வரப்படக் கூடிய சட்டங்கள் பெரும்பாலும் மதச்சார்பின்மைக்கு எதிரானவையாக இருக்கின்றன.  இஸ்லாமிய சமூகத்தை குறி வைத்து தாக்குபவையாக இருக்கின்றன. லவ் ஜிகாத், பசுவதை தடுப்பு ஆகிய பெயர்களில் இருந்தாலும், அதன் உள்ளடக்கம் இஸ்லாமிய சமூகத்தை குறிவைப்பதாகவே இருக்கிறது. இந்த அரசாங்கத்திற்கு வழிகாட்டுகிற ஆர்எஸ்எஸ் தலைமையில் செயல்படும் இந்துத்துவா சக்திகள் நாட்டின் பல்வேறு நிறுவனங்களில்   ஊடுருவியுள்ளார்கள்.  ஏனெனில், அரசு என்று சொன்னால் அது நாடாளுமன்றம் மட்டுமின்றி, நீதித்துறையும்  அதிகார வர்க்கமும், ராணுவம் உள்ளிட்ட ஆயுதப்பிரிவுகள் அனைத்தும் அடங்கியதாகும்.  அவர்கள் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டு அரசாங்கத்தை அமைத்துவிட்டார்கள் என்பதால், அந்த அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி இதர துறைகளில் இருக்கக் கூடிய முக்கியமான நிறுவனங்களில் ஊடுருவி,  அதனுடைய தலைமையை கைப்பற்றுகிற வேலையையும் செய்கிறார்கள்.

அதிகாரத்தில் ஊடுருவல்

இத்தாலிய மார்க்சீய சிந்தனையாளர் கிராம்ஷி அவர்கள் இந்த போக்கைப் பற்றி சொல்லும்போது இந்த ஆபத்தான சக்திகள் நடத்துகிற நெடும்பயணம் என்கிறார்.  இந்த நெடும்பயணம் என்பது அரசியல் சாசனத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட நிறுவனங்களை ஊடுருவி, அவற்றின் தலைமையை கைப்பற்றுகிற பாதை என கிராம்ஷி அவர்கள் குறிப்பிட்டதுதான் இன்றைக்கு இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  இந்த நிறுவனங்களை எல்லாம் அவர்கள் சீரழிக்கவில்லை; சிதைக்கவில்லை.  மாறாக, நிறுவனங்களை அப்படியே வைத்துக் கொண்டு, அவற்றினுள் ஊடுருவி, உள்ளிருந்து அதன் தலைமையை, அதிகாரத்தைக் கைப்பற்றுகிறார்கள் என்பது மிக மிக ஆபத்தான விஷயமாகும்.  எனவே, நவீன இந்தியா என்கிற கருத்தாக்கத்தின் அடிப்படைக் கோட்பாடுளையும், தன்மையையும் இவர்கள் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். 

மறுபுறம் நவீன தாராளவாதக் கொள்கைகளை அவர்கள் மிகத் தீவிரமாகப் பின்பற்றுகிறார்கள். 2018 துவங்கி 2021 வரையிலான இதே மூன்றாண்டு காலத்தில் கார்ப்பரேட் ஆதரவு நவீன தாராளவாத கொள்கைகளும் மிகத் தீவிரமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.  பொதுத்துறை நிறுவனங்கள் அநேகமாக முற்றிலுமாக ஒழித்துக் கட்டப்பட்டு வருகின்றன.  கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று இருந்த காலமாகும். இக்காலகட்டத்தில் நிவாரண திட்டங்கள் என்ற பெயரில் சில திட்டங்களை இவர்கள் அறிவித்துக் கொண்டிருந்தார்கள். அதிலே ஒரு கொள்கையாக இவர்கள் அறிவித்தது என்னவென்றால், கேந்திரமான துறைகளில் மட்டும்தான் பொதுத்துறை நிறுவனங்கள் செயல்படும்.  மற்றவை எல்லாம் தனியார்மயமாக்கப்படும் என்றனர்.  கேந்திரமான துறைகளில் கூட அதிகபட்சமான 4 பொதுத்துறை நிறுவனங்கள்தான் இருக்கும்.  மற்றவை எல்லாம் தனியாருக்கு விற்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  எண்ணெய் நிறுவனங்கள் உட்பட அனைத்திலும் இதுவே இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  பிரதானமாக இருக்கக் கூடிய பொதுத்துறை நிறுவனங்கள் ஒன்று இணைக்கப்படுகின்றன; அல்லது தனியாருக்கு விற்கப்படுகின்றன என்பதுதான் இந்த மூன்றாண்டு கால நடவடிக்கையாக இருந்து வருகிறது.

இறையாண்மைக்கு ஆபத்து

பிரதமர் பேசும்போதெல்லாம் சுதந்திர இந்தியா என்பது சுயசார்புள்ள இந்தியாவாக இருக்க வேண்டும் என்கிறார்.  இவ்வாறு சொல்லிக் கொண்டே, இந்தியாவிற்கு ஏற்கனவே கொஞ்சநஞ்சம் இருக்கிற சுயசார்பையும் தங்கள் நடவடிக்கைகளால் தகர்க்கிறார்கள்.  சுயசார்பு தகர்க்கப்படுகிறது என்றால் என்ன பொருள்?  பொருளாதார இறையாண்மை விட்டுக் கொடுக்கப்படுகிறது என்பதேயாகும்.  அதனுடைய ஒரு மிக முக்கியமான உதாரணமாக, பாதுகாப்புத் துறையிலே ஆயுதத் தளவாட உற்பத்தியில் 100% அந்நிய நிறுவனங்கள் உள்ளே வரலாம் என ஒரு கொள்கையை இவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். அமெரிக்க நிறுவனங்கள் பாதுகாப்புத் துறைக்கான டேங்குகள், ஆயுதங்கள் இவற்றையெல்லாம் உற்பத்தி செய்யலாம். இவற்றின் மீதான முழுக்கட்டுப்பாடு பன்னாட்டு நிறுவனங்களின் கைகளில் இருக்கும்.  எனவே, தேசத்தின் பாதுகாப்பு தொடர்பான தளவாட உற்பத்தி தொடர்பான மொத்தக் கட்டுப்பாடும் பன்னாட்டு நிறுவனங்கள் கைகளுக்குப் போய்விட்டது என்று சொன்னால் இந்திய தேசத்தின் இறையாண்மையை எங்கே போய் தேட முடியும்?  இறையாண்மை எப்படி இருக்கும்?  ஆனால், இதைப்பற்றி எல்லாம் இந்திய ஆட்சியாளர்களுக்கு கவலை இல்லை.  ஏனென்று சொன்னால், தேச விடுதலை, தேசத்தின் இறையாண்மை என்பவற்றிற்கெல்லாம் இவர்கள் பெரிய முக்கியத்துவம் கொடுப்பது கிடையாது.  விடுதலைக்காக நடந்த போராட்டத்தில் இவர்களுக்கு எந்தவொரு பங்குபாத்திரமும் கிடையாது. இவர்களுக்கு வேண்டியதெல்லாம் இந்து ராஜ்ஜியம் என்பதேயாகும்.  அதற்காக இவர்கள் எதை வேண்டுமானாலும் செய்வார்கள். 

இந்த கார்ப்பரேட் ஆதரவு பாதையிலே அமெரிக்க ஏகாதிபத்தியம் இவர்களுக்கு உதவுகிறது என்றால் அவர்களோடு கை கோர்க்கவும் இவர்கள் தயங்க மாட்டார்கள்.  எனவே, ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பது கொஞ்சம் கூட இல்லாத ஒரு பகுதியாகத்தான் இவர்கள் இருக்கிறார்கள் என்பதைத்தான் தேச விடுதலைப் போராட்ட காலம் துவங்கி இன்று வரை நாம் பார்த்துக் கொண்டு வருகிறாம்.    எனவே, மோடி முன்வைக்கிற ஆத்மநிர்பர் – அதாவது சுயசார்பு- என்பது வெறும் வாய் வார்த்தையாகவே உள்ளது.

அருங்காட்சியகத்தில் ஜனநாயகம்

அதேபோலத்தான் நாடாளுமன்ற ஜனநாயகமும் இருக்கிறது.  இப்போது புதிய நாடாளுமன்ற வளாகத்திற்கான கட்டுமானப் பணிகள் தில்லியில் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.  இதைக் கட்டுகிற பொறுப்பு டாடா நிறுவனத்திடம் கொடுக்கப்பட்டுள்ளது.  இன்னும் 2 ஆண்டுகளில், அதாவது 2023ஆம் ஆண்டிற்குள் இந்த கட்டுமானப் பணியை முடித்துவிடுவோம் என டாடா நிறுவனம் சொல்லி வருகிறது.  அரசு சார்பில் என்ன சொல்லப்படுகிறது என்றால், இந்த புதிய வளாகத்தில்தான் நாடாளுமன்றம் இயங்கும்.  பழைய நாடாளுமன்ற கட்டிடம் என்பது ஜனநாயகத்தின் அடையாளமாக பொருட்காட்சியில் வைக்கப்படும் என்று அவர்கள் சொல்கிறார்கள்.  இன்றைக்கு நாடாளுமன்ற ஜனநாயகம் என்பது பொருட்காட்சியில் வைக்கப்படுகிற நிலைமையில்தான் இருக்கிறது.  இந்த ஒரு விஷயத்தை அவர்கள் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்கள். 

நாடாளுமன்றத்தைப் பற்றியோ அல்லது அது சார்ந்த நிறுவனங்களைப் பற்றியோ இவர்களுக்கு எந்த உணர்வும் இல்லை; மரியாதையும் இல்லை.  எனவே, நாடாளுமன்ற ஜனநாயகம் என்பது பொருட்காட்சியில் வைக்கத் தகுந்த ஒன்றுதான் என்ற அடிப்படையில்தான் இவர்களது நடவடிக்கைகள் இருந்து வருகின்றன.  நாடாளுமன்ற ஜனநாயகத்தை பின்னுக்குத் தள்ளிவிட்டு ஒரு புதிய வகையான ஜனநாயகத்தை நிறுவ இவர்கள் முயல்கிறார்கள்.  இந்த புதிய வகையான ஜனநாயகம் எப்படி இருக்கும் என்பதை நம்மால் ஊகிக்க முடிகிறது.  நாடாளுமன்றத்தின் கடந்த மழைக்கால கூட்டத் தொடரின்போது பல முக்கியமான மசோதாக்கள் எந்தவிதமான விவாதத்திற்கும் உட்படுத்தப்படாமல் நிறைவேற்றப்பட்டன என்பதிலிருந்தே அதனை புரிந்து கொள்ள முடியும்.  குறிப்பாக, பொதுத்துறை பொதுக் காப்பீட்டு நிறுவனங்களை தனியார் மயமாக்குவதற்கான மசோதா குறித்து விவாதிக்க அனுமதிக்காததோடு மட்டுமின்றி, அதை நிலைக்குழுவிற்கு அனுப்பலாம் என்ற வாதத்தையும் கூட அரசு ஏற்கவில்லை.

மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, பாஜகவோடு கூட்டணியில் உள்ள சில கட்சிகள் உட்பட இந்த மசோதாவிற்கு எதிரான நிலையைத்தான் எடுத்திருந்தார்கள். ஒரு வேளை  மாநிலங்களவையில் இம்மசோதா மீதான வாக்கெடுப்பு அனுமதிக்கப்பட்டிருந்தால், நிச்சயமாக அவர்களால் அதனை நிறைவேற்றியிருக்க முடியாது.  எனவே, இம்மசோதா மீது விவாதத்திற்கோ, வாக்கெடுப்பிற்கோ இடம் கொடுக்காது அவசர அவசரமாக நிறைவேற்றினார்கள். இப்படிப்பட்ட நடவடிக்கைகளைப் பார்க்கும்போது, இந்தியாவில் நாடாளுமன்ற ஜனநாயகம் என்பது முழுமையாகக் குழிதோண்டி புதைக்கிற இடத்தில் தான் இவர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள்.

கூட்டாட்சிக்கு கேடு

அதுபோலத்தான், கூட்டாட்சி கோட்பாடுகளும், மாநில உரிமைகளும், நிதி தொடர்பான மாநிலங்களுக்கான பங்கீடும் மோசமாக அரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.  மத்திய அரசு எதை வேண்டுமானாலும் செய்யலாம்.  உங்களுக்கு இந்த நிதியில், வரி வருவாயில் பங்கீடு வேண்டுமென்றால், நீங்கள் அதன் நிபந்தனைகளை எல்லாம் நிறைவேற்ற வேண்டும் என்று அவர்கள் கூற முடியும்.  ஏற்கனவே மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய ஜிஎஸ்டிக்கான இழப்பீடு மிகப் பெரிய நிலுவையில் உள்ளது. எனவே, நிதி விஷயத்தில் மாநிலங்களை அவர்கள் பட்டினி போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது முக்கியமான விஷயமாகும்.

அதே போன்று, அரசியல் தளத்திலும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் என்றால் ஆளுநர்களையும், துணைநிலை ஆளுநர்களையும்  கொண்டு கவிழ்ப்பதற்கான முயற்சி செய்வது, இதர கட்சிகளிலிருந்து சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி பாஜக தலைமையிலான ஒரு மாநில அரசாங்கத்தை உருவாக்க முயற்சிப்பது என்ற நடவடிக்கைகளால் கூட்டாட்சி கோட்பாடு முற்றிலும் தகர்க்கப்பட்ட நிலையில் நாம் உள்ளோம். 

இதுவரை மாநில உரிமைகள் பலவற்றிலும் ஒன்றிய அரசு தலையீடு செய்தது என்பதையும், மாநில அதிகாரங்களை எல்லாம் ஒன்றிய அரசு தன்வசப்படுத்திக் கொண்டது என்பதையும் நாம் கண்டோம்.  சமீபகாலத்தில் சில புதிய பகுதிகளிலும் அவர்களது இத்தகைய ஆக்கிரமிப்பு நடந்து கொண்டுள்ளது என்பதை பார்க்க முடிகிறது.  புதிய கல்விக் கொள்கையை, வேளாண் சட்டங்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.  அதேபோன்று கூட்டுறவுத் துறை என்பது மாநில அதிகார வரம்பிற்குள் உள்ள ஒன்றாகும்.  ஆனால், இதற்கு மத்தியில் ஒரு அமைச்சகத்தை ஏற்படுத்தி அமித் ஷாவை அதற்கு அமைச்சராக நியமித்திருக்கிறார்கள்.

கொள்கை மாற்று தேவை

2019 நாடாளுமன்ற தேர்தல்களுக்குப் பிறகு எதிர்க்கட்சிகள் ஒப்பீட்டளவில் பலவீனமாக இருக்கின்றன. மேலும், ஒரு சில மாநிலக் கட்சிகள், பாஜகவினர் செய்யும் அக்கிரமங்களுக்கு எதிராக வாய் திறக்க மறுக்கின்றனர். எனவே, பாஜக எதை வேண்டுமானாலும் செய்துவிட்டு அதிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும் என்ற நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது.  எனவே, ஒட்டுமொத்தமாக நவீன சுதந்திர இந்தியாவின் அடிப்படைக் கோட்பாடுகள் முற்றுகையிடப்பட்ட சூழலில்தான் நாம் இதனை பேசிக்கொண்டுள்ளோம்.

எனவே நமது சுயேச்சையான மாற்றுக் கண்ணோட்டங்கள் அல்லது நவீன இந்தியா குறித்த மாற்றுத் திட்டங்களின் மூலமே இவற்றை எதிர்கொள்ள வேண்டும்.  இந்தியா குறித்த கடந்த கால முதலாளித்துவ தாராளவாத கண்ணோட்டத்தைப் பற்றி பேசுவது மட்டும் போதாது.  ஏனெனில் அக்கண்ணோட்டத்தின் பெரும்பகுதி கடந்த காலத்தில் அரிக்கப்பட்டு விட்டது. அது இந்துத்துவா சக்திகளால் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது.  எனவே, இந்திய மக்களால் ஏற்றுக் கொள்ளப்படுகிற ஒரு புதிய சமூக கருத்தாக்கத்தை நாம் உருவாக்க வேண்டும்.  மதச்சார்பற்ற, ஜனநாயக, கூட்டாட்சி ஆகியவையும் தேச இறையாண்மை பாதுகாப்பும் அந்த மாற்றுக் கொள்கைகளின் தூண்களாக அமையும்.

இந்துத்துவா கொள்கையை, வகுப்புவாதத்தை, நவீன தாராளவாத கொள்கைகளை தெளிவாக எதிர்கொள்கிற கொள்கையாக அது இருக்க வேண்டும். நவீன தாராளவாதமும், இந்துத்துவாவும் கலந்த அபாயகரமான கலவை நீடிக்கக் கூடாது.  

இடது ஜனநாயக மாற்று

மோடி தலைமையிலான இந்த அரசின் இத்தகைய கொள்கைகளால் அதிகம் பயனடைந்தவர்கள் யார்? என்பதை இந்த நோய்த்தொற்று காலத்தில் கூட பார்க்க முடிந்தது. 2020ஆம் ஆண்டில் இந்தியாவில் 102 பில்லியனர்கள் இருந்தனர்.  2021ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 140 ஆக அதிகரித்துள்ளது.  பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள இந்தக் காலத்தில் பணக்காரர்கள் மேலும் பணம் படைத்தவர்களாக மாறியிருக்கிறார்கள் என்பதிலிருந்து இக்கொள்கைகளால் பலனடைந்தவர்கள் யார் என்பது தெளிவாகிறது. மறுபக்கம், வேலையின்மை உருவாகியுள்ளது; வறுமை, பட்டினி ஆகியவை அதிகரித்துள்ளன.

இடது ஜனநாயக முன்னணியின் மாற்றுக் கொள்கைகள் என நாம் குறிப்பிடுகிற சமூக, பொருளாதார, அரசியல் மாற்றுக் கொள்கைகளை முன்வைக்காமல் இந்த நிலைமைகளை மாற்ற முடியாது. அந்த கொள்கைகளைக் கொண்டு அனைத்துப் பகுதி உழைப்பாளி மக்கள், மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகளை ஒன்றிணைத்திட வேண்டும்.

போராட்டங்களில் எழும் நம்பிக்கை

இந்துத்துவா.- நவீன தாராளவாத கொள்கைகளுக்கு எதிர்ப்பே இல்லாத நிலைமை இல்லை. குடியுரிமை திருத்த சட்டத்தை இவர்கள் கொண்டு வந்தபோது, நாடு முழுவதிலும் கண்டன இயக்கங்கள் எழுந்ததை பார்த்தோம்.  இஸ்லாமியர்கள் மட்டுமல்லாது, இதர மதங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் இப்போராட்டங்களில் திரண்டனர்.  நோய்த்தொற்று காரணமாக இப்போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க இயலவில்லை என்றாலும், அது ஒரு மிகப் பெரிய வெகுஜன இயக்கமாக அமைந்தது. 

அதே போலவே விவசாயிகளின் இயக்கமும் வெடித்துள்ளது.  ஒன்பதாவது மாதத்தை அது எட்டியுள்ளது. தில்லியின் எல்லையில் நான்கு முனைகளில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் இன்னமும் முகாமிட்டு அப்போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.  பஞ்சாப், ஹரியானா, மேற்கு உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களின் அரசியலில் இந்த விவசாயிகள் போராட்டத்தின் தாக்கம் இருக்கும்.  ஏனெனில், பாஜக அரசு ஆட்சியில் நீடித்திருக்கும் வரை விவசாயிகளுக்கு எதிரான இத்தகைய கொள்கைகள் இருக்கும் என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர். எனவே, பாஜக அரசுகளை அகற்றுங்கள் என்ற முழக்கத்தை அவர்கள் முன்வைத்துள்ளனர். 

தனியார்மயமாக்கல், புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் போன்றவற்றிற்கு எதிராக எண்ணற்ற போராட்ட இயக்கங்கள் நடைபெற்று வருவதையும் காண்கிறோம்.  விசாகப்பட்டின உருக்காலை தனியார்மயமாக்கப்படுவதை எதிர்த்து மிகப் பெரிய போராட்டம் நடைபெற்று வருகிறது. இது உழைக்கும் வர்க்கத்தின் போராட்டமாக மட்டுமின்றி, அனைத்துப் பகுதி மக்களையும், பாஜக தவிர்த்த அனைத்து அரசியல் கட்சிகளையும் இணைத்த மக்களின் போராட்டமாக வடிவெடுத்துள்ளது. இத்தகைய போராட்ட இயக்கங்கள் கட்டப்பட்டு, பரவலாக்கப்பட்டு, ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.  நாம் முன்வைக்கும்  இடது ஜனநாயக மாற்றுத் திட்டம், மக்களை ஒருங்கிணைக்கும் புள்ளியாக மாற வேண்டும்.

எதிர்ப்புரட்சி என்ற நிலையிலிருந்து செயல்படும் ஆளும் வர்க்கத்திற்கும், அதனுடைய கொள்கைகளுக்கும் எதிராக ஒரு வலுவான போராட்டத்தை நிச்சயமாக நம்மால் நடத்த முடியும்.  அதேபோன்று, அரசியல், சமூக, பொருளாதார தளத்தில் மக்களுக்கான நீதியை வழங்கக் கூடிய ஒரு திட்டத்தை முன்னெடுக்க முடியும்.  இதன் மூலம் விடுதலைப் போராட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட மாண்புகளையும், அரசியல் சாசனத்தின் வழிகாட்டும் நெறிமுறைகளில் அடங்கியுள்ள கூறுகளையும்  நம்மால் முன்னெடுக்க முடியும்.

எனவே, இந்திய விடுதலை, 75வது ஆண்டை எட்டியுள்ள இந்தத் தருணத்தில் அனைத்து இடதுசாரி, ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து ஒரு உறுதிமொழியை எடுப்போம்.

மோடியும் அவரது அரசும் முன்வைக்கக் கூடிய கொள்கைகளுக்கும், நடவடிக்கைகளுக்கும் எதிராக மிகப் பெரிய எதிர்ப்பியக்கத்தைக் கட்டமைப்பது; அவர்களுடைய நடவடிக்கைகளை  திரும்பப் பெறச் செய்திடும் வகையில் இயக்கங்களை முன்னெடுப்பது; இந்த நாசகரமான ஆட்சியை அகற்றுவதுடன், அதன் இடத்தில் புதிய சக்திகளை,  நவீன இந்தியாவின் அடிப்படைக் கோட்பாடுகளை முன்னெடுக்கக் கூடிய சக்திகளை, அமர்த்திடுவோம் என்று உறுதியேற்போம்.

இவ்வகையில் நமது எதிர்கால நடவடிக்கைகள் அமைவது அவசியமாகும்.

தமிழில்: கிரிஜா

விடுதலைப் போரில் காங்கிரஸின் வர்க்க அணுகுமுறை

இரா. வேல்முருகன்

1947ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15ஆம் தேதியன்று டெல்லி செங்கோட்டையில் ஏற்றப்பட்டிருந்த யூனியன் ஜாக் கொடி அகற்றப்பட்டு, அந்த இடத்தில் மூவர்ணக் கொடி  ஏற்றப்பட்டது. தங்களின் நீண்டகால சுதந்திர கனவு ஈடேறிவிட்டதாக இந்தியாவின் கோடிக்கணக்கான மக்கள் குதூகலித்து கொண்டாடினார்கள்.

ஆனால் இந்த விடுதலை நாள் கொண்டாட்டத்தில் காந்தி பங்கேற்கவில்லை. மாறாக அப்போது நடைபெற்ற வகுப்பு கலவரங்களில் இருந்து நவகாளியிலும், பீகாரிலும் அமைதியை நிலைநாட்ட அவர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார். அதே நாளில் ஆயிரக்கணக்கான கம்யூனிஸ்டுகள் சிறைச்சாலையில் விடுதலை போராட்ட கைதிகளாக அடைபட்டிருந்தனர். இந்திய மக்களுக்கு விடுதலை நாள் செய்தியை கேட்டு ஒரு பத்திரிக்கையாளர் காந்தியை அணுகிய போது ” என் இதயம் வறண்டு போய்விட்டது” என அவர் மிகுந்தவேதனையுடன் பதிலளித்தார்.

காங்கிரஸ் கட்சி 

காங்கிரஸ் கட்சி 1885 இல் துவங்கப்பட்டபின் முதல்20 ஆண்டுகள்  வரை பிரிட்டிஷ் காலனி அரசிடம் மனு கொடுக்கும் பணியை மட்டுமே செய்து வந்தது  என்றால் மிகையாகாது. 1896-97  ஓர் ஆண்டில் மட்டும்  சுமார் 45 லட்சம் மக்கள் பஞ்சத்தில் மடிந்துபோனார்கள். 1899 – 1900 வரை 12.50 லட்சம் மக்கள் மாண்டுபோனார்கள். 1860 முதல் 1908 வரை 48 ஆண்டுகளில் 20 ஆண்டுகள் இத்தகைய பெரும் பஞ்சம் நீடித்து, ஒரு கோடிக்கும் அதிகமாக மக்கள் செத்து மடிந்தனர். இதற்கு எதிராக பெரும் போராட்டங்களை காங்கிரஸ் கட்சி நடத்தவில்லை.

ஆனால் இத்தகைய கொடுமைகளுக்கு எதிராக இந்திய நாட்டின் இளைஞர்கள் அதிதீவிர குழுக்களாக உருவாகிவந்தனர். மகாராஷ்ட்ராவில் சாபேகர் சகோதரர்கள் போன்ற இளைஞர்கள் மித்ரமேலா, அபிநவ் பாரத் போன்ற அமைப்புகளை உருவாக்கி போராடினார்கள். வங்கத்தில் அனுசீலன் சமிதி, யுகாந்தர் குழு போன்ற அமைப்புகள் நடத்திய போராட்டங்கள் வங்கப் பிரிவினையை பிரிட்டிஷ் அரசு திரும்பப் பெறச் செய்ததில் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தன. இதே கால கட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக தீவிரமாக செயல்படவேண்டும் என லாலா லஜபதி ராய் , பாலகங்காதர திலகர், விபின் சந்திர பால் போன்றோரும், பிரிட்டிஷ் அரசின் கோபத்திற்கு ஆளாகாமால் மிதமாக செயல்பட வேண்டும் என கோபாலகிருஷ்ண கோகலே, அன்னிபெசன்ட் அம்மையார் போன்றோரும் இரண்டு குழுக்களாக செயல்பட்டனர்.

ஜாம்ஷெட்பூரில்  டாட்டா – புதிய ஜவுளி ஆலையை  (சுதேசி ஆலை) துவக்கினார் அப்போது இந்திய தேசிய முதலாளிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி தீவிரவாத தலைவர்கள் லால்-பால்-பால் அந்நிய பொருட்கள் புறக்கணிப்பு, தேசிய கல்வி கொள்கை, சுதேசி போராட்டம், சுயராஜ்யம் (தன்னாட்சி) போன்ற சீர்திருத்த கொள்கைகளை முன்வைத்தார்களே ஒழிய இந்திய மக்களுக்கான முழு சுதந்திரம் என்ற கோரிக்கை அவர்களிடத்தில் எழவில்லை. 1905ஆம் ஆண்டு நடந்த காங்கிரஸ் மாநாட்டில் கோபாலகிருஷ்ண கோகலே தலைமை உரையாற்றிய போது இந்திய நாடாளுமன்றத்தில் இந்தியாவின் ஆட்சி நடைபெறவேண்டும் என்பதுதான் காங்கிரஸ் குறிக்கோள். காலப்போக்கில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு உட்பட்டு காலனி நாடுகள் சுயமாக ஆட்சியை எப்படி நடத்துகிறார்களோ, அதேபோன்று இந்தியர்களும் அரசாட்சி நடத்துவோம் என்றார். இருபதாம் நூற்றாண்டின்  துவக்கத்தில் பிரிட்டிஷ் ஆட்சி கொள்கையை மென்மையாக விமர்சிப்பது,அரசியல் சீர்திருத்தங்கள் உருவாக்குவது இதன் மூலம் சில சலுகைகளை பெறுவதுதான் காங்கிரசின் நோக்கமாக இருந்தது.

காந்தியின் தலைமை 

“ஊழியர்களும் மக்களுமே இந்த உலகின் ஆகப் பெரிய செல்வம், மிக உயர்ந்த தீர்மானகரமான சக்தி, மிக உயர்ந்த மூலதனம், அவர்கள் இல்லாமல் உலகில் எந்த புரட்சியும் சாத்தியமில்லை” என்பதை உணர்ந்த மகாத்மா காந்தி இதனை சரியாக பயன்படுத்தினார்”. காந்தியின் தலைமையின் கீழ் இந்திய முதலாளி வர்க்கம் வெகுமக்கள் போராட்டத்திற்கு தலைமை தாங்கியது. “மகாத்மா காந்தியின் தலைமையில் செயல்பட்ட முதலாளித்துவ வர்க்க தலைமையானது பிரிட்டிஷாரை பேச்சுவார்த்தை மேடைக்கு அழைத்து கொண்டு வருவதற்காகவே வெகு மக்கள் பங்கேற்கும் போராட்டத்தை நடத்துவது என்ற வியூகத்தையும் அதற்கேற்ப உத்திகளையும் மிகவும் விரிவான முறையில் திட்டமிட்டு நடத்தியது.” அதனால்தான் காந்தி நடத்திய ஒத்துழையாமை போராட்டமாக இருந்தாலும் சரி, சட்டமறுப்பு இயக்கமாக இருந்தாலும் சரி, வெகுமக்கள் எழுச்சியை உருவாக்கி இந்திய தேசிய முதலாளிகளின் நலனுக்கு ஏற்ப சில உடன்பாடுகளோடு போராட்டத்தை திரும்ப பெற்றார்  .

பீஹாரில் சம்பரான் மாவட்டம்  விவசாயிகள் போராட்டத்தில் மகாத்மா காந்தி பங்கெடுக்க வேண்டும் என போராட்டக்காரர்கள் அழைத்தனர். விவசாயிகளின் அழைப்பின் பேரில் காந்தி அங்கே சென்றதோடு அல்லாமல் அகிம்சா போராட்டத்தை அங்கு நடத்தி வெற்றியும் பெற்றார். இதேபோல் குஜராத் மாநிலத்திலுள்ள கெட்டா விவசாயிகளின் கோரிக்கைக்கான சத்தியாகிரக போராட்டத்திற்கு வழிகாட்டியது மட்டும் இல்லாமல், சத்தியாகிரக போராட்டத்தை நடத்தி வெற்றியும்  கண்டார். இதன் காரணமாக காந்தியின் புகழ் இந்தியா முழுவதும் பரவியது.

வெள்ளை ஏகாதிபத்தியத்தின் ரௌலட் சட்டத்தை எதிர்த்து அகிம்சை வழியில் ஒத்துழையாமை இயக்கத்திற்கு காந்தியின் தலைமையில் காங்கிரஸ் கட்சி முடிவு எடுத்தது. மகாத்மா காந்தி எவ்வித நிபந்தனையும் இன்றி ஒத்துழையாமை இயக்கம் என அறிவித்து திலகர் போன்ற தீவிர தேசிய தலைவர்களை எல்லாம் ஓரங்கட்டியது என்றாலும், ஒத்துழையாமை இயக்கத்தையும், கிலாபத் இயக்கத்தையும் இணைத்து மாபெரும் மக்கள் எழுச்சியை உருவாக்க முடிந்தது.

ஒத்துழையாமை இயக்கம் அறிவித்ததுடன் காந்தி மகாராஷ்டிராவில் இருந்து ரயிலில் புறப்படும்போது கைது செய்யப்பட்டார், பம்பாய், டில்லி போன்ற இடங்களில் நடந்த வன்முறை. இந்த வன்முறைக்கு எதிராக மக்கள் போராடியபோது டாக்டர் சத்பாலும், டாக்டர் சைபுத்தீன் கிச்சிலுவும் நாடு கடத்தப்பட்டனர். இதற்கு எதிராக நடந்த எழுச்சியின் துவக்கம்தான் ஜாலியன் வாலாபாக்கில் ஜெனரல் டயர், மைக்கேல் டயர், லார்டு ஷெட்லாந்து நடத்திய மிருகத்தனமான மனிதத்தன்மையற்ற துப்பாக்கிச்சூடு. இதில் ஏராளமான மக்கள் தங்கள் இன்னுயிரை இழந்தனர், பல நூற்றுக்கணக்கான மக்கள் பலத்த காயம் அடைந்தனர்.

இந்த படுகொலை நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் மக்களை கிளர்ந்தெழ செய்தது. இந்த போராட்டத்தின் உச்சமாக உத்திரபிரதேசம் மாநிலம் கோரக்பூர் மாவட்டம் அருகில் உள்ள ஒரு சிறிய நகரமான சௌரி சவ்ரா காவல் நிலையத்தை கிராம மக்களே ஒருங்கிணைந்து முற்றுகை இட முயற்சி செய்தனர். அப்போது காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் 3 பொது மக்கள் கொல்லப்பட்டனர்.இதை தொடர்ந்து 500க்கும் மேற்பட்ட மக்கள் காவல் நிலையத்தை சூறையாடினார்கள். இதில் 22 காவலர்கள் மாண்டனர். இதில் 228 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 172 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. காந்தி இந்த தண்டனையை வரவேற்றார்.  ஆனால் கம்யூனிஸ்ட் தலைவர் நரேன் பட்டாச்சார்யா நாடுமுழுவதும் பெரும் போராட்டங்களை நடத்தினார்.பின்னர் இதன் விளைவாக 110 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாகவும்,19 பேருக்கு தூக்குதண்டனையாகவும் மாறியது.

இப்போராட்டத்திற்கு பிறகு ஏதோ மக்கள் பெரும் தவறை செய்ததை போல் மக்களை நொந்துக் கொண்டு காந்தி ஒத்துழையாமை போராட்டத்தை திரும்ப பெற்றார்.

பூரண சுயராஜ்யமும் கம்யூனிஸ்டுகளும்

1920 ஆம்ஆண்டு தாஷ்கண்டில் அமைக்கப்பட்ட முதல் கம்யூனிஸ்ட் கட்சி கிளைதான் இந்தக் கோரிக்கையை முதலில் முன்வைத்தது. 1921ஆம் ஆண்டு அகமதாபாத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டிலும், 1922கயா காங்கிரஸ் மாநாட்டிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த அபானி முகர்ஜியும், எம்.என்.ராயும் தயாரித்த பூரண சுயராஜ்யம் என்ற தீர்மானம் முன்மொழியப்பட்டது. காங்கிரஸ் கட்சியில் இந்த தீர்மானம் பெரும் கருத்து மோதலை உருவாக்கியது. இதன் விளைவாக மௌலானா ஹஷ்ரத் மொஹானி முழு விடுதலை தீர்மானத்தை மாநாட்டில் முன்மொழிந்தார். ஆனால் காந்தி இந்த தீர்மானத்தை தோற்கடித்ததோடு நில்லாமல் எம்.என்.ராயின் இந்த முயற்சி அரைவேக்காட்டுத்தனம் என்றும் சாடினார்.

தேசிய முதலாளிகளும், காங்கிரஸ் கட்சியும் பூரண சுயராஜ்யம் என்ற இந்த நிலைபாட்டிற்கு வருவதற்கு சுமார் பத்தாண்டுகள் தேவைப்பட்டது . 1929ஆம் ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில்தான் பூர்ண சுயராஜ்யம் கோரிக்கை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

1928ஆம் ஆண்டு நடைபெற்ற விவசாய தொழிலாளர்களின் போராட்டத்திலும்,பம்பாய், குஜராத், உத்திரபிரதேசம் போன்ற பகுதிகளில் நடைபெற்ற வேலை நிறுத்தம் மற்றும்  குஜராத் விவசாயிகளின் வரிகொடா இயக்கம் ஆகியவற்றில் சுமார் 1.50 லட்சம் தொழிலாளர்கள் பங்கேற்றனர். அதேபோன்று தென்னிந்திய இரயில்வே வேலைநிறுத்தம், தொழிற்தகராறு மசோதா  போராட்டத்தில் சுமார்  5 லட்சம் மக்கள்  பங்கேற்றனர்.  இந்த சூழலில்தான் வேறு வழியின்றி காந்தியால் பூரண சுயராஜ்யம் என்ற தீர்மானம் முன்மொழியப்பட்டு மாநாடும்  ஏகமனதாக அங்கீகரித்தது.

காந்தி இர்வின் உடன்படிக்கை

1930 ஏப்ரல் 6ஆம் தேதி ‘உப்பு சத்தியா கிரகம்’ காந்தி தலைமையில் துவங்கப்பட்டது. இப்போராட்டம் தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகளை காந்தி விதித்திருந்தார். நாடு முழுவதும் சத்தியகிரகிகள் கைது செய்யப்பட்டனர். ஆனால் மே 5ஆம் தேதி வரை காந்தி சுதந்திரமாக விடப்பட்டிருந்தார். காந்தியை தவிர, நேரு, வல்லபாய் பட்டேல் உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர். இப்போராட்டம் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

நான் கைது செய்யப்பட்டால் எனது தோழர்களோ , பொதுமக்களோ பதட்டம் அடைய தேவையில்லை. நமக்கு வழிகாட்டுவது கடவுள்தான் நானில்லை. ஒவ்வொரு கிராமமும் உப்பு உற்பத்தி செய்யட்டும். உத்தரவை மீறி உப்பு கொண்டு வரட்டும். மதுபானக்கடைகள், கஞ்சா மையங்கள், அந்நிய துணிக்கடைகள் முன்னால் பெண்கள் மறியல் நடக்கட்டும். ஒவ்வொரு குடும்பத்தின் இளைஞர்களும் பெரியவர்களும் நூல் நூற்கட்டும்.அந்நிய துணிகள் எரிக்கப்படட்டும். இந்து, இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள் அனைவரின் இதயமும் ஒன்றிணையட்டும். பள்ளி கல்லூரிகளை விட்டு மாணவர்கள் வெளியேறட்டும். அரசு ஊழியர்கள் பணியில் இருந்து விலகட்டும். மக்கள் பணியில் தங்களை ஈடுபடுத்திகொள்ளட்டும். அப்போது முழு சுயராஜ்யம் வந்து நமது கதவுகளைத் தட்டும் என்றார் காந்தி.

அனைத்து  மக்களையும் தனது அகிம்சா போராட்டத்தில் கொண்டுவருவதற்கு காந்தி முயன்றார். அவர் தொடங்கிய உப்பு சத்தியாகிரக போராட்டம் மக்கள் போராட்டமாக உருமாறி மாபெரும் எழுச்சியை மக்கள் மத்தியில் உருவாக்கியது. இதுவரை வீட்டுக்குள்ளே அடைபட்டுக் கிடந்த பெண்கள், குழந்தைகள் என அனைத்து பகுதி மக்களும் இப்போராட்டத்தில் இணைந்தனர். ஆனால் இப்போராட்டம் வெளிப்படையாகவே இந்திய ஜவுளி ஆலை முதலாளிகள் நலன்களை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கையாகவே அமைந்தது. அந்நிய துணி பகிஷ்கரிப்பும், சுதேசிய ஆதரவு பிரச்சாரமும் இந்திய ஆலை முதலாளிகளின் நலன்களையும் பாதுகாக்க பயன்பட்டதே ஒழிய சுயராஜ்யம் என்பது பின்னுக்குப் போனது.

1931ஆம் ஆண்டு மார்ச் 5ஆம் நாள் காந்தி – இர்வின் ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால் ஏற்கனவே 1929 ஆம் ஆண்டு லாகூரில் நடைபெற்ற மாநாட்டில் கொண்டு வந்த பூரண சுயராஜ்யம் என்ற இலக்கை நீர்த்துப் போக செய்து சில நிபந்தனைகளுடன் காந்தி இர்வின் ஒப்பந்தம் கையெழுத்தானது. “சில நிபந்தனைகளுடன் உப்பு தயாரிக்கும் உரிமை மக்களுக்கு வழங்கப்பட்டது, அத்துடன் அந்நிய துணிக்கடைகள் மற்றும் மதுபானக்கடைகள் முன் மறியல் செய்வதற்கான உரிமை,காங்கிரஸ் கட்சி பகிரங்கமாக செயல்பட அனுமதி, இவற்றிற்கெல்லாம் மேலாக அறவழி போராட்டத்தில் ஈடுபட்ட சத்தியாகிரகிகளை விடுதலை செய்வது போன்ற பிரிவுகள் அதில் அடங்கியிருந்தன. ஆனால் காந்தியின் முதலாளி வர்க்க நலனுக்கு சிறிது கூட பங்கம் வந்துவிடக்கூடாது என்ற சிந்தனையில் சுயராஜ்யம் என்ற நிலைபாட்டிலிருந்த கீழிறங்கி வந்தது மட்டும் அல்ல; விடுதலை போராட்டத்தில் தீவிரமாக பங்கெடுத்த பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் உள்ளிட்ட அதிதீவிர இயக்கத் தோழர்களின் தூக்குத்தண்டனை குறித்தோ, தீவிர போராட்ட வீர்ர்கள் குறித்தோ மவுனம் சாதித்ததோடு அவர்களின் தண்டனையும் நியாயமே என்பதுதான் காந்தியின் நிலைபாடாக இருந்தது.

இந்த உடன்படிக்கைக்கு ஆதரவாகவும், எதிராகவும் காங்கிரஸ் கட்சி தலைவர்களிடத்திலும் மக்கள் மத்தியிலும் இரண்டு விதமான உணர்வு உருவாகியது. அதே நேரத்தில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு ஒரு உண்மை புரிய வைக்கப்பட்டிருந்தது. தாங்கள் கடைப்பிடிக்கும் இந்த மோசமான அடக்குமுறைகளால் மக்களின் எழுச்சியை தடுத்து நிறுத்தமுடியாது என்பதையும் பிரிட்டிஷார் புரிந்துகொண்டனர். 

காங்கிரசின் நெருக்கடியும் மக்கள் எழுச்சியும்

1933ஆம் ஆண்டு சத்தியாகிரகப் போராட்டத்தை காந்தி விலக்கிக் கொண்ட பிறகு காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் நெருக்கடி நிலவியது. இதன் விளைவாக காங்கிரஸ் கட்சிக்குள் இருந்து செயல்பட்ட முற்போக்காளர்கள், சோசலிஸ்டுகள் சுபாஷ் சந்திர போஸ், ஜவஹர்லால் நேரு, வித்தல்பாய் பட்டேல், ஜெயப்பிரகாஷ் நாராயணன் போன்றவர்களெல்லாம் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே தனி அமைப்பாக செயல்படும் நிலைக்கு வந்துவிட்டனர். இவையனைத்தையும் காந்தி எதிர்க்கவில்லை. காரணம் நேரு காங்கிரஸ் கட்சியின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் வரை எந்த பாதிப்பும் இல்லை என காந்தி புரிந்து வைத்திருந்தார். “நேருவின் கருத்துக்கள் காங்கிரசின் கொள்கையுடன் அடிப்படையில் மாறுபட்டு விலகிச்செல்லும் அளவிற்கு தெளிவானதொரு வடிவத்தை எடுத்துள்ளதாக நான் கருதுவதில்லை. எனவே அவரது கம்யூனிச சிந்தனையை கண்டு யாரும் அச்சமடைய வேண்டாம்” என்றார் காந்தி. இந்த புரிதலில் இருந்துதான் இடதுசாரிகள் பக்கம் மக்கள் சென்றுவிடாமல் தடுக்க ஜவஹர்லால் நேருவை தொடர்ந்து மூன்று முறை காங்கிரஸ் கட்சியின் தலைவராக அனுமதித்தார் காந்தி.

விவசாயிகள் கோரிக்கைகளை காங்கிரஸ் திட்டத்தில் சேர்க்கவேண்டும் என கோரிக்கைகளை வைத்தனர். ஆனால் காங்கிரஸ் இக்கோரிக்கையை நீண்ட காலமாக புறக்கணித்து வந்தது. காங்கிரஸ் கட்சியே விவசாயிகளின் கட்சிதான் என வாதிட்டது. ஆனால் 1935ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்டுப்பாட்டிற்குள் இல்லாமல் தனித்து இயங்கும் விவசாய சங்கம் துவக்கப்பட்டது. “உழுபவனுக்கே நிலம் சொந்தம், நிலவுடைமையை ஒழிப்போம்” என்பது போன்ற கோஷங்களுடன் அது உதயமானது.

தொழிலாளர்கள் இதற்கு முன்பு வரை காங்கிரஸ் கட்சியின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து செயல்பட்டனர். ஆனால் தற்போது காங்கிரஸ் கட்டுப்பாட்டில் இருந்து விலகி சுயமாகச் செயல்படும் தொழிற்சங்கமாக உருவெடுத்தது. 1920களில் துவங்கிய ஏஐடியுசி பதினாறு ஆண்டுகளுக்கு பிறகு தொழிலாளர்களின் நலன் காக்க ஏகாதிபத்தியம் மற்றும் தேசிய முதலாளிகளை எதிர்த்தும் இயக்கம் நடத்தும் அளவிற்கு வர்க்க அரசியல் தெளிவடைந்திருந்தனர். இதை பொறுக்க முடியாத முதலாளித்துவத்தின் தேசிய தலைமை தொழிற்சங்கத்தை உடைக்க காங்கிரஸ் கட்டுப்பாட்டில் செயல்படும் தொழிற்சங்கத்தை உருவாக்க முயற்சித்தார்கள். ஆனால் இந்த காலத்தில் பாம்பே, கான்பூர், டில்லி, கல்கத்தா, நாக்பூர் உள்ளிட்ட பகுதிகளில் தொழிற்சங்கம் வேகமாக வளர்ந்தது மட்டுமல்ல; அது வெகுமக்களையும் இணைத்துக் கொண்டு செயல்பட்டது.

இதேபோன்று ரவீந்திரநாத் தாகூர், சரோஜினி நாயுடு, முன்ஷி பிரேம்சந்த் போன்ற உயரிய எழுத்தாளர்கள் எல்லாம் இணைந்து இந்திய முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம், நாடு முழுவதும் செயல்பட்ட இளைஞர், மாணவர் குழுக்களையெல்லாம் ஒருங்கிணைத்து அனைத்திந்திய இளைஞர் மாணவர் அமைப்புகள் துவங்கின. இந்த அமைப்புகளை எல்லாம் ஒருங்கிணைத்து பூரண சுயராஜ்யம் பெறவேண்டும் – அதாவது   “இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சி அகற்றப்பட்டு அந்த இடத்தில் தொழிலாளி – விவசாயிகள் நலன் காக்கும் ஆட்சி அமைக்க வேண்டும்” என்ற பொருள்பட 1936இல் லக்னோவில் கூடிய கிசான் காங்கிரஸ் முடிவெடுத்தது. இத்தகைய போக்குகளால் காங்கிரஸ் கட்சி கலக்கமடைந்தது.  அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு தயாரானது.

வெள்ளையனே வெளியேறு இயக்கம் 

1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7, 8 தேதிகளில் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் வெள்ளையனே வெளியேறு இயக்க தீர்மானத்தை ஜவஹர்லால் நேரு முன்மொழிந்தார் என்பதுதான் மிக முக்கியமான செய்தி. அத்தீர்மானத்தில் கம்யூனிஸ்டுகள் கொடுத்த திருத்தத்திற்கும் நேருதான் பதிலளித்தார். காங்கிரஸ் கட்சியின் அனைத்து குழுக்களையும், பிரிவினரையும் இணைத்து தனது பின்னே அணிவகுக்க செய்து, தீர்மானத்தை கிட்டத்தட்ட கம்யூனிஸ்டுகளை தவிர ஒருமனதாக நிறைவேற்றிட காந்தியால் முடிந்தது. ஆகஸ்ட் 8 அன்று வெள்ளையனே வெளியேறு இயக்க தீர்மானத்தை நிறைவேற்றிய உடன் இரவோடு இரவாக பொழுது விடிவதற்குள் காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

 சரியான திட்டமிடல் இல்லாமல் துவக்கியதன் விளைவாக பிரிட்டிஷ் அரசாங்கம் இப்போராட்டத்தை கடுமையாக ஒடுக்க முடிந்தது. நாடுமுழுவதும் சுமார் 2,000 சத்தியாகிரகிகள் கைது செய்யப்பட்டனர் இருந்தாலும் இப்போராட்டம் குறிப்பிடத்தக்க எந்த விளைவையும் உருவாக்கவில்லை. இரண்டாம்  உலக யுத்தத்தின் போக்குகள் ஜெர்மன், இத்தாலி, ஜப்பான் ஆகிய பாசிசஅணிக்கு எதிராக திரும்பியதும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் போருக்கு பிறகு இந்தியாவை ஆட்சி செய்ய முடியாது. ஆனாலும், உடனடியாக இந்தியாவை ஒப்படைக்கும் மனநிலையில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இல்லை. ஆனால், காங்கிரசும், முஸ்லிம் லீக்கும் ஏதாவது ஒரு வகையில் நெருக்கடி கொடுத்து பேச்சுவார்த்தை மூலம் இந்திய தேசிய முதலாளிகள் அதிகாரத்தை கைப்பற்றிட முயற்சி செய்தனர்.எனினும் அவர்கள் இதில் வெற்றியடையவில்லை.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்

இரண்டாம் உலக யுத்தத்திற்கு பிறகு வெகுஜன எழுச்சி ஏற்பட்டது. நாடு முழுவதும் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம், வங்காளத்தில், விளைச்சலில் ஐந்தில் மூன்று பங்குக்கு உரிமை கோரிய குத்தகை விவசாயிகளின் தேபாகா போராட்டம்,  பம்பாய் ஆர்.ஐ.என் (பிரிட்டிஷ் கப்பற்படை மாலுமிகள்) போராட்டம், அவர்களுக்கு ஆதரவான பம்பாய் தொழிலாளர்களின் போராட்டம்,  விவசாயிகளின் உரிமைக்காகவும் தொழிலாளர்களின் உரிமைக்காகவும் 400க்கும் மேற்பட்ட தோழர்களை பலிகொடுத்து போராடிய கேரள புன்னப்புரா வயலார் எழுச்சி, வடக்கு மலபார், கையூர், திரிபுரா பழங்குடி இன எழுச்சி என இப்படி ஏராளமான வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டங்கள் கம்யூனிஸ்டுகளின் தலைமையில் இக்காலத்தில் நடந்தன.  

கூலி விவசாயிகள், ஏழை விவசாயிகளின் உரிமைக்காக உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற கோரிக்கைக்காக முன்வைத்து 4000க்கும் மேற்பட்ட விவசாயிகள் விவசாய தொழிலாள தோழர்கள் உயிரை ஈந்து நடத்திய தெலுங்கானா ஆயுத எழுச்சி, மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் வோர்லி பழங்குடி மக்களை  கந்துவட்டி கும்பலிடமிருந்தும், நிலப்பிரபுக்களிடம் இருந்தும் விடுவிக்க நடந்த வீரம் செறிந்த போராட்டம், கீழைத்தஞ்சையில் விவசாயிகள் போராட்டம் இவை அனைத்தையும் தலைமை தாங்கி நடத்தியது கம்யூனிஸ்டுகள்தான். ஏகாதிபத்திய எதிர்ப்பு போரில் முன்னணி பகுதியாக கம்யூனிஸ்டுகள் மாறினார்கள். சுதந்திரத்திற்காக ஏற்பட்ட வெகுஜன எழுச்சியை இந்திய தேசிய முதலாளி வர்க்கம் தங்களின் சுயநலனுக்காக பயன்படுத்தியது. தேசிய முதலாளித்துவ வர்க்கம் சமரச போக்கில் ஈடுபட்டு பிரிட்டிஷ் அரசிடமிருந்து சமாதான ரீதியில் அதிகாரத்தை மாற்றிக்கொள்ள முயன்றனர்.

1946ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் பிரிட்டிஷ் – இந்திய கப்பற்படை வீரர்கள் நடத்திய எழுச்சி. பிரிட்டிஷார் கடைபிடித்து வந்த இனப் பாகுபாட்டு கொள்கைக்கு எதிராக ஒரு மாதத்திற்கு முன்பாக இந்திய விமானப் படைவீரர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். இந்தியாவில் இருந்த பிரிட்டிஷ் படையைச் சேர்ந்த அனைத்து பிரிவினர் மத்தியிலும் இனப்பாகுபாட்டிற்கு எதிரான உணர்வு இதேபோன்று இருந்து வந்தது. ஆனால் கடற்படை வீர்ர்கள் நடத்திய கலகத்திற்கு ஈடான வடிவத்தை வேறு எந்த போராட்டமும் எட்டவில்லை.

கடற்படை வீரர்களின் எழுச்சி உலக யுத்தத்திற்கு பிந்தைய காலத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பு எழுச்சியில் மிகவும் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வாக கருதப்படுகிறது. பிரிட்டிஷ் இந்தியாவின் தரைப்படை,விமானப்படை மற்றும் கடற்படை வீரர்களோடு இணைந்து மாபெரும் எழுச்சியாக உருவாகிய இப்போராட்டத்திற்கு ஆரம்பத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் மற்றும் முஸ்லிம் லீக் ஆகிய இயக்கங்கள் ஆதரவு அளித்தன. ஆனால் பின்னர் காங்கிரசும், முஸ்லிம் லீக்கும் போராட்டத்திற்கு அளித்த ஆதரவை திரும்ப பெற்றன. ஆனால் கம்யூனிஸ்டுகள் கப்பற்படை எழுச்சிக்கு வழிகாட்டியது மட்டும் அல்லாமல் அவர்களுக்கு ஆதரவாக இந்தியாவின் முக்கிய நகரங்களில் இருந்த அனைத்து தொழிலாளர்களையும் இணைத்து காலவரையறையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இது நாடு முழுவதும் மிகப்பெரிய எழுச்சியை உருவாக்கின. இந்த போராட்டங்களுக்கு பிறகே, இனியும் இந்தியாவை ஆட்சிசெய்ய முடியாது என்ற நிலைக்கு பிரிட்டிஷார் வந்தனர்.

இந்திய விடுதலை என்பது நம் பாட புத்தகத்தில் படித்தது போல் கத்தியின்றி, இரத்தமின்றி பெறப்பட்டதல்ல. மகாத்மா காந்தியின் ஆளுமைமையை கண்டு அஞ்சி நடுங்கி பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் விடுதலையை கொடுத்துவிடவில்லை. காங்கிரஸ் கட்சி  நடத்திய ஒத்துழையாமை இயக்கம், சட்டமறுப்பு இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் என அவர்கள் நடத்திய இந்த மூன்று போராட்டத்தினால் மட்டுமே நாடு விடுதலை அடைந்துவிடவில்லை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய முஸ்லிம் லீக், கத்தார் கட்சி, மித்ரமேலா, அபிநவ் பாரத், அனுசீலன் சமிதி, யுகாந்தர் குழு, இந்துஸ்தான் குடியரசு ராணுவம், இந்துஸ்தான் குடியரசு சோசலிஸ்ட் ராணுவம், பாரத் மாதா சங்கம், ஏஐடியுசி, கிசான் சபா, அனைத்திந்திய மாணவர், இளைஞர் பெருமன்றம், அனைத்திந்திய முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் இப்படி நூற்றுக்கணக்கான அமைப்புகள் நடத்திய போராட்டங்களில் லட்சகணக்கான மக்கள் எழுச்சியாக பங்கெடுத்ததும் கூட அதற்குக் காரணம் என்பதையும் வரலாற்றிலிருந்து மூடி மறைத்துவிட முடியாது.  

லெனின் 150: லெனினும் இந்திய விடுதலை போராட்டமும்

குரல்: ஆனந்த்ராஜ்

பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா

தோழர் லெனின் பிறந்தது 1870 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி. அவர் பிறந்து 150 ஆண்டுகள் ஆகியும், அவர் 1924 ஜனவரி மாதம் மறைந்து 96 ஆண்டுகள் முடிந்தும், லெனின் அவர்களின் மகத்தான புரட்சிகர பங்களிப்பு நமது சமகால பிரச்சினைகளுக்கும் வெளிச்சம் காட்டும் வகையில் அமைந்துள்ளது.

மார்க்ஸ் – எங்கெல்ஸ் காலத்திற்குப் பின் மார்க்சீயத்தை முன்னெடுத்து சென்று சமகால பிரச்சினைகளை புரிந்துகொள்ளவும் புரட்சிகர இயக்கத்தை வலுப்படுத்தவும் ஆகப்பெரிய பங்களித்தவர் தோழர் லெனின். மார்க்ஸின் மூலதனம் நூல் முதலாளித்துவ உற்பத்தி அமைப்பு மூலதனத்தை மையப்படுத்தி ஒரு சில பெரும் மூலதனங்களின் ஆதிக்கத்திற்கு இட்டுச்செல்லும்; போட்டி முதலாளித்துவம் ஏகபோக முதலாளித்துவமாக மாறும் என்பதை தெளிவுபடுத்தியிருந்தது. காலனி ஆதிக்கம் பற்றியும், வளர்ந்த முதலாளித்துவ நாடுகளில் நடைபெற்றுவந்த வர்க்கப் போராட்டங்களின் மீது காலனி ஆதிக்க அமைப்பு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பற்றியும் மார்க்ஸ்-எங்கெல்ஸ் இருவரும் மிகச்சரியான சில கருத்துக்களை அங்கொன்றும் இங்கொன்றுமாக  முன்வைத்தனர் என்பது உண்மை.

எடுத்துக்காட்டாக, பிரிட்டிஷ் காலனி ஆதிக்கம் இந்தியாவை நாசப்படுத்தியது பற்றியும் அதன் வீழ்ச்சிக்கான சாத்தியப்பாடுகள் பற்றியும் அற்புதமான இரு கட்டுரைகளை 1853இல் நியூயார்க் டெய்லி ட்ரிப்யூன் பத்திரிக்கையில் மார்க்ஸ் எழுதியுள்ளார். எனினும், காலனி ஆதிக்கமும் அதன் முரண்பாடுகளும் உலக முதலாளித்துவத்தின் மீது விளைவிக்கக்கூடிய தாக்கங்கள் பற்றி மார்க்ஸும் எங்கெல்ஸும்  முழுமையாக ஆய்வு செய்யவில்லை. அவர்கள் வாழ்ந்த காலத்தில் அது மையப்பிரச்சினையாகவும் இல்லை. மேலை நாடுகளின் முதலாளித்துவ வளர்ச்சிக்கும் அதன் ஆரம்ப மூலதன திரட்டலுக்கும் காலனிகள் ஆற்றிய பங்கை மார்க்ஸ் மூலதனம் நூலில் விவரிக்கிறார். ஆனால் காலனி நாடுகளில் முதலாளித்துவ வளர்ச்சியும் நவீன தொழிலாளி வர்க்கத்தின் சமூகப் பங்கும் துவக்க நிலையில் இருந்த பின்புலத்தில் இப்பிரச்சினைகள் மார்க்ஸின் படைப்புகளில் மைய இடம் பெறவில்லை. இந்த இடைவெளியை இட்டுநிரப்புவதில் தோழர் லெனினின் பங்கு மிக முக்கியமானது.

காலனி ஆதிக்கம் உலக முதலாளித்துவத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது பற்றியும், இதற்கு இணையாக, காலனி நாடுகளில் உருவாகும் தேச விடுதலை இயக்கங்கள் முதலாளித்துவத்திற்கு எதிரான பாட்டாளி வர்க்க இயக்கத்தின் புரட்சிகர இயக்கத்திற்கு எவ்வளவு முக்கியமானவை என்பது பற்றியும் 1905இல் இருந்தே லெனின் தீவிரமாக சிந்தித்து வந்தார். இதனையொட்டி இந்தியாவிலும் சீனாவிலும், பொதுவாக ஆசிய கண்டத்திலும் ஏற்பட்டுவந்த அரசியல், சமூக, பொருளாதார மாற்றங்களை அறிந்துகொள்வதில் அவர் கவனம் செலுத்தி வந்தார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க நாடுகளில் முதலாளித்துவ வளர்ச்சி தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் இயக்கங்கள் மலர காரணமாக அமைந்தது. இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இருந்து பல காலனி நாடுகளில் முதலாளித்துவம் வேகம் அடைந்த சூழலில் காலனிகளிலும் தொழிலாளி வர்க்கத்தின் அரசியல்  பிரவேசம் துவங்கி வளர ஆரம்பித்தது. இந்தியாவில் தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் பிரவேசம் பற்றி 1908ஆம் ஆண்டில் ஒரு முக்கிய பதிவு செய்கிறார் லெனின். இதில் துவங்கி இந்த கட்டுரையில், லெனினுக்கும் இந்திய விடுதலை போருக்கும் உள்ள உறவின் ஒரு சில முக்கிய அம்சங்களை நாம் சுருக்கமாக பார்ப்போம்.

இந்தியா பற்றி லெனின்

 ப்ரோலெதாரி (Proletary) என்ற, லெனினை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த, பத்திரிக்கையில் 1908 ஜூலை 23 இதழில், “உலக அரசியலில் தீப்பற்றி பரவக்கூடிய பொருட்கள் என்ற தலைப்பில் லெனின் பின்வருமாறு எழுதுகிறார்:

இந்தியாவில் தங்களது எழுத்தாளர்களுக்காகவும் அரசியல் தலைவர்களுக்காகவும் சாதாரண மக்கள் போராடத் துவங்கியுள்ளனர்…….. இந்திய ஜனநாயகவாதியான திலக் மீது பிரிட்டிஷ் குள்ளநரிகள் விதித்துள்ள தண்டனையை எதிர்த்து வீதிகளில் ஆர்ப்பாட்டங்களும் பம்பாய் நகரில் வேலை நிறுத்தமும் நிகழ்ந்துள்ளன. இந்தியாவிலும் கூட உணர்வுபூர்வமான அரசியல் வெகு மக்கள் போராட்டத்தை நடத்தும் அளவிற்கு தொழிலாளி வர்க்கம் வளர்ந்துள்ளது. இதன் பொருள், ரஷ்ய பாணியில் இந்தியாவில் செயல்படும் பிரிட்டிஷ் சர்வாதிகார ஆட்சி அழிந்தே தீரும் என்பதாகும்.

ஐரோப்பிய நாடுகளில் பாட்டாளி வர்க்க இயக்கங்கள் சில பின்னடைவுகளை சந்தித்த நேரத்தில் 1913இல் ‘பின் தங்கிய ஐரோப்பாவும் முன்னேறிய ஆசியாவும்’ என்ற தலைப்பில் லெனின் எழுதிய கட்டுரையில் அவர் கூறுகிறார்:

ஆசியாவின் அனைத்துப் பகுதிகளிலும் ஜனநாயக இயக்கம் வளர்ந்து, விரிவடைந்து, வலுப்பெற்று  வருகிறது……….பல கோடி ஆசிய உழைப்பாளி மக்களுக்கு நம்பத் தகுந்த நேச சக்தியாக வளர்ந்த நாடுகளின் தொழிலாளி வர்க்கம் உள்ளது. இதன் வெற்றியை உலகில் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. இதன்மூலம் ஐரோப்பிய (உழைக்கும்) மக்களும் ஆசிய (உழைக்கும்) மக்களும் விடுதலை பெறுவார்கள்.

அக்டோபர் புரட்சியின் தாக்கம்

1917ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நிகழ்ந்த புரட்சியில் கொடுங்கோலன் ஜார் மன்னனின் ஆட்சி ரஷ்ய மக்களால் தூக்கி எறியப்பட்டது. ஆனால் இந்த மக்கள் எழுச்சியின் தலைமை சமரச போக்கு கொண்ட கட்சிகளின் கையில் இருந்தது. நிலைமை வேகமாக மாறியது. அடுத்த சில மாதங்களில் தொழிலாளிகளும், விவசாயிகளும், போர்முனையிலிருந்து போரை நிராகரித்து பெரும் எண்ணிக்கையில் திரும்பி வந்துகொண்டிருந்த ராணுவ வீரர்களும், வீதிகளில் இறங்கி தங்கள் கோரிக்கைகளுக்காக போராடினர். இவர்களின் போராட்டத்திற்கு முற்றிலும் பொருத்தமான முன்னணிப் படையாக லெனின் தலைமையில் செயல்பட்டுவந்த ரஷ்ய சமூக ஜனநாயக கட்சி – போல்ஷெவிக் கட்சி –  அமைந்தது. ரஷ்யா முழுவதும் தொழிலாளிகள், விவசாயிகள், ராணுவ வீரர்கள் இணைந்த ஜனநாயக அமைப்புகள் – இவை “சோவியத்” என்று அழைக்கப்பட்டன – மிக வேகமாக பரவின.  1917 அக்டோபர் மாதத்தில் போல்ஷெவிக் கட்சியின் தலைமையில் உழைக்கும் மக்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். ரஷ்ய சோசலிச குடியரசு பிறந்தது.   ரஷ்யாவில் நிகழ்ந்த இந்த மகத்தான புரட்சி உலகெங்கும் பெரும் தாக்கத்தை விளைவித்தது. அக்டோபர் புரட்சியைக்கண்டு ஏகாதிபத்திய முதலாளித்துவ வல்லரசுகள் பதறின.

ஏன் பதறின? உழைக்கும் மக்களே ஆட்சி நடத்த முடியும்; வலுவான பொருளாதார, அரசியல், சமூக வளர்ச்சியை, திட்டமிட்ட சோசலிச பொருளாதார வளர்ச்சியை சாதித்து உழைக்கும் மக்களின் வாழ்வை பன்மடங்கு மேம்படுத்த முடியும் என்று பின்னர் உலகிற்கு நிரூபித்தது அக்டோபர் புரட்சி. இப்புரட்சியின் வர்க்கத்தன்மையை, இது முதலாளித்துவம் என்ற அமைப்பிற்கே விடப்பட்ட பெரும் சவால்; இப்புரட்சி நிலைத்துவிட்டால் முதலாளித்துவமும் முதலாளி வர்க்கமும் வரலாற்று போக்கில் காலாவதி ஆகிவிடுவர் என்பதை ஏகாதிபத்திய முதலாளித்துவம் உணர்ந்தது. எனவேதான், ஏகாதிபத்திய வல்லரசுகள் அனைத்தும் கைகோர்த்துக் கொண்டு, அக்டோபர் புரட்சியை முளையிலேயே கிள்ளி எறிய முனைந்தன. 1918 மே மாதமே 14 ஏகாதிபத்திய முகாம் நாடுகளின் துருப்புக்கள் ரஷ்யாவிற்குள் நுழைந்து எதிர்ப்புரட்சி சக்திகளுக்கு ஆதரவாய் போரிட்டன. ஆனால் செம்படை மக்கள் ஆதரவுடன் இரண்டு ஆண்டுகள் மிகக்கடுமையாக போரிட்டு வெற்றி பெற்றது. சோசலிச ரஷ்யாவை எளிதில் அழித்துவிடலாம் என்ற ஏகாதிபத்தியக் கனவு தகர்ந்தது. இந்த நிகழ்வுகள், ஏகாதிபத்தியத்தின் நுகத்தடியில் அடிமைப்படுத்தப்பட்டிருந்த காலனி நாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. கொடுங்கோல் ஜார் மன்னனை வீழ்த்தி, ஏகாதிபத்திய நாடுகளின் படைகளையும் விரட்டி அடித்த சோசலிச ரஷ்யாவின் மீதும், போல்ஷெவிக் கட்சி மீதும், அதன் தலைவர் லெனின் மீதும் இந்தியா உள்ளிட்ட   காலனி நாடுகளில் மிகப்பெரிய மரியாதையும் நேச உணர்வும் ஏற்பட்டன. இதன் ஒரு விளைவாக அன்றைய காலனி இந்தியாவில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடமிருந்து நாட்டை விடுவிக்க வேண்டுமென்ற வேட்கையுடன், இதனை செய்து முடிக்க சோசலிச ரஷ்யா சென்று அந்நாட்டின் தலைவர்களின் ஆலோசனையும் உதவியும் பெறலாம் என்ற என்ணத்துடன் துடிப்புமிக்க பல இந்தியர்கள் ரஷ்யாவிற்கு பயணித்தனர். (இவர்களில் பலரும் தேச பக்தர்கள் தான்; கம்யுனிஸ்டுகள் அல்ல.) சிலர் ரஷ்யா சென்று திரும்பி வருகையில் ஆஃப்கனிஸ்தான் தலைநகரான காபுலில் தங்கி பிரிட்டிஷ் காலனி அரசுக்கு எதிராகவும் இந்திய விடுதலைக்காகவும் செயல்பட்டனர். 1920ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்  காபுலில் செயல்பட்டுவந்த  “இந்திய புரட்சியாளர்கள் அமைப்பு” தனது பேரவை கூட்டத்தில் இந்திய விடுதலைப்போருக்கு சோவியத் ரஷ்யா அளித்த ஆதரவுக்கும், காட்டிய நட்பு உணர்வுக்கும் நன்றி தெரிவித்து ஒரு தீர்மானம் நிறைவேற்றி லெனினுக்கு அனுப்பியது. இத்தீர்மானத்தை பெற்றுக்கொண்டு அளித்த பதிலில், லெனின் காலனி ஆதிக்கத்திற்கு எதிராக இந்திய மக்கள் நடத்தும் போராட்டத்திற்கு ரஷ்ய உழைப்பாளி மக்களின் முழு ஆதரவை தெரிவித்தார்.

லெனின் பாய்ச்சிய புத்தொளி

லெனின் புரட்சி பற்றித்தான் 24 மணி நேரமும் சிந்தித்துக்கொண்டிருந்தார் என்றால் அது மிகையாகாது. மார்க்ஸீய நிலைபாட்டில் நின்று, கள அனுபவங்களின் அடிப்படையில், சமகால அரசியல், சமூக, பண்பாட்டு, பொருளாதார தளங்களில் மார்க்ஸீய புரிதலை மேம்படுத்திக்கொண்டே இருந்தவர் லெனின். அந்த அடிப்படையில், அவர் வாழ்ந்த காலத்தில் ரஷ்யாவில் சோசலிச புரட்சி வெற்றிபெற தொழிலாளி-விவசாயி கூட்டு என்பது இன்றியமையாதது என்ற நிலைப்பாட்டிற்கு ஆழமான கள அனுபவமும் (குறிப்பாக, 1905 ரஷ்ய விவசாயிகளின் எழுச்சி) மார்க்சீய புரிதலும் லெனினை இட்டுச்சென்றது. இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஜனநாயக புரட்சியில் விவசாயிகளின் பங்கு பற்றி லெனின் முன்வைத்த புரிதல் மார்க்சீயத்தின் வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல் கல் எனலாம்.

மார்க்ஸ் எங்கெல்ஸ் காலத்தில் முதலாளித்துவம் வளர்ச்சி அடைந்த நாடுகளில் உள்ள வலுவான தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் சோசலிச புரட்சி நிகழும் என்ற கருத்து மேலோங்கியிருந்தது. 19ஆம் நூற்றாண்டில் 1871 பாரிஸ் நகரிலும் வேறு சில தருணங்களிலும் தொழிலாளிவர்க்கம் அரசியல் ரீதியாக கிளர்ந்து எழுந்தது என்றாலும், சோசலிச புரட்சி நடத்தி ஆட்சி அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள இயலவில்லை. பிரிட்டன், ஃப்ரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட வளர்ந்த ஐரோப்பிய நாடுகளில் சோசலிச சக்திகள் ஆட்சிக்கு வர இயலவில்லை. இப்பிரச்சினையை புரிந்துகொண்டு செயல்பட  1916 ஜூன் மாதத்தில் லெனின் எழுதி முடித்த, அவரது மிக முக்கியமான படைப்பான ஏகாதிபத்தியம் – முதலாளித்துவ வளர்ச்சியின் உச்ச (இறுதி) கட்டம்  என்றநூல் வழிகாட்டியது. இந்த நூல் ஏகாதிபத்தியம் உலகம் முழுவதையும் இணைத்துள்ள நிலையில், இந்த ஏகாதிபத்திய சங்கிலியின், இணைப்பின் பலவீனமான கண்ணியில் புரட்சி வெடிக்கக்கூடும் என்ற புதிய பார்வையை கொடுத்தது. இந்த புரிதலின் அடிப்படையில்தான் ‘ஏகாதிபத்தியம் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் நுழைவாயில்’ என்று  1917 அக்டோபர் புரட்சிக்கு ஒரு ஆண்டுக்கு முன்பே லெனினால் கூற முடிந்தது.     அன்றைய ஏகாதிபத்திய அமைப்பின் பலவீனமான கண்ணியாக இருந்த ரஷ்யாவில் நடந்த 1917 அக்டோபர் புரட்சிக்கு தலைமை தாங்கி லெனின் கூற்று சரியென்று போல்ஷெவிக் கட்சி நிரூபித்துக்காட்டியது.[i]

இவ்வாறு தொழிலாளி-விவசாயி கூட்டணியின் அவசியத்தையும், உலக ஏகாதிபத்திய அமைப்பின் பின் தங்கிய, பலவீனமான பகுதிகளில் சோசலிச புரட்சி வெடிக்கும் வாய்ப்பு உண்டு என்பதையும் முன்வைத்ததோடு இல்லாமல், இப்புரிதலை விரிவுபடுத்தி,  கடும் காலனி ஆதிக்க சுரண்டலுக்கு உள்ளாகியிருக்கும் நாடுகளிலும் நாட்டு விடுதலைக்கான எழுச்சிகள் நிகழும் காலமாக ஏகாதிபத்திய காலம் அமையும் என்பதையும் லெனின் தெளிவுபடுத்தினார். வளர்ந்த முதலாளித்துவ நாடுகளில் சுரண்டப்படும் தொழிலாளி வர்க்கமும், ஏகாதிபத்தியத்தால் சுரண்டப்படும் காலனி நாடுகளின் உழைப்பாளி மக்களும் நேச சக்திகள் என்ற முக்கியமான கருத்தை லெனின் வலுவாக முன்வைத்தார். இவ்விரு சக்திகளும் வலுப்பெற்று அவர்கள் போராட்டங்கள் வெற்றி அடைவது மானுடம் உலகளவில் சோசலிச புரட்சியை நோக்கி பயணிக்க மிக அவசியம் என்ற புரிதலை சர்வதேச பொது உடைமை இயக்கத்தில் லெனின் கொண்டு சென்றார்.

கம்யூனிஸ்ட் அகிலத்தின் இரண்டாம் மாநாடு  

19ஆம் நூற்றாண்டின் இறுதி 30 ஆண்டுகளில் ஐரோப்பிய நாடுகளில் முதலாளித்துவம் வேகமாக வளர்ந்ததுடன் தொழிலாளி வர்க்கமும் அதன் அரசியல் அமைப்புகளும் வலுப்பெற்று வந்தன. இதில் அன்றைய ஜெர்மன் சமூக ஜனநாயக கட்சி என்ற பெயரில் இயங்கிய கம்யூனிஸ்டுகள் அந்த நாட்டின் பாராளுமன்றத்தில் கணிசமான இடங்களைப் பெறும் அளவிற்கு அக்கட்சி செல்வாக்கு பெற்றிருந்தது. ஆனால் ஒருகாலத்தில் ஐரோப்பாவிற்கே வழிகாட்டியாக இருந்த அக்கட்சியில் திருத்தல்வாதம் தலைதூக்கியது. இதன் விளைவாக, 1914ஆம் ஆண்டு பல நாடுகளின் தொழிலாளி வர்க்கங்களை ஒன்றிணைத்து, ஏகாதிபத்திய நாடுகளுக்கிடையே மூண்ட லாபவெறி காக்கும் போரை எதிர்த்து உழைப்பாளி மக்கள் காவு கொடுக்கப்படுவதை தடுப்பது என்ற தனது சர்வதேசக் கட்மையை நிறைவேற்றுவதற்குப் பதில் இக்கட்சி ஜெர்மானிய பேரரசின் யுத்தத்தை ஆதரிக்கும் நிலை எடுத்தது. இந்த பின்னடைவின் அடிப்படை காரணங்களை லெனின் தனது ஏகாதிபத்தியம் நூலிலும், ‘ஏகாதிபத்தியமும் சோசலிச(இயக்க)த்தின் பிளவும்என்ற கட்டுரையிலும் விரிவாக விளக்கியுள்ளார். சோசலிசம் இவ்வாறு எதிர்கொண்ட நெருக்கடியான பன்னாட்டு சூழலில், அக்டோபர் புரட்சிக்கெதிராக ஏகாதிபத்திய வல்லரசுகள் படையெடுத்த பின்னணியில்தான் 1919ஆம் ஆண்டு மார்ச் 2 முதல் 6 வரை ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்முயற்சியில் மாஸ்கோவில் நடந்த சர்வதேச மாநாட்டில் பாட்டாளி வர்க்க ஜனநாயகத்தை நோக்கி உலகம் பயணித்திட உதவும் இலக்குடன்  பல்வேறு நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகளையும் சக்திகளையும் உறுப்பினர்களாக கொண்ட, பரஸ்பர உதவிக்கான அமைப்பாக “கம்யூனிஸ்ட் அகிலம்” என்ற புதிய அமைப்பு பேரியக்கமாக பிறந்தது. 

கம்யூனிஸ்ட் அகிலத்தின் இரண்டாம் மாநாடு 1920ஆம் ஆண்டு ஜூலை 19 முதல் ஆகஸ்ட் 7 வரை நடைபெற்றது.துவக்க நிகழ்ச்சிகள் மட்டும் பெட்ரோகிராட் நகரில் நடந்தன. பின்னர் மாநாடு மாஸ்கோவில் நடந்தது. இந்த மாநாட்டில் இந்தியா உள்ளிட்ட பல காலனி நாடுகளில் விடுதலை போராட்டங்களில் கம்யூனிஸ்டுகளின் அணுகுமுறை எவ்வாறு இருக்கவேண்டும் என்பது பற்றிய வரலாற்று சிறப்பு மிக்க விவாதம் இடம் பெற்றது. இதில் லெனின் அவர்களின் பங்கு மிக முக்கியமானது.

தேச விடுதலை போராட்டங்களும் கம்யூனிஸ்ட் அகிலமும்

இந்த மாநாட்டின் ஒரு முக்கிய விவாதப்பொருள் ‘காலனி நாடுகளின் பிரச்சினை’ என்பதாகும். இப்பிரச்சினை குறித்து, அச்சமயம் நிலவிய உலக சூழலை கணக்கில் கொண்டு, லெனின் சமர்ப்பித்த முன்மொழிவுகள் கீழ்க்கண்ட அம்சங்களைக் கொண்டிருந்தன:

·          உலகளவில் ஒடுக்கும் தேசங்கள், ஒடுக்கப்படும் தேசங்கள் என்று நாடுகள் வேறுபடுத்தி பார்க்கப்பட வேண்டும். கம்யூனிஸ்ட் அகிலம் ஒடுக்கப்படும் தேசங்களின் மக்கள் பக்கம் நிற்கும்.

·          ஏகாதிபத்திய நாடுகள் நடத்திய முதல் உலகப் போருக்குப்பின் உலக அரசியல் அமைப்பிலும் பல்வேறு தேச மக்களுக்கு இடையிலுமான பரஸ்பர உறவுகள், சோவியத் ரஷ்யா, அதன் தலைமையில் உள்ள பல சோவியத் குடியரசுகள் மற்றும் சோவியத் வடிவிலான ஜனநாயக இயக்கங்கள் ஆகியவற்றின் மீது விரல்விட்டு என்ணக்கூடிய ஏகாதிபத்திய நாடுகள் நடத்தி வரும்  யுத்தத்தினால் நிர்ணயிக்கப்படுகிறது.

·         பின்தங்கிய காலனி நாடுகளில் எந்த தேச விடுதலை இயக்கமும் முதலாளித்துவ ஜனநாயக தன்மை கொண்டதாகத்தான் இருக்க முடியும். காரணம், இங்கு மக்களில் பெரும்பகுதியினர் தம்வயம் உற்பத்திக்கருவிகளை வைத்துக்கொண்டு, சிறு/குறு/பெரு சுய உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகள். இவர்கள் பிரதிநிதித்துவப்படுத்துவது முதலாளித்துவ உற்பத்தி உறவுகளே. எனினும், பின்தங்கிய, காலனி நாடுகளில் நடந்துவரும் தேச விடுதலைக்கான போராட்டங்களை “தேசீய-புரட்சிகர” இயக்கங்கள் என்று கம்யூனிஸ்ட் அகிலம் வரையறுக்கிறது. காரணம், இந்த இயக்கங்களின் தலைமையும் தன்மையும் எல்லா இடங்களிலும், எல்லா கட்டங்களிலும் முதலாளித்துவ-ஜனநாயகத்தன்மையுடன் தான் இருக்கவேண்டும் என்பது அவசியம் அல்ல.

·         கம்யூனிஸ்டுகள் என்ற முறையில் நாம் (அகிலம்) காலனிகளில் முதலாளி வர்க்கத்தினர் தலைமையிலான தேச விடுதலை இயக்கங்களுக்கு கீழ்க்காணும் நிபந்தனைகளுடன் ஆதரவு அளிப்போம்:  அவை உண்மையில் புரட்சிகரமாக இருக்கவேண்டும். மேலும் இந்த இயக்கத்தவர், நாம் சுரண்டப்படும் மக்களுக்கும் விவசாயிகளுக்கும் புரட்சிகர உணர்வுபெறும் வகையிலும் கல்வியூட்டி, அமைப்புரீதியாக திரட்டுவதற்கு தடையாக இருக்கக்கூடாது.

·          வளர்ந்த நாடுகளின் தொழிலாளி வர்க்கம் பின் தங்கிய காலனி நாடுகளின் உழைப்பாளி மக்களுக்கு உதவ வேண்டும்.

·          சோவியத் குடியரசுகளில் வெற்றி பெற்றுள்ள தொழிலாளி வர்க்கம் பின்தங்கிய நாடுகளுக்கு ஆதரவு அளிக்கவேண்டும். இது சாத்தியமாகும் பொழுது, பின்தங்கிய நாடுகள் முன்னேறுவது சாத்தியமாகும்.

அகிலத்தின் லெனினிய நிலைபாடும் இந்தியாவும்

1920இல் நிலவிய இந்திய சூழலுக்கு இவை பொருத்தமாகவே இருந்தன. இந்தியாவில் 1880களிலேயே முதலாளிவர்க்கம் அரசியல் களத்திற்கு வந்துவிட்டது. அதன் அரசியல் கருவியாகத்தான் இந்திய தேசீய காங்கிரஸ் உருவானது. அங்கொன்றும் இங்கொன்றுமாக 1860களிலிருந்தே தொழிலாளிகளின் போராட்டங்கள் நிகழ்ந்திருந்தபோதிலும், தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் பிரவேசம் 1920களில் தான் குறிப்பிடத்தக்க அளவிற்கு ஏற்படத் துவங்கியது. ஆகவே, இந்திய விடுதலைப் போராட்டத்தின் தலைமை முதலாளி வர்க்கத்திடம் தான் இருந்தது. அதேசமயம் காந்தி அவர்கள் விடுதலை இயக்கத்தில் முக்கிய பங்கு ஆற்றத்துவங்கிய பிறகுதான் அது விரிவான மக்கள் இயக்கமாக மாறத்துவங்கியது. இதில் கோடிக்கணக்கான விவசாயிகளின் பங்கேற்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. அன்றைய நிலமையில் துவக்க நிலையில் இருந்த கம்யூனிஸ்ட் இயக்கம் அடுத்துவந்த பல பத்தாண்டுகளில் தேச விடுதலை போராட்டத்தில் இருந்து தனிமைப்பட்டு விடாமல் இருக்க கம்யூனிஸ்ட் அகிலத்தின் இரண்டாம் மாநாட்டு வழிகாட்டுதல் பெரிதும் உதவியது. அகிலத்தின் இரண்டாம் மாநாட்டின் காலனி எதிர்ப்பு இயக்கங்கள் தொடர்பான நிலைபாட்டை உருவாக்கியதில், ஆழ்ந்த மார்க்ஸீய தத்துவார்த்த ஞானத்துடன் இப்பிரச்சினையைப்பற்றி லெனின் முன்வைத்த கருத்துக்கள் ஆகப்பெரிய பங்கு வகித்தன.


[i] 1916ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் லெனின் எழுதிய ‘ஏகாதிபத்தியமும் சோசலிசத்தில் பிளவும் என்ற முக்கியமான கட்டுரை. மேலை நாடுகளில் தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிகர வளர்ச்சியை தடுப்பதில் காலனிகளை ஏகாதிபத்திய நாடுகள் சுரண்டி அபரிமிதமான உபரிகளை பெறமுடிந்த நிலை எத்தகைய பங்கு ஆற்றியது என்று இக்கட்டுரையில் விளக்குகிறார். (https://www.marxists.org/archive/lenin/works/1916/oct/x01.htm)

பெரியார் – சுயமரியாதை இயக்கமும் சோசலிசமும்

(புது தில்லியில் கடந்த 2018, ஜனவரி 3-4 தேதிகளில், அம்பேத்கர் பல்கலைகழகமும், அசோகா பல்கலைகழகமும் இணைந்து நடத்திய ‘திராவிடவியல், தேசியம், கூட்டாட்சித்தத்துவம்’ என்ற தலைப்பிலான ஆய்வரங்கத்தில் முன்வைக்கப்பட்ட கட்டுரை. )

ஆர்.விஜயசங்கர் (ஆசிரியர், பிரண்ட்லைன்)

தமிழில்: ரமணி

தென்னிந்திய லிபரல் கூட்டமைப்பும் (South Indian Liberal Federation) 1916ல் வெளியிடப்பட்ட பிராமணரல்லாதோர் கொள்கை அறிக்கையும் சென்னை மாகாணத்தில் ஒரு புதிய அரசியல் போக்கு மலர்ந்ததையும்,  அது சென்னை மாகாணத்தின் அரசியல் தளத்தில் செல்வாக்கு செலுத்தவுள்ளது என்பதையும், அது மட்டுமல்லாமல் பிற்காலத்தில் ஒரு நூற்றாண்டிற்கும் மேலாக செல்வாக்கை செலுத்திக் கொண்டிருக்கும் என்பதையும் வெளிப்படுத்துவதாக அமைந்தன. அவர்களின் அரசியல் கொள்கைகளைத் தாங்கி வந்த ‘நீதி’ என்ற பத்திரிக்கையின் பெயரைக் கொண்டு, அந்தக் கூட்டமைப்பானது  ‘நீதிக்கட்சி’ என்றே அறியப்பட்டது. அந்த (பிராமணரல்லாதோர் கொள்கை) அறிக்கை அன்றைக்கு நிலவிவந்த சிக்கலை  கீழ்வருமாறு முன்வைத்தது:

(மெட்ராஸ்) மாகாணத்தின் மக்கள் தொகையான 4 கோடி 15 லட்சம் பேரில், 4 கோடிப் பேர் பிராமணர் அல்லாதவர்கள். வரி செலுத்துவோரில் கணிசமானவர்கள் அதே பிரிவைச் சார்ந்தவர்கள். அவர்களில் ஜமீந்தார்கள், நிலப்பிரபுக்கள் மற்றும் விவசாயிகளும் அடங்குவர்.  அன்றைய மெட்ராசில் நிலவிவந்த நிலைமை என்னவென்றால் பெரும்பான்மையாக இருந்த அவர்கள் அதற்குரிய அந்தஸ்தோடு அரசியலில் பங்காற்ற முடியவில்லை.  தேசத்தின் பொது அரசியலில் தங்களது செல்வாக்கை குறைந்த அளவே  செலுத்த முடிந்தது; அல்லது முற்றாக செலுத்த இயலவில்லை. திட்டமிட்டு முயற்சியில் ஈடுபடக்கூடிய இன்றைய காலகட்டத்தில் அவர்களின் பொதுநலனை பாதுகாக்க, வளர்த்தெடுக்க அவர்களுக்கென ஒரு அமைப்பு இல்லை. அரசியலில் எதிராளியை, மற்றும் எதிரணி நிபுணர்களை எதிர்கொள்ள அதே அளவு தகுதியுள்ள அவர்களது தரப்பு உண்மைகளை எடுத்துரைக்க தகுதியான நபர்கள் அவர்கள் சார்பில் யாருமில்லை; பத்திரிகையும் இல்லை.  ஆகையால் அவர்களது அரசியல் செல்வாக்கு (15 லட்சமே உள்ள பிராமணர்களோடு ஒப்பிடும் போது) கடுமையான பாதிப்பிற்கு ஆளாகியது.

அந்த அறிக்கை எவ்வாறு பிராமணரல்லாத சமூகம் பாதிப்பிற்கு ஆளானது என்பதை எடுத்துரைக்கிறது.  மெட்ராஸ் நிர்வாகக் கவுன்சில் உறுப்பினர் சர். அலெக்சாண்டர் கார்டியு அவர்களின் அறிக்கையைச் சுட்டிக்காட்டி 1892க்கும்  1904க்கும் இடைப்பட்ட காலத்தில் நடைபெற்ற மாகாண ஆட்சிப்பணித் தேர்வுகளில் (Madras Provincial Civil Services) வெற்றி பெற்ற பதினாறு பேரில் பதினைந்து பேர் பிராமணர்கள் என்பதை தெரிவித்துள்ளது.  கார்டியு அவர்கள் கூற்றுப்படி உதவிப் பொறியாளர்கள், துணை ஆட்சியர்கள், கீழமை நீதிமன்ற நீதிபதிகள் ஆகிய பதவிகளை பிராமணர்கள் ஏகபோகமாக அனுபவித்து வந்தது தெட்டத் தெளிவாக தெரிய வருகிறது.  மெட்ராஸ் பல்கலைக் கழகம், மெட்ராஸ் சட்டப் பேரவை போன்ற அமைப்புகளிலும் இதே நிலைமையே தொடர்ந்தது. அரசியல் தளத்தில் அந்த கொள்கை அறிக்கை சுட்டிக் காட்டியிருப்பது என்னவென்றால் மெட்ராஸ் மாகாணத்திலிருந்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு தேர்வான பதினைந்து பேரும் பிராமணர்களே.  இது எவ்வாறு அனைத்துத் தரப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாகும் என்ற கேள்வியை அறிக்கை எழுப்பியுள்ளது.

அந்த கொள்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள், உயர்மட்ட அதிகார மையங்களில் இருந்து பெறப்பட்ட சான்றாதாரங்களைக் கொண்டிருந்தன. மற்றவர்களைக் காட்டிலும் பிராமணர்களுக்கு  காலங்காலமாக  கிட்டிய கல்விப் பின்புலம், அதன் தொடர்ச்சியாக நவீன கல்வி, குறிப்பாக பத்தொன்பதாம் நூற்றாண்டு முற்பகுதியில் ஆங்கிலக் கல்வி கற்கும் வாய்ப்பு கிட்டியது. இந்த உண்மையை பிரிட்டிஷ் அரசு ஆவணப்படுத்தியுள்ளது. இதன் காரணமாக பிராமணர்கள்  உயர்கல்வியில் மேலாதிக்கம் பெற்றவர்களாக இருந்தனர்.  1881-82ல் இருந்த பொதுக் கல்வி இயக்ககத்தின் அறிக்கை  (Director of Public Instruction) குறிப்பிடுவது என்னவென்றால், நுண்கலை மற்றும் இளங்கலை இரண்டு பிரிவுக்கும் சேர்த்து நடத்தப்பட்ட தேர்வுகளில் 125 பிராமணர்களுக்கு ஒருவர் வீதமும் 5,888 இதர இந்துக்களுக்கு ஒருவர் வீதம் இருந்ததாக தெரிவிக்கிறது.  சிவில் பொறியியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, வேளாண்மை பள்ளிக்கூடங்கள் பெரும் எண்ணிக்கையில் பிராமண சமூகத்தைச் சார்ந்த மாணவர்களை ஈர்ப்பதும் அதே சமயம் இளங்கலை அறிவியல் படிப்பில் அதிகமாகும் ஏற்றத்தாழ்வு அதே அளவில் இருந்து வருவதையும் சுட்டிக் காட்டுகிறது.

ஆங்கிலவழி உயர்கல்வியில் பிராமணர்களின் ஏகபோகம், 1857ல் நடந்த முதல் சுதந்திரப் போருக்குப் (சிப்பாய் கலகம்) பின்னர் விரிவடைந்த, மத்தியத்துவப்படுத்தப்பட்ட, மற்றும் இந்திய மயமாக்கப்பட்ட அதிகார வர்க்கப் பணியிடங்களிலும் பிராமணர்கள் ஏகபோகமாக அனுபவிப்பதற்கு வழிவகுத்தது.   நிபுணத்துவ துறைகளான (liberal professions) சட்டம், மருத்துவம், மற்றும் ஆசிரியப் பணி ஆகியவற்றில் அவர்களின் மேலாதிக்கம் சரியாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிராமணர்கள், பிராமணர் அல்லாதவர்கள் என இரு பிரிவாகப் பிரித்து ஒரு சட்டகத்துக்குள் அடக்குவதன் பல்வேறு அடிப்படைகளில், பிரிட்டிஷ் அரசு இந்தியாவை காணும் பார்வையும் ஒன்றாகும்.   தினமும் அரசு நிர்வாகத்தில், கிட்டத்தட்ட வாழ்வின் அனைத்து தளங்களிலும் எதிர்கொள்ளவேண்டிய மிகவும் சிக்கலான சாதி-மத பிரமைகளை உள்வாங்கி  முடிவுகளை மேற்கொள்ள வேண்டியது ஆட்சியாளர்களின் நடைமுறைத்தேவையாக எழுகிறது.  துப்புரவான ஆங்கிலேய அல்லது காலனி ஆதிக்க வகைப்படுத்துதலை சமூகத்தின் மீது திணிப்பதன் வழியாக தனது கட்டுப்பாட்டைக் கொண்டுவர பிரிட்டிஷ் ஆட்சி விரும்பியது.  உள்ளூர் சமூகமோ அவர்களின் வகைப்படுத்துதலில் காணப்பட்ட துல்லியத்தன்மையோ, துப்புரவினையோ கொண்டிருக்கவில்லை.  பிரிட்டிஷ் ஆட்சியின் சொற்பயன்பாடுகள் பெரும் எண்ணிக்கையிலான உள்பிரிவுகளை ஒன்றாக்கி ஒரே வகைப்பாட்டில் அடக்கியது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில்  சென்னை மாகாணத்தில் இருந்த பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை குறித்து கல்வித் துறையின் அறிக்கையை “இர்சிக்” சுட்டிக் காட்டுகிறார்.  1870-71 வாக்கில் கல்வித்துறையானது பள்ளி மாணவர்களை  பிராமணர்கள், இதர இந்துக்கள், கிழக்கிந்தியர்கள், ஐரோப்பியர்கள், முகமதியர்கள், தேசிய கிறிஸ்துவர்கள் மற்றும் பார்சிகள் என பிரித்தது.  1880-ன் முற்பகுதியில் இந்துக்களின் வகைப்பாடு  பிராமணர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் மற்றும் இதர இந்துக்கள் என மாற்றியமைக்கப்பட்டது. அந்த நூற்றாண்டின் இறுதிவாக்கில் பிராமணர்கள், பிராமணர் அல்லாதவர்கள் என வகைப்படுத்தப்பட்டது.

சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் தலைவர்களாக,  பிராமணர் அல்லாத நான்கு கோடி பேர்களின் பிரதிநிதியாக, பிராமணர்கள் இருப்பதை இந்த கொள்கை அறிக்கை கேள்விக்குள்ளாக்கியது. இதே விதமாக பிரதிநிதித்துவ உரிமை குறித்த கேள்வியை வர்க்க நோக்கில் முன்வைத்தோமென்றால் அது நீதிக் கட்சியின் தலைமைக்கு சரியாகவே பொருந்தியது. தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் ஏ.என். சட்டநாதன் (1969) குறிப்பிடுகிறார், நெருக்கமாக பிணைக்கப்பட்ட சமூகத்தில் பெரும்பான்மை மக்களை பிரதிநிதித்துவப்படுத்தாத, அவர்களை அறிந்திராத, அவர்கள் மொழியில் உரையாடாத  பணக்காரர்களில் உயர் வகுப்பினருடையதாகவே அந்த அமைப்பு இருந்தது. சமூகத்தை மாற்றியமைக்கும் நோக்கமோ அல்லது பெரும்பான்மை மக்கள் பயனுற அவர்களின் வாழ்நிலையை உயர்த்தும் நோக்கமோ அவர்களுக்கு இல்லை. … உள்ளூர் சுயாட்சி அமைப்புகளின் ஏற்பாடாக அமைந்த மாவட்ட அவைகளிலும், பொதுச் சேவைகளிலும் பிராமணர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும், டாக்டர் அன்னி பெசண்ட் அம்மையாரால் துவக்கப்பட்டு சென்னையில் பிரபலமடைந்த “ஹோம் ரூல்” இயக்கத்திலும் பிராமணர்கள் செல்வாக்கு பெருகிவருவதைக் குறித்துமே அவர்கள் கவலைப்பட்டனர்.

நீதிக் கட்சி கட்டமைக்க விரும்பிய ‘பிராமணர் அல்லாதார் அடையாளத்தின்’ உள் முரண்பாடுகள், நீதிக்கட்சி தொடங்குவதற்கு பத்தாண்டுக்கு முன்னதாகவே தெரியத் தொடங்கியிருந்தன. தமிழ் நாட்டின் சமூக-பொருளாதார வரலாற்றைப் பார்த்தோமென்றால் பிராமணரல்லாதார் இயக்கம் தோன்றுவதற்கு முந்தைய நூற்றாண்டிலேயே பள்ளர், பறையர், பள்ளியர்கள் (pallis) ஆகிய கொத்தடிமைகளை வைத்திருப்பதில் பிராமணரல்லாத நிலப்பிரபுக்கள் பிராமண நிலப்பிரபுக்களுக்கு சற்றும் சளைத்தவர்களாக இல்லை என்பது தெளிவாகத் தெரிய வருகிறது..  பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தீவிர அடிமை முறை இருந்தது குறித்து தர்மா குமார் தெரிவித்திருப்பது. “ வெள்ளாள (பிராமணரல்லாதார்) விவசாயிகள் அடிமைகளை வைத்திருந்தனர்.  அவர்களை விற்கவும், அடகு வைக்கவும், மற்றும் வாடகைக்கு விடவும் செய்தனர் (அதில் கிடைக்கும் வருமானம் அடிமையின் உரிமையாளருக்கே சொந்தமாகும் ).

மேலும் பள்ளியர்களை வகைப்படுத்துவதில் உள்ள சிக்கல்களைப் பற்றி அவர் குறிப்பிடும்போது “1819-ல் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் இங்கு அடிமைகளாக இருப்பது இரு சாதியைச் சார்ந்தவர்கள் மட்டுமே, ஒன்று பள்ளர், மற்றொன்று பறையர் ஆகும்.  அதே சமயம் பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸ் (சென்னை மாகாண ஆட்சியர்) அவர்கள் தெரிவித்திருப்பது “வேளாண் பணிகளில் ‘அடிமைகளாக’ உள்ள சாதியினர் பள்ளி, பள்ளன், பறையன் ஆகும்.  பள்ளி சாதியினர் பிராமணர்களுக்கு அடிமைகளாக இருந்தவர்கள்; மற்ற இரு சாதியினரும் பிராமணர் அல்லாதவர்களுக்கு அடிமைகளாக இருந்தவர்கள்.  அதே சமயம் 1881-ல் வெளியிடப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கை தெரிவிப்பது என்னவென்றால் பள்ளி சாதியினர் பண்ணை அடிமைகளாக இருந்தவர்கள்;  வெள்ளாள சமூகத்தினருக்கு அடிமைகளாக இருந்தனர் என்கிறது.  விவசாயத்தில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக ஒரு சமயத்தில் தமிழகத்தில் வறண்ட பகுதிகளிலிருந்து பெரும் பகுதி மக்கள் இடம் பெயர்ந்து மற்ற பகுதிகளுக்குச் சென்றனர்.  அது வறட்சிக்கு இட்டுச் சென்றது.  பேரலை போல் தாக்கி பல பகுதிகளை பொது மயானமாக மாற்றியது. சாதி அடுக்குமுறை சமூக-பொருளாதார சீர்குலைவை ஏற்படுத்தியது.  இந்த கசப்பான உண்மைகள் பிராமணரல்லாதோர் அறிக்கையில் இடம் பெறவில்லை.

நீதிக்கட்சியின் இந்தக் குறுகிய கண்ணோட்டத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர் வேறு யாருமல்ல, ஈ.வெ.ரா. பெரியார் தான்.  பிராமணல்லாதார் அடையாளத்திற்கு ஒரு புதுப் பரிமாணம் உருவாக்கியதில் வெற்றி கண்டவர் அவரே. 1926-ஆம் ஆண்டு மதுரையில் ஒரு பிராமணரல்லாதார் மாநாட்டில் அவர் பேசியது வருமாறு: “முதலாவதாக நமது இயக்கம் என்றால் என்னவென்று சாதாரண மக்களுக்குப் புரிய வைத்திருக்கிறோமா? நாம் சாதாரண மக்களின் அனுதாபத்தை பெற ஏதாவது செய்திருக்கிறோமா? நமக்காக அரசு பதவிகளைப் பெற்றிருக்கிறோம். விருதுகள் பெற்றிருக்கிறோம். ஆனால் இவற்றின் மூலம் சாதாரண மக்கள் பயனடைந்திருக்கிறார்களா?  நமக்குக் கிடைத்த அதிகாரத்தையும், பதவியையும் பயன்படுத்தி பிராமணர்கள் முன்னேறுவதைத் தடுத்திருக்கிறோம். அதில் சந்தேகத்திற்கு இடமில்லை.  ஆனால் மக்களின் துயரங்களிலிருந்து அவர்களை விடுவித்திருக்கிறோமா?  மக்களை அடிமைகளாக, ஏழை கூலித் தொழிலாளியாக, பாட்டாளியாக வைத்திருக்கும் மூட நம்பிக்கையிலிருந்து அவர்கள் விடுபட ஏதாவது செய்திருக்கிறோமா?  நமக்கு பதவிகளும், விருதுகளும் தேவையில்லை என்று சொல்லவில்லை.  அவற்றை பெறுவது மட்டும் நமது நோக்கமல்ல.   நான் பிராமணரல்லாதோர் எனச் சொல்லும் போது 90 சதவீதமாக உள்ள ஏழைகள், ஏதுமற்றவர்களைத்தான் சொல்கிறேன்.  ராஜாக்கள், மற்றும் ஜமீந்தார்களைச் சொல்லவில்லை.  இங்கே கூடியுள்ள உங்களைப் பார்த்துக் கேட்கிறேன்.  நாம் உண்மையிலேயே பிராமணரல்லாதோர் நலனுக்காக பாடுபட உறுதியோடு இருக்கிறோமா? அல்லது ஒரு சிறிய பகுதியினரின் நலனுக்காக இருக்கிறோமா?  இந்தப் பிரச்னையில் புத்திசாலித்தனத்துடனும், பொறுப்புணர்வுடனும் செயல்பட, உறுதியேற்க எல்லாத் தலைவர்களுக்கும் நான் அழைப்பு விடுக்கிறேன்.”

வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தின் தேவை குறித்தும் அதை காங்கிரஸ் தலைமை ஏற்கும்படி செய்திட தான் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியுற்ற பின்னணியில் 1927-ல் பெரியார் காங்கிரசிலிருந்து வெளியேறினார்.  இதே காரணங்களுக்காக உடனே நேரிடையாக நீதிக் கட்சியில் போய்ச் சேரவில்லை.  நீதிக்கட்சியை விட்டு விலகி இருக்காவிட்டாலும். 1925ல் ராமநாதன் அவர்களால் துவக்கப்பட்ட சுயமரியாதை இயக்கத்தை தனது சர்வதேசப் பார்வைக்கு உகந்ததாக, மறுமலர்ச்சிக்கான புதிய சிந்தனைகளுக்கு அகலக் கதவு திறந்து வைத்திருக்கும் அமைப்பாக, தொண்ணூரு வயது வரையிலும் எந்த நோக்கத்திற்காக தனது அரசியல் வாழ்க்கையை அர்ப்பணித்து இருந்தாரோ, அதற்கு ஏற்ப சுயமரியாதை இயக்கம் இருந்ததால், அவ்வமைப்பை தனது நோக்கத்திற்கு உகந்ததாகக் கருதினார்.  சுயமரியாதை இயக்கம் பிராமணரல்லாதார் அடையாளத்திற்கு ஒரு தனித்துவமான, மாறுபட்ட பரிமாணத்தைத் தந்தது. மேலும் அந்த இயக்கத்தை ஜனநாயகப்படுத்தியது.  சமூக அடித்தளத்தை விரிவுபடுத்தவும் செய்தது.

அவர் பார்வையில் பிராமணரல்லாதார் என்பவர் கலாச்சார அடிப்படையில் பிராமணர்களால் அடிமைப்படுத்தப்பட்டவர்கள்; பொருளாதார, அறிவுசார் வளங்கள் பெற தடுக்கப்பட்டவர்கள் என்பதேயாகும்.  சுயமரியாதையுடன், கண்ணியத்துடன் கூடிய ஒரு மனிதனாக மீண்டெழ இவையே உதவும்.  பிராமணீயம் பிராமணரல்லாதார் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள் ஆகியவற்றின் உதவியுடன் தத்துவார்த்த அடிப்படையில் சாதி அமைப்பை ஆதரிக்கவும், நிலை நிறுத்தவும் உதவுகிறது. பிராமணரல்லாதார் இயக்கத்தில் உயர் பிரிவினரின் கட்டுப்பாட்டு எல்லைகளை சுயமரியாதை இயக்கத்தினர் தகர்த்தனர்.  ஈ.சா.விஸ்வநாதன் கூற்றுப்படி, சுயமரியாதை அமைப்பினர் தாழ்த்தப்பட்டவர்கள், இதர பிற்படுத்தப்பட்டவர்களான நாடார்கள், அகமுடையார்கள், இசை வேளாளர்கள், செங்குந்தர்கள், வன்னியகுல சத்திரியர்கள் ஆகியோரை நோக்கிச் சென்றனர்.  இந்தச் சாதியினரில் பெரும்பான்மையானவர்கள் விவசாயக் கூலிகள், பயிற்சி இல்லா தொழிலாளிகள், தமிழக மாவட்டங்கள் அனைத்திலும் சமமாக பரவி இருப்பவர்கள். 

ஈ.சா.விஸ்வநாதன் ‘ஈ.வெ.ரா. பெரியாரின் அரசியல் வாழ்வு’ என்ற தனது நூலில் குறிப்பிடும்போது,  சுயமரியாதை இயக்கத்தினர் தங்களது சாதிப் பெயரினை விட்டொழித்து, சாதி அடையாளங்களிலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டு,  சாதி மறுப்புத் திருமணங்களை ஆதரித்து,  பெண் விடுதலைக்கு பாடுபட்டனர்.  குழந்தைத் திருமணத்தை எதிர்த்தனர். வரதட்சிணைக்கு எதிராக செயல்பட்டனர்.  விதவைத் மறுமணத்தை ஆதரித்தனர்.  சொத்தில் பெண்ணுக்கு உரிமை கோரி போராடினர். விவாக ரத்து உரிமை கோரினர்.  மேலும் இது போன்றவற்றுக்கு ஆதரவாகச் செயல்பட்டனர். 1942-ல் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் தங்களது சாதிப் பெயரை கைவிட்டார்கள் என்கிறார்.

இந்த சுயமரியாதை இயக்கம் பிராமணரல்லாதாரை அடிமைப்படுத்தியிருக்கும் ஆரிய கலாச்சாரத்திற்கு மாற்றாக தீவிர சமூக சீர்திருத்தம், மதச்சார்பின்மை, அறிவியலை வளர்த்தெடுப்பது போன்றவற்றை செயல்படுத்தும் அமைப்பாகும்.  இவ்வமைப்பு மாகாணத்தில் பிராமணரல்லாத மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றிருந்தது.  ஈ.சா.விஸ்வநாதன் தெரிவிப்பது என்னவெனில் “இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த குழு, (பெரியாரின்) சுயமரியாதை இயக்கத்தினர், தமிழ்ப்பற்றாளர்கள், சாமியார்கள், பெண்கள், ஆதி திராவிடர்கள். உழைப்பாளி மக்கள், மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் உட்பட பலர் இணைந்த, நீதிக்கட்சியை விட ஒரு நெகிழ்வான அரசியல் சக்தியாக சென்னை மாகாணத்தில் உருவானது. சுயமரியாதை இயக்கம் மற்றும் நீதிக்கட்சியில் இருந்த முற்போக்காளர்களால் நடத்தப்பட்ட ஆலய நுழைவுப் போராட்டங்களில் நூற்றுக்கணக்கான ஆதிதிராவிடர் உள்ளிட்ட இளைஞர்கள், இளம் பெண்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.  

இந்தத் திட்டங்கள், அதனை செயல்படுத்துவது ஆகியவற்றின் மீது பிராமணர்கள் மட்டுமல்லாது, மதம் குறித்த பெரியாரின் கருத்தை ஏற்க மறுத்த நீதிக்கட்சித் தலைவர்களிடமிருந்தும் கடும் எதிர்ப்பினை சந்தித்தது.  இந்தப் புதிய முற்போக்கான, மதச்சார்பற்ற அடையாளம் சாதிப் பிரிவினையால் பயனடைந்து வரும் பிராமணரல்லாதோரில் இருந்த சில சுயநல சக்திகளை ஆட்டம் காண வைத்தது.  பிராமணரல்லாதோர் இயக்கம் சந்தித்த அடுத்த மாற்றம் அவர்களுடைய அச்சத்தை தீவிரப்படுத்தியது  முக்கியமாக இந்த அமைப்பு சாதி அடையாளத்துடன் கூடியதானாலும், வர்க்க வளையத்திற்குள் நுழைந்தது. 

அன்றைக்கு சென்னை மாகாணத்தில் தொழிற்சாலைகள் எண்ணிக்கை பெருகியதும். அதன் விளைவாக தொழிலாளி வர்க்க சமூகம் சுயமரியாதை இயக்கத்தின் சமூகப் பின்புலத்தை வர்க்க அடிப்படையில் தீவிரமாக மாற்றியமைக்கும் வாய்ப்பினை ஏற்படுத்தியது.  தொழிலாளி வர்க்க, சோசலிச தலைவர்களான எம். சிங்காரவேலர், ஜீவானந்தம் ஆகியோர் சுயமரியாதை இயக்கத்தோடு இணைந்து செயல்பட்டதும், அவர்கள் பெரியாரிடம் செல்வாக்கு பெற்றவர்களாக அமைந்தமையினால் அந்த இயக்கத்தை சீர்திருத்தக் கண்ணோட்டத்திலிருந்து, புரட்சிகர திசைவழியில் நடத்திச் சென்றனர்.  1917-ல் ரஷ்யாவில் போல்ஷ்விக் தலைமையில் புரட்சி வெற்றி பெற்றதும், இந்தியாவில் தொழிலாளி வர்க்கம் தோன்றியதும் இந்த வளர்ச்சிக்கு பின்புலமாக இருந்தது. கம்யூனிஸ்ட் அறிக்கை தமிழாக்கம் செய்யப்பட்டு, தொடராக பெரியாரால் நடத்தப்பட்ட ‘குடி அரசு’பத்திரிகையில் வெளிவந்தது.  பெரியார் அதற்கு ஆழமான கருத்துரை வழங்கியிருந்தார். அதில் குறிப்பிட்டிருந்தது என்னவென்றால் இந்தியாவில் சூழ்நிலை கனிந்திருந்தாலும், புரட்சி இதுவரை வராததற்குக் காரணம் இங்கு பணக்காரர் ஏழை இவர்களுக்கிடையிலான மோதல்களை சாதிக் கட்டுமானம் முகமூடியாக மறைத்து நிற்கிறது. ஒரு வலிமையான சோசலிச கண்ணோட்டத்துடன் கூடிய ஈரோடு திட்டம் பின்னர் வெளிவந்தது.

தமிழுக்கு எதிராக, சமஸ்கிருதத்திற்கு ஆதரவாக சலுகைகள் காட்டுவதை எதிர்த்து உருவான தனித்தமிழ் இயக்கம், (அதே ஆண்டு துவக்கப்பட்ட) பிராமணல்லாதோர் இயக்கத்துடன் இணைந்து இரட்டையர் போல் செயலாற்றியது.  ராஜாஜி அரசு பள்ளிக் கல்வியில் இந்தியை கட்டாய பாடமாக திணித்த போது அதனை எதிர்த்து தமிழ்நாடு பொங்கி எழுந்தது.  இந்த எதிர்ப்புப் போராட்டங்களில் பிராமணரல்லாதார் இயக்கத்தின் சமூக  நீதி மற்றும் தமிழுக்கான நீதி ஆகியவை சங்கமித்ததன் விளைவாக திராவிட தேசியம் வளர்வதற்கான அடித்தளம் உருவாக்கப்பட்டது.  சுயமரியாதை இயக்கத்தின் சோசலிச கட்டம், அடிப்படை சமூக நீதித் திட்டம், மற்றும் தனித்தமிழ் இயக்கத்தால் வளர்க்கப்பட்ட பேராண்மை இவற்றின் ஒன்றிணைவு  அவன்/அவளின் சாதி, வர்க்கம், மொழி போன்ற பல்வேறு அடுக்குகளைக் கொண்ட அடையாளங்கள் உடைய தமிழ் மக்களின் விருப்பங்கள் நிறைவேற வேண்டும் என்ற நோக்கத்தை தூண்டிவிட்டது.

சோசலிசம் நோக்கிய பெரியாரின் திருப்பம் ஒரு சில பகுதியினருக்கு அபாய

சங்கொலியாக இருந்தது.  குறிப்பாக பிராமணரல்லாதவர்களில் ஒரு பகுதியினர், பிரிட்டிஷ் அரசு ஆகியோரே அப்பகுதியினர்.  அரசியல் தளத்தில் வர்க்கம் பெரிய அளவில் நுழைவது பிராமணரல்லாதார் இயக்கத்தில் இருந்த நில உடைமையாளர்கள் தங்கள் அதிகாரம், இதுவரை பெற்ற சலுகைகள் மற்றும் தங்களது சொத்திற்கு ஆபத்து வரும் எனக் கருதினர்.  பெரும் எண்ணிக்கையில் மக்களை ஈர்க்கக் கூடிய ஒரு சமூக சீர்திருத்தவாதி புரட்சியாளராக மாறுவது, குறிப்பாக தேசிய இயக்கம் பெருகி வரும் கால கட்டத்தில், சோவியத் யூனியனில் சோசலிசம் திட்டவட்டமான நிலையை எட்டும் சூழலில் பிரிட்டிஷ் அரசிற்கு மிகப் பெரும் கவலையளிக்கும் விஷயமாக இருந்தது.  வளர்ந்து வரும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மீது கடுமையான தாக்குதல் கட்டவிழ்த்து விடப்பட்டது.  இதுவரை பிராமணரல்லாதார் இயக்கம் பெற்ற நன்மைகளைப் பாதுகாக்க வேண்டி, குறிப்பாக மாகாணத்தில் காங்கிரஸ் கட்சியில் பிராமணர்கள் கை மேலோங்கி உள்ள சூழலில், நீதிக்கட்சியின் அரசியல் வீழ்ச்சி கண்கூடாக காணப்பட்ட நிலையில், பெரியார் மீண்டும் சமூக சீர்திருத்த வட்டத்திற்குள் வந்து சேர்ந்தார்.

இருப்பினும், பெரியார் அவருடைய அரசியல் பயணத்தில் ஒரு சிக்கலான கட்டத்தில் பொதுக்கூட்டங்கள் வாயிலாகவும், அச்சு ஊடகம் வாயிலாகவும் வெளிப்படுத்திய சமூக சீர்திருத்தம், சோசலிசம் குறித்த கருத்துக்கள் மக்கள் மனங்களை கவ்விப் பிடித்தன – அடுத்த நூற்றாண்டு வரை மக்களிடம் அழிக்கவியலாத செல்வாக்கு செலுத்தும் அரசியல் சக்தியாகின.