குடியரசின் பலன்களை ஒன்று திரட்டப் போராடுவோம்!

ஹரிகிஷன் சிங் சுர்ஜித்

தமிழில். சி.சுப்பாராவ்

பூரண சுதந்திரம் என்ற குறிக்கோளை பல ஆண்டுகளாக ஏற்க மறுத்த காங்கிரஸ், கடைசியில் 1929 டிசம்பரில் நடந்த லாகூர் காங்கிரசில் அதை ஏற்று ஆண்டுதோறும் ஜனவரி 26 ஐ சுந்திர தினமாகக் கொண்டாடத் தீர்மானித்தது. ஆனால் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத் தளைகளைத் துண்டித்தால் மட்டும்  போதாது என்பதை மக்கள் உணர்ந்திருந்தனர். காலங்காலமாக இங்கு நீடித்து வரும் பசி, சுரண்டல் ஒடுக்குமுறைத் தளைகளிலிருந்து இந்திய மக்கள் விடுபடுவது தான் முக்கியமானது என்று அவர்கள் உணர்ந்திருந்தனர். இந்த விழிப்புணர்வு  நாடெங்கிலும் எண்ணிலடங்கா வழிகளில் பிரதிபலித்தது. உதாரணமாக,  ஒரு இர்விங்கை விரட்டி விட்டு அங்கு ஒரு புருஷோத்தம்தாஸ் தாக்குர்தாஸ்ஸை உட்கார வைப்பதில் சாதாரண இந்தியக் குடிமகனுக்கு என்ன கிடைக்கப்போகிறது? என்று சிறையின் மரணத் கொட்டடியிலிருந்து பகத்சிங் எழுதி, அது அவரை தூக்கிலிட்ட பிறகு, இளம் அரசியல் ஊழியருக்கு என்ற தலைப்பில் வெளிவந்தது ஒரு சிறந்த உதாரணம்.

இதே ஜனவரி 26 தான் பின்னாளில் குடியரசு தினமாக்கப்பட்டது. காரணம் நாமனைவரும் அறிந்ததே..

காங்கிரஸ் வட்டாரங்களிலும் இதே உணர்வுகள் பிரதிபலித்ததில் வியப்பேதுமில்லை. பூரண சுதந்திரம் குறித்த தீர்மானம் நிறைவேறி யதன் பின், ஒன்றே காலாண்டு கழித்து 1931 மார்ச் 29-31 ல் நடைபெற்ற கராச்சி காங்கிரசில் அடிப்படை உரிமைகள் பற்றிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தான்  1947 சுதந்திரத்திற்குப் பிறகு அரசியலமைப்புச் சட்டம் உருவாக்க அடித்தளமாக அமைந்தது.  அதே ஆண்டு 1931 ஆகஸ்ட் 6-8 ல் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் கூட்டத்தில் சில மாற்றங்களுடன் இந்த தீர்மானம் அங்கீகாரம் பெற்றது.

இந்த தீர்மானத்தின் முக்கியமான குறிப்புகளில் ஒன்று மக்களை சுரண்டும் முறைக்கு முடிவு கட்ட அரசியல் சுதந்திரத்தோடு உண்மையான பொருளாதார சுதந்திரமும், பசியில் வாடும் கோடிக் கணக்கான மக்களுக்கு கிடைக்கச் செய்வது அவசியம் என்பதாகும். மேலும் இத்தீர்மானம் எதிர்கால அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் பெற வேண்டிய விஷயங்களின் பட்டியலைத் தந்தது..

பின்னால் சேர்க்கப்பட இருந்த முக்கியமான கடமைகள் பல துவக்கத்தில் இந்தப் பட்டியலில் இல்லை என்பதில் சந்தேகமில்லை. உதாரணமாக தாழ்த்தப் பட்டவர், பழங்குடியினர், (SC/ST)) என பின்னாளில் அழைக்கப் பட்ட மக்களுக்கு பிரத்யோகமாக எவ்வித வாக்குறுதியும் இதில் இல்லை. அதேபோல் விவசாயிகளின் சிரமத்தைக் குறைப்பதாக அது கூறினாலும், நிலச் சீர்திருத்தத்தின் அவசியத்தை அது சுற்றி வளைத்து ஏதோ சொல்லியது. குத்தகை முறை, வருவாய், குத்தகை இவைகள் சமத்துவ அடிப்படையில் சரி செய்யப்படும் என்று சொல்லியது. நிலப்பிரபுத்துவ உடைமையோ, நிலப்பிரபுத்துவ நில உறவையோ ஒழிப்பது காங்கிரசின் செயல் திட்டத்தில் இன்றும் இடம் பெற வில்லை. விவசாயிகளின் சுமையைக் சமத்துவ அடிப்படையல் சரிசெய்யப்படும் என்பதற்கு நூற்றுக் கணக்கான முறையில் அர்த்தப்படுத்த முடியும். இருந்தாலும்,  1931 ல் நிலவிய அரசியல், தத்துவார்த்த சூழலில் இந்த அளவு கூறியுள்ளதே மிகப் பெரிய முன்னேற்றம் என்பதில் ஐயமில்லை. 1922 ல் நிலப்பிரப்புகளின் நிலங்களைத் தொடக் கூட காந்தியடிகள் மறுத்த தையும், நில உரிமையாளருக்கு உண்டான குத்தகையை விவசாயிகள் தராமல் நிறுத்தக் கூடாது என்றுகூறியதையும், ஒப்பிட்டால், உண்மையிலேயே இது பெரிய முன்னேற்றம்தான்.

மொத்தத்தில் கராச்சி ஆவணத்தில் பல குறைபாடுகள் இருந்தாலும், இந்திய உழைப்பாளி மக்களுக்கு காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகள் குறிப்பிடத் தகுந்தவை. தங்கள் பங்கிற்கு மக்களும் காங்கிரஸை ஏமாற்ற வில்லை. தங்கள் முழு ஆதரவை நல்கினார்கள். 1937 தேர்தல் முடிவுகளில் இது  பிரதி பலித்தது. காங்கிரஸிற்கு மக்கள் ஆதரவு தந்ததற்கான காரணங்களை வேறு ஒருகோணத்திலும் காணமுடியும். 1937 ல் பெரும்பான்மை மாநிலங்களில் முஸ்லீம் லீக் தோற்றது. காங்கிரஸிடம் இருந்ததைப் போல் அதனிடம் அப்படி ஒரு திட்டம் இல்லை என்பதே இதற்கு காரணம் ஆகும். 55 சதம் முஸ்லீம்களாக இருக்கும் பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகளுக்கு ஆதரவான யூனியனிஸ்ட் கட்சியே வென்றதைச் சுட்டிக் காட்டலாம்.

நிறைவேறாத வாக்குறுதிகள்

இருப்பினும், சுதந்திரத்திற்குப் பின் வாழ்வில் எத்தனையோ விஷயங்களில் எவ்வளவோ முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், 1947 க்கு முன் காங்கிரஸ் நாட்டு மக்களுக்கு அளித்த பல வாக்குறுதிகளை கைவிட்டு துரோகமிழைத்தது என்ற உண்மையை மறுக்க இயலாது.

நாம் மேலே விவாதித்த நிலச் சீர்திருத்த விஷயத்தையே எடுத்துக்கொள்வோம். 1931 ல் காங்கிரஸ் நிலச் சீர்திருத்தம் பற்றி சுற்றி வளைத்துப் பேசி, நிலப்பிரபுத்துவத்தை அழிப்பது பற்றிப் பேச மறுத்தாலும், விரைவிலேயே சூழ்நிலைகள் அதைத் தீவிரமாகப்  பேச வைத்தன. 1936 ல் தோன்றிய அகில இந்திய விவசாயிகள் சங்கம் நிலப்பிரபுத்துவத்தை அழிப்பது பற்றிப் பேசியதும், வரவிருந்த மாகாண சட்டசபைத் தேர்தல்களும் சேர்ந்து, காங்கிரஸ் இவ் விஷயத்தில் ஒரு நிலைபாடு எடுக்க வேண்டியதாயிற்று. ஐக்கிய மாகாணங்களில் தேர்தல் பிரச்சாரத்தின் போது, காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் நேரு இது குறித்து தெளிவான வாக்குறுதிகள் அளித்தார். இத்தகைய வாக்குறுதிகள் இன்றி விவசாயப் பெருங்குடி மக்களின் நம்பிக்கையைப் பெற இயலாது என்று காங்கிரஸ் சரியாகவே கணித்திருந்தது.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், அது எடுத்த நடவடிக்கைகளில் ஒன்று ஜமீன்தாரி முறையை ஒழித்தது ஆகும். நிலவுடமைக்கு சில உச்சவரம்புகள் கொண்டு வரப்பட்டன. இதுவும் தெலுங்கானா போன்ற விவசாயிகளின் எழுச்சியின் காரணமாகத்தான். இதுபோன்ற சில ஆரம்ப நடவடிக்கைகளைத் தாண்டி, விவசாயிகளை அவர்களது துன்பத்திலிருந்து விடுவிக்க, காங்கிரஸ் வேறெதுவும் அபூர்வமாகக் கூடச் செய்யவில்லை. ஜமீன்தாரி முறை மேலோட்டமாக அழிக்கப் பட்டதால், மிகப்பெரிய நிலச்சுவான்தார்கள் நாட்டில் இருக்கவே செய்தார்கள். வேண்டுமென்றே பல ஓட்டைகளுடன் ஏற்படுத்தப் பட்ட நில உச்சவரம்புச் சட்டம் கேலிக் கூத்தாக்கப் பட்டது. காரணம் 1947 க்குப் பிறகு அரசு அதிகாரத்தில் நிலப்பிரபுக்களுக்கும் பங்கிருந்தது..

உண்மையில் நிலச் சீர்திருத்தமே இல்லாது போனதால், ஒட்டுமொத்தமாக நாட்டிற்கும், குறிப்பாக சமூகத்தின் அடிமட்ட மக்களுக்கும் பெரும் தீங்கு விளைவித்தது. வசதியான வாழ்க்கைத்தரம் பெற வைப்போம் எனக் கராச்சி காங்கிரஸ் அளித்த வாக்குறுதி இன்று வரை நிறைவேற்றப்படவில்லை. நிலச்சீர்திருத்தம் முழுமையடையும் வரைஅது நிறைவேறாமலேயே இருக்கும். சுமார் 65 சத மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்பவர்கள் என்ற அடிப்படையில் கிராமப் புறங்களில் மிக முக்கியமான நிலம் இல்லாவிடில், அவர்களால் வாழ இயலாது. கராச்சித் தீர்மானம் உறுதி யளித்ததுபோல  விவசாயக் கூலிகளை அடிமைத்தனத்திலிருந்து மீட்க முடியவில்லை என்றால் அதற்கும் நிலச் சீர்திருத்தம் அமலாகாததுதான். சிந்தித்துப் பார்த்தால் சமூகத்தைப் பிடித்துள்ள முப்பெரும் வியாதிகளான, குழந்தைத் தொழிலாளர், பிச்சை எடுத்தல், விபச்சாரம் இவை யனைத்தும் நிலச்சீர்திருத்தம் நடக்காததால் ஏற்பட்டவைதான்.

விவசாயிகள் சங்கமும், இடதுசாரிகளும் நிலச்சீர்திருத்தம் சிறிய அளவிலாவது நடக்க மிக நீண்ட நெடிய போராட்டங்களை நடத்த வேண்டியிருந்தது. மேற்கு வங்கத்திலும், கேரளத்திலும் கொண்டு வரப்பட்ட சட்டங்களை நீதித்துறை செல்லாததாக ஆக்கிவிடாது தடுக்கவும் போராட வேண்டியிருந்தது.

ஆனால் இன்று பல மாநிலங்களில் பெயரளவிற்கு நடந்த நிலச்சீர்திருத்தங்களையும் மாற்றிவிட இன்று அரசுகள் முயற்சித்து வருவதுதான் மிகக் கொடுமை. இம்முறை நிலப்பிரபுக்கள் தனியாக இல்லை மிகப்பெரிய தொழிலகங்களும், அன்னிய மூலதனங்களும் இவ்விஷயத்தில் அவர்களுக்கு துணை சேர்ந்துள்ளார்கள்.

தாழ்த்தப்பட்டோரின் நிலை

மறு விநியோகம் என்ற அம்சம் நிலச்சீர்திருத்தத்தில் இல்லாததால் மற்றொரு எதிர் வினையும் ஏற்பட்டுள்ளது. ஜாதியின் பெயரால் சுதந்திர இந்தியாவில் எந்த ஒரு குடிமகனுக்கும் தீங்கு நேராது என்று கராச்சித் தீர்மானம் கூறுகிறது. கிணறுகள், குளங்கள், பொது இடங்களிலும், எல்லாக் குடிமக்களுக்கும் சம உரிமை உண்டு என்றும் கூறுகிறது. இருப்பினும் இன்று நாம் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் (SC/ST)) என்று குறிப்பிடும் மக்களைப் பற்றி தனியாக எதுவும் குறிப்பிடவில்லை. இப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பாக காந்தி, அம்பேத்கர் ஒப்பந்தப்படி, கல்வி, வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு என்ற கருத்து உருவானது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், இந்நாட்டில் கடுமையாக ஒடுக்கப்பட்ட அம்மக்களுக்கு, சுதந்திர இந்தியாவில் சம உரிமை அளிக்கப்படும் என்ற வாக்குறுதியைக் காங்கிரஸ் அளித்தது.

தலித் மக்களின் சமூக ஒடுக்கு முறையின் பொருளாதாரப் பரிணாமத்தை காங்கிரசோ அல்லது டாக்டர் அம்பேத்கரோ கவனிக்கத் தவறியது என்பது வேறு விஷயம். அக்காலத்தில் இப்பிரச்சனையை கம்யூனிஸ்ட்டுகள் தான் எழுப்பி வந்தனர். 1930 ல் செயலுக்கான மேடையில் (Platform Of  Action) இவ்விஷயம் முக்கியமான பிரச்சனையாக இடம் பெற்றது. எனினும் இந்நிலை நீண்டநாள் நீடிக்கவில்லை. இந்திய அரசியலமைப்பு விரைவில் கையெழுத்திட்ட பின் நடந்த தலித் மக்களின் பேரணியில் அம்பேத்கர் இது பற்றிப் பேசினார். இன்று தலித்துகள் சிவில், அரசியல் சமத்துவமுள்ள ஒரு யுகத்தில் நுழைகிறார்கள் – எனினும் அங்கு சமூகப், பொருளாதார சமத்துவம் இருக்காது என்றார் அவர். இது ஒரு முக்கியமான கூற்று. தலித்துக்களின் முன்னேற்றத்திற்காக கல்வி, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடுகள் தொடர்ந்தாலும், அவை பெரும்பாலான இம்மக்களுக்கு குறிப்பிட்ட அளவு உதவவில்லை என்பது யதார்த்தம். ஜாதி – வர்க்க ஒருங்கிணைப்பு (Cast – Class Comondance) காரணமாக, பொருளாதார ஏணியின் அடித்தளத்தில் இருப்பவர்கள் சமூகப் படிகளிலும், அடித்தளத்தில் இருப்பதே இதன் காரணம். இன்னும் விவசாயக் கூலிகளில் பெரும்பாலானோர் தலித்துக்கள் என்பதால் நிலச் சீர்திருத்தம் இவர்களுக்கு சொத்தைத் தருவதோடு, சமூக அந்தஸ்த்தையும் தரும். மேற்கு வங்கம் இதைத்தான் பளிச்சென்று காட்டுகிறது. ஆனால், இதுதான் நாடு முழுவதும் கவனமாகத் தவிர்க்கப்பட்டது.

இன்னும் சில உதாரணங்கள்

வாழ்நிலைக் கேற்ற கூலி, நல்ல பணிச் சூழல், வரையறுக்கப்பட்ட வேலை நேரம், பெண் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பு, சுரங்கம் மற்றும் தொழிற்சாலைகளில் குழந்தைத் தொழிலாளர்களைப் பணியிலமர்த்தத் தடை, கிராமப்புற கடன்கள் ஒழிப்பு, கந்து வட்டி ஒழிப்பு (இதனால் நம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்) போன்ற பல்வேறு விஷயங்களில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் பற்றி இங்கு பேசாமல் இருப்பதே நல்லது. ஆளும் வர்க்கம் சாமர்த்தியமாக இவற்றில் பலவற்றை அரசின் கொள்கைகளை நெறியுறுத்தும் கோட்பாடுகளில் வைத்தது. இதனால், இவை செயல்படுத்தப்பட வேண்டிய வரையறைக்குள் வராமல், உன்னதமான விருப்பமாகவே நின்றுவிட்டன.

இவை எவ்வாறெல்லாம் கேலிக் கூத்தாகின என்பதற்கு ஒரு உதாரணம் பார்க்கலாம். அரசு அனைவருக்கும் கட்டாய அடிப்படைக் கல்வி வழங்கும் என்று கராச்சி தீர்மானம் கூறியது. சுதந்திரத்திற்குப் பின் அடிப்படைக் கல்வி (Primary) என்பது ஆரம்பக்கல்வி (Elementary) என்று மாறியது. புதிய அரசியலமைப்புச் சட்டமோ 10 ஆண்டுகளில் அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச, கட்டாய ஆரம்பக்கல்வி அளிக்க அரசு முயற்சி செய்யும் (trike to Provide) என்றது. கராச்சித் தீர்மானத்தில் இது அடிப்படை உரிமைகளும், கடமைகளும் என்ற தலைப்பில் 1 (XI) பகுதியாக இடம் பெற்றதும், சுதந்திரத்திற்குப் பின் இது நெறியுறுத்தும் கோட்பாடுகளில் வைக்கப்பட்டதும் கவனிக்கத் தக்கது.

56 ஆண்டுகளாகியும், நடைமுறைப்படுத்தாத இவ்விஷயத்தை 10 ஆண்டுகளில் செய்வதாகக் கூறிய விந்தையை என்ன வென்று சொல்வது?

பொது சுகாதாரம், கல்வி மற்றும் இதர சமூக நலத் திட்டங் களுக்கான செலவுகளை இந்நாட்டின் எதிர்கால வளத்திற்கான முதலீடு எனக்கருதாமல், வீண் செலவு என்றே இந்திய ஆளும் வர்க்கங்கள் நினைத்து வந்துள்ளன. கோத்தாரி கமிஷனின் பரிந்துரைகள் வந்த பின், இரண்டாண்டுகள் கழித்து, 1968 ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதத்தை செலவிட மத்திய அரசு ஒப்புக் கொண்டது. ஆனால், அதன் பின் 36 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாய் வந்த பல அரசாங்கங்கள் இந்தப் பரிந்துரையை அமலாக்கவில்லை. இடதுசாரிகளில் கடும் நிர்பந்தம் காரணமாக தற்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கல்விக்கு இத்தொகை ஒதுக்குவதாக ஒத்துக் கொண்டுள்ளது.

மதச்சார்பின்மை, கூட்டாட்சி

கராச்சித் தீர்மானம் அதிக முக்கியத்துவம் தந்த மற்றொரு விஷயம் மதச்சார்பற்ற அரசியல். அரசு எந்த மதத்தையும் சாராமல் நடுநிலை வகிக்கும் என அது கூறியது. ஆனால், இன்று ஆளும் அரசியல் வாதிகள் மதவாதப் பிரச்சனைகள் எழுந்தால் நடுங்குகிறார்கள். மதவாத சக்திகளோடு சமாதானமாகப் போகிறார்கள். இல்லை யெனில் சரணாகதியடைகிறார்கள். அவர்களில் பலரும் மதச்சார்பின் மையை எந்த மதத்தையும் சாராது நடுநிலை வகித்தல் என்ற பொருளில் பார்க்காது, எல்லா மதவாத சக்திகளுடனும் ரகசியத் தொடர்பு வைத்திருத்தல் என்ற பொருளில் பார்க்கின்றனர். எனினும், சாதாரண மக்கள் மதச்சார்பின்மையை சரியான வழியில் புரிந்து கொண்டுள்ளனர். இன்றும் நமது மதச்சார்பற்ற தன்மை பாதுகாக்கப் படுகிறது என்றால், அது இந்நாடு எதிர் நோக்கும் சவால்களை உணர்ந்து, தேச ஒற்றுமையைக் காப்பதன் அவசியத்தை உணர்த்த, உண்ண உணவும், உடுக்க உடையும் இல்லாத, படிப்பறிவில்லாத நமது பாமர மக்களால் தான்.

நமது நாட்டின் அடிப்படைத் தன்மைகளில் முக்கியமான மற்றொரு அம்சமான கூட்டாட்சி பற்றி கராச்சி ஆவணம் எதுவும் கூறவில்லை. இரு காரணங்களால் இது நமக்கு வியப்பளிக்கிறது. முதலாவதாக, இதற்கு மூன்றாண்டுகளுக்கு முன்புதான், மோதிலால் நேரு கமிட்டி எதிர்கால இந்தியாவில் கூட்டாட்சி முறைதான் இருக்க வேண்டும் என்று தெளிவாகக் கூறியிருந்தது. கராச்சி மாநாடு காங்கிரசை இரண்டாம் வட்ட மேஜை மாநாட்டின் விவாதப் பொருள்களில் இந்தியாவில் கூட்டாட்சி முறையின் அவசியம், அதற்குத் தேவையான அம்சங்கள் ஆகியன இடம் பெற்றது இரண்டாவது காரணம். 1930 ல் காங்கிரஸ் முதல் வட்ட மேஜை மாநாட்டைப் புறக்கணித்தது. ஒத்துழையாமை இயக்கம் துவங்கியது. பிறகு காந்தி – இர்வின் ஒப்பந்தம் அடுத்த வட்ட மேஜை மாநாட்டில் கலந்து கொள்ளும் சூழலை உருவாக்கியது. அதை கராச்சி மாநாடும் அனுமதித்தது எல்லாம் நாம் அறிந்தவையே. ஆனாலும், இந்திய அரசுச்சட்டம் 1935ன் கூட்டாட்சி பற்றிய பகுதியை, சரியில்லை எனக் கூறி காங்கிரஸ் நிராகரித்தது. இச்சட்டப்படி 1937 ல் நடந்த மாகாணத் தேர்தல்களில் மட்டுமே போட்டியிட ஒப்புக் கொண்டது.

இது இவ்வாறு இருப்பினும், கூட்டாட்சித் தத்துவத்தை 1921 வாக்கிலேயே காங்கிரஸ் ஏற்றுக்கொண்டுள்ளது. அப்போதே அது நிர்வாகக் காரணங்களுக்காக பிரிட்டிஷ் அரசு கொண்டு வந்த மாகாணங்கள், ராஜதானிகளை காங்கிரஸ் நிராகரித்துள்ளது. இதற்கு மாறாக, காந்தியடிகள் தலைமையிலான காங்கிரஸ் தனது கிளைகளை மொழிவாரியாகப் பிரித்தது. 1928 ல் நேரு தலைமையிலான கமிட்டி அளித்த அறிக்கையில் மொழிவழி மாநிலங்கள் அமைப்பது பற்றிய சிந்தனைகள் தெளிவாக இடம் பெற்றன. சுதந்திரத்திற்குப் பின், மொழிவழி மாநிலங்கள் அமைய மக்கள் கடுமையாகப் போராடி, பல தியாகங்கள் செய்ததும், பெரும்பாலும் இப்போராட்டங்கள் கம்யூனிஸ்ட்டுகள் தலைமையில் நடந்ததும் வேறு விஷயம்.

இன்று இந்திய அரசியலின் இரு அடிப்படைத் தன்மைகளான மதச்சார்பின்மையும், கூட்டாட்சித் தத்துவமும், மதவாத சக்தி களாலும், அவர்களது கூட்டாளிகளாலும் கடும் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றன. இன்று இவற்றைக் காப்பது மட்டுமின்றி, இவற்றை வலுப்படுத்துவதும் தேவையாக உள்ளது.

ஏகாதிபத்தியத்திற்கெதிரான மக்கள் உணர்வுகளைப் பிரதி பலிக்கும் வண்ணம், சுதந்திரத்திற்கு முன் இந்திய தேசிய காங்கிரஸ் பல்வேறு வாக்குறுதிகளைத் தந்துள்ளது. அவை இன்றைய சூழலில் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளன. உதாரணமாக, தங்கள் நலன்களைக் காக்க விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் சங்கம் அமைக்கும் உரிமை வழங்கப்படும் என்ற வாக்குறுதிகளுக்கு எதிராக இன்று அவ்வுரிமையைப் போராடிப் பெற்றவர்களிடமிருந்து அதைப் பறிக்கும் முயற்சிகள் நடக்கின்றன. வேலை நிறுத்தங்கள் சட்ட விரோதமானவை என்ற உச்ச நீதி மன்றத் தீர்ப்பை மாற்ற பாராளுமன்றம் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இன்று வரை ராணுவச் செலவுகள், இதர செலவினங்களைக் குறைத்து, மக்கள் நலத்திட்டங்களுக்கு நிதியைத் திருப்பிவிட அரசுக்கு இயலவில்லை. கனிம வளம், ரயில், கப்பல், தரைப்போக்குவரத்து, கேந்திரமான தொழிற்சாலைகள் அனைத்தும் அரசுடைமையாக்க, அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பது வாக்குறுதி.

ஆனால், இன்று அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொழிற் சாலைகள், சேவைத்துறைகளை தங்கத்தாம்பளத்தில் வைத்து தனியார் பூர்ஷ்வா முதலாளிகளுக்குத் தாரை வார்ப்பதைப் பார்க்கிறோம். ஜவுளி மற்றும் உள்நாட்டுத் தொழில்களை வெளி நாட்டுப் போட்டியில் இருந்து பாதுகாப்போம் என்பது பழைய உறுதி மொழி. இன்று யதார்த்தத்தில் நம் உள்நாட்டுத் தொழில் களெல்லாம் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு இரையாகின்றன. சம ஆடுதளம் கூட நம் தொழில்களுக்கு இல்லை. பணம் மற்றும் அந்நியச் செலவாணி பற்றிக் குறிப்பிடும் போது, நாட்டின் நலன் கருதி அவை கட்டுப் படுத்தப்படும் என்றார்கள். நடைமுறையில் ஏகாதிபத்தியத்தின் வேண்டுகோளை ஏற்று ரகசியமாகவோ, வெளிப்படையாகவோ பணத்தின் மதிப்பு இறக்கப்படுகிறது.

மொத்தத்தில், இந்நாட்டின் விடுதலைப் போராட்டத்தின் போது, போராடிய மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இந்த நாட்டின் ஆளும் வர்க்கங்கள் அக்கறை காட்ட வில்லை. நம் மக்களின் மகத்தான போராட்டங்களின் விளைவாக இங்கு ஒரு மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசு ஏற்பட்டுள்ளது. எனினும், ஏகாதிபத்திய பூர்ஷ்வா சக்திகள் நமது குடியரசின் அடித்தளத்தை பலவீனப்படுத்தி, மக்களை என்றும் அடிமைத்தளையில் வைத்திருக்க முயற்ச்சிக்கின்றன. அவர்களுக்குப் புரியக்கூடிய வகையில் பதிலளிக்க ஒரே மொழிதான் உள்ளது – போராட்ட மொழி. மக்களுக்கு அளிக்கப் பட்டுள்ள வாக்குறுதிகள் காகித மலர்களாக இல்லாது உண்மையாக மாற இடதுசாரி, ஜனநாயக சக்திகள் இயன்ற அனைத்தையும் செய்ய வேண்டும். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை தூக்கி எறிந்ததைப்போல, மக்கள் தங்கள் விடுதலைப் போராட்டத்தை விரிவு படுத்தி, வலுப்படுத்தி, நம் குடியரசைக் காக்க வேண்டும். இந்தக் குடியரசு நன்னாளில், நமது இத்தீர்மானத்தைப் புதுப்பித்துக் கொண்டு, அதன் வெற்றி நோக்கி முன்னேறுவோம்!

இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் அடிப்படைவாதிகள்

கடந்த  சில ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பா கண்டத்தில் பெரும் விவாதம் நடந்து கொண்டிருந்தது.  அதாவது ஆரிய இனத்தில் பிறப்பவர் அறிவாளி என்றும், வேறு இனங்களில் பிறக்கும் குழந்தைக்கு அவ்வளவு மதிநுட்பம் இருப்பதில்லை என்றும் விவாதம் நடந்தது. அதேபோல் தான், உயர்கல்வி நிலையங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதமானம் இட ஒதுக்கீடு என்கிற, மத்திய அரசின் முடிவுக்கு, எதிரான விவாதங்களும் நடைபெறுகிறது. தகுதி என்பது, அவரவர் வளருகிற சமூக சூழ்நிலையில் இருந்தே உருவாகிறது.  பிறக்கும் போதே எல்லோரும் எல்லாத் தகுதிகளுடன் பிறப்பதில்லை.  உலகமயமாக்கல் கொள்கையைப் பற்றி குறிப்பிடுகிறபோது, அடிப்படைவாதம் உலக மயமாக்கலோடு சமரசம் செய்து கொள்கிறது என்று சமீர் அமீன் குறிப்பிடுகிறார்.  இங்கே அடிப்படை வாதம் என்பது மத, சாதி மற்றும் இன ரீதியிலான ஆதிக்க மனப்பான்மை ஆகும்.

உலகமயமாக்கல் காலத்தில் பல்வேறு விதமான பண்பாட்டு பரிவர்த்தனைகள் நடந்தாலும், அடிப்படை சிந்தனையில் இருந்தும், ஆதிக்க சிந்தனையில் இருந்தும் சிலர் மாறுவதே இல்லை.  பொருளாதார ரீதியினாலும், சமூக ரீதியினாலும் உயர்ந்தோர் எனக் கருதிக் கொள்பவர்கள், இத்தகைய அடிப்படை வாதத்துடன் சமரசம் செய்து கொள்பவர்களே.  இது ஆதிக்க  உணர்விலிருந்தே வெளிப்படுகிறது.

1927ல் அமெரிக்க உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில், கேரியேக்கும், அவரது சகோதரியும் கட்டாய கருத்தடை செய்து கொள்ள வேண்டும்.  இவர்கள் பரம்பரை முட்டாள்கள் எனவும், இவர்கள் பிள்ளை பெற்றால் அவர்களும் முட்டாள்களாகவே இருப்பார்கள் என்றும் குறிப்பிட்டது.  ஆகவே அமெரிக்க நாடு முட்டாள்கள் நிறைந்த சமூகமாக மாறி விடக்கூடாது எனும் நல்லெண்ண அடிப்படையில், மக்கள் நலன் கருதி கட்டாயக் கருத்தடைக்கு ஆணையிட்டது. இந்த தீர்ப்பினைப் போலவே, இன்று நம் நாட்டில் செயல்பட்டு வரும் தேசிய அறிவுசார் ஆணையம் (National Knowledge Commission), கல்வியில் இட ஒதுக்கீடு என்பது தேசத்தை பின்னோக்கி நகர்த்துவதற்கு ஒப்பாகும், என்று குறிப்பிடுகிறது.  எனவே இட ஒதுக்கீடு கூடாது என வலியுறுத்துகிறது.  பிரதம மந்திரியின் ஆலோசனைகள் இரண்டு பேர் இடஒதுக்கீடு தகுதியை சீரழிக்கும்.  எனவே எங்கள் பணியினை ராஜினாமா செய்கிறோம் என்று வெளியேறியுள்ளனர்.

இங்கே தகுதி என்பது பரம்பரை சார்ந்தே பயன்படுத்தப் படுகிறது.  இது உண்மையா? என்பதை எல்லா நாடுகளிலும்  வெவ்வேறு மட்டங்களில் ஆய்வு செய்து வருகின்றனர்.  இந்தியாவில் கரண்ட் சையின்ஸ் எனும் ஆய்விதழில் சுயந்தராய் சவுத்ரி, சங்கீதா ராய் ஆகியோர், 23 ஜாதிக்கருத்துக்களை ஒப்பிட்டு ஆய்வுகளாகத் தேர்வு செய்துள்ளனர்.  தென்னிந்தியாவில் ஐயர், வன்னியர், பள்ளர் மற்றும் வட இந்தியாவில் பிராமணர், முண்டா பழங்குடி இனத்தவர் என பலரையும் ஆய்வு செய்து இவர்களின் மைட்டோ காண்ட்ரியா டி.என்.ஏ. எனப்படும் மரபணுக் கூற்றினை ஒப்பிட்டுள்ளனர்.  அதிலிருந்து மேற்படி பிரிவினர் அனைவரும் ஒன்று போன்ற மரபணுக்கூறுகளை உடையவராக உள்ளனர் என்பது கண்டறியப் பட்டுள்ளது.  இப்படிப்பட்ட அறிவியல் ரீதியில் சாதிய வித்தி யாசங்கள் எதுவும் இல்லை என்று நிரூபணம் செய்யப்பட்ட பின்னும், இன்றைய இடஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்கள், எதை அடிப்படையாகக் கொண்டு, இடஒதுக்கீடு தகுதியை அழித்து விடும் என்று கூறுகிறார்கள்?

மிகச் சமீபத்தில் +2 தேர்வு முடிவில் வெளியான ஒரு தகவல், உச்சி முடியைப் பிடித்து உலுக்குகிறது.  அப்பா பெரிய நிறுவனத்தின் மேலாளர், அம்மா இன்னொரு நிறுவனத்தின் அதிகாரி என்ற சூழலில் பிறந்து வளர்ந்த மாணவர் 1200 மதிப்பெண்ணுக்கு 1153 மதிப்பெண் பெற்றுள்ளார்.

அதே நேரத்தில் அப்பா, அம்மா இரண்டு பேரும் அன்றாடம் கூலி வேலைக்குச் செல்பவர்கள்.  மகனோ பள்ளி முடிந்து மாலையில் ஹோட்டலில் டேபிள் துடைக்கும் பணியை மேற்கொண்ட ஒரு மாணவன், 1200 மதிப்பெண்ணிற்கு 1013 மதிப்பெண் பெற்றுள்ளார்.  மேற்கண்ட இந்த இரண்டு பேரில் யார் அதிக தகுதியும், திறமையும் உடையவர்? என்பதை இட ஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்களால் விளக்க முடியுமா?

கடுமையாக உழைத்து முன்னுக்கு வரும் ஒருவர் புறக்கணிக்கப்படுவது இந்திய சமூகத்தில் புதிதல்ல. மகாபாரதமும், ராமாயணமும் மேற்படி புறக்கணிப்பு குறித்து கதைகளை உள்ளடக்கி இருக்கிறது. தானே கற்றுக்கொண்ட வில்வித்தைக்கு ஏகலைவன், துரோணருக்கு குருதட்சணையாக, தன் கட்டை விரலை வெட்டிக் கொடுத்தது நடந்தது. தேரோட்டியின் மகனாக வளர்க்கப்பட்ட கர்ணனுக்கு ராஜ்ஜியம் கொடுக்கப்பட்டு மன்னனாக மாறிய பின்னும், கர்ணன் சுயவரத்தில் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்பட்டான். மன்னனாக இருந்தும் பலநேரங்களில் அவமானப்படுத்தப்பட்டான். பிராமணர் அல்லாத விசுவாமித்திரர், மக்களை பெருமழையில் இருந்து மீட்பதற்கு தன்னையே அழித்துக்கொள்ள முன்வந்தார். அது கண்டு அவருடைய சமஸ்கிருத கல்வி காரணமாகவும், அவருக்கு பிரம்மரிஷி பட்டம் வழங்கப் பட்டது.  இருந்தபோதிலும், ராமனின் திருமணத்தின் போது, பிராமணரல்லாத விசுவாமித்திரர் திருமணத்தை நடத்தி வைக்க முடியாது  என்றும், பிராமணரான வஷிஷ்ட்டர் தான் நடத்தி வைப்பார் என்றும் வலியறுத்தப்பட்டு, விசுவாமித்திரர் வெளியேற்றப் படுவார்.  இப்படி பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக, வேறு வேறு தளங்களில், வேறு வேறு காரணங்களுக்காக, சாதி ரீதியான அவமானங்கள் தொடருகின்றன.

சாதிய படிநிலையின் கீழ்நிலையில் இருப்பவர்கள் இரக்கமற்று குற்றங்களைப் புரிபவர்கள் என சித்தரிக்கப்பட்டு வருகின்றனர்.  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு செஞ்சியில் பணம் களவாடப்பட்டதைக் கண்டறிய முடியாத நிலப் பிரபு, அங்கே பணியாற்றும் குழந்தை உழைப்பாளிகளை அழைத்து, அவர்கள் பழங்குடி இனத்தை சார்ந்தவர் என்ற காரணத்தினால் திருடி இருக்க முடியும் என்ற முடிவுக்கு வந்தார்.  உண்மையைக் கண்டறிய மாட்டு சாணத்தை கரைத்து அதை கொதிக்க வைத்து, அதற்குள் குழந்தைகளின் கையைத் திணித்து கொடுமை செய்தனர்.  அதாவது இந்த சாதியைச் சார்ந்த குழந்தைக்கு படிக்கிற புத்தியை விடவும், திருடுகிற புத்தி அதிகம் என்ற பரம்பரை பரம்பரையான கற்பிதங்களில் இருந்து இந்த சிந்தனைகள் வளர்க்கப்படுகிறது.  ஆனால் சமூக ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் உயர்வானவர்கள், படித்துப் பெற முடியாத தகுதியை பணத்தின் மூலம் பெறுவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.  இங்கே தகுதி குறித்த விவாதம் நடத்தப் படுவதில்லை.  கடந்த 2005 ஆக. 12 அன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தனியார் கல்லூரிகளின் இட ஒதுக்கீடு வேண்டும் என அரசு கட்டாயப்படுத்தக்கூடாது என்றும், வெளிநாடு வாழ் இந்தியர்கள் பல லட்சங்களை கொண்டிருக்கும் தகுதி பெற்றவராக இருந்தால் அவர்களுக்கு 15 சத இட ஒதுக்கீடு வழங்கலாம் என்றும் தீர்ப்பு வழங்கினர்.  அப்போது இது போன்ற போராட்டம் ஏன் நடை பெறவில்லை?  என்றால் காரணம் பணமும் ஒரு தகுதியாக கருதப் பட்டதே ஆகும். பணம் இருந்தால் அவனுக்கு திறமை குறைவாக இருக்காது என நம்பப்படுகிறது.

தகுதி குறைவானவர்கள், மருத்துவம் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றைப் படிக்கிறபோது தரம் குறையாதா? என்ற வாதமும் அதிகரித்துள்ளது.  படிப்பில் தகுதி குறைந்த ஒருவர் பணத்தினால் தகுதி பெற்றவராகி அதே மருத்துவத்தையும், தொழில் நுட்பத்தையும் படிக்கிறபோது, குறைகிற தரத்தைப் பற்றி கவலை கொள்வதில்லை.  தகுதி என்பது  இந்திய சமூகத்தில் சாதியை மட்டுமே மையப்படுத்தி பேசப்பட்டு வந்திருக்கிறதே ஒழிய, வேறு வடிவங்களில் இல்லை.  இந்த இளக்காரமான பார்வையை மாற்றவே சமூக ரீதியிலான இடஒதுக்கீடு என்பது தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இட ஒதுக்கீடு தந்த சமூக வளர்ச்சி

இட ஒதுக்கீடு கொள்கை சமூகத்தை சமப்படுத்த உதவியதா? என்ற கேள்விக்கு விடையளித்தால் தான், இட ஒதுக்கீடு கொள்கைக்கான போராட்டத்தின் நியாயம் புரியும்.  சென்னை ராஜதானியாக இருந்த நேரத்தில் 1831 கால சட்டத்திலேயே இட ஒதுக்கீடு கல்வி மற்றும்  வேலைவாய்ப்பால் அமுல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்னுக்கு வந்துள்ளது.  இக்கோரிக்கைகளை பிரிட்டிஷார் ஒருசில இடங்களில் கணக்கில் எடுத்துள்ளார்.  1850-51-ம் ஆண்டுகளில் பிரிட்டிஷைச் சார்ந்த மான்ஸ்டூவர்ட் எல்பின்ஸ்டோன் என்ற நிர்வாகி,  கிறிஸ்த்துவ மிஷனரியைச் சார்ந்தோர், சாதிய படி நிலையில் கீழே உள்ள சாதியைச் சார்ந்த மாணவர்கள் சிறந்தவர்களாக உள்ளனர், என்பதை கண்டறிந்துள்ளனர், என குறிப்பிட்டுள்ளார்.  இதை உயர்சாதியினர் எப்படி புரிந்து கொண்டு எதிர்வினையாற்றுவார்கள் என்பது சிக்கலானது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளார். அதே ஆண்டில் பாம்பே ராஜதானியின் கல்வி ஆணையம், அதனுடைய அறிக்கையில், மிக நம்பிக்கையோடு பின் தங்கிய சமூகப் பிரிவினரான மகர் மற்றும் தேட் போன்றவர்களின் குழந்தைகளுக்கு கல்வி அளித்தால், சமூகத்தின் மற்ற பிரிவினரைப் போலவே சிறந்த ஞான முடையவர்களாக, வளரும் வாய்ப்புள்ளது, என குறிப்பிட்டுள்ளது.

இந்திய கல்வி ஆணையம்,1882ல் தீண்டத்தகாதவர்களாக உள்ள சாதியினருக்கு, ஆரம்பக்கல்வியில் வாய்ப்பளிக்கும் விதத்தில் ஒரு திட்டத்தை உருவாக்கியது.  அதன்படி, மலபார்  (சென்னை ராஜதானி), மத்தியப் பகுதியில் இருந்த மாநிலங்களான, மத்தியப் பிரதேஷ், மகராஷ்ட்ரா மற்றும் இன்றைய சட்டீஸ்கர், பாம்பே ராஜதானியில் இருந்த மகராஷ்ட்ரா, கர்நாடகா, குஜராத் ஆகிய பகுதிகளிலும் இத்திட்டம் அமுல்படுத்தப்பட்டது.  இதன்மூலம் ஒருசில குறிப்பிட்ட சாதியினரின் ஏக போக உரிமையோடு இருந்த கல்வி மற்றும் வேலை வாய்ப்பில், சமூகரீதியில் பின் தங்கியவர்களுக்கு ஓரளவு வாய்ப்பினைத் தர முடிந்தது.  இத்தகைய குறைந்த பட்ச கல்வி அறிவும், அதன்பின் விடுதலை இந்தியாவின் இடஒதுக்கீடு மூலம் பெற்ற கல்வி அறிவும், சமூக ரீதியில் பின் தங்கிய மக்களின் வளர்ச்சிக்கு உதவியாக இருந்துள்ளது. அதேபோல் பிற்படுத்தப் பட்டோருக்கான இடஒதுக்கீடு, 1902ம் ஆண்டு கோல்சன்பூர் மகாணத்திலும், மில்லர் என்பவரின் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைப்படி மைசூர் மகாணத்தில் 1921-ம் ஆண்டிலிருந்தும், எல்.ஜி. ஹவானூர் கமிஷனின் பரிந்துரைப்படி சென்னை ராஜஸ்தானியில் 1921-ம் ஆண்டிலிருந்தும், திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் 1935ம் ஆண்டிலிருந்தும் அமுல்படுத்தப்படுகின்றன.

இத்தகைய இடஒதுக்கீட்டின் மூலம், பிற்படுத்தப் பட்டவர்களும், தாழ்த்தப்பட்டவர்களும் முழுமையான சமூக மாற்றத்தைப் பெற்றுவிட்டனர் எனக் கூறுவதற்கு இல்லை.  ஆனால் தனிநபர் வருமான விகிதத்தில், கல்வி அறிவு பெற்றோரின் சராசரி விகிதத்தில், மருத்துவ வசதிகளைப் பயன்படுத்துகிற சராசரி விகிதத்தில் சில மாற்றங்களைக் காண முடிந்துள்ளது.  2001-ம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்திய மனித வளர்ச்சி அறிக்கை தென்னிந்தியா மற்றும் வட இந்தியாவுக்கான ஒப்பீட்டு அறிக்கையை வெளியிட்டு உள்ளது.

எண் சுகாதார குறியீடு தெற்கு வடக்கு இந்தியா
1 பிறப்பு விகிதம் 2 4 3
2 இறப்பு விகிதம் 7 10 9
3 குழந்தை இறப்பு விகிதம் 44 78 68
4 மருத்துவ மனைகளில் பிரசவம் 70 18 34
5 பிறப்பின்போது மருத்துவ உதவி 76 28 42
6 குழந்தை நோய் தடுப்பு நடவடிக்கை 75 18 42
7 தொற்று நோய் தடுப்பு 91 64 76
8 இரும்பு சத்து மாத்திரைகள் 88 36 58
9 பிரசவத்தின்போது தாய் இறப்பு 158 582 407
10 PHC சராசரி மக்கள் தொகை 24044 29574 27364
11 வறுமை விகிதம் 17 32 26

ஆதாரம்: தேசிய மனித வளர்ச்சி அறிக்கை : 2001

இந்த அறிக்கையை கம்யூனிஸ்டுகள் பார்க்கிற போது திருப்தி பட முடியாது.  இதில் இருக்கும் ஓட்டைகளும், இன்னும் கிடைக்க வேண்டிய தேவைகளும் கண்ணை உறுத்திக் கொண்டே இருக்கும்.  ஏனென்றால், கம்யூனிஸ்ட்டுகள் 100 சதமான வெற்றியை நோக்கி சிந்திப்பவர்கள்.  ஆனால் இன்றைய முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ அமைப்பு முறையில் தென்னிந்தியா சற்று முன்னேறி இருப்பதில், இட ஒதுக்கீடு அளித்த பங்கு மறுப்பதற்கு இல்லை.  இட ஒதுக்கீடு அமுலில் உள்ள தென்னிந்திய மாகாணங்களை விடவும், வட இந்திய மாகாணங்களில் உள்ள விளை நிலத்தின் தன்மை, நீர்வளத்தின் தன்மை, கனிம வளங்களின் தன்மை, உள்ளிட்ட பல்வேறு வளங்கள் மனித குல வளர்ச்சிக்கு பயன் தரவில்லை என்பதை ஓப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் மற்றும் ஜுன் ட்ரெஸ் ஆகியோர் நடத்திய சமீபத்திய ஆய்வான இந்திய வளர்ச்சி மற்றும் பங்கேற்பு (Indian Development and Participation)”தமிழகத்தில் சுகாதாரத் துறை ஒரு சில முக்கியமான காரணம்,” என்று சுட்டிக் காட்டியுள்ளது.  அதேபோல் லீல் விசாரி என்ற பெண், தனது ஆய்வின் மூலம் தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களில் பணியாற்றுகிற மருத்துவர்களுக்கும், நோயாளிகளுக்கும் இடையில் மொழி, உடை, செயல்பாடு மற்றும் விழுமியங்களின் (Values) அடிப்படையில் எந்த ஒரு வித்தியாசத் தையும் பார்க்க முடிவதில்லை. இதற்கு காரணம் தாழ்த்தப் பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பெண்கள் மருத்துவர் களாக ஆவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகும் என்கிறார். அதே நேரத்தில் வட இந்தியாவில் உள்ள மருத்துவர்களுக்கும், நோயாளி களுக்கும் இடையே பெரிய அளவில் இடைவெளி இருப்பதாகக் குறிப்பிடுகிறார். இதற்குக் காரணம், மருத்துவர்களில் பெரும் எண்ணிகையில் உயர் சாதியினர் மட்டுமே இருக்கின்றனர்.  இவர்களால் பின் தங்கிய பிரிவினரில் இருந்து வருகிற நோயாளி களை முழுமையாகப் புரிந்து கொள்ள முடிவதில்லை, என்றும் குறிப்பிடுகிறார்.

வட இந்தியாவில் இருக்கிற இன்னும் ஒரு முக்கியமான பிரச்சனை மூளை வெளியேற்றம் (Brain Drain) ஆகும்.  இந்தியாவில் முக்கியமான உயர்கல்வி நிறுவனங்களான IIT, IIM, IIMS, PGI (Chanrdigarh) ஆகியவற்றில் படிக்கின்ற பெரும்பான்மையான மாணவர்கள் வெளிநாடுகளில் குறிப்பாக, அமெரிக்காவில் பணியாற்றுகின்றனர்.  தற்போது சுமார் 1 கோடி இந்தியர்கள் அமெரிக்காவில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தியாவில் பணியாற்ற விரும்பாமை IIT போன்ற நிறுவனங்களில் படிக்கின்ற மாணவர்களிடம் இது அதிகரித்து வருவதற்கு அடிப்படைக் காரணம், ஒன்று இந்தியாவில் அவர்களைப் பயன்படுத்துவதற்கான உற்பத்தி சார்ந்த தொழில் நிறுவனங்களின் போதாமை, இரண்டு இந்த மாணவர்களைப் பயன்படுத்தும் அளவிற்கு பணத்தின் போதாமை. மூன்று வெளிநாடுகளில் ஏற்கனவே செட்டிலாகி விட்ட தன் சொந்த பந்தங்களின் நெருக்கடி. சில தினங்களுக்கு முன்பாக அமெரிக்காவில், இடஒதுக்கீடு கூடாது என்று நடந்த ஆர்ப்பட்டமே இதற்குச் சாட்சி. இதற்கும் இட ஒதுக்கீட்டிற்கும் என்ன சம்மந்தம்? என்றால், கம்ப்யூட்டர் துறை தவிர்த்து எஞ்சினியரிங் மற்றும் மருத்துவம் படித்த பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் இந்தியாவிலேயே இருந்து பணியாற்றியுள்ளனர்.  இந்திய ரயில்வே போன்ற நிறுவனங்களில் சாம்பிள் எடுத்துப் பார்ப்பதன் மூலம் இவற்றைப் புரிந்து கொள்ள முடியும்.  தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களிடையே ஏற்படுகிற சமஸ்கிருதமயமாக்கலும் (Samkrisation), உயர் சாதியினரிடத்தில் உள்ள மேற்கத்திய மயமாதலும் (Westernisation)தான் இதற்குக் காரணமாகும். இத்தகைய சமஸ்கிருதமயமாக்கல் மற்றும் மேற்கத்தியமயமாக்கல் நிகழ்வுகள், தீண்டாமை இந்த சமூகங்களில் இன்னும் தொடருவதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுப்பதாக இருக்கின்றன. இடஒதுக்கீட்டின் நன்மைகளைப் பேசுகிற போது, தீண்டாமை குறித்த கேள்விக்கு விடை காண முடியாத நெருடல் வருவது குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும்.

மண்டல் கமிஷன் 26 ஆண்டு காலதாமதம்

நமது நாட்டில் மிக எளிமையான பணி கமிஷன் அமைப்பது ஆகும்.  தீவிரமான போராட்டமோ, கொலையோ, கலவரமோ எதுவானாலும் ஒரு கமிஷனை அமைத்து விட்டால், அந்நிகழ்வு கிட்டத்தட்ட மறக்கப்பட்ட ஒன்றாக மாறிவிடும்.  இந்தியாவில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு கொடுப்பது குறித்து ஆய்வு செய்ய இதுவரை இரண்டு கமிஷன்கள் மட்டுமே அமைக்கப் பட்டுள்ளன. ஆனாலும், அவைகளின் பரிந்துரைகள் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.  முதலில் 1953, ஜனவரி-29 அன்று காகா காலேகர் என்பவரின் தலைமையில் 11 பேர் கொண்ட கமிஷன் அமைக்கப்பட்டது. இக்குழு 1955, மார்ச் 30-ல் தனது பரிந்துரைகளை சமர்பித்தது.  அன்றைய மத்திய அரசு இந்தக் குழுவின் பரிந்துரைகளில் திருப்தி அடையாத காரணத்தால், மாநிலங்களே, ஆங்காங்கு இருக்கின்ற சமூக தேவைகளைக் கணக்கில் கொண்டு இடஒதுக்கீடு கொள்கையை அமுல்படுத்திக் கொள்ளலாம், என 1962-ல் அறிவிப்பை வெளியிட்டது.

காகா காலேகர் கமிஷனின் பரிந்துரை மீது, இரண்டு விதமான ஆட்சேபனைகளை மத்திய அரசு பதிவு செய்தது. ஒன்று, பின்தங்கிய பிரிவினருக்கு உண்மையில் கிடைக்க வேண்டிய பலன், 70 சதமான இடஒதுக்கீடு என்ற நீண்ட சாதிய பட்டியலுக்குள் காணாமல் போய்விடும் என்ற அச்சமாகும்.  இரண்டு, சாதி ரீதியில் இனம் காணப்பட்டு பிரச்சனையைத் தீர்ப்பது, மிகவும் பின் தங்கிய சிந்தனை என கருதியதாகும்.  இந்த இரண்டு சிந்தனைகளும் சாதியா? வர்க்கமா?  என்ற பட்டிமன்றத்தில் இருந்து பிறந்திருக்க வேண்டும்.  இப்படி ஒரு சர்ச்சையை மைய அரசு தானே உருவாக்கி, அதன் காரணமாக, இடஒதுக்கீடு கொள்கையைத் தள்ளிப் போட்டது.  பிராமணர், சத்திரியர், வைசியர் ஆகிய 3 வர்ணங்கள் வரை, வர்க்க ரீதியில் பொதுவான கண்ணோட்டத்தில் முன்னேறியவர்களாகவே நீண்ட நெடும் காலம் இருந்துள்ளார். சமூக ஒடுக்குமுறையும் இவர்கள் மீது இருந்ததற்கான தகவல்கள் இல்லை.  சூத்திரர்களைப் பொருத்தளவில், வர்க்க ரீதியிலும், சாதி ரீதியிலும் சமூக ஒடுக்கு முறையை சந்தித்த கூட்டம் என்பது வெட்ட வெளிச்சமான உண்மை.  ஆனாலும் காகா காலேகர் கமிஷனின் பரிந்துரை ரத்து செய்யப்பட்டது.

1978, டிசம்பர்-20ல் மண்டல் கமிஷன் அமைக்கப்பட்டது. இக்கமிஷன் தனது பரிந்துரையை 1980-ல் மைய அரசிடம் ஒப்படைத்தது. அதற்குள் அன்றைய மொரார்ஜி தேசாய் தலைமை யிலான மைய அரச கவிழ்க்கப்பட்டதால் அமுல்படுத்தவில்லை.  அதன்பின் வி.பி. சிங் தலைமையிலான தேசீய முன்னணி அரசு, 1990, ஆகஸ்ட்-7ல் வேலை வாய்ப்பில் 27 சதமான இதர பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கீடு செய்யும் கொள்கை அமுல்படுத்தப்பட்டது. இதுவும் தொடர் போராட்டங்கள் காரணமாக, நீதிமன்றம் 1993ல் கொடுத்த தீர்ப்பின் படி,  27 சத இட ஒதுக்கீடு வேலை வாய்ப்புத் துறையில் அமுல் செய்யப்பட்டு வருகிறது.  சுமார் 26 ஆண்டுகள் ஆன பிறகும் கூட, மண்டல கமிஷன் பரிந்துரை செய்த கல்வி, வாய்ப்பில் 27 சத இட ஒதுக்கீடு, இன்னும் மக்களுக்கு கிடைக்க வில்லை.  கல்வித் துறையில் 26 ஆண்டு காலம், 26 தலைமுறை மாணவர்களுக்கு கிடைத்திருக்க வேண்டிய நியாயம் கிடைக்காமல் போய் இருக்கிறது.  இப்படிப்பட்ட தாமதத்திற்கான அடிப்படைக் காரணம் சாதி ரீதியான பாகுபாடும், பழைய வர்ணாசிரம, மனுதர்ம வாதிகளின் புதிய அவதாரங்களும் ஆகும்.

இந்நிலையில், மண்டல் கமிஷன் பரிந்துரைத்த நிலச் சீர்த்திருத்தம், நில விநியோகம், கிராமமுன்னேற்றம் போன்றவை அவ்வளவு எளிதில் நிறைவேறும் ஒன்றாக இருக்கிறது.  மண்டல் கமிஷனின் முழுப் பரிந்துரைகளையும் அமுல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கான போராட்டமே இப்போது நடந்திருக்க வேண்டும். ஆனால், இடஒதுக்கீட்டை எதிர்த்து போராடுவது, காலம் காலமாக அனுபவித்து வந்த வாய்ப்புகளையும், வாழ்க்கை வசதி களையும் இழக்கிற கோபத்தில் பிறந்ததாகும். இந்தக் கோபம் இடஒதுக்கீடு அமுலாக்கத்தை இன்னும் ஓராண்டு தள்ளி வைத்திருக்கிறது.

2006 -கல்வியாண்டிலிருந்து அமுலாக்க வேண்டிய இடஒதுக்கீடு, 2007 ஜீலையில் இருந்து தான் அமுலாகும். இதற்காக வருகிற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் சட்டம் இயற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படி தொடர்ந்து மண்டல கமிஷன் பரிந்துரை அமுலாவது, தள்ளிப் போய்க் கொண்டே இருப்பதற்கு, சில அரசியல் சாட்சிகள் ஆதரவாகவும் இருக்கின்றன.  குறிப்பாக, BJP 1990-ல் 27சத இடஒதுக்கீட்டிற்கான அறிவிப்பை திரும்பப் பெறவில்லையானால், வி.பி. சிங் அரசுக்கான ஆதரவை வாபஸ் வாங்குவதாக அறிவித்து, வாபஸ் வாங்கவும் செய்தது. இன்றைக்கும், இடஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்கள் அத்வானி மற்றும் வாஜ்பாய் போன்ற தலைவர்களை தொடர்ச்சியாகச் சந்தித்து ஆலோசனை பெறுவதும், இந்தப் பின்னணியில் இருந்தே என்பது தெளிவாகிறது.

இன்று இடதுசாரிகள் குறிப்பாக CPI(M) முன்வைக்கிற, பொருளாதார ரீதியில் மேம்பட்டவர்கள் (Creamy Layor) இடஒதுக்கீட்டிலிருந்து விலக்களிக்கப்பட வேண்டும் என்பது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.  ஏற்கனவே உச்சநீதி மன்றம், 1993ல் வேலைவாய்ப்பில் 27 சதவிதமான இடஒதுக்கீடு குறித்த தீர்ப்பில் குறிப்பிட்டதை மையப்படுத்தியே, மார்க்சிஸ்ட் கட்சி இப்போதும் கோரிக்கை வைத்துள்ளது.  அதே நேரத்தில் Creamy Layor-ஐ முன்வைத்து இடஒதுக்கீட்டை அமுல்படுத்தக் கூடாது என மார்க்சிஸ்ட் கட்சி வாதிடவில்லை.  பொருளாதார ரீதியில் மேம்பட்டவர்களுக்கு இடஒதுக்கீட்டின் அவசியம் என்ன?  என்ற கேள்விக்கு விடைகாண முடியாதவர்களே மார்க்சிஸ்ட் கட்சியை அவதூறு பொழிகின்றனர். இத்தகைய பிரிவினர் வரலாற்றின் பக்கங்களைத் தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ள முயற்சிக்கிறார்கள்.  உண்மை என்னவென்றால், 1978-ல் மண்டல் கமிஷன் அமைக்கப் பட்ட போது, மொரார்ஜி தேசாய் தலைமையிலான அரசையும், 1990 -ல் மண்டல் கமிஷனின் பரிந்துரையான வேலைவாய்ப்பில் 27 சதமான இடஒதுக்கீட்டை அமுல்படுத்திய போது, வி.பி. சிங் தலைமையிலான அரசையும், இப்போது கல்வியில் 27 சதமான இடஒதுக்கீட்டை அமுல்படுத்துகிற போது மன்மோகன் சிங் தலைமையிலான அரசையும், ஆதரிப்பதில் மார்க்சிஸ்ட் கட்சி முன்னின்று செயலாற்றி இருக்கிறது.  இப்படி ஒரு பெருமை வேறு எந்த கட்சிக்கும் இருக்குமா? என்பது சந்தேகமே. எனவே, மார்க்சிஸ்ட் கட்சி இடஒதுக்கீடு அமுலாவதை ஒரு போதும் தள்ளிப்போடக் காரணமாக இருந்ததில்லை.

உலகமயாக்கலும் சமூக நீதியும்:

இன்று இடஒதுக்கீட்டினை வலியுறுத்தும் அரசியல் இயக்கங்களின் பலவும் உலகமயமாக்கலை ஆதரிக்கின்றன. முன்னமே குறிப் பிட்டதைப் போல், உலகமயமாக்கல் அடிப்படை வாதத்துடன் சமரசம் செய்து கொண்டுள்ளது.  உலகமயமாக்கல் கொள்கையும், அடிப்படை வாதமும் ஒடுக்கப்பட்ட மக்களை வஞ்சிப்பதில் ஒன்று பட்டு செயலாற்றுகின்றன என்பதை உணர வேண்டும்.  அடிப்படை வாதம் சாதீயத் தூய்மையை, வர்ணாசிரமத்தை முன்வைத்து பின்தங்கிய மக்களை ஒடுக்கும் பணியைச் செய்தது.  உலகமய மாக்கல், ஒடுக்கப்பட்ட மக்கள் பயன்படுத்தும், பொதுவிநியோக முறை, அடிப்படைக் கட்டமைப்புகள் ஆகியவற்றை அரசின் கடமையில் இருந்து அபகரிக்கும் பணியைச் செய்கிறது.  அடுத்ததாக, புதிய அரசுப் பள்ளிகளை, புதிய ஆசிரியர்களை, சுகாதார நலத் திட்டங்களை அரசு செய்வதில் இருந்து விலகி, தனியாரிடம் ஒப்படைத்து, அதை வணிகமயமாக்கும் பணியைச் செய்கிறது.  எனவே, ஒடுக்கப்பட்டவர்களை மேலும் ஒடுக்குவதற்கான ஆயுதமாகவே, உலகமயமாக்களும், இடஒதுக்கீடும் இருந்துள்ளது  என்பதை அறிய முடியும்.

இந்த சமரசத்தை உலகமயமாக்கல் கொள்கை, அடிப்படை வாதத்துடன் செய்து கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளாமல், இட ஒதுக்கீட்டையும், உலகமயமாக்கல் கொள்கை யையும் ஒரு சேர ஆதரிப்பது பேராபத்தை விளைவிக்கும்.  இது வெட்டப் போகிறவனின் கையில் சிக்கிய ஆடு போன்றது.  1993-ல் உச்ச நீதி மன்றம் 27சத இடஒதுக்கீட்டிற்கு அனுமதித்தது. அதன் பின் உலகமயமாக்கல் கொள்கையின் தீவிரத்தின் காரணமாக, வேலைக்கு ஆள் எடுக்கும் பணி முறையாக நடைபெறவில்லை. வேலை வாய்ப்பில் 27 சத இடஒதுக்கீடு அமுலுக்கு வந்த பின், எத்தனை துறைகளில், எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு கொடுக்கப்பட்டது.  என்பதை அரசு ஓர் வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.  ஏனென்றால், வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, ஆண்டுக்கு 2 சத மத்திய அரசு ஊழியர்கள் குறைக்கப்பட்டார்கள். BSRB (Banking Service Recuritment Board) கலைக்கப்பட்டது. பல மாநிலங்களில் அரசுப் பணிகளுக்கு ஆள் எடுப்பதில்லை  என்ற வேலை நியமனத் தடைச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது.  அரசு பொதுத் துறை நிறுவனங்கள் அனைத்தும் தனியாருக்கு விற்பது துரிதமானது. தனியார் இன்சூரன்ஸ் மசோதா, அந்நிய முதலீடு போன்றவை அமுலானது.  இவையனைத்தும் இடஒதுக்கீட்டிற்கு எதிரானவை என்பதை யாரும் புளி போட்டு விளக்க வேண்டியதில்லை.  இத்தைகயை செயல்கள் காரணமாகவே, இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு இடஒதுக்கீட்டுக் கொள்கை மீது நம்பிக்கை குறைவதற்கு காரணமாகும். இந்த நம்பிக்கை குறைவு காரணமாகவே இடஒதுக்கீட்டை ஆதரித்தும் நடைபெறும் போராட்டங்கள் குறைவாக அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெறுகிறது.

இப்போது உயர் கல்வியில் இடஒதுக்கீடு இதர பிற்படுத்தப் பட்ட பிரிவினருக்கு ஒதுக்க வேண்டும் என்பது பொது விவாதம்.  ஆனால், கல்வி ஒரு கடைச் சரக்காகவும், மாணவர்கள் நுகர்வோரா கவும் உரு மாறியிருக்கிறார்கள்.  இதன் விளைவு, ஆரம்பக் கல்வி முதல் உயர் கல்வி வரை வணிகமயமாகியுள்ளது. இதர பிற்படுத்தப் பட்ட பிரிவினர் ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம்,  AIIMS, PGI போன்ற தொழில் நுட்ப கல்வி நிலையங்களிலும், ஜவர்ஹர்லால் நேரு பல்கலைக் கழகம் போன்ற மத்தியப் பல்கலைக் கழகங்களிலும் மிகக் குறைவான எண்ணிக்கையில் உள்ளனர்.  அதே போல், ஓரளவு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் பாடப் பிரிவுகளான, இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, கார்ப்பரேட் செக்கரட்டரிஷிப், ஜர்னலிசம், பேங்கிங், மைக்ரோ பயாலஜி, பயோ கெமிஸ்டரி, பயோ டெக்னாலஜி போன்ற பாடப் பரிவுகள் படித்தவர்களும் இடஒதுக்கீடு இல்லாத காரணத்தினால் OBC, SC மற்றும் ST ஆகியோர் மிகக் குறைவாக இருக்கிறனர். இன்றைக்கு இடஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்கள் முன்வைக்கின்ற தகுதி, திறமை  உள்ளிட்ட எதுவும் இல்லாதவர் களால், பணத்தை வைத்து படிப்பை விலை பேச முடிகிறது. T.A. இனாம்தாருக்கும், அரசுக்குமான வழக்கில் உச்ச நிதிமன்றம், சுயநிதிக் கல்லூரிகளில் இடஒதுக்கீடு கேட்பதற்கு அரசுக்கு உரிமையில்லை என்றும், NRI-க்கான 15 சத இடஒதுக்கீடு கொடுக்கலாம் என்றும் 2005, ஆக.12 அன்று தீர்ப்பு வழங்கியது. இதற்கு எதிராக இடதசாரி இயக்கங்கள் மட்டுமே பேராடின. வேறுயாரும் போராடவில்லை. இந்தத் தீர்ப்பு அரசின் கடமையில் இருந்தும், சமூக கட்டுப்பாட்டில் இருந்தும் விலக்கிகொண்ட தனியார் மயமாக்கலின் காரணமாக ஏற்பட்ட கொடுமையாகும். குறிப்பாக பள்ளிகள் முதல் அனைத்து கல்லூரிகளும், கடந்த 15 ஆண்டுகளில் அரசாங்கத்தால் திறக்கப்பட்டதை விட, தனியாரால் திறக்கபட்டதே அதிகம். இதற்கு முன் இருந்த BJP அரசும், இப்போது உள்ள காங்கிரஸ் அரசும், அந்நியப் பல்கலைக்கழகத்திற்கு அனுமதியளிக்க எந்த நேரமும் தயாராக இருக்கின்றன. இத்தகைய அந்நியப் பல்கலைக் கழகங்களில் இடஒதுக்கீடு எப்படிக் கிடைக்கும்?  எனவே, சமூகநீதிக்கு முதலில் குழிதோண்டுவது உலகமயமாக்கல் கொள்கை என்பதை உலகமயமாக்கலை ஆதரிப்போர் உணர வேண்டும்.  அதன் மூலம் தான் இடஒதுக்கீட்டின் பலாபலன் எல்லோருக்கும் கிடைக்கும்.

மேலே விவாதித்ததில் இருந்து இன்றைய அத்தியாவசியத் தேவையான இடஒதுக்கீடு கொள்கை அமுலாக வேண்டும்.  புதிய உயர்கல்வி நிலையங்களை மைய அரசு சார்பில் துவக்கிட முன்வர வேண்டும்.  கல்வித்துறையில் தனியார் துறையின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தி, சமூகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.  பள்ளிக் கல்வியில் பொதுப்பள்ளி (Common School) முறையை வளர்க்க வேண்டும். இவை அனைத்தையும் மத்திய மாநில அரசுகள் முன்வைப்பதன் மூலமே உண்மையான சமூக நீதி கிடைக்கும்.

ஆதாரம்

  1. அறிவாளியா? முட்டாளா?-த.வி. வெங்கடேஸ்வரன்
  2.  ஃப்ரண்ட் லைன் கட்டுரைகள்-மே-05-2006.
  3. ஃப்ரண்ட் லைன் கட்டுரைகள்-பிப்-05-2002.
  4. அனில் சடகோபால் கட்டுரை, பீப்பிள்ஸ் டெமோக்ரசி – மே 22 – 28 – 2006.
  5. Why Reservation for OBC is a Must by V.B.Rawat – Countercwocents.org
  6. Merits of Resevation: efficient health system and Social equity emerging evidence from south Indian, S.Venkatesan, One World..