மார்க்சிசம், தேசியம் மற்றும் அடையாள அரசியல்

தற்கால வரலாற்றிலிருந்து சில குறிப்புகள்

– அர்ச்சனா பிரசாத்

தமிழில் : ச.லெனின்

(2017 செப்டம்பர் 12ஆம் தேதி எரிக் ஜெ. ஹாப்ஸ்வாம் அவர்களின் பிறந்த தின நூற்றாண்டையொட்டி கேரள சாகித்ய அகாதமியும், ஜன விகாஷ்கராவும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் அர்ச்சனா பிரசாத் ஆற்றிய உரையின் குறிப்பே இக்கட்டுரை)

ஹாப்ஸ்வாம் வரலாற்றியியலாளர்களின் கலங்கரை விளக்காக மட்டுமல்ல; உலக உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகளுக்காக குரல் கொடுத்த, மக்களுக்கான வரலாற்றியலாளராவார். தனது பொருளாதார மற்றும் அரசியல் வரலாற்று ஆய்வுகளின் மூலம், தற்காலத்தில் நாடுகளுக்கிடையேயும், ஏகாதிபத்தியம் மற்றும் மக்கள் இயக்கங்களிலும் ஏற்பட்டு வரும் மாற்றங்களை அவர் வெளிக்கொணர்ந்தார். குழப்பமான சமூக சூழலும், சமூக பதட்டமும், குறுகிய தேசியவாத போக்கும், வர்க்கமற்ற அடையாள அரசியல் வளர்ந்திட இடம் தந்துள்ளது. இவை குறித்து ஆய்வு செய்திட, இக்கட்டுரையில் ஹாப்ஸ்வாம் போன்ற மார்க்சியர்களின் ஆய்வு முறையை பயன்படுத்தியுள்ளேன்.

குறுகிய தேசிய வாதமும், வர்க்கமற்ற அடையாள அரசியலும் பெரும்பான்மை தேசியவாத கருத்துக்களால் உந்துதல் பெற்று பல சமூக குழுக்களை ஆதிக்கம் செய்ய எத்தனிக்கின்றன. இதன் மூலம் சிறுபான்மையினரை அரசியல் ரீதியாக தனிமைப்படுத்துகின்றனர். மேலும் அவை புதிய தாராளமய கொள்கைகளை ஆதரிப்பதன் மூலம் கார்ப்பரேட், தனியார் பெருநிறுவனங்களுக்கு சாதகமாகவே நிற்கின்றன. இது சமூகத்தில் ஏற்றத்தாழ்வை மேலும் விரிவுபடுத்தியுள்ளது. இவை கலாச்சார ரீதியாக குறிப்பான தன்மைகளை கொண்ட பல்வேறு போராட்டங்களாக வெளிப்படுகிறது.

அரசியல் கலாச்சாரம் மற்றும் முதலாளித்துவத்துடனான அதன் உறவு பற்றி, தற்கால மார்க்சிய புரிதலின் அடிப்படையில், வர்க்கம், தேசியம் மற்றும் அடையாள அரசியல் ஆகியவைக்களுக்கிடையிலான தொடர்புகள் பற்றியதே இக்கட்டுரை.

தேசியம் பற்றிய பார்வை

1

கலாச்சார ரீதியான அரசியல் வெளிப்பாடு என்பது, குறிப்பட்ட சமூகத்தின் சமூக கட்டமைப்புடன் நெருக்கமான தொடர்புடையதாகும். அந்தோனியோ கிராம்ஷி, எரிக் ஹாப்ஸ்வாம் மற்றும் பெனடிக்ட் ஆண்டர்சன் உள்ளிட்ட மார்க்சிய சிந்தனையாளர்கள், முதலாளித்துவத்திற்கு உள்ளேயே நிகழும் மாற்றங்களுக்கும், அரசியல் இயக்கங்கள் பயன்படுத்தும் கலாச்சார வெளிப்படுத்தலுக்கும் உள்ள உறவுகளை விளக்கியுள்ளனர். உதாரணமாக, “தேசியம்” குறித்த ஹாப்ஸ்வாமின் பங்களிப்பில் அரசியலும், கலாச்சாரமும் எவ்வாறு ரஷ்ய புரட்சிக்கு பிறகு மாற்றம் கண்டது என்பதை விளக்குகிறார்.

எனவே அரசியல் நோக்கங்கள் கொண்ட கலாச்சார வெளிப்படுத்தலை வெறும் முதலாளித்துவ தன்மை கொண்டதாக மட்டுமே பார்க்க முடியாது என்கிறார். இதற்கு முன்பாகவே அரசியல் கலாச்சாரம் என்பது வர்க்க போராட்ட கட்டமைப்பில் தனித்தன்மையுடன் பங்காற்றியுள்ளது என்பதையும் அடையாளப்படுத்தியுள்ளனர். கலாச்சாரம், அதிகாரம் மற்றும் வர்க்கம் ஆகியவைகளுக்கு இடையான உறவுகள் குறித்து முன்பே கிராம்ஷி விளக்கியுள்ளார்.

இந்த வெளிச்சத்தில்தான் ஆண்டர்சனும், ஹாப்ஸ்வாமும் தேசியம் பற்றி ஒவ்வொரு வர்க்கமும் ஒவ்வொரு பார்வை கொண்டிருக்கும் என்றும், அதற்கிணங்கவே அவை வெவ்வேறு விதமான அரசியல் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் என்கின்றனர். இவைகளை ரஷ்ய புரட்சியின் வெளிப்பாடுகளை கொண்டே விவாதிக்கின்றனர். ரஷ்ய புரட்சி மேற்கத்திய முதலாளித்துவ விரிவாக்கத்தை தடுத்தது. ஏகாதிபத்திய நாடுகளிடமிருந்து விடுபடுவதற்கும், தங்களின் சுய நிர்ணய உரிமையை பாதுகாத்துக் கொள்வதற்கும் எல்லா நாடுகளுக்கும் உரிமையுண்டு என்பதை அங்கீரித்து ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்கள் அனைத்தையும் ரஷ்யா ஆதரித்தது.

ஒடுக்கப்படும் தேசங்களின், தேசிய விடுதலை போராட்டங்களை ஆதரிப்பதென்பது, ஒருங்கிணைந்த சர்வதேச மூலதனத்தை பலவீனப்படுத்துவதற்கும், சர்வதேச உழைக்கும் வர்க்கத்திற்கு எதிரான அதன் முரண்பாடுகளை அதிகப்படுத்துவதற்கும் உதவும் என்கிற லெனின் முன்மொழிவை அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

தேசமும் தேசியமும்

தேசமும், தேசியமும் வரலாற்று ரீதியாக பரிணமித்து வளர்ந்த குறிப்பிடத்தக்க அரசியலே அன்றி, அவை வரலாற்று ரீதியாக தேங்கிக் கிடந்த பழங்கால கலாச்சார முறைமை அல்ல. அவர்கள் லெனினியத்தையும் தாண்டி, தேசியம் குறித்து, வெவ்வேறு வர்க்கங்கள், வெவ்வேறு விதமாக கருத்துக்களை முன்வைக்கும் என்பதை புரிந்து கொள்ள சில கருதுகோள்களை எடுத்து வைத்தனர்.

இத்தகைய கலாச்சார ரீதியான வெளிப்படுத்தல் பல நேரங்களில் போராட்ட வடிவம் எடுத்து, மேலாதிக்கத்திற்கு எதிராக வலுவான எதிர்வினையை ஆற்றும். அதே நேரம் அது கட்டாயம் தேசியவாதம் என்கிற அளவிற்கு இருக்க வேண்டியதில்லை. இவை அவர்களின் சமூக பின்னணிக்கேற்ப “அடையாள (அரசியல்) இயக்கங்களாக” தனித்துவத்தோடு இருக்கும். தேசியமும், அடையாள அரசியலும் இயல்பாக ஆளும் வர்க்கத்தின் சதியாக இருக்கும். அக்டோபர் புரட்சிக்கு பிறகு இவை இரண்டுமே முதலாளித்துவத்திற்கு எதிரான இறுதி யுத்தத்தின் ஒரு பகுதியாக தொழிலாளி வர்க்கத்தால் பயன்படுத்தப்பட்டது. தத்துவார்த்த ரீதியாக பார்த்தால், குறுகிய தேசியவாதம் மற்றும் சமூக ரீதியான அரசியல் ஆகியவற்றில் உள்ள ஆதிக்கத்திற்கு எதிரான ஆற்றலை நாம் பயன்படுத்த இயலும்.

“மார்க்சியமும், தேசிய இன பிரச்சனைகளும்” என்ற புத்தகத்தில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளது போல், வலுவான உழைக்கும் வர்க்கத்தின் ஒற்றுமையால் மட்டுமே இந்த ஆற்றலை நாம் பயன்படுத்த முடியும். சோவியத்துகளும், சோவியத்தின் கம்யூனிஸ்ட் தலைமையும் உழைக்கும் வர்க்கத்திற்கு வர்க்க உணர்வை ஊட்டும்போதே தேசிய இனம் குறித்த தீர்மானம் உண்மை வடிவம் பெறும் என்றார்.

அடையாள அரசியல்

இவ்வாறாக, புரட்சிக்கு பிந்தைய அரசியல் கலாச்சாரம் பற்றிய புரிதல், தற்கால ஆளும் வர்க்கத்தின் தேசம் மற்றும் அடையாள அரசியல் குறித்து அது கேள்வி எழுப்பியது. ஆதிக்கத்திற்கு உட்பட்ட அனைத்து தேசியம் மற்றும் அடையாளம் குறித்தும் கேள்வி எழுப்பியது. தேசியத்தையும், அடையாளத்தையும் சமூக, கலாச்சார உணர்வின் அடிப்படையில் தவறாக புரிந்து கொள்ளக் கூடாது. எல்லையை தாண்டி வர்க்கத்தின் ஆதிக்கத்தை நிறுவ முயலும்போது அதை நாம் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். ஒரு சமூகத்தில் தொழிலாளி வர்க்கத்திடம் நிலவும் வர்க்க உணர்வின் அளவே, தேசியம் மற்றும் அடையாளம் போன்ற அரசியல் வெளிப்பாட்டு தன்மையை தீர்மானிக்கும். தேசிய, இனம் குறித்த வரையறையை சோவியத் யூனியன் உருவாக்கியபோது இதை பார்க்க முடிந்தது.

தனித்த போராட்டங்கள் மற்றும் கலாச்சார அரசியலை புறந்தள்ளிவிட முடியாது. “புரட்சியை முன்னிறுத்தும் வர்க்க போராட்டத்திற்கு இவை மாற்றாக அமையாது என்ற போதும் அதற்கான களத்தையும், போராட்டத்திற்கான முரண்களை உந்தித்தள்ளும்” என்கிறார் கிராம்ஷி. எனவே நிலவும் குறுகிய தேசியவாதமும், பல்வேறுவிதமான போராட்டங்களும் இதற்கு உதவுகிறதா இல்லையா என்று பார்க்க வேண்டும். உதவுகிறது என்றால் வர்க்க அடிப்படையில் செயல்படும் இயக்கம் எவ்வாறு அதை அணுக வேண்டும்? எந்த வகையிலான வழிமுறைகளை அது கையாள வேண்டும் என்பதை விவாதிக்க வேண்டும்.

வர்க்கப் போராட்டத்தின் முதல் படி

2

நவீன இந்திய தேசம் என்ற கருத்தாக்கமே ஏகாதிபத்தியத்திற்கு எதிரான தேசிய இயக்கத்தில் இருந்துதான் பிறந்தது. காந்தியின் வருகைக்கு முன்பு வரை தேசிய இயக்கம் என்பது கட்டுப்படுத்தப்பட்ட, சுய சிந்தனையற்றவர்களை பெரும்பான்மையாகக் கொண்டதாகவே கருதப்பட்டது. காந்தியின் வருகைக்கு பிறகே விவசாயிகள், தொழிலாளர்களின் பங்கேற்பை விடுதலைப் போராட்டத்தில் அதிகம் காண முடிந்தது. காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியின் இருத்தல் என்பது பல்வேறு விவாதங்களுக்கு பிறகு இந்தியா என்கிற கருத்தாக்கத்தை உத்தரவாதப்படுத்தியது. அரசியல் விடுதலைக்கான போராட்டம்தான் வர்க்க போராட்டத்திற்கான முதல்படி என்பதை தொழிலாளி வர்க்கம் அங்கீகரித்தது. காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியை நிறுவிய ஐம்பதாவது ஆண்டையொட்டி இஎம்எஸ் நம்பூதிரிபாட் மார்க்சிஸ்ட் (ஆங்கிலம்) இதழில் எழுதியபோது, காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியின் திட்டத்திலிருந்து கீழ்க்காணும் குறிப்பை சுட்டுகிறார்.

“தேசிய இயக்கத்தை உண்மையான ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கமாக வார்த்தெடுப்பதே நமது உடனடி இலக்கு. இயக்கத்தின் இலக்கு, அந்நிய சக்திகளிடமிருந்து விடுதலைக்காகவும், உள்நாட்டு பிரத்தியேக சுரண்டல் முறைக்கு எதிராகவும் இருக்க வேண்டும். இதற்கு தற்போதைய முதலாளித்துவ தலைமையை ஒதுக்கி புரட்சிகர சோஷலிச தலைமையிடம் அதை கொண்டு வர வேண்டும். அதை சாத்தியமாக்க மார்க்சிய சோஷலிஸ்டுகள் காங்கிரசுக்குள்ளிருந்தே ஒழுங்கமைந்த அமைப்பாக செயல்படுவது அவசியம். வேறு வார்த்தைகளில் சொல்வதானால் இந்த இலக்கை நிறைவேற்ற நமது கட்சியால்தான் முடியும். காங்கிரஸ் கட்சிக்குள் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்துவதும், தெளிவுப்படுத்துவதும் நமது கட்சியின் பலம் மற்றும் செயல்பாட்டையே சார்ந்துள்ளது. இந்த இலக்கை சாத்தியப்படுத்த நாட்டில் உள்ள ஏகாதிப்பத்தியத்திற்கு எதிரான அனைத்து சக்திகளையும் ஒருங்கிணைத்திட வேண்டும்”.

காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி உருவாக்கம்

காங்கிரசின் செயல்பாட்டை கொஞ்சம் தீவிரத்தன்மை கொண்டதாக மாற்றுவது, காங்கிரசிற்கு அப்பாற்பட்ட வெகுஜன அரசியலை கையாள்வது போன்றவையே காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியின் உருவாக்கத்திற்கான காரணம் என்பதை இ.எம்.எஸ் தெளிவாக சுட்டிக்காட்டுகிறார். காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியில் இருந்த கம்யூனிஸ்டுகள் தொழிற்சங்கத்தையும், விவசாயிகள் சங்கத்தையும் கட்டி எழுப்பி காங்கிரசின் திட்டத்தை தீவிரத் தன்மை கொண்டதாக மாற்ற அழுத்தம் கொடுத்தனர். சோஷலிச சமூகத்தை கட்டி எழுப்பும் வகையில் பிரிட்டிஷாரிடமிருந்து முழுமையான விடுதலை என்பதை காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியினர் குறி இலக்காக கொண்டிருந்தனர். காங்கிரசுக்குள் சோஷலிச திட்டங்களுக்கு பரவலான ஏற்ப்பை உருவாக்கவும், வெளியில் வலுவான விடுதலை போராட்டத்தை முன்னெடுக்கவும் தொழிலாளர்கள், விவசாயிகளை திரட்ட திட்டமிட்டனர்.

தேசம் குறித்த தொழிலாளி வர்க்க பார்வை இந்துஸ்தான் சோஷலிஸ்ட் ரிபப்ளிகன் ஆர்பியிடம் இருந்தது. அது தனது திட்டத்தில் “நாங்கள் திட்டமிடும் புரட்சி என்பது, அரசுக்கு எதிரான மோதலாக மட்டும் இருக்காது. இது ஒரு புதிய சமூக அமைப்பை நோக்கி இட்டுச் செல்லும். புரட்சி முதலாளித்துவத்திற்கு சாவு மணி அடித்து வர்க்க வேற்றுமையை ஒழிக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக அது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிறுவி, சுரண்டும் வர்க்கத்தை அதிகாரத்திலிருந்து விரட்டியடிக்கும்” காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி மற்றும் காந்திய வழிமுறைகள் மீதும் இந்த அமைப்பு அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தாலும், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களை கம்யூனிஸ்டுகள் திரட்டியது ஏகாதிபத்தியத்திற்கு எதிரான மக்கள் இயக்கங்களுக்கு ஆதரவு கொடுத்திட காங்கிரசில் இருந்த முதலாளித்துவ தலைமையை நிர்பந்தித்தது. இது அரசியல் அமைப்பு சட்டத்தின் கொள்கைகளை உருவாக்குவதற்கும், நாடாளுமன்ற, சட்டமன்ற அமைப்பு முறையை உருவாக்குவதற்கும் அழுத்தம் கொடுத்தது.

பின்னுக்குத் தள்ளப்பட்ட பெரும்பான்மை கலாச்சார தேசியவாதம்

அரசியல் அமைப்பின் பிரதான அம்சம் தாராளவாத முதலாளித்துவவாதிகளின் தேசியத்திற்கு ஆதரவாகவே உருவாக்கப்பட்டிருந்தாலும், அதன் அடிப்படை குணாம்சம் என்பது கலாச்சார தேசியம் சார்ந்ததல்ல. அது பன்முகப்பட்ட கலாச்சார குணாம்சங்களை கொண்டது. தொழிலாளி வர்க்கத்திற்கு போராடும் உரிமையை அது வழங்குகிறது. குறிப்பாக கூட்டுபேர உரிமையை அங்கீகரித்தல், நிலப்பிரபுத்துவ ஒழிப்பு, பன்முகப்பட்ட கலாச்சாரத்தை அங்கீகரித்தல்,அரசியல் சாசனத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளிட்டவைகளை குறிப்பிடலாம். அதேசமயம் இந்த சாசனத்தை உருவாக்குவதில் ஒரு கம்யூனிஸ்ட் இல்லாததன் விளைவு அது முதலாளிகளுக்கு ஆதரவான ஒன்றாக அமைந்தது. அதே நேரம் பொது தளத்தில் சமூக ஜனநாயக கருத்துக்களே ஆதிக்கம் செலுத்தியது. உழைக்கும் மககளை அணிதிரட்டி, பெரிய அளவிலான இயக்கங்களை இந்திய கம்யூனிஸ்ட்டுகள் நடத்தியதே இதை சாத்தியப்படுத்தியது. இதுவே ஆர்.எஸ்.எஸ், இந்து மகா சபாவின் தலைமை முன்வைத்த கலாச்சார பெரும்பான்மை தேசியவாதத்தை பின்னுக்குத் தள்ள முக்கியக் காரணமாக அமைந்தது.

பல்வேறு குழுக்களின் நலன்களை ஒருங்கிணைப்பதில் உள்ள ஏற்ற இறக்கங்கள், தங்களது அடையாளத்தையும், கலாச்சார வெளிபபடுத்தலையும் முன்வைக்கும் போராட்டமாக பரிணமித்தது. இருபதாம் நூற்றாண்டின் முதல் கால் பகுதியில் இதுபோன்ற கலாச்சார வெளிப்படுத்தல் பெரும்பகுதியான தலித் மற்றும் ஆதிவாசி மக்களை திரட்டுவதில் முக்கிய பங்காற்றியது. பெரும்பான்மை அடையாளங்கள் அவர்களை ஆதிக்கம் செலுத்தும் அரசியலுக்கு எதிரானதாக இது உருவானது. 1970களுக்கு பிறகு குஜராத் மற்றும் பீஹாரில் இந்துத்துவ தேசியவாதிகள் தங்களின் அரசியல் அமைப்பை மறுசீரமைப்பு செய்து கொண்டபோது இது மேலும் வலுப்பெற்றது. மத்திய இந்தியாவில் ஒடுக்கப்பட்ட பிரிவினரில் உள்ள மேம்பட்ட பகுதியினரை தங்களின் வளையத்திற்குள் உள்ளடக்க பெரும்பான்மை தேசியவாதத்தினர் முனைந்தபோது அடையாள அரசியல் இதற்கு எதிராக நின்றது.

அடையாள அரசியல்

முதலாளித்துவ அரசின் குறிப்பிட்ட பிரிவினரின் நலனுக்காக செயல்படுவது என்பது, பலதரப்பட்ட தொழிலாளி வர்க்கத்தின் கோரிக்கைகளின்பால் அரசின் அணுகுமுறையின் மூலம் வெளிப்படுகிறது. ஒடுக்கப்பட்ட சமூக குழுக்களின் துவக்க கால போராட்டத்திற்கு எதிரான செயல்களே இதை உறுதிப்படுத்தியது. அரசின் இத்தகைய செயல்பாடு அடையாள அரசியலை மேலும் வலுப்படுத்தியது. நீண்டகால ஓட்டத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் பெரும்பான்மையானோர் முதலாளித்துவ அமைப்பு முறையின் அதிகார வரைமுறையின் கீழ்நிலையிலேயே இருந்தனர். இது சமூகங்களுக்குள்ளேயே மாற்றங்களையும், வர்க்கமற்ற அரசியலையும் உருவாக்கியது.

மார்க்சியர்கள் அல்லாதவர்களால் ஆதிவாசி மற்றும் தலித் பிரிவினரிடையே உள்ள ஏற்றத்தாழ்வுகளையும், மற்றும் வளர்ந்துவரும் முரண்பாடுகளையும் காண இயலாது. தற்கால முதலாளித்துவத்தில் பெரும்பகுதி வேலையற்ற தொழிலாளர்கள் கூட்டமாக உருவாகி நிற்கும் தலித் மற்றும் ஆதிவாசி உழைக்கும் மக்களின் பிரச்சனைகளையும் அவர்களால் எதிர்கொள்ள இயலாது.

வர்க்க பார்வையற்ற அடையாள அரசியலால் வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்ட சமூகங்கள் மீது அக்கறையோடு செயல்பட்டு அவர்களை சிறிது பாதுகாக்கலாம். ஆனால் சமூக பார்வையுடன் கூடிய, அடிப்படையான சமூக மாற்றத்தை உருவாக்க அவர்கள் முனைவதில்லை. அதேசமயம் இப்போது ஒடுக்கப்பட்ட, சமூகங்களுக்கு கிடைக்கப்பெறும் சிற்சில உரிமைகளும், வாய்ப்புகளும் நீண்டகால போராட்டத்திற்கு பிறகே கிடைக்கப் பெற்றது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே இடது மற்றும் ஜனநாயக இயக்கங்கள் இதை வரவேற்று ஏற்க வேண்டும். வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்ட சமூக குழுக்களுக்கு கல்வி, வேலை உள்ளிட்டவைகளில் சம வாய்ப்பு என்கிற கோரிக்கை என்பது வர்க்க அடிப்படையிலான இடது மற்றும் ஜனநாயக போராட்டங்களுக்கும் முக்கியமான அம்சமாகும்.

3

சமூக குழுக்கள் தலைமையிலான போராட்டங்கள் மற்றும் வர்க்க அடிப்படையிலான போராட்டங்களுக்கிடையிலான உறவு குறித்த மறுபரிசீலனையை செய்வதற்கான கட்டாயத்தை இடது மற்றும் அதன் கிளை அமைப்புகளின் பெருந்திரள் போராட்டங்கள் உருவாக்கியது. இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய காலத்தில் நடைபெற்ற தெபேகா, தெலுங்கானா மற்றும் வார்லி போராட்டங்கள் இதற்கு சிறந்த உதாரணமகும். விடுதலைக்கு பிறகு நடைபெற்ற வார்லி மற்றும் திரிபுரா இயக்கங்கள் வர்க்க மற்றும் சமூக அமைப்புகளுக்கிடையிலான உறவுகளை பகுப்பாய்வு செய்ய உதவியது. விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் இடையேயான உறவுகளை வலுப்படுத்த தலித் மற்றும் ஆதிவாசி இயக்கங்கள் உதவிடும் என்ற புரிதல் ஏற்பட்டது. பல்வேறு குழுக்களின் தனித்தனி நலன்கள் மற்றும் உரிமைகளுக்கான கோரிக்கைகளை ஒருங்கிணைத்தல் என்பது பெரிய அளவிலான வர்க்க போராட்டத்தை கட்டியமைத்திட இடதுசாரிகள் தலைமையிலான விவசாய இயக்கத்திற்கு தேவையான முக்கியமான உள்ளீடாகும்.

கிராமப்புற தொழிலாளி வர்க்கம்

1980-ல் விவசாய தொழிலாளர்களுக்கான தனி அமைப்பு துவக்கப்பட்டது. அது தலித் மற்றும் ஆதிவாசி மக்கள் கிராமப்புற தொழிலாளி வர்க்கம் என்பதை அங்கீகரித்தது. விவசாய தொழிலாளர் சங்கத்தின் கொள்கை அறிக்கையில் “விவசாய இயக்கத்தை கட்டி எழுப்புவதில் விவசாய தொழிலாளர்கள் முக்கிய பங்கு வகித்தனர். நகர்ப்புற தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளிடம் ஒரு இணைப்பை அவர்கள் உருவாக்குகின்றனர். அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியகாவும் அவர்கள் மிகவும் மோசமான சுரண்டலுக்கு உள்ளாகின்றனர். இவர்களில் பெரும்பகுதியானவர்கள் தலித் மற்றும் ஆதிவாசியினரே. சமூக ரீதியாக சாதி இந்துக்களின் (ஆதிக்க சாதி) கைகளில் சிக்கிக்கொண்டு கடுமையான கொடுமைகளை எதிர்கொள்கின்றனர். விவசாய தொழிலாளர்கள் என்பவர்கள் தனி வர்க்கம் என்பதால், விவசாய தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்பு மற்றம் கூலி உயர்வுக்கான இயக்கங்களையும் தனியாக கட்டி எழுப்ப வேண்டியுள்ளது”. தலித் மற்றும் ஆதிவாசி விவசாய தொழிலாளர்களுக்கு, விவசாயிகளுடன் உள்ள இணைப்பை சாத்தியப்படுத்த, நிலத்திற்கான போராட்டத்தையும், நில சீர்திருத்தத்திற்கான கோரிக்கையும், அனைத்து ஊரக மற்றும் நகர்ப்புற தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு என்கிற கோரிக்கையையும் முன்நிறுத்த வேண்டும்.

4

ஆளும் வர்க்கம், ஆதிக்க தேசியவாதத்தின் மூலமாக கடந்த 20 ஆண்டுகளாக வேகமாக வளர்ந்து வரும் இந்து கலாச்சார தேசியம் என்பது கம்யூனிஸ்ட்டுகள் முன்னுள்ள பிரதான சவாலாகும். கலாச்சார தேசியத்தின் வரலாற்று ரீதியான வளர்ச்சியே இந்து ராஷ்ட்ரா என்கின்றனர். வரலாற்றியியலாளர்களின் ஆய்வின்படி மயூரிய சாம்ராஜ்ஜியத்திற்கு முந்தைய காலம் வரை ஆதிக்கம் செலுத்திய இந்து சமூகமோ, இந்து வாழ்க்கை முறையோ கிடையாது. மதத்தை பயன்படுத்தி அடுத்தடுத்து வந்த ஆட்சியாளர்கள் உழைக்கும் திரளில் இருந்து அடிமைகளையும், போர் வீரர்களையும், அதிகமான தானியங்களையும், அதிகமான பணத்தையும் அடைந்தனர். ஆயுத பலத்தை பயன்படுத்தியோ, நிர்பந்தித்தோ இதை அடையாமல் மதம் என்னும் தத்துவத்தை பயன்படுத்தி எளிதாக இதை அடைந்தனர். இதை ஏற்காமல், தங்களின் குறுகிய அரசியல் ஆதாயத்திற்காக ஆர்.எஸ்.எஸ் வரலாற்றை தவறாக முன்நிறுத்துகின்றனர்.

தாய் மதத்திற்குத் திரும்ப வைப்பது

அனைவரையும் உள்ளடக்கிய ஆன்மீக ஜனநாயகம் இங்கு உண்டு என்கின்றனர் இந்துத்துவ தேசியவாதிகள். 1980களுக்கு பிறகு தங்களது சமூக தளத்தை விரிவுபடுத்தாமல் ஆதிக்கத்தை நிலைநாட்ட முடியாது என்பதை அவர்கள் புரிந்துக் கொண்டனர். எனவே தலித் மற்றும் ஆதிவாசி மக்களிடம் குறிப்பிட தகுந்த பணிகளை அவர்கள் மேற்கொண்டனர். இது தலித் மற்றும் மலைவாழ் மக்களிடையே ஊடுருவ அவர்களுக்கு வாய்ப்பளித்தது. உதாரணமாக வட இந்தியாவில் முதலில் தலித் மக்களை ஒருங்கிணைக்க ஒரு தளத்தை உருவாக்கி பிறகு தாய்மதம் திரும்ப வைப்பது என்கிற திட்டத்தின்படி செயல்பட்டனர். 2015-ல் கிராம அளவில் குழுக்கள் அமைத்து சாதிய பாகுபாட்டை முடிவுக்கு கொண்டுவருவது என்றும், அதன்பிறகு அடுத்த நகர்விற்கு செல்வது என்று ஆர்.எஸ்.எஸ் முடிவு செய்துள்ளது. முதல் முறையாக 75,000 கிராமங்களில் ஆர்.எஸ்.எஸ் மாவட்ட அளவில் கூட்டங்கள் நடத்தியுள்ளுது. குறிப்பாக தேர்தல் நடந்துள்ள பஞ்சாப், உத்திரப்பிரதேசத்தில் கவனம் செலுத்தியுள்ளனர்.

இக்குழுக்கள் ஆதிக்க சாதியினரிடம் உரையாடல்களை நடத்த துவங்கிவிட்டதாகவும், “ஒரு கிராமம், ஒரே கிணறு, ஒரே சுடுகாடு” என்கிற முழக்கத்தை முன்வைத்து தங்களை சாதியத்திற்கு எதிரானவர்களாக காட்ட முயற்சிக்கிறது. இதை நியாயப்படுத்த அம்பேத்கரை இஸ்லாமியர்கள் மற்றும் கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிரானவர்களாக காட்ட முயற்சிக்கின்றனர்.

சமூக ஒற்றுமை என்ற போலி பிரச்சாரம்

இந்துயிசம் தான் தீண்டாமைக்கான ஆரம்பப் புள்ளி என்பதை தலித் இயக்கங்கள் வலுவாக முன்வைப்பதை எதிர்கொள்ள, அம்பேத்கர் சமூக ஒருமைப்பாட்டையும், ஒன்றுப்படட இந்து சமூகத்தையுமே விரும்பினார் என்று அம்பேத்கரின் 125வது பிறந்தநாளை முன்வைத்து பரவலாக பிரச்சாரம் செய்தனர். சமூக ஒற்றுமை என்பதை மட்டும் பேசி சமூக சேவை மற்றும் ஆதிக்க சாதியினருடன் ஒரு சமரசத்திற்கும் அவர்கள் சென்றனர். அதாவது, தலித் மக்கள் இந்து சமூகத்திற்குள் ஒருங்கிணைக்கப்படுவது என்பது ஆதிக்க சாதியினரின் கட்டளைகளை அவர்கள் ஏற்கும் பட்சத்தில்தான் நடக்கும் என்ற சமரசத்தையும் முன்வைத்துள்ளனர். இதற்காக 2016-ல் விஷ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட தனது துணை அமைப்புகளை வைத்து மேல்நிலை கூட்டம் ஒன்றையும் ஆர்.எஸ்.எஸ் நடத்தியது. இதன் அறுவடையை 2016 உத்திரப்பிரதேச தேர்தலில் அவர்கள் அடைந்தனர்.

இதேபோன்று தான் ஆதிவாசிகளின் அடையாளத்தை அழிக்கவும் ஆர்.எஸ்.எஸ் முனைகிறது. ஆதிவாசிகளை தங்களின் தனித்துவமான கலாச்சார அடையாளத்திலிருந்து ஆர்.எஸ்.எஸ் ஊழியர்கள் சொல்லும் குறிப்பிட்ட அடையாளத்திற்குள் கொண்டு வருகின்றனர். ஆதிவாசிகளிடையேயான இந்து தேசியவாதிகளின் பணிகளை 1940களில் மத்திய பிரதேச பகுதிகளில் பார்க்க முடியும். 1930களிலேயே சமஸ்தானங்களில் மதம் மாறுதல் தடை சட்டங்கள் இந்த மகா சபாவின் வற்புறுத்தலால் கொண்டுவரப்பட்டது. 1940களின் நடு பகுதியில் வலதுசாரிகள் மற்றும் காங்கிரசிற்குள்ளேயும், வெளியேnயும் கிருஸ்தவ மத மாற்றம் பற்றிய பிரச்சனை எழுப்பப்பட்டது. நியோகி குழு ஐந்தாவது பட்டியல் பகுதியில் (இந்தியாவின் மத்திய பகுதியில் உள்ள பத்து மாநிலங்கள்) கிருஸ்தவ அமைப்புகளுக்கு தடை விதித்தது. இது அப்பகுதியில் வனவசி கல்யான் என்கிற ஆர்.எஸ்.எஸ் துணை அமைப்பு செயலாற்ற 1950களில் அதிக வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. இது அவர்கள் 1970-80 களில் முன்வைத்த தாய் மதம் திரும்புதல் என்கிற இரண்டாம் கட்ட செயலுக்கு உதவியது. இந்து தேசியம் எனும் பெரிய குடையின் கீழ் ஆதிவாசிகள் மற்றும் இதர சாதியினரை இணைக்கும் தோற்றத்தை அவர்கள் கொடுத்தனர். இது அரசியல் ரீதியாக பாஜகவின் தளத்தை விரிவுப்படுத்த உதவியது.

இந்து தேசியம்

வெவ்வேறான சாதிய, சமூக குழுக்களின் கூட்டணியால் விரிவான தளத்தை உருவாக்கி ஜனநாய சக்திகளை ஒதுக்குவதே இதன் நோக்கம். ஆர்.எஸ்.எஸ்-ன் இத்தகைய விரிவாக்கம் ஆதிவாசி மற்றும் தலித் மக்களை திரட்டுவதின் மூலம் மற்றவர்களை ஒதுக்கி வைப்பதே இப்போதைய அவர்களின் திட்டம். இதன் முதல் துவக்கம் 2008-ல் கந்தமால் கலவரத்தில் பட்டியல் பழங்குடியினரின் சலுகைகள் மதம் மாறாத பழங்குடிகளுக்குதான் கொடுக்கப்பட வேண்டும் என்ற முழக்கத்தை முன்வைத்தனர். இந்துத்துவ தேசியவாதத்தில் அனைத்து பிரிவினரையும் இணைப்பது என்ற முழக்கத்தோடே மற்ற இஸ்லாமிய, கிருஸ்தவ மதத்தினருக்கு எதிரான போக்கை வளர்க்கின்றனர். அடையாள அரசியல் இதற்கு ஏற்றாற்போல் கருத்துருவாக்கப்படுகிறது.

இப்படியான கருத்துருவாக்கம் தொடர்ந்து ஆளும் வர்க்கம் மற்றும் கார்ப்பரேட்டுகளால் பயன்படுத்தப்படுகிறது. அவர்களால் இயக்கப்படும் இந்துத்துவ தேசியவாதிகள் தாங்கள் செய்யும் கொடூரமான தேசியவாத செயல்களை நியாயப்படுத்த இவைகைளை பயன்படுத்திக் கொள்கின்றனர். இது ஆண்டர்சன், ஹாப்ஸ்வாம் முன்வைத்த முதலாளித்துவ தேசியத்தோடு பொருந்தும்.

தொழிலாளர்களின் தலைமையிலான சோவியத் அரசு இருந்தவரை அது சோஷலிச மாற்றை முன்வைக்க தொழிலாளி வர்க்கத்திற்கு உந்துதல் அளித்தது. தாராளவாத ஜனநாயக அரசியல் தலைமையிலான, சமூக சீர்திருத்தத்துடனான அரசு மூலதனம் என்ற கருத்தின் பிறப்பு, ஒரு சமரசத்திற்கான திட்டமாகவே கருதப்பட்டது. அணிசேரா நாடுகள் அனைத்திலும் இத்தகைய தலைமையை காண முடியும். சோவியத் அணுபவத்தின் முடிவுக்கு பிறகும், சந்தை பொருளாதாரத்திற்குள் சீனாவின் பயணத்திற்கு பிறகும், தேசிய முதலாளிகளுக்கான ஒரே மாதிரியாக இருப்பது வட அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நடைமுறைகள் மட்டுமே. இது மாற்றத்தை விரும்பாத, தேசிய அரசை விரும்பும் அரசியல் கலாச்சாரத்தை உலகம் முழுவதும் வெளிப்படுத்துகிறது. இந்தியாவில் கார்ப்பரேட்டுகளின் உதவியோடு சமூக ரீதியாக பிற்போக்குத்தனமான, மாற்றத்தை விரும்பாத இந்துத்துவ தேசியவாதம் பரவுவதும் இதன் ஒரு பகுதியாகவே பார்க்க வேண்டியுள்ளது. ஆளும் வர்க்க தேசிய அரசு பழமைவாதத்தை முறைமையாக்கி, தாராளவாத ஜனநாயக அரசுகள் செய்திருந்த சமூக சீர்திருத்தத்தை கூட தடுக்கின்றனர். அமெரிக்கா, மத்திய ஐரோப்பா, ஐரோப்பா என உலக அளவில் இது காணப்படுகிறது. “உச்சகட்ட நிலையின் காலம்” எனும் ஹாப்ஸ்வோமின் புத்தகத்தில் அவர் குறிப்பிடுவதுபோல் வலதுசாரி தேசியவாதிகளின் பரவலுக்கு தேசிய முதலாளிகளுக்கும், சர்வதேச கார்ப்பரேட்டுகளுக்கிடையேயான கூட்டணியே காரணம்.

உருக்குலையும் ஒற்றுமை

5

மேலே விவாதித்தது போல் இந்துத்துவ கலாச்சார தேசியத்தின் ஆதிக்கம் மற்றும் பரவலுக்கு மூலதனத்தின் ஒருங்கிணைவு மற்றும் பிற்போக்கு சக்திகளுக்கு அதன் ஆதரவுமே காரணம். தொழிலாளி வர்க்கத்தின் மீதான இதன் தாக்கம் பெரிய அளவில் உள்ளது. பாரம்பரிய தொழிற் சங்கங்கள் முன்பு தொழிலாளர்கள் மத்தியிலான இந்த பிளவு பெரிய சவாலாக உள்ளது. அதே நேரம் அடையாள அரசியலுக்கும் இது வழிகோலுகிறது.

பல்வேறு விதமான அரசியல் அடையாளத்தை வெளிப்படுத்தும் விதமாகவும், கலாச்சார ரீதியான வேற்றுமைகளை ஏற்று அங்கீகரிக்கும் வகையில் உழைக்கும் மக்களின் ஒற்றுமையை விரிவுப்படுத்தும் புதிய வழிகளை வர்க்க அடிப்படையில் செயல்படும் இயக்கங்கள் கண்டடைய வேண்டும். இது தேசியவாதத்திற்கு மாற்றான ஒரு கருதுகோளை உருவாக்கலாம். பிரம்மாண்டமான சோஷலிச இயக்கத்தில் இவை பதியப்படலாம்.

இந்திய தேசம் அதன் பழமையான கலாச்சாரத்தை கொண்டு விளக்கப்படுகிறது. தற்கால சூழலுக்கு ஏற்ப பழைய கருத்துக்களை பொருத்திக் கொள்ளுதல், சகிப்பு தன்மை மற்றும் நெகிழ்வு தன்மை கொண்டதாக பார்க்கப்படுகிறது.

அறிவியலுக்கும், மதத்திற்குமான உறவு நிலை மாற்றம் என்பது சமூக சீர்திருத்தத்திற்கான வழிமுறைகளால்தான் மாறும் என்றே காந்தி, நேரு, அம்பேத்கர், பகத்சிங் என எல்லோரும் கருதினர். அறிவியல், அறிவியல் வளர்ச்சி, கலாச்சார ரீதியான அறிவியல் முனைப்பு அனைத்துமே சமூக உற்பத்தி உறவுகளோடு சம்மந்தபட்டதாகும்.

சுதந்திர இந்தியா பற்றி கம்யூனிஸ்டுகள்

சுதந்திர இந்தியா பற்றி கம்யூனிஸ்ட்டுகளுக்கு இரண்டு கருத்து இருந்தது. அவை ஒன்று, ஏகாதிபத்திய எதிர்ப்பு இரண்டு, மறுகட்டமைப்பின் மூலம் சமத்துவத்திற்கான சமூக பொருளாதார சீர்திருத்தமாகும். இளம் அரசியல் ஊழியர்களுக்கு பகத்சிங் எழுதிய இறுதிக் கடிதத்தில் (2 பிப் 1931) “அரசியல் விடுதலை இல்லாமல் தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் பொருளாதார சுதந்திரம் இல்லை” என குறிப்பிடுகிறார். பகத்சிங்கிற்கு அரசு பிரிட்டிஷாரிடமிருந்து இந்தியர்களுக்கு கைமாறுவதைவிட அரசியல் விடுதலை முக்கியமானதாகபட்டது. இந்தியாவை ஆட்சி செய்ய போகிறவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து சோஷலிச முறைமையை அமலாக்க வேண்டும் என்று விரும்பினார். 1925-ல் இந்துஸ்தான் சோஷலிஸ்ட் ரிபப்ளிக் ஆர்மியின் திட்டத்தில் தொழிலாளி வர்க்கத்திற்கு இரண்டு கடமைகள் இருப்பதாக குறிப்பிடப்படுகிறது. ஒன்று, அந்நிய முதலாளி வர்க்கத்துடனான இந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் கூட்டை எதிர்த்தல். இரண்டு, ஒரு சிலரின் கைகளில் அரசதிகாரம் செல்வதை எதிர்த்து போராட தொழிலாளிகளை திரட்டி சமூக மறுகட்டமைப்பை செய்ய வேண்டும் என்பதாகும். சோஷலிசம் என்பதே இந்தியாவின் 98 சதவீத மக்களின் உண்மையான விடுதலையாகும். இந்தியாவின் விடுதலை என்பது அனைத்து அடிமை தேசத்திற்கான விடுதலையாக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய சர்வதேச பார்வையுடன் கூடிய தேசியம் தான் அவர்களின் பார்வை. தேசியம் எனும் வகையிலும் விடுதலை வேண்டும், தேசத்திற்குள்ளும் ஒடுக்குமுறையிலிருந்தும், சுரண்டலிலிருந்தும் விடுதலை வேண்டும் என்பதே அவர்களின் கருத்தாகும்.

மத ரீதியான வெறுப்புணர்வு மற்றும் மத அடிப்படையிலான அரசியல், புரட்சியை பாதிக்கும் என்று நவஜுவான் பாரத் சபாவின் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. “இவர்களின் பிரித்தாளும் அரசியல் இந்து மற்றும் முஸ்லீம் மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கிறது” என்றனர். பிற்போக்குத்தனமான, பழமைவாத இந்துக்களும், தீவிரமான முகமதியர்களும் அந்நியர்களால் சுரண்டப்படுகிறார்கள் என்று 1926-ல் வெளியிடப்பட்ட திட்டம் குறிப்பிடுகிறது. இது இன்றும் கச்சிதமாக பொருந்தும். நரேந்திர மோடி மற்றும் மற்ற வலதுசாரி மத அடிப்படைவாதிகளே ஏகாதிபத்தியத்தின் அரசியல் மற்றும் பொருளாதார தரகர்களாகத்தான் உள்ளனர்.

சர்வதேசத் தன்மை கொண்ட சோஷலிஸ்ட் பார்வை

அனைவரையும் உள்ளடக்கிய உழைக்கும் வர்க்கத்திற்கான உரிமையை முன்வைத்து, வரலாற்றில் சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான கூடுதல் அக்கறையோடு, சமூக ஒருங்கிணைப்பை உருவாக்கி தொழிலாளி வர்க்கத்தை ஒன்றிணைத்து திரட்டுவதே கம்யூனிஸ்டுகளின் பணி. இதன் ஒரு சிறந்த சமீபத்திய உதாரணம் மகாராஷ்டிராவில் அகில இந்திய விவசாயிகள் சங்க போராட்டம். ஆதிவாசிகள் தங்களை விவசாயிகளாக உணர்ந்து பங்கேற்ற போராட்டமாகும். தேசியம் என்பதற்கான சோஷலிச பார்வை என்பது சர்வதேச தன்மை கொண்டது மட்டுமல்ல, உண்மையான ஜனநாயக அரசுக்காகவும், தேசத்திற்குள்ளேயே உள்ள சுரண்டலிலிருந்து விடுதலை என்பதற்காகவும் நிற்பதாகும்.

அதாவது வலதுசாரி முதலாளித்துவ தேசியம் என்பதற்கு மாற்றான, சாதி, மத வேறுபாடின்றி தொழிலாளி, விவசாயிகளை உள்ளடக்கிய சமூக பொருளாதார சமத்துவத்தை படைக்கும் மறுகட்டுமானமாகும்.