மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


கீழ் காவிரி டெல்டா பகுதியில் வரலாற்று மாற்றங்களும், இன்றைய நிலையும்


வி.கே.ராமச்சந்திரன்

(இது கீழ் காவிரி டெல்டா பகுதியில் பொருளாதார மாற்றங்கள் குறித்த ஆய்வு. இது தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள இரண்டு கிராமங்களில் நடத்தப்பட்ட சமூக-பொருளாதார கணக்கெடுப்புகளை தழுவி எழுதப்பட்டது.)

கீழ்வேளூர் தாலுக்காவில் உள்ள பாலக்குறிச்சி என்ற கிராமமானது, முதலில் 1917இல் ஆய்வு செய்யப்பட்டது. இந்த கணக்கெடுப்பை நடத்தியவர் கே. சுந்தர ராஜலூ. இதை வழி நடத்தியது மதராஸ் பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற பேராசிரியரான கில்பர்ட் ஸ்லேட்டர் என்பவர். இந்த பிரபல ஆய்வு “ஸ்லேட்டர் ஆய்வுகள்” என அறியப்படுகிறது. இந்த கிராமம் பின்னர் 1942இல் பி.ஜே.தாமஸ் மற்றும் கே.சி.ராமகிருஷ்ணன் அணியாலும், 1960களின் துவக்கத்தில் மார்க்கரட் ஹாஸ்வெல் என்பவராலும், 1983இல் எஸ்.குகன் என்பவராலும், 2005இல் வி.சுர்ஜித் என்பவராலும் ஆய்வு செய்யப்பட்டது. வெண்மணி கிராமத்தில் கீழ்வெண்மணி என்ற குடியிருப்பு அடங்கியுள்ளது. இங்குதான் டிசம்பர் 25, 1968 அன்று 44 தலித் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஒரு குடிசைக்குள் விரட்டி அடிக்கப்பட்டு, சாதி-இந்து நிலக்கிழார்-குற்றவாளிகளாலும் அவர்களின் அடியாட்களாலும் உயிருடன் எரித்து கொல்லப்பட்ட கோர சம்பவம் நிகழ்ந்தது. வேளாண் ஆய்வுக்கான அறக்கட்டளை நடத்திய இந்த ஆய்வுதான் இந்த இரண்டு கிராமங்களில் ஜனத்தொகை கணக்கெடுப்பு போல நடத்தப்பட்ட முதல் சமூக-பொருளாதார கணக்கெடுப்பு.

அண்மையில் நடத்தப்பட்ட ஊரக தமிழகம் குறித்த பெரும்பாலான ஆய்வுகளை விடவும் இந்த ஆய்வு இரண்டு அம்சங்களில் வெகுவாக மாறுபட்டது. முதலாவதாக இந்த ஆய்வின் கருவும், தரவு மூலமும் தனித்துவம் மிக்கது. இந்த ஆய்வுக்கான அடிப்படை தரவுகளானது இரண்டு கிராமங்களிலும், ஜனத்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில், அட்டவணை கொண்டு, அனைத்து குடும்பங்களிலும் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு மூலமும், குறிப்பிட்ட மக்களிடம் நடத்தப்பட்ட நேர்காணல் மூலமும், உள்ளூர் அதிகாரிகள், அரசியல் ஊழியர்கள், விவசாய மற்றும் விவசாய தொழிலாளர் சங்க ஊழியர்கள், இதர உள்ளூர் மக்கள் என அனைவருடனான உரையாடல் மூலமும் வருகிறது. இரண்டாம் தர தரவு மூலமானது, மாநில மற்றும் மத்திய அளவிலான தரவு சேகரிப்பு நிறுவனங்களிடமிருந்தான, பரந்துபட்ட, பன்முகத்தன்மை கொண்ட அதிகாரப்பூர்வ தரவுகள் ஆகும்.

இரண்டாவதாக, இந்த ஆய்வின் அடிப்படை வழிமுறையானது இரண்டு கிராமங்களிலும் உள்ள வர்க்கங்கள் குறித்த விரிவான ஆராய்ச்சி முறையில் அடங்கி உள்ளது. ஊரக பகுதிகளில் வர்க்கங்களை விரிவாக ஆராயாமல், வேளாண் உறவுகள் குறித்த அறிவியல்பூர்வமான ஆய்வை நிகழ்த்த முடியாது. உற்பத்தி சக்திகளின் உடைமை அளவு, பணி முறை மற்றும் உழைப்பு சக்தி செலவழிக்கும் முறை மற்றும் குடும்பங்களின் வேளாண்-வேளாண் அல்லாத வருமானம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, இரண்டு கிராமங்களில் உள்ள குடும்பங்களும் சமூக-பொருளாதார பிரிவுகளின் கீழ் வரையறுக்கப்பட்டன. இந்த இரண்டு கிராமங்களில் வேளாண் உறவுமுறை – சாதி, வர்க்க மற்றும் பாலின வேறுபாடு – குறித்த இந்த ஆய்வானது, அண்மையில் ஊரக தமிழகம் குறித்து நடத்தப்பட்ட வேறு எந்த ஆய்வை விடவும் மிகவும் ஆழமான தரவுகளின் அடிப்படையில் நடத்தப்பட்டது.

பாலக்குறிச்சியும் வெண்மணியும் “வால்-முனை கிராமங்கள்”. அதாவது காவிரி பாசன முறையின் கடை முனையில் உள்ள கிராமங்கள். ஆதலால் கடந்த இருபது ஆண்டுகளில் காவிரி நீர்வரத்து குறைவால் டெல்டா பகுதியில் பெரிதும் பாதிக்கப்பட்ட கிராமங்கள்.

கீழ் காவிரி டெல்டா பகுதியானது நெல் மற்றும் வேளாண் உற்பத்தி உபரி விளைச்சலுக்கு பேர் போன பகுதி. அது மட்டுமல்லாமல், அரசு மற்றும் நிலக்கிழார்கள் இணைந்து, கொடூரமான மற்றும் மனிதத்தன்மையற்ற சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறையை உழைக்கும் மக்கள் மேல் கட்டவிழ்த்து விட்டதற்கும் அறியப்பட்ட பகுதி. வர்க்க சுரண்டல் மற்றும் சாதி ஒடுக்குமுறையும், ஒதுக்குதல், தனிமைப்படுத்துதல் மற்றும் காட்டுமிராண்டித்தனமான தீண்டாமை முறையும், அனைத்தும் ஒன்றோடொன்று பிரிக்க முடியாதது. “ஒடுக்குமுறை எவ்வளவு ஆழமானதோ, அதே அளவு எழுச்சியும் பெரியது”: செங்கொடியின் கீழ் தமிழகத்தில் முதன்முதலில் சங்கமாக ஒருங்கிணைக்கப்பட்ட உழவர்களும் விவசாய தொழிலாளர்களும் கீழ் காவிரி டெல்டா பகுதியைச் சேர்ந்தவர்கள்தான் (ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தின் கிழக்கு பகுதி). இன்று பழைய பயிர் முறையும் விளைச்சலும் மாறி விட்டது – திரும்பிச் செல்ல இயலாத அளவு மாறி விட்டது. அதோடு சேர்ந்து உற்பத்தி உறவுகளும், பழைய வேளாண் முறையின் மையக் கருவாக விளங்கிய கொடூரமான நேரடி ஒடுக்குமுறையும் சேர்ந்து மாறிவிட்டது.

இந்த ஆய்வுக்கான கணக்கெடுப்பின் அங்கமாக இருந்தது : பாலக்குறிச்சியில் 390 குடும்பங்கள் மற்றும் வெண்மணியில் 415 குடும்பங்கள். கேள்விகள் நீளமாகவும் விரிவாகவும் அமைந்தன. பல அத்தியாயங்களும் கணக்கெடுப்பு மற்றும் அதிகாரப்பூர்வ தரவுகள் மூலமான முக்கிய படிப்பினைகளை விவரிக்கின்றன. ஆய்வு நடத்தப்பட்ட சமயத்தின் விளைச்சல் ஆண்டு 2018-19 ஆகும்.

இந்த கட்டுரையில், கணக்கெடுப்பு தரவுகள் மூலம் வேளாண் உறவுகள் குறித்து நாம் அறிகின்ற முக்கிய அம்சங்களை அறிமுகப்படுத்துகிறோம்.

2005இல் பாலக்குறிச்சியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்விற்குப்பின் கீழ் காவிரி டெல்டா பகுதியின் உற்பத்தி சக்திகளின் நிலையில் ஏற்பட்ட முக்கிய மாற்றம் என்னவென்றால், டெல்டா பகுதியானது மாநிலத்தின் நெல் உற்பத்தியின் மையப்பகுதி என்ற நிலையிலிருந்து நலிந்து வந்துள்ளதே ஆகும். பாசனத்திற்கு மேட்டூர் அணையிலிருந்தான நீர் வரத்தை சார்ந்துள்ள இந்த பகுதியில், அணையிலிருந்தான ஆண்டு நீர்வரத்து 1960களில் 70 லட்சம் கோடி லிட்டர் என்ற அளவிலிருந்து, கடந்த பத்து ஆண்டுகளில் (2010-19) சுமார் 30 லட்சம் கோடி லிட்டர் என்ற அளவுக்கு குறைந்துள்ளது. கீழ் காவிரி டெல்டா பகுதியில் நிலம் வறண்டு வரும் போக்கு தற்போது எழுந்து வரும் மிகப்பெரும் ஆபத்துகளில் ஒன்று. இதன் காரணம் பெரும்பாலும் மழை பொழிவு மாற்றத்தை விட, நீர் மேலாண்மை முறை மாற்றத்தில்தான் அடங்கி உள்ளது.

நீர் வரத்து குறைவின் முக்கிய காரணமானது கர்நாடகா மற்றும் தமிழகம் இடையேயான நீர் பகிர்வு முறையில் ஏற்பட்ட மாற்றம்தான். இதன் விளைவாக, இப்பகுதியில் பழைய முறைப்படி விளைச்சலை தொடர்வது சாத்தியமற்றதானது. 1970கள் மற்றும் 1980களின் “பசுமைப் புரட்சி” காலத்தில் இந்த பகுதி ஒற்றைப் பயிர் பகுதியில் இருந்து இரட்டைப் பயிர் பகுதியாக மாறியது. இந்த ஆய்வு நடத்தப்பட்ட சமயத்தில் இந்த பகுதி மீண்டு ஒற்றை பயிர் முறைக்கே சென்றதோடு, முன்னாட்களின் ஆய்வுகளில் பாலக்குறிச்சியில் பதிவான நெல் விளைச்சல் அளவை விட இப்போது குறைந்து விட்டது.

ஆக, காவிரி நீர் வரத்து குறைவால் ஏற்பட்ட சவால்களை தீர்க்க வேளாண் மற்றும் பாசன திட்டங்கள் தவறிவிட்டன. இந்த பகுதியில் புதிய நீர் வரத்து முறைக்கு ஏற்றவாறு உள்ள பயிர்கள் (பயிர் வகை மற்றும் வேளாண் முறை) நோக்கி வேளாண்மை நகரவில்லை. மாநிலத்தில் நுண் நிலை பாசன முறைகளும் போதுமான அளவு நவீனப்படுத்தப்படவில்லை – உதாரணமாக கால்வாய் பராமரிப்பு மற்றும் இதர முறைகள் மூலம் நீர் பாராமரிப்பை மேம்படுத்துவது. புயலும் வறட்சியும் மாறி மாறி வரும் பகுதிக்கு ஏற்றாற் போன்ற பயிரிடும் முறையே கீழ் காவிரி டெல்டா பகுதிக்கு முக்கிய தேவை. இந்த கடினமான தேவைகளை பூர்த்தி செய்தால் மட்டுமே வேளாண்மையில் உற்பத்தி சக்திகள் மீண்டெழுந்து வளர முடியும்.

இந்த வேளாண்மை குறித்த பல உரையாடல்களும் 1980களில் மதராஸ் வளர்ச்சி ஆய்வுக்கான நிறுவனத்தை (mids) சேர்ந்த புகழ்பெற்ற நிர்வாகி மற்றும் பேராசிரியரான எஸ்.குகன் எழுப்பினார். மாநிலங்களுக்கு இடையேயான நீர்வள பகிர்வு அடிப்படையிலான கிராக்கியை கணக்கில் கொண்டால், காவிரி நீரில் தமிழகத்திற்கான பங்கும், காவிரி டெல்டாவின் கடைநிலை பகுதிகளுக்கும் தொடர்ந்து குறைந்து கொண்டே வரும் என்பதை குகன் அவர்கள் தெளிவாக தெரிவித்தார். பாசன முறையை தேர்ந்த முறையில் மாற்றி (கால்வாய்களில் பராமரிப்பு அரண் உருவாக்கி), அன்று நிலவி வந்த தாழ் நிலை நிலங்களில் நெல் பயிரிடலுக்கான வெள்ள நீர்ப்பாசன முறையில் பயன்படுத்திய நீர் அளவை விட குறைந்த நீரை பயன்படுத்தும் பயிர்களை நோக்கி நகர வேண்டும் என அவர் பரிந்துரைத்தார். அவர் பரிந்துரைகள் தொலைநோக்கு பார்வை கொண்டதாக இருந்தது. இந்த கருத்துக்கு போதிய கவனம் கொடுக்காததன் விளைவை இன்று காண முடிகிறது.

மேலும் இந்த கிராமங்களில் ஏற்பட்ட முக்கிய முன்னேற்றங்களானது, 1980களில் துவங்கி, பசுமைப் புரட்சியின் பலன்கள் நலிந்து வந்த நிலையில், அதே வேளையில் பயிரிடலைத் (குறிப்பாக நெல் பயிர்) தவிர வேறு எந்த முக்கிய பொருளாதார தொழிலும் இங்கு வளரவில்லை.

கடந்த நூறு ஆண்டுகளில் உற்பத்தி சக்திகளில் குறிப்பிட்ட தன்மை மாற்றங்கள் உருவாகி உள்ளன. இதோடு சேர்ந்து இந்த பகுதியில் உற்பத்தி உறவுகளில் மாற்றமும் ஏற்பட்டுள்ளது. வரலாற்று ரீதியாக இந்த பகுதியில் வேளாண் உறவுகளில் பெரும் ஏற்றத்தாழ்வு நிலவி வந்துள்ளது. பதினேழாம் நூற்றாண்டில் இந்த பகுதியில் நில உடைமையும் நிலக் கட்டுப்பாடும் குறிப்பிட்ட சில சாதி இந்து நிலக்கிழார்கள் கையில் குவிந்து கிடக்க துவங்கியது. இதோடு சேர்ந்து பலருக்கும் சுதந்திரமற்ற நிலையும் பணிக்கு அப்பாலும் நிலவும் கொடூர அடக்குமுறையும் வேரூன்றியது.

வேளாண் உறவுகளை பொறுத்த வரை, வரலாற்று காலத்தை ஒப்பிடுகையில் முக்கிய மாற்றங்கள் என்னவென்றால், பண்டைய கொடூர நிலக்கிழார் முறையும், தொழிலாளர்களின் பொருளாதார, சமூக, தனிப்பட்ட (அவர்கள் உடல் உட்பட) வாழ்வின் மீது முதலாளித்துவத்திற்கு முந்தைய முறையிலான சுரண்டல்களும் உடைந்தன. அது உடைக்கப்பட்டதற்கு பிரதான காரணம், பற்பல ஆண்டுகளாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலும், 1960களின் மத்தியில் துவங்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலும் அந்த பகுதியின் உழவர்களும் விவசாய தொழிலாளர்களும் தொடுத்த போராட்டம் தான். இந்த போராட்டத்திற்கும், குறிப்பாக கீழவெண்மணி கோர சம்பவத்திற்கு பின் இந்த அடக்குமுறையில் அரசு எந்திரம் மற்றும் நிலக்கிழார்கள் கூட்டை வெகுஜன இயக்கங்கள் அம்பலப்படுத்தியதாலும், அரசு கொள்கைகள் இதற்கு செவி சாய்க்க உந்தப்பட்டன. குத்தகை முறை இன்றும் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்தாலும், இன்று குத்தகை விதிமுறைகளில், குறிப்பாக கோவில் நிலம் தொடர்பான குத்தனை விதிமுறைகளில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

1970கள் மற்றும் 1980களில் நிலவிய விவசாய தொழிலாளர்கள், அடிமை பண்ணை தொழிலாளர், மற்றும் தலித்துகள் மீதான பணிக்கு வெளியிலான ஒடுக்குமுறையும் இன்று அழிந்துள்ளன. நிலக்கிழாரின் கட்டளையின் பேரில் தலித் மக்களை பொது இடங்களான பள்ளிகள், உணவுக் கூடங்கள், உணவு பரிமாறும் இடங்களான திருமணம் மற்றும் ஈமச்சடங்கு போன்றவற்றிலிருந்து ஒதுக்கி வைக்கும் முறையும் இன்று நடக்காது. போராட்டங்கள் மூலமே இந்த கிராமங்களின் தலித் மக்கள் சமூக தளத்தில் வெற்றி கண்டுள்ளனர்.

ஆனால் இங்கு நடந்துள்ள மாற்றத்தின் காரணி மேல் மட்டத்திலிருந்து நிலச் சீர்திருத்தத்திற்கு சட்ட ஒப்புதல் அளித்தது அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்த இரு கிராமங்களிலும் உள்ள மிகவும் பணக்கார குடும்பங்களின் உறுப்பினர்கள், அதாவது பொருளாதார தளத்தில் ஆதிக்கம் செலுத்தும் முதலாளித்துவ விவசாயிகள் அனைவருமே பண்டைய நிலக்கிழார் பரம்பரை வழி வந்தவர்கள்தான். காலப் போக்கில் அவர்களின் நிலம் பல துண்டுகளாக பிரிக்கப்பட்டு, அவர்களின் பிரதான வருமானம் பயிர் விளைச்சல் மூலமாக இல்லாமல் போனாலும், ஏற்றத்தாழ்வு கூர்மையாக உள்ள படிநிலையில் நிலக்கிழார்கள் உச்சியில் அமர்ந்துள்ளனர். பாலக்குறிச்சியில் வெறும் 2 விழுக்காடு பங்கு வகிக்கும் பிரதான நிலக்கிழார் குடும்பங்கள் 38 சதவீத நிலத்திற்கு சொந்தமானவர்களாக உள்ளனர். வெண்மணியில் 1 விழுக்காடு நிலக்கிழார் குடும்பங்கள் 18 சதவீத நிலத்திற்கு உடைமையாளர்கள். தங்கம் மற்றும் நிதி சொத்துக்களை ஒதுக்கி வைத்தால் கூட, இவர்கள் மொத்த சொத்தில் பாலக்குறிச்சியில் 22 சதவீதம் மற்றும் வெண்மணியில் 24 சதவீதம் சொத்துக்களுக்கு சொந்தக்காரர்கள். பாலக்குறிச்சியில் ஆய்வு ஆண்டில் மொத்த தொழிலாளர்களின் உழைப்பு நாட்களில் 33 சதவீதம் நிலக்கிழார்களால் பணியமர்த்தப்பட்டது. அதே பங்கு வெண்மணியில் 12 சதவீதமாக இருந்தது. கிராமத்தின் பெரும்பாலான, வளமான நிலங்கள் எல்லாம் நிலக்கிழார்கள் கையில் இருந்ததோடு, அவர்கள் எந்த வேளாண் செயல்பாடுகளிலும் பெரும்பாலும் ஈடுபடவில்லை. கிராமத்திலும், கிராமத்திற்கு வெளியில் உள்ள ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளிலும் வேளாண்மை அல்லாத வருவாய் முறைகளின் உடைமையாளர்கள் என்ற முறையில் அவர்கள் கிராமத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். மற்றைய குடும்பங்களை விட உயர் கல்வி முறைகளை அவர்களால் தேர்ந்த முறையில் பயன்படுத்த இயலுவதால், வேளாண்மை அல்லாத பணிகள் மற்றும் மாதாந்திர ஊதிய பணிகளில் அதிக வாய்ப்பு பெறுகின்றனர்.

பாலக்குறிச்சியிலும் வெண்மணியிலும் நிலமின்மை இன்னும் கூர்மையாகத்தான் உள்ளது: பாலக்குறிச்சியில் 46 சதவீத குடும்பங்களுக்கும், வெண்மணியில் 56 சதவீத குடும்பங்களுக்கும் நிலம் இல்லை. ஆனால் பாலக்குறிச்சியில் நிலமின்மை குறைந்துள்ளது. பெருமளவு மக்கள் சொத்தில்லா தொழிலாளர்களாகி வரும் நிலையில், ஒரு சிறு பகுதி தொழிலாளர்கள் சில சிறு அளவிலான நிலத்திற்கு சொந்தக்காரர்கள் ஆகி உள்ளனர். இந்நாளில் இரண்டு கிராமங்களிலும் உள்ள நிலவுடைமையின் முக்கிய அம்சமானது, தலித் குடும்பங்களிடம் நிலம் உள்ளதுதான். உள்ளூர் சமூக சேவை அமைப்பான “உழுபவருக்கே நில சுதந்திரம்” (LAFTI) என்ற அமைப்பு நடத்திய பேச்சுவார்த்தையில் அடிப்படையில், ஒரு ஏக்கர் நிலம் தலித் குடும்பங்களுக்கு ரூ.33,000-ற்கு விற்கப்பட்டு (பெண்கள் பேரில் பதியப்பட்டு), அதில் பாதியை அரசாங்க மானியம் மூலம் வழங்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. பாலக்குறிச்சியில் 150 தலித் குடும்பங்களுக்கும் (அதாவது மொத்த தலித் குடும்பங்களில் 66 விழுக்காடு), வெண்மணியில் 95 தலித் குடும்பங்களுக்கும் (மொத்த தலித் குடும்பங்களில் 36 விழுக்காடு) இன்று நிலம் உள்ளது. இந்த விற்பனை 2010 முதல் 2019 வரையிலான காலத்தில் நிகழ்ந்தது. இந்த நிலங்கள் எந்த விதத்திலும் போதுமான வருமானம் ஈட்டுவாதில்லை என்றாலும், தலித் மக்களிடம் நிலம் உள்ளது என்பதே கீழ் காவிரி டெல்டா பகுதியில் நில உடைமை அமைப்பில் ஒரு வரலாற்று மாற்றம் ஆகும். இந்த இரண்டு கிராமங்களிலும் (நாகப்பட்டினம்-திருவாரூர் பகுதியிலும்), ஒரு குறுகிய வரம்பிற்கு உட்பட்டாவது LAFTI அமைப்பு திறம்பட செயல்படுவதற்கு காரணம், கீழ் காவிரி டெல்டா பகுதியின் வேளாண் இயக்கத்தின் தாக்கத்தால்தான்.

கூலித் தொழிலாளர்களே இந்த பகுதியின் தொழிலாளர்களில் பெரும் பங்கு வகிக்கின்றனர். பயிர் உற்பத்தி இன்று கூலித் தொழிலுக்கான முக்கிய வருமானம் இல்லை என்பதால், விவசாய மற்றும் விவசாயம் அல்லாத தொழிலாளர்கள் என்ற வெவ்வேறு வர்க்கங்கள் கிராமங்களில் இன்று இல்லை. ஆதலால் கூலித் தொழிலாளர்கள் குடும்பங்களை “திறன் சாரா மற்றும் பகுதி திறன் சார் தொழில்கள் மூலம் பெரும்பாலான வருமானம் ஈட்டுபவர்கள்” (பாலக்குறிச்சியில் மொத்த குடும்பங்களில் 24 சதவீதம் மற்றும் வெண்மணியில் 24 சதவீதம்) மற்றும் “திறன் சார் மற்றும் முறைசார் கூலி உழைப்பு மூலம் பெரும்பாலான வருமானம் ஈட்டுபவர்கள்” (பாலக்குறிச்சியில் 12 சதவீத குடும்பங்கள் மற்றும் வெண்மணியில் 11 சதவீத குடும்பங்கள்) என வரையறுத்து உள்ளோம். மொத்தமாக, அனைத்து குடும்பங்களில் கூலித் தொழிலாளர் குடும்பங்களின் பங்கு பாலக்குறிச்சியில் 70 சதவீத குடும்பங்கள் மற்றும் வெண்மணியில் 60 சதவீத குடும்பங்கள்

பொதுவாக, திறன் சாரா மற்றும் பகுதி திறன் சார் உழைப்பிலும்,  திறன் சார் மற்றும் முறைசார் உழைப்பிலும் ஈடுபட்டுள்ள பெரும்பாலான தொழிலாளர்கள் பட்டியலின மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் (ஒரு கிராமத்தில் 80 சதவீதம் மற்றொரு கிராமத்தில் 90 சதவீதத்தை விட அதிகம்). 

ஏழை உழவர்கள் மற்றும் திறன் சாரா மற்றும் பகுதி திறன் சார் தொழிலாளர் வர்க்கங்கள் மத்தியில் பட்டியலின குடும்பங்களின் பங்கு மிக அதிகமாக உள்ளது – வெண்மணியில் 50 சதவீதம் மற்றும் பாலக்குறிச்சியில் 74 சதவீதம். இடைநிலை மற்றும் மேல்நிலை உழவர்கள் வர்க்கங்கள் மத்தியில் இவர்களின் பங்கு 5-6 சதவீதம் மட்டுமே. பணக்கார மற்றும் நிலக்கிழார் விவசாயிகள் வர்க்கத்தின் மத்தியில் இவர்கள் பங்கு இல்லவே இல்லை.

வேலைவாய்ப்பு மற்றும் வருமானம்

ஏழைகள் மத்தியில் நிலவும் வேலையின்மையே இரண்டு கிராமங்களில் நிலவும் பெரும் துயரம். விவசாயப் பணியும், விவசாயம் அல்லாத பணியும் இரண்டு கிராமங்களின் குடும்பங்களுக்கும் போதுமான வருமானத்தை ஈட்டுவதில்லை. சராசரியாக, திறன் சாரா மற்றும் பகுதி திறன் சார் தொழில்கள் மூலம் பெரும்பாலான வருமானம் ஈட்டும் குடும்பங்கள் மத்தியில், ஆண்டுக்கு பெண் தொழிலாளிக்கு விவசாயத்தில் கிடைக்கும் வேலை நாட்கள் 23 மட்டுமே. இதே ஆண்களுக்கு பாலக்குறிச்சியில் 16 நாட்கள் மற்றும் வெண்மணியில் 17 நாட்கள்

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் அரசாங்கம் வாக்குறுதி அளிக்கும் ஆண்டிற்கு 100 நாள்கள் வேலை ஒருபோதும் கிடைப்பதில்லை என்றாலும், இதுவே கூலி உழைப்பு மூலம் கிடைக்கும் மிகப்பெரும் வாய்ப்பு. இதன் மூலம் கூலி உழைப்பு குடும்பங்களில் சராசரியாக பெண்களுக்கு பாலக்குறிச்சியில் ஆண்டிற்கு 45 நாட்கள் வேலையும், வெண்மணியில் 49 நாட்கள் வேலையும் கிடைப்பதோடு, ஆண்களுக்கு சராசரியாக முறையே 18 மற்றும் 22 நாட்கள் வேலை கிடைக்கின்றது.

ஆக விவசாயம் அல்லாத வேலை இரண்டு கிராமங்களிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. குடும்ப வருமானத்தில் பெரும் பங்கு தொழில் மற்றும் சேவை துறை வேலைகள் மூலம் ஈட்டப்படுகிறது (பாலக்குறிச்சியில் 81 சதவீதம் மற்றும் வெண்மணியில் 87 சதவீதம்). இந்த வருமானத்திலும் 42-45 சதவீத வருமானம் நகர்ப்புற மற்றும் நகர்ப்புறம் போன்ற பகுதிகளின் வேலை மூலம் ஈட்டப்படுகிறது. கிராமம் என்பது வசிக்க மற்றும் அடிப்படை பொருளாதார பணிகளுக்கான இடமாக இருந்தாலும், கிராம பொருளாதாரம் என்பது கிராமத்தின் எல்லைக்குள் அடங்குவது இல்லை.

நகர்ப்புறமயமாக்கல் அதிகமாக உள்ள, நகர மையங்கள் பரந்துபட்ட நிலப்பரப்பில் அமைந்துள்ள, மற்றும் தேர்ந்த போக்குவரத்து இணைப்பு கொண்ட மாநிலம் என்ற வகையில் தமிழகம் இந்திய மாநிலங்கள் மத்தியில் தனித்துவம் மிக்கது. தொழில் மற்றும் சேவை துறை வேலைகள் மூலம் வருமானம் ஈட்டும் போக்கு தமிழகத்தில் முன்னதாகவே துவங்கி விட்டது. சிறு விவசாயிகள் ஊரக தொழிலாளி வர்க்கத்தில் சேரும், மற்றும் ஊரக தொழிலாளர்கள் விவசாயம்-அல்லாத வேலைகளுக்கு நகரும் “அமைதியான மாற்றம்” நிகழ்வதை சி.டி.குரியன் அவர்கள் 1980லேயே கண்டு கூறினார். 2021-22இல் தமிழகத்தின் மொத்த மதிப்பு கூட்டல் உற்பத்தியில் (GVA) 37 விழுக்காடு தொழில் துறை மூலம் வந்தது (தேசிய சராசரி 28 விழுக்காடு). மேலும் மாநிலத்தின் ஊரக தொழிலாளர்களில் 30 சதவீதம் பேர் உற்பத்தி மற்றும் கட்டுமான தொழில்களில் ஈடுபட்டு உள்ளனர் (தேசிய சராசரி 19 விழுக்காடு).

கிராமத்திற்கு வெளியே பணிகளுக்காக நகர்வது, குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரத்தை பல தளங்களுக்கு விரிவாக்குவதை காட்டுகிறது. இந்த விரிவாக்கல் அனைத்து சாதி மற்றும் வர்க்கங்கள் மத்தியிலும் நிகழ்ந்துள்ளது. ஆனால் சாதி மற்றும் வர்க்கங்கள் இடையே தொழிலாளர்களுக்கு கிடைக்கும் பணியின் தரம் அடிப்படையில், விரிவாக்கலில் பெரும் ஏற்றத்தாழ்வு காணப்படுகிறது. பாலக்குறிச்சியில் மூன்றில் இரண்டு பங்கு தொழிலாளர்கள் திறன் சாரா பணியில் வேலை செய்தனர். இது வெண்மணியில் 71 விழுக்காடு.

பெண்களுக்கு பணிகளில் வாய்ப்புகள் மிக மிகக் குறைவு. மேலும் அதிக பெண்கள் விவசாயம்-அல்லாத தொழிலாளர் படையில் சேர்ந்தாலும், விவசாயம்-அல்லாத பணிகளில் வாய்ப்பும், விவசாயம்-அல்லாத வருமானத்திலும் பாலின பாகுபாடு மிக அதிகமாக உள்ளது.

கிராமத்தில் உடல் சார் உழைப்பு கூலியின் நிலை, மனித வளர்ச்சி குறியீடுகள் அடிப்படையில் நாம் நான்கு அறிந்த போக்கையே பின்பற்றுகிறது – அவை அகில இந்திய அளவை விட வெகுவாக அதிகமாகவும், அதிகாரப்பூர்வ பதிப்புகளில் தமிழகம் முழுவதுக்குமாக குறிப்பிட்டுள்ள சராசரி அளவிக்கு குறைவாகவும், மேலும் கேரளாவில் நிலவும் ஊதிய அளவை விட மிகக் குறைவாகவும் உள்ளன. இரண்டு கிராமங்களிலும் விவசாயக் கூலியானது, கைக்காசாக அழிக்கப்படுவதோடு, உடன் தேநீரும் சிறிதளவு கொறிக்கும் பண்டங்களும் வழங்கப்படுகின்றன. விவசாய தொழலில் ஈடுபடும் ஆண்களுக்கு அளிக்கப்படும் தினசரி கூலி சராசரியாக பாலக்குறிச்சியில் ரூ.496 மற்றும் வெண்மணியில் ரூ.433. இதுவே பெண்களுக்கு முறையே ரூ.220 மற்றும் ரூ.233 என கூலி அளவு உள்ளது. கட்டுமான தொழிலில் ஈடுபடும் ஆண்களுக்கு அளிக்கப்படும் தினசரி கூலி சராசரியாக பாலக்குறிச்சியில் ரூ. 463 மற்றும் வெண்மணியிலும் ஏறத்தாழ இதே அளவு தான்.

வருமான மூலம் விவசாயத்திற்கு வெளியில் பல தளங்களுக்கு விரிவாக்கப்பட்டாலும், மொத்த குடும்ப வருமானம் சராசரியாக குறைவாகவே உள்ளது. இரண்டு கிராமங்களிலும் சுமார் கால் பங்கு குடும்பங்கள் அதீத வறுமைக் கோடு நிலையான நாள் ஒன்றிற்கு 2 டாலர்கள் என்ற அளவை விட குறைவான வருமானம் ஈட்டுவதோடு, 50 விழுக்காடு குடும்பங்களுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவு பெறுதல் பொருளாதார ரீதியாக சாத்தியமில்லாமல் இருக்கிறது.

பட்டியலின குடும்பங்கள் பெரும்பாலும் ஏழை உழவர்கள் வர்க்கத்தில் குவிந்து கிடப்பதன் விளைவாக, சராசரியாக மற்ற வகுப்புகளை ஒப்பிடுகையில் பட்டியலின விவசாய குடும்பங்களின் விவசாயம் மூலமான வருமானம் மிகவும் குறைவாக உள்ளது. ஆய்வு நடத்தப்பட்ட ஆண்டு புயல் பாதித்த வருடம். இயற்கை பேரிடரின் தாக்கம் மற்ற வகுப்பினரின் விளைநிலங்களை விட தலித் குடும்பங்களின் விளைநிலங்களில் அதிகமாக உள்ளதை தரவுகள் காட்டுகின்றன.

சராசரியாக ஒரு ஹெக்டேரிலிருந்து வரும் வேளாண் தொழில் மூலமான ஆண்டு வருமானம் என பார்த்தால், வெண்மணியில் தலித் குடும்பங்களின் வருமானம் ரூ. 280-ஆக இருக்க, மற்ற அனைத்து தலித் அல்லாத குடும்பங்களின் சராசரி வருமானம் ரூ.6,456-ஆக இருந்தது. பாலக்குறிச்சியில் சராசரியாக ஒரு ஹெக்டேரிலிருந்து தலித் குடும்பங்களுக்கு வருவது வருமானம் அல்லாமல், நட்டம் (-) ரூ. 2,437 மற்றும் தலித் அல்லாத குடும்பங்களின் சராசரி வருமானம் ரூ. 311. வெறும் நெல் பயிர் விளைச்சல் வருமானம் மட்டும் எடுத்துக்கொண்டால், வெண்மணியில் தலித் குடும்பத்தின் சராசரி ஹெக்டேர் வருமானம் ரூ.1,229 மற்றும் தலித் அல்லாத குடும்பங்களுக்கு ரூ.5,336. பாலக்குறிச்சியில் இது தலித் மற்றும் தலித் அல்லாத குடும்பங்களுக்கு முறையே  (-)ரூ.1,749 மற்றும் ரூ.5,880.

கடன் 

1970களின் பிற்பகுதி மற்றும் 1980களின் துவக்கத்தில், சமூக மற்றும் வளர்ச்சிக்கான வங்கித் துறை என்பது அதிகாரப்பூர்வ கொள்கையாக இருந்த பொழுது, ஊரக வங்கிகள் நாடு முழுவதும் எழத் துவங்கின (ஊரக வங்கிகள் பெருமளவு வளர்ந்த பகுதிகளில் தமிழகம் முக்கிய மாநிலம்). பொதுத் துறை வங்கிகள் முறைசாரா துறைக்கு எதிர் சக்தியாக செயல்பட்டு, காலப்போக்கில் அதை வெளியேற்றும் சக்தியாக எழும் என நம்பப்பட்டது. ஆனால் இந்த எதிர்பார்ப்பு பூரத்தி ஆகவில்லை. முறைசார் துறை வங்கிகள் வளர்ந்து இன்று அனைத்து குடும்பங்களையும் உள்ளடக்கியிருந்தாலும், அதிக வட்டியில் நிலவும் அதிக கடன் அளவுகளின் தொல்லை தீரவில்லை. கல்வி, வீடு, மருத்துவம் போன்ற ஏழைகளின் நுகர்வு சார் கடன்களானது இப்போது ஆண்டிற்கு 20 சதவீதத்திற்கு அதிகமாக வட்டி போடும் நுண்நிதி நிறுவனங்களான “புதிய தனியார் முறைசார் துறை” மூலம் பெறப்படுகிறது. நுண் நிதி நிறுவனங்கள் குறைந்த வருமானம் உள்ள கடனாளர்களை மறைமுகமாக கட்டாயப்படுத்தும் குழு பணிகளில் ஈடுபடுத்துகின்றன. இங்கு குழுக்கள் கடனாளிகளை மேற்பார்வை செய்து, நிறுவனம் விதித்த வழிமுறைகளை பின்பற்றாத அதன் பெண் உறுப்பினர்களை தண்டிக்கிறது. இன்றும் ஊரக நிதி, குறிப்பாக அதிக அளவு நுகர்வு தேவைகளுக்கான கடன்களானது ஊரக ஏழை மக்களை கடன் வலையில் சிக்க வைக்கும் கருவியாக உள்ளது.

கல்வி

கடந்த 40 ஆண்டுகளில் பள்ளி மற்றும் மூன்றாம் நிலை கல்வி முறையில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. கிராமங்களின் பள்ளி கல்வி முறையின் முக்கிய அம்சமானது, ஏறத்தாழ அனைத்து குழந்தைகளும் பள்ளி கல்வி முறையில் சேர்க்கப்படுவதுதான். ஆனால் கல்வி பெறுவதில் பாலின பாகுபாடு தொடர்கிறது.

கல்வியை பொறுத்தவரை, சாதி பாகுபாடு குறைந்துள்ளது. ஆனால் 16 வயதுக்கு மேல் உள்ள பட்டியலின ஆண்கள் மற்றும் பெண்கள் இடையே குறிப்பிட்ட பாகுபாடு காணப்பட்டது. வெண்மணியின் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், 16 வயதுக்கு மேல் உள்ள பெண்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் கல்வி பெற்ற பெண்களில் விகிதத்தை பார்த்தால், இந்த விகிதம் மற்ற வகுப்பினரை பட்டியலின பெண்களுக்கு அதிகமாக இருந்தது.

வெண்மணியில் 10-14 வயது வரை உள்ள குழந்தைகளில் 20 சதவீதம் பேர் தனியார் பள்ளிக்கு செல்கின்றனர் (17 வயதுக்கு மேல் உள்ளவரை பார்த்தால் இது 36 சதவீதம்). பள்ளி கல்வியில் தனியார் பள்ளிகள் விரிவடைய, கல்வி செலவீனங்கள் உயர்ந்து, அதை சந்திக்க அதிக கடனில் மூழ்க  விழ குடும்பங்கள் தயாராக உள்ளன. பெற்றோருக்கு கடன் சுமை கொடுக்காத, அனைவருக்கும் இலவசமான, உயர்ந்த தர கல்வியை அளிக்க தமிழ்நாடு முயற்சி செய்ய வேண்டும்.

பள்ளி கல்வியில் உள்ள சில பிரச்சனைகள்  நம் தரவுகளில் இருந்து தெளிவாக தெரிகின்றன. முதலாவதாக, அனைத்து மாணவர்களும் பள்ளியில் சேர்ந்து, முதலில் 10 ஆண்டுகளுக்கும், பின்னர் 12 ஆண்டுகளுக்கும் அவர்கள் அனைவரையும் தக்க வைக்கும் குறிக்கோளை சாதிக்க வேண்டிய அவசியம் உள்ளது ; குறிப்பாக தக்க வைக்கும் குறிக்கோள். இரண்டாவதாக, அனைத்து மாணவிகளையும் தக்க வைக்க சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இதைத் தாண்டி, பள்ளி கல்வியின் தரம், மற்றும் ஏழை மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு உயர்ந்த தரத்தில் உயர் கல்வி கிடைப்பதை உறுதி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். கல்வியில், முக்கியமாக பள்ளி கல்வியில், நெடு நாள் நீடிக்கும் முன்னேற்றத்தை உறுதி செய்ய பொதுத் துறையின் பங்கு இன்றியமையாதது.

வீட்டு வசதி

வீட்டு வசதியின் தரம் குறித்த ஆராய்ச்சி இந்த ஆய்வின் முக்கிய பங்கு வகிக்கிறது. 1) கற்கள் போன்ற திடமான பொருட்கள் கொண்டு கூரை, சுவர் மற்றும் தரை கட்டப்பட்டுள்ளதா? 2) குறைந்தது 2 அறைகள் உள்ளதா? 3) சமையல் அறை தனியாக உள்ளதா? 4) வீட்டுமனைக்குள் வீட்டு தேவைக்கும் பயன்படுத்தும் தண்ணீர் வசதி உள்ளதா (அல்லது 200 மீட்டருக்குள் உள்ளதா)? 5) ஒரு மின்சார துவாரமாவது உள்ளதா? 6) குடும்பத்தினர் பயன்படுத்தும் கழிவறை உள்ளதா?  – என்ற வரையறைகள் மூலம் வீட்டின் தரத்தை ஆய்வு செய்தோம்.

இங்கு தரவுகள் பிரச்சனைக்குரியவையாக உள்ளன. பாலக்குறிச்சியில் 19 சதவீத வீடுகளும் வெண்மணியில் 22 சதவீத வீடுகளுமே இந்த ஆறு வரையறைகளையும் பூர்த்தி செய்கின்றன. அனைத்து வீடுகளிலும் மின்சார வசதி பயன்படுத்தும் நிலையில் உள்ளது. மற்ற வரையறைகளை பொறுத்த வரை, பல முயற்சிகள் எடுக்க வேண்டி உள்ளன.

வீட்டு வசதியில் சாதி பாகுபாடு வெளிப்படையாக தெரிந்தது: பட்டியலின குடும்பங்களில் பாலக்குறிச்சியில் 15 சதவீத வீடுகளும் வெண்மணியில் 9 சதவீத வீடுகளுமே இந்த ஆறு வரையறைகளையும் பூர்த்தி செய்கின்றன. பயன்படுத்தும் கழிவறை இருப்பது பெரிய பிரச்சனை – அனைத்து குடும்பங்களிலும், குறிப்பாக பட்டியலின குடும்பங்களில். இந்த கிராமங்களில் வெளிப்புறத்தில் கழிக்கும் பழக்கம் மறையவில்லை. குறிப்பாக தலித் குடும்பங்களுக்கு கழிவறை வசதி மிகக் குறைவாக உள்ளது.

தலித் குடும்பங்கள் 

பல ஆண்டுகளின் போராட்டத்தின் விளைவாக, பண்டைய தீண்டாமை முறையும், சாதி பெயரில் பொது இடங்களில் வருவதை தடுப்பதும், அன்றாட தலித்துகளுக்கு எதிரான வன்முறையும் மறைந்துள்ளன. பண்ணை அடிமை நிலையிலிருந்து, நில உடைமை உள்ளவர் மற்றும் கூலித் தொழிலாளர் என்ற நிலையை எட்டி உள்ளது பெரும் மாற்றத்தை குறிக்கிறது. கீழ் காவிரி டெல்டா பகுதியில் தலித் மக்கள் தங்கள் போராட்டத்தில் பெரும் வெற்றிகள் கண்டிருந்தாலும், அனைவரின் இல்லாமையை ஒழிக்கும் போராட்டத்தில் முன்னேற்றம் காண்பதில் நிறுவனத் தடைகள் இன்னும் நிலவி வருகின்றன. பல ஆண்டுகள் போராட்டத்திற்கு பின்னும் தலித் மக்கள் தனிமையிலேயே வாழ்கின்றனர் – சமூக ரீதியாகவும், மற்றும் இருப்பிட ரீதியாகவும்.

தலித் குடும்பங்கள் மத்தியில் நிலமின்மை விகிதம் அதிகமாக இருப்பதோடு, நிலம் உள்ளவர்கள் மத்தியிலும் சராசரி நில அளவு சாதி இந்துக்களை ஒப்பிடுகையில் மிகக் குறைவாக உள்ளது. தலித் குடும்பங்களின் விளைச்சல் நில அளவு அடிப்படையில், அவர்கள் பெரும்பாலும் ஏழை உழவர்கள் வர்க்கத்தில் குவிந்து கிடப்பதன் விளைவாக, சராசரியாக மற்ற வகுப்புகளை ஒப்பிடுகையில் பட்டியலின விவசாய குடும்பங்களின் விவசாயம் மூலமான வருமானம் மிகவும் குறைவாக உள்ளது. கல்வியில் பெரும் மாற்றங்கள் உண்டாகி இருந்தாலும், வேறுபாடுகள் தொடர்கின்றன. வீட்டு வசதி, தண்ணீர் வசதி மற்றும் சுகாதார வசதிகளின் அடிப்படையில் மற்றவர்களை ஒப்பிடுகையில் தலித் குடும்பங்கள் மிகவும் பின் தங்கி உள்ளனர் (பொதுவாகவே முன்னேற்றங்கள் போதுமானதாக இல்லாத போதும்).

பல ஆண்டுகளாகவும், இன்றும் தொடரும் இடதுசாரி சங்கங்களின் தொடர் போராட்டம்தான் இரண்டு கிராமங்களிலும் தலித் மக்களிடையே சமூக மாற்றத்திற்கான முக்கிய உந்து சக்தியாக உள்ளது. LAFTI அமைப்பின் சாதனைகள் கூட அந்த பகுதியில் இடதுசாரி அரசியல் அமைப்புகள் ஆற்றிய பங்கின் விளைவாகவே சாத்தியமானது. இது போன்ற அரசியல் அமைப்புகள் இல்லாமல் இருப்பதன் விளைவாக, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், இன்றும் பட்டியலின மக்களுக்கு எதிராக தொடுக்கப்படும் கொடூர ஒடுக்குமுறை மற்றும் வன்முறை நிகழ்வுகள் தொடர்வதை நாம் பார்க்கிறோம். அண்மையில் “Economic and Political Weekly” ஆய்வு இதழில் “‘சமூக நீதி மண்ணில்’ தலித்துகளுக்கு எட்டாத நீதி” என்ற கட்டுரை இன்றைய தமிழக நிலையை விளக்குகிறது (Elusive Justice to Dalits in the ‘Land of Social Justice’ by Lakshmanan and Sethuraman (2023)). 

இந்த ஆய்வின் முக்கிய வெளிப்படானது, தமிழக ஊரக பகுதிகள் முழுமையிலும் தலித் மக்களின் சமூக-பொருளாதார நிலை குறித்த விரிவான ஆய்வு நடத்தப்பட வேண்டியதன் அவசியம் தான் – இதுவரை கிடைத்துள்ள வெற்றிகள் மற்றும் மாற்றங்களை கண்டறியவும், மற்றும் மிக முக்கியமாக, எதிர்கால கொள்கைகளுக்கும் கீழிருந்து எழ வேண்டிய செயல்பாடுகளுக்கும், மேலும் ஒடுக்குமுறை மற்றும் தொடர்ந்து வரும் இல்லாமையை கண்டறிவதற்கும்.

நிறைவாக

தமிழ்நாட்டின் பொருளாதார மாற்றமானது, மற்ற இந்திய மாநிலங்களை விட தமிழகத்தை மிகவும் நல்ல நிலையில் கொண்டு வைத்துள்ளது. மேலும் முக்கிய பொருளாதார, மனித வளர்ச்சி குறியீடுகளில் தேசிய சராசரியை விட பன்மடங்கு முன்னேற்றம் காணப்படுகிறது. கீழ் காவிரி பகுதியில் உற்பத்தி சக்திகளில் வரலாற்று மாற்றங்கள் நேர்ந்துள்ளன. இதன் முக்கிய அம்சங்கள் நெல் உற்பத்தி தொழிற்நுட்பத்தில் மாற்றம், பயிர் விளைச்சல் காலம் மற்றும் நில பயன்பாட்டில் மாற்றம், காவிரி நீர்வரத்து முறை மூலமாக இந்த பகுதிக்கு கிடைக்கும் நீர்வரப்பு தொடர்ந்து குறைந்து வந்துள்ளது, மற்றும் நகரமயமாக்கலும் பயிர் உற்பத்திக்கு வெளியிலான பணிகளின் வளர்ச்சியும். இந்த பகுதியில்ல உற்பத்தி உறவுகளில் ஏற்பட்டுள்ள வரலாற்று மாற்றங்களின் பின்னணியில் தலித் மக்களும் கம்யூனிஸ்ட் கட்சியும் பல ஆண்டுகளாக தொடுத்த வர்க்க மற்றும் சாதிக்கு-எதிரான போராட்டம் அடங்கி உள்ளது. அதே சமயம், நம் தரவுகள் குறிப்பிடுவது போல, பொருளாதார மேம்பாடு, வேலை நிலை மற்றும் சமூக-பொருளாதார ஏற்றதாழ்வு குறைத்தல் போன்ற அம்சங்களில் “அடிப்படை மாற்றம் இல்லாத வளர்ச்சி” போக்கின் பின்னடைவுகள் என்ன என்பதை அறிய முடிகிறது. நில சீர்திருத்தம் மூலம் ஏற்படும் மாபெரும் மாற்றத்தை தமிழக ஊரக பகுதி காணாமல் போனதால், இன்றும் அதீத வர்க்க, சாதி, பாலின பாகுபாடுகள் நீடிக்கின்றன. இவை புதிய சூழலில் புதிய வடிவங்கள் எடுத்தாலும், சமூக அமைப்பில் வேரூன்றி கிடக்கின்றன.

பி.கு : அண்மையில் “திராவிட மாடல்” என்ற தலைப்பில், தமிழ்நாடு அனைவரையும் உள்ளடக்கிய தனித்துவமிக்க வளர்ச்சி கண்டு, சாதி பேதம் மற்றும் ஒடுக்குமுறையை ஒழிக்கும் கொள்கைகள் மூலம் “அனைவருக்கும் பொருளாதார மற்றும் சமூக நீதி” உறுதி செய்துள்ளதாக எழும் ஒரு வாதம் பிரபலம் அடைந்துள்ளது (Kalaiyarasan and Vijaybhaskar 2021). ஆனால் பல அறிஞர்களும் பொருளாதார வளர்ச்சி அனைவரையும், குறிப்பாக பட்டியலின மக்களை, உள்ளடக்கியதாக கூறும் வாதத்தை கேள்விக்குள்ளாக்கி வருகின்றனர். தலித்துகளுக்கு கிடைக்கும் குறைந்த தர வேலைகள், தலித்துகள் மத்தியில் தொழில் உடைமை குறைவாக உள்ளது, மற்றும் தொடரும் சாதிய வன்முறைகள் பற்றி ஜூடித் ஹெயர் என்ற அறிஞர் எழுப்புகின்றார் (“திராவிட மாடல்” புத்தகம் கீழவெண்மணி வன்கொடுமையை குறிப்பிடவே இல்லை). அவர் பாலின பாகுபாடு மற்றும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக தொடரும் ஒடுக்குமுறை குறித்து குறிப்பிடுகிறார். வேளாண் சீர்திருத்தங்களுக்கு கவனம் செலுத்தாததன் காரணமாக சமூக நீதி முன்னேற்றத்திற்கு பாதகம் விளைந்து, சாதி-வர்க்க பாகுபாடும் அடக்குமுறையும் இன்றும் தொடரவில்லையா? என ஜான் ஹாரிஸ் என்ற அறிஞர் கேள்வி எழுப்புகிறார் ( “திராவிட மாடல்” புத்தகத்தில் சி.டி. குரியன் முன் நிறுத்திய “அடிப்படை மாற்றம் இல்லாத வளர்ச்சி”  பற்றிய வாதம் கணக்கில் கொள்ளப்படவில்லை. மேலும் குரியன் அவர்களின் தமிழ்நாடு குறித்த பணிகள் குறிப்பிடப்படவே இல்லை.)

தமிழில் – அபிநவ் சூர்யா



Leave a comment