மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


அமெரிக்காவிற்கு அடிபணியும் மோடி அரசின் அயல்துறைக் கொள்கை


ஜி. ராமகிருஷ்ணன்

கடந்த 29.02.2024 அன்று அதிகாலையில் காசா நகரத்தில் வீடுகளை இழந்த, வருவாயை இழந்த பாலஸ்தீன மக்களுக்கு உணவுப் பொட்டலம் ஒரு ட்ரக்கில் வந்திருக்கிறது. பசியால் வாடும் பாலஸ்தீன மக்கள் உணவுப் பொட்டலங்களை வாங்கிட அங்கு செல்கிறார்கள். திடிரென்று இஸ்ரேல் ராணுவத்தினர் அப்பாவி பாலஸ்தீன மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி 112 பேர் அதே இடத்தில் கொல்லப்பட்டனர். 700க்கும் மேற்பட்டவர்கள் காயமுற்றனர். கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து காசா – பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் தொடுத்து வரும் தாக்குதலின் தொடர்ச்சிதான் கடந்த 29 ஆம் தேதி நடந்த கோரமான சம்பவம்.

இத்தகைய சூழலிலும் ஐ.நா.மன்றத்தில் காசா மீது தொடுத்து வரும் தாக்குதலை நிறுத்த வேண்டுமென்று கொண்டு வரப்பட்ட தீர்மானங்களை அமெரிக்கா தனது ரத்து அதிகாரத்தின் மூலம் தடுத்துவிட்டது. இத்தகைய தீர்மானம் ஐ.நா. மன்றத்தில் வருகிறபோது இந்திய அரசு பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவான நிலைபாட்டை மேற்கொள்ளவில்லை. மாறாக, அமெரிக்காவின் நிலைபாட்டை ஆதரிக்கக் கூடிய நடைமுறையை கடைப்பிடித்து வருகிறது.

கூட்டுசேராக் கொள்கையிலிருந்து விலகல்

தென்னாப்பிரிக்காவில் கருப்பின மக்கள் நிறவெறிக்கு எதிராக போராடுகிறபோது, பெரும்பான்மையான உலக நாடுகள் கருப்பின மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தன. ஐ.நா. மன்றமும் இனவெறிக்கு முடிவுகட்ட வேண்டுமென்று தொடர்ச்சியாக பல தீர்மானங்களை நிறைவேற்றியது. இந்திய அரசு தென்னாப்பிரிக்காவில் இனவெறிக்கு எதிராக போராடும் கருப்பின மக்களுக்கு ஆதரவாக நின்றது. ஐ.நா. மன்றத்திலும் இனவெறிக்கு எதிரான தீர்மானங்களை ஆதரித்தது.

1950களில் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்திடமிருந்து விடுதலை பெற்ற வியட்நாம் மீது அமெரிக்க ஏகாதிபத்தியம் போர் தொடுத்து வியட்நாமின் தென்பகுதியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்பை எதிர்த்து ஹோ சி மின் தலைமையில் நடைபெற்ற விடுதலைப் போராட்டத்தை உலக நாடுகள் ஆதரித்தன. ஐ.நா. மன்றமும் வியட்நாம் விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றியது. இந்திய அரசு வியட்நாம் மக்களின் விடுதலைப் போராட்டத்தை சமரசமின்றி ஆதரித்தது.

கூட்டு சேரா நாடுகளின் அமைப்பில் முக்கிய பங்கு வகித்த இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கை தென்னாப்பிரிக்க மக்களின் இனவெறிக்கு எதிரான போராட்டத்தையும், வியட்நாம் மக்களின் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தையும் ஆதரிக்கக்கூடிய அயலுறவுக் கொள்கையை கடைப்பிடித்தது. ஆனால், பாரதிய ஜனதா கட்சி கடந்த 2014ஆம் ஆண்டு அதிகாரத்திற்கு வந்ததிலிருந்து  கூட்டுசேரா நாடு கொள்கையிலிருந்து வெகுவாக விலகி, அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளின் வெளியுறவு கொள்கைகளை ஆதரிக்கக் கூடிய அயல்துறை கொள்கையை கடைபிடித்து வருகிறது.

 “ஒரு அரசாங்கத்தின் அயல்துறை கொள்கையானது இறுதியாக பார்த்தால் அதன் உள்நாட்டு கொள்கையின் வெளிப்பாடே தவிர வேறு எதுவுமல்ல” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்சி திட்டம் குறிப்பிடுகிறது.

ஒன்றிய பாஜக அரசு பெருமுதலாளிகள் மற்றும் நிலச்சுவான்தார்களின் நலன்களை பிரதிபலிப்பதோடு, ஏகாதிபத்திய நாடுகளின் மூலதனத்தின் நலன்களுக்காகவும் செயல்படக்கூடிய அரசாக உள்ளது. பாஜக கட்சி இதர முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ கட்சிகளை போல் அல்ல. இக்கட்சியின் தலைமையிலான அரசு பாசிச தன்மை கொண்ட ஆர்.எஸ்.எஸ். வழிகாட்டுதலின்படி செயல்படக்கூடிய அரசு. நாட்டின் தலைநகரம் டெல்லியாக இருந்தாலும், பாஜகவுக்கு வழிகாட்டுதல் நாக்பூரிலிருந்தே (ஆர்எஸ்எஸ் தலைமையகம்) வருகிறது.

ஒன்றிய பாஜக அரசு கார்ப்பரேட் கம்பெனிகள் – இந்துத்துவா சக்திகளின் கூட்டுக் களவாணி அரசு என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்ணயித்துள்ளது. இதன் பொருள் உள்நாட்டு – பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளுடைய நலன்களை பாதுகாப்பதோடு, இந்தியாவை ஒரு இந்து ராஷ்டிரமாக மாற்றக் கூடிய பாதையில் வேகவேகமாக சென்று கொண்டிருக்கிறது.

நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கை

நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கை 1991ஆம் ஆண்டிலிருந்து  அமலாக்கப்பட்டு வந்தாலும் அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகள், உலக வங்கி மற்றும் சர்வதேச நிதி நிறுவனம் வலியுறுத்தக் கூடிய இக்கொள்கையை  மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு வேகவேகமாக அமலாக்கி வருகிறது.  

“நவீன தாராளமய பொருளாதார கொள்கையின் நோக்கம் லாபத்தை மையமாகக் கொண்டதே ஒழிய, மக்கள் நலனை மையமாகக் கொண்டவை அல்ல. கார்ப்பரேட்கள் கொள்ளை லாபம் ஈட்டுவதற்கு வசதி செய்து கொடுத்து நாட்டில் பொருளாதார சமத்துவமின்மையை கூர்மையாக இக்கொள்கை அதிகரிக்கிறது. நாட்டில்  இவ்வாறு செல்வத்தை உருவாக்குபவர்களை மதித்திட வேண்டுமென்று பிரதமர் மோடி நமக்கு புத்திமதி சொல்கிறார். செல்வம் என்பது உழைக்கும் மக்களின் உழைப்பால் உருவாக்கப்பட்ட மதிப்பின் பணமாக்கலே தவிர, செல்வம் என்பது வேறு அல்ல” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி ஒரு பேட்டியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

2014ஆம் ஆண்டு உலகளவிலான பணக்காரர்கள் பட்டியலில் 614வது இடத்தில் இருந்த அதானி குழுமம் தற்போது 2வது இடத்திற்கு வந்துள்ளது. 1991ஆம் ஆண்டு நாட்டின் மொத்த செல்வத்தில் 10 சதவிகிதம் அதானி, ரிலையன்ஸ், டாட்டா, ஆதித்திய பிர்லா, பார்ட்டி டெலிகாம் ஆகிய 5 இந்திய பெருமுதலாளிகளுக்கு சொந்தமாக இருந்தது. இது 2021ஆம் ஆண்டில் 18 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

இது எவ்வாறு நிகழ்ந்தது?

பாஜக ஒன்றிய அரசு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு கடந்த 10 ஆண்டு காலத்தில் 5.5 லட்சம் கோடி வரிச்சலுகை அளித்துள்ளது. கார்ப்பரேட் கம்பெனிகள் வங்கிகளிடம் பெற்று திருப்பி செலுத்தாத வாராக்கடன் 15 லட்சம் கோடியை ஒன்றிய அரசு ரத்து செய்துள்ளது. மீண்டும் வங்கிகளுக்கு அம்மூலதனத்தை மக்கள் வரிப்பணத்திலிருந்தே மத்திய அரசு ஈடு செய்கிறது. இத்தகைய கொள்கையினால் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான பொருளாதார ஏற்றத்தாழ்வு பெருமளவிற்கு அதிகரித்துவிட்டது. உலகளவில் பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகளவில் உள்ள நாடு இந்தியா என்று பல ஆய்வுகள் கூறுகின்றன.

மேலும் மின் உற்பத்தி, எண்ணெய் உற்பத்தி, நிலக்கரி சுரங்கம், ராணுவ தளவாட உற்பத்தி, இரயில்வே, அரசு வங்கிகள் உள்ளிட்டு பொதுத்துறை நிறுவனங்களை தனியார் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஒன்றிய அரசு தாரை வார்த்து வருகிறது. இத்தகைய தனியார்மய கொள்கையினால் கேந்திரமான தொழில்கள் கார்ப்பரேட்டுகளின் கைகளுக்கு சென்றுவிட்டன. உதாரணமாக, அதானி குழுமத்திற்கு 7 விமான நிலையங்களும், 14 துறைமுகங்களும் சொந்தமாக உள்ளன. மேலும், மின் உற்பத்தியில் பொதுத்துறையை விட கார்ப்பரேட் கம்பெனிகளுடைய பங்கு அதிகமாக இருக்கிறது.

லாபகரமாக இயங்கக்கூடிய அரசு வங்கிகளையும், ஆயுள் காப்பீட்டுக் கழகம் உள்ளிட்ட நிதி நிறுவனங்களையும் இந்திய பெருமுதலாளிகளுக்கும், பன்னாட்டு கம்பெனிகளுக்கும் தாரை வார்த்து தனியார்மய கொள்கையை ஒன்றிய பாஜக அரசு அமலாக்கி வருகிறது. இந்தியாவில் முதன்மையான அரசு வங்கியாக இருக்கக் கூடிய பாரத ஸ்டேட் வங்கியை தனியார் மயமாக்கிட வேண்டுமென்று பன்னாட்டு கம்பெனிகளுக்கு ஆதரவாக இருக்கும் கோல்டுமேன் சேக் என்ற அமெரிக்க இன்வெஸ்டர் கம்பெனி வலியுறுத்துகிறது.

“ஸ்திரமான நிதி நிலைமையில் செயல்படும் அரசு பாரத வங்கியில் முதலீடு செய்வதற்கு முதலீட்டாளர்கள் விரும்புகிறார்கள். இதனால் இந்த வங்கியின் செயல்பாடு ஆரோக்கியமாக இருக்கும்” என அந்த ஆய்வு குறிப்பிடுகிறது. அதேநேரத்தில், இந்த வங்கியின் ஒட்டுமொத்த மூலதனத்தில் 51 சதவிகிதத்தை தனியாருக்கு அளித்திட வேண்டுமென்றும் வலியுறுத்துகிறது. இவ்வாறு கேந்திரமான தொழில்கள் அனைத்தையும் உள்நாட்டு, பன்னாட்டு கம்பெனிகளுக்கு தாரை வார்ப்பதின் மூலம் இந்திய பொருளாதாரம் கார்ப்பரேட் கம்பெனிகளின் செல்வாக்கிற்குள் செல்லும் நிலைமை உருவாகும். இதுகுறித்து தோழர் சீத்தாராம் அவர்களின் கூற்றை இங்கு மேற்கோள் காட்டுவது பொருத்தமாக இருக்கும்.

“நவீன தாராளமயச் சீர்திருத்தங்களை எவ்விதமான தங்குதடையுமின்றி எடுத்துச் செல்லக்கூடிய இத்தகைய கொள்கையானது, இயற்கையாகவே இந்தியாவை சர்வதேச உறவுகளில் அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் சர்வதேச நிதி மூலதனத்தின் எடுபிடியாக மாற்றியிருக்கிறது”.

மேற்கண்ட பொருளாதாரக் கொள்கையை கடைப்பிடிக்கக் கூடிய இந்திய அரசு அமெரிக்க ஏகாதிபத்திய அரசின் உலகளாவிய பொருளாதார, ராணுவ ஆதிக்க கொள்கையின் இளைய பங்காளியாக மாறியிருக்கிறது.

குஜராத் முதலமைச்சராக இருந்தபோது மாநில அரசின் ஆதரவோடு நடந்த இஸ்லாமிய இனப்படுகொலையையொட்டி அம்மாநில முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடிக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாட்டு அரசுகள் விசா தர மறுத்தது. ஆனால், தற்போது அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளின் கொள்கைகளை, நடவடிக்கைகளை பாஜக தலைமையிலான மோடி அரசு ஆதரிப்பதால் ஏகாதிபத்திய நாடுகளும் ஒன்றிய பாஜக அரசை ஆதரிக்கின்றன. இப்பின்னணியில் இந்திய அரசு கடைப்பிடித்து வரும் அயலுறவுக் கொள்கையை பரிசீலிக்க வேண்டியுள்ளது.

நாற்கரக் கூட்டணி

அமெரிக்க தன்னுடைய ஏகாதிபத்திய பொருளாதார ஆதிக்கத்தை தக்க வைத்துக் கொள்வதற்கும், அமெரிக்க பொருளாதாரத்திற்கு இணையாக வளர்ந்து வரக் கூடிய சீனாவின் வளர்ச்சியை கட்டுப்படுத்திட, மட்டுப்படுத்திட பல ராணுவ கூட்டு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய 4 நாடுகளின் இணைந்து உருவாக்கிய ராணுவ ‘நாற்கரக் கூட்டணி’ – என்பது இந்திய பசிஃபிக் பிராந்தியத்தில் சீனாவின் வளர்ச்சியை கட்டுப்படுத்தவும், தனிமைப்படுத்தவும் உருவாக்கப்பட்டதுதான்.

இந்தியா, அமெரிக்கா ஆகிய இரண்டு நாடுகளுக்கிடையிலான அயல்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சர்களின் கூட்டம் (2+2) 2018லிருந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 2020 வரையில் இரண்டு நாடுகளுக்கிடையில் மூன்று ஒப்பந்தங்கள் போட்டுள்ளனர். இந்தியாவிற்கு அதிகமான அளவில் அமெரிக்காவிடமிருந்து ராணுவ தளவாடங்கள், ராணுவ விமானங்கள், ஹெலிகாப்டர்கள் இறக்குமதியாகின்றன. மேலும், இஸ்ரேலிடமிருந்தும் தொடர்ந்து இந்தியா ராணுவ தளவாடங்களை வாங்கி வருகிறது. இதன் விளைவாக, அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளிடமிருந்து பெருமளவில் ராணுவ தளவாடங்களை இந்தியா நம்பியிருக்கக்கூடிய நிலைமை உருவாகி வருகிறது.

அமெரிக்காவின் தீவு மாநிலமான ஹவாய் பகுதியில் அமெரிக்க கப்பற்படை தளத்திற்கும், டெல்லியில் உள்ள இந்திய கப்பற்படை மையத்திற்கும் இணைப்பு ஏற்படுத்துவது என்று ஒப்பந்தமாகி தகவல் பரிமாற்றமும் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் இந்தியாவினுடைய ராணுவ ரகசியங்கள் அனைத்தும் அமெரிக்காவினுடைய ராணுவத் தலைமையகத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. மொத்தத்தில் இந்தியா சுயேச்சையான அயலுறவுக் கொள்கையை கைவிட்டு அமெரிக்காவினுடைய இளைய பங்காளியாக மாறிவிட்டது. இப்பின்னணியில்தான் இஸ்ரேல், பாலஸ்தீனத்தை தாக்குகிறபோது, இந்திய அரசு இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கையை ஆதரிக்கும் நிலைபாட்டை மேற்கொண்டுள்ளது.

இஸ்ரேலின் இன அழிப்புத் தாக்குதல்

கடந்த அக்டோபர் மாதம் இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் காசா பகுதியின் மீது தாக்குதலை துவக்கியது. பாலஸ்தீன மக்களை அவர்களது பூர்வீக தேசமான பாலஸ்தீனத்திலிருந்தே அப்புறப்படுத்தி நாடற்றவர்களாக ஆக்கும் நோக்கத்தோடு, ஒரு இன அழிப்பு தாக்குதலை தொடுத்து வருகிறது. இதுவரையில் 30,000க்கும் மேற்பட்ட (29.02.2024 வரையில்) பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டதில் மூன்றில் இரண்டு பகுதியினர் பெண்களும், குழந்தைகளுமாவர். மேலும் 70,000 பேர் காயமுற்றுள்ளனர். காசாவில் வசித்து வந்த 23 லட்சம் பேரில் 20 லட்சம் பேர் தங்களது வாழ்விடத்திலிருந்து வெளியேறும் நிலைமை உருவாகி விட்டது. மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், பெரும்பான்மையோரின் வீடுகள், தொழில் வளாகங்கள் மீது இஸ்ரேல் ராணுவம் குண்டு வீசி அழித்து வருகிறது.  

இஸ்ரேல் பாலஸ்தீனத்தை தாக்க துவங்கிய போது பிரதமர் மோடி இஸ்ரேல் நாட்டு அதிபர் நேதன்யாகுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்தியா இஸ்ரேல் பக்கம் நிற்கும் என்று உறுதியளித்தார்.

பாலஸ்தீன நாட்டின் மீது தொடுத்து வரும் தாக்குதலை இஸ்ரேல் நிறுத்த வேண்டுமென்று ஐ.நா. மன்றத்தில் கடந்த 20.02.2024 அன்று மூன்றாவது முறையாக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை தனது ரத்து அதிகாரத்தின் மூலம் அமெரிக்க அரசு தடுத்து விட்டது.

காசாவின் பெரும்பகுதியை கைப்பற்றிய இஸ்ரேல் அரசு மிச்சமிருக்கும் காசா பகுதி மீது தாக்குதலை துவங்கப்போவதாக இஸ்ரேல் அதிபர் பகிரங்கமாக அறிவித்திருக்கிறார். இஸ்ரேல் பயன்படுத்தும் ஆயுதங்கள் பெரும்பகுதியாக அமெரிக்காவிலிருந்து இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

ஐ.நா. மன்றத்தில் கடந்த அக்டோபர் மாதம் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்காமல் வெளிநடப்பு செய்தது. இரண்டாவது முறையாக ஐ.நா.வில் இஸ்ரேலை கண்டிக்கும் தீர்மானம் வந்தபோது, பெரும்பாலான தெற்காசிய நாடுகள் அந்த தீர்மானத்தை ஆதரிக்கும் நிலைபாட்டை எடுக்கும்போது வேறு வழியில்லாமல் அந்த தீர்மானத்தை ஆதரித்தது.

காசாவின் பெரும்பகுதி இஸ்ரேலின் தாக்குதலுக்கு உள்ளாகிய பின்னணியில் 14 லட்சம் பாலஸ்தீன மக்கள் ரஃபா பகுதியில் தஞ்சம் அடைந்துள்ளனர். இப்பகுதியின் மீது இஸ்ரேல் தொடுக்கும் தாக்குதலை நிறுத்த வேண்டும் என ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து (அமெரிக்க ஆதரவு நாடுகள்) ஆகிய மூன்று நாடுகளும் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன. ரஃபா மீது தாக்குதல் தொடுத்தால் பேரழிவு ஏற்படும் என மேற்கண்ட மூன்று நாடுகளும் கவலை தெரிவித்துள்ளது. இத்தகைய பின்னணியிலும் இந்திய அரசு ரஃபா மீது இஸ்ரேல் தாக்குதல் தொடுக்கக் கூடாது என்ற நிலைபாட்டை மேற்கொள்ள முன்வரவில்லை.

பிரிக்ஸ் கூட்டணி (BRICS) நாடுகளில் ஒன்றான பிரேசில் அரசு இஸ்ரேல் அரசாங்கத்தை வன்மையாக கண்டித்துள்ளது. இக்கூட்டமைப்பில் அங்கமாக உள்ள தென்னாப்பிரிக்கா தொடுத்த வழக்கு அடிப்படையில் பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் தாக்குதல் ஐ.நா. மன்றத்தினுடைய இன ஒழிப்புத் தீர்மானத்திற்கு எதிரானதாகும் எனவும், உடனடியாக தாக்குதலை நிறுத்திட இஸ்ரேல் ராணுவத்திற்கு ஐ.நா. மன்றம் ஆணையிட வேண்டுமென சர்வதேச நீதிமன்றம் முடிவெடுத்தது. ஆனால் ஐ.நா. பாதுகாப்புக்குழுவில் சர்வதேச நீதிமன்றத்தின் முடிவை அமெரிக்கா அரசு தனது ரத்து அதிகாரத்தின் மூலம் தடுத்து நிறுத்திவிட்டது.

பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் தொடுத்துள்ள இன அழிப்புத் தாக்குதலை கண்டித்தும், தாக்குதலை நிறுத்திட வேண்டுமென வலியுறுத்தியும் உலகளவில் எழுச்சிமிக்க மக்கள் இயக்கம் நடைபெற்று வருகிறது. பல நாடுகளில் உள்ள யூதர்கள்,  பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலின் இன அழிப்பு தாக்குதலை யூதர்களை பாதுகாப்பது என்ற பெயரால் நடத்துவதைக் கண்டித்து இயக்கம் நடத்துகின்றன.

உலகத்தின் மத்திய கிழக்கு பகுதிகள் அப்பகுதி நாடுகளை தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் வைத்திருப்பதற்கு இஸ்ரேலை ஒரு அடியாளாக அமெரிக்கா பயன்படுத்தி வருகிறது. இதன் அடிப்படையில்தான் அமெரிக்க அரசும், அமெரிக்காவின் நட்பாக இருக்கக் கூடிய ஐரோப்பிய நாடுகளும் இஸ்ரேலுக்கு ராணுவ தளவாடங்களை அனுப்புவதுடன் நிதி உதவிகளையும் செய்து வருகின்றன.

பாஜக அரசு 2014இல் அதிகாரத்திற்கு வந்தபிறகு, இஸ்ரேல் அரசுடன் நெருக்கமாக உறவு வைத்துக் கொள்வதோடு, ஏராளமான ஆயுதங்களை இஸ்ரேல் அரசிடமிருந்து இந்தியா வாங்குகிறது. இஸ்ரேலின் ராணுவ ஆயுத ஏற்றுமதியில் 42 சதவிகிதம் இந்தியாவிற்கு வருகிறது. இந்தியாவும் ராணுவ தளவாடங்களை இஸ்ரேலுக்கு அனுப்பி வருகிறது. இஸ்ரேலில் இருந்த பாலஸ்தீனர்கள் வெளியேறியதால் அந்த இடத்தில் வேலையில் சேர்க்க இந்தியாவில் இருந்து ஆட்களை அனுப்புகிறார்கள்.

பாலஸ்தீனத்தில் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டு பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீன மக்களை குண்டு வீசி தாக்கி இஸ்ரேல் அழித்து வருகிறது. கொஞ்சமாவது மனிதநேயத்தில் அக்கறை இருந்தால் இந்திய அரசு இஸ்ரேலிடமிருந்து ஆயுதங்களை பெறுவதையும், இஸ்ரேலுக்கு ஆயுதங்களை அனுப்புவதையும் நிறுத்திட வேண்டும்.

கடந்த ஜனவரி 22 அன்று ராமர் கோவில் திறப்பு நிகழ்ச்சியான மத விழாவை அரசு விழாவாக மோடி தலைமையிலான மத்திய அரசும், யோகி ஆதித்யநாத் தலைமையிலான மாநில பாஜக அரசும் நடத்தியது. நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கையை வேகமாக அமலாக்கி, ஒன்றிய பொருளாதாரத்தை உள்நாட்டு, பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளிடம் ஒப்படைத்து, தேச இறையாண்மைக்கு மோடி அரசு வேட்டு வைத்துள்ளது. மேலும், சுயேச்சையான அயலுறவுக் கொள்கையை கடைப்பிடிப்பதற்கு மாறாக, அமெரிக்காவின் உலக மேலாதிக்கத் திட்டத்தின் இளைய பங்காளியாகவும் இந்தியா மாறியிருக்கிறது. பாஜக அரசின் இத்தகைய கொள்கையும், நடவடிக்கையும் இந்திய தேசத்தின் இறையாண்மையை பாதிப்பதோடு, மதச்சார்பற்ற, சுயசார்பு பொருளாதாரக் கொள்கையையும் கடுமையாக பாதிக்கும். இதன் மூலம், ஒன்றிய பாஜக அரசு, தேச நலனையும், மக்கள் நலனையும் காவு கொடுக்கிறது. ஒன்றிய அரசின் இத்தகைய கொள்கைகளையும், நடவடிக்கைகளையும் எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து குரல் எழுப்பும்.



Leave a comment