மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


மார்க்சிய பார்வையில் அறிவியல் வளர்ச்சி


அபிவ் சூர்யா

அறிவியல் மற்றும் அறிவியல்-தொழில்நுட்ப வளர்ச்சி என்பது மானுட வரலாற்றில் எப்போதுமே முக்கிய பங்கு வகித்து வந்திருந்தாலும், தற்காலத்தில் இதன் தாக்கமும் முக்கியத்துவமும் உச்சத்தை எட்டியுள்ளது. யார் அறிவியல் வளர்ச்சியை கட்டுப்படுத்துகின்றனர்; யாரிடத்தில் தொழில்நுட்ப மேம்பாடு நிரம்பி உள்ளது போன்றவை தேசங்கள் இடையேயான உறவுகளையும், சர்வதேச அளவில் சுரண்டல் முறையின் தன்மைகளையும் தீர்மானிக்கின்றது.

இப்படிப்பட்ட அறிவியல் வளர்ச்சி எப்படி நிகழ்கிறது? அதன் போக்கு என்ன? அதன் போக்கை எது தீர்மானிக்கிறது?  தற்காலத்தில் நிலவும் உற்பத்தி முறைக்கும் அறிவியல்-தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் இடையே என்ன தொடர்பு? உற்பத்தி முறையில் ஏற்படும் நெருக்கடி அறிவியல் வளர்ச்சியை எப்படி பாதிக்கும்? இது போன்ற கேள்விகளுக்கு மார்க்சிய ஆய்வு முறைப்படி விடை கண்டறிந்து, அதன் வாயிலாக புரட்சியின் பாதையில் அறிவியல் ஆற்றும் பணிகளையும், அதை நிர்ணயிக்க ஆற்ற வேண்டிய கடமைகளையும் தெரிந்து கொள்வது அவசியம்.

முதலாளித்துவ அறிஞர்கள், அறிவியல் என்பதை வெறும் லாபத்திற்கான கருவியாக மட்டுமே புரிந்து கொள்கின்றனர். இதனால் லாப நோக்கை மேம்படுத்தும் வகையில் அறிவியலுக்கான கட்டமைப்புகள் இருப்பின் (அதாவது அறிவியல் குறித்த கொள்கைகள், காப்புரிமம் குறித்த சட்டங்கள் போன்றவை) அது அனைத்து தரப்பினருக்கும் சாதகமாக அமையும் என வாதிடுகின்றனர். அதுவும் நவ தாராளமய ஆதரவாளர்கள், கட்டற்ற வர்த்தகம் மற்றும் சந்தை பொருளாதாரத்தின் விளைவாக மூன்றாம் உலக நாடுகளும் தொழில்நுட்பத்தை பெற்று வளர்ச்சி அடையலாம் எனக் கூறுகின்றனர். ஆனால் இது ஏகாதிபத்திய சுரண்டலை நியாயப்படுத்தும் அப்பட்டமான நச்சு சொல்லாடலே ஆகும். அறிவியல் என்பது உற்பத்தியை பெருக்கி லாபத்தை கூட்ட வல்ல “தங்க முட்டையிடும் வாத்து” என்றே பார்ப்பதால், அந்த அறிவியல் தொழில்நுட்பங்களை எந்த ஏழை நாட்டிற்கும் வளர்ந்த நாடுகள் தானாக அளிக்காது என்பது தெளிவாக தெரிகிறது.

அறிவியலை புறந்தள்ளுவதா?

உண்மையில், அறிவியல் என்பது ஆளும் வர்க்கங்களின் கையில் இருக்கும் சுரண்டல் கருவி மட்டுமே அல்ல. மானுட மேம்பாட்டிற்கான மகத்தான கண்டுபிடிப்புகளை அறிவியல் நமக்கு எப்போதும் அளித்து தான் வருகின்றது. அண்மைக்கால பின் நவீனத்துவ சித்தாந்தங்கள், அறிவியலையே முற்றாக புறந்தள்ளவும் சொல்கின்றன. அது மக்கள் மத்தியில் அறிவியல் ஆர்வம் பெருகுவதை தடுக்கின்றது. இதுவும், சுரண்டும் வர்க்கத்திற்கே சாதகமாக அமைந்து விடுகின்றது.

உழைக்கும் மக்கள் அறிவியலை வெறுப்பதனால், அதன் மீதான தங்களின் நியாயமான உரிமையை கோராமல் போய் விடுகின்றனர். இதன் விளைவாக அறிவியல் வளர்ச்சி மீதான கட்டுப்பாடு சுரண்டும் வர்க்கம் கையில் வலுவாக சென்றடைகிறது. இது உழைக்கும் வர்க்கத்தின் சக்தியை மேலும் வலுவிழக்கச் செய்கிறது. அண்மை காலங்களில் இது போன்ற அறிவியல் குறித்த பிற்போக்கான புரிதல் இடதுசாரி இயக்கங்கள் மத்தியிலும் ஊடுருவத் துவங்கி உள்ளன. இந்த பின் நவீனத்துவ போக்குகளின் காரணமாக “இடதுசாரிகள் பிற்போக்காளர்கள்” என முத்திரை குத்த வலதுசாரி சக்திகளுக்கு ஏதுவாக உள்ளது.

ஆனால் அறிவியல்-தொழில்நுட்ப வளர்ச்சி குறித்த தெளிவான புரிதலை மார்க்சிய ஆய்வு மட்டுமே வழங்க முடியும். “லாப நோக்கமே அறிவியலுக்கு சிறந்தது” என்ற வலதுசாரி புரிதலையும், “லாபத்திற்கு மட்டுமே அறிவியல்” என்ற “சர்வதேச சதித் திட்டம்” நிலவுவது போல சித்தரிக்கும் நுட்பமாற்ற புரிதலையும் புறந்தள்ளி, அறிவார்ந்த முறையில் அறிவியல் வளர்ச்சியை அணுகுவது அவசியமாகும்.

இயங்கியல் பொருள்முதல்வாதமும் அறிவியலும்

மார்க்சியம் என்பது இயங்கியல் விதிகளை பொருளியல் தளத்தில் பொருத்தி, இந்த அண்டத்தையும், மானுட சமூகத்தையும் புரிந்து கொள்கிறது. “இயங்கியல்”, அதாவது எதிர்மறைகளின் உறவாடல் மற்றும் மோதல் வழியாக வளர்ச்சி என்ற கோட்பாட்டின் அடிப்படையில், வளர்ச்சியை புரிந்து கொள்ள வேண்டும் என்றால், முதலில் அந்த காலகட்டத்தில் நிலவும் எதிர்மறையான சக்திகளை புரிந்து கொள்வது அவசியம். “பொருள்முதல்வாதம்” என்றால் இந்த எதிர்மறை சக்திகளை எவரின் எண்ண ஓட்டங்களிலும் தேடாமல், “பொருள்” அல்லது பொருளியல் தளத்தில் தேட வேண்டும் என்கிறது. ஆக, மார்க்சிய ஆய்வு என்பது அந்த அந்த வரலாற்று சூழலுக்கும் ஏற்ப, அந்த அந்த கால கட்டத்தில் நிலவும் பொருள்நிலை சக்திகளையும் அதன் முரண்பாடுகளையும் புரிந்து கொள்வதில் அடங்கி உள்ளது. இதே போல தான் அறிவியல் குறித்த மார்க்சிய பார்வையும் அமைய வேண்டும்.

இதனை சுறுக்கமாக சொன்னால், “அறிவியல்” என்பது – மனிதர்கள் மேற்கொள்ளும் சமூக உற்பத்தி முறையின் ஒரு அங்கமாக உள்ள மனித உழைப்பில் ஒரு பகுதியை அறிவு மேம்பாட்டிற்காக ஒதுக்கி வைக்கப் படுவதையே “அறிவியல்” என்கிறோம். மனிதர்களின் மற்ற உழைப்பைப் போலவே இந்த “அறிவியல்” உழைப்பும் முக்கியமான பணியாற்றுகின்றது. இந்த உழைப்பின் மூலமாக இயற்கை மற்றும் இந்த அண்டத்தின் உண்மைகளை வெளிக்கொணர முடியும். இயற்கையோடு மனிதன் உறவாடுவதே “உற்பத்தி”. இதனால் இந்த “அறிவியலில்” செலுத்தப்படும் உழைப்பானது இயற்கையோடு மனிதன் கொண்டிருக்கும் உறவினை மேம்படுத்துகிறது. வழிநடத்துகிறது.

இந்த சுறுக்கமான விளக்கத்தின் மேல் இயங்கியல் பொருள்முதல்வாத ஆய்வை பொருத்தி பார்ப்போம். இப்போது “அறிவியல்” என்பதும் ஒரு வகை மனித உழைப்பு, மற்றும் அதன் வெளிப்பாடு தான். ஆக, மற்ற மனித உழைப்பு போலவே, இந்த உழைப்பும் ஒரு “சமூக” உற்பத்தி முறையின் அங்கமாகத் தான் நிகழ்கிறது. ஆக, எந்த ஒரு காலத்திலும், அறிவியல் ஆய்வு முறையின் நோக்கம் என்ன, அது எப்படி வழி நடத்தப்படுகிறது, முன்னேற்றத்திற்கான அதன் திட்டம் என்ன, அறிவியல் கண்டுபிடிப்புகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன, அறிவியல் ஆய்வில் யார் ஈடுபடுகின்றனர் மற்றும் யார் ஒதுக்கப்படுகின்றனர் என்பது போன்ற அனைத்தையும் வெறும் முந்தைய கால அறிவியல் வளர்ச்சியின் நிலை மட்டும் தீர்மானிப்பதில்லை. அந்த அந்த காலத்தில் நிலவும் சமூக அமைப்பும், உற்பத்தி முறையும் தீர்மானிக்கின்றது.

ஆனால் சமூக சூழல் அறிவியல் மீது தாக்கம் ஏற்படுத்துவது போலவே, அறிவியல் கண்டுபிடிப்புகளும் சமூகத்தின் பொருளியல் வாழ்வின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இப்படி சமூகத்தின் மீது ஏற்பட்ட தாக்கம், மீண்டும் அறிவியல் ஆய்வின் வளர்ச்சிப் பாதையின் மேல் சுழற்சியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

ஆக, அறிவியலில் ஈடுபட்டுள்ள “அறிவுசார்” உழைப்பின் மீது, சமூகத்தில் நடக்கும் வர்க்கப் போராட்டங்கள் பிரதிபலிக்கும். சமூக சூழலுக்கு ஏற்ப, இந்த “அறிவுசார்” உழைப்பின் தன்மை, தரம் ஆகிய அனைத்துமே அறிவியல் கண்டுபிடிப்புகள் மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எந்த ஒரு காலத்திலும், அறிவியல் வளர்ச்சியின் போக்கு எதேச்சையாகவோ, கையளவு மனிதர்களின் அசாதாரண திறமையால் மட்டுமோ ஏற்படுவது இல்லை.

மனித வாழ்வில் ஏற்படும் இயங்கியல் மாற்றங்களானது அறிவியல் “எப்படி பயன்படுத்தப்படுகிறது” என்பதை மட்டும் தீர்மானிப்பதில்லை. அறிவியல் கண்டுபிடிப்புகளின் தன்மை மற்றும் தரத்தையும் கூட தீர்மானிக்கின்றது.

மார்க்சிய புரிதலில் அறிவியல்

“மனிதனின் இருப்பே சிந்தனையை தீர்மானிக்கின்றது” என்பது மார்க்சிய கூற்று. அறிவியல் என்பதை “அறிவுப்பூர்வமான சிந்தனைகளின் உற்பத்தி” என புரிந்து கொண்டால், மனிதனின் இருப்பும், மனிதனின் அன்றாட பொருளியல் வாழ்விற்கான உழைப்பு மற்றும் உற்பத்தியும் தானே இந்த “அறிவுப்பூர்வமான சிந்தனைகளின்” உற்பத்தியையும் தீர்மானிக்க வேண்டும்? இதன் காரணமாகத் தான், ஆதிகால மனித சமூகத்தில் “அறிவியல்” என்பதற்காக தனியே எந்த உழைப்பையும் ஒதுக்கி வைக்காத போதும், அறிவியல் வளர்ச்சி ஏற்படத் தான் செய்தது. ஏனென்றால் அன்றாட வாழ்வின் பொருளியல் உற்பத்தியில் ஏற்படும் உழைப்பின் பழக்க வழக்கங்கள் தான் அறிவுப்பூர்வமான சிந்தனைகளுக்கு அடிப்படை.

எனவே, அறிவியலின் எந்த வளர்ச்சியும் வெறும் ஒரு மனிதனின் மூளையில் “உதிப்பது” அல்ல. ஒரு சிந்தனையின் உண்மை தன்மையானது, அன்றாட வாழ்வின் உழைப்பின் வாயிலாகத் தான் நிரூபணம் ஆகிறது. ஆகையால் அன்றாட பொருளியல் வாழ்வின் முன்னேற்றம் தான், அறிவியல் முன்னேற்றத்தையும் தீர்மானிக்கின்றது. இதன் பொருள், எந்த ஒரு கால கட்டத்திலும், “மனித உழைப்பு எவ்வாறு ஒருங்கிணைக்கப்படுகிறது” என்பதே அறிவியலின் வளர்ச்சியை தீர்மானிக்கிறது என்பதாகும். குறிப்பிட்ட காலத்தின் “உற்பத்தி முறை” (எ.கா. – ஆதி பொதுவுடைமை, நிலப்பிரபுத்துவம்,..) அதற்கு அடிப்படையாக அமைகிறது.

புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள், அதன் காலத்தில் நிலவும் நிலவும் உற்பத்தி முறையில் “அளவு மாற்றம்” ஏற்படுத்துகின்றன. இதன் காரணமாக உற்பத்தி முறையில் முரண்பாடுகளும், நெருக்கடிகளும் உருவாகின்றன. இந்த நெருக்கடியானது அறிவியலில் தாக்கம் செலுத்துகிறது. “சிந்தனை” மற்றும் “செயல்” (Theory and Practice) இரண்டிற்கும் இடயே விரிசல் உண்டாக்கின்றது. உற்பத்தி முறையில் ஏற்படும் “புரட்சிகர” மாற்றமானது, “சிந்தனை முறை”, அதாவது அறிவியல் முறையிலும் மற்றதை ஏற்படுத்தும்.

இதை ஒரு உதாரணம் கொண்டு புரிந்து கொள்ளலாம். இயற்கையில் நிலவும் கடுமையான சூழலில் உயிர் பிழைக்க போராடும் ஆதி கால மனிதனின் சிந்தனைகள் எல்லாம் இயற்கையில் திறம்பட பிழைப்பதை நோக்கியே இருக்கும். அப்படிப்பட்ட சமூகத்தில் “அறிவார்ந்த சிந்தனைகள்” அனைத்துமே பிழைத்திருப்பதற்கான மேம்பட்ட வழிமுறைகளை நோக்கியதாக இருக்கும். ஆனால் முதலாளித்துவ உற்பத்தி முறையில் ஒரு கண்டுபிடிப்பாளரின் சிந்தனைகள் முழுவதும், விற்பனைக்கான ஒரு பண்டத்தை உருவாக்குவதை நோக்கி மட்டுமே இருக்கும்.

இப்போது ஆதி கால மனித சமூகத்தில் நெருக்கடி உண்டானால் என்னாகும்? இப்போது ஆதி மனிதனின் போராட்டம் இயற்கையோடு இல்லாமல், சக மனிதர்களோடு போராட்டம் என மாறிப் போனால், என்னாகும்? இது நாள் வரை “பிழைத்திருப்பது” என்பதை நோக்கி கட்டமைக்கப்பட்ட “அறிவுச் சிந்தனைகளின்” இலக்கு மாற்றப்படும். எனவே சிந்தனைகள் நெருக்கடியை எதிர்கொள்ளும். மனிதர்களோடு போராட்டம் என்ற இலக்கை நோக்கிய சிந்தனைகள் வெளிப்படும். ‘பிழைத்திருப்பதற்கான’ சிந்தனைகளை அமலாக்க பயன்படுத்தப்பட்டு வந்த வழிமுறைகள், கட்டமைப்புகள் பயன் குறைந்தவையாக ஆகிடும்.

இவ்வாறுதான் உற்பத்தி முறையில் ஏற்படும் நெருக்கடி, அறிவியல் முறையிலும் பிரதிபலிக்கின்றது.

அறிவியலை வளர விடாமல் தடுக்கும் உத்தியோடு சிலர் செயல்படுகிறார்கள் என்றோ, குறிப்பிட்ட வர்க்கம் முயற்சிக்கிறது என்றோ ‘சதித்திட்ட கதையாடலை’ மார்க்சியம் முன்வைப்பதில்லை. அறிவியலின் உண்மையைத் தேடிக் கண்டறியும் அடிப்படையை, வலிமையை மார்க்சியம் அங்கீகரிக்கின்றது. ஆனால் எந்த ஒரு காலத்திலும் புதிய சிந்தனை/கண்டுபிடிப்புகளில் ஏற்படும் நெருக்கடியானது அக்கால உற்பத்தி முறையில் ஏற்படும் நெருக்கடியின் விளைவு என்றே அது விளக்குகிறது.

முதலாளித்துவமும் அறிவியலும்

மேற்கண்ட புரிதலினை, தற்கால முதலாளித்துவ உற்பத்திக்கு பொருத்தி, இந்த சூழலில் அறிவியல் வளர்ச்சியை புரிந்த கொள்வதை மார்க்ஸ், எங்கல்ஸ் தொடங்கி பல மார்க்சிய அறிஞர்கள் செய்துள்ளனர்.

முதலாளித்துவ முறையில் நிலவும் போட்டியின் விளைவாக, அதிவேக அறிவியல்-தொழில்நுட்ப வளர்ச்சி, மூலதனத்திற்கு அவசியமாக இருக்கிறது என்பதை தனது “மூலதனம்” நூலில் மார்க்ஸ் விவரித்துள்ளார். ஆனால் அறிவியல் கண்டுபிடிப்புகள் மீதான ஏகபோக கட்டுப்பாடு என்பது முதலாளித்துவத்தின் ஒரு சிறு அம்சம் மட்டுமே. முதலாளிகளுக்கு இடையிலான போட்டியின் காரணமாகவும், முதலாளி-தொழிலாளி இடையிலான வர்க்கப் போராட்டம் காரணமாகவும், முதலாளி வர்க்கம் அறிவியல் வளர்ச்சியைக் கொண்டு எந்திரமயமாக்கலை விரைவு படுத்துகிறது. இதன் விளைவாக லாப விகித நெருக்கடி உருவாகிறது. அதீத உற்பத்தி நெருக்கடி உருவாகிறது.

ஆனால் முதலாளித்துவத்தின் அடிப்படை நெருக்கடி என்ன? முதலாளித்துவம் வளர வளர உழைப்பு மேலும் மேலும் “சமூகமயம்” ஆகிறது (அதாவது மேலும் மேலும் தொழிலாளர்களின் உழைப்பு அனைவரும் சேர்ந்து புரியும் “சமூக” உழைப்பாக மாறுகிறது). ஆனால் உழைப்பின் பலனான உற்பத்தி பண்டங்கள் தனிச்சொத்து குவியலுக்கு செல்கின்றன. இதுவே முதலாளித்துவத்தின் அடிப்படையான சிக்கல். இது நாள் வரை முதலாளித்துவத்தில் அறிவியல் முறையானது தனிச்சொத்து குவியலை மேம்படுத்தவே கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆனால் “சமூகமயம்” ஆன தொழிலாளி வர்க்கத்தின் தேவைகளுக்கு எழுச்சிபெறும்போது முன்பு கட்டமைக்கப்பட்ட அறிவியல் முறை அந்த தேவைகளுக்கு முரணாக அமைகிறது. இந்த நெருக்கடியானது அறிவியலிலும் பிரதிபலிக்கின்றது.

முதலாளித்துவ முறையில் அறிவியல் தழைக்கும் என்று முதலாளித்துவத்தின் ஆதரவாளர்கள் கூறி வந்தாலும், உண்மையில் மேற்சொன்ன நெருக்கடி ஏற்பட்ட பின், அறிவியல் நச்சுப்படுகிறது. முதலாளித்துவத்தில் “அறிவு” வர்த்தகமாக்கப்பட்டதன் விளைவாக, அறிவியல் ஆய்வும் சந்தை நிபந்தனைகளுக்கு உள்ளாக்கப்படுகிறது. இப்போது நிகழ்த்தப்பட்டுவரும் “டிஜிட்டல் புரட்சி” என்பதன் அடிப்படையை பார்த்தால் கூட, மக்களின் தரவுகளை சேகரித்து, விளம்பரப் பிரச்சாரங்கள் மூலம் நம் ஜனநாயகத்தை சீர்குலைத்து, உழைப்பின் மீது மூலதனத்தின் ஆதிக்கத்தை வலுப்பெறச் செய்யும் விதமாகவே பயன்படுத்தப்படுகிறது. இந்த “டிஜிட்டல் புரட்சி”க்கு அடிப்படையாக உள்ள இணையதளம், நுண்கணினி (Microprocessor), போன்ற தொழில்நுட்பங்கள் எல்லாம் மக்கள் செல்வத்தின் மூலம் பொதுப் பல்கலைக்கழகங்களில் கண்டுபிடிக்கப்பட்டன, ஆனால் தனியாருக்கு அதன் காப்புரிமங்கள் உரிமையாக்கப்பட்டன. இது, தொழிலாளி வர்க்கத்தின் தேவைகளை தீர்க்க முடியாத முதலாளித்துவ அமைப்பில், அறிவியலுக்கு ஏற்பட்டிருக்கும் ஆழமான நெருக்கடியின் ஒரு உதாரணமாகும்.

வளரும் அறிவியலை, மூலதனம் தனது லாப நோக்கங்களுக்காக கட்டுப்பாட்டில் வைப்பதனால் மக்கள் மத்தியில் அறிவியல் மீதான ஆழமான அவநம்பிக்கை வளர்வதை பார்க்கிறோம். உலகின் மிகப்பெரும் முதலாளித்துவ பொருளாதாரமான அமெரிக்காவில் கூட இதை பார்க்கலாம். சுகாதாரத்தில் தனியார் ஏகபோகம், நவீன மருந்து தொழில்நுட்பத்தை தனியார் காப்புரிமம், புதிய ஆய்வுகள் பணக்காரர்களின் நோய்களுக்கு மட்டுமே தீர்வு தேடுவது போன்ற போக்குகளின் காரணமாக மக்கள் ஏமாற்ற உணர்வுக்கு ஆளாகின்றனர். இதனால் அறிவியலற்ற “மாற்று” முறைகள் பிரபலமாவது, தடுப்பூசிக்கு எதிரான பிரச்சாரம் போன்ற போக்குகள் எழுவதும், அறிவியல் அடிப்படையிலான மருத்துவ முறைக்கு எதிர்ப்பு உருவாவதையும் பார்க்கிறோம்.

இது போன்ற நெருக்கடியும், அறிவியலுக்கு எதிரான  போக்குகளும் கல்வி, வேளாண்மை போன்ற பல துறைகளில் காணப்படுகிறது. உலகம் முழுவதும் வெளிப்படுகிறது. அறிவியலுக்கு எதிராக முழக்கமிட்டு வலதுசாரிகள் வெற்றிபெறுகிறார்கள். கொரோனா பெருந்தொற்றின் காலத்தில், சோசலிச நாடுகள் மக்களை அறிவியல் பூர்வமாக ஒன்று திரட்டி போராடினார்கள், ஆனால் முதலாளித்துவ நாடுகள் மக்களை கைவிட்டன, போராட்டத்தையும் கைவிட்டன. இதுவே முதலாளித்துவத்தில் “சிந்தனை” மற்றும் “செயல்” (Theory and Practice) இரண்டிற்கும் இடையில் ஏற்பட்டுள்ள விரிசலின் தெளிவான வெளிப்பாடு.

அறிவியல் துறையில் உழைப்பின் தன்மையை பார்த்தால், அதுவும் நெருக்கடியிலேயே உள்ளது. ஏகாதிபத்திய நாடுகள், இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளில் பல்லாயிரம் தொழில்நுட்ப பட்டதாரிகளை அடிமட்ட பணியில் அமர்த்திக் கொண்டு, முன்னேறிய தொழில்நுட்பத்தையும் சர்வதேச திறமைகளையும் தன் வசம் குவித்து வைத்துள்ளன. இது ஏகாதிபத்திய நாடுகளுக்கும் – வளரும் நாடுகளுக்கும் இடையேயான முரண்பாட்டை கூர்மையாக்குகிறது. மேலும் “அறிவுசார்” உழைப்பிற்கும், உடல் உழைப்பிற்கும் இடையிலான முரண்பாட்டையும், இயற்கை பற்றிய அறிவியலுக்கும், சமூக அறிவியலுக்கும் இடையிலான விரிசலையும் தொடரச் செய்கிறது. இவை எல்லாம் உழைப்பு தளத்தில் முதலாளித்துவ நெருக்கடியின் வெளிப்பாடே.

அதிலும் குறிப்பாக, இன்று மானுடம் சந்திக்கும் மிகப்பெரும் சவால் “பருவநிலை மாற்றம்” பற்றிய பிரச்சனையில், அடிப்படை காரணம் என்ன?

முதலாளித்துவத்தில் “அந்நியமாதல்” கோட்பாட்டை மார்க்ஸ் விவரித்தார். தொழிலாளர் உழைப்பை செலுத்தி உருவாக்குவது தான் பண்டங்கள். ஆனால் அதிலிருந்து அவர்கள் அந்நியமாக்கப்பட்டு, அது தனிச்சொத்து குவியலுக்கு செல்கிறது. ஆக, மனிதர்கள் தம் உழைப்பின் பலனிலிருந்து அந்நியமாக்கப்படுகின்றனர். இதன் காரணமாக மனித உழைப்புக்கும், இயற்கைக்கும் இடையேயான “உயிரோட்டமான பிணைப்பு” முறிவுற்று போகிறது. இவ்வாறு தன் உழைப்பில் இருந்தே அந்நியமாகிப் போகும் தொழிலாளி, அந்த உழைப்பு எப்படி ஒருங்கிணைக்கப்பட வேண்டும், இயற்கையோடு இயைந்து எப்படி செயலாற்ற வேண்டும் என்பதை தீர்மானிக்கிற அதிகாரமோ, வழிமுறையோ இல்லாமல் போகிறார். இதன் காரணத்தால், மூலதனம் தன் லாப நோக்கிற்கு வேண்டியது போல  செயல்பட்டு, அது உழைக்கும் மக்களையும் பாதிக்கிறது, இயற்கையையும் பாதிக்கிறது. அதுபற்றிய எந்தக் கவலையும் இல்லாமல் தன்னை பெருக்கிக் கொண்டிருக்கிறது. இதுவே “பருவநிலை நெருக்கடி”யின் அடிப்படை ஆகும்.

இன்று இந்த பருவ நிலை நெருக்கடிக்கு தீர்வு காண அறிவியல் முறைகள் இருப்பினும் கூட, அதனை அமலாக்க இங்கே உள்ள கட்டமைப்பு, மூலதனக் குவியலினை இலக்காக கொண்டு அமைக்கப்பட்டுள்ளதால், அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து பருவ நிலை மாற்றத்தை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு முயற்சிகளை மேற்கொள்வதற்கு, ஏகாதிபத்திய நிதி மூலதனம் தடையாக இருக்கின்றது.

அறிவியல் குறித்த தத்துவார்த்த போக்குகள்

முதலாளித்துவத்தில் அறிவியலின் நெருக்கடி பற்றி புரிந்து கொண்டோம். இங்கே “அறிவியல்” குறித்த மார்க்சிய தத்துவார்த்த போக்குகளின் பரிணாமம் குறித்து பார்ப்போம்.

இயங்கியல் பொருள்முதல்வாத கோட்பாட்டை மேலும் வலுவாக்கும் விதமாக எங்கல்ஸ் இந்த கோட்பாட்டை இயற்கை மற்றும் அண்டத்தையும் புரிந்து கொள்ள பயன்படுத்தி எழுதிய நூல்  தான் “இயற்கையின் இயங்கியல்”. இதன் மூலம் அறிவியலாளர்களுக்கு இயங்கியல் பார்வை ஏன் அவசியம் என்பது குறித்தும் விவரித்தார். இவ்வாறு அறிவியல் ஆய்வில் இயங்கியலை பயன்படுத்தும் தத்துவத்தை ஜே.டி.பெர்னால், ஜே.பி.எஸ்.ஹால்டேன், ஐன்ஸ்டீன் உட்பட பல விஞ்ஞானிகளும் முன்னெடுத்துச் சென்றனர்.

அறிவியல் மற்றும் சமூகத்திற்கு இடையேயான உறவு குறித்த தத்துவங்களும் மார்க்சிய மரபில் பரவலாக புகழ் பெற்றன. முதலாளித்துவ நெருக்கடியால் அறிவியல் நசுக்கப்படாததன் காரணத்தால் சோவியத் ஒன்றியத்தில் அறிவியல் தழைத்தோங்கியது. மக்களின் வாழ்வியல் கலாச்சாரத்தோடு அறிவியல் ஒன்றிப் போனதன் விளைவாக, தொழிலாளர் வர்க்கத்தின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், அறிவியல் ஆய்வுக்குள் “ஆலை சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு”, “சமூக அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்” போன்ற துறைகள் பல்கலைக்கழகங்களில் உருவாக்கப்பட்டு தழைத்தன. இதன் தொடர்ச்சியாக அறிவியல் குறித்த தத்துவ விவாதங்களும் விரிவடைந்தன. போரிஸ் ஹெசன் அவர்களின் பணி எவ்வாறு நியூட்டனின் ஆய்வுகள் பதினேழாம் நூற்றாண்டின் வர்த்தகம் சார் முதலாளித்துவத்தின் எழுச்சியுடன் தொடர்புடையது என்பதைக் காட்டியது. நிகோலாய் புக்கரின், நிகோலாய் வாவிலோவ் போன்றோரின் அறிவியல்-சமூகம் குறித்த ஆழமான விவாதங்கள், அறிவியல் தன் முழு திறனை வெளிக்கொண்டு வர சோசலிச சமூகத்தில் தான் முடியும் என்பதை நிறுவின.

இரண்டாம் உலகப்போருக்கு பின், பிரபல பரிணாம வளர்ச்சி விஞ்ஞானிகளான ரிச்சர்ட் லேவின்ஸ், ரிச்சர்ட் லியோன்டிஃப் போன்றவர்கள் மார்க்சியத்தின் மூலம் அறிவியல் வளர்ச்சியை புரிந்து கொள்ளும் பணியை தொடர்ந்தனர். ஆனால் 1970களில் தொடங்கி, இடதுசாரி ஆய்வாளர்கள் மத்தியிலும் தவறான புரிதல்கள் எழத் தொடங்கின. ஆர்.எம்.யங் என்ற மார்க்சிய ஆய்வாளர், அதி தீவிர நிலைபாட்டை எடுப்பதாக எண்ணி, “அறிவியல் என்றாலே முதலாளித்துவ அறிவியல் மட்டும் தான்” என வாதிட்டார். ஆனால் இது பொருள்முதல்வாத புரிதலுக்கு எதிரானது. இதனைத் தொடர்ந்து எழுந்த பின் நவீனத்துவ கோட்பாடுகள் இடதுசாரி போர்வையில் முற்றிலும் அறிவியலற்ற கோட்பாடுகளை முன் வைத்தன. அவர்கள் மார்க்சிஸ்டுகள் முதலாளித்துவத்தில் அறிவியல் மீது வைக்கும் அதே குற்றச்சாட்டுகளை வைத்துக் கொண்டே கருத்துமுதல்வாத கோட்பாட்டு நிலை எடுக்கின்றனர். இவர்கள், “அறிவியல் மூலம் உண்மை நிலையை கண்டறியவே முடியாது. அந்தந்த வர்க்கங்களின் நலனுக்கு ஏற்றார்போல கோட்பாடுகள் உருவாக்கப்படுகின்றன” என வாதிட்டார்கள். சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கு பின், நவ தாராளமய காலத்தில் இந்த கோட்பாடுகள் மேலும் வலுப்பெற்றன.

இப்படிப்பட்ட பொருள்முதல்வாதத்திற்கு எதிரான கோட்பாடுகள் அறிவியலில் மனித உழைப்பின் பங்கையும், அறிவியல்-உழைப்பு-இயற்கை இடையேயான உறவையும் நிராகரிக்கின்றன. அறிவியல் என்பதை மனித உழைப்பின் அங்கமாக பார்ப்பதையும், அறிவியலின் நெருக்கடியை உற்பத்தி முறையின் நெருக்கடியின் பிரதிபலிப்பாக பார்ப்பதையும் நிராகரிப்பதன் மூலமாக, இந்த பின் நவீனத்துவ கோட்பாடுகள், இயங்கியல் போராட்டம் வழியாக மனித சமூகம் அடையும் வளர்ச்சியையும், அந்த போராட்டத்தில் அறிவியல் ஆற்றும் பங்களிப்பையும் முற்றிலுமாக மறைக்கின்றன.

இறுதியாக

மனித சமூகத்திற்கு அப்பாற்பட்டு நின்று அனைத்து மானுட பிரச்சனைகளுக்கும்  நூதன தீர்வை அளிக்கக் கூடியதாக அறிவியலை பார்க்கும் பார்வையும் தவறு. அதே வேளையில், அறிவியலின் உண்மை அறியும் திறனை முற்றிலுமாக நிராகரித்து, அறிவியல் மொத்தமும் முதலாளித்துவ அறிவியல் என நிராகரிப்பதும் தவறு.

மார்க்சிய புரிதல் மூலம் மட்டுமே இந்த இரண்டு தவறுகளையும் களைந்து, மனித உழைப்பின் வடிவமான அறிவியலின் ஆற்றலை உணரும் அதே வேளையில், அந்த அந்த காலத்தின் சமூக கட்டமைப்பு எவ்வாறு அறிவியல் வளர்ச்சியின் தன்மையை தீர்மானிக்கின்றது என்பதை புரிந்து கொள்ள முடியும். மார்க்சிய புரிதலால் மட்டுமே கோவிட் தடுப்பு மருந்து போன்ற அறிவியலின் வியக்கத்தக்க சாதனைகளை அங்கீகரிக்கும் அதே வேளையில், அணு ஆயுதம் போன்ற அறிவியலின் கோர முகத்தையும் புரிந்து கொள்ள முடியும். மார்க்சிய புரிதலால் மட்டும் தான் அறிவியலின் உண்மை திறனை புரிந்து கொண்டு, அந்த திறன் உழைக்கும் மக்களுக்கு பயன்பட தேவையான இயக்கங்கள் மற்றும் போராட்டங்களை கட்டமைக்க முடியும். இப்படிப்பட்ட போராட்டங்கள் மூலம், இக்கால ஏகாதிபத்திய சூழலில் அறிவியல்-முதலாளித்துவம் இடையேயான முரண்பாடுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து, அதை கூர்மைப்படுத்த இயலும். அறிவியல் பற்றிய மார்க்சிய புரிதல் மட்டுமே பிற்போக்கு சித்தாந்தங்களை எதிர்க்கும் அதே வேளையில், முதலாளித்துவ தளையில் இருந்து இருந்து அறிவியலை விடுவிக்க உதவும்.



One response to “மார்க்சிய பார்வையில் அறிவியல் வளர்ச்சி

Leave a comment