கம்யூனிஸ்ட் கட்சி மேலிருந்து கட்டப்படுவதுதான். ஆனால் அதன் கால்கள் நிலத்தில் நன்றாகவே ஊன்றி நிற்கின்றன. கட்சியால் பின்பற்றப்படும் ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாடு அவரவர் கிளையில்/கமிட்டியில் மனம் திறந்து விவாதிக்கும் ஏற்பாட்டை உறுதி செய்கிறது என்ற ஒரு பாதியை மறைத்துவிட்டு, முடிவெடுத்த பின் அது அனைவரையும் கட்டுப்படுத்தும் என்பதை மட்டும் பெரிதுபடுத்தி சர்வாதிகாரப் போக்கு என்று நமக்குப் பட்டம் சூட்டுவோர் உண்டு. தகவல் பரிமாற்றம் என்பது இரு வழிப் பாதை என்று கட்சியின் அமைப்பு விதிகள் தெளிவுபடுத்துகின்றன. மேல் கமிட்டி எடுக்கும் முடிவுகள், செய்யும் பணிகளைக் கீழ் கமிட்டிகளுக்கு ரிப்போர்ட் செய்ய வேண்டும். கீழ் கமிட்டிகளின் பணிகளும், கருத்துக்களும் மேல் கமிட்டிக்கு வரவேண்டும். கீழிருந்து வரும் கருத்துக்களை ஊன்றிக் கேட்க வேண்டும் என்று கட்சி வலியுறுத்துகிறது.
உயரிய ஜனநாயகம்:
அதுவும் கட்சியின் மாநாடு உருவாக்கும் நிகழ் அரசியல் நடைமுறை உத்தியின் நகல், மாநாட்டுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே அனைத்து உறுப்பினர்களுக்கும் வந்து சேருகிறது. அனைவருக்கும் திருத்தங்கள்/ஆலோசனைகள் முன்மொழிய உரிமை உண்டு. ஒவ்வொரு திருத்தமும் பரிசீலிக்கப்பட்டு ஏற்கப்படுகிறது அல்லது நிராகரிக்கப்படுகிறது. கொள்கை உருவாக்கத்தில் ஒவ்வொரு கட்சி உறுப்பினரும் பங்கேற்கும் வாய்ப்பை விட உயரிய ஜனநாயகம் வேறு என்ன இருக்க முடியும்?
உதாரணமாகக் கடந்த மாநாட்டைப் பார்ப்போம். 20வது மாநாட்டுக்கு முன்னதாக 3713 திருத்தங்கள் பெறப்பட்டு, அவற்றில் 163 ஏற்றுக் கொள்ளப்பட்டன. மாநாட்டின்போது பிரதிநிதிகள் முன்மொழிந்த 349 திருத்தங்களில் 23 ஏற்றுக் கொள்ளப்பட்டன. 2014 அக்டோபரில் நடந்த மத்தியக்குழு கூட்டத்தில் கூட அரசியல் நடைமுறை உத்தி குறித்த பரிசீலனை நகல் அறிக்கையைப் பொறுத்தவரை பெரும்பான்மை அரசியல் தலைமைக்குழு மற்றும் வேறு கருத்துக்கள் இருந்த 2 தோழர்கள் என்று 3 அறிக்கைகள் சுற்றுக்கு விடப்பட்டன. முதலாளித்துவ பத்திரிகைகள் எல்லாம் மார்க்சிஸ்ட் கட்சிக்குள் சண்டை என்று சுறுசுறுப்பாக தலைப்பு செய்திகளை வெளியிட்டன. பொதுச் செயலாளர் பிரகாஷ் கராத் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பகிரங்கமாகவே சொன்னார் – “மத்தியக் குழுவில் 3 அறிக்கைகள்; ஆனால் அரசியல் தலைமைக்குழுவில் 7 அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. இதுதான் எங்கள் அற்புதமான உட்கட்சி ஜனநாயகம்!” – சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை மீது பல மத்தியக்குழு உறுப்பினர்கள் கருத்துக்களைப் பதிவு செய்து, மீண்டும் திருத்தி எழுதப்பட்டு, 2015 ஜனவரியில் ஹைதராபாத்தில் கூடிய மத்தியக்குழு கூட்டத்தில் மீண்டும் விவாதத்துக்கு உட்படுத்தப்பட்டது. அங்கு வந்த பிறகும் திருத்தங்கள் எழுத்து மூலமாக அளிக்க வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அவை அரசியல் தலைமைக்குழுவால் பரிசீலிக்கப்பட்டு மத்தியக் குழுவில் முன்வைக்கப்பட்டு இறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அரசியல் நடைமுறை உத்தி பரிசீலனையின் அடிப்படையில் நகல் அரசியல் தீர்மானமும் இறுதி செய்யப்பட்டுள்ளது.
அரசியல் நடைமுறை உத்தியை உருவாக்கக் கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பைக் கட்சி தோழர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வருகிற ஆவணத்தை ஊன்றிப் படிக்க வேண்டும், புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு ஏதுவாக சில விவரங்களைத் தருவதுதான் கட்டுரையின் நோக்கம்.
அரசியல் நடைமுறை உத்தி குறித்த பரிசீலனை எதற்காக?
புரட்சிக்கான பயணம் நேர்கோட்டுப் பாதையல்ல, பல திருப்பங்களும் வளைவுகளும், தடைகளும் வரும். புதிய நிகழ்ச்சிப் போக்குகள் உருவாகும். புதிய சவால்கள் எழும்பும். இவற்றை எதிர்கொண்டு முன்னேற உதவி செய்வதே அரசியல் நடைமுறை உத்தி. உத்தி சரியாக இருந்தால், சரியாக நடைமுறையானால் புரட்சிகர சக்திகள் வளரும், கம்யூனிஸ்ட் கட்சி வளரும். இறுதி இலக்கை நோக்கிய பயணம் விரைவுபடும். 1964ல் மார்க்சிஸ்ட் கட்சி உருவான பின்னர் 7வது மாநாடு துவங்கி ஒரு குறிப்பிட்ட காலம் வரை ஓரளவு வளர்ச்சி இருந்தது, தெரிந்தது. அதற்குப் பிறகு நமக்கு வர வேண்டிய அளவு வளர்ச்சி வரவில்லை. 3 மாநிலங்களைத் தாண்டிய வளர்ச்சியாகவும் இல்லை. சால்கியா பிளீனம் சுட்டிக் காட்டியபடி ஓர் அகில இந்திய வெகுஜன புரட்சிக் கட்சியாக மாற வேண்டுமே? எது தடுக்கிறது? தேர்தலில் கிடைக்கும் வாக்கு சதவீதம், 3 மாநிலங்கள் தவிர மற்ற இடங்களில் பெரிதாக வரவில்லை. அண்மைக் காலத்தில் அது சரிந்தும் இருக்கிறது. தியாகத்துக்குப் பஞ்சமில்லை, வேலைகளுக்கு ஓய்வில்லை. ஆனாலும் என்ன பிரச்னை? இந்தக் கேள்வி அவ்வப்போது கட்சி மாநாடுகளில் விவாதிக்கப்பட்டு விடை தேடுவதற்கான முயற்சிகளும் நடந்தன. அதன் தொடர்ச்சியாகக் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்த பரிசீலனை கீழ்க்கண்ட 4 நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனத் தீர்மானித்தது:
- நாம் தொடர்ச்சியாகக் கடைப்பிடித்து வந்த அரசியல் நடைமுறை உத்தியை மீள் ஆய்வுக்கு உட்படுத்துவது.
- கட்சி ஸ்தாபன செயல்பாடு மற்றும் மக்கள் மத்தியில் நாம் ஆற்றும் பணி குறித்த பரிசீலனை.
- வர்க்க, வெகுமக்கள் அமைப்புகளையும், அவற்றின் செயல்பாடுகளையும் பரிசீலித்து, அரசியல் பணியும், கட்சி கட்டும் பணியும் நடப்பதை உறுதி செய்வது.
- நவீன தாராளமயம் சமூகப் பொருளாதார சூழலில் ஏற்படுத்தியிருக்கும் மாற்றங்கள், அவை வர்க்கங்களின் மீது ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் போன்றவற்றை ஆய்வு செய்து, பொருத்தமான முழக்கங்களை உருவாக்குவது.
இவை நான்கும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. இவற்றை நடைமுறைப்படுத்துவதன் மூலம் குறைபாடுகளைக் களைந்து முன்னேற முடியும்.
ஆய்வுக்கான காலகட்டம்:
மத்தியக்குழு தற்போது இதில் முதல் நடவடிக்கையை எடுத்திருக்கிறது. அதாவது தொடர்ச்சியாக நாம் கடைப்பிடித்த அரசியல் நடைமுறை உத்தி குறித்த மீள் ஆய்வு. வழக்கமாக முந்தைய மாநாட்டில் உருவாக்கப்பட்ட உத்தி எவ்வாறு நடைமுறையாகியிருக்கிறது என்பதே அடுத்த மாநாட்டில் பரிசீலிக்கப்படும். ஆனால், முதன் முறையாக, ஒரு குறிப்பிட்ட காலகட்டம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்ட உத்திகள் பரிசீலிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, சர்வதேச அளவில் சோஷலிசத்துக்கு ஏற்பட்ட பின்னடைவு அதனால் ஏகாதிபத்தியத்தின் கை ஓங்கிய சூழல்; நவீன தாராளமய பொருளாதாரத்தின் துவக்கம்; மதவெறி சக்திகள் அரசியல் சக்தியாக வலுவடைந்த நிலை; சாதிய அடையாள அரசியல் முன்னுக்கு வந்த சூழல் என்று இவை எல்லாமே நிகழ்ந்தது 1980களின் இறுதியில். இவற்றை எதிர்கொள்ள நாம் உருவாக்கிய உத்திகள் எந்த அளவு நமக்கு உதவின என்று பார்க்க வேண்டும் என மத்தியக்குழு தீர்மானித்தது. அதாவது 1988ல் நடந்த 13வது மாநாட்டுக்குப் பின்னுள்ள காலகட்டம், ஏறத்தாழ 25 ஆண்டுகள், ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அவ்வப்போது எழும் குறிப்பான அரசியல் சூழலை எதிர்கொள்ள நிச்சயம் நாம் கடைப்பிடித்த உத்தி உதவியிருக்கிறது. இதற்கான உதாரணங்கள் ஏராளம் உண்டு. பரிசீலனை அறிக்கையில் இவை பட்டியலிடப்பட்டுள்ளன. உடனடி நோக்கமான காங்கிரஸ் அல்லது பிஜேபியைப் பின்தள்ள, மதவாத, பிரிவினைவாத சக்திகளை எதிர்கொள்ள, மக்களுக்கான சில நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்க, சமூக ஒடுக்குமுறைகளில் தலையீடு செய்ய, இடதுசாரி ஒற்றுமையைக் கட்டி பலப்படுத்த, கேரளா, திரிபுராவில் இடதுசாரிகள் தலைமையிலான அரசாங்கம் உருவாக, மேற்கு வங்கத்தில் இடது முன்னணி அரசாங்கத்தை உறுதிப்படுத்த என்று பல அம்சங்களில் முன்னேற அரசியல் நடைமுறை உத்திகள் உதவியுள்ளன. ஆனால் இந்த உத்தி, நமது சொந்த பலத்தை அதிகரிக்க உதவியதா, முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ கொள்கைகளுக்கு மாற்றாக இடது ஜனநாயக மாற்றை முன்வைத்து, இடது ஜனநாயக அணியைக் கட்ட உதவியதா என்பதுதான் அடிப்படையாக நாம் பார்க்க வேண்டிய விஷயம். மீள் ஆய்வு அறிக்கை இந்த அம்சங்களில்தான் கவனம் செலுத்தியிருக்கிறது.
இடைக்கால முழக்கமாக இடது ஜனநாயக முன்னணி:
மார்க்சிஸ்ட் கட்சி உருவான பின் நடந்த 7வது, 8வது, 9வது மாநாடுகளில் காங்கிரஸ் மட்டுமே மத்தியிலும், மாநிலங்களிலும் ஆட்சி செய்த பின்னணியில், காங்கிரசுக்கு எதிரான ஒரு ஜனநாயக மாற்றை உருவாக்க வேண்டும் என்பதுதான் அறைகூவலாக இருந்தது. எனவே ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைக்க வேண்டும் என்பதுதான் அரசியல் தீர்மானங்களில் மையக் கருத்தாக இடம் பெற்றது. ஆனால் ஜலந்தரில் 10வது மாநாடு நடந்த 1978ல் ஜனதா அரசு உருவான சூழல் நிலவியது. அதாவது காங்கிரசுக்கான மாற்றும் முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ அணி சேர்க்கையாகவே இருந்தது. ஆட்சியும், கட்சியும் மாறினால் போதாது, வர்க்க அணி சேர்க்கையில் மாற்றம் வருவதை உறுதி செய்ய வேண்டு மல்லவா? இருக்கும் இரண்டுமே ஒரே வர்க்கக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் நிலையில், இது அல்லது அது என்று முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ சக்திகளில் ஒன்றையே மக்கள் தேர்வு செய்ய வேண்டிய நிலை எப்படி உதவும்? அது மாற்றப்பட வேண்டும். அதற்காக முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ கொள்கைகளுக்கு முற்றிலும் அடிப்படையில் வேறுபட்ட உண்மையான மாற்றாக, மக்களுக்கு முன்னால் இடதுசாரி மாற்று நிறுத்தப்பட வேண்டும். வலுவான பிரம்மாண்டமான போராட்டங்களை நடத்துவதன் மூலம் புரட்சிக்கான வர்க்கங்களை ஒன்றுதிரட்டி இடது ஜனநாயக முன்னணியை உருவாக்க வேண்டும். இந்நிகழ்முறை வர்க்க சமன்பாட்டில் மாற்றத்தைக் கொண்டு வந்து, பிற்பாடு மக்கள் ஜனநாயக முன்னணி வடிவமைக்கப்பட இட்டுச் செல்லும் என 10வது மாநாடு விளக்கியது. இரண்டு முன்னணியிலும் இடம்பெற வேண்டிய வர்க்கங்கள் ஒன்றுதான். ஒரே வித்தியாசம், தொழிலாளி வர்க்கத்தின் தலைமைப் பாத்திரம் மக்கள் ஜனநாயக முன்னணியின் போதுதான் உறுதி செய்யப்படும். எனவே, மக்கள் ஜனநாயக முன்னணி என்பது புரட்சியின் இலக்கு என்றாலும், அதற்கு முன்னதாக, ஓர் இடைக்கால முழக்கமாக இடது ஜனநாயக முன்னணி என்பது முன்வைக்கப்பட்டது. இதன் திட்டமும், இதில் இடம் பெற வேண்டிய சக்திகளும் 10வது மாநாட்டு அரசியல் தீர்மானத்தில், அன்றைக்கிருந்த சக்திகளின் தன்மையைக் கணக்கில் கொண்டு உருவாக்கப்பட்டன.
அதாவது, இடது ஜனநாயக முன்னணி உருவாக, மக்கள் பகுதிகளின் பிரம்மாண்டமான போராட்டங்கள் கட்டவிழ்த்துவிடப்பட வேண்டும். இது நடக்க வேண்டுமானால் வர்க்க வெகு மக்கள் அமைப்புகள் பெரும் அமைப்புகளாக உருவாகி, பொருத்தமான கோரிக்கைகளை முன்வைத்து, சுயேச்சையான மற்றும் கூட்டு இயக்கங்கள் மூலம் மக்கள் போராட்டங்களைக் கட்ட வேண்டும். இப்படி எழும்பும் இடது ஜனநாயக முன்னணி, அடிப்படையில் முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ கொள்கை மேடைக்குத் தெளிவான மாற்றை மக்கள் முன்வைப்பதாக இருக்க வேண் டும் என்று 10வது மாநாடு வலியுறுத்தியது.
அடுத்து நடந்த சால்கியா பிளீனம், தொழிலாளி வர்க்கக் கட்சி வளர்ந்தால்தான், இது சாத்தியம் என்று சுட்டிக் காட்டியது. அதாவது மார்க்சிஸ்ட் கட்சியின் வளர்ச்சியும், அதன் சொந்த பலம் அதிகரிப்பதும் முக்கியமானது என்பதுதான். ஆயிரக்கணக்கான ஊழியர்களை உருவாக்கி, லட்சக் கணக்கான மக்களை நமது அரசியலை நோக்கி ஈர்ப்பதாக வளர வேண்டும். அத்துடன் வெகு மக்களை ஈர்க்க விரிந்து பரந்த வெகுமக்கள் அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும். கட்சியின் சொந்த பலம் அதிகரிப்பு, மிகப்பெரும் வர்க்க, வெகுமக்கள் அமைப்புகள், இடது ஜனநாயக சக்திகளை ஒன்றிணைப்பது என்ற இந்தக் கடமைகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை.
இந்த அறைகூவல் வரும்போது, மேற்கு வங்கம், திரிபுரா மாநிலங்களில் இடது முன்னணி இருந்தது. பின்னர் கேரளாவிலும் இடது ஜனநாயக முன்னணி உருவானது. நாம் உருவாக்க நினைக்கிற தேசிய அளவிலான இடது ஜனநாயக முன்னணியின் பகுதிகள் இவை. ஆனால், 25 ஆண்டுகள் ஆன பின்னும், இந்த 3 மாநிலங்களைத் தாண்டி, எங்குமே இடது ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைக்க முடியவில்லை. தேசிய அளவிலோ இடது ஜனநாயக முன்னணியைக் கட்டும் பணியில் எந்த அசைவும் இல்லை. இதற்கான காரணத்தைத் தேடும்போது, அது நம் அரசியல் நடைமுறை உத்திக்குள்ளேயே இருப்பதைக் காண முடியும்.
பின்னுக்குப் போனது ஏன்?
இடது ஜனநாயக முன்னணியைக் கட்டுவது என்பதை ஒவ்வொரு மாநாட்டிலும் அழுத்தமாகக் கூறினாலும், 13வது மாநாட்டிலிருந்தே அத்துடன் சேர்த்து வேறொன்றையும் சொல்ல ஆரம்பித்தோம். காங்கிரஸ் அல்லாத மதச்சார்பற்ற சக்திகளை ஒருங்கிணைப்பது என்பதை முன்னிறுத்தினோம். முதலில் ராஜீவ் காந்தி அரசை அகற்றுவதற்காக, பின்னர் நரசிம்மராவ் அரசை அகற்றுவதற்காக, பின்னர் பிஜேபிக்கு எதிராக என்று தொடர்ச்சியாக இந்த உத்தி முன்வைக்கப்பட்டது. 15வது மாநாட்டில், இடது, ஜனநாயக, மதச்சார்பற்ற சக்திகளைத் திரட்டுவது என்பது உறுதியான முழக்கமாக முன்வைக் கப்பட்டது. எனவே மெதுவாக, இடது ஜனநாயக முன்னணி என்ற இடைக்கால முழக்கம் பின்னுக்குத் தள்ளப்பட்டு, அந்த இடத்தில் இடது ஜனநாயக மதச்சார்பற்ற அணி என்பது மற்றொரு புதிய இடைக்கால முழக்கமாக முன்னேறியது.
ஐக்கிய முன்னணி அரசு தடுமாறி விழுந்த பின், 16வது மாநாட்டில் (1998) 3வது மாற்று என்ற மேலும் திட்டவட்டமான முழக்கத்தை உருவாக்கினோம். அதாவது ஐக்கிய முன்னணி, தேர்தலுக்குப் பின் ஒன்றிணைக்கப்பட்ட அணிதான் என்பதைக் கணக்கில் எடுத்து, மக்கள் மத்தியில் ஒரு நம்பகத்தன்மை ஏற்பட வேண்டுமானால், தேர்தலுக்கு முன்பே ஒரு அணி சேர்க்கை உருவாக்கப்பட வேண்டும். இது காங்கிரஸ் பிஜேபிக்கு மாற்றாக இருக்க வேண்டுமானால், மாற்றுக் கொள்கை அடிப்படையில் உருவாக்கப்பட வேண்டும் என்பதற்காக 16வது மாநாட்டில், கொள்கை அடிப்படையில் 3வது மாற்று அமையும் என்று தெளிவுபடுத்தினோம். இதில் பெரிதாக முன்னேற்றம் நடக்கவில்லை என்று நடைமுறையில் பார்த்த பின், அதற்கான காரணங்களை ஆராய்ந்தோம். மாற்றுக் கொள்கை என்னும் மேடைக்கு வர வேண்டும் என்றால், இக்கட்சிகளின் கண்ணோட்டத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும். அவற்றுடன் இணைந்து கூட்டுப் போராட்டங்களை, இயக்கங்களை நடத்தினால், அது மாற்றம் ஏற்பட நிர்ப்பந்திக்கும்; குறிப்பாக இக்கட்சியின் பின்னுள்ள மக்களின் நிர்ப்பந்தம் தலைமைக்கு ஒரு கட்டாயத்தை ஏற்படுத்தும் என்று 18, 19வது மாநாடுகளில் விவாதித்தோம். ஆனால் கூட்டு இயக்கங்களுக்கும் இக்கட்சிகள் பெரிதாக வரவில்லை. அப்படியானால், தேர்தல் காலத்தில் ஒரு தேர்தல் மாற்றாகவாவது இவற்றை முன்னிறுத்தலாம் என்று முடிவு செய்தோம். கொள்கை பிரச்னைகளைப் பார்க்காமல், காங்கிரஸ்/பிஜேபியைத் தேர்தலில் பின்தள்ள முன்வரும் கட்சிகளை ஒருங்கிணைக்கும் இடத் துக்குப் போனோம்.
உத்தி பிரச்னையா அல்லது நடைமுறை பிரச்னையா?
இதனால் என்ன நடந்தது? முதலில் காங்கிரஸ் அல்லாத மதச்சார்பற்ற முதலாளித்துவ கட்சிகள் கொண்ட தேர்தல் மாற்று, அடுத்து கொள்கை அடிப்படையில் கூட்டுப் போராட்டங்களின் மூலம் உருவாகும் 3வது மாற்று, அதற்குப் பிறகு இடது ஜனநாயக முன்னணி என்ற நிலை உருவானது. இது இடது ஜனநாயக முன்னணியைத் தொலை தூர இலக்காக 3வது இடத்துக்குத் தள்ளியது. ஒரே நாளில் இந்த முன்னணியைக் கட்ட முடியாது என்றாலும், இது நிறைவேறும் சாத்தியப்பாடு உள்ள முழக்கம் என்று 11வது மாநாடு சுட்டிக்காட்டியிருக்கிறது. ஆனால் மேற்கண்ட சூழலால், இதைப் பிரச்சாரத்துக்கு முன்வைக்கப்படும் முழக்கமாக மட்டுமே கருத நேர்ந்தது. எனவே, அரசியல் நடைமுறை உத்தியை அமல்படுத்தியதில் பிரச்சனை என்று மட்டும் பார்க்க முடியாது; அரசியல் நடைமுறை உத்தியின் ஒரு பகுதியே பிரச்சனை என்பதுதான் உண்மை. அப்படியானால், கட்சியின் சொந்த பலம் அதிகரிக்கவில்லை என்பது பற்றி நாம் விவாதிக்கவே இல்லையா? 2014 தேர்தல்தான் நம்மை விழித்தெழ வைத்ததா? நிச்சயமாக இல்லை. 1996, 1998 தேர்தல் பரிசீலனை அறிக்கைகள், அரசியல் நடைமுறை உத்தியை மீள் பரிசீலனைக்கு உள்ளாக்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டின. இந்த அடிப்படையில் அரசியல் தலைமைக்குழு சில முயற்சிகளை எடுத்தது. அடுத்தடுத்து வந்த பல வேலைகளின் காரணமாக அது முழுமையாக நடக்கவில்லை. 17வது மாநாட்டின்போது, மதச்சார்பற்ற முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ கட்சிகளுடனான தேர்தல் உறவை மட்டும் பரிசீலித்தோம். மதச்சார்பற்ற கட்சிகளைத் திரட்டுவது, 3வது மாற்று போன்ற உடனடி கடமைகள், நமது சொந்த பலத்தை வளர்ப்பது, இடது ஜனநாயக முன்னணியைக் கட்டுவது போன்ற அடிப்படை கடமைகளை செய்வதிலிருந்து கவனத்தைத் திசை திருப்பியது என்பது அப்பரிசீலனையில் முன்னுக்கு வந்தது. இருப்பினும், 3வது மாற்றை நாம் உடனடியாகக் கைவிடவில்லை. அம்முழக்கத்தை முன்வைத்து 15 ஆண்டுகள் ஆன பின்னும் அது வெற்றி பெறவில்லை, வெற்றி பெறுவது தற்போதைய நிலையில் சாத்தியமில்லை என்ற பின்னணியில் 20வது மாநாட்டில்தான் அதைக் கைவிட்டோம். நமது கட்சியின் நலனில் நின்று, தேவைப்பட்டால், மாநிலங்களில் மதச்சார்பற்ற முதலாளித்துவ கட்சிகளுடன் தேர்தல் உறவு வைக்கலாம் என்று தீர்மானித்தோம்.
பிரச்னை என்ன? மாறி மாறி காங்கிரசும், பிஜேபியும் ஆட்சிக்கு வந்து கொண்டிருந்தன. இதர கட்சிகளைத் திரட்ட நாம் முயற்சித்துக் கொண்டிருக்கும்போது, நமது சொந்த பலம் வளரவில்லை. இந்த பலவீனம், இக்கட்சிகளைத் திரட்டவும் உதவவில்லை. தேர்தல் காலத்தில் தொகுதி உடன்பாடுகளை வெற்றிகரமாக்கவும் உதவவில்லை. சொல்லப்போனால் 2014 தேர்தலில், பல மாநிலங்களில் நம்முடன் உடன்பாடு கொள்ளவும் பல கட்சிகள் ஆர்வம் காட்டவில்லை.
மாநில முதலாளித்துவ கட்சிகள்:
இந்நிலைக்கு அடிப்படையான காரணம் என்ன என்றும் மீள் ஆய்வு நகல் அறிக்கை விவாதிக்கிறது. காங்கிரஸ் அல்லாத மதச்சார்பற்ற கட்சிகள் எதுவும் அகில இந்திய கட்சியாக இல்லை. அவை மாநில முதலாளித்துவ கட்சிகளாகத்தான் இருந்தன. 16வது, 17வது மாநாடுகளில் இக்கட்சிகள் குறித்துப் பரிசீலித்து, இவற்றின் குணாம்சம் மாறி வருகிறது என்று நிர்ணயித்தோம். இக்கட்சிகள் பிரதிநிதித்துவப்படுத்தும் மாநில முதலாளித்துவ சக்திகளின் ஒரு பகுதி பெரு முதலாளியாக, நவீன தாராளமயமாக்கலின் காரணமாக மாறிப்போனது. நவீன தாராளமய கொள்கைகளைத் தங்கள் நலனுக்கான வாய்ப்பாகப் பார்த்தார்கள். பெருமுதலாளிகளுக்கும் பெருமுதலாளிகள் அல்லாத முதலாளிகளுக்கும் இடையே நிலவிய முரண்பாடு மட்டுப்பட்டது. மாநில முதலாளிகளின் வர்க்க அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டபோது, அவர்கள் நலனைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் அணுகுமுறையில் அந்த மாற்றம் பிரதிபலித்தது. அந்நிய மூலதனம் குறித்த அவர்களின் பார்வை மாறி, மாநிலங்களில் நவீன தாராளமயத்தை நடைமுறைப்படுத்தும் சூழலை உருவாக்கியது. மத்திய அரசில் பங்கு பெறும் சூழல் என்பது, உறுதியான காங்கிரஸ் எதிர்ப்பு அல்லது உறுதியான பிஜேபி எதிர்ப்பை மாற்றி, அரசியல் சந்தர்ப்பவாத நிலைக்கு இட்டுச் சென்றது. இவற்றின் நிலைபாட்டை வைத்து, இவர்களை ஒன்றிணைப்பது அல்லது தள்ளி வைப்பது என்ற நிலையை நாம் எடுத்தோம். இதனால் சந்தர்ப்பவாதத்தின் சாயல் அல்லது தோற்றம் நம்மீதும் படிந்தது.
மதச்சார்பற்ற கட்சிகள் என்ற வார்த்தையை நாம் பயன்படுத்தினாலும், பிஜேபியுடன் அணிசேர, ஆட்சியில் பங்கேற்க இவை தயங்கவில்லை. எனவே, கூட்டுப் போராட்டங்களுக்கு வருவதற்கும் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. கிராமப்புறங்களில் உள்ள பணக்கார ஆதிக்க சக்திகளை இவை பிரதிநிதித்துவப்படுத்துவதால், இவற்றுடன் தொடர்ச்சியான தேர்தல் உறவுகள் நமது விவசாய இயக்க வளர்ச்சிக்கு உதவிகரமாக இல்லை. இந்த முரண்பாட்டை உரிய முக்கியத்துவத்துடன் நாம் கவனிக்கவில்லை. இதற்குப் பின்னும், ஒரு குறைந்தபட்ச திட்டத்தின் அடிப்படையில் இக்கட்சிகளை ஒன்றிணைக்க நாம் முயற்சித்தோம். அது தவறு.
மொத்தத்தில் இடது ஜனநாயக சக்திகளை அடையாளம் கண்டு திரட்டி, இடது ஜனநாயக முன்னணியைக் கட்டுவது என்ற கடமை தேசிய அளவில் பின்னுக்குப் போனதால், இயல்பாகவே மாநிலங்களிலும் அதற்கான அழுத்தம் உருவாகவில்லை. எனவே, மாநிலங்களிலும் இதற்குத்தான் முன்னுரிமை தர வேண்டும் என்று நகல் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. காங்கிரஸ் அல்லாத மதச்சார்பற்ற கட்சிகளுடன் தேசிய அளவில் அணி சேர்வது என்பது இன்றைய நிலையில் பொருத்தமில்லை, சாத்தியமும் இல்லை. எனவே, அகில இந்திய அரசியல் உத்தி காரணமாக, மாநிலங்களில் இவற்றுடன் தேர்தல் உடன்பாடு கொள்ள வேண்டும் என்ற நிர்ப்பந்தம் உருவாகாது. நமது கட்சியின் நலனுக்குத் தேவைப்பட்டால், இடது ஜனநாயக முன்னணியைக் கட்டவும், அத்தகைய சக்திகளைத் திரட்டவும் உதவும் என்றால், இடது அல்லாத இதர கட்சிகளுடன் மாநிலங்களில் தேர்தல் உடன்பாடு கொள்ளலாம். அப்போதும் கூட 17வது மாநாடு சுட்டிக்காட்டியுள்ள எச்சரிக்கையான அணுகுமுறை தேவை.
கட்சியின் சொந்த பலம் அதிகரிப்பு:
பொதுவாகக் கட்சி மற்றும் வர்க்க, வெகு மக்கள் அமைப்புகள், உறுப்பினர் எண்ணிக்கையில் உயர்ந்திருந்தாலும், இதில் பெரும் பகுதி 3 மாநிலங்களிலிருந்து வருவதுதான். புள்ளிவிவரங்கள் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. தற்போது மேற்கு வங்கத்திலும் பலவீனம் ஏற்பட்டிருக்கிறது. எனவே, இந்தியா முழுவதும் நமது சொந்த பலத்தை அதிகரிப்பது என்பது முன்னைக் காட்டிலும் தேவையானதாகிறது.
மேலும், நவீன தாராளமயக் கொள்கைகள் நகர்ப்புறத்திலும், கிராமப்புறத்திலும் நமது அணிக்கு வர வேண்டிய வர்க்கங்களின் மீது (தொழிலாளி வர்க்கம், விவசாயம் சார்ந்த வர்க்கங்கள், நடுத்தர வர்க்கம்) எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளன என்பதைத் திட்டவட்டமாக ஆய்வு செய்து, பொருத்தமான முழக்கங்களையும், போராட்ட வடிவங்களையும் தீர்மானிக்க வேண்டியிருக்கிறது. அகில இந்திய அளவில் நாம் ஏற்படுத்திய குழுக்கள் இத்தகைய ஆய்வை முடித்து அறிக்கைகளை அளித்திருக்கின்றன. இவை பரிசீலிக்கப்பட்டு, தேவையான அம்சங்கள் அரசியல் ஸ்தாபன அறிக்கையில் இணைக்கப்படும். இது நமது வளர்ச்சிக்கு உதவும்.
பொதுவாக நவீன தாராளமய நிகழ்முறை, இடதுசாரிகளை பலவீனப்படுத்தியுள்ளது. ஏகாதிபத்தியத்தின் இன்றைய முகமான உலகமயத்தை உறுதியாக எதிர்த்து நிற்கக் கூடிய இடதுசாரி சக்திகள் பலவீனம் அடைந்திருப்பது, ஜனநாயக மற்றும் வர்க்கப் போராட்டங்களை வலுவாக முன்னெடுப்பதிலும் பிரச்னைகளை உருவாக்குகிறது. இவற்றைப் புரிந்து கொண்டு சந்திப்பதற்கு ஏற்ற வகையிலும், அரசியல் ஸ்தாபன உத்தியைத் திறனுடன் நிறைவேற்றும் வகையிலும் ஸ்தாபனம் மேம்பட வேண்டும். இதற்கானதொரு பிளீனம், மாநாட்டுக்குப் பிறகு நடத்தப்பட்டு, முன்னேற்றம் காண முயற்சிக்கப்படும். நீண்ட காலம் செயல்பட்ட மேற்கு வங்க இடது முன்னணி அரசாங்கம், நவீன தாராளமயத்தை எதிர்கொள்ள முயற்சித்தபோது, தொழிற்சாலைகளுக்காக நிலம் கையகப்படுத்திய பிரச்னை, தவறான சமிக்ஞையைக் கொடுத்தது. கட்சியின் தோற்றத்தை பாதித்தது. எனவே கடந்த 10 ஆண்டுகளில் இந்த அரசு மேற்கொண்ட இத்தகைய முயற்சிகளையும் பரிசீலித்து எதிர்காலத்துக்கான படிப்பினைகளைப் பெற வேண்டும்.
இவை தவிர, அரசியல் நடைமுறை உத்தி தவறாக நடைமுறைபடுத்தப்பட்ட நிகழ்வுகளும் உண்டு. மீள் ஆய்வு அறிக்கையில் இவை விளக்கப்பட்டுள்ளன.
வகுப்புவாத அபாயத்தை சந்திப்பது எப்படி?
இந்த அம்சமும் அறிக்கையில் சுயவிமர்சனத்துடன் பரிசீலிக்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் வகுப்புவாத எதிர்ப்பு என்றால், தேர்தல் நேரத்தில் பிஜேபியை வீழ்த்துவது என்பதற்கே முன்னுரிமை அளிக்கப்பட்டது. இந்தப் புரிதலில் மாற்றம் ஏற்பட்டு, அனைத்துத் தளங்களிலும் அதை எதிர்த்துப் போராடுவதற்கான உத்தி உருவாக்கப்பட வேண்டும் என்று கூறுவதுடன் குறிப்பான வழிகாட்டுதலையும் நகல் அரசியல் தீர்மானம் முன்வைக்கிறது . 2005ல் நடந்த நமது 18வது மாநாடு, அது பிஜேபி தோல்வி அடைந்த நேரமாக இருந்தாலும், இந்துத்துவ வகுப்புவாத சக்திகளின் பலத்தைக் குறை மதிப்பீடு செய்துவிடக் கூடாது என்று கவனப்படுத்தியது. அவர்களது நடவடிக்கைகள் பல்முனை நடவடிக்கைகள். அன்றாடம் செய்யப்படுபவை. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இவை தொடரும். ஆட்சி அதிகாரத்தில் இருந்தால், அது முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளப்படும். தொடர்ச்சியான இந்நடவடிக்கைகளின் விளைவாக, ஒரு பகுதி மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. சிறுபான்மை மக்களின் மீதான தாக்குதல்களை நியாயம் என்று நினைக்கிறார்கள். இந்து மக்களின் வாழ்க்கை பாதிப்புக்கு சிறுபான்மை மக்கள் காரணம் என்பதும் இணைக்கப்படுகிறது. ஜெர்மனியில் ஹிட்லர் பின்பற்றிய பாதைதான் இது. அதேசமயம், இப்போக்கு சிறுபான்மை வகுப்புவாதத்தை வலுப்படுத்த உதவுகிறது. இதனையும் எதிர்க்க வேண்டும்.
எனவே, மதவெறிக்கு எதிரான நமது போராட்டம் பல தளங்களில் (அரசியல், சித்தாந்த, சமூக, பண்பாட்டு, கல்வித் துறைகளில்) நடக்க வேண்டும் என்பதுடன், வாழ்வுரிமை மீதான தாக்குதலை எதிர்த்த போராட்டத்துடன் ஒருங்கிணைந்து நடத்தப்பட வேண்டும். வாழ்வுரிமை சிக்கல்களுக்குக் காரணம், மோடி அரசு பின்பற்றும் பொருளாதார கொள்கைகள் என்பதை சுட்டிக்காட்டி, ஒன்றுபட்டுப் போராடினால்தான் நம்மைத் தற்காத்துக் கொள்ள முடியும் என்பதை விளக்க வேண்டும். மதத்தின் பேரால் பிரிந்து நின்றால் போராட்ட ஒற்றுமை சிதையும், போராட்டம் வீரியம் இழக்கும், தாக்குதல்கள் நம் மீது அதிகரிக்கும் என்ற வகையில் கொண்டு போவதுதான், ஒருங்கிணைத்து செய்யப்படுவது என்பதன் பொருளாகும். பேராபத்தாகக் கிளம்பியிருக்கும் மதவெறியை இடதுசாரிகள் மட்டும் எதிர்கொண்டுவிட முடியாது. மதவெறியை எதிர்த்த ஜனநாயக, மதச்சார்பற்ற சக்திகளை எல்லாம் ஒன்றுதிரட்டி ஒரு பரந்த மேடை உருவாக்கப்பட வேண்டும். நகல் அரசியல் தீர்மானம், கட்சிகள் என்ற வார்த்தையைப் பயன்படுத்தவில்லை, சக்திகள் என்றுதான் கூறுகிறது. கட்சிகள் இடம்பெறக் கூடாது என்பதல்ல. பல்வேறு அமைப்புகள், அறிவுஜீவிகள் உள்ளிட்ட மேடையில் கட்சிகளும் இருக்கலாம், மத நல்லிணக்கத்தில் நம்பிக்கை கொண்ட மதத் தலைவர்கள் கூட இருக்கலாம். கட்சிகள் என்றாலே, தேர்தல் அணியாக இருக்கும் என்ற தோற்றம் எழுகிறது. வகுப்புவாத எதிர்ப்பு மேடையைத் தேர்தல் கூட்டணிக்கான முன்னோட்டமாகப் பார்க்க வேண்டிய அவசியமில்லை.
இதர அம்சங்கள்:
இதற்கிடையே நாடாளுமன்றவாதம் போன்ற தவறான போக்குகளும் நமது முன்னேற்றத்துக்குத் தடையாக இருக்கின்றன. தேர்தல் பணிகளைப் புறக்கணிக்க வேண்டும் என்பதல்ல நமது வாதம். வெகுமக்கள் அமைப்புகளை பலப்படுத்தி, மக்கள் இயக்கங்களைப் பெருமளவில் வீச்சாக உருவாக்குவதற்கு பதிலாக, தேர்தல் குறித்த நடைமுறைகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்துவது உதவாது. நமது மக்கள் தளத்தை வலுப்படுத்துவதன் மூலம்தான், தேர்தலிலும் வெற்றி பெற முடியும். நமது சுயேச்சையான கொள்கைகளை முன்னிறுத்தினால்தான் அது சாத்தியம். தலையீடுகளில் கிடைக்கும் தொடர்புகளை அரசியல், ஸ்தாபன ரீதியான உறுதிப்படுத்துவது அவசியம். இன்றைய காலத்தில் தேர்தலில் சாதி, மதம், பணம் போன்றவை முன்னணி பங்கு வகிக்கும்போது, கொள்கைகள் பின் இருக்கைக்குத் தள்ளப்படும்போது, தேர்தல் சீர்திருத்தங்களுக்கான நமது குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும். எனவே, நமது உத்தியின் அடிப்படை அம்சம், கட்சியின் சொந்த பலத்தை அதிகரிப்பது, வர்க்க வெகுமக்கள் அமைப்புகளைப் போராடும் பிரம்மாண்ட சக்திகளாக மாற்றுவது, இடது ஜனநாயக சக்திகளை அணி சேர்ப்பது என்பதுதான். இவற்றை நோக்கியே நமது நடவடிக்கைகள் அமைய வேண்டும் என்று பரிசீலனை அறிக்கை விளக்குகிறது.
இந்த அடிப்படையில், 21வது மாநாட்டுக்கான நகல் அரசியல் தீர்மானம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பிஜேபியை எதிர்ப்பது பிரதான பணி. அத்துடன் காங்கிரஸ் எதிர்ப்பும் தொடரும். காங்கிரசுடன் அரசியல் மற்றும் தேர்தல் ரீதியான உறவு இல்லை. நவீன தாராளமய எதிர்ப்பு என்று சொன்னால் மத்திய அரசு கடைப்பிடிக்கும் கொள்கையை எதிர்த்தால் மட்டும் போதாது. மாநில அரசாங்கங்கள் மக்களுக்கும், தொழிலாளி வர்க்க நலனுக்கும் முரணாகக் கடைப்பிடிக்கும் கொள்கைகளும் எதிர்க்கப்பட வேண் டும். அதற்கான போராட்டங்கள் திட்டமிட்டு நடத்தப்படவேண்டும். எந்தக் கட்சியாக இருந்தாலும், அவை கடைப்பிடிக்கும் முதலாளித்துவக் கொள்கைகளிலிருந்து, கொள்கை ரீதியாக நாம் நம்மை வேறுபடுத்திக்காட்ட வேண்டும். பிரச்சாரங்களை நடத்த வேண்டும். அப்போதுதான், மாநிலங்களில் உழைப்பாளி மக்களை அணிதிரட்டி இடது ஜனநாயக மேடைக்கு அவர்களை ஈர்க்க முடியும். தேர்தல் என்று வரும்போது, இனி அகில இந்திய அளவில் காங்கிரஸ் பிஜேபிக்கு மாற்றாக, மாநில முதலாளித்துவ மதச்சார்பற்ற கட்சிகளை அணி சேர்ப்பது என்பது இருக்காது. மாநிலங்களில் தேவைப்பட்டால், நமது கட்சியின் நலனுக்கு உதவும் என்றால் இடதுசாரி அல்லாத கட்சிகளுடன் தேர்தல் உடன்பாடு வைக்கலாம். ஆனல் அது இடது ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைக்க உதவ வேண்டும். அதாவது தற்போது இறுதிப்படுத்தப்படும் அரசியல் நடைமுறை உத்தியின் தொடர்ச்சியாகவே தேர்தல் உத்தியும் அமையும்.
கட்சியின் சொந்த பலத்தை அதிகரிப்பதுதான் பிரதான நோக்கம் என்னும்போது, இதர முதலாளித்துவ கட்சிகளின் பின்னுள்ள மக்களை ஈர்ப்பதும் இதன் ஒரு பகுதிதான். மக்கள் பிரச்னைகளில், மாநில உரிமைகளைப் பாதுகாப்பதில், தேசத்தின் இறையாண்மை காப்பதில், ஏகாதிபத்திய எதிர்ப்பில் கூட்டுப் போராட்டங்களுக்கு காங்கிரஸ் அல்லாத மதச்சார்பற்ற கட்சிகளை அணுகும் முயற்சிகளை எடுக்க வேண்டும். பிரச்சனைகள் அடிப்படையில் தேவைப்படும் கூட்டு மேடைகளை உருவாக்கிக் கொள்ளலாம். அதேசமயம் வர்க்க, வெகுமக்கள் அமைப்புகளைப் பொறுத்தவரை கூட்டுப் போராட்டங்களின் மூலம் காங்கிரஸ், பிஜேபிக்குப் பின்னுள்ள மக்களையும் ஈர்க்க முயற்சிக்க வேண்டும் என்று அரசியல் தீர்மானம் வழி காட்டுகிறது.
நகல் அரசியல் தீர்மானம் இடது ஜனநாயக முன்னணியில் யார் யாரை இணைக்கலாம் என்று குறைந்தபட்ச பட்டியலைப் போடுகிறது. இதன் திட்டம் என்ன என்பதை விளக்குகிறது. கட்சியின் தளங்களாக இருக்கக் கூடிய மேற்கு வங்கம், திரிபுரா, கேரள கட்சியை வலுப்படுத்த வேண்டும். இது இடது ஜனநாயக முன்னணியை வலுப்படுத்தும் ஏற்பாடே. மேலும், இதனை உருவாக்குவது, இந்தியா முழுதும் ஒரே மாதிரியாக இருக்க வாய்ப்பில்லை. எனவே, 3 மாநிலங்களைத் தாண்டிய இதர மாநிலங்களில் மாநிலத் தன்மைக்கேற்ப இடது ஜனநாயக சக்திகளை அடையாளம் கண்டு ஒன்றிணைக்க வேண்டும். 10வது மாநாட்டின்போது தமிழகத்தில் திமுகவையும் ஜனநாயக உள்ளடக்கம் கொண்ட சக்தி என்ற முறையில், இடது ஜனநாயக மேடையில் இணைக்கலாம் என்ற கருத்து இருந்தது. ஆனால் பிற்பாடு நிலைமை வேறு. எனவே, தற்போதைய நிலையில் அத்தகைய சக்திகள் எவை என்பதை அடையாளம் காண வேண்டும். ஏற்கனவே உருவாகியிருக்கும் இடதுசாரி ஒற்றுமை மற்றும் கூட்டு இயக்கங்களை மேலும் பலப்படுத்த வேண்டும்.
ஏகாதிபத்திய எதிர்ப்பு இயங்கங்களை முன்னெடுக்க வேண்டும். இந்திய அரசியலில் வலதுசாரி திருப்பத்தை ஏற்படுத்தியுள்ள, ஆர்.எஸ்.எஸ். நெருக்கமாக ஒருங்கிணைந்து வழிகாட்டும் மோடி தலைமையிலான பிஜேபியின் மக்கள் விரோத, மதவெறி நடவடிக்கைகளை முறியடிக்க இடைவிடாமல் முயற்சிக்க வேண்டும். உருவாகி வரும் சர்வாதிகாரப் போக்குகளை அம்பலப்படுத்த வேண்டும். மதவெறி நிகழ்ச்சி நிரலை எதிர்கொள்ள சமூக, கலாச்சார, தத்துவார்த்த, கல்வி துறைகளில் மதவெறி எதிர்ப்பைக் கட்டுவதில் கவனம் செலுத்த வேண்டும்.
தலித், ஆதிவாசி, சிறுபான்மை மக்கள் மீதான சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களை முழு வீச்சுடன் நடத்த வேண்டும். பெண்கள் மீதான அதிகரிக்கும் தாக்குதல்களுக்கு எதிராகத் தலையீடுகளை வலுவாக மேற்கொள்ள வேண்டும். மிகவும் ஒடுக்கப்பட்டுள்ள இம்மக்களைத் திரட்டுவதற்கு மட்டுமல்ல, அடையாள அரசியலை எதிர்கொள்வதிலும் இத்தலையீடுகள் முக்கியப் பங்காற்றும்.
நிறைவாக……
- அனைத்துப் பகுதி உழைக்கும் மக்களின் தீரம் மிக்க போராட்டங்களை உருவாக்கி நடத்துகிற துடிப்பான, எழுச்சியான கட்சியாக மார்க்சிஸ்ட் கட்சியை முன்னிறுத்துவோம்!
- கட்சியின் மார்க்சிய லெனினிய சித்தாந்த அஸ்திவாரத்தை பலப்படுத்துவோம்!
- மேற்கூறிய கடமைகளை நிறைவேற்றும் வல்லமை பெற்றதாகக் கட்சி ஸ்தாபனத்தை மேம்படுத்துவோம்!
என்ற அறைகூவலை, கட்சி அணிகளின் முன் நகல் அரசியல் தீர்மானம் வைக்கிறது.
அரசியல், பொருளாதாரமானாலும், பண்பாட்டுத் தளமாக இருந்தாலும், சமூக ஒடுக்குமுறையாக இருந்தாலும், பாகுபாடுகளுக்கு எதிரான முதல் குரல் மார்க்சிஸ்ட் கட்சியுடையதுதான். தியாகிகள் சொரிந்த ரத்தம் புரட்சிகர பயண வழியெங்கும் சிந்திக் கிடக்கிறது. மார்க்சியம் அந்தப் பயணத்திற்கான ஒளியைப் பாய்ச்சுகிறது. எது நடந்தாலும் துணிச்சலாக முன்னேபோவது நமது தோழர்கள்தான். சுரண்டப்படும் எண்ணற்ற மக்களின் விடுதலைக்கான திட்டம் நமது கையில் இருக்கிறது. இன்னும் எதற்காகக் காத்திருக்க வேண்டும்? தடைகளைத் தகர்த்து, குறைகளைக் களைந்து முன்னேறுவோம் என்கிற நம்பிக்கையை அரசியல் தீர்மானம் அளிக்கிறது.