மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


இந்தியாவில் முற்போக்குப் பண்பாட்டு இயக்கம்: வரலாற்று ஆய்வு


பேரா. மாலினிபட்டாச்சார்யா

படைப்பாற்றல் மிக்க பொழுதுபோக்கு நடவடிக்கைகள் எனும் குறிப்பிட்ட பொருளில் ‘பண்பாடு’ என்ற சொல்லை இங்கு நாம் பயன்படுத்துகிறோம். இத்தகைய செயல்பாடுகள் தொடர்பான ஒரு ‘இயக்கம்’ பற்றி பேசுவது, அவை தனிமனித உள்ளத்தில் தனிப்பட்ட ஓர் முறையில் உருவான ஒன்றல்ல; அவற்றின் உருவாக்கம் சமூகம் சார்ந்தது, அரசியல் – கருத்தியல் அம்சத்தை உள்ளடக்கியது என்ற பொருளில்தான். பண்பாட்டு அரசியலுக்கு எப்போதும் இடமுண்டு. 

இந்தியாவில் முற்போக்குப் பண்பாட்டு இயக்கத்தில் நாம் ஏன் ஆர்வம் செலுத்துகிறோம்? ஏனெனில், கம்யூனிஸ்டுகள் இப்பாரம்பரியத்தின் சொந்தக்காரர்கள். இதில் முக்கியப் பங்கு வகித்தவர்கள். 

கருத்தியல் போர் 

இந்திய முற்போக்குப் பண்பாட்டு இயக்கத்தின் தொடக்க கால அரசியல், சாதியப் படிநிலை, பெண்கள் மீதான ஒடுக்குமுறை ஆகியவற்றை எதிர்த்தும், கல்வியறிவு பெறவும் 19ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற உரிமைகளுக்கான சமூகச் சீர்திருத்த இயக்கங்களில் வேர்கொண்டுள்ளது. ஆதிக்கப் பண்பாட்டுக்கு எதிரான விமர்சன பூர்வமான எதிர்ப்பாக இது விளங்கியது. தொன்மைக்காலம் தொட்டு ஆதிக்கப் பண்பாட்டுக்கு எதிரான மாற்றுக் கருத்தும், பன்முகத்தன்மை கொண்ட பார்வையும் முன்வைக்கப்பட்டு வந்தது. ஆனால், காலனி ஆதிக்கமும், நவீன மேலைய சிந்தனையுடன் தொடர்புடைய மேட்டுக்குடி வர்க்கங்களில் ஒரு பகுதியினரிடம் உருவான தேசிய அடையாளத்துக்கான தேடலும் 19ஆம் நூற்றாண்டின் சீர்திருத்த இயக்கங்களுக்கு ஒரு புதிய தன்மையை அளித்தது. அவை வழி வழியாக வரும் விவாதங்களின் பகுதி என்று கூறலாமா? அல்லது ‘சுதேசி நவீனத்துவம்’ என்ற சொல்லாடலில் அழைக்கலாமா? 

1930, 40களின் பண்பாட்டு இயக்கம், இருபதாம் நூற்றாண்டின் இருபதுகளில் வெகுமக்கள் இயக்கமாக மாறிய விடுதலைப் போராட்டத்துடன் மிக நெருக்கமான வரலாற்றுத் தொடர்பைக் கொண்டிருந்தது. தொழிலாளர்கள், விவசாயிகளின் பரந்துபட்ட போராட்டங்கள் வலுப்பெற்று காலனி ஆதிக்க எதிர்ப்பு எழுச்சிக்கு புதிய பரிமாணங்களை கொடுத்தன. ரஷ்யப் புரட்சி, ஐரோப்பாவில் பாசிசத்தின் எழுச்சி, இரண்டு உலகப்போர்கள் போன்ற சர்வதேச நிகழ்வுகளின் தாக்கம் கூடுதலாக இருந்தது. இந்தப் பின்னணியில் சம உரிமை, சமூக நீதி ஆகியவற்றின் அடிப்படையில் நல்லிணக்கத்தை நிலை நாட்டும் சுதந்திர நவீனக் குடியரசு பற்றிய உண்மையான பார்வை ஏற்கனவே உருப்பெற்றிருந்தது. இப்பார்வை வெறும் கருத்தியல் சார்ந்ததாக மட்டுமல்லாமல், சமூகப் போராட்டங்களிலும், படைப்பாக்கம், விமர்சன இலக்கியம் , இதழியல், நாடகம், பாடல்கள், காட்சிக் கலைகள், பின்னாளில் திரைப்பட ஊடகம் போன்றவை மூலம் பன்மடங்காக வெளிப்பட்ட புதிய போக்குகளில் தெளிவாகத் தெரிந்தது.

அதேசமயத்தில் சுதந்திரப் போராட்டத்திற்குள் வர்க்கம் ,சாதி, வகுப்புவாதம் ஆகியவற்றின் அடிப்படையில் ஆழமான பிளவுகளும் ஏற்பட்டன. விடுதலையின் நோக்கத்தை ரத்த வெள்ளத்தில் மூழ்கடிப்போம் என பிற்போக்குச் சக்திகள் அச்சுறுத்தின. இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியும் , சிறிது காலத்துக்குப் பிறகு உருப்பெற்ற ஆர்எஸ்எஸ் அமைப்பும் இக்காலத்தில் பிறந்து, விடுதலைப் போராட்டத்திலிருந்த இந்த எதிரெதிர் போக்குகளைப் பிரதிநிதித்துவப்படுத்தின. கம்யூனிஸ்ட்களைப் பொறுத்தவரை, பண்பாட்டில் ‘முன்னேற்றம்’ என்பது பாசிசத்துக்கு எதிரான உலகளாவிய கருத்தியல் போருடன் ஒருங்கிணைந்தாகும். கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டபோதும் கம்யூனிஸ்ட் அறிவுஜிவீகள் இங்கு ‘பண்பாட்டில் ஐக்கிய முன்னணியை’ உருவாவதற்கு உதவியதன் மூலம், அதன் மீதான ‘பழமை வாதிகளின்’ ஆதிக்கத்தை விமர்சன பூர்வமாக எதிர்த்துப் போராடி, பண்பாட்டை எதார்த்த வாழ்க்கையுடனும், போராடும் ‘மக்களின்’ எதிர்பார்ப்புகளுடனும் ஒருங்கிணைத்தனர். காலனிய எதிர்ப்புப் போராட்டத்தை ஒரு வெகுமக்கள் இயக்கமாக மாற்றுவதன் மூலம் மக்களின் நலனுக்கான இத்தகைய ‘முன்னேற்றம்’ என்னும் தங்கு தடையற்ற பாதை சாத்தியம் என்பதை அவர்கள் உணர்ந்தனர். 

பாசிசத்தின் முன்னோடி ஆதரவாளர்கள்

ஆங்கிலேயர்கள் முன்வைத்த ‘இரு தேசக் கோட்பாட்டை’ ஏற்றுக் கொண்டு இத்தாலியின் முசோலினி பாணியில் தமது பிளவுவாத, மக்கள் விரோத ‘இந்து ராஜ்ஜியத்தை’ க் கட்டமைக்க ஆர்எஸ்எஸ் முற்பட்டது. விடுதலைப் போராட்டத்தில் அவர்களுக்கு எவ்விதப் பங்கும் இல்லை என்பது மட்டுமல்ல; தொடக்கத்திலிருந்தே இந்தியாவில் பாசிசத்தின் முன்னோடி ஆதரவாளர்களாக அவர்கள் விளங்கி வந்தனர். இந்திய ஆளும் வர்க்க மேலாதிக்கத்தில் மிகவும் பிற்போக்கான, வன்முறைப் போக்கை அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தினர். சில குறிப்பிட்ட வரலாற்றுத் தருணங்களில் அதுவே அவர்களை மிகவும் செல்வாக்கு மிக்கவர்களாக்கியது. 

சர்வதேச பின்புலத்தில், ‘பண்பாட்டில் ஐக்கிய முன்னணி’ எனும் அடிப்படையில் அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் 1936 ஆம் ஆண்டு ஏப்ரலில் (போர்க்களங்களில் பாசிச எதிர்ப்பு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம் என அழைக்கப்பட்டது) நிறுவப்பட்டது. ஐரோப்பாவில் காட்டுமிராண்டித்தனமான சக்திகளால் வழிநடத்தப்பட்ட பாசிசத்தை முறியடிக்கவும், பண்பாட்டைப் பாதுகாக்கவும் ரோமன் ரோலண்ட், ஹென்றி பார்புஸ் போன்றோர் தலைமையில் நிறுவப்பட்ட சர்வதேச எழுத்தாளர்கள் சங்கத்துடன் இவ்வமைப்பு தொடர்பில் இருந்தது. நேரு போன்ற இந்திய விடுதலைப் போராட்டத் தலைவர்களில் ஒரு பகுதியினர் எழுத்தாளர்கள், அறிவுஜீவிகளின் பாசிச எதிர்ப்பு அமைப்புகளுடன் தொடர்பு கொண்டிருந்தனர். சோவியத் ரஷ்யாவின் சோசலிச சாதனைகளால் இவர்கள் ஈர்க்கப்பட்டனர். முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் உருவான பொழுதே இந்திய அறிவுஜீவிகளில் செல்வாக்குமிக்க ஆளுமைகளை அது ஈர்த்தது. விடுதலைப் போராட்டம் உள்ளிருந்து எதிர்கொண்ட ஆபத்துகளைப் பற்றி அவர்கள் அறியாதவர்கள் அல்ல என்பதை இது காட்டுகிறது.

கலைக்கு முற்போக்கு அடையாளம்

காலனிய எதிர்ப்புப் போராட்டத்தில் பாசிஸ்டுகள் அரசியல் ரீதியில் உதவக்கூடும் எனக் கருதிய அறிவுஜீவிகள் மத்தியில் நிலவிய பாசிசத்தின் மீதான ஈர்ப்பை முறியடிப்பதிலும் முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தது. கலையில் எதார்த்தவாதத்தின் அவசியத்தையும் அவர்கள் வலியுறுத்தி வந்தனர். அழகியல் கோட்பாடுகளுக்கு ஆதரவளித்து வந்ததுடன், கலைக்கு முற்போக்கு அடையாளம் தேவையா? அழகியலை நிலை நாட்ட ஏதாவது ஒரு அமைப்பு அவசியமா? கலைக்கு நிறுவன ஒழுங்கமைவு முக்கியமா? மக்கள் கலை, இலக்கியம் என ஏதாவது உண்டா? உள்ளடக்கத்துக்கும், உருவத்துக்கும் இடையிலான தொடர்புகள், மக்கள் யுத்தத்துக்கும், காலனிய எதிர்ப்புப் போராட்டத்துக்கும் இடையிலான முரண்பாடுகள் போன்ற பல்வேறு பிரச்சனைகளின் மீது ஆர்வமூட்டும் விவாதங்கள் நடைபெற்று வந்தன. பண்பாட்டு மேலாண்மைக்கு எதிரான இத்தகைய விவாதங்களில் கம்யூனிஸ்டுகள் பல்வேறு ஆக்கப்பூர்வ பங்களிப்புகளை செலுத்தி வந்துள்ளனர். 

கம்யூனிஸ்ட் கட்சியின் மீதான தடை நீக்கப்பட்ட பிறகு, அடுத்த ஆண்டு, 1943 மே மாதம் மும்பையில் நடைபெற்ற கட்சியின் அகில இந்திய மாநாட்டில் இந்திய மக்கள் நாடக மன்றம் தோற்றுவிக்கப்பட்டது. (1941ஆம் ஆண்டு பெங்களூருவில் இதன் முதல் கிளை நிறுவப்பட்டது). அதன் கொள்கை அறிக்கை குறிப்பிடுவது போல, நிச்சயமாக அது ஒரு கட்சி அமைப்பும் அல்ல; நன்கு சிந்தித்து உருவாக்கப்பட்ட திட்டமும் அதற்கு இல்லை. ஆனால் முன்னேற்றத்துக்கான புதிய பார்வையுடன் கூடிய, நிகழ்த்துக் கலைஞர்களை ஒரு பொது மேடையில் அணிதிரட்டும் கடமை , அர்ப்பணிப்பு மிக்க கட்சித் தொண்டர்களால் நிறைவேற்றப்பட்டது. இது நமது வரலாற்றின் ஒரு முக்கியமான கட்டத்தில், ஒரு தனித்துவமான அமைப்பாக விளங்கியது. ஏற்கனவே குறிப்பிட்டது போல, நாடு முழுவதும் ஏற்பட்ட படைப்பாற்றல் எழுச்சி, ஏகாதிபத்திய ஆட்சியின் கீழ் கலைஞர்கள் இடையே ஏற்பட்ட விரக்தி ஆகியவை காரணமாக இந்த மேடையின் கீழ் பல்வேறு தரப்பையும் சேர்ந்த திறமைசாலிகளான ஒட்டுமொத்த தலைமுறையையும் திரட்டுவது சாத்தியமானது. நாடு முழுவதிலும் உள்ள ஏராளமான புகழ்பெற்ற கலைஞர்கள் இவ்வமைப்புடன் நெருங்கி வந்தனர். இவ்வமைப்பின் கீழ் திரண்ட இளம் கலைஞர்கள் பலர் பிற்காலத்தில் பண்பாட்டுத்துறையில் புகழ்பெற்ற ஆளுமைகளாக மலர்ந்தனர். 

குறை மதிப்பீடும் எளிமைப்படுத்தலும்

வங்கப் பஞ்சம், போர்க்காலங்களில் ஏற்பட்ட உணவுப் பற்றாக்குறை, செல்வந்தர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையே அதிகரித்து வந்த இடைவெளி, பெருகிவந்த வகுப்புவாத வன்முறை ஆகியவற்றினால் ஏற்பட்ட தார்மீக வீழ்ச்சி போன்றவை மக்களிடையே வலுவான பண்பாட்டுத் தொடர்பின் அவசியத்தை அதிகரித்தது. இந்திய மக்கள் நாடக மன்றம் நிகழ்த்துக் கலைகளில் கவனம் செலுத்தியதால், அதன் வரம்பு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்துக்கு அப்பால் சென்றது. இது கல்வியறிவு பெற்றவர்களின் பண்பாட்டுக்கு அப்பால், சமூக வாழ்வின் அடிமட்டத்தில் உள்ள படைப்பாற்றலின் வளமான ஆதாரங்களை ஆராய்வதற்கான வழியைப் பண்பாட்டு ஆர்வலர்களுக்கு திறந்து விட்டது. உழைக்கும் மக்கள், குறிப்பாக கிராமப்புற மக்கள் தங்களின் சொந்த வாழ்க்கை அனுபவங்கள், போராட்டங்களிலிருந்து தமது படைப்பாற்றலை வெளிப்படுத்தினர். இவர்கள் எழுத்தறிவு பெற்றவர்களின் பண்பாட்டுடன் நெருக்கமான தொடர்பைப் பராமரித்ததைக் காணலாம். விவசாயிகள், தொழிலாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்ட தேர்ந்த கைவினைஞர்கள், விடுதலை பெற்ற, ஒன்றுபட்ட இந்தியாவிற்கான முற்போக்குப் பார்வையை முன்வைப்பதில் இணைந்து நின்றனர். மத்தியதர வர்க்க அறிவுஜீவிகளையும், உண்மையான மக்கள் கலைஞர்களையும் ஒருங்கிணைப்பதில் மக்கள் நாடக இயக்கம், மக்கள் நாடக மன்றத்துக்கும் அப்பால் சென்றது. 

இக்காலங்களில் படைப்பாற்றலிலும், அமைப்பு ரீதியிலும் உச்சத்துக்குச் சென்ற இந்திய மக்கள் நாடக மன்றத்தின் செயல்பாடுகளை தொடர்ந்து பராமரிப்பது கடினமான ஒன்றாக இருந்தது. விடுதலைக்குப் பின்னர் இவ்வமைப்பின் எதிர் மேலாண்மை பாத்திரத்துக்கு எதிராக பல்வேறு காரணிகள் ஒருங்கிணைந்து நின்று சவால் விடுத்தன. 1948 ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்ற கட்சியின் அகில இந்திய மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட தீவிர இடதுசாரி நிலைப்பாட்டின் மீது எல்லாப் பழிகளையும் சுமத்துவது எளிது. (1951இல் அது விமர்சிக்கப்பட்டு சரி செய்யப்பட்டுவிட்டது.) ஆனால், அதைத் தொடர்ந்து விதிக்கப்பட்ட தடை பொதுதளத்தில் பண்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதை சிக்கலாக்கியது. செயல்பாட்டாளர்கள் பலர் அச்சத்துக்கு உள்ளாகினர். பலர் காவல்துறையின் கண்காணிப்பில் இருந்தனர். பலர் சிறையில் அடைக்கப்பட்டனர். தீவிர அரசியல் நிலைப்பாடு காரணமாக சிலர் செயல்படுவதில் சிரமத்தை உணர்ந்தனர். 

பண்பாட்டு அரசியலின் முக்கியத்துவம் குறித்து கட்சித் தலைமையின் குறை மதிப்பீடும், பெருமளவுக்கு எளிமைப்படுத்தலும்தான் உண்மையான பிரச்சினையாகும். பரந்த அரசியல் நிலை சரிப்படுத்தப்பட்ட பிறகும் இத்தகைய பார்வை தொடர்ந்தது. விடுதலைக்குப் பிந்தைய சூழலில் பண்பாட்டுத் தலையீடு குறித்து இக்களத்தில் பணியாற்றுவோர் மத்தியில் ஒருவிதக் குழப்பம் நிலவியதாகத் தோன்றுகிறது. சில சமயங்களில் இது திசை தவறிய தாராள வாதத்திற்கும், பிற சமயங்களில் பிளவுபட்ட சிந்தனைக்கும், பண்பாட்டு ரீதியாக செயல்படும் தனி நபர்கள் மீதான குறுகிய, இயந்திரத்தனமான கட்டுப்பாட்டைக் கொண்டு வரும் முயற்சிகளுக்கும் வழிவகுத்தது. மேலே குறிப்பிட்ட திசையற்ற நிலைமையும், பண்பாடு குறித்த நேருவின் கோட்பாடும், கல்விப்புலன் சார்ந்த அமைப்புகளை உருவாக்கியதும் சேர்ந்து இவ்வியக்கத்தை பலவீனப்படுத்தி, இதன் செயல்பாடு அரசைச் சார்ந்திருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது. பரந்துபட்ட அறிவுஜீவிகளை உள்ளடக்கி போருக்குப் பிந்தைய காலங்களில் சமாதானப் பண்பாட்டு இயக்கம் செயல்பட்டு வந்த போதிலும், 1956க்குப் பிறகு ஒரு அகில இந்திய அமைப்பு என்ற வகையில் இந்திய மக்கள் நாடக மன்றம் செயலிழந்து போனது. 

முற்போக்கு பண்பாடு

இருப்பினும் 1950களிலும் கூட இலக்கியத்திலும், நாடகத்திலும், திரைப்படங்களிலும், விமர்சன எதார்த்தப் போக்கு உருவாக்கிய பெரும் செல்வாக்கை எவரும் புறக்கணித்து விட முடியாது. தெலுங்கானா, தெபாகா, கைய்யூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டங்களின் மூலம் உருப்பெற்ற பிரபலமான பாடல்கள், நாடகங்களின் வளமான பாரம்பரியத்தையும் நாம் மனதில் கொள்ளவேண்டும். மக்கள் நாடக இயக்கத்தின் தொடர்பினால் பெற்ற உத்வேகத்தின் பல சுவடுகளை அவை தாங்கியுள்ளன. 

1950கள் வரையிலான முற்போக்கு பண்பாட்டு இயக்கத்தின் ஒருங்கிணைந்த வரலாற்றைக் கண்டறிய, இரண்டு அனைத்திந்திய அமைப்புக்களின் எஞ்சியுள்ள மைய ஆவணங்கள் நமக்கு உதவுகின்றன. அடுத்தடுத்த காலகட்டத்தில், பல மாநிலங்களில் இத்தகைய செயல்பாடுகள் நடைபெற்று வந்துள்ள போதிலும், இந்த அனுபவங்களைத் தொகுப்பதில் நாம் பின்தங்கி இருப்பதால், ஓரிரு உதாரணங்களை மட்டுமே அளிக்கும் நிலையில் உள்ளோம். 1960 களில் கம்யூனிஸ்ட் கட்சியில் ஏற்பட்ட பிளவும், 1970 களில் நக்சல்பாரி இயக்கமும் ஒரு பரந்த பண்பாட்டு தளம் எனும் கருத்துருவாக்கத்தில் கடுமையான பின்னடைவுகளை ஏற்படுத்தின. புதிய நிலைமையில் முற்போக்கு பண்பாட்டிலிருந்து மக்களின் ஜனநாயகப் பண்பாட்டை நோக்கிய பயணம் தாமதமானது. 

அத்தகைய நிலையிலும், தற்போதைய அரசியல் சமநிலையை தலைகீழாக மாற்றி அமைக்க முடியாவிட்டாலும், முற்போக்கு பண்பாட்டு இயக்கம் வலுவான எதிர்ப்பு சக்தியாக விளங்கியது என்பதில் ஐயமில்லை. பண்பாட்டுத் துறையில் அவர்களது செல்வாக்கு குறித்த சில சான்றுகளை அளிக்கலாம். குறிப்பாக அவசரகால நிலை, பண்பாட்டு நடவடிக்கைகள் மீதான தணிக்கை, அதைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் கொந்தளிப்பு காலகட்டம் முற்போக்கு பண்பாட்டு இயக்கத்துக்கு ஒரு புதிய உத்வேகம் அளித்தது. சில மாநிலங்களில், வணிக நோக்கில் செயல்படும் அமைப்புக்களுக்கு அப்பால் செழித்து வளர்ந்த நாடக இயக்கங்கள் ஏற்கனவே செயல்பட்டுக் கொண்டிருந்தன. உத்பல் தத் – பாதல் சர்க்கார் -ஹபீப் தன்வர் போன்றோரின் ஒரு தலைமுறை எதிர் நாடக இயக்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தியது எனில், கர்நாடகாவில் செயல்பட்ட சமுதாயா குழுவும், சப்தர் ஹஷ்மியின் ஜனம் ஆகிய அமைப்புகளும் இப்போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு முன்னெடுத்துச் சென்றன. 

எதிர்ப் பண்பாட்டு நடவடிக்கைகள்

கேரளாவின், கேரள சாஸ்திர சாகித்ய பரிஷத்தின் முற்போக்கு வெளியீடுகள், மேற்கு வங்கத்தின் சிற்றிதழ்கள் ஆகியவை எதிர்ப் பண்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டன. 

1980களின் முற்பகுதியில் மாநிலங்களில் புதுமையான பண்பாட்டு நடவடிக்கைகளை விரிவுபடுத்தும் இலட்சியத்துடன் ‘ஜர்னல் ஆப் ஆர்ட்ஸ் அண்ட் ஐடியாஸ்’ இதழ் வெளிவந்தது. 50களில் இருந்தே திரைப்பட சங்கங்கள் எதிர்காலத் தலைமுறையினரின் திரைப்படங்கள், ஆவணப் படங்கள் மீதான ரசனையை வளர்த்துவந்தன. அவை மரபுகளை உடைத்து, புதிய பார்வையை உருவாக்கின. சத்யஜித்ரே, ரித்விக் கட்டாக், மிருணாள் சென் ஆகிய மூவருக்குப் பிறகு ஷியாம் பெனகல், அடூர் கோபாலகிருஷ்ணன், கிரீஷ் காசரவள்ளி, சயீத் மிர்சா போன்ற இளம் இயக்குனர்கள் உருவாகினர். காட்சிக் கலையில் மூத்த ஆளுமைகளான சித்த பிரசாத், சோம்நாத் ஹோர், எம்.எப்.ஹுசைன் ஆகியோரைத் தொடர்ந்து, குலாம் ஷேக், விவான் சுந்தரம் ஆகிய இளம் தலைமுறையினர் வந்தனர்.

அனைத்திந்திய அமைப்பின் சூழலில் உருவாக்கப்படா விட்டாலும் அல்லது எப்போதும் இடதுசாரி இயக்கத்தின் ஒரு பகுதியாக இருப்பதாகக் கூறிக்கொள்ளாத போதும், இது போன்ற அனைத்துப் பண்பாட்டு நடவடிக்கைகளும் பொதுமக்களின் மன ஓட்டத்தை எதிர்ப் பண்பாட்டுச் செயல்களுக்கு ஒத்திசைவாகவே வைத்திருந்தன. ஆயினும் அவர்கள் எழுத்தறிவு பெற்ற சமுதாயத்துக்கு அப்பால் அரிதாகவே செல்ல முடிந்தது. அவ்வாறு இருந்தபோதிலும், ஆதிக்க வர்க்கங்களின் பண்பாட்டைப் பாதித்த விழுமியங்களை ஓரளவு உயர்த்திப் பிடித்தனர். மேலாதிக்கப் பண்பாட்டின் பேசுபொருள் கூட சம உரிமைகள், வர்க்கம், சாதி, பாலின சமத்துவம், மதச்சார்பின்மை போன்றவற்றின் சாயலைக் கொண்டிருந்தன. பண்பாட்டுத் தர நிலை, வெளிப்படையான சந்தைப்படுத்துதல் ஆகியவற்றுக்கு இடையிலான வேறுபாட்டு உணர்வைக் கொண்டிருந்தன. கல்வி, பண்பாடு, இலக்கியம், ஊடகம், காட்சிக் கலைகள், நாடகம், திரைப்படம் ஆகிய அரசின் கொள்கைகளில் இது தெளிவாகத் தெரிகிறது. 

முற்போக்குப் பண்பாட்டு இயக்கத்தின் அதிகார எதிர்ப்பு, 1980களின் பிற்பகுதியிலிருந்து குறிப்பாக, சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, சரிவடைந்தது. 1990களில், ஏகாதிபத்திய உலகமயமாக்கல் சகாப்தத்தில் நுழைந்தவுடன் சரிவு துரிதப்படுத்தப்பட்டது. கார்ப்பரேட் ஊடகங்களின் உலகளாவிய ஆதிக்கத்தின் மூலம் திணிக்கப்பட்ட பண்பாட்டு ஏகாதிபத்தியம் இதில் ஓர் அம்சமாகும். கற்றோர், கல்வியறிவற்றோர் ஆகியோரின் பண்பாட்டு நடவடிக்கைகள் உட்பட பண்பாட்டு உற்பத்தி, விநியோகம் ஆகிய ஒவ்வொரு அம்சத்திலும் சந்தை, பெரும்பாலும் உலகளாவிய சந்தை ஒரே ஆளும் சக்தியாக மாறியுள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக, நமது நாட்டில் மீட்சி பெற்றுள்ள ஆர்எஸ்எஸ் – உடனான கார்ப்பரேட் மூலதனக் கூட்டு அனைத்து பன்முகப் பண்பாட்டிற்கும் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலாதிக்கக் கருத்தியல் ஆதரவாளராக மாறியுள்ள ஆர் எஸ் எஸ்-க்கு எதிரான கம்யூனிஸ்டுகளின் எதிர்ப்பு மீண்டும் ஒருமுறை கூர்மையடைந்துள்ளது. மாறியுள்ள சூழல், உத்திகளில் மாற்றத்தைக் கோருகிறது. நமது இலக்கில் எவ்வித ஐயப்பாடும் இல்லை. நமது போர்த் தந்திரங்களை மீளாய்வு செய்ய, நமது பாரம்பரியத்திலிருந்து நிச்சயமாக நாம் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. 

தமிழில்: ஜி. பாலச்சந்திரன்



Leave a comment