அவனது ரத்தம் போதிய அளவு வெளியேற்றப்படவில்லை!

 • பி. சாய்நாத்

(ஃப்ரண்ட்லைன் ஆகஸ்ட் 14, 2020 இதழில் வெளியானது. PARI Link )

இரத்தம் வெளியேற்றுவது என்பது பொதுவான சிகிச்சை முறையாக கடந்த 3 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வந்திருக்கிறது. உடலில் உள்ள இரத்தம், கபம், கரும்பித்தம், மஞ்சள் பித்தம் ஆகிய சுரப்பிகளிடையேயான சமனின்மையே நோய்களுக்காக காரணம் என நம்பிக்கை நிலவியது. இந்த நம்பிக்கையை ஹிப்போகிரேட்டஸ் என்பவர் வெளிப்படுத்தினார், அவரைத் தொடர்ந்து இந்தக் கருத்து  மத்திய கால ஐரோப்பா கண்டம் முழுவதுமே பரவலாக காணப்பட்டது.

ரத்தம் வெளியேற்றலுக்கு அட்டைப்பூச்சிகள் பயன்படுத்தப்பட்டன. மருத்துவர்களின் மருத்துவ-தத்துவ மாயைகளின் காரணமாக இரத்தம் வெளியேறி செத்தவர்கள் எத்தனை பேர் என்பது நமக்கு தெரியாது. இங்கிலாந்து அரசர் இரண்டாம் சார்லஸ் மரணத்திற்கு முன் அவருடைய உடலில் இருந்து 24 அவுன்ஸ் ரத்தம் வெளியேற்றப்பட்டதை அறிவோம். ஜார்ஜ் வாஷிங்டன் தொண்டையில் ஏற்பட்ட கிருமித் தொற்றினை குணப்படுத்த, (அவரது வேண்டுகோளின் பேரில்) மிகுதியான ரத்தம் அவர் உடலில் இருந்து  வெறியேற்றப்பட்டது. உடனடியாக. அவர் இறந்தும் போனார்.

முதலாளித்துவத்தின் பிரேதப் பரிசோதனை

கொரோனா வைரஸ் நோய் நவ தாராளமயக் கொள்கையின், அதன் வழியே முதலாளித்துவ அமைப்பின், முழுமையான, தெளிவான பிரேதப் பரிசோதனை அறிக்கையை நமக்குக் கொடுத்திருக்கிறது. பிரேதம் மேசை மீது கிடத்தப்பட்டிருக்கிறது. பிரகாசிக்கும் வெளிச்சத்தில், அதன் நாடி நரம்புகளும், எலும்புகளும், தசைகளும் நம் முகத்திலடித்தாற்போல் தெளிவாகத் தெரிகின்றன. அட்டைப்பூச்சிகளை தெளிவாகப் பார்க்க முடிகிறது – தனியார்மயம், கார்ப்பரேட் உலகமயம், அதீத சொத்துக் குவியல், இதுவரை பார்த்திருக்காத ஏற்றத்தாழ்வின் உண்மை நிலை என எல்லா அட்டைப்பூச்சிகளுமே நன்கு தெரிகின்றன. சமூக, பொருளாதாரப் பிணிகளுக்கு மருந்தாக முன்வைக்கப்பட்ட ‘இரத்தம் வெளியேற்றும் வழிமுறையின்’ காரணமாக, உழைக்கும் மக்கள் கண்ணியத்துடன் வாழ்வதற்கான அடிப்படைகள் சமுதாயத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளன.

ஐரோப்பிய கண்டத்தில் மூன்றாயிரம் ஆண்டுகளாக நிலவிய அந்த மருத்துவமுறை, 19ஆம் நூற்றாண்டில் அதன் உச்சத்தை அடைந்தது. 19ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலும், 20ஆம் நூற்றாண்டிலும்தான் இந்த மூட நம்பிக்கை அதன் மதிப்பை இழந்தது. எனினும் அதன் கோட்பாடுகளும், நடைமுறைகளும் பொருளாதார, தத்துவ, தொழில் மற்றும் சமுதாயத் துறைகளில் இப்போதும் ஆதிக்கம் செலுத்துகின்றன.

தம்மிடம் வந்த நோயாளியை சாகக் கொடுத்துவிட்ட மத்தியகால மருத்துவர்கள், சோகத்துடன் தம் தலையை ஆட்டியபடியே ‘அவனுடைய ரத்தம் போதுமான அளவு வெளியேற்றப்படவில்லை’ என்று சொல்வார்கள் என அலெக்சாண்டர் காக்பர்ன் குறிப்பிட்டதைப் போலத்தான் இவர்களும் பேசுகின்றனர். உலக வங்கியும், சர்வதேச நிதியமும் தங்கள் அதிர்ச்சியூட்டும் நடைமுறைகளால் ஏற்பட்ட அச்சமூட்டும் பேரழிவுகளை, சிலசமயம் இனப்படுகொலைகளை ஒத்த பாதிப்புகளையும் பார்த்து, இந்த அழிவுகளெல்லாம் தனது ‘சீர்திருத்த’ நடவடிக்கைகள் எல்லை மீறியதால் ஏற்பட்ட பாதிப்புகள் என்று சொல்லவில்லை. சீர்திருத்தங்களை போதுமான அளவு மேற்கொள்ளாத காரணத்தாலேயே ஏற்பட்டதாகவும், உண்மையில் சீர்திருத்தங்களை சமூக விரோதிகளும், அழுக்கடைந்த மனிதர்களும் தடுத்து விட்டதன் காரணமாகவே அழிவுகள் ஏற்படுவதாகவும் ஊளையிட்டு வந்துள்ளனர்.

தத்துவக் கிறுக்கர்களின் வாதங்களின்படி, ஏற்றத்தாழ்வு என்பது அச்சப்பட வேண்டிய விசயம் அல்ல. அதன் மூலமே போட்டி மனப்பான்மையும், தனிநபர் முயற்சிகளும் ஊக்கம்பெறும். எனவே ஏற்றத்தாழ்வுகள் மேலும் மேலும் தேவை என்பதுதான் அவர்களின் வாதம்.

கடந்த 20 ஆண்டுகளாக, மனித சமூகம் சந்திக்கும் பிரச்சனைகளுக்கும், ஏற்றத்தாழ்வுகளுக்கும் தொடர்பில்லை என்று கருணையற்ற முறையில் கூறிக் கொண்டிருந்தனர். இந்த புத்தாயிரமாண்டின் தொடக்கத்தில். புரூக் கிங்ஸ் என்ற நிறுவனம் ஏற்றத்தாழ்வுகள் பற்றிய விவாதத்தை அலட்சியப்படுத்துவது; பலவீனப்படுத்துவது குறித்து எச்சரிக்கை செய்தது.  இந்த எகனாமிஸ்ட் இதழில், கொரோனா நோய் தொற்று உலகையே வாரிச் சுருட்டுவதற்கு சரியாக 90 நாட்களுக்கு முன்னதாக “சமத்துவமின்மை என்பது மாயை” “செல்வமும், வருமான இடைவெளியும் நமக்குத் தோன்றுவது போல உண்மையானதல்ல” என்ற அட்டைப்படச் செய்தியை வெளியிட்டது. கோழிக்கு முன் அதன் நுரையீரலைக் காட்டுவதைப் போன்ற கசப்பான இந்தச் செய்தியில், “வருமான ஏற்றத்தாழ்வு செல்வக் குவிப்பு தொடர்பான புள்ளிவிபரங்கள் குறித்து அது கடுமையாக விமர்சனம் செய்தது; புள்ளிவிபரங்கள் திரட்டப்பட்ட ஆதாரங்களை மறுத்தது”

தொடர்ந்து அந்தக் கட்டுரையில் “போலிச் செய்திகளும், சமூக ஊடகங்களும் நிறைந்த இந்த உலகத்தில், இப்புள்ளிவிபரங்களைப் போன்ற நம்பிக்கைகளும் நகைப்புக்குரிய வகையில் நீடித்துக்கொண்டுள்ளன” என ஏகடியம் பேசியது.

கொரோனா வைரஸ் நோய் பரவல் இப்போது நமக்கு அதிகாரப்பூர்வமான பிரேதப் பரிசோதனை அறிக்கையைத் தந்துள்ளது. இப்போதும் கூட அவர்களின் தரப்பு சிந்தனையாளர்கள், கார்ப்பரேட் ஊடகங்கள், கடந்த மூன்றாண்டுகளில் நடந்துவரும் அழிவுகள் எதுவும் முதலாளித்துவத்துடன் தொடர்புடையவை அல்ல என்று காட்டுவதற்கான வழிகளை மும்முரமாக தேடிக் கொண்டிருக்கின்றன.

இயல்பு நிலையே பிரச்சனை

பிரச்சனைக்கு எத்தனை சீக்கிரமாக தீர்வை அடைந்து ‘இயல்புக்கு திரும்பிட’ முடியும்?.  ஆனால் இயல்புக்குத் திரும்புவதல்ல பிரச்சனை.

‘இயல்புநிலைதான்’ பிரச்சனையாக இருந்தது. (ஆளும் வட்டாரங்களில் ‘புதிய இயல்பு’ என்பது பற்றிய வாதங்கள் கிசுகிசுக்கப்பட்டுக் கொண்டுதான் உள்ளது)

கொரோனா வைரசுக்கு முந்தைய இயல்பு நிலை: 2020, ஜனவரி மாதம் வாக்கில் ஆக்ஸ்ஃபாம் வெளியிட்ட அறிக்கையிலிருந்து, உலகின் 22 பணக்கார ஆண்களின் கைவசம் உள்ள சொத்து, ஆப்பிரிக்க கண்டம் முழுவதும் வசிக்கும் பெண்களின் கைவசமுள்ள சொத்துக்களை விட அதிகம் என அறிந்துகொண்டோம்.

அதே போல உலகின் 2,153 கோடீஸ்வரர்கள், இந்த பூமியில் வாழும் மக்களின் மொத்த சொத்தில் 60 சதவீதத்தை  தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

புதிய இயல்பு நிலை: கொள்கை ஆய்வு நிறுவன அறிக்கை சொல்கிறது, அமெரிக்காவின் கோடீஸ்வரர்கள், பெருந்தொற்று பரவிய முதல் மூன்று வாரங்களில், தங்கள் சொத்துக்களில் 282 பில்லியன் டாலர்களை கூடுதலாக சேர்த்திருப்பதாக எடுத்துக் காட்டுகிறது. 1990களில் அவர்களின் வசமிருந்த மொத்த சொத்துக்களை விட இது அதிகம். (240 பில்லியன் டாலர்கள்)

இயல்பு நிலை என்பது,  உலகில் உணவுக் கையிருப்பு பிதுங்கி வழிந்து கொண்டிருந்தபோதும், கோடிக்கணக்கானவர்கள் பசியில் வாழ்ந்து வந்ததுதான் ‘இயல்பு நிலை’ எனப்பட்டது. இந்தியாவில் ஜூலை 22 வாக்கில் 91 மில்லியன் டன் அளவிலான உணவு தானியங்கள் ‘உபரி’ அல்லது  அவசர கையிருப்பு என்ற பெயரில் அரசின் வசம் இருந்தது – ஆனால் பசியால் வாடுவோரின் எண்ணிக்கை, உலகத்திலேயே இந்தியாவில்தான் அதிகமாக இருந்தது.

புதிய இயல்பு நிலையில் என்ன ஆனது? தானிய கையிருப்பில் மிகக் குறைந்த அளவு கையிருப்பு தானியங்களை மட்டுமே அரசு இலவசமாக  விநியோகித்தது. ஆனால். மிகப் பெரிய அளவிலான அரிசி கையிருப்பை கிருமி நாசினி தயாரிக்க தேவைப்படும் எத்தனால் தயாரிப்புக்காக வழங்கியது.

உணவுக் கிடங்குகளில் நாம் 50 மில்லியன் டன் அளவுக்கான உணவுப் பொருட்களை கிடங்குகளில் தேக்கி வைத்திருந்த பழைய இயல்பு நிலை காலத்தில், பேராசிரியர் ஜீன் டிரெஸ் அந்த சூழலை ரத்தினச் சுருக்கமாக இவ்வாறு விளக்கினார்: “உணவுக் கிடங்குகளில் தானியங்களை வைத்திருக்கும் சாக்குப் பைகளை வரிசையாக அடுக்கினால், அவை பூமியிலிருந்து நிலவுக்குச் சென்றுவரும் தொலைவை இரண்டுமுறை நிரப்புவதற்கு ஒப்பாகும்.” புதிய இயல்புநிலை காலத்தில் அந்த அளவு இரண்டு மடங்காகி 104 மில்லியன் டன்களாக ஆனது. நிலவிற்கு சென்றுவர இரண்டு பாதைகளை அமைக்கலாம். அதில் ஒன்று பெரும்பணக்காரர்களுக்கான ராஜபாட்டையாக அமைந்த நெடுஞ்சாலையாகவும், இன்னொன்று புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சோர்வுடன் நடந்து பயணிப்பதற்கான அழுக்கடைந்த சர்வீஸ் சாலையாகவும் இருக்கும்.

1995 முதல் 2018 வரையிலான காலத்தில் 3,15,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது அரசு புள்ளிவிபரங்களின் அடிப்படையிலான எண்ணிக்கை. இதுவே குறைவான மதிப்பீடுதான். பல பத்து லட்சம் பேர் விவசாயத் தொழிலாளர்களாக மாறியுள்ளனர். துணைத் தொழில்களும் நசிந்து போனதால், மேலும் பல லட்சம் பேர் கிராமங்களை விட்டு இடம் பெயர்ந்தனர்.

நல வாழ்வு

மருத்துவத் துறையில் பெருகிவரும் தனியாரும், ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் மருத்துவச் செலவுகளும் இயல்பு நிலையாக இருந்தது. அமெரிக்காவில் ஓட்டாண்டிகளாக மாறிய தனிநபர்களில் பெரும் எண்ணிக்கையினர் மருத்துவச் செலவுகளின் காரணமாகவே அந்த நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்தியாவில், கடந்த பத்தாண்டுகளில் காணாத வகையில், மருத்துவச் செலவுகளின் காரணமாக 5.5 கோடிப்பேர் ஒரே ஆண்டில் வறுமைக்கோட்டுக்கு கீழே தள்ளப்பட்டனர்.

புதிய இயல்புநிலை காலத்தில், மக்கள் நல்வாழ்வின் மீது கார்ப்பரேட் கட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இந்தியா போன்ற நாட்டின் தனியார் மருத்துவமனைகள் அதீத லாபமீட்டுகின்றன, லாபம் குவிக்கும் பல்வேறு செயல்பாடுகளோடு சேர்த்து கொரோனா வைரஸ் பரிசோதனைகளின் வழியாகவும் பணத்தைச் சுருட்டுகிறார்கள்.

தொழிலாளர்

மாநிலங்கள் ஒன்றன்பின் ஒன்றாக தொழிலாளர் நலச் சட்டங்களை நிறுத்தி வைக்கத் தொடங்கியுள்ளன. அல்லது சட்ட மீறல் சாதாரணமாகியுள்ளது. எட்டுமணி நேர வேலை எனப்படும் தனிச்சிறப்பான சட்ட விதியும் கூட சில மாநிலங்களில் ரத்து செய்யப்பட்டு, ஒரு நாளுக்கு 12 மணி நேரம் என ஆக்கப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் கூடுதல் 4 மணி நேர உழைப்புக்கு ஓவர்டைம் சம்பளம் இல்லை என ஆக்கப்பட்டுள்ளது. உத்திர பிரதேச மாநிலத்தில் நடைமுறையில் உள்ள 38 தொழிலாளர் நலச் சட்டங்கள் இடைநிறுத்தப்பட்டு, தொழிலாளர்கள் ஒன்றுகூடவோ, போராடவோ கூட சாத்தியங்கள் மறுக்கப்பட்டுள்ளன.

ஒரு நாளைக்கு 8 மணி நேர வேலை என்பதை முதன் முதலில் ஏற்றுச் செயல்படுத்திய முதலாளி ஹென்றி போர்டு (1914). ஃபோர்டு நிறுவனம் அடுத்துவந்த இரண்டாண்டுகளில் இருமடங்கு லாபம் ஈட்டியது. எட்டுமணி நேரத்திற்கும் கூடுதலாக உழைக்கும்போது, உற்பத்தித் திறன் வீழ்ச்சியடைவதைக் காண முடிந்தது. புதிய இயல்பு நிலையில் இந்திய முதலாளிகள், அவசர சட்டங்களின் மூலம் கொத்தடிமை நிலையை உருவாக்கவேண்டுமென விரும்புகிறார்கள். இதில் கிளர்ச்சியடைந்த ஊடக ஆசிரியர்களும் ‘நல்ல நெருக்கடியை வீணாக்காதீர்கள்’ என்று வற்புறுத்தத் தொடங்குகின்றனர். இத்தனைக்குப் பிறகும், அந்த அழுக்கடைந்த தொழிலாளர்கள் முட்டி போட்டு நிற்குமளவுக்கு தெம்புடன் இருப்பதை அவர்கள் காரணமாக முன்வைக்கின்றனர். அட்டைப்பூச்சிகளை ஏவி விடுங்கள். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ‘தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்களை’ வேகப்படுத்தாமலிருந்தால், அது பைத்தியக்காரத்தனமே என்கிறார்கள் அந்த பத்திரிக்கை ஆசிரியர்கள்.

விவசாயம்

விவசாயத்தில் அச்சமூட்டும் சூழல் உருவாகிக் கொண்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளில், வங்கி நிதியுதவியுடன் இனிய வார்த்தைகள் மூலமும், பலவந்தமாகவும், துன்புறுத்தியும் மூன்றாம் உலக நாடுகளில் வாழும் கோடிக்கணக்கான சிறு, குறு விவசாயிகள் பணப்பயிர்களுக்கு மாற்றப்பட்டதை நினைவில் கொள்ளுங்கள். பணப்பயிர்களை ஏற்றுமதி செய்யலாம். கத்தையாக பணம் கிடைக்கும். நாடுகளுக்கு டாலர் வந்து குவிவதன் மூலம் ஏழ்மையை விரட்டமுடியும் என்றார்கள்.

என்ன நடந்ததென்பதையும் நாம் அறிவோம். சிறு பணப்பயிர் விவசாயிகள், குறிப்பாக பருத்தி விவசாயிகள்தான், தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள். கடன் சுமை அதிகம் ஏற்றப்பட்டவர்களும் அவர்களே.

நிலைமை இப்போது மேலும் மோசமடைகிறது. மார்ச் – ஏப்ரல் வாக்கில் ராபி விளைச்சலை விற்பனை செய்யமுடியாமல் குவிக்கப்பட்டுள்ளன. அவை விரைவில் அழுகக் கூடிய விளைச்சலாக இருந்தால், ஊரடங்குக் காலத்தில் விளை நிலங்களிலேயே அழிக்கப்பட்டன. பருத்தி, கரும்பு போன்ற பணப்பயிர்கள் அறுவடை செய்யப்பட்டு லட்சக்கணக்கான குவிண்டால் அளவில், விவசாயிகளின் வீட்டுக் கூரையை முட்டும் அளவுக்கு அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

இரண்டாம் உலகப் போர்க் காலத்திற்கு பின் இப்போதுதான் கடுமையான பொருளாதார தேக்க நிலையை எதிர்கொள்கிறோம் என்றும், 1870ஆம் ஆண்டுக்கு பின் மக்கள் வருமானத்தில் கடுமையான வீழ்ச்சியை எதிர்கொள்வதாகவும் ஐ.நா., பொதுச் செயலர் அந்தோனியோ குந்தரேஸ் கூறுகிறார். உலக அளவில் வருமானம் மற்றும் நுகர்வில் ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சி இந்தியாவையும் விட்டுவைக்கப் போவதில்லை.

கொரோனா வைரஸ் பற்றி இன்னொன்றையும் குந்தரேஸ் குறிப்பிட்டார், “எல்லா இடங்களிலும் நிலவிவரும் பொய்களையும், தவறான நம்பிக்கைகளையும் கொரோனா வைரஸ் தொற்று அம்பலப்படுத்தியுள்ளது. சுதந்திர சந்தைகள், அனைவருக்கும் மருத்துவத்தை உறுதி செய்யும் என்ற பொய் அம்பலமாகிவிட்டது. கட்டணம் செலுத்தாத சேவை, சேவை அல்ல என்பதும் பொய்யாகிவிட்டது”

இணையவழிக் கல்வி

கோடிகளில் லாபம் குவிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள், இணையவழிக் கல்வியை பரவலாக்கிக் கொண்டிருப்பதுதான் ‘புதிய இயல்புநிலை’ ஆகும். ஏற்கனவே பெரிய அளவில் பணம் பார்த்துக் கொண்டிருந்த அவர்கள், இப்போது இரண்டு மடங்கு லாபம் கொழிக்க திட்டமிட்டுள்ளனர். சாதி, வர்க்கம், பாலினம் மற்றும் மண்டல அளவிலான விளிம்பு நிலையில் உள்ள மாணவர்கள் பிரம்மாண்டமான அளவில் கொள்ளை நோயின் பெயரால் சட்டப்பூர்வமாகவே கல்வி நிறுவனங்களை விட்டு வெளியேற்றப்படுவார்கள். (குழந்தைகளின் கல்வி தடைபடலாமா என்ற புலம்பல் காதில் கேட்கிறதா?)

இப்போது புதிதாக வேலை இழந்த பெற்றோர்கள் நொடித்துப்போனதால்,  பள்ளிக் கட்டணம் செலுத்த முடியாததால் எத்தனை பெண் குழந்தைகள் பள்ளியிலிருந்து இடைவிலகப் போகின்றனரோ? நிதி நெருக்கடியின்போது பெண் குழந்தைகளை இடைநிறுத்துவது பழைய இயல்பு நிலைதான். ஆனால் ஊரடங்கில் அந்த இடை விலகல்கள் தீவிரமடைந்துள்ளன.

இயல்பு நிலை காலத்திலேயே, இரண்டு டிரில்லியன் மதிப்புள்ள ஊடகம் (பொழுதுபோக்கு) தொழிற்சாலையில், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றி எந்த செய்தியும் வெளியானதில்லை. தேசியப் பத்திரிக்கை அல்லது தொலைக்காட்சிகள் எதிலும் தொழிலாளர், விவசாயிகளுக்கென சிறப்புச் செய்தியாளர்களே இல்லை. வேறு வார்த்தைகளில் சொன்னால், மொத்த மக்கள் தொகையில் 75 சதவீதமே உள்ள மக்களைக் குறித்த செய்திகள் ஏதுமில்லை. அவர்களிடமிருந்து செய்திகளை எடுத்துச் சொல்லவோ, அவர்களுக்கு செய்திகளைப் பேசுவதற்கோ ஊடகங்கள் விரும்பவில்லை.

மார்ச் 25 ஆம் தேதிக்கு பிறகு, பல வாரங்களாக கையறு நிலையில் உதவிக்காக நின்ற புலம்பெயர் தொழிலாளர்களைப் பற்றி, ஊடக நெறியாளர்கள் அறிந்து வைத்திருக்கவே இல்லை. ஒரு சில ஊடகவியலாளர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்த செய்திகள் இன்னும் சரியாக சொல்லப்பட்டிருக்க வேண்டும் என ஒப்புக்கொண்டனர். கார்ப்பரேட் ஊடக முதலாளிகள் ஆயிரக்கணக்கான பத்திரிக்கையாளர்களையும், தொலைக்காட்சி ஊழியர்களையும் பணி நீக்கம் செய்தனர். புலம் பெயர்ந்த தொழிலாளர்களைப் பற்றிய விரிவான செய்தி சேகரிப்பு மேற்கொள்ளப்படும் சந்தர்ப்பத்தை இல்லாமலாக்கவே ஊழியர்களும், செய்தியாளர்களும் வீட்டுக்கு அனுப்பபட்டனர். இந்த பணி நீக்கங்கள் கொரோனா வைரஸ் பரவலுக்கு முன்பாகவே திட்டமிடப்பட்டதுதான். இவ்விசயத்தில் மோசமான குற்றவாளிகள் ஏராளமாக லாபமீட்டும் ஊடக நிறுவனங்கள்தான்.

தொலைக்காட்சி வழி ரியாலிட்டி ஷோ

இப்போதெல்லாம், தொலைக்காட்சிகளில் ரியாலிட்டி ஷோ வருவதைப் போல ஒரு மனிதர் அவ்வப்போது தொலைக்காட்சியில் தோன்றி நாட்டை வழிநடத்துகிறார். அவருடைய தற்பெருமையை நாட்டின் எல்லா சேனல்களும், முக்கிய நேரத்தில் ஒளிபரப்பு செய்கின்றன. அமைச்சரவை, அரசாங்கம், நாடாளுமன்றம், நீதிமன்றங்கள், சட்ட மன்றங்கள், எதிர்க் கட்சிகள் என எதுவுமே தேவையில்லை. நாம் எத்தனை தொழில்நுட்ப மேம்பாட்டை அடைந்திருந்தபோதிலும், ஒரே ஒரு நாள் கூட நாடாளுமன்றத்தை கூட்ட சாத்தியப்படவில்லை. மெய் நிகர் வழியில், ஆன்லைன் மூலமாக, தொலைக்காட்சி மூலமாகக் கூட ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 125 நாட்களில் ஒருமுறை கூட நாடாளுமன்றம் கூடவில்லை. தொழில்நுட்ப வலிமையில் நம்மைப்போல் கடுகளவும் இல்லாத, பரிதாபமான மற்ற நாடுகளும் கூட சிரமமில்லாமல் நாடாளுமன்றக் கூட்டங்களை நடத்திவிட்டன.

முற்போக்கு இயக்கங்கள் செய்ய வேண்டியது என்ன? அவர்கள் என்றுமே பழைய இயல்பு நிலையை ஏற்றுக் கொண்டது கிடையாது. ஆனால் நீதிக்கான போராட்டம், சமத்துவம் மற்றும் பூமிப் பந்தை பாதுகாத்துக் கொண்டே மக்கள் கண்ணியத்துடன் வாழ்வதற்கான போராட்டம் ஆகிய சில பழைய விசயங்களுக்குத் திரும்ப வேண்டியுள்ளது. நீதியே நமது சட்டகம். சமத்துவமின்மைக்கு முடிவுகட்டுவதே இலக்கு. அதை செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் சில ஏற்கனவே இருக்கின்றன. இன்னும் சிலவற்றை கண்டடைய வேண்டியுள்ளது.

விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர் இயக்கங்கள் இனி பருவநிலை மாற்ற பிரச்சனையையும் கணக்கில் கொள்ள வேண்டும். இந்தியாவில் ஏற்கனவே விவசாயத்தை நாசமாக்கியிருக்கும் பருவநிலைமாற்ற பிரச்சனையை விவசாயப் பிரச்சனைகளில் ஒன்றாக சேர்க்காவிட்டால் விவசாய இயக்கங்களும், விவசாயத் தொழிலாளர் இயக்கங்களும் சிரமங்களை எதிர்கொள்ளும். வேளாண் சூழலியல் அணுகுமுறையை இணைத்து போராட வேண்டும்.

தொழிலாளர் இயக்கங்கள், பெரிய ரொட்டித் துண்டுக்காக நடத்தும் போராட்டங்கள் அவசியம்தான். சாதாரண காலங்களில் முன்வைக்காத, ரொட்டி கடையின் உரிமையையே கோரும் முழக்கங்களையும் எழுப்ப வேண்டிய காலம் இது.

மூன்றாம் உலக நாடுகளின் கடன்களை ரத்து செய்ய வலியுறுத்துவது மிகத் தெளிவான முழக்கமாகும். இந்தியாவில் மக்கள் மீதான கடன் சுமைகளை ரத்து செய்ய கோருவது மிகச் சரியான முழக்கமாகும்.

கார்ப்பரேட் ஏகபோகங்களை அகற்ற வேண்டும். முதலில்,  மருத்துவம், உணவு, விவசாயம் மற்றும் கல்வி ஆகியவற்றில் இருந்து கார்ப்பரேட் ஏகபோகங்களை அகற்றுதல் ஆரம்பிக்க வேண்டும்,

அரசுகளை நிர்பந்தப்படுத்தி, வள ஆதாரங்களை மறுவிநியோகம் செய்ய வைப்பதற்கான தீவிரமான இயக்கங்கள் வேண்டும். பணக்காரர்கள் மீது ஒரு சதவீதமாவது வரி விதிக்கக் கேட்பது துவக்கமாக அமையும். எவ்வித வரியும் செலுத்தாமல் லாபத்தை அப்படியே கொண்டு செல்லும் பன்னாட்டு கார்ப்பரேட்டுகள் மீது வரி விதிக்க வேண்டும். பல்வேறு நாடுகளும் பல பத்தாண்டுகளாக நிறுத்திவிட்ட அந்த வரி விதிப்பு முறையை மேம்படுத்த வேண்டும்.

மக்கள் இயக்கங்கள்

மிகப் பெரும் மக்கள் இயக்கங்களை முன்னெடுப்பதன் மூலமே அரசுகளை கட்டாயப்படுத்தி விரிவான பொது சுகாதாரம் மற்றும் கல்விக்கான கட்டமைப்புகளை உருவாக்கச் செய்வது சாத்தியமாகும். உணவுக்கான நீதி, நலவாழ்வுக்கான நீதி ஆகிய முழக்கங்களை முன்வைக்கும் மக்கள் இயக்கங்களை கட்டமைக்கும் தேவை உள்ளது. இதுபோன்ற ஊக்கமளிக்கும் முன்னுதாரண மக்கள் இயக்கங்கள் ஏற்கனவே நடைபெற்றிருக்கின்றன. ஆனால் கார்ப்பரேட் ஊடகங்களின் செய்தி சேகரிப்பில் அவை ஓரங்கட்டப்பட்டு மறைக்கப்பட்டுவிட்டன.

தனிப்பட்ட பிரகடனங்களை விடவும், விடுதலைப் போராட்ட பாரம்பரியமும் அதனால் உருவான அரசியலமைப்புச் சட்டமும், மக்களை அணி திரட்டுவதற்கு கூடுதலாக பயன்படும் வாய்ப்புள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக சந்தைப் பொருளாதாரத்தை அமல்படுத்தி, தார்மீக நீதியை அழித்து, ஒவ்வொரு நாளும் இந்திய அரசாங்கங்கள், அரசமைப்பின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறியுள்ளன. இவர்கள் முன்வைத்த ‘வளர்ச்சிப் பாதை’ முழுவதும் மக்களையும், அவர்களின் பங்கேற்பையும், ஈடுபாட்டையும், கட்டுப்பாட்டையும் இல்லாமலாக்கும் நோக்கத்தோடே அமைந்திருந்தன.

உலகம் முழுவதும் பரவியிருக்கும் பெருந்தொற்றினை, மக்கள் ஒத்துழைப்பின்றி எதிர்த்து வீழ்த்த முடியாது. கொரோனா பரவலுக்கு எதிரான போராட்டத்தில் கேரளா அடைந்திருக்கும் வெற்றியானது உள்ளூர் சமுதாய மட்டத்தில் மக்களின் பங்கேற்புடன் உருவாக்கப்பட்ட சமுதாய சமையலறைகள் இல்லாமல் சாத்தியமில்லை. இந்த சமையலறைகளை வலைப்பின்னலாக உருவாக்கி மக்களுக்கு மலிவான விலையில் உணவு வழங்கப்பட்டது. தொற்றின் தடம் அறிதல், நோய் தொற்றுள்ளவர்களை தனிமைப்படுத்துதல் ஆகிய வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள், மக்கள் பங்கேற்பின் காரணமாகவே சிறப்பாக நடந்தன. சர்வதேச பரவல் முடிவுக்கு வந்தாலும் கூட, கேரள அனுபவங்கள் நாட்டிற்கு அது பயணிக்க வேண்டிய பாதை எது என்று எடுத்துக் காட்டும் படிப்பினைகளைத் தருகின்றன.

அனைத்து முற்போக்கு இயக்கங்களும், பல்வேறு பின்னடைவுகளை எதிர்கொண்டுள்ளன. நிறைவேற்றப்படாத நிகழ்ச்சி நிரல்களை எட்டுவதற்காக தொடர்ந்து போராட வேண்டும் என்பதையும் உணர்ந்தே உள்ளன.

இந்திய சுதந்திர தினத்தின் 73வது ஆண்டான இக்காலத்தில், இன்னும் வென்றெடுக்கப்படாத  விடுதலையின்  நிகழ்ச்சிநிரலை சாத்தியப் படுத்துவதற்காக போராடுவதே, வாழ்க்கையை மதிப்பு மிக்கதாக்கும்.

நன்றி: ஃப்ரண்ட்லைன் (ஆகஸ்ட் 14, 2020)

தமிழில்: ம. கதிரேசன்

உலகமயமாக்கல்: 25 ஆண்டுகளில் எழுந்திருக்கும் சவால்கள், படிப்பினைகள் …

பெருகும் ஏற்றதாழ்வுகளின் 25 ஆண்டுகள் – பகுதி 3

முந்தைய பகுதி: <<<

வேளாண் நெருக்கடி

வேளாண் நெருக்கடியின் மிகத்துயரமான அம்சம் தொடரும் பெரும் எண்ணிக்கையிலான விவசாயிகளின் தற்கொலைகள். 1997 முதல் 2016வரை மூன்று லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இத் தற்கொலைகளுக்கும் வேளாண்நெருக்கடிக்கும் உள்ள தொடர்பு நெருக்கமானது. வேளாண் நெருக்கடியின் ஆழத்தை வேளாண்வளர்ச்சி பற்றிய விவரங்கள் நமக்கு தெளிவுபடுத்துகின்றன. தானியம், பருப்பு, எண்ணய்வித்துக்கள், கரும்பு ஆகிய முக்கிய பயிர்களை எடுத்துக் கொண்டால், 1981முதல் 1991வரையிலான காலத்தில் இப்பயிர்களின் உற்பத்தி வேகமாக வளர்ந்தது. ஆனால் அடுத்த 20ஆண்டுகளில் – 1991முதல் 2010முடிய – இவற்றின் உற்பத்தி வளர்ச்சியின் வேகம் பெரிதும் குறைந்தது. மகசூல் உயர்வும் இதேபாணியில்தான் இருந்தது. நெருக்கடி1998 – 2004 காலத்தில் மிகவும் தீவிரமாக இருந்தது என்பது உண்மை. வேளாண்உழைப்பாளிமக்கள் எதிர்கொண்ட இந்த நெருக்கடிக்கு அரசின் தாராளமய கொள்கைகளேக காரணம். அரசின் பட்ஜட் பற்றாக்குறையை குறைப்பது என்ற பெயரில் உரம், எரிபொருள், மின்சாரம் உள்ளிட்ட இடுபொருள் மானியங்கள் வெட்டப்பட்டு, உற்பத்திச் செலவு உயர்ந்தது. ஆனால், அளவு கட்டுப்பாடு இன்றி அயல்நாட்டு வேளாண்பொருட்களின் இறக்குமதி அனுமதிக்கப்பட்டதால், விளைபொருட்கள் விலைகள் வீழ்ச்சியை சந்தித்தன. நிதித்துறை சீர்திருத்தங்கள் விவசாயக் கடனைக் குறைத்து வட்டிவிகிதங்களை உயர்த்தியது. விவசாயிகள் கந்துவட்டிக்காரர்களிடம் சிக்கும் நிலை ஏற்பட்டது. அரசின் செலவைக் குறைப்பது என்ற தாராளமய கொள்கை கிராமப்புற கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்த அனுமதிக்கவில்லை. பாசனம், வேளாண்விரிவாக்கம், வேளாண்ஆராய்ச்சி அனைத்துமே பலவீனமடைந்தன. பொது வினியோகமுறை சீரழிக்கப்பட்டது. தனியார்மயத்தால் கல்வி, ஆரோக்கியச் செலவுகளும் அதிகரித்து விவசாயக் குடும்பங்கள் கடன்வலையில் வீழ்ந்தன.

அதேசமயம், வேளாண்துறை நெருக்கடியில் இருந்த போதிலும், கிராமப்புற செல்வந்தர்கள் கொழுத்துள்ளனர் என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். பயிர்வாரியாகவும் பகுதிவாரியாகவும் காலவாரியாகவும் வேளாண்நெருக்கடியின் தன்மையும் தாக்கமும் வேறுபட்டு இருந்தன. அதேபோல், வேளாண்பகுதிமக்கள் அனைவர் மீதும் ஒரே மாதிரியான தாக்கம் இல்லை. முதலாளித்துவ-நிலப்பிரபுக்கள் மற்றும் பணக்கார விவசாயிகளில் ஒருபகுதியினர் தாராளமய கொள்கைகளால் பயன்பெற்றுள்ளனர். அவர்களிடம் நிலம், இயந்திரங்கள் உள்ளிட்ட உற்பத்திசார் சொத்துக்கள் குவிந்துள்ளன. 1992 முதல் 2003 வரையிலான காலகட்டத்தில்கூட, சற்று மந்தமான வேகத்தில் என்றாலும், வேளாண்துறையில் இயந்திரங்களின் உடமையும் பயன்பாடும் அதிகரித்தே வந்துள்ளன. உதாரணமாக, டிராக்டர்களின் எண்ணிக்கை 1992-2003 காலத்தில் இரண்டு மடங்காகியது. 2004-05க்குப் பிறகு 2011-12 வரையிலான காலத்தில் கிராமப்புறங்களில் வேளாண் பயன்பாட்டிற்கான இயந்திர விற்பனை வேகமாக அதிகரித்துள்ளது.

இதன் பொருள் என்னவெனில், வேளாண்துறையில் கிடைக்கும் உபரிமூலம், உழைப்பாளி மக்களை சுரண்டுவதன் மூலம், மூலதன சேர்க்கை நடைபெற்று வருகிறது. அரசின் கொள்கைகளும் நிலம் மற்றும் மூலதனக் குவியலை ஊக்குவிக்கும் வகையில் நிலஉச்சவரம்பு சட்டங்களை நீக்குகின்றன. மறுபுறம் விவசாயிகள் நிலம் மற்றும் உற்பத்தி சொத்துக்களை இழப்பதன் மூலமும், அரசுகள் இயற்கைவளங்களை அடிமாட்டுவிலைக்கு பன்னாட்டு இன்னாட்டு ஏகபோகங்களுக்கு வாரிவழங்குவதன் மூலமும், ரியல்எஸ்டேட் கொள்ளை மூலமும் சிறப்புபொருளாதாரமண்டலங்கள் என்றவகையிலும் ஆரம்ப மூலதன சேர்க்கை பாணியிலான மூலதனக் குவியலும் தொடர்கிறது.

வேலைவாய்ப்பு

நிகழ்ந்துள்ள வளர்ச்சி வேலைவாய்ப்புகளைப் பெருக்கவில்லை. தொழில்துறையில், குறிப்பாக ஆலை உற்பத்தித் துறையில், பணியிடங்கள் கூடவேஇல்லை. ஒட்டுமொத்தமாக உருவான பணியிடங்களும் பெரும்பாலும் உழைப்பாளி மக்களுக்கு எந்தப்பாதுகாப்பும் இல்லாத அமைப்புசாரா பணிஇடங்களாகவே இருந்தன. 1993முதல் 2005வரையிலான காலத்தில் ஏதேனும் ஒரு பணியில் (சுயவேலைஉட்பட) இருப்போர் எண்ணிக்கை 1கோடியே 20லட்சம் அதிகரித்தது. இது 1983-1994 காலத்திய வளர்ச்சியைவிட மந்தம் என்பது ஒருசெய்தி. ஆனால் மேலும் துயரமான செய்தி, 2004 முதல் 2012 வரை இந்த எண்ணிக்கை வெறும் 10 லட்சம் மட்டுமே அதிகரித்தது என்பதாகும்.

வறுமை

வறுமை பற்றி அரசு வெளியிடும் புள்ளிவிவரங்கள் நகைப்புக்கு உரியவை. அரசின் வறுமைக்கோடு என்பது ஒரு சாகாக் கோடு என்றுதான் சொல்ல வேண்டும். அரசு நிர்ணயித்துள்ள வறுமைகோட்டில் எவரும் வாழமுடியாது. ஆனால் சாகாமல் இருக்கலாம் என்று வேண்டுமானால் சொல்லலாம்! 2011-12 தேசீய மாதிரி ஆய்வு தரும் விவரங்கள்படி நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு ரூபாய் 50க்கும் குறைவாக செலவு செய்தவர்களாகத்தான் கிராமப்புற குடும்பங்களில் 80% இருந்தனர். நகரப் புறங்களிலும் கிட்டத்தட்ட பாதிகுடும்பங்களின் நிலைமை இதுதான். ஒரு நாகரீக வாழ்க்கைக்குத் தேவையான குறைந்தபட்ச அம்சங்களை வைத்துப் பார்த்தால், நமது நாட்டில் 80சதமானத்திற்கும் அதிகமான மக்கள் வறியவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். நமது நாட்டில், 5வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் கிட்டத்தட்ட பாதிப்பேர் வயதுக்கேற்ற எடையை எட்டாதவர்கள். சஹாரா பாலைவனத்திற்கு தெற்கே வசிக்கும் ஆப்பிரிக்க நாடுகளில் கூட இந்த விகிதம் நாலில் ஒன்றுதான். இது போன்ற இன்னும் பல துயர்மிக்க புள்ளிவிவரங்கள் உள்ளன! அதுவும் நாட்டுக்கு விமோசனம் என்று ஆளும் வர்க்கங்கள் விளம்பரப்படுத்திய தாராளமய கொள்கைகள் 22ஆண்டுகள் அமலாக்கப்பட்ட பின்னர்!

மலையும் மடுவும் போன்ற ஏற்றத்தாழ்வுகள்

ஒரு விஷயத்தில் தாராளமய கொள்கைகள் வெற்றி பெற்றுள்ளன. அது எதில்என்றால், அசிங்கமான, ஆபாசமான அளவிற்கு ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்கச் செய்ததில்! தொழிலிலும் நிலஉடமையிலும் பொதுவாக சொத்து வினியோகத்திலும் நம்நாட்டில் பெரும் ஏற்றத்தாழ்வு இருந்து வந்துள்ளது என்றாலும், கடந்த 23ஆண்டுகளில் இவை பலப்பல மடங்குகள் அதிகரித்துள்ளன.

2008இல் அமெரிக்க டாலர் கணக்கில் ஒரு பில்லியன் டாலர் – அதாவது, 100கோடிடாலர் – சொத்து மதிப்புகொண்ட இந்திய செல்வந்தர்கள் எண்ணிக்கை 41ஆக இருந்தது. அதன்பின் ரூபாய் மதிப்பு டாலருக்கு எதிராக பெரிதும் சரிந்துள்ளது. இது இந்த எண்ணிக்கையைக் குறைத்து இருக்க வேண்டும். ஆனால் அதற்கு நேர்மாறாக, 2013இல் 53, 2014இல் 70என்று இந்த இந்திய டாலர் பில்லியனேர்கள் எண்ணிக்கை பாய்ச்சல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. நாட்டின் வளர்ச்சி வேகம் இரண்டு ஆண்டுகளாக 5%க்கும் குறைவுதான். ஆனால் டாலர் பில்லியனேர்கள் வளர்ச்சிவிகிதம் அமோகம்!

2014இல் முகேஷ்அம்பானியை முதலிடத்தில் கொண்டுள்ள இந்த 70 இந்திய டாலர்பில்லியனேர்களின் மொத்த சொத்துமதிப்பு சுமார் 390 பில்லியன்டாலர். அதாவது சுமார் ரூ. 24லட்சம் கோடி. இது இந்திய நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் (ஜீ.டி.பி.யில்) கிட்டத்தட்ட நாலில் ஒருபங்கு ஆகும். முதல் பத்து செல்வந்தர்களின் மொத்தசொத்து மட்டும் தேசஉற்பத்தியில் கிட்டத்தட்ட 6% ஆகும்.

இந்தியப் பெருமுதலாளிகள் அவர்கள் சொத்துக்களை பிரும்மாண்டமான அளவில் அதிகரித்துள்ளனர். டாட்டா குழுமத்தின் சொத்து 1990இல் 10,922கோடிரூபாயாக இருந்தது. 2012-13இல் இது 5,83,554 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. (ஆதாரம்: டாட்டாஇணையதளம்). இதே கால இடைவெளியில், அம்பானி குழுமத்தின் சொத்துக்கள் 3167கோடி ரூபாயில் இருந்து 5,00, 000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந்தது. முகேஷ் அம்பானியின் RIL மற்றும் அதன் உபநிறுவனங்களின் சொத்து 3,62,357 கோடி ரூபாயும், அனில் அம்பானியின் ADAG கம்பெனியின் சொத்துக்கள் 1,80,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாகவும் ஆகியுள்ளன.(ஆதாரம்: இக்குழுமங்களின்இணையதளங்கள்).

1991இல் இருந்து 2012 வரையிலான காலத்தில் நாட்டின் நிலை தொழில் மூலதனமதிப்பு 4மடங்கு அதிகரித்தது. இதேகாலத்தில் தனியார் கார்ப்பரேட் முதலாளிகளின் சொத்து 9மடங்கு அதிகரித்துள்ளது. (ஆதாரம்: மத்திய புள்ளியியல்நிறுவனம், தேசீய கணக்கு புள்ளிவிவரங்கள்)

நாடு விடுதலை பெற்ற காலத்தில் இருந்து 1991வரை தனியார் கார்ப்ப்ரேட் நிறுவனங்கள் அவர்களுக்கு கிடைத்த நிகரவருமானத்தில் (ஈவுத்தொகையாக கொடுத்து விடாமல்) கைவசம் (மறுமுதலீடுக்காக) வைத்துக் கொண்ட தொகை தேசஉற்பத்தி மதிப்பில் 2%க்கும் கீழாகவே இருந்தது. இது 2007-08இல் தேசஉற்பத்தியில் 9.4%ஆக உயர்ந்தது. தற்சமயம் 8%ஆக உயர்நிலையிலேயே நீடிக்கிறது.

மறுபுறம் சுட்டெரிக்கும் உண்மை என்ன? கணிசமான பகுதி மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி, கழிப்பறை இன்றி, குடிதண்ணீர் இன்றி, தலைக்குமேல் கூரைஇன்றி, வசிக்க வீடின்றி, குளிர்வந்தாலும் மழைபெய்தாலும் சாவை எதிர்நோக்கி வாழும் கோடிக்கணக்கான மக்கள். ஊட்டச்சத்து குறைவான தாய்மார்கள், குழந்தைகள், ரத்தசோகையில் வாடும் பெண்கள், குழந்தைகள், பிறக்கும் 1000சிசுக்களில் 40சிசுக்கள் ஒரு ஆண்டுக்குள் இறக்கும் அவலநிலை (இது குஜராத் உட்பட பல மாநிலங்களில் அதிகம்) இப்படி தொடரும் கொடுமைப்பட்டியல்!

இதுதான் – பெருகும் ஏற்றத்தாழ்வுகள்தான் –தாராளமய வளர்ச்சியின் முக்கியதோர் இலக்கணம்.

மோடி அரசின் தீவிர தாக்குதல்கள்

ஊழல் மலிந்த யூ பீ ஏ அரசு தூக்கி எறியப்பட்டு பா ஜ க தலைமையில் 2014 மே மாதம் பொறுப்பேற்ற மத்திய அரசு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் மீது கடும் சுமைகளை ஏற்றியுள்ளது. பாஜக அரசு விலைவாசி உயர்வை குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக அதனை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. மொத்த விலைப்புள்ளி உயர்வு முன்பை விட கூடியுள்ளது என்று அரசு தரும் புள்ளிவிவரங்களும், ரிசர்வ் வங்கியும், ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ளன.

இது நமக்கு வியப்பளிக்கவில்லை. காரணம், தாராளமயக் கொள்கைகளின் அறுவடைதான் தடையில்லா விலைஉயர்வு என்று நமக்கு அனுபவம் சொல்கிறது.முந்தைய அரசு பின்பற்றிய அதே தாராளமயக் கொள்கைகளை இன்னும் தீவிரமாக மோடி அரசு பின்பற்றுகிறது. பல ஆண்டுகளாக அரசுகள் பின்பற்றிவரும் தாராளமயக் கொள்கைகளால், அரசு செய்ய வேண்டிய முதலீடுகள் செய்யப்படாமல், அளிப்பை(Supply) அதிகரிக்கும் வாய்ப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. கட்டுப்பாடற்ற இறக்குமதி ஊக்குவிக்கப்பட்டதால் ரூபாய் மதிப்பு சரிவதும் அதனால் விலைவாசி உயர்வதும் தொடர்ந்து நிகழ்கிறது. ஒரு அமெரிக்க டாலருக்கு 45 ரூபாய் என்பதிலிருந்து 67 ரூபாய் ஆக உயர்ந்தால் இறக்குமதிப்பொருட்களின் செலவு ரூபாய் கணக்கில் கிட்டத்தட்ட ஐம்பது சதம்  அதிகரிக்கும் என்பது தெளிவு.1991ல் ஒரு அமெரிக்க டாலர் மதிப்பு பதிமூன்று ரூபாய்க்கும் குறைவாக இருந்தது. இப்பொழுது எழுபது ரூபாயை தாண்டியுள்ளது.

இதே காலத்தில் நமது நாட்டு இறக்குமதி பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதிலிருந்தே விலைவாசி உயர்வுக்கு ஒரு முக்கிய காரணம் ரூபாய் மதிப்பு குறைந்து வருவதும் மற்றொன்று இறக்குமதியின் முக்கியத்துவம் அதிகரித்துவருவதும் என்பதை புரிந்து கொள்ளலாம். ஆனால் பிரச்சனை அது மட்டுமல்ல. தொடர்ந்து அரசு முதலீடுகள் வெட்டப்படுவது கட்டமைப்பு வசதிகளை கடுமையாகப் பாதிக்கிறது. பல முக்கிய துறைகளில் இறக்குமதியின் பங்கு அதிகரிக்கிறது. அரசின் தாராள இறக்குமதிக் கொள்கைகளும் இதற்கு இட்டுச்செல்கின்றன.

இவை அனைத்தும் உணவுப் பொருள் சப்ளையை அதிகரிப்பதில் சிரமத்தை ஏற்படுத்துகின்றன. அரசின் வேளாண் கொள்கைகள் தானிய உற்பத்தியின் வளர்ச்சி குறைவதற்கு காரணமாக உள்ளன. இதோடு கட்டுப்பாடற்ற ஏற்றுமதி, முன்பேர வணிகம் ஆகியவையும் சேரும் பொழுது விலைவாசி உயர்வின் வேகம் அதிகரிக்கத்தானே செய்யும்? இன்னொரு புறம் உணவு, உரம் , எரிபொருள் ஆகியவற்றிற்கான மானியங்களை அரசு தொடர்ந்து வெட்டுகிறது. இக்கொள்கைகள் விலைவாசி உயர்வுக்கு நேரடி காரணமாக உள்ளன.

அரசின் வரவு-செலவு கொள்கை  

பா ஜ க அரசின் மூன்று பட்ஜெட்டுகளிலும் தாராளமய கொள்கைகள்தான் பின்பற்றப்பட்டுள்ளன. மறைமுக வரிகளை உயர்த்தி மக்கள் மீது விலைவாசி மற்றும் வரிப்பளுவை ஏற்றுவதும் பெரும் கம்பனிகள் மற்றும் செல்வந்தர்கள் மீதான நேர்முக வரிகளை குறைப்பதும் வரிஏய்ப்போருக்கு வெகுமதி அளிப்பதும்தான் பா ஜ க அரசின் வரிக்கொள்கையாக இருந்துள்ளது. அதேபோல், பாதுகாப்பு துறை, நிதித்துறை உள்ளிட்டு எல்லா துறைகளிலும் அந்நிய முதலீடு மீதான வரம்புகளை நீக்குவதும் இறக்குமதி வரிகளை குறைப்பதும்தான் மோடி அரசின் கொள்கையாக உள்ளது.

சென்ற ஆண்டு ஜெயிட்லி தனது பட்ஜெட்டில் சொத்துவரியை அறவே நீக்கி விட்டார். நூறு சீமான்கள் கையில் தலா டாலர் 1 பில்லியனுக்கு அதிகமாக சொத்து குவிந்துள்ள நாடு நமது இந்தியா. அதாவது, 130 கோடி மக்கள் வசிக்கும் இந்தியாவில் 100 பெரும் செல்வந்தர்கள் கையில் தலா ரூ 7,000 கோடிக்கும் அதிகமாக சொத்து உள்ளது. இவர்களின் மொத்த சொத்து நாட்டின் ஆண்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட நாலில் ஒரு பங்கு. இத்தகைய நாட்டில் தான் சொத்துவரி வேண்டாம்; வாரிசு வரி வேண்டாம்; வருமான வரியை குறைக்கவேண்டும் என்று செல்வந்தர்கள் கூவுகின்றனர். அவர்கள் ஊதுகுழலாக உள்ள ஊடகங்களும் இதையே உரக்கச் சொல்லுகின்றன. மத்திய மாநில அரசுகள் திரட்டும் மொத்த வரிப்பணத்தில் 65% க்கும் கூடுதலாக ஏழை மக்களை தாக்கும் மறைமுக வரிகளே உள்ளன.[1] வருமான வரி சலுகைகளை செல்வந்தர்களுக்கு அளித்தது மட்டுமின்றி, வரிஏய்ப்போருக்கு சாதகமாக இருப்பது மட்டுமின்றி, வரி தொடர்பான தாவா அரசுக்கும் பணக்காரர்களுக்கும் இருக்கும் பட்சத்தில் அதனை பரஸ்பர பேரம் மூலம் பைசல் செய்துகொள்ளவும் வலியுறுத்தி, பணக்காரர்களுக்கு இந்த ஆண்டு பட்ஜெட் அழைப்பு விடுத்துள்ளது.

மோடி அரசு பன்னாட்டு, இந்நாட்டு கம்பனிகள் மீதும் செல்வந்தர்கள் மீதும் உரிய வரி விதித்து வசூலித்து வளங்களை திரட்டுவதற்குப்பதில், மக்கள் சொத்துக்களாகிய பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்று வருமானம் ஈட்ட முனைகிறது. வளங்களை திரட்டுவதற்குப்பதில், செலவுகளை குறைப்பதில்தான் அழுத்தம் அளிக்கிறது. அதிலும் உணவு, உரம், எரிபொருள் போன்ற மக்களுக்கும் வேளாண்மைக்கும் அவசியமான மானியங்களை வெட்டி செலவை சுருக்கிக்கொள்ள அரசு விழைகிறது.

சில படிப்பினைகள்

தாராளமய கொள்கைகள் பெரும் துயரங்களை மக்கள் வாழ்வில் அரங்கேற்றியுள்ளன. கடந்த பதினெட்டு  ஆண்டுகளில் 3லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்பட்டதற்கு இவைதான் பிரதான காரணம். தாராளமய காலத்தில் வேலை வாய்ப்பு வளர்ச்சி மிகவும் மந்தமாக இருந்துள்ளது. உருவாக்கப்பட்ட பணியிடங்களும் முறைசாரா, குறை கூலி தன்மையுடையவை. தொழில் வளர்ச்சியும் சுமார்தான். ஆலை உற்பத்தி சில ஆண்டுகளில் மட்டுமே குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்தது. சமூக ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக, பழங்குடி மக்கள், தலித் மக்கள், முஸ்லிம் மக்கள் மற்றும் பெண்கள் கூடுதலாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதெல்லாம் உண்மை. இவை, நாம் ஏன் தாராளமய கொள்கைகளை முன்பின் முரணின்றி, சமரசமின்றி, எதிர்க்க வேண்டும் என்பதை தெளிவுபடுத்துகின்றன.

ஆனால், இதன் பொருள் இந்திய அரசின் வர்க்கத்தன்மை மாறிவிட்டது என்பது அல்ல. இந்திய அரசு பன்னாட்டு நிதி மூலதனத்தையும் அதன் உள்நாட்டுக் கூட்டாளிகளையும்தான் பிரநிதித்துவப்படுத்துகிறது என்ற வாதம் முற்றிலும் தவறானது. 198௦களின் இறுதியிலும் அதனை தொடர்ந்தும் சோசலிச முகாம் பலவீனமடைந்தது. 1990களில் அமெரிக்க ஆதிக்கத்தில் ஒருதுருவ உலகு அமைந்தது. நம் நாட்டில் இந்துத்வா சக்திகள் தலைதூக்கின. அதனையொட்டி இந்திய அரசியலில் ஒரு வலது நகர்வு ஏற்பட்டது. தாராளமய கொள்கைகள் தீவிரமாக அமலாக்கப்பட்டன. இவையெல்லாம் சேர்ந்து இந்திய அரசியல் களத்தில் முக்கியமான மாற்றங்களை கொண்டு வந்துள்ளன என்பதில் ஐயமில்லை. நமது நாட்டில் வர்க்க பலாபலத்தை மாற்றுவதற்கான போராட்டம் இந்த மாற்றங்களை ஸ்தூலமாக ஆய்வு செய்து கணக்கில் கொள்ள வேண்டும். ஆனால் “நிகழும் அனைத்தும் உலக நிதி மூலதன ஆதிக்கத்தால் மட்டுமே” என்று கருதுவது இந்தப்போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல உதவாது. கட்சி திட்டம், இந்திய அரசு அதிகாரம்  நிலப்பிரபுக்கள் – முதலாளிகள் வர்க்கக் கூட்டின் கையில் உள்ளது என்றும், இந்த கூட்டிற்கு பெருமுதலாளிகள் தலைமை தாங்குகின்றனர் என்றும், இப்பெரு முதலாளிகள் காலப்போக்கில் பன்னாட்டு நிதி மூலதனத்துடன் மேலும் மேலும் இணைந்து செயல்படுகின்றனர் என்றும் மிகச் சரியாகவே வரையறுத்துள்ளது. கடந்த 25 ஆண்டுகளின் அனுபவமும் இதுதான். அதே நேரத்தில், இந்திய முதலாளி வர்க்கத்தின் கட்டமைப்பிலும், பெருமுதலாளிகளின் தன்மையிலும் செயல்பாட்டிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் கிராமப்புற மாற்றங்களையும் நாம் ஸ்தூலமாக ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. ஆனால் நிலப்ரபுக்கள் அரசு அதிகாரத்தில் பங்கேற்கின்றனர் என்பதை மறக்கலாகாது. பலதுருவ திசையில் உலகம் பயணிக்கிறது என்பதையும் இந்திய பெருமுதலாளிகள் உள்ளிட்ட இந்திய முதலாளி வர்க்கம் முழுமையாக ஏகாதிபத்தியத்தின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதையும், அதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வெளி இன்னும் உள்ளது என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும். சுருங்கச்சொன்னால், ஸ்தூலமான நிலமைகளை ஸ்தூலமாகஆய்வு செய்தே நமது இயக்கம் சரியான முடிவுகளுக்கு வர முடியும். தாராளமய காலத்தில் ஏற்பட்டுள்ள வர்க்க உறவு மாற்றங்கள் குறித்த இத்தகைய ஆய்வை கட்சி கடந்த இரண்டு ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது. சில பூர்வாங்க முடிவுகளுக்கு கல்கத்தா ப்ளீனம் வந்தது. பணி தொடர்கிறது.

[1]தீப்பெட்டி வாங்கும் பொழுதும் மண்ணெண்ணெய் வாங்கும் பொழுதும், எந்த ஒருபொருளையோ, சேவையையோ வாங்கும் பொழுதும் சாதாரண மக்கள் மறைமுக வரி கட்டுகின்றனர். இந்த வரி வாங்கும் பொருளின் விலையில் ஒளிந்திருப்பதால் மறைமுக வரி என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய வரிகள் அம்பானிக்கும் ஒன்றுதான் ஆண்டிக்கும் ஒன்றுதான். ஏழைகளின் வருமானம் குறைவாக இருப்பதால், ஏழைகள் மீது இவை பெரும் சுமையாக ஆகின்றன. செல்வந்தர்களுக்கு இது ஒரு கொசுக்கடி தான்.

 

தமிழக பொருளாதார வளர்ச்சியும் தாராளமயமும் – பகுதி 1

அறிமுகம்

இந்தியா விடுதலை பெற்று இன்றைய தமிழகம் தனி மாநிலமாக உருவான பொழுது தமிழகம் பொருளாதார ரீதியாக பின்தங்கியே இருந்தது.காலனி ஆட்சியில் வேளாண் துறை பெரும்பாலும் தேக்க நிலையில் தான் இருந்தது.ஐம்பதுகளின் துவக்கத்தில் மாநிலத்தின் நெல் உற்பத்தி 20 லட்சம் டன் என்ற அளவில் தான் இருந்தது. மகசூலும் ஏக்கருக்கு ஏழு க்விண்டால்(700 கிலோ) என்று குறைவாகவே இருந்தது. தொழில் துறையிலும் பெரும் முன்னேற்றம் காலனி ஆட்சிக்காலத்தில் நிகழவில்லை. ஜவுளி, சிமெண்ட், சர்க்கரை என்று சில துறைகளில் நவீன ஆலை உற்பத்தி துவங்கியது. ஆனால் ஆமை வேகத்தில் தான் அதிகரித்தது.தொழில்துறையின் பெரும்பகுதி ஆலை அல்லாத முறைசாரா உற்பத்தியாகவே இருந்தது. தொழில்துறை உழைப்பாளர்களில் பெரும் பகுதியினர் முறைசாரா உற்பத்தியில் தான் இருந்தனர். கட்டமைப்பு துறைகளில் காலனீய அரசு மிகக் குறைவான அளவில் தான் முதலீடுகளை மேற்கொண்டது. 1950 இல் தமிழகத்தின் மின் உற்பத்தித்திறன் 160 மெகாவாட் என்ற அளவில் மிகவும் சொற்பமாக இருந்தது. சமூக குறியீடுகளிலும் நிலைமை மோசம் தான். தமிழகத்தின் எழுத்தறிவு விகிதம்1950களின் துவக்கத்தில் சுமார் 20%என்ற அளவில் தான் இருந்தது. உயிருடன் பிறக்கும் ஆயரம் சிசுக்களில் ஏறத்தாழ நூற்றைம்பது சிசுக்கள் ஒரு ஆண்டு நிறைவடையும் முன்பே இறக்கும் நிலை இருந்தது.

இந்திய விடுதலைக்குப் பின்னான கடந்த அறுபத்தியெட்டு ஆண்டுகளில் அனைத்து துறைகளிலும் தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி நிகழ்ந்துள்ளது. 1951இல் (5 வயதிற்கு மேற்பட்ட மக்கள் மத்தியில்) 20 % ஆக இருந்த எழுத்தறிவு விகிதம் 2011 மக்கள்தொகை கணக்குப்படி (7வயதிற்கு மேற்பட்ட)ஆண்கள் மத்தியில் 87 %, பெண்கள் மத்தியில் 74 %. 1950 இல் 150 ஆக இருந்த சிசு இறப்பு விகிதம்  2012 ஆம் ஆண்டுகணக்குப்படி 21 ஆகக் குறைந்துள்ளது. மின் உற்பத்தி திறன் 22,000 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது.1950களின் துவக்கத்தில் 20 லட்சம் டன்னாக இருந்த நெல் உற்பத்தி தற்சமயம் ஏறத்தாழ மூன்று மடங்காக 60 லட்சம் டன் என்ற அளவிற்கு அதிகரித்துள்ளது.

அகில இந்திய அளவில் தேச உற்பத்தி மதிப்பு ஆண்டொன்றுக்கு சுமார் 3 சதவிகிதம் என்ற அளவில் 1950 முதல் 1966 வரையிலான காலத்தில் அதிகரித்துவந்தது. அக்காலகட்டத்தில் தமிழக மாநில உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் இதை விட குறைவாக இருந்தது. 1970-71 முதல் 1982-83 வரையிலான காலத்திலும் அகில இந்திய வளர்ச்சி விகிதத்தை விட தமிழக வளர்ச்சி விகிதம் குறைவாகவே இருந்தது. 1980-81 முதல் 1990-91 காலத்தில் தமிழக வளர்ச்சி விகிதம்5.38 %ஆக இருந்தது (இந்தியா 5.47%).1990-911998-99 களில் இது 6.02 % ஐ எட்டியது(இந்தியா 6.50%). தமிழக மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 1980-1990களில் கணிசமாக குறைந்தது. இதனால் தமிழக தலா உற்பத்தி மதிப்பு இவ்விரு காலகட்டங்களில் ஆண்டுக்கு முறையே3.87 % மற்றும் 4.78 % அதிகரித்தது. பத்தாம் ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2002-2007) தமிழக உற்பத்தி வளர்ச்சி விகிதம் ஆண்டு சராசரி கணக்கில் கிட்டத்தட்ட 9.7 % ஐ எட்டியது.அடுத்த பதினொன்றாவது திட்ட காலத்தில் (2007-12) இது 7.7 % ஆக குறைந்தது.

இவ்வாறு அரசு புள்ளி விவரங்களை வைத்துப் பார்த்தால், தாராளமய காலத்தில் – அதாவது, கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் – தமிழக பெருளாதார வளர்ச்சி, அகில இந்திய அளவை விட சற்று குறைவாக இருந்தாலும், பொதுவாக வேகமாகவே இருந்துள்ளது எனலாம். மேலும் அதற்கு முந்தைய காலத்தை விட அதிகம் என்றும் கூறலாம். ஆனால் இதை வைத்து தமிழக வளர்ச்சி பாராட்டுக்குரியது என்ற முடிவுக்கு செல்ல இயலாது. வளர்ச்சியின் துறைவாரி தன்மை, அதன் பலன்கள் யாரை சென்று அடைந்துள்ளன ஆகிய விஷயங்களையும் நாம் பரிசீலிக்க வேண்டும்.வேறு வகையில் சொன்னால், தமிழக பொருளாதார வளர்ச்சியின் வர்க்கத்தன்மையை ஆராய வேண்டும்.

 

வளர்ச்சியின் துறைசார் கட்டமைப்பு

அட்டவணை 1 தமிழக மாநில உற்பத்தியின் துறைசார் விகிதங்களை தருகிறது:

Untitled-1

நாம் முதலில் கவனிக்க வேண்டியது, கடந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளில் பயிர் மற்றும் கால்நடை வேளாண்மை, வனம் மற்றும் மீன்பிடி ஆகியவையை உள்ளடக்கிய முதல் நிலைத்துறையின் பங்கு மொத்த மாநில உற்பத்தி மதிப்பில் 43.5% இலிருந்து செங்குத்தாக 7.8%ஆக குறைந்துள்ளது என்பதாகும். குறிப்பாக தாராளமய காலகட்டத்தில் –அதாவது, கடந்த 20-25 ஆண்டுகளில் – 23.42% இலிருந்து 7.81% ஆக மிக வேகமாக குறைந்துள்ளது. ஆனால் தமிழக உழைப்பாளி மக்களில் வேளாண்மை துறையில் இருப்பவர்கள் சதவிகிதம் இன்றளவும் கிட்டத்தட்ட 40%ஆக உள்ளது. கிராமப்புறத்தில் இந்த சதவிகிதம் 51% ஆக உள்ளது. நவீன பொருளாதார வளர்ச்சியில் மொத்த உற்பத்தியில் வேளாண்மை துறையின் பங்கு கணிசமாக குறைவது வியப்பிற்குரிய விசயமல்ல. ஆனால், உழைப்பாளி மக்களுக்கு வேளாண் அல்லாத துறைகளில் வேலைவாய்ப்புகள் மிக மந்தமாகத்தான் அதிகரித்துள்ளன என்பது தமிழக வளர்ச்சியின் ஒரு முக்கிய ஊனம் ஆகும். அகில இந்திய நிலையும் இது தான். அகில இந்திய அளவில் கிராமப்புறங்களில் 2011-12 இல் உழைப்புப் படையில் 64% வேளாண் மற்றும் வேளாண்சார் துறைகளில் தான் இருந்தனர்.

இரண்டாவதாக நாம் கவனிக்க வேண்டிய விஷயம் தொழில்துறை வளர்ச்சியில் பெரும் வேகம் இல்லை.சொல்லப்போனால், தாராளமய காலத்தில் மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் தொழில்துறையின் பங்கு குறைந்துள்ளது. 1960-61 இல் இந்த பங்கு 20.27% ஆக இருந்தது. 1980-81இல் 33.49% ஆக உயர்ந்தது. அடுத்த பத்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட அதேநிலையில் தொடர்ந்தது. ஆனால் தாராளமய கட்டமான கடந்த இருபது-இருபத்தைந்து ஆண்டுகளில் இப்பங்கு சரிந்து 2012-13 இல் 29% க்கும் கீழே சென்றுவிட்டது. அது மட்டுமல்ல. மொத்த மாநில உற்பத்தி மதிப்பில் பதிவுசெய்யப்பட்ட ஆலை உற்பத்தி (registered manufacturing) யின் பங்கு 1960-61 இல் 6.85% ஆக இருந்தது.இது 1990-91 இல் 16.22% ஆக உயர்ந்தது. ஆனால் தாராளமய காலத்தில் 2012-13 இல் கணிசமாக குறைந்து 11.56% ஆக உள்ளது. பதிவு செய்யப்படாத ஆலைத்துறை உற்பத்தியும் 5.17% ஆக சரிந்து 1960-61 இல் இருந்த 7.91% ஐயும் விட கீழே சென்றுள்ளது.

இந்த விவரங்கள் சொல்லும் செய்தி என்ன? தாராளமய கால வளர்ச்சி என்பது வேளாண்துறையிலோ, தொழில்துறையிலோ சாதிக்கப்படவில்லை. நவீன கால வளர்ச்சியின் இலக்கணமாக இருந்த தொழில்மயமாக்கல் இங்கே நிகழவில்லை. ஒருசில தொழில்கள் தமிழகத்தில் கடந்த இருபதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளில் விரிவடைந்துள்ளன என்பது உண்மை. மோட்டார் வாகன உற்பத்தி மற்றும் விற்பனை, துணி மற்றும் பின்னலாடை துறை ஆகியவற்றை இவ்வாறு குறிப்பிடலாம். அனால் பொதுவான பலதுறை தொழில்மயம் இங்கே நிகழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அப்படியானால் எங்கிருந்து வந்துள்ளது வளர்ச்சி? மூன்றாம் நிலைத்துறை – இது சேவைத்துறை என்றும் அழைக்கப்படுகிறது – தான் அதிகமாக வளர்ந்துள்ளது. இத்துறையின் பங்கு 1960-61 இல் 36.22% ஆக இருந்தது. 1990-91 இல் 43.4 % என்ற அளவிற்குத்தான் உயர்ந்தது. ஆனால் அடுத்துவந்த தாராளமய காலத்தில் சுமார் இருபது ஆண்டுகளில் 63.65% என்றார் அளவிற்கு அதிகரித்துள்ளது. இதன் உள்ளடக்கம் என்ன? உற்பத்தி மதிப்பு அடிப்படையில் சேவைத்துறையின் மிகப் பெரிய பகுதி என்பது நிதி மற்றும் ரியல் எஸ்டேட்தான். இது 2012-13 இல் சேவைத்துறை உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமான மதிப்பைக் கொண்டுள்ளது. 2012-13 இல் மாநில மொத்த உற்பத்தியில் நிதி மற்றும் ரியல் எஸ்டேட்டின் பங்கு 23.13% ஆக உள்ளது. தமிழகத்தின் வளர்ச்சி என்பது மாபெரும் தொழில் வளர்ச்சி, தகவல் தொழில்நுட்ப புரட்சி என்றெல்லாம் சித்தரிப்பது மிகையானது என்பது தெளிவு.

வளர்ச்சியின் வர்க்கத்தன்மை

துறைவாரி உற்பத்தி பெருக்கம், அதில் அதிகரித்துவரும் சேவைத்துறையின் பங்கு, தொழில்துறையின் மந்தமான வளர்ச்சி, வேளாண்துறையின் தேக்கம்/துயரம் இவை ஒருபுறம் இருக்க, தமிழக வளர்ச்சி பல்வேறு வர்க்கங்களின் மீது ஏற்படுத்தியுள்ள தாக்கம் என்ன என்பதை பார்ப்போம்.

பொதுவாக காங்கிரஸ் ஆட்சியிலும் திராவிடக்கட்சிகளின் ஆட்சியிலும் முதலாளிகளும் நிலப்பிரபுக்களும் பெரும் ஆதாயம் பெற்றுள்ளனர் என்பது உண்மை. தமிழக கிராமப்புற மாற்றங்களை 197௦களின் இறுதியில் ஆய்வு செய்த பேராசிரியர் குரியன் 1961-62 முதல் 1971-72 வரையிலான காலத்தில் நிலச்சீர்திருத்தம் பற்றி பரவலாக பேசப்பட்டிருந்தாலும், கிராமப்புறக்குடும்பங்களில் 1 சதமாக இருந்த பெரும் செல்வந்தர்களின் கையில் குவிந்திருந்த சொத்து மதிப்பு 1961-62 இல் 33% ஆக இருந்தது, 1971-72 இல் 39%ஆக உயர்ந்தது. இதே காலத்தில் உயர்மட்ட 10% நீங்கலாக மீதம் 90% குடும்பங்களிடம் இருந்த சொத்துப்பங்கு 27.43% இல் இருந்து 22.36% ஆக குறைந்தது. 1970களிலும் அதன் பின்பும் நில மறுவிநியோகம் என்பது இடதுசாரிகள் அஜண்டாவில் மட்டுமே இருந்தது. அரசுகள் இப்பிரச்சினையில் செயல்பட மறுத்துவிட்டன. 1990களிலும் அதன் பின்பும் எதிர்மறையான நிலச்சீர்திருத்தம் – அதாவது, உச்சவரம்பை உயர்த்துவது, உச்சவரம்பு சட்டங்களை செயலற்றதாக ஆக்குவது, செல்வந்தர்களுக்கும் கார்ப்ப்ரேட்டுகளுக்கும் சாதகமாக விதிமுறைகளை மாற்றி விலக்குகளையும் அளித்து நில ஏகபோகத்தை தக்கவைப்பது, வலுப்படுத்துவது என்பதே அரசின்கொள்கையாக இருந்துவந்துள்ளது. இது இரு திராவிட கட்சிகளின் ஆட்சிகளுக்கும் பொருந்தும். 2001-2006 காலத்தில் அரசின் வசம் இருந்த நிலங்களை ஏகபோக முதலாளிகளுக்கு அற்ப குத்தகைக்கு அளிக்க மாநில அ.இ.அ.தி.மு.க. அரசு முனைந்ததும் அதை எதிர்த்து போராட்டங்கள் நடத்தப்பட்டதும் இங்கே நினைவில் கொள்ளவேண்டும். அதேபோல், ஏழைகளுக்கு இரண்டு ஏக்கர் என்று 2006 இல் தேர்தல் வாக்குறுதி அளித்து, பின்னர் வழங்க அரசிடம் நிலம் இல்லை என்று தி,மு,க. அரசு நிலை எடுத்ததும் நினைவில் கொள்ளத்தக்கதே. ஆக பல நிலா உச்சவரம்பு சட்டங்கள் தமிழகத்தில் இயற்றப்பட்டுள்ள போதிலும் நிலா ஏகபோகம் என்பது பெருமளவில் தகர்க்கப்படவில்லை.

அதேசமயம், வேளாண்வளர்ச்சிக்கு என்று அரசு நடைமுறைப் படுத்தியுள்ள, நடைமுறைப் படுத்திவரும் திட்டங்களாலும் மானியங்களாலும் மிக அதிகமாக அபயன் அடைந்திருப்பது நிலப்பிரபுக்கள், பெருமுதலாளித்துவ விவசாயிகள் மற்றும் பணக்கார விவசாயிகள்தான் என்று கள ஆய்வுகள் கூறுகின்றன. சில நஞ்சை பகுதிகளில் பாரம்பர்ய நிலப்பிரபுக்கள் நிலங்களை விற்று காசாக்கி வேறுதுறைகளில் முதலீடு செய்துள்ளனர். இது அப்பகுதிகளில் உள்ள குடியானவ சாதியினருக்கு நிலபலத்தை கூட்டியுள்ளது. இவ்வாறு உருவாகியுள்ள பணக்கார விவசாயிகளில் ஒருபகுதியினர் நவீன உற்பத்திமுறைகளில் முதலீடு செய்துள்ளனர். வங்கி, கூட்டுறவு அமைப்புகள் அரசின் விரிவாக்கப்பணி அமைப்பு, அரசு மான்யங்கள் மற்றும் அனைத்து வேளாண்சார் திட்டங்களையும் ஏற்கெனவே இருந்த நிலப்பிரபுக்களும் இவ்வாறு வளர்ந்துள்ள பெரிய முதலளித்வ விவசாயிகள்/ பணக்கார விவசாயிகள் ஆகியோரும் பயன்படுத்தியுள்ளனர். விவசாயத்தில் கடந்த இருபது ஆண்டுகளில் இந்திய மற்றும் அந்நிய கம்பனிகளும் நுழைந்துள்ளன. இவர்கள் நேரடி விவசாயத்தில் ஈடுபடுவது குறைவு தான். ஆனால், அனைத்து இடுபொருள் சந்தைகளிலும் நுழைந்துள்ளனர். விதை, உரம், பூச்சிமருந்து, இயந்திரங்கள், தொழில் நுட்பங்கள், என்று அனைத்தும் இன்று கார்ப்பரேட்டுகளின் கைகளில் உள்ளது. தாராளமய கொள்கைகளின் பகுதி யாக அரசின் வேளாண் ஆராய்ச்சி அமைப்பும் விரிவாக்க அமைப்பும் பலவீனமடைந்துள்ளதால் விவசாயிகள் கார்ப்பரேட்டுகளை கூடுதலாக சார்ந்துநிற்கும் நிலை உருவாகியுள்ளது. நிறுவனக்கடன் வசதிகளும் சிதைந்துள்ளதால் லேவாதேவிகள், வர்த்தகர்கள், மற்றும் கார்ப்பரேட்டுகளின் முக்கியத்துவம் தமிழக வேளாண்மையில் அதிகரித்துள்ளது. 1970களில் இருந்தே பொதுப் பாசன வசதிகளை மேம்படுத்துவதில் அரசின் பங்கு குறையத்துவங்கியது. அரசு அளித்த மானியங்களை பயன்படுத்தி கிணற்று பாசனத்தை பம்புசெட்டுகள் வைத்தும் ஆழ்குழாய்கிணறுகள் அமைத்தும் பயன்படுத்தும் வாய்ப்புகள் சிறு குறு விவசாயிகளுக்கு ஏற்கெனவே குறைவாக இருந்தது. தாராளமய காலத்தில் இது கிட்டத்தட்ட எட்டாக்கனியாக ஆகிவருகிறது. நவீன பாசன முறைகள், நவீன வேளாண் இயந்திரங்கள், தொழில் நுட்பங்கள் அனைத்துமே ஒருசிறிய பகுதி பெருமுதலாளித்துவ விவசாயிகள், முதலாளித்துவ நிலப்பிரபுக்கள் கைகளில் தான் குவிந்துள்ளன.

சுருங்கச்சொன்னால், விவசாயிகள் மத்தியில் வர்க்க வேறுபாடு பெரிதும் அதிகரித்து ஒருபுறம் முதலாளிதத்துவ நிலப்பிரபுக்கள் மற்றும் (பாரம்பர்யமாக ஊரின் நிலக்குவியலில் இடம் பெறாதிருந்தாலும் காலப்போக்கில் அரசின் திட்டங்களையும் மானியங்களையும் பயன்படுத்தி பணக்கார விவசாயி நிலையில் இருந்து) பெரிய முதலாளித்வ விவசாயிகளாக மாறியுள்ளவர்களுமே கடந்த முப்பது ஆண்டுகளில் தமிழக கிராமங்களில் ஆளும் வர்க்கமாக உருவாகியுள்ளனர். பெரும் பகுதி ஏழை மற்றும் நடுத்தர விவசாயிகளை பொருத்தவரையில், தாராளமய கொள்கைகளால் பயிர் சாகுபடி விவசாயம் கட்டுபடியாகாததாக மாறியுள்ளது. இடுபொருள் விலைகள் உயர்வு, விளைபொருள் விலைகளின் வீழ்ச்சி மற்றும் உத்தரவாதமின்மை, உள்ளிட்ட அரசுகொள்கைகளின் விளைவுகளால் இந்நிலை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இன்று தமிழக கிராமங்களில் விவசாயத்தில் கிடைக்கும் வருமானத்தை மட்டும் வைத்து குடும்பம் நடத்துவது என்பது பெரும்பாலான நடுத்தர விவசாயிகளுக்குக் கூட சாத்தியம் இல்லை.ஒரு சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டுள்ள “சமூக-பொருளாதார –சாதிவாரி கணக்கெடுப்பு” (SECC) தரும் விவரங்கள்படி, தமிழக கிராமப்புறங்களில் நூறு குடும்பங்களை எடுத்துக் கொண்டால், அதில் சாகுபடியை பிரதான வருவாயாக கொண்டிருப்பது 19 குடும்பங்களுக்கும் குறைவானவை தான் (18.63%). மறுபுறம், ஏறத்தாழ மூன்றில் இரண்டு பங்கு குடும்பங்கள் (65.77%) பிரதான வருவாய் ஆதாரமாக கொண்டுள்ளது உடல் உழைப்பைத்தான். மேலும், சாகுபடிசெய்யும் குடும்பங்களை எடுத்துக் கொண்டால், ஒரு ஹெக்டேருக்கு (2.47 ஏக்கர்) குறைவாக சாகுபடி செய்வோர் மொத்த சாகுபடிசெய்யும் குடும்பங்களில் 77%. ஆனால் இவர்கள் வசம் உள்ள சாகுபடி நிலப்பரப்பு மொத்த சாகுபடி நிலப்பரப்பில் 35.4% தான். இது தான் தாராளமய காலத்தில் தமிழக கிராமப்புற வர்க்க கட்டமைப்பின் தன்மை.

தொடரும்

இந்திய நாடும் விவசாயிகளும்!

பி. சாய்நாத்

தமிழில்: எம்.கிரிஜா

(அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநாடு 2013, ஜூலை 24 முதல் 27 வரை தமிழகத்தில் கடலூரில் நடைபெறுவதனையொட்டி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாவட்ட அளவிலான கருத்தரங்குகள் நடத்தப்பட்டன. இதில் இந்து பத்திரிகையின் கிராமப்புற பிரச்சனைகள் துறை ஆசிரியரும் பிரபல பத்திரிகையாளருமான திரு பி.சாய்நாத் அவர்கள் நெல்லை, கோவில்பட்டி, ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய மையங்களில் கலந்து கொண்டு கருத்துரையாற்றினார்.  இன்று இந்திய விவசாயத் துறையில் நிலவி வரும் நெருக்கடி குறித்து அவர் விரிவாக உரையாற்றினார்.  அவரது உரையின் சாராம்சத்தை எம். கிரிஜா தொகுத்தளித்தது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.)

அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநாடு இம்மாத இறுதியில் நான்கு நாட்கள்; நடைபெற உள்ளது. மாநாடு நடைபெறும் இந்த நான்கு நாட்களில் 188 இந்திய விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வர், 2000-த்திற்கும் மேற்பட்டோர் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவர் (ஏனெனில் காவல்துறையினரின் தகவல் படி 12 முறை தற்கொலைக்கு முயன்றால் தான் ஒரு முறை முயற்சி வெற்றி பெறுகிறது), 8000-த்திற்கும் அதிகமான விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேறுவர் அல்லது விவசாயி என்ற அடையாளத்தை இழப்பர், பல விவசாயிகள் விவசாயக் கூலிகளாக மாறிடுவர். 

ஆனால், இதே நான்கு நாட்களில் இந்தியாவின் மக்கள் தொகையில் வெறும் 1 சதவீதத்தினராக உள்ள செல்வந்தர்களுக்கு 5500 கோடி ரூபாயை மத்திய அரசு மட்டும் வரிச்சலுகையாக (கார்ப்பரேட் வரி வருமானம், இறக்குமதி தீர்வை, சுங்க வரி ஆகிய வகையில்) அளித்திடும்.

இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பட்ஜெட்டில் 5,33,000 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.  இந்தியாவில் உள்ள பெரு முதலாளிகளுக்கும், மிகப்பெரிய நிறுவனங்களுக்கும் பல்லாயிரம்; கோடி ரூபாய் வரிச் சலுகையாகக் கிடைக்கிறது.

இது நமது பட்ஜெட் பற்றாக்குறை தொகையைக் காட்டிலும் பல ஆயிரம் கோடி ரூபாய்கள் கூடுதலானதாகும்.  எனவே, செல்வந்தர்கள் செலுத்த வேண்டிய வரிகளை முறையாக செலுத்தினார்கள் என்றாலே இந்தியாவில் எந்த நெருக்கடியும் இருக்காது.  நடப்பு பட்ஜெட்டில் மிகப்பெரிய அளவிலான சலுகை (அதாவது 66000 கோடி ரூபாய்கள்) இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கு தரப்பட்டுள்ளது.  கடந்த மூன்றாண்டுகளில் பார்த்தால் ரூ.1,500 கோடிக்கும் அதிகமான தொகை இறக்குமதி செய்யப்படும் தங்கம், வைரம் மற்றும் ஆபரணங்கள் மீது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

2006 முதல் இறக்குமதியை ஊக்குவித்து ரூபாய் 3 இலட்சம் கோடிக்கும் அதிகமான தொகையை இறக்குமதி வரியில் தள்ளுபடியாக அளித்த அதே ஆட்சியாளர்கள், தற்போது நெருக்கடி நிலவுவதால் தங்கத்தை இறக்குமதி செய்ய வேண்டாம் எனக் கூறுகிறார்கள்.

வெள்ளைத் தங்கம்

விவசாயிகளின் வாழ்க்கையில் தங்கத்திற்கு மற்றொரு மதிப்பீடும் உள்ளது.  பருத்தி பெருமளவில் விளைவிக்கப்படும் விதர்பா பகுதியில் இன்று நிலவும் நெருக்கடியை நம்மால் முழுமையாக புரிந்துகொள்ள முடிந்தால் தங்கத்தின் இத்தகைய மதிப்பீட்டினையும் நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

விதர்பா பகுதியின் பருத்தி விவசாயிகளின் தற்போதைய வாழ்நிலையை 60-70-களிலான வாழ்நிலையோடு நாம் ஒப்பீடு செய்து பார்க்கலாம்.  அப்போது அவர்கள் செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்தனர்.  தங்கள் வீட்டுப் பிள்ளைகளை மும்பையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிக்கு படிக்க அனுப்பி வந்தனர்.  அன்றைய காலகட்டத்தில் பருத்தி விற்றால் விவசாயிக்கு கிடைக்கும் தொகையானது தங்கத்தின் மதிப்பை விட கூடுதலாக இருந்தது. எனவேதான், பருத்தியை வெள்ளைத் தங்கம் என அழைக்கலாயினர்.

1974-ல் ஒரு குவிண்டால் பருத்தியின் மதிப்பு 10 கிராம் தங்கத்தின் மதிப்பை விட கூடுதலாக இருந்தது. ஆனால், இன்று 6 அல்லது 7 குவிண்டால் பருத்தியைக் கொடுத் தால்தான் 10 கிராம் தங்கம் கிடைக்கும்.  இதுவே 10 கிராம் தங்கத்தின் விலை 3,, என உயர்ந்தபோது 10 குவிண்டால் பருத்தியை கொடுக்க வேண்டியிருந்தது.

ஆக, தங்கம் இறக்குமதி செய்யப்படுவது, தங்கத்தின் மதிப்பு விவசாயியின் வாழ்வில் ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள் குறித்து புரிந்து கொண்டுள்ளீர்கள்.

இயற்கை எரிவாயுவின் விலையை இரண்டு மடங்காக அதிகரித்திட சமீபத்தில் இந்திய அரசு எடுத்துள்ள முடிவு இந்திய விவசாயத்துறையின் மீது கடுமையான பாதிப்பை ஏற்படுத்திட உள்ளது.  ஏனெனில், இந்த விலையேற்றத்தின் காரணமாக மின்சாரக் கட்டணமும், உர விலையும் கடுமையாக உயர்ந்திடும் அபாயம் உள்ளது.

இத்தகையதொரு நெருக்கடியான சூழலில் இந்திய விவசாயம் சிக்கித் தவித்துக் கொண்டுள்ளபோது விவ சாயிகள் சங்கத்தின் மாநாடு நடைபெற உள்ளது.

இந்திய விவசாய நெருக்கடியின் அம்சங்கள்

விவசாயத் துறையில் செய்யப்படும் முதலீட்டின் அளவில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி என்பதுதான் இந்திய விவசாயத்துறை நெருக்கடியின் முக்கியமான, முதலாவதான அம்சமாகும்.

விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த இதர தொழில்கள் மீதான முதலீடு குறித்து பார்ப்போம்.  1989-ல் வி.பி.சிங் அரசு சமர்ப்பித்த பட்ஜெட்டில் இதற்கான முதலீடு என்பது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 14 சதவீதமாக இருந்தது.

ஆனால், 2004ல் இது 6 சதவீதத்திற்கும் குறைவாக வீழ்ச்சியடைந்தது.  எனவேதான், 2004-ல் மிகப் பெரிய மாநிலங்களின் அரசுகள் – கர்நாடகாவின் எஸ்.எம்.கிருஷ்ணா மற்றும் ஆந்திராவின் சந்திரபாபுநாயுடு ஆகியோரின் அரசுகள் – விவசாயிகளால் தோற்கடிக்கப்பட்டன.  இவர்களது கொள்கைகள் விவசாயத்தில் ஏற்படுத்திய பாதிப்புகள் காரணமாக சட்டமன்ற தேர்தலின் போது விவசாயிகள் இவர்களுக்கு எதிராக வாக்களித்தனர். எனவே, விவசாயிகள் தங்களது வலிமையை உணர்ந்திட வேண்டும்.

இந்திய விவசாயிகள் பலவீனமானவர்கள் அல்ல என்பதுடன் அவர்கள் எவ்விதத் துணையுமின்றி தனியாக இல்லை.  தங்கள் மீது தாக்குதல் தொடுக்கும் அரசுகளின் மீது எதிர்த்தாக்குதல் தொடுக்கும் வலுவினைப் பெற்றவர்கள்.  இன்றைக்கு நிதியாதாரம் என்பது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மடைமாற்றம் செய்யப்படுவதால் விவசாயத் துறையிலான முதலீடு என்பது கடுமையாக வீழ்ச்சியடைந்து வருகிறது.

ஏற்கனவே கூறியபடி, விவசாயிகள் சங்கத்தின் மாநாடு நடைபெறுகின்ற அந்த நான்கு நாட்களில் மத்திய அரசு மட்டும் 5500 கோடி ரூபாயை கார்ப்பரேட்டு களுக்கு வாரி வழங்கிட உள்ளது. மாநில அரசுகள் இவர்களுக்கு அளிக்கும் சலுகைகளையும் இதனுடன் கூட்டினால் இவர்களுக்கு கிடைக்கும் தொகை இன்னமும் கூடுதலாக இருக்கும்.

மேற்கு வங்க மாநிலத்தின் சிங்கூரிலிருந்து தனது நானோ கார் தொழிற்சாலையை டாட்டா நிறுவனமானது குஜராத்திற்கு இடமாற்றம் செய்த போது 29000 கோடி ரூபாயை குஜராத் மாநில அரசு அந்நிறுவனத்திற்கு அளித்தது. கேட்பவர் வியந்திடும் வகையிலான மலிவு விலையில் நிலம் இவர்களுக்கு குத்தகைக்கு கொடுக்கப்பட்டது. சொல்லப்போனால் அனைத்தும் அவர்களுக்கு அநேகமாக இலவசமாகவே கிடைத்தது. ஆக, இன்றைக்கு முதலீடு என்பது பெருமளவில் விவசாயத் துறையிலிருந்து இந்தியப் பொருளாதாரத்தின் இதர துறைகளுக்கு மடைமாற்றம் செய்யப்பட்டு வருகிறது.

யார் விவசாயி?

இந்திய நாட்டு விவசாயிகளின் எண்ணிக்கை குறித்து தவறான கருத்து மக்களிடையே நிலவி வருகிறது.  உண்மையில் அவர்கள் நினைப்பதை விட மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே விவசாயிகள் உள்ளனர்.

இந்திய மக்கள் தொகையில் 53 சதவீதத்தினர் விவசாயிகள் என ஜகதீஷ் பகவதி, அரவிந்த் மனக்ரேயா போன்ற நவீன-தாராளமய பொருளாதார மேதைகள் கூறி வருகின்றனர்.

இந்த நாட்டில் யார் யார் விவசாயிகள்? என்பது இவர்களுக்கு தெரியவில்லை என்பதனை இவர்களது கூற்று தெளிவாகக் காட்டுகிறது.

உண்மையில் இந்திய மக்கள் தொகையில் 50 சதவீதத்தின்ர் விவசாயத்துடன் தொடர்புடையவர்களாக உள்ளனர். எப்படி திரைப்படத் துறையில் இருப்பவர்களை எல்லாம் நடிகர்கள் என சொல்ல முடியாதோ, கல்வித் துறையுடன் தொடர்புடையவர்களை எல்லாம் மாணவர்கள் என்றழைத்திட முடியாதோ, அது போல விவசாயத் துறையுடன் தொடர்புடைய வர்கள் எல்லாம் விவசாயிகள் அல்ல.

யார் விவசாயி? என்பது மக்கள் தொகை கணக்கெடுப்பில் வரையறை செய்யப்பட்டுள்ளது.  விவசாயிகளில் பல்வேறு பிரிவினர் உள்ளனர்.  இவர்களில் ஒரு வகைதான் பிரதானமான விவசாயி என்பவர்.

எவர் ஒருவர் ஆண்டொன்றுக்கு குறைந்தது 183 நாட்கள் விவசாயத்தில் ஈடுபடுகிறாரோ அவர் தான் பிரதானமான விவசாயி ஆவார். இவர் தான் முழுமையாக தன்னுடைய தொழிலில், வாழ்வாதாரத்தில் மற்றும் வருமானத்தில் விவசாயத்தை சார்ந்திருப்பவராகக் கருதப்படுகிறார்.

எவரொருவர் ஆண்டொன்றுக்கு 3 முதல் 6 மாத காலம் விவசாயத்தில் ஈடுபடுகிறாரோ (இதில் 1 முதல் 3 மாத காலம் கேஷூவல் தொழிலாளியாக இருந்திருக்கலாம்) அவர் பகுதிநேர விவசாயி ஆவார்.

இவர்களுக்கு அடுத்து விவசாயத் தொழிலாளர்கள் என்ற பிரிவினர் உள்ளனர். இவர்களையும் பிரதானமான விவசாயத் தொழிலாளி மற்றும் பகுதிநேர விவசாயத் தொழிலாளி என வகைப்படுத்திடலாம்.

இந்நிலையில், நமது மக்கள் தொகை கணக்கெடுப்பு பிரதானமான விவசாயிகளையே உண்மையான விவசாயிகளாகக் கருதுகிறது.   இதனடிப்படையில் பார்த்தால், இந்திய மக்கள் தொகையில் 8 சதவீதத்திற்கும் குறைவானவர்களே விவசாயிகள் ஆவர்.  பிரதானமான விவசாயிகளின் எண்ணிக்கையுடன் பகுதிநேர விவசாயிகளின் எண்ணிக்கையை சேர்த்தால் இது 9.9 சதவீதமாக இருக்கும். விவசாயத் தொழிலாளர்களின் எண்ணிக்கையையும் சேர்த்தால் கூட அது இந்திய மக்கள் தொகையில் வெறும் 23 சதவீதம் மட்டுமே ஆகும்.  ஆனால், இந்த எண்ணிக்கையும் கூட தற்போது பெருமளவில் சுருங்கி வருகிறது.

2001 மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியனவற்றை ஒப்பிட்டுப் பார்த்தால் 77 இலட்சம் மக்கள் விவசாயத்தை விட்டு வெளியேறி உள்ளனர் அல்லது பிரதானமான விவசாயி என்ற அடையாளத்தை இழந்துள்ளனர்.

பிரதானமான விவசாயி என்ற அடையாளத்தை இவர்கள் இழந்ததனை நாம் அறிந்து கொள்வது எப்படி

மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளிவி வரங்களில் விவசாயிகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்து வருகிற அதே நேரத்தில் விவசாயத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆந்திராவில் விவசாயிகளின் எண்ணிக்கை 13 லட்சம் குறைந்துள்ள அதே நேரத்தில் விவசாயத் தொழிலாளர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 40 லட்சமாக அதிகரித்துள்ளது. இதிலிருந்து, விவசாயிகள் தங்களது நிலத்தின், வாழ்வின் மீதான கட்டுப்பாட்டினை இழந்துள்ளனர் என்பதனையும்,  ஓராண்டில் 183 நாட்கள் விவசாயத்தில் ஈடுபட முடியாத நிலையில் உள்ளதோடு விவசாயத் தொழிலாளர்களாக மாறியுள்ளனர். இதன் மூலமாகவே விவசாயிகள் தங்களது அடையாளத்தை இழந்துள்ளனர் என்பதனை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.

60, 70, 80-களில் இந்தியாவில் விவசாயிகளின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்து வந்தது. 1991 மற்றும் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு இடைப்பட்ட 20 ஆண்டு காலத்தில் விவசாயிகளின் எண்ணிக்கை 72 இலட்சம் வீழ்ச்சியடைந்துள்ளது. இதனையே வேறு வார்த்தைகளில் சொல்வதானால், பொருளாதார சீர்திருத்தக் கொள்கைகள் அமலாக்கப்பட்ட இந்த 20 ஆண்டுகளில் விவசாயிகள் என வகைப்படுத்தப்பட்டவர்களில் 150 லட்சம் பேரை நாடு இழந்துள்ளது. அப்படியானால், நாளொன்றுக்கு சராசரியாக 2000 விவசாயிகளை இழந்து வருகிறோம். கடந்த பத்தாண்டுகளைப் பார்த்தோமேயானால், நாளொன்றுக்கு 2035 விவசாயிகளை இழந்துள்ளோம். எனவே, நமது மக்கள் தொகையில் 50 சதவீதத்தினர் விவசாயிகள் எனச் சொல்வது சரியல்ல.

ஆனால், 50 முதல் 60 சதவீதத்தினர் விவசாயத்துடன் தொடர்புடையவராக உள்ளனர் என்பதே உண்மையாகும். திட்டக் கமிஷனின் புள்ளி விவரத்தின் படி 2005 முதல் 2010 வரையிலான காலகட்டத்தில் விவசாயத் துறையில் 140 லட்சம் வேலையிழப்புகள் ஏற்பட்டுள்ளன என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

கார்ப்பரேட் கரங்களில்

இந்திய விவசாய நெருக்கடியை ஒரு வரியில் சொல்வதானால், இந்திய விவசாயத்தை சிறு விவசாயிகளின் கைகளிலிருந்து பறித்து பகாசுர கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைத்திட ஆட்சியாளர்கள் எடுத்துள்ள முடிவே நெருக்கடியின் உள்ளடக்கம் எனக் குறிப்பிடலாம்.  உதாரணமாக, மகாராஷ்டிர மாநிலத்தில் எவரெல்லாம் விவசாயிகள் என பதிவு செய்யப்பட்டுள்ளனர் எனப் பார்க்கலாம்.

விவசாயத் துறையில் அளிக்கப்படும் கடன், கிராமப்புறக் கடன் ஆகியனவற்றின் கீழ் விநியோகிக்கப்படும் தொகையானது நாட்டிலுள்ள பெருநிறுவனங்களுக்கு கிடைத்திடும் வகையில் இது தொடர்பான சட்டங்கள் திருத்தப்பட்டுள்ளன.

இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரி ஒருவர் மகாராஷ்டிர மாநிலத்தில் 2010-ம் ஆண்டில் அனைத்து வங்கிகளாலும் விநியோகிக்கப்பட்டுள்ள கடன் குறித்து ஆய்வு செய்துள்ளார்.  இந்த ஆய்வின் படி, விநியோகிக்கப்பட்ட மொத்த கடனில் 53 சதம் மும்பை நகரின் மெட்ரோ கிளைகளின் வாயிலாக விநியோகிக்கப்பட்டுள்ளன.  வெறும் 38 சதம் மட்டுமே அம்மாநிலத்தின் ஒட்டு மொத்த கிராமப்புற பகுதிகளில் உள்ள வங்கிக் கிளைகளின் வாயிலாக விநியோகிக்கப்பட்டுள்ளன.

மும்பை பெருநகரில் விவசாயிகள் எங்குள்ளனர்

மும்பை நகரில் வசித்து வரும் முகேஷ் அம்பானியும் அமிதாப் பச்சனும் தான் நவீன விவசாயிகள்.

உத்தரபிரதேசத்தில் தனக்கு நிலம் இருப்பதால் தனக்கு விவசாயக் கடன் அளிக்கப்பட வேண்டும் என மகாராஷ்டிராவில் அமிதாப்பச்சன் விண்ணப்பித்ததைப் பார்த்தோம். இது மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டும் காணப்படும் நிலையல்ல. ஒட்டுமொத்த தேசத்திலும் இத்தகைய நிலை நிலவுகிறது.

1990-க்குப் பிறகு நாடு முழுவதிலும் உள்ள பல கிராமப்புற வங்கிகளுக்கு அரசு மூடுவிழா நடத்தியுள்ளது. 1993-ல் இந்தியாவின் தேசியமயமாக்கப்பட்ட, ஷெட்யூல்ட், கிராமப்புற வங்கிகள் என அனைத்து வகை வங்கிகளின் 60 சதம் கிளைகள் கிராமப்புறப் பகுதிகளில் செயல்பட்டு வந்தன.  ஆனால், 2008ல் இந்த எண்ணிக்கை 48 சதவீதத்திற்கும் குறைவானது.  இதன் காரணமாக ஏற்பட்ட நெருக்கடியின் விளைவாக   2009-10ல் கிராமப்புறப் பகுதிகளில் புதிய கிளைகளை திறப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வங்கி வர்த்தகத் தாளாளர் (கரஸ்பான் டென்ட்) என்ற புதிய நடைமுறையை அமலாக்கத் துவங்கியுள்ளனர். நவீன கந்து வட்டிக்காரர்களான இவர்கள் ஒவ்வொருமுறை கடன் தொகை வழங்கிடும்போது அல்லது கடனுக்கு ஒப்புதல் அளித்திடும்போது சம்மந்தப்பட்ட விவசாயியிடமிருந்து ஒரு தொகையைப் பெற்றுக் கொள்கின்றனர். அளிக்கப்பட வேண்டிய தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்தகை நடைமுறையால் என்னவெல்லாம் நடக்கிறது என்று கதை கதையாக செய்திகள் கன்னியாகுமரியிலிருந்து வந்துள்ளன.

விவசாயக் கடன் குறித்த புதிய வியாக்கியானம்

சொல்லப்போனால் விநியோகிக்கப்படும் விவசாயக் கடன் தொகையின் அளவு பெருமளவுக்கு அதிகரித்துள்ளது.  ஆனால், இந்தக் கடன் தொகையெல்லாம் சிறிய விவசாயிகளைச் சென்றடைவதில்லை.

விவசாயக் கடன் திட்டத்தின் கீழ் பல்வேறு விஷயங்கள் இணைக்கப்பட்டு அவை நியாயப்படுத்தப்படுகின்றன. இவற்றில் சில கேலிக்கூத்துக்களும் நடைபெறுகின்றன.

2010-ம் ஆண்டில் அவுரங்காபாத் நகரைச் சார்ந்த வர்த்தகர்களின் சிறிய குழு ஒன்று ஒரே நாளில் 150 மெர்சிடஸ் பென்ஸ் கார் வாங்கியது கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும், லிம்கா சாதனைப் பட்டியலிலும் இடம் பெற்றது.  150 மெர்சிடஸ் பென்ஸ் கார்களை வாங்கிட இவர்கள் செல வழித்தது 66 கோடி ரூபாய்கள் ஆகும்.  இதில் 44 கோடி ரூபாய் தேசியமயமாக்கப்பட்ட ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவிடமிருந்து 7 சதவீத வட்டிக்கு பெறப்பட்ட கடன் தொகையாகும்.

விவசாயி ஒருவர் டிராக்டர் ஒன்றினை வாங்கிட எத்தனை சதவீத வட்டிக்கு கடன் தொகை கிடைக்கும் என்ற கேள்வியை இவ்வங்கியின் கிளை மேலாளரைக் கேட்ட போது அவர் சொன்ன பதில் 14 சதவீத வட்டி என்பதாகும்  ஆடம்பரப் பொருளான மெர்சிடஸ் காருக்கு 7 சதவீத வட்டியில் கடன், அதே நேரத்தில் உற்பத்திக்கு பயன்படுகிற டிராக்டர் வாங்கிட 14 சதவீத வட்டியில் கடன் என்பது வேடிக்கையாக இருக்கிறது. சிறு விவசாயிகளின்பால் இந்திய அரசானது எத்தகைய பகைமை உணர்வைக் கொண்டிருக்கிறது என்பதனை இது காட்டுகிறது. எத்தகைய பாரபட்சமான முறையில் சிறு விவசாயிகள் நடத்தப்படுகிறார்கள் என்பதனை இது விளக்குகிறது.

விவசாயக் கடன் பற்றி இவர்கள் அளிக்கும் புதிய வியாக்கியானத்தின் படி, முகேஷ் அம்பானி சென்னை அண்ணா சாலையில் ஓர் குளிர்பதனக் கிடங்கினைத் திறக்கிறார் என்றால் அதற்கு அவருக்கு 4 சதவீத வட்டியில் விவசாயக் கடன் கிடைக்கும். ஏனென்றால், குளிர்பதனக் கிடங்கில் காய்கறிகளை பாதுகாப்பது என்பது விவசாயம் ஆகும்.

ஆனால், இந்த காய்கறிகளை விளைவிக்கும் விவசாயி அவனுக்குத் தேவையான கடன் தொகை கிடைக்காததால் தற்கொலை செய்து கொள்ளும் அவல நிலை நிலவுகிறது.

இத்தகையதொரு நிலையில் தான் இந்த ஆட்சியாளர்கள் விவசாயக் கடன் என்பதனை வரையறை செய்து, ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டினை சமர்ப்பித்திடும் போது இதனுடைய அர்த்தத்தினை விரிவுபடுத்தி வருகிறார்கள்.  எனவே, விவசாயிகளுக்கு அளிக்கப்படும் கடன் என்பது பெருமளவில் வெட்டப்பட்டு வருகிறது.

நாடு முழுவதிலும் பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று அங்குள்ள விவசாயிகளைச் சந்திக்கின்ற போது அவர்கள் சொல்வதெல்லாம் மிகக் குறைந்த அளவிலான வட்டி விகிதம் அறிவிக்கப்படுகிறது, எனினும் கடன் எதுவும் எங்களுக்குக் கிடைப்பதில்லை என்பதேயாகும்.

நாடு தழுவிய அளவில் 2010-ம் ஆண்டு வரை விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள கடன் குறித்த ஆய்வு ஒன்றினை டாட்டா இன்ஸ்டி டியூட் ஆப் சோசியல் சயின்சைச் சார்ந்த பேராசிரியர் ராம்குமார் ஆய்வு செய்துள்ளார். இந்த ஆய்வின்படி, சிறு விவசாயிகளுக்கு அளிக்கப்படும் ரூ.5000 முதல் ரூ.2 லட்சம் வரையிலான கடன்களின் எண்ணிக்கை மிக வேகமாக வீழ்ச்சியடைந்து வருகிறது. 2000 முதல் 2008 வரையிலான ஆண்டுகளில் இத்தகைய கடன்களின் எண்ணிக்கை 50 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

அதே நேரத்தில், 10 கோடி ரூபாய்க்கு மேல் அளிக்கப்படும் கடன்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. 10 கோடி, 25 கோடி என கடன் தொகை பெறும் விவசாயி யாரையேனும் உங்களுக்குத் தெரியுமா?  அப்படி எந்த விவசாயியாவது உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ளாரா? அப்படியானால் இந்தக் கடன் தொகையெல்லாம் எங்கே போகிறது என்று பார்த்தால் அவையெல்லாம் விவசாயிகளைச் சென்றடைவதில்லை.  மாறாக கார்ப்பரேட் நிறு வனங்களையே சென்றடைகின்றன. விவசாயத்திற்கான இயந்திர உற்பத்திக்கு இக்கடன் தொகைகள் செல்கின்றன. எல்லா வகையான கடன் தள்ளுபடி திட்டங்களும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் கிடைக்கின்றன.

தற்போது இந்திய அரசானது முதலாளிகளை பிரதிநிதித்துவப்படுத்தும்? பிக்கி (FICCI) அமைப்பும் இணைந்து 7000 கோடி ரூபாய் பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டில் “Million Farmer Initiative” என்ற ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது.  இத்திட்டத்திற்கு இந்திய அரசு அளித்திடும் மானியத் தொகையின் அளவு ரூபாய் 3000 கோடியாகும்.  கொல்கத்தாவில் தலைமையகத்தைக் கொண்டு செயல்பட்டு வரும் இந்திய புகையிலை நிறுவனம் (ITC) தமிழகத்தில் இத்திட்டத்தினை செயல்படுத்திட உள்ளது.  இதன்படி, கேழ்வரகு, மிளகாய், சீரகம் மற்றும் புகையிலை ஆகியனவற்றை எவ்வாறு பயிர் செய்திட வேண்டுமென நமது பாரம்பரியமான விவசாயிகளுக்கு இந்நிறுவனத்தின் உயரதிகாரிகளும் MBA பட்டதாரிகளும் பயிற்சி அளிக்கப் போகிறார்களாம். இதிலிருந்து நமது இந்திய விவசாயத் துறையை நிறுவனமய மாக்கிடும் அரசினுடைய முயற்சி தெளிவாகிறது.

இந்திய விவசாயத் துறையிலிருந்து பல லட்சக்கணக்கானவர்களை வெளியேற்றுவது, இந்திய விவசாயத்தினை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைப்பது ஆகியனவற்றில் இந்திய அரசு கடைப்பிடித்து வரும் நிலைபாடானது நமது விவசாய நெருக்கடிக்கு முக்கிய காரணமாகிறது.  இது தான் இந்தியாவில் தற்போது நிலவி வரும் விவசாய நெருக்கடிக்கு மையமான, ஜீவாதாரண மான காரணமாகும்.

சந்தை சார்ந்த விலை நிர்ணயக் கொள்கை

இத்தகைய கொள்கைகளை செயல்படுத்திடும் அதே நேரத்தில் இந்திய அரசானது சந்தை சார்ந்த விலை நிர்ணயக் கொள்கையைக் கொண்டுள்ளது. எரிவாயு விலையை இரண்டு மடங்காக உயர்த்திட மேற்கொள்ளப்பட்ட முயற்சியைப் போல இதுவும் தன்னிச்சையான ஒன்றாகும். இக்கொள்கையின் கீழ் சந்தைக்கு எந்த அடிப்படையும் கிடையாது.  அதே போல, இந்திய உற்பத்தி முறைக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.  ஆனாலும் இதற்கு சந்தை சார்ந்த விலை நிர்ணயக் கொள்கை என நாமகரணம் செய்யப்பட்டுள்ளது.

இன்றைக்கு விவசாயத்திற்கான அனைத்து இடுபொருட்களின் விலையையும் இவர்கள் உயர்த்தியுள்ளார்கள். கடந்த 15 ஆண்டுகளில் உரவிலை பெருமளவு அதிகரித்துள்ளது. விவசாயிகள் பயன்படுத்தும் டை-அமோனியம்-பாஸ்பேட் (DAP) உரத்தின் விலையைப் பார்ப்போம்.  1991-ல் 1 மூட்டை DAP -யின் விலை ரூ.180 என இருந்தது, 2011ல் ரூ.534 என அதிகரித்தது. தற்போது தமிழகத்தில் ஒரு மூட்டை  ரூ. 1250க்கு விற்கப்படுகிறது.

மின் கட்டணம், உர விலை, தண்ணீர் என அனைத்து இடுபொருட்களின் விலையும் முன்பிருந்ததை விட பல மடங்கு தற்போது அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் இன்று தண்ணீர் தனியார்மயமாக்கப்பட்டு வருகிறது. இவை எல்லாவற்றின் காரணமாக இன்று விவசாயி சாகுபடிக்கு செய்யும் செலவுத் தொகையின் அளவு ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது.

ஆனால், விவசாயிக்கு கிடைக்கும் வருமானத்தின் அளவு ஐந்து மடங்கு அதிகரித்திடவில்லை. விவசாயத்தில் ஈடுபடுபவர் பயிர் சாகுபடிக்கு செலவு செய்திட வேண்டிய தொகை பெருமளவு அதிகரித்திருப்பதால் விவசாயிகளால் அதனை ஈடு செய்ய இயலவில்லை.  எனவே, அவர்கள் விவசாயத்தை விட்டு வெளியேறுகின்றனர். அவர்களுக்குத் தேவையான கடன் வசதி அரசிடமிருந்து கிடைக்காததால் கந்து வட்டிக்காரர்களிடம் கடன் வாங்குகின்றனர்.

விளைச்சலுக்கு செய்த செலவு கூட திருப்பி கிடைக்காத நிலையில் வாங்கியக் கடனை திருப்பி செலுத்திட இவர்களால் முடியாமல் போகிறது. ஆனால், வாங்கியக் கடனோ வட்டியோடு குட்டி போட்டு வளர்ந்து நின்று பயமுறுத்த,  கடன் வலையில் சிக்கிய இவர்கள் திவாலாகிப் போகின்றனர். உயிரை மாய்த்துக் கொள்வதைத் தவிர வேறு வழி தெரியாது தற்கொலை செய்து கொள்கின்றனர். பெரும்பாலான விவசாயிகளின் தற்கொலைக்கு இத்தகைய கடன்பட்ட நிலையே காரணமாகிறது.

தற்கொலை செய்து உயிரிழந்த 850 விவசாயிகளின் குடும்பங்களைச் சென்று சந்தித்து கேட்டபோது அனைத்து சம்பவங்களிலும் கடன் சுமையே தற்கொலைக்கு காரணமாகச் சொல்லப்பட்டது. இத்தகைய விவசாயக் குடும்பங்களின் கடன் தொகை என்பது விவசாயத் தொழிலை செய்திட வாங்கியது மட்டுமல்ல.  மருத்துவ சிகிச்சைக்காக, குழந்தைகளின் கல்விச் செலவுக்காக என்றும் அவர்கள் கடன் வாங்கியுள்ளனர். இன்றைக்கு கிராமப்புற இந்தியாவில் உள்ள விவசாயக் குடும்பங்களின் கடன் பட்டியலில் விவசாயம் செய்திட வாங்குவதற்கு அடுத்த படியாக மருத்துவ சிகிச்சைக்காக செலவு செய்திட வாங்கும் தொகை இரண்டாவது இடத்தில் உள்ளது.

இன்றைக்கு நகர்ப்புறத்தில் உள்ள ஓரளவு வருமானமும் வசதி வாய்ப்பும் உள்ள நடுத்தர வர்க்க குடும்பத்தினரைக் காட்டிலும் கூடுதலான அளவில் நமது கிராமப்புற மக்கள் உடல் ஆரோக்கியத்திற்காக செலவு செய்யும் நிலையை காண முடிகிறது.

இந்நிலையில்தான், நமது விவசாயிகளைப் பார்த்து பருத்தி, வெனிலா போன்ற பணப்பயிர்களை பயிர் செய்திடுமாறு நமது ஆட்சியாளர்கள் கூறினர்.  சர்வதேச சந்தையில் இவற்றிற்கு நல்ல விலை உள்ள காரணத்தால் அவர்களுக்கு அமெரிக்க டாலரில் வருமானம் கிடைக்கும் என ஆசை காட்டினர்.  அரசு கூறியதை நம்பிய விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் இத்தகைய பணப்பயிர்களை விளைவிக்கத் துவங்கினர். பல ஏக்கர் கணக்கான விளை நிலங்களில் பருத்தி பயிர் செய்யப்பட்டபோது உண்மையிலேயே சர்வதேச சந்தையில் பருத்திக்கு ரூ. 4,000, 5,000, 6,000 என நல்ல விலை கிடைத்து வந்தது.  இதனைப் பார்த்த விவசாயிகள் சிறிது காலம் கழித்து விலை 7000 என வரும்போது தங்களிடம் உள்ள விளைச்சலை விற்றால் நல்ல விலை கிடைக்கும் என எண்ணி காத்திருந்தனர்.  அத்தகைய நேரத்தில், அது நாள் வரை சர்வதேச சந்தையில் நிலவிடும் சூழலை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு விவசாயிகளை ஊக்குவித்து வந்த இந்திய அரசானது திடீரென பருத்தி ஏற்றுமதியை தடை செய்து வெளியிட்ட அறிவிப்பு அவர்களது தலையில் பேரிடியாக இறங்கியது.

மும்பை பஞ்சாலை முத லாளிகளான வாடியாக்களுக்கும், அம்பானிகளுக்கும் மலிவு விலையில் பருத்தியை கிடைக்கச் செய்திடவே இத்தகைய அதிரடியான அறிவிப்பினை இந்திய அரசு வெளியிட்டது. இதன் காரணமாக, சர்வதேச சந்தையில் பருத்தியின் விலை ரூ.7000 என இருந்தபோது, நமது விவசாயிகள் மும்பை பஞ்சாலை முதலாளிகளுக்கும், வர்த்தகர்களுக்கும், கந்து வட்டிக் காரர்களுக்கும் வெறும் ரூ.3000-த்திலிருந்து 3500 வரையிலான விலைக்கு விற்க வேண்டி வந்தது. இதன் காரணமாக பெருமளவிலான விவசாயிகள் கடன் வலையில் சிக்குண்டனர்.  கந்து வட்டிக்காரர்களின் கடன் வலை, அரசிடமிருந்து எந்த கடன் உதவியும் கிடைக்காத நிலை, விவசாயத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி, இடுபொருட்களின் விலை உயர்வு ஆகியன எல்லாம் சேர்ந்து இந்திய விவசாயிகளை வாழ்க்கையின் ஓரத்திற்குத் தள்ளியதுடன் தற்கொலை செய்து கொள்ளத் தூண்டின.

பெண்கள் விவசாயிகளா?

தேசிய குற்றப் பதிவு மையம் (National Crime Records Bureau) இந்த ஆண்டு ஜூன் மாத இறுதியில் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி 1995 முதல் 2013 வரையிலான 18 ஆண்டுகளில் 2,84,694 இந்திய விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.  ஆனால், இந்த எண்ணிக்கையில் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த பெண் விவசாயிகள் எண்ணிக்கை இடம் பெறவில்லை.

இந்திய அரசும், காவல் துறையும் தற்கொலை செய்து கொண்டு உயிரிழக்கும் பெண் விவசாயிகளை விவசாயிகளாக கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை.  மாறாக, அவர்களை விவசாயியின் மனைவியாகவே கணக்கில் கொள்கின்றனர்.  எனவே, 8 முதல் 10 சதம் வரையிலான பெண் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்திருப்பதாக அதிகாரபூர்வமான புள்ளி விவரங்கள் தெரிவிப்பது முழுமையான உண்மையல்ல.

அதே போல தற்கொலை செய்து கொண்ட தலித் மற்றும் பழங்குடியின விவசாயிகளின் எண்ணிக்கையும் இந்த புள்ளி விவரத்தில் இடம் பெறவில்லை.  ஏனெனில், பெரும்பாலான தருணங்களில் இறந்து போன தலித் அல்லது பழங்குடியின விவசாயியின் பெயரில் பட்டா இல்லை என்ற காரணத்தை காவல் துறையினர் காட்டுகின்றனர். ஆக மொத்தத்தில், உயிரிழந்த பெண் விவசாயிகள், தலித் மற்றும் பழங்குடியின விவசாயிகள் ஆகியோரின் எண்ணிக்கையை சேர்க்காத போதும் கூட தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் எண்ணிக்கை 2,84,694 ஆக உள்ளது.

அப்படியானால், கடந்த 9 ஆண்டுகளில் நமது நாட்டில் ஒவ்வொரு 32 நிமிடங்களுக்கும் ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்கிறார்.  விவசாயிகளின் இத்தகைய தற்கொலைகள் நெருக்கடியல்ல. மாறாக, விவசாயத் துறை நெருக்கடியின் விளைவுகளே அவை.

ஆட்சியாளர்கள் செயல்படுத்திய நவீன தாராளமயக் கொள்கைகள் காரணமாக கடன் வழங்கலில் ஏற்பட்ட வீழ்ச்சி, இடு பொருட்களின் விலை உயர்வு போன்ற விளைவுகளால் இன்றைக்கு விவசாயத் துறை என்பது போதுமான முதலீடு இன்றி தவித்து வருகின்றது. சிறு விவசாயிகளிடமிருந்து விவசாயத்தைத் தட்டிப் பறித்து அதனை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைத்திடும் நோக்குடனே இக் கொள்கைகள் அமலாக்கப்படுகின்றன. எனவேதான், பல லட்சக் கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தப்பட்டுள்ளன.

வெற்றிலை, பயிர் செய்யப்பட்டு வந்த விளை நிலங்கள் சுரங்கத் தொழிலுக்கு மாற்றப்படுவதனை எதிர்த்து சமீபகாலமாக பன்னாட்டு நிறுவனமான போஸ்கோவை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.  பல லட்சக் கணக்கான மக்கள் கிராமங்களை விட்டு வெளியேறுவதால் பெருமளவில் இடம் பெயர்தல் நடைபெறுவதாக மக்கள் தொகை கணக்கெடுப்பும், தேசிய மாதிரி ஆய்வும் தெரிவிக்கிறது. இத்தகைய இடம் பெயர்தலும் இப்பிரச்சனையில் கூடுதல் சிக்கலை ஏற்படுத்துகிறது. ஆண்கள் கிராமத்தை விட்டு வெளியேறுவதால் அல்லது கிராமத்திலேயே இருந்தாலும் கூட அவர்கள் விவசாயமல்லாத தொழிலில் ஈடுபடுவதால் இன்று விவசாயத்தில் ஈடுபடும் ஆண்களின் எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்துள்ளது.  இதன் காரணமாக, விவசாயத்தில் ஈடுபட்டு வரும் பெண்களின் பணிப் பளு இரண்டு மடங்கிற்கும் கூடுதலாக அதிகரித்துள்ளது.

முன்பெல்லாம் ஆடு, மாடு, கோழி என கால்நடைகளை பராமரிக்கும் பணியினை மேற்கொண்டு வந்த விவசாயக் குடும்பத்தின் பெண்கள், இன்று விவசாயத் தொழிலாளர்களாகவும் மாறியுள்ளனர். இதன் காரணமாக இன்று பெண் விவசாயத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைப் பார்க்க முடிகிறது. 1997-லிருந்து இந்தியாவில் உள்ள கால்நடைகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது.  ஏனெனில், முன்பு இந்த கால்நடைகளை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த பெண்கள் இப்போது இதர தொழில்களுக்கு மாறிவிட்ட காரணத்தால் இந்நிலை ஏற்பட்டுள்ளது.  ஆனால், இப்பெண்களின் வேலைப் பளு தற்போது 10 மடங்கு அதிகரித்துள்ளது.

தண்ணீர் மற்றும் சுற்றுச் சூழல் நெருக்கடி

விவசாயிகளிடமிருந்து விவசாயத்தைத் தட்டிப் பறிக்கும் அரசின் கொள்கைகளே விவசாயத் துறையின் இன்றைய நெருக்கடிக்கு அடிப்படைக் காரணம் என்பதனை நாம் அடையாளம் காணும் அதே நேரத்தில் நாம் பொறுப் பேற்க வேண்டிய வேறு பல விஷயங்களும் உள்ளன.

இத்தகைய பிரச்சனைகளுக்கு அரசு தீர்வினை அளிக்காது என்பதனையும் நாம் உணர்ந்திட வேண்டியுள்ளது. இந்திய விவசாயத்துறை இன்று கடுமையான தண்ணீர் மற்றும் சுற்றுச் சூழல் நெருக்கடியையும் சந்தித்து வருகிறது. நாம் தவறான முறையில் விவசாயத்திற்கு தண்ணீரைப் பயன்படுத்தி வருகிறோம்.  இத்தகைய முறையில் மாற்றத்தைக் கொண்டு வருவதுடன் நாம் முன்னேற்றத்தையும் ஏற்படுத்திட வேண்டியுள்ளது. உதாரணமாக, மகாராஷ்டிர மாநிலத்தில் கரும்பு பிரதானமாக பயிரிடப்பட்டு வருகிறது. இம்மாநிலத்தின் மொத்த கரும்பு சாகுபடியில் மூன்றில் இரண்டு பங்கு கரும்பு வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பயிர் செய்யப்படுகிறது. ஒரு ஏக்கர் நிலத்தில் கரும்பினை பயிர் செய்திட 18 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. அப்படியானால் நாம் கரும்பினை பயிர் செய்யும் பல ஏக்கர் நிலங்களுக்கு தேவைப்படும் தண்ணீரின் அளவை கணக்கிட்டுப் பாருங்கள்.  எனவேதான், பருவமழை பொய்க்காது மாதம் மும்மாரி பொழிந்தாலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. நிலத்தடி நீர் வளத்தை நாம் அழித் தொழித்துள்ளோம். நமது நாட்டின் எந்தப் பகுதிக்குப் போனாலும் தமிழகத்தில் உள்ள திருச்செங்கோடு நகரைச் சார்ந்த போர்வெல் ரிக் இயங்கிக் கொண்டிருப்பதனைப் பார்க்க முடியும். ஏனெனில், போர்வெல் ரிக்கின் தலைநகரம் திருச்செங்கோடுதான். எனவே, அங்கு சென்றபோது அங்கிருந்த ரிக் உரிமையாளர்களிடம் உங்களது பகுதியில் எத்தனை ரிக்குகள் தற்போது இயங்கிக் கொண்டுள்ளன என்று கேட்டபோது அந்த எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது என அவர்கள் கூறினார்கள்.  அநேகமாக நிலத்தடி நீரை ஒட்டுமொத்தமாக உறிஞ்சிவிட்டதால் பெருமளவிலான தண்ணீர் நெருக்கடியை எதிர்நோக்குகின்றோம். எனவே, மாற்று வழி முறைகள், தொழில்நுட்பங்கள் குறித்து நாம் கவனம் செலுத்திட வேண்டும்.  இல்லையெனில், நாம் சுற்றுச் சூழல் நெருக்கடியையும், உணவு நெருக்கடியையும் எதிர்கொள்ள வேண்டிவரும்.  தண்ணீர் பாதுகாப்பு என்பது இல்லாமல் உணவுப் பாதுகாப்பு என்பது இருக்க முடியாது. இந்திய அரசானது தண்ணீரை தனியார்மயமாக்கி வருகிறது.  இதன் காரணமாக தண்ணீர் என்பது அதனை காசு கொடுத்து வாங்கும் சக்தியைப் பெற்றுள்ள மக்களின் வாழ்விடங் களை நோக்கியே பாய்ந்திடும்.

சாத்தியமானத் தீர்வுகள்

இத்தகையதொரு நிலையில், விவசாயிகளுக்கான தேசியக் கமிஷனின் முக்கியமான பரிந்துரைகளை அமலாக்கிடக் கோரி நாம் போராட வேண்டும்.  2004-ம் ஆண்டில் பெருமளவிலான எண்ணிக்கையில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதனையடுத்து இந்திய அரசானது பேராசிரியர் எம்.எஸ். சுவாமிநாதன் தலைமையில் இக்கமிஷனை நியமித்தது.

2007-ம் ஆண்டில் பேராசிரியர் சுவாமிநாதன் அவர்கள் 4 பாகங்களைக் கொண்ட பரிந்துரையை விவசாயத் துறை அமைச்சர் சரத் பவாரிடம் அளித்தார். பல முற்போக்கான பரிந்துரைகள் அதில் இடம் பெற்றிருந்தன.  ஆனால், ஆறாண்டுகள் கடந்த பின்னரும் இன்று வரை இந்த அறிக்கை மீதான விவாதம் எதுவும் நாடாளுமன்றத்தில் நடைபெறவில்லை.  நமது மாண்புமிகு அமைச்சர் ஒரு நிமிட நேரம் விவாதிப்பதற்குக் கூட இந்த அறிக்கையினை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திடவில்லை. கிருஷ்ணா-கோதாவரி படுகைத் திட்டம் ஆந்திர மக்களுக்கு சொந்தமானது என்றபோதும் இத்திட்டத்தின் பயன்கள் முகேஷ் அம்பானியை சென்றடைய வேண்டுமா அல்லது அனில் அம்பானிக்கு அப்பலன்கள் கிடைத்திட வேண்டுமா என்பது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதித்திட இவர்களுக்கு நேரம் இருக்கிறது.

எனவே, சுவாமிநாதன் குழு அளித்த பரிந்துரைகள் அமலாக்கப்பட நாம் இயக்கங்களை நடத்திட வேண்டும். விவசாய உற்பத்தி செலவுடன் கூடுதலாக 50 சதவீதத்தை சேர்த்து அதனை விவசாயிக்கு விலையாக அளித்திட வேண்டும் என இக்கமிஷனின் ஒரு பரிந்துரை கூறுகிறது. குறைந்த வட்டியிலான கடன் மற்றும் வறட்சி பாதித்த பகுதிகளிலே வட்டியில்லாக் கடன் பற்றியும் இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இடதுசாரிக் கட்சிகளைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த அறிக்கை குறித்து விவாதிப்பதற்காக நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத் தொடர் நடத்தப்பட வேண்டுமென கோரினர். நமது அமைச்சர் சரத் பவார் அவர்கள் இதனை ஏற்றுக் கொண்ட போதும் இன்று வரை இது நடைபெறவில்லை. சொல்லப் போனால், இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பிறகு பேரசிரியர் சுவாமிநாதன் அவர்களுடன் திருவாளர் சரத் பவார் பேசுவதேயில்லை.  ஒரு வேளை அமைச்சர் விரும்பியபடி முழுக்க முழுக்க கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமானதொரு பரிந்துரையை பேராசிரியர் சுவாமிநாதன் அளிக்காததால் அவர் மீது இவருக்கு கோபம் இருக்கக் கூடும்.

எனவே, 2004 முதல் 2007 வரை யிலான காலத்தில் இந்திய விவசாயத் துறையின் நெருக்கடி குறித்து ஆய்வு செய்து விவசாயிகளுக்கான தேசிய கமிஷன் அளித்துள்ள பரிந்துரைகளின் அமலாக்கத்திற்கான போராட்டத்தை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

விவசாயத் துறை நெருக்கடி குறித்து மட்டும் விவாதிப்பதற்கான நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் நடத்தப்பட வேண்டுமென நாம் கோரிக்கை வைத்திட வேண்டும்.  இக்கூட்டத்தில் வேறு எந்தப் பிரச்சனை குறித்தும் விவாத்திக்கப்படக் கூடாது.  மேலும், இந்தியாவில் விவசாயம் என்பது பொது சேவையாக (public service) அறிவிக்கப்பட வேண்டுமென நாம் கோரிட வேண்டும்.  இந்தியாவில் விவசாயத்தில் ஈடுபடுபவர்கள் மிகக் குறைவான வருமானத்தை ஈட்டுபவர்களாகவே உள்ளனர்.  விவசாயப் பொருட்களின் உற்பத்தியின் அளவில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பை வைத்து மட்டும் விவசாயத்துறை வளர்ச்சியை கணக்கிடாதீர்கள்.  விவசாயிகளின் வருமானத்தினை அடிப்படையாகக் கொண்டு இவ்வளர்ச்சியை கணக்கிடுங்கள் என சுவாமிநாதன் கமிஷனின் பரிந்துரை கூறுகிறது. மேற்கூறப்பட்டவை தவிர மேலும் இரண்டு விஷயங்கள் குறித்து நாம் கவனம் செலுத்திட வேண்டும்.

சமூக அளவிலான ஆராய்ச்சி மற்றும் பொருளாதாரமன கொள்கைகள் குறித்த விஷயங்களே அவை. சமூக அளவில், நாம் ஆராய்ச்சி யில் நமது கவனத்தை செலுத்திட வேண்டும். இன்றைக்கு அரசுத்துறை வேளாண் பல்கலைக் கழகங்களும் இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சிலும் விற்பனை செய்யப்பட்டுவிட்டன.

இவையெல்லாம் இன்று முழுக்க முழுக்க மான்சான்டோ, கார்கில் போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்காகவே செயல்படுகின்றன. நமது விவசாயிகளின் நலனுக்காக இவை செயல்படவில்லை. உலகிலேயே இது தான் சிறந்தது, இந்த விதைதான் மிகச் சிறந்தது என்றெல்லாம் நாள் தோறும் இந்த வேளாண் பல்கலைக் கழகங்களும் ஆராய்ச்சி கவுன்சிலும் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், இவர்களது இத்தகைய கூற்றால் நமது இந்திய விவசாயிகள் வஞ்சிக்கப்பட்டு வருகின்றனர்.

எனவே, இந்திய விவசாயிகள் சங்கமானது தேசிய அளவில், மாநில அளவில், வாய்ப்பிருந்தால் மாவட்ட அளவில், நவீன ஆராய்ச்சிக் கூடங்களை சிறிய அளவிலாவது துவங்கிட வேண்டும்.  இத்தகையக் கூடங்கள் 1 அல்லது 2 ஏக்கர் நிலத்தைக் கொண்டு தங்களது பரிசோதனையை மேற்கொள்ளலாம். ஏனெனில், இன்று ஒவ்வொரு மாவட்டத்திலும் நமது மண்ணின் வளம் குறித்து நாம் ஆய்வு மேற்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.  நமது மண்ணின் வளம் பெருமளவில் அரிக்கப்பட்டு வருகிறது.  நமது நாட்டின் பல்வேறு பகுதிகளில் விளை நிலங்கள் 20 முதல் 25 சதம் வரை மலட்டுத் தன்மை அடைந்து வருகின்றன. மண்ணின் தன்மைக்கு ஒவ்வாத பயிர்களை நாம் சாகுபடி செய்வதாலும், சில சமயம் மிக அதிக அளவிலான இரசாயனங்களையும் உரங்களையும் நாம் பயன்படுத்துவதால் இத்தகைய மலட்டுத் தன்மை ஏற்படுகிறது.

எனவே, விவசாயிகள் சங்கமானது இவ்விஷயத்தில் தனது கவனத்தை செலுத்தி, ஒரு குறிப்பிட்ட பகுதியிலுள்ள விவசாயி என்ன பயிரை சாகுபடி செய்தால் பயனடையலாம் என்பதனைக் கண்டறிந்திட வேண்டும். உலகின் பல்வேறு நாடுகளில் விவசாயிகள் சங்கங்கள் இத்தகைய ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகின்றன.  விவசாயத்திற்கு நீர் வளத்தை நாம் பயன்படுத்திடும் முறையை மறு பரிசீலனை செய்திட வேண்டும்.

சமூகத்தின் ஆதரவுடனான விவசாயம் குறித்து நாம் சிந்திக்கத் துவங்கிட வேண்டும். உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழும் 50 குடும்பங்கள் ஓராண்டு காலத்திற்குத் தங்களுக்கு என்னென்ன தானியங்களும் காய்கறிகளும் என்ன அளவிற்கு தேவை என அப்பகுதியில் உள்ள விவசாயிகளிடம் முன் கூட்டியே தெரிவித்து அவற்றை அந்த விவசாயிகளிடமிருந்து வாங்கிடுவதற்கான ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம். இதன் காரணமாக, அந்த விவசாயிகளுக்கு அந்த ஓராண்டு காலத்தில் என்னென்ன தானியங்களை, காய்கறிகளை என்ன அளவு உற்பத்தி செய்திட வேண்டும் என்பது முன் கூட்டியே தெரிந்துவிடும். இதன் காரணமாக, விவசாயிகளும் நுகர்வோரும் பயனடைய முடியும்.

அரசியல் மற்றும் பொருளாதாரப் பிரச்சனைகள் பற்றி பார்த்தோமேயானால், இன்று ஆட்சியாளர்கள் செயல்படுத்திடும் நவீன தாராளமயக் கொள்கைகளை நாம் எதிர்த்திட வேண்டும்.

கடந்த 20 ஆண்டுகளாக அமலாக்கப்பட்டு வரும் இத்தகைய கொள்கைகள் திரும்பப் பெறப்பட நாம் ஆட்சியாளர்களை வலியுறுத்திட வேண்டும்.  இந்திய விவசாயிகளுக்குச் சொந்தமான, பயனளித்து வந்த கடன் திட்டங்கள் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட நாம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.  இதற்கான பேரியக்கங்களை நடத்திட வேண்டும்.

நமது நாட்டின் வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தோமேயானால், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்த வீரஞ்செறிந்த சுதந்திரப் போராட்டத்தில் நகர்ப்புறத் தலைவர்களும் வழக்கறிஞர்களும் மட்டுமல்ல, இந்திய விவசாயிகளும் அளப்பரிய பங்களிப்பினை செலுத்தியிருப்பதனைக் காண முடிகிறது.

தேச விடுதலைக்காக 1857-ல் நடைபெற்ற முதல் சுதந்திரப் போரில் விவசாயிகளின் பங்களிப்பைக் காண முடிகிறது.

1948-ல் கம்யூனிஸ்ட்களின் தலைமையில் தெலுங்கானா பகுதி விவசாயிகள் வெகுண்டெழுந்து நிஜாம் மன்னருக்கு எதிராக சமர் புரிந்து, அவரை தோற்கடித்து 10 லட்சம் ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி அந்த நிலங்களை மறுவிநியோகம் செய் தனர்.

50-களில் கேரளத்தில் நிலச்சீர்திருத்தம் செயல்படுத்தப்பட்டதை பார்த்தோம். அதே போல 70-80களில் மேற்கு வங்கத்தில் நிலச்சீர்திருத்தம் அமலானதைப் பார்த்தோம். இன்னமும், செய்து முடிக்கப்பட வேண்டிய பல்வேறு விஷயங்கள் உள்ளன. 

நமது இந்திய தேசத்தில், 50-60-70-களில் நாம் விவசாயிகளின் பேரெழுச்சியுடன் கூடிய இயக்கங்களைப் பார்த்தோம். ஆனால், 90-களிலும் 2000-த்திலும் பெரும் எண்ணிக்கையிலான விவசாயிகளின் தற்கொலைகள் அரங்கேறியதனைப் பார்த்தோம். தற்கொலை என்பது தீர்வினை அளிக்காது.  மாறாக இத்தகைய நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு சரணடைவதாகும்.

எனவே, நாம் 50-60-70களுக்குத் திரும்பிச் செல்வோம். நவீன தாராளமயக் கொள்கைகளை எதிர்க்கத் துவங்கிடுவோம். விவசாயிகளின் கைகளிலிருந்து விவசாயத்தை தட்டிப் பறித்து கார்ப்பரேட் நிறுவனங்களின் கரங்களில் ஒப்படைப்பதனைத் தடுத்து நிறுத்தி இந்திய விவசாயிகளின் உரிமையை நிலைநாட்டிடுவதற்காக போராடுவோம்.  உங்களுக்கு இது சாத்தியமே என்பதனையும் நிச்சயமாக உங்களால் வெற்றி பெற இயலும் என்பதனையும் இந்திய விவசாயிகளின் வரலாற்றிலிருந்து உணர்ந்து கொள்ளுங்கள்.  விவசாயிகள் வெளியே வந்து போராட்டக் களத்தில் குதித்து கார்ப்பரேட்டுகளை எதிர்த்து போராடுகின்ற போது அந்தப் போராட்டமானது கடுமையானதொரு பெரும் போராட்டமாக இருக்கும். இறுதியில் விவசாயிகளே வெற்றி பெறுவர் என்பது உறுதி.

முதலாளித்துவச் சித்தாந்தம் அல்லது சோஷலிஸ்டு சித்தாந்தம்… நடுவழி ஏதும் கிடையாது (ஏனென்றால் மனிதகுலம் ஒரு மூன்றாம் சித்தாந்தத்தைப் படைக்க வில்லை. மேலும், வர்க்கப் பகைமைக ளால் பிளக்கப்பட்டுள்ள ஒரு சமுதாயத்தில் வர்க்கத்தன்மையற்ற சித்தாந்தமோ வர்க்கத்துக்கு அப்பாற்பட்ட சித்தாந்தமோ என்றைக்கும் இருக்க முடியாது). எனவே சோஷலிஸ்டு சித்தாந்தத்தை எந்த விதத்தில் சிறுமைப்படுத்தினாலும், அதிலிருந்து இழையளவேனும் விலகிச் சென்றாலும் முதலாளித்துவச் சித்தாந்தத்தைப் பலப் படுத்துவதாகவே பொருளாகும். மூன்றாம் வழி கிடையாது.

இந்தியாவின் சமகால வேளாண் நெருக்கடி!

அறிமுகம்

இந்தியா விடுதலை அடைந்த பொழுது விவசாயம் மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்தது. நிலப்பிரபுத்துவச் சுரண்டலும் அதன் மீது தொடர்ந்த காலனீயச் சுரண்டலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தன. 1900 முதல் 1950 வரையிலான ஐம்பது ஆண்டுகளில் வேளாண் உற்பத்தி ஆண்டு ஒன்றுக்கு அரை சதவிகிதம் என்ற அளவில், கிட்டத்தட்ட தேக்க நிலையில் இருந்தது.

விடுதலைக்குப் பின் 1950-51 முதல் 1964-65 வரையிலான காலத்தில் வேளாண் உற்பத்தி ஆண்டு ஒன்றுக்கு 3.3  என்ற அளவில் அதி கரித்தது. ஓரளவு ஜமீன்தாரி ஒழிப்பு, குத்தகை மற்றும் வார சாகுபடி தொடர்பான சீர்திருத்தங்கள் மற்றும் பாசனம், மின்சார உற்பத்தி உள்ளிட்ட ஊரக வளர்ச்சி சார்ந்த துறைகளில் அரசு மேற்கொண்ட பொது முதலீடுகளும் இந்த வளர்ச்சியை சாத்தியப்படுத்தின. இந்த வளர்ச்சி பாசனப் பெருக்கத்தாலும் கூடுதல் நிலங்கள் சாகுபடிக்குள் கொண்டு வரப்பட்டதாலும் நிகழ்ந்தது. ஆனால் ஒரு ஏக்கரில் கிடைக்கும் மகசூல் பெருமளவிற்கு உயரவில்லை. பாசனம் மூலம் மட்டுமே சற்று அதிகரித்தது. மேலும் நில ஏகபோகம் தகர்க்கப்படவில்லை. மாறாக, உச்ச வரம்பு சட்டங்கள் கேலிக் கூத்தாக ஆக்கப்பட்டன. இதனால், இந்த வேளாண் வளர்ச்சி நிலைத்த தன்மை பெற்றிருக்கவில்லை.

1966-ல், பருவ மழை பொய்த்த பின்னணியில் ஆகப்பெரிய உணவு நெருக்கடி வெடித்தது. அமெரிக்காவில் இருந்து தானியம் இறக்குமதி செய்து உணவு நெருக்கடியை சமாளிக்கும் நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டது. இது இந்திய அரசின் அயலுறவுக் கொள்கைகளில் தலையிட வும் இந்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கவும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு வாய்ப்பு அளித்தது. உணவு உற்பத்தியை அதிகரிப்பது என்பது உணவு பாதுகாப்பு தொடர்பான பிரச் சினை மட்டும் அல்ல, நாட்டின் இறையாண்மை சம்மந்தப்பட்டதும் கூட என்பதை இந்த நெருக்கடி வெளிக் கொணர்ந்தது.

இந்த பின்புலத்தில்தான் ஆளும் வர்க்கங்கள் பசுமை புரட்சி கொள்கையை அமலாக்கினர். பசுமைப் புரட்சி என்பது தொழில் நுட்பம் மட்டும் அல்ல. தானிய உற்பத்தியைப் பெருக்கிட,  உயர் மகசூல் விதைகள், ரசாயன உரங்கள் உள்ளிட்ட ஒரு புதிய தொழில் நுட்பம், அதோடு விவசாயிகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் தானியங்களுக்கு குறைந்தபட்ச விலை உத்தர வாதம், அரசு கொள்முதல் ஏற்பாடு, வேளாண் ஆராய்ச்சி அமைப்பை வலுப்படுத்துதல், விரிவாக்கப் பணி அமைப்பினை வலுப்படுத்துதல், மான்ய விலையில் உரம் உள்ளிட்டடு பொருட் கள், சாகுபடிச் செலவுகளுக்கும் நவீன வேளாண் உற்பத்திக் கருவிகளை வாங்கவும், கிணறு, பம்பு செட்டில் முதலீடு செய்யவும் வங்கி/கூட்டுறவு கடன் என்று பல வகைகளில் அரசு முன் முயற்சிகளை மேற்கொண்டதும் சேர்ந்து தான் பசுமை புரட்சி கொள்கை என்பதாகும். பாசன வசதி பெற்ற நெல் மற்றும் கோதுமை சாகுபடி தான் இதில் பிரதானமாக பயன் அடைந்தது என்பது உண்மை.

எனவே, பயிர்கள், பகுதிகள், வர்க்கங்கள் என்ற மூன்று வகைகளிலும் பசுமை புரட்சி ஒரு பகுதி விவசாயிகளுக்கே கூடுதல் பயன் அளித்தது என்பதும் உண்மை. எனினும், சாகுபடி பரப்பளவு சிறிதளவே அதிகரிக்கும் என்ற நிலையில், பசுமை புரட்சி கொள்கைகள் 1960-களின் பிற்பகுதியில் இருந்து தானிய உற்பத்தியை பெருக்கவும் வேளாண் வளர்ச்சியை சாத்தியமாக்கவும் முக்கிய பங்கு ஆற்றின என்பது மறுக்க முடியாத உண்மை. 1965-66 முதல் 1974-75 வரை தானிய உற்பத்தி ஆண்டு ஒன்றுக்கு 3.4 சதவிகிதம் என்ற வேகத்திலும் வேளாண் உற்பத்தி 3.2 சதவிகிதம் என்ற வேகத்திலும் அதிகரித்தன. இந்த வளர்ச்சி மகசூல் உயர்வால் தான் பெரும் பகுதி சாத்தியம் ஆகியது. சாகுபடி பரப்பளவு சிறிதே அதிகரித்தது. 1969-ல் 14 தனியார் வணிக வங்கிகள் நாட்டு உடைமையாக்கப்பட்டன. மக்கள் அவையில் இடதுசாரிகள் ஆதரவு கிடைத்ததால் தான் இது சாத்தியம் ஆயிற்று. வேளாண்துறைக்கு நிறுவனக் கடன் கிடைக்க, வட்டி விகிதம் குறைய, இந்த நடவடிக்கை பெரிதும் உதவியது.

1970-களில் அரசு பாசன விரிவாக்கத்திலும் தொடர்ந்து முதலீடு செய்தது. வேளாண் ஆராய்ச்சி அமைப்பு, விரிவாக்க அமைப்பு, மற்றும் தானியக் கொள்முதல் அமைப்பு ஆகியவை வலுப்பெற்றன. இத்தகைய கொள்கைகள் 1980 முதல் 1991 வரையிலான காலத்தில் வேளாண் உற்பத்தி ஆண்டுக்கு 4 சதவிகிதம் என்ற அளவிலும் நெல் மற்றும் கோதுமை உற்பத்தி, முறையே ஆண்டு ஒன்றுக்கு 3.84 சதவிகிதம், 4.38 சதவிகிதம்  என்ற அளவிலும் அதிகரிக்க பெரிதும் உதவின.

சுருக்கமாகச் சொன்னால், காலனி ஆதிக்க காலத்தில் தேக்க நிலையில் இருந்த வேளாண் உற்பத்தி மதிப்பு 1950 முதல் 1990-களின் நடுப்பகுதி வரை சராசரியாக ஆண்டு ஒன்றுக்கு 3 சதவிகிதம் என்ற வேகத்தில் வளர்ந்தது.  தாராளமயக் கொள்கைகளும் வேளாண்துறையும்

1991-ல் இருந்து தாராளமய, தனியார்மய கொள்கைகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டன என்பது நாடறிந்த உண்மை. இந்தக் கொள்கை கள் வேளாண்மையும் விவசாயிகளும் இதர கிராமப்புற உழைக்கும் மக்களும் சந்தித்து வரும் கடும் நெருக்கடிக்கு மிக முக்கிய காரணம். தாராளமயக் கொள்கைகள் வேளாண்துறை மீது ஏற்படுத்தி உள்ள பாதிப்புகளைக் காண்போம்:

அன்னிய நிதி மூலதனம் நாட்டை விட்டு வெளியே சென்று விடக் கூடாது, அதை இங் கேயே தக்க வைப்பதே அரசின் வரவு செலவு கொள்கைகளின் மைய நோக்கமாக இருக்க வேண்டும் என்பது தாராளமய, உலகமயக் கொள்கைகளின் அடிப்படை அம்சம். குறிப்பாக, இந்தக் கொள்கைகளின் படி, அரசு தனது வரவுகளுக்கு உட்பட்டே செலவு செய்ய வேண் டும். செல்வந்தர்கள், அந்நிய, இந்திய பெரும் கம்பெனிகள் மீது அவர்கள் ஊக்கம் குறையாது இருக்க குறைந்த வரி தான் போட வேண்டும். மக்களுக்குப் பயன் தரும் மானியங்களைக் குறைத்துத் தான் செலவை வரவுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். வேளாண் துறையில் இக்கொள்கை உரமானியத்தையும் இடுபொருள் மானியங்களையும் வெட்டிச் சாய்க்கிறது.

1991-ல் இருந்து உர விலை, எரிபொருள் விலை, போக்கு வரத்து கட்டணங்கள், டீசல் விலை, மின் கட்டணங்கள் போன்றவை தொடர்ந்து உயர்த் தப்படுவது  தொடர்கிறது. இடதுசாரிகள் நீங்க லாக, அனேக மாநில அரசுகளும் மத்திய அரசு பின்பற்றும் தாராளமயக் கொள்கைகளையே பின்பற்றி வருகின்றன.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி-.2  அரக்கத் தனமாக செயல்பட்டுள்ளது. விவசாயிகளின் அமைப்புகள், இடதுசாரிக் கட்சிகள் ஆகியவற்றின் தொடர் எதிர்ப்பையும் புறந்தள்ளி இடுபொருட்கள் விலைகளை தொடர்ந்து வேகமாக உயர்த்தி வருகிறது. இவ்வாறு இடுபொருட் செலவுகள் அதி கரித்து வரும் நிலையில், 1990-களின் பிற்பகுதியில் இருந்து, உலக வர்த்தக அமைப்பின் விதிகளின் படி இந்திய அரசு இறக்குமதி மீதான அளவு கட்டுப்பாடுகளை நீக்கி விட்டது. இறக்குமதி வரிகளையும் குறைவாகவே வைத்திருந்தது. இதே காலத்தில் பன்னாட்டு சந்தைகளில் வேளாண் பொருட்களின் விலைகள் சரிந்து கொண்டிருந் தன. இந்த இரண்டினாலும், இந்தியாவில் வேளாண் விலைகள் வீழ்ச்சி அடைந்தன. மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி என்ற கதை ஆயிற்று  விவசாயிகளுக்கு. பின்னர் பன்னாட்டு சந்தைகளில் விலை உயர்ந்த பொழுதும் அதன் பலன் இந்திய விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை, மாறாக ஊக வணிகர்களுக்கும் வர்த்தக சூதாடி களுக்கும் சென்றது. விவசாயிகளுக்கு மிஞ்சியது விலைகளின் தாறுமாறான ஏற்ற இறக்கம் தான்.

மோசமான நரசிம்மம் கமிட்டியின் பரிந்துரை களில் துவங்கிய நிதித்துறை தாராளமயம் விவசாயிகளுக்கான கடன் வசதியை சுருக்கியது. வட்டி விகிதங்கள் உயர்ந்தன. கடன் அளவு சரிந்தது. வங்கிகள் அளிக்கும் கடன்கள் பற்றிய முடிவுகளில் அரசு தலையிடக் கூடாது என்றும் லாப நோக்கத்தின் அடிப்படையில் மட்டுமே வங்கிகள் செயல்பட வேண்டும் என்றும் கூறப்பட்டது. 1990-களில் இருந்து 2005 வரை இந்த நிலை நீடித்தது. அதன் பின் கடன் கொள்கையில் சில மாற்றங்களை அரசு அறிவித்த போதிலும், சிறு குறு விவசாயிகள் நிறுவனக் கடன் வசதி பெறுவது கடினமாகவே உள்ளது. மறுபுறம் நகர்ப்புற செல்வந்தர்களுக்குக் கூட வேளாண் கடன் தரப்படுகிறது! கிராமப்புற வங்கிகளின் எண்ணிக்கை 1969-ல் இருந்து 1991 வரை வேகமாக அதிகரித்த நிலைமை தலைகீழாக மாறி அவற்றின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அவை அளிக்கும் கடனும், பெரும்பாலான சாதாரண விவசாயிகளைப் பொருத்த வரையில் குறைந்து வருகிறது. விவசாயிகள் கந்து வட்டியில் மீண்டும் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. (திருச்சி மாவட்டத்தில் நானும் வேறு சில ஆய்வாளர் களும் இணைந்து மேற்கொண்ட கள ஆய்வில் இதைத் தெளிவாகக் காண முடிந்தது)

அரசின் செலவுகளை குறைக்கும் முகமாய் ஊரக வளர்ச்சிக்கான அரசு ஒதுக்கீடு 1991-க்குப் பிறகு தொடர்ந்து தேச உற்பத்தியின் சதவிகித அளவில் குறைந்து வருகின்றன. பொதுத்துறை முதலீடுகள் கணிசமாக வெட்டப்பட்டுள்ளது. இதனால், பாசன விரிவாக்கம் பழங்கதையாகிப் போனது. மின்சார உற்பத்தி வளர்ச்சி சுருங்கிப் போயிற்று. வேளாண்மைக்கான கட்டமைப்பு வசதிகள் வலுப்படுத்தப்படவில்லை. வேளாண் விரிவாக்கப் பணி அமைப்பும் வலுவிழந்துள்ளது. அதேபோல், தேசிய வேளாண் ஆராய்ச்சி அமைப்பு அரசு முதலீடுகளைப் பெற இயலாமல் பன்னாட்டு வேளாண் பெரும் கம்பெனிகளை நாடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. உரம், பூச்சி மருந்து, விதை, வேளாண் கருவிகள், உற்பத்தி நடைமுறைகள் இவை அனைத்திலும் பன்னாட்டு வேளாண் பெரும் கம்பெனிகளின் ஆதிக்கம் வலுப் பெற்றுள்ளது. தாராளமயக் கொள்கைகள் விதை, உரம் போன்ற இடுபொருட்கள் தரம் குறித்தும் விலை குறித்தும் இருந்த ஒழுங்கு முறைகளையும் கட்டுப்பாடுகளையும்  நீக்கி உள்ளதும் விவசாயிகளுக்குப் பெரும் கஷ்டங் களை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய-மாநில அரசுகளின் ஊரக வளர்ச்சிக் கான ஒதுக்கீடுகள் வெட்டப்பட்டது கிராமப்புற கிராக்கியையும் பாதித்துள்ளது. கிராமப் புறங்களில் மக்களின் வாங்கும் சக்தி வளராமல் தடுக்கப்பட்டுள்ளது. இதில் அண்மைக் காலங் களில் ஊரக வேலை உறுதி திட்டம் போன்றவை முறிப்பு ஏற்படுத்தி உள்ளதாக அரசு விளம்பரம் செய்து வருவது மிகவும் மிகையான மதிப்பீடு.

பெரும்பகுதி விவசாயிகள் சொந்த சாகுபடியால் மட்டுமே தங்களது உணவு தானியத் தேவையை சந்தித்துக் கொள்ளும் நிலையில் இல்லை. இந்த பின்புலத்தில், தாராளமயக் கொள்கைகளின் பகுதியாக 1997-ல் லக்குசார் பொது வினியோக அமைப்பு புகுத்தப்பட்டு, 2001-ல் தானிய வழங்கு விலைகள் கணிசமாக உயர்த்தப்பட்டதும் ஊரக பொருளாதாரத்தை மேலும் நெருக்கடியில் சிக்க வைத்துள்ளது.

மேற்கூறப்பட்டுள்ள அரசின் கொள்கை விளைவுகள் கடந்த பதினைந்து ஆண்டுகளில் 2,50,000-க்கும் அதிகமான விவசாயிகளை தற்கொலைக்குத் தள்ளியுள்ளன. ஒட்டுமொத்த வேளாண் உற்பத்தி வளர்ச்சி விகிதம் 1984-85 முதல் 1994-95 வரையிலான காலத்தில் ஆண்டுக்கு 4.1 சதவிகிதம் என்ற வேகத்தில் வளர்ந்து வந்தது. ஆனால் 1994-95 முதல் 2004-05 வரையிலான காலத்தில் ஆண்டுக்கு 0.6 சதவிகிதம்  என்று அதல பாதாளத்திற்கு சென்றது. பருத்தி நீங்கலாக, இதர அனைத்து முக்கிய பயிர்களின் உற்பத்தி வளர்ச்சியும் மகசூல் வளர்ச்சியும் 1980-1991 காலத்தில் இருந்ததை விட 1991-க்குப் பின்பான தாராளமய சீர்திருத்த காலத்தில் பெரிதும் குறைந்துள்ளன. இதை கீழ்க் காணும் அட்டவணைகளில் காணலாம்:

அட்டவணை 1 :

முக்கிய பயிர் வகைகளின் ஆண்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம், 1967-81, 1981-91  1991-2010, சதவிகிதத்தில்:

பயிர்வகை 1967-81 1981-91 1991-2010
தானியங்கள் 2.56 3.32 1.45

பருப்பு வகைகள்

-0.11 1.7 0.33
மொத்த தானியங்கள் 2.29 3.2 1.37
எண்ணெய்  வித்துக்கள் 1.45 6.41 1.96
பருத்தி 2.26 2.06 4.37
கரும்பு 2.53 4.02 1.44

அட்டவணை 2:

முக்கிய பயிர்வகைகளின் மகசூல், ஆண்டு வளர்ச்சி விகிதம், 1967-81, 1981-91  1991-2010, சதவிகிதத்தில்:

பயிர்வகை 1967-81 1981-91 1991-2010
தானியங்கள் 2.11 3.64 1.61
பருப்பு வகைகள் -0.59 1.94 0.42
மொத்த தானியங்கள் 1.83 3.51 1.51
எண்ணெய் வித்துக்கள் 0.68 3.10 1.47
பருத்தி     2.26      2.32 3.06
கரும்பு 1.30 2.01 1.63

1990-களின் பிற்பகுதியில் தொடங்கி தாராளமய கொள்கைகளின் தாக்குதலின் எதிர் விளைவுகள் வெளிவரத் துவங்குகின்றன. 1996-க்குப் பின் விவசாயிகளின் தற்கொலைகள் வேக மாக அதிகரிக்கின்றன. அதேபோல் வேளாண் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதை மிகத் தெளிவாக அட்டவணை 3-ல் தரப் பட்டுள்ள தானிய உற்பத்தி விவரங்களில் காண லாம்.

அட்டவணை 3:

மொத்த உணவு தானியங்கள், பரப்பளவு, உற்பத்தி, மகசூல், 1997-98  2006-07 :  

ஆண்டு

பரப்பளவு லட்சம்

ஹெக்டேர்களில்

உற்பத்தி

பத்து லட்சம்

டன்களில்

மகசூல் ஒரு

ஹெக்டே க்கு

கிலோ கிராம்

1998-99 125.17 203.60 1627
1999-00 123.11 209.80 1704
2000-01 121.05 196.81 1626
2001-02   122.78 212.85  1734
2002-03 113.86 174.77 1535
2003-04 123.45 213.19 1727
2004-05 120.08 198.36 1652

2005-06

121.60 208.60 1715
2006-07 124.07 211.78 1707

 1998-ல் இருந்து 2007 வரை தானிய பரப்பளவும் உற்பத்தியும் மகசூலும் கிட்டத்தட்ட தேக்க மாகவே உள்ள நிலையைக் காணலாம். இதே போல் இக்காலகட்டத்தில் இடுபொருட்கள் பயன்பாடும் தேக்கமாகவே இருந்தது. எடுத்துக் காட்டாக, 1991-97 காலத்தில் மொத்த பாசனப் பரப்பளவு ஆண்டுக்கு 2.6 சதவிகிதம் என்ற அளவிலும் விவசாயத்தில் மின் நுகர்வு 9.4 சதவிகிதம் என்ற அளவிலும் இருந்தது. ஆனால், 1997 முதல் 2006 வரையிலான காலத்தில் பாசனப் பரப்பளவு அதிகரிக்கவே இல்லை. வேளாண் துறை மின் நுகர்வு ஆண்டுக்கு 0.5 சதவிகிதம் என்ற அளவில் குறைந்தது. 2005-க்குப் பின் சிறிதளவு மீட்சி உற்பத்தியிலும் மகசூலிலும் ஏற்பட்டுள்ளது. ஆனால் இது உறுதியாகவோ நிலைத்ததன்மை கொண்டதாகவோ இல்லை.

வேளாண் நெருக்கடியில் ஏற்ற இறக்கம்:

கடந்த இருபதுக்கும் மேலான ஆண்டுகளில் தாராளமய கொள்கைகளின் விளைவாக வேளாண் துறையும் விவசாயிகளும் ஊரக பொருளாதாரமும் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளதை நாம் மேலே கண்டோம். அதே சமயம் இந்த நெருக்கடி சில காலங்களில் மிகக் கடுமை யாகவும் சில காலங்களில் மீட்சி தன்மை கொண்டதாகவும் உள்ளது என்பதும் உண்மை. குறிப்பாக, 1991 முதல் 1997 வரை தாராளமய கொள்கைகளின் தாக்கம் சற்று குறைவாகவே இருந்தது. இதற்கு ஒரு முக்கிய காரணம் உலக வர்த்தக அமைப்பின் விதிகளின் படி வேளாண் பொருட்களின் இறக்குமதி மீதான அளவு கட்டுப்பாடுகளை நீக்கும் காயம் பின்னர் 1999-ல் தான் செய்யப்படுகிறது. அதேபோல் நிதித் துறை சீர்திருத்தங்களும் படிப்படியாகத் தான் அமலாகிறது.

ஆனால், அதன் பின், 1997 முதல் 2004 வரையிலான காலத்தில் வேளாண் நெருக்கடி மிகவும் தீவிரம் அடைகிறது. 2004-05-க்குப் பிறகு சிறிதளவு மீட்சி ஏற்பட்டுள்ளது. காலம், பயிர், பகுதி, வர்க்கம் ஆகிய அம்சங்களின் அடிப்படையில் வேளான் நெருக்கடியின் தன்மையும் தாக்கமும் வேறுபடுகின்றன என் பதைப் பதிவு செய்ய வேண்டி உள்ளது. ஏற் கெனவே, பருத்தி பயிர் உற்பத்தியிலும் மகசூ லிலும் இக்காலத்தில் முன்னேற்றம் ஏற்பட் டுள்ளதை பார்த்தோம். தாராளமயக் கொள்கை களின் தாக்கம் எல்லா பயிர்களின் மீதும் ஒரே மாதிரி இல்லை. அதே போல், மிக முக்கியமாக, கிராமப்புற அல்லது வேளாண் பகுதி மக்கள் அனைவர் மீதும் ஒரே மாதியான தாக்கம் இல்லை. முதலாளித்துவ நிலப்பிரபுக்கள் மற்றும் பணக்கார விவசாயிகளில் ஒரு பகுதியினர் தாராளமய கொள்கைகளால் பயன் பெற்றுள் ளனர். அவர்களிடம் நிலம், இயந்திரங்கள் உள் ளிட்ட உற்பத்திசார் சொத்துக்கள் குவிந்துள்ளன.

1992 முதல் 2003 வரையிலான காலகட்டத் தில் கூட, சற்று மந்தமான வேகத்தில் என்றாலும், வேளாண் துறையில் இயந்திரங்களின் உடைமை யும் பயன்பாடும் அதிகரித்தே வந்துள்ளன. உதாரணமாக, டிராக்டர்களின் எண்ணிக்கை 1992-2003 காலத்தில் இரண்டு மடங்காகியது. 2004-05-க்குப் பிறகு 2011-12 வரையிலான காலத்தில் கிராமப்புறங்களில் வேளாண் பயன்பாட்டிற் கான இயந்திர விற்பனை வேகமாக அதிகரித் துள்ளது. இதை அட்டவணை 4-ல் காணலாம்:

அட்டவணை 4:

டிராக்டர்கள், பவர் டில்லர்கள் விற்பனை, 2004-05  2010-11 (டிசம்பர் வரை)

ஆண்டு விற்பனை

டிராக்டர்  விற்பனை (எண்களில்)

பவர் டில்லர் (எண்களில்)

2004-05 2,47,531 17,481
     2005-06 2,96,080 22,303
2006-07 3,52,835 24,791
 2007-08 3,46,501 26,135
  2008-09 3,42,836 35,294
2009-10 3,93,836 38,794
2010-11 5,45,109 55,000
2011-12 4,19,270 39,900

 வேளாண் நெருக்கடியும் வர்க்க முரண்பாடுகளும்:

நமது விவாதம் ஒரு விஷயத்தை தெளிவு படுத்துகிறது. ஒட்டு மொத்தமாக, இந்திய விவசாயிகளுக்கும் ஏகாதிபத்தியத்திற்கும் பெரும் முரண்பாடு என்றும் இது தான் கிராமப் பகுதிகளின் இன்றைய பிரதான முரண்பாடு என்றும் முடிவு செய்வது சரி அல்ல.

2000ஆம் ஆண்டில் சி.பி.ஐ (எம்) ஏற்றுக் கொண்டுள்ள திட்டம் கிராமப் பகுதியில், இந்திய வேளாண்மை துறையில் ஏகாதி பத்தியத்தின் ஊடுறுவலை, நேரடி தாக்கத்தை, பதிவு செய்கிறது. அதே சமயம், இந்திய புரட்சி யின் முக்கிய அம்சமாக ஏழை விவசாயிகளையும் விவசாயத் தொழிலாளிகளையும் அடிப்படை சக்தியாகக் கொண்டு, தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் இதர விவசாயிகளையும் திரட்டி நிலப்பிரபுக்களுக்கு எதிராக, நில ஏகபோகத்தை தகர்த்து விவசாயப் புரட்சியை நிறைவு செய்ய வேண்டியதன் அவசியத்தையும் அது வலி யுறுத்துகிறது. 1964ஆம் ஆண்டு திட்டத்தின் இந்தியப் புரட்சியின் கட்டம் பற்றிய நிர்ண யிப்பை உறுதியும் செய்கிறது. கடந்த இருப துக்கும் மேலான தாராளமயக் கொள்கைகள் இந்த நிர்ணயிப்பு சரி என்றே நமக்கு உணர்த்துகிறது.

கிராமப் புறங்களில் ஏராளமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது உண்மையே. குறிப்பாக, விதை, உரம் உள்ளிட்ட இடுபொருட்கள், வேளாண் தொழில் நுட்பம், நிலம் உள்ளிட்டு எல்லா விஷயங்களிலும் பன்னாட்டு மூல தனத்தின் பங்கு கூடி உள்ளதும் உண்மையே. ஆனால், இந்திய அரசும் வேளாண் துறையில் தொடர்ந்து ஒருமுக்கிய பங்கு வகிக்கிறது. 2004-க்குப் பின், குறிப்பாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி-1 ன் ஆட்சி காலத்தில், இடதுசாரி களின் நிர்ப்பந்தம் காரணமாக, வேளாண் துறையில் அரசு முதலீடுகள் அதிகரிக்கப்பட்டன.

கடந்த 7-8 ஆண்டுகளில் வேளாண் துறையில் உற்பத்தி சக்திகள் வளர்ந்துள்ளன, மகசூல்கள் உயர்ந்துள்ளன. 1991-2013 காலத்தில் உற்பத்தி மற்றும் மகசூல் வளர்ச்சி விகிதங்கள், 1980-91-ஐ ஒப்புநோக்குகையில் குறைந்துள்ளன என்பது சரி. ஆனால் 1991-2013 காலத்திலும், முன்பை விட குறைந்த வேகத்தில் என்றாலும், வளர்ச்சி ஏற் பட்டு உள்ளது என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும். அதேபோல், கடந்த இருபதுக்கும் மேலான ஆண்டுகளில் விவசாய இயந்திரங் களின் உற்பத்தியும் விற்பனையும் கணிசமாக அதிகரித்துள்ளது. ஆகவே, வேளாண் துறையில் உற்பத்தியில் கிடைக்கும் உபரி மூலம், உழைப் பாளி மக்களை சுரண்டுவதன் மூலம், மூலதன சேர்க்கை நடைபெற்று வருகிறது. மறுபுறம் விவசாயிகள் நிலம் மற்றும் உற்பத்தி சொத் துக்களை இழப்பதன் மூலமும் அரசுகள் இயற்கை வளங்களை அடிமாட்டு விலைக்கு பன்னாட்டு இந்நாட்டு ஏகபோகங்களுக்கு வாரி வழங்குவதன் மூலமும், ரியல் எஸ்டேட் கொள்ளை மூலமும், சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என்ற வகையிலும் மூலதனக் குவியல் ஆரம்ப மூலதன சேர்க்கை பணியில் தொடர்கிறது.

இவ்வகை நிலைமைகளையும் முரண்பாடு களையும் எதிர்கொள்வதற்கு, சமகால நெருக் கடியில் இருந்தும், நில ஏகபோகம் என்ற கட் டமைப்பு அடிப்படையிலான இந்திய விவ சாயத்தின் அடிப்படை நெருக்கடியில் இருந்தும் நாட்டையும் கிராமப்புற உழைக்கும் மக்களையும் விடுவிக்க, நிலப் பிரபுக்களுக்கும், சாதி-பழங்குடி-பாலின ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான கிராமப்புற இயக்கத்தை, விவசாயத் தொழி லாளர்கள் மற்றும் ஏழை விவசாயிகளை தனது அச்சாணியாகக் கொண்டு, தொழிலாளி வர்க் கத்தின் தலைமையில் செயல்படும் வலுவான ஜனநாயக இயக்கம் அவசியம்.

வெனிசுலாவில் நிலச் சீர்திருத்தம்!

வெனிசுலா நாட்டு கிராமப் புறங்களிலே பிரபுத்துவ பண்ணை முறையை எதிர்த்துப் போர்ப் பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது. லத்தீன் அமெரிக்க நாடுகளிலேயே அரசு ஆதரவுடன் நிலச் சீர்திருத்தங்கள் தற்போது அமலாகி வரும் நாடு வெனிசுலா மட்டுமேயாகும். பயன்படுத்தப்படாமல் இருக்கும் ஏராளமான தரிசாகக் கிடக்கும் தனியார் பண்ணை நிலங்களை உற்பத்தியில் ஈடுபடுத்தும் இயக்கம் நிலச் சீர்திருத்தத்தின் முக்கியமானதொரு அம்சமாகும். மேலும் ஒட்டுமொத்த கிராமப்புற வளர்ச்சிக்கு அடிப்படையான உணவில் தன்னிறைவு பெறவும், வேளாண்மை லாபகரமாக இருக்கவும் தேவையான வகையில் நிலம் மற்றும் நீர் பயன்பாட்டை மாற்றி அமைத்தல் என்பது வேளாண் சீரமைப்புக் கொள்கையில் உள்ளடங்கிய அம்சங்களாகும். வேளாண் துறையில் மாற்றங்களை நிர்வகிக்கவும், தொழில் நுட்ப மாற்றங்களைக் கொண்டு வருவதற்கும் தேவையான புதிய அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. நில உடமையில் கூட்டுறவு அமைப்பை உருவாக்குவது என்பது தற்போதைய கொள்கையின் அடிப்படை அம்சமாகும்.

இயற்கை வளங்களின் பன்முகத்தன்மையைப் பார்க்கும் போது, வெனிசுலாவைப் போன்று, வேறெந்த லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் காண இயலாது. மழைக்காடுகள், புல்வெளிகள், ஆற்றுப் பள்ளத்தாக்குகள், பளபளக்கும் கரீபியன் கடலோரப் பகுதிகள் அதற்கு எடுத்துக்காட்டாக நெல், சோளம் மற்ற  தானியங்களை பயிர் செய்வதற்கு ஏற்ற நிலம் ஏராளமாக உண்டு. உஷ்ணப் பிரதேசப் பயிர்களை இங்கே பயிரிட இயலும்.

நிலச்சீர்திருத்தம் கொண்டு வருவதற்கு முன்பு வரை வெனிசுலாவின் கிராமப்புற வளங்கள் பயன்படுத்தப்படாமலேயே இருந்தன. லத்தீன் அமெரிக்க நாடுகளிலேயே வெனிசுலாவில் மட்டும் தான் தேசிய மொத்த உற்பத்தியில் வேளாண் துறையின் பங்கு மிகவும் குறைவாகும் (6 சதம்). வேளாண் பொருட்களை இறக்குமதி செய்த நாடும் இதுவே.

வேளாண் உறவுகள் : பின்னணி

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்திலேயே பெட்ரோலிய உற்பத்தியில் வெனிசுலா கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டது. 1930 களிலிருந்து உலகின் மிகப் பெரிய பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடாக ஆன பின்னர், வேளாண்மையின் பங்கு வெகுவாகக் குறைந்தது. 1935 ம் ஆண்டு உழைக்கும் மக்களில் 60 சதம் பேர் வேளாண் துறையிலிருந்தனர். மொத்த உற்பத்தியில் வேளாண் துறையின் பங்கு 20 சதமாக இருந்தது. ஆனால், 1960 ல், கிராமப்புற மக்கள் தொகை 35 சதமாகக் குறைந்தது. 2000 ல் இது 12 சதமாகக் குறைந்து விட்டது.

பெட்ரோலியம் வெனிசுலா பொருளாதாரத்தில் பிரதான பங்கு வகிக்க ஆரம்பித்ததால், வேளாண் துறை மதிப்பை இழந்தது. இதே கால கட்டத்தில் நிலக்குவியலும் அதிகரித்தது. 1937 ல் மொத்த நில உடமையாளர்களில் 4.8 சதம் பேர் ஆயிரம் ஏக்கருக்கு மேல் வைத்திருந்தனர். மொத்த வேளாண் நிலத்தில் இது 88.8 சதம் ஆகும். 57.7 சதம் விவசாயிகளிடம் 10 ஹெக்டேர் அல்லது அதற்கும் குறைவான வேளாண் நிலம் மட்டுமே இருந்தது. மொத்த வேளாண் நிலங்களில் இது 0.7 சதமாகும். 1998, நிலங்கள் முழுவதும் ஒரு சிலரின் கைகளில் குவிந்ததுடன், வெனிசுலா பொருளாதாரத்தில் வேளாண் துறையின் பங்கும் வெகுவாகச் சரிந்தது. 1998 ல் எடுக்கப்பட்ட வேளாண் கணக்கெடுப்பின் படி, மொத்த மக்கட் தொகையில், ஒரு சதத்திற்கும் குறைவானவர்களிடம் 60 சதம் வேளாண் நிலங்கள் இருந்தன. 5 சதம் நில உடமையாளர்களிடம், கிராமப்புற மொத்த நிலப்பரப்பில் 75 சதம் இருந்தது. ஆனால், 75 சதம் சிறு நில உடமையாளர்களிடம் 5 சதம் வேளாண் நிலம் மட்டுமே இருந்தது.

பல இடங்களில் சட்ட விரோதமான முறையில் நிலங்களை அபகரித்தனர். வெனிசுலா நிகழ்வுகள் பற்றி எழுதும் பத்திரிக்கை யாளர் கிரிகெரி வில்பெர்ட், இது பற்றிக் குறிப்பிடுகையில், ஏராளமான நிலத்தை அபகரித்து, தனது சொந்த சொத்தாக மாற்றிய மோசமான சர்வாதிகாரி யுவான் வின்சென்ட் கோமஸ் (1908 – 1935) என்பவன் எனக் குறிப்பிடுகிறார். ஆட்சியிலிருந்தவர்களுக்கு நெருக்கமானவர்கள் மற்றும் பணக்காரர்கள் நிலங்களை அபகரித்தனர். வெனிசுலாவின் முன்னாள் அதிபர் கார்லோஸ் அண்ட்ரோ பெரெஸ் ஊழல் குற்றச்சாட்டுகளின் விளைவாக, பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்டவர். நாடு முழுவதிலும், பல நபர்கள் மூலமாக 60000 ஹெக்டேர்கள் நிலத்தை இவர் தன் வசம் வைத்துள்ளார். இப்படிப்பட்ட நில உடமையாளர்கள் உற்பத்தியை அதிகரிப்பதற்காகவோ வேளாண் சொத்துக்களைப் பெருக்குவதற் காகவோ, நிலங்களை அபகரிக்கவில்லை. மாறாக, சமூகத்தில் தங்கள் அந்தஸ்து, அதிகாரத்தை உயர்த்திக் கொள்ளவே நில அபகரிப்பைச் செய்துள்ளனர்.

வெனிசுலா நாட்டிலுள்ள மிகப் பெரிய நில உடமையாளர்கள் அந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்லர். கோறே மாநிலத்தில், பிரிட்டனைச் சேர்ந்த வெஸ்டி குரூப்புக்குச் சொந்தமான அக்ரேபுளோரா நடத்தும் எல்சார்கோட் என்ற பெரும் பண்ணை இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். 18, 803 ஹெக்டேர் நிலப்பரப்புள்ள சான் பாப்லோ பேனோ என்ற பெரிய பண்ணை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட பெரிய பண்ணைகளை தன் வசம் வைத்துள்ள வெஸ்டி பிரபுவின் கம்பெனிக்கு பிரேசில், அர்ஜென் டினாவிலும் வேளாண் நிலம், கால் நடைகள் உள்ளன. முன்பு யாராகுய் மாநிலத்தில் ஆப்பிரிக்க – அமெரிக்க குழுக்களுக்குச் சொந்தமாக இருந்த 1,154 ஹெக்டேர் நிலத்திற்கு ஸ்பெயின் நாட்டிலிருந்து வந்தவர்கள் உரிமை கொண்டாடினர் என்பதும் ஒரு எடுத்துக்காட்டாகும். 1959 ல் சர்வாதிகாரி புல்ஜென்சியோ படிஸ்டாவின் ஆட்சியை தூக்கி எறிந்து  புரட்சி நடைபெற்ற போது, கியூபாவிலிருந்து வெளியேறிய படிஸ்டானியோக்கள் என்று அழைக்கப்படும் பணக்காரர்கள் மற்றொரு எடுத்துக்காட்டாகும்.

கோஜேடெஸ் மாநிலத் தலைநகரான சான்கார்லோசிலிருந்து 10 நிமிடத்தில் காரில் பயணித்து சென்று சேரக்கூடிய கிராமப்புற பகுதிகளைப் பற்றி லி மான்டே டிப்ளோமேடிக் என்ற பத்திரிக்கையின் எழுத்தாளரான மாரிஸ் லெமோய்ன் 2003 ல் கீழ்கண்டவாறு விவரிக்கிறார். நிலம் பயன்பாடு குறைவாக உள்ளதையும், பல ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் அபகரிக்கப்பட்டு, எந்த சட்டப்பூர்வமான முறையிலும் பெறப்படாமல் இருப்பதையும் (லத்திபண்டியா) குறிப்பிடுகிறார்.

பௌல்டன் குடும்பம் நாட்டிலேயே பணக்காரக் குடும்பம் ஆகும். இவர்களுக்கு சொந்தமாக 20000 ஹெக்டேர் நிலப்பரப்பில், அடுக்கடுக்காக முள்வேலிகள் போடப்பட்டு ஹெடோஸ் எனப்படும் மாட்டுப் பண்ணைகள் உள்ளது. ப்ளோரா கம்பெனியா அனோனிமாவுக்கு சொந்தமாக ஹேடா எல் சார்கோட் என்ற 14000 ஹெக்டேர் பண்ணை உள்ளது. இவ்வளவு பரந்த நிலப்பரப்பில் அங்கொன்றும், இங்கொன்றுமாக மேய்ந்து கொண்டிருக்கும். அடுத்தபடியாக எல் பவோ முனிசிபாலிடி பகுதியில் 1,20,000 ஹெக்டேர் நிலப்பரப்புடைய எஸ்டேட், பிராஞ்சர் குடும்பத்திற்கு சொந்தமானதாகும். இந்த எஸ்டேட்டுகளைத் தாண்டி, இந்தப்புறம் 80,000 ஹெக்டேர், அந்தப்புறம் 30,000 ஹெக்டேர் எனப் பரந்து விரிந்த நிலப்பரப்பில் மூன்று நான்கு ஹெக்டேர் நிலம் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது.

இந்த நிலங்கள் பெரும்பாலும் நேரடியாக அபகரிக்கப் பட்டவை. எனவே, நிலச் சீர்திருத்தங்களை இன்று அமலாக்குவோர் நிறையப் பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டியுள்ளது. தங்களுடைய நிலம் என பெரிய நில உடமையாளர்கள் கூறினாலும், சட்டப் பூர்வமான ஆதாரங்கள் இல்லை. சட்டப்பூர்வமான முறையில் நிலத்தைப் பெறாமலே நிலத்தை அபகரித்தே பண்ணையாட்களைக் கொண்டு வேலை வாங்கும் பெரிய, பெரிய பண்ணைகள் உருவாயின. நிலக்குவியலாக ஒரு சிலரிடம் இருந்தபோதிலும், நில உறவுகள் அப்படியே நிலைத்து நிற்கவில்லை. வில்பெர்ட் 3 முக்கிய அம்சங்களைக் குறிப்பிடுகிறார்.

 1. நிலத்திற்கான சந்தை, குறிப்பாக பெரும் நில உடமையாளர் களிடயே வளர்ந்தது.
 2. ஏழைகளையும், சிறு குத்தகையாளர்களையும் நிலங்களிலிருந்து வெளியேற்றப்பட்டதை யொட்டி, வேளாண்மை உற்பத்தி குறைந்தது. மக்கள் நகர்ப்புறங்களை நோக்கிச் செல்ல ஆரம்பித்தனர்.
 3. நில உடமை, நிலத்தின் மீதான ஆதிக்கம் தனி நபரிடமிருந்து மட்டுமின்றி, கம்பெனிகளிடமும் நிலம் சொந்தமாகக் குவிந்தது.

19 ம் நூற்றாண்டைச் சேர்ந்த விடுதலை வீரர் சைமன் பொலிவார் பெயரில் பொலிவாரியன் குடியரசு என்ற பெயரிலேயே 1999க்குப் பின்னர் வெனிசுலா அழைக்கப்படுகிறது. பெருமுதலாளிகள், சர்வதேச மூலதனக் கூட்டாளிகள், வங்கி உரிமையாளர்கள், பெரிய நில உடமையாளர்களிடமிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றுவதே அரசின் கடமை. வெனிசுலாவின் ஆளும் வட்டாரத்தில் பெரு நில உடமை யாளர்களும் இருந்தனர். நில உடமையாளர்கள் சிலர் சந்தைக்கென உற்பத்தியில் ஈடுபட்டிருந்தாலும், நில உடமை வர்க்கம் என்ற வகையில் ஆளும் வட்டாரத்தின் மிகமோசமாகவே சுரண்டும்  ஒட்டுண்ணிகளாகவே  இருந்தனர். 1960 களில் முதல் முறையாக நிலச் சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டபோது, பெரும் நில உடமை யாளர்கள் அதை வெற்றிகரமாக நிறைவேறாமல் தடுத்துவிட்டனர். 1998 ம் ஆண்டிற்குள், நிலச் சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக ஏழைகளுக்கு வழங்கப்பட்ட நிலத்தில் 90 சதம் மீண்டும் பெரும் நில உடமையாளர்களிடமே வந்துவிட்டது. பெரும் நில உடமை, கிராமப்புற வளர்ச்சிக்கும், வேளாண் துறையில் தொழில் நுட்பம் புகுத்துவதற்கும் பெரும் தடையாக இருந்தது. பெரும் நில உடமை முறை உணவிற்காகவும், விவசாயப் பொருட்களுக்காகவும்  இறக்குமதியைச் சார்ந்திருக்கும் நிலையை ஏற்படுத்தியது. அரசாங்க அமைப்பிற்குள் நில உடமையாளர்கள் கொண்டிருந்த ஆதிக்கம் நிலச் சீர்திருத்தத்தால் நிலம் பறிபோவதை ஆத்திரத்தோடு எதிர்த்தனர்.

சட்டங்களும், கொள்கைகளும்

1998 க்குப் பின் நிலச் சீர்திருத்தம் மற்றும் புதிய வேளாண் முறைக்காக தேவைப்படும் சட்டப்பூர்வமான நிறுவன கட்டமைப்பை வெனிசுலா அரசு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டது. அரசியல் சாசனத்திலேயே வேளாண் உறவுகள் மற்றும் கிராமப்புற சமூகப் பொருளாதாரப் பிரச்சனைகளைக் கொண்ட புதிய கொள்கை பிரகடனத்தை வெளியிட்டது. 1999 ல் வெனிசுலாவின் பொலிவாரிய குடியரசு இயற்றிய அரசியல் சாசனத்திலேயே எதிர்கால வெனிசுலா சமுதாயம் பற்றிய பார்வையை நியாயப்படுத்தும் வண்ணம் வழி காட்டுதல்கள் தரப்பட்டுள்ளன.

அரசியல் சாசனத்தின் ஆறாம் பிரிவு, சமூகப் – பொருளாதார முறை பற்றியும், முதல் அத்தியாயம் சமூகப் பொருளாதார அமைப்பும், பொருளாதாரத்தில் அரசின் செயல்பாடு பற்றியும் விளக்குகிறது. வருமான வளர்ச்சியை ஊக்குவிப்பது, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது, மக்கள் பங்கேற்கும் வண்ணம் உருவாக்கப்பட்ட திட்டம், தேசிய சுயாதிபத்தியம் எனப் பல விஷயங்கள் பற்றி விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. தனியார் ஊக்குவிப்புடன், அரசும் இணைந்து, சுமூகமான பொருளாதார வளர்ச்சிக்காக செயல்படுவது, வேலை வாய்ப்புகளை அதிகரிப்பது, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது மற்றும் சட்ட அமலாக்கத்தை உத்தரவாதப்படுத்துவது, சமத்துவ கோட்பாட்டின் அடிப்படையில் வளர்ச்சி, ஜனநாயக முறையில் கலந்தாலோசித்து, திட்டங்களை அமல்படுத்துவது என அரசியல் சாசனம் பலவற்றை வலியுறுத்துகிறது.

அரசியல் சாசனத்தின் 304, 307 ஆகிய பிரிவுகள் நிலம் தொடர்பானவை.

 1. ஒட்டு மொத்த கிராமப்புற வளர்ச்சியை அடைய அரசு லாபகரமான வேளாண்மையை ஊக்குவிப்பதை அடிப்படை யுக்தி என்கிறது.
 2. அரசு உணவுப் பாதுகாப்பை உத்தரவாதம் செய்யும். அனைவரும் உணவைப் பெறுகிற முறையில் நாடே தன்நிறைவைப் பெற உணவு உற்பத்தி, கால் நடை வளர்ப்பு, மீன் பிடிப்பு, மீன் வளர்ப்பு உட்பட கவனிக்கப்படும்.
 3. லாபகரமான தன்னிறைவு பெற்ற வேளாண்மை என்ற நோக்கத்தை அடைவதற்கு ஏதுவாக, நிதி மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் அரசே மேற்கொள்ள அரசியல் நிர்ணயச் சட்டம் வழிசெய்கிறது. தொழில் நுட்ப பரிமாற்றம், பயிர் செய்யும் உரிமை, அடிப்படை கட்டுமான வசதி, பயிற்சி ஆகியவை ஊக்குவிக்கப்படுமென அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 4. வேலை வாய்ப்புகள் பெருக்குவதற்கு ஏற்ற சூழலை அரசு உருவாக்கும்.
 5. தற்போது வேளாண் நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு அதனால் ஏற்படும் நஷ்டத்தை சமாளிக்க ஈட்டுத் தொகை வழங்கப்படும். அரசியல் சாசனத்தில் பெரும் தொழில் ரீதியாக அல்லாத சுய வேலையாக ஈடுபடும் மீனவர்களைப் பாதுகாக்க பிரத்யேக நடவடிக்கைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
 6. கிராமப்புறங்களிலுள்ள பெரிய பண்ணைகள், சமூக நலன்களுக்கு புறம்பாகவே உள்ளன. அவற்றை உற்பத்தித் திறன் மிக்க சிறு அமைப்பாக மாற்றப்படும் விவசாயிகளும், பிறரும்  சொந்தமாக நிலம் வைத்திருக்கலாம். தனியார் பண்ணைகள்  செயல்படுகிற நேரத்திலேயே கூட்டுறவு பண்ணை முறையில் செயல்பட ஊக்குவிக்கப்படும்.
 7. வெனிசுலாவின் நீர்வளங்கள் தேசியமயமாக்கப்படும் என்பது மிகவும் முக்கியமான அம்சமாகும். 304 ம் பிரிவின் படி, அனைத்து நீர் வளங்களும் அரசின் சொத்தாகும். இது வாழ்க்கைக்கும், வளர்ச்சிக்கும் இன்றியமையாததாகும். கடைசியாக, அரசு நிலத்தை சரியான முறையில் பயன்படுத்த ஊக்குவிக்கப்படும்.

2001, நவம்பரில் நிலம் மற்றும் வேளாண் வளர்ச்சிக்கான சட்டம் இயற்றப்பட்டது. இது வேளாண் சீர்திருத்தத்திற்கு அடிப்படை யானது. 2002 டிசம்பரில் இச்சட்டம் அமலுக்கு வந்தது. நில உச்சரம்பு, தற்போது பயன்பாட்டில் இல்லாத நிலத்தின் மீது வரி, ஏழைகளுக்கு நில விநியோகம் ஆகியவை இச்சட்டத்தின் முக்கிய அம்சங்களாகும். இச்சட்டம் அமலுக்கு வருமுன்பே, சுப்ரீம் கோர்ட்டிலுள்ள பிற்போக்கு சக்திகள் சட்டத்தின் இரண்டு பிரிவுகளை நீக்கிவிட்டன. 89, 90 ஆகிய பிரிவுகள் பெரிய பண்ணைகளில் விவசாயிகள் சென்று ஆக்கிரமித்துக் கொள்வது சட்டத்திற்கு புறம்பானது. நிலங்களை அபகரித்த பெரிய நில உடமையாளர்கள் ஈட்டுத்தொகை தரப்பட மாட்டாது என இந்தப் பிரிவுகள் குறிப்பிடுகின்றன. இரண்டு பிரிவுகளை பிற்போக்கு சக்திகள் நீக்கின. ஆனால் 2005 ல் அரசு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு செல்லாது என்று கூறிய பிரிவுகளை மாற்றி சட்டத் திருத்தம் கொண்டு வந்தது. இதன் மூலம் நிலத்திற்கான பட்டா விவசாயிகளுக்கு வழங்கப்படாத போதும், நிலத்தைப் பயன்படுத்தி, அதிலிருந்து கிட்டும் வருமானத்தை விவசாயிகள் பெற முடியும். சட்ட சிக்கல்கள் முடிந்து நிலம் உரிமை பெறும் வரை, நிலத்தைப் பயன்படுத்தும் வகையில் சர்டிபிகேட் தரப்படும்.

நில உச்ச வரம்பிலும் நிறைய மாற்றங்கள் வந்துள்ளன. முதலில், தரம் குறைவான நிலங்களுக்கு 5000 ஹெக்டேர்கள், தரம் உயர்ந்த நிலங்களுக்கு 100 ஹெக்டேர்கள் என உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் நிலங்களை தர அடிப்படையில் வகைப்படுத்தி, உயர்தர நிலங்களுக்கு 50 ஹெக்டேர்கள் என உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டது.

புதிய அமைப்புகள்

வேளாண் சீர்திருத்தங்களை அமல்படுத்துவதற்குத் புதிய நிர்வாக அமைப்புகள் தேவைப்பட்டது. புதிய அமைப்புகளோடு ஏற்கனவே செயல்படும் அமைப்புகளும், நிலச் சீர்திருத்தங்களை அமலாக்க ஏற்றவாறு மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

வேளாண் அமைச்சரகத்தின் கீழ், மூன்று அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவைதான் நிலச் சீர்திருத்தம் மற்றும் வேளாண் மாற்றத்திற்கு மையங்களாகக் கருதப்படுகின்றன. தேசிய நில கழகம் (INTI) நிலச்சீர்திருத்தங்களை அமலாக்கும் பிரதான நிறுவனமாகும். இதற்குள் ஒரு சட்ட மையமும் உள்ளது. நிலங்களை அடையாளம் காண்பது, நிர்வகித்து, ஒழுங்குபடுத்துவது மற்றும் விநியோகம் செய்வது, இந்த நிறுவனத்தின் பிரதான கடமையாகும். கிராமப்புற வளர்ச்சிக்கான தேசிய கழகம் (NIDER) என்ற அமைப்பு வேளாண்துறை கட்டமைப்பு, சாகுபடிக்கான திட்டங்கள் ஆகியவற்றைக் கவனித்துக் கொள்ளும். வெனிசுலா வேளாண்மைக் கார்பரேசன் என்ற அமைப்பு, வேளாண் பரிவர்த்தனை, சந்தை, விற்பனை, உற்பத்தி முதல் விற்பனை வரை அனைத்து கட்டப் பணிகளையும் கவனித்துக் கொள்ளும்.

வேளாண் மற்றும் நிலம் அமைச்சரகம் தவிர, மக்களின் பொருளாதாரத்திற்கான அமைச்சரகம் (MINE) மற்றும் உணவு அமைச்சரகம், அறிவியல் தொழில் நுட்ப அமைச்சரகம் ஆகியவை ஒட்டுமொத்த வேளாண் சீர்திருத்தங்களையும், கிராமப்புற வளர்ச்சியையும் மேம்படுத்த பல விதங்களில் ஈடுபடுத்தப்படுகின்றன.

சட்ட அமலாக்கமும், முன்னேற்றமும்

நிலச்சட்டம் அமலுக்கு வந்த பின்னர், மெதுவாகத்தான் முன்னேற்றம் காணப்பட்டது. கிரிகிரி வில்பெர்ட் கூறுவதைப் போல, சட்டங்களை அமலாக்க புதிய கட்டமைப்பு தேவைப் படுவதால், ஆரம்ப கால முன்னேற்றம் மெதுவாகவே இருந்தது. 2003 – 2004 ல் நிலச் சீர்திருத்தம் வேகமாக அமலாகியது. 2004 லிருந்து அரசுக்குச் சொந்தமான நிலங்களே விநியோகம் செய்யப்பட்டன. 2005 ம் ஆண்டு தான் தனியார் நிலங்கள் நிலச் சீர்திருத்ததின் கீழ் வந்தன.

வெனிசுலாவில் உள்ள 30 மில்லியன் ஹெக்டேர் சாகுபடி நிலங்களில் 19 மில்லியன் ஹெக்டேர் அரசுக்கு சொந்தமானவை. அரசின் கட்டுப்பாட்டிலிருந்தவை. பிரபுத்துவப் பண்ணை உள்ளிட்ட தனியார் நிலம் 11 மில்லியன் ஹெக்டேர் ஆகும். ரிச்சர்டு விவாசின் கணிப்பின் படி, 10 மில்லியன் ஹெக்டேர் நிலம் சர்ச்சைக்குள்ளாகிய நிலமாகும். 4 மில்லியன் ஹெக்டேர் நிலத்திற்கு உரிமைப் பத்திரம் வழங்கப்பட்டது. இந்த நில விநியோகத்தால் பயனடைந்த குடும்பங்களின் எண்ணிக்கை 126000 என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

தேசிய நில கழகத்தின் தலைவர் யுவான் கார்லோஸ் லோயோ, 62 எஸ்டேட்டுக்களை கையகப்படுத்தியுள்ளதாகவும், இவற்றின் மொத்தப் பரப்பளவு 5,34,000 ஹெக்டேர்களாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆண்டு நிறைய நிலங்களை அரசு கையகப்படுத்தியுள்ளது. வெஸ்டி குரூப்பின் பிரிட்டிஷ் நிறுவனமான அக்ரோடபளோராவும், ஸ்பெயின் நாட்டினர் ஆதிக்கத்திலிருந்த எஸ்டேட்டு ஆகியவை கையகப்படுத்ப்பட்டுள்ளன. 2006 மார்ச்சில் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, வெனிசுலா அரசு வெஸ்ட் குரூப்புக்கு அதன் 13000 ஹெக்டேர் எல்சார்கோட் பண்ணைக்கு ஈட்டுத்தொகையான 4.2 மில்லியன் அமெரிக்க டாலர்களை கொடுத்துவிடும். அபுரே மாநிலத்தில் உள்ள 18,803 ஹெக்டேரில் உள்ள சான் பாப்லோ பேனோ பண்ணையை எந்த தொகையும் அளிக்காமல் அரசு எடுத்துக் கொள்ளும். சான் பாப்லோ பேனோவிலுள்ள பண்ணையிலுள்ள கால்நடைகளுக்கு 2.5 மில்லியன் டாலர்கள் வழங்கப்படும். அந்தப் பண்ணையில் வேளாண் பயிற்சிப்பள்ளி துவக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெஸ்டியின் மாமிசம் உற்பத்தி செய்யும் நிறுவனமான அக்ரோ ப்ளோரா நிலத்தின் மதிப்பு 11.6 மில்லியன் டாலர்களாகும் எனக் கூறியுள்ளது. தேசிய நிலக்கழக அதிகாரி ரிச்சர்டு விவாஸ், வெஸ்டியின் சொத்துக்களை அரசு பரிசோதனை செய்து வருகிறது என்கிறார். வெனிசுலா அதிபர் சாவேஸ், தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டியொன்றில், வெனிசுலா மக்களுக்கு நிலங்களை பெற்றுத் தருகிறம். தங்கள் நிலங்களுக்கு அவர்கள் உரிமையாளர்களாவதுடன், தங்கள் கௌரவத்தையும் மீட்டுள்ளனர் எனக் கூறியுள்ளனர்.

2006 மே மாதம் யாரகுய் பகுதியில் உள்ள 1154 ஹெக்டேர் செழிப்பான நிலம் ஸ்பெயின் நாட்டினரின் வசமிருந்தது. அவர்களுக்கு 3.16 மில்லியன் டாலர்களை கொடுத்து வெனிசுலா அரசு அவர்களிடமிருந்து நிலத்தை மீட்க ஒப்பந்தம் செய்துள்ளது.

2006 ஆகஸ்டு மாதம் பொலிவார் மாநிலத்திலுள்ள லா, வெர்ஜரீனா என்ற எஸ்டேட்டில், இரண்டு மாத இடைவெளிக்குப் பின் அதிபர் சாவேஸ் தனது ரேடியோ, தொலைகாட்சி நிகழ்ச்சியைத் தொடர்ந்தது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும். 1,87,000 ஹெக்டேர் பரப்பளவில், உள்ள லா வெர்ஜரீனா எஸ்டேட் வெனிசுலாவிலேயே மிகப் பெரிய எஸ்டேட் என சாவேஸ் குறிப்பிட் டுள்ளார். இந்த எஸ்டேட் தற்போது சோசலிச வளர்ச்சிக்கும், உற்பத்தி மையமாகவும் மாறிவிட்டது என சாவேஸ் கூறியுள்ளார்.

யாராகுயில் நிலச் சீர்திருத்தம் அமலாவது பற்றிய பதிவுகள்

யாராகுய் என்ற மாநிலம் வெனிசுலாவில் நிலத்திற்காக வலுவாக நடத்தப்பட்ட போராட்டங்களைக் கண்ட மாநிலம் ஆகும். 40 ஆண்டுகளுக்கும் மேலாகவே இங்கே விவசாய இயக்கம் வலுவானப் போராட்டங்களை நடத்தியுள்ளது. லோஸ் கேனிசோஸ் என்ற இடத்தில் முதலில் போராட்டம் வெடித்தது. பின்னர் மாநிலம் முழுவதும் பரவியது. போராட்டத்தின் ஆரம்ப காலத்தில் நிலம் கைப்பற்றப்பட்ட போதும், கடன் மற்றும் முதலீடு செய்ய நிதி வசதி போன்ற உதவி கிட்டவில்லை.

1940 களில் அபகரிக்கப்பட்ட நிலங்களைக் கொண்ட பண்ணை தற்போது 13 கூட்டுறவு அமைப்புகளாக ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்தப் பண்ணை 1086 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டது. இதில் 116 ஹெக்டேரில் சாகுபடி செய்யப் பட்டு வருகிறது. பெல்லா விஸ்தா என்ற கூட்டுறவு அமைப்பின் உறுப்பினரான விக்டர் ஓர்டிஸ் தனது அனுபவங்களைப் பற்றி விவரிக்கையில், நாங்கள் 090 என்ற எண் கொண்ட உள்ஆட்சி அரசாணையுடன் 5 ஜூலை, 2005 ல் இங்கே வந்தோம். நாங்களும் எங்களது பெற்றோர்களும் நில உடமையை முறைப்படுத்தும் கமிட்டியை சேர்ந்தவர்கள். இது தனியாருக்கு சொந்தமான நிலம் இல்லையென எங்களுக்குத் தெரியும். ஆனால், அப்போது இருந்த அரசு நாங்கள் நிலத்தை கையகப்படுத்த உதவவில்லை. அஸ்செட்டா என்ற கியூபா நாட்டு பாஸ்ட்டியனோஸ் குடும்பத்தின் கைவசம் இந்த நிலம் முதலில் இருந்தது. அவர்கள்  பின்னர் அல்போன்சா பூசி என்பவருக்கு விற்றனர். அவர்கள் மலைச்சிகரங்களில் உள்ள மரங்களை வெட்டுவதுண்டு. திருடுவதும் உண்டு.

1998 ல் சாவேஸ் இங்கே வந்தார். நான் அதிபராக நீங்கள் உதவுங்கள். நீங்கள் நிலத்தை மீண்டும் பெறுவதற்கு நான் உதவுகிறேன் என்று கூறினார் என்கிறார்.

நிலச் சட்டத்தின் 89, 90 வது பிரிவுகள் செல்லுபடியாகாது என்று ஆனவுடன், நிலத்திற்கான இயக்கம் உயிர் பெற்றது. உச்ச நீதிமன்றம் சட்டத்தை முடக்க முயன்றது என்று சேவியர் என்ற இளைஞன் கூறினான். தேசிய நிலக்கழகத்தின் அதிகாரி ரிச்சார்டு விவாஸ் கூறியதையே இவனும் கூறினான். முதலாளிகள் இன்னும் நீதியை விலை கொடுத்து வாங்க முடிகிறது.

நிலச்சட்டம் பல கட்டங்களாக அமல்படுத்தப்படுகிறது.

 1. முதலில் பெரிய பண்ணைகளில் சொத்துரிமை பற்றியும், உற்பத்தி பற்றியும் தெரிந்து கொண்டு, சாலைகள், மின் வசதி, நீர்பாசன வசதி போன்றவற்றை மதிப்பீடு செய்கின்றனர்.
 2. கூட்டுறவு அமைப்புகளில் பங்கேற்போருக்கு சமூக – பொருளாதார மற்றும் தொழில் நுட்பத்திறன் வளர்க்கும் வகையில் திட்டங்கள் தயாரித்து, செயல்படுத்தப்படுகின்றன.
 3. அரசு சார்பில் பயிற்சி பள்ளிகள் நடத்தி, அதில் பங்கேற்போருக்கு மாதம் 150 டாலர்கள் ஸ்காலர்ஷிப் அளிக்கப்படுகிறது. மிஷன் சமோரா கூட்டுறவு அமைப்புகளை ஏற்படுத்த ஊக்குவிக்கும் திட்டமாகும்.

யாராகுயில் 2004 ல் நிலத்திற்கான இயக்கம் உத்வேகம் அடைந்தது. 275 பேர் சேர்ந்து 13 கூட்டுறவு அமைப்புகளை உருவாக்கினர். இவர்களுக்கு வேளாண் பயிற்சி அளிக்கப்பட்டது. மிலாக்ரோ கோர்ட்ஸ் என்ற பெண் பயிற்சியாளர் வேளாண் கல்லூரியில் பட்டம் பெற்ற முதல் நபர். இங்கு பயிற்சி பெறும் நபருக்கு மாதம் 1,86,000 பொலிவரஸ் உதவித் தொகையாக அளிக்கப்படுகிறது.

நிலத்தை அவர்கள் எப்படி கையகப்படுத்தினர்?

2005 மார்ச் 30, எங்கள் பயிற்சி முடிந்து, எப்படி நிலத்தை ஆக்கிரமிப்பதென யோசித்தோம். ஜூலை 5 சுதந்திர தினம். சைமன் பொலிவார் நினைவு இடமான உராஷிஷேயில் காலை 8 மணிக்கு கூடி, அங்கிருந்து பண்ணையை நோக்கி, ஊர்வலமாகச் சென்று, கதவைத் தள்ளி, உள்ளே வந்தோம். போலீஸ் அங்கே இருந்தனர். அரசின் பாதுகாவலர்களும் இருந்தனர். அங்கிருந்த கமாண்டர்களில் ஒருவன் வேட்டைத் துப்பாக்கியை எடுத்தான். மக்களும் எதிர்க்கத் தயாரானார்கள். நாங்கள் 11 மணிக்கு பண்ணையைச் சென்றடைந் தோம். நாங்கள் 154 பேர். 3 குழுக்களாகப் பிரிந்தோம். ஒரு குழு பண்ணை கட்டடத்தில் ஆயுதங்கள் உள்ளனவா என்பதை பரிசோ திக்கும். இரண்டாவது குழு வேலையாட்களை கண்காணித்து, கட்டுப்படுத்தியது. ஒரு குழு கேட்டின் வெளியே காவலுக்கு இருந்தது.

காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை மாறி மாறி தாக்குதல் நடைபெற்றது. பதட்டம் நிலவியது. கமாண்டர் துப்பாக்கியை எடுத்து குறிவைத்ததும், எங்கள் குழுவில் உள்ள ஒருவர் தனது ஆயுதத்தை எடுத்து, நீ சுட்டால், உன் தலையை சீவி விடுவோம் என்றார்.

தாக்குதல் 8 மணிக்கு முடிவுக்கு வந்தது. 7 மணிக்கு பண்ணை வேலையாட்கள் அந்த இடத்தை விட்டு சென்று விட்டனர். 8 மணிக்கு நிலத்தை திருடியவன் தனியாக இருப்பதை உணர்ந்தான். பின்னர் கூடியிருந்த மக்களிடம், அரசிடம் நிலம் தொடர்பான ஆவணங்களை பெற்றுக் கொள்ளச் சொல்லுங்கள் என்று கூறிவிட்டு வெளியேறினான். மறுநாள் காலை,  பண்ணையை சரியாக்கும் பணியை ஆரம்பித்தோம். சமைக்கவில்லை. முனிசிபல் அதிகாரிகள் எங்களுக்கு உணவு கொண்டு வந்து கொடுத்தனர் என்று விவரித்தார்.

நிக்கோ மென்டஸ் என்ற பெண் இச்சம்பவத்தைப்  பற்றி கூறுகையில், முதலில் கொஞ்சம் பயமாக இருந்தது. ஆனால், அந்த நேரம் வந்த போது ஒரு வீரனைப் போல நடந்து கொண்டோம். நெய்டா என்ற மற்றொரு பெண், நாள் முழுவதும் நான் இந்தப் பண்ணையில் தானிருந்தேன். எனது 35 வயது மகளும் உடனிருந் தாள். கேட்டைத் தாண்டி உள்ளே செல்ல உத்தரவிடப்பட்டதும், வேலியைத் தாண்டி உள்ளே குதித்துவிட்டேன். அதற்கு பிறகு ஒரு அடி கூட திருப்பி வைக்கவில்லை என்கிறார்.

முதலில் தற்காலிகமாக கூடாரம் அமைத்து தங்கிய அவர்கள், பின்னர் குடிசைகள் கட்டிக் கொண்டனர். தற்போது, அனைவரும் பண்ணையிலேயே இருக்கும் வண்ணம் நிரந்தர குடியிருப்புகளைக் கட்ட இருக்கின்றனர். கூட்டுறவு அமைப்புகளுக்கு நிலம் சொந்தமாக் கப்படவில்லை. அங்கே தங்கி நிலத்தைப் பயன்படுத்த சர்டிபிகேட் டுகள் வழங்கப்பட்டுள்ளன. நிலத்தில் சாகுபடி செய்வதாக பொய் சொன்ன நில ஆக்கிரமிப்பாளர் அங்கு வளர்ந்திருந்த கரும்பை வெட்டவில்லை. பழுதடைந்த டிராக்டர் ஒன்றும் அங்கு இருந்தது. தற்போது அதை சரிசெய்து, நிலத்தை உழுவதற்கு பயன் படுத்துகின்றனர்.

2005 செப்டம்பர் மாதம் 116 ஹெக்டேரில் 60 ஹெக்டேர் பயிரிடப்பட்டுள்ளது. என்ன பயிரிடலாம் என்பதையொட்டி ஒரு பட்டி மன்றமே நடந்தது.

கருப்பு பீன்ஸ் 7 ஹெக்டேர்
வெள்ளைச் சோளம் 10 ஹெக்டேர்
கடலை 5 ஹெக்டேர்
தக்காளி 4 ஹெக்டேர்
பச்சை மணத்தக்காளி 3 ஹெக்டேர்
மஞ்சள் 9 ஹெக்டேர்
வெள்ளரி 5 ஹெக்டேர்
வெங்காயம் 1 ஹெக்டேர்
தர்பூசணி 3 ஹெக்டேர்
சேனைக் கிழங்கு 3 ஹெக்டேர்
யுக்கா 1 ஹெக்டேர்

இவை தவிர வாழை மற்றும் காய்கறிகள் பண்ணை ஓரப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ளது.

கூட்டுறவு அமைப்புக்கு சர்டிபிகேட் வழங்கப்பட்டு விட்டால் தனியாக முடிவெடுக்க முடியாது. பிரதிநிதிகள் கூட்டம் போட்டு எந்த பயிர் போடுவது, எப்படி செய்வதென கூடி முடிவெடுக்கின்றனர். தொழில் நுட்பம் அறிந்தவரும் கூட்டத்தில் கலந்து கொள்வார்.

கூட்டுறவு அமைப்புகளின் உறுப்பினர் எண்ணிக்கை எப்படிப்பட்ட திட்டத்தை செயல்படுத்தப் போகின்றனர் என்ற அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. ஒரே சான்றிதழைக் கொண்டு, புதிய கூட்டுறவு சங்கத்தை ஆரம்பிக்க முடியாது. புதிய உறுப்பினர் சேர விரும்பினால், அவரை மற்ற உறுப்பினர்கள் அங்கீகரிக்க வேண்டும். கூட்டுறவு சங்க விதி முறைகளை நிர்ணயிக்க ஸ்பெயின் நாட்டு கூட்டுறவு அமைப்புகளை பற்றி ஆராய்ந்து வருகிறார்கள்.

விவசாய இயக்க அமைப்பாளர்கள் புதிய அமைப்பில் கூட்டுறவு சங்கத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளனர். கூட்டுறவு உணர்வுடன், தொழில் நுட்ப திறமையும் வேண்டும். சீன அனுபவத்தைக் கூறினால் – (RED) சிவப்பாகவும், திறமையாகவும் இருக்க வேண்டும். ஐ.என்.டி.ஐ இயக்குநர் ரிச்சர்ட விவாஸ், நிலம் பொதுவுடமையாகும் இயக்கத்தைப் பற்றி கூறுகையில் மெக்சிகோ அனுபவத்தை சுட்டிக்காட்டியுள்ளார். இப்படி ஒரு அமைப்பு உருவாக்கியது நல்லது தான். ஆனால், மக்கள் ஆரம்பத்திலிருந்த உணர்வை இழந்து விட்டனர். நிலப்புரட்சி செய்ய வேண்டும். ஐ.என்.டி. ஐயின் சட்டப்பிரிவு இயக்குநர் கூட்டுறவு சங்கம் தொழில் நுட்ப நிர்வாகத்தை புரிந்து கொள்ளாவிடில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்கிறார். பயிர்கள் பற்றிய தொழில் நுட்ப அறிவு கூட்டுறவு அமைப்பு உறுப்பினர்களிடையே குறைவாக உள்ளது. பயிற்சி அளிக்க வேண்டியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கிராமப்புறத்திலுள்ள வர்க்க எதிரி

வேளாண் மாற்றத்தை எதிர்த்து முதலாளிகள், நிலச் சுவான்தார்கள், அவர்களின் ஆதரவாளர்கள், தேசிய, சர்வதேச ஊடகங்கள்  செயல்படுவது இயல்பானதே. லத்தீன் அமெரிக்க நாடுகளிலுள்ள கிராமப்புற உழைக்கும் மக்களின் ஆதரவு வெனிசுலா நிலச் சீர்திருத்த முயற்சிகளுக்கு கிடைத்துள்ளது.

நிலச் சீர்திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டதிலிருந்தே நில உரிமையாளர், கால் நடை உரிமையாளர் சங்கங்கள்  மற்றும் ஊழல் மிகுந்த வலதுசாரி தொழிற்சங்க அமைப்புகள் நிலச் சீர்திருத்தத்தை எதிர்த்தனர். சொத்துரிமை அடிப்படையான உரிமை என்றும் அது மீறப்பட்டதென்றும் புலம்பினார்கள். சட்ட விரோதமாக நிலங் களை அபகரித்துக் கொண்ட அவர்கள் நில விநியோகத்தை சட்ட விரோதமான செயல் என சிறிதும் கூச்சமின்றி விளக்கமளித்தனர்.

நிலச்சட்டம் நிறைவேற்றப்பட்டதுடன், முதலாளி சங்கம் சட்டப் பிரதியை பொது இடத்தில் கிழித்தெறிந்தது. இச்சம்பவம் அனைத்து தொலைகாட்சி சானல்களிலும் ஒளிபரப்பட்டது. நிலச் சீர்திருத்தத்தை அதிகார வர்க்கம் எப்படி எதிர் கொள்கிறதென்பதை இது சுட்டிக்காட்டுகிறது. 2003 ம் ஆண்டு ஆட்சி கவிழ்ப்பு நடத்தியபோது, சட்ட விரோத அரசு சட்ட விரோதம் என அறிவிக்கப்பட்ட சிலவற்றில் முதன்மையானது நிலச்சட்டமாகும்.

தனியார் தொலைக்காட்சி சானல்கள், செய்தித்தாள்கள் ஆகியவை மக்களின் சுயாதிபத்தியத்தின் எதிரிகள். இவர்களின் பிரச்சாரத்துடன் சர்வதேச ஊடகங்களும், இணைந்து தவறான பிரச்சாரம் செய்தன. நியூயார்க் டைம்ஸ், கிறிஸ்டியன் சயன்ஸ், மானிட்டர், த எகானமிஸ்ட், பைனான்சியல் டைம்ஸ், ராய்டர்ஸ் ஆகியவை இதில் அடங்கும். நிலச் சீர்திருத்தம் அரசு கொள்கையாக அறிவிக்கப்பட்ட பின்னரும், காவல் துறை, நிர்வாகம், தேசிய பாதுகாப்பு படை ஆகியவை புரட்சியை பாதுகாப்பதற்கு பதிலாக எதிர் புரட்சிக்கு ஆதரவு தருகின்றன.

கூலிப்படையை அமைத்து (சிகாரியோஸ்) நிலப்பிரப்புக்கள் தலைவர்கள், தொண்டர்களை தாக்கியுள்ளனர். தனிநபர்கள், குடும்பங்கள் இத்தகைய தாக்குதலை சந்தித்துள்ளனர்.

2002 ஆகஸ்டில் வட வெனிசுலாவில், முகமூடி அணிந்த ஒருவன் அறுவை சிகிச்சை நிபுணரும், நில கமிட்டி தலைவருமான பெத்ரோ கோரியாவை அணுகி, அவரைக் கூப்பிட்டான். திரும்பிய அவரை ஐந்து முறை சுடடான். அரசுக்கு சொந்தமான நிலங்களை 50 குடும்பங்களுககு விநியோகித்து, அவர்களுக்கு சட்டப்பூர்வமாக நிலம் வழங்கப்பட இருந்தது. அந்த கமிட்டி தலைவராக கோரியா செயல்பட்டார். அங்கிருந்த பண்ணை உரிமையாளர் முன்னாள் அதிபரின் நெருங்கிய நண்பர். கோரியா போல் பல தலைவர்கள் குறிவைத்து கூலிப்படைகள் மற்றும் ராணுவத்தால் கொல்லப் பட்டுள்ளனர்.

ஸ்பெயினின் காலனியாதிக்கத்தையும், கொடுமைகளையும் எதிர்த்து நீண்ட காலமாக இப்பிரதேச மக்கள் போராடி வந்துள் ளனர். அதன் முடிவாக இந்த விவசாயிகள் போராட்டம் நடை பெற்றுள்ளது என்கிறார் தேசிய அசெம்பிளியின் துணைத் தலைவர் அல்வரெஸ், அல்வரெஸ் யாராகுயில் விவாய இயக்கத் தலைவராக இருந்தவர். நிலச் சீர்திருத்தம் என்பது மக்களுக்கு சுயாதிபத்தியம் வழங்குவதாகும். 50 ஆண்டுகளில் செய்ய வேண்டிய பணியை வெனிசுலாவில் 3 ஆண்டுகளில் செய்யப்பட்டுள்ளது. நில சீர்திருத்தம் 1999 ல் நடத்தப்பட்ட காலத்தில் 300 கொலைகள் நடந்துள்ளன. அவற்றில் 150 கொலைகளுக்கும் மேல் உறுதி செய்யப்பட்டுள்ளன. அல்வரெஸ் காரில் செல்லும் போது குண்டுகள் வீசப்பட்டன. ஆனால், உயிர் தப்பிவிட்டார். அவர் தாக்கப்படுவார் என இரண்டு நாட்களுக்கு முன்பே செய்தி வந்தது. இரண்டு ஆண்டுகளில் அவரை இரண்டு தடவை சொல்ல முயற்சி நடந்துள்ளது. வெனிசுலாவின் தகவல் தொடர்பு அமைச்சர் அல்வாரெஸ் மீதான கொலை வெறித் தாக்குதல், விவசாய இயக்கத் தலைவர்களை தீர்த்துக்கட்ட கூலிப்படையை ஏவிவிடும் சில சக்திகளின் கைவரிசை என கண்டனம் தெரிவித்துள்ளார்.

கொலை வெறித் தாக்குதலுக்கு அரசு அளிக்கும் பதில் என்ன? மேலும் சில நிலச் சீர்திருத்தங்கள். ஒவ்வொரு தாக்குதலும் புரட்சியை மென்மேலும் வலுப்படுத்தும் என வேளாண் அமைச்சர் கூறியுள்ளார். தனது ரேடியோ மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சியில் சாவேஸ் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தார். காவல் துறையி லுள்ள ஊழல் பேர் வழிகளுக்கு எச்சரிக்கை செய்துள்ளார். விவசாய இயக்கத் தலைவர்களை பாதுகாக்க அரசு தவறியுள்ளதை கண்டித்து, நிர்வாகம் பெரும் நிலச் சுவான்தார்களுடன் இணைந்து செயல்பட் டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

வேளாண் சீர்திருத்தத்தின் முக்கிய அம்சங்கள்:

லத்தி பண்டியா எனப்படும் பயன்படுத்தப்படாத பெரும் பண்ணைகள் அழிக்கப்பட்டுள்ளன. நில உரிமையாளர்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்கப்பட்டு, அரசு நிலத்தை கையகப்படுத்தியுள்ளது. லத்தி பண்டியா மீது போர் தொடுக்கப்பட்டுள்ளது.

நிலம் மறுவிநியோகம் செய்யப்பட்டு கூட்டுறவு சங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கூட்டு உற்பத்தியை அதிகரிப்பதே பிரதான நோக்கம்.

நில உரிமை பெற வேண்டுமெனில், பட்டாவை விட உற்பத்திதான் முக்கியமானது. யார் வேலை செய்கிறார்களோ நிலம் அவர்களுக்குத் தான் சொந்தம். வெறும் வேலி போடுவதால் மட்டும் உரிமை கிடைத்துவிடாது.

வேளாண் கொள்கையின் அடிப்படை நோக்கம் உணவில் தன்னிறைவு பெறுவதாகும். இது தேசிய சுயாதிபத்தியத்தை அடைவதற்கு அடிப்படையானதாகும்.

லத்தி பண்டியாவை அழித்தல், தன்னிறைவு, சுற்றுச் சூழல் பாதுகாப்பு ஆகிய மூன்று நோக்கங்களைக் கொண்டது வேளாண் கொள்கையாகும்.

கிராமம் நோக்கி செல்வோம் என்பது முக்கியமான அம்சமாகும். குடிபெயர்தலை தடுத்து, நிலம், கடன் வசதி வழங்கி, விவசாயத்தை உயிர்ப்பித்தல் முக்கியமாகக் கருதப்படுகிறது.

சீனாவைப் போல் நிலப்பயன்பாட்டுக் கொள்கையில் வெனிசுலா கூடுதல் கவனம் செலுத்துகிறது. அந்தந்த பகுதி மக்களின் உரிமைகளை பாதுகாப்பது மற்றொரு முக்கிய அம்சமாகும்.

வேளாண் சீர்திருத்தங்கள் நீடித்து நிற்க வேண்டும் என்றால், அரசு ஆதரவுடன் கூடிய சேவைகள் மற்றும் முதலீடு தேவை என்பது உணர்த்தப்பட்டுள்ளது. பல நடவடிக்கைகளில் அரசு முதலீடு செய்துள்ளது. கிராமப்புற, நகர்ப்புற குடும்பங்களின் வருமானத்தை உயர்த்துவதுடன், அரசு நியாயவிலைக் கடைகளை (மெர்கல் கடை) அமைத்துள்ளது. 43 சத நுகர்வோர் இக்கடைகளில் தான் பொருட்களை வாங்குகின்றனர்.

வெனிசுலாவில் பெரிய மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அதன் பழைய ஆளும் வர்க்கம் தோற்கடிக்கப்படவில்லை. ஆனால் அதே நேரம் ஆட்சி, அதிகாரம் தற்போது அதனிடம் இல்லை. முதலாளித்துவ உலகில் ஆளும் வர்க்கங்களும், ஏகாதிபத்தியமும் புரட்சியை தோற்கடிக்க முயலுகையில், வெனிசுலாவின் அனுபவம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. தேர்ந்தெடுத்துள்ள பாதை கடினமானது தான். ஆனால் அதை குறைத்து மதிப்பிட முடியாது. நாங்கள் தினமும் கற்றுக் கொள்கிறோம். உலகம் முழுவதற்கும் பயன்படும் அனுபவத்தை உருவாக்குகிறோம் என அவர்கள் கூறுவதிலிருந்து நாமும் கற்றுக் கொள்ள நிறைய உள்ளது.

English Version

தமிழக விவசாய மறுமலர்ச்சி, தரிசு நிலத் திட்டம்!

“கைப்பு நிலத்தையும் செப்பனிட்டுப் பயிர்
காத்து கதிர் வளர்த்தேன் – அதன்
கண்ட பலனைப் பறிகொடுத்து நின்று
கண்ணீர் வடிப்பதை நாம் சகியோம்.”

என்றார் பாட்டுக்கோட்டை பட்டுக்கோட்டை

இன்று ஏழை நிலமில்லா மக்களுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்கும் திட்டத்தை அமல்படுத்த புதிய தமிழக அரசு கொள்கையளவில் முடிவெடுத்துள்ளது. இந்த முடிவினை அதன் தோழமைக் கட்சிகளும், தமிழக மக்களும் வரவேற்றுள்ளன. இத்திட்டம் சிறந்த, நெறிய முறையில் நிறைவேற்றப்படுமானால், தமிழகம் விவசாயத் துறையில் புத்தொளி பெறுவது திண்ணம்.

இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலும், அதற்குப் பின்னர் சுதந்திர இந்தியாவிலும் நிலவுடைமையில் பல்வேறு மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. இதே மாறுதல்கள் தமிழகத்திலும் நடைபெற்றது. இந்தியா விவசாயம் சார்ந்த நாடு. விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுப்பதின் மூலம் தான் மக்களின் ஏழ்மை, வேலையின்மை இவற்றைப் போக்க முடியும். இது தமிழகத்திற்கும் பொறுத்தமானதே.

ஆனால், விவசாயத் துறையில் தமிழகத்தில் நடந்தது என்ன? 1960 க்குப் பின்னர் நடந்த பசுமைப்புரட்சியின் மூலம், விவசாயத்தில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்தன. உணவு உற்பத்தி பல மடங்கு பெருகியது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால், விவசாய நிலங்களில் இருபோகங்கள், முப்போகங்கள் சாகுபடியாயின. தண்ணீர்த் தேவை அதிகமானது. இடுபொருட்களின் விலைகள் அதிகமாகியது. நிலத்தடி நீரின் தேவை அதிகமாகி, தமிழக நிலத்தடி நீர் முற்றிலும் தீரும் நிலை ஏற்பட்டுள்ளது. 80 சதவீத நிலத்தடி நீர் உபயோகப்படுத்தப்பட்டு விட்டது. நீர்ப்பாசன வசதிகளைக் காப்பாற்றுவதற்கும், பெருக்குவதற்கும் அரசு உரிய கவனம் செலுத்த வில்லை. விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. இதன் காரணமாக சிறு, குறு விவசாயிகள் கடனிலும், வறுமையிலும் உழன்றனர். கிராமப்புறங்கள் வறுமை யில் உழன்றது. தங்களிடமிருந்த சிறுபகுதி நிலங்களை விவசாயிகள் விற்கத் தொடங்கினர் அல்லது ஈடுவைத்தனர். நிலங்களை இழந்த விவசாயிகள் விவசாயக் கூலிகளாக மாறினர். விவசாயக் கூலி வேலை வாய்ப்புக்களும் குறைந்ததால் வேலைக்காக நகரங்களை நோக்கிச் சென்றனர். தற்போது நகர வளர்ச்சியும், நெருக்கடியில் உள்ளது. தமிழகத்தில் ஏராளமான சிறு நகரங்கள் உருவாகி வருகின்றன.

நிலங்களைப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்ற கொள்கையின் படி, 1961லும், 1970லும் நிலச் சீர்திருத்தச் சட்டங்கள் தமிழகத்தில் அமலாக்கப்பட்டன. இந்தச் சட்டங்கள் முறையாக அமல்படுத்தப் பட்டிருந்தால், தமிழகத்தில் சுமார் 25 லட்சம் ஏக்கர் உபரியாகக் கிடைக்கும் என்று நில வருவாய் சீர்திருத்தக் கமிட்டி அறிவித் துள்ளது. 1990 வரை உபரி என அறிவிக்கப்பட்ட நிலம் 1.75 லட்சம் ஏக்கர். இந்த நிலங்களைக் கைப்பற்ற முடியாமல், நிலங்கள் சட்ட விரோதமாகப் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன. எனவே, தமிழகத்தில் நிலச் சீர்திருத்தச் சட்டங்கள் விவசாயிகளுக்கு பெரும் பயனை அளிக்கவில்லை.

மகாத்மா காந்தியின் சீடரான ஆச்சார்யா வினோ பாபாவே, 1951 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ம் தேதி, பூமிதான இயக்கம் என்பதைத் துவக்கினார். இதன்படி, பெரும் பண்ணையார்கள், பணக்கார விவசாயிகளிடமிருந்து நிலங்கள் தானமாகப் பெற்று, அவற்றை ஏழை, எளிய மக்களுக்குப் பகிர்ந்தளிப்பது என்ற கொள்கை வகுக்கப்பட்டது. இதன்படி, தமிழகத்தில் மட்டும் 85,744 ஏக்கர் நிலம் பெறப்பட்டு, அதில் 62,745 ஏக்கர் நிலம் ஏழை மக்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால், இந்த நிலங்கள் ஏழை மக்களால் சாகுபடி செய்யப்படாமல், நாளடைவில் அந்தந்த பணக்கார விவசாயிகளே நிலங்களைக் கையகப்படுத்திக் கொண்டனர். ஏப்ரல் 2006 ல் திண்டுக்கல் மாவட்டத்தில் நடத்திய ஆய்வில் பூதான் இயக்கத்தில் பெறப்பட்ட 3536 ஏக்கர் நிலத்தில், 1579 ஏக்கர் நிலம் மட்டுமே ஏழை மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 1957 ஏக்கர் நிலம் விநியோகம் செய்யப்படவில்லை.

ஏழை விவசாய மக்களுக்காக ஏற்பட்ட நிலச் சீர்திருத்தச் சட்டங்கள், பூதான் இயக்கம் போன்றவை அவர்களுக்குப் பயனளிக்கவில்லை. அதே சமயம், இடது முன்னணி ஆளுகின்ற மேற்கு வங்கத்தில் நிலச்சீர்திருத்தச் சட்டங்களை கடுமையாக்கி 13 லட்சம் ஏக்கருக்கும் மேலான விவசாய நிலங்கள் அரசால் கையகப்படுத்தப்பட்டன. மேலும், விவசாயத்திற்குப் பொருத்தமில்லாத, அரசின் கட்டுப்பாட்டிற்குள் உள்ள 6 லட்சம் ஏக்கர் நிலங்களில் பெரும் பகுதியை விவசாயத்திற்குப் பொருத்தமானதாக மாற்ற முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. மேற்குவங்க பஞ்சாயத்துக்கள் விவசாயிகளின், குறிப்பாக ஏழை விவசாயிகளின் அதிகாரத்தை அதிகரித்துள்ளது.

தமிழகத்திலோ, ஏழை விவசாயிகளின் அதிகாரம் பறிபோகத் தொடங்கியது. சென்ற அதிமுக ஆட்சியில் தமிழக அரசு ஒருங்கிணைந்த தரிசு நில மேம்பாட்டுத் திட்டம் என்ற ஒரு திட்டத்தை அறிவித்தது.  (அரசாணை எம்.எஸ். எண்.189 – 2.7.2002) இதன்படி, தமிழகத்தில் உள்ள 50 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான தரிசு நிலங்களை பெரும் தொழிற்கழகங்கள், சிறு தொழில் நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு அமைப்புகள் நீண்ட கால குத்தகைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று அந்த அரசு ஆணையில் குறிப்பிடப்பட்டது. இதன் மூலம் அளிக்கப்படும் நிலத்தின் அதிக பட்ச அளவு 1000 ஏக்கர்கள் ஆகும். தேவை ஏற்பட்டால் இதற்கு மேலும் கூட நிலங்களைப் பெற்றுக் கொள்ளலாம். இதை 30.11.2004 அன்று திட்டக்குழு துணைத்தலைவர் திரு.எம்.எஸ்.அலுவாலியா அவர்களுடன் நடத்திய விவாதத்தின் போது, அன்றைய தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா குறிப்பிடுகையில், தமிழகத்தில் தற்போது தரிசாக உள்ள சுமார் 2 மில்லியன் ஹெக்டேர் நிலத்தையும் மற்றும் நிரந்தரமாக தரிசாக இருக்கும் நிலங்களையும் படிப்படியாக சாகுபடியின் கீழ் கொண்டு வருவதற்காக தரிசு நில மேம்பாட்டு அடங்கல் திட்டம் ஒன்றையும் நான் தொடங்கி வைத்துள்ளேன். இவ்வாண்டில், இத்திட்டத்தின் கீழ் நல்ல முன்னேற்றம் ஏற்படும். முதல் நிலைத் துறைக்கான எங்களது புதிய உத்திகளில் பயிர்களைப் பல திறப்படுத்துதல், பண்ணை உற்பத்தியைப் பெருக்குவதற்கான புதிய தொழில் நுட்ப உத்திகள் போன்றவை அடங்கும்.

அன்றைய முதலமைச்சரின் இந்த அணுகு முறை, உலகமயமாதல் கொள்கையோடு ஒன்றிணைந்தது. இக்கொள்கை யின் காரணமாக ஆங்காங்கு விவசாயக் கிளர்ச்சிகள் எழுந்தன. தமிழகத்தின் முற்போக்குச் சக்திகள் ஒன்றிணைந்து இச்செயலைக் கண்டித்தனர்.

தற்போது பதவி ஏற்றுள்ள புதிய அரசு ஏழை விவசாயிகளின், நிலமற்ற விவசாயக் குடும்பங்களின் வறுமை நிலையைப் போக்க, ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2 ஏக்கர் விவசாய நிலம் வழங்கும் திட்டத்தைத் துவக்க உள்ளது. இதன் முதற்கட்டமாக செப்டம்பர் 17 ம் தேதி, திருவள்ளூர் மாவட்டத்தில் மாண்புமிகு. முதல்வர். கருணாநிதி அவர்கள் ஏழை விவசாயக் குடும்பங்களுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்குகிறார்.

இத்திட்டம் தமிழகத்தில் முறையாக செயல்படுத்தப்பட்டால், ஏழை விவசாயிகளின் வாழ்வில் ஒரு விடியலைக் காணலாம். தற்போது தமிழகத்தில் 2003 – 04 ஆண்டின் பருவம் மற்றும் பயிர் அறிக்கையின் படி, நடப்புத் தரிசு நிலங்கள் 9,53,963 ஹெக்டேரும், மற்ற தரிசு நிலங்கள் 18,62,861 ஹெக்டேரும் உள்ளது. மேய்ச்சல் நிலங்கள் 1,13,474 ஹெக்டேரும் உள்ளது. இந்த நிலங்களைத் தவிர

மடங்களுக்கான நிலங்கள் – 23,207 ஹெக்டேர்
கோயில் நிலங்கள் – 1,75,759 ஹெக்டேர்

நிலங்களும் உள்ளன. இந்த நிலங்களை அரசு கையகப்படுத்தி, ஏழை விவசாயிகளுக்கு வழங்க முடியும். தமிழகத்தில் தற்போது 60,62,786 ஆண்களும், பெண்களும் விவசாயக் கூலித் தொழிலாளர் களாக உள்ளனர். சராசரியாக 15,15,696 விவசாயக் கூலிக் குடும்பங்கள் உள்ளன.

தமிழகத்தில் உள்ள தரிசு நிலங்கள் மற்றும் கோயில், மடங்களின் நிலங்கள்

நிலங்கள் ஹெக்டேர் ஏக்கர்
நடப்புத் தரிசு நிலங்கள் 9,53,963 23,57,293
மற்ற தரிசுகள் 18,62,861 46,03,229
மொத்தம் 28,16,824 69,60,522
நிலங்கள் ஹெக்டேர் ஏக்கர்
மடங்களுக்கான நிலங்கள் 23,207 57,345
கோயில் நிலங்கள் 1,75,759 4,34,309
மொத்தம் 1,98,966 4,91,654

 ஆதாரம் பருவம் மற்றும் பயிர் அறிக்கை (2003 – 04) – தெற்கு ஆசியாவில் நிலச்சீர்திருத்தம் – பக்கம் 36

இத்திட்டம் தமிழகத்தில் முழுமையாக அமல்படுத்தப் பட்டால், விவசாயத்தில் பெரும் மாறுதல்கள் ஏற்படும். உலகில் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) 6 நாடுகளில் மேற்கொண்ட ஆய்வில் நில விநியோகம் செய்யப்பட்ட சிறு விவசாயிகளின் உற்பத்தி பெருமளவில் அதிகரித்துள்ளது. உலகவங்கியின் உலக வறுமையைத் தகர்ப்போம் என்ற வெளியீட்டில், தாய்லாந்து நாட்டில் 2 ஏக்கரிலிருந்து 7 ஏக்கர் வரை உள்ள விவசாய நிலங்களின் நெல் உற்பத்தி ஏக்கருக்கு 60 சதம் வரை உயர்ந்துள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டில் பிரான்ஸஸ் லேப்பி மற்றும் ஜோசப் காலின்ஸ் என்ற இரு ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் 1960 லிருந்து 1973 வரை உள்ள 13 ஆண்டுகளில் சிறு விவசாயிகளின் நிகர வருமானம் அதிகரித்துள்ளது. உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) வெளியிட்டுள்ள 2000 ஆம் ஆண்டு விவசாயத்தை நோக்கி என்ற வெளியீட்டில், நிலங்களைச் சரிசமமாகப் பகிர்ந்தளிப்பு முறை விவசாயத்தில் பெரும் மாற்றத்தை உருவாக்கும். பெரு விவசாயிகள் உற்பத்தி செய்வதை விட, சிறு விவசாயிகள் அதிக உற்பத்தி செய்ய முடியும் என்பதையும் அது குறிப்பிடுகிறது. இதன் மூலம் அந்தந்த நாட்டின் வறுமையும், வேலை யின்மையும் ஒழியும் என்பதையும் அது குறிப்பிடுகிறது. இந்தியாவின் மொத்த நிலங்களில் 5 சதவீத நிலங்கள் ஏழை மக்களுக்கு வழங்கப்பட்டால், அது நாட்டின் 35 சதவீத ஏழ்மையை ஒழித்து விடும் என்பதை திரு.பாரத் தோக்ரா என்ற சுற்றுச்சூழல் ஆய்வாளர் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

1979 ல் கூடிய நிலச் சீர்திருத்தமும், ஊரக வளர்ச்சியும் பற்றி ஆய்வு செய்த உலக மாநாட்டில் தங்களுடைய உறுதி மொழியாக கிராமப்புற ஏழை மக்களுக்கு நிலங்களின் மீது உரிமை வேண்டும் என்பதை ஏற்றுக் கொண்டார்கள். இதேபோல், 1995, 1996 ல் கூடிய பசியும், வறுமையும், உலக உணவு ஆகிய இரண்டு மாநாடுகளிலும், வறுமையையும், பசியையும் போக்க மக்களுக்கு நில உரிமை வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டது. தற்போது தமிழகத்தில் விநியோகம் செய்ய உள்ள தரிசு நிலங்களில் 22 சதவீதம் மாநிலத்தில் ஒரு பெரும் மாற்றத்தை உருவாக்கும். எனவேதான் இத்திட்டம் ஒரு தொலை நோக்குப் பார்வையோடு செயல்படுத்த அரசு திட்ட மிட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை எந்த ஒரு அரசும் மேற் கொள்ளாத இந்தத் திட்டத்தை தற்போதைய தமிழக அரசு மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது. அண்டை  மாநிலங்களான ஆந்திராவில் 42.02 லட்சம் ஏக்கர் நிலமும், கர்நாடகாவில் 13.72 லட்சம் ஹெக்டேர் நிலமும், 4.57 லட்சம் ஹெக்டேரும் தரிசு நில விநியோகத் திட்டத்தின் கீழ் விநியோகிக் கப்பட்டுள்ளன. ஆனால், தமிழகத்தில் இதுவரை 2.7 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் மட்டுமே இதுவரை விநியோகிக்கப்பட் டுள்ளது. தமிழகத்தில் உள்ள தரிசு நிலங்கள் மட்டுமல்லாது, கோயில்கள், மடங்கள் மற்றும் டிரஸ்ட் போன்றவைகளின் பெயர் களில் ஏகபோகங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் நிலக் குவியல் களையும், முறைப்படி அரசு கையகப்படுத்த வேண்டுவது மிகவும் அவசியமாகிறது. இந்த நிலங்களையும், கையகப்படுத்திக் கூட ஏழை விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய முடியும். இதுவும் தற்போதைய தமிழக அரசின் கவனத்தில் உள்ளது.

இந்த தரிசு நில விநியோகத் திட்டத்தில் அரசு பிரதானமாகக் கவனத்தில் கொள்ள வேண்டியவைகள்:-

 1. கிராம விவசாயக் கணக்குகளில் கொடுக்கப்படும் நிலங்களின் உரிமை அந்தந்த விவசாயிகளின் பெயரில் பதிவு செய்யப்பட வேண்டும்.
 2. கொடுக்கப்படும் நிலங்களை வாங்கவோ, விற்கவோ, ஈடுவைக்கவோ முடியாதபடி பதிவு செய்தல் அவசியம்.
 3. நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதிக்கான கடன்கள், பயிர்க் கடன்கள் போன்றவை நீண்டகாலத் தவணைகளில் திருப்பிச் செலுத்துதல் திட்டத்தின் கீழ் கிராமப்புற விவசாயக் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் இவைகளின் மூலம் வழங்கப்பட வேண்டும்.
 4. அந்தந்த கிராமங்களில் ஒரு கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டு, வருவாய் அதிகாரிகளுக்கு உதவியாக இக்குழு செயல்பட வேண்டும்.

இத்திட்டம் தமிழகத்தில் முழுமையாக நிறைவேற்றப் பட்டால், தமிழகத்தின் விவசாயம், பொருளாதாரம் இவைகளில் பெரும் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக, ஏழை விவசாயிகள், விவசாயக் கூலித் தொழிலாளர்கள் இவர்களின் வாழ்க்கையில் பெரும் மாறுதல்களையும், வளர்ச்சிகளையும் இத்திட்டம் உருவாக்கும். அந்த மக்களின் வாங்கும் சக்தி, வாழ்க்கைத் தரம் முதலியன உயரும். இத்திட்டத்தை முழு முயற்சியோடு செயல்படுத்த தமிழக அரசும், துறை சம்பந்தப்பட்ட அமைச்சர்களும், அதிகாரிகளும் மிகத் தீவிரமாக செயல்படுத்த முன்வர வேண்டும். இத்திட்டத்தை முழுமையாக நிறைவேற்றும் போது, பொறுப்பற்ற அதிகாரிகள், திட்டத்தை நசுக்க நினைக்கும் அரசியல்வாதிகள், கிராமப்புறத்தில் ஏழை விவசாயிகளை அடக்கியாளும் நில உடைமையாளர்கள் மற்றும் சமூக விரோதிகளால் இடையூறு ஏற்பட வாய்ப்பு உண்டு. அரசு இவைகளை கவனத்தில் கொள்ள வேண்டும். இத்திட்டம் முழுமையாக நிறைவேற்றப்பட்டால், தமிழகத்தில் ஏழை மற்றும் தலித் மக்களின் வாழ்வில் ஒரு மிகப் பெரும் மறுமலர்ச்சி ஏற்படும்.