மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


முட்டுச் சந்தில் நிற்கும் நவ தாராளவாதம்!! புறந்தள்ளுமா தெற்குலக நாடுகள்??


ஆர். எஸ். செண்பகம்

திவாலுக்கு வந்த நவீன தாராளவாதக் கொள்கைகள்

பொருளாதார வளர்ச்சியும், அனைத்து மக்களின் முன்னேற்றமும் வேண்டுமெனில், நவீன தாராளவாதக் கொள்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்று சொன்னது இன்று பொய்யாகியுள்ளது. லாபம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு இயங்குவதன் காரணமாக, பெருந்துன்பங்களுக்கு மக்கள் ஆளாவது மட்டுமின்றி, உலக அளவில் பொருளாதார நெருக்கடி நீடித்து நிலைத்து நிற்கிறது. தெற்குலக நாடுகள் உலகளாவிய கடன் நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன. வருமான ஏற்றத்தாழ்வுகள், பொருளாதாரச் சுரண்டல்கள், செல்வாதார ஏற்றத்தாழ்வுகள் என ஏராளமான பொருளாதாரச் சிக்கல்களை வளரும் நாடுகள் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. இந்தச் சூழலில், மக்களின் அதிருப்தியை மட்டுப்படுத்துவதற்காக, ஒன்றுபட்டு போராடும் மக்களை துண்டாடுவதற்காக, திசை திருப்புவதற்காக, அவர்களது உணர்வுகளை தூண்டும் விதமாக, அந்நிய வெறுப்பு, இனவெறி, தேசிய பெருமை, மத – இன வெறிகள் போன்றவற்றை நிதி மூலதனம் தூண்டிவிடுகிறது. அது மட்டுமல்லாமல், ஜனநாயகத்தின் மீதும், மக்களின் குடியுரிமை மீதும், மனித உரிமைகளின் மீதும், எதேச்சாதிகாரத் தாக்குதல்கள் தொடுக்கப்படுகின்றன.

இவையனைத்தையும் கடந்த பத்தாண்டுகளாக நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். பொருளாதார வளர்ச்சி, மனித அபிவிருத்தி, ஜனநாயகம், பசி மற்றும் வறுமை, பாலின இடைவெளி, பத்திரிக்கை சுதந்திரம் மற்றும் பல்வேறு குடிமைச் சமூக உலகளாவிய குறியீடுகளில் மிகவும் பின்தங்கிய நிலையில் இந்தியா உள்ளது. ஆனால், தெற்குலக நாடுகளை கடன் நெருக்கடியில் இருந்து மீட்டெடுப்பதில் பிரதமர் மோடி தலைமையிலான இந்தியா தலைமைப் பாத்திரம் வகிக்கும் என்று பிரதமர் மோடிக்கான பிரச்சார எந்திரம் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறது. உண்மையில் நிலைமை இன்னும் பல மடங்கு மோசமாகியுள்ளது.

நவ தாராளவாதம் முட்டுச்சந்தில் நிற்கும் நிலையில் “நவ-தாராளவாதத்திற்கு அப்பால் தெற்குலக நாடுகள் தங்களது எதிர்காலத்தை எவ்வாறு திட்டமிட வேண்டும்?” என்பது குறித்து பேராசிரியர் பிரபாத் பட்நாயக் விவாதிக்கிறார். குறிப்பாக, சுதந்திர வர்த்தகத்திற்கு நாடுகள் திறந்துவிடப்பட்டுள்ள சூழலில், அதன் விளைவுகள் என்ன? அதில் இருந்து மீண்டு வருவதற்கான மாற்று என்ன? என்பவை குறித்தும், அத்தகைய மாற்றினை நவ தாராளவாதத்தை மிஞ்சி எப்படி அமல்படுத்த வேண்டும் என்பது குறித்தெல்லாம் வாதிடுகிறார்.

வடக்குலக நாடுகளின் பாதுகாப்புவாதம்

நவதாராளவாதம் முட்டுச் சந்திற்கு வந்துள்ள சூழலில், வடக்குலக நாடுகள், குறிப்பாக அமெரிக்கா போன்ற நாடுகள், தற்காப்புவாத ஆட்சி முறைக்கு, அதாவது பாதுகாப்புவாத நடைமுறைகளுக்கு, சத்தமில்லாமல் நகர்ந்துள்ளன. பாதுகாப்புவாதம் என்றால் என்ன? சுதந்திர வர்த்தகத்தின் காரணமாக, ஆட்சி செலுத்தும் நிதி மூலதனத்திடமிருந்து உள்நாட்டு தொழில் துறைகளை பாதுகாப்பதற்காக எடுக்கப்படும் அரசாங்க நடவடிக்கைகள்…அதாவது நவீன தாராளவாதக் கொள்கைகளை மீறி எடுக்கப்படும் நடவடிக்கைகள். வர்த்தகத்தில் மட்டுமல்லாமல், அமெரிக்கா நிதி முதலீட்டிலும் ஆஃப் ஷோரிங் பாதுகாப்புவாத நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஊதுகுழல்களின் நிபுணத்துவம்

பிரிட்டிஷ் செவ்வியல் பொருளாதார நிபுணர் டேவிட் ரிக்கார்டோ சுதந்திர வர்த்தகம் மூலம் நாடுகள் தங்களுடைய பொருளாதார வளர்ச்சியை உத்தரவாதப்படுத்திக் கொள்ள முடியும் என்று கூறினார். ஜான் பேப்டிஸ்ட் சே – Say’s law என்பதை வரையறுத்தார். அதன்படி, ஒரு பொருளின் அளிப்பும் அதன் விநியோகமும் அதற்கான கிராக்கியை தானே உருவாக்கிக் கொள்ளும் என்பது. அதையே ரிக்கார்டோ வழி மொழிந்தார்; அதோடு கூடவே ஒரு முன் அனுமானத்தையும் அளித்தார். ஒரு நாட்டில் தொழிலாளர் சந்தை சமநிலையில் இருக்கும் போது, அத்தனை தொழிலாளர்களும் அவர்களுடைய முழு திறனையும் பயன்படுத்தும் வகையில் பயன்படுத்தப்பட்டிருப்பார்கள். மேலும் ஒரு நாடு ஒரு குறிப்பிட்ட பொருளை அல்லது சேவையை சிறப்பு நிபுணத்துவம் பெற்று ஏற்றுமதி செய்யும்போது, அதனை குறைந்த செலவில் உற்பத்தி செய்து வழங்க முடியும் என்ற மற்றொரு முன் அனுமானத்தையும் கூறினார். எனவே, வர்த்தகம் என்பது ஒவ்வொரு நாட்டிற்கும் பயனளிக்கக் கூடியதாகவும், நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பின் ஒரு வடிவமாகவும் இருக்கும் என்பது முதலாளித்துவத்திற்கு ஆதரவான செவ்வியல் பொருளாதார நிபுணர்களின் வாதம். ஆனால், ஜானோஸ் கோர்னாய் என்ற ஹங்கேரிய பொருளாதார நிபுணர், சோவியத்திற்குப் பிந்தைய மாற்றத்திற்கு உட்பட்ட நாடுகளில் மேக்ரோ பொருளாதார அம்சங்களை பற்றி பகுப்பாய்வு செய்து, ஆதாரவளம் போதுமான அளவிற்கு இல்லாதிருக்கும் சோசலிச நாடுகளுக்கிடையே மட்டுமே மேற்கூறிய முன் அனுமானங்களும், சுதந்திர வர்த்தகம் ஒத்துழைப்பு வடிவமாக இருப்பதும் சாத்தியமாகும் என்பதை வரையறுத்துக் கூறினார்.

சாத்தான் வேதம் ஓதினால்?

தற்போதைய முதலாளித்துவ உலகின் பொருளாதாரம் சந்திக்கும் மிக முக்கிய பிரச்சினையே போதுமான கிராக்கியின்மை என்பது. அதாவது போதுமான வாங்கும் சக்தி இல்லாமல் பொருட்கள் தேங்கி நிற்கிறது. எனவே, சுதந்திர வர்த்தகம் என்பது நிச்சயம் தீர்வாக முடியாது. ஏனென்றால், வளர்ச்சி குன்றிய இரண்டு நாடுகள் தங்கள் பொருளாதாரச் சந்தைகளை சுதந்திர வர்த்தகத்திற்காகத் திறந்துவிடும்போது, இயல்பாகவே மற்றொரு நாட்டினை தன்னுடைய பொருளாதாரப் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக ஒரு நாடு இன்னொரு நாட்டினை சுரண்ட முனையும். (beggar my neighbour policy என்று இதைத்தான் குறிப்பிடுகிறோம்). நாடுகளுக்கிடையே போட்டி உருவாகி, ஒரு நாடு மற்றொரு நாட்டின் காலை கீழே இழுக்கும். வர்த்தகப் பற்றாக்குறையுடைய நாட்டில் (இறக்குமதி ஏற்றுமதியை விட அதிகரிக்கும்போது) வேலையின்மை அதிகரிக்கும். இலாபமே பிரதானமாக இருப்பதால் ஊதியப் பங்கும் குறையும். எனவே, சுதந்திர வர்த்தகம் என்பது அந்த நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற உதவாது. உண்மையில் கிராக்கி மேலும் குறையும். கிராக்கி குறையக் குறைய நாட்டின் பொருளாதாரம் மேலும் வீழ்ச்சியடையும். வர்த்தகப் பற்றாக்குறையையும், நாணயப் பரிமாற்று விகிதச் சரிவையும் சந்திக்கும் நாட்டை விட்டு ஊக முதலீடுகள் வெளியேறும். இதனைத் தடுப்பதற்காக, பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய, சர்வதேச நிதியத்திடம் கடன் வாங்கும் போது, அதன் நிர்பந்தங்களுக்கிணங்க ”சிக்கன நடவடிக்கைகளை” எடுக்க வேண்டியது வரும். சிக்கன நடவடிக்கைளில் முதலில் அடிவாங்குவது வேலைவாய்ப்பு தான். எனவே, சுதந்திர வர்த்தகம் தீர்வல்ல.

அதேபோல, போதுமான பொருளுற்பத்தியை வழங்கும் திறன் இல்லாத நாட்டிற்கும், போதுமான கிராக்கி இல்லாத நாட்டிற்குமிடையே சுதந்திர வர்த்தகத்திற்கான சந்தைகள் திறந்துவிடப்படும்போது, காலனிய ஆதிக்க நிலை போன்று, முந்தைய நாட்டில் தொழில் துறை (deindustrialisation) குறிப்பாக உற்பத்தித் துறை மந்தமடையும். சுதந்திர வர்த்தகம் இங்கு அடக்குமுறையின் வடிவமாகிவிடுகிறது. உண்மையில், உலக வர்த்தக அமைப்பு போன்ற சர்வதேச அமைப்புகள் சுதந்திர வர்த்தகத்தை சாதுர்யமாகத் திணித்து, ஏழை நாடுகளின் குரல்வளைகளை நெறிக்கின்றன.

ஏற்றுமதி சார்ந்த வளர்ச்சிக் கொள்கை

ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரக் கொள்கையே வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று நவ தாராளவாதம் அரற்றுகிறது. ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரக் கொள்கையை பின்பற்றும்போது, ஒவ்வொரு நாட்டிலும் முழு வேலைவாய்ப்பினை சந்தைகள் தாமாகவே உருவாக்கி விடாது. பொருட்களின் குவிப்பு ஒரு புறம் நடைபெறும். “இருத்தலுக்கான போராட்டம்” அல்லது “தக்கன பிழைத்து வாழ்தல்” என்ற டார்வினியப் போட்டியே நவ தாராளமயத் தத்துவத்தின் நெறிமுறை. அந்த “நெறிமுறைகளை” ஏற்றுக் கொள்ளும் நாடு, டார்வினியப் போட்டியின் இன்றியமையாத வெளிப்பாடாக, பிற நாடுகளைச் சுரண்ட முனைவது என்பது இயல்பாகவே நடைபெறும்.

ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரக் கொள்கை கடைபிடிக்கப்படும் ஒரு நாட்டில், நாட்டின் வளர்ச்சியில் தனியார் மூலதனத்திற்கும், அரசாங்க முதலீட்டுச் செலவினங்களுக்கும் இடமில்லை. சந்தை விரிவடைந்தால்தான் அதற்கேற்ப தனியார் முதலீடு வரும். நவீன தாராளமய ஆட்சி முறையின் கீழ், தனியார் நுகர்வு ஒரு உந்து சக்தியாக இருந்து, அதன் மூலம் வளர்ச்சி காண்பதற்கு வாய்ப்பில்லை. அரசு முதலீட்டினை நவ தாராளவாதம் எதிர்க்கிறது. அரசு தனது செலவினங்களுக்காக செல்வந்தர்கள் மீது வரி விதிப்பதை அது அனுமதிக்காது. அப்படி விதிக்கப்படுமேயானால், உலகமயமாக்கப்பட்ட நிதி மூலதனம் நாட்டை விட்டு பறந்து போய்விடும். இதற்கு மாறாக, அரசு தனது செலவினங்களை நிதிப் பற்றாக்குறையுடன் அதிகரிப்பதை நவ தாராளவாதம் அனுமதிக்காது. நிதி பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை சட்ட (FRBM ACT) வரையறையின்படி, ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சியில் நிதிப்பற்றாக்குறை 3 சதத்திற்கு மேல் இருக்கக்கூடாது என்று வரையறுத்துள்ளது. வேறு வழியின்றி ஒரு நாடு ஏற்றுமதி சார்ந்த வளர்ச்சிக் கொள்கையை கடைப்பிடிக்குமேயானால், அது பின்வரும் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.

  1. நாடுகளிடையே கடுமையான டார்வீனிய போட்டி நடைபெறும்.
  2. நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை குறைப்பதற்காக, வேலைவாய்ப்பு குறைக்கப்படும். பற்றாக்குறையை சமாளிப்பதற்காக வெளிநாட்டுக் கடனை வாங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்.
  3. ஏற்றுமதியில் வீழ்ச்சி ஏற்படுவதன் காரணமாகவோ, அல்லது உலகப் பொருளாதாரத்தின் மந்தநிலை காரணமாகவோ, அல்லது அந்த நாட்டின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட காரணிகளால் ஏற்றுமதி வீழ்ச்சி அடையும் நிலை ஏற்பட்டாலோ, தற்போதைய நடப்புக் கணக்குப் பற்றாக்குறை இன்னும் அதிகரிக்கும். அந்தக் கடனைச் சரிசெய்வதே சிக்கலாக மாறும். அந்நிய மூலதனம் நாட்டை விட்டு வெளியேறும் அபாயம் ஏற்படும். இந்த நிதி வெளியேற்றத்தைத் தடுக்க, சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் வாங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். அதனால் சர்வதேச நிதியம் பிறப்பிக்கும் சிக்கன நடவடிக்கைகள் உழைப்பாளி மக்களின் மீது சுமையாக விடியும். ஓரளவு நடுத்தர வருவாயுடன் இருந்த நாடும் கூட, உதாரணமாக இலங்கை போன்ற நாடுகள், கடன்களை திருப்பிச் செலுத்த முடியாமல் கடுமையான நிதி நெருக்கடிக்கு உள்ளாகும். தீவிரமான பொருளாதாரச் சிக்கல்களில் சிக்கிக் கொள்ளும்.
  4. உலகமயமாக்கப்பட்ட சர்வதேச நிதி மூலதனப் பாய்ச்சலின் விஷச் சுழலில் ஒரு நாடு சிக்கிக் கொள்வதால், அடுத்த பிரச்சனையாக “தேசிய-அரசின்” சுய ஆட்சி குறைமதிப்பீட்டிற்கு உள்ளாகிறது. உலகளவில் ஏற்படும் திடீர் பொருளாதார நெருக்கடிகளை சந்திக்க வேண்டி வருவது மட்டுமல்லாமல், உழைக்கும் மக்களின் நிலைமைகளை மேம்படுத்துவதற்கான ”தேசிய” அரசின் அர்த்தமுள்ள தலையீட்டையும் செய்ய முடியாமல் தவிக்கிறது.

எனில், மாற்று எது?

வளரும் நாடுகளில் உழைப்பாளி மக்களின் வாழ்நிலையை மேம்படுத்திக் கொண்டே வளர்ச்சிக்கான பாதையில் செல்வதற்கான மாற்றுக் கொள்கை என்ன? என்ற கேள்வி நம்மிடையே எழுவது இயல்பு. ஒரு நடப்புக் கணக்கு பற்றாக்குறையுள்ள நாட்டில், உள்நாட்டுச் சந்தையை கவனத்தில் கொண்டு, வர்த்தகப் பற்றாக்குறையை தவிர்க்கும் விதத்தில், ஏற்றுமதி சார்ந்த வளர்ச்சிப் பாதையை விடுத்து, வேலைவாய்ப்பினை அதிகரிக்கும் விதத்தில், அரசாங்க முதலீடுகளை செய்யலாம். அப்போது, அந்நாடு இரண்டு தடைகளை தாண்டி பயணிக்க வேண்டியிருக்கும்.

  1. முதலாளித்துவவாதிகளின் தரப்பில் வேலையில்லா பட்டாளத்தை குறைப்பதற்கு அல்லது வேலையின்மை விகிதத்தை கணிசமாகக் குறைப்பதற்கு எதிர்ப்பு கிளம்பும். வேலைவாய்ப்பு விகிதம் உயரும்போது பணவீக்கம் ஏற்படும் என்று வாதிடுவார்கள். விலைக் கட்டுப்பாடு மூலமும், தன்னுடைய “வருவாய் கொள்கையின் மூலமும் (பணவீக்கத்தை கட்டுப்படுத்த கூலி மற்றும் ஊதிய உயர்வினை கட்டுக்குள் வைக்கும் உத்தி) பணவீக்கத்தை அந்த அரசால் கட்டுக்குள் வைக்க முடியும்.
  2. இறக்குமதி செய்வதை குறைக்கும்போது, அதற்கு எதிர்வினையாக எதிர் தரப்பில் உள்ள நாடுகள் அந்த நாட்டிலிருந்து ஏற்றுமதியாகும் பொருட்களை வாங்காமல் தவிர்க்கும். அப்போது அந்நாட்டின் ஏற்றுமதி குறையும். ஒரு வேளை, அந்த நாடு முழுவதும் தன்னிறைவு பெற்ற நாடாகவே ஆகிவிட்டாலும், இறக்குமதியை ஈடு செய்யும் அளவிற்கு உள்நாட்டு உற்பத்தி நடப்பதற்கு நீண்ட காலம் பிடிக்கும்.

பொருளாதாரத் தன்னிறைவு காணும் மாற்று உபாயங்கள்

ஒரு நாட்டிற்கு மிகவும் அத்தியாவசியமான எண்ணெய் வளம் இல்லாதிருக்கலாம். அப்போது அந்த நாடு எண்ணெயை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் ஏற்படும். அந்தச் சூழலில் அது உலக நிதிமூலதனத்தின் பிடியில் சிக்கிக் கொள்ளும் அபாயம் ஏற்படும். அது மட்டுமின்றி, அத்தியாவசியமாக இறக்குமதி செய்ய வேண்டியவற்றைத் தவிர, பிறவற்றை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்து கொள்ளலாம் என்பது சிறிய நாடுகளுக்கு சாத்தியமில்லாதது. இப்படிப்பட்ட சூழலில் சிறிய நாடுகள் என்ன செய்யலாம்? அவை, தன்னிறைவு நிலையை எட்டுவதற்கு ”பொருளாதாரக் கூட்டுகளை (economic unions)” தங்களுக்குள் உருவாக்கிக் கொள்ளலாம். இந்தியா போன்ற பெரிய நாடுகள் எண்ணெய் வளம் உள்ள நாடுகளுடன் இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தங்களை போடலாம். அதன் மூலம் டாலர்களில் வணிகம் செய்தைத் தவிர்த்து, அவரவர் நாணயங்களில் வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ளலாம்.

சமீப காலமாக, இது போன்ற இருதரப்பு வர்த்தக ஒப்பந்தங்கள் அதிகமாகி வருகின்றன. உதாரணமாக, பிரேசிலுக்கும் சீனாவிற்கும் இடையே, இந்தியாவிற்கும் ஐக்கிய அரபு நாடுகளுக்குமிடையே ஏற்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் கட்டளை ஏதுமின்றியே, அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் அராஜகமாய் ஒரு தலைப்பட்சமாக நாடுகளின் மீது தடைகளை விதிப்பதை தவிர்ப்பதற்கு, தற்போது இது போன்ற இரு தரப்பு ஒப்பந்தங்கள் அதிகரித்து வருகின்றன. அந்நியச் செலாவணி கையிருப்பின் கட்டுப்பாடின்றி ஒரு நாட்டால் தன்னிறைவு பெறும் வகையில் வேலைவாய்ப்பை உருவாக்கவும், பொருளாதார நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் இந்த ஒப்பந்தங்கள் உதவுகின்றன; உதவ முடியும்.

வரும் காலத்தில், தெற்கு-தெற்கு பொருளாதார கூட்டமைப்புகள் மற்றும் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தங்கள் போன்றவை அதிகரிக்க வேண்டும். இதன் மூலம் தெற்குலக நாடுகள் கிட்டத்தட்ட “தன்னிறைவு பெறக்” கூடியவையாக மாற முடியும். அல்லது குறைந்தபட்சம் “தேசிய” தன்னிறைவு நிலையை பிரதிபலிக்கும் நிலையை எட்ட முடியும்.

பொருளாதாரத் தன்னிறைவு எதற்காக?

தற்போதைய உலகச் சூழலில் உலகப் பொருளாதார வளர்ச்சி ஸ்தம்பித்து (secular stagnation) என்ற தேக்க நிலையை எட்டியுள்ளது. இந்தச் சூழலில் நாடுகள் பொருளாதாரத் தன்னிறைவு பெறுவது அவசியமாகிறது. பொருளாதாரத் தன்னிறைவு பெற்ற நாட்டில் பொருளாதாரம் வளர்ச்சி பெறும். வேலைவாய்ப்பும் வேலைவாய்ப்பு வளர்ச்சி விகிதமும் அதிகமாக இருக்கும். பொருளாதாரத் தன்னிறைவு பெறுவது அவசியம் என்பதற்கான நான்கு காரணங்கள்.

  1. வேலைவாய்ப்பு அதிகரிக்கும்; பசியும் பட்டினியும் ஏழ்மையும் குறையும்; உலகமயமாக்கப்பட்ட நிதி மூலதனத்திற்கு அடிமையாக தேசிய அரசுகள் இருக்க வேண்டிய நிலை இருக்காது.
  2. பெருநகர அதிகார ஆதிக்கத்திலிருந்தும், சர்வதேச நிதியம் மற்றும் உலக வங்கி போன்றவற்றின் கட்டுப்பாட்டிலிருந்தும் நாடுகள் விடுதலை பெறும்.
  3. தெற்குலக நாடுகளின் வரலாற்றில் அவ்வப்போது பதிவாகியுள்ள பஞ்சங்கள், நிலையாக நீடித்திருக்கும் ஊட்டச்சத்துக் குறைபாடு போன்றவை இல்லாத வகையில், உணவு தன்னிறைவினை எட்டுவதை சாத்தியமாக்கும்.
  4. தற்போதைய நவீன தாராளமய காலக்கட்டத்தில் தெற்குலக நாடுகளில் அவற்றின் பொருளாதார செயல்பாட்டில் மற்றும் வேலைவாய்ப்புகளில் தொடர்ந்து இருக்கும் ஏற்ற இறக்கங்களை இல்லாமல் செய்யும்.

எழுகிற எதிர்ப்புகள்

  1. முதலாவதாக கருத்தியல் ரீதியான எதிர்ப்பு எழுகிறது. கருத்தியல் ரீதியாக முன்வைக்கப்படும் வாதம் என்னவெனில், பொருளாதாரத் தன்னிறைவு காண முனையும் நாடு இறக்குமதி செய்வதற்குப் பதிலாக தற்காப்புவாதத்தை கையில் எடுத்துக் கொண்டு உள்நாட்டு தொழில் துறையை வளர்த்தெடுக்கும்போது, எந்த நாட்டிலிருந்து இறக்குமதி செய்து வந்ததோ அந்த நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படாதா என்றும், இதுவே beggar my neighbour policy ஆகாதா என்றும் கேள்வி எழுப்பப்படுகிறது. இதற்குத் தெளிவான பதில் ”இல்லை” என்பதுதான். ஏனென்றால் அரசின் தலையீட்டின் மூலம் வேலைவாய்ப்பினை உருவாக்குவதன் மூலம் ஒட்டுமொத்த கிராக்கியை உயர்த்த முடியும்.
  2. தற்காப்புவாதம் கடைபிடிக்கப்படும்போது, புதிய புதிய கண்டுபிடிப்புகளும், தொழில்நுட்ப முன்னேற்றங்களும் தடைபடும் என்ற வாதம் முன் வைக்கப்படுகிறது.
    இதுவும் சரி இல்லை. ஏனென்றால் முதலாளித்துவத்தின் தொழில்புரட்சியும், நாம் இன்றைக்கு தொழிற்புரட்சிக்கான கண்டுபிடிப்புகளாகக் கொண்டாடும் பல கண்டுபிடிப்புகளும் பிரிட்டனில் ஒன்றரை நூற்றாண்டு கால தற்காப்புவாத ஆட்சிக்குப் பிறகுதான் வந்தன. முதலாளித்துவ பொருளாதாரங்கள் அன்றும் சரி, இன்றும் சரி, தற்காப்புவாத கொள்கைகளைப் பின்பற்றி, உள்நாட்டு தொழில் துறையை பாதுகாத்து வருகின்றன என்பதுதான் உண்மை. எனவே, கண்டுபிடிப்புகளுக்கும் தொழில் நுட்ப முன்னேற்றங்களுக்கும் இடமிருக்காது என்ற வாதம் தவறு.
  3. ஒரு பொருளாதாரச் செயல்பாட்டில் உற்பத்தியாளர்களும் நுகர்வோரும் பெரிய அளவில் பயனுறும் வகையில் ஆதார வளங்கள் பயன்படுத்தப்பட வேண்டும்; பொருட்கள் அல்லது சேவை விநியோகிக்கப்பட வேண்டும் என்பது (efficiency) பொருளாதாரத்தின் ’திறன்’ எனப்படுகிறது. பொருளாதாரத் தன்னிறைவு காண முயலும் ஒரு நாட்டில், தற்காப்பு பொருளாதாரக் கொள்கை கடைபிடிக்கப்படும். அதன் காரணமாக, இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் சொந்த நாட்டில் உள்நாட்டு தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும்போது, ஏற்றுமதிக்கென்றே பிரத்தியேக நிபுணத்துவத்துடன் உற்பத்தியாகும் நாடுகளை விட குறைந்த விலையில் தயாரிக்க முடியாது. எனவே, பொருளாதாரச் செயல் திறன் என்பது தோற்றுப் போகிறது என்ற வாதம் முன் எழுப்பப்படுகிறது.

    பொருளாதாரத் தன்னிறைவு பெற்ற நாடு உலகின் பிற நாடுகளுடன் எந்த வர்த்தகத்திலும் ஈடுபடாது என்று அர்த்தமல்ல. அதன் அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு (இருதரப்பு வர்த்தக ஒப்பந்தங்கள் போடப்படும் நாடுகளைத் தவிர) உலகின் பிற பகுதிகளைச் சார்ந்து அந்த நாடு இருக்க வேண்டியது வராது. அதே நேரத்தில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் ஒட்டுமொத்த விலை உயர்த்தப்படும்போது, அத்தியாவசிய இறக்குமதி வரிகள் மூலமாகவோ அல்லது அந்நியச் செலாவணியை வாங்குவதன் மூலமோ அல்லது விற்பதன் மூலமோ அல்லது உள்நாட்டில் பணவீக்கம் இல்லாத வகையில் வேறு ஏதேனும் ஏற்பாட்டின் மூலமோ வர்த்தகம் சமநிலைப்படுத்தப்படும்.

உபாயம் என்ன?

தேசிய தன்னிறைவிற்கான உந்து சக்தியாக அரசாங்கப் பொதுச் செலவினம் தான் இருக்க முடியும். அதேநேரத்தில், தெற்குலக நாடுகளின் பொருளாதாரத்தைப் பொறுத்த வரையில் பொதுச் செலவினம் என்பது கிராக்கிக்கான வெறும் கிரியா ஊக்கி மட்டுமல்ல. ஒரே நேரத்தில் பல பங்கு பாத்திரங்களை வகிக்க வேண்டும். அவற்றில் சில :-

  1. அத்தியாவசிய சேவைகளுக்கு, குறிப்பாக கல்வி, மருத்துவம் போன்றவற்றிற்கு பொதுச் செலவினம் செய்யப்பட வேண்டும்.
  2. முக்கிய உள்கட்டுமான வசதிகளுக்கு பொதுச் செலவினம் செய்யப்பட வேண்டும்.
  3. விவசாயத்திற்கு பொது முதலீடு செய்யப்பட வேண்டும். அது அத்தியாவசியம். நீர்ப் பாசனத்தில், குறைந்த தண்ணீரில் நிறைந்த விளைச்சலை கொடுக்கும் விதைகளில், ஆய்வு மற்றும் விவசாய அபிவிருத்தித் துறைகளில், விவசாய விளை பொருட்களை சந்தைப்படுத்துவதில், விவசாய விளைபொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை அளிப்பதில் என அனைத்திலும் அரசின் பொது முதலீடு வேண்டும். அதே போல, நிலப்பிரபுத்துவத்தை ஒழிக்கும் வகையில் நிலச் சீர்திருத்த நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் உணவு தன்னிறைவினை எட்ட முடியும்.

    மைக்கேல் கேலக்கி என்ற போலந்து நாட்டின் மார்க்சிய பொருளாதார வல்லுநர் கூறியுள்ளது போல், வளர்ச்சியடையாத கலப்புப் பொருளாதாரத்தில் முக்கிய நிதி சிக்கலே போதுமான விவசாய உற்பத்தி பற்றியதுதான். பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான உணவு தானியங்கள் மட்டுமின்றி, விவசாயம் அல்லாத பொருட்களுக்கான சந்தையையும் விவசாயத் துறை வழங்க வேண்டும். நிக்கோலஸ் கால்டோர் என்ற கேம்பிரிட்ஜ் பொருளாதார நிபுணர் 1978இல் கூறியது போல, தொழில்மயமாக்கல் என்பது நாடுகளுக்கு வெளியே ஏற்றுமதி நடப்பதன் மூலமாகத்தான் நிகழ வேண்டுமென்பதில்லை. நாடுகளுக்கு உள்ளேயே தொழில் துறையில் இருந்து விவசாயத்திற்கு ஏற்றுமதியாவதன் மூலமும் நடக்கலாம்.
  4. உழைப்பாளி மக்களுக்கு மானியங்களும், பண மாற்றங்களும் அரசின் பொதுச் செலவினங்களின் மூலம் செய்யப்பட வேண்டும். உணவு மானியம் குறிப்பாக முக்கியத்துவம் பெறுகிறது. பொது விநியோக முறை அவசியம்.
  5. அனைத்து கனிம வளங்களும், தீர்ந்துவிடக் கூடிய இயற்கை ஆதார வளங்களும் அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். அவற்றிலிருந்து வரும் பயன் மட்டுமல்லாது விற்பதன் பலனும் சமூகத்திற்கே சேர வேண்டும்.
  6. எண்ணெய், இரயில், ரோடு, வங்கிகள், ஸ்டீல் போன்று பொருளாதார ரீதியாக பிறவற்றிற்கு ஆதாரமாக இருக்கும் அல்லது கட்டுப்படுத்தும் பகுதிகளையும், பொதுப் பயன்பாட்டிற்குரியவற்றையும், இயற்கை ஆதார வளங்களையும், அந்நிய உள்நாட்டு வர்த்தகத்தையும் விளாடிமிர் லெனின் “commanding heights” என்று குறிப்பிட்டார். இவை அரசின் கட்டுப்பாட்டில் இருந்தால் மட்டுமே சமூக நோக்கிற்கு பயன்படும். இதுபோல இன்னும் பலவற்றை சொல்லலாம். ஆனால் அவை திட்டவட்டமான பின்புலத்துடன் தீர்மானிக்கப்பட வேண்டும்.

அரசு தலையீட்டுடன் கூடிய (dirigiste) பொருளாதாரக் கொள்கை

நவீன தாராவாதக் கொள்கைகள் அறிமுகமாகும் முன்பு நடைமுறையில் இருந்த Dirigiste பொருளாதாரக் கொள்கையை மேற்கூறிய வழிமுறைகள் நினைவூட்டலாம். Dirigiste பொருளாதாரக் கொள்கையில், அரசு ஒரு வலுவான பாத்திரத்தை வகிக்கிறது. அது ஒரு ஒழுங்குமுறை. அரசின் தலையீட்டிற்கு மாறாக, பொருளாதார திட்டமிடல், முதலீட்டை வழிநடத்துதல், ஊதியங்கள் மற்றும் விலைகளைக் கட்டுப்படுத்துதல் மற்றும் தொழிலாளர் சந்தைகளை மேற்பார்வை செய்தல் என அனைத்தும் தேசிய அரசால் தீர்மானிக்கப்படும். எனில், மீண்டும் பழையதுக்குத் திரும்பப் போகிறோமா? என்ற கேள்வி எழுகிறது.

நவீன தாராளவாத விதிமுறைகளை மிஞ்சுவது என்பது வெறுமனே மாற்றுக் கொள்கையால் மட்டும் நடக்கக் கூடாது. ஆனால், மாற்றுக் கொள்கையுடன் சேர்ந்து, மக்களுக்கு அதிகாரமளிப்பதற்கான மாற்று முறையுடன், புதுமையானதாக அது இருக்க வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தின்படி உத்தரவாதப்படுத்தப்பட்ட, நியாயமான, பொதுவான, அடிப்படை பொருளாதார உரிமைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் மக்களுக்கு அதிகாரமளிக்கப்பட வேண்டும்.

Dirigiste பொருளாதாரக் கொள்கையுடன் கூடிய ஆட்சி முறையை மக்கள் எப்படி கட்டுப்படுத்துவது?

குறிப்பிட்ட கால இடைவெளியில் நடத்தப்படும் தேர்தல் என்பது பயனற்றது. அதே நேரத்தில் ஒரு சில அடிப்படை பொருளாதார உரிமைகளை அளிப்பதை அரசின் கடமையாக மாற்றிவிடலாம்.

பொதுவான ஒரு அடிப்படை வருமானம் என்பது குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும் என்பது எல்லோராலும் பொதுவாக ஏற்றுக் கோள்ளப்படுவது. ஒவ்வொரு பிரஜைக்கும் அரசு உத்தரவாதப்படுத்தியுள்ள வருமானம் கிடைப்பதற்கேற்ற வகையில் யாருக்கெல்லாம் அந்த வரம்பில் வருமானம் இல்லையோ அவர்களுக்கெல்லாம் அரசின் பண மாற்றம் மூலம் உத்தரவாதப்படுத்த வேண்டும். அதற்கான செலவினை ஈடுகட்ட செல்வந்தர்களுக்கு வரி விதிக்க வேண்டும். ஆனால், இதில் சில விஷயங்கள் நெருடலானவை. ஒன்று செலவு மிகவும் அதிகம்; இரண்டு நிதிச்சூழல் மோசமடையும்போது எப்போது வேண்டுமானாலும் நிறுத்தப்படலாம். மூன்று, பணமாற்று என்பது மக்களுக்கு உதவுவதாக எப்போது இருக்குமென்றால், அந்தப் பணத்தின் மூலம் அவர்களால் சில பொருட்களை அல்லது சேவைகளை பெற முடியும்போது தான். அரசுப் பள்ளிகளோ, மருத்துவமனைகளோ இல்லாத பட்சத்தில் இந்த பண மாற்று பயனில்லாமல் போகும்.

எனவே, அடிப்படை பொருளாதார உரிமைகளை உத்தரவாதப்படுத்தும் வகையிலான சில நிறுவனரீதியான ஸ்தாபன உரிமைகள் மக்களுக்கு அதிகாரமளிப்பதாக இருக்கும். இவை இலாபத்திற்காக இயங்குபவையாக இல்லாமல், பொதுவானவையாக இருக்கும். கல்வி நிறுவனங்கள் அல்லாது உணவகங்கள், பார்கள், கிளப்புகள், அரசு அல்லது இராணுவ நிறுவனங்கள், செஞ்சிலுவை சங்கம் அல்லது பிற தொண்டு மற்றும் உதவி நிவாரண வசதிகளுக்காக உள்ள அமைப்புகள் போன்றவை மக்களுக்கு உண்மையான பலனை அளிக்கும். அவற்றை அதிகச் செலவினம் என்று சொல்லியோ அல்லது திடீரென்று நிறுத்தவோ வாய்ப்பில்லை.
இந்தியாவைப் பொறுத்தவரையில் ஐந்து அடிப்படைப் பொருளாதார உரிமைகள், உணவுக்கான உரிமை, வேலை வாய்ப்பு உரிமை, தேசிய சுகாதாரச் சேவை மூலம் இலவச தரமான மருத்துவப் பாதுகாப்புக்கான உரிமை, இலவச தரமான கல்விக்கான உரிமை என ஐந்து அடிப்படைப் பொருளாதார உரிமைகளை நிறுவுவதற்கான நிதி ஆதாரங்கள் திரட்டப்பட வேண்டும். இவற்றோடு மூத்த குடிமக்களுக்கான ஓய்வூதியம் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் நலன்களுக்கான தொகையையும் உறுதி செய்ய வேண்டியுள்ளது. நமது நாட்டில் ஒரு சதவிகித செல்வந்தர்களின் சொத்துக்களின் மீது வரி விதிப்பதாலும், பரம்பரை சொத்துக்களின் மீது வரி விதிப்பதன் மூலமும் இதற்கான நிதியை திரட்ட முடியும்.

ஒரு ஏழை நாட்டில் இதற்கான நிதியாதாரம் எங்கிருந்து வரும்?

இதுவரை நாம் பொதுவாக தேசிய தன்னிறைவு குறித்துப் பேசும்போது, ஓரளவு பெரிய நாடுகளை மையப்படுத்தியே பேசிக் கொண்டிருந்தோம். ஆனால், தெற்குலக நாடுகளில் பெரும்பாலானவை சிறிய ஏழை நாடுகளாகும். அவற்றால் தாமாகவே பொருளாதார தேசிய தன்னிறைவை எட்டிப்பிடித்துவிட முடியாது. எனவே,

  1. இந்த நாடுகள் அருகாமையில் உள்ள நாடுகளுடன் பொருளாதாரக் கூட்டினை (economic unions) உருவாக்கிக் கொள்ளலாம். இப்படி உருவாகும் ஒவ்வொரு பொருளாதாரக் கூட்டும் பொருளாதாரத் தன்னிறைவினை எட்ட முயலலாம். அதற்கு இந்த நாடுகள் நிச்சயமாக ஒரு பொதுவான அடிப்படை பண்புகளை கொண்டிருக்க வேண்டும். அதாவது, உலகின் பிற பகுதிகளுக்கு பொதுவான வெளிப்புற கட்டணங்கள் இருக்க வேண்டும், அதே நேரத்தில் பொருளாதாரக் கூட்டில் உள்ள நாடுகளுக்கு உள் கட்டணங்கள் இருக்கக் கூடாது. கூட்டிற்குள் உள்ள நாடுகள் ஒவ்வொன்றும் பொருளாதாரத் தன்னிறைவை அடைவதற்கு முழு முயற்சி எடுக்க வேண்டும். ஒரு வேளை முதல் நாடு சர்வதேசச் சந்தைக்காக பொருளுற்பத்தி செய்து விற்பதன் மூலம் அதிகமான அந்நியச் செலாவணியை பெறலாம். அதே நேரத்தில் இரண்டாவது நாட்டிற்கு, அதனுடைய அடிப்படை அத்தியாவசியப் பொருட்களைக்கூட சந்தையில் இருந்து வாங்குவதற்குத் தேவையான போதுமான அந்நியச் செலாவணி இல்லாதிருக்கலாம். இந்நிலையில் அவற்றின் பொருளாதாரக் கூட்டு எவ்வாறு இருக்க வேண்டுமென்றால், இரு நாடுகளும் அவற்றிற்கான அத்தியாவசிய அடிப்படைத் தேவைகளை அவற்றிற்குள்ளாகவே உற்பத்தி செய்து கொள்ளும் வகையில் இருக்க வேண்டும்.
  2. பொருளாதாரக்கூட்டில் உள்ள இரு நாடுகளிடையே உள்ள வர்த்தக உபரியை, வர்த்தகப் பற்றாக்குறையுடன் கூடிய நாட்டினை சரி செய்யச் சொல்லாமல், வர்த்தக உபரியுடன் கூடிய நாடு சரி செய்ய வேண்டும். அப்போதுதான் ஏற்றத்தாழ்வற்ற வர்த்தக சமநிலை பொருளாதாரக் கூட்டிற்குள் வரும்.
  3. இவை மட்டுமே ஏற்றத்தாழ்வுகளை நீக்கிவிடாது. மக்களின் வாழ் நிலையில் ஏற்றத் தாழ்வுகள் இருக்கலாம். இதனை சரி செய்வதற்கு பொருளாதாரக் கூட்டிற்குள் உள்ள நாடுகளிடையே தொழிலாளர்கள் சுதந்திரமாகப் போய்வரும் ஏற்பாடு இருக்க வேண்டும். அதேநேரத்தில் மக்கள் கட்டாயப்படுத்தப்பட்டு, நாடு விட்டு நாடு போகும்படி நிர்பந்தம் இருக்கக் கூடாது. இதற்காக பொருளாதாரக் கூட்டிற்குள் உள்ள நாடுகளிடையே வளங்களையும் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மறுபகிர்வு செய்து கொள்ள வேண்டும்.
  4. பொருளாதாரக் கூட்டில் உள்ள நாடுகளில், ஏழை நாட்டிற்கு அதை விட வசதியாக உள்ள நாடு ஒட்டுமொத்த உள்நாட்டு வருமானத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட சதத்தை ஒவ்வொரு வருடமும் வழங்க வேண்டும்.
    நிச்சயமாக, நாட்கள் நகரும்போது முரண்கள் எழலாம். ஆனால், பொருளாதாரக் கூட்டிற்குள் இருக்கும் நாடுகளுக்கு நீண்ட கால தேடலாக நாடுகளின் பொருளாதாரத் தன்னிறைவு என்ற வேட்கை இருப்பதால் அவை ஒன்றுக்கொன்று போட்டியிடாது.

நாடுகளிடையே பொருளாதாரக் கூட்டு என்பது நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பின் ஒரு வடிவமாகும். எனவே, இங்கு ‘தக்கது நிலைத்து நிற்கும்’ என்ற டார்வீனியன் போட்டி இல்லாதிருக்கும். ஒவ்வொரு நாடும் பிற நாடுகளை மிதித்துத் தள்ளாமல், தன்னுடைய சொந்த நாட்டில் அதிகமான வேலைவாய்ப்பினை உருவாக்க, அதற்கான பாதையைத் தேர்ந்தெடுத்து அதில் பயணிக்கும். அதே நேரத்தில், முதலாளித்துவ சொத்து உறவுகள் உடனடியாக முறியடிக்கப்படப் போவதில்லை என்பதால், ஒரு முரண்பாடு காலப்போக்கில் எழும். அது தீர்க்கப்பட வேண்டும்.

சூழல் சார்ந்து மட்டுமல்ல, கருத்தியல் சார்ந்தும் இதுவே பொருத்தமானது

ஏற்றுமதி சார்ந்த வளர்ச்சி நியாயமில்லை என்பதற்கு கருத்தியல் சார்ந்தும் நியாயம் உள்ளது. ஒரு முதலாளித்துவப் பொருளாதாரத்தில் உள்ளார்ந்த ஊக்கிகளைக் கொண்டு வளர்ச்சியைத் தூண்டுவது சாத்தியமில்லை. அவை ஒரு கட்டத்தில் பொருளாதாரம் நிலைத்த மந்த நிலைக்குச் செல்வதை வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்கும். இப்படிப்பட்டச் சூழலில், புதிய கண்டுபிடிப்புகளும் வளர்ச்சிக்கான கிரியா ஊக்கிகளாக செயல்பட முடியாது. காரணம் அதற்கான நிதியையும் அந்தப் பொருளாதாரம் தானே அளித்தாக வேண்டும்.

ஆனால், ஒரு பொருளாதாரம் கடந்த காலத்தில் வளர்ச்சியைக் கண்டிருந்தாலும், இல்லாவிட்டாலும், புறத்தே இருந்து இயங்கும் வெளிப்புற ஊக்கிகள் தொடர்ந்து தூண்டுதலை அளித்து, அந்தப் பொருளாதாரத்தை நிலைத்த மந்த நிலையில் இருந்து விடுவிக்கும். குறிப்பாக, அரசுச் செலவினங்கள் (நிதிப் பற்றாக்குறை மூலமோ அல்லது செல்வந்தர்கள் மீது வரி விதிப்பதன் மூலமோ) முதலீடாகும்போது, உண்மையான வெளிப்புற ஊக்கிகளாகச் செயல்பட்டு வளர்ச்சியைத் தூண்டுகின்றன. எனவே, தன்னிறைவு வளர்ச்சிக் கொள்கை மட்டுமே ஒரு நாட்டிற்கோ அல்லது பொருளாதாரக் கூட்டில் உள்ள நாடுகளுக்கோ வளர்ச்சியை உறுதி செய்யும்.

நிறைவாக

தெற்குலக நாடுகளின் கடன் நெருக்கடி ஆபத்தான நிலையை எட்டியுள்ளது. 1983க்குப் பிறகு அதிக எண்ணிக்கையிலான இறையாண்மை மிக்க நாடுகளின் கடனை 2022ஆம் ஆண்டு பதிவு செய்தது. ஏகாதிபத்தியம், முன்னேறிய முதலாளித்துவ நாடுகளின் மூலதனக் குவிப்பிற்காக ஏழை நாடுகளிலிருந்து உபரிகளைப் பிழிந்தெடுக்கிறது. சர்வதேச நாணய நிதியத்திடம் வாங்கப்பட்ட கடன்களை சரி செய்கிறோம் என்ற பெயரில் மீண்டும் மீண்டும் நாடுகளுக்கு கடன்களை வழங்கி அந்நாடுகள் மீளாக்கடனில் சிக்கியுள்ளன. எடுத்துக்காட்டாக, இலங்கை சர்வதேச நிதியத்திடமிருந்து 17வது திட்டத்துடன் இணைக்கப்பட்ட கடனைப் பெற்றுள்ளது. பாகிஸ்தான் 23வது கடனைப் பெற்றுள்ளது. எனவே, தற்கால முதலாளித்துவத்தில் கடனால் ஏற்படும் நெருக்கடி தீர்க்க முடியாததாகத் தோன்றுவதில் ஆச்சரியமில்லை.
தெற்குலக நாடுகளின் தன்னிறைவுக்குத் தேவையான பல்வேறு அளவீடுகளை பேராசிரியர் பட்நாயக் முன்வைத்துள்ளார். ஒரு மாற்றுப் பொருளாதாரத் திட்டமிடலுடன், மக்களுக்கு அதிகாரமளிக்கும் வகையில், அரசியலமைப்பு ரீதியாக உத்தரவாதம் அளிக்கப்பட்ட, நியாயமான, உலகளாவிய, அடிப்படை பொருளாதார உரிமைகளை உத்தரவாதப்படுத்தும் நிறுவனப்படுத்தப்பட்ட ஒரு தொகுப்பினைக் கொண்ட மாற்று முறையினை அறிமுகப்படுத்துவதன் மூலம், முட்டுச் சந்தில் நிற்கும் நவ தாராளவாதத்தை மீறி தெற்குலக நாடுகள் பயணிக்க வேண்டும்.



Leave a comment