விவசாயிகள் எழுச்சியின் வர்க்க அரசியல்

பேரா.பிரபாத் பட்நாயக்

இந்திய விவசாயிகளின் மகத்தான போராட்டம், கோட்பாட்டு ஞானத்திற்கு புதிய தூண்டு கோலாக மாறியுள்ளது. இந்தியாவின் கிராமப் புறங்களில் ஒரு பொதுவான போராட்டத்தில், நிலவுடைமை ஆதிக்கத்திற்கு எதிராக,  வசதிபடைத்த விவசாயிகள் உள்ளிட்டு விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளர்களையும் எவ்வாறு ஒன்றிணைப்பது என்பது இடதுசாரிகளால் மிகவும் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வரும் ஒரு கோட்பாட்டு கேள்வி ஆகும்.

பல ஆண்டுகளாக  பல மார்க்சியக் கூட்டங்கள் விவசாயிகளுக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் இடையிலான முரண்பாடுகள் குறித்தும், விவாதித்துள்ளன.  நிலப்பிரபுக்களுக்கும் கிராமத்தில் வாழும் பிற பகுதியினருக்கும் இடையிலான முரண்பாட்டிற்கு,  தீர்மானகரமான  தீர்வுகளை அந்தக் கூட்டங்கள் முன்வைத்துள்ளன. இடதுசாரி விவசாய அமைப்புகள், இடதுசாரி அல்லாத பிற விவசாய அமைப்புகளுடன் கூட்டுப் போராட்டங்களில் ஈடுபட்ட போதெல்லாம், விவசாயத் தொழிலாளர்களின் சில கோரிக்கைகளை இணைத்தன. அதன் மூலம் விவசாயத் தொழிலாளர்களை நம் போராட்டங்களில் பங்கேற்கச் செய்ய வேண்டும் என வலியுறுத்தின; ஆனால் இந்த முயற்சிகள் பெரிதாக பலனளிக்கவில்லை.

சாதிப் பஞ்சாயத்து  வர்க்கப் பஞ்சாயத்தானது

விவசாயிகளுக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் இடையிலான முரண்பாடு என்பது வெறுமனே பொருளாதாரம் சார்ந்தது அல்ல – கூடுதலான கூலியினைப் பெற்றிட விழையும் விவசாயத் தொழிலாளர்களின் விருப்பம் என்பது விவசாயிகளை நேரடியாக பாதிக்கக் கூடிய ஒன்று – (அதனோடு) இதற்குள் சாதியப் பரிமாணமும் உள்ளடங்கியுள்ளது. விவசாயத் தொழிலாளிகள் முக்கியமாக பட்டியல் சாதிகளைச் சார்ந்தவர்கள், ஆனால் விவசாயிகளோ பொதுவாக பட்டியல் சாதி அல்லாதவர்கள்; இந்தியாவின் பெரும்பகுதிகளில், குறிப்பாக வடக்கில், பட்டியல் சாதியினர் பாரம்பரியமாக எந்த நிலத்தையும் சொந்தமாக வைத்திருக்க அனுமதிக்கப்படுவது கிடையாது. தில்லியின் சுற்றுப்புறங்களில், இந்த முரண்பாடு தீவிரமான ஜாட் – (எதிர்) பட்டியலினத்தவர்  என்ற வடிவில் உள்ளது. தில்லிக்கு அருகில் உள்ள கிராமம் கஞ்சவாலா. கூலிக் கோரிக்கைகள் தொடர்பாக 1970களில் ஜாட் விவசாயிகளுக்கும் கம்யூனிஸ்ட் கட்சியால் திரட்டப்பட்டிருந்த பட்டியலின விவசாயத் தொழிலாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலுக்கு சாட்சியமாக இந்த கிராமம் இருந்தது. இந்தியப் புரட்சி எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்த ஒரு பாடமாகவும் இந்த மோதல் இருந்தது.

ஆனால், நரேந்திர மோடி அரசாங்கத்தால் இயற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் தற்போதைய போராட்டம், சாத்தியமற்றதாகக் கருதப்பட்ட ஒன்றை நிகழ்த்திக் காட்டியுள்ளது; அது,  விவசாயிகளையும் விவசாயத் தொழிலாளர்களையும் ஒரு பொதுவான தளத்திற்கு கொண்டு வந்துள்ளது என்பதே. உண்மையில், 2021 செப்டம்பர் 5 அன்று  முசாபர்நகரில் நடைபெற்ற விவசாயிகள் மகா பஞ்சாயத்திற்கு ‘அனைத்து வர்க்கத்தினரும்’, ‘அனைத்து சாதி யினரும்’ ‘அனைத்து மதத்தினரும்’ வந்திருந்தார்கள்; இவர்கள் அனைவரின் ஒருமித்த ஆதரவைப் போராட்டம் பெற்றிருந்ததாக மகாபஞ்சாயத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் பெருமிதத்துடன் கூறினர்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம் என்று அறிவித்திருந்த போதிலும், செப்டம்பர் 27 அன்று விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக நடந்த பாரத் பந்த்திற்கு, பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவை அளித்தது. இது அக்கட்சியின் அடி மட்டத்தில் ஏற்பட்டிருந்த பெரும் குழப்பத்தை சுட்டிக் காட்டியது. இந்த குழப்பம் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் அல்லது ஜாட் மற்றும் பட்டியலின மக்களுக்கு இடையிலான உறவுகளுடன் மட்டும் சுருங்கி விட வில்லை. இது மேலும் இரண்டு வழிமுறைகளில் வெளிப்பட்டது. ஒன்று, போராட்டத்தில் பெண்கள் பெருமளவில் பங்கேற்பது. குறிப்பாக, வழக்கு மொழி யில் கொடூரமானவர்கள் எனச் சித்தரிக்கப்படும் ஜாட் விவசாயப் பெண்கள் பற்றியது , அவர்களும் காலங்காலமாக, ஆணாதிக்க சமூகத்தால் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருபவர்கள் தான்; அவர்கள்  வெகுஜன போராட்டங்கள் மற்றும் வெகுஜன கூட்டங்களில் பெரிய அளவில் பங்கேற்றது என்பது ஒரு புதுமை யான மற்றும் வரலாறு காணாத நிகழ்வு.

மதவெறி மாயமாய்  மறைந்த விநோதம்

மற்றொன்று, ஜாட் மற்றும் முஸ்லிம்களுக்கு இடையேயான உறவு. இவ்வுறவு கடந்த காலத்தில் ஒப்பீட்டளவில் சுமூகமாக இருந்து வந்தது. ஆனால் 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக, தற்போதைய ஆளும் பாஜகவின் தூண்டுதலினால் கசப்பானதாக மாறியது. ​ஆகஸ்ட் 2013ல் முசாபர் நகரில் சாதி அடிப்படையிலான ‘மகா பஞ்சாயத்து’ ஒன்று நடை பெற்றது. அப்பஞ்சாயத்து வகுப்புவாத சம்பவம் ஒன்றைக் குறித்து விவாதிப்பதற்காக கூடியது. அதன் தொடர்ச்சியாக  மிகப் பெரிய அளவிலான கலவரங்கள் நடைபெற்றன. இக்கலவரங்கள் மக்களை வகுப்புவாத அடிப்படையில் பிளவுபடுத்தின; பாரதிய ஜனதா கட்சியை தனிப்பெரும் கட்சியாக மாற்றின;  அறுதிப் பெரும்பான்மையையும் அக்கட்சிக்கு பெற்றுத்தந்தன.  ஆனால், விவசாயிகளின் தற்போதைய போராட்டமோ  கசப்புணர்வுடன் இருந்த இந்த இரண்டு சமூக மக்களையும் ஒன்றிணைத்துள்ளது; ஒவ்வொரு சமூக மக்களும் கடந்த ஏழு ஆண்டுகளில் தாங்கள் செய்த  தவறுகளை மீண்டும் செய்ய மாட்டோம் என்று உறுதியளித்துள்ளனர்.

ஒட்டு மொத்தப் பிரச்சனையையும் கையில் எடுத்து

சாதி, சமூகம் மற்றும் பாலின உறவுகளின் மீது  ஏற்படுத்திய தாக்கங்கள் மட்டுமல்ல;

விவசாயிகளின் இந்தப் போராட்டமானது அவர்களின் சொந்தக் கோரிக்கைகளுடன் நேரடியாக தொடர்பில்லாத, பல அழுத்தமான ஜனநாயகப் பிரச்சனைகளுக்கும் ஆதரவினை நல்கியுள்ளது

குறிப்பிடத்தக்க ஒன்று. ‘பணமாக்கல் திட்டம்’  என்ற பெயரில் பொதுத்துறை சொத்துக்களை தனியார்மயமாக்குதல், குடிமை உரிமைகள் மீதான தாக்குதல், அமலாக்க துறை மற்றும் மத்திய புலனாய்வுப் பிரிவு (சி.பி.ஐ) போன்ற அரசு நிறுவனங்களைப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் மற்றும் விமர்சகர்களை மிரட்டுவது, பீமா-கோரேகான் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் உட்பட ஏராளமான மக்களை விசாரணையின்றி சிறையில் அடைத்திருப்பது ஆகியவற்றை எதிர்ப்பதன் மூலம் விவசாயிகள் இயக்கம் முற்றிலும்  மாறுபட்ட ஒன்றினை நிகழ்த்திக் காட்டியுள்ளது.

நம் தேசத்தில் இது வரை நடை பெற்றுள்ள  விவசாயிகளின் எந்த ஒரு போராட்டமும், தற்பொழுதைய போராட்டத்தைப் போல விரிவானதாகவோ, ஒட்டுமொத்த தேசத்திற்கான ஜனநாயகப் பிரச்சனைகளை கையில்  எடுத்துக் கையாண்டதாகவோ இருந்ததில்லை.

விவசாய வர்க்கம் தனது பாத்திரத்தை உணர்கிறது

மார்க்சியக் கோட்பாட்டின் படி, விவசாயிகளை கூட்டாளிகளாக இணைத்துக் கொண்டு, தொழிலாளி வர்க்கத்தால் தான் இது போன்ற முக்கியமான பணி களைச் செய்ய இயலும்; விவசாயிகளால் ஒரு பொழுதும் சுயமாகச் செய்ய இயலாது. காலனி ஆட்சிக்கெதிரான போராட்டத்தை விவசாயிகள் வழி நடத்திய போது, காலனி ஆட்சிக்கு பிறகு கட்டியெழுப்பப்பட வேண்டிய சமூகம் எவ்வாறிருக்க வேண்டும் என்பது குறித்த தெளிவான பார்வை அவர்களுக்கு ஏதும் இருந்த தில்லை என்று அடிக்கடி வாதிடப்பட்டது; ஆனால் தற்பொழுதோ மதச்சார்பின்மை, ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு ஆகியவற்றைத் தகர்க்கும் முயற்சி களை எல்லாம் எதிர் கொண்டு, அவைகளை பாதுகாக்க முயற்சிக்கும் விவசாயிகளை நாம் காண்கிறோம். இது போன்ற விசயங்களில், விவசாயிகளின் பார்வை குறித்து மதிப்பீடு செய்யும் பொழுது, ஜான் மேனார்ட் கீன்சால் ‘படித்த முதலாளித்துவம்’ என்று அழைக்கப்பட்ட நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினரில் சில பிரிவினரும், அரசை பகுத்தறிவின் உருவகமாக மாற்றும் கூறுகளில் பெரும் நம்பிக்கை வைத்திருந்தவர்களில் சில பிரிவினரும் முரண்பட்ட வகையில்  உடந்தையாக  இருந்துள்ளனர்.

“கிராமப்புற வாழ்க்கையின் முட்டாள்தனம்” என்று அடிக்கடி நிராகரிக்கப்பட்ட ஒரு வர்க்கம், திடீரென ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு விழுமியங்களைப் பாதுகாப்பதில் அதிக ‘முற்போக்கான’ சமூக வர்க்கங்களை விட முன்னேறிவருவது எப்படி?  இக்கேள்விக்கான பதிலின் ஒரு பகுதி – சந்தேகத்திற்கு இடமின்றி மாற்றம் அடைந்து வருகிற சூழ்நிலைகளுக்கு ஏற்ப  விவசாய வர்க்கம் தனக்கான பாத்திரத்தை கண்டடைந்துள்ளது என்பதுதான். ஏகபோக முதலாளித்துவ காலக்கட்டத்தில்,  விவசாயிகளின் வேளாண்மை உட்பட சிறு உற்பத்திகளின் மீது ஏகபோக மூலதனத்தின் தாக்குதல் அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் முன்பு போல் நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்துப் போராடுவது மட்டுமல்ல, சமூகத்தின் மிகவும் ‘முன்னேறிய’ பிரிவான ஏகபோக முதலாளிகளையும் எதிர்த்துப் போராட வேண்டியுள்ளது.

விவசாயிகளின் குணங்களை புரட்சிகரமாக்குவோம்!

நவீன தாராளமயக் கொள்கைகளை நடைமுறைப் படுத்தத் துவங்கியதற்கு பிறகு இந்தியாவில் ஏகபோக மூலதனம்  விவசாயத்தை ஆக்கிரமிப்பு செய்வது,   வேகமடைந்துள்ளது. இதற்கு முன்பிருந்த அரசாங்கங்கள் ஏக போக மூலதனத்தின் ஆக்கிரமிப்பிலிருந்து  விவசாயத்தைப்  பாதுகாத்துவந்தன. ஆனால் இந்தப் பாதுகாப்பு, நவதாராளமயக் கொள்கைகள் அமலாக்கத்தின் தொடக்கத்திலேயே முடிந்து போனது; வேளாண் இடுபொருள் மானியங்கள் குறைக்கப்பட்டன; பணப்பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை திரும்பப் பெறப்பட்டது; நிறுவனக் கடன் மறுக்கப்பட்டது; இதன் விளைவாக லாபம் குறைந்து, கடன் சுமை அதிகமாகி லட்சக்கணக்கான விவசாயிகளை தற்கொலைக்கு தள்ளியது. 

உணவு தானியங்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை போன்றவை மூலம் மாநிலங்களால் வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு கூட  தற்பொழுதைய மூன்று வேளாண் சட்டங்கள் மூலம் மறுக்கப்பட்டது. உள்நாட்டு ஏகபோகமும், சர்வதேச வேளாண் வணிகத்தை உள்ளடக்கிய புதிய, ‘நவீன’ எதிரியை எதிர்த்துப் போராடுவதற்காக, விவசாயிகள் தங்களைத் தாங்களே உயர்த்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர்.

மேற்சொன்ன கேள்விக்கான விடையின் மற்ற பகுதி – விவசாயிகளின் பழைய சாதிய, வகுப்புவாத மற்றும் ஆணாதிக்க தப்பெண்ணங்களை அகற்றுவதிலும், அவர்களின் குணாம்சங்களை புரட்சிகர மாக்குவதிலும் இருக்கும் போராட்டத்தில் உள்ளது. என்னே ஒரு அற்புதமான போராட்டம் இது!

தமிழில்: அ.கோவிந்தராஜன்

விவசாயிகளின் போராட்டமும் அதன் வர்க்க அடித்தளமும்

நிலோத்பல் பாசு

ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் தலைமையிலான ஓராண்டு கால போராட்டம், நினைத்துப் பார்க்க முடியாத வெற்றியை சாதித்துள்ளது. 2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த மோடி அரசு முதன் முறையாக ஒரு மக்கள் போராட்டத்திற்கு முன் அடிபணிந்துள்ளது. விவசாயிகளின் ஒருங்கிணைந்த இப்போராட்டம் நாடு முழுவதின் கவனத்தை ஈர்த்துள்ளதோடு, நவ தாராளமயத்தின் சர்வதேச நிதி மூலதனத்தின் கீழ் இயங்கும் வலதுசாரி அரசியல் சித்தாந்தத்திற்கு எதிராக உலகம் முழுவதும் போராடி வரும் அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

விவசாயிகளின் போராட்டம் அரசாங்கத்திற்கு அதிர்ச்சியை  ஏற்படுத்தி இருப்பதோடு அவர்களுக்குப் பெரும் சங்கடத்தையும்  ஏற்படுத்தியுள்ளது. மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என்று பிரதமர் அறிவித்தார். பெரும் பகுதி விவசாயிகளின் ஒன்றுபட்ட  போராட்டத்தின் முன் தனது முந்தைய நிலைபாட்டில் அவரால் உறுதியாக நிற்க முடியாமல் போனதே அந்த அதிர்ச்சியின் வெளிப்பாடாகும்.

விவசாயிகள் போராட்டம் நடந்த இக்காலம் முழுவதும் அரசாங்கத்தின் கொள்கையே சரி என்று வழிமொழிந்த பிரதான ஊடகங்கள், மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என்கிற முடிவை மோடியின் கச்சிதமான ஆட்டம் என்று முன்னிறுத்துகின்றன. இது விவசாயிகளின் பிரம்மாண்டமான போராட்டத்தை மறுக்கும் செயலாகும். அதனால்தான், விரைவில் வரவிருக்கும் சில மாநில தேர்தல்களை மனத்தில் கொண்டே சட்டங்கள் திரும்பப் பெறப்படுவதாக அவை தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், பூனை கூடையை விட்டு வெளியே வந்துவிட்டது. மூன்று வேளாண் சட்டங்களையும் ஏன் திரும்பப் பெறுகிறோம்? என்பதற்கான காரணங்கள் மற்றும் நோக்கங்கள் நாடாளுமன்றத்தில் முன் வைக்கப்பட்டுள்ளது. அக்குறிப்பே, எவ்வாறு இச்சட்டங்கள், விவசாயம் மற்றும் வேளாண் பணிகள் அனைத்தும் கார்ப்பரேட் பெரு முதலாளிகளிடம் கையளிக்கும் உள்நோக்கத்தைக் கொண்டது என்பதை மிகத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது.

சட்டங்களை  திரும்பப் பெறும்போதும் அரசாங்கம் தனது பொய்களையும் ’நியாயங்களையும்’  மீண்டும் மீண்டும் கூறியுள்ளது. அதில் ”வல்லுநர் குழுக்களின் பல ஆண்டுகால பரிந்துரைகள், விவசாயிகள், துறைசார் வல்லுநர்களின் பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகள்,  விவசாய பொருளாதார அறிஞர்கள் உள்ளிட்டவர்களின் ஆலோசனைகள், விவசாய அமைப்புகள் முன்வைத்த கோரிக்கைகள் ஆகியவற்றின் அடிப்படையிலும் விவசாயிகள் மற்றும் ஊரக அமைப்புகளின் அனைத்துவிதமான சமூக பொருளாதார முன்னேற்றத்தை கருத்தில் கொண்டும் இந்தச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. முப்பதாண்டுகளாக பல அரசாங்கங்கள் இச்சீர்திருத்தங்களை செய்ய முயற்சித்தபோதும் தற்போதைய அரசைபோல் விரிவான அளவில் அதற்கான முன்முயற்சிகளை அவை மேற்கொள்ளவில்லை. மேலும் இக்காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியும் நிகழ்ந்துள்ளது.” என்று அக்குறிப்பில் அரசு தெரிவித்துள்ளது.

விவசாயிகளின் போராட்டத்தை இழிவுபடுத்துவதும் அவற்றை ஏளனமாக கருதும் போக்கும் இதிலும் தொடர்வதைக் காணலாம். “குறிப்பிட்ட சில விவசாய குழுக்களே இச்சட்டங்களை எதிர்த்து போராடுகின்றபோதும், பல்வேறு கூட்டங்களிலும் பல்வேறு முறைகளிலும் வேளாண் சட்டங்களின் அவசியத்தை விவசாயிகளிடம் எடுத்துரைக்க அரசாங்கம் கடுமையாக முயற்சித்தது.” என்று நாடாளுமன்றத்தில் அரசு கூறியுள்ளது. இதில் எள் அளவும் உண்மை இல்லை.

சர்வதேச நிதியம் & நவ தாராளமயத்தின் கூட்டு தான் வேளாண் சட்டத்தின் உள்ளடக்கம்

துவக்கத்திலேயே அரசாங்கத்தின் வர்க்க சார்பு இதில் வெளிப்படையாக தெரிவதை கவனத்தில் கொள்வது அவசியமாகும். கரோனா பெரும்தொற்றுக் காலத்தை கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான சீர்திருத்தங்களை மேற்கொள்ள சாதகமாக பயன்படுத்தப்படுவதே அருவருக்கத்தக்க செயலாகும். கரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த இந்த கடுமையான ஊரடங்கு அமலாக்கப்படுவதாக கூறினாலும்,  விவசாயத்தை கார்ப்பரேட்களுக்கு, குறிப்பாக அரசாங்கத்தோடு நெருக்கமானவர்களுக்கு, கையளிக்கவே ஊரடங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. விவசாய பொருட்களை கொள்முதல் செய்வதற்கும், அவற்றை சேமிப்பதற்கான சேமிப்பு கிடங்குகளை அமைப்பதற்கும்,  விநியோக ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் இக்காலத்தில் செய்துள்ள முதலீடுகளின் அளவே இதனை அப்பட்டமாக வெளிப்படுத்தும்.

இது அரசாங்கத்தின் செயல்பாட்டில் உள்ள வர்க்க உள்ளடக்கத்தை வெளிப்படுத்துகிறது. வர்க்க உணர்வுடன் அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கைகளை எதிர்த்து நிற்காமல் போனால், சொந்தமாக விவசாயம் செய்வதற்கும், எதை விதைப்பது? என்பதை சுயமாக முடிவு செய்வதற்கும், விற்பனைக்கான முறைகளை தீர்மானிப்பதற்கும், பல்வேறு வேளாண் நடவடிக்கைகளில் விவசாயிகளின் சுதந்திரத்தை பாதுகாப்பதற்கும் முடியாமல் போகும்.

சர்வதேச நிதியத்தின் விவசாய பொருட்களின் உலகளாவிய சந்தையின் தேவைகளை நிறைவேற்றும் போக்குடைய செயல்பாட்டின் ஒரு பகுதியாக தங்களை நிறுத்திக்கொள்ள விவசாயிகள் இயக்கம் உறுதியாக மறுத்துள்ளது. கார்ப்பரேட் பெருமுதலாளிகள் அரசாங்கத்தை அதை நோக்கியே தள்ளுகின்றனர். இது உலகளாவிய போக்காகவே உள்ளது. அதன் அடிப்படையிலான உலகளாவிய சட்டகத்தின் ஒரு பகுதியாக இந்தியாவிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்குடனேதான் வேளாண் சட்டங்கள் அவசரகதியில் கொண்டுவரப்பட்டன.

இந்த சட்டகத்தின் முக்கியமான கூறு என்னவெனில், விவசாய நிலத்தில் பயிரிடப்படும் பொருளை மாற்றுவதாகும். மற்ற வளர்முக நாடுகளைபோல் அல்லாமல் சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு, நாம் உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்திருப்பது நமது அரசியல் மற்றும் பொருளாதார இறையாண்மை பாதுகாப்பதற்கான முக்கியமான அரணாக உள்ளது. உணவு உற்பத்தி எவ்வாறு இந்திய மக்களுக்கு அவசியமோ, அதேபோல் கார்ப்பரேட் தலைமையிலான விவசாய சந்தைக்கு வர்த்தகப் பயிர்கள் அவசியமாக உள்ளது. மேலும் இந்த வர்த்தகப் பயிர்கள் இந்தியாவின் பல்வேறு காலச்சூழலில் நன்றாக விளைய கூடியதாகவும் உள்ளது.  எனவே  வேளாண் சட்டங்கள், எதை விதைப்பது? எதை விவசாயம் செய்வது? எனும் சுதந்திரத்தை பாதிக்கும். விவசாயிகள் மீது தொடுக்கப்பட்ட இத்தாக்குதலை பூகோள எல்லைகளை கடந்து விவசாயிகள் இயக்கம் வென்றுள்ளது.

எதிர்ப்பாற்றலின் விரிந்த தன்மை

“தொடர்ந்து நிலவும் சர்வதேச முதலாளித்துவ நெருக்கடி, கொரோனா பெருந்தொற்று மற்றும் அதை தொடர்ந்த ஊரடங்கின் காரணமாக  இந்திய பொருளாதாரம் சந்திக்கும் நெருக்கடிகளின் பின்னணியில், விவசாயம் மற்றும் அதன் வர்த்தகத்தை முழுமையாக கார்ப்பரேட்டுகளின்  கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்ல இந்திய ஆளும் வர்க்கத்தின் தலைமை எடுத்த முயற்சிகளை விவசாயிகளின் இந்தப் போராட்டம் தடுத்துள்ளது” என்று விவசாயிகளின் இப்போராட்டத்தை அங்கீகரிக்கும் வகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) நிறைவேற்றிய தீர்மானம் சுட்டிக்காட்டியுள்ளது.

முன்னெப்போதும் இல்லாத அளவிலான எதிர்ப்புணர்வின் விரிந்த தன்மையையும் அதன் வர்க்க இயங்கு தன்மையையும் தெளிவாக விளக்குவது எளிதானதல்ல. கடந்த 2019 ஆம் ஆண்டு மோடி தலைமையிலான அரசாங்கம்  இரண்டாவது முறையாக ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு அதன் மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்த்து ஆங்காங்கே எழுந்த எதிர்ப்பு இயக்கங்களுக்கு சரியான பலன் கிடைக்கவில்லை. தனிநபர் இடைவெளியை கடைப்பிடிக்கச் சொன்ன அச்சுறுத்தல் நிறைந்த காலத்தில் பொதுவான கொள்கை பிரச்சினைகளுக்காக பிரம்மாண்டமான மக்கள் திரள் போராட்டங்களை நடத்துவதில் உள்ள சிரமமே நம்ப முடியாத அளவிலான இப்போராட்டத்தை புரிந்து கொள்ள போதுமானதாகும்.

இப்போராட்டம் மேலும் பல சிக்கல்களை கொண்டதாகும். ஏனெனில், இந்திய விவசாயிகளிடம் நிலவும் வர்க்க வேறுபாடுகளால் கடந்த காலத்தில் அனைத்து தரப்பு விவசாயிகளையும் ஒன்றிணைத்து ஒரு போராட்டத்தை நடத்த முடிந்ததில்லை. ஆனால், இப்போராட்டத்தில் வசதிபடைத்த விவசாயிகள், சிறிய மற்றும் மத்திய தர விவசாயிகளும் பங்கேற்றனர். அதேநேரம் சாதிய படிநிலையின் படி கடந்த காலங்களில் தனித்து ஒதுங்கியிருந்த நிலமற்ற விவசாயக் கூலித் தொழிலாளர்களை அணிதிரட்டுவது பெரும் சவாலாக இருந்தது.

அரசாங்கமும் அதன் அரசியல் இயந்திரமான பிஜேபி – ஆர் எஸ் எஸ் –உம் இந்த சமூகக் குறைபாட்டைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த முனைந்தனர். மத அடையாளங்களை பயன்படுத்தியும் அரசியல் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. போராட்டத்தில் பங்கேற்ற பெரும்பகுதியினர் பஞ்சாப் மாநிலத்தவர்கள் என்பதால் இப்போராட்டம் காலிஸ்தான் தீவிரவாதத்தின் சதி என்றும் கொச்சைப்படுத்தினர். ஆனால், அரசின் அத்தனை முயற்சிகளும் தோல்வியையே தழுவியது. வேற்றுமைகளை கடந்த ஒற்றுமையின் பலத்துடன் ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் தலைமையில் சுமார் 500 அமைப்புகளின் ஒருங்கிணைந்த செயல்பாடு அரசாங்கத்தின் பல்வேறு  தாக்குதல்களை எதிர்கொள்ளும் கேடயமாக இருந்தது. இவ்வொற்றுமையே அதன் தனித்தன்மையாக விளங்கியது.

இந்த விரிந்து பரந்த வர்க்க – வெகுஜன ஒருங்கிணைவு ஏற்படுவதற்கான அடிப்படையான அம்சங்களை பிரதான ஆய்வாளர்கள் புரிந்து கொள்ள மறுக்கின்றனர்; அல்லது தெரிந்தே அதை மறுத்து, சிதைக்கப் பார்க்கின்றனர். இப்போராட்டம் நீண்டகால வளர்ச்சிப்போக்கின் அடித்தளத்தில் எழுந்துள்ளது. நிச்சயம் திரும்ப பெற வேண்டிய சட்டமான கட்டாய நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்த போராட்டத்திலிருந்து இது துவங்கியது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் காரணமாக விவசாய பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காதது; பணப்புழக்கம் குறைந்தது ஆகியவற்றுக்கு எதிராக நடந்த போராட்டங்கள் இப்போராட்டத்தின் இரண்டாம் கட்டமாகும். அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு (AIKSCC) ஒரு விரிந்த மேடையின் துவக்கமாகும். அதுவே பின்னர் வேளாண் சட்டங்களுக்கு எதிரான ஐக்கிய விவசாயிகள் முன்னணியாக எழுந்து நின்றது. இது, வர்க்கம், சாதி என்கிற வேற்றுமைகளை கடந்த ஒருங்கிணைவை வழங்கியது.

“சர்வதேச நிதி மூலதனத்துடன் இணைந்த பெரு முதலாளிகளுக்கும் பணக்கார விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு விவசாயிகளுக்கும் இடையே இந்த வேளாண் சட்டம் ஒரு மோதலை உருவாக்கியுள்ளது. இம்மோதல் உழைக்கும் வர்க்கம், ஏழை விவசாயி மற்றும் விவசாய கூலி தொழிலாளர்களை ஒருங்கிணைத்து முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ வர்க்க அமைப்பிற்கு எதிரான போராட்டத்தைத் தீவிரப்படுத்துவதற்கு உதவும் சாத்தியக்கூறுகள் உள்ளன’‘ என்ற மத்திய குழுவின் அறிக்கையை கொண்டு நாம் இதை சுருக்கமான கூறலாம்.

விவசாயிகளின் இப்போராட்டத்தின் துவக்கத்திலிருந்தே தொழிற்சங்கங்களின் உடனடியான ஆதரவு செயல்பாடுகளை உள்வாங்காமல், இயற்கையாக உள்ள விரிவான வர்க்க இணைவு முழுமை பெறாது. மோடி அரசாங்கத்தின் தொழிலாளர் விரோத செயல்பாடுகளையும், அது கொண்டு வந்துள்ள புதிய தொழிலாளர் சட்டங்களை எதிர்த்தும், இயற்கை வளங்களை கண்மூடித்தனமாக விற்பதை கண்டித்தும் உழைக்கும் வர்க்கம் கனன்று கொண்டிருந்தது. இது விவசாயிகளின் ஒருங்கிணைந்த போராட்டத்திற்கு தொழிலாளி வர்க்கத்தையும் தெழிற்சங்கங்களையும் தங்களது உறுதியான ஆதரவை நல்கிட வழிவகுத்தது. சமீபகாலங்களில் திட்டமிட்ட அடிப்படையில் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்க அமைப்புகளின் ஒருங்கிணைவு பல முட்டுக்கட்டைகளை தகர்த்துள்ளது. அதுவே ஒரு விரிவான ஒருங்கிணைவை கட்டியமைக்க வழிகோலியது.

“தேசத்தின் சொத்துக்களை கொள்ளையடிக்கும்  நவ தாராளமய பொருளாதார சீர்திருத்தங்களின் தீவிரத்தன்மை பெரு முதலாளிகளுக்கும் சிறு,குறு மற்றும் மத்திய தொழில் நிறுவனங்களை நடத்தி வரும் முதலாளிகளுக்கும் இடையே ஒரு மோதலை உருவாக்கியுள்ளது. பெரு முதலாளிகள் மற்றும் இதர முதலாளிகள் மத்தியில் உருவாகியுள்ள இம்மோதல், பிஜேபி மற்றும் அதன் கொள்கைகளுக்கு எதிரான வலுவான விரிந்த ஒருங்கிணைவை கட்டியமைக்கும் சாத்தியக்கூறுகளை உருவாக்கியுள்ளது.” (மத்திய குழு அறிக்கை)

புதிய அரசியல் விழிப்புணர்வு: ஜனநாயகத்தையும் அரசியல் அமைப்பு சட்டத்தின் மாண்புகளை பாதுகாத்தல்

திரும்பிப் பார்க்கையில், வாழ்நிலையைப் பாதுகாப்பதற்கான வர்க்கப் போராட்டமானது, அடிப்படையாகவும், பெருமளவிலும் பொருளாதாரரீதியான தன்மை கொண்டதாக அமைந்திருந்த இந்தப் போராட்டத்தினை புதியதொரு அரசியல் மட்டத்திற்குக் கொண்டு சென்று, அதை உண்மையானதொரு மக்கள் இயக்கமாக உருமாற்றி அமைத்தது என்பது தெளிவாகிறது. “விவசாயிகளுக்கு ஆதரவான சீர்திருத்தம்” என்று சொல்லப்பட்ட இச்சட்டங்களை எதிர்த்து போராடுவதற்கான விழிப்புணர்வை மூவர்ணக் கொடியின் பின்னணியில் இந்திய அரசியல் அமைப்பு சட்டமே ஏற்படுத்தியது என்பது தற்செயல் நிகழ்வே.

அரசாங்கத்தின் இந்த சட்ட நடைமுறைகள் முழுக்க முழுக்க இந்திய அரசியல் சாசனத்திற்கும் அதன் ஜனநாயக விழுமியங்களுக்கும் எதிரானதாகும். அதுவே இந்த நீடித்த போராட்டத்திற்கு அடித்தளமாக அமைந்தது. இவ்வேளாண் சட்டங்களை அரசாங்கம் மிருக பலத்துடன்  நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய போதும், அது நாடாளுமன்ற மரபுகளையும் நடைமுறைகளையும் காலில் போட்டு மிதித்தது. அதுவும் இந்த வீரியமிக்க போராட்டத்திற்கு உரமிட்டது.

தேச விடுதலை போராட்டத்தின் போது அது உத்தரவாதப்படுத்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் உள்ளடக்கமான ஜனநாயகம் மற்றும் மாநில உரிமைகளை இவ்வரசு குறைத்து மதிப்பிட்டதன் விளைவாக அது தற்போது அம்பலப்பட்டு நிற்கிறது. இறுதியாக, தேசத்தின் தலைநகரின் வீதிகளில் நடந்த இப்போராட்டம் அரசாங்கத்தின் அருவருக்கத்தக்க வடிவத்தை தோலுரித்து காட்டியுள்ளது. இதில் முரண்பாடு என்னவெனில், வேளாண் சட்டங்களை அரசாங்கம் திரும்பப் பெற்றிருப்பது, நீதி நியாயங்களை நிலைநாட்டுவதற்கான போராட்டங்கள் சரியானதுதான் என்று நிருபித்துள்ளது.

அரசாங்கம்தான் வன்முறையை கையாளும் என்பதை உருவகமாக மட்டுமல்லாமல் நிஜத்திலும் எடுத்துக்காட்டியுள்ளது. எழுநூற்றுக்கும் மேற்பட்டவர்கள் போராட்ட களத்தில் தியாகிகளாக மரணித்திருந்தாலும் அரசின் தாக்குதலுக்கு உள்ளாகி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் உள்ளது. தடுப்பு வேலிகள் போடுவது, சாலைகளில் பள்ளம் வெட்டி வைப்பது, கூர்மையான கம்பிகளை சாலையில் பதிப்பது போன்ற அரசின் நடவடிக்கைகள் மேலெழும் மக்கள் திரள் போராட்டங்களை தடுத்துவிட முடியாது. வன்முறையற்ற மக்கள் திரள் போராட்டங்கள் பெரிய அளவில் ஆதரவை பெற்றிருப்பதோடு வருங்கால போராட்ட முறையாகவும் காட்சி தருகிறது.

வெற்றிகளின் பலன்களை முன்னோக்கிய பயணத்திற்கு பயன்படுத்துவோம்

இவ்வரசு வீழ்த்த முடியாத சக்தியல்ல; ஒன்றிணைந்த போராட்டத்தால் அதை முறியடிக்க முடியும் என்கிற உணர்வு நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது. அனைத்து விவசாய பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை, விவசாய பொருட்களுக்கு போதுமான கொள்முதல் விலை, விவசாய நெருக்கடிகளை எதிர்கொள்ளும் வகையில் அமைப்பு ரீதியான அடிப்படை மாற்றங்கள் உள்ளிட்டவைகளுக்கான போராட்டம் தொடரும் என்பது தெளிவு.

ஐக்கிய விவசாயிகள் முன்னணி தொடர்ந்து செயலாற்றும் என்றும், மேற்கண்ட பிரச்சினைகளை எதிர்கொள்ள அது புதிய முன்னெடுப்புகளை செய்யும் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஜனநாயக இயக்கங்களுக்கான புதிய சாத்தியக்கூறுகளை இப்போராட்டத்தின் வெற்றி உருவாக்கியுள்ளது என்பது தெளிவு. முன்னோக்கிய பயணத்திற்கான விரிவான ஒருங்கிணைவை இந்த வெற்றி விட்டுச் சென்றுள்ளது.

தமிழில்: ச.லெனின்

ஏகாதிபத்தியத்தை வீழ்த்திய விவசாயிகள் !

பிரபாத் பட்நாயக்

(மார்க்சிஸ்ட் இதழ் நடத்தும் இணையவழி கருத்தரங்கில் பிரபாத் பட்நாயக் பேசுகிறார். நீங்களும் கேட்க … பதிவு செய்வீர்)

(கட்டுரையின் ஆங்கில மூலம் படிக்க … )

சில குறிப்பிட்ட போராட்டங்களுக்கு, உடனடி முக்கியத்துவத்தைத் தாண்டியும், கூடுதலான முக்கியத்துவங்கள் உருவாகின்றன. அந்தப் போராட்டம் நடக்கும்போது களத்தில் இருந்தவர்களும் கூட அதன் முக்கியத்துவத்தை முழுமையாகத் தெரிந்து கொண்டிருப்பதில்லை. அப்படிப்பட்ட ஒரு போர்க்களம்தான் பிளாசி. பிளாசியில் நடைபெற்றதனை யுத்தம் என்று கூடச் சொல்ல முடியாது. ஏனென்றால் ஒரு புறத்தில் படைக்கு தலைமையேற்ற தளபதி, கையூட்டு பெற்றுக்கொண்டு தனது படையை முன் நடத்தாமல் இருந்துகொண்டார்; இருந்தாலும் கூட, பிளாசியின் காடுகளுக்குள் போர் நடைபெற்ற அந்த நாள், உலக வரலாற்றில் புதிய சகாப்தத்திற்கு கட்டியம் கூறுவதாக அமைந்தது.

விவசாயிகள் இயக்கத்திற்கும், மோடி அரசாங்கத்திற்கும் இடையே நடந்த போராட்டமும் அந்த வகையிலான ஒன்றுதான். கிளர்ந்தெழுந்த விவசாயிகளின் வியப்புக்குரிய உறுதிப்பாட்டிற்கு முன்பாக மோடி அரசாங்கம் மண்டியிட நேர்ந்திருப்பது, வெளிப்படையாகத் தெரிகிறது. இன்னொரு மட்டத்தில், இது நவ தாராளமயத்தினை பின்னடையைச் செய்துள்ளது. வேளாண்மை துறையில் கார்ப்பரேட் நுழைவு அதிகரிக்கும் போது, விவசாயிகளின் வேளாண்மை கார்ப்பரேட்டுகளுக்கு அடிபணிந்ததாகிறது. நவீன தாராளமய நிகழ்ச்சி நிரலில் இது மிக முக்கியமான விளைவு ஆகும். அந்த விளைவினை உருவாக்குவதுதான் வேளாண் சட்டங்களுடைய நோக்கமும் ஆகும்.

ஏகாதிபத்தியத்தின் விருப்பம்:

மேலே குறிப்பிட்ட இரண்டு பார்வைகளும் தெள்ளத் தெளிவானவையே. ஆனால் அவைகளுக்கு அப்பாற்பட்ட மூன்றாவது ஒரு நிலையும் இருக்கிறது, அது விவசாயிகளின் வெற்றிக்கு கூடுதலான முக்கியத்துவம் தருகிறது. இதுவரை அது போதுமான அளவு கவனிக்கப்படவில்லை. மிகவும் அடிப்படையான பொருளில், ஏகாதிபத்தியத்திற்கு ஏற்பட்ட பின்னடைவுதான் விவசாயிகளின் இந்த வெற்றி என்ற உண்மையோடு அது தொடர்புடையது. எனவே, பின்னடைவைச் சந்தித்த மோடி அரசாங்கத்தின் மீது, மேற்கத்திய ஊடகங்கள் வைத்த விமர்சனங்கள்  யாருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்திருக்காது.

ஏகாதிபத்தியமானது, உலகின் அனைத்து உணவு வளங்களையும்,ஆதார வளங்களையும் வளைத்துப்போட விரும்புவதைப் போலவே, கச்சா எண்ணை வளங்களை கட்டுப்படுத்த விரும்புவதைப் போலவே, உலகம் முழுவதும், நிலப் பயன்பாட்டின் முறைகளைக் கட்டுப்படுத்தவும்  விரும்புகிறது. குறிப்பாக, மூன்றாம் உலக நாடுகளில் இதைச் செய்ய விரும்புகிறது. பூமியின் வெப்ப மண்டலம் மற்றும் மித வெப்பமண்டல பகுதிகளில் அமைந்த இந்த நாடுகளில்தான் மித வெப்ப மண்டல விவசாயத்தை மேற்கொள்ள முடியும், பெருநகர முதலாளித்துவம் (metropolitan capitalism) அமைந்த பகுதிகளில் இந்தப் பயிர்கள் வளரும் சூழல் இல்லை.

ஒட்டச் சுரண்டப்பட்ட விவசாயிகள்:

இந்த பெருநகரங்கள் (metropolis) தங்களுடைய சொந்த நன்மைக்காக, உலகமெங்கும் நிலப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான சாத்தியத்தை காலனி ஆதிக்க நடைமுறைகள்  ஏற்படுத்திக்கொடுத்தன. இந்தியா போன்ற நாடுகளில் இந்த நடைமுறை வெட்கக்கேடான விதத்தில் பின்பற்றப்பட்டது.

காலனி ஆதிக்க அரசாங்கங்களின் வருவாய்த் தேவைகளுக்காக, விவசாயிகளின் மீது குறிப்பிட்ட அளவு வரி விதிக்கப்பட்டது (அதனை செலுத்தத் தவறினால், அவர்களுடைய நில உரிமையை இழக்க நேரிடும்), எனவே இந்த வரியை செலுத்துவதற்காக வியாபாரிகளிடமிருந்து அவர்கள் முன்பணம் பெற்றார்கள். இதனால் வியாபாரிகள் விரும்புகிற பயிர்களை அவர்கள் விளைவித்தார்கள், அப்போதுதான் முன்பே ஒத்துக்கொண்ட விலையில் அவைகளை அவர்களிடம் விற்க முடியும்; இந்த வியாபாரிகள், பெருநகரங்களில் உள்ள கிராக்கியை (சந்தை சூழ்நிலைமைகளுக்கு ஏற்ப) கணக்கில் கொண்டு பயிர் உற்பத்தியின் மீது தங்கள் கட்டுப்பாட்டை செலுத்தினார்கள். அல்லது, கிழக்கிந்திய கம்பனியின் ஓபியம் முகவர்கள் செய்ததைப் போல, தங்களிடம் முன் பணம் பெற்ற விவசாயிகள், அந்த பயிரைத்தான் விளைவிக்க வேண்டுமென்று நேரடியாகவே அவர்களை கடைமைப்பட்டவர்களாக ஆக்கினார்கள்.

இவ்வாறு, நிலத்தின் பயன்பாட்டை பெருநகரங்கள் கட்டுப்படுத்தின, இதனால், உணவுப்பயிர்களை விளைவித்த நிலங்களில் அதற்கு மாறாக அவுரி, ஓபியம் மற்றும் பருத்தி ஆகிய பயிர்கள் முன்பு காணாத அளவில் பயிர் செய்யப்பட்டன; விவசாயிகளிடமிருந்து திரட்டப்பட்ட வரி வருவாயில் இருந்தே அவர்களுக்கு பணம் தரப்பட்டது, எனவே பெரு நகரங்கள் அந்த விளைச்சலை ‘இலவசமாகவே’ பெற்றுவந்தார்கள்.

இறக்கமற்ற ஆதிக்கம்:

காலனி ஆதிக்கத்தை மேற்கொண்ட நாடுகள், தங்கள் காலனி நாடுகளில் இருந்து சுரண்டிய பண்டங்களை, தேவை போக தங்களுக்குள் வர்த்தகம் செய்துகொண்டார்கள். வர்த்தக பற்றாக்குறையை சரி செய்துகொள்ளும் மும்முனை வணிகமும் அதில் அடக்கம். (உதாரணமாக, பிரிட்டனுடைய வர்த்தக பற்றாக்குறையை ஈடு செய்யும் விதத்தில், இந்திய விவசாயிகளிடம் கட்டாயப்படுத்தி விளைவிக்கப்பட்ட ஓபியம் பயிர், சீனாவிற்கு ஏற்றுமதி செய்து, அவர்களை வற்புறுத்தி நுகரச் செய்யப்பட்டது). இரக்கமில்லாத வகையில் விவசாயிகள் சுரண்டப்பட்டார்கள், பத்தொன்பதாம் நூற்றாண்டில், வங்க மொழியில் நடத்தப்பட்ட ‘நீல் தர்பண்’ என்ற நாடகம், அவுரி விவசாயிகளின் பரிதாபகரமான நிலையை விளக்குவதாக அமைந்தது. அந்த நாடகத்தை தீனபந்து மித்ரா உருவாக்கினார். நாடகத்தை பார்த்துக் கொண்டிருந்த ஈஸ்வர் சந்திர வித்தியாசாகர் என்ற சமூக சீர்திருத்த முன்னோடி, வேளாண் வியாபாரியாக நடித்தவரை நோக்கி தனது செருப்புக்களை வீசுகிற அளவிற்கு, அந்த நாடகம் தத்ரூபமாக அமைந்தது!

விவசாயிகளிடமிருந்து வரியை வசூலிப்பதில் காட்டப்பட்ட கடுமையும், வியாபாரிகள் கொடுக்கும் முன்பணத்தின் மூலம், பயிர் செய்யும் முறையில் செய்யப்பட்ட தலையீடும், விவசாயிகளிடமிருந்து திரட்டப்பட்ட வருவாயைக் கொண்டே விளைச்சலை வாங்குவது என்ற ஏற்பாடும் தற்போது பெருநகரங்களுக்கு சாத்தியம் இல்லை. சுதந்திரத்திற்கு பிறகு வந்த ஆட்சிகள் பொதுச் செலவினங்களை மேற்கொண்டன (dirigiste regime). உணவுதானிய உற்பத்திக்கு ஆதார விலை வழங்குவது உள்ளிட்ட உதவிகளை மேற்கொண்டார்கள். எனவே உணவு உற்பத்தி நடவடிக்கையின் மீதான பெருநகர கட்டுப்பாடுகளை புறந்தள்ளக்கூடிய சாத்தியத்தை விவசாயிகள் பெற்றார்கள்.

அதீத தேசியமும், ஏகாதிபத்தியமும்:

இப்போதுள்ள பெருநகரங்களுக்கு உணவு தானியங்கள் தேவைப்படவில்லை. ஆனால் அதே சமயம் உணவு தானிய உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளை அதிலிருந்து தங்களுக்கு தேவையான பயிர் உற்பத்தியை நோக்கி மாற்றிட அவர்களால் முடியவில்லை. உற்பத்தி செய்யப்பட்ட உணவு தானியத்தை, முன்பே முடிவு செய்யப்பட்ட ஆதார விலையைக் கொடுத்து, அரசாங்கம் கொள்முதல் செய்கிறது. நவ-தாராளமய திட்டத்தின் ஒரு பகுதியாக, நிதிச் சிக்கனம் என்ற பெயரில், உழைக்கும் மக்களின் வருவாய் சுருக்கப்பட்டுள்ளது. இதனால்  உணவு தானியத்திற்கான உள்நாட்டு கிராக்கி வீழ்கிறது. ஆனாலும்கூட, இதன் மூலமாக ஏகாதிபத்தியத்தின் விருப்பத்தை சாதிக்க முடியவில்லை. ஏனெனில், நிலப்பயன்பாட்டு முறைகளிலோ, உணவு தானிய உற்பத்தியிலோ இது மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. மாறாக, இதன் விளைவாக அரசின் வசமுள்ள தானிய இருப்புதான் அதிகரிக்கிறது. எனவேதான், ஆதார விலையை உறுதி செய்யும் ஏற்பாட்டையே முற்றாக ஒழிக்க வேண்டுமென்று ஏகாதிபத்தியம் விரும்புகிறது. மேலும்,அதோடு சேர்த்து, பயிர் உற்பத்தியில் தலையீடு செய்யும் விதத்தில், மாற்று வழிமுறை ஒன்றையும் அது எதிர்பார்க்கிறது.

‘அதீத தேசியவாத’வாய்ச்சவடாலை அடித்தபடியே, ஏகாதிபத்தியத்தின்  விருப்பத்தை முன்னெடுக்கும் மோடி அரசாங்கம், மூன்று வேளாண் சட்டங்களை நிறைவேற்றியதன் மூலம் மேற்சொன்னவைகளை சாதிக்க நினைத்தது. வேளாண் துறையை கார்ப்பரேட் வசமாக்கும்போது, நில பயன்பாட்டின் மீதான கட்டுப்பாடு உண்மையில் பெருநகரங்களின் வசமாகும். அந்தச் சந்தைகளின் சமிக்கைகளுக்கு ஏற்ற விதத்தில் விவசாயிகளை பயிர் செய்யவைப்பது, கார்ப்பரேட் பெருநிறுவனங்களுக்கு சாத்தியம். இவ்வகையில் மூன்றாம் உலக நாடுகளில் உள்ள விவசாய நிலங்களை பெருநகரங்களின் கிராக்கிக்கு ஏற்ப பயன்படுத்தச் செய்ய முடியும். தனது முகாமை பின்பற்றும் கல்வியாளர்களையும், ஊடக டமாரங்களையும் பயன்படுத்தி ‘அரசாங்கம் கொடுக்கும் ஆதார விலை இல்லாவிட்டால்’ அது விவசாயிகளுக்கு எவ்வளவு நல்லது என்று எடுத்துரைப்பது உட்பட, தன்னாலான அனைத்தையும் செய்து தனது விருப்பங்களைச் சாதிக்க ஏகாதிபத்தியம் முயற்சியெடுத்தது. ஆனால் அந்த முயற்சிகள் தோல்வியடைந்தன.

திரும்பப் பெறுவது மட்டும் போதுமா?

மூன்று சட்டங்களுக்கும் எதிரான விவசாயிகளின் கடுமையான போராட்டம், மோடி அரசாங்கத்தை சரணடையச் செய்து விட்டது. ஆனால், வெறுமனே சட்டங்களை திரும்பப் பெறுவதனால் மட்டும், பழைய நிலைமையை மீட்டெடுத்திட முடியாது. இவ்விடத்தில்தான், விவசாயிகள் வற்புறுத்தக்கூடிய, குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்ட உறுதி என்ற முழக்கம் அவசியமானதாகிறது. மூன்று சட்டங்களை திரும்பப் பெற்றால், உணவு தானிய சந்தைப்படுத்துதல் ஏற்கனவே நடந்துகொண்டிருந்த குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே நடத்த முடியும். அரசின் முகவர்களின் மேற்பார்வையில் வர்த்தகம் நடக்கும் மண்டிகளில்தான் அது நடக்கும்.அப்படி நடந்தாலும் கூட, குறைந்தபட்ச ஆதார விலைக்கான ஏற்பாடு இல்லாவிட்டால், விவசாயிகளுக்கு உற்பத்திச் செலவிலிருந்து சற்று கூடுதலான லாபத்துடன் கூடிய விலை கிடைக்கும் என்ற உத்திரவாதம் ஏதும் இல்லை.

வேறு வார்த்தைகளில் சொன்னால், உணவுதானிய சந்தைப்படுத்துதலை மண்டி அல்லாத பிற இடங்களிலும் மேற்கொள்ள அனுமதிப்பதன் மூலம் (அரசாங்கத்தின் மேற்பார்வை அவசியமற்றதாகிறது). எனவே, அவ்வப்போது அரசாங்கம் குறைந்தபட்ச ஆதாரவிலையை  அறிவித்து வந்தாலும் கூட, அதனை அமலாக்குவது சாத்தியமில்லை. அதே சமயத்தில், வர்த்தகத்திற்கு அரசாங்கத்தின் மேலாண்மையை கட்டாயப்படுத்துவது(மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதன் மூலமாக உறுதி செய்யப்பட்டாலும் கூட) அது குறைந்தபட்ச ஆதாரவிலை என்ற ஏற்பாட்டை உறுதி செய்வதற்கு போதுமான ஒன்றல்ல என்பதே உண்மையாகும். எனவே, ஆதார விலையை உறுதி செய்வதற்காக, குறிப்பிட்ட ஏற்பாட்டினை உருவாக்குவது அவசியம். இதனை சட்டத்தின் மூலமே உறுதி செய்ய வேண்டுமென விவசாயிகள் கேட்கிறார்கள், அப்போதுதான் அரசாங்கம் நினைத்தால்  அந்த ஏற்பாட்டை முடித்துக்கொள்வது என்பது இயலாது.

புரட்டுத்தனம் செய்வதில் பாஜக அரசாங்கத்தை விஞ்ச முடியாது என்பது நமக்கு தெரிந்த ஒன்றுதான், எனவே இது அவசர அவசியமான தேவையாக உள்ளது. இல்லாவிட்டால், மோடி அரசாங்கம் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றாலும் கூட, அது தனது விருப்பத்தை வேறு வடிவங்களில் நிறைவேற்றிக்கொள்ளவே முயற்சிக்கும்.

வெற்றியின் இரண்டு அம்சங்கள்

கேடுகெட்ட இந்தப் போக்குகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டியிருப்பினும், விவசாயிகளின் இப்போதைய வெற்றி மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்; நமது நாட்டின் வெப்பமண்டலம் மற்றும் மித வெப்ப மண்டல நிலப்பரப்பினை, ஏகாதிபத்திய சக்திகளுடைய கட்டுப்பாட்டிற்குள் செல்லாமல் தடுத்து நிறுத்துவதில் இந்தப்  போராட்டம் வெற்றி அடைந்துள்ளது. இந்த வெற்றியின் இரண்டு அம்சங்கள் நம்முடைய சிறப்பான கவனத்தை பெறுகின்றன.

மக்களை அணு அணுவாக பிளப்பதன் மூலம், வெகுஜன நடவடிக்கைகளுக்கான சாத்தியங்களை வெகுவாக கட்டுப்படுத்தக் கூடிய நவீன தாராளமயத்தின் போக்கோடு – அதாவது –  ஊடகங்கள் மீது, கல்வியாளர்கள் மீது அது கொண்டிருக்கும் ஆதிக்கத்தின் மூலமாக எந்தவொரு எழுச்சிக்கும் சமூகத்தின் ஆதரவு கிடைக்காத வகையில் தடுக்க முடியும் என்பதோடு தொடர்புடையது. இந்த வெற்றியின் முதலாவது அம்சம் ஆகும்.

இந்த ஒட்டுமொத்த சகாப்தத்திலும், நவீன தாராளமய நடவடிக்கைகளை, வெகுமக்கள் பொதுவாக எதிர்த்து வந்துள்ளனர். அந்த எதிர்ப்பு, நீடித்த வேலைநிறுத்தம் அல்லது முற்றுகை ஆகிய நேரடி செயல்பாட்டு வடிவங்களில் மேற்கொள்ளப்படவில்லை. மறைமுகமான, அரசியல் வழிமுறைகளில், அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான மாற்று அரசியல் இயக்கங்களை கட்டமைப்பதன் மூலம், லத்தீன் அமெரிக்காவில் நடந்ததைப் போல செய்யப்பட்டு வந்துள்ளது. ஆட்சிக்கு வந்த பின், நவீன தாராளமய கொள்கைகளை எதிர்க்க முயற்சித்த அரசாங்கங்கள், அன்னிய செலாவணி நெருக்கடி தொடங்கி, ஏகாதிபத்தியத்தால் திணிக்கப்பட்ட பொருளாதாரத் தடை வரையிலான தடங்கல்களை எதிர்கொள்ள நேர்ந்திருக்கிறது. இத்தகைய தடங்கல்கள், அரசாங்கங்களை முடக்கவும் செய்துள்ளன.

இப்படிப்பட்ட சூழலில் இருந்து மாறுபட்டதாக, இந்திய விவசாயிகளின் போராட்டத்தை குறிப்பிட வேண்டும். வரவிருக்கும் தேர்தல்களில், பாஜகவிற்கு எதிராக இயங்குவோம் என்ற அரசியல் ‘மிரட்டலை’ விவசாயிகள் விடுத்தார்கள். நவ-தாராளமய சூழலில் மிகவும் அரிதாகவே பார்க்க முடிந்த, நேரடி நடவடிக்கையில் இறங்கினார்கள்.

இரண்டாவது அம்சம், விவசாயிகளின் இந்த நேரடி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட கால அளவு பற்றியதாகும். தலைநகர் தில்லியின் எல்லைப்பகுதிகளில் ஒரு ஆண்டு முழுவதும் அவர்கள் முகாமிட்டார்கள். வரும் காலத்தில், இதனை ஆய்வுக்கு உட்படுத்தும் ஆய்வாளர்கள், இந்த அற்புதமான சாதனையை சாத்தியமாக்குவது எவ்வாறு சாத்தியமானது என்ற புதிரை அவிழ்ப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. எப்படியும், இந்தச் சாதனை, கொண்டாட்டத்திற்குரிய ஒன்றுதான்.

தமிழில்: சிந்தன்

இந்தியாவின் தொடரும் வேளாண் கிளர்ச்சி: மார்க்சீய புரிதலை நோக்கி

பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா

அறிமுகம்

கடந்த ஆறுமாதங்களுக்கும் மேலாக, கடும் குளிரையும், பின்னர் கூடிவரும் வெப்பத்தையும், பரவும் பெரும் தொற்றையும், அடக்குமுறை அரசையும் மிகுந்த வீரத்துடனும் விவேகத்துடனும்  எதிர்கொண்டு பல லட்சக்கணக்கான விவசாயிகள் ஒன்றுபட்ட, நாடு தழுவிய கிளர்ச்சியை அமைதியாக, அதேசமயம் வியக்கத்தக்க ஒற்றுமையுடனும் உறுதியுடனும்  நடத்திவருகின்றனர். இந்தியாவில் தேச விடுதலை போராட்டத்திற்குப்பின் இத்தகைய மிகப்பெரிய அளவிலான, உறுதியான, நீண்ட போராட்டத்தை நாடு கண்டதில்லை. அதுமட்டுமல்ல. அகில இந்திய அளவில் இத்தகைய வலுவான விவசாயிகளின் போராட்டம் நடந்துவருவதுபோல்  சமகால உலகில் வேறு எங்கும் கடந்த பல பத்தாண்டுகளில் வெகுமக்கள் போராட்டம்  நடக்கவில்லை என்றே கூறலாம்.

போராடும் விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகள் என்ன?அண்மையில் மத்தியில் ஆளும் பாஜக அரசு பாராளுமன்ற ஜனநாயக நெறிமுறைகளை புறம் தள்ளி  நிறைவேற்றிய மூன்று  விவசாயிகள் விரோத, மக்கள் விரோத சட்டங்கள் ரத்து செய்யப்பட வேண்டும். இச்சட்டங்களில் ஒன்று, விவசாயிகளுக்கு ஓரளவாவது விளைபொருளுக்கு விலை கிடைப்பதற்கு உதவும் வேளாண் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தும் குழுக்கள் (ஏ பி எம் சி  – APMC)தொடர்பான சட்டத்தை விவசாயிகளுக்கு விரோதமாகவும் பெரு வணிகர்களுக்கு சாதகமாகவும் திருத்தியுள்ளது. இன்னொரு சட்டம், ஒப்பந்த விவசாயம் தொடர்பாக பன்னாட்டு – இந்நாட்டு  பெரும் வேளாண் வணிக கம்பனிகளுக்கு சாதகமான மாற்றங்களை செய்துள்ளது. மூன்றாவது சட்டம், அத்தியாவசியப் பண்டங்கள் சட்டத்தை நீர்த்துப்போகச்செய்யும் திருத்தங்களை அமலாக்கியுள்ளது. இந்த மூன்று திருத்தப்பட்ட சட்டங்களுமே வேளாண்துறையில் அந்நிய, இந்திய பெருமுதலாளிகள் வேகமாக ஆதிக்கம்பெற வழிவகுக்கும் நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டுள்ளன. வேளாண்துறையை கார்ப்பரேட்மயமாக்குவதே இச்சட்டங்களின் இலக்காகும். இவற்றால் விவசாயிகளில் ஆகப்பெரும் பகுதியினருக்கு நன்மை ஏதும் இருக்காது என்பது மட்டுமல்ல; கடும் பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பும் உண்டு என்பதே உண்மை. இவற்றின் பாதிப்பு விவசாயிகள் என்ற வகையிலும், நுகர்வோர் என்ற வகையிலும் ஏற்படும். மின் உற்பத்தி மற்றும் விநியோகம் தொடர்பான சட்ட திருத்தங்களும் விவசாயிகளுக்கு பெரும் ஆபத்தாக அமையும் என்பதையும் விவசாயிகள் நன்கு அறிந்துள்ளனர். இந்த நான்கு சட்டங்களை முழுமையாக ரத்துசெய்ய வேண்டும் என்பது  போராட்டத்தின் மையமான கோரிக்கையாகும். இன்னொரு மிக முக்கியமான கோரிக்கை, வேளாண் விளைபொருட்களின் விலை நிர்ணயம் தொடர்பானதாகும். 2006 ஆம் ஆண்டு நடுவண் அரசிடம் அன்றைய அரசால் அமைக்கப்பட்ட, பேராசிரியர் மா. சா. சாமிநாதன் தலைமையிலான தேசிய விவசாயிகள் ஆணையம் சமர்ப்பித்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட குறைந்த பட்ச ஆதரவு விலைக்கான சூத்திரம் அமலாக்கப்படவேண்டும் என்பதும், இது சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்படவேண்டும் என்பதும் போராடும் விவசாயிகளின் கோரிக்கை ஆகும்.

மிகக்கடினமான சூழலில் சளைக்காமல் நடைபெற்றுவரும் இத்தகைய வீரம் செறிந்த வேளாண் கிளர்ச்சியைப் பற்றிய மார்க்சீய புரிதலை நோக்கி நாம் பயணிக்க வேண்டியுள்ளது. அந்த முயற்சியின் ஒரு துவக்கம் தான் இந்தக்கட்டுரை.

மார்க்சீய பார்வையில் இந்தியாவின் வேளாண் பிரச்சினை

இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் திட்டம் வேளாண் பிரச்சினை பற்றி பின்வருமாறு கூறுகிறது:

  • இந்திய மக்கள் முன் உள்ள பிரதான தேசீய பிரச்சினை வேளாண் பிரச்சினை ஆகும். இப்பிரச்சினையைத் தீர்க்க புரட்சிகர மாற்றம் தேவை. கிராமப்புறங்களில் நிலவும் நிலப்பிரபுத்துவம், வர்த்தக மற்றும் வட்டி சுரண்டல், சாதி மற்றும் பாலின ஒடுக்கு முறை ஆகியவற்றை அழித்தொழித்தலை இலக்காகக் கொண்ட முழுமையான, தீவிரமான வேளாண் சீர்திருத்தம் இப்புரட்சிகர மாற்றத்தின் பகுதியாகும். வேளாண் பிரச்சினையை முற்போக்கான, ஜனநாயக முறையில் தீர்க்காதது மட்டுமல்ல; இப்பிரச்சினையை எதிர்கொள்ளவே இயலவில்லை என்பது இந்தியாவின் முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ ஆட்சியின் கையாலாகாத்தனத்தை பறைசாற்றுகிறது. (பத்தி 3.15)
  • வேளாண் உறவுகளை பொறுத்தவரையில், கிராமப்பகுதிகளில் முதலாளித்துவ உறவுகளின் வளர்ச்சி பிரதான அம்சமாக உள்ளது. இதன் தன்மை கிராமப்புற உழைக்கும் மக்களில் கணிசமான பகுதியினர் கூலி  தொழிலாளிகளாக மாறியுள்ளதும், ஊரக மக்கள் தொகையில் விவசாயத்தொழிலாளர்களின் சதவிகிதம் பெரிதும் அதிகரித்திருப்பதும், சந்தைக்கான உற்பத்தியும்  விவசாயிகள் மத்தியில் ஏற்றத்தாழ்வுகள் வேகமாக உயர்வதும் ஆகும். மேலும் பாரம்பர்யமாக குத்தகை செய்துவரும்  விவசாயிகள் நிலவெளியேற்றம் செய்யப்படுவது;  கிராமப்புற பெரும் செல்வந்தர்கள் – குறிப்பாக நிலப்பிரபுக்கள் – வேளாண் மற்றும் அத்துடன் தொடர்புகொண்ட நடவடிக்கைகளில் அதிக அளவில் மறுமுதலீடு செய்வதன் மூலம் முன்பு இல்லாத அளவிற்கு பெருமளவிலான மூலதன மறு உற்பத்திக்கான அடித்தளம் போடப்படுவது ஆகியவையும் நிகழ்கின்றன.(பத்தி 3.18)

கட்சி திட்டம் இவ்வாறு நிலப்பிரபுத்வத்தையும் நிலக்குவியலையும் தகர்க்க வேண்டியதன் அவசியத்தையும் இதனை பெருமுதலாளிகள் தலைமையிலான முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ இந்திய அரசு செய்திட முற்றிலும் தவறியுள்ளதையும், விடுதலைக்குப்பின் வந்த ஐம்பது ஆண்டுகளில் கிராமப்புறங்களில் முதலாளித்துவ உறவுகள் கணிசமாக வளர்ந்துள்ளதையும் சுட்டிக்காட்டுகிறது.

மேலும், தாராளமய கொள்கைகள் அமலாகி வரும் கடந்த 30 ஆண்டுகளில் வேளாண் உற்பத்திக்கு அரசு முன்பு அளித்துவந்த இடுபொருள் உள்ளிட்ட மானியங்கள், விவசாய உற்பத்திக்கு உதவும் பொதுத்துறை முதலீடுகள், விளைபொருட்களுக்கு கட்டுபடியாகும் விலை, வேளாண் விரிவாக்க அமைப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு மூலம் மகசூல் உயர்வு, நிறுவனக்கடன் வசதி, உறுதியான கொள்முதல் உள்ளிட்ட அனைத்து ஆதரவுகளும் பெரும்பாலும் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளன. நில உச்ச வரம்பு சட்டங்கள் நீர்த்துப்போகும் வண்ணம் திருத்தப்பட்டது மட்டுமின்றி, பல மாநிலங்களில் பன்னாட்டு, இந்நாட்டு பெரும் ஏகபோகங்களின் கைகளில் நிலங்கள் மிகக்குறைந்த தொகைக்கு நீண்டகால பயன்பாட்டுக்கு ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. விதைகள், உரம் மற்றும் பூச்சி கொல்லி மருந்துகள் உள்ளிட்ட இடுபொருட்கள், அனைத்து வேளாண் உபகரணங்கள், வேளாண் தொழில்நுட்பங்கள் என அனைத்து வேளாண்சார் துறைகளிலும் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு ஏகபோக பெரும் கம்பெனிகள் நுழைவதற்கும் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டிக்கொள்ளவும் தாராளமய கொள்கைகள் ஊக்குவிக்கின்றன. 1990களின் இறுதியிலிருந்து உலக வர்த்தக அமைப்பின் விதிகளுக்கு கட்டுப்பட்டு வேளாண் பொருட்களின் மீதான இறக்குமதி அளவு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, அவை வரம்பின்றி இந்தியாவிற்குள் இறக்குமதியாகலாம் என்ற நிலை உருவாகி, விவசாய விளைபொருட்களின் விலைகள் பெரும் வீழ்ச்சியையும், அதிகமான ஏற்ற இறக்கங்களையும் சந்தித்து வருகின்றன. ஆக, ஒருபுறம் இடுபொருட்களின் விலை உயர்வு, மறுபக்கம் விளைபொருட்களின் விலை வீழ்ச்சி, அரசின் ஆதரவு விலகலால் பொது முதலீடுகள் வெட்டப்பட்டு, மகசூல் உயர்வு வேகம் குறைவது, அதிகரித்துவரும் பெரும் வேளாண் வர்த்தக கம்பனிகளின் ஆதிக்கம் ஆகியவை இந்தியாவின் கிராமங்களில் புதிய முரண்களையும் ஏற்படுத்தியுள்ளன.

கொல்கத்தா சிறப்பு மாநாட்டிற்குப் பின்

வேளாண் வர்க்க உறவுகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருவதை 2014இல் கொல்கத்தாவில் நடைபெற்ற கட்சியின் சிறப்பு மாநாடு சுட்டிக்காட்டியது. இதனைத் தொடர்ந்து, கட்சியின் மத்தியக்குழு 2017 ஜனவரியில் கூடி, வேளாண் அரங்கப்பணிகள் குறித்து  நிறைவேற்றிய ஆவணத்தில்  சில முக்கிய கருத்துக்களை முன்வைத்தது:

  • கிராமப்பகுதிகளில்,  நிலப்பிரபுக்கள், பெரும் வேளாண் முதலாளிகள், பெரும் காண்டிராக்டர்கள் மற்றும் பெரும் வணிகர்கள் ஆகிய பிரிவினரை உள்ளடக்கிய   செல்வந்தர்களின் கூட்டணிதான் ஆதிக்க வர்க்கமாக உள்ளது. வேளாண் இயக்கம் மற்றும் கிராமப்புற வர்க்க போராட்டம் ஆகியவற்றின் வளர்ச்சி இந்த நிலப்பிரபுக்கள் – கிராமப்புற செல்வந்தர்கள் கூட்டுக்கு எதிரான போராட்டங்கள் மூலம் தான் நிகழும்.
  • ஏழை மற்றும் நடுத்தர விவசாயிகளில் பலர் வேளாண் மற்றும் இதர துறைகளில் கூலி வேலை செய்கின்றனர். கிராமப்புற உழைப்புப்படையில் கணிசமான பகுதியினர் கரத்தால் உழைப்பவர்கள். கிராமப்புற செல்வந்தர் கூட்டத்தை எதிர்த்துப் போராட விவசாயத் தொழிலாளர்கள், ஏழை விவசாயிகள், நடுத்தர விவசாயிகள், வேளாண் அல்லாத துறைகளில் பாடுபடும் கரத்தால் உழைப்பவர்கள், கைவினைஞர்கள் மற்றும் இதர கிராமப்புற ஏழைகளை உள்ளடக்கிய விரிவான ஒற்றுமையை கட்ட வேண்டும்.
  • அனைத்து விவசாயிகளுக்கும் பொதுவான பிரச்சினைகளான விளைபொருளுக்கு தக்க விலை மற்றும் கொள்முதல், கடன் நிவாரணம் போன்றவை மீதான இயக்கங்கள் நடத்தப்படவேண்டும். மறுபுறம், விவசாயத்தொழிலாளிகள், ஏழை மற்றும் நடுத்தர விவசாயிகள், இதர உழைக்கும் மக்கள் நலன்களை மையப்படுத்தியதாக நமது பணிகளின் தன்மை ஆக்கப்படவேண்டும். நிலப்பிரபுக்கள்மற்றும் பெரிய முதலாளித்துவ விவசாயிகளின் கோரிக்கைகளில் இருந்து நமது கோரிக்கைகள் தெளிவாக வேறுபடுவதோடு, இந்த கிராமப்புற பணக்கார வர்க்கத்திற்கு எதிரான கோரிக்கைகளையும் நாம் முன்வைக்கவேண்டும். சமூக ஒடுக்குமுறைகளை எதிர்த்துப் போராட வேண்டும். இதில் விவசாய சங்கமும் விவசாயத் தொழிலாளர் சங்கமும் முன்னணியில் இருக்க வேண்டும். பெண்விவசாயிகள் மற்றும் பெண் விவசாயத் தொழிலாளர்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளுக்காகவும், பாலின பாகுபாட்டையும் ஆணாதிக்க முறைமையையும் எதிர்த்தும் போராட வேண்டும். அரசின் நல திட்டங்களின் பயன்  உழைப்பாளி மக்களை முழுமையாக சென்றடைவதற்கும் கூட்டுறவு அமைப்புகளை ஜனநாயகப்படுத்தி வலுப்படுத்துவதற்கும் நாம் செயலாற்ற  வேண்டும்.
  • மாநில நிலைமைகளுக்கு ஏற்றவாறு, விவசாயத் தொழிலாளர்கள் அமைப்பு மட்டுமின்றி அனைத்து கிராமப்புற உடல் உழைப்பு தொழிலாளிகளுக்கான அமைப்புகளும் உருவாக்கப்பட வேண்டும். விவசாய தொழிலாளர் சங்கம், ஊரக தொழிலாளர் சங்கம், விவசாய சங்கம் ஆகியவை இணைந்து பொது பிரச்சினைகளின் மீது ஒன்றுபட்ட போராட்டங்களை நடத்த வேண்டும். இது கிராமப்புற செல்வந்தர் வர்க்கத்தை எதிர்கொள்ள மிகவும் அவசியம்.
  • தாராளமய கொள்கைகளையும் ஆளும் வர்க்கங்களையும் எதிர்த்த வர்க்கப் போராட்டங்களை வலுப்படுத்துவதுடன், வகுப்புவாத அபாயத்தை எதிர்ப்பதும் விவசாயிகள் மற்றும் இதர அனைத்து கிராமப்புற உழைக்கும் மக்களின் ஒற்றுமையைக் கட்ட அவசியம் ஆகும் .

மார்க்சீயப் பார்வையில் வேளாண் கிளர்ச்சி

புதுதில்லியின் எல்லைப்பகுதியில் தற்போது நடந்துகொண்டிருக்கும் வேளாண் கிளர்ச்சி இந்திய விவசாய இயக்கத்தின் வரலாற்றில் என்றென்றும்  நீங்காப்புகழ் பெற்றதாகத் திகழும். அமைதியான இக்கிளர்ச்சி சாதனைகள் பலவற்றை செய்துள்ளது. சாதி, மதம், மொழி, இனம் தாண்டிய விரிவான ஒற்றுமையை கோடிக்கணக்கான விவசாயிகள் மத்தியில் இக்கிளர்ச்சி சாதித்துள்ளது. வடமாநிலங்களில் மதவெறி அரசியலை தற்காலிகமாகவாவது பின்னுக்குத் தள்ளியுள்ளது. பெருமளவில் பெண்விவசாயிகளின் பங்கேற்பை பெற்றுள்ளது. கிளர்ச்சியை வழிநடத்தும் கூட்டுத் தலைமை தொழிலாளர் அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து கூட்டு இயக்கங்களை திட்டமிட்டு நடத்தியுள்ளது. எல்லையற்ற பணபலம் கொண்ட ஆர்எஸ்எஸ் – பாஜக அமைப்புகளும், அவற்றின் தலைமையில் இயங்கும் மத்திய அரசும் அதன் அடிமையாக செயல்படும் ஊடகங்களும் கிளர்ச்சிக்கும் அதன் தலைமைக்கும் எதிராக நடத்திய அவதூறு பிரச்சாரங்களையும் அடக்குமுறைகளையும் பிரித்தாளும் சூழ்ச்சிகளையும் இன்றுவரை வெற்றிகரமாக முறியடித்துள்ளது. ஆளும் வர்க்கங்களுக்கும் அவர்களது அரசுக்கும் பெரும் சவாலாக இக்கிளர்ச்சி அமைந்துள்ளது. தற்பொழுது உள்ள அரசுக்கு மிக  நெருக்கமாக உள்ள அம்பானி மற்றும் அதானி ஆகிய  இரு பெரும் ஏகபோக முதலாளிகளை பெயர் சொல்லி இவர்கள் நலனுக்காக மக்கள் விரோத வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று பகிரங்கமாகவே  கிளர்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இவ்விரு பெருமுதலாளிகள் தங்களுக்கும் இச்சட்டங்களுக்கும் தொடர்பில்லை என்று சொன்னாலும், இச்சட்டங்களால் பெரும் பயன் அடையக்கூடிய இடத்தில் இம்முதலாளிகள் உள்ளனர் என்பதை ஊடகங்களில் வெளியாகியுள்ள ஆய்வு கட்டுரைகள் மற்றும் இதர தரவுகள் மூலமாக அறிய முடிகிறது. கிளர்ச்சியின் ஆகப்பெரிய சாதனை கொரோனா பெரும் தொற்று உருவாக்கியுள்ள மிகக்கடினமான சூழலிலும், மிகப்பெரிய அளவிற்கு விவசாயிகளைப் பங்கெடுக்க வைத்ததும் நாட்டு மக்களில் பாதிப்பேருக்கு இன்றளவும் வாழ்வாதாரமாக உள்ள வேளாண் துறை மீதும், அத்துறையில் பெரும் சேதம் விளைவித்து வரும் அரசின் தவறான தாராளமய கொள்கைகள் மீதும், நாட்டு மக்களின் கவனத்தைத் திருப்பி அதனை அன்றாடப் பேசுபொருளாக ஆக்கியதும் ஆகும்.

எனினும், மார்க்சீயப் பார்வையில் இப்பிரச்சினைகளை பரிசீலித்தால், நடப்பு நிகழ்வுகள் ஒட்டுமொத்த இந்திய அரசியல் பொருளாதாரத்தில் ஏற்பட்டுவரும் முதலாளித்துவ வளர்ச்சியின் முரண்களுடன் நெருக்கமான தொடர்புடையவை என்பது தெளிவாகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் பொருளாதாரம் எதிர்கொண்டுவரும் நெருக்கடி மேலும் மேலும் ஆழமடைந்துவருகிறது. முப்பது ஆண்டுகளாக அமலாக்கப்பட்டுவரும் தாராளமய கொள்கைகள் இந்தியாவின் வேளாண் நெருக்கடிக்கு மிக முக்கிய காரணம் என்பது உண்மை. வேளாண் நெருக்கடி பெரும் பகுதி விவசாய குடும்பங்களையும் கிராமப்புற உழைக்கும் மக்களையும் கடுமையாக பாதித்துள்ளது என்பதும் உண்மை. இவற்றின் மிகத்துயரமான வடிவம்தான் லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்பட்டிருப்பது. அதேசமயம் இக்காலத்தில் முதலாளித்துவ உறவுகள் வேளாண் மற்றும் கிராமப்புற பொருளாதாரத்தில் பெருமளவு வளர்ந்துள்ளன என்பதும் உண்மை. இதனால் நிலபலமும், பணபலமும், சமூக ஆதிக்க வலுவும் கொண்ட ஒரு சிறுபகுதியினர் – பெரும் செல்வந்தர்கள் – முதலாளித்துவ நிலப்பிரபுக்களாகவும் நவீன முதலாளித்துவ விவசாயிகளாகவும் வளர்ந்துள்ளனர். கிராமத்தின் பொருளாதாரம், சமூகம், அரசியல்,கல்வி, ஆரோக்கியம் என அனைத்துத் தளங்களிலும் இவர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இவர்கள் தங்கள் உபரிகளை விவசாயத்தை நவீனப்படுத்தவும், இயந்திரமயமாக்கவும், மகசூலை உயர்த்திக்கொள்ளவும், விவசாயம் சார்ந்த, சாராத லாபம் தரும் பல நடவடிக்கைகளை (பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவ மனைகள், ரியல் எஸ்டேட் தொழில், அரவை ஆலைகள், பால் பண்ணைகள், வேளாண் விளைபொருட்களுக்கு மதிப்புக்கூட்டி விற்பது போன்ற) துவக்கி நடத்தவும், கடந்த இருபதுக்கும் மேலான ஆண்டுகளில் களமிறங்கியுள்ளனர். கணிசமான பகுதி விவசாயிகளுக்கு பெரும் நட்டம் ஏற்பட்டாலும், இந்த செல்வந்தர் கூட்டத்திடம் செல்வங்கள் குவிகின்றன. நவீன வேளாண்மை நிகழ்கிறது.

 பாஜக ஆட்சியில் வேளாண் துறைக்கு அளிக்கப்பட்டுவந்த சலுகைகள் முந்தைய ஆட்சிகளை விட அசுர வேகத்தில் பறிக்கப்பட்டுள்ளன. பெட்ரோலிய கச்சா எண்ணையில் இருந்து உருவாகும் அனைத்து இடுபொருட்களின் விலைகள் பாய்ச்சல் வேகத்தில் அதிகரித்துள்ளன. மோடி அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையும், குளறுபடியானதும் விலை உயர்வை தீவிரப்படுத்தியதுமான ஜி எஸ் டி அமலாக்கமும், முறைசாராத்துறைகளை பெரிதும் பலவீனப்படுத்தி, மக்களின் வாங்கும் சக்தியை சுருக்கி, கிராக்கியை  சரிய வைத்துள்ளன; வேலையின்மையை பெரிதும் அதிகரித்துள்ளன. இத்தகைய நெருக்கடியான சூழலில் விளைபொருட்களுக்கு தக்க விலை மற்றும் முழுமையான கொள்முதல் என்ற கோரிக்கைக்கும் கடன் ரத்து என்ற கோரிக்கைக்கும் விவசாயிகள் மத்தியில் வலுவான ஆதரவு உருவாகியுள்ளது. பொருளாதார மந்தம் தீவிரமாகியுள்ள நிலையில் விவசாயத்திற்கு வெளியே வாழ்வாதாரம் காண்பதும் கடினமாகியுள்ள சூழலில், வேளாண்குடியினருக்கு விரோதமான சட்டங்களை மிகுந்த அவசரத்துடன், ஜனநாயக விரோதமான முறையில் மத்திய அரசு இந்தக் கொடிய கொரோனா காலத்தில் நிறைவேற்றியது விவசாயிகள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியதில் வியப்பில்லை. விவசாயத்தை முழுமையாக முதலாளித்துவ சந்தையின் திருவிளையாடல்களுக்கு விட்டுவிடுவோம்;பெருமுதலாளிகளின் ஆடுகளமாக ஆக்கிடுவோம் என்பதே இச்சட்டங்களின் உள்ளடக்கம் என்பதை பணக்கார விவசாயிகள் உட்பட அனைத்து விவசாயிகளும் புரிந்துகொண்டனர். நிறைவேற்றப்பட்டுள்ள சட்டங்கள் விவசாயத்தையும் விவசாயிகளையும் பன்னாட்டு இந்நாட்டு பெரும் கம்பெனிகளின் ஆதிக்கத்திற்கு படிப்படியாக ஆட்படுத்தும் என்ற உணர்வு போராடும் விவசாயிகள் மத்தியில் வலுவாக உள்ளது. இக்காரணங்களால் பணக்கார விவசாயிகளும், ஒருபகுதி பெரிய முதலாளித்துவ விவசாயிகளும் கூட இப்போராட்டத்தில் பங்கெடுக்கின்றனர். இக்கிளர்ச்சி பெரும்பகுதி விவசாயிகளின் நலனைக் காக்கும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளதால் இடதுசாரி விவசாய அமைப்புகள் இக்கிளர்ச்சியில் முக்கிய பங்கு ஆற்றி வருகின்றனர். விவசாயிகளின் ஒற்றுமையைக் கட்டவும், விவசாயத் தொழிலாளர்கள் கோரிக்கைகளைக் கொண்டு செல்லவும், தொழிலாளர் அமைப்புகளுடன் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவும், இக்கிளர்ச்சியில் இடதுசாரி சக்திகள் ஆக்கபூர்வமான பங்காற்றி வருகின்றனர். விவசாயிகள் மீதும் தொழிலாளிகள் மீதும் பொதுத்துறை மீதும் ஒரே நேரத்தில் ஆட்சியாளர்கள் கடும் தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டுள்ள இன்றைய அரசியல் சூழலில் விவசாயிகளின் கிளர்ச்சியும் அதனை விவசாயி-தொழிலாளி கூட்டணி என்ற திசைவழியில் கொண்டு செல்ல இடதுசாரி சக்திகள் முனைவதும் வரவேற்க வேண்டிய, முற்போக்கான அம்சங்கள்.

மார்க்சீய நிலைபாட்டில் இருந்து பரிசீலிக்கும் பொழுது, இக்கிளர்ச்சி முற்போக்குத்தன்மை கொண்டது; நமது புரட்சிப்பயணத்திற்கு சாதகமானது என்பதை அங்கீகரிக்கலாம். . விவசாயிகளின் பரந்துபட்ட ஒற்றுமை ஒரு சில பிரச்சினைகள் மீது இக்கிளர்ச்சியில் கட்டப்பட்டுள்ளது. விவசாயி-தொழிலாளி கூட்டணியை நோக்கி பயணிக்க இக்கிளர்ச்சி உதவும். அதேநேரத்தில் கிராமப்புற செல்வந்தர்களுக்கெதிரான வர்க்கப் போராட்டத்திற்கு இக்கிளர்ச்சி மாற்று அல்ல என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். நிலச்சீர்திருத்தம், விவசாயத் தொழிலாளர்களின், கிராமப்புற உடல் உழைப்பு தொழிலாளிகளின் பிரச்சினைகள், சமூக ஒடுக்குமுறை ஒழிப்பு, பாலின சமத்துவம், பொருளாதாரச் சுரண்டல் ஒழிப்பு, பழங்குடி மக்களின் உரிமைகள், ஏழை-நடுத்தர விவசாயிகளின் நலன் உள்ளிட்ட பல பிரச்சினைகளில் களப்போராட்டங்கள் நடத்தி தொழிலாளி-விவசாயி கூட்டணியை உருவாக்கி வலுப்படுத்தி பயணிப்பது வேளாண் பிரச்சினைக்கு கட்சி திட்டம் முன்வைக்கும் தீர்வு ஆகும். இது ஒரு நெடிய பயணமும் ஆகும்.

நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளாண் கிளர்ச்சி நமது நெடிய பயணத்தில் முக்கியமான, சாதகமான திருப்பம். அரசின் அடக்குமுறைகளை முறியடித்து இக்கிளர்ச்சியை வெற்றி பெறச் செய்வது நம்முன் உள்ள முக்கிய அரசியல் கடமைகளில் ஒன்றாகும். இக்கிளர்ச்சியில் கட்டப்பட்டுள்ள மக்கள் ஒற்றுமை மிகவும் முக்கியமானது. ஆர் எஸ் எஸ் – பா ஜ க தலைமையிலான மத அரசியல் நடத்தி மக்களை பிளவுபடுத்திவரும் சக்திகளுக்கு எதிராகவும் உழைக்கும் மக்கள் ஒற்றுமையைக் கட்டவும் இக்கிளர்ச்சி மகத்தான பங்கு ஆற்றியுள்ளது. இக்கிளர்ச்சியில் இடதுசாரிகள் முக்கிய பாத்திரம் வகித்து ஒற்றுமையைக் கட்டிக் காப்பதுடன், தாராளமய கொள்கைகள் பற்றிய மாயைகளை கிழித்தெறியவும், வகுப்புவாதத்தை முறியடிக்கவும், சுருங்கச் சொன்னால் கார்ப்பரேட் ஹிந்துத்வாவை அம்பலப்படுத்தவும் திறமையாக செயல்பட வேண்டும்.