மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


மாற்று அரசியலுக்கான மார்க்சிய உரையாடல்


என்.குணசேகரன்

மறைந்த அய்ஜாஸ் அகமது அவர்கள் ஒரு தலைசிறந்த மார்க்சிய அறிஞர். இன்றைய காலச் சூழலின் சவால்களை மார்க்சிய நோக்கில் புரிந்து கொள்ளவும், போராட்ட நடைமுறைகளை அமைத்திடவும், தொடர்ந்து வழிகாட்டி வந்த மார்க்சிய ஆசிரியர்.

1990ஆம் ஆண்டுகளில் மார்க்சிய ஆய்வாளர்கள் பலர் தடம் மாறி, மார்க்சியத்தின் ஜீவ நாடியான பாட்டாளி வர்க்கப் புரட்சி, சோசலிச இலக்குகளைக்  கைவிட்டு மார்க்சியத்தை திரித்து வந்த நிலையில், அய்ஜாஸ் அகமது மகத்தான மார்க்சிய ஆசானாகத் திகழ்ந்தார். புரட்சிகரமான மார்க்சியத்தை உயர்த்திப் பிடித்து, கருத்துப் போராட்டத்தை அவர் நடத்தி வந்தார்.

2022ஆம் ஆண்டு மறைந்த அய்ஜாஸ் அகமது ஏராளமான கட்டுரைகளையும், நூல்களையும் எழுதியுள்ளார். நவீன தாராளமயம் என்ற திருப்பத்தை அடைந்த இன்றைய முதலாளித்துவ இயக்கத்தினை மார்க்சிய வழி நின்று ஆய்வு செய்திடும் எழுத்துக்களாக அவரது எழுத்துக்கள் அமைந்துள்ளன. அத்துடன் இன்றைய முதலாளித்துவ எதிர்ப்புப் போராட்டத்தின் வளர்ச்சி, புரட்சிகர மாற்றத்தின் திசைவழி குறித்தெல்லாம் மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் ஆய்வு நெறியில் நின்று படைப்புக்களை அளித்துள்ளார்.

பேராசிரியர் அய்ஜாஸ் அகமது அவர்களுடன் தோழர் விஜய் பிரசாத் நடத்திய உடையாடல் “மார்க்ஸ் – புரட்சியின் அரசியல்” என்ற தலைப்பில் தற்போது நூல் வடிவம் பெற்றுள்ளது.

அரசியல் கையேடு

மார்க்சியம் முன்னெடுக்கும் புரட்சிகர அரசியலை ஆழமாக புரிந்து கொள்ள உதவிடும் நூலாக இந்த நூல் அமைந்துள்ளது. இந்த உரையாடலில் இருவரும் பகிர்ந்து கொள்ளும் கருத்துக்கள், மார்க்சின் பங்களிப்பு பற்றிய பல பரிமாணங்களை வெளிக்கொணர்கிறது. மார்க்சின் எழுத்துக்கள் பற்றிய விவரங்களை அறிந்து கொள்வது மட்டுமல்ல; மார்க்சின் எழுத்துக்களுக்கு அடிப்படையாக இருந்த மார்க்சின் எண்ணவோட்டத்தை ஆழமாக புரிந்து கொள்ளும் வகையில் இந்த உரையாடல்கள் அமைந்துள்ளன.

தோழர் விஜய் பிரசாத் உலக அளவில் செயல்பட்டு வரும் மார்க்சிய செயல்பாட்டாளர். மார்க்சியத்தை உயர்த்திப் பிடித்து, போராடும் உழைக்கும் வர்க்க இயக்கங்களின் தத்துவார்த்த புரிதலை மேம்படுத்தும் படைப்புக்களை விஜய் பிரசாத் அளித்து வருகிறார்.

அய்ஜாஸ் அவர்களின் உயரிய மார்க்சிய சிந்தனைகள் தெளிந்த நீரோட்டமாக வெளிவரும் வகையில் விஜய் பிரசாத் உரையாடலை ஒருங்கிணைக்கிறார். கனமான, தத்துவக் கட்டுரைகளை, கட்டுரை வடிவத்தில் படிக்கும்போது சிலருக்கு ஏற்படும் சோர்வு, இந்த உரையாடல் வடிவ படைப்பில், உரையாடலோடு ஒன்றிப்போகும்போது ஏற்படுவதில்லை.

நூலின் முன்னுரையில் விஜய்பிரசாத் குறிப்பிடுவது போன்று, மார்க்ஸ் பொது தளத்தில் பொருளாதார அறிஞராகவே முன்னிறுத்தப்படுகிறார். மார்க்சின் பொருளாதாரம் பற்றிய பங்களிப்பு மகத்தானதுதான் என்பதில் ஐயமில்லை. உண்மையில்,மார்க்ஸ் முதலாளித்துவத்தை வீழ்த்தி, பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுகிற நிகழ்வைப் பற்றி ஏராளமாக எழுதியுள்ளார். அவரது புரட்சிகர அரசியல் பார்வையை வெளிப்படுத்தும் மார்க்சின் எழுத்துக்கள் அதிமுக்கியத்துவம் வாய்ந்தவை.

அதிலும் இன்று முதலாளித்துவத்தின் நேரடித் தாக்குதல் உழைக்கும் மக்கள் மீது அதிகரித்துள்ள நிலையில், வலதுசாரி அரசியலை பக்கபலமாக வைத்துக் கொண்டு, முதலாளித்துவ கருத்தியல் ஆயுதபாணியாக மாறியுள்ள நிலையில், புரட்சிகர அரசியல் இன்று அவசரத் தேவையாக உள்ளது. அதற்கு மார்க்சின் புரட்சிகர அரசியல் பார்வை குறித்த ஆழமான புரிதல் தேவை. இந்த நோக்கத்தை நிறைவேற்றும் சிறந்த கையேடாக இந்த உரையாடல் நூல்  திகழ்கிறது.

இந்த உரையாடல் மார்க்ஸ் ஏங்கெல்சின் நான்கு நூல்களை மையமாக வைத்து நிகழ்த்தப்பட்டுள்ளது.

1)   ஜெர்மன் சித்தாந்தம் (1845 – 46)

2)   கம்யூனிஸ்ட் அறிக்கை (1848)

3)   லூயி போனபர்ட்டின் பதினெட்டாம் புரூமர் (1852)

4)   பிரான்சில் உள்நாட்டுப் போர் (1871)

மார்க்சிய தத்துவ வளர்ச்சி

இதில் “ஜெர்மன் சித்தாந்தம்” மார்க்சின் சிந்தனை, மார்க்சிய தத்துவமாக வளர்ந்த நிகழ்வை, தத்துவார்த்த வளர்ச்சியை எடுத்துரைக்கிறது.

ஹெகல், பாயர்பேக் போன்ற தத்துவ ஞானிகளின் தத்துவங்களை விமர்சன ரீதியில் கருத்துப் போராட்டம் நடத்தி, மார்க்சும், ஏங்கெல்சும் தங்களது வரலாற்றுப் பொருள்முதல்வாத தத்துவ நிலைபாட்டிற்கு வந்த வளர்ச்சிப் போக்கை இந்த உரையாடல் நமக்கு வழங்குகிறது. இந்த உரையாடலின் ஊடாக ஏராளமான சுவாரசியமான தகவல்களையும், விவரங்களையும் அய்ஜாஸ் அவர்களும், விஜய்பிரசாத்தும் அளிக்கின்றனர்.

மனித நடைமுறையே வரலாற்றை முன்னெடுக்கிறது; இதிலிருந்து துவங்கி, மனித உற்பத்தியே மையமானது என்கிற நிலைக்கு மார்க்ஸும், எங்கெல்சும்  வந்தடைகின்றனர். வரலாற்றை இயக்குவது உற்பத்தியும், உற்பத்தி உறவுகளுமே.

மனித நடைமுறை வரலாற்றைப் படைப்பதில், வரலாற்றின் மீது வினை புரிவதில் மையமானது – தத்துவ அறிவின் அடைப்படையே மனித நடைமுறைதான். மார்க்சுக்கு முந்தைய தத்துவங்களை எதிர்த்துப் போராடி மேற்கண்ட கருத்துக்களுக்கு மார்க்ஸ் வந்தடைகிறார்.

இயற்கை அல்லது பொருள் அனைத்தும் மாறாமல் நிலையானதாக இருப்பதில்லை. அனைத்தும் இயக்கத்தில் இருக்கிறது. சமூக உறவுகளுக்கு வரலாற்றுப் பின்புலம் இருப்பது போன்று, இயற்கைக்கும் வரலாற்று பின்புலம் உண்டு. இந்தக் கருத்துக்களை உள்ளடக்கிய இயக்கவியல், வரலாற்றுப் பொருள்முதல்வாத தத்துவ நிலைபாடுகளுக்கு மார்க்ஸ் வந்தடைகிறார். ஹெகல், பாயர்பேக் சிந்தனைகளை உள்வாங்கி, அவைகளை விமர்சித்து, அவர்கள் தாக்கத்திலிருந்து வெளியேறி, தனித்த நிலைபாடுகளுக்கு மார்க்சும் ஏங்கெல்சும் வந்தடைகிற நிகழ்வை – உரையாடல் தெளிவாக வெளிக்கொணர்கிறது.

மனித நடைமுறை என்பது ஜெர்மன் தத்துவத்தில் உற்பத்தியாக பரிணமிக்கிறது. எனவே, வரலாறு என்பது உற்பத்தியின் வரலாறாக, உற்பத்தி முறைகளின் மாற்றங்களாக பார்க்கும் பார்வை விரிவடைகிறது. உழைப்புப் பிரிவினை, கூலி உழைப்பு, உழைப்புச் சுரண்டல் உள்ளிட்ட மார்க்சிய கருத்தாக்கங்கள் வடிவமைக்கப்படுகின்றன.

முரண்பாடுகள் வினையாற்றி வளர்ச்சி ஏற்படுவதை கருத்து அல்லது சிந்தனையில் மட்டும் கண்டதால், ஹெகல் தத்துவம் கருத்து முதல்வாத தத்துவம் ஆனது. கருத்தில், சிந்தனையில் வினைபுரியும் முரண்பாடுகள் அடிப்படையில் சமூக வாழ்வில் வினையாற்றும் முரண்பாடுகளின் பிரதிபலிப்பாகவே உள்ளன என்பதனை மார்க்ஸ் கண்டறிந்தார்.

அய்ஜாஸ் பேசும்போது மார்க்ஸின் கம்யூனிசம் பற்றிய கருத்தை விளக்குகிறார். முதலாளித்துவ முரண்பாடுகளின் வெடிப்பாகவே கம்யூனிசம் தர்க்க ரீதியாக வளர்ச்சி பெறுகிறது என மார்க்ஸ் கருதினார். வரலாற்றின் இயக்க வளர்ச்சியில் வரலாற்று ரீதியாகவும், தர்க்க ரீதியாகவும் எழுகிற அமைப்பாக கம்யூனிசம் விளங்குகிறது.

வரலாற்றின் தர்க்கம்

கம்யூனிஸ்ட் அறிக்கையில், புதிய மாற்று சமுதாயத்தை கட்டமைப்பது பற்றியும், அதற்கான அரசியல் நடைமுறை பற்றியும் மார்க்ஸ் எழுதுகிறார்.

கம்யூனிஸ்ட் அறிக்கையில் மார்க்ஸ் அவரது சமகால முதலாளித்துவத்தை மட்டும் விளக்கவில்லை; முக்கியமாக, முதலாளித்துவத்தின் தர்க்கரீதியான இயக்கம் மற்றும் வளர்ச்சியை விளக்குகிறார். தேசிய எல்லைகளையெல்லாம் தாண்டி, முதலாளித்துவ உற்பத்தி விரிவடைந்து கொண்டே இருக்கும். இதன் விளைவாகவே பாட்டாளி வர்க்கம் ஒன்றுபடுவதும் வர்க்கப் போராட்டம் நடப்பதும், இறுதியில் சமூகம் மாற்றியமைக்கப்பட்டு மறுகட்டமைப்பு செய்யப்படுவதும் நிகழ்கிறது.  இந்த மாற்றம் தவிர்க்க முடியாமல் வந்தே தீரும் என்று வறட்டு நம்பிக்கையுடன் சொல்லப்பட்டதல்ல. முதலாளித்துவ இயக்கத்தின் தர்க்க ரீதியான விளைவாகவே சமூக மாற்றம் ஏற்படுகிறது.

மார்க்ஸ் முதலாளித்துவத்தை வீழ்த்திட பணியாற்றுவதிலும்,  புரட்சிகர இயக்க முன்னேற்றத்திலும் என்றுமே நம்பிக்கை இழந்ததில்லை. தத்துவார்த்தப் பணிகளோடு இணைந்து வர்க்க இயக்க வளர்ச்சியிலும் மார்க்ஸ் பெரும் அக்கறை செலுத்தி வந்தார்.

கட்சிகளின் வர்க்க ஆய்வு

“லூயி போனபர்ட்டின் பதினெட்டாம் புரூமர்” நூலில் மார்க்ஸ் தனது பங்களிப்பு என்ன என்று வரையறுத்து பேசுகிறார்.அந்த கருத்துக்கள் மிக முக்கியமானவை;

* உற்பத்தி வளர்ச்சியின் ஒரு வரலாற்றுக் கட்டத்தில் வர்க்கங்கள் உருவாகி வளர்ச்சி அடைகின்றன.

* வர்க்கப் போராட்டம் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திற்கு இட்டுச் செல்கிறது.

* இந்த பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் இடைப்பட்ட ஒரு கட்டமாக இருக்கும். இறுதியில் வர்க்கங்கள் மறைந்து வர்க்கமற்ற சமூகம் உருவாகிறது.

இந்த நூலில் மார்க்ஸ் அரசியல் கட்சிகளின் வர்க்கத் தன்மைகளைப் பற்றி பேசுகிறார். அரசு நிறுவனங்களின் வர்க்க அடிப்படை, விவசாயிகளில் அடங்கியுள்ள பல்வேறுபட்ட விவசாயப் பிரிவுகள் போன்ற விளக்கங்களுடன் அன்றைய பிரான்சில் இருந்த நிலைமைகளை மார்க்ஸ் விளக்குகிறார்.

 ஒவ்வொரு நாட்டின் புரட்சிகர மாற்றத்தை சாதிக்க வேண்டும் எனில், அந்த நாட்டில் இருக்கும் குறிப்பிட்ட நிலைமைகளை, குறிப்பாக, வர்க்க நிலைமைகளை, ஆராய வேண்டும் என்று லெனின் வழிகாட்டினார். இந்த லெனின் போதனைக்கு  மூலமாக மார்க்சின் இந்த நூல் அமைந்துள்ளது.

அன்றைய பிரான்சில் இருந்த நிலைமைகள் குறித்து ஏராளமான விவரங்கள் தகவல்கள் அடங்கியதாக இந்த நூல் இருப்பதால், இதனை வாசிப்பதில் கூடுதல் கவனம் வேண்டும் என்கிறார் அய்ஜாஸ் அகமது. ஏனெனில், மார்க்ஸ் தத்துவ வரையறைகளை கண்மூடித்தனமாக தனக்கு தோன்றியதை வெளிப்படுத்துகிறவர் அல்ல; மாறாக, எதார்த்த உண்மைகள், விவரங்கள், தகவல்கள், அனைத்தையும் ஆய்வு செய்து, அந்த அடிப்படையில், பொதுவான தத்துவார்த்த வரையறை முடிவுகளுக்கு வந்தடைவார்.

முதல் பாட்டாளி வர்க்க அரசு

1871ஆம் ஆண்டு 72 நாட்கள் பாரிஸ் கம்யூன் எனப்படும் பாட்டாளி வர்க்க அரசு பாரிஸ் நகரில் முதலாளித்துவ ஒழுங்கினை வீழ்த்தி அதிகாரத்தில் இருந்தது. பிரான்ஸ் நாட்டை மிக மோசமான போரிலும், பெரும் துயரங்களுக்கும் ஆளாக்கிய பிரெஞ்சு ஆளும் வர்க்கத்திற்கு எதிராக பாரிஸ் தொழிலாளி வர்க்கம் நிகழ்த்திய மாபெரும் புரட்சி, பாரிஸ் கம்யூன்.

தங்களுக்கென்று ஒரு அரசை ஏற்படுத்தியதோடு, அந்த அரசு ஜனநாயக கோட்பாடுகள் அடிப்படையில் செயல்பட்டு வந்தது. முதலாளித்துவ வர்க்கங்களால் உருவாக்கப்பட்ட பல பிரச்சனைகளை தீர்ப்பதற்கு பாரிஸ் கம்யூன் அரசு பல நடவடிக்கைகளை எடுத்தது. இந்த அரசின் செயல்பாடுகளை கார்ல் மார்க்ஸ் வெகுவாகப் பாராட்டி பதிவு செய்துள்ளார்.

1871ஆம் ஆண்டு பாரிஸ் கம்யூன் அரசு உருவாவதற்கு முன்னதாக, ஏராளமான புரட்சிகர முயற்சிகளும், தோல்வி அடைந்த பல புரட்சிகர நடவடிக்கைகளும் நிகழ்ந்தன. அந்த தோல்விகளால் துவளாத பாரிஸ் தொழிலாளி வர்க்கம் தனது அரசை நிறுவியது. அது ஒரு கடுமையான போராட்டம். தோல்வி அடைவதற்கான வாய்ப்புகளை பாரிஸ் கம்யூன் புரட்சிக்கு தலைமை தாங்கியவர்கள் உணர்ந்திருந்தார்கள். அத்தகைய புரட்சிகர அரசு கடுமையாக ஒடுக்கி அழிக்கப்பட்டது. ஏறத்தாழ ஒரு லட்சம் ஆண், பெண் போராளிகளை பிரெஞ்சு முதலாளித்துவ வர்க்கம் கொடூரமாக படுகொலை செய்தது. முதலாளித்துவத்தின் ரத்தம் தோய்ந்த வரலாற்றில் பாரிஸ் கம்யூன் அழிப்பு மிகக் கோரமானது.

கார்ல் மார்க்ஸ் பாரிஸ் கம்யூன் நிகழ்வுகளின் ஒவ்வொரு அசைவையும் துல்லியமாக ஆராய்ந்து பதிவு செய்தார். “பிரான்சில் உள்நாட்டு போர்” என்கிற நூல், முதலாவது அகிலத்தில் கார்ல் மார்க்ஸ் ஆற்றிய மூன்று உரைகளின் தொகுப்பு.

1917ஆம் ஆண்டு போல்ஷ்விக்குகள் தலைமையில் லெனினது பாட்டாளி வர்க்க அரசு அமைந்தபோது, அது 72 நாட்கள் கடந்த மறுநாள் லெனின் குளிர்கால அரண்மனைக்கு வெளியே வந்து மகிழ்ச்சி வெள்ளத்தில் நடனமாடினார்.  பாட்டாளி வர்க்க புரட்சியின் முதல் முயற்சியான பாரிஸ் கம்யூன் 72 நாட்களோடு முதலாளித்துவ வர்க்கங்களால் ஒடுக்கப்பட்டது. ஆனால் அந்த தோல்வியின் படிப்பினைகளை நன்கு உணர்ந்து புதிய முயற்சியாக நவம்பர் புரட்சி நடைபெற்று 72 நாட்கள் கடந்தும் நீடிக்கிறது என்கிறபோது உலகப் பாட்டாளி வர்க்கத்தின் வெற்றியாக லெனின் அதை கொண்டாடினார்.

எது சர்வாதிகாரம்?”

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் நிறுவப்பட வேண்டும் என்று 18வது புரூமர் நூலில் மார்க்ஸ் எழுதிய அந்த லட்சியம் பாரிஸ் கம்யூனில் நிறைவேறியது. இதில் ‘சர்வாதிகாரம்’ என்கிற சொல் கம்யூனிஸ்டுகளை ஜனநாயக விரோதிகள் என்று தூற்றுவதற்கு எதிரிகள் பயன்படுத்துகிற சொல்லாக அமைந்துள்ளது. ஆனால், பாரிஸ் கம்யூன் அரசின் அமைப்பு எப்படிப்பட்டதாக இருந்தது? உண்மையில், அந்த அரசை தொழிலாளி வர்க்கங்களின் ஒவ்வொரு உறுப்பினரும் நிர்வகித்தனர். அத்துடன் ஏழை விவசாயிகளும் அந்த அரசு அமைப்பில் அங்கம் வகித்தனர். பாரிஸ் கம்யூனை எதிர்த்தவர்களையும் கூட அரசு நிர்வாக அமைப்பில் இணைத்து அவர்களுடைய தேவைகளும் நிறைவேற்றப்பட்டன. மார்க்சியத்தின் மையமான கருத்து முதலாளித்துவ அமைப்பில் குவிக்கப்பட்டிருந்த அதிகாரங்களை வர்க்கங்களிடம் பரவலாக்கி ஒரு புதிய அரசை, பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசை உருவாக்க வேண்டுமென்பதுதான்.

இதையே லெனின் ஒரு கேள்வி எழுப்பி விடை கண்டார். ரஷ்யாவில் புரட்சியின்போது வாழ்ந்து கொண்டிருந்த பாட்டாளி வர்க்க உறுப்பினர்கள் இருபது கோடி மக்கள். ஏன் அவர்கள் அனைவருக்கும் அரசு நிர்வாக பொறுப்புக்களை பிரித்தளிக்கக் கூடாது? இதுதான் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம். உண்மையில் இது பெரும்பான்மையின் சர்வாதிகாரம். முதலாளித்துவ அரசு ‘ஜனநாயகம்’ ‘தாராளவாத’ அரசு என்று ஆடம்பரமாக அறிவித்து, உண்மையில் முதலாளித்துவ சிறுபான்மை சர்வாதிகாரத்தை மேற்கொண்டு, பெரும்பான்மை மக்களை அடக்கி ஒடுக்கி சுரண்டலுக்கு ஆளாக்கி வருகிறது. இந்த கருத்துக்களை பாரிஸ் கம்யூன் அனுபவத்தின் அடிப்படையில் லெனின் ‘அரசும், புரட்சியும்’ நூலில் விரிவாக விளக்குகிறார்.

நவம்பர் புரட்சி மிகப்பெரும் தத்துவார்த்த விவாதங்களால் பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர உணர்வை உயர்த்தியதன் விளைவாகவே வெற்றி கண்டது. இந்த தத்துவார்த்த விவாதங்களுக்கு லெனினும் அவரது தோழர்களும் முக்கிய பங்காற்றினார்கள். பாரிஸ் கம்யூன் விஷயத்திலும் இதுபோன்றே நிகழ்ந்தது. இதுவே மார்க்சை வெகுவாக ஈர்த்தது.

பாரிஸ் கம்யூன் தலைமை கவனிக்க தவறிய பல விஷயங்களையும் மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் பதிவு செய்துள்ளனர். இவை அனைத்தும் எதிர்கால புரட்சிகளுக்கு படிப்பினைகளாக அமைந்தன. தற்போதும் பாரிஸ் கம்யூன் நிகழ்ந்த பிரான்சில் அந்த நினைவுகளை பிரெஞ்சு முதலாளித்துவ வர்க்கம் அழித்தொழிக்க பெரும் முயற்சிகள் செய்தாலும், உலகப் பாட்டாளி வர்க்கம் சோவியத், சீன புரட்சிகள் உள்ளிட்ட புரட்சிகர மாற்றங்களிலிருந்து மேலும்மேலும் படிப்பினைகளைக் கற்று முன்னேறும். அந்த வரலாற்றில் பாரிஸ் கம்யூன் முக்கிய இடம் பெறும்.

ஜெர்மன் சித்தாந்தம், கம்யூனிஸ்ட் அறிக்கை, லூயி போனபர்ட்டின் பதினெட்டாம் புரூமர், பிரான்சில் உள்நாட்டுப் போர் ஆகிய நான்கு நூல்களும் மார்க்சின் புரட்சிகர அரசியலையும், தத்துவ கருத்தாக்கங்களையும்  உள்வாங்கிக் கொள்ள  தேவையான அடிப்படை நூல்கள். ஏற்கனவே மார்க்சியம் அறிந்தவர்கள் மார்க்சிய வாசிப்பை மேற்கொண்டவர்கள், மாற்றத்திற்கான அரசியல் நாட்டம் கொண்டவர்கள் அனைவரும் மேற்கண்ட நூல்களை ஆழமாக வாசிக்க இந்த உரையாடல் நூல் மிகச் சிறந்த வழிகாட்டியாக உள்ளது.

இதனைச் சிறப்பாக தோழர் ச.லெனின் மொழியாக்கம் செய்துள்ளார். பாரதி புத்தகாலயம் மிக நேர்த்தியாக இந்த நூலை வெளியிட்டுள்ளது. மார்க்சியர்கள், முற்போக்காளர்கள் மட்டுமல்லாது, இளைஞர்கள், பொது மக்களிடம் வாசிப்பு ஆர்வத்தை ஏற்படுத்தும் மகத்தான பணி இது. நூல் தயாரிப்பில் ஈடுபட்ட அனைவருக்கும் பாராட்டுக்கள்!



Leave a comment