மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


நகர்மயமாதல்: கட்சியின் அணுகுமுறை


(நகர்மயமாதல்குறித்தஅகிலஇந்தியபட்டறையில்முன்வைத்துஇறுதிப்படுத்தப்பட்டகுறிப்பு)

2021இல் இந்திய நகர்ப்புற மக்கள் தொகை 49.8 கோடி இருக்கும் என உலக வங்கி மதிப்பீடு செய்துள்ளது. உலக நகர்ப்புற மக்கள் தொகையில் 35.4% ஆகும். 2035இல் 67.5%ஆக உயரும் எனவும் மதிப்பீடு செய்துள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 52 நகரங்களில் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கிறார்கள். 5 மாநிலங்களில் 40% அதிகமான மக்கள் நகர்ப்புறங்களில் வசிக்கிறார்கள். 2019இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 63% நகர்ப்புறத்தின் பங்களிப்பாகும். இது 2036க்குள் 75% ஆக உயரும் என நிதி அயோக் திட்டங்கள் தெரிவிக்கின்றன.

பெரும்பான்மையான தொழிலாளர்களும், நடுத்தர மக்களும் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர். தற்போதைய சட்ட நடைமுறைகள் ஆளும்வர்க்க கருத்தியலை தளமாகக் கொண்டுள்ளன. குறிப்பாக, வகுப்புவாத சக்திகள் ஆதாயம் அடைகின்றன. நகர்மயமாதல் முக்கிய வளர்ச்சியின் கருவியாக ஆளும் வர்க்கம் கருதுவதால், அதன் செயல்முறை மேலும் துரிதப்படுத்தப்படும். எனவே, முதலாளித்துவ சமூகக் கட்டமைப்பில் நகர்மயமாதலின் பங்களிப்பை நாம் புரிந்து கொள்வதும், வெகுஜன இயக்கங்களைக் கட்டி எழுப்புவதன் முக்கியத்துவத்தையும் புரிந்து கொள்வது அவசியமாகிறது.

ஒரு புரட்சிகர இயக்கம் நகர்மயமாதலைப் புரிந்து கொள்ள வேண்டியதன் அவசியம்

நகர்மயமாதல் என்பது மூலதனக் குவிப்புச் செயல்முறையின் உள்ளார்ந்த அம்சமாகும். கைவினைஞர்கள் மற்றும் வணிக வியாபாரம் மூலம் பொருட்கள் உற்பத்தி செய்யும் மையங்களாக நகரங்கள் இருந்தன. ஆனால், முதலாளித்துவம் நவீன தொழில்மயமாக்கலுடன் வந்தது. தற்போதைய நகரங்கள் வளர்ச்சி அடைந்து புதிய நகரங்கள் மற்றும் விரிவாக்கங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அந்நகரங்கள் முதலாளித்துவ வளர்ச்சியுடன் இணைந்து வளர்ந்துள்ளன. மூலதனத்திற்குத் தேவையான உபரி மதிப்பை எடுக்க உழைப்புச் சக்தியைப் பெறுவதற்கு உழைப்பாளி மக்கள் நகரங்களில் குவிக்கப்பட்டுள்ளனர். முதலாளித்துவ சமூகத்தில் வேலை செய்யும் இடம், குடியிருக்கும் இடத்தில் இருந்து தனியாகப் பிரிக்கப்பட்டது. இவ்விரு பகுதிகளும் மூலதனத்தின் மறு உருவாக்கத்திற்கும், முதலாளித்துவ கருத்தியலை நிலைநிறுத்தவும் மிக முக்கியமான பகுதிகளாகும். வர்க்க நலன்கள் என்பது உற்பத்தி செய்யும் இடங்களில் மட்டுமின்றி, குடியிருக்கும் பகுதிகளிலும் வெளிப்படுகிறது. இவ்விரு பகுதிகளிலும் நடைபெறும் போராட்டங்கள், வர்க்கப் போராட்டங்களின் ஒரு பகுதியாகும். ஒன்றை, மற்றொன்றில் இருந்து புறக்கணிக்க இயலாது. எனவே, இவ்விரு பகுதிகளில் நடைபெறும் போராட்டங்கள், வர்க்க உணர்வுள்ள புரட்சிகர இயக்கத்தின் முழு வளர்ச்சியை உறுதி செய்யும்.


நகர்மயமாக்கல் என்றால் என்ன?


நகர்மயமாக்கல் என்பது விவசாயத்தில் ஈடுபடாத மக்கள், ஒரு குறிப்பிட்ட பகுதியில் சேர்ந்து வசிக்கும் ஒரு நிகழ்வாக வரையறுக்கப்படுகிறது. அப்பகுதியில் நிர்வாகம், வர்த்தகம் மற்றும் தொழில்கள் போன்றவை விவசாயம் அல்லாத தொழில்களின் நடவடிக்கைகளை மையமாகக் கொண்டுள்ளது. ஆனால் ஆரம்பத்தில் இது ஒரு வர்க்க நிகழ்வாகும். துவக்கத்தில் நகர்மயமாக்கல் என்பது உபரி உற்பத்தியின் தோக்கமும், உற்பத்தியில் ஈடுபடாதவர்கள் அப்பொருள்களைக் கைப்பற்றுவதும், புவியியல் ரீதியாக ஓர் இடத்தில் குவிப்பதுமாக இருந்தது. நகர்மயமாதல் என்பது உபரி உற்பத்தியின் அடிப்படையில் தேசங்கள் அமைக்கப்படும் நடவடிக்கைகளின் துவக்கத்தோடு இணைக்கப்படுகிறது. அரசு ஒரு நிறுவனமாக மாறுவதற்கு உதவி செய்த முதல் இடம் நகரங்கள் ஆகும்.

வரலாற்றில் நகர்மயமாதல் அரசியல் பரிணாம வளர்ச்சிக்கும், தொழில்முறை வணிக வளர்ச்சிக்கும் இடையே தெளிவான தொடர்ச்சி உள்ளது. வர்த்தகம், வணிகச் செயல்பாடுகள், கைவினைஞர்களின் நடவடிக்கைகள், யாத்திரை மையங்கள், இறையியல் மையங்கள் ஆகியவற்றின் பாரம்பரிய மையங்களாக நகரங்கள் இருந்தன. முந்தைய நகரங்கள், உபரி உற்பத்தியின் நுகர்வு மையங்களாக இருந்தன. முதலாளித்துவ தரமான புதிய கூறு சேர்க்கப்படுகிறது. அது தொழில்மயமாக்கல் மூலம் உபரி மதிப்புக்கான உற்பத்தியுடன் நெருக்கமான தொடர்புடையதாகிறது.


நகர்மயமாதலும் முதலாளித்துவமும்

முதலாளித்துவம் நாட்டை நகரங்களின் ஆட்சிக்கு உட்படுத்தியுள்ளது. அது மகத்தான பெருநகரங்களை உருவாக்கி உள்ளது. கிராமப்புறங்களோடு ஒப்பிட்டால் நகர மக்கள் தொகை பெரிதும் அதிகரித்துள்ளது. (கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை) முதலாளித்துவமும், நகர்மயமாதலும் இணைந்து பயணிக்கின்றன. நகரமயமாதல் என்பது முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த அம்சமாகும்.


உற்பத்தி மற்றும் உபரி மதிப்பு மையங்கள்

முதலாளித்துவ சமூகத்தில் உற்பத்தி மற்றும் உபரி மதிப்பின் முக்கிய மையங்களாக நகரங்கள் உள்ளன. உபரி மதிப்பு உற்பத்தி செய்யும் இடங்களில் நிகழ்கிறது. அது சந்தைப்படுத்தும்போது வெளிப்படுகிறது. உபரி மதிப்பு விவசாய உற்பத்தியிலும், கிராமப்புறங்களில் முதலாளித்துவ விவசாய பண்ணைகளிலும் பெரிய விவசாய வணிகத்திலும் நடைபெறுகிறது. இப்பணிகளில் உபரி மதிப்பு இல்லை என்றால், மூலதனத்தின் இயக்கம் நின்றுபோய் நெருக்கடி ஏற்படும். எனவே, உற்பத்தியான பொருள்களை வினியோகம் செய்வதற்கான போக்குவரத்து மற்றும் தகவல்தொடர்பு மையங்களாக உள்ள நகரங்கள், உபரி மதிப்பை அடைந்திடக் கிடங்குச் செயல்பாடுகள் இன்றியமையாதவையாகும்.


நகர வளர்ச்சியும், இடம் சார்ந்த செறிவும்


பொருட்களின் உற்பத்தி, சுழற்சி செறிவும், பரிமாற்றம், நுகர்வு மற்றும் உழைப்பு சக்தியின் பெருக்கம் ஆகியவற்றுக்குத் தேவையான வெளிப்படையான சமூக உள்கட்டமைப்பை உருவாக்க வேண்டும். முதலாளித்துவம், உற்பத்தி சாதனங்களையும், தொழிலாளர்களையும் ஒரே கூரையின் கீழ் சேகரிக்கிறது. மேலும், பொருள்களை உற்பத்தி செய்வதற்கான இயந்திரங்கள், மூலப் பொருள்களில் வேலை செய்வதற்கான தொழிலாளர்களையும் ஒருங்கிணைக்கிறது. இச்செயல்பாடுகள் மூலம் பொருளாதாரப் பலன்களைப் பெற்றிட பெரிய நகரங்களில் உற்பத்தி சக்திகள் குவிக்கப்படுகின்றன. போக்குவரத்து, சேமித்து வைக்கும் இடங்கள், தகவல் தொடர்புக்கான நெட்வொர்க், வர்த்தகம், வியாபாரம், வங்கிச் செயல்பாடுகள் தேவைப்படுகின்றன. எனவே, பெரிய தொழில்களை, வணிக வளாகங்களில் உற்பத்தி செய்யும் பொருட்கள் மற்றும் விநியோகத்தின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்ய அதே இடங்களில் நிறுவப்படுகின்றன. அப்பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு குடியிருப்பு வசதிகளும் செய்து கொடுக்கப்படுகிறது. இதன் விளைவாக உருவானதே நகரங்கள்.

நகர்மயமாக்கல் ஒரு வர்க்க நிகழ்வு


வர்க்க நலன்கள் உற்பத்தி செய்யும் இடங்களில் மட்டுமின்றி, குடியிருப்புப் பகுதிகளிலும் வெளிப்படுகின்றன. அதாவது, வர்க்கப் போராட்டம் தொழிற்சாலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் என இரு இடங்களிலும் வெளிப்படுகிறது. நகர்ப்புறக் குடியிருப்புகள் அமைப்பாக்கப்பட கட்டப்பட்டுள்ள சூழலும் வர்க்க சக்திகளின் நலன்களைப் பிரதிபலிக்கிறது. பணக்காரர்கள், ஏழைகள் எனத்தனித்தனியாக பிரித்துக் குடியமர்த்தி உள்ளது. பணக்காரர்கள், ஏழைகள் வசிக்கும் சுற்றுப்புறங்களுக்கு இடையே சமூக உள்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதில் வேறுபட்ட நடைமுறைகள் இருப்பது வெளிப்படையாகத் தெரியும். தற்போது நகரங்கள் சமூகத்தால் கண்காணிக்கப்பட்ட தெருக்கள், ஆடம்பரமான வணிக வளாகங்கள், பொழுதுபோக்கு மன்றங்கள் போன்ற வசதிகளுடன் கட்டமைக்கப்படுகின்றன.

பெரிய நகரங்களில் ஷாப்பிங் மால்கள், அறிவியல் பூங்காக்கள், ஆடம்பரமான ஸ்டார் ஓட்டல்கள், விமான நிலையங்கள், கண்டெய்னர் வளாகங்கள், கோல்ப் மைதானங்கள் உள்ளடக்கிய பெரிய நிலப்பரப்புகளைக் கொண்டுள்ளன. இவை பணக்காரர்களுக்கு வசதிகளை மேம்படுத்தியுள்ளன. ஆனால் இத்தகைய சிறப்பான நகர்ப்புற விரிவாக்கத்தின் மறுபக்கம், ஏழைகள் வசிக்கும் குடிசைப் பகுதிகள் வேற்றுக்கிரகவாசிகள் போல் அந்நியப்பட்டுள்ளன. குடிநீர் வழங்கல், மற்றும் சுகாதாரம் இல்லாத நிலையில் ஒரு பெரிய சமூகம் உள்ளது. ஆயிரக்கணக்கில் இப்பகுதி மக்கள் குப்பைகளாக, உணவுக்காக நகரங்களுக்குத் துரத்தப்படுகிறார்கள். ஆயிரக்கணக்கில் புல்டோசர்கள் மூலம் அகற்றப்படுகிறார்கள். புறநகர்களுக்குத் தள்ளப்பட்டவர்கள், புலம்பெயர்ந்தவர்கள், தொழிலாளர்கள், வீடற்ற ஏழைகள் நகரங்களில் அதிகரித்து வரும் வறுமையுடன் போராடி வசிக்கிறார்கள்.


தொழிலாளர்கள் தோற்றுவாய் மற்றும் சேர்மானம்


முதலாளித்துவப் பொருளாதார இயக்கத்திற்கு உழைப்புச் சக்தி சிறப்பு சரக்காகத் தேவைப்படுகிறது. மூலதனத்தின் தேவைக்காக ராணுவ இருப்பு போல் தொழிலாளர்கள் காத்திருப்பு தேவைப்படுகிறது. அது முந்தைய சமூக அமைப்பில் இருந்து தொடர்ந்து நிரப்பப்பட வேண்டும். நகர்ப்புற தொழிற்துறை பொருளாதாரத்திற்குத் தேவையான உழைப்பைச் சக்தியை வழங்குபவர்களாக கிராமப்புற ஏழைகள், குறிப்பாக வறுமையில் துன்பப்பட்டு வெளியேற்றப்பட்டவர்கள், இடம் பெயர்ந்த விவசாயிகள் மற்றும் கைவினைஞர்கள் ஆகியோர் மூலம் நிரப்பப்படுவது கட்டாயமாகிறது. நகர்ப்புற மக்களிடையே ஏற்படும் இந்த மாற்றங்களில் ஒன்றுதான் இடப்பெயர்வாகும். இது இயல்பாக நகர்ப்புற மக்கள் தொகையின் சேர்மானத்தை ஆழமாகப் பாதிக்கிறது. சாதி, மதம், மொழி, பிராந்தியம் போன்றவற்றின் அடிப்படையில் மக்களின் பன்முகத்தன்மையில் சேர்மானத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எப்படி இருப்பினும், நகரங்களில் (தொழில் நகரங்கள் உட்பட) உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவே. நகர்ப்புற மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் சேவைப் பணிகளில் ஈடுபடுபவர்களே கூடுதலாக இருக்கின்றனர்.

மூலதனத்திற்கு ஏற்றவாறு உழைப்பு சக்தி படையைக் காத்திருப்பில் தக்க வைக்க வேலையில்லா பெரும் உபரி மக்கள், வேலையில் இருந்து வெளியேற்றப்பட்டவரகள் மட்டுமின்றி, குழந்தைகள், முதியோர் கணிசமாக உள்ளனர். தற்போது ஆயுட்கால சராசரி உயர்ந்துள்ளதால் முதியோரின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. முதலாளித்துவத்தின் வளர்ச்சியும், விரிவாக்கமும் நகரங்களில் மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்திருக்கிறது.

குடியிருப்பு – வேலையிடம்


மூலதனம் நிறுவியுள்ள உற்பத்தி முறையில் வசிப்பிடத்தையும், பணியிடத்தையும் தனித்தனியாகப் பிரித்து வைத்துள்ளது. முந்தைய சமூகத்தில் விவசாயம் அல்லாத உற்பத்தியின் இருப்பிடமாக, வசிக்கும் வீடுகளிலேயே பட்டறைகள் இருந்தன (கைவினைஞர்கள் தொழில்). முதலாளித்துவ உற்பத்தி முறையில், இந்த இணைப்பு வேலை செய்யும் இடத்தையும், வசிப்பிடத்தையும் தனித்தனியே பிரித்துவிட்டது. வேலை செய்யும் இடத்தையும், வசிப்பிடத்தையும் பிரித்து வைத்தது நகரங்களின் முக்கிய அம்சம் ஆகும். உற்பத்தி மற்றும் இதர துறை நடவடிக்கைகள் குறிப்பிடப்பட்ட பகுதிகளில் நடைபெறுகின்றன. தொழிலாளர்கள் மற்றும் இதர பகுதி மக்கள் நன்கு வரையறுக்கப்பட்ட குடியிருப்புகளில் வசிக்கிறார்கள். முந்தைய காலத்தில் உற்பத்தி மற்றும் விநியோகம் குறித்த அனைத்து நடவடிக்கைகளும் அங்கு மேற்கொள்ளப்பட்டன. இக்கால உற்பத்தி முறையில் பொருள்களின் மறு உற்பத்தி, உழைப்புச் சக்தியான மனிதவளத்தின் பௌதிக கருத்தியல் அம்சங்கள், மனித வளத்தை ராணுவக் காத்திருப்புப் படையைப் போல் பராமரிப்பது தொடர்பான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே, மூலதனம் தொழிற்சாலைகளில் கட்டுப்படுத்துவது போலவே குடியிருப்பு பகுதிகளிலும் கட்டுப்பாட்டுக்குள் வைப்பது அவசியமாகிறது.


பணியிடம் வசிப்பிடம் மாறும் காட்சிகள்

தொழிலாளர்கள் உழைப்புலகின் தயாரிப்பாளர்கள். ஆனால் வசிப்பிடங்களில் நுகர்வோர். அவர்கள் உழைப்பின் மூலம் வருவாய் பெறுகிறார்கள். அதை வசிப்பிடங்களில் செலவிடுகிறார்கள். தொழிற்சாலைகளில் அவர்கள் நேரடி மூலதனத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதுபோல், வசிப்பிடங்களில் நேரடி கட்டுப்பாட்டில் இருப்பதில்லை.

முதலாளித்துவ சமூகத்தில் உழைப்புலகம் அடிப்படையானது. ஏனெனில் இது அவர்களின் வர்க்க நிலையைத் தீர்மானிக்கிறது. வாழும் உலகமும் முக்கியமானது. ஏனெனில் இங்குதான் தொழிலாளர்கள் தொடர்ந்து தொழிலாளியாக மறு உற்பத்தி (இனப்பெருக்கம்) செய்யப்படுகிறார்கள். அதனால் கடந்த பாரம்பரிய காலத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட நிலை ஏற்பட்டுள்ளது. தொழிலாளர் வர்க்கத்திற்கு வேலை செய்யும் இடம் வசிப்பிடம் என இரு பகுதிகளிலும் நாம் பணியாற்றுவது அவசியமாகிறது. பணியிடத்திற்கும், வசிப்பிடத்திற்கும் இடையிலான உறவில் பல்வேறு வடிவங்கள் உள்ளன. அவை முதலாளித்துவ வளர்ச்சி கட்டங்களுக்குத் தகுந்தவாறு ஒருங்கிணைக்கப்படுகின்றன.

உதாரணமாக, மேற்கத்திய நாடுகளில் 19, 20ஆம் நூற்றாண்டுகளின் முற்பகுதியில் பெரிய தொழிற்சாலைகள் நகரங்களுக்கு இருந்தன. இந்தியாவில் 20ஆம் நூற்றாண்டில் தொழில்மயமாக்கல் நடைபெற்றது. முக்கிய தொழில்கள் என ஜவுளி மற்றும் பிற இயந்திர, கனரக தொழிற்சாலைகள் 1970கள் வரை பம்பாய், அகமதாபாத், கல்கத்தா, கான்பூர், சென்னை போன்ற பெருநகரங்களின் மையத்தில் இருந்தன.

உற்பத்தி முறையில் தொழில்களின் தன்மையில் ஏற்பட்ட மாற்றங்களால் பெரிய ஜவுளி மற்றும் பிற தொழிற்சாலைகள் மூடப்பட்டன. அல்லது புறநகர் பகுதிகளுக்கு, தொழிற்பேட்டைகளுக்கு மாற்றப்படுவதையும் நாம் பார்க்கிறோம். முந்தைய கட்டத்தில் தொழிலாளர் குடியிருப்புகள் காலனிகளாகத் தொழிற்சாலைகளின் அருகிலேயே அமைந்தன. இது தொழிலாளிவர்க்கத்தை அரசியல் ரீதியாக அமைக்கும் பணிக்கு குறிப்பிடும்படியான கவனம் செலுத்த உதவியது.

புதிய தாராளமயக் கொள்கை முதலாளித்துவ உற்பத்தி முறையின் கட்டமைப்பில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளன. அது வேலை முறைகளிலும் பலவடிவங்களில் மாற்றங்களைக் கொண்டு வந்தன. முதலாவதாக, மைய தொழிற்சாலைகள் நகரங்களுக்குள் இல்லை. அடுத்து, பெரிய தொழிற்சாலைகளில் கூட ஒப்பந்தத் தொழிலாளர் மற்றும் கேசுவல் தொழிலாளர்கள் முறை அதிகரித்தது. பல்வேறு வேலைகள் அவுட்சோர்ஸ் என்ற பெயரில் உதிரி பாகங்களின் உற்பத்தி வெளியேற்றப்பட்டது. வீடுகளிலேயே, குறிப்பாக பெண்கள், பீஸ் ரேட்டுக்கு பணிபுரியும் வேலைகளாக மாறின. எனவே, தொழிலாளி முதலாளி என்கிற நேரடி உறவில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பலருக்கு நிலையான பணி இடங்களே இருப்பதில்லை.

இந்தியாவில் முதலாளித்துவ வளர்ச்சியின் இந்தக் கட்டத்தில் தொழிலாளி வர்க்கத்தின் பெரும்பகுதி முறைசாரா துறையில் உள்ளனர். அவர்களின் பணியிடங்கள் குடியிருப்புப் பகுதிகளிலேயே உள்ளன என்பதையும் நாம் அங்கீகரிக்க வேண்டும். கொல்கத்தா பிளீன அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி இந்தத் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் மிக கவனமுடன் பணியாற்றி, அமைப்புகளை, குழுக்களை அமைப்பதாக நமது அணுகுமுறைகள் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். அது தொழிற்சங்கங்கள், வாலிபர், மாதர் மற்றும் இதர வெகுஜன அமைப்புகளை உருவாக்குவதாக இருக்க வேண்டும்.

குடியிருப்பு பகுதிகளில் பழைய மற்றும் புதிய முதலாளித்துவ சித்தாந்தங்களுடன் தொடர்புடைய கருத்தியல், கலாச்சாரங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. அனைத்துவிதமான பிற்போக்கு, ஆதிகாலத்துக் கருத்தியல் நடைமுறைகள் மக்களின் ஆன்மிக, சமூக வாழ்வியலில் தலையிடுகின்றன. இது ஏற்கனவே பலவீனமான தொழிலாளர்களின் அரசியல் வர்க்க உணர்வை மேலும் நீர்த்துப் போகச் செய்கிறது. அதேசமயம், புதிய தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஊடகங்கள் வழியாக முதலாளித்துவ அரசியல் கருத்தியல் வலுவாகக் கொண்டு செல்லப்படுகிறது.

வேலை செய்யும் இடத்தில் உபரி மதிப்பை எவ்வளவு பெற முடியுமோ, அந்த அளவு உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாகிறார்கள். மூலதலனம் தனது லாப விகிதத்தைத் தக்க வைத்துக் கொள்ள, தொழிலாளர்களின் வருமானத்தை வசிப்பிடங்களில் பல்வேறு வடிவங்களில் பறித்துக் கொள்கிறது. மிரட்டிப் பணம் பறித்தல், மோசடி நடவடிக்கைகள், பதவி பறிப்பு, சமமற்ற பரிமாற்றங்கள், முறைகேடுகள் (ஊழல், கலப்படம்) ஆகியவை மூலம் தொழிலாளர்களின் வருமானத்தைப் பறித்துக் கொள்கிறது. மேலும் ஊதிய வெட்டுக்களையும் பயன்படுத்துகிறது. இது மட்டுமின்றி, தொழிலாளர்களின் வருவாயில் ஒரு பகுதி, கடன் மற்றும் பணவீக்கத்தால் வெளியேற்றப்படுகிறது.

வேலை செய்யும் இடத்தில் மூலதனம் உழைப்பைச் சுரண்டுகிறது. அது வசிப்பிடத்தில் அபகரித்துக் கொள்கிறது. இவை இரண்டும் உபரி மதிப்பின் ஒரு பகுதியாகும். இதில் வேறுபாடு என்னவெனில், வேலை செய்யும் இடத்தில் சுரண்டுபவர்களுடன் தொழிலாளர்களுக்கு நேரடி தொடர்பு உள்ளது. தற்போது தொழிலாளி முதலாளிக்குமான இத்தொடர்பு தொலைவில் இருந்து இயக்கப்படுகிறது. வசிப்பிடத்தில் இத்தொடர்புகள் மறைமுகமாக உள்ளது.

நகர்மயமாதலுடன் தொடர்புடைய பல பிரச்சனைகளுக்குக் காரணம் கூடுதல் லாபத்திற்காக மூலதனத்தின் வெறித்தனமான தேடலின் விளைவாகும். பலர் வாதிடுவதுபோல் தவறான நிர்வாகமோ, தவறான மேலாண்மையோ அல்ல. நகர்ப்புற வளர்ச்சிக்கான ஆளும் வர்க்கத்தின் லட்சியத்தை நிறைவேற்றிட அரசாங்கத்தால் பின்பற்றப்படும் கொள்கைகளே அடிப்படை காரணமாகும். அரசாங்கம், மூலதனத்தின் வளர்ச்சிக்காக, முக்கியமாக, கூடுதல் லாபம் பெறுவதற்காக சேவை செய்கிறது. குறைந்தபட்ச சீர்திருத்தங்கள், மற்றும் தொழிலாளர் நலனுக்காக நாம் போராட வேண்டும் இத்தகைய பணிகளும் போராட்டங்களும்தான் நகர்ப்புற பாட்டாளி வர்க்கத்தை நமது இயக்கத்திற்குள் கொண்டு வந்து அரசியல் உணர்வை வழங்குவற்கான வாய்ப்பைத் தரும். நகர்ப்புற கொள்கைகள், குடிமை வசதிகள் வழங்குதல், பொழுதுபோக்கு, மற்றும் கலாச்சார வசதிகள் வழங்குவது போன்றவைகளுக்காக நகர்ப்புற ஏழைகளின் வாழ்வியல் நிலையை மேம்படுத்தும் எதற்காகவும் நாம் போராட வேண்டும்.

எனவே, மூலதனத்திற்கு எதிரான போராட்டம் என்பது வேலை செய்யும் இடம், வசிக்கும் இடம் என இரண்டு பகுதிகளிலும் முக்கியத்துவம் பெறுகிறது.

நகர்மயமாக்கல் சமூகக் கட்டுப்பாடும், வர்க்க நலனுக்கான போராட்டமும்


முதலாளித்துவ ஆட்சியில் நகர்மயமாக்கல் நடைமுறையானது மக்கள் வாழ்வியல் மீது எப்போதும் மிகுந்த கட்டுப்பாடுகளை விதிக்கிறது. தொழிலாளர்களின் வாழ்க்கை முறைகள், அவர்களின் உழைப்புச்சக்தி, அவர்களின் கலாச்சாரம், அரசியல், மதிப்பீடுகள், உலகத்தைப் பற்றிய கருத்தியல் அறிவு ஆகியவற்றை மூலதனம் அடிப்படையில் தனது இருக்கமான கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நகரங்களில் மக்கள் வாழ்க்கை ஒழுங்கமைக்கப்பட்ட விதம் பணியிட அனுபவத்தின் மூலம் பெற்ற வர்க்க உணர்வைச் சிதைத்து, நீர்த்துப் போகச் செய்கிறது. இது அரை பாட்டாளி வர்க்கம், மற்றும் தொழிலாளர் வர்க்கத்தின் நட்பு சக்திகளிடையே வர்க்க சிந்தனையை, ஜனநாயக உணர்வின் வளர்ச்சியைத் தடுக்கிறது.

இத்தகைய அந்நிய கருத்தியல் தாக்கங்களை வசிப்பிடங்களில் நாம் எதிர்கொள்ளாதவரை, இதர உழைக்கும் மக்கள், வர்க்க ஒற்றுமை மற்றும் பரந்த ஜனநாயக மக்கள் சக்தியை ஒன்றுபடுத்த முடியாது.

வாழும் உலகில் முதலாளித்துவ கருத்தியல் மேலாதிக்கத்தை திணிக்கும் சில வழிமுறைகள்


முன்பு தொழிலாளர்கள் தொழிற்சாலைகளின் அருகிலேயே அமைக்கப்பட்ட காலனிகளில் வசித்தனர். அவை பெரும்பாலும் நிறுவனங்கள் மேலாண்மையால் கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டன. இங்கு தொழிலாளர்கள் பணியிடத்தில் மட்டுமின்றி, பொது சமூக வாழ்க்கையிலும் வர்க்க கருத்தியல் ஒற்றுமையுடன் வாழ்க்கை நடத்தினார்கள். தற்போது தொழிலாளர்களின் காலனிகளில் இருந்து பன்முக சமூகங்களுக்குச் சிதறடிக்கப்பட்டுள்ளார்கள்; அல்லது விலக்கப்பட்டு உள்ளார்கள். இதனால் முன்பு போல் அதே மாதிரியான வாழ்க்கைச் சூழலை இழக்கிறார்கள். இந்நிலை வர்க்க உணர்வின் தன்னிச்சையான வளர்ச்சிக்குத் தடையாக உள்ளது.

புறநகர் பகுதிகளுக்குத் தொழிலாளர்களைச் சிதறடிப்பது போன்ற இக்கொள்கைகள் வர்க்கப் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் மாற்று மருந்தாக ஆபத்தான ஆளும் வர்க்கத்தால் சில பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. புதிய புறநகர் பகுதிகளை அமைப்பது, குறைந்த வருவாய் கொண்டவர்களுக்கு வீட்டு உரிமையை மேம்படுத்துவது, போக்குவரத்து அமைப்பு மூலம் எளிதான கூறுகளை மேம்படுத்துவது போன்றவை வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளாக கூறப்படுகின்றன. ஆனால் இவற்றின் அடிப்படை நோக்கம் வர்க்கப் போராட்டங்களை மழுங்கடிப்பதாகும்.

பல்வேறு கடன் வழங்கும் நடைமுறைகள் மூலம் ஏழைகள் மத்தியிலும் வெளிப்படையான நுகர்வு கலாச்சாரத்தை உருவாக்கிவிட்டு, மக்களை அரசியலற்றவர்களாகவும், சுயநலமிக்கவர்களாகவும் வளர்த்தெடுக்கிறது. சந்தை சக்திகளால் உருவாக்கப்படும் பாதுகாப்பின்மை, பதற்றம், வளர்ந்து வரும் முதியோர்களின் பிரச்சனைகள் இவைகளனைத்தும் மதவெறியைத் தூண்டுகின்றன. தெளிவற்ற மூடநம்பிக்கைகள் மக்களின் கலாச்சார, ஆன்மிக வாழ்க்கையில் ஊடுருவுகிறது. அனைத்துவகையான மதவாத சக்திகள், கடவுள் மற்றும் சந்தைப் பொருளாதாரம் அவர்களது அரசியல் நலனுக்காக மக்களைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இது வகுப்புவாத சக்திகளை வலுப்படுத்துகிறது.

வேலைநேரம் போக மற்ற நேரங்களான ஓய்வு நேரம் எதுவாக இருந்தாலும், அதை நவீனத் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்புகள் மூலம் பெருநிறுவன மூலதனத்தால் குடியிருப்புப் பகுதிகளிலும் பயன்படுத்திக் கொள்கிறது. இந்தத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மக்களின் ஓய்வு நேரத்தில் கூட ஒருவரோடு ஒருவர் இணையாமல் தானாகவே தனிமைப்படுத்தப்பட்டு ஆளும் வர்க்க கருத்துகளின் தாக்குதலுக்கு ஆட்படுகிறார்கள்.


நவதாராளமயக் கொள்கையால் தனியார்மயமாக்கல், நிதிமயமாக்கல், வணிகமயமாக்கல், டிஜிட்டல்மயமாக்கல் மூலம் சமூகத்தில் பண சக்தியை அதிகரித்துள்ளது. இந்தப் பண சக்தி மக்களின் வாழ்க்கையில் இறுக்கமான பிடிப்பை ஏற்படுத்தி உள்ளது. அது மக்கள் வாழ்க்கையின் அனைத்து விஷயங்களையும் முடிவு செய்கிறது. முதலாளித்துவ பாராளுமன்ற எல்லைக்குட்பட்ட ஆட்சி அமைப்பில் முக்கிய அரசியல் நிகழ்வுகள் குடியிருப்புப் பகுதிகளிலேயே நடைபெறுகின்றன. முதலாளித்துவ கட்சிகளின் அரசியல் சாகசங்கள் மூலம் குடியிருப்புப் பகுதிகளில் அதிக கவனம் செலுத்துகிறது. அதாவது, ஒவ்வொரு நாளும் முதலாளித்துவ அரசியல் கருத்தியல் இப்பகுதிகளில் நடைபெறுகின்றன. அரசியல் திட்டங்கள், வாக்கு வங்கியை தக்க வைக்கும் நோக்கத்துடன் அரசு திட்டங்கள், நல உதவி திட்டங்கள், இப்பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. முதலாளித்துவ கட்சிகளின் செல்வாக்கில் இருந்து உழைக்கும் மக்களை விடுவிக்கவும், அக்கட்சிகளை மக்களிடம் இருந்து தனிமைப்படுத்தவும் நாம் எதிர் கொள்ள வேண்டிய பணிகளுக்கு இத்திட்டங்கள் தடை ஏற்படுத்துகின்றன.

பன்முக செயல்பாடுகள், வலுமிக்க போராட்டங்கள் மூலம் சக்திவாய்ந்த அடித்தளம் கொண்ட வர்க்க வெகுஜன அமைப்புகளைக் கட்டி எழுப்புவதன் மூலம் மட்டுமே, வெகுஜன சமூக அரசியல் உணர்வை வளர்த்தெடுக்க முடியும். ஆளும் வர்க்கத்தின் ஊடக சமூகமயமாதல் பணம் மற்றும் கருத்தியல் பலத்தை இத்தகைய வெகுஜன சக்திகளின் போராட்டங்கள் மூலமே எதிர்கொள்ள முடியும்.


நகர்ப்புற பணிகள் மற்றும் கட்சியின் அணுகுமுறைகள்

முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டங்களின் ஒரு பகுதி வசிப்பிடங்களின் போராட்டம். சமூக வாழ்வியல் வளர்ச்சிக்கு உற்பத்தி ஒரு முக்கிய அங்கமாகும் என மார்க்சியம் கருதுகிறது. இது தொடர்பான போராட்டங்கள் வர்க்கப் போராட்டத்தின் மையப் பகுதியாகும். ஆனால் முதலாளித்துவ பொருளாதாரத்தில் உபரி மதிப்பை உறுதி செய்யவும், மூலதனத்தின் மறு உற்பத்தி சுழற்சியை நிறைவு செய்யவும், வினியோகமும், நுகர்வும் மிக முக்கியமானதாகும். நிஜ வாழ்க்கையில் அவைகளைப் பிரிக்க முடியாது. அது ஒரு இயங்கியல் ஆகும். எனவே, அனைத்து துறைகளில் நடக்கும் போராட்டங்கள், அவற்றின் சொந்தமான முக்கியத்துவம் பெறுகிறது. அவற்றில் ஒன்றை மட்டும் தேர்வு செய்ய நாம் முயற்சிக்கக்கூடாது. நுகர்வு குறித்த பிரச்சனைகளை வசிப்பிடங்களில் மக்கள் எதிர்கொள்ளும்போது குடியிருப்புப் பகுதிகளில் நமது வேலைகளை ஒழுங்கமைப்பது அவசியமாகிறது.

நகர்ப்புற இந்தியாவில் மற்றுமொரு தனித்துவம் வாய்ந்த அம்சம் மக்களைக் குடியிருப்புப் பகுதிகளில் பாரபட்சமாக தனித்தனியாகப் பிரித்து வைத்திருப்பது. பட்டியலின மக்கள் குவியலாக தனிப்பகுதியில் குடிசைகளில் வசிக்கின்றனர். இவ்வாறு ஒதுக்கப்பட்ட மக்களுக்கு, நகரங்களில் மற்ற பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கிடைக்கும் அடிப்படை வசதிகளை விடக் குறைவாகவே செய்து தரப்படுகிறது. ஏழை, பணக்காரர் என்ற ஏற்றத்தாழ்வு மட்டுமின்றி, சாதி, மத ரீதியாகவும் மக்களைப் பிளவுப்படுத்தி வைத்துள்ளார்கள். நகர்ப்புறத்தில் ஜனநாயக வாழ்க்கைக்கான போராட்டம் என்பது அனைத்து வகையான சாதி, மதம், பாலின பாகுபாடுகளுக்கு எதிராகவும் நடத்தப்பட வேண்டும்.

நகரங்களில் அடுத்த முக்கிய பிரச்சனையாக இருப்பது பாலினப் பாகுபாடு ஆகும். பெண்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. வாழ்க்கையின் அடிப்படை வசதிகள் இன்றி, ஏழைப் பெண்கள் பாலியல் பாகுபாட்டை எதிர்கொள்கிறார்கள். குறிப்பாக, குடிசைப் பகுதிகளில் பெண்களுக்குக் கழிப்பறை இல்லாதது, குழந்தைகள் பராமரிப்பு வசதி இல்லாதது ஆகியவற்றால் பெண்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பெண்கள், பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் அவர்களது பாதுகாப்பைப் பயமுறுத்துகிறது. பெண்கள் பொது இடங்களில் பாதுகாப்புடன் அணுகமுடிவதில்லை.

இத்தகைய நெருக்கடிகள் அமைப்பாக்கப்பட்ட தொழிலாளர்களை மட்டுமின்றி இதர பிரிவு உழைக்கும் மக்களையும் பெரிதும் பாதிக்கின்றன. அமைப்புசாரா தொழிலாளர்கள், நகர்ப்புற ஏழைகள், கீழ்நடுத்தர மக்களும் இதில் அடங்குவர். இந்நிலையில் வேலை செய்யும் இடங்களில் தொழிலாளர்களை அமைப்பாக்குவதோடு, வசிப்பிடங்களிலும் வெகுஜனங்களை அமைப்பாக்குவதன் அவசியத்தை நாம் அங்கீகரிக்க வேண்டும். அரசியல் போராட்டங்களின் வெற்றிக்கு இவ்விரு இடங்களிலும் இணைந்து செயல்படுவது இன்றியமையாதது ஆகும்.

நவதாராளமய சகாப்தத்தில் உழைப்புச் சுரண்டல், அதாவது உபரி மதிப்பு (லாபம்) பிரச்சனைகளுடன், தொழிலாளர்களின் ஊதியத்தை, வருவாயை மூலதனம் ஆக்கிரமிப்பது தொடர்பான பிரச்சனைகளும், சமமான முக்கியத்துவத்தைப் பெறுகின்றன. நகரங்களில் நடைமுறைப்படுத்தப்படும் நவதாராளமயக் கொள்கைகளின் சீர்திருத்த நடவடிக்கைகள், ஏழைகள், கீழ்நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தைப் பெரிதும் பாதித்துள்ளது. ஏழை மக்களின் சுற்றுப்புற உட்கட்டமைப்பு வசதிகள் மோசமடைந்துள்ளது. அடிப்படை சேவை பணிகள் தனியார்மயமாக்கப்பட்டது. பயனர் கட்டணங்கள் விதிப்பது போன்ற நடைமுறைகள் வாழ்க்கைச் செலவை அதிகரிக்கச் செய்துள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒன்றிய, மாநில அரசுகளால் வழங்கப்பட்டு வந்த மானியங்கள், கடன்கள் குறைக்கப்பட்டுள்ளது இச்சீர்திருத்தங்களால் ஏற்பட்ட மற்றொரு வீழ்ச்சியாகும். அதிகாரப் பரவல் எனப் பேச்சுகள் இருந்தாலும், உண்மையான அதிகாரப் பகிர்வு உள்ளாட்சி அமைப்புகளுக்கு இல்லை. இத்தகைய நிலைமைகளை நாம் நிராகரித்தால், மூலதனத்திற்கு எதிரான போராட்டத்தின் ஒரு முக்கியமான புதிய பகுதியை இழக்க நேரிடும்.

நவதாராளமயத்தால் அனைத்துவிதமான பொது சொத்துக்கள், பூங்காக்கள், பொது இடங்கள், நீர்நிலைகள் தனியாருக்கு வழங்கப்படுவதால், பெரும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. சுகாதார வசதிகள், பள்ளிகள், போக்குவரத்து, குடிநீர்வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றல் போன்ற சேவைப்பணிகளையும் இது பாதித்துள்ளது. எனவே, நகர்ப்புற பொதுச் சொத்துக்களை பாதுகாக்கவும், அடிப்படை சேவைப் பணிகளைத் தனியார் மயமாக்குவதற்கு எதிரான போராட்டங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

புதிய தாராளமய நகர்மயமாக்கல் ஒரு சிறிய சிறுபான்மையினருக்கு வெளிப்படையாக செல்வத்தையும், நுகர்வையும் உருவாக்கி உள்ளது. ஆனால் இச்சிக்கன சீர்திருத்தத் திட்டங்கள் வறிய, பாதுகாப்பற்ற, கடன்பட்ட, மிகப்பெரும்பான்மையினருக்கு நெருக்கடிகளை அதிகரிக்கச் செய்துள்ளது. இச்சூழலில் நவதாராளமயக் கொள்கைகள் உருவாக்கும் நகரங்களும், நகர்மயமாக்கல் செயல்முறைகளும் அரசியல், சமூக, வர்க்கப் போராட்டங்களின் முக்கிய தளங்களாக மாறியுள்ளன.



Leave a comment