ரஷ்யாவின் தனித்தன்மை …

பிப்ரவரி புரட்சியிலிருந்து அக்டோபருக்கு 2

லெனின் கம்யூனிசப் புரட்சியாளர்களுக்கு அறிவுறுத்துவார். ‘குறிப்பிட்ட சூழலில், நிலவுகிற நிலைமைகள் அனைத்தையும் உள்வாங்கிட வேண்டும்’.(“Concrete Study of Concrete Conditions” ). சமூக இயக்கத்தை அறிவதற்கும்,அதில் தலையிட்டு மாற்றத்தை நிகழ்த்துவதறகுமான மார்க்சிய அணுகுமுறை, இது.
குறிப்பிட்ட நிலைமைகள் என்று சொல்கிறபோது மார்க்சியவாதிகள் வர்க்கங்களின் நிலைமைகளைக் குறிப்பிடுகின்றனர்.
ஆதிக்க நிலையில் இருக்கும் முதலாளித்துவ வர்க்கம் தனது மூலதனத்தையும்,அதிகாரத்தையும் வலுப்படுத்திக்கொள்ள எடுக்கும் முயற்சிகள், அந்த முயற்சிகளால் எதிர்முனையில் தீவிரமான சுரண்டலுக்கு ஆளாகும் உழைக்கும் வர்க்கங்களின் நிலை என இரு முனைகளையும் ஆராய்ந்திட வேண்டும். சுருக்கமாக, வர்க்கரீதியான சமுக, பொருளாதார, பண்பாட்டு முரண்பாடுகளை ஆராய்வதுதான் குறிப்பிட்ட சூழலை சரியாகக் கணிக்கும் முறையாகும். இதுவே மார்க்சிய அணுகுமுறை.
ரஷ்யாவில் 1917-ம் ஆண்டுகளின் துவக்கத்திலிருந்தே அங்கு நடந்து வரும் ஒவ்வொரு அசைவையும் நுணுக்கமாக ஆராய்ந்து வந்தனர், ரஷ்யக் கம்யூனிஸ்டுகள். அவர்கள் ரஷ்ய சமுகத்தில் நிலவும் வர்க்க முரண்பாடுகளை சரியாக புரிந்து கொண்டதால்தான் வலுவாக தலையீடு சாத்தியமானது.
இந்த மார்க்சிய நடைமுறை அக்டோபர் புரட்சி எனும் சோஷலிச புரட்சிக்கு இட்டுச்சென்றது. கம்யூனிஸ்ட்களை ஆட்சி அதிகாரத்தில் அமரச் செய்தது.
1905-ல்,ஒரு”முன்னுரை”:
1917 பிப்ரவரியில் நடந்த புரட்சி உண்மையில் முதலாளித்துவப் புரட்சி. அது நடந்த பிறகு, எட்டு மாதங்கள் கழித்து, அக்டோபரில் சோசலிப் புரட்சி நடந்தது. இந்த இரண்டு புரட்சிகளுக்கும் முன்னோடியாக ஒரு நிகழ்வு அமைந்தது. அது 19௦5-ஆம் ஆண்டு நிகழ்ந்த ஆயுதம் தாங்கிய எழுச்சி. அது தோல்வியில் முடிந்தது. எனினும் டிராட்ஸ்கி அதுபற்றி எழுதுகிறபோது பிப்ரவரி புரட்சிக்கும், அக்டோபர் புரட்சிக்கும் ஒரு “முன்னுரை” போன்று அமைந்த எழுச்சி என்கிறார்.
1905-ஆம் ஆண்டுக்கும் புரட்சிகள் தொடங்கிய 1917-ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட 11 ஆண்டுகள் முக்கியமான திருப்பங்கள் நிறைந்த காலம். அதாவது, டிராட்ஸ்கியின் வார்த்தைகளில் “முன்னுரை”-க்கும், முக்கிய “நாடகக்” காட்சிக்கும் இடையில் நடந்த வரலாற்று நிகழ்வுகள் என்ன?
ஆட்சியதிகாரத்தில் வீற்றிருந்த ஜார் ஆட்சி பல சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருந்தது. இதனை எழுதுகிற போது, ”இக்காலத்தில் ஜாரிய ஆட்சி வரலாற்று முன்னேற்றம் எழுப்பிய சில தேவைகளோடு கூர்மையாக முரண்பட்டு நின்றது” எனத் தத்துவார்த்தமாகக் கூறுகிறார். அதாவது,வரலாறு வெடித்துக் கிளம்பி மாற்றம் ஏற்படுத்த விழைகிறது. அதற்கு தடையாக ஜாரியம் இருக்கிறது என்கிறார் டிராட்ஸ்கி.
1905-ஆம் ஆண்டு புரட்சியை ஜார் அரசு கடுமையாக ஒடுக்கியது. இதன் பலனாக, ரஷ்ய முதலாளித்துவம் பொருளாதாரரீதியாக அதிக பலம் பெற்றது. தொழில் மூலதனக் குவியல் தீவிரமானது. வெளிநாட்டு மூலதனம் ரஷ்யப் பொருளாதாரத்தில் ஆதிக்கம் பெற்றது.
1905-எழுச்சி முதலளித்துவத்திற்கும் பல பாடங்களைக் கற்றுக் கொடுத்தது. அது மேலும் மேலும் பிற்போக்கானதாக மாறியது. தொழிலாளி வர்க்க இயக்கங்களிடம் அதிக எச்சரிக்கை உணர்வுடன் அது நடந்து கொள்ளத் தொடங்கியது.
அத்துடன் நடுத்தர வர்க்க முதலாளித்துவம் 1905-க்குப்பிறகு மிகவும் பலவீனப்பட்டது. அறிவுஜீவிப் பிரிவினர் முதலாளித்துவத்துடன் நெருக்கமாக இருந்தனர். இந்த நிலையில் கம்யூனிஸ்ட்கள் பாட்டாளி வர்க்கத்தின் மீது முழு நம்பிக்கை வைத்து செயலாற்றினர்.
கம்யூனிஸ்ட்களின் சிந்தனைப் போக்கையும் செயல்திட்டத்தையும் டிராட்ஸ்கி விளக்குகிறார்:
…..”வளர்ந்து வரும் பாட்டாளி வர்க்கம் மட்டுமே, விவசாயிகளை தலைமை தாங்கிடவும், மாற்றத்திற்கான திட்டத்தை செயல்படுவதற்கான மேடையையும், உருவாக்க இயலும் என்கிற நிலை ஏற்பட்டது……”

இப்படிப்பட்ட மகத்தான கடைமைகளை நிறைவேற்ற வேண்டுமானால், விசேடமான ஒரு புரட்சிகர அமைப்பு தேவை. இந்த ஸ்தாபனம்தான் வெகுமக்களை திரட்டுவதற்கும், அவர்களைப் புரட்சிகர செயல்பாட்டில் ஈடுபட வைக்கவும் உதவிடும்.
1905-ஆம் ஆண்டுகளிருந்து வேகமாக உருவான உள்ளூர் மட்டத்திலான உழைக்கும் மக்களின் சங்கமாகத் திகழ்ந்த “சோவியத்துக்கள்“ இப்படிப்பட்ட அமைப்புக்களாக அமைந்தன. இவற்றில் முக்கியமாக தொழிலாளர்களும், ஓரளவு விவசாயிகளும், இராணுவ வீரர்களும் அங்கம் வகித்தனர்.
இங்கிலாந்து, பிரான்சு உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வழியில் நிலப்பிரபுத்துவ அடிமைத்தனத்திலிருந்து ஜனநாயக உரிமைகள் மக்களுக்கு உரியதாக்கிடும் அமைப்பை நோக்கி முன்னேறின.
ரஷ்ய உழைக்கும் மக்கள் தங்களுக்கென்று தேர்ந்தெடுத்துக்கொண்டு வளர்த்த ஜனநாயக கட்டமைப்பு “சோவியத்துக்கள்” ஆகும். இந்த “சோவியத்துக்கள்”புரட்சியில் முக்கிய பங்கினை வகித்தது. டிராட்ஸ்கி இதன் தோற்றம் மற்றும் அவற்றின் புரட்சிகரப் பாத்திரம் குறித்து விளக்குகிறார்.
அன்றைய ரஷ்யா புரட்சியைக் கருக் கொண்டிருந்தது. அந்தப் புரட்சி சில கடைமைகளை நிறைவேற்ற வேண்டியிருந்தது.
முதலில் அது ஜார் என்ற மன்னராட்சியின் கொடுங்கோன்மையை அழிக்க வேண்டும். ஏற்கனவே பிரான்சில் பிரெஞ்ச் புரட்சி இதைச் செய்திருந்தது. ஆனால் ரஷ்யாவில் புதிய வர்க்கமான பாட்டாளி வர்க்கம் இந்தப் புரட்சியில் முக்கியப் பாத்திரம் வகிக்க வேண்டியிருந்தது.
மன்னராட்சியின் கொடுங்கோன்மையை அழிக்கும் பொறுப்பை முதலாளித்துவ வர்க்கத்திடம் முற்றாக ஒப்படைத்துவிடக்கூடாது. அதாவது, பழைய எஜமானன் போய், புதிய எஜமானனுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கும் நிலைக்கு பாட்டாளி வர்க்கம் ஆளாகி விடக்கூடாது.
இந்த அழுத்தமான அறிவியல்ரீதியான மார்க்சியப் புரிதல் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இருந்ததால்தான் பிப்ரவரிப் புரட்சிக்குப் பிறகு அடுத்த சில மாதங்களில் அங்கு பாட்டாளிவர்க்க அரசு லெனின் தலைமையில் அமைந்தது.
உலகப்போரின் தாக்கம்
இந்த புரிதல் உள்நாட்டு வர்க்க நிலைமைகளை மட்டும் அடிப்படையாகக்கொண்டு உருவானதல்ல. உலக நிலைமைகளும் முழுமையான ஆய்வுக்கு உள்ளாக்கப்பட்டன. லெனின் ஏகாதிபத்தியம்: முதலாளித்துவத்தின் உச்சகட்டம்” என்ற நூலில் உலக முதலளித்துவ முரண்பாடுகளை விரிவாக விளக்கியிருந்தார். உலகம் பயணப்பட்டுக் கொண்டிருக்கிற சகாப்தம் சோசலிசப் புரட்சிக்கான சகாப்தம் என்பதை லெனின் ஆணித்தரமாக வாதிட்டு வந்தார்.
இந்தக் கருத்தாக்கம் ரஷ்யப் பாட்டாளிவர்க்கம் புரட்சிப் பாதையில் செல்வதற்கான தத்துவார்த்த பலத்தை அளித்தது.
அன்று முதலாம் உலகப் போர் மூண்டபோது ரஷ்யா அதில் தன்னை இணைத்துக் கொண்டது. ரஷ்ய முதலாளித்துவம் தனது மூலதன நலன்களை வலுப்படுத்திக்கொள்ள போரில் நாட்டை ஈடுபடுத்தியது.
உலகப் போரில் பங்கேற்ற நாடுகளிலேயே அதிக இழப்பை சந்தித்தது, ரஷ்யாதான். கிட்டத்தட்ட 25 இலட்சம் பேர் கொல்லப்பட்டனர். அதாவது, நேசநாடுகள் கூட்டணியின் ராணுவத்தில் போரில் கொல்லப்பட்டவர்களில் நாற்பது சதமனோர், ரஷ்யர்கள்! அதிலும் விவசாயிகளை உள்ளடக்கிய தரைப்படைதான் அதிக இழப்பை சந்தித்தது.
போரில் ஈடுபட்டிருந்த வீரர்களின் மன நிலையை பிரேயகா என்ற வீரர் இவ்வாறு எழுதினார்:
“கடைசி நிலையில் இருக்கும் வீரர் உட்பட அனைவருக்குமே சமாதானம் வேண்டும் என்பதைதைத் தவிர வேறு சிந்தனை இல்லை; யார் வெற்றி பெறப் போகிறார்கள், எந்த வகையில் சமாதானம் வரப் போகிறது என்பதைப் பற்றியெல்லாம் இராணுவத்தினருக்குக் கவலையில்லை; சண்டையிட்டு அவர்கள் மிகவும் வெறுத்துப் போனதால் எந்த விலை கொடுத்தாவது சமாதானம் வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள்.”
இந்த வகையில் இராணுவத்தில் ஏற்பட்ட கடும் அதிருப்தி உள்நாட்டில் புரட்சிகர மாற்றம் ஏற்பட வேண்டுமென்ற எண்ணத்தை மெல்ல ஏற்படுத்தியது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு தண்டனையாக போர்முனைக்கு அனுப்பட்ட பல தொழிலாளர்கள் ராணுவத்திற்குள்ளே புரட்சிகர கனலை எரியச் செய்தனர்.
“தாய் நாட்டிற்காகப் போர்” என்ற போலியான தேச பக்த உணர்வை முதலாளித்துவம் இராணுவத்தினரிடம் ஏற்படுத்தியிருந்தது. அந்த உணர்வு மெல்ல மெல்ல ஆட்டம்கண்டது. கம்யூனிஸ்ட்கள் எடுத்துரைத்த புரட்சி வேலைத்திட்டத்திற்கு ஆதரவாக அவர்களை திருப்பியது.
போரினால் முதலாளிகள் மிகப் பெரிய இலாபத்தை ஈட்டினர். பல பெரிய கம்பெனிகள் நூறு சததிற்கும் மேலாக இலாபம் ஈட்டினர். இந்த விவரங்கள் கொண்ட அறிக்கை டூமா எனப்படும் ரஷ்யப் பாராளுமன்றத்திலேயே சமர்ப்பிக்கப்பட்டது. தேசப்பற்று எனும் பெயரால் உழைக்கும் மக்களைப் போரில் ஈடுபடச் செய்தது எதற்காக என்பதை மக்கள் புரிந்து கொள்ளத் தொடங்கினர்.
போரில் ரஷ்யா பெரும் இழப்பை சந்தித்து பின்வாங்கத் தொடங்கியது.
இந்த நிலைமையை சந்திக்க ஜார் மற்றும் சில முதலாளித்துவ கட்சிகளை உள்ளிட்ட ஆளும் கூட்டம் மேலும் மோசமான பிற்போக்குப் பாதையில் செல்ல முயற்ச்சித்தது. ஈவிரக்கமற்று மக்களை நசுக்கும் சர்வாதிகாரஆட்சியமைப்பை ஏற்படுத்துவது, பேச்சுரிமையை முழுவதும் அகற்றும் வகையில் டூமாவை ஒழிப்பது, தலைநகரங்களில் இராணுவச் சட்டத்தைக் கொண்டு வருவது, கலகம் ஏற்படுவதை தடுக்க ஆயுதம்தரித்த சக்திகளை தயார் செய்வது, போன்ற பல அரக்கத்தனமான கொள்கைகளை பின்பற்றத் தொடங்கியது. உண்மையில் இவையே பிப்ரவரி புரட்சி நிகழ்வதற்கு முந்தைய காலம் முழுவதும் நீடித்தது.

ஆனால், இந்த கொள்கைகள் முழுவதையும் நடைமுறைப்படுத்தும் போது ஆளும் கூட்டம் எதிர்பார்த்தற்கு மாறான பல விளைவுகள் ஏற்பட்டன.

புரட்சியின் தலைமையிடமாகத் திகழ்ந்த நகரமான பெட்ரோகிராடு நகரத்தில் இராணுவச் சட்டத்தை அமலாக்கும் முன்பாகவே புரட்சி சக்திகளிடம் அந்த நகரம் கைவசமானது. கலகத்தை அடக்க நிறுத்தப்பட்ட படைகள் அனைத்தும் ‘கலகக்காரர்களின்’ உடைமைகளாக மாறின. அதே போன்று டூமா ஒழிக்கப்படவில்லை; மாறாக கலைக்கப் பட்டது.

தாக்குதல் தொடுக்க வந்த எதிரியின் கத்தி புரட்சிகர சக்திகளின் முன்னால் வெறும் அட்டைக் கத்தியாக மாறிப் போன வினோதம் நிகழ்ந்தது.

புரட்சி வெற்றியை நோக்கி முன்னேறியது. இதனைப் பற்றி டிராட்ஸ்கி கவித்துவ நடையில் குறிப்பிடுகிறார்:

“கொடுங்கோன்மை அரசு உருவாக்கிய அரசியல் சூழ்நிலைமைகளில் ரஷ்யப் பாட்டாளி வர்க்கம் தனது முதற்கட்ட அடிகளை எடுத்து வைக்க கற்றுக்கொண்டது”. ரஷ்ய வரலாற்றில் என்றுமில்லாத வகையில் போராட்ட அலைகள் சூறாவளிகளாக வெடித்துக் கிளம்பின.

(தொடரும்)