வெல்வதற்கோர் பொன்னுலகம்!

சமுதாய வாழ்க்கையெனும் அரங்கினையும் தன்னுள் கொண்டு முரணற்றதாய் அமைந்த பொருள்முதல்வாதம்; வளர்ச்சி பற்றிய மிக விரிவான, மிக ஆழமான போதனையாகிய இயக்கவியல்; வர்க்கப் போராட்டத்தையும், ஒரு புதிய, கம்யூனிச சமுதாயத்தின் படைப்பாளனாகிய பாட்டாளி வர்க்கத்திற்குள்ள உலக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புரட்சிகர பாத்திரத்தையும் பற்றிய தத்துவம் – இவையாவும் அடங்கிய ஒரு புதிய உலகக் கண்ணோட்டத்தை இந்த நூல் மாமேதைக்குரிய தெளிவோடும், ஒளிச்சுடரோடும் எடுத்துரைக்கிறது. மாமேதை லெனின் அவர்கள் மார்க்சும், ஏங்கல்சும் எழுதிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை பற்றி தெரிவித்துள்ள கருத்தாகும்.

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியாகி ஒன்றரை நூற்றாண்டு கடந்துவிட்ட போதிலும், இன்றைய சூழலுடன் பொருத்திப் பார்த்து, படித்து பயன்பெற வேண்டிய நூல் என்றால் மிகையாகாது. ஆங்கிலத்தில் A World to Win என்று லெப்ட் வேர்டு பதிப்பகம் வெளியிட்ட நூலை பாரதி புத்தகாலயம் தமிழில் வெளியிட்டுள்ளது. கடினமான அரசியல், பொருளாதார கருத்துக்களை, எளிமையான, அழகான நடையில் மொழி பெயர்த்துள்ள கி.இலக்குவன் அவர்கள் பாராட்டுக்குரியவர். தமிழில் இதை வெளியிட்ட பாரதி புத்தகாலயத்திற்கு பாராட்டுக்கள். இதில் மூன்று முக்கிய கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. மார்க்சீய அறிஞர்களான பிரபாத் பட்நாயக், இர்பான் ஹபீப் மற்றும் அய்ஜாஸ் அகமது ஆகியோரின் கட்டுரைகளுக்கு தோழர் பிரகாஷ் காரத் அறிமுக உரை எழுதியுள்ளார்.

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை மீண்டும் படிக்கத் தூண்டும் வகையில் அறிமுக உரை அமைந்துள்ளது. இந்நூலை படித்து விட்டு, கம்யூனிஸ்ட்டு கட்சி அறிக்கையை, அதன் பல பதிப்புகள், அவற்றிற்கு மார்க்ஸ், ஏங்கெல்ஸ் எழுதியுள்ள முகவுரையை படிப்பது சிறந்த அனுபவமாக அமையும். (இந்த கட்டுரையாளர் அப்படி வாசித்தது பயனுள்ளது என குறிப்பிட விரும்புகிறார்.) பத்தொன்பதாம் நூற்றாண்டு ஐரோப்பாவில் நிலவியசூ ழல், பாரீஸ் கம்யூன் புரட்சி, பிரஞ்சு புரட்சி பற்றி தோழர். பிரகாஷ் காரத் குறிப்பிடுகிறார். 1864 ல் உழைக்கும் மக்கள் சங்கம், மார்க்சீய சிந்தனைகள் வளர்ச்சி பற்றி குறிப்பிடும் அவர், 1948 ல் கம்யூனிஸ்ட் பிரகடனத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவின் போது, உலகம் எந்த அளவு மாறியுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டுகிறார். சோவியத் யூனியன், மக்கள் சீனம், வியட்நாம், கொரியா, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் என மக்கள் ஜனநாயக அரசுகள் ஏற்பட்ட காலம் அது. ஆனால், சோவியத் யூனியன் உடைந்த பின் சோசலிசம் செத்துப் போய் விட்டது என்ற புலம்பலும், முதலாளித்துவத்திற்கு மாற்று இல்லை என்ற ஏகாதிபத்திய நாடுகளின் கொக்கரிப்பும், சோசலிசத் தின் சாத்தியப்பாடு பற்றி சிந்தனையாளர்களின் கவனத்தை திருப்பியது.

சோவியத் யூனியன் வீழ்ந்த பின், உலக நாடுகளுக்கு தலைவனாக, தட்டிக் கேட்க ஆளில்லாதது போன்று ஏகாதிபத்திய அமெரிக்கா செயல்படத் துவங்கிய உடனேயே தொண்ணூறுகளின் பின் பகுதியில், வளர்ந்த நாடுகளில் வெடித்த உழைக்கும் மக்களின் போராட்டம், குறிப்பாக, பிரெஞ்சு நாட்டுத் தொழிலாளர் போராட்டம் முதலாளித்துவம் நிரந்தரமானது அல்ல என்ற கருத்தை மீண்டும் வலுவாக நிலை நிறுத்தியது.

தனது அறிமுக உரையின் இரண்டாவது பகுதியில் கம்யூனிஸ்டு பிரகடனத்தில் முதலாளித்துவம் பற்றிய மார்க்சின் ஆய்வு முழுமை பெறவில்லை என்றும் மூலதனம் என்ற நூல் தான் முழுமையாக அப்பணியைச் செய்துள்ளது என்று தோழர்.காரத் குறிப்பிடுகிறார். மேலும், இன்றைய சூழலில், நிதி மூலதனத்தின் வளர்ச்சி,  அதனால் ஏற்படும் பிரச்சனைகள், பொருளாதார சீர்குலைவுகள் பற்றி தெளிவாக விளக்கியுள்ளார். முதலாளித்துவம் உலகளாவிய அளவில் செயல்பட்டாலும், தேசிய எல்லைக்குள் வர்க்கப் போராட்டம் நடத்தப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை கம்யூனிஸ்டு பிரகடனம் வலியுறுத்துவது, இன்றும் பொருத்தமாக உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டுகிறார். இன்றைய சந்தை சார் பொருளா தாரத்தில் தங்களை இணைத்துக் கொண்டுள்ள ஆளும் வர்க்கங்கள் அதை நிலையானதாக கருத இயலாது என்றும், தங்கள் நிலை பாடுகளை மாற்றிக் கொள்ள வேண்டி இருக்குமென்றும் கூறுகிறார்.

மேலும், சுயாதிபத்தியத்தை ஒரு நாடு இழக்கும் போது, அந்நாட்டு மக்கள் தங்களை தாங்களே ஆளும் உரிமையை இழக்கின்றனர் என்பதை இன்றைய இந்திய சூழலுடன் பொருத்தி விளக்கியுள்ளார். வர்க்கப் போராட்டத்தை நாம் திறமையாக கையாள வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது. தோழர்.காரத்தின் அறிமுக உரையின் மூன்றாவது பாகத்தில், இன, குழுவாதம், மதம் மற்றும் தேசிய அடிப்படையில் பல்வேறு சிக்கல்கள் தோன்றியுள்ளதையும், இவற்றினால் ஏகாதிபத்தியத்திற்கெதிரான போராட்டங்களுக்குத் தடைகள் ஏற்படுகின்றன என்பதை வலியுறுத்தியுள்ளார். சாதி, மத, இன அடிப்படையில் எவ்வளவு மோதல்கள்? ஆப்கனில் தாலிபன், பாகிஸ்தானில் உள்ள மத அடிப்படைவாதிகள், இந்தியாவில் இந்து மத வெறியர்கள் ஆகியவற்றுடன் அமெரிக்க ஏகாதிபத்தியம் சேர்ந்து செயல்படுகிறது. இதனால் மக்கள் ஒற்றுமை பாதிக்கப்படுகிறது. சோவியத் யூனியன் மற்றும் யூகோஸ்லாவியாவில் நடைபெற்ற நிகழ்வுகள், பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட நாடுகளின் பிரச்சனைப் பற்றி மார்க்சீய தத்துவம் மற்றும் நடைமுறைகள் காட்டும் வழிகாட்டுதல் குறித்த ஒரு புதிய பார்வையின் அவசியத்தை உணர்த்துகின்றன என்று கூறுகிறார்.

நான்காம் பகுதியில், சோசலிசம் சந்தித்த பின்னடைவுகள் காரணமாகத் தோன்றியுள்ள திரிபுவாத போக்குகள் குறித்து கவனத்தை ஈர்க்கும் அதே சமயம், தொழிலாளி வர்க்கம் மட்டுமே ஏகாதிபத்திய தாக்குதலை தொடர்ந்து எதிர்த்து வருகிறதென்ப தையும் சுட்டிக்காட்டியுள்ளார். கம்யூனிஸ்டு பிரகடனத்திலிருந்து மேற்கோள் காட்டி, ஆண்களின் உழைப்பு அகற்றப்பட்டு, பெண் தொழிலாளர்கள் அமர்த்தப்படுவதைக் குறிப்பிட்டு, 20 – ம் நூற்றாண்டு இறுதிக் கணக்கின் படி, வளர்ந்துள்ள முதலாளித்துவ நாடுகளில் உழைப்பாளர் படையில் 60 சதம் பெண்கள் உள்ளனர் என்பதை குறிப்பிடுகிறார். உழைக்கும் வர்க்கத்தின் ஒரு அங்கமாக பெண் தொழிலாளர்கள் மாற்றப்படாவிட்டால், பிரகடனத்தின் நோக்கத்தை நிறைவேற்ற இயலாதென எச்சரிக்கிறார். அனைத்து நாடுகளிலுமுள்ள தொழிலாளி வர்க்க கட்சிகளுக்குள்ளே கம்யூனிஸ்டுகள் தான், மிகவும் முன்னேறிய, மிகவும் நெஞ்சுறுதி படைத்தவர் என பிரகடனத்தில் கூறியுள்ளது மிகவும் சரியான நிலை என்று வலியுறுத்தியுள்ளார். இப்பகுதியின் இறுதியில், இருபதாம் நூற்றாண்டில் சோவியத் யூனியன் மற்றும் இதர சோசலிச நாடுகள் சந்தித்த அனுபவங்களின் அடிப்படையில் கட்சி பற்றியும், வர்க்கம் பற்றியும், அரசு பற்றியும், பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. இன்றளவும் விடை காணப்படாதவையாகவும் நீடிக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.

அறிமுக உரையின் இறுதிப் பகுதியில் இன்று கட்சியின் செல்வாக்கு, பணிகள், பலம், பலவீனம் பற்றி பொதுச் செயலாளர் சுருக்கமாக தனது கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்.

கம்யூனிஸ்ட் பிரகடனம் – அன்றும் இன்றும் என்ற அய்ஜாஸ் அகமதுவின் கட்டுரை மிகவும் சுவாரசியமாக எழுதப்பட்டுள்ளது. துவக்கத்திலேயே, பைபிள், குரானுக்கு அடுத்தபடியாக விரிவான முறையில்  அறியப்பட்ட நூல் கம்யூனிஸ்ட் பிரகடனம் என்கிறார் ஆசிரியர். போல்ஷ்விக் புரட்சிக்கு முன்பு 35 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டது என்பதும், அக்காலத்திலேயே 544 பதிப்புகள் வெளிவந்தன என்பதும் அதன் சிறப்பை வெளிப்படுத்து கின்றன. 1917 நவம்பர் புரட்சிக்குப் பின்னர் மேலும் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு, எண்ணற்ற பதிப்புகள் வெளியாகின என்பதும் இந்நூலின் செல்வாக்கு எந்த அளவுக்கு இருந்ததென்பதை காட்டுகிறது பைபிள், குரான் போலின்றி, வெளியிட்டு 150 ஆண்டுகளுக்குள் இந்நூல் ஏற்படுத்தியுள்ள தாக்கம் மிக அதிகம். இது ஒரு இளமை ததும்பும் நூல் என்கிறார் கட்டுரையாளர், மற்ற நூல்களைக் காட்டிலும், இந்நூல் உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தக் காரணம் அதன் அரசியல் வலிமை என்று குறிப்பிடப் பட்டுள்ளது மிகவும் பொருத்தமானதாகும். அதேபோல, இந்த நூலின் உரைநடை வீச்சின் கம்பீரம், சமூகங்களை பீடித்துள்ள நோய் பற்றிய நிர்ணயிப்பையும், எதிர்கால நிகழ்வுகளைப் பற்றிய கணிப்பும்….. பிரகடனத்தின் சிறப்புக்குக் காரணம் என்கிறார் அகமது.

மார்க்சும், ஏங்கெல்சும் இணைந்தும், மார்க்ஸ் தனியாகவும் ஏராளமான நூல்களை எழுதிய போதிலும், 30 வயது கூட நிரம்பாத இளைஞரான ஒருவரின் அறிவு முதிர்ச்சி மிக்க நூல்தான் பிரகடனம் என்கிறார் கட்டுரையாளர் அகமது. மார்க்சின் மற்றநூல்களை மேற்கோள் காட்டி, அவை அன்று நிலவிய அரசியல் சிந்தனை போக்குகளுக்கெதிராக அவரது தத்துவ மோதல்களின் அடையா ளங்கள் என்று குறிப்பிடுகிறார், அவை குறிப்பிட்ட நூலாசிரியர் களுக்கெதிராக, அச்சிந்தனைகளுக்கு எதிராக எழுதப்பட்டவை என்றும் விளக்குகிறார். ஆனால், பிரகடனத்தின் மறக்க முடியாத முற்பகுதி எந்த ஒரு சிந்தனையாளருக்கோ, சிந்தனைப்போக்கு களுக்கோ எதிரான விமர்சனமாக இது அமையவில்லை. மாறாக, அதுவரை மார்க்ஸ் எழுதிய நூல்களுக்குள்ளேயே முதன் முறையாக தனது கருத்துக்களை அழுத்தந்திருத்தமாக விவரிக்கக்கூடிய ஒரு பகுதியாகவே உள்ளது என்றும், இந்நூல் அரசியல், பொருளா தாரம், வரலாறு, தத்துவம் ஆகியவற்றுக்கிடையே ஒரு புதிய உறவு முறைக்கான இலக்கணத்தை வகுக்கும் நூல் என்றும் நூலின் அம்சங்களைப் பற்றி விளக்குகையில் கூறுகிறார், இந்நூல் ஒரே நேரத்தில் இரண்டு விதமான அசைவுகளைச் சுட்டிக்காட்டியது. ஒன்று பொருளியல் உலகில் நடைபெறும் அசைவு அதாவது பல்வேறு உற்பத்தி முறைகளைப் பொதுவான முறையில் விளக்கு வதன் மூலம் தத்துவம் என்ற அறிவியல் ஆய்வை உறுதிப்படுத்தக் கூடிய ஒரு வரலாற்றுக் கோட்பாடு……. இரண்டாவது – நீதிநெறி முறைகளுக்கு முரணான, பொறுத்துக் கொள்ள முடியாத ஒரு உலகத்தை புரட்சிகரமான மாற்றங்கள் மூலம் மாற்றியமைக்கும் நெறிமுறை சார்ந்த திட்டம். இரண்டுவிதமான அம்சங்கள் குறித்தும் மார்க்சியம் கவனம் செலுத்தியுள்ளது என்றும் நூலின் முக்கியத் துவம் பற்றி நிறைய விளக்கியுள்ளார். முதலாளித்துவத்தை எப்படிப் பார்க்க வேண்டும்?

முதலாளித்துவத்தின் சாரத்தைப் புரிந்து கொள்ள வேண்டு மென்றால் அதனை ஆடாமல் அசையாமல் இருக்கும் ஒரு சமூக அமைப்பாக பார்க்கக்கூடாது (பக்கம் 30) என்பதே மார்க்சின் பதில். மேலும், மார்க்சின் அனைத்து படைப்புகளிலும் உள்ள மூன்று முக்கிய அம்சங்களாக கட்டுரையாளர் குறிப்பிடுபவை:

  1. முதலாளித்துவ உற்பத்தி முறையைப் பற்றி மிகவும் கூர்மையான முறையிலும், மிகவும் விரிவான முறையிலும் விளக்குவதற்கான முயற்சி……….
  2. அவர் காலத்திலும், அவரைச் சுற்றியும் உருவாகி வந்த வரலாறு மற்றும் அரசியல் பற்றிய விரிவான பரிசீலனை………
  3. தொழிலாளர் இயக்கம் பரிசீலிக்க வேண்டிய பிரச்சனைகள் ஆகும்.

பிரகடனம் பற்றிய பல்வேறு அணுகுமுறைகளை கட்டுரையாளர் விளக்கியுள்ளார், ஹெகலின் கருத்துக்கு எதிராக மார்க்ஸ் தனது கருத்துக்களை வெளிப்படுத்த ஆரம்பித்தார் என்றும், உணர்வு என்பதை கருப்பொருளாகக் கொண்டு பல கட்டுரைகளை எழுதினார் மார்க்ஸ் என்றும் கூறுகிறார், உணர்வு பற்றிய மார்க்சின் மிகவும் பிரபலமான வாசகமும் மேற்கோளாகக் காட்டப் பட்டுள்ளது. மனிதனுடைய உணர்வு அவனது வாழ்நிலையை தீர்மானிக்கவில்லை. மாறாக, அவனது சமூக வாழ்க்கைத்தான் அவனது உணர்வை தீர்மானிக்கிறது (பக்கம் 33).

கட்டுரை ஆசிரியர் பிரகடனத்தை எப்படி பரிசீலிக்கலாம் என்று விளக்கியுள்ளார்.

  1. காலச் சூழலுக்கேற்ப பரிசீலிக்கலாம். (உ.ம் கம்யூனிஸ்ட் லீக், பிளவுபட்டுக் கிடந்த உழைக்கும் வர்க்கம் – வர்க்க ஒற்றுமை……)
  2. சித்தாந்த அடிப்படையில் பரிசீலிக்கலாம். (ஹெகல், ஃபாயர்பாக்….) இப்படி கூறிவிட்டு, பிரகடனத்தை பரிசீலிப்பது என்பது முடிவே இல்லாத ஒன்று என கருதும் அளவுக்கு ஆழமானது சிக்கல் நிறைந்தது, புரிந்து கொள்வதற்கு கடினமானது என்ற தன் கருத்தை முன்வைக்கிறார் பிரகடனத்திலுள்ள அரசியல், பொருளாதார அம்சங்களை ஆராய்ந்து, ஐரோப்பிய சூழல், முதலாளி-தொழிலாளி வர்க்கத் தன்மைகளை விரிவாக எழுதி யுள்ளார். மேலும், முதலாளித்துவ வர்க்கம் ஒரு புரட்சிகரமான வர்க்கம் என்ற தன்மையை எப்போது இழக்கும்? என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார். தனது கருத்துக்களுக்கு வலுவூட்ட கிராம்சியின் கருத்துக்களை மேற்கோள்காட்டி விளக்குகிறார். இந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் தன்மைகளையும் கட்டுரையாளர் பரிசீலனை செய்துள்ளார். முதலாளித்துவத்தின் விதிகளையும் விளக்கமாக எழுதியுள்ளார்.

அய்ஜாஸ் அகமது கட்டுரையின் கடைசி பகுதியான உலகமயமாக்கல், பொருளாதாரம் பண்பாடு, தற்போதைய சூழலை தெள்ளத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. அதில் ஊடே நூலிழை போன்று ஹெகல் மற்றும் மார்க்சின் கருத்துக்கள் ஆராயப் பட்டுள்ளன. உலகளாவிய வர்க்கம் என்று அதிகாரவர்க்கத்தை ஹெகல் குறிப்பிட்டாலும், மார்க்ஸ் அதற்கெதிரான விளக்கத்தை அளித்துள்ளதை எழுதியுள்ள கட்டுரையாளர் அச்சொல்லிற்கு நீண்ட விளக்கம் தந்துள்ளார். பாட்டாளி வர்க்க நிலைமைகளை விளக்கி கட்டுரையை நிறைவு செய்துள்ளார் அகமது அவர்கள். கட்டுரைக்கு பின் 6 பக்கங்களுக்கு கொடுத்துள்ள குறிப்புகள் சில சொற்களை சரியாக புரிந்து கொள்ள உதவும் வகையில் எழுதப்பட்டுள்ளது.

நூலில் இரண்டாவது கட்டுரை மிகச்சிறந்த வரலாற்று அறிஞர் இர்பான் ஹபீப் அவர்களால் எழுதப்பட்டதாகும். தலைப்பு கம்யூனிஸ்ட் பிரகடனத்தில் பொதிந்துள்ள வரலாற்றை வாசிப்பது என்பதாகும் பிரகடனம் பற்றிய எதிர்பார்ப்பு எவ்வாறு இருந்தது என்ற முன்னுரையுடன் கட்டுரை துவங்குகிறது. முந்தைய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது போன்று ஹெகல், ஃபாயர்பாக் பற்றிய மார்க்சின் ஆய்வுரைகள் தொடர்பான மேற்கோள்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உணர்வு பற்றிய மார்க்சின் நிலைப்பாட்டை இவரும் குறிப்பிடுகிறார். பொருளியல் வாழ்வு, உற்பத்தி, மனித உழைப்பு பற்றிய கருத்துக்களை முன்வைக்கும் போது, மனிதகுலம் தன்னால் நிறைவேற்றக் கூடிய கடமைகளைத்தான் தனக்கு நிர்ணயித்து கொள்கிறது என்ற மார்க்சின் கூற்று எவ்வளவு பொருத்தமானது என்பதை எடுத்துக் காட்டுகிறார். வரலாற்று சூழல்களின் பின்னணியில் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டிய செயல் முறைகளின் எல்லைப் பற்றி மார்க்சும், ஏங்கெல்சும் அறிந்திருந்தனர். ஆனால், சிந்தனைகள் மூலமும் அவற்றை புரட்சிகரமான செயல்பாடுகள் நிலைக்கு உயர்த்துவதன் மூலம்தான் உலகையே மாற்றி அமைக்க முடியும் என நம்பினார்கள். பிரகடனம் இதை வெளிப்படுத்துவதாக உள்ளது.

மார்க்சிய ஆய்வு முறை வரலாற்று இயக்கவியல் அடிப் படையில் இருந்தது. முரண்பாடுகளின் தாக்கங்களினால் ஏற்படும் விளைவுகள் வரலாற்று மாற்றங்களை ஏற்படுத்துகின்றன என்ற பார்வை மிகவும் முக்கியமானது. கொள்கைதான் புரட்சிகரமான நடவடிக்கைகளுக்கு முன்னோடியாக இருக்க வேண்டும் என்ற மார்க்ஸ்-ஏங்கெல்சின் நம்பிக்கை மிகவும் முக்கியமான ஒன்றாகும். சமுதாய வரலாற்றை. மனிதகுல வளர்ச்சியை மார்க்சீய அடிப்படையில் புரிந்து கொள்ள பிரகடனத்தை படிப்பது அவசியமாகும். ஒவ்வொரு காலகட்டத்திலும் பொருள் உற்பத்தி நடைபெற்ற விதம், வர்க்கங்கள் உருவான விதம் ஆகியவற்றை புரிந்து கொண்டால்தான் வர்க்கப் போராட்டம் இடையறாமல் நடப்பதை புரிந்துகொள்ள முடியும். வர்க்கப் போராட்டம் சில நேரங்களில் வெளிப்படையாகவும், சில நேரங்களில் மறைமுகமாகவும் நடப்பதை பிரகடனம் சுட்டிக்காட்டுகிறது. மார்க்சின் ஜெர்மன் சித்தாந்தம் என்ற நூல் இதைப்பற்றி விரிவாகவே விளக்கமளிக்கிறது.

இர்பான் ஹபீபின் கட்டுரையில், பிரகடனத்தில் உற்பத்தி முறை என்ற சொல் பயன்படுத்தவில்லை என குறிப்பிடப்படுகிறது. ஆனால், பின்னர் எழுதப்பட்ட நூல்களில் அது பயன்படுத்தப் படுகிறது. இது மார்க்சிய அடிப்படையில் ஆய்வு செய்ய மிகவும் அடிப்படையான ஒன்றாகும். கரிண்ட்ரிஸ் (1857-58) என்ற நூலில் ஆசிய பாணி உற்பத்தி முறை பற்றியும், இந்திய சமூகம் பற்றியும் மார்க்ஸ் நிறைய எழுதியுள்ளார். அப்போது இந்தியாவுக்கு வரலாறு என்ற ஒன்றே இல்லை என மார்க்ஸ் கூறினார். ஆனால் பின்னர் அந்த கருத்தை வெளிப்படுத்தும் வகையில் அவர் எழுதவில்லை என்பது கவனிக்கத்தக்கது. பிரகடனத்திலும் அது சேர்க்கப்படவில்லையென கட்டுரையாளர் தெரிவிக்கிறார். பிரகடனம் முதலாளித்துவ வர்க்கத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சி பற்றி குறிப்பிடுகிறது. ஆனால் முதலாளித்துவ வர்க்கத்தினர் என்ற சொல்லும் மூலதன உடமையாளர்கள் என்ற சொல்லும் ஒரே பொருளில் பயன்படுத்த வில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மூலதனம் ? சுரண்டல் பற்றிய தனது கருத்துக்களில் மூலதன திரட்சி உருவான விதம் மார்க்சின் புகழ்வாய்ந்த கண்டுபிடிப்பு என கட்டுரையாளர் மார்க்சை பாராட்டுகிறார். ஆடம்ஸ்மித், ரிக்கார் டோ போன்ற தொன்மை பொருளாதார நிபுணர்களின் கருத்துக்களிலிருந்து மாறுபட்டு, முக்கியமான பங்கை மார்க்ஸ் பொருளாதாரம் என்ற சமூக அறிவியலுக்கு ஆற்றியுள்ளார் என மார்க்சை பாராட்டுகிறார்.

இறுதியாக, கம்யூனிஸ்ட் பிரகடனம் என்பது ஒரு குறிப்பிட்ட தேவையை நிறைவேற்ற வடிவமைக்கப்பட்டது என்றும், முக்கியமான கருத்துக்களை மிகச்சரியாக எழுதியுள்ளானர் என்பதும் பிரகடனத்திற்கு கிடைத்த வெற்றி கட்டுரையாளர் பிரகடனத்தை மட்டுமின்றி அதுவெளிவந்த பின் மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் எழுதிய வற்றை படிப்பது பிரகடனத்தின் நோக்கத்தை புரிந்து கொள்ள உதவும் என்று எழுதியிருப்பது வரவேற்கத்தக் கதாகும். அது மட்டுமல்ல ஏராளமான நூல்களை மேற்கோள் காட்டி, வாசிக்கும் உணர்வை தூண்டி இருப்பதும் பாராட்டுக்குரியது.

நூலின் கடைசி கட்டுரையான 150 ஆண்டுகளுக்குப்பிறகு கம்யூனிஸ்ட் அறிக்கை என்பதை பிரபல பொருளாதார அறிஞர் பிரபாத் பட்நாயக் அவர்கள் எழுதியுள்ளார். இந்த கட்டுரையை விஜயராகவன் என்பவர் மொழிபெயர்த்துள்ளார். கம்யூனிஸ்ட் அறிக்கை மார்க்சிய உலக கண்ணோட்டத்தை எழுத்துவடிவில் கொணர்ந்த முதல் முயற்சி என கட்டுரையாளர் பாராட்டுகிறார். ஜெர்மன் தத்துவ ஞானம் என்று மார்க்சும், ஏங்கெல்சும் எழுதியது அப்போது அச்சில் வரவில்லையென்ற போதும் பிரகடனத்தின் அடித்தளமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பிரகடனம் வரலாற்றை பொருள்முதல்வாத பார்வையில் விளக்கி இருப்பது அதன் சிறப்பம்சமாகும் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

கம்யூனிஸ்ட் அறிக்கையின் 4 சிறப்பு அம்சங்களை கட்டுரையாளர் கீழ்க் கண்டவாறு சுட்டிக்காட்டுகிறார்.

  1. வரலாற்றின் உள் இயக்கங்களை இனங்கண்டு, சமூக உற்பத்தி சக்திகளுக்கும், உற்பத்தி முறையின் சமூக உறவுகளுக்குமிடையேயான தொடர்பு.
  2. சமூகம் வர்க்க வடிவிலும், வர்க்கப் போராட்ட வடிவிலும் செயல்படுதலை விளக்குதல்.
  3. முதலாளித்துவ உற்பத்தி முறையைப் பற்றிய சிறப்பான, சுருக்கமான ஆய்வு.
  4. முதலாளித்துவம் ஏன் இருக்கிறது என்றும், முதலாளித்துவ மற்றும் அனைத்து வகை சுரண்டல்களிலிருந்தும் மனித குலத்தை எப்படி பாட்டாளி வர்க்கம் விடுவித்து வரலாறு படைக்கும் என்ற விளக்கம் ஆகியவை பிரகடனத்தின் முக்கிய அம்சங்களாகும்.

இவை மட்டுமின்றி, வரலாறு என்பது ஏதோ தனிநபர் வாழ்வின் சம்பவத் தொகுப்பு என்ற பார்வையை அகற்றி, பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில் பார்க்க பிரகடனம் உதவியுள்ளது. அதேபோல், முதலாளித்துவ அமைப்பில் உள்ள முரண்பாடுகள், சமூக போக்குகளை விளக்குகிறது என்கிறார் பட்நாயக். கம்யூனிஸ்ட் அறிக்கை புரட்சியை நடைமுறைப்படுத்த முயற்சித்தது. ஐரோப்பிய அரசியல் பொருளாதார நிகழ்வுகளை விளக்கியதுடன் உலகப் புரட்சி பற்றிய போக்குகளையும் பிரகடனம் வரையறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மார்க்சீயம் இன்றும் உயிரோட்டமாக இருப்பதற்கான காரணங்களை எடுத்துக் காட்டுகளுடன் விளக்கும் கட்டுரையாளர் பட்நாயக், மார்க்சின் எழுத்துக்களை முழுமையாக படித்துவிட்டால் மட்டும் யதார்த்தத்தைப் புரிந்து கொண்டுவிட்டதாகக் கூற இயலாது என்றும், மார்க்சியத்தை மறு கட்டமைப்பு செய்வதன் மூலம், செய்யப்பட்ட மறு கட்டமைப்பின் வேர்களை மார்க்சினுடைய எழுத்துக்களில் அடையாளம் காணுவது அவசியம் என்றும் கூறுகிறார். ஹார்க் லுக்காசை மேற்கோள் காட்டுகிறார்.

தொண்ணுறுகளில் சோசலிச நாடுகளில் ஏற்பட்ட நிகழ்வுகளையும், உலகமயமாதல், நிதி மூலதனத்தின் ஆதிக்கம், அதனால் ஏற்பட்டுள்ள நெருக்கடி ஆகியவற்றை விரிவாக கட்டுரையாளர் எழுதியுள்ளார்.

இன்றயை உலகப் பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுபட்டு, முன்னேற்றப் பாதையில் செல்ல சோசலிச திட்டத்தைப் புதுப்பிக்க வேண்டும் என்றும், அதற்குப் புதிய ஒருங்கிணைக்கப் பட்ட கோட்பாடுகளை உருவாக்க வேண்டிய தேவை எழுந்துள்ளதென்றும், கம்யூனிஸ்ட் அறிக்கை அடித்தளமாக அமையும் என்றும் கூறியுள்ளதன் மூலம் சோசலிசம் சாத்தியமே என்பதையும், மனித குல விடுதலைக்கு அதுவே தேவை என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளார். மூன்று அருமையான கட்டுரைகளையும், சிறந்த அறிமுக உரையும் கொண்ட இந்நூல் கட்சியில் உள்ள ஒவ்வொருவரும் படித்து பயன்பெற வேண்டியவையாகும். இந்த நூலை படித்துவிட்டு, கம்யூனிஸ்ட் அறிக்கையை மீண்டும் வாசித்தால், மார்க்சிய கோட்பாடுகளை எளிதாகப் புரிந்து கொள்ள இயலும்.

சிறந்த மொழி பெயர்ப்பைச் செய்துள்ள கி.இலக்குவன், விஜயராகவன் மற்றும் பாரதி புத்தகாலயத்துக்கு மீண்டும் பாராட்டுகள். கட்டுரையாளர்கள் அனைவருமே மார்க்சின் அசாத்திய புத்திக் கூர்மையையும், சமூக, அரசியல், பொருளா தாரத்தை தீர்க்கதரிசனத்துடன் அலசி ஆராய்ந்திருப்பதைப் பாராட்டியுள்ளனர். விடுபட்ட விசயங்களைச் சுட்டிக்காட்டி யுள்ளனர். ஏராளமான எடுத்துக்காட்டுகள், மேற்கோள்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த நூல்களையும் வாசிப்பது மேலும் மார்க்சியத்தை நன்கு புரிந்து கொள்ள சிறந்த வாய்ப்பாக இருக்குமென்பதில் ஐயமில்லை.