மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


இன்றும் வழிகாட்டும் தோழர் லெனின்


2024: லெனின் நினைவுநூற்றாண்டு

பேரா. வெங்கடேஷ்ஆத்ரேயா

அறிமுகம்


மார்க்ஸ்-எங்கெல்ஸ் வழிநின்று மார்க்சீயத்தின் தத்துவத்தையும் நடைமுறையையும் இடைவிடாமல் தனது அரசியல் வாழ்வில் முன்பின் முரணின்றி பின்பற்றிய மாமேதை தோழர் லெனின் அவர்கள் 1924ஆம் ஆண்டு ஜனவரி 21 ஆம் தேதியன்று மறைந்தார். அதன்பின் 100 ஆண்டுகள் கடந்து விட்டன. லெனின் காலத்துடன் ஒப்பிடுகையில் நாம் வாழும் உலகம் பிரும்மாண்டமான மாற்றங்களை கண்டுள்ளது. உற்பத்தி சக்திகளின் பாய்ச்சல்வேக வளர்ச்சி மனிதர்களின் வாழ்விலும், சமூகங்களின் தன்மைகளிலும் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இதெல்லாம் உண்மை என்றாலும், லெனின், மார்க்சீய அணுகுமுறையை பின்பற்றி அவர் வாழ்ந்த காலத்தில் ஏற்பட்ட சமூக-பொருளாதார-அரசியல்-தத்துவ மாற்றங்களை ஆய்வு செய்தும் அம்மாற்றங்களில் புரட்சிகர பாத்திரம் வகித்து பங்கேற்றும், கண்டறிந்து நமக்கு அளித்துள்ள மார்க்சீய-லெனினிய வழிகாட்டல் இன்றும் சமகால உலகை நாம் புரிந்துகொண்டு சோஷலிச உலகை அமைக்கும் புரட்சிகரப் பாதையில் தொடர்ந்து பயணிக்க நமக்கு வழிகாட்டுகின்றன.


ஏகாதிபத்தியம் பற்றி லெனின்


முதலாளித்துவ உற்பத்தி அமைப்பின் தன்மை, இயக்க விதிகள், மானுட வரலாற்று வளர்ச்சியில் அதன் பங்கு, அதன் உள்முரண்கள், தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் நிகழும் வர்க்கப்போராட்டத்தின் வாயிலாக முதலாளித்துவத்தின் தவிர்க்க முடியாத அழிவு, அதனைத் தொடர்ந்து சோசலிச உற்பத்தி அமைப்பு வாயிலாக பொது உடமை அமைப்பை நோக்கிய மானுட வரலாற்று பயணம் ஆகியவற்றை எல்லாம் தனது மகத்தான படைப்பான மூலதனம் நூலில் தெள்ளத்தெளிவாக கார்ல் மார்க்ஸ் முன்வைத்துள்ளார். மார்க்ஸ்-எங்கெல்ஸ் ஆகியோரின் படைப்புகளும், அவர்கள் இதர புரட்சியாளர்களுடன் இணைந்து ஐரோப்பிய நாடுகளில் பொது உடைமை இயக்கத்தை முன்னெடுக்க மேற்கொண்ட முனைவுகளும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்திலும் மேற்குலக புரட்சியாளர்களுக்கு பெரும் ஊக்கம் அளித்தது. முதலாளித்துவ சுரண்டலை எதிர்த்துப் போராடவும் புரட்சிகர சமூக-பொருளாதார-அரசியல் மாற்றங்களுக்கான பாதையில் பயணிக்கவும் மார்க்ஸ்-எங்கெல்ஸ் உருவாக்கிய மார்க்சீய அணுகுமுறை அவர்களுக்கு வழிகாட்டியது. குறிப்பாக பொதுஉடைமை தத்துவத்தையும் மார்க்சீய அணுகுமுறையையும் பின்பற்றி செயல்பட்ட ஜெர்மன் சமூக ஜனநாயக கட்சி ஆளும் வர்க்கங்களின் தாக்குதலையும் எதிர்கொண்டு முன்னேறியது.

எனினும், ஸ்தூலமான நிலமைகளையொட்டி திட்டவட்டமான ஆய்வு மேற்கொண்டு, களப்போராட்டங்களில் பங்கேற்றும் அவற்றிற்கு வழிகாட்டியும் மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸ் முக்கிய பங்கு ஆற்றினாலும், அவர்களது ஆய்வுகள் முதலாளித்துவம் என்ற உற்பத்தி அமைப்பை மையமாகக் கொண்டே அமைந்தன. உலகம் தழுவிய அமைப்பாக முதலாளித்துவம் வளர்ந்துவந்து கொண்டிருந்த 1880-1920 காலச்சூழலில் சமகால முதலாளித்துவம் பற்றிய புதிய தத்துவ வெளிச்சம் பாய்ச்ச வேண்டிய சவாலை, எங்கெல்சும் மார்க்சும் இல்லாத சூழலில் மார்க்சிசம் எதிர்கொண்டது. அன்றைய முதலாளித்துவம் பற்றி தத்துவ ஆழம் மிக்கதும், அதேநேரத்தில் மிகவும் ஸ்தூலமானதும் திட்டவட்டமானதுமான புரிதலை தனது ஏகாதிபத்தியம் என்ற நூல் மூலமாக முன்வைத்த மாபெரும் மார்க்சிஸ்டாக லெனின் அமைந்தார்.


ஏகாதிபத்தியம்-முதலாளித்துவத்தின் உச்ச கட்டம்


1916ஆம் ஆண்டில் லெனின் தலைமறைவு வாழ்க்கையில் இருந்தபொழுது அவரால் எழுதப்பட்ட ஒரு “சிறு நூல்” தான் ஏகாதிபத்தியம்-முதலாளித்துவத்தின் உச்சகட்டம். எப்படி 1848 இல் வெளிவந்த மார்க்ஸ்-எங்கெல்ஸ் எழுதிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை என்ற “சிறு நூல்” பத்தொன்பதாம் நூற்றாண்டில் சோசலிச புரட்சியாளர்களுக்கு கலங்கரை விளக்கமாக அமைந்ததோ, அதேபோல் லெனின் 1916இல் வெளியிட்ட ஏகாதிபத்தியம் என்ற “சிறுநூல்” இன்றுவரை சோசலிச புரட்சியாளர்களுக்கு கலங்கரை விளக்கமாக திகழ்ந்துகொண்டிருக்கிறது. தேச விடுதலை இயக்கங்களுக்கும் முக்கிய வழிகாட்டியாக அது அமைந்துள்ளது. இந்த நூலில் 1870 முதல் 1914 வரையிலான காலத்தில் உலக அளவில் ஏற்பட்டிருந்த முக்கிய அரசியல்-பொருளாதார மாற்றங்களை துல்லியமாக ஆய்வு செய்து லெனின் முக்கிய முடிவுகளை லெனின் முன்வைத்தார். தனது ஏகபோக-ஏகாதிபத்திய கட்டத்தில் முதலாளித்துவம் உலகையே ஒன்றிணைத்துவிட்டது. வளர்ந்த முதலாளித்துவ-ஏகாதிபத்திய நாடுகளின் அரசுகளும் முதலாளிவர்க்கமும் உலகம் தழுவிய காலனி ஆதிக்கம் மூலம் அந்த நாடுகளின் உழைப்பாளி மக்களை கடுமையாக சுரண்டியும் இயற்கை வளங்களை சூறையாடியும் அபரிமிதமான லாபங்கள் பெற்றன. இதில் ஒரு பகுதியை தமது நாடுகளின் உழைக்கும் வர்க்கத்தின் ஒருபகுதியினரை வர்க்க போராட்டப்பாதையிலிருந்து திசை திருப்ப அவர்கள் பயன்படுத்தினர். இதனால், முதலாளித்துவ உற்பத்தி அமைப்பின் முரண்பாடுகள் முற்றும் பொழுது, வளர்ச்சி பெற்ற மேலை முதலாளித்துவ நாடுகளில் சோசலிச புரட்சிகள் வெடிக்கும் என்று பத்தொன்பதாம் நூற்றாண்டில் பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நிகழாமல் போனது. முதல் உலகப்போர் 1914இல் துவங்கும்பொழுது சர்வதேச சோசலிஸ்ட் இயக்கம் திருத்தல்வாதிகளின் பிடியில் இருந்தது. ஏகாதிபத்திய நாட்டு பெருமுதலாளிகள் மற்றும் அரசுகளின் லாபவெறியால் மூண்ட இந்தப் போரை சோசலிச சக்திகள் எதிர்க்க வேண்டும்; ஏகாதிபத்திய லாபவெறி போர் ஆளும் வர்க்கங்களுக்கு எதிரான உள்நாட்டு வர்க்கப்போராக மாற்றப்படவேண்டும் என்ற சர்வதேச சோசலிஸ்ட் இயக்க முடிவை திருத்தல்வாதிகள் நிராகரித்து, தத்தம் ஏகாதிபத்திய அரசுகள் பக்கம் நின்றனர். இத்தகைய நிலைபாடுகளை புரிந்து கொண்டு எதிர்வினையாற்ற தொடர்ந்து களம் கண்ட லெனின் சரியான சோசலிச புரிதலை ஏற்படுத்தும் நோக்குடன் ஏகாதிபத்தியம் நூலை எழுதினார்.


தேச விடுதலை இயக்கங்கள்


மார்க்ஸ்-எங்கெல்ஸ் பங்களிப்பிற்குப் பின் ஆகப்பெரிய பங்களிப்பாக லெனின் எழுதிய ஏகாதிபத்தியம் நூலும், அதற்கு முன்பும் பின்பும் அவர் எழுதிய முக்கிய நூல்களும், ரஷ்ய சமூக ஜனநாயக கட்சி சரியான புரட்சிகர பாதையில் செல்ல அவர் ஆற்றிய பணியும் அமைந்தன. ஐரோப்பிய நாடுகளில் வெடித்த சோசலிச புரட்சிகள் 1917-1923 காலத்தில் ஆளும் வர்க்கங்களால் நசுக்கப்பட்ட பின்னணியில் முதலாளித்துவத்தின் ஏகாதிபத்திய கட்டத்தில் புரட்சியின் குவிமையம் கிழக்கு நோக்கி நகர்ந்தது. இதுபற்றி முன்பே “பின்தங்கிய ஐரோப்பாவும் முன்னேறும் ஆசியாவும்” என்ற ஒரு கட்டுரையில் லெனின் சுட்டியிருந்தார். ஏகாதிபத்திய கட்டத்தில் உலகம் முழுவதும் ஒரு சங்கிலியாக பிணைக்கப்பட்ட நிலையில் எங்கு சங்கிலியின் கண்ணி மிகவும் பலவீனமாக உள்ளதோ அங்கு புரட்சி வெடிக்கும் என்ற கூற்றை ரஷியாவில் நிகழ்ந்த மகத்தான 1917 அக்டோபர் புரட்சிக்கு தலைமையேற்று நடத்தி லெனின் நிரூபித்தார். ஒரு நாட்டில் முதலாளித்துவம் முற்றிலும் வளர்ந்து அங்கு தொழிலாளி வர்க்கம் அனைத்து வல்லமைகளையும் பெற்றபின்தான் சோசலிச புரட்சி நிகழும் என்ற திருத்தல்வாத கண்ணோட்டத்தை லெனின் தகர்த்து எறிந்தார். மிக முக்கியமாக, புரட்சியில் தொழிலாளி வர்க்கத் தலைமையின் அவசியத்தை தொடர்ந்து உயரத்திப் பிடித்துக்கொண்டே, சோசலிசத்தை நோக்கி பயணிக்கும் இருபதாம் நூற்றாண்டின் புரட்சிகளில் காலனி ஆதிக்கத்தை எதிர்த்து நடத்தப்படும் தேச விடுதலை இயக்கங்களின் முக்கியத்துவத்தை அழுத்தமாக லெனின் பதிவு செய்தார். அதுமட்டுமல்ல. 1899இல் அவர் எழுதிய “ரஷ்யாவில் முதலாளித்துவ வளர்ச்சி” என்ற முக்கியமான நூலில் தொடங்கி ரஷ்ய சமூக ஜனநாயக கட்சியின் திட்டத்தை உருவாக்குவதிலும் 1905 ரஷ்யப் புரட்சியை ஆழமாக ஆய்வு செய்வதிலும், இவற்றின் வாயிலாக தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் தொழிலாளி-விவசாயி கூட்டணியை அமைத்து வலுப்படுத்துவது சோசலிச புரட்சியின் ஜனநாயக கட்டத்திற்கு எவ்வளவு முக்கியமானது என்பதைப் புரிய வைத்ததிலும், லெனின் ரஷ்ய புரட்சியில் ஆற்றிய ஆகப்பெரிய பங்கை நாம் உணர முடிகிறது. லெனினின் படைப்புகளும் புரட்சிகர பணிகளும் ரஷ்யப்புரட்சிக்கு மட்டுமின்றி இந்திய விடுதலைப்போர், மக்கள் சீனத்தின் மகத்தான புரட்சி, பின்னர் வியட்நாம் புரட்சி என்று இருபதாம் நூற்றாண்டின் அனைத்து புரட்சிகளுக்கும் முக்கிய சமூக–பொருளாதார-அரசியல் இயக்கங்களுக்கும் வழிகாட்டி வந்துள்ளன என்பதை பதிவிட வேண்டும்.
“ஜனநாயக மத்தியத்துவம்” என்ற கோட்பாடு பற்றி
சோசலிசம் மற்றும் பொது உடமை அமைப்பு நோக்கிய பயணத்தில் கம்யூனிஸ்ட் கட்சி மையப் பங்கு ஆற்ற வேண்டியதன் அவசியத்தை அவர்கள் வாழ்ந்த காலச்சூழலுக்கு ஏற்றவாறு கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் மார்க்சும் எங்கெல்சும் தெளிவுபடுத்தியுள்ளனர். அரசின் கொடூரமான அடக்குமுறை நிலவி வந்த ஜார்கால ரஷ்யாவில் கட்சியின் அமைப்பு தொடர்பான விரிவான விவாதத்தை சமூக ஜனநாயக இயக்கம் நடத்தவேண்டி வந்தது. இந்த விவாதத்தில் லெனின் முன்வைத்த முக்கியமான அமைப்புசார் கோட்பாடு ஜனநாயக மத்தியத்துவம் ஆகும். கட்சியின் ஒவ்வொரு உறுப்பு அமைப்பிலும் முழுமையாக ஜனநாயகத்தன்மையில் விவாதம் நடத்துவதும் பின்னர் இறுதியில் பெரும்பான்மை அடிப்படையில் எடுக்கப்படும் முடிவிற்கு அமைப்பின் உறுப்பினர்கள் கட்டுப்படுவதும் இந்த கோட்பாட்டின் மைய அம்சமாகும். கட்சியின் அனைத்து அமைப்புகளும் ஜனநாயக அடிப்படையில் குறிப்பிட்ட கால இடைவெளியில் தேர்வு செய்யப்படுவதும் அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகள் ஜனநாயக மத்தியத்துவ கோட்பாட்டை கடைப்பிடிப்பதும் இதில் ஒவ்வொரு கமிட்டியும் அதற்கு வழிகாட்ட தேர்வு செய்யப்பட்டுள்ள மேல் கமிட்டி முடிவுகளுக்கு கட்டுப்படுவதும் ஜனநாயக மத்தியத்துவ கோட்பாட்டின் முக்கிய அம்சமாகும். ஒவ்வொரு உறுப்பினருக்கும் கமிட்டிக்கும் ஒரு பிரச்சினையை விவாதித்து அதன்மீது ஏற்றுக்கொள்ளப்பட்ட முடிவுகளை அமல்படுத்திக்கொண்டே, இப்பிரச்சினையில் தனது நிலைபாடு வேறாக இருந்தால் தொடர்ந்து பொருத்தமான அமைப்பில் பொருத்தமான முறையில் மேல் முறையீடு செய்யவும் இக்கோட்பாடு இடமளிக்கிறது. புரட்சிகர இயக்கம் எதிர்கொள்ளும் சவால்களையும், நிலவும் வர்க்க ஆட்சியின் தன்மையையும் கணக்கில் கொண்டு, புரட்சி இலக்கு நோக்கிய பயணத்தில் முன்னேற ஜனநாயக மத்தியத்துவ கோட்பாடு அவசியம். இருவேறு கோட்பாடுகளை இக்கோட்பாடு இணைக்கிறது. ஒன்று ஜனநாயகம். மற்றொன்று மத்தியத்துவம். இரண்டும் அமைப்பின் புரட்சிகர பயணத்தில் இலக்கை நோக்கி வெற்றிகரமாக பயணிக்க மிக அவசியம். நடைமுறையில் இக்கோட்பாட்டை அமலாக்கும்பொழுது இணைந்துள்ள இரண்டு கோட்பாடுகளில் ஒன்று அல்லது இன்னொன்று மேலோங்கக்கூடும் என்பதை உணரந்து, அவ்வாறு நிகழும்பொழுது பொருத்தமான தீர்வை கட்சி தலைமை காணவேண்டும். உலக பொது உடைமை இயக்கங்களின் அனுபவ அடிப்படையில் ஜனநாயக மத்தியத்துவம் என்ற கோட்பாடு பொது உடைமை இயக்கங்களில் விரிவான அங்கீகாரம் பெற்றுள்ளது.


லெனினிய பாதையில் சோவியத் சோசலிச சாதனைகள்


ரஷ்யாவில் போல்ஷெவிக் கட்சி தலைமையேற்று நடத்திய மகத்தான 1917 அக்டோபர் புரட்சி மானுடத்தின் நெடிய வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வு என்பதை கம்யூனிஸ்ட் இயக்கத்தின் எதிரிகள் உட்பட யாரும் மறுக்க இயலாது. அந்தப் புரட்சியில் மிக முக்கிய பங்கு வகித்தவர் தோழர் லெனின். அக்டோபர் புரட்சியை ஒருகணம் கூட ஏகாதிபத்திய முதலாளித்துவ சக்திகள் ஏற்கவில்லை. புரட்சி நிகழ்ந்து ஆறு மாதத்தில் 14 நாடுகளின் படைகள் ரஷ்யாவிற்குள் புகுந்தன. இதில் வியப்பு ஒன்றும் இல்லை. முதலாளிகள் இல்லாமல் ஒரு நாடு இயங்கமுடியும், மக்கள் வாழ முடியும் என்பது நிரூபிக்கப்பட்டால் முதலாளி வர்க்கமும் முதலாளித்துவ அமைப்பும் தேவை இல்லை என்றல்லவா ஆகிவிடும்! எனினும் ரஷ்ய செம்படை இரண்டு ஆண்டுகள் வீரம் செறிந்த போர் நடத்தி அக்டோபர் புரட்சியில் உருவான சோசலிச ரஷ்யாவை பாதுகாத்தது. பின்னர் சோசலிச சோவியத் குடியரசு உருவானது. இளம் சோவியத் குடியரசை அழித்தொழிக்க ஏகாதிபத்திய நாடுகள் எடுத்த அனைத்து முயற்சிகளும் லெனின், அவரது மறைவிற்குப் பின் ஸ்டாலின் தலைமையில் செயல்பட்ட சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டு செயல்பாட்டாலும் சோவியத் மக்களின் உறுதியான பங்களிப்பாலும் முறியடிக்கப்பட்டன. எதிரிகளின் தொடர் தாக்குதல்கள், பொருளாதார-அரசியல் அங்கீகார மறுப்பு, அறிவியல் தொழில்நுட்ப ஒத்துழைப்பு மறுப்பு, மேலை நாடுகளின் ராணுவ முஸ்தீபுகளை கணக்கில் கொண்டு தன்னை தற்காத்துக் கொள்ளவேண்டிய நிர்ப்பந்தம் ஆகியவற்றால் 1928இல்தான் ரஷ்யா தனது 1913 உற்பத்தி நிலைகளை எட்ட முடிந்தது. எனினும் இவற்றின் மத்தியிலும் கூட 1940இல் சோவியத் ஒன்றியம் உலகிலேயே இரண்டாம் தொழில்மய நாடாக பரிணமித்தது. பாசிச சக்திகளை வீழ்த்தி உலகில் ஜனநாயகத்தை பாதுகாத்தது சோவியத் ஒன்றியம். இரண்டாம் உலகப்போரில் இரண்டு கோடி சோவியத் மக்கள் நாட்டையும் உலகையும் சோசலிச அமைப்பையும் பாதுகாக்க தங்கள் இன்னுயிரை ஈந்தனர். இரண்டாம் உலகப்போருக்குப்பின் யுத்தகால பேரிழப்புகளையும் தாங்கிக்கொண்டு சோவியத் ஒன்றியம் தொடர்ந்து வளர்ந்தது. மக்களின் வாழ்க்கை தரமும் உயர்ந்தது. ஆனால் ஏகாதிபத்திய நாடுகளின் உலகம் தழுவிய கொள்ளை லாபத்தில் உருவான நிதி மூலதன ஆதிக்கம் சோவியத் ஒன்றியம் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஊடுருவி இந்த நாடுகளை பலவீனப்படுத்தியது. மறுபுறம் அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியம் மாபெரும் ஆயுதப் போட்டியை சோவியத் ஒன்றியத்தின் மீது திணித்து மக்கள் நலன் சார்ந்த சோசலிச முனைவுகளை பலவீனப்படுத்தியது. லெனினிய நெறிமுறைகளில் இருந்து சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி மேலும் மேலும் விலகி திருத்தல்வாதப் பாதையில் சென்றதும், சோவியத்-சீனா பிளவும் சோவியத் ஒன்றிய ஆட்சியை மேலும் வலுவிழக்கச் செய்தன. இறுதியாக 1991இல் சோவியத் ஒன்றியத்தில் சோசலிசம் வீழ்த்தப்பட்டு முதலாளித்துவம் மீண்டும் நிலை நிறுத்தப்பட்டது. இந்த நிகழ்வுகள் பற்றிய ஆழமான ஆய்வுக்குள் இக்கட்டுரையில் செல்ல இயலாது என்றாலும், அத்தகைய ஆய்வை மேற்கொள்வது உலகப் பொது உடைமை இயக்கத்தின் முன்னால் உள்ள பெரும் சவால்களில் ஒன்றாகும். உலகெங்கும் இந்நிகழ்ச்சி போக்குகள் பற்றிய பல ஆய்வுகளும் தரவுகளும் வெளிவந்த வண்ணம் உள்ளன.


லெனின் மற்றும் லெனினியத்தின் சமகால பொருத்தப்பாடு

சோவியத் ஒன்றியத்தின் அழிவு முற்போக்காளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கான காரணங்களையும் கிழக்கு ஐரோப்பிய சோசலிச நாடுகளில் முதலாளித்துவம் மீண்டும் நிறுவப்பட்டுள்ளதையும் ஆழமாக, தக்க தரவுகளுடன் ஆய்வு செய்து, இந்த நாடுகள் அனைத்திலும் சோஷலிசத்திற்கான போராட்டத்தை முன்னெடுக்கும் பொறுப்பு பொது உடைமை வாதிகளின் முன் உள்ளது. எனினும் சோசலிச நாடுகளின் பின்னடைவும் வீழ்ச்சியும் லெனினியத்தின் விளைவு என்று கருதுவது பொருத்தமல்ல. இன்றைய நமது சவால்களை எதிர்கொள்ள லெனின் முன்வைத்த கருத்துக்களும் அவரது வாழ்வும் எழுத்துக்களும் உதவாது என்ற முடிவும் பொருத்தமல்ல, 1991இல் சோவியத் ஒன்றியம் சிதறிய பொழுது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைமையில் ஒருதுருவ உலகம் அமைந்த பொழுது “வரலாறு முடிவுக்கு வந்துவிட்டது. முதலாளித்துவம் வென்றுவிட்டது. சோசலிசம் அழிந்துவிட்டது.” என்று வெற்றிக்களிப்பில் கொக்கரித்தவர்கள் அடுத்த 30க்கும் மேற்பட்ட ஆண்டுகளில் முதலாளித்துவ உலகம் மானுடத்தின் அடிப்படை பிரச்சினைகள் எவற்றையும் தீர்க்கவில்லை என்பதோடு, அவை மேலும் தீவிரம் அடைந்துள்ளதையும் இன்று காண்கின்றனர். வறுமை, வேலையின்மை, உணவு பாதுகாப்பின்மை, இயற்கை பேரிடர்கள் மற்றும் பெரும் தொற்றுக்களின் பாதிப்புகளில் இருந்து மக்களை பாதுகாக்க இயலாத நிலமை, தொடர்ந்து துரத்தும் பேரழிவு ஆயுதங்களின் அச்சுறுத்தல், போர்கள் தொடர்ந்து வெடிக்கும் நிலைமை என்ற ஒரு நீண்ட பட்டியல் மானுடத்தின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக ஆக்கியுள்ளது. இவை அனைத்துமே உலகம் தழுவிய ஏகாதிபத்திய அமைப்பின், லாபவெறி அடிப்படையில் இயங்கும் முதலாளித்துவ அமைப்பின் இயக்க விதிகளின் செயல்பாடுகள்தான் என்று மானுடம் மேலும் மேலும் உணர்ந்துவரும் நிலை இன்று உலகெங்கும் உருவாகி வருகிறது. 1917இல் ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான முரண்பாடுகளால், லாபத்திற்கான போட்டியால் கட்டவிழ்த்துவிடப்பட்ட முதல் உலகப் போர் அன்றைய ரஷ்யாவில் சோசலிச புரட்சி வெடிக்க ஒரு காரணமாக அமைந்தது. அதனை தொடர்ந்து அடுத்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக முதலாளித்துவ உலக ஆதிக்கத்தில் போர்கள் அற்ற ஒரு தருணம் கூட இல்லை என்பதே மானுடத்தின் அனுபவம். குறிப்பாக, சோவியத் ஒன்றியம் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் சோசலிசம் வீழ்த்தப்பட்ட பின், முதலாளித்துவ ஏகாதிபத்திய மேலாதிக்க அச்சுறுத்தல் மானுட இனத்தின் ஆகப்பெரிய நெருக்கடியின் வெளிப்பாடாக அமைந்துள்ளது. ஏகாதிபத்தியத்திற்கும் வளரும் நாடுகளுக்கும் இடையிலான முரண்பாடுகள் தீவிரம் அடைந்து வருவதை சமகால நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன. பாலஸ்தீன மக்களின் தேச விடுதலையை மறுப்பதோடு, அவர்களை இனப்படுகொலை செய்துவரும் பயங்கரவாத இஸ்ரேல் நாட்டுக்கு உறுதுணையாக மேலை வல்லரசுகளும் ஏகாதிபத்தியமும் செயல்பட்டு வருவது உலகெங்கும் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வுகளை வலுப்படுத்திவருகிறது. 1991 – 2008 காலத்தில் பன்னாட்டு அரங்குகளில் பெரும் எதிர்ப்பின்றி செயல்பட்ட ஏகாதிபத்தியம் கடந்த பதினைந்து ஆண்டுகளில் உலக அளவில் தொடர் பொருளாதார நெருக்கடியையும் பன்னாட்டு அரங்குகளில் ஏகாதிபத்திய எதிர்ப்பையும் சந்தித்து வருகிறது. ஒரு துருவ உலகில் இருந்து பல துருவ உலகை நோக்கி உலக அரசியல் களம் நகர்ந்து வருகிறது. மக்கள் சீனத்தை அடக்க ஏகாதிபத்திய நாடுகள் தங்கள் முயற்சிகளை தீவிரப்படுத்தினாலும், அது எளிதான பணி அல்ல என்று அனுபவம் அவர்களுக்கு உணர்த்திவரும் அதே வேளையில், வளரும் நாடுகளும் மக்கள் சீனமும் பல பன்னாட்டு அரங்குகளில் இணைந்து செயல்படும் போக்குகள் வலுப்பெற்று வருகின்றன. இவையெல்லாம் முன்பின் முரணின்றி நிகழவில்லை என்றாலும், ஏகாதிபத்தியத்திற்கும் வளரும் நாடுகளுக்கும் இடையில் மோதல்கள் அதிகரித்து வருவதை நமக்கு நினைவுபடுத்துகின்றன. தாராளமய கொள்கைகளால் ஏகாதிபத்திய நாடுகளிலும் வளரும் நாடுகளிலும் தொழிலாளி வர்க்கத்திற்கும் முதலாளி வர்க்கத்திற்கும் இடையிலான முரண்பாடுகள் தீவிரம் அடைந்து வருகின்றன. பெரு முதலாளித்துவ ஆதரவு தாராளமய கொள்கைகளால் உலகெங்கும் விவசாயிகள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். லெனின் அன்று முன்வைத்த விவசாயி-தொழிலாளி வர்க்கக் கூட்டணி இன்றும் உலகின் பல நாடுகளில் பொருத்தமாகவே உள்ளது. இந்திய நாட்டின் மகத்தான விவசாயிகள் போராட்டத்தில் உருவாக்கப்பட்ட விவசாயி-தொழிலாளி கூட்டணி பாஜக அரசு இறுமாப்புடன் நிறைவேற்றிய விவசாய விரோத மக்கள் விரோத சட்டங்கள் மூன்றையும் குப்பை தொட்டியில் போட வைத்தது. பருவநிலை மாற்றம் குறித்த பன்னாட்டு விவாத அரங்குகளில் வளரும் நாடுகளின் ஒற்றுமை முக்கிய பங்காற்றி வருகிறது. ஏகாதிபத்தியத்தின் அனைத்து சீனா விரோத முயற்சிகளையும் இதுவரை மக்கள் சீனம் வெற்றிகரமாக எதிர்கொண்டு வருகிறது. பிரிக்ஸ், ஷாங்காய் கூட்டுறவு அமைப்பு உள்ளிட்ட ஆசிய, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்க நாடுகள் பலவும் பிரச்சினைகளின் அடிப்படையில் ஒருங்கிணைந்து செயல்படும் போக்கையும் காண முடிகிறது.
ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் பன்னாட்டு நிதி மூலதன ஆதிக்கத்தால் மட்டுப்பட்டுள்ளன என்ற அம்சம் ஒருபுறம் இருந்தாலும் இதுவே தொடரும் என்று கருத முடியாது. ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் முற்றிலும் மறைந்துவிட்டதாக கருதவும் முடியாது.
உலக அளவில் சோசலிசத்திற்கும் ஏகாதிபத்தியத்திற்குமான முரண்பாடுதான் இன்றும் நாம் வாழும் சகாப்தத்திலும் அடிப்படை முரண்பாடு என்ற நிலை தொடர்கிறது.


இறுதியாக


லெனின் நூறு ஆண்டுகளுக்கு முன்பாக கடந்த நூற்றாண்டின் முதல் இருபது ஆண்டுகளில் முன்வைத்த பல கோட்பாடுகளும் அரசியல் புரிதல்களும் இன்றும் நமக்கு பாடமாகவே அமைகின்றன. குருட்டுப் பாடமாக அல்ல, மாரக்சீய அணுகுமுறை அடிப்படையிலான வழிகாட்டுதலாக!



Leave a comment