மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


மோடியின்  பத்தாண்டு   ஆட்சியில் பெண்களின் நிலை


பேரா. ஆர். சந்திரா

மானுட விடுதலை என்பது பெண்களின் விடுதலையுடன்  இணைந்தது. சமுதாயத்தின் ஒரு பாதியாக இருக்கும் பெண்கள்  ஒடுக்கப்படும் வரை, மானுட விடுதலை சாத்தியம் இல்லை என்பதை மார்க்சும், ஏங்கல்சும், லெனினும் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளனர். ஒரு சமுதாயம் முன்னேறுவதை கணிப்பதற்கு அங்கே வாழும் பெண்களின் அந்தஸ்தை ஓரு சிறந்த அளவுகோலாக கருத வேண்டும். விடுதலை போராட்டமும் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியும் சுதந்திர இந்தியாவில் மக்கள் இயக்கங்களும்  இந்தியாவில் பெண்கள் நிலையில் முன்னேற்றத்தை முன்னெடுத்துள்ளன. பெண்கள் உரிமை தொடர்பான சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. இந்திய விடுதலைக்கு முன்பும், பின்பும், பெண்கள் முன்னேற்றத்திற்கென ஏராளமான ஆண்களும், பெண்களும் குரல் கொடுத்துள்ளனர். குறிப்பாக, இடதுசாரி மாதர் அமைப்புகளும், இடதுசாரி கட்சிகளும், இதர மகளிர் அமைப்புகளும் பெண் விடுதலை தொடர்பாக, தொடர்ந்து போராடியதன் விளைவாக, இன்று பெண்கள் ஓரளவு முன்னேறி வருகின்றனர். பெண்கள் உரிமைகள் பற்றிய புரிதலும் ஓரளவு ஏற்பட்டுள்ளது. ஆனால், கடந்த பத்தாண்டுகளில், மத்தியில் மோடி தலைமையிலான பா. ஜ. க அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து, போராடிப் பெற்ற பல உரிமைகள் இன்று மறுக்கப்படுவதையும் , மறக்கடிக்கப்படுவதையும் காண்கிறோம்.

மோடி தலைமையிலான  பாஜக அரசு  என்பது மோடி என்ற தனி நபரின் ஆட்சி அல்ல. வலதுசாரி, பிற்போக்கு சித்தாந்தங்களை  கடைபிடிக்கும் ஆர்எஸ்எஸ் என்ற அமைப்பின் கோட்பாடுகளை பின்பற்றும் அரசு அது. பெண்கள் பற்றி ஆர். எஸ். எஸ். சொல்லுவதென்ன? மனுஸ்மிருதியில் பெண்கள் பற்றி சொல்லப்பட்டிருப்பதை ஆர். எஸ். எஸ். வலியுறுத்துகிறது. “எப்படிப்பட்ட உரிமைகளையும் பெற பெண்கள் தகுதியானவர்கள் அல்ல  என்பதுடன், அனைத்து முடிவுகளும் ஆண்களால், தந்தை/கணவன்/ ஆண் சகோதர் மற்றும் மகன் ஆகியோரால் எடுக்கப்பட வேண்டும். பெண்களை கண்டிப்பான கண்காணிப்புடன் வைத்திருக்க வேண்டும். அவர்கள் மீதான கட்டுப்பாடுகளை மீறினால் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் .ஆண்களுடன்  பெண்கள் வைத்திருக்கும் உறவை கட்டுபடுத்துவதை விட முக்கியமானது எதுவும் இல்லை, கீழ்சாதி ஆண்களுடன் உறவு வைத்துக் கொண்டால் சித்திரவதை மற்றும் மரணத்தால் தண்டிக்க வேண்டும். பெண்களுக்கு சொத்து, செல்வம் அளிக்க கூடாது.  தனது கணவன் குடிகாரன், பைத்தியம் அல்லது கொலைகாரனாக இருந்தாலும் பெண் அவனை போற்றி வணங்க வேண்டும். கணவன் இறந்தால் அவனுடைய சிதையோடு அவர்களும் எரிந்து போக வேண்டும்.” பெண்களைப் பற்றி இவ்வளவு மோசமான பார்வை கொண்ட மனுவாத சித்தாந்தத்தை  பா. ஜ. க அரசு  அமுல்படுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. இதற்காக, மக்களை மதரீதியாக, சாதிரீதியாக, பிளவுபடுத்தி, மனுவாத கொள்கையால் பாதிக்கப்பட்ட பெண்களையே தனக்கு ஆதரவாக திரட்டும் பணியை பாஜகவும் சங்பரிவார அமைப்புகளும் செய்து வருகின்றன.  மனுவாத நிகழ்ச்சிநிரலை அமுல்படுத்த அரசின் பல்வேறு அமைப்புகளை ஆர்எஸ்எஸ் பயன்படுத்துகிறது. அரசியல் அமைப்பு சட்டத்தின் மீதே தாக்குதல் நடக்கிறது . கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாகவும், இந்துத்துவ அரசியலை திணித்தும் செயல்படும் ஒன்றிய அரசால் பெண்கள் நிலை மிகவும் மோசமடைந்துள்ளது.

சமூக உற்பத்தியில் பெண்கள்

மோடி அரசின் பொருளாதார கொள்கைகள் கடந்த பத்தாண்டுகளில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. பொருளாதார சுதந்திரம் பெண் விடுதலைக்கு அடித்தளம் என கூறப்படுகிறது. வீட்டை விட்டு வெளியே சென்று வேலை செய்து, வருவாய் ஈட்டும் பெண்கள் சமூகம் பற்றிய கூடுதல் புரிதலுடன் செயல்பட இயலும். “நச்சுப் பிடித்த வீட்டு வேலைகளில் இருந்து பெண்களை விடுவித்து, சமூக உற்பத்தியில் அவர்களை பங்கெடுக்க செய்ய வேண்டும்” என லெனின் வலியுறுத்தினார். கடந்த பத்தாண்டுகளில் எவ்வளவு பெண்கள் வேலை இழந்துள்ளனர் என்பது தொடர்பாக துல்லியமான புள்ளி விவரங்கள் இல்லை. இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம் [CMIE]  கொடுக்கும் புள்ளிவிவரங்கள் பெண்களின் வேலைவாய்ப்புகள் குறைந்து வருவதை சுட்டிக்காட்டுகின்றன. 2018 கணக்குப்படி கிராமப்புறங்களில் 6.5 மில்லியன் பெண்களும், நகர்ப்புறங்களில் 2.3 மில்லியன் பெண்களும் வேலை இழந்துள்ளனர் என்று தெரிகிறது. தேசிய மாதிரி ஆய்வறிக்கை 2012இல் 9.7% ஆக இருந்த வேலையின்மை விகிதம் 2018இல் 17.3% என உயர்ந்துள்ளது என குறிப்பிடுகிறது. பெண்களின் வேலை இழப்பு கிட்டத்தட்ட இருமடங்காகி விட்டது.  பண மதிப்பு இழப்பு நடவடிக்கையால் ஏராளமான சிறுகுறு மற்றும் முறைசாரா துறை தொழில்கள் பாதிப்புக்கு உள்ளாகின. பல குடும்பங்களில் ஆண் பெண் இருவருக்கும் வேலை இழப்பு. பல இளம் பெண்களின் திருமணம் நின்று போனது. பலர் உயிரிழந்தனர்.  ஆனால் மோடி கவலைப்படவில்லை. இரங்கல் கூட தெரிவிக்கவில்லை.

கோவிட்  பெருந்தொற்று  ஏற்பட்ட பொழுது மாநில அரசுகளைக்  கலந்து ஆலோசிக்காமல் மோடி  அரசு தன்னிச்சையாக முடிவெடுத்ததன் விளைவாக,  புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பட்ட இன்னல்களை சொல்லி மாளாது. ஏராளமான பெண்கள் தங்கள் சிறு குழந்தைகளையும் தன் உடைமைகளையும் சுமந்து கொண்டு, நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் நடந்து சென்றதைப் பார்த்தோம். செல்லும் வழியிலேயே இறந்து போனவர்கள் ஏராளம்.

வேலை இழப்பு

கடந்த நான்கு ஆண்டுகளில் எவ்வளவு வேலை இழப்பு என்பது பற்றி முறையான தகவல் இல்லை . கோவிட்  தொற்றுக்கு  பிந்தைய காலம் பற்றி உலக தொழிலாளர் நிறுவனம் நடத்திய ஆய்வில், 4,520 தொழில்கள் முடங்கிவிட்டன என தெரிகிறது. இளைஞர்களும் பெண்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். குடும்ப வருவாய் இழப்பினால், பல பெண்குழந்தைகள் படிப்பை நிறுத்தி கிடைத்த வேலையை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டனர். பிஎம்கேர்ஸ்  நிதியிலிருந்து எவ்வளவு பயணம் நிவாரணமாக கொடுக்கப்பட்டது பற்றிய தகவல் கிடையாது. பொருளாதார மீட்பு நடவடிக்கைகள், அவை செயல்படுத்தப்பட்ட விதம், அவற்றிற்கான நிதி ஒதுக்கீடு பற்றி முறையான புள்ளி விவரங்களே இல்லை. கடந்த  ஆறு ஆண்டுகளில் குழந்தை உழைப்பு அதிகமாகி உள்ளது என யூனிசெஃப் சுட்டிக்காட்டுகிறது. கிராமப்புற மக்களுக்கு வேலை கிடைக்கச் செய்த ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை ஒன்றிய அரசு வெட்டிச் சுருக்கியுள்ளது. மாநில அரசுகளுக்கு உரிய  நிதி வழங்கப்படவில்லை. பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் மிகப்பெரிய நெருக்கடியை சந்திக்கின்றன. இத்திட்டத்தில் பயன்பெறுவோர் பெரும்பாலும் பெண்களே. இத்திட்டத்தை ஊற்றி மூடுவதால் மிக கடுமையான பாதிப்புக்கு பெண்கள் ஆளாகியுள்ளனர் என்பதைக் காண முடிகிறது. .ஆண்டுக்கு இரண்டு கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்த பின்னர், பாஜக கார்ப்பரேட்டுகளுக்கு சலுகைகளை வாரி வழங்குகிறது . ஆனால் கோடிக்கணக்கான வேலையில்லா ஆண்கள்/ பெண்கள் பற்றி கவலைப்படாத அரசு கொடூரமான முறையில் சாதாரண மக்களக்கு எதிராக  செயல்படுகிறது. மோடி அரசின் . ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்கில் இந்தியா எல்லாம் என்ன ஆயிற்று? எவ்வளவு ஆண்கள் பெண்கள்  அவற்றால் பயனபெற்றுள்ளனர் என்பது பற்றி புள்ளிவிவரங்கள் இல்லை. கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை அதிகரித்துள்ளது. இதை வெளிக்கொணரும் அதிகாரிகள் பணிமாற்றம் செய்யப்படுகின்றனர்.  அல்லது அவர்களே ராஜினாமா செய்கின்றனர்.  மத்திய புள்ளியியல் கழகத்தின் உயர் அதிகாரிகள் ராஜினாமா செய்துள்ளனர். தங்கள் ஆட்சியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக காண்பிப்பதற்காக, புள்ளிவிவரங்களையே மாற்றுவதும் நடக்கிறது. அதற்கு ஆதரவாக செயல்பட மறுக்கும் அதிகாரிகள்  பணியில் தொடர முடிவதில்லை .

பொதுத்துறை நிறுவனங்கள், கல்வி, சுகாதாரம் அனைத்தும் தனியார்மயமாகும் பொழுது  நிரந்தர பணியிடங்கள் காண்டிராக்ட்டுக்கு விடப்படுகிறது. இடஒதுக்கீடு மூலம் கல்வியும் சிறிதளவு கிடைக்கும் வேலைவாய்ப்புகளும் தலித், பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட்ட பெண்களிடமிருந்து பறிக்கப்படுகிறது. தூய்மைப்பணியை பொருத்தவரை 80 சதம் பெண்கள் ஈடுபடுகின்றனர். இதுவும் இன்று அவுட்சோர்சிங் செய்யப்படுவதால், குறைந்தகூலி, பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றுவது என்பது நவீன இந்தியாவின் மிகப் பெரிய அவமானம் வெட்கக்கேடு . இந்த பணியை செய்யும் பெண்கள் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு மோசமான நிலைமையில் உள்ளனர். பா. ஜ. க ஆட்சி செய்யும் மாநிலங்களில்தான் இது மிகவும் அதிகமாக இருக்கிறது. குறைந்தபட்ச  தேவையான, கையுறைகள் கூட இப்பெண்களுக்கு தரப்படுவதில்லை. தோல் நோய்களின் தாக்குதல் மிக அதிகம். இந்த கொடுமைக்கு  முற்றுப்புள்ளி வைக்க, கேரளாவில் சிலந்தி வடிவ ரோபோவை  கொண்டு இப்பணியை செய்கின்றனர். ஸ்வச் பாரத்  பற்றி பேசுபவர்கள், அம்பேத்கரை வாக்கு வங்கிக்கு பயன்படுத்துவோர் எங்கே போனார்கள்?  

அச்சம் நிறைந்த வாழ்வு         

அரசியல் தளத்தில் மோடி அரசு மேற்கொண்ட பல நடவடிக்கைகள், சீர்திருத்தங்கள் என்ற பெயரில் கொண்டு வரப்பட்ட மாற்றங்கள், பெண்களை வெகுவாக பாதித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைப் பொறுத்தவரை கடந்த பத்தாண்டுகளில் மோடி அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள், பெண்கள் மீது படுமோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. தீவிரவாதிகள் என்ற பெயரில் அழைத்து செல்லப்படும் ஆண்கள், குறிப்பாக இளைஞர்கள் கதி என்ன என்று தெரியவில்லை. அவர்களின் தாய், மனைவி, குழந்தைகள் நிலை, அவர்கள் எப்படி வாழ்கிறார்கள், குடும்பத்தை எப்படி நடத்துகிறார்கள் என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாகும். அரசியல்சாசனப்பிரிவு 370ஐ ரத்து செய்த பின்னர்  ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டு, இணைய சேவை துண்டிக்கப்பட்டு, மின்சாரம் மற்றும் அடிப்படை வசதிகள் இன்றி அம்மாநிலப் பெண்கள் சொல்லொணா துயரத்தையும், பாதுகாப்பின்மையையும் அனுபவித்தனர். எப்பொழுது தாக்கப்படுவோம் என்ற அச்சத்துடன் அவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

2019இல் மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர், அரசியல் சாசனத்தின் மதச் சார்பின்மையை மீறி குடியுரிமை திருத்த சட்டத்தை மோடி அரசு நிறைவேற்றியது. நாடு முழுவதும் முஸ்லிம் பெண்கள் காலவரையற்ற தர்ணாவில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தேசவிரோதிகள் என முத்திரை குத்தப்பட்டனர். காவல்துறை வன்முறையில் ஈடுபட்டது. தலைநகர் தில்லியில் போராளிகள் மீது பாஜக குண்டர்கள் தாக்குதல் நடத்தினர். முஸ்லிம்களின் வீடுகள் எரிக்கப்பட்டன. ஏராளமான பெண்கள் காயமுற்றனர். இப்போராட்டத்தில் ஈடுபட்ட பல பெண்கள்  மீது  தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டனர். தாக்குதலை நடத்தியவர்களை அரசு கைது செய்யவில்லை. வெறும் 15 பெண்களுடன் துவங்கிய இந்த போராட்டம்,  ஒரு கி. மீ தூரத்திற்கு பந்தல் போடும் அளவுக்கு ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்ற போராட்டமாக மாறியது. நாடுமுழுவதும் ஆயிரக்கணக்கில் பெண்கள் பங்கேற்ற மிக முக்கியமான போராட்டம் இது  என்றால் மிகையாகாது. இந்த போராட்டத்தின் முகமாக 82 வயது பில்கிஸ் பாட்டி மாறினார். டைம்ஸ் பத்திரிக்கை 2020ஆம் ஆண்டு உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய 100 பெண்கள் பட்டியலில் பில்கீஸ் பாட்டியும் இடம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. முஸ்லிம் பெண்களுக்காக   முதலை கண்ணீர் வடிக்கும் மோடி அரசு முத்தலாக்கு முஸ்லிம்  பெண்களை பாதிக்கிறது எனக்கூறி அதற்கு தடை விதித்ததுடன், தலாக் சொல்லும் முஸ்லிம் ஆணை சிறையில் அடைக்க முடியும் என சட்டம் இயற்றியது. இப்படி சிறுபான்மையினருக்கு எதிரான பல நடவடிக்கைகளை மோடி அரசு மேற்கொண்டுள்ளது. 

விவசாயிகளின் கனவு

2014இல் மோடி மராட்டிய மாநிலத்தில் பிரச்சாரம் செய்யும்பொழுது, “விவசாயிகளே உங்கள் கனவே என் கனவு. நீங்கள் இனி தற்கொலை செய்யும் நிலை ஏற்படாது.  உங்கள் வாழ்வை முன்னேற்றாமல் நான் உறங்கமாட்டேன்” என்றார். அவர் ஆட்சிக்கு வந்த அடுத்த மூன்று ஆண்டுகளில் 12,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். விவசாயிகள் தற்கொலை பற்றி ஒன்றிய அரசு தகவல் தர மறுக்கிறது.  பெண்கள் விவசாயிகளாக கருத்தப்படாத சூழலில், அவர்கள் தற்கொலை செய்து கொண்டால் கணக்கில் வராது. நிவாரணமும் கிடையாது. தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்ப பெண்கள் பற்றிய ஆய்வுகள் அவர்களின் மிக மோசமான வாழநிலையை விளக்குன்றன. விவசாயிகள் வருவாயை இரட்டிப்பாக ஆக்குவதாக கோரி  மூன்று மோசமான விவசாயிகளின் நலன்களுக்கு எதிரான சட்டங்களை மோடி அரசு கொண்டு வந்தது.  குளிர், மழை, வெயில் என எதையும் பார்க்காமல், வீரம் செறிந்த  போராட்டத்தை விவசாயிகள் நடத்தினர். கணிசமான பெண்களும் இதில் பங்கேற்றனர். விவசாயிகளை தேசதுரோகிகள் என மோடி அரசு கூறியது. உலக அளவில் இந்த போராட்டம் பேசப்பட்ட பொழுது இது உள்நாட்டு விவகாரம் என கூறியது. இப்போராட்டத்தில் உயிர் துறந்த விவசாயிகள் குடும்பங்களை பற்றி, அப்பெண்கள் நிலைபற்றி மோடி அரசு கவலைப்படவில்லை. இறுதியில் மோடி அரசு பின்வாங்கியது விவசாயி மக்களின் வீரஞ்செறிந்த போராட்டத்திற்குக் கிடைத்த பெரிய வெற்றியாகும்.

தங்களுடைய அரசியல் ஆதாயத்திற்காக, எதையும் செய்யத் தயாரான கட்சி பாஜக. மத அடிப்படையில் மக்களை பிரித்து, வாக்குகளை பெற என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதற்கு சிறந்த  எடுத்துக்காட்டு மணிப்பூர் பிரச்சினையை பாஜக அரசு கையாண்ட விதம் ஆகும். குக்கி பிரிவினர் பெரும்பாலும்  கிறித்துவ மதத்தை சேர்ந்தவர்கள்.  மெய்தி இன மக்கள்  பெரும்பாலும் இந்து மதத்தை சேர்ந்தவர்கள். மெய்தி மக்களுக்கு எஸ். டி அந்தஸ்து கொடுக்கப்பட்டால், தங்கள் வாழ்வு பாதிக்குமென குக்கி  மக்கள் அஞ்சினர். நீண்டகாலமாக இரு பிரிவினருக்கும் இடையே நிலவிய  பகை, மே  மாதம் வெடித்தது. அதைக் கட்டுப்படுத்துவதற்கு பதிலாக, அரசு வன்முறையை வேடிக்கை பார்த்தது. இரண்டு குக்கி  பெண்கள் ஆடையின்றி ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டது வைரலாக மாறியதும். நிலைமை மேலும் மோசமாகியது. இப்படி தினமும் 100 சம்பவங்கள் நடக்கின்றன என முதல்வர் அலட்சியமாக பதிலளித்தார்.  தேவாலயங்கள்  சூறையாடப்பட்டன. சில கோவில்களும் தாக்கப்பட்டன. பெண்கள் மிக மோசமான முறையில் பாலியல் வன்முறைக்கு ஆளாகினர். எதிர்க் கட்சிகள் முதல்வர் பதவி விலக வேண்டுமென்றனர். பிரதமர் மோடி வாயையே திறக்கவில்லை. பாஜக முதல்வர்  பதவி விலகவில்லை. இதுதான் பாஜக  பெண்களை பாதுகாக்கும் லட்சணம்.

33 சதம் இட ஒதுக்கீடு கோரிய போராட்டங்கள் இருபது ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்துள்ளன. புதிய பாராளுமன்ற கட்டிடத்தில்  33 சத ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது. அது நடைமுறைக்கு வருவதற்கு இன்னும் பல ஆண்டுகள் ஆகும். மோடி இதை தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தி பெண்கள் வாக்குகளை பெற முயற்சி செய்யலாம்.

ஒரு பெண்ணை, அதுவும், பழங்குடி பெண்ணை ஜனாதிபதியாக்கி விட்டதாக மார்தட்டிக் கொள்ளலாம். ஆனால், மணிப்பூரில் பழங்குடி மக்கள் மீது நடந்த வன்முறையை ஒரு பெண்ணாக, அதுவும் ஒரு பழங்குடியினத்தவராக இருக்கும் குடியரசு தலைவர் கண்டிக்கவில்லை. புதிய பாராளுமன்றத்தை குடியரசு தலைவர் திறந்து வைக்கவில்லை  என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே மனுவாத இந்துத்துவ பாஜக அரசிற்கு பாலின சமத்துவத்தில்  நம்பிக்கை கிடையாது என்பதுதான் உண்மை.

சமூக கலாச்சார தளங்களில் மோடி அரசின் செயல்பாடு  மிக மிக பிற்போக்குத்தனமானதாகும். பரம்பரை சொத்தில் சமஉரிமை, சாதி, மத மறுப்பு திருமணம் உள்ளிட்ட, தன் விருப்பப்படி திருமணம் செய்து கொள்ளும் உரிமை, விவாகரத்து செய்யும் உரிமை போன்ற பல உரிமைகளை கொண்டிருந்த இந்து சட்ட மசோதாவை அம்பேத்கர் முன்வைத்த பொழுது, அதற்குக் கடும் எதிர்ப்பை தெரிவித்தவர்கள் மனுவாதிகள். வரதட்சிணை தடுப்புச்சட்டம் செயலற்றுள்ளது. பெண்கருகலைப்பு என்பது சட்டத்தையும் மீறி நடந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, பாஜக ஆளும் மாநிலங்களில் அதிகமாகவே நடக்கின்றன.  பெண்கள் மீதான  பாலியல் வன்கொடுமைகள் கடந்த பத்தாண்டுகளில் மிகவும் அதிகமாக நிகழ்ந்துள்ளன.

பெண்கள் மீதான வன்முறை

பாலியல் வன்கொடுமை செய்பவர்களை ஆதரிக்கும் பாஜக அணுகுமுறை வெட்கக்கேடானது. கத்துவாவில் 8 வயது  சிறுமி கூட்டாக பாலியல் வன்முறைக்கு உள்ளாகி கொல்லப்பட்டது மனசாட்சி உள்ளவர்களை உலுக்கிய சம்பவம். இத்தகைய கொடூர சம்பவம் கோவிலுக்குள் நடந்துள்ளது. இத்தகைய கொடூரத்தை செய்தவர்கள் பாதுகாப்பாக இன்னும் உலவி வருகிறார்கள். இன்று வரை இது பற்றி மோடி வாய் திறக்கவில்லை. தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது, “வாக்காளர்களே, நிர்பயாவை மனதில் வைத்துக் கொண்டு வாக்களியுங்கள்” என்று பிரச்சாரம் செய்தவர் மோடி. பாஜக ஆட்சியில் தினம் ஏராளமான பெண்கள் தாக்கப்படுகின்றனர். பெண்களுக்கெதிரான வன்முறைகளில் முதலிடம் வகிப்பது பாஜக ஆளும் உத்தரப்பிரதேசம் தான். தலித் பெண் 4 உயர் சாதி ஆண்களால்  ஹத்ராசில் கூட்டாக பலாத்காரம் செய்யபட்டு, கொலை செய்யப்பட்ட  பொழுது, பாதிக்கப்பட்டவர்கள் பொய் சொல்வதாக கூறி, குற்றம் செய்தவர்களை பாதுகாத்த பாஜக அரசை என்னவென்பது? இம்மாநிலத்தில், “ஸ்வாமி” சின்மயானந்தா பள்ளியில் படிக்கும் மாணவியை வனபுணர்வுக்கு ஆளாக்கிய பொழுது, புகார் கொடுத்த மாணவி சிறை செல்ல நேர்ந்தது.  இது போன்ற வழக்குகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் பத்திரிக்கையாளர்கள் தாக்குதலுக்கும் சிறை அடைப்புக்கும் உள்ளாகின்றனர். [பத்திரிக்கையாளர் கப்பன் எடுத்துக்காட்டு] குஜராத் கலவரத்தில்  மிக மோசமாக பாதிக்கப்பட்ட பில்கீஸ்  பானுவின் குடும்பத்தை ஒழித்து, அவளை பலாத்காரம் செய்து அவள் குழந்தையைக் கொன்ற குற்றவாளிகளுக்கு சுதந்திர தினத்தன்று விடுதலை கிடைக்கிறது. மாலை போட்டு குற்றவாளிகள் வரவேற்கப்படுகிறார்கள். மோடி அரசு வெட்கி தலை குனிய வேண்டும். பில்கீஸ்  உயிரை கையில் பிடித்துக் கொண்டு தன் எஞ்சிய வாழ்நாட்களை கடத்த வேண்டும். எத்தனை சம்பவங்கள்! பட்டியல் போட்டால் பக்கங்கள் நிறையும்.

விளையாட்டு துறையில் யார் பதக்கம் வென்றாலும், அவர்களுடன் போட்டோ எடுத்துக்கொள்ளும், மோடி அந்த வீராங்கனைகள் தாங்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறோம் என்று  ஆதாரத்துடன் கூறும் பொழுது  மௌனமாகிறார். மல்யுத்த வீராங்கனைகள் பாஜக தலைவருக்கு எதிராக ஆதாரங்களுடன் புகார் கொடுத்த பொழுது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை. காரணம், அவர் கணிசமான வாக்குகளை மோடிக்கும், அவரது அரசுக்கும் பெற்று தரமுடியும் என்ற கணிப்புதான். மல்யுத்த வீராங்கனைகள் டில்லியில் நடத்திய போராட்டத்தில், காவல் துறை அவர்களை தாக்கியதை  மறக்க இயலாது. உலக அளவில் இந்த விஷயம் பேசப்பட்டும், குற்றவாளி  பிரீஜ் பூஷண்  மீது எந்த நடவடிக்கையும் இல்லை. இது நாட்டிற்கே அவமானம். ஒலிம்பிக் பதக்கம் வென்ற சாக்க்ஷி  மாலிக்கிற்கே இந்த நிலை என்றால், வெளி உலகிற்கு தெரியாத பெண்கள் பாதிக்கப்படும் பொழுது என்ன நடக்கும்? அரசின் இந்த மெத்தனப் போக்கை கண்டித்து, பஜ்ரங் புனியா, மல்யுத்த வீரர் வீரேந்தர் சிங் ஆகிய இரு புகழ்மிக்க விளையாட்டு வீரர்கள் ஒன்றிய அரசு வழங்கிய பத்மஸ்ரீ விருதை திருப்பி கொடுத்து விட்டனர்.  “பேட்டி பச்சாவோ! பேட்டி பதாவோ!”  என்று கோஷமிட்டு விளம்பரத்திற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை விரயமாக்கும் மோடி அரசு, உண்மையில் பெண்களை பற்றி கவலைப்படுவதில்லை எனக் கூற ஏராளமான எடுத்துக்காட்டுகள் உள்ளன. “காங்கிரஸ் கட்சியின் தலைவி ஒரு விதவை; அக்கட்சி எப்படி விளங்கும்?” என்று பாஜக தலைவர்கள் பொதுவெளியில் கூறியுள்ளனர்.

பெண்கள் மீது நடக்கும் வன்முறைகளுக்கு பெண்களே காரணமென்ற கூற்றை முன்வைக்கும் மனுவாதிகளை எதிர்க்க, பெண்கள் ஒன்றிணைய வேண்டும். ஹிஜாப் அணிய தடை போடுவதன் மூலம், முஸ்லிம் பெண்களின் கல்விக்கு தடை போடும் மோடி அரசு வீழ்த்தப்பட வேண்டும்.. கேஸ் இணைப்புகள் கொடுத்துவிட்டால் மட்டும் போதாது. அடுத்த சிலிண்டர் வாங்க முடியாத அளவுக்கு விலைவாசி உயர்வு கடுமையாக பெண்களை பாதிக்கிறது. அதை எதிர்த்த நமது போராட்டங்கள் தீவிரமடைய வேண்டும். லவ் ஜிகாத் என்ற பெயரில் மதமறுப்பு திருமணம் செய்பவர்கள் தாக்கப்படுவதை எதிர்த்து குரலெழுப்ப  வேண்டும். ஒரே நாடு, ஒரே  மொழி, ஒரே கலாச்சாரம் என்ற பெயரில், நம் உடை, உணவு, . இருப்பிடம், நமது தனிப்பட்ட வாழ்க்கையில் மூக்கை நுழைக்கும் மனுவாத சக்திகளை வலுவாக எதிர்க்க வேண்டும். பாஜகவை வீழ்த்த முடியும். இந்திய விவசாயிகள் தொழிலாளி வர்க்கத்தின் உதவியுடன் மகத்தான போராட்டம் நடத்தி, மோடி அரசு நிறைவேற்றிய விவசாயிகள் விரோத, மக்கள் விரோத மூன்று சட்டங்களை குப்பை தொட்டியில் போட வைத்தனர். கடந்த பத்தாண்டுகளில் பெண்கள் நிலை எவ்வளவு மோசமாகி இருக்கிறது என்பதை மக்கள் மத்தியில் கொண்டு செல்வது நமது முக்கிய கடமையாகும். சாதி, மத, மொழி வேறுபாடின்றி  மக்களை ஒன்றிணைக்க வேண்டும். அதன் மூலமே கார்ப்பரேட் இந்துத்துவ, மனுவாத அரசை வீழ்த்த முடியும்.



Leave a comment