மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


முற்போக்கு சமூக மாற்றத்தின் மீது வேட்கை கொண்ட அறிவியலாளர்


பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா

பிரபீர் புர்காயஸ்தா ஒரு சிறந்த பொறியாளர். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின்பால் ஆழமான ஈடுபாடு கொண்டவர்.  அவர் மக்கள் அறிவியல் இயக்கத்தின் (People’s Science Movement) அர்ப்பணிப்பு மிக்க செயல்பாட்டாளர். அறிவியல் மனப்பான்மை, இந்தியாவின் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப சுயசார்பு, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான போராட்டத்தில் அவர் முன்னணியில் இருந்து வந்துள்ளார். புர்காயஸ்தா எழுதிய கட்டுரைகளின் ஒரு சிறந்த தொகுப்பை ‘லெஃப்ட்வேர்ட்’ பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இத்தகைய சிறந்த அறிவாளி அங்கீகரிக்கப்படுவதற்குப் பதிலாக, சட்டத்திற்குப் புறம்பான செயல்பாடுகள் தடுப்புச் சட்டம் (UAPA) எனப்படும் கொடூர அடக்குமுறைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் விசாரணைக்காகக் காத்திருக்கிறார் என்பது இந்திய நாட்டின் தற்போதைய ஆட்சியின் தன்மை எத்தகையது என்பதை வெளிப்படுத்துகிறது. தற்போதைய ஒன்றிய அரசின் கீழ், பல முற்போக்கான அறிவுஜீவிகள் மற்றும் செயல்பாட்டாளர்கள் பலருக்கு ஏற்பட்டுள்ள கதி இதுதான்.

புத்தகத்தில் பதினொரு கட்டுரைகளும், மேலும் கட்டுரைகளுக்கான சுருக்கமான அறிமுகமும் உள்ளன. அறிமுகத்தின் தொடக்க வரிகள், ஆசிரியரின் பகுத்தறிவின் மீதான பற்றுறுதி மற்றும் இந்திய சமூகத்தின் முற்போக்கான மாற்றத்திற்கான அவரது ஈடுபாட்டை வெளிப்படுத்துகின்றன:

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை நாம் எப்படிப் பார்க்கிறோம்? சமூகத்தில் அவை என்ன பங்கு வகிக்கின்றன? அதேபோல, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை வளர்ப்பதில் சமூகத்தின் பங்கு என்ன என்பதும் முக்கியமானது. ஒரு சமூக / அரசியல் செயல்பாட்டாளராக என்னை யோசிக்க வைக்கும் முதன்மையான கேள்விகள் இவை; ஒருவேளை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் மீதான எனக்குள்ள ஆழ்ந்த ஈடுபாடும் ஒரு காரணமாக இருக்கலாம். இந்தப் பிணைப்புதான் என்னை மக்கள் அறிவியல் இயக்கத்திலும், அனைவருக்குமான சுதந்திரமான இணைய மென்பொருள் இயக்கத்திலும் அங்கம் வகிக்க வழிவகுத்தது.” (பக்கம் 11)

புர்காயஸ்தாவின் முன்னுரை, அறிவியலுக்கும் தொழில்நுட்பத்துக்கும் இடையிலான உறவை சுருக்கமாக ஆய்வு செய்கிறது. இந்த உறவு பற்றி புத்தகத்தின் இதர பல கட்டுரைகளிலும் அவர் விவாதிக்கிறார். அறிவியலின் நோக்கம் இயற்கையை அறிவது, தொழில்நுட்பத்தின் நோக்கம் ஒரு பொருளை உருவாக்குவது என்பதை ஆசிரியர் குறிப்பிடுகிறார். தொழில்நுட்பம் அதன் உள்ளார்ந்த இயல்பிலேயே அனுபவத்தின் அடிப்படையிலானது. மேலும், ஒரு பொருளை உருவாக்கும் செயல்முறை மூலம் தொழில்நுட்பம் இயற்கையை மாற்றுகிறது. அதே சமயம், பொருளை உருவாக்கும் அச்செயல்முறை, அறிவியலின் முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். ஆசிரியரின் வார்த்தைகளில், “…தொழில்நுட்பம் சில சமயங்களில் இயற்கையின் அடிப்படை உறவுகளை மறுவரையறை செய்யலாம்; மறுவரையறை தொடர் நிகழ்வாகும்போது அறிவியல் மீது தாக்கம் செலுத்தும்.” (பக்கம் 13)

பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டிற்கு மிகவும் அவசியமான உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்கு அறிவியலும் தொழில்நுட்பமும் இன்றியமையாதவை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அவை ஒன்றுக்கொன்று தொடர்ந்து அதிகரித்துவரும் நெருக்கமான உறவு கொண்டிருந்தாலும், அவை வெவ்வேறானவை என்பதை புர்காயாஸ்தா சரியாகவே வலியுறுத்துகிறார். முன்னுரையின் இறுதியில் அறிவின் உடைமை (ownership) தொடர்பான முக்கியமான கேள்விகளை நூலாசிரியர் எழுப்புகிறார். அக்கேள்விகள் நூலின் பல கட்டுரைகளில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

புத்தகத்தில் உள்ள பதினொரு கட்டுரைகள், கருப்பொருளின் அடிப்படையில் நான்கு பிரிவுகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. மூன்று கட்டுரைகளைக் கொண்ட முதல் பகுதி, பொதுவாக முதலாளித்துவத்தின் கீழும், குறிப்பாக அதன் நவதாராளமய வடிவத்தின் கீழும், அறிவானது பெருமூலதனத்தின் பேராசைக்கு சேவைசெய்யும் ஏகபோகமாக மாற்றப்படுகிறது என்பதையும், எவ்வாறு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களின் பயன், சமுதாயத்திற்கு முழுமையாகச் சென்றடைவது தடுக்கப்படுகிறது என்பதையும் பேசுகிறது. கார்ப்பரேட்களுக்கு லாபத்தை உத்தரவாதப்படுத்துவதற்காக அறிவை ஏகபோகப்படுத்தும் இந்த அமைப்பு, கூடவே அறிவின் வளர்ச்சியையும் மட்டுப்படுத்துகிறது; எனவே சமூகத்திற்கும் மனித குலத்திற்கும் ஏகபோக முதலாளித்துவம் தீங்கு விளைவிக்கும் என்ற முக்கியமான விஷயத்தை இது வெளிப்படுத்துகிறது.

அறிவியலை மக்களிடம் கொண்டு செல்லுதல்

அறிவும் தொழில்நுட்பமும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பொதுவானது; அனைவருக்கும் சொந்தமானது; ஒட்டுமொத்த சமுதாயத்திற்குச் சேவை செய்வதற்கானது என்பதற்கான ஓர் உறுதியான நம்பகமான வாதத்தை இது முன்வைக்கிறது. காப்புரிமைகள், பதிப்புரிமைகள், வர்த்தகச்சின்னங்கள் மற்றும் பலவற்றின் மூலம் அறிவுச் சொத்துரிமைக்கு “வலுவான” பாதுகாப்பை வழங்குவது அறிவு உற்பத்தியை ஊக்குவிக்கிறது என்ற நவதாராளவாத கட்டுக்கதை, வலுவான எடுத்துக்காட்டுகள் மூலம் ஆசிரியரால் முற்றிலுமாகத் தகர்க்கப்பட்டுள்ளது. அறிவின் உற்பத்தி மற்றும் அதனால் விளையும் பயன் ஆகிய இரண்டையும், அனைவரின் நலன்களுக்காகவும் ஜனநாயகப்படுத்த வேண்டிய அவசியம் இந்தப் பகுதியில் உள்ள முதல் கட்டுரையில் பேசப்படுகிறது. இந்த முயற்சியில் விஞ்ஞானிகள் மற்றும் பொதுமக்கள் இருவரின் பங்கும் விவாதிக்கப்படுகிறது. ஆசிரியர் அதை இவ்வாறு கூறுகிறார்: “இன்று, அறிவியல் ரீதியாகவும் ஜனநாயக பூர்வமான முறையிலும் முடிவெடுக்கும் ஒரு செயல்முறைக்காகப் போராடுவதற்கு விஞ்ஞானிகளை அணிதிரட்ட வேண்டிய பணியும்,  அறிவியலை மக்களிடம் கொண்டு செல்வதற்கான வலுவான இயக்கமும் கைகோர்க்க வேண்டும்… எனவே அறிவியல் தொழில்நுட்பத்தின் பயன் பொதுவான நலனுக்காகவும், அனைவருக்கும் கிடைக்கக்கூடியதாகவும் மாற்றப்பட நாம் போராடியாக வேண்டும். இந்தப் போராட்டத்தில் மக்களையும் ஈடுபடுத்த வேண்டும். இதுதான் இன்று நம் முன் உள்ள சவால். (ப. 30).

முதல் பகுதியில் உள்ள இரண்டாவது கட்டுரை அறிவுப் பொதுவுடமையின் தன்மையைக் குறித்து விவாதிக்கிறது. குறிப்பாக, நவதாராளவாதத்தின் கீழ், பொதுவான அறிவு விரைவாக தனியுடமையாக்கப்படுவதை எதிர்கொள்வதில் உள்ள சவாலின் பல்வேறு அம்சங்களை இது நுணுக்கமான முறையில் விவாதிக்கிறது. அரசு நிதியுதவி மூலம் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகளின் அனைத்துப் பயன்களையும் தனியாருக்கு லாபங்களை அதிகரிக்க வழங்கும் அமெரிக்காவின் பே-டோல் (Bayh-Dole) சட்டத்திருத்தத்தின் தீய விளைவுகளை காட்சிப்படுத்துகிறது. இது ஒரு நம்பிக்கையான குறிப்புடன் முடிவடைகிறது, “… தற்போதைய காப்புரிமை சார்ந்த அறிவியல் அணுகுமுறைக்கு மாற்றாக, அறிவுப் பொதுவுடமை அணுகுமுறை ஒரு விளிம்பு நிலைப் பார்வையாக அல்லாமல், வேகமாக வளர்ந்து வரும் அணுகுமுறையாக உள்ளது.” (ப.56)

முதல் பகுதியில் உள்ள மூன்றாவது கட்டுரை, கோவிட் பெருந்தொற்றின்போது, வளர்ந்த முதலாளித்துவ நாடுகளான ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் ஜப்பானின் மருந்துதயாரிக்கும் பெருநிறுவனங்கள் மற்றும் அதன் ஆதரவாளர்கள், ஆற்றிய அழிவுகரமான பங்கைப் பற்றிய கூர்மையான விமர்சனத்தை முன்வைக்கிறது. இந்த விமர்சனம் பரவலாக பகிரப்பட வேண்டும். சக மனிதர்கள் மீது அக்கறையுள்ள உலகம் மட்டுமே தொற்றுநோய்கள் மற்றும் பொது சுகாதார நெருக்கடி நிலைகளை சமாளிக்க முடியும் என்று கட்டுரை முடிகிறது. இத்தகைய மனிதநேய, சகமனித அக்கறை குறித்தே ஏகபோக பெருமூலதனமும் அதன் ஏகாதிபத்திய ஆதரவாளர்களும் நடுங்குகிறார்கள். 

கருத்தியல் சுதந்திரம்

மூன்று கட்டுரைகளைக் கொண்ட இரண்டாவது பகுதி, தொழில்நுட்பத்தில் நிகழும் அடிப்படை சட்டக  மாற்றங்கள் (paradigm shifts) பற்றி விவாதிக்கிறது. முதல் கட்டுரை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் விரைவான வளர்ச்சி மற்றும் இருபதாம் நூற்றாண்டில் அவற்றின் வளர்ந்துவரும் பரஸ்பர வினையாற்றல் (interaction) மற்றும் ஊடுருவல் (inter-penetration) ஆகிய இரண்டிற்கும் இடையிலான வேறுபாட்டை கண்ணுறுவதை கடினமாக்குகின்றன என்பதைக் குறிப்பிட்டு, தொழில்நுட்பத்தை வெறும் “அறிவியலின் களச்செயலாக்கம்” (applied science) என்று கூறுவதை நிராகரிக்கிறது. “அறிவியலும் தொழில்நுட்பமும் அவை இயங்கும் சமூகம் என்ற ஒரு பெரிய அமைப்பின் துணை அமைப்புகளாகப் பார்க்கப்பட வேண்டும்”, என வாதிடுகிறது.  இரண்டாவது கட்டுரை, தொழில்நுட்பத்தில் கருத்தியல் சுதந்திரத்தை மீட்டெடுப்பதற்கான ஓர் உறுதியான வாதத்தை முன்வைக்கிறது. மூன்றாவது, சுதந்திரத்திற்குப் பிறகான முதல் இரண்டு பத்தாண்டுகளில் இந்திய அரசாங்கம் பின்பற்றிய கொள்கைகளில் சுயசார்பு பற்றிய பார்வையை பகுப்பாய்வு செய்கிறது. இந்தியாவின் ஆற்றல், உரம், தொலைத்தொடர்பு மற்றும் மருந்துத் துறைகள் தொடர்பான செழுமையான அனுபவங்களைக் கணக்கில் கொண்டு, உலகளாவிய அரசியல் பொருளாதாரத்தின் கட்டமைப்பிற்குள் தொழில்நுட்ப சிக்கல்களை ஆசிரியர் விவாதிக்கிறார். ஆதிக்கம் செலுத்தும் முன்னேறிய நாடுகள், தங்களிடமிருந்து புதிதாக சுதந்திரம் பெற்ற, ஒப்பீட்டளவில் தங்கள் சொந்தத் தொழில்நுட்பத்தை உருவாக்கி வளர்க்க முயலும் நாடுகள் எளிதாக தொழில்நுட்பம் பெறுவதைத் தடுக்கும் போக்கும், இதற்கு முற்றிலும் மாறாக, வளரும் நாடுகளுடன் தொழில்நுட்பத்தைப் பகிர்ந்து கொள்ளும் சோசலிச நாடுகளின் வியக்கத்தக்க விருப்பமும் பிரச்சினையின் கவனிக்கத்தக்க அம்சங்கள்.  

புத்தகத்தின் மூன்றாவது பகுதியில் உள்ள மூன்று கட்டுரைகள் பொது நல அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை விரிவாக  விளக்குவதில் கவனம் செலுத்துகின்றன. இவற்றில் முதலாவது அறிவியல் மற்றும் அதன் பரிணாம வளர்ச்சியை சமூக வரலாற்று கோணத்தில் இருந்து விவாதிக்கிறது. மேலும் முற்போக்கு இயக்கங்கள் அறிவியல் சார்ந்து நின்று, அறிவியலுக்கு முரணான அனைத்து பழைய/புதிய அணுகுமுறைகளையும் மூட நம்பிக்கைகளையும் உறுதியுடன் நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்துகிறது. இரண்டாவது கட்டுரை, சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும், அறிவியல் வளர்ச்சிக்கு இந்தியாவில் இடதுசாரி இயக்கம் ஆற்றிய பங்கு பற்றிய மிகத்தேவையான, விஷயத்தை சிறப்பாக விவாதிக்கிறது. மூன்றாவது கட்டுரை பாகிஸ்தானைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநரான குலாம் கிப்ரியாவின் ‘பாகிஸ்தானில் தொழில்நுட்பத்தைக் கைக்கொள்ளல் என்ற புத்தகத்தின் மதிப்புரை ஆகும். காலனித்துவத்திற்குப் பிந்தைய சமூக அமைப்பில் தொழில்நுட்ப வளர்ச்சியின் சிக்கல்களை இக்கட்டுரை ஆய்வு செய்கிறது.

புத்தகத்தின் நான்காவது மற்றும் இறுதிப் பகுதி இரண்டு ஆழமான கட்டுரைகள் மூலம் ‘அறிவியல் அணுகுமுறையில் அமைந்த குடியரசைத் திட்டமிடுதல்’ என்ற கருப்பொருளை விவாதிக்கிறது. இவற்றில் முதலாவது ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. ஆட்சியில் அறிவியல் மற்றும் அறிவியல் அணுகுமுறை மீதான தாக்குதல்களை விரிவாக அம்பலப்படுத்துகிறது; அதே நேரத்தில் உலகளாவிய அறிவியல் அறிவின் பரிணாம வளர்ச்சிக்கு இந்தியாவின் பங்களிப்புகளை வரலாற்றுத் தரவுகளின் மூலம் முறையாக அங்கீகரிக்கிறது. இரண்டாவது, அறிவியல் பார்வையுடனான ஒரு தேசத்தை கட்டியெழுப்புவதற்கான சவாலை ஆழமான நோக்குடன் நுணுக்கமாக விளக்குகிறது.

தெளிவாக எழுதப்பட்டுள்ள இந்நூலைப் படிக்கும்போது, ​​இந்தியாவின் தற்போதைய ஆட்சியாளர்கள், இவ்வளவு சிறந்த பல்துறை சிந்தனையாளரை தேசத்திற்கு அச்சுறுத்தல் என்று முத்திரை குத்துவது நமக்கு வியப்பாக இல்லாவிட்டாலும், வருத்தம் அளிக்கிறது. மிகவும் குறிப்பாகச் சொல்லவேண்டுமானால், பிரபீர் புர்கயஸ்தா அறிவியல் அணுகுமுறையை உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் பாதுகாக்கிறார். அறிவியலை நிராகரித்து குருட்டு நம்பிக்கை மற்றும் வெறுப்பு ஆகிய இரண்டையும் வளர்க்க விரும்புவோருக்கு, பிரபிர் புர்காயஸ்தா பெரும் அச்சுறுத்தலாக தெரிவது இயல்புதானே?



Leave a comment