திராவிட மாடல் நூல்: தொடரும் விவாதம்

பேரா. வி. முருகன்

 “ திராவிட மாடல்-தமிழ்நாட்டின் அரசியல் பொருளாதரத்திற்கான ஒரு விளக்கம்” என்ற புத்தகத்தை  கேம்ப்ரிரிட்ஜ் பல்கலைக் கழக பிரஸ் இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெளியிட்டது. திரு கலையரசன் அவர்களும் திரு விஜய பாஸ்கரும் இதன் ஆசிரியர்கள். பொருளாதாரம், அரசியல் அறிவியல் மற்றும் சமூகவியல் ஆகிய துறைகளில் சிறந்த ஆராய்ச்சி வல்லுனர்கள் என்று அறியப்படுபவர்கள்.

இந்தப் புத்தகம் அரசியல் அறிவியல்(Political Science) மற்றும் சமூகவியல் (Sociology) துறையில் உள்ள ஆராய்ச்சி வல்லுனர்களுக்காக எழுதப்பட்ட ஓர் ஆராய்ச்சி நூல்.

அமெரிக்காவில் உள்ள பிரௌன் பல்கலைக் கழகத்தில் உள்ள Watson Institute for International and Public Affairs என்ற துறையின் சார்பாக இந்தப் புத்தகத்தைப் பற்றிய விவாதம் நடந்தது. அதை பாட்ரிக் ஹெல்லர்  தலைமை தாங்கி நடத்தினார்.  புத்தகத்தின் ஆசிரியர்கள் என்ற முறையில் விஜய பாஸ்கரும் கலையரசனும் கலந்து கொண்டார்கள். அந்த விவாதத்தில் பார்த்தா சாட்டர்ஜி, ரீனா அகர்வாலா, பார்பரா ஹாரிஸ் ஒய்ட் போன்ற அறிஞர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

இவர்கள் அனைவரும் சமூகவியல் வல்லுனர்கள். மார்க்சீயம் நன்கு தெரிந்தவர்கள். ஆனாலும் அவர்கள் மார்க்சீய சிந்தனையாளர்கள் அல்ல. அவர்கள் முற்போக்கு சிந்தனையாளர்கள். அதனால் இந்த நூலைப் பற்றிய அவர்களது விமர்சனங்கள் மார்க்சிய பார்வையில் சொல்லப்பட்டவை அல்ல. இந்த விவாதம் முற்றிலும் சமூகவியல் பார்வையில் நடந்தவை. அவர்கள் அனைவரும் இந்தியாவில் கள ஆய்வு செய்த அனுபவம் உள்ளவர்கள்.  உதாரணத்திற்கு பாட்ரிக் ஹெல்லர் கேரளத்தைப் பற்றி நீண்ட காலமாக ஆராய்ச்சி செய்பவர்.

இந்தத் தொகுப்பிற்குள் போகும் முன் ஒரு குறிப்பைத் தர வேண்டும். இதில் பல சொல்லாடல்கள் வருகின்றன. Hegemony, Historic block என்ற சொல்லாடல்கள் கி்ராம்ஸி சொல்லும் கருத்துக்கள். Model, Solidarity, Status based inequality, Populism, Social Popular, Economic Popular போன்ற சொல்லாடல்கள் நமக்குப் பரிச்சயமானவைதான். ஆனாலும் இங்கு சமூகவியலுக்குரிய கலைச் சொற்கள் என்ற அர்த்தத்தில் இவை பயன்படுத்தப் பட்டுள்ளன. இந்தியாவைப் பற்றி பேசும் போது Status based inequality என்பது ஜாதீய அமைப்பின் காரணமாக எழும் ஏற்றத்தாழ்வுகளைக் குறிக்கிறது. Model என்ற சொல் நமக்கு மிகவும் பரிச்சயமான சொல். ஆனாலும் சமூகவியலில் இன்னும் நுணுக்கமான விஷயங்களோடு தொடர்புடையவை.  பாட்ரிக் ஹெல்லர் மற்றும் பார்பரா ஹாரிஸ் வொய்ட் ஆகிய இருவரும் திராவிட மாடல் என்ற சொல்லாடலில் வரும் மாடல் என்ற கருத்தை மறுக்கிறார்கள். அதன் பொருள் சமூகவியலுக்குரிய கலைச்சொல்லாக மாடல் என்ற சொல்லைப் பார்க்கும்போது திராவிட மாடல் என்ற சொல்லாடலில் அது பொருந்தாது என்பதாகும்.  

 Solidarity என்பது பல வேறுபாடுகளைத் தாண்டி சில அடையாளங்களின் அடிப்படையில் ஒரு அணியாகத் திரள்வது. பிராம்மண எதிர்ப்பு, இந்தி/ சமஸ்கிருத எதிர்ப்பு போன்ற அடையாளங்களின் அடிப்படயில் இங்கு ஒன்று திரள்வது.  தங்களுடையேயுள்ள முரண்பாடுகளைக் கடந்து ஒரே அணியில் திரள்வது. உதாரணத்திற்கு,  பிராமாணரல்லாத முதலாளிகளும் தொழிலாளர்களும் ஒரே அணியில் திரள்வது. முதலாளிகளால் பாதிக்கப்பட்டாலும்  முதலாளிகளோடு போவதற்கு  தொழிலாளர்கள் இசைவு தெரிவிப்பது.  கலையரசனும் விஜய பாஸ்கரும் இந்த சொல்லைப் பயன்படுத்தவில்லை. அவர்கள் கிராம்ஸியின் Historic Block சொற்களைத்தான் பயன்படுத்துகின்றனர்.

 இணைய தளத்தில் இவற்றைப் பற்றி தேடினால் சமூகவியல் துறையிலேயே இந்தக் கலைச்சொற்களைப் பற்றிய ஒருமித்த கருத்துக்கள் இல்லை. இது இயற்பியல், உயிரியல் போன்ற இயற்கை அறிவியலுக்கு மாறானது.

இந்தப் புத்தகத்தை அறிமுகப்படுத்தி அதன் நோக்கம், அவர்கள் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்ட பொருள், அவர்களது ஆய்வு முறைகள், அவர்களுடைய ஆய்வு முடிவுகள் ஆகியவற்றை சுருக்கமாக வழங்கினார்கள்.

ஆசிரியர்கள் வழங்கிய அறிமுகம்.

  1. உலகில்  சில பகுதிகளில் பொருளாதார வளர்ச்சி ஏற்படும் அதே வேளையில் மனித வளத்தில் வளர்ச்சியில்லை. அதே போல் மனித வளர்ச்சி ஏற்படும் நாடுகளில் பொருளாதார வளர்ச்சி ஏற்படுவதில்லை. இது ஏன்?
  2. ஒரு சமூகத்தில் சமூக அந்தஸ்துகள் (இந்தியாவில் இது ஜாதிய அமைப்பைக் குறிக்கிறது) காரணமாக ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்து வெற்றி பெரும் நாடுகளில் பொருளாதார வளர்ச்சி ஏற்படுவதில்லை. அதே போல் பொருளாதார வளர்ச்சி ஏற்படும் நாடுகளில் சமூக அந்தஸ்துகள் (இந்தியாவில் இது ஜாதிய அமைப்பைக் குறிக்கிறது) காரணமாக ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெறுவதில்லை. இது ஏன்?

இந்த நிலைதான், பொதுவாக,  பெரும்பாலான மூன்றாம் உலக நாடுகளில் உள்ளது.  அரசியல் அறிவியலில் மற்றும் சமூகவியலிலும் இந்தக் கேள்விகளுக்குப் பதில் தேடும் வகையில் தொடர்ந்து ஆய்வுகள் நடைபெறுகின்றன.  அதில் ஒரு பகுதியாகத்தான் இந்தத் புத்தகத்தையும் பார்க்க வேண்டும்.

 இந்தப் புத்தகத்தில் வலியுறுத்தப்படும் முக்கியமான கருத்து:   தமிழ் நாட்டில் பொருளாதார வளர்ச்சி, மனித வளத்தில் வளர்ச்சி, (சமூக அந்தஸ்துகள் காரணமாக) ஜாதிய அமைப்பு காரணமாக ஏற்பட்ட ஏற்றத்தாழ்வுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி ஆகிய மூன்று விஷயங்களையும் தமிழ்நாட்டில்   திராவிட  இயக்கம்  சாதித்துள்ளது. இதையே திராவிட மாடல் என்று இந்நூலின் ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.  (இதன் பொருள் திராவிட மாடல் என்ற ஒரு மாடல் இருக்கிறது என்றும், அது  மற்ற மாடல்களில் இருந்து வேறுபடுகின்றது  என்றும் கூறுவதாகும்) இந்த மாடலை மற்ற தென் உலக நாடுகளிலும் செயல் படுத்தலாம்..

(தென் உலக நாடுகள் என்பது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு தெற்கே உள்ள நாடுகள் என்பவையாகும். மூன்றாவது உலக நாடுகள் என்று எடுத்துக் கொள்ளலாம்)

இதுதான் இந்த புத்தகத்தின் சாராம்சம்.

அரசியல் அறிவியல் என்ற துறைக்குரிய ஆய்வு என்ற முறையில் இதற்கு முதலில்  செய்ய வேண்டியது:  தமிழ் நாட்டில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்பதையும்,   மனித வளத்தில்  வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்பதையும், ஜாதீய அமைப்பின் காரணமாக இருந்த ஏற்றத் தாழ்வுகள் குறைந்துள்ளன என்பதையும், போதிய தரவுகள் மூலம் நிறுவதல் செய்ய வேண்டும் . அப்படி தமிழ்நாட்டில் நடந்துள்ளது என்று தரவுகளைக் கொடுத்து நிரூபிக்க முயற்சித்துள்ளார்கள்.

 இரண்டாவதாக, எப்படி இது நடந்தது என்பதற்கான விளக்கத்தை தர வேண்டும்.  அவர்கள் தரும் விளக்கத்தின்படி, திராவிட மாடல் என்ற ஒன்று உள்ளது என்றும், அதன் மூலம் இந்த சாதனைகள் நடந்துள்ளன என்றும் வாதிடுகிறார்கள்.

மூன்றாவதாக, இந்த மாடலில் உள்ள குறைகள், அதன் வரம்புகள் இது எதிர்காலத்தில் எப்படி மேற்கொண்டு செல்லக்கூடும்  என்று சொல்கிறார்கள். அவர்களின் வாதங்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.

தமிழ்நாட்டில்  எழுந்த ஒரு தனித்துவம் வாய்ந்த சமூக நீதி பற்றிய கருத்தோட்டம் இந்த வளர்ச்சிப் பாதைக்கான முக்கியமான காரணமாகும்.  இது சில அடையாளங்களை அடி்ப்படையாகக் கொண்டு இயங்கிய இயக்கத்தில் இருந்து அரசியல் இயக்கமாக மாற உதவியது. 

 பலவித வேறுபாடுகள் கொண்ட கீழ்நிலை ஜாதிகளில் உள்ள அனைவரையும் சமஸ்கிருதத்தை மையமாகக் கொண்ட உயரடுக்கினரை எதிர்த்து,  கிராம்ஸி கூறும் historic block என்ற கருத்தாக்கத்தின் கீழ், ஒரு அணியாக  திரட்டப்பட்டதுதான் தமிழ்நாட்டின் வெற்றிக்கு முக்கியமான காரணம். தேர்தலுக்கு அப்பாற்பட்டு சமூக அமைப்பு விமர்சிக்கப் பட்டது.  திட்டமிட்டு  தொடர்ந்து நடத்தப்பட்ட அரசு தலையீடுகள் மூலம் ஜாதியின் அடிப்படியில் அமைந்த தொழில் உறவுகள் தகர்க்கப்பட்டதாக உரையில் சொல்லப்பட்டது.

கல்வி, சுகாதாரம், மூலதனம் மற்றும் உழைப்பாளர்கள் ஆகிய நான்கு தளங்களில் தமிழ்நாட்டில் நடந்தவைகளைப் பற்றி சுருக்கமாக ஆசிரியர்களின் உரையில் கூறப்பட்டது.

தேசிய அளவில் கல்வி உயரடுக்கினரை மையப்படுத்தி வளர்ந்தது. அதனால் பள்ளிக் கல்விக்குப் பதிலாக உயர்கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஆனால் தமில்நாட்டில், இதற்கு மாறாக, பள்ளிக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் உயர்கல்வி விரிவாக்கப்பட்டது. இடஒதுக்கீடு மூலமாக உயரடுக்கினருக்கு பாரபட்சமாக இருந்த கல்வியை ஜனநாயகப்படுத்தியது.

 சுகாதாரத்தில் வலுவான ஆரம்ப சுகாதார அமைப்புகள் செயல்பட்டன என்று சுட்டிக் காட்டப் பட்டது.

ஜாதிய அமைப்பின் காரணமாக பிறப்பின் அடிப்படையாலே சிலர் முதலாளிகளாகவும் சிலர் தொழிலாளர்களாகவும் உருவாகிய சூழ்நிலையில், உற்பத்தி தொழில்துறையின் வளர்ச்சியின் மூலம்தான் சமூகநீதி கிடைக்கும் என்று கணிக்கப்பட்டது. ஜாதிகளின் அடிப்படையில் அமையும் தொழில் வளர்ச்சி, நவீனத்துவத்தை தராது என்று கணிக்கப்பட்டது. கிராமங்களில் இருந்து நகர்ப்புறத்திற்கு மக்கள் புலம்பெயர்வது ஊக்குவிக்கப்பட்டது.  

மூலதனத் திரட்டலுக்கு எதிராக இல்லாமல், மூலதனக் குவியல் ஊக்குவிக்கப்பட்டது மூலதனக் குவியல் தொடர்ந்து நடந்தது. மூலதனக் குவியல் ஜனநாயகப்படுத்தப் பட்டது. தாழ்த்தப் பட்ட ஜாதியினரும் மூலதனக்குவியலில் பங்கேற்றனர். இந்தியாவில் உள்ள பட்டியல் இனத்தைச் சேர்ந்த தொழில்முனைவர்களில் நான்கில் ஒரு பங்கினர் தமிழ்நாட்டில் உள்ளார்கள் என்று சுட்டிக் காட்டப்பட்டது.

பணியிடங்களில் உழைப்பவர்களின்  நிலை சரியாக இல்லாவிட்டாலும், பணியிடங்களுக்கு வெளியே அரசு செய்த பல பொதுநலத்திட்டங்கள் ( உதாரணத்திற்கு பொது விநியோக அமைப்பு) மூலமாக அவர்கள் வாழ்வு மேம்படுத்தப்பட்டது. மொத்தத்தில், இதை இடது பாப்புலிசம் என்று  ஆசிரியர்கள் கூறினார்கள்.

உரையாடலில் கலந்துகொண்ட ஆய்வாளர்களின் கருத்தை சுருக்கமாக காண்போம்.

பார்த்தா சாட்டர்ஜி:

இந்தப் புத்தகம் முக்கியமாக சொல்வது பாபுலிஸம் வளர்ச்சியைக் கொடுக்கும் என்பதாகும். பல மாடல்கள் உள்ளன. இதோடு  திராவிட மாடல் என்று மற்றொரு மாடல் உள்ளது என்று இந்தப் புத்தகம் கூறுகிறது. மற்ற இடங்களில் இதை செயல் படுத்தலாம் என்று கூறுகிறார்கள்.  பண்பாட்டுத் துறைகளில்  நடக்கும் சில இயக்கங்களை அடித்தளமாக கொண்டு ஏற்படும் வளர்ச்சிப் போக்கு சில ஜனநாயக விளைவுகளை தர வாய்ப்புகள் உண்டு என்று இந்தப் புத்தகம் கூறுகிறது.

 இந்தப் புத்தகத்தில் கூறப்பட்டிருப்பவைகளின் அர்த்தம் என்ன? சொத்துடைமைகளில் உள்ள ஏற்றத்தாழ்வுகளுக்குப் பதிலாக சமூக அந்தஸ்த்துகளில் ( இங்கு ஜாதி அடிப்படையில்)  உள்ள ஏற்றத்தாழ்வுகளை முக்கியமானவையாக எடுத்துக்கொள்வது விளிம்புநிலை மக்களுக்கு வளர்ச்சியை தரும். ஐரோப்பாவில் உள்ள அனைவருக்குமான பொதுநலத்திட்டங்களுக்குப் பதிலாக, குறிப்பிட்ட பகுதி மக்களை மையப்படுத்தி பொது நலத்திட்டங்களை அமுல்படுத்தலாம்.

 திராவிடம் மற்றும் தமிழர்களின் கலாசாரம் என்ற அடிப்படையிலும், பிரமாணியம் மற்றும் சமஸ்கிருதம் ஆகியவற்றை உள்ளடக்கிய கலசாரம் என்ற அடிப்படையிலும், சமுதாயம் இரண்டாக  எதிரெதிராகப் பிளவுபட்டுள்ளது. இந்த  எதிர்நிலை பொதுவான இயல்பறிவாக ( Dravidan common sense) உருவாகிவிட்டது. வளர்ச்சிக்கான செயல்திட்டம் இந்த எதிர்நிலைகளின் அடிப்படையில் கட்டப்படுகிறது. முடிவில், இதை இடது பாப்புலிசம் என்று கூறுகிறார்கள்.

 இது எப்படி இடது பாப்புலிசம் ஆகும்? (பார்த்தா சாட்டர்ஜியின் கேள்வி) கம்யூனிஸ்டுகள் மூலதன திரட்டலை ஒப்புக் கொள்ள மாட்டார்கள். இங்கு தரப்படும்  மொத்த வாதமும் மூலதனத் திரட்டலுக்கு வசதி செய்து தருவோம் என்பதுதான். நிலச்சீர்திருத்திற்குப் பதிலாக கல்வியை அனைவரும் அடையக்கூடியதாக்குவது என்பதும், ஜாதி  அமைப்பின் காரணமாக எழும் ஏற்றத்தாழ்வுகளைத் தாக்குவது என்பதும் செய்தால் போதும். மற்ற ஏற்றதாழ்வுகளும் மற்ற பிரச்சனைகளும் அப்படியே இருக்கும். தொழிலாளர்கள் பணிபுரியும் இடத்திற்கு அப்பால் வெளியே அவர்களுக்கு தேவையான அளவிற்கு தகுந்தாற் போல் அரசு சில திட்டங்களை அமுல்படுத்துவதன் மூலம் அவர்களுக்கு  உதவுவது. இது மேற்கு வங்ககத்தயோ அல்லது கேரளாவையோ போன்றதல்ல. அந்த மாடல்களில் நிலச்சீர்திருத்தின் மூலம் உற்பத்தி பொருளாதாரத்தை மாற்றுவது. ஆனால் இவர்கள்  வேறு திசையினைக் காட்டுகிறார்கள்.  இந்த மாடலின் வரம்புகள் என்ன? எந்த அளவிற்கு மற்ற இடங்களில் இந்த மாடலை அமுல்படுத்த முடியும்? அவர்களே இந்த மாடலின் வரம்புகளையும், அது எதிர்காலத்தில் செல்லக் கூடிய சாத்தியக்கூறுகளையும்  இந்தப் புத்தகத்தில் விவாதித்துள்ளார்கள்.

அதிமுக பிரிந்து வந்த பிறகு அவர்கள் மதத்தையும் கலாச்சாரத்தையும்  விமர்சிக்கும் பகுத்தறிவு இயக்கத்தை கைவிட்டார்கள். இது பற்றிய விவாதம் இந்தப் புத்தகத்தில் இல்லை. இறுதியான கேள்வி: கலாச்சாரத்தை அடிப்படையாக இந்தப் பரிசோதனை தீர்ந்து விட்டதா? திராவிட மாடலில்  வளர்ச்சி தொடருமா?

ஒவ்வொரு இடத்திற்குத் தகுந்தாற் போல் வளர்ச்சி தரும் மாடல் இருக்க வேண்டும். அது அந்த இடத்தின் கலாச்சாரத்தை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். இதுதான்,  இந்தப் புத்தகம் தரும் பாடம்.

ரீனா அகர்வாலா:

திராவிட மாடல் என்று ஏதோ ஒன்று இருக்கக் கூடும் என்று நினத்தாலும், இந்தப் புத்தகத்தை படித்து முடித்த பிறகு, திராவிட மாடல் என்றால் என்ன என்று  புரியவில்லை. தமிழ்நாட்டில் மேலிருந்து நடந்ததிற்கும்,  கீழிருந்து நடந்ததிற்கும், மாறி மாறி இந்தப் புத்தகம் விவாதிக்கிறது. மேலிருந்து அரசு செய்த தலையீடுகள் மிகவும் பாராட்டப்படுகிறது.  தலைவர்கள் தந்த சில கருத்துக்கள், பல்வேறு நலவாரியங்களை அமைத்தது;  இட ஒதுக்கீட்டில்  செய்தது; சுகாதாரத்தில் செயல்பட்டது; அடிப்படை கட்டமைப்பினை நன்கு உருவாக்கியது போன்ற விஷயங்கள் அதிகமாகப் பாராட்டப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் விளிம்பு நிலை மக்களுக்கு பல நன்மைகள் கிடைத்துள்ளன என்பதை ரீனா அகர்வாலா ஒப்புக் கொள்கிறார். ஆனால் தமிழ்நாட்டின் பாப்புலிஸம் இந்தப் புத்தகத்தில் பாராட்டப்படும் அளவைப் பார்க்கும்போது, அது என்ன அப்படிப்பட்ட பாப்புலிஸம் என்று கேட்கத் தோன்றுகிறது. நிச்சயமாக அது கம்யூனிசம் இல்லை. புத்தகத்தின் ஆசிரியர்கள்  மூலதனத்தை தாக்க மறுக்கிறார்கள் என்பதை ரீனா அகர்வாலா சுட்டிக் காண்பிக்கிறார்.   இது ஒரு வகையான சமூக ஜனநாயகம்தானே.  ஆனாலும் தமிழ்நாட்டின் பாப்புலிசம் சமூக ஜனநாயகமில்லை என்று  கூறப்பட்டுள்ளது. . அது எப்படி? இன்றிருக்கும் பிரச்சனைகளுக்கும் ஏற்றத்தாழ்வுகளுக்கும், எந்த சமூகக் கட்டமைப்புகள் காரணமோ, அந்த கட்டமைப்புகளை மாற்ற முயற்சிக்காமல், அவற்றிற்குள்ளேயே செயல்படுவதுதான் அனைத்து சமூக ஜனநாயகங்களுக்கும் பொதுவானது.  கருணாநிதியின் ஆட்சியில்  தொழிலாளர்கள் மீது  தி,மு.க, அடக்குமுறையை ஏவி விட்ட வரலாறு உள்ளது என்று ரீனா அகர்வாலா சுட்டிக் காண்பிக்கிறார்.

 தமிழ்நாட்டில் எப்படி பாப்புலிசம் அமுல்படுத்தப் பட்டது? அரசியல் தலைவர்கள் எதற்காக ஜாதிய அமைப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு   விடுதலை பெற்று தர வேண்டும்? தேர்தலில் வெற்றி பெறுவதுதான் முக்கியமான தூண்டுகோலாக இருக்க வேண்டும். அ.தி.மு.க வை  பாப்புலிச அரசு இல்லை என்று கூறப்பட்டுள்ளது. அது ஏன்? சொல்லப் போனால் இரு இயக்கங்களும், போட்டி போட்டுக் கொண்டு, பாப்புலிசத்தை அமுல் படுத்தின. தேர்தலின் பங்களிப்பை ஆசிரியர்கள்  குறைத்து மதிப்பிடுகிறார்கள். அதற்குப் பதிலாக, பல்வேறு பிரிவினரின் பிரதிநிதிகளும் அரசில் பங்கெடுப்பதன் மூலம் பாப்புலிசம் அமுல்படுத்தப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. அப்படியானால்  அடையாள பிரதிநிதித்துவ மாடலில் இருந்து திராவிட மாடல் எப்படி வேறுபடுகிறது?

 தமிழ் நாட்டின் பாப்புலிசத்தின் மற்றொரு அம்சம், கீழிருந்து நடக்கும் இயக்கம் ஆகும்.. சமூக நீதியின் எந்த அம்சம்  தமிழ்நாட்டின் பாபுலிசத்திற்கு முக்கிய பங்களித்துள்ளது? வர்க்க ரீதியான முரண்பாடுகளைத் தாண்டி, அனைத்து வர்க்கங்களின் இசைவை, சில அடையாளங்களின் அடிப்படையில் உள்ள, கூட்டொருமைப்பாடு ( solidarity) வழியாகப்  பெறுவது அவசியமானது என்று வாதிடப்படுவது  போல் தெரிகிறது. வளர்ச்சிக்கு கூட்டொருமைப்பாடு முக்கியமானதா? வர்க்கரீதியாக ஒன்றிணப்பதை விட ஜாதிய ரீதியாக ஒன்றிணப்பது முக்கியமான யுக்தியா?

நவீன கல்வியை எல்லோருக்கும் வழங்குவதும், அரசு வேலைகளில் அதிக வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதும், நிலசீர்திருத்தத்தை விட முக்கியமானது என்று கூறப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் பணிபுரியும் இடத்தில் சரியாக இல்லாததை, பணியிடங்களுக்கு அப்பால் வெளியில் வலுவான நலத்திட்டங்கள் மூலம் தொழிலாளர்களின் வாழ்வு மேம்படுத்தப்பட்டுள்ளது என்று  கூறப்பட்டுள்ளது..

 இந்த மாடல் மற்ற இடங்களில் பின்பற்ற முடியுமா? அப்படி பின்பற்ற வேண்டுமா?

பார்பரா ஹாரிஸ் ஒயிட்:

 இந்தப் புத்தகம் எழுப்பும் மையக் கருத்து:  கலாசாரம் எப்படி ஒரு சமுதாயத்தின் பொருளாதாரத்தை பாதிக்கும்?  அரசியல் ரீதியாக  கடுமையாக உழைத்து பிராமணர்கள் அல்லாதவர்களால் ஒரு சமூகத் தொகுதி (block) உருவாக்கப்பட்டது. ஒரு கருத்தியலின் ஆதிக்கம் (hegemony) மூலம் பொருளாதார  மேம்பாடும், அரசு தலையீடுகள் மூலம் மூலதன திரட்டலையும், அமைப்பு ரீதியான மாற்றங்களையும் அடைய முடியும் என்று இந்தப் புத்தகம் கூறுகிறது. கீழ்நிலைப்படியில் உள்ள ஜாதியினரிடம்   ஏற்படும் மூலதனம் திரட்டல் மூலம் சமுதாய அமைப்பில் மாற்றங்கள் ஏற்படும்.  தொழிலாளர்களின் போராட்டங்கள் பொருளாதார வளர்ச்சியை நிர்மாணிக்கும் இயந்திரம் என்ற கருத்து திட்டமிட்டு மறைக்கப்பட்டு அதற்குப் பதிலாக திராவிடக் கூட்டணியைப் மையப்படுத்திய விளக்கத்தை  முன்னிலைப்படுத்தப்படுகிறது.

பாப்புலிசம் சிறு உற்பத்தியை (petty production) ஊகுவிக்கிறது. அது மூலதன திரட்டலையும் உருவாக்குகிறது. முதலாளித்துவத்தால் பாதிக்கப்படுவோருக்கு ஏதோ ஒரு வகையில் நிவாரணத்தைக் கொடுத்து முதலாளித்துவத்திற்கு ஆதரவு கொடுகிறது. உரிமைகளின் அடிப்படையில் உருவாகும் பாப்புலிசமும், அரசின் தலையீட்டால் உருவாகும் பாப்புலிசமும்,  முற்போக்கான இடது பாப்புலிசத்தைக் கொடுக்கிறது என்று புத்தகம் சொல்கிறது. தமிழ்நாட்டில் நிலவும் ஊழலோடு திராவிட மாடல் எப்படி இணைந்து இருக்க முடியும்? 

பாட்ரிக் ஹெல்லர்:

இது ஒரு மாடல் அல்ல. இது ஒரு வளர்ச்சிப் பாதை. இதில் வேறு எங்கும் காணமுடியாது என்று சொல்லக்கூடிய தனித்துவம் இல்லை. இது போன்று பல இடங்களில் நடந்துள்ளது. குறிப்பாக, பிரேசிலுக்கும் தமிழ்நாட்டிற்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. பிராமணர் அல்லாதவர்களிடம் உள்ள வர்க்கங்களிடம் உள்ள முரண்பாடுகளைத் தாண்டி  கலாச்சாரத்தின் ஒரு சமூகத் தொகுதி கட்டப்பட்டுள்ளது. இதே யுக்தியை வலதுசாரிகளும் செய்ய முடியும்.

இந்த நான்கு அறிஞர்களும் சமூக அறிவியலின்படி இந்தப் புத்தகத்தை விமர்சித்துள்ளார்கள்.  மிக விரிவான முறையில் எல்லாத் துறைகளிலும் கொடுக்கப் பட்டுள்ள தரவுகளுக்காக இந்த புத்தகத்தை அனைவரும் பாராட்டியுள்ளனர். தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சியும் மனித வள வளர்ச்சியும் நடந்துள்ளது என்று இந்தப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளதை இவர்கள் யாரும் மறுக்கவில்லை.   இந்த புத்தகம் மிக சாதுரியத்துடன் எழுதப்பட்ட புத்தகம் என்றுதான் நான் கருதுகிறேன். இது ஒரு வகையில்  அரசியல் அறிவியல்( political science) மற்றும் சமூகவியல் (sociology) வல்லுனர்களுகாக எழுதப்பட்ட ஆராய்ச்சி என்ற தோற்றமளிக்கிறது. அதே சமயத்தில் தி.மு.க. விற்கு  அரசியல் ரீதியாக நல்ல லாபம் தரும் நூலாகவும் அமைந்துள்ளது. அவர்களின் பிராச்சாரத்திற்கு கிடைத்த ஒரு வரப்பிராசாதம். குறிப்பாக முதலாளித்துவத்தின் வளர்ச்சியை, சாதனையாக, கருத்தியல் ரீதியாக காட்டும் நூல். இடதுசாரி சித்தாந்தத்திற்கு மாற்றாக, இது திராவிட மாடலை முன்னிறுத்துகிறது.