திராவிட கட்சி அரசுகளுடைய பொருளாதார கொள்கைகள் பற்றி

பேராசிரியர் வெங்கடேஷ் ஆத்ரேயா

காங்கிரஸ் ஆட்சிக்காலம்

இந்தியா விடுதலை பெற்ற பின் இருபது ஆண்டுகள் (1947 -1967) தமிழ் நாட்டில்  காங்கிரஸ் ஆட்சி செய்தது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தமிழக பொருளாதாரத்தில் சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்தன.

ஒன்றிய ஆட்சியும் மாநில ஆட்சியும் ஒரே கட்சியின் கையில் இருந்த அக்கால கட்டத்தில் கிராமப்புறங்களில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் நடந்துவந்த தொடர் போராட்டங்களின் விளைவாக சில மாற்றங்கள் ஏற்பட்டன. குறிப்பாக, பழைய ஜமீந்தாரி மற்றும் இனாம் நில உறவுகள் பலவீனம் அடைந்தன. குத்தகை விவசாயிகள் நிலைமையில் சில முன்னேற்றங்கள் நிகழ்ந்தன. கம்யூனிஸ்டுகளின் தலைமையில் குத்தகை விவசாயிகள் நடத்திய பெரும் போராட்டங்களின் விளைவாக குத்தகை விவசாயிகள் நில வெளியேற்றம் என்பது ஓரளவிற்கு தடுக்கப்பட்டது. பங்கு சாகுபடி முறையில் குத்தகை விவசாயி பங்கு கணிசமாக உயர்ந்தது. வலுவான போராட்டங்கள் நீண்ட காலம் நடந்த கீழத்தஞ்சை பகுதிகளில் நிலங்களின் உடமை குத்தகை விவசாயிகளுக்கு கிடைத்தது. ஆனால் நில உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டு அதன் அடிப்படையில் நிலமற்ற மற்றும் ஏழை விவசாயிகளுக்கு நிலம் பகிர்ந்தளிப்பது   தொடர்பாக விவசாய இயக்கம் போராடியும் சிறிதளவு முன்னேற்றம் தான் காணமுடிந்தது. காங்கிரஸ் அரசு பெரும் நில உடமையாளர்களை ஊக்குவித்து முதலாளித்துவ அடிப்படையில் விவசாய வளர்ச்சி காண முயற்சித்தது. ஒன்றிய அரசு அளவிலும் நவீன விவசாயமும் மகசூலில் உயர்வும் வேளாண் பொருட்கள், குறிப்பாக உணவு தானியங்கள், சந்தைபடுத்தப்படுவதும் முதலாளித்துவ வளர்ச்சிக்கு அவசியம் என்பது உணரப்பட்டது. பலநோக்கு பாசன திட்டங்கள் மூலம் அணைகள் கட்டப்பட்டு பாசன விரிவாக்கம் நிகழ்ந்தது. கிராமப்புறங்களில் மின்சார வசதி விரிவாக்கப்பட்டது. இது நிலத்தடி நீர் பயன்பாட்டை அதிகப்படுத்தியது. இவை ஓரளவு வேளாண் உற்பத்தி வளர்ச்சியை சாத்தியப்படுத்தின. தொழில் துறையில் ஐந்தாண்டு திட்டங்கள் மூலம் அரசு முதலீடுகளும் தனியார் பெருமுதலாளிகளை ஊக்குவித்து தனியார் துறை முதலீடுகளும் நிகழ்ந்தன. தமிழகத் தொழில் வளர்ச்சிக்கு கம்யூனிஸ்ட் இயக்கம் குறிப்பிடத்தக்க பங்கு ஆற்றியது. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், பாரத மிகுமின் நிறுவனம் போன்றவை இந்த முயற்சிகளுக்கு சான்றாக இன்றும் உள்ளன. முதல் மூன்று ஐந்தாண்டு திட்டங்கள் மூலம் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டன. கல்வி மற்றும் பொது சுகாதாரம் ஆகிய துறைகளிலும் மாநில காங்கிரஸ் அரசு சில முயற்சிகளை மேற்கொண்டது.   எனினும், மாநிலத்தை காங்கிரஸ் ஆட்சி செய்த காலத்தில் தமிழக பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் அகில இந்திய விகிதத்தை விட சற்று குறைவாகத்தான் இருந்தது. (இதற்கு நாட்டின் பல பிறபகுதிகள் நாடு விடுதலை அடைந்தபொழுது மிகவும் பின்தங்கிய நிலையில்  இருந்ததால் அவற்றின் வளர்ச்சி விகிதம் அதிகமாக இருந்தது என்பதும் ஒரு காரணம்)   

 1967இல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் தி மு க தலைமையிலான தேர்தல் கூட்டணி காங்கிரஸ் கட்சியை வீழ்த்தியது. அறுதி பெரும்பான்மையுடன் திமுக ஆட்சிக்கு வந்தது. அந்த வெற்றியில் கம்யூனிஸ்ட் இயக்கம் உட்பட பல அரசியல் கட்சிகள் திமுகவுடன் இருந்தன என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

தமிழ் நாட்டில் திராவிட இயக்க பின்புலம் கொண்ட கட்சிகள் 1967 ஆம் ஆண்டில் இருந்து ஐம்பத்து ஐந்து ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. இக்காலத்தில் தமிழகம் பல துறைகளில் பொருளாதார வளர்ச்சி அடைந்திருக்கிறது என்பது உண்மை. இந்த வளர்ச்சியின் தன்மையையும் வேகத்தையும் நிர்ணயிப்பதில் ஒன்றிய, மாநில அரசுகளின் கொள்கைகளுக்கு குறிப்பிடத்தக்க பங்கு உண்டு. இந்த 55 ஆண்டு காலத்தில் நிகழ்ந்த பல அரசியல் மாற்றங்களையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். காங்கிரஸ் எதிர்ப்பு வியூகம் அமைத்து 1967இல் ஆட்சிக்கு வந்த திமுக 1971இல் காங்கிரஸ் கட்சியுடன் தேர்தல் உடன்பாடு அமைத்து மீண்டும் ஆட்சிக்கு வந்தது. பின்னர் 1975இல் நெருக்கடிநிலை பிரகடனம் செய்யப்பட்டது. 1976ஆம் ஆண்டு ஜனவரி இறுதியில் ஒன்றிய அரசு திமுக ஆட்சியை கலைத்தது. இதனால் காங்கிரஸ் கட்சியுடன் திமுகவிற்கு முரண் உருவான போதிலும், 1980 இல் நடந்த மாநில மற்றும் மக்களவை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியுடன் உடன்பாடு கண்டு தேர்தலை திமுக சந்தித்தது. இரு திராவிட கட்சிகளுமே உறுதியான காங்கிரஸ் எதிர்ப்பு நிலையையோ, ஒன்றிய அரசின் முதலாளித்துவ வளர்ச்சிக்கான கொள்கைகளை எதிர்க்கும் நிலையையோ கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக எடுக்கவில்லை. இந்த அரசியல் பின்னணியை நாம் நினைவில் கொள்ள வேண்டும். திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகத்தில் நிகழ்ந்துள்ள பொருளாதார வளர்ச்சியின் வர்க்கத்தன்மை குறித்த சில அம்சங்களை நாம் பரிசீலிப்போம்.

நில உறவுகள்

1950கள், 60களில் திராவிட இயக்கம் மிகப் பெரிய அளவிற்கு சிறுதொழில் முனைவோர், வியாபாரிகள், உழைப்பாளி மக்கள், விவசாயிகள் இவர்களை மையப்படுத்திய இயக்கமாக வளர்ந்தது. நிலச்சீர்திருத்தம் உட்பட திமுகவில் பேசப்பட்ட காலகட்டம் அது. இன்னும் சொல்லப்போனால் காங்கிரஸ் கட்சியினுடைய நிலச்சீர் திருத்தங்களை ஏளனம் செய்து, “உச்சவரம்பா? மிச்சவரம்பா?” என்று கேட்ட கட்சி திமுக. ஆட்சிக்கு வந்தவுடனேயே சில சீர்திருத்தங்களையும் அக்கட்சி சட்டரீதியாக மேற்கொண்டது. அது அப்படி செய்திருந்தாலும்கூட, உச்ச வரம்பை 30 ஸ்டாண்டர்ட் ஏக்கர் என்பதிலிருந்து 15 ஆக குறைத்து சட்டம் இயற்றினாலும், தமிழகத்தில் பெருமளவுக்கு நில மறுவிநியோகம் இன்றும் நடக்கவில்லை என்ற ஒரு உண்மையை நாம் கணக்கில் கொள்ள வேண்டும். திமுக இயற்றிய நிலஉறவுகள் தொடர்பான சட்டங்களில் இருந்த விதிவிலக்குகளும், இச்சட்டங்கள் களத்தில் அமலாக்கப்பட்டதில் இருந்த பலவீனங்களும் இந்த நிலைமைக்கு முக்கிய பங்கு அளித்துள்ளன.

நிலச்சீர்திருத்தம் தொடர்பாக காங்கிரசை விமர்சித்த திமுகவும், அதிலிருந்து தோன்றிய அதிமுகவும் நிலச்சீர்திருத்தப் பிரச்சினையில் ஜனநாயகரீதியான முன்னெடுப்புகளை மேற்கொள்ளவில்லை. 1984  பிப்ரவரி கணக்குப்படி தமிழகத்தில் மொத்தம் 2 லட்சத்து நாலாயிரம் ஏக்கர் நிலம் மட்டுமே உபரியாக இருப்பதாக அரசு மதிப்பீடு செய்துள்ளதாகவும், அதில் 89,000 ஏக்கர் மட்டுமே உபரி என்று அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதிலும் 71,000 ஏக்கர் நிலம் மட்டுமே விநியோகிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது. 1979இல் சிதம்பரத்தில் நடைபெற்ற அகில இந்திய விவசாய சங்கத்தின் தமிழக மாநில மாநாடு 20 லட்சம் ஏக்கர் தமிழகத்தில் உபரியாக உள்ளன என்ற உண்மையை வெளிக்கொணர்ந்து, அவற்றை அரசு கையகப்படுத்தவேண்டும் என்று கோரி, பல போராட்டங்களை அடுத்த பல ஆண்டுகளில் மேற்கொண்டது. ஆனால் இன்றுவரை நில உச்ச வரம்பு சட்டங்களில் உள்ள ஓட்டைகள் அடைக்கப்படவில்லை. பல நியாயமற்ற விதிவிலக்குகள் தொடர்கின்றன. குறிப்பாக கோயில் மற்றும் அறக்கட்டளைகள் என்ற பெயரில் பழைய, புதிய நிலப்பிரபுக்கள் குவித்து வைத்துள்ள நிலங்கள் கையகப்படுத்தப்படவில்லை. 1961-62இல் தமிழகத்தில் ஒரு ஹெக்டேருக்கு குறைவாக நிலம் வைத்திருந்தோர் மொத்த நில உடமையாளர்களில் கிட்டத்தட்ட 80%. இவர்களிடம் 20% நிலப்பரப்புதான் இருந்தது. 1981-82இல் இந்த நிலைமையில் மிகச்சிறிய மாறுதலே ஏற்பட்டிருந்தது.

1985 மார்ச் 13 அன்று சட்டப்பேரவையில் ஆற்றிய தனது உரையில் தோழர் கோ. வீரையன் அவர்கள்  தமிழகத்தில் ஒரு விவசாயக் குடும்பத்திற்கு 25 சாதாரண ஏக்கர் புஞ்சை, 15 ஏக்கர் நஞ்சை நிலம் என்ற உச்சவரம்பை நிர்ணயித்து விதிவிலக்குகளை எல்லாம் நீக்கிவிட்டால், சுமார் 20 லட்சம் ஏக்கர் உபரி நிலம் கிடைக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் இன்றுவரை தமிழக அரசு உபரி நிலம் என்று கையகப்படுத்தி விநியோகம் செய்துள்ளது சுமார் 2 லட்சம் ஏக்கர் என்றுதான் ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சித்துறை தரவுகள் தெரிவிக்கின்றன. அண்மையில் அரசு இணைய தளம் தரும் தகவல் என்னவெனில் 2016 பிப்ரவரி முடிய 2,08,442 ஏக்கர்  நிலம் உபரியாக அறிவிக்கப்பட்டு, 1,90, 723  ஏக்கர் விநியோகம் செய்யபட்டிருந்தது.

(இதற்கு நேர் மாறாக இந்திய நாட்டின் நிகர சாகுபடி பரப்பில் 3 சதவீதம் மட்டுமே கொண்டுள்ள மேற்கு வங்கத்தில் இடது முன்னணி ஆட்சி மூலம் நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்ட உச்ச வரம்புக்கு அதிகமான நிலப்பரப்பில் 23 சதவீதம் நிலமற்றோருக்கும் ஏழை விவசாயிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த நில சீர்திருத்தப் பயனாளிகள் 1.5 லட்சம். மேற்கு வங்கத்தில் உச்சவரம்பு நிலம் பெற்ற பயனாளிகள் 15 லட்சம், பங்கு சாகுபடி சீர்திருத்தங்கள் (Operation Barga)  மூலம் பயனடைந்தோர் மேலும் 15 லட்சம், ஆக மொத்தம் 3௦ லட்சம்.)

2010-11இல் தமிழகத்தின் மொத்த கிராம குடும்பங்களில் எழுபது சதத்திற்கும் மேல் நிலம் அற்றவை. நிலம் சாகுபடி செய்வோரை எடுத்துக்கொண்டால், இவர்களில் 78% ஒரு ஹெக்டேர் மற்றும் அதற்கும் குறைவாக சாகுபடி செய்வோர். இவர்களிடம் மொத்த சாகுபடி நிலங்களில் 35% உள்ளது. மறுமுனையில், பத்து ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்வோர் மொத்த சாகுபடியாளர்களில் 2.3% தான். ஆனால் இவர்களிடம் மொத்த சாகுபடி நிலப்பரப்பில் 18.5 சதம் உள்ளது. நிலம் மட்டுமல்ல. நவீன உற்பத்திக்கருவிகளும் ஒரு சிலரிடமே தமிழகத்தில் குவிந்துள்ளன. திராவிட கட்சிகள் தமது ஆட்சி காலங்களில் கிராமப்புறங்களில் முதலாளித்துவ நிலப்பிரபுக்களுக்கும் பணக்கார விவசாயிகளுக்கும் ஏனைய செல்வந்தர்களுக்கும் ஆதரவாகவே செயல்பட்டு வந்துள்ளனர்.

நிலக்குவியல் என்பதைப் பொருத்தவரையில் தமிழகத்தில் திராவிட கட்சிகளின் ஆட்சியில்  பெரிய மாற்றமில்லை என்று மட்டும் சொன்னால் அது பொருத்தமாக இருக்காது. ஏனெனில் அதன் சமூகக் கட்டமைப்பில் முக்கியமான மாற்றமிருக்கிறது. பாரம்பரியமான மேல்சாதி நிலவுடைமையாளர்கள் ஆதிக்கம் குறைந்துள்ளது. இடைச்சாதிகள் கையில் முன்பைவிடக் கூடுதலாக நிலம் உள்ளது. இது குறிப்பிடத்தக்க, ஜனநாயக தன்மை கொண்ட மாற்றம். ஆனால், இது தலித்துகளுக்குப் பொருந்தாது என்பதும் உண்மை. தலித்துகளைப் பொருத்தவரை பெருமளவுக்கு அவர்கள் நிலம் பெறவில்லை என்பதும், தமிழகத்தின் ஒரு எதார்த்தமான உண்மை. திராவிட கட்சிகள் நில உறவுகளை மாற்ற பெரும் முயற்சி எடுக்கவில்லை. இதற்கு ஒரு காரணம் அன்றைய திமுக வின் கிராமப்புற தலைமை என்பது பணக்கார விவசாயிகளிடமும் முதலாளித்துவ விவசாயிகளிடமும் இருந்தது என்பதாகும். இன்றைக்கும் கிராமப்புறங்களில் சாதிஒடுக்குமுறை தொடர்வதற்கு நில ஏகபோகமும் ஒரு காரணம். கிராமப்புறங்களில் அதிகாரங்களை நிர்ணயம் செய்வதில் நிலவுடைமை தொடர்ந்து பங்கு ஆற்றுகிறது.

முதலாளித்துவ வளர்ச்சி

1950கள், 60களில் உற்பத்தி முறைகளில் மாற்றமில்லாமல், பாசனப் பெருக்கம், ஒரு எல்லைக்குட்பட்ட  நிலச்சீர்திருத்தத்தின் காரணமாக கிடைத்திருக்கக்கூடிய கூடுதல் சாகுபடி நிலம் என்ற வகையில், வேளாண் உற்பத்தி பெருகியது. 60களின் நடுப்பகுதிக்குப் பிறகு, வேளாண் உற்பத்தியின் வளர்ச்சி என்பது பிரதானமாக பசுமைப் புரட்சி என்ற ஒரு பதாகையின் கீழ் அது இன்றைக்கு பேசப்பட்டாலும், முக்கியமாக சில தொழில்நுட்ப மாற்றங்களை மையப்படுத்தியதாக இருந்தது. ஒன்றிய அரசினுடைய பெரிய பங்கும் அதில் இருந்தது. நவீன உற்பத்தி முறைகள் புகுத்தப்பட்டன. அதற்கு முக்கியமாக நீர்வளம் தேவைப்பட்டது. ரசாயன உரங்கள், உயர் மகசூல் விதைகள், உத்தரவாதமான பாசன மேலாண்மை ஆகிய அம்சங்களை உள்ளடக்கிய ஒரு புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டு அது தமிழகத்திலும் தனது பங்கை ஆற்றியது. வங்கிகள் நாட்டுடமையாக்கப்பட்டன; வேளாண் விரிவாக்கப்பணி அமைப்பு வலுப்படுத்தப்பட்டது; தேசீய வேளாண் ஆய்வு அமைப்பு வலுப்பெற்றது; இடுபொருட்களுக்கு மானியம் வழங்கப்பட்டது; அரசு உத்தரவாத விலை கொடுத்து நெல் மற்றும் கோதுமை பயிர்களை கொள்முதல் செய்தது ஆகிய நடவடிக்கைகள் ‘பசுமை புரட்சியின் பகுதியாக இருந்தன. தமிழகத்தில் வேளாண்துறையில் மகசூல் அதற்குப் பிறகு உயர்ந்தது என்பது உண்மை.

இன்றைக்கு கிராமப்புறங்களில் விவசாயம் அல்லாத துறைகளில் பணிகள் உருவாகி இருக்கின்றன. அவை அதிகரித்துக்கொண்டும் வருகின்றன. தமிழகத்தில், குறிப்பாக மற்ற பல்வேறு துறைகளில் ஏற்பட்ட வளர்ச்சியின் காரணமாக நகர கிராம இணைப்பு முன்னேறி இருக்கிறது. இது திராவிட இயக்கங்களின்  ஆட்சியில் மட்டும் நிகழவில்லை, முன்பும் நிகழ்ந்தது. போக்குவரத்து, கல்வி, பொதுவிநியோகம் எல்லாம் உழைப்பாளி மக்கள் மீது நிலச்சுவான்தார்களின் அதிகார பலத்தைக் குறைத்திருக்கின்றன. ஆனால், அது அறவே மறைந்துவிட்டது என்றோ, அல்லது இந்த அதிகார பலம் குறைக்கப்பட்டதனால், கிராமப்புற செல்வங்களை உருவாக்கும் உழைப்பாளி மக்களை சுரண்டுவதில் நிலவுடைமையாளர்களுக்குப் பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்றோ சொல்ல முடியாது. இன்னும் சொல்லப்போனால் அரசினுடைய பல்வேறு திட்டங்களையும் பயன்படுத்தி கிராமங்களில் நிலவுடைமையாளர்களால் பெருமளவுக்கு முன்னேற முடிந்துள்ளது. தமிழகத்து கிராமங்களில் பெரும் நிலக்குவியல், பீகார், ஜார்கண்ட், சட்டிஷ்கர், மத்திய பிரதேச  பாணியில் இல்லாவிட்டாலும், இன்றைக்குப் பல நூறு ஏக்கர்கள் வைத்திருக்கும் நிலப்பிரபுக்கள் தமிழகத்தில் இல்லை என சொல்ல முடியாது.

அகில இந்திய முதலாளித்துவ வளர்ச்சியில் பங்கு

தமிழகத்தை வளர்ச்சி விகிதத்தை ஒட்டுமொத்தமாகப் பார்த்தோமானால் குஜராத், மகாராஷ்டிரா, மாநிலங்களுக்கு அடுத்தபடியாக மாநிலத்தினுடைய மொத்த உற்பத்தி மதிப்பு அதிகரித்து வந்துள்ளது. ஆனால் உற்பத்தி வளர்ச்சியின் தன்மை எவ்வாறு இருக்கிறது? காங்கிரஸ் ஆட்சியிலும், திராவிடக் கட்சிகளின் ஆட்சியிலும் முதலாளிகளும் நிலப்பிரபுக்களும் ஆதாயம் பெற்றுள்ளார்கள் என்பதுதான் பொதுவான உண்மை.

திராவிட கட்சிகளின் ஆட்சிகள் ஒன்றிய அரசின் தாராளமய கொள்கைகளுக்கு முரணாக செயல்பட்டது இல்லை. ஏனெனில் அவர்கள் அந்தக் கொள்கையினுடைய பல அம்சங்களை ஏற்றுக் கொண்டவர்களாக மாறியுள்ளனர். தொடர்ந்து பல பத்தாண்டுகளாக திராவிட கட்சிகள் மாறி மாறி ஒன்றிய அரசில் அங்கம் வகித்தும் உள்ளனர்.

தாராளமய காலத்தில் ஊரக வர்க்க உறவுகள்

இந்தியாவின் பிற பகுதிகளைப் போலவே தமிழகத்திலும் கிராமப்புறங்களில், கடந்த 30 ஆண்டுகளில், தனியார்மய, தாராளமய, உலகமய காலகட்டத்தில் வேளாண்துறையில் கிராமப்புறங்களில் உள்ள வர்க்க உள்முரண்பாடுகளில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. கிராமப்புறங்களில் இன்றைக்கு பழைய பாரம்பரிய பத்தாம்பசலி நிலப்பிரபுக்கள் கிட்டத்தட்ட இல்லை எனச் சொல்லலாம். முதலாளித்துவ நிலப்பிரபுக்கள் இருக்கிறார்கள். அதோடு சேர்ந்து பாரம்பரியமாக கிராமப்புற நில ஏகபோகத்தில் பங்கேற்காத, ஆனால், பிறகு அரசின் திட்டங்களைப் பயன்படுத்தி வளர்ந்துள்ள, விவசாயம் சார்ந்த, விவசாயம் சாராத பல குடும்பங்கள் உள்ளே வந்துள்ளார்கள். அவர்கள் நவீன உற்பத்தி முறைகளைப் பயன்படுத்தி வலுவான முதலாளித்துவ விவசாயிகளாக இடம் பெற்றிருக்கிறார்கள். அதைப்போலவே, பணக்கார விவசாயிகளும் இருக்கிறார்கள்.

தற்சமயம் விவசாயத்தில் அநேகமான செயல்பாடுகள் இயந்திரமயமாகிவிட்டது. விவசாயத்தில் கூலி வேலை என்பது குறைவாகத்தான் உள்ளது. இன்றைய கிராமங்களில் விவசாயக்கூலித் தொழிலாளி என்ற பிரிவை வரையறுக்க முடியவில்லை. ஏனெனில் கிராமப்புற உடல் உழைப்பு தொழிலாளிகள் பல வேலைகளை செய்கிறார்கள். இவர்கள் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. 2011 சமூகப் பொருளாதார கணக்கெடுப்பின்படி கிராமப்புற மொத்த உழைப்பாளிகளில் 65 சதவிகிதம் பிரதானமாக  விவசாயத்தை சார்ந்திருப்பவர்கள். அதில் ஒரு 20 சதம்தான் சாகுபடியாளர்கள். மீதம் 45 சதம் விவசாயத் தொழிலாளி என்ற கணக்கு வருகிறது. இவர்கள் அனைவரும் விவசாயத் தொழிலாளிகளாக மட்டும் இல்லை. உண்மை என்னவென்றால் நிலமற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்களது வருமானம் கூலிக்கான உடல் உழைப்பை சார்ந்துள்ளது. கிராமப்புறங்களில் நிகழ்ந்துள்ள நில இழப்பு வலுவான வர்க்க வேறுபாடுகளை உருவாக்கியுள்ளது. தாராளமய வளர்ச்சி வேலையின்மை பிரச்சினையை தீவிரமாக்கியுள்ளது.  குஜராத், மகாராஷ்டிரா அளவிற்கு இல்லாவிட்டாலும் தமிழகத்திற்கும் இது பொருந்தும்..

தமிழக கிராமங்களில் தமிழக நகரங்களில் தொழில்வளர்ச்சி தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், அதைவிட அதிகமாக இந்த மூன்றாம் நிலைத் தொழில்கள் வளர்ந்துள்ளன. இதனால் இரண்டாம் நிலையின் பங்கு குறைந்துள்ளது. 1960-61இல் தமிழகத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் தொழில்துறையின் பங்கு 20.47 சதமாக இருந்தது. ஐந்தில் ஒரு பங்காக இருந்தது. இது வேகமாக அதிகரித்து 90-91ல் மூன்றில் ஒரு பங்கானது. 33.1 சதம். 1995-96 வரும்போது, 35 சதமாக உயர்ந்தது. ஆனால், அதற்குப்பிறகு, தொடர்ந்து அது குறைந்துகொண்டே வருகிறது.

.தமிழக அரசின் முதலீட்டுக் கொள்கைகள் பற்றி பார்ப்போம். இந்தியாவில் தாராளமய கொள்கைகளின் பகுதியாக  உழைப்பாளி மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றன. இது தமிழகத்திற்கும் பொருந்தும். தமிழகத்தின் திராவிட கட்சிகளின் அரசுகள் தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாப்பதில் அக்கறை காட்டவில்லை. பெரும் கம்பனிகளை ஊக்குவித்து முதலீடுகளை கொண்டு வருவது மட்டுமே அரசுகளின் கவனத்தில் இருந்துள்ளது. இதன் பொருள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஏராளமான சலுகைகள் அளிக்கப்படுவது என்பதாகும்.

தமிழகத்தில் கிராமங்களில் வசிக்கின்ற மக்களின் சதவிகிதம்  பிற மாநிலங்களை ஒப்பிடும்போது நிச்சயமாக குறைந்துள்ளது. ஆனால், இன்றும் 50 சதவிகிதம் மக்கள்  கிராமப்புறங்களில் இருக்கிறார்கள். விவசாயத்தையும் சேர்ந்துதான் அவர்கள் வாழ்வாதாரம் இருக்கிறது. விவசாயம் மட்டுமல்ல. விவசாயக் குடும்பங்கள்கூட, விவசாயத்தில் கூலி வேலை, வெளியே கூலி வேலை, சில சிறுசிறு தொழில்கள் நடத்துவது என்று பலவகைகளில் கடுமையாக உழைக்க வேண்டிய நிர்ப்பந்தம் கிராமப்புற உழைக்கும் மக்களுக்கு உள்ளது. மிகக் கடுமையான உழைப்பை செலுத்திய பிறகுதான்  வறுமைக்கோட்டையே எட்டுகிறார்கள். சில ஆண்டுகளுக்குமுன் நடத்தப்பட்ட, ஊரக வேளாண் குடும்பங்கள் தொடர்பான ஒன்றிய அரசின் ஆய்வும் இதனை தெளிவுபடுத்துகிறது.

தொழில் வளர்ச்சியின் வர்க்கத்தன்மை

தொழில் வளர்ச்சியில் முக்கிய அம்சம் என்னவெனில் தமிழக தொழில் வளர்ச்சி வேலை வாய்ப்புகளை வேகமாக அதிகரிக்கும் தன்மையில் இல்லை. ஆட்சிக்கு வந்த காலத்தில் இருந்தே திராவிட கட்சிகள் காங்கிரசைப் போலவே பெருமுதலாளிகளுக்கு ஆதரவாகத்தான் செயல்பட்டனர். 1970களின் துவக்கத்தில் வெடித்த சிம்சன் போராட்டத்திலேயே இதைக் காண முடிந்தது. வால்பாறையில் தேயிலை தொழிலாளர்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டது, நெய்வேலியில் இரும்புக்கரம் என்பதெல்லாம் நாம் சந்தித்த சம்பவங்கள். பின்னர் 1977இல் வந்த எம் ஜி ஆர் அரசு டி வி எஸ் முதலாளிகளுக்கு அளித்த ஆதரவும் இதே வகையானதே. அடுத்துவந்த காலங்களில் ஸ்பிக், ஸ்டெர்லைட் என்று பொதுவான பெருமுதலாளி ஆதரவு நிலையை திராவிட கட்சிகளின் தலைமையிலான மாநில அரசுகள் தொடர்ந்து எடுத்துவந்துள்ளன. தாராளமய கொள்கைகள் அமலாக்கத்திற்கு வந்த பிறகு பெயரளவிற்குக் கூட பொதுத்துறை பாதுகாப்பு, தொழிலாளர் நலன், தொழிலாளர் உரிமைகள் போன்றவற்றிற்கு ஆதரவாக மாநில அரசுகள் செயல்படவில்லை. அதற்கு நேர்எதிராக, தொழில் ஊக்குவிப்பு என்ற பெயரில் வெளிப்படைத்தன்மை எதுவும் இல்லாத புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடுவது, அதன் அடிப்படையில் நிலம்,  நீர், மின்சாரம் உள்ளிட்ட எல்லா வசதிகளையும் சலுகை கட்டணத்தில் இந்நாட்டு, பன்னாட்டு பெருமுதலாளிகளுக்கு அளிப்பது என்பது இரு கழக ஆட்சிகளிலும் தொடர்கிறது. இந்த ஒப்பந்தங்களும் சரி, அவற்றின் மூலம் நிகழ்ந்துள்ள முதலீடுகளும் சரி, வேலை வாய்ப்புகளை பெருக்குவதில் மிகச்சிறிய பங்களிப்பே செய்துள்ளன. தி.மு.க ஆட்சியில் (2007 வாக்கில் என்று நினைவு) ஒரு முறை சட்ட சபையில் 6,000 கோடி ரூபாய் முதலீடு அளவிற்கு போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களால் 20,000 வேலைகள் என்று அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டது. கணக்குப் பார்த்தால் இது ஒரு கோடி ரூபாய் முதலீட்டுக்கு மூன்று பணியிடங்கள் என்று வருகிறது! 2015 செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர் மாநாட்டில் இரண்டு  லட்சத்து  நாற்பத்தி இரண்டாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டதாக சொல்லப்பட்டது. 2016 தமிழ்நாடு பட்ஜெட் உரையில் இந்த முதலீடுகள் மூலம் இரண்டு லட்சத்து எண்பதாயிரம் பணியிடங்கள் உருவாகும் என்று கூறப்பட்டுள்ளது. அப்படியானால் ஒரு கோடி ரூபாய் முதலீட்டிற்கு ஒரு பணியிடம் என்று ஆகிறது! ஆக. நாட்டின் இயற்கை வளங்களை தாரை வார்த்துக் கொடுத்து, அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து, வரிச்சலுகைகளையும் அளித்து பன்னாட்டு இந்நாட்டு பெருமுதலாளிகளை முதலீடு செய்ய அழைப்பது எந்த விதத்திலும் வேலை வாய்ப்பை உருவாக்கிட பயன் தராது என்பது தெளிவு.  ஆனால் சிறு குறு மூலதனங்கள் மூலமும் அரசு முதலீடுகள் மூலமும் வேலை வாய்ப்பை பெருக்கும் வகையிலான தொழில் கொள்கைகளை திராவிட கட்சிகளின் அரசுகள் பின்பற்றவில்லை என்பது தெளிவாகிறது. இவர்கள் மாறி மாறி பங்கேற்ற மத்திய அரசு கூட்டணி அரசாங்கங்களிலும் இந்த பிரச்சனைகளை திராவிட கட்சிகள் எழுப்பவில்லை என்பது மட்டுமல்ல. மத்தியில் கூட்டணி ஆட்சிகளில் பங்கேற்ற பொழுது பொதுத்துறை நிறுவனங்களை பலவீனப்படுத்தும் மத்திய அரசுகளின் தாராளமய கொள்கைகளை எதிர்த்து குரல் எழுப்பவும் இல்லை. எனினும் மக்களின் வலுவான போராட்டங்களின் விளைவாக சில நலத்திட்ட நடவடிக்கைகளை இந்த அரசுகள் மேற்கொண்டு வந்துள்ளன.

இறுதியாக

இன்று நாட்டின் அரசியல் நிலைமைகளை கணக்கில் கொண்டு அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டிய பெரும் கடமை நம் முன் உள்ளது. கடந்த காலம் எப்படி இருந்தாலும், சமகால தேவைகளையும் இன்று உலகளவிலும் இந்தியாவிலும் அம்பலப்பட்டு நிற்கும் ஏகபோக கார்ப்பரேட் ஆதரவு வளர்ச்சிப்பாதையை நிராகரிக்க வேண்டியதன் அவசியத்தையும், மதவெறி அரசியலைக் கையாளும் சக்திகளை முறியடிக்க வேண்டியதன் அவசியத்தையும் உணர்ந்து இடதுசாரி இயக்கங்களுடன் இணைந்து செயல்பட திராவிட கட்சிகளுக்கு வாய்ப்பு உள்ளது.  இது நடக்குமா என்பதை நிர்ணயிப்பதில் வர்க்க, வெகுஜன இயக்கங்களுக்கு முக்கிய பங்கு உண்டு.

இந்தியமக்களின் விடுதலை – கம்யூனிஸ்டுகளின் தெளிவான மாற்றுப்பார்வை

பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா

அறிமுகம்

சுதந்திர இந்தியாவின் எழுபத்தி ஐந்தாம் ஆண்டை அதிகார பூர்வமாக கொண்டாடிவரும் ஒன்றிய அரசின் தலைமை விடுதலை இயக்கத்தில் பங்கேற்காத ஒன்றாகும். இத்தலைமையின் அரசியல்-தத்துவார்த்த முன்னோடிகள் காலனி அரசிடம் மண்டியிட்டு, மன்னிப்புக் கேட்டு, சேவகம் புரிந்தவர்கள். அவர்களது இலக்கு, மதசார்பற்ற, பல்வேறு மொழிவழி தேசீய இனங்களும் தன்னாட்சி பெற்று இணைந்து வாழும் இந்திய ஒன்றியம் அல்ல. மாறாக, பெரும்பான்மை என்ற போர்வையில், இந்துராஷ்டிரா என்ற இலக்கைத்தான் இன்றைய ஆட்சியாளர்களின் அன்றைய குருமார்கள் முன்வைத்தனர். மகாத்மா காந்தி கொலையில் குற்றம் சாட்டப்பட்டு தண்டனையிலிருந்து தப்பிய சவார்கர், முஞ்சே, ஆர் எஸ் எஸ். ஸின் பயங்கர இந்து ராஷ்டிரா இலக்கணத்தை விரிவாக முன்வைத்த கோல்வால்கர் உள்ளிட்ட அனைத்து ஆர் எஸ் எஸ் தலைவர்களுக்கும் எந்த ஒரு கட்டத்திலும் இந்திய மக்களின் விடுதலை இலக்காக இருந்ததில்லை. பன்முக இந்திய தேசத்தின் அரசியல் விடுதலையும் ஆர் எஸ் எஸ்  இலக்காக என்றுமே இருந்ததில்லை.

இந்திய தேசீய காங்கிரசின் விடுதலை இயக்கப் பார்வை

இந்திய விடுதலை இயக்கத்தில் தலைமை பாத்திரத்தை வகித்த காங்கிரஸ் கட்சி அரசியல் விடுதலை என்ற இலக்கை அக்கட்சி துவங்கி பல பத்தாண்டுகள் முன்வைக்கவில்லை. 1885 இல் துவக்கப்பட்ட இந்திய தேசீய  காங்கிரஸ் கட்சி 1930 இல் தான் இந்திய தேசத்தின் முழுவிடுதலை என்ற முழக்கத்தை  முறையாக அதன் அகில இந்திய மாநாட்டில் பிரகடனப்படுத்தியது. மக்கள் எழுச்சியின் காரணமாக விடுதலை முழக்கத்தை இவ்வாறு முன்வைத்தபோழுதும், விடுதலை  பெற்ற இந்தியா எத்தகைய சமூகமாக இருக்கவேண்டும் என்பது பற்றியெல்லாம் காங்கிரஸ் விரிவாகவோ ஆழமாகவோ பேசவில்லை. அடுத்தடுத்து வந்த காலங்களில் விவசாயிகளையும் தொழிலாளிகளையும் இதர பகுதி உழைப்பாளி மக்களையும் விடுதலை இயக்கத்தில் விரிவாக பங்கேற்க வைப்பதற்கு அவர்களது அன்றாட வாழ்வுசார் கோரிக்கைகளையும் முன்வைக்க வேண்டும் என்ற அவசியத்தை காங்கிரஸ் தலைமை, முன்பின் முரணின்றி இல்லாவிடினும் ஓரளவாவது உணர்ந்தது. இதனால் தான் உழுபவனுக்கு நிலம் சொந்தம், குறைந்தபட்சக்கூலி, வேலை நேரம் வரையறுக்கப்படுவது போன்ற பிரச்சினைகள் பற்றி அது பேசியது. 1930களில் மேலை ஏகாதிபத்திய நாடுகள் பெரும் வீழ்ச்சியில் பத்தாண்டு காலம் சிக்கி உழைக்கும் மக்கள் பெரும் வேலையின்மை, வறுமை பிரச்சனைகளை  சந்தித்துக்கொண்டிருந்த காலத்தில் சோசலிச சோவியத் ஒன்றியம் திட்டமிட்ட பொருளாதார வளர்ச்சி மூலம் அனைவருக்கும் வேலையையும், தொடர்ந்து உயரும் வாழ்க்கை நிலையையும் உறுதிப்படுத்திய அனுபவம் இந்திய தேசீய காங்கிரஸ் தலைமையின் ஒருபகுதியினரை சோசலிசம் பற்றியும் திட்டமிடுதல் பற்றியும் பேச வைத்தது. எனினும் காங்கிரஸ் கட்சி விடுதலை இயக்க காலத்திலும், அதன் பின்பும், சொற்களைத் தாண்டி இத்திசைவழியில் வெகுதூரம் பயணிக்கவில்லை. முதலாளித்துவ வளர்ச்சிப்பாதைதான் காங்கிரஸ் கட்சியின் கனவாக விடுதலைபோராட்ட காலத்திலும் அதன் பின்பும் இருந்தது. இதுபற்றி தோழர் இஎம்எஸ் நம்பூதிரிபாத் மிகச்சிறப்பாகவும் தெளிவாகவும் இந்திய சுதந்திரப்போராட்ட வரலாறு என்ற புத்தகத்திலும் நெருக்கடியில் இந்தியாவின் திட்டமிடல் என்ற நூலிலும் விளக்கியுள்ளார்.

எத்தகைய மாண்புகளும் விழுமியங்களும் இந்திய விடுதலை போராட்டத்தில் உயர்த்திப் பிடிக்கப்படவேண்டும் என்பதிலும் காங்கிரஸ் முன்னுக்குப்பின் முரணான நிலைபாடுகளைத்தான் கொண்டிருந்தது. சாதி அமைப்பையும் சமூக ஒடுக்குமுறைகளையும் தீவிரமாக காங்கிரஸ் எதிர்க்கவில்லை. பொதுவாக மதசார்பின்மை என்ற விழுமியத்தை ஏற்றுக்கொண்ட போதிலும் நடைமுறையில் காங்கிரஸ் கட்சி அதனை முரணின்றி பின்பற்றவில்லை. பெரும்பாலும் நிலப்ரபுக்களையும் ஜமீன்தார்களையும் மன்னராட்சிகளையும் எதிர்த்து காங்கிரஸ் களம் இறங்கவில்லை. மாறாக, இந்திய முதலாளிகளின் நலம் காக்கும் நோக்குடனே செயல்பட்ட காங்கிரஸ் இயக்கம், கிராமப்புற ஆதிக்க சக்திகளுடன் மோதலை தவிர்க்கவே முயன்றது. சாதி ஒடுக்குமுறையை தகர்க்கவோ, பழங்குடி மக்களின் உரிமைகளை நிலைநாட்டவோ காங்கிரஸ் தலைமை குறிப்பிடத்தக்க எந்த முயற்சியும் எடுத்ததாக சான்றுகள் இல்லை. விடுதலைக்குப்பின் இந்திய தேசீய காங்கிரஸ் பகிரங்கமாகவே கிராமப்புற பெருநில உடமையாளர்களுடன் சமரசம் செய்துகொண்டது. மக்கள் எழுச்சியின் காரணமாகவும் முதலாளித்துவ வளர்ச்சியின் தேவை அடிப்படையிலும் கிராமப்புற மற்றும் வேளாண் உற்பத்தி உறவுகளில் சில மாற்றங்கள் நிகழ்ந்தன. ஒரு எல்லைக்கு உட்பட்ட நிலச்சீர்திருத்த நடவடிக்கைகளை காங்கிரஸ் மேற்கொண்டது. ஆனால் அடிப்படையில் பெருமுதலாளிகளின் தலைமையிலான முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ வர்க்க ஆட்சியைத்தான் காங்கிரஸ் நடத்திவந்தது. அப்பாதையின் நெருக்கடி 1980 – 1991 காலத்தில் மேலும் மேலும் தீவிரமடைந்த பின்னணியில், பன்னாட்டு அரங்கில் சோவியத் ஒன்றியத்திலும் பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் சோசலிச அமைப்புகள் தகர்க்கப்பட்ட சூழலில், 1991 இல் இருந்து காங்கிரஸ் நவீன தாராளமய கொள்கைகளை தீவிரமாக அமலாக்கியது. இந்த நிகழ்ச்சிப்போக்குகள் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் இந்திய அரசின் வர்க்கத்தன்மை பற்றிய கீழ்கண்ட மதிப்பீடு மிகச்சரியானது என்று நிரூபிக்கின்றன: “இந்திய அரசு முதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்களின் அரசு. இதற்கு தலைமை தாங்குவது பெருமுதலாளிகள். இப்பெருமுதலாளிகள் மேலும் மேலும் கூடுதலாக அந்நிய நிதி மூலதனத்துடன் இணைந்து செயல்படுகின்றனர்.”

இக்கட்டுரையின் நோக்கம் விடுதலை இயக்கத்திலும் அதன் பின்பும் இந்திய தேசீய காங்கிரஸ் எடுத்த பல்வேறு நிலைபாடுகள், அவற்றில் இருந்த முரண்கள் மற்றும் அவற்றின் வர்க்கத்தன்மை ஆகியவற்றை ஆய்வது அல்ல. எனினும் இந்திய நாட்டின் விடுதலை இயக்கத்தையும் இந்திய மக்களின் விடுதலை என்ற இலக்கையும்  பொது உடமை இயக்கம் எவ்வாறு முன்பின் முரணின்றி இணைத்துப் பார்த்தது என்பதை புரிந்து கொள்ள உதவும் வகையில் தேச விடுதலை இயக்கத்திற்கு தலைமை தாங்கிய காங்கிரஸ் கட்சியின் அணுகுமுறை தொடர்பான கருத்துக்கள் இங்கே இடம் பெற்றுள்ளன.

விடுதலை இயக்கத்தில் கம்யூனிஸ்டுகளின் மாற்று பார்வை

இந்திய தேசீய காங்கிரஸ் என்ற அரசியல் அமைப்பின் வாயிலாக இந்திய முதலாளிவர்க்கம் 1885 ஆம் ஆண்டிலேயே அரசியல் களம் புகுந்துவிட்டது. இதற்குப்பின் பல பத்தாண்டுகளுக்குப் பின் தான் நவீன தொழிலாளி வர்க்கம் உருவாகி எண்ணிக்கையில் வேகமாக அதிகரித்த நிலையில், உலகெங்கும், குறிப்பாக ரஷ்யாவிலும் எழுந்த புரட்சிகர அலைகளின் பின்புலத்தில் இந்திய தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் உணர்வும் விடுதலை வேட்கையும் வேகமாக வளர்ந்து அரசியல் களத்திற்கு வருகிறது.1917இல் ரஷ்யாவில் வெடித்த மகத்தான அக்டோபர் புரட்சியின் தாக்கம் இதில் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தது.

1921இல் காங்கிரஸ் முன் கம்யூனிஸ்டுகள் வைத்த கடிதம்

1920இல் முதன்முறையாக கூடிய அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (ஏஐடியுசி ) வளர்ந்துவந்த தொழிலாளி வர்க்க இயக்கத்தின் ஒரு குறியீடு என்றால், 1921இல் காங்கிரஸ் கட்சியின்  அகமதாபாத் நகரில் கூடிய அகில இந்திய கமிட்டி கூட்டத்திற்கு இந்திய பொது உடமை இயக்கத்தின் துவக்கத்தில் பங்கேற்ற M.N.ராய் மற்றும் அபானி முகர்ஜி ஆகிய இருவரும் சமர்ப்பித்த கடிதத்தின் வாயிலாக முன்வைக்கப்பட்ட அறைகூவல் விடுதலை இயக்கத்தில் சில இடதுசாரி கருத்துக்களை பிரகடனப்படுத்தியது. நிறைகுறைகள் இருந்தாலும், இது கவனிக்கத்தக்க ஆவணம். அடுத்த ஆண்டு கயாவில் காங்கிரஸ் கூடிய பொழுதும் இக்கடிதம் அனுப்பப்பட்டது. இக்கடிதம் முழு சுதந்திரம் – “பூரண ஸ்வராஜ்” – என்ற கோரிக்கையை விடுதலை இயக்கத்தில் முதன் முறையாக எழுப்பியது. இந்த கோரிக்கையை 1929 இல் தான் காங்கிரஸ் ஏற்றுகொண்டது. அது மட்டுமல்ல; விடுதலைப் போராட்டத்தில் விவசாயிகளையும் தொழிலாளிகளையும் இதர உழைக்கும் மக்களையும் ஈர்க்கும் வகையில் அவர்களின் உடனடி வாழ்வுசார் பிரச்சினைகளை காங்கிரஸ் கையில் எடுக்க வேண்டும் என்று கடித வடிவிலான இந்த பிரகடனம் வலியுறுத்தியது. அது கூறியது: “(காங்கிரஸ்) தொழிற்சங்கங்களின் குறைந்தபட்ச கோரிக்கைகளை தனது கோரிக்கைகளாக ஏற்கட்டும்; விவசாய சங்கங்களின் திட்டத்தை தனது திட்டமாக ஏற்கட்டும்…. விரைவில் எந்த இடையூறும் காங்கிரஸ் முன்னேறுவதை தடுக்க இயலாது. தங்களின் பொருள்சார் நலனுக்காக உணர்வுபூர்வமாக போராடும் அனைத்து மக்களின் எதிர்கொள்ள முடியாத வலிமை காங்கிரசுக்கு பின்பலமாக இருக்கும்.” இந்த அறைகூவலை தொடர்ந்து தோழர் சிங்காரவேலர் காங்கிரஸ் கட்சியின் கயா மாநாட்டில் அறிவிக்கப்பட்ட கம்யூனிஸ்ட் என்ற முறையில் முழு சுதந்திரம் என்ற முழக்கத்தை ஏற்குமாறு வற்புறுத்தி உரை நிகழ்த்தினார்.

வகுப்புவாத எதிர்ப்பில் இடதுசாரிகள்

தொடர்ந்து காலனி அரசின் கடும் தாக்குதலுக்கு உள்ளான போதிலும் கம்யூனிஸ்ட் கட்சி தன்னை புனரமைத்துக்கொண்டு 1926ஆம் ஆண்டு மே மாதத்தில் வகுப்பு வாதவாத பிரச்சினை பற்றி தனது அறிக்கையை வெளியிட்டது. 1922 முதல் 1927 வரை ஏராளமான வகுப்பு கலவரங்கள் நிகழ்ந்தன. நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். பல காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் தலைவர்கள் வகுப்புவாத சிந்தனைகளுக்கும் செயல்பாட்டுக்கும் மாறினர். இந்துமஹாசபா தலைவராக இருந்த சவார்கர் எழுதிய இந்துத்வா என்ற புத்தகம் 1923இல் வெளிவந்தது. 1925இல் ஆர் எஸ் எஸ் அமைப்பு உருவாக்கப்பட்டது. இத்தகைய சூழலில் கம்யூனிஸ்ட் கட்சி வகுப்புவாதத்தை சமரசமின்றி எதிர்ப்பது என்ற தனது நிலைபாட்டை உறுதிபட கடைப்பிடித்தது. காங்கிரசைப் போல் அல்லாமல், வகுப்புவாத அமைப்பை சார்ந்த எவரும்  கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக முடியாது என்ற நிலையை அது ஏற்கெனவே எடுத்திருந்தது. தோழர்கள் முசபர் அஹமதும் பாகர்ஹட்டாவும் இணைந்து வெளியிட்ட கடிதத்தில் இந்துக்களும் முஸ்லிம்களும் அந்நிய மற்றும் இந்திய முதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்களால் சமமாக சுரண்டப்படுகின்றனர் என்றும், இருசாராரின் பொருளாதார நலன்களும் ஒன்றானவையே என்றும் வலியுறுத்தினர். வர்க்க பேதமற்ற சமூகத்தை இருசாராரும் இணைந்து உருவாக்க முன்வரவேண்டும் என்றும் அக்கடிதம் அறைகூவல் விடுத்தது. காலனி ஆதிக்க சுரண்டலை எதிர்க்கவும் அழைத்தது.

1930இல் கம்யூனிஸ்டுகள் முன்வைத்த நடவடிக்கைக்கான திட்டம்

1920கள் முழுவதும் காலனி அரசால் வேட்டையாடப்பட்டு வந்தபோதிலும் கம்யூனிஸ்டுகள் உறுதியுடன் எதிர்காலப் பணிகள் பற்றி முனைப்புடன் சிந்தித்தனர். 1930ஆம் ஆண்டு நடவடிக்கைக்கான நகல் திட்டம் என்ற கம்யூனிஸ்ட் கட்சி ஆவணம்  இந்திய மக்களின் விடுதலை பற்றி கம்யூனிஸ்டுகளின் கண்ணோட்டத்தை பதிவு செய்தது. அது கூறியது:

இந்திய மக்களின் அடிமைத்தளைகளை அழித்தொழிக்கவும், தொழிலாளி வர்க்கத்தையும் விவசாயிகளையும் அவர்களை கசக்கிப் பிழியும் வறுமையில் இருந்து விடுவிக்கவும், தேசத்தின் விடுதலையை அடைவது அவசியம். விவசாய புரட்சி என்ற பதாகையை உயர்த்திப் பிடிப்பது அவசியம்……இந்தியாவின் புரட்சிகர விடுதலைக்கு பிரிட்டிஷ் முதலாளித்துவத்திற்கு எதிராகவும் நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராகவும் விவசாய புரட்சியை சாதிப்பது தான் அடிப்படை.

இதனை செய்வது யார் என்ற கேள்விக்கு அந்த அறிக்கை தொடர்ந்து கூறியது:

உலக வரலாறும் இந்தியாவில் வர்க்கப் போராட்டம் அளித்துள்ள படிப்பினைகளும் இந்திய மக்களின் விடுதலை, தேச அடிமைநிலையை ஒழிப்பது, தேச வளர்ச்சிக்கு குறுக்கே நிற்கும் அனைத்து தடைகளையும் தகர்த்தெறிவது, (சுரண்டும் வர்க்கங்களின்) நிலங்களை பறிமுதல் செய்து, புரட்சிகர தன்மையிலான மிகப்பெரிய அளவிலான ஜனநாயக புனரமைப்பை சாதிப்பது ஆகிய அனைத்தும் தொழிலாளி வர்க்கத் தலைமையின் கீழ் மட்டுமே சாத்தியம் என்பதை நிரூபிக்கின்றன.

1930 அறிக்கை முன்வைத்த மக்களுக்கான கோரிக்கைகள் 

மக்களுக்கான விரிவான திட்டத்தையும் அறிக்கை முன்வைக்கிறது. அதன் அனைத்து அம்சங்களையும் நாம் இங்கே விளக்கவோ விவாதிக்கவோ இயலாது. எனினும் நம்மை வியக்க வைக்கும் வகையில் தொலைநோக்குப் பார்வையுடன் பல விஷயங்களை அத்திட்டம் முன்வைத்துள்ளதை கோடிட்டுக் காட்டலாம். ஆவணம் முன்வைக்கும் கோரிக்கைகளில் சிலவற்றை பார்ப்போம்:

 • பிரிட்டிஷ் ஆட்சியை தூக்கி எறிந்தபின், அனைத்து (அந்நிய) கடன்களையும் ரத்துசெய்தல்; அனைத்து பிரிட்டிஷ் தொழிற்சாலைகள், வங்கிகள், ரயில், கடல் மற்றும் நதி சார் போக்குவரத்து, மலைத்தோட்டங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து நாட்டுடமை ஆக்குதல்.
 • நிலப்பிரபுக்களின் நிலங்கள், வனங்கள், இதர சொத்துக்கள் ஆகியவற்றை நட்டஈடுஇன்றி பறிமுதல் செய்து உழைக்கும் விவசாயிகளிடம் ஒப்படைத்தல். (இது, மன்னர்கள்,பிரிட்டிஷ் அரசு அலுவலர்கள், லேவாதேவிகாரர்கள் ஆகியோருக்கும் பொருந்தும்). வங்கிகளுக்கும் லேவாதேவிக்காரர்களுக்கும் விவசாயிகள் தரவேண்டிய கடன்கள் ரத்து செய்யப்படும். அனைத்து ஆண்டான்-அடிமை ஒப்பந்தங்களும் ரத்தாகும்.
 • எட்டு மணி நேர வேலைநாள், தொழிலாளர் பணிநிலைமைகளில் மிகப்பெரிய முன்னேற்றம், கூலி உயர்வு ஆகியவை உறுதிசெய்யப்படும். வேலைகிடைக்காதவர்களுக்கு அரசு பராமரிப்பு வழங்கப்படும்
 • ஊடக சுதந்திரம், தொழிலாளர்களுக்கான அமைப்பு மற்றும் வேலை நிறுத்த உரிமை.
 • மறியலுக்கு தடை விதித்தல் உட்பட அனைத்து தொழிலாளர் விரோத சட்டங்கள் ரத்தாகும்.
 • அரசில் இருந்து மதம் முழுமையாக விலக்கப்படும்.
 • சாதி அமைப்பும் சாதி ஒடுக்குமுறைகளும் முழுமையாக அழித்தொழிக்கப்படும்.

பெண்கள் உரிமைகள்

இந்திய சமூகத்தில் பெண்களின் துயரநிலையை முடிவுக்கு கொண்டுவர பல நடவடிக்கைகளை 1930ஆம் ஆண்டு அறிக்கை பேசுகிறது. பெண்களின் முழுமையான சமூக, பொருளாதார, சட்டரீதியான சமத்துவத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராடும் என்று ஆவணம் கூறுகிறது. இதுபற்றிய விவரமான கருத்துக்கள் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. அன்றே, கருவுற்றிருக்கும் பெண் தொழிலாளர்களுக்கு மகப்பேறுக்கு முன்பு இரண்டு மாதம், பின்பு இரண்டு மாதம் முழு சம்பளத்துடன், தக்க இலவச மருத்துவ வசதிகளுடன்  விடுப்பு தரப்படவேண்டும் என்று அறிக்கை கூறியுள்ளது. பெண்கள் வேலை செய்யும் ஆலைகளில் ஆலை உடைமையாளர் செலவில் குழந்தை காப்பகங்கள் அமைக்கப்பட்டு செயல்படவேண்டும் என்ற கோரிக்கையையும் இந்த ஆவணம் முன்வைத்துள்ளது. பெண்தொழிலாளர்கள் அவர் தம் சிசுவிற்கு பாலூட்ட தனி அறை, இப்பெண்களுக்கு 6 மணி நேரம் மட்டுமே வேலைநாள் என்ற கோரிக்கைகளும் அறிக்கையில் இடம் பெறுகின்றன.

கல்வி, இளைஞர் நலம்

16 முதல் 20 வயதுவரையிலான இளைஞர்களுக்கு வேலைநாள் நான்கு மணிநேரமாக இருக்கவேண்டும் என்றும் 16 வயதுக்கு குறைவான குழந்தைகளை பணி அமர்த்தக்கூடாது அறிக்கை கோருகிறது. 16 வயதுவரை, கட்டாய இலவச கல்வி அரசால் வழங்கப்படவேண்டும் என்றும் அது கோருகிறது. அனைத்து மாணவர்களுக்கும் பாடபுத்தகங்கள், உணவு, உடை ஆகியவை அரசால் வழங்கப்படவேண்டும் என்பது அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.

1930கள், 1940கள்

கட்சியின் முதல் திட்ட ஆவணம் 1930 இல் தயார் செய்யப்பட்டது. அப்பொழுது மீரட் சதிவழக்கு நடந்துகொண்டிருந்தது. மீரட் சதிவழக்கில் சிறை சென்ற தோழர்கள் வெளியே வந்தபிறகு நகல் அரசியல் கருத்துரு ஒன்று டிசம்பர்  1933 இல் அன்றைய “தற்காலிக (புரோவிஷனல்)”   மத்தியக் குழுவால் நிறைவேற்றப்பட்டது. பின்னர் 1936 இல் மூன்றாவது திட்ட ஆவணம் – நடவடிக்கைக்கான மேடை – ஏற்றுக்கொள்ளப்பட்டது. முந்தைய இரு ஆவணங்களில் இருந்த சில தவறுகளை நீக்கிய  இந்த ஆவணத்தின் அடிப்படையில் சர்வதேச அகிலத்துடன் இந்திய கம்யூனிஸ்ட் இணைப்பு பெற்றது. பின்னர் 1943இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்  முதல் அகில இந்திய மாநாட்டில் கட்சி திட்டம் தொடர்பான வழிகாட்டுதல்கள் தரப்பட்டன. சர்வதேச மற்றும் இந்திய நிலைமைகள் பற்றிய மதிப்பீடுகள் தொடர்பாக  இந்த ஆவணங்களில் சில வேறுபாடுகள் இருந்தபோதிலும், நாட்டு விடுதலையிலும் மக்கள் விடுதலையிலும் உழைக்கும் மக்களின் கோரிக்கைகளை முன்னிறுத்தி மக்களை விடுதலை இயக்கத்தில் திரட்டவேண்டும் என்ற புரிதல் தொடர்ந்தது. பின்னர், கம்யூனிஸ்ட் இயக்கத்தில் புரட்சியின் கட்டம் பற்றியும், அதன் தலைமை வர்க்கம் பற்றியும், பங்கேற்கும் வர்க்கங்கள் பற்றியும், இந்திய அரசின் வர்க்கத்தன்மையை மதிப்பீடு செய்வதிலும், அதிலிருந்து புரட்சியின் பாதையை இனம் காண்பதிலும் கடுமையான வேறுபாடுகள் எழுந்தன. நீண்ட போராட்டத்திற்குப்பின், மக்கள் ஜனநாயக புரட்சி என்ற இலக்கை நோக்கி இயக்கம் பயணிக்க வேண்டும் என்ற, விடுதலை இயக்க காலத்தில் அங்கீகரிக்கப்பட்டிருந்த  புரிதலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தொடர்ந்து முன் எடுத்துச் சென்றுள்ளது. இந்த வரலாறுக்குள் செல்வது இக்கட்டுரையின் வரம்பிற்கு அப்பாற்பட்டது.

இறுதியாக

இக்கட்டுரையின் நோக்கம், முதலாளித்துவ கட்சிகளைப்போல் இல்லாமல், கம்யூனிஸ்ட் இயக்கம் வர்க்கப் பார்வையில் நின்று விடுதலை இயக்கத்தில் செயல்பட்டது என்பதை தெளிவு படுத்துவது தான். அரசியல் விடுதலையின் அவசியத்தை நன்கு உணர்ந்து, இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி ஊசலாடிக்கொண்டிருந்த பொழுதே, 1921இலேயே முழுவிடுதலை என்ற கோரிக்கையை முன்வைத்த கம்யூனிஸ்டுகள் வெறும் அரசியல் விடுதலை மட்டும் நமது நோக்கமாக இருக்கமுடியாது என்பதையும் வலுவாக முன்வைத்தனர். வர்க்க அடிப்படையில் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளைக் கையில் எடுப்பது அவசியம் என்று வலியுறுத்தினர். இத்தகைய பாதையின் மூலம் தான் உண்மையான ஜனநாயகத்தன்மை கொண்ட நாடாக இந்தியா மாற இயலும் என்பதை 1921,1930 ஆவணங்களில் மட்டுமின்றி, அதற்குப் பின்பும், விடுதலைப் போராட்ட காலத்திலும், இன்று வரையிலும் கம்யூனிஸ்டுகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளனர். அதேபோல் சமூக ஒடுக்குமுறையை முடிவுக்கு கொண்டு வருவதும் பழங்குடி மக்களின் சம உரிமைகளை நிலை நாட்டுவதும் பாலின சமத்துவத்தை நோக்கி பயணிப்பதும் இந்திய நாட்டு மக்களின் விடுதலைப் பயணத்தின் இன்றியமையாத அம்சங்கள் என்ற புரிதலுடன் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி செயல்படுகிறது. இந்தியா பல மொழிவழி தேசீய இனங்களைக்கொண்ட நாடு என்பதையும் மக்களின் முழுமையான விடுதலை என்பதன் இலக்கணத்தின் பகுதியாக முன்வைக்கிறது. அதேபோல், மதச்சார்பின்மையையும் நவீன இந்தியாவின் இலக்கணத்தின் பகுதியாக நாம் பார்க்கிறோம். நவீன தாராளமய கொள்கைகளை நிராகரித்து, வலுவான பொதுத்துறை, திட்டமிட்ட பொருளாதாரம் என்ற திசைவழியில் பயணித்தால் தான் ஏகாதிபத்திய தாக்குதலை எதிர்த்து நிற்கவும், பாடுபட்டு பெற்ற அரசியல் விடுதலையை பாதுகாக்கவும் இயலும். இந்த அம்சங்கள் அனைத்தும் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் சமகாலப்படுத்தப்பட்ட திட்டத்தில் தெளிவாகவும் விரிவாகவும் விளக்கப்பட்டுள்ளன.

சமகாலத்தில் பல்வேறு அரசியல் பார்வைகளும் “மாடல்களும்” உரத்த குரலில் முன்வைக்கப்படுகின்றன. ஒருபுறம் ஆர் எஸ் எஸ் சின் கார்ப்பரேட் இந்துத்வா மாடல் ஊடகங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. மறுபுறம் மதசார்பின்மை பற்றி அவ்வப்பொழுது பேசினாலும் தாராளமய பாதை தான் சரியான மாடல் என்று காங்கிரஸ் கருதுகிறது. விவசாய புரட்சியின்றி, சில சமூக சீர்திருத்த முனைவுகள், சில நலத்திட்டங்கள் மற்றும் தாராளமய கொள்கைகள் மூலம் வளர்ச்சி காணலாம் என்ற சில மாநில முதலாளித்துவ கட்சிகளின் மாடல்கள் முன்மொழிகின்றன. கம்யூனிஸ்ட் இயக்கம் சமூக ஒடுக்குமுறையையும் பொருளாதார சுரண்டலையும் இணைந்தே எதிர்ப்பது தான் சரியான, புரட்சிகரமான வர்க்கப்பார்வை என்ற புரிதலில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதுதான் மக்கள் விடுதலை என்ற இலக்கை அடைய சரியான பாதை. எனவே தான், தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் விவசாயிகளையும் இதர உழைக்கும் மக்களையும் திரட்டி போராடுவதோடு, சாதி ஒடுக்குமுறையை தகர்ப்பது, பாலின சமத்துவத்தை நிலைநாட்டுவது, பழங்குடி மக்களின் உரிமைகளை உயர்த்திப்பிடிப்பது, தாராளமய பாதையை நிராகரிப்பது, பொதுத்துறையை வலுப்படுத்துவது, மாநில உரிமைகளுக்கு குரல் கொடுப்பது, மதசார்பின்மையை பாதுகாப்பது ஆகிய அம்சங்களும் மக்கள் ஜனநாயக புரட்சிப் பயணத்தின்  இன்றியமையாத அம்சங்கள் என்று மார்க்சிஸ்ட் கட்சி கருதுகிறது.

தேசிய குடும்பநல ஆய்வின் தரவுகள் தரும் படிப்பினைகள்

பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா

அறிமுகம்

கடந்த முப்பது ஆண்டுகளாக இந்திய பொருளாதாரம் தாராளமய கொள்கைகளின் அமலாக்கத்திற்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. தேச உற்பத்தி மதிப்பின் வளர்ச்சி விகிதத்தை மட்டுமே, நாட்டு முன்னேற்றத்திற்கான அளவுகோலாக, முன்வைக்கும் ஆளும் வர்க்க அறிவுஜீவிகள், இக்கொள்கைகள் உழைப்பாளி மக்களுக்கு ஏற்படுத்திவரும் இன்னல்களை, கண்டு கொள்வதில்லை. பொருளாதார வளர்ச்சி விகிதத்திலும் தாராளமய கொள்கைகள் சாதனை படைக்கவில்லை என்பதும், கடந்த பத்து ஆண்டுகளாக வளர்ச்சி விகிதம் குறைந்துவருகிறது என்பதும், வறுமையும், வேலையின்மையும், விலைவாசியும் அதிகரித்து வருகின்றன என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். அதேசமயம் இடதுசாரிகளின் தலைமையில் தாராளமய கொள்கைகளையும், அவற்றின் உழைக்கும் மக்கள் விரோத விளைவுகளையும் எதிர்த்தும், மாற்று கொள்கைகளை முன்வைத்தும், தொடர்ந்து வர்க்க மற்றும் வெகுமக்கள் போராட்டங்களும் நடைபெற்று வந்துள்ளன. இதனால் மக்களின் வாழநிலையில் தாராளமய கொள்கைகளின் மோசமான விளைவுகளையும் மீறி சில முன்னேற்றங்களும் நிகழ்ந்துள்ளன. (அறிவியல் – தொழில்நுட்ப வளர்ச்சி இத்தகைய முன்னேற்றங்களை சாத்தியமாக்குவதில் பங்காற்றியுள்ளது என்பதையும் நினைவில் கொள்க). நிகழ்ந்துள்ள முன்னேற்றத்தின் ஒரு அம்சம் ஆரோக்கியம் மற்றும் குடும்ப நல்வாழ்வு தொடர்பானது. இக்களத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் பற்றியும் அதன் நிறைகுறைகள்  பற்றியும் அறிவதற்கு ஒன்றிய அரசு மேற்பார்வையில் நடத்தப்பட்டுள்ள நாடு தழுவிய ஆய்வுகளும், அவை தரும் தரவுகளும் நமக்கு உதவுகின்றன. கடந்த முப்பது ஆண்டுகளில் ஐந்து ஆய்வுகள் நடத்தப்பட்டன. இவை ஒவ்வொன்றும் “தேசீய குடும்ப நல ஆய்வு” (National Family Health Survey – NFHS) என்று அழைக்கப்படுகின்றன. முதன் முறையாக 1992-93 ஆண்டில் NFHS 1, பின்னர் 1998-99 இல் NFHS 2 , 2005 – 06 இல் NFHS 3, 2015 – 16 இல்  NFHS 4, இறுதியாக அண்மையில் 2019-2021 இல்  NFHS 5 என்று ஐந்து ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன.  அவற்றின் பல்வேறு அறிக்கைகளும் இணைய தளத்தில் கிடைக்கின்றன.  இந்த அறிக்கைகள் மூலம் நாம் நாட்டு மக்களின் நல்வாழ்வு முன்னேற்றம் குறித்து சில முக்கிய விஷயங்களை அறிந்துகொள்ள  முடிகிறது.

NFHS அறிக்கைகள் தரும் தரவுகள்

ஏராளமான தரவுகளை NFHS அறிக்கைகள் அளிக்கின்றன. ஒட்டுமொத்த விவரங்களின் அடிப்படையில் சில குறியீடுகளை (indicators) உருவாக்கி, கணக்கிட்டு, அட்டவணைகளாக அறிக்கைகள் நமக்கு தருகின்றன. அத்தகைய குறியீடுகளில் முக்கியமான சில வருமாறு:

 • : எழுத்தறிவு சதவிகிதம்; 10 ஆண்டுகளாவது பள்ளி படிப்பு பெற்றவர்கள் சதவிகிதம்; ரத்த சோகை சதவிகிதம்: ஒரு முறையாவது இணையதளம் பயன்படுத்தியவர்கள் சதவிகிதம்; தங்கள் பயன்பாட்டிற்கு அலைபேசி வைத்திருக்கும் பெண்கள் சதவிகிதம்; தங்கள் பெயரில் வங்கி/சேமிப்பு கணக்கு வைத்துக்கொண்டு பயன்படுத்தும் பெண்கள் சதவிகிதம்;18 முதல் 49 வயது வரையிலான  பெண்களில் கணவரின் வன்முறைக்கு உள்ளானவர் சதவிகிதம் ஆகிய குறியீடுகள்.       

மேலும் பல குறியீடுகளை NFHS ஆய்வுகளில் இருந்து பெற இயலும், விவாதிக்க இயலும் என்றாலும் இக்கட்டுரையில் மேலே குறிப்பிட்டுள்ள முக்கியமான குறியீடுகளின் விவரங்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. முதலில் NFHS 5 தரவுகளை பரிசீலிப்போம். பின்னர் கடந்த 30 ஆண்டுகளில் நடத்தப்பட்டுள்ள ஐந்து ஆய்வுகளில் இருந்து ஆரோக்கிய புலத்தில் நிகழ்ந்துள்ள முன்னேற்றம் குறித்து பார்ப்போம்.

NFHS 5 (2020-21) தரவுகள்

தாய் – சேய் நலம்

இதில் மிக முக்கியமான குறியீடு சேய் இறப்பு விகிதம் ஆகும். உயிருடன் பிறக்கும் ஆயிரம் சேய்களில் ஒரு ஆண்டுக்குள் இறந்துவிடும் சேய்களின் எண்ணிக்கைதான் சேய் இறப்பு விகிதம். ஒரு சமூகத்தின் மிக முக்கிய ஆரோக்கிய குறியீடாக இது கருதப்படுகிறது. NFHS 5 தரும் விவரங்கள்படி அகில இந்திய அளவில் சேய் இறப்பு விகிதம் நகர்ப்புற பகுதியில் 28.6 ஊரகப்பகுதியில் 38.4, மொத்தத்தில் 35.2 என்று உள்ளது. கடந்த NFHS 4 (2015-16) அறிக்கையின்படி சேய் இறப்பு விகிதம் 40.7 ஆக இருந்தது. மொத்தத்தில் ஒரு சிறிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எனினும் இலங்கை, வங்கதேசம், பூடான், மாலத்தீவுகள் ஆகிய நாடுகளுக்கு பின்னால் தான் இந்தியா உள்ளது. இலங்கையின் விகிதம் 2020இல் 6 தான். NFHS 5 இன்படி இந்தியாவின் கேரளா மாநிலம் மட்டுமே அதைவிட குறைவாக 4.4 என்று உள்ளது. NFHS 5 இன்படி தமிழகத்தில் சேய் இறப்பு விகிதம் 18.6.  

இந்திய சமூகத்தில் ஆணாதிக்க முறைமையும், அதன் பகுதியாக ஆண் மகவையே கூடுதலாக விரும்பும் விழுமியமும் இருப்பது நாம் அறிந்ததே. சேய் நலம் பற்றிய ஒரு குறியீடு இதனை உறுதி செய்கிறது. அந்தக் குறியீடு உயிருடன் பிறக்கும் சிசுக்களின் பாலின விகிதம் என்பதாகும். ஆய்வுக்கு முந்தைய 5 ஆண்டுகளில் உயிருடன் பிறந்த சிசுக்களை கணக்கில் கொண்டு 1000 ஆண்மகவுக்கு எத்தனை பெண்மகவு நிகழ்ந்தது என்பது NFHS 5 யில் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த விகிதம் உலகளவில் சராசரியாக 1000 ஆண்மகவுக்கு 952 பெண்மகவு என உள்ளது. NFHS 5 தரும் விவரப்படி இந்த எண்ணிக்கை இந்தியாவில் 929 ஆக உள்ளது. NFHS 4 இல் இதைவிடக் குறைவாக 919 என இருந்தது. கேரளாவின் குறியீடு 951 என உலக சராசரியையொட்டி இருந்தது. தமிழ்நாட்டின் குறியீடு 878 என்ற அளவில் மிகவும் குறைவாக உள்ளது.

தாய் சேய் நலம் தொடர்பான மற்றொரு குறியீடு நிகழும் மொத்த பிரசவங்களில் என்ன சதவிகிதம் மருத்துவ நிறுவனங்களில் நிகழ்கிறது என்பதாகும். இதில் கடந்த 30 ஆண்டுகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. NFHS 5 விவரப்படி ஆய்வுக்கு முந்தைய ஐந்து ஆண்டுகளில் அகில இந்திய அளவில் நிகழ்ந்த பிரசவங்களில் 89% மருத்துவ நிறுவனங்களில் நடந்துள்ளதாக தெரிகிறது. NFHS 4 இல் இது 79% ஆக இருந்தது. கேரளா, தமிழ் நாடு ஆகிய இரு மாநிலங்களிலும் கிட்டத்தட்ட அனைத்து பிரசவங்களுமே மருத்துவ நிறுவனங்களில் தான் நிகழ்கின்றன.

குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலை

இந்த அம்சம் தொடர்பாக மூன்று குறியீடுகளை பரிசீலிப்போம்.

முதலாவதாக, 6 மாதத்திலிருந்து இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் போதுமான உணவு பெறும் குழந்தைகள் சதவிகிதம் என்ற குறியீட்டை எடுத்துக்கொள்வோம். NFHS 5 தெரிவிக்கும் தகவல் அகில இந்திய அளவில் 11.3 % குழந்தைகளுக்குத்தான் போதுமான உணவு கிடைக்கிறது என்பதாகும். NFHS 4 இல் இது 9.6% ஆக இருந்தது. எந்த அளவிற்கு நமது நாட்டில் குழந்தைகளுக்கு அவர்கள் வயதுக்கேற்ற போதுமான உணவு கிடைப்பதில்லை என்பதை இந்த விவரங்கள் அம்பலப்படுத்துகின்றன. தமிழகத்தில் இந்த குறியீடு 16.3% என்ற அளவில் குறைவாக உள்ளது. கேரளாவிலும் கூட இந்த சதவிகிதம் 23.5 என்ற அளவில் தான் உள்ளது.

இரண்டாவதாக, ஐந்து வயதிற்கு குறைவான குழந்தைகளில் வயதுக்கேற்ற உயரம் அடையாதவர்களின் சதவிகிதம் என்ற குறியீட்டை எடுத்துக்கொள்வோம். 

அகில இந்திய அளவில் 35.5% குழந்தைகள் வளர்ச்சி குன்றியவர்களாக உள்ளனர். தமிழ் நாட்டில் நான்கில் ஒரு குழந்தை வளர்ச்சி குன்றியதாக உள்ளது. கேரளாவின் சதவிகிதம் 23.4.  நிலைமையில் பெரும் முன்னேற்றம் காண வேண்டியுள்ளது.

மூன்றாவது குறியீடு ஆறு மாதத்திலிருந்து ஐந்து வயது வரை உள்ள குழந்தைகளில் ரத்த சோகை உள்ளவர் சதவிகிதம் என்பதாகும். NFHS 5 அகில இந்திய அளவில் மூன்றில் இரண்டு பங்கு குழந்தைகள் ரத்த சோகை உள்ளவர்கள் என்று தெரிவிக்கிறது. தமிழகத்தில் இந்த சதவிகிதம் 57.4. கேரளாவில் நிலைமை மேலே இதை விட சற்று மேம்பட்டு உள்ளது. அங்கு ரத்த சோகை உள்ள குழந்தைகள் சதவிகிதம் 39.4 என உள்ளது.

ஒட்டுமொத்தமாக, குழந்தைகள் ஊட்ட சத்து நிலைமையில் இந்தியா மிகவும் பின்தங்கியுள்ளது. குறிப்பாக கேரளாவும், ஓரளவிற்கு தமிழகமும் அகில இந்திய நிலைமையை விட மேம்பட்டு உள்ளன. வேறு பல மாநிலங்களில், அகில இந்திய சராசரியை விட மோசமான நிலைமை உள்ளது. முப்பது ஆண்டுகளாக அமலாக்கப்பட்டு வரும் தாராளமய கொள்கைகள் தேச உற்பத்தி மதிப்பு வளர்ச்சியில் பெரும் சாதனை ஒன்றும் நிகழ்த்தவில்லை என்பது மட்டுமல்ல; ஆரோக்கியம் தொடர்பாகவும் இக்காலத்தில் ஓரளவு முன்னேற்றம் தான் நிகழ்ந்துள்ளது.

பெண்கள் முன்னேற்றம் குறித்து

15 ஆண்டுகள் முதல் 49 ஆண்டுகள் வரையிலான வயது கொண்ட பெண்கள் மற்றும் ஆண்கள்  தொடர்பாக NFHS 5 தரும் சில விவரங்கள் பெண் கல்வி, ஆரோக்கியம், பாலின சமத்துவம், பெண்கள் மீதான வன்முறை ஆகியவை பற்றி தெரிந்துகொள்ள உதவுகின்றன.

கல்வி

 NFHS 5 அகில இந்திய அளவில் பதினைந்து முதல் நாற்பத்தொன்பது வயது வரம்புகளுக்குட்பட்டவர்களின் எழுத்தறிவு பெண்களுக்கு 71.5% சதவிகிதம் ஆகவும் ஆண்களுக்கு 84.4% என்றும் மதிப்பிடுகிறது. NFHS 5 படி தமிழ் நாட்டில் எழுத்தறிவு பெற்றவர் பெண்களில் 84% ஆண்களில் 90.7%. கேரளாவில் பெண்கள் எழுத்தறிவு விகிதம் 97.4%, ஆண்கள் எழுத்தறிவு விகிதம் 97.1%.

  அகில இந்திய அளவில் குறைந்த பட்சம் பத்து ஆண்டுகள் பள்ளிக்கல்வி பெற்றவர் பெண்களில் 41%, ஆண்களில் 50.2% என்றும் NFHS 5 மதிப்பிடுகிறது.  தமிழகத்தில் இந்த சதவிகிதங்கள் முறையே 56.6, 59.1. கேரளாவில் முறையே  77%, 73.3%.

ரத்த சோகை விகிதம்

பெண்கள் உடல் நலம் குறித்த ஒரு முக்கிய அம்சம் ரத்த சோகை பாதிப்பு. NFHS 5 விவரப்படி அகில இந்திய அளவில், 15 முதல் 49 ஆண்டுகள் வயதுவரம்புகளில் வரும் பெண்களில் 60.2% ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இந்த சதவிகிதம் 53.4 ஆக உள்ளது, கேரளத்தில் 36.3% ஆக உள்ளது.

இணைய தள பயன்பாடு

       NFHS 5 ஆய்வில் 15 முதல் 49 வயதுக்குட்பட்டோரின் இணைய தள பயன்பாடு பற்றி விவரங்கள் கிடைக்கின்றன. அதன்படி, அகில இந்திய அளவில் பெண்களில் 33.3%, ஆண்களில் 57.1% குறைந்த பட்சம் ஒரு முறையாவது இணைய தளத்தை பயன்படுத்தியுள்ளனர். தமிழகத்தில் இந்த சதவிகிதங்கள் முறையே 46.9%, 70.2% என்றுள்ளன. கேரளாவில்  முறையே பெண்களில் 61.1%, ஆண்களில் 76.1% என்று இணையதள பயன்பாடு உள்ளது குறிப்பிடத்தக்கது. அனைத்து மாநிலங்களிலும் அகில இந்திய அளவிலும் இவ்விஷயத்தில் பாலின இடைவெளி அதிகமாக உள்ளது. தமிழ் நாட்டில் மிக அதிகமாக உள்ளது.

சுய அலைபேசி பயன்பாடு 

கடந்த இருபது ஆண்டுகளில் உலக அளவிலும் நம் நாட்டிலும் அலைபேசி பயன்பாடு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இதுபற்றி NFHS 5 தரவுகள் நமக்கு தெரிவிக்கும் ஒரு செய்தி அகில இந்திய அளவில் பெண்களில் பாதிக்கு மேலானவர்கள் – 54% – சொந்தமாக அலைபேசி வைத்திருக்கின்றனர்; அதனை பயன்படுத்துகின்றனர் என்பதாகும். NFHS 4 இன் படி 2015-16 இல் இது 45.9% ஆக இருந்தது.  தமிழகத்திலும் கேரளத்திலும் பெரும்பாலான பெண்கள் சொந்தமாக அலைபேசி வைத்துள்ளனர்; பயன்படுத்துகின்றனர். NFHS 5 விவரப்படி கேரளத்தில் 86.6% பெண்கள், தமிழ் நாட்டில் 74.6% பெண்கள் என்று உள்ளது.

வங்கி கணக்கு வைத்துள்ள பெண்கள்

கடந்த இருபது ஆண்டுகளாக  பெண்கள் வங்கி கணக்குகள் வைத்திருப்பது பரவலாகி வருகிறது. அகில இந்திய அளவில் NFHS 4 2015-16 தரும் தகவல் என்னவென்றால், குறிப்பிடப்பட்டுள்ள வயது வரம்புக்குள் உள்ள பெண்களில்  53% பெண்கள் தான் வங்கி/சேமிப்பு கணக்கு வைத்திருந்தனர். NFHS 5 2019 – 2021 கணக்குப்படி, இது 78.6% ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாடு பல ஆண்டுகளாகவே இந்த அம்சத்தில் முன்னணியில் இருந்துவருகிறது. NFHS 4 2015-16 தரும் விவரப்படி தமிழகத்தில் 77% பெண்கள் வங்கி/சேமிப்பு கணக்கு வைத்திருந்தனர். அச்சமயம் கேரளத்தில் 70.6% பெண்களிடம் வங்கி/சேமிப்பு கணக்கு இருந்தது.   NFHS 5 2019 – 2021 கணக்குப்படி கேரளத்தில் ஓரளவு தான் இத்தொகை அதிகரித்தது, 70.6% இல் இருந்து 78.5% ஆக உயர்ந்தது. இது அகில இந்திய சராசரி அளவு தான். ஆனால், ஏற்கெனவே முன்னணியில் இருந்த  தமிழ் நாட்டில் இக்குறியீட்டில் வேகமான அதிகரிப்பு நிகழ்ந்து, 92.2% என்று ஆகியுள்ளது.

கணவனின் வன்முறை எனும் பிரச்சினை  

 ஆணாதிக்க விழுமியங்கள் வலுவாக உள்ள நமது நாட்டில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை நீண்ட காலமாக உள்ள பிரச்சினை. முதலாளித்துவ நுகர்வுக் கலாச்சாரமும், தொடரும் நிலப்ரபுத்துவ சமூக விழுமியங்களும் இப்பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணங்கள். விழிப்புணர்வு பெற்றுவரும் பெண்கள் இத்தகைய வன்முறைக்கு எதிராக ஜனநாயக மாதர் இயக்கங்களாலும் முற்போக்கு சக்திகளாலும் திரட்டப்படுகின்றனர். எனினும் இப்பிரச்சினை தொடர்கிறது. NFHS 4, NFHS 5 அறிக்கைகளில் அதிர்ச்சி அளிக்கும் தகவல்களும் உள்ளன.

18 முதல் 49 வயதுவரை உள்ள திருமணமான பெண்களில் கணவனின் வன்முறைக்கு உள்ளான பெண்கள் சதவிகிதம் என்ற குறியீட்டின் விவரங்கள் இவ்விரண்டு ஆய்வுகளின் அகில இந்திய, மாநில அறிக்கைகளில் தரப்பட்டுள்ளன. இவை தரும் செய்திகள் வருமாறு:

கணவனின் வன்முறைக்கு உள்ளாகிய பெண்கள் சதவிகிதம்

இந்தியா             தமிழ் நாடு           கேரளம்

NFHS 4  (2015-16)            31.2                     40.7                  14.3            

NFHS 5  (2019-2021)          29.3                     38.1                   9.9

அகில இந்திய அளவில் கணவன் வன்முறையால் ஏறத்தாழ 30% பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலைமையில் கடந்த பல ஆண்டுகளாக மிகச்சிறிய அளவிலான முன்னேற்றம் தான் நிகழ்ந்துள்ளது. தமிழ்நாடு இக்குறியீட்டில் முன்னணியில் இருப்பது பாலின சமத்துவமும் பாலின வன்முறை ஒழிப்பும் வெகு தூரத்தில் உள்ளன என்று நமக்கு உணர்த்துகின்றன. கேரளாவில் ஒப்பீட்டளவில் பெண்கள் மீதான கணவன் வன்முறை என்பது குறைவாக உள்ளது. மேலும் குறைந்தும் வந்துள்ளது. ஆனால் இதுவும் ஏற்கத்தக்கது அல்ல.

   பொதுவான முன்னேற்றம்

தாராளமய கொள்கைகளாலும், கடந்த எட்டு ஆண்டுகளாக ஆர்எஸ்எஸ் – பாஜக அரசுகளின் அதி தீவிர மக்கள் விரோத நடவடிக்கைகளாலும் உழைக்கும் மக்களும் பெண்களும் சமூக ஒடுக்குமுறைகளுக்கு உட்படுத்தப்படும் மக்களும்   கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகி வந்துள்ளனர். எனினும் இதற்கு  மத்தியிலும் முற்போக்கு சக்திகளின் தொடர் தலையீடுகளாலும் மக்களின் வர்க்க வெகுஜன போராட்டங்களாலும் பொதுவான அறிவியல்-தொழில்நுட்ப முன்னேற்றங்களின் விளைவாகவும் மக்கள் நலம் சார்ந்த பிரச்சினைகளில் ஒருசிலவற்றில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை நாம் முன்வைத்துள்ள தரவுகள் நமக்கு உணர்த்துகின்றன.

NFHS 1 முதல் NFHS 5 வரை நமக்கு கிடைத்துள்ள தரவுகள் தாய் சேய் நலம் விஷயத்தில் பொது முன்னேற்றம் நிகழ்ந்துள்ளதை காட்டுகின்றன. சேய் இறப்பு விகிதம் பொதுவாக நாடு முழுவதும் தொடர்ந்து குறைந்து வருகின்றது. எனினும் ஆரோக்கியத்திற்கு போதுமான நிதி ஒதுக்குவதிலும் உரிய கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதிலும் சுணக்கம் காட்டும் அரசுகளின் கொள்கைகளும் ஆணாதிக்க சமூகமும் இன்னும் வேகமாக சேய் இறப்பு விகிதத்தை குறைப்பதற்கு முட்டுக்கட்டைகளாக உள்ளன. மொத்த பிரசவங்களில் மருத்துவ நிறுவனங்களில் நிகழும் பிரசவங்களின் சதவிகிதம் கணிசமாக உயர்ந்துள்ளது. இதில் சில மாநிலங்கள் பின்தங்கியுள்ளன என்றாலும் பொதுவாக முன்னேற்றம் உள்ளது.   

குழந்தைகள், பெண்கள் ஊட்டச்சத்து நிலையை பொருத்தவரையில் நிலைமையில் பொதுவான  முன்னேற்றம் இருப்பதாக சொல்ல இயலாது. சில அம்சங்களில் பின்னடைவு கூட காணப்படுகிறது என்பது கவனத்தில் கொள்ளப்படவேண்டும். இது இன்னும் வலுவான, அறிவியல் பூர்வமான தலையீடுகளின் அவசியத்தை உணர்த்துகிறது. கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்குமுன் துவக்கப்பட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி சேவைகள் திட்டம் – ICDS – போதுமான அளவு அரசு நிதி ஒதுக்கீடு கிடைக்காமல் தொடர்ந்து பெரும் சவால்களை சந்தித்துவருகிறது. அதில் பணியாற்றும் ஊழியர்களின் அர்ப்பணிப்பு மிக்க சேவை ஓரளவு முன்னேற்றத்தை சாத்தியமாக்கியிருந்தாலும், அரசுகளின் அணுகுமுறை வேகமான மேம்பாட்டிற்கு தடையாக உள்ளது. பல்வேறு மாநிலங்களை ஒப்பிடும் பொழுது ஏறத்தாழ அனைத்துக் குறியீடுகளிலும் மிகச்சிறந்த மாநிலமாக திகழ்வது கேரளா என்பது தெளிவாகிறது.

கிராம-நகர ஏற்றத்தாழ்வுகள்

NFHS தரவுகள் பெரும்பாலான குறியீடுகளில் பொதுவாக நாடு முழுவதும் மற்றும் மாநில வாரியாகவும் ஓரளவு முன்னேற்றம் நிகழ்ந்துள்ளதை தெரிவிக்கின்றன. ஆனால் ஏற்றத்தாழ்வுகள் அதிகமாக நீடிப்பதையும் பார்க்க முடிகிறது, இதில் பல பரிமாணங்கள் இருந்தாலும், பிரதானமாக நகர்ப்புற – கிராமப்புற இடைவெளி என்பது அதிகமாக உள்ளது. சேய் இறப்பு விகிதம் உள்ளிட்டு பல அம்சங்களில் இதைக் காணமுடிகிறது. அகில இந்திய அளவிலும்  பின்தங்கிய மாநிலங்களிலும் மட்டுமின்றி ஓரளவு முன்னணியில் உள்ள தமிழ் நாடு போன்ற மாநிலங்களிலும் கூட பல குறியீடுகளைப் பொறுத்தவரையில் கிராம நகர இடைவெளி கணிசமாக உள்ளது.  இதில் விதிவிலக்காக உள்ளது கேரளா மாநிலம். அங்கு பெரும்பாலான குறியீடுகளில்  கிராம நகர இடைவெளி மிகக் குறைவு. அதேபோல் முக்கியமான குறியீடுகளில், பாலின இடைவெளியும் குறைவு. தாய் சேய் நலத்திலும் பொது சுகாதாரத்திலும் கேரளா அகில இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளது.

நிறைவாக

ஏராளமான தரவுகள் தரும் NFHS பல சுற்று ஆய்வுகளுக்கு ஒரு அறிமுகமாக மட்டுமே இக்கட்டுரை உள்ளது.

மேலும் விவரங்களை அறிந்துகொள்ளவும், பரிசீலிக்கவும் கீழ்க்கண்ட இணைய தளங்கள் உதவும்:    

http://www.rchiips.org/nfhs

http://www.iipsindia.ac.in

தமிழ் நாடு பட்ஜெட் 2022-23: தாராளமய தாக்கம் !

பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா

இன்றைய பன்னாட்டு சூழல் மிகவும் சவாலானதாக உள்ளது. 2008இல் வெடித்த உலக பொருளாதார நெருக்கடிக்குப் பின் பல ஆண்டுகளாகவே உலக முதலாளித்துவ அமைப்பு மந்த நிலையில் உள்ளது. கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக பெரும் தொற்றும் அதனையொட்டி அமலாக்கப்பட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும் மந்தநிலையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன. ரஷ்யா – உக்ரைன் போர் பன்னாட்டு பொருளாதார மீட்சிக்கான வாய்ப்புகளை மேலும் குறைத்துள்ளது. ஓரளவு ஏற்றுமதியை சார்ந்துள்ள தமிழ் நாட்டு பொருளாதார வளர்ச்சிக்கு இது பாதிப்பாக அமையும்.

இந்தியாவின் தேசீய பொருளாதார நிலைமை சாதகமாக இல்லை. கடந்த எட்டு ஆண்டுகளாகவே ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் தீவிர தாராளமய கொள்கைகளாலும் 2016 நவம்பர் மாதம் ஒன்றிய அரசு அமலாக்கிய பணமதிப்பிழப்பு நடவடிக்கை, அதனையடுத்து அமலுக்கு வந்த குளறுபடியான ஜிஎஸ்டி ஆகியவற்றாலும் விவசாயம், சிறு,குறு தொழில்கள் உள்ளிட்ட முறைசாரா துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஜிஎஸ்டி தாக்குதலாலும் கார்ப்பரேட் கம்பெனிகள் மற்றும் செல்வந்தர்களுக்கு ஒன்றிய அரசு அளித்த வருமானவரி சலுகைகளாலும் மாநிலங்களின் நிதிநிலைமையும் மோசமானது. பெரும் தொற்றும் அதனை ஒன்றிய அரசு எதிர்கொண்ட விதமும் மக்களுக்கும் மாநில அரசுகளுக்கும் எதிராகவே அமைந்தது.

எங்கே ‘திராவிட மாடல்’?

இத்தகைய சூழலில் 2022-23க்கான தமிழ் நாடு நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த மார்ச் 18 அன்று தாக்கல் செய்துள்ளார். அவர் தனது உரையில் பல முறை ‘திராவிட மாடல்’ என்று தனது பட்ஜட்டை வர்ணித்துள்ளார். இதன் பொருள் என்ன என்பது தெளிவுபடுத்தப்படவில்லை. எனினும் பொருளாதார வளர்ச்சி விகிதம் மட்டுமே இலக்கு என்று இல்லாமல் மக்களுக்கான நலத்திட்டங்களையும் அரசு முன்னெடுக்கும் என்று சிலர் இதை புரிந்து கொள்ளக் கூடும். ஆனால் உண்மையில் தமிழ் நாடு அரசின் பட்ஜட் வளர்ச்சியை ஏற்படுத்த உதவாது. இதர, மக்கள் நலன் சார்ந்த முனைவுகளும் இந்த பட்ஜட்டில் மிகக்குறைவுதான். இதன் பின்புலம் என்னவெனில் நிதி அமைச்சர் ஒன்றிய அரசின் தீவிர தாராளமய கொள்கைகளை பெருமளவிற்கு பின்பற்றுகிறார். அரசின் வரவு-செலவு இடைவெளி இலக்கை அடைவதற்கு செலவுகளை குறைப்பது மட்டுமே வழி என்ற தாராளமய கோட்பாட்டை அவர் ஏற்கிறார். இது பற்றிய விவரங்களை காண்போம்.

பட்ஜட் ஒதுக்கீடுகள் அதிகரிப்பு சொற்பமே

பல்வேறு துறைகளுக்கான பட்ஜெட் ஒதுக்கீடுகளைப் பார்த்தாலே, மக்கள் நலன் சார்ந்த முன்னேற்றத்துக்கான முக்கியத்துவம் குறைவாகவே இருக்கிறது என்பது புலனாகும். கடந்த பட்ஜெட்டைவிட (2021-22) இந்தப் பட்ஜெட்டில் பெரும்பாலான துறைகளுக்கான ஒதுக்கீடுகள் சிறிதளவே உயர்ந்திருக்கின்றன. சில ஒதுக்கீடுகள் குறைக்கப்பட்டிருக்கின்றன. இன்னும் சில ஒதுக்கீடுகள் பணவீக்க விகிதத்தை விடவும் அதிகமாக, கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளன. பள்ளிக் கல்விக்கான ஒதுக்கீடு 13.1 சதவீதம் உயர்ந்திருக்கிறது. போன பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகை 32,599.54 கோடி ரூபாய். இப்போது அது 36,895.89 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. அதைப்போல கிராம முன்னேற்றம் மற்றும் பஞ்சாயத்து அமைப்புகளுக்கான ஒதுக்கீடு 22,738 கோடியிலிருந்து 26,647 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. இது 17.2 சதவீத உயர்வு.
ஆனால் பெரும்பாலான மற்ற துறைகளுக்கான ஒதுக்கீடுகளில் உயர்வு எதுவும் இல்லை.

உயர்கல்வித்துறைக்கு இந்தப் பட்ஜெட்டில் 5,668.89 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகை 5,369.09 கோடி ரூபாய். சுகாதாரம் மற்றும் குடும்ப நலனுக்கு சென்ற ஆண்டு 18,933 கோடி. ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்தப் பட்ஜெட்டில் 17,901.73 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலான வீழ்ச்சியை இந்த ஒதுக்கீடுகள் காட்டுகின்றன. சமூக நலன், பெண்களுக்கு அதிகாரமளித்தல், சமூகப் பாதுகாப்பு, ஆதிதிராவிடர் மற்றும் மலைசாதியினர் நலன் ஆகிய துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் உண்மையளவில் குறைந்துள்ளன. அரசு ஊழியர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டுவருவது பற்றி பட்ஜெட் மௌனம் சாதிக்கிறது.

வேளாண் துறை சார்ந்த முதலீடுகள் குறைவு

வேளாண் உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு, சமச்சீர்வாக, தொடர்ந்து வேளாண்மையை நவீன மயமாக்குவதற்கான உட்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். அதைப்போன்றே அதிமுக்கியமான இலக்குகளை நிறைவேற்றுவதற்காகச் செலவுகளை அதிகப்படுத்தும் முயற்சிகள் என்று எதுவுமில்லை. கிராம வேளாண் தொழிலில் மதிப்புக்கூட்டல் அம்சத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. அதற்கு முக்கியத்துவம் கொடுத்தால் வளர்ச்சி என்பது பரவலாக்கப்படும்; கிராமப்புற வேலையின்மைப் பிரச்சினை ஓரளவு குறையும். நகர்ப்புற வேலை உத்தரவாதத் திட்டத்தை சரியான சட்டத்தின் ஆதரவோடு நகரப்புறம் முழுவதும் முன்னெடுத்துச் செல்வதற்கான முனைப்பு இல்லை. மகாத்மா காந்தி தேசிய கிராம வேலைவாய்ப்புத் திட்டத்தை வலுப்படுத்தவும் முயற்சி இல்லை.

2021-22 ஆண்டிலேயே சிக்கன நடவடிக்கைகள் மூலம் பற்றாக்குறையை (fiscal deficit) மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 3.8 % ஆக குறைத்துள்ளார் நிதி அமைச்சர். பதினைந்தாவது நிதி ஆணையம் அனுமதித்துள்ள 4.5% என்பதை பயன்படுத்தி வளர்ச்சிக்கான முதலீடுகளை அதிகமாக செய்திருக்க முடியும். வரும் 2022-23 ஆண்டிலும் கூடுதலாக மூலதனச் செலவுகளை மேற்கொண்டிருக்க முடியும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி மக்களுக்கு நிவாரணத்தை கூட்டவும், கிராக்கியை உயர்த்தவும் நடவடிக்கை எடுக்க நிதி அமைச்சர் தவறி விட்டார்.

பதுங்கியிருக்கும் தாராளமய கோட்பாடு

இந்த விளைவுகள் எல்லாம், நிதிநிலையைப் உறுதிப்படுத்துவதற்கான ‘அவசர’ தேவையைப் பற்றி நிதியமைச்சர் சொன்ன கருத்துடன் ஒத்திசைவானவை. உள்நாட்டு உற்பத்தியில் சதவிகிதப் பங்கு என்ற அலகில் கடன்களைக் குறைத்தல், நிதிப்பற்றாக்குறையைச் சரிசெய்தல் ஆகியவை நிதிநிலையைப் உறுதிப்படுத்தும் அம்சங்கள். 2021ஆம் ஆண்டு ஆகஸ்டில் தனது பட்ஜெட் உரையில் பிடிஆர் இப்படிச் சொன்னார்: “நிதிநிலையைப் பலப்படுத்துதல் என்பது அடிப்படைக் கொள்கை. தமிழ்நாடு நிதிப்பொறுப்பு சட்டம் சொல்லும் விதிகளை தொடர்ந்து பின்பற்றி, இனி வரும் ஆண்டுகளில் வருவாய் பற்றாக்குறையைக் குறைக்கும் இந்த மாநில அரசு. அதே சமயம், வளர்ச்சி சம்பந்தப்பட்ட செலவுகளுக்காக முதலீடும் செய்யப்படும்.”
இதிலிருக்கும் பிரச்சினை என்னவென்றால், நலத்திட்டங்களுக்கும், ‘வளர்ச்சித்’ திட்டங்களுக்கும் இடையில் இருப்பதாகச் சொல்லப்படும் முரண்பாடு.

கல்வி மட்டுமல்ல; உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பும் மனித மேம்பாட்டுக்கு உதவும். இத்தகைய முதலீடுகள் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சிக்குச் சம்பந்தமில்லாதவை என்று ஏன் கருதப்படுகிறது? “பொருளாதாரக் கோணத்தில் பார்க்கும்போது, சமூகநலனும், ஒட்டுமொத்தப் பொருளாதார முன்னேற்றமும் சமன்படுத்தி கொண்டு செல்ல வேண்டிய இரண்டு (எதிர்மறை) பக்கங்கள்,” என்று தனது பட்ஜெட் உரையில் பழனிவேல் தியாகாராஜன் சொல்லியிருந்தார். இப்பார்வையில் சிக்கல் உள்ளது.

மக்கள் நலன் காக்கும் செலவுகள் வளர்ச்சிக்கு எதிரானதா?

ஏன் சமூகநலன் சார்ந்த செலவுகள் பொருளாதார வளர்ச்சிக்கு எதிராகவே வைக்கப்படுகிறது? சமூகநலத் திட்டங்கள் ஆட்சியாளர்களின் கருணைச் செயல்களாகவே ஏன் பார்க்கப்படுகின்றன? ‘உணவு, உடை, உறைவிடம், கல்வி, ஆரோக்கியம் ஆகியவை நாகரிகமடைந்த ஒரு சமூகத்தில் மக்களின் உரிமைகள்’ என்று பார்க்கப்பட வேண்டும். ‘பெரிய மனதுடன்’ அரசு அளிக்கும் கொடைகள் அல்ல இவை. பிரச்சினை என்னவெனில் ’புதிய தாராளமயக் கொள்கை’ என்பது ‘சமூக நலனோடும்’ ‘அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியோடும்’ ஒத்துப்போவதில்லை. சமூகநலனையும் உள்ளடக்கிய, ஒட்டுமொத்த, ஜனநாயகத் தன்மை கொண்ட வளர்ச்சியை முன்னெடுப்பதும் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கடமை என்ற பார்வைக்கும், ஜனநாயக அரசாங்கத்தை ‘திறமையான’ முதலாளித்துவ தாராளமய பொருளாதாரத்திற்கு பெருந்தடையாக, தொல்லையாகப் பார்க்கும் புதிய தாராளமய சித்தாந்தத்திற்கும் இடையில்தான் உண்மையான போராட்டம் நிகழ்கிறது.

புதிய தாராளமய அமைப்பில் ஏற்படும் ‘வளர்ச்சி’ கொழுத்த நிதி மூலதனத்தின் நலன்களை மட்டுமே முதன்மையாகக் கவனித்துக் கொள்வதும், அதனால் சமத்துவமின்மையும், உழைக்கும் வர்க்கத்தினரின் பெருந்திரள் வறுமையும் அதிகரிப்பதும் உலகம் முழுவதும் காணப்படும் போக்குதான். அதற்காக வளர்ச்சியே வேண்டாமென்று பொருளல்ல. அந்த வளர்ச்சி மக்களுக்கு அதிகாரம் வழங்குவதாகவும், மக்களின் அடிப்படை மனித உரிமைகளை, பொருளாதார, சமூக, அரசியல் உரிமைகளை நிறைவேற்றுவதாகவும் அமைய வேண்டும் என்பதுதான் முக்கியம்.

உண்மை என்ன?

நாம் வாழும் இந்தக் காலகட்டத்தில் மக்கள் பல்வேறு பிரச்சினைகளோடு போராடிக் கொண்டிருக்கிறார்கள். கொரோனா தொற்றுப்பரவலின், ஊரடங்குகளின் கடுமையான விளைவுகள் மட்டுமல்ல; பொருளாதார வளர்ச்சி மந்தம், வேலையின்மை அதிகரிப்பு, சீறி உயரும் விலைவாசி ஆகியவையும் மக்களை வாட்டி வதைக்கின்றன. மேலும், முறைசாராத் துறையை சீரழித்த 2016-ஆம் ஆண்டின் பணமதிப்பிழப்பு என்ற நாசகார நடவடிக்கையும், 2017ஆம் ஆண்டு ஜிஎஸ்டி படு தோல்வியும், கடந்த ஐந்து ஆண்டுகளாக கிராமங்களிலும், நகர்ப்புறங்களிலும் ஏற்படுத்திய துன்பம் மக்களை பாடாய்ப்படுத்துகிறது.

2017-18-க்கான உழைப்பு படை ஆய்வும், 2017-18-க்கான நுகர்வோர் செலவு ஆய்வும், 2018-19 ஆண்டை மையப்படுத்தி இந்தியாவில் கிராமப்புறங்களில் இருக்கும் வேளாண் குடும்பங்களின் நிலையைப் பற்றி சமீபத்தில் வந்த தேசிய மாதிரி ஆய்வும் மக்களிடையே பரவலாக நிலவும் துயரத்தை, வாங்கும் சக்தி இழப்பை, வெளிக்காட்டின. மற்ற சில மாநிலங்களோடு ஒப்பிடும்போது, தமிழ்நாடு பரவாயில்லைதான். ஆனாலும் கிராமப்புற தமிழ்நாட்டு வேளாண் வீடுகளில் சராசரி மாத வருமானம் பற்றிய தேசிய மாதிரி ஆய்வு தரும் தகவல்களில் இருந்து, அந்தச் சராசரி வருமானம் ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்பதை அறிய முடிகிறது. அறிவுபூர்வமாக வறுமையை ஆராய்ந்து உருவாக்கப்பட்ட எந்த வரையறையின்படி பார்த்தாலும், கணிசமான அளவு கிராமத்து மக்கள் ஏழைகள்தான் என்பது அந்த ஆய்வு உணர்த்தும் செய்தி.

ஆண்டுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 7 அல்லது 8 சதவீதம் வளர்ந்திருக்கிறது என்று பல ஆண்டுகளாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வந்தபின்பும் நிலைமை இப்படித்தான் இருக்கிறது. இதைப் பார்க்கும்போது மனதில் தோன்றுவது இதுதான்: நமக்கு வளர்ச்சி வேண்டும் நிச்சயமாக. ஆனால் அந்த வளர்ச்சி வேறுவிதமாக இருக்க வேண்டும்.

எத்தகைய வளர்ச்சி தேவை?

கிராம முன்னேற்றம், கல்வி முன்னேற்றம், ஆரோக்கியம் பேணுதல் ஆகியவை மிக அவசியம். கிராமப்புறத்து, நகர்ப்புறத்து உட்கட்டமைப்பு, மற்றும் வேளாண் துறை ஆகியவற்றில் பொதுமுதலீடுகளை அதிகரிக்க வேண்டும். முழுமையான நில மறுவிநியோகமும், சிறுகுறு விவசாயிகளுக்கு அரசின் திட்டமிட்ட உதவிகளும் அவசியம். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு முக்கியத்துவம் தந்து, வேலைவாய்ப்புகளை அதிகரிக்கச் செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். இதற்கு நிதி அடிப்படைவாதத்தைக் கைவிடுவதோடு, பெருமுதலாளி நிறுவனங்கள் மீதும் பெரும் செல்வந்தர்கள் மீதும் உரிய வருமான வரிகள் விதிக்கப்பட்டு, கறாராக வசூலிக்கப்பட வேண்டும். அதைப்போலவே முக்கியமானது, ஒன்றிய அரசிடமிருந்து மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் நிதிவளங்கள் அதிகரிக்கப்பட வேண்டும். அரசியல் அமைப்புச் சட்டம் வரையறுத்திருப்பது போல இந்தியாவை மாநிலங்களின் ஒன்றியமாக கட்டமைத்துக் கொள்வதற்கு ஒரு பெரும் போராட்டம் வேண்டியிருக்கிறது.

முன்மாதிரி நடவடிக்கைகள் எங்கே?

அண்மை காலங்களில் ‘திராவிட மாடல்’ என்ற சொற்றொடர் பலரால் பயன்படுத்தப்படுகிறது. பிரபலம் அடைந்துள்ளது. எனினும் இதன் பொருள் துல்லியமாக வரையறுக்கப்படவில்லை. அண்மையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் பெரும் வெற்றி பெற்ற பொழுது செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் நாடு முதல்வர் இந்த வெற்றி ‘திராவிட மாடல்’ பெற்ற வெற்றி என்று பொருள்பட கூறினார். இது அரசியல் களத்தில் கிடைத்த தேர்தல் வெற்றியை முன்வைத்து சொல்லப்பட்டுள்ளது. சிலர் திராவிட மாடலுக்கு கொடுக்கும் விளக்கம் இது பொருளாதார வளர்ச்சியையும் வறுமை ஒழிப்பு உள்ளிட்டு நலிந்தவருக்கு சமூக பாதுகாப்பையும் அளிக்கும் தனித்தன்மை வாய்ந்த வளர்ச்சிப் பாதை என்பதாகும். ஒரு சிலர் இன்னும் ஒருபடி மேலே சென்று இதுதான் நாட்டுக்கே பொருத்தமான பாதை என்று முழங்குகின்றனர்.

‘திராவிட மாடல்’ பற்றிய விரிவான விளக்கமும் விவாதமும் தமிழ் நாடு பட்ஜெட் பற்றிய இக்கட்டுரையின் வரம்பிற்கு அப்பாற்பட்டது. நவீன தமிழ் நாட்டின் முக்கிய சிற்பிகளில் ஒருவரான பெரியார் அவர்களின் தலைமையில் வளர்ந்த திராவிட சமூக சீர்திருத்த இயக்கத்தின் மகத்தான ஜனநாயகப் பங்கை அங்கீகரிப்பது மிகவும் அவசியம். எனினும், பொருளாதாரக் கொள்கைகளை பொறுத்தவரையில், திராவிட கட்சிகள் என்று தங்களை கருதிக் கொள்ளும் கட்சிகள் கடந்த ஐம்பத்து ஐந்து ஆண்டுகளாக தமிழ் நாட்டு ஆட்சியாளர்களாக செயல்பட்டு வந்துள்ளனர் என்பதையும், குறிப்பாக கடந்த முப்பது ஆண்டுகளாக தீவிரமான தாராளமய கொள்கைகளை அமலாக்கிவரும் ஒன்றிய அரசாங்கங்கள் அனைத்திலும் இக்கட்சிகள் மாறி மாறி நேரடியாக பங்கேற்று அல்லது ஆதரித்து வந்துள்ளனர் என்பதையும், புறந்தள்ள இயலாது. பாராளுமன்றத்தில் தாராளமய கொள்கைகளுக்கும் அவற்றை அமலாக்கிட முன்மொழியப்பட்ட பல மசோதாக்களுக்கும் திராவிட கட்சிகள் ஆதரவு தந்து வந்துள்ளன என்பதும் கவனிக்கத்தக்கது.

அரசு தரும் புள்ளிவிவரக் குறியீடுகள்படி கல்வி, ஆரோக்கியம் உள்ளிட்ட துறைகளில் பல மாநிலங்களை விட தமிழ் நாடு முன்னேறியுள்ளது என்பது உண்மை. நவீன பெரும் தொழில் வளர்ச்சியிலும் ஒப்பீட்டளவில் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக தமிழ் நாடு திகழ்கிறது என்பதும் உண்மை. ஆனால் ஒன்றிய அரசின் அங்கமாக, அல்லது அதற்கு ஆதரவாக இருந்ததால் பல மக்கள் விரோத தாராளமய கொள்கைகளை அமல்படுத்தும் அரசுகளாக அடுத்தடுத்து வந்த திராவிட கட்சிகளின் அரசுகள் இருந்தன என்பதும் உண்மை. இதனால் நகரப்பகுதிகளிலும் கிராமப்பகுதிகளிலும் பரவலாக வறுமை தொடர்வதை தடுக்க இயலவில்லை. கிராமப்புற விவசாயக் குடும்பங்களின் வாழ்நிலை பற்றி ஒன்றிய அரசின் புள்ளியியல் நிறுவனம் நடத்திய 2018-19 ஆண்டுக்கான ஆய்வு பெரும் தொற்றுக்கு முன்பே இக்குடும்பங்களின் சராசரி மாத வருமானம் மிகக் குறைவாக இருந்தது என்பதை தெரிவிக்கிறது.

பொது உடமை இயக்கத்தின் தீவிர போராட்டங்களாலும் முயற்சிகளாலும் நில மறுவிநியோகம் உள்ளிட்ட நிலச்சீர்திருத்த நடவடிக்கைகள் தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதியில் நடந்துள்ளன என்றாலும், நில விநியோகம் தமிழ் நாட்டின் ஜனநாயக இயக்கங்களின் தொடரும் சவாலாகவே உள்ளது. அண்டை கேரள மாநிலத்தில் நிலசீர்திருத்தம் பொது உடமை இயக்கத்தின் தலைமையில் மிகப்பெரிய மக்கள் இயக்கமாக நடந்தது. பெண்-ஆண் சமத்துவத்திற்கும் சமூக ஒடுக்குமுறைகளை தகர்க்கவும் முக்கிய பங்கு ஆற்றியது. புகழ்பெற்ற பொருளியல் அறிஞர் பேராசிரியர் அமர்த்யா சென் ஒருமுறை நவீன ஆசியாவில் வளர்ச்சி என்ற சவாலில் சாதனை புரிந்துள்ள நாடுகளாக ஜப்பான், மக்கள் சீனம், தாய்வான் மற்றும் தென் கொரியா ஆகியவற்றை குறிப்பிட்டு, இந்நாடுகளின் ஒரு பொது அம்சம் இவை அனைத்தும் முழுமையான நிலசீர்திருத்தம் நடைபெற்றுள்ள நாடுகள் என்பதை சுட்டிக் காட்டுகிறார். இந்த அனுபவங்கள் தமிழ் நாட்டு வளர்ச்சி பற்றிய விவாதத்திற்கும் வெளிச்சம் தரும்.

நீண்ட காலமாக சமூகநீதி பொதுவெளியில் உரக்கப் பேசப்பட்டும் சமூக ஒடுக்குமுறைகளும் சாதி மறுப்பு திருமணங்களை ஏற்க மறுக்கும் சமூக விழுமியங்களும் தமிழகத்தில் ஏன் தொடர்கின்றன என்பவை போன்ற கேள்விகளையும் தமிழ் நாட்டு ஜனநாயக இயக்கங்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

நிதி அடிப்படைவாதம் உதவாது

ஒரு ஆண்டுக்கான தமிழ் நாடு பட்ஜெட் பற்றிய பரிசீலனை என்பதை ஒரு வரம்பிற்குள் தான் செய்ய முடியும். அதில் திராவிட மாடலை தேடுவதோ, அது இல்லை என்று சொல்வதோ, இக்கட்டுரையின் நோக்கம் அல்ல. நாம் சொல்வது என்னவென்றால், தமிழ் நாடு நிதி அமைச்சர் ஒன்றிய அரசும் பதினைந்தாவது நிதி ஆணையமும் முன்வைக்கும் நெறிமுறைகளை தட்டிக் கேட்க வேண்டும் என்பதுதான். தனது பட்ஜெட் உரையிலேயே நிதி அமைச்சர் ஒன்றிய அரசின் மாநில உரிமை பறிப்பு அணுகுமுறையை விமர்சித்துள்ளார். ஒன்றிய அரசிடம் இருந்து மாநிலத்துக்கு சட்டப்படி அளிக்கப்படும் தொகைகளை நிபந்தனையின்றி அளிக்க வேண்டும் என்றும் கோரி இருக்கிறார். இதுபோல் ஒன்றிய அரசு கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக எடுத்துவரும் நடவடிக்கைகளை ஒத்த கருத்துள்ள மாநில அரசுகளுடன் இணைந்து எதிர்க்க தமிழ் நாடு அரசு முன்வர வேண்டும்.

நிதி அமைச்சர் கவனத்திற்கு இன்னும் ஓரிரு விஷயங்களை முன்வைக்க வேண்டியுள்ளது. பெரும் தொற்றுக்கு முன்பிருந்தே பெரும் சிக்கலில் உள்ளவை தமிழ் நாட்டின் சிறுகுறு தொழில்கள். இவை கணிசமான அளவில் தொழில் உற்பத்திக்கும் ஏற்றுமதிக்கும் பங்காற்றுபவை. மேலும் பெரும் தொழில்களைவிட குறைந்த முதலீட்டில் கூடுதல் வேலை வாய்ப்புகள் தருபவை. நகர்ப்புற வேலை திட்டத்தை முழுமையாக விரிவுபடுத்தி, சிறு,குறு தொழில்களின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் தொழிலாளர்களுக்கு தரப்படும் கூலியில் ஒருபகுதியை இந்த வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் மானியமாக வழங்கலாம். கேரள அனுபவத்தை உள்வாங்கி, உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் அதிகாரங்கள், நிதி மற்றும் பணியாளர்கள் தந்து உதவலாம். இது ஜனநாயக பங்கேற்புக்கான வாய்ப்புகளையும் மக்களுக்கு அளிக்கும்.

வேளாண் துறையில் விரிவாக்கப் பணி அமைப்பையும் ஆராய்ச்சி அமைப்பையும் வலுப்படுத்துவதுடன், போதுமான அளவில் விளைபொருட்களை நல்ல விலையில் விற்கும் வகையில் வேளாண் விளைபொருள்களை சந்தைப்படுத்தும் குழுக்களின் எண்ணிக்கையையும் செயல்பாட்டு திறனையும் உயர்த்த உரிய ஒதுக்கீடுகள் செய்யலாம். இங்கே நாம் குறிப்பிட்டிருப்பவை சில எடுத்துக்காட்டுகளே.
நிதி அடிப்படை வாதத்தை புறம் தள்ளி மக்கள் சார் அணுகுமுறையை பின்பற்றி தமிழ் நாடு மேலும் முன்னேற நம் முன் வாய்ப்புகள் உள்ளன.

2022-23 ஒன்றிய ‘பட்ஜெட்’ : ஒரு மதிப்பீடு !

 • பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா

ஒன்றிய பட்ஜட்டை  மதிப்பீடு செய்வது  எப்படி?

முதலில் பட்ஜட் வேறு, நிதி அமைச்சரின் பட்ஜட் உரை வேறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அமைச்சரின் உரையில் வார்த்தை ஜாலங்கள் இருக்கும். அரசியல் பிரச்சாரம் இருக்கும். தான் முன்மொழியும் பட்ஜட் வரும் ஐந்து ஆண்டுகளில், பத்து ஆண்டுகளில் ஏகப்பட்ட நன்மைகள் தரும் என்ற பொய்யுரை இருக்கும். இந்த ஆண்டு பட்ஜட் 25 ஆண்டுகளுக்கானது என்று நிதி அமைச்சரும், ஒரு நூற்றாண்டுக்கானது என்று இந்தியா பிரதமரும் திருவாய் மலர்ந்தருளியுள்ளனர். இந்த பிரச்சாரத்தையும் பசப்புவார்த்தைகளையும் புறக்கணித்து சரியான அறிவியல் நிலைபாட்டில் இருந்து நாம் ஒன்றிய பட்ஜட்டை பரிசீலனை செய்வோம்.

பொய்த்துப்போன எதிர்பார்ப்புகள்

2022 – 23 நிதி ஆண்டுக்கான ஒன்றிய  அரசின் வரவு செலவு அறிக்கை 2022 பிப்ரவரி 1 அன்று தாக்கல் செய்யப்பட்டது. ஐந்து மாநிலங்களில் தேர்தல் விரைவில் நடைபெற இருந்ததாலும், விவசாயிகள் மத்தியில் தனது செல்வாக்கு பெரிதும் சரிந்துள்ள நிலையில் அதனை மீட்டெடுக்கவும், பல நலத்திட்டங்களுக்கான ஒதுக்கீடுகளை உயர்த்தியும் தேசீய வேளாண் ஆணயம் பரிந்துரைத்துள்ள குறைந்த பட்ச ஆதரவு விலை தொடர்பான முன்னெடுப்பை அறிவித்தும் பட்ஜட் அமையும் என்ற எதிர்பார்ப்புகள் ஊடகங்களில் முன்வைக்கப்பட்டன. ஆனால் அப்படி பட்ஜட் அமையவில்லை. மாறாக, ஊரக தொழிலாளர்கள்  மற்றும் வேளாண் குடிமக்கள் மீதான கடும் தாக்குதலையே ஒன்றிய பட்ஜட் மேலும் முன்னெடுத்து சென்றுள்ளது. நகர்ப்புற உழைப்பாளி மக்களுக்கும் சிறு குறு தொழில் முனைவோருக்கும் பொதுவாக முறைசாரா துறைகளுக்கும் பட்ஜட் நட்புக்கரம் நீட்டவில்லை.   இரண்டாண்டுக்கும் மேலாக தொடரும் பெரும் தொற்று மற்றும் ஒன்றிய அரசு அதனை எதிர்கொள்வதில் பின்பற்றிய கொள்கைகள் பெரும் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை சீரழித்துள்ள நிலை உள்ளது.

இத்தகைய சூழலில் அனைத்துப் பகுதி உழைப்பாளி மக்களுக்கும் கடும் வறுமையில் வாடுவோருக்கும் நிவாரணம் அளிக்கும் பட்ஜட் தான் அவசர அவசிய தேவை. இதுவே கிராக்கியை உயர்த்தி பொருளாதார மீட்சிக்கு உதவியிருக்கும். ஆனால் ஒன்றிய பட்ஜட் இதற்கு நேர விரோதமாக அரசின் ஒதுக்கீடுகளை உண்மை அளவில் உயர்த்தவில்லை. தேச உற்பத்தி மதிப்பின் (ஜிடிபி) சதவிகிதமாக கணக்கிட்டால் நடப்பு ஆண்டில் இது 16.3 %, ஆனால் வரும் ஆண்டுக்கான  பட்ஜட் இதனை 15.2% ஆக குறைத்துள்ளது.

உழைப்பாளிகள் மீது வரிச்சுமை, உணவு, உர மானியங்கள்  வெட்டு

ஒன்றிய அரசு மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் செலவுகளை மேற்கொள்ளவில்லை. மாறாக மக்களுக்கு நிவாரணம் மறுத்து, செல்வந்தர்களுக்கும் பெரு முதலாளிகளுக்கும் வரிச் சலுகைகள் தரும் பாதையில்தான் இந்த பட்ஜட் பயணிக்கிறது. அரசின் நடப்பு ஆண்டிற்கான மொத்த செலவின் திருத்தப்பட்ட மதிப்பீடு ரூ. 37,70,000 கோடி . வரும் ஆண்டுக்கு  பட்ஜட் முன்வைக்கும் மொத்த செலவு மதிப்பீடு ரூ 39,44,909கோடி . விலைவாசிஉயர்வை கணக்கில் கொண்டால் இது சரிவு என்பது தெளிவு. ஒன்றிய அரசின் வரி வருமானத்தில் பாதிக்கும் சறறு அதிகமாக மக்கள் மீது சுமத்தப்படும் சுங்க வரி, கலால் வரி மற்றும் ஜிஎஸ்டி மூலம் கிடைக்கிறது. கம்பனிகள்  மற்றும்செல்வந்தர்கள்  இதைவிடக் குறைவாகவே வரி செலுத்துகின்றனர். மொத்தமாக மாநிலங்கள் மற்றும் ஒன்றியம் இரண்டும் சேர்த்து வசூலிக்கும் வரி தொகையில் கார்ப்பரேட் மற்றும் தனிநபர் வருமானங்களின் மூலமாக கம்பனிகள் மற்றும் செல்வந்தர்கள் தருவது மூன்றில் ஒரு பங்கு தான். மக்களிடம் இருந்து மறைமுக வரிகள் மூலம் வருவது மூன்றில் இரண்டு பங்கு.மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக் காலத்தில் ஒன்றிய அரசின் மொத்த வரி வருமானம் 2014-15 இல் ரூ 12.4 லட்சம் கோடியில் இருந்து 2020-21 இல் ரூ 24.2 லட்சம் கோடியாக, கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது. இவ்வளவுக்கும் 2020-21 ஆண்டில் பெரும் தொற்று காரணமாக உற்பத்தி சரிந்திருந்தது. மாமூல் நிலமை இருந்திருந்தால் ஒன்றிய அரசின் வரி வருமானம் மேலும் கூடி இருக்கும்.  நிலைமைகள்  இப்படி இருந்தும், ஒன்றிய பட்ஜட் மக்களுக்கான மானியங்களை வெட்டுவது, நலத்திட்ட செலவுகளை குறைப்பது என்றே செயல்பட்டுள்ளது. 2013-14 இல் ஒன்றிய அரசின் மொத்த மானியம் தேச உற்பத்தி மதிப்பில் 2.3 % ஆக இருந்தது. மோடி அரசு தொடர்ந்து மானியங்களை குறைத்ததால் தொடர்ந்து சரிந்து  2019-20 இல் 1.1% ஆகியது. இதே காலத்தில் பெரும்  கம்பனிகள் மற்றும்  செல்வந்தர்களுக்கு வரி சலுகைகள் அளித்ததால் இழப்பை ஈடுகட்ட அரசு அதிகம் கடன் வாங்கியது. இதனால் ஆண்டு தோறும் வட்டி செலவு அதிகரித்தது. 2014-15 இல் தேச உற்பத்தி மதிப்பில் 3.2% ஆக இருந்த வட்டிச்செலவு 2021-22 இல் 3.6% ஆக அதிகரித்தது. ஆக பட்ஜட் மூலமாக உழைப்பாளி மக்கள் மீது வரிச்சுமையை கூட்டி அந்த வரிப்பணத்தில் அரசுக்கு கடன் கொடுத்துள்ள பெரும் கம்பனிகளுக்கும் செல்வந்தர்களுக்கும் கூடுதல் வட்டி பணம் தரப்படுகிறது. இது ஒருவகை முதலாளித்துவ ரசவாதம்!

மேலும் சில விவரங்களை காண்போம். மக்களுக்கு மிகவும் முக்கியமான மூன்று மானிய வகைகள் உரம், உணவு மற்றும் பெட்ரோலியம் ஆகியவை சார்ந்தவை. நடப்பு ஆண்டில் இவை முறையே (கோடி ரூபாய்களில்)  140122, 286469,   6517என்று  உள்ளன. மூன்றும் 22 -23பட்ஜட்டில் 105222, 206831 மற்றும்5813கோடி ரூபாய்கள் என்று உள்ளன. ஏறத்தாழ ரூ 14,000 கோடி மானிய வெட்டு நிகழ்கிறது. 2020-21 இல் எல்பிஜி திட்டத்தில் ரூ 23,667 நேரடி பயன் மாற்றம் நிகழ்ந்தது. வரும் 22–23இல் ஒதுக்கீடு ரூ. 4,000 கோடிதான். ஏழை குடும்பங்களுக்கு எல்பிஜி இணைப்பிற்கான ஒதுக்கீடு 20 -21 இல் ரூ 9,235 கோடி. 22-23இல் ரூ. 800 கோடி மட்டுமே.  

ஊரக வளர்ச்சி, வேளாண்மை

ஊரக வளர்ச்சிக்கு நடப்பு ஆண்டில் ஒதுக்கீடு ரூ 2,06,948கோடி. வரும் ஆண்டில் ரூ  2,06,293 கோடிதான்.  விலைவாசி உயர்வை கணக்கில்  கொண்டால் இது குறிப்பிடத்தக்க சரிவு. நடப்பு ஆண்டில்  வேளாண் மற்றும் வேளாண்சார்ந்த நடவடிக்கைகளுக்கான  ஒதுக்கீடு ரூ 1,47,764 கோடி. வரும் ஆண்டில் ரூ  1,51,521கோடி.  விலைவாசி உயர்வை கணக்கில் கொண்டால் இது சரிவு என்பது விளங்கும். நடப்பு ஆண்டில்  “ராஷ்ட்ரீய கிசான் விகாஸ் யோஜனா” (தேசீய வேளாண் வளர்ச்சி திட்டம்)விற்கு ரூ 10,407 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால் அரசு 5,860 கோடி தான் செலவழித்தது. வரும் ஆண்டுக்கான பட்ஜட் ஒதுக்கீடு ரூ 10,433 கோடி. இதுவும் செலவிடப்படுமா என்பது கேள்வியே. சிறு,குறு விவசாயிகளுக்கென்று உருவாக்கப்பட்ட திட்டங்களுக்கு ஒதுக்கீடுகள் குறைக்கப்பட்டுள்ளன.

மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டம் (ரேகா திட்டம்)

2020-21 ஆண்டில் ரேகா திட்டத்திற்கு ஒன்றிய அரசு ரூ.1,11,170 கோடி  செலவழித்தது என பட்ஜட் ஆவணங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக பாஜக ஆட்சியில் இத்திட்டத்தையும் அதன் பின் உள்ள சட்டத்தையும் நீர்த்துப்போக செய்ய எல்லா முனைவுகளையும் அரசு மேற்கொண்டுவருகிறது. அடுத்த ஆண்டு 2021-22 இல் ரேகாவிற்கான ஒதுக்கீட்டை  பட்ஜட்டில் ரூ.73,000 கோடியாக குறைத்தது. பின்னர், திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி இத்தொகை ரூ. 98,000 கோடியாகியாது என்றாலும், இதுவும் தேவையை வைத்துப் பார்க்கும் பொழுது மிகவும் குறைவு. மீண்டும் வரும் ஆண்டிற்கு ஒதுக்கீடு ரூ 73,000 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. 2020-21இல் அனைத்து ஊரக வேலை திட்டங்களுக்கும் சேர்த்து ரூ 1,93,000 கோடி செலவிடப்பட்டது. 2021-22 பட்ஜட்டில் ரூ 1,25,000 கோடியாக இது குறைக்கப்பட்டது. எனினும் திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி இது ரூ 1,73,000 கோடியானது. ஆனால் 22-23 இல் ஒதுக்கீடு மீண்டும் ரூ. 1,25,000 கோடி  என்ற அளவில்தான் உள்ளது.ஊரக மற்றும் புலம் பெயர் தொழிலாளிகள் வாழ்வாதாரம் பற்றி பாஜக அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை என்பது கண்கூடு.

ஒன்றிய அரசு மெல்ல மெல்ல ஊரக வேலை திட்டத்தை ஒழித்துக்கட்ட முனைவதைக் காண முடிகிறது. தில்லியில் உள்ள அசோகா பல்கலையில் செய்யப்பட்டுள்ள ஆய்வில் 100 நாட்கள் வேலை கிடைப்பதே இல்லை. சராசரியாக 22 நாட்கள் மட்டுமே 2020-21 இல் கிடைத்ததாக அந்த ஆய்வு சொல்கிறது। அரசு 51 நாட்கள் எனறு  கணக்கு சொல்வதன் சூட்சுமம் என்னவெனில், திட்டத்தில் பதிவு செய்து ஒருநாளாவது வேலை செய்தவர்கள் மட்டுமே சராசரி கணக்கிட எடுத்துக்கொள்ளப்படுகிறார்கள் என்பதாகும்.

விவசாயிகளை பழிவாங்க துடிக்கும் ஒன்றிய அரசு

வீரம் செறிந்த, வரலாற்று சிறப்பு மிக்க  போராட்டத்தை நடத்தி, 700க்கும் மேலான இன்னுயிர்களை ஈந்து,  அரசின் அடக்குமுறையை தகர்த்து, வேளாண் விரோத, மக்கள் விரோத சட்டங்களை முறியடித்த விவசாயிகளை பழிவாங்கும் தன்மையில் ஒன்றிய பட்ஜட்அமைந்துள்ளது.  அனைத்து பயிர்களுக்கும் தேசீய வேளாண் ஆணையம் பரிந்துரைத்துள்ள சூத்திரத்தின் அடிப்படையில் குறைந்தபட்ச ஆதரவு விலையை அரசுதரவேண்டும் என்பதும், முழுமையான கொள்முதல் செய்யப்படவேண்டும் என்பதும் விவசாயிகள் முன்வைத்த இரு முக்கிய கோரிக்கைகள். ஆனால் ஒன்றிய பட்ஜட் சென்ற ஆண்டைவிட குறைவான தொகையை கொள்முதலுக்கு ஒதுக்கியுள்ளது. கொள்முதலால் பயனடையும் விவசாயிகளின் எண்ணிக்கையும் குறையும். உர மானியம் 25 % வெட்டப்பட்டுள்ளது. பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்ட ஒதுக்கீடும் குறைந்துள்ளது. பிரதம மந்திரி கிசான் திட்டப்பயன் கதியும் இதுவே. வேறு பல வேளாண்.ஒதுக்கீடுகளும் குறைந்துள்ளன.

மாநிலங்களின் மீது தொடரும் தாக்குதல்

இக்கட்டுரையில் ஒன்றியம்  – மாநிலங்கள்  அதிகாரப்பகிர்விலும் நிதிப் பங்கீட்டிலும் பாஜக ஆட்சியில் மாநிலங்களுக்கு  ஏற்பட்டுவரும் இழப்புகள் பற்றி விரிவாக  விவாதிக்க இயலாது. எனினும் ஒருசில அம்சங்களை சுருக்கமாக பார்க்கலாம்.2014 இல் ஆட்சிக்குவந்த பாஜக அரசு தொடர்ந்து வரிகொடுக்கும் திறன் அடிப்படையிலான  நேர்முக வரிவிகிதங்களை குறைத்து வருகிறது. 2016-17 பட்ஜெட்டில் சொத்து வரியை நிதி அமைச்சர் ஜெயிட்லி ரத்து செய்தார். அடுத்தடுத்த பட்ஜெட்டுகள் மூலம்கார்ப்பரேட் கம்பனிகள் மீதான வருமான வரியை பட்ஜெட்டுகள் குறைத்தன. இறுதியில் 2019 இல் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கார்ப்பரேட் கம்பனிகள் மீதான வருமான வரியை 22% என்று தடாலடியாக குறைத்தார். இதனால் ஒன்றிய அரசுக்கு மட்டுமின்றி, மாநில அரசுகளுக்கும் வரி வருமான இழப்பு கணிசமாக ஏற்பட்டது. ஏனெனில் ஒன்றிய அரசின் மொத்த வரிவருமானம் நிதி ஆணைய பரிந்துரைகளின்படி ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையில் பகிர்ந்துகொள்ளப்படுகிறது. வருமான வரிகள் பற்றிய முடிவுகளை ஒன்றிய அரசு தன்னிச்சையாக எடுக்கிறது. மாநிலங்களுடன் கலந்தாலோசிப்பதில்லை. இதனால் மாநிலங்கள் வரி வருமானம் இழக்கின்றன.

வரிப்பகிர்வு மூலமும், வேறு வகைகளிலும் மாநிலங்களுடன் ஒன்றிய அரசு வளங்களை பகிர்கிறது.பொதுவாக, ஒன்றிய அரசுகள் இப்பகிர்வுகள் வாயிலாக தங்களது அதிகாரத்தை செலுத்த முனைகின்றன. பாஜக ஆட்சியில் இந்த முனைவு பெரிதும் அதிகரித்துள்ளது. அனைத்து அதிகாரங்களையும் மாநிலங்களிடமிருந்து பறித்து, மையப்படுத்துவது என்பது பாஜக அரசின் அணுகுமுறையாக இருந்துவருகிறது.

பாஜக ஆட்சியின் எட்டு ஆண்டுகளில் இரண்டு நடவடிக்கைகள் மாநில அரசுகளுக்கு மிகவும் விரோதமானவை. ஒன்று, நவம்பர் 2016 இல் மோடி அரசு மேற்கொண்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை. இது முறைசாராத்துறையை பெரிதும் பலவீனப்படுத்தியதோடு, மாநில அரசுகளின் வரி வருமானத்தை சிதைத்தது. இரண்டாவது, 2017 ஜூலை 1இல்  அமலுக்கு வந்த ஜிஎஸ்டி சட்டம்.இதன்மூலம் சரக்குகள் மற்றும் சேவைகள் மீது வரிவிதிக்கும் உரிமை மாநிலங்களிடம் இருந்து பறிக்கப்பட்டு, ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஜிஎஸ்டி கவுன்சில் இடம் தரப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் வேறு பல அம்சங்களும் மாநிலங்களுக்கு விரோதமாக உள்ளன.இச்சட்டத்தில் ஐந்து ஆண்டுகாலம் மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி அமலாக்கத்தால் ஏற்படும் வரிவருமான இழப்பை ஒன்றிய அரசு ஈடு செய்யும் என்ற வாக்குறுதி இடம் பெற்றிருந்தும், பெரும் தொற்றை காரணம் காட்டி, ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு தரவேண்டிய தொகைகளை இன்னும் முழுமையாக தரவில்லை.

வரும் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் மாநிலங்களுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் கூடுதல் கடனாக ஒன்றிய அரசு அளிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஐம்பது ஆண்டுகளுக்கான வட்டி இல்லாத கடன் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலெழுந்தவாரியாக பார்த்தால், இது ஒரு வரவேற்கத்தக்க நடவடிக்கையாக தெரியும். ஆனால் உண்மை என்னவெனில்,இக்கடனை முன்கூட்டியே அடைக்கும் உரிமை மாநிலங்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு செய்வதால் மாநிலங்களின் சுயேச்சையான நிதி திரட்டும் உரிமைகள் பாதிக்கப்படும் என்று தமிழக அரசின் நிதி அமைச்சரும் முன்னாள் ஒன்றிய நிதித்துறை செயலர் கார்க் அவர்களும் விளக்கியுள்ளனர். ஒன்றிய அரசின் மூத்த நிதித்துறை அதிகாரி ஒருவர் அரசியல் சாசனத்தின் ஷரத்து 293(3) படி, ஒன்றிய அரசுக்கு கடன் திருப்பித்தரவேண்டிய நிலையில் உள்ள மாநிலங்கள் ஒன்றிய அரசின் அனுமதியின்றி கடன் வாங்க இயலாது என்று தெளிவு படுத்தியுள்ளார்.

இவ்வாறு பல வழிகளில் மாநிலங்களின் வளம் திரட்டும் வழிகளுக்கும் வரவு-செலவு சார்ந்த முடிவு எடுக்கும் உரிமைகளுக்கும் பாஜக ஆட்சியில் பல முட்டுக்கட்டைகள் போடப்பட்டுள்ளன. பல ஆண்டுகளாகவே, தேச உற்பத்தி மதிப்பின் விகிதமாக கணக்கிட்டால் மாநிலங்களுக்கு ஒன்றிய பட்ஜெட் மூலமாக கிடைக்கும் வளங்களின் மொத்த மதிப்பு குறைந்து வருகிறது.

தீவிர தனியார்மயம்

ஒன்றிய பட்ஜட் அதிதீவிர தாராளமய கொள்கைகளை பின்பற்றியே அமைந்துள்ளது என்பதற்கு இன்னொரு முக்கியமான சான்று, தனியார்மயம் பற்றிய அதன் முனைவுகள்.  ஒருகாலத்தில் தாராளமயவாதிகள் கூட தனியார்மய நடவடிக்கைகளை நியாயப்படுத்த பொதுத்துறையின் நட்டங்களை காரணமாக முன்வைத்து வந்தனர். மோடி ஆட்சியில் பொதுத்துறையை கிட்டத்தட்ட முழுமையாக தனியார் (பெருமுதலாளிகளுக்கு) என்னவிலை கிடைத்தாலும் கொடுத்துவிடுவது என்பது அரசின் கொள்கையாக ஆக்கப்பட்டுள்ளது. மிகவும் குறைந்த விலைக்கு பொதுத்துறை நிறுவன பங்குகள் விற்கப்படுகின்றன. அவற்றிடம் உள்ள சொத்துக்கள் திட்டமிட்டு குறைவாக மதிப்பிடப்பட்டு விற்கப்படுகின்றன. இது அரசுக்கு நெருக்கமான பெருமுதலாளிகளுக்கு சாதகமான முனைவாக உள்ளது. வரும் ஆண்டுக்கான பட்ஜெட்டில் அரசு பங்கு விற்பனை மதிப்பின் இலக்கு ரூ 65,000 கோடி என்று பட்ஜெட்டில் இருந்தாலும் வரும் மாதங்களில் மேலும் பல பொதுத்துறை நிறுவனங்கள் விற்கப்படக் கூடும். வங்கிகள் தனியார்மயம் முடுக்கிவிடப்பட்டுள்ளது. மகத்தான, உலகின் ஆகச்சிறந்த நிதி நிறுவனமான LICயையே குறைவாக மதிப்பீடு செய்து விற்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.

வரும் காலங்களில் இத்தகைய நடவடிக்கைகளால் அரசின் வருவாய் பாதிக்கப்படும். நாட்டின் சுயசார்பும் இறையாண்மையும் ஆபத்துக்குள்ளாகும். சமூக நீதியின் ஒரு முக்கிய அம்சமான இட ஒதுக்கீடு முற்றிலும் அழிக்கப்படும்.

நிறைவாக

மொத்தத்தில் ஒன்றிய அரசின் பட்ஜட் விவசாயிகளுக்கும் விவசாயதொழிலாளிகள் மற்றும்  இதர கிராமப்புற, நகர்ப்புற உழைப்பாளி மக்களுக்கும் நிவாரணம் மறுக்கிறது.தனது மொத்த ஒதுக்கீடுகளை  உண்மையளவில் குறைத்துள்ளது. மாநிலங்களுக்கு சாதகமாக இல்லை. பொருளாதார மீட்சிக்கும் உதவாது. கடும் பணவீக்கமும் அதிகரித்துவரும் வேலையின்மையும்தான் பட்ஜட்டின் முக்கிய விளைவுகள். இந்த இரண்டு கொடிய பிரச்சனைகளை எதிர்கொள்ள பட்ஜெட் எந்தவகையிலும் உதவாது. மாறாக, தீவிரப்படுத்தும். இத்தகைய பின்னணியில் நமது இயக்கங்களை வலுப்படுத்தி அரசின் கொள்கைகளை மாற்ற மக்களை திரட்டுவது அவசர அவசியம்.

இந்தியாவில் அதிகாரப் பரவலாக்கமும், கூட்டாட்சி அமைப்பும்

 • தாமஸ் ஐசக்

(மார்க்சிஸ்ட் இதழ் நடத்திய விடுதலை 75 தொடர் கருத்தரங்கத்தில் கேரள மாநில முன்னாள் நிதியமைச்சரும் பேராசிரியருமான தாமஸ் ஐசக் அவர்கள் ஆற்றிய உரையின் கட்டுரை வடிவம் இங்கே தரப்படுகிறது)

நாடு விடுதலை பெற்று, இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட தருணத்திலேயே, இது ‘முழுமைபெறாத கூட்டாட்சியாக இருக்கிறது’ என்று பலரும் விமர்சித்தார்கள். அதற்குப் பிறகு நடந்தவற்றை ஆராய்ந்து பார்த்தால் இரண்டு போக்குகளை நம்மால் காணமுடிகிறது. ஒன்று, அதிகாரத்தை மையத்தில் குவிப்பது; மற்றொன்று. அதிகாரத்தை பரவலாக்கம் செய்வது.

அரசமைப்பும், அதிகார குவிப்பும்:

அதிகார பரவலாக்கம் பற்றி அரசியலமைப்புச் சட்டத்தில் எழுதப்பட்டிருந்தாலும் அதற்கு வடிவம் கொடுக்க போதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. 1990களின் தொடக்கத்தில் பல்வேறு விவாதங்களுக்கு பிறகு அதிகார பரவலாக்கத்தின் அவசியத்தை உள்ளாட்சி அமைப்புகள் மூலம் உறுதிப்படுத்தும் விதமான திருத்தங்கள் அரசியலமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்டன. ஆனால் அதற்கு பிறகும் நமக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. உள்ளாட்சி அமைப்புகளை உண்மையான தன்னாட்சியுடன் செயல்படக்கூடிய நிர்வாக அதிகாரமாக மாற்றும் முயற்சி நடைபெறவே இல்லை. இந்தப் போக்கினை இந்தியாவின் அரசியல் பொருளாதார வளர்ச்சியுடன் பொருத்திப் பார்த்தால் புரிந்துகொள்ள முடியும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தபோதே ஒன்றிய அரசின் அதிகாரம் மாநில அரசுகளைவிட கூடுதலாக இருப்பது அனைவருக்கும் புரிந்தது. அரசியலமைப்புச் சட்டத்தில் பல்வேறு ஓட்டைகள் இருப்பதும் அதனை பயன்படுத்தி மாநில அரசுகளின் அதிகாரங்களை ஒன்றிய அரசு அத்துமீறும் போக்கும் கண்கூடாகவே தெரிந்தது.

ஒன்றிய அரசுகளுக்கு என்று சில அதிகாரங்களும், மாநில அரசுகளுக்கு என்று சில அதிகாரங்களும் அதனுடன் மூன்றாவதாக பொது (concurrent) பட்டியலும் இருக்கிறது. பொதுப்பட்டியலில் ஒன்றிய அரசும் சட்டங்களை கொண்டு வரலாம். மாநில அரசுகளும் சட்டங்களை கொண்டு வரலாம். ஆனால் ஒன்றிய அரசின் அதிகாரமே இறுதியில் செல்லுபடியாகும்.

அரசு நிர்வாக அதிகாரத்தை பொறுத்தவரை ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுக்குமான வரைமுறைகள் தெளிவாக வகுக்கப்படவில்லை. உதாரணத்திற்கு நீதித்துறையை நிர்வகிக்க மாநிலங்களுக்கு துளிக்கூட அதிகாரமில்லை. மாநிலப் பட்டியலில் உள்ள விசயங்கள் தொடர்பாக எந்த மாநிலத்தையும் ஆலோசிக்காமல் ஒன்றிய அரசு எந்தவொரு சர்வதேச ஒப்பந்தத்திலும் கையெழுத்திட முடியும். இதனால்தான் இந்தியாவை முழுமையற்ற கூட்டாட்சி என்கிறோம்.

இந்தியா பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாடு. இங்கு பல மொழிகள் பேசும் மக்கள் வாழ்கிறார்கள். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தொடக்கத்தில், மொழிவாரியான கமிட்டிக்களே இடம்பெற்றிருந்தன. விடுதலைப் போராட்டத்தின்போது உயர்த்தி பிடிக்கப்பட்ட கோட்பாடாகவும் அது  இருந்தது. அப்படிஇருந்த நிலையில், அதிகாரக் குவிப்பிற்கான சாத்தியம் எப்படி ஏற்பட்டது?

இதற்கு தோழர் இ.எம்.எஸ். ஒரு முக்கியமான காரணத்தை முன்வைக்கிறார். அதாவது, நாடு விடுதலை பெறுகிற சமயத்தில் ஏற்பட்ட இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையும், அதனால் மக்கள் அனுபவித்த கடும் துயரங்களையும் கணக்கில் கொண்டு இதுபோல் ஒரு நிகழ்வு மீண்டும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக அரசியலமைப்புச் சட்டத்தில் ஒன்றிய அரசுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டதாக தோழர் இ.எம்.எஸ். சுட்டிக்காட்டுகிறார். அரசியலமைப்பு இவ்வாறு இருக்க தொடக்கம் முதலே அதிகார குவிப்பு ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

முரண்பட்ட போக்குகள்:

1956-இல் கேரளாவில் நடந்த முதல் தேர்தலில் மக்கள் பேராதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி அமைக்கிறது. ஆட்சி அமைத்தவுடன், நிலச்சீர்திருத்தம், கல்வியில் சீர்திருத்தம், அதிகார பரவலாக்கம், தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச கூலி மற்றும் தொழிற்சங்க உரிமைகளை நிலைநாட்டும் சட்டங்கள் போன்றவற்றை அரசு மேற்கொள்கிறது.

1959-இல் அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு அமெரிக்காவின் சி.ஐ.ஏ.வின் விருப்பத்திற்கு ஏற்றபடி கேரளாவில் சில குழப்பங்களை ஏற்படுத்தி, பின் சட்டஒழுங்கை காரணம் காட்டி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கவிழ்க்கிறது. இது ஏதோ இந்தியாவில் ஒரு மாநிலத்திற்கு மட்டும் நடந்துவிட்டதாக நாம் கருதிவிடக் கூடாது.

இரண்டாம் உலகப்போருக்கு பிறகு உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் இடதுசாரி அரசுகள் (இவை கம்யூனிச அரசுகள் கூட இல்லை) ஜனநாயக வாக்கெடுப்பு மூலம் ஆட்சிக்கு வந்தன. காங்கோ, இரான், பிரேசில் இன்னும் பல நாடுகளைச் சொல்லலாம். இங்கெல்லாம் மிக மோசமான முறையில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலையீட்டால் இடதுசாரி அரசுகள் கவிழ்க்கப்பட்டன. அமெரிக்க அரசின் ரகசிய ஆவணங்களின் அடிப்படையில் இவைகுறித்து இன்று ஏராளமான ஆய்வுகள் நமக்கு கிடைக்கின்றன. இதன் ஒரு பகுதியாகத்தான் கேரளத்திலும் நமது ஆட்சி பறிக்கப்பட்டது.

அடுத்து ஒன்றிய அரசு மூலம் மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமிக்கப்படுவதை பார்த்தால் அவர்களும் ஒன்றிய அரசின் முகவர்களாக மாநில அதிகாரத்தில் தலையிடுகிறார்கள். பொருளாதார தளத்தை எடுத்துக் கொண்டால், ஒன்றிய அரசு நேரடியாக சில பொருளாதார திட்டங்களை கொண்டுவருகிறது. அரசியலமைப்புச் சட்டத்தில் இதற்கு இடமேயில்லை. மாநில அரசுகள் சில வரிகளை வசூலிக்கலாம். ஒன்றிய அரசு சில வரிகளை வசூலிக்கலாம். வசூலிக்கப்படும் வரிகளை எவ்வாறு மாநிலங்களின் வளர்ச்சி திட்டங்களுக்காக பகிர்ந்தளிப்பது என்று முடிவெடுக்க இந்திய நிதி ஆணையம் உருவாக்கப்பட்டது. இவ்வளவுதான் பொருளாதார தளத்தை பொறுத்தவரையில் அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. (அதிலும் ஒன்றிய அரசின் வரிவசூலிக்கும் அதிகாரம் மாநிலங்களைவிட மிகக் கூடுதலாகவே இருக்கிறது)

ஆனால் ஒன்றிய அரசுகள் மாநிலங்களின் உரிமைகளான கல்வி, சுகாதாரம், விவசாயம் போன்ற தளங்களில் தமது திட்டங்களை மாநில அரசுகளை மீறி திணிப்பதிலிருந்து அதிகாரக் குவிப்பு தெளிவாகிறது.

நல்வாய்ப்பாக இதற்கு எதிரான போக்கும் வளரத் தொடங்கிவிட்டது. இந்த போக்கு பன்முகத் தன்மையை உயர்த்திப் பிடிக்கும் இடதுசாரிகள் மற்றும் மாநில கட்சிகளை உள்ளடக்கியது ஆகும்.

1967 பொதுத்தேர்தலில் 8 மாநிலங்களில் காங்கிரஸ் அல்லாத இடதுசாரி மற்றும் மாநிலக் கட்சிகளின் கூட்டணி பெற்ற வெற்றி ஒரு வரலாற்று திருப்புமுனையாக அமைந்தது. அதன் பிற்பகுதிகளில் இடதுசாரிகள் மற்றும் மாநிலக்கட்சிகளின் தலைவர்கள் (இ.எம்.எஸ், ஜோதிபாசு, ஷேக் அப்துல்லா மற்றும் பலர்) ஸ்ரீநகரில் கூட்டிய மாநாடு, மாநில உரிமைகளில் ஒன்றிய அரசு தலையிடும் அதிகார குவிப்பை கட்டுக்குள் கொண்டுவர வேண்டிய அவசியத்தை உணர்த்தியது. இதன் விளைவாகத்தான் 2007-இல் பூஞ்சி கமிஷன் உருவாக்கப்பட்டது. இக்குழு ஆழமாக விவாதித்து ஒன்றிய அரசின் அதிகார குவிப்பிற்கு கடிவாளம் போடும் விதமான வலுவான பரிந்துரைகளை முன்வைத்தது.

இந்த இரண்டு போக்குகளும் 1991 வரை முரண்பாட்டுடன் தொடர்ந்தன.

1990களுக்கு பின்:

1990 களுக்கு பிறகு இந்த இரண்டு முரண்பட்ட போக்குகளின் இயக்கத்தில் ஒரு தடை ஏற்பட்டு அதிகாரம் மையத்தில் குவிக்கப்படும் போக்கு வேகமெடுத்து இன்று அதன் விளைவாக இந்திய கூட்டாட்சி அமைப்புமுறையே ஆபத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

எந்த அளவிற்கு என்றால், இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்தியா மாநிலங்களின் ஒன்றியம் என்கிறது. ஆனால் ஒன்றிய அரசு நினைத்தால் ஒரு மாநிலத்தை உருவாக்கிடவும் கலைத்திடவும் முடியும் என்ற அளவிற்கு அதிகார குவிப்பு வளர்ந்துள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு ஏற்பட்ட நிலை நாளை எந்த மாநிலத்திற்கு வேண்டுமானாலும்ஏற்படலாம்.

அடுத்து ஒன்றிய அரசு கொண்டுவந்த சட்டங்களைப் பார்ப்போம். 3 வேளாண் சட்டத்திருத்தங்கள், தொழிலாளர் சட்டத் தொகுப்புகள், புதிய கல்விக்கொள்கை, மின்சாரச் சட்டம் என அனைத்தும் மாநில அதிகாரத்தில் செய்யப்பட்ட வரம்புமீறிய தலையீடுகளே.

விவாதத்தில் இருக்கும் மின்சாரச் சட்டத் திருத்தத்தின்படி ஒரு மாநிலத்தின் மின்சாரவாரியத்தின் நிர்வாக உறுப்பினர்களை ஒன்றிய அரசுதான் நியமிக்கும். இந்த வாரியத்தை எப்போது வேண்டுமானாலும் கலைத்து வேறு மாநிலத்தின் வாரியத்தின்கீழ் கொண்டுவரவும் இச்சட்டதிருத்தத்தில் ஒன்றிய அரசுக்கு அதிகாரம் வழங்க ஏற்பாடு உள்ளது.

உச்சநீதிமன்ற நீதிபதிகளை தேர்வு செய்வதில் தலையீடு, பணியிலிருந்து ஓய்வுபெற்ற சில நீதிபதிகளுக்கு சலுகைகள் வழங்குவது என நீதித்துறையையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சி செய்கிறது. இந்த வரிசையில் தற்போது சமீபமாக மாநிலங்களில் அமர்த்தப்படும் ஐஏஎஸ் (இந்திய ஆட்சிப்பணி) அதிகாரிகளை மாநில அரசுடன் கலந்தாலோசிக்காமல் எப்போது வேண்டுமானாலும் திரும்பப்பெற்று வேறு அதிகாரியை பணியில் அமர்த்தும் அதிகாரத்தை தங்களுக்கு வழங்கிக் கொள்கிறது ஒன்றிய அரசு.

நீதித்துறையைப் போலவே திட்ட ஆணையமும் ஒரு தன்னிச்சையான அமைப்பு. இதில் ஒவ்வொரு மாநிலமும் தங்கள் மாநிலத்திற்கு தேவையான திட்டங்களை பற்றி எடுத்துரைக்கும் உரிமை இருந்தது. ஆனால் திட்ட ஆணையம் கலைக்கப்பட்டு, அதனிடத்தில் ‘நிதிஆயோக்’ என்ற ஒரு குழுவை அமர்த்தியுள்ளது. திட்டக் கமிஷனை கலைத்ததால் ஏற்பட்ட விளைவு என்ன? மாநிலங்களின் திட்டத்திற்கு தேவைப்படும் நிதியை கேட்டுப்பெற இயலாது. ஒன்றிய நிதிஅமைச்சரின் நிதிஒதுக்கீடு முடிவுகளை சார்ந்தேஇருக்க வேண்டியுள்ளது.

ஜி.எஸ்.டி. வரியை ஒன்றிய அரசு கொண்டுவந்தது. அதன்மீது மாநில அரசுகளுக்கு நடைமுறையில் எந்த அதிகாரமும் இல்லை. அதற்கும் ஒன்றிய அரசையே நாட வேண்டியுள்ளது. நிதிசார் பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை  (FRBM-Fiscal Responsibility & Budget Management) என்கிற சட்டத்தை 2000ஆம் ஆண்டு ஒன்றிய அரசு கொண்டுவந்தது. மாநில அரசுகள் ரிசர்வ் வங்கியிடமிருந்து எவ்வளவு கடன் வாங்கமுடியும் என்பதை ஒன்றியஅரசு இதன்மூலம் கட்டுப்படுத்துகிறது. ஒரு மாநிலத்தின் மொத்த உற்பத்தியிலிருந்து 3% வரை மட்டுமே கடன்வாங்க முடியும் என்றும், அப்படி வாங்கும் கடன்தொகையை மாநிலங்கள் மூலதன செலவீனங்களுக்காக மட்டுமே செலவுசெய்ய வேண்டும்எனவும் நிபந்தனை விதிக்கப்படுகிறது.

இதுபோன்ற நிபந்தனைகள் மாநிலங்களின் உரிமைகளை பறிக்கிறது. உதாரணத்திற்கு, இந்த கொரோனா பொதுமுடக்க காலத்தில் மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கியிருக்க நேர்ந்தது. இதனால் வேலை வருமானம் என அனைத்தும் பாதிக்கப்பட்டது. மக்களுக்கு உணவு தேவைப்பட்டது. உடனடி மருத்துவ உதவிகள் தேவைப்பட்டன. ஒன்றிய அரசின் இந்த நிபந்தனையால், அரசுக் கருவூலத்தில் பணம் இருந்தும் மாநில அரசுகளால் மக்களின் உடனடி தேவைகளுககு செலவுசெய்ய முடியவில்லை.

நவம்பர் 31, 2021 அன்று மாநிலங்களின் கருவூலத்தில் வைத்திருந்த ஒட்டுமொத்த இருப்பு 3லட்சம் கோடி ரூபாய்கள். இந்த கொரோனா காலத்தில் மக்கள் எவ்வளவு நெருக்கடிக்கு ஆளானார்கள் என்று அரசுக்கு தெரியாதா? அந்த பணத்தை செலவுசெய்ய முடியாத நிலை ஏன்?

ஒற்றை ஆட்சி விருப்பங்கள்:

இந்தியா வேகமாக அதன் கூட்டாட்சி குணங்களை இழந்துவருகிறது. இப்போது மத்திய ஆட்சியில், கூட்டாட்சி முறையை விரும்பாத, பன்முகத் தன்மையை ஏற்காத, இந்தியா பல்வேறு தேசியஇனங்களின் கூட்டு என்பதை ஏற்காத ஒரு கட்சி அமர்ந்துள்ளது.

இன்று ஒருவர் தன்னை எந்த அளவிற்கு இந்தியன் என்று உணர்கிறாரோ, அதேஅளவுக்கு தான் ஒரு தமிழன், மலையாளி, கன்னடிகா, … என தங்கள் மொழி மற்றும் பண்பாட்டு அடையாளத்தையும் உணர்கிறார்கள் என்பதே உண்மை. முன்பு இருந்த ஒன்றிய அரசுகளுக்கும் தற்போது இருக்கும் அரசுக்கும் முக்கியமான வேறுபாடு ஒரே இந்தியா, ஒரே மொழி, ஒரே தேர்தல், ஒரே வரி என அனைத்தையுமே ஒற்றைத்தன்மையை நோக்கி செலுத்துவதே. இப்படி ஒரு சித்தாந்தத்தை கொண்டுள்ள கட்சி எப்படி கூட்டாட்சி முறையை வலுப்படுத்தும்?

வேதனைக்குரிய விசயம் என்னவென்றால், 1990களுக்கு முன் வலுவாக இருந்த எதிர்ப்புகள் இப்போது அப்படி இல்லை.

1990 இல் ஏற்பட்ட நெருக்கடி

விடுதலைக்குப்பின் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியை குறைத்து உள்நாட்டில் தன்னிறவை எட்டிட முடிவு செய்தோம். இதற்கான கட்டமைப்பு வசதிகளை உருவாக்கிட பொதுத்துறை நிறுவனங்கள் பிரதான பங்காற்றின. மாநிலங்களுக்கு இடையிலான சமத்துவமின்மையை குறைக்க திட்டக் குழு அவசியப்பட்டது.

ஆனால் இதில் சில சிக்கல்களை நாம் சந்திக்க நேர்ந்தது. வெளிநாடுகளிலிருந்து எதையும் இறக்குமதி செய்யமாட்டோம் என்றால், உள்நாட்டு வளர்ச்சி உள்நாட்டு சந்தையை சார்ந்து இருக்கிறது என்று பொருள். நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் செலவுசெய்ய போதுமான அளவு வருமானம் ஈட்டினால்தான் உள்நாட்டு சந்தை விரிவடையும். ஆனால் அது நிகழவில்லை. ஏனெனில் பெரும்பாலான உழைக்கும் மக்கள் விவசாயத் தொழிலை சார்ந்துதான் வாழ வேண்டியிருந்தது. விவசாயத் தொழிலில் ஈடுபடும் பெரும்பாலான மக்களின் பொருளாதார நிலைமைகள் முன்னேற வேண்டுமென்றால் அதற்கு நிலச்சீர்திருத்தம் அடிப்படையான முன்நிபந்தனை. அதை செய்யாத காரணத்தால் சீர்குலைவு ஏற்பட்டது.

எனவே 1980களில் வேறு முடிவுகளை அரசு எடுக்கிறது. அதாவது உற்பத்தி செய்யப்படும் பொருட்களை நாம் வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்வது என்று. ஆனால் உற்பத்திக்குத் தேவைப்படும் இடுபொருட்களையும், நவீன இயந்திரங்களையும், இன்னபிறவற்றையும் இறக்குமதி செய்யும் முடிவிற்கு மீண்டும் அரசு வருகிறது. ஏற்றுமதியும் எதிர்பார்த்த அளவில் நிகழவில்லை.

இந்த தொடர் நிகழ்வுகளால் உள்நாட்டில் நமது கடன்சுமை அதிகரித்து ஒரு பொருளாதார நெருக்கடிக்குள் நாடு சென்றது. இப்பொருளாதார நெருக்கடியிலிருந்து வெளிவர ஐ.எம்.எஃப் மற்றும் உலகவங்கியிடம் கடன்வாங்க வேண்டியிருந்தது. இந்த இரண்டு அமைப்புகளும் ஏகாதிபத்தியத்தின் கையாட்களே. நவீன தாராளமய கொள்கைகளை அமல்படுத்துவதற்குதான் இவர்கள் கடன்கொடுக்கிறார்கள்.

இந்திய முதலாளிகளுக்கும் அரசு பின்பற்றும் பொருளாதார கொள்கையில் மாற்றம் தேவைப்பட்டது. அரசின் கொள்கைகள் அவர்களுக்கு லாபகரமாக இல்லைஎன்பதை அவர்கள் புரிந்துகொண்டு உலகசந்தையில் அவர்கள் வலைவீச விருப்பப்பட்டனர். விடுதலைக்குப்பின் உருவாக்கிய பொதுத்துறை நிறுவனங்கள் நல்ல வளர்ச்சியடைந்திருந்தன.எனவே இந்திய முதலாளிகள் நவீன தாராளமயக் கொள்கையின் தனியார் மயத்தை ஆதரித்து அந்நிய மூலதனத்தின்பக்கம் நின்றனர்.

இது எவ்வாறு அரங்கேற்றப்பட்டது என்பதற்குள் நான் ஆழமாக போகவிரும்பவில்லை. ஆனால் ஒன்றைமட்டும் முன்வைக்கிறேன். அனைத்து துறைகளிலும் இருந்த ஒழுங்குமுறைகள் யாவும் உலகசந்தையோடு ஒத்துப்போகும்படி அந்நிய மூலதனத்துக்கு ஆதரவாக மாற்றிஅமைக்கப்பட்டது. இன்னும் எளிமையாக சொல்வதென்றால் அந்நிய மூலதனத்தின் தடையற்ற போக்குவரத்திற்காக விதிகள் தளர்த்தப்பட்டன.

இதன்விளைவாக என்னநடந்தது?

“என்ன விளைவுகள் இருந்தால் என்ன, இது பொருளாதார வளர்ச்சியைஅதிகரித்துள்ளது” என ஒருசிலர் வாதிடுகின்றனர். இப்படி வாதம் செய்பவர்கள் எதையும், எதையும் ஒப்பிடுகிறார்கள்? கொரோனாவுக்கு முன், இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி 7% ஆக இருந்தது. 1951 முதல் 1980 வரையான காலக்கட்டத்தில் 3.5% ஆகயிருந்த வளர்ச்சி விகிதம் நவீன தாராளமயக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தியதற்குப்பிறகு இருமடங்காக அதிகரித்து 7% ஆகியிருக்கிறது என்பது அவர்களுடைய வாதம். ஆனால் இவர்கள் 1980 ஆம் ஆண்டிலேயே பொருளாதார வளர்ச்சி 3.5% என்பதில் இருந்து 5% ஆகிவிட்டிருந்ததை கூறமாட்டார்கள். தனியார் மயத்திற்கு முன்பே ஒரு சீரான வளர்ச்சிப்போக்கில்தான் பொருளாதாரம் வளர்ந்தது.

விடுதலைக்கு முன் என்ன நடந்தது என்பதை பார்க்க வேண்டும். அப்போது 1% என்ற அளவிற்கும் குறைவாக இருந்த வளர்ச்சி, விடுதலைக்கு பின் 5% ஆனது. எனவே மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி என்பது 1990களுக்கு பின்  ஏற்பட்டது அல்ல.

வரலாறு காணாத ஏற்றத்தாழ்வு:

உண்மையில், நவீன தாராளமயக் கொள்கையின் நடைமுறையால் கிடைத்த வளர்ச்சிக்கு இந்திய மக்கள் பெருந்தொகையை இழக்க வேண்டியிருந்தது. சமத்துவமின்மை எல்லா இடங்களிலும் ஆழமாக வளரத் துவங்கியது. இந்திய வரலாற்றில் இன்றிருப்பதுபோல் சமத்துவமின்மை எக்காலத்திலும் இருந்ததில்லை. அவ்வளவு இடைவெளி கொண்ட ஏற்றத்தாழ்வு இருக்கிறது.

உதாரணத்திற்கு சில புள்ளிவிவரங்களை பார்க்கலாம்.

முதலில் இந்தியாவில் அதிக பணம்படைத்த 1% மேல்தட்டு மக்களின் வருமானத்தைப் பார்ப்போம். 1961-இல் அவர்களின் வருமானம் 13% இருந்தது. 1981 வரைஇது ஏறத்தாழ இப்படியே நீடித்தது. 1991-இல் இது 10.4% ஆக குறைகிறது. ஆனால் தனியார்மயமும் நவீன தாராளமய கொள்கைகளும் நடைமுறைக்கு வந்தபிறகு 2020-இல் அவர்களுடைய வருமானம் 21% ஆக அதிகரித்திருக்கிறது.

இதே காலக்கட்டத்தில் அடித்தட்டில் இருக்கும் 50% மக்களின் வருமானம் எப்படி இருந்தது?

1961-இல் 21% ஆகவும், 1981-இல் 23% ஆகவும் உயர்ந்திருந்தது. பின் தனியார்மயம் நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு பிறகு 2020-இல் 14.7% ஆக குறைந்திருக்கிறது. நினைவில் கொள்க. இதில் வெறும் 1% செல்வந்தர்களையும் 50% அடித்தட்டு உழைக்கும் மக்களையும் மட்டுமே நாம் ஒப்பிடுகிறோம்.

சொத்துக்குவிப்பு எப்படி இருக்கிறது என்று பார்ப்போம். அடித்தட்டு மக்களின் சொத்துக்கள் 1961-இல் 10% லிருந்து 1981 வரை 12% ஆக உயர்ந்தது. இன்று 2020-இல் வெறும் 2.8% ஆக சுருங்கியுள்ளது! 1% மேல்தட்டு மக்களிடம் சுதந்திரம் பெற்றதிலிருந்து 1991 வரை 11% ஆக சீராக இருந்த சொத்துசேர்ப்பு, இன்று 43% ஆக அசுர வளர்ச்சி அடைந்துள்ளது.

இந்த ஏற்றத்தாழ்வுகள் ஒரு சமூக கொந்தளிப்பாக மாறிவிடக் கூடாது என்பதற்காகத்தான் பா.ஜ.க போன்றொதொரு கட்சியின் ஆட்சி முதலாளிகளுக்கு தேவைப்படுகிறது. இதன் அரசியல், மக்களை மதம், சாதிசார்ந்த இந்துத்துவ வெறுப்பு அடிப்படையில் எப்போதும் பிரித்து வைக்கிறது. அதோடு ஒரு எதேச்சதிகாரத் தன்மையுடன் நடந்துகொள்ளக்கூடிய, பன்முகத்தன்மையை புறம்தள்ளி அனைத்தையும் ஒற்றைஅதிகாரத்தின்கீழ் கொண்டுவரக்கூடிய ஒற்றைஆட்சியை நோக்கிய ஒரு கட்சியாக அது செயல்படுகிறது. அதிகாரகுவிப்பு என்பது நவீன தாராளமயக் கொள்கையின் உள்ளார்ந்த பண்பும்கூட என்று புரிந்துகொள்ள வேண்டும்.

அதிகார பரவலின் நிலை:

இப்போது மாநிலகட்சிகளின் தன்மையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது. பா.ஜ.க, காங்கிரஸ் கட்சிகளைப் போலவே இவர்களும் நவீன தாராளமயக் கொள்கைகளை ஏற்றுக்கொள்கின்றனர்.

அதன் விளைவாகவே, கொரோனா பெருந்தொற்று காலத்தில் அரசு கஜானாவில் பணம்கொட்டிக்கிடந்தும் வாழ்வாதாரத்தை இழந்த, வேலையிழந்த மக்களுக்கு அதனை பயன்படுத்தாத நிலையை மாநில அரசுகள் ஏற்றுக்கொண்டன.

ஆனால் கேரளா இதனை கொரோனா காலம் முழுவதும் செலவு செய்தது. 2021-இல் ஒருநாள்கூட கேரள அரசு கஜானாவில் பணம் விட்டுவைத்ததில்லை. இதுதான் எங்கள்கொள்கை. இடதுசாரி கொள்கை. இக்காலத்தில் கடனாக பெற்ற பணத்தை உணவு, மருத்துவ தொகுப்புகளை வழங்கவும், ஓய்வூதியத்தை உயர்த்தவும், சுயஉதவிக்குழுக்களின் கடன்களை தள்ளுபடி செய்யவும் செலவிட்டது. 2021-இல் கேரளாவின் சமூகநல செலவினங்கள் 162% உயர்ந்துள்ளது. பிற மாநிலங்களில் 30% மட்டுமே உயர்ந்துள்ளது.

அதிகார பரவலாக்கம் என்று சொல்லும்பொழுது,

1. மத்தியிலிருந்து மாநிலங்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படவேண்டும்.

2. மாநிலங்களிலிருந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பகிரப்படவேண்டும்.

ஆனால்,பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளை பொருத்தமட்டில் அதிகார பரவலாக்கம் என்பது மாநிலங்களின் உரிமைகளை மீறி, நேரடியாக தங்கள் அதிகார எல்லைக்குள்உள்ளாட்சிகளை கொண்டுவர வேண்டும் என்பதாகவே இருக்கிறது. இதற்கு சிறந்த உதாரணம் ராஜிவ்காந்தி ஆட்சிக்காலத்தில் அரசியலமைப்புச் சட்டத்திற்கு செய்யவிருந்த 64 மற்றும் 65வதுதிருத்தங்கள். அவை பின் முறியடிக்கப்பட்டன.

பா.ஜ.க உள்ளாட்சி அமைப்புகள் பற்றி அதிகம் பேசுவார்கள். ஆனால் அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் செய்த முதல்காரியம் உள்ளாட்சி துறைக்கு இருந்த அதிகாரத்தை குறைத்ததுதான்.

அதீத வறுமை ஒழிப்பு:

இந்தியாவில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கும் மாநிலங்களில் கேரளா முதலிடத்தில் உள்ளது. கேரள மாடலுக்கு இப்படி பல தனித்துவங்கள் உள்ளன. அவற்றைப் பற்றி “Peoples Planning” (மக்களின் திட்டமிடல்) என ஒரு தனி புத்தகமே வெளிவந்துள்ளது. புயல், வெள்ளம், கொரோனா போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் கேரளா உள்ளாட்சி அமைப்புகள் மூலமே மீண்டெழுகிறது.

தோழர் இ.எம்.எஸ். தொடங்கி வைத்த “மக்களின் திட்டமிடல்” என்ற பாதையில் கேரளா பயணிக்கத் தொடங்கி தற்போது 25வது ஆண்டு நிறைவை நாங்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேலையில், உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கேரளாவில் அதீத வறுமைஒழிப்பு என்ற பிரச்சாரத்தை நாங்கள் கையிலெடுத்திருக்கிறோம் என்று பெருமிதத்தோடு கூறுகிறேன். அதீத வறுமையில்லாத மாநிலமாக கேரளாவை மாற்றுவது என முடிவு செய்திருக்கிறோம்.

இதனால் கேரளாவில் அனைத்துமே சரியாக நடக்கிறது என்ற எண்ணம் வேண்டாம். நல்ல உள்ளாட்சிகளும் உள்ளன; மோசமாக செயல்படும் உள்ளாட்சிகளும் உள்ளன. ஆனால் அதிகார பரவலாக்கம் திட்டமிடலிருந்துதான் தொடங்க வேண்டும் என்பதுதான் கேரள அனுபவம் உணர்த்தும் உண்மை.

தனியார் மயத்திற்கு மாற்று மக்கள் பங்களிப்புடன் கூடிய திட்டமிடல்தான். அவரவர் வசிக்கும் பகுதிகளில் என்ன வரவேண்டும் என்று மக்கள் திட்டமிட அதிகாரம் வேண்டும். இருக்கும் பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் எதற்கு முன்னுரிமை வழங்கவேண்டும், நிலம் எவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டும், கூட்டாக எப்படி, என்ன பயிர் செய்யவேண்டும் என அனைவரின் பங்களிப்பு மட்டுமே தனியார் மயத்திற்கு மாற்றாகும். (Participation is the answer to Privatization)

முடிவாக:

“ஜனநாயக மத்தியத்துவம் பேசும் கம்யூனிஸ்ட் கட்சி எப்படி ஜனநாயக பரவலாக்கம்” குறித்து பேசமுடியும் என தோழர் இ.எம்.எஸ்இடம் ஒருமுறை பத்திரிக்கையாளர் கேட்க, அதற்கு அவர் கொடுத்த பதில், “ஜனநாயக மத்தியத்துவம் என்பது எங்கள் கட்சிக்குள் கடைப்பிடிக்கப்படும் கொள்கை. அதில் ஒருவருக்கு உடன்பாடில்லை என்றால் அவர் தாராளமாக விலகலாம். ஆனால் ஜனநாயக பரவலாக்கம் என்பது அரசுகளின் கொள்கையாக இருக்கவேண்டும்.” ஜனநாயக அதிகார பரவலாக்கம் அதிகாரத்தை மத்தியிலிருந்து மாநிலத்திற்கும், மாநிலத்திடமிருந்து உள்ளாட்சிக்கும் கடத்திடும்.

கேரளாவில் இடதுசாரி ஆட்சியில் உள்ளாட்சி நிர்வாக அமைப்புகளின் கட்டமைப்புகள் மிகவும் வலுவாக இருக்கிறது. ஆனால் தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களில் இவை மிகவும் வலுவற்றதாக இருக்கின்றன. எவ்வளவு குறைபாடுகள் இருந்தாலும், எவ்வளவு வலுவற்றதாக இருந்தாலும் அதிகார பரவலாக்கத்திற்கு நம் அரசியலமைப்புச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள அமைப்புகளை இந்நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட, விரிவுபடுத்த நாம் பயன்படுத்தவேண்டும் என்பதையே முடிவாக நான் சொல்ல விரும்புகிறேன்.

தமிழில்: பிரசன்னா வெங்கடேஷ்

தமிழ்நாட்டு ஊரக வேளாண் குடும்பங்களின் நிலை என்ன?

பேரா. வெங்கடேஷ்  ஆத்ரேயா

அறிமுகம்

இந்த கட்டுரையில் ஆய்வறிக்கை தமிழக வேளாண் குடும்பங்களின்  நிலைமை குறித்து தரும் சில தரவுகள் பற்றி சுருக்கமாக பரிசீலிப்போம்.

வரையறை

ஒன்றிய அரசின் ஆய்வில் சம்பந்தப்பட்ட ஆண்டில் (2018 ஜூலை முதல்  2019 ஜூன் வரையிலான ஒரு ஆண்டு) விவசாயம் சார்ந்த நடவடிக்கைகள் மூலம்  நான்காயிரம் ரூபாய் அல்லது அதற்கு அதிகமான மதிப்பு பெறுகின்ற அளவிற்கு உற்பத்தி செய்யும் குடும்பங்கள் மட்டுமே வேளாண் குடும்பங்கள் என  வரையறுக்கப்பட்டுள்ளது. விவசாயம் என்பது பயிர் சாகுபடி, தோட்டக்கலைப்பயிர்கள் சாகுபடி, கால்நடை பராமரிப்பு (ஆடு, மாடு, கோழி, பன்றி உள்ளிட்டு) தேனீ வளர்ப்பு, பட்டுப்புழு வளர்ப்பு  ஆகிய அனைத்தையும் குறிக்கும்.  குடும்பத்தில் ஒரு நபராவது தனது பிரதான பணியாகவோ இரண்டாம் நிலை பணியாகவோ மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கவேண்டும். ஆய்வு கிராமப்புறங்களில் மட்டும் நடத்தப்பட்டது. ஆய்வில் இடம்பெற்ற குடும்பங்கள் (ஆய்வு வரையறுத்துள்ள) ‘வேளாண் குடும்பங்கள்’, ‘வேளாண் அல்லாத குடும்பங்கள்’ என்று இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளன. விரிவான ஆய்வு வேளாண் குடும்பங்களிடம் மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வு தரும் சில விவரங்களை நாம் காண்போம்.

தமிழகம் -இந்தியா ­­

பல முக்கியமான தன்மைகளில் தமிழகம் இந்திய சராசரியிலிருந்து கணிசமாக வேறுபடுகிறது.

 • அகில இந்திய அளவில் மொத்த கிராமப்புற குடும்பங்களில் 54% குடும்பங்கள் வேளாண் குடும்பங்கள் என்றும், மீதம்   46% வேளாண் அல்லாத குடும்பங்கள் என்றும் ஆய்வு மதிப்பிட்டுள்ளது. ஆனால் தமிழகத்தின் கிராமப்புற குடும்பங்களில்  26% மட்டுமே வேளாண் குடும்பங்கள் என தனது வரையறையின் அடிப்படையில்  ஆய்வு தெரிவிக்கிறது.
 • சமூக கட்டமைப்பை பொருத்தவரையில் அகில இந்திய அளவில் வேளாண் குடும்பங்களில்  கிட்டத்தட்ட 16% பட்டியல் சாதியினர், 46% இதர பிற்படுத்தப்பட்டோர், 14% பழங்குடியினர், மீதம்  24% இதர சமூகங்களை சேர்ந்தவர்கள். தமிழக நிலைமை இதிலிருந்து கணிசமாக வேறுபடுகிறது. தமிழகத்தில், வேளாண் குடும்பங்களில் பழங்குடி மக்கள்  1.2 %, பட்டியல் சாதியினர்  20.2%, இதர பிற்படுத்தப்பட்டோர்  78.3%, இதர சாதியினர்    0.3% மட்டுமே .
 • கல்வி சார்ந்த சில குறியீடுகளை எடுத்துக்கொண்டால், தமிழக ஊரக வேளாண் குடும்பங்களின் எழுத்தறிவு விகிதம் 7 வயதுக்கு மேற்பட்டவர்களில்   80.5% (ஆண்கள் 87.5%, பெண்கள் 73.6%)   ஆக உள்ளது. அகில இந்திய சராசரி 73.6% (ஆண்கள் 81.9%, பெண்கள் 65.0 %)ஆக உள்ளது. 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் பத்தாம் வகுப்பும் அதற்கு மேலும் படித்தவர்கள் சதவிகிதம் தமிழகத்தில்  41.7% (ஆண்கள் 48.7%, பெண்கள் 34.6%).இந்திய சராசரி 33.8% ( ஆண்கள் 40.4%, பெண்கள் 27.0). இவ்விவரங்கள் பொதுவாக பல பிற மாநிலங்களைவிட கல்வி புலத்தில் தமிழகம் சற்று முன்னணியில் உள்ளது என்பதை நினைவுபடுத்துகிறது.
 • பொதுவாக இந்திய நாட்டில் பெரும்பாலான வேளாண் குடும்பங்கள் சிறு குறு விவசாயிகள் என்பது உண்மை.  நிலம் உள்ள ஒரு வேளாண் குடும்பம் சராசரியாக தன்வசம் வைத்துள்ள வேளாண் நிலம் தமிழகத்தில் 0.265 ஹெக்டேர்தான் (சுமார் 65 சென்ட்). அகில இந்திய சராசரி 0.558 ஹெக்டேர்(138 சென்ட்). இவை சராசரிகள் என்பதை நினைவில் கொள்க. ஏனெனில் பெரும் நில உடமையாளர்களும் உள்ளனர். உண்மையில், நில உடமையில் உள்ள பெருத்த ஏற்றத்தாழ்வுகள் காரணமாக  பெரும்பகுதி வேளாண் குடும்பங்கள் இரண்டு ஹெக்டேருக்கும் (5 ஏக்கருக்கு ஆறு சென்ட் குறைவு) குறைவாகவே நிலம் வைத்துள்ளனர். ஒரு சிறிய பகுதியினரிடம் பெரிய பண்ணைகள் உள்ளன.

தமிழக வேளாண் குடும்பங்களின் வருமானம்

 • ஒன்றிய அரசின் ஆய்வின்படி தமிழக கிராமப்புற விவசாய குடும்பங்களின்  சராசரி மாத வருமானம் ரூ 11,924. அகில இந்திய அளவில் ரூ 10,218. இத்தொகை விவசாயிகள் கையை விட்டு பணமாக செலவழிக்கும் செலவுகளை மட்டுமே கணக்கில்  கொண்டு நிகர வருமானத்தை கணக்கிடுகின்றன. வேளாண் செலவுகள் மற்றும் விலைகள் ஆணையம் (CACP–Commission on Agricultural Costs and Prices) முன்வைக்கும் C2 என்ற செலவு வரையறைப்படி பார்த்தால் செலவு கணிசமாக கூடுதலாக இருக்கும். C2 செலவு தொகை என்பதில் கையைவிட்டு பணமாக சாகுபடிக்கு செலவழிக்கப்படும் தொகை மட்டுமின்றி கீழ்வரும் செலவுகளும் சேரும்: சாகுபடிப் பணிகளில் செலவிடப்படும் குடும்ப உழைப்பு சக்தியின் பணமதிப்பு, நிலத்திற்கான குத்தகை மதிப்பு (சொந்த சாகுபடி செய்யும் விவசாயி அவ்வாறு செய்யாமல் குத்தகைக்கு விட்டிருந்தால் குத்தகைத்தொகை கிடைத்திருக்கும் அல்லவா, அது சொந்த சாகுபடியில் கிடைக்காது என்ற வகையில் வெளிப்படாத செலவு என்று பொருளியலில் அங்கீகரிக்கப்பட்ட கோட்பாடு உள்ளது), சாகுபடிக்காக செய்யப்பட்டுள்ள முதலீட்டு தொகைக்கான வட்டி.. இவையெல்லாம் கணக்கில் கொள்ளப்பட்டால் வரும் தொகை C2. இந்த அடிப்படையில் கண்டால் தமிழக ஊரகப்பகுதி விவசாய குடும்பத்தின் சராசரி மாத  வருமானம் ரூ 10,448 ஆகும். அகில இந்திய அளவில் இத்தொகை ரூ 8,337 ஆகும்.
 • ஒரு வேளாண் குடும்பத்தின் மொத்த வருமானம் பல நடவடிக்கைகள் மூலம் பெறப்படுகிறது. குறிப்பாக, பயிர் சாகுபடி, கால்நடை வளர்ப்பு, குத்தகை மற்றும் கூலி/சம்பள உழைப்பு ஆகிய நடவடிக்கைகள் முக்கியமானவை. இவ்வாறு வருமான மூலம் என்ற அடிப்படையில் பார்த்தால், தமிழகத்தில் சராசரியாக ஒரு ஊரக வேளாண் குடும்பத்தின் மொத்த வருமானத்தில் கூலி உழைப்பின் மூலம் கிடைக்கும் பங்கு 55% . பயிர் சாகுபடி மூலம் கிடைப்பது 22%. கால்நடை வளர்ப்பு மூலம் கிடைப்பது 17% , குத்தகை மூலம் கிடைப்பது 6% என்று ஆய்வு தெரிவிக்கிறது. அகில இந்திய அளவில் இந்த விகிதங்கள் முறையே 39.8%,  37.2%, 15.5%, 13.1% என்று உள்ளன. எனவே வேளாண் குடும்பம் என்று வரையறுக்கப்பட்டுள்ள குடும்பங்களிலும் குடும்ப உறுப்பினர்களின் கூலி உழைப்புதான் அதிகமாக பங்களிக்கிறது.  தமிழகத்தில் மொத்த குடும்ப வருமானத்தில் கூலி-சம்பள வருமானம் இந்திய சராசரியை விட கூடுதலான பங்கு வகிக்கிறது. ஒரு ஹெக்டேருக்கு உட்பட்டு நிலம் உள்ள வேளாண் குடும்பங்களில் ஐந்தில் மூன்று பங்குக்கும் அதிகமானவை  பிரதானமாக கூலி  உழைப்பை சார்ந்தே உள்ளன.

கடன் பற்றி

கிராமப்புற வேளாண் குடும்பங்கள் கடன் வாங்காமல் இருப்பது என்பது எளிதான விஷயமல்ல. சாகுபடிக்கும் இதர சுய உற்பத்தி நடவடிக்கைகளுக்கும், குறிப்பாக அவ்வுற்பத்தியில் சந்தை சார் இடுபொருட்கள் தேவை என்கிறபொழுது கணிசமான சொந்த மூலதனம் அல்லது வேறு வருமான மூலங்கள் இருந்தாலொழிய கடன் வாங்காமல் வேளாண் மற்றும் வேளாண்சார் தொழில்கள் செய்வது கடினம்.  ஆய்வு ஆண்டில் தமிழக கிராமப்புற வேளாண் குடும்பங்களுக்கு சராசரியாக ஒரு குடும்பத்திற்கு ரூ 1,06,553 கடன் இருந்ததாக ஆய்வு சொல்கிறது. மொத்த வேளாண் குடும்பங்களில் 65% குடும்பங்கள் கடன் பட்டிருந்தன. அகில இந்திய அளவில் சராசரி கடன்  ரூ 74,121 ஆகவும் கடன் நிலுவை இருந்த குடும்பங்களின் சதவிகிதம் 50% ஆகவும் இருந்தது. இதன் ஒரு பொருள் சந்தை சார்ந்த இடுபொருட்களை அதிகமாக பயன்படுத்தும்  நவீன வேளாண்மையில் அகில இந்திய சராசரியை விட தமிழகம் கூடுதலாக ஈடுபட்டுள்ளது என்பதாகும்.

கவனம் தேவை

மேலே குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களில் இருந்து முடிவுகளுக்கு பயணிக்கும் பொழுது கவனம் தேவை. “ கிராமப்புற மொத்த குடும்பங்களில் வேளாண் குடும்பங்கள் 26% தான். எனவே விவசாயம்  தமிழக பொருளாதாரத்திற்கு முக்கியமல்ல.” என்று முடிவு செய்வது மிகவும் தவறாகும். இந்த ஆய்வு முன்வைத்துள்ள ‘வேளாண் குடும்பம்’ என்பதற்கான  வரையறைக்குள் வராத ஏராளமான ஊரக குடும்பங்கள் தங்கள் வருமானத்தில் குறிப்பிடத்தக்க பகுதியை விவசாயக்கூலி வேலை மூலம் பெறுகின்றனர். ஆகவே தமிழக கிராமப்புற மக்களில் விவசாயத்தை ஏதோ ஒரு வகையில் ஓரளவாவது சார்ந்து நிற்கும் குடும்பங்களின்  சதவிகிதம் 26% ஐ விட நிச்சயம்  அதிகம்.

அகில இந்திய ஒப்பீடுகள் ஒரு புறமிருக்க, தமிழக விவசாயிகள் குறித்து கிடைக்கும் தரவுகளை பார்ப்போம்.

தமிழக ஊரக வேளாண் குடும்பங்கள்

 • ஒன்றிய அரசின் ஆய்வின் வரையறை படி தமிழக ஊரகப்பகுதியில் மொத்த குடும்பங்களில் 26%  வேளாண் குடும்பங்கள் என்பதை ஏற்கெனவே குறிப்பிட்டோம். சமூக ரீதியாக இது வேறுபடுகிறது. பட்டியல் சாதியினர் மத்தியில் இந்த சதவிகிதம் சற்றுக் குறைவாக  18% ஆகவும் பிற பிற்படுத்தப்பட்டோர் மத்தியில் 31% ஆகவும் உள்ளது.
 • பெரும்பாலான குடும்பங்கள் குறைந்த அளவிலான நிலம் கொண்டுள்ளனர். 95 சதவீத பட்டியல் சாதி வேளாண் குடும்பங்கள் மற்றும் 91 சதவீத இதர பிற்படுத்தப்பட்டோர் வேளாண் குடும்பங்கள்  சராசரியாக 1 ஹெக்டேருக்கு குறைவாகவே நிலம் கொண்டுள்ளனர்.
 • பட்டியல் சாதி வேளாண் குடும்பங்களிடம் ஒரு குடும்பத்திற்கு சராசரியாக  வீட்டுமனையையும் சேர்த்து 1.25 ஏக்கருக்குக் குறைவாகவே நிலம் உள்ளது. இதர பிற்படுத்தப்பட்ட சாதியினரிடம் சராசரியாக 2 ஏக்கர் நிலம் உள்ளது.
 • பெரும்பாலான வேளாண் குடும்பங்கள் ஒரு பயிர் மட்டுமே சாகுபடி செய்கின்றனர்.
 • பாசனத்தை பொருத்தவரையில் மொத்த சாகுபடி பரப்பளவில்  43% தான் பாசனம் பெறுகிறது. பாசனத்திற்கு அதிகமாக பயன்படுத்தப்படுவது நிலத்தடி நீர். அடுத்து உள்ளது வாய்க்கால் பாசனம்.
 • ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட குடும்பங்களில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமானவர்கள் பயிர் சாகுபடி வருமானம் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.  இதன் பொருள் இந்த நிலங்கள் நடப்பு தரிசாக இருந்திருக்கலாம்; அல்லது சாகுபடி பொய்த்துப்போய் விட்டது என்பதாகும்.
 • தமிழக ஊரக வேளாண் குடும்பங்களில் 64%  பயிர் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.

உள்ளூர் சந்தைகளின் முக்கிய பங்கு

தமிழகத்தின் முக்கிய பயிர்கள் நெல், சோளம், வேர்க்கடலை மற்றும் தேங்காய் ஆகும். முக்கியமான செய்தி என்னவெனில், இடுபொருட்கள் வாங்குவதும் விளை பொருட்கள் விற்பதும் கணிசமான அளவிற்கு உள்ளூர் அல்லது அருகாமை சந்தைகளில்தான் நிகழ்கிறது. ஒன்றிய அரசு கடந்த ஆண்டு பாராளுமன்ற நெறிமுறைகளை புறக்கணித்து நிறைவேற்றிய விவசாயி விரோத வேளாண் சட்டங்களை நியாயப்படுத்த அரசு பயன்படுத்திய, பயன்படுத்திவரும் கதையாடல் எவ்வளவு தவறானது என்பதை இத்தகவல் நமக்கு தெரிவிக்கிறது. APMC ஏற்பாடுகளும் செயல்பாடுகளும் எந்த வகையிலும் கிடைக்கும் விலைக்கு விளைபொருட்களை விற்பதற்கு முட்டுக்கட்டையாக இல்லை என்பதை இத்தரவுகள் தெரிவிக்கின்றன.(மாபெரும் போராட்டங்களுக்கு அடிபணிந்து ஒன்றிய அரசு மூன்று விவசாயிகள் விரோத சட்டங்களை ரத்து செய்ய நேர்ந்துள்ளது என்பது மகிழ்ச்சியான செய்தி.)

கொள்முதல்

ஒன்றிய அரசின் ஆய்வு விவசாய குடும்பங்கள் மத்தியில் கொள்முதல் விலை மற்றும் ஏற்பாடுகள் குறித்த விழிப்புணர்வு தமிழகத்திலும் கூட குறைவாகவே உள்ளது என்று கூறுகிறது. நெல் சாகுபடியாளர்களை பொருத்தவரையில், 2019இல் 64% விவசாயிகள்  உள்ளூர் சந்தைகளில் நெல்லை விற்றனர். 28% அரசு முகமைகளுக்கு விற்றனர். மொத்த விற்பனையில் அரசு முகமைகளுக்கு 32% விற்கப்பட்டது, 62% உள்ளூர் சந்தைகளில் விற்கப்பட்டது.

இத்தரவுகள் ஒரு முக்கிய செய்தியை சொல்கின்றன. நெல் கொள்முதல் ஏற்பாடுகளை அரசு வலுவாக செய்தால் பெரும்பகுதி நெல்லை விவசாயிகள் உரிய கொள்முதல் விலை பெற்று அரசுக்கு விற்பார்கள் என்பதுதான் அந்த செய்தி. அத்தகைய ஏற்பாடு இல்லை என்பது தொடரும் துயரம். நெல்லின் கதை இதுவென்றால் பிற பயிர்கள் விற்பனையில் விவசாயிகள் படும் பாடு என்ன என்பதை உணர்வது கடினமல்ல.

இந்த நிலை மாற வேண்டும். ஒரு ஆண்டுக்கும் மேலாக நாடு முழுவதும் நடந்துவரும், தற்பொழுது முடிவுக்கு வந்துள்ள மகத்தான விவசாயிகள் போராட்டத்தின்  முக்கியமான கோரிக்கைகளில் ஒன்று  நியாயமான கொள்முதல் விலை சட்ட ரீதியாக உத்தரவாதப்படுத்தப்படவேண்டும் என்பதாகும்.  அரசின் ஆய்வு சொல்லும் செய்தி  வேளாண் குடும்பங்களின் வருமானம் உயர இக்கோரிக்கை மிக அவசியம் என்பதாகும். நெல்லுக்கும் கோதுமைக்கும் மட்டுமல்ல; அனைத்து முக்கிய பயிர்களுக்கும் இத்தகைய நியாயமான கொள்முதல் விலையும் அறுவடை முடிந்தவுடன் கொள்முதல் என்பதும்  உறுதிப்படுத்தப்படவேண்டும்.

நிறைவாக

ஒன்றிய அரசின் ஊரக வேளாண் குடும்பங்கள் நிலை பற்றிய நாடு தழுவிய ஆய்வு நமக்கு பல செய்திகளை சொல்கிறது. ஆய்விலும் அறிக்கையிலும் சில பல குறைபாடுகள் இருந்தாலும் ஜனநாயக  இயக்கம் அரசு வெளியிட்டுள்ள ஆவணத்தை கவனமாக பரிசீலித்து தக்க கோரிக்கைகளை உருவாக்கிட வேண்டும். கொள்முதல் ஒரு எடுத்துக்காட்டுதான். விவசாய குடும்பங்கள் என்று வரையறுக்கப்பட்ட குடும்பங்களில் கூட கூலி வருமானம் பிரதான பங்கு வகிப்பதை நாம் பார்த்தோம். ஏழை மற்றும் சிறு குறு விவசாயிகளையும் கிராமப்புற உடல் உழைப்பு தொழிலாளிகளையும் ஒன்றிணைத்து நியாயமான கூலிக்கும் கூடுதலான வேலை நாட்களுக்கும் நாம் போராட வேண்டியுள்ளது. ரேகா திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த கூடுதல் முனைவுகள் தேவை. சிறு நகரப் பகுதிகளுக்கும் அதனை விரிவு செய்ய வேண்டியுள்ளது. இன்னும் பலப்பல பிரச்சினைகள் -வீழ்ந்து கிடக்கும் வேளாண் விரிவாக்க அமைப்பு, நிதி மறுக்கப்பட்டு  பலவீனம் அடைந்துள்ள  வேளாண்  ஆராய்ச்சி அமைப்பு, நிறுவனக்கடன் அளவு விகிதாச்சார அடிப்படையில் குறைந்து விவசாயிகள் கந்துவட்டிக்காரர்களிடம் தள்ளப்படுவது, பாசன வசதிகளின் போதாமை, இது போல் இன்னும் பல பிரச்சனைகளை ஆய்வின் தரவுகள் வெளிப்படுத்துகின்றன. முழுமையான ஜனநாயக நிலச்சீர்திருத்தத்தின் இலக்கணமான நிலமறுவிநியோகம் மிகக் குறைந்த அளவே தமிழகத்தில் நிகழ்ந்துள்ளது என்பதும் இங்கு நினைவுபடுத்தப்பட வேண்டிய செய்தி. 

ஒன்றிய அரசின் ஆய்வு தமிழக கிராமங்களில் உள்ள வேளாண் குடும்பங்களின் பலவீனமான பொருளாதார நிலையை வெளிப்படுத்துகிறது. சொந்த காட்டிலும் பிற நிலங்களிலும் பாடுபட்ட பிறகும், அனைத்துவகை கூலி வேலைகளுக்கு சென்று பாடுபட்ட பிறகும், கால்நடை வளர்ப்பில் உழைப்பை செலுத்திய பின்பும், ஒரு வேளாண் குடும்பத்தின் மாத வருமானம் ரூ 10,000ஐ ஒட்டியே உள்ளது என்பது தமிழக வளர்ச்சிப் பாதை ஒரு முன்மாதிரி என்ற  பிம்பத்தை ஒட்டி அமையவில்லை. ஐந்து நபர்கள் கொண்ட குடும்பத்தின் சராசரி வருமானம் மாதம் பத்தாயிரம் என்றால் நபருக்கு நாள் ஒன்றுக்கு 70 ரூபாய் கூட இல்லை என்கிறது கணக்கு. இதுவும் சராசரி தான். இதற்கும் கீழ் கணிசமான வேளாண் குடும்பங்கள் உள்ளன. அனைவருக்குமான ஊரக வளர்ச்சியின் அவசியத்தை இவ்விவரங்கள் நமக்கு நினைவூட்டுகின்றன. விரிவான கிராமப்புற வறுமை நம்மோடு தொடர்ந்து பயணிக்கிறது.

ஒரு முக்கிய அம்சத்தை கவனப்படுத்தி இக்கட்டுரையை நிறைவு செய்யலாம். வேளாண் குடும்பம் என்று வரையறுக்கப்பட்டுள்ள குடும்பங்களிலும் குடும்ப உறுப்பினர்களின் கூலி உழைப்புதான் அதிகமாகப் பங்களிக்கிறது என்பதை பார்த்தோம். இதன் பொருள் உற்பத்திக்கருவி உடைமைகள் மூலம் அல்லாது மிகக்கடுமையான உழைப்பின் மூலம் தான் இக்குடும்பங்களின் பெரும் பகுதி வருமானம் பெறப்படுகிறது என்பதாகும். வேறு வகையில் சொல்வதானால், கிராமப்புற வேளாண் குடும்பங்கள் கடும் உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாகியே தங்கள் வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. தமிழ் நாட்டில் கிராமப்புற குடும்பங்களின் மொத்த வருமானத்தில்  வேளாண்சாரா மூலங்களின் பங்கு கடந்த பல பத்தாண்டுகளில் அதிகரித்துள்ளது என்ற உண்மையை சிலாகித்து மட்டுமே பார்ப்பது முழுமையான பார்வை அல்ல என்பதை நாம் அடிக்கோடிட்டுக் கூற வேண்டியுள்ளது.  உற்பத்தி உறவுகளில், நில உடமை உறவுகளில் மாற்றம் காணாமல் கிராமப்புற உழைப்பாளி மக்களின் வாழ்வில் நிலைத்தகு முன்னேற்றம் காண இயலாது என்பதை இவ்விவரங்கள் நமக்கு உணர்த்துகின்றன.  பொது விநியோக அமைப்பும் சேமநல திட்டங்களும் தமிழகத்தின் சிறப்பு அம்சங்கள் என்றாலும் இவை மட்டுமே நீண்ட கால வாழ்வாதார உத்தரவாதமாக இருக்க முடியுமா என்ற கேள்வி இயல்பாக எழுகிறது.  நடப்பில் உள்ள இந்த அம்சங்களும் யாருடைய கொடையும் அல்ல; வர்க்கப்பார்வையுடன் நடத்தப்பட்ட வர்க்க  வெகுஜன அமைப்புகளின் தொடர்ந்த போராட்டங்கள் இத்தகைய ஏற்பாடுகளை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தன என்பதும் நினைவில் கொள்ள வேண்டிய விஷயம். கிராமப்புற பொருளாதாரமும் ஒட்டுமொத்த தமிழக பொருளாதாரமும் மக்கள் நலன் சார்ந்து மேம்பட விவசாயத்தில் உற்பத்தி சக்திகள் வேகமாக வளர்வது அவசியம் என்பதையும், அதன் பயன் அனைத்து மக்களையும் சென்று அடைய வேண்டுமென்றால் உற்பத்தி உறவுகளும் மாற வேண்டும்  என்பதையும் நாம் உணர முடிகிறது. இதோடு, வேளாண் ஆதரவு பொதுகட்டமைப்புகள்–மின்சாரம், பாசனம், விரிவாக்கப்பணி அமைப்பு, வேளாண் ஆராய்ச்சி அமைப்பு, விளைபொருள் சேமிப்பு கிடங்குகள், ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் – போன்றவை வலுப்படுத்தப்பட்டு சிறுகுறு விவசாயிகளை எளிதில் சென்றடைவதும் அவசியம். ஒன்றிய அரசின் வேளாண் கொள்கைகளை எதிர்த்த தொடர்ந்த போராட்டமும் மாநில அரசின் முனைவுகளும் முக்கியம்.

நமது விவசாய அமைப்புகள்  ஒன்றிய அரசின் ஆய்வறிக்கையை ஆழமாக பரிசீலித்து பொருத்தமான கோரிக்கைகளை உருவாக்கி  தீவிரமாக களம் புக வேண்டும்.

சீனாவின் பயணம் எப்படிப்பட்டது?

[சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாம் ஆண்டு நிறைவு விழாவில் தோழர் ஷி ஜின் பிங் ஆற்றிய உரை (ஜூலை 1, 2021). ]

தோழர்களே! நண்பர்களே!

இன்று ஜூலை முதல் நாள். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றிலும் சீன தேசத்தின் வரலாற்றிலும் இது மிகச் சிறப்பான, முக்கியமான நாள். கட்சியின் நூறாம் ஆண்டு நிறைவை அனைத்து கட்சி உறுப்பினர்களோடும் நாடு முழுவதும் உள்ள  அனைத்து இன மக்களுடனும் இணைந்து கொண்டாட  நாம் கூடியிருக்கிறோம். கட்சியின்  கடந்த நூறு ஆண்டு போராட்டப் பயணத்தின் சிறப்புகளை பின் நோக்கி பார்க்கிறோம். சீன தேசத்தின் மறுமலர்ச்சிக்கான ஒளிமிக்க  வாய்ப்புகளை எதிர்நோக்குகிறோம்.

தொடக்கத்தில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு சார்பாக அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்.

இந்தச் சிறப்பான தருணத்தில் கட்சியின் சார்பாகவும் மக்கள் சார்பாகவும்  ஒரு பிரகடனம் செய்வதில் பெருமை கொள்கிறேன். தேசம் முழுமையும், ஒட்டுமொத்த கட்சியும் மேற்கொண்ட தொடர் முயற்சிகளின் விளைவாக நமது முதல் நூறாண்டு இலக்கான ‘எல்லா வகைகளிலும் மித அளவிலான வசதிபடைத்த சமூகத்தை கட்டுவது’ (Build a moderately prosperous society) என்பதை நிறைவு செய்துள்ளோம். இதன் பொருள் வரலாற்று சிறப்பு மிக்க வகையில் வறுமை பிரச்சினை சீனாவில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது என்பதாகும். இப்பொழுது நாம் அனைத்து வகைகளிலும் சிறப்பான, நவீன, சோசலிச நாடாக சீனாவை ஆக்குவது என்ற இரண்டாம் நூறாண்டு இலக்கை நோக்கி நம்பிக்கையுடன் பீடுநடை போடுகிறோம். இது சீன தேசம், சீன மக்கள் மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு மகத்தான சாதனையாகும்!

தோழர்களே! நண்பர்களே!

சீன தேசம் ஒரு மகத்தான தேசம். 5000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு உள்ள நாடு. மானுட நாகரீக வளர்ச்சிக்கு சீனா அழிக்க இயலாத பங்களிப்புகளை செய்துள்ளது. எனினும், 1840 ஆம் ஆண்டு கஞ்சா யுத்தத்திற்குப் பிறகு சீனா படிப்படியாக அரை-காலனி, அரை நிலப்பிரபுத்துவ சமூகமாக சிறுமைப்பட்டது. முன்பு எப்பொழுதும் இல்லாத அளவிற்கு பெரும் பாதிப்புகளுக்கு ஆளானது. நாடு கடும் அவமானத்திற்கு உள்ளாகியது. மக்கள் பெரும் துயரத்தை சந்தித்தனர். சீன நாகரீகம் இருளில் மூழ்கியது. அப்பொழுதில் இருந்து தேசீய மறுமலர்ச்சி என்பது சீன தேசத்தின், சீன மக்களின் ஆகப்பெரிய கனவாக இருந்து வந்தது.

தேசத்தை ஆபத்திலிருந்து காப்பாற்ற சீன மக்கள் தைரியத்துடன் போராடினார்கள். உயர்சிந்தனை கொண்ட தேசபக்தர்கள் தேசத்தை ஒன்றுபடுத்த முயற்சித்தனர். ஒன்றன் பின் ஒன்றாக தைபிங் சுவர்க்க அரசு இயக்கம், சீர்திருத்தத்திற்கான 1898 இயக்கம், யிஹெதுவான் இயக்கம், 1911 ஆம் ஆண்டு புரட்சி என்று எழுச்சிகள் நிகழ்ந்தன. நாட்டைக் காப்பதற்கு பல திட்டங்கள் தீட்டப்பட்டன. ஆனால் அவை அனைத்தும் தோல்வியில் முடிந்தன. நாட்டை பாதுகாப்பதற்கான இயக்கத்திற்கு புதிய சிந்தனைகளும், புரட்சிகர சக்திகளை திரட்ட புதிய அமைப்பும்  அவசர தேவையாக இருந்தன.

1917 இல்  ரஷ்ய அக்டோபர் புரட்சி வெடித்தபின் மார்க்சிசம்-லெனினிச தத்துவம் சீனாவை வந்தடைந்தது.  பின்னர், 1921இல் சீன மக்களும் தேசமும் பெரும் விழிப்புணர்வு பெற்ற நிலையில், சீன தொழிலாளி வர்க்க இயக்கத்துடன் மார்க்சிசம் லெனினிசம் நெருக்கமாக இணைந்து கொண்டிருந்த நேரத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சி பிறந்தது. சீனாவில் ஒரு கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்படுவது என்பது ஒரு சகாப்த நிகழ்வாகும். இந்நிகழ்வு நவீன கால சீன வரலாற்றை ஆழமான வகையில் மாற்றியது. உலக வளர்ச்சியின் வரைபடத்தையே மாற்றியது.

துவக்கப்பட்ட நாளில் இருந்து கட்சி சீன மக்களின் மகிழ்ச்சியை, சீன தேசத்தின் மறுமலர்ச்சியை தனது இலக்காகவும் ஆகர்ஷ சக்தியாகவும் கொண்டிருந்தது. கடந்த நூறு ஆண்டுகளில் கட்சி சீன மக்களை ஒன்றுபடுத்தி, தலைமை தாங்கி நடத்தியுள்ள போராட்டங்கள், செய்துள்ள தியாகங்கள், ஆக்கப் பணிகள் அனைத்தும் ஒரு அடிப்படையான கருத்தால் ஒன்றிணைக்கப்பட்டிருந்தன. அதுதான் சீன தேசத்தின் மாபெரும்  மறுமலர்ச்சி என்பதாகும்.

தேசீய மறுமலர்ச்சியை சாதிக்க அசைக்கமுடியாத உறுதியுடன், மக்களை ஒற்றுமைப்படுத்தி, சீன மக்களின்  ரத்தம் சிந்திய போராட்டங்களுக்குத் தலைமை தாங்கியது. புதிய-ஜனநாயகப் புரட்சியின் மூலம்  மகத்தான வெற்றியும் பெற்றது.

வட பகுதி போர் ,விவசாய புரட்சிப் போர், ஜப்பானிய ஆக்கிரமிப்பை எதிர்த்த போர், விடுதலைக்கான போர் ஆகிய பெரும் யுத்தங்கள் வாயிலாக, ஆயுதமேந்திய எதிர்ப்புரட்சி சக்திகளை ஆயுதமேந்திய புரட்சி மூலம் முறியடித்தோம். ஏகாதிபத்தியம், நிலப்பிரபுத்துவம் மற்றும் அதிகாரவர்க்க-முதலாளித்துவம் ஆகிய முப்பெரும் மலைகளை தகர்த்தோம். மக்கள் சீன குடியரசை நிறுவினோம். இதன் மூலம் மக்களே நாட்டின் எஜமானர்களாயினர். இவ்வாறு நமது நாட்டின் விடுதலையை சாதித்தோம். மக்களை விடுவித்தோம்.

ஏகாதிபத்திய வல்லரசுகள் சீனாவில் அனுபவித்த சலுகைகள், நமது நாட்டின் மீது அந்நிய அரசுகள் திணித்த ஏற்றத்தாழ்வான ஒப்பந்தங்கள், பழைய சீனத்தில் நிலவிய ஒற்றுமையற்ற நிலைமை, அரைக் காலனி, அரை நிலப்பிரபுத்துவ நாடு என்ற சீன நாட்டின் நிலைமை  – இவை அனைத்திற்கும் புதிய ஜனநாயக புரட்சியின் வெற்றி முற்றுப்புள்ளி வைத்தது. தேசீய மறுமலர்ச்சியை சாதிப்பதற்கான அடிப்படை சமூக நிலைமைகளை ஏற்படுத்தியது.

விடாப்பிடியான போராட்டத்தின் மூலம் கட்சியும் சீன மக்களும் சீன மக்கள் எழுந்துவிட்டார்கள் என்று உலகிற்குக் காட்டினர். இனி என்றுமே பிறரால் சீன தேசத்தை அவமதிப்பதோ, மிரட்டுவதோ  சாத்தியமில்லை என்று காட்டினர்.

தேச மறுமலர்ச்சியை அடைய, வலுவான சீனத்தை தற்சார்பு உணர்வுடன் கட்டிட, கட்சி சீன மக்களை ஒன்றுபடுத்தி, அவர்களுக்குத் தலைமை தாங்கியது. சோசலிச புரட்சி மற்றும் நிர்மாணத்தில் பெரும் வெற்றி பெற்றது.

சோசலிச புரட்சியை நிகழ்த்தியதன் மூலம்  பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சீனாவில் நிலைத்திருந்த, சுரண்டலும் அடக்குமுறையும் நிலவிய நிலப்பிரபுத்துவ அமைப்பை அழித்தொழித்தோம். சோசலிசத்தை நமது அடிப்படை அமைப்பாக ஆக்கினோம். சோசலிச கட்டுமான செயலாக்கத்தில் ஏகாதிபத்திய,  மேலாதிக்க சக்திகளின் அழிப்பு முயற்சிகள், சதிச் செயல்கள், ஆயுதம் தாங்கிய தாக்குதல்கள் உட்பட அனைத்தையும் முறியடித்து சீன தேசத்தின் வரலாற்றில் மிகவும் விரிவானதும் ஆழமானதுமான சமூக மாற்றங்களை ஏற்படுத்தினோம். உலகின் கிழக்கு பகுதியில் அதிக மக்கள் தொகை கொண்ட, ஏழ்மையான, பின்தங்கிய நாடாக இருந்த சீனாவை சோசலிச நாடாக மாற்றியது. தேசீய மறுமலர்ச்சியை அடைவதற்கு அவசியமான அடிப்படை அரசியல் தளத்தையும் நிறுவன அஸ்திவாரங்களையும் ஏற்படுத்திக் கொடுத்தது.

விடாப்பிடியான போராட்டங்கள் மூலம் கட்சியும் சீன மக்களும் அவர்கள் பழைய உலகை தகர்ப்பவர்கள் என்பது மட்டுமின்றி, புதிய உலகை நிர்மாணிப்பவர்கள் என்பதையும், சோசலிசம் மட்டுமே சீனத்தை காப்பாற்றும் என்பதையும், அதுதான் சீன வளர்ச்சியை சாத்தியமாக்கும் என்பதையும் உலகிற்கு காட்டினர். 

தேசீய மறுமலர்ச்சியை அடைய,  கட்சி சீன மக்களை ஒற்றுமைப்படுத்தி, தலைமை தாங்கி, சிந்தனைகளை மனச்சிறைகளில் இருந்து விடுவித்தது. இதனால் வேகமாக முன்னேறியது. சீர்திருத்தங்கள், சீன தேசத்தின் கதவுகளை விரிவாக திறப்பதில், சோசலிச நவீன மயமாக்கலில் வெற்றி பெற்றது.

சோசலிசத்தின் துவக்க கட்டத்திற்கான கட்சியின் நிலைப்பாட்டை நாம் உருவாக்கினோம். சீர்திருத்தம் மற்றும் பொருளாதாரத்தை திறந்து விடுதல் என்பதை உறுதியுடன் செய்தோம். நாலா பக்கங்களிலும் இருந்து வந்த அபாயங்களையும் சவால்களையும் முறியடித்தோம். சீன குணாம்சங்களைக்கொண்ட சோசலிசத்தை நிறுவி, அதை உயர்த்திப் பிடித்து, பாதுகாத்து, வளர்த்தோம். இதன் மூலம், சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட பின்பான காலத்தில் கட்சி வரலாற்றில் பெரும் முக்கியத்துவம் கொண்ட பெரியதொரு திருப்பத்தை சாதித்தோம். அதிக அளவில் மையப்படுத்தப்பட்ட, திட்டமிடுதல் கொண்ட, பொருளாதாரம் என்ற தன்மையில் இருந்து  உயிர்ப்பு மிக்க சோசலிச சந்தை பொருளாதாரம் என்ற தன்மைக்கு சீனப் பொருளாதாரம் மாறியது. மேலும் பெரும்பாலும் தனித்தே இருந்த நாடு என்ற நிலையில் இருந்து, வெளி உலகம் முழுமைக்கும் திறந்துவிடப்பட்ட நாடாக சீனா மாறியது. இத்திருப்பம் ஒப்பீட்டளவில் பின்தங்கிய உற்பத்தி சக்திகளைக் கொண்ட நாடு என்ற நிலையில் இருந்து, உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரம் என்ற இடத்திற்கு சீனாவால் தாவ முடிந்தது. மேலும் சீனா தனது மக்களின் வாழ்க்கை தரத்தை குறைந்த மட்டத்தில் இருந்து ஒட்டுமொத்த அளவில் ஓரளவு வசதியான வாழ்க்கை என்ற நிலைக்கும், அதன்பின் அனைத்து அம்சங்களிலும் ஓரளவு வசதியான வாழ்க்கை என்ற நிலைக்கும் உயர்த்தியுள்ளது. வேகமான வளர்ச்சிக்கான பொருளாதார அடித்தளத்தையும் ஆற்றல் தரும் நிறுவன உத்தரவாதங்களையும் உருவாக்கி, தேசீய மறுமலர்ச்சியை நோக்கி செல்லும்  வாய்ப்புகளையும் இச்சாதனைகள் ஏற்படுத்தியுள்ளன.

விடாப்பிடியான  போராட்டங்கள் மூலம் கட்சியும் சீன மக்களும் சீர்திருத்தங்கள் மூலமும் சீனாவின் கதவுகளை விரிவாக திறந்ததன் மூலமும் (இவை இன்றைய சீனத்தை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றியுள்ளன) சமகாலத்திற்கு சீனா மிக வேகமாக முன்னேறியுள்ளது என்று காட்டியுள்ளனர்.

தேசீய மறுமலர்ச்சி என்ற இலக்கை அடைய கட்சி சீன மக்களை ஒற்றுமைப்படுத்தி, தலைமை தாங்கி,மாபெரும் போராட்டத்தை, மாபெரும் திட்டத்தை, மாபெரும் கனவை தொடர்ந்து மேற்கொண்டு வந்துள்ளது. இதனை தன்னம்பிக்கை, தற்சார்பு,புதுமை காணல் ஆகியவற்றின் மூலம் செய்துள்ளது. புதிய சகாப்தத்தில் சீன குணாம்சங்களுடனான சோசலிசத்தை அடைவதில் பெரும் வெற்றி கண்டுள்ளது.

கட்சியின் பதினெட்டாவது தேசீய மாநாட்டை தொடர்ந்து, சீன குணாம்சங்களுடனான சோசலிசம் ஒரு புதிய சகாப்தத்திற்குள் நுழைந்துள்ளது. இந்த கட்டத்தில் நாம் கட்சியின் ஒட்டு மொத்த தலைமையை வலுப்படுத்தியுள்ளோம்.ஐந்து கள ஒன்றிணைக்கப்பட்ட திட்டம்  மற்றும் நான்கு முனை முழுமையான உத்தி ஆகியவை ஒருங்கிணைந்து அமலாக்கப்படுவதை உறுதிப்படுத்தியுள்ளோம். சீன குணாம்சங்களுடனான சோசலிச அமைப்பை மேம்படுத்தியுள்ளோம். சீனாவின் ஆட்சி சார் அமைப்புகளை நவீனப்படுத்தி அவற்றின் ஆளும் திறனை மேம்படுத்தியுள்ளோம். கட்சி  விதிகளின் அடிப்படையில் கட்சி ஆளப்படுவதை உறுதி செய்துள்ளோம்.  சரியான உட்கட்சி நெறிமுறைகளை உருவாக்கியுள்ளோம். பல அபாயங்களையும் சவால்களையும் வென்று, முதல் நூறு ஆண்டுகளின் இலக்கை நிறைவு செய்து, இரண்டாம் நூறு ஆண்டுகளின் இலக்கை அடைவதற்கான உத்திகளை முன்வைத்துள்ளோம். கட்சி மற்றும் நாட்டிற்கான நமது சாதனைகளும் மாற்றங்களும் தேசீய மறுமலர்ச்சியை அடைய வலுவான நிறுவன அமைப்புகளை நமக்கு அளித்துள்ளன. வலுமிக்க அடித்தளத்தை தந்துள்ளன. கூடுதலாக முன்முயற்சிகளை எடுக்க நமக்கு உந்து சக்தியாகவும் அவை அமைந்துள்ளன.

விடாப்பிடியான போராட்டத்தின்மூலம் கட்சியும் சீன மக்களும் சீனா நிமிர்ந்து நின்று மகத்தான மாற்றங்களை சாதித்துள்ளது, வசதிபடைத்த நாடாக மட்டுமின்றி வலுவான நாடாகவும் மாறியுள்ளது, சீனாவின் தேசீய மறுமலர்ச்சி வரலாற்றின் தவிர்க்க இயலாத பகுதியாகிவிட்டது என்பதையும் உலகுக்கு காட்டியுள்ளனர்.

மாவோ கூறினார்: “தியாகிகளின் தியாகங்கள் நமது மனங்களை மேலும் வலுப்படுத்துகின்றன. நாம் உருவாக்கும் புதிய வானத்தில் சூரியனையும் சந்திரனையும் ஒளி வீசச் செய்ய முனையும் தைரியம் நம்மிடம் உள்ளது.” இந்த அச்சமற்ற உணர்வைத்தான் பல ஆயிரம் ஆண்டுகள் கொண்ட சீன தேச வரலாற்றின் மிக அற்புதமான அத்தியாயத்தை கடந்த நூறு ஆண்டுகளில் சாதிக்கும் பணியில் கட்சி சீன மக்களை ஒற்றுமைப்படுத்தி தலைமை தாங்கி வெற்றி பெற்றுள்ளது. சீன தேசத்தின், மனித குலத்தின் வளர்ச்சி வரலாற்றில் நாம் பதித்துள்ள புதிய பாதை, நாம் மேற்கொண்டுள்ள இலக்கு, கடந்த நூறு ஆண்டுகளில் நாம் படைத்துள்ள சாதனைகள் நிச்சயம் இடம் பெறும்.

தோழர்களே, நண்பர்களே,

நூறு ஆண்டுகளுக்கு முன் சீனாவின்  கம்யூனிஸ்ட் முன்னோடிகள் சீன கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவினர். அதன் மாபெரும் துவக்க உணர்வை வளர்த்தெடுத்தனர். அதன் அடிப்படை கோட்பாடுகள் வருமாறு: லட்சியங்களையும் உண்மையையும் உயர்த்திப்பிடித்தல்; நமது துவக்க வேட்கைக்கும் இலக்கிற்கும் உண்மையாக இருத்தல்; இழப்பு பற்றி கவலையின்றி தைரியமாக போராடுதல்; கட்சிக்கும் மக்களுக்கும் விசுவாசமாக இருத்தல். இந்த உணர்வு கட்சியின் வலிமைக்கான ஊற்றுக்கண்.

கடந்த நூறு ஆண்டுகளில் கட்சி இந்த துவக்க உணர்வை முன்னெடுத்து சென்றுள்ளது. அதன் நெடிய போராட்டங்கள் மூலம் சீன கம்யூனிஸ்டுகளுக்கு உத்வேகம் அளிக்கும் பல கோட்பாடுகளை உருவாக்கியுள்ளது. தனித்தன்மை வாய்ந்த அரசியல் குணத்தை ஏற்படுத்தியுள்ளது. வரலாறு முன்னேறுகையில் கட்சியின் உணர்வு தலைமுறை தலைமுறையாகத் தொடர்கிறது. கட்சியின் மகத்தான துவக்க உணர்வு எப்பொழுதும் உயிர்ப்புடன் இருக்கும் வகையில், முன்னெடுத்து செல்லப்படும் வகையில் நமது மகத்தான புரட்சிகர பாரம்பர்யத்தை உயர்த்தி பிடிப்போம். 

தோழர்களே! நண்பர்களே!

நமது கடந்த நூறு ஆண்டு சாதனைகள் அனைத்தும் சீன கம்யூனிஸ்டுகளின், சீன மக்களின், சீன தேசத்தின் தீவிர முயற்சிகளால் நிகழ்ந்துள்ளன. இதன் பிரதான பிரதிநிதிகள் தோழர்கள் மாவோ, டெங், ஜியாங் ஜெமின் மற்றும் ஹூ ஜின் டாவ் ஆவர். சீன தேசத்தின் மறுமலர்ச்சிக்கு அவர்கள் மாபெரும் வரலாற்றுச் சிறப்பு மிக்க பங்களிப்பை செய்துள்ளனர். அவர்களுக்கு நமது மிக உயர்ந்த மரியாதையை செலுத்துகிறோம்.

இத்தருணத்தில் சீன புரட்சிக்கும், நிர்மாணத்திற்கும் சீர்திருத்தத்திற்கும், சீன கம்யூனிஸ்ட் கட்சியை துவக்கி, வலுப்படுத்தி வளர்த்ததற்கும் தோழர்கள் மாவோ, ஜூ என் லாய், லியு ஷா சி, சு டே, டெங் சியாவ் பிங், சென் யுன் மற்றும் இதர முதுபெரும் புரட்சியாளர்களை நெகிழ்வுடன் நினைவு கூறுவோம். மக்கள் குடியரசை நிறுவி, பாதுகாத்து வளர்க்கும் பணிகளில் மனஉறுதியுடன் தங்கள் உயிரையும் ஈந்த புரட்சியாளர்களை இத்தருணத்தில் நெகிழ்வுடன் நினைவு கூறுவோம். சீர்திருத்தம், சீனாவின் கதவுகளை விரிவாக திறந்துவிடல், சோசலிச நவீனமாக்கல் ஆகிய பணிகளுக்கு தங்கள் வாழ்வை அர்ப்பணித்த தோழர்களுக்கு இத்தருணத்தில் நெகிழ்வுடன் நினைவு கூறுவோம். நவீன காலங்களில் தேசங்களின் சுதந்திரத்திற்கும் மக்கள் விடுதலைக்கும் உறுதிபடப்போராடிய அனைத்து பெண்களையும் ஆண்களையும் நெகிழ்வுடன் நினைவு கூறுவோம். நமது தாய் நாட்டிற்கும் தேசத்திற்குமான அவர்களின் சிறப்பான பங்களிப்பு வரலாற்றில் நிரந்தர இடம் பெறும். சீன மக்களின் இதயங்களில் அவர்களது உன்னதமான உணர்வுகள் என்றும் இருக்கும்.

மக்கள் தான் உண்மையான கதாநாயகர்கள். ஏனெனில் அவர்கள் தான் வரலாற்றை படைக்கின்றனர். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு சார்பாக நாடுமுழுவதும் உள்ள தொழிலாளர்கள், விவசாயிகள், அறிவுஜீவிகள் அனைவருக்கும் உயர்ந்த மரியாதையை செலுத்துகிறேன். இதர அரசியல் கட்சிகள், கட்சி சார்பற்ற பொது வாழ்வு பிரமுகர்கள், மக்கள் அமைப்புகள், சமூகத்தின் அனைத்து துறைகளை சார்ந்த தேச பக்தர்கள்; மக்கள் விடுதலைப்படை, மக்களின் ஆயுத போலீஸ் படை, தீயணைப்பு மற்றும் மீட்சி சேவைத்துறை ஆகிய அனைத்து அமைப்புகளின் உறுப்பினர்களுக்கும்; அனைத்து சோசலிச உழைக்கும் மக்களுக்கும்; ஐக்கிய முன்னணியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்கள். ஹாங்காங், மக்காவ் சிறப்பு நிர்வாக பகுதி சீன மக்களுக்கும் தைவான் மற்றும் உலகின் இதர பகுதிகளில் வாழும் சீன மக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். சீன மக்களுடன் நட்பும் புரிதலும் கொண்ட, புரட்சி, வளர்ச்சி மற்றும் சீர்திருத்தத்தில் சீனா எடுத்துவரும் முயற்சிகளை ஆதரிக்கும் உலகெங்கும் உள்ள மக்களுக்கும் நண்பர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி.

தோழர்களே! நண்பர்களே!

நமது கட்சியின் துவக்க இலக்கை வரையறை செய்வது எளிது என்றாலும், அந்த இலக்கிற்கு நாம் விசுவாசமாக இருப்பதை உறுதி செய்வது அதைவிட  கடினமான பணி. வரலாற்றைக் கற்பதன் மூலம் வல்லரசுகள் எழுவதும் வீழ்வதும் ஏன் என்று புரிந்துகொள்ளலாம். வரலாறு எனும் கண்ணாடி மூலம் நாம் தற்பொழுது எங்கு உள்ளோம் என்பதை அறியலாம். எதிர்காலம் பற்றிய வெளிச்சம் பெறலாம். கட்சியின் கடந்த நூறு ஆண்டு வரலாற்றை உற்றுநோக்கி கடந்த காலத்தில் நம்மால் எவ்வாறு வெற்றிபெற முடிந்தது என்று அறியலாம். எதிர்காலத்தில் தொடர்ந்து வெற்றி பெறுவது எப்படி என்றும் அறியலாம். இவ்வாறு செய்வதன் மூலம் கூடுதல் உறுதியுடன் நமது துவக்க இலக்கிற்கு உண்மையாக இருந்து மேலும் சிறந்த எதிர்காலத்தை நோக்கி நம் முன்னே உள்ள புதிய பயணத்தினை தொடரலாம்.

ஓய்வின்றி ஒரு மேம்பட்ட வாழ்க்கையை சாத்தியமாக்கிட நாம் சீன மக்களை ஒற்றுமைப்படுத்தி அவர்களுக்கு தலைமை தாங்க வேண்டும்.

இந்த நாடு என்பது இந்த நாட்டின் மக்களே. மக்கள் தான் நாடு. நாட்டின் மீதான நமது தலைமை பாத்திரத்தை நிலைநாட்டி உறுதிப்படுத்த நாம் போராடி வந்துள்ளோம். அதன் பகுதியாக மக்களின் ஆதரவை வென்றெடுத்து தக்க வைக்கவும் நாம் போராடி வருகிறோம். கட்சியின் வேர்கள் மக்கள் தான். அவர்கள் தான் கட்சியின் உயிர்நாடி, கட்சியின்  வலிமைக்கான ஆதார வளம். எல்லாக் காலங்களிலும் கட்சி அனைத்து சீன மக்களின் அடிப்படை நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தியே வந்துள்ளது. எப்பொழுதும் கட்சி மக்களுடன் நிற்கிறது. தனக்கென்று கட்சிக்கு பிரத்யேக நலன் எதுவும் இல்லை. எந்த தனி நபர் நலனையோ, அதிகார குழுக்களின் நலனையோ, உயர் நிலை குழுக்களையோ  கட்சி ஒருபோதும் பிரதிநிதித்துவப்படுத்தியதில்லை. சீன மக்களிடமிருந்து கட்சியை பிரிக்கவோ, மக்களை கட்சிக்கு எதிராக திருப்பவோ செய்யப்படும் முயற்சிகள் கட்டாயம் தோல்வியுறும். இத்தகைய நிலை ஏற்பட 9 கோடியே ஐம்பது லட்சம் கட்சி உறுப்பினர்களோ 140 கோடிக்கும் அதிகமான சீன மக்களோ இடம் அளிக்க மாட்டார்கள்.

நம் முன் உள்ள பயணத்தில் மக்களை நெருக்கமாக சார்ந்து நின்று  வரலாறு படைக்க வேண்டும். மக்களுக்கு சேவை செய்வது என்ற கட்சியின் அடிப்படை நோக்கத்தை உயர்த்தி பிடிப்போம். மக்களுடன் உறுதியாக நிற்போம். கட்சியின் வெகு மக்கள் நிலைபாட்டை (mass line) அமலாக்குவோம். மக்களின் ஆக்க திறனை மதிப்போம். மக்களை மையப்படுத்தும் வளர்ச்சி என்ற கோட்பாட்டை நடைமுறைப்படுத்துவோம். முழுமையான மக்கள் ஜனநாயகத்தை அமலாக்குவோம். சமூக நீதி மற்றும் நியாயத்தை பாதுகாப்போம். வளர்ச்சியில் உள்ள சமநிலையை பாதிக்கும் அம்சங்களை, குறைபாடுகளை  களைவோம். மக்களுக்கு மிகுந்த கவலை தரும் அவசர நெருக்கடிகளையும் பிரச்சினைகளையும் தீர்த்து வைப்போம். இதன்மூலம் முழுமையான மானுட வளர்ச்சி மற்றும் அனைவருக்கும் பொது வளம்ஆகிய இலக்குகளை அடைவதில் கூடுதலான, குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காண்போம்..

சீன சூழலுக்கேற்ப மார்க்சியத்தைத் தொடர்ந்து கடைப்பிடிப்போம்

நமது கட்சியும் நாடும், மார்க்சியத்தை வழிகாட்டும் அடிப்படைத் தத்துவமாகக் கொண்டு கட்டப்பட்டவை; அது நமது கட்சியின், நாம் தூக்கிப்பிடிக்கும் பதாகையின் ஆன்மாவாகும். சீன கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சியத்தின் அடிப்படைக் கோட்பாடுகளையும், நிரூபிக்கப்பட்ட உண்மைகளிலிருந்து நிதர்சனத்தைத் தேடிக் கண்டடையும் கொள்கையையும் உயர்த்திப் பிடித்து இயங்குகிறது.

சீன நிலைமையின் யதார்த்தத்தில் இன்றைய போக்குகளைக் கூர்ந்து நோக்கி, வரலாற்றில் ஒரு முக்கிய முன்முயற்சி எடுத்து அதனைக் கடுமையான ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளோம். அதன்மூலம், தொடர்ந்து மார்க்சியத்தை இன்றைய காலகட்டத்தில் சீனாவின் தேவைகளுக்கேற்பப் பொருத்தி, சமூகப் புரட்சியை முன்னெடுத்துச் செல்வதில் சீன மக்களுக்கு வழிகாட்டியாக இருக்க நம்மால் முடிந்துள்ளது. அடிப்படையில், சீன சூழலுக்கு பொருத்துவதற்கான சோசலிசத்தின் வலிமையும், அதை செயல்படுத்துவதற்கான கட்சியின் திறமையும், மார்க்சியம் நடைமுறைப்படுத்தப்படக்கூடியது என்ற உண்மையினால்  சாத்தியமாகியுள்ளன.

தொடரும் நமது பயணத்தில் மார்க்சிய-லெனினிய தத்துவம், மாவோவின் சிந்தனைகள், டெங் ஜியோபிங்கின் கோட்பாடுகள், சீன கம்யூனிஸ்ட் கட்சியால் அங்கீகரிக்கப்பட்ட மேம்பட்ட உற்பத்தித்திறன், மேம்பட்ட கலாச்சாரம் மற்றும் மக்களின் அடிப்படை நலன்கள் ஆகியவற்றிற்கான ‘மூன்று கொள்கைகள்’, வளர்ச்சிக்கான அறிவியல் அணுகுமுறை ஆகியவற்றைத் தொடர்ந்து உயர்த்திப் பிடிக்க வேண்டும். புதிய சகாப்தத்திற்கான சீனப் பண்புகளுக்கு ஏற்ப சோசலிசம் பற்றிய சிந்தனையை நடைமுறைப்படுத்த வேண்டும். சீனாவின் திட்டவட்டமான நிலைமைகள் மற்றும் அதன் பாரம்பர்ய  பண்பாட்டின் சிறப்பு அம்சங்களுக்கு  ஏற்ப, மார்க்சிய தத்துவத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை நாம் தொடர்ந்து கையாளவேண்டும். சமகாலப் போக்குகளை கவனித்து, புரிந்துகொண்டு, காலத்திற்கேற்ப வழிநடத்தவும் மார்க்சியத்தைப் பயன்படுத்தி, சமகால சீனாவிற்கும்  இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டிற்குமான மார்க்சியத்தை மேலும் வளர்த்தெடுப்போம்.

பல சமகாலப் பண்புகளுடனான பெரிய போராட்டத்தை நடத்திட வேண்டும்.

போராடும் மனவுறுதியும், வெற்றிக்கான துணிவும், நம் கட்சியை வெல்லற்கரியதாக ஆக்கியுள்ளது. நம் உயரிய கனவை நனவாக்க, கடின உழைப்பும், விடாமுயற்சியும் தேவை. தேசிய மறுமலர்ச்சி என்ற நமது இலக்கை சாத்தியமாக்கிட, இன்று நாம் முன்னெப்போதையும் விட ஒற்றுமையுடனும், திறமையுடனும், நம்பிக்கையுடனும் உள்ளோம். ஆனால், அதை அடைய மேலும் கடினமாக உழைக்க வேண்டியுள்ளது.

நம் முன்னேற்றப் பாதையில், அமைதியான காலங்களில் கூட, மறைந்திருக்கக்  கூடிய  ஆபத்தினையும்  எதிர்நோக்கும் கூரிய விழிப்புணர்வு தேவை. தேசப் பாதுகாப்புக்கு, அமைதி மற்றும் பாதுகாப்புக்கான  வழிமுறைகளை  சமநிலைப்படுத்தும் ஒரு முழுமையான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும். நூறாண்டுக்கு ஒரு முறை நிகழும் மாற்றங்கள் தற்போது உலகில் ஏற்பட்டுவரும் சூழலில், நம் தேசத்தின் மறுமலர்ச்சிக்கான திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இம்மாற்றத்தினால் எழும் புதிய அம்சங்கள் மற்றும் தேவைகள், சீன சமுதாயத்தில் ஏற்படும் முக்கியமான முரண்பாடுகள், சிக்கலான உலகச் சூழலிலிருந்து எழும் புதிய பிரச்சனைகள் மற்றும் சவால்கள் ஆகியவற்றைப் பற்றிய முழுமையான புரிதல் தேவை. நம் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல, புதிய பாதைகளை உருவாக்குவதிலும், சவால்களையும், இடர்பாடுகளையும் தாண்டிச் செல்லத் தேவையான பாலங்களை அமைப்பதிலும் நாம் தைரியமாகவும் திறமையாகவும் செயல்பட வேண்டும்.

சீன மக்களின் மகத்தான ஒற்றுமையை பலப்படுத்த வேண்டும்

கடந்த ஒரு நூற்றாண்டு கால போராட்ட வரலாற்றில், ஐக்கிய முன்னணியை முன்னிலைப்படுத்தி வந்துள்ளோம். எல்லாக் காலங்களிலும் ஒற்றுமைப்படுத்தக்கூடிய அனைத்து சக்திகளையும் ஒற்றுமைப்படுத்தியுள்ளோம். திரட்டவாய்ப்புள்ள அனைத்து சாதகமான காரணிகளையும் திரட்டியுள்ளோம். மிகவும் விரிவான ஐக்கிய முன்னணியை உருவாக்கியுள்ளோம். கூட்டு முயற்சிக்கான அனைத்து வலுவையும் இணைத்துள்ளோம். தேச மறுமலர்ச்சி எனும் நோக்கத்திற்காக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழும் ஒவ்வொரு சீனரையும் அணிதிரட்ட இந்த தேச பக்த ஐக்கிய முன்னணி ஒரு முக்கியமான கருவியாக  உள்ளது. 

நாம் பயணிக்கும் இந்தப் பாதையில், நம்மிடையே உள்ள பொதுவான தன்மைகள் மற்றும் பன்முகத் தன்மைகளுக்கிடையே சமநிலையைப் பேணிக் காத்து, ஒருமைப்பாட்டையும் ஒற்றுமையையும் வளர்க்க வேண்டும். நம் கோட்பாடு மற்றும் அரசியல் வழிகாட்டுதலை வலுப்படுத்தி, பரந்த அளவில் ஒத்த கருத்தை உருவாக்கி, அறிவுத்திறன்  மிகுந்தவர்களை ஒன்றிணைத்து, ஒருமித்த செயல்பாட்டுக்கான களத்தை விரிவுபடுத்தி, அனைவரின் நலன்களும் ஒன்றிணைவதை நோக்கி பயணிக்க  வேண்டும். இதன் மூலமே நாம் அனைத்து சீன மக்களின் திறமைகளையும் ஆற்றலையும் ஒரே இலக்கை நோக்கி செலுத்த இயலும். தேச மறுமலர்ச்சி என்ற இலக்கை அடைவதற்கு மாபெரும் சக்தியாக இணைய முடியும்.

கட்சி கட்டும் புதிய பெரிய திட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும்

சீன கம்யூனிஸ்ட் கட்சியை மற்ற அரசியல் கட்சிகளிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் தனிச்சிறப்பு என்னவெனில், தன்னை தானே  சுய சீர்திருத்தம் செய்துகொள்ளும்  அதன் துணிவே ஆகும். பல சோதனைகளுக்கும் இன்னல்களுக்கும் ஆளான போதிலும் கட்சி துடிப்புடன் செயலாற்றக் காரணம் இந்த கடுமையான சுய பரிசோதனையும், திறமையான சுய நிர்வாக ஒழுங்குமே ஆகும். வரலாற்றில் பல்வேறு ஆழமான மாற்றங்களையும் அபாயங்களையும் சந்தித்தபோதும், உலகளாவிய ஆழமான மாற்றங்கள் நிகழும் பொழுதும், நாட்டிலும் பன்னாட்டு களத்திலும் பல சவால்களை எதிர்கொண்டு  தேசத்தின் முதுகெலும்பாக எப்போதும் முன்னணியில் நிற்க முடிந்தது.

நம் முன்னேற்றப் பாதையில் ‘நல்ல எஃகு செய்ய நல்ல கொல்லன் தேவை’ என்ற பழமொழியை நினைவில் கொள்ள வேண்டும். சுய பரிசோதனையும், திறமையான சுய நிர்வாக ஒழுங்கும் முடிவற்றுத் தொடர வேண்டும் என்ற அரசியல் விழிப்புணர்வு நமக்குத் தேவை. கட்சியை அரசியல் ரீதியாக பலப்படுத்துவதை நம் முக்கியக் கொள்கையாக செயல்படுத்த வேண்டும். கட்சியின் அமைப்பு முறையை மேலும் கறார்த்தன்மை கொண்டதாக ஆக்க வேண்டும். நேர்மையான, திறமை வாய்ந்த கட்சி அலுவலர்களைப் பயிற்றுவிக்க வேண்டும். கட்சியின் கட்டுப்பாட்டு ஒழுக்க நெறிகளை மேம்படுத்தவும், நாணயத்துடன் செயலாற்றவும், ஊழலுக்கு எதிராகப் போராடவும், கட்சியின் தரத்தைக் குலைக்கும் எந்தத் தீங்கினையும் களையவும் உறுதியுடன் செயல்பட வேண்டும். புதிய யுகத்தில், சீனப் பண்புகளுடனான சோசலிசத்தை நிலை நாட்ட, கட்சி தனது உயர் பண்பையும், தன்மையையும் சாராம்சத்தையும் பாதுகாத்து நாட்டின் அரசியல் மையத்தில், முக்கிய தலைமை இடத்தில் இருந்து செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

தோழர்களே, நண்பர்களே,

சிறப்பு நிர்வாகப் பகுதிகளான ஹாங்காங் மற்றும் மக்காவ் ஆகியவற்றைப் பொறுத்தவரை, ஒரு நாடு- இரு நிர்வாக அமைப்புகள் என்ற கொள்கையின் உள்ளடக்கத்திற்கு உண்மையாக செயல்படுவோம். அம்மக்கள் பெருமளவு  தன்னாட்சி அதிகாரம் பெற்று தங்களது பகுதிகளைத் தாங்களே நிர்வகிப்பர். தேசியப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சட்டம் மற்றும் அமலாக்க அமைப்புகள் மத்திய அரசின் ஒட்டுமொத்த அதிகார வரம்பிற்குள் இருக்கும். சீனாவின் இறையாண்மை, பாதுகாப்பு, மேம்பாட்டு நலன்களைப் பாதுகாக்கும் அதே வேளையில், இவ்விரண்டு சிறப்புப் பகுதிகளிலும் நீடித்த வளர்ச்சியையும் சமூக நிலைத்தன்மையையும் உறுதி செய்வோம்.

தைவான் பிரச்சனையைத் தீர்த்து ஒருங்கிணந்த சீனாவை மீட்டுருவாக்கம் செய்வது என்ற வரலாற்றுப் பணியில் சீன கம்யூனிஸ்ட் கட்சி அசைக்க முடியாத உறுதிப்பாட்டுடன் உள்ளது. இது ஒவ்வொரு சீனக் குடிமக்களின் கனவாகவும் உள்ளது. ஒரே சீனம் என்ற 1992இல் எடுக்கப்பட்ட ஒருமித்த முடிவை உயர்த்திப் பிடித்து அமைதியான வழியில் தேசிய ஒருங்கிணைப்பை முன்னெடுப்போம். தைவான் ஜலசந்தியின் இருபுறமும் வாழும் தோழர்களாகிய நாம் இவ்விஷயத்தில் இணைந்து ஒற்றுமையாக முன்னேற வேண்டும். “சுதந்திரத் தைவான்” முயற்சியை உறுதியாகத் தோற்கடித்து, ஒரே சீனத்திற்கான பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க வேண்டும். இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான  சீனமக்களின் மனஉறுதியையும் திறனையும் யாரும் குறைத்து மதிப்பிட முடியாது.

தோழர்களே! நண்பர்களே!

எதிர்காலம் இளைஞர்களின் கைளில் உள்ளது. நாம் அவர்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளோம். நூறாண்டுகளுக்கு முன் சீனா இருளில் மூழ்கியிருந்த ஆண்டுகளில் முன்னேற்ற சிந்தனையுடைய இளைஞர்கள் குழு ஒன்று  மார்க்சியம் எனும் ஒளிவிளக்கை உயர்த்திப் பிடித்து, அந்த ஒளியில்  சீன தேசத்தின் மறுமலர்ச்சிக்கான வழியைத் தேடியது. அன்றிலிருந்து, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பதாகையின் கீழ், தலைமுறை தலைமுறையாக இளைஞர்கள் கட்சிக்காகவும் மக்களுக்காகவும் தங்கள் இளமை பருவத்தை அர்ப்பணித்து வருகின்றனர். நாட்டின் மறுமலர்ச்சிக்கான இயக்கத்தில் முன்னணியில் இருந்து வருகிறார்கள்.

இப்புதிய யுகத்தில் நம் இளைஞர்கள், அவர்கள் சீன மக்கள் என்பதில் மேலும் பெருமையும் நம்பிக்கையும் கொண்டு நாட்டின் மறுமலர்ச்சிக்கு  பங்களிப்பதை  தமது குறிக்கோளாகக் கொண்டு செயல்பட வேண்டும். அப்பொழுதுதான், இளைஞர்கள் மீதான நம் காலத்தின், கட்சியின், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியும்.

தோழர்களே, நண்பர்களே,

நூறாண்டுகளுக்கு முன், சீன கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டபோது, வெறும் 50 பேர்களுக்கு சிறிது அதிக அளவிலேயே உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. இன்று 140 கோடிக்கு மேற்பட்ட மக்கள் வாழும் சீனத்தில், 9.5 கோடிக்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்டு உலகின் மிகப்பெரிய ஆளும் கட்சியாகவும் சர்வதேச அளவில் மிகுந்த செல்வாக்குடையதாகவும் சீன கம்யூனிஸ்ட் கட்சி  விளங்குகிறது.

ஒரு நூற்றாண்டுக்கு முன், சீனா உலகின் கண்களில் வீழ்ச்சியடைந்து உதிர்ந்து கொண்டிருந்த ஒரு நாடாக இருந்தது. இன்று, அது தடுக்கமுடியாத வேகத்தில் மறுமலர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கும் நாடாக காட்சியளிக்கிறது. கடந்த நூற்றாண்டில் சீன கம்யூனிஸ்ட் கட்சி, நம் மக்களின் சார்பாக பல வரலாற்றுச் சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. இன்று அது அடுத்த நூற்றாண்டுக்கான இலக்கை அடையும் புதிய பயணத்தில், மக்களை அணிதிரட்டி தலைமையேற்று வழிநடத்துகிறது.

கட்சி உறுப்பினர்களே,

நம் கட்சியின் ஸ்தாபன இலக்கிற்கு உண்மையாக இருந்து, உங்கள் லட்சியங்கள்  மற்றும் நம்பிக்கைகளில் உறுதியாக நிற்கவும் உங்கள் ஒவ்வொருவரையும் மத்தியக் கமிட்டி கேட்டுக் கொள்கிறது.  இன்பத்திலும் துன்பத்திலும்  மக்களை விட்டு விலகாது, அவர்கள் மீதான பரிவுடன், தொடர்ந்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் அவர்களுடன் இணைந்து நின்று அயராது பணிகளைச் செய்ய வேண்டும். இவ்வாறு கட்சியின் நோக்கத்திற்காக செயல்படுவதன் மூலம் நீங்கள் கட்சிக்கும் மக்களுக்கும் மேலும் பெருமை சேர்க்க முடியும்.

தோழர்களே, நண்பர்களே,

சீன கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டு நூறாண்டுகளான நிலையில், இன்றும் கட்சி அதே துடிப்புடன் செயல்படுகிறது. சீன தேசத்திற்கு நீடித்த பெருமை சேர்க்க, அதே உறுதியுடன் திகழ்கிறது. நாம் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்த்து, முன்னால் நாம் செல்லவேண்டிய பயணத்தைக் கண்ணுறும் போது, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுதியான தலைமையின் கீழ், அனைத்து  இனக்குழு மக்களின் ஒற்றுமை காத்து, நாம் மேலும் பல உயரங்களைத் தொடுவது உறுதி. நாம் அனைத்து வகையிலும் உன்னதமான நவீன சோசலிச தேசத்தைக் கட்டியெழுப்பி, சீன மக்களின் பெரும் கனவான தேச மறுமலர்ச்சி என்ற இலக்கை அடைவோம்.

வாழ்க நமது உயர்ந்த, போற்றத்தக்க, சரியான கட்சி!

வாழ்க நமது உயர்ந்த, போற்றத்தக்க, வீரமிக்க மக்கள்!

தமிழில்: பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா

இந்தியாவின் தொடரும் வேளாண் கிளர்ச்சி: மார்க்சீய புரிதலை நோக்கி

பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா

அறிமுகம்

கடந்த ஆறுமாதங்களுக்கும் மேலாக, கடும் குளிரையும், பின்னர் கூடிவரும் வெப்பத்தையும், பரவும் பெரும் தொற்றையும், அடக்குமுறை அரசையும் மிகுந்த வீரத்துடனும் விவேகத்துடனும்  எதிர்கொண்டு பல லட்சக்கணக்கான விவசாயிகள் ஒன்றுபட்ட, நாடு தழுவிய கிளர்ச்சியை அமைதியாக, அதேசமயம் வியக்கத்தக்க ஒற்றுமையுடனும் உறுதியுடனும்  நடத்திவருகின்றனர். இந்தியாவில் தேச விடுதலை போராட்டத்திற்குப்பின் இத்தகைய மிகப்பெரிய அளவிலான, உறுதியான, நீண்ட போராட்டத்தை நாடு கண்டதில்லை. அதுமட்டுமல்ல. அகில இந்திய அளவில் இத்தகைய வலுவான விவசாயிகளின் போராட்டம் நடந்துவருவதுபோல்  சமகால உலகில் வேறு எங்கும் கடந்த பல பத்தாண்டுகளில் வெகுமக்கள் போராட்டம்  நடக்கவில்லை என்றே கூறலாம்.

போராடும் விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகள் என்ன?அண்மையில் மத்தியில் ஆளும் பாஜக அரசு பாராளுமன்ற ஜனநாயக நெறிமுறைகளை புறம் தள்ளி  நிறைவேற்றிய மூன்று  விவசாயிகள் விரோத, மக்கள் விரோத சட்டங்கள் ரத்து செய்யப்பட வேண்டும். இச்சட்டங்களில் ஒன்று, விவசாயிகளுக்கு ஓரளவாவது விளைபொருளுக்கு விலை கிடைப்பதற்கு உதவும் வேளாண் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தும் குழுக்கள் (ஏ பி எம் சி  – APMC)தொடர்பான சட்டத்தை விவசாயிகளுக்கு விரோதமாகவும் பெரு வணிகர்களுக்கு சாதகமாகவும் திருத்தியுள்ளது. இன்னொரு சட்டம், ஒப்பந்த விவசாயம் தொடர்பாக பன்னாட்டு – இந்நாட்டு  பெரும் வேளாண் வணிக கம்பனிகளுக்கு சாதகமான மாற்றங்களை செய்துள்ளது. மூன்றாவது சட்டம், அத்தியாவசியப் பண்டங்கள் சட்டத்தை நீர்த்துப்போகச்செய்யும் திருத்தங்களை அமலாக்கியுள்ளது. இந்த மூன்று திருத்தப்பட்ட சட்டங்களுமே வேளாண்துறையில் அந்நிய, இந்திய பெருமுதலாளிகள் வேகமாக ஆதிக்கம்பெற வழிவகுக்கும் நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டுள்ளன. வேளாண்துறையை கார்ப்பரேட்மயமாக்குவதே இச்சட்டங்களின் இலக்காகும். இவற்றால் விவசாயிகளில் ஆகப்பெரும் பகுதியினருக்கு நன்மை ஏதும் இருக்காது என்பது மட்டுமல்ல; கடும் பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பும் உண்டு என்பதே உண்மை. இவற்றின் பாதிப்பு விவசாயிகள் என்ற வகையிலும், நுகர்வோர் என்ற வகையிலும் ஏற்படும். மின் உற்பத்தி மற்றும் விநியோகம் தொடர்பான சட்ட திருத்தங்களும் விவசாயிகளுக்கு பெரும் ஆபத்தாக அமையும் என்பதையும் விவசாயிகள் நன்கு அறிந்துள்ளனர். இந்த நான்கு சட்டங்களை முழுமையாக ரத்துசெய்ய வேண்டும் என்பது  போராட்டத்தின் மையமான கோரிக்கையாகும். இன்னொரு மிக முக்கியமான கோரிக்கை, வேளாண் விளைபொருட்களின் விலை நிர்ணயம் தொடர்பானதாகும். 2006 ஆம் ஆண்டு நடுவண் அரசிடம் அன்றைய அரசால் அமைக்கப்பட்ட, பேராசிரியர் மா. சா. சாமிநாதன் தலைமையிலான தேசிய விவசாயிகள் ஆணையம் சமர்ப்பித்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட குறைந்த பட்ச ஆதரவு விலைக்கான சூத்திரம் அமலாக்கப்படவேண்டும் என்பதும், இது சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்படவேண்டும் என்பதும் போராடும் விவசாயிகளின் கோரிக்கை ஆகும்.

மிகக்கடினமான சூழலில் சளைக்காமல் நடைபெற்றுவரும் இத்தகைய வீரம் செறிந்த வேளாண் கிளர்ச்சியைப் பற்றிய மார்க்சீய புரிதலை நோக்கி நாம் பயணிக்க வேண்டியுள்ளது. அந்த முயற்சியின் ஒரு துவக்கம் தான் இந்தக்கட்டுரை.

மார்க்சீய பார்வையில் இந்தியாவின் வேளாண் பிரச்சினை

இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் திட்டம் வேளாண் பிரச்சினை பற்றி பின்வருமாறு கூறுகிறது:

 • இந்திய மக்கள் முன் உள்ள பிரதான தேசீய பிரச்சினை வேளாண் பிரச்சினை ஆகும். இப்பிரச்சினையைத் தீர்க்க புரட்சிகர மாற்றம் தேவை. கிராமப்புறங்களில் நிலவும் நிலப்பிரபுத்துவம், வர்த்தக மற்றும் வட்டி சுரண்டல், சாதி மற்றும் பாலின ஒடுக்கு முறை ஆகியவற்றை அழித்தொழித்தலை இலக்காகக் கொண்ட முழுமையான, தீவிரமான வேளாண் சீர்திருத்தம் இப்புரட்சிகர மாற்றத்தின் பகுதியாகும். வேளாண் பிரச்சினையை முற்போக்கான, ஜனநாயக முறையில் தீர்க்காதது மட்டுமல்ல; இப்பிரச்சினையை எதிர்கொள்ளவே இயலவில்லை என்பது இந்தியாவின் முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ ஆட்சியின் கையாலாகாத்தனத்தை பறைசாற்றுகிறது. (பத்தி 3.15)
 • வேளாண் உறவுகளை பொறுத்தவரையில், கிராமப்பகுதிகளில் முதலாளித்துவ உறவுகளின் வளர்ச்சி பிரதான அம்சமாக உள்ளது. இதன் தன்மை கிராமப்புற உழைக்கும் மக்களில் கணிசமான பகுதியினர் கூலி  தொழிலாளிகளாக மாறியுள்ளதும், ஊரக மக்கள் தொகையில் விவசாயத்தொழிலாளர்களின் சதவிகிதம் பெரிதும் அதிகரித்திருப்பதும், சந்தைக்கான உற்பத்தியும்  விவசாயிகள் மத்தியில் ஏற்றத்தாழ்வுகள் வேகமாக உயர்வதும் ஆகும். மேலும் பாரம்பர்யமாக குத்தகை செய்துவரும்  விவசாயிகள் நிலவெளியேற்றம் செய்யப்படுவது;  கிராமப்புற பெரும் செல்வந்தர்கள் – குறிப்பாக நிலப்பிரபுக்கள் – வேளாண் மற்றும் அத்துடன் தொடர்புகொண்ட நடவடிக்கைகளில் அதிக அளவில் மறுமுதலீடு செய்வதன் மூலம் முன்பு இல்லாத அளவிற்கு பெருமளவிலான மூலதன மறு உற்பத்திக்கான அடித்தளம் போடப்படுவது ஆகியவையும் நிகழ்கின்றன.(பத்தி 3.18)

கட்சி திட்டம் இவ்வாறு நிலப்பிரபுத்வத்தையும் நிலக்குவியலையும் தகர்க்க வேண்டியதன் அவசியத்தையும் இதனை பெருமுதலாளிகள் தலைமையிலான முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ இந்திய அரசு செய்திட முற்றிலும் தவறியுள்ளதையும், விடுதலைக்குப்பின் வந்த ஐம்பது ஆண்டுகளில் கிராமப்புறங்களில் முதலாளித்துவ உறவுகள் கணிசமாக வளர்ந்துள்ளதையும் சுட்டிக்காட்டுகிறது.

மேலும், தாராளமய கொள்கைகள் அமலாகி வரும் கடந்த 30 ஆண்டுகளில் வேளாண் உற்பத்திக்கு அரசு முன்பு அளித்துவந்த இடுபொருள் உள்ளிட்ட மானியங்கள், விவசாய உற்பத்திக்கு உதவும் பொதுத்துறை முதலீடுகள், விளைபொருட்களுக்கு கட்டுபடியாகும் விலை, வேளாண் விரிவாக்க அமைப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு மூலம் மகசூல் உயர்வு, நிறுவனக்கடன் வசதி, உறுதியான கொள்முதல் உள்ளிட்ட அனைத்து ஆதரவுகளும் பெரும்பாலும் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளன. நில உச்ச வரம்பு சட்டங்கள் நீர்த்துப்போகும் வண்ணம் திருத்தப்பட்டது மட்டுமின்றி, பல மாநிலங்களில் பன்னாட்டு, இந்நாட்டு பெரும் ஏகபோகங்களின் கைகளில் நிலங்கள் மிகக்குறைந்த தொகைக்கு நீண்டகால பயன்பாட்டுக்கு ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. விதைகள், உரம் மற்றும் பூச்சி கொல்லி மருந்துகள் உள்ளிட்ட இடுபொருட்கள், அனைத்து வேளாண் உபகரணங்கள், வேளாண் தொழில்நுட்பங்கள் என அனைத்து வேளாண்சார் துறைகளிலும் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு ஏகபோக பெரும் கம்பெனிகள் நுழைவதற்கும் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டிக்கொள்ளவும் தாராளமய கொள்கைகள் ஊக்குவிக்கின்றன. 1990களின் இறுதியிலிருந்து உலக வர்த்தக அமைப்பின் விதிகளுக்கு கட்டுப்பட்டு வேளாண் பொருட்களின் மீதான இறக்குமதி அளவு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, அவை வரம்பின்றி இந்தியாவிற்குள் இறக்குமதியாகலாம் என்ற நிலை உருவாகி, விவசாய விளைபொருட்களின் விலைகள் பெரும் வீழ்ச்சியையும், அதிகமான ஏற்ற இறக்கங்களையும் சந்தித்து வருகின்றன. ஆக, ஒருபுறம் இடுபொருட்களின் விலை உயர்வு, மறுபக்கம் விளைபொருட்களின் விலை வீழ்ச்சி, அரசின் ஆதரவு விலகலால் பொது முதலீடுகள் வெட்டப்பட்டு, மகசூல் உயர்வு வேகம் குறைவது, அதிகரித்துவரும் பெரும் வேளாண் வர்த்தக கம்பனிகளின் ஆதிக்கம் ஆகியவை இந்தியாவின் கிராமங்களில் புதிய முரண்களையும் ஏற்படுத்தியுள்ளன.

கொல்கத்தா சிறப்பு மாநாட்டிற்குப் பின்

வேளாண் வர்க்க உறவுகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருவதை 2014இல் கொல்கத்தாவில் நடைபெற்ற கட்சியின் சிறப்பு மாநாடு சுட்டிக்காட்டியது. இதனைத் தொடர்ந்து, கட்சியின் மத்தியக்குழு 2017 ஜனவரியில் கூடி, வேளாண் அரங்கப்பணிகள் குறித்து  நிறைவேற்றிய ஆவணத்தில்  சில முக்கிய கருத்துக்களை முன்வைத்தது:

 • கிராமப்பகுதிகளில்,  நிலப்பிரபுக்கள், பெரும் வேளாண் முதலாளிகள், பெரும் காண்டிராக்டர்கள் மற்றும் பெரும் வணிகர்கள் ஆகிய பிரிவினரை உள்ளடக்கிய   செல்வந்தர்களின் கூட்டணிதான் ஆதிக்க வர்க்கமாக உள்ளது. வேளாண் இயக்கம் மற்றும் கிராமப்புற வர்க்க போராட்டம் ஆகியவற்றின் வளர்ச்சி இந்த நிலப்பிரபுக்கள் – கிராமப்புற செல்வந்தர்கள் கூட்டுக்கு எதிரான போராட்டங்கள் மூலம் தான் நிகழும்.
 • ஏழை மற்றும் நடுத்தர விவசாயிகளில் பலர் வேளாண் மற்றும் இதர துறைகளில் கூலி வேலை செய்கின்றனர். கிராமப்புற உழைப்புப்படையில் கணிசமான பகுதியினர் கரத்தால் உழைப்பவர்கள். கிராமப்புற செல்வந்தர் கூட்டத்தை எதிர்த்துப் போராட விவசாயத் தொழிலாளர்கள், ஏழை விவசாயிகள், நடுத்தர விவசாயிகள், வேளாண் அல்லாத துறைகளில் பாடுபடும் கரத்தால் உழைப்பவர்கள், கைவினைஞர்கள் மற்றும் இதர கிராமப்புற ஏழைகளை உள்ளடக்கிய விரிவான ஒற்றுமையை கட்ட வேண்டும்.
 • அனைத்து விவசாயிகளுக்கும் பொதுவான பிரச்சினைகளான விளைபொருளுக்கு தக்க விலை மற்றும் கொள்முதல், கடன் நிவாரணம் போன்றவை மீதான இயக்கங்கள் நடத்தப்படவேண்டும். மறுபுறம், விவசாயத்தொழிலாளிகள், ஏழை மற்றும் நடுத்தர விவசாயிகள், இதர உழைக்கும் மக்கள் நலன்களை மையப்படுத்தியதாக நமது பணிகளின் தன்மை ஆக்கப்படவேண்டும். நிலப்பிரபுக்கள்மற்றும் பெரிய முதலாளித்துவ விவசாயிகளின் கோரிக்கைகளில் இருந்து நமது கோரிக்கைகள் தெளிவாக வேறுபடுவதோடு, இந்த கிராமப்புற பணக்கார வர்க்கத்திற்கு எதிரான கோரிக்கைகளையும் நாம் முன்வைக்கவேண்டும். சமூக ஒடுக்குமுறைகளை எதிர்த்துப் போராட வேண்டும். இதில் விவசாய சங்கமும் விவசாயத் தொழிலாளர் சங்கமும் முன்னணியில் இருக்க வேண்டும். பெண்விவசாயிகள் மற்றும் பெண் விவசாயத் தொழிலாளர்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளுக்காகவும், பாலின பாகுபாட்டையும் ஆணாதிக்க முறைமையையும் எதிர்த்தும் போராட வேண்டும். அரசின் நல திட்டங்களின் பயன்  உழைப்பாளி மக்களை முழுமையாக சென்றடைவதற்கும் கூட்டுறவு அமைப்புகளை ஜனநாயகப்படுத்தி வலுப்படுத்துவதற்கும் நாம் செயலாற்ற  வேண்டும்.
 • மாநில நிலைமைகளுக்கு ஏற்றவாறு, விவசாயத் தொழிலாளர்கள் அமைப்பு மட்டுமின்றி அனைத்து கிராமப்புற உடல் உழைப்பு தொழிலாளிகளுக்கான அமைப்புகளும் உருவாக்கப்பட வேண்டும். விவசாய தொழிலாளர் சங்கம், ஊரக தொழிலாளர் சங்கம், விவசாய சங்கம் ஆகியவை இணைந்து பொது பிரச்சினைகளின் மீது ஒன்றுபட்ட போராட்டங்களை நடத்த வேண்டும். இது கிராமப்புற செல்வந்தர் வர்க்கத்தை எதிர்கொள்ள மிகவும் அவசியம்.
 • தாராளமய கொள்கைகளையும் ஆளும் வர்க்கங்களையும் எதிர்த்த வர்க்கப் போராட்டங்களை வலுப்படுத்துவதுடன், வகுப்புவாத அபாயத்தை எதிர்ப்பதும் விவசாயிகள் மற்றும் இதர அனைத்து கிராமப்புற உழைக்கும் மக்களின் ஒற்றுமையைக் கட்ட அவசியம் ஆகும் .

மார்க்சீயப் பார்வையில் வேளாண் கிளர்ச்சி

புதுதில்லியின் எல்லைப்பகுதியில் தற்போது நடந்துகொண்டிருக்கும் வேளாண் கிளர்ச்சி இந்திய விவசாய இயக்கத்தின் வரலாற்றில் என்றென்றும்  நீங்காப்புகழ் பெற்றதாகத் திகழும். அமைதியான இக்கிளர்ச்சி சாதனைகள் பலவற்றை செய்துள்ளது. சாதி, மதம், மொழி, இனம் தாண்டிய விரிவான ஒற்றுமையை கோடிக்கணக்கான விவசாயிகள் மத்தியில் இக்கிளர்ச்சி சாதித்துள்ளது. வடமாநிலங்களில் மதவெறி அரசியலை தற்காலிகமாகவாவது பின்னுக்குத் தள்ளியுள்ளது. பெருமளவில் பெண்விவசாயிகளின் பங்கேற்பை பெற்றுள்ளது. கிளர்ச்சியை வழிநடத்தும் கூட்டுத் தலைமை தொழிலாளர் அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து கூட்டு இயக்கங்களை திட்டமிட்டு நடத்தியுள்ளது. எல்லையற்ற பணபலம் கொண்ட ஆர்எஸ்எஸ் – பாஜக அமைப்புகளும், அவற்றின் தலைமையில் இயங்கும் மத்திய அரசும் அதன் அடிமையாக செயல்படும் ஊடகங்களும் கிளர்ச்சிக்கும் அதன் தலைமைக்கும் எதிராக நடத்திய அவதூறு பிரச்சாரங்களையும் அடக்குமுறைகளையும் பிரித்தாளும் சூழ்ச்சிகளையும் இன்றுவரை வெற்றிகரமாக முறியடித்துள்ளது. ஆளும் வர்க்கங்களுக்கும் அவர்களது அரசுக்கும் பெரும் சவாலாக இக்கிளர்ச்சி அமைந்துள்ளது. தற்பொழுது உள்ள அரசுக்கு மிக  நெருக்கமாக உள்ள அம்பானி மற்றும் அதானி ஆகிய  இரு பெரும் ஏகபோக முதலாளிகளை பெயர் சொல்லி இவர்கள் நலனுக்காக மக்கள் விரோத வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று பகிரங்கமாகவே  கிளர்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இவ்விரு பெருமுதலாளிகள் தங்களுக்கும் இச்சட்டங்களுக்கும் தொடர்பில்லை என்று சொன்னாலும், இச்சட்டங்களால் பெரும் பயன் அடையக்கூடிய இடத்தில் இம்முதலாளிகள் உள்ளனர் என்பதை ஊடகங்களில் வெளியாகியுள்ள ஆய்வு கட்டுரைகள் மற்றும் இதர தரவுகள் மூலமாக அறிய முடிகிறது. கிளர்ச்சியின் ஆகப்பெரிய சாதனை கொரோனா பெரும் தொற்று உருவாக்கியுள்ள மிகக்கடினமான சூழலிலும், மிகப்பெரிய அளவிற்கு விவசாயிகளைப் பங்கெடுக்க வைத்ததும் நாட்டு மக்களில் பாதிப்பேருக்கு இன்றளவும் வாழ்வாதாரமாக உள்ள வேளாண் துறை மீதும், அத்துறையில் பெரும் சேதம் விளைவித்து வரும் அரசின் தவறான தாராளமய கொள்கைகள் மீதும், நாட்டு மக்களின் கவனத்தைத் திருப்பி அதனை அன்றாடப் பேசுபொருளாக ஆக்கியதும் ஆகும்.

எனினும், மார்க்சீயப் பார்வையில் இப்பிரச்சினைகளை பரிசீலித்தால், நடப்பு நிகழ்வுகள் ஒட்டுமொத்த இந்திய அரசியல் பொருளாதாரத்தில் ஏற்பட்டுவரும் முதலாளித்துவ வளர்ச்சியின் முரண்களுடன் நெருக்கமான தொடர்புடையவை என்பது தெளிவாகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் பொருளாதாரம் எதிர்கொண்டுவரும் நெருக்கடி மேலும் மேலும் ஆழமடைந்துவருகிறது. முப்பது ஆண்டுகளாக அமலாக்கப்பட்டுவரும் தாராளமய கொள்கைகள் இந்தியாவின் வேளாண் நெருக்கடிக்கு மிக முக்கிய காரணம் என்பது உண்மை. வேளாண் நெருக்கடி பெரும் பகுதி விவசாய குடும்பங்களையும் கிராமப்புற உழைக்கும் மக்களையும் கடுமையாக பாதித்துள்ளது என்பதும் உண்மை. இவற்றின் மிகத்துயரமான வடிவம்தான் லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்பட்டிருப்பது. அதேசமயம் இக்காலத்தில் முதலாளித்துவ உறவுகள் வேளாண் மற்றும் கிராமப்புற பொருளாதாரத்தில் பெருமளவு வளர்ந்துள்ளன என்பதும் உண்மை. இதனால் நிலபலமும், பணபலமும், சமூக ஆதிக்க வலுவும் கொண்ட ஒரு சிறுபகுதியினர் – பெரும் செல்வந்தர்கள் – முதலாளித்துவ நிலப்பிரபுக்களாகவும் நவீன முதலாளித்துவ விவசாயிகளாகவும் வளர்ந்துள்ளனர். கிராமத்தின் பொருளாதாரம், சமூகம், அரசியல்,கல்வி, ஆரோக்கியம் என அனைத்துத் தளங்களிலும் இவர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இவர்கள் தங்கள் உபரிகளை விவசாயத்தை நவீனப்படுத்தவும், இயந்திரமயமாக்கவும், மகசூலை உயர்த்திக்கொள்ளவும், விவசாயம் சார்ந்த, சாராத லாபம் தரும் பல நடவடிக்கைகளை (பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவ மனைகள், ரியல் எஸ்டேட் தொழில், அரவை ஆலைகள், பால் பண்ணைகள், வேளாண் விளைபொருட்களுக்கு மதிப்புக்கூட்டி விற்பது போன்ற) துவக்கி நடத்தவும், கடந்த இருபதுக்கும் மேலான ஆண்டுகளில் களமிறங்கியுள்ளனர். கணிசமான பகுதி விவசாயிகளுக்கு பெரும் நட்டம் ஏற்பட்டாலும், இந்த செல்வந்தர் கூட்டத்திடம் செல்வங்கள் குவிகின்றன. நவீன வேளாண்மை நிகழ்கிறது.

 பாஜக ஆட்சியில் வேளாண் துறைக்கு அளிக்கப்பட்டுவந்த சலுகைகள் முந்தைய ஆட்சிகளை விட அசுர வேகத்தில் பறிக்கப்பட்டுள்ளன. பெட்ரோலிய கச்சா எண்ணையில் இருந்து உருவாகும் அனைத்து இடுபொருட்களின் விலைகள் பாய்ச்சல் வேகத்தில் அதிகரித்துள்ளன. மோடி அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையும், குளறுபடியானதும் விலை உயர்வை தீவிரப்படுத்தியதுமான ஜி எஸ் டி அமலாக்கமும், முறைசாராத்துறைகளை பெரிதும் பலவீனப்படுத்தி, மக்களின் வாங்கும் சக்தியை சுருக்கி, கிராக்கியை  சரிய வைத்துள்ளன; வேலையின்மையை பெரிதும் அதிகரித்துள்ளன. இத்தகைய நெருக்கடியான சூழலில் விளைபொருட்களுக்கு தக்க விலை மற்றும் முழுமையான கொள்முதல் என்ற கோரிக்கைக்கும் கடன் ரத்து என்ற கோரிக்கைக்கும் விவசாயிகள் மத்தியில் வலுவான ஆதரவு உருவாகியுள்ளது. பொருளாதார மந்தம் தீவிரமாகியுள்ள நிலையில் விவசாயத்திற்கு வெளியே வாழ்வாதாரம் காண்பதும் கடினமாகியுள்ள சூழலில், வேளாண்குடியினருக்கு விரோதமான சட்டங்களை மிகுந்த அவசரத்துடன், ஜனநாயக விரோதமான முறையில் மத்திய அரசு இந்தக் கொடிய கொரோனா காலத்தில் நிறைவேற்றியது விவசாயிகள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியதில் வியப்பில்லை. விவசாயத்தை முழுமையாக முதலாளித்துவ சந்தையின் திருவிளையாடல்களுக்கு விட்டுவிடுவோம்;பெருமுதலாளிகளின் ஆடுகளமாக ஆக்கிடுவோம் என்பதே இச்சட்டங்களின் உள்ளடக்கம் என்பதை பணக்கார விவசாயிகள் உட்பட அனைத்து விவசாயிகளும் புரிந்துகொண்டனர். நிறைவேற்றப்பட்டுள்ள சட்டங்கள் விவசாயத்தையும் விவசாயிகளையும் பன்னாட்டு இந்நாட்டு பெரும் கம்பெனிகளின் ஆதிக்கத்திற்கு படிப்படியாக ஆட்படுத்தும் என்ற உணர்வு போராடும் விவசாயிகள் மத்தியில் வலுவாக உள்ளது. இக்காரணங்களால் பணக்கார விவசாயிகளும், ஒருபகுதி பெரிய முதலாளித்துவ விவசாயிகளும் கூட இப்போராட்டத்தில் பங்கெடுக்கின்றனர். இக்கிளர்ச்சி பெரும்பகுதி விவசாயிகளின் நலனைக் காக்கும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளதால் இடதுசாரி விவசாய அமைப்புகள் இக்கிளர்ச்சியில் முக்கிய பங்கு ஆற்றி வருகின்றனர். விவசாயிகளின் ஒற்றுமையைக் கட்டவும், விவசாயத் தொழிலாளர்கள் கோரிக்கைகளைக் கொண்டு செல்லவும், தொழிலாளர் அமைப்புகளுடன் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவும், இக்கிளர்ச்சியில் இடதுசாரி சக்திகள் ஆக்கபூர்வமான பங்காற்றி வருகின்றனர். விவசாயிகள் மீதும் தொழிலாளிகள் மீதும் பொதுத்துறை மீதும் ஒரே நேரத்தில் ஆட்சியாளர்கள் கடும் தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டுள்ள இன்றைய அரசியல் சூழலில் விவசாயிகளின் கிளர்ச்சியும் அதனை விவசாயி-தொழிலாளி கூட்டணி என்ற திசைவழியில் கொண்டு செல்ல இடதுசாரி சக்திகள் முனைவதும் வரவேற்க வேண்டிய, முற்போக்கான அம்சங்கள்.

மார்க்சீய நிலைபாட்டில் இருந்து பரிசீலிக்கும் பொழுது, இக்கிளர்ச்சி முற்போக்குத்தன்மை கொண்டது; நமது புரட்சிப்பயணத்திற்கு சாதகமானது என்பதை அங்கீகரிக்கலாம். . விவசாயிகளின் பரந்துபட்ட ஒற்றுமை ஒரு சில பிரச்சினைகள் மீது இக்கிளர்ச்சியில் கட்டப்பட்டுள்ளது. விவசாயி-தொழிலாளி கூட்டணியை நோக்கி பயணிக்க இக்கிளர்ச்சி உதவும். அதேநேரத்தில் கிராமப்புற செல்வந்தர்களுக்கெதிரான வர்க்கப் போராட்டத்திற்கு இக்கிளர்ச்சி மாற்று அல்ல என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். நிலச்சீர்திருத்தம், விவசாயத் தொழிலாளர்களின், கிராமப்புற உடல் உழைப்பு தொழிலாளிகளின் பிரச்சினைகள், சமூக ஒடுக்குமுறை ஒழிப்பு, பாலின சமத்துவம், பொருளாதாரச் சுரண்டல் ஒழிப்பு, பழங்குடி மக்களின் உரிமைகள், ஏழை-நடுத்தர விவசாயிகளின் நலன் உள்ளிட்ட பல பிரச்சினைகளில் களப்போராட்டங்கள் நடத்தி தொழிலாளி-விவசாயி கூட்டணியை உருவாக்கி வலுப்படுத்தி பயணிப்பது வேளாண் பிரச்சினைக்கு கட்சி திட்டம் முன்வைக்கும் தீர்வு ஆகும். இது ஒரு நெடிய பயணமும் ஆகும்.

நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளாண் கிளர்ச்சி நமது நெடிய பயணத்தில் முக்கியமான, சாதகமான திருப்பம். அரசின் அடக்குமுறைகளை முறியடித்து இக்கிளர்ச்சியை வெற்றி பெறச் செய்வது நம்முன் உள்ள முக்கிய அரசியல் கடமைகளில் ஒன்றாகும். இக்கிளர்ச்சியில் கட்டப்பட்டுள்ள மக்கள் ஒற்றுமை மிகவும் முக்கியமானது. ஆர் எஸ் எஸ் – பா ஜ க தலைமையிலான மத அரசியல் நடத்தி மக்களை பிளவுபடுத்திவரும் சக்திகளுக்கு எதிராகவும் உழைக்கும் மக்கள் ஒற்றுமையைக் கட்டவும் இக்கிளர்ச்சி மகத்தான பங்கு ஆற்றியுள்ளது. இக்கிளர்ச்சியில் இடதுசாரிகள் முக்கிய பாத்திரம் வகித்து ஒற்றுமையைக் கட்டிக் காப்பதுடன், தாராளமய கொள்கைகள் பற்றிய மாயைகளை கிழித்தெறியவும், வகுப்புவாதத்தை முறியடிக்கவும், சுருங்கச் சொன்னால் கார்ப்பரேட் ஹிந்துத்வாவை அம்பலப்படுத்தவும் திறமையாக செயல்பட வேண்டும்.

சோஷலிச கியூபாவும் கொரோனா பெருந்தொற்றும்

பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா

உலகம் முழுவதும் இன்று பெரும்பாலான நாடுகள் கொரோனா பெரும் தொற்று, அதனை எதிர்கொள்வதற்கான யுக்திகளில் ஒன்றாக ஊரடங்கு, அதனால் ஏற்படும் பொருளாதார பாதிப்புகள், கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்களும் வருமானமும் சிதைந்துள்ள அவலநிலை, மக்கள் மத்தியில் பரவிவரும் அச்சம் என்று தத்தளித்துக் கொண்டிருக்கின்றன. இத்தகைய அவநம்பிக்கை நிறைந்த சூழலில் சோசலிஸ சக்திகள் மட்டுமே மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றன. 

குறிப்பாக, பெரும்தொற்றை எதிர்கொண்டு மக்களை பாதுகாப்பதில் சிறப்புற செயல்படும் அரசுகளாக சோசலிச அமைப்பை கொண்டுள்ள மக்கள் சீனம், வியத்நாம், கியூபா, இவை தவிர இந்திய முதலாளித்துவ அமைப்புக்குள் இருந்துகொண்டே, மார்க்சிஸ்டுகள் தலைமையில் இயங்கிவரும் இடது ஜனநாயக மாநில அரசை கொண்டுள்ள இந்திய மாநிலமான கேரளம் ஆகியவை உலகம் முழுவதும் பாராட்டப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் பெரும்தொற்றை எதிர்கொள்வதிலும் மக்களை பாதுகாப்பதிலும் கியூபாவின் வெற்றிகரமான அனுபவத்தை சுருக்கமாக பதிவிடுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

கியூபா என்ற சிவப்பு நட்சத்திரம்

கியூபா நாடு அமெரிக்க ஐக்கிய நாட்டின் தெற்கு மாநிலமான ஃப்ளோரிடாவில் இருந்து சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 1492 இல் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த கொலம்பஸ் என்ற மாலுமியால் முதலில் ஐரோப்பியர்களுக்கு கியூபா அறிமுகமானது. 1711 இல் ஸ்பெயின் அரசின் படைகள் கியூபாவை தமது காலனி நாடாக ஆக்கிக் கொண்டன. கியூபாவின் மக்கள் கடும் சுரண்டலுக்கு உள்ளாக்கப் பட்டனர். 

அடுத்து வந்த பல பத்தாண்டுகளில் ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து  லட்சக்கணக்கான கருப்பின மக்கள் அடிமைகளாக கைப்பற்றப்பட்டு, இந்த நாட்டிற்கு அழைத்து வரப்பட்டு அவர்களது உழைப்பும் மிகக் கடுமையாக சுரண்டப்பட்டது. கியூபா மக்கள் ஸ்பெயின் அரசின் காலனி ஆதிக்கத்திற்கு எதிராகவும் கொடிய காலனீய முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிராகவும் மீண்டும் மீண்டும் கிளர்ந்து எழுந்தனர்.

1898 இல் அமெரிக்க வல்லரசு கியூபாவை கைப்பற்றியது. 1902 இல் கியூபாவிற்கு சுதந்திரம் அளிப்பதாக அமெரிக்க வல்லரசு அறிவித்த போதிலும் அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவின் காலனி போல் தான் கியூபா இருந்தது. 1959 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கியூபாவில் இருந்த அமெரிக்க ஆதரவு சர்வாதிகாரி பாதிஸ்தா தலைமையிலான அரசு ஃபிடெல் காஸ்ட்ரோ தலைமையிலான கியூப விடுதலைப் படையால் விரட்டி அடிக்கப்பட்ட பின்புதான் கியூபா உண்மையில் சுதந்திரம் பெற்றது. 

பல ஆண்டுகளாக அன்றைய கியூபாவின் சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து, ஜனநாயக ஆட்சியை அமைக்க ஃபிடெல் தலைமையில் நடந்து வந்த ஆயுதம் தாங்கிய போராட்டம் 1959 இல் வெற்றி பெற்றது. மிக விரைவில் கியூபாவின் ஜனநாயக புரட்சி சோசலிச தன்மை கொண்டது என்பது தெளிவானது. கியூப கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் ஃபிடெல் அவர்களை தலைவராக கொண்ட ஆட்சி அமைக்கப்பட்டது.

அமெரிக்க அரசு கியூபாவின் புதிய, சுயேச்சையான ஆட்சியை கவிழ்க்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது. அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக கியூபாவின் சோசலிச ஆட்சியை அழிப்பதற்கு அமெரிக்க ஏகாதிபத்தியம் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. கியூபாவிற்கு எதிராக உணவு மற்றும் மருந்து விற்பனையைக் கூட தடுக்கும் கொடிய, முழுமையான வர்த்தக, தொழில்நுட்ப, பொருளாதார தடையை அறுபது ஆண்டுகளாக அமெரிக்க வல்லரசு அமலாக்கி வருகிறது. தனது நட்பு நாடுகளையும் இதனை கடைப்பிடிக்குமாறு நிர்ப்பந்திக்கிறது. 

கியூபாவை அழிக்க மட்டுமின்றி, கியூபாவின் சோசலிச புரட்சியின் மகத்தான தலைவர் ஃபிடெல் காஸ்ட்ரோவை கொலை செய்யவும் பலமுறை அமெரிக்க அரசு முயன்றது. ஆனால் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சதிகள் அனைத்தையும் முறியடித்து, இன்று உலக நாடுகளில் பெரும்பான்மை நாடுகளின் ஆதரவை பெற்று, மக்கள் நலன் பேணுகின்ற அரசு என்ற பெருமையையும் கியூபா பெற்றுள்ளது. குறிப்பாக, மத்திய, தென்அமெரிக்க நாடுகளில் உள்ள அனைத்து முற்போக்கு சக்திகளுக்கும் எழுச்சிதரும் எடுத்துக்காட்டாக கியூபா திகழ்கிறது.

1959 இல் கியூபா மிகவும் பின்தங்கிய, கொடிய சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், பரவலான வறுமை ஆகியவற்றை இலக்கணமாக கொண்ட ஒரு சமூகமாக இருந்தது. இன்று சோசலிச கியூபா அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் மக்கள் நல்வாழ்வு, அனவைருக்கும் வேலை, நிறவெறி ஒழிப்பு, சமூக பொருளாதார சமத்துவம் ஆகிய இலக்கணங்களைக் கொண்ட நாடாக உலக அரங்கில் மிளிர்கிறது. 

கியூபாவின் மனிதவள குறியீடுகள் முன்னணி முதலாளித்துவ நாடுகளுக்கு சமமாகவும் சில அம்சங்களில் அவற்றை விட சிறப்பாகவும் உள்ளன. எடுத்துக்காட்டாக, ஆரோக்கியக் குறியீடுகளில் முக்கியமான ஒன்று சேய் இறப்பு விகிதம் என்பதாகும். உயிருடன் பிறக்கும் ஆயிரம் சேய்களில் ஒரு வயது நிறைவு அடையும் முன் இறந்துவிடும் சேய்களின் எண்ணிக்கைதான் சேய் இறப்பு விகிதம் என்று அழைக்கப் படுகிறது. இது கியூபாவில் வெறும் 4 என ஆகியுள்ளது. இந்த விகிதம் 1959 இல் கிட்டத்தட்ட 50 என்றிருந்தது. அமெரிக்காவில் இந்த விகிதம் இன்றும் கியூபாவை விட அதிகமாக உள்ளது. வேறு பல பணக்கார நாடுகளுக்கும் இது பொருந்தும். 

இந்தியாவில் சேய் இறப்பு விகிதத்தின் சராசரி 2018 இல் 32 ஆக இருந்தது. சில மாநிலங்களில் இன்னும் அதிகம். எடுத்துக்காட்டாக, மத்திய பிரதேசத்தில் கிராமப் புறங்களில் இது 52 ஆக இருந்தது. ஒரு பானை சோற்றுக்கு ஒருசோறு பதம் என்று இதனை எடுத்துக் கொள்ளலாம். சராசரி ஆயுட்காலம், சராசரி கல்வி பயிலும் ஆண்டுகள், எழுத்தறிவு விகிதம், இந்த குறியீடுகளில் பாலின வேறுபாடு மிக்குறைவாக இருத்தல், நகர  கிராம இடைவெளி மிககுறைவாக இருத்தல் – இவை அனைத்திலும் கியூபாவின் சாதனைகளை காணலாம். (இந்தியாவில் இத்தகைய சாதனைகளை கேரள மாநிலத்தில் மட்டுமே பார்க்க முடியும்.) 

பொதுசுகாதாரத்தை பேணிக்காப்பதிலும் அனைத்து மக்களுக்கும் கல்வியையும் மக்கள் நல்வாழ்வையும் உறுதி செய்வதிலும் கியூபா உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு வழிகாட்டியாக உள்ளது. இப் பின்புலத்தில் கியூபா கொரோனா தொற்றை எதிர்கொண்ட விதத்தை பார்க்கலாம்.

கியூபாவும் கொரோனா பெரும் தொற்றும்

உலக சுகாதார அமைப்பு கொரோனா பெரும் தொற்றின் புதிய குவி மையம் மத்திய, தென் அமெரிக்கா  என்று அறிவித்துள்ளது. ஆனால் 2020 ஏப்ரல், மே  ஆகிய இரு மாதங்களில் கியூபாவில் புதிதாக தொற்று உள்ளவர் என அறியப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக பிரிட்டிஷ் பத்திரிக்கையான கார்டியன் ஜூன் 7 தேதியிட்ட ஒரு கட்டுரையில் கூறுகிறது. அதன்பின் நிலமை தொடர்ந்து சீரடைந்து வருகிறது.

தொற்றை எதிர்கொள்ள கியூபா அரசும் மக்களும் தயார் நிலையில் இருந்தனர். மார்ச் 24 கியூபாவில் 48 நபர்கள் தொற்று கொண்டிருந்தனர். இந்த எண்னிக்கை வேகமாக அதிகரித்தது. மார்ச் 29 இல் 119 ஆகியது, ஏப்ரல் 14 இல் ஏழு மடங்காக, 814 ஆக உயர்ந்தது. அச்சமயம் 24 பேர் இறந்திருந்தனர். அடுத்த இரு மாதங்களில் அரசும் மக்களும் இணைந்து மேற்கொண்ட, திட்டமிட்ட, கட்டுப்பாட்டுடன் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. ஜூன் 7 கணக்குப்படி அன்றுவரை மொத்தம் 2,173 நபர்களுக்கு தொற்று ­உறுதி செய்யப்பட்டிருந்தது. 83 நபர்கள் இறந்திருந்தனர். 19 நாட்கள் கழித்து, ஜூன் 26 கணக்குப்படி கியூபாவில் அன்றுவரை மொத்தம் 2,325 நபர்களுக்கு தொற்று உறுதியாகியிருந்தது. மொத்த இறந்தவர் எண்ணிக்கை இரண்டு கூடி 85 ஆகியிருந்தது. கடைசியாக ஜூலை 3 தகவல்படி அன்றுவரை மொத்தம் தொற்று உறுதியானவர் 2,353, இறந்தவர் 86. தொற்றின் பரவல் வேகமும் இறப்பு விகிதமும் வேகமாக குறைந்துள்ளன. கியூபாவின் மக்கள் தொகை 2018 இல் 1.13 கோடியாக இருந்தது. இந்த விவரங்கள் அடிப்படையில் கொரோனா பெரும் தொற்றை கியூபா திறமையாகவும், இயன்ற அளவிற்கு குறைந்த உயிர் இழப்புடனும் எதிர்கொண்டுவருகிறது என்று கூறலாம். இதற்கு பின்புலமாக உள்ளது சோசலிச கியூபாவின் மக்கள் நல்வாழ்வு கட்டமைப்பும் அரசின் கொள்கை சார்ந்த அணுகுமுறையும் ஆகும்.

கியூப புரட்சி 1959இல் வெற்றி பெற்ற நாளில் இருந்தே மக்களின் நலன் சார்ந்து செயல்படுவதை அடிப்படை கொள்கையாக அங்குள்ள சோசலிச அரசு கடைப்பிடித்துவருகிறது. கல்வி, ஆரோக்கியம் ஆகிய இரண்டு அம்சங்களுக்கும் அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்துள்ளது. 1978ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அன்றைய கஸக்ஸ்தான் குடியரசின் ஆல்மா ஆடா என்ற நகரில் நடைபெற்ற சர்வதேச மாநாடு ‘அனைவருக்கும் ஆரோக்கியம்’ என்ற முழக்கத்தை, இலக்கை முன்வைத்தது. 

சோசலிச கியூபா அப்பொழுதே அந்த இலக்கை நோக்கி கணிசமாக முன்னேறியிருந்தது. அதற்குப் பின் கியூபா அந்த மாநாட்டில் வலியுறுத்தப்பட்ட முதல்நிலை ஆரோக்கிய வசதி (primary health care)  என்பதையும் நோய் தடுப்பு ஆரோக்கிய அணுகுமுறை (preventive health care) என்பதையும் தாரக மந்திரங்களாக எடுத்துக்கொண்டு மக்கள் வாழும் ஒவ்வொரு பகுதியிலும் போதுமான மருத்துவர், செவிலியர், மருத்துவ கட்டமைப்பு இருத்தல், குடும்ப மருத்துவர் , குடும்ப செவிலியர் என்ற அணுகுமுறை, ஒவ்வொரு குடும்பத்தையும் சந்தித்து அவர்களது ஆரோக்கியத் தேவைகளை கண்டறிந்து நோய் தடுப்பு மற்றும் மக்கள் நல்வாழ்வு சேவைகளை அமைத்துக்கொள்ளுதல் என்று மக்களின் ஆரோக்கியம் தொடர்பான பல அம்சங்களையும் முழுமுனைப்புடன் முன்னெடுத்துச்சென்றது.  

இந்த வரலாற்றுப் பின்னணியில் இன்று கியூபாவில் வலுவான ஆரோக்கிய கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. 2019 கணக்குப்படி கியூபாவில் 1000 மக்களுக்கு 9 மருத்துவர்கள் உள்ளனர். (இந்தியா: 1.34). 2014 ஆம் ஆண்டு விவரப்படி, கியூபாவில் 1000 மக்களுக்கு 5.2 மருத்துவமனை படுக்கைகள் உள்ளன. (இந்தியா, 2019 : 0.55) இந்த நிலை பணக்கார நாடுகளில் கூட இல்லை.  குறிப்பாக, கியூபாவில் ஆரோக்கிய அமைப்பு மக்களுடன் மிக நெருக்கமாக உள்ளது. குடியிருப்புப் பகுதிகள் அனைத்திலும் செயல்படும் “புரட்சி பாதுகாப்பு அருகமை அமைப்புகள்” இத்தகைய ஒருங்கிணைப்புக்கு உதவுகின்றன. 

இதனால் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினைகள் மக்கள் வாழும் பகுதிகளில் எழும் பொழுதே கண்டறிந்து எதிர்கொள்ள முடிகிறது. கொரோனா பெரும் தொற்றை எதிர்கொள்வதில் முக்கியம் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தும் அனைத்து அம்சங்களையும் கியூபாவால் திட்டமிட்ட முறையில் அமலாக்க முடிந்திருக்கிறது. 

தொற்று உள்ளதா என்று விரிவான பரிசோதனைகள் மூலம் விரைவில் அறிதல், தொற்று உள்ளவர் என்று அறியப்படுபவர் யாருடன் எல்லாம் தொடர்பு கொண்டிருந்தார் என்பதையும் விரைவில் கண்டறிந்து அவர்களையும் பரிசோதித்து, தனிமை படுத்துதல், தக்க சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட உரிய நடவடிக்கைகளை தாமதமின்றி மேற்கொண்டு தொற்றின் பரவலை கட்டுப்படுத்துவதில் கியூபா சிறப்புற செயல்பட்டுள்ளது.

இதற்கு ஒரு முக்கிய காரணம் ஆரோக்கியம் தொடர்பான மனிதவளம் திட்டமிட்ட அடிப்படையில் தொலைநோக்குடன் போதுமான அளவிற்கு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் கியூபா நாட்டில் மேலோங்கியுள்ள சமூக விழுமியங்கள் ஆரோக்கியத்தை மனித உரிமை எனக் கருதுகின்றன. (கியூபாவின் சோசலிச அரசியல் சாசனம் இதை உறுதிபடக் கூறுகிறது.)­ கியூபாவின் மருத்துவர்களும் செவிலியர்களும் லாப நோக்கத்தால் உந்தப்பட்டு செயல்படுவதில்லை. மாறாக, மக்கள் நலம் பேண அவர்கள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர். 

இன்று உலகின் பல நாடுகளிலும் அவர்கள் சேவையை அரசுகள் நாடுகின்றன. மிகுந்த சோசலிச சர்வதேச உணர்வுடன் கியூபா பல ஆப்பிரிக்க, மத்திய மற்றும் தென் அமெரிக்க நாடுகளுக்கு இந்த வகையில் உதவுகிறது. கொரோனா தொற்று காலத்திலும் கியூபாவின் உதவி பல நாடுகளுக்கு – மக்கள் நலன் கருதி, கியூபாவிற்கு எதிராக செயல்படும் பிரேசில் நாட்டுக்குக் கூட – தரப்படுகிறது. இக்காலத்தில்  உலகின் மிகவும் பணக்கார ஏழு நாடுகளில் ஒன்றான இத்தாலி நாடு கூட கியூபாவின் உதவியை பெற்றுள்ளது.

கியூபாவில் கொரோனா பெரும் தொற்றை எதிர்கொள்வதில் பல பத்தாயிரம் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவம் படிக்கும் மாணவர்கள் களம் இறக்கப்பட்டு, வீடு வீடாக சென்று பணிபுரிகின்றனர். நமது நாட்டிலும் மனித நேயம் மிக்க மருத்துவர்களும் செவிலியர்களும் உள்ளனர். ஆனால் ஆரோக்கியம் என்பது தனியார்மயம், வணிகமயம் என்ற பாதையில் பயணித்துள்ளதால், மக்களை பாதுகாப்பது பெரும் சவாலாகியுள்ளது.­ 

மிக முக்கியம் என்று உலகம் முழுவதும் உள்ள மருத்துவர்கள் வலியுறுத்தும் பொதுசுகாதார நடவடிக்கைகளை கியூபா திட்டமிட்டு அமலாக்குகிறது. அதற்கான கட்டமைப்பை கியூபா தொடர்ந்து உருவாக்கியுள்ளது மட்டுமின்றி, சோசலிச அரசியல் தின்ணமும் கியூபா கொரோனா பெரும் தொற்றை எதிர்கொள்வதில் முக்கிய பங்கு ஆற்றியுள்ளது. நாடு முழுவதும் உயிர்ப்புடன் செயல்படும் மக்களின் ஜனநாயக அமைப்புகள் இப்பணியில் முக்கிய பங்கு ஆற்றியுள்ளன. இறுதியாக, கியூபா உறுதியான அறிவியல் அடிப்படையில் இப்பிரச்சினையை  எதிர்கொண்டுவருவது அதற்கு மேலும் வலு சேர்க்கிறது.