பெண்கள் குறித்த மார்க்சிஸ்ட் கட்சி திட்டத்தின் கண்ணோட்டம்

  • .வாசுகி

இந்திய சூழலில், சோசலிசப்  புரட்சிக்குப் போவதற்கு முன்பு, மார்க்சிஸ்ட் கட்சியின் இலக்காக  மக்கள் ஜனநாயகப் புரட்சி வரையறுக்கப்பட்டுள்ளது. இந்தப் புரட்சியில் தலைமை பாத்திரம் வகிக்க வேண்டிய தொழிலாளி வர்க்கத்தின் ஒரு பகுதியினராக பெண்கள் உள்ளனர். ஜனநாயக புரட்சியின் முக்கிய அம்சம், விவசாய உறவுகளில் புரட்சிகர மாற்றங்களைக் கொண்டு வருவது. அதற்கு கிராமப்புற உழைப்பாளிகளைத் திரட்ட வேண்டும், அதன் ஒரு பகுதியாக விவசாயிகளாக, விவசாய தொழிலாளராக உள்ள பெண்களைத் திரட்டும் கடமையும் புரட்சிகர இயக்கத்தின் முன் உள்ளது. அதே சமயம், சமூக ஒடுக்குமுறைக்கு உள்ளாகிற சமூகப் பிரிவினராகவும் பெண்கள் உள்ளனர்.

சாதி, வர்க்கம், பாலினம் :

பெண்ணியவாதிகளில் ஒரு பகுதியினர் கூறுவதைப் போல், பெண்ணின் மீதான ஒடுக்குமுறைக்கு ஆணாதிக்கத்தை மட்டும் காரணமாகக் கட்சி திட்டம் நிறுவவில்லை. ஆணாதிக்கத்துடன், நிலப்பிரபுத்துவமும், முதலாளித்துவமும் பெண்ணடிமைத்தனத்துக்கான காரணிகளாக, அதனை நியாயப்படுத்தி, நீட்டிக்கும் தத்துவங்களாக உள்ளன என்பதையும், பெண்ணடிமைத்தனம் சமூகக் கட்டமைப்போடு இணைந்தது; இதற்கான பவுதீக சூழல் நிலவுகிறது என்பதையும் சுட்டிக்காட்டுகிறது. இந்தப் புரிதலின் அடிப்படையில்தான் பெண், உழைப்பாளி, குடிமகள் என்று மூன்று வகைகளில் பெண்ணின்  மீதான ஒடுக்குமுறை அமைவதாக கட்சித் திட்டம் விளக்குகிறது. மேலும் சாதி-வர்க்கம்-பாலினம் என்ற ஒன்றுக்கொன்று தொடர்புடைய அடிப்படையிலும், பெண்கள் மீதான சுரண்டல் நிகழ்வதை கவனிக்க வேண்டும்.

அப்படியானால்,  சில தனிநபர்களின் மனச் சிதைவு காரணமாக பெண்ணின் மீதான ஒடுக்குமுறை நிகழ்கிறது என்ற வாதமும், மறுபுறம் அதற்கு தீர்வு ஆண் எதிர்ப்பு என்பதும் நிராகரிக்க வேண்டிய கருத்தியலாகின்றன. தனிநபர் அணுகுமுறைதான் காரணம் என்றால், பெண்ணின் மீதான ஒடுக்குமுறைக்கு சமூக ஒப்புதல் கிடைப்பது எப்படி?  சமூகத்தின் அனைத்துத் தளங்களிலும் இது நிலவுவதும், நியாயப்படுத்தப் படுவதும், இது ஒரு பொதுக்கருத்தாக, பொதுப் புத்தியாக மாறியிருப்பதும், புராண, இதிகாசங்கள் உள்ளிட்டவை இதற்குத் துணை போவதும், ஆண்மை பெண்மை என்று வேறுபட்ட முறையிலான கற்பிதமும் எவ்வாறு நிகழ்கின்றன? பல நூறாண்டுகளாக இது நீடிப்பது எப்படி?

வரலாற்றில் தனியுடமை தோன்றியதும், பெண்ணடிமைத்தனம் உருவானதும் ஒத்திசைந்து நிகழ்ந்ததாக எங்கல்ஸ் ஆதாரங்களுடன் எடுத்து வைக்கிறார். வர்க்க சமூக அமைப்பு உருவான காலம் தொட்டு நிலவும் பெண்ணடிமைத்தனம், நில உடமை சமூகத்தில் தத்துவமாக நிலை பெறுகிறது. முதலாளித்துவ சமூக அமைப்பு, தன் லாபத்துக்காக அதைப் பயன்படுத்துகிறது. புதிய வடிவங்களில் பெண்ணின் மீதான ஒடுக்குமுறை தொடர்கிறது. பண்பாடு அதைத் தொடர்ந்து வலுப்படுத்துகிறது. எனவே முதலாளித்துவ சமூக அமைப்பிலும் நிலைபெற்று நீடிக்கிற இதன் ஆழத்தைப் புரிந்து கொள்ளாமல், ஒரு குடும்பத்தில் ஆணாதிக்கம், மற்றொரு குடும்பத்தில் பெண்ணாதிக்கம் என்று போகிற போக்கில் சமப்படுத்தி விட முடியாது.

உதாரணமாக, பெண் விவசாய தொழிலாளி குறைவான கூலிக்கு உழைக்க நேரும் போது அங்கு பாலினம்/வர்க்கம் என்ற இரண்டு அம்சங்களில் ஒடுக்கப்படுவது நடக்கிறது. தலித் பெண் உழைப்பாளி என்றால், சாதி என்பதையும் சேர்த்து மூன்று விதங்களிலும் அவர் ஒடுக்கப்படுகிறார். தலித்துகளுக்கும், பெண்களுக்கும் குறைவான கூலி கொடுக்கப்படுவதே அவர்களது தாழ்த்தப்பட்ட சமூக அந்தஸ்து காரணமாகத்தான். அதேபோல், பெண்ணை சுமையாகப் பார்க்கும் நில உடமை கருத்தியல் இன்னும் காலாவதியாகி விடவில்லை. முதலாளித்துவ சமூக அமைப்பில், இது பல்வேறு விதங்களில் வெளிப்படுகிறது. உதாரணமாக, முன்னேறிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, பெண்கரு அழிப்பு நடைபெறுவதைக் கூற முடியும்.

கட்சி திட்டத்தின் பாரா 3.15, விவசாய புரட்சியின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக சாதிய, பாலின ஒடுக்குமுறை ஒழிப்பை முன்வைக்கிறது. அரசு கட்டமைப்பு பற்றிய அத்தியாயத்தில், பாரா 5.13ல் அனைத்து துறைகளிலும் முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ அரசு ஆணாதிக்கத்தை வலுப்படுத்தியிருக்கிறது; பெண், தொழிலாளி, குடிமகள் என்று பல மட்டங்களில் ஒடுக்குமுறை நடக்கிறது, நவீன தாராளமயமானது பொருளாதாரம் மற்றும் சமூக தளங்களில் புதிய வடிவிலான பாலின சுரண்டலைக் கொண்டு வந்திருக்கிறது என்கிறது. இந்த நிலை வன்முறையை அதிகரிக்கிறது. பொருளாதார சுதந்திரமும், சமூக -அரசியல் வாழ்வில் சுதந்திரமான பங்களிப்பும், பெண்களின் முன்னேற்றத்துக்கான முன்நிபந்தனையாகும். இன்றைய சமத்துவமற்ற நிலையை எதிர்ப்பதுடன், சமத்துவத்துக்கான பெண்கள் இயக்கத்தை, சமூக விடுதலைக்கான இயக்கத்தின் ஒரு பகுதியாகப் பார்க்க வேண்டும் என்று விளக்குகிறது கட்சித் திட்டம். பாரா 5.20வில் இன்றைய பண்பாட்டு வளர்ச்சிப் போக்குகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, மரபு, மதச்சடங்கு என்ற பெயரில் பெண்களை இழிவுபடுத்தும் நாசகரமான பழக்க வழக்கங்கள் நிலவுகின்றன என்பது குறிப்பிடப்படுகிறது.

மக்கள் ஜனநாயக அரசு என்ன செய்யும்?

இச்சூழலில் மக்கள் ஜனநாயகப் புரட்சி நடந்து, மக்கள் ஜனநாயக அரசு அமைந்தால் அது பெண்களுக்கு என்ன செய்யும் என்பதும் திட்டத்தில் இடம் பெற்றிருக்கிறது. தொழிலாளிகளுக்கும், விவசாயிகளுக்கும் நிகழும் முன்னேற்றத்தின் பலன், அவ்வர்க்கங்களில் உள்ள பெண்களுக்கும் போய் சேரும் என்பது ஒரு புறம். அனைவருக்கும் சம உரிமை, சம வேலைக்கு சம ஊதியம் போன்ற நடவடிக்கைகள் உண்மையாக அமலுக்கு வரும். மேலும், பெண்களுக்கு எதிரான சமூக சமத்துவமின்மையும், பாகுபாடும் அகற்றப்படும். நிலம் உள்ளிட்ட சொத்துக்களின் மீது சம உரிமை, அனைத்து சமூகங்களையும் சார்ந்த பெண்களுக்கு சம உரிமையின் அடிப்படையில் சம சட்டங்கள் உறுதி செய்யப்படும்.

முதலாளித்துவ அரசியல் கட்சிகள் குடும்ப அமைப்பைப் பற்றிப் பேசுவது அரிது. அப்படியே பேசினாலும், அது புனிதமானது; கேள்விக்கு அப்பாற்பட்டது என வலியுறுத்துவார்கள். பெண்ணியவாதிகளில் ஒரு பகுதியினர், குடும்பக் கட்டமைப்பு பெண்ணுக்கு எதிரானது; எனவே அது தகர்க்கப்பட வேண்டும் என்று கூறுவார்கள். ஆனால்,  மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டமோ இந்த இரண்டையும் நிராகரித்து, குடும்ப அமைப்பு ஜனநாயகப்படுத்தப்பட வேண்டும் என மதிப்பீடு செய்கிறது. மக்கள் ஜனநாயக அரசு அமைந்தால் ”குடும்பக் கட்டமைப்பை ஜனநாயகப்படுத்துவதன் பகுதியாக குழந்தை வளர்ப்பு மற்றும் வீட்டு வேலைகளில் பொருத்தமான ஆதரவு ஏற்பாடுகள் செய்யப்படும்” என்பது திட்டத்தில் இடம் பெற்றிருக்கிறது.

சோவியத் யூனியனில் மலிவு விலை உணவகம், சலவையகம், அனைத்து வேலைத்தளங்களிலும் தரமான குழந்தை காப்பகம் உறுதி செய்யப்பட்ட பின்னணியில்தான், சோசலிச அரசு முன்வைத்த சம வாய்ப்புகளை பெண்களால் பயன்படுத்திக் கொள்ள முடிந்தது. குடும்பத்தின் அல்லது பெண்ணின் கடமையாக இருந்தவை அரசின் பொறுப்பாக மாறியது. இது ஒரு முக்கிய மாற்றம் என்பதையும் இத்துடன் இணைத்துப் பார்க்க வேண்டும்.

புதிய முற்போக்குப் பண்பாடு:

பெண்ணடிமைத்தனத்தை மன மாற்றத்தின் மூலம் மட்டுமே ஒழிக்க முடியாது. அதற்கான பவுதீக சூழல் (material conditions) இருக்க வேண்டும். அதே சமயம், பொருளாதார தளத்தில் மாற்றம் வருவது, தானாகவே பண்பாட்டுத் தளத்தில் மாற்றத்தைக் கொண்டு வந்து விடாது. அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். அதைப் பற்றியும் கட்சித் திட்டம் கூறுகிறது. அதாவது ஜனநாயக, மதச்சார்பற்ற கண்ணோட்டத்தை உடைய புதிய முற்போக்கு மக்கள் பண்பாடு முன்னெடுக்கப்படும். சாதிய, பாலின பாகுபாடு, வகுப்புவாத வெறுப்புணர்வு, அடிமைத்தனம், மூடநம்பிக்கைகள் போன்றவற்றைப் போக்குவதற்கு இது வழி கோலும்.

எனவே, பெண்கள் மக்கள் ஜனநாயக அணியில் இடம் பெற வேண்டிய வர்க்கங்களின் இன்றியமையாத ஒரு பகுதியினர் என்ற முறையிலும், ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை கிடைக்கப் போராட வேண்டிய சமூகப்பிரிவினர் என்ற முறையிலும் பார்க்கப்பட வேண்டும். ஒடுக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் எதிரான போராட்டத்தில் வர்க்கரீதியாகவும், சமூகரீதியாகவும் அவர்கள் அணிதிரட்டப்பட வேண்டும், புரட்சிகர போராட்டத்தில் தோளோடு தோள் நிற்கும் போர்ப் படையின் பகுதி அவர்கள் என்ற புரிதல் கட்சி திட்டத்தில் வெளிப்படுகிறது.

குரல்: வெங்கடேஷ்

எடிட்டிங்: மதன் ராஜ்