மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


பாசிசத்தின் மீதான சோவியத் வெற்றியின் விளைவு


என்.சங்கரய்யா

(பாசிச ஹிட்லரை, சோவியத் செஞ்சேனை வீழ்த்தியதை போற்றும் வகையில் 30.04.1985 அன்று வெளியான “தீக்கதிர்” சிறப்பிதழில் தோழர் என்.சங்கரய்யா எழுதிய கட்டுரை)

1942 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 22 ம் தேதி வேலூர் மத்திய சிறை; அரசியல் பாதுகாப்பு கைதிகள் அடைக்கப்பட்டிருந்த பகுதி; சோவியத் யூனியன் மீது ஹிட்லரின் நாஜிப் படைகள் திடீரென்று தாக்குதலைத் தொடுத்துவிட்டன என்று வானொலி அறிவித்தது. பாதுகாப்புக் கைதிகள் வாழ்ந்த பகுதியில் காங்கிரஸ் தலைவர்கள் திரு பட்டாபி சீத்தாராமையா, காமராஜ், சாம்பமூர்த்தி போன்றவர்களும் தோழர் ஏ.கே. கோபாலன், டாக்டர் கே.பி.கிருஷ்ணா மற்றும் பல கம்யூனிஸ்ட் தோழர்களும் சேர்ந்து இருந்தனர். அந்தத் தோழர்களில் நானும் ஒருவன்.

அச்செய்தியைக் கேட்டவுடனேயே, ஹிட்லரின் படைகள் இன்னும் ஆறு வார காலத்தில் ரஷ்யாவின் கிழக்கு எல்லையான விளாடிவாஸ்டாக் நகரத்தை கைப்பற்றிவிடும் என்று பட்டாபி சீத்தராமையா படபடவென்று பொரிந்து தள்ளினர். டாக்டர் பட்டாபி சீத்தாராமையா தான் காங்கிரஸ் கட்சியின் வரலாற்றை எழுதிய ஆசிரியராவார். அவர், வரலாற்றை அறிந்து கொள்ள முடிந்த மேதாவித்தனம் அவ்வளவுதான்!

பொன்மொழிகள் பொய்மொழியானது

கம்யூனிஸ்டுகளான நாங்கள் கூடினோம். அதில் மார்க்சிஸ்ட் தத்துவ ஆசிரியர் கே.பி.கிருஷ்ணா பேசினார். டாக்டர் பட்டாபி போன்ற  ‘பெரியவர்கள்’ என்ன சொன்னபோதிலும், சோவியத் செஞ்சேனை தனது ராட்சசக் கால்களைக் கொண்டு நாஜிப் படைகளை மிதித்து அழித்துவிடும்: இது உறுதி என்று தோழர் கே.பி கிருஷ்ணா முழங்கினார். பலத்த கைதட்டல் எங்களிடமிருந்து கிளம்பியது.  ‘பூர்ஷ்வா வரலாற்று ஆசிரியர்’  பட்டாபியின்  ‘பொன்மொழிகள்’ பொய்மொழிகளாகின.

மெய்யான விஞ்ஞானமாம் மார்க்சிசம் – லெனினிசத்தின் வெளிச்சத்தில் தோழர் கே.பி.கிருஷ்ணா வெளியிட்ட சொற்களை வரவாறு உண்மை என நிரூபித்துக் காட்டியது.

சோவியத்- ஜெர்மன் யுத்தத்தைப் போல் பிரம்மாண்டமானதொரு யுத்தத்தை உலகம் இதுவரை கண்டதில்லை. சோவியத் கம்யூனிசம் அழிந்துவிடும் என்றும் அதேசமயத்தில் தங்களுடைய போட்டியாளனாகவும் எதிரியாகவுமிருந்த ஹிட்லர் ஜெர்மனியும் சோவியத் யூனியன் பிடியில் சிக்கி அடிபட்டுப்போவான் என்றும் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் எகாதிபத்திய நாடுகள் திட்டமிட்டு செயலாற்றின.

பாசிசம் அனைத்து மக்களையும் அழிக்கும் என்று சோவியத் யூனியன் மேற்கத்திய நாடுகளை எச்சரித்தது. ஹிட்லருக்கு எதிராக பாசிஸ்ட் எதிர்ப்பு முன்னணியை அமைக்க முன்வருமாறு சோவியத் யூனியன் மேற்கத்திய ஏகாதிபத்திய நாடுகளையும் அழைத்தது.

ஆனால், மேலை நாடுகள் அதை ஏற்க மறுத்துவிட்டன. செக்கோஸ்லாவாகியா, போலந்து போன்ற பல ஐரோப்பிய நாடுகளை ஹிட்லர் ஆக்கிரமித்து அடிமைப்படுத்தினான். இந்த நாடுகளை ஹிட்லருக்கு பலியாக கொடுத்தன மேலை நாடுகள். இந்த நாடுகளை பிடித்தபின் ஹிட்லர் அடுத்தாற்போல் சோவியத் யூனியன் மீது பாய்வான் என்று அவை எதிர்பார்த்தன. மேலை நாடுகளின் நயவஞ்சகத் திட்டத்தை முறியடிக்கும் வகையிலும், தன்னுடைய பாதுகாப்பை பலப்படுத்திக் கொள்வதற்கு அவசியமான அவகாசத்தை தேடிக் கொள்வதற்காகவும், சோவியத் ராஜதந்திரம் முயற்சித்தது. சூழ்ச்சியை சூழ்ச்சியால் முறியடிக்க பரஸ்பரம் ஒருவரை ஒருவர் ஆக்ரமித்துக் கொள்வதில்லை என்றதொரு ஒப்பந்தத்தை சோவியத் யூனியன் ஹிட்லர்ஜெர்மனியுடன்செய்துகொள்ள வேண்டியதாயிற்று.

 இது, பாசிஸ்ட் ஜெர்மனிக்கு துணை போவதாகும் என்று மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள் கதறின. பாஸிசத்தை முறியடிக்க முன்னணி அமைக்க வாருங்கள் என்று சோவியத் யூனியன் பன்முறை வற்புறுத்தி அழைத்தபோது மறுத்து விட்ட மேற்கத்திய ஏகாதிபத்திய நாடுகளின் கொள்கையே, இந்த உடன்பாட்டை செய்துகொள்ள வேண்டிய நிர்பந்தத்தை சோவியத் யூனியனுக்குத் ஏற்படுத்தியது என்பதை உலக பாட்டாளி மக்கள் தெளிவாக உணர்ந்தனர்.

சோவியத் நாட்டைத் தாக்குவதற்கு ஏகாதிபத்திய நாடுகளினால் வளர்க்கப்பட்ட ஹிட்லர், தன்னை வளர்த்த பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் மீதும் யுத்தப் பிரகடனம் செய்தான். வளர்த்த கடா அவர்கள் மார்பிலேயே பாய்ந்தது. இதனால் இரண்டாவது உலகப் போர் 1938இல் ஆரம்பித்து விட்டது. பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய ஏகாதிபத்திய நாடுகள் ஒருபுறமும், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய பாசிஸ்டு நாடுகள் மறுபுறமும் போரில் குதித்தன.

உலக முதலாளித்துவ அமைப்பு, ஏகாதிபத்திய பகுதியாகவும், பாசிஸ பகுதியாகவும் போரில் இறங்கின. தனக்குச் சாதகமான தருணம் பார்த்து ஹிட்லர் சோவியத் பூமியைத் தாக்குவான் என்று சோவியத் தலைமைக்கு நிச்சயமாக தெரியும். எனவே கிடைத்த அவகாசத்தைப் பயன்படுத்திக் கொண்டு சோவியத் யூனியன் தன் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தியது.

சோவியத் மீது பாய்ந்தான்

எதிர்பார்த்தபடியே ஹிட்லர், சோவியத் யூனியன் மீது திடீரென்று மாபெரும் தாக்குதலைத் தொடுத்தான். சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி, தோழர் ஸ்டாலின் தலைமையில், இந்த ஜீவ மரணைப் போராட்டத்தை உறுதியாகச் சந்தித்தது. முதல் கட்டத்தில், பின்வாங்கிக் கொண்டே எதிரியை மேலும் மேலும் உள்ளே இழுத்து, அவனுக்கு பலத்த சேதத்தை உண்டுபண்ணியது. ஹிட்லரால்  ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில், சோவியத் தேச பக்தர்கள் சக்திவாய்ந்த கொரில்லாப் போராட்டங்களை நடத்தி, எதிரியை நிலைகொள்ள விடாமல் தவிக்க வைத்தனர். சோவியத் மக்களின் வீரஞ்செறிந்த போராட்டம் உலக மக்களின் ஆதரவையும் பாராட்டுக்களையும் பெற்றது. 

ரஷ்யாவுக்கு ஏற்பட்டுள்ள அபாயம் நமக்கு ஏற்படும் அபாயமாகும் என்று பிரிட்டிஷ் பிரதமர் சர்ச்சில் அறிவித்தார். ஜெர்மனியை எதிர்ப்பதற்கு முன்வர மறுத்த மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள் இப்பொழுது தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவே  சோவியத் யூனியனுடன் சேர்ந்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சோவியத் யூனியன் முன்பிருந்தே விரும்பிய பாசிஸ்ட் எதிர்ப்பு முன்னணி இப்பொழுதுதான் உருவானது. கோரமான போர்களில் சோவியத் படைகள் பாசிஸ்ட் ஜெர்மனியை பலவீனப்படுத்தின. லெனின்கிராட், ஸ்டாலின்கிராட், மாஸ்கோ மற்றும் இதர போர் முனைகளில் லட்சக்கணக்கான சோவியத் வீரர்கள் தங்களின் உயிர்களைத் தியாகம் செய்து எதிரியை தடுத்து நிறுத்தினர். லட்சக்கணக்கில் எதிரிப்படைகளை அழித்தனர்.

சோவியத்தின் சாதனை

சோவியத்தின் பிரம்மாண்டமான யுத்த நடவடிக்கைகள் உலகத்தை வியக்கச் செய்தன. விடுதலைபெற்றுவிட்ட உழைப்பாளி மக்களின் பொதுவுடைமை சமுதாயமும், அரசும் மட்டுமே இத்தகைய சாதனைகளை புரியமுடிந்தது என்பதை மனித வர்க்கம் கண்டது. சோவியத் யூனியன் மீது ஜெர்மனியின் வெறித் தாக்குதலின் வேகத்தை மட்டுப்படுத்த, ஜொமனியின் மேற்குப் பகுதியில், சோவியத்தின் நேச நாடுகளாகிய அமெரிக்கா, பிரிட்டன் ஆகியவை ஐரோப்பாவின் மேற்குப் பகுதியில் தங்களின் துருப்புகளை இறக்கி, எதிரிக்கு எதிராக இரண்டாவதுபோர்முனையைத் துவக்க வேண்டுமென்று சோவியத்யூனியனும் முற்போக்கு சக்திகளும் கோரின.

ஆனால் இரண்டாவது போர் முன்னயைத் துவக்குவதற்கு அமெரிக்கா, பிரிட் டன் அக்கறை காட்டவிலை. காரணம் என்னவென்றல், அவர்களின் பழைய நோக்கம்தான். அதாவது ஜெர்மனி, சோவித் யூனியனை அடித்து நொறுக்கி  பலவீனப்படுத்த வேண்டும். அதே நேரத்தில் சோவியத் யூனியன், ஜெர்மனியை சக்தி இழக்கும்படி செய்துவிட வேண்டும். அப்படிப்பட்ட நிலைமை ஏற்படும்பொழுது, அமெரிக்காவும் பிரிட்டனும் தமது படைகளை இறக்கி ஐரோப்பா முழுவதையும் தங்கள் ஆதிக்கத்தில் கொண்டு வந்துவிடவேண்டும் என்பதுதான் அந்த நோக்கம். ஆனால், உள்ளதற்கே  ஆபத்து வந்துவிட்டது.

இரண்டு பக்க தாக்குதலுக்கு ஆளான ஹிட்லரின் ஜெர்மனி வீழ்ந்தது. இதுவே ஏகாதிபத்திய நேச நாடுகளின் நேச பார்வையாக நேச பாதையாக இருந்தது. நாளை சோவியத் தலைமை இவர்களின் இந்த சூழ்ச்சியையும் முறியடித்தது. பலமான எதிர் தாக்குதல்களை தொடுத்து ஜெர்மன் படைகளை சோவியத் பூமியிலிருந்து விரட்டியது ஜெர்மனியின் மூல பலத்தை அழித்தது. 

அதைத் தொடர்ந்து சோவியத் பூமி முழுவதையும் விடுவித்துவிட்டு ஜெர்மனியால் அடிமைப்படுத்தப்பட்டிருந்த போலந்து, ருமேனியா, செக்கோஸ்லோவாக்கியா, யூகோஸ்லோவியா, பல்கேரியா, ஹங்கேரி, அல்பேனியா போன்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகளை செஞ்சேனை ஹிட்லரின் கொடுமையில் இருந்து விடுவித்தது.

வென்றது கம்யூனிசம்

இந்த நாடுகளின் மக்கள் சோவியத் யூனியனுக்கு நன்றி செலுத்தினார்கள். இந்த நாடுகளில் எல்லாம் தொழிலாளர்களும் ஜனநாயகவாதிகளும் கம்யூனிச கட்சியின் தலைமையின் கீழ் விடுதலை அரசுகளை ஏற்படுத்தி, நாளடைவில் அவற்றை கம்யூனிஸ்ட் அரசுகளாக அமைத்தார்கள். சோவியத் செஞ்சேனை ஜெர்மனியை நோக்கி முன்னேறியது. இதைக்கண்ட மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள் பயந்து அலறின. சோவியத் யூனியனை பலவீனப்படுத்தவே இரண்டாம் போர்முனையை அவர்கள் துவக்காமல் இருந்தனர். சோவியத் செஞ்சேனையோ ஜெர்மனியின் தலைநகரான பெர்லினை கைப்பற்றி வெற்றி வாகை சூடியது. சோவியத் படைகளால் விடுதலை செய்யப்பட்ட ஜெர்மன் பிரதேசம்தான் இன்று ஜெர்மன் ஜனநாயக குடியரசாக கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையின் கீழ் இயங்குகிறது. எந்த ஜெர்மன் பூமி கம்யூனிஸ்ட் எதிர்ப்புக்கு பாசிசத்தை உருவாக்கியதோ அதே ஜெர்மன் பூமியின் ஒரு பகுதியில் இன்று கம்யூனிசம் வெற்றிவாகை சூடிவிட்டது. ஜெர்மனியை தோற்கடித்த பின் சோவியத் யூனியன் பாசிஸ்ட் ஜப்பானுக்கு எதிராக யுத்த பிரகடனம் செய்தது. ஆசியாவின் தூரக் கிழக்கு பகுதிகளான சீனாவிலும் கொரியாவிலும் இருந்த ஜப்பானின் படைகள் அனைத்தும் களமிறங்கின.

இதன்மூலம் மகத்தான சீன தேசமும் கொரிய நாடும் தங்களது தேச விடுதலையை பெறுவதற்கு சோவியத் யூனியன் உதவி செய்தது. இதன் விளைவாகவே பின்னர் சீன மக்களின் போராட்டம் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் வெற்றி பெற்றது. 1949 அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி அன்று சீன மக்கள் குடியரசை அமைத்தது. வடகொரியாவும் விடுதலை அடைந்தது.

சோசலிச அமைப்பு 

எனவே, இந்த யுத்தத்தில் சோவியத் யூனியனின் வெற்றியின் காரணமாக ஒரு நாட்டில் இருந்த சோசியலிசம் பல நாடுகளுக்கும் பரவியது. ஒரே ஒரு சோசலிச நாடாக இருந்த சோவியத் யூனியனுக்கு பதிலாக, பல்வேறு சோசலிச நாடுகள் அடங்கிய ஒரு உலக சோசலிச அமைப்பு வரலாற்று ரீதியில் உருவெடுத்தது.

1917 இல் சோசலிச புரட்சி ரஷ்யாவில் வெற்றி பெற்ற பொழுது, உலக முதலாளித்துவ அமைப்பின் பொது நெருக்கடியின் முதல் கட்டம் துவங்கியது. பல நாடுகளை கொண்ட சோசலிச அமைப்பு உருவானதை தொடர்ந்து, உலக முதலாளித்துவ அமைப்பின் பொது நெருக்கடியின் இரண்டாவது கட்டம் ஆரம்பமானது. சோவியத் வெற்றியினால் ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் தங்களை அடக்கி ஆண்ட ஏகாதிபத்திய நாடுகளுக்கு எதிராக தேச விடுதலை புரட்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். சோவியத் யூனியனின் உதவியினாலும் இதர சோசலிச நாடுகளின் ஆதரவாலும், 100 கோடி ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க மக்கள் ஏகாதிபத்திய நுகத்தடியில் இருந்து அரசியல் விடுதலை பெற்று, இன்று தங்கள் சுதந்திரத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்கும், பொருளாதார சுதந்திரத்தை அடைவதற்கும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நூறு கோடி மக்களின் விடுதலையை தொடர்ந்து, உலக ஏகாதிபத்திய அமைப்பு மேலும் பாதிக்கப்பட்டு, அதன் விளைவாக உலக முதலாளித்துவ அமைப்பில் பொருளாதார நெருக்கடியின் மூன்றாவது கட்டம் ஆரம்பமாகிவிட்டது. மேலும், சோவியத் யூனியனின் பாசிஸ்ட் எதிர்ப்பு வெற்றியின் காரணமாக, முதலாளித்துவ உலகம் முழுவதிலும் தொழிலாளி வர்க்க இயக்கங்களும், கம்யூனிஸ்ட் இயக்கங்களும் ஆழமாக வேரூன்றி வளர்ந்து வருகின்றன.

செங்கொடி இல்லாத நாடு இன்று உலகத்தில் இல்லை. இந்த வளர்ச்சி மனித வர்க்கத்தை எல்லா பாதைகளும் கம்யூனிசத்திற்கே இட்டு செல்கின்றன என்ற நிலையை உலகத்தில் ஏற்படுத்தி விட்டது. பாசிஸ்ட் எதிர்ப்பு யுத்தத்தில் சோவியத் யூனியன் பெற்ற மகத்தான வெற்றியின் காரணமாக ஏற்பட்ட இந்த விளைவுகள் இன்றைய சகாப்தத்தின் எதிர்காலத்தை நிர்ணயித்து வருகின்றன.

போர் முனையில் கலைஞர்கள்

நாஜி ஜெர்மனிக்கு எதிரான சோவியத் மக்களின் மாபெரும் தேசபக்தி யுத்த வரலாற்றில் கலைஞர்களுக்கும், கலாச்சார துறை ஊழியர்களுக்கும் முக்கியமான இடம் உண்டு. பாடகர்களும், இசைவாணர்களும், கவிஞர்களும், புகழ்பெற்ற நாடக, சினிமா நடிகை, நடிகர்களும் போர்முனைகளுக்கு சென்று போர் வீரர்களுக்கும், காயமுற்று மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த போர் வீரர்களுக்கும் கலை நிகழ்ச்சிகள் நடத்தி மகிழ்ச்சியூட்டி வந்தனர்.

மார்ஷல் ஆந்திரி ஏரெமென்கோ பின்னர் எழுதிய நினைவு குறிப்புகளில், இதுபற்றிக் குறிப்பிட்டிருப்பதாவது; “யுத்தத்தின் போது பத்து முனைகளில் நான் கமாண்டராக இருந்தேன். அவை ஒவ்வொன்றிலும் கலைஞர்கள் கலைநிகழ்ச்சிகள் நடத்துவதைக் கண்டேன். போர் வீரர்களுக்கு உற்சாகமூட்டி அவர்களுடைய மன உறுதியை உயர்த்துவதில் கலைஞர்கள் பெரும் தொண்டு ஆற்றினர்” என்று ஏரெமென்கோ குறிப்பிட்டு இருக்கிறார். போர்முனையில் இவ்விதம் தொண்டாற்றிய கலைஞர்களில் புகழ்பெற்ற “ராஸ்கோ ஆர்ட் தியேட்டர்” நாடக நடிகர்களும் இருந்தனர். மாபெரும் தேசபக்த யுத்தத்தின் போது சோவியத் போர்முனைகளில் 1500க்கும் அதிகமான நாடகம், இசை முதலிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

புஷ்கின், டால்ஸ்டாய், செக்காவ், ஆஸ்த்ரோவஸ்கி, மாயாகோவ்ஸ்கி, த்வார் தோவ்ஸ்கி, ஸ்பார் தோவாஸ்கி முதலியவர்களின் படைப்புகள் இந்த கலை நிகழ்ச்சிகளில் இடம்பெற்றன. முன்னணி போர் வீரர்கள் எங்கும் கலைஞர்களை உற்சாகத்துடன் வரவேற்றதாக ஆர்ட் தியேட்டரின் பிரபல நடிகையான அல்வா தரசோவா தம் நினைவு குறிப்புகளில் எழுதி உள்ளார். போர்முனைகளுக்கு சென்ற இந்த தியேட்டரின் மற்றொரு கலைஞரான அனஸ் தாஸ்யாஜ் யோர்கியோகி மேவ்ஸ்காயா, யுத்தத்தில் தாம் ஆற்றிய தொண்டு பற்றி எழுதுகையில், துப்பாக்கி சுடக் கற்றுக்கொண்டு, போர்முனைக்கு சென்று நாஜிகளை எதிர்த்து போராடத் தாம் விரும்பியதாகவும், ஆனால் அதற்கு அனுமதி கிடைக்காததால், கலை நிகழ்ச்சிகள் மூலம் போர் முனையில் வீரர்களுக்கு உற்சாகமூட்டவாவது முடிந்தது பற்றி மகிழ்ச்சி அடைவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். 

மனித குலத்தின் பாதுகாவலன்

சோவியத் யூனியனின் வெற்றிதான் இன்று சோசலிச முகாமும், உலக தொழிலாளி வர்க்க இயக்கமும், தேச விடுதலைப் புரட்சியும் இன்றைய உலகத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் சக்திகளாக ஆகிக்கொண்டு வருகின்றன என்ற பேருண்மைக்கு அடித்தளமாகும். பாசிஸ்ட் அபாயத்திலிருந்து மனித குலத்தை பாதுகாத்த பெருமை சோவியத் யூனியனையே சாரும். சோசலிச உலக அமைப்பின் வெற்றிகளை கண்டு மூர்க்கத்தனமான கோபத்துடன் சோவியத் யூனியனையும் இதர சோசலிச நாடுகளையும் அழிப்பதற்கும், உலக மக்கள் மீது மீண்டும் தன் ஆதிக்கத்தை ஏற்படுத்துவதற்கும், அணு ஆயுத யுத்தத்திற்கு தீவிரமாக தயாரிப்பு செய்து வரும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் யுத்த சதி திட்டங்களை முறியடிப்பதிலும், உலக சமாதானத்தை பாதுகாப்பதிலும் சோவியத் யூனியனும் இதர சோசலிச நாடுகளும் இன்று முன்னணியில் இருக்கின்றன. சோவியத் யூனியனுடன் ஒன்றுபட்டு நின்று அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் யுத்த சதிகளை முறியடிப்பதும், உலக சமாதானத்தை பாதுகாப்பதும் இந்திய மக்கள் அனைவரின் பிரதான கடமையாகும்.

(ச. லெனின் தொகுத்துள்ள “என். சங்கரய்யா – தேர்ந்தெடுக்கப்பட்ட உரை, பேட்டி, கட்டுரை, ஆவணம்” எனும் புத்தகத்தில் இக்கட்டுரை வெளியாகியுள்ளது.)



Leave a comment