மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


சாதி அமைப்பை சற்றும் தயையின்றி ஒழிப்பது


நூல் அறிமுகம்

கே.சுவாமிநாதன்

“சாதி ஒடுக்குமுறை எதிர்ப்பு போராட்டங்கள்: கள அனுபவங்கள்” – பி. சம்பத்

“சாதி ஒடுக்குமுறை மற்றும் சாதிய பாகுபாடு பிரச்சினை நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டது. முதலாளித்துவத்திற்கு முந்தைய சமூக அமைப்பு முறைமைக்குள் அதன் வேர்கள் ஆழமாகப் புதைந்தும் உள்ளன. முதலாளித்துவ வளர்ச்சியை உள்ளடக்கிய சமூக அமைப்பு, ஏற்கனவே உள்ள சாதிய அமைப்புடன் சமரசம் செய்து கொண்டுள்ளது. இந்திய முதலாளித்துவமே சாதிய பாரபட்சங்களை வளர்க்கிறது. உழைப்பாளி வர்க்கங்களின் அங்கமாக மிகப் பெரும்பான்மை தலித் மக்கள் இருப்பதால் தொழிலாளி வர்க்க ஒற்றுமை என்பது சாதிய அமைப்பு முறை மட்டும் தலித் மக்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிரான ஒற்றுமையை முன் நிபந்தனையாக கொண்டுள்ளது. சமூக சீர்திருத்த இயக்கத்தின் வாயிலாக, சாதி அமைப்பு முறைமையை, எல்லா வடிவிலான சாதிய பாகுபாடுகளையும் ஒழிப்பது ஜனநாயகப் புரட்சியின் மிக முக்கியமான பகுதியாகும். சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம், வர்க்க ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்துடன் பிணைக்கப்பட்டிருக்கிறது_ “

என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் கட்சித் திட்டம் (5.12) தெளிவாக சாதிய அமைப்பை வீழ்த்துவது பற்றிய பார்வையை முன்வைக்கிறது. கம்யூனிச இயக்கத்தின் இந்த புரிதல் அதன் நீண்ட நெடிய பாரம்பரியத்தின், அனுபவத்தின் விளை பொருள் ஆகும். 

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதல் ஆவணமாக கருதப்படும் “செயல்பாட்டுக்கான மேடை நகல் (1930)” ( Draft Platform for action) வார்த்தைகள் இவை:

“சாதி அமைப்பை சற்றும் தயையின்றி ஒழிப்பது, விவசாயப் புரட்சியை நடத்துவது, பலவந்தமாக பிரிட்டிஷ் அரசை தூக்கியெறிவது ஆகியனவே முழுமையான சமூக, பொருளாதார, பண்பாட்டு, சட்ட பூர்வமான விடுதலையை உழைக்கும் மக்களாக உள்ள ஒடுக்கப்பட்டவர்களுக்கும், அடிமைகளாக அமிழ்த்தி வைக்கப்பட்டுள்ளவர்களுக்கும் கொண்டு வந்து சேர்க்கும்”_ 

கம்யூனிச இயக்கம் தோன்றிய காலத்திலேயே எவ்வளவு ஆழமான பார்வையையும், அக்கறையையும் கொண்டிருந்தது என்பதை இந்த ஆவணம் பறை சாற்றுகிறது. 

சாதி என்பது இந்திய சமூகத்தின் மேல் கட்டுமானம் மட்டுமன்று அடிக்கட்டுமானத்தின் உற்பத்தி உறவுகளுடனும் தொடர்பு கொண்டதாக உள்ளது என்பதையும் சோசலிசம் நோக்கிய பயணத்தில் உள்வாங்கி செயலாற்ற வேண்டியுள்ளது. 

கள அனுபவங்கள் நூல் வடிவில்

இத்தகைய வெளிச்சத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட்) மற்றும் அதன் வெகு சன அமைப்புகள் வர்க்க ஒடுக்குமுறை – சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை ஒரு சேர முன்னெடுத்து வருகிறது. ஆந்திராவின் கே.வி.பி.எஸ், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் மாநிலங்களில் ஆற்றி வந்துள்ள பணிகள் பிற மாநில அமைப்புகள் மற்றும் அகில இந்திய அளவில் தலித் சோஷன் முக்தி மஞ்ச் உருவாக்கத்திற்கும் வழி வகுத்துள்ளது. 

கம்யூனிச இயக்கத்தின் முத்திரைப் போராட்டங்களான  கீழத் தஞ்சை, தெலுங்கானா, வோர்லி, புன்னப்புரா, தெபாகா போன்றவை எவ்வாறு ஒரு சேர  வர்க்க ஒடுக்குமுறை – சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்க முடியும் என்பதற்கும், சாதிய அமைப்பை வீழ்த்துவதில் கம்யூனிஸ்டுகள் காட்டிய முனைப்புக்கும் சாட்சியங்கள் ஆகும். இதன் தொடர்ச்சியாகவே கடந்த 30 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், 2007க்கு பின்னர் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் களமாடி வருகின்றன. 

தோழர் பி. சம்பத் தூத்துக்குடி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர்; தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முதல் அமைப்பாளர். முதல் தலைவர் என்ற வகையில் இப்போராட்டங்களுக்கு தலைமை ஏற்று வழி நடத்தியுள்ளார். தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மத்தியக் குழு உறுப்பினராக உள்ள பி. சம்பத் எழுதி பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள நூல்தான் “சாதி ஒடுக்குமுறை எதிர்ப்பு போராட்டங்கள்: கள அனுபவங்கள்”. 

“தீக்கதிர்” நாளிதழில் அவர் 32 வாரங்களாக எழுதி வந்துள்ள கட்டுரையின் தொகுப்பு இது. 256 பக்கங்களை கொண்ட இந்த நூல் தோழர் சம்பத் அவர்களின் தனிப்பட்ட அனுபவங்கள் அல்ல. மாறாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக ஜனநாயக எண்ணம் கொண்டோரை சாதிய வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு களம் கண்ட இயக்க அனுபவங்களாகவே விவரிக்கப்பட்டுள்ளது. 

தலித் எழுச்சியும், தென் மாவட்ட சாதி மோதல்களும்

1980 களின் பிற்பகுதி, 1990 களின் முற்பகுதி காலங்களில் தென் மாவட்ட சமூக சூழல்களில் ஏற்பட்ட மாற்றங்கள், மோதல்கள், எதிர்வினைகள் உழைப்பாளி மக்களின் ஒற்றுமைக்கு சவால் விடுப்பதாக இருந்தன. அவற்றை முதலாளித்துவ கட்சிகள் எதிர்கொண்டதற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர் கொண்டதற்குமான வித்தியாசம் மிக முக்கியமானது. கல்வி, நிலம் ஓரளவுக்கு தலித் மக்களின் கைவசம் ஆன போது தங்களின் உரிமைகளுக்கான வேட்கையை அழுத்தமாக வெளிப்படுத்தினர். அதனை சாதி ஆதிக்க சக்திகளால் பொறுத்துக் கொள்ள இயலவில்லை. இதுவே சாதிய மோதல்களாக வெளிப்பட்டன. ஆகவே சாதிக் கலவரங்களை மற்ற கட்சிகள், அமைப்புகள் எல்லாம் இரு தரப்பாரின் மோதல் என்று சித்தரித்து,  அமைதி வேண்டும் என்று மட்டும் வேண்டுகோளை விடுத்த வண்ணம் இருந்தன. ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே, “சாதி பாகுபாடுகளை ஒழிப்போம்; சமூக நல்லிணக்கம் காப்போம்” என்று பிரச்சினையின் வேரைத் தேடி தீர்வுகளை முன் வைத்தது. 

இந்த பார்வையை எவ்வாறு களத்தில் செயலாக்கியது என்பது குறித்த தோழர் சம்பத் அவர்களின் பகிர்வுகள் அருமையானவை. 

* தென் மாவட்டங்களில் சாதிய மோதல்கள் மக்களின் அன்றாட வாழ்க்கையையே முடக்கி உயிர்ப் பலிகளை வாங்கிக் கொண்டு இருந்த 1995 – 96 ஆண்டுகளில் மதுரை, விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை, தேனி, புதுக்கோட்டை, தூத்துக்குடி மாவட்டங்களில் மார்க்சிஸ்ட் கட்சி சாதிய பாகுபாடுகளுக்கு எதிராகவும் மக்களை ஒற்றுமைப்படுத்தவும் களம் கண்ட அனுபவங்கள் 3 பகுதிகளாக இந்த நூலில் தரப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான கிராமங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாதி ஆதிக்க சக்திகளின் கோபத்தையும், அவநம்பிக்கையுடன் இருந்த ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வுகளையும் எதிர்கொண்டு அந்தப் பணியை ஆற்றிய பாங்கினை நூல் பதிவு செய்துள்ளது. சாதிய வன்மம் தலைதூக்கி இருந்த சூழலிலும் கூட ஜனநாயக எண்ணம் கொண்டவர்களை சாதி வேறுபாடுகளைக் கடந்து வென்றெடுக்க முடியும் என்ற பேரனுபவத்தை உழைப்பாளி மக்கள் இயக்கத்திற்கு தந்த களங்கள் அவை. 

* ஒரு பக்கம் சாதிய வேறுபாடுகளை கடந்து மக்களை இணைக்கிற முயற்சிகளை செய்த நேரத்தில் தீண்டாமை, சாதி பாகுபாடுகளை எதிர்த்த களங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னின்றது. நாலு மூலைக் கிணறு, கொடியன் குளம் போன்ற கிராமங்களில் காவல்துறை தொடுத்த அடக்குமுறைக்கு எதிராக தோழர் சம்பத் தலைமையில் தூத்துக்குடி மாவட்ட கட்சி, வெகு சன அமைப்புகள் களம் இறங்கின. கொடியங்குளம் தலித் மக்கள் ஓரளவு பொருளாதார மேம்பாடு அடைந்து இருந்த கிராமம். ஆகவே காவல்துறைக்குள்ளும் ஊடுருவியுள்ள சாதிய வன்மம் அவர்களின் சொத்துக்களை குறி வைத்து சூறையாடியதை  சம்பத் விவரிக்கும் போது சாதிய அமைப்பு எவ்வாறு சொத்துடமை வர்க்க நலன்களோடு கிராமப்புறங்களில் பின்னிப் பிணைந்துள்ளது என்பதை உணர்த்துகிறார். களங்களில் காலம் வீணாகாது எவ்வாறு பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைந்து செல்ல வேண்டும்; நம்பிக்கை தர வேண்டும்; தரவுகளை திரட்டி பொதுச் சமூகத்திற்கு அநீதியை எடுத்துரைக்க வேண்டும் என்பதற்கான கையேடு போல இந்த பகுதிகள் நூலில் அமைந்துள்ளன. நாலு மூலைக் கிணறு கொடுரத்திற்காக 82 காவல்துறை அதிகாரிகள் தண்டிக்கப்படுகிற வரை நடத்தப்பட்ட தொடர் இயக்கங்கள், முயற்சிகள் தென் மாவட்டங்கள் முழுக்க நம்பிக்கையையும், சாதிய எண்ணங்கள் ஊடுருவி இருந்த காவல்துறைக்கு எச்சரிக்கையாகவும் அமைந்தது. வெங்கடாசலம் ஆணையம் முன்பாக வைக்கப்பட்ட தரவுகளின் திரட்டல்களும் முக்கியமானவை. 

* வீரர் சுந்தரலிங்கம் பெயர் போக்குவரத்து கழகத்திற்கு வைக்கப்பட்டபோது பெரும் சாதிய மோதல்கள் வெடித்தது. அரசாங்கம் எல்லா தலைவர்களின் பெயர்களையும் நீக்கியது. இப் பிரச்சினையில் சி.பி.எம் நிலைப்பாடு தனித்துவமானது. வீரர் சுந்தரலிங்கம் பெயர் மீதான தீண்டாமை உறுதியாக எதிர்கொள்ளப்பட வேண்டுமென்று கூறியது. ஆகவே எல்லா தலைவர்களின் பெயர்களை நீக்குவது, சாதி ஆதிக்க சக்திகளின் நிர்ப்பந்தத்திற்கு பணிவதாகி விடுமென்ற கருத்தை அழுத்தமாக கூறியது. 

* மாஞ்சோலை தொழிலாளர் மீது நடைபெற்ற தாமிர வருணி துப்பாக்கி சூடு பற்றிய பகுதியும் முக்கியமானது. வர்க்க ஒடுக்குமுறை – சாதி ஒடுக்குமுறை இரண்டிற்கும் ஆளான மாஞ்சோலை தொழிலாளர்கள் உரிமைகளுக்காக நடைபெற்ற வீரம் செறிந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அன்றைய மாவட்ட செயலாளர் கடுமையான தலைக் காயத்திற்கு ஆளாகி உயிருக்கே ஆபத்து என்ற கட்டத்திற்கு சென்றார் என்பதெல்லாம் கம்யூனிஸ்டுகளின் அரசியல் உறுதிக்கு சான்று.

* கொடியன்குளம் போராட்டம் அப்பகுதி தொழிலாளர் மத்தியில் ஏற்படுத்திய ஈர்ப்பு, அவர்கள் சி.ஐ.டி.யூ வின் ஹார்பர் டாக் ஒர்க்கர்ஸ் யூனியனில் இணைந்தது, ஓட்டப்பிடாரம்  ஒன்றியத்தின் உள்ளாட்சித் தேர்தல்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது ஆகிய அனுபவங்களை எல்லாம் சம்பத் பகிர்ந்துள்ளார். 

* மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை ஏற்று நடத்திய பந்தப்புளி ஆலய நுழைவு, கண்டதேவி தேர், மேலவளவு பஞ்சாயத்து தலைவர் படுகொலை எதிர்ப்பு, பாப்பாபட்டி கீரிப்பட்டி நாட்டார்மங்கலம், கொட்டக்கட்சியேந்தல் பஞ்சாயத்துகளில் தலித்துகள் போட்டியிட இருந்த தடை நீக்கம் ஆகிய பிரச்சினைகளில் எடுத்த உறுதியான நிலைபாடு, தலையீடுகள் இந்நூலில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

விரிந்த வியூகம்

தலித் அமைப்புகளை இதர சாதி அமைப்புகள் போன்று பார்க்க இயலாது; அவற்றின் ஜனநாயக உள்ளடக்கம் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்; அதே நேரத்தில் அடையாள அரசியல் தவிர்த்து சாதிய வேறுபாடு இன்றி ஜனநாயக எண்ணம் கொண்டவர்களை வென்றெடுக்க வேண்டும் என்ற தெளிவான அணுகுமுறையில் பிறந்ததே தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி. 

தலித் இயக்கங்கள் – வர்க்க, வெகு மக்கள்  அமைப்புகள் – முற்போக்கு ஜனநாயக அமைப்புகள்- மனித உரிமை இயக்கங்கள் ஆகியனவற்றின் ஒருங்கிணைந்த மேடையாக அது உருவெடுத்தது. ஆகவே களங்களிலும் அந்த கை கோர்ப்பு தீண்டாமைக்கு எதிரான எழுச்சியாக மாறியுள்ளது. 

* நூலில் மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, கடலூர், திருப்பூர், ஈரோடு, இராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட அனுபவங்கள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. 

* இந்த அனுபவங்களில் முக்கியமானவை கள ஆய்வுகள். தீண்டாமை நிலவுகிறதா என்று அறிய ஆய்வு எதற்கு? என்ற கேள்விகள் சில நேரம் எழுகின்றன. தமிழ்நாட்டில் அம்மாவின் ஆட்சியில் தீண்டாமைக் கொடுமைகளே இல்லை என்று சட்ட மன்றத்திலேயே ஒரு அமைச்சர் பேசினார். அதிகாரிகளும் புகார்கள் வரும் போது மறைப்பதும் மறுப்பதும் நடந்தேறும். இச்சூழ்நிலையில் கள ஆய்வுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. மறுக்க இயலாத தரவுகளாக அமைகின்றன. பொதுச் சமுகத்தின் கவனத்தை ஈர்க்கின்றன. மதுரை மாவட்ட கள ஆய்வு 20 ஆண்டு வயதான உத்தப்புரம் தீண்டாமை சுவரை வெளி உலகின் கவனத்திற்கு கொண்டு வந்தது. அந்த போராட்டம் இந்த நூலில் இரண்டு பகுதிகளாக பேசப்பட்டுள்ளது. எப்படி அந்த சின்ன கிராமத்தின் சாதிய பாகுபாடு பிரச்சினை உலகத்தின் பார்வையை ஈர்த்தது, அன்றைய சிபிஎம் அகில இந்திய பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் வருகை தருவதாக அறிவிக்கப்பட்ட முதல் நாளே அந்த சுவரின் பகுதிகள் இடிக்கப்பட்டு வழிகள் ஏற்படுத்தப்பட்டன என்பது உற்சாகம் தரும் பகிர்வாகும். சாதி வேறுபாடுகளை கடந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற பேரையூர் ஆர்ப்பாட்டத்தை சம்பத் உணர்ச்சி பூர்வமாக விவரித்துள்ளார். உத்தப்புரம் சுவர் வீழ்ந்தவுடன் தமிழ்நாடு முழுக்க சுவர் என்ற வடிவம் கவனம் பெற்று கோவை நாகராஜபுரம், கோவை பெரியார் நகர், சேலம் காந்தி மகான் நகர், சங்ககிரி, திருச்சி எடமலைப்பட்டி புதூர் உள்ளிட்ட இடங்களில் இருந்த பல தீண்டாமை சுவர்கள் இடிக்கப்பட்டன. 

* காளப்பட்டி, கோவை பகுதியில் சாதிய ஆதிக்க சக்திகள் வலுவாக இருக்கும் கிராமம். அங்குள்ள கோயிலில் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறது.  தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலையிட வேண்டுமென்ற கோரிக்கை ஆதித் தமிழர் பேரவையின் இன்றைய பொதுச் செயலாளர் ரவிக்குமார் அவர்களால் புதுக்கோட்டை தீ. ஒ.மு மாநாட்டில் முன் வைக்கப்பட்டது. செகுடந்தாளி முருகேசன் என்ற அருந்ததியர் சமூக தியாகியின் உயிர்ப் பலி நிகழ்ந்த பிரச்சினை அது. தீண்டாமை ஒழிப்பு முன்னணி முன்னெடுப்பில் இப்படி செய்த ஏராளமான தலையீடுகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. 

 சி.பி.எம், தீ. ஒ. மு தோழர்கள் பலர் சொந்த கிராமங்களில் சாதி வேறுபாடு கடந்து சாதிய பாகுபாடுகளை எதிர்த்த போராட்டங்களில் முன்னின்றனர். அதனால் அவர்கள் தம் சொந்த உறவுகளின் எதிர்ப்பை சம்பாதித்ததும், சமூகப் புறக்கணிப்புக்கு ஆளானதும் கூட நிகழ்ந்தது. இந்த அனுபவங்கள் மிக முக்கியமானவை.

முத்திரை பதித்த வெற்றிகள் – இயக்கங்கள்

இந்த நூல் அருந்ததியர் உள் ஒதுக்கீடு, எஸ்.சி., எஸ்.டி துணைத் திட்டம், சாதி ஆணவக் கொலைகளுக்கு எதிரான சிறப்பு சட்ட கோரிக்கை, நகர்ப்புற தீண்டாமை எதிர்ப்பு ஆகிய முக்கிய தளங்களில் எவ்வாறு சிபிஎம், தீ ஒ மு தலையீடுகளை செய்துள்ளது என்பதை விரிவாக பதிவு செய்துள்ளது. 

* டாக்டர் அம்பேத்கர் சாதிய கட்டமைப்பை ” படிநிலைச் சமத்துவமின்மை” (Graded Inequality) என்று சித்தரிப்பார். அவர் வாழ்ந்த காலத்திலேயே தலித் சமுகங்களுக்குள் வெவ்வேறு படிநிலைகளில் இருந்த சாதிகளுக்குள் இருந்த முரண்கள் விவாதத்திற்கு வந்தன. தமிழ்நாட்டிலும் அருந்ததியர் மீதான ஒடுக்குமுறை மிக மிக மோசமானது. இது அவர்களின் கல்வி, பொருளாதார வாழ்விலும் கடுமையாக வெளிப்படுகிறது. இந்த சூழ்நிலையில் அருந்ததியர் உள் ஒதுக்கீடு கோரிக்கையை அருந்ததியர் இயக்கங்கள் 25 ஆண்டுகளாக எழுப்பி வந்தன. சி.பி.எம் அக்கோரிக்கையை முன்னெடுத்த பின்னர் அது பொதுச் சமூகத்தின் கவனத்தைப் பெற்றது. அதற்கான கள ஆய்வுகள் முக்கியமானவை. தமிழ்நாட்டின் பிரபல அரசு, அரசு உதவி பெறும் உயர் கல்வி நிறுவனங்களில் கூட அருந்ததியர் சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் நுழைய முடியவில்லை என்ற உண்மை அம்பலத்திற்கு வந்தது. அருந்ததியர் உள் ஒதுக்கீடு கோரிக்கை மண்டல மாநாடுகள், சென்னைப் பேரணி என்ற தொடர் இயக்கங்கள் பயனாக 3 சதவீத அருந்ததியர் உள் ஒதுக்கீடு கோரிக்கை வெற்றியை பெற்றது. இதில் அரசியல் கட்சிகள், தலித் இயக்கங்கள் பலவற்றிற்கு தடுமாற்றம் ஏற்பட்டது. இதையெல்லாம் இந்த நூலில் சம்பத் விவரித்து இருப்பது சிறப்பான அனுபவம். 

* சாதி ஆணவக் கொலைகளுக்கு எதிராக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி, நிவாரணம் கிட்ட போராடுவதோடு தனிச் சட்டம் வேண்டுமென்ற கோரிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது. தர்மபுரி சாதி மறுப்பு திருமண பிரச்சினையை ஒட்டி மூன்று கிராமங்களில் தலித்துகள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்கள் குறித்தும், அதில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி செய்த தலையீடுகள் குறித்தும் விரிவாக எழுதி இருக்கிறார். சாதி ஆணவப் படுகொலைக்கு எதிராக தனிச் சட்டம் கோரி சேலம் முதல் சென்னை வரை நடத்தப்பட்ட 400 கிமீ நடை பயணம் எவ்வாறு பொதுச் சமூகத்துடனான உரையாடலாக வட மாவட்டங்களில் அமைந்தது என்பதை பதிவு செய்துள்ளார். 

* சென்னை, மதுரை நகரங்களில் நடத்தப்பட்ட கள ஆய்வு சாதி பாகுபாடுகளுக்கு மாநகரங்களும் விதி விலக்கு அல்ல என்ற உண்மையை ஓங்கி வெளி உலகுக்கு சொன்னது. 

* எஸ்.சி., எஸ்.டி. துணைத் திட்டங்கள் குறித்த பார்வையை, விழிப்பை, அரசுக்கு அதன் அமலாக்கம் குறித்த நிர்ப்பந்தத்தை உருவாக்க தீண்டாமை ஒழிப்பு முன்னணி 15 ஆண்டுகளாக செய்து வந்துள்ள பணிகள், உயர் கல்வி இட ஒதுக்கீடு, தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீடு கோரிக்கை, நிலுவை காலியிடங்களை நிரப்புதல், மதம் மாறிய கிறித்தவர்க்கு பட்டியல் சாதிகளில் இடம், பஞ்சமி நிலம் என பல்வேறு பிரச்சினைகளில் செய்யப்பட்டுள்ள தலையீடுகளை இந்த நூலில் எழுதியுள்ளார். 

இந்த நூலின் 32 வது பகுதி நிலம் உள்ளிட்ட அடிப்படைத் தீர்வுகளை பற்றி பேசுகிறது. 

இந்த நூல் சாதி ஒடுக்குமுறை எதிர்ப்பு களத்தில் கம்யூனிஸ்டுகளின் பங்கைப் பற்றிய சிறந்த ஆவணமாக்கல்.

இந்த நூலின் சிறப்பு இந்த நூலின் அணிந்துரைகள், வாழ்த்துரைகளும் நூலின் பொருளை கனத்தோடு பேசுகின்றன. 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் பிருந்தா காரத் அணிந்துரையில்

” சித்தாந்தத்தின் அடிப்படையில் வர்க்க போராட்டம், சமூகப் போராட்டம், பண்பாட்டுப் போராட்டம் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பைப் புரிந்து கொள்வது, நச்சுத் தன்மை வாய்ந்த சாதிய அமைப்பை அடித்து நொறுக்குவதற்கு மிக முக்கியமானதாகும். இன்று இந்தியா எதிர்கொள்ளும் சவாலான சூழ்நிலையில் இந்த இணைப்புகளைப் புரிந்து கொள்வதற்கான சாலை வரைதடத்தை இந்த புத்தகம் வழங்குகிறது.”



Leave a comment