(மார்க்சிஸ்ட் இதழின் சார்பில், இந்திய விடுதலையின் பவள விழா ஆண்டில் நடைபெறும் தொடர் இணைய வழி கருத்தரங்கங்களின் தொடக்க நிகழ்வாக ஆகஸ்ட் 15 அன்று காலை நடைபெற்ற நிகழ்வினை தொடங்கி வைத்து தோழர் பிரகாஷ் காரத் ஆற்றிய ஆங்கில உரையின் தமிழாக்கம்)
இந்திய விடுதலையின் 75வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம். 74 ஆண்டுகளுக்கு முன்னர் ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று இந்தியா தன் அரசியல் விடுதலையைப் பெற்றது. 200 ஆண்டுகள் காலனியாதிக்கத்தின் கீழ் சிக்கிக் கிடந்த இந்தியா ஒரு சுதந்திர நாடாக பரிணமித்தது. இது உலகளாவிய முக்கிய நிகழ்வு ஆகும். ஏனெனில், உலகின் இரண்டாவது மிகப் பெரிய மக்கள் தொகை கொண்ட இந்திய நாட்டின் விடுதலைப் போராட்டம், நவீன வரலாறு கண்ட மிகப் பெரிய வெகுமக்கள் இயக்கங்களில் ஒன்று. உலகத்தில் நிலவிய பழைய பாணியிலான காலனி ஆதிக்க முறை, 19 ஆம் நூற்றாண்டுடன் முடிவுக்கு வரத் தொடங்கியதை இந்திய விடுதலை உணர்த்துகிறது.
இந்தியா ஒரு நவீன தேசமாக உருவானது. நம்மைப் பொறுத்தவரை இந்திய தேசியமானது ஏகாதிபத்தியத்திற்கு எதிராக நாம் நடத்திய போராட்டத்தின் விளை பொருளே ஆகும். ஆங்கிலேயர்கள் இங்கே வருவதற்கு முன் இந்தியா ஒரு தேசமாக இருக்கவில்லை. சாம்ராஜ்ஜியங்களாக, பேரரசுகளாக, சிறு-குறு நில மன்னர்களின் ஆட்சிப் பகுதிகளாகவே அது இருந்தது. ஆங்கிலேயர்களின் காலனி ஆதிக்கத்தை எதிர்த்து நடத்திய போராட்டத்தில்தான் இது ஒரு தேசமாக உருவெடுத்தது என்பதை புரிந்து கொள்வது அவசியமாகும்.
இந்திய தேசியத்தின் உருவாக்கம்
இன்றைக்கு இந்தியாவில் ஆட்சி அதிகாரத்தில் உள்ள பாஜகவும், அதன் தாய் அமைப்பாகிய ஆர்எஸ்எஸ் அமைப்பும் புராதன இந்து தேசம் அல்லது புராதன இந்திய தேசியம் என்பதாக தொடர்ந்து பேசிக் கொண்டுள்ளனர். இவ்வாறு கூறுவதின் மூலம் இந்தியாவை அவர்கள் இந்து தேசமாகக் குறிப்பிடுகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை, இத்தகைய இந்து தேசமானது 3,000 ஆண்டுகளாக இருந்து வருகிறது. ஆனால், வரலாற்று ரீதியாகப் பார்த்தால், அதற்கு முன்பிருந்த நிலப்பிரபுத்துவ அரசியல் நடைமுறையை தூக்கி எறிந்து புதிதாகத் தோன்றிய முதலாளித்துவ வர்க்கத்தின் வளர்ச்சிப் போக்கோடு இணைந்தே நவீன தேசம் என்ற கருத்தாக்கம் உருவானது. எனவேதான், ஐரோப்பாவில் – குறிப்பாக 18ஆம் நூற்றாண்டில் பல தேசிய இயக்கங்கள் உருவானதையும், முதலாளித்துவவாதிகள் தலைமையில் அந்த இயக்கங்கள் நிலப்பிரபுத்துவ அரசுகளை தூக்கி எறிந்து, இன்றுள்ள நவீன தேசங்களை நிர்மாணித்ததையும் நாம் பார்த்தோம்.
இந்தியாவிலும், ஏகாதிபத்தியத்தையும், காலனியாதிக்கத்தையும் எதிர்த்து நடந்த விடுதலைப் போராட்டம், சாதி, மதம், இனம், மொழி ஆகிய அனைத்து வேறுபாடுகளுக்கும் அப்பாற்பட்டு நடந்தது. அனைத்துப் பகுதி மக்களையும் ஒன்றிணைத்தது. ஆக, இந்திய தேசிய அடையாளம் என்பது தேச விடுதலைப் போராட்ட கனலிலிருந்தே தோன்றியது. நாம் அனைவரும் இந்தியர்கள்; நமக்கென்று ஒரு சுதந்திர நாடு இருக்க வேண்டும்; இந்த நாட்டின் தலைவிதியை நாமே தீர்மானிக்க வேண்டும் போன்ற உணர்வுகளை இதுவே தட்டியெழுப்பியது. எனவே, நவீன இந்தியாவின் அடிப்படை கோட்பாடுகளைப் பற்றி பேசும் போது, அவை தேச விடுதலைப் போராட்டத்தின்போது எழுந்த மாண்புகள், லட்சியங்கள், குறிக்கோள்களோடு இரண்டற கலந்து பின்னிப் பிணைந்தவையே ஆகும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அடிப்படை கோட்பாடுகளின் உருவாக்கம்
இந்தியாவை அல்லது நவீன இந்தியாவின் அடிப்படைக் கோட்பாடுகளை வடிவமைப்பதில், அந்த காலகட்டத்தில் மிகச் சிறியதொரு சக்தியாக இருந்தபோதிலும் கம்யூனிஸ்டுகள் மிக முக்கியமான பங்களிப்பை ஆற்றினார்கள். “முழு விடுதலை” என்ற முழக்கத்தை முதலில் முன்வைத்தவர்கள் கம்யூனிஸ்டுகளே அன்றி காங்கிரஸ் தலைமை அல்ல என்பதை நாம் மறந்து விடலாகாது. 1921ஆம் ஆண்டில் அகமதாபாத்தில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் அமர்வில், அப்போதிருந்த கம்யூனிஸ்ட் குழுக்களோடு நெருக்கமான தொடர்பில் இருந்த மௌலானா ஹஸ்ரத் மொஹானி அவர்கள்தான் முழுமையான விடுதலையைக் கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தார்.
அதன் பிறகும், தேசவிடுதலை என்பது வெறும் அரசியல் விடுதலை மட்டுமல்ல; அது பொருளாதார மற்றும் சமூக உள்ளடக்கத்தையும் அகத்தே கொண்டிருக்க வேண்டுமென்று கம்யூனிஸ்டுகள் வாதிட்டனர். இவ்வாறாக, 1929ஆம் ஆண்டில்தான்ஆண்டில்தான் “முழு விடுதலை” என்ற கருத்தாக்கம் காங்கிரஸ் கட்சியால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
1931ஆம் ஆண்டு கராச்சியில் நடைபெற்ற காங்கிரஸ் அகில இந்திய அமர்வில், விடுதலை இந்தியா எப்படி அமைய வேண்டும் என்பதைக் குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ‘அடிப்படை உரிமைகள் மற்றும் தேசிய பொருளாதார திட்டம்’ என இத்தீர்மானம் அழைக்கப்பட்டது. அதில்தான் முதன் முறையாக நவீன இந்தியா குறித்த கருத்தாக்கம் முன்வைக்கப்பட்டது. கருத்துச் சுதந்திரம், கூட்டம் கூடுவதற்கான உரிமை, பத்திரிகை சுதந்திரம் என்பன போன்ற குடிமக்களின் அடிப்படை உரிமைகள் குறித்து அதில் பேசப்பட்டன. இவற்றோடு, தொழிலாளர்களின், விவசாயிகளின் உரிமைகள், குத்தகை விவசாயிகள் செலுத்த வேண்டிய குத்தகைக் கட்டணத்தை குறைப்பது, தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச வேலை நேரம், பெண்களுக்கு சமஉரிமை, தொழிற்சங்கத்தை உருவாக்குவதற்கான உரிமை, விவசாயிகளுக்கான அமைப்புகளை ஏற்படுத்துவதற்கான உரிமை ஆகியன குறித்தும் பொருளாதார திட்டத்தில் பெருமளவில் பேசப்பட்டது. இவ்வகையில், கராச்சி தீர்மானமானது அப்போது காங்கிரஸ் இயக்கத்திற்குள் இருந்த இடதுசாரிகளின் செல்வாக்கைப் பெற்றிருந்தது. எனவேதான், பின்னாளில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்டது.
தேச விடுதலைக்கான இயக்கத்தின் இத்தகைய போக்கில்தான், மதச்சார்பற்ற, ஜனநாயகம் கொண்ட, பொருளாதார, சமூக நீதியை உள்ளடக்கிய நவீன இந்தியா குறித்தான கண்ணோட்டம் வடிவம் பெற்றது.
1950 ஆம் ஆண்டில் இந்தியா ஒரு குடியரசானது. தேச விடுதலை இயக்கத்தில் வடிவம் பெற்ற மதச்சார்பின்மை, ஜனநாயகம் போன்ற கருத்தாக்கங்கள், இந்திய அரசியல் சாசனத்தில் இடம் பெற்றிருந்தன. கூட்டாட்சி தத்துவமும், வேற்றுமையில் ஒற்றுமையும் அதில் அடங்கியிருந்தன.
அடிப்படைகள் மாறவில்லை
1947இல் விடுதலையின் போது, இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையும் சேர்ந்தே நடந்தது. இது பெருமளவிலான வன்முறைகளுக்கும், படுகொலைகளுக்கும் வழிகோலியது. நாட்டின் மேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பயங்கர வன்முறைகள் நடைபெற்றன. பிரிவினையின் வலியை நினைவு கூறும் வகையில் ஆகஸ்ட் 14ஆம் தேதி ஆண்டுதோறும் அனுசரிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இத்தகைய அறிவிப்பின் பின்னால் உள்ள நோக்கம் சந்தேகத்திற்குரியதே. ஏனென்றால், ஒருபுறம் முஸ்லீம் லீக் கட்சியும், மறுபுறம் இந்து மத அடிப்படைவாதிகளுமாக, வகுப்புவாத சக்திகளே பிரிவினையை கூர்மைப்படுத்தியதுடன் , மதக்கலவரங்களையும், வன்முறைகளையும் தூண்டிவிட்டனர் என்பதை நாம் அறிவோம்.
ஆகஸ்ட் 14 என்பது பாகிஸ்தானின் விடுதலைநாள் ஆகும். எனவே, பிரதமர் மோடி மேற்கொண்டுள்ள அறிவிப்பின் நோக்கம், இந்நிகழ்வுகளை நினைவு படுத்துவதன் மூலம் இஸ்லாமியர்களுக்கு எதிரான உணர்வுகளைத் தூண்டுவதும், இவ்வகையில் மதஉணர்வுகளின் அடிப்படையில் மக்களிடையே பிளவினை அதிகரிப்பதும் ஆகும்.
பிரிவினையின்போது பயங்கர வன்முறைகள் நிகழ்ந்தபோதும், பாகிஸ்தான் போன்று மத அடையாளத்தின் அடிப்படையிலான நாடாக அல்லாமல், இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகவே அமைந்தது. மதத்தின் அடிப்படையில் குடிமக்கள் யார் மீதும் பாகுபாடு காட்டப்படாது என்பதை இந்திய அரசியல் சாசனம் தெளிவாக வரையறுத்தது. இது மிகவும் முக்கியமாக கவனிக்க வேண்டியதாகும். ஏனென்றால், இன்றைக்கு நாட்டின் அதிகாரத்தில் இருப்பவர்களால் இந்த அடிப்படைக் கோட்பாடு குறித்து கேள்வி எழுப்பப்படுகிறது, இந்தக் கோட்பாடு அரிக்கப்படுகிறது.
கைவிடப்பட்ட வழிகாட்டு நெறிகள்
விடுதலைப் போராட்டத்தில் முன்னுக்கு வந்த மாண்புகளையும், கண்ணோட்டங்களையும் பெருமளவில் உள்ளடக்கியதாக நமது அரசியல் சாசனம் அமைந்துள்ளது என்பதை ஏற்கனவே குறிப்பிட்டேன். 1931இல் நிறைவேற்றப்பட்ட கராச்சி தீர்மானமானது இந்திய அரசியல் சாசனத்திலும் எதிரொலிக்கிறது. அரசியல் சாசனத்தில் வழிகாட்டும் நெறிமுறைகள் என்றொரு பகுதி இருக்கிறது. இது கண்டிப்பாக நடைமுறைபடுத்தப்பட வேண்டிய பகுதியல்ல என்றபோதும், நாடு பயணிக்க வேண்டிய திசை வழியை இது காட்டுகிறது. அதிலிருந்து சில பகுதிகளை மேற்கோள் காட்ட விரும்புகிறேன்.
முதலாவதாக, தேசிய வாழ்க்கையோடு இணைந்த அனைத்து நிறுவனங்களிலும் நீதி உத்திரவாதப்படுத்தப்பட வேண்டும். அதேபோன்று, சமூக, பொருளாதார, அரசியல் வாழ்க்கையிலே பாகுபாடு எதுவுமின்றி நீதியும், நேர்மையும், நியாயங்களும் இருக்க வேண்டும். இவற்றின் வாயிலாக மக்கள் நலனை ஊக்குவித்திட அரசை வலியுறுத்துகிறது.
இரண்டாவதாக, ஊதியத்தில் காணப்படும் சமமற்ற நிலைமையை குறைத்திட வலியுறுத்துகிறது. இதனை செயல்படுத்திட, சமூகத்திற்குச் சொந்தமான வளங்களின் மீதான கட்டுப்பாடு என்பது பொதுநலனுக்கு உட்பட்டதாகத்தான் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிடுகிறது.
இந்தியாவின் பொருளாதார முறைமை செயல்படுத்தப்படுவதன் மூலம் பொதுநலனுக்கு எதிரான விதத்தில் ஒருபோதும் செல்வமும், உற்பத்தி சாதனங்களும் ஒரு சிலரின் கைகளில் குவிந்திடக் கூடாது.
ஆக, இந்த வழிகாட்டு நெறிமுறைகளில் அரசியல், பொருளாதார, சமூக நீதியின் அடிப்படையிலான நவீன இந்திய அரசின் கொள்கைகள் தெளிவாக வரையறை செய்யப்பட்டுள்ளன.
இந்தியா தற்போது 75வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தருணத்தில், இந்த வழிகாட்டு நெறிமுறைகளைப் பார்க்கும்போது, இந்திய அரசு நிர்வாக அமைப்பும், அடுத்தடுத்து ஆட்சியதிகாரத்திற்கு வந்த அரசுகளும் இந்த நெறிமுறைகளை அதன் மெய்யான சாராம்சத்தோடு செயல்படுத்த முனைந்ததாக கூற முடியுமா? சொல்லப்போனால், இன்றைக்கு அரசால் செயல்படுத்தப்படும் பல கொள்கைகள் அரசியல் சாசனத்தின் வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டவற்றிற்கு நேர்எதிராகவே உள்ளன. ஏனெனில், விடுதலைக்கு பின் உருவாக்கப்பட்ட அரசுகளின் அதிகாரம் ஆளும் வர்க்கங்களின் கைகளிலேயே இருந்தது. அதாவது நவீன இந்தியாவில் முன்னெழுந்த வர்க்கமாகிய முதலாளித்துவ வர்க்கத்தின் கைகளில் இருந்தது. புதிதாக உருவான வர்க்கம் எனும் போதிலும் அது ஓரளவிற்கு வலுவானதாகவே இருந்ததையும் நாம் கவனிக்க வேண்டும். அவர்கள் உண்மையில் என்ன செய்திருக்க வேண்டும்? வழிகாட்டும் நெறிமுறைகளில் இடம் பெற்றிருந்த கண்ணோட்டங்களையும், லட்சியங்களை நிறைவேற்றுவதற்கான முயற்சியிலே ஈடுபட்டிருக்க வேண்டும். அதை கவனத்தில் கொள்ளவே இல்லை என்பதோடு மொத்தமாக கைவிட்டு விட்டார்கள் என்பதையும் நாம் பார்க்க வேண்டும். இவர்கள் பழைய நிலவுடைமை, அரைநிலவுடைமை சக்திகளோடு சமரசம் செய்து கொண்டனர். அரசு அதிகாரத்தில் பங்காளியாக இணைத்துக் கொண்டார்கள். எனவேதான், இந்திய அரசின் வர்க்கத்தன்மையை குறிப்பிடும்போது முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ அரசு என்று குறிப்பிடுகிறோம்.
பழைய கண்ணோட்டங்களோடு சமரசம்
நிலப்பிரபுத்துவத்தோடு இவர்களின் சமரசம் நவீன இந்தியாவின் வடிவமைப்பில் பலப்பல விதங்களில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தியதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்த சமரசத்தின் காரணமாகவே தீவிரமான நிலச்சீர்திருத்தம் நடைபெறவில்லை. நிலத்தின் மீதான உரிமை ஒரு சிலர் கைகளில் குவிந்திருந்த நிலையை பெரிதாக மாற்ற இயலவில்லை. நிலப்பிரபுத்துவ சமூக உறவுகளில் பெரிய அளவிற்கு முறிப்பை ஏற்படுத்த இயலவில்லை. குறிப்பாக, சாதி ஒழிப்பிற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. கராச்சி தீர்மானத்திலும், தேச விடுதலைப் போராட்டத்தின்போது முன்னெழுந்த மாண்புகள், லட்சியங்கள், அரசியல் சாசனத்தின் வழிகாட்டும் நெறிமுறைகள் முன்வைத்த விஷயங்கள் எல்லாம் பாதிக்கப்பட்டதற்கு இத்தகைய சமரசமே முக்கியமான காரணமாகும்.
இதற்கு உதாரணமாக கல்வியை நாம் குறிப்பிடலாம். இவர்கள் ஆட்சியதிகாரத்திற்கு வந்தவுடனேயே அனைவருக்கும் ஆரம்பநிலைக் கல்வியை உறுதி செய்யும் முயற்சியை தீவிரமாக முன்னெடுத்திருக்க வேண்டும். ஆனால், விடுதலையடைந்து 20-25 ஆண்டுகள் கடந்த பின்னரும் கூட – அதாவது 70களின் துவக்கத்திலும் கூட இந்தியாவின் அனைத்துக் குழந்தைகளுக்கும் ஆரம்ப கல்வி கிடைக்கவில்லை. அந்த குழந்தைகளை எல்லாம் பள்ளிகளில் சேர்ப்பதற்கான முயற்சி பெரிய அளவில் ஆளும் வர்க்கங்களிடமிருந்து வரவில்லை என்கிறபோது, அதிகார வர்க்கமும் அது பற்றி பெரிய அளவில் முனைப்பு காட்டவில்லை. நேரு உள்ளிட்டவர்களுக்கு இந்த பார்வை இல்லை என்றோ, அல்லது இந்த விஷயம் அவர்களுக்குத் தெரியவில்லை என்பதால் இது நடக்கவில்லை என்றோ சொல்லிவிட முடியாது. தெரிந்தும் ஏன் நடக்கவில்லை என்றால், சாதிய அமைப்பு முறை உடைக்கப்படாதது தான் முதன்மையான காரணமாக முன்னுக்கு வருகிறது. கல்வி என்றால் அது எங்களுக்குத்தான், மற்றவர்களுக்கு இல்லை என்ற அடிப்படையில்தான் உயர்சாதிகளைச் சார்ந்தவர்கள் செயல்பட்டு வந்தனர். எனவே, அதிகார வர்க்கமும் இதில் முனைப்புக் காட்டவில்லை. இதன் காரணமாக, அனைவருக்கும் ஆரம்ப கல்வி என்பது தோல்வியை அடைந்தது.
முதலாளித்துவ பாதையின் சிக்கல்கள்
மேலும் ஆளும் வர்க்கங்கள், இந்தியாவிற்கு முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையை தேர்வு செய்தார்கள். இது முதலாளித்துவத்தை மேலும் வளர்த்தெடுக்க உதவும். ஆனால் இந்தியாவிற்காக ஏற்கனவே முன்வைத்துள்ள கோட்பாடுகளை பின்னுக்குத் தள்ளிடும். பொருளாதார ரீதியாக, அரசியல் ரீதியாக, சமூக ரீதியாக முன்வைக்கப்பட்டுள்ள விடுதலைக்கான லட்சியங்களுக்கு நேர் எதிரானதாக, பிற்போக்கானதாக, முதலாளித்துவ பாதை இருக்கும் என்று கம்யூனிஸ்டுகள் எச்சரித்தோம். இந்த முதலாளித்துவ வளர்ச்சிப் பாதை, செல்வ வளங்களை ஒரு சிலரின் கைகளிலே குவிந்திடச் செய்யும்; ஏகபோகங்களை உருவாக்கும்; மிகப் பெரிய தொழிலதிபர்கள் உருவாவார்கள் என்று நாம் சொன்ன எல்லாம் பின்னாளில் நிகழ்ந்தன.
அதுமட்டுமின்றி, முதல் மூன்று ஐந்தாண்டுத் திட்டங்கள் வரை பொருளாதார தளத்திலே நிகழ்ந்த முன்னேற்றங்களும், அவற்றின் பலன்களும் ஒரு சிலரின் கைகளிலேயே குவிந்தன. தீவிர நிலச்சீர்திருத்தம் நடைபெறவில்லை. நிலஉறவுகளில் ஜனநாயக ரீதியிலான மாற்றங்கள் ஏற்படவில்லை. அதே போல முதலாளித்துவ பாதையை பின்பற்றினால் அதன் காரணமாக நெருக்கடிகள் உருவாகும் என்பதையும் நாம் சுட்டிக் காட்டினோம். இந்தப் பாதை அந்நிய மூலதனம், சர்வதேச நிதிமூலதனத்தை சார்ந்து செயல்படக் கூடிய பாதையாகும். எனவே, நிச்சயமாக இதில் நெருக்கடிகள் உருவாகும். உள்நாட்டு சந்தைகளை பலப்படுத்த வேண்டும். அதற்கு மக்கள் கைகளிலே வாங்கும் சக்தி வேண்டும். எனவே, தீவிர நிலச்சீர்திருத்தம் உள்ளிட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்தால்தான் வாங்கும் சக்தி உருவாகும். அது உள்நாட்டு சந்தைகளை வலுப்படுத்தும். எனவே அந்நிய மூலதனத்தை சார்ந்து இருக்க வேண்டிய அவசியம் இருக்காது என்று நாம் குறிப்பிட்டோம். ஆனால், அவர்கள் பின்பற்றிய வளர்ச்சிப் பாதை இவற்றுக்கெல்லாம் நேர் எதிராகவே இருந்த காரணத்தால் நாம் சுட்டிக் காட்டியவாறு நெருக்கடிகள் நிகழ்ந்தன என்பதைக் காண வேண்டும். சொல்லப்போனால், 1970களிலேயே இந்த நெருக்கடிகள் இந்தியாவில் உருவாயின.
இந்தியாவில் இவர்கள் கடைப்பிடித்த முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையில் அரசு ஒரு முக்கியமான பங்கை வகித்தது. கனரகத் தொழில்கள், உள்கட்டமைப்பு வசதிகள் போன்றவை எல்லாம் பொதுத்துறையில் உருவாக்கப்பட்டன. முதலாளித்துவத்தின் வளர்ச்சிக்காக அரசு தலையிட்டு இந்த உதவிகளை எல்லாம் செய்தது. ஆனால், நெருக்கடி உருவான பின்னணியில் இந்த போக்குகளைக் கூட கைவிட வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
1991ஆம் ஆண்டு தொடங்கி நவீனதாராளவாத பாதைக்கு இந்தியா மாறியது. இந்த மாற்றத்திற்கும் உலக அளவிலான நிகழ்ச்சிப் போக்குகளுக்கும் தொடர்பு உண்டு. சோவியத் ஒன்றியம் சிதறுண்டது; உலகளாவிய நிதிமூலதனத்தின் ஆதிக்கம் ஏற்பட்டது; உலகமயச் சூழலுடனான நவீன தாராளவாத கொள்கைகள் உலக நாடுகளிலுள்ள பல அரசுகளால் பின்பற்றப்பட்ட நிலை ஆகிய காரணங்களால் இந்தியாவிற்கும் அந்த நிலைமை ஏற்பட்டது.
ஏற்கனவே சொன்னபடி, முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ வர்க்கங்களால் வழிநடத்தப்பட்ட இந்திய அரசு, தனது ஜனநாயகக் கடமைகளை முழுமையாக செய்து முடிக்காத நிலைமையும், முதலாளித்துவ வளர்ச்சிப்பாதையை தேர்ந்தெடுத்ததால் வந்த நெருக்கடிகளும் நிலவுகிற சூழலில், நவீன தாராளமய கொள்கைகளும் கடைப்பிடிக்கப்படும் ஒரு புதிய கட்டத்தில் நாம் இருக்கிறோம்.
பெற்றதையும் இழப்பதா?:
இந்திய ஆளும் வர்க்கங்கள் தங்களது ஜனநாயக புரட்சியின் கடமைகளை நிறைவேற்றுவதில் தோல்வி அடைந்தது மட்டுமல்ல; அந்த கடமைகளுக்கு நேர்எதிரான பாதையில் செல்கின்றன. விடுதலையால் பெற்ற கொஞ்சநஞ்ச பலன்களும், வளர்ச்சியும் மீண்டும் பறிக்கப்படும் நிலைக்குத்தான் இவர்கள் இட்டுச் செல்கிறார்கள். எனவேதான், மதச்சார்பின்மைக்கு, ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கைகள், கூட்டாட்சி கோட்பாட்டை சீர்கெடுப்பது, தேசியம் என்று பேசிக்கொண்டே நாட்டின் இறையாண்மையை காலில் போட்டு மிதிப்பது போன்றவை எல்லாம் பாஜக ஆட்சிக்கு வந்த கடந்த 7 ஆண்டுகளில் நடந்து கொண்டிருக்கின்றன. இவ்வகையில் நவீன இந்தியாவின் அடிப்படை கோட்பாடுகள் மீது ஒரு தாக்குதல் நடந்து கொண்டிருக்கிறது.
இந்திய விடுதலையின் 75வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள இந்தச் சூழலில் நாட்டின் எதிர்காலம் குறித்த கேள்வி எழுகிறது. எப்படி இருக்க வேண்டும் என நினைத்தார்கள் என்று பார்த்தோம். இடைக்காலத்தில் எப்படி இருந்தது என்பதையும் பார்த்தோம். எதிர்கால இந்தியா குறித்த ஊகங்களை கடந்த மூன்றாண்டுகளாகவே பிரதமர் மோடி சொல்லிக் கொண்டிருக்கிறார்.
2018ஆம் ஆண்டு பிரதமர் மோடி நிகழ்த்திய சுதந்திர தின உரையிலே புதிய இந்தியா என்ற கருத்தாக்கத்தை முன்வைத்தார். புதிய இந்தியா முழுமையாக எப்போது வடிவம் பெறும் என்று சொன்னால் 2022இல் – அதாவது இந்திய விடுதலையின் 75 ஆண்டுகள் நிறைவு பெறும்போது அது நிகழ்ந்திடும் என்று அவர் சொன்னார். அவர் சொல்வதைப் பார்க்கும்போது, இந்தப் புதிய இந்தியாவின் பாதை ஒருபுறம் இந்துத்துவ மதவெறிப் பாதையாகவும், மறுபுறம் நவீன தாராளவாத கார்ப்பரேட் பாதையாகவும் இருக்கும் என்று தெரிகிறது. இந்தக் கலவை நச்சுத்தன்மை கொண்டது. மிக ஆபத்தானது. இதுதான் இந்திய விடுதலையின் பவள விழா தருணத்தில் மிகப் பெரிய அச்சுறுத்தலாகவும், ஆபத்தாகவும் இந்திய மக்களின் முன் வந்து நிற்கிறது.
மோடி ஆட்சி, ஒரு நச்சுக் கலவை
2019 மக்களவை தேர்தலில், மிகப் பெரிய பலத்தோடு பாஜக ஆட்சியமைத்தது. அந்த ஆண்டே ஆகஸ்ட் 5ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, மாநிலத்தை சிதைத்தது. அரசியல் சாசனத்தின் பிரிவு 370ஐ ஒழித்துக் கட்டியது. முதன் முறையாக, இந்தியாவில் மாநிலங்களின் எண்ணிக்கை 29 என்பதிலிருந்து 28 ஆகக் குறைந்தது. இந்தச் செயல் புதிய இந்தியா பற்றிய ஒரு முன்னோட்டமாகும். இந்த ஒரே நடவடிக்கை நாட்டின் மதச்சார்பின்மை மீதான தாக்குதலாகவும், கூட்டாட்சி கோட்பாட்டின் மீதான தாக்குதலாகவும் இருந்தது. எந்தவொரு மாநிலமும் சுயேச்சையாக சில விஷயங்களில் முடிவு செய்வதை இந்த ஆட்சியும், அரசும் ஒருபோதும் ஏற்காது. மேலும், இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் ஒரு மாநிலம் என்பதாலும், அதனை சிதைக்கும் நோக்கத்தோடு இதனை முன்னெடுத்தார்கள்.
இதற்கு அடுத்து, 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதியன்று ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டிய பூமி பூஜை அரசு விழாவாக நடத்தப்பட்டது. அந்த நிகழ்வில் பங்கேற்ற பிரதமர் மோடி, ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது. ஆனால், ஆகஸ்ட் 5ஆம் தேதிதான் இந்தியாவிற்கு விடுதலை கிடைத்தது என்று ராமர் கோவில் அஸ்திவார நிகழ்வோடு இணைத்துப் பேசினார். அப்படியானால், புதிய இந்தியா ஒரு இந்து ராஷ்டிரமாக இருக்கும் என்பதற்கான அடையாளமாக இந்தக் கோயில் இருக்கும் என்பதை அவரது உரை சுட்டிக் காட்டியது.
2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. சுதந்திர இந்தியாவில் முதன் முறையாக குடியுரிமைக்கான தகுதியாக மதம் என்பது நிறுவப்பட்டது. இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தின் விவரங்களுக்குள் போக விரும்பவில்லை. ஆனால், நவீன இந்தியாவில் குடியுரிமை பெறுவதற்கான தகுதிகள் என்னவாக இருக்க வேண்டும் என்று அரசியல் சாசனம் சுட்டிக் காட்டியதோ, அதற்கு மாறாக, மதம் என்பதை ஒரு தகுதியாகக் கொண்டு வருகிற வேலையை குடியுரிமை திருத்தச் சட்டம் செய்தது. ஏற்கனவே இந்தியாவின் அரசியல் சாசனம் மத அடிப்படையிலோ, பாலின அடிப்படையிலோ, மொழி அடிப்படையிலோ பாகுபாடுகள் இருக்கக் கூடாது என்பதை அடிப்படைக் கோட்பாடாக முன்வைத்துள்ளது என்பது நமக்குத் தெரியும். எனவே, இப்போது கொண்டுவரப்பட்டுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது அரசியல் சாசனம் சுட்டிக் காட்டியிருக்கக் கூடிய நவீன இந்தியா என்ற கருத்தாக்கத்திற்கு அடித்தளமாக இருக்கக் கூடிய அடிப்படைக் கோட்பாடுகளுக்கு முரணானதாக, அதை சிதைக்கக் கூடியதாக இருக்கிறது.
அடுத்தடுத்து, பாஜக ஆட்சியதிகாரத்தில் இருக்கக் கூடிய உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், அசாம், ஹரியானா போன்ற மாநிலங்களில் கொண்டு வரப்படக் கூடிய சட்டங்கள் பெரும்பாலும் மதச்சார்பின்மைக்கு எதிரானவையாக இருக்கின்றன. இஸ்லாமிய சமூகத்தை குறி வைத்து தாக்குபவையாக இருக்கின்றன. லவ் ஜிகாத், பசுவதை தடுப்பு ஆகிய பெயர்களில் இருந்தாலும், அதன் உள்ளடக்கம் இஸ்லாமிய சமூகத்தை குறிவைப்பதாகவே இருக்கிறது. இந்த அரசாங்கத்திற்கு வழிகாட்டுகிற ஆர்எஸ்எஸ் தலைமையில் செயல்படும் இந்துத்துவா சக்திகள் நாட்டின் பல்வேறு நிறுவனங்களில் ஊடுருவியுள்ளார்கள். ஏனெனில், அரசு என்று சொன்னால் அது நாடாளுமன்றம் மட்டுமின்றி, நீதித்துறையும் அதிகார வர்க்கமும், ராணுவம் உள்ளிட்ட ஆயுதப்பிரிவுகள் அனைத்தும் அடங்கியதாகும். அவர்கள் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டு அரசாங்கத்தை அமைத்துவிட்டார்கள் என்பதால், அந்த அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி இதர துறைகளில் இருக்கக் கூடிய முக்கியமான நிறுவனங்களில் ஊடுருவி, அதனுடைய தலைமையை கைப்பற்றுகிற வேலையையும் செய்கிறார்கள்.
அதிகாரத்தில் ஊடுருவல்
இத்தாலிய மார்க்சீய சிந்தனையாளர் கிராம்ஷி அவர்கள் இந்த போக்கைப் பற்றி சொல்லும்போது இந்த ஆபத்தான சக்திகள் நடத்துகிற நெடும்பயணம் என்கிறார். இந்த நெடும்பயணம் என்பது அரசியல் சாசனத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட நிறுவனங்களை ஊடுருவி, அவற்றின் தலைமையை கைப்பற்றுகிற பாதை என கிராம்ஷி அவர்கள் குறிப்பிட்டதுதான் இன்றைக்கு இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிறுவனங்களை எல்லாம் அவர்கள் சீரழிக்கவில்லை; சிதைக்கவில்லை. மாறாக, நிறுவனங்களை அப்படியே வைத்துக் கொண்டு, அவற்றினுள் ஊடுருவி, உள்ளிருந்து அதன் தலைமையை, அதிகாரத்தைக் கைப்பற்றுகிறார்கள் என்பது மிக மிக ஆபத்தான விஷயமாகும். எனவே, நவீன இந்தியா என்கிற கருத்தாக்கத்தின் அடிப்படைக் கோட்பாடுளையும், தன்மையையும் இவர்கள் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
மறுபுறம் நவீன தாராளவாதக் கொள்கைகளை அவர்கள் மிகத் தீவிரமாகப் பின்பற்றுகிறார்கள். 2018 துவங்கி 2021 வரையிலான இதே மூன்றாண்டு காலத்தில் கார்ப்பரேட் ஆதரவு நவீன தாராளவாத கொள்கைகளும் மிகத் தீவிரமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. பொதுத்துறை நிறுவனங்கள் அநேகமாக முற்றிலுமாக ஒழித்துக் கட்டப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று இருந்த காலமாகும். இக்காலகட்டத்தில் நிவாரண திட்டங்கள் என்ற பெயரில் சில திட்டங்களை இவர்கள் அறிவித்துக் கொண்டிருந்தார்கள். அதிலே ஒரு கொள்கையாக இவர்கள் அறிவித்தது என்னவென்றால், கேந்திரமான துறைகளில் மட்டும்தான் பொதுத்துறை நிறுவனங்கள் செயல்படும். மற்றவை எல்லாம் தனியார்மயமாக்கப்படும் என்றனர். கேந்திரமான துறைகளில் கூட அதிகபட்சமான 4 பொதுத்துறை நிறுவனங்கள்தான் இருக்கும். மற்றவை எல்லாம் தனியாருக்கு விற்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எண்ணெய் நிறுவனங்கள் உட்பட அனைத்திலும் இதுவே இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பிரதானமாக இருக்கக் கூடிய பொதுத்துறை நிறுவனங்கள் ஒன்று இணைக்கப்படுகின்றன; அல்லது தனியாருக்கு விற்கப்படுகின்றன என்பதுதான் இந்த மூன்றாண்டு கால நடவடிக்கையாக இருந்து வருகிறது.
இறையாண்மைக்கு ஆபத்து
பிரதமர் பேசும்போதெல்லாம் சுதந்திர இந்தியா என்பது சுயசார்புள்ள இந்தியாவாக இருக்க வேண்டும் என்கிறார். இவ்வாறு சொல்லிக் கொண்டே, இந்தியாவிற்கு ஏற்கனவே கொஞ்சநஞ்சம் இருக்கிற சுயசார்பையும் தங்கள் நடவடிக்கைகளால் தகர்க்கிறார்கள். சுயசார்பு தகர்க்கப்படுகிறது என்றால் என்ன பொருள்? பொருளாதார இறையாண்மை விட்டுக் கொடுக்கப்படுகிறது என்பதேயாகும். அதனுடைய ஒரு மிக முக்கியமான உதாரணமாக, பாதுகாப்புத் துறையிலே ஆயுதத் தளவாட உற்பத்தியில் 100% அந்நிய நிறுவனங்கள் உள்ளே வரலாம் என ஒரு கொள்கையை இவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். அமெரிக்க நிறுவனங்கள் பாதுகாப்புத் துறைக்கான டேங்குகள், ஆயுதங்கள் இவற்றையெல்லாம் உற்பத்தி செய்யலாம். இவற்றின் மீதான முழுக்கட்டுப்பாடு பன்னாட்டு நிறுவனங்களின் கைகளில் இருக்கும். எனவே, தேசத்தின் பாதுகாப்பு தொடர்பான தளவாட உற்பத்தி தொடர்பான மொத்தக் கட்டுப்பாடும் பன்னாட்டு நிறுவனங்கள் கைகளுக்குப் போய்விட்டது என்று சொன்னால் இந்திய தேசத்தின் இறையாண்மையை எங்கே போய் தேட முடியும்? இறையாண்மை எப்படி இருக்கும்? ஆனால், இதைப்பற்றி எல்லாம் இந்திய ஆட்சியாளர்களுக்கு கவலை இல்லை. ஏனென்று சொன்னால், தேச விடுதலை, தேசத்தின் இறையாண்மை என்பவற்றிற்கெல்லாம் இவர்கள் பெரிய முக்கியத்துவம் கொடுப்பது கிடையாது. விடுதலைக்காக நடந்த போராட்டத்தில் இவர்களுக்கு எந்தவொரு பங்குபாத்திரமும் கிடையாது. இவர்களுக்கு வேண்டியதெல்லாம் இந்து ராஜ்ஜியம் என்பதேயாகும். அதற்காக இவர்கள் எதை வேண்டுமானாலும் செய்வார்கள்.
இந்த கார்ப்பரேட் ஆதரவு பாதையிலே அமெரிக்க ஏகாதிபத்தியம் இவர்களுக்கு உதவுகிறது என்றால் அவர்களோடு கை கோர்க்கவும் இவர்கள் தயங்க மாட்டார்கள். எனவே, ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பது கொஞ்சம் கூட இல்லாத ஒரு பகுதியாகத்தான் இவர்கள் இருக்கிறார்கள் என்பதைத்தான் தேச விடுதலைப் போராட்ட காலம் துவங்கி இன்று வரை நாம் பார்த்துக் கொண்டு வருகிறாம். எனவே, மோடி முன்வைக்கிற ஆத்மநிர்பர் – அதாவது சுயசார்பு- என்பது வெறும் வாய் வார்த்தையாகவே உள்ளது.
அருங்காட்சியகத்தில் ஜனநாயகம்
அதேபோலத்தான் நாடாளுமன்ற ஜனநாயகமும் இருக்கிறது. இப்போது புதிய நாடாளுமன்ற வளாகத்திற்கான கட்டுமானப் பணிகள் தில்லியில் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதைக் கட்டுகிற பொறுப்பு டாடா நிறுவனத்திடம் கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் 2 ஆண்டுகளில், அதாவது 2023ஆம் ஆண்டிற்குள் இந்த கட்டுமானப் பணியை முடித்துவிடுவோம் என டாடா நிறுவனம் சொல்லி வருகிறது. அரசு சார்பில் என்ன சொல்லப்படுகிறது என்றால், இந்த புதிய வளாகத்தில்தான் நாடாளுமன்றம் இயங்கும். பழைய நாடாளுமன்ற கட்டிடம் என்பது ஜனநாயகத்தின் அடையாளமாக பொருட்காட்சியில் வைக்கப்படும் என்று அவர்கள் சொல்கிறார்கள். இன்றைக்கு நாடாளுமன்ற ஜனநாயகம் என்பது பொருட்காட்சியில் வைக்கப்படுகிற நிலைமையில்தான் இருக்கிறது. இந்த ஒரு விஷயத்தை அவர்கள் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்கள்.
நாடாளுமன்றத்தைப் பற்றியோ அல்லது அது சார்ந்த நிறுவனங்களைப் பற்றியோ இவர்களுக்கு எந்த உணர்வும் இல்லை; மரியாதையும் இல்லை. எனவே, நாடாளுமன்ற ஜனநாயகம் என்பது பொருட்காட்சியில் வைக்கத் தகுந்த ஒன்றுதான் என்ற அடிப்படையில்தான் இவர்களது நடவடிக்கைகள் இருந்து வருகின்றன. நாடாளுமன்ற ஜனநாயகத்தை பின்னுக்குத் தள்ளிவிட்டு ஒரு புதிய வகையான ஜனநாயகத்தை நிறுவ இவர்கள் முயல்கிறார்கள். இந்த புதிய வகையான ஜனநாயகம் எப்படி இருக்கும் என்பதை நம்மால் ஊகிக்க முடிகிறது. நாடாளுமன்றத்தின் கடந்த மழைக்கால கூட்டத் தொடரின்போது பல முக்கியமான மசோதாக்கள் எந்தவிதமான விவாதத்திற்கும் உட்படுத்தப்படாமல் நிறைவேற்றப்பட்டன என்பதிலிருந்தே அதனை புரிந்து கொள்ள முடியும். குறிப்பாக, பொதுத்துறை பொதுக் காப்பீட்டு நிறுவனங்களை தனியார் மயமாக்குவதற்கான மசோதா குறித்து விவாதிக்க அனுமதிக்காததோடு மட்டுமின்றி, அதை நிலைக்குழுவிற்கு அனுப்பலாம் என்ற வாதத்தையும் கூட அரசு ஏற்கவில்லை.
மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, பாஜகவோடு கூட்டணியில் உள்ள சில கட்சிகள் உட்பட இந்த மசோதாவிற்கு எதிரான நிலையைத்தான் எடுத்திருந்தார்கள். ஒரு வேளை மாநிலங்களவையில் இம்மசோதா மீதான வாக்கெடுப்பு அனுமதிக்கப்பட்டிருந்தால், நிச்சயமாக அவர்களால் அதனை நிறைவேற்றியிருக்க முடியாது. எனவே, இம்மசோதா மீது விவாதத்திற்கோ, வாக்கெடுப்பிற்கோ இடம் கொடுக்காது அவசர அவசரமாக நிறைவேற்றினார்கள். இப்படிப்பட்ட நடவடிக்கைகளைப் பார்க்கும்போது, இந்தியாவில் நாடாளுமன்ற ஜனநாயகம் என்பது முழுமையாகக் குழிதோண்டி புதைக்கிற இடத்தில் தான் இவர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள்.
கூட்டாட்சிக்கு கேடு
அதுபோலத்தான், கூட்டாட்சி கோட்பாடுகளும், மாநில உரிமைகளும், நிதி தொடர்பான மாநிலங்களுக்கான பங்கீடும் மோசமாக அரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மத்திய அரசு எதை வேண்டுமானாலும் செய்யலாம். உங்களுக்கு இந்த நிதியில், வரி வருவாயில் பங்கீடு வேண்டுமென்றால், நீங்கள் அதன் நிபந்தனைகளை எல்லாம் நிறைவேற்ற வேண்டும் என்று அவர்கள் கூற முடியும். ஏற்கனவே மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய ஜிஎஸ்டிக்கான இழப்பீடு மிகப் பெரிய நிலுவையில் உள்ளது. எனவே, நிதி விஷயத்தில் மாநிலங்களை அவர்கள் பட்டினி போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது முக்கியமான விஷயமாகும்.
அதே போன்று, அரசியல் தளத்திலும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் என்றால் ஆளுநர்களையும், துணைநிலை ஆளுநர்களையும் கொண்டு கவிழ்ப்பதற்கான முயற்சி செய்வது, இதர கட்சிகளிலிருந்து சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி பாஜக தலைமையிலான ஒரு மாநில அரசாங்கத்தை உருவாக்க முயற்சிப்பது என்ற நடவடிக்கைகளால் கூட்டாட்சி கோட்பாடு முற்றிலும் தகர்க்கப்பட்ட நிலையில் நாம் உள்ளோம்.
இதுவரை மாநில உரிமைகள் பலவற்றிலும் ஒன்றிய அரசு தலையீடு செய்தது என்பதையும், மாநில அதிகாரங்களை எல்லாம் ஒன்றிய அரசு தன்வசப்படுத்திக் கொண்டது என்பதையும் நாம் கண்டோம். சமீபகாலத்தில் சில புதிய பகுதிகளிலும் அவர்களது இத்தகைய ஆக்கிரமிப்பு நடந்து கொண்டுள்ளது என்பதை பார்க்க முடிகிறது. புதிய கல்விக் கொள்கையை, வேளாண் சட்டங்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். அதேபோன்று கூட்டுறவுத் துறை என்பது மாநில அதிகார வரம்பிற்குள் உள்ள ஒன்றாகும். ஆனால், இதற்கு மத்தியில் ஒரு அமைச்சகத்தை ஏற்படுத்தி அமித் ஷாவை அதற்கு அமைச்சராக நியமித்திருக்கிறார்கள்.
கொள்கை மாற்று தேவை
2019 நாடாளுமன்ற தேர்தல்களுக்குப் பிறகு எதிர்க்கட்சிகள் ஒப்பீட்டளவில் பலவீனமாக இருக்கின்றன. மேலும், ஒரு சில மாநிலக் கட்சிகள், பாஜகவினர் செய்யும் அக்கிரமங்களுக்கு எதிராக வாய் திறக்க மறுக்கின்றனர். எனவே, பாஜக எதை வேண்டுமானாலும் செய்துவிட்டு அதிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும் என்ற நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. எனவே, ஒட்டுமொத்தமாக நவீன சுதந்திர இந்தியாவின் அடிப்படைக் கோட்பாடுகள் முற்றுகையிடப்பட்ட சூழலில்தான் நாம் இதனை பேசிக்கொண்டுள்ளோம்.
எனவே நமது சுயேச்சையான மாற்றுக் கண்ணோட்டங்கள் அல்லது நவீன இந்தியா குறித்த மாற்றுத் திட்டங்களின் மூலமே இவற்றை எதிர்கொள்ள வேண்டும். இந்தியா குறித்த கடந்த கால முதலாளித்துவ தாராளவாத கண்ணோட்டத்தைப் பற்றி பேசுவது மட்டும் போதாது. ஏனெனில் அக்கண்ணோட்டத்தின் பெரும்பகுதி கடந்த காலத்தில் அரிக்கப்பட்டு விட்டது. அது இந்துத்துவா சக்திகளால் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது. எனவே, இந்திய மக்களால் ஏற்றுக் கொள்ளப்படுகிற ஒரு புதிய சமூக கருத்தாக்கத்தை நாம் உருவாக்க வேண்டும். மதச்சார்பற்ற, ஜனநாயக, கூட்டாட்சி ஆகியவையும் தேச இறையாண்மை பாதுகாப்பும் அந்த மாற்றுக் கொள்கைகளின் தூண்களாக அமையும்.
இந்துத்துவா கொள்கையை, வகுப்புவாதத்தை, நவீன தாராளவாத கொள்கைகளை தெளிவாக எதிர்கொள்கிற கொள்கையாக அது இருக்க வேண்டும். நவீன தாராளவாதமும், இந்துத்துவாவும் கலந்த அபாயகரமான கலவை நீடிக்கக் கூடாது.
இடது ஜனநாயக மாற்று
மோடி தலைமையிலான இந்த அரசின் இத்தகைய கொள்கைகளால் அதிகம் பயனடைந்தவர்கள் யார்? என்பதை இந்த நோய்த்தொற்று காலத்தில் கூட பார்க்க முடிந்தது. 2020ஆம் ஆண்டில் இந்தியாவில் 102 பில்லியனர்கள் இருந்தனர். 2021ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 140 ஆக அதிகரித்துள்ளது. பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள இந்தக் காலத்தில் பணக்காரர்கள் மேலும் பணம் படைத்தவர்களாக மாறியிருக்கிறார்கள் என்பதிலிருந்து இக்கொள்கைகளால் பலனடைந்தவர்கள் யார் என்பது தெளிவாகிறது. மறுபக்கம், வேலையின்மை உருவாகியுள்ளது; வறுமை, பட்டினி ஆகியவை அதிகரித்துள்ளன.
இடது ஜனநாயக முன்னணியின் மாற்றுக் கொள்கைகள் என நாம் குறிப்பிடுகிற சமூக, பொருளாதார, அரசியல் மாற்றுக் கொள்கைகளை முன்வைக்காமல் இந்த நிலைமைகளை மாற்ற முடியாது. அந்த கொள்கைகளைக் கொண்டு அனைத்துப் பகுதி உழைப்பாளி மக்கள், மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகளை ஒன்றிணைத்திட வேண்டும்.
போராட்டங்களில் எழும் நம்பிக்கை
இந்துத்துவா.- நவீன தாராளவாத கொள்கைகளுக்கு எதிர்ப்பே இல்லாத நிலைமை இல்லை. குடியுரிமை திருத்த சட்டத்தை இவர்கள் கொண்டு வந்தபோது, நாடு முழுவதிலும் கண்டன இயக்கங்கள் எழுந்ததை பார்த்தோம். இஸ்லாமியர்கள் மட்டுமல்லாது, இதர மதங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் இப்போராட்டங்களில் திரண்டனர். நோய்த்தொற்று காரணமாக இப்போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க இயலவில்லை என்றாலும், அது ஒரு மிகப் பெரிய வெகுஜன இயக்கமாக அமைந்தது.
அதே போலவே விவசாயிகளின் இயக்கமும் வெடித்துள்ளது. ஒன்பதாவது மாதத்தை அது எட்டியுள்ளது. தில்லியின் எல்லையில் நான்கு முனைகளில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் இன்னமும் முகாமிட்டு அப்போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். பஞ்சாப், ஹரியானா, மேற்கு உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களின் அரசியலில் இந்த விவசாயிகள் போராட்டத்தின் தாக்கம் இருக்கும். ஏனெனில், பாஜக அரசு ஆட்சியில் நீடித்திருக்கும் வரை விவசாயிகளுக்கு எதிரான இத்தகைய கொள்கைகள் இருக்கும் என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர். எனவே, பாஜக அரசுகளை அகற்றுங்கள் என்ற முழக்கத்தை அவர்கள் முன்வைத்துள்ளனர்.
தனியார்மயமாக்கல், புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் போன்றவற்றிற்கு எதிராக எண்ணற்ற போராட்ட இயக்கங்கள் நடைபெற்று வருவதையும் காண்கிறோம். விசாகப்பட்டின உருக்காலை தனியார்மயமாக்கப்படுவதை எதிர்த்து மிகப் பெரிய போராட்டம் நடைபெற்று வருகிறது. இது உழைக்கும் வர்க்கத்தின் போராட்டமாக மட்டுமின்றி, அனைத்துப் பகுதி மக்களையும், பாஜக தவிர்த்த அனைத்து அரசியல் கட்சிகளையும் இணைத்த மக்களின் போராட்டமாக வடிவெடுத்துள்ளது. இத்தகைய போராட்ட இயக்கங்கள் கட்டப்பட்டு, பரவலாக்கப்பட்டு, ஒருங்கிணைக்கப்பட வேண்டும். நாம் முன்வைக்கும் இடது ஜனநாயக மாற்றுத் திட்டம், மக்களை ஒருங்கிணைக்கும் புள்ளியாக மாற வேண்டும்.
எதிர்ப்புரட்சி என்ற நிலையிலிருந்து செயல்படும் ஆளும் வர்க்கத்திற்கும், அதனுடைய கொள்கைகளுக்கும் எதிராக ஒரு வலுவான போராட்டத்தை நிச்சயமாக நம்மால் நடத்த முடியும். அதேபோன்று, அரசியல், சமூக, பொருளாதார தளத்தில் மக்களுக்கான நீதியை வழங்கக் கூடிய ஒரு திட்டத்தை முன்னெடுக்க முடியும். இதன் மூலம் விடுதலைப் போராட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட மாண்புகளையும், அரசியல் சாசனத்தின் வழிகாட்டும் நெறிமுறைகளில் அடங்கியுள்ள கூறுகளையும் நம்மால் முன்னெடுக்க முடியும்.
எனவே, இந்திய விடுதலை, 75வது ஆண்டை எட்டியுள்ள இந்தத் தருணத்தில் அனைத்து இடதுசாரி, ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து ஒரு உறுதிமொழியை எடுப்போம்.
மோடியும் அவரது அரசும் முன்வைக்கக் கூடிய கொள்கைகளுக்கும், நடவடிக்கைகளுக்கும் எதிராக மிகப் பெரிய எதிர்ப்பியக்கத்தைக் கட்டமைப்பது; அவர்களுடைய நடவடிக்கைகளை திரும்பப் பெறச் செய்திடும் வகையில் இயக்கங்களை முன்னெடுப்பது; இந்த நாசகரமான ஆட்சியை அகற்றுவதுடன், அதன் இடத்தில் புதிய சக்திகளை, நவீன இந்தியாவின் அடிப்படைக் கோட்பாடுகளை முன்னெடுக்கக் கூடிய சக்திகளை, அமர்த்திடுவோம் என்று உறுதியேற்போம்.
இவ்வகையில் நமது எதிர்கால நடவடிக்கைகள் அமைவது அவசியமாகும்.
தமிழில்: கிரிஜா