திடுக்கிடும் தலைப்புடன் ஒரு புதிய செய்தி வெளியாகிறது. ஆயுதங்களுக்காக உலகம் மேற்கொள்ளும் ஆண்டு செலவுத்தொகை 2 லட்சம் கோடி டாலர்களை கடந்துள்ளது. இந்த பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. பட்டியலில் அடுத்து உள்ள பத்து நாடுகளின் ஒட்டுமொத்த செலவீனத்தை விட அமெரிக்காவின் செலவீனம் அதிகமாக இருக்கிறது. அமெரிக்காவின் உளவுத்துறை செலவீனங்களையும், அணு ஆயுத பராமரிப்பு செலவீனங்களையும் சேர்த்து கணக்கிட்டால் வரும் தொகை மட்டுமே 1 லட்சம் கோடி டாலர்களை கடக்கும். இது மிக மிக அதிகமான தொகை ஆகும். மனித உழைப்பையும் அறிவையும் வீணடிக்கும் கடும் செயல்.
இன்னொரு செய்தி. சட்டவிரோத வரி ஏய்ப்புக்கு வழிவகுக்கும் நாடுகளில் குவிந்திருக்கும் செல்வத்தின் மதிப்பு 37 லட்சம் கோடி டாலர்களை கடந்திருப்பதாக ஒரு கணிப்பு வெளியாகியுள்ளது. பெரும் செல்வந்தர்கள், மனித வளத்தை சூறையாடிச் சேர்த்த செல்வம் இப்படிப்பட்ட நாடுகளில் பணமாகவும், தங்கமாகவும், வைப்பு நிதியாகவும் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் மொத்த தொகையில் ஒரு சிறு பகுதி மட்டுமே. மேற்சொன்ன கணிப்பில் நிலம், விலை உயர்ந்த கலை பொருட்கள், நகைகள் போன்றவை உள்ளடங்காது. அவற்றையும் சேர்த்தால், கையளவு மனிதர்களிடம் குவிந்துள்ள செல்வத்தின் அளவு மிகக் கொடுமையானது. உலகின் முதல் 22 செல்வந்தர்கள் கையில் உள்ள சமூக வளத்தின் மதிப்பு, ஆப்ரிக்காவில் மொத்தம் உள்ள 3.25 கோடி பெண்களிடம் உள்ள ஒட்டுமொத்த செல்வத்தை விட அதிகம் ஆகும்.
உலகில் நிலவும் ஏழ்மை, பட்டினி மற்றும் எழுத்தறிவின்மை போன்ற சிக்கல்களுடைய அவல நிலைமை குறித்தும், கால நிலை மாற்ற பிரச்சனையால் எழும் அதிபயங்கர தாக்கங்கள் குறித்தும் தொடர்ந்து அறிக்கைகள் வந்து கொண்டே இருக்கின்றன. இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக செலவிடப்பட வேண்டிய நம்முடைய சமூக வளத்தின் பெரும் பகுதியை, ஆயுதங்களை குவிக்க செலவிடுவதுடன், வெளிநாடுகளில் பதுக்கியும் வைக்கிறார்கள். ஐக்கிய நாடுகள் சபையின் 17 நிலைத்த நீண்டகால வளர்ச்சிக் குறிக்கோள்களை – பட்டினியை ஒழித்து அமைதியை நிலைநாட்டும் இலக்கினை – எட்டுவதற்கு ஆண்டுக்கு 2.5 லட்சம் கோடி டாலர்கள் செலவிட வேண்டியுள்ளது. இப்போது இந்த குறிக்கோள்களை எட்டுவதற்கு மிகச் சிறிய தொகை மட்டுமே செலவிடப்படுகிறது. பெருந்தொற்றுக் காலத்திலும், அதன் பிறகு அதிகரித்து வரும் விலைவாசி உயர்வுக் காலத்திலும், இந்த செலவினங்களில் மென்மேலும் வெட்டு ஏற்படும். நாம் இந்தக் குறிக்கோள்களை விட்டு மென்மேலும் விலகிச் செல்வோம். மானுடத்தின் மிக முக்கியமான சிக்கலான பட்டினியை ஒழிக்கும் பாதையில் நாம் நெடுந்தொலைவு செல்லவேண்டியுள்ளது. (மக்கள் சீனம் தவிர. அங்கு 2021இல் கடும் ஏழ்மை ஒழிக்கப்பட்டுவிட்டது). உலக மக்களில் 300 கோடிபேர் ஏதோ ஒரு வித பட்டினியால் அவதிப்படுவதாக கணிக்கப்படுகிறது.
விடுதலைக்கு பதிலாக ஆதிக்கம்
மானுடத்தின் இந்த சிக்கல்களை தீர்க்கும் உலகு தழுவிய ஒரு சமூக – அரசியல் திட்டத்தை உருவாக்குவதற்கு பதிலாக, அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளான ஜி7 நாடுகளும், தங்களின் உலக ஆதிக்கத்தை நீடிப்பதற்கான உத்தியை நோக்கியே செல்கின்றன. சோவியத் ஒன்றியமும், கிழக்கு ஐரோப்பிய சோசலிச நாடுகளும் வீழ்ந்த 1991 ஆம் ஆண்டுக்கு பின், மூன்றாம் உலக நாடுகள் கடன் வலையில் சிக்க வைக்கப்பட்டதில் இருந்து இந்த ஆதிக்க போக்கு தொடங்கியது. இந்த ஆதிக்கம் கால வரம்பின்றித் தொடரும் என்றும், அமெரிக்காவுக்கு எதிரான ஒரு அணியின் வரலாறு முடிந்து போனது என்றும், அமெரிக்க அறிவுஜீவிகள் மார் தட்டினார்கள். ஆனால் அமெரிக்காவும், ஜி7 நாடுகளும் “உலக பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” என்ற பெயரில் எல்லை மீறி சென்றதாலும், (குறிப்பாக சட்டவிரோதமாக ஈராக் மீது 2003இல் போர் தொடுத்தது) 2007-08இல் ஏற்பட்ட பெரும் பொருளாதார நெருக்கடியின் காரணமாகவும், அந்நாடுகளின் ஆதிக்கம் நிலை குலைய துவங்கியது.
அமெரிக்கா மற்றும் ஜி7 நாடுகளில் வறண்டு போன வங்கி அமைப்பிற்கு நிதியளிக்க இந்தியா, சீனா, இந்தோனேசியா போன்ற நாடுகளை அணுகின. அதனால், ஜி7 கூட்டமைப்பை மூடிவிட்டு, உலகளாவிய சட்ட-திட்டங்களை தீர்மானிப்பதை ஜி20 என்ற கூட்டமைப்பின் கீழ் கொண்டு வந்து, அதில் நிதி அளிக்கும் இந்த புதிய நாடுகளையும் சேர்க்க உறுதி அளித்தது. ஆனால் மேற்கத்திய வங்கிகள் மீண்டு வந்த பின்னர், ஜி20 ஒதுக்கப்பட்டு, முந்தைய ஜி 7 ஆதிக்கம் நிலைநாட்டப்பட்டது. இதர சக்திகளை எதிரியாக பார்க்காமல், மானுட சிக்கல்களை தீர்ப்பதில் கூட்டாளியாக பார்க்கலாம் என்ற முன்மொழிவை ஏற்க அமெரிக்கா மறுத்தது. இந்த கூட்டு சக்தியாக ஜி 20 அமைப்பில் பங்கு வகித்த சில நாடுகள் சேர்ந்து BRICS (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா) கூட்டமைப்பு 2009 இல் துவங்கப்பட்டது. இந்நாடுகள் ஒன்றிணைந்து, மேற்கத்திய நாடுகளால் கட்டுப்படுத்தப்படாத, ஐ.எம்.எஃப்-பின் சிக்கன அஜெண்டாவிற்கு அப்பாற்பட்ட, வளர்ச்சி திட்டங்களுக்கு வழி வகுக்கும் நிறுவன அமைப்பை ஏற்படுத்த முன் வந்தன.
BRICS கூட்டமைப்பு துவங்கப்படுவதற்கு முன், ரஷ்யாவின் விளாடிமிர் புதின் (அதுவரை பல விஷயங்களில் மேற்கத்திய நாடுகளுடன் நெருங்கி இருந்தார்) முனிச் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்று ஒரு முக்கிய உரையாற்றினார். “ஒரு துருவ உலகம் என்றால் என்ன?” என புதின் கேட்டார். “இந்த வார்த்தையை எவ்வளவு அழகு படுத்தி காட்டினாலும், அதன் அர்த்தம் ஒரே அதிகார புள்ளி, ஒரே ஒரு ஆதிக்க மையம் மற்றும் ஒற்றை ஆண்டான்” என்பதுதான். அந்த ஒற்றை அதிகார புள்ளி என்பது அமெரிக்காவையே குறிக்கிறது என்று அனைவரும் அறிந்திருந்தனர். மேற்கத்திய நாடுகளின் “சர்வதேச உறவுகளில் அதீதமாக பயன்படுத்தப்படும் கட்டுக்கடங்காத தாக்குதல் ” குறித்து புதின் கடுமையாக விமர்சித்தார். மேலும் “சர்வதேச சட்டம்” மேற்கத்திய நாடுகளை அவை மேற்கொள்ளும் போர் குற்றங்களிலிருந்து பாதுகாப்பதை குறிப்பிட்டார். “யாரும் பாதுகாப்பாக உணர்வதில்லை. ஏனெனில் யாரும் சர்வதேச சட்டம் தங்களை பாதுக்காக்கும் அரண் என்பதாக உணரவில்லை. இப்படிப்பட்ட சூழல் ஆயுத குவியலை ஊக்குவிப்பதில் ஆச்சரியம் இல்லை”. அமெரிக்கா ஐரோப்பாவை சுற்றி ஏவுகணை வளையத்தை உருவாக்குவதை நிறுத்திவிட்டு, 2002இல் அது கைவிட்டுவிட்ட “அணு ஆயுத ஏவுகணைக்கு எதிரான ஒப்பந்த”-த்திற்கு திரும்பிச் செல்ல வேண்டும் என புதின் குறிப்பிட்டார். அன்றைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் இந்த முன்மொழிவை ஏற்க மறுத்தார்.
அச்சுறுத்தல்கள்
21ஆம் நூற்றாண்டில் தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்ட அமெரிக்காவும் அதன் ஆதரவு நாடுகளும் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டனர். லிபியாவின் மீது 2011 ஆம் ஆண்டு நேட்டோ முன்னெடுத்த தாக்குதல் மேற்கத்திய நாடுகள் தம் ஆதிக்கத்தை நிலைநாட்ட எடுத்த முன்னெடுப்புகளுக்கான குறியீடாக அமைந்தது. இதுவே தெற்கு சீன கடல் பகுதி முதல் கரீபிய கடல் பகுதி வரை உலகளாவிய நேட்டோ ஆதிக்கம் தொடர்பான வாதங்களுக்கு முன்னோட்டமாக அமைந்தது. 30 நாடுகள் மீதான பொருளாதார தடை விதிப்பு மூலம் அமெரிக்காவையும், அதன் கூட்டாளி நாடுகளையும் எதிர்ப்பவர்களை ஒழுங்கு படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இது மட்டுமல்லாமல் ஐ.எம்.எஃப் அமைப்பின் புதுப்பிக்கப்பட்ட சிக்கன திட்டத்தின் காரணமாக, பல ஏழை நாடுகள் கொரோனா காலத்தில் கூட, தங்களுக்கு கடன் கொடுத்த செல்வச் செழிப்பு மிக்கவர்களுக்கு வழங்க வேண்டியிருந்த பணம், தங்கள் நாட்டு மக்களை காக்க சுகாதாரத்திற்கு மேற்கொண்ட செலவினை விடவும் அதிகம்.
2018இல் “தீவிரவாதத்திற்கு எதிரான போர்” நிறைவுற்றதாக அமெரிக்கா அறிவித்தது, அதன் தேச பாதுகாப்பு உத்தியில், சீனாவும் ரஷ்யாவும் அடைந்துவரும் எழுச்சியே மிகப்பெரும் ஆபத்தாக குறிப்பிட்டது. அமெரிக்கா பாதுகாப்பு செயலாளர் ஜிம் மாட்டிஸ் அமெரிக்காவை “நெருங்கி வரும் எதிரி நாடுகளை” கட்டுப்படுத்துவது என்று வெளிப்படையாகவே பேசினார். சீனா மற்றும் ரஷ்யாவை இவ்வாறு தம் எதிரி நாடுகளாக குறிப்பிட்ட அவர், அமெரிக்காவின் மொத்த ஆதிக்கத்தையும் பயன்படுத்தி இந்நாடுகளை அடிபணிய வைப்பது என்று பேசினார். ஐரோப்பா மற்றும் ஆசியாவை சுற்றி அமெரிக்காவின் பல ராணுவ தளங்கள் (மொத்தம் 800) உள்ளதோடு, ஜெர்மனி முதல் ஜப்பான் வரை ரஷ்யா மற்றும் சீனாவை முன் நின்று தாக்கும் பல கூட்டாளி நாடுகளை அமெரிக்கா கொண்டிருக்கிறது. அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளி நாடுகளின் கடற்படைகள், “பயணிப்பதற்கான சுதந்திரம்” என்ற பெயரில் ரஷ்யா (ஆர்டிக் பகுதி) மற்றும் சீனாவிற்கு (தெற்கு சீன கடல் பகுதி) எதிராக மிக அச்சுறுத்தலான படைப் பயிற்சிகளில் ஈடுபட்டன. இப்படிப்பட்ட செயல்பாடுகளோடு, 2014 ஆம் ஆண்டில் அமெரிக்கா உக்ரைன் நாட்டின் அரசியலில் தலையிட்டதும், 2015இல் தைவானிற்கு பெருமளவு ஆயுதங்கள் அளித்ததும், ரஷ்யாவையும், சீனாவையும் மேலும் மிரட்டுவதாக அமைந்தது. மேலும் 2018இல் அமெரிக்கா தன்னிச்சையாக “இடைநிலை தூர அணு-ஆயுத சக்திகள்” ஒப்பந்தத்திலிருந்து விலகியதன் காரணமாக, சர்வதேச அணு-ஆயுத கட்டுப்பாட்டு கட்டமைப்பை நலியச் செய்தது. ரஷ்யாவுக்கும், சீனாவுக்கும் எதிரான போர்க்கள அணு ஆயுத உத்தியை அமெரிக்கா வகுத்துவருகிறது என்பதுதான் இந்த பின்வாங்கலின் வெளிப்பாடு.
அமெரிக்காவின் தேச பாதுகாப்பு உக்தியில் சீனாவையும், ரஷ்யாவையும் கட்டுப்படுத்துவது பற்றி குறிப்பிட்டிருப்பதும், “இடைநிலை தூர அணு-ஆயுத சக்திகள்” ஒப்பந்தத்திலிருந்து விலகியதும், ரஷ்யாவுக்கும், சீனாவுக்கும் அமெரிக்காவால் உள்ள அச்சுறுத்தல் கற்பனையானது அல்ல என்பதை தெளிவாக்குகிறது. இதுவரை, ஆசிய பகுதியில் அமெரிக்காவின் நட்பு நாடுகளான தென் கொரியாவும், ஆஸ்திரேலியாவும் இடைநிலை தூர அணு-ஆயுதங்களை அனுமதிக்க தயாராக இல்லை. ஆனால் குவாம் மற்றும் ஒக்கினாவா-வில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களில் ஆயுதங்களை குவிக்க வாய்ப்பு உண்டு. பல ஆண்டுகளாக இவ்வாறு கட்டமைக்கப்பட்டு வரும் அமெரிக்க அச்சுறுத்தலை ரஷ்யா உணர்ந்ததன் விளைவாகவே உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை முன்னெடுக்கிறது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர்ந்தாலும், இல்லாவிட்டாலும் அமெரிக்கா உக்ரேனில் அணு ஆயுதங்களை குவிக்க வாய்ப்பு உள்ளது என்ற கவலை எழுந்துள்ளது.
உக்ரைனில் நடந்துவரும் போர் பற்றிய வாதங்களுக்கு பின் ஒரு முக்கியமான கேள்வி உள்ளது: இயற்கையாகவே யூரேசியா (ஆசிய-கிழக்கு ஐரோப்பிய) நாடுகள் நெருங்கி வரும் போக்கை அமெரிக்காவும் அதன் ஆதரவு நாடுகளும் அனுமதிக்குமா? இல்லையேல் இதை தடுக்க ஐரோப்பிய மற்றும் சில ஆசிய நாடுகளில் தலையிடும் முயற்சிகளை தொடருமா? ஐரோப்பிய நாடுகளை ஆங்கிலேய-அமெரிக்க-ஆர்டிக் கூட்டமைப்பினுள் கொண்டு வந்து, ஐரோப்பிய-ஆசிய நாடுகள் இணைப்பை, குறிப்பாக ரஷ்யா மற்றும் சீனா உடனான இணைப்பை தடுக்கும் அமெரிக்காவின் முயற்சியும் உக்ரைன் மீதான போரில் ஒரு பங்கு ஆற்றியுள்ளது என்பதை நிராகரிக்கவே முடியாது.
இந்த நிலையில் மானுடத்தின் மிக முக்கிய சிக்கல்கள் கண்டுகொள்ளப் படாமல் போகின்றன. பட்டினியும் போர்களும் பூமியை வாட்டுகின்றன. அன்றாட வாழ்வின் நிதர்சன பிரச்சனைகளை தீர்ப்பதற்காகச் செல்ல வேண்டிய சமூக வளங்களோ, ராணுவ ஆதிக்கத்திலும் போர்களிலும் வீணடிக்கப் படுகின்றன.
முக்கண்ட சமூக ஆய்வுக் கழகத்தின் செயல் இயக்குனரும்,லெஃப்ட்வேர்ட் பதிப்பகத்தின் ஆசிரியருமான விஜய் பிரசாத் எழுதிய ‘வாஷிங்டன் தோட்டாக்கள்’ என்ற புத்தகம், அமெரிக்கா எப்படி ‘ஏகாதிபத்தியமாக’ தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது என்பதை விளக்குகிறது. ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்த புத்தகத்தை பேராசிரியர் பொன்ராஜ் தமிழில் கொடுத்துள்ளார்.
‘புரட்சியை கட்டமைக்கிற இடதுசாரிகளின் சொற்களை கொண்டதாகவும், அதனை அடக்குகிற அரசு ஆவணங்களை அடிப்படையாக கொண்டும்’ எழுதப்பட்டிருக்கும் இந்த நூல், விஜய் பிரசாத் அவர்களுடைய பல ஆண்டு பணிகளின் விளைவாகும். இந்த நூலில் விவரிக்கப்பட்டிருக்கும் பல சதி வேலைகள், அந்த வேலைகளை கருவியாக இருந்து முன்னெடுத்த ‘உளவாளிகளுடனான’ நேர்காணல்களில் இருந்தும் பெறப்பட்டுள்ளன. ஏராளமான அரசு ஆவணங்களில் இருந்து விபரங்கள் திரட்டப்பட்டுள்ளன. இருப்பினும், ரத்தினச் சுருக்கமாகவும், புரிந்துகொள்ள எளிதான மொழியிலும் எழுதியிருக்கிறார்.
இந்த புத்தகம் 3 பகுதிகளைக் கொண்டுள்ளது. இரண்டாம் உலகப் போருக்கு முன் நிலவிய காலனி ஆதிக்க சூழலும், பிறகு அமெரிக்கா உலகின் முதன்மை சக்தியாக ஆனதுடன், அமெரிக்காவை மையமாக கொண்டு, பழைய ஏகாதிபத்திய நாடுகளை தனது ஆரமாக மாற்றிக் கொண்டது எப்படி?. அந்த ஆபத்தான சக்கரங்கள், உலகம் முழுவதும் பறந்து, மக்களின் இயல்பான விடுதலை வேட்கையினை சிதைக்கும் வழிமுறைகள் என்னென்ன?. சோவியத் ஒன்றியம் சிதைந்ததற்கு பிறகு இந்த உத்திகள் ‘கலப்பு யுத்தம்’ என்ற வடிவத்தை கூடுதலாக மேற்கொண்டது எப்படி? என்பதையும் இந்த நூல் விளக்குகிறது.
2021 ஆம் ஆண்டின் மத்தியில் பெண்டகன் வெளியிட்ட விபரங்களின்படி, உலகின் 80 நாடுகளில், 750 ராணுவத் தளங்களை அமெரிக்கா வைத்துள்ளது.ஆனால் உண்மையில் சிறிதும், பெரிதுமாக ராணுவம் நிலை கொண்டிருக்கும் நாடுகளின் எண்ணிக்கை 183 ஆகும். கண்களுக்கு முன் எந்த எதிரியும் தென்படாத நிலையில், உலகம் முழுவதும் அவர்கள் யாரை எதிர்த்து போர் செய்கிறார்கள்?
அமெரிக்காவின் ராணுவ தளங்களை அதிக எண்ணிக்கையில் கொண்டிருக்கும் நாடுகளில் ஒன்று, ஜப்பான். ஜப்பான் நாட்டின் ஒக்கினாவா தீவில் அமையப்பெற்ற ராணுவ தளங்கள், பெண்கள் மீதான வன்முறையின் மையமாக இருக்கின்றன. அந்த தளங்களுக்கு எதிராக மக்களின் கோபம் குவிந்தது. இப்பிரச்சனை பேசிய ஹடோயாமா புகியோகத், 2009ஆம் ஆண்டு தேர்தலில் பெரும் வெற்றி பெற்றார். பிறகு அவர் அமெரிக்காவின் ராணுவ தளங்களுக்கு எதிரான கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்தார்.
அதன் பின்னர், ஒபாமாவின் நிர்வாகம் ஜப்பானிடம் மிகக் கடுமையாக நடந்துகொண்டது. சில ஆண்டுகளில் ஹடோயாமா புகியோகத் தனது கட்சியாலேயே தனிமைப்படுத்தப்பட்டார்.
கேள்விகளுக்கு அப்பாற்பட்ட இந்த அதிகாரம் எப்படி நிறுவப்பட்டது? எவ்வாறு நிர்வகிக்கப்படுகிறது? உலக மக்களின் மிக இயல்பான, ஜனநாயக விருப்பங்களை அது எப்படி நசுக்கி அழிக்கிறது என்பதைத்தான் இந்த நூல் ஏராளமான உதாரணங்களின் வழியாக விளக்குகிறது.
அமெரிக்காவின் பிறப்பு
அமெரிக்கா எப்படி உருவாக்கப்பட்டது என்பதில் இருந்துதான் அதன் அதிகாரம் தொடங்குகிறது. 1776 ஆம் ஆண்டில் நடந்த அமெரிக்க புரட்சியை, விஜய் பிரசாத் விளக்குகிறார். “முதலில் அது ஒரு புரட்சியா” என கேள்வி எழுப்பும் அவர். “அதில் வர்க்கப் போராட்டம் எதுவும் இல்லை. புரட்சிகர நடவடிக்கை என்ற வரையறைக்கு உட்பட்ட தொழிலாளர் இயக்கம் எதுவும் மக்களிடமிருந்து எழவில்லை. அந்த போராட்டத்தில் பல்வேறு தரப்பட்ட மக்களின் சமூக ஒற்றுமை வெளிப்படவில்லை. மாறாக பூர்வ குடி மக்களை இனப்படுகொலை செய்யும் உணர்வு இருந்தது. அடிமையாக்கப்பட்ட ஆப்பிரிக்கர்களின் கலகம் பற்றிய பெரும் அச்சம் இருந்தது.”
ஆம்!. அமெரிக்கா பிறந்த போதே அது தனது காலனி ஆதிக்கத்தை உறுதி செய்துகொள்ளும் பூர்வகுடி மக்கள் மீதான தாக்குதலையும், அண்டை நாடுகளின் மீதான ஆக்கிரமிப்பையும் நடத்தி முடித்திருந்தது.இரண்டாம் உலகப்போர் நடந்து முடிந்த பின்னர், உலகின் யதார்த்தங்கள் மாறியிருந்தன. அதனை ஏற்க மறுத்த இங்கிலாந்தும் ஃபிரான்சும் தங்களுடைய பிரதான இடத்தை மீண்டும் அடைந்துவிட முடியும் என்று நம்பினார்கள்.
அல்ஜீரியா முதல் மலாயா வரை, வியட்நாம் முதல் கயானாவரை அவர்கள் காலனி ஆதிக்க போர்களை முன்னெடுத்தார்கள். ஆனால் அவை தேசிய எழுச்சிகளை எதிர்கொள்ள முடியாமல் பலவீனமடைந்தன. 1956 ஆம் ஆண்டில் சூயஸ் கால்வாய் மீதான தங்கள் அதிகாரத்தை உறுதிப்படுத்த, இஸ்ரேலின் உதவியோடு பல தந்திரங்களை முன்னெடுத்தார்கள், ஆனால் அவை தோல்வியில் முடிந்தன.
சோசலிச முகாமாக அமைந்த சோவியத் ஒன்றியமும் தனது தொழில் தளங்களை இழந்திருந்தது. அந்த நாட்டில் 52 ஆயிரம் தொழில் நிறுவனங்களின் உற்பத்தி நின்று போயிருந்தது. மூலதன பங்கு 30% வீழ்ச்சியை சந்தித்தது. 2 கோடியே 70 லட்சம் பேர்களை போர்க்களத்தில் அது இழந்திருந்தது. ஒட்டுமொத்தமாக பார்த்தால் இரண்டாம் உலகப்போரின் காரணமாக சோவியத் ஒன்றியத்தின் குடிமக்கள் தங்கள் 25 வருட வருமானத்தை, போரின் விலையாக கொடுத்திருந்தார்கள்.
அதே சமயத்தில், அமெரிக்கா மிகவும் குறைவான சேதங்களை மட்டுமே எதிர்கொண்டிருந்தது. 4 லட்சத்திற்கும் சற்று அதிகமானவர்களை போரில் இழந்திருந்தாலும், அதன் உற்பத்தி திறனும், பண்பாட்டு வளர்ச்சியும் தடைபடவில்லை. இவை அமெரிக்காவிற்கு சாதகமாக அமைந்தது. இப்படித்தான் உலகத்தின் மைய இடத்திற்கு அமெரிக்கா வந்து சேர்ந்தது.
அமெரிக்கா மையமாக இருக்கிறது. ஃபிரான்சும், இங்கிலாந்தும் இன்ன பிற நாடுகளும் ஆரங்களாக உள்ளன. 1946, 49 மற்றும் 1952 காலகட்டத்தில் ஜப்பானில் நடந்த தேர்தல்களில் அமெரிக்கா தலையிட்டது. லிபரல் கட்சிக்கும், ஜனநாயக கட்சிக்கும் இடையில் கூட்டணி உருவாக்க, அமெரிக்க ஆக்கிரமிப்பு படைகள் அரும்பாடுபட்டன. இதன் மூலம் சோசலிஸ்ட் கட்சி பின்னுக்குத் தள்ளப்பட்டது. ஜப்பான் அமெரிக்காவின் ஆரமாக ஆனது. இத்தாலியின் பிரதமர் அல்சைட் டி காஸ்பரி, பிரான்சு பிரதமர் பால் ராமடியர் ஆகிய இருவருடைய அரசிலும் கம்யூனிஸ்டுகள் தொடர்ந்து இடம்பெற்றால் அந்த நாடுகளுக்கு நிதி எதுவும் வழங்கப்படாது என்று அமெரிக்கா மிரட்டியது. 1963 முதல் 1972 வரை இதனை சாதித்திட பெரும்பணம் செலவிடப்பட்டது. பின் அந்த நாடுகளும் அமெரிக்காவிற்கு ஆரமாகின.
ஒரு மோசமான ‘சக்கர வியூகம்’ செயல்படுகிறது. அது ஏராளமான படுகொலைகளையும், அதிகாரப் பறிப்பையும் செய்துள்ளது, செய்து வருகிறது.
புதிய ஒழுங்கு
உலகப்போர் முடிந்த பின், 1944 ஆம் ஆண்டில் பிரெட்டன்வுட்ஸ் நகரில் அமெரிக்கா கூட்டிய மாநாடு, உலக அரங்கில் அதன் முதன்மை விருப்பத்தை பறைசாற்றியது. 1948 ஆம் ஆண்டில் ஐரோப்பிய பொருளாதார கூட்டுறவு அமைப்பு பிறந்தது. இதற்காக அமெரிக்கா 12 பில்லியன் டாலர்கள் கடனாக கொடுத்தது. 1949ஆம் ஆண்டில் நேட்டோ பிறப்பெடுத்தது. நேட்டோவில் அதன் உறுப்பினர்களுக்கு பங்கு எதுவும் கிடையாது. அமெரிக்காதான் அதன் விதிகளை முடிவு செய்தது.அமெரிக்க கண்ட நாடுகளின் அமைப்பு 1948ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு லத்தீன் அமெரிக்காவில், அமெரிக்காவின் செல்வாக்கை உறுதி செய்யும் விதமாக ஏற்படுத்தப்பட்டதாகும்.
இந்த அமைப்பின் முதல் கூட்டம் கொலம்பியாவில் நடைபெற்ற அதே சமயத்தில், கொலம்பியா நாட்டில் ஏழை மக்களின் விருப்பத்திற்குரிய தலைவராக இருந்த ஜார்ஜ் கெய்டான் சுட்டுக்கொல்லப்பட்டார். அதனை ஒட்டி எழுந்த மக்கள் எழுச்சி ‘கம்யூனிசமாக’ அடையாளப்படுத்தப்பட்டு, வன்முறையில் வீழ்த்தப்பட்டது. பொகாட்டாவில் நடந்த மாநாட்டின் முடிவில், கம்யூனிஸ்டுகளை ‘அழித்து ஒழிப்பது’ ஒரு சட்டமாகவே ஆக்கப்பட்டது.1954ஆம் ஆண்டில் இதே போல தெற்காசிய ஒப்பந்த அமைப்பு, மணிலா ஒப்பந்தம், 1955ஆம் ஆண்டில் மத்திய ஒப்பந்த அமைப்பு – பாக்தாத் ஒப்பந்தம் ஆகியவை ஏற்படுத்தப்பட்டன.
ஐரோப்பிய பகுதிகளில் நேட்டோ விரிவாக்கம் செய்யப்பட்டதன் மூலம் ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் மீது நிர்ப்பந்தம் செலுத்தப்பட்டது. லத்தீன் அமெரிக்காவில் நடந்த எழுச்சிகள் வீழ்த்தப்பட்டன. இவ்வாறு மாற்று அதிகாரத் தளங்கள் உருவாவதற்கான எந்த சிறு முயற்சியையும் தடுக்க அமெரிக்கா தொடர்ந்து முயன்றது.
ராணுவ கூட்டு பயிற்சிகள் என்ற பெயரால், வலுக்குறைந்த நாடுகளின் படைகள் அமெரிக்க கட்டமைப்பாக மாற்றப்பட்டன. மேலும் இந்த ராணுவங்கள், நவீன தளவாடங்களை வாங்கிச் சேர்க்கவும் வற்புறுத்தப்பட்டன. இப்போதுள்ள அமைப்பின் வலிமையைக் கொண்டு, உலகத்தின் எந்தவொரு பகுதியிலும் அமெரிக்க தாக்குதலை முன்னெடுப்பதற்கு ஒரு மணி நேர அவகாசமே தேவைப்படும்.
ஐ.நாவும், காலனிய நீக்கமும்
இரண்டாம் உலகப் போருக்கு பிறகான ஆண்டுகளில் உலகின் முதன்மையான முரண்பாடாக அமைந்தது வடக்கு – தெற்கு முரண்பாடே. அதாவது காலனி நாடுகளின் மீதான ஆதிக்கத்தை கைவிட மறுத்த ஏகாதிபத்தியத்தின் போர்களே அந்த காலகட்டத்தின் முதன்மையான முரண்பாடாக அமைந்தது என்கிறார் விஜய் பிரசாத்.
1945ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை உருவானது. உலகளாவிய சட்ட வரையறைகளுக்கும், காலனி நாடுகளின் யதார்த்த நிலைமைகளுக்கும் இடையிலான முரண்பாடுகளை தீர்ப்பதில் ஐ.நா செய்ய முடிந்தது என்ன?அது மேலை நாடுகள் மேற்கொள்ளும் வரன்முறையற்ற தலையீடுகளை சட்டப்பூர்வமாக்கியது. ஆம். சுதந்திர நாடுகளுக்குள் தலையீடு செய்யும் அதிகாரத்தை பாதுகாப்புக் குழுவின் நிரந்தர உறுப்பினர்களான ஐந்து நாடுகள் மட்டும் பெற்றார்கள்.
இந்த ஏற்பாட்டினை சோவியத் ஒன்றியம் எதிர்த்தது. ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டங்களை புறக்கணிப்பு செய்தது. இந்த புறக்கணிப்பை பயன்படுத்திக் கொண்டு, வட கொரியாவை நிலைகுலையச் செய்திடும் தலையீடுகளை வேகப்படுத்த முயன்றன ஏகாதிபத்திய நாடுகள். அதன் பின் சோவியத் ஒன்றியம் தனது புறக்கணிப்பு முடிவுகளை மாற்றிக் கொண்டது. ஐ.நா பாதுகாப்புக்குழுவில் பயன்படுத்தப்பட்ட முதல் 56 தடுப்பு அதிகாரங்கள் (வீட்டோ பவர்) சோவியத் ஒன்றியத்தினால், தேச விடுதலை இயக்கங்களை பாதுகாக்கும் நோக்கில் செய்யப்பட்டன.
ஐ.நாவின் செயல்பாடுகள் முதல் பார்வையிலேயே பாரபட்சமாக தோன்றுகின்றன. அதற்கு முன் நிலவிய ஏற்பாடுகளின் தொடர்ச்சியாகவே இதுவும் அமைந்திருப்பதை இந்த புத்தகம் விளக்குகிறது.
சுக்கா மிளகா சுதந்திரம்?
1864 ஆம் ஆண்டில் ‘ஜெனீவா மாநாடு’ நடந்தபோது, காலனி ஆதிக்க போர்களை பற்றி எதுவும் பேசப்படவில்லை. இந்தியாவிலும், ஆப்பிரிக்காவிலும், அமெரிக்காவிலும் அந்த மண்ணின் பூர்வ குடிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட கொடூர வன்முறைகளைப் பற்றி எதுவுமே பேசப்படவில்லை.1943 ஆம் ஆண்டில் ரூஸ்வெல்ட் மிக வெளிப்படையாகவே பேசினார். “காலனி ஆதிக்க அமைப்பு என்பதன் பொருள் போர்” என்ற அவர், “இந்தியா, பர்மா, ஜாவா ஆகிய நாடுகளின் வளங்களைச் சுரண்டி, அந்த நாடுகளின் வளங்களை அங்கிருந்து அகற்ற வேண்டும்” என்பதை தெளிவுபடுத்தினார் அதே சமயத்தில் “கல்வி, தரமான வாழ்நிலை மற்றும் குறைந்தபட்ச உடல்நலம் ஆகிய அடிப்படை தேவைகளை அவர்களுக்கு ஒருபோதும் கொடுத்துவிடக் கூடாது” என்று வெளிப்படையாக முன்வைத்தார்.
ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்ட பின்னரும் இனப்படுகொலைகளுக்கு முடிவு ஏற்படவில்லை. 1952 முதல் 1960 வரை கென்யாவில் இனப்படுகொலைகளை முன்னெடுத்தது இங்கிலாந்து. ‘விடுதலை விருட்சத்திற்கு என் குருதி நீராகப் பாயட்டும்’ என்று முழங்கிவிட்டு மரணித்தார் கென்ய புரட்சியாளர் கிமாதி.
1945ஆம் ஆண்டில் இந்தோ சீனாவின் விடுதலையை ஹோசிமின் அறிவித்த உடனே அப்பகுதியை கைப்பற்ற பிரெஞ்சுப் படைகள் மீண்டும் வந்தன. காலனிய நீக்கத்திற்கான உலக மக்களின் விருப்பங்கள் ஏராளமான உயிர்த் தியாகங்களைக் கொண்டே சாதிக்கப்பட்டன.
காலனி நீக்கம் ஒரு தவிர்க்க முடியாத நிகழ்வுப்போக்கு என்பதை அமெரிக்கா புரிந்து கொண்டது.மேற்கு நாடுகளில் செயல்படும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு பயன் கொடுக்கும் முதலாளித்துவ சமூக அமைப்பினை பாதுகாத்து நீடிக்கச் செய்யும் பணியை அமெரிக்கா முன்னெடுக்கும் என்பதை அவர் பிரகடனம் செய்தார். இதனை அவர்கள் மிகுந்த எச்சரிக்கையோடே மேற்கொண்டார்கள்.
“அமெரிக்கா மறைவாக, பின்னணியில் இயங்க வேண்டியது முக்கியம். அதே நேரத்தில் தேவைப்படும் இடங்களில் தளவாடங்களையும், ஆலோசனைகளையும், பயிற்சியையும் வழங்குவதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். உள்ளூர் அரசில் தலையிடும் முயற்சிகள் மீது வெறுப்பு வராமல் தலையீடு செய்வதும், காலனி ஆதிக்கம் என்ற புகார்கள் தேவையின்றி எழாமல் பார்த்துக்கொள்வதும் அமெரிக்காவுக்கு முக்கியம்” என்று சி.ஐ.ஏ துணை இயக்குனர் பிஸ்ஸல் எழுதினார். அவர்கள் உருவாக்கிய உத்திகளில் ஒன்றுதான் ‘கலப்பு யுத்தம்’.
கலப்பு யுத்தங்கள்
சீரழிவு வேலைகள், பொருளாதாரத் தடைகள், திரிக்கப்பட்ட உண்மைகளைக் கொண்ட ஊடக பிரச்சாரம், பண்பாட்டுத் தலையீடுகள் ஆகியவை உள்ளடங்கியதே ‘கலப்பு யுத்தம்’ ஆகும். சமூக மற்றும் அரசியல் தளங்களில் செயல்படும் அரசுப் பணியாளர்களையும், அரசு சாரா பணியாளர்களையும் கொண்டு, மரபு வழிமுறைகளிலும், மரபு அல்லாத வழிகளிலும் இந்த போர் முன்னெடுக்கப்படுகிறது. கருத்தியல் மேலாதிக்கம் இந்த போரின் ஒரு பகுதியாக அமைகிறது.
அமெரிக்காவும், சுயநலம் மிக்க அதன் கூட்டாளிகளும் முதலில் ஒரு நாட்டின் மீது பொருளாதார தாக்குதலை முன்னெடுக்கிறார்கள். பிறகு அந்த நாட்டு மக்களிடையே கலகங்கள் தூண்டப்படுகின்றன. ஆட்சி மாற்றங்கள் இவ்வாறு திணிக்கப்படுகின்றன.
ஒவ்வொரு நாட்டிலும், பழைய மேட்டுக்குடிகளும், நிலம்படைத்த சுய நலமிகளும் அமெரிக்காவின் ஆரங்களை வலுப்படுத்த விரும்பினார்கள். சோசலிசமும், கம்யூனிசமும் தங்களை ஓரங்கட்டிவிடும் என்று அஞ்சி நடுங்கினார்கள். அவர்களுக்கு சி.ஐ.ஏ உதவி செய்கிறது. ஆலை முதலாளிகளும், மதகுருமார்களும் துணையாக நிற்கிறார்கள்.
இந்த கலப்பு யுத்தத்தில், வங்கிகளின் பங்கு மிக முக்கியமான ஒன்றாகும். ‘தற்காலத்தில்ஆட்சிக் கவிழ்ப்புகள் இராணுவ டாங்கிகளைக் கொண்டு ஏற்படுத்தப்படும் அவசியம் கிடையாது; பல சமயங்களில் அது வங்கிகளின் வழியாகவே நடக்கிறது’ என்று கிரேக்கத்தின் வெளியுறவுத்துறை அமைச்சரின் கருத்து கச்சிதமான எடுத்தாளப்பட்டுள்ளது.
காட் ஒப்பந்தம், உலக வர்த்தக அமைப்பு, சர்வதேச நாணய நிதியம் ஆகிய அமைப்புகளும் இந்த நோக்கத்தில் பயன்படுத்தப்படுகின்றன. அவை வெறுமனே வர்த்தக ஏற்பாடுகளாக இல்லை.
சில உதாரணங்களை பார்க்கலாம்!
பெரு என்ற நாட்டில் அலைன் கார்சியா என்ற சோசலிச தலைவர் இருந்தார். அவருக்கு மக்களிடையே செல்வாக்கு இருந்தது. அவர் நிகரகுவா, சோவியத் ஒன்றியம் மற்றும் கியூபாவிற்கு ஆதரவாக பேசிவந்தார். உடனே அந்த நாட்டின் மீது ஐ.எம்.எஃப் நடவடிக்கை ஏவியது. கடன் வாய்ப்புக்கள் அத்தனையும் அடைக்கப்பட்டன. இதனால் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் அந்த நாடு சிக்கியது. கார்சியாவின் அரசியல் செல்வாக்கு சரிந்தது. அவர் பதவியிலிருந்து விலக, ஏகாதிபத்திய ஆதரவாளர்கள் அதிகாரத்தை பிடித்தார்கள்.
அப்பர் வோல்ட்டா என்ற நாட்டின் தலைவராக தாமஸ் சங்கரா என்ற இளைஞர் பதவிக்கு வந்தார். தங்கள் நாட்டின் பெயரை ‘நேர்மையான மனிதர்களின் நாடு’ என்று (பர்கினோ பாசோ) மாற்றினார். அப்போது அந்த நாட்டின் மீது ஐ.எம்.எப் கடன் வலை மிக மோசமான நெருக்கடிகளை உருவாக்கியிருந்தது. இந்த கடன்களுக்கு எதிரான ஆப்ரிக்க நாடுகளின் ஒன்றுபட்ட அமைப்பை உருவாக்க முயன்றார். ஏகாதிபத்தியம் அவருக்கு எதிராக குண்டுகளை குறிபார்த்தது. சங்கரா கொல்லப்பட்டார்.
ஏழ்மைப்படுத்தப்பட்ட நாடான குவாதேமாலாவில், ஜனநாயக விருப்பங்களைக் கொண்ட, ஜாக்கப் அர்பென்ஸ் ஆட்சிக்கு வந்தார். அந்த நாட்டின் வளமான நிலங்கள் அமெரிக்காவின் யுனைடெட் ஃபுரூட்ஸ் என்ற நிறுவனத்தின் வசம் இருந்தன. அந்த நிலங்களில் ஒரு பகுதியை எடுத்து, மக்களுக்கு வழங்கும் உறுதியோடு அவர் இருந்தார். நிறுவனத்தின் வசம் இருந்த 2 லட்சம் ஏக்கர் நிலங்களை அவர் கையகப்படுத்தினார். உடனே அர்பென்ஸ் ஆட்சிக்கு எதிராக சி.ஐ.ஏ. களத்தில் குதித்தது.
1990, ஈராக் மீது ஐநா சபை விதித்த தடைகளினால் 5 லட்சத்து 67 ஆயிரம் குழந்தைகள் மரணமடைந்தார்கள். அணுகுண்டு வீச்சால் இறந்த குழந்தைகளை விடவும் அதிகமான எண்ணிக்கை இது. ஆனால் இந்த விலை அவசியமானது என்று அமெரிக்கா தயக்கமின்றி முன்வைத்தது.
உலகமயத்தை ஒழுங்காற்றும் விதிகள் அனைத்தையுமே அமெரிக்கா உருவாக்கியது, அமெரிக்க டாலர் அதன் மைய செலாவணியாக இருந்தது. அமெரிக்க மேலாதிக்கம் கொண்ட ‘சர்வதேச நாணய நிதியம்’ (ஐஎம்எஃப்) மற்றும் அமெரிக்க தரவரிசை முகமைகள் உலக நாடுகளின் பொருளாதார வலிமையை மதிப்பீடு செய்யும் நிறுவனங்களாக ஆகின. நாடுகளுக்கிடையில் பண வர்த்தகத்தை மேற்கொள்ளும் சேவை நிறுவனமான ‘ஸ்விஃப்ட்’ என்ற ஐரோப்பிய நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்த அனைத்து ஏற்பாடுகளும், அமெரிக்காவின் விதிகளுக்கு இணங்காத நாடுகளின் மீது தாக்குதல் தொடுப்பதற்காக பயன்படுத்தப்படுகின்றன.
அரசு சாரா அமைப்புகள்
சர்வதேச நாணய நிதியம் செய்கிற வற்புறுத்தல்களுக்கு கட்டுப்பட்டு பல நாடுகளும் தங்கள் மக்கள் நலத்திட்டங்களை சுருக்கிக் கொள்கிறார்கள். அப்போது உருவாகும் சூழலை பயன்படுத்தி என்.ஜி.ஓ (அரசு சாரா அமைப்புகள்) செயல்பாடுகள் தொடங்குகின்றன. இந்த அமைப்புகளும் ஏகாதிபத்திய திட்டத்தின் ஒரு பகுதியாக அமைகின்றன. அவர்கள் அரசுகளை சாராதவர்கள். ஆனால் தங்களுக்கு நிதி கொடுக்கும் ஏற்பாடுகளைச் சார்ந்தவர்கள். என்.ஜி.ஓ அமைப்புகளுக்கான நிதி அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிடமிருந்தே வருகின்றன.
என்.ஜி.ஓ அமைப்புகளின் ஏகாதிபத்திய ஆதரவு செயல்பாடுகளின் உதாரணத்தை உணர்த்த, ஹெய்ட்டி என்ற நாட்டின் 200 ஆண்டுகால வரலாறு இந்த நூலில் சுருக்கமாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. பொருளாதார தடைகள் ஏற்படுத்தும் கொடூரமான விளைவுகளையும், உயிர் காக்கும் சிகிச்சைகளைக் கூட பெற முடியாத ஆபத்தான நிலைமையையும் புரிந்துகொள்ள ஈரான் பற்றிய விவரிப்புகள் உதவுகின்றன.
பிரேசில் நாட்டில் ‘பசிஅழிப்புத்திட்டம்’ கொண்டுவந்த உலகப் புகழ்பெற்ற தலைவரான லூலாவிற்கு 86% மக்கள் ஆதரவு இருந்தது. ஆனால், அந்த நாட்டிலும் அமெரிக்க வல்லூறு நுழைந்தது. லூலாவிற்கு எதிராகஅந்த நாட்டின் ‘சட்டமே’ ஒரு கருவியாகப் பயன்படுத்தப் பட்டது.
அதே சமயத்தில், இந்தக் கலப்பு யுத்தங்கள் மக்கள் சக்தியினால் முறியடிக்கப்பட்ட உதாரணங்களையும் பார்க்கிறோம். வெனிசுவேலா என்ற நாட்டில் மதுரோவின் அரசுக்கு எதிராக அமெரிக்க ஆதரவுடன் ஒரு முற்றுகை முன்னெடுக்கப்பட்டது. இந்த முற்றுகையை மக்கள் ஆதரவே முறியடித்தது.
பொலீவியா நாட்டில், ஈவோ மொரேல்ஸ் ஆய்மா ஆட்சிக்கு வந்தார். பொலிவிய குடியரசின் வரலாற்றில், உள்ளூர் இனக்குழுவைச் சேர்ந்த முதல் ஆட்சியாளர் ஈவோதான். அவருடைய இயக்கத்தின் பெயர் ‘சோசலிசத்திற்கானஇயக்கம்’. இயற்கை வளங்களை வரன்முறையற்று சுரண்டும் சக்திகளுக்கு எதிராக அவர் உறுதி காட்டினார். அவருடைய முன்னெடுப்புகள் மக்களிடையே ஆதரவினை விரிவாக்கின. அவருக்கு எதிரான சதிகள் மக்கள் சக்தியின் மூலம் முறியடிக்கப்பட்டன.
ஆதிக்கத்தின் செயல் திட்டம்
‘கிரெனெடா’ ஒரு லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட நாடு.அந்த நாட்டின் மக்கள் ‘புதியஅணிகலன்இயக்கத்தின்’ மூலமாக, தங்கள் நாட்டுக்கு ஏற்ற சோசலிச அமைப்பை உருவாக்க முயன்றது. 1983ஆம் ஆண்டில் அமெரிக்க படையெடுப்பினால் நசுக்கப்பட்டது.
இப்படி எந்தவொரு நாட்டிலும், உழைப்பாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் அதிகாரம் கிடைக்கும் சூழல் ஏற்படுமானால் ஏகாதிபத்தியம் அதற்கு எதிராக களத்தில் இறங்குகிறது. ஏகாதிபத்தியத்தின் ஆணைகளை மறுப்பதற்கு ஏதாவதொரு நாடு முயற்சி செய்யும் என்றால், அங்கே தலையீடுகள் செய்யப்படுகின்றன. தேர்தல்களில் தலையீடு அல்லது ஆட்சிக் கவிழ்ப்பு நடத்தப்படுகிறது.
அந்த நடைமுறைகளை விஜய் பிரசாத் விரிவாக விளக்கியுள்ளார். செயல் திட்டம் இதுதான்.
பொதுக் கருத்தை உருவாக்குதல் – உண்மைக்கு மாறான, அச்சமூட்டும் கதைகளை செய்திகளாக திரித்து பரப்புதல்.
ஆட்சிக் கவிழ்ப்பின் திறமை வாய்ந்த உளவாளியை களத்தில் இறக்குதல்.
கூலிப்படை, ராணுவத்தை தயார் செய்தல்
பொருளாதார வாய்ப்புகளை முடக்கி முற்றுகையிடுவது
பிற நாடுகளிடம் இருந்து துண்டித்தல்
பெருந்திரள் போராட்டங்களை ‘உருவாக்குதல்’
அமெரிக்காவின் பங்கை மறுத்தல் (அச்சத்தை பரவவிடல்)
மறக்கச் செய்தல்
முற்போக்கான குருமார்களை கொலை செய்தல்
பல நாடுகளிலும் பரிசோதிக்கப்பட்ட மேலே குறிப்பிட்ட வழிமுறைகளை படிக்கும்போது, இந்தியாவில் நடக்கும் பல்வேறு மாற்றங்களையும் கூட நம்மால் ஒப்பிட்டு பார்க்க முடிகிறது. உண்மையில், பாசிச – நாஜி சக்திகளோடு கைகோர்ப்பதில் அமெரிக்காவிற்கு எந்த வெட்கமும் இருக்கவில்லை என்பதை இந்த புத்தகம் ஆதாரத்துடன் விளக்குகிறது.
மேலும், இஸ்லாமை மையப்படுத்தி, கம்யூனிச வெறுப்பினை கட்டமைப்பதற்காக ‘ஹாஜி யூசுப் சங்’முன்வைத்த திட்டம் இந்த நூலில் உள்ளது.
இஸ்லாமிய பண்பாட்டு சங்கம் ஒன்றை தொடங்கி, சீனா மற்றும் மத்திய கிழக்கு இஸ்லாமியத்தோடும், உலகம் முழுவதும் தொடர்புகளை அதிகமாக்க வேண்டும்.
அமெரிக்கர்களையும், இஸ்லாமியர்களையும் கம்யூனிசத்திற்கு எதிராக திரட்டும் விதமான பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டும்.
அந்த அமைப்புகளுக்கு சீனா அல்லது பிற இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர்களே தலைவர்களாக இருக்க வேண்டும். அமெரிக்காவின் பின்புலம் மறைவாகவே இருக்க வேண்டும்.
இதுதான் அவர் அனுப்பிய ஆவணத்தின் சாரமாக அமைந்த கருத்துக்கள்.
இந்த திட்டம் அரேபிய மன்னர்களாலும், சி.ஐ.ஏ.வினாலும் 1951ஆம் ஆண்டின் பிற்பகுதியில் முன்னெடுக்கப்பட்டதை புத்தகத்தின் மூலம் விரிவாக அறிந்துகொள்கிறோம்.
கியூபாவில் எழுந்த நம்பிக்கை
எத்தனை அதிகாரம் மிக்கதாக இருந்தாலும், மக்கள் சக்தியின் துணையைக் கொண்டு ஏகாதிபத்தியத்தை முறியடிக்க முடியும் என்ற நம்பிக்கையை வழங்கும் ஊற்றாக இருப்பது கியூபாவே ஆகும். கியூப நாடு தனது நாட்டு மக்களின் விடுதலையை சாதித்ததுடன் போராட்டத்தை முடித்துக்கொள்ளவில்லை. எப்போதும் அது உலக மக்களுடன் தனது பிணைப்பை வலுப்படுத்திக் கொண்டுள்ளது.
1966 ஆம் ஆண்டில், தேச விடுதலை இயக்கங்களை, ஃபிடல் காஸ்ட்ரோ ஹவானாவிற்கு அழைத்தார். முக்கண்ட மாநாட்டில், “காலனி உலகெங்கிலும் புரட்சிகர விடுதலைப் போர்களுக்கான ஆதரவையும் ஒத்துழைப்பையும் இந்த அமைப்பு வழங்கிடும். விடுதலை இயக்கங்கள் எங்கே நடைபெற்றாலும் அவை அனைத்திற்கும் கியூப அரசும், மக்களும் தங்கள் சக்திக்கு உட்பட்டு பொருள் உதவியையும், அனைத்து உதவிகளையும் வழங்கிடும்’ என காஸ்ட்ரோ அறிவித்தார்.
இந்த மாநாட்டுக்கான அவசியம், அதற்கு முந்தைய ஆண்டுகளில் தொடங்கிய வன்முறை தாக்குதல்களில் இருந்து எழுந்தது.
1960 களிலும், 1970 களிலும் நடந்த விடுதலை போராட்டங்களுக்கு எதிராக கொடூர வன்முறையை ஏகாதிபத்தியம் முன்னெடுத்தது. மலாய அவசர நிலை (1948-1960), கென்ய அவசர நிலை (1952), அல்ஜீரியா மீது ஃபிரெஞ்சு போர் (1954-1962), வியட்நாம் மீதான ஃபிரெஞ்சு போர் (1946-1954), அமெரிக்கா – வியட்நாம் போர் (1954-1975), கியூபா மீதான அமெரிக்க படையெடுப்பு (1961), காங்கோவில் பேட்ரிஸ் லுமூம்பாவின் படுகொலை (1961), குவட்டமாலா மீது படையெடுப்பு (1954), டொமினியன் குடியரசு மீது அமெரிக்க படையெடுப்பு (1965), இந்தோனேசியாவில் கம்யூனிஸ்டுகள் மீதான இனப்படுகொலை (1965) என அடுத்தடுத்து முன்னெடுக்கப்பட்ட ஆதிக்க வன்முறைகளும், கொத்துக்கொத்தான மரணங்களுமே திரிகண்ட மாநாட்டில் கூடிய விடுதலைப் படைகளின் உத்திகளை வடிவமைத்தன. வன்முறை அவர்கள் மீது திணிக்கப்பட்டது.
1979 டிசம்பர் 31 ஆம் தேதி என்ற மலைமுகட்டின் மேல் நின்று அதற்கு முந்தைய 10 ஆண்டுகளில் உலகில் நடைபெற்ற அரசியல் மாற்றங்களை நமக்கு எடுத்துக் காட்டுகிறார் விஜய் பிரசாத். காலனி ஆதிக்கங்களில் இருந்து அங்கோபா, கேபோ வெர்டே, கினியா பிசாவ் மற்றும் மொசாம்பி ஆகிய நாடுகள் போர்த்துகீசியர்களுக்கு எதிராகப் போராடி வெற்றி பெற்றன. ரொடீசியாவில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் வலுவடைந்தன. 1980ஆம் ஆண்டில் ஜிம்பாவே விடுதலை பெற்றது. வியட்நாம் போர் 1975ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்தது. ஆனால் அந்த நாட்டின் நிலம் வேதியல் குண்டு வீச்சுகளினால் நச்சுத் தன்மை அடைந்திருந்தது. ஆப்கானிஸ்தான், நிகரகுவா மற்றும் கிரனடா ஆகிய மூன்று ஏழை நாடுகளில் புரட்சிகள் நடந்தன. ஆனால் அவை நிலைப்பெற்றிடும் முன்பாக முறியடிக்கப்பட்டன. வங்க தேசத்திலும், சாட், பாகிஸ்தான், ஈராக், தென் கொரியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் ஆட்சிகள் கவிழ்க்கப்பட்டன. இந்த எல்லா இடங்களிலும் அமெரிக்காவின் கொடும் கரங்கள் இருந்தன.
1946 – 1949 ஆண்டுகளில் கிரேக்க நாட்டில் பாசிஸ்டுகள் இடதுசாரிகளை ஒடுக்கினார்கள். இந்த அழித்தொழிப்பினை அமெரிக்கா தனது ஊடகங்களின் பலத்தைக் கொண்டு மறைத்தது. இந்தோனேசியாவில் இடதுசாரிகளும், இடதுசாரி ஆதரவாளர்களும் 1965 ஆம் ஆண்டில் தொடங்கி பெரும் எண்ணிக்கையில் கொல்லப்பட்டார்கள். ஆம். இந்த இன அழிப்பில் 10 லட்சம் பேர் கொல்லப்பட்டார்கள். இந்த காலகட்டம் தொடர்பான ஆவணங்களை முழுமையாக வெளியிட அமெரிக்கா மறுப்பு தெரிவிக்கிறது. இருப்பினும், ஜகார்த்தாவில் இருந்த அமெரிக்க தூதரகத்திற்கு நடப்பவை தெரிந்தே இருந்தன என்பதை இந்த நூல் எடுத்துக்காட்டுகிறது.
குவாடேமலாவிலோ அல்லது இந்தோனேசியாவிலோ அல்லது தெற்கு வியட்நாமில் செயல்படுத்தப்பட்ட ஃபீனிக்ஸ் முன்னெடுப்புகளோ, இடதுசாரிகளை அழித்தொழிப்பதற்கு உள்ளூர் சுயநல சக்திகளையும், ராணுவ கூட்டாளிகளையும் அமெரிக்காவே தூண்டியது.
உலகம் தழுவிய வர்க்கப்போர்
ஆம்!. நடந்துகொண்டிருப்பது தெள்ளத் தெளிவாகவே ஒரு வர்க்கப் போர் தான். உலகம் முழுவதுமே அது உழைக்கும் மக்களுக்கு எதிராக தனது துப்பாக்கியை நீட்டிக் கொண்டுள்ளது. உலகம் முழுவதும் நடக்கும் கனிம வளச் சுரண்டல்களை எதிர்த்து போரிடும் மக்களை போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு ஆகிய பெயர்களில் முத்திரையிடுவதன் மூலம் தங்கள் சுரண்டலுக்கு எவ்வித ஆபத்தும் இல்லாமல் தடுத்துக் கொள்கிறார்கள்.
மன்னர்கள், தங்கள் விருப்பப்படி எதையும் செய்துகொள்வதற்கான ‘புனித உரிமையை’ கடவுள் வழங்கியிருப்பதாக பழங்கால கோட்பாடு ஒன்று உண்டு. அப்படிப்பட்ட ‘புனித உரிமை’ கொண்டிருப்பவர்களாகவே ஏகாதிபத்தியம் தன்னை கருதிக் கொண்டு இயங்குகிறது என்பதை ‘வாசிங்டன் தோட்டாக்கள்’ விளக்குகிறது.அவர்களுடைய தாரக மந்திரம் இதுதான்,‘கம்யூனிசத்தைக் காட்டிலும் பிற்போக்குத்தனம் சிறந்தது.’
சில விமர்சனங்கள்
கடும் உழைப்பின் பலனாக வெளிவந்திருக்கும் இந்த நூல் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தின் அவசியத்தை விளக்குகிறது. அதே சமயத்தில், வீழ்த்தப்பட்ட புரட்சிகளின் கதையையே மையப்படுத்தி இருப்பது ஒரு குறையாகும். இந்தியா போன்ற நாடுகளிலும் ஏகாதிபத்திய திட்டங்கள் செயல்படுவதை இந்த நூலின் ஒரு பகுதியாக கொண்டுவந்திருக்க வேண்டும். அது இந்திய வாசகர்களுக்கு நூலை கூடுதலாக நெருக்கமாக்கியிருக்கும். சோசலிச சக்திகளின் தவிர்க்க முடியாத பாத்திரத்தை விளக்கும் இந்த நூலில் அதற்கென தனியாக ஒரு பகுதி இல்லாததும், கட்டுரையாளரின் பார்வையில் குறைகளாக படுகின்றன. இவ்வளவு சிறப்பான நூலை நமக்கு கொடுத்திருக்கும் விஜய் பிரசாத் பாராட்டுக்குரியவர். தமிழில் அதன் பொருள் குன்றாமல் நமக்கு அளித்துள்ள மொழிபெயர்ப்பாளர் பணியும், பாரதி புத்தகாலயத்தின் பணியும் பாராட்டுக்குரியது.
(டிரைகாண்டினெண்டல் இணைய இதழிற்காக விஜய் பிரசாத் தயாரித்த ஆவணப் பதிவின் சுருக்கம், தமிழில் – சிந்தன்)
2020, அக்டோபர் 17 அன்று, இந்திய கம்யூனிச இயக்கம், தனது நூறாண்டு வரலாற்றை நிறைவுசெய்கிறது. ஒடுக்குமுறைகளுக்கும், கொடுங்கோன்மைக்கும், சுரண்டலுக்கும் எதிராக தீரம்மிக்க போராட்டங்களை முன்னெடுத்துள்ள கம்யூனிஸ்டுகள் என்ன சாதித்திருக்கிறார்கள் என்பதை வரலாற்றின் கழுகுப் பார்வையில் அறிந்துகொள்வதுதான் இக்கட்டுரையின் நோக்கம்.
கம்யூனிஸ்டுகள் எப்போதுமே நாட்டுப்பற்றோடு இயங்கினார்கள். இந்தியாவின் சமூக – பொருளாதார, பண்பாட்டு நிலைமைகளில், அவர்களின் நடவடிக்கைகள் வேர்விட்டிருக்கின்றன. அதே நேரத்தில், உலகின் ஒட்டுமொத்த மேம்பாட்டையும், உலக மக்களின் விடுதலையையும் தங்கள் சிந்தனையில் பிரிக்க முடியாத அங்கமாக கொண்டே செயல்பட்டார்கள். இவ்வாறு செயல்படுவதால் உடனடி அரசியலில் பலன் கொடுக்காது என்றபோதிலும் அவர்கள் இந்த கண்ணோட்டத்தை எப்போதும் கடைப்பிடித்து வந்துள்ளனர்.
கம்யூனிஸ்ட் கட்சியின் உருவாக்கம்:
சோவியத் ஒன்றியத்தை உருவாக்கிய அக்டோபர் புரட்சி, இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு பெரும் ஊக்கத்தைக் கொடுத்த நிகழ்வாகும். ஏனென்றால் அது சோவியத் தொழிலாளர்களுக்கு மட்டும் விடுதலையை பெற்றுத்தரவில்லை; உலகம் முழுவதுமே ஒடுக்கப்பட்ட தேசங்களுக்கு திசைவழி காட்டுவதாகவும் இருந்தது.
இந்திய புரட்சியாளர்கள் சிலர், பிரிட்டிஷ் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கத்துடன், சோவியத் ஒன்றியத்தின் (இப்போதைய ரஷ்யாவின்) தாஷ்கெண்ட் பகுதியில் சந்தித்தார்கள். அவர்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை 1920 அக்டோபர் 17 ஆம் தேதியன்று உருவாக்கினார்கள். இதற்கு இந்தியரும், மெக்சிக்கோ கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கியவரும், கம்யூனிஸ்ட் அகிலத்தின் செயற்குழு உறுப்பினருமான எம்.என்.ராய் உதவி செய்தார்.
1920 காலகட்டத்தில் இந்தியாவின் பல பகுதிகளில் கம்யூனிஸ்ட் குழுக்கள் உருவாகி இயங்கின. பம்பாயில் எஸ்.ஏ.டாங்கே, கல்கத்தாவில் முசாபர் அகமது, மதராஸ் மாகாணத்தில் சிங்காரவேலர், லாகூரில் குலாம் உசேன் ஆகியவர்களை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். இப்படி உருவான குழுக்களுக்கு மார்க்சிய-லெனினிய தத்துவக் கல்வியும், அரசியல் கல்வியும் வழங்குவதில் முனைப்புக் காட்டி செயல்பட்டது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.
எம்.என்.ராயுடன் தொடர்பில் இருந்த இந்திய கம்யூனிஸ்டுகள் , இப்போதைய உத்திர பிரதேச மாநிலத்தில் அமைந்திருக்கும் கான்பூர் நகரத்தில் ஒரு மாநாடு கூட்டினார்கள். 1925 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 25 முதல் 28 வரை 3 நாட்கள் அந்த மாநாடு நடந்தது. அதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்படுத்துவதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இந்தியாவில் ஒரு பகுதி கம்யூனிஸ்டுகள் கான்பூர் மாநாட்டினை இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தொடக்கமாக பார்க்கிறார்கள்.
தடைக் கற்களே படிக்கட்டாக:
பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து முழுவிடுதலை வேண்டும் என்ற குரலை இந்திய கம்யூனிஸ்டுகள் தொடக்கம் முதலே எழுப்பினார்கள். இந்திய மக்கள் தம்மை தாமே ஆண்டுகொள்ள முடியும் என்பதற்கு சோவியத் ஒன்றியம் முன்னுதாரணமாக அமைந்தது. இந்திய தேசிய காங்கிரசின் அகமதாபாத் கூட்டத்தில் மவுலானா ஹஸ்ரத் மொஹானி, சுவாமி குமரானந்தா ஆகிய இரு கம்யூனிஸ்டுகள் முழு விடுதலைக்கான தீர்மானத்தை முன்வைத்தார்கள். அந்த தீர்மானம் ஏற்கப்படவில்லை என்றபோதிலும் தேசிய இயக்கத்தில் கம்யூனிஸ்டுகளின் தாக்கம் அதிகரித்தது.
1920களில் கம்யூனிஸ்டுகள் மேற்கொண்ட கடும் முயற்சிகளால் தொழிற்சங்கங்கள் உதயமாகின. 1928-29 காலகட்டத்தில் நாடு முழுவதும் தொழிலாளர் போராட்டங்கள் அலையடித்தன. வங்கத்தின் ரயில்வே தொழிலாளர் போராட்டங்களும், பம்பாயில் நூற்பாலைத் தொழிலாளர் போராட்டங்களும் தீரம் மிகுந்த உதாரணமாக அமைந்தன.
பிரிட்டிஷ் அரசாங்கம் சதி வழக்குகளை புனைந்து கம்யூனிஸ்டுகளை முடக்க முயன்றது. 1929 முதல் 1933 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் நடைபெற்ற மீரட் சதிவழக்கு அவற்றில் முக்கியமானதாகும். குற்றம்சாட்டப்பட்ட 33 பேரில் 27 பேருக்கு தண்டனையை உறுதி செய்தது நீதிமன்றம். அவர்கள் இந்த வழக்கு விசாரணையை மேடையாக்கி, தங்களின் நோக்கங்களை பிரச்சாரம் செய்தார்கள்.
1934 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் ஆட்சியானது கம்யூனிஸ்ட் கட்சியையும் அதனோடு தொடர்புடைய அமைப்புகளையும் தடை செய்தது. உறுப்பினராக ஆவதே குற்ற நடவடிக்கை என அறிவித்தது. இதனாலெல்லாம் கம்யூனிச லட்சியங்கள் பரவுவதை அவர்களால் தடுக்க முடியவில்லை. பொருளாதார பெருமந்தத்திற்கு (Great Depression) இடையிலும் சோவியத் ஒன்றியம் நிகழ்த்திவந்த சாதனைகள், கம்யூனிசத்தை நோக்கிய ஈர்ப்பை அதிகப்படுத்தின.
பிரிட்டிஷ் ஆட்சியின் நிர்வாக இயந்திரத்தையே, பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர எழுச்சியினால் முடக்கிப் போட முடியும் என்பதை கம்யூனிஸ்டுகள் நிரூபித்துக் காட்டினார்கள். 1937 ஆம் ஆண்டில் நடைபெற்ற வேலை நிறுத்தங்களில் மட்டும் 6 லட்சத்து 6 ஆயிரம் தொழிலாளர்கள் பங்கெடுத்தனர். அதே சமயம் 80 சதவீதம் வேளாண் சமுகமாக அமைந்த இந்தியாவின் விடுதலை, விவசாயிகளைத் திரட்டாமல் சாத்தியமாகாது என்பதையும் அவர்கள் உணர்ந்திருந்தனர். தொடக்க காலத்தில் நகர்ப்புறங்களில் குவிமையமாக வளர்ந்த கம்யூனிஸ்ட் இயக்கம், ஊரகப் பகுதிகளுக்கும் தன் வேர்களைப் பரப்பியது.
விவசாயிகள் சங்கம் 1936 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. விவசாயத் தொழிலாளர்களுக்கான முதல் சங்கத்தை உருவாக்கியதும் கம்யூனிஸ்டுகளே. மாணவர்கள், முற்போக்கு எழுத்தாளர்கள், நாடகக் கலைஞர்கள் என பல்வேறு வழிமுறைகளில் மக்களை திரட்டி, புரட்சிகர உணர்வை வளர்த்தெடுத்தனர் கம்யூனிஸ்டுகள்.
நிலவுடைமைக்கும் சாதிக்கும் எதிராக:
சாதியும் – வர்க்கமும் கலவையாக இயங்கிய ஊரக இந்தியாவின் பிரச்சனைகளை அவர்கள் எதிர்த்து நின்றார்கள். நிலவுடைமை சக்திகள், வட்டிக்காரர்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் சுரண்டலுக்கு ஆளாகிவந்த விவசாயிகளை திரட்டினார்கள். கடன் சுழலில் சிக்கி, தங்கள் நிலத்தை இழந்த விவசாயிகளையும், தீண்டாமையை எதிர்கொண்டதுடன், கட்டாய உழைப்பைச் செலுத்த நிர்ப்பந்திக்கப்பட்ட நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களையும் திரட்டி கொடூர அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராடினார்கள்.
கம்யூனிஸ்டுகள் தலைமையின் காரணமாக விவசாயிகள் இயக்கம் வலுவடைந்தது. 1938 ஆம் ஆண்டில் விவசாயிகள் சங்கத்தில் 60 லட்சம் பேர் சேர்ந்திருந்தனர், அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 80 லட்சமாக உயர்ந்தது.
நிலவுடைமை சமூகத்தில் நிலவிய கொடுங்கோன்மைக்கு எதிராகவும், நில உரிமைகளுக்காகவும் கம்யூனிஸ்டுகள் போராடிக் கொண்டிருந்த நேரத்தில், காங்கிரஸ் கட்சி நில உடைமையாளர்களோடு வெளிப்படையாக கூட்டு சேர்ந்து செயல்பட்டது. இந்தியத் தொழில் முதலாளிகளும் காங்கிரஸ் கட்சியை ஆதரித்தார்கள். இதன் விளைவாக காங்கிரஸ் கட்சியின் வலதுசாரி பிரிவுகளுக்கும், கம்யூனிஸ்டுகளுக்கும் இடையே மோதல்கள் எழுந்தன. காங்கிரஸ் கட்சியின் தலைமையில் இயங்கிய மாகாண அரசுகள் வெளிப்படையாகவே நில உடைமையாளர்களையும், தொழில் முதலாளிகளையும் ஆதரித்தன. காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியிலிருந்து கம்யூனிஸ்டுகள் வெளியேற்றப்பட்டனர். இதனை நினைவுகூரும்போது, இ.எம்.எஸ் ‘காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் மாநில, மாவட்ட மற்றும் உள்ளூர் நிர்வாகிகள் சிலரும், ஒட்டுமொத்த உறுப்பினர்களும் வெளியேறி தங்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக் கொண்டார்கள்’ என்று கூறினார்.
இரண்டாவது உலகப்போர் :
1939 ஆம் ஆண்டில் இரண்டாவது உலகப்போர் தொடங்கியது. இந்திய பிரதிநிதிகளுடன் ஆலோசனை செய்யாமலே, இந்திய வீரர்களை போர் முனைக்கு அனுப்பியது பிரிட்டிஷ் அரசாங்கம். மேலும், இக்காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்தன. போருக்கு எதிரான போராட்டங்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்தது. இதனால், 1941 ஆம் ஆண்டில் பெரும்பாலான கட்சி நிர்வாகிகளை கைது செய்து சிறைப்படுத்தியது பிரிட்டிஷ் ஆட்சி.
1942 ஆம் ஆண்டில்தான் கம்யூனிஸ்ட் அமைப்பின் மீதான தடை விலக்கப்பட்டது. தலைவர்கள் விடுவிக்கப்பட்டனர். போர் ஒரு பக்கம் நடந்துகொண்டிருந்தது, வங்கத்தை பஞ்சம் சூழ்ந்தது. மாபெரும் இந்தப் பஞ்சத்தினால் வங்கம், ஒரிஸா, அசாம், பீகார் பகுதிகளில் 30 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பலியானார்கள்.
லாப நோக்கில் விலையை அதிகரிக்கும் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கொள்கையே இந்தப் பெரும் பஞ்சத்தினை விளைவித்தது என்கிறார் பொருளாதார அறிஞர் உத்சா பட்நாயக். உணவு தானியங்களை பதுக்கி வைத்து விலையேற்றிய வணிகர்களில் ஒரு பகுதியினர் மற்றும் நிலவுடைமையாளர்களுக்கு எதிரான பிரச்சாரத்தையும் இயக்கத்தையும் கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்தது. பெண்கள் தற்காப்புக் குழு அமைக்கப்பட்டு இளம் பெண்கள் கடத்தப்படுவதை தடுத்தார்கள். தன்னார்வலர்களும், மருத்துவக் குழுக்களும் ஏற்படுத்தி நிவாரண பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அயர்வில்லாத இந்தப் பணிகள், கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்குத்தளத்தை விரிவாக்கின.
போருக்குப் பிறகான எழுச்சி:
இரண்டாவது உலகப் போருக்கு பின் இந்தியாவில் வெகுமக்கள் போராட்ட எழுச்சி ஏற்பட்டது. அவற்றில் பல போராட்டங்களுக்கு கம்யூனிஸ்டுகள் தலைமைதாங்கினார்கள். 1946 ஆம் ஆண்டில் தபால் ஊழியர்கள், ரயில்வே பணியாளர்கள், தந்தி பணியாளர்கள் உள்ளிட்டு போராட்டக் களத்திற்கு வந்தனர்.
1946 பிப்ரவரி மாதத்தில் நடந்த கப்பல் படை கிளர்ச்சி தீரம்மிக்க ஒரு போராட்டமாக இருந்தது. பொது வேலை நிறுத்த அறிவிப்பை ஒட்டி, கிளர்ச்சியை தொடங்கிய கப்பல் படையினருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முழு ஆதரவை வழங்கியது. தொழிலாளர்கள் இக்கிளர்ச்சிக்கு ஆதரவாக வேலை நிறுத்தம் செய்தார்கள். வணிகர்கள் கடையடைப்புச் செய்தார்கள், மாணவர்கள் கல்விநிலையங்களை புறக்கணித்தார்கள். கடைசியாக, கப்பல்படை வீரர்கள் சரணடைய நேர்ந்தபோதிலும், நாடு முழுவதிலும் அவர்களுக்கு ஆதரவாக எழுந்த கிளர்ச்சியே அவர்களை அழித்தொழிப்பதில் இருந்து காத்துநின்றது.
தெபாகா இயக்கம்:
தெபாகா இயக்கம், வங்கத்தில் கம்யூனிஸ்டுகள் தலைமையேற்று நடத்திய மாபெரும் விவசாய எழுச்சியாகும். தெபாகா என்றால் மூன்று பங்கு என்று பொருள். விளைச்சளினை மூன்றாக பங்கிட்டு அதில் 2 பங்குகள் குத்தகை விவசாயிகளுக்கு சொந்தமாக வேண்டும் என்ற கோரிக்கையே அதில் பிரதானமாக இருந்தது. 1946 ஆம் ஆண்டு தொடங்கிய இந்தப் போராட்டம் 4 ஆண்டுகள் இடைவிடாமல் நடைபெற்றது.
அந்தக் காலத்தில் கல்கத்தாவில் வகுப்புவாத வன்முறைகள் நடந்துகொண்டிருந்தன. அதே சமயத்தில் மதங்களைக் கடந்த மக்கள் ஒற்றுமையின் அடையாளமாக தெபாகா எழுச்சி அமைந்தது. மேற்குவங்கத்தில் அமைந்திருந்த முஸ்லீம் லீக் அரசாங்கம் இப்போராட்டத்தை ஒடுக்குவதற்காக காவல்துறையை ஏவியது. அடக்குமுறைகளை எதிர்கொண்டு முன்னணியில் போராடிய இந்து, முஸ்லிம், பழங்குடி ஆண்களும், பெண்களுமாக 73 பேர் கொல்லப்பட்டார்கள். இறுதியில் இந்தப் போராட்டம் வெற்றிபெற்றது.
தெலங்கானா ஆயுதப்போராட்டம்:
தெலங்கானா ஆயுதப் போராட்டம், இந்தியாவில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் எழுச்சிகளிலேயே மிகப்பெரியதாகும். ‘வெட்டி’என்று அழைக்கப்பட்ட கட்டாய உழைப்பு, நியாயப்படுத்த முடியாத வரி முறைமை ஆகியவைகளை எதிர்த்தும், நில உரிமையை முன்நிறுத்தியும் இந்த போராட்டம் தொடங்கியது. 1946 ஆம் ஆண்டில் தொடங்கிய போராட்டம் 5 ஆண்டுகள் தொடர்ந்தது. ஹைதராபாத்தினை ஆண்ட நிஜாம் மன்னன் ரசாக்கர்கள் என்ற குண்டர் படையையும், காவல்துறையையும் ஏவி, அடக்குமுறை செய்தபோது, ஆயுதங்களை ஏந்தி தங்களை தற்காத்தபடி விவசாயிகள் போராடினார்கள். 30 லட்சம் மக்கள் தொகை இருந்த 3 ஆயிரம் கிராமங்கள் கம்யூனிஸ்டுகளின் கட்டுப்பாட்டில் வந்தன. 10 லட்சம் ஏக்கர் நிலங்கள் விவசாயிகளுக்கே விநியோகம் செய்யப்பட்டன. கட்டாய உழைப்பு ஒழிக்கப்பட்டு, குறைந்தபட்ச கூலி முறை அமலாக்கப்பட்டது. அடிப்படை வசதிகளை ஏற்படுத்த சுய நிர்வாகக் குழுக்கள் ஏற்படுத்தினார்கள்.
நிஜாமின் ஆளுகைப் பகுதியை இந்திய ஒன்றியத்துடன் இணைக்கும் விதமாக 1948, செப்டம்பர் 13 ஆம் தேதி தனது நடவடிக்கையை தொடங்கியது இந்திய ஒன்றிய அரசு. இதற்கு நிஜாம் மன்னன் ஒப்புக்கொண்டதும் இந்திய ராணுவமும், காவல்துறையும் நுழைந்தன. தற்காப்பு போராட்டம் நடந்தது என்றாலும் – 4 ஆயிரம் கம்யூனிஸ்டுகளும், விவசாய போராளிகளும் கொல்லப்பட்ட நிலையில், 10 ஆயிரம் பேர் தடுப்புமுகாம்களில் அடைக்கப்பட்டனர். அவர்கள் 3 – 4 ஆண்டுகள் துன்புறுத்தப்பட்டார்கள். விவசாயிகளிடமிருந்து நிலத்தை பிடுங்கி, நிலவுடைமையாளர்களிடம் மீண்டும் ஒப்படைத்தது இந்திய அரசு.
புன்னப்புரா வயலார் எழுச்சி :
1946 ஆம் ஆண்டில் திருவிதாங்கூர் சமஸ்தானம் மன்னராட்சியில் இருந்தது. சமஸ்தானத்திற்கென்று பிரதமர் இருந்தார். அவர்கள் இந்தியாவின் நாடாளுமன்ற முறையை ஏற்கவில்லை. மாறாக அமெரிக்காவைப் போன்ற ஏற்பாட்டை வலியுறுத்தினார்கள். இப்போதைய ஆலப்புழா மாவட்டத்தில் அமைந்த புன்னப்புரா – வயலார் ஆகிய இரு கிராமங்கள் மன்னராட்சிக்கு எதிரான போராட்டத்தின் மையப்புள்ளியாக அமைந்தன. போராட்டக் களத்தில் பல தொழிலாளர்களை சுட்டுக் கொல்லவும் காவல்துறை தயங்கவில்லை. இருப்பினும் திருவிதாங்கூர் விரைவில் இந்தியாவின் பகுதியானது. மொழிவழி மாநிலத்திற்கான அடித்தளத்தை இப்போராட்டமே கொடுத்தது. கொச்சி, திருவிதாங்கூர் மற்றும் பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்த மலபார் மாவட்டம் (மதராஸ் மாகாணத்தின் ஒரு பகுதி) ஆகியவை இணைந்து கேரள மாநிலம் உருவானது. தமிழ்நாடு உட்பட மொழி வழி மாநிலங்கள் உருவாக்கத்திற்கான அவசியத்தினை வலியுறுத்தி, சாத்தியமாக்கியதில் கம்யூனிஸ்ட் கட்சி பெரும் பங்களிப்பைச் செய்தது.
கம்யூனிஸ்ட் இயக்கத்தில் கருத்து மோதல்கள் :
இந்தியாவின் விடுதலையை எப்படிப் புரிந்துகொள்வது என்ற கேள்வி, கம்யூனிஸ்ட் இயக்கத்தில் கருத்து மோதல்களை உருவாக்கியது. அதுவரை அவர்கள் தீவிரமாக எதிர்த்துவந்த பிரிட்டிஷ் ஆதிக்கம் அகன்றுவிட்டது. இப்போது இந்தியர்கள் நாட்டை ஆள்கிறார்கள்.
இந்த அரசின் தன்மை என்ன? ஆட்சியாளர்கள் யார்? இது காலனி ஆதிக்க அரசாங்கத்தின் கைப்பாவைதானா? அல்லது இந்திய ஆளும் வர்க்கங்களின் ஆதரவைப் பெற்ற சுதந்திர அரசாங்கமா? புதிய அரசையும், ஆளும் வர்க்கங்களையும் கம்யூனிஸ்டுகள் எப்படி எதிர்கொள்ள வேண்டும்? ஆட்சியாளர்களோடு இணைந்து நிற்க வேண்டுமா? அல்லது அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தை முன்னெடுப்பதா? ‘ரஷ்ய’ வழிமுறையா அல்லது ‘சீன’ வழிமுறையா? இந்திய வழிமுறை என ஏதாவது உள்ளதா? இவையெல்லாம் அந்த காலகட்டத்தில் எழுந்த மிக முக்கியமான கேள்விகள் ஆகும். இந்த கருத்துமோதல் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பல்வேறு போக்குகள் உருவாக்கத்திற்கு காரணமாக அமைந்தது.
1950களின் மத்தியில் இருந்தே கருத்து மோதல்கள் தீவிரமாகின. விடுதலைக்கு பிறகான இந்திய அரசாங்கத்தை எப்படி மதிப்பீடு செய்வது என்பதுதான் முதல் கேள்வியாக இருந்தது. புதிய அரசாங்கம் ஒப்பீட்டளவில் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை கடைப்பிடித்தது; பொருளாதார திட்டமிடலுக்கு முயன்றது; தனது இலக்கு சோசலிச வகைப்பட்ட சமுதாயத்தைக் கட்டமைப்பதே என்று கூட காங்கிரஸ் கட்சி சொல்லியது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு பகுதியினர் காங்கிரஸ் கட்சியில் இருக்கும் இடது தன்மை கொண்ட சக்திகளோடு இணைந்து செயல்பட வேண்டுமென நினைத்தனர். அவர்கள் காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவு நிலவுடைமைக்கு எதிரான, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான தேசிய முதலாளிகளை பிரதிநிதித்துவம் செய்வதாகவும் வாதிட்டனர். இந்த விவாதங்களின் தொடர்ச்சியாக 1964 ஆம் ஆண்டில் கட்சியின் பிளவு ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சியுடன் ஒத்துழைப்பதற்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த பிரிவு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) என உருவானது. 1969 ஆம் ஆண்டில், ஆயுதப் போராட்டம் அவசியம் என நம்பிய கம்யூனிஸ்டுகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) ஏற்படுத்தினார்கள்.
இடதுசாரி மாநில அரசாங்கங்கள் :
இந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றில் மிக முக்கியமான காலமாக, கம்யூனிஸ்டுகளின் தலைமையில் மாநில அரசுகள் அமைந்ததைப் பார்க்கலாம். பல்வேறு மொழிவழி தேசிய இனங்களைக் கொண்ட இந்தியாவில், அதன் அரசியலும் மொழிவழி மாநிலங்களின் அடிப்படையிலேயே பெரும்பாலும் வடிவம் பெற்றுள்ளது.
மொழிவழி மாநிலங்களை ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றிய கம்யூனிஸ்ட் இயக்கம், விடுதலைப் போராட்ட காலத்தை போலவே, விடுதலைக்கு பின்னரும் வெற்றிகரமான மக்கள் போராட்டங்களை வழிநடத்தியது. இதனால் திரண்ட மக்கள் செல்வாக்கினால்தான் சில மாநிலங்களின் ஆட்சியையும் பிடிக்க முடிந்தது. தேர்தல்களில் வெற்றி பெறுவதோ, மாநில ஆட்சிகளை வழிநடத்துவதோ, தொழிலாளிகள்-விவசாயிகளின் கையில் அரசு அதிகாரத்தை கொண்டு சேர்ப்பதற்கான வழிமுறை இல்லை என்றபோதிலும், இத்தகைய ஆட்சிகளை நடத்துவதன் மூலம் கம்யூனிஸ்டுகளால் மாற்றுக் கொள்கைகளை அமலாக்கி ஒரு சில நிவாரணங்களைக் கொடுக்க முடிந்தது.
கேரளா: ஆந்திர மாநிலத்தில் ஆட்சியை பிடிப்பதற்கான முயற்சி பின்னுக்குத் தள்ளப்பட்ட சமயத்தில், கேரள மாநிலத்தில் கம்யூனிஸ்டுகளுக்கு வரலாற்று வெற்றி சாத்தியமானது. 1956 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கேரளத்தில் 1957 ஆம் ஆண்டு முதல் சட்டமன்ற தேர்தல் நடந்தது. 1957 ஏப்ரல் 5 ஆம் தேதி, இ.எம்.எஸ் நம்பூதிரிபாட் முதலமைச்சராக பதவியேற்றார்.
ஆட்சி உருவான ஆறாவது நாளில், அவசர சட்டத்தின் மூலம் விவசாயிகளை அவர்களுடைய குத்தகை நிலங்களில் இருந்து வெளியேற்றத் தடை செய்தது கம்யூனிஸ்ட் அரசு. நிலச் சீர்திருத்த சட்டத்தையும் அறிமுகம் செய்தது. சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கே நில உரிமை, நியாயமான வாடகை நிர்ணயம், நில உடைமைக்கு உச்ச வரம்பு மற்றும் விவசாயிகளே தாங்கள் சாகுபடி செய்யும் நிலத்தை விலைக்கு வாங்குவதற்கான உரிமையை வழங்குதல் ஆகியவற்றிற்காக சட்டமாக இது கொண்டுவரப்பட்டது. கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்தியது, கல்வித்தளத்தில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு ஜனநாயகப்படுத்தினார்கள். பொது சுகாதார கட்டமைப்பை விரிவாக்கினார்கள். நியாய விலைக் கடைகளின் வழியாக அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் நியாய விலையில் ஏழை மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்தார்கள்.
நிலச்சீர்திருத்த நடவடிக்கைகள் நிலவுடைமையாளர்களை கலகலக்கச் செய்தது. கல்விச் சீர்திருத்தங்களுக்கு கத்தோலிக்க திருச்சபைகளில் இருந்து எதிர்ப்பு வந்தது. ‘விமோசன சமரம்’ என்ற பெயரில் தொடர் போராட்டங்களை அவர்கள் முன்னெடுத்தார்கள். காங்கிரஸ் கட்சி இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கம்யூனிஸ்ட் ஆட்சியினை கலைத்தது. தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைந்தது. அவர்கள் நிலச்சீர்திருத்தத்தை நீர்த்துப் போகச் செய்தார்கள். இதற்கு எதிராக இடதுசாரிகள் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்தார்கள் என்பதையோ, அடுத்து ஆட்சிக்குவந்த பிறகு சீர்திருத்தங்களை முன்னெடுத்தார்கள் என்பதையோ தனித்து குறிப்பிடுவது அவசியமில்லை.
1993 ஆம் ஆண்டில் 28 லட்சம் குத்தகை விவசாயிகளுக்கு உரிமைகள் உறுதி செய்யப்பட்டது. 60 லட்சம் ஹெக்டேர் நிலம் மறுவிநியோகம் செய்யப்பட்டது. 1996 ஆம் ஆண்டுவாக்கில் 5 லட்சத்து 28 ஆயிரம் நிலமற்ற விவசாய தொழிலாளர்களுக்கு நிலம் வழங்கப்பட்டது. கேரளத்தில் நிலச் சீர்திருத்த நடவடிக்கைகள் நிலவுடைமைக் கட்டமைப்பின் முதுகெலும்பினை தாக்குவதாக அமைந்தன. கம்யூனிஸ்டுகளின் கொள்கைளால் கல்வியறிவும், மனிதவளமும் மேம்பட்டன. இந்த மேம்பாடுகளை 1970 ஆம் ஆண்டு முதலே பல்வேறு ஆய்வுகளில் அறிய முடிந்தது.
1) மக்களின் பொருளாயத வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துதல், ஒரு நாடு அல்லது மாநிலம் செல்வச் செழிப்போடு வளர்ந்தபிறகே சாத்தியம் என்பது உண்மையில்லை.
2) மக்களால் முன்னெடுக்கப்படும் பொது நடவடிக்கைகள் வழியாக மறுபங்கீட்டை சாத்தியப்படுத்திட முடியும் – என்ற இரு படிப்பினைகளை கேரள முன்மாதிரி நமக்கு வழங்குகிறது.
மேற்கு வங்கம் :
வங்கம், பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தினால் மிகக் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்ட மாகாணம் ஆகும். வங்கப் பஞ்சம் பற்றி ஏற்கனவே பார்த்தோம். இந்திய விடுதலையின் போது பிரிவினையும், அதையொட்டி எழுந்த வகுப்புவாத வன்முறைகளும், அந்த மாகாணத்தில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தின. ஏராளமான மக்கள் அகதிகளானார்கள். அகதிகளின் வாழ்விட உரிமைக்காகவும், அரசியல் உரிமைக்காகவும் கம்யூனிஸ்டுகளே முன்னணியில் நின்றார்கள்.
வங்க பஞ்சத்தின்போது நிவாரண நடவடிக்கைகளை கம்யூனிஸ்டுகள் முன்னெடுத்தார்கள். 1950 ஆம் ஆண்டு வாக்கில் கல்கத்தாவின் தெருக்களில் ‘பட்டினிப் பேரணிகள்’ நடைபெற்றன. ஏழைகள் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் திரண்டார்கள். நிலச்சீர்திருத்தத்திற்கான முழக்கம் ‘தெபாகா’ இயக்கத்தின் பகுதியாக ஆனது. விவசாயிகள் சங்கம் குத்தகைதாரர்களின் உரிமைக்காக போராடியது. இவற்றால் கம்யூனிஸ்டுகள் வலிமைபெற்றார்கள்.
குறுகிய காலமே செயல்பட்ட ஐக்கிய முன்னணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து 1977 ஆம் ஆண்டில் இடது முன்னணி அமைந்தது. தேர்தல் வெற்றியின் மூலம் மாநிலத்தில் ஆட்சியமைத்தது. ஜோதிபாசு முதலமைச்சரானார். 34 ஆண்டுகள் தொடர்ச்சியான ஆட்சியை இடது முன்னணி வழங்கியது.
இடதுமுன்னணி அரசு நிலச்சீர்திருத்த நடவடிக்கைகளை முன்னெடுத்தது. குத்தகை விவசாயிகளின் உரிமைகளைக் காக்கும் வகையில் ஆபரேசன் பர்க்கா முன்னெடுக்கப்பட்டது. நில உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டு, அதிகப்படியான நிலங்கள் மறுவிநியோகிக்கப்பட்டன. இந்தியாவில் நிலச்சீர்திருத்தம் மூலம் பலனடைந்த பயனாளிகளில் 50% மேற்குவங்கத்திலேயே உள்ளார்கள் என்ற புள்ளிவிபரத்தின் வழியாக நாம் அங்கு நடைபெற்ற நிலச்சீர்திருத்தத்தின் அளவினை உணரலாம்.
2008 ஆம் ஆண்டு வாக்கில் 29 லட்சம் விவசாயிகள் சாகுபடிக்கான நிலங்களை மறுவிநியோக திட்டங்களின் வழியாக பெற்றிருந்தனர். 15 லட்சம் விவசாயிகள் குத்தகை பதிவு பெற்றார்கள். 55 லட்சம்பேருக்கு வீட்டுமனைகள் வழங்கப்பட்டிருந்தன. இவ்வாறு பயனடைந்தவர்களில் 55% பேர் தலித் மற்றும் பழங்குடிகள் ஆவர்.
மேற்கு வங்கத்தின் வேளாண்மையை மறுகட்டமைத்து, அதன் வழியாக ஊரக ஏழை மக்களின் வாழ்க்கையை உயர்த்தியதுதான் கம்யூனிஸ்ட் தலைமையிலான அரசாங்கத்தின் முக்கியமான சாதனையாகும். ஊரக வளர்ச்சியில் பொது முதலீடு அதிகரித்ததன் வழியாக பாசன திட்டங்கள் குறிப்பிடத்தக்க அளவில் விரிவாக்கப்பட்டன. இதன் வழியாக மூன்று போக விவசாயம் சாத்தியமானது. நாட்டிலேயே அரிசி சாகுபடியில் முன்னணி மாநிலமாக மேற்கு வங்கம் உருவானது.
அதிகார பரவலாக்கல் நடவடிக்கை மேற்கு வங்கத்தின் ஊரக வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தியது. நிலச்சீர்திருத்தம் உட்பட உள்ளூர் முடிவுகளை திறம்பட மேற்கொள்வதில் பஞ்சாயத்து அமைப்புகள் முக்கியமான பங்குவகித்தன. இந்த சீர்திருத்தங்களால், மேற்கு வங்கத்தின் ஊரக பகுதிகளில் பெரும் நிலவுடைமையாளர்கள், வட்டிக்காரர்கள், சாதி ஆதிக்க சக்திகள் பலவீனமடைந்தன. தலித், பழங்குடி மக்களின் உள்ளாட்சி பிரதிநிதித்துவம் மக்கள் தொகையில் அவர்களின் பங்கினை விட அதிகமாக உயர்ந்தது. இது உழைக்கும் வர்க்கத்திற்கு சாதகமாக வர்க்க பலம் அதிகரிக்கச் செய்தது.
திரிபுரா :
திரிபுராவில் , 1948 ஆம் ஆண்டில் கம்யூனிஸ்டுகளின் தலைமையிலான மக்கள் விடுதலைக் குழு உருவாக்கப்பட்டது. அது பழங்குடி மக்களின் பிரச்சனைகளில் போராட்டங்களை முன்னெடுத்தது. கந்துவட்டிக் கும்பல்களின் ஆதிக்கத்திற்கு எதிராக கம்யூனிஸ்டுகள் போராடினார்கள். இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையை ஒட்டி அகதிகள் பல்லாயிரக் கணக்கில் அலை அலையாக வரும் சிக்கலை திரிபுரா எதிர்கொண்டது. அகதிகள் தஞ்சம் அடைவது 1960 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து நடைபெற்றது.
இந்த சூழலில் பழங்குடி மக்களின் நில உரிமையை பாதுகாப்பது, பழங்குடிகளை குத்தகைய நிலங்களில் இருந்து வெளியேற்றுவதை தடுப்பது, அகதிகளுக்கு முறையான மறுவாழ்வு என கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் விடுதலைக் குழு போராட்டங்களை முன்னெடுத்தது. விவசாயிகள் – பழங்குடிகள் இடையிலான ஒற்றுமையை இந்தப் போராட்டங்கள் அதிகரித்தன.
1978 ஆம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடது முன்னணி ஆட்சிக்குவந்தது. நிருபன் சக்ரபர்த்தி முதலமைச்சராக தேர்வானார். நிலச்சீர்திருத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. சட்ட விரோதமாக பழங்குடி மக்களின் நிலங்களை உரிமை மாற்றம் செய்வதை தடுத்ததுடன், பழங்குடி நிலங்கள் மீட்டுத் தரப்பட்டன, குத்தகை விவசாயிகளின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டன. இதற்காக நிலச்சீர்திருத்த சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது.
மாவட்ட கவுன்சில் தன்னாட்சி சட்டம் மூலமாக, பழங்குடி மக்களுக்கு பிராந்திய அளவில் தன்னாட்சி அதிகாரம் உறுதி செய்யப்பட்டது. கோக்பொரோக் என்ற பழங்குடி மொழி அலுவல் மொழியாக சேர்க்கப்பட்டது.
1980 ஆம் ஆண்டு முதல் 2000 ஆம் ஆண்டு வரையில் பிரிவினைவாத கிளர்ச்சிகளை திரிபுரா எதிர்கொண்டது. இடது முன்னணி அரசாங்கத்தின் ஒருங்கிணைந்த முயற்சிகள் வழியாக இந்த வன்முறைகள் மட்டுப்படுத்தப்பட்டன. கல்வியறிவு, நலவாழ்வு, தனிநபர் வருமானம் மற்றும் அதிகாரப் பரவல் ஆகியவற்றில் திரிபுரா தனித்துவமான சாதனைகளை எட்டியது.
1978 முதல் 1988 வரையிலும், 1993 முதல் 2018 வரையிலும் இடது முன்னணி மாநில ஆட்சியில் இருந்துள்ளது. இப்போது மிகப்பெரும் அளவில் பணத்தைக் கொட்டியும், சமூக ஊடகங்களின் வழி மோசடிப் பிரச்சாரம் செய்தும் பாஜக தேர்தல் வெற்றியை சாதித்திருக்கிறது. இருப்பினும் தேர்தல் தோல்வியைக் கடந்தும் களத்தில் முன்னணியில் நிற்கின்றது கம்யூனிஸ்ட் இயக்கம்.
நவ தாராளமய காலகட்டமும், ஒன்றிய ஆட்சிகளும்:
1991 ஆம் ஆண்டில் இந்தியாவில் நவதாராளமய கொள்கைகள் அதிகாரப்பூர்வமாக அமலாகத் தொடங்கின. இந்தக் கொள்கைகள் பெருமுதலாளிகளுக்கு சாதகமாக இருப்பதை கண்டுணர்ந்துவருகிறோம். சோவியத் ஒன்றியத்தின் பின்னடைவும் தகர்வும், இந்திய அரசின் முரட்டுத்தனமான முதலாளித்துவப் போக்கிற்கு உதவி செய்தது. மேலும், நவதாராளமய கொள்கைகள் வலதுசாரி அரசியல் எழுச்சிக்கு வழிவகுத்துள்ளன. இந்த சூழலை பயன்படுத்தி பாசிச அமைப்பான ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான சக்திகள் இந்தியாவை ஒரு இந்துத்துவ அரசாக மாற்ற முயற்சிக்கிறார்கள். இந்திய கம்யூனிஸ்டுகள் நவ தாராளமய கொள்கைகளுக்கு எதிராக இடைவிடமல் போராடுவதுடன், பாசிச சக்திகளையும் இடைவிடாமல் எதிர்க்கின்றனர்.
1990 ஆம் ஆண்டிற்கு பிறகு மாநில கட்சிகளின் பங்களிப்பைக் கொண்டு அமைந்த கூட்டணி அரசுகளுக்கு கம்யூனிஸ்டுகள் ஆதரவளித்தார்கள். மத்திய ஆட்சியின் கொள்கைகளில் கம்யூனிஸ்டுகளின் தாக்கம் மிக அதிகமான காணப்பட்ட ஆண்டு 2004-07 வரையிலான காலம் ஆகும். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு இடதுசாரி கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவளித்தார்கள். இதனால் பாரதிய ஜனதா கட்சி,மத்திய ஆட்சி அதிகாரத்தில் இருந்து தொலைவில் வைக்கப்பட்டது. மேலும் ஊரக வேலை உறுதி திட்டம், தகவல் அறியும் உரிமை சட்டம், வனத்தில் வசிக்கும் பழங்குடிகளுக்கான நில உரிமைச் சட்டம் போன்ற முற்போக்கான முடிவுகள் எடுக்கப்பட்டன. இருந்தாலும் நவதாராளமய கொள்கைகளில் மாற்றம் ஏற்படவில்லை என்பதை கவனிக்க வேண்டும். அதனால்தான் 2008 ஆம் ஆண்டு அமெரிக்க ஏகாதிபத்தியத்தோடு தனது நெருக்கத்தை இந்திய அரசு அதிகரித்தது. இதனை ஒட்டி இடதுசாரிகளும் மத்திய அரசாங்கத்திற்கு அளித்துவந்த ஆதரவினை விலக்கிக் கொண்டார்கள்.
மேற்கு வங்கத்தில் பின்னடைவு:
மேற்கு வங்க மாநிலத்தில், கடந்த 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இடது முன்னணி மாபெரும் வெற்றியை சாதித்தது. ஆனால் பொருளாதாரத்தில் நவ தாராளமயத்தின் தாக்கம் அதிகரித்த பின்னணியில் மாநிலங்கள் தங்கள் சுயாட்சியை இழந்துகொண்டிருந்தன. மாநிலங்களுக்கிடையே போட்டிச் சூழல் ஏற்படுத்தப்பட்டு தொழிலாளர் உரிமைகளை பாதுகாக்கும் மாநிலங்களுக்கு முதலீடுகள் கிடைக்காத நிலைமை ஏற்படுத்தப்பட்டது. மேற்கு வங்கத்தில் பொது முதலீட்டுக்கான வாய்ப்புக்களை ஒன்றிய அரசாங்கங்கள் தொடர்ந்து புறக்கணித்து வந்தன, தொழிலாளர் உரிமைகளில் சலுகை கொடுத்து, வரிச் சலுகைகளை அள்ளி வழங்கும் மாநிலங்களை நோக்கி அந்நிய முதலீடுகள் சென்றன. இந்தப் போட்டியில் மேற்கு வங்கம் பின்னுக்குத் தள்ளப்பட்டது. நிலச்சீர்திருத்தம் மூலம் சாதித்திருந்த வளர்ச்சி மிதமாகிய நிலையில், மாற்று வழிமுறைகளை இடது முன்னணி நாட வேண்டி வந்தது.
தனியார் முதலீடுகளை ஈர்க்க முயற்சியெடுத்த இடதுமுன்னணி அதற்காக நிலம் கையகப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டபோது சர்ச்சைகள் வெடித்தன. இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்ட எதிர்க் கட்சிகள் விவசாயிகளில் ஒரு பகுதியை இடது முன்னணி அரசாங்கத்திற்கு எதிராக திருப்பினார்கள். 2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் இடதுமுன்னணி தோல்வியைத் தழுவியது. அடுத்தடுத்த ஆண்டுகளில் வலதுசாரிகளின் மோசடிப் பிரச்சாரங்களும், தாக்குதல்களும் தொடர்கின்றன. இக்காலத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஆதரவாளர்கள் 250க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானவர்கள் வீடுகளை விட்டு விரட்டப்பட்டார்கள்.
இவற்றையெல்லாம் எதிர்கொண்டு வங்கத்திலும் நாடு முழுவதும் இடதுசாரிகள் போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்தே வருகிறார்கள். அமைப்புசாராதவர்களை அமைப்பாக்கவும், ஒப்பந்தத் தொழிலாளர்களை ஒருங்கிணைக்கவும் முன்கையெடுக்கிறார்கள். அரசின் திட்டப்பணிகள் மற்றும் ஜவுளி ஆலைகளில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களை வெற்றிகரமாக திரட்டியுள்ளார்கள். வீட்டு வேலைகளில் ஈடுபடும் பெண்கள், விவசாயத் தொழிலாளர்கள் என பல்வேறு வேலை சூழலில் இருப்பவர்களையும் திரட்டுவது மிகவும் சவாலான பணியாகவே உள்ளது. இந்த அனைத்துப் போராட்டங்களின் பிரிக்க முடியாத பகுதியாக சாதிக்கும், சாதி ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான போராட்டமும் அமைந்துள்ளது. இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் உருவான காலத்திலிருந்தே நடந்துவரும் இந்த போராட்டம் இப்போதும் தொடர்கிறது. சாதி ஒழிப்பை முன்வைத்து பல்வேறு அமைப்புகளை இணைத்த மேடையை கம்யூனிஸ்டுகள் உருவாக்கியுள்ளனர்.
இந்துத்துவ சக்திகளின் எழுச்சியின் காரணமாக வகுப்புவாத திரட்டல் அதிகரிக்கிறது. இது கம்யூனிஸ்டுகள் கட்டமைக்கும் போராட்ட ஒற்றுமைக்கு ஆபத்தாக எழுகிறது. ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான அமைப்புகளின் பாசிச வகைப்பட்ட திரட்சியும், பிரச்சாரமும் நவ தாராளமய கொள்கைகளால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை வகுப்புவாத அடிப்படையில் பிளவுபடுத்துகின்றன. இத்தகைய முயற்சியை எதிர்கொள்ள பரந்துபட்ட மதச்சார்பற்ற, முற்போக்கு சக்திகளின் கூட்டணியை உருவாக்க கம்யூனிஸ்டுகள் முயல்கின்றனர். இதற்கான போராட்டத்தில் முன்னணியில் நிற்கிறார்கள்.
நவ தாராளமய காலகட்டத்தில், அமெரிக்க ஏகாதிபத்தியமும், இந்திய முதலாளிகளும் அரசியல் தலையீடுகளை பல வடிவங்களில் மேற்கொண்டு வருகிறார்கள். அடையாள அரசியலும், தனிப்பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்ட அரசு சாரா அமைப்புகளும் அதற்கான கருவிகளாக இருக்கின்றன.
முடிவாக:
இப்படியான சூழலில்தான், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் அவசியம் முன்னைக் காட்டிலும் அதிகரித்துள்ளது. நூற்றாண்டுகால தீரம் மிக்க வரலாற்றினை திரும்பிப் பார்க்கும் இந்த சமயத்தில், நவ தாராளமய காலகட்டம் குறித்தும், இந்த காலத்தில் ஏற்பட்ட பலவீனங்களையும் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன் உள்ள சாத்தியங்களையும், வாய்ப்புகளையும் புரிந்துகொள்ள வேண்டும். ஆத்திரமோ, கசப்புணர்வோ உதவாது. திறந்த மனதுடன் சாத்தியங்களை ஆய்வு செய்வதன் வழியாகவே கம்யூனிஸ்டுகள் முன்னேற முடியும். கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வளர்ச்சி, இந்திய மக்கள் நலன்களை பாதுகாக்க மிக மிக அவசியமாகும். நாடு, அநாகரீக நிலைமைக்கு பின் தள்ளப்படாமல் தடுப்பதில், கம்யூனிஸ்டுகள் தங்கள் கடமையை வீரியமாக ஆற்றிட வேண்டும்.
உழைக்கும் கோடிக்கணக்கான மக்களின் நலன்களையே தங்கள் லட்சிய இலக்காக கொண்டிருக்கும் கம்யூனிஸ்டுகள், அயர்வில்லாத போராட்டங்களுக்கான உற்சாகத்தை, தங்கள் சொந்த வரலாற்றிலிருந்தே பெற்றிட வேண்டும்.
இந்த இதழில் Leftword பதிப்பகத்தின் முதன்மை ஆசிரியர் விஜய் பிரசாத் பதிலளிக்கிறார். நேர்காணல் ஆர்.ப்ரசாந்த். தமிழில் வீ.பா.கணேசன்.
‘ட்ரம்ப் திட்டம்’ என்ற ஒன்று இருப்பதாக வைத்துக் கொண்டால், அதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? அல்லது திறமையற்றதொரு அதிபரின் குழப்பமான நடவடிக்கைகளின் தொடர்ச்சிதான் அது என்பதாகவே பார்க்கிறீர்களா?
மேலோட்டமாகத் தெரிவதை விட ‘ட்ரம்ப் திட்டம்’ என்பது மிகவும் ஒழுங்கமைவான ஒன்று என்றே நான் கருதுகிறேன். திறமையற்ற வகையில் அவரது நடவடிக்கைகள் உள்ளன என்பது உண்மைதான். டிவிட்டரிலும் கருத்துகளைப் பதிவு செய்து வருகிறார். அவர் என்ன செய்கிறார் என்பதை தொடர்ந்து கவனிப்பது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கிறது என்பதோடு, அதில் ஒரு சில விஷயங்கள் ஒன்றுக்கொன்று முரண்பட்டவையாகவும் உள்ளன. என்றாலும் ட்ரம்ப்-இன் மீது மட்டுமே நம் கவனத்தைச் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. முதலில் திட்டம் பற்றிப் பார்ப்போம்.
முதலாவதாக, தங்கள் வேலைகள் காணாமல் போய்விட்டன என்றும், தங்கள் எதிர்காலம் மறைந்து விட்டது என்ற எண்ணத்தோடு தாங்கள் அவமானப்படுத்தப் படுகிறோம் என்றும், தரம் தாழ்த்தப்படுகிறோம் என்றும் நினைத்துக் கொண்டிருந்த வெள்ளை இனத்தைச் சேர்ந்த கருத்தால் உழைக்கும் தொழிலாளர்களில் ஒரு பிரிவினரை மிகச் சிறப்பான வகையில் ட்ரம்ப்பினால் நெருங்க முடிந்துள்ளது. அமெரிக்காவை மீண்டும் மிகச் சிறப்பானதாக ஆக்குவோம் என்ற கோஷம் அவர்களிடையே எதிரொலித்தது. ஏனெனில் அவர்களது அமெரிக்கா, அதாவது கருத்தால் உழைக்கும் தொழிலாளர்களின் அமெரிக்கா, மிக வேகமாக மறைந்து வருகிறது என்றே அவர்கள் கருதினார்கள். அது வெள்ளையர் பிரிவைச் சேர்ந்த தொழிலாளி வர்க்கம் அல்ல; 30 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள். ஒபாமா அதிபராக இருந்தபோது தேநீர் விருந்து இயக்கத்தின் ஒரு பகுதியாக இருந்த வெள்ளை இனத்தைச் சேர்ந்த கருத்தால் உழைக்கும் தொழிலாளர்கள்தான் ட்ரம்ப்பின் இயக்கத்திற்குள் பெருமளவிற்கு தங்களை அர்ப்பணித்துக் கொண்டார்கள்.
இப்போது ட்ரம்ப் வெளிப்படுத்தும் பழமைவாதம் என்பது அமெரிக்காவை மற்ற நாடுகளிலிருந்து தனிமைப்படுத்தும்படியான அமெரிக்காவின் பழைய பழமைவாதத்தைப் போன்றது அல்ல. அமெரிக்காவை மீண்டும் மிகச் சிறப்பானதாக ஆக்குவோம் என்பதன் பொருள் தனது தேச நலனுக்காக சர்வதேச மேடையில் அமெரிக்கா தன்னை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே ஆகும். தீவிரமான வலதுசாரிகள் வாதாடுவதெல்லாம் பிரிட்டன், ப்ரான்ஸ், அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகளில் உள்ள தலைமை உலகமய நோக்கம் கொண்டதாக மாறியுள்ளது. அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்றால், இந்தத் தலைமை தங்கள் தேசிய நலன்களின் மீது கவனம் செலுத்துவதாக இல்லை என்பதே ஆகும். ஆண்டுதோறும் டவோஸ் நகரில் ஒன்று கூடும் உலகத்தின் மேல்தட்டுப் பிரிவினரின் நலன்களில்தான் அவர்கள் கவனம் செலுத்தி வந்தனர். உண்மையில் இந்த வாதத்தில் கொஞ்சம் உண்மையும் இருந்தது என்றும் கூறலாம். உண்மையில் டவோஸ் முதலாளிகளின் இந்த சர்வதேச நிர்வாகிகள் தங்களது நலன்களை கவனமாகவே பார்த்துக் கொண்டார்கள். டவோஸ் முதலாளிகளின் சார்பாகவே அவர்கள் உலக அமைப்பை நிர்வாகம் செய்து வந்தார்கள். இதற்கு மாறாக டவோஸ் முதலாளிகளின் சார்பாக இல்லாமல் அமெரிக்க முதலாளிகளின் சார்பாகவே உலக அமைப்பை நாம் நிர்வாகம் செய்ய வேண்டும் என்றுதான் ட்ரம்ப் சொல்கிறார். உலகளாவிய முதலாளிகளில் பெரும்பகுதியினர் அமெரிக்க முதலாளிகளாகவே இருக்கிறார்கள் என்பதாகவே இருந்தது. அவர்களின் திட்டத்தில் பெரும்பகுதி அமெரிக்க டாலர்-வால் ஸ்ட்ரீட் கூட்டணியால்தான் நடத்தப்படுகிறது. எனவே, ட்ரம்ப் சொல்வது என்னவென்றால், உலகப் பொருளாதார அமைப்பை நிர்வகிப்பதற்காக உலகளாவிய பொருளாதார நிகழ்ச்சி நிரல், உலகளாவிய மனித உரிமைகளுக்கான நிகழ்ச்சி நிரல் அதாவது மனித உரிமைகள் குறித்த ஜெனிவா ஒப்பந்தம் போன்றவற்றால் நாம் மிகவும் கட்டுண்டு கிடக்கிறோம். எனவே அமெரிக்க ராணுவம் மேலும் தீவிரமாக சண்டையிட வேண்டும்; மேலும் அதிகமான வன்முறையில் இறங்க வேண்டும்; அதே நேரத்தில் அமெரிக்க நிதித் துறை அமெரிக்காவில் நலன்களைப் பாதுகாப்பதற்கு மேலும் தீவிரமாகச் செயல்பட வேண்டும். எனவே ‘முதலில் அமெரிக்கா’ என்ற இந்த நிலைபாடு என்பது நிச்சயமாக மற்றவர்களிடமிருந்து தனிமைப்பட்டிருப்பது அல்ல; மாறாக, அது மேலும் மேலும் அப்பட்டமான ஏகாதிபத்தியம் என்பதைத் தவிர வேறல்ல.
எனவே ‘ஹிலாரி ஒரு ஏகாதிபத்தியவாதி என்பதால் அவரை விட ட்ரம்ப் மேலானவர்’ என்று மக்கள் சொல்லும்போது குழப்பம்தான் ஏற்படுகிறது. ஹிலாரி ஏகாதிபத்தியவாதிதான். ஆனால் ட்ரம்ப் ஊக்கமருந்தால் உரமேற்றப்பட்ட ஏகாதிபத்தியவாதி. அவரது ஏகாதிபத்தியம் மேலும் மேலும் பராக்கிரமம் மிக்க ஏகாதிபத்தியம் என்றே கூறலாம். லிபியா, சிரியா, இராக் போன்ற நாடுகளின் கண்ணோட்டத்தின்படி தங்களின் மீது குண்டுகள் வந்து விழும்போது, அது நடுத்தரமான ஏகாதிபத்தியவாதி போட்டதா? அல்லது முரட்டுத் தனமான ஏகாதிபத்தியவாதி போட்டதா? என்பது முக்கியமில்லை. என்றாலும் கூட, ஆய்வுக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, ஒரு மார்க்சிய கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, இதிலுள்ள ஒருசில வேறுபாடுகளை நாம் கண்டறிவது மிகவும் முக்கியமாகும். ஹிலாரி அதிபராக இருந்திருந்தால் ஒரு விதமான உலகளாவிய கண்ணோட்டத்துடன் ஆட்சி செய்திருப்பார்; உலகளாவிய முதலாளிகளின் நிர்வாகியாகவும் அவர் இருந்திருப்பார். உலகம் முழுவதிலும் இருந்து வரும் சமிக்ஞைகள் குறித்து ஓரளவிற்கு உணர்ச்சியை வெளிப்படுத்துபவராகவும் இருந்திருப்பார். ஆனால் ட்ரம்ப்-ஐப் பொறுத்தவரையில், இவை குறித்தெல்லாம் முற்றிலும் கவலைப்படாத ஒருவராகவே இருக்கிறார். அதனால்தான் அவர் ஐரோப்பாவிற்குச் சென்றபோது அவர்களது திட்டத்திற்காக ஜெர்மன் முதலாளிகளை, ப்ரெஞ்சு முதலாளிகளை மிரட்டுகிறார். அவர்களைக் கேலி செய்கிறார். அமெரிக்க முதலாளிகள்தான் முதன்மையானவர்களாக இருக்க வேண்டும் என்றே அவர் நம்புகிறார். எனவே இந்த இரு ஏகாதிபத்தியங்களும் அதன் வகையில் அல்ல; அளவில்தான் வேறுபட்டவையாக இருக்கின்றன.