என். குணசேகரன்
ஆனந்த் டெல்டும்டெவின் “சாதிக் குடியரசு” நூல், இந்திய மக்கள் எதிர்கொள்ளும் சமூக சிக்கல்கள் பற்றி ஆழமான பல கருத்துக்கள், ஏராளமான விவரங்கள் கொண்ட 400-பக்க நூலாக அமைந்துள்ளது. டெல்டும்டெவின் சிந்தனைகள் அனைத்தும் கவனத்தில் கொள்ள வேண்டியவை; விவாதத்திற்கும், விமர்சனத்திற்கும் உட்படுத்த வேண்டியவை. எனினும், முக்கிய கருத்துக்கள் சிலவற்றை மட்டும் இக்கட்டுரை விவாதிக்கிறது.
“சாதி, வர்க்க இயக்கவியல்: உள்ளேயும், வெளியேயும்” என்ற தலைப்பு டாக்டர் அம்பேத்கரின் ஒரு முக்கிய மேற்கோளுடன் துவங்குகிறது. “சாதி என்பது மூடப்பட்ட வர்க்கம்” என்று 1916-ம் ஆண்டு “இந்தியாவில் சாதிகள்” என்கிற நூலில் டாக்டர் அம்பேத்கர் குறிப்பிடுகிறார். அதாவது, வர்க்கத்தின் வடிவமாக சாதி உள்ளது என்று அவர் கருதினார்.
இன்றைய நவீன கிராம சமுதாயத்தை எடுத்துக்கொண்டால் நிலவுடைமையாளர்கள், முதலாளிகள் என்ற அதிகாரம் படைத்த வர்க்கப் பிரிவினர் ஒருபுறம்; அவர்களிடம் பல்வேறு வகைகளில் பணியாற்றும் நிலமற்ற விவசாயிகள், முறைசாராத் தொழிலாளர்கள் போன்றோர் மறுபுறம் என வர்க்க அடிப்படையில் வேறுபாடுகள் உள்ளன. ஆனால் இதை விட வெளிப்படையாக தெரிவது அந்த கிராம சமூகத்தில் நிலவும் சாதி வேறுபாடுகள் தான். எனவேதான் வர்க்கம், சமூகத்தின் உள்ளடக்கமாகவும் சாதி அதன் வெளிப்புற வடிவமாகவும் விளங்குகிறது.
சாதி, வர்க்க ஒடுக்குமுறை எதிர்ப்பு இரண்டும் இணைந்த போராட்டத்தில்தான் பொருளாதார சுரண்டலுக்கும் ஒடுக்கு முறைக்கும் ஆளான உழைக்கும் மக்கள் அனைவரையும் ஒன்று திரட்ட முடியும்.
இந்த ஒற்றுமை அம்பேத்கர் கனவு கண்ட சமத்துவ சமூகத்தை உருவாக்கிடும். அம்பேத்கரின் வர்க்கம், சாதி பற்றிய வரையறை இதனையே உணர்த்துகிறது.
சாதி, வர்க்கம் என்ற இரண்டும் வேறுபட்டவையாக இருந்தாலும், இரண்டுக்கும் ஒற்றுமை அம்சங்களும் உண்டு என்கிறார் டெல்டும்டெ. இரண்டுக்கும் உள்ள பிணைப்பை சரியாக புரிந்து கொண்டு இயங்கும்போது, சமூக விடுதலைக்கான ஒன்றுபட்ட போராட்டத்தைக் கட்டவிழ்ப்பதற்கான வலிமை ஏற்படுவதாக அவர் கருதுகிறார்.
கம்யூனிஸ்ட் இயக்கங்கள் நீண்ட காலமாகவே ஒடுக்கப்பட்ட மக்களை சமூக, பொருளாதார அடிப்படையில் அணிதிரட்டி வந்துள்ளனர். இந்த செயல்பாட்டுக்கான வழிகாட்டுதலை மார்க்சியமே வழங்குகிறது. இதனால்தான் அம்பேத்கரும் மார்க்சியப் பார்வையில் முக்கியமான கருத்தாக்கமான “வர்க்கம்” என்கிற கருத்தாக்கத்தை சாதி பற்றிய ஆய்வுக்கு பயன்படுத்துகிறார்.
அம்பேத்கரும் மார்க்சியமும்
மார்க்சியத்தின் மீது ஈர்ப்பு கொண்டவராக அம்பேத்கர் இருந்தார் என்பதனை டெல்டும்டெ விவரிக்கின்றார். மார்க்சியம் “….மனித உறவுகளில் உள்ள சுரண்டல் தன்மையை முன்னிலைப்படுத்தி, அதனை மாற்றுவதற்கு வழிகாட்டும் சித்தாந்தம்” என்று அம்பேத்கர் கருதியதாக டெல்டும்டெ கூறுகிறார். (பக்கம்-127)
மார்க்சின் “மூலதனம்” மராத்தியில் வெளிவந்தபோது, “கூலி, விலை, லாபம்” என்ற மார்க்சின் நூலை அவரது “ஜனதா” பத்திரிகையில் அம்பேத்கர் தொடராக பிரசுரித்துள்ளார். 1956-ம் ஆண்டில் காத்மாண்டுவில் நடந்த ஒரு கருத்தரங்கில் “புத்தரும், மார்க்ஸும்” என்ற தலைப்பில் ஆராய்ச்சிக் கட்டுரை சமர்ப்பித்து உரையாற்றியுள்ளார். அதில் புத்தர், மார்க்ஸ் இருவரின் உலகப்பார்வையும் இலட்சியங்களும் ஒன்றே என்று பேசியுள்ளார்.
1936 ஆகஸ்ட் 15 அன்று அனைத்து உழைக்கும் மக்களையும் திரட்ட அவர் சுதந்திர தொழிலாளர் கட்சி அமைத்தார். இது, அவரிடம் வர்க்க சிந்தனை இருந்ததை எடுத்துக்காட்டுவதாக டெல்டும்டெ கருதுகிறார்.
இந்த உண்மைகளை ஆனந்த் டெல்டும்டெ எடுத்துக் கூறுவதன் நோக்கம் என்ன? மார்க்ஸ் சிந்தனையும் அம்பேத்கர் சிந்தனையும் எதிரும் புதிருமானது அல்ல என்றும், மார்க்சிய இயக்கங்களும் தலித் இயக்கங்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்துகிறார்.
மார்க்சியம் மீது சில விமர்சனங்களும் அம்பேத்கருக்கு உண்டு என்று டெல்டும்டே குறிப்பிடுகிறார். வன்முறையையும், சர்வாதிகாரத்தையும் அது வலியுறுத்துவதாக அம்பேத்கர் கருதினார் என்று டெல்டும்டெ தெரிவிக்கின்றார்.
ஆனால், வன்முறை, சர்வாதிகாரம் இரண்டுமே ஆளும் முதலாளித்துவ வர்க்கங்களும், அவற்றின் கருவியாக செயல்பட்டு வரும் அரசும் மக்களை அடக்கி ஒடுக்கிட, மேற்கொள்ளுகிற வழிமுறைகள். இதனை மார்க்சியம் ஆழமாக விளக்குகிறது. இன்றளவும் இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலும் இதனை நாம் காண்கின்றோம். புரட்சிகர மாற்றம் ஏற்பட்டு, பாட்டாளி வர்க்க அரசு அமைகிற போது, பெரும்பான்மை மக்கள் அதிகாரத்தில் இருப்பதை முதலாளித்துவம் சகித்துக் கொள்வதில்லை. பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தில் இருப்பதை பொறுக்க முடியாத முதலாளித்துவம், மீண்டும் எதிர்ப்புரட்சி வேலைகளை செய்து உழைக்கும் மக்களின் அரசினை வீழ்த்த வன்மத்துடன் முயற்சிக்கும்.
அதனை எதிர்கொள்ள வேண்டுமானால், பாட்டாளி வர்க்க அரசு அனைத்து அதிகாரங்களையும் கொண்ட பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசாக இருக்க வேண்டும் என்று மார்க்சியம் வழிகாட்டுகிறது. அந்த அரசு உண்மையில் பெரும்பான்மை உழைக்கும் மக்களின் அரசாக இருக்கும் என்பதனை மார்க்சியம் விளக்குகிறது. அந்த அரசும், அது நிர்வகிக்கும் சமூகமும், நடைமுறையில் உண்மையான மக்கள் ஜனநாயகமாகவே இருக்கும்.
மார்க்சியத்தை வன்முறை தத்துவம் என்றும், சர்வாதிகாரத் தத்துவம் என்றும் மனிதநேய சிந்தனையாளர்கள் பலரும் கூட தவறான புரிதலுக்கு ஆட்பட்டுள்ளனர். அவர்கள் மார்க்சியத்தை அதன் முழுப்பரிமாணங்களுடன் புரிந்து கொள்வதற்கு ஏற்ற வகையில் மார்க்சியம் பற்றிய முழுமையான தரவுகள், மதிப்பீடுகள் கொண்ட கருத்தியல் பிரச்சாரம் அதிகமாக தேவைப்படுகிறது.
சுயநல அரசியலும்,சாதி ஒழிப்பும்
1936-ல் தொழிலாளர் கட்சியை அமைத்த அம்பேத்கர், அந்த வர்க்கத் திரட்டல் பணியை முதன்மைப் பணியாகத் தொடரவில்லை. 1942ல் அனைத்திந்திய தாழ்த்தப்பட்டோர் கூட்டமைப்பினை உருவாக்கினார். இது, வர்க்கம் என்கிற முனையிலிருந்து சாதி என்கிற முனைக்கு அவர் சென்றுவிட்டதை குறிப்பதாக டெல்டும்டெ எழுதுகிறார்.
அம்பேத்கர், காங்கிரஸ் ஆட்சியில் சட்ட அமைச்சராக பொறுப்பேற்றதும், பிறகு காங்கிரஸ் தலைமையால் துரோகத்திற்கு ஆளானதும் வரலாறு. இவற்றை விளக்கும் டெல்டும்டெ பாஜக, காங்கிரஸ் இரண்டுமே தலித் மக்களுக்கு துரோகம் இழைக்கும் கட்சிகளென ஆதாரங்களுடன் எடுத்துரைக்கிறார்.
ஆனால் அந்தக் கட்சிகளோடு, அம்பேத்கர் பெயரை உச்சரித்துக் கொண்டு அரசியல் செல்வாக்கை தேடிக் கொண்ட பலர், சுயநல அரசியலை நடத்தி வருகிற நிலையையும் டெல்டும்டெ அம்பலப்படுத்துகிறார்.
இதற்கு தலித்துகளான ‘ராம்கள்’ சிலரை எடுத்துக்காட்டாக முன்வைத்து பேசுகிறார். ராம்தாஸ் அத்வாலே செல்வாக்கு பெற்ற பெரும் கோடீஸ்வரராக ஆன வரலாற்றை குறிப்பிடுகிறார். முதலில் தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கூட்டணி அரசில் அமைச்சராகவும், பிறகு பாஜக அரசில் அமைச்சராகவும் அவர் இருந்தார். அதேபோன்று ராம் விலாஸ் பஸ்வான், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசிலும் பாஜக தலைமையிலான கூட்டணி அரசிலும் தொடர்ச்சியாக ஐந்து முறை மத்திய அமைச்சராக பதவியில் இருந்து வருகிறார். இவர்களை விட பலமடங்கு சுயநல அரசியலும், ஊழல் சாம்ராஜ்யத்தை நடத்தி வருகிற பலர், பல முதலாளித்துவ கட்சிகளில் இருந்து வருகின்றனர் என்பது உண்மையே. ஆனால் சாதி ஒழிப்பு லட்சியத்திற்காக வாழ்க்கையைத் துவங்குகிற பலர் தடம் மாறி போகிறபோது, அந்த லட்சியத்திற்கு பாதிப்பு ஏற்படுகிறது.
தற்போதைய நிலையில் அம்பேத்கரைப் பின்பற்றுவோரும் கூட அம்பேத்கரின் பார்வையை நடைமுறையில் பின்பற்றுவதில்லை. சாதி ஒழிப்பு இலட்சியம் சாத்தியமில்லை என்று அவர்கள் கருதுகின்றனர். அம்பேத்கர் பெயரை உச்சரிக்கும் வேறு சிலர் இந்துத்துவா மற்றும் நவீன தாராளமய விஷ கருத்தியலுக்கு ஆளாகி உள்ளனர். எனவே சாதி ஒழிப்பு நிகழ்வு மெதுவாகவே நடக்கும் என்று விளக்கும் டெல்டும்டெ, அந்த குறிக்கோள் வர்க்க ஒற்றுமை போராட்டங்களின் வழியாகத்தான் சாத்தியமாகும் என்கிறார். (பக்கம் 179). இந்த கருத்திற்கும், கம்யூனிஸ்டுகளின் பார்வைக்கும் பெரிய வேறுபாடு இல்லை.
சங்கப் பரிவாரம் விடுக்கும் சவால் உள்ளிட்ட அனைத்தையும் எதிர்கொள்ள, “சாதி உணர்வு வேரறுக்கப்பட வேண்டும்” என்கிறார் டெல்டும்டெ. இதற்கு “சாதி அடுக்கில் நிறுத்தப்பட்டிருக்கும் சாதிகளின் அடையாள உணர்வுகள் அழிக்கப்பட வேண்டும்” என்கிறார். அதாவது, “சாதி ஓழிக்கப்படுதலே சரியான தீர்வாக அமையும்” என்கிறார். இது கரடு முரடான, நீண்ட கால பாதையாக இருக்கலாம். இதற்கு சரியான அணுகுமுறை தேவை. சாதி ஒழிப்பை சாதிக்க, தலித் மக்கள் வர்க்க நிலைமைகள், வர்க்க கருத்து நிலைகளில் நின்று சமூகத்தை அணுக வேண்டும்; தலித்துக்களைப் போன்றே கிராமப்புற அதிகார வர்க்கங்களிடம் அடிமைப்பட்டுக் கிடக்கும் தலித் அல்லாதவர்களோடு நெருக்கம் ஏற்பட இந்த அணுகுமுறையே சிறந்த வழி என்கிறார் டெல்டும்டெ. இது சாதி ஒழிப்பில் முன்னேறிட உதவிடும்.
சங்பரிவாரங்களின் திட்டம்
தலித் மக்களை தங்கள் பிடியில் வென்றெடுப்பது என்பது சங்பரிவாரத்தின் ஒரு நயவஞ்சகமான திட்டம்.
இந்துக்களுக்கு எதிராக இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், கம்யூனிஸ்டுகளை முன்னிறுத்தி, சமூகத்தில் பிளவை ஏற்படுத்துவது இந்துத்துவாவின் குறிக்கோள். இதனை அடைவதற்கான அவர்களது திட்டத்திற்கு, தலித்துகள் தடையாக இருப்பார்கள் என்கிற அச்சம் எப்போதுமே அவர்களுக்கு உண்டு.
வேறுபட்ட நம்பிக்கைகள், கடவுளர்கள், சடங்குகள் என பல்வேறு பிரிவினரை இந்து என்கிற ஒற்றை மத அடையாளத்தின் கீழ் கொண்டுவர இந்துத்துவா முயற்சிக்கிறது. இதற்காக பல பிரிவினரின் பன்முகத் தன்மைகளை அழிக்கும் பண்பாட்டு அழிப்பினை அவர்கள் செய்து வருகின்றனர். தலித் மக்களை இந்து என்ற ஒற்றை மத அடையாளத்தின் கீழ் கொண்டுவருவது சாத்தியமில்லை. ஏனெனில், இந்து மதத்தில் நால் வருணம் என்கிற ஒடுக்குமுறை கோட்பாடு, காலம் காலமாக, அவர்கள் மீது திணிக்கப்பட்டு, தீண்டாமை உள்ளிட்ட கொடுமைகளுக்கு அவர்கள் ஆளாகி வருகின்றனர். இந்த நிலையை எதிர்கொண்டு தலித் மக்கள் மத்தியில் இந்து மத ஒற்றை அடையாளத்தை ஏற்படுத்த சங்பரிவாரம் பெரு முயற்சி செய்கிறது. அம்பேத்கரையும் காவி மயமாக்க அவர்கள் படாதபாடு படுகிறார்கள். அம்பேத்கர் இந்து மதத்தை முழுமையாக நிராகரித்தவர் என்கிற உண்மையை மறைத்து, அம்பேத்கரை சித்தாந்த ரீதியாக கடத்திட முயற்சிக்கிறார்கள். தலித் இயக்கத்தில் உள்ள நடுத்தர வர்க்கத்தினர் சிலரின் சுயநலமும், சங்பரிவாரத்தின் இந்த சதித் திட்டத்திற்கு துணையாக இருக்கிறது என்பதை டெல்டும்டெ அழுத்தமாக குறிப்பிடுகிறார்.( பக்கம் 265)
பாஜகவிற்கு தலித் மக்கள் மீது எந்தப் பாசமும் இல்லை. பாஜக ஆட்சியில் தலித் மக்கள் மீதான தாக்குதல்கள் ஒவ்வொரு நாளும் சராசரியாக 111 என்ற எண்ணிக்கையில் நடந்து வருவதை சுட்டிக் காட்டும் டெல்டும்டெ “ஆளும் வர்க்கங்களின் நலன்கள் தற்போதைய சாதிப் பிளவுகளை பாதுகாப்பதில்தான் உள்ளது. இந்த ஆளும் வர்க்கங்களின் தேவைகளுக்கு ஏற்ப அரசும் செயல்படுகிறது” என்கிறார். எனவே, பாஜக தலைமை தாங்கும் அரசினை எதிர்த்தால் மட்டும் போதாது. எதிர்காலப் பார்வை முன்வைக்கப்பட வேண்டும். முதலாளித்துவ அரசினை அகற்றி, உழைக்கும் வர்க்கங்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுகிற மாற்று நிகழ்ச்சி நிரல் அவசியம்.
சாதி ஒழிப்பில் நிலப் பிரச்சனை
தலித் விடுதலை பற்றி பேசுகிறவர்கள் நிலப் பிரச்சனை பற்றி அதிகம் பேசுவதில்லை. டெல்டும்டெ தலித் விடுதலைக்கு நிலவுடைமை உறவுகளில் மாற்றத்தை ஏற்படுத்துவது மிக முக்கியமானது என்று எழுதுகிறார். “மக்கள் தொகை அடிப்படையில் பார்த்தால், 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட தலித் மக்கள் பெரும்பாலும் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். வேகமாக நிகழும் நகரமயத்தில், தலித் அல்லாதவர்கள் நகர்ப்புறங்களுக்கு குடியேறுகிற அளவில் பாதி அளவிற்கு மட்டுமே நகரங்களுக்கு செல்லும் தலித் மக்களின் எண்ணிக்கை உள்ளது. இந்நிலையில் தலித் விடுதலை குறிக்கோளினை அடைந்திட, நிலம் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது.” (பக்கம் 211). இதனையொட்டி அம்பேத்கர் 1929-ம் ஆண்டில் மகாராஷ்டிரா கொங்கண் பகுதியில்ந டத்திய நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் போராட்டத்தை டெல்டும்டெ குறிப்பிடுகிறார்.
கம்யூனிஸ்டுகள் நீண்டகாலமாக நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தி வந்துள்ளனர். டெல்டும்டெ இந்த பங்களிப்பை விரிவாக எழுதவில்லை என்றாலும், நிலத்துக்கான போராட்டம் கம்யூனிச இயக்கத்தின் பிரிக்க முடியாத நிகழ்ச்சி நிரலாக இருந்து வந்துள்ளது. அந்த வகையில் தலித் விடுதலைக்கு கம்யூனிஸ்டுகள் ஆற்றிய பங்கு மிக முக்கியமானது. எதிர்வரும் காலங்களிலும் புதிய சூழலுக்கு ஏற்றவகையில் நிலப் போராட்டம் முன்னெடுத்துச் செல்ல வேண்டியது அவசியமானது. இது விவசாயப் பகுதியினரை திரட்டி நகர்ப்புற உழைக்கும் வர்க்கங்களோடு ஒற்றுமை காண வழிவகுக்கும். இந்த வர்க்க ஒற்றுமையைக் கட்டுவது, சாதி ஒழிப்பில் முக்கிய கடமையாக அமைந்துள்ளது.
கம்யூனிஸ்டுகள் மீது விமர்சனம்
எவ்வித அடிப்படையும் இல்லாமல் கம்யூனிஸ்டுகள் மீது ஏற்கெனவே உலா வந்து கொண்டிருக்கின்ற பல அடிப்படியில்லாத கருத்துக்களையும் ஆங்காங்கே டெல்டும்டெ பதிவு செய்துள்ளார். “வறட்டு தத்துவவாதிகள்” என்று கம்யூனிஸ்ட்களை தூற்றுகிறார். சாதி – வர்க்க உறவுகள் பற்றிய “தத்துவார்த்த பற்றாக்குறை” இடதுசாரி இயக்கங்களிடம் இருப்பதாக அவர் குறிப்பிடுகிறார். அவரது அறிவியல் சார்ந்த சிந்தனைக்கு பொருத்தமற்ற வகையில் இக்கருத்துக்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. தலித் இயக்கங்கள் ‘சாதி மட்டும் பார்க்கிறார்கள்; கம்யூனிஸ்டுகள், வர்க்கம் மட்டும் பார்க்கிறார்கள்’ என்று சூத்திரம் போன்று டெல்டும்டெ எழுதுகிறார். ‘இதனால் இரண்டு இயக்கங்களும் மக்களிடமிருந்து தனிமைப்பட்டு வருகின்றன’ என்கிறார். தலித் இயக்கங்களின் கருத்து நிலைகள், செயல்பாடுகள், நோக்கங்கள் பலவற்றை அவரே விமர்சித்திருக்கிறார்.
ஆனால், மார்க்சிய இயக்கம் வர்க்கம் மட்டும் பார்ப்பது உண்மையல்ல என்பது மட்டுமல்ல; உண்மையான மார்க்சிய செயல்பாடு சாதியை தவிர்த்து வர்க்கம் மட்டும் பார்ப்பதாக இருக்க இயலாது. ஒரு கிராமத்தில் நிலப்பிரச்னைக்கு விவசாயிகளை திரட்டும் பணியில் ஈடுபட்டு, வர்க்க ஒற்றுமைக்கு முயல்கின்ற ஒரு கம்யூனிஸ்ட், சாதி சவாலை எதிர்கொள்ளாமல் வர்க்க ஒற்றுமையை உருவாக்க இயலாது. உள்ளூர் மக்களிடம் ஒடுக்குமுறை உறவுகளுக்கு எதிராகவும், சாதிய மனப்பான்மையை கைவிடவும் கருத்துப் பிரச்சாரத்தை மேற்கொள்ளாமல் உண்மையான வர்க்க ஒற்றுமை உள்ளூரில் சாத்தியமாகாது. இதை நடைமுறைப்படுத்துகிறபோது சில தவறுகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளளன. வாழ்வாதார, பொருளியல் பிரச்சினைகளில் அதிக கவனம் செலுத்துகிற நிலையில், சமூகரீதியில் உள்ள ஒடுக்குமுறை பிரச்சனைகள் மீது உரிய கவனம் செலுத்தாத போக்கு ஏற்படுகிறது. இது உண்மையான, மார்க்சிய தத்துவ நடைமுறை அல்ல. மார்க்சிய அடிப்படையில் சமூக கட்டமைப்பை பார்ப்பதில் உள்ள சரியான மார்க்சிய புரிதலை ஏற்படுத்தி, இதனை அவ்வப்போது சரி செய்திட வேண்டும். பல தலித் இயக்கங்களோடு இணைந்து கம்யூனிஸ்டுகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த பல ஆண்டுகளாக பல மாநிலங்களில், குறிப்பாக, தமிழ்நாடு, ஆந்திரா மாநிலங்களில் கூட்டாக தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைத்து செயல்பட்டு வருகின்றனர். தலித் மக்களுக்கான உரிமைகளை நிலைநாட்டி உள்ளனர்.
இவ்வாறு தீவிரமான செயல்பாடுகள் மேற்கொண்ட போதிலும், பல அறிவுஜீவிகள் கம்யூனிஸ்டுகளுக்கு ‘வர்க்கம் மட்டுமே தெரியும்; சாதி பற்றி அவர்களுக்கு தெரியாது’ என்ற அவதூறுப் பிரச்சாரத்தை நிறுத்தவில்லை. கம்யூனிஸ்டுகள் ஒடுக்கப்பட்ட மக்களிடையே வேரூன்றுவதை அவர்கள் விரும்பவில்லை; அது மட்டுமல்ல; தலித் மக்கள் பரந்த அளவில் சுரண்டப்படும் வர்க்கங்களோடு இணைந்து போராடுவதையும் அவர்கள் விரும்பவில்லை; வர்க்க ஒற்றுமை உருவாகி, சுரண்டலுக்கே முற்றுப்புள்ளி வைக்கும் சோஷலிச பாதையில் தலித்துக்கள் செல்வதை தடுக்கும் உள்நோக்கமும் அவர்களில் பலருக்கு உண்டு.
சாதியைப் பற்றி சரியாகப் புரிந்து கொள்வதற்கு மார்க்சிய அணுகுமுறை உதவுகிறது. பொருளியல் தளத்தில் எவ்வாறு உழைப்புச் சுரண்டல் நடக்கிறது என்பதனையும், சாதி அடுக்கில் அடித்தட்டில் இருக்கிற தலித், பிற்பட்ட உழைக்கும் மக்கள் எவ்வாறு கடும் உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ளவும், மாற்றத்துக்கான சரியான செயல்பாட்டிற்கும் மார்க்சியமே வழிகாட்டுகிறது. அதேபோன்று, மக்களின் சுரண்டல் வாழ்க்கை நிலைமைகளை மறைப்பதற்கும், மறப்பதற்கும், சாதி, மதம் இரண்டுமே பயன்படுத்தப்படுகின்றன. உழைக்கும் மக்களை ஆதிக்க வர்க்கங்களின் சுரண்டலுக்கு உட்படுத்தி, கேள்வி கேட்காமல் அடிமை வாழ்க்கையில் உழல்வதற்கான சிந்தனைகளை சாதி, மத சிந்தனைகள் ஏற்படுத்துகின்றன. ஆளும் வர்க்கத்தின் கருவிகளாக இவை செயல்படுவதை மார்க்சிய ஆய்வுமுறை மூலமாகத்தான் துல்லியமாக புரிந்து கொள்ள முடியும்.
தீண்டாமை ஒழிப்பு, சாதி ஒழிப்பு என்று அவ்வப்போது சில நடவடிக்கைகளை எடுத்தால் மட்டும் சாதி ஒடுக்குமுறை சார்ந்த சமூக அடுக்கினை அகற்றிட முடியாது. வர்க்க நிலைமைகளையும் சாதிய ஒடுக்குமுறை உறவுகளையும் சரியாக கணித்து சரியான செயல்பாட்டு வியூகங்களை அமைத்து செயல்படுவதன் வழியாகத்தான் சாதி ஒழிப்பிலும் முன்னேற முடியும். வர்க்க விடுதலை சாதிக்க முடியும். இதுவே கம்யூனிஸ்டுகளின் கடந்தகால அனுபவமாகவும் இருந்துள்ளது. கேரள சமூகமும், தமிழகத்தில் கம்யூனிஸ்டுகள் ஓரளவு வலுவாக ஆதரவு தளம் பதித்த கீழத்தஞ்சை பகுதியிலும் இந்த வரலாற்று அனுபவங்கள் ஏராளமாக உள்ளன. இந்த வரலாற்றை டெல்டும்டெ அங்கீகரித்ததாக தெரியவில்லை. வர்க்க ஒற்றுமையை கட்ட வேண்டும் என்று வலியுறுத்தும் டெல்டும்டேவின் பார்வையை நடைமுறைப்படுத்தவும் கூட கம்யூனிஸ்டு இயக்கங்களின் சாதி ஒடுக்குமுறை எதிர்ப்பு வரலாற்றையும் அவற்றின் அனுபவங்களையும் கற்பது அவசியமாகிறது.
தலித் எழுச்சி
1990களில் அதிக அளவில் தலித் இயக்கங்கள் உருவான சூழலில், மார்க்சிஸ்ட் கட்சி தலித் இயக்கங்களின் புத்தெழுச்சியை வரவேற்றது. அதனை ஒடுக்குமுறைக்கு எதிரான எழுச்சியாகவே மார்க்சிஸ்ட் கட்சி கணித்தது. அந்த எழுச்சியை வரவேற்பது மட்டுமல்லாமல், அவர்களோடு இணைந்து, களத்தில் ஏராளமான கூட்டு இயக்கங்களை மார்க்சிஸ்ட் கட்சி முன்னெடுத்து வருகிறது
‘சாதிகள் ஒருவகையில் வர்க்கத்தின் ஒரு வடிவமாகவே இந்தியாவில் உள்ளன; வர்க்கங்கள் சாதிகளுக்குள் உட்புகுந்து இருப்பதை காணமுடியும்’ என்பது அம்பேத்கரின் கருத்து. அதே கோணத்தில் டெல்டும்டெ சாதிக்கும் வர்க்கத்திற்கும் உள்ள உறவினை விளக்குகிறார். வர்க்கம் என்றால் மார்க்ஸையும், சாதி என்றால் அம்பேத்கரையும் பிரித்துக் காண்பது சில அறிவு ஜீவிகள் மேற்கொள்ளும் வீணான வேலை என்று டெல்டும்டெ கருதுகிறார்.
சாதி, வர்க்கம் இரண்டையும் பிரித்துப் பார்க்கிற தவறினை உண்மையான மார்க்சியம் செய்வதில்லை. ஆனால் ‘இந்த இரண்டையும் பிரித்துப் பார்க்கிற தவறுகளை தலித் இயக்கங்களும், மார்க்சிய இயக்கங்களும் செய்ததால், இரண்டுமே பின்னடைவுக்கு சென்றுவிட்டது ‘என்று டெல்டும்டெ கருதுகிறார். வழக்கமாக பலர் மார்க்சியத்தை தூற்றுகிற அதே பாணியில் இக்கருத்தினை டெல்டும்டெ வெளிப்படுத்துகிறார்.
மார்க்சியம் ஒரு சமூகத்தை துல்லியமாக ஆய்வு செய்திட வழிகாட்டுகிறது. அந்த சமூகத்தில் வாழும் மக்கள் தங்களது வாழ்க்கையின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள உற்பத்தியில் ஈடுபட வேண்டிய கட்டாயம் உள்ளது. அந்த வகையில் பொருளாதாரம் அடிப்படையாக அமைந்துள்ளது. அந்த பொருளாதார இயக்கத்தில் நிலம் உள்ளிட்ட உற்பத்தி சாதனங்களின் உடைமையாளர்கள், அதில் உடைமை ஏதும் இல்லாமல் உழைப்பு மட்டும் செலுத்துவோர் என்று பிரிவுகள் ஏற்படுகின்றன. இந்த உற்பத்தி சார்ந்த உறவுகளின் அடிப்படையில் தான் வர்க்கங்கள் உருவாகின்றன. சொத்துடைமை வர்க்கங்கள், உழைப்பு சக்தியை மட்டுமே நம்பி இருக்கிற உடைமையற்ற வர்க்கங்கள் என்ற இரண்டு முக்கிய பிரிவுகள் சமூகத்தில் ஏற்படுகிறது. இரண்டு வர்க்கங்களும் வெவ்வேறான நலன்களை கொண்டதாக உள்ளன.
இந்த இரண்டு வர்க்கப் பிரிவினர் சாதிகளாகவும் பிரிந்துள்ளனர். உழைக்கும் வர்க்கங்களாக இருந்தாலும், சாதி என்கிற சமூக அடுக்கு, கருத்து ரீதியாக அவர்களை ஒன்று சேர விடாமல் தடுக்கிறது. உழைக்கும் வர்க்கங்கள் சாதிகளாக பிரிந்திருப்பதும் தலித் மக்களை, தலித் அல்லாத சாதியினர் பகைமையோடு அணுகுவதும் சாதிச் சிந்தனையின் விளைவு. இது, சுரண்டப்படுகின்ற மக்களிடம் வர்க்க ஒற்றுமை ஏற்படுவதை தடுக்கிறது. இதனால் ஆளும் வர்க்கங்கள் பலனடைகின்றன. சாதி பற்றி மார்க்சிய வழியில் ஆராய்வதே சரியான பாதைக்கு வழிவகுக்கும். இன்றைய முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ சமூக உறவுகளில் உள்ள அநீதியான ஒடுக்குமுறை நிலைமைகளை மாற்றியமைத்து சமத்துவத்தை அடைய மார்க்சியம் வழிகாட்டுகிறது.
ஆக, டெல்டும்டெவின் கருத்துக்களும், கள அனுபவங்களும் கீழ்க்கண்ட முடிவுகளுக்கு இட்டுச் செல்கின்றன.
முதலாளித்துவத்தை தூக்கி எறியும் நிகழ்ச்சி நிரல் இல்லாமல்,சாதி ஒழிப்புக் குறிக்கோள் நிறைவேறாது. ஆனால் இவை இரண்டுமே தானாக அழிந்து போகாது. முதலாளித்துவத்தையும், சாதி கருத்து நிலைகளையும் அழிப்பதற்கான களப்போராட்டங்கள், கருத்தியல் முயற்சிகள் இடைவிடாது நடந்தால்தான் இரண்டையும், மரணப்படுக்கையில் தள்ளிட முடியும். இதனை அனைத்துப் பகுதியினரையும் உள்ளடக்கிய பாட்டாளிவர்க்கத்தின் உறுதியான, ஒன்றுபட்ட நடவடிக்கைகளே சாதிக்கும்.