மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


May 25, 2024

  • நிதித்துறை – மாநில சுயாட்சி சீர்குலைவு

    அபிநவ்சூர்யா தேசிய இனங்களின் உரிமைகளை அங்கீகரித்தும், கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையிலும் கட்டமைக்கப்பட்ட இன்றிய ஒன்றியத்தின் ஸ்திரத்தன்மை அண்மைக் காலங்களில் கடும் சோதனைக்கு ஆளாகி உள்ளது. மாநில முதலமைச்சர்களும், பல எதிர்க் கட்சி தலைவர்களும் ஒன்றிய அரசிற்கு எதிராக தில்லி வீதிகளில் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். குறிப்பாக, கேரள அரசின் அமைச்சரவையே நேரடியாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இறங்கி உள்ளது. இது, மோடி அரசு மாநிலங்களின் சுயாட்சி மீது தொடுத்து வரும் தீவிர தாக்குதல்களுக்கு அத்தாட்சி. எதேச்சாதிகார முறையில் செயல்படும் ஆளுநர்கள் மூலம் பல மாநிலங்களில் அரசாங்க செயல்பாடுகளை சீர்குலைத்து, மாநில அரசாங்கங்கள் கையில் உள்ள சிறிதளவு சட்டம் இயற்றும் உரிமைகளையும் பறிப்பது, புதிய கல்வி கொள்கை இயற்றுதல், மத்தியில் கூட்டுறவு அமைச்சகம் அமைத்து கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டு வருதல் என்பது போன்ற மாநில பட்டியலில் இருக்கும் துறைகளில் மத்திய அரசு ஊடுருவுதல் என்பது போன்ற நேரடியான தாக்குதல்கள் மூலம் மட்டுமல்லாமல், மத்திய புலனாய்வு அமைப்புகளை ஏவி விட்டு எதிர்க் கட்சி தலைவர்களை அச்சுறுத்துதல், குதிரை பேரம் மூலம் எதிர்க் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆட்சியை கவிழ்த்தல் போன்ற சட்டவிரோத தாக்குதல்கள் மூலமும் மாநில அரசாங்கங்களை சீர்குலைத்து, கூட்டு ஜனநாயகத்தை அழிக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது பா.ஜ.க. அரசு. இந்த போக்கின் ஒரு பகுதியாக, மாநிலங்களின் நிதி சுயாட்சி (fiscal federalism) அடிப்படைகளை தீவிரமாக அழிக்கும் வேலைகளும் வலுப்பெற்றுள்ளன. நவ தாராளமய காலத்தில், நாட்டை மொத்தமாக கார்ப்பரேட்டுகளுக்கு விற்க ஏதுவாக, நிதி உட்பட அனைத்து அதிகாரங்களையும் மத்தியில் குவிக்கும் நடவடிக்கைகள் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகவே நடைபெற்று தான் வருகிறது. ஆனால் எல்லாவற்றையும் போலவே, காங்கிரஸ் செய்து வந்த ‘நிதி சுயாட்சி’ அழிப்பையும் அதி தீவிர நிலைக்கு கொண்டு சென்றுள்ளதே பாஜக அரசின் சாதனை. நாம் இங்கு நினைவில் கொள்ள வேண்டியது, இன்று ஊடகங்களில் பரவலாக உலா வரும், “கட்டும் வரி ஒவ்வொரு ரூபாய்க்கும் தமிழ்நாட்டிற்கு கிடைப்பது 30 பைசா மட்டுமே, உத்திர பிரதேசத்திற்கு 1.7 ரூபாய் கிடைக்கிறது” என்பது போன்ற குறுகிய நோக்கம் உடைய பார்வை தவறானது என்பது மட்டுமல்லாமல், ஆபத்தானதும் கூட. இது ‘சுயாட்சி’ தத்துவத்தை வெறும் ‘யாருக்கு எவ்வளவு’ என்ற பார்வைக்கு சுருக்குவதோடு மட்டுமல்லாமல், அதன் பின்னணியில் உள்ள தாராளமய எதேச்சதிகார போக்குகளை மறைக்கிறது. அனைத்து மாநிலங்களின் வளர்ச்சிப் பாதையும் நேர் கோடு கிடையாது. பல வரலாற்று மற்றும் சமகால காரணிகளின் விளைவாக, சில மாநிலங்கள் வேகமாக வளர்ந்ததோடு மட்டுமல்லாமல், அதிக வரி ஈட்டும் திறனும் பெற்றன. இதனால், இந்த மாநிலங்களில் இருந்து ஈட்டப்பட்ட வரியின் ஒரு பகுதி, வளர்ச்சி குன்றிய மாநிலங்களுக்கு மடை மாற்றப்பட்டது. இந்த பங்கீட்டு முறை, உண்மையான கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் நிகழ்ந்த வரை பிரச்சனை எழவில்லை. ஆனால் மாநில சுயாட்சி அழிக்கப்படும் பொழுதுதான், அந்த கோபம், இது போன்ற தோற்றத்தில் வெளிப்படுகிறது. மாநிலங்களின் நிதி உரிமைகளே அழிக்கப்படுவதுதான் இங்கு பிரதான பிரச்சனை என்பதை நினைவில் கொள்வது அவசியம். இவ்வாறு மத்திய மாநில அரசுகள் இடையே நிலவும் நிதி உட்பட அனைத்து உரிமைகளின் ஏற்றத்தாழ்வை நம் அரசியல் சாசனமும் அங்கீகரித்து உள்ளது. உதாரணமாக, 2021இல், மத்திய-மாநில அரசுகளின் மொத்த வருவாயில் 37 விழுக்காடு மட்டுமே மாநிலங்களால் வசூலிக்கப்பட்டது.… Continue reading